செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் 6 ச முதல் த வரை ஆசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர் முனைவர் பி. தமிழகன் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம் - 6 ச முதல் த வரை ஆசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர் முனைவர் பி. தமிழகன் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2018 பக்கம் : 20+364= 384 விலை : 480/- தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 24339030, செல்: 9444410654  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 320 கட்ட்மைப்பு : இயல்பு  படிகள் : 1000   கணினி & நூலாக்கம் : நல்லதம்பி, கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  களஞ்சியம் வளமான வீடுகள் கட்டி வாழும் நிலக்கிழார் பெருநிலக்கிழார் ஆகிய உழவர்கள், தங்கள் வீட்டின் உட்பகுதியில் களஞ்சியங்கள் அமைத்திருப்பர். களஞ்சியம் இருக்கும் வீடு என்றால் வளமிக்க உழவர்வீடு என்பது பொருள். களத்தில் வரும் தவசங்கள் பயறு வகைகள் ஆகியவற்றை அங்கே பூச்சியரிப்பு, மட்குதல் ஏற்படாவகையில் தளத்தின்மேல் உயர்த்தியும் புன்கு வேம்பு ஆகியவற்றின் தழைகளைப் பரப்பியும், பாதுகாப்பர். அவ்வாண்டு முழுமைக்கும் பயன்படும். அடுத்த ஆண்டு விளைவு குறைந்தாலும் களஞ்சியப் பொருள் கவலையின்றி வாழ உதவும். ஏருழவர் போலச் சொல்லேர் உழவராம் சான்றோர் நூல்கள், அக்காலத்தார்க்கே அன்றி எக்காலத்தார்க்கும் பயன்படும் வகையில் பாதுகாத்துப் பயன் கொள்ளச் செய்வது நூல் களஞ்சியமாகும். இந்தியப் பரப்பில் தமிழ் மொழியில் தான் முதன்முதல் `கலைக் களஞ்சியம் உருவானது என்பது பெருமிதப்படத்தக்கதாம். இப்பொழுது தமிழ்மண் பதிப்பகத்தால் வெளியிடப்படும் செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் செவ்வியல் மொழிக் கொடையாக வந்து, தமிழ்மண் பதிப்பக வெளியீட்டால், தமிழ்கூறு நல்லுலகப் பொருளாவது, செம்மொழிச் செம்மல் முனைவர் திருமிகு க. இராமசாமி அவர்கள் தூண்டல் வழியாகத் துலங்கிய துலக்கமாகும். ஆதலால் படைப்பாளன் என்ற நிலையில் நெஞ்சார்ந்த நன்றியுடையேன். இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். கடப்பாட்டு உரை தமிழ் இயற்கை இயங்கியல் வழிப்பட்ட ஒலி, வரி, வடிவுகளையும் இயற்கை இயங்கியல், மெய்யியல், வாழ்வியல், படைப்பியல் என்பவற்றை அடிமனையாகவும் கொண்ட மொழி. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்னும் மூல முழக்கத்தை முழுவதாகக் கொண்டது நம்மொழி என்பதை ஓராற்றான் விளக்குவதாக அமைந்தது இக் களஞ்சியம். ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் என்பவை இல்லாமல், வெளிப்பட எவரும் அறிந்து கொண்டுள்ள வழக்கு, செய்யுள் என்பவை கொண்டே விளக்குவது இக்களஞ்சியம். இதனை, ஊன்றியும் விரும்பியும் கற்பார் தாமும் இவ்வாய்வு செய்ய வியலும் என்பதைத் தூண்ட வல்ல ஆய்வும் இது! ஆதலால், படிப்பாளியைப் படைப்பாளி ஆக்கவல்லது என்பதை என் பட்டறிவுத் தெளிவாகக் கண்டு வருகிறேன்! எளிமையாய் - ஆழ்ந்த நுணுக்கங்களை - ஓரளவு கற்றாரும், கொள்ள வழிகாட்டும் `கைவிளக்கு அன்னது இது. இதனை முதல் - இடை - நிறைவு என்னும் மூன்று நிலை களிலும் உற்ற பெறலரும் உதவுநராக இருந்து முற்றுவித்ததுடன், தமிழ் உலகப் பயன்பாட்டுக்கும் வழியமைத்துத் தந்த `கலங்கரை விளக்கம் செம்மொழிச் செம்மல் முனைவர் திருத்தகு க. இராமசாமி அவர்களே ஆவர். ஆதலால், அவர்களை நெஞ்சாரப் போற்றுவது என் தலைக்கடனாம்! திருவள்ளுவர் தவச்சாலை நிறுவன வழியே இப்பணி செய்ய வாய்த்த அளவில் சொற்றிரட்டியும் மெய்ப்புப் பார்த்தும உதவிய பெருந்தகு கேண்மையும் உழுவலன்பும் உடைய முனைவர் பெருந்தகை கு. ருமாறனார் அவர்களுக்கும் எம் எழுத்துப்பணியைத் தம் பணியாக் கொண்டு தொடர்ந்து செய்துவரும் தொய்விலாத் தொண்டர் மெய்ப்புப் பார்த்தலில் வல்லார் முனைவர் பி. தமிழகனார் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியுடையேன். என் எழுத்தைப் படியெடுத்தும், கொங்கு வட்டார வழக்குச் சொற்களைத் தொகுத்தும் உதவிய புலவர் கலைமணியார் அவர்களுக்கும், இப்பணியில் இல்லை எனினும் உழுவ லன்பாலும் உரிமைப் பேற்றாலும் என் எழுத்துகளைப் படியெடுத்து உதவிய திருக்குறள் செம்மல் பெரும்புலவர் மு. படிக்கராமு அவர்களுக்கும் பெருநன்றியும் வாழ்த்தும் உடையேன். இத்தொகை அனைத்தையும் கணினிப்படுத்தியும், மெய்ப்புப் பார்த்தும், வரவு செலவு கணக்கைத் தக்க வகைத் தணிக்கைக்கு உரியவையாகச் செய்தும், பணிநிறைவை ஒப்படைத்தும் பெருநன்றாற்றிய கவனகச் செம்மல் முனைவர் கலை. செழியனார் அருந்தொண்டைப் பாராட்டி நன்றி பெரிதுடையேன். பணி நிறைவுப்பயன், தமிழ் கூறு நல்லுலகப் பயன்பாடு ஆதல் வேண்டும் என்பது தானே! இல்லாக்கால் செய்த பணியால் ஆவதென்ன? செய்யாமை ஒப்பது தானே! அவ்வாறு ஆகாமல் தாய்த்தமிழக ஆர்வலர்களுடன், அயலகத் தமிழ்ப் பெருமக்களாக விளங்கினும் தாய்த்தமிழக ஆர்வலர்களிலும் மேம்பட்ட ஆர்வலர்களாகக் குவையத்து, அமெரிக்கா, கனடா, மலையகம், சிங்கபுரி, ஈழம் முதலாக வாழ்வார் ஆர்வத் தளிர்ப்பும் தூண்டலும் முன்னிற்கும் பேறு வியப்புக்கும் பெருநன்றிக்கும் உரியதாம்; இப்பெருமக்கள் அனைவர் உள்ளமும் ஓருருவாக வாய்த்து, கருவி நூற்பணியைத் தொகை தொகையாக வகைப்படுத்தி வான் பெருந்தொண்டாகச் செய்தலே எம் பிறவிக் கடன் எனக் கொண்ட தமிழ்ப் போராளி திருமிகு கோ. இளவழகனார் வெளியீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயற்கரிய செய்வார் பெரியர் என்பதை நிலைநாட்டியதைப் போற்றுவதன்றி என் சொல்வேன்? களஞ்சியம் கணினிப்படுத்திய அளவில் நிறைவுறுமா? பத்துத் தொகுதிகளையும் ஒருமுறைக்கு மும்முறையாய் முழுதுற மெய்ப்புப் பார்த்தல், எளிமைப் பாடா? கண்புரை வளர்ந்தாலும் இடைத்தடை நேர்ந்தாலும் இத்தொண்டு தமிழன்னை தளிர்க்கும் தொண்டு என்று இமைப் பொழுதும் சோராது கடனாற்றிய கடப்பாட்டாளர் மெய்ப்புச்செம்மல் முனைவர் பி. தமிழகனார்க்குப் பெருங்கடப்பாடு உடையேன்; பதிப்புச் சுமையை ஏற்றமை என் சுமை ஏற்றமையாம்! வாழிய நலனே! வாழிய நலனே! இரா. இளங்குமரன் தமிழ்க் களஞ்சியம் மொழியின் வளம், அம்மொழியைப் பேசுவோர் பயன்படுத்தும் சொற்களாலும், அம் மொழியில் உள்ள இலக்கண, இலக்கிய வகைகளாலும் அறியப்படும். தமிழின் வளம் இலக்கியங்களிலும் மக்கள் வழக்குகளிலும் நிறைந்துள்ளது. சொற்களின் வளமும், பெருக்கமும் மொழியின் சிறப்பைக் காட்டும். சொற்களின் பெருக்கைக் காட்ட எத்தனையோ நிகண்டுகளும், அகராதிகளும், களஞ்சியங்களும் தமிழில் வந்துள்ளன. இவற்றுள் பல பிறமொழிச் சொற்களையும் தமிழ்ச் சொற்களாய்க் கருதிப் பொருள் தந்துள்ளன. பிற மொழிகளில் ஏறிய தமிழ்ச் சொற்களும் வேற்றாடை உடுத்தியுள்ளன. அவற்றை அறிந்து தமிழெனக் காட்ட, மொழி உணர்வும், இலக்கிய இலக்கணப் புலமையும், தமிழ் முழுதறி தகுதியும், மக்கள் வழக்குகளை வழங்கும் சூழலில் கேட்டறிதலும், சொற் பொருளாய்வும், சொல்லியல் நெறிமுறைகளும், வேர்ச் சொல்லாய்வும், கூர் மதியும் நிறைந்திருக்க வேண்டும். இத்தமிழ்ச் சொற் களஞ்சியம் சொற்களின் பொருளை மட்டுமா தருகின்றன? சொற்களின் வேரும், அதன் விரிவும், அவற்றின் விளக்கமும், சான்றுகளும், மக்களின் பொது வழக்கும், வட்டார வழக்கும், யாழ்ப்பாணத் தமிழ் வழக்கும் செறிந்துள்ள தமிழ்க் களஞ்சியமாம். ஒரு வினைச் சொற்கள் தொகை தொகையாகிய தொகை இக்களஞ்சியம். `அடித்தல் சொல்லடியாக 145 சொற்கள் உண்ணல் வகைகள், ஊர்ப் பெயர் ஈறுகள் (504) நோய் வகைகள் (229), நோய் வினைகள் (216), மதில் பொறி வகைகள் (28) மலை வகைகள் (25) முதலிய எத்தனையோ வகைகளும் தொகைகளும் அடங்கியுள்ளன. இவற்றின் தொகுப்பு கற்பாரை வியக்க வைக்கும்! இக் களஞ்சியத் தொகுதிகளுள் நூற்றுக்கணக்கில் மரபுத் தொடர்கள், இணை மொழிகள், ஒலிக்குறிப்புகள், அவற்றின் விளக்கங்கள் அடங்கியுள்ளன. சொற்கள் விளக்கத்திற்கு அன்றாடச் செய்திகளும் (செய்தித்தாள்கள்) சான்றாகின்றன. சிற்றிலக்கிய வகைகள் தொண்ணூற்றாறு என்பர். ஆனால், பற்பல நூறுவகைகள் உள்ளமையை இக்களஞ்சியம் காட்டும். மேனாட்டு உடைகளை மாட்டியதால் தமிழர் மேனாட்டார் ஆகாரன்றோ? பஜ்ஜி ஏதோ பிறமொழி என்றே மயங்கி நிற்பர். அது பச்சைக் காய்கறிகளால் செய்யப்படுவது. தேவநேயப் பாவாணர் உடன் பழகியமையாலும், அவர் நூல்களைத் தோய்ந்து தோய்ந்து கற்றமையாலும், அவரே பாராட்டியமையாலும் ஐயா, பல சொற்களுக்கு வேர்ச்சொல் வழி மூலமும் கிளையும் காட்டியுள்ளார். புழுதி, பூழ்தி, பூதி. பல சொற்களின் பொருள் வேறுபாடுகளும் காட்டப்பட்டுள்ளன: விரைப்பு- விரைப்பு; விறைப்பு - தொய்வின்மை; இக்களஞ்சியம் தவசங்களாம் சொற்கள் கொட்டப்பட்டு நிறைந்துள்ளது. படிப்பார் தத்தமக்குத் தேவையான தவசங்களை அள்ளி அள்ளிப் பயன் கொள்ளலாம். எவ்வளவு அள்ளினும் என்றும் குறையாது இக்களஞ்சியம். தமிழரின், மொழி, இன, இலக்கிய, இலக்கணம் ஆகியவற்றின் வரலாறு, பண்பாடு, நாகரிகங்களின் அடங்கல்களைப் படை படையாகத் திரட்டித் தொகுத்து வெளியிடும் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் முதலிடம் பெற்றிருக்கிறது. ஐயா முதுமுனைவர், இளமை முதல் தொகுத்த சொற்களஞ்சியங்களைச் சேர்த்துச் சேர்மானமாக்கித் திரட்டித் தந்துள்ளார்கள். தமிழர்களே! இங்கே வம்மின்! களஞ்சியம் கொண்மின்!! தமிழை வளர்மின்!!! பி. தமிழகன். அணிந்துரை செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் என்னும் இந்நூல் இன்று நம்மிடையே வாழும் தொல்காப்பியராக விளங்கும் மூத்த தமிழறிஞர் செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஏறத்தாழ 8000 தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் விளக்கத்தினை மேற்கோள் சான்றுகளுடன் வழங்கும் இந்நூல் தோராயமாக 3254 பக்கங்களில் பத்துத் தொகுதிகளாக வெளிவந்து தன்னேரிலாத தமிழ் மொழிக்குத் தனிப்பெருமை சேர்க்கும் முன்னோடிப் பணியாக அமைந்துள்ளது. அகரமுதலிகளில் இடம்பெறாத சொற்கள், மரபுச்சொற்கள், வட்டார வழக்குச் சொற்கள், பழமொழிகள் போன்றவை இக்களஞ்சியத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்க தாகும். இசை, மருத்துவம், கல்வெட்டு, அறிவியல் ஆகிய துறைகள் சார்ந்த இன்றியமையாத சொற்களுக்கும் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. அகரத்தில் தொடங்கும் சொற்களுக் கான பொருள் விளக்கங்கள் மட்டுமே 276 பக்கங்களில் முதல் தொகுதியாகவும் தனித் தொகுதியாகவும் அமைந்திருப்பது நூலின் செறிவையும் விரிவையும் பறை சாற்றுவதாக அமைந்துள்ளது. அயன் மொழிச் சொற்கள் அறவே தவிர்க்கப் பட்டிருப்பது நூலின் தனிச்சிறப்பாகும். சொற்பொருட் களஞ்சியப் பணியை நிறைவேற்றும் வகையில் நூலாசிரியருக்குத் தூண்டுதலாக அமைந்தது ஒல்காப் புகழ் தொல்காப்பியமே. குறிப்பாக, எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே (தொல். 640) என்னும் நூற்பா. இந் நூற்பாவினை மூல முழக்கமாகக் கொண்டது தமிழ்மொழி என்பதை விளக்கும் பொருட்டே இக்களஞ்சியம் உருவாக்கப் பட்டதென நூலாசியிர் குறிப்பிட்டுள்ளார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் காட்டியவாறு ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் எனக் காணாமல் வெளிப்படையாக அறியக்கூடிய சொற்களுக்கு மட்டுமே அமைதியும் திரிபும் பொருள் விளக்கமும் காட்டுவது இக்களஞ்சியம் என்பதும் நூலாசிரியர் கூற்றாகும். பொருள் விளக்கங்களினூடே கீழ்க்காணும் தொல்காப்பிய நூற்பாக்களின் பயன்பாட்டினையும் உணரலாம். பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லின் ஆகும் என்மனார் புலவர். (தொல். 641) தெரிபுவேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும் இருபாற் றென்ப பொருண்மை நிலையே. (தொல். 642) பொருட்குப் பொருள்தெரியின் அதுவரம் பின்றே. (தொல். 874) பொருட்குத் திரிபில்லை உணர்த்த வல்லின் (தொல். 875) மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா. (தொல். 877) ஒரு பொருள் பல சொற்கள் மிகவும் நுட்பமாய் ஆராயப் பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. `அழகு பொருண்மையைக் குறிக்கும் 67 தனித்தமிழ்ச் சொற்களை அடையாளங்கண்டு அவற்றிற்கு நுட்பமான விளக்கங்களைத் தந்திருப்பது ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலத்திற்கும் வளமான பட்டறிவிற்கும் சான்றாக விளங்குகிறது. பெருமதிப்பிற்குரிய ஐயா இளங்குமரானாரின் நெடுங்கால அவா இந்நூல் வெளியீட்டின் வழி நிறைவேறியுள்ளமை மகிழ்வளிக்கிறது. இது காலத்தை வென்றுநிற்கும் நிலைத்த பணி. தமிழ் ஆய்வாளர்களுக்குக் கிட்டியுள்ள தலைசிறந்த நோக்கீட்டு நூல். உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் இந்நூலினை வரவேற்றுப் போற்றுவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. களஞ்சியப் பணி ஒரு தொடர் பணி. இப்பத்துத் தொகுதிகளை அடித்தளமாகக் கொண்டு தொடர்ந்து நூற்றுக்கணக்கான தொகுதிகள் வெளிவந்து தமிழிற்கு வளம்சேர்க்க வேண்டும் என்பது என் அவா. தனித்தமிழ்ப் பற்றாளராகவும் அரிய தமிழ் நூல்களின் பதிப்புச் செம்மலாகவும் விளங்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ. இளவழகனார் இக்களஞ்சியத்தை அருமுயற்சியுடன் சிறப்புற வெளிக்கொணர்ந்திருப்பது பாராட்டிற்குரியதாகும். முனைவர் க. இராமசாமி முன்னாள் பேராசிரியர் - துணை இயக்குநர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர் முன்னாள் பொறுப்பு அலுவலர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை நுழைவுரை தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் புதைந்து கிடக்கும் அறிவுச் செல்வங்களைத் தனக்கே உரிய நடையில் இருந்து தமிழின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் அய்யா இளங்குமரனாரின் நினைவாற்றலை நினைந்து நினைந்து மகிழ்பவன். அவர் அருகில் இருக்கவும், அவருடன் உரையாடவும், வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும் பேறாகவும் கருதுகிறேன். மொழிஞாயிறு பாவாணர், செந்தமிழ் அறிஞர் இலக்குவனார், மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் முதலான பெருமக்களை எட்டி இருந்து பார்த்தவன். அவர்களின் அறிவு நலன்களைக் படித்துச் சுவைத்தவன். இப் பெருமக்களின் மொத்த உருவமாக அய்யா இளங்குமரனாரைப் பார்த்து நெஞ்சம் நெகிழ்பவன். அய்யா அவர்களின் அறிவுச் செல்வங்களைக் கடந்த காலத்தில் பேரளவில் எம் பதிப்பகம் வெளியிட்டு அவரின் உழைப்பை தமிழ் கூறும் உலகுக்கு அளித்ததில் நிறைவு அடைகிறேன். இன்று உங்கள் கைகளில் தவழும் செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் எனும் இவ்வருந்தமிழ்த் தொகுப்பை உருவாக்குவதற்கு எவ்வளவு காலம் உழைத்திருப்பார் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். வியந்து போகிறேன். இச்செந்தமிழ்த் தொகுப்பு தமிழ் அகராதி வரலாற்றில் தமிழுக்குப் புது வரவாகும். இதுவரை யாரும் செய்ய முன்வராத பெரும்பணி யாகும். அய்யாவின் இலக்கிய, இலக்கணப் பெரும்பரப்பைத் தாங்கிவரும் இப்பொற் குவியலை உலகத் தமிழர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பாவாணர் போல் வேர்காட்டி, வளம் கொடுக்கும் சொற்கடலாய் வாழும் அய்யாவின் பேருழைப்பால் விழைந்த இலக்கிய இலக்கணக் களஞ்சியத்தை வெளியிடுவதன் மூலம் என்னையே நான் பெருமைப் படுத்திக் கொள்கிறேன். என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பேறாகக் கருதுகிறேன். அய்யாவின் 75ஆம் (30.01.2005) அகவை நிறைவை திருச்சித் திருநகரில் தமிழர் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நிகழ்வில் புலமைக்குத் தலைவணக்கம் எனும் நிறைவுமலரினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு மகிழ்ந்தது. அந்த மலரில் மலேசியப் பாவரசு சு.ஐ.உலகநாதன் எழுதிய பாடலினை கீழே சுட்டியுள்ளேன். வாய்த்திருக்கும் அகவையெலாம் வரலாறு படைக்கின்றார் வையகமே வந்து போற்று நம் முன் சான்றாக வாழும் `ஐயா அவர்களால் உருவாக்கப்பட்ட இக்களஞ்சியத்தை தமிழ் உலகுக்கு வழங்குவதில் பெருமையும், பூரிப்பும் அடைகிறேன். கோ. இளவழகன் ஆசிரியர் விவரம் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பிறப்பு : 30. 1. 1930 பெற்றோர் : இராமு - வாழவந்தம்மை (உழவர்குடி) ஊர் : சங்கரன்கோவில் வட்டம், வாழவந்தாள்புரம் கல்வி : தொடக்கக் கல்வி - உள்ளூரில் நடுநிலைக் கல்வி - பாவாணர் பயின்ற முறம்பு பள்ளி வித்துவான் - தமிழ்த் தேர்வு - தனித் தேர்வர் ஆசிரியர் பணி : தொடக்கப் பள்ளி - 16ஆம் அகவையில் தொடக்கம் உயர்நிலைப் பள்ளி - தமிழாசிரியப்பணி ஆய்வுப்பணி : பாவாணருடன் - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் - கலைச் சொல் விளக்கம் தொகுப்புப் பணி, தமிழக வட்டார வழக்குச் சொல் தொகுப்புப் பணி. தமிழ்ப்பணி : கட்டுரை, கவிதை, கதை, நாடகம், காப்பியம், இலக்கண - இலக்கிய உரை - தமிழ்ச் சொல்லாய்வு - பழந்தமிழ்நூல் பதிப்புகள் - தனிமனித - இலக்கண - இயக்க, இசை, வரலாறு. தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் - நாடகம். குழந்தைப் பாடல்கள் - ஆய்வுப் பொழிவு - தொகுப்பு நூல்கள் நாளொன்றுக்கு 18 மணிநேர எழுத்துப் பணி திருவள்ளுவர் தவச்சாலை நிறுவி இயக்குதல். செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் ... நூல்கள் : சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணிவாசகர் பதிப்பகம், ஈரோடு குறளாயம், திருவள்ளுவர் தவச்சாலை, தமிழ்மண் பதிப்பகம் வழி 420க்கும் மேல் வெளிநாட்டு பயணம் : தமிழீழம், சிங்கப்பூர், மலேயா, அமெரிக்கா முதலிய நாடுகளில் தமிழ் அமைப்புகளில் பொழிவுகள். திருமணம் நிகழ்த்துதல் : தமிழகம், சிங்கப்பூர், மலேயாவில் 4000க்கும் மேற்பட்ட தமிழ்நெறித் திருமணங்கள் நிகழ்த்துநர். இயக்கப்பணி : தமிழகத் தமிழாசிரியர் கழகம், உலகத் தமிழ்க் கழகம், தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், திருக்குறள் பேரவை, ஈரோடு குறளாயம், தமிழ்ச்சான்றோர் பேரவை விருது : இலக்கியச் செம்மல், செந்தமிழ் அந்தணர், முதுமுனைவர் முதலியன. பதிப்பாசிரியர் விவரம் முனைவர் பி. தமிழகன் பிறப்பு : 5. 10. 1946 பெற்றோர் : பிச்சை - மீனாட்சி (வேளாண்குடி) ஊர் : இலால்குடி வட்டம், குமுளூர் கல்வி : தொடக்கக் கல்வி - உள்ளூர் நடுநிலைக் கல்வி - இருங்கலூர் உயர்நிலைக் கல்வி - பூவாளூர் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளி புலவர் - கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் தமிழியல் இலக்கிய இளைஞர், முதுகலை, கல்வியியல் முதுகலை, தனித் தேர்வர் ஆய்வு : தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம், சங்க இலக்கியத்தில் மரபியல் சொற்கள் ஆசிரியர்கள் : முதுபெரும்புலவர் அடிகளாசிரியர், பாவலரேறு பாலசுந்தரனார் ஈடுபாடு : சங்க இலக்கியம், பத்தி இலக்கியங்கள், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், நாட்டுப்புறவியல் ஆசிரியப் பணி : திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசுப் பள்ளிகளில் 33 ஆண்டுகள் தமிழாசிரியர், பணி நிறைவுக்குப்பின் ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்லூரியில் பேராசிரியர் பணி தொடர்தல். இயக்கப் பணி : தமிழியக்கம், பாவாணர் தமிழியக்கம், திருவள்ளுவர் தவச்சாலை நூல்கள் : தமிழகத் தொல்பொருள் ஆய்வு (வ்ட்பீது கீகுநூழ்ஙூ) வழக்குச் சொல் அகராதி (ர்மயூரூயுகுயிகீஞ்ணூ நிகுபீய்நூக்ஷி) பதிப்புப் பணி : முதுமுனைவர் இரா. இளங்குமரனாரோடு இணைந்து தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட முதுமொழிக் களஞ்சியம், சங்க இலக்கியம். பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம் எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் `உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கைகளை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். நூலாக்கத்திற்கு உதவியோர் ஆசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் பதிப்பாசிரியர்: முனைவர் பி. தமிழகன் கணினி மற்றும் நூல்வடிவமைப்பு: திரு. நல்லதம்பி (யாழினி கணினி) திருமதி. கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: முனைவர் பி. தமிழகன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் 1. ச வரிசைக் சொற்கள் 2 2. சா 46 3. சி சீ 69 4. சீ 113 5. சு சூ 128 6. சூ 170 7. செ சே சை 179 8. சே 210 9. சொ சோ ஞ 225 10. சோ 248 11. `ஞ 259 12. த 269 ‘ச’ முதல் ‘த’ வரை ‘ச’ வரிசைக் சொற்கள் ச தமிழ் உயிர்மெய் வரிசையில் மூன்றாம் எழுத்து இது. ஒரு மாத்திரை அளவினதாம் குற்றெழுத்து. வல்லின எழுத்து வரிசையில் இரண்டாம் எழுத்து. நான்கு என்னும் தமிழெண் சகரக் கீற்றின் மேல் நீட்டலாகும் (Ì). சகரம், சகாரம் என்பன சாரியை இணைந்த வடிவாம். சகரம் முதலாம் மொழிகளை, சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி சளிசகடு சட்டை சவளி - சவிசரடு சந்து சதங்கை சழக்காதி யீரிடத்தும் வந்தனவால் சம்முதலும் வை என்கிறது நன். மயிலை நாதருரை விளக்கம் (105). வல்லெழுத் தென்ப கசட தபற - தொல். 