செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் 7 தா முதல் நீ வரை ஆசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர் முனைவர் பி. தமிழகன் பதிப்பாளர் கோ. இளவழகன் செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் - 7 தா முதல் நீ வரை ஆசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர் முனைவர் பி. தமிழகன் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2018 பக்கம் : 20+356= 376 விலை : 470/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 376  கட்டமைப்பு இயல்பு  படிகள் : 1000   கணினி & நூலாக்கம் : நல்லதம்பி, கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  களஞ்சியம் வளமான வீடுகள் கட்டி வாழும் நிலக்கிழார் பெருநிலக்கிழார் ஆகிய உழவர்கள், தங்கள் வீட்டின் உட்பகுதியில் களஞ்சியங்கள் அமைத்திருப்பர். களஞ்சியம் இருக்கும் வீடு என்றால் வளமிக்க உழவர்வீடு என்பது பொருள். களத்தில் வரும் தவசங்கள் பயறு வகைகள் ஆகியவற்றை அங்கே பூச்சியரிப்பு, மட்குதல் ஏற்படாவகையில் தளத்தின்மேல் உயர்த்தியும் புன்கு வேம்பு ஆகியவற்றின் தழைகளைப் பரப்பியும், பாதுகாப்பர். அவ்வாண்டு முழுமைக்கும் பயன்படும். அடுத்த ஆண்டு விளைவு குறைந்தாலும் களஞ்சியப் பொருள் கவலையின்றி வாழ உதவும். ஏருழவர் போலச் சொல்லேர் உழவராம் சான்றோர் நூல்கள், அக்காலத்தார்க்கே அன்றி எக்காலத்தார்க்கும் பயன்படும் வகையில் பாதுகாத்துப் பயன் கொள்ளச் செய்வது நூல் களஞ்சியமாகும். இந்தியப் பரப்பில் தமிழ் மொழியில் தான் முதன்முதல் `கலைக் களஞ்சியம் உருவானது என்பது பெருமிதப்படத்தக்கதாம். இப்பொழுது தமிழ்மண் பதிப்பகத்தால் வெளியிடப்படும் செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் செவ்வியல் மொழிக் கொடையாக வந்து, தமிழ்மண் பதிப்பக வெளியீட்டால், தமிழ்கூறு நல்லுலகப் பொருளாவது, செம்மொழிச் செம்மல் முனைவர் திருமிகு க. இராமசாமி அவர்கள் தூண்டல் வழியாகத் துலங்கிய துலக்கமாகும். ஆதலால் படைப்பாளன் என்ற நிலையில் நெஞ்சார்ந்த நன்றியுடையேன். இன்ப அன்புடன் இரா. இளங்குமரன் கடப்பாட்டு உரை தமிழ் இயற்கை இயங்கியல் வழிப்பட்ட ஒலி, வரி, வடிவுகளையும் இயற்கை இயங்கியல், மெய்யியல், வாழ்வியல், படைப்பியல் என்பவற்றை அடிமனையாகவும் கொண்ட மொழி. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்னும் மூல முழக்கத்தை முழுவதாகக் கொண்டது நம்மொழி என்பதை ஓராற்றான் விளக்குவதாக அமைந்தது இக் களஞ்சியம். ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் என்பவை இல்லாமல், வெளிப்பட எவரும் அறிந்து கொண்டுள்ள வழக்கு, செய்யுள் என்பவை கொண்டே விளக்குவது இக்களஞ்சியம். இதனை, ஊன்றியும் விரும்பியும் கற்பார் தாமும் இவ்வாய்வு செய்ய வியலும் என்பதைத் தூண்ட வல்ல ஆய்வும் இது! ஆதலால், படிப்பாளியைப் படைப்பாளி ஆக்கவல்லது என்பதை என் பட்டறிவுத் தெளிவாகக் கண்டு வருகிறேன்! எளிமையாய் - ஆழ்ந்த நுணுக்கங்களை - ஓரளவு கற்றாரும், கொள்ள வழிகாட்டும் `கைவிளக்கு அன்னது இது. இதனை முதல் - இடை - நிறைவு என்னும் மூன்று நிலை களிலும் உற்ற பெறலரும் உதவுநராக இருந்து முற்றுவித்ததுடன், தமிழ் உலகப் பயன்பாட்டுக்கும் வழியமைத்துத் தந்த `கலங்கரை விளக்கம் செம்மொழிச் செம்மல் முனைவர் திருத்தகு க. இராமசாமி அவர்களே ஆவர். ஆதலால், அவர்களை நெஞ்சாரப் போற்றுவது என் தலைக்கடனாம்! திருவள்ளுவர் தவச்சாலை நிறுவன வழியே இப்பணி செய்ய வாய்த்த அளவில் சொற்றிரட்டியும் மெய்ப்புப் பார்த்தும உதவிய பெருந்தகு கேண்மையும் உழுவலன்பும் உடைய முனைவர் பெருந்தகை கு. ருமாறனார் அவர்களுக்கும் எம் எழுத்துப்பணியைத் தம் பணியாக் கொண்டு தொடர்ந்து செய்துவரும் தொய்விலாத் தொண்டர் மெய்ப்புப் பார்த்தலில் வல்லார் முனைவர் பி. தமிழகனார் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியுடையேன். என் எழுத்தைப் படியெடுத்தும், கொங்கு வட்டார வழக்குச் சொற்களைத் தொகுத்தும் உதவிய புலவர் கலைமணியார் அவர்களுக்கும், இப்பணியில் இல்லை எனினும் உழுவ லன்பாலும் உரிமைப் பேற்றாலும் என் எழுத்துகளைப் படியெடுத்து உதவிய திருக்குறள் செம்மல் பெரும்புலவர் மு. படிக்கராமு அவர்களுக்கும் பெருநன்றியும் வாழ்த்தும் உடையேன். இத்தொகை அனைத்தையும் கணினிப்படுத்தியும், மெய்ப்புப் பார்த்தும், வரவு செலவு கணக்கைத் தக்க வகைத் தணிக்கைக்கு உரியவையாகச் செய்தும், பணிநிறைவை ஒப்படைத்தும் பெருநன்றாற்றிய கவனகச் செம்மல் முனைவர் கலை. செழியனார் அருந்தொண்டைப் பாராட்டி நன்றி பெரிதுடையேன். பணி நிறைவுப்பயன், தமிழ் கூறு நல்லுலகப் பயன்பாடு ஆதல் வேண்டும் என்பது தானே! இல்லாக்கால் செய்த பணியால் ஆவதென்ன? செய்யாமை ஒப்பது தானே! அவ்வாறு ஆகாமல் தாய்த்தமிழக ஆர்வலர்களுடன், அயலகத் தமிழ்ப் பெருமக்களாக விளங்கினும் தாய்த்தமிழக ஆர்வலர்களிலும் மேம்பட்ட ஆர்வலர்களாகக் குவையத்து, அமெரிக்கா, கனடா, மலையகம், சிங்கபுரி, ஈழம் முதலாக வாழ்வார் ஆர்வத் தளிர்ப்பும் தூண்டலும் முன்னிற்கும் பேறு வியப்புக்கும் பெருநன்றிக்கும் உரியதாம்; இப்பெருமக்கள் அனைவர் உள்ளமும் ஓருருவாக வாய்த்து, கருவி நூற்பணியைத் தொகை தொகையாக வகைப்படுத்தி வான் பெருந்தொண்டாகச் செய்தலே எம் பிறவிக் கடன் எனக் கொண்ட தமிழ்ப் போராளி திருமிகு கோ. இளவழகனார் வெளியீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயற்கரிய செய்வார் பெரியர் என்பதை நிலைநாட்டியதைப் போற்றுவதன்றி என் சொல்வேன்? களஞ்சியம் கணினிப்படுத்திய அளவில் நிறைவுறுமா? பத்துத் தொகுதிகளையும் ஒருமுறைக்கு மும்முறையாய் முழுதுற மெய்ப்புப் பார்த்தல், எளிமைப் பாடா? கண்புரை வளர்ந்தாலும் இடைத்தடை நேர்ந்தாலும் இத்தொண்டு தமிழன்னை தளிர்க்கும் தொண்டு என்று இமைப் பொழுதும் சோராது கடனாற்றிய கடப்பாட்டாளர் மெய்ப்புச்செம்மல் முனைவர் பி. தமிழகனார்க்குப் பெருங்கடப்பாடு உடையேன்; பதிப்புச் சுமையை ஏற்றமை என் சுமை ஏற்றமையாம்! வாழிய நலனே! வாழிய நலனே! இரா. இளங்குமரன் தமிழ்க் களஞ்சியம் மொழியின் வளம், அம்மொழியைப் பேசுவோர் பயன்படுத்தும் சொற்களாலும், அம் மொழியில் உள்ள இலக்கண, இலக்கிய வகைகளாலும் அறியப்படும். தமிழின் வளம் இலக்கியங்களிலும் மக்கள் வழக்குகளிலும் நிறைந்துள்ளது. சொற்களின் வளமும், பெருக்கமும் மொழியின் சிறப்பைக் காட்டும். சொற்களின் பெருக்கைக் காட்ட எத்தனையோ நிகண்டுகளும், அகராதிகளும், களஞ்சியங்களும் தமிழில் வந்துள்ளன. இவற்றுள் பல பிறமொழிச் சொற்களையும் தமிழ்ச் சொற்களாய்க் கருதிப் பொருள் தந்துள்ளன. பிற மொழிகளில் ஏறிய தமிழ்ச் சொற்களும் வேற்றாடை உடுத்தியுள்ளன. அவற்றை அறிந்து தமிழெனக் காட்ட, மொழி உணர்வும், இலக்கிய இலக்கணப் புலமையும், தமிழ் முழுதறி தகுதியும், மக்கள் வழக்குகளை வழங்கும் சூழலில் கேட்டறிதலும், சொற் பொருளாய்வும், சொல்லியல் நெறிமுறைகளும், வேர்ச் சொல்லாய்வும், கூர் மதியும் நிறைந்திருக்க வேண்டும். இத்தமிழ்ச் சொற் களஞ்சியம் சொற்களின் பொருளை மட்டுமா தருகின்றன? சொற்களின் வேரும், அதன் விரிவும், அவற்றின் விளக்கமும், சான்றுகளும், மக்களின் பொது வழக்கும், வட்டார வழக்கும், யாழ்ப்பாணத் தமிழ் வழக்கும் செறிந்துள்ள தமிழ்க் களஞ்சியமாம். ஒரு வினைச் சொற்கள் தொகை தொகையாகிய தொகை இக்களஞ்சியம். `அடித்தல் சொல்லடியாக 145 சொற்கள் உண்ணல் வகைகள், ஊர்ப் பெயர் ஈறுகள் (504) நோய் வகைகள் (229), நோய் வினைகள் (216), மதில் பொறி வகைகள் (28) மலை வகைகள் (25) முதலிய எத்தனையோ வகைகளும் தொகைகளும் அடங்கியுள்ளன. இவற்றின் தொகுப்பு கற்பாரை வியக்க வைக்கும்! இக் களஞ்சியத் தொகுதிகளுள் நூற்றுக்கணக்கில் மரபுத் தொடர்கள், இணை மொழிகள், ஒலிக்குறிப்புகள், அவற்றின் விளக்கங்கள் அடங்கியுள்ளன. சொற்கள் விளக்கத்திற்கு அன்றாடச் செய்திகளும் (செய்தித்தாள்கள்) சான்றாகின்றன. சிற்றிலக்கிய வகைகள் தொண்ணூற்றாறு என்பர். ஆனால், பற்பல நூறுவகைகள் உள்ளமையை இக்களஞ்சியம் காட்டும். மேனாட்டு உடைகளை மாட்டியதால் தமிழர் மேனாட்டார் ஆகாரன்றோ? பஜ்ஜி ஏதோ பிறமொழி என்றே மயங்கி நிற்பர். அது பச்சைக் காய்கறிகளால் செய்யப்படுவது. தேவநேயப் பாவாணர் உடன் பழகியமையாலும், அவர் நூல்களைத் தோய்ந்து தோய்ந்து கற்றமையாலும், அவரே பாராட்டியமையாலும் ஐயா, பல சொற்களுக்கு வேர்ச்சொல் வழி மூலமும் கிளையும் காட்டியுள்ளார். புழுதி, பூழ்தி, பூதி. பல சொற்களின் பொருள் வேறுபாடுகளும் காட்டப்பட்டுள்ளன: விரைப்பு- விரைப்பு; விறைப்பு - தொய்வின்மை; இக்களஞ்சியம் தவசங்களாம் சொற்கள் கொட்டப்பட்டு நிறைந்துள்ளது. படிப்பார் தத்தமக்குத் தேவையான தவசங்களை அள்ளி அள்ளிப் பயன் கொள்ளலாம். எவ்வளவு அள்ளினும் என்றும் குறையாது இக்களஞ்சியம். தமிழரின், மொழி, இன, இலக்கிய, இலக்கணம் ஆகியவற்றின் வரலாறு, பண்பாடு, நாகரிகங்களின் அடங்கல்களைப் படை படையாகத் திரட்டித் தொகுத்து வெளியிடும் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் முதலிடம் பெற்றிருக்கிறது. ஐயா முதுமுனைவர், இளமை முதல் தொகுத்த சொற்களஞ்சியங்களைச் சேர்த்துச் சேர்மானமாக்கித் திரட்டித் தந்துள்ளார்கள். தமிழர்களே! இங்கே வம்மின்! களஞ்சியம் கொண்மின்!! தமிழை வளர்மின்!!! பி. தமிழகன். அணிந்துரை செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் என்னும் இந்நூல் இன்று நம்மிடையே வாழும் தொல்காப்பியராக விளங்கும் மூத்த தமிழறிஞர் செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஏறத்தாழ 8000 தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் விளக்கத்தினை மேற்கோள் சான்றுகளுடன் வழங்கும் இந்நூல் தோராயமாக 3254 பக்கங்களில் பத்துத் தொகுதிகளாக வெளிவந்து தன்னேரிலாத தமிழ் மொழிக்குத் தனிப்பெருமை சேர்க்கும் முன்னோடிப் பணியாக அமைந்துள்ளது. அகரமுதலிகளில் இடம்பெறாத சொற்கள், மரபுச்சொற்கள், வட்டார வழக்குச் சொற்கள், பழமொழிகள் போன்றவை இக்களஞ்சியத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்க தாகும். இசை, மருத்துவம், கல்வெட்டு, அறிவியல் ஆகிய துறைகள் சார்ந்த இன்றியமையாத சொற்களுக்கும் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. அகரத்தில் தொடங்கும் சொற்களுக் கான பொருள் விளக்கங்கள் மட்டுமே 276 பக்கங்களில் முதல் தொகுதியாகவும் தனித் தொகுதியாகவும் அமைந்திருப்பது நூலின் செறிவையும் விரிவையும் பறை சாற்றுவதாக அமைந் துள்ளது. அயன் மொழிச் சொற்கள் அறவே தவிர்க்கப் பட்டிருப்பது நூலின் தனிச்சிறப்பாகும். சொற்பொருட் களஞ்சியப் பணியை நிறைவேற்றும் வகையில் நூலாசிரியருக்குத் தூண்டுதலாக அமைந்தது ஒல்காப் புகழ் தொல்காப்பியமே. குறிப்பாக, எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே (தொல். 640) என்னும் நூற்பா. இந் நூற்பாவினை மூல முழக்கமாகக் கொண்டது தமிழ்மொழி என்பதை விளக்கும் பொருட்டே இக்களஞ்சியம் உருவாக்கப் பட்டதென நூலாசியிர் குறிப்பிட்டுள்ளார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் காட்டியவாறு ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் எனக் காணாமல் வெளிப்படையாக அறியக்கூடிய சொற்களுக்கு மட்டுமே அமைதியும் திரிபும் பொருள் விளக்கமும் காட்டுவது இக்களஞ்சியம் என்பதும் நூலாசிரியர் கூற்றாகும். பொருள் விளக்கங்களினூடே கீழ்க்காணும் தொல்காப்பிய நூற்பாக்களின் பயன்பாட்டினையும் உணரலாம். பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லின் ஆகும் என்மனார் புலவர். (தொல். 641) தெரிபுவேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும் இருபாற் றென்ப பொருண்மை நிலையே. (தொல். 642) பொருட்குப் பொருள்தெரியின் அதுவரம் பின்றே. (தொல். 874) பொருட்குத் திரிபில்லை உணர்த்த வல்லின் (தொல். 875) மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா. (தொல். 877) ஒரு பொருள் பல சொற்கள் மிகவும் நுட்பமாய் ஆராயப் பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. `அழகு பொருண்மையைக் குறிக்கும் 67 தனித்தமிழ்ச் சொற்களை அடையாளங்கண்டு அவற்றிற்கு நுட்பமான விளக்கங்களைத் தந்திருப்பது ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலத்திற்கும் வளமான பட்டறிவிற்கும் சான்றாக விளங்குகிறது. பெருமதிப்பிற்குரிய ஐயா இளங்குமரானாரின் நெடுங்கால அவா இந்நூல் வெளியீட்டின் வழி நிறைவேறியுள்ளமை மகிழ்வளிக்கிறது. இது காலத்தை வென்றுநிற்கும் நிலைத்த பணி. தமிழ் ஆய்வாளர்களுக்குக் கிட்டியுள்ள தலைசிறந்த நோக்கீட்டு நூல். உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் இந்நூலினை வரவேற்றுப் போற்றுவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. களஞ்சியப் பணி ஒரு தொடர் பணி. இப்பத்துத் தொகுதிகளை அடித்தளமாகக் கொண்டு தொடர்ந்து நூற்றுக்கணக்கான தொகுதிகள் வெளிவந்து தமிழிற்கு வளம்சேர்க்க வேண்டும் என்பது என் அவா. தனித்தமிழ்ப் பற்றாளராகவும் அரிய தமிழ் நூல்களின் பதிப்புச் செம்மலாகவும் விளங்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ. இளவழகனார் இக்களஞ்சியத்தை அருமுயற்சியுடன் சிறப்புற வெளிக்கொணர்ந்திருப்பது பாராட்டிற்குரியதாகும். முனைவர் க. இராமசாமி முன்னாள் பேராசிரியர் - துணை இயக்குநர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர் முன்னாள் பொறுப்பு அலுவலர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை நுழைவுரை தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் புதைந்து கிடக்கும் அறிவுச் செல்வங்களைத் தனக்கே உரிய நடையில் இருந்து தமிழின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் அய்யா இளங்குமரனாரின் நினைவாற்றலை நினைந்து நினைந்து மகிழ்பவன். அவர் அருகில் இருக்கவும், அவருடன் உரையாடவும், வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும் பேறாகவும் கருதுகிறேன். மொழிஞாயிறு பாவாணர், செந்தமிழ் அறிஞர் இலக்குவனார், மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் முதலான பெருமக்களை எட்டி இருந்து பார்த்தவன். அவர்களின் அறிவு நலன்களைக் படித்துச் சுவைத்தவன். இப் பெருமக்களின் மொத்த உருவமாக அய்யா இளங்குமரனாரைப் பார்த்து நெஞ்சம் நெகிழ்பவன். அய்யா அவர்களின் அறிவுச் செல்வங்களைக் கடந்த காலத்தில் பேரளவில் எம் பதிப்பகம் வெளியிட்டு அவரின் உழைப்பை தமிழ் கூறும் உலகுக்கு அளித்ததில் நிறைவு அடைகிறேன். இன்று உங்கள் கைகளில் தவழும் செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் எனும் இவ்வருந்தமிழ்த் தொகுப்பை உருவாக்குவதற்கு எவ்வளவு காலம் உழைத்திருப்பார் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். வியந்து போகிறேன். இச்செந்தமிழ்த் தொகுப்பு தமிழ் அகராதி வரலாற்றில் தமிழுக்குப் புது வரவாகும். இதுவரை யாரும் செய்ய முன்வராத பெரும்பணி யாகும். அய்யாவின் இலக்கிய, இலக்கண பெரும்பரப்பைத் தாங்கிவரும் இப்பொற் குவியலை உலகத் தமிழர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பாவாணர் போல் வேர்காட்டி, வளம் கொடுக்கும் சொற்கடலாய் வாழும் அய்யாவின் பேருழைப்பால் விழைந்த இலக்கிய இலக்கணக் களஞ்சியத்தை வெளியிடுவதன் மூலம் என்னையே நான் பெருமைப் படுத்திக் கொள்கிறேன். என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பேறாகக் கருதுகிறேன். அய்யாவின் 75ஆம் (30.01.2005) அகவை நிறைவைத் திருச்சித் திருநகரில் தமிழர் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நிகழ்வில் புலமைக்குத் தலைவணக்கம் எனும் நிறைவுமலரினைத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு மகிழ்ந்தது. அந்த மலரில் மலேசியப் பாவரசு சு.ஐ.உலகநாதன் எழுதிய பாடலினைக் கீழே சுட்டியுள்ளேன். வாய்த்திருக்கும் அகவையெலாம் வரலாறு படைக்கின்றார் வையகமே வந்து போற்று நம் முன் சான்றாக வாழும் `ஐயா அவர்களால் உருவாக்கப்பட்ட இக்களஞ்சியத்தை தமிழ் உலகுக்கு வழங்குவதில் பெருமையும், பூரிப்பும் அடைகிறேன். கோ. இளவழகன் ஆசிரியர் விவரம் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பிறப்பு : 30. 1. 1930 பெற்றோர் : இராமு - வாழவந்தம்மை (உழவர்குடி) ஊர் : சங்கரன்கோவில் வட்டம், வாழவந்தாள்புரம் கல்வி : தொடக்கக் கல்வி - உள்ளூரில் நடுநிலைக் கல்வி - பாவாணர் பயின்ற முறம்பு பள்ளி வித்துவான் - தமிழ்த் தேர்வு - தனித் தேர்வர் ஆசிரியர் பணி : தொடக்கப் பள்ளி - 16ஆம் அகவையில் தொடக்கம் உயர்நிலைப் பள்ளி - தமிழாசிரியப்பணி ஆய்வுப்பணி : பாவாணருடன் - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் - கலைச் சொல் விளக்கம் தொகுப்புப் பணி, தமிழக வட்டார வழக்குச் சொல் தொகுப்புப் பணி. தமிழ்ப்பணி : கட்டுரை, கவிதை, கதை, நாடகம், காப்பியம், இலக்கண - இலக்கிய உரை - தமிழ்ச் சொல்லாய்வு - பழந்தமிழ்நூல் பதிப்புகள் - தனிமனித - இலக்கண - இயக்க, இசை, வரலாறு. தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் - நாடகம். குழந்தைப் பாடல்கள் - ஆய்வுப் பொழிவு - தொகுப்பு நூல்கள் நாளொன்றுக்கு 18 மணிநேர எழுத்துப் பணி திருவள்ளுவர் தவச்சாலை நிறுவி இயக்குதல். செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் ... நூல்கள் : சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணிவாசகர் பதிப்பகம், ஈரோடு குறளாயம், திருவள்ளுவர் தவச்சாலை, தமிழ்மண் பதிப்பகம் வழி 420க்கும் மேல் வெளிநாட்டு பயணம் : தமிழீழம், சிங்கப்பூர், மலேயா, அமெரிக்கா முதலிய நாடுகளில் தமிழ் அமைப்புகளில் பொழிவுகள். திருமணம் நிகழ்த்துதல் : தமிழகம், சிங்கப்பூர், மலேயாவில் 4000க்கும் மேற்பட்ட தமிழ்நெறித் திருமணங்கள் நிகழ்த்துநர். இயக்கப்பணி : தமிழகத் தமிழாசிரியர் கழகம், உலகத் தமிழ்க் கழகம், தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், திருக்குறள் பேரவை, ஈரோடு குறளாயம், தமிழ்ச்சான்றோர் பேரவை விருது : இலக்கியச் செம்மல், செந்தமிழ் அந்தணர், முதுமுனைவர் முதலியன. பதிப்பாசிரியர் விவரம் முனைவர் பி. தமிழகன் பிறப்பு : 5. 10. 1946 பெற்றோர் : பிச்சை - மீனாட்சி (வேளாண்குடி) ஊர் : இலால்குடி வட்டம், குமுளூர் கல்வி : தொடக்கக் கல்வி - உள்ளூர் நடுநிலைக் கல்வி - இருங்கலூர் உயர்நிலைக் கல்வி - பூவாளூர் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளி புலவர் - கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் தமிழியல் இலக்கிய இளைஞர், முதுகலை, கல்வியியல் முதுகலை, தனித் தேர்வர் ஆய்வு : தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம், சங்க இலக்கியத்தில் மரபியல் சொற்கள் ஆசிரியர்கள் : முதுபெரும்புலவர் அடிகளாசிரியர், பாவலரேறு பாலசுந்தரனார் ஈடுபாடு : சங்க இலக்கியம், பத்தி இலக்கியங்கள், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், நாட்டுப்புறவியல் ஆசிரியப் பணி : திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசுப் பள்ளிகளில் 33 ஆண்டுகள் தமிழாசிரியர், பணி நிறைவுக்குப்பின் ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்லூரியில் பேராசிரியர் பணி தொடர்தல். இயக்கப் பணி : தமிழியக்கம், பாவாணர் தமிழியக்கம், திருவள்ளுவர் தவச்சாலை நூல்கள் : தமிழகத் தொல்பொருள் ஆய்வு (வ்ட்பீது கீகுநூழ்ஙூ) வழக்குச் சொல் அகராதி (ர்மயூரூயுகுயிகீஞ்ணூ நிகுபீய்நூக்ஷி) பதிப்புப் பணி : முதுமுனைவர் இரா. இளங்குமரனாரோடு இணைந்து தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட முதுமொழிக் களஞ்சியம், சங்க இலக்கியம். பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம் எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் `உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ் சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கைகளை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். நூலாக்கத்திற்கு உதவியோர் ஆசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் பதிப்பாசிரியர்: முனைவர் பி. தமிழகன் கணினி மற்றும் நூல்வடிவமைப்பு: திரு. நல்லதம்பி (யாழினி கணினி) திருமதி. கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: முனைவர் பி. தமிழகன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் 1. தா வரிசைச் சொற்கள் 2 2. தி தீ 31 3. தீ 79 4. து தூ 95 5. தூ 128 6. தெ தே தை 145 7. தே 159 8. தை 173 9. தொ தோ தெள 179 10. தோ 220 11. ந 234 12. நா நி நீ 291 13. நி 323 14. நீ 338 ‘தா’ முதல் ‘நீ’ வரை தா வரிசைச் சொற்கள் தா தகர ஆகாரமாகிய இந்நெட்டெழுத்து ஓரெழுத்து ஒருமொழியாம். தா எனும் ஏவல் பொருளது. தாழ்தல், பரவல் என்பவற்றின் முதனிலை அளவில் நின்று பொருள் தருவது. தாழ்வில்லையா > தாவலையா. தாஅம் = பரவும். ஈதா கொடுவெனக் கிளக்கும் மூன்றும் இரவின் கிளவி ஆகிடன் உடைய - தொல். 927 தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே - தொல். 929 இனி, ஈ தா கொடு எனும் மூன்றும் முறையே இழிந்தோன் ஒப்போன் மிக்கோன் இரப்புரை - நன். 407 என்பதால் கொடுப்பவனினும் தாழ்வுடையவன் கேட்பது ஈ என்பதாம். ஈ யென இரத்தல் இழிந்தன்று - புறம். 204 ஈஎன்னும் ஒலியுடன் எப்பொழுதும் திரியும் ஈ எனப்படும் உயிரி எண்ணத் தக்கதாம். தாக்கல் தாக்குதல் > தாக்கல். தாக்கல்:1 சொல்லாலோ கருவியாலோ ஒருவரை வருந்தச் செய்தல். குத்திப் பேசுதல், அடித்தல், துன்புறுத்தல். தாக்கல்:2 செய்தி. ஊருக்கு ஏதாவது தாக்கல் உண்டா? என்பது ம.வ. தாக்கல்:3 ஒருவர் கருத்து ஒருவரிடம் படிதல். எ-டு: பாரதிதாசனார் தாக்கத்தை, அவர் பாடலில் காணலாம்; பாவாணர் ஆய்வை, அவர் தாக்கத்தில் காணலாம் தாக்கல்:4 தாக்கல் = செலுத்துதல். சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் ம.வ. தாங்கல் சுமை தாங்குதல் பொறுத்தல் முதலிய பொருள்களில் தாங்கல் வருதல் பொதுவழக்கு. அவருக்கு என்மேல் கொஞ்சம் மனத்தாங்கல் என்னும் வட்டார வழக்கில் தாங்கல் வருத்தம் என்னும் பொருளது. மனத்தில் துயர் தங்குவதாம் நிலை தாங்கலாயது. தாங்கல் என்பது தங்குதல் > தாங்குதல். இவ்வகையால் தாங்கல் என்பது ஏரி என்னும் பொருள் தாங்கியது. ஏந்தல், தாங்கல் என்பவை ஏரியின் பெயர்கள். இனி, ஏங்கல் தாங்கல் என்பது ஏங்கி வருவார்க்குத் தாங்கலாக இருப்பது ஏங்கல் தாங்கலாம். இவை முகவை மாவட்ட வழக்கு. தாங்குதல் தாங்குதல்:1 தாங்கும் அளவுக்கு அல்லது கொள்ளும் அளவுக்கு உட்கொள்ளுதல் தாங்குதல் ஆகும். மேலும் மேலும் வலியுறுத்தி உண்பிக்கப் பெறும் ஒருவர். இனித் தாங்காது என்று மறுப்பது கொண்டு தாங்குதல் என்பது தாங்கும் அளவு உண்ணுதலைக் குறித்தல் அறியப் பெறும். தாங்குதல்:2 தாங்குதல் = சுமத்தல். பெரிய குடும்பத்தை அவன் ஒருவனே தாங்குகிறான் என்பது ம.வ. தாங்குதல்:3 மிகவும் பரிவுடன் இருத்தல். அவன் பெண்டாட்டியைத் தாங்கு தாங்கென்று தாங்குகிறான் என்பது ம.வ. தாங்குவார் தரிப்பார் தாங்குவார் = வறுமைக்கும் துயருக்கும் களைகணாக அல்லது துணையாக இருந்து அவற்றைத் தவிர்ப்பார். தரிப்பார் = உற்ற போதெல்லாம் உடனிருந்து உரைஉள்ளத்தாலும் உடலாலும் உதவுவார். தாங்குவார், சுமை தாங்கி போல்வார். தரிப்பார் உடை போல்வார். இவ்வுவமைகளாலேயே தாங்குவார் தரிப்பார் இயல்பு புலனாம். தாங்குநர் என்பதை வள்ளல் என்னும் பொருளில் வழங்கும் பெரும்பாணாற்றுப்படை (18). தண்கடல் வரைப்பில் தாங்குநர்ப் பெறாது தாச்சி தா(ய்)ச்சி என்பது தலைமை என்னும் பொருளில் திருப்பாச்சேத்தி வட்டார வழக்காக உள்ளது. தாயே குடும்ப - இனத் தலைமை, தாய்த்தெய்வத் தலைமை என்பவற்றின் வழிவந்த ஆட்சி ஆகலாம். தாய்மொழி, தாய்நாடு, தாயம் என்பவற்றின் தலைமைத் தகுதியைக் கருதலாம். தாடி முகத்தின் கீழமைந்த கன்னப்பகுதி தாழ்ந்து இருப்பதால் தாடை எனப்படும். தாடையில் இருந்து தோன்றிக் கீழிறங்கும் முடிக்கற்றை தாடியாகும். தாடி வைத்தவர் எல்லாம் தாகூரா? (பாரதிதாசனார்). மரத்தில் கீழிறங்கிய கொம்பு தாடிக் கொம்பு. திண்டுக்கல் சார்ந்த ஓர் ஊர்ப்பெயர் தாடிக் கொம்பு. தாடியைத் தடவல் தாடியைத் தடவல் = கவலைப்படல். சில உணர்வுகள் சில செய்கைகளால் வெளிப்படும். அவ்வாறு வெளிப்படுத்துவனவற்றுள் ஒன்று தாடியைத் தடவலாம். தாடி இல்லாதவர் நாடியைத் தடவல் இவ்வகைத்தே. இழப்புக்கு ஆட்பட்டவர் செயலோடாத நிலையில் இருந்து தலையைப் பிடித்தல், நாடியைத் தடவல் ஆகிய செயல்களைச் செய்வர். அதனால் எவரேனும் காலைக் கட்டி உட்கார்ந்தாலும் தாடியைத் தடவினாலும் என்ன கப்பல் கவிழ்ந்து விட்டதா? என்பர். தாங்காத இழப்புக்கு ஆட்பட்டவர் செயலை ஏன் செய்கிறாய் என்பது வினவற் பொருளாம். தாட்டிகம் தாட்டிகம் = வலிமை, வல்லாண்மை. தாள் என்பது முயற்சி, வலிமை ஆகிய பொருள் தரும் சொல். தாட்டிகம் என்பது பிறரை அடக்கி ஆளலும், பிறர்க்கு மேம்பட நிற்றலுமாகிய தன்மை குறித்து வழங்கும் சொல்லாக உள்ளது. அவன் தாட்டிகமானவன் என்பதில் வலிமைப் பொருளும், அந்தத் தாட்டிகன் போய்விட்டான். ஊரே வைத்தவன் வரிசையாகி விட்டது என்பதில் வல்லாண்மைப் பொருளும் உண்மை புலப்படும். இது வல்லாண்மை வழிப்பட்டதே ஆகும். வன்கொடுமை வழிப்பட்டது அன்று. சிலர் அடாவடித்தனம் செய்வது தாட்டிகம் எனப்படாது என்க. தாட்டு ஓட்டு (தாட்டோட்டு) தாட்டு = தவணை சொல்லல். ஓட்டு = இல்லை போ எனச் சொல்லல். கடன் வாங்கியவன் தராமல் இப்பொழுது பிறகு என்று சொல்லிக் கொண்டு வந்தால் நான் இன்ன நாள் வருவேன் அன்று தாட்டோட்டுச் சொல்லாமல் தந்து விட வேண்டும். இல்லையானால் நடக்கப் போவது வேறு என்று சொல்லி எச்சரிப்பது நடைமுறை. கெடுக் கடந்து நிற்கும் பணத்தை வாங்க வருபவன் வாயில் இருந்து வரும்சொல் தாட்டோட்டாகும். தாட்டுப் பூட்டு தாட்டு = தடை. பூட்டு = அடை. ஒருவர் அடாச் செயலைச் செய்ததாகவோ, கூடாச் சொல்லைக் கூறியதாகவோ அறிந்த ஒருவர் தாட்டுப்பூட்டு என்று குதிப்பர்; ஊரைக் கூட்டியும் விடுவர். அவனை எங்கும் போக விடாதே; தடுத்து நிறுத்து; வீட்டுக்குள் போட்டுப் பூட்டு; நான் உண்டா இல்லையா என்று பாராமல் விடமாட்டேன் என்று வன்ம உரைகள் கூறுவது கொண்டு தாட்டுப்பூட்டு எனும் இணைச்சொல் உண்டாயது. தாட்டு > தட்டு = தடுத்தல். தட்டோர் அம்ம இவண் தட்டோரே என்பது புறம் (18). கிளித்தட்டு என்பது தடுத்து விளையாடும் சிறுவர் ஆட்டம். தாண்டகம் நாற்சீரால் ஆகிய அளவடியைத் தாண்டி (மிகுந்து) வருவது தாண்டகமாகும். ஆறு சீர்களாலேனும் எண்சீர்களாலேனும் ஆடவரை யாவது கடவுளரையாவது புகழ்ந்து பாடுவது தாண்டகம் ஆகும். இவற்றுள் ஆறு சீர்கள் வரப்பாடுவது குறுந்தாண்டகம் என்றும், எண்சீர்கள் வரப்பாடுவது நெடுந்தாண்டகம் என்றும் பெயர் பெறும். அப்பரடிகளும், திருமங்கை மன்னரும் பாடிய தாண்டகங்களைக் காண்க. நாவுக்கரசருக்கு ஒரு பெயர் தாண்டக வேந்தர் என்பது. நான்கு அடிகளுக்கும் எழுத்து எண்ணி ஒத்த அளவால் வருவது தாண்டகச் செய்யுளாகும். மூவிரண் டேனும் இருநான் கேனும் சீர்வகை நாட்டிச் செய்யுளின் ஆடவர் கடவுளர்ப் புகழ்வன தாண்டகம்; அவற்றுள் அறுசீர் குறியது நெடியதெண் சீராம் - பல்காய. பன்னிரு. 307 இனித் தாண்டகம் நான்கடியும் அளவொத்து வருவது அளவியல் தாண்டகம் என்றும், அளவு அழிந்து வருவது அழிவழித் தாண்டகம் என்றும், சந்தமும் தாண்டகமுமாக வருவது சந்தத் தாண்டகம் என்றும் யாப்பருங்கல விருத்தியுடையார் காட்டுவர். எண்சீரின் மிக்குத் தாண்டகம் வருதற்கும் அவர் எடுத்துக்காட்டுத் தருவர் (95). இருப்பத்தேழு எழுத்து முதலாகக் குறில் நெடில் ஒத்து வருதலைக் கணக்கிட்டுக் காட்டுவார். இருபத் தேழெழுத் தாதி யாக உயர்ந்த எழுத்தடி யினவாய் எழுத்துங் குருவும் இலகுவும் ஒத்து வந்தன அளவியற் றாண்டகம் எனவும் அக்கரம் ஒவ்வாதும் எழுத்தல கொவ்வாதும் வந்தன அளவழித் தாண்டகம் எனவும் பெயர்பெறும் - முத்துவீ. 1116 தாதாரி தாய்வழியில் வந்த உரிமையாளர் (பங்காளி) தாதாரி எனப்படுதல் விருதுநகர் வட்டார வழக்காகும். தாய்தாரி > தாதாரி. பட்டம் தாங்கியவர் பட்டதாரி எனப்படுவது போன்றது. தாரம் = தன்னுடைமையானது. தாரம் அரும்பொருள், மணப்பொருள். தாதியர் தாய்போல் உதவும் தொண்டுள்ளம் படைத்தவர் தாதியர். தாதையர் x தாதியர். பொருள் நாட்டம் உடையராய்ப் பரத்தமை கொண்டார்க்கு இச்சொல் திரிபுற்றுத் தாசியர் ஆனமை குமுகாயச் சீர்கேட்டுச் சான்றாம். தாதன் தாதி, தாசன் தாசி என்பவை அடிமைப் பொருள் பட்டமை முன்னைக் குமுகாயக் கேட்டின் பெருஞ்சீர்கேடாம். தொண்டுக்கு இருந்த இறைமைச் சீர் இழிமையுற்ற வகை இது. தாது தாது:1 பொன், பொன் போன்ற பூம்பராகம் (மகரந்தம்). பொன்போலும் தேமல், அழகு தேமல் எனப்படும். தாதுண் தும்பி - மதுரைக். 655 தாது:2 தாது = தூசி, மட்புழுதி. தாதுலராத கோதை தன்னொடும் தழீஇ (திருவிளை யாடல் புராணம், மாமனாய் வந்து வழக்குரை காதை) எனும் தொடரில் பயின்று வரும் தாது என்பதற்குத் தூசி, மண் புழுதி ஆகிய பொருள்களே பொருந்தும் என்பார் நூற்றுக் கவனகர் செய்குதம்பிப் பாவலர். கதைப்படி தலைவியானவள் செல்வத்தை யும், கணவனையும் இழந்துவிட்டதனால், பொன்னோ மலரின் மகரந்தமோ அவள் கூந்தலில் இருக்க வாய்ப்பில்லை என விளக்கமும் கொடுத்துள்ளார். தாதை தந்தையின் தந்தை தாதை எனப்படுவார். தாதா தாத்தா என்பவர் அவர். தந்தையும் தாதை எனப்படுதல், தாதையர் சொல இராமன் காடு போதல் - தனிப். என்பதால் தந்தை தாயர் இருவரையும் குறித்தலும், தாயைக் குறித்தலும் கொள்ள வாய்க்கின்றது. தாத்து தாழ்ந்து பள்ளமாக உள்ள இடத்தைத் தாத்து (தாழ்த்து) என்பது தென்தமிழக வழக்காகும். தாழ்த்து = தாழ்வான இடம். தாபதம் கணவனை இழந்த மனைவி கொள்ளும் கடைப்பிடி நோன்பு தாபதம் என்று வழங்கப்படும். காதலன் இழந்த தாபத நிலை - தொல். 1025 தாமணி ஆடு, மாடுகளை வரிசையாகக் கட்ட உதவும் கயிற்றைத் தாமணி என்பர். தாம்பு + அணி = தாம்பணி > தாமணி. தாமணி கண்ணி தாம்பு மாகும் - பிங். 1592 தழுவு தாமணியே தாம்பு பசுக்கட்டுங் கயிறதாகும் - சூடா. 7.6 தாம்பு = கயிறு. தண்ணீர்த் தாம்பு என்பதும் வழக்கு. தாமணி தாவணி எனத்திரியும். தாம்பணி > தாமணி > தாவணி. மாட்டுத்தாவணி என்பது மாடு விற்று வாங்கும் சந்தையாகும். தாவணி என்பது வழுவழக்காம். தாமரை தா + மரை = தாமரை. தாழ்ந்த நீர் நிலையில் வளர்வதும் இலை அடைசலாக மருவிக் கிடத்தலாலும் தாமரை எனப்பட்டதாம். சிவந்த அதன் பூ நிறம் போன்ற மாழை தாமிரம் அல்லது செம்பு எனப்பட்டது. பின்னே வெண்ணிறப் பூப் பூக்கும் தாமரை ஒன்று தோன்றியதால் வேறுபடுத்தற்குச் செந்தாமரை வெண்டாமரை என்றனர். ஆனால் பொது வகையில் தாமரை என்றால் செந்தாமரையையே சுட்டும். பூவெனப் படுவது பொறிவாழ் பூவே என்பது வழங்கு மொழி. பொறி = திருமகள். தாமிரப் படிவுடைய நிலத்தில் ஓடிவரும் ஆறு தாமிரவருணி என்பதும், ஐந்தவைகளில் தாமிரவருணி ஓடிவரும் பகுதியில் உள்ள திருநெல்வேலித் திருக்கோயில் தாமிரவவை என்பதும் கருதத் தக்கவை. தாமிரப்பட்டயம் என்பது செப்புப் பட்டயம் (அ) செப்பேடு ஆம். தாமிரவருணிக் கரையகத்ததோர் ஊர் செப்பரை என்பதாம். தாமரை நோன்பு மாலையில் தாமரை மலரில் புகுந்த வண்டு, ஆங்கிருக்கும் போதில் கதிர் மறைதலால் மலர் மூடிக்கொள்ள ஆங்கேயே தங்கியிருந்து காலையில் கதிரோன் எழும்பிய அளவில் அம்மலர் மலர்தலால் வெளிப்பட்டுச் செல்வதாய மலரை, இரவெல்லாம் கையில் கொண்டிருந்து நோன்பு கொண்ட தலைவி, அம் மலரைத் தோழியிடம் கொடுத்தலைப் பற்றிப் பாடுதல் தாமரை நோன்பு என்பதாம். அது கலிவெண்பாவால் இயற்றப்படுவதாம். கங்குலின்வண் டேந்திநகை கால்பானு வான்மலர்த்திப் பங்கய மாதொருத்தி பாங்கியிடம் - செங்கை கொடுக்கவே கூறலேடார் தாமரை நோன்பாம் எடுத்தல் கலிவெண்பா வே - பிர. திர. 24 மாலையில் தாமரையுள் புகுந்த வண்டு காலையில் வெளிப் படுதல் முருகாற்றுப்படை, சிலம்பு ஆகியவற்றில் அறிந்த செய்தி. கவிமணி, நினைவும் முடிவும் என்னும் பாடலிலும் குறிப்பார். தாமரையை ஏந்தியிருந்து நோற்றலால் தாமரை நோன்பு எனப்பட்டது. இது திருமகளை நோக்கிய நோன்பாகலாம். தாம்படிப்பு களத்தில் மாடு கட்டிப் போரடித்தல் பிணையல் எனப்படும். பிணையல் = ஒன்றோடு ஒன்று பிணைத்து மாடுகளை மிதிக்க விடுதல். பிணைத்தற்கு உரிய கயிறு தாம்பு ஆகும். தாம்பால் பிணித்து மிதிப்பதால் (கதிரடித்தல் போல) தாம்படிப்பு என்பது கம்பம் வட்டார வழக்காகும். தாம்பு + அணி = தாம்பணி, (தாவணி) எனல் அறிக. தாயமாடல் தாய் + அம் = தாயம் = தாயினின்று பெறும் உரிமை. ஆடல்= விளையாடல். தாயமாடல் = சீட்டுப் போடுவது போல் முத்தும் பலகறையும் போட்டு உடன் பிறந்தார் பாகம் பிரித்தல்; முத்தினாலும் பலகறையினாலும் விளையாடிப் பிறர் உரிமையைப் பெறுதல் அல்லது பறித்தல். தாயமாடிக் காலத்தை வீண் போக்குவது போல் வேலை செய்யாமல் காலங்கழித்தல் அல்லது தாழ்த்தல். வேலை தாயமாடுகிறது என்னும் வழக்கை நோக்குக. தாயமாட்டுதல் தாய் தந்தை வழி உரிமை பாராட்டித் தடுத்து வைத்தல். தாயமாட்டி விட்டார்கள்; இல்லாவிடில் நேற்றே வந்திருப்பேன் என்பது வழங்குமொழி. இது நெல்லை வழக்கு. தாயம் என்பது தாயவிளையாட்டு. அவ் விளையாட்டில் ஈடுபட்டவர் எழுந்து வருதல் அருமை. ஆதலால் அதன் வழி உண்டாகிய வழக்குச் சொல்லும் ஆகலாம். தாயம் தாயம்:1 தாய்வழியினர் தாயம் ஆவர். தாயத்தார் என்பாரும் அவர். தாயம்:2 தாய பாகம் எனப்படும் தாய்வழிச் சொத்து. தாயம்:3 தாயம் vdக்TறிவிளையாLம்விளையாட்L. அது சிற்றூர்களில் புளிய முத்துப்போட்டு உருட்டி ஆடும் ஆட்டமாம். தாய் ஆய் > தாய். ஆகி - உண்டாகி - கருவாகி - இருந்தவள் ஆய். கருக்கொள்ளுதல் ஆகியிருத்தல் என்றும் உண்டாகி யிருத்தல் என்றும் கூறப்படும். ஆய் தம் உரிமை ஒட்டுடன் தம் ஆய் > தாய் என ஆயது. தந்தை தாய்ப் பேண் - ஆத்தி. தாய்சொல்லைத் தட்டாதே - ம.வ. தாய்ச்சீலை தாய்ச்சீலை = கோவணம். தாயின் சீலை கிழிந்து போக அதில் ஒரு பகுதியை எடுத்துச் சிறாரும், பெரியரும் அரையில் மான மறையாகக் கட்டிய துணி தாய்ச்சீலையாம். இதனை நீர்ச்சீலை, குளிசீலை, கச்சணம் (கௌசணம்) எனவும் பிறவாறும் வழங்கல் உண்டு. குறி மறைத்து இறுக்கிக் கட்டிய உடையாக இருந்தமையால், அது குறியிறை எனவும் பட்டது. அவ்வாறு உடுத்த பெரியரும் - துறவரும் - உளர். அவருள் ஒருவர் குறியிறையனார் எனப்பட்டார். அவர் சங்கச் சான்றோர். தாரகை தாரகை:1 நீண்ட வரிசையில் அமைந்த விண்மீன் பெயர், பின்னர்ப் பொதுவில் விண்மீன் என்னும் பொருள் தரலாயிற்று. தாரகை:2 விண்மீன் மின்னும் ஒளியுடையது போல் உடை, அணி ஒப்பனைக் கோலங்களால் மினுங்குவார் தாரகை எனப்பட்டனர். தாரகை:3 தன்னியல் மறைத்தும் செயல்மறைத்தும் திரையில் மின்னும் நடிக நடிகையர் தாரகை எனப்பட்டனர். தாரகை மாலை தாரகை = கண்மணி, விண்மீன் (வெ.வி.பே.) (கண்மணியென) இருபொருள்களை இணைத்து இருபத் தேழு பாடல்கள் பாடுவது தாரகை மாலை எனப்படும் என்பார் பன்னிரு பாட்டியலார். அரிய கற்புடைய மகளின் மாண்புகளை வகுப்பால் கூறுவது தாரகை மாலை என்பார் இலக்கண விளக்கப் பாட்டியலார். இரண்டு பொருள்புணர் இருபத் தெழுவகைச் சீரிய பாட்டே தாரகை மாலை - பன்னிரு. 305 வகுப்பாற் கற்புடை மகளிர்க் குள்ள தகைத்திறம் கூறுதல் தாரகை மாலை - இலக். பாட். 107 இனித் தூசிப் படையைப் புகழ்ந்து வகுப்பால் ஒன்பது கவி பாடுவது தாரகை மாலை என்பார் வெண்பாப் பாட்டியலார் (32). தாரம் தாரம்:1 பரிசாகவும் நினைவுப் பொருளாகவும் மதிக்கத்தக்கதாகவும் அமைந்த உயர்பொருள் தாரம் எனப்பட்டது. தாரம்:2 ஐம்புல இன்பமும் ஆறாம் புலமாம் மனப்புலக் கொடையும் ஒருங்கே வழங்கும் மனைவியில் சிறந்த நிறைசெல்வம் வேறின்மை யால் தாரம் எனப்பட்டார். தாரம் வாய்ப்ப தெல்லாம் தவப்பயன் என்பது ம.வ. தாரம்:3 தாரம் = அரிதாரம் முதலாம் மணப்பொருள்; மணமும் எழிலும் கவர்ச்சியும் தரலால் தாரம் எனப்பட்டதாம். தாரா ஒரு பறவையின் பெயர். அது பெரிதும் நீரில் உணவு கொள்ளும் பறவை. நீரில் நீந்தும் பறவை; கூட்டமாக ஒரு படகு செல்வது போலச் செல்லும் பறவை. தார் என்பது நீண்டு செல்வது. தாரை என்பது நீர். தாரை வார்த்தல் என்பது தண்ணீரை விடுதலாகும். வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள என்னும் தொல்காப்பிய நூற்பாவொடு (800) இணைக்கத்தக்கது தார் (தாரை) என்பது. தாரையில் வாழும் பறவை தாரா எனப் பட்டது. உழவரோதை, நாரை ஓதை, தாரா ஓதை ஆகியவை கலந்த கழனியை, எருதோ டுழல்கின்றா ரோதை - குருகொடு தாராத்தோ றாய்ந்தெடுப்பும் தண்ணங் கழனி என்கிறது திணைமாலை நூற்றைம்பது (139). கழிகளில் மேய்வதால் தாரா, கழியன் என்றும் குவா குவா என்று ஒலிப்பதால் வாத்து என்றும் பெயர் பெறும். தாராவின் கால்கள் குறுகியவை; கால்விரல்கள் சவ்வுப் படலம் உடையவை. குறுங்கால் அன்னம் - குறுந். 304 துதிக்கால் அன்னம் - ஐங். 106 இவ் வன்னப் பறவை தாரா, வாத்து, கழியன் எனப் பட்டவையாம். சங்க நூலில் வரும் அன்னம், பாலும் நீரும் பிரித் துண்ணும் தன்மையுடைய புனைவுடையது அன்று. அது பின்னாளைய புனைவு. நீர்வாழ் பறவையுள் ஒருவகை அன்னம் விண்ணில் மாலை வட்டமாய் விரைந்து பறப்பவை. அவை மெல்லிய தூவி (இறகு) உடையவை. அன்னச் சேவலை நோக்கி, குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை யாயின் என்பது புறப்பாடல் (67). நிலந்தாழ் மருங்கின் தெண்கடல் மேய்ந்த இலங்குமென் தூவிச் செங்கால் அன்னம் என்பது நற்றிணை (356). அன்னம் ஆரம் போல வானில் பறந்து போதல் வலசை போதல் எனப்படும். வண்ணம் எதுவும் கலவா வெண்மைத் தோற்றம் தந்தமையால் அன்னம் (அற்றது) எனப்பெயர் பெற்றது. பின்னே கரிய நிற அன்னம் தோன்றியதால் அது காரன்னம் எனப்பட்டது. தாராளம் தார் என்பது படை . பகைவர் நாட்டில் செல்லும் படைஞர் தமக்கு அகப்பட்ட பொருள்களை எல்லாம் தமக்காக அள்ளிக் கொள்வதுடன் தம்மொடு வருவார்க்கும் கேட்பார்க்கு மெல்லாம் வழங்குதல் தாராளம் ஆகும். இது பொதுவழக்கு. தாரி தாரி:1 தார் என்பது நீண்டு குறுகிய நிலம். நெடும் போக்காக இருப்பது. அதன் வரப்பும் அதற்குத்தக நெடிது செல்லும். தாரி என்பது தாரியாம் நிலத்து வரப்புக்கு ஆகி, அது நடைவழி ஆதலால், நடைவழி என்னும் பொருளும் தருதல் மதுரை வழக்காகும். தாரி:2 தாரி என்பது சொல்லின் பின்னொட்டாகவும் வரும். எ-டு: வேடதாரி, பட்டதாரி. தாரை நீர்; நீர் நில்லாமல் பள்ளம் நோக்கி நீண்டு செல்வதால் தாரை எனப்பட்டது. தாரை வார்த்தல் என்பது தண்ணீரைக் கையில் விட்டு இனி உன்னைச் சார்ந்தது என்னும் ஒப்படைப்பு உறுதிச் செயல். தாரை = தாரகை, விண்மீன். அட்டில் நீர் வெளிப்படும் வாய் சலதாரை எனப்படும் (ம.வ.). தார் நீண்டு செல்வது, நீளமானது தார். நீர் கொட்டிய அளவில் நில்லாமல் நீண்டு செல்லுதலால் தாரை எனப்பட்டது. நீண்ட நிலம் தார் எனப்படும். எ-டு: தெற்குத்தார். நீண்ட வாழைக்குலை, தார் எனப்படும். வாழைத்தார். மலர்களால் தொடுக்கப்பட்டு நீண்டிருக்கும் மாலை, தார் எனப்படும். நீளவிட்டு வேட்டியைக் கட்டி மடித்துடுத்தல் தார்ப் பாய்ச்சுதல். மாடோட்டும் முள்ளும் சாட்டை வாரும் அமைந்த கோல் தார்க்கோல். தூசிப்படை. தார்தாங்கிச் செல்வது தானை (திருக். 767). ஒருபாடலுக்கு விரித்துரைக்கும் உரை தார்ப்பரியம். தார் போடல் தூண்டிச் சுறுசுறுப்பாக்கல். தார் என்பது இருப்பால் ஆன கூர்முள். அதனைத் தன்னிடம் கொண்டது, தார்க்குச்சி, தார்க்கம்பு, தார்க்கோல் எனப்பல பெயர்களைப் பெறும். தார் போட்டுக் குத்தி அச்சுறுத்தி மாட்டை ஓட்டுவது வழக்கம். ஆதலால், தன்னியல்பாக நடக்கும் மாட்டை விரைந்தோட்ட உதவுவது தார் ஆகும். அத்தார் போலச் சிலரைச் செயலாற்ற வைக்கும் சொல்லும் தார்போடல் என வழக்கில் வந்தது. அவனைத் தார் போடாமல் கிளப்ப முடியாது; தார் போட்டாலே என்ன என்று கேட்காதவன், இப்படி நயமாகச் சொல்வதைத்தானா கேட்கப் போகின்றான் என்பர். தார்க்குத்தை யும் பார்த்து விடுவோம் எனச் சில மாடுகள் இருப்பது போல இருப்பவரும் இருத்தல் கண்கூடே. தாலாட்டு நாற்சீர் ஈரடி ஓரெதுகைக் கண்ணிகளாகத் தாலாட்டுப் பாடல் வரும். சீராமர் தாலாட்டு முதலியவை இவ்வகையில் அமைந்த நூல்களாம். பேராம் அயோத்திப் பெருமானைத் தாலாட்டச் சீரார் குருகையர் கோன் சேவடிகள் காப்பாமே அல்லி அரசாணி மாலை, பவழக்கொடி மாலை, இவ் வகைக் கண்ணிகளால் வருவனவேயாம். இவை மாலை எனப் பெயர் பெறுவதைக் கருதி அந்தாதி எனக் கொள்ள வேண்டு வதில்லை. தொடர் கதை, தொடர்ந்து வரும் பாடல் என்னும் பொருளில் வருவது இம்மாலையாம். பெரியாழ்வார் பாடிய கண்ணன் திருத்தாலாட்டு கவின்மிக்கது. கவிமணி, பாவேந்தர் முதலியவர்கள் பாடிய தாலாட்டுகள் புதுமணம் கமழ்வன. தாய்மார் வளர்த்த தமிழ் தாலாட்டாம். தாலாட்டு, ஆர் ஆரோ ஆர் ஆரோ ஆரிவரோ ஆராரோ என்னும் எடுப்புடன் தொடங்குவதால் ஆராட்டு என்றும் கூறப்படும். தொட்டிலில் தொங்கப் போட்டும் நாவசைத்தும் பாடுதலால் தாலாட்டு என்றும் கூறப்படும். தால் = நா, தொங்குதல். தாலி தாலி என்பது தால் ஆகிய நாக்குப் போல் அமைப்பும், அதனைப் போல் தொங்குவதுமாம் அணி. பொற்றாலி, புலிப்பல் தாலி ஐம்படைத் தாலி எனப்பல வகையாம். வெள்ளையாட்டின் தாடையில் தொங்கும் தசைக்கட்டி தாலி என வழங்கும். தாலம் என்பது பனை; அதன் ஓலையைச் சுருட்டிக் கட்டிக் கழுத்தில் மங்கல அணியாகத் தொங்கவிடும் வழக்கத்தால் தாலி எனப்பட்டது. பனையில் காய்ந்த ஓலை பொன்னிறத்தது என்பது பொற்றாலிச் சான்றாம். மஞ்சள் கிழங்கும் தாலியாகப் பயன்படல் உண்டு. தாலிகட்டல் திருமணச் சடங்கில் முதன்மை பெறுவது திருநாண் பூட்டல் அல்லது தாலி கட்டல். எவ்வளவு வேலை இருப்பவரும் தாலி கட்டும் வரை திருமணத்தில் இருத்தல் அதன் மதிப்புணர்த்தும். திருமணம் என்பது அதுவே எனவும் உணரச் செய்யும். தாலிகட்டு ஈழத்தில் திருத்தாலி கட்டுதல் என வழங்குகின்றது. அன்றியும் திருத்தாலி கட்டித் திருவிளக்கு ஏற்றுதல் என்று வழங்கும் தொடரால் மணமக்கள் திருவிளக்கேற்றல் வழக்கமும் விளக்கமாம். மனைவிளக்கு என்னும் பழைய ஆட்சியும், குடும்ப விளக்கு என்னும் புத்தாட்சியும் போற்றும் நடைமுறை இதுவாம். தாவடி தாழ்ந்த அடி என்பது தாவடி எனல் பொதுவழக்கு. மரத்தின் தாழ்ந்த கிளையைத் தாவடி என்பது மதுரை மாவட்ட வழக்காகும். தாழ்வு > தாவு. எ-டு: வீழ்வு > வீவு. தாவிலை உடல்நலம் தேறி வருபவர்களைப் பார்த்துத் தாவிலையா? (தாழ்வில்லையா, தா = துயரம்; துயரம் இல்லையா) எனக் கேட்பது வழக்கம். தா = குற்றம், பழுது, கேடு எனப் பொருள்படும். தா + இல் = தாவில் என்றும், தாவிலை என்றும் வரும். இஃது ஒரு பழஞ்சொல். தாவில் கொள்கை (தொல். 73); தாவின்று (புறம். 373); தாவின்று கழிக (நற். 271); தாவில் ஊழி (முருகு. 164); தாவில் விளக்கம் (திருக். 853). தாவிலை = தேவலை என்றும், தேவலாம் என்றும் உலக வழக்கில் வழங்கும் வழு வழக்குகள். தாவு வீழ்வு என்பது வீவு என்றும், வாழ்வு என்பது வாவு என்றும் வழங்குவது போல் தாழ்வு என்பது தாவு ஆவது வழக்கு. தாழ்வு = பள்ளத்தாக்கு, கிடங்கு. மேடு தாவு பார்த்து வண்டியோட்டு என்பது வேளாண் தொழில் வழக்கு. கழுத்தின் கண்டத்தின் கீழேயுள்ள குழியைத் தாவு என்றும் கூறுதல் உண்டு. தாவைப் பிடித்து நெரித்து விட்டான் என்பர். இவை தென்தமிழக வழக்குகள். தாழி தாழி:1 குதிர்போன்ற பெரும்பானை. நிலத்தை அகழ்ந்து (தோண்டி) அதனுள் தாழப் புதைத்து வைத்து மூடுதலால் பெற்ற பெயர் தாழி. உயர்வு x தாழ்வு. நிலத்தின் அடியில், இறந்தாரைப் புதைத்து வைக்கப் பயன்படுத்தியமையால், முதுமக்கள் தாழி என வழங்கப்பட்டது. புதைத்தல், சுடுதல் என்னும் இருவகை வழக்குகளில் முன்னது இது. கட்பெருந்தாழிகளும் உண்டு. அது காடித்தன்மை (புளிப்புத் தன்மை) மிகுவதற்காக நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டது. மாடு நீர் அருந்துவதற்காகத் தாழிகள் வைத்துநீர், பழங்கஞ்சி, ஊறல் ஆகியவை வைக்கப்பட்ட குழிதாழிகள் உண்டு. அவை குடிக்கப் பயன்பட்டமையால் குடிதாழி எனவும் வழங்கப் பட்டன. தாழி:2 தாழ்ந்து நிற்கும் மழை முகில். கடல் மட்டத்தை ஒட்டித் தாழ்ந்து நிற்கும் மழைமுகில் தாழி எனப்படுதல் பொருள் பொதிந்த ஆட்சியாகும். தாழியின் நிலப்பகுதி நகர்வு நன்மழையாகி வளம் சேர்க்கின்றது. பெரும்புயல் அழிவு போல அழிவு இல்லாமல் பெரிதும் அமைந்த ஆக்கமாக அமையும். அதன் பயன்பாட்டை நோக்கும் போது, அப்பெயரீட்டின் அருமை மேலும் சிறப்புறுகின்றது. வானிலை ஆய்வின் பயன்சொல்லாக இந்நாள் பெருவழக்கில் ஊன்றியுள்ளது. தாழிசை மாலை தாழிசை என்னும் பா இன வகையால் பாடப்படுவதொரு நூல் தாழிசை மாலை. திருச்சிராப்பள்ளி, சக்தி தாழிசை மாலை தண்டபாணி அடிகளால் பாடப்பட்டது. 34 தாழிசைகள் கொண்டது. தாழை தாழை:1 புல்லின நிலைத்திணைகளுள் ஒன்று தாழை. அது நெடிய மடலைக் கொண்டது. எனினும் செறிந்தமைந்து கீழே கீழே தாழ்தலால் தாழை எனப்பட்டது. தாழை வகை பலப்பல. கெட்டித் தன்மை மிக்கது கல்தாழை கற்றாழை; அதில் ஒருவகை சோற்றுக் கற்றாழை; சோறாவது மடலுள் உள்ள கூழ்ப்பதமான வெண்ணிறப் பொருள். மடல் பெரிது தாழை. அதன் பூ மணமும் காற்றில் நெடுந்தொலை பரவ வல்லது. தாழம்பூ மகளிர் அணியும் பூவகையுள் ஒன்று. ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம்; உள்ளே பார்த்தால் ஈரும் பேனும் என்பது பழமொழி. தாழை விரிவெண் தோட்டில் மடல் எழுதப்பட்டமை, முதிர்பூந் தாழை முடங்கல் வெண்தோட்டு விரைமலர் - சிலப். 8:49-50 என்பதால் விளங்கும். தாழையூற்று, தழுதாழை, தாழைக்குடி எனத் தாழையின் பெயருடைய ஊர்கள் பலப்பல. நாகதாழை என்பது படமெடுக்கும் பாம்பு போல் மடலுடை யது. அம் மடலை வாட்டி எடுத்த சாறு காது வலியை அகற்றும் மருந்தாம். அத் தாழையை மருள் எனவும் நாகதாழி எனவும் வழங்குவர். தாழை:2 தாழை மேலெழாமையுடன் கடற்கானல் அலையால் தாழ்ந்தும் உயர்ந்தும் எழுந்து நிற்கும் தன்மையும் உடையதாம். வீழ்தாழ் தாழை என்பது பெருவழக்கு (நற். 78; குறுந். 228; பட். 84; கலி. 131; அகம். 20). தாழைக்குக் கண்டல் என்பதொருபெயர். கண்டல் என்பது முள் உடையது. கத்தரி வகையுள் ஒன்று கண்டங்கத்தரி; முள்ளுடையது அது. முள்ளாலும் முட் செடியாலும் அமைந்த வேலி கண்டல் வேலி எனப்படும். கைதை வேலிக் கழிவாய் வந்தெம் பொய்தல் அழித்துப் போனார் என்பது சிலம்பு (7:43). கண்டல் எனப்படும் தாழை கடற்கானல் அலையால் தாழ்ந்து உயர்தலை, அழுவ நின்ற அலர்வேய் கண்டல் கழிபெயர் மருங்கின் ஒல்கி ஓதம் பெயர்தரப் பெயர்தரப் பெயர்தந் தாங்கு என்பது குறுந்தொகை (340). தாழை:3 தாழையினும் தாழ்ந்த உயர நிலைத்திணை இருந்தும் இது தாழை எனப்பட்டது, இதன் இனமான தென்னை, பனை, கமுகு என்பவற்றை ஒப்பிட்டு நோக்கத் தெளிவாம். தாழையின் பூ, கற்றையானது; மணமிக்கது; மிகு நாள் மணம் உடையது; தன் இருப்பைத் தன்மணத்தால் காட்டுவது. தாழ் உயரத்திலிருந்து இறங்கும் சரிவு தாழ்வரை, தாழ்வாரம் பூட்டைத் திறக்கும் கோல், தாழ்க்கோல், தாழக்கோல் திறப்பு என்பது ம.வ. தாழ்முன் கோல்வரின் அக்குச் சாரியை வரும் என்பது இலக்கணம் (தொல். 384). தாழ் = ஏவல்; பணி என்னும் பொருளது. தாழ்வாரம் வீட்டு முகப்பில், மேலே உயர்ந்து கீழே தணிந்து மழைநீர் வழிந்தோடுவதற்காக அமைக்கப்பட்ட கட்டடப் பகுதி வாரம் எனவும் தாழ்வாரம் எனவும் வழங்கும். வாரம் = நீர் வழிந்தோடத் தக்க சரிவுப் பகுதி. சுவரைத் தாண்டி நீண்டு செல்லும் கூரை அல்லது தகடு உடையது. கன்மாவினாலேயே வாரம் அமைப்ப தும் இக்கால வழக்கு. ஏட்டைக் கட்டி இறைவாரத்திலே வை என்பது பழமொழி. தாவாரம் இல்லை தனக்கொரு வீடில்லை என்பது குதம்பைச் சித்தர் பாடலில் வரும் இரட்டுறல் அடி. இறைவாரம் = தாழ்வாரம். தாளம் போடல் தாளம் போடல்:1 தாளம், தாள் என்பதில் இருந்து தோன்றினாலும், பின்னர்க் கால்தாளம், கைத்தாளம் என இரண்டாக விரிந்ததாம். கால்தாளம், உதைத்தலால் உண்டாவது. கைத்தாளம் குட்டுதல், அடித்தல், அறைதல், இழுத்தல் ஆகியவற்றால் உண்டாவது. ஒழுங்காக இருக்கிறாயா? தாளம் போடவா? என்றால் அடிக்கவா மிதிக்கவா என்னும் பொருளில் வருவதாம். அத்தாளம் என்பது வேறொரு வகையது. அல் = இரவு; தாலம் > தாளம் = சோறு; அற்றாளம், இரவுணவு. தாளம் என்பதற்கு அடி என்னும் பொருள் வந்த பின் அத்தாளம் எனச் சிதைவடைந்த சொல்லுக்கும் அப்பொருளே வழக்கில் வந்து விட்டது. தாளம் போடல்:2 தாளம் போடல் = வறுமைப்படல். தந்தனாப் போடல் போல்வது. தாளம் போடல் என்பது. தாளம் போட்டுக் கொண்டு பிச்சை எடுப்பாரைப் பார்த்தால் இதன்பொருள் விளங்கும். சிலர் தங்கள் வயிற்றிலும் மார்பிலும் தாளிலும் தாளம் போட்டுக் கொண்டு இரப்பது கண்கூடு. தாள் என்னும் காலடியால் அளவிட்டு உண்டாக்கியது தாளமா யிற்றாம். தாளாண்மை தாளின் ஆளுமையால் அமைவது தாளாண்மை; அதனை உடையவர் தாளாளர். தாளாவது கால். நிற்றல் இயக்கம் இருத்தல் ஆகிய எல்லாமும் தாளால் அமைவன. அதனால் தாள் என்பது முயற்சியாயிற்று. முயற்சியே திருவினை ஆக்கலால், தாளாளர் கடன்படா வாழ்வினர் (திரிகடு. 12) எனப்பட்டார். செயல் வீறுடையார் தாளாளர் ஆதலால் கல்வி நிறுவனச் செயலர் தாளாளர் எனப்பட்டார். தாள் (கால்) இயக்கமே கால்நடை, மிதிவண்டி, உந்து, தொடரி, வானூர்தி முதலாம் இயங்கிகளின் இயக்க ஆழிகள் (சக்கரம்). தாளி தாளியடித்தல் என்பது சங்க நூல் ஆட்சி. பயிர்களின் செறிவைக் குறைக்கப் பலகு என்னும் சட்டத்தை ஓட்டுதல் பலகடிப்பு எனப்படும். அது பல் பல்லாக இருக்கும் கருவி. பலகடிப்பைத் தாளியடித்தல் என்பர் புறநாறூற்றுப் பழைய உரைகாரர் (120). பலகடித்தல் என்பது பல்லியாடல் என்பது பழவழக்கு. நெல்லை வழக்கு இது. தாள் தாள், நெல் தாள், புல்தாள், கேழ்வரகுத்தாள் என வழங்குகிறது. தாள் = அடி. அடி சார்ந்த பயிரிதழ். அது மரத்திற்கும் ஆகியது. நடக்க உதவும் கால் நிலத்தில் ஊன்றிப் பயிர்போல் நிற்றலால் அதுவும் தாள் எனப்பட்டது. ஒரு பயிர் செய்து அதனை விளைந்தபின் அறுத்து, அறுவாய் மீளவும் வளரும் வகையில் இரண்டாம் பயிராக்குவது தாளடி எனப்படும். தாள்கள் பலவற்றை ஊற வைத்து அழுக்கை மருந்துகளால் அகற்றி அரைத்துக் கூழாக்கி எழுதுவதற்குப் பயன்படுத்திய நிலையில் அதன் அடிப்பொருளை மறவாமல் தாள் என வழங்கினர். பேப்பர் என்பதன் பொருளை அது தருவதாயிற்று. எம் முயற்சியும் ஊன்றிச் செய்தாலே செய்ய முடியும் ஆதலால் அவ்வூன்றுதல் பொருளிலேயே தாள் முயற்சிப் பொருள் தருவதாயிற்று. தாளாற்றித் தந்த பொருள் - திருக். 212 தாள் தப்பட்டை தாள் = நெல் புல் இவற்றின் தாள்; எழுது பொருளாம் கடிதத்தாளுமாம். தப்பட்டை = மேற்குறித்த தாள்களின் சிதைவு. இனித் தப்பைப் பட்டை, தப்பட்டையுமாம். தாள் = புல்லினத்தின் தண்டுகள் சில தாள் எனப்படும். கடிதம் செய்தற்குரிய மூலப் பொருள்களில் பெரும்பாலானவும் புல்லினப் பொருள்களேயாம் என்பதும் எண்ணத் தக்கது. முன்னாளில் பயன்படுத்திய ஓலை, மடல் முதலியவையும் புல்லினம் சார்ந்தவையே. மூங்கில் பிளாச்சு, தப்பை எனப்படும். அது பட்டையாக இருக்கும். ஆதலின் தப்பைப் பட்டை, தப்பட்டை என வந்தது ஆகலாம். தாள் தப்பட்டை இல்லாமல் பொறுக்கித் துப்புரவு செய்யச் சொல்வது வழக்கம். தாள்புழு நெல்லின் தாள் இடையில் ஒருவகைப் புழு புகுந்து நெற் பயிரின் ஆற்றலை உறிஞ்சி அழித்துவிடும். நெற்பயிர் பொட்டடைக்கும் காலத்தில் தோன்றுவது இது. தாள் என்பது அடி. தாளில் பற்றிப் பயிரை அழிக்கும் புழு தாட்புழு. தாறுமாறு தாறுமாறு:1 தாறு = தாற்றுக் கோலால் குத்துதல். மாறு = முள் மாற்றால் அடித்தல். தாறு மாறாகப் பேசுதல்; தாறு மாறு செய்தல் என்பவை நாட்டு வழக்கில் உள்ளவை. தாறுமாறு செய்வது புண்படுத்துவதாம். தாற்றுக் கோல், இரும்புமுள், கம்பு, சாட்டை இவற்றை ஒருங்கு உடையதாம். அதனால், குத்தியும் அடித்தும் அறைந்தும் மாட்டை ஓட்டுதல் உண்டு. தாற்றுக்கோலை முன்னும் பின்னும் மாற்றிப் பயன்படுத்தலை அறிக. தாறுமாறு அத்தகையதே. மாறு கம்பு, வளார், குச்சி எனவும் படும். தாறுமாறு:2 தாறு = தாற்று உடை கட்டுதல். (தற்று > தாற்று) மாறு = தாற்று உடையை மாற்றி எடுத்துச் சுற்றிக் கட்டுதல். தட்டுச் சுற்று, வட்டுடை என்பவை மேல் நாள் உடைமுறை. அதன் வழி வந்ததே தாறு கட்டுதல். தாற்றுப் பாய்ச்சுதல் என்பதே சிற்றூர்களில் தாற்பாச்சை என இன்றும் வழக்கில் உள்ளது. மேலிருந்து கீழும், கீழிருந்து மேலுமாக மாற்றிக் கட்டுதல் போல் எதிரிடையாகச் செய்வதைத் தாறுமாறு என்பதும் பொருந்துவதாம். தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் (திருக். 1023) என்பதில் தற்றுடை வந்தது அறிக. தார் என்பது நீளம்; நீளவிட்டுக் கட்டி உடுத்தல் தார்ப் பாச்சை எனலும் வழக்கு. தானம் தன் > தான் > தானம் = தன்னையும் வழங்கல். தனக்குரியவற்றைப் பிறர் நலனுக்கெனக் கொடுத்தல் தானமாம். அதன் பிரிவு பெரிதாம். தன் நெஞ்சங் கொடுத்து இரங்குதல், நல்ல சொல் சொல்லல், நல்ல உதவி புரிதல், இன்ப துன்பத் துடிப்பில் தன் பங்களிப்புண்மையை உண்மையாகக் காட்டல் தன் பொருளையே அன்றித் தன்னையும் தரும் நிலை உண்டாயின் தருதல் என்பவை எல்லாம் தானமாம். தவம்தானம் ஆகிய இரண்டையும் இணைத்தே வழங்குகிறார் திருவள்ளுவர். தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின் - திருக். 19 மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம்செய் வாரின் தலை - திருக். 295 என்பவை காண்க. தவத்தவன் தன் தேவையைக் குறைத்துப் பிறர்தேவையை நிறைப்பவன். தன் துயர் தாங்கிப் பிறர் துயர் தீர்ப்பவன் என்பதை உணரின் தவம் தானம் என்பவற்றின் இணைவின் அருமை விளங்கும். இரண்டும் தமிழர் செந்நெறி வாழ்வுச் செப்ப முத்திரைச் சொற்களாம். தானம் தவம் தானம் = கொடை; பொருட் கொடை மட்டு மன்று; தன்னைத் தரும் கொடையும் தானமேயாம். தன் > தான் > தானம் என அதன் தோற்றமே, வாள் தந்தனனே தலை எனக்கீய என்னும் தலைக் கொடையாளி குமணனை நினைவூட்டும். தவம் என்பது தவ் என்னும் வேர் வழியது. தவ் = சுருக்கம். உண்டி, உடை, உறைவு எல்லாம் எளிமையதாய் - தேவை யைச் சுருக்குவதாய் - சேவையைப் பெருக்குவதாய் அமைவதே தவம். தானம் தவம்இரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின் என்பது வள்ளுவம் (19). தான வகை தலைப்படு தானம். அறத்தான் ஈட்டிய பொருளை அறிவர் அருளர் ஆயோரைக் கொள்க எனப் பணிந்து கொடுத்தல். இடைப்படு தானம் நோயர் மாற்றுத் திறத்தர் ஆயோர்க்கு இரக்கத்தால் ஈதல். கடைப்படு தானம் புகழ்வார் வன்கணர் ஆயோர்க்குக் கடப்பாடாகத் தருதல். இவ்வகை அகர முதலிகள் தருவன. வறியார்க்கொன்று ஈவதே ஈகை என்பது வள்ளுவம் (திருக். 221). 1. எடைக்கு எடை தருதல். 2. பொற்பசுவுள் புகுந்து அப்பசுவை வழங்கல். 3. ஆயிரம் பல்லாயிரம் என ஆன் வழங்கல். 4. பொற்காளை வழங்கல். 5. பொற்குதிரை வழங்கல். 6. பொன்னணி பூட்டிப் பூவையை வழங்கல். 7. திசைக் காவலர் பெயரால் வழங்கல். 8. பொற்றேர் வழங்கல். 9. ஐம்பொன் கலங்கள் வழங்கல். 10. பொற்பூ வழங்கல். 11. கற்பகக் கொடை. 12. பொற்பரப்புக் கடற்கொடை. 13. மணிப்பசுத் தானம். 14. பொற்குடத் தானம். 15. பொற்பிள்ளையார் தானம். 16. திருமால் திருத்தானம். 17. முத்துத் தாமரைத் தானம். 18. முத்து மலைத் தானம். 19. முத்துப் பசுத்தானம். 20. திருமகள் தானம். 21. ஊண் தானம். 22. கல்விக் கொடை. 23. முத்துத் தானம் (முத்து மாலை, முத்துக் குடை, முத்தங்கி). 24. பெருங்கொடை. இத்தானங்களை எவர் வழங்குவார்? மன்னரும், வணிகரும் (கோக்களும், இளங்கோக்களும்) வழங்குபவர். வழங்கப் பெறுபவர் வறியவர் எவருமா? இல்லை! இல்லை! வேதியர் - பூசுரர் - என்பார் பெற்றனர். உழைப்பாளர் கொடை உழைப்பார்க்குக் கிடைத்திருந்தால் சுழல்முறைப் பொருள் வளமாய்த் திகழ்ந்திருக்கும். இது பாழுக்கிறைத்த நீராயிற்று! வீணில் உண்டு களிப்போரை நிந்தனை செய்வோம் என்ற பாரதிபாட்டு இவரை நோக்கியே போலும்! தானை தன்னைத் தன் நாட்டுக்காக ஈகம் செய்வானாய் - அவ் வீகத்தில் தன் உயிரையும் தர ஒருப்பட்ட உரத்தனாய் இருப்பான், தானை எனப்பட்டான். பின்னர் அவன் செலுத்திய குதிரையும், தேரும் யானையும் ஆகியனவும் சேரத் தானை எனப்பட்டன. அவ்வகையில் காலாள்படை, குதிரைப்படை, தேர்ப்படை, யானைப்படை என்றாயின. அக்காலாள் படையுள்ளும் வேற் படை, விற்படை, வாட்படை எனக் கருவி வகையாலும் தூசிப் படை, தலைப்படை, பக்கப்படை, கரந்துபடை என இடவகை யாலும் பெயர் பெற்றன. வேல்தானை, வாள் தானை, வில்தானை எனலாயின அவை. பண்டே கடற்படை என்பதுவும் இருந்தது. இதுகால், வான்படை, கடற்படை, நிலப்படை என முப்படைகள் என்பன உளவாயின. வலவன் இல்லாமல் இயங்கும் வான்படையும் உண்டாயிற்று. போருக்காகத் தன்னை ஒப்படைத்ததும், கூற்றுக்கும் அஞ்சா ஆற்றல் உடையதும் ஆகிய படையணி தானை என்பதாம். தானை > சேனை (வ). x.neh.: அவை > சபை (வ). தானை மறம் தானையாவது படை; படைவீரர் தம் ஆண்மைச் செயலைக் கூறுவது தானை மறம் ஆகும். பொர எதிர்ந்த இருவகைப் படைகளும் பொருது ஒருங்கே மடியாமை விலக்கிய உயர்வையும் நிலங்காவல் கொண்ட வேந்தற்கு உறுதி கூறும் தன்மையையும், பகைவர் அழிவு பாட்டுக்கு நொந்து உரைக்கும் இரங்குதலையும் இத் தானை மறம் கூறும் என்பார் புறப்பொருள் வெண்பா மாலையார் (129-131). தானை மாலை அகவல் ஓசையிற் பிறழாது அரசர்க்குரிய ஆசிரியப் பாவால் முன்னர் எடுத்துச் செல்லும் கொடிப் படையைச் சொல்வது தானை மாலையாகும். ஆசற உணர்ந்த அரசர் பாவால் தூசிப் படையைச் சொல்வது தானை மாலை யாகும் - இலக். பாட். 109 தான் குழம்பிலே போட்ட காயைத் தான் என்பது பார்ப்பனர் வழக்கம். எதனைக் கொண்டு - மூலமாகக் கொண்டு - செய்யப்பட்டதோ அதற்கு அப் பெயரிடல் வழக்கம். பூண்டு போட்டது பூண்டுக் குழம்பு. கத்தரிக்காய் போட்டது கத்தரிக்காய்க் குழம்பு. ஆதலால் தான் என்பது எது முதன்மைப் பொருளோ அதனைத் தான் எனல் வழக்காயிற்று. தான் தோன்றி தான்தோன்றி = சொல்வார் சொற்கேட்டு நடவாதவன். தான்தோன்றி யப்பர் எனச் சிவபெருமான் பெயர் சில கோயில்களில் உண்டு. இலிங்க உரு எவரும் செய்து வைக்காமல் நிலத்தை அகழுங்கால் வெளிப்பட்டதாகவோ, கல்லின் அமைதியே இலிங்க வடிவு உடையதாகவோ இருந்தால் இப் பெயர் அதற்கு வழங்கப்படும். அது தான்தோன்றி எனப்படுவது போலத் தனக்குத் தோன்றியதே சரி. பிறர் சொல்வதைப் பற்றிக் கருதுவது இல்லை என வாழ்பவரும் உளர். அவரைத் தான்தோன்றி என்பது வழக்கு. தனக்குத் தோன்றுவதே தோற்றமாகக் கொண்டவன் தான்தோன்றி. தான்தோன்றித்தனம் என்பது அறிவின்மையைக் குறிக்கும் வசையாகவும் வழங்குகின்றது. இலங்கம் > இலிங்கம்.  தி தீ வரிசைச் சொற்கள் திக்கித் திணறல் திக்கல் = சொல் வெளிப்பட முடியாது இடர்ப் பாடாதல். திணறல் = அச்சத்தால் பெருமூச்செறிந்து இளைப்பு ஆகுதல்; மூச்சுவிட முடியாமையுமாம். எதிர்பாரா அச்சம், இழப்பு, நேர்ச்சி இன்னவற்றால் திடுமென்று ஏற்படும் மெய்ப்பாட்டு நிலைகள் இவை. இயல்பான திக்கல் பேச்சு உறுப்புக் குறை, பயிற்சியில் குறை ஆயவற்றால் உண்டாவது. இது சில சூழல்களால் ஏற்படுவது. பேச்சுத் திணறுதல் அளவன்றி, மூச்சுத் திணறுதலும் திணறலேயாம். அது உயிர் தப்பத் தவிக்கும் நிலையாகவும் இருத்தல் உண்டு. வெள்ளத்துள் படுதல், புகைக்குள் மாட்டுதல் வகையால் திணறல் ஏற்படும். எதிர்பாரா வினாவுக்குத் திக்கித் திணறல் ஏற்படும். திக்குதல் உறுப்புக் குறை, அச்சம், முதுமை ஆயவற்றால் பேச்சு இயல் பாக வாராது தடைப்பட்டுத் தடைப்பட்டு வருதல் திக்குதல் ஆகும். திக்குதல் பொதுமக்கள் வழக்கில் கொன்னுதல் எனப் படுகின்றது. ஆனால் அதுவும் அச்சப்பொருளில் வருவது என்பது, அச்சம் பயமிலி காலம் பெருமையென்று அப்பால் நான்கே கொன்னைச் சொல்லே என்னும் தொல்காப்பியத்தால் (739) புலப்படும். திக்குத்திசை திக்குத்திசை:1 திக்கும் திசையும் ஒன்றாகவே தெரிகின்றது. ஆனால் வேறுபாடு உண்டு என்பது இவ் இணைச்சொல்லால் புலப்படும். ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே என்றும், வீணையர் யாழினர் என்றும் வழக்கு உள்ளமையால் அவற்றில் வேற்றுமை இருத்தல் புலப்பட வில்லையா? அது போன்றது திக்குத் திசை. திக்குத் தெரியாத காட்டில்; திக்கு யானைகள்; திக்குப் பாலர் என்பவற்றில் உள்ள திக்கு நான்கு அன்று, எட்டாகும். அதுபோல் திக்கு நான்கு; திசை நான்கு இரண்டு வகையும் சேர எட்டு. நேர்த்திசை நான்கு: வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு. கோணத்திசை நான்கு: வடமேற்கு, வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு. கோணத்திசை திக்கு எனப் பொருளாதல் அறிக. திக்குத் தெரியவில்லை என்றால் திசையைக் காணமுடியாத நிலைமாறு நிலை (மயக்கம்) உண்டாகிவிட்டது என்பதாம். இதற்காக ஏற்பட்டதே திசைகாட்டி! திக்குத் திசை:2 திக்கு = புரவலர் அல்லது வள்ளல் (திக்குக்கு உதவியாக அமைந்தவர்). திசை = புரவலர் அல்லது வள்ளல் இருக்கும் திசை. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்பது தனிச் சிறப்புடைய பழமொழி. இவண், திக்கு என்பது ஆதரவாளரைக் குறிக்கும். புலவர்களும், கலைஞர்களும், இரவலர்களும் திக்குத் திசை தெரியவில்லை என ஏங்கும் நிலை இருப்பதுண்டு. அந்நிலையில் எழுந்த இணைச்சொல் திக்குத் திசை தெரிய வில்லை என்பதாம். திக்கு என்பதும் திசை என்பதும் ஒருபொருட் சொல்போல் தோன்றினும் திக்கு என்பதன் பொருள் ஆதரவு என்பதாம். திக்கு வேறில்லை என்பது அருணகிரி அந்தாதி. திக்குமுக்கு திக்கு என்பது மூச்சுத் துடிப்பு; திக்குத் திக்கு என்பது அச்சத்தால் நாடி நரம்புகள் துடிப்பு; முக்கு என்பது மூச்சு; நேரே வெளிப்பட முடியாமல் தடைப்பட்டு முயன்று வெளியேற்றும் நிலை. அவர் திக்குமுக்காடித் திணறுகிறார்! அவர் நிலை என்ன ஆகுமோ? நொடி நொடியும் செத்துப் பிழைக்கும் பிழைப்புத் தான். என்பது மக்கள் வழக்குத் தொடர். இத் திக்குமுக்கு திக்கித் திணறல் என்றும் வழங்கும். திக்கல் சொல் வெளிப்படுத்த ஏற்படும் இடரைக் குறிப்பதொடு, மூச்சு வெளிப்படுத்த ஏற்படும் இடரையும் குறிப்பது இது. முட்டித் திரும்பும் தெரு முக்கு எனப்படுதல் இன்றும் சிற்றூர் வழக்கில் உண்டு. திக்கு வெற்றி (திக்கு விசயம்) எட்டுத் திக்கும் படைகொண்டு சென்று, பகைவரை வெற்றி கொண்ட சிறப்பைப் பாடுவது திக்கு விசயம் என்பதாம். கடிகை முத்துப் புலவரால் திக்கு விசயம் பாடப் பட்டுள்ளது. அது சிவகிரி வருகுணராம பாண்டிய வன்னியனார் திக்கு விசயம் என்பது. நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின் வெண்டலைப் புணரிக் குடகடற் குளிக்கும் -புறம்; 2 என்பது போலும் புகழ் நாட்டத்தால் முழுதாளும் முனைப்பு மீக்கூர்ந்தார்க்கு எழுந்த திசை வெற்றிப் பாட்டின் வழிவந்த சிற்றிலக்கிய வகை இது. திங்கள் திங்கள்:1 திகழ் > திங்கள். கதிரவன் ஒளியால் திகழ்வது திங்கள். அங்கண் உலகத் தகல்நிலாப் பாரிக்கும் திங்கள் - நாலடி. 151 திங்கள்:2 திங்கள் தோன்றி வளர்ந்து முழுமையாகிக் குறைந்து தோன்றாமல் போகும் கால அளவு (30 நாள்) திங்கள் எனப்பட்டது. மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் - திருப்பாவை திசை திகை > திசை. புதியதோர் இடம், செறிந்த காடு, இருட்பொழுது, அஞ்சத்தக்க குரல் முதலியவற்றைக் காணும் போதும் கேட்கும் போதும் செயல்தடையும் அச்ச உணர்வும் நடுக்கமும் உண்டாம். அவ்வாறு உண்டாக்கும் இடம் பண்டு பல பக்கங்களிலும் காடும் விலங்கும் இருளுமாக இருந்தமையால் தனித்தியங்கத் திகைப்பாயிற்று. திகைப்பு ஆக்கிய பக்கம் திக்கு எனவும், திசை எனவும் ஆயின. அவை நான்கு எனவும், எட்டு எனவும், பத்து எனவும் வளர்நிலையில் அறிந்து கொள்ளப்பட்டன. அவற்றுக்குப் பெயர் சூட்ட உயரமும் தாழ்வும் உதவின. உயரமான மலைப்பக்கம் மேக்கு, மேற்கு எனவும், தணிவாக அமைந்த பக்கம் கீழ்க்கு கிழக்கு எனவும் எதிரெதிர் ஆயின. தென்னை மரமும் தென்றற்காற்றும் ஆகியவை கொண்டு தெற்கு எனவும், ஆலமரம், வாடைக்காற்று அல்லது வடந்தை கொண்டு வடக்கு எனவும் ஆயின. ஆலமரத்தின் இலை நெடு வட்டமாதல் கொண்டு வடமரம் எனப்பட்டமை அறிக. இனி, இவற்றின் இடைப்பட்ட பக்கங்கள், இருதிசைகளுக்கு இடைப்பட்டனவாகலின் தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு எனப்பட்டன. அதன்பின் மேலேயும் கீழேயும் ஆகியமை அத்திசைப் பெயர்கள் முன்னரே காணப்பட்டமையா லேயே யாம். குணம், குடம், தக்கணம், உத்தரம் என்பனவற்றின் பெயர் விளக்கங்களை ஆங்காங்குக் காண்க. திசைக்கட்டு (மாதிரக்கட்டு) மாதிரம் = திசை. மாதிரம் எவையும் நோக்கான் என்றார் கம்பர் (உயுட். 1221). மான்மயல்தான் கூனியென்று தாய்மந்திர வாதிகொண்டு தான்பார்க்க கொட்டங்கி தாலத்தின் - வான்திசையைக் கட்ட இவளெழுந்து கைநொடித்துக் கோமயலைக் கொட்டங்கிக் கேயுரைத்தல் கூறு என்றும், உள்ளிட்டுக் கல்யாணத் துக்குமுகிழ்த் தம்வைக்க உள்ளுமவன் என்கணவன் உண்மையென - வள்ளலுறக் கொட்டங்கிக் கெல்லாங் கொடுத்தனை பின்சேறல் ஒட்டிலகு மாதிரக் கட்டு என்றும் மாதிரக் கட்டின் இலக்கணத்தைப் பிரபந்தத் திரட்டு (35, 36) கூறுகின்றது. கொட்டங்கி = கோடாங்கி. திடாரிக்கம் திடம் = வலிமை. ஆரிக்கம், பின்னொட்டு. நோக்குக; ஆர வாரிக்கும். தங்களிடம் உண்மையில்லாதும் இவ்வளவு திடாரிக்க மாக அயலார் பேசும் போது, தமிழர் தங்களிடம் உண்மை இருந்தும் வாய்மூடிக் கிடக்கிறார்களே என்று வருந்துவார் பாவாணர். திட்டம் > திடம். திட்டம் உறுதிப்பாடானது. இது நெல்லை வழக்கு. திட்டு திண் + து = திட்டு. திட்டு, திட்டமுமாம். திண்ணிய பாறை ஆற்றங்கரையிலோ, கிணற்றிலோ இருந்தால் திட்டு எனப்படும். மெல்லிய மெத்தை திண்டு எனப்படும். இது வலிய பாறையாகும். ஆற்றங்கரைத் திட்டில் அமைந்த ஊர் திட்டுக்குடி (திட்டக்குடி), திட்டச்சேரி; ஏரியில் திட்டு இருந்தால் திட்டாத்தேரி; கிணற்றின் ஆளோடிப் பகுதி திட்டு. வன்மனத்துண்டாம் வசைமொழி திட்டு எனப்படும். உறுதிப்படுத்தப்பட்ட செயல் திட்டம் எனப்படும். ஐந்தாண்டுத் திட்டம், வாழ்வியல் திட்டம். திட்பம் திண்பு > திட்பு > திட்பம். உறுதியான உள்ளம் திட்பமாகும். அவ்வுறுதி வெளிப்பாடு சொல் செயல் வழியே வெளிப்படும். ஆதலால், உறுதியான சொல், உறுதியான செயல், உறுதியான கடைப்பிடி (கொள்கை) எல்லாமும் திட்பம். உடல் வலிமை திண்ணம்! உடல் வலிமையும் உள்ளத்து வலிமையும் ஒன்றுதல் திட்பம். திண்மை என்பதும் அது. எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் - திருக். 666 எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் பயமின்றே வினைத்திட்பம் இல்லாக் கடை - திருக். 670 கண்ணப்ப நாயனார் பிள்ளைப் பெயர் திண்ணன் என்பது. திணித்தல் உண்ண மாட்டாத குழந்தைக்கு வலுக்கட்டாயமாக உணவைக் கொள்ளாத அளவுக்கு உட்செலுத்துதல் திணித்தல் ஆகும். தலையணைக்குப் பஞ்சு திணித்தல் போலத் திணிக்கப் பெறுவது என்னும் பொருளுடையது. திணிதல் செறிவும் நெருக்கமுமாதல் மண்டிணிந்த நிலனும் என்னும் புறப்பாட்டால் விளங்கும் (2). ஒருவர் தம் கருத்தை வலுவாகத் திணித்தலும் திணித்தலே யாம். திணை திண் > திணை. திண் = வலிமை, கட்டமைவு. 1. உயர்திணை ஆறறிவுடைய உயிர்வகையில் சிறந்த மாந்தர். 2. அஃறிணை மற்றை உயிரிகளும், உயிரிலாதவையும். 3. ஐந்திணை - நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை. 4. அகம் எழுதிணை கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை. 5. புறம் எழுதிணை வெட்சி, உழிஞை, வஞ்சி, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண். 6. திண்ணை என்பதன் இடைக்குறை. திணைக்களம் திணை = இடம், ஒழுக்கம், பிரிவு முதலாம் பலபொருள் ஒருசொல். முறையே குறிஞ்சித்திணை, குறிஞ்சி ஒழுக்கம், உயர்திணை என்பவை என்க. திணை என்பது ஆட்சித்துறை, ஆட்சிக்கட்டில், ஆய்வுப் புலம் என்னும் பொருளில் ஈழத்தமிழர் வழக்கில் உள்ளது. எ-டு: தமிழ்த்திணைக்களம் (தமிழ்த்துறை). திண்டாட்டம் கொண்டாட்டம் திண்டு = திண்ணை. சோற்றுக்கோ வேறு பிச்சை (இரவல்) பெறுதற்கோ வறியவர், செல்வர் வீட்டு முகப்பில் உள்ள திண்டுகளில் ஏறி நின்று தம் துயரை உள்ளே இருப்பவர் கேட்டு உதவுமாறு ஆடிப்பாடுதல் திண்டாட்டமாகும். இது வறுமைப்பாட்டில் நிகழ்வது. கோயிலுக்குக் காவடி கொண்டு செல்வதைக் காண்கிறோம். தோளில் தலையில் கைகளில் தூக்கிக் கொண்டு மகிழ்வாக ஆடுதல் கொண்டாடுதல் - கொண்டாட்டம் - ஆகும். இஃது அன்பு மேலீட்டாலும், இறையுணர்வு மேம்பாட்டாலும், போர்க்கள வீறு முதலிய பெருமிதத்தாலும் உண்டாவனவாம். ஊரவையில் ஒருவர் தமக்கு நேர்ந்ததைப் பல்கால் கூறுதல் மன்றாட்டு ஆகும். கோயிலில் - இறை - மன்றாட்டும் உண்டு. திண்டு திண்டு = வஞ்சம். திண்டு என்பது தலையணை, திண்ணை போன்றதைக் குறிக்கும். திண்டு தலையணை என்பதில் திண்டு மெத்தையைக் குறிக்கும். திண்ணையில் சாய்ந்து கொள்வதற்காகத் திண்டு அமைப்பதும் உண்டு. திண்டுக்கு முண்டு என்பது எதிரிடைப் பொருள் தரும். ஆனால் இத்திண்டு வேறுபட்டது. அவன் மனத்தில் ஒரு திண்டு இருக்கிறது. அதனால், கலகலப்பாகப் பேசுகிறானா பாருங்கள் என்பதில் திண்டு என்பதற்கு வஞ்சம் அல்லது கரவு என்னும் பொருளுண்மை வெளிப்படும். திண்டு திரடு திண்டு=மேடு;bகட்டியாக அமைந்j,அல்லதுஅமை¡கப்ப£டதுதி©L MF«. திண்மை வழியது அது. திண்ணை, திணை என்பவும் கட்டமைவு உடையவையே. திரடு = இயற்கை வகையால் ஏற்பட்ட மண்மேடு. இத்திண்டு திரடுகள் நிலத்து மட்டத்தில் உயர்ந்து, நடைச்செலவு வண்டிச் செலவு ஆயவற்றுக்குத் தடையாய் இருக்கும். ஆதலால் காட்டு வழியில் மாட்டுவண்டிச் செலவு இடர்ப்படுதல் உண்டு. ஓரிடத்து மேட்டையும், தொடர் மேட்டையும் குறிக்கும். திண்டு திரடு என்பது இயற்கைப் பொருள் செயற்கைப் பொருள் ஆகியவற்றில் ஓர் ஒழுங்கற்று மேடுபள்ளம் மொத்தை கற்றை என அமைந்த அமைப்பைக் குறித்து வருவதாயிற்று. துணி திண்டும் திரடுமாக இருக்கிறது என்பதும் வழக்கே. திண்டு என்பது மெத்தை திண்ணை முதலிய சொற்களுடன் ஒப்பிட்டுக் காணத் தக்கதாம். திண்டுக்கல் என்னும் பெயரையும் கருதுக. ஊரூர்க்குத் திரடுகள் இல்லாமல் இல்லையே! திரள் திரளை திரட்டு என்பவற்றில் திரடு என்பதன் பொருள் வெளிப்படுமே. திண்டு திரடு என்னும் இச்சொல், துணியின் நெசவு செம்மையாக அமையா நிலையில் திண்டு திரடாக இருக்கிறது என்று வழங்குவதாயிற்று. திண்டு முண்டு திண்டு = மனத்தில் இரக்கமில்லாத, பாறைக்கல் போன்ற தன்மை. முண்டு = முட்டி மோதும் தன்மை. திண்டு முண்டுக்காரன் என்பதில் வரும் திண்டும் முண்டும் இப்பொருளவாம். இனித் திண்டுக்கு முண்டு என்பதும் உண்டு. பாறைக்கல் போல ஒருவன் இருந்தால், அவனையும் முட்டித் தாக்குபவனைத் திண்டுக்கு முண்டன் என்பது உண்டு. திண்டு முரட்டுத் தனத்தையும் முண்டு மோதுதல் அல்லது முட்டுதலையும் குறிப்பனவாம். திண்ணக்கம் மண்ணக்கம் திண்ணக்கம் = சோம்பல், செயலாற்றும் மன மில்லாமை. எதையும் பொருட்டாக எண்ணாமல் மன இறுக்கத்துடன் இருத்தல். இவ்வாறு இருந்தே பழகி விட்டால் வேளைக்கு உண்ணல் திண்ணையில் சத்திரம் சாவடிகளில் படுத்துக் கிடத்தல் என்ற அளவிலேயே வாழ்வு சுருங்கிப் போகும். அந்நிலைமை உயிரியக்க வாழ்வு ஆகாது. போம் அளவும் ஒரு நோயாய்ச் சீரழியும்; சீரழிக்கும். அந்நிலை முற்றின் மண்ணோடு மண்ணாகி மட்கி மடியும் பாடு ஆகிவிடும். மண்ணக்கம் = மண்ணுள் மண்ணாய் ஆகி மட்கிப் போகும் நிலை. திண்ணைப்பள்ளி முற்காலத்தில் தமிழ்க்கல்விக்கென அரசர்கள் பள்ளிகள் வைத்திலர். வழிவழியாகக் கற்றவர்கள் ஆங்காங்குத் திண்ணைப் பள்ளிகள் நடத்தினர். செல்வம் உடையவர்கள், தங்கள் வீட்டுப் பிள்ளைகள் படிப்பதற்காகப் படித்தவர்களைத் தேடிவந்து தம்வீட்டு முகப்புத் திண்ணையிலேயே பாடம் சொல்லித் தர ஏற்பாடு செய்தனர். அவர்கள் வீட்டுப் பிள்ளைகளுடன் ஆர்வமுடையவர்கள் வீட்டுப்பிள்ளைகளும் அவர்களுடன் வந்து கற்றனர். பெரும்பாலும், வாய்பாடம் மணலில் எழுதுதல் என்பனவே நிகழ்ந்தன. எல்லாப் பாடமும் மனப்பாடம் செய்ய வேண்டும். பெரிய மாணவர் சொல்லச் சொல்லக் கேட்டு, எழுத்து அறியாமலே, புதிய இளைய மாணவர் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, வெற்றி வேற்கை, உலகநீதி என்பனவெல்லாம் மனப்பாடமாகச் சொல்லி விடுவர். கணக்குப் பாடமும் பெரிதும் மனப்பாடமே. எண் சொல்லல், வாய்பாடு சொல்லல், மனக்கணக்குப் போடல் என நடைபெறும். பெரிய மாணவர், சிறிய ஆசிரியர் அல்லது சட்டாம்பிள்ளை எனக் கற்பிப்பவராகி, அப்பயிற்சியால் தாமே திண்ணைப் பள்ளி ஆசிரியராகப் போவது உண்டு. ஆங்கிலேயர் வந்த பின்பு சிற்றூர்ப் பள்ளிகளில் கற்பலகை, குச்சி, தாள், கரிக்கோல், மை எழுதுகோல் ஆயவை வந்தன. அதற்குமுன் ஏடும் எழுத்தாணியும் வழக்கில் இருந்தன. அச்செழுத்து, தாள் எழுத்து வந்தபின் பனை ஏட்டில் எழுதுதல் நின்றது. திண்ணைப் பள்ளிக்கு நேரம் எப்படி? விடிவதற்கு முன் பள்ளிக்கு வந்து விட வேண்டும். பொழுது அடைந்த பின்னரே வீடு செல்ல வேண்டும். பகலெல்லாம் பள்ளியிலும் ஆசிரியர் வட்டத்திலும்தான் மாணவர் இருக்க வேண்டும். ஆசிரியரும் மாணவரும் சேர்ந்தே காலைக் கடன், குளிப்பு என்பனவெல்லாம் செய்வர். அவர் வழியாக நல்ல பழக்க வழக்கங்கள் பிள்ளைகளுக்கு ஏற்பட வேண்டும் என்ற வகையில் இவ்வேற்பாடு செய்தனர். விடிகாலையில் முதன்முதலாகப் பள்ளிக்கு வருபவன் ஏரான் எனப்படுவான். பல ஏர்கள் தொடர்ந்து நிலம் உழுதல் உண்டு. அவற்றில் தலையேர்க்காரர் போடும் தடத்தின் வழியே தான் மற்றை ஏர்களும் அடுத்தடுத்து உழுது செல்லும். முன்னே செல்லும் ஏர் போன்றவன் ஏரான். அவனை வேத்து என்பதும் உண்டு. வேத்து = வேந்தன், தலைவன். ஏரானாக வந்தவனுக்கு மட்டுமே அடி இராது. அவன் வந்தபின் வருபவர்களை வரிசையாக எழுதி வைப்பான். ஏரானுக்கு அடுத்து வந்தவனுக்கு ஓரடி; அடுத்தவனுக்கு இரண்டடி எனக் கூடிக் கொண்டே வரும். அதனால், ஏரானாக வரவே மாணவர் போட்டி போட்டுக் கொண்டு கருக்கல் பொழுதிலேயே பள்ளிக்கு வந்துவிடுவர். அதில் என்ன வேடிக்கை என்றால் எனக்கு முன் யாரும் வரவில்லை என ஏக்கழுத்தத்தோடு ஒருவன் பள்ளிக்குள் நுழைந்தால், அவனுக்கு முன் வந்து ஒரு மூலையில் இருளில் இருப்பவன், ஒரு செருமல் செருமி, நான் உனக்கு முன் வந்திருக்கிறேன் என்பதை நிலைநாட்டி, தலைதாழச் செய்து விடுவான். விடிகாலையில் வந்த மாணவர்கள் ஆசிரியரோடு ஆறு குளம் முதலியவற்றுக்குச் சென்று காலைக் கடன் கழித்து வந்து, பாடம் படித்துவிட்டுக் காலை உணவுக்கு வீடு செல்வர். அங்குக் கடிகாரம் மணியடிப்பு இல்லை. வெயில் வழியாக ஏற்படும் நிழல்தான் கடிகாரம்! மணியெல்லாம்! சொல்லிக் கொள்ளாமல் போக முடியுமா? எல்லாரும் சேர்ந்து ஆசிரியரிடம் விடை கேட்பர். எப்படி? காலமே எழுந்தி ருந்து கைகால்கள் தூய்மை செய்து கோலமாம் நீறு பூசி குழந்தைகள் பசியும் ஆற, பாடமும் சொல்லிக் கொண்டோம் படியடி வாங்கிக் கொண்டோம்; சீடனை அனுப்பும் ஐயா! திருவடி சரணந் தானே! என வேண்டிக் கொள்வர். ஆசிரியர் தலையசைத்து விடைதருவார்! விரைவில் வரவேண்டும் என்று ஆணையிடுவார். உணவை முடித்தும் முடியாமலும் ஓடி வருவர் மாணவர். மீளவும் படிப்பர். மாலையில் பள்ளி முடிந்து செல்லும் போதும் இசைவு பெற வேண்டும். அதற்கு அவர்கள் வேண்டும் வேண்டுகை, மிக அடக்கமும் அமைவும் உறுதியும் உடையதாம். அந்திக்குப் போறோம் நாங்கள்; அகத்தினில் விளையா டாமல், சிந்தையாம் விளக்கின் முன்னே சுவடியை அவிழ்த்துப் பார்த்து வந்தது வாரா தெல்லாம் வகையுடன் படித்துக் கட்டிக் கந்தனார் கோழி கூவக் காலையில் வருவோம் ஐயா! அந்நாள் பள்ளி, பாடம், ஆசிரியர், மாணவர் என்பவை யெல்லாம் ‘இப்படியா இருந்தது? என்று நம்மை எண்ண வைக்கின்றது அல்லவா! மாணவர் பாடும் பாடல்கள் இரண்டும் முனைவர் அ. ஆறுமுகனார் எழுதிய பிறந்த மண்ணின் பிடி வரலாறு என்னும் நூலில் கண்டவை. வேறு வேறு இடங்களில் வேறுவேறாகச் சொல்வதுமுண்டு. திதலை மகப்பேறு ஆய பின்னர் மகளிர் வயிற்றில் உண்டாகும் மேடுபள்ள வளையங்கள். மழைத்துளியாம் துவலை போன்ற தோற்றத்தினதால் திதலை எனப்பட்டதாம். திதலை அவ்வயிற்று வாலிழை மகளிர் - அகம். 86 தித்தி திருத்தகவினதாம் பொன்போலும் தோல் தோற்றம், தித்தி எனப்படும். தேமல் என்பதும் அது. பொன்னிறத்ததால் பொன் அழகாக இருப்பதால் அழகு தேமல் எனவும் வழங்கும் (ம.வ.). துத்தி என்பதும் அது. துத்தி துதைதி துத்தி = மகரந்தம். அது போல்வது தித்தி (தனிப்.) திப்பி புளிக்கரையல் செய்யும் போது கரையாத எச்சம் திப்பி எனப்படும். அவ்வாறே கரையாததும் சாறு எடுக்கப்பட்ட எச்சமும் ஆகியவற்றைத் திப்பி எனல் தென்தமிழக வழக்கு. கரும்புச் சக்கை; சோளச் சக்கை என்பவையும் திப்பி போன்ற வழக்கே. திப்பிலி ஒரு மருந்துச் சரக்கு இது. திரிகடுகம் எனப்படுவனவற்றுள் ஒன்று. திப்பி + இலி = திப்பிலி. திப்பி = சக்கை. திப்பிலியை அரைக்க சக்கை, நார் என்னும் திப்பி எதுவும் இல்லாமல் மாவாகவே இருப்பது கொண்டு வழங்கப்பட்ட bபயர்ïது.áy மருந்துகளை இடிக்கும் போது திப்பி வருதலும் சலித்தலும், எத்தனை முறை இடித்தாலும் திப்பி இல்லாமல் போகாமையும் உண்டு என்பது அறிக. திமிசு திம் திம் என ஒலி யெழும்ப மண்ணைக் கெட்டியாக்கவும், கெட்டிமண்ணை உடைக்கவும் பயன்படுத்தும் கைப்பிடிக் கோலொடு கூடிய இடிப்புக் கட்டை. கட்டட வேலையில் தளம் கெட்டியாக்கவும் பயன்படும் அது. கட்டைக்குப் பகரமாக இரும்புத் தகடும் இக்காலத்து உண்டு. அதற்கும் திமிசுக் கட்டை, திமிசு என்பனவே பெயர். திமிர் திம் > திமிர். திண் > திம் = மனச்செருக்கு, கருவம். அவனுக்குள்ள திமிர் அப்படிப் பேச வைக்கிறது (ம.வ.). திமில்: திமில்:1 கெட்டித் தன்மையும் கொழுமையும் எழுச்சியும் உடையது திமில். காளையின் எழில் மிகும் உறுப்பு. திமில்:2 திமில் போலும் இசைப்பறை திமிலை. திமிலை குடமுழா திமில்:3 திமில் போலும் தோற்றமுடைய மீன் கூடை. திரட்டி ஒரு பெண் பூப்படைதலைத் திரட்டி என்பது பார்ப்பனர் வழக்கு. திரளுதல் என்பது பருவமாதல் ஆகும். திரட்டி விழா பூப்பு நீராட்டு விழா. வட்டாரம் தோறும் இனம் தோறும் இதற்கு வழங்கும் சொற்கள் மிகப்பலவாம். திரட்டி உருட்டி திரட்டுதல் = பரவிக் கிடப்பதை ஒன்றாக்குதல் திரட்டுதல். உருட்டுதல் = திரட்டப்பட்டதை வேண்டும் அளவு உருண்டையாக்குதல். இரண்டையும் செய்தல் திரட்டி உருட்டல் ஆகும். மட்குடம் வனைவாரும், எருவாட்டி தட்டுவாரும் முதற்கண் மூலப்பொருள்களைத் திரட்டுவர்; பின்னர்த் திரட்டியதை உருட்டிப் பயன்படுத்துவர். நூல்களைத் திரட்டுதல், பாடல்களைத் திரட்டுதல், ஊரைக் கூவித் திரட்டுதல் என்பன ஒன்று சேர்த்தலே. மாவைக் களியாக்குவதற்குத் திரட்டி உருட்டுதல் இல்லாமல் முடியாது. திரட்டுதலோடு புரட்டி உருட்டுதலும் அதற்கு வேண்டும். திரட்டு ஒருவர் பாடிய பாடல்களைத் திரட்டிய நூலோ, பலர் பாடிய பாடல்களைத் திரட்டிய நூலோ திரட்டு என்று வழங்கப்பட்டது. முன்னே தொகை என்று வழங்கிய ஆட்சியைத் திரட்டு ஏற்றுக் கொண்டது பின்னே எனலாம். குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு, சிவஞான முனிவர் பிரபந்தத் திரட்டு என்பன போன்றவை முதல் வகையின. தனிப்பாடல் திரட்டு, பலபாடல் திரட்டு என வழங்குவன அடுத்த வகையின. இனித் தெருட்டு என்பதொரு நூல்வகை யுண்டு. அது நீலகேசித் தெருட்டு என்பதால் விளங்கும். தெருட்டு என்பது தெளிவிப்பது என்னும் பொருளது. திரட்டு என்பது தெரிவு என வழங்கப் பெற்றமை சுவடிகளால் அறிய வருகின்றது. தெரிந்தெடுக்கப் பட்ட பாடல்களையுடையது என்பது பொருள். புறத்திரட்டு, பன்னூற்றிரட்டு என்பவை அரிய திரட்டு நூல்களாம். * தொகை காண்க. திரவக்கொடி கொடியைத் திரட்டி வளைத்துப் பானை குடம் ஆயவை வைக்கப் பயன்படுத்தும் புரிமணை (பிரிமணை)யைத் திரவக் கொடி என்பது கொங்கு நாட்டு வழக்கு. திரட்டப் பட்ட கொடி என்னும் முறையில் திரளக் கொடி எனப்பட்டு, திரவக் கொடியாகத் திரிந்திருக்கலாம். திரவிடம் (வ) தமிழ் என்பதற்குரிய ழ் அல்லது ழகர ஒற்று ஆங்கிலத் திலோ வடமொழியிலோ இல்லை. அதனால் அவர்கள் மொழிக்குத் தகத் தமிழ் என்பதைத் தமில் (Tamil) என்றும், தமி (Thamis) என்றும் ஒலித்தனர். தமில் என்பதில் இருந்து தமிழ் வரவில்லை. தமிழ் என்று சொல்ல முடியாதவர் தமில் என்றனர் என்பதே உண்மை. தமிழ் என்பதைச் சொல்ல முடியாத ஆரியர் த்ரமிள், த்ரமிடம், திராவிடம் என்றனர். பவளம் என்பதையும் கமுகம் என்பதையும் சொல்ல முடியாமல் ப்ரவாளம் என்றும், க்ரமுகம் என்றும் சொல்வது போல்வது அது. தின்னவேலி என்று திருநெல்வேலியை ஆங்கிலர் ஒலித்தால், திருப்ளிகேன் என்று திருவல்லிக்கேணியை ஒலித்தால் அவர்கள் மொழியின் அமைப்புக்குத் தக அவர்கள் கூறினார்கள் என்பதை அல்லாமல், தின்னவேலியே திருநெல்வேலி ஆயது என்றும், திருப்ளிக்கேனே திருவல்லிக்கேணி ஆயது என்றும் கூறுவது எப்படித் தவறோ அப்படித் தவறே ட்ரவிடம் என்பதில் இருந்து தமிழ் வந்தது என்பது. ஆதலால் திரவிடம் என்பதே தமிழ் என்பது மொழியியல் ஏமாற்றும், உண்மை மறைப்பும் வஞ்சமுமாம் என்க. தேசியப் பாடலில் திராவிடம் உள்ளதே என்றால், வங்கத் தாகூர் தமிழில் பாடவில்லை. அவர் கேட்டறிந்த ட்ரவிடச் சொல் கொண்டு திராவிடம் என்றாரே அல்லாமல் மொழியாய்வு செய்து கொண்டார் அல்லர். கால்டுவெல் திராவிட மொழி இலக்கணம் என எழுதினாரே எனின், அவர் ஆங்கில வழியில் கற்றவர். வடமொழியர் வழங்கியதை ஏற்றுக் கொண்டு கூறினார் எனினும், தமிழ் தனித்தியங்கும் தன்மையது என்றும் தெலுங்கம், கன்னடம் முதலியவற்றுக்குத் தாய் என்றும் திராவிட மொழி பழங்குடியினர் மொழி என்றும் கூர்மையாகக் கண்டு கொண்டதுடன், அயன்மொழி சேரச் சேரத் தமிழ் கெடும் என்றும், அயன்மொழித் துணையின்றித் தமிழ் தூய்மையாய் விளங்க வல்லது என்றும் சுட்டிக் காட்டி ஒப்பிலக் கணம் செய்தவர் அவர். அவர்க்கும் வழிகாட்டியவர் மலையாளப் பேரறிஞர் குண்டர்ட்டு என்பவர் என்பார் பாவாணர். பஞ்சத் திரவிடம் எனச் சேர, சோழ, பாண்டிய, துளுவ, மராத்திய நாட்டைக் கூறினரே வடவர், எவரேனும் ஏற்றனரா? தமிழர்தாமே இல்லாததை ஏற்று முரண்டுப் பிடியில் உள்ளனர். திராவிடம் அன்று, நம்மொழி தமிழ்மொழியே. திரள் திரண்டதும் திரட்டப்பட்டதும் திரள் ஆகும். மக்கள் திரள் திரளாகச் செல்கின்றனர். மணல் திரள்; திரண்டு கிடக்கும் மண் திரடு. ஆட்டு மந்தை, மாட்டு மந்தை - திரள். சோற்றுத்திரள்; திரட்டிய கவளமும், ஆக்கிய குவியலும் திரள் - கடைந்து திரட்டப்பட்டது வெண்ணெய். அணுத்திரள் என்பது நன்னூலாரின் ஆட்சி. திராணி திராணி என்பது வலிமை என்னும் பொருளில் குமரி, முகவை, நெல்லை வழக்காக உள்ளது. வலிமை யற்றவனைத் திராணி கெட்டவன் என்பர். திரன் வலிமை. திரனை உடைமை திரனி > திரானி > திராணி. திரி திரி என்பது ஏவல். ஒருபொருள் இருந்த நிலையில் மாறித் தோற்றம் தருவது திரிதல் ஆகும். அவ்வாறு திரியச் செய்வது திரித்தல் ஆகும். திரி என்பது கயிறு திரித்தல். நூல் திரித்தல் குடிசைத் தொழில்கள். வீட்டுக்கு வேண்டும் மாவு வகை திரிக்கத் திரிகை வீடுதோறும் இருந்தன; இப்பொழுதும் சிற்றூர்களில் திரிகை உண்டு. கையால் கயிறு திரிக்கும் காலம் பழங்காலம். அக்காலத்தில் கயிற்றையும் நூலையும் கையால் திரித்தனர். திரிப்பது இரண்டை இணைத்து முறுக்கி மேலும் வலுவூட்ட மற்றொன்றையும் இணைப்பர். அதனால் திரி என்பது மூன்று என்னும் பொருள் தரலாயிற்று. முக்கோல் மணை, திரிதண்டம் எனப்பட்டது. முப்புரிக் கயிறும், முப்புரி நூலும் திரிக்கப்பட்டன. முப்புரி தமிழ் அந்தணர் அடையாளமாய்ப் பின்னர் வருணச் சாயம் பூசப்பட்ட அடையாளப் பொருள் ஆயிற்று. இத்திரியே திரிசூலம், திரிசூலி, திரிவேணி, திரிபுவனம் என்னும் மும்மை எண்சுட்டும் நிலையுற்றது. திரிகால் கால் என்பதற்குச் சக்கரம் என்பது ஒருபொதுப் பொருள். சக்கரம் சுழல்வது கொண்டு திரிகால் என வழங்குதல் தலக்குள வட்டார வழக்காக உள்ளது. தலைக்குளம், தலக்குளம் எனப்பட்டது (குமரி மாவட்டம்). திரிகை திரிகை = சுழலும் மரம்; பின்னே கல் திரிகை ஆயது. இதுகால் மாழைத் திரிகைகள் மின்பொறி இயக்க வகையால் அமைந்துள. திரிமரம் என்பது திரிகையின் பழம் பெயர். திரிமரப் பந்தர் (பெரும்பாண். 187). அதனால் மரத்தால் அமைந்திருந்தமை புலனாம். திரிதரல் திரிதரல் = திரிதல், சுழலல். திரிதருதல் என்பதும் இது. அலமரல் தெருமரல் என்பவை அலமருதல், தெருமருதல் என்றானாற் போல்வது (தொல். 189). திரிபந்தாதி அடிதோறும் முதற்சீர் முதலெழுத்தொன்று மட்டும் அளவால் ஒத்துத் திரிந்து நின்று பிறவெழுத்துகளது தொகுதி (யமகம்) மடக்குப் போலவே வருவது திரிபு என்னும் சொல்லணி வகையினதாம். மடக்கு அமைப்பில் முதல் எழுத்து ஒன்று மட்டுமே திரிந்து நிற்றல் திரிபு என்க. திரிபுடன் அந்தாதியாக வரும் பாடல்களைக் கொண்ட நூல் திரிபந்தாதி எனப்பெறும். சிவப்பிரகாச அடிகள் இயற்றிய பழமலைத் திரிபந்தாதி காண்க. எ-டு: திருவருந் தங்க வருங்கல்வி மாது சிறப்புவருங் கருவருந் தங்க நிலையாதென் றுள்ளங் கரைந்திறைஞ்சிற் பொருவருந் தங்க மலைபோலும் குன்றைப் புராதனனை இருவருந் தங்க டலையா லிறைஞ்சு மிறைவனையே - பழமலை.திரிபந். திரிபு திரிபு:1 திரிபு = ஒன்று வேறொன்றாகத் தோன்றல். புணர்ச்சி வகையுள் ஒன்று திரிதல். மற்றவை தோன்றல், கெடுதல். திரிபு:2 இதுவோ அதுவோ என உண்டாம் ஐயத்தில் மாறுபட முடிவு செய்தல் திரிபு. ஐயம் திரிபு அறக்கற்றல் ம.வ. திரிபு:3 பால் திரிந்து திரைந்துவிட்டது. கெட்டுப் போனது. பால் திரைந்து போனது என்பதும் அது. திரிமணை மணை என்பது அடிக்கட்டை, துண்டுப்பலகை எனப் பொருள் தரும் சொல். திரிகை, மரத்தினால் முற்காலத்தில் செய்யப்பட்டு வழக்கில் இருந்தமையால் அதனைத் திரிமணை (திரிகை) என்பது ஒட்டன்சத்திர வழக்கு ஆயிற்று. x.neh.: அரிவாள்மணை. திரு பெயர்ச் சுட்டு வேண்டாப் பெருஞ்சுட்டுப் பேராசிரியப் பெருமகனார் ஒருவர் முன்பு திகழ்ந்தார்! பேராசிரியர் என்பதே அவர்தம் பெயர். அப்பேராசிரியர் பெருந்தகை இணையற்ற பேரா சிரியராகவே திகழ்ந்தார். அத்திகழ்வு முற்றிலும் நம் கையகத் தகப்படா தொழிந்தன வெனினும், கிடைத்தவை அவர் பேராசிரியரே என்பதை நிறுவ வல்லவையாம்! அவை எவை? தொல்காப்பிய பின்னான்கியல்களாம் மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் என்பவற்றுக்கு அவர் விரித்த உரை; திருக்கோவையார்க்கு அவர் அருளிய உரை என்பவை அவை. பெறலரும் அப்பேராசிரியப் பெருந்தகை தரும் திரு விளக்கம், பெருவிளக்கம்! அருவிளக்கம்! அப்படியொரு விளக்கம் அப்பேராசிரியரை யன்றி எவரே அருளினார்! திருவென்பது பொருள் உடைமையும் பொருள் கொணர்ந்து துய்த்தலும் இன்றி எஞ்ஞான்றும் திருத்தகவிற்று ஆயதோர் உள்ள நிகழ்ச்சி. அது, வினையுள் உடைமை எனப்படும் என்பது தொல்காப்பியத்தில் வரும் விளக்கம் (பொருள். 273). திரு என்பது செல்வம் என அமையாமல், திருத்தகவிற்று ஆயதோர் உள்ள நிகழ்ச்சி என்கிறாரே பேராசிரியர்! செல்வம் என்பது சிந்தையின் நிறைவே என்னும் குமரகுருபர அடிகள் தெளிவுக்கு மூலவர் இப்பேராசிரியரோ? வினையுள் உடைமை என்பது என்ன செறிவு! என்ன செட்டு! என்ன செழுமை! தீவினையால் இன்மை எய்தினும் உடையவன் போல் இருக்கும் ஒள்ளிய உள்ள நிலையே அஃதன்றோ! எண்ண எண்ண விரியுமே - இனிக்குமே - பேராசிரியரின் இத்திருவுரை! இனிக்கோவையாரில் வரும் திருவுரைதான் என்ன? திருவென்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்றது அழகு; இஃது என் சொல்லியவாறோ? எனின், யாவன் ஒருவன் யாதொரு பொருளைக் கண்டானோ அக்கண்டவற்கு அப்பொருள்மேல் சென்ற விருப்பத்தோடே கூடிய அழகு! அதன்மேல் அவற்கு விருப்பம் சேறல்! அதனிற் சிறந்த உருவும் நலனும் ஒளியும் எவ்வகையானும் பிறிது ஒன்றற்கு இல்லாமையால் திரு வென்றது அழகுக்கே பெயராயிற்று! அங்ஙனம் ஆயின் இது செய்யுளின் ஒழிய, வழக்கினும் வருவது உண்டோ? எனின், உண்டு; கோயிலைத் திருக்கோயில் என்றும், கோயில் வாயிலைத் திருவாயில் என்றும், அலகைத் திருவலகு என்றும், பாதுகையைத் திருவடி நிலை என்றும் வழங்கும் இத்தொடக்கத்தன எல்லாம் திருமகளை நோக்கி எழுந்தன அல்ல. அது கண்டவனுடைய விருப்பத்தானே எழுந்தது. ஆதலானும், திரு வென்பது அழகு என்றே அறிக. அதனால் திருவென்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கமே என்பது அது. திருவளர் தாமரை என்பதில் வரும் திரு விளக்கம் இது! திருமகள் வளர்கின்ற தாமரை என்ற அளவில் பொருள் கொள்வாரைத் தெளிவிக்க உரைக்கும் தேர்ச்சி உரை இது. கண்டாரால் விரும்பப் பெறும் பேறாம் தன்மை யாங்குண்டோ ஆங்குண்டு திரு என்றாராம்! இனி, அகரவரிகள் திருவுக்கு என்ன பொருள்களைத் தருகின்றன. அழகு, ஒளி, கணி (சோதிடம்), சிறப்பு, செல்வம், தலையில் சூடப்படும் ஓரணி, தாலி, திருமகள், தெய்வத்தன்மை, பெண், பேறு, பொலிவு, நல்வினை, மங்கல மொழியுள் ஒன்று - என்பவை அவை தரும் பொருள்களாம். இத்தகு வளத்திருவைக் கண்டோர் வாளா விடுவரோ? திருவைக் கொஞ்சிக் கொஞ்சிக் குலவினர்; கொண்டாடினர்! திரு இருவகை வழக்குகளிலும் பெறும் சிறப்புகளைக் காண்க! சொல்வகை சான்று: திரு முன்னடைச் சிறப்புச் சொல் திருமிகு, திருத்தகு திரு பின்னடைச் சிறப்புச் சொல் உயர் திரு, தவத்திரு திரு முன்பின் அடைச்சிறப்புச் சொல் திருப்பெருந்திரு, திருவார்திரு திருப்பெற்ற மாந்தர் பெயர் திருவள்ளுவர் திருநாவுக்கரசர் திருப்பெற்ற உடற்பெயர் திருமெய், திருமேனி திருப்பெற்ற உறுப்புப் பெயர் திருமுடி, திருவடி திருப்பெற்ற குடிச்சிறப்புப் பெயர் திருமாவளவன், திருமாறன் திருப்பெற்ற கூட்டப்பெயர் திருத்தொண்டர், திருக் குலத்தார் திருப்பெற்ற பதவிப்பெயர் திருவாய்க்கேள்வி, திருமந்திர ஓலை திருப்பெற்ற ஊர்ப்பெயர் திருப்பதி, திருவாரூர் திருப்பெற்ற இடப்பெயர் திருக்கோயில், திருமலை திருப்பெற்ற பொருட்பெயர் திருவிளக்கு, திருமலர் திருப்பெற்ற நாட்பெயர் திருவாதிரை, திருவோணம் திருப்பெற்ற நிகழ்வுப் பெயர் திருவுலா, திருப்பூட்டு திருப்பெற்ற பண்புப் பெயர் திருவருள், திருவறம் திருப்பெற்ற நூல்பெயர் திருக்குறள், திருவருட்பா திருப்பெற்ற பாவகைப் பெயர் திருநேரிசை, திருத்தாண்டகம் திருப்பெற்ற தொழிற்பெயர் திருமெழுக்கு, திருமுழுக்கு திருப்பெற்ற வாழ்த்து திருவுறுக, திருவாழ்க இன்னும் பகுத்துரைப்பின் எத்தனையோ வகைத் திருக்களாம்! திருகல் முறுகல் திருகல் = வளைதல், கோணல். முறுகல் = வளைந்து கீழோ மேலோ முடிச்சுப் படச் செல்லுதல். திருகிய மரத்தைப் பிளப்பதினும் முறுகிய மரத்தைப் பிளக்க இயலாது. பிளக்கும் கருவியையும் பதம்பார்க்கும் கெட்டியான முடிச்சு உடையது. திருகல் முறுகலான மரங்கள் தச்சு வேலைக்கு ஆகாதெனத் தள்ளப்படும். முற்றுதல் மிக்கது வயிரம் பாய்ந்தது ஆகும். அம்மரத்தின் தன்மை மக்கள் இயல்புக்கும் வந்தமையால், அவன் திருகல் முறுகல் பேர்வளி என்னிடம் உன் திருகல் முறுகலை வைத்துக் கொள்ளாதே என்பதும் வழக்காயிற்று. திருக்கண் பத்து (நயனப் பத்து) ஆசிரிய விருத்தம் பத்தினாலாவது, கலித்துறை பத்தினா லாவது நயனத்தைப் புகழ்வது நயனப் பத்தாகும் (நயனம் - கண்) (நவநீத. 50). ஆசிரிய விருத்தம் பத்தால் பாடுவது என்று பன்னிரு பாட்டியல் கூறும் (333). பத்துப்பாடல் என்ற அளவில் இலக்கணவிளக்கப் பாட்டியல் (92) அமையும். பார்வையைப் பத்துப் பாட்டால் உரைப்பது நயனப் பத்தென நவிலப் படுமே என்பது முத்துவீரியம் (1104). திருக்கு முறுக்கு திருக்கு = நீண்ட அளவில் திருகிய கயிறு. முறுக்கு = குறுகிய அளவில் முறுக்குண்ட கயிறு. கயிறு திருக்கு முறுக்காய்க் கிடக்கிறது என்பது உலக வழக்கு. இருள்திருக்கிட் டொண்ணறுந் துகிற்கிழி பொதிந்துறை கழித்தனபோற் - சீவக. 164 திருக்கிட்டு = நீள முறுக்கி. திருக்குறள் திரு = கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்றது அழகு. யாப்பால் பெற்ற பெயர் குறள். அதன்சிறப்புக் கருதிய அடை திரு. அதன்முதற் பெயர் அறம். செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென அறம் பாடிற்று என்னும் புறப்பாடலால் (32) அப்பெயரீடு விளக்கம். அறம் என்பதால் முப்பாலும் அறமே ஊடகமாக அமைந்த நூல் என்பதும் மனத்தில் மாசில்லா அறமே அறம் என்பதும், அவ்வறமில்லா எதுவும் மாசு படிந்ததே என்பதும் அதன் விளக்கமாம். உலகுக்கு ஒருநூல் என உலகம் கொள்ள ஒப்பதும் மிக்கதும் இல்லா ஒருநூல் திருக்குறள் என்பதை உலகம் கட்டாயம் ஏற்கும் நூல். மழலையர் வாய் அமிழ்தாகவும் பெருமூதாளர் வீடுபேறாகவும் எண்ணி எண்ணி ஓதத் தக்க நூல்! உலகம் எப்பிரிவும் எப்பிணக்கும் இல்லாமல் வாழவென்றே தமிழில் யாக்கப்பட்ட நூல் திருக்குறளாகும். அதன் ஆசிரியர் திருவள்ளுவர் என்பது. அரசின் உள்படு கருமத் தலைவர் பெயர் என்பது நாவலர் பாரதியார் முடிபு. திருக்குறள் பொய்யாமொழி என்றும் பொருளுரை என்றும் பாராட்டப்பட்ட நூல். திருவள்ளுவர் வரலாறு எனச் சொல்பவை எல்லாம் பிற்காலப் புனைவுகளே. திருவள்ளுவ மாலை திருக்குறளின் சிறப்புகளைக் கூறினும் அவையும் பிற்காலப் புலவர்கள் முற்காலப் புலவர்களின் பெயர்களால் பாடி வைக்கப் பட்டவையே. திருவள்ளுவர் தொல்காப்பியர் வழியில் தமிழ்நெறியைத் தெளிந்து உலகுக்காகப் பொதுமை யறம் பொலியச் செய்யப்பட்ட சால்பு நூலாம், திருக்குறள். அதன்காலம் கி.மு. 31 எனத் தீர்மானிக்கப்பட்டாலும் அதற்கு முன்னையது என்பது சங்கச் சான்றோர் கொண்ட திருக்குறள் ஆட்சிகளால் விளக்கமாம். வள்ளுவர் உள்ளமும் வரலாறும் திருக்குறளே யன்றி வேறன்றாம். 1330 குறள்களும் பளிங்குள் (கண்ணாடியுள்) தோன்றும் பனிமலை (இமயமலை) என்னத் தக்க விரி வுடையவையாம். மக்கள் வாழ்வியல் சட்டம் திருக்குறளே எனவரும் நாள், உலகம் உய்யும் நாளாம். திருக்கைக் கோட்டி ஏடுகளைக் காப்பதற்கென ஒரு திட்டம் இடைக்காலத்தில் இருந்தது என்பதைத் திருக்கைக் கோட்டி என்னும் கல்வெட்டுத் தொடர் விளக்குகின்றது. திருமுறைகள் வைத்து வழிபடப் பெற்ற கோயில் மண்டபம் திருக்கைக் கோட்டி என்று வழங்கப் பெற்றது. இதனைச் சீர்காழியிலுள்ள திருஞானசம்பந்தர் திருக்கோயில் கல்வெட்டு விளக்குகின்றது. திரிபுவனச் சக்கரவர்த்திகள் ரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு ஆவது இராஜராஜ வளநாட்டுத் திருக்கழுமல நாட்டுப் பிரமதேயம் திருக்கழுமலம் கற்கடக நாயிற்று முதல் கிராம காரியஞ் செய்கிற பெருமக்களோம். ஆளுடைய பிள்ளையார்த் திருமாளிகைத் தமிழ்விரகர் கண்டு இக்கோயில் திருக்கைக் கோட்டியில் எழுந்தருளி யிருக்கிற திருமுறைகள் திருக்காப்பு நீக்கி அழிவுள்ளன எழுந்தருளிவிக்கவும் திருமுறைகள் எழுந்தருளிவித்தும், திருமுறை பூசித்து மிருக்கைக்கு இவ்வூர் காசு கொள்ளா இறையிலியாக இட்ட நிலம் என்று வரும் அக்கல்வெட்டுப் பகுதி திருக்கைக் கோட்டி என்பதை நன்கு விளக்குகின்றது. ஏடுகள் பழுதுற்ற போது அவற்றைப் புதுக்குதற்கு ஒரு தமிழ் விரகர் (அறிஞர்) இருந்தார் என்பதும் தேவாரத் திருமுறைகள் வழிபடப் பெற்றன என்பதும் ஊர்ச் சபையாரே இவற்றின் செலவுக்கு இறையிலி நிலம் அளித்துப் போற்றினர் என்பதும் தெளிவாம். திருக்காராயில், திருவீழி மிழலை, திருவுசாத்தானம் கல்வெட்டுகளும் திருக்கைக் கோட்டி பற்றி உரைக்கின்றன. திருவுசாத்தானக் கல்வெட்டு திருக்கைக் கோட்டியில் இருந்து தேவாரம் ஓதுவார்களைத் திருக்கைக் கோட்டி ஓதுவார் என்றும், அதற்கு அளிக்கப் பெறும் நிவந்தத்தைத் திருக்கைக் கோட்டிப் புறம் என்றும், அதனை ஆட்சி செய்பவரை திருக்கைக் கோட்டி இல்லத் துறையார் என்றும் குறிப்பிடுகின்றது. திருக்கைக் கோட்டி என்பதன் சொற்பொருள் விளங்கக் கிடப்பதே. உலகை வாழ வைக்கும் கை உழவர்கை. ஆதலால் அவர்கை திருக்கை என்று வழங்கப் பெறும். அவர்தம் உழுதொழிற் சிறப்பை உரைக்கும் நூல் திருக்கை வழக்கம் என்பது. கம்பரால் இயற்றப் பெற்ற ஏரெழுபதுடன் இணைந்த இத்திருக்கை வழக்கமும் கம்பர் அருளியதே. உழுதொழில் செய்த உயர்கை திருக்கை எனப் பெற்றது போலவே எழுதுதொழில் செய்த எழிற்கையும் திருக்கை எனப் பெற்றது. அக் கையெழுத்து அமைந்த ஏட்டை ஆகுபெயரால் பின்னர்ச் சுட்டியது. ஆகலின் ஏடுகளைத் தன்னகத்துக் கொண்ட கோயில் மண்டபம் திருக்கைக் கோட்டி எனப் பெற்றது. கோட்டம் என்பது கோயிலையும் கோட்டி என்பது கோயில் வாயிலையும் குறிக்கும். ஆயிழை கோட்டத்து ஓங்கிரும் கோட்டி என்னும் சிலப்பதிகாரத் தொடரும் (30: 61,62) அப்பகுதியில் அரும்பத உரையாசிரியர் கோட்டி - கோயில் வாயில் என்று எழுதுவதும் இவண் கருதத் தக்கனவாம். ஆதலால் திருக்கைக் கோட்டி என்பது கோயில் வாயிற்கண் இருந்ததோர் மண்டபம் என்பது விளங்கும். ஏடுகளை அழியாமல் போற்றிக் காத்தற்கும் நாள்தோறும் ஓதுதற்கும் செய்த ஏற்பாடே திருக்கைக் கோட்டி ஆதலின் அச்செயல் நயக்கத் தக்கதாம். திருச்சின்னம் சின்னம் என்பது திருக்கோயில் பொருள்களையும், சங்கம், ஊதுகொம்பு ஆகியவற்றையும், அடையாளம், துண்டித்தல், துன்புறுத்தல் ஆகிய பொருள்களையும் தரும் சொல். திருச்சின்னம் என்பது திருக்கோயிற் பொருள்களின் இறைமை யின் சிறப்புகளை எடுத்துச் சங்கமும் கொம்பும் பிடிப்பதாக வரும். மெய்ப்பொருட் கொள்கைகளைக் கூறிச் சின்னம் பிடிப்பதாகவும் வரும். திருச்சின்ன மாலை என்னும் பெயரால் வேதாந்த தேசிகர், வீரராகவாச்சாரியார் ஆகியோர் இயற்றிய நூல்கள் உண்டு. வள்ளலார் அருளிய ஆனந்த மேலீட்டுப் பாடல் சின்னம் பிடிப்பதாக வரும். அம்பலவர் வந்தாரென்று சின்னம்பிடி அற்புதம் செய்கின்றாரென்று சின்னம்பிடி செம்பலன் அளித்தாரென்று சின்னம்பிடி சித்திநிலை பெற்றதென்று சின்னம்பிடி சிற்சபையைக் கண்டோமென்று சின்னம்பிடி சித்திகள்செய் கின்றோமென்று சின்னம்பிடி பொற்சபை புகுந்தோமென்று சின்னம்பிடி புந்திமகிழ் கின்றோமென்று சின்னம்பிடி என்பவை அவற்றில் முதலிரு கண்ணிகள். திருத்தகு அழகும் தகவும் அமைந்தது திருத்தகு. திருத்தகு மாமுனி சிந்தாமணி திருத்தகவு, திருத்தகை என்பனவும், மேதகு, மேதகை என்பனவும் இவ்வகைய. திருத்தம் திரிபு = மாற்றம். மாறுபாடு இல்லாமல் செவ்விதில் அமைப்பது திருத்தம் ஆகும். மாணவர் விடைத்தாள் திருத்துதல் ஒருபெரும்பணி. திருத்தமான பேச்சு, திருத்தமான செயல் ம.வ. திருத்தக் கல்லுக்குத் தெற்கிட்டுப் பிறந்தவன் என்பது பழமொழி. நூல்களில் பிழை - திருத்தப்பட்டி இல்லாமல் செப்ப மாகச் செய்தவர் ஆறுமுக நாவலர். திருத்து வயல் என்னும் பொருளுடையது இச்சொல். மேடு பள்ளங்களைத் திருத்தியது திருத்து. வயல் பிச்சைப் பிள்ளை திருத்தெல்லாம் (குற்றா. குற. 112). வயக்கல் - கல்லு கரம்பை நீக்கி முள்ளு புதர் வெட்டி பண்படுத்தப்பட்டது என்னும் பொருளில் கல்வெட்டுகளில் பயிலும் இச்சொல். வசக்கல் என்றும் வரும். வயக்கல் > வசக்கல் > வயல் இதே பொருளுடையது திருத்து. செய் என்பதும் திருத்திச் செய்யப்பட்ட வயல் என்பதே இது. பழஞ்சொல். நன்கு செய்யப்பட்டது நன்செய். எளிதாகச் செய்யப்பட்டது புன்செய். திருநீறு பூசுதல் திருநீறு பூசுதல் = உணவு முடித்தல். சிவநெறியர், உணவு கொள்ளுமுன் திருநீறு பூசுதல் வழக்கம். அதனால் ஒருவர் திருநீறு பூசியிருந்தால் உணவை முடித்துவிட்டார் எனப்பொருள் செய்வது வழக்கம். இதனால் வாயாலேயே விருந்து செய்துவிடும் தேர்ச்சியுடைவர்கள், திருநீறு பூசியிருக்கிறீர்கள் சாப்பாடு முடிந்துவிட்டது போலும் என்று பேச்சை முடித்துக் கொள்வர். இல்லை இல்லை நீறில்லா நெற்றி பாழ் என்பதறிந்து பூசினேன்; உண்டேனில்லை; உணவு வேண்டும் என்பாரா? அப்படி வேண்டும் என்றாலும் வாய்விருந்தர்க்கு வேறு வழியில்லாமல் போய்விடுமா? திருப்பல்லாண்டு இறைவனையும், இறைவன் தொடர்புடைய பொருள் களையும், அடியார்களையும் இன்னபிறவற்றையும், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு வாழ்கவென வாழ்த்துவதாய் அமைந்த நூல் திருப்பல்லாண்டு என்பதாகும். பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டு அறுசீர் ஆசிரிய விருத்தத்தால் அமைந்துள்ளதறிக. திருப்பள்ளியெழுச்சி உலகத்துயிர்களை யெல்லாம் தன் அடிக்கண் ஒடுக்கி, மீண்டும் மலர்க்கும் இறைவன் துயில் கொள்வதாகவும், அவன் அத்துயில் நீங்கி எழுந்தருள வேண்டுவதாகவும் அவன் புகழ்பல பேசி எண்சீர் விருத்தத்தால் பாடப்பெறுவது திருப்பள்ளி எழுச்சியாகும். தொண்டரடிப் பொடி ஆழ்வாரும், மாணிக்க வாசகரும் அருளிய திருப்பள்ளி எழுச்சிகள் எடுத்துக்காட்டாம். பாரதியாரால் பாடப் பெற்ற பாரதமாதா பள்ளியெழுச்சி இவ்விலக்கணம் அமையப் புதுநெறியில் அமைந்ததாகும். இறை வனைத் தந்தையாய்த் தாயாய்க் குருவாய்த் தெய்வமாய், அரசாய், வள்ளலாய் நிறுத்தித் திருப்பள்ளி யெழுச்சி பாடுகிறார் வள்ளலார். திருப்பூட்டல் திரு என்பது மங்கலச் சொல். தெய்வத் தன்மையது என்னும் பொருளது. ஒருவர் மணம், ஒன்றிய பாலது ஆணையால் இயற்கையின் இயைபால் தெய்வம் கூட்டி வைத்தலால் நேர்வது என்பது தொன்முது தமிழர் கொள்கை. அதனால் இயற்கைப் புணர்ச்சி, கடவுட் புணர்ச்சி, தெய்வப் புணர்ச்சி என்றனர். அவ்வழக்கே திருமணம், திருமங்கல நாண் அணிதல், திருப்பூட்டல் என வழக்கில் ஊன்றியது. திருப்பூட்டல் என்பது மணமகன் மணமகளுக்குத் திருமங்கல நாணை அணிவித்தலாம். மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு - திருக். 60 என்பது எண்ணத் தக்கது. திருப்பெயர்ப் பொறி பீடும் பெயரும் எழுதிக் கல்நாட்டல் வீர வழிபாட்டு முறையாகும். நடுகல் என்பது வீர வழிபாட்டுச் சின்னமே. காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று வகையிற் கல் என்னும் தொல்காப்பிய (1006) வழியிலேயே காட்சிக் காதை, கால்கோட் காதை, நீர்ப்படைக் காதை, நடுகற் காதை, வாழ்த்துக் காதை, வரந்தரு காதை என்பவற்றை இளங்கோவடிகளார் வஞ்சிக் காண்டமாக அமைத்துக் கொண்டார். செங்குட்டுவன் வடநாடு சென்று பனிமலையில் கல்லெடுத்து மேன்மலையில் கோயில் நிறுவி வழிபட்ட செய்தியை விரித்துரைத்தார். இச்செய்தியும், தென்னாட்டு வேந்தர்களாகிய கரிகாற் சோழன் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் முதலியோர் வடநாடு சென்று இமயத்தில் தங்கள் இலச்சினைகளைப் பொறித்துக் கொடிநாட்டித் திரும்பிய செய்தியும் பின்னணியாகக் கிளர்ந்தது. இத்திருப் பெயர்ப் பொறி இலக்கியமாம். வெற்றிக் கொடிமேரு வில்நாட்டித் தன்பெயரைப் பற்றி வரைதலந்தப் பான்மைப்பேர் - பிர. திர. 68 என்பது திருப்பெயர்ப் பொறியின் இலக்கணம். திருப்பெயர் வரிசை (நாமாவளி) நாமம் = பெயர்; ஆவளி = வரிசை; விளக்கணி, தீபாவளி எனப்படுதல் அறிக. இறைவன் திருப்பெயர்களைப் பலபட வுரைத்து வாழ்த்து தலும் வேண்டிக் கிடத்தலும் நாமாவளியாம். அம்பலத் தரசே அருமருந்தே ஆனந்தத் தேனே அருவிருந்தே பொதுநடத் தரசே புண்ணியனே புலவ ரெலாம்புகழ் கண்ணியனே எனத் தொடங்கும் வள்ளலார் நாமாவளி. நல்லோரெல் லார்க்கும் சபாபதியே நல்வர மீயும் தயாநிதியே என அருள் விளக்கம் செய்து, புத்தந்தரும் போதா வித்தந்தரும் தாதா நித்தந்தரும் பாதா சித்தந்திரும் பாதா என வேண்டி நிறைகின்றது. அடியார் திருக்கூட்டத்து ஆர்வ இசையால் கொட் டாட்டுப் பாட்டாகத் திகழும் வண்ணம் பல்வேறு இசை வண்ணம் திகழப் பாடப்பட்டுள்ளதாம். கொட்டாட்டுப் பாட்டு (வாட்ய நிருத்த கீதம்) என்பது கல்வெட்டில் கண்ட அருந்தொடர். திருப்பேறு (இலட்சுமி விலாசம்) கன்னி ஒருத்தியின் திருமணத்தைக் கவினோடு நடத்தி வைக்கத் திருமாலும் திருமகளும் ஒருங்கு வந்ததாகப் பாடுதல் இலட்சுமி விலாசமாம். பெண்ணை மணங்கூட்ட மாலொடுபொன் வந்ததாய்ப் பாடல் அணைலட் சுமிவிலா சம் - பிர. திர. 3 திருப்போர்ப்புறம் போர்ப்புறம் = போர்க்களம். புறங்காடு = இடுகாடு, சுடுகாடு. போர்க்களமே போர்ப்புறமாம். சோழன் செங்கணானும் சேரமான் கணைக்கால் இரும்பொறையும் போர்ப்புறத்துப் பொருது உடைந்துழி சேரமான் கணைக்கால் இரும்பொறையைப் பற்றிக் கொண்டு சோழன் சிறை வைத்துழி பொய்கையார் களம்பாடி வீடுகொண்ட களவழி நாற்பது எனவரும் குறிப்புக் காட்டும் போர்ப்புறம், திருப்போர் ஆகித் திருப்பூராகியது என்பர் (நூல்: அலகுமலை அனுபூதி). திருமடக்கு (திருவியமகம்) அடிதோறும் வந்த சொல்லோ தொடரோ மீண்டும் வந்து பொருள் வேறு தருவது மடக்கு என்னும் சொல்லணியாகும். அடியின் முதல், இடை, கடை மடங்கி வருதல் முறையே முதன்மடக்கு, இடைமடக்கு, கடைமடக்கு எனப்பெயர் பெறும். முழுவதும் மடங்கி வருவதும் உண்டு. அது முழுமடக்காகும். திருஞானசம்பந்தர் பாடிய கடைமடக்குப் பதிகத்தில் முதல் பாடல். உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வது நின்னருள் மெய்யினையே கற்றவர் காய்வது காமனையே கனல்வழி காய்வது காமனையே அற்றம் மறைப்பதும் உன்பணியே அமரர்கள் செய்வதும் உன்பணியே பெற்றும் உகந்தது கந்தனையே பிரம புரத்தையு கந்தனையே திருமணம் திரு = அழகு, செல்வம். மணம் = மணமாலை சூடி மணமக்களாக்கும் விழா. பண்டை நாளில் திருமணம் நிகழ்ந்த முறை அகநானூற்றில் (86, 136) பதிவாக்கப்பட்டுள்ளது வருமாறு. திருமணம் நடத்துதற்கு நன்னாள் ஒன்றைத் தேர்ந்தனர். அந்நாள், திங்களொடு சகடம் (உரோகிணி) என்னும் விண்மீன் கூடிய நாளாகும். அந்நாளே ஓரை என வழங்கப் பெற்றது. அந்நாளில் வைகறைப் பொழுதே மணம் செய்தற்குரியது எனக் கொண்டு ஊரவரை அழைத்தனர். திருமணம் நிகழ விருக்கும் இல்லத்தில் வரிசை வரிசையாகத் தூண்கள் நட்டனர்; பந்தல் இட்டனர்; வெண்மணல் பக்கமெல்லாம் பரப்பினர்; பந்தலில் மாலைகள் தொங்க விட்டனர்; வாழையும் கமுகும் நிறுத்தினர்; தொடலைகள் (மாலைகள்) ஆங்காங்குக் கட்டினர்; எழில்மிகு தழைகளைக் கட்டித் தூண்களை அழகு படுத்தினர். விளக்குகள் ஏற்றினர். ஊரவர் எல்லாரும் மணவீட்டில் கூடியிருந்தனர். உழுந்தம் பருப்புடன் கூட்டிக் குழைய ஆக்கிய பொங்கல் உண்டனர். பின்னர்ப் புதல்வர்களைப் பெற்ற மங்கல மகளிர் மணச் சடங்குகளைச் செய்தனர். ஊர்ச்சடங்குகளை உரிய முறையில் செய்தலில் தேர்ச்சி மிக்கவர்கள் அவர்கள். புதிய பானைகளில் நறுநீர் கொண்டு வந்தனர். புதுக்கலங்களில் பல்வேறு மங்கலப் பொருள்களையும் நறுமணப் பொருள்களையும் கொணர்ந்தனர். அவர்கள் அவற்றை முறைமுறையே எடுத்துத் தர மக்கட்பேறுற்ற மங்கல மகளிர் நால்வர் முன்னின்று திருமணச் சடங்கு நிகழ்த்தினர். மணமக்களுக்கு நீராட்டுதல் முற்பட்ட வினையாக அவர்களால் செய்யப்பட்டது. கற்பு நெறியில் வாழ்க! நற்பல உதவி புரிக! கணவனால் விரும்பப்படும் நன்மனைவியாகத் திகழ்க! என வாழ்த்தி மணமகளுக்கு முதற்கண் நீராட்டினர். நீராட்டுடன் நெல்லும் பூவும் தூவினர். புத்துடை உடுத்தச் செய்தனர். மணமக்கள் இருவரையும் ஒருங்கமர வைத்துத் திருமணம் நிகழ்த்தினர். அதன்பின்னர்ச் சுற்றத்தார் சூழ்ந்தனர். மணமகளை நீ பெரிய மனைக்கிழத்தி ஆவாயாக என வாழ்த்தினர். மணமகளை மணமகனுடன் இணைத்து ஓரிற்படுத்தி மகிழ்ந்தனர். முதலிரவு உடன்புணர் கங்குல் எனப்பட்டது (அகம். 86). இனி இவற்றுடன் நெய்கலந்து ஆக்கப் பெற்ற புலவூண் விருந்து தருதலும் புள் நிமித்தம் அறிந்து மணவினைக்குப் புறப்படலும், கடவுளை வழிபட்டு மணவினை தொடங்கலும், முழவம் முரசம் முதலிய மங்கல இசை மணநிகழ்வின் போது இசைத்தலும், வெண்ணூலில் நறுமலர் தொடுத்த மாலையை மணமக்கள் அணிதலும் ஆகியவையும் மணச்சடங்கின் போது நிகழ்ந்தமை அறியக் கிடக்கிறது (அகம். 136). மகளிர் நடத்திய திருமணம் ஆடவர் நிகழ்த்துவதாய் மாறி, அயன்மொழியர் நடத்துவதாய் மாறியது. மாறாமல் ஊர்ப் பெருமக்கள் நடத்துவதாகவே சில குடி வழிகளில் தொடரவும் செய்தது. பின்னே தன்மானத் திருமணம், சீர்திருத்தத் திருமணம், தமிழ்நெறித் திருமணம், சிவநெறித் திருமணம், சன்மார்க்கத் திருமணம், பதிவுத் திருமணம் எனப் பலவகைப்பட்ட மீட்டெடுப்புகள் நிகழ்கின்றன. எனினும், ஆரியமயக்கு விட்டபாடில்லை என்பதைத் தொலைக்காட்சியரும், தமிழ் உணர்வில்லாரும் வளமூட்டி வளர்க்கவே செய்கின்றனர். திருமறம் கண்ணிடந்தப்பல், கையறுத்தல், கால்தடிதல் முதலாகத் தமக்குத் தாமே செய்து இறைவன் திருவருளில் தோய்ந்த அடியார் வரலாற்றை ஆசிரியப்பாவாற் கூறுவது திருமறம் ஆகும். இவ்வகையில் எழுந்தவை திருக்கண்ணப்ப தேவர் திருமறம் முதலியவையாம். திருமால் திரு + மால் = திருமால். திரு = அழகு. மால் = பெரியது, உயரமானது. அழகும், உயரமும் அமைந்த தோற்றமுடையவர் திருமால். அழகும் தோற்றமும் அமைந்த கட்டடம் திருமால். மால் > மகால் (வ). திருமாளிகை அடியார் ஒருவர் பிறந்த வீட்டைத் திருமாளிகை என்பது மாலிய வழக்காகும். திருமாளிகைத் தேவர் என்னும் இசைப்பா வல்ல சிவனிய அடியார் பெயரால் திருமாளிகை சிவனியச் சார்புடைமையும் புலப்படும். திரு = தெய்வத் தன்மை. திருமுக்கால் பாடலின் இரண்டாம் அடியும் நான்காம் அடியும் முச்சீரால் முடிவது திருமுக்கால் எனப்படும். முதலாம் மூன்றாம் அடிகள் நாற்சீர் என்க. விண்ணவர் தொழுதெழு வெங்குரு மேவிய சுண்ணவெண் பொடியணி வீரே சுண்ணவெண் பொடியணி வீரும தொழுகழல் எண்ணவல் லாரிட ரிலரே இத்திருப்பிரமபுரத் திருமுக்கால் (1) ஆளுடைய பிள்ளையார் அருளியதே. திருமுடி சூட்டு (பட்டாபிசேகம்) வேந்தன் ஒருவன் தான் இனிதின் ஆட்சி நடாத்தி அதன் பின்னர் அவன் பெற்ற மைந்தனுக்கு ஆட்சியைத் தருதல் திருமுடிசூட்டு எனப்படும் பட்டாபிசேகம் ஆகும். அரியணை அனுமன் தாங்க என வரும் பாட்டு திருமுடி சூட்டாக இராம காதையில் திகழ்கின்றது. அரசர்தம் பெருவிழாக்களுள் தலையாயது முடிசூட்டு விழாவாம். இந்நாள் மக்களாட்சி முறையில் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவை ஒப்பிட்டுக் காணத்தக்கதாம். தானரசு செய்துதவு தன்சேய்க் கரசுதரல் தேன்மொழியாய் பட்டாபி சேகமாம் - பிர. திர. 69 திருமுன்னிலை முறை (சந்நிதி முறை) இறைவன் முன்னிலையில் நின்று முறையிட்டு வேண்டு வதாகப் பாடப்பெறும் நூல் சந்நிதி முறையாம். சந்நிதி முறை என்பது தனிநூல் எனச் சொல்லப் படுவ தெனினும், பல நூல்களின் தொகையாகிய அடக்க நூல் எனல் தகும். திருப்போரூர் முருகன் சந்நிதிமுறை என்பது இவ்வகை நூல்களுள் சிறப்பிடம் பெற்றது. அதில் தாலாட்டு, பள்ளி எழுச்சி, கட்டியம், எச்சரிக்கை, தூது, ஊசல் ஆகியவை உண்டு. தாழிசை, வண்ணம், சந்தம், விருத்தம், அட்டகம் ஆகியவை உண்டு. விருத்தங்களிலும் கலிவிருத்தம், பெருங்கழிநெடில் விருத்தம், குறுங்கழிநெடில் விருத்தம், சந்தக் கழிநெடில் விருத்தம் என்பனவும் இடம்பெற்றுள. வேறு சில சந்நிதி முறைகளில், இவற்றுடன் கோயில் சார்ந்த இலக்கிய அமைப்புகளும் இடம்பெற்றுள. கலம்பகத்தில் பல்வேறு பாடல்களும் துறைகளும் கலந்துள என்றால், சந்நிதி முறைகளில் பல்வேறு நூல்களும் நூற்பகுதிகளும் தொகுப்பாகச் செறிந்துள எனலாம். திருவரங்கம் ஈராறுகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதி அரங்கம் ஆகும். சான்று, காவிரியாறு கொள்ளிட ஆறு ஆகியவற்றின் இடையே உள்ள திருவரங்கம். மேற்கேயும், எருமையூர் (மைசூர்)ப் பகுதியில் அரங்கம் உண்டு; முகவை மாவட்டத்திலும் அரங்கம் உண்டு. அரங்குதல் = அரித்தல். ஆறுகள் நிலத்தை அறுத்து ஓடுவதால் ஆறு ஆயது. ஆறு அரங்குவதால் நிலம் அரிக்கப்பட்டு எஞ்சியுள்ள இடைப்பகுதி அரங்கம் எனப்படலாயிற்று. துருத்தி என்பதும் அரங்கம் போல்வதே. நீரின் இடையே எழுந்து தோன்றும் - துருத்தி நிற்கும் - இடம் துருத்தியாம். சான்று, திருப்பூந் துருத்தி. கடல்நீர் இடையே வெளிப்பட்டு நிற்கும் நிலப்பகுதி - நீரில் இருந்து தீர்ந்து எழும்பும் நிலப்பகுதி - தீர்வு எனப்பட்டது. அது தீவு எனப்படுகிறது. தீர்வு > தீவு. ஒரு காலத்தில் இமயப்பகுதி நீராக இருந்தமையால் இந்தியா நாவலந்தீவு எனப்பட்டது. நாவல்மரம் மிகுந்து விளங்கியிருத்தல் புலப்படுத்தும் பெயர். சமயப் போர் நாவல் நட்டு நடத்துதலால் பெற்ற பெயர் என்பது பின்னை வழக்காகலாம். தமிழுலகில் திருவரங்கம் என்றவுடன் எவருக்கும் நினைவில் உந்தியும் முந்தியும் நிற்பது உறையூர் என்னும் பழமைப் பெருநகர் சார்ந்து, ஆற்றிடைக் குறையாக விளங்குவதும் அரங்கர் ஆலயப் பெருமை யுடையதுமாம் அரங்கமேயாம். ஆழ்வார்கள் என்பார் திருமால் அன்பிலே ஆழ்ந்து ஆழங்கால் பட்டு அதுவாகவே மாறி நின்று, அருமைப் பனுவல்களை அருளியவர்கள் என்பது எவரும் அறிந்தது. பன்னீராழ்வார்களும் பண்ணோடு இசைத்த பனுவல், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் எனப்படுகிறது. பன்னீராழ்வார்களின் காலத்தின் பின் தொகையாக்கிச் சூட்டப்பட்ட பெயரே நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்பது. இதில் 3776 பாடல்கள் உள. ஈரடிக் கண்ணிகளை ஒரு பாடலாகக் கொண்டு நாலாயிரம் எனக் காட்டுவாரும் உண்டு. உண்ணும் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று வாழ்ந்தவர்கள் ஆழ்வார்கள் (3293). என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை இன்றமிழ் பாடிய ஈசன் என்றும் (3425), ஏர்விலா என்னைத்தன் னாக்கி என்னால் தன்னை பார்பரவு இன்கவி பாடும் பரமரே என்றும் (3429) பரமனைப் பாடப் பரமனே படைத்துக் கொண்ட பிறவி தம் பிறவி என வாழ்ந்தவர்கள் ஆழ்வார்கள். அப்பெருமக்கள் திருவரங்கத்தைக் கண்டு, சொக்கிச் சொக்கி நின்று சொட்டச் சொட்டப் பாடுகின்றனர். திரு வரங்கத்தை ஏறத்தாழ நூற்று ஐம்பது இடங்களில் (150) பெயர் சொல்லிப் பாடுகின்றனர். எப்படி? அரங்கம் அரங்கமாநகர் அணி அரங்கம் கடி (காவல்) அரங்கம் சீர் அரங்கம் தண்அரங்கம் திரு அரங்கம் திரு அரங்கத் திருப்பதி தென் அரங்கம் நளிர் அரங்கம் நீள்மதில் அரங்கம் பாயுநீர் அரங்கம் புனல் அரங்கம் பொழில்சூழ் அரங்கம் மதிள் அரங்கம் பொன்னிசூழ் அரங்கம் திருவரங்கம் கொண்ட பெருமைத் தொடர்கள் இவை. கோதையாம் குழந்தையை எடுத்து வளர்த்துச் செயற்கரிய செய்த பெரியாராய்த் திகழ்ந்த பெரியாழ்வார், தென்னாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கத் திருப்பதி என்கிறார் (422). ஆழ்வார் அமுதமொழிகளைப் போற்றுதல் எவர் கடன்? ஆழ்வார் வழி அடியார் கடன்! ஆழ்வார்கள் அமுதவாயால் ஆழங்கால் பட்டு நின்ற திருவரங்கம் என்னும் பெயர் என்ன ஆயது? கோயிலார்க்குத் தெரியாதா? ஊரவர்க்குத் தெரியாதா? ஊராளியர்க்குத் தெரியாதா? ஆழ்வார்கள் வாய், தேனாய் இன்னமுதாய்த் தித்திக்கத் தித்திக்கப் பொழிந்த, திருவரங்கத் திருப்பெயரை மீட்டெடுப்பார் எவர்? திருவரங்கத் தின்னமுதர் வருவாரா? வந்தால் அவர் ஆழ்வார் வழியர்! ஆழ்வார் தொண்டர்! ஆழ்வார் அணுக்கர்! ஆழ்வார் வாழ்வர்! திருவலகு திருவலகு இட்டான் என்பது இறையனார் களவியல் உரை. அலகிடுதல் = பெருக்குதல். அலகு = பெருக்குமாறு. திருக்கோயில் வழக்கில் இருந்த இது, பார்ப்பனருள் மாலிய வழிபாட்டார் (ஐயங்கார்) வீட்டு வழக்காகக் கொண்டுள்ளனர். திருவாடல் (இலீலை) தெய்வத் திருவிளையாடல் பற்றிக் கூறுவதாக அமைந்தது இலீலையாம். இவ்வகையில் புகழ்வாய்ந்தது பிரபுலிங்கலீலை, தியாகராச லீலை என்பன. இலீலை பல்வேறு கதைக் குறிப்புகளைக் கொண்டு நடப்ப தால் பல்வேறு யாப்பமைதி அமைந்த பாடல்களைக் கொண் டுள்ளது. திருவிளையாடற் புராணம் என்பது இலீலை என்பதுடன் ஒப்பிட்டு இணைத்து நோக்கத்தக்கது. கிரீடை எனவரும் பனுவல் இலீலை வகையினதே. நாலாயிரப் பனுவலில் கண்ணன் பாலக் கிரீடை உள்ளது. திருவாதல் பூப்படைதல் என்பதைத் திருவாதல் என்பது கொங்கு நாட்டு வழக்கு. திரு என்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை என்னும் பேராசிரியர் (தொல்காப்பியம்) உரையைக் கருதலாம். அதன்பொருள் அழகு. இனிச் செல்வம் என்பதும் அது. அதனைப் பெறாளை இருசி என்பது பொது வழக்கு. திருவாயிரம் தெய்வத்தைப் பற்றி ஆயிரம் பாடல்கள் பாடுவது திருவாயிரமாம். வண்ணச் சரபம் தண்டபாணி அடிகள் நான்கு திருவாயிரங்கள் பாடியுள்ளார். அவை பழனித் திருவாயிரம், தில்லைத் திருவாயிரம், திருவரங்கத் திருவாயிரம், தெய்வத் திருவாயிரம் என்பன. இவற்றுள் பழனித் திருவாயிரத்தில் இடம் பெற்றுள்ளவை: 1. வெண்பா மாலை: தனித்தனி வெண்பாக்கள் நூறுடையது. 2. வெண்பா அந்தாதி: அந்தாதித் தொடரில் வெண்பா நூறுடையது. 3. அலங்காரம்: கட்டளைக் கலித்துறை நூறுடையது. 4. குருபரமாலை: எழுசீர்விருத்தம் ஐம்பத் தொன்றாலாகியது. 5. பதிற்றுப்பத் தந்தாதி: பத்துப் பாடல்களுக்கு ஒருவகை யாப்பாகப் பத்துவகைப் பாடல்கள் அந்தாதித் தொடையில் நூறுடையது. 6. ஒருபா ஒருபஃது: அந்தாதித் தொடரில் பத்து அகவற்பாக்களைக் கொண்டது. 7. நவமணி மாலை: வெண்பா, கட்டளைக் கலித்துறை, வெண்டளைக் கலிப்பா, கொச்சகம், கலிநிலைத் துறை, கட்டளைக் கலிப்பா, எழுசீர் விருத்தம், ஆசிரியப்பா, சந்த எண்சீர்ப்பா என ஒன்பது பாவகை யில் அந்தாதி நடையில் இயல்வது 81 பாடல்களை யுடையது. 8. சித்தி மாலை: பலவகைச் சந்த விருத்தங்களையுடைய 64 பாடல்களைக் கொண்டது. 9. நவரசம்: ஒன்பான் சுவைகளை ஒருவகை யாப் பினால் பாடியது. 9 பாடல்களையுடையது. 10. நடு ஒலியல் அந்தாதி: 32 கலைச்சந்தப் பாடல்கள் 30 உடையது. 11. வகுப்பு: தனனத் தந்தத் - தனனத் தத்தத் என்றும், தனதன தனதந்த தனதன தனந்த என்றும், தனனதன தானதன - தானான தந்தனா என்றும் வரும் சந்தத்தில் மூன்று வகுப்புப் பாடல்களை யுடையது. 12. வண்ணம்: கலவி மகிழ்தல் என்னும் அகத்துறை வண்ணப்பாடல் ஒன்றுடையது. 13. பிள்ளைக்கவி: நூறு பாடல்களை யுடையது. 14. கலம்பகம்: நூறுபாடல்களை யுடையது. 15. யமக அந்தாதி: நூறு பாடல்களை யுடையது. 16. திரிபு மஞ்சரி: 51 பாடல்களையுடையது ஆகப் பாடல் ஆயிரம். திருவில் அழகமைந்த வானவில். கொலைக் கருவியாம் வில் போலமையாது வான்மழைக் கொடை வளமாம் திருவும் வனப்பும் வண்ணவளைவும் உடைமையால் திருவில் எனப்பட்டதாம். திருவில் அல்லது கொலைவில் அறியார் - புறம். 20 திருவூர்த் திருவெண்பா (சேத்திரத் திருவெண்பா): பாட்டுடைத் தலைவன் ஊரினை நேரிசை வெண்பாவால் பாடுவது ஊர் நேரிசை என்றும், இன்னிசை வெண்பாவால் பாடுவது ஊர் இன்னிசை என்றும் பெயர் பெறும். ஆனால் சேத்திரத் திருவெண்பா என்பது இறைவன் கோயில் கொண்ட ஊர்களை அடைவு செய்து வெண்பாவால் கூறுவதாகும். சேத்திரம், திருக்கோயில் என்க. இவ்வகையில் எழுந்தது ஐயடிகள் காடவர் கோன் நாயனாரால் அருளப் பெற்ற சேத்திரத் திருவெண்பா ஆகும். சேத்திரத் திருவெண்பா, கலிவெண்பாவால் வருதலை வள்ளலார் அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவால் அறிக. திரை நீர் அலையை என்ன பெயரிட்டு அழைப்பர்? திரை என்பர். நீர்த் திரையை அரங்கத் திரை ஆக்குவது பொருத்தம் தானே! காட்சியை எடுத்துக்காட்டுவதும் திரை; காட்சிக்குக் கவின் சேர்ப்பதும் திரை. நீர்த்திரை ஒன்றா? ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி எனச் சிலப்பதிகாரம் கூறும் மூவகைத் திரைகளும் நீர்த் திரையிலும் உண்டு. ஒரு கரையில் இருந்து மறுகரை வரை செல்லும் திரை ஒருமுக எழினி; இருகரைகளில் இருந்தும் எதிர் எதிராக வந்து மோதி மீளும் திரை, பொருமுக எழினி; மேடைக் காட்சியைத் தன்னிடத்து வெளிப்படக் காட்டும் திரை, கரந்துவரல் எழினி; அரங்கத் திரையுடன் இத்தனை வகையும் பொருந்திய திரை பொய்கைத் திரை. திரையாம் எழினியை இழுனி என விளக்கும் கூத்தநூல். இழுத்து மூடித் திறப்பதால் இழினி ஆயிற்று. எழில் பெறும் ஓவியங்களுக்கு இடமாகி நிற்றலால் எழினி ஆயிற்று. இழுனி, எழினியாகவும் இருத்தல் வேண்டும். எழினி இழுனியாகப் பயன் செய்யவும் வேண்டும். இதனால் நீர்த்திரை எழினி இழுனித் திரையாகவே அமைகின்றது. திரையைக் கிழித்தல் திரையைக் கிழித்தல் = வெளிப்படுத்துதல். திரையாவது மறைப்பு. வீட்டு வாயில் திரை, சாளரத் திரை, கோயில் திரை, நாடக மேடைத் திரை இவையெல்லாம் மறைவுகளும் மறைப்புகளுமாம் ஆள்களுக்கும் துணித்திரை (முகத்திரை) உண்டு. அதனைக் குறியாமல் உள்ளத்தே மறைத்துள்ள தீய செய்திகளை வெளிப்படுத்தல் திரையைக் கிழித்தலாம். பொய்யை மெய்யாக நடிப்பதையும் ஏமாற்றுவதையும் வெளிப் படுத்திக் காட்ட விரும்புபவர், எவ்வளவுதான் உன்னால் மறைக்க முடியும். கெட்டிக்காரன் புளுகும் எட்டு நாள்! பார் உன் திரையைக் கிழித்துக் காட்டுகிறேன் என்று எச்சரிக்கை விடுப்பர். இவண் திரை கிழித்தல் என்பது வெளிப்படுத்துதல் பொருளதாம். முகத்திரையை விலக்குதல் என்பது ம் இப்பொருளதே. திலகம் இலகம் > திலகம். இலங்குவது - விளங்குவது - இலகம். திலகம் ஒருமரம்; மஞ்சாடி மரம் அல்லது குங்கும மரம் என்பது அது; நெற்றிப் பொட்டாக விளங்குவது. திலகம், திலகையும் ஆகும். தீவ திலகை மணிமேகலையில் வரும் மணிபல்லவத் தீவின் காவல் தெய்வம். தில்லுமுல்லு தில்லு = வலிமை, உடல் வலிமை, கொழுப் பெடுத்த தன்மை. முல்லு = தேவையில்லாமல் முட்டி மோதல். உனக்குத் தில்லு இருந்தால் வந்து மோதிப்பார் என்பதில் தில் என்பதற்கு வலிமைப் பொருள் உள்ளமை புலப்படும். உடல் வலிமையை மூல தனமாகக் கொண்டு ஊரையே - ஒரு கூட்டத்தையே - அச்சப்படுத்துவார் உண்டு. அவரைத் தில்லு முல்லுக்காரர் என்பர். காரணம் இல்லாமலே தானே ஒரு காரணத்தைப் படைத்துக் கொண்டு வம்புக்கு இழுத்து வலியச் சண்டை செய்து வாரிக் கொள்வதே வழக்கமாகப் போன முரட்டுப் பிறவியர் அவர். அவர்க்கும் முரடர் இல்லாமலா போவர்? வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது பழமொழி. அத்தகை யவர், தில்லுமுல்லுக் காரனைப் பார்த்து, உன் வேலையை இங்குக் காட்டாதே; வேறிடத்தில் வைத்துக் கொள் என்பர். தில்லு முல்லும் ஆள் பார்த்தே மோதும்! தில்லை சதுப்பு நிலக்காட்டு மரங்களுள் ஒன்று தில்லை. அத் தில்லை செறிமரக் காடாகவே இருக்கும். புறநானூற்றில் (252) நெய்தல் நிலமரமாகவே கூறப்பட்டுள்ளது. பிச்சாவரம் காட்டில் தில்லை மரம் மிகவுண்டு. தில்லைப் பொதும்பில் நீர்நாய் பள்ளி கொள்ளும். வேலி மரமாகவும் தில்லையை வளர்ப்பர். தில்லை மரத்தாலே பெயர் பெற்றதே தில்லை ஆகிய சிதம்பரம். தில்லையின் பால் நச்சுத் தன்மையுடையது. அதுபட்ட இடத்தில் புண்ணுண்டாகும். கண்ணில் பட்டால் பார்வை போய்விடும் என்பர் இதன் இலையை ஆடு மாடுகள் தின்னாவாம். கற்றைத் தலைச்சடைத் தோற்றத்தைத் தில்லை மரம் தருதல், தில்லை அன்ன புல்லென் சடையொடு எனவரும் புறப்பாடலால் விளங்கும் (252). தில்லையின் பட்டையில் இருந்து வழியும்பால் நச்சுத் தன்மையதெனினும், ஆறாப் புண்ணையும் ஆற்றும் என்றும், அதன் விதையினால் எல்லா நஞ்சையும் நீக்கலாம் என்றும் சில பெருநோய்களுக்கு மருந்தாம் என்றும் கூறுவர் மருத்துவர். தில்லையின் சடைத் தோற்றம், நஞ்சுடைமை, நஞ்சகற்றல் என்பவை தில்லைக் கூத்தனை எண்ண வைக்கும்! தில்லை பாலை கல்லிவர் முல்லை குல்லை என வரும் குறிஞ்சிப்பாட்டு (77, 78). உனக்குத் தில் இருக்கிறதா? என்னும் மக்கள் வழக்கில் தில் தெளிவுப் பொருளதாகின்றது. தில் இடைச்சொல். விழைவு, காலம், ஒழியிசைப் பொருள்களில் வரும் (தொல். 