19 சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே - தொல். 62 சரிசமழ்ப்பு என்னும் எடுத்துக்காட்டு வெண்பாவின் அடிக்குறிப்பாக இது, சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தை மறுத்துரைப்பார் கூற்றுப் போலும் என்று எழுதுகிறார் உ.வே.சா. சக்கரம், சகடம், சகடு, சடை, சண்பகம், சதுக்கம். சதுரம், சந்தம், சந்தனம், சந்தி, சந்து, சமம், சமயம், சமழ்ப்பு, சமன், சலம், சவட்டல் இவை பழந்தமிழ்ச் சொல்லடைவில் உள்ளவை. சங்கம், சதங்கை, சமர், சமையம், சமையல், சலங்கை என்பனவும் தமிழே! சகதி, சகுனம், சக்கட்டை, சக்கரை, சக்களியல், சக்கிரி, சக்கை, சங்கடம், சங்காயம், சச்சரவு, சஞ்சலம், சடக்கு, சடங்கு, சடசடப்பு, சடலம், சடுதி, சடைவு, சட்டகப்பை, சட்டகம், சட்டம், சட்டி, சட்டுவம், சட்டென, சணப்பு, சணல், சண்டாளன், சண்டி, சண்டு, சண்டை, சண்பு, சதசதப்பு, சதிர், சதுரம், சந்தடி, சந்துசெய்தல், சந்துவாய், சந்தை, சப்பாணி, சப்பு, சப்பை, சமண், சமதை, சமம், சமரம், சமர், சமனிசை, சமனிலை, சமைதல், சம்பல், சம்பளம், சம்பா, சம்பாரம், சம்பு, சரக்கு, சரசரப்பு, சரடு, சரம், சரவடி, சரி, சரிகை, சரிக்கட்டுதல், சரிக்குச்சரி, சரிதல், சரிபங்கு, சரிபாதி, சரிப்படுதல், சரிவு, சருகு, சருக்கரை, சருச்சரை, சருவுதல், சலித்தல், சலிப்பு, சல்லடம், சல்லடை, சல்லரி, சல்லிகை, சல்லிக்கல், சல்லிவேர், சவம், சவங்கல், சவடி, சவடு, சவரி, சவர், சவர்க்காரம், சவலை, சவளம், சவளி, சவளுதல், சவுக்கு, சவை, சவ்வு, சழக்கு, சழிதல், சளசளப்பு, சள்ளை, சறுக்கல், சற்று, சன்னம், சன்னல்பின்னல் இவையெல்லாம் இருவகை வழக்குகளிலும் இடம்பெற்ற சகரமுதற் சொற்கள். இவ்வாறாகவும் சகரம் மொழி முதலாகாது எனல் எண்ணத் தக்கதாம். சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அஐ ஔவெனும் மூன்றலங் கடையே என்பது தொல்காப்பியம் (62). இளவழகனார் தொல்காப்பிய மூலப்பதிப்பில், அவை, ஔவெனும் ஒன்றலங் கடையே எனப் பாடவேறுபாடு காட்டுவார் (கழகப்பதிப்பு 1943). 1942- ல் வெளிவந்த புன்னைவனநாதர் மூலப்பதிப்பில், சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அஐ ஔவெனும் மூன்றலங் கடையே என்றே நூற்பா உளது. பாடவேறுபாடு இல்லை. 1996-ல் பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகப் பதிப்பு (தொல். மூலம்) வெளிவந்தது. அது பல்வேறு ஏடுகள், பதிப்புகளை ஆய்ந்து வெளிவந்த அரிய பதிப்பு. அதில் இந்நூற்பாவின் அடிக்குறிப்பாக, இந்நூற்பாவிற்கு, அவைஔ என்னும் ஒன்றலங் கடையே என்ற பாடவேறுபாடும் உள்ளது எனப் பாவாணர் எழுதுகிறார். ஆனால் எந்தச் சுவடியிலும் பதிப்பிலும் இப்பாடம் காணப்பெறவில்லை. இது அவர் திருத்தம். என்றுள்ளது. இப்பாடவேறுபாடு கழக மூலப்பதிப்பில் முன்னரே உள்ளதால், பாவாணர் அதன்பின் அதனைச் சுட்டி நச். உரையில் எழுதினார் (1944). இது அவர் திருத்தம் என்பது அன்று. இனி, மயிலைநாதர் காட்டிய சகரமுதற் சொற்கள் பலவும் சங்கச் சான்றோர் நூல்களில் இடம்பெற்றவை. திருக்குறளிலும் சில இடம்பெற்றவை. பின்னே அகர முதலி வழியே காட்டப்பட்ட சொற்கள் மிகப்பலவாதல் தெளிவு. இவை தமிழ்ச் சொற்களே அன்றிப் பிறமொழிச் சொற்கள் அல்ல. அகரக் கிளவி (தொல். 115) வகரக் கிளவி (தொல். 81) என்பவை போலச் சகரக்கிளவி என்பதும் (தொல். 62) சகர முதலாகிய சொல் என்பதுதானே! அவ்வாறாக அந்நூற்பாவே சகரம் மொழி முதலாக வாராது என்பது முரணாம் அன்றோ! சகர ஐகாரமும், சகர ஔகாரமும் தமிழில் மொழி முதலாகாமை வெளிப்படை. சகரம் மொழி முதலாதலும் வெளிப்படை. ஆனால், தொல்காப்பியத்தில் `சகர முதல் சொல் எதுவும் வரவில்லை. ஏப்புழை ஞாயில் ஏந்துநிலை அரணம் கண்ட தமிழன், சட்டி செய்ய அறியான் என்றோ அதற்குப் பெயரிட அறியான் என்றோ கூறல் தகாது. அவ்வகையால், மயிலைநாதர் காட்டிய வெண்பாவின் ஆணைப்படி, சம்முதலும் வை என்பதே முறையாம். சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அவ், ஐ ஔவெனும் இரண்டலங் கடையே என நூற்பா அமைந்து அவ் சுட்டுப் பெயராய் நிற்க, ஐ, ஔ என்னும் இரண்டலங் கடையே என்றாகவும், அகரத்தையும் எண்ணியமையால் மூன்றலங் கடையே எனத் திரித்திருக்கக் கூடும். ஆயினும், ஏட்டுச் சான்று கிட்டாதவரை, இப்பாடமே பாடமாம். மனம்போல் திருத்தின் எந்நூலும் நூலாக இராது. சகடம் நீரோட்டத்தில் உருண்டு உருண்டு வரும்மண் சவட்டு மண். சவட்டுமண், பானை குடம் முதலியன வனையப் பயனாம். அப் பானை வனையப் பயன்படுவதாம் சுழல் பொறி சவடு. அது சகடு என வகரம் ககரமாகத் திரிந்தது. சகடு ஊர்தியாயது; சகடம் (சக்கரம்) வண்டி என உருப்பெற்றது. அது, உருள்வதாய்க் கால்போல் பயன்பட்டமையால் சகடக்கால் என்றாயது. அச் சகடம் போல் வட்டமாய் அமைக்கப்பட்ட இனிப்புக்கட்டி சக்கரை எனப்பட்டது. சக்கரம், சாகரம் என நிலம் சூழ்ந்த கடலைக் குறிப்பதாயிற்று. சுற்றிச் சுழலும் திரிகை சக்கடி எனப்பட்டது. வாயில் ஒன்றை இட்டுப் பல்கால் மென்று அல்லது பல்கால் பொறியால் ஆட்டி வெளியே தள்ளுவது சக்கை எனப்பட்டது. வட்ட வடிவில், இழைத்து ஓடவிட்ட பொன்னால் செய்யப்பட்ட ஓர் அணிகலம் சவடி ஆயது. * சவளி காண்க. சகடு சகடு, ஒளிமிக்க விண்மீன். சகடு வடிவினது. திங்களோடு சேர்ந்து நிற்கும் பொழுது மணமங்கல முழுத்தப் பொழுதாகக் கொள்ளப்படுவது. அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கள் சகட மண்டிய துகள்தீர் கூட்டத்து - அகம். 136 வானூர் மதியம் சகடணைய - சிலப். 1: 50 சகடு > சகடமாம். * சகடம் காண்க. சகடை நீர் உருண்டோடும் மேட்டைச் சகடை என்பது திருப்பரங்குன்ற வட்டார வழக்கு. மேட்டில் இருந்து கீழே சக்கரம் உருள்வது போல் நீரும் உருண்டு ஓடுதல் கண்டு வைக்கப்பட்ட ஒப்புப்பெயர் இது. சகடை = சக்கரம். சகடு = வண்டி. சாகாடு என்பதும் அது. சகடு, சாகாடு என்பவை தொல்பழ இலக்கிய வழக்குச் சொற்கள். * சகடு காண்க. சக்கடி கேழ்வரகு, கம்பு ஆகிய தவசங்களை மாவாக்கிக் களி உணவாக உண்பது முன்னாளைப் பெருவழக்கு. களியாக்கும் போது துடுப்பால் நன்கு கிண்டித் திரட்டுவர். அக்கிண்டற்குரிய பானையைச் சற்றே கவிழ வைத்துக் கடைவர். அவ்வாறு சாய்த்து வைத்துக் கடைதலைச் சக்கடி என்பர். * சக்கட்டி காண்க. சக்கட்டி ஒருவர்க்கு இரண்டுகால்களில் ஒன்று சற்றே நெடியதாய் மற்றொரு கால் சற்றே குறியதாய் இருந்தால் அவர் நடை இயல்பாக இராது. ஒவ்வோர் அடியும் சக்குச் சக்கு என்று ஒலியுண்டாக ஊன்றி நடப்பார். அவ்வொலி சக்குச் சக்கெனக் கேட்டலால் அவரைச் சக்கட்டி என்பது மக்கள் வழக்கு. இதுகால் மாற்றுத் திறனாளரென வழங்குவது பண்பியல் சிறப்பாம்! இரங்கத் தக்கது, எள்ளலாகாதே! சக்கர மாற்று ஒன்றன் பெயர்களை யெல்லாம் முறையே கூறிச் சக்கரச் சுழற்சி போல அவை அடுத்தடுத்துத் தலைமை பெறுமாறு பாடுதல் சக்கர மாற்று எனப்படுகிறது. இவ்வகையில் திருச்சக்கர மாற்றாகத் திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் ஒன்று விளங்குகின்றது. அது சீர்காழிப் பதிகமாகும். பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த் தோணி புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை அரமன்னு தண்காழி கொச்சைவய முள்ளிடங் காதியாய பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம் நாம்பரவு மூரே! இது பதிக முதற்பாடல். பின்னர் வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சை வயம் எனப் பத்துப் பெயர்கள் பத்துப் பாடல்களிலும் முன்னாக விளங்கச் சக்கர முறையில் சுழல்வதால் இப்பெயர் பெற்றதாம். இச்சக்கர மாற்றிலேயே மேலுமொரு பதிகமும் பாடப்பெற்றுள்ளது. அது விளங்கிய சீர்ப்பிரமனூர் என்று தொடங்குகின்றது. சக்கரம் சக்கரம்:1 சகடு > சகடம் > சக்கடம் > சக்கரம். சகடு, சகடம், சாகாடு என்பவை வண்டி என்னும் பொருளன. வட்ட வடிவமாகச் செய்யப்பட்ட சக்கரையும் (சருக்கரை) சக்கரம் எனப்பட்டது. வட்ட வடிவான பணம் சக்கரம் ஆகும். அரசரின் ஆழிப்படை சக்கரப்படையாம். சக்கர நெறி நில் என்றார் ஔவையார் (ஆ.சூ). உருண்டை (வட்ட) வடிவான உலகம் சக்கரம் எனப்பட்டது. முச்சக் கரமும் அளப்பதற்கு நீட்டியகால் இச்சக் கரமே அளந்ததால் - தனிப். பட்டினப். மண்பானை வனைவார் கருவி சக்கரம் ஆகும். விரைவாக வந்து செல்லும் விருந்தினரையும், ஓரிடத்துத் தங்காது திரிபவரையும் காலில் சக்கரம் மாட்டியிருக்கிறார் என்பது மக்கள் வழக்கு. சக்கரம் என்பதன் ககர ஒற்றுத் தொகுத்து, சகரமாகி உலக வட்டம் சூழும் கடலைக் குறித்தது. சக்கரம் > சகரம் > சாகரம். சகரர் தோண்டிய கடல் சாகரம் எனப் புனையப்பட்டது. காற்றின் இயற்கை சுழலுதல் ஆதலால் அதனைச் சக்கரம் என்பதும், சக்கரப்பா என்பதும் புலமையர் வழக்கு. நாலாரைச் சக்கரம், ஆறாரைச் சக்கரம், எட்டாரைச் சக்கரம் என்பவை சக்கரப் பாவகை. சக்கரம்:2 சக்கரம் வண்டிகளுக்கு உரியது. சக்கரமாகிய வட்ட வடிவில் ஆக்கிய சக்கரம் என்னும் பணம் சேரலத்தில் வழங்கியது. வட்டமாகச் செய்யப்பட்ட வெல்லம் சக்கரம் என வழங்கப்படுதல் முஞ்சிறை வட்டார வழக்காகும். சக்கரை (சருக்கரை) பொது வழக்கு. சக்கை மேலே, முள்தோல்; அதனுள்ளே, வழுக்கைத் தோல்; அதனுள், பசைத்தோல்; அதனுள்ளே, சுளை; அதன் உள்ளே, விதை அல்லது கொட்டை. அதற்கும் மேல்தோல்; இவ்வாறு விலக்கி ஒதுக்கப்படும் தோடு (சக்கை) மிகப் பலவாக இருத்தலால் பலாப் பழத்தைச் சக்கைப் பழம் என்பது குமரி மாவட்ட வழக்கு. சக்கைப்போடு சக்கைப் போடு போட்டான் மழை சக்கைப்போடு போட்டுவிட்டது என்பது தென்தமிழக மக்கள் வழக்கு. இது மிகுதி என்னும் பொருள் தருவது. கரும்பை ஆட்டிச் சாறெடுத்த எச்சம் சக்கை. பலாப்பழத்தின் சுளை நீங்கிய தோல் மூடு முதலியவை சக்கை. இவற்றில் பயன்பொருளிலும், சக்கை மிகுதியாதல் கண்கூடு. இதனால் சக்கை என்பதற்கு மிகுதிப் பொருள் உண்டாயிற்று. சாரம், சாறு ஆயவற்றினும் சக்கையே மிகுதியாதல் பெரும்பாலும் அறியத்தக்கது. இது தென்தமிழக வழக்கு. சக்கை வைத்தல் சக்கை வைத்தல் = உறுதி செய்தல். மாட்டுத் தாம்பணிகளில் (தாவணி) மாடு பிடிப்பவர்களிடம் சக்கை வைத்தல் நிகழ்வு காணலாம். ஒருவர் மாட்டை, ஒருவர் விலை பேசுங்கால் அவ்விலை இவ்வளவுதான்; இதற்கு மாற்று இல்லை என்பதற்கு அடையாளமாகத் தரகர்கள் சக்கை வைப்பர். சக்கை என்பது வைக்கோல், சக்கை, செத்தை எனவும் படும். சில இடங்களில் புல்லைப் பறித்துக் கையில் தருதலும் உண்டு. அதனை வாங்கிவிட்டால் பேச்சு மாறக் கூடாது என்பது இருபக்கத்துக்கும் உறுதியாகும். சக்கை வாங்கிவிட்டால் கட்டுப்பட்டு நடத்தலைக் கடமையாகக் கொள்வர். சக்கை வைத்துவிட்டு மாறுவது இழிவாக எண்ணப்படும். சங்கடமும் சள்ளையும் சங்கடம் = உழைப்பு மிகுதியால் உண்டாகும் உடல் தொல்லை. சள்ளை= மாறி மாறி உண்டாகும் மனத்தொல்லை. உடல்நோவும் உளநோவும் முறையே சங்கடமும் சள்ளையும் எனப்படுகின்றன. ஒன்றை ஒன்று தழுவி இயல்பவை. ஆதலால், இவ்விரண்டும் வேறுபாடற வழங்கும் வழக்கமும் உண்டு. சங்கடமான வேலை மனச்சள்ளை என்னும் வழக்குகள் இவற்றின் பொருளை வெளியாக்கும். சங்கடம் சங்கு + அடம் = சங்கடம் = துயரம். அடம் = அடர்த்து நெருக்குவது. கத்திப் பேசினால் சங்கை நெரித்துவிடுவேன் என வன்மம் கூறுவர். சங்கு மென்மையான குழல் உறுப்பு. அழுத்தி நெருக்கினால் கண்பிதுங்கிப் போகும்; உயிரையும் போக்கிவிடும். அதனால் சங்கை நெரிப்பது போன்ற துயர் சங்கடம் எனப்பட்டது. சங்கமுள் சங்கஞ்செடி, இண்டஞ்செடி போல முள்ளுடையது. முள் கூரியது; நச்சுத் தன்மையும் அமைந்தது. சங்கும் இண்டும் செறிந்து கிடப்பவை. அதனால் அதன் ஊடு செல்லல் அரிதாம். * சங்கு காண்க. சங்கம் சங்கு + அம் = சங்கம். சங்கம் என்பது அறிஞர் அவையைக் குறித்துப் பின்னே பலவகைக் கூட்டத்தினரையும் குறிப்பதாயிற்று. தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்பவை பழந்தமிழ்ச் சங்கங்கள். புத்தருக்கு ஒப்ப மதிக்கப்பட்டது புத்த சங்கம். சங்கம் கூட்டம் என்னும் பொதுப் பொருளும் கொள்ளும். சங்குப் பூச்சி தனித்தனியே திரிவதில்லை. அயிரை மீன்போல் கூட்டம் கூட்டமாகவே இருக்கும். அச்சங்குகளைப் போல் கூடிய கூட்டம் சங்கம் ஆயது. பழவழக்கு, பொதியில், அவையம், கூடல், புணர்கூட்டு என்பன; கழகம் என்பதும் அது. சங்கத்தினும் எண்ணிக்கை குறைந்தது குழு. பொதுமக்கள் அவை கூட்டம் என்பதாம். சங்காயம் சருகு, செத்தை முதலியவற்றைச் சங்காயம் என்பது திருவாதவூர் வட்டார வழக்கு. பொருந்தாத நட்பு அல்லது தொடர்பை ஒதுக்குவது, ஒட்டிய தூசியையும் அழுக்கையும் தட்டுவதும் துடைப்பதும் போன்றதாகலின் உன் சங்காயம் வேண்டா என்பது மதுரை வழக்கு. உன் சங்காயத்தே வேண்டா என்பதும் அது. உன் சங்காத்தமே வேண்டா என்பது சென்னை வழக்கு. சங்கு உடல் உறுப்புகளுள் ஒன்று சங்கு; அவ்வாறு பூக்களால் காட்சி தரும் ஒரு செடியின் பெயர், சங்கஞ்செடி; சங்கின் வடிவு மூலம் சங்குப் பூச்சி. அதன் கூடே ஒலி எழுப்பும் சங்கு எனவும், பாலூட்டும் சங்கு எனவும் வழங்குகின்றது. சங்கு அனைய நிறத்திலும் சங்கு அனைய வடிவிலும் அமைந்த மலை சங்கு மலை. சங்கு வடிவிலான ஆண்கள் கழுத்து சங்கு எனப்பட்டு, எல்லாக் கழுத்துகளையும் சங்கு குறிப்பதாயிற்று. ஆட்டின் சங்கை இறுக்கிப் பிடித்து அது மென்று விழங்கும் உணவை எடுத்துப் பாலொடு கலந்து குழந்தை மருந்தாகப் பயன்கொள்ளல் இன்றும் சிற்றூர் வழக்கம். சங்கம் பூ வெண்ணிறமானது; பின்னே நீலம் மஞ்சள் நிறத்திலும் சங்கம் பூக்கள் உண்டாயின. சங்கு ஊதுதல் சங்கு ஊதுதல் = சாதல். இறப்புக்கு அடையாளமாகச் சங்கு ஊதுவதும், சேகண்டி அடிப்பதும் நடைமுறையில் உள்ளன. கோயில் விழாவிலும் இவை உண்டு எனினும் சங்கு ஊதிவிட்டார்கள் என்றால் சாவாகி விட்டது; உடலைத் தூக்கப் போகிறார்கள் என்பதற்கு அடையாளமாக விளங்குகிறது. ஆதலால் சங்கு ஊதுதல் சாவின் அடையாளப் பொருளாகிவிட்டது. சங்கு ஊதுமளவும் அவன் குணம் மாறாது என்றும், உனக்குச் சங்கு எப்போது ஊதுவார்களோ, எங்கள் சங்கடம் தீருமோ? என்றும், தீமையில் ஊறி நிற்பவர்களைப் பற்றி அவர்கள் செய்யும் தீமைக்கு ஆட்பட்டவர்கள் நினைப்பது இயல்பாயிற்று. சங்கு ஊதுதல் ஒருவர் வாழ்வில் முப்போது உண்டு என்பர். பிறப்பின் போது தலைச்சங்கு மணத்தின் போது இடைச்சங்கு இறப்பின் போது கடைச்சங்கு என்பன அவை. கடைச்சங்கு ஊதிய சங்கத்தை மீட்டெடுத்தார் பாண்டித்துரை நான்காம் சங்கம் தோற்றுவித்து என்பது ஒரு தனிப்பாடல். சங்கு முட்டை முத்து உடையது சங்கு; ஒலியுடையதும் அது. முட்டைகளில் கெட்டுப் போனவை கெடாதவை என நீரில் மிதக்க விட்டுக் காண்பது வழக்கம். கெட்டுப் போகாத முட்டை மேலே மிதக்கும். மற்றவை தாழும். கெட்டுப் போகாத நல்ல முட்டையைச் சங்குமுட்டை என்பது முகவை மாவட்ட வழக்கு. வட்ட வடிவமும் வெண்ணிறமும் நீரில் பாதியளவாய் மிதக்கும் நிலையும் சங்கு நினைவை ஊட்டியிருக்கலாம். சங்கைப் பிடித்தல் சங்கைப் பிடித்தல் = நெருக்குதல். சங்கு உயிர்ப்பான இடம். மூச்சுக்காற்றுச் செல்லும் வழியன்றோ அது. அதனை நெருக்குதல் உயிர்ப் போக்கைத் தடுப்பதாம். சங்கை ஒதுக்குதல் என்பதும் இதுவே. சங்கை அழுத்திப் பிடித்தாலே மூச்சுத் திணறி விழி பிதுங்கும். எத்தகைய வலியவனையும் சங்கைப் பிடித்துவிட்டால் செயலறவே நேர்ந்துவிடும். ஆதலால் ஒருவர் வாங்கிய கடனை நெருக்கிக் கேட்கும் போதோ, கடன் நெருக்கடி அவருக்கு உண்டாகும் போதோ கடன் என்னைச் சங்கைப் பிடிக்கிறது என்பர். தப்ப முடியாத நெருக்கடி என்பது பொருளாம். சடம்பு சடம்பு = சணல் நார். உணலால் அமைந்து உயிரோடு விளங்குவது உடம்பு! அது போல், சணலால் அமைந்தது சடம்பு ஆயிற்று. சணல்நார் பின்னல், தைத்தல், கட்டல் ஆகிய பயன்களுக்கு உரியது. புளிச்சை போன்ற ஒரு செடிவகை அது. அதன் தண்டின் மேல் அமைந்த பட்டையை நீரில் ஊற வைத்து நார் எடுப்பர். கயிறு, வடம், மிதி ஆயவற்றுக்கும் ஆகும். சடுகுடு தமிழக விளையாட்டு வகையுள் ஒன்று. சடுகுடு என்று பாடிக் கொண்டு எதிரியைப் பிடித்தலால் சடுகுடு எனப்பட்டது. இதுகால் கபடி ஆயிற்று. ஆட்டம் அதுதான்! பெயர் மாற்றம் ஒருமைப்பாட்டுக்காகவாம்! குடத்தி என்பது ம.வ. சடை சடை:1 சடு > சடை = தடை, சிக்கு, கற்றை, செறிவு. சடுத்தம் = விரைவு. சடுகுடு ஆட்டத்தில் விரைந்து ஓடலும் தடுத்தலும் (தட்டு) உண்டு. கிளித்தட்டு என்பது பெயர். கொடி பின்னிச் செறிந்து கிடத்தலால் நடையிடத் தடையாம். கொடித்தடை அது. சடைப்பனை என்பது பார்வை மரம்; கூந்தல் பனை என்பதும் அது. இயற்கையாம் சடைக்கு மாறு செயற்கையாக உண்டாகும் சடை. சிலர் முடியில் அழுக்கும் பிசிறும் சேர்தலால் சடையும் சடைக்கற்றையும் உண்டாம். அதனைச் சீப்பால் பிரிக்க இயலாச் சிக்கலாகிவிடும். சடையன், சடைச்சி, சடையப்பன், சடையாண்டி என்பவை சிவனியம் சார் பெயர்கள். தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே - புறம். கட. வா. மரத்தின் வேரும் வீழ்தும் பின்னிக் கிடத்தலால் சடை எனப்படும். (வெ.வி.பே.அ.) சடை:2 அடர்த்தல் > சடர்தல் > சடை. அடர வளர்ந்து நெருங்குதல், கற்றையாய்த் தொங்குதல். சடைச்சம்பா, சடைப்பருத்தி, சடையவரை, சடைநாய், சடைச்சி, சடையாண்டி செறிந்து கற்றையாய்த் தொங்கும் மயிர்முடி. (தேவநே.) சடைவு சடைவு:1 சடைவு = மனமாற்றம்; சினத்தல். நான் அவர் சொன்னபடி கேளாததால் சடைத்துக் கொண்டார் என்பது மக்கள் வழக்கு. சடைவு:2 சடைவு = சோர்வு. நேற்றுக் கடுமையான வேலை; உறக்கமும் இல்லை; உடல் சடைவாகிவிட்டது என்பது மக்கள் வழக்கு. சட்டதிட்டம் சட்டம் = அரசால் வகுக்கப்பட்ட ஒழுங்குமுறை. திட்டம் = சமுதாயத்தால் திட்டப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை. சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று வலியுறுத்துவதும் எதிர்பார்ப்பதும் நாகரிக நாடுகளுக்கெல்லாம் பொது விதி. சட்டங்கள் அரசால் அல்லது அரசின் அமைப்பால் உருவாக்கப் பெற்றாலும் சமுதாய அமைதியும் நன்மையும் சமுதாயத்தால் திட்டமிட்டே உருவாக்கப் படுகின்றன. ஆகவே, இவ்விரண்டும் ஒன்றோடு ஒன்று விலக்கமில்லாத் தொடர்பினவாம். ஆனால், தனித்தனித் தன்மை உடையனவாம். சட்டி எடுத்தல் சட்டி எடுத்தல் = இரந்துண்ணல். ஓடெடுத்தல் போல்வது சட்டி எடுத்தல். ஓடு, திருவோடு; சட்டி, மண்சட்டி; இல்வாழ்வில் இருப்பவரும் வறுமைக்கு ஆற்றாமல் சட்டி எடுப்பது உண்டு. துறவியர் பெரிதும் திருவோடு எடுப்பதே வழக்கு. இதுவே வேற்றுமை. சட்டி மாற்றல் ஒரு சட்டியில் குழம்போ காய்கறியோ வைத்திருப்பர். அதில் தாளித்துக் கொட்டுவதற்குப் பிறிதொரு சட்டியில் எண்ணெய் சுடவைத்து, கடுகு பருப்பு கறிவேப்பிலை முதலியவற்றைப் போட்டுப் பொரியச் செய்வர். தாளிப்புச் சட்டியில் உள்ளதைக் குழம்பு காய்கறிச் சட்டிகளில் விட்டுவைப்பர். தாளித்தல் என்பதைச் சட்டி மாற்றுதல் என்பது முதுகுளத்தூர் வட்டார வழக்கு. சட்டினி சட்னி என்பது பெருவழக்குச் சொல். இட்டவி, தோசை இருக்கும் இடங்களிலெல்லாம் இருப்பது சட்னி. இதனைத் தமிழ் மரபில் சட்டினி என எழுதுவர். இட்லியை இட்டிலி என எழுதுவது போல என்க. சட்னி தமிழ்ச்சொல்லே என ஆர்வத்தால் சொல்பவர்கள் சட்டுணி என வடிவமைத்துக் கொள்வர். சட்டு என்பது விரைவுக் குறிப்புச் சொல். சட்டெனவா சட்டென்று எதையும் செய்ய மாட்டான் என்பவை வழக்கில் உள்ளவை. சட்டுப்புட்டு என்று பார்த்து விட்டுவா என இணைச்சொல்லாகியும் விரைவுக் குறிப்பு உணர்த்தும். ஆதலால், சட்டென விரைவாக உண்பதற்குத் துணையாவது சட்டுணி எனப் பொருத்தம் காட்டினர். ரதா என ஒரு சொல் வந்தது. விளைவு என்ன ஆனது? எந்தக் குப்பை எனினும் புதிது என்றால் உடனே பற்றிக் கொள்ளும் வழக்கே வழக்காக்கிக் கொண்டுவரும் போலித் தன்மையில் திளைக்கும் தமிழர், எத்தனை சொற்களைக் கைவிட்டனர்? அதர், ஆறு, நெறி, வழி, படி, பதி, பாதை, தடம், தடி, சாலை, பெருவழி, நெடுவழி, தனிவழி, பொதுவழி முதலாம் தமிழ்ச்சொற்களை ஓங்கி உதைத்து ஒழித்துக் கட்டிவிட்டதை வரலாற்றுலகம் நன்கு அறியும். இது கண்ணேரில் காணும் காட்சி. சாலை முதலிய சொற்கள் ஒரு ரதாவால் இப்படிப் போயினவே என வருந்தியவர்கள், மங்கம்மாள் சாலை மறந்து விடாதே சோலை என்பது போன்ற பழமொழி பொதுமக்கள் வழக்கு ஆகியவற்றை எண்ணிச் சாலையைத் தலைகாட்ட வைத்தனர். ஆனாலும் மேலும் என்ன ஆனது? ஆங்கில ரோடு வந்தது. நாடெல்லாம் பரவியது. தமிழ்ச்சாலைக்கு மூடுவிழாவைத் தமிழரே முனைந்து நடத்திவிட்டனர். இப்படித்தான் சட்னியின் ஆட்சி நிகழ்ந்தது. சட்னி என்பது உருதுச் சொல். அச்சொல் வருமுன் தமிழில் வழங்கிய சொல் துவையல். ஒரு துவையலா வழக்கில் இருந்தது? இருக்கின்றது! மிளகாய்த் துவையல், பொரி கடலைத் துவையல், தேங்காய்த் துவையல், கறிவேப்பிலைத் துவையல், பயற்றுத் துவையல், மல்லித் துவையல், புதினாத் துவையல் என்பன நாம் அறியாதனவா? துவையலின் சுவை விளங்கக் காரத் துவையல், உறைப்புத் துவையல், புளித் துவையல் எனவும், அதன் இறுக்க நிலை நெகிழ்நிலை ஆகியவை விளங்கக் கட்டித் துவையல், கரைதுவையல் எனவும் வழங்குகின்றது. அம்மியில் வைத்துத் துவைத்து (அடித்துத் தட்டி) ஆக்குவதால் துவையல் ஆயிற்று. துணி சலவை செய்வதைத் துவைத்தல் என்பது அறிக. துவையல் போலவே பொரியல், அவியல், வறையல், வற்றல், கூட்டு, குழம்பு முதலானவை தொழில் வழிவந்த பெயர்களே! துவையல் வழக்கு முற்றாக அழிந்து விடவில்லை. இட்லி தோசையொடு கூடுகின்ற நிலையில்தான் அழிந்துவிட்டது. சோற்றுணவுடன் சேரும் போது தன் ஆட்சியை விடாமல் வைத்துக் கொண்டுள்ளது. கட்டித் துவையல் சோற்றுக்கு என்றால், கரைதுவையல் தோசை இட்டவிக்கு! கரை துவையலின் தலையில் கைவைத்த சட்னி கட்டித் துவையலையாவது விட்டதா? கட்டிச் சட்னி என்னும் பெயரால் அதன் தலையையும் தடவிவிட்டது. இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான், ஊசி நுழைய இடம் தந்தால் ஒட்டகம் நுழைந்துவிடும் என்பவை பழமொழிகள். ஒரு ரசம் வந்தது; மிளகுசாறு, மிளகுதண்ணீர், மிளகுநீர் என்பவை அழிந்தன. புளிச்சாறு என்பதும் அவ்வகையினதே. புளிக்குழம்பு கட்டியானது. அது வேறு; புளிச்சாறு வேறு. ஆங்கிலவரும் மிளகு தண்ணியைக் கொண்டனர். நம் தமிழரோ இரசத்தில் திளைக்கின்றனர். சாற்றின் இடத்தை இரசம் பற்றிக் கொண்டது என்பதால் பயனென்ன? பழச்சாறு கனிச்சாறு எனப் பளிச்சிடும் எழுத்தில் புத்தம் புது வணிக நிலையங்களில் காண்பது இல்லையா! அந்த உணர்வு வந்துவிட்டால் பொதுவழக்காகி விடும். சிலர் துணிந்து நடைமுறைக்குக் கொண்டு வந்தால், பலரும் ஏற்கும் நிலை கட்டாயம் ஏற்பட்டே தீரும். நாம், சட்னி என்பதை யாழ்ப்பாணத்தார் பச்சணி என்கின்றனர். ஏன்? பச்சை மிளகாய், பச்சைத் தேங்காய் (அவிக்காத - காயவைக்காத - பொரிக்காத தேங்காய்) இத்தகைய பொருள்களை அரைத்து ஆக்கும் துவையலைப் பச்சணி என்பது தக்கதே. நாம் பச்சடி என ஒருவகைக் கறியமைத்துக் கொள்வது இல்லையா? பச்சணி அரைத்து ஆக்குவது; பச்சடி சமைத்து ஆக்குவது. முன்னது, சிற்றுணவுத் துணை; பின்னது, பேருணவுத் துணை. இனிக் கிச்சடி என்பதொரு சொல்லுண்டு. அது கோயில் திருவுணவுள் ஒன்றெனக் கோயிலொழுகு கூறும்; கிச்சடி சென்னைப் பகுதியில் ஒருவகைச் சிற்றுணவு; நெல்லைப் பகுதியில் சட்டினிக்கு ஒரு பெயர் கிச்சடி என்பது. இக் கிச்சடியும் தமிழ்ச்சொல் அன்று. மராத்திச்சொல் என்பர். நாம் சட்டினியை யாழ்ப்பாணத்தார் வழங்குவது போல் பச்சணி எனலாம். அல்லது பழைய வழக்காகிய கரைதுவையலை ஆட்சிக்குக் கொண்டு வரலாம். மொழிக்காவல் என்பது சொற்காவல்! புதுச்சொல்லாக்கம்; பழஞ்சொல்லாட்சியைப் புதுக்கல் என்பவை சொற்காவல் வழிகளில் தலையாயவை. உறங்கியவன் கன்று கடாக் கன்று என்பது பழமொழி. பருப்புக் குழம்பின் இடத்தைச் சாம்பார் பறித்துக் கொண்டது. அதனை எளிமையாகத் தனித்தமிழில் பற்றுடையவர்களாலும் மீட்டுக் கொள்ள முடிகிறதா? சட்டினி இடத்திலே பச்சணி வருமா? கரைதுவையல் வருமா? இரண்டுமே வருமா? வழக்குக்குக் கொண்டு வரும் உணர்வாளர்களைப் பொறுத்தது அது. உணவு விடுதிக்காரர் எவர்க்கேனும் மொழிக்காவல் உணர்வு உண்டாகாதோ? உண்டாகிவிட்டால், ஓராயிரம் தமிழ்க்காவலர்களின் ஒருமொத்த வடிவாக அவர் தொண்டாற்ற முடியும்! சட்டென்று சட்டென்று = விரைந்து. சட்டென்று ஓர் அடி அடிக்க ஆகும் பொழுதுள் வா என்பது பொருளாம். சொல்லொக்கும் கடிய வேகம் (கம்ப. பால. 412) என்பது போல்வது. சடாரென என்பதும் வழக்கே. சட்டை சட்டை ஆங்கிலர் வந்தபின் வந்த வரவன்று. சட்டை. பழமையானது. பாம்பு சட்டை உரிப்பதைக் காணலாம். அதன் உடற்போர்வையாக இருந்தது சட்டை எனப்பட்டது. சட்டகம் என்பது உடற்கொரு பெயர். எலும்பாலாய உடல் எற்புச் சட்டகம் எனப்படும். (யா.வி.). சட்டை இட்ட பிரதானிகள் என்பார் அரசவைக்குச் சட்டையுடன் செல்லும் உரிமையர். சட்டகப் போர்வையாய் அமைந்தது சட்டையாம். தையல் தொழில் செய்வார் துன்னகாரர் எனப்பட்டார். துன்னகாரர் வீதி மதுரையில் இருந்தது. இதுகால் தையல்காரத் தெருவாக உள்ளது. சண்டி சண்டு > சண்டி = வேலைக்கு ஆகாத மாடு. சுறுசுறுப்பு அற்றதும் வேலைக்கு உதவாததும் வண்டியிலோ ஏரிலோ பூட்டினால் படுத்துக் கொள்வதுமாம் மாடு சண்டி மாடு எனப்படும். வண்டிக் காளை இரண்டு; இரண்டு மாடும் சண்டி; வண்டிக்காரன் நொண்டி, தின்னுமாம் ஒருவண்டி; திரும்பாதாம் ஒருமடக்குச் சண்டி என்பவை பழமொழிகள். உழையாமை = சண்டித்தனம். சண்டு சாவி சண்டு = நீர்வளமற்றோ நோயுற்றோ விளைவுக்கு வராமல் உலர்ந்து போன தட்டை, தாள், வைக்கோல், சருகு முதலியவை. சாவி = மணிபிடிக்காமல் காய்ந்து போன கதிரும் பூட்டையும். சண்டு பயிரில் நிகழ்வதும், சாவி கதிரில் நிகழ்வதும் ஆகும். விளைவுக்கு வாராமல் அறுக்கப் பெறும் நெல் தாள், சண்டு - வைக்கோல் எனப்படுவதும். சாவி - பதர் எனப்படுவதும், கருதுக. பதர், பதடி எனல் இலக்கிய வழக்கு. * பதடி காண்க. சண்டு வற்றல், சருகு வற்றல்: சண்டு வற்றல் = நோய்ப்பட்டு வெம்பி வெதும்பிப் போனவற்றல். சருகு வற்றல் = காம்பும் விதையும் கழன்ற வற்றல். மிளகு வற்றல் அல்லது மிளகாய் வற்றலில் தரம் பிரிப்பார் சண்டு வற்றலையும் சருகு வற்றலையும் இவ்வாறு ஒதுக்குவர். சண்டு சருகு ஆயவையும் ஆலையில் பொடியாகி விற்பனைக்கு வந்துவிடல் நடைமுறை. சண்டை சண்டை:1 சள்ளை = தொல்லை, இடையூறு, மனத்துயர். நாய் சள்ளு சள்ளு எனக் குரைத்துக் கொண்டு வந்து கடியாய்க் கடித்துவிட்டது, சள்ளை பிடித்தவன் அவன் என்பவை மக்கள் வழக்குகள். சள் > சண்; சள்ளை > சண்டை. வாய்ச்சண்டை, கைச்சண்டை, ஒழியாச்சண்டையாம். சண்டைக்கு நிற்பவன் சண்டன், சண்டாளன், சண்டாளி. சண்டாளி சூர்ப்பநகை தாடகை போல்வடிவு கொண்டாளைப் பெண்டென்று கொண்டாயே - தொண்டா செருப்படிதான் செல்லாஉன் வாழ்க்கைஎன் வாழ்க்கை நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர் - ஔவை. தனிப். சண்டை:2 சண்டை = இலக்கிய வகைகளுள் ஒன்று. தலைவன் நாடு ஊர் சிறப்பு ஆயவற்றைக் கூறி, வஞ்சினம் கூறல், போர் புரிதல், களக்காட்சி முதலியவற்றை விரித்துக் கூறல் சண்டை என்னும் நூற் பொருளாகும். பாஞ்சாலங் குறிச்சிச் சண்டை பட்டிதொட்டி யெல்லாம் நாட்டுப் பாடலாக விளங்குகின்றது. கற்றறியார்க்கும் பயன்படுமாறு சண்டை நூல்கள் எழுந்தனவாம். சண்டை சச்சரவு சண்டை = மாறுபாட்டால் உண்டாகும் கைக்கலப்பு. சச்சரவு = மாறுபாட்டால் உண்டாகும் வாய் (வசைக்) கலப்பு (கலகம்). வீடு, தெரு, ஊர் அளவில் நடப்பவை சண்டை என்றும், நாடு தழுவிய அளவில் நடப்பது போர் என்றும் வேறுபாடு கொள்ளலாம். சண்டையில் பெரும்பாலும் கருவிகள் பயன்படுத்தப் படா. ஆகலின், கைக்கலப்பு எனல் தகும். சிலர் கைக்கலப்பு இன்றி வாய்க்கலப்பு அளவில் அமைவதும் உண்டு. இரண்டையும் இணைத்துச் சண்டை சச்சரவு போடாதீர்கள் என்று தடுப்பர். சண்டை போடுவதற்காகவே சேவற்கோழிகளை வளர்த்துப் பயிற்சி தருவர். சேவற்சண்டை, சேவற்போர், கோழிச் சண்டை என்பவை அவை. பின்னர்ச் சூதாட்டமாகவும் ஆயின. அதனால் சட்டத்தால் தடுக்கப்பட்டது. முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என்பது திரைகளால் விளக்கமாகின்றது. சண்பகம் சண்பு > சண்பகம். சண்பு = நறுமணமுடைய ஒருவகைப்புல். அப்புல்லின் மணம் போன்ற நறுமண மலர்களையுடையது சண்பகம். பெருந்தண் சண்பகம் செரீஇ - திருமுரு. 27 சம்பங்கி என்னும் பூவும் நறுமணமுடையதே. அது செடிவகை. சண்பகம் மக்கள் வழக்கில் செண்பகமாக வழங்குகிறது. மேலை மலை அடிவாரத்தில் செண்பகத் தோப்பு உண்டு. செண்பக அருவி குற்றாலச் சாரலில் உள்ளது. சண்பகக் காடுதோறும் - கம்ப. பால. 31 சதங்கை கட்டல் சதங்கை கட்டல் = அரங்கில் ஆடவிடல். ஆடுவார், காலுக்குச் சதங்கை கட்டல் வழக்கம். ஆடவிடுதலுக்கு ஏற்பாடு செய்வார் செயலிலிருந்து இது வந்ததாம். சிலர் தாமே நேரில் வந்து சொல்லமாட்டார். அத்துணிவு அவர்க்கு இல்லை; எண்ணமும் கூட இல்லை. அத்தகையரைச் சிலர் தூண்டி விட்டும் ஏவிவிட்டும் கிளப்பிவிடுவர். அவர் வந்து துணிவுடன் பேசுவர்; சொல்லிக் கொடுத்த சொற்களை எல்லாம் சொல்வர். அத்தகையர் செயலைக் கண்டு வியப்படைந்தவர். உனக்குச் சதங்கை கட்டி ஆட விட்டிருக்கிறார்கள்; நீயாகவா ஆடுகிறாய்? உன்னைத் தெரியாதா எனக்கு? என நகையாடுவர். இதனால் சதங்கை கட்டல், ஆடவிடற் பொருளதாதல் தெளிவாம். சதாசிவம் சதாசிவம் என்னும் பெயர், பெயரைக் குறியாமல் எண்பது பணத்தைக் குறிக்கும் வழக்கம் செட்டிநாட்டில் உண்டு. எண்குணம் என்பது போன்ற ஒரு குறிப்பு வழி ஏற்பட்ட வழக்காக இஃது இருக்க வேண்டும். இறைவற்குக் கோச்செங்கட் சோழன் எடுத்த கோயில்களைப் போன்றதொரு எண் வழிப்பட்டதாகும். மருதுபாண்டியர் மதுரைக் கோயில் வாயிலில் 1008 சரவிளக்கு அமைத்து, 1008 திருக்கோயில்களுக்கு விளக்கேற்றியதாகிய கருத்துப் போன்றது இத்தகையவை. சதுக்கம் சதுரம் > சதுக்கம். நாற்பக்க மேடை சதுக்கம் ஆகும். சதுரம் என்பது உடல். கழுத்தின் கீழும் இடுப்பின் மேலும் உள்ள பகுதி சதுரமாக இருத்தலால் உடல் சதரம் எனப்பட்டது. அது சதுரம் ஆயது. அவ்வடிவ மேடை சதுக்கமாயது. சந்தியும் சதுக்கமும் - இணைமொழி. சதுக்கம் நாற்சந்தி சந்திக்கும் இடத்தில் அமைந்திருந்தது. சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் - முருகு. 225 பொருள்: சதுக்கமும் நாற்சந்தியினும் (உரை, நச்.). சதுர அரங்கக் கட்டு சதுரங்கம் = சதுர அரங்கம். அரங்கின்றி வட்டாடலைக் கூறினார் வள்ளுவனார். அரங்கக் காய்களை நகர்த்துவது போலச் சரிவாகவும் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் மேலே சென்று, பின்னர்ச் சரிவாக இறங்கி முடிவது போன்ற அமைப்பில் பாடப்படுவது இது. தண்டபாணி அடிகள் இயற்றிய திருவரங்கத் திருவாயிரத்தில் இப்பந்தம் இடம் பெற்றுளது. இது கட்டளைக் கலித்துறை, வெண்பா ஆகிய பாவகையில் அமைக்கப்படும். குதிரைப் பாய்ச்சல் அமைப்பில் வருவது, சதுரங்க துரகபதி பந்தம் எனப்படும். சித்திர கவி விளக்கம் என்னும் நூல் காண்க. துரகம் = குதிரை. சத்திரம் சாவடி சத்திரம் = காசிலாச் சோற்று விடுதி. சாவடி = காசிலாத் தங்கல் விடுதி. சத்திரம் சாவடி கட்டுதலும் அவற்றை அறப்பொருளாய் நடத்துதலும் நெடுநாள் வழக்கம். சத்திரம் சாவடிகளுக்கு நிலக்கொடை புரிந்த செய்திகள் மிகப் பல. இவற்றொடு கிணறு, சோலை, தண்ணீர்ப் பந்தல் முதலியன அமைத்த செய்திகளும் பழமையானவை. ஊரூர்க்குச் சத்திரம் உண்டு; சாவடியும் உண்டு; சத்திரப் பெயரால் ஊர்களும், சாவடிப் பெயரால் ஊர்களும் தெருக்களும் மிகப் பலவாம். சத்திரம் உணவு வழங்குவதோடு மருத்துவமனையாகவும் விளங்கியது எனலாம்; சத்திரம் வைத்தல் என்பது அறுவைப் பண்டுவம் செய்தல் ஆதலால். சாவடி என்பது உசாவடியாம். ஊரூர்க்கு உள்ள வழக்குகளை உசாவித் தீர்ப்புக் கூறும் இடமாக விளங்கியதாகும். அவ்வழக்கம் அற்றுப் போனதால் சத்திரம் சாவடி என்பவற்றின் பொருள் விளக்கமும் அற்றுப் போயதாம். சத்திரம் வைத்தல் சல்லியக்கிரியை எனப்பட்டது (வ). மருத்துவச்சாலை ஆதுலர் சாலை எனப்பட்டது (வ). சந்தம் சந்தம் என்பது இசை. சந்தப்பாடல் பாவகையுள் ஒன்று. இங்கே சொல்லப் படும் சந்தம் அழகு என்னும் பொருளில் கல்குளம் வட்டாரத்தில் வழங்குகின்றது. தளிரின் நிறமும் மென்மையும் கவர்ச்சி மிக்கவை. மாநிறம் என்பது மாந்தளிர் நிறமாகும். பல்லவத்தின் (தளிரின்) சந்தம் (அழகு) மடிய (அழிய) வடிவால் மருட்டிய தாழ்குழலே என்பது யாப்பருங்கலக் காரிகையின் கடவுள் வாழ்த்துப் பாட்டு. அரிய இலக்கிய ஆட்சியும், எளிமையாக மக்களாட்சியில் இடம்பெறும் என்பதன் சான்றுகளுள் ஒன்று சந்தம். சந்தி ஒன்றும் ஒன்றும் நேர்முன் நிற்பது சந்தியாகும். அதில் இருந்து சந்தி என்னும் பொழுதும், சந்தி என்னும் தெருவும், சந்தி என்னும் சொல் உறுப்பும், சந்திப்பு என்னும் கூடுதுறைகளும் உண்டாயினவாம். இரண்டு கூடுவது சந்தி. மூன்று, நான்கு கூடினால் முச்சந்தி, நாற்சந்தி. ஊர்கூடிக் கடை வாணிகம் செய்தால் சந்தை; சந்தையில் உண்டாகும் பலவகை ஒலி சந்தடி; பலவகை வேர்கள் பின்னிப் பிணைதலால் மணம் உண்டாம் மரம் சந்தனம், சாந்தம். ஒன்றை ஒன்று ஒப்பிட்டுக் காணும் அழகு சந்தம். இசையும் இனிமையும் இணைந்த பா, சந்தப்பா. சந்தி சதுக்கம் சந்தி = இரண்டு தெருக்களோ மூன்று தெருக்களோ சந்திக்கும் இடம் சந்தியாம். சதுக்கம் = நான்கு தெருக்கள் சந்திக்கும் இடம் சதுக்கமாம். மூன்று தெருக்கள் சந்திப்பதை முச்சந்தி என்றும், நான்கு தெருக்கள் சந்திப்பதை நாற்சந்தி என்றும் கூறுவதுமுண்டு. சந்தியும் சதுக்கமும் மிகப் பழமையானவை என்பது சங்க நூல்களில் இடம் பெற்றிருப்பது கொண்டு அறியலாம். * சதுக்கம் காண்க. சந்து இரண்டு தொடைகள் சேருமிடம் சந்து; இரண்டு தெருக்கள் சந்திக்கும் இடமும் சந்து; இரண்டு தெருக்களை இணைக்கும் ஊடுவழி, ஊடு சந்து; சந்தித்துச் செல்லும் ஊர்தி நிலையம் சந்திப்பு; பலர் கூடி வணிகம் செய்யும் இடம் சந்தை; பகலும் இரவும் சந்திக்கும் பொழுது சந்தி; இருவர் எதிரீட்டை நீக்கி இணைத்தல் சந்து செய்தல். சந்து பொந்து சந்து = இரண்டு சுவர்க்கு அல்லது இரண்டு தடுப்புக்கு இடையேயுள்ள குறுகலான கடப்பு வழி சந்து ஆகும். கடவு என்பதும் அது. பொந்து = எலி தவளை நண்டு முதலியவை குடியிருக்கும் புடைஅல்லது வளை, பொந்து ஆகும். சந்து பொந்தை அடைக்காமல் எதையாவது காப்பாக வைத்திருக்க முடியுமா? என்பர். இவ்வளவு சந்து பொந்து இருந்தால் பூச்சி பொட்டு வராமல் இருக்குமா? என்பதும் வழக்கே. சுவரில் இரு செங்கல்களுக்கு ஊடுள்ள இடைவெளி சந்து என்பதையும், பொந்து என்பதற்குப் பொத்தல், பொள்ளல் என்பதையும் கருதுக. சந்தை தெருக்கள் சந்திக்கும் இடத்தில் அமைக்கப்பட்ட வணிகப்பகுதி சந்தை ஆகும். புதன் சந்தை = புதன்கிழமை சந்தை கூடுமிடம். ஊராக விளங்குகிறது. சந்தைப் பேட்டை என்பதும் சந்தை கூடிய இடமாம். சபைக்கிருத்தல் அவை > சவை > சபை; சபைக்கு இருத்தல் என்பது ஊரவை கூடியுள்ள போது; அவையில் கால்மடக்கி அமரும் நிலை சபைக்கு இருத்தல் ஆகும். கால்மேல் கால் போட்டு இருத்தலோ குத்துக் கால் போல் நட்டுக்காலில் இருத்தலோ, கால் பின் மடிப்பாகி இருத்தலோ இல்லாமல் சம்மணம் கூட்டி இருப்பதாகும். தவநிலை இருக்கையாகச் சமணத் துறவர் (சிரமணர்) இருக்கும் நிலை சம்மணம் ஆகும். சபைக்கிருத்தல் என்பது உசிலம்பட்டி வட்டார வழக்கு. சப்பளாக் கட்டை சப் என்பது ஒலிக்குறிப்பு. சப்பென அறைவிட்டால் தெரியும் என்பதில் சப் என்பது ஒலிக்குறிப்பாவது தெரியும். சப்புச் சப்பு என இப்படியா மெல்லுவது என்பர். சப்பு இடுதல் = சப்பீடு, சாப்பாடு. சப்புச் சப்பென ஒலிக்குமாறு இரண்டு மரப்பலகைகளை ஒத்தொலிக்கச் செய்வது சப்பளா. அக்கருவி, சப்பளாக்கட்டை. சப்பு என்பது சுவைப்பொருளும் தருதல் ம.வ. குழம்பில் உப்புச்சப்பு இல்லை, உப்புச்சப்பு இல்லாத சாப்பாடு. சப்பாணி நடக்க முடியாமல் குந்தியிருந்து நகர்வது சப்பாணி. அப்பருவக் குழந்தையைக் கைத்தாளமிட்டு - இரண்டு கைகளையும் தட்டி ஒலி எழுப்பி - அவ்வாறே அதுவும் கை தட்டி மகிழச் செய்வது பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் சப்பாணிப் பருவம் எனப்படும். கொட்டுக சப்பாணி என்பது அது. சப்பெனத் தட்டி ஒலி எழுப்பல் சப்பாணி. பண்ணுவது, - பாணி. சப்பாத்தி கோதுமை மாவைப் பிசைந்து உருட்டி, அவ்வுருட்டையைச் சப்புச் சப்பென அறைந்து அகலச் செய்து, இரும்புக் கல்லில் போட்டு வேக வைக்கும் அட்டில் முறையைப் பார்ப்பவர்க்கு விளக்கமாக இப்பொருள் பொருத்தம் புலப்படும். சப்பு ஒலிக்குறிப்பு. அகற்றி > ஆற்றி > ஆத்தி. x.neh.: அகன்றோர் > ஆன்றோர். சப்புதல் கண்ணமுது (பாயசம்) தேன் அமுது முதலியவற்றைச் சப்புக் கொட்டிச் சுவைத்து உண்ணல் சப்புதலாகும். சப்புச் சப்பெனல் ஒலிக் குறிப்பாகும். சப்பென அறைதல் என்பதில் அவ்வொலிக் குறிப்பு அறியக் கிடக்கின்றதாம். கன்று தாயின் மடியில் வாய் வைத்துப் பால் இழுத்துக் குடித்தலும் சப்புதலாம். விரலைச் சப்புதல் போல்வதாகலின். சப்பை கால் படலம் விரிந்து நொண்டியாகி நடப்பவர், நடக்கும்போது சப்பு சப்பு என்று ஒலி கேட்கும். அதனால் அவர் காலைச் சப்பைக் கால் என்பர். சப்பைக் கால் பிள்ளையார் என்பார் காளமேகப் புலவர் (தனிப்.). காலின் சப்பை வடிவு போல், மூக்கு உயரமில்லாமல் தட்டையாக இருந்தால் அதனைச் சப்பை மூக்கு என்பர். சமதை சமமாக அல்லது சமன்பாடாக இருப்பதைச் சமதை என்பது இராசபாளைய வட்டார வழக்காகும். யார் என்றாலும் அவரிடம் சமதையாகப் பேசுவார்; சமதையாக உட்கார வைப்பார் என்பது வழக்கு. சமமாக என்பது சமதை எனப்படுதல் நல்ல சொற் சுருக்கம். சமநிலை யோங்கல் (சமசங்கினாமம்): பெண், ஆண் ஒருவனுடன் சமனிலை கூற அவன் அச் சமநிலையின் உயர்ந்து நின்று அவளை வெற்றி பெற்றதைக் கூறுவது இப்பனுவலின் பொருளமைதியாம். இதனை, அரிவை, சமங்கூற வேந்தன் சமந்தப்பி வேறல் சமசங்கி னாம மென்றே சாற்று என்கிறது பிரபந்தத் திரட்டு (62). ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் - திருக். 69 என்னும் பொருள் வளமிக்க பொய்யா மொழிக்கே, பெண்ணியல்பால் தானாக அறியாமையின், கேட்ட தாய் எனவும் கூறினார் என்று பரிமே. பொருள்விளக்கம் கூறுவதைக் கருதின், சமசங்கினாமம் என நூற் பெயர் எழுந்தமை வியப்பன்றாம். சமம் சமம்:1 சமர் என்பதும் அமர் என்பதும் அது. போர் அறம் ஒப்பானவரொடு போரிடலேயாம். பொரு > போர். பொரு = ஒப்பு. சிறப்புடை அரசியலாவன, மடிந்த உள்ளத்தோனையும், மகப் பெறாதோனையும், மயிர்குலைந்தோனையும், அடிபிறக்கிட் டோனையும், பெண் பெயரோனையும், படை இழந்தோனையும், ஒத்தபடை எடாதோனையும் பிறவும் இத்தன்மை யுடையோரையும் கொல்லாது விடுதலும் கூறிப் பொருதலும் முதலியனவாம் (தொல். புறத். 65 நச்.). சமம்:2 சமம் = சமனிலை; நடுவுநிலை. சமன் என்பதும் இது. சமன்செய்து சீர்தூக்கும் கோல் - திருக். 118 சமழ்ப்பு சமநிலையில் தாழ்தல்; தலை கவிழ்தல். தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்மின் - பரி. 20 :36 சமைதல் மணவாழ்வுக்கு உரிய தகுதியாம் பூப்பு அடைதல். பருவமடைதல் என்பதும் இது. பிள்ளை சமைந்திருக்கிறாள்; குச்சில் கட்ட வேண்டும் என்பது ம.வ. சமைப்பு அமைப்பு > சமைப்பு. சமைப்பு:1 சமையல் செய்தல். சமைப்பு:2 சிலை வடித்தல். சிற்பி சிலை சமைத்தான். அணிகலன் சமைத்தல். முடிமுதல் கலன்கள் சமைப்பேன் - சிலப். 19:114 சமைப்பு:3 கருவுறல். மனைவியர் நிறைவயின் வசிதடி சமைப்பில் - பரி. 