738). திவலை திவலை = துளி, மழை, மழைத்துளி (வெ.வி.பே.). திவவு = கட்டு; திவலை = கட்டில் இருந்து அகன்றது. திவளல் = மெலிதல், அசைதல் (வெ.வி.பே.) திவவு படிக்கட்டு, வீணையை இறுக்கிக் கட்டுதல். திவவு யாழ், கட்டுதல் அமைந்த யாழ். திறப்பணம் திறப்பு, திறவுகோல் எனத் தமிழகத்தில் வழக்குப் பெற்றுள்ளது தாழ்க்கோல். இத் தாழ்க்கோல் ஈழத்தில் திறப்பணம் என வழங்குகின்றது. துரப்பணம் என்னும் கருவிப் பெயர் போலத் திறப்பணம் என்பது அணம் என்னும் சொல்லீறு பெற்றுள்ளது. திறவுக் குச்சி, திறவைக்குச்சி என்பவை தமிழகச் சிற்றூர் வழக்கு. திறம் ஒரு செயலை மேற்கொள்ளும் போது உண்டாகும், தடையை உடைத்துத் திறந்து மேலும் வலுவாகச் சென்று வெற்றி கொள்ளும் அறிவும் ஆற்றலும் திறமாம். திறமை, திறப்பாடு என்பனவும் இது. அவ்வறிவாற்றல் இல்லான் திறங்கெட்டவனாம். திறல், திறன் என்பனவும் திரம் என்பதாம். திறம்புதல் திறப்பாடு இல்லாது செயலற்றுப் போதல் திறம்புதல் ஆகும். திறம்புதல், திறத்திற்கு மாறுபாடாதல். திறப்பாடு இல்லாமை என்பதும் திறம்புதலாம். திறை இறை > திறை. இறையாவது இறுக்க - செலுத்த -ப் படுவதாம் இறை (வரி). அரசிறை என்பதும் இது. இறை தகர ஒற்றுப் பெற்றுத் திறை ஆயிற்று. திற்றல் இது தின்னல் போல்வதே. தேனொடு கடமான் பாலும் திற்றிகள் பிறவு நல்கி என்னும் கந்தபுராணப் பாட்டு (வள்ளி. 76) திற்றிகள் தின்பவைகள் எனக் குறித்து வந்தது. தினம் தினம் = நாள். தின் + அம் = தினம். தின்னுவது. ஒ.நோ.: தின் > தீன் > தீனி = தின்னப்படும் பண்டம். கோழி, புறா, ஆடு, மாடுகளுக்குத் தீனி வைத்தல் வழக்கு. தின்றால் தெறித்தால் வெளியே ஓடு சிற்றூர் வழக்கு. நாள் என்பது கதிரோன். அது, உயிர்களின் வாழ்வைத் தின்று குறையச் செய்வது. தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும் கூற்றம் அளந்துநும் நாளுண்ணும் என்பது நாலடி (7). ஒளிமிக்க கதிர் நாள்தோறும் நாழி என்னும் முகத்தலளவுக் கருவியால் அளந்தெடுத்து நம் உயிராகிய சேமிப்பை உண்ணும் என்பது இதன் பொருளாம். நாள் என்பதை வாள் என்பார் வள்ளுவர். அது, நாள் என ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாள் என்பது (திருக். 334). தினவு தோலைத் தின்னுவது போன்ற அரிப்பு, தினவு ஆகும். ஊறல் என்பதும் அரிப்பு என்பதும் இது. ஊறு அல்லாமலும் ஊறு அடைந்ததாக உணர்த்துவது, ஊறல். அரி என்பது நுண்ணியது. நுண்ணிய மருக்களாகத் தோன்றித் தினவு தருவது அது. மூன்றும் தோல் பற்றிய துயர்கள் எனினும் நுண்வேறுபாடு உடையவை. தோல் தினவு, மனத்தினவாகிய நிலையில் தினவெடுத்தவன் எனச் சினமும் பொறாமையும் கொள்வானைக் குறிப்பதாயிற்று. தினவெடுத்தல் தினவெடுத்தல் = அடங்காது திரிதல். தினவெடுத்துத் திரிகிறான் என்னும் சொல்லின் பொருட்குறிப்பு ஆழமானது. படக்கூடாதது தோலில் பட்டால் தினவு உண்டாகும். இவனோ அத்தினவுக்கு ஆட்படாமல் உடல் தினவுக்கு (காம வெறிக்கு) ஆட்பட்டு அவ் வெறியாலேயே திரிபவன் என்னும் பொருளில் வழங்குவதாம். தினவு அரிப்பு எனவும் படும். அரிப்பெடுத்து அலைகிறான் என்பதும் இப்பொருளதே. பொறாமை, பிறர்க்கு உண்டாகும் தீமையால் மகிழ்தல் முதலியனவும் இத்தினவு வகைப்பட்டதே. அடங்காத் தனம் சுட்டும் சொல்லாகத் தினவு வழக்கில் உள்ளது. இப்பொழுது எழுதும் சிறுகதை, பேசும் அரசியல் ஆகியவற்றில் தினவும் அரிப்பும் மிக இடம்பெறுகின்றன. தினை தின்னுதற்குத் தக்க இடிமாவாகவும், மாவுருண்டையாகவும் கொள்ளப்பட்ட தவசம் தினை. தின்னுதல் சுவைப்பு வகையுள் ஒன்று; தின்னுவதற்குரிய பண்டம் தீனி எனப்படுகிறது. தவசங்களுள் மிகச் சிறிதாக இருத்தலால் தினையளவு (சிறிதளவு) தினைத்துணை என வழங்கப்பட்டது. தினை, குறிஞ்சி நில மலைவாணர் உணவுப் பொருளுள் ஒன்று; குறிஞ்சிக் குமரனுக்குரிய படையற் பொருள். தின் தின் என்பது ஏவல். தின்னுதல் என்பது உட்கொளல் வகையுள் ஒன்று. தின் என்பது தீன் என்றும் தீனி என்றும் ஆகும். கோழி, ஆடு, மாடு முதலியவற்றுக்கு இயற்கையாகக் கிடைக்கும் தீன் தவசம், புழு, பூச்சி, இலை, தழை, தட்டை, தாள், தவிடு, பொட்டு என்பனவாம். இதுகால், செயற்கைத் தீனிகளும் உண்டாக்கிச் சந்தைப் பொருள் ஆகியுள்ளது. குறிஞ்சிவாணர்க்கு இயற்கையாக வாய்த்து ஒரு தின்னுதல் பொருள் தினை எனப்பட்டது. குறிஞ்சி நிலக்கடவுள் ஆகிய முருகனுக்குத் தேனும் தினை மாவும் படைத்தல் வழிபாட்டு முறையாயிற்று. விருந்துப் பொருளும் ஆயிற்று. செழுந்தினையும் நறுந்தேனும் விருந்தருந்தக் கொடுப்போம் என்பது குற்றாலக் குறவஞ்சி. தின் பொருளாகத் தினை இருந்து, பின்னே இடந்தொறும் காலந்தொறும் பெருகலாயிற்று. தின்பண்ட வகைகள் இதுகால் எண்ணில் அடங்கா அளவு பெருகி யுள்ளமை கண்கூடு. தின்பண்டக் கடைகளின் பெருக்கமே அதன் பெருக்கத்தைக் காட்டும். நொறுங்கத் தின்று நோயகற்று என்பது நலப் பழமொழி. இத் தீன் வகை, சிறுதீன், பெருந்தீன் என இரண்டாயிற்று. சிறுதீன் என்பது நொறுக்குத்தீனி, நொறுவல், நொய்ம்மை எனப்பட்டது. முன்னவை இரண்டும் மக்கள் வழக்கு. பின்னது இலக்கிய வழக்கு. நொய்ம்மை நுகரேல் என்றார் ஔவையார். தின்னல், கறித்தல் எனவும் படும். இன்னும் பசும்புல் கறிக்கல்லா இளங்கன்று என்பார் குமரகுருபரர் (மீனா. பிள்.). பெருந்தீன் சோறு, சாறு, தொடுகறி, மோர் என்பவற்றுடன் உண்பது ஆகும். ஆனால் சிற்றூர்வாணர் சோறு போட்டிருக்கிறேன் தின் என்பர். அருந்துதல் அல்லது உட்கொளல் வகைகள், உண்ணல் பருகல் குடித்தல் சப்பல் தின்னல் நக்கல் என்பர். உண்ணல் - சோறு; பருகல் - பழச்சாறு; குடித்தல் - நீர்; சப்பல் - கண்ணமுது; தின்னல் - கறி; நக்கல் - தேன். ஆங்கிலவர் முன், கரண்டி கொண்டு உண்ணுதல் கோழி பொறுக்கித் தின்னல் போல் இருத்தலால் பொதுமக்கள் துரை தீனி தின்கிறார் என்றும் இரை எடுக்கிறார் என்றும் கூறுதல் வழக்காயிற்று. இரை ஆடு மாடு தின்னுதல் பொருள். தின்னுதல் இரை போடுதலாம். மெல்லாமல் உட்கொளல் விழுங்கல்; போட்டதை எல்லாம் தின்னுதல் அமுக்குதல்; பாரம் போடல்; கொட்டுதல். நொய்ப் பொருளைத் தின்னுதல் கப்புதல். கப்பி = நொய்மையான தவிடு, குறுநொய். தின்றால் தெறித்தால் தின்றால் தெறித்தால் தெருப்பக்கம் போயேன்; ஏன் வீட்டுக்குள் அடைந்தே கிடக்கிறாய் என்பது சிறுவர்களை வெளியே அனுப்பி, வேலைகளைத் தடையில்லாமல் செய்ய வீட்டுப் பெரியவர்கள் ஏவும் ஏவல்; இன்றும் சிற்றூர் வழக்கில் உண்டு. தின்னல், உண்ணல் வகையுள் ஒன்று; காயைக் கறித்துத் தின்னல் முறையால் கறி ஆயது. இன்னம் பசும்புல் கறிக்கல்லா இளங்கன்று உள்ளி என்பது குமரகுருபரர் வாக்கு. தின்னல் என்பது உண்ணல் பொருள் தருவதாயிற்று. தெறித்தல் என்பது நீரை விட்டுக் கைகழுவுதல். மழை பெய்வதைத் தெறித்தல் என்பர். சொரிதல், பெய்தல், பொழிதல், கொட்டல் என்பவும் அது. உண்டு கை கழுவினால் வெளியே போக வேண்டியது தானே என்பது பொருள். தின்னுதல் சிறு தீனிவகைகளை மென்று தின்பது தின்னுதலாம். இது தின்னுகை என்றும் வழங்கும். சிதலை தினப்பட்ட ஆல மரத்தைச் சுட்டும் நாலடியார் (197), தினற்பொருட்டாற் கொள்ளாது என்று தொடரும் திருக்குறள் (256) இதனால் ஊன் முதலியன தின்பதையும் தின்னுதல் குறித்தல் புலனாம். ஊன் தின்பார்க்கு என்பார் வள்ளுவர் (252).  தீ வரிசைச் சொற்கள் தீ தீ:1 தகர வரிசையில் நான்காம் எழுத்து; நெடில். ஓரெழுத்து ஒருமொழி. ஐம்பூதங்களுள் ஒன்றாகியது தீ. தீயால் இருளில் வதிவார் ஒளிநலம் பெறலும், தீயால் உணவுவகை ஆக்கலும், குளிர் நீங்கலும், இனிமைப் பொருள் தந்தது. தீம் என்பதும், தீவிய என்பதும் தே என்பதும் தேம் என்பதும், தேன் என்பதும், இனிமைப் பொருள் தருதல், இருவகை வழக்குகளிலும் காணக் கூடியவை. தீ இனிமைக்கு எதிராம் இன்னாமை குறித்தலும் ஆகும். தீமை, தீயன். தீ தன்முன் மெல்லினம் வரின் இனிமையையும் வல்லினம் வரின் இன்னாமையையும் தரும். தீங்குரல் தீஞ்சொல் தீந்தேன் தீம்பால் தீக்குரல் தீச்சொல் தீத்தேன் தீப்பால் தீ:2 எரி, எரித்துவிடு என்னும் ஏவல். தீ:3 தீ = கருகுதல்; அடுப்புத் தீகின்றது பார் ம.வ. தீக்கங்கு விறகு எரிந்து துண்டுபட்டுள்ள கரி, எரிதழல் வெளிப் படாமல் தீயை உள்ளடக்கித் தீயின் நிறத்தோடு இருப்பதும், தீ நிறம் மாறிச் சாம்பல் பூத்து உள்வெப்பத்தோடும் இருப்பதும் தீக்கங்கு எனவும், கங்கு எனவும் சொல்லப்படும். கங்கை ஊதி மீளவும் தீயைப் பற்றி எரியச் செய்யலாம். கங்கின் நிறத்தை யுடையதொரு பறவை கங்கம் எனப்பட்டது. அது பருந்து. கங்கம் வந்துற்ற செய்ய நம்களத்து -கம். உயுத். 1233 தீக்கடைகோல் தீ உண்டாக்குவதற்காக ஒன்றனோடு ஒன்றை உருளவிட்டுக் கடையும் கோல். ஞெலிகோல் என்பதும் இது. இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் - புறம். 315 தீக்குழி மாரியம்மன் கோயில் முன் பெரிய குழிவெட்டியோ, சுவர் அமைத்தோ கட்டைகளைப் போட்டு எரித்துத் தணலாக்கி அக்கங்கின் மேல் நடப்பது தீக்குழி இறங்கல் எனப்படும். இதனைப் பூக்குழி என்றும் கூறுவர். ஊரெல்லாம் கூடியிருந்து எடுக்கும் விழா. பால் வேறுபாடு அகவை வேறுபாடு இல்லாமல் நோன்பிருந்து எடுக்கும் விழா அது. நேர்த்திக் கடனாகச் செய்வது. தீக்குறளை தீமை பயக்கும் குறுஞ்சொல் அல்லது சிறுசொல். தீக்குறள் = குறள்மொழி எனப்படும்; சிறுசொல் என்பதும் அது. குறுமொழிக் கோட்டி என்பது சிலம்பு (16:64). தீக்குறளை சென்றோதோம் திருப்பாவை. பொருள்: தீமை பயக்கும் சிறுசொல்லைப் போய்ப் பிறரிடம் சொல்லோம். தீங்கு தீயால் எரிப்பது போலச் செய்யப்படும் கொடுமை தீங்கு ஆகும். தீமை என்பதும் இது. தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்தே நீங்குவதே நல்ல நெறி - நீதிவெண்பா 20 தீயதாம் தன்மை தீமையாம். எமியம் என்னாய், தீங்குசெய் தனையே - அகம். 112 தீசல் எரிதல், எரிந்து கருகல் வாடை என்பவை பொதுவழக்குப் பொருள். ஆனால் பார்ப்பனர் வழக்கில் தீசல் என்பது பொறாமை என்னும் பொருளில் வழங்குகின்றது. உள்ளெரிவே பொறாமை ஆதலால் அதன் வெளிப்படு விளக்கம் இதுவாம். தீச்சட்டி மாரியம்மன் கோயிலுக்கு நேர்த்திக் கடனாகச் செய்வது தீச்சட்டி எடுத்தல் என்னும் வழக்கமாகும். நோய்க்காகவோ நலம் வேண்டியோ நேர்ந்து கொண்டு அதன்படி தீ எரியும் சட்டியைக் கையில் தாங்கிச் சென்று கோயிலை அடைந்து வழிபடுவது அது. அக்கினிச் சட்டி என்பது இருபிறப்பி (வ, த). தீட்டுதல் தீட்டுதல்:1 மெருகேற்றுதல், கூராக்குதல் ஆகியவை தீட்டுதல் எனப்படும். குற்றிய அரிசியைப் புடைத்து மேலும் குற்றுதல், தீட்டுதல் எனப்படும். தீட்டுக்கல் என்பது சாணை பிடிக்கும் அரக்கமை கல்லாகும். தீட்டுக்கல், தீத்துக்கல் எனல் திரிபு. தீட்டுதல்:2 ஓவியம் வரைதலைத் தீட்டுதல் எனக் குறிப்பதுண்டு. அவன் நன்றாக ஓவியம் தீட்டுவான் என்பது ம.வ. தீட்டுதல்:3 நன்றாக வயிறு முட்ட உண்ணுதலைத் தீட்டுதல் என்பது நாட்டுப்புற வழக்கு. ஒரு தீட்டுத் தீட்டி விடுவான் என மிக மிக உண்பவனைச் சுட்டிக் கூறுவர். இடித்து உமி போக்கிய பின் ஒட்டிய தவிடு போக்குதலைத் தீட்டுதல் என்பது வழக்கு. இனித் தீற்றுதல் தீட்டுதலாக வருதலும் கூடும். * தீற்றுதல் காண்க. தீண்டல் தீண்டு + அல் = தீண்டல் = தீண்டத்தகாதது. தீண்டல்:1 பாம்பு கடித்தல் என்பதைப் பாம்பு தீண்டியது என்பது ம.வ. தீண்டல்:2 மகளிர் மாதவிலக்கு நாள் மூன்றும் தீண்டல் நாள். தீண்டாமை தீண்டக் கூடாதவர் - தொடக்கூடாதவர் என ஒதுக்கி வைக்கப்பட்ட உழைப்பாளர் குடியினர். மேற்குலத்தவர் என்பார் விதைத்த நச்சு வித்து இது. முள்மரக் காடும் இது. தீண்டாமை இதுவரை முற்றிலும் ஒழிக்கப்படாத முள் மரமாகவே உள்ளது. பெரியோர் முயற்சிகள் முழுவதாக வெற்றி பெறுநாளே தீண்டாமைப் பேய் ஒழிநாளாம். பிறப்பொக்கும் என்ற மண்ணில் மக்களாட்சி வந்த பின்னரும் தீண்டாமை மாயவில்லை என்பது கண்கூடு. சாதிமை என்னும் புற்று நோயைச் சாகடிக்கும் வரை தீண்டாமை ஒழியாது. சாதியே ஆட்சி அளவுகோல் ஆகிவரும் மக்களாட்சி தீண்டாமைப் பட்டியலை ஒழிக்காத வரை ஒழியாது என்பது மெய்யாம். தீது தீயின் தன்மையது தீது. தீதும் நன்றும் பிறர்தர வாரா - புறம். 192 தீத்தாங்கி பயன்படுத்தி முடித்த பொருள்களை - அடிக்கடி எடுத்துப் பயன்படுத்தாத பொருள்களை - ஒதுக்கிடத்தில் வைப்பது வழக்கம். கூரை வீடுகளில் இதற்கெனப் பரணை அமைப்பது உண்டு. பரணை என்னும் பொருளில் தீத்தாங்கி என்பது திருமங்கல வட்டார வழக்காக உள்ளது. பயன்படுத்தித் தீர்ந்த பொருள்களைத் தாங்குவதால் இப் பெயர் பெற்றிருக்கும். தீந்து வண்டிச் சக்கரத்தில் தேய்மானம், ஒலி முதலியவை இல்லாமல் பாதுகாக்க மை போடுவது வழக்கம். மசகு என்பது முகவை வழக்கு. திருச்செங்கோடு வட்டாரத்தில் மை என்பதைத் தீந்து என்கின்றனர். வைக்கோலை எரித்துக் கரியாக்கி அக் கரியில் எண்ணெய் விட்டுக் குழப்பிப் பயன்படுத்துவர். ஆதலால் அவ் வினைப்பாடு கொண்டு தீந்து என வழங்கப்படுவதாயிற்று. தீயால் எரிக்கப்பட்டு ஆக்கிய உயவு நெய் (மசகு) தீந்து எனப்பட்டது மூல நிலை விளக்கமாம். தீப்பாய் அம்மை தீ வளர்த்து அதில் வீழ்ந்த பெண்டிர், தீப்பாய் அம்மை என வழிபடப்பட்டனர். கணவனை இழந்தவர், அதன்மேல் வாழ்வை வெறுத்துக் கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்னும் துணிவால் செய்தது இது. பூத பாண்டியன் தேவி தீப்பாய்ந்தமை புறநானூற்றால் அறியப்படும். மணிமேகலை ஆதிரை காதை இதற்குச் சான்று. பலப்பல ஊர்களில் தீப்பாய் அம்மை கோயில் உண்டு. சிலப்பதிகாரத்தில் மாதரி அடைக் கலம் இழந்தேன் இடைக்குல மக்காள் என அனல் பாய்ந்ததும், கனல்புகும் கபிலர் வரலாறும், அடைக்கலக் காவலும் நட்புக் காதலும் பற்றியவையாம். தீப்பெட்டி கல்லைத் தட்டிக் கனல் ஆக்கிய காலம் தொல் பழமை யானது. தீத்தட்டிக் கல் என்பது அதன் பெயர். எரிமருந்துக் கலவையைப் பூசிய பெட்டியும், எரிமருந்து அப்பிய குச்சியும் ஆகியவை யுடையது தீப்பெட்டி. தீப்பெட்டித் தொழில் பெருந்தொழில்; குடிசைத் தொழி லாகச் செய்யப்படுவது. அதன் வளர்ச்சியே வெடி, வேட்டு, வாணம் என்னும் வனப்புப் பொருள்களாம். சிவகாசி என்றால் தீப்பெட்டித் தொழிற்சாலையும், அச்சகமும் எவர்க்கும் நினைவில் வரும். சீனவெடி, சீனச்சரம் எனச் சீன நாட்டில் இருந்து இறக்குமதி யான பொருள்கள், இதுகால் சிவகாசியில் இருந்து உலகப் பரவலாக விளங்குகிறது. தீப்பொரி தீ, பரவி எரியும் போதும், உலைக்களத்தில் தீக்கங்கை ஊதும் போதும் தீப்பொரி உண்டாகும். அதனைத் தீப்பொரி என்பர். அப்பொரித் தோற்றமே பொரி வாணத்திற்கு முன்னோடி. தீச்சட்டியில் வேகும் கடலை பொரிகடலை, பொரி என்பவையும் அப் பொரியால் பெயர் பெற்றவையே. பொரி விளங்காய், பொரி உருண்டை, பொரியல் என்பன எண்ணத் தக்கன. புன்கின் பூவைப் பார்த்தால் பொரிபோல் தோன்றலால், பொரிப்பூம் புன்கு எனப்படும் (ஐங்குறு 347, 368; குறுந். 341; நற். 9). புன்னைப் பொரிப்பூ என்னும் பழமொழி (22). தீப்போக்கு செம்பொன் தீயில் உருகவிட்டு மாசகற்றிய மாற்றுக் குறையாத பொன் தீப்போக்கு செம்பொன் ஆகும். உருக்கி ஓடவிட்டுப் போக்க வேண்டுவ போக்கிய தூய பொன். தீப்போக்கு செம்பொன் கழஞ்சு (தெ.க.தொ. 5:669). தீம் தீ > தீம் = இனிமை. தேன் நேர் சுவைய திரளரை மாஅத்துக் கோடைக் கூழ்த்து கமழ்நறுந் தீங்கனி - அகம். 348 தீய பண்பு தம் நலத்தாலோ தமக்கு ஆகாப் பண்பாலோ பிறரைக் கெடுக்கும் - அழிக்கும் - தீய பண்புகள் மூவகையாம். அவை சொல்லால் ஆவன, உடலால் ஆவன, உளத்தால் ஆவன என்பர். சொல்லால் ஆவன: 4 பொய் சொல்லல், கோள் சொல்லல், சினந்து கூறல், பயனில்லாதன சொல்லல் என்பன. உடலால் ஆவன: 3 களவு செய்தல், வறிதே தொழில் செய்தல், கொலை செய்தல் என்பன. உளத்தால் ஆவன: 3 கொலை செய்ய நினைத்தல், பொருந்தாக் காமப்பற்று, தீய பேராசை என்பன. இவை மூன்று வகையும் இன்னும் விரிவுடையன. ஆனால் அகர முதலிகள் இவ்வாறு பட்டியலிட்டன. இயலாதன இயலும் எனல், இரக்கமின்மை, இரண்டகம் செய்தல், இனப்பகை கொள்ளல், இனப்பகையொடு கூடல், உட்பகை யாதல், ஏமாற்றல், கள்ளுண்ணல், காட்டிக் கொடுத்தல், கூட்டிக் கொடுத்தல், சூது விரும்பல், தற்புகழ் பேசல், தீ நட்புக் கொள்ளல், நட்பைப் பிரித்தல், நம்பிக்கைக் கேடு, பொறாமை, வசை சொல்லல், வஞ்சம் செய்தல், வாக்குத் தவறல் இன்ன பலவும் தீய பண்புகளாம். தீயல் தீப்போல் எரிவு உண்டாக்குவதைத் தீயல் என்று நாஞ்சில் நாட்டில் வழங்குகின்றனர். எரிக்கும் குழம்பு காரக்குழம்பு ஆகும். எரிதல் வேதல் என்பதை வயிறு எரிதல் (வயிற்றெரிச்சல்) வயிறு வேதல் என வேதனைப் படுத்துதல் பற்றிய வழக்கு உண்டு. தீயல் என்பது எரிதல் பொருளில் காரக் குழம்பைக் குறித்தல் அருகிய வழக்காக அறியத்தக்கதாம். தீயாட்டு துணியைப் பந்தாகச் சுருட்டி எண்ணெயில் ஊற வைத்துத் தீமூட்டிச் சுழற்றுதல் சூ(ழ்)ந்து எனப்படுதல் பொதுவழக்கு. அதனைத் தீயாட்டு என்பது குற்றால வழக்கு. தீப்பந்தம் கொண்டு சுற்றி ஆடுதலால் பெற்ற பெயர் இது. தீயாற்றல் தீயாற்றல் = குழி மெழுகுதல். இறந்தவர்களை எரித்தால் மறுநாள் தீயாற்றல் என ஒரு நிகழ்ச்சி நடத்தப்படும். புதைத்தாலும் நிகழ்வதே. அதனைக் குழிமெழுகுதல், பாலாற்றல், காடாற்றல் எனவும் வழங்குவர். தீயை நீர்விட்டு அணைத்துப் பாலூற்றல் தேன் சொரிதல், எலும்பை எடுத்து உருவமைத்து வழிபடல் ஆகியவெல்லாம் நிகழும். நீர் கொணர்ந்து நிலம் மெழுகி அறுகு நடல், பிரண்டை நடல் என்பனவும் செய்வர். இறந்தவரை எரியூட்டிய அல்லது புதைத்த மறுநாள் நன்காட்டில் செய்யும் கடன்கள் இவையாம். மற்றையிடங்களில் எரியும் தீயை ஆற்றல் அணைத்தலாம் தீயணைப்பு என்பது அறிக. தீயினால் தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு -குறல். 129 என்னும் திருக்குறளைத் தமிழறிந்தார் எவரும் அறிவர். தீச்சுட்ட புண் தீயில் சுட்ட புண் என்று கூறாமல் திருவள்ளுவர் ஏன் விரித்துரைத்தார். இன்னும் ஆலும் சேர்த்துத் தீயினால் என்பானேன்? தீக்கங்கு அடுப்புப்பக்கம் கிடக்கிறது. அதனை அறியாமல் ஒருவர் மிதித்துவிட நேர்கின்றது. அது சுட்டு விடுகிறது; அதனை எப்படிக் கூறுவது? தீச்சுட்டது என்றோ தீச்சுட்டுவிட்டது என்றோ கூறுவதே வழக்கம். தீயால் என்றோ, தீயினால் என்றோ கூறும் வழக்கம் இல்லை. தீச்சுடுதல் என்பது தீயின் இயற்கையும் சுடுபட்டவரின் அறியாமையும் காட்டுவது. தீயில் சுடுதல் என்பது ஊண்பொருளை வாட்டித் தின்பதற்குப் பயன்படுத்தும் முறை. கிழங்கு சுட்டுத் தின்னல், மொச்சைக்காய், நிலக்கடலை ஆகியவை சுட்டுத் தின்னல் என்பவை இன்றும் வழக்கில் உள்ளவை. வாட்டித் தின்னல் என்பது மேலெழும்பும் தீயில் வாட்டுதல். சுடுதல் என்பது கங்கில் படச் செய்து வெதுப்புதல். தீச்சுடுதல், அறியாது நிகழ்ந்தது; தீயிற் சுடுதல், விரும்பிச் செய்தது. இவ்விரண்டிலும் வேறாயது தீயாற் சுடுதல் அல்லது தீயினாற் சுடுதல். ஆல் என்பது மூன்றாம் வேற்றுமை உருபு. வாளால் வெட்டினான் கத்தியால் குத்தினான் என்று வழங்கும் வழக்கினைக் கருதுக! திட்டமிட்டும் தீர்மானித்தும் செய்கின்ற செயலே வெட்டுதல், குத்துதல் என்பதும். அதனை அறிவிப்பதே ஆல் என்பதும் தெளிவாம். இங்கே தீயினால் சுடுதல் என்பது இயல்பாக நிகழ்ந்ததன்று என்பதும், திட்டமிட்டுத் தீர்மானித்துச் செய்யப்பட்டது என்பதும் தெளிவாம். வாளால் வெட்டினான் என்றால் எழுவாய் மறைந்திருத்தல் தெளிவு. அதுபோல் இங்கு எழுவாய் மறைந்துள்ளது. வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் கொள்வதை நாலாயிரப் பனுவல் பாடும் (691). உடலிடைத் தோன்றிற் றொன்றை, அறுத்ததன் உதிரம் ஊற்றிச் சுட்டுறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வதை இராமாயணம் இசைக்கும் (1364). இச்சுடுதல்கள் நலப்பாட்டுச் சுடுதல்கள். சுடப்படுவார் நலத்திற்காகச் சுடத்தக்கார் தம் கடனெனக் கொண்டு செய்வன. ஆனால், இத்தீயினால் சுடுவதோ தீய நெஞ்சத்தின் வெளிப்பாடாய்த் தீமை செய்வதே நோக்காகிச் செய்யப்படுவது. காலையும் கையையும் கட்டிப் போட்டு அல்லது திமிராமல் கட்டிப் பிடித்துக் கொண்டு கண்ணிலே கொள்ளிக் கட்டையால் இடிப்பது அல்லது செலுத்துவது போல்வது. இந்த வன்கொடுமையைக் காட்டுவதற்காகவே தீயினால் என்றார் திருவள்ளுவர். புண் ஆறுதலிலும் இருவகை உண்மையைத் தெளி விக்கிறார் திருவள்ளுவர். புறத்தே ஆறுதல்; அகத்தே ஆறுதல் என்பவை அவை. சில புண்கள் புறத்தே ஆறியது போல் தோன்றும். ஆனால் அகத்தே ஆறி இராது. அகத்தே குடைந்து குழிப் புண்ணாகிக் கொண்டே இருக்கும். புறத்தே புண் ஆறி இருப்பினும் அகத்தே புண்ணின் தடம் முற்றாக மாறாமலும் ஆறாமலும் ஒவ்வொரு வேளையில் வலியுண்டாகும். புண்பட்ட இடத்தில் ஏதேனும் ஒன்று மெல்லெனப்பட்டாலும் குலையுயிரும் குற்றுயிருமாகத் துடிக்க வைக்கும். அந்நிலையும் ஓராண்டு ஈராண்டன்றிப் பல்லாண்டுகள் உளதாதல் பட்டார்க்கே வெளிப்பட விளங்கும். உள்ளாறுதல் என்னும் இவ்விளக்கம் பட்டறிவால் உரைத்ததென்று உறுதியாகச் சொல்லலாம். குறளுக்கு மெய்ப்பொருள் காண்டற்குப் பட்டறிவும் இன்றியமையாதது என்பதற்கே இக்குறிப்பாம் என்க! தேடி வந்து தீயால் சுட்டவன் எவனோ அவனே, அப்பொழுதிலோ வேறு பொழுதிலோ நாவினாலும் வன்கொடுஞ்சொல்லால் சுடுகின்றான். அத்தீயால் சுட்ட புண் புறத்தே ஆறுவதுடன் உள்ளாலும் ஒருகால் ஆறிவிடும். ஆனால், நாவினால் சுட்டது, உள்ளால் ஒருநாளும் ஆறவே ஆறாது. நிலைபெற்றே போய்விடும் என்பதால், உடலில் தீச்சுட்டதால் அமைந்த வடு (தழும்பு) மாறாமை போல ஆறாது என்கிறார். எடுத்துக்காட்டும் ஆக்கி விடுகிறார்; தீக்கொடுமையிலும் தீச்சொற் கொடுமையே பெருங்கொடுமை என்னும் இதனைத் தீயினால் சுட்ட செம்புண் உள்ளாறும்; அத்தீயிற்றீய வாயினால் சுட்ட மாற்றம் மாறுமோ வடுவே யன்றோ என்றது வில்லிபாரதம். தீயவை தீய பயத்தலால் என்னும் குறளைத் (202) தீயவே தீய பயத்தலால் தீயவே தீயினும் அஞ்சப் படும் என அரசஞ் சண்முகனார் பாடங் கொண்டதும் எண்ணத் தக்கது. தீயின் பெயர்கள் அரி - சிவந்த நிறத்தது. செவ்வரி, அரிமா. அழல் - அழல - வெப்பமுற -ச் செய்வது. அழற்சி. அனல் - அல்லதாய் ஆக்குவது. எரி - சிவந்து எரிவது, சுடுவது. எழுநா - மேல்மேல் எழுவது. கனலி, கனல் - கனன்று கருமையாக்குவது. சுடர் - சுடுதலால் சுடர்வது (அ) சுட்டு ஒளி செய்வது. சூரன் - சுட்டுத் துயர் செய்வது. செஞ்சுடர் - சிவந்ததும் ஒளி செய்வதுமாயது. சேர்ந்தார்க் கொல்லி - தன்னைச் சேர்ந்தவற்றையெல்லாம் அழிப்பது. ஞெகிழி - வெப்பத்தால் உருக்குவது. தகனன் - பளபளப்பானது (அ) தகதகப்பானது. தழல் - தழைத்து விரிவது. தேயு - தேய்த்தலால் உண்டாவது (கல், மூங்கில்). நெருப்பு - நெருநெருவென ஒலித்தெரிவது. மடங்கல் - அரிமா அன்ன நிறத்தது. முளரி - செந்தாமரைப்பூப் போலும் செந்நிறத்தது. வடவை - குதிரைபோல் தாவிப் பாய்வது. வன்னி - அழித்தலில் வல்லது. தீரம் பிறர் வலிமையைத் தீர்க்கும் திறம். வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - திருமுரு. வெண். 3 தீர்த்தம் நீர் என்பதும் தீர்த்தம் என்பதும் ஒன்றே. கோயில் குளம் தீர்த்தம் என்பன வெல்லாம் தொடர்பினவே. தீர்த்தம் பெரிதும் பார்ப்பன வழக்காக இருத்தலால் வேற்றுச் சொல்லாய்த் தோற்றம் தருகிறது. ஆனால் தொல்பழந்தமிழ்ச் சொல்லேயாம். தீர்த்தலும் தீர்தலும் விடற்பொருட் டாகும் என்பது தொல்காப்பியம் (801). நீர் கீழே விழுந்தவுடன் பள்ளம் நோக்கி ஓடல் இயற்கையது. நீண்டு ஓடுதலால் தீர்த்தம் எனப்பட்ட அது, புனித நீரைக் குறிக்கும் அளவில் அமைந்தது. பாரதத்தில் தீர்த்தமாடற் சருக்கம் உண்டு. தலபுராணங்களில் தீர்த்தமாடல் இல்லாமல் இராது. மூர்த்தி தலம் தீர்த்தம் என்பவை நாடறி செய்தி. தீர்வு ஒன்றன் தொடர்பு அற்றுப் போதல் தீர்வு எனப்படும். கடன் தீர்ந்தது; வழக்குத் தீர்ந்தது; உறவு தீர்ந்தது ம.வ. கணவன் மனைவியர் கூடி வாழும் கருத்திலர் எனின் தீர்வை வாங்கல் - கூடி வாழ்தலில் இருந்து விலக்குப் பெறுதல் - சட்ட வழிப்பட்டது. அது மக்கள் வழக்கே சட்டமாயது. வழக்கு உசாவல் முடித்துத் தீர்ப்புக் கூறுதல் கண்கூடு. ஆண்டுக்குரிய வரிகட்டல் தீர்வை செலுத்துதலாம். நீரிடையே தீர்ந்து துண்டுபட்ட நிலம் தீவு. தீர்வு > தீவு. தீவம் என்பதும் அது. ஆற்றிடைக் குறையாம் தீர்வு அரங்கம் எனல் முன் அறிந்தது. தீர்வை தீர்வை = தீர்ந்து போகச் செய்வது; கீரி. கொடிய பாம்பையும் கொல்ல வல்ல கீரியைப் பழந்தமிழ் தீர்வை என்கிறது. அரவுக் குறும்பு எறிந்த சிறுகண் தீர்வை - மலைபடு. 504 பொருள்: பாம்பினது வலிகளை அழித்த சிறிய கண்ணினை யுடைய கீரி (உரை, நச்.). அவன் என்னை மடக்கினான்; தீர்த்துக் கட்டிவிட்டேன் என்று கூறும் கொலைஞர்களின் உரை எண்ணத் தக்கது. * தீரம் காண்க. தீவம் தீர்வு > தீவு ஆயது போல, தீர்வம் > தீவம் ஆயது. தீவம் >Ôg« (வ). தீர்தல் விடற்பொருட் டாகும் என்பது தொல்காப்பியம் (801). இருளைத் தீரச் செய்தலால் தீவம் ஆயது. தீவனம் ஆடு மாடு கோழிகளின் உணவு தீவனம் ஆகும். தீவனம் முன்னர் இயல்பாக வாய்த்தது; இப்பொழுது செயற்கை வகையில் ஆக்கப்படுகிறது. தீனி, தீவனம் என்பவை உணவு வகைகளே. உயிரிகளின் உடலில் ஒரு தீ எரிந்து கொண்டே உள்ளது. அதன் பெயர் பசித்தீ; பசித்தீயைப் பாவி என்பர். பசிப்பிணி என்னும் பாவி - மணிமே. 11:80 பசியென்னும் தீப்பிணி - திருக். 227 பசித்தீயை அணைக்க உட்கொள்வதே தீனி, தீவனம், உணவு என்பவை. பசித் தீயை அணைக்கும் உணவுக்குத் தீவனம் என்பது அரிய ஆட்சியாம். இடும்பைக்கு இடும்பை படுத்தல் போல் தீயை எரிக்கும் தீயாக அமைந்தது தீ அனம் ஆகிய தீவனம். அனம் > அன் + அம்; தீயாம் பசியை அற்றுப் போகச் செய்வது தீவனம் ஆயிற்றாம். பசுமை வளம் கொழிக்கும் வனத்தை மக்கள் தீ வனம் ஆக்குவது, இயற்கைச் சூழலை ஈடு செய்ய முடியாக் கேடாக உள்ளதை எண்ணின், ஆடு மாடு முதலியவற்றுக்குத் தீவனப்பஞ்சம் இல்லையாம். தீவு தீவு:1 தீர்வு > தீவு. கடல்நீர் சூழ் கிடக்கையுள் நீர் தீர்வாகி யமைந்த திட்டு அல்லது மேட்டு நிலப் பகுதி தீவாகும். அரங்கம், ஆற்றிடைக் குறை என்பன ஈராறுகளின் இடைப்பட்ட நிலப்பகுதியாகும். முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் முதல் இராசராசன் மெய்க்கீர்த்தி. திருவரங்கம் தீவம் என்பதும் இது. தீவு:2 தீ, தே என்பவை இனிமைப் பொருள் தருதல் பொதுவழக்கு. தீவு என்பது அழகு என்னும் பொருளில் அம்பாசமுத்திர வட்டார வழக்காக உள்ளது. தீவாக = அழகாக. இதனை நோக்க, நீர் சூழ்ந்த நிலப்பகுதியாம் தீர்வு (தீவு) தரும் காட்சியின்பம் துய்த்த பேற்றால் தீவு அழகு என்னும் பொருளில் வழங்கித் தீ என அமைந் திருக்கலாம். தீவாக என்னும் சொற்றொடர் வழக்கும் இதனை விளக்கும். தீயாக என வராமை அறிய வேண்டும். தீற்றி திற்றுதல் = தின்னுதல், உண்ணுதல். திற்றி > தீற்றி. தின் > தீன் > தீனி போல. உணவைத் தீற்றி என்பது குமரி மாவட்ட இலவுவிளை வட்டார வழக்கு. துற்றுதல் என்பதும் தின்னுதல் பொருளில் வரும். துற்றுதல் > திற்றுதல் > தீற்றி. தீற்றுதல் உண்ணுதல் பொருள் தரும் சொல். நென்மா வல்சி தீற்றி (343) என்னும் பெரும்பாணாற்றுப் படை அடிக்கு, நெல்லை யிடித்த மாவாகிய உணவைத் தின்னப் பண்ணி என வரும் நச். உரையால் இப்பொருள் தெளிவாம். புற்கற்றை தீற்றி (புற்கற்றையைத் தின்னச் செய்து) என வரும் சிந்தாமணி (3105). தீனி தின்னும் பொருள்கள் தீனி. தின்னத் தீனி ஏதாவது இருக்கிறதா? என்பர். தின் > தீன் > தீனி. தீனான தினிதென்று மீதூண் விரும்பினாற் தேக பீடைகளே தரும் - குமரேச. 60  து தூ வரிசைச் சொற்கள் து து:1 தகர உகரம் என்பது இது. வல்லின உயிர்மெய் உகரமாகலின் சொல்லிறுதியில் குற்றியலுகர மாதலும் உண்டு. து:2 துய்ப்பு > துப்பு > து = உண். துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை - திருக். 12 தனிக்குறில் சொல்லாகாது (தொல். 43, 44). இயல்வழி அல்லாத விதிவழி வந்தது து. நொதுவாம் குறில் - ஓரெழுத் தியல்பதம் (நன். 129). இயல்பதம் அன்று, விதி வழியது. துவும் நொவும். துய் > து = உண். நோய் > நொய் > நொ = துன்புறு. துகள் புழுதி, பொடி முதலியவை துகள் எனப்படும். துகள், தூள் ஆகும். புகையிலையை அரைத்துப் பொடியாக்கியது மூக்குத்துகள் > மூக்குத்தூள், மூக்குப்பொடி எனப் பெருவழக்காக ஊன்றியுள்ளது. குடிசைத் தொழிலாம் அது, ஆலைத் தொழிலாகப் பெருகியுள்ளது. திருநீறு, சாணகம் நீற்றப்பட்டதே ஆகும். அதுவும் துகள், தூளேயாம். புது வரவாகியது குளம்பி (காபி)ப் பொடி; தேயிலைப் பொடி; அவற்றைக் காப்பித் தூள், தேயிலைத்தூள் எனல் பெருவழக்காகி யுள்ளது. மஞ்சள் தூள், மல்லித்தூள் எனப் பழநாள் அரைசிலைப் பொருள்கள் ஆலை அரைவைப் பொருள்களாய்ப் பெருவணிக ஆட்சி கொண்டது. முகப்பொடி, மணத்தூள்; மருத்துவ உட்கோள் பொருள் களுள் தூள் உண்டு. தூள் தூளாக்கல், கிழித்தல், சிதைத்தல், அழித்தல் என்பனவாம். துகள் அழுக்கு, புழுதி, கசடு வழியாகவும் ஏற்பட்டமை யால் குற்றப் பொருளும் தந்தது. அதனால் குற்றமிலாப் புலமையர் துகள்தீர் புலவர் எனப்பட்டனர் (யா. கா. பாயிரம்). துகிர் துவர் > துகிர் = சிவப்பு. துகிர் = சிவந்த நிறப் பவழம். பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் - புறம். 218 துவர், துவரை நிறம். துகில் துகிர் என்பது பவளம். துகிர்போல் செந்நிறத்தில் அமைந்த பட்டு (செம்பட்டு) துகில் ஆயது. அது துய்ப்பஞ்சால் பருத்தியால் ஆயது. உடலுக்கு நலம் சேர்ப்பது; மென்மையானது. பட்டு நீக்கித் துகில் உடுத்து - பட். மகளிர் இரவு உடை துகில் ஆகும். துகில் வெளிய ஆடை எனவும், வெண்மையும் செம்மையும் கலந்தது எனவும் சிலம்பி நூல் வலை போல்வது எனவும் பனி போல்வது எனவும் பாம்புரி போல்வது எனவும் புகை போல்வது எனவும் பாட்டுக் கூறும். கோபத் தன்ன தோயாப் பூந்துகில் - திருமுரு. 15 துகிலுடுத் தவைபோல் சிலம்பி வானூல் வலந்த மருங்கில் - பெரும்பாண். 235-236 பனிதவழ் பவைபோல், பைங்காழ் அல்குல் நுண்துகில் நுடங்க - பெரும்பாண். 328-329 நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து அரவுரி அன்ன அறுவை - பொருந. 82-83 புகைமுகந் தன்ன மாசில் தூஉடை - திருமுரு. 138 பின்னவை இரண்டும் பொதுவகை உடையாம். துக்கம் துட்கு என்பது அச்சக் குறிப்பு. துட்கம் > துக்கம் ஆயது. அச்சமும் ,நோயும், இழப்பும், இறப்பும், ஆகிய எல்லாம் அச்ச நடுக்கக் குறியின. ஆதலால் அவை துக்கம் எனப்பட்டன. துக்கவீடு, துக்கம் கேட்டல் என்பவை ம.வ. துக்கம் துடைக்கும் துகளறு மாதவர் - மணிமே. 17:75 குக்கூ என்றது கோழி; அதனெதிர் துட்கென் றன்றென் தூய நெஞ்சம் - குறுந். 157 அச்சமுற்றார் திக்குத் திக்கெனத் துடிக்கிறது; திடுக்கிட்டுப் போனேன் என்பவை ம.வ. துக்கம், துக்கம் உண்டாதல், துக்க நீக்க வழி, துக்க நீக்கம் என்பவை பௌத்த மத உண்மைகள். பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிறவார் உறுவது பெரும்பேர் இன்பம் பற்றின் வருவது முன்னது பின்னது அற்றோர் உறுவது - மணிமே. 2:64-67 துக்காணி துண்டு துக்காணி, என்றும் துட்டு துக்காணி என்றும் வழங்கும் இணைச்சொல்லுள் ஒன்று துக்காணி. துண்டு என்பதனினும் சிறிது துக்காணி என்பதாம். துக்கடி என்பது நில அளவைப் பெயர்களுள் ஒன்று. மிகச்சிறிய நிலப்பரப்பு. முகவை, நெல்லை வழக்கு இது. துச்சில் துச்சு + இல் = துச்சில். துய்ச்சு > துச்சு. துய்ப்பதற்கு இடமாக இருந்தது. அஃது உடல். துச்சில் இருந்த உயிர் என்னும் வள்ளுவம் (340). துய்த்து > துத்து > துச்சு. துச்சு சிறுமைப் பொருளும் தரலாயிற்று. என்னைத் துச்சமாக எண்ணுகிறான் என்பது வழக்கு. துச்சு குச்சு துச்சு = சிறியதும் வீட்டை ஒட்டிக் கூரை வேய்ந்ததுமாம் குடியிருப்பு. துச்சில் என்பது வள்ளுவம். குச்சு = குச்சுகளைக் கால்களாக நாட்டி, வரிச்சுகளாகவும் முகடாகவும் பரப்பி வைக்கோல், கீற்று, கோரை, தழை என்பவை பரப்பப்பட்ட சிறிய குடிசை. குச்சும் மச்சாகும் குளிர்க்கு என்பது ஔவையார் மொழி (தனிப்). பூப்படைந்த பெண்ணுக்குத் தாய்மாமன் குச்சில் அமைத்துக் கொடுப்பதும் நீராட்டு நாள்வரை அக்குச்சிலில் அப்பெண் தங்கியிருப்பதும் அண்மைக் காலம்வரை சிற்றூர்களில் காணப் பட்ட நிகழ்வுகளாம். துஞ்சல் துய்ஞ்சல் > துஞ்சல். மெல்லிய துய்ப்பஞ்சில் உறங்குதல் துய்ஞ்சல் > துஞ்சல் ஆயது. உறங்குவார்க்கும் இறந்தார்க்கும் வேறுபாடு தோன்றா மையால் துஞ்சலுக்கு இறத்தல் பொருளும் உண்டாயது. இறந்தார் போல் உறங்கிக் கிடத்தல், துஞ்சு துயில் - மணிமே. 8:12 எனப்படும். காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன். சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி. பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன். பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி. இறத்தல் என்பது, மங்கல வழக்காகத் துஞ்சுதல் எனப்பட்டிருக்கக் கூடும். இயற்கை எய்தினார், இறையடி சேர்ந்தார், வீடு பேறுற்றார் என்பவை போலத் துஞ்சினார் என்பது அந்நாள் வழக்காகலாம். துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் என்னும் வள்ளுவம் (திருக். 926) நினைக்கத் தக்கது. உறக்கத்தில் உள்ளார் என நினைத்தவர் இறந்தாராகக் காணலும் கண்கூடு. துடுப்பாட்டம் கிரிக்கெட் என்பது சூதாட்டத்திலும் பெருஞ் சூதாட்டமாக உலகத்தைக் கெடுத்து வருதல் கண்கூடு. அதற்குரிய விளம்பரம், வேலை கெட்டுக் காணும் கூட்டம் தொலைக்காட்சியைக் கண்ட அளவாலே புலப்படும். இவ்வாட்டத்தை ஈழத் தமிழர் துடுப் பாட்டம் எனப் பெயரிட்டு வழங்குகின்றனர். துடுப்புப் போன்ற மட்டையால் அடிப்பதால் இப்பெயர் பெற்றது. மட்டைப்பந்து ஆட்டம் என்பது தமிழக வழக்கம். முன்னாள் சமையல் துடுப்பு, படகோட்டும் துடுப்பு என்பவை எண்ணத்தக்கன. பனைமடல், தென்னை மடல் என்பவை மட்டை எனப்படல் அறிக. துடி அதிர்வுடைய தோற்பறை. தலையும் கடையும் அகன்று விரிந்து நடுவே அல்லது இடையே சுருங்கிய அமைவினதால், மகளிர் இடை துடியிடை எனப்பட்டது. கண்துடிப்பும் துடி எனப்பட்டது. வலந்துடித்தல், இடந்துடித்தல் எனக் கொண்டு குறிகூறுதல் உண்டு. கண் துடித்தல் கொண்டு எதிரதாம் விளைவு கூறுகிறது இலக்கியம். துடிநூல் என்றொரு நூலுண்டு. பொலந்துடி மருங்குலாய் புருவம் கண்நுதல் வலந்துடிக் கின்றில வருவ தோர்கிலேன் - கம்ப. சுந். 361 வஞ்சனை நாள்வலம் துடித்த வாய்மையால் எஞ்சல வீண்டுதாம் இடம்து டித்ததால் - கம்ப. சுந். 363 பொருள்: வலந்துடித்தலால் தீமை விளைவதும் இடந்துடித்தலால் நன்மை விளைவதும் இதற்கு முன்னெல்லாம் எனக்குத் தவறாது விளைந்தன (உரை, வை.மு.கோ.). இவற்றில் துடி இடையும் துடிப்பும் உள்ளமை அறிக. துடைத்தல் துடைத்தல் = இல்லாது செய்தல். துடைத்தல் என்பது தடவுதல் பொருளை விடுத்துத் துடைத்து எடுத்தலைக் குறிப்பது வழக்கில் உள்ளது. தண்ணீரைத் துடை என்றால் ஈரப்பதமும் இல்லாமல் நீக்கலைக் குறித்தல் தெளிவு. அவன் சாப்பிட்டால் பானையைத் துடைத்து அல்லது கழுவி வைத்துவிட வேண்டியதுதான் என்பதில் முழுவதும் தீர்த்து விடுதல் என்னும் பொருளில் துடைத்தல் ஆளப்படுதல் வெளிப்படை. திருடன் வந்து வீட்டைத் துடைத்து வைத்தது போல் ஆக்கிவிட்டான் என்பதும், உன்னை ஒருநாள் கடையில் வைத்தால் போதும் துடைத்து வைத்தது போலத்தான் என்பதும் மொத்தமாக இல்லாது ஆக்கிவிடும் பொருளவாம். படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர் பரம்பொருள் முன்னிருந்த படி இருப்பது போல் - மனோண். தமிழ்வாழ். துடைத்து மெழுகல் துடைப்பதற்கு உரிய கருவி துடைப்பம்; துடைக்குமாறு; விளக்குமாறு; கூட்டுமாறு; வாரியல் முதலியனவும் அது. குப்பை, கூளம், தும்பு, தூசி ஆகியவற்றைக் கூட்டிப் பெருக்கி வாரிக் கொட்டிய பின்னர்ச் செய்ய வேண்டிய பணி மெழுகுதலாகும். மண்தளமாக இருந்த காலத்தில் சாணக நீர் கொண்டு மெழுகும் வழக்கம் இருந்தது. செங்கல் கல்லால் ஆய தளம் ஏற்பட்ட பின் தண்ணீர் தெளித்துத் துடைத்தல் ஆயிற்று. இதுகால் பளிக்குத் தளத்தில் பளிச்சிடும் வகையில் துடைத்து எடுக்கக் கருவிகள் உண்டாகி விட்டன. வெள்ளி செவ்வாய் ஒவ்வொருவர் வீட்டையும் மெழுகுதல் தமிழக வழக்கு. துட்கு துண் + கு = துட்கு. துண் = நடுக்கம், அச்சம், ஒலிக்குறிப்பு. எ-டு: துண். குக்கூ என்றது கோழி அதனெதிர் துட்கென் றன்றென் தூய நெஞ்சம் - குறுந். 157 * துண் காண்க. துட்டன் துட்டு > துட்டன். பெருந்தன்மை இல்லாத செல்வன் செருக்குக் கொள்வான். அச் செருக்கால் செய்யக் கூடாதன வெல்லாம் செய்வான். இவற்றை எண்ணியவர் அவன் செயலுக்கு மூலம் அவன் வைத்துள்ள துட்டே - பணமே - என்பதை எண்ணினர். துட்டினால் செருக்கிய அவனைத் துட்டன் என்றனர். வழக்கம் போல டகர ஒற்றை ஷ் என மாற்றி மொழிச் சிதைவு செய்துவிட்டனர். முந்திரிமேல் காணி மிகுவதேல் கீழ்தன்னை இந்திரனா எண்ணி விடும் - நாலடி. 346 அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான் என்பது பழமொழி. துட்டு துக்காணி துட்டு துக்காணி:1 முன்னே வழங்கிய காசு துட்டு என்பது. ஒரு துட்டு என்பது நான்கு சல்லிக் காசு. 1 துட்டு = 4 சல்லிக்காசு. 192 சல்லிக்காசு = 1 உருபாய். 48 துட்டு = 1 ரூபாய். 3 துட்டு (அ) 12 சல்லிக்காசு = ஓர் அணா (அ) மாகாணி உருபாய். 2 மாகாணி உருபாய் = அரைக்கால் (1/8) உருபாய். 2 அரைக்கால் உருபாய் = கால் (1/4) உருபாய். 2 கால் உருபாய் = அரை (1/2) உருபாய். 2 அரை உருபாய் = ஒரு உருபாய். 3 கால் உருபாய் = முக்கால் (3/4) உருபாய். இப்பொழுது வழக்கிலுள்ள காசுகளுக்கு முற்பட்டு ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப் பட்டது அது. துட்டு என்பது 4 சல்லி என்பதைக் குறிப்பதை அன்றிப் பொதுவாகப் பணம் என்பதையும் குறிக்கும். அவன் துட்டுக்காரன் எனப் பணக்காரனைக் கூறுவர். கால் துட்டுக்குக் கூட - ஒருசல்லிக்குக் கூட - கடைச்சரக்கு வாங்கிய காலம் உண்டு. துக்காணி என்பது அதிலும் சிறிய காசு (சல்லி) என்பதாம். துக்கடி, துச்சில், துணுக்கு என்பவை சிற்றளவை குறிப்பன. துக்காணி போல் ஒரு பொட்டிட்டு என்பது தனிப்பாடல். துக்குணி கிள்ளி என்னும் குற்றாலக் குறவஞ்சியால் துக்குணி சிறிதாதல் புலப்படும். துட்டுத் துக்காணி:2 துட்டு= கைப்பொருள். துய்க்காணி= துய்ப்புக்கு அல்லது நுகர்வுக்கு வேண்டும் நிலபுலம். துட்டுத் துக்காணி எதுவும் இல்லை என்று இரங்குவதும், துட்டுத் துக்காணி உண்டா? என்று வினவுவதும் வழக்காறு. துட்டு என்பது குறைந்த பொருளையும் துக்காணி என்பது குறைந்த நிலபுலத்தையும் குறிப்பதாம். அதற்கும் வழியில்லை என்பது இரங்கத் தக்க நிலையை மிகுவிப்பதாம். துய்த்தல் = வாழ்வு நுகர்வுக்கு வேண்டும் வாய்ப்பு. அதற்காக முதியர்க்குச் சோறு உடைக்கென (அன்னவத்திர)ப் பங்கு தரும் வழக்கத்தை அறிவது தெளிவாம். துணி துணி என்பதன் பொருள் தமிழறிந்தார் எவரும் அறிந்தது. நெடிய பாவில் இருந்து துணிக்கப்படுவது துணி எனப்படு கின்றது. அத்துணியினும் சிறிதாகத் துண்டிக்கப்பட்டது துண்டு எனப்படுகின்றது. துண்டு துணி என்றோ, துணி துண்டு என்றோ வழங்கும் இணைச்சொல் இவற்றின் நெருக்கத்தைக் காட்டும். இங்குத் துணியை மட்டும் காண்போம். துணி என்பதன் பொருள் அறிந்தோம். அதன் வழியாக ஏற்பட்ட ஒருசொல் துணிவு என்பதாம். ஒருவனைத் துணிந்தவன் என்று சொல்கின்றோம். அவனைத் துணிந்தவன் என்பதற்குக் காரணம் என்ன? பிறர் பிறர்க்கு இல்லாத தனித்தன்மை அவனுக்கு இருத்தலால் அன்றோ துணிந்தவன் என்கிறோம்! துணிவு, துணிந்தவன், துணிவாளன், துணிவாளி, துணுக்கு, துணுக்கை இன்னவற்றுக் கெல்லாம் துணி என்பதுதானே அடிச்சொல்? இது எப்படிப் பொருளொடு பொருந்துகின்றது? பெரும்போர் ஒன்றில் ஈடுபட்ட வீரருள் பலரும் நிற்க, ஒருவன் மட்டும் தனிநின்று வீறு காட்டி வெற்றி கொள்ளல் துணிச்சலாகப் பாராட்டப்படுகிறது. பரிசு பாராட்டுகள் வழங்கப்படுகின்றன. ஒருவேளை அவ்வமரில் அவன் உயிர் துறப்பின், அவன் அமரன் எனப் போற்றப்படுகிறான். சிறப்பொடு பூசனைக்கு உரிமையாளனும் ஆகின்றான். ஓரிடத்தில் முறைகேடான செயல் ஒன்று நடக்கின்றது. அல்லது ஒருவர் முறைகேடாகத் தாக்கப்படுகின்றார். அந்நிலையில் அதனைப் பார்க்கின்றவர்களுக்கு அது கொடுமை என்பது புலப்பட்டாலும் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்னும் உணர்வு இயல்பாக எழுந்தாலும் துணிவாக முன்வந்து தடுக்க முனைவார் அறியர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு இருப்பவரும், இப்படி நடக்கிறதே என்று வருந்திக் கொண்டு போகின்றவரும் நமக்கென்ன என்று நழுவு கின்றவரும்தாமே மிகப் பலர். ஆனால் எல்லாருமே அப்படி இருந்து விடுகின்றனரா எனில், இல்லையே! எவரோ ஒருவர் அக் கூட்டத்தை, விடுத்துத் துணிந்து செல்கிறார். துணிந்து என்றால், கூட்டத்தில் இருந்து துணிந்து (பிரிந்து) செல்லுதல் என்பதைக் குறித்து, அது அவர்தம் தன்மையைக் குறிப்பதாயிற்று. அவ்வாறு சென்றவர் பின் விளைவு என்ன என்பதைக் கூடக் கருதாமல் தட்டிக் கேட்கிறார். துணிச்சலாகச் செயலாற்றுகிறார். கூட்டத்தோடு கூட்டமாக அமைந்துவிடாமல், நூற்றொடு நூற்று ஒன்றாக நின்று விடாமல் தனியொருவராகத் துணிந்து செல்வதால் அவர் தன்மை துணிவு ஆயிற்று. அவர் துணிவாளர் என்றும், துணிச்சல்காரர் என்றும் பாராட்டப் படுபவர் ஆனார். கோடி, கோடி மக்கள் இருந்தாலும் வல்லாண்மை மிக்க ஆங்கில வணிகரை எதிரிட்டுக் கப்பலோட்ட எத்துணைப் பேர்க்குத் துணிவு வந்தது? அவருள் துணிந்த ஒருவர் வ.உ.சி. ஆனார். இனித் துணிவு என்பதற்கு வேறொரு பொருளும் உண்டு. அது முடிவு செய்தல் என்பது. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு - திருக். 666 என்பதும், சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் - திருக். 671 என்பதும், எண்ணித் துணி என்பதும் இப்பொருளில் வருவன. இத்துணிவுக்கு முடிவு செய்தல் என்னும் பொருள் எப்படி வந்தது. ஒன்றைப் பற்றி ஆராயுங்கால் பலப்பல கருத்துகள் அடுத்தும் தொடுத்தும் உண்டாகின்றன. அவற்றுள் ஒவ் வொன்றாக ஆய்ந்து, விலக்குவ விலக்கித் தக்கதைத் தேர்ந்து முடிவாகக் கொள்வதே அத் துணிவு ஆகும். பலவற்றை ஆய்ந்து விலக்கி ஒன்றைத் தக்கதெனத் தனித்து அல்லது துணித்து எடுத்துக் கொண்டமையால் அது துணிவு எனப்படுகின்றதாம். அதனால் துணிவுக்கு உறுதிப் பொருள் என்பதும் உளதாயிற்று. ஒருவர் வரலாற்றில் அமைந்த ஒரு சிறு நிகழ்ச்சியை அல்லது ஒரு நூலின் ஒருசிறு பகுதியைத் தனித்துக் காட்டுதல் துணுக்கு எனப்படுகின்றது. துணுக்குச் செய்தி இடம்பெறாத நாளிதழும் இல்லை என்றால், கிழமை இதழ், திங்களிதழ், மலர் என்பவற்றைச் சொல்ல வேண்டுவது இல்லை. துணுக்கைப் படித்த அளவானே இதழை மூடி வைப்பாரும் உளர் என்பதால் துணுக்கின் சுவை புலப்படும்! இதுகால், துணுக்கு எழுத்தாளர் எனத் தம்மைக் கூறிப் பெருமைப்படுவாரும் உளர். ஆனால் அவர் எழுதுவதே துணுக்குச் செய்திதான். ஒரு பெருநூலில் அல்லது வரலாற்றில் எடுக்கப்பட்ட துணுக்கு அன்று என்பதே வேறுபாடாம். துணுக்கம் துணுக்குறுதல் என்பன நடுக்கம் என்னும் பொருள் தருவன. அவை துண் என்னும் ஒலிக்குறிப்பின் வழியாக வந்தனவாம். துணித்து துணித்து என்பதற்குத் துண்டாக்கி என்பது பொதுப் பொருள். துணிக்கப்பட்ட துண்டுக்குத் துணித்து என்பது குமரி வட்டார வழக்கு. தனித்தாக அமைந்தது தனித்து என்றும், தனியன் என்றும் வழங்கப்படும் வழக்குப் போல்வது இது. துணிமணி துணி = ஆடை அல்லது உடை வகை. மணி = அணிகல வகை. துண்டு, துணி, துணுக்கு என்பவை எல்லாம் ஒருபொருளன. பாவில் இருந்து துணிக்கப்படுவதால் துணி ஆயிற்றாம். துணி என்பது உடுப்பனவற்றை யெல்லாம் தழுவி நின்றது. அது போல மணி என்பது அணிவனவற்றையெல்லாம் தழுவி நின்றது. மணி வகை ஒன்பது; இக்கால் அவ்வொவ்வொன்றின் போலிமையும், புத்தாக்கமானவையும் எண்ணற்றுள. அவற்றால் அமைக்கப் பெற்ற அணிகலங்கள் எல்லாம் மணி என்னும் சொல்லுள் அடக்கமே. மணவிழாவுக்குத் துணிமணி எடுக்காதவர் எவர்? துணியைக் கிழித்தல் துணியைக் கிழித்தல் = கிறுக்காதல். சீலையைக் கிழித்தல் என்னும் வழக்குப் போல்வது. துணி என்பது துண்டித்தல் என்னும் பொருளில் வருவது. எனினும் அதனை முழுமையான சீலை, வேட்டி, துண்டு என்னும் பொருளாகக் கொண்டு அதனைக் கிழித்தலைக் குறித்ததாம். நான் என்ன துணியைக் கிழித்துக் கொண்டா திரிகிறேன் என்பதில் நான் கிறுக்கனா? என்னும் வினாவுண்மை காண்க. துணியைத் தாண்டல் துணியைத் தாண்டல் = உறுதி மொழிதல். மெய்கூறல் (சத்தியம் செய்தல்) என்பதன் முறைகளுள் ஒன்று துணியைத் தாண்டல், பிள்ளையைப் போட்டுத் தாண்டலாகக் கருதப்படும் உறுதியே துணியைப் போட்டுத் தாண்டலுமாம். துணி மானப் பொருள். அதனை எடுத்துப் போட்டுத் தாண்டல் மானத்தின் அடையாளம் எனப்பட்டதாம். நான் சொல்வது பொய் என்றால் இத்தாண்டும் பிள்ளை ஐயோ என்று போய்விடும் என்பது போல், நான் சொல்வது பொய் என்றால் கட்டத் துணி இல்லாமல் போய்விடும் என உறுதி மொழிவது, இவ்வழக்கத்தின் பொருளாம். துணி கிடையாது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. துணிவு துணிவுஎன்று பலரும் சொல்கிறோம். துணிந்தவனுக்குத் துக்கமில்லைஎன்று பழமொழி கூறுகிறோம். துணிவு என்பது யாது? துணிவு என்பதன் பொருளை அதன் முதனிலையே தெளிவாக்குகிறது. அதன் முதனிலை எது? துணிஎன்பதே முதனிலை. ஒரு நெடும்பாவு ஓடுகின்றது; அதில் துணித்து எடுப்பதே துணிஎனப்படுகிறது. அறுத்து எடுப்பதால் அறுவை எனப்படுவது போலத் துணித்துஎடுப்பதால் துணிஎனப்படுகிறது. துண்டிக்கப் படுபவை துண்டு, துண்டம் எனப்படுவதும் கருதுக. துணிக்கப்பட்டது துணியாவது போல் துணித்து வந்தது, துணிவுஎனப்படுகிறது. மக்கள் பல்லாயிரவர் ஒருங்கு திரண்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் நாம் துணிவினர் என்பது இல்லை. ஒருவர் இருவரையே துணிவினர் என்கிறோம்; பாராட்டுகிறோம்; சிறப்பிக்கிறோம்! ஏன்? நடக்கக் கூடாத கொடுமை அல்லது தீமை நடக்கின்றது. அதைக் கூட்டமெல்லாம் கூடிக் கூடிப் பேசுகின்றது. ஆனால் அதனைத் தடுக்கும் துணிவு அவரெல்லாருக்கும் வந்து விடுவதில்லை! எவரோ ஒருவர் அக்கூட்டத்தை விடுத்துத் துணிந்து (துண்டுபட்டு) செல்கிறார்; தட்டிக் கேட்கிறார். தடுத்து நிறுத்துகிறார்! அவரைத் துணிவானவர்! என்று கூட்டமே சொல்கின்றது! தம்மில் இருந்து துணிந்து போய்த் தாம் செய்ய முடியாததைச் செய்பவர் எவரோ, அவரைத் துணிவினர் என்பதும், அவர் தன்மையைத் துணிவுஎன்பதும் தக்கவை தாமே! கோடி கோடிப் பேர்கள் இருந்தாலும் ஆங்கிலவரை எதிர்த்துக் கப்பலோட்டுதற்குக் கிளர்ந்தவர். இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதற்கண் தனி ஒருவராகக் கிளர்ந்தவர் வ.உ.சிதம்பரனாரே! அவர், கூட்டத்தோடு கூட்டமாக அமைந்து விடவில்லை! கூட்டத்தைத் துணிந்து வெளிப்பட்டார்! துணிவாளர்எனப்பட்டார். நக்கீரத் தன்மை எத்துணைப் பேர்க்கு வாய்க்கும்! தமிழ்ச் சங்கப் பேரவையில் குற்றம் குற்றமேஎன்று துணிந்து கூற அவர் ஒருவர் தாமே முன் வந்தார்! பின்னைப் புனைவுச் செய்தியே ஆயினும், துணிவுச் சான்றாக அன்றோ நிலைபெறுகின்றது! கூட்டத்தோடு கூட்டமாக நின்று விடாத தனித்தன்மையே துணிவுஎன்பதை அதன் முதனிலை செவ்விதாகச் சொல் கின்றதே! ஒருவர் துணிந்து சொல்ல அல்லது செய்ய முற்பட்டு விட்டாரா? அவரைத்தொடர்ந்து ஒருவர் இருவரெனத் துணிந்து வருதல் கண்கூடு! முதற் துணிவர் தலைவராகி விடுவார்! வழித்துணிவர் துணிவுக் குழுவராகி விடுவார்; கிளர்ச்சி, புரட்சி, எழுச்சி என்பவற்றின் மூலவர்ஒரு துணிவர்தாமே! அத் துணிவர்க்கு மூலம் துணிதானே. துணுக்கு துண் என்பது அதிர்வு. விண் என்பதும் அதிர்வே. விண்விண் எனல் விண் எனல் என்பன போல் துண் எனலும் அதிர்வுக் குறிப்பாம். துண் என்னும் அதிர்வுக் குறிப்பு, துணுக்குற்றான் (நடுக்குற்றான்) எனவும் வரும். துண்டு துணுக்கு என்னும் இணைச்சொல்லில் சிறிதினும் சிறிது என்னும் பொருளில் வருகின்றது. துணுக்கம் (நடுக்கம்) என்பதுமாம். துண் நடுக்கக் குறிப்பு, அச்சக்குறிப்பு என்பதும் அது. எயினர் கோன் துண்ணென்றான் - கம். அயோ. 1020 துண்ணெனும் அவ்வுரை தொடர்ந்தது ஓகையும் - கம். ஆரண். 962 துண்டம் துண்டு > துண்டம். ஒரு பெரும்பொருளைப் பகுத்துத் துண்டு போடுவது துண்டு என்றும் துண்டம் என்றும் வழங்கப்பெறும். துண்டு துண்டாக ஆக்கு என்பது ஏவல். துண்டம் துண்டம் செயும் அரி என்பார் அருணகிரியார். துண்டம் என்பது ஆட்டுத் தரகர் வழக்கில் 60 ஆடுகளைக் குறிப்பதாக வழங்குகின்றது. கண்டத்தில் சிறியது துண்டம். அதனால் கண்டதுண்டம் என்பது இணைமொழி யாயிற்று. வெட்டு ஒன்று துண்டு இரண்டுஎன்பது பழமொழி. தனித்துப் போதலைத் துண்டரியாய்ப் போய்விட்டான் என்பது திருத்தவத்துறை (இலால்குடி) வட்டார வழக்கு. பிறை நிலவைத் துண்டமெனில் மதித்துண்டம் எனப்படும். பயிர் நிலத்தில் ஊடு ஊடு காய்ந்து பட்டுப் போதலைத் துண்டம் துண்டமாகப் பட்டுப் போனது என்பதும் துள்ளம் துள்ளமாகப் பட்டுப் போனது என்பதும் வேளாண் தொழில் வழக்கு. மீன் துண்டைத் துணியல் என்பர். கொழுமீன் குறைஇய துணியல் - மதுரைக். 320 * துண்டம் துள்ளம் காண்க. துண்டம் துள்ளம் துண்டம்= துண்டு துண்டாக அமைந்தது. துள்ளம்= துண்டத்தின் இடையிடையே அமைந்த சிறு வட்டங்கள். ஒருவர் நிலப்பரப்பில் ஒரு பகுதி துண்டம் அல்லது துண்டு என்று வழங்கப்படும். அத் துண்டின் ஊடே ஊடே சில பகுதிகளிலுள்ள பயிர்கள் கருகியோ வாடியோ போயிருந்தால் துள்ளம் துள்ளமாகக் கருகியோ வாடியோ போயிருப்பதாகக் கூறுவது வழக்காறு. துளி, துள்ளி, துள்ளம் என்பவை ஒரு பொருளன. துளியின் சிறுமை மழைத்துளியால் தெரிய வரும். துண்டுதுணி நெடிய பாவில் இருந்து துண்டு போடுவது - துண்டு துண்டாக அறுத்து அமைப்பது துண்டு; அத்துண்டையும் சிறிது சிறிதாக அறுத்து ஆக்குவது துணி. துணியிலும் சிறியது துணுக்கு. துண்டு துணுக்கு என்பதும் உண்டு. துணி, துணிப்பதால் (துண்டாக்குதலால்) பெற்ற பெயர். அத் துணித்துண்டு போலவே ஒரு கூட்டத்தில் இருந்து பிரிந்து அவர் செய்தற்கு அரிய செயலைச் செய்வாரே ஆனால், அவர் துணிவாளர் எனப்படுவார். கூட்டத்தில் இருந்து துணிந்து (பிரிந்து) செயலாற்றியமையால் துணிவு, துணிவாளர் என்பவை உண்டாயின. எண்ணித் துணிக கருமம் என்பது வள்ளுவம் (திருக். 467). துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை என்பது பழமொழி. துண்டு துணுக்கு துண்டு = ஒன்றைத் துண்டித்தது துண்டு. துணுக்கு = ஒன்றைத் துண்டித்ததைப் பலவாகத் துண்டித்தது, துணுக்கு. துண்டு என்பது துண்டிக்கப் பட்டதாம். துண்டு துணி துணுக்கு என்பவை எல்லாம் துண்டிக்கப்பட்டவையே. கூட்டத்தில் இருந்து ஒன்றை ஒதுக்குதல் துண்டித்தலாகச் சொல்லப்படுவதை அறிக. சின்னஞ்சிறு செய்திகள் துணுக்கு என இந்நாள் பெருக வழங்குதல் நினைவு கூரத்தக்கது. துத்தி துய்த்தி > துத்தி. உண்ணுவதற்குத் தக்க இலைகளை யுடையது துத்தி. துத்துதல் = உண்ணுதல். துளிர் இலைகளைக் கீரை போலச் சமைத்துண்ண வயிற்றிலுள்ள வளித் தொல்லை தீரும். இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி அந்நீரால் வாய்கொப்பளிக்கப் பல்வலி நீங்கும். இலைகளோடு பூக்களைச் சேர்த்து அரைத்துப் புண்கள் மேல் கட்டினால் புண்கள் ஆறும். இலைகளைப் பிழிந்து சாறெடுத்து எண்ணெய் சேர்த்துக் காய்ச்சிக் கரப்பான் மேல் பூசினால் கரப்பான் குணமாகும். இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி நாள்தோறும் இரவு இரண்டு மூன்று மிடறு ஒருவாரம் பருகக் குடல்புண் ஆறும். இலைகளை அரிசிமாவுடன் சேர்த்து வேகவைத்துக் கட்டிகள் மேல்பூசிக் கட்டினால் விரைவில் பழுத்து உடையும். இலைகளைப் பருப்புடன் சேர்த்து வேக வைத்துக் கடைந்து உணவுடன் சேர்த்து உண்டால் மூலநோய் தீரும் (குறளருவி 1:4.21). துப்பு துய்ப்பு > துப்பு. துப்புக் கெட்டவன் என்பது அறிவு கெட்டவன் என்னும் பொருளில் முகவை வட்டார வழக்காக உள்ளது. துப்பு வலிமை; அது துய்க்கும் உணவால் உண்டாவது பற்றிய ஆட்சி. அறிவு கெட்டவன் என்பது, பசி வந்திடப் பத்தும் பறந்து போம் என்பதன் வழியதாகலாம். மானம் தவம் குலம் கல்வி முதலிய பத்தும் பசி வந்திடப் போம் என்பது ஔவையார் வாக்கு (நல்வழி26). துப்புணி துப்பும் நீர் என்பதைத் துப்புணி என விளவங்கோடு வட்டாரத்தில் வழங்குகின்றனர். தண்ணீர் தண்ணி எனப்படுவது போல், ணீர் ணியாகிவிட்டது. துப்புணி = எச்சில் (துப்பு நீர்). உமிழ் நீர் என்பதும் அது. துப்பு என்பது துய்ப்பு என்பதன் தொகுத்தல். அதன் செவ்விய வடிவம் அந் நீரின் துய்ப்புச் சிறப்பைக் காட்டுவது. அதன் எழுத்துக் குறையோ (துப்பு) இழிமை ஆகிவிட்டது. உண்டது அறச் செய்யும் அருமைநீர் அறியாமையால் பாழாக்கப்படுவது சொல்லால் தெளிவாகின்றது. துமி தும் > துமி. உமி போலும் நீர்த்துளி. மோர்த் துமி குமுதனிட்ட குலவரை துமிதம் ஊர்புக வானவர் துள்ளினார் - கம். உயுத். 661 துமி என்பதற்குத் துளி என்னும் பொருள் உண்டா? என்று இராமாயண அரங்கேற்றத்தில் வினவ, மக்கள் வழக்கிலேயே உண்டு என்றாராம் கம்பர். அதை மெய்ப்பிக்க வேண்டும் என்று கூற, விடியற் போதில் தெருவில் சென்றனராம். கலைமகளே மோர் கடைவாள் வடிவில் ஒரு வீட்டில் மோர் கடைய, அடுத்திருந்த சிறுவர்களிடம் மோர்த்துமி துமிக்கும் அப்பால் போய் விளையாடுக என்றாளாம். அதைக் கேட்டு எதிர்த்தவர்கள் ஒப்பினர் என்பது விநோதரச மஞ்சரி. துமித்தல் என்பது தூவுதல் பொருளில் யாழ்ப்பாண வழக்காக உள்ளது. துமித்தல் துணித்தல் > துமித்தல் = அறுத்தல், துண்டாக்கல். வாழை முழுதுறத் துமிய - திருமுரு. 307 பொருள்: வாழையினது பெரிய முதல் (அடி) துணிய (உரை, நச்.). தும்பி வண்டு வகையுள் ஒன்று; யானை; வண்டு (பொது). தும்பு > தூம்பு. நீர்வடி குழாய் போன்ற அமைப்புடைய உறுப்பு உடைமையால் பெற்ற பெயர் இது. தும்பிக்கை உடைமையால் யானை தும்பி என்றும், அதன் கை தும்பிக்கை என்றும் பெயர் பெற்றன. குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய என்பது மணிமேகலை (4:3-4). தும்பி சேர் கீரனார் என்பார் சங்கச் சான்றோருள் ஒருவர். அவரைத் தும்பைச் சொகினனார் என்பார் ஔவை து.சு. தும்பி என்பது வண்டினத்திற்குப் பொதுவாய் வழங்கினும் சுரும்பு மதுகரம் தும்பி ஆண்வண்டே என்னும் பிங்கலந்தை அடியால் ஆண் வண்டு என்பது புலப்படும். தும்பியும் வண்டும் என வந்திருக்குமிடங்களில் வண்டைப் பெண்வண்டாகக் கருத வேண்டும். (சி.த.சொ.ஆ, பக். 94) தும்பை தூம்பு > தும்பு > தும்பை. தும்பைப்பூ தூம்பு (துளை) உடையது; தூம்பு > தும்பு. துளையுடைய கை தும்பிக்கை; தும்பி என்பது வண்டு. அதன் வாயாக நெடிய உறிஞ்சு குழாய் உள்ளது. சுரும்பு என்பதும் இது. தும்பைப்பூ வெண்ணிறமானது. நல்ல வெள்ளையைத் தும்பைப் பூப் போன்ற வெள்ளை என்பர். தும்பையின் ஒருவகை கீழே கவிந்த பூவையுடையது. அது கவிழ் தும்பை எனப்படுகிறது. மூக்குத் துளைவழி வெளிவரும் காற்று தும்மல் தும்மு எனப்படுதல் எண்ணுக. துந்துபி என்பது ஓர் இசைக்கருவி; துளையுடையது. தும் தும் என்னும் ஒலி எழுப்புவது. தும்பைக் காலி தும்பைப் பூ நல்ல வெண்ணிறமானது. சலவை தும்பைப் பூப் போல உள்ளது என்பது பாராட்டு மொழி. உவமை வகையால் சலவையைக் குறித்த தும்பை, சலவை செய்வாரைக் குறிப்பதாகத் தும்பைக் காலி எனப்பட்டது. இது, திண்டுக்கல் வட்டார வழக்கு. ஏகாலி எனச் சலவையரைச் சொல்லுவதில் உள்ள காலி தும்பையொடு ஒட்டப்பட்டுள்ளது. ஏகாலி என்பது எழுகாலி என்பதன் பிழைவடிவு. அவர்கால் இரண்டு; கழுதையின் கால் நான்கு; கவைக் கொம்பின் கால் ஒன்று; ஆக ஏழுகால் என்பர். ஏகாலி நெல்லை, முகவை வழக்கு. தும்பை மாலை மாற்றாரோடு தும்பைப் பூமாலை சூடிப் பொருவதைக் கூறுவது தும்பை மாலையாகும். தும்பைவேய்ந் தொனாரொடு சூழ்ந்து பொருவது சொல்வது தும்பை மாலை யாகும் - முத்துவீ. 1077 ஒனார் > ஒன்னார் = பகைவர். தும்மல் தும் > தும்மு > தும்மல். தும் = ஒலிக்குறிப்பு. இயல்பாகச் சிறப்பாக மாந்தர்க்கும் பொதுவாக மற்றை உயிரிகளுக்கும் தும்மல் ஏற்படும். குளிராலும் மாறுபட்ட நெடியாலும் தும்மல் ஏற்படும். பிறர் நினைத்தால் தும்மல் உண்டாம் என்னும் புனைவும் பழமை தொட்ட நம்பிக்கையாம். புலவி நுணுக்கம் எனும் அதிகாரத்தில் தும்மு என்பதை நான்குமுறை ஆள்கிறார் திருவள்ளுவர். ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து - திருக். 1312 வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று - திருக். 1317 தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல் எம்மை மறைத்திரோ என்று - திருக். 1318 என்பவை அவை. மந்தி மீன் நாற்றம் தாங்காமல் தும்மியதாக மதுரை மருதனிள நாகனார் பாடுகிறார். அது, கொழுஞ்சுளைப் பலவின் பயங்கெழு கவாஅன் செழுங்கோள் வாங்கிய மாச்சினை கொக்கின் மீன்குடை நாற்றம் தாங்கல்செல் லாது துய்த்தலை மந்தி தும்மும் என்பது நற்றிணை (326). பாட்டு தொகை அடைவில் வேறு தும்மல் காணப் பெறவில்லை. தும்மினால் ஏதோ இடையூறு வரும் என்னும் அச்சத்தால் நூறு என்பதும் இரண்டாம்முறை தும்மினால் இருநூறு என்பதும் ம.வ. நூறு என்பது நூறாண்டு வாழ்க என்னும் வாழ்த்தாம். துயிலெடை நிலை கண்படை கொண்ட வேந்தரை வைகறைப் போழ்தில், முன்னே திறை தந்த வேந்தரும், திறை தாராத வேந்தரும் வாழ்த்தி நின்மொழி கேட்டு நடக்க விழைந்து நிற்கின்றனர், வேந்தே! துயில் எழுக எனப்பாடுவது துயிலெடை நிலை என்பதாகும். கண்படை மன்னர் முன்னர்த் தண்பதம் விடிய எல்லை இயல்புறச் சொல்லித் தந்த திறையரும் தாராத் திறையரும் ஏத்தி நின்மொழி கேட்டினி தியங்க வேண்டினர் இத்துயில் எழுகென விளம்பின் அதுவே மன்னவர் துயிலெடை நிலையே - பன்னிரு. 324 பாசறையில் சூதர் துயிலெழுப்புதலுமாம் - பிர. தீபம். 61 துயில் துய் + இல் = துயில். துய்யாம் மென்படுக்கையில் (பஞ்சுப்) படுத்து உறங்குதல் துயில் ஆயது. உறக்கம் பின்னே உண்டாம் எழுச்சிக்கும் கிளர்ச்சிக்கு இடனாதலால், துய்ப்பதற்கு இடமாக அமைந்தது துயில் எனலாயிற்று என்பதுமாம். துய்த்துல் தூய் > துய். துய்த்துல் = உண்ணுதல். உடலுக்கு ஒவ்வியதாய், தூயதாய் உண்ணல், பருகுதல், நுகர்தல், துய்த்தல், துற்றல் எனவும் ஆகும். துற்றவ துற்றல் என்பது உண்ணத் தக்கதை உண்ணல். துற்றல் > திற்றல் = உண்ணல், தின்னல். துற்றல், துற்றி, துற்று என்பவை துய்த்தல் வழிப்பட்ட சொற்கள். துவ்வத் தக்கவை துற்றி ஆனாற் போலத் தின்னத் தக்கவை திற்றி ஆயிற்றாம் இவை இலக்கிய வழக்குகள். துற்றிய துருவையம் புழுக்கு - பொருநர். 103 பொருள்: அறுகம் புல்லால் திரித்த பழுதையைத் தின்ற செம்மறிக் கிடாய் (உரை, நச்.). அழித்தானாக் கொழுந் திற்றி - மதுரைக். 211 துய்ப்பு துய்ப்பு என்பது துப்பு எனத் தொகைநிலை எய்தும். துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை - திருக். 12 என்பதில் வரும் துப்பு நான்கும் துய்ப்பு வழிப்பட்டதே. நுகர்பொருள் என்னும் பொருள் தரும் துய்ப்பு என்பதன் வடிவம் துப்பு ஆகும். இத் துப்புக்கு வலிமை, செம்மை, சிவப்பு முதலிய பொருள் வளர்ச்சி துய்ப்பு வழிவந்ததே யாகும். துய்ப்பிலா நிலையில் வலிமை உண்டோ? பசி வந்திடப் பத்தும் பறந்திடும் என்பது பழமொழி யன்றோ! துரப்பு துடைப்பு துடைப்பம் என்பவை வாரியலைக் குறிக்கும், பொதுவழக்குச் சொல். துரப்பு என்பது துடைப்பத்தைக் குறிக்கும் சொல்லாகக் குமரி வட்டார வழக்கில் உள்ளது. தூர்த்துல் (தூர்ப்பு) என்பது பெருக்குதலைக் குறிக்கும். தூர்ப்பு > துரப்பு ஆகியிருக்கும். துடைப்பு துரப்பு ஆகாது. துடப்பு, தொடர்பு என்றே ஆகும். தூர்த்துக்குடி (தூத்துக்குடி) மேடாக்கப்பட்டு அமைந்த ஊர். தூர்தல், காது தூர்தல் = காதுத் துளை மூடிப்போதல். தூர்வை அள்ளல் உழவர் பணிகளுள் ஒன்று. துரவு துரப்பணம் = துளைத்தல்; துரப்பணக் கருவி. துரப்பணத்தால் அகழப்பட்ட கிணறு துரவு ஆகும். தோட்டம் துரவு இணைமொழி. துரவு கண்ணாறு இழிச்சப் பெறுவதாகவும் (தெ.க.தொ. 19:344). துரிஞ்சி குறுமரவகை இது; அரைப்பு எனவும் சீயக்காய் எனவும் முடியழுக்கைப் போக்க உதவும் காயை உடையது துரிஞ்சி. துரு + இஞ்சி > துரிஞ்சி. துரு = அழுக்கு; இஞ்சி = இழுத்துக் கொள்வது. துரு இரும்பு கரியது. அதில் பற்றும் பிதிர் துரு எனப்படும். துருப்பிடித்தால் படிப்படியே பொரிந்து கெட்டுப் போகும்; மண்ணோடு மண்ணாகி விடும். துருவைப் போன்ற நிறமுடைய ஆட்டை - செம்மறியாட்டை - துரு என்றும், துருவை என்றும் வழங்கினர். தகர்விரவு துருவை வெள்ளையொடு விரைஇ - மலைபடு. 414 துருத்தி நிலத்தை இருபாலும் நீர் அறுத்துச் செல்ல இடைப்பட்ட திட்டு நிலம் துருத்தி எனப்படும். நாவைத் துருத்துதல் மக்கள் வழக்குச்சொல். நாவை மேலெழுப்பிக் காட்டலாம். துருத்தி பெரிதாயின் அரங்கம் எனப்படும். ஆற்றிடைக் குறை அரங்கம் ஆற்றுவீ அரங்கம் என்பவை அவை (சிலப். 10:156). எ-டு: திருப்பூந் துருத்தி, திருவரங்கம். நீர் மோதித் தாக்கும் இடம் ஆகலின், வீங்குநீர்த் துருத்தி ஆயிற்று! உந்தும் அருவி புடைசூழ்தலின் குற்றாலம் ஆயிற்று. இவண் பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கத்தையும் கருதிப் பொருட்பொருத்தம் கண்டு கொள்க. தஞ்சை நாட்டுக் குற்றாலத்திற்குத் துருத்தி என்பதே பழம்பெயர். ஆளுடைய பிள்ளையார் இத்திருக்கோயிலைத் துருத்தி என்றார். இறைவரைத் துருத்தியுடையார் என்றார். மெய்ப்பொருள் விளங்கும் வகையில் அவர் கூறியது, பைம்பொழில் சூழ் வீங்குநீர்த் துருத்தியார் என்பது. இதனையே வீங்குநீர்த் துருத்தி யுடையார் என்று கல்வெட்டும் குறிக்கின்றது. கீழா துருத்தியில் நிலம் ஒருமாவும் (தெ.க.தொ. 19:348). துருத்தி என்னும் உலைக்களக் கருவி, மேலெழுதலால் பெற்ற பெயர். நிலப்பகுதி மண்சரளை கரடுகளால் உயர்ந்து நிற்பின் துருகம் எனப்பட்டது. துருகம் என்பது சின்ன சேலம் பக்கத்ததோர் ஊர். நந்தி துருகமும் உண்டு. உயரமாம் மலைமேல் ஏறித் திரியும் வரையாடு, துருவையாடு எனப்படும். துருதுருப்பு என்பது எழுச்சிக் குறிப்பாம். பையன் துருதுரு என்றிருக்கிறான் என்பர். துரு நிறமும் கருதத் தக்கது. துரும்பு துரு > துரும்பு. ஒரு பொருள் வெப்பு, காற்று, பயன்படுத்தாமை முதலியவற்றால் தன்னியல் படிப்படியே கெடும் அடையாளம் அதன் மேலே பொரி பக்கு எனவிடுதல். அது சிறிது; கனமற்றது; அத்தகையது துரும்பு. எளிதில் மண்ணில் பட்டு மட்கிப் போவது. இரும்பில் ஏற்படுவது துரு. மரம் மட்டை இலை தழை முதலியவற்றில் நொய்தாகத் தோன்றுவது துரும்பு. எரி துரும்பு என்பது ம.வ. தூசியும் துரும்பும் இணைச்சொல். துரும்பனேன் என்பார் வள்ளலார்! துரும்பிலும் உள்ளான் தூணிலும் உள்ளான் என்பது இறைமை பற்றிய ம.வ. இதுகால் ஒற்றனை அவ்வாறு சுட்டும் நிலையும் உண்டாயிற்று. துருவல் துருவல் = தேடல், ஆராய்தல். துருவுதல், நுண்ணியதாகத் துளைத்தல் பொருளது. தேங்காய் துருவுதல், துரப்பணம் செய்தல், துரவு (கிணறு) என்பவற்றை நோக்கின் நுணுக்கமாகத் துளைத்தல் பொருளதென்பது துலங்கும். இந்நுணுக்கத் துளைப்பு, அடர்காட்டின் ஊடு நோக்கிப் பார்க்கும் பார்வைக்கும், பருப்பொருளின் ஊடே நுணுகியாராயும் ஆய்வுக்கும் பொருளாதல் வழக்காயிற்றாம். எதையும் மேலாகப் பாராமல் துருவித் துருவிப் பார்ப்பான் என்பதில் இப்பொருள் விளக்கமாம். துருவுதல், நுணுகியும் ஆழ்ந்தும் பார்த்துல். துல்லியம் துல்லியம்:1 இது சரியாக இவ்வளவு எடை இருக்கும் என மதிப்பிடு வதைத் துல்லியமாக என்பது தென்தமிழக வழக்கு. துல்லியம் என்பது துலைக்கோலால் (தராசால்) நிறுத்துச் சொல்லப்படுவது போன்றது என்பதாம். (Purity) என்பதன் கலைச்சொல் துல்லியமாக அமைகின்றது. துல்லியம்:2 திட்டவட்டமாக, உறுதியாக என்னும் பொருளில் கல்வெட்டு துல்யம் என்பதைக் காட்டுகின்றது. திருப்பணியும் திருநாளும் தாழ்வற நடத்திப் போதுக துல்யம் (தெ.க.தொ. 17:127). துவக்கமும், தொடக்கமும் ஒன்றை உருவாக்குதல், அமைத்தல், தோற்றுவித்தல் என்பவை நடைமுறை. அதனைச் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ விழா எடுத்து நிகழ்த்துதல் கண்கூடு. அவ்விழா துவக்கவிழா ஆகும். அத் துவக்கம் நிகழ்ந்து ஓராண்டு நிறைந்து, அடுத்த ஆண்டும் தொடர்தல் தொடக்கம் ஆகும். அவ்வாறு தொடரும் விழாக்கள் எத்தனை எனினும் அவை தொடர்தல் குறியாக அத்தொடர் ஆண்டுகொண்டு இருபதாம் ஆண்டு, முப்பதாம் ஆண்டு - தொடக்கவிழா எனச் சுட்டப்பெறும். ஒரு, பொறியமைப்புடைய பெட்டி, பின் அதனைத் தொடரும் பெட்டிகள் உடைய ஊர்தியைத் தொடர்வண்டி (தொடரி) என்பதும், ஒரு சொல்லொடு பலசொற்கள் பொருளால் தொடர்வதைச் சொற்றொடர் என்பதும் வழக்காதல் அறிக. துவக்கு என்பது ஊன்; தோலுள் தோன்றிய முதல்பொருள் துவக்கே. அஃது ஊன்துவை எனப்படும். ஊன்துவை அடிசில் என்பது பதிற்றுப்பத்தின் ஒரு பாடற்பெயர் (45). துவக்கம் என்பது பிழையென்பாரும், துவக்கமும் தொடக்கமும் ஒன்றே என மயங்குவாரும் உண்டு. துவக்கு வழியது தொடக்கம் என்பது அறிய வேண்டுவதாம். முதல் ஐந்து வகுப்புப் பள்ளியைத் துவக்கப்பள்ளி என்று வழங்கலாயது. அது தவறு என்ற கருத்தில் தொடக்கப்பள்ளி எனலாயிற்று என்பது முதியர்கள் கண்டது. துவைதல், துவைத்தல் என்பவை கூராக்கல், சலவை செய்தல், அரிசியின் தவிடு போக்கல் என அமைந்தவை, முற்படச் செய்வனவாம். துவைக்குட்டி என்பது ஈன்றணிய ஆட்டுக்குட்டி. துவைக்குப் பாலில்லை என்பது வழக்கு. துவையாவது இளங்குட்டி. துவக்கு துப்பாக்கி என்பதைட் துமுக்கி என்றார் பாவாணர். தும் டும் துமீல் டுமீல் என்பவை ஒலிக்குறிப்புகள். துமுக்கி என்பதற்கு முற்படத் துவக்கு என்னும் சொல் துப்பாக்கி என்னும் பொருளில் யாழ்ப்பாண வழக்காக உள்ளது. துவரம் துவர்த் தன்மை உடையது துவரம் ஆகும். துவர்ப்பு, துவர்த்துன்மை யுடைமையால் பெற்ற பெயர். துவரம் பயறு வண்ணத்தாலும் சுவையாலும் பெற்ற பெயர். பெரிதும் துவரைப் பயறு இட்டுச் செய்யப்படும் பொரியல் கறியைத் துவரம் என்பது தென் தமிழக வழக்கு. துவரி துவர்ப்புச் சுவையுடையது துவரி; பாக்கு. பாக்கின் கறை துவர் நிறம்; துவராடை; காவியாடை துவர் நிறப்பயறு துவரை; துவர்நிறமான் = துவரிமான். துவர் நிற மண்மேடும் மலையும் துவரங்குறிச்சி. துவர்மன்னும் ஆடையர் - தகடூர். 1 துவர்ப்பு = வெறுப்பு; வாழ்விலாம் வெறுப்பால் கொள்ளும் துறவு ஆடை. * துவர் காண்க. துவர் துவர் மன்னும் ஆடையர் என்பது காவியுடையர் என்பதாம். துவர் என்பது ஒருவகைச் செந்நிறம். துவர் நிறப்பயறு துவரை என வழங்கப் பெறுதலும், செந்நிறம் உடையதும் துவர்ப்பதும் ஆகிய ஒருபொருள் துவர்ப்பு என வழங்கப்பெறுதலும், செந்நிறக் கற்பாறையும் செம்மண் மேடுமாக அமைந்த மலையும் அம்மலை சார்ந்த ஊரும் துவரங்குறிச்சி என வழங்கப்பெறுதலும் கண்டறிக. துவராடை என்பது காவிநிறம் ஏறிய அல்லது காவிநிறம் ஏற்றப்பெற்ற ஆடை. தோய்த்துப் பிழிந்து வெயிற்படாது உலர்த்தப் பெறும் ஆடை நாளடைவில் பழுப்பேறிக் காவி நிறமாதல் கண்கூடு. அந்தணர் சிவந்த ஆடை உடுத்தும் போர்த்தும் இருந்தனர் என்பதைப் பொன்மலை சுடர் சேர என்னும் கலிப்பாட்டில் நாரைக்கு அவரை ஒப்பிட்டமையால் உணரலாம். அதன் உரைக்கண் பெரிய நாரை சிறகு சிவந்திருத்தலானும் மூக்குத் தரையிலே சென்று குத்துதலானும் அதனை முக்கோலை ஊன்றியிருந்த அந்தணரோடு ஒப்புரைத்தார் என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் எழுதுவது கருதத் தக்கது (கலித். 126). துவர்த்தல் துவ்வுதல் = உண்ணுதல். துவர்த்தல் உண்ணச் செய்தல். வெப்பும் காற்றும் ஈரத்தை உண்ணச் செய்தல் துவர்த்தலாம். கூந்தலைத் துவர்தல்; ஆடையைத் துவர்தல் என்பன வழக்கு. துவர்த்துதல் உலரப் போடுதலாம். பின்னிருங் கூந்தல் பிழிவனம் துவரி - குறிஞ். 60 துவராமை = உலராமை. துவராக் கூந்தல் - பதிற். 89 துவர்த்தல் துவட்டுதல் என மக்கள் வழக்கில் உள்ளது. தலையைத் துவர்த்து = தலையை உலரச் செய். துவன்றுதல் துவன்று நிறைவாகும் - தொல். 815 துவன்றுதல், செறிவு நிறைவு திண்மை முதலாம் பொருள் தருவது. துவன்றுதல் > தோன்றுதல் ஆகும். தோற்றப் பொலிவு. துன்றுதல் > துன்னுதல் என்றாகியும் செறிவுப் பொருள்தரும்; நெருங்குதலுமாம். துவைத்தல் வாய் வைத்துச் சப்பி இழுத்துப் பால் குடித்தல்; தாய்ப்பால் மறவாக் குட்டியைத் துவைக்குட்டி என்பதும் துவைக்குப் பால்தா என்பதும் ஆட்டுமந்தையில் கேட்கும் செய்திகள். துவைத்தல் ஒலித்தல் பொருளில் வருதலும் கருதத்தக்கது. துவ்வல் தூவி என்பது இறகு. பறவைகளின் இறகு காற்றில் பறத்தல் கண்டு தூவி எனப்பட்டது. தூவுதல் என்பது துவ்வல் ஆகிப் பறவை இறகைக் குறித்தது. இது விளவங்கோடு வட்டார வழக்கு ஆகும். துவ்வுதல் துய்த்தல் போல்வது. துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும் என வரும் குறளால் துவ்வுதல் உண்ணுதல் பொருட்டதாதல் புலப்படும் (42). தான்துவ்வான் (திருக். 1006) என வருவதும் அது. துளி துள்ளி வீழும் நீர்த்திவலை துளி எனப்பட்டது. நீர்மப் பொருளாய மோர், பால், நெய், தேன் முதலியவையும் துளிப்பெயர் பெற்றன. துளி என்பது சிறியது என்னும் பொருளும் கொண்டது. துள்ளுதல் வழியாகத் துள்ளல் வினையாயது. துள்ளாட்டம் கலை. மீன்துள்ளி ஓர் ஊர்ப்பெயர். துள்ளம் என்பதும் ஊர்ப்பெயரே. திரு.வி.க. இளந்தைப் பருவத்தில் துள்ளி விளையாடிய ஊர் அது. பெரும்பனையைப் பனித்துளி காட்டல் வள்ளுவ மாலைப் பாட்டு. பயிரூடே விடுபாடு, மேடு, நோய் இருந்தால் துள்ளம் துள்ளமாக எனல் உழவர் வழக்கு. துள்ளல் துள்ளலாக என்பதும் அது. ஆட்டு மந்தையைத் துள்ளம் என்பது ஆயர் வழக்கு. துள்ளம் என்பது இத்தனை ஆடுகள் என அவர்களிடம் கணக்கு உண்டு. சிறுதுளி பெருவெள்ளம் என்பது பழமொழி. பலதுளி பெருவெள்ளம் என மாற்று மொழியும் அதற்கு உண்டு. துளைக்கால் வாய்க்கால் என வழங்கப்படும் பொதுவழக்குச் சொல் தஞ்சைப் பகுதியில் துளைக்கால் என வழங்கப்படுகிறது. நீர் தேங்கிய குளம், ஏரி முதலியவற்றில் இருந்து நீரை வெளியேற்றிப் பயிருக்குப் பாய்ச்சுதல் வழக்கம். நீர் வெளியேறும் மடையில் துளைகள் உண்டு. அதனை அடைக்கவும் திறக்கவும் துடுப்பு அல்லது அடைப்பு உண்டு. துளையில் இருந்து வெளியேறி வாய்க்காலுக்கு நீர் வருவதால் வாய்க்காலைத் துளைக்கால் என்றனர். துளை, கண் எனப்படும் ஆதலால், கண்வாய் என்பதும் அது. துள்ளம் துள் + அம் = துள்ளம். துள்ளி விழும் நீர் துளி; அளவால் சிறியது அது; நீர்த்துளியினும் பனித்துளி மிகச் சிறிது. துளியின் சிற்றளவு ஒருபெரு நிலப்பரப்பில் அல்லது நீர்ப் பரப்பில் தனித்து மேடாய் விளங்கும் இடத்திற்குத் துள்ளம் எனப் பெயர் தந்தது. பயிர் நிலத்தில், பயிர் காய்ந்தோ நோயுற்றோ வட்டம் வட்டமாக அமைவதைத் துள்ளம் துள்ளமாகக் காய்ந்து விட்டது என்பது வேளாண் தொழிலர் வழக்கு. ஆட்டுக்கு அடர்முடி ஆகி விட்டால், ஊடு ஊடு களைவதைத் துள்ளம் என்பது ஆயர் வழக்கு. * துள்ளி காண்க. துள்ளி துள்ளி விழும் நீர், துள்ளி எனப் பெயர் பெற்றது. அதன் இடைக்குறை துளி ஆயது. சிற்றளவு துளி அளவு என்றாயிற்று. நீரோட்டத்தில் மீன் நிரம்பத் துள்ளி வீழும் இடம் மீன்துள்ளியாய், அஃதோர் ஊர்ப்பெயரும் ஆயிற்று. நீர்த்துளி பின்னே நீர்மச் சிற்றளவு குறிப்பதாய்த் தேன்துளி, பால்துளி, மோர்த்துளி முதலியவற்றுக்கும் ஆயது. மோர் கடைந்த ஆய்ச்சியின் குரலில் மோர்த்துளி, மோர்த்துமி ஆனதைக் கம்பர் கேட்டு மற்றைப் புலவர்களுக்கு மெய்ப்பித்தார் என்றும், துமிதம் ஊர்புக (குமுதனிட்ட குலவரை) என்னும் ஆட்சிச் சான்று அஃது என்றும் புனைவுகள் கூறும். துள்ளித் துடிக்க துள்ளுதல் உடல் மேலும் கீழும் எழும்பி இறங்கல். துடித்தல் அச்சத்தால் மூச்சுத் திணறிப் பெருமூச்செறிதல். ஓருடலில் இருந்த உயிர் வெளிப்படுங்கால் துள்ளித் துடித்தல் காணலாம். உடல் வெட்டுண்டு உயிர் போகும் நிலையில் காண்பது. ஆடு கோழிகளை வெட்டும் போது ஏற்படுவது துள்ளத் துடித்தல், வழியில் செல்பவர் கையில் பொருள் இல்லார் எனினும் அவர் உடல் துள்ளித் துடித்தலைக் காண்பதற்காகவே கொல்லு வார் இருந்தனர் என்பதைக் கலித்தொகை கூறுகிறது. துள்ளுநர்க் காண்பார், தொடர்ந்து உயிர்வௌவல் என்பது அது (4). சாவு வராமலே சாவுத்துயர் அடையச் செய்தலிலும் துள்ளத் துடித்தல் உண்டு என்பது நடைமுறையில் காண்பது. துறவு துறவு என்பது ஒரு பெருநிலை. தன்னலப் பற்று அற்ற நிலை; பிறர் நலத் தொண்டுக்குத் தம்மை ஆளாக்கிக் கொண்ட நிலை, விருப்பு வெறுப்பு அற்றுப் போன வியன்நிலை. மனத்துறவே துறவெனக் கண்டது தமிழுலகு. மனைத்துறவு கொள்ளாதது அது. மணவாத் துறவும், மணந்த துறவும் போற்றாதது அது. மனைவியொடும் கூடி மாணறம் காக்கும் மரபினது தமிழர் துறவு. துறவு என்னும் பெயர் கேட்ட அளவானே, புறக் கோலங்களே பளிச்சிட்டுத் தோன்றுதல் இற்றை நிலையாகி விட்டது. ஒவ்வொரு சமயமும் புறக்கோலங்கள் தத்தமக்கெனக் கொண்டுள்ளமையால் விளையும் காட்சி இது. வள்ளுவ நீத்தார் பெருமை புறக்கோலம் அறியாதது. வள்ளுவத் துறவும் வள்ளலார் துறவும் உள்ளத் துறவே! உலகத்து உறவே! துனிநயம் (துனிவிசித்திரம்) துனி என்பது அச்சம், சினம், துன்பம், வெறுப்பு, புலவி நீட்டம் முதலிய பொருள் தரும் சொல். விசித்திரம் (வ) என்பது வியப்பு, பேரழகு, வேடிக்கை பலவண்ணம் எதிருரை எனப் பலபொருள் தரும் சொல். பிரிவுழிக் கலங்கும் கலக்கத்தை அழகுறக் கூறுவது துனிவிசித்திரம் என்பதாம். முத்துமுலைப் பெண்கலவி பாடிப் பிரிவாய் விரித்துரைத்தல் அண்ணும் துனிவிசித்தி ரம் - பிர. திர. 5 பிரிவுழிக் கலங்கலைக் கற்றார் உருகிக் கலுழுமாறு உணர்வொன்றப் பாடுதலால் நயம் ஆயிற்றாம். நெடிய வாடையும் பிரிந்தவனைக் கூட்டுவிக்க உதவுதலால் நல்வாடை யாகி நெடுநல் வாடை எனப் பெயர் பெறவில்லையா? செங்கடு மொழி என்னும் தொல்காப்பியச் சொல்லாட்சியும் அது (களவு. 23). துன்பு துன் + பு = துன்பு. துன்பம் என்பதும் இது. துன் = ஊசி; துன்னல் = தையல். ஊசி குத்துவது போல் மனத்தில் வலி உண்டாக்குதல், உண்டாகுதல் துன்பம் ஆகும். துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமுமே உயிரின் நோக்கு என்பார் திரு.வி.க. துன்புள தெனினன்றோ சுகமுளது என்பார் கம்பர் (அயோத். 698).  தூ வரிசைச் சொற்கள் தூ தூ:1 தமிழ் உயிர்மெய் வல்லினத்தில் மூன்றாம் நெடில்; தகர ஊகாரம்; ஓரெழுத்து ஒருமொழி. தூ:2 ஏவல் = தூவு. விதையைத் தூவு. தூ:3 வலிமை. சுற்றமொடு தூ அறுத்தலின் - மதுரைக். 188 தூ:4 ஊன். தூவொடு மலிந்த காய கானவர் - மலைபடு. 155 தூ:5 தூய்மை. அறுவைத் தூவிரி கடுப்ப.. .. அருவி - புறம். 154 தூ:6 தூது. சொல்லியதைச் சொல்லுதல். திருக்குறளில் ஓரதிகாரப் பெயர். அதி.69 தூ:7 தூவி; தோகை. தூ:8 மழை. தூவானம் தூற்றல். தூ:9 வெறுப்புக் குறிப்பு. தூவெனக் காறி உமிழ்தல். தூக்கம் உறக்கம் என்னும் பொருளில் தூக்கம் என வழங்குதல் உண்டு. தூக்கம் என்பது உயரம் என்னும் பொருளிலும் கூடுதல் என்னும் பொருளிலும் நெல்லை வழக்கில் உண்டு. தூக்குவது மேலெடுத்தலாதல் உயரப் பொருள் தந்தது. உரிய அளவிலும் மிகுதியாதலைத் தூக்கு என்பர் அது, இனிப்பு தூக்காக உள்ளது என்பது போன்றவற்றில் வழங்கும். அது தூக்கம் எனப்படாமல் தூக்கு என நிற்கும். தூக்கு என்பது துணிகாயப் போடும் கொடிக் கயிற்றுக்குப் பெயராகப் பழனி வட்டார வழக்கில் உள்ளது. தூக்கி நிறுத்தல் ஒன்றை ஓரிடத்து நிலைபெற நிறுத்த வேண்டும் என்றால், தூக்குதல் முதற்பணி; அதற்குரிய இடத்தில் உரிய வகையில் நிறுத்திக் கிட்டித்தல் அடுத்த பணி. இவ்விரு பணிகளும் இணைவானவை. இவற்றை விளக்குவது தூக்கி நிறுத்துதல் என்பது. தொழுது எழுவாள் என்பது எப்படித் தொழுதலும் எழுதலும் இடையீடு அற்ற ஒன்றெனத் தோற்றம் தருவதோ அவ்வாறு தூக்கி நிறுத்துதலும் ஒருங்கே நிகழ வேண்டும் என்பதே இதன் குறிப்பாம். இடையீடு படின், இரட்டை வேலையாய், இரட்டை வேளையாய் ஏற்பட்டு விடும். ஈதல் இசைபட வாழ்தல் என்பதைக் கருதுக (திருக். 231). தூக்கு தூக்கு:1 தூக்கி எடுத்து நிறுக்கும் நிறைகோல். தூக்கு:2 ஓர் எடை அளவு. நான்கு தூக்கு விறகு நிறு தூக்கு:3 வீழ்ந்ததை மேலெடு (அ) வீழ்ந்தவரை எடு. தூக்கு:4 ஆராய்க: நூலை ஆராய்க. செயலை ஆராய்க. தூக்கு:5 பாட்டு: ஆய்ந்து நோக்கத்தக்கது. தூக்கு:6 தூக்கில் போடு. ஏவல். தூக்கு:7 உயரமானது, மிகுதி, தூக்கணம் குருவி, உயரக்கட்டிய உறி. தூக்குச்சட்டி காட்டு வேலைக்குச் செல்பவர் நண்பகல் உணவுக்குத் தூக்குச் சட்டியில் உணவு கொண்டு போவர். அது தூக்குப் போகணி எனவும் வழங்கும். தூக்கு வட்டா என்பது திருச்சிராப்பள்ளி பெரம்பலூர் வட்டார வழக்கு. முன்னது தென்தமிழக வழக்கு. தூக்குதல் ஒன்றை இருக்கும் இடத்தில் இருந்து மேலே எடுத்தல் தூக்குதல் ஆகும். காலைத் தூக்குதல், கையைத் தூக்குதல், குழந்தையைத் தூக்குதல், கல்லைத் தூக்குதல், கொலைத் தண்டனையாகக் கழுத்தில் கயிற்றைப் போட்டுத் தூக்குதல். பொருளை எடை போடுதல். ஆராய்தல். தூக் குத்தல் அரிசி தூய குத்துதல் அரிசி. பிள்ளையார் கணவதியார்க்கு நாள் போனகத்துக்கு வைத்த தூக்குத்தல் அரிசி இருநாழி க.க.சொ.அ. தூங்கல் தூங்கல்:1 தொங்குதல் > தூங்கல். ஊஞ்சல் தொங்குதல் தூங்கல் ஆகும். இப்பாலும் அப்பாலும் தலை - கை -களை அசைக்கும் யானை தூங்கல். சுவர்க் கடிகையாரத்தின் தொங்கட்டம் (Pendulam). தூங்கல்:2 உறங்கல். அமர்ந்து அல்லது சாய்ந்து கண்மூடல். தூங்கல் ஓரியார் என்பார் ஒரு புலவர். நற். 60; குறுந். 151, 295 ஆகிய மூன்று பாடல்களைப் பாடியவர். தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் என்பான் ஒரு சோழ வேந்தன் (புறம். 39). தூசி தட்டல் தூசி தட்டல்:1 தூசி தட்டல் = விலை போகாதிருத்தல். ஈயோட்டல், கொசுவிரட்டல் என்பன போல்வது தூசிதட்டல். காலையில் கடைதிறந்ததும் கடையில் பிடித்துள்ள தூசியைத் துடைத்தும் பெருக்கியும் கடைப்பொருள்களில் படிந்துள்ள தூசியைத் தட்டலுமே வேலை; விற்கும் வேலை இல்லை என்பதைக் குறிப்பது தூசி தட்டல். நாள்தோறும் தூசி தட்டிக்கொண்டிருக்குமாறு நேர்வது எப்படி? பழைய பொருள்கள் போகவில்லை; புதுப்பொருள்கள் வரவில்லை என்பதே பொருள். ஆதலால் விற்பனை இல்லை. வேலை மட்டும் தீராத வேலை என்பதே குறிப்பாம். தூசி தட்டல்:2 தூசி தட்டல்= மீளவும் எடுத்தல். பல ஆண்டுகளுக்கு முன்பு முடிந்த ஒரு வழக்கில், துப்பு துலங்க அவ்வழக்கை மீண்டும் ஆய்வு செய்ய எடுப்பதைத் தூசி தட்டல் என்பது பொதுவழக்கு. எப்போதோ முடிந்த வழக்கை இப்போது தூசி தட்டுகிறான் என்பது மக்கள் வழக்கு. தூசி துப்பட்டை தூசி = கிழிந்து நைந்து போன துண்டும் துணியும். துப்பட்டை = (துய்ப்பட்டை) அழுக்கேறிக் கழிந்து போன பஞ்சு. தூசு என்பது துணி என்னும் பொருளது. தூசு நல்குதல் பண்டு தொட்டே வரும் வழக்கம். துய் என்பது பஞ்சு. துய்ப்பட்டை என்பது பஞ்சுக் கற்றை அல்லது பஞ்சுத் தொகுதி என்பதாம். இப்பொழுது தூசி துப்பட்டை என்பது முதற்பொருளில் இருந்து பெரிதும் விலகிக் குப்பை கூளப் பொருளில் வழங்குகின்றதாம். * தூசி தும்பு காண்க. தூசி தும்பு தூசி = கிழிந்து நைந்து போன துண்டும் துணியும். தும்பு = அறுந்து போன நூலும், கழிந்து போன பஞ்சும். தூசு = துணி; தூசு என்பது தூசியாக நின்றது. கொடி பிடித்துப் போகும் படை தூசிப்படை எனப்படும். தூசியைக் கிளப்புவதால் அப்பெயர் வந்தது என்பது பொருந்தப் புனைதல். பொரு ளுடையதன்று. தும்பு = நூல் கயிறு, சணல்; கயிறு தும்பு தும்பாகப் போய் விட்டது; துணி தும்பு தும்பாகக் கிழிந்து விட்டது என்பவை வழக்காறுகள். * தூசி துப்பட்டை காண்க. தூச்சம் தேள்கடி , பாம்புக்கடி முதலியவற்றுக்கு மந்திரம் சொல்லிக் கொண்டே, துணியை வீசுதல் பார்வை பார்த்தல் எனப்படும். தூசு என்பது துணி. துணி வீசிப் பார்வை பார்த்தலைத் தூச்சம் என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும். தூட்டம் தூட்டம், தூட்டை என்பன கள்ளத்தனம், வஞ்சம் என்னும் பொருளில் குமரி மாவட்ட மூக்குப் பீரி வட்டாரத்தில் வழங்குகின்றது. துட்டின் வழியாக ஏற்படும் சிக்கல் துட்டம் ஆகி, தூட்டமாகலாம். தூணி தூணி:1 துண் > தூண் > தூணி. துண் = விரைவுக் குறிப்பு. தூணி = விரைந்து செல்லும் அம்பு; அம்பு வைக்கும் கூடு. அம்பறாத் தூணி. வல்வில் தூணி - முல்லை. 39 தூணி:2 பழநாள் முகத்தலளவைகளுள் ஒன்று. அது, நான்கு மரக்கால் அளவு. மரக்கால், எட்டுப் படி. இரண்டு மரக்கால், பதக்கு. இரண்டு பதக்கு, ஒரு தூணி. கலம், பொதி, பாரம் என்பன அவற்றின் மிக்கன. தூணிப்பாடு தூணி அளவை நெல்லை விதைத்துப் பயிரிடும் நிலம். பலவயல் முப்பதின் தூணிப்பாடு (தெ.க.தொ. 7:173). தூணி நான்கு மரக்கால் அளவு (வெ.வி.பே.). மரக்கால் என்பது நான்கு படி; சிறுபடி என்றால் ஆறு படி ம.வ. தூண் துண் > தூண். துண்ணெனும் அசைவு நடுக்கம் இல்லா உறுதியது தூண். கற்றூண், மரத்தூண், இரும்புத்தூண் முதலியவை. உறுதியான அல்லது திண்ணிய பண்புகள் தூண். அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையென்று ஐந்துசால்பு ஊன்றிய தூண் - திருக். 983 சிற்றில் நற்றூண் - புறம். 86 தூண்டித் துலக்கல் தூண்டுதல் துலக்குதல் என்னும் சொற்களின் இணைப்பு இது. தூண்டுதல் அடங்கியிருப்பதை மேலெழச் செய்தல். ஒருவினாவை எழுப்பி அதற்கு விளக்கம் பெற அவாவுதல். விளக்கைத் தூண்டுதல், சுடர்விளக்காயினும் ஒரு தூண்டுகோல் வேண்டும் என்று வழங்கும் பழமொழி, தூண்டலை விளக்கும். ஆப்பிள் பழம் விழுதல் ஐசக்கு நியூட்டனார்க்குத் தூண்ட லாயதை அறிக. துலக்குதல் ஆவது விளக்குதல், விளக்கம் பெறச் செய்தல்; ஒளிப்படுத்தல் பொருளவாம். பல் துலக்குதல், கலம் துலக்குதல் என்பவற்றை அறிக. தூண்டல் வழியால் உண்டாவது துலங்கல். தூண்டில் தூண்டு + இல் = தூண்டில். தூண்டுதல் = மேலே இழுத்தல். இல் = சொல்லீறு. தூண்டில், மீன்பிடி கருவி. கம்பு, கயிறு, தக்கை, முள் முதலியவை யுடைய கருவி அது. முள்ளில் மீனுக்கு உணவாகும் புழுவைக் கோத்து வைத்து நீருள் மூழ்க விடுவர். மீன் புழுவைப் பற்றிய அளவில் அதன்வாய் தூண்டில் முள்ளில் மாட்டிக் கொள்ளும். மேல் மிதந்த தக்கை நீருள் செல்லும். மீன்மாட்டிக் கொண்டதை உணர்ந்து தூண்டிலை விரைந்து மேலே தூக்கி அல்லது தூண்டி, மீனைப் பற்றுவர். அது வெவ்வேறு வடிவில் உலகளாவிய பரப்புடையது. இன்றும் நடைமுறைத் தொழிலாகப் பயன்கொள்வது. நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் - புறம். 399 சுடர்விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும் என்பதில் தூண்டல் மேலெழுப்பல் பொருள் உண்மை அறியலாம். அவனா செய்தான்? தூண்டிவிட்டவன் ஒருவன் இருக்கிறான் என்னும் மக்கள் வழக்கை நோக்குக. தூண்டல் துலங்கல் என்பன அறிவியல் ஆய்வியல் சார்ந்தவை. தூண்டில் போடல் தூண்டில் போடல் = சிக்க வைத்தல். தூண்டில் போடுவது மீனைப் பிடிப்பதற்காக, இங்கே அவ்வாறு தூண்டில் முள் இல்லாமல் தந்திரங்களாலேயே பிறரைச் சிக்க வைத்து அவர்கள் பொருள்களையும் அல்லது அவர்களையே கூடக் கவர்வதும் சிக்க வைப்பதும் தூண்டில் போடலாகச் சொல்லப்படுகிறதாம். வலைபோடுதல், வலைவீசுதல் என்பனவும் இப்பொருளவே. தூது தூது:1 தூ = தூவுதல், கூறுதல், மழைத்துளி வீழல், கூறியதைக் கூறிய படியே கூறுதல். வழியுரைத்தல் வழிமொழிதல் எனல் இந்நாள் வழக்கு. வழியுரைப்பான் பண்பு (திருக்.688). தூவானம் = மென்சாரல்; தூவி = மெல்லிய இறகு. தூது:2 சிற்றிலக்கிய வகையுள் ஒன்று. கலிவெண்பாவினால் உயர்திணை இருபாலினரையும் அஃறிணைப் பொருள்களையும் தூதாக விடுத்துத் தம் வேட்கை நிலையுரைப்பதாகக் கூறுவது தூது ஆகும். ஆடவர் மகளிர் இருவர் வாக்காகவும் தூது நூல் கூறப் பெறுதல் உண்டு. பயில்தரும் கலிவெண் பாவி னாலே உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும் சந்தின் விடுத்தல் முந்துறு தூதெனப் பாட்டியற் புலவர் நாட்டினர் தெளிந்தே - இலக். பாட். 114 தூது விடுதற்குரியவை இவை பத்தென வரையறை செய்து கூறியவர்கள் உளர். ஆனால் அவ்வரையறை கடந்து எண்ணிலாப் பொருட்பெயரால் தூது நூல்கள் உளவாதல் கண்கூடு. எகினமயில் கிள்ளை எழிலியொடு பூவை சகிகுயில்நெஞ் சந்தென்றல் வண்டு - தொகைபத்தை வேறுவே றாப்பிரித்து வித்தரித்து மாலைகொண்டன் பூறிவா வென்றதூ து - பிர. திர. கொண்டு அன்பு ஊறி வா தூதை தூதை என்பது தொல்பழங்கால முகத்தலளவைப் பெயர்களுள் ஒன்று. தொல்காப்பிய உரையாசிரியர்கள் தூதை என்பதைக் காட்டுவர். கலம் என்பதும் அளவைப் பெயரே. தூதை, சிறுபானைக்குப் பெயராகக் குமரிமாவட்டக் கருங்கல் வட்டார வழக்கில் இருப்பது, தென்தமிழகத் தமிழின் தொல்பழஞ் சான்றையும், பழமை போற்றும் காப்புணர்வையும் வெளிப் படுத்தும். தூப்பான் தூர்த்தலுக்கு ஆகும் வாரியல் தூர்ப்பான் என மதுரை வட்டாரத்தில் வழங்குகின்றது. துடைப்பத்திற்குரிய பெயர்கள் வட்டாரம்தோறும் அருமை அருமையாக விளங்குகின்றன. அதுபோல் பூப்பு பற்றிய சொற்களும் வட்டாரம்தோறும் அரிய அரிய வழக்குகளைக் கொண்டுள. தூம்பாக்குழி அங்கணம் என இருவகை வழக்கிலும் வழங்கும் சொல், மதுரை வட்டாரத்தில் தூம்பாக்குழி என வழங்குகின்றது. தூம்பு என்பது துளை. தூம்பொடு கூடியமைந்த குழி என்பது நல்ல விளக்கமாகும். தூம்பு தூம்பு:1 முகத்தலளவையுள் ஒன்று. பூண்கட்டிய பெருமரக்கால். பல்லவர் ஆட்சியில் தொண்டை மண்டல வழக்கில் இருந்தது. நாயனார் ஆடியருளத் தேன் ஒருதூம்பு; பால் ஒரு தூம்பு; தயிர் ஒரு தூம்பு; நெய் ஒரு தூம்பு (க.க.சொ.அ). தூம்பு:2 ஏரி குளங்களிலிருந்து நிலத்திற்குப் பாயுமாறு நீர்வர வைக்கப்பட்ட குழாய் - புழை -யமைப்பு தூம்பாகும். இவ்வூர் பெருந்தூம்பி நின்றும் வடக்கு நோக்கிப் போன பெருங்காலுக்குக் கிழக்கு. தூம்பு:3 வீட்டுக்கூரை மாடி ஆகியவற்றில் பெய்த மழைநீர் வழியச் செய்த குழாய் ம.வ. தூம்பு:4 துளை அமைப்புடைய இடுக்குவழி, உட்டுளை, அங்கணம், மரக்கால், மூங்கில், வழி, வாயில் என்னும் பொருள்களில் வரும் (வெ.வி.பே.). தூரம் தொலை தூரம்= எட்டம். தொலை= மிக எட்டம். அவனுக்கும் எனக்கும் தூரம் தொலை என விலக்குவார் உளர். வீட்டுக்கு அயல் வைத்தலைத் தூரமாதல் என்று வழங்கும் வழக்கால் தூரப்பொருள் புலனாம். தொல் என்பதிலிருந்து வரும் தொலை என்பது எட்டத்தினும் எட்டம் என்பதை விளக்கும். தூரம் விலகிப் போதலைக் குறித்தலும் வழக்கே. விலகிப் போதலும் அகன்று போதலும் கருதுக! தீங்கினர் தம் கண்ணில் தெரியாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி என்பது அறிவுரையாம் (தனிப்.). தூரி ஊஞ்சல் (ஊசல்) என்பது வரிப்பாடலாக இளங்கோவடிகளாரால் பாடுபுகழ் பெற்றது. ஊஞ்சல் வகையுள் ஒன்றாய வலைப்பின்னல் ஊஞ்சல் மதுரை வட்டாரத்தில் தூரி எனப்படுகின்றது. ஊஞ்சலாடல் தூரியாடல் எனப்படும். அது தொட்டில் என்னும் பொருள்தருதல் முகவை மாவட்ட வழக்காகும். இனிக் கட்டிலே தூரியாகக் கட்டி ஆடுவதும் தூரி எனப்படும். மரத்தின் அடிப்பகுதியை (தூர்) தூரி என்பது சீர்காழி வட்டார வழக்கு. தூரிகை தூவி > தூரி > தூலி. மயில் தூவி - இறகு - கொண்டு முன்னர் எழுதியமையால் தூவிகை, தூரிகை, தூலிகை என்பவை எழுதுகோல் என்னும் பொருள் தந்தன. தூவல் என்பதற்கு எழுதுகோல் என்றார் பாவாணர். தூரியம் துரியம் > தூரியம். துரியம் = விரைதல்; விரைந்து முழங்கும் இசைக்கருவிகள் துரியம் எனப்படும். மாற்றரு மரபின் உயர்பலி கொடுமார் அந்தி விழவில் தூரியம் கறங்க - மதுரைக். 459, 460 பொருள்: விலக்குதற் கரிய முறைமையினை யுடைய உயர்ந்த பலிகளைக் கொடுத்தற்கு அந்திக் காலத்துக்கு முன்னாக எடுத்த விழாவிலே வாச்சியங்கள் ஒலிப்ப (உரை, நச்.). தூர் தூர்:1 தூர்ந்து மேடானது. தூர்:2 சேற்றுமண். தூர்:3 மரத்தின் தூர், அடிப்பகுதி; வேரும் தூரும் இணைச்சொல். தூர்:4 ஏவல்; வீட்டைத் தூர் (பெருக்கு). தூர்:5 ஏவல்; பள்ளத்தை மேடாக்கு. தூர்தல் காது குத்தினோம்; தோடு போடவில்லை; தூர்ந்து போனது என்பது மக்கள் வழக்கு. காதுத் துளை மூடிப்போனது என்பது இதன்பொருளாம். கிணறு தூர்வை எடாமல் ஊற்றுத் தடைபட்டுவிட்டது என்பர். கிணற்றில் தூசி செத்தை சருகு மண்சரிவு ஆகியவை ஏற்பட்டு மூடுதல் தூர்வையாம். தூர்வை எடுத்தல் வேண்டும் என்பதாம். தூர்த்தல் மெழுகல் பெருக்கல் கூட்டல் என்பவை மண் வீட்டில் வேண்டத் தக்கவை. தூர்த்தல் என்பது தளத்தில் உண்டாய பள்ளத்தில் மண்போட்டு மூடி மேடாக்கி மெழுகிப் பெருக்கிக் கூட்டியள்ளல் கடமை. இல்லை குண்டு, குழி, பள்ள மாகக் கிடக்கும். கடல்சார் இடங்களில் மேட்டிடம் மனைகட்டற்கு வாய்த்தல் அரிது. சிங்கப்பூரில் மனைகட்ட இடமின்றிக் கடலைத் தூர்த்தே - மேடாக்கியே - வீடு கட்டுகின்றனர். இவ்வகையில் தூர்த்து - மேடாக்கி -க் குடியமைத்த இடம் தூர்த்துக் குடியாய் இருந்து தூத்துக்குடி ஆகியுள்ளது. தூர்த்தன் தூர்த்தை என்பன பண்பியல் மூடுண்டு போனவர் என்பதை உணர்த்தும் சொற்களளளளாம். கோவல கண்ணகியாரை என் மக்கள் என்ற கவுந் தியடிகளிடம், ஒருவயிற்றோர் ஒருங்குடன் ஆவதும் உண்டோ உறுதவத்தீர்என்று வினாவி, அவர் சாவிப்புக்கு ஆட்பட்டவர் தூர்த்தன் தூர்த்தையர். ஏரி குளங்கள் தூர்ந்து போய்விடல் வேளாண் மைக்குக்கேடு! மக்கட் பெருக்கம் ஏரி குளங்களைத் தூர்த்தே குடியிருப்பு களைப் பெருக்கும் நிலை எதிர்காலப் பெருங்கேடாம். தூர்த்தர் நல்லறிவோ நற்கேள்வியோ இல்லாராய் மேடுபட்ட - திண்டுபட்ட - நிலையில் திரிவார் தூர்த்தர் எனப்படுவர். தூர்த்தல் மேடுபடுதல். காது குத்தினோம் அது தூர்ந்து போனது என்பது மக்கள் வழக்கு. பரத்தர் = தூர்த்தர் (சிலப். 5:200, அரும்.). தூர்த்தனும் பரத்தையும் - சிலப். 10:219 விடரும் தூர்த்தரும் இணைமொழி. * விடர் காண்க. தூர்த்தல் பெருக்கல் தூர்த்தல் = பள்ளத்தை மூடி ஒப்புரவு செய்தல். பெருக்கல் = குப்பைகளைக் கூட்டித் துப்புரவு செய்தல். கிணறு மேடுபட்டுப் போதலையும், காதில் உள்ள துளை மூடிப் போதலையும் தூர்ந்து போதல் என்பது வழக்கு. கிணற்றில் மேடிட்டுப் போதலை அள்ளுதலைத் தூர்வை வாரல் தூர்வை எடுத்தல் என்பதும் வழக்கே பெருக்குதல், கூட்டுதல், திரட்டுதல், ஒன்றுசேர்த்தல் என்பனவெல்லாம் ஒரே பொருளன. தூர்த்து மெழுகல் தூர்த்து மெழுகல் = ஒன்றும் இல்லாது அழித்தல். தூர்த்தல் = பெருக்குதல்; மெழுகல் = துடைத்தல்; தூர்த்து மெழுகல் தூய்மையுறுத்தும் பணிகளாம். அத்தூய்மைப் பணியைச் சுட்டாமல், தூர்த்து மெழுகப்பட்ட இடத்தில் ஒரு சிறு தூசியும் தும்பும்கூட இல்லாமல் போகும் அல்லவா? அவ்வாறு எந்த ஒன்றும் இல்லாமல் வெறுமை யாக்குவது, தூர்த்து மெழுகலாக வழங்குகின்றதாம். ஒரு வாரம் வீட்டில் இருந்தான்(ள்) தூர்த்து மெழுகி விட்டுப் போய்விட்டான்(ள்) என்பது இப்பொருளை விளக்கும். தூவல் தூவல்:1 தூவல் = தூவு மழை; தூவானம்; தூரல். தூவும் பறவை இறகு, தூவி. தூவியால் எழுதிய வழியில் வந்த எழுதுகோலின் பெயர். உழவர் விளைநிலத்தில் விதை தெளித்தல். நீரைச் சிந்துதல். பறவைகளுக்குத் தீனியைப் பரவலாகத் தெளித்தல். தூவல்:2 தூவல் என்பது மழைப்பொழிவு. இது, தொன்மையான இலக்கிய வழக்கு. தூவல் என்பது எழுதுகோல். இது புதுவழக்கு. தூவல் என்பது உணவு என்னும் பொருளில் திண்டுக்கல் வட்டாரத்தில் வழங்குகின்றது. தூவல் பயிர்க்கும் (உயிர்க்கும்) உணவாவதுடன், உணவு ஆக்கித் தருதல், துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை என்னும் குறளால் (12) விளக்கமுறும். அவ் விளக்கம் பொதுமக்கள் வெளிப்பாடு, தூவல் என்பதற்கு உணவுப்பொருள் கண்டதாம். தூவாக்குழவி து = உண்; துவ்வுதல் = உண்ணுதல்; துவ்வாமை, தூவாமை = உண்ணாமை. தூவாக்குழவி = உண்ணாத குழந்தை. தாயில்லாப் பிள்ளை, தூவாக் குழவி எனப்படும். தாய்ப்பாலூட்டப் பெறாத குழந்தை என்பது இதன் பொருள். சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியொடு மாறுபட்ட பகைவர் நாட்டின் நிலைமையைக் கூறும் பரணர், தாயில் தூவாக் குழவி போல ஓவாது கூஉநின் உடற்றியோர் நாடே என்றார் (புறம். 4). தூவாக்குடி என்பதோர் ஊர் திருச்சிராப்பள்ளிக்கு அணித்தாய் உள்ளது. தூவி வானம் துளிவிடுதல் வானம் தூவுகிறது என்பது மக்கள் வழக்கு. அன்னத்தின் தூவி வள்ளுவரால் குறிக்கப்படும். தானே உதிர்வதால் - தூவுவதால் - தூவி ஆயது. மயிலின் தோகையும் தூவி எனப்படும். அத்தோகை பழநாளில் எழுதுகோல் போல் பயன்படுத்தப்பட்டதால் எழுதுகோலைத் தூவி என்றார் பாவாணர். களத்தில் நெல்லைத் தூவி சண்டுசாவி போக்கலால் அது தூவுதல் என்றாயது. தூற்றுதல் என்பதும் அது. தூளி தூள் > தூளி = பொடியாய்ப் பரவுதலுடையது. பூம்பராகம்; பொடியாய்க் காற்றில் பரவுதல். புழுதி = பொடியாகி நொய்மையுறல். தூசிப்படை; கொடிப்படை; முற்படை. ஊஞ்சல், ஏணை என்பன. நிற்றலின்றி ஆடுதலால் பெற்ற பெயர். குதிரை = விரைந்து ஓடும் இயல்பினது. தூசி என்பதும் இது. தூற்றல் களத்தில் தவசத்தைத் தூய்மையாகப் பிரிக்கத் தூவுதல், தூற்றுதல் எனப்படும். அது மழைத் தூறல் (தூற்றல்) போல் இருத்தலால் தூற்றல் எனப்பட்டது. பழிபரப்புதலும் தூற்றல் ஆகிப் பழிதூற்றல் எனப்பட்டது. தூற்றப்பட்ட தவசம் மாசற்றுப் பொலிவுடன் இருப்பதால் பொலி எனப்பட்டது. பொலி > பொலிவு = அழகு.  தெ தே தை வரிசைச் சொற்கள் தெ தகர எகரம். உயிர்மெய்க் குறில். இதைப்பார் என்பதற்கு, தெ பார் என மக்கள் வழக்கில் உள்ளது. வழுவழக்காகும். தெற்கைத் தெக்கு என்பதும் தெற்று என்பதைத் தெத்து என்பதும், தெவிட்டுதல் என்பதைத் தெகிட்டுதல் என்பதும். தக்கணம் என்பதைத் தெக்கணம் என்பதும் வழு வழக்குகளே. தெங்கு தென்கு > தெங்கு. தென்னகத்தில் இருந்து வந்தமையால் தென்கு, தெங்கு ஆயது. ஏழ்தெங்க நாடு மறைந்த குமரிக் கண்டத்தில் இருந்த 49 நாடுகளுள் ஏழு நாடுகள். அம்மரமும் பனைமரமும் ஒத்த புல்லினத்தன. ஆயினும் பனையின் நேர்செலல் இன்றி வளைதல் மிக்கதால் தென்னியது - வளைந்தது - தென்னை எனப்பட்டது. அவ் வளைவுப் பொருள் தென்னி எடு எனவும், பல் தென்னிவிட்டது எனவும் வழக்கில் ஊன்றியது. * தென்னவை, தென் காண்க. தெட்டுதல் தெட்டுதல், திருடுதல் பொருளில் மதுக்கூர் வட்டார வழக்காக உள்ளது. தெட்டாதிரான் பணி செய்திரான் என்னும் தனிப்பாடல் திருடாமல் வேலை செய்யான் என்னும் பொருளது. தெட்டுதல் வழியாகச் சேர்க்கப் படுவதே தேட்டு என்னும் கருத்து மக்களுக்கு இருந்தமை வெளிப்படுத்தும். வழக்கு என்பது சொல்லால் விளக்கம் பெறல் ஆகும். தெண் தெள் > தெண். தெள் = தெளிவு. தெளிந்த நீர், தெண்ணீர். தெண்ணீர்க் கயத்துள் சிறுமீன்- நறுந். 17 தெண்டல் தெண்டல் = பச்சோந்தி. தெண்டல் என்பது கரட்டான் அல்லது ஓணான் என்னும் பொருளில் அகத்தீசுவர வட்டார வழக்காக உள்ளது. கரடு என்பது கரிய பாறை. அதில் இருப்பது கரட்டான். திண்டல் என்பது திண்டு போன்ற பாறை; சான்று ஈரோட்டில் திண்டல் உண்டு. திண்டுக்கல் - ஒரு மாவட்டம்; கோட்டையுடையது. திண்டு > தெண்டு. தெண்டில் இருப்பது தெண்டல் என விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது. தெண்டல், பச்சோந்தி. பலநிறம் காட்டும் பச்சோந்தி என்பது வழங்கு மொழி. தெத்தலும் குத்தலும் தெத்தல் = வளைதல், கோணுதல். சிலர் பல்வரிசைப் படாமல் வளைந்தும் சாய்ந்தும் நீண்டும் குறைந்தும் ஒழுங்கின்றி இருக்கும். அதனைத் தெத்தல் என்பர்; தெத்துப்பல் என்பதும் அது. நேராக நிற்கும் கல், கம்பி முதலியவை குத்துக்கல், குத்துப்பாறை என வழங்கும். குற்றி என்பது கற்றூண். அது குத்தி ஆகியது. பற்றி என்பது பத்தியானது போல. ஆதலால் குத்தல் நேராக இருத்தல் ஆகும். தெத்தலும் குத்தலும் என்பது ஒழுங்கு இல்லாமை, ஒரு சீராக இல்லாமை, உயரம் தாழ்வு ஆயவை என்பவற்றைக் குறிப்பதாம். தெப்பக்குளம் தெப்பம் = மிதவை, படகு. படகில் செல்ல வேண்டிய நீர்நிலை தெப்பமாகும். குளத்தின் ஊடு கோயிலும் காவும் அமைந்திருத்தலும், திருவிழா எடுத்தலும், தெப்பத்தைச் சுற்றித் தேரோட்டம் விடுதலும் உண்டு. மதுரை, மாரியம்மன் தெப்பக்குளம்; திருச்சிராப்பள்ளி, தெப்பக்குளம். தெப்பத் திருவிழா விழா வகைகளுள் ஒன்று. தெம்பாங்கு ஈரடி ஓரெதுகையாய் நாற்சீரடியாய் ஒவ்வோரடியின் மூன்றாம் சீரும் முதற்சீருக்கேற்ற மோனை யுடையதாய் வரும் சிந்துநடை, தெம்பாங்கு என்பதாம். இதனைத் தென்பாங்கு என்பர். தேன் போல் இனிக்கும் பாட்டு என்பது பொருளாம். இனித் தெம்பாங்கு முதலடியின் இறுதிச் சீர் மடக்காக இரண்டாவது அடி வருவதும் உண்டு. நாட்டுப்புறம் தந்த பாட்டுவளம் இத் தென்பாங்காம். தெம்பாளி திடமானவர் என்பதைத் தெம்பாளி என்பது தென்தமிழக வழக்கு. தெம்பு ஆளி. தெம்பு = திடம். தெம்மாடி என்பது இதற்கு மாறான சொல். தெம்பு அற்றவர் என்னும் பொருளது. தெம்பு ஆடிப் போனவன்(ள், ர்) தெம்மாடியாம். தெய்வக் கையுறை சிற்றிலக்கிய வகையுள் ஒன்று. ... - தெய்வத்தைத் தோழி துதித்துக் குவிமுலையைக் கைகொடுத்தல் ஓவில்தெய் வக்கை யுறை - பிர. திர. 16 காதலுக்குத் தடையுண்டாங்கால் உடன்போக்கு நிகழ்தல் உண்டு. அவ் வுடன்போக்குக்கு உடந்தையாகவும் உறுதுணையாகவும், இருப்பவள், தலைவியின் உயிருக்கு உயிரான தோழியே ஆவள். அவள் தன் கவலையை யெல்லாம் அடக்கிக் கொண்டு தலைவியின் நல்வாழ்வே கருத்தாகி, வழிநனி பயக்க வெனத் தெய்வம் வாழ்த்தித் தலைவியைத் தலைவனிடம் கையடையாகக் கொடுப்பாள். இவ்வுருக்க மிகு செய்கையே கருப்பொருளாக அமைந்த இலக்கியம் தெய்வக் கையுறை. தெய்வத்தை வாழ்த்திக் கையுறையாகக் கொடுத்தலால் இப்பெயர்த்தாயிற்று. தெய்வம் கடவுள் என்பாரும் தெய்வம் என்பாரும் முனிவர் எனப்படுதல் சங்கநூல் வழக்கு. வள்ளுவரைத் தெய்வப் புலவர் என்பது பழவழக்கே. தெய்வ முனிவர் என்பதும் தொல் வழக்கே. இந்நாளிலும் தங்களைக் கண்டது தெய்வத்தைக் கண்டது போல் தங்கள் வாக்கு தெய்வ வாக்கு என்பவை நேரிடைக் கேட்கும் உரைகளே! வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவனைத் தெய்வ நிலையில் கண்ட திருவள்ளுவர், ஐயப்பாடு இல்லாமல் ஒருவர் உள்ளத்தை அறிந்து கொள்ள வல்லாரைத் தெய்வத்தோடு ஒப்பக் கொண்டார் (702) விருந்தோம்புதற்கு உரியவருள் ஒருவர் தெய்வம் என்றும் திருவள்ளுவர் கூறுகிறார் (43). முயற்சியாளனுக்கு மாந்தத் தெய்வம் தானே வந்து உதவும் என்பதையும் குறிக்கிறார் (1023). தெரிப்பு காதில் தெரிந்தெடுத்த இடத்தில் துளையிட்டு அணியும் அணி. காதில் குழந்தைப் பருவத்தில் அணியும் அணிகளுள் ஒன்று தெரிப்பு. அது, ஒரு குண்டு, சுரை, ஓடாணி என்னும் மூன்று பிரிவுகளையுடைய சிறிய அணிகலமாகும். சற்றே வயது வந்ததும் தெரிப்பைக் கழற்றிக் கடுக்கன் போடுவர். தெரிப்புக்கு முன்னே அணியப்படுவது வாளி எனப்படும் வளையம் ஆகும். இவை தென்தமிழக வழக்கு. தெரிப்புக் கட்டுதல் மாரியம்மன் வழிபாட்டில் பூக்குழி இறங்குதல் என்பது ஒன்று. தீயையும் பூவாக எண்ணி இறங்குவது அது. அதற்கு நோன்பு கொண்டு கயிறு கட்டுதல் வழக்கமாதலால், பூக்குழி இறங்குதல் தெரிப்புக் கட்டுதல் என மேலூர் வட்டாரத்தில் வழங்குகின்றது. தெரிப்பெடுத்தல் தெரிப்பெடுத்தல் = கண்டுபிடித்தல். ஒருபொருள் களவு போய் விடுமானால் உடுக்கடித்துக் கேட்டலும், மையோட்டம் பார்த்துக் காணலும் நாட்டுப்புறத்தில் இன்றும் மாறிற்றில்லை. கோடாங்கி சொல்லும் குறிப்பறிந்து போய் மறைவைக் கண்டெடுத்தல் தெரிப்பெடுத்தல் என வழங்குகின்றது. இனிச் சாமியாடிகள் சொல்வது கொண்டும் தெரிப்பெடுத்தல் உண்டு. தெரிவிக்கப்பட்ட அடையாளப்படி தெரிவிக்கப்பட்ட இடத்தில் தெரிவிக்கப்பட்ட பொருளை எடுத்தலே தெரிப் பெடுத்தலாக வழக்கில் உள்ளதாம். பலவற்றுள் ஏதேனும் ஒன்றிரண்டு ஏதோ ஒருவகையான் சரியாக இருப்பின் அதனைக் கொண்டே காலத்தை ஓட்டல் கண்டறியும் செய்தி. தெரியல் தெரிந்தெடுத்த மலர்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை தெரியல் ஆகும். ஆர்புனை தெரியல் - புறம். 82 பொன்னால் செய்யப்பட்டதும் தெரியலாயமை, புனைவினைப் பொலிந்த பொலநறுந் தெரியல் - புறம். 32 என்பதால் தெளிவாம். தேர்ந்த புனைவுடையது என்பது அதன் தெரிதற் பொருளாம். தெரிவு செய்தல் தேர்தல், தேர்வு, தேர்ந்தெடுத்தல் என்பவை பழகிப் போன சொற்கள். தேர்ந்தெடுத்தலை ஈழத் தமிழர் தெரிவு செய்தல் என வழங்குகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களைக் கொண்ட தொகை நூல் தெரிவு என வழங்கப் பட்டது பழமுறை. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் என்னும் குறளில் (510) தேர்தல், தெளிதல் உண்டு. தேர்ந்து தெளிதலும், தெளிந்து தேர்தலும் வழக்கம். எனினும், தெளிதலே முற்பட வேண்டுவது போல், தெரிதலே முற்பட வேண்டும் என அறியலாம். தெரிவை வாழ்வியல் தெரிந்த தேர்ச்சியுடையவள். மகளிர் பருவங்களுள் ஒன்று. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண். இருபத்தாறு முதல் முப்பத்தொரு வயதுப் பெண் (வெ.வி.பே.). நீர்விலங் கழுத லானா தேர்விலங் கினவால் தெரிவை கண்ணே - குறுந். 256 தெரு ஓர் ஊரையோ நகரையோ சுற்றிப் பார்க்கவும் தத்தம் வீடுகளுக்குச் சென்று வரவும் நடைவழியாக இருப்பது தெருவாகும். தெருமரல் என்பது சுற்றி வருதல். அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி - தொல். 794 தெருமரற்கு அமைந்தது தெருவெனச் சுருங்கி யிருக்கலாம். ஆறுகிடந்தன்ன அகல்நெடுந் தெரு - நெடுநல். 30 இனித் திரிதரற்குரியது தெரு என்பதுமாம். திரிதரல் = திரிதல், உலாவல். எவ்வழி மருங்கினும் திரிதர லோவா- பெருங் 2:18: 68, 69 தெருவு, தெருவம் என்பதும் இது. தேரோடத் துகள் கெழுமியதைச் சங்க நூல்கள் பலவாகப் பதிவு செய்துள்ளன (புறம். 245; பெரும். 397, 411; மதுரைக். 648, 649; அகம். 68, 189; நற். 227). தெருவில் வளைந்து செல்ல வகை இருந்தமை தேர்சுற்றி வர வாய்ப்பாக அமைந்தது (நற். 50; பரி. திர. 7). இவற்றால் தேர்திரிதரத் தெரு அமைந்தமை விளங்கும். தெருவகை முடுக்கு = சிறுசந்து. சந்து = தெருவின் கிளை. தெரு = சிறுவீதி. மறுகு = போக்குவரத்து மிகுந்த பெருந்தெரு (அ) வீதி. ஆவணம் = கடைத்தெரு. அகலுள் = அகன்ற மறுகு. சாலை = பெருவழி (Road). சந்தி = மூன்று தெருக்கள் கூடுமிடம். சதுக்கம் = நான்கு தெருக்கள் கூடுமிடம். (தேவநே. 8:197) தெருமரல் சுழன்று திரிதல், மனச்சுழற்சி அல்லது கலக்கம். தெருமரல் இயக்கமும் தீர்க்குவோம் - புறம். 381 தெருமரல் வாழி தோழி - கலி. 26 தெல்லி இல்லி > தெல்லி. மீன்பிடி கூடையைத் தெல்லி என்பது நெல்லை வழக்கு. உருண்டைச் சுரைக்காய் போன்ற வட்ட வடிவினது அது. மீன் ஒழுகிப் போகாமல் நீர் ஒழுகிப் போகும் அமைப்பினது. இல்லி என்பது ஓட்டை. இல்லிக்குடம் = ஓட்டைக் குடம் (நன். 28). கேட்டதைக் கேட்டவுடன் போகவிடும் மாணவன் இயல்புக்கு உவமையாவது அது. இல்லி > தெல்லி ஆயது தகரப்பேறு ஆகும். தெல்லிச்சட்டி தெல்லி, ஓட்டை என்னும் பொருள் தருவது. தெல்லி = துளை, கண். துளைச் சட்டி, கண்சட்டி என்று பொதுவழக்காக உள்ள வடிசட்டியைத் தெல்லிச் சட்டி என்பது பானை வனைபவர் வழக்காகும். தெவ்வர் எவ்வர் > தெவ்வர். எவ்வம் = துயரம்; துயரம் செய்யும் பகைவர் தெவ்வராம். தெவ்வுப் பகையாம் - தொல். 829 செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்தும் - புறம். 6 தெளிகணன் தெளிகணன் என்பது தெளிந்த பார்வையன் எனப்பொருள் கொள்ளத்தக்கது. ஆனால் செட்டிநாட்டு வழக்கில் அவையறிந்து - ஆளறிந்து - பழகத் தெரியாதவன் என்னும் பொருளில் வழங்குகின்றது. இவ் வெதிரிடைப் பொருள் மங்கல வழக்கு ஆகலாம். தெளிந்த கண் (அறிவு) இல்லாதவன். தெளியக் கடைந்தவன் தெளியக் கடைந்தவன்:1 தெளியக் கடைந்தவன் = தேர்ந்தவன் (எள்ளல் குறிப்பு). சிறுவயதிலேயே சில சிக்கலான வினாக்களை ஒருவன் எழுப்பினாலும், ஒருவர் சொன்னதை மறுத்து உரையாடினாலும் தெளியக் கடைந்தவன் என்பர். தெளியக் கடைதல் என்பது கடைந்த மோரை மீளக் கடைந்து வெண்ணெய் எடுப்பது போல்வதாம், கடைந்த மோரில் வெண்ணெய் எடுப்பவன் எனவும் கூறுவர். தெளிவு என்பது தெளிந்த மோரை. கட்டி மோர் கீழே படிய, தெளிவானது மேலே நீராக நிற்கும். அதில் மோரின் இயல்பும் இல்லை. அவ்வாறாக அதில் வெண்ணெய் எடுப்பது அருமை. ஆகலின், அதனை எடுக்கவும் வல்லவன் எனக் கூறுவதாம். இது இசை வழிப்பட்டதன்று. எள்ளல் வழிப்பட்டது. தெளியக் கடைந்தவன்:2 தெளியக் கடைந்தவன் = நம்பாதவன். கடைந்து வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர்க்கு தெளிவு என்பது பெயர். அதில் இருந்து வெண்ணெய் எடுக்கப்பட்ட பின்னரும் ஏதேனும் இருக்குமெனக் கடைந்து பார்த்தல் தெளியக் கடைதல் ஆகும். இல்லை என்று சொல்லியும் இருக்கும் எனத் தேடுபவனைத் தெளியக் கடைந்தவன் என்பது நெல்லை வழக்கு. தெளிவு வடித்து எடுத்துத் தெளிவாக்கப்பட்ட பதனீரைத் தெளிவு என்பது தென்தமிழக வழக்கு. தெளிவு, கருத்துப் பொருளில் தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் எனவரும் (திருக். 510). தெள்ளிக் கொழித்தல் புடைத்தல் வகையுள் தெள்ளுதல் ஒன்று. கொழித்தல் மற்றொன்று. தவசம் பருப்பு மாவு முதலியவற்றை முறத்தில் பரப்பி மேலும் கீழும் பக்கமும் அகற்றிக் கல், மண், தூசி, பூச்சி, புழு முதலியவற்றை அகற்றுதல் தெள்ளுதலாம். தெள்ளுதல் தெளிவாகக் கண்டு விலக்குவ விலக்கல். தெள்ளிய அறிவு, தெள்ளிய ஆல் தெள்ளத் தெளிவாக வழக்குமொழிகள். கொழித்தல் என்பது முறத்தின் இக் கரையில் இருந்து அக் கரைக்கும் அக்கரையில் இருந்து இக்கரைக்கும் தள்ளி ஒட்டிய தவிடு, நொய் முதலியவற்றை அகற்றிக் கொழுமைப்படுத்துதலாம். இரண்டும் புடைத்தல் வழிப்பட்டவையே. நாவுதல், நீவுதல் என்பவும் அவ் வகையே. தெள்ளுத் தண்ணீர் தெள் = தெளிவு. தெளிந்த நீர்க் கஞ்சியைத் தெள்ளுத் தண்ணீர் என்பது நெல்லை வழக்கு. கஞ்சித் தண்ணீர், சோற்றுத் தண்ணீர், நீர்க் கஞ்சி எனப்படுதல் (நீராகாரம்) உண்டு. நீற்றுத் தண்ணீர் (நீச்சுத் தண்ணீர்) என்பதும் வழக்குகளே. தெள்ளேணம் தெள்ளுதல், முறத்தில் பொருளைப் போட்டு மேலே தூக்கி விடுதல் தெள்ளுதல் ஆகும். ஏண் > ஏணம் = உயரம். தவசம் பருப்பு முதலியவற்றைத் தெள்ளுவார் பாடும் வகையில் அமைக்கப்பட்ட பாடல் தெள்ளேணம் ஆகும். இது நாட்டுப்புற மாந்தர் இசைப்பா வகையது. அதனை மாணிக்கவாசகர் இறைமைப் பாடலாக் கினார். திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக் கருவேர் அறுத்தபின் யாவரையும் கண்டதில்லை; அருவாய் உருவமும் ஆயபிரான் அவன்மருவும் திருவாரூர் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ - திருவா. திருத்தெள். தெறல் தெறல் = அழித்தல். தெறுதல் என்பதும் இது. வலியும் தெறலும் அளியும் உடையோய் - புறம்.2 பொருள்: பகைவர் பிழைசெய்தால் அப்பிழையைப் பொறுத்தலும், அப்பிழை பொறுக்கும் அளவல்லவாயின் அவரை அழித்தற்கு உசாவும் உசாவினது அகலமும், அவரை அழித்தற் கேற்ற மனவலியும் சதுரங்க வலியும் அவ்வாற்றான் அவரை அழித்தலும் அவர் வழிபட்டால் அவர்க்குச் செய்யும் அருளு முடையோய் ப.உ. தெற்கு தென் + கு = தெற்கு = தென்திசை. வசையில் புகழ் வயங்கு வெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும் - பட். 1, 2 தெற்று தெற்று = எழும்புதல். தெற்றி என்பது திண்ணை என்னும் பொருளது. நிலமட்டத் திற்கு மேலே திண்ணிதாய் அமைக்கப்பட்டதே திண்ணை என்பதாம். தெற்றுப்பல் என்றால் இயல்பான பல்வரிசையை விடுத்து மேலே எழும்பி நிற்கும் பல்லைக் குறிப்பதாம். தெற்று தென் என்பதன் வழிவந்ததாம். தென், தென்னை, தென்னுதல் என்பவை வளைதல் பொருளுடையதாகி, அவை நிரம்ப வளர்ந்ததற்கும் பெயராயிற்று. இலங்குவளை மகளிர் தெற்றி யாடும் - புறம். 53 தென்னுதல் = வளைதல்; தெற்று; வளைந்து எழும்புதல். தெற்றென என்பது தெளிவாக என்னும் பொருளது. இத் தெற்று வேறு. தென் தென் என்பது தோற்றம்; தென்படுகிறது; தென்பட வில்லை என்பவை இன்றும் மக்கள் வழக்கு. தென் என்பது வளைவு; தென்னித் தின்னல், தென்னிப்பல் என்பவை இன்றும் மக்கள் வழக்கு. தேங்காயைத் தென்னித் தின்னல் உண்டு. தென் என்பது தென்னை நிரம்பிய திசை, தென்திசை, தெற்குத்திசை. தென் என்பது தேனுண்ணும் வண்டு. தென்னுண் தேன் என்பது கம்பர் (பால. 585). தென் என்பது தேன்; மின் > மீன், தென் > தேன். தென் திசையை ஆட்சி செய்தவன், தென்னன்; பாண்டியன். தென்திசையில் இருந்துவரும் காற்று தென்றல்; தென்கால். தென்னன் தமிழின் உடன்பிறந்த சிறுகால் - மீனா. பிள்ளைட். தென் பகுதி நாடு, தென்னாடு; தென்னாடுடைய சிவனே போற்றி (திருவா.). தென் - இசை; தென்னா தெனா தென் = அழகின் பெயர்களுள் ஒன்று. தென், ஊரடை; தென்காசி, தென்னிலை, தென்னூர், தென்திருவாலவாய். தென்கால் தென்கால்:1 தென்கால் = தென்றல்; தெற்கில் இருந்துவரும் காற்று; தென்வளி இளங்கால், மென்கால் என்பவையும் இது. தென்கால்:2 தென்பால் அமைந்த கால்வாய். எ-டு: தென்கால் கண்வாய் தென்படல் தென்படல் = தோன்றுதல். எனக்குத் தென்படவில்லை என்றால் தெரியவில்லை தெரியவில்லை, தோன்றவில்லை என்பவை பொருளாம். தென்னவை இனிய அவை தென்னவையாகும். தென் > தேன். தென்னவர் பாண்டியர். அவர்தம் அவை ஒன்று ஒருகாலத்தில் இருந்தமையால் அவ்விடம் தென்னவை எனப்பட்டு, உரத்தநாட்டைச் சார்ந்து விளங்குகின்றது. தென்மலை, தென்னாடு என்பவை போலத் திசைப்பெயர் குறித்ததாயின் வடவவை என ஒன்றிருத்தல் வேண்டும். இல்லை ஆதலால் இனிய அவையாம். தென்னு தென்னுதல் தென்னு என்பவை வளைதற் பொருளவை. பல் கோணியிருத்தலைப் பல் தென்னியிருக்கிறது என்பதும், தேங்காயைத் தென்னி எடு என்பதும் வழங்கு தொடர்கள். தென்னை என்பதன் வளைவுப் பொருள் புலப்படத் தென்னு என்பது குமரி மாவட்ட வழக்காக உள்ளது. தென்னை ஓரறிவுயிரிகளுள் ஒன்று. தென்னகப் பயிரியாக அமைந்தது; புல்லினம் சார்ந்தது. புல்லினமாவது புறவயிரமுடையது. ஓரறிவாவது உற்றறிவது. ஒன்றறி வதுவே உற்றறி வதுவே - தொல். 1526 புல்லும் மரனும் ஓரறி வினவே - தொல். 1527 தென் = தென்திசை. தென்னுதல் = வளைதல். தென்னை தெங்கு எனவும் வழங்கும். நாய்பெற்ற தெங்கம் பழம் - பழ. 151 தெங்கம்பழம் = தேங்காய்.  தே வரிசைச் சொற்கள் தே தகர ஏகாரம்; ஓரெழுத்து ஒருமொழி; இனிமை என்னும் பொருளது. தேன், தே என நின்று தேமொழி, தேநீர் என இனிமைப் பொருள்தரும். தேம் என்றும், தேஎம் என்றும் ஆகித் தேயம் (நாடு) எனும் பொருளும் தரும். தே = தெய்வம் எனப் பொருள்தரும் தேஊர் > தேவூர். தேஎம் தேஎம் = தேயம், நாடு. கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம் - தொல். 1013 கொள்ளார் தேஎம் = தன் ஆணையை ஏற்றுக் கொள்ளாத பகைவர் தேயம். தேஎம் > தேயம் > தேசம். செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்து - புறம். 6 தேக்கம் தேங்க வைப்பதும் தேக்கி வைப்பதும் தேக்கம் ஆகும். தேங்க வைப்பது தேங்காய்; தேக்கி வைக்கும் நீர்நிலை தேக்கடி; அடியாவது நிலம், நீர்நிலை. தேர்வில் அடுத்த வகுப்புக்குச் செல்லாமல் தேக்கி வைப்பதும் தேக்கமே. எண்ணெய்ப் பசை, உறுதித் தன்மை ஆகியவற்றைத் தேக்கி வைக்கும் மரம் தேக்கு. தேக்கமல் அடுக்கம் - அகம். 143 நீர்நிலையில் இருந்து நீர் ஓடாமல் தேக்கி வைப்பது நீர்த்தேக்கம்; அணை, அணைக்கட்டு; சிறை, கற்சிறை. பள்ளத்தில் இருந்து மேட்டில் நீர் ஏறாமை தேக்கமாம். தேக்குதல் நீரைத் தேக்குதல் என்பது தடுத்து நிறுத்துதல் ஆகும். நீர்த் தேக்கம், தேக்கடி, தேக்கு என்பவை தேக்க வழிப்பட்ட சொற்கள். ஒருவரை ஏதேனும் ஒரு வகையால் வராமலோ செல்லாமலோ தடுத்து நிறுத்துதலைத் தேக்குதல் என்பது பெட்டைவாய்த்தலை வட்டார வழக்காகும். தேக்கெறிதல் தேக்கு + எறிதல் = தேக்கெறிதல். தேங்கிய சுவை மேலும் மேலும் எழும்புதல். இனிப்பு மிகுசுவை; வேண்டா; தேக்கெறிகிறது ம.வ. தேங்காய் தேம் + காய் = தேங்காய். தேங்காய்:1 இனிய காய். தேங்காய்:2 நீர் (இளநீர்) தேங்கியுள்ள காய். தேங்காய் மரத்திலே மாங்காய் பறிக்கவொரு சினைமந்தி கொக்கை நோக்கும் - மலரும் மாலையும் மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்பவர்க்குத் தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய் தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம். சித். பா. தேசிக்காய் தேசி என்பது தேசத்தான் தேசத்தது, என்னும் பொருளது. இலாமிச்சை எனப்படும் எலுமிச்சை வெளிநாட்டில் இருந்து இங்கு வந்தமையால் வேறு தேசத்தில் இருந்து வந்தது என்னும் பொருளில் தேசி எனப்பட்டது. தேசிக்காய் என இலாமிச்சைக் காயை வழங்குதல் குமரி மாவட்ட இலந்தைக்குள வட்டார வழக்காகும். அயல் தேசத்தான் பரதேசி எனப்படுதலும். மண்ணெண்ணெய் சீமை எண்ணெய் எனப்படுதலும் கருதத் தக்கவை. தேட்டம் தேடிச் சேர்க்கப்படுவது தேட்டு; தேடுவதன் மூலம் விருப்பம் ஆதலால் தேட்டம் விருப்பம் எனப்பொருள் கொண்டது. தேனீக்கள் தேடிச் சேர்க்கும் தேனடை தேட்டு எனவும் ஆகிய நிலையில், ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் என இரட்டுறல் வழக்கு உண்டாயது. ஈயும் இயல்பிலார் தேடிவைத்த பொருளைத் தீய கள்வர் கொள்வர் என்பதும், (தேன்) ஈ, தேடி வைத்த தேனைத் தீப்பந்தம் உடையவர் கவர்வர் என்பதும் பொருளாயின. தேட்டுவழி ஏற்பட்டது தேட்டமாம். தேட்டு தேட்டு = தேன்கூடு, தேன்தட்டு. தேடிச் சேர்த்தது என்னும் பொருளது. தேன் ஈ பூக்கள்தோறும் தேடிச் சென்று சேர்த்து வைக்கும் தேன்போலச் சிறிது சிறிதாகப் பல்கால் தேடிவைத்த செல்வமும் தேட்டு என வழங்கப் பெற்றது. தேடி வைத்த செல்வம் விரும்பி விரும்பித் தேடப்படுவதும் காக்கப்படுவதும் ஆதலால் தேட்டம் என்று ஆயது. தேட்டமாவது விருப்பம். விருப்பம் இல்லாமையை எனக்குத் தேட்டம் இல்லை என்பது பொதுமக்கள் வழக்கு. தேமா தேமா:1 தேன்போலும் இனிய சுவையுடைய பழம் தரும் மாமரம். தேமா மேனிச் சில்வளையாயம் - சிறுபாண். 176 தேமா:2 யாப்புச் சீர்களில் ஒன்று தேமா. அது, இரு நேரசைகளைக் கொண்டது. தேமா புளிமா கருவிளம் கூவிளம் சீரகவற்காம் - யா. கா. 7 தேயம் தாம் வாழும் இடம் இனியது என்பதால் தே என்றனர்; தேஎ என அளபெடுத்துக் கூறினர். இனிமைப் பொருள் வெளிப்பட விளங்கத் தேஎம் என்றனர். அது பின்னே தேயம் ஆயது. தேயத்தைத் தேசம் ஆக்கித் தேஜ் எனத் தேய்த்துக் கொண்டு அத்தேய்வு மூலத்தில் இருந்தேதேஎம்,தேயம் வந்த தென்றால் முழுப்பொய்மை என்பது வெளிப்படை அல்லவா! தேயம் போன்றதொரு சொல் நாடு என்பது. திருக்குறளில் நாடு என்பதோர் அதிகாரம். நாடு என்பதன் பொருள் விரும்பு, தேடு, ஆராய் என்பதே. நாட்டம் என்பது கண் என்றும் இசையென்றும் வாள் என்றும் பொருள் தரும். நாட்டைக் கண்ணாகக் கருது; இசை இன்பமாக நினை; நாடு காக்க வாளையும் எடு என இயைக்க அமைந்தவை அதன் பொருள்கள். ஆதலால் நாடு போலவே இனிமைப் பொருள்தரும் தேயமும் தமிழேயாம். தே > தேம் > தேன் = இனிமையல்லவா! தேநீர், தேமொழி, தேனெய் வழக்குச் சொற்கள் அல்லவா! தே > தேய் > தேயு = தீ இன்பமல்லவா! தீம்பால், தீம்பாகு, தீஞ்சொல், தீங்குரல். தே = தெய்வம்; தேவர் = மேலோர். திருவள்ளுவ தேவர், திருத்தக்க தேவர், தோலா மொழித் தேவர், அருண்மொழித் தேவர், இராசராச தேவர், இராசேந்திர தேவர் என எத்தனை எத்தனை தேவர்கள். தேவையூர் ஓர் ஊர்ப் பெயரில்லையா? தேவகோட்டம் = தெய்வ உறையுள் அல்லவா? தேவகன்னி கேளாப் பெயரா? பனியிலும், இருளிலும் கிடந்தவனுக்கல்லவோ தீயும் செஞ்சுடரும், வெண்சுடரும் தெய்வத் தன்மையதாக விளங்கும். தேனடை = தேத்திறால், தேன்கூடு, தேந்தண்ணீர். தே > தீ > தீம் = தீம்பால், தீம்பாகு, தீம்பூங்கட்டி எனல் அறியாதவை இல்லையே. தேய்த்தல் தேயுமாறு செய்தல், தட்டிக் கழித்தல், துணியைத் தேய்ப்புப் பொறிகொண்டு தேய்த்தல், உடல் தேய்த்துக் குளித்தல், கலங்கள் தேய்த்தல். தேய்தல், தன்வினை; தேய்த்தல், பிறவினை. தேய்த்துப் போட்ட கல் தேய்த்துப் போட்ட கல் = இழிவுறுத்தல், அருவறுத்தல். காலில் ஏதாவது படக்கூடாத அருவறுப்புப் பட்டு விட்டால் கண்ணில் காணப்பட்ட கல்லில் காலைத் தேய்த்து ஓரளவு அருவறுப்பைத் துடைத்துக் கொள்ளுதல் நடைமுறை. அத் தேய்த்தலுக்கும் எல்லாக் கல்லையும் பயன்படுத்த முடியாது. கேட்பாரற்றதும் கருதுவாரற்றதுமாகிய கல்லிலேயே தேய்ப்பர். அத்தகைய கல்லைப் போலச் சிலரை இழிவு படுத்தினால், என்னைத் தேய்த்துப் போட்ட கல்லைப் போல நினைக்கிறான்; அவனை மதித்து நானென்ன பார்ப்பது என வெறுத்துரைத்தல் வழக்கு. தேய்த்துவிடுதல் தேய்த்து விடுதல் = ஏமாற்றி இல்லை யெனல். இல்லை என்று வாயால் சொல்லாமல் பல்கால் அலையவிட்டு அவர்களே உண்மையறிந்து கொண்டு ஒதுங்கிவிடுதல் தேய்த்துவிடுதலாம். தேய்த்து விடுதல் ஏய்த்து விடுதல் போல்வதென்க! எண்ணெய் தேய்த்தல்; தேய்த்துக் குளிப்பாட்டல் என்பவற்றைக் கருதினால் இன்பப்படுத்தலாம். ஆனால், தேய்த்துவிடுதலும், குளிப்பாட்டலும் வழக்கில் ஏமாற்றுதலாகிய பொருளைத் தருவதாக அமையும். குளிப்பாட்டல் என்னும் வழக்கை அறிக. பேச்சிலேயே குளிப்பாட்டி விடுவானே அவனுக்குத் தண்ணீர் எதற்கு? என்பதும் இப்பொருளை விளக்கும். தேய்வை தேய்வை:1 கல்லில் தேய்த்துக் குழம்பாக எடுக்கப்படும் சந்தனம். நறுங்குற டுரிஞ்சிய பூக்கேழ்த் தேய்வை - திருமுரு. 33 தேய்வை:2 சவர்க்காரம் தேய்த்துக் குளிக்கப் பயன்படுவது. தேய்வை:3 எழுதியதை அழிக்கப் பயன்படுத்தும் இரப்பர் (Rubber), உந்துகளில் பயன்படுத்தும் கால் (சக்கரம் - Wheel). தேரி காற்று மோதியடித்தலால் கடற்கரைப் பகுதியில் உள்ள மணல் மேடுபட்டு மலைபோல் உயர்ந்து தோற்றம் தரும். அது தேரி எனப்படும். கடற்கரை சார்ந்த கள்ளி, தாழை என்பவற்றை யன்றித் தென்னை, பனை மரங்களின் உச்சியைத் தொடவும் ஏன் மறைக்கவும் கூட, தேரிகள் உண்டு. தேர்போன்று உயர்ந்து தோன்றும் மணற்குவியலைத் தேரி என்பது அரிய உவமை ஆட்சியாம். தேரிப் பெயரால் ஊர்ப்பெயர்களும் நெல்லைப் பகுதியில் உண்டு. தேரை தேரை:1 தேர் அமைப்பில் தோன்றும் மணல்மேடு தேரி என வழங்கப்படும். கடற்கரைப் பகுதிகளில் தேரியை மிகக் காணலாம். சமநிலமாக இருந்த மணற்படுகை ஒரு கடுங்காற்றால் பனையின் கழுத்துக்கு உயர்ந்து தேரியாதலும், இன்னொரு காற்றால் அத் தேரி பழைய நிலையை அடைதலும் இயற்கை. தேரி மணல்மேடு என்னும் பொருள் தந்தபின் அம் மணல் நிறத்தவளை தேரை எனப்பட்டது. மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் தவளை, வெளிப்படக் கிடப்பினும் மணல் நிறத்திலேயே இருக்கும். அது மணற்றவளை எனவும் படும். மணலில் வாழ்வதுடன் சார்ந்ததன் வண்ணமாம் நிறமும் பெற்றிருக்கும். தேரை:2 தேரையாவது தவளை. அத்தவளையை அன்றித் தென்னைக்கு உண்டாகும் ஒரு நோய்க்குத் தேரை என்பது பெயர். தென்னையின் காய் ஆகிய தேங்காயில் உள்ளீடு இல்லாமல் செய்யும் நோய் இது. தேரை தேங்காய்க்குள் போவதும் இல்லை; தேங்காய் நீரை உறிஞ்சியோ, பருப்பைத் தின்றோ அழிப்பதும் இல்லை. ஆனால் தேரை விழுந்தது எனப் பழி கொண்டது. இதனால், தேரையார் தெங்கிள நீருண்ணார் பழிசுமப்பார் என்பது பழமொழி ஆயிற்று. பருப்பில்லா தொழிந்த அக் காயைத் தேரைக்காய் என்பதுடன் ஒல்லிக்காய் என்பதும் உண்டு. ஒல்குதல் குறைதல், தேய்தல், சிறுத்துப் போதல் ஆகும். தேர் தேர்:1 தேர்ந்தெடுத்த கலை நுணுக்கத்துடனும் வலுவுடனும் செய்யப்பட்டது தேர். கடலோடா கால்வல் நெடுந்தேர் - திருக். 496 பண்டை நாற்படைகளுள் ஒன்று தேர்ப்படை. . அழகிய பல தேரை இயங்கச் செய்ய வல்லான் உருவப் பஃறேர் இளஞ் சேட்சென்னி என்பான் (புறம். 4). பஃறேர் = பலதேர். மாண்வினை நெடுந்தேர் - புறம். 39 தேர்:2 பேய்த்தேர் எனப்படும் கானல்நீர். உருவில் பேஎய் ஊராத் தேர் - அகம். 67 தேர்:3 தேர்ந்தெடு என்னும் ஏவல் பொருளது. தேர்ச்சி தேர்வின் மதிப்பீட்டால் அடைவது தேர்ச்சி, தேர்ச்சி இன்மை என்பவற்றைக் காட்டும். தேர்ச்சி என்பது வெற்றிப் பொருள் தருவதே. தேர்வு என்பது ஆராய்வு ஆகும். தேரான் துணை = ஆராயாதவன் நட்பு. மேற்படிப்புக்கும், பணியமர்த்தத்திற்கும் தேர்வே அடிப்படையாக உள்ளது. இக்கால நிலை. தேர்தல் மக்களாட்சி முறையில் சிற்றூர் முதல் நாடு ஈறாக ஆள்வதற்குரியாரைத் தேர்ந்தெடுக்கும், நாடு வாழ் மக்கள் உரிமை தேர்தல் ஆகும். தேர்தலில் வெற்றி கொண்ட அமைப்பு ஆளும் உரிமையுடையதாகும். தக்கார் எனத் தெரிந்து தேர்ந்தெடுப்பதே தேர்தல் ஆகும். இந்திய நாட்டில் ஐந்தாண்டுக்கு ஒருமுறையாகத் தேர்தல் நடத்தப்படுகின்றது. அதனை நடத்தத் தேர்தல் ஆணையமென ஒன்றுள்ளது. தேர்வு தொடக்கக் கல்வி முதல் நிறைவுறும் வரையும் பயில்வார் அறிவுத்திறம் செயல்திறம் ஆகியவை தேர்வு நடாத்தி அதனை மதிப்பீடு செய்வதும், அதற்குச் சான்று வழங்கித் தேர்வு ஆயது, ஆகாதது ஆயவைக்குச் சான்று வழங்குவதும் தேர்வு முறை ஆகும். தேர்வு செய்யும் துறைகள் பயில்வார் தரநிலையில் அமைக்கப் பட்டுள. வகுப்புத் தேர்வு, பருவத்தேர்வு, ஆண்டுத்தேர்வு, பட்டயத்தேர்வு, பட்டத்தேர்வு, பயிற்சித்தேர்வு, செயன்முத் தேர்வு எனப் பலவகைத் தேர்வுகள் உள. தேர்வாளர்கள், திருத்தாளர்கள், தேர்வுத்துறை என்பவை எல்லாம் நடைமுறையில் உள்ளவை. தேவபாணி தெய்வத்தைப் பாடும் பாடல் தேவபாணி. பாடும் திறம் வல்லார் பாணர், பாடினியர் என்று வழங்கப்பட்டமை அறியத் தக்கது. திருப்பாணாழ்வாரும், திருநீல கண்ட யாழ்ப்பாண நாயனாரும், பாணாற்றுப் படைகளும் எண்ணத்தக்கன. தேவபாணி தொல்காப்பியத்தில் சுட்டப்படுகின்றது. அது பெருந்தேவபாணி, சிறு தேவபாணி எனப் பகுக்கவும் ஆயிற்று. கலியும், பரிபாடலும் தேவபாணிக்குரியவை என்பது முந்தையோர் முடிபு. ஆயின், பின்னே மாறியமைந்த சான்றும் உண்டு. பதினோராந் திருமுறையில் பெருந்தேவபாணி உண்டு. அது நக்கீர தேவநாயனார் பாடியது. 67 அடிகளைக் கொண்டது. பரிபாடலில், திருமால், செவ்வேள் ஆகியோரைப் பற்றிய தேவபாணிகள் உள. தேவர் தே + அர் = தேவர் = இனியர், அமரர், அரசர், பெரியர். திருவள்ளுவ தேவர்; திருத்தக்க தேவர்; தோலாமொழித் தேவர்; அருண்மொழித் தேவர்; இராசராச தேவர். தேவர் என்பார், எவர் கட்டளையும், எச்சட்டமும் இல்லாமல் மனச்சான்றால் உயர்வாழ்வு வாழ்பவர். அவர்தம் செயல்கள் பண்புகள் கொண்டே உலகியல் ஒழுக்கம் நிகழும். அதனால், வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான என்றார் தொல்காப்பியர் (1592). வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் - திருக். 50 தெய்வத் தன்மையர் தேவர். தேவாரம் தே + ஆரம் = தேவனுக்குத் தொடுக்கப்பட்ட பாமாலை. இறைவன் மாலை - 1 இறைவனைப் பற்றிப் பாடப்பட்ட மாலை - 2 இறைவனால் பாடப்பட்ட மாலை - 3 இறைவனுக்குப் பாடிய மாலை - 4 இறைவனின் மாலை - 5 இறைவனது மாலை - 6 இறைவன்கண் சேர்க்கும் மாலை - 7 இறைவா எனப் பாடப்பட்ட மாலை - 8 என எட்டு வேற்றுமைக்கும் பொருந்தும் அமைதியது தேவாரம். இறைவன்மேல் கொண்ட வாரத்தால் (அன்பால்) பாடப் பட்ட மாலை இறைவனைப் பங்காளனாகக் கொண்டு பாடப் பட்ட மாலை (வாரம் = பங்கு). மூவர் தேவாரம், பாடப்பட்ட காலமுறையால் அமைந்தவை. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்பார் அவர். தேவி தேவன், தேவர் என்பார்க்குப் பெண்பால் தேவியாம். சேரன்மாதேவி, சோழன்மாதேவி, பாண்டிமாதேவி, கோப்பெருந்தேவி, கண்ணகி தேவி. தேவை தம்மிடம் இல்லாததை அல்லது வேண்டியதைத் தேடி வைத்துக் கொள்வது தேவையாகும். இப்பொழுது சேர்த்து வைத்தால்தானே ஒரு நெருக்கடிக்கு உதவும் எனத் தேடிச் சேமிப்பதும், தேடிக் கொள்வதும் தேவை எனப்படுவது ம.வ. தேவைக்கு உதவாதவன் பிறகு உதவினால் என்ன உதவாவிட்டால் என்ன என்பது பழிப்புரை. தேவை இல்லாமல் சுற்றாதே, தேவை இல்லாததற்குச் செலவிட்டால் தேவைக்குக் கிட்டாது என்பவை மக்கள் வழக்குகள். தேள் தீ > தே > தேள். தீப்போல் கடுப்பேற்றும் நஞ்சினையுடையது தேள் ஆகும். ஈக்கு விடம்தலையில் எய்தும்இருந் தேளுக்கு வாய்த்து விடம்கொடுக்கில் வாழுமே - நீதிவெண். 18 இருந்தேள் = கருந்தேள். மற்றொன்று செந்தேள். செந்தேளினும் கருந்தேள் நஞ்சு கொடிது என்பர். தேள்கடுப் பன்ன நாட்படு தேறல் - புறம். 392 நெடுநாள் புளித்தமது, தேள் கொட்டிய நஞ்சு கடுப்பாக ஏறுவது போல் ஏறுமாம். தேறல் தேறல் = கள். வடித்துத் தெளிவு செய்யப்பட்டது கள். தேறு > தேற்று = தெளிவு. தேக்கள் தேறல் - மலைபடு. 171 தேம்பிழி தேறல் - குறிஞ்சிப். 155 தேனும் வடிக்கப்பட்டமையால் தேம்பிழி என்பர். தெளிந்த தேன்போல் இசைத்த யாழை தேம்பிழி மகரயாழ் என்றார் கம்பர் (பால. 36). தேர்வு எழுதித் தேர்ச்சி அடைவர்; தேர்வில் தோற்றால் பலர் தேற்ற (தெளிவிக்க) இயலாத் துயருக்கு ஆட்படுகின்றனர். தேராமல் ஒருவனைத் தெளிதல் ஆகாது என்பதைத், தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் என்பது வள்ளுவம் (திருக். 510). தேற்றம் தேற்றம் = தெளிவு; திட்டமாக உறுதிப்படுத்துதற்கு வரும் ஏகாரம் தேற்றேகாரம். யானே கள்வன் கலங்கல் நீரைத் தெளிவாக்கப் பயன்படுத்தும் கொட்டை, தேற்றாங் கொட்டை எனப்படும். தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇ - தொல். 1051 கணக்கில், வடிவ கணிதத்தில் தேற்றம் என்பது ஒரு பகுதியாம். தேற்றாமை என்பது தெளிவில்லாமை. நிறையொழுக்கம் தேற்றாதான் பெற்ற வனப்பும் - திரிகடு. 80 தேற்றாங் கொட்டை நீராளப் பொருளின் அழுக்கு கசடு ஆயவை நீக்கப் பயன்படுத்தும் கொட்டை. தேற்றா = ஒருவகை மரம். அக்கொட்டையை நீராளப் பொருளில் போட்டுவிட்டால் நீக்குவனவற்றை நீக்கிக் கீழே படியச் செய்வது அது. மேலாக வடித்துப் பயன்கொள்ளலாம்; கசடு கீழே தங்கிவிடும். தேனாக ஒழுகுதல் தேனாக ஒழுகுதல் = (வஞ்சகமாக) இனிக்க இனிக்கக் கூறல். வாய் கருப்புக் கட்டி; கை கடுக்காய் என்பதும், உள்ளத்திலே வேம்பு உதட்டிலே கரும்பு என்பதும் பழமொழிகள். தேன் ஒழுகுதல் போல இனிக்க இனிக்கப் பேசுதலைக் குறித்தாலும், உள்ளே வஞ்சகம் உண்மையால் பெருந்தீமை பயப்பதேயாம். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்னும் வள்ளலார் வாக்கு, தேனாக ஒழுகவிடுவாரின் தேர்ச்சி நிலையைத் தெளிவிக்கும். தேனெய் தேன் + நெய் = தேனெய் = தேனும் நெய்யும். தேனாகிய நெய்யுமாம். தேனெய்யொடு கிழங்கு மாறி - பொருந. 214 பொருள்: தேனாகிய நெய்யோடே கிழங்கும் விற்று (உரை, நச்.). பிறந்த குழந்தைக்குத் தேனெய் புகட்டுதல் வழக்கு. அது சேனெய் என வழங்கப்படுகிறது. பசு நெய்யும் இனிப்பும் கலந்தது. சே = ஆன் (அ) பசு.  தை வரிசைச் சொற்கள் தை தை:1 தகர ஐகாரம்; நெடில்; ஓரெழுத்து ஒருமொழி. தை:2 தை என்னும் திங்கள் பெயர். தையொரு திங்களும் தரைவிளக்கி - நாலா. 504 தைப்பனி தரையைப் பிளக்கும், மாசிப்பனி மச்சைப் பிளக்கும் என்பது பழமொழி தையும் மாசியும் வையகத் துறங்கு - ஔவையார் வை அகம் = வைக்கோல் வேய்ந்த வீடு. தை:3 தைக்க என்னும் ஏவற்சொல். பாணற்குச் சொல்வதுவும் - தனிப். காளமே. தை:4 கூத்தின் தொடக்கக் கால்தாளம் தைத் தக்கா தை. தை:5 உழவர் வண்டி, ஏர் ஓட்டலில், மாடோட்டும் குறி. தை, தை. தை:6 தைத்தல் ஊன்றுதல் பொருளது. துணி, தோல் முதலியவற்றில் ஊசியை ஊன்றித் துளைத்தல் தைத்தல், தையல் எனப்படும். அதுபோல் நிலத்தில் ஊன்றி நடுவதாம் நாற்று ஊன்றுதல் பொருளில் தை எனப்படுதல் குமரி மாவட்ட வழக்காக உள்ளது. தைஇ தைஇ = தை. தைஇத் திங்கள் தண்கயம் போலக் கொளக் கொளக் குறையாக் கூழுடை வியனகர் - புறம். 70 பொருள்: தை மாத்தின்கண் குளிர்ந்த பொய்கையைப் போலக் கொள்ளக் கொள்ளத் தொலையாத சோற்றை யுடைய அகன்ற நகரிடத்து (ப.உ.). தைப்பாறுதல் தகைப்பு ஆறுதல் > தைப்பு ஆறுதல். தகைப்பு ஆறுதல், இளைப்பு ஆறுதல் என்பவை தைப்பாறுதல் எனப்படும். களைப்பு ஆறுதல், களை ஆறுதல் என்று வழங்குதல் தஞ்சை வழக்கு. தைப்பாறுதல் நெல்லை, முகவை வழக்கு. தகைப்பு = நீர்வேட்கை. தகைப்பு நீக்குதல் (தாகம் நீக்குதல்) தெம்பாக்கிவிடும். தைப்பொங்கல் தென்செலவு சென்ற கதிர் தென்னெல்லையில் இருந்து வடக்கே திரும்பும் நாள், தைத்திங்கள் முதல்நாள். அன்று மனைப் பொங்கல் அல்லது கதிர்ப் பொங்கல் நாள் இரண்டாம் நாள், மாட்டுப் பொங்கல் நாள். அன்று திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஏனெனில் உழவு என்றோர் உலகநல - உயிர்நல - வாழ்வியல் தொழில் பற்றிப் பாடியவர் அவர். மூன்றாம் நாள் ஏறுதழுவுதல் என்னும் மஞ்சு வெருட்டு - சல்லிக்கட்டு - விழா நாள். அன்று காணும் பொங்கல் எனவும் வழங்கும். தைப்பிறந்தால் வழிபிறக்கும் என்னும் மகிழ்வில் எடுக்கப்படுவது பொங்கல்விழா. பொங்கல் நாள் ஆகிய தை முதல்நாளே தமிழர் ஆண்டுப் பிறப்பு நாளென அரசு அறிவித்த பெருமையது. நீர், பால், நெய், அரிசி, பழம், பருப்பு, சுக்கு, ஏலம், இனிப்பு முதலாம் பலபொருள்களும் ஒன்றாக உலையில் பொங்கினாலும் அவ் வவற்றின் சுவையை விடாமல் மற்றவற்றின் சுவையைக் கெடாமல் மேலும் சுவையூட்டுவது வாழ்வியல் விளக்கமாம். மாந்தர் வாழ்வும் அவ்வாறு பொங்கல் வாழ்வாய்த் திகழ வேண்டும் என்பதன் குறிப்பு விளக்கம் அதுவாம். காட்டில் கழனியில் போட்டவை எல்லாம் களத்திற்கு வந்து களஞ்சியத்திற்கும் வந்து இனிக் கவலை இல்லை எனப் பொங்கல் எடுத்த நாள், தமக்காக உதவிய இயற்கைக்கும் ஆடு மாடுகளுக்கும் உழைத்தவர்களுக்கும் நன்றி பாராட்டும் நாளாகவும் அமைந்த அருமை எண்ணி மகிழத் தக்கதாம். தமிழக இயற்கைக் கொப்பத் தை முதல்நாளே தமிழர் ஆண்டுப் பிறப்பு என்றும் அடுத்தநாள் உலக நலம் பாடிய அறவோர் வள்ளுவர் நாளென்றும் அரசு அமைத்த முறை தமிழர் பாராட்டுக் குரியவையாம். நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க விளைக வயலே வருக இரவலர் பால்பல ஊறுக பகடுபல சிறக்க பசியில் லாகுக பிணிசேண் நீங்குக அறநனி சிறக்க அல்லது கெடுக நன்று பெரிது சிறக்க தீதில் லாகுக என்னும் ஐங்குறுநூற்றின் (1, 2, 3, 5, 7, 9) வாழ்த்து, அன்றே பொங்கலுக்கு வாழ்த்திய வாழ்த்துப் போல்வதாம். தையல் தையல்:1 தையல் = பெண். காதல் களத்தில் தைக்கும் கண்ணை யுடையளாதலின் தையல் எனப்பட்ட களவுக் காரிகையின் பெயர், பின்னர்ப் பெண் பொதுமைக்கு ஆகியது. கூற்று பெண்தகையால் பேரமர்க் கட்டு - திருக். 1083 கூற்றமோ கண்ணோ - திருக். 1085 கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்தகைப் பேதைக் கமர்த்தன கண் - திருக். 1084 நகையொழிந்து நாணுமெய் நிற்ப இறைஞ்சித் தகையாகத் தையலாள் சேர்ந்தாள் நகையா நல்லெழில் மார்பன் அகத்து - கலித். 147 தையல்:2 தையல் = அழகு. அழகுக்குரிய பெயர்களுள் ஒன்று தையல் ஆகும். மாதர் காதல் என்னும் தொல்காப்பியத்தை எண்ணினால் இப்பொருத்தம் விளங்கும் (811). தையூண் இருக்கை தை நோன்பு கொள்வார் நீராடி நோன்பை முடித்து அதன்பின்னரே ஊண் (உணவு) கொள்வர். அந்நிலை தையூண் இருக்கை எனப்படும். மந்தி நிறைய முக்கி .... வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர் தையூண் இருக்கையில் தோன்றும் - நற். 21 தைலா தையலாள் > தைலா. தையலாள் = பெண்; தையல் என்பதும் அது. தைலாகுளம் = ஒருகுளம்; ஓரூர். தைலா = தெய்வப் பெயர். இதுகால் இப்பெயர் பெருவழக்காக உள்ளது. ஆனால் பொருள் புரியாமல் பயன்படுத்தப் படுகிறது. தைலாங் குருவி என்பது ஒரு சிறு குருவி. மஞ்சள் குருவி என்பது அதன் பெயர். தகைவிலான் குருவி (வெ.வி.பே.). ஓய்வு ஒழிவு இல்லாமல் பறந்து திரிதலால் தகைவு இலான் எனப்பட்டது. தகைவு = செயலற்றிருத்தல். தைவரல் தைவரல்:1 தைவரல் = தடவல். அல்குல் தைவரல் - தொல். 1209 தைவரல்:2 தைவரல் = தடவி வருதல். விசும்பு தைவரு வளியும் - புறம். 2 தைவரல்:3 இசைஎழுப்பும் வகையுள் ஒன்று. பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் - சிலப். 7:5 தைவரல் என்பது சாற்றுங் காலை மையறு சிறப்பின் மனமகிழ் வெய்தித் தொடையொடு பட்டும் படாஅ தாகியும் நடையொடு தோன்றி யாப்புநடை இன்றி ஓவாச் செய்தியின் வட்டணை ஒழுகிச் சீரேற் றியன்றும் இயலா தாகியும் நீர வாகும் நிலைய தென்ப - சிலப். 7:5 அரும்.  தொ தோ தெள வரிசைச் சொற்கள் தொகுப்பு தொகுப்பு > தோப்பு. ஒருமரம், தனிமரம். பலவகை மரங்கள் தொகுப்பாக இருந்தால் தோப்பு எனப்படும். ஒரே வகை மரங்கள் பலவாக இருந்தால் மாந்தோப்பு, புளியந்தோப்பு, வேப்பந்தோப்பு என அம்மரப் பெயரால் வழங்கும். ஒருவகை மரங்கள் மிக்கு பிற ஒன்றிரண்டு இருப்பினும் பலவற்றின் பெயராலேயே வழங்கப்படும். தோப்பின் பெயராலே ஊர்ப்பெயர் வழங்கல் உண்டு. தோப்பின் பெயரே தோப்பூர் என ஊர்ப் பெயராதலும் உண்டு. தொகை தொகை:1 தொகுத்து வைக்கப்படுவது தொகை ஆகும். பணத்தைத் தொகுப்பது பெருவழக்கு. ஆதலால் தொகை என்பது பணத்தைக் குறித்தது. பாடல்களைத் தொகுத்ததும் சொற்களைத் தொகுத்ததும் புலவர்கள் கொடை ஆயின. இவையும் தொகை எனப்பட்டன. விரிந்த ஒன்றைச் சுருக்கிக் கூறுதல் தொகை எனப்பட்டது; தொகுத்ததை விரித்துக் கூறுதல் விரி எனப்பட்டது. ஆதலால் தொகுத்தலும் விரித்தலுமாகிய நூல்கள் தொகை விரி எனப்பட்டன. பழம்பாடல்கள் மன்னர் அவையில் அரங்கேற்றப் பெற்றன. அவ் வரங்கேற்றத்திற்கு முன்னர்ப் புலமையாளர்களைக் கொண்டு தனித்தனியே கிடந்த பாடல்கள் தொகைப்படுத்தப்பட்டன. அவை குறுந்தொகை, நெடுந்தொகை கலித்தொகை என வழங்கப் பெற்றன. தொல்காப்பியர் காட்டும் நூல்வகைகளுள் ஒன்று தொகை என்பதாம். தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த் ததர்ப்பட யாத்தல் என்பவை (1597) அவை. தொகைவகை விரியில் தருக - நன். பாயிரம். தொகை:2 தொகையாவன எட்டு நூல்கள். அவை, எட்டுத்தொகை என வழங்கப்படுவன. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பவை அவை. நற்றிணை நானூறு, குறுந்தொகை நானூறு, அகநானூறு, புறநானூறு என நான்கு நூல்கள் நானூறு எனப் படினும், வரையறுத்த எண்ணுடையவை ஆதலால், தொகை நூல்கள் எட்டையும் நானூறு என்னும் பெயரால் வழங்கல் கூடவில்லை. கலித்தொகை 150 பாடல்கள்; பதிற்றுப்பத்து 100 பாடல்கள்; பரிபாடல் 70 பாடல்கள்; ஐங்குறுநூறு 500 பாடல்கள். இவை கொண்டு பொதுப்பெயர் சூட்ட வாய்க்கவில்லை. வெளிப்பட இரண்டும், குறிப்புப்பட ஒன்றுமாக முப்பெயர்கள் தொகை எனத் தலைதூக்கி நின்றன. குறுந்தொகை, கலித்தொகை என்பனவும், நெடுந்தொகை எனப்படும் அகநானூறு என்பதும் அவையாம். அவற்றுக்குரிய தொகை என்னும் பெயர் தொகுக்கப்பட்டவை என்னும் பொதுப்பெயராதற்கு உரிமையும் தகவும் உடையவை. ஆதலால், அப் பெயரே ஒப்பப் பெற்றது. ஐங்குறுநூறு ஐவர் பாடினவும், பதிற்றுப்பத்து பதின்மர் பாடியனவும் ஆயினும், தொகையேயாம். ஏனெனில் ஒன்றல்ல பல என்பது தமிழ்நெறி ஆகலின். தொக்கம் உண்ட உணவு உள்ளே செல்லாமல் வெளியேயும் எடுக்க மாட்டாமல் தொண்டைக்குள் சிக்கிக் கொள்ளுதல் தொக்கம் எனப்படும். தொக்கத்தால் மூச்சுத் திணறி உயிர் விட்டோரும் உண்டு. சிற்றூர்களில் முன்னாளில் குழலை வாய்க்குள் உறிஞ்சி எடுக்கும் மருத்துவர்கள் இருந்தனர். இப்பொழுது எளிதாக மருத்துவர்கள் எடுத்து விடுகின்றனர். தொக்கு தொக்கு:1 ஒன்றோடு ஒன்று இணைவது தொடக்கு, தொடுக்கு தொக்கு என ஆகும். இரண்டு மூன்று பொருள்களைக் கலந்து அரைக்கும் துவையலைத் தொக்கு என்பது தென்தமிழக வழக்கு. உனக்கு நான் என்ன தொக்கா? என்பது இளைத்தவனா என்னும் பொருளது. சோறு உண்ணத் தொட்டுக் கொள்வது (தொக்கு, துவையல்) போன்றவனா? என்னும் பொருளது. நெல்லை வழக்கு. தொக்கு:2 கேழ்வரகு மாவில் நீர்விட்டுக் கரைத்து, போட வேண்டும் அளவு உப்புப் போட்டு வெயிலில் காயவைத்துப், புளிக்கச் செய்யும் கூழ்மாவைத் தொக்கு என்பது கம்பம் வட்டார வழக்கு. பலவும் தொகுத்துப் புளிக்க வைத்தலால் தொக்கு, எனப் பெயர் பெற்றதாகும். தொக்கக்கால் = கூடினால்; தொக்கு, கூட்டப்பட்டது. தொக்கு தொசுக்கு தொக்கு = இடையீடு இல்லாமல் நெருக்கமாக அமைவது. தொசுக்கு= செறிவு இல்லாமல் இளக்கமாக அமைவது. வெளிப்பார்வையில் கெட்டிபட்ட மண்போலத் தோன்றும் சில இடங்கள் கால் வைத்தவுடன் உள்வாங்கும். அளறு, சேறு, களர் என்பன தொசுக்கென உள்வாங்குவன. மண்ணைப் போலவே சில செயல்களைக் கடுமையாக எண்ணி எளிமையாகச் செய்து முடித்துவிட்டால் தொக்கு தொசுக்கு என்று முடிந்துவிட்டது என்பர். உடல் உறுதியான வனைத் தொக்கு என்பதும், வலுவற்றவனைத் தொசுக்கு என ஆட்டத்தில் இருந்து தள்ளுவதும் விளையாட்டு வழக்கு. தொங்கல் காதணி வகைகளில் ஒன்று. இது தொங்கட்டான், தொங் கட்டம் எனவும் வழங்கப் பெறும். காதோடு ஒட்டி அமையாது காதொடு பொருந்திய சுரை அல்லது வளையத்தில் இருந்து தொங்குவதால் தொங்கல் எனப்பட்டது. தொங்குதல் நத்துதல், விரும்பி நிற்றல். அவனை எவ்வளவு தொங்கினாலும் ஏதும் தரமாட்டான். பின் ஏன் அவனைத் தொங்குகிறாய்? என்பது மக்கள் வழக்கு. தொங்குதல் தொடுக்குதல்: தொங்குதல் = ஒருகிளை வளைந்தோ ஒடிந்தோ தாழ்தல் தொங்குதலாம். தொடுக்குதல் = தொங்கும் கிளை கீழே வீழாமல் தொடுக்கிக் கொண்டு இருத்தல் தொடுக்குதலாம். தொங்கல், தொங்கட்டம் என்பவற்றால் தொங்குதல் பொருள் அறிக. தொடுவானம் தொடுகோடு என்பவற்றால் தொடுக்குதல் பொருள் அறிக. ஆடு குழை தின்னவும் வேண்டும்; கிளை ஒடிந்து விழாமலும் இருக்க வேண்டும் என்பதற்கு ஆடு மேய்ப்பார் அறாவெட்டு வெட்டுவர். அந்நிலையில் கிளை, தொங்கித் தொடுக்கிக் கொண்டு இருக்கும். ஆயன்வெட்டு அறாவெட்டு என்பது பழமொழி. அறா = அற்றுப் போகாத. தொங்குபாலம் இப்பால் (பக்கம்) அப்பால் ஆகிய இரண்டையும் இணைப்பது பாலம். ஆற்றைக் கடக்கவும் கடற்பகுதி கடக்கவும் அன்றி, தொடரி (தொடர்வண்டி) வழியில் கீழே பாலமும் மேலே பாலமும் என அமைத்தலும் வழக்கம். தொங்குபாலம் என்பது வேண்டும் போது மேலேதூக்கவும் கீழே இறக்கவுமாக அமைத்து இருபாலும் செல்ல அமைந்த இரும்புப் பாலமாகும். பாம்பன் பாலம் அத்தகையது. முகவையையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் பாலம் அஃதாம். தொஞ்சை தொய்தல் = வளைதல். தொய்வு = வளைவு. துரட்டி (தோட்டி) எனப்படும் தொடுவைக் கம்பைத் தொஞ்சை என்பது திருப்பரங்குன்ற வட்டார வழக்காகும். தொடு வளைவுப் பொருள் தருவது போல், தொய்வும் வளைவுப் பொருள் தருவதே. தொடங்கட்டுதல் புறப்பட்டு ஒருவர் செல்லும் போது குழந்தையோ பிறர் ஒருவரோ உடன்தாமும் வருவதாகப் புறப்படுதல் தொடங் கட்டுதல் என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு. தொடங்கும் வேளையில் தடையாதல் என்னும் பொருளது இது. தொடரி தொடர் + இ = தொடரி. தொடர்வது தொடரி. ஊர்வது ஊரி போல. வரிசையாகத் தொடுக்கப்பட்ட பெட்டிகளை யுடையது தொடரி (Train) ஆகும். தொடர்மொழி, தொடர்கதை, தொடர் ஓட்டம் என்பன தொடர்வனவாம். ஒன்றோடு ஒன்று தொடர்புடையது அது. தொடரன் என்பது புத்திலக்கணம். தொடர்பு நட்பாவது பழவழக்கு. தொடர் ஒன்றை ஒன்று தொட்டு நிற்பது தொடர். பொருள் தொடர்வது பொருட்டொடர். சிலப்பதிகாரம் பொருள் தொடர்நிலைச் செய்யுளை யுடையது. சொல் தொடர்ந்து முடிநிலை எய்துவது சொற்றொடர். கதை தொடர்ந்து இதழ்தோறும் வருவது தொடர்கதை. தொலைக்காட்சியில் தொடர் கதைக்கே கூட்டம் அமர்ந்து விடுகிறது. மலை தொடர்ந்து அமைவது மலைத்தொடர். ஊர்தியாகப் பயன்படும் தொடர், தொடர்வண்டி; தொடரி என்பதும் அது. தொடர் கொலை, தொடர் கொள்ளை என்பவை நாளும் செய்தித்தாளில் தொடர் செய்தி. சங்கிலி எனப்படுவது தொடுத்து இணைக்கப்பட்டதாகலின் பழநாளில் தொடர் எனவே வழங்கப்பட்டது. தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய - புறம். 74 தொடர்நிலைச் செய்யுள் சிலப்பதிகாரத்திற்கு இயலிசை நாடகப் பொருட்டொடர் நிலைச் செய்யுள் என்னும் பெயருண்மை அறிக. * காப்பியம், பெருங்காப்பியம், அகலக்கவி காண்க. தொடர்பு தொடர் > தொடர்பு = நட்பு, பாலுறவு. தொடு, தொடர், தொடர்பு என்பவை நெருக்கம் காட்டும் சொற்கள். பழக்கத்தாலும், உறவாலும் தொடர்பைக் குறியாமல் அதற்கு மேலும் வளர்ந்து பாலுறவுப் பொருளாகவும் வழக்கில் உள்ளது. அவனுக்கும் அவளுக்கும் நெடுங்காலமாகத் தொடர்பு என்னும் வழக்கு அதனைக் காட்டும். அத்தொடர்பு முறையல்லாத முறையில் ஏற்பட்டது என்பது அறியத்தக்கது. சான்றோர் தொடர்பு நட்பாம் தொடர்பு என்ப வற்றுக்கும் இத் தொடர்புக்கும் உள்ள எதிரிடைப் பொருள் பெரிதாம். இனி ஒருவர் குற்றத்தில் மற்றொருவரும் கூடியிருந்தால் இச்செயலில் அவர்க்கும் தொடர்பு உண்டு. அவர் தொடர்பு இல்லாமல் இது நடந்திராது என்பர். தொடல் தொடுத்த வளையங்களால் அமைந்த பின்னல் சங்கிலி. அது தொடர் என்பது. தொடர்தலால் பெற்ற பெயர் அது. தொடுதல் என்பதும் தொடர்தலே ஆதலால் தொடல் என்பது சங்கிலி என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது. தொடர்ப்படு ஞமலி (சங்கிலியில் கட்டப்பட்ட நாய்) என்பது புறநானூறு (74). தொடாம் பழம் தொடுத்து வைக்கப்பட்ட தொடர்போல் சுளைகளை யுடைய ஆரஞ்சுப் பழத்தைத் தொடாம் பழம் என்பது இலாலாப்பேட்டை வட்டார வழக்காகும். தொடராம் என்பது தொடாம் எனப் பேச்சு வழக்குப் பெற்றதாகலாம். தொடி தொடு > தொடி. தொடுதல் = வளைவு. எ-டு: தொடுவை. தொடி = பழநாள் முகத்தளவை வகையுள் ஒன்று. தொடிப்புழுதி கஃசா உணக்கின் - திருக். 1037 தொடி = ஒருபலம்; கஃசு = கால்பலம். தொடுகோல் வளைந்த குறடு உடைய கம்பு தொடுவையாகும். அது தொடுகோல் எனக் கம்பம் வட்டாரத்தில் வழங்குகிறது. தொடுத்தடி, தொடுக்கம்பு எனவும் வழங்கும். தொடுவைக் கம்பு என்பது பொதுவழக்கு. தொடுதல் தொடுதல்:1 தொடுதல் = அயற்பால் மேல் கைபடல், வஞ்சினம் கூறல். தொடுதல் என்பது இயல் நிலையில் குறைவற்றது. ஆனால், தொடுதற்கு உரிமை யில்லாரைத் தொடுதல் என்னும் வழக்குப் பொருளில் இடம்பெறும்போது பழிப்புக்குரியதாகின்றது. தொடுப்பு என்பதும் பாலுறவுச் சொல்லாக வழக்கில் உண்டு. இனிப் பகையுடையார், என்னைத் தொடு பார்க்கலாம்; தொட்டுவிட்டு உயிரோடு போய் விடுவாயா? என வஞ்சினம் கூற இடமாக இருப்பதும் தொடுதலாக அமைகின்றது. தொடுதல்:2 காலில் அணியும் மிதியடி போடுதல் தொடுதல் எனப்படும். மிதியடி தொட்டார் என்பர். கையால் தொடுதல் அன்றிக் காலால் தொடுதலுக்கும் ஆயது. கையில் தொடுக்கும் தொடி (வளையல்) என்பதை எண்ணலாம். மிதியடி போடுதலைத் தொடுதல் என்பது திருச்செங்கோடு வட்டார வழக்காகும். தொடுதோல் (செருப்பு) என்பது இலக்கிய ஆட்சி (அகம். 34). தொடுதல்:3 தலைமை உணவுக்குத் தக்க துணையுணவு கொள்ளுதல் தொடுதல் ஆகும். தொடுகறி என்னும் பெயரும், தொட்டுக் கொள்ள என்ன இருக்கிறது? என்னும் வினாவும் தொடுதல் உண்ணுதல் பொருட்குரிமையை விளக்கும். வட்டிலைச் சூழ அமைந்த தொடுகறிக் கலங்களை, நாள்மீன் விராய கோள்மீன்களுக்கு உவமை காட்டும் சிறுபாண் (242 - 245). தொடுதோல் தோலால் அமைந்ததும் காலைச் சுற்றிக் கிடப்பதுமாம் செருப்பு, தொடுதோல் என வழங்கும். தொடு = வளைவு. எ-டு: தொடுவை, தொடை, தொடையல், தொடலை. தொடுதோல் பூண்டவர், தொடுதோல் அடியர். தொடும்பு தோல் என்னும் பொருளில் தொடும்பு என்பது இறையூர் வட்டார வழக்கில் உள்ளது. தொடக்கு என்பது தசைப்பொருளது. தொடுதோல் என்பது செருப்பு. ஆதலால் தொடு என்பது தோல் ஆகித் தொடும்பு எனப்பட்டிருக்க வேண்டும். தொடுத்து அமைந்தவை தொடர், தொடக்கு, தொடும்பு என்பனவாம். தொடுவை தொடு + வை = தொடுவை. வைக்கோல் உதறி உலரவிடவும், வைக்கோலைத் திரட்டவும் மரக்கிளையை வளைக்கவும் ஆகிய ஒரு கருவி தொடுவையாகும். தொடு = வளைவு; வளைவமைந்த கருவி. தொடை தொடை:1 தொடுக்கப்பட்டது தொடை, தொடையல் என்னும் மாலையாம். தொடை:2 பாடல் அழகு நயம் கருதி எதுகை, மோனை எனத் தொடுக்கப் படுவதும் தொடையாம். எதுகை, மோனை, முரண், இயைபு, அளபெடை என ஐந்தொடை வகை உண்டு. செந்தொடை என்பதும் யாப்புத் தொடையே. அடியின் முதல் எழுத்து அளவால் ஒத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றுவது எதுகைத் தொடை. அடியின் முதல் எழுத்து ஒன்றுவது மோனை. ஒருபொருளுக்கு ஒருபொருள் முரணாக அமைந்தது முரண். அடியிறுதி ஒத்தமைவது அல்லது இயைவது இயைபு. அடிதோறும் அளபெடை வருவது அளபெடை. ஓரடிக்குள் எதுகை மோனை முதலியன வந்தால் அடியெதுகை அடிமோனை என்பவை முதலாக வழங்கப்படும். ஓரடிக்குள் அமையும் தொடை இணை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், கூழை ஒரூஉ, முற்று என ஆறு வகைப்படும். முதலிரண்டு சீரும் எதுகை, மோனை முதலியவற்றால் இணைவது இணை. முதல் மூன்று சீரும் எதுகை, மோனை முதலியவற்றால் இணைவது கூழை. முதலும் கடைசியும் எதுகை, மோனை முதலியவற்றால் இணைவது ஒரூஉ. இரண்டாம் சீர் ஒழிய எதுகை முதலியவற்றால் இணைவது மேற்கதுவாய். மூன்றாம் சீர் ஒழிய எதுகை முதலியவற்றால் இணைவது கீழ்க்கதுவாய். நான்கு சீரும் எதுகை, மோனை முதலியவற்றால் இணைவது முற்று. எத்தொடையும் இல்லாமல் இயற்கை அழகொடும் அமைந்தது செந்தொடை. தொடை:3 இடுப்பின் கீழ் தொடுக்கப்பட்டுள்ள கால்களின் மேற்பகுதி தொடையாம். நோய்தபு நோன்தொடை - பதிற். 44 தொடை:4 தொடுக்கப்படும் அம்பு, தொடை எனப்படும். தொடை:5 எலும்பு நரம்பு முதலியவற்றால் தொடுக்கப்பட்டுள்ள உடல் தொடை எனப்படும். தொடை:6 வாழை நார் பூத்தொடுக்க உதவுவதால் அதனைத் தொடை என்பதும் வழக்கு. வாழைத் தொடை என்பர். தொட்டப்பா அப்பாவாகிய தந்தைக்குப் பின் அறிவுத் தந்தையாக (ஞானத் தந்தையாக) விளங்கும் கிறித்தவக் குருவராம் தந்தையைத் தொட்டப்பா என்பது நெல்லைக் கிறித்தவர் வழக்காகும். தொட்டு வாழ்த்துரைக்கும் அப்பா என்னும் பொருளில் தொட்டப்பா எனப்பட்டாராம். தொட்டப்பாட்டு தொட்டில் கட்டுதலைத் தொடுத்தல் என்பர். தொட்டிலில் குழந்தையை இட்டுப் பாடும் தாலாட்டுப் பாடலை, ஒட்டன் சத்திர வட்டாரத்தார் தொட்டப்பாட்டு என்பர். தொடுக்கப் பட்டது தொட்டம் என்க. தொட்டாற் சுருங்கி தொட்டாற் சுருங்கி:1 படர்கொடி வகையுள் ஒன்று தொட்டாற் சுருங்கி. ஒருவர் கை, கால் பட்டாலோ விலங்கு பறவை தொட்டாலோ இலை அப்படியே மடங்கிச் சுருங்கிப் போகும். தொட்டால்வாடி, தொட்டாற் சிணுங்கி என்பனவும் இது. ஆனால், ஆய்ந்து பார்த்தால் இரண்டு மூன்று முறை தொட்டால் சுருங்கும். பின்னர்ச் சுருங்குவது இல்லை. தொட்டாற் சுருங்கி:2 புழுவகையுள் ஒன்று. ஆயிரங்கால் பூச்சி என்பது ம.வ. மழைக்காலத்தில் பெருகக் காணும் இப்புழு, தொட்ட வுடன் சுருண்டு விடும். சிறிது நேரம் சென்று தன் இயல்பில் செல்லும். இதுவும் சிலமுறை தொட்டால் சுருங்குவது இல்லை. தோலுக்கு மேல் தொண்ணூறடி, துடைத்துப் பார்த்தேன் ஒன்றுமில்லை என்னும் பழமொழியை நினைக்கத் தூண்டும். அடிக்கு அஞ்சுவது இரண்டு மூன்று முறைதான். பின்னர் இயல்பாகி விடும் என்பதாம். தொட்டாற் சுருங்கி:3 தொட்டாற் சுருங்கி = அழுகணி, ஏதாவது சொல்லப் பொறாதவன். தொட்ட உணர்வால் தானே சுருங்கும் செடி, தொட்டாற் சுருங்கி. அதனைப் போலச் சில குழந்தைகள் தொட்டாற் சுருங்கி எனப்படும். ஒருசொல்லைச் சொல்லப் பொறுக்காமலும், தொட்டால் தொடப் பொறுக்காமலும் அழும் குழந்தையைத் தொட்டாற் சுருங்கி என்பர். அந்நிலையில் வளர்ந்தவர்களும் இருப்பதுண்டு. விளையாட்டுக்கு ஒன்றைச் சொன்னாலும் விளையாட்டாகக் கொள்ளாமல் சண்டைக்கு வந்து விடுவர். அப்படி அவர்கள் இயல்பு இருப்பதை, அறிந்து பலரும் அதே விளையாட்டுக் காட்டி, அத்தன்மையே இயல்பாகப் போய்விட ஆவதும் உண்டு அது தொட்டாற்சுருங்கி உன்னிடம் வராது என்பது வழக்கு. தொட்டி தொடுதல் = தோண்டுதல். தொட்டி = தோண்டப்பட்ட பள்ளம், பள்ளம் போன்ற நீர்த் தொட்டி. தொட்டிப் பள்ளமாகத் தளம் கிடக்கிறது; நீர் வாட்டம் பார்க்க வில்லையா? என்பது கட்டடம் கட்டும் கொத்தர் வழக்கம். தொட்டில் குழந்தைகள் படுக்கக் கட்டில் உண்டு. தொட்டிலும் உண்டு. தொட்டில் கட்டிப் போட்டுத் தாலாட்டுதலில் அண்மைக் காலம் வரை தாய்மார் பூரித்ததுண்டு. இப்பொழுது தாலாட்டுப் பாடுதல் அரிதாகிவிட்டது. தொடுதல் = தோண்டுதல். கற்பாறையில் பள்ளமாகத் தோண்டி அமைக்கப்பட்டது தொட்டில் எனப்பட்டது. பெருங் கல்லைக் குடைந்து மாடு நீர்பருக வைத்ததும் தொட்டில் (தொட்டி) ஆயது. நாற்புறமும் ஓடு தகரம் கூரை ஆயவை அமைத்து ஊடு வெளியமைந்த வீடு தொட்டிக் கட்டு எனப்பட்டது. ஊரெல்லாம் பட்டிதொட்டி எனலுமிருந்தது. தொட்டில் என்னும் சொல் இப் பழமைகளை யெல்லாம் கொண்டு வந்து விடுகிறது. தொட்டனைத் தூறும் மணற்கேணி - திருக். 396 என்பதைத் தொட்டில் காட்டிக் கொண்டுள்ளது. தொட்டுக்கொள் துடைத்துக்கொள் தொடுதல், துடைத்தல் இரண்டும் சிறிது, மிகச் சிறிது என்னும் அளவு காட்டுவதாய் மக்கள் வழக்கில் உள்ளன. எண்ணெய், குழம்பு, சாறு, சோறு முதலியவை ஒருவர் தேவைக்கு வேண்டுமளவு இல்லாமல் பாதியாய், கால் அளவாய் உள்ளது. அந்நிலையில் வேறொருவருக்கும் அதில் பங்கு போடும் நிலை உண்டானால், இங்கே இருப்பதே தொட்டுக்கோ துடைத் துக்கோ என்று இருக்கிறது. இதில் எப்படி வாரி வழங்குவது என்பர். தலைக்குத் தேய்க்கும் எண்ணெய் குறைந்த நிலையில் இருந்து கொட்டிவிட்டால், தொட்டுக்கோ தொடைத்துக்கோ என்று இருந்தது. அதையும் தொலைத்து விட்டாயா? என்பர். துடைத்தல் = தடவுதல், வழித்தல். தொட்டு விளையாடல் தமிழக விளையாட்டு வகைகளுள் ஒன்று தொட்டு விளை யாடல். தொடுவான் ஒருவன்; தொடுபடாமல் ஓடுவார் பலர். ஒருவனைத் தொட்டுவிட்டால் அவன் தொடுபவனாக மாறி விளையாடுவான். தொடுபடாமல் இருப்பான் வெற்றியாளன். நொண்டியடித்து ஒருவட்டத்துள் தொட்டு விளையாடல் நொண்டி எனப்படும். தொண்கலித்துறை மாலை (நவகாரிகை மாலை) கட்டளைக் கலித்துறை ஒன்பதால் பாடப்பெறுவது நவகாரிகை மாலை எனப்பெறும். இக்காரிகை தெய்வத்தின் மேல் பாடப்பெறுவதாகும். திருவண்ணாமலை அருணாசலேசர் நவகாரிகை மாலை இவ்வகையைச் சார்ந்ததாகும். நவம் (வ) = ஒன்பது; காரிகை = கட்டளைக்கலித்துறைப் பாடல். தொண்சுவை (நவரசம்) ஒன்பான் சுவைகளையும் சுவைக்கு ஒன்றாக ஒரே வகை யாப்பால் பாடுதல் நவரசம் எனப்படும். பழனித் திருவாயிரத்தில் நவரசம் ஒன்பதாம் பகுதியாம். தொண்சுவை மாலை (நவரச மஞ்சரி) நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென் றப்பால் எட்டே மெய்ப்பா டென்ப என்பார் தொல்காப்பியர் (மெய்ப். 3). இவ்வெட்டனுடன் சமனிலை என்பதொன்றையும் சேர்த்து ஒன்பான் சுவை என்பர். நவரசம் என்பததுவே. சுவைக்கு ஒன்பதாக ஒன்பான் சுவைக்கும் எண்பத்தொரு பாடல் பாடுதல் நவரச மஞ்சரி எனப்பெயர் பெறும். வண்ணச் சரபம் தண்டபாணி அடிகளின் திருச்செந்தில் நவரச மஞ்சரி இவ்வகையில் எழுந்ததாம். தொண்டான் தோண்டிக் குழி அல்லது பள்ளம் செய்தல் தொண்டு எனப்படும். அக் குழிபோல் அமைந்து பொருள் போட்டு வைக்கப் பயன்படும் துணிப்பையையும், தோல்பையையும் தொண்டான் என்பது இறையூர் வட்டார வழக்காகும். தொண்டு தொண்டு = துளை. தொண்டு என்பது துளை, பணிசெய்தல், அடிமை என்னும் பொதுப்பொருளில் வழங்கும். அது, அடைப்பின் ஊடு புகுந்து செல்லும் வழி அல்லது பாதைக்குப் பெயராக நெல்லை வழக்கில் உள்ளது. தொண்டுவழி என்பதும் அது. தொண்டு தொசுக்கு தொண்டு= ஓட்டை அல்லது துளை. தொசுக்கு= மெல்லெனக் கீழே ஆழ்த்திவிடும் அளறு. தொண்டு தொசுக்கு என்று சொல்லாமல் இருக்க மாட்டாயே என்பது வழக்கு. குறை கூறாமல் இருக்க மாட்டாயே என்பது குறிப்பு. தொண்டு என்பதன் குறை, ஓட்டை; தொசுக்கின் குறை, தொசுக்கெனக் கீழே இறங்குதல். தொசுக்கு, தொறுக்கென இறங்குதல் எனவும் சொல்லப்படும். குற்றவகை தொண்டு தொசுக்கு என்க. தொண்டை நீர்க்கொடி வகையுள் ஒன்று தொண்டை; உள்துளை உடையது. உணவும் காற்றும் செல்லும் குழாய்கள் உள்ள கழுத்துப் பகுதிக்குத் தொண்டை என்பதும் பெயர். தொண்டு போடுதல் துளைத்தல் ஆகும். பழநாளில் எண் வரிசை ஆறு, ஏழு, எட்டு, தொண்டு, பத்து என்று இருந்து பின் அவ்விடத்தில் தொண்டு என்பது ஒன்பது ஆயிற்று. தவித்த வாய்க்கு நீரும் பசித்த வயிற்றுக்கு உணவும் தருவது தொண்டு எனப்பட்டுப் பின்னர் மற்றை மற்றை உதவி செய்தலையும் தொண்டு என்றனர். மக்கள் தொண்டு, இறைவன் தொண்டாகித் திருத்தொண்டர் எனப்பட்டனர். நீர் குடைந்து உட்சென்ற நிலப்பகுதி தொண்டு எனப்பட்டுத் தொண்டியாயது. துறைமுகம் என்பது அது. உணவெனப்படுவது நீரும் சோறும்; அவற்றைத் தருவோர் உயிர் தருவோர் (புறம். 18). தொண்மணி (நவமணி) ஒன்பான் மணிகளின் பெயரும் அமைய, ஒன்பான் பாடல்கள் இயற்றல் நவமணியாம். விருதை சிவஞான யோகிகள் இயற்றிய ஒரு நூல் சேறை நவமணி மாலை என்பது. தொண் = ஒன்பது. தொண்மணிமாலை (நவமணி மாலை) வெண்பா முதலாக வேறுபட்ட பாவும், பாவினமும் ஒன்பது வர அந்தாதியாகப் பாடுதல் நவமணி மாலை எனப்பெறும். நவரத்தின மாலை என்பதும் இது. ஒன்பது பாடல்களிலும் ஒன்பது மணிப் பெயர்கள் வரும். வெண்பா முதலா வேறோர் ஒன்பது நண்பாக் கூறல் நவமணி மாலை - இலக். பாட். 76 பாவே இனமே என்றிவை இரண்டும் மேவிய வகையது நவமணி மாலை - பன்னிரு. 294 ஆசிரிய விருத்தம் ஒன்பது வருவது நவமணி மாலை என்று நவநீதப் பாட்டியல் (52) கூறும். அந்தா தித்து வெண்பா ஆதிய பாவும் பாவினமு மாக ஒன்பது செய்யுள் அணிபெறச் செப்புவ ததுதான் நவமணி மாலையாம் நாடுங் காலே - முத்துவீ. 1051 இவ்விலக்கணம் அமையப் பாரதியாரால் செய்யப் பெற்ற பாரதமாதா நவரத்தின மாலை புதுநெறியினதாகும். வெண்பா, கட்டளைக் கலித்துறை, வெண்டளைக் கலிப்பா, கொச்சகம், கலிநிலைத்துறை, கட்டளைக் கலிப்பா, எழுசீர் விருத்தம், ஆசிரியப்பா, சந்த எண் சீர்ப்பா என ஒன்பது வகை யாப்பில் அந்தாதியாகப் பாடப்பட்ட நவமணி மாலை, பழனித் திருவாயிரத்தில் உண்டு. இயற்றியவர் வண்ணச்சரபம் தண்டபாணி அடிகள். தொதுக்கனும் பொதுக்கனும் தொதுக்கன் = வலிமையற்றவன். பொதுக்கன் = வலிமையற்றுப் பொதி போலத் தோற்றமளிப்பவன். கால் தள்ளாடி நடையிடும் வலிமை இல்லாதவன் தொதுக்கனாவான்; அவன் மெலிந்தும் காட்சி அளிப்பான். ஆனால், பொதுக்கனோ தோற்றத்தில் கனமாக இருப்பான். தொதுக்கன் அளவும் நடக்கவோ செயலாற்றவோ மாட்டான். சிறு செயல் செய்யவும் இளைத்துக் களைத்துப் போய்விடுவான். தொதுக்கன் தொதுக்கட்டி என்றும், பொதுக்கன் பொதுக்கட்டி என்றும் வழங்கப்படுவதுண்டு. தொத்தல் தொத்துதல் என்பது ஒன்றைச் சார்ந்து இருத்தல், மேலே ஏறி இருத்தல் ஆகும். தன் வலிமைக் குறைவால் பிறரைச் சார்ந்து இருத்தல் தொத்தல். ஆதலால், அது தாமே ஒன்றைச் செய்ய இயலாமல் இளைத்தவனைக் குறிப்பதாக நெல்லை வழக்கில் உள்ளது. அவர் ஒரு தொத்தல் என்பது இயலாதவர் என்பதாம். மரமேறல், மாடியேறல், மலையேறல் முதலியவை தொற்றியும் நிமிர்ந்தும் கிளர்ந்தும் ஏற வல்லதாம். அவ்வாறு ஏற இயலாதவன் தொத்தல் என வழங்கப் பெற்றுப் பின்னர்ச் செயலற்றவன் என்னும் பொருள் பெற்றிருக்கலாம். தொற்று + அல் = தொற்றல்; தொற்றுதல் அல்லாதவன் தொத்தல். x.neh.: வற்றிக் காய்ந்தது வற்றல்; அது வத்தல் எனப்படுவது போல. தொத்தலும் வத்தலும் தொத்தல் = நோயால் நலிந்தவன். வத்தல் = வறுமையால் மெலிந்தவன். கால் தள்ளாடி நடப்பாரைத் தொத்தல் என்பது வழக்கம். சிலருக்குத் தொத்தன் எனப் பட்டப் பெயரும் உண்டு. ஊன் வாடி மெலிந்து தோன்றுதல் வற்றலாம். மற்றை வற்றல்களையும் கருதுக. வாடலினும் வற்றிச் சுருங்கியது வற்றல் என்க. வற்றல் என்பதை வத்தல் எனவே பெரும்பாலும் வழங்குதலும் அறிக. தொத்தா தாயைத் தொடுத்துப் பின்னே வந்த தாய் தொடுத்த தாய் ஆவர். சின்னம்மை, சிற்றாத்தாள் சின்னாத்தா என்னும் முறைப் பெயர்கள் தெற்கு வழக்கில் உண்டு. காஞ்சி, செங்கற்பட்டு வட்டாரத்தில் தொத்தா வழக்கு உண்டு. தொந்தம் சொந்தம் > தொந்தம் = உறவுடையவர். சொந்தமானவரெல்லாம் தொந்தமானவரா? என்பதால் உரிமை உறவும் உதவுதலும் தொந்தம் எனப்படுதல் அறியலாம். தொந்தமாவது தொற்றிக் கொள்ளப்பட்ட உறவு என்னும் பொருளது. சிலர் இளம் வயதிலேயே பெற்றோர் உற்றோரை இழந்துவிட்டால் அவனுக்கு வாய்த்த தொந்தம் அவ்வளவுதான்! விதைத்தவன் தண்ணீர் விடாமலா போவான் என ஆறுதல் கூறுவர். தொந்தி தொப்பை தொந்தி = வயிறு பருத்துப் போதல் அல்லது பருத்த வயிறு. தொப்பை = பருத்த வயிற்றில் விழும் மடிப்பு. தொந்தி தொப்பை இரண்டும் பருவயிற்றைக் குறிப்பவை யாய் வழக்கில் இருப்பினும் இவ் வேறுபாடு கருதத் தக்கதாம். தொந்திப் பிள்ளையார் எனப் பிள்ளையார் பெயருண்டு. தொந்தியப்பன் என்பதும் பெயரே. அது பிள்ளையாரைக் கருதியது. மத்தள வயிறன் என்பார் அருணகிரியார் (திருப்புகழ் க.வா.). தொம்பை என்பது தவசம் போட்டு வைக்கும் குதிர் ஆகும். தொய்வு தொப்பு. தொப்புள் என்பவை தொப்பையை விளக்கும். தொப்பி பனம்பழ நார்ச்சதைத் திரளையை (உருண்டையை)த் தொப்பி என்பது தூத்துக்குடி வட்டார வழக்கு. முற்காலத்தில் தோப்பி என்பதொரு மதுவகை சொல்லப்பட்டது. நெல்லரிசியில் இருந்து எடுத்த மதுப்போலப் பனம்பழச் சாற்றில் இருந்து எடுக்கப்பட்டது தோப்பி எனப்பட்டதாகலாம் என்பதை நினைவூட்டும் ஆட்சி இது. காற்றுப் புகுந்து நீர்க்குமிழாதலும், துணி குமிழாதலும் தொப்பி எனப்படுதல் கொண்டு தொப்பி உருண்டைப் பொருளதாதல் அறியலாம். தொப்பை தொப்பி உருண்டைப் பொருள் தருவது போல உருட்டப்பட்ட சாண உருண்டையைப் தொப்பை என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு. தொப்பை என்பது திரண்ட வயிறு (தொந்தி) என்னும் பொருள் தருவது பொதுவழக்கு. தொமுக்கு தொம் > தொம்பு > தொமுக்கு. தொமுக்கு என்பது வயிறு பெருத்து ஓங்கு தாங்காக இருப்பவரைத் தொமுக்கு என்பது திருப்பூர் வட்டார வழக்கு. அத்தகையவரைத் தொமுக்கடா என்பது நெல்லை வழக்கு. தொமுக்கு = பெரியது, பருத்தது. தொம்பை தொம்பை:1 நெல் சோளம் கம்பு வரகு முதலிய தவசங்களைப் போட்டுவைக்கும் குதிர்களைத் தொம்பை என்று வழங்குவது உண்டு. விருத்தாசலப் பகுதி வழக்கு அது. குதிர் என்பது குலுக்கை எனவும் வழங்கும். தொம்பை என்பது வயிற்றைக் குறிப்பது பொதுவழக்கு. தொப்பை, தொந்தி என்பனவும் அது. தொம்பை:2 நெற்கூட்டைத் தொம்பை என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு. தொப்பை வயிறு ஆவது போல, உவமை வகையால் நெற்கூடு தொம்பை எனப்பட்டதாம். நிரம்ப உண்பவனைத் தொம்பை என்பது பட்டப்பெயர். தொம்பையா எனப் பெயரும் உண்டு. பெருவயிறர் என்னும் பொருளில் பிள்ளையாரைக் குறிப்பது அது. சான்று: முக்குறுணிப் பிள்ளையார். முக்குறுணி= மூன்று மரக்கால் (அ) 12 படி. தொயில் பழநாளில் மகளிர் மார்பில் எழுதப்படும் தொய்யில் என்பது இலைச்சாறு - பச்சிலைச் சாறு - கொண்டு எழுதப்பட்டதாம். அதற்குப் பயன்பட்ட கீரைப் பெயர் சாறுமிக்க தொயில் கீரை என்பதாம். அக் கீரை அதனை நினைவூட்டும் வகையில் இன்றும் முகவை மாவட்ட வழக்கத்தில் உள்ளது. தொரட்டு உன்னோட தொரட்டுத்தான் எப்போதும் என்பதில் தொரட்டு தொல்லை என்னும் பொருளது. இது நெல்லை வழக்கு. மூக்கடைப்பு தொரட்டு எனப்படும். மூக்கடைப்புப் போன்ற தொல்லை என உவமை வழக்கு ஆகும். தொலித்தல் தொலித்தல்:1 தொலித்தல் = தோல் போக்கல், இடித்தல், அடித்தல். தோல் என்பது தொலி எனவும் வழங்கும். தவசங்களின் தோலைப் போக்குமாறு உலக்கையால் இடிப்பதைத் தொலித்தல் என்பது வழக்கு. அவ்வழக்கில் இருந்து அடித்தல் பொருளும் உண்டாயிற்று. சண்டையில் தொலித்துவிட்டான் என்பது கடுமையாக அடித்துவிட்டான் என்னும் பொருளுடன், தோல் உரிய காயங்கள் உண்டாக்கிவிட்டான் என்னும் பொருளும் உண்டாயிற்று. இடித்தல், தொலித்தல், குற்றுதல் என்பனவெல்லாம் இடித்தல் சார்புடைய சொற்களே. தொலித்தல்:2 அவனை விட்டோம் என்றால் தொலித்துப் போடுவான் என்னும் வழக்கால் எவருக்கும் இல்லாமல் முற்றாக உண்ணு தலைத் தொலித்தல் குறிப்பது விளங்கும். தொலைத்தல் அழித்தலாகலின் அச்சொல் தொலித்தலாக மருவியது எனினும் ஆம். தொலித்தல் உமி போக்கல் என்னும் பொருளில் வழங்கப் பெறும் சொல். தொலை தொல் என்பதன் வழியாக வந்தது தொலை. அத்தொலை, காலத்தொலை, இடத்தொலை என இரண்டாம். காலமும் இடமும் முதற்பொருள்களாம் (தொல். 950). தொல்காப்பியம் பழங்கால மரபுகளைக் காக்கும் நூலாகும். தொல்லோன் பழமையோன். தொல்லோன் காண்க என்பது திருவாசகம். இவை காலத் தொன்மைய. தொலைவு என்பது இடத்தொன்மை; அப்பாலாய் அப்பாலுக்கு அப்பாலாய் நிற்கும் இடத்தொன்மை. அத்தொலை வழியாகவே தொலைப்பேசி, தொலைக்காட்சி, தொலைத் தொடர்பு, தொலைவரி என்னும் அறிவியல் புத்தாக்கச் சொற்கள் கிளர்ந்துள்ளன. காலமும் இடமும் பெரிதும் கடத்தலால் தொலைதல் (தொலைந்து போதல்) உண்டாயது. அவற்றைத் தொலையாமல் காக்கும் முயற்சியால் தொல்லையும் உண்டாயது. தொல்லை பழமையும் துயரும் சுட்டுதல் அறிக. தொலைவு இடத்தொலைவையும், தொலைந்து போதலை யும் குறித்தலால் பொருள் தெளிவுக்காகத் தொலைக் காட்சி, தொலைப்பேசி என்றனர். இடை ஒற்று இல்லாக்கால் தொலைந்து போய காட்சி (தொலைகாட்சி), தொலைந்து போன பேசி (தொலைபேசி) என ஆகும். இதனை விதிவிலக்குக் காட்டி இருவகையாலும் (தொலைபேசி, தொலைப்பேசி) வழங்கலாம் என்பது விதி இருக்க விதியில்லாமையைத் தேடிக் காட்ட வேண்டியது இல்லையாம்! தொல், தொன் தொன்மை என்றாகும். தொன்மையெலாம் நன்மையாவனவோ புதுமையெலாம் தீமை யாவனவோ என்பர். தொன்மூதாளர், தொன்மூதாலம்; அத்தொன்மையைத் தொல்லை (பழமை) என்பதும் குறித்தல் தொல்லை நான்மறை என்பதால் அறியலாம். தொல்லை இரும்பிறவி என்பது பழமையும் துன்பும் சுட்டும் இரட்டுறல். தொலைப்பேசி தொலை + பேசி = தொலைப்பேசி. தொலைப்பேசி என வேண்டா தொலைபேசி என்றால் தகும் என்பவர், தொலைகாட்சி என எழுதுவதோ சொல்வதோ இல்லை. தொலைதொடர்பு என எழுதுவதோ பேசுவதோ இல்லை. ஏனெனில் தொலைந்து போய காட்சி, தொலைந்து போன தொடர்பு எனப் பொருள்தரும் என்பதை அறிகிறார்கள். ஆனால், தொலைபேசி என்றால் தொலைந்த பேசி எனப் பொருள் தருதலை உணர்வதில்லை. தொலைக்கண் பேசுவதும், தொலைவிலிருந்து பேசுவது கேட்பதும் தொலைப்பேசியே எனல் தகவாம். பலர் சொல்கிறார் எழுதுகிறார் என்று பிழை வழக்குக் கொள்வது பிழையே அல்லாமல் மொழிச்செப்பம் ஆகாதாம். தொல்காப்பியம் தொல்காப்பிய முன்மை திருக்குறள், தொகை நூல்கள் ஆயவற்றுக்கு முன்னரே தொல்காப்பிய வழக்குகள் மறைந்து போயின. அவரே, தொல்லோர் வழக்கு என்று சொல்லிய வழக்குகள் பின்னவர்க்கு வாய்க்கும் என்பதற்கு இடமில்லையே! இவ்வாறான வழக்கு களைப் பழைய உரையாசிரியர்கள் அவ்வந் நூற்பா உரை களிலேயே சுட்டியுளர். பின்னை ஆய்வாளர்களும் கூரிய சீரிய வகையில் கண்டு தொகுத்தும் உள்ளனர். விரிவுமிக்க அவற்றை முழுவதாகச் சுட்டாமல் சிலவற்றைச் சுட்டுவோம். அதுவே பெரிதாம் அளவில் நிற்பது. தொல்காப்பியர் நாளில் பாட்டி என்பதொரு சொல் வழங்கியது. இன்று நாம் பாட்டி என்பதற்குக் கொள்ளும் பொருள் தாய் தந்தையரைப் பெற்றவரைப் பாட்டி என்னும் முறைப்பெயராக அழைப்போம். சங்கநாளிலே பாட்டி என்றால் பண்ணிசைத்துப் பாடும் பாணன் மனைவியைக் குறித்தது. தொல்காப்பியர் காலத்திலோ பன்றி, நாய், நரி என்பவற்றைக் குறித்தது அது. பாட்டி என்பது பன்றியும் நாயும் நரியும் அற்றே நாடினர் கொளினே என்பவை மரபியல் நூற்பாக்கள் (35, 36). கோழி என்னும் பொதுப்பெயர் சேவற்கோழி, பெட்டைக் கோழி எனப் பால்பிரிவு கொண்டு உரைக்கப்படும். இவற்றில் சேவல் என்பது தொல்காப்பியர் நாளில் பறப்பனவற்றுள் ஆண்பால்களுக்கெல்லாம் பெயராக இருந்துள்ளது. தோகை அமைந்த மயில், ஆண்பால் எனினும் அதனைச் சேவல் எனல் ஆகாது. அதன் பெண்மைச் சாயல், சேவல் பெயரீட்டுத் தடையாகும் என்பது தொல்காப்பியம். சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவணும் மாயிரும் தூவி மயில்அலங் கடையே என்பது. இதனைக் கூர்ந்தாராயும் பேராசிரியர், தோகையு டையவாகிப் பெண்பால் போலும் சாயல் ஆகலான் ஆண்பால் தன்மை இல என்பது கொள்க. எனவே செவ்வேள் ஊர்ந்து அமர்ந்த மயிற்கு ஆயின் அதுவும் நேரவும் படும் என்கிறார். தொல்காப்பியர் சாயல் கருதி உரைத்தார். பேராசிரியர் தொன்மம் (புராணம்) சுட்டும் முருகன் ஊர்தி, கொடி என்பவை கொண்டு கூறுகிறார். பறவைச் சேவல் பெயரைக் குதிரை ஆண்பாற்கு இயைத்துக் கொள்ளும் மரபைச் சுட்டுகிறார் தொல்காப்பியர். குதிரையுள் ஆணினைச் சேவல் என்றலும் என்பது அது. பேராசிரியர் இத்தொடர்க்கு, குதிரையைச் சேவல் என்றல் இக்காலத்து அரிதாயிற்று. அதுவும் சிறகொடு சிவணாதாயினும் அதனைக் கடுவிசை பற்றிப் பறப்பது போலச் சொல்லுதல் அமையும் என்பது கருத்து என்கிறார். எருமை ஆணினைக் கண்டி என்னும் வழக்கு தொல்காப்பியர் நாளில் இருந்தது என்பது எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும் என்பதால் புலப்படும். இதனைப் பேராசிரியர் அது காணலாயிற்றில்லை என்கிறார். அவ்வாறே மூடு, கடமை என்னும் பெயர்களை ஆடு பெறும் என்னும் இடத்தில், இவை இப்பொழுது வழக்கினுள் அரிய என்கிறார் பேராசிரியர் (மர. 94). ஆனால், திருச்சிராப்பள்ளி வட்டாரத்தில் ஆட்டிற்கு மூடு என்னும் வழக்கு உள்ளமை அறியக் கிடக்கிறது. இதில் இருந்து ஒரு செய்தி, ஒருவழக்கு ஒரு காலத்து ஓரிடத்து இல்லை எனத் தோற்றம் தந்தாலும், எல்லாக் காலத்தும் எல்லா இடத்தும் இல்லாமல் - வழக்கு இல்லாமல் - முற்றாக அழிந்து போவதில்லை. அழிந்தமை பொதுவில் காணக் கிடப்பினும் புதைபொருள் - தொல்லியல் - ஆய்வாளிக்குக் கிடைக்கும் புலனம் (சான்று) போலக் கிட்டுவதும் உண்டு. குடியேற்றப் பாதுகாப்பு என்னும் இயற்கை வழக்கு அரணம்போல இந்நாட்டு மக்கள் எந்நாட்டுட் குடிபுகுந்து வாழ்குவராயினும் ஈங்குக் கொண்டிருந்த வழக்குகளைப் பாட்டி வழங்கிய பழம்பொருள் போலப் பாதுகாப்பது உண்டு எனக் கொள்ள வேண்டும். தவம் என்பதொரு தன்மை; தவம் எனத் திருக்குறளில் ஓர் அதிகாரம் உண்டு. தவம் என்பது தவ என்னும் நிலையில் மிகுதி என்னும் பொருள்தரும் என்பது தொல்காப்பியம் - உரியியல். போலித்தவம் பெருகிவிட்ட இந்நாளில் தவ என்பதன் உரிப்பொருள் காணல் அரிது எனின், திருச்சிராப்பள்ளி வட்டாரத்தில், அது தவப்பிஞ்சு (மிகச் சிறுபிஞ்சு) என்னும் வழக்கு உள்ளது. நரல் என்பது மக்கள் பெருக்கத்தைக் குறிக்கும் நெல்லைப் பகுதி வழக்குச் சொல். முறம் என்பது எங்கும் அறியும் சொல்லாக இருக்க சுளகு என்பது நெல்லை வட்டாரத்தில் மட்டுமே வழங்கும் சொல்லாக உள்ளது. சொல்லாய்வு கொண்டு ஒருவர் காலத்தைத் தீர்மானிக்கும் போது, ஏதோ ஒரு சொல்லைச் சுட்டிக்காட்டி இது இவ்வளவு பிற்காலத்தது என்று கொண்டு தீர்மானித்துவிடல் ஆகாது என்பதற்கே இவை சொல்லப்பட்டன. தொல்காப்பியர் நாளில், அதோளி, இதோளி, உதோளி, எதோளி என்னும் சொற்கள் வழக்கில் இருந்தன என்பதை அறியும் நாம் அச்சொற்கள் சங்க இலக்கியப் பரப்பிலோ திருக்குறளிலோ இடம் பெறாமை கொண்டு தொல் காப்பியத் திற்கும் இவற்றுக்கும் உள்ள நெடிய இடைவெளியை உணரலாம். அதோளி, இதோளி முதலியவை சுட்டு முதலாகிய இகர இறுபெயர், வினா முதலாகிய இகர இறுபெயர் எனவும் வழங்கும். அதோளி அவ்விடம் என்பது போன்ற பொருளவை இச் சொற்கள். இவ்வாறே குயின் என்பதொரு சொல்லும் வழக்கு வீழ்ந்தது. இதுபற்றிப் பேராசிரியர் ஒரு காலத்து வழங்கப்பட்ட சொல் ஒரு காலத்து இலவாகலும் பொருள் வேறுபடுதலும் உடைய, அவை அதோளி, இதோளி, உதோளி எனவும் குயின் எனவும் நின்ற இவை ஒருகாலத்து உளவாகி இக்காலத்து இலவாயின. அவை முற்காலத்து உள என்பதே கொண்டு வீழ்ந்த காலத்தும் செய்யுள் செய்யப்படா. அவை, ஆசிரியர் நூல் செய்த காலத்து உளவாயினும் கடைச் சங்கத்தார் காலத்து வீழ்ந்தமை யின் பாட்டினும் தொகையினும் அவற்றை நாட்டிக் கொண்டு செய்யுள் செய்திலர் அவற்றுக்கு இது மரபிலக்கணம் ஆதலின் என்பது. இனி, பாட்டினும் தொகையினும் உள்ள சொல்லே மீட்டொரு காலத்துக்கு உரித்தன்றிப் போயினவும் உள. அவை முற்காலத்துள வென்பதே கொண்டு பிற்காலத்து நாட்டிச் செய்யுள் செய்யப் பெறா என்பது என்கிறார் (தொல். செய். 80). ஆனால் சோழன் நல்லுருத்திரன் என்பார் இயற்றிய முல்லைக்கலியில், ஈதோளிக் கண்டேனால் என்னும் தொடர் இடம் பெற்றுள்ளது (117). இது, இதோளி ஈதோளி எனச் சுட்டு நீண்டு நின்றது என்கிறார் உரையாசிரியர் நச்சினார்க்கினியர்! அற்றுப்போன ஆட்சி என்பதும், எங்கோ தலை நீட்டுதல் கண்டு, ஆய்வாளர் பார்வை இருத்தல் வேண்டும் என்பதன் சான்று ஈதாம். அழன், புழன் என்னும் சொற்களைப் பற்றி ஆசிரியர் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார் (எழுத்து. 193) அழன் புழன் என்பன போல்வன இக்காலத்து இல என்றும், புதியன தோன்றினாற் போலப் பழையன கெடுவனவும் உள. அவை அழன் புழன் முதலியனவும், எழுத்திற் புணர்ந்த சொற்கள் இக்காலத்து வழங்காதனவுமாம் எனவும் உரையாசிரியர்கள் வரைகின்றனர். பெண்மகள் என்பது தொல்காப்பியர் காலத்தில் பெண்மகன் எனவும் வழங்கியமையால், பெண்மை அடுத்த மகனென் கிளவியும் என்றார். இதற்கு நச்சினார்க்கினியர், கட்புலனாயதோர் அமைதித் தன்மையடுத்து நாணுவரை இறந்து புறத்து விளையாடும் பருவத்தால் பால் திரிந்து பெண்மகன் என்னும் பெயர்ச்சொல் என்று பொருளும், பெண்மகன் என்பது அத்தன்மையாரை அக்காலம் அவ்வாறே வழங்கினாராயிற்று இங்ஙனம் கூறலின் என்று விளக்கமும் வரைந்தார். புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் பாலரையும் பெண்மகன் என்று வழங்குப என்று உரையாசிரி யரும், மாறோக்கத்தார் அப்பருவத்துப் பெண் பாலாரை இக்காலத்துப் பெண்மகனென வழங்குப என்று சேனாவரை யரும் கூறுவர். மாறோகம் என்பது கொற்கை சார்ந்த பகுதி. மாறோகத்து நப்பசலையார் சங்கப் புலவர். சேனாவரையர் ஊர் கொற்கை சார்ந்த ஆற்றூர்! பெண்பிள்ளையை வாடா போடா முதலாக ஆண்பால்பட அழைப்பதும், ஆண் உடை உடுத்து அழகு பார்ப்பதும் அன்பின் பெருக்கால் விளைவது. ஒரு பெருமூதாளர்! ஊன்றுகோல் காலாக உதவ ஒரு நீர்நிலைப் படிக்கட்டில் அமர்ந்திருக்கிறார். பால்வேறுபாடு அற்ற நிலையில் சிறுவரும் சிறுமியரும் நீராடும் ஆட்டத்தை ஓவியமாக வடிக்கிறார். திணிமணல், செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத் தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து நீர்நணிப் படுகோடு ஏறிச் சீர்மிகக் கரையவர் மருளத் திரையகம் பிதிர நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து குளித்துமணற் கொண்ட கல்லா இளமை என்கிறார். உளவியல் கூர்ந்த பாலியல் பகுப்புப் பழமையைத் தொல்காப்பியர் உரைத்தார்; தொடித்தலை விழுத்தண்டினார் என்னும் முதுபெரும்புலவர் அதன் மெய்ம்மத்தை நிறுவினார் (புறம். 243). ஒரு துறைக்கண் மேம்பட்டாரைப் பாராட்டுதல் பண்டு தொட்டே வழங்கி வரும் வழக்கமாம். சிறந்த போர்வீரர்க்கு ஏனாதி; சிறந்த வாணிகர்க்கு எட்டி - என்பவை முதலாகப் பல விருதுகள் வழக்கப்பட்டன. அவை சிறப்புப் பெயர் எனப்பட்டன. குடும்பத்தில் இடப்பட்ட பெயர் இயற்பெயர். ஒருவர்க்கு இயற்பெயரொடு சிறப்புப் பெயரும் சேர்கிறது. அவ்விரு பெயர்களில் எப்பெயர் முன்னாகவும், எப்பெயர் பின்னாகவும் இருத்தல் வேண்டும் என்பதைத் தொல்காப்பியர், சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கு இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார் என்று இலக்கணம் வகுத்தார் (தொல். 524). சிறப்புப் பெயர் முன்னாகவும், இயற்பெயர் பின்னாகவும் வரவேண்டும் என்றார். எ-டு: தெய்வப் புலவர் திருவள்ளுவர் கணியன் பூங்குன்றனார் இம்முறை இடைக்காலத்தில் சிலரால் போற்றப்படா மையால், கடிசொல் இல்லை காலத்துப் படினே (தொல். 935) என்பது கொண்டு மாற்றிப் போற்றலாயினர். ஆனால் தொன்முறை போற்றும் வகையால், இந்நாளில், நாவலர் ச.சோ. பாரதியார் மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் செந்தமிழ் அரிமா சி. இலக்குவனார் முனைவர் வ.சுப.மாணிக்கனார் தமிழ்ப்பேரொளி பாரதிதாசனார் என வழங்கல் காண்கிறோம். மக்கள் என்பது பன்மைப் பெயர். அதனை மக்கள்கள் என எவரும் வழங்கார் பழங்காலத்தில். ஆடுகள், மாடுகள், மலைகள் என அஃறிணையை அன்றி உயர்திணைப் பன்மைக்குக் கள் சேர்ப்பது இல்லை; சேர்ப்பது பிழை. அவன் அவள் அவர் அது எனும் அவை என்பது மெய்கண்டார் தொடர்; பலர் பாலுக்கே கள் சேர்க்கக் கூடாது என்றிருக்க, ஒருவருக்கே அவர்கள் எனக் கள் சேர்ப்பது வழக்கம் ஆகிவிட்டது. அவர்கள் இவர்கள் பெரியவர்கள் என்பவை அவாள் இவாள் பெரியவாள் என்றெல்லாம் ஆகிவிட்டன. காளமேகப் புலவர் இவ்வழக்கை எள்ளுவது போல் பாடியுள்ளார். செற்றலரை வென்ற திருமலைரா யன்கரத்தில் வெற்றிபுரி யும்வாளே வீரவாள் - மற்றைவாள் போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள் ஆவாள் இவாள்அவாள் ஆம் என்பது அது. உயர்திணைக்கு ஒட்டாத கள் பூரியர்கள் எனத் திருக்குறளில் (919) இடம் பெறுகிறது. மற்றையவர்கள் என்றும் இடம் பெறுகிறது (263). மார் என்பதொரு சொல்லீறு, வினைச்சொல்லிலேயே வருவது தொல்காப்பியர் காலத்து வழக்கு. சென்மார், பாடன்மார் எனவரும். ஆனால் அவ்வீறு தோழிமார் (அகம். 15) என வருவது ஆயிற்று. அவன் பருகுவன்; அவன் படிப்பன் என அன் ஈறு படர்க்கை ஆண்பாலுக்கே வரும். ஆனால், நான் பருகுவன்; நான் படிப்பன் என வழங்குதல் உண்டாயிற்று. இவ்வழக்கு வள்ளுவர் நாளிலேயே, இரப்பன் இரப்பாரை எல்லாம் எனத் தன்மைக்கு அன் ஈறு வந்துவிட்டது. வரவேண்டும் முறை நான் பருகுவென்; நான் படிப்பென்; யான் இரப்பென் என்பனவாம். இன்னவை இன்னும் பல. இவ்வேறுபாடு ஏற்பட வேண்டும் எனின் தொல்காப்பியர்க்கும் திருவள்ளுவர்க்கும் சங்கச் சான்றோர்க்கும் நெடிய இடைவெளி இருத்தல் வேண்டும் என்பதேயாம். தமிழ் எண்கள் ஒன்று முதல் நூறு வரை உகரத்தால் முடியும் சிறப்பின. எட்டு என்பதை அடுத்துத் தொண்டு என்றோர் எண் இருந்து வீழ்ந்துபட்டது. அவ்விடத்திற்கு எண்பதுக்கு மேல் இருந்த ஒன்பது இறங்கிவிட்டது. மற்றை எண்களும் (தொண்ணூறு, தொள்ளாயிரம்) என்பனவும் இறங்கிவிட்டன. தொல்காப்பியர் நாளில் தொண்டு ஒன்பது என்னும் இரண்டும் ஆட்சியில் இருந்தமை அறிய முடிகின்றது. ஒன்பது என்பதற்கு இலக்கண முடிபு கூறும் அவரே (குற். 40), தொண்டு தலையிட்ட என ஆள்கிறார் (செய். 100). பரிபாடல் ஆசிரியரும், மலைபடுகடாம் ஆசிரியரும் தொண்டு என்னும் எண்ணைப் பயன்படுத்துகின்றனர். பின்னர் அவ்வழக்கு அழிந்தது. இனி, யாப்பு வகையால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மறைவுகள் மிகப் பலவாம். தொல்காப்பியச் செய்யுள் இயலையும் காக்கை பாடினியம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்பவற்றையும் மேலோட்டமாக நோக்கினும் எளிதில் புலப்படும். சார்பெழுத்து மூன்று என்பது தொல்காப்பியம். அது பின்னே பத்தாகவும், 369 ஆகவும் பெருக்கிக் கொள்ளப்பட்டன. நேர், நேர்பு, நிரை, நிரைபு எனப்பட்ட அசைகள் நேர் நிரை என்ற அளவில் குறைந்தன. எழுத்தை எண்ணிக் கொள்ளப்பட்ட குறளடி முதலியன, சீர் எண்ணிக் கொள்ளும் நிலையை எய்தியது. பா வகையில் கலியும் பரியும் வழக்குக் குன்றித் தாழிசை துறை விருத்தம் என்னும் இனம் மிகப் பெருக்கமுற்றன. சிற்றிலக்கியங்கள் பெருக்கமுற்றன. தொன்மம், புராணம் என்னும் பெயரால் புனைபொருள் ஆகிவிட்டது. தொன்மம் என உரையொடு வழங்கிய பழைய வரலாறு இல்லாது ஆகியது. உவமை என்னும் ஓரணி அணியியல் எனப் பெருகியது. அகம் புறம் ஆகிய பொருள், திணை, துறைப்படுத்துப் பாடும் முறை அருகியது. இன்னவாறு மேலும் பல மாற்றங்கள் ஏற்படுதற்கு நெடிய இடைவெளி யாகியிருக்கும் என்பது எளிதில் அறிவதாம். இடைவெளி நெடிது, மிகுதி என்பதால் காலம் கணிக்கப் பட்டுவிடுமா? எனின், தொல்காப்பியம் தரும் அகச்சான்று களையும் அக்கால நிலைக்கு வாய்த்த புறச்சான்றுகளையும் கொண்டே முடிபு செய்தல் வேண்டும். தொல்காப்பியர் காலம் தொல்காப்பியர் காலத்தில் மூவேந்தர் ஆட்சி நிகழ்ந்தது. சேர, சோழ, பாண்டிய நாடு எனினும் அது மொழியால் செந்தமிழ் நிலமாக இருந்தது. அந்நாளில் தொண்டை நாடு என ஒரு நாடு தோற்றமாயிற்று இல்லை. அந்நாளில், தமிழகத்தே வட மொழியாளர் வரவால் அவர் மொழியும் வரலாயிற்று. ஆயினும் அவர் வழங்கிய வடசொல்லை வழங்குதல் ஆகாது. அப்படி வழங்க நேர்ந்தாலும் வடமொழி எழுத்தை ஏற்காமல் தள்ளித் தமிழ் மரபுக்குத் தகத் தமிழ் எழுத்தில் வழங்க வேண்டும் என்பவற்றைத் தொல்காப்பியர் கட்டளைப்படுத்துகிறார். ஆதலால், வடவர் தென்னாடு புகுந்த காலத்தைச் சார்ந்து, அவர்தம் மொழியைத் தமிழ்மண்ணில் பரப்பத் தொடங்கிய நாளில், மொழியாற்றுக்கு வகுத்த வலிய கரைபோல இலக்கணம் வகுத்துக் காத்தார். வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே என்பது அந்நூற்பா (884) தொல் காப்பு இயம் என்னும் பெயரீடு அறிக. பாயிரத்தில் பனம்பாரனார் தமிழ் கூறு நல்லுலக எல்லையாக வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் என்கிறார். வடக்கே கூறிய எல்லை வடவேங்கடம்; இது மலை. இவ்வாறே தெற்கே கூறிய எல்லை தென்குமரி; இதுவும் மலையாகவே ஆதல் வேண்டும். அன்றி, ஆறோ, கடலோ ஆயின் அதனைக் குறிப்பிட்டிருப்பார். ஆதலால் குமரிமலை இருந்த காலத்தில் தொல்காப்பியர் வாழ்ந்தார் என உறுதி செய்தல் வேண்டும். பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள என்னும் சிலப்பதிகாரத் (11:19-20) தொடர்கொண்டு குமரிக்கோடு கொடிய கடலால் கொள்ளப்பட்ட காலத்திற்கு முற்பட்ட காலத்தினர் தொல்காப்பியர் என்பதைத் திட்டப்படுத்தல் வேண்டும். அது, கவாடபுரத்துத் தமிழ்ச்சங்கம் தோன்றுவதற்கு முற்பட்டும், தென்மதுரைத் தமிழ்ச்சங்கம் அழிவுற்ற காலத்திற்குப் பிற்பட்டும் கொள்ள வேண்டும் காலம். அக்காலம் இடைச்சங்கக் காலம். கவாடபுர அழிவின் பின் தொல்காப்பியர் சங்கத் தலைமை இல்லாமையால் கவாடபுர அழிவுக் காலத்தொடு தொல் காப்பியர் இயற்கைக் காலம் எண்ணப்பட வேண்டும். பாயிரத்தின் வழியாக அறியப் பெறும் அகச்சான்றுகளுள் தலையாய ஒன்று, தொல்காப்பியர் ஐந்திரம் நிறைந்தவர் என்பது. ஐந்திரம் வடமொழி இலக்கண முதல்நூல். அதன் மறைவுக்குப் பின் தோன்றியதே பாணினியம் என்னும் இலக்கண நூல். இவற்றால் தொல்காப்பியர் பாணினி காலத்திற்கு முற்பட்டவர் என்பதும் ஐந்திரக் காலத்தவர் என்பதும் விளங்கும். யவனர் யகர வரிசையில் யா என்னும் எழுத்தை யன்றி எவ்வெழுத்தும் சொல்லின் முதலாக வாராது என்கிறார் தொல்காப்பியர். ஆவோ டல்லது யகர முதலாது (தொல். 65) ஆதலால், அவர் யவனர், யவனத் தூதர் வருகைக்கு முற்பட்டவர் எனக் கொள்ளல் வேண்டும். சங்கச் சான்றோர், யவனர் தந்த வினைமாண் நன்கலம் யவனத் தச்சர் என வழங்குகின்றமை கொண்டு இதனைத் தெளியலாம். கயவாகு காலமும் செங்குட்டுவன் காலமும் ஒன்று எனச் சிலப்பதிகாரத்தின் வழி அறிவதாலும், அக்காலம் கி.பி. 174-196 எனக் குறிக்கப்படுவதாலும், அச்செங்குட்டுவனுக்கு முன்னர்க் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் பல்யானை செல்கெழு குட்டுவன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், உதியஞ்சேரல் என்பார் ஆட்சி நிகழ்ந்தமையைப் பதிற்றுப்பத்தால் அறியப்படுவதாலும் அக்காலம் ஏறத்தாழ 200 ஆண்டுகளாம் எனப் பதிகத்தால் அறிய வருதலாலும் தொல்காப்பியர் காலம் கி.மு.விற்குப் பிற்பட்டது ஆகாது என்று உறுதிசெய்யலாம். கிரேக்கத்தில் இருந்து (யவனம்) அலெக்சாண்டர் (356-323) படையெடுப்பும், மெகசுதனிசு என்னும் யவனத்தூதர் கி.மு.320-298 வரை இந்தியாவில் இருந்ததை வரலாறு கூறுவதும், மௌரிய சந்திரகுப்தர் காலம் கி.மு.320-296 என அறியப் படுவதும் கொண்டு அக்காலத்திற்கு முற்பட்டவர் தொல்காப்பியர் எனக் கொள்ள வேண்டும். பாணினியம் இயற்றிய பாணினியின் காலம் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு என்றும் 5 ஆம் நூற்றாண்டு என்றும் கூறப்படுவதாலும் பாணினி தம் இலக்கணத்தில் யவனம் என்னும் சொல்லை வழங்குவதாலும் அவர் காலத்தில் ஐந்திர நூல் வழக்கு ஒழிந்துவிட்டது என அறியப்படுதலாலும் அக்காலத்தில் கொற்கை முத்து குறிக்கப்படுவதாலும் தொல்காப்பியர் காலம் கி.மு. 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டுகளுக்கு முற்பட்டமை அறியலாம். ஐந்திரம் ஐந்திரம் வியாகரணம் இந்திரனால் அருக தேவர்க்கு உரைக்கப்பட்டது என்பது சிலப்பதிகாரத்தால் அறியப்படு தலானும், அவ்வருகர் காலம் கி.மு. 599-527 என அறியப்படு வதாலும், அவ்வைந்திரம் நிறைந்த தொல்காப்பியர் காலம் அக்காலத்திற்கு முற்பட்டதாக இருக்க வேண்டும். ஏனெனில் அருக சமயம் பற்றிய குறிப்பு எதுவும் தொல்காப்பியத்தில் இல்லை என அறிந்துள்ளோம். கவாடபுரம் முதற்கடல் கோளால் தென்மதுரை அழிந்தபின் நிலந்தரு திருவிற் பாண்டியனால் நிறுமிக்கப்பட்டதாம் இடைச்சங்கத்தில் அவன் கூட்டிய அவையில் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றமாயதாலும் தொல்காப்பியனார் கவாடபுரக் கழகத்தில் இருந்தாராக அறிதலாலும் கவாடபுரம் அழிவொடு இரண்டாம் சங்கம் நிறைவுற்றதாலும் தொல் காப்பியர் காலம் கவாடபுரம் அழிவுக்காலம் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டுவதாம். ஐந்திரமும் வேற்றுமையும் தொல்காப்பியர் ஐந்திரம் கற்றுத் தேர்ந்தவர். தம் இலக்கணத்தில் வேற்றுமை இயலின் தொடக்கத்தில் வேற்றுமை தாமே ஏழென மொழிப என்றவர் (546), விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே என்று (547) எட்டாக்குகிறார். எட்டாம் வேற்றுமை பெயரும், பெயரின் விகாரமும் ஆதலால் ஒன்றெனக் கொண்டவர் ஐந்திரத்தார் என்பதைச் சேனாவரையரும், நன்னூல் முதல் உரையாசிரியர் மயிலைநாதரும் சுட்டுகின்றனர். ஏழியன் முறையது எதிர்முக வேற்றுமை வேறென விளம்பான்; பெயரது விகாரமென்று ஓதிய புலவனும் உளன்;ஒரு வகையால் இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன் என்றும் ஐந்திர நூற் கருத்தைச் சுட்டும் நூற்பாவைத் தொல் காப்பிய நூற்பாவொடு ஒப்பிட்டுக் காணுமாறு (மயிலைநாதரும் நன்னூல், சேனாவரையரும்) காட்டியுளர். ஆதலால் ஏழு வேற்றுமை எனக் கொண்ட தொல்காப்பியர், அதனொடு சாரத் தனி நூற்பாவால் விளி கொள்வதன்கண் விளியோடு எட்டே என ஏற்றார். இவ்வேற்பு ஐந்திரம் சார்ந்தது எனத் தெளிய வாய்க்கின்றது. தொல்காப்பியரின் ஐந்திரம் நிறைதலுக்குச் சான்றாகின்றது. சொல் பகுநிலை இனி மற்றொரு சான்று, ஐந்திரம் சொல்லின் முதனிலை, இடைநிலை, இறுதிநிலை பற்றிய பகுப்புகள் உடையது இல்லை. ஆனால், பாணினியம் அப்பகுப்புகளை உடையது. பாணினியத் திற்கு முன்னவராகத் தொல்காப்பியர் இருந்த மையாலும் அவர் நிறைந்திருந்த ஐந்திரத்தில் அப்பகுப்பு இல்லாமையாலும் தமிழ் மரபில் எல்லாச் சொல்லும் பொருள் குறித்த தனிச்சீர்மை இயற்கை நெறிப்பட அமைந்து கிடந்தமையாலும், அப்பகுப்பு தேவைப்பாடு அற்றதாய் இருந்ததால் வித்து, வேர், முளை, கிளை, என விளங்கிய அளவில் நின்றது; இந்நெறியும் ஐந்திரம் கொண் டிருந்த நெறியாம். தமிழியம் தமிழ் நெறியில் நூல் யாத்த தொல்காப்பியர் ஐந்திரம் கற்றதால் அதனை வழிமொழிந்தார் அல்லர். வழிமொழிந் திருப்பின் பொருளதிகாரம் என மூன்றாம் அதிகாரத் தமிழர் வாழ்வியல் பெட்டகம் நாம் காண வாய்த்திராது; பிறர் பிறரும் பின்னால் பொருள் இலக்கணம் (அகப்பொருள் புறப்பொருள்) வகுத்திரார். அகத்துறையும் புறத்துறையும் பாடுபொருளாகிப் பாட்டு தொகை எனக் கையில் கனியாகத் தவழ்ந்திருக்க நேர்ந்திராவாம். இவ்வைந்திரம் பற்றிச் சிலப்பதிகாரம், விண்ணவர் கோமான் விழுநூல் என்றும் (11:99), கப்பத் திந்திரன் கட்டியது என்றும் (11:154) குறிக்கின்றது. ஐந்திர நூல் காலம் ஐந்திர நூலைக் கேட்டவருள் ஒருவர் அருகதேவர் என்றும், அவர்க்கு இந்திரன் ஓதினான் என்றும் அருக நூல்கள் கூறுகின்றன. ஆகலின், அந்நூல் அவர் காலத்திற்கு முன்னரே இயற்றப் பட்டிருக்க வேண்டும். அவர்காலம் கி.மு.599-527 என்பர். அவர்தம் ஐந்திரக் கேள்வி அகவை முப்பதில் என்றால் கி.மு.569-இல் கேட்டவராதல் வேண்டும். அந்நூல் அக்காலத்திற்கு முன்னர் இயற்றப் பட்டிருக்க வேண்டும். இனி, அருக சமயம் புத்தசமயம் பற்றிய செய்திகள் எவையும் தொல்காப்பியத்தில் இடம் பெறவில்லை. அன்றியும் தொல்காப்பியர் கூறிய மக்கள் தாமே ஆறறி வுயிரே என்னும் மன அறிவுக் கொள்கை அருக சமயத்தார் ஏற்பது அன்று. நன்னூலார் அருக சமயத்தார் ஆதலால், அவர் ஐயறிவுக் கொள்கை அளவிலே நின்றமை கொண்டு அறியலாம். இவற்றால் அருகர், புத்தர் ஆகிய இருவரும் அறவுரை கூறிப் பரப்பிய காலத்திற்கும் - கி.மு. ஆறாம் நூற்றாண்டு நடுப்பகுதிக்கும் முற்பட்டு இருந்தவர் தொல்காப்பியர் எனக் கொள்ளல் முறையாம். ஒரு காலத்தவர் எனினும் அக் கொள்கை உடன்பாடு இருப்பார் அன்றிப் பிறர் கூறாரே! முற்பட்டவர் என்னின், அம்முற்பாட்டைக் காண வேறு ஏதேனும் சான்று வேண்டும். அச்சான்று கடல்கோள் சான்றாம். இலங்கை வரலாற்றின் படி மூன்று கடலூழிகள் அறிய வருகின்றன. அவை: 1. கி.மு. 2387 இல் இலங்கை தென்னிலத்தில் இருந்து பிரிவுபடுமாறு அமைந்த கடல்கோள். 2. கி.மு. 504 இல் பாண்டுவாசா என்பார் காலத்தில் ஏற்பட்ட கடல்கோள். 3. கி.மு. 306 தேவனாம் பிரியன் நாளில் ஏற்பட்ட கடல்கோள். இவற்றைச் சான்றாகத் தமிழ்நாட்டு வரலாறு கூறுகின்றது. தமிழ்நாட்டு அரசு வெளியீடு: 1975. கி.மு. 145-இல் ஒரு கடல்கோள் நிகழ்ந்தாகச் சான்று காட்டுகிறார் இரா.இராகவ ஐயங்கார். இவற்றின் பின்னரும் தமிழகப் பரப்பில் ஏற்பட்ட கடல்கோளால் புகார் நகர் முதலிய பகுதிகள் அழிந்துள. கொற்கை, கீழ்கடல் தொண்டி முதலியவும் அழிந்துள. இக்கடல்கோள் சிலப்பதிகாரக் காலத்தை அடுத்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்திருத்தல் வேண்டும். தென்னகத்தில் இருந்து இலங்கை பிரிந்த காலத்துக் கடல்கோளின் பின்னரே வான்மீகர் வாழ்ந்து தென்னகம் பற்றி உரைத்ததால் கடல்சூழ் இலங்கை என்கிறார். சீத்தலைச் சாத்தர், குரங்குசெய் குமரியம் கடற்றுறை என்கிறார். ஆதலால், இலங்கை தீவமாகப் பிரிந்த பின்னிலை இவர்கள் காலமாம். நிற்க. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருக தேவர் கேட்ட ஐந்திரத்தைத் தொல்காப்பியரும் கற்றார். ஆதலால், அக்கால எல்லை தொல்காப்பியர்க்கும் ஏற்பதேயாம். வழக்கு செய்யுள் கற்று அவர் ஐந்திரப் புலமையும் பெற ஐம்பது அகவையர் ஆகியிருக்கக் கூடும். பின்னர்த் தொல்காப்பியம் இயற்றி அரங்கேற்றமும் நிகழ நெடிய காலம் தேவைப்பட்டிருக்கும். நூல் அரங்கேற்றத்தின் பின்னரும் வாழ்ந்து இரண்டாம் கடலூழிக்கு ஆட்பட்டனர் எனலாம். கி.மு. 504-இல் ஏற்பட்ட கடல்கோள் அது எனின் கி.மு. 594 தொல்காப்பியர் தோன்றிய மேல் எல்லையாகவும், கி.மு.504 தொல்காப்பியர் வாழ்வு நிறைவு எல்லையாகவும் கொள்ளலாம். இதற்கு ஓர் அரிய சான்றும் உளது. இலங்கை வரலாறு கூறும் முதற்கடல்கோள் தென்னில மாகிய குமரிக் கண்டத்தில் இருந்து அல்லது இந்திய இணைப்பில் இருந்து இலங்கையைப் பிரித்த காலத்தது. இரண்டாம் கடல்கோள் பாண்டுவாசா என்பார் (பாண்டிய அரசர்) காலத்தில் ஏற்பட்டது. இப்பாண்டுவாசா என்பார் நிலந்தரு திருவிற் பாண்டியன் எனக் கொள்ளத்தகும். இடைச்சங்க அழிவு அவனொடும் தொடர்புடையதாக வரலாறுகள் அனைத்தும் கூறுவதாகலின். அக்காலமே தொல்காப்பியர் காலமும் ஆம் என்பது. உள்ள சான்றுகள் மாறவும் கூடும். மேலும் வலிய சான்றுகள் வாய்க்கவும் கூடும். வேறு வகை முடிபு சீராக வாய்க்குமெனின் இக்கணிப்பைப் புறம்தள்ளித் தக்க முடிவை ஏற்பதும் ஆய்வுச் சால்பாம். எப்படியும் ஒரு மெய்ம்மை கண்டு நிலைப்படுத்த வேண்டும் என்பதே ஆய்வாளன் நோக்காக இருக்க வேண்டும். அந்நோக்கு எமக்கு ஏற்றது மட்டுமன்று. எவர்க்கும் வேண்டு வதாம். இதனைப் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு நிலைநாட்டும் சான்றுகிட்டின் அதனைக் கண்டார் கொண்ட மகிழ்வு எமக்கும் உண்டாம். இவ்வகையால் கி.மு. 504-இல் பாண்டுவாசா காலத்தில் ஏற்பட்ட கடல்கோள் இடைச்சங்க அழிவாய் அமைந்து தொல் காப்பியர் காலத்தைத் தீர்மானிக்க உதவுகிறது. அக்காலத்தின் மேலெல்லை கி.மு. 594 தொட்டுக் கீழெல்லை கி.மு. 504 ஆகலாம். தொண்ணூறு வயது ஒருவர் வாழ்வு என்பது இயலாதது அன்றாம். தொல்லை தொல் + ஐ = தொல்லை = பழமை. பழம்பொருள்கள் தம் பழமையால் சிதைதலும் அழிதலும் மனத்துயர் ஊட்டுவனவாம். தொல்லை, தொலையும் ஆகித் தொல்லைவும் ஆகிப் போகும். பழமையைப் போற்றுவார் புதுமை காண்பார் பழிப்புக்கும் இழிப்புக்கும் ஆட்படுதல் கண்கூடு. தொல்லையாம் பழமை மதிக்கத்தக்க மதியாளரிடம் பெருமையும் ஆகிச் சிறக்கும். தொழிலாளர் நாள் நாள் ஒன்றுக்கு 20 மணிநேரம், 18 மணி நேரம் என உழைத் தவர்கள் நெடிய போராட்டங்களுக்குப் பின்னர் 8 மணிநேர வேலை என உலக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதனை மே முதல்நாள் எனக் கொண்டனர். அது தொழிலாளர் நாள், உழைப்பாளர் நாள் எனப்படுகின்றது. 1890 மே முதல்நாள் உலக அளவில் தொழிலாளர் நாளாகக் கொள்ளப்பட்டது. அமெரிக்கத் தொழிலாளர்கள் தொடங்கிய போராட்ட விளைவுதான் இது. காரல் மார்க்கசாரின் கொள்கை வெற்றி எனல் தகும். தொழில் தொழில் = தொழுகைக்கு இடமாக இருப்பது. தொழு + இல் = தொழில். எத்தொழில் செய்யத் தொடங்குவாரும் தமக்கமைந்த கருவியையோ தாம் வழிபடு தெய்வத்தையோ தொழுது தொடங்குதல் வழியாக ஏற்பட்ட பண்பாட்டுச் சொல் தொழில். மாதவி தன் வீணையைத் தொழுது வாங்கினாள் என்பது சிலம்பு (7:4). சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே - அதைத் தொழுது படித்திடடி பாப்பா என்பது பாரதியார் பாட்டு. எத்தொழில் செய்யப் புகுவாரும் தொழுது தொடங்குதல் நடைமுறை வழக்கு. தொழு தொழு = மாடு கட்டும் இடம். தொழுவம், தொழுவு என்பனவும் அது. தொழூஉ என்பது பண்டை வழக்கு (கலி. 101) தமிழ்மக்கள் தம் தலைத்தொழிலாகக் கொண்டிருந்தது உழவு. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்பது வள்ளுவம் (1033). அவ்வுழு தொழிற்கு உதவுவன மாடுகள். அவற்றின் உழைப்பும், எருவும் நிலவள பயிர்வள மூலமாவன. உண்டிக் கொடையின் மூலமுமாகி உயிர்க் கொடையாகத் திகழ்வன. ஆதலால் அம் மாடுகள் நிற்கும் இடம் தொழத்தக்க இடமாகக் கொண்டு, தொழூஉ - தொழுவு - தொழு எனப்பட்டதாம். தொழுகை, தொழுகைப் பள்ளி என்பவற்றின் மூலம் இத் தொழுவமாம். நன்றி பாராட்டும் நல்ல குறியீட்டுப் பண்பாட்டுச் சொல் தொழு. தொழுதூண் தொழுது + ஊண் = தொழுதூண். பிறரை வழிபட்டும், அடிமைப்பட்டும் உழையாமல் உணவு கொண்டு உயிரோடு வாழ்பவர் தொழுதூண் வாழ்வர் எனப்படுவர். அவர்க்கெனக் கொள்கையோ வேலை செய்து வாழும் வாழ்வோ இல்லாமல், குழைந்து வளைந்து திரிவதே வாழ்வாகிப் போனவர். இத்தகையரை நோக்கிச் சொல்லப் பட்டதே தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது என்பது. தொழும்பர் தொழும்பர்:1 இறைமைப் பணியிலும் பற்றிலும் தம்மைத்தாமே அவன் அருளால் ஒப்படைத்து அத் தொழும்பிலேயே - தொண்டிலேயே - ஆரா இன்பம் அடையும் அடியார். தொழும்பர் உளக்கோயில் - மீனா. பிள். தொழும்பர்:2 வறுமையாலும் வல்லாண்மையராலும் மீளா அடிமை யராகச் செல்வர்க்கும் செருக்கர்க்கும் தந்நலத்தர்க்கும் அடிமைப்பட்டு அல்லல் உழக்கும் ஒப்புரிமை இழந்துவிட்ட இரங்கத்தக்க பிறவியர். தொழுத்தை என்பாரும் இவர். தொழுவர் தொழில் செய்பவர் தொழுவர். நெல்லரி தொழுவர் - புறம். 209 தொள்ளாயிரம் தொள்ளாயிரம் பாடல்களையுடைய நூல்வகை தொள்ளாயிரம் எனப்பட்டது. தொள்ளாயிரம் ஒருவகை யாப்பால் இயலும் என்பது முத்தொள்ளாயிரத்தால் விளங்கும். இனி, அரும்பைத் தொள்ளாயிரம் ஒட்டக்கூத்தர் இயற்றியது. மற்றொரு தொள்ளாயிரம், வசந்தத் தொள்ளாயிரம். இவை இரண்டும் மறைந்து போன நூல்களைச் சார்ந்தவை. முத்தொள்ளாயிரத்தில் மட்டும் 110 பாடல்கள் கிடைத்துள. தொன்மம் (புராணம்) உலகத் தோற்றம், மக்கட் சிறப்பு முதலியவற்றை அழகுறக் கூறுவது புராணம் ஆகும். குலவரவு காரிகை யாப்பிற் புராணமே யாம் - வெண். பாட். 43 இதன் உரைகாரர் மனு வந்தரம், உலகத் தோற்றம் ஆகியவற்றைக் கூறுவது புராணம் என்பர். இனிப் பழமையான செய்திகளைக் கூறும் நூல்களைத் தொன்மை என்பார் தொல்காப்பியர். அவ்வகையால் பழங்கதைகளைக் கூறும் புராணம் தொன்மம் என்னும் ஆட்சி பெற்றதாம். நாட்டிலும், ஏட்டிலும் வழங்கிய கதைகளைத் தொகுத் தமைத்த நூல் புராணம் ஆயிற்று. அவ்வகையில் பெரிய புராணம் குறிப்பிடத்தக்கது. கந்த புராணம் விரிந்தது. பின்னே, பதினெண் புராணங்கள், அரிச்சந்திர புராணம் என்பன வளர்ந்தன. திருக்கோயில்களுக்குப் புராணம் பாடும் மரபு பெரும்புலவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரரால் பெருவழக்காயிற்று. புராணம் பாடப்பெறாக் கோயில் புகழிலாக் கோயில் என்ற தவிப்பும் இருந்தது என்பது அவர் வரலாற்றால் விளங்குகின்றது. திருக்கருவைத் தலபுராணம் காப்பு, பாயிரம், வணக்கம், அவையடக்கம் என்பவை 49 பாடல்களைக் கொண்டுள்ளது. பின்னர்த் திருநாட்டுச் சருக்கம், திருநகர்ச் சருக்கம், தலவிசேடச் சருக்கம், தீர்த்த விசேடச் சருக்கம், மூர்த்தி விசேடச் சருக்கம், புராண கதை வரலாறு எனக் கூறி முதலாவது கதை காகபுசுண்டர் கதியடைந்த சருக்கம் முதலாக முப்பத்தைந்தாவது சேரவரதுங்கர் தெரிசனம் பெறு சருக்கம் ஈறாக வளர்கின்றது. புராண நூல் அமைப்பின் ஒரு பொதுப்போக்கு இதனால் புலப்படும். தொன்முறை ஆய்தம் என்பது ஓர் எழுத்து. ஆயுதம் என்பது கருவி. ஆய்தமும் ஆயுதமும் வெவ்வேறு சொற்கள்; வெவ்வேறு பொருள் தருவன. ஆனால் இரண்டையும் வேறுபாடு இல்லாமல் எழுதும் வழக்கம் தொடக்கக் கல்வியாளரிடத்தே யன்றி வளர்ந்தோரிடம் கூட உள்ளது. ஆய்தத்தை ஆயுதமாகவும், ஆயுதத்தை ஆய்தமாக வும் எழுதுவது அன்றி, இரண்டையும் ஆயுதம் என்று எழுது வதும் வழக்கில் ஊன்றியுள்ளது. ஆய்த எழுத்தின் வடிவத்தை வீரமாமுனிவர்தாம் அமைத்தாராம். அமைத்தது மட்டுமா? அதனால் தமிழைக் கெடுத்து விட்டாராம். எப்படி? உயிர் எழுத்துக்களின் முடிவில் அடுப்புக் கட்டிகளைப் போல 3 புள்ளிகளைக் குறித்து, அதுதான் ஆயுத எழுத்து என்றும் சொல்லிவிட்டார். அதுதான் அவர் செய்த பெருந்தவறு என்கிறார் ஒருவர். அவர் குற்றச்சாட்டை மறுக்க வந்தது அன்று இது. அவர் உரையில் ஆறு இடங்களில் ஆய்தம் பற்றிக் குறிப்பிடுகிறார். ஆறு இடங்களிலும் ஆயுதம்தான் உள்ளது. ஆய்தமே இல்லை! தொன்மையை மறுக்க விழைவார் தொல்வடிவை மாற்ற லாமா? ஆய்தத்தை ஆயுதம் எனலாமா? மறுக்க உரிமை கொண்ட வர்க்கு மாற்றியமைக்கவும் உரிமை உண்டா? தொன்முறையைத் தொன்முறையாகவே வைத்து ஆய்தலே நெறிமுறை. தொன்மை தொல் + மை = தொல்மை > தொன்மை. தொன்மை தானே, உரையொடு புணர்ந்த பழமை மேற்றே - தொல். 1493 உரையும் பாட்டும் விரவிய தகடூர் யாத்திரையும், பெருந்தேவனார் பாரதமும் இதற்கு எடுத்துக்காட்டாவன. பின்னாளைய புராணப் பெயர்க்கு முன்னோடி மாபுராணம், பூத புராணம் என்பன. மணிவாசகர் இறைவனுக்குச் சூட்டிய பெயர் புராணன் என்பது. பெரியபுராணம், திருத்தொண்டர் புராணம். பின்னைக் கோயில் புராணங்கள் பல்ல பலவாம். தொன்மையாவது பழமை; பழஞ்செய்தி பழமை நிகழ்வு பற்றியதொரு நூல்வகை. தொன்மை மாந்தரைத் தொல்லோர் என்பதும் செய்யுள் வழக்கு.  தோ வரிசைச் சொற்கள் தோ தகர ஓகார உயிர்மெய். அதோ இதோ என்பவற்றின் முதற்குறை. ஓரெழுத்து ஒருமொழி. தோகை தொகுப்பாக அமைந்த இறகுகள் தோகை எனப்படும். தொகு > தோகு > தோகை. தோகை என்பது தோகை யுடைய மயிலைக் குறித்தது. நெல், கரும்பு, சோளம் ஆகிய பயிர்களுக்கும் தோகை உண்டு. அதற்கும் தோகை என்பதும் பெயர். முன்னது இயங்கு திணை. பின்னது நிலைத்திணை. ஆதலால் நிலைத்திணையின் பெயரே பின்னர் இயங்குதிணைக்கு ஆயது. மயிலின் தோகை, மயிலுக்கே தோகை என்னும் பெயரைத் தந்தது. அது மூன்றாம் நிலை. அதன்பின் மயில் தோகை போலும் கூந்தல் உடைய மகளிர் பெயராயிற்று. அதனை அன்மொழித் தொகை என்பது இலக்கணர் வழக்கு. தோகை என்னும் பெயர் நெடிய காலத்திற்கு முன்னே கப்பல் வழியாக வாணிகப் பொருளாயிற்று. சாலமோன் காலத்திலேயே தோகை கொண்டு செல்லப்பட்டது. அங்குத் துகி என வழங்கப் பட்டது. தோக்கு துப்பாக்கி என்னும் பொருளில் குமரி மாவட்டத்தில் தோக்கு என்பது வழங்குகின்றது. நோக்கு மாறா வகையில் பயன்படுத்துதலால் நோக்கு, தோக்கு என மக்கள் வழக்கில் வந்திருக்கக் கூடும். மற்றொன்று: ஒரோ ஒரு குண்டு இல்லாமல் பல தொடர்ந்து சுழல் வகையால் வரும் சுழலி கொண்டு தொகைப்பட்ட அது தொக்கு > தோக்கு ஆகியிருக்கவும் கூடும். தோசை தோசை:1 தோசை என்னும் சிற்றுண்டியைத் தமிழ்நாடு நன்கு அறியும். தோசையில் பல வகைகள் இன்று காண்கிறோம். விறலிவிடு தூது என்னும் நூலில் தோசை வகைகள் என்னும் தொடர் உள்ளது. ஆதலால் அது முன்னரே வகை வகையாகச் செய்யப்பட்டதை அறியலாம். காஞ்சிபுரம் தேவராசர் திருக்கோயில் கல்வெட்டு ஒன்றில், தோசை செய்து படைப்பதற்கு அறக்கட்டளை நிறுவிய செய்தி கூறப்பட்டுள்ளது. நான்கு நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதாம் அக்கல்வெட்டு. திருக்கோயிலின் படையற்பொருள் நாட்டுப்பொருளாகவும் பழமையாக வழங்கி வந்ததாகவும், புதிதாகப் புகுத்தப்படாத தாகவும் இருத்தல் வேண்டும் என்பது தெளிவான செய்தி. இனித் தோசை என்ற சொல் தமிழில் மட்டுமின்றித் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வழக்கில் உள்ளது. ஆதலால், தோசை என்கிற சொல்லைத் தனித்தமிழ்ச்சொல் என்று கொள்வதில் ஐயமில்லை. இக்கருத்துகளை, 1956-இல் கோவை கிழார் இராமச் சந்திரனார் ஒரு கட்டுரையாக விரித்து எழுதினார். பிறர் அத் தோசைச் சொல்லுக்குப் பொருள் கூறுவதையும் அக் கட்டுரையிலேயே விளக்கினார். தோ - ஓசை - தோசை என்றும், தோ - சொய் - தோசை என்றும் கூறுவார்கள். தோ என்றது துவி என்ற வடமொழியின் திரிபு என்றும், அதற்கு இரண்டு என்ற பொருள் என்றும் கூறி, இருமுறை சொய் என்ற ஓசை அது சுடும் போது உண்டாகிறபடியால் அப்பொருள் தோசை என்று பெயர் பெற்றது என்பர். துபாஷி - துவி - பாஷி - இரண்டு மொழிகள் பேசுபவன் என்பது இதைப் போன்ற ஒருசொல். தோசை வேற்றுச் சொல் என்பதைக் கூறும் சொல்லாய்வுச் செய்தியைக் குறிப்பிடும் அவர், இதைக் குறித்த கதை வருமாறு என ஒரு கதையையும் குறிப்பிடுகிறார். ஒருவன் கணியம் (சோதிடம்) கற்கப் புறப்பட்டானாம். அவனுக்குப் போகும் வழியில் சொகினத் தடை (சகுனத் தடை) உண்டாயிற்றாம். அவன் திரும்பி வந்து தன் மனைவியறியாமல் அட்டளையில் ஏறி மறைந்து கொண்டானாம். (அட்டளை என்பது அடுப்பறையில் விறகு வைப்பதற்காக அமைக்கப்பட்ட மேல் முகட்டுத் தடுப்பு ஆகும்). மனைவி, தோசை வார்க்கும் போது அதன் ஒலிகளை எண்ணி 32 வர, அவள் அறியப் பின்னர் வெளிப்பட்டு இன்று 16 தோசை போட்டுள்ளாய் என்றானாம். அவனுடைய கணியத்திறம் கைமேல் பலிக்கக் கண்டு அவள் வியந்து போனாளாம். இதன்படி தோசை என்றால் இரண்டு ஒலிகள் என்று பொருள்படும். ஆகவே, இச்சொல் வடநாட்டுச் சொல் ஆகின்றது. அது சரியா? என வினா எழுப்பினார். முடிவாக, இச்சொல் எவ்வாறு உண்டாயிற்று? வேறு இலக்கியங்களில் வந்ததா? என்பவற்றைப் பற்றி நண்பர்கள் தெரிவிப்பார்களாக என்றார். இச்செய்தியைத் தாங்கிய தோசைக் கட்டுரை செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 31 பரல் 4 பக்கம் 168-170-இல் வெளி வந்தது (1956 திசம்பர்). இக்கட்டுரையைக் கண்ட பாவாணர், தோசைக்கு விளக்கம் வரைந்தார். இட்டவி போன்றதே தோசையும் தமிழகத்தில் தொன்று தொட்டு வழங்கி வரும் சிற்றுண்டி வகையாகும். தோசை என்னும் சொல் தோய் என்னும் பகுதியடியாகப் பிறந்ததாகும். உறைதல், திரைதல், புளித்தல், தோயும் வெண்டயிர் (கம்ப. நாட்டுப். 28). இட்டவி மாவிலும் தோசைமாவு மிகப் புளித்திருத்தல் வேண்டும். இல்லாக்கால் சட்டியில் எழும்பாது; எளிதாய் வேகாது; சுவையாயுமிராது. தோய் > தோயை > தோசை. ய - ச போலி. இன்றும் நாட்டுப் புறத்தார் சிலர் தோயை என்றே வழங்குவர். தோசை என்ற தூய தமிழ்ச்சொல் மலையாளத்தில் தோச என்றும், கன்னட தெலுங்கு மொழிகளில் தோசை என்றும் வழங்குகின்றது. இவ்விளக்கம் செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 31 பரல் 6 பக்கம் 270-இல் வெளிவந்தது (1957 பிப்ரவரி). தோசை சுவையானது போல், தோசை ஆய்வும் சுவையானதே யன்றோ! தோசை:2 தோய்ந்த மாவு கொண்டு சுடப்படும் பண்டம் தோயை > தோசை ஆயது. அதன் வடிவம் வட்டம். அவ் வடிவப் பெயர், ஆழ்வார்களுள் ஒருவராம் சக்கரத்தாழ்வாரைக் குறிப்பதாகக் கொள்வது மாலியர் வழக்கு. வியப்பான வழக்கு இல்லையா? புட்டவல்பட் டாணி பொரிதேங் குழலப்பம் மட்டவிழும் தோசை வடையுடனே - சட்டமுற ஓயாமல் சோறுகறி உண்டையுண்டை யாயடைக்கும் வாயா நமச்சிவா யா என்று புலவனுக்கு உண்ணத் தராமல் தானே உண்ட ஒரு கருமியைப் பற்றிய தனிப்பாடல் இது. தோடு தோடு:1 விளவங்கோடு வட்டாரத்தில் தோடு என்பது ஓடை என்னும் பொருளில் வழங்கும். தொடப்பட்டது (தோண்டப் பட்டது) தோடு ஆகும். நீரால் தோண்டப்பட்டோ, மக்களால் தோண்டப்பட்டோ அமைந்தவையே ஓடை ஆகும். ஆதலால் அப் பொருள் குறிக்க அமைந்த வழக்கு இது. தோடு என்பது துளை, பொந்து என்னும் பொருளில் மதுரை வட்டார வழக்காக உள்ளது. அதுவும் துளைத்துத் தோண்டல் வழியதே. தோடு:2 மரம் கிளை முதலியவற்றையும் பயறு நெல் முதலிய வற்றையும் மூடியிருக்கும் பட்டை தோடு ஆகும். ஒன்றைத் தொடுத்தும் இணைந்தும் இருப்பதால் தோடு எனப்பட்டது. காதோடு ஒட்டியுள்ள அணிகலம் தோடு ஆகும். தோடுடைய செவியன் - தேவா. திருஞான. பல பறவைகள் கூடியிருக்கும் கூட்டம் தோடு ஆகும். தோடையம் தொடரியம் > தோடயம். நாடகம் தொடங்குவதன் அறிகுறியாக அதுபற்றிய செய்திகளைக் கூறுவது. நூலுக்குப் பாயிரம் போன்றது தோடயம். குறவஞ்சி நாடகம், கீர்த்தனை முதலியவற்றில் தோடயம் காணலாம். தொடக்கவுரை என்னும் இந்நாள் பொழிவு நிரலை எண்ணுக. தோட்டம் தொடு > தோடு > தோட்டம். வீட்டைத் தொடுத்து - நெருங்கி - இருப்பது தோட்டம் ஆகும். கிணற்றைத் தொடுத்து இருப்பதும் அது. அதனால் தோட்டம் துரவு என இணைமொழி உண்டாயிற்று. உனக்கும் எனக்கும் தோட்டம் துரவு இல்லை என்பது ம.வ. உனக்கும் எனக்கும் உறவில்லை என்பது அதன் பொருளாம். தோட்டம் துரவு கீரை, காய்வகை பயிரிடும் வீட்டுப் புறத்துக் கொல்லையும், உணவுக்காம் காய்கறி வகைகளைப் பயிரிடும் விளைநிலமும் தோட்டம் ஆகும். பெரிதும் வீட்டையும் ஊரையும் தொடுத்தே இருத்தலால் தொடு > தோடு > தோட்டம் என்றாகியது. இந் நாளில் தோட்டப்பயிர், தோட்டக்கலை என்பவை வேளாண்சார் தொழில்கள் ஆயின. தோட்டம் எங்கிருந்தாலும் அங்கே துரவு இருத்தல் கட்டாயத் தேவை. தவசப் பயிரினும் தோட்டப் பயிர்க்குத் தட்டாமல் நீர் தேவை. ஆதலால் தோட்டத்தில் கட்டாயம் துரவு இருக்கும். துரவு என்பது கிணறு. குளித்தல், கலம் துலக்கல், வீட்டுக்குத் தேவையாம் நீர்கொள்ளல் ஆயவற்றுக்கு வாய்ப்பாம் வகையில் தோண்டிப் பயன்படுத்துவது துரவு ஆகும். துரவு = துளைப்பு; துரவுக்கருவி துரப்பணம்; பெரிதும் வட்டமாகவும் சிறியதாகவும் துரவு இருக்கக் காணலாம். தோட்டம் தோப்பு தோட்டம்= கீரை செடி கொடி பயிரிடப்படும் இடம். தோப்பு= மரம் வைத்து வளர்க்கும் இடம். தோட்டம், பூந்தோட்டம், காய்கறித் தோட்டம் என்பவற்றால் விளங்கும். தோப்பு, மாந்தோப்பு, புளியந்தோப்பு என்பவற்றால் விளங்கும். தோட்டம் தோப்புப் பெயர்களால் பல ஊர்ப் பெயர்களும் தெருப் பெயர்களும் விளங்குதல் எவரும் அறிந்ததே. தோடு = தொகுதி; கூட்டம். தோப்பு = தொகுப்பு. தோட்டமும் தோப்பும் எங்களுக்கு உண்டு என்பது வளமைப் பேச்சு. தோட்டி தோட்டி:1 தோட்டி என்பது அங்குசம் எனப்படும் வளைகருவி. தொடு, தோடு என்பவை வளைவுப் பொருளவை. தோட்டி என்பது வளைகத்தி என்னும் பொருளில் குமரி மாவட்டத்திலும், தோட்டை, துரண்டு என்பவை அப்பொருளில் நடைக்காவு வட்டாரத்திலும் வழங்குகின்றன. தோட்டி என்பது அங்குசம் என்னும் வளை கருவியாம். அதனை யுடையவன் யானைப் பாகன். அதனால், தோட்டி முதல் தொண்டைமான் வரை எனப் பழமொழி ஆயிற்று. தொண்டைமான், தொண்டை நாட்டரசன். தோட்டி இந்நாளில் தொறட்டி என வழங்கப் படுகின்றது. வளைந்த புளியங்காயைத் துறட்டிக்காய் என்பதும் வழக்கு. தோட்டி:2 தோட்டியாவது செல்லும் போக்கில் செல்லவிடாது பற்றி இழுத்து நிறுத்தி வைப்பது. யானைத் தோட்டியால் புலனாம் இது. இவ்வாறே கண்டாரைத் தன்கண் நிறுத்த வல்ல அழகும் புனைவால் தோட்டி எனப் பெற்றதாம். கண்ணுள் வினைஞர் என்னும் பெயரும் ஓவியர்க் குண்மை கருதத்தக்கது. தோட்டி:3 வளைந்து சென்று வாயிலை மூடும் கதவும் தோட்டியாம். நாடுடை நல்லெயில் அணங்குடைத் தோட்டி - மதுரைக். 693 பொருள்: அக நாட்டைச் சூழ உடைத்தாகிய முழு அரண்களிலிட்ட வருத்தத்தை யுடைய கதவுகள் (உரை, நச்.). கண்டீரக்கோப் பெருநள்ளியின் மலையின் பெயர் தோட்டி. வட்டமலை என்பது போல (புறம். 150). தோட்டி தொண்டைமான் தோட்டி என்பது யானைப்பாகன் கையில் உள்ள ஒரு வளைகருவி. யானையை இயக்க அக்கருவி பயன்படும். யானைப் பாகர் அதனை வைத்திருப்பால் தோட்டி வைத்திருப்பவன் தோட்டி எனப்பட்டான். இடையர்கள் இலை தழை கொய்ய வைத்திருப்பது தோட்டியே; அது தொரட்டி எனவும், வாங்கு (வளைவு) எனவும் வழங்குகிறது. தொண்டைமான் என்பவன் ஆளும் அரசன். அவன் நாடு தொண்டைநாடு பல்லவபுரம் சென்னை காஞ்சிப்பகுதி. அங்கே தொண்டைமான் என்னும் பெயருடன் ஆட்சி செய்தலால் தொண்டைமான் என்பது அரசன் என்னும் பொருள் பெற்றது. தோட்டி யானைமேல் இருந்து அதனைச் செலுத்துபவன்; தொண்டைமான் அவ் யானைமேல் உலாக் கொள்பவன். இவ்வியல் கருதி அவர்கள் தோட்டி முதல் தொண்டைமான் வரை என்றனர். தோட்டி என்னும் அப்பொருள் மக்கள் வழக்கில் மாறிப் போய்விட்டது. தோணுகால் தோண்டுகால் > தோணுகால். இயல்பாக அமைந்த கால்வாயில் இருந்து நீரைப் பிரித் தெடுக்க வெட்டியமைக்கப்படும் நீர்க்கால் தோண்டு காலாகும். அது மக்கள் வழக்கில் தோணுகாலாக உள்ளது. தோன்றுதல் மக்கள் வழக்கில் தோணுதலாக உள்ளதும் எண்ணத்தக்கது. தோணோக்கம் தோள் + நோக்கம் = தோணோக்கம். மாணிக்கவாசகரால் அறிந்து கொள்ள வாய்க்கும் ஓர் ஆட்டப்பாட்டு தோணோக்கமாம். தோளெடுத்து வீசி ஆடுவ துடன், அதனை நோக்கிக் கொண்டு பாடுவதும் உண்மையால் இப்பெயர் பெற்றதெனலாம். இப்பாடல் முடிநிலை தோணோக்கம் ஆடாமோ? என்று வருதல் பெயர்க்குறி என்க. இது மகளிராடல் என்பது, துன்றார் குழலினீர், மங்கை நல்லீர் என்பன போல வரும் வரிகளால் விளங்கும். தோணோக்கப் பாடல்கள் திருவாசகத்தில் 14 உள. நான்காம் பாடல்: கற்போலும் நெஞ்சம் கசிந்துருகக் கருணையினால் நிற்பானைப் போலவென் னெஞ்சினுள்ளே புகுந்தருளி நற்பாற் படுத்தென்னை நாடறியத் தானிங்ஙன் சொற்பால தானவா தோணோக்கம் ஆடாமோ தோண்டித்துருவல் உள்ளே என்ன இருக்கிறது என்பதை அகழ்ந்து பார்த்தல் தோண்டல் ஆகும். தோண்டிய இடத்தில் உள்ளவற்றை உன்னிப் பாக ஆராய்வது, குடைந்து பார்ப்பது ஆகியவை துருவல் ஆகும். சிலர் சில செய்திகளை வெளிப்படுத்தவே மாட்டார்கள். என்னென்ன வகையால் முயன்றாலும் அவர்கள் அச்செய்தியை வெளியிட மாட்டார்கள் அவர்களிடமிருந்து பலப்பல வினாவி, அம் மறுமொழியை ஆராய்ந்து மடக்கி மடக்கி வினாவி உண்மையை உரைக்க வைத்துவிடுவர். அது தோண்டித் துருவுதல் எனப்படும். அவனிடம் மறைத்தால் எப்படியும் தோண்டித் துருவாமல் விடமாட்டான் என்பர். தோது தொடர்ந்து ஒருவர்க்குச் செய்யும் துணையைத் தோது எனக் குறிப்பது நெல்லை வழக்கு. நமக்குத் தோதான நான்குபேர் போனால் பாரம் போட்டுக் கொண்டு வந்துவிடலாம் என்பர். நீங்கள் இங்கு வந்தது தோதாயிற்று என்பது உதவி என்னும் பொருளதே. தோது வாது தோது = உதவியாக இருத்தல். வாது = உதவியாக வாதாடுதல். அவனையும் கூட்டிக் கொண்டு போனால் தோது வாதுக்கு உதவியாக இருக்கும் தனியாக ஒருவர் ஒரு செயலைச் செய்ய முடியும் எனினும் தமக்காகப் பேச முடியும் எனினும் தோதுவாது இருந்தால் ஒருதென்பும், ஓர் உறுதியும் வாய்க்கும். ஆதலால் உதவத் தெரிந்த பேசத் தெரிந்த ஒருவர் துணைவேண்டும் என்னும் வகையால் எழுந்த இணைச்சொல் இது. இனி எனக்குத் தோதுவாதுக்கு யார்வந்து உதவுவார் என்று வருந்துவார் பலர். எதற்கும் ஒற்றையாளுடன் மற்றோர் ஆளும் இருத்தல் துணிவை உண்டாக்கல் தெளிவு. தோப்பு கூப்பு தோப்பு = திட்டமிட்டு வளர்த்த ஒருவகை அல்லது பலவகை மரங்கள் உடைய தொகுப்பு. கூப்பு = திட்டமின்றி இயற்கையாகச் செறிந்து வளர்ந்துள்ள மலைக் காடு கூப்பு. தொகுப்பு என்பது தோப்பு ஆயிற்றாம். பகுத்தது பாத்தியாவது போலக், கூப்பு என்பது குவிப்பு என்பதிலிருந்து வந்ததாம். குவி, குவிதல், குவிப்பு, குமி, குமிதல், குமிப்பு என்பவற்றையும் கருதுக. தோப்புக் காடும் கூப்புக் காடும் என்பது வழக்கு. தோப்பைக் கிழங்கு செட்டி நாட்டு வழக்கில் தோப்பைக் கிழங்கு என்பது இளங்கிழங்கு என்னும் பொருளில் வழங்குகின்றது. வயிற்றுக் குழந்தை போன்ற இளமை வழிப்பட்ட ஆட்சி ஆகலாம். தோலா தோலா - தோலாத (தோற்காத) என்பதன் தொகுத்தல் பிறரிடம் தோல்வி கண்டறியாத வலிமையைத் தோலா உரன் என்றார். சூளாமணி ஆசிரியர் தோலா மொழித்தேவர் என்பதும். அந்நூற்கண், தோலா நாவிற் கச்சுதன் (308) ஆர்க்கும் தோலா தாய் (1473), தோலா மன மலர்ந்திலங்கு செய்கை (1790) என மூன்றிடங்களில் ஆளப்பட்டுள்ள அருந்தொடர்களும் நோக்கத் தக்கன. தோலாமொழி சூளாமணியை இயற்றிய ஆசிரியர் பெயர் தோலாமொழித் தேவர் என்பது. அவர், நூலோர் ஆய்ந்து நுண்பொறி கண்ணு நொடிவல்லான் மேலார் ஆயும் மேதைமை யாலும் மிகநல்லான் தோலா நாவிற் சுச்சுதன் சொல்லும் பொருளெல்லாம் வேலார் கையாய் மெய்ம்மைய வன்றே மிகையாலும் என்னும் பாடலில் (308) தோலா நாவைச் சுட்டுகிறார். அரைசர் ஏறே அடலாழி வலவா யார்க்கும் தோலாதாய் என்றும் தோலாமையைச் சுட்டுகிறார் (1473). தோலாதவன் (தோற்காதவன்) என்பது இன்றும் மக்கள் வழக்கில் உள்ளதே. வெல்லுஞ் சொல் என்பது இதன் உடன்பாட்டு வடிவம் (திருக்.645). தோலான் துருத்தியான் தோலான் = ஊதுலைத் துருத்தியின் தோற்பை போலப் பின்வருபவன். துருத்தியான் = துருத்தியின் மூக்குப் போல் முன்னே வருபவன். ஒருவன் ஒன்றில் மாட்டிக் கொள்ளும் போது அவனுக்காக ஒருவன் பொறுப்பேற்று வந்தால் நீ என்ன அவனுக்குத் தோலானா துருத்தியானா? என்று வினவுவது உண்டு. நீ வாராதே என்று தடுக்கும் தடையாக வரும் வினா இதுவாம். ஊதுலையில் அமைந்த தோல் துருத்தி அமைப்பைத் தழுவியது இவ்விணை மொழியாம். தோலும் வாலும் தோல் என்பதும் வால் என்பதும் உழவர் பயன்படுத்தும் நீர் இறைப்புப் பெட்டியொடு இணைந்துள்ள கருவிகள். இரும்பால் - தகட்டால் - செய்யப்பட்ட சால் அல்லது கூனையில் இறுக்கிக் கட்டப்பட்ட பெரிய தோல் பை தோல் ஆகும். சாலில் நீர் நிரப்பி கிணற்றில் மேலே கொண்டுவந்து தோல்பை வழியாக நீரை வாய்க்காலில் வடிப்பர். அத்தோலில் இருந்து செல்லும் கயிறு வால். அது வால் கயிறு எனப்படும். வடத்தொடு சேர்த்துக் கட்டப்படும். வடம் வால் இரண்டும் சாலை மேலும் கீழும் பற்றி மேலிழுத்தும் கீழிறக்கியும் கிணற்று நீரை முகந்து வரும். முகவைப்பாட்டு பழமையானது. இறவை என்பது நீர் இறைக்கும் தொழில் பற்றியது. இறவைக்குப் போகிறது மாடு இறைக்கப் போகிறார் என்பது வழக்கு. தோல் தோல் ஆவது எண்வகை வனப்பினுள் ஒன்று. இழுமென் மொழியான் விழுமியது நுவலல் தோல் வனப்பின் இயல்பாம். அழகு நடையில் அருமையான பொருளைக் கூறக் கேட்போர் வயப்படுவர் என்பது ஒருதலை. வயப்படுத்தும் சொல்லழகும் பொருளழகும் அழகே என்பது ஒருதலை. தோழத்தன் தோழன் + அத்தன் = தோழத்தன். கன்னங்குறிச்சி வட்டாரத்தில் மாப்பிள்ளைத் தோழனைத் தோழத்தன் என்பர். அத்தன் அப்பன் அனைத்தும் தலைவன், மணவாளன் என்னும் பொருளன. அத்தன் தோழன் என்பது முன்பின் மாற்றமாம். தோழமை தோழர் என்பது இக்காலத்தில் மிகுதியாக வழங்குஞ்சொல். ஆனால், தோழன், தோழி, தோழமை என்பனவெல்லாம் மிகுபழஞ் சொற்களே! தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்னும் பழமொழி, வாழ்வியல் உரைக்கும் சிறப்பினது. தோழி என்னும் சொல்லை ஒரே ஓர் இடத்தில் வள்ளுவர் வழங்கியுள்ளார் (திருக். 1284). தோழன், தோழமை என்பவற்றை வழங்கினார் அல்லர். தோற்றம் தோன்றுவ தொன்று தோற்றமாம். பிறப்பு, பொலிவு முதலிய பொருள்களும் உண்டு. அவர் தோற்றப் பொலிவு டையவர் என்பது வழக்கு. * தோன்றல் காண்க. தோற்றல் தோற்றுப் போதல் பொருள் அல்லது தோல்விப் பொருள் தரும் சொல் இது. விளையாட்டில் எதிரணி தோற்றல் உறுதி தோன்றுதல் தோற்றல் - தோற்றம் தருதல் - என்னும் பொருளிலும் வழங்கும். தோன்றல் தோன்று > தோன்றல். தோற்றம் தருதல் தோன்றலாம். புணர்ச்சி வகையுள் ஒன்று தோன்றல் விகாரம். எ-டு: வாழை + பழம் = வாழைப்பழம். தோன்றல் = பிறத்தல். வள்ளுவர் தோன்றிய ஆண்டு கி.மு. 31 என்று அறிஞர்கள் தீர்மானித்துளர். தோன்றல் = ஒரு செயலில் ஈடுபடுதல். தோன்றிற் புகழொடு தோன்றுக - திருக். 236 தோன்றி தோன்றி, மேந்தோன்றி என்பன காந்தள் ஆகும். மண்ணில் புதையுண்டு கிடந்து மழைபெய்த அளவில் எண்ணிப் பாராத பெருவளர்ச்சி கொண்டு தோன்றுவது கண்டு தோன்றி என்றும் மேந்தோன்றி என்றும் கூறினர். தெளவை எவ்வை, நுவ்வை, தவ்வை > தெளவை. என் அக்கை, நுன் அக்கை, அவன் அக்கை. அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும் - திருக். 167 தவ்வைக்குக் காட்டிவிடும். மூத்தாள், முகடி என்பாள் தெளவை. மூதேவி என்பது ம.வ  ந வரிசைச் சொற்கள் ந நகரம், நகாரம் என்பனவும் இது. தமிழ் நெடுங்கணக்கில் எட்டாம் உயிர்மெய்க் குறில். மெல்லின வகையில் நான்காம் எழுத்து. ங ஞ ண ந ம ன நல், நல்ல என்னும் பொருள் தரும் குறில். எ-டு: ந + கீரன் = நக்கீரன் ந + செள்ளை = நச்செள்ளை ந + பண்ணன் = நப்பண்ணன் நல்லந்துவனர், நன்னாகனார் பெயர்கள் நல் என்றே நின்றன. ந மங்கலப் பொருள் தருதல் சிவனிய வழக்கு. நமசிவாய. குறில்களாம் நொ, து என்பவை போல நவும் பொருள் தரும் எனக் கொள்ளல் வேண்டும். இனி நல் என்பதன் தொகுத்தலுமாம். நகம் ஒளியுடையதும், எதிரொளி செய்வதும் நகமாம். நகுதல் பல்லொளி வெளிப்படலால் அமைந்தது. நகையே அழுகை - தொல். 1197 நகுநயம் மறைத்தல் - தொல்.120 நகம் = மலை. கதிர்பட்ட அளவில் பனிநீரும் பனிப்படிவும் இலையும் தளிரும் பூவும் ஒளி செய்தலால் கொண்ட பெயர். பன்னகமும் நகுவெள்ளிப் பனிவரை - கம்ப. பால. 324 நகரப் பா (நகர்விருத்தம்): நகர நலங் குறித்துப் பத்து ஆசிரிய விருத்தம் பாடுவது நகரப்பாஎன்னும் சிறுநூற் பாற்படும் (நவநீத. 41). நகர் நகர்தல் எனுஞ்சொல் விரிதல், அகலுதல், உயர்தல் முதலாம் பொருளது. விரிவும் உயர்வும் பெரிய பரந்த சுற்றுச் சூழலும் அமைந்த இல்லம் நகர் எனப்பட்டது. பின்னர் சிற்றூரினும் விரிந்ததும் பல சிற்றூர்களைத் தன்னகத்துக் கொண்டதுமாம் பரந்த ஊர் நகராகியது. இக்கால் சிற்றூர்களும் நகர்களாகக் கூறப்படுகிறது. ஒரு நகருள் பல நகர்கள் இருக்க இதுகால் காணலாம். நகராட்சி, மாநகராட்சி என்பவை மக்கள் தொகையால் கணக்கிடு முறை உண்டாயிற்று. இவற்றின் மூலம், உயிரிகளின் ஒருவகை நகர்வன என்றாகியமையே. நகர் நகரம் என்றும், நகரி என்றும் வழங்கலாயின. நகரகம் என்பது அகநகர் எனல் ஆகும். டவுண்சிப் (Township) என்பது நகரமாகக் கலைச்சொல்லாயது. ஊர்வலம் போல் நகர்வலமும் ஏற்பட்டது. நகர்வலக் காதல் உலாக் காட்சியினால் உண்டாகிய காமம் மிகுந்தால் அதனைப் பிறரொடும் உரைத்து வருந்துவது பவனிக் காதல் என்னும் பெயர் பெறும். காமரு முலாவற் காட்சி யாலே அடைந்த காம மிக்கா லவற்றைப் பிறரொடும் எடுத்துப் பேசி வருந்துதல் பவனிக் காதலாம் பகருங் காலே - முத்துவீ. 1121 நகல் நகு + அல் = சிரித்தல், மகிழ்தல். பல்லொளி வெளிப்படல் நகல், நகுதல்; நகை, நகைத்தல். நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பால் பட்டன்று இருள் - திருக். 999 தவலருந் தொல்கேள்வி தன்மை யுடையார் இகலிலர் எஃகுடையார் தம்முட் குழீஇ நகலின் இனிதாயிற் காண்பாம் அகல்வானத்து உம்பர் உறைவார் பதி - நாலடி. 137 நகுலம் மெல்லியதும் மினுங்குவதுமாம் முடியுடையதுமாம் கீரி நகுலம் எனப்படும். மாந்தர்க்கு நலம் செய்தல் கொண்டே நகுலம் (நல்ல பிறப்பு) என்றும், கீரிப் பிள்ளை என்றும் வழங்கப் பெற்றதாம். பிள்ளை நகுலம் என்பதற்குக் கீரிக்குட்டி என்பார் அரும்பத உரையாசிரியர் (சிலப். 15:54). குட்டி என்னும் இளமைப் பெயர் கீரிக்கும் உரித்தென்பர் மயிலைநாதர் (நன். 387 - உ.வே.சா. அடிக்.). நகை நகுதல் > நகை. நகை = ஒளியுடைய பல். நகுதல் = மகிழ்தல். நகும் பொழுது பல் வெளிப்பட்டு ஒளி செய்தலால் நகை எனப்பட்டது. நகுதற் பொருட்டன்று நட்டல் - திருக். 784 என்பது அது. நகையில், எள்ளல் நகையும் உண்டு. அது, பன்னகமும் நகுவெள்ளிப் பனிவரை - கம்ப. பால. 324 என்பது. காதல் வெளிப்பாடும் நகையாக்கும் என்பது, நகுநயம் மறைத்தல் என்னும் தொல்காப்பியத்தால் (1207) அறியலாம். பொன்னகையிற் சிறந்தது புன்னகை என்பது மக்கள் வழக்கு. நகை நட்டு நகை= இழை எனப்படும். தண்டட்டி, பாம்படம் ,போல்வன. நட்டு= முருகு, கொப்பு, காப்பு, தோடு முதலியன. முன்னது பேரணிகலங்களையும், பின்னது சிற்றணி கலங்களையும் குறிக்கும். முன்னவற்றிலும் திருகு அமைப்பு இருந்தாலும், பின்னவற்றில் திருகமைப்பே சிறப்பும் தனித் தன்மையும் உடையதாதல் கருதுக. முன்னவற்றில் பளிச்சிடலும் அசைவும் பின்னவற்றில் அசைவிலா நிலைப்பும் உண்மை கருதுக. பெண்ணுக்கு நகை நட்டு என்ன போட்டீர்கள் என்று வினவார் இக்காலத்து அரியர். நகைப்பதம் நகை = ஒளி, மகிழ்வு, புன்முறுவல். பதம் = பக்குவம். வாரித்தரள நகைசெய்து வன்செம் பவள வாய்மலர்ந்து - சிலப். 7:38 தவத்தோ ராயினும் தகைமலர் வண்டின் நகைப்பதம் பார்க்கும் இளையோ ராயினும் - சிலப். 14:162-163 நகையாயம் நகையமர் ஆயம் - பு.வெ. 75 இன்னகை யாயம் - சிறுபாண். 220 பொருள்: இயலிசை நாடகத்தாலும் இனிய மொழிகளாலும் இனிய மகிழ்ச்சியைச் செய்யும் திரள் (நச். உரை). நகைவேளம்பர் நகை= மகிழ்வு, நகைச்சுவை. வேள்= மூங்கில்; வேய் > வேள். அம்பர்= உயரம்; உயர்விடம். கழைமேல் ஏறி மக்கள் மகிழ்வுறக் கூத்துச் செய்யும் கழைக்கூத்தர், நகைவேளம்பர் எனப்படுவார். வளைக்க வளையும் வேய் மன்னர் முடி மேலாம்; வளைக்க வளையாத வேய் வேளம்பர் கைப்புகுந்து மேதினி எல்லாம் உழலும் தனிப். நக்கத்திர மாலை (உடுமாலை) நகுதல் = ஒளி செய்தல்; நக்கத்திரம் = ஒளியுடையது. உடுவின் பெயர் ஒவ்வொன்றும் வருமாறு இனிய பாடல் இருபத்தேழு இயற்றித் தொடுத்தல் நக்கத்திரமாலை எனப்படும். உடுவின் எண்ணிக்கை 27 ஆகலின், இந்நூற் பாடல் தொகையும் 27 ஆயிற்று. உடுப்பேர்க் கார்த்திருத்தல் சந்தமேற்ற நட்சத்ர மாலையே- பிர. திர. 26 * தாரக மாலை காண்க. நக்கல் நகுதல், நகைத்தல், நகை, என்பன எள்ளுதல் பொருளில் வருவன. எள்ளல் இளமை பேதைமை மடனென் றுள்ளப் பட்ட நகை நான்கென்ப என்னும் தொல்காப்பிய (1198) முன்வைப்பு எள்ளல் என்பதே.. கேலி செய்தல் என்னும் பொருளில் விளவங்கோடு வட்டாரத்தில் நக்கல் என்பது வழங்கப்படினும் பொது வழக்கென விரிவுற்றது அது. நகிச்சை என்னும் நக்கல் பொருள்தரும் சொல்லும் விளவங்கோடு வட்டாரத்தில் வழங்குகின்றது. என்ன நக்கலா செய்கிறாய்? ம.வ. நக்கல் நரகல் நக்கல்= நகையாடும் சொல். நரகல்= அருவறுப்பான சொல். நக்கல் நரகல் பேச்சை நம்மிடம் வைத்துக் கொள்ளாதே என்று தகவற்ற சொற்களைக் கடிவர். நகுதல் = நகைத்தல்; நக்கல் என்பதும் அது. வேடிக்கை விளையாட்டு, கேலி கிண்டல் என்று சொல்பவை நக்கலாம். இடக்கரடக்கு முதலாம் இழிந்த சொற்களைச் சொல்லுதல் நரகலாம். நரகல் என்பது சொல்லின் தன்மை நோக்கிய உவமைச் சொல். நக்கவா துக்கவா (துய்க்கவா) நக்கல் = நக்கி உண்ணல். துக்கல் = நுகர்தல், துய்த்தல். விழக் கூடாத இடத்தில் விழுந்த தேனை நக்கவா துக்கவா? என்பர். இரண்டற்கும் ஆகாது என்பதாம். கருமியினிடம் அகப்பட்ட பொருள் எவருக்கும் உதவாது போவதை விளக்க இவ்விணைச்சொல் பயன்படுகின்றதாம். அவன் சொத்து நக்கவா துக்கவா ஆகும்? என்பர். துக்கல் = துய்த்தல்; துத்தல் என்பதும் துற்றி என்பதும் அது. நக்கிக் குடித்தல் நக்கிக் குடித்தல் = உழையாமல் உண்ணல். ஆற்றில் வெள்ளம் போனாலும் நாய் நக்கித்தானே குடிக்க வேண்டும் என்பது பழமொழி. நாய் நீரை நக்கிக் குடிக்கும். அவ்வாறே கஞ்சி சோறு ஆயவற்றை நாய் உண்பதும் நக்குதல் எனவே சொல்லப்படும். நக்குதல் என்பது இழிவுப் பொருள் தருவதாக அமைந்துவிட்டது. அது போல் உழையாமலோ, உழைப்புக் கிட்டாமலோ இரந்து உண்பதை நக்கிக் குடித்தல் என்பது வழக்காக ஊன்றிவிட்டது. நகுதல் என்பதும் தன் உயர்பொருளை விடுத்து இழிபொருளுக்கு இடமாகியதும் உண்டு. நகையாண்டி என்பதே நையாண்டியாதல் அறிக. நையாண்டி மேளம் நாடறி செய்தி. நக்குதல் தேன், குழம்பு, பாகு முதலியவற்றை நாவால் தொட்டுச் சுவைத்து உட்கொள்வது நக்குதலாம். இது நால்வகையால் உண்ணுதல் என்பதில் ஒரு வகையாம். மற்றவை உண்ணல், பருகல், கடித்தல் என்பனவாம். நக்கு நாயினும் கடையெனப் புகலும் நான்மறையே என்பது நாவுக்கரசர் தேவாரம். நங்கு நங்கு என்பது பொறாமை என்னும் பொருளில் குமரி மாவட்ட இரணியல் வட்டார வழக்காக உள்ளது. நல்லது என்னும் பொருளமைந்த நன்கு என்பது நங்கு ஆகியிருக்கலாம். நல்லது இல்லாததை நல்லது என்பது மங்கல வழக்காகக் கொள்ளக் கூடியது. வேறு வகையாகப் பொருள் கொள்ளவும் இடந்தரும் சொல் இது. நங்கூரம் கப்பலை நிலை நிறுத்தப் பயன்படும் கூர்நுனை இரும்புக் கொக்கியுடையதும் கலப்பை வடிவுடையதும் நங்கூரமாம். ஒன்றைக் கீழே வைக்கும் போது மெதுவாக வைக்காமல் வலுவாக வைத்தால் என்ன நங்கென வைக்கிறாய் என்னும் வழக்கு நங்கூரம் பாய்ச்சுதலை விளக்கும். கூரம் = கூர்மை அமைந்த கருவி. நங்கை பெண்டிருள் நல்லாள் என்னும் பொருளமைந்த நங்கை என்பது நாத்துணையாள் என்னும் உறவுமுறைச் சொல்லாகப் பழனி வட்டார வழக்கில் உள்ளது. நாத்தூண் நங்கை என்று சிலப்பதிகாரத்து வரும் மதுரை ஆயர்குடி வழக்கு, இன்றும் ஆவினன்குடி வட்டார வழக்காக இருத்தல் பழம்பொருட் புதையலாய்த் திகழ்கின்றது. கணவரின் மூத்தாளை (அக்கையை) நங்கை என்பது கோவை வழக்கு. நசை நசை = விருப்பம், ஆசை. நச்சுதல் = விரும்புதல். நசைதர வந்தோர் நசைபிறக் கொழிய வசைபட வாழ்ந்தோர் பலர்கொல் - புறம். 15 பொருள்: தம் ஆசை கொடுவர வந்தோர் அவ்வாசை பின்னொழிய வசையுண்டாக உயிர் வாழ்ந்தோர் பலரோ? (ப.உ.). நச்சாடை நச்சு + ஆடை = நச்சாடை. நச்சாடை, நச்சாடை தவிர்த்த லிங்கம் (சிவன்) நச்சாடலிங்கம் என்பவை சேற்றூர் வட்டார வழக்கு. ஆண் பெண் பெயர்களும் அவ்வூரில் உண்டு. அவ்வூர்த் தெய்வப் பெயர் அது. நச்சு நஞ்சு > நச்சு. நஞ்சுடைய பாம்பு நச்சுப்பாம்பு எனப்படல் ம.வ. நச்சுயிரி என்பதும் மக்கள் வழக்கே. நச்சப்படு பொருளையும் குறிக்கும். பொருளுரையாளர், நச்சுக் கொன்றேற்கு நன்னெறி யுண்டோ? - சிலப். 16:65-66 பொருள்: மெய்யுரைக்கும் சான்றோரால் நச்சப்படும் தொழிலைக் கெடுத்தேனுக்கு (அ.ப. உரை). பொருள்: மறவியிற் பொருந்தி யமைந்தோர் விரும்பப்படும் பொருளாகிய நல்ல ஒழுக்கத்தைக் கெடுத்த எனக்கு இனித் தீக்கதியன்றி நற்கதியுண்டாமோ? (அடியார்க். உரை). உயிரைக் கெடுக்கும் நச்சுக்கு விருப்பம் என்னும் பொருள்தரல் மாறன்றோ எனின் அன்றாம். அவர் உலக வாழ்வை வெறுத்து இறப்பே இனிது எனக் கொண்டார் ஆகலின் அப்பொருள் உண்டாயிற்றாம். நஞ்சுக் குப்பியே ஞாலும் தாலியாய்க் கொண்ட வீறுடையார்க்கு இறப்பு இன்பமே அல்லவோ! சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை என்னும் வள்ளுவம் (திருக். 230) நோக்குக. புலவனுக்குப் பொருள்தர இயலவில்லையே எனத் தலை தருவதற்கு வாள்தந்த குமணனையும், புலவன் வறுமை தீர்க்க வாய்க்கவில்லையே எனப் பாம்புப் புற்றில் கைவிட்ட புரவலன் ஒருவனையும் எண்ணுக. நச்சுப் பிச்சு நச்சுப் பிச்சு:1 நச்சு = சொத்து முழுவதையும் நைத்துவிடச் செய்கின்ற பெருஞ்செலவுகள். பிச்சு = சொத்தைப் பிரித்துப் பிரித்து விற்கத் தக்க சிறு செலவுகள். நச்சு = நைந்து போகச் செய்வது; பிச்சு = பிய்ந்து போகச் செய்வது. பிய்த்துக் கொடுத்தலைப் பிச்சுக் கொடுத்தல் என்பதும் வழக்காறு. பிய்த்தலைப் புய்த்தல் என்பது இலக்கிய வழக்காறு. இனி, நச்சுப் பிச்சு எனப் பேசாதே என்பதும் வழக்காறு. நச்சரித்தும் பித்துப் பிடித்தும் பேசுதலைச் சுட்டுவது அது. நச்சுப் பிச்சு:2 நச்சு = நஞ்சு போல் அழிக்கும் தீயர். பிச்சு = பங்குப் போட்டு பிரிக்கும் உடன் பிறந்தார். நச்சுப் பிச்சு எதுவும் இல்லை; ஆதலால் கவலை எதுவும் அவருக்கு இல்லை என்பது நயப்புரை. நச்சு, சொத்து முழுவதையும் அழித்து விடக்கூடிய தீய மக்கள். பிச்சு, பங்கு பாகம் என்று பிரித்துக் கொண்டு போகக் கூடிய உடன்பிறந்தார். தனி மகனாக இருந்து, அவனுக்குச் சொத்தை அழிக்கும் தீய மகனும் இல்லாமல் நன்மகன் இருந்தால் அவனை நச்சுப் பிச்சு இல்லாதவன் என்பர். நஞ்சு நைந்து = நஞ்சு. உயிரை நைந்து போகச் செய்யும் - ஒழிந்து போகச் செய்யும் - பொருள். அதன் கொடுமையறிந்து நச்சு என்றும் கூறினர். நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும் - ஔவை. தனிப். நஞ்சுக் கொடி கன்றுக்கும் தாய்க்கும் தொடர்பாக இருந்தது நஞ்சுக் கொடி. கன்று பிறந்த போது அதுவும் வெளியே தள்ளும். கன்றைத் தள்ளியவுடன் வெளிப்படாமல் கருப்பையில் ஒட்டிக் கொண்டிருந்து படிப்படியே விழுதலும் உண்டு. அப் பொழுதில் நாய் பற்றாமல் விழிப்போடு பார்த்திருத்தல் வேண்டும். நஞ்சுக் கொடி இளங்கொடி எனவும் படும். பால் மரங்களில் அதனைக் கட்டும் பழக்கம் மூடத்தனத்தால் ஏற்பட்டது மட்டுமன்று பால் மரம் பொதுமரமாம். ஆதலால் பொதுமைக் கேடுமாம். பால்மரத்தில் நஞ்சுக் கொடியைக் கட்டினால் பால் சுரக்கும் என்னும் பழக்கம் கேடானதாம். நடக்கை நடத்தலாகிய செயலையும் நடத்தையாகிய பண்பையும் தெரிவிக்கும் சொல். ஒருவர் உடலியக்கமும் உளவியக்கமும் ஒருங்கே காட்டும் இப்பொருள் நடத்தை என்பதற்கும் உரியதாம். நடை என்பதும் ஆம். ஞாலத்து வரூஉம் நடக்கை - தொல். 1057 ஏறுபோல் பீடு நடை - திருக். 59 நன்னடத்தைச் சான்றிதழ் - வழக்கு. நடப்பு நடப்பு = நடக்கும் செய்தி, ஆண்டு. இப்பொழுது செய்ய முடியாது; நடப்புக்குப் பார்க்கலாம் என்பது வழக்கு. நடப்பு என்பது எதிர்வரும் ஆண்டு என்பதாம். இதில் நடக்கும் ஆண்டை நடப்பு என்பது வழக்கில்லை. ஆனால், நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது என்பதில் நடப்பு என்பது நடைமுறை என்றும் நிகழ்ச்சி என்றும் பொருள் தருவதாய் அமைகின்றது. அவன் நடப்புச் சரியில்லை என்பதில் நடப்பு ஒழுக்கப் பொருள் தருதல் வெளிப்படை. ஆயினும், நடப்பு, நடை என்பதன் வழியாகவே வருகின்றது. நடம் நட்டம் > நடம் = கூத்து. நட்டுவக்கால் கூத்துக்கலை. தாண்டவம் என்பது இயல்பான கூத்தினும் மேம்பட்ட திறத்தது. ஒற்றைக்கால் ஊன்றி ஒற்றைக்கால் எடுத்து தலைமேல்வர உயர்த்தியும் கலைபல காட்டி ஆடல். தாண்டவம் புரியவல்ல தம்பிரான் - பெரியபு. என்று நடவரசனும், எடுத்த பொற்பாதம் என்று அவன் திருவடியும் கூறப்பட்டனவாம். நடலை நல்லதெனக் கொள்ளத்தக்க உறுதிப்பாடு எதுவும் இல்லாதவர்; போலிமையர்; வஞ்சர். நஞ்சிற் கொடியான் நடலைத் தொழிலால் துஞ்சுற் றனனோ - கம்ப. ஆரண். 1102 நடவு நெல்லை விதைத்து நாற்றங்காலில் வளரச் செய்து உரிய பருவத்தில் நாற்றைப் பறித்துத் தொளிநிலத்தில் ஊன்றுதல் நடவு எனப்படும். நடுதல், நடுகை என்பவும் இது. நட்டவா மென வீழ்ந்தன - கம்ப. உயுத். 1437 நடவை நடவை = நடத்தற்குரிய வழி. கான்யாற்று நடவை - மலைபடு. 214 பொருள்: காட்டாற்று வழி (நச். உரை). நடு இடைவெளிப்பட ஊன்றுதல் நடுதல். நடவு நடுகை என்பதும் அது. பயிர்களை நடுதல், தூண்கள் நடுதல், மரம் நடுதல் அறிக. நடுவே நிற்கும் சமன்கோல் போலவும், உச்சியில் நிற்கும் கதிர் போலவும் சாயாது ஊடு நிற்றல் நடுவுநிலைமை. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி - திருக். 118 நடுகல் அமரிடை இறந்தான் அமரன். அவன் பெயரும் பீடும் கல்லில் எழுதி மாலை சூட்டி, பீலி சாத்தி, படையலிட்டு வழிபடல் வழக்காயிற்று. கற்புடைப் பெண்ணாம் கண்ணகிக்கு நடுகல் அன்றிக் கோயிலும் எடுத்தமை சிலப்பதிகாரம். பீடும் பெயரும் எழுதிய பிறங்குநிலை நடுகல் பற்றிச் சங்கநூல்கள் பலபடக் கூறுகின்றன. நடுகற்கள் இதுகாறும் ஆங்காங்குக் காணவும் படுகின்றன. காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் பெரும்படை வாழ்த்தல் என்பது தொல்காப்பியம் (1006). நடுகல் வகை ஊர்காத்தான் நடுகல். பெண் மீட்டான் நடுகல். அறம் காத்தான் நடுகல். புலிகுத்தி நடுகல். பன்றி குத்தி நடுகல். குதிரை குத்தி நடுகல். ஆவட்டி (ஆ கவரும் வெட்சிப் போரில் இறந்தான் நடுகல்.) தீப்பாய்ந்த அம்மை நடுகல் நடுக்கம் நிலையாக நில்லாமல் அதிர்ந்து விதிர்விதிர்த்து நடுங்குதல். அதிர்வும் விதிர்வும் நடுக்கம் செய்யும் - தொல். 799 அகவை முதிர்வாலும் அச்சத்தாலும் உண்டாகும் மெய்ப்பாடு நடுக்கம். அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே - தொல். 1202 நடுக்கூறு நடுப்பகுதி, நடுப்பாகம் என்னும் பொருளமைந்த நடுக்கூறு என்னும் சொல்லுக்கு, நள்ளிரவு என்னும் பொருள் உசிலம்பட்டி வட்டார வழக்காக உள்ளது. நடுப்பகல், நண்பகல். நடு இரவு, நள்ளிரவு. பகல் இரவு ஆகிய இரண்டன் நடுவுக்கும் பொதுவாகியது. இரவு மட்டும் குறிப்பது அவ் வட்டார வழக்காக இருக்கின்றது. கூறு = பகுதி. நடுச்செங்கலை உருவல் நடுச்செங்கலை உருவல் = ஒரு தீமையால் பல தீமைக்கு ஆளாக்கல். ஒரு தளத்தின் நடுவேயுள்ள செங்கலை உருவினால் அதன் பக்கங்களில் உள்ள செங்கல்களும் ஒவ்வொன்றாகச் சரிந்து தளமே பாழ்பட நேரும். அவ்வாறே ஓர் அரிய செயலில் ஈடுபட்டுள்ள போது அதற்கு அச்சாணியாக இருக்கும் ஒரு செயலைத் தடைப்படுத்தி விடுவது முழுத்தடையும் செய்ததாகவே முடியும். அன்றியும் முழுப்பயன் இழப்புடன் வீண் முயற்சியும், செலவும், மனத்துயரும் உண்டாகவே இடமாம். நன்றாகத் தொழில் ஓடிக் கொண்டிருந்த போது நடுச்செங்கலை உருவுவது போல உருவிவிட்டானே என்பது வழக்குரை. நடுநாள் நாள் நடு > நடுநாள். நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும் - புறம். 280 நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் - புறம். 189 பொருள்: இடை யாமத்தும் நண்பகலும் துயிலானாய் (ப.உ.). நடுவண் நடுவு + அண் = நடுவண் = நடுவாக அமைதல். வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவணது எய்த இருதலையும் எய்தும் நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய் தடுவது போலும் துயர் - நாலடி. 114 நடுவண் அரசு என்பது இற்றைக்கால வழக்குத்தொடர். நடுவுநிலை ஒருபால் சாயாது சமன்கோல் போல் ஒப்ப நிற்கும் நிலை. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி - திருக். 118 அதிகாரப் பெயர் நடுவுநிலைமை. நடுநிலை என்னும் சொல், சமன்செய்து சீர்தூக்கும் துலைக்கோலின் நடுநின்று ஒருபாற் கோடாத நாவின் நிலையினின்று எழுந்தது. தகுதி பற்றி ஒருவரை ஒருவர் ஒருவினைக்கு அமர்த்தும் போதும், திறமை பற்றி ஒரு துறையிற் சிறந்தவர்க்குப் பரிசளிக்கும் போதும், விலைக்குக் கொள்ளும் பொருட்டுப் பண்டங்களுள் நல்லனவற்றைத் தெரிந்து எடுக்கும் போதும், குற்றச் சாட்டுப் பற்றி ஒருவர் நடத்தையை ஆய்ந்து தீர்ப்புக் கூறும் போதும் பகை நட்பு நொதுமல் (அயல்) என்னும் முத்திறத்தும் ஒத்திருந்து உண்மைப்படி ஒழுகுதல். நன்றி செய்தவரிடத்தும் கண்ணோடி நடுநிலை திறம்பக் கூடாதென்பதற்கு இது செய்ந்நன்றி யறிதலின் பின் வைக்கப்பட்டது. (திருக். மரபுரை பக். 92). நடுவொலியந்தாதி: * ஒலியந்தாதி காண்க. நடை நடை = ஒழுக்கம், வழி, வாயில், பழக்கவழக்கம், செல்வம், முறைமை. நடை கெட்டவன் என்பது ஒழுக்கம் கெட்டவன் என்னும் ம.வ. வட்டம் சுற்றி வழியே போ என்பது பழமொழி யானாலும், குறுக்கே சுருக்கமாகப் போகும் நடைவழி ஒன்றை மக்கள் உண்டாக்கி விடுதல் நடைமுறை. நடைவழியில் உட்காராதே என்பது வாயிலிலும், வாயில் நேரிலும் உட்காராதே என்பதாம். நடையறியாதவன் அயலூரான்; போகட்டும் விடுங்கள் என்பதில் பழக்க வழக்கம் முறைமைப் பொருள்கள் உள. நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே - புறம். 312 என்பதில் பரிசு பாராட்டு விருது கொடை என்பவை உள. நடைவகை கருத்துவகை, காட்சிவகை என இருவகையாலும் வருவன. அடுக்கு நடை அரச நடை ஆமை நடை இசை நடை இணை நடை இயல் நடை இலக்கண நடை இலக்கிய நடை இறக்க நடை உணர்ச்சி நடை உயர் நடை உரைநடை உரைப்பா நடை உந்து நடை உலக நடை உலா நடை ஊக்கு நடை எதிர்நடை எருமை நடை எழில் நடை எழுச்சி நடை ஏறு நடை ஏற்ற நடை ஒய்யார நடை ஓட்ட நடை ஓர நடை ஓய் நடை கட்டுரை நடை கால்நடை காவல் நடை கிந்து நடை குந்து நடை குறு நடை கூட்டு நடை கூத்து நடை கொடு நடை கோணல் நடை கோல் நடை செய்யுள் நடை தடை நடை தத்து நடை தவழ் நடை தளர் நடை தனி நடை தாவு நடை நடுங்கு நடை நழுவு நடை நெடு நடை நேர்நடை நொண்டல் நடை படை நடை பழமை நடை பாட்டு நடை புதுமை நடை புலமை நடை புறநடை பொதுநடை போலி நடை மென்னடை வரிசை நடை வளர் நடை வன்னடை நடையன் நடப்பவன் நடையன் எனப்படல் பொதுவழக்கு. நடக்க உதவும் மிதியடியை நடையன் என்பது நெல்லை வழக்கு. ஓரிடத்து நின்று மேயாது பச்சை காணும் பக்கமெல்லாம் அலையும் ஆட்டை நடையன் என்பது குற்றால வழக்கு. நட்டணை சொல்வதைக் கேளாமல் வீம்பு செய்தலும் தான் சொல்லியதைச் சாதித்தலும் நட்டணை எனப்படும். நிமிர்ந்து நிற்கும் அணைபோல் ஆட்ட அசைவின்றி நிற்கும் நிலையைச் சுட்டியது அது. நட்டணைக்காரன் நட்டணை செய்யாதே என்பவை தென்தமிழக வழக்கு. நட்டணைக்கால் என்பது கால்மேல் கால் போட்டிருத்தல். பிறரை மதியாதிருத்தலுமாம். நட்டணைக்கால் நட்டணம், நட்டணைகளுக்குக் கூத்து, கோமாளிக் கூத்து, கணவன் மனைவி போன்றவருள் ஒற்றுமையின்மை, நடிப்பு கொடுமை என்னும் பொருள்களும், நட்டணைக்காரன் என்பதற்குக் கருவங் கொண்டவன் என்னும் பொருளும் தரப்பட்டுள்ளன. (செ.த.சொ.பி. அகரமுதலி) நட்டு + அணை + கால் = நட்டணைக்கால். நட்டணைக்கால் என்பது ஒற்றைக் காலை நிலத்தில் ஊன்றி மற்றைக் காலைக் குறுக்காக அக்காலின் மேல் ஊன்றி இருத்தல். சுவரில் சாய்ந்து கொண்டும் நட்டணைக்காலின் நிற்றல் உண்டு. கொக்கு ஒரு காலை ஊன்றி ஒரு காலை எடுத்து மடக்கி நிற்றலை ஓராற்றான் நட்டணைக் காலுக்கு ஒப்பிடலாம். எடுத்த காலை அடுத்த காலொடு பொருத்தி நில்லாமை ஒன்றே கொக்கின் ஒற்றைக் கால் நிலைக்கும் நட்டணைக்கால் நிலைக்கும் உள்ள வேறுபாடாம். ஒற்றைக் காலில் நிற்றல் என்பது கெடுபிடியாக நின்று, நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளச் செய்யும் நடவடிக் கையாகக் கருதப்படும். கொடுத்தே தீர வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று வாங்கிவிட்டான் என்பது வழங்குமுறை. இதில் இருந்து நட்டணை என்பதற்குக் கெடுபிடியாக நிறைவேற்றல், முறைகேடு வன்புக்கு நிற்றல் எனப் பொருள்கள் உண்டாயின. நட்டணை செய்யாதே, சொன்னால் கேள் என்னும் கட்டளையில் இருந்தே நட்டணை, சொல்லுக்குக் கட்டுப்படாதது என்னும் பொருள் தருவதாயிற்றே. கால்மேல் கால் போடுதல் அவைக்குப் பொருந்தா நிகழ்ச்சி எனப்படுவதுடன் செருக்குக்கு அடையாளமாகவும் நாட்டுப்புற மக்களால் இன்றும் கருதப்படுகிறது. வள்ளலார் அஞ்சியவற்றுள் ஒன்று கால்மேல் கால் வைத்திருத்தல். காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன்; காலின்மேல் கால்வைக்கப் பயந்தேன்; பாட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன்; பஞ்சணை படுக்கவும் பயந்தேன்; நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து நன்குறக் களித்துக்கால் கீழே நீட்டவும் பயந்தேன்; நீட்டிப் பேசுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய்! வள்ளலார் பாடிய பிள்ளைச் சிறுவிண்ணப்பத்துள் ஒன்று இது. நட்டம் நட்டம்:1 அசைவறச் செய்தல் நடுதல் எனப்படும். நட்ட கல்லும் பேசுமோ? என்பது சிவவாக்கியர் பாடல். நட்டுக்கு நிறுத்தல் என்பது மக்கள் வழக்கு. நட்டம் என்பது நிலை இழந்து பொருள் இழந்து செயலற நிற்கும் நிலையைக் குறித்தது. அதனைக் கட்டம் என்பதைக் கஷ்டம் ஆக்கியது போல், நஷ்டம் ஆக்கிவிட்டனர். நட்டம்:2 நட்டம் = நடனம், ஆடல். நள்ளிரவில் நட்டம் பயின்றானை சிவபுராணம். நட்டு ஆடல் - காலை ஊன்றி - பதித்து - ஆடல் நடம். தாளைப்பதித்தல் = பதம். நட்டாற்றில் விடுதல் நட்டாற்றில் விடுதல் = ஒரு பணியின் நடுவே கைவிடுதல். நட்டாறு (நடு + ஆறு) வரை வெள்ளத்தில் படகில் ஏற்றிக் கொண்டு போய் இடையே உன்பாடு என வெள்ளத்தில் தள்ளிவிட்டால் அவன் பாடு என்னாம்? கரையிலேயே இருந்திருப் பின், வெள்ளம் வடிந்தபின் வந்திருப்பான். நீந்திக் கடக்க முடியுமா என எதிர்நோக்கி யிருப்பான். இவற்றுக்கு வாய்ப்பெதுவும் இல்லாமல் வெள்ளத்தோடு வெள்ளமாகப் போக விடுதல் வெங்கொடுமையாம். இப்படி ஓர் இடரான செயலைத் தொடங்கி, அதன் இடையே உதவாமலும் எதிரிட்டும் இருத்தல் நட்டாற்றில் விடுதலாம். இது தள்ளல், கைவிடல் எனவும் வழங்கும். நட்டுக்கு நடு நட்டு= பெரும்பரப்பில் நடுவாக அமைந்த இடம். நடு= நடுவே யமைந்த இடத்தின் சரியான மையப்புள்ளி. நடுப்பகுதி வேறு; நடுப்பகுதியின் மையம் வேறு. வட்டத்துள் வட்டம் மையம் எனினும் அதன் மையப்புள்ளி நட்ட நடுவாகும் நட்டுக்கு நடு, நடுவுக்கு நடு, நட்ட நடு என்பனவெல்லாம் ஒரு பொருளனவாம். நட்டாறு என்பது நடுவாறு என்றாலும் நட்ட நடு ஆறு என்பதே சரியான நடுவாம். நட்ட நடுவில் ஒரு புள்ளி வை என்பதற்கும். நடுவில் புள்ளி வை என்பதற்கும் வேறுபாடு உண்டு. நட்பியல் நண்பு > நட்பு + இயல் = நட்பியல். உடையழி காலை உதவிய கைபோல் நடலை தீர்த்தல் நண்பன தியல்பு - பெருங். 5:3:39-40 நட்பு நட்பு என்னும் சொல்லைத் திருவள்ளுவர் பெருவழக்காக ஆள்கிறார். கேண்மை, தொடர்பு, பழக்கம், ஒன்றுதல் என்பவற்றையும் வழங்குகிறார். பழைமை என்பது வழிவழியாக வரும் நட்பாகும். நட்பு, காதல் பொருளில் வருதல், உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன மடந்தையொ டெம்மிடை நட்பு - திருக். 1122 என்பது நட்பு காதல் பொருளதாகும். நட்பு என்பது நள் என்னும் வேர் வழியாக வந்த சொல். நள் + பு = நட்பு; நள்ளுதல் = நெருங்குதல்; செறிதல். நட்பும் காதலும் நட்பு என்பது உள்ளத்து அளவால் காதலுக்கு ஒப்பானது. அக் காதல் அளவில் நில்லாமல் இடித்துக் கூறும் ஆசிரியன் போலவும், உரிய பொழுதில் தன்னையும் கொடுக்கும் கொடையாளன் போலவும் அமைவது அது. காதலாம் துணை ஒன்றே. ஆனால், நட்பாம் துணை அவ்வொன்று என்னும் அளவில் நிற்பது இல்லை. சங்கப்பலகை போலத் தக்கார்க் கெல்லாம் தகுதியான இடந்தந்து விரியும் விரிவினது அது. காதல், பால் வேறுபாடு உடையது. ஆனால் நட்பு, அவ்வேறுபாடும் இல்லாதது. காதல் துணை, வீட்டளவில் குடும்ப அளவில் நிற்றல் பெரும்பாலும் வழக்கமாக உள்ளது. நட்புத் துணை இடங்கடந்த விரிவினது. இருமனம் கூடினால் திருமணம் ஆகும். அவ்வாறே இருமனம் ஓரொத்த இயைவே இனிய நட்பும் ஆகும். காதல் வெற்றி எத்தகைய இன்ப நலமும், வாழ்வுச் சிறப்பும் தருமோ, அவ்வளவு இன்ப நலமும் வாழ்வுச் சிறப்பும் நல்ல நட்பும் தரும். காதல் தோல்வி எத்தகைய துன்பமும் வாழ்வுக்கேடும் தருமோ, அவ்வளவு துன்பமும் வாழ்வுக் கேடும் தீய நட்பும் தரும். புணர்ச்சி பழகா உணர்ச்சி மேம்பாட்டுப் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனார் நட்பு, நாடு கடந்து ஓடி வரவும் உயிரோடு ஒன்றவும் செய்தது வரலாறு. சீனக்கர் பொய்யா மொழியார் நட்பு, படுக்கையில் செல்லக்கிட என்றதற்காக இறுதி நெருப்புப் படுக்கையில் கணவன் மனைவியொடு புலவர் பொய்யாமொழியாரும் கூடிய மூவர் செல்லக்கிட என்னும் படுக்கை ஆயது. செல்லக்கிட = செல்லாமல் படுத்துக் கிட. பாரியின் நட்புக் கபிலர், பாரியின் மகளிர்க்குத் தந்தையாகிச் செய்கடன் செய்து முடித்து மேலும் வாழ விரும்பாமல் பெண்ணையாற்றங் கரையில் செந்தழல் வளர்த்து அதில் புகும் வீடுபேற்றின்பத்தை ஊட்டியது. கனல்புகு கபிலக் கல் அது எனக் கல்லெழுத்தும் ஆயது. நட்பும் பகையும் நட்பு பகை என்பவை எதிரிடைகள். நள் என்பதன் அடியாக நட்பும், பக்கு பகு என்பதன் அடியாகப் பகையும் பிறக்கின்றன. முன்னது இணைதல் கருத்திலும் பின்னது பிரிதல் கருத்திலும் வருவன. பகை என்பதற்குத் தமிழில் மிகப்பல சொற்கள் காணக் கிடக்கின்றன. அனைத்தையும் திரட்டவில்லை எனினும், அரிதின் முயன்று ஐம்பது சொற்கள் அளவு திரட்டிக் காட்டிய அகர முதலிகள் உள. ஆயின் இன்னும் அவ்வெண்ணிக்கை யளவுள்ள சொற்கள் இணைக்கத் தக்கனவாக எஞ்சியுள்ளன. பகை இவ்வாறாக நட்பு என்பதற்கோ அவ் விரிந்த அகர முதலிகளும் கேண்மை, கேள், தொடர்பு எனச் சொல்லி அமைந்தன. இச்சுட்டும் சொல்லும் நண்பர்கள் வாய்த்தலின் சுருக்கப் பாட்டையும், பகைவர்கள் கிளர்தலின் பெருக்கப் பாட்டையும் சொல்லளவாலும் சுட்டுவனவாம். தமிழில் அமைந்துள்ள எதிர்ச் சொற்கள் பெரும்பாலும் அடியொற்றி அமைவன. ஆதலால், பகைச்சொல் கொண்டு நகைச்சொல் அல்லது நட்புச் சொல்லைக் கண்டு கொள்ளக் கூடுவதாம். நட்பியலைக் கருதினால், நெருங்குதல், பொருந்துதல், கலத்தல், ஒன்றுதல், நிலைத்தல் என்னும் படிமான வளர்ச்சியைக் காண இயலும். நெருங்குதலால் பொருந்துதலும், பொருந்து தலால் கலத்தலும், கலத்தலால் ஒன்றுதலும், ஒன்றுதலால் நிலைத்தலும் நிகழ்வனவாம். இவ்வண்ணமே, பகையியலில் நெருங்காமை, பொருந்தாமை, கலவாமை, ஒன்றாமை, நிலையாமை என்பவை ஏற்படுதலை அறியக் கூடும். நெருங்காமையால் பொருந்தாமையும், பொருந் தாமையால் கலவாமையும், கலவாமையால் ஒன்றாமையும், ஒன்றாமையால் நிலையாமையும் ஏற்படுதல் வெளிப்படையே! நட்பியல் பகையியல் என்பவற்றை ஏரண முறையில் அல்லது இயற்கையொடு பொருந்திய அறிவியல் முறையில் ஆய்ந்து முந்தையோர் குறியீடு செய்துள்ளமை கொள்ளை மகிழ்வு தருவதாகும். இதனை அறிந்து மகிழுமாறு நட்புப் பொருட்சொற்களையும் பகைப்பொருட் சொற்களையும் பட்டியலிட்டு இவண் சுட்டப் படுகின்றனவாம். தமிழில் சொற்பஞ்சம் இல்லை! அவற்றைத் திரட்டி ஒழுங்குறுத்திப் போற்றாப் பஞ்சமே வழிவழி வாடாமல் வாய்த்துக் கொண்டிருக்கிறது. சருக்கரை ஆலையாளனுக்குச் சருக்கரை நோய் வந்ததைப் போல்வது இது! நண்பர் பகைவர் அகத்தர் புறத்தர் அகம்பர் புறம்பர் அகர் பரர் அகவர் புறவர் அடங்கினார் அடங்கார் அடுத்தார் அடுக்கார், அடாதார் அடைந்தார் அடையலர், அடையார் அண்டினார் அண்டார் அணுக்கர், அணுகினார் அணுகார், அணுகலர் அமர்ந்தார் அமரார் அரியலர் அரிகள், அரிஞர் அருகர் அருகலர் இகலார், இகலிலர் இகலினார், இகலோர் இசைந்தார், இசையுநர் இசையார், இரிஞர் இயலுநர், இயன்றார் இயலார், இயலாதார் இனியர் இன்னார் உள்ளுநர் உள்ளார், உள்ளாதார் எண்ணுநர் எண்ணலர், எண்ணார் எதிரார்எதிர்ந்தார், எதிரர், எதிரி ஏலுநர், ஏன்றார் ஏலார், ஏற்கார் ஒட்டுநர் ஒட்டலர், ஒட்டார் ஒப்புநர் ஒப்பலர், ஒப்பார் ஒல்லுநர் ஒல்லார் ஒவ்வுநர் ஒவ்வலர், ஒவ்வார், ஒவ்வாதார் ஒன்றுநர் ஒன்றலர், ஒன்றார் கருதுநர் கருதலர், கருதார் குறுகுநர் குறுகலர், குறுகார் கூடுநர் கூடலர், கூடார் கேளிர் கேளார் கொள்ளுநர், கொள்வார் கொள்ளலர், கொள்ளார் சாருநர், சார்ந்தார் சார்பிலார், சாரலர், சாரார் சினமிலர், சினமிலி சினத்தர், சினவர் செறார் செறுநர் செற்றமிலார் செற்றார் சேக்காளி, சேர்ந்தாளி சேராதார், சேரார் சேர்ந்தார், சேர்ப்பாளர் சேரலார், சேராதவர் தம்மோர் அயலர் தரியர், தரிஞர் தரியலர், தரியார் திருந்தினார் திருந்தலர், திருந்தார் துன்னினார் துன்னலர், துன்னார் தெரிந்தார், தெரியுநர் தெரியலர், தெரியார் தெவ்விலர், தெவ்வர், தெவ்வார், தெவ்வினர் தெறார் தெறுநர், தெறுவர் தேறுநர், தேறுவார் தேறலர், தேறார் தொடர்பர் தொடர்பிலார் தொடருநர் தொடரார் தொடுத்தார் தொடுக்கார் தொடுப்பர் தொடுக்கிலார், தொடுப்பிலர் நகைவர் பகைவர் நசைவர் நசையிலி நட்டார், நட்பர், நட்பாளர் நள்ளார், நட்பிலி நண்ணுநர் நண்ணலர், நண்ணார் நண்பாளர் நண்பிலார், நண்பிலி நணியர் சேயர் நணுகுநர் நணுகலர், நணுகார் நயத்தர், நயவர் நயனிலி, நயவார் நள்ளுநர் நள்ளார், நள்ளாதார் நிகரர் நிகரார், நிகரலர் நேர்நர், நேரர் நேரலர், நேரார், நேராதார் நோலுநர் நோலார், நோனார் பகையார், பகையிலி பகைஞர் பசையுநர் பசையார், பசையிலி பற்றுநர் பற்றலர், பற்றிலி புல்லினார் புல்லார், புல்லாதார் பேசுநர் பேசார், பேசலர், பேச்சிலார் பேணுநர் பேணலர், பேணார் பொருந்துநர் பொருந்தலர், பொருந்தார் பொருவுநர் பொருவார் மருவுநர் மருவலர், மருவார் மன்னுநர் மன்னலர், மன்னாதார் மாண்பர், மாணர், மாணலர், மாணார் மாறிலர், மாறிலி மாற்றலர், மாற்றார் முட்டார் முட்டுநர் முரண்டார், முரணார் முரண்டர், முரணர் முனியலர் முனிந்தார் முனைவிலர் முனைந்தார் மேவுநர் மேவார், மோதுநர் வட்கிலர் வட்கார் வணங்குநர் வணங்கலர், வணங்கார் வீடலர் விட்டார், விடுநர் வேண்டுநர் வேண்டலர், வேண்டார் பகைமை, பகைவர் சுட்டிய சொற்களுக்கெல்லாம் பெரும் பாலும் பழஞ்சொல் ஆட்சியுண்மை கழக நூற் பயிற்சியாளர் காணத் தக்கனவே. அரிதாக வழக்குச் சொற்களும் இயைக்கப் பெற்றுள. சான்று - சேக்காளி, சேர்த்தாளி, பேசார், தொடுப்பர். நணி நண் > நணி. நண் = நெருக்கம். அணிமையும் நணிமையும் ஒப்பன. நணி நணி = மிக அணிமை (அ) மிக நெருக்கம். திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும் - புறம். 154 நணிநணி இருந்த, குறும்பல் குறும்பில் ததும்ப வைகி - புறம். 177 நணிமை நண் > நணி > நணிமை. நண்ணுதல் = நெருங்குதல். நணிமை = அணிமை; நணி என்பதும் இது. நம்முள் குறுநணி காண்குவ தாக - புறம். 209 நண்டு மருதநிலக் கருப்பொருள்களுள் ஒன்று நண்டு. அது பலபெயர்களைத் தாங்கும். அலவன் நள்ளி குளிர்ஞெண் டார்மதி களவன் என்றிவை கற்கடகப் பெயரே என்பது திவாகரம். ஐங்குறுநூற்றில் கள்வன் பத்து என்பது ஒன்று. அது ஏடு எழுதுவோர் பதிப்பித்தோர் ஆயவர்களால் ஏற்பட்ட பிழையாகும். தலைவன் தலைவியர் சந்தித்த இடத்தில் சான்றாக இருந்தவர் எவரும் இலர். ஒரு நண்டு அவர்கள் கண்காணத் தோன்றியது; அதுவே கள - இட-ச் சான்றாக இருந்தமையால் களவன் எனப்பட்டது. புள்ளிக் களவன் புனல்சேர் பொதுக்கம் என்பது கலித்தொகை (88). நண்டும் தும்பியும் நான்கறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே என்பது தொல்காப்பியம் (1530). மெய்யுடைமையின் ஊற்றுணர்வும், இரைகோடலின் நாவுணர்வும், நாற்றம் கோடலின் மூக்குணர்வும், கண்ணுடைமையின் கண்ணுணர்வு முடையவாயின; நண்டிற்கு மூக்குண்டோ எனின், அஃது ஆசிரியன் கூறலான் உண்டு என்பது என்றார் பேராசிரியர் (உரை). நண்டு நீர்வளமான இடங்களில், மரம் செடி கொடிகளின் வேர் அடியிலும் வயல் வரப்புகளிலும் அளை வகுத்துக் கொண்டு வாழும். இதனை, தண்ணக மண்ணளைச் செல்லும் (27), தண்ணக மண்ணளை நிறைய (30) என ஐங்குறுநூறு சொல்கிறது. நண்டின் கண்கள் உடலின்மேல் உயர்ந்து வேம்பின் அரும்புபோல் தோன்றும் அழகை, வேப்பு நனை அன்ன நெடுங்கண் என்கிறது (30). புள்ளிகள் பலவற்றை யுடைமையால், புள்ளிக் கள்வன் என்கிறது (21). நண்டின் கால்களில் கூர்மையான அரம்பம் போன்ற நகங்கள் இருத்தலால் பயிர் செடி கொடிகளை அறுக்கும். கள்வன் ஆம்பல் அறுக்கும் (21) கள்வன் வள்ளை மென்கால் அறுக்கும் (26) வித்திய வெண்முளை கள்வன் அறுக்கும் (29) வயலைச் செங்கொடி கள்வன் அறுக்கும் (25) எனக் கூறும். தாயுயிர்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வன் என்கிறது ஐங்குறுநாறு (24). பிறரும் அவ்வாறே கூறினர். ஆனால் இறந்ததாகக் கிடந்த நிலையே யன்றி இறந்தது இல்லையாம். சினை (முட்டை) பயந்த அலவன், உடல் சுருங்கிப் பின் முன்னையினும் பருத்தல் வேண்டி ஓடுமாற்றத் தொடங்கும். ஓடு கழலும் அலவன் மெலிந்து புத்தோடு பெறுங்கால், அதன் வாலில் ஒட்டிக் கிடந்த சினைகள் பொரித்துத் தாயலவனை நீங்கும். சினை பயவாமுன் இருந்த நிலைமையின் வேறாய்ப் புத்தோடும் பருவுடலும் பெறுவான் புலர்ந்து ஓய்ந்து ஒடுங்கிக் கிடக்கும் நண்டு இறந்தது போலத் தோன்றுதலின் நம் நாட்டுப் பண்டைச் சான்றோர் தாயுயிர் வேண்டாக் கூருகிர் அலவன் என்றும் (தொல். பொருள். நச். 157 மேற்), தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வன் என்றும் (ஐங். 24) கூறினர் என்று விளக்குகிறார் உரைவேந்தர் ஔவை. சு. து. நண்டு ஈர மண்ணில் செல்லுங்கால் அதன் கால்கள் பதிந்து வரிகளாகத் தோன்றுதலால், தண்சேறு கள்வன் வரிக்கும் என்கிறது ஐங்குறுநூறு (28). வரிதல் வரைதல் எழுதுதலாம். அதன்வரி, எழுத்தாகத் தோற்றம் தருவதும் உண்டு. ஆதலால், நந்து நாகு நீர் எழுத்தாய்த் தோன்றினும் தோன்றும் என்பர். நண்டு நசுக்கு நண்டு = ஓடி ஆடித் திரியும் வளர்ந்த குழந்தைகள். நசுக்கு = ஓடி ஆடாமல் நகர்ந்தும் கிடந்தும் தவழ்ந் தும் இருக்கும் குழந்தைகள். நண்டு என்பதை நண்டு சிண்டு என்பதில் காண்க. நசுக்கு சிறிது என்னும் பொருளது. நசுகணி என்பதொரு நோய். அதன் பூச்சி பசைபோல் ஒட்டிக் கிடப்பதாம். நசுக்குதல் தேய்த்தலுக்கு உரிய நொய்மையானது என்பது தெளிவு. நண்டும் சிண்டும் நண்டு = ஓடி ஆடித் திரியும் பிள்ளைகள். சிண்டு = ஓடி ஆடித் திரியாமல் தவழ்ந்தும் ஊர்ந் தும் திரியும் பிள்ளைகள். நண்டும் சிண்டுமாகத் திரிகின்றன நண்டுஞ் சிண்டுமாகப் பல பிள்ளைகள் என்பவை வழக்கு. சிண்டு, சுண்டு எனவும் வழங்கும். நண்டு, சிண்டு என்பவை பெரிய நண்டு, நண்டுக் குஞ்சு என்பவற்றைச் சுட்டி, அத்தகு குழந்தைகளைக் குறிப்பதாயிற்றாம். சிண்டு, சுண்டு என்பவை சிறியது என்னும் பொருள் தரும் சொற்கள். சிறு குடுமியைச் சிண்டு என்பதையும், சிறுகாயைச் சுண்டைக்காய் என்பதையும் கருதுக. சுண்டைக் காயைச் சுரைக்காய் ஆக்கிவிட்டானே என்பதும் விளக்கும். நண்டூரி நரியூரி சிறுமியர்கள் விளையாடும் ஒருவகை விளையாட்டு. ஒருத்தி கண்ணைக் கட்டிவிட்டு அவள் கை தோள் கால் முதலியவற்றில் ஒருத்தி விரலால் தடவி நண்டூரி நரியூரி எனக் கூறி ஒளிந்து விடுவாள். அவளைத் தேடிப் பிடிப்பது அந்த விளையாட்டு. சரியாகக் கண்டுபிடிக்கவில்லை என்றால் மீளவும் கண்ணைக் கட்டி நண்டூரி நரியூரி என்று தொடர்வது அவ் விளையாட்டு. நண்ணுதல் நள் > நண் > நண்ணுதல். நள் = செறிவு, நெருக்கம். நள்ளிரவு, நண்பகல். நண்ணும் இருவினையும் நண்ணுமின்கள் நல்லறமே- சிலப். 16 வெண். நண்பு நட்பு > நண்பு. நள் > நண் = நெருக்கம், செறிவு. செறிந்த தொடர்புக்கு நட்பு, நண்பு என்பவை பெயராயின. கண்போல் நண்பிற் கேளிர் - புறம். 71 நண்ணார், நண்ணாதார் = நெருங்கார், பகைவர். நண்ணார் நடுக்குற - மணிமே. 22:29 நத்தம் எப்பொழுதும் ஆடு மாடு மக்கள் பறவை என ஒலி ஓயாது விளங்கும் இடம் நத்தம் ஆகும். ஊரூர் தோறும் நத்தம் உண்டு. அது தனியொருவர் இடமன்று. ஊர்ப் பொதுவுக்கென விடப்பட்ட அரசு இடம். நத்தம் பாழ்பட்டால் ஊரே பாழ்பட்டதாகப் பொருளாம். ஊர்ப் பெயர்களே நத்தம் எனல் உண்டு. நத்தம், ஆலடி நத்தம், ஆவல் நத்தம், சாவல் நத்தம். நத்தம் புறம்போக்கு நத்தம் = ஊர்க்குப் பொதுவாம் மந்தை. புறம்போக்கு = ஆடு மாடு மேய்தற்கென அரசு ஒதுக்கிய புல்நிலம். ஊர் மாடு, ஆடு முதலியவை நத்தத்தில் தங்கும். நாய்களும் நத்தத்தில் திரியும். ‘நாய் குரைத்து நத்தம் பாழாகுமா? என்பது பழமொழி. புறம்போக்கு மேய்ச்சல் நிலம் எனவும் வழங்கப்படும். நத்தம் ஊரடி சார்ந்தது; புறம்போக்கு ஊர் நிலபுலங்களையெல்லாம் தாண்டிய ஆறு, குளம், ஓடை முதலியவை. நத்தல் நறுங்கல் நத்தல் = தின்னுதற்கு வாய் அலந்த குழந்தை. நறுங்கல் = சவலைப் பிள்ளை (அ) நோயால் நறுங்கிப் போன பிள்ளை. நத்துதல் = ஆர்வப்படுதல்; நறுங்குதல் = வளர்ச்சி இன்றி இருத்தல். இத்தகு குழந்தைகள் பெற்றோர்க்கு ஓயாத தொல்லை தந்து கொண்டே இருக்கும். அழுகையும் அரற்றுமாக இருக்கும். நத்தல் நறுங்கலை வைத்துக் கொண்டு எப்படி எல்லாவற்றையும் நேரம் காலத்தில் முடிக்க முடியும் என ஏங்குவார் பலர். நத்துதல் நத்தை ஓய்வு ஒழிவு இல்லாமல் மண்ணை உண்டு கொள்ளுவ கொண்டு தள்ளுவ தள்ளும் இயல்பினது போல் ஓயாது விரும்பி உண்பதும் வாய்த்ததை எல்லாம் துய்ப்பதுமாக இருத்தலை நத்துதல் என்பது தென்தமிழக வழக்கு. நத்துவாய் என்பார் பாரதியார். நத்தைமண் நத்தை வாழும் சேற்றுமண், களிமண்ணாகவும் கெட்டித் தன்மையதாகவும் இருக்கும். அம் மண்ணைக் கொண்டு சுவர் வைத்தாலும், முகடு பரப்பினாலும் நீரால் கரையாத கெட்டித் தன்மையது. ஆதலால், நத்தைமண் எனப்படும் கருஞ்சேற்று மண்ணைப் பழநாளில் கட்டடப் பணிக்குப் பயன்படுத்தினர். இன்றும் மதுரை மாவட்ட உசிலம்பட்டிப் பகுதியில் அத்தகு மண்வீடுகளைக் காணலாம். நத்தமண் என்பது மக்கள் வழக்கு. நந்தல் நந்துதல் > நந்தல். நந்து = சங்கு. நந்தல் = விளங்குதல், பெருகுதல் அதற்கு எதிரிடையாம் கெடுதல், சுருங்குதல். வீரமிகு மன்னனிவன் விட்டார்க்கும் நட்டார்க்கும் தாரணியின் ஆக்கினனந் தல் நட்டவர்க்கு நந்தல் ஆக்கம்; விட்டவர்க்கு நந்தல் கேடு. நந்தி நந்து > நந்தி = விளக்கமிக்கது; காளை. காளையின் நடையும் திமிலும் கண்டாரைக் கவர்வன. சில காளைகளின் கொம்பும் தாடையும் கண்ணைவிட்டு அகலாதவை. தஞ்சையின் நந்தி, கருவறைக்குப் போக நினைவாரையும் கட்டிப் போட்டு நிறுத்த வல்ல பருமையும் பெருமையு முடையதாதல் கண்கூடு. நந்து நந்து = சங்கு. நந்துதல் = ஒளிவிடுதல். ஒளிவிடுதல் உண்மையால் நந்து எனப்பட்டது. கதிர்க்கோட்டு நந்தின் சுரிமுக ஏற்றை - புறம். 266 நந்து > நத்து > நத்தை. நத்தம் என்பதும் அது. நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் - திருக். 235 நப்பி ஈயாக் கருமியை நப்பி என்பது நெல்லை வழக்காகும். நக்குதல் = விரும்பிச் சுவைத்தல்; நச்சுதல் = விரும்புதல்; நத்துதல் = விரும்பிக் கிடத்தல். இவற்றைப் போன்ற சொல்லமைப்பு, நப்புதல் ஆகும். தனக்கே எல்லாமும் என்னும் தற்பற்றே அது. ஆதலால் ஈயாக் கருமியாய் எச்சில் கை உதிரானாய் இருப்பானை நப்பி என்பது வழக்காயிற்று. பொதுவழக்கு, இலக்கிய வழக்கில் இழந்துபோன வளத்தை மீட்டெடுக்க உதவுமெனக் காட்டும் சான்றாம் இது. நமரி கத்தியை நமரி என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு. பேம் நாம் உரும் அச்சம் என்பது தொல்காப்பிய உரியியல் (848) நூற்பா. நாம் என்பது நம் ஆதல் சொல்லியல் முறை. நம் ஆகி அச்சப்பொருள்தரும் கத்தியைக் குறிக்கும் வழக்காகி இருக்கலாம். அமரி, சமரி என்பவற்றை நமரியுடன் வைத்து எண்ணிப் பார்க்கலாம். நமன் சமன் > நமன். எவ்வுயிருக்கும் ஒப்பவனாக இருந்து கடனாற்றும் காலன் என்பதன் சமன்மை கருதிய பெயர். ஞமன் என்பதும் அது. சமன்கோல், நமன்கோல், ஞமன்கோல், சீர்தூக்கும் கோல், நிறைகோல் என்பனவெல்லாம் ஒருபொருளன. நம்பிக்கை நம்பும் மேவும் நசையா கும்மே என்பது தொல்காப்பியம் (812). விருப்பத்தால் ஒன்றின் மேல் ஈடுபடுதல், கட்டாயம் வெல்வேம் என்னும் நம்பிக்கையை உண்டாக்கும். நம்பிக்கை இல்லாமல் ஈடுபடும் எச்செயலும், எத்தடையும் இல்லாமல் அந்நம்பிக்கை இல்லாமையே தடையாய்த் தானே தோற்றுப் போகச் செய்யும். ஆதலால் எந் நம்பிக்கையிலும், தன்னம்பிக்கை இன்றியமையாததாகும். நம்பிரான் நம் + பெருமகன் > பெருமான் > பிரான். இறைவனையும் இறையடியாரையும் ஆளும் அரசனையும் நம்பிரான் என்பது வழக்கு. இதன் பெண்பால் நம்பிராட்டி. நம் பெருமாட்டி என்பதன் மரூஉ. தம்பிரான் தோழர் என்பார் சுந்தர மூர்த்தியார். நம் என்பது உரிமைச் சுட்டு. * பெருமான் காண்க நம்மட்டி மண்வெட்டி என்பது, கொச்சை வழக்கில் மம்பெட்டி, மம்பட்டி என வழங்குதல் பொதுவழக்காகும். அது நம்மட்டி என வழங்குதல் விளவங்கோடு வட்டார வழக்காகும். இது, கொச்சையிலும் கொச்சையாகும். நயப்பரம் நயப்பரம் என்பது கொழுப்பு என்னும் பொருளில் மதுரைச் சிலைமான் வட்டார வழக்காக உள்ளது. தோற்றப் பொலிவு தருவதால் கொழுப்புக்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். நயம் பயம் நயம் = நயந்து அல்லது நயத்தால் பயன்படுத்திக் கொள்ளுதல். பயம் = பயப்படுத்தி அல்லது அச்சுறுத்திப் பயன்படுத்திக் கொள்ளுதல். நயபயம் காட்டி நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளுதல் சிலர் இயற்கையாம். ஆடிக் கறப்பதை ஆடிக் கறத்தல், பாடிக் கறப்பதைப் பாடிக் கறத்தல் போல் பயன்படுத்துதல் நயமாம். வல்லாண்மை யாலும் சூழ்ச்சித் திறத்தாலும் ஒருவனை அச்சுறுத்தித் தன்செயலை நிறைவேற்றிக் கொள்ளுதல் பயமாம். இவ்விரண்டும் உலகிடையில் காணக் கூடியனவேயாம். நரந்தம் நரந்தம் என்பது ஒருவகைப் புல்; அப்புல்லைத் தொட்ட கையில் அதன் மணம் கமழும்! அதனை மென்றால் மணமும் இனிமையும் உள்ளமை தெளிவாம். மணநெய் எடுக்கப் பயன்படும் பொருள்களுள் நரந்தம் ஒன்று. அதியமான் கையின் நறுமணம், நரந்தம் அன்னது என்பதனை ஔவையார், நரந்தம் நாறும் தன்கையால் என்கிறார் (புறம். 235). நரந்த நெய் கூந்தலுக்குப் பூசப்பட்டமை, நரந்தம் நாறிருங் கூந்தல் என்பது கலிப்பா (54). நரந்தப் புல்லை மான் விரும்பியுண்ணும். எனவே, நரந்தை நறும்புல் மேய்ந்து கவரி என்கிறது புறப்பாடல் (122). நரம்பு நாற்று நரம்பு= நரம்பு வைத்துப் போன அல்லது முற்றிய நாற்று. நாற்று= நடுதற்குரிய பருவ நிலையில் அமைந்துள்ள நாற்று. காய்கறி தவச வித்துகளை நாற்றங்காலில் முளைக்கச் செய்து வளர்த்து உரிய வளர்ச்சி நிலையில் நடவு செய்தல் வேளாண்மை முறையாம். அம்முறையில் நரம்பு வைத்த அல்லது மட்டை வைத்த நாற்று முற்றியதற்குச் சான்றாம். அந்நாற்றை நட்டால் பக்கம் விரியாது. நட்டது மட்டுமே சின்னஞ்சிறு கதிர் வாங்கி அல்லது பயன் தந்து நின்றுவிடும். நரம்பும் நாற்றுமாக இருக்கிறது; ஒரு பாதியே பயன்படும் என்பது வழக்காறு. நாறு > நாற்று. நாறுதல் = முளைத்தல். நரலுதல் ஒலித்தல் பொருளது. நரல் பெருத்துவிட்டது என்பது நெல்லை வழக்கு. நரல் = மக்கள்; அவர்கள் பெருகிய இடத்து உண்டாகும் ஒலி நரலுதல் ஆயிற்று. முரலுதல் என்பது குழலிசை யாதல் எண்ணத் தக்கது. நரவலி நரவலி என்பது, நரம்புச் சிலந்தியைக் குறிக்கும். நரவலி என்னும் பெயர் அச்சிலந்தி போன்ற கல்விருசம் பழத்திற்கு அல்லது மூக்குச் சளிப் பழத்திற்கு வடார்க்காட்டுப் பாங்கரில் வழங்கி வருகிறது. (தேவநே. சொல். 13, 14). நரி நரை என்பது வெண்ணிறம். நரை நிறமுடைய விலங்கு நரி எனப்பட்டது. வெண்ணிறப் பசு நரையான் எனப்படுதல் உண்டு. நரைப்புறக் கழுதை (அகம். 207) ஆயன் ஆட்டை ஓட்டிச் செல்வது போல் தன் வாலால் அடித்தும் வாயால் சங்கைப் பிடித்தும் நடக்க வைத்துக் கொண்டு போகவல்லது. ஊளை இடுவதால் அதனை ஊளை என்றும் ஊளன் என்றும் வழங்குவர். காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு - திருக். 500 நரிமா என்பதும் இது. இசையும் எனினும் இசையா தெனினும் வசைதீர எண்ணுவர் சான்றோர் - விசையின் நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ அரிமாப் பிழைப்பெய்த கோல் - நாலடி. 152 நரியன் நரி + அன் = நரியன். நரி, சூழ்ச்சிக்கு உவமையாவது. அச்சூழ்ச்சி வஞ்சமிக்க தன்னலச் சூழ்ச்சியாம். அத்தகைய சூழ்ச்சியனாம். நரியன் என்னும் வஞ்சன் பெயரை நரிக்கண்ணன் என்னும் பெயரால் பாவேந்தர் வழங்குகின்றார். சூழ்ச்சியில் நரிக்கண்ணன் மட்டுமல்லன், நரிக்கு அண்ணனும் ஆவன் அவன். நூல் பாண்டியன் பரிசு. நாடக உறுப்புக்கு ஏற்ற நயத்தகு பெயர். நருள் நருள் = மக்கள், கூட்டம். நரலுதல் என்பது ஒலித்தல். மக்கள் கூட்டமாகக் கூடிய இடத்தில் ஒலி மிக்கிருத்தல் வெளிப்படை. ஆதலால், ஒலித்தல் பொருள்தரும் நரல் அவ்வொலிக்கு அடிப்படையாக அமைந்த கூட்டத்தை நரல் எனக் குறித்து நருள் என்றாகியது. நருள் பெருத்துப் போனது என்பதில் மக்கள் பெருகிவிட்டனர் என்னும் குறிப்புளது. இவ்வளவு பதவலா? என்பதும் மக்களின் கூட்டம் என்னும் பொருளே தருதலும் வழக்கே. பதவல் = கூட்டம். நரை நுரை > நரை. பால்நுரைப் போர்வை போர்த்து ஆறுவருதல் கண்கூடு. மீனுண் கொக்கின் தூவி யன்ன வால்நரை கூந்தல் முதியோள் - புறம். 277 நலங்கு நலங்கு > நலுங்கு. மணம் செய்தவளும், வயிறு வாய்த்தவளும் எத்துயரும் உறாமல் எத்தீமையும் அடையாமல் நலமாக வாழவும் நலமாக மகப்பேறு எய்தவும் மகளிர் நீர்க்கலம் சுற்றி வாழ்த்துதல் நலங்கு ஆகும். நலுங்கு என்பது ம.வ. நலம் நல் + அம் = நலம். நலம் = நன்மையானது, மங்கலமானது. நலம் x பொலம். பொல்லாதது பொலம். எந்த நலத்திற்கும் முந்து நலம், உடல்நலம். ஆதலால் உடல்நலத்துறை எனத் துறையே உண்டாயிற்று. xUtiu¡ f©lhš, ‘eykh? என வினவுதல் பண்பாடு ஆயது. விருப்பும் கண்ணோட்டமும் இன்பமும் நலமாம். இவையுள்ள இடம் அழகு உறையுள் எனற்கு ஐயமின்றே! ஆகலின் நலமும் அழகெனலாயிற்றாம். நலம் புனைந்துரைத்தல் திருக்குறளின் (112) ஓரதிகாரப் பெயர். நலம் பாராட்டல், மேலும் மேலும் நலமாகச் செய்ய வைக்கும். நலம் பொலம் நலம் = பூப்பு நீராட்டு மணம் போன்ற நன்னிகழ்ச்சிகள். பொலம் = நோய் இறப்பு போன்ற தீய நிகழ்ச்சிகள். நல்லது பொல்லது என்பதும் இதுவே. உற்றார் உறவாக இருந்தும் பகையாகி இருப்பாரும், கொண்டு கொடுத்தல் இல்லாத அயலாராக இருப்பாரும் கூட, ஓரூரில் நிகழும் பொலங்களைத் தள்ளி வைக்க மாட்டார். ஊரொழுங்கு அதுவாகும். அவ்வாறு செய்து ஊர்ப்பகையைத்தேடிக் கொள்ள எவரும் விரும்பார். யாராக இருந்தாலும் நலம்பொலம் தள்ளலாமா? என்பது சிற்றூர் வழக்கு. நலிதல் நலிதல் = நலத்தில் குறைதல் நலிதலாம். உடல்நிலை பொருள்நிலை முயற்சிநிலை ஆயவற்றில் குறைவு உண்டாதல் நல்ல நிலையில் இருந்து நலிவு நிலையுறுதலாகவே கருதப்படும். நலிதல், மெலிதல் வறுமை, தோல்வி இழப்பு ஆயவற்றால் உண்டாதல் எவரும் அறிந்தது. நலிவின்மேல் நலிவாதலும் கண்கூடு. ஆனால், நன்முயற்சி யாளன் ஒருவன் குடியில் பிறந்தால் நலிவனைத்தும் தூளாகிப் போதல் உறுதி. எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் - திருக். 666 இசைச்செயல்கள் எட்டனுள் நலிதல் ஒன்று என்பார் அடியார்க்கு நல்லார். எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு என்பவை (சிலப். 3:26) அவை. நல்குதல் கொடுத்தல் என்பது பொருள். எதைக் கொடுத்தல் நல்குதல்? நல்லதைக் கொடுத்தலே நல்குதலாம். வாழ்வுக்கு இன்றியமையாததைக் கட்டாயம் தேவைப்படுவார்க்குத் தருதலே நல்குதலாம். பல்கலைக் கழகங்கள் நல்குதல் நோக்கியே நடைபெற வேண்டியுளது. தொழிலாளர் ஆண்டுழைப்புக்கு நல்குகை பெறுதல் உரிமையாயிற்று. அந் நல்குகையை நன்னர் என்பார் பாவாணர். நல்குதலால் பயனுண்டாயின் நல்குகை நல்குகையேயாம்! நல்கூர்தல் நல்கு + உரவு = நல்குரவு > நல்கூர்தல் = வறுமை. நல்கு = நன்மை. நன்மை என்றிருப்பவை ஊர்ந்து விடுதல், நல்கு ஊர்தல் ஆகும். நன்மையாயினவை எல்லாம் அகன்றுவிட்ட துயர்நிலை. வறுமை துன்பமே எனினும் அத்துன்பமே மாந்தர் வாழ்வுக்கும் உயர்வுக்கும் இன்றியமையாதது. வறுமையே உழைப்பின் உந்துநிலை; வறுமையால் ஏற்படும் வயிற்றடிப்பாடு எத்துயரையும் தாங்கும் உளவலிமை உடல் வலிமை உளநலம் உடல்நலம் என்பவற்றை அவர்க்கு ஊட்டினும், உலக நலத்துக்கு வேண்டும் கடிய உழைப்பு அயரா உழைப்பு ஆயவற்றை ஓயாது கிளரச் செய்வதால் உலக நலமும் ஆம். இவ்வடிப்பொருள் கொண்டே நல்கூர்தலும் நல்குரவும் அமைந்தனவாம். நல்குரவு திருக்குறளில் (105) ஓர் அதிகாரப் பெயர். நல்லடக்கம் அடக்கம் என்பது ஓர் உயரிய பண்பு. நல்லடக்கம் என்னும் இச்சொல் இறந்து போனவர்களைப் புதைப்பதைக் குறிக்கிறது. அடக்கம் செய்தல் என்னும் அது, ஈழத்தில் நல்லடக்கம் என வழங்குகின்றது. குருதியோட்டம், மூச்சு முதலியவை அடங்கிவிட்ட உடலைப் பெட்டியில் கல்லில் மண்ணில் மூடிப் புதைப்பது ஆதலால் அப்பெயர் பெற்றது. இறந்தார் மாண்டார் என்பவை சிறந்தார் என்னும் பொருளன. அவரை அடக்கம் செய்தலை நல் என அடை தந்து வழங்கல் போற்றுதற்குரியதாம். நல்லது நளியது: நல்லது = கோயிலில் நிகழும் பொங்கல்விழா தேர்த்திருவிழா முதலியன. நளியது = கோயிலில் நிகழும் குளுமை சொரிதல் விழா. நன்மையாவது மங்கலம்; மங்கல விழாக்கள் நல்லது எனப்படும். வெப்பம் மிக்கும், மழை இல்லாதும், அம்மை முதலிய நோய் வந்தும் துன்புறுத்தும் காலத்தில் தெய்வத்திற்குச் சாந்தி செய்ய வேண்டும் எனக் குளுமை சொரிதல் என ஒரு விழாக் கொண்டாடப்படும். குளுமை சொரிதல் விழாவே நளியது ஆகும். நளி என்பது குளிர்ச்சியாம். குளிர் நளுக்குதல் என்பது நடுக்குதல் பொருளில் வந்தது. குளிர் நடுக்குவதாகலின். நல் வரிசைப் பழம் புலவர்கள்: நக்கண்ணன் நக்கண்ணையார் நக்கீரர் நத்தத்தனார் நப்பசலையார் நப்பண்ணனார் நப்பாலத்தனார் நப்பூதனார் நல்லச்சுதனார் நல்லந்துவனார் நல்லழுசியார் நல்லாதனார் நல்லாப்பிள்ளை நல்லாவூர் கிழார் நல்லாறனார் நல்லிறையனார் நல்லூர்ச் சிறுமேதாவியார் நல்லெழுனியார் நல்வழுதியார் நல்விளக்கனார் நல்வெள்ளியார் நல்வேட்டனார் நற்கொற்றனார் நற்சேந்தனார் நற்றத்தனார் நற்றாமனார் நன்பலூர் சிறுமேதாவியார் நன்னாகனார் நன்னாகையார் நவியம் நவியம் = கோடரி. வேண்டாப் பகுதியை விலக்கி வேண்டுமாறு செய்ய உதவும் கருவி, நவியம். கோடாலி என்பது மக்கள் வழக்கு. கோடு = கிளை; அரி = வெட்டுதல், துண்டித்தல். கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய் நெடுங்கை நவியம் - புறம். 36 பொருள்: வலிய கையை யுடைய கொல்லன் அரத்தால் கூர்மை செய்யப்பட்ட அழகிய வாயினை யுடைத்தாகிய நெடிய கையை யுடைய கோடாலி ப.உ. நவில் நவில்தொறும் என்றால் படிக்கும் தோறும் என்னும் பொருளதா? இல்லை! எடுத்துச் சொல்லும்தோறும் என்பதே பொருள்! எடுத்துச் சொல்லும் போதுதான் சிக்கல் உண்டாகும்; மயக்கம் உண்டாகும்! அந்நிலை உண்டாகும் போதுதான் சிக்கல் அறுக்கும் சிந்தனையும் அச்சிந்தனையால் கலந்துரையாடலும். வழக்கொடு படுத்தலும் உண்டாகித் தெளிவு ஏற்படும். நூல் என்பதே நுவல் என்பதன் வழியாக வந்த சொல்லே! நுவல்வது யாது அது நூல். பாடம் சொல்லியும் எடுத்துரைத்தும் அழுந்தத் தழும்பேறிய செய்திகளே நூலுருக் கொண்டன! இவற்றை எண்ணின் நவில்தொறும் நூல்நயம் என்பது நுவல்தொறும் நூல்நயம் என்னும் பொருளுடைய தாதல் விளங்கும். சுவைக்காக ஒருமுறை, சொல்லுக்காக ஒருமுறை, பொருளுக்காக ஒருமுறை அணிக்காக ஒருமுறை, துறைக்காக ஒருமுறை, நிறைக்காக ஒருமுறை எனப் பன்முறை சொல் விரித்துரைக்கும் போதுதான் நூலின் நயங்கள் பளிச்சிடும். நவ்வி நவ்வி:1 மான் வகையுள் ஒன்று நவ்வி. அதன் கண் அமைப்பும் மருட்சியும் இயக்கமும் தோற்றமும் புலமையரைக் கவர்ந்து தன் கண்ணுள் நிறுத்தியது. அதனால் காதன் மகளிர் கண்ணுக்கு உவமை யாயிற்று. நவியம் என்பது கோடரி. அது பட்டால் சாய்க்க வல்லது; வாட்டவல்லது. ஒரு நோக்கு நோய்நோக்கு என்றும், களப்போரில் வென்ற யான் களவுப் போரில் தோற்றேன் என்று கூறவும் செய்வது. அத்தகு வருத்தும் அழகு விழிகளால் நவ்வி எனப் பெயர் பெற்றதாம். நவியம் பாய்தலின் - புறம். 36 பெருங்கவின் பெற்ற சிறுதலை நவ்வி - மதுரைக். 275 காண்க: அகம். 7, 39; நற். 124. நவ்வி:2 நவ்வி = அழகு. இளமைத் தன்மையும் மானும் நவ்வியாம். இளமையில் அழகுண்மை அறிந்ததே. மானின் அழகோ கலைமான் எனப் பெயரீட்டுரிமைக்கு இடனாயிற்று. நவ்வியம் புதுமைப் பொருள் தரும் சொல். புதுமைக் கவர்ச்சி எவருக்கும் உரியதே. ஆகலின், நவ்வி அழகு குறிக்கும் சொல்லாயிற்றென்க. நளி நள் > நளி = செறிவு, பெருமை. நளிச்சினை வேங்கை - சிறுபாண். 22 நளிகொள் சிமைய விரவுமலர் - நெடுநல். 27 நளிநயம் (அவிநயம்) நள் + இ = நளி. நளி + நயம் = நளிநயம். நளி, செறிவு, பெருமை, குளுமை, நடுமை ஆகிய பல்பொருள் உடையது. தடவும் கயவும் நளியும் பெருமை - தொல். 803 நளிஎன் கிளவி செறிவும் ஆகும் - தொல். 806 செறிந்த இதழ்களை யுடையதும் எழிலும் ஏற்றமும் தெய்வத் தன்மையும் வாய்ந்த நறுமலருமாம் தாமரை நளினம் ஆகும். ஞாயிற்றேர் நிறத்தகை நளினம் - பரிபா. 5 நளிநயமாவது, செறிந்த மெய்ப்பாடு; காண்பார் கட்புலம் கவரும் எழில், நயத்தகு குறிப்பு, பெருந்தகும் இன்பம் அனைத்தும் பயக்கும் ஆடற்கலைக் கோலமாம். பாவகம், அவிநயம் என்பவும் இது. நளிநயம் இருபத்து நான்கு வகைய என்பார் அடியார்க்கு நல்லார் (சிலப்.3:13). வெகுண்டோன் நளிநயம் (அவிநயம்) வெகுண்டோன் அவிநயம் விளம்பும் காலை மடித்த வாயு மலர்ந்த மார்புந் துடித்த புருவமுஞ் சுட்டிய விரலும் கன்றின உள்ளமொடு கைபுடைத் திடுதலும் அன்ன நோக்கமோ டாய்ந்தனர் கொளலே. ஐயமுற்றோன் நளிநயம் பொய்யில் காட்சிப் புலவோர் ஆய்ந்த ஐய முற்றோன் அவிநயம் உரைப்பின் வாடிய உறுப்பும் மயங்கிய நோக்கமும் பீடழி புலனும் பேசா திருத்தலும் பிறழ்ந்த செய்கையும் வான்றிசை நோக்கலும் அறைந்தனர் பிறவும் அறிந்திசி னோரே. மடியின் நளிநயம் மடியின் அவிநயம் வகுக்கும் காலை நொடியொடு பலகொட் டாவிமிக உடைமையும் மூரி நிமிர்த்தலும் முனிவொடு புணர்தலும் காரண மின்றி யாழ்ந்துமடிந் திருத்தலும் பிணியு மின்றிச் சோர்ந்த செலவோ டணிதரு புலவர் ஆய்ந்தன ரென்ப. களித்தோன் நளிநயம் களித்தோன் அவிநயம் கழறுங் காலை ஒளித்தவை ஒளியான் உரைத்த லின்மையும் கவிழ்ந்துஞ் சோர்ந்துந் தாழ்ந்துந் தளர்ந்தும் வீழ்ந்த சொல்லொடு மிழற்றிச் சாய்தலும் களிகைக் கவர்ந்த கடைக்கணோக் குடைமையும் பேரிசை யாளர் பேணினர் கொளலே. உவந்தோன் நளிநயம் உவந்தோன் அவிநயம் உரைக்குங் காலை நிவந்தினி தாகிய கண்மல ருடைமையும் இனிதி னியன்ற உள்ள முடைமையும் முனிவி னகன்ற முறுவனகை யுடைமையும் இருக்கையுஞ் சேறலுங் கானமும் பிறவும் ஒருங்குட னமைந்த குறிப்பிற் றன்றே. அழுக்காறுடையோன் நளிநயம் அழுக்கா றுடையோன் அவிநயம் உரைப்பின் இழுக்கொடு புணர்ந்த இசைப்பொரு ளுடைமையுங் கூம்பிய வாயுங் கோடிய உரையும் ஓம்பாது விதிர்க்கும் கைவகை யுடைமையும் ஆரணங் காகிய வெகுளி உடைமையும் காரண மின்றி மெலிந்தமுக முடைமையும் மெலிவொடு புணர்ந்த இடும்பையு மேவரப் பொலியு மென்ப பொருந்துமொழிப் புலவர். இன்பமொடு புணர்ந்தோன் நளிநயம் இன்பமொடு புணர்ந்தோன் அவிநயம் இயம்பின் துன்பம் நீங்கித் துவர்த்த யாக்கையுந் தாங்கித் தாழ்ந்த பெருமகிழ் வுடைமையும் மயங்கி வந்த செலவுநனி யுடைமையும் அழகுள் ளுறுத்த சொற்பொலி வுடைமையும் எழிலொடு புணர்ந்த நறுமல ருடைமையும் கலங்கள்சேர்ந் தகன்ற தோண்மார் புடைமையும் நலங்கெழு புலவர் நாடின ரென்ப. தெய்வமுற்றோன் நளிநயம் தெய்வ முற்றோன் அவிநயம் செப்பிற் கைவிட் டெறிந்த கலக்க முடைமையும் மடித்தெயிறு கௌவிய வாய்த்தொழி லுடைமையும் துடித்த புருவமுந் துளங்கிய நிலையும் செய்ய முகமுஞ் சேர்ந்த செருக்கும் எய்து மென்ப இயல்புணர்ந் தோரே. ஞஞ்ஞை யுற்றோன் நளிநயம் ஞஞ்ஞை யுற்றோ னவிநயம் நாடில் பன்மென் றிறுகிய நாவழி வுடைமையும் நுரைசேர்ந்து கூம்பும் வாயும் நோக்கினர்க் குரைப்போன் போல உணர்வி லாமையும் விழிப்போன் போல விழியா திருத்தலும் விழுத்தக வுடைமையும் ஒழுக்கி லாமையும் வயங்கிய திருமுகம் அழுங்கலும் பிறவும் மேவிய தென்ப விளங்குமொழிப் புலவர். சிந்தை யுடம்பட்டோன் நளிநயம் சிந்தையுடம் பட்டோன் அவிநயம் தெரியின் முந்தை யாயினும் உணரா நிலைமையும் பிடித்த கைமேல் அடைத்த கவினும் முடித்த லுறாத கரும நிலைமையுஞ் சொல்வது யாதும் உணரா நிலைமையும் புல்லு மென்ப பொருந்துமொழிப் புலவர். துஞ்சா நின்றோன் நளிநயம் துஞ்சா நின்றோன் அவிநயம் துணியின் எஞ்சுத லின்றி இருபுடை மருங்கு மலர்ந்துங் கவிழ்ந்தும் வருபடை யியற்றியு மலர்ந்துயிர்ப் புடைய ஆற்றலு மாகும். இன்றுயில் உணர்ந்தோன் நளிநயம் இன்றுயி லுணர்ந்தோன் அவிநயம் இயம்பின் ஒன்றிய குறுங்கொட் டாவியும் உயிர்ப்புந் தூங்கிய முகமுந் துளங்கிய உடம்பும் ஓங்கிய திரிபும் ஒழிந்தவுங் கொளலே. செத்தோன் நளிநயம் செத்தோன் அவிநயம் செப்புங் காலை அத்தக அச்சமும் அழிப்பும் ஆக்கலும் கடித்த நிரைப்பலின் வெடித்துப் பொடித்துப் போந்துணி வுடைமையும் வலித்த உறுப்பும் மெலிந்த வகடு மென்மைமிக வுடைமையும் வெண்மணி தோன்றக் கருமணி கரத்தலும் உண்மையிற் புலவர் உணர்ந்த வாறே. மழைபெய்யப் பட்டோன் நளிநயம் மழைபெய்யப் பட்டோன் அவிநயம் வகுக்கின் இழிதக வுடைய இயல்புநனி யுடைமையும் மெய்கூர் நடுக்கமும் பிணித்தலும் படாத்தை மெய்பூண் டொடுக்கிய முகத்தொடு புணர்த்தலும். ஒளிப்படு மனனி லுலறிய கண்ணும் விளியினுந் துளியினு மடிந்தசெவி யுடைமையும் கொடுகிவிட் டெறிந்த குளிர்மிக வுடைமையும் நடுங்கு பல்லொலி யுடைமையும் முடியக் கனவுகண் டாற்றா னெழுதலு முண்டே. பனித்தலைப் பட்டோன் நளிநயம் பனித்தலைப் பட்டோன் அவிநயம் பகரின் நடுக்க முடைமையும் நகைபடு நிலைமையும் சொற்றளர்ந் திசைத்தலு மற்றமி லவதியும் போர்வை விழைதலும் புந்திநோ வுடைமையும் நீறாம் விழியுஞ் சேறு முனிதலும் இன்னவை பிறவும் இசைத்தனர் கொளலே. உச்சிப்பொழுதின் வந்தோன் நளிநயம் உச்சிப் பொழுதின் வந்தோன் அவிநயம் எச்ச மின்றி இயம்புங் காலைச் சொரியா நின்ற பெருந்துய ருழந்து தெரியா நின்ற உடம்பெரி யென்னச் சிவந்த கண்ணும் அயர்ந்த நோக்கமும் பயந்த தென்ப பண்புணர்ந் தோரே. நாணமுற்றோன் நளிநயம் நாண முற்றோன் அவிநயம் நாடின் இறைஞ்சிய தலையும் மறைந்த செய்கையும் வாடிய முகமுங் கோடிய உடம்புங் கெட்ட வொளியுங் கீழ்க்கண் ணோக்கமும் ஒட்டின ரென்ப உணர்ந்திசி னோரே. வருத்தமுற்றோன் நளிநயம் வருத்த முற்றோன் அவிநயம் வகுப்பிற் பொருத்த மில்லாப் புன்க ணுடைமையுஞ் சோர்ந்த யாக்கையுஞ் சோர்ந்த முடியுங் கூர்ந்த வியர்வுங் குறும்பல் லுயாவும் வற்றிய வாயும் வணங்கிய உறுப்பும் உற்ற தென்ப உணர்ந்திசி னோரே. கண்ணோவுற்றோன் நளிநயம் கண்ணோ வுற்றோன் அவிநயம் காட்டி னண்ணிய கண்ணீர்த் துளிவிரல் தெறித்தலும் வளைந்தபுரு வத்தொடு வாடிய முகமும் வெள்ளிடை நோக்கின் விழிதரு மச்சமுந் தெள்ளிதிற் புலவர் தெளிந்தனர் கொளலே. தலைநோவுற்றோன் நளிநயம் தலைநோ வுற்றோன் அவிநயம் சாற்றின் நிலைமை யின்றித் தலையாட் டுடைமையுங் கோடிய விருக்கையுந் தளர்ந்த வேரொடு பெருவிர லிடுக்கிய நுதலும் வருந்தி ஒடுங்கிய கண்ணொடு பிறவுந் திருந்து மென்ப செந்நெறிப் புலவர். அழற்றிறம் பட்டோன் நளிநயம் அழற்றிறம் பட்டோன் அவிநயம் உரைப்பின் நிழற்றிறம் வேண்டும் நெறிமையின் விருப்பும் அழலும் வெயிலுஞ் சுடரும் அஞ்சலும் நிழலும் நீருஞ் சேறு முவத்தலும் பனிநீ ருவப்பும் பாதிரித் தொடையலும் நுனிவிர லீர மருநெறி யாக்கலும் புக்க துன்போடு புலர்ந்த யாக்கையுந் தொக்க தென்ப துணிவறிந் தோரே. சீதமுற்றோன் நளிநயம் சீத முற்றோன் அவிநயம் செப்பின் ஓதிய பருவர லுள்ளமோ டுழத்தலு மீர மாகிய போர்வை யுறுத்தலு மார வெயிலுழந் தழலும் வேண்டலு முரசியு முரன்று முயிர்த்து முரைத்தலுந் தக்கன பிறவுஞ் சாற்றினர் புலவர். வெப்பின் நளிநயம் வெப்பின் அவிநயம் விரிக்குங் காலைத் தப்பில் கடைப்பிடித் தன்மையுந் தாகமும் எரியி னன்ன வெம்மையோ டியைவும் வெருவரு மியக்கமும் வெம்பிய விழியும் நீருண் வேட்கையு நிரம்பா வலியும் ஓருங் காலை உணர்ந்தனர் கொளலே. நஞ்சு உண்டோன்தன் நளிநயம் கொஞ்சிய மொழியிற் கூரெயிறு மடித்தலும் பஞ்சியின் வாயிற் பனிநுரை கூம்பலுந் தஞ்ச மாந்தர் தம்முக நோக்கியோர் இன்சொ லியம்புவான் போலியம் பாமையும் நஞ்சுண் டோன்றன் அவிநயம் என்ப. நளுக்குதல் நளுக்குதல் = குளிர்ச்சி, நடுக்கம். குளிர் நளுக்குகிறது என்பது மக்கள் வழக்கு. நளிர் > நளுக்கு > நடுக்கு. நள் நள் = நெருக்கம். பகலின் நடுப்பொழுதும் இரவின் நடுப்பொழுதும் நெருக்கமாதலால் நள்இரவு, நள்(நண்)பகல் என்றும் வழங்கப்படுகின்றன. நள்ளி, நெருங்கிய நேய நெஞ்சன். நள்ளார், நண்ணார், நெருங்கார், பகைவர். நள் + பு = நட்பு; நண்பு. நண்ணுதல் = நெருங்குதல். நள் = நளிர், குளிர்ச்சி. நெருங்கிய குளுமை. நளிர் = நளுக்குதல், நடுக்குதல், குளிர் நடுக்கம். உள்ளத்தான் நள்ளாது உறுதித் தொழிலராய்க் கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை - தெள்ளிப் புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட மனத்துக்கண் மாசாய் விடும் - நாலடி. 128 நள்ளி நளி > நள்ளி = செறிந்த அல்லது நிறைந்த பெருமை யுடையவன். கண்டீரக் கோப்பெருநள்ளி என்பான் கொடையால் தனிப்பெருஞ் சிறப்புற்றான். படையாலும் சிறப்புற்றான். தோட்டி என்னும் மலைக்குத் தலைவனாகிய இவன் வள்ளல் எழுவருள் ஒருவன். நட்டோர் உவப்ப நடைப்பரி சாரம் முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத் துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு நளிமலை நாடன் நள்ளி எனச் சிறுபாணாற்றுப் படையிலும், எந்நாடோ என நாடும் சொல்லான் யாரீரோ எனப் பேரும் சொல்லான் பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே... நளிமலை நாடன் நள்ளியவன் எனவே என்று புறநானூற்றிலும் (150) பாராட்டப்பட்டவன். அவன் ஊரின்கண் இலன் எனினும் பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் (தம்மளவில் கொடை புரியும்) இளங்கண்டீரக்கோ என்னும் தம்பியையும் உடையனாய் இருந்தவன் (புறம். 151). தடவும் கயவும் நளியும் பெருமை - தொல். 803 நளியென் கிளவி செறிவும் ஆகும் - தொல். 806 நறவு நறிய மணமும் சுவையும் அமைந்த கள். நறவு மகிழ்ந்து - மலைபடு. 172 நறுக்கை திண்டுக்கல் வட்டாரத்தில் செருப்பு, நறுக்கை என வழங்கப்படுகின்றது. செருப்பு அளவெடுத்து அகல நீள வளைவுப்படி நறுக்கிச் செய்யப்படுதல் கொண்டு அப் பெயர் பெற்றிருக்கும். மரக்கட்டையைப பயன்படுத்துதலும் அப்படி நறுக்கி அமைக்கப்பட்டதேயாம். நறுங்கல் பயிர் நறுங்கிப் போய்விட்டது என்பது நெல்லை வழக்கு. நறுங்குதல் மெலிந்து வளராமல் குறுகிக் கிடக்கும் நிலையாகும். நறுக்கப்பட்டது குறுகும். அவ்வாறு குறுகியதாக்கப் படாமல், வளர்ச்சியின்றிக் குறுகியது நறுங்குதல் எனப்படுகிறது. நறுக்குதல்= வெட்டித் தறித்துல். நறுந்தொகை நறுமணமிக்க மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை போன்ற அறநூல். வெற்றி வேற்கை என்பதும் அது. பாடியவன் அதிவீர ராமபாண்டியன். * வெற்றி வேற்கை காண்க. நறுமை நறியதாம் - நறுமண முடையதாம் - தன்மை நறுமையாம். நன்மையுமாம். நறுநெய்க் கடலை விசைப்பச் சோறட்டு - புறம். 120 புனைவினைப் பொலிந்த பொலநறுந் தெரியல் - புறம். 29 நறுவிசு நறுவிது > நறுவிசு. நன்றாகிய வகையில் - எச்சிதையும் எக்கேடும் வாரா வகையில் செய்தல். பூப்பறித்தல், காய்பறித்தல், களைகொத்தல், துணி துவைத்தல் முதலியவற்றை நறுவிசாகச் செய்க என்பது மக்கள் வழக்கு. நறுவுதல் நறுவுதல் என்பது விரும்புதல் என்னும் பொருளில் மதுக்கூர் வட்டார வழக்காக உள்ளது. வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய் என்னும் ஔவையார் தனிப்பாடல் நறுவிது என்பதை ஆள்கிறது. நல்ல மணமும் சுவையும் உடையது நறுவிது ஆகும். குறைவாகவும் சுவையானதாகத் தேர்ந்தும் உண்பவரை நறுவிசாகச் சாப்பிடுவார் என்பது நெல்லை வழக்கு. நறை நறுமணமிக்க ஒருவகைக் கொடி. நறிய மணம் உடைமை யால் பெற்ற பெயர் நறை என்பதாம். நரந்தம் என்பது நறை அன்று. இரண்டும் மணமுடை யவையே எனினும் நரந்தம் ஒரு புல்; நறை கொடி. நறையும் நரந்தமும் என்கிறது பொருநராற்றுப்படை (238). நற்றாய் நல் + தாய் = நற்றாய். பெற்ற தாயை நற்றாய் என்பது அகப்பொருள் வழக்கு. தாய், செவிலித்தாய் என்பன வளர்ப்புத் தாயைக் குறிக்கும். தோழியின் தாய் அவள். நல்லம்மை, நல்லப்பன் என்பவை மக்கள் வழக்கில் சிற்றன்னை, சிற்றப்பா ஆயோரைக் குறிக்கும். நற்றிணை நல் + திணை = நற்றிணை. நல் = நல்ல; திணை = ஒழுக்கம். எட்டுத் தொகையுள் சொல்லப்படும் முதல்நூல். 9 அடி முதல் 12 அடி வரையுள்ள நானூறு பாடல்களை யுடையது. நற்றிணை நானூறு என்பதும் பெயர். நனவு நல் > நன் > நனவு > நனா. கதிரொளியில் கண்ணேரில் காணும் காட்சி நனவு ஆகும். மயங்கல் இல்லாமல் நல்வகையில் தெளிவுறக் காண வாய்ப்பது அது. நனவென ஒன்றில்லை யாயின் கனவினான் காதலர் நீங்கலர் மன் - திருக். 1216 இது, நனவுக் காட்சி வழியதே கனவுக் காட்சி என்பதைப் புலப்படுத்தும். காட்சியணி, இயல்பு நவிற்சியணி என்பவை நனவுக் காட்சிகளாம். * கனவு காண்க. நனவுதல் அகலத் தடவி வருடுதலை நனவுதல் என்பது நெல்லை வழக்கு. நனந்தலை உலகம் என்பது, அகன்ற விரிந்த உலகம் என்னும் பொருளது. அது போல் அகலத் தடவுதல் - குத்தல் கிள்ளல் பிடித்தல் இல்லாமல் - வருடுதல் நனவுதல் ஆயது. நன என்னும் உரிச்சொல் வழியது இது. நனா நல் > நன் > நனவு > நனா. நன்றாகத் தோற்றம் தரும் விளக்க மிக்க காட்சி நனா அல்லது நனவு எனப்படும். தெளிவற்றதாய் மறைவினதாய் மீள நினைவுக்கு வராது மறைவதாய் அமையும் தோற்றம் - மயங்கு மனத்தோற்றம் கனவு எனப்படும். கனாநூல் என்பதொரு நூல் உண்டு. அடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டுவது அது (சிலப்.15:95-106). நனி நன் + இ = நனி; உடல்மேல் உயிர்வந் தொன்றுவ தியல்பே - நன். 204 மிகுதிப் பொருள்தரும் உரிச்சொல். அவைதாம், உறுதவ நனியென வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப - தொல். 784 நனிபேதையே நயனில் கூற்றம் - புறம். 227 நனிநாகரிகம் பு, சு, பீ என்னும் எழுத்துகளையும் தம் நாவால் கூற விரும்பா நனி நாகரிகம் தொல்காப்பியருடையது. உப்பகாரம் = பு உச்சகாரம் = சு பவ்வீ = பீ அவையல் கிளவி என்றார் இவற்றை. அவையல் கிளவி மறைத்தனர் கிளர்தல் - தொல். 925 இடக்கரடக்கு என்பதும் இது. நனை நனை = அரும்புதல், தோன்றுதல்; நனை = நல்ல பொலிவுடையது. நீர் வளத்தாலும் பனிப்பதத்தாலும் அரும்புதலால் அரும்பு நனை எனப்பட்டதாம். நீரால் நனைதல், பனியால் நனைதல், பனிமலர் ம.வ. நனைஞாழல் - பொருந. 197 நீர் நனை மேவர - மதுரைக். 587 நன்கு நன்றாக அமைந்தது நன்கு எனப்பெறும். அமைய வேண்டிய அமைப்பின்படி அமைந்ததே அழகாக விளங்கும். ஆகலின் அழகு நன்கு எனப் பெற்றதாம். நன்மை தருவதாலும் நன்கு என்பதற்கு அழகு உரியதாம். உள்ளக் கிளர்ச்சியால் உவகையைப் பெருக்கி உயிரை வளர்ப்பதாகலின். நன்செய் புன்செய் செய்து பண்படுத்தப்பட்ட இடம் செய்; பயிர் செய்தற்கு அமைந்தது அது. நன்றாக (அ) மிகுதியாகப் பண்படுத்தியதும் மிகுவருவாய் தருவதும் ஆகிய இடம் நன்செய். ஓரளவு (அ) குறைவாகப் பண்படுத்தியதும் நன்செய்யளவு பயன் தராததுமாகிய இடம் புன்செய். நன்செயும், புன்செயும் நிலம் புலம் என இணைத்து வழங்கப்படும். * நிலபுலம் காண்க. நன்செய்வகை வயல் = வைத்துப் போற்றப்படும் நிலம். கழனி = போரடிக்கும் களமுள்ள வயல். பழனம் = பழைமையான வயல். பண்ணை = பள்ளமான வயல். செறு = சேறு செய்யப்பட்ட வயல்.(தேவநே. சொல். 72) * வை காண்க. நன்மை நல்லதாம் தன்மை நன்மையாம். நன்மை தின்மை அறிவோரும் (சிலப். 11:181 அடியார்க்.) தீமை, தின்மையாயது. நன்மை தின்மை ம.வ. நன்றா பூவானியை (பவானியை) அடுத்துள்ள ஒரு குன்றம் நன்றா நணா என வழங்கலால் திருநணாச் சிலேடை வெண்பா என ஒருநூல் எழுந்தது. மக்கள் அதனை ஊராட்சிக் கோட்டை என வழங்குகின்றனர். தீஞ்சுனை நிலைஇய திருமா மருங்கில் கோடுபல விரிந்த நாடுகாண் நெடுவரை எனப் பதிற்றுப்பத்தில் (85) பாடுபுகழ் பெற்ற மலை அது. பொருள்: இனிய நீரையுடைய சுனைகள் நிலைபெற்ற மலைவளத்தையுடைய பெரிய பக்கங்களைப் பெற்ற சிகரங்கள் பல ஆகாயத்தே விரிந்த, தன்மீது ஏறி, நாடு முழுவதும் காணக் கூடிய உயர்ச்சியைப் பெற்ற நன்றா என்னும் மலையிடத்தில் (ப.உ.). நன்றி, செய்ந்நன்றி நன்றியறிதல் வேறு, செய்ந்நன்றி அறிதல் வேறு. நன்றியறிதல் ஒழுக்கம் பற்றியது; செய்ந்நன்றி அறிதல் உதவி பற்றியது. நன்றியறிதல் பொதுநலம் கருதியது. பொய்யான் திருடான் ஏமாற்றான் ஒழுக்கந்தவறான் என ஒருவனின் நற்பண்பாட்டை மதிப்பது நன்றியறிதல். தனக்கு ஊண், உடை, உறையுள், உற்றுழி என உதவி செய்தலை நினைந்து போற்றல் செய்ந்நன்றி அறிதல். செய்ந்நன்றி செய்த நன்றி மட்டுமன்று, செம்மையான நன்றியுமாம் என்பதற்குச் செந்நன்றி என்னாமல், செய்ந்நன்றி என்றார் (திருக். 110). நன்னயம் நயம் என்பது சிறந்தது, நடுவு நிலையானது, விரும்பத் தக்கது என்னும் பொருள்களையுடையது. அதனினும் சிறந்த நயம் நல் நயம் ஆகும். இச் சொல் சிவகாசி வட்டாரத்தில் தாலி என்னும் பொருளில் வழங்குதல் கொண்டு இதன் மதிப்புப் புலப்படும். மங்கலம் நன்கலம் என்னும் வள்ளுவம் எண்ணத்தக்கது (60). நன்னர் நன்னர் = நலமானது, நலம் செய்வது. இன்னே வருகுவர் தாயர் என்னும் நன்னர் நன்மொழி கேட்டனம் - முல்லைப். 17-18 நன்னி நன்றி என்னும் பொருளில் பெரியகுளம் வட்டாரத்தில் நன்னி என்பது வழங்குகின்றது. நன்னர் என்பது போல் நன்னி கிளர்ந்தது போலும். நன்னர் என்பது போனசு என்பதற்குப் பாவாணரால் தரப்பட்ட சொல். நன்னர் நன்மொழி என்பது முல்லைப்பாட்டு(17). நன்னியும் குன்னியும் என்பது இணைச் சொல். சின்னதும் சிறியதும் போல்வது. இது நெல்லை வழக்கு. நன்னியும் குன்னியும் நண்ணி > நன்னி. குன்றி > குன்னி. நணியது = குறுகியது, சிறியது. குன்றி = மிகச் சிறியது. நன்னியும் குன்னியும் என்பது சிறியதும் மிகச் சிறியதுமாம். நன்னியும் குன்னியுமாக நான்கு பிள்ளைகளைப் போட்டு விட்டுப் போய்விட்டாள் ம.வ. திருச்சிராப்பள்ளி வட்டாரம். நன்னீர் கடல்நீர், உப்புநீர். உப்பற்றதும் குடிக்கப் பயன்படுவதும் ஆகிய நீர் நன்னீர் ஆகும். குமரிக்கடல் நீர் உப்புநீர். குமரி நன்னீர் என்னின் குமரியாறு அஃது என்பதாம். நன்னீர்ப் பஃறுளி - புறம். 9  நா நி நீ வரிசைச் சொற்கள் நா நகர ஆகாரம்; நாவு அல்லது நாக்கு. நகர வரியில் முதல்நெடில். நான்கு எனச் சொல்லொடு சேர்ந்து பொருள் தருவது நா + நிலம் = நானிலம். நாவாய் இணைப்பு, நாவாயை நினைவூட்டுகிறது. * நாவாய் காண்க. நாகம் நாகம் = ஈயம். ஈயம் களிம்பு ஏறாதது; களிம்பு நஞ்சாவது. எல்லியம் (எவர் சில்வர்) வருமுன் பெரும்பாலும் (துத்த)நாகக் கலங்களே உணவு, கறி, குழம்பு, கூட்டு என வைக்கப் பயன்படுத்தப்பட்டதால் துய்ப்பு வைத்தற்குரிய நாகம் எனப்பட்டுத் துத்த நாகப் பெயர் பெற்றிருக்கலாம். துத்த நாகத் தகட்டால் செய்யப்படும் கலங்களுக்கு இளகும் தன்மை இருப்பதால் வெடித்தல் உடைதல் கீறல் அரிது; நெளியும் வளையும். செம்புக் கலங்கள் ஈயம் பூசாமல் பயன்கொள்ளல் இயலாது. நாகரிகமும் பண்பாடும்: நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை. அது எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன்படுத்துவது. பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம். அது எல்லாப் பொருள்களையும் தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்துவது. இலக்கணப் பிழையின்றிப் பேசுவதும் எல்லா வகையிலும் துப்புரவாயிருப்பதும் காற்றோட்டமுள்ளதும், உடல் நலத்திற்கு ஏற்றதுமான வீட்டிற் குடியிருப்பதும் நன்றாய்ச் சமைத்து உண்பதும் பிறர்க்குத் தீங்கு செய்யாமையும் நாகரிகக் கூறுகளாம். எளியாரிடத்தும் இனிதாகப் பேசுவதும், புதிதாய் வந்த ஒழுக்கமுள்ள அயலாரை விருந்தோம்புதலும், இரப்போர்க் கிடுவதும், இயன்றவரைப் பிறர்க்குதவுவதும், கொள்கையும் மானமும் கெடின் உயிரை விடுவதும் பண்பாட்டுக் கூறுகளாம். சுருங்கச் சொல்லின் உள்ளத்தின் செம்மை பண்பாடும், உள்ளத்திற்குப் புறம்பான உணவு உடை உறையுள் முதலியவற்றின் செம்மை நாகரிகமும் ஆகும். ஆகவே, இவற்றை முறையே அகநாகரிகம், புறநாகரிகம் எனக் கொள்ளினும் பொருந்தும்! (பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் பக். 8,9) பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர் என்னும் குறளின் (580) நடைக்கு இவ்விளக்கம் மாறாகுமோ என்னும் ஐயமும் வினாவும் கற்பவர்க்கு வரும். அதனால், பண்டைக் காலத்தில் நாகரிகம் என்னும் சொல்லையே பண்பாடென்னும் பொருளிலும் ஆண்டனர். அதனாலேயே பண்பாட்டுக் குணமான கண்ணோட்டத்தை நாகரிகம் என்றார் திருவள்ளுவர். திருந்திய நிலை என்னும் பொதுக் கருத்தில் நாகரிகமும் பண்பாடும் ஒன்றாதல் காண்க என விளக்கம் தந்தார் பாவாணர் (பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் பக். 10). நாகரிகம் நாகரிகம் என்பது நகர மக்களின் திருந்திய வாழ்க்கை. நாகரிகம் என்னும் சொல் நகரகம் என்னும் சொல்லின் திரிபாகும். (நகர் + அகம் = நகரகம். நகரகம் > நகரிகம் > நாகரிகம்) எல்லா நாட்டிலும் மாந்தர் முதன்முதல் நகர நிலையிலேயே நாகரிகம் அடைந்துள்ளனர். அதனால் நகரப் பெயரினின்று நாகரிகப் பெயர் தோன்றியுள்ளது. சிற்றூர்கட்கும் நகரங்கட்கும் எவ்வளவோ தொடர்பேற்பட்டுள்ள இக்காலத்தும், நாகரிக மில்லாதவன் நாட்டுப்புறத்தான் என்றும் பட்டிக்காட்டான் என்றும் இழித்துக் கூறுதல் காண்க. நகரப்பதி வாழ்நர் என்னும் சொல், நாகரிகமுள்ளோரைக் குறிக்கும் இலக்கிய வழக்கையும் நோக்குக. ஆங்கிலத்திலும் நாகரிகத்தைக் குறிக்கும் இலத்தீனச் சொல் நகரப் பெயரினின்று தோன்றியது. L.Civitas, city or city-state. Civis citizen. L.CiviLis.E.Civit.civiLize! (தேவநே.) நாகவல்லி நாகவல்லி = வெற்றிலை, வெற்றிலைக் கொடிக்கால். நாகு > நாகம் = இளமை. வள்ளி > வல்லி = கொடி. வெற்றிலைத் தோற்றம் படமெடுத்தாடும் பாம்புப் படம்போல் இருத்தலாலும் இளமையான வெற்றிலையே சுவையானதாலும் இருமையும் கருதி வெற்றிலை, நாகவல்லி எனப்பட்டதாம். வல்லி கொடி ஆதலால் கொடிக்கால் என்னும் பெயர், வெற்றிலைக் கொடிக்காலையே குறித்தலறியலாம். நாகு நாகு:1 இளமை; இளமையில் இளமை. நாகிளங் கமுகின் வாளை தாவுறும் - கம். உயுத். 1217 நாகிள வேங்கை - அகம். 85; புறம். 352 நாகு:2 எருமையும் மரையும் பெற்றமும் நாகே - தொல். 1562 நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே - தொல். 1563 என நாகு பெண்பாற் பெயராகக் கூறுவார் தொல்காப்பியர். மரையும் பெற்றமும் எருமையும் நாகே - பிங். 2580 நந்து நீர்வாழ் சாதியும் நாகே - பிங். 2581 நாகு என்னும் நீர்ப்பூச்சி செல்லும் போது மணலில் உண்டாம் கோடு எழுத்துப் போலவும் தோன்றும்; ஆயினும் அஃது எழுத்து ஆகுமா? என்பது திருவிளையாடல் புனல்வாதம். நாக்கணாம் பூச்சி மண்புழு, நாங்கூழ்ப் புழு என்பவற்றை நாக்கணாம் பூச்சி என்பது முகவை வழக்கு. நாவால் பதப்படுத்தி மண்ணில் உணவு பெற்று உரமும் ஆக்கும் செயலால் பெற்ற பெயர் இது. காக்கணம் செடி என்பது போல் கணம் என்னும் சொல்லீறு பெற்றது. நாக்கோணல் நாக்கோணல் = சொல்மாறல். நாவு கோணல் என்பது சொன்ன சொல்லை மாற்றிப் பேசுதல், மறுத்து அல்லது மறைத்துப் பேசுதல் என்பவற்றைக் குறிப்பதாக அமைகின்றது. கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக் கோடாமை கோடி யுறும் என்னும் ஔவையார் தனிப்பாடல் நாக்கோணாமை என்ன என்பதையும் அதனைப் போற்றுதலின் அருமையையும் தெளிவிக்கும். நாக்கு மாறி, சொறிபுரட்டன், பேச்சுமாறி என்பன வெல்லாம் நாக்கோணல் பற்றியனவே. சொன்னதை மாற்றிப் பேசுதல் வாந்தியெடுத்ததை உண்டல் என உவமை வகையில் வசைமொழியாக வழங்குகின்றது. நாச்சியார் மகன் நாயகன் = தலைவன்; நாயகியின் பெயர் நாச்சியார். குடும்பத் தலைவி. அவர் பிள்ளையை அல்லது கணவனை நாச்சியார் மகன் என்பது செட்டி நாட்டு வழக்கு. கணவன் பெயர் சொல்லாமை வழக்கால் ஏற்பட்டது இவ்வழக்கு. நாடகமாடல் நாடகமாடல் = இல்லாததும் பொல்லாததும் சொல்லி ஏமாற்றுதல். நாடகம் உயர்ந்த கலை. எனினும் அதன் உள்ளீடு பெரிதும் புனைவும் கற்பனையுமே. அதனால், நாடகக் காட்சி நிகழ்கின்ற முறையிலேயே ஒன்று நிகழ்ந்ததாக எவரும் கொள்ளார். அது நடிப்புத் திறம் காட்டவல்ல கலை; அது கலையே அன்றி வாழ்வன்று; நாடகமே வாழ்வாகி விட்டால், வாழ்வு என்னவாகும்? இவ்வளவு தெரிந்தும் என்னிடமே நாடகமாடுகின்றான் என்றும், என்ன நடிப்பு நடிக்கின்றான் என்றும் உவர்ப்பால் சொல்லுவது உண்டு. பசப்புதல் என்பதும் ஒருவகையில் நாடகமாடுதல் போன்றதே. நாடக மாராயன் நாடக இயக்குநனும் பாடல் பாடுபவனும் நாடக மாராயன் என்று வழங்கப்படுவான். மாராயம் என்பது பழைய விருதுகளுள் ஒன்று. நாட்டவரில் மாராயன் ஐயாற நாத ராஜேந்திர சோழ நாடக மாராயனுக்கும் இவன் வர்க்கத்தார்க்கும் குடுத்தோம். தெ.க.தொ. 8:644 நாடகம் நாடு + அகம் = நாட்டகம் > நாடகம். நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் - தொல். 999 நாட்டில் பலகாலங்களில் பல இடங்களில் பற்பலர் பழக்க வழக்க ஒழுக்கங்களை ஓரிடத்து ஒருங்கே காணுமாறு சுவைபடப் புனைந்து முத்தமிழும் நன்கு துய்க்கும் வகையில் காட்டப்படும் கலை நாடகமாகும். முத்தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம். இந்நாள் நாடகம் பெரிய திரை, சிறிய திரை, மேடை நாடகம் என விரிவுடையதாகி யுள்ளதாம். தமிழ் இயல், இசை, நாடகம் என மும்மைத் தமிழாகத் தொல்பழ நாள் தொட்டே இலங்குதல் கண்கூடு. நாடல் நாடல் = நெருங்குதல். நாடல், விரும்புதல் பொருளது. அவ்விருப்பம் நெருக்கத்தை உண்டாக்குதல் கண்கூடு. விருப்பம் உடையவர்களை அடிக்கடி பார்த்தலும், அவர்கள் இருக்குமிடம் செல்லலும், அவர்கள் விரும்புவன செய்தலும் எல்லாம் நெருக்கத்தின் மேல் நெருக்கமாக அமைவன. ஆரிருந்தால் என்ன அவனுக்கு; அவள்மேல் தான் நாட்டம்; பாரேன் குழைவதை என்பதில் நாட்டம் விருப்பத்தின் வழியாக வந்த நெருக்கத்தைக் காட்டுவதாம். என்னை நாடினான் என்பதில் நெருங்கினான் என்பதே பொருளாதல் அறிக. நாடன் நாடன் என்பது பொதுப்பெயர். நாட்டுக்கு உரிமை பூண்டவன் என்னும் பொருளது. ஆனால் பாண்டியனையே நாடன் என முந்தையோர் குறித்தனர். தென்னாடுடைய சிவன் என்று பாண்டியநாட்டு அமைச்சர் மாணிக்கவாசகர் பாடினார். அவரே தென்பாண்டி நாட்டானை என்றார். நாடன் எனப் புறம் 49-இல் வருவது பாண்டியனைக் குறிக்கும் என்று கொள்ளலாம். நாடன் என்கோ? ஊரன் என்கோ? பாடிமிழ் பனிக்கடல் சேர்ப்பன் என்கோ? நாடன் = பாண்டியன்; ஊரன் = சோழன் (உறையூரன்), சேர்ப்பன் = சேரன், சேரலன். நாடி நரம்பு நாடி = நாடித் துடிப்பு. நரம்பு = உணர்வுக்கு இடமாகிய நரம்பு. நரம்புக்கும் நாடிக்கும் மிகு தொடர்புண்மை வெளிப்படை. நாடி பார்ப்பதற்கு இடமாக இருப்பது குருதிக் குழாய். அதனுள் ஓடும் குருதியோட்டம் கொண்டே துடிப்பளவு காணப்படு கின்றது. வளிமுதலா (வாதம் முதலா) எண்ணிய மூன்று என்னும் குறளால் (941) நாடித் துடிப்பு வகை புலப்படும். நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி என வரும் குறளால் (948) நாடிச்சீர் புலப்படும். நாடி அறிவது நாடி என்க. நாடி நூல்கள் நாடியைத் தெளிவிக்கும். நரம்புப் பிடி நூல்கள் வர்ம நூல் என வழங்கின. நாடி பார்த்தல் நாடி பார்த்தல் = ஆராய்தல். அவன் ஆளென்ன பேரென்ன? என்னை நாடி பார்க்கிறான் என்பது தகுதி யில்லாதவனாகக் கருதப்படும் ஒருவன் தன்னை ஆராய்தலை அல்லது தன்னைப் பற்றிக் கருத்துரைத்தலைப் பற்றிக் கூறும் கடிதலாகும். நாடி பார்த்து நோய் இன்னதென அறிதல் மருத்துவ நெறி. அந்நெறியைத் தழுவி வந்த வழக்கு நாடி பார்த்தலாம். பதம் பார்த்தல் என்பதும் அது. நாடிப் பார்த்தல் எனின் நெருங்கிப் பார்த்தலாம். நாடியைப் பிடித்தல் நாடியைப் பிடித்தல் = கெஞ்சல். உதவி வேண்டியோ, செய்த தவற்றைப் பொறுக்க வேண்டியோ காலைப் பிடித்தல் போல நாடியைப் பிடிப்பதும் வழக்கே. காலைப் பிடித்தல் முற்றாக நீரே தஞ்சம் என்னும் பொருட்டது. நாடியைப் பிடித்தல் கெஞ்சிக் கேட்டல் வழிப்பட்டது. நாடியைப் பிடித்தல் உரிமைப்பட்டவர் செய்கை. காலைப்பிடித்தல் அவ்வுரிமை கருதாத பொதுமைத் தன்மை யுடையது. நாடியைப் பிடிக்கிறேன்; நான் கேட்டதை இல்லை என்று சொல்லி விடாதே என்பது வழக்கு. நாடு நாடு:1 நாடு என்னும் சொல்லுக்குப் பலபொருள் உண்டு. இடம் என்பது ஒருபொருள். இடத்தின் பரப்புக்கு ஓர் அளவில்லை; சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு என்பன தனித்தனி நாடுகளாக விளங்கின. சில ஊர்ப் பெயர்கள் நாடு என இக்காலத்தும் வழங்கப் பெறுகின்றன. ஆதலால் சில ஊர்களைக் கொண்ட பகுதியும் தனியூர்களும் கூட நாடுகள் எனப் பெயர் பெற்றன என்பது விளங்கும். வளநாடு நாடு என்னும் பிரிவுகள் சோழர் காலத்தில் இருந்தன. இப்பொழுது, தமிழ்நாடு, பாரதநாடு என வழங்குகிறோம். இவை, நாடு என்பது இடப்பொருள் உணர்த்துதற்குச் சான்றுகள். நாடு என்பதற்கு விரும்பு என்பதும் ஒருபொருள். எந்த மண் வாழ்வு தந்து கொண்டிருக்கிறதோ அந்த மண்ணின் மேல் விருப்பம் வைக்க வேண்டியது நமது கடமை; அது நன்றி மறவாதவர் தன்மை; வயிற்றை ஓரிடத்திற்கு வைத்து, நெஞ்சை ஓரிடத்திற்கு வைத்துக் கொண்டிருப்பது நன்றி கெட்டவர் செயல். இதனை வலியுறுத்துவது போலவே நாடு என்னும் சொல் அமைந்துள்ளது. உன்நாட்டை விரும்பு என அது வலியுறுத்துகிறது. நாடு என்பதற்குத் தேடு ஆராய் என்பனவும் பொருள். மனிதன் என்பதற்கு அடையாளம் பகுத்தறிதல். தக்கது இன்னது, தகாதது இன்னது என்பதை அறிவதே பகுத்தறிவு; அப் பகுத்தறிவு உடைமையே மாந்தன் தனி வாழ்வுக்கும், நாட்டின் பொதுவாழ்வுக்கும் ஏன்? உலகப் பொதுவாழ்வுக்கும் நன்மை தருவது. ஆதலால் நாட்டை விரும்பி அதன் நன்மைக்குரிய செயல்களை ஆராய்ந்து செய்க என்பதாகவும் இச்சொல்லமைதி உள்ளது. ஒருநாடு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதைத் திருவள்ளுவர் தெளிந்துரைத்தார். வேண்டும் வளங்கள் எளிதாக எவருக்கும் கிடைக்க வேண்டும்; அவ்வாறு கிடைக்க வாய்ப்புள்ளதே நாடு; அவ்வாறு கிடைக்க வாய்ப்பற்றது நாடாகாது என்றார். இடப்பரப்பு, இயற்கை யமைப்பு, மக்கள் தொகை இவற்றைப் பொறுத்து ஒன்றை நாடு என்று சொல்லுதல் கூடாது. வாழ்பவர்க்கு வேண்டுவன வெல்லாம் பிறநாடுகளை எதிர்நோக்காமல் அங்கேயே கிடைக்க வாய்ப்புள்ளது எதுவோ அதுவே நாடு என்பது வள்ளுவர் கருத்து. நாங்கள் பிழைக்க வழியில்லை என்று மக்கள் தம் பிழைப்பைத் தேடி வேறு வேறு இடங்களுக்கு ஓடும் படியான நிலையை முன்னோர் வெறுத்தனர்; பழித்து ஒதுக்கினர்; பிழைப்புக்காக வேறோர் ஊருக்குச் செல்வதையும் கூட இழிவாகக் கருதினர். அவ்வாறு போதற்கு இடமாகாத ஊரை நெஞ்சாரப் புகழ்ந்தனர்; அவ்வூர் மக்களையே பழங்குடியினர் எனப் பாராட்டினர். பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறு சிறப்பிற் புகார் - சிலப். 1:15, 16 பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட மதுரை மூதூர் - சிலப். 15:5, 6 பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇ - மலைபடு. 479 என்பனவற்றை அறிக! நாடு 2 நாடு = விரும்பு. நாட்டம் = விரும்பி நோக்கும் கண். நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டி உரைக்கும் குறிப்புரை யாகும் - தொல். 1042 ஒவ்வொருவர்க்கும் அவர் பிறந்தமண் அவர்தம் விருப்புக்கு உரியதாகலின் விரும்பு என்னும் பொருளிலேயே அமைந்தது. நாடுவது நாட்டம்; நாட்டம் = விருப்பம். விரும்பிக் காணுதல் பொருளால், நாட்டம் கண் என்றும் பண் என்றும் பொருள் கொண்டது. நாடு கண்காணி நாயகம் சோழராட்சிக் காலத்தில் அரசு அதிகாரிகள் செயல்களைக் கண்காணிக்கும் அதிகாரிகளின் தலைவன். இந்நாடு உள்ளிட்ட நாடுகள் கண்காணி நாயகம் செய்கின்ற வைப்பூர் உடையான் தெ.க.தொ. 18: 328. நாடுவகை வரி விதிப்பதற்காக நாட்டு அளவையும் அதன்கண் அமைந்த நிலங்களின் தரத்தையும் கண்டு வகைப்படுத்தி அளந்து பிரித்து, அவ்வவற்றிற் கேற்ப வரி உறுதி செய்தற்கு அமைந்த அதிகாரி நாடுவகை. கேரளாந்தக வளநாட்டு உறையூர்க் கூற்றத்து திருப்பராய்த் துறை - இந்நாடுவகை செய்கின்ற காரிக்குடையான் வீர சோழன் தெ.க.தொ. 8:583 நாட்காட்டி நாள் + காட்டி = நாட்காட்டி. நாட்காட்டி வரவு பிற்பட்டதாயினும் அதன் சொல்வரவு முற்பட்டதாம். நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும் வாள துணர்வார்ப் பெறின் என்னும் குறளில் (334) உள்ள நாள் காட்டி என்பவற்றை இணைத்து ஆக்கப்பட்ட ஆக்கச் சொல் அது. x.neh.: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி - அகராதி ஆகிவிடவில்லையா? நாட்குறிப்பு, நாட்செய்தி, நாள்வழிக்கணக்கு என்பனவெல்லாம் பின்வரவாக, முன்வரவு இந்நாட்காட்டிக் குறளாம். நாட்டம் நாட்டம் = கண், விருப்பம், ஆய்வு. நட்டுதல் > நாட்டுதல் = ஊன்றுதல். கூர்ந்து நோக்கும் நோக்கமும், அந்நோக்கால் உண்டாம் விருப்பமும் விருப்பொடும் ஆயும் ஆய்வும் நாட்டமாம். நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும் - தொல். 1042 நாட்டாண்மை ஊராட்சித் தலைவராக ஊரவரால், கொள்ளப்பட்டவர் நாட்டாண்மை எனப்படுவர். நாட்டாமை என்பது ம.வ. ஊர்க்கோயில் விழா, ஊர்வழக்கு, ஊரில் நிகழும் சடங்குகள் எல்லாம் அவர் தலைமையில் அவர் முன்னிலையிலேயே நிகழ்தல் அண்மைக் காலம் வரை இருந்தது. அவர் சொற்படி ஊர் நடக்கும். ஒருவரைக் கண்டித்துச் சொன்னால் நீ என்ன நாட்டாமையா? என்னும் வினாவினால் நாட்டாண்மைத் தனம் என்ன என்பது புலப்படும். நாட்டுப்புறச் செய்கை வேந்தன் திருவோலக்கத்தில் இருந்து தன் ஒற்றரை அழைத்து, அடுத்த நாட்டு நிலையை அறிந்து வருமாறு போக்குதலும், போக்கிய அவர் வேண்டுமாற்றான் கரந்து போய் ஒற்றறிந்து மீளலும், வேந்தனைக் கண்டு அடுத்த நாட்டு ஒற்றுச் செய்தியை உரைத்தலும் நாட்டுப் புறச்செய்கை என்னும் நூற்பொருளாம். இவற்றுடன் அவ்வடுத்த நாட்டரசன், வேந்தன் மகிழுமாறு திறை குவித்துப் பணிதலும் புறநாட்டுச் செய்கை என்பதேயாம். வேந்தன்அத் தாணி மிசையுற்றொற் றர்ப்போக்கித் தாந்திரும்பி வேந்தரியல் சாற்றுவது - வாய்ந்த புறநாட்டுச் செய்கை; புறநாட்டார் பொன்னைத் திறைகுவித்தல் அப்பெயர்ப்பாச் செப்பு - பிர. திர. 23 சிலப்பதிகாரத்திலும் கலிங்கத்துப் பரணியிலும் இப்புறநாட்டுச் செய்கைக்குரிய கருப்பொருள்கள் உண்டு. இவற்றை வாங்கிக் கொண்டு இச்சிற்றிலக்கியப் படைப்பு வெளிப்பட்டதென்க. நாட்டு விருத்தம் நாட்டின் சிறப்பியல் குறித்து ஆசிரிய விருத்தம் பத்து இயற்றுவது நாட்டுவிருத்தம் என்னும் நூல்வகையாம் (நவநீத. 41). நாட்பு நாட்பு = போர்க்களம். ஞாட்பு என்பதும் அது. ஞாட்பு என்னும் சொல்லைக் களவழி நாற்பது பயில வழங்கும் (2, 11, 17, 28, 34, 39) ஞயம் நயம் என்றும் ஞமலி நமலி என்றும் ஞமன் நமன் என்றும் திரிந்து வழங்கினாற் போல ஞாட்பு நாட்பு ஆயிற்று என்க! விழுமியோர் துவன்றிய அகன்கண் நாட்பின் என்னும் பதிற்றுப்பத்தால் (45) இதனை உணரலாம். நாணம் நாணம், குனிதல், வளைதல், தலை தாழ்தல். நாண், நாணு என்பனவும் இது. கருமத்தால் நாணுதல் நாணு; திருநுதல் நல்லவர் நாணுப் பிற - திருக். 1011 நாணயத் தாள் தங்கம் வெள்ளி செம்பு நாணயங்களுக்கு ஈடாக வழங்கும் தாளை நாம் காசுத்தாள் என வழங்குதல் உண்டு. ஈழத்தமிழர் அதனை நாணயத்தாள் என வழங்குகின்றனர். காசு என்பது என்ன? பொன்! காய்ச்சி - உருக்கி - வடிக்கப்பட்டது காசு. அதனை நாணயமாக்கியது அரசு. பின்னே அவ்வரசு காசுக்கு ஈடாகத் தாளைத்தந்தது. காசு என்னும் பொதுச்சொல்லால் காசுத்தாள் என நாம் பெயர் சூட்டினால், ஈழத்தமிழகம், அதற்கே உரிய சிறப்புச் சொல்லால் நாணயத்தாள் என வழங்குகிறது. நாணயம் நா நயம் > நாணயம். நம்பகத் தன்மை வாய்ந்தது என்னும் பொருளில் நாணயம் அரசாணையால் வெளியிடப்பட்டது. அதனைக் கொல்லு வேலை செய்வார் தம் விருப்பப் படி செய்தால் குற்றமாகும். அரசு, காசு அச்சடிக்க எனவே அஃகசாலை (அக்கசாலை) அமைத்து ஆங்கு அச்சிட்டனர். பெரும்பாலும் இளவரசரே அதன் ஆணைத் தலைவராக இருந்தார் என்பது பழமையான கொற்கையின் பக்கமாக உள்ள அக்கசாலை என்னும் ஊரால் புலப்படும். காய்ச்சி உருக்கிய மாழையால் செய்யப்பட்டமையால் காய்ச்சு > காசு எனப்பட்டது. மாழை = உலோகம். * கொற்கை காண்க. நாணல் நாணல்:1 நாண் + அல் = நாணல் = வளைதல். அல் = சொல்லீறு. புல்வகையுள் ஒன்று நாணல். காற்றின் போது இயல்பாகத் தாழ்ந்து இயல்பாக நிமிர்தலால் நாணல் எனப்பட்டது. பிரித்த நாணல் மாலைவாய்ப் பாரின் பாயல் வைகினர் -கம்.அயோத் 665 நாணல்:2 நாணுதல் > நாணல் = வெட்கப்படுதல். புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி கல்லா ஒருவன் உரைப்பவுங் கண்ணோடி நல்லார் வருந்தியுங் கேட்பரே மற்றவன் பல்லாருள் நாணல் பரிந்து - நாலடி. 155 நாணி நாண் + இ = நாணி = வில்; விற்கயிறு; அம்பு. நாண் = கயிறு; அரைஞாண் (ம.வ.) நாணேற்றல் வில்லியர் வழக்கு. நாண் கோத்தல் = அம்பு கோத்தல். வில்லின் நாணினைச் செவ்வழிக் கோதையில் தரிக்க- கம். உயுத். 1085 நாணுதல் கோணுதல்: நாணுதல்= நாணத்தால் தலை தாழ்தல். கோணுதல்= நாணத்தால் தலை தாழ்தலுடன் உடலும் வளைதல். என்ன நாணிக் கோணி நிற்கிறாய்? என்று வினவுவார் உளர். திருட்டுக் குற்றத்தில் அகப்பட்ட ஒருவன் தலை கவிழ்ந்து நிலங்கிளைத்தலை இலக்கியம் காட்டும். தம் புகழ் கேட்டார் போல் தலைநாணுதலையும் இலக்கியம் இயம்பும். கோண், கோணல், கூன், கூனல் என்பவை ஒரு பொருளனவாம். நாண்மலர் நாட்காலை மலர்ந்த மலர். நாள் விடிபொழுதைக் குறித்தலால், நாட்கள் உண்டு நாள்மகிழ மகிழின் யார்க்கும் எளிதே தேரீ தல்லே - புறம். 123 பொருள்: நாட்காலத்து மகிழ்ந்திருக்கும் ஓலக்கம் (ப.உ.). நாதசுரம் ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே என்பது அப்பரடிகள் வாக்கு. சொல் இறைவன் எனவும் பொருள் இறைவி எனவும் வழங்குதல் உள்ளமையால், சொல்லையும் பொருளையும் இகழ்தல் இறைமையை இகழ்தலாகக் கொள்ளப்பட்டது. சொல் இறைவனோடு இருந்தது. இறைவனாகவே இருந்தது என்பது விவிலியம். இசை முறையமைத்துப் பண்ணோடு பாடுமுறையும் கருவிக் கூட்டிசையும் தமிழர் திருக்கோயில்களிலேயே திகழ்ந்தன. நாதனுக்கு ஊர் நமக்கு ஊர் என்பது அடியார் நிலை. ஆதலால், நாதனைப் பற்றி நாதன் முன்னின்று பாடிய குழற் கருவியிசை நாதசுரம் ஆயது. சுரம் என்பது வேற்றுச் சொல் அன்று. அரிய தமிழ்ச் சொல்லே. சுர் என்னும் ஒலிக் குறிப்பு வழியது அது. * சுரம் காண்க. நாதாங்கி நா + தாங்கி = நாதாங்கி. வீட்டுக் கதவுகள் இரட்டை எனின் ஒற்றைக் கதவில் கொண்டி என்னும் ஒரு வளைகம்பி இருக்கும். அதனை அடைத்து மாட்டுதற்குக் கொண்டியின் முனைவளைவைத் தாங்குதற்கு ஒருவளைவு அடுத்த கதவில் இருக்கும். அதற்கு நாதாங்கி என்பது பெயர். ஒற்றைக் கதவு இரட்டைக்கதவு எல்லாவற்றுக்கும் தகப் பூட்டுகள் உண்டாகிவிட்டன இப்பொழுது. ஒற்றைக் கதவுக்கு நாதாங்கி இராது (ம.வ.). நாத்தூண் நங்கை நா + தூண் (துணை) + நங்கை = நாத்தூண் நங்கை. நாவுக்குத் துணையாக - பேச்சுத் துணையாக - அமைந்த இள நங்கை. நாத்தூண் நங்கை எனப்படுதல் சிலப்பதிகார வழக்கு (16: 19). மக்கள் வழக்கில் நாத்துணையாள் நாத்தினாள் எனப்படுகிறாள். அவள் கணவனுக்குத் தங்கையாயவள். தலைவிக்குத் துணையானவர் உசாத்துணை, அசாத்துணை எனப்படுவார். சொற்றுணை என்பார் நாவுக்கரசர். நாமகள் கலைமகள் பெயர்களுள் ஒன்று நாமகள். நான்முகன் துணை என்றும் நாவில் இருப்பவள் என்றும் தொன்மம் கூறும். திருவைத் திருமகள் என்பது போலக் கலையைக் கலைமகள் என்றும், மொழி நாவழியாக இயலத் தொடங்கியமையால் நாமகள் என்றும் கூறப்பட்டதாம். நாமகள் இலம்பகம் என்பது சிந்தாமணியின் முதல் இலம்பகம். சீவகன் கல்வி கற்ற பகுதியைக் கூறுவது. நாயனக்காரர் நாயனம் + காரர் = நாயனக்காரர். நாயனார் > நாயன்மார். நாயன்மார் வாரப்பாட்டுக்குத் தகக் குழலிசைத்தவர் நாயனக்காரர் எனப்பட்டனர். வாரப் பாடல்களுக்கு இசை வகுத்துத் தந்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் என்பவரின் வழியில் வந்த ஓரம்மையார் என்பதும், திருநீலகண்டர் ஞானசம்பந்தர்க்கு யாழிசைத்தவர் என்பதும் பெரியபுராணச் செய்தி. நாயனம் நாயனாம் இறைவனுக்கு, ஒப்படைக்கப்பட்ட இசைக்கருவி நாயனம். அதனை இசைத்தவர் நாயனக்காரர்; நாயகன், நாயன், நாதன் ஒருவழிச் சொற்கள். நாயன் அடிமையர் - தொண்டர் - நாயன்மார்; நாயனார் எனப்பட்டனர். குடும்புகளின் தலைவன், பொறுப்புகளில் தலைப் பட்டோன், கடல்வணிகச் சிறப்பாளன் ஆயோர் நாயகன், நாயகம், நாய்கன் என்றெல்லாம் வழங்கப்பட்டனர். தண்டல் நாயகர், ஓலைநாயகம், மாநாய்கன் என்பவற்றைக் கருதுக. குடித்தலைமை நாயகர், குலத்தலைமை, படைத்தலைமை என்றெல்லாம் ஆகியது இது. நாயன் ஒப்பிலா ஒரு தலைவனாம் இறைவனாம். நாயனுக்கு ஊர் நமக்கு ஊர் என்பது சுந்தரர் வாக்கு. நாயுருவி நாய் + உருவி = நாயுருவி. நாயின் பல்போல் இருந்து தன்னை அடுத்து வருவார் உடலிலும் உடையிலும் பற்றிக் கொண்டு வந்துவிடும் புல்லின் வித்துடையது நாயுருவி. வேறிடத்துப் பரவ இயற்கை வழங்கிய ஏந்து இஃதாம். நாய் போல் பற்றுவதும், பற்றியிருந்த இடத்தில் இருந்து உருவி, மற்றொன்றைப் பற்றிப் பரவுதலும் உள்ளமையால் இப்பெயர் பெற்றது. தற்காப்பொடு தன்னினப் பரவற்கு வாய்த்த இயற்கைக் கொடை நலம் இது. நாய் நா = நாக்கு, நாவு. நாய் ஓடும் போதும் ஓடி இளைக்கும் போதும் படுத்திருக்கும் போதும் நாவைத் தொங்கவிட்டும் மேலும் கீழும் இழுத்துக் கொண்டுமிருத்தலால் அந்நாவின் செயல் கண்டவர் நா > நாய் எனப் பெயரிட்டனர். x.neh.: பே > பேய்; ஆ > ஆய். நாய்க்கு முகர்வுத் திறம் மிகுந்தது என்பர். தன் மோப்பத்தால் தொடர்புடைய ஒன்று என்ன மாற்றம் கொண்டாலும் மணத்தால் அறியவல்லது. மக்களின் முகர்வு உணர்வினும் முன்னூறு மடங்கு மோப்ப ஆற்றல் உடையது நாய் என்பர். மோப்பத்திறம் கண்டே, துப்பறிவதற்குக் காவல்துறை பயன்படுத்துவதனை நாம் அறிவோம். நாய் நன்றியறிதலுக்கு எடுத்துக்காட்டானது என்பர். ஆனால் அது விரும்பும் உணவு தந்த திருடனுக்கு உதவியாக இருப்பதால் கம்பர் அதனை நன்றி மறத்தலுக்கு எடுத்துக் காட்டினார். நாய்க்குகன் என்றெனை ஓதாரோ - கம். அயோ. 1024 நாய்கன் நாவாய் வழியாகக் கடல்வணிகம் செய்பவன் நாய்கன் எனப்பட்டான். கண்ணகியின் தந்தை பெயர் மாநாய்கன் என்பது. கடலோடி வணிகர்களின் தலைவன் ஆதலால் மாநாய்கன் எனப்பட்டான். இறைமையில் தலைப்பட்டார் நாயன்மார் எனப்பட்டனர். தலைவன் தலைவியர் நாயகன் நாயகி எனப்பட்டமை பின்வழக்கு. நாய்ப்பிழைப்பு நாய்ப்பிழைப்பு = இழிவு, ஓயாதலைதல். நாய் நன்றியறிவு மிக்கதாம். உயர்வுடையதாக மதிக்கப் படுகிறது. ஆனால், நன்றி மறக்க வல்லதும் நாயே. சுவையான ஒன்றை அதற்குத் தந்துவிட்டால் திருடனுக்கும் உதவும்படியாக இருந்து விடுவதும் அதற்கு வழக்கமே. அதனால்தான் நாய்க்குகன் என்றெனை ஓதாரோ என நன்றி மறப்புச் சான்றாக நாயைக் குகன் வழியே கம்பர் குறித்தார். மற்றும், நாய் எத்துணைப் பொருள் கிடைப்பினும் இழிபொருள் எச்சில் இலை தேடலை விடுதல் இல்லை; வேலையின்றி ஓயாது அலைதலை ஒழிதலில்லை; தன்னினத்தைக் கண்டால் காரணம் இல்லாமலே குரைத்தல், கடித்துக் குதறுதல், உண்டதைக் கக்கி அதனைப் பின் உண்டல் ஆயவற்றைச் செய்யாமல் இருப்பதில்லை. ஆகலின் இவற்றைக் குறித்தே இழிவுப் பொருள் ஏற்பட்டதாம். அதனால், இது என்ன நாய்ப்பிழைப்பு என வழக்கு மொழி உண்டாயிற்று. * நாய் காண்க. நாரி மகளிர் நார் + இ = நாரி. நார் = கட்டு, அன்பு. மகளிர்தம் இனிய அன்பால் கட்டும், உயர்பண்பு உடையராகலின் நாரி என்றும், நாரியர் என்றும் வழங்கப் பெற்றார். நாரியர்க் குறைவாமிடம் நண்ணினான் - கம். ஆரண். 859 நாரை நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்குபிளந் தன்ன பவழக் கூர்வாய் செங்கால் நாராய் என்னும் தனிப்பாடல் பெரும் பரவலுடையது. இப்பாடலடிகளில் நாரையின் நெடியதும் சிவந்ததுமாம் காலும் நீண்டு சிறுத்துச் செல்லும் பனங்கிழங்கு போன்ற சிவந்த வாயும் நெடிய நாவும் அழகாகக் காட்டப்பட்டுள்ளன. நீர்நிலைகளை அடுத்து வாழும் நாரை கனைகுரல் நாரை (சிந். 2108) எனப்படும். அது கூட்டமாக இருந்து ஒலித்தல், வம்ப நாரை இனன் ஒலித்தன்ன - அகம். 100 கருங்கால் நாரை நரன்று வந்திறுப்ப - பெருங். 3:7:31 கைதையம் படுசினை புலம்பொடு வதியும் - நற். 178 நாரை, செறிமடை வயிரின் பிளிற்றி - அகம். 40 இறுமென் குரல - ஐந். எழு. 66 என்னும் இவற்றால் அறியலாம். பறவை நூலார் நாரைகள் நரலும் (croak) என்று கூறுவதைச் சுட்டுவார் பி.எல்.சாமி (சங்க புள்ளின, பக். 13). நரலுதல் ஒலித்தல்; மக்கள் பெருக்கம் ஒலிப்பெருக் கமாக்கும். ஆதலால் நரல் பெருத்துவிட்டது என்பது நெல்லை மாவட்ட வழக்கு. நரலுதலால் நாரை எனப்பட்டது என்க. நார் நார்:1 மரத்தின் (பட்டை) நார் பெருங்களிறு வாங்க முரிந்து நிலம்படாஅ நாருடை ஒசியல் - குறுந். 112 நார்:2 நார் = அன்பு, நட்பு. தென்னை, பனை, புளிச்சை, சணல் முதலியவற்றின் உரி. கயிறாகவும் வடம் முதலியவாகவும் பயன்படுவது. ஒன்றோடு ஒன்று இணைந்து மற்றவற்றையும் இணைப்பது. அது போன்றது அன்பு. தொடர்புடைய உயிரிகளை யெல்லாம் இணைக்கும் அன்பை நார் என வழங்குதல் அரிய ஆட்சியாம். நட்பும், காதலும் என்றும் நார் விரிவுறும். நாரில் நெஞ்சம் - குறுந். 219 நாலடியார் நான்கடி வெண்பாப் பாடல்களால் அமைந்த நூல் நாலடியார். நானூறு பாடல்களை யுடையதாகலின் நாலடி நானூறு எனவும் வழங்கும். திருக்குறளை அடுத்துக் கூறப்படும் அறநூல் நாலடியார். பலர் பாடிய தொகை நூல் அது. நீரில் நாலடி எதிரிடச் சென்றதால் பெற்ற பெயர் என்பது புனைவு. திருக்குறள் விளக்கம் போல் அமைந்த நாலடிப் பாடல்கள் பல உண்டு. தருமனார், பதுமனார், விளக்கவுரை என மூன்று பழைய உரைகள் கொண்டது. பதினெண்கீழ்க் கணக்கில் முதல்நூலாக நாலடி நான்மணி எனச் சொல்லப்படுவது. நூற்பெயர் ஆர் ஈறு பெறுவது இந்நூல். நாலாயிரப் பனுவல் நாலாயிரப் பனுவல் நாலாயிரத் திவ்விய பிரபந்தம். ஆழ்வார்கள் பன்னிருவரால் பாடப்பட்ட இறைமை நூல். பொய்கையார், பூதத்தார், பேயார், திருமழிசையார், குலசேகரர், பெரியாழ்வார், ஆண்டாளார், தொண்டரடிப் பொடியார், திருப்பாணர், திருமங்கையார், நம்மாழ்வார், மதுரகவியார் என்பார் அவர். நாலித்தலை நாலுதல் = தொங்குதல், ஆடுதல். நாலித்தலை; கழுத்தணிகளில் தொங்கலாக அசைந்தாடும் முகப்புக் கோவை. சவி மூன்றுவடம் உடையன எட்டும், சவியினுள்ளால் சிறுதூக்கமும் மூன்றே நாலித் தலையில் விடங்குடையன எட்டில் கட்டின பொத்தி எட்டும் தெ.க.தொ. 12:78 (க.க.சொ.அ.). நாலீடு நால் + ஈடு = நாலீடு. ஈடு = இடப்பட்டது. நான்கு பக்கங்களிலும் வீடமைந்து நடுவிடம் முற்றமாக இருப்பதை நாலீடு என்பது கன்னங்குறிச்சி வட்டார வழக்காகும். நாற்பாலும் இட(விட)ப் பட்ட முற்றம் நாலீடு ஆயது. இடு > ஈடு. நாவசைத்தல் நாவசைத்தல் = ஆணையிடல். நாவு அசைத்தல் என்பது ஒலித்தல், பேசல், ஆட்டல் என்னும் பொருள்களின் நீங்கி ஆணையிடுதல் என்னும் பொருளிலும் வழங்குகின்றது. அவன் நாவசைத்தால் போதும்; நாடே அசையும் என்பது நாவசைத்தல் ஆணை என்னும் பொருளதாதலை விளக்கும். நீங்கள் நாவை அசைத்தால் போதும்; நான் முடித்து விடுவேன் என்பது ஆணை கேட்டு நடப்பார் வேண்டுகை உரை. நாவல் நாவல், மரவகைகளுள் ஒன்று. அம்மரம் மிக்கதாலும் அதன் சிறப்பாலும் நாவலம் தேயம் என இத்தேயம் வழங்கப்பட்டது. நௌவல் என்பது ம.வ. நாவன்மை காட்டும் சமயப் போரர், அதன் கிளையை நட்டுச் சொற்போர் புரிந்தமையால் நாவல் எனப்பட்டது. இரும்பு ஆற்றலும் குருதியாக்கமும் செய்யும் கனி நாவற்கனி. போருக்கு அழைத்தல் அடையாளமும் நாவலோ நாவல் என்பதாக இருந்தமை உண்டு. சமயப் போர்க்கு முதற்கண் அழைத்தவர் ஆருகதராக - சமணராக - இருந்தமையால் நாவல் மரத்திற்கு ஆருகதம் (அருகசமயம்) என்னும் பெயரும் உண்டாயிற்று. ஔவையார் முருகன் மேல் எழுந்த சுட்ட பழம் சுடாத பழம் என்னும் கதையில் இடம் பெறுவது நாவல். நாவலந் தண்பொழில் - மணி. 22:29 நாவலோஓ - முத்தொள். 4 நாவாடுதல் நாவு + ஆடுதல் = நாவாடுதல். பேசுதல் என்பதை நாவாடுதல் என்பது மதுரை வட்டாரக் குதிரை வண்டிக்காரர் வழக்காகும். சொல்லாடுதல் என்பது போன்றது நாவாடுதல். நாவாய் புடைத்தல் வகையுள் ஒன்று. நாவுதல் என்பது. முறத்தின் இக் கரையில் இருந்து அக்கரைவரை சென்று திரும்பும் புடைக்கப்படும் பொருள்கள். அது போல் கடலின் ஒருகரையில் இருந்து இன்னொரு கரைவரை சென்று மீளும் கப்பல் நாவாய் எனப்பட்டதாம். வானியைந்த இருமுந்நீர்ப் பேஎநிலைஇய இரும்பௌவத்துக் கொடும்புணரி விலங்குபோழக் கடுங்காலொடு கரைசேர நெடுங்கொடிமிசை இதையெடுத்து இன்னிசைய முரசுமுழங்கப் பொன்மலிந்த விழுப்பண்டம் நாடார நன்கிழிதரும் ஆடியல் பெருநாவாய் மழைமுற்றிய மலைபுரையத் துறைமுற்றிய துளங்கிருக்கை - மதுரை. 75-85 நாவாய்க் கொடிகள் கடலில் ஓடும் நாவாய்களில் உள்ள கொடிகள், இன்ன நாட்டைச் சேர்ந்தவை என்பதை அறியச் செய்யும் அடையாளமாம். ஆனால், நாவாயின் கொடிகளுள் வேறுசிலவும் உண்டு. கடற்கொள்ளையர் நாவாயின் கொடி கறுப்பு. புரட்சியாளர் நாவாயின் கொடி சிவப்பு. அமைதியை விரும்புவார் நாவாயின் கொடி வெள்ளை. தொற்றுநோய் உள்ளவர் செல்லும் நாவாயின் கொடி மஞ்சள்! தொற்று நோயர் செல்லும் மஞ்சள் கொடியைக் கண்டால் கொள்ளையர் தாமும் நெருங்காராம் (தினமலர் - சிறுவர்மலர் - 03.06.2011). நாழி நாழி = மூங்கில், மூங்கிலால் செய்யப்பட்ட முகத்தல் அளவுக் கருவி. ஒரு கணுவுக்கு மேல் அடுத்த கணு அளவுள் வெட்டப்பட்ட அளவுடையது. பரிய மூங்கில் மரக்கால் ஆகவும், சிறிய மூங்கில் நாழியாகவும் அளவு வரம்பு செய்து ஆக்கப்பட்ட அளவு கருவி. நாழி கொண்ட நறுவீ முல்லை - முல்லைப். 9 நாழிக் கிணறு, நாழியோடு என்பவை மக்கள் வழக்குகள். நாழிகை காலக்கணக்குகளுள் ஒன்று. அல்லும் பகலும் அறுபது நாழிகை என்பதால் ஒரு நாழிகை இருபத்து நான்கு மணித்துளி அளவாம். இரண்டரை நாழிகை ஒரு மணிப் பொழுது ஆகும். முகத்தலளவைக்குப் பயன்பட்ட நாழி, கால அளவைக் கணிப்புக்கும் பயன்பட்டதால் நாழிகைப் பெயர் பெற்றது. நாழியில் விடப்பட்ட நீர், சொட்டுச் சொட்டாக முழுவதும் வழியும் நேரம் நாழிகையாயது. அது நாழிகை வட்டு என்றும், நாழிகை வட்டில் என்றும் வழங்கப்பட்டது அதனைக் கணக்கிட்டுச் சொல்வார் நாழிகைக் கணக்கர் எனப்பட்டனர். நாழிகைக் கணக்கறிந்து நாழிகைக்கு ஒரு பாடல் சொல்பவர் நாழிகைக் கவி எனப்பட்டனர். கன்னல் என்பதும் நாழிகை வட்டில் எனப்பட்டது; நாழிகையும் ஆயது. நின்குறுநீர்க் கன்னல் இனைத்தென் றிசைப்ப - முல்லைப். 87-88 பொருள்: கிடாரத்து (கன்னல்) நீரிலே காண்கின்ற நினது நாழிகை வட்டிலில் சென்ற நாழிகை இத்துணை என்று சொல்ல (உரை, நச்.). பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள் - முல்லைப். 55 என்று நாழிகைக் கணக்கர் கூறப்பட்டனர். நாழிகைக் கவி அரசர்க்கும் அமரர்க்கும் உரைக்கும் கடிகைகளை, முப்பத்திரண்டு வெண்பாவினால் உரைப்பது நாழிகைக் கவியாகும். இது நாழிகை வெண்பா, கடிகை வெண்பா எனவும் பெறும். வானவர்க்கும், அரசர் தமக்கும் அறிய உரைத்த கடிகைகளை உரை செய்யுள் முப்பத் திரண்டுவெண் பாவென ஓதுவரே - நவநீத. 34 இதனைக் கடிகையளவில் தோன்றி நடப்பதாகக் கூறுவார் இலக்கண விளக்கமுடையார். தேவர் அரசர் திறனே ரிசையான் மேவுங் கடிகையின் மேற்சென் றதனை நாலெட்டுறச் சொலல் நாழிகை வெண்பா - இலக். பாட். 90 நாழிகைக் கவி இலக்கணத்தைப் பன்னிரு பாட்டியல் பின்வருமாறு உரைக்கின்றது. ஈரிரண் டியாமத் தியன்ற நாழிகைச் சீர்திகழ் வெண்பாப் பாடுநர் யாவரும் இருநான் கேழே ழிருநான் காமெனக் கன்னன் முப்பதும் எண்ணினர் இனிதே மன்னர் கடவுளர் முன்னிலை யாக அன்ன கடிகை என்னும் இயல்பில் தொகுநெறி அன்னவை நேரிசை வெண்பா முதல் யாமம் ஏழு அளவும் பாடி எட்டாவதில் யாமம் ஒன்றென்றும், இரண்டாம் யாமம் ஆறளவும் பாடி ஏழில் யாமம் இரண்டென்றும், மூன்றாம் யாமம் ஆறளவும் பாடி ஏழில் யாமம் மூன்றென்றும், நான்காம் யாமம் ஏழளவும் பாடி எட்டில் யாமம் நான்கென்றும் பாடின் முப்பது வெண்பாவாம் (பன்னிரு. 292, 293). நாளி நாலி > நாளி. நாலுதல் = தொங்குதல். தொங்கும் வாயை யுடைமையால் யானை நால்வாய் எனப்பட்டமை அறிக. நாளி = நாய், கள். நாய், நாவைத் தொங்கவிட்டு நீர் சொட்டலும்; கள், பாளையைச் சீவித் தொங்கவிட்டு கள்ளாகிய நீர் சொட்டலும் கொண்டு இடப்பட்ட பெயர் நாளி என்பதாம். நாளிருக்கை அரசர் முற்பகற் போதில் திருவோலக்கத்தில் இருந்து முறை கேட்டலும், திறைவாங்கலும், நூலாய்தலும், நாளிருக்கையாகும். பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇ - மதுரைக். 825 நாளோலக்கம், திருவோலக்கம், வீற்றிருத்தல் என்பனவும் இது. வீறு = பக்கம். தலைமையர் ஊடிருக்க இருபக்கமும் வரிசையாக மற்றையர் இருத்தல் வீற்றிருத்தல். நாளும் பொழுதும் நாள்= இரவும் பகலும் கூடிய ஒருநாள். பொழுது= ஒருநாளில் திட்டப்படுத்தப்பட்ட ஒரு பொழுது. கதிரோனைக் கொண்டு பொழுது கணக்கிடப்படும். பொழுது புறப்பட்டது பொழுது விழுந்தது என்பன போல வழங்கும் வழக்குகளால் பொழுது கதிராதல் விளங்கும். கதிர் உள்ள போது மூன்று பொழுதும், விழுந்த போது மூன்று பொழுதுமாக ஆறு பொழுது கூறுவர். அவற்றையும் பகுத்து நல்பொழுது அல்பொழுது எனக் கணித்துக் கூறுவர். நாளும் பொழுதும் நலிந்தோர்க் கில்லை என்பது தெளிவுரை. நாளும் பொழுதும் பார்க்கவே நாளும் பொழுதும் செலவிடுவார் மிகப்பலர். நாளை நேற்றை நாள், இற்றை (இன்றை) நாள், நாளை நாள் என்பவற்றை நேற்று, இன்று, நாளை என வழங்குகிறோம். கதிர் எழுந்து மறைந்து மீள எழும் கால அளவை நாள் எனக் கொண்டனர். இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எனக் காலத்தை மூன்றாக்கினர். இறந்த காலம் கணக்கிட முடியாதது. அவ்வாறே எதிர்காலமும் கணக்கிட முடியாதது. நிகழ்காலம் என்பது என்ன? ஒரு நொடிப் பொழுது! முந்திய நொடி, இறந்த காலம்; பிந்திய நொடி, எதிர்காலம். இறந்த காலத்தை உன்னால் எதுவும் செய்ய முடியாது. எதிர்காலத்தில் நீ நிலைபெற வாழலாம். அதற்குரிய அறவாழ்வு வாழ்க என்று கட்டியம் கூறும் சொல்லே நாளை என்பது. நாள் என்பதில் இருந்து தோன்றிய அரிய சொல் நாளை என்பதை உணர்ந்தால் வீழ்நாள் இன்றி, வாழ்நாள் பேறாகும் அது. நாள் நாள் என்பது தன்ஒளி உடைய கதிரோனால் ஆகும் பகல் இரவு என்னும் இரண்டும் கூடிய பொழுது ஆகும். அல்லும் பகலும் கூடியதே நாள். நாள் கோள் என்பதில் வரும் கோள் திங்கள், செவ்வாய் முதலியவாம். நாளின் (கதிரின்) ஒளியைக் கொள்வதால் கொண்ட பெயர் கோளாம். * கோள் காண்க. நாள்வட்டம் நாளாசரி முறைமை; நாள்வழியாக அல்லது காலந்தோறும் செய வேண்டிய முறைமை. திருநந்தா விளக்கு மூன்றுக்கு எண்ணெய் மூவுழக்கு நம்பிமார் வசமே நாள்வட்டம் அளக்கவும் க.சொ.அ. நாறிப் போதல் நாறிப் போதல் = அருவறுப்பான குணம். நாற்றம் பழநாளில் நறுமணம் எனப்பொருள் தந்து, பின்னே பொறுக்க முடியா அருவறுப்பு மணத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது. மூக்கைப் பொத்திக் கொள்ள வைக்கும் வெறுக்கத்தக்க மணமும் நாறுதலே. பீநாறி என்பது ஒரு செடிப் பெயர். அதன் தன்மையை இனி விளக்க வேண்டியதில்லையே. இந்நாறுதல் மூக்கை நாறச் செய்யாமல் மனத்தில் நாறுதலை உண்டாக்கும் இழிசெயல் செய்வதைக் குறிப்பதாக வழங்கு கின்றது. அவன் பிழைப்பு நாறிப் போயிற்று. அவன் நாறின பயல், பீநாறிப் பயல் என்பனவெல்லாம் நாறிப் போதல் பொருளை நவில்வன. நாறு நாறு > நாற்று நெல்லைப் பாவி (பரவி) முளையிட வைத்து நடுமாறு வளர்ப்பது நாற்று எனப்படும். நாற்றுப் பாவும் இடம் நாற்றங்கால்; அதனை உரிய பருவத்தில் எடுத்து நடும் பரப்பு நடவு நிலம்! நாற்றங்காலில் பயிர் வளமாக வளர்ந்தால்தான் நடவு நிலத்தில் சீராக வளரும். கருவடைந்து மகப்பேறு ஆகும் வரை தாயின் வயிற்றின் வளரும் குழந்தையெனப் பேணப்படுவது நாற்று. ஒரு முழுநாள் விதைநெல்லைக் கோணியில் கட்டி நீரில் ஊறப் போடுவர். மறுநாள் ஊறிய நெல் முளைப்பதம் பெற்ற நிலையில் ஒருமணம் உண்டாகும். அது நாறு (மணம்) எனப் பெயர் வைக்கச் செய்தது. காட்டில் மழையில் ஒருவகை இயற்கை மணம் வருவது வெறி எனப்படும். அது போல்வது முளைக்கட்டிய நெல்லின் மணம். அதனைக் கொண்டே நாறு எனப்பட்டது. நாறு, ஒற்று ஊடு பெற்று நாற்று ஆயது. நாற்பது காலமும் இடமும் பொருளும் பற்றி நாற்பது வெண்பாப் பாடுதல் நாற்பதாகும். காலம் பற்றியது = கார் நாற்பது. இடம் பற்றியது = களவழி நாற்பது. பொருள் பற்றியது = இன்னா நாற்பது, இனியவை நாற்பது. காலம் இடம்பொருள் கருதி நாற்பான் சால உரைத்தல் நானாற் பதுவே - இலக். பாட். 91 நானாற்ப தென்னாமல் நாற்பது வெண்பா வமைந்த நூல்கள் இப்பொருளமைதியால் மேலும் மிகுதற்கு இடந்தந்து பாடினார் முத்துவீரியனார். இடம்பொருள் காலம் இவற்றில் ஒன்றனை வெண்பா நாற்பதால் விளம்பல் நாற்பது - முத்துவீ. 1113 நாற்பா மூவின மாலை: நால்வகைப் பாவும், அப் பாக்களின் மூவினங்களாகிய தாழிசை, துறை, விருத்தங்களும் ஓர் ஒழுங்காய் அமையப் பாடப்படுவதொரு நூல் நாற்பா மூவின மாலை. சரசுவதியம்மை நாற்பா மூவினமாலை என்பது பண்டித சங்குப் புலவர் இயற்றியதாகும். நாற்றம் இயற்கை மணம் நாறு, நாற்று எனப்படும். அதில் பெரிதும் நன்மணமும் அரிதில் புன்மணமும் உண்டு. நன்மணம் நறுமணம், நறுநாற்றம் என வழக்கில் ஊன்றியது. புன்மணம் ஒருவகை நெடியும், அருவறுப்பும் ஆக்கும். அது நாற்றம் எனப்பட்டது. நாற்றம் என்னும் பொதுமை அந்நிலையில் மாறிக் கெட்ட மணத்தையே குறிப்பதாயிற்று. தீமணம் என்பதும் அது. தீப்பற்றி எரியுங்கால் ஏற்படும் கருகல் வாடையே தீமணம்! நல்ல காற்றைக் கெடுப்பதால் தீய மணமும் ஆயிற்று. தீய்தல் என்பது கருகுதல் பொருளில் அட்டில் கலையில் இடம்பெறும். பொரியல் தீய்ந்து போனது ம.வ. நானாதரம் நால் > நான் > நானா = நால்வகையான, பல வகையான. நானா தரப்பட்டவற்றை எல்லாம் ஆராய்ந்தான் நானா தரப்பட்டவர்களும் அவனுக்கு நண்பர்கள் ம.வ. நானாதேசி நாலா தேயங்களிலிருந்தும் வந்து இவண் குடியேறியிருந்த வணிகர்கள் நானாதேசி எனப்பட்டனர். x.neh.: பர (அயல்) தேசி (தேயத்தார், தேசத்தார்). போகீவரமுடையார், கோயிலில், நானாதேசித் திருவா சலுக்கு நானா தேசியோம் வைத்த வைப்பு க.சொ.அ. (வைப்பு = வைப்பு நிதி). நானாற்பது நான்கு வகைப் பொருள்களைப் பற்றி நாற்பது நாற்பதாகப் பாடப்பட்ட நூல்வகை நானாற்பது எனப்படும். இவ்வகையில் பதினெண்கீழ்க் கணக்குத் தொகுதியில் இடம் பெற்றுள்ள கார்நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்னும் தொகுதி எடுத்துக்காட்டாம். ஆயின், ஒருவரால் செய்யப்பட்ட நூல்கள் அவையல்ல, தனித்தனி ஒருவரால் செய்யப்பட்டது என்பது வேறுபாடு. கீழ்க்கணக்கு இவையெனச் சுட்டும் பாடலில் நானாற்பது என வருவது கொண்டு, இவ்வகை தோற்றியதெனல் வெளிப் படை. நாற்பது என்னும் வகையே சாலும். * நாற்பது காண்க. நானில நாகரிக வளர்நிலை: குறிஞ்சி நிலை : வேட்டையாடுதல்,குகைவாழ்வு, இயற்கை உணவு கொள்ளல். முல்லை நிலை : ஆடுமாடு வளர்த்துல், குடியிருப்ப மைத்தல், தினை வரகு முதலியன விளைவித்தல். மருத நிலை : கழனி திருத்தல், வேளாண் தொழில் வளம், கலைவளம், கோயில் விழா எனப் பெருகுதல். நெய்தல் நிலை : கடல்வளம் கொள்ளல், கடற்செலவு, நாடு காணல், கடல் வணிகம். நானிலம் நான்கு + நிலம் = நானிலம். மேற்கில் இருந்து முறையே தணிந்து கிழக்காக அமைந்தவை தமிழக நானிலம். பண்டைக் குமரிக் கண்டமும் அவ்வாறே அமைந்ததென்பர். குறிஞ்சி : மேல் மலையும் மலைசார் பகுதியும். முல்லை : காடும் காடுசார் பகுதியும். மருதம் : வயலும் வயல்சார் பகுதியும். நெய்தல் : கடலும் கடல்சார் பகுதியும். குறிஞ்சியும், முல்லையும் வறண்டு வளங்குன்றல் பாலை. அது மழை வறத்தலால் உண்டாகும் காலநிலையே அன்றி இடநிலை அன்று. நானிலை நூறு (நானிலைச் சதகம்) ஒழுக்கம், வழிபாடு, ஓகம், அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) எனப்படும் நான்கு படிகளையும் பற்றி நூறு பாடல்கள் பாடுவது நானிலைச் சதகம். தண்டபாணி அடிகளால் நானிலைச் சதகம் இயற்றப்பட்டுள்ளது. நான்மணிக்கடிகை நான்கு மணிகளால் கோக்கப்பட்ட அணிகலம் போன்ற நூல் நான்மணிக் கடிகை. ஒவ்வொரு பாடலிலும் நான்கு நான்கு கருத்துகள் உடைமை அப் பெயர்க்கு உரித்தாக்கிற்று. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார். இதற்குப் பழைய பொழிப்புரை ஒன்றுண்டு. கீழ்க்கணக்கு நூல்களில் நாலடியை அடுத்துக் கூறப்படுவது இந்நூலாம். நான்மணிமாலை வெண்பா, ஆசிரியம், விருத்தம், கலித்துறை என்பன முறையே வந்து நாற்பது பாட்டான் முடிவது நான்மணி மாலையாகும். வெண்பா ஆசிரியம் விருத்தம் கலித்துறை ஒண்பா நான்கும் நான்மணி மாலை - செய். வகைமை இம்முறை மாறியும் வரும் வழக்குண்மை கீழ்வரும் நூற்பாக்களால் புலப்படும்: வெண்பாக் கலித்துறை அகவல் விருத்தம் நண்பாய் வருவது நான்மணி மாலை - பன்னிரு. 257 வெள்ளை கலித்துறை அகவல் விருத்தம் கொள்வது நான்மணி கோத்தவந் தாதி - பன்னிரு. 259 என்றும், வெண்பாக் கலித்துறை விருத்தம் அகவல் பின்பேசும் அந்தாதி யினாற் பதுபெறின் நான்மணி மாலை யாமென நவில்வர் - இலக். பாட். 61 அகவலும் அகவல் விருத்தமும் நாற்பதாக அகவலை முற்கொண்டு கூறுவதும் நான்மணி மாலை என்பர். ஆனால் அவர் அகவல் விகற்பமும் அகவல் விகற்ப விருத்தமும் நான்கு கூறுபடக் கொண்டு வகுப்பார் போலும், ஆயினும் தகவுடையதன்று. அகவலும் அகவல் விருத்தமும் நாற்ப தகவலை முன்வைத் தறைவது கடனே - பன்னிரு. 258 நான்மாடக்கூடல் கூடல், மாடக்கூடல், நான்மாடக்கூடல் என்பவை முதலாகப் பல பெயர்களையுடைய மாநகர் மதுரையாகும். புலவர்கள் தமிழ் கூட்டுண்ட நகர் ஆதலால் கூடல் ஆயிற்று. மதுரை ஆலவாய் என்னும் பெயர்கள் முந்தை யமைந்தவை. நான்கு பக்கங்களிலும் உயர்ந்த கோபுரங்களை உடைமையால் நான்மாடக் கூடல் எனப் பெயர் கொண்டுள்ளது. திருவிளை யாடல் கதைகள் வேறுசொல்லும். புலவர்கள் கூடியமையால் கூடல், புணர்கூட்டு, பொதியில் என்னும் பெயர்கள் அமைந்தன.  நி வரிசைச் சொற்கள் நி நகர இகரம்; மெல்லின உயிர்மெய்; குறில். நிகண்டு நிகழ்ந்து > நிகண்டு = நூலிலும் மக்கள் வழக்கிலும் நிகழும் சொற்களைத் திரட்டிப் பொருளொடும் அடைவு செய்யப்பட்ட நூல். அகராதி உருவாக்கம் பெறுமுன்னர்ச் சொற்பொருள் விளக்கம் காணப்பட்டது நிகண்டு நூல்கள் ஆகும். நிகண்டு நூல்கள் திண்ணைப் பள்ளிப்பாட நூல்களில் இடம்பெற்றன. அதன் பதினொன்றாம் தொகுதி கட்டாயப் பாடமாக இருந்தது. இலக்கிய இலக்கண வழக்கிலும் மக்கள் வழக்கிலும் உள்ள சொற்களை ஒருவகைப் பிரிவு வகையாலும் எதுகை மோனை எண் வகையாலும் ஒழுங்குபடுத்திப் பொருள்தருவது நிகண்டு நூல்முறையாகும். கடவுட் பெயர், விலங்கின் பெயர், செயற்கை வடிவப்பெயர் எனப் பலவகையாகக் கூறியதுடன், சொல்லை எதுகை வாரியாகப் பிரித்துப் பொருள் கூறுவதையும் மேற்கொண்டனர். ஒரு நிகண்டிற்குப் பின்னர் மற்றொரு நிகண்டு தோன்றும் போது முன் நிகண்டில் கூறப்பட்ட சொற்களுடன், விடுபட்ட சொற்கள் புதிது தோன்றிய சொற்கள் என்பவற்றையும் இணைத்துப் பெருக்கிக் கொண்டுவந்தனர். இவ்வாறு வழக்கியலில் நிகழ்ந்து வரும் சொற்களுக்குப் பொருள் தந்தமையால் அதனை நிகண்டு என்றனர். நிகழ்ந்து வரும் சொற்களின் அடைவே நிகழ்ந்து நிகண்டு ஆயிற்று. இன்றும், நகர்ந்து என்பதை நகண்டு எனல் வழக்கு. நகர்ந்து உட்கார் என்பதை நகண்டு உட்கார் என்பர். பிறழ்ந்து என்பது பிறண்டு என்பதையும் எண்ணுக. நிகண்டு என்பது இடுகுறிப் பெயர் என்பர். தமிழில் இடுகுறிப் பெயர் என ஒன்றில்லை என்பது எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே என்பதால் அடிபட்டுப் போவதை அறியலாம் (தொல். 640). இடைச்சொல் உரிச்சொல் என்பனவும் பொருள் குறித்து வருவனவே. அசைநிலை, இசைநிறை என்பனவும் பொருள் குறித்தனவே. நிகரன் நிகர = உவம உருபு. நேர நிகர அன்ன இன்ன - நன். 367 நிகரன் = ஒப்புரவாளன், பெயர். ஒப்புரவறிதல் திருக்குறளில் (22) வரும் ஓரதிகாரம். நிகரி நிகர் + இ = நிகரி = ஒத்தது, ஒப்பாயது. நிகர என்பது உவமை உருபுகளுள் ஒன்று. நேர நிகர அன்ன இன்ன - நன். 267 அனுப்பப்படும் மூலம் அப்படியே மின்னஞ்சல் வழி அனுப்பிப் பதிவாவணம் ஆக்குதல் நிகரி vd¥gL«. ‘Fax’ என்பதற்குரிய கலைச்சொல்லாவது அது. நிகரிலி நிகர் + இலி = நிகரிலி > நேரிலி. ஒப்பு இல்லாமை. நிகரில் என்பதும் இது. நிகரில் சூழ் சுடர் - நாலா. 3475 நிகரிலி சோழ மண்டலம் நிகர் ஒப்புப் பொருளது; உவமை உருபு. நிகர்:1 நேர நிகர ஒப்ப உறழ - நன். 267 தன்னிகர் ஒன்றில்லாச் சிலை - நாலா. 179 நிகர் > நேர் > நேர. உவம உருபு. உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர் - திருக். 813 நேரில்லாமல் எல்லாம் பார்த்தேன்; இப்பொழுது முடியவில்லை ம.வ. நிகர்:2 நிகர் = ஒளி. கதிரோன் ஒளிக்கு நிகர் அதுவே ஆதலின் நிகர் ஒளிப் பொருள் தந்தது. நிகர்மலர் நீயே கொணர்வாய் - மணிமே. 3:15 நிகழ்ச்சி நிகழ் > நிகழ்ச்சி. நிகழ்கின்றது யாது அது நிகழ்ச்சியாம். நிகழ்கின்ற காலம் நிகழ்காலம். நிகழப் போகும் கூட்டத்தின் அல்லது திட்டத்தின் வரன்முறை ஒழுங்கு, நிகழ்ச்சி நிரல். இதுகால் திருமண அழைப்பிலும் நிகழ்நிரல் அல்லது நிகழ்ச்சி நிரல் போடும் வழக்கம் உண்டு. எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில் - திருக். 582 கோப்ப, அவிழ ,கொள்ள, பூப்ப, ஊர, - இச் செய வென் எச்சங்களெல்லாம் ஈண்டு நிகழ்காலம் உணர்த்தியே நின்றன; ஞாயிறு பட வந்தான் என்றாற் போல (சிறுபாண். 164-168 உரை,நச்.). நிச்சம் நிற்றம் > நித்தம் > நிச்சம் = நிலைபேறு, நாள்தோறும். பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு - திருக். 532 நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை - புறம். 360 நிச்சம் உழக்குநெய் பொற்காலோ டொக்கும் உழக்கால் அட்டுவார்களாக க.க.சொ.அ. நிச்சில், நிசதி என்பனவும் இது. நிசதிப்படி அட்டும் நெய் இருநாழியும்; நிசதம் நெல்லு முக்குறுணி க.க.சொ.அ. நிணக்கும்: நிணக்கும் = இணக்கும், பின்னும். நாரினை ஊடும் பாவுமாய் ஓடவிட்டு இணைத்தல், நார்க்கட்டில் பின்னல் முறையாம். அவ்விணக்குதல் நிணக்கல் ஆயது. போழ்தூண் டூசியில்... கட்டில் நிணக்கும் - புறம். 82 நிணம் நிணம், உருகும் தன்மையது. நிணம்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல் - திருக். 1260 நித்திலம் நில் + தி = நிற்றி > நித்தி + இல் + அம் = நித்திலம் = முத்து. நிலைபெற்ற ஒளியுடையது யாது அது நித்திலம். சங்கு சுடச்சுட ஒளிதரும். அது தரும் முத்தும் தன் வெண்ணிறம் மாறாது அமைந்திருக்கும். ஆதலால் நிற்றிலம்- நித்திலம் எனப்பட்டதாம். x.neh.: பற்றி > பத்தி; முற்றுதல் > முத்துதல். நிமித்தம்: இக்குறியால் இதுவிளையும் என முன்னோரால் உறுதி செய்யப்பட்ட குறிப்பு நிமித்தமாகும். நியமித்தது > நிமித்தம். கட்சியுள் காரி கடிய குரலிசைத்துக் காட்டும் போலும் - சிலப். 12:13 நிமித்தம் சொல்பவன் நிமித்திகன். நுந்தை யாகிய சேரல னிடத்தே நீயிருக்க, ஒரு நிமித்திகன் வந்து நின்னைப் பார்த்து அரசுவீற்றிருக்கும் இலக்கணமுண் டென்று சொல்ல அரும்பத. சிலப். 30:174-175. நிமிர்தல் நிமிர்தல் = ஓங்குதல், உயர்தல், எழுதல், நேராக்கல். நீர்மேல் கடல்மேல் நிமிர்கின்ற நிமிர்ச்சி நோக்கா - கம்ப. சுந். 64 கம்பி வளைந்துவிட்டது; நிமிர்த்த வேண்டும் -ம.வ நாயின் வாலை நிமிர்த்த முடியுமா? -ம.வ நிமிர் பரிப் புரவி - பட்டினப். 185 நிம்பிரி நீம்பிரி > நிம்பிரி. நீம்பல் = வெடிப்பு; பிரி = பிரிப்பது. குடும்பப் பெண்ணுக்கு ஆகாக் குணங்களுள் ஒன்று நிம்பிரி; அஃதாவது பொறாமை. நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி - தொல். 1220 அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும் - திருக். 168 நியமம் நியமம் = வரையறுத்துக் கோலப்பட்ட கடைவீதி. ஓவுக்கண் டன்ன இருபெரு நியமத்து - மதுரைக். 365 பொருள்: ஓவியத்தைக் கண்டாற் போன்ற கட்கு இனிமையை யுடைய இரண்டாகிய அங்காடித் தெரு நிரத்தல் நிரத்தல் = பலர்க்கும் சமனாக அமைதல், தருதல். நாக நாறு நரந்தை நிரந்தன - சிலப். 12:2 பொருள்: மணநாறும் சுரபுன்னையும் நரந்தையும் நிரல்படப் பூத்தன (உரை, அடியார்க்.) நிரல் = ஒழுங்கு. நிரப்பு நிரப்பு = வறுமை. நிரம்பிய நலமாக்குவது. வறுமை துயரூட்டுவது எனினும், வறுமைப் பாட்டாலேயே உலகம் பெறத்தக்க நலங்களை யெல்லாம் பெற்றது; பெற்றும் வருகிறது. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு - திருக். 267 உழைப்பாலேயே உலகம் வாழ்கிறது என்றால், உழைப்புத் தூண்டல் வறுமையாம் நிரப்பாலேயேயாம். நிரப்பு திருக்குறளில் ஓரதிகாரம். அதன்பெயர் நல்குரவு (106). இயற்கை நல்கிய வலிமையே நல்குரவு. உழைத்தால் உடல் நலமாம்; செரிமானமாம்; மருத்துவர் கட்டளைக்கு ஓட வேண்டியோ, தொப்பை குறையப் பயிற்சியோ வேண்டியதில்லை. இயற்கைத் தாக்கமும் ஒன்றும் செய்யா. நோய் எதிர்ப்பு இயல்பாகக் கிட்டும். நல்ல உறக்கம் வரும். இவையெல்லாம் உழைப்பு - வறுமை - நல்கும் வலிமைகள் அல்லவா! நிரப்புக் கலப்பு நிரப்பு= குறித்த அளவு தந்து நிரவலாக நடுதல். கலப்பு= நிரவலாக இல்லாமல் இடம் மிகைப்பட நடுதல். நிரவல், சமனிலைப்பாடு என்னும் பொருளது. கலப்பு என்பது கலக்கம் என்னும் பொருளது. கலக்கமாவது அகலம் அகலமாக நெட்டிடை வெளிபட்டு இருத்தல். பயிர் நெருக்கமாக இல்லை; நிரப்புக் கலப்பாக இருக்கிறது என்பது ஒரு மதிப்பீடு. நெருக்கமானவற்றை அகற்றுதலைக் கலப்பித்தல் என்பர். நிரம்பா நோக்கு முழுதுறப் பார்வையை ஓட விடாது, கண்ணை வைத்த குறியின் மேல் குறித்து நோக்கக், குறுக்கிய கண் பார்வை. அரம்போழ் நுதிய வாளி அம்பின் நிரம்பா நோக்கின் நிரையம் கொண்மார் - அகம். 67 நிரையம் = ஆன் கூட்டம். நிரம்புதல் நிரம்புதல் = நிறைதல். குளம் நிரம்பிவிட்டது; மதகைத் திறக்கவில்லை என்றால் கரை உடைப்பெடுக்கும் ம.வ. நிரம்ப நீக்கி - தொல். 1183 நிரயம் நிரந்தரமாக - நிலைப்பாக - ஆகிய இடம். கொண்டுவிட்டால் மீள இயலாக் கொடுநிலை. காணின் குடிப்பழியாம்; கையுறின் கால்குறையும் ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம் - நீள்நிரயத் துன்பம் பயக்குமால்; துச்சாரி நீகண்ட இன்பம் எனக்கெனைத்தால் கூறு - நாலடி. 84 நிரல்நிறை வரிசையுற நிறுத்துதல். பொருள்கோள் வகையுள் ஒன்று; அணிவகையுள் ஒன்றுமாம். நிரல்நிறை சுண்ணம் அடிமறி மொழிமாற்று - தொல். 887 நிரல்நிறுத் தியற்றுதல் நிரல்நிறை யணியே - தண்டி. 66 நிரை நிரை = வரிசை, நிரையசை, ஆநிரை. நிரை பிடித்துக் களைவெட்டல் ம.வ. குறில்இணை, குறில்நெடிலிணை தனித்தும் ஒற்றடுத்தும் வரல் நிரையசை எ-டு: பல, பழம்; பலா, எழால். நிரைமீட்டல் சருக்கம் - வில்லி பாரதம் நிலபுலம் நிலம்= நன்செய். புலம்= புன்செய். செய்தற்கு ஏற்பப் பயன் தருவது செய்யாம். பண்ணுதல் - செய்தல் - தொழிற் குறித்தே பண்ணை என்பதும் வந்தது. செய்க்குப் பண்படுத்துதல் முதன்மை. அது பண்பாடு எனப்படும். வாழ்வுக்கும் பண்பாடு இன்றியமையாததே. நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும் என்பது நிலம் நன்செய் என்பதைக் காட்டும். வரகுவிளை புன்புலம் என்பது புன்செய்யைக் காட்டும். புன்புலம், புன்செய் என்க. நிலம் நிற்கவும் நிலைபெறவும் வாய்ப்பாக அமைந்தது நிலம். நில்+அம் = நிலம். நானிலமாகவும் ஐந்நிலமாகவும் பகுக்கப் படினும் நிலம் என்பது மருத நிலம் ஆகிய நன்செயைக் குறிப்பதாகவும் ஆகியது. நிலபுலம் என்னும் இணைச்சொல்லில், நிலம் நன்செய்; புலம் புன்செய். நிலம் நீச்சு நிலம்= நன்செய். நீச்சு= நீர்வாய்ப்பு. நிலம் நீச்சு உண்டா என்பது உழவரைப் பற்றிய ஒருவினா. நிலம் நன்செய் ஆதல் நிலபுலம் என்பதில் காண்க. நீச்சு என்பது கிணறு, குளம், கால் முதலிய நீர் வாய்ப்புகளைக் குறிக்கும். நீரருகே சேர்ந்த நிலம் (ஔவை. தனிப்.) என்பதே நிலத்தின் மதிப்பாம். நீர்வள மில்லா நிலம், நிலம் எனப்படாமல் புலமாகப் போய்விடும். நிலா நிலவு > நிலா. திங்களின் ஒரு பெயர் நிலா. ஒருநாள் போல் ஒருநாள் தோன்றி நிலைபெறவில்லை. அவ்வாறு ஒருநிலையில் நில்லாமையால் நில்லா > நிலா என்றான். அது சுற்றிச் சுற்றி வருதலால் - நிலவுதலால் - நிலவு என்றான். * பிறை காண்க. நிலையாமை நில் > நிலை + ஆ + மை = நிலையாமை = நிலையில்லாத் தன்மை. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும் - திருக். 349 இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம் செல்வம் வலிஎன் றிவையெல்லாம் - மெல்ல நிலையாமை கண்டு நெடியார் துறப்பர் தலையாயர் தாமுய்யக் கொண்டு - நாலடி. 53 திருக்குறளில் நிலையாமை (34) எனும் ஓரதிகாரமும், நாலடியாரில் செல்வம் நிலையாமை (1), இளமை நிலையாமை (2), யாக்கை நிலையாமை (3) என மூன்று அதிகாரங்களும் உண்டு. நிலையாளம் சொல்லிய சொல் காற்றில் போய்விடும். கைத்தீட்டில் தா என்பது பொதுவழக்கு. அதற்கு விளக்கம் போல் நிலையாளம் என்பது கடிதம் என்னும் பொருளில் சிவகாசி வட்டார வழக்காக உள்ளது. நில் ஏவல்; நிற்றல், நிலை. நிற்றற்கு இடமாக இருப்பது நிலம். நில் + அம் = நிலம். நிற்பதற்கு நிலை வைத்தான். நிலையம் கோலினான்; நிலைபெற வாழ வழிகண்டான்; நிலைபேறுற்றான். நில்லாதவை நிலைத்தவை எவை எவை என எண்ணி வாழ்ந்தான். நில்லா வாழ்வை நிற்க வைத்தது, நிலை வைத்த தொடக்கமே. நிழல் நிழலுதல் = சுழல்தல். ஒளிக்குத் தக உருவின் படிவை நீட்டியும் குறுக்கியும் பக்கம் மாற்றியும் நிழற்றுதலால் நிழல் எனப்பட்டது. நிழல் = ஒளி. நிழல் மணி - சிந்தா. 321 குடை நிழற்றல் = ஆட்சி புரிதல். நிறம் நிறம்:1 நிறம் = வண்ணம். ஒன்றன்கண் படிந்து நிற்பது நிறம் ஆகும். இலையில் பசுமை படிந்திருத்தலும் பூவில் பலப் பல வண்ணங்கள் படிந்து நிற்றலும் உண்மை. பருவமும் உருவமும் மாற நின்ற நிறமும் மாறும். பச்சை இலை பழுக்கும் போதும், காய் நிலை மாறிப் பழுக்கும் போதும் நிறம்மாறும். நிறம் உயிரிகளுக்குப் பாதுகாப்புத் தரும்; குச்சிப்பூச்சி, பச்சைப் பாம்பு, கரட்டான் முதலானவை அறிக. நிறம்:2 நிறம் = மார்பு. நிறப்புண் கூர்ந்த.... ஏனம் - மலைபடு. 245-247 முன்பு குறித்தெறிந்த புறப்புண் நாணி - புறம். 65,66 பொருள்: மார்பு குறித்து எறிந்த வேல் புறத்தைத் துளைத்துச் சென்றமையால் புறப்புண் எனத் தோற்றுமாறாயிற்றே என நாணங் கொண்டு ப. உரை. நிறுத்தக்குறி கால்புள்ளி, அரைப்புள்ளி, முக்கால்புள்ளி, முற்றுப்புள்ளி, உணர்வுக்குறி, வினாக்குறி என நிறுத்திப் படிக்க வேண்டிய அடையாளக் குறி. நிறுத்த சொல் நிறுத்த சொல் = நிலைமொழி. முன்நின்ற சொல் (அ) நிறுத்த மொழி. நிறுத்த சொல்லின் ஈறாகு எழுத்து - தொல். 108 நிறுத்தம் நிறுத்தம் = வண்டி நிறுத்தும் இடம். போக்குவரவுத் துறை சார் வண்டிகள், நின்று செல்லும் இடம் (புத்தாக்கச் சொல்). நிறுத்தல் நிறுத்தல்:1 நிற்கச் செய்தல். முனிவு மெய் நிறுத்தல் - தொல். 1217 நிறுத்தல்:2 நிறை போடுதல் (எடை போடுதல்) ம.வ. நிறை நிறை:1 நிறை = உள்ளத்தை உறுதியாக நிறுத்தும் திண்மை, கற்பு. நிறைகாக்கும் காப்பே தலை - திருக். 57 நிறை:2 நிறை = நிறைகோல். நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் உலகிய லறிவோ டுயர்குணம் இனையவும் அமைபவன் நூலுரை ஆசிரி யன்னே - நன். 26 ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும் மெய்ந்நடு நிலையும் மிகுநிறை கோற்கே - நன். 29 நிறை:3 நிறை = எடை. இப்பொன் எவ்வளவு எடை? ம.வ. நிறை:4 நிறை = நிறைதல். நிறைஉயிர் முயற்சியின் உள்வளி துரப்ப - நன். 74 நிறைவு (உத்தியாபனம். வ) கோடைப் பொழுதில் தலைவன் தலைவியைக் காண்பதற்குச் சோலைக்கண் சேறலும், அப்பெண் தலைவன் வருகை அறிந்து அன்பால் உருகிப் புன்முறுவலுடன் புறத்தே நிற்றலும், தூதுவிடுத்து அவளை அடைந்து இன்புறுதலும் கூறல், நிறைவு என்னும் உத்தியாபன இலக்கியச் செய்தியாம். வேனிற் பொழுதிலிறை மின்கன்னி ஆசையால் தான்சோலை மேவுறஅத் தையலறிந் - தூனுருக நின்றுநகை யாத்தூது நெட்டிப்பின் னேமருவல் பன்னுகாதல் உத்யா பனம் - பிர. திர. 42 நினைவு நில் > நிலை > நிலைவு > நினைவு. கண்டது கேட்டது படித்தது ஆகியன மனத்தில் நிற்பது நினைவு ஆகும். நின்றதன் வழியாய் வந்தது நினைவு. அழுந்தியதும் ஆழ்ந்ததுமாம் நினைவு. மீள நினைதல் வேண்டாமல் நிலைபெற்று விடும். அதனை நிலைபெறச் செய்ய வேண்டுதல் மீள உண்டாயின், மறந்து போய்விட்டது என்பதாம். எந்தை வாழி ஆத னுங்க! என் நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே நின்னியான் மறப்பின் மறக்கும் காலை என்னுயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும் என்னியான் மறப்பின் மறக்குவென் - புறம். 175 என்பதால் இது விளக்கமாம். பொருள்: என்னுயிர் பிரியும் போது என்னை மறக்கும் நிலை உண்டாயின் அப்போது மறப்பேனல்லது மறவேன் உன்னை ப.உ. உள்ளினேன் என்றேன்; மற்றென் மறந்தீர்? என்னும் புலவி நுணுக்கக் குறள் (1316) மீள நினைத்தல் உண்டாயின் அது மறந்ததாம் என்பதை வெளிப்படுத்தும். * மறதி காண்க. நின்றசொல் நிலைபெற்ற சொல், மாற்றிலாச் சொல். நின்ற சொல்லர் நீடுதோன் றினியர் - நற். 1 ஒருசொல்கடை என்பது சிலகடைகளில் உள்ள உறுதி மொழி. ஆங்குச் சொன்னவிலை தவிர்த்து வேறு கேட்கும் விலை இல்லை என்பதாம். நின்று நில் > நின் > நின்று = பொறுத்து, காலந்தாழ்த்து, நிலைத்து. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது உடனே அன்றிக் காலம் பொறுத்து என்னும் பொருளது. கன்னின்றான் எந்தை கணவன் களப்பட்டான் - பு.பொ.வெ. 176  நீ வரிசைச் சொற்கள் நீ உயிர்மெய் நகரவரிசையில் நான்காம் எழுத்து. நெட்டெழுத்து. ஓரெழுத்து ஒருமொழி. முன்னிலை ஒருமை. 1. ஆண்பால் ஒருமை. 2. பெண்பால் ஒருமை. 3. ஒன்றன்பால் ஒருமை. முன்னிலைச் சுட்டு. ஏவல்முற்று; நீ = நீவு (தடவு). நீ நீ (நீ நீவு). நீ > நின் = உன். நின்னை, நின்னால், நினக்கு, நின்னின், நின்னது. நின்கண் என இரண்டு முதல் ஏழாம் வேற்றுமை வரை ஏற்றது. உன்னை, உன்னால், உனக்கு, உன்னின், உன்னது, உன்கண்; நீ நின்னாகியது போல் உன்னாகியும் இரண்டு முதல் ஏழாம் வேற்றுமை வரை ஏற்றது. நீ > நின் > நீனு பொதுமக்கள் வழக்கு. நீனை, நீனால், நீனுக்கு, நீனின், நீனது, நீனின்கண் என இரண்டுமுதல் ஏழாம் வேற்றுமை வரை ஏற்றது. நீ > நீர் > நீயிர், நீவிர் என்று நீ + இர்; ய், வ் உடம்படு மெய் பெற்று வந்தன. (ஏ போல் இருமையும் ய், வ் ஏற்றது). நீ > நீங்கள், உங்கள், நுங்கள் என்றும் நின், நின்றன், நுன்றன், நுந்தம் என்றும் முன்னிலை ஆகும். நீ நுன், நுன்னை, நுன்னால், நுனக்கு, நுன்னின், நுன்கண் எனவும் நும், நும்மை, நும்மால், நுமக்கு, நும்மின், நுங்கண் எனவும் வேற்றுமை ஏற்றன. நீ நீம் எனவும், நும்மை நுமை எனவும், உம்மை உமை எனவும், உன்னை உனை எனவும், நின்னை நினை எனவும் தொகையாகியும் வரும். நீ நும்மாகி நுவ்வை, நுந்தை, நும்முன், நும்பின், நுவ்வோய், நும்மோள், நும்மோன் என முறைப்பெயராகும். நீ தன்மை இடம் கடந்த முன்னிலை இடம் ஆதலால், தன்னின் நீங்கிய முன்னிலை இடத்திற்கே அதன் ஒட்டெழுத்து மொழிகள் அகலும். க்: நீக்கு = உன்னிடத்தில் அல்லது நின்னிடத்தில் இருந்து நீக்கு - அகற்று அல்லது அப்பாற் படுத்து. ங்: நீங்கு = நிற்கும் இடத்தில் இருந்து அகன்று செல். நீங்கியது, அகன்று சென்றது. `` ச்: நீச்சு = நீரில் நீந்திச் செல்லுதல், அகன்று செல்லுதல். நீச்சுப் பழக வேண்டும். ஞ்: நீஞ்சு = நீச்சு; நீச்சடித்து நீங்கிச் செல். மீன்குஞ்சுக்கு நீஞ்சவா முடியாது ட் :நீட்டு = உள்ள இடத்தில் இருந்து நீள அல்லதுஅகலச்செய். நீட்டலளவை நீட்டியளப்பதோர் கோல் (திருக்.796) ண்: நீண்டு =` நீண்டு அல்லது அகன்று போதல். தருகை நீண்ட தயரதன் (கம்ப. பாயிரம்) த்: நீத்து = நீந்திப் போதல், வேண்டாத வற்றை அகற்று. நீத்தல் விண்ணப்பம் (திருவா.) ந்: நீந்து = நீந்திப் போதல், நீங்கிப் போதல். ப்: நீப்பு = நீப்பும் நீத்தல் (விடுதற்) பொருளதே. மயிர்நீப்பின் (திருக். 969) ம்: நீம்பு = நீவித் தள்ளு (அ) அகற்று. ய்: நீயல் = பரப்புதல். ர்: நீர் = நீண்டு பள்ளம் நோக்கி ஓடுவது. ல்: நீல் = நீர் > நீல் > நீள் > நீளி, நீளு, நீண்டு செல்வது. வ்: நீவு = நீவுதல், அகலத் தடவுதல். ழ்: நீழல் = நிழல் நீழல்; ஒளியின்படி மாறி அமைவது. ள்: நீள் = நீள்வது, நீளம். ற்: நீறு = நீற்றப்பட்டது; நீற்றுநீர் (வடிகஞ்சி) . சோறுவாக்கிய கொழுங்கஞ்சி (பட். 44). ன்:நீன் = நீ; முன்னிலை. நீ அடிவந்த சொற்கள் அனைத்தும் முற்பட நீண்டும் அகன்றும் பரந்தும் செல்லும் இவ்வமைதி தமிழ்மொழியின் கட்டமைதிச் சிறப்பையும் சொல்லாக்கியரின் அறிவியல்சார் மொழியியல் திறத்தையும் காட்டுவனவாம். நீகான் நீரில் கலம் செலுத்தும் வல்லோன் (அ) திறவோன் நீகான். மீகான் என்பானும் இவன். திசையறி நீகானும் போன்ம் - பரி. 10:55 பெருநீர் ஓச்சுநர் = மரக்கல மீகாமர் (மதுரைக். 321, நச்.). ஓசுநர் - பரவர்; மீகாமர் (சிலப். 5:27, அரும்.). நீக்கம்பு குமரி மாவட்ட வழக்கில் நீக்கம்பு என்பது நோய் என்னும் பொருளில் வழங்குகின்றது. அம்பு = நீர். அப்பு என்பதும் அது. நீர் தெளித்து நீக்கும் மந்திரிப்பு முறை கருதி நோய் நீக்கம்பு எனப்பட்டது போலும். நீக்குப் போக்கு நீக்கு = மறக்க வேண்டுவனவற்றை மறத்தல். போக்கு = ஒதுக்க வேண்டுவனவற்றை ஒதுக்குதல். ஒரே கெடுபிடியாக இருந்தால் முடியுமா? வாழ்க்கையில் நீக்குப் போக்கு. கட்டாயம் வேண்டும் என்று பட்டறிவாளர் அறிவுரை கூறுவர். பொறுத்தல் இறப்பினை (சிறப்பு) என்றும் அதனை, மறத்தல் அதனினும் நன்று என்பார் வள்ளுவர் (152). தூற்றாதே தூர விடல் என்பது நாலடி (75). இவை நீக்குப் போக்குகளைச் சுட்டுவன. நீக்குதல் விலக்குதல் அகற்றுதல் என்னும் பொருளுடைய நீக்குதல் கொங்கு வழக்கில் கதவு திறத்தல் பொருளில் வழங்குகிறது. தாழ் நீக்கலும், பூட்டுத் திறத்தலும், கதவைத் திறத்தலும் நீக்குதல் ஆகலின் இப்பொருளில் வழங்கலாயிற்று. நீங்குதல் நீங்குதல் = சார்ந்ததை விட்டு அகலுதல் விலகுதல். நினைமாண் நெஞ்சம் நீங்குதல் மறந்தே - அகம். 51 நீங்குதல் = தன்வினை; ஊரை நீங்குதல், உறவை நீங்குதல். நீக்குதல் = பிறவினை; அழுக்கை நீக்குதல், பதவியை நீக்குதல். நீசர் நீயர் > நீசர் = ஒன்றாமல் விலக்கத் தக்கார். நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - நாலடி. 68 நீடல் நீளல் > நீடல். இடம் நீடல், காலம் நீடல், இசை நீடல் எனப்பல வகை நீடல்கள் (நீளல்கள்) உண்டு. உரிய அளவில் நீளல் நீடலாம். நீட்டல் அளவை என்பதை எண்ணுக. அளபிறந் திசைத்தலும் ஒற்றிசை நீடலும் - தொல். 33 சுரம்பல விலங்கிய அரும்பொருள் நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே - குறுந். 59 நீடு நீண்டு என்பதன் தொகை. நீடுவாழ் கென்பாக் கறிந்து - திருக். 1312 நிலமிசை நீடுவாழ் வார் - திருக். 3 நீடு + ஊர் = நீடூர். ஓர் ஊர்; அணைக்கட்டும் அமைந்தது. நீட்டக் குறைக்க: நீட்ட= கைந்நீட்டிக் கொடுக்க. குறைக்க= கொடுத்ததை மறுக்க. கொடுத்துப் பழக்கப்படுத்தி விட்டு அதற்குப் பின்பு கொடுக்க மறுத்தால் வெறுப்பைக் கட்டிக் கொள்ள நேர்தல் உண்டு. நீட்டக் குறைக்க நெடும்பகை என்பது பழமொழி. நீட்டுதல் கொடுத்தற்குக் கையை நீட்டுதல். கொடுக்காதவனை, நீட்ட மாட்டானே எனப்பழிப்பர். தருகை நீண்ட தயரதன் என்றார் கம்பர். குறைத்தல் சுருக்குதலும் இல்லை யெனலும் தழுவியது. நீட்டம் நீளல் > நீட்டல் > நீட்டம். நீட்டம் வேண்டின் அவ்வள வுடைய கூட்டி எழூஉதல் என்மனார் புலவர் - தொல். 6 கம்பு கொஞ்சம் நீட்டமாக இருந்தால் மரத்தில் காய் தட்டலாம் ம.வ. நீட்டல் நீட்டல் = தருதல், அடித்தல், பெருகப் பேசல். கைந்நீட்டல், தருதல் பொருளதாதல் அறிவோம். அன்றியும் கைந்நீட்டல் அடித்தல் பொருளதாதலும் அறிவோம். இவண் நீட்டல் கைந்நீட்டல் போல வந்தது. நீட்டிக் குறைக்க நெடும்பகை என்பது கொடைப் பொருள் தரும் நீட்டல். இனி நீட்டினால் என்கையும் நீளும் என்பது அடித்தல் பொருள் தரும் நீட்டல். உனக்கு வாய் நீண்டுவிட்டது என்பதில் வாய் என்பது நாவைக் குறித்து, நாவு பேச்சைக் குறித்து வந்ததாம். உனக்கு நாக்கு நீளம் என்பதும் இப்பொருளதே. நீட்டிக் குறைத்தல் நீட்டிக் குறைத்தல் = தந்து நிறுத்துதல். நீட்டிக் குறைக்க நெடும்பகை என்பது பழமொழி. நீட்டல் என்பது பெரிதாகக் கொடுத்தலையும், குறைத்தல் என்பது முன்பு தந்த அளவில் பன்மடங்கு குறைத்துக் கொடுத்தலையும் குறித்து வழங்குகின்றது. நீட்டுதல், குறைத்தல் என்பவை தம் சொற் பொருளை விடுத்து, வேறு பொருள் தருதலால் வழக்குச் சொல்லாயிற்றாம். நீட்டுதல் என்பதைப் பார்க்க, கைந்நீட்டலும் காண்க. நீத்தம் நீந்திச் செல்லுதற்கு அரிதாகிய பெருவெள்ளம் நீத்தமாம். நாளிடைப் படாஅ நளிநீர் நீத்தம் - குறுந். 369 பொருள்: ஒருநாளேனும் இடையீடு படாத செறிந்த நீரையுடைய வெள்ளம் உரை. நீத்தார் பெருமை நீத்தார் பற்றற்றவர்; முற்றத் துறந்தவர்; அவராவார், தந்நலம் அறத் துறந்தவர்; அவர் பெருமை கூறுவது நீத்தார் பெருமை ஆயிற்று. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு என்றார் பொய்யாமொழியார் (21). நீந்தல் நீ > நீந்து > நீந்தல். நீரில் நீந்தியும் நிலத்தில் நடந்தும் கடத்தல். பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - திருக். 10 செழுநீர்த் தண்கழி நீந்தலின் - அகம். 160 நீந்தல் நீத்துமாம். யானைக்கு நீத்தும் முயற்கு நிலையென்ப காகை நாடன் சுனை - யா.கா. பொருள். நீம்பல் பானையை மூடியும் மூடாமலும் வைத்திருத்தலை நீம்பல் என்பது விருதுநகர் வட்டார வழக்கு. நீக்குதல், நீங்குதல், நீச்சு, நீஞ்சு, நீப்பு என்பவை போல் நீங்குதல் பொருளில் வருவது நீம்பல். இது முற்றிலும் நீங்காமலும், முற்றிலும் மூடியும் இல்லாத நிலையைக் குறித்தல் தனித்தன்மையது. நீயல் நீங்கல், ஒதுங்குதல். வல்லிருள் நீயல் அதுபிழை யாகும் - பரிபா. 6 நீரகம் நீர் + அகம் = நீரகம் = உலகம். நீரால் சூழப்பட்ட நிலம். நீரகம் எனப்பட்டது. நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல் - மலைபடு. 81 நீரணிமாடம் நீர் சூழ்ந்த பகுதியின் ஊடு, காவொடு கூடிய வளமனை மாடம் எனச் செல்வர்கள், வேந்தர்கள் எடுத்து வாழிடம் நீரணி மாடமாம். நீந்துகுளம் பொழுதுபோக்கு கலைநிகழ்வு ஆய வற்றுக்கும் ஆங்கு இடமுண்டு. நீர்மாடம் என்பதும் இது. நீரல் ஈரம் நீர் அல்லாத நீரால் உண்டாகிய ஈரம். நீரல் ஈரம் எனப்படும். நீரல் நீர், என்பதும் இது. சிறுநீர் என்பதை அவையல் கிளவியாய்க் கொண்டு உரைத்தது இது. இடக்கரடக்கு என்பதும் இது. நீராட்டு பொதுவான நீராடுதலைச் சுட்டாமல் அரசு ஏற்புக்கும், மணக்கோளுக்கும் பூப்புற்றமைக்கும் நீராட்டு எடுத்தல் விழாக்கோலம் கொள்வதாம். கடவுள் மங்கலம் எனப்பட்ட நீராட்டு குடமுழுக்கு நீராட்டாக நிகழ்கின்றது. பிள்ளைத்தமிழில் நீராடல் பருவம் என ஒன்றுண்டு. நீராழி மண்டபம் தெப்பக் குளத்தின் இடையே பெருமாளிகை, கோயில் கோபுர அமைப்பு, திருவிழா நிகழ்தற்குரிய இடம் ஆகியவை அமைந்தது நீராழி மண்டபமாம். நீரி தமிழ் பழமைக்குப் பழமையாம் மொழி; அதே போல் புதுமைக்குப் புதுமையாம் மொழி; பழமையில் இருந்து புதுமை பூத்துப் பொலிவதற்காம் சொல்வளப் - பொருள்வளப் - பேறுகளையும் உடைய மொழி. நீர்வாழ்வன என்னும் ஆறெழுத்துச் சொல்லை ஒரு சித்தர் நீரி என ஈரெழுத்துச் சொல்லாக ஆக்கிப் படைத்து வழிகாட்டினார் என்றால், உடனே ஊர்வனவற்றை ஏன் ஊரி என வழங்கக்கூடாது என்னும் உணர்வை ஊட்டுவது தமிழ்வளம். அந்த உணர்வில் அழுந்தும் போதிலே, அகடூரி என்னும் சொல்தோன்றி, நமக்கு முந்தைப் பாட்டன் ஒருவன் அச்சொற் கோட்டையைப் பிடித்து வெற்றி கொண்டிருப்பதை விளம்பி, நம்மை வியப்பில் ஆழ்த்துவதும் தமிழ்வளம். அகடு ஊரி = வயிற்றால் ஊர்ந்து செல்வதாம் பாம்பு; ஊரி = ஊர்ந்து செல்வது; அகடு = வயிறு. ஊரி அகட்டோடு ஒட்டிக் கொண்டது மட்டுமோ? தனியே நின்று சங்கு, முகில், குழந்தை என்னும் பொருளையும் தரும். ஊரும் சங்கும், படரும் முகிலும், தவழும் குழந்தையும் ஊரி எனத் தக்கவைதாமே! ஊரி, புல்லுருவியையும் குறிக்கும், உருவி என்பது ஊரியாகிவிட்டது. ஒரு மரத்தின் நீரையும் உரத்தையும் உருவி உண்ணும் - வளரும் - அதனை ஊரி என்றது தகும் தானே! இனிக் கல்வி ஈறு குன்றிக் கல்லாக நின்று, ஊரியுடன் ஒட்டிப் புதுவரவுக் கல்லூரியாகப் பெயர் காட்டித் திகழ்வது நினைவில் எழுமன்றோ? உடனே அவ்வெழுச்சியின் ஊடே சிந்தாமணி, கலத்தற் காலம் கல்லூரிக் கொட்டிலா? கற்கும் காட்சியைக் கண்முன் காட்டி, நம் புது நோக்கை முதுநோக்காக்கிக் குறுமுறுவல் கொள்ள விளங்குகின்றது (995). நீருந்து பேருந்து, மகிழ்வுந்து, சரக்குந்து எனக்காணும் நமக்கு நீருந்து புதுவதாகத் தோன்றும். உந்து, பழஞ்சொல். உந்தீபற என்பது மணிவாசகம். உந்து பந்து கண்கூடு. நீரை உந்தித் தள்ளிச் செல்லும் பொறிப் படகையும் போர்ப்படகையும் நீருந்து என்பது ஈழத்தமிழர் வழக்கு. நல்ல ஆட்சி இது. நீர் நீர்மைக்கெல்லாம் மூலமாக இருப்பது நீர். நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு - திருக். 20 ஒழுக்கு = நீர் ஒழுக்கமும், நீர்மையாம் பண்பு ஒழுக்கமுமாம். நீர்நாடு நீர்வளமிக்க நாடு; காவிரி நாடு, புனல்நாடு, ஆலி நாடு ஆயவை சோழநாடு. புனல்பரந்து பொன்கொழித்தலால் பொன்னி என்பது காவிரியையும், பொன்னி நாடு என்பது சோழ நாட்டையும் குறிக்கும். நீர்நிலை நில்லாது பள்ளம் நோக்கி ஓடும் இயல்பினது நீர்; அது நிற்பதற்குக் கரை அல்லது தடுப்பாம் அணை வேண்டும். அந்நிலையில் அது நீர்நிலையாகும். நிலையாவது நிற்றலாம். நீர்நிலைப் பெயர் நிலையம் என்னும் பெயராய் வளர் கலைச்சொல்லாய்ச் சிறக்கின்றது. தொடர்நிலையம், உந்துநிலையம், அஞ்சல் நிலையம் வானொலி நிலையம், தொலைக்காட்சி நிலையம், ஆராய்ச்சி நிலையம் என விரிந்தன. நீர் நிலையால் நிலையூர், புனலூர், புனல்வேலி முதலாய பெயர்கள் கிளர்ந்தன. நீர்ப்படை சிலப்பதிகாரத்தில் ஒருகாதை நீர்ப்படைக் காதை என்பது கண்ணகியார்க்கு இமயத்தில் கல்லெடுத்துக் கங்கையில் நீராட்டிக் கொணர்ந்த கல் அது. கண்ணகியார் சிலைக்கு முழுக்காட்டியதும் நீர்ப்படையாம் கடவுள் மங்கலமேயாம். இந்நாளில் குடமுழுக்கு என்பது பழநாளில் கடவுள் மங்கலம் எனப்பட்டதாம். காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தல் - தொல். 1006 நீர்மை நீர்மை = பண்பாடு, ஒழுக்கம், தன்மை. நிறைநீர நீரவர் கேண்மை - திருக். 782 நீர = தன்மைய. நீரவர் = பண்புடையார். நெறியின் நீங்கியோர் நீரல கூறினும் - சிலப். 10:237 நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி - சிலப். 14:17 நீரல = பண்பில; நீர்மை = பண்பு. நீரின் தன்மை நீர்மை என்பதாகும். நிலத்தொடு நீர் இயையின் நிலத்து நிறம் தன் நிறமாகிவிடும். வெப்பத்தில் நீர் ஒழுக்காகும்; வெப்பமும் கொள்ளும்; தட்பத்தில் நீர் கட்டியாகும்; தண்ணிதும் ஆம்; விண்ணில் சென்று தண்ணெனக் குளிரின் கல்லும் ஆகும். ஆல் (நீர்) கட்டியாவதால் ஆலங்கட்டி என்பது பெயர். நீர்போல், சான்றோர் இயலுக்கும் கால இடங்களுக்கும் தக நடந்து கொள்ளும் இயல்பே நீர்மை ஆகும். நீர்மை திருக்குறளில் பெருவழக்காக உள்ளது. நீர்வழங்கல் வடிகாலமைப்பு தமிழகத்தில் குடிநீர் வடிகால் வாரியம் என ஒருதுறை உள்ளது. இத்துறைப் பெயர் ஈழத்தில், நீர்வழங்கல் வடி காலமைப்புத் திணைக்களம் என்னும் பெயரில் வழங்குகின்றது. நீர் வழங்கல் என்பது வெளிப்படை விளக்கம் செய்கின்றது. நீர்வழி ஆற்றின் இக்கரையில் இருந்து அக்கரைக்குச் செல்லுதற்கு அமைந்த வழி. நீர்வழிப் படூஉம் புணை - புறம். 192 நீரத்த நல்லூர் அத்தம் = வழி. காவிரிக் கரைசார் குடந்தைப் பக்கத்ததோரூர். படகுத்துறை என்பதும் உண்டு. பரிசல் துறை என்பதும் அது. நீர்வளாவுதல் வெந்நீரையும் தண்ணீரையும் குளிபதமாகக் கலந்து கொள்வது நீர்வளாவுதல் ஆகும். உளம் ஒன்றித்து மகிழ்வொடு கலந்து பேசுதல் அளவளாவுதல் ஆகும். நீரை வேண்டும் வெப்பு தட்புத் தகவு நிலையில் அமைத்தல் வளாவுதல் ஆயிற்று. நீர் வளாவினால் குளித்து விடலாம் என்பது மக்கள் வழக்கு. வளாவுதலை விளாவுதல் என்பது வழு. நீர்வார்த்தல் நீர்வார்த்தல் = தருவதை உறுதி செய்தல். தாரை வார்த்தல் என்பதும் இதுவே. இப்பொருள் உன்னதே; எனக்கும் இதற்கும் உள்ள உரிமையை அல்லது தொடர்பை விலக்கிக் கொள்கிறேன் என்பதற்கு அடையாளமாக நீர்வார்த்தல் அல்லது தாரை வார்த்தல் நிகழும். தார் என்பதும் நீர் என்பதும் ஒன்றே. தார் நீண்டு செல்வது என்னும் பொருளது; நீள்வதால் நீள் என்பது நீரே. குறள்வடிவில் வந்த திருமாலுக்கு மாவலி மன்னன் தாரைவார்த்த கதையும், குறள் நெடுமாலாக வளர்ந்து நிலமளந்த கதையும் நாடறிந்தது. திருமணம் முடித்துத் தருதலில் தாரைவார்த்தல் உண்டு. பெண்ணை உன்னிடம் பொறுப்பாக ஒப்படைத்து விட்டேன் என்பதற்குரிய சடங்காக அது நிகழ்த்தப்படுகின்றது. நீர்தொட்டு உறுதி செய்தல், நிலந்தொட்டு உறுதி செய்தல் போல இது நீர் விட்டு உறுதி செய்தலாம். நீர்விழா வையை நீர்விழா பரிபாடலில் மிகுதியுண்டு. காவிரியில் நிகழ்ந்த இந்திரவிழா, கானல்வரி கடலாடு காதை ஆயவை சிலப்பதிகாரப் புகழ்வாய்ந்தவை, தைந்நீராடல் நெடிய வழக்கு. ஆறுள்ள இடங்களிலெல்லாம் நீர்விழா எடுக்கக் காணலாம். ஆறில்லா இடத்தும் தெப்பத் திருவிழா நிகழ்தல் கண்கூடு. நீர்வெட்டு தண்ணீர் வழங்குதல் நிறுத்தப்படுதல் என்னும் பொருளில் ஈழத்தமிழரால் வழங்கப்படுவது நீர்வெட்டு. மின்வெட்டு என்பது தமிழக வழக்கில் உண்டு. வெட்டு என்பது குறைப்பு என்பதுடன், துண்டித்தல் - தொடர்பைத் துண்டித்தல் - என்னும் பொருளில் வழங்குகின்றது. களைவெட்டு என்பது அகற்றுதல் பொருளது. முடிவெட்டு முதலியவும் அப்பொருளவே. இன்று எட்டுமணிநேர நீர்வெட்டு என்பது ஈழச் செய்தித்தாள் செய்தி. நீலம் நீர் > நீல் > நீலம் = நீல நிறம், நீலப்பூ. வள்ளிதழ் நீலம் - குறுந். 366 பொருள்: வளமிக்க இதழ்களையுடைய நீலமலர் நீலவான் ஆடை - பாரதிதாசனார் நீவுதல் நீவுதல் = தடவுதல். பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி - புறம். 279 வீக்கத்தின் மேல் இக்களிம்பை நீவு என்பது மக்கள் வழக்கு. நீழல் நிழல் > நீழல் = நிழல் அல்குவெயில் நீழல் அசைந்தனர் செலவே - அகம். 346 பொருள்: வெயிலுக்காக நிழலில் தங்கிச் சென்றனர் உரை. * நிழல் காண்க. நீறு நீறு = சாம்பல், புழுதி, பொடி. கல் சங்கு சாணம் முதலியவற்றைச் சுட்டு நீற்றப்படுவதால் நீறு எனப்பட்டது. நீற்றப்பட்டது பொடியாகும். சாணக நீறு, திருநீறு ஆயது. நீறுபூத்த நெருப்பு என்னும் பழமொழியால் நீறு, சாம்பல் பொருள் தருதலறியலாம். இரும்புற நீறு மாடிக் கலந்திடைக் குரம்பைக் கூரை கிடக்கினும் கிடக்கும் - புறம். 332 நீறுதல் நீறு ஆகிப் போதல் (சாம்பல் ஆகிப்போதல்) நீறுதல் ஆகும். நீற்றப்பட்ட நீறு, திருநீறு. நீறுதல் என்னும் இச்சொல் மனம் புழுங்குதல் என்னும் பொருளில் மூக்குப்பீரி வட்டார வழக்காக உள்ளது. புழுங்குதல் பொறாமைப்படுதல் ஆகும். உடையவனை வெதுப்பும் அது, அவனை நீறாக்கும் என்பது குறிப்புப் பொருளாம். 