5:39 சம்பந்தி கிளை என்பதும் உறவு என்பதும் கொடுப்பவர் உறவுப் பெயராகவும், கேள் என்பதும் உற்றார் என்பதும் கொள்பவர் உறவுப் பெயராகவும் இருந்த நாள் உண்டு. கேள், உற்றார் என்பவை தந்தை வழியர். கிளை, உறவு என்பவை தாய் வழியர் உறவுப் பெயர்கள். இவை மாறிப் பொதுமையாயன. சம்பந்தி என்னும் வேற்றுச் சொல் அவ்விடத்தைப் பற்றிக் கொண்டது. சம்பந்தி என்பது உறவுப் பெயராக இல்லாமல், ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஒன்றாகும் துவையல் என்னும் பொருளில் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது. சம்பல் சம்பல்:1 சம்பல் என்பது விலை குறைதல் என்னும் பொருளில் வழங்கும் தென்தமிழக வணிக வழக்குச் சொல். வற்றல் விலை சம்பல்; வெங்காய விலை சம்பல் என்பர். பொருள் மிகுதியாவதைச் சவத்துப் போதல் என்பர். வதியழிதல் என்றும் கூறுவர். மலிவு என்பதும் அது. சம்பல், சாம்புதல். வாடுதல் என்னும் பொருளது. காய்கள் சாம்பிப் போனால் - சம்பிப் போனால் - சிறுத்துப் போய்விடும். இதனால் ஏற்பட்ட வழக்குச் சொல் இது. சம்பல்:2 சம்பல் என்பது விலை மலிவு என்னும் பொருளது. அது பொதுவழக்கு. ஆனால் விருந்து என்னும் பொருளில் பழனி வட்டார வழக்காக உள்ளது. விருந்துக்கு வருவார்க்குக் கொடுக்கும் உணவு நெல்லுச் சோறே. சோளம், கேழ்வரகு, கம்பு ஆயவை இருப்பினும் நெற்சோறு ஆக்கிப் படைத்தலே வழக்கம். அதனால் சம்பு (சம்பா) ஆக்கிப் படைக்கும் விருந்தாள் சம்பல் எனப் பட்டிருக்கலாம். இனி அடிக்கடி வரும் விருந்தினரை நோக்கியும் வழங்கியதாகலாம். சம்பல் மலிவுப் பொருளது. சம்பளம் சம்பு + அளம் = சம்பளம். சம்பு = நெல்; நெல்வகையுள் ஒன்று சம்பா. அளம் = உப்பு; உப்பு விளையுமிடம் உப்பளம். நாள் வேலை, மாத வேலை எனச் செய்வார்க்கு நெல்லும் உப்பும் ஆகிய இரண்டுமோ, ஒன்றோ வழங்கப்பட்ட பழநாளில் அவ்விரண்டையும் சுட்டும் வகையில் சம்பளம் என்றனர். உப்பின்றித் தவசமாகத் தந்ததைக் கூலி என்றனர். * கூலி காண்க. சம்பா நெல் வகையுள் ஒன்று. சம்பா நெல் என்பது இது. நெடிய உயரமும் நீண்ட காலமும் பெருங்கதிரும் கொண்ட நெல் வகை. குறுங்காலப் பயிர் குறுவை எனப்படும். இது நெடுங்காலப் பயிராம். சம்பை சம்பா நெல் போல வளரும் கோரைப்புல். சம்பங்கோரை வளமாக வளரும் கால் வரத்து ஊர். எ-டு: சம்பை (முகவை மாவட்டம்). சரக்கு சரக்கு:1 பலசரக்கு என்பவற்றுள் பலவும் உசிலை எனப்படும் மசாலைப் பொருள்களேயாம். சரக்கு என்பவை உலர் பொருள்களானவை. பல என்பதை விலக்கிச் சரக்கு என்றாலே மசாலையைக் குறிப்பதாக யாழ்ப்பாண வழக்கு உண்டு. சரக்கு:2 சரக்கு = சாராயம். சரக்கு என்பது காய்ந்த பொருளாம். பலசரக்குக் கடையில் உள்ளவை உலர்ந்து காய்ந்த பொருள்களே என்பதை அறிக. உலர்ந்த பட்டைகளைத் தட்டிப் போட்டு ஊற வைத்து வடித்துக் காய்ச்சுவது சாராயம் ஆதலால் அதனைச் சரக்கு என்பது வழக்காயிற்று. பட்டைச் சாராயம் என்பதும் அதன் மூலப் பொருளை விளக்குவதாம். சரக்கு முறுக்கா? வணிகர் முறுக்கா? என்பதிலுள்ள சரக்குப் பொருள் என்னும் பொருளது. சரக்குப் போட்டிருக்கிறான் போலிருக்கிறது; நடையும் பேச்சும் தெரிகிறதே என்பதில் சரக்கின் பொருள் சாராயம், மது முதலியவை என்பது விளக்கமாம். சரடு கட்டுதல் சர் > சர > சரடு = நீளமாய்த் திரித்தல், நீளமாய்ச் செய்தல். சரடு என்பது கயிறு. இனி, கழுத்திலே பூட்டும் சரடு என்பதொரு பொன்னணிகலமும் உண்டு. மஞ்சள் கயிற்றில் தாலியைக் கோத்துக் கட்டுதல் திருமணச் சடங்கு ஆகும். சரடு கட்டுதல் என்பது உசிலம்பட்டி வட்டாரத்தில் திருமணம் செய்தல் என்னும் பொருளில் வழங்குகின்றது. தாலி கட்டுதல் என்பது பொது வழக்கு. சரணை சரணை = சரிவு; ஓரம். ஓரம் சாரம் என்பது இணைமொழி; ஓரமும் ஓரம் சார்ந்த இடமும் ஓரம் சாரம் ஆகும். சாரணை என்பது சரணை எனக்குறுகி ஓரம் என்னும் பொருளில் அறந்தாங்கி வட்டார வழக்காக உள்ளது. மலைச்சாரல், மலைசார்ந்தது மழைச் சாரல் மழையைச் சார்ந்து பெய்யும் சிறு தூறல், சாரல். சரி இருவர் உரையாடுகின்றனர். ஒருவர் உரைக்கு ஒருவர் சரி,சரி என்கிறார் என்றால், உங்கள் கருத்து ஏற்றது, செம்மையானது, நான் ஒப்புகிறேன் என்பதன் அடையாளமாம். தம்பி இன்று விடியலிலேயே புறப்பட வேண்டும்; அதற்கு வேண்டிய வற்றைச் செய் என்று கூறுவதை ஒருவர் சரி என்றால் அப்படியே செய்கிறேன் என்பதாம். ஒரு மலையின் சரிவைப் பார்க்கிறோம்! அது மலையொடு தொடர்பும் தொடர்ச்சியும் உடையது என்பது விளக்கமாகிறது. ஒரு சரிவான இடம் என்பது, ஒன்றைச் சார்ந்துள்ள இடமாம். ஆங்குப் பெய்கின்ற மழை, மலையைச் சார்ந்த மழை சாரல் மழை எனப்படுகிறது. சாரல் நாடன் எனின் முல்லை நாட்டுக்கு அரசன் எனப்படுவான். சேரன் எனில் கடல் சேர்ந்த நாட்டுத் தலைவன். சார்தல், சார்பு, சார்ச்சி, சார்கை என்பவை எல்லாம் ஒன்றைத் தழுவி நிற்பவை. சார்ந்ததன் வண்ணமாதல் இயற்கை முறை. இவற்றால் சரி என்பதன் பொருள்விளக்கம் தெளிவாம். ஒருவர் வழியினை - சொல்லினை - ஏற்பதன் அடையாளம் சரி என்பதாம். சரி செய்தல் என்பது மேடு பள்ளம் திருத்தல் செப்பம் செய்தல், பகையை மாற்றி நட்பு ஆக்கல், மாறுபாட்டை அகற்றல் ஆகிய ஒத்தியைபுப் பொருளையே தருதல் அறியலாம். சரிபார்த்தல் என்பது செய்யப்பட்டது சீராக - செவ்விதாக - இருக்க வேண்டும் வகையில் உள்ளதா என ஆய்தலாம். சரியாக இருக்கிறது என்றோ சரி செய்ய வேண்டும் என்றோ சரி செய்ய இயலாக் குறையுடையது என்றோ தீர்ப்பு எழுதுதலும் ஏற்கலாம் ஏற்க இயலாது என முடிவு செய்தலும் தணிக்கையர் பார்வையாம். உரிய துணியுடன் அல்லது நூலுடன் சார்ந்த பட்டிழை சரிகை எனப்படும். சரிசமம் என்பது அளவிலும் ஒப்பீட்டிலும் ஏற்ற மாற்ற மற்றவை என்பதை வெளிப்படுத்தும். ஏற்கத் தக்கது சரியானது, ஏற்கத் தக்கவர் சரியானவர் எனின் உளம் ஒப்பவர் என்பதாம். இவற்றால் சரி என்பது இயைவுப் பொருள் தந்தது. சரிசமன் என்பதில் ஏற்றத் தாழ்வற்ற நிலை புலப்படும். அரியிருக்கை, சரியிருக்கை (அரியாசனம் சரியாசனம்) என்பவை கம்பர் தனிப்பாடல். சரிக்கட்டல் என்பதன் பொருள், தம் இயலாமை முடியாமை காட்டி, சிக்கலை ஒரு வகையால் தீர்த்துக் கொள்ளும் முறையாம். சரி சரி என்றால் ஆம் ஆம் என்பதாம். சருகு போடுதல் சருகு போடுதல் = வெற்றிலை போடுதல், உவப்புறுதல். சருகு என்பது வெற்றிலையைக் குறிக்கும். அது நாட்டுப் புறங்களில் காய்ந்து அல்லது உலர்ந்து போன வெற்றிலையைக் குறிப்பதாக அமைந்ததாம். கடையில் வேண்டும் பொருள்களை வாங்கிக் கொண்டு ஒரு சருகு கொடுங்கள் என இலவயமாகக் கேட்டுப் பெறுவர். சருகு, வெற்றிலைப் பொருள் தருவதால் சருகு போடுதல் வெற்றிலை போடுதல் என வழக்கில் அமைந்தது. அது பாலுறவுக் குறிப்பாகவும் வழக்கில் உள்ளது. சரேல் என விரைந்து வருதலைச் சரசர என சரேலென வா என்பது மக்கள் வழக்கு. சரசரவென சரேலென விரைந்து செல்வதும் கண்ணை மூடித் திறக்குமுன் மறைந்து விடுவதும் பாம்பாம். அதன் செலவு சரசர எனப்படும். சாரைப் பாம்பு என்னும் பெயரைக் கருதுக. சரளைக் கல் உருளுவதும் சர்சர் என அறுப்பதும் சரக்குச் சரக்கென நடப்பதும் எண்ணுக. சலசலப்பு சலசலப்பு = அச்சுறுத்தல். இந்தச் சலசலப்புக் கெல்லாம் அஞ்சிய ஆளா நான்? என்பதில் வரும் சலசலப்பு அச்சுறுத்தல் பொருளதாம். நரி காட்டில் வாழ்வது. சலசலப்பின் இடையேயே வாழ்வது. அதனால் சலசலப்பு அச்சமற்றது அது. இந்தச் சலசலப்புக் கெல்லாம் இந்த நரி அஞ்சுமா? என்றும் தம்மை நரியாகக் கூறுவர். சலசலப்பு - ஒலிக்குறிப்பு. நீரோட்டம், இலையசைவு, கலம் கருவி ஒலிகள் ஆயவை சலசலப்பாம். இச் சலசலப்பு, அச்சப்பொருளில் வருதல் வழக்கு வழிப்பட்டதாம். அந்தச் சலசலப்பை இங்கே வைத்துக் கொள்ளாதே என்பது எச்சரிப்பாம். சலம் சலம்:1 சலம் = நீர். நீர் சலசலத்து ஓடலால் சலம் எனப்பட்டது. தண்ணந் துவர்பல ஊட்டிச் சலங்குடைவார் - பரி. 10:90 வாய்க்காலில் நீர் ஓடுகின்றது. அதில் ஒருவன் தன் கையை வைத்து நில் நில் எனத் தடுக்கின்றான். நீர், நில்லாமல் சல சல என்னும் ஒலியுடன் ஓடுகின்றது. கையை வைத்து நீரைத் தடுத்தவனுக்கு, தான் தடுத்து நிறுத்தியதற்கு நீர் அழுவது போலத் தோன்றுகின்றது! அதனால், இரைந்த தென் அழுவையோ செல்! செல்! என விடுத்தான். இது மனோன்மணிய நாடகத்தில் வரும் காட்சிகளுள் ஒன்று. நீர் இரைச்சலிட்டுச் செல்வது எவரும் அறிந்தது. நீரின் இரைச்சல் ஒலி வெவ்வேறு வகையாகக் கேட்கும். அதனால் அருவி, முழவம் போல் ஒலிக்கின்றது என்றும், கல்லெனக் கரைந்து வீழ்கிறது என்றும், ஒல்லெனத் தவழ்கிறது என்றும், சலசல என்று ஓடுகின்றது என்றும் ஒலிக்குறிப்போடு சொல்வது வழக்காயிற்று. இவ்வொலிக் குறிப்புகளில் ஒன்றே சல் சல், சல சல, சலம் என அமைந்ததாம். நீர் சல சல என்னும் ஒலியுடன் ஓடுவதால் சலம் என்னும் பெயர் பெற்றது. சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் என்றார் அப்பரடிகள். சல சல மும்மதம் சொரிய என்பதும் ஒரு தமிழ்ப்பாடல் அடியே! (சீவக. 82). சலம் ஆகிய நீர் சமையலுக்குக் கட்டாயம் வேண்டும். அச்சமையல் அறையிலேதான் கலங்களைத் தேய்த்தல், கழுவிக் கொட்டல், வடித்தல் ஆகியன நிகழும். ஆதலால் அவ்வறைக்குள் வடிக்கப்பட்ட நீர் புறம் போதற்கு வாய்ப்பாகக் குழியும் துளையும் அமைப்பர். அவ்வமைப்பின் பெயர், சலக்கால்புரை என்பது. அது சலக்காப்புரை, சலக்கப்புரை என வழங்கப்படுகின்றதாம். சலம் = நீர்; கால் = வழி; புரை = துளை. சலக்கால்புரைக்கு இன்னொரு பெயர் அங்கணம் என்பது. அங்கணக் குழி என்பதும் அதுவே. அகம் + கண் + அம் = அங்கணம் எனப்பட்டதென்க. அங்கணத்துள் உக்க அமிழ்தைக் கூறும் திருக்குறள் (720). ஊரங்கண நீரை உரைக்கும் நாலடியார் (175). அங்கணம் சலதாரை எனவும் வழங்கும். நீர் ஒழுகுமிடமே சலதாரை என்க! நீர் பள்ளம் நோக்கி நீண்டு செல்வது. ஆதலால் தார் என்றும், தாரை என்றும் வழங்கப்படும். தாரை வார்த்தல் என்பது நீர் வார்த்தல் தானே! ஓடை ஆறு முதலியவற்றில் ஓடும் நீர் இறுதியில் கடலில் கூடுதல் இயற்கை. சலம் கூடும் இடத்திற்கு - கடலுக்குச் சலதி என்பது ஒரு பெயர். தமிழெனும் அளப்பரும் சலதி என்பார் கம்பர் (தாடகை. 38). பல கிண்ணங்களில் பல்வேறு அளவுகளில், நீர்விட்டு ஒலிக்கும் இசைக்கருவி சலதரங்கம் எனப்படுவதும், கலிப்பாவில் உறுப்புகளுள் ஒன்று அம்போதரங்கம் எனப்படுவதும் எண்ணத்தக்கன. கடல்நீர் அலைதல் இடையீடு இல்லாதது. அலை ஓய்வது எப்பொழுது? தலை முழுகுவதும் எப்பொழுது? என்னும் பழமொழியே அலையின் இடையீடற்ற அலைவைத் தெரிவிக்கும். அவ்வலை போல அலைபாயும் உள்ளமும் சலம் எனப்படும். அவ்வுள்ளமுடையான், சலவன் என்றும், அவ்வுள்ள முடையாள் சலதி என்றும் கூறப்படுவர். சலவர் என்பது கடலோடிகளையும், முத்துக் குளிப்பவர் களையும் குறிக்கும். சலங்குக்காரர் என்பவரும் முத்துக் குளிப்பவரே. சலாபம் என்பதும் முத்துக் குளித்தலையே குறிக்கும். நீராடுவாரைச் சலங்குடைவர் என்னும் பரிபாடல் (10:90) சலகை என்பது தோணியையும் சலஞ்சலம் என்பது வலம்புரிச் சங்கையும் (சீவக. 184) சலம் புகன்று என்பது மாறுபட்டுரைத்தலையும் (மதுரைக். 112) குறித்தல் அறியத்தக்கன. நீரில் தோய்த்து வெளுக்கும் தொழில் சலவை எனப்படுவதும், வெளுக்கப்பட்ட துணி சலவைத் துணி எனப்படுவதும், புத்தம் புது பணத்தாள் சலவைத் தாள் எனப்படுவதும் சலவைத் தூள், சலவைக் கட்டி எனச் சவர்க்கார வகைகள் வழங்கப்படுவதும், நீர் ததும்பி வழிதலும் ஓயாது பேசுதலும் சலம்புதல் எனப்படுவதும் வழக்கில் உள்ளமை அறிந்தால் சலம் என்னும் பொருட்பெருக்கம் நன்கு விளங்கும். ஒரு சொல்லில், வேற்றெழுத்து ஒன்றை அமைத்து எழுதி விட்டதால் மட்டும் வேற்றுச் சொல் ஆகிவிடாது என்பதும், ஒரு வேரடியில் வந்த பல சொற்கள் கிடைக்குமாயின் அச்சொல்லின் மூலம், அம்மொழிக்குரியதே என்பதும், குறிப்பாக ஒலிக்குறிப்பு வழி வந்த சொல் ஒன்று, வேறுபட்ட இருமொழிகளிலும் கூட இடம்பெறக் கூடுமென்றும் அறிதல் வேண்டும். நீர், புனல் முதலிய சொற்கள் பெருவழக்கில் இருந்தமையால், சலம் என்பது அருகிக் காணப்படுவது கொண்டும், ஜலம் என்னும் சொல்லில் இருந்து வந்தது என்பார் கருத்துக் கொண்டும் அடிப்படைக் கரணியம் தெளிவாக அமைந்துள்ள சொல்லை வேற்றுச் சொல்லென விலக்க வேண்டுவதில்லை எனத் தெளிக. பெட்டியும், பெட்டியில் உள்ள பொருளும் நம்முடையவை யாய் இருக்க, எவரோ ஒருவர் பெட்டி மேல் வைத்த பொட்டு ஒன்றால் மட்டும் அவர் பெட்டியும் அவர் பொருளும் ஆகிவிடும் எனலாமா?. சலம்:2 சலம் = நீரலை போல் அலைக்கழிக்கும் வஞ்சம். சலம்புணர் கொள்கைச் சலதி என்றார் இளங்கோவடிகளார் (9:69). சலம் என்பது வஞ்சகம் என்னும் பொருளையும், சலதி என்பது வஞ்சகி என்னும் பொருளையும் தருவனவாம். சலம்:3 சலம் = சீற்றம். சலம்புரி தண்டேந்தினவை - பரி. 15:58 சலம்:4 சலம் = புண்ணீர். கட்டி உடைந்து சலம் வருகிறது ம.வ. சலித்தல் சலித்தல்:1 துளையுடைய சட்டி சலிப்புச்சட்டி, கண்சட்டி எனப்படும். சல்லடை எனப்படுவது பெரியது. மாச் சல்லடை, மணல் சல்லடை முதல் பலவாக மக்கள் பயன்பாட்டில் உண்டு. சல்லடை போட்டுத் தேடுதல் எங்கும் தேடுதல் என்பதாம். தேடிக் காணாமையால் சலித்துப் போதல் உண்டு. சலித்தல் = வருந்துதல், வெறுத்தல். அஞ்சித் தருமமும் சலித்ததம்மா (கம்ப. உயுத். 269). சலித்தல்:2 சல்லடைக் கண்போல் போர்க்கருவியால் உடல் துளைக்கப்படுதல் சலித்தலாம். அவனையே சலிக்கும் நீரால் - கம். ஆரண். 667 சல் தண்ணீர் பயிருக்கு நீர் பாய்ச்சி, ஒருநாள் விட்டு மறுநாள் விடும் தண்ணீரை எடுப்புத் தண்ணீர் என்பது பொது வழக்கு. அதனைச் சல்தண்ணீர் என்பது இறையூர் வட்டார வழக்கு. ஈரம் இருப்பதால் சலசலத்து ஓடும் நீரைச் சல் தண்ணீர் என்பது ஒலிக்குறிப்பு வழிப்பட்டது. சலசல, சலசலப்பு, சலவை, சலதாரை, சலவன், சல்பிடித்தல் என்பன வெல்லாம் ஒலிக்குறிப்புத் தோற்ற வழிவந்தவை. சலுப்புத் தண்ணீர் என்பது வடமதுரை வட்டார வழக்கு. சல்லி சல்லி:1 சலசலப்பு ஒலி தருவது சல்லி. சல்லிகை ஓர் இசைக்கருவி. சல்லி:2 கல்லுடைக்கும் போது விழும் சிறுதுண்டு சல்லி. சல்லிக்கல், சரனைக்கல், கட்டுமானப் பொருள். சல்லி:3 ஆங்கிலவர் காலத்தில் ஓர் உரூபாவுக்கு 192 சல்லிக்காசு என்னும் நாணயம் இருந்தது. இப்பொழுது நூறு சல்லி, ஓர் உரூபா எனப்படுகிறது. சல்லி:4 சிறு செயல் செய்து திரிவாரைச் சல்லி; சல்லிப்பயல் எனல் ம.வ. சல்லி கட்டு சல்லி= சல் சல் எனச் சலசலத்து வரும் காளை. கட்டு= கட்டிப் பிடித்து அடக்குதல். ஏறு தழுவுதல், மஞ்சுவிரட்டு என்பவை காண்க. மாடுபிடி என்பதும் அது. சல்லிசு சல்லி > சல்லிசு. சல்லி = சிறியது. அது எளிமைப் பொருள் தருதல் சல்லிசு என்பதாம். அதைச் செய்வது சல்லிசு, விலை சல்லிசாக இருக்கிறது ம.வ. சல்லை தொரட்டி என்னும் பொருளில் சல்லை என்பது கருவூர் வட்டார வழக்காக உள்ளது. முள் மரத்தில் ஏறிப் பறிக்க இயலாது. பிடித்து உலுப்பவும் இயலாது. ஆனால் தொரட்டி கொண்டு வளைக்கவோ, பறிக்கவோ, உலுப்பவோ எளிதாக இயலும். ஆதலால் சல்லை என்னும் வழக்கு உண்டாயிற்று. சல்லிது(சு) என்பது எளிது, குறைந்தது என்னும் பொருளில் வழங்கும் வழக்குச் சொல்லாக இருப்பதால் அறியலாம். சல்லிசாகப் பறிக்கலாம்; சல்லிசாக வாங்கலாம் என்பவை வழங்கு மொழிகள். * சல்லிசு காண்க. சவட்டுதல் பல்கால் மிதித்தல்; புரட்டுதல்; மிக மெல்லுதல்; நலித்தல். * சவளி காண்க. சவட்டு மெத்தை சவட்டுதல், சவளுமாறு அடித்தல் மிதித்தல் ஆகியவை செய்தலாம். மழை பெருகக் கொட்டலும், பொழிதல் போர்க்கள அழிபாடும் சவட்டுதல் எனப்படுவது பழநாள் வழக்கு. பல்கால் பல்லிடங்களில் அடித்துவரும் மண் சவட்டு மண். சவட்டு மெத்தை என்பது நாஞ்சில் நாட்டில் கால்மிதியின் பெயராக உள்ளது. சவத்தல் ஈரப்பதமாக இருப்பதைச் சவத்தல் என்பது அறந்தாங்கி வட்டார வழக்கு. ஈரப்பதமாக இருப்பது விரைவில் கெட்டுப் போகுமாதலால் அதனை விலை குறைத்து மலிவாக விற்பர். ஆதலால் சவத்தல் என்பதற்கு மலிவு என்னும் பொருள் மதுரை வட்டாரத்தில் உண்டு. சவத்தல் என்பது போலவே பதத்தல் என்பது ஈரப்பதம் குறித்தல் பொது வழக்காகும். மழையால் பதப்பட்டுப் போனது என்பர். சவர் சவர் என்பது பாம்பு என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது. சவர் > சவல் > சவள் > சவடு. சவண்டு போய்க் கிடப்பதும் வளைந்து வளைந்து செல்வதுமாம் பாம்பைச் சவர் என்பது, சவள் என்பதன் வழி வந்ததேயாம். சவட்டுதல் காண்க. சவர்க்காரம் உவர் > சவர் + காரம் = சவர்க்காரம் (Soap). சவர்க்காரம் என்பது வழலை (சோப்பு). உவர், அழுக்குப் போக்கும் மண். சலவைக்கு உவர்மண் பயன்படுத்துவது சிற்றூர் வழக்கு. உவர் > சவர் அச் சவர்த் தன்மையும் கறையை எடுக்கும் எரிவும் கொண்டது சவர்க்காரம். பெரிதும் துணியின் அழுக்குப் போக்கப் பயன்படுத்துவது. சவளி பெருநகரங்களில் எல்லாம் வண்ண வண்ண எழுத்துகளில் ஜவுளிக் கடைகள் காணப் பெறுகின்றன. உள்ளே இருக்கும் வண்ணத் துணிகளை யெல்லாம் வெளிப்படுத்திக் காட்டுவது போல், பட்டொளி செய்யும் பலவண்ண மின் விளக்குகள் இலங்குகின்றன. ஆனால், ஜவுளி என்பதோ பெயர்ப் பலகையில் மொழிக் கொலைக்கு முன்னோடியாய் இருக்கின்றது. வணிகப் பெருமக்கள் உள்ளம் வண்டமிழ்ப் பக்கம் சாரவில்லையே என்ற வருத்தத்தால் பாவேந்தர், தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை என்றார். உரிமம் பெறுதற்குக் கட்டாயமாகத் தமிழிலும் விளம்பரப் பலகை இருக்க வேண்டும் என்று, ஆணை பிறப்பித்த பின், வேண்டா வெறுப்பாய் ஓரஞ்சாரங்களில் ஒட்டுக் குடித்தனம் போல் வைக்கப் பெற்ற தமிழ் விளம்பரப் பலகையிலேயாவது பிழையில்லாத் தமிழ் இருக்கச் செய்ய எண்ணம் வரக் கூடாதா? ஆங்கிலத்திலே பலகை எழுத வேண்டுமானால், அதில் தெளிவுடையவர்களிடம் கேட்டு எழுதுகின்றனர். பிழை ஏற்பட்டு விடுமானால் நாணுகின்றனர். ஆனால், தமிழைக் கெடுப்பதற்கு மட்டும் மொத்தக் குத்தகை எடுத்தவர்கள்போல் தாமும் அறியாமல், அறிந்தவரிடமும் கேளாமல், தவறாமல் பிழை செய்கின்றனர்! தமிழ்த்தாய் பெற்ற பிள்ளைகளுக்கு அவளை இழிவு செய்வதற்கு உரிமை இல்லையா என்ன? பாலாடையோ நூலாடையோ என்று ஐயுறுமாறு ஆடை நெய்தார்களாம்! புகை போலவும் நுரை போலவும், பாம்பின் உரி போலவும் ஆடை இருந்ததாம். மூங்கிலின் உள்ளே உள்ள வெண்படலம் போலவும் ஆடை இருந்ததாம். அத்தகைய நாகரிகம் வளர்ந்த நாட்டிலே, அவற்றை விற்கும் கடைக்கு ஒரு பெயர் இல்லாமலா போயிற்று? மடிமடியாக அடுக்கி வைத்து நறுமணம் ஊட்டப் பெற்ற கடைகளே நிரம்பிய வீதியே மதுரையில் இருந்ததாமே! நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும் பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து நறுமடி செறிந்த அறுவை வீதி என்று கூறுகிறாரே இளங்கோவடிகள் (சிலப். 14:205-207). இவ்வறுவை வீதி, துணிக்கடைகளே இருந்த பெருந்தெருக்களே! அறுவைக் கடை, துணிக்கடை, புடவைக் கடை என்னும் பெயர்களைத்தாம் தம் கடைகளுக்கு வைக்கவில்லை! பிழையில்லாத் தமிழிலாவது பெயரிட வேண்டாவா? ஜவுளிக் கடையினர், இப்பெயரை விரும்பி விரும்பி வைப்பதன் மயக்கம் ஒரு போலி மயக்கம்! ஜவுளி என்பது வடசொல் எனக் கொண்ட மயக்கம் அது. சவளி என்பது தூய தமிழ்ச் சொல்லாகும். சவட்டுதல் என்பது பழந்தமிழ்ச் சொல். அழித்தல், துன்புறுத்தல், வருத்தல், சிதைத்தல், அறைதல், வாட்டுதல் முதலிய பொருள்களில் அது வரும். பல்கால் மெல்லுதலும் சவட்டுதலும் ஆகும்; பல்கால் மிதித்தலும், அவ்வாறு சவட்டுதலே ஆகும். மன்பதை சவட்டுங் கூற்ற முன்ப என்று பதிற்றுப் பத்தும் (84), வம்ப வடுகர் பைந்தலை சவட்டி என்று அகமும் (375), அறைக்கல் இறுவரைமேல் பாம்பு சவட்டி என்று கார்நாற்பதும் (17), பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டி என்று பெரும்பாணும் (217) கூறுகின்றன. மழை சவட்டி விட்டது என்றும், நோய் ஊரையே வளைத்துச் சவட்டிவிட்டது என்றும், கதிரைச் சவள மிதிக்க வேண்டும் என்றும், வெற்றிலையை ஓயாமல் மென்று, சவக்களித்து விட்டது என்றும் கூறுவது பெரிதும் வழக்கத்தில் உள்ளன. சோர்ந்தவன், மெலிந்தவன் மழுங்கியவன் ஆகியவனைச் சவங்கல் என்றும், சவண்ட பயல் என்றும் பழிப்பதும் வழக்கே. சவளை (சவலை)யை அறியார் எவர்? சவலை வெண்பா என ஒரு பாவகை இலக்கணத்தில் இடம் பெற்றுவிட்டதே. இடைவரும் நாற்சீரடி ஒன்றில் முச்சீர் வருதல் சவலை வெண்பாவாம். படாப்பாடு படுத்துதல் சவட்டுதல் என்றும், படாப்பாடு படுதல் சவளுதல் என்றும் மேலே கூறிய இருவகை வழக்குகளாலும் அறியலாம். நீர், முட்டி மோதி அலைத்துக் குலைத்து அள்ளி வந்து போடப்பட்ட மண், சவடு என்று வழங்கப் பெறுவதும், அச்சவட்டு மண், பானை முதலியவை செய்தற்கும், செங்கல் ஆக்குவதற்கும் பயன்படுவதும் யாவரும் அறிந்ததே. சவட்டு மண் கொண்டு மிதித்து நைத்துப் பானை வனைவாரைச் சவளைக்காரர் என்பதும் வழக்கே. அன்றிப் பஞ்சு நூலைப் பாவில் இட்டு அடித்துப் பசையேற்றித் துணி நெய்வாரைச் சில பகுதிகளில் சவளைக்காரர் என்பதும் அறியத் தக்கதே. பொன்னை உருக்கி ஒழுக விட்டுக் கம்பியாக இழுத்துப் பின்னல் வேலை செய்யும் ஓர் அணிக்குச் சவடி என்னும் பெயர் வெளிப்படையே. நெருப்பிலிட்டு ஒன்றை வாட்டச் சவளை யாகும் (துவளும்) என்றும், நோயடிப்பட்டு நொய்ந்த பிள்ளை (சவளை) என்றும், சவ்வுச் சவ்வென வளைவதைச் சவளல் என்றும், சவளும் வளாரையுடைய புளிய மரத்தைச் சவள மரம் என்றும், மிதிவண்டியைச் சில இடங்களில் சவட்டு வண்டி என்றும், கடலினை அடுத்து முகவாயிற் கிடக்கும் கருங்குறு மணலைச் சவளை என்றும், தோணி செலுத்தும் கோலைச் சவளைக் கோல் (துடுப்பு) என்றும் வழங்கும் வழக்காறுகள் யாவும் நோக்கத் தக்கன. இனிப் பருத்திக்குப் பன்னல் என்றொரு பெயர் உண்டு என்பதை இலக்கியவழி அறியலாம். பன்னல் வேலிப் பணைநல் லூரே என்பது புறப்பாட்டு (345); பன்னல் வேலி இன்னது என விளக்குவது போலப் பருத்தி வேலி என்றும் புறப்பாடல்கள் (299, 324) கூறும். பன்னல் தரும் பஞ்சியும், நூலும் பனுவல் எனப் பெற்றன. பஞ்சித்தன் சொல்லாப் பனுவல் இழையாக என்று ஆடை நூல் போல ஆய்வு நூலை உருவகித்துரைத்தலும் வழக்காயது. சவளி என்பது, பன்னல் என்பது போல் பருத்திக்குரிய பெயர்களுள் ஒன்று என்பதை, மருத்துவக் கலைச்சொல் விளக்கம் செய்கின்றது. பருத்தி இலையை நைத்து எடுக்கப் பெற்ற சாற்றைச் சவளை என்பதும் மருத்துவ நூலோர் வழக்கே. சவளியாம் பருத்தியினின்று எடுத்த பஞ்சி நூலால் செய்யப் பெற்றதும் சவட்டிச் சவட்டிப் பணி செய்யப் பெற்று உண்டாயதும் ஒன்றப் பொருள் பொருந்தச் சவளி என்று முந்தையோர் பெயரிட்டனர். அச்சவளிப் பெயரைச் சவுளி யாக்கி, அதன் பின்னர் ஜவுளியாக்கிப் பண்டமாற்று வேலை செய்யப் பழகிப் போன பெருமக்கள் எழுத்து மாற்று வேலையைத் தொடர்ந்து நோக்கிய இடத்தெல்லாம் நீக்கமறச் செய்து வருகின்றனர். தமிழ் உணர்வுடைய தெளிவுடைய சிலர் சவளிக்கடை எனத் திருத்தி வாடிக்கையாக்கி விட்டால், அதனைப் பார்த்தேனும் ஒருவர் ஒருவராய் உண்மை உணர்ந்து எங்கும் சவளிக் கடைகளாய்க் காண வாய்க்கும். துணி எப்படிச் சவட்டப்படுகிறது என்று விளக்க வேண்டியது இல்லை! பஞ்சுநேர் உலகப் பாட்டிலே மெலிந்த பாவியேன் யான்படும் பாடு பஞ்சுதான் படுமோ என்பன பட்டறிவால் சொல்லிய பருவரல் மொழிகள். பஞ்சு படும்பாடு படாப்பாடு தானே! மணையில் இட்டுக் கொட்டை பிரித்தெடுத்த பஞ்சு, வில்லால் புடைக்கப்பட்டு, மட்டையால் உருட்டப்பட்டு, நூலாய் இழைக்கப்பட்டு, நூலைப் பாவாய் இழுக்கப்பட்டு, பசையூட்டப்பட்டு, மொத்தும் அடியும் தரப்பட்டு, மிதிபட்டு, அடிபட்டு நெய்யப்பட்டு, பின்னும் பின்னும் அழுக்குப் போக அறைபட்டு - நைபட்டு - எத்தனை பட்டுப் பட்டாய்க் கிழிபட்டுப் போகின்றது! சவட்டப் பெறவில்லையா, எத்துணையோ வகைகளில் நிலைகளில்? அதனைச் சவளி என்பது சரிதானே! சவைத்தல் பல்கால் மென்று சுவை கொள்ளல், சவைத்தலாம். சவைத்தற்கென்றே சவையம் என ஒன்று (சூயிங்கம்) கடைகளில் விற்பது நாம் அறிந்ததே! சவ்வு மிட்டாய், என்பதும் சவைத்தற்கென்று அமைந்ததே. சழிந்து சப்பளிந்து சழிதல் = நெளிந்து போன ஒன்று மேலும் நெளிதல் சழிதல் ஆகும். சப்பளிதல் = சழிந்த அதுசீராக்க இயலா வண்ணம் சிதைவுறுதல் சப்பளிதலாம். நெளிதல் என்பது வளைதல், திருகுதல். ஒருபொருள் நெளிந்து போனால் அதனை நெளிவு எடுத்துப் பயன்படுத்துவர். அது சழிந்து போனால் அதைப் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியா விட்டாலும் பயன்படுத்தும் அளவுக்குச் சீர் செய்யலாம். சப்பளித்து போனால் மீண்டும் உருப்படுத்த முடியாது. உருக்கி வேண்டுமானால் மாற்றுருக் கொடுக்கலாம். ஈயம் அலுமினியக் கலங்களே பெரும்பாலும் சழிதல் சப்பளிதல்களுக்கு ஆட்படும். சள்ளை சள்ளு சள்ளு எனக் குரைத்துச் சண்டை போடுதல் நாயின் குணம். ஒன்றை ஒன்று கடிப்பதும் புரட்டிப் புரட்டி எடுப்பதும் கண்ட ஒருவர் கருத்தில் சள்ளை என்னும் சொல் உருவாகிப் பரவியுள்ளது. வாராத் துயர் வருதலும், தீரா நோய்ப் படுதலும் சள்ளை என மக்கள் வழக்கில் ஊன்றியுள்ளது. சற்று சிறு > சிற்று > சற்று = சிறிது. சற்றேனும் ஏறுமாறாக என்பது ஔவையார் தனிப்பாடல். சற்றுநேரம் சிறிது நேரம் என்பது கற்றோர் வழக்கு. கல்லார் பெருவழக்கு செத்த என்பதாயிற்று. செத்த நேரம் (சிறிது நேரம்) பொறு என்பர். இவ்வழக்கு அறியாவிடில், செத்த நேரம் என்பதற்கு அகராதியில் பொருள் தேடினால் என்ன அறிவர்? சனியன் சனிக்கோளுக்குரியவனாகக் கூறப்படுபவன் சனி. அவனை, நோய்முகன் என்றார் பாவாணர். கரிமுகன் என்பானும் அவன். குச்சன் என்பது மக்கள் வழக்கு. சனியன் கோயில் கொண்ட ஊர் குச்சனூர் என வழங்கப்படுகிறது. சின்னமனூர் சார்ந்த ஊர்; தேனி மாவட்டம். ஏழரையாட்டையான் என்பதும் சனியே. சன்னம் பொன்வேலை செய்வார் பொற்பொடியைச் சன்னம் என்பர். பொடி அல்லது தூள் என்னும் சிறுமைப் பொருள் தருவது அது. குறையோ முயற்சி இன்மையோ இருந்தால் சன்னம் சன்னமாகச் சரியாகிவிடும் என்பது நெல்லை, முகவை வழக்காகும். சிறிது சிறிதாக என்பதே அதன் பொருளாம். சின்னம் என்பதும் சிறிது என்னும் பொருள் தருவதே. * சின்னம் காண்க. சன்னல் பின்னல் சன்னல் = சன்னமாக அல்லது மெல்லிதாக நீண்டிருத்தல். பின்னல் = சுருண்டு பின்னிப் பிணைந்து கிடத்தல். பாம்பைப் பற்றிய விடுகதை ஒன்று. சன்னல் பின்னல் கொடி, சாதிலிங்கக் கொடி, மின்னி மறையும் கொடி, என்ன கொடி? எனவரும். தோட்டத்தில் கொடிகள் நெருக்கிக் கிடந்தால் கொடி இப்படிச் சன்னல் பின்னலாகக் கிடந்தால் எப்படிக் காய்க்கும் என வினாவுவர்.  சா வரிசைக் சொற்கள் சா சகர ஆகாரம். உயிர்மெய் நெடில். ஏவல் - சாவு. சாகாடு சகடு > சாகாடு = வண்டி. சகடத்தை - சக்கரத்தை - யுடையது சாகாடு. ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கும் உரனுடை நோன்பகட் டன்ன எங்கோன் - புறம். 60 சாடு என்பதும் இது. சகடு > சாடு. சாக்குத்தி சாவ + குத்தி = சாக்குத்தி. சாவக்குத்தி என்பது தொகுத்தலாய்ச் சாக்குத்தி யாயது. கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டுவாய்ச் சாக்குத்தி- கலி. 105 பொருள்: தழுவுவாரைத் தழுவுவாரைக் கோட்டிடத்தே சாம்படி குத்தி நச். சாக்குப் போக்கு சாக்கு = குற்றத்தைத் தனக்கு வாராமல் வேறொருவர் மேல் போட்டுத் தப்புதல். போக்கு = உரிய வழியை விட்டு வேறொரு வழி காட்டி அல்லது போக்குக் காட்டித் தப்புதல். சாட்சி என்பதைச் சாக்கி என்பதும் சாட்சி சொல் பவனைச் சாக்கி என்பதும் இன்றும் நடைமுறையில் உள்ளவை; சாட்டு என்பது சாக்கு என வருகின்றதாம். பிறரைப் பொறுப்பாளி யாக்கிச் சாற்றுதல் > சாட்டுதல் (கூறுதல்) சாக்கு ஆயிற்றாம். சாக்கிடுதல் என்பதும் அது. போக்கு என்பது போக்குக் காட்டித் தப்புதலாம். சாக்கோட்டி சாக்கோட்டி = கீழே சாய்ந்து விழுமாறு தலைசுற்றல். கருக்கொண்ட மகளிர் சுற்றலும் வாந்தியுமாக இருக்கும் நிலையை மசக்கை என்பது பெருவழக்கு. இரணியல் வட்டாரத்தில் கருமயக்கத்தைச் சாக்கோட்டி என்கின்றனர். நாவறட்சி, தலைசுற்று, கண்மயக்கு, நிற்கமுடியாமை ஆகியவை கண்டு அவலமாக இருக்கும் நிலையை இவ்வாறு வழங்குகின்றனர் எனலாம். மசக்கை = மயக்கம். சாங்கியம் சடங்கியம் > சாங்கியம். சாங்கியம் என்பது சடங்கு என்னும் பொருளில் தென்தமிழகம், கொங்கு ஆகிய பகுதிகளில் வழங்குகின்றது. சாங்கியம் பெரும்பாலும் மகளிர் முன்னின்று செய்யும் சடங்கையே ஆகும். சடங்கியம் என்பது சாங்கியம் என்றாகியது எனலாம். இனி, அந்தியூர் வட்டாரத்தில் சாங்கியம் என்பது பழமொழி என்னும் பொருளில் வழங்குகின்றது. சடங்குகளில் வழிவழியாகச் சொல்லப்படும் தொடர்களை முதற்கண் குறித்து, பின்னர்ப் பழமொழியைக் குறித்ததாகலாம். சாடா நெல்லை ஆலங்குளம் வட்டாரத்தில், பூரான் என்னும் ஊரியைச் சாடா என வழங்குகின்றனர். இது, இயக்க வகையால் ஏற்பட்ட உவமை வழியது ஆகும். பூரான் ஊர்ந்து செல்லுதல், வண்டி செல்லும் செலவு போன்றதாகும். சகடு > சாடு = வண்டி. சாடு > சாடா. இதனைச் சாரா என்று நாகர்கோயில் வட்டாரத்திலும், சாராடி எனத் திருமங்கல வட்டாரத்திலும் வழங்குகின்றனர். சரசர எனச் செல்லுதல் வழிப்பட்டவை சாரா, சாராடி என்பவை. சாடி வாட்ட சாட்டம் என்பவை இணைமொழிகள். வாட்டம் வாடி என்றும், சாட்டம் சாடி என்றும் வழங்கும். மர அறுவை இடம் வாடி எனப்பட்டது (மரவாடி) போல் அமைந்தது சாடி. சாடுதல் ஓடுதல், புகுதல். நண்டு வளையைக் கீழப்பாவூர் வட்டாரத்தார் சாடி என்பர். இவ்வாட்சி கூரிய பார்வையும் கொள்ளும் பொருளமைதியும் உடையதாகும். சாடிக்கு ஏற்ற மூடி சாடிக்கு ஏற்ற மூடி = கணவனுக்கு ஏற்ற மனைவி. கலத்தின் மேல்வாயும், மூடியின் உள்வாயும் பொருந்தியமையச் செய்யப்படும். அதனையே சாடிக்கு ஏற்ற மூடி எனல் வழக்கு. செப்பின் புணர்ச்சி என நட்பியலைக் கூறுவார் திருவள்ளுவர் (887). குடும்பத்தில் கணவன் கருத்துக்கு ஒப்பி நடக்கும் மனைவி வாய்த்து விட்டால், அவளைச் சாடிக்கு ஏற்ற மூடி எனச் சொல்வது வழக்கமாம். நல்ல கருத்தா; அல்ல கருத்தா என்பது பற்றியதன்று செய்தி. இருவர் கருத்தும் ஒத்த கருத்து என்பதே குறிப்பு. பிறர்க்கு அவர்கள் செயற்பாடு எத்தகைய தானாலும் அவர்களுக்குள் ஒரு பிணைப்பு இருத்தல் அவர்கள் வாழ்வுக்குத் தக்க ஒன்றுதானே. சாடை இவரைப் பார்த்தால் அவர் சாடையாக இருக்கிறார் இல்லையா? என ஐயுற்று வினாவுவார் உளர். சாடை ஒப்புப் பொருளில் சாயலைக் குறித்து வருகின்றது. இது நெல்லை, குமரி, முகவை ஆகிய தென்தமிழக வழக்காகும். சாடை என்பது உவமை உருபொடு ஒட்டக்கூடியது. சகடை = வண்டிச் சக்கரம்; இரண்டும் ஒப்பானவை யாதல் கண்கூடு. அது கொண்டு சகடை > சாடை ஆகியிருக்கலாம். rfL> சாடு = வண்டி. சாடையம் சாடை என்பது போல என்னும் பொருள் தருவது ஆதலால் சாடையம் என்பதும் அதனை ஒப்பப் பொருள் கொண்டது. ஒருவர் நடையுடை ஒப்பக் கொண்டு மேடை யேற்றுவது நாடகம் (கூத்து) ஆகும். திண்டுக்கல் வட்டாரத்தில் நடிகர் உடையைச் சாடையம் என்பது வழக்காகும். ஒப்ப அமைந்த உடைக்கோலமே கண்டதும் அடையாளம் காணவைக்கும். அரிய சொல் வழக்கு ஈதாம். * சாடை காண்க. சாட்டுக் கூடை பிரம்புக் கூடை என்பது நெல்லை வட்டார வழக்கில் சாட்டுக் கூடை எனப்படுகின்றது. உழவர் பயன்படுத்தும் தார்க்கோல், சாட்டைக்கோல் எனப்படல் உண்டு. சாட்டைக்கோல் என்பது மூங்கில் பிரம்பே ஆகும். ஆதலால், மூங்கில் பிரம்பு சாட்டை எனப்பட்டது. அதனால் செய்யப்பட்ட கூடை, சாட்டைக் கூடை ஆயது. சாட்டை, நீளமாகவும் வளைந்தும் செல்லுதல். இது கட்டுக் கொடி, மூங்கில் முதலியவற்றின் இயற்கை. சாட்டை சாட்டைக் கம்பு அல்லது சாட்டைக் கோல் நீளத்தினும் அதில் கட்டப்பட்ட வார் நீண்டிருக்கும். வார் = நீளம். ஆதலால் சாட்டை என்பதற்கு நீளம் என்னும் பொருளைச் செம்பட்டி வட்டாரத்தார் வழங்குகின்றனர். கம்பில் இருந்து தொங்கும் வாரின் தொங்குதல் நீளம் ஆயவை குறித்து ஒப்புமைப் பொருள் வகையால், சடை என நாகர்கோயில் வட்டாரத்தார் வழங்குகின்றனர். சாணம் சாணகம், சாணம், சாணி என வழங்கப்படுவன ஒரு பொருளன. சிவனிய அடையாளமாம் திருநீற்றுக்கு மூலப் பொருள் ஆவின் சாணமாம். சாணகமாம் சாணம், மருத்துவப் பயன் உடையது. புண், வீக்கம் ஆயவை உண்டானால் அவற்றை ஆற்றச் சாண ஒற்றடம் கொடுப்பது சிற்றூர் வழக்கம். யானையின் சாணகம் புண்ணை ஆற்றுமென அதனை மிதிப்பார் உண்டு. புண்ணாற்றும் ஆற்றல் சாணத்திற்கு இருப்பதால் சாணம் என்பதற்குத் தழும்பு - வடு - என்னும் பெயர் பண்டே உண்டாயிற்று. கோணம் தின்ற வடுவாழ் முகத்த சாணம் தின்ற சமந்தாங்கு தடக்கை - மதுரைக். 592- 593 சாணை வெங்காயத்தைக் கெடாமல் பாதுகாக்க வைக்கும் அடைதட்டியைப் பண்டடை என்பதுடன் சாணை என்பதும் உண்டு. அது முகவை வழக்கு. சாலை பன்னசாலை என்பவை இலை தழைகளால் ஆக்கப்படுபவை. சாலை > சாளை > சாணை ஆகிய வடிவம் இது. தென்னைக் கீற்றுத் தட்டியால் கூடுபோல் செய்யப்படுவது அது. சில திங்கள் அளவுக்குப் பாதுகாக்க உதவுவது. பண்டடை, சாணை என்பவை வேளாண் வழக்கு. சாதல் சா > சாய் > சாய்தல் > சாதல். கதிர்சாய்ந்து மறைதல் போல், நின்றான் இருந்தான் கிடந்தான் எனச் சாய்ந்து மூச்சற்றுப் போய்விடல் சாதல் ஆகும். சாதல் இயற்கையைக் கதிர் காட்டுவதைப் புறநானூறு காட்டும் (27). நாள்என ஒன்றுபோல் காட்டி உயிரீரும் வாள் எனக் காட்டும் திருக்குறள் (334). இவை சாய்தல் - சாதல் - விளக்கமாம். சாதல் இயற்கை என்பதைச், சாதலும் புதுவ தன்றே - புறம். 192 என்பதை உலகம் காட்டும். இறந்தாரை எண்ணிக் கொண்டற்று - திருக். 22 சாதலின் இன்னாத தில்லை - திருக். 230 என்பவை சாதல் விளக்கங்களாம். * சாவு காண்க. சாத்து சாத்து:1 எறும்புகள் வரிசை வரிசையாகப் போகும். எறும்பின் வரிசை எறும்புச் சாரி எனப்படும். ஒன்றைச் சார்ந்து ஒன்று செல்வதால் சாரி எனவும், சாரை எனவும் வழங்கலாயின. சாத்து:2 சாத்து என்பது வணிகக் கூட்டம்; சாத்தன், வணிகன். கோவலன் தந்தை மாசாத்தன், பெருவணிகன். அவன், கால் நடைகள் கால்களையுடைய ஊர்திகள் வழியே (கால் - சக்கரம்) வணிகம் செய்தவன். நிலவணிகன். கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக் குலத்தில் குன்றாக் கொழுங்குடிச் செல்வர் - சிலப். 2:7-8 என்பதிலுள்ள கால் என்பதைக் கருதுக. வணிகர்களாகிய சாத்து வழிபட்ட தெய்வம் சாத்தன். சார்த்து, சாத்து, சார்தல் சேர்தல் என்பார் பாவாணர் (பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்.) சாத்து வழிவந்த சாத்தனாம் தெய்வம், பின்னர் ஐயனார் எனப்பட்டார். சாத்தொடு போந்து தனித்துயர் உழந்தேன் - சிலப். 11:190 சாந்தம் சாந்துக் கலவை தரும் மரம் சாந்தம் என்பதுடன் அதன் நறுமணமும், பலரும் விரும்பிப் பூசும் இயல்பும் பலரும் விரும்பும் பொறுமை அமைதி ஆய பண்பைக் குறிக்கும் கலைச் சொல்லாயிற்று. சாந்தமானவர் அவர்; அவரே அப்படிப் பேசினால் காரணம் இல்லாமல் இராது என்பது ம.வ. சாந்தில் தொடுத்த தீந்தேன் - நற். 1 * சாந்து காண்க. சாந்தாற்றி சாந்து + ஆற்றி = சாந்தாற்றி. சாந்து நீராளமாகப் பூசப்படுவது; குளிர்ச்சியானது. அதனால் பூசப்பட்ட அது உடன் உலர்வதற்காகக் காற்றை விசிறியால் ஆக்கி உலரச் செய்வது வழக்கம். அவ்விசிறிக்குச் சாந்தாற்றி என்பது பெயர். அகற்றி = ஆற்றி; நீர்ப்பதத்தை அகலச் செய்வது. * விசிறி காண்க. சாந்து சாந்து:1 சார்ந்து > சாந்து = சந்தன மணம். சாந்தின் நறுமணம் மரமுதிர்வால் மட்டும் ஏற்படுவது அன்று; அதன்வேர் மற்றை மற்றை வேர்களொடு பின்னிப் பிணைந்து கிடக்குமானால்தான் மிகுமணமாகும் என்பர். அதன் வழியாகப் பெற்ற பெயர் சாந்து. சாந்து > சந்து > சந்தனம். சந்தனம் கொடுத்து வரவேற்றலும் பூசி விடுதலும் வரவேற்பும் மகிழ்வும் காட்டும் சான்றாகலின் அமைதிப் பொருளும் தந்தது. சந்து என்பது இருவரை இணைத்தல் எனவும் ஆயது. சாந்து:2 சாந்து > சந்து > சந்தனம். கன்மாவையோ, (கல் மாவு) சுண்ணாம்பையோ நீர்விட்டுக் குழைப்பதைச் சாந்து என்று மக்கள் வழங்கும் வழக்கம். சாந்து என்பது அரைத்துக் குழைக்கப்படுவது என்பதைத் தெளிவிக்கும். சந்தனக் கலவை, சந்தனக் கரைசல், சந்தனக் கட்டி என்பவையும் சந்தனக் கட்டையைக் கல்லில் தேய்த்துக் குழம்பாக்கிப் பூசுதலும் சாந்தின் பொருள் விளக்கமாம். சாப்பாடு போடல் சாப்பாடு போடல் = திருமணம் செய்தல். நண்பர்களுக்குள்ளும் அன்பர்களுக்குள்ளும் திருமண அகவை உடையவர்களெனின், என்ன எப்பொழுது சாப்பாடு போட எண்ணம்? போகிற போக்கைப் பார்த்தால் சாப்பாடு போடும் எண்ணமே இல்லையா? என வினவும் சாப்பாடு, திருமணப் பொருட்டதாம். திருமணம் என்றாலே பலவகைக் கறிகள் கண்ணமுது (பாயசம்) அப்பளம் வடையுடன் சாப்பாட்டுச் சிறப்பே பெருஞ்சிறப்பாகப் பேசப்படுவதாகலின் சாப்பாடே திருமணப் பொருள் தருவதாயிற்று. தாலி கட்டு முடிந்தால் இலை முன்னர்த்தான் பலரைப் பார்க்கலாம்! அவ்வளவு பாடு, சாப்பாடு. சாப்பாடும் கூப்பாடும் சாப்பாடு = பலர் கூடிச் சாப்பிடுதல். கூப்பாடு = பலர் கூடிச் சாப்பிடும் போது உண்டாகும் பேரொலி. சப்பு, சப்பிடுதல் என்பவை சாப்பாட்டுக்கு மூலம். கூ, கூவுதல், கூப்பிடு, கூப்பீடு, கூப்பாடு என்பவை கூப்பாட்டின் மூலம். பலர் சேர்ந்து சாப்பிடும் போது, இதைக் கொண்டு வா, அதைக் கொண்டு வா என்று கூப்பிடுவதும், பலரும் ஒரு வேளையில் கூப்பிடுதல் உரையாடுதல், இரைதல் முதலியவை நிகழ்த்துவதும் கூப்பாடு ஆக்குகின்றதாம். சிலர் சாப்பாடு போடுவர்; சாப்பாடு போடும் போதே திட்டவும் செய்வர். அதனால் சாப்பாடும் வேண்டாம் கூப்பாடும் வேண்டாம் என்று வெறுத்துக் கூறும் நிலையும் உண்டு. சாப்பிடுதல் சப்புச் சப்பென வாயொலி எழுமாறு உண்ணுதல் சாப்பிடுதல் ஆகும். சப்பிடுதல், சப்பீடு - சாப்பாடு என வந்தது. நன்றாகச் சாப்பிடுபவனை அல்லது சாப்பாடே குறியாக இருப்பவனைச் சாப்பாட்டு ராமன் என்பது இக்கால வழக்கு. சாம்பல் சாம்பல்:1 ஒன்று எரிந்து அழிபட்டதன் பொடி,- சாம்பல். உயிர் போய் உடல் அழிபடல், -சாதல். விறகு எரு முதலியவை எரிபட்டு அழிந்தால் அவற்றின் எரி துகள் சாம்பல் எனப்படும். உடலும் கட்டை எரு ஆயவற்றொடு அடுக்கி வைக்கப்பட்டு எரியூட்டப் படுதலால் அப்பொடியும் சாம்பல் எனப்பட்டது. மாந்தர் வாழ்வு கடைசியில் ஒரு பிடி சாம்பல்தான் என மக்கள் எவரும் சொல்வர். சாம்பல், செடி கொடிகளுக்கு மருந்தும் உரமுமாம். மாந்தர் உடல் எரிந்த சாம்பல் கரைக்கவும் வழிபாட்டுக்கு வைக்கவும் நினைவிடம் எழுப்பவுமாக வழக்கில் ஊன்றியுள்ளது. சாம்பல்:2 ஒன்றன் கொழுமை வாடுதல் சாம்புதல் (சாம்பல்) எனப்படும். காய் சாம்பிப் போய்விட்டது என்பது மக்கள் வழக்கு. சாம்பல்:3 சாம்பல் நிறம். வெண்மையும் கருமையும் கலந்தது. சாம்பல் நிறம் ஒருகுட்டி - பாரதி. சாம்பல் பூசுணை என்பது மக்கள் வழக்கு. சாம்பல்:4 தலைவன் பிரிவால் தலைவிக்கு உடலில் உண்டாம் பசலை சாம்பல் எனப்படும். (ம.வ.) சாம்பு சம்பு > சாம்பு. சம்பு என்பது புல்லின் வகையது. அதனைப் பறித்துப் பரப்பிப் படுக்கையாகக் கொண்டனர் முந்தையர். அதனால் சாம்பு என்பது படுக்கை என்னும் பொருள் தருவதாயிற்று. சாய்தல் படுத்தல்; சாய்தலுக்குப் பயன்பட்டது சாய்ம்பு; சாம்புமாம். இப்பொழுதும் கோரைப்பாய் என்பது கோரைப் புல்லைக் கொண்டு நெய்யப் பட்ட படுக்கையேயாம். பாய் பல்வேறிடங் களில் அழகு அழகாக நெய்யப்பட்டு விலைமான மிக்கதும் வண்ணக்கோல வனப்புடையதுமாக விளங்குகின்றது. காசுமீரப்பட்டு, காஞ்சிப்பட்டு என்பவை போல் தென்தமிழகத்தில் பத்தமடைப் பாய்க்குத் தனிச் சிறப்புண்டு. சாயல் சாயல்:1 கொட்டி வைத்தால் போன்ற பேரழகுத் தோற்றம் சாயல் ஆகும். சாய் > சாயல். சாய்த்தல் = கொட்டுதல். சாயம், ஒன்றில் இருந்த வண்ணத்தை ஒன்றில் சாய்த்துப் படியச் செய்வது. சாயலும் நாணும் அவர்கொண்டார் - திருக். 1183 சாயல்:2 தோற்றப் பொலிவுடையது. மயிலன்ன சாயல் என்பர். சாய் - சாயை - சாயல். வடிவ ஒப்பே சாயலாம். உருவும் நிழலும் போல்வதாகலின் சாயை சாயலாயது என்றுமாம். சாயை = நிழல். சாய் சாய்:1 சாய்கின்ற தன்மை யமைந்த கோரை. அளபெடையில் சாஅய் என்றாகும். உதுக்காண், சாஅய் மலர் காட்டிச் சால்பிலான் யாமாடும் பாவைகொண் டோடி யுழி - கலி. 144 சாய்ப்பாவை = கோரைப்புற் பாவை. சாய்:2 ஏவல். சாய்க! கொஞ்ச நேரம் சும்மா சாய் ம.வ. சாய்:3 ஏவல். சரிக்க! குடத்தில் இருக்கும் நீரைச் சாய் ம.வ. சாய்க்கடை சாய் + கடை = சாய்க்கடை > சாக்கடை (ம.வ.) சரிவாக அமைந்த வடிகால். கடை = இடம். ஏழாம் வேற்றுமை உருபு. கண்கால் கடை நன் (302). கழிவுகால் என்பதும் இது. கழிவு காலில் போய் நின்று கொண்டு அழகு காட்டுவான் சுவாமி விவேகானந்தர் பக். 8 * அங்கணம் காண்க. சாய்தல் சாய்தல் = படுத்தல், உறங்குதல், இறத்தல். மரம் சாய்தல், தூண் சாய்தல், சுவர் சாய்தல் என்பன சாய்தலாம். இவ்வாறே மாந்தர் படுப்பதும் சாய்தல் எனப்படுவ தாயிற்று. சிலர், கொஞ்சம் பொழுதேனும் கட்டையைச் சாய்த்தால்தான் தாங்கும்; உடலுக்கு ஒரே அலுப்பு என்பர். திண்டு முதலியவற்றில் சாய்ந்திருத்தலும் சாய்தலே. முழுதுடலும் கிடத்திப் படுத்தலும் சாய்தலே. பறவைகளுக்குக் கூடுண்டு; விலங்குகளுக்குக் குகையுண்டு; மனித குமரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்பது கிறித்தவ மறைக்குறிப்பு. இனி, ஆள் சாய்ந்துவிட்டது என்பதில் இறப்புப் பொருளும் இடம்பெறும். சாய்ப்பாங்கரை, சாய்ப்பு சமையல் அறையை நெல்லை வட்டாரத்தில் சாய்ப்பாங்கரை என வழங்குகின்றனர். சமையல் கலங்கள் ஏனங்கள் குவளைகள் ஆகியவற்றைத் திறவையாய் வைத்தால் தூசி தும்பு விழும். பூச்சி பொட்டு அடையும். நலக்கேடு ஆக்கும். ஆதலால், கலங்கள் கவிழ்த்தி வைக்கப்படுதல் அறிவுசார் நடைமுறை. இது, தொல் பழநாள் தொட்ட நடைமுறை என்பது, என் மண்டை (கலம்) திறக்குநர் யார் என்னும் புறநானூற்றால் புலப்படும். கலங்கள் சாய்த்து வைக்கப்பட்ட திண்டு (கரை) உடைய சமையலறையைச் சாய்ப்பாங்கரை என்பது அருமை மிக்கது. சாய்ப்பு என்னும் அளவில் கூறுவது திருச்செந்தூர் வட்டார வழக்கு. சாரங்கம் மழைபெய்து பனித்துளி போல் பெய்வதைச் சாரல் என்பர். அதுபோல் சிறுசிறு துளியாக வந்து கூடும் நீரை அதாவது ஊற்று நீரைச் சாரங்கம் என்பது மதுரை, தென்காசி வட்டார வழக்கு ஆகும். வெதுப்பான உட்புறம் சுரங்கம் (சுர் அங்கம்) எனப்படுவது போலச் சாரங்கம் (சார் அங்கம்) எனப்பட்டது. அங்கு > அங்கம் = அங்கவியல். திருக்குறளில் ஓரியல். அங்கம் = உறுப்பு, உடல். அங்குதல் = வளைதல். வங்கு > அங்கு. சாரப்பனுவல் (சாரப் பிரபந்தம்) இறைவன் திருமுன்பைப் புலவர் சார்ந்து, தமக்கு வேண்டுவன அருள வேண்ட, அவர்தம் நிலை உரைப்பதாகவும், புலவர் இறைவன் பெருநிலை கூறுவதாகவும், இறைவன் இவர் இவரைச் சார்ந்து இவ்விந் நலங்களைப் பெறுக என அருள்வ தாகவும், புலவர் வாழ்த்துவதாகவும் அமைந்தது சாரப் பிரபந்தம் எனப்படும். கழிநெடில் ஆசிரிய விருத்தத்தால் இந்நூல் அமைந் துள்ளது. நமசிவாய சுவாமிகள் அருளிய அருணாசலேசுவரர் சாரப் பிரபந்தம் இதற்கு எடுத்துக் காட்டாகும். சாரம் சாரம்:1 சார் + அம் = சாரம். ஒன்றனைச் சார்ந்து அதன் சாயலாக - வடிவாக - அமைவது சாரம். சார்ந்ததன் வண்ணமாதல் உலகியற்கை. பரந்துபட்ட செய்தியை விரித்துக் கூறாமல் தெளிந்து தேர்ந்து சுருக்கிக் கருத்து மாறாமல் கூறுவதொரு நூல் வகை சாரம் எனப்படுகிறது. இவ்வகையில் சுட்டத் தக்கதொரு நூல் சிவபோக சாரம். மற்றொன்று சிவயோக சாரம். முன்னது: அடிகள் வணக்கம் முதல் பொதுநிலை ஈறாகப் பதினொரு பகுதிகளை யுடையது. 139 வெண்பாக்களைக் கொண்டது. பின்னது: உரைநடையால் ஆயது. பூரணானந்தர் அருளியது என்னும் குறிப்புளது. தொடக்கத்திலும் முடிவிலுமாக நான்கு பாடல்களே உள. இச் சார நூல்கள் சித்தர் தொகுதி சார்ந்தன. அறநெறிச் சாரம் போல்வன உலகியல் நெறியை விளக்குவன. இங்குக் கூறிய சார நூல்களோ, சித்தாந்தம், வேதாந்தம் (சிவக்கொண் முடிவு, மறைக்கொண் முடிவு) பற்றியன. சாரம்:2 கட்டுமானச் சுவர் வேலை செய்யவும் பூசவும் வண்ணம் தீட்டவும் சுவரைச் சார்ந்து போடும் கம்புப் பரப்பு அல்லது இரும்புப் பலகைப் பரப்பு சாரம் ஆகும். சார்ந்து அமைத்தது சாரம். தஞ்சைக் கோயில் மேல்தளக் கல் பரப்பச், சாரம் போடப்பட்ட இடம் சாரப்பள்ளம் எனப்பட்டது. சாரல் தூறல் சாரல் = நுண்ணிய மழைத்துளி நெருங்க விழுதல். தூறல் = பருத்த மழைத்துளி அகல விழுதல். சாரல் விழுதல்; தூற்றல் போடுதல் எனவும் வழங்கும். மலைச்சரிவு, சாரல் பெய்தற்கு மிக வாய்ப்பாம். குற்றாலச் சாரல் என்பது இதனை விளக்கும். சட்டச்சடவென விழுவது தூறலாம். உமியைப் போல் மெல்லியதாய்ப் பனிநீர் தெளித்தல் போல் இன்பந் தருவதாய் அமைந்தது சாரலாம். சாரிகை எறும்பு வரிசையாகச் செல்லுதல் சாரி எனப்படும். வரிசையாகச் செல்லுதலை எறும்புச் சாரி முறை எனல் வழக்கு. பழநாளில் குதிரைகளை வரிசையாக ஓட்டலும் ஒன்றை ஒன்று முந்தச் செய்தலும், முந்திய குதிரையை யுடையாரைப் பாராட்டலும் குதிரைப்படை கோலோச்சிய நாள் வழக்காம். பின்னர்க் குதிரை ஓட்டம் குதிரைப் பந்தயமாகச் சூதுப் பொருள் ஆயிற்று. அதனை ஒழிக்க வேண்டும் என்றும், நிகழ்த்த வேண்டுமென்றும் மக்கள் இரு கூறுபட்டாலும் குதிரைப் பந்தயம் ஒழிந்து போகவில்லை. மாறாகக் கழுதையோட்டம், கட்டை வண்டி ஓட்டம், குதிரை வண்டி யோட்டம் என்பனவெல்லாம் கடந்து மிதிவண்டி, துள்ளுந்து, மகிழ்வுந்து என ஓட்டப்பந்தயம் பெருகியே வருகின்றது. மாந்தர் ஓட்டமோ குருதி யோட்டம் போல விளங்கி உலகப் பந்தயமாகிவிட்டது. தடுப்பு அல்லது தடையோட்டம் எனவும் உள்ளது. போட்டி உலகம் இது என்பதற்கு வேறு சான்று வேண்டாமல் ஓட்டப் பந்தயங்கள் நிகழ்கின்றன. பாராட்டும் பெறுகின்றன. குதிரைச்சாரிகை - குதிரை ஓட்டம் - தலைப்பட்டதாக விளங்கக் கரணியம் அதன் இயற்கைத் தாவலும் விரைதலும் துள்ளலும் வளைதலும் கொண்டு கிளர்ந்தமையாம். அதனைப் படை வகையுள் குதிரைப்படை, தேர்ப்படை என இரண்டற்கும் பயன்படுத்தியதும் அதனாலேயாம். சார், சாரு இவை அழகு சுட்டும் சொற்களாக நிகண்டாலும் அகரமுதலிகளாலும் அறியப் பெறுகின்றன. உளவியலுள் தனிச் சிறப்பினது சார்ந்ததன் வண்ணமாதல் என்பது. அழகுக்கு அத்தன்மை யுண்மை விளக்க வேண்டியது இல்லை. குற்றாலச் சாரலும் கொள்ளை அருவிச் சூழலும் சார்ந்தார் ஒருவர் தம்மை மறந்து அவற்றின் வயத்தராதல் கண்கூடு. சார்ந்தார் களைப்பையும் கவலையையும் மாற்றிக் கிளர்ச்சியும் களிப்பும் நல்கும் அழகைச் சார், சாரு என்றது பொருந்துவதேயாம். சார்த்து பனை ஓலை வெண்மைக் குருத்தாக வெளிப்படும். பின்னர்ப் பசுமைக் காட்சி வழங்கும். அதன்பின் மஞ்சள் வண்ணம் கொள்ளும். மஞ்சள் வண்ண ஓலை சாரோலை. வெள்ளை வண்ண ஓலை குருத்தோலை. சாரோலையைக் கண்டு குருத்தோலை சிரித்ததாம் என்பது பழமொழி. திருமண உறுதி எழுதுதல் பொன்னிறமான சாரோலையில் ஆதலால் நாகர்கோயில் வட்டாரத்தில் சார்த்து என்பது திருமண உறுதி எழுதும் ஓலையைக் குறித்து வழங்குகின்றது. குருத்தோலை தலைநிமிர்ந் திருத்தலும், சாரோலை சரிந்து சாய்ந்து தாழ்தலும் கண்டறிக. அறிந்தால் மேற்சுட்டிய பழமொழி விளக்கமாம். வாழ்வியலுமாம். சாலகம் சலசலத்து ஓடும் நீர் சலம் ஆகும். சலம் ஓடும் அங்கணம் திருச்செந்தூர் வட்டாரத்தில் சாலகம் எனப்படும். நீர்ப்பிறை பழமையானது என்பது அங்கணத்துள் உக்க அமிழ்து என்னும் திருக்குறளால் வெளிப்படும் (720). ஊர் வடிகால், ஊரங்கண நீர் என்று நாலடியாரில் கூறப்படும் (175). சாலாணிமாறு நீர்ச்சால் அல்லது தண்ணீர்ப் பானை வைப்பதற்குப் புரிமணை என்பதொரு வைக்கோற்புரி வளையம் உண்டு. அதனை சாலாணிமாறு என்பது திருச்செந்தூர் வட்டார வழக்கு. மாறு, கூட்டுமாறு, விளக்குமாறு, பெருக்குமாறு என்பவற்றில் உள்ளது போன்றது. மாறு கொண்டு (வைக்கோல், வளார், கொடி) செய்யப்பட்டவை மாறு ஆகும். ஆணி = தாங்குதல். தாங்கிப் பிடி என்பதை ஆணிப் பிடி எனல் நெல்லை வழக்கு. சாலி சாலி:1 சால் + இ = சாலி. சால் = நிறைவு; இ = சொல்லீறு. சாலியாவது நெல். ஒரோ ஒரு நெல் வித்தின் வழித்தோன்றிய நாற்று, பண்ணையாய் ஐம்பது நூறு எனக் கிளைத்துக் கதிருக்கு நூறு நூற்றைம்பது என நென்மணி ஆயிரம் ஆயிரமாய்ப் பெருகுவது ஆதலின் சாலி எனப்பட்டது. கேழ்வரகு, சோளம், தினை முதலியவை அவ்வாறு பண்ணை பெருகி வாராமை அறிக. நெல்லைக்குச் சாலி என ஒரு பெயருள்ளமையும், சாலினி எனப் பெருமைமிகு பெண்பாற் பெயர் உள்ளமையும் அறியத் தக்கவை. பிடிபடி சீறிடம் எழுகளிறு புரக்கும் - புறம். 40 ஒரு பெண்யானை படுக்கும் சிறிய நிலத்தில் விளைந்த நெல் ஏழு ஆண் யானைகளுக்கு உணவாகிக் காக்கும் என்பது இதன் பொருளாம். சாலி:2 நெல்லுக்குச் சாலி என்பது ஒருபெயர். சால என்னும் உரிச்சொல் வழியாகப் பெற்ற பெயர். நெல்லின் கூர் நுனை கிழிக்கவல்ல கூர்மை பெற்றது. முள் போன்றது. அச்சாலி வழிப்பட்டுக் கருவேல் சீமைக் கருவேல் என்பவை முறையே எழுமலை வட்டாரத்திலும், திருமங்கலம் வட்டாரத்திலும் சாலி என வழங்கப்படுகின்றன. சால உறு தவ நனி கூர் கழி மிகல் என்பது நன்னூல் (456). சாலை மங்கம்மாள் சாலை மறந்து விடாதே சோலை என்னும் பழமொழியால் சாலை பெருவழிப் பொருள் தருதல் அறியலாம். சாலை, நெடுஞ்சாலை, அகல்நெடுஞ்சாலை, வட்டச்சாலை, நால்வழிச் சாலை என நடக்கவும், ஊர்திகள் இயங்கவுமாம் சாலை அன்றிப் பற்பல சாலைகள் உளவாதல் பலரும் அறிந்தது. பாடசாலை, மருத்துவச்சாலை, தவச்சாலை, அறச்சாலை எனப்பெரியதும் பெருமைக்குரியதுமாம் சாலைகள் பலப்பல உண்டு. காந்தளூர்ச் சாலை என்னும் பழம்பெயரைச் சங்கச் சான்றோரும் கல்வெட்டாரும் பதிவு செய்துளர். சாலையூர், சாலைப்புதூர் என்னும் ஊர்கள் பலவாதல் கண்கூடு. உணவுச்சாலை, ஊர்களில் அன்றிச் சாலைகளைச் சார்ந்து மிகுந்து வருதல் எவரும் அறிந்தது. தண்ணீர்ப் பந்தலை நீர்ச்சாலை என்றது விவேக சிந்தாமணி. புத்தகச் சாலை, வாசகர் சாலை என்பவை பள்ளிகளில் அன்றி அரசுத்துறையில் ஒன்றாகவும் ஆயது. புத்தகச் சாலையைச் சுவடிச்சாலை என்றார் பாரதிதாசனார். சால் சால்:1 சால் என்பது வேரடிச் சொற்களுள் அதாவது உரிச்சொற்களுள் ஒன்று. மிகுதி என்றும் நிறைவு என்றும் பொருள் தருவது. ஒருவர்க்கு எவ்வளவு மிகுதியாகப் பசித்தாலும் இதற்குமேல் கொள்ளவே முடியாது என்னும் அளவில் உணவு தந்து இதற்குமேல் முடியவே முடியாது என நிறைவு செய்து விடலாம். வேறு எக்கொடையாலும் அவ்வாறு நிறைவு செய்து விட முடியாது. அந்நிறைவு - சாலவும் - நிறைவாம். நீர் இறைக்கும் நீர்ச்சால், நீர் வைக்கும் நீர்ச்சால் என்பவை பெரியவை. உழுவார் சாலடித்தே வளைய வளைய உழுவது சால் உழவாம். ஆண்டுக்கு முழுமையாகக் கட்டும் நிலவரி இறுசால் எனப்படும். தவசங்களில் மிகவிளைவதும் பண்ணை பெருகிச் சிறப்பதுமாகிய நெல், சாலி எனப்படும். நெல் முதலியவை போட்டு வைக்கும் கூடு, சால் எனப்படும். போக்கு வரவுக்குப் பயனாம் வழிகளில் சாலை என்பதே அகன்று நீண்டதாம். அதனால் நெடுஞ்சாலை, அகல்நெடுஞ் சாலை என்று வழங்கப்பட்டன. பருப்பொருளாம் இச்சால், பண்பையும், பண்பு உடையாரையும் குறிப்பதாகச் சால்பு, சான்றோர் எனச் சொல்லப் பயன்பட்டது; அத்தகு நிறைவிலார் சாலார், சால்பிலார் எனப்பட்டனர். ஒப்பிலா வீரர் சான்றோர் எனப்பட்டனர். சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே (புறம். 312); சான்றோர் மெய்ம்மறை (பதிற். 14, 58) என்பவற்றால் புலப்படும். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்னும் ஔவையார் மொழி மிகப் பலரும் அறிந்ததாம். இல்லாத நிறைவையும் இருப்பதாகக் காட்டி நடிப்பார் சாலக்கம் செய்கிறார் எனப்படல் வழக்கு. இந்தச் சாலமெல்லாம் என்னிடம் வேண்டா என்பர். மிக ஏமாற்றுப் பொருளது இது. சால உறு தவ என்பவை உரிச்சொற்களாதல் (தொல். 456) அறிக. சால்:2 நீர் வைக்கும் பெருங்கலமும், நீர் இறைக்கும் பெருங்கூனையும் சால் எனப்படும். சால் போல் பெரியதாகவும் தவசம் போட்டு வைப்பதற்கு உரியதாகவும் உள்ள நெற்குதிரைச் சால் என்பது பழனி வட்டார வழக்கு. சால்பு சால > சால் > சால்பு. சால உரிச்சொல்; மிகுதிப் பொருளது. அதன் வழியது சால்பு. சால உறு தவ நனி கூர் கழி மிகல் - நன். 456 சால்பு; நிறைவு; உயர்பண்புகள் நிறைதல். அப்பண்புகளை, அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்து எனச் சுட்டும் திருக்குறள் (963). சால்புடையவர் சான்றோர். சான்றோர் சான்றோர் பால ராப - புறம். 218 அதற்கு எதிர், சாலாமை. சாலார் சாலார் பால ராப என்பதும் அப்புறப்பாடலின் அடுத்த அடி. சான்றோரின் உயர்வாய ஆளும் தன்மை சான்றாண்மை அப்பெயரில் அமைந்தது திருக்குறளில் ஓரதிகாரம். ஆன்றோர் சான்றோர் என்பது இணைச்சொல். அகன்றோர் > ஆன்றோர் = அறிவால் அகன்றவர். சான்றோர் = சால்பால் நிறைந்தவர். ஆன்றோரும் சான்றோரும் தனித்தனித் தன்மையர் ஆதல் ஆக்கமில்லை. ஆன்றோர் சான்றோராகவும், சான்றோர் ஆன்றோராகவும் ஒருமையராய்த் திகழலே உலக நலம் என்பாராய், அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை என்றார் திருவள்ளுவர் (திருக். 315). சாவட்டை பயற்று நெற்று அல்லது தவசக் கதிர் பயறோ, தவசமணியோ கொள்ளாமல் இருந்தால் அதனைச் சாவட்டை என்பது முகவை வட்டார வழக்கு. சாக அடிக்கப் பட்டது, சாகடிக்கப்பட்ட நோய் உடையது என்னும் பொருளில் வழங்குகின்றது. அட்டை என்பது சொல்லீறு. எ-டு: சப்பட்டை, சில்லட்டை. பதர், பதடி என்பவற்றை எண்ணலாம். சாவி என்பது செத்துப் போனது என்னும் பொருளில் வழங்குவது பொதுவழக்கு. சாவம் சாவு + அம் = சாவம் > சாபம் = வில் (வ). சாவுமாறு பழித்தல் - தூற்றல் - சாவமாம். சாவிப்பு என்பதும் அது. சாவமிடல், சாவம் போடல் என்பது ம.வ. சாவுமாறு செய்யும் அம்பு அல்லது கணையை ஏவும் வில் சாவம் எனப்படுதல் இலக்கிய வழக்கு. சாவு சாய்வு > சாவு. பொழுது சாய்ந்து மறைதல் போல் உயிர் போய்விட உடல் சாய்ந்து விடுதல் சாவு ஆகும். சா, சாதல், சாவு, சாக்காடு என்பனவெல்லாம் இப்பொருளவே. செத்தார் என்பதும் இருவகை வழக்குகளிலும் உள்ள சொல்லே. * இறந்தார், மாண்டார் என்பவை காண்க. சாழல் சாழலோ என ஈற்றுச் சொல் வருமாறான ஓர் அமைப்புடைய பாடல் சாழல் எனப்படுகின்றது. சாழல் வழக்கிழந்த சொல் போலத் தோன்றினாலும் முற்றாக வழக்கிழக்கவில்லை. சாடுதல் என்பதாக வழங்குகின்றது. சாடு சாடு என்று சாடி விட்டான் என்று மறுத்து மறுத்து உரைப்பாரைக் கூறும் வழக்குடன் சாழல் பாடல்களைப் பார்த்தால் விளக்கமாம். பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயான் மறைபோலும் காணேடீ பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ - திருவா. திருச். 1 இது மணிமொழியார் திருச்சாழல் முதற்பாட்டு. மானமரும் மென்னோக்கி வைதேகி யின்துணையா கானமரும் கல்லதர்போய்க் காடுறைந்தான் காணேடி கானமரும் கல்லதர்போய்க் காடுறைந்த பொன்னடிகள் வானவர்தம் சென்னிமலர் கண்டாய் சாழலே - பெரியதிரு. 11-5-1 இது திருமங்கையார் பாடிய திருச்சாழல் முதற்பாட்டு. கொச்சகக் கலிப்பா யாப்பும், பாடல் அமைதியும் பொருணிலையும் ஒப்பச் சாழலாக (சாடலாக) உள்ளன அல்லவோ! சாளை சாலை > சாளை. தோட்டத்து அமைந்த அல்லது காட்டில் அமைந்த இலை தழை வேய்ந்த சிறிய கூரை வீடுகளைச் சாளை என மக்கள் வழங்குகின்றனர். இராம காதையில் இராமனும் சீதையும் உறைவதற்கு இலக்குவன் சாலை அமைத்தமையைக் கம்பர் பாடுவார். இனியதோர் சாலை கொண்டேகி- ஆர. 127 என்பது அது. சாலை என்பது சாளை என வழக்கில் ஊன்றியது. சாறு சாறு:1 உறு > ஊறு > சாறு = உள்ளே ஊறிக் கிடந்த வழிவு. ஒன்றைப் பிழிவது வழியாகக் கிட்டும் வழிவு சாறு எனப்பட்டது. தேன்சாறு கரும்புச்சாறு பழச்சாறு என்பவை அவற்றின் பிழிவுகளே. மிளகு சாறு, புளிச்சாறு, மீன்சாறு, மதுச்சாறு என்பனவும் பிழிந்த அல்லது காய்ச்சி வடித்த அவற்றின் பிழிவுச் சாறுகளே. விழாக்களின் போது வழங்கப்பட்ட சாற்று வகைகளால் விழாக்கள் சாறு எனப்பட்டன. நூல் அரங்கேற்றத்தில் புலமையரால் போற்றிப் பாடப்படும் பாடல்கள் சாற்றுக்கவிகள் என்பது அரங்கேற்ற விழாப்பாடல் என்பதே. பின்னே அது சாத்துக்கவி எனப்படுவதாயிற்று. 17, 18, 19 ஆம் நூற்றாண்டுகளில், சாற்றுக்கவி நூலில் பெரும் பகுதியாக இருந்தது. அவ்விடத்தை முன்னுரை, அணிந்துரை, வாழ்த்துரை என்பவை இந்நாளில் பற்றிக் கொண்டன. சாறு:2 சாறு என்பது எண்ணெய் என்னும் பொருளில் உசிலம்பட்டி வட்டாரத்தில் வழங்குகின்றது. எள், கடலை, தேங்காய் முதலியவற்றின் சாறு என்பது கொண்ட வழக்கம் அது. ஆட்டி வடிக்கும் சாறுதானே எண்ணெய்! சாற்றமுது சாறு, மிளகு சாறு, மிளகு தண்ணீர் என்பவை பொது வழக்கு. அதனைச் சாற்றமுது என்பது பெருமாள் கோயில் வழக்கு. அவ்வழிபாடுடையார் குடிவழக்குமாம். அமுது என்பது பாலமுது, கண்ணமுது எனப் பொதுமை குறித்து வரும். சாற்றுதல் கூறுதல் என்னும் பொருளது. ஒருநூல் பற்றிப் பாராட்டுதல் சாற்றுதல் எனப்பட்டது. அச்சாற்றுதல் அரசுச் செய்தி, ஊரவர் அவைச் செய்தி, ஊரறிய வேண்டிய பொதுச் செய்தி ஆயவற்றைப் பறைசாற்றுதல் என ஆயது. பறை முழக்கி அல்லது தமுக்கடித்துச் செய்திகளைக் கூறுதலால் பறையறைதல் தமுக்கடித்தல் என்பவை வழக்கில் ஊன்றின. ஒட்டுக் கேட்டு உரைப்பாரை, அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க் குய்த்துரைக்க லான் என்னும் வள்ளுவம் (1076); அதன் பழமையை உரைக்கும். செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி என்றும் புறப்பாட்டு (279) போர்க்களச் செய்தி அறிவிப்பாம். இன்றும் தமுக்கடித்து ஊர்ச்செய்தி உரைத்தல் கண்கூடு. அதனை ஊர் சாட்டுதல் என்பர். ஊர் சாற்றுதல் என்பது அதுவாம். சான்றோர் சால்பால் நிறைந்தோர்; வீரத்தால் மிகுந்தோர்; அறிவான் மிக்கோர் என மூவகையரும் சான்றோர் எனப்படல் இக்கால வழக்கம். சான்றோன் எனக் கேட்டதாய் (திருக். 69); சான்றோர் சான்றோர் பால ராப (புறம். 218); சான்றோர் பலர்யான் வாழும் ஊரே (புறம். 191); சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே (புறம். 312) என்பவற்றில் இம்மூவகையரும் சான்றோராதல் அறிக.  சி சீ வரிசைச் சொற்கள் சிஃறாழிசை சில + தாழிசை = சிஃறாழிசை. கலிப்பா வகையுள் ஒன்று சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா என்பது. பல தாழிசைகளையுடைய கலிப்பா பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா எனப்படும். பல கட்டைகளை யுடைய கட்டுமரம் பஃறி எனப்பட்டது போல் சில கட்டுமரங்களை யுடையது சிஃறி என்றிருந்து வழக்கு வீழ்ந்திருக்கக்கூடும். * தாழிசை காண்க. சிகடு கசடு என்பது குற்றம் என்னும் பொருளில் இலக்கிய வழக்கு மக்கள் வழக்கு ஆகிய இருவகை வழக்குகளுக்கும் உரிய சொல். அழுக்கு என்னும் பொருளும் அதற்கு உண்டு. செங்கற்பட்டு மாவட்ட வழக்கில் கசடு என்னும் பொருள் தருவதாகச் சிகடு என்னும் சொல் வழங்குகின்றது. இவ்வழக்கு, சகடர் என்னும் பெயர் (கசடர்) வழக்கை நினைவு படுத்துகிறது. சகடர் மனோன்மணிய ஆட்சிச் சொல். சிக்கடி சீனியவரை, கொத்தவரை என வழங்கும் ஓர் அவரை வகையைத் தருமபுரி வட்டாரத்தார் சிக்கடி என வழங்குகின்றனர். அவரை வகைகளைப் பார்த்த அளவால் கொத்தவரையே சிறியது என்பது புலப்படும். அகலம் நீளம் கனம் ஆயவை சிறிதாதல் கருதிய பெயரீடு ஆகலாம். மற்றொன்று ஒரு காம்பை ஒட்டிக் காய்கள் நெருக்கமாய் இருத்தலால் இப்பெயர் பெற்றதுமாகலாம். கொத்தவரை நெருங்கிய கொத்தால் கொண்ட பெயர்தானே! சிக்கல் முடி கற்றையாகச் சேர்தல் சிக்கு எனப்படும். அச் சிக்கு, முடியைச் செவ்விதிற் பேணாமையால் உண்டாவது. அவ்வாறே செவ்வையாகத் தாமும் பிறரும் சிந்திக்காமையாலும் மாறுபட எண்ணலாலும் வாழ்வியலில் சிக்கல் உண்டாகும். சற்றே பொறுமையாகச் சிந்தித்துச் செயல்பட்டால் சீர்தூக்கிச் செய்யும் வகையால் சிக்கலைத் தீர்த்து விடலாம். முடிச்சிக்கல், நூலிழையில் சிக்கல், செறிவான முட்காட்டில் சிக்கல் எல்லாம் எப்படித் தீர்க்கப் படுகின்றன என்பதை எண்ணிச் செய்தால் வாழ்வியல் சிக்கலைத் தீர்த்து விடலாம். சிக்குதல் முடியில் உண்டாதலால் சிக்கம், சிகை, சிகழிகை என்று வழங்கப்பட்டது முடி. அவ்வாறே, மலைஉச்சி இடம் சிகரம் சிகரி எனப்பட்டது. சிக்கமே குடுமி நாமம் சீப்புடன் உரியும் ஏற்கும் சிகழிகை மயிர்மு டிப்பேர் சிறந்தவா சிகைதே மாலை - சூடா. நிக. 11 சிக்கனம் செலவை இறுக்கிப் பிடித்தல்; மிகுதியாகச் செலவு செய்யாது சுருக்குதல். அக்கமும் காசும் சிக்கெனத் தேடு - கொன்றை. சிக்குதல் சிக்குதல் = அகப்படுதல், மாட்டிக் கொள்ளுதல். பலமுறை அவனைப் பிடிக்க முயன்றும் சிக்கவில்லை. இப்பொழுது வாய்ப்பாகச் சிக்கிக் கொண்டான். இனித்தப்ப முடியாது ம.வ. சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே - திருவா. முத். 9 முடி சிக்குதல், சேற்றில் சிக்குதல், கடனில் சிக்குதல், மீன், பறவை, விலங்கு முதலியவை தூண்டில், கண்ணி, வலை, பொறி ஆயவற்றில் சிக்குதல் என வருவன வெல்லாம் சிக்குதலேயாம். சிக்கெடுத்தாற் போலிருத்தல் சிக்கெடுத்தாற் போலிருத்தல் = தொல்லை தீர்தல். தலையை நீராட்டிப் பேணுதல், எண்ணெய் தேய்த்தல், தலைவாருதல் ஆயவை இல்லாக்கால், சிக்கு உண்டாம். கற்றை கற்றையாய்ச் சடையும் உண்டாம். நூற்கண்டு கயிறு ஆகியவை நீளச் செல்லும் போது சிக்கல் பட்டு விடுவதும் உண்டாம். தொண்டை, பல்லிடுக்கு ஆகியவற்றில் ஏதாவது பொருள் சிக்கி இடர் தருவதும் உண்மையே. இச்சிக்கலுள் எவையாயினும் எடுக்கப்பட்டால் அன்றி ஒழுங்காவதில்லை. நலம் செய்வதில்லை. இச் சிக்கல்கள் போலவே வாழ்வியற் சிக்கலும் ஏற்படுவது மிகுதி. அச் சிக்கல்கட்கு ஆட்பட்டு அல்லல் பட்டவர்கள் அவை தீர்ந்த மகிழ்வில் இப்பொழுதுதான் சிக்கெடுத்தாற் போலுள்ளது என்பர். சிக்கல் = தொல்லை; சங்கடம். சிங்கி தட்டல் சிங்கி தட்டல் = ஒத்துப் பேசுதல். சிங்கி ஒரே சீராக ஒரே போக்காக ஒலித்துக் கொண்டிருப்பதாம். இதனை இசைக்க, மற்றை மற்றைக் கருவி இசைஞர்க்கு வேண்டுவது போல் பெரிய நுட்பமான தேர்ச்சி வேண்டுவதில்லை. அவர்கள் விடாமல் தாளம் போடுவதே கடமையாக உள்ளது. அவர்களுக்கெனத் தனிப்பட்ட இசைப்பும் இல்லை. பிறர்க்கு ஒத்துப் பின்தாளம் போடுவதே வேலையாதலால், தனக்கென ஒரு கருத்து இல்லாது எவர் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு ஒத்துப் பேசுவதைச் சிங்கி தட்டல் என்பது குறிப்பதாயிற்று. சாலராப் போடல் என்பதும் இதுவே. சிங்கியடித்தல் சிங்கியடித்தல் = வறுமைப்படல். வயிற்றுப் பாட்டுக்கு வகையில்லாதவர்கள் என்பதைக் குறிப்பது சிங்கி யடித்தலாம். இசை நிகழ்ச்சி நடந்தால் அதில் பாடகர், குழலர், யாழர், மத்தளர் ஆகியவர்க்கு உரிய மதிப்பும் பொருள் வருவாயும் சிங்கியடிப்பவர்க்கு வருவதில்லை. ஆதலால் அவர் வறுமையிலேயே தவிப்பார். அதனைக் கொண்டே வறுமைப் படுதலைச் சிங்கியடித்தலாகச் சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. சிடுமூஞ்சி சிறுமூஞ்சி > சிடுமூஞ்சி. சினத்தால் முகத்தைச் சுருக்கிச் சொல்லால் எரிந்து விழுபவரை - சினங்கொண்டவரை-ச் சிடுமூஞ்சி என்பர். சிடுசிடு என்னும் இரட்டைச்சொல் சினக்குறியாம். அந்தச் சிடுமூஞ்சி யிடம்வாய் கொடாதே ம.வ. சிட்டம் சிட்டம்:1 சிட்டு = சிட்டுக்குருவி, சிறுகுருவி. சிட்டம் = சிறிய நூல்சுற்று. சிட்டம் போடு சிட்டம்:2 சிட்டம் = சிறு கருக்கு. திரியும் கெட்டது, சிட்டமும் பிடித்தது (அகல்விளக்கு - மு.வ.) சிட்டாகப் பறத்தல் சிறுகுருவி சிட்டுக்குருவி; சிறிய உடல் சிறியகால் சிற்றிறகு. எளிமையாய் எழும்பிப் பறந்து, தன் சிற்றுருவம் காணா வகையில் பறந்து மறைய வல்லது. அதுபோல், சிறுவர்கள் பெரியவர்கள் கையிலும் கண்பார்வையிலும் அகப்படாமல் நொடிப் பொழுதில் மறைவதை, அவன் சிட்டாகப் பறந்துவிட்டான் என்பர். (ம.வ.) சிட்டிக்கல் தட்டாங்கல் என விளையாடும் விளையாட்டை விருதுநகர் வட்டாரத்தில் சிட்டிக்கல் என வழங்குகின்றனர். மேலே தட்டான் போல் பறப்பதால் தட்டான் பறவையைக் குறித்து வந்த பெயர், சிட்டுக்குருவிக்கு ஒப்பிட்டுக் காட்டிய வழக்காகும். சிட்டுக்கல் > சிட்டிக்கல். சிட்டி, சிறியதுமாம். சிணுங்குதல் சிணுங்குதல் = வேண்டி நிற்றல், மழை தூறுதல். சிணுங்குதல் என்பது அழுதல் என்னும் பொருளது. அதிலும், ஓயாது அழுதலையும் கண்ணீர் வடித்தலையும் குறிப்பது அச்சிணுங்குதல். அதனால், தான் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வதற்காகச் செய்யப்படுவது; அழுது அடம்பிடித்தல் என்பது வன்மைப்பட்டது. இஃது இயலாமைப்பட்டது. கேட்டது உடனே கிடைக்கத் தடையோ, மறுப்போ உண்டாயின் குழந்தைகள் சிணுங்கியும் கண்ணைக் கசக்கியும் இரக்கத்தை உண்டாக்கித் தாம் விரும்புவதைப் பெற்று விடுவர். அதனால் வேண்டுதல் பொருள் உண்டாயிற்று. சிணுங்கும்போது சிலசில துளி கண்ணீர் வருவ துண்டாகலின் அம்மாதிரி துளிக்கும் மழையைச் சிணுங்குதல் என்பதும் வழக்கமாயிற்று. சிண்டான் பொண்டான் சிண்டான் = சிற்றெலி அல்லது சுண்டெலி. பொண்டான் = பேரெலி அல்லது பெருச்சாளி. சிண்டு, சுண்டு என்பவை சிறுமைப் பொருளன. சிண்டான் என்பது சுண்டான் என்றும் வழங்கப்படும். பொந்து என்பது வயிற்றைக் குறிக்கும். வயிறு பருத்தவரைப் பொந்தன் என்பது வழக்கம். பொந்தன் பொண்டான் ஆயிற்றாம். சிறிதே யுள்ள குடுமி சிண்டு என்பதைக் கருதுக. சிண்டு முடிதல் சிண்டு முடிதல் = இருவருக்குள் பகையாக்கல். சிண்டு = சிறுகுடுமி. ஒருவர் குடுமியை முடிவதை இது குறிப்பதில்லை. ஒருவர் குடுமியை மற்றொருவர் குடுமியொடு முடிந்து போடுவதைக் குறிப்பதாக உள்ளது. இருவர் சிண்டையும் முடிந்தால் முட்டாமல் மோதாமல் முடியாதே. சிண்டு முடிதல் என்பது சிக்கலை உண்டாக்கிப் பகை ஏற்படுத்துவதாக அமைகின்றது. தலையிரண்டை ஒன்றாய் முடித்துப் போட்டு வெட்டுதல், அறுத்தல் ஆகியவை ஒரு காலத்தில் தண்டனை வகையுள் ஒன்றாக இருந்து, இவ்வழக்கு உண்டாகியிருக்க வேண்டும். ஒட்டக்கூத்தர் தந்த தண்டனையாகத் தனிப்பாட்டு ஒன்று கூறும் இதனை. இரண்டொன்றாய் முடிந்துதலை இறங்கப் போட்டு வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்த னில்லை - தனிப். சிண்டு வைத்தல் சிண்டு வைத்தல் = ஏமாறுதல். கொண்டை போடுதல் என்பதைப் போன்றது இது. சிண்டு சிறு குடுமி. என்னை ஏமாற்றவா பார்க்கிறாய்? அதற்குச் சிண்டு முடிந்தவனைப் பார் என்பதும், சிண்டு முடிந்து பூச்சுற்றியவனைப் பார் என்பதும், நான் ஏமாற மாட்டேன், ஏமாறுகிற ஆளைப்பார் என்பதாம். சிண்டு முடிந்தவர்கள், கல்வி சூழ்ச்சித் திறம் இல்லாதவர் என்ற எண்ணத்தில் எழுந்துள்ள வழக்கு இது. சாணக்கியன் சிண்டு என்ன எளிய சிண்டா? அந்தச் சிண்டு நாட்டையே ஆட்டிப் படைக்க வில்லையா? காதில் பூச்சுற்றலும் இத்தகையதே. சிண்டைப் பிடித்தல் சிண்டைப் பிடித்தல் = செயலற்றுப் போக நெருக்குதல். சிண்டாவது உச்சிக் குடுமி. அதனைப் பிடித்தல் எளிது. முழுமையாக வளைத்துப் பிடிக்கலாம் செயலற்றுப் போகவும் செய்துவிடலாம். இச்செயலில் இருந்து பலவகையாலும் நெருக்கடி உண்டாக்கி வருந்தச் செய்தலும் சிண்டைப் பிடித்தலாக வழங்கலாயிற்று. சரியாகச் சிண்டு அவனிடம் மாட்டிக் கொண்டது, இனித் தப்புவது கடினம்தான் என்பது நெருக்குதல் அல்லது செயலற்றுப் போகச் செய்தல் வழி வரும் சிண்டாம். சிண்டைப் பிய்த்தல் தன்துயர் நிலை. சிண்டைப் பிடித்தல் பிறரைத் துயருறுத்தும் நிலை. சிதடு இயற்கை யமைதியாய் வாய்க்கும் உடற்கூறு சிதைவது சிதடு எனப்பட்டது. பருப்பற்ற தேங்காய் சிதட்டுக்காய் எனப்படும். உறுப்புக் குறையுள் தலைப்பட்டதாக மக்களுக்குத் தோன்றுவது பார்வைக் குறைவேயாம். குரு = ஒளி. புறவொளி யற்றவர் அகவொளியராகத் திகழ்ந்தாலும் குருடர் எனவே முன்பு வழங்கப் பெற்றனர் எண்பேர் எச்சம் என உடற்குறைகளை எண்ணினர் (புறம். 28). துஞ்சுபுலி இடறிய சிதடன் போல என்பது புறப்பாடல் (13). சிதர் சிதைந்த உடை, சிதர் என வழங்கப்பட்டது. இன்று அது கந்தை, கிழிவு எனப்படுகிறது. புலமையாளர் வறுமையால் சிதர் உடை உடுத்துக் கொண்டு வள்ளல்களை நாடினர். வண்மையாளர் முதற்கண் அவர்தம் சிதருடையை அகற்றிச் சீருடை வழங்கியதைப் புறநானூறு பல பாடல்களில் சுட்டுகிறது. சிதர் சிதர்வை எனவும் வழங்கப்பட்டது. சிதாஅர் என அளபெடையும் கொண்டது (புறம். 69, 150, 385). சிதலை சிதல் > சிதலை. சிதைத்தலாலேயே உயிர்வாழும் உயிரி கறையான். அதனைச் சிதலை என முந்தையர் வழங்கினர். ஒளியும் வெப்பும் இல்லாத் தண்ணியதாய் இருண்டதாய் உள்ள இடங்களிலேயே அதன் இயக்கமும் இருப்பும் இருத்தலால் கறையான் என மக்கள் வழக்காயிற்று. கறையாவது இருள். சிதலை தினப்பட்ட ஆல மரத்தை - நாலடி. 197 * செல் காண்க. சிதறல் சிதைந்து போதலும், சிதறிப் போதலும் சிதறலாம். மண்பானை கண்ணாடி முதலியவை சற்றே தாக்கத்திற்கு ஆட்படின் உடைந்து சிதறிப் போம். தேங்காயை வீசி எறிந்து காணிக்கை செலுத்துதல் கையில் இருந்து விட்டு அல்லது வீசி எறிதலால் விடலை எனப்படும். விடலைக் காயைச் சிதறுகாய் என்பர். ஒருபொருள் அல்லது நீர் கொட்டிப் போதல் சிந்துதல் ஆகும். அச்சிந்துதல் பல இடங்களில் சிதறிப் போகுமானால் சிந்திச் சிதறல் என்பர். சிந்தாமல் சிதறாமல் அள்ளி வை என்பது ம.வ. சிதாஅர் சிதாஅர் என்பது கந்தை யாடை. நீனிறச் சிதாஅர் களைந்து வெளிய துடீஇ என அம்பர்கிழான் அருவந்தையைக் கல்லாடனாரும் (புறம். 385), அரவின் நாவுருக் கடுக்கும் என் தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப் போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன அகன்றுமடி கலிங்கம் உடீஇ எனக் கிள்ளி வளவனை நல்லிறையனாரும் (புறம். 393) கூறுவனவற்றால் சிதாரின் இழிபாடும், கலிங்கத்தின் மேம்பாடும் தெள்ளிதிற் புலப்படும். கலிங்கம் = ஆடை வகை. * சிதர் காண்க. சிதைவு சிதை > சிதைவு. சிதையாவது இறந்தார் உடலை எரியூட்டி அழிக்க அடுக்கும் கட்டை எரு ஆகியவையாம். இவ்வழியால் சிதைவுக்கு அழித்தல் பொருள் உண்டாயது. சிதைதல் இல்லாச் சிறப்பினது தமிழ்மொழி என்பதால் சிதையா உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே எனப் பாடினார் பேரா. சுந்தரனார் (மனோன். தமிழ்வாழ்த்து). சித்தம் சித்தம் என்பது எண்ணம், ஆய்வு, உள்ளம் என்னும் பொருளில் வழங்கும் சொல். சித்தர் என்பார் மெய்யியல் மருத்துவ இயல் சிந்தனை வல்லார். அவர்தம் உயரிய தொண்டாலும் தம் நலம் இன்மையாலும் வணங்கத்தக்க இறைமையராகக் கொள்ளப்பட்டமையே, சித்தன் போக்கு சிவன்போக்கு எனப்பட்டது. சிலர் பிறரை மயக்கும் அருஞ்செயலால் சித்து வேலை செய்பவராக விளங்கினர். அவர்தம் சூழ்ச்சித் திறத்தால் பிறர்க்குப் புலப்படா வகையால் செய்ததை இறையருளாக மக்கள் கொண்டனர். பிறர் மருள (மயங்க)ச் செய்தலால் மருளாடி எனவும் பெயர் பெற்றனர். மெய்யியல் மேம்பட்டாளர், சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன் - திருவா. அச். 1 என்றனர். சிந்தம் > சித்தம். சிந்தம் = சிந்தித்தல், எண்ணல். கலம்பக உறுப்புகளுள் ஒன்று சித்து. சித்திரம் செத்திரம் > சித்திரம். செத்து = போல. சித்திரம்:1 சித்திரம் = அழகு. தீட்டப் பெறும் வண்ணத்திலும் வரியிலும் வனப்புக் கொலுக் கொள்ளலின் அழகு, சித்திரம் எனப் பெற்றதாம். சித்திர வேலைப்பாடு உடைய சிலம்பு சித்திரச் சிலம்பு எனப்பெற்றது. சித்திரம் ஆங்கு அழகுப் பொருள் தந்தது. ஓவியம் என்பதும் சித்திரத்துடன் ஒப்பக் கருதுக. சித்திரம்:2 செத்து = போல. ஒன்றைப் பார்த்தால் அதையே போல வரைதலால் செத்திரம் எனப்பட்டுச் சித்திரம் ஆகியது. சித்திரம்: செத்தல் = ஒத்தல்; செத்து = ஒத்து, போல. தொல். பொ. 286 (தேவநே.). * ஓவியம் காண்க. சித்திரை விடுதல் கோடை விடுமுறை என்பது பள்ளிக் கூடங்களில் வழங்கும் பொதுவழக்கு. அவ் விடுமுறை சித்திரை, வைகாசி மாதங்களில் வருதலால் (ஏப்பிரல், மே) அதனைச் சித்திரை விடுதல் என உசிலம்பட்டி வட்டாரத்தார் வழங்குகின்றனர். விடுதல் = விடுமுறை விடுதல். சிந்தடி சிந்து + அடி = சிந்தடி. குறளடி இரு சீரடி; சிந்தடி முச்சீரடி. அடிவகையுள் ஒன்று இது. குறளனுக்கும் அளவனுக்கும் இடைப்பட்ட உயர முடையவன் சிந்தன். குறள்இரு சீரடி; சிந்துமுச் சீரடி - யா.கா. 12 சிந்தனை சிந்திக்கும் மனம் சிந்தை எனப்படும். சிந்தனை என்பது சிந்தையின் செயற்பாடு. கட்டுரை வகையுள் ஒன்று சிந்தனைக் கட்டுரை (மறைமலை.). சிந்தனை கவலைப் பொருளில் வருதல், சிந்தனை முகத்தில் தேக்கி - கம். அயோ. 1045 என்பதனால் புலப்படும். சிந்து ஓரெதுகை பெற்ற இரண்டு அடிகள் அளவொத்து வருவது சிந்தாகும். இச்சிந்து குறளடி முதலாக எவ்வடியானும் வரப்பெறும் காவடிச் சிந்து, தங்கச்சிந்து, நொண்டிச் சிந்து, வழிநடைச் சிந்து, ஆனந்தக் களிப்பு, தெம்மாங்கு எனச் சிந்து பலவகைப் படும். பாரதியார் பாடிய பலவகைச் சிந்துகளை நயந்த பாவேந்தர், அவரைச் சிந்துக்குத் தந்தை என்று பாராட்டியது நினைக்கத்தக்கது. சிந்து மோகினி வண்ணக ஒத்தாழிசைப் பாடல்களால் ஒரு பெண்ணைக் கடலுக்கு ஒப்பிட்டுப் பாடுவது சிந்து மோகினி எனப்படும் என்கிறது பிரபந்தத் திரட்டு (41). வண்ணகஒத் தாழிசையான் மாதுகடல் நேராக்கிற் பண்ணுசிந்து மோகினியாம் பார் என்பது அது. கடிகை முத்துப் புலவர் இயற்றிய சமுத்திர விலாசம் போன்றவற்றிலிருந்து இச்சிந்து மோகினி கிளர்ந்திருக்கலாம். சிப்பிலி சல்லடை, வடிகட்டி என்பவற்றைச் சிப்பிலி, சிப்பிலித் தட்டு என்பது முகவை வட்டார வழக்கு. பிலிற்றுதல் என்பது ஒழுக விடுதல், வடிய - வழிய - விடுதல் என்னும் பொருளில் இலக்கிய ஆட்சியுடையது. எ-டு: தேன் பிலிற்றும். சிறிது சிறிதாக வடிக்கும் தட்டு சிப்பிலியாயது. யாழ்ப்பாண வழக்கில், தொட்டில் என்பது சிப்பிலி என வழங்கப்படுகின்றது. தொங்குதல் வழியாக ஏற்பட்ட வழக்கு ஆகலாம். * சலித்தல் காண்க. சிமம் சிமயம் > சிமம். சிமம் = ஒளி செய்யும் பனிமலை. * சிமயம் காண்க. சிமயம் இமையம் > இமயம் > சிமயம். இமையம் = ஒளிசெய்தல், இமைத்தல். பனியின் படிவின் மேல் கதிரொளி படுதல் பேரொளி செய்தலால் இமையம் சிமையமாய் சிமயம் ஆயிற்றாம். இமயச் சிமயம் இமயத்தின் உச்சி. சிமையத் திமையரும் (சிலப். 6:28). சிமிலி சிமிழ் > சிமில் > சிமிலி. குங்குமச் சிமிழ் எனப்படுதல் இன்றும் வழக்கில் உள்ளது. செப்பு என்பதும் அது. கதவுகளில் சிமிழ் அமைப்புடைய குமிழ்கள் உண்டு. யானை மோதிக் கதவை உடைக்காதிருக்க வைக்கப்படுவது அது. அச்சிமிழ் போன்ற அமைப்புடைய நீர்க்கலம் சிமிலியாகும். சிமிலிக் கரண்டையன்- மணிமே. 3:86 சிமிலியாகிய கரண்டையை உடையவன் சிமிலிக் கரண்டையன். சிமிலி, உறி என்பதுமாம். உறிக்கலயம் என்பது ம.வ. சிம்பும் சிலும்பும் சிம்பு = மரம் செடி கொடிகள் பக்கமடித்துக் கிளைத்தல். சிலும்பு = பக்கமடித்துக் கிளைத்ததில் துளிரும் தளிரும் நிரம்புதல். சிம்பு என்பது சிம்படித்தல் என்றும், சிலும்பு என்பது சிலும்படித்தல் என்றும் வழங்கப்படும். கொழுமை, வளமை, நீர்மை முதலியவை சிறந்த மரம் செடி கொடிகள், சிம்பும் சிலும்பும் அடித்தல் தனி அழகுத் தோற்றமாம். ஆனால் சிம்பும் சிலும்பும் அப்படியே வளரவிடின் பயனீடு குறைந்து போம். ஆதலால், சிம்பு சிலும்புகளைக் குறைத்து விடுவது நடைமுறை. சிரகம் கரகம் > சிரகம். குழந்தைகளுக்குப் பால்புகட்டும் கெண்டி போன்ற அமைப்பில் துறவோர் கொண்ட நீர்க்கலம் சிரகம் ஆகும். கரகம் என்பதும் அது. நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய - தொல். 1570 சிரகம் பொன்னால் ஆயது என்பது, அடர் பொற் சிரகத்தால் என்பதால் விளங்கும் (கலி. 51). சிரல் ஒருவகைப் பறவை; சிச்சிலிப் பறவை எனப்படும். மிகு பழமையில் சிரல் என்பது சிறு (சிறியது) என்னும் பொருள் தந்தது. சிச்சிலி என்பதும் அப்பொருளதே. சில், சில்லி, சிள் என்பனவும் அப் பொருளவே. சிரல் கூரிய சிவந்த அலகை யுடையது. பனிவார் தளவின் சிரல்வாய்ச் செம்முகை - ஐங்குறு. 447 தளவு = முல்லை. சிலதர் சில > சிலதர். சில, சிறு சிறு வேலைகளைச் செய்வதற்காக அமைந்த எடுபிடி யாள்கள் சிலதர் எனப்பட்டனர். முதன்மையானதும் முழுமையானதுமாம் வேலைக்கு உரியவராக அவர் இரார். பணித்ததைச் செய்யும் பணிப்பெண், சிற்றாள் போல்வாள் அவர். ஏவலர் = சிலதர் (சிலப். 13:61) சிலதியர் பெண்பால். ஏவற் சிலதியர் (சிலப். 5:51) பொருள்: ஏவற் சிலதியர் = மடைப்பள்ளியார் அடியார் உரை, அடியார்க். சிலப்பு வரம்பு, வரப்பு; பரம்பு, பரப்பு; இவை வலித்தல் விகாரம் எனப்படும். இவ்வாறு வருவனவற்றை வலிக்கும் வழி வலித்தல் என்பார் தொல்காப்பியர் (886). சிலம்பு, சிலப்பு; சிலம்பு அதிகாரம் சிலப்பதிகாரம். இது வலிக்கும் வழி வலித்தல் ஆகுமா? சிலம்பு சிலப்பதிகாரத்தில் மிகப்பல இடங்களில் ஆளப்படுகின்றது. அடை தந்தும் ஆளப்படுகின்றது. ஆனால் சிலப்பதிகாரம் எனப்பெயர் சுட்டும் இடங்களிலின்றி எவ்விடத்தும் சிலம்பு, சிலப்பு என வந்ததில்லை. வேறு இடங்களிலும், வழக்குகளிலும் இல்லை. ஆதலால் இது வலிக்கும் வழி வலித்தல் அன்று. வலியா வழி வலித்தல் எனப் புது இலக்கணம்தான் சொல்ல வேண்டும். சிலம்பதிகாரம் என்று பெயர் சூட்டாமல் சிலப்பதிகாரம் என இளங்கோவடிகளார் சூட்டியது ஏன்? தக்க காரணம் இல்லாமல் முகத்திலே முத்திரை வைத்தது போலப் பெயர் வைப்பாரா? மெல்லொற்றை வல்லொற்றாக்குவாரா? ஆக்கினால் தக்க காரணம் இருத்தல் வேண்டும். ஏனெனில் தகவார்ந்த இலக்கியப் படைப்பாளர் அவர். சிலம்பு என்பது மெல்லொலியது; மெல்லியலார் அணிகலம் ஆவது. ஒலிக்கும் கம்பாட்டமும், ஒலிமிக்க மலையும், ஒலிதரும் அணிகலமும் சிலம்பு எனப்படுகின்றன. சிலம்பாயி சிலம்பாறு சிலம்பி என்பனவும் பெயரீடுகளே! இவையும் ஒலி வழிப் பெயர்களே! சிலம்பு கழி நோன்பு என்பது பழங்காலச் சடங்குகளுள் ஒன்று; திருமண நிகழ்ச்சிக்கு முன்னர் மணமகளின் காலில் இருந்து சிலம்பைக் கழற்றும் சடங்கே அது. அவள் திருமணமானவள் திருமணமாகாதவள் என்பதை எளிதில் அறியக் காட்டும் அணிகலம் சிலம்பு. கண்ணகியார் சிலம்பு காலில் இல்லாமல் பொதிவாயில் (பையில்) இருந்தது அதனால்தான்! மெல்லியதும், மெல்லியலார் அணிவதும் ஆகிய அச்சிலம்பு செய்த செய்கை என்ன? சிலம்புச் செய்தியை ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் புரியுமே! சிலம்பு கவர்ந்த கள்வனெனக் கோவலனைக் கொன்றது - சிலம்பு! கள்வன் அல்லன் கோவலன்; காவலனே தவறுடையன் என்று கண்ணகியார் வழக்குரைத்தமையால் - அச்சிலம்பின் காரணத்தால் - பாண்டியன் உயிர் துறந்தான். கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்லென்று பாண்டிமாதேவியும் உடன் உயிர் துறந்தார். கண்ணகியார் விண்ணவர் போற்ற - குன்றக் குறவர் காண - விண்ணுலகு புக்கார். அவர்தம் சீற்றத்தால் மதுரை மாநகர் அலக்கண் உற்றது. பாண்டியர் குடிக்குப் பழியும் மாநகர்க்கு வசையும் உற்றன. கண்ணகியாரைத் தம் இல்லில் வைத்துப் பேணிய மாதரியார், அடைக்கலம் இழந்தேன் இடைக்குல மக்காள் என்று கூறி எரிவளர்த்து அதில் மூழ்கினார். கண்ணகியாரையும் கோவலனையும் மதுரைக்கு அழைத்து வந்த துறவி கவுந்தி யடிகளார் நிகழ்ந்தது தாங்காமல் வடக்கிருந்து உயிர் துறந்தார். மதுரையில் நிகழ்ந்ததை அறிந்த கோவலன் தாயும், கண்ணகியின் தாயும் மூச்சடங்கினர். கோவலன் தந்தையும், கண்ணகியார் தந்தையும் துறவு கொண்டனர். மாதவியார் துறவு பூண்டார்; மகள் மணிமேகலையைக் கோதைத் தாமம் குழலொடு களைந்து, போதித்தானம் புகுவித்தார். மதுரைச் செய்தியைப் புகார்க்குக் கொண்டு சென்ற மாடலன் தன் சொல்லால் நேர்ந்த நேர்ச்சியறிந்து தீர்த்தச் செலவு மேற்கொண்டான். பொற்கொல்லர் உள்ளம் புண்பட்டுக் கண்ணகியார் சினந்தணிதற்கு உயிர்ப்பலியூட்டிக் குளுமை செய்தனர். செய்தியறிந்த செங்குட்டுவன், வடநாட்டுப் படையெடுப்பு மேற்கொண்டு பெரும் போராற்றிப் பேரழிவு புரிந்து, கண்ணகியார்க்குக் கோயிலெடுத்து வழிபாடு செய்தான். இவ்வெல்லாம் மெல்லியல் தன்மைகளா? மெல்லியல் சிலம்பின் நேர்ச்சிகளா? இல்லை! இல்லை! சிலம்பு பொதுவகையில் மெல்லியதே எனினும், இச்சிலம்பு வல்லிதில் வல்லிதாய்க் கொடுமைகளுக்கு இடனாகி யுள்ளது. ஆதலால், இக்காவியத்தைக் கற்கத் தொடங்குவார் எடுத்த எடுப்பிலேயே இவ்வன்கண்மையை ஒளிவு மறைவு இன்றி அறிந்து கொள்ளும் வகையில், சிலம்பைச் சிலப்பாக்கி வலித்தல் உண்மை காட்டுவேன் என்று பெயர்ச் சூட்டுச் செய்துள்ளார் இளங்கோவடிகளார். வலித்தல் விகாரம் என இலக்கணம் கூறுவதற்காகவா இப்பெயர்ச் சூட்டு? அடிகளார் எத்தகு திறவோர்! சிலம்பி சிலம்பு > சிலம்பி = சிலந்தி. சிலம்புதல் = ஒலித்தல். சிலம்பி - ஓயாது ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும் ஓர் உயிரி. சிலம்புதல் = ஒலித்தல். வலைகட்டும் சிலந்திப் பூச்சியே அது. வான்குருவி யின்கூடு வல்லரக்கு தொல்கறையான் தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் - ஔவை. தனிப். சிலம்பு சிலம்பு:1 காலணியாம் சிலம்பில் ஒலியெழுப்பும் பரல்மணிகள் இடப்படுதல் உண்டு. அப்பரல் ஒலி கொண்ட மகளிர் காலணி, சிலம்பு எனப்பட்டது. என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே - சிலப். 20:67 சிலம்பு:2 தமிழர் விளையாட்டு வகையுள் ஒன்று சிலம்பாட்டம். அது ஒருவர் கம்புடன் மற்றொருவர் கம்பு மோதலால் ஒலி எழும்புதலால் சிலம்பு ஆயிற்று. சிலம்பு:3 மலையில் எழும் ஒலி எதிரொலி செய்தலால் அது சிலம்பு எனப்பட்டது. எதிர்குதிர் ஆகின் றதிர்ப்பு மலைமுழை - பரி. 8 சிலம்பால் சிலம்பிசை ஓவாது - பரி. 15 சிலம்பு:4 சிலம்பால் விளைந்த கதை சிலம்பு (சிலப்பதிகாரம்) எனப்பட்டது. சிலம்பு:5 தயிர் கடைதல் வகையால், மத்தும் தயிரும் சுழன்று ஒலிக்கும் ஒலி சிலம்புதல் (சிலுப்புதல்) எனப்பட்டது. தோயும் வெண்டயிர் மத்தொலி துள்ளவும் ஆயர் மங்கையர் தங்கை வருந்துவார் - கம். பால. 60 சிலம்பு கழி நோன்பு திருமணத்திற்கு முன்னர் மணப்பெண் பூண்டிருந்த சிலம்பை அகற்றுதல் - மணமகளாம் அடையாளம் செய்தல் - சடங்கு, சிலம்பு கழி நோன்பாகும். மணமகள் வீட்டார் செய்வது அது. உடன்போக்கு உண்டாயின் வேற்றூரார் மணச்சடங்கு செய்விக்கு முன் சிலம்பு கழி நோன்பு செய்வர். தொடியோள் மெல்லடி மேலவும் சிலம்பே - குறுந். 7 நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினும் எம்மனை வதுவை நன்மணம் கழிக - ஐங். 399 சிலுக்கட்டி மிகக் குள்ளமானவர் - கனமும் இல்லாதவர் - சிலுக்கட்டி எனப்படுவார். சில்லுக்கருப்புக் கட்டி, கருப்புக் கட்டி வகையுள் ஒன்று. அது சின்னஞ்சிறிய அச்சில் ஆக்கப்படுவது. அச்சுக்கட்டி அதனிற் பெரியது. வட்டு அதனினும் பெரியது. தேங்காயை உடைத்துக் கீற்றுப் போட்டது சில்லு எனப்படும். சிறு குருவி சில்லை எனப்படும். இவையெல்லாம் சிறியது (சின்னது) என்னும் பொருள. சில், சிலு, சில்லை என்பவை எல்லாம் ஒரு வழிய, சிலுக்கட்டி வண்டி சிலுக்கட்டியாள் சிலுக்கட்டிப் பிள்ளை என்பவை வழக்குகள். மிகச்சிறிய உந்தினைச் சிலுக்கட்டிக்கார் என்பதும் கேட்கக் கூடியதே (ம.வ.) கார் = மகிழ்வுந்து (ஆங்.) சிலுப்பி சொல்வதை முகம் கொடுத்துக் கேளாமல் திருப்புதலைச் சிலுப்புதல் என்பது முகவை வழக்கு. சிலுப்பி என்பதற்குத் தோசை புரட்டும் கரண்டி என்னும் வழக்கு உசிலம்பட்டி வட்டாரத்தது ஆகும். மோர் கடைதலைச் சிலுப்புதல் என்பது நெல்லை வழக்கு. சிலம்புதல் ஒலித்தல் என்னும் பொருளில் இருவகை வழக்கிலும் உண்டு. சிலம்பாட்டம்; மனைச் சிலம்புவ மங்கல வள்ளையே கம்பர் (பால. 61). சிலுப்புதல் சிலுப்புதல் = மறுத்தல், மறுத்து ஒதுங்குதல். மாடு, சினம் சீற்றம் உடையவை எனின் கொம்பை வளைத்துக் குத்துவதற்கு வரும். அவ்வாறு வருவதைச் சிலுப்புதல் என்பர். என்ன சிலுப்புகிறாய்; பூசை வேண்டுமா? என்று அடிப்பர். ஆயினும் சிலுப்புதலை அத்தகைய மாடுகள் விடா. கொம்பை ஆட்டி அசைத்துத் திருப்புதலே சிலுப்புதலாம். மோர் கடைதலை மோர் சிலுப்புதல் என்னும் வழக்கமும் உண்டு. இவ்வழக்கங்களில் இருந்து ஒருவர் ஒன்றைக் கூறும் போது அதனை ஏற்றுச் செய்யாமல் மறுத்தால் சிலுப்பினால் விட்டு விடுவோமா? செய்யாமல் போ, பார்க்கலாம் என ஏவியவர்கள் இரைவர். இங்குச் சிலுப்புதல் மறுத்தல் பொருளது. சிலும்பல் சிறிதாக எழும்பும் அலையைச் சிலும்பல் என்பது சீர்காழி வட்டார வழக்கு. சிறிதாகத் துள்ளி மேலே எழும்புவதைச் சிலும்பல் என்பதும், மரத்தின் ஆடு கிளையைச் சிலும்பல் என்பதும் முகவை, நெல்லை வழக்குகள். சிலை சில் > சிலை. கல்லை உளியால் பெயர்த்தால் சில் என ஒலிக்கும். கல்லை வேண்டும் உருவுக்குத் தகப் பெயர்த்து ஆக்குவது சிற்ப வேலையாம்; சிற்பமாவது சிலை. சிலம்புதல் சிலைத்தல் இரண்டும் ஒலிப்பொருளனவே. கல்லில் வடிக்கப்பட்டது சிலை என முதற்கண் பெயர் பெற்றுப் பின்னர் வெண்கலச் சிலை, ஐம்பொன் சிலை எனப் பலவாய் விரிந்தன. கற்சிலையே சிலை எனப்பட்டமை, காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் பெரும்படை வாழ்த்தல் என்னும் தொல்காப்பியத்தாலும் (1006) சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தாலும், நடுகற்களாலும் விளங்கும். நடுகற்கள் பீடும் பெயரும் எழுதப்பட்டவையாம். சிலைப்பு சில் சில் = ஒலிக்குறிப்பு. சல் சல் என்னும் ஒலிக்குறிப்புப் போன்றது. சிலைத்தல் = ஒலித்தல். வலிதுரந்து சிலைக்கும் வன்கட் கடுந்துடி - புறம். 170 மதியார் சிலைத் தெழுந்து - புறம். 78 பொருள்: மதியாராய் ஆர்த்து எழுந்திருந்து ப.உ. சில் காற்று சில் = சிறியது; மெல்லியது. தென்றற் காற்று மெல்லியதாம். ஆதலால் மென்கால், மென்காற்று எனவும் வழங்கும். அது போன்றதே சில் காற்று என்பதுமாம் (வெ.வி.பே.) x.neh.: சில் பதம். சிறிதளவு சோறு. சில்லாட்டை பதனீர் வடிகட்டும் பன்னாடையைச் சில்லாட்டை என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு. சிறிய வடிகட்டி என்னும் பொருளது. பன்னாடை பனைமடலில் உள்ள வலைப் பின்னல். அட்டை என்னும் சொல்லீறு. ஆட்டை என்றும் வழங்கும் சான்று இது. சில் = சிறிது; சில்லுக் கருப்புக் கட்டி, சில்லான், சில்லைக் குடில் என இருவகை வழக்கிலும் உள்ளது. சில்லாப்பு சில்லிடுதல் = சில்லாப்பு (சில்லார்ப்பு); குளிர்தல். சில்லாப்பு, குளிர் என்னும் பொருளில் சீர்காழி வட்டார வழக்காக உள்ளது. குளிர்காய்ச்சல் கண்டவரைத் தொட்டுப் பார்த்து உடல் சில்லிட்டுப் போய்விட்டது என்பது தென்தமிழக வழக்கமாகும். சில்லென்று குளிர்கிறது என்பர். பொன்போலப் பளிச்சிட்டு விளங்கும் சிறு நெருஞ்சிப் பூவைச், சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக்காட்டி னுள்ளே நில்லென்று சொல்லி நிறுத்திவிட்டுப் போனீரே என்பது இரங்கல் வகையால் எழுந்ததொரு சிற்றூர்க் காதலி பாடல். சில்லான் ஓணான் இனத்தில் சிறியதாகிய உயிரியைச் சில்லான் என வழங்குதல் தென்தமிழக வழக்கு. சில் = சிறியது. சில்லு = சிறிய துண்டு; சில்லுண்டி = சிற்றுண்டி. இவையும் வட்டார வழக்காக வழங்கப்படுவனவே. * சில்லாட்டை காண்க. சில்லிகை சில் > சிள். சில்லென்று ஓசையிட்டுப் பறக்கும் ஒரு பறவை சில்லிகை ஆகும். சில்லி, சில்லிகை எனவும் வழங்கப்படும். சில்லித்தாரா என்றும், சீட்டித்தாரா (சீழ்க்கை அடிப்பது) என்றும் கூறுவதுண்டு. சிள் என்ற ஓசையை விடும் ஒருவகைப் பூச்சியைச் சில்லிகை என்பர். சுவர்க்கோழி என்பதும் வழக்கு. சிள் வண்டு என்பதும் அது. சில்லை என்பது நிகண்டு. (சங்க. புள்: 104). சில்லுக்காப் பாதை சிறியதாய ஒற்றையடிப் பாதையைக் கொங்கு நாட்டினர் சில்லுக்காப் பாதை என்பர். சில்லு = சிறிது. கால் பாதை, காப்பாதை ஆயிற்று, காலடி என்பது போல. சில்லை சில் > சில்லை = சிறியது. பழநாளில் பெரிய மாளிகை வீடு நகர் எனப்பட்டது. சிறிய வீடு சில்லை எனப்பட்டது. சில்லைக் குடில் என்பது மிகச் சிறிய குடிசை என்பதாம். சில்லைச் சிறுகுடில் - சிலப். 16: 147 ஓணானினும் சிறிதால் ஓணான் போல் தோன்றுவதாய ஊரும் உயிரி சில்லான் எனவழங்கப் படுதல் அறிக. சில்வாரி சில்வாரி = சின்னத் தனமானவன். சில் என்பது சிறுமைப் பொருளது. வாரி என்பது மானவாரி என்பதில் உள்ளது போன்றது. சின்னத்தனமான வழிகளில் பொருள் தேடிக் காலங்கழிப்பவன் சில்வாரி, சில்லவாரி எனப்படுவான். இதனைச் சல்லவாரி என்பதும் வழக்கு. சல்ல என்பது சள்ளை என்பதன் திரிபாம். பிறர்க்குச் சள்ளை - ஓயாத் தொல்லை தந்து பொருள் தேடுவது சள்ளைவாரித் தன்மையாம். அவன் சில்வாரி, எப்பொழுதும் காலைவாரி விடுவான் என்பது எச்சரிக்கை வழக்கம். சிவப்பு சிவப்பு என்பது வண்ணப் பெயர். இது வெகுளிப் பொருளும் தரும் என்பது தொல்காப்பியம். கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள என்பது அது (855). சி: சிங்கம், சிவந்த நிறத்தது. சிங்கி என்பது தீ; சிவந்த நிறத்தது. சிந்துரம், குங்குமம்; சிவந்தது. சிவ்வெனல் சிவத்தல். சிவல், செந்நிறப் பறவை. சிவல் நிலம், சிவற்காடு. சிவந்த வண்ணம் செவ்வண்ணம் என்றும் சிவப்பு என்றும் வழங்கும். செ: சிவப்பு செவப்பு ஆதல் பெருவழக்கு. செக்கர் வானம். செக்கச் செவேர் செங்கதிர், செங்கழுநீர். செங்கால், செங்கணான், செஞ்சுடர், செந்துறை, செந்தேள், செந்தில், செந்தூர், செம்பு, செம்பொன், செம்மறி, செம்மரம், செம்மை, செம்போந்து, செம்போர்க் காளை, செய்யன், செய்யாள், செவ்வான், செவ்விதழ், செவ்வாய், செவல் நிலம், செவலை. சிவப்பு, செக்கச் செவேர், செவேர் என்றும் சொல்லப்படும். செக்கர் கொள்பொழுது என்பது கலித்தொகை (126). சிவந்த நிலம், சிவந்த நிறப்பறவை, சிவல் எனப்படும். சிவல் என்பது சிச்சிலிப் பறவை. சிவலப் பிள்ளை, சிவலக் காளை என்பவை செவலப்பிள்ளை செவலக் காளை என்றும் சிவல்நிலம் செவல் நிலம் என்றும் மக்களால் வழங்கப்படும். சிவந்த குருதி படிந்த போர்க்களம் செங்களம் ஆம். செங்களம் படக்கொன்று என்பது குறுந்தொகை (1). சிவந்த நிறக் கதிரோன் செங்கதிர், செஞ்சுடர், செஞ்ஞாயிறு என வழங்கும். செங்கதிர்க் கனலி; செஞ்சுடர் கல்சேர; செஞ்ஞாயிற்றுச் செலவும் காண்க. சிவந்த நிலப்பகுதி செஞ்சி; கப்பிய சிவப்பு செங்காவி; சிவந்த மாழை செம்பு, செப்பு; சிவந்த கோள் செவ்வாய்; சிவந்த கல் செங்கல்; செம்மண் ஊர் செங்கி; சிவந்த நிற அரிமா சிங்கம்; சிவந்த நிற முருகன் செவ்வேள்; அவன் வேல் செவ்வேல்; சிவந்த கண்ணுடையவன் செங்கணான், செங்கட்சோழன்; சிவந்த கொண்டையுடைய கோழி சேவல். சிவந்த நிறத்தவன் சேய். சிவந்த நிறமுடைய தேற்றாங் கொட்டை சேங்கொட்டை இவை யெல்லாம் இருவகை வழக்கிலும் உள்ளவை. எரிநிறக்கடவுள் = சிவம். சிவ சிவ மந்திர மொழி. செம்மை என்பது நேர்மை, நடுவு நிலைமை, கட்டமைவு, இனிமை முதலாகிய கருத்துப் பொருள்களையும் தரும். செங்கோடு, செங்கோல், செந்தமிழ், செங்கீரை என்பவை அவை. செங்கீரை என்பது பிள்ளைத் தமிழ்ப் பருவங்களுள் ஒன்று; அது, மழலைச் சொல்லின் இனிமையைக் கூறுவது. கீர் > கீரை = ஒலி. செவ்வை, செவ்விது, செம்மையர், செய்யர் என்பவை தன்மை சார்ந்தவை. செம்மல் செறிவும் செம்மையும் ஆம். செம்பாதி, சரிபாதி; செம்பாகம், நல்ல சுவை. செந்தண்மை அருள்தன்மை. செவ்வியல் = கட்டமைவு. செந்நா = பொய்யுரையா மெய்நா. செந்நாப் போதார் செய்யா கூறிக் கிளத்தல் எய்யா தாகின் றெம்சிறுசெந் நாவே - புறம். 148 செந்தில், செந்தூர், செவல்பட்டி, செவலார் குளம் என்பவை ஊர்ப் பெயர்கள். செந்தூள் = குங்குமம்; செம்புள்ளி குத்துதல் இழிமைப்படுத்தல். சே: சே என்பது சிவப்புப் பொருள் தரல், சேவல் (சிவந்த கொண்டையுடையது) சேல் (செங்கெண்டை) சேது (செம்மீன்) சேயோன் (செவ்வேள்) சேயாறு (சிவந்த நீராறு) சேங்கொட்டை (சிவந்த கொட்டை, தேற்றாங் கொட்டை) சேம்பு, சேப்பு (கிழங்கு) என்பவற்றால் அறியலாம். சே இளமைப் பொருள்தரல், சேங்கன்று என்பதால் விளங்கும். இச் செம்மை, நேர்மை நடுவுநிலைமை என்பவற்றைக் குறித்தது, செங்கோல், செப்பம், செங்குத்து, செங்கோடு, செந்தூக்கு, செந்நா முதலியவாம். சரிபாதி, சரியானது, நிறைவானது என்பதையும் செம்மை குறித்தது, செம்பாதி, செம்மல், செங்கிழக்கு, செந்தேன், செம்புலம். செம்மை மழலை மொழியைக் குறித்தமை, செங்கீரைப் பருவம் (பிள்ளைத்தமிழ்) வழியே அறியலாம். செந்தமிழ், செம்மொழி என்பவற்றால் கட்டமைந்த கவின் என்பது செம்மைப் பொருளதாதல் விளங்கும். செம்பொருள் என்பது மெய்ப்பொருள்; செம்பொருள் சிவம். சிறப்பென்னும் செம்பொருள் காண்ப தறிவு - திருக். 358 சிவப்பு என்பது சிகப்பு என ஆவது ஒலிப்பு வழித்திரிபாகும். செவ்விதன்றாம். இனிச்சிவப்பு வெகுளிப் பொருளாதல், சினந்தார் கண் சிவந்துவிடல் கண்கூடு. செங்குருதி கொப்பளிக்கச் சினக்கும் தோற்றச் சிவப்பு, சிறப்பு அன்றாம். ஏனெனில், சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லியை அருள் கனிந்த கண்ணில் கொண்டிருக்க வேண்டாவே! பொதுநலம் நாடிய போரும் கூடக், கொலையில் கொடியாரை ஒறுத்தற்கு மட்டும் கொள்ளற்பாலது என்பது இன்னா செய்யாமை கூறிய வள்ளுவர் இசைவு வழியாம் (550). சிவப்புக் கொடி காட்டல் சிவப்புக் கொடி காட்டல் = தடுத்தல். சிவப்புக் கொடி காட்டினால் தொடர்வண்டி நிற்க வேண்டும் என்பது பொருள். ஆதலால், சிவப்பு தடைப் படுத்தத்திற்குச் சான்றாயிற்று. எப்பொழுது சிவப்புக் கொடி மாறிப் பச்சைக் கொடி காட்டுவார்களோ? தெரியவில்லை. அது வரையிலும் திருமணப் பேச்சை எடுக்க முடியாது எனத் தவிக்கின்றனர் பலர். சிவப்பு தடையாவது. எங்கெங்கும் விளம்பரப் பொருளாகி விட்டது. சிவப்பு முக்கோணம் இல்லாத ஓரிடம் உண்டா? இரண்டுக்கு மேல் வேண்டா என்பதும் வேண்டாததாய், ஒன்றே போதும் என்றன்றோ விளம்பரப் படுகிறது. ஆயினும் குறைக்க முடிகிறதா? நினைப்பவர் மனமே கோயில் என்பது சிவப்புக்கும்தான். சிவல் சிவப்பு நிறமுடைய சிறிய பறவை சிவல். சிவல், சிவலை என்பவை சிவந்த நிறத்தவை என்னும் பொருளன. சிவல்போர் கடுமையாக இருத்தலால் அப்போருக்காகப் பயிற்சி தந்து வளர்க்கும் வழக்கம் போர் வீரர்களிடம் இருந்தது. எ-டு: சிவல் வென்றி (பு.பொ.வெ. 542) சிவனி செவப்பு, சிவப்பு, சிகப்பு என்பவை செம்மையடிச் சொற்கள். சிவனி என்பது சிவன் என்பது போலச் சிவந்த வண்ணம் குறிப்பதே. விளவங்கோடு வட்டார வழக்கில், சிவனி என்பது சிவப்பு எறும்பைக் குறித்து வழங்குகின்றது. செவ்வெறும்பு முயிறு என்பவை அவை. சிவிகை சிவிகை என்பது ஒரு காலத்தில் துறவோர் ஊர்தியாக இருந்ததுண்டு. பல்லக்கு தண்டியல் என்பனவும் அதன் வகைகளே. வளைந்த நெடுங்கம்பு மேன்முகடாகக் கீழ்ப்பலகைப் பரப்புப் பெட்டியமைப்பு இருப்பாகக் கொண்டது சிவிகை யாகும். செல்வர்களும் தம் போக்குவரவுக்குப் பயன்படுத்திய வழக்கமும் உண்டு. சிவிகை பொறுத்தலையும் (சுமத்தலையும்) ஊர்தலையும் (இருந்து செல்லுதலையும்) திருவள்ளுவர் காட்சியளவால் காட்டுகின்றார். சிவ் - சிவி - சிவிகை என வளைவு வழிப்பட்ட கலைச்சொல் சிவிகை. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடை - திருக். 37 * சிவியார் காண்க. சிவியார் சிவிகை பொறுப்பாரும் (சுமப்பாரும்) இருப்பாரும் வள்ளுவர் நாளில் இருந்து அண்மைக் காலம் வரை இருந்தனர். அச் சிவிகை தாங்குவாரைச் சிவிகையார் என்பது யாழ்ப்பாண வழக்கு. வளைதலைச் சிவ்வென வளைதல் என்பது மக்கள் வழக்கு. சிவ்வென மூங்கில் வளைதல் காணலாம். அதனால், வளைக்க வளையும் வேய் என்பர். கூரைவீட்டு வளையாகவும் அதனைப் பயன்படுத்தினர். அவ்வளை கொண்டு ஆக்கப்பட்ட ஊர்தியே சிவிகை எனப்பட்டதாம். சிவிறி சிவிறி = விசிறி. சிவிறி என்பது எழுத்து முன்பின் மாறி விசிறி என வழங்குகின்றது. எழுத்து மாறி நின்றாலும் பொருள் மாறாமல் விளங்குகின்றது. தசை என்பது சதை என மாறிப் பொருள் மாறாமை போல்வது அது. அயர்வுற்று முரசு கட்டிலில் படுத்துவிட்ட மோசிகீரனார்க்குச் சேரலாதன் கவரி வீசினான் என்பது விசுறுதல் வீசுதல் ஆகிவிட்டதுணரலாம் (புறம். 50). கவரி என்பதுதான் என்ன? சவரியாகி விடவில்லையா? சிவீர் சிவீர், செவீர், செக்கச் செவீர் என்பனவெல்லாம் சிவப்பு வழிப்பட்ட சொற்கள். உன் முகம் என்ன சிவீர் என்று சிவந்திருக்கிறது? என்பது வழக்கு. சிவீர் என்பது மதுரை முகவை, நெல்லை வழக்கில் உள்ளது. சிவப்பு என்னும் பொருளது. வானம் சிவீர் என இருக்கிறது என்பர். சிள்வீடு சிள் = ஒலிக்குறிப்பு. சிள் என ஒலிக்கும் உயிரி சிள்வீடு எனப்பட்டது. விடுதல் வீடு. இவண் ஒலிவிடுதல். ஓயா ஒலியுடையது அது. வண்டின் வகையுள் ஒன்று. சிறகர் சிறகுடைய பறவை. சிறகி என்பதொரு பறவையின் சிறப்புப் பெயர். சிறகு போலும் செதிலுடைய ஒரு வகை மீன் சிறகி ஆகும். சிறகு + அர் = சிறகர். சிறகு = பக்கம். ஒரு சிறகர் = ஒருபக்கம். சிறகு சிறகு, சிறை என்பவை பக்கம் என்னும் பொருளும் தருவன. அஃது இடப்பொருளது. அது சினைப் பெயராகவும் இருப்பதே பறவைச் சிறகுகள். கட்டை வண்டிகளில் பட்டடைப் பலகை அல்லது பட்டடைச் சட்டம் என்பதோர் உறுப்பு உண்டு. அது, அச்சு தெப்பக்கட்டை ஆகியவற்றின்மேல் அகன்று நீண்ட பலகைப் பரப்பு. அதன் இருபக்கச் சட்டங்களையும் சிறகு என்பது உழவர் வழக்காகும். சிறக்கணித்தல் சிறகு தட்டிப் பறக்கும் பறவை போல் கண்ணிமை கொட்டி வளைத்து நோக்கல் சிறக்கணித்தல் என்பதாம். மக்கள் வழக்கில் எளிமையாக வழங்கும் சொல் கண்ணடித்தல் என்பது. காதல் குறி இது. குறிக்கொண்டு நோக்காமை யல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் - திருக். 1095 சிறப்பு சிறப்பு:1 சிறப்பு என்பது புகழ்; அது பொதுப் பொருள். சிறப்பு என்பது திருமுழுக்காட்டு என்னும் பொருளில் செட்டிநாட்டு வட்டார வழக்காக உள்ளது. சிறப்பு விருந்து என்றும், சிறந்த அக்கறையான வேலை என்றும் பொருள் தருதல் உண்டு. அதுவும் பொதுவழக்கே. பொதுநாள், திருநாள் அல்லது கடிநாள் (விழாநாள்) என்னும் கருத்து பண்டே உண்டு. சிறப்பு:2 சிறப்புடைய பொருளில் அழகும் உண்மையால் அழகு சிறப்பு எனப் பெற்றதாம். அழகையும் புகழையும் தன்னகத்து அகப்படுத்திக் கொள்வது யாது? அஃது சிறைப்பாகிச் சிறப்பும் ஆயதாம். இறைப்பு, இறப்பு நோக்குக. ஏட்டைக் கட்டி இறைப்பிலே (இறப்பிலே) வை என்பது பழமொழி. ஐகாரம் அகரமாதல் மொழியியல். சிறப்பென்னும் செம்பொருள் செம்பொருளாவது மெய்ப்பொருள். திருக்குறள் மெய் யுணர்தல் அதிகாரத்தில் வரும் இவ்வாட்சியால் இப்பொருள் விளக்கமாம். செம்பொருள் காண்பது அறிவு (திருக். 358) எனலால் மற்றை அறிவினும் இது வேறாதல் புலப்படும். தொடுதல் உணர்வு மெய்யுணர்வு. அதுபோல் வாயுணர்வு, செவியுணர்வு, கண்ணுணர்வு, மூக்குணர்வு என்பனவும் உண்டு. மனவுணர்வாம் ஆறாம் அறிவும் உண்டே. . இவற்றின் நிலையை, ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு - திருக். 354 என்பதால் வள்ளுவர் தெளியச் செய்கிறார். மெய்யுணர்வு மேன்மையையும் குறிப்பிடுகிறார். ஐயுணர்வும் ஐயம் அற்றுத் தெளிவு பெற்றுவிட்டவர் உளராயின் அவர்க்கு, மண்ணுலகினும் விண்ணுலகம் மிக நெருங்கியதாகப் புலப்படும் என்றார் திருவள்ளுவர் (353). மெய்யுணர்வு ஆறறிவினும் மேம்பட்ட அறிவேயாம். ஆயினும் அதன் தோற்றம் மெய் என்பதில் இருந்தே உண்டாகின்றது. மெய்யாவது உடல். அதற்குத் தன் இயக்கம் இல்லை. உயிர் இயக்குவதே இயக்கமாகும். உயிர் கண்ணுக்குத் தெரிவதோ எனின் இல்லை! அதன் இயக்கம் புலப்படுவதோ எனின் தனியே புலப்பட்டது இல்லை. உடலசைவு - இயக்கம் - செயல் என்பவை கொண்டே உயிரின் இயக்கம் புலப்படுகின்றது. ஆதலால் மெய்யே உயிர் உண்மை. இயங்குதல், இல்லாமை முதலியவற்றை மெய்ப்பிக்க உதவுகின்றது. மெய்தொட்டே அறிவு வளர்நிலை பெறுகின்றது. ஓர் உயிர் வாழ்ந்த நாளில் செய்தது எவையெவை என்பவற்றை மெய்ப்பிக்கும் சான்றாக மெய்யே விளங்குதலால் அதன் வழியாகப் பிறந்தது மெய்ம்மை என்னும் பொருள் பொதிந்த சொல்லாம். மெய் எனப்படும் உடல் அழிந்தாலும், அம்மெய்யில் உயிர் நின்ற காலத்தில் செய்யப்பட்ட வசை இசை ஆகியவையே அம்மெய்யில் நின்ற உயிரின் மதிப்பீடு ஆகிவிடுவதால் மெய்யே மதிப்பீடு ஆகிவிடுகின்றதாம். இனி மெய் பற்றிய ஆய்வும்தான் எத்தகைய மேம்பாட்டுக்கு உரியது. புறம்பு நிற்பதும் காற்றே; உட்புகுந்ததும் காற்றே. அக்காற்றின் இயக்கம் எத்தகைய அருமையது. அக்காற்று புறக்காற்றுப் போல்வதா? அசைக்க ஆட்ட அலைக்க மட்டும் செய்வதா? ஒவ்வொரு துடிப்பும் - நாடி நரம்புத் துடிப்பும் - அதனால் அல்லவோ நிகழ்கின்றன. குருதி கால்பல கொண்டு உடலாகிய நிலத்துப் பாய்ந்து பரவுதற்கு அக்காற்று இயக்கம் இன்றி இயலுமா? அமுதக்காற்று உட்சென்று நஞ்சை எடுத்துக் கொண்டு வெளிப்படும் அருமை அளவிட்டு உரைக்க ஆவதா? இயவுள் என்பது உலகை இயக்கும் ஆற்றல். உயிர் என்பது உடலை இயக்கும் ஆற்றல். அவ்வுயிரியக்கம் உடல் பழுதுற்றால் தானும் பழுதுற்றுப் போம். அவ்வுயிரியக்க நிலையை அறிந்து உடலை உயிரியக்க இயவுளாகக் கொண்டு பேணி, அஃதுள்ள காலத்து அறிவறிந்த செயற்பாடுகளைத் தவறாமல் செய்து என்றும் அழியாத பேரா இயற்கையைப் பெறுவதே செம்பொருள் ஆகும். அதனையே, பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்ப தறிவு - திருக். 358 என்றது வள்ளுவம். சிறார் சிறுவர் > சிறார். சிறுமகார் > சிறாஅர் என்பதுமாம். எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப புலவர் தோழ - குறுந். 129 சிறுவன் > சிறான் ஆம். இதன் பெண்பால் சிறுமி. சிறியர் சிறுதன்மையர் சிறியர். செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர் செயற்கரிய செய்கலா தார் - திருக். 26 சிறுவர் சிறுவயதினர்; சிறியர் சிறு செயலினர். இரண்டும் வேறு வேறு பொருளன. சீச்சீ சிறியர் செய்கை செய்தான் - பாரதி. பாஞ்சாலி. சிறுகாப்பியம் பெருங்காப்பிய உறுப்புகளில் சில குறைந்து வரினும், அறம் முதல் நான்கு பொருள்களில் குறைந்து வரினும் அது சிறுகாப்பியம் என்று கூறப்படும். காப்பிய நெறியில் சில குறைந்து வருமாயினும் காப்பியமே என்றும், அற முதல் நான்கு பொருள்களில் குறைவுபட்டு வருவதே சிறுகாப்பியம் என்றும் கூறுவார் தண்டியாசிரியர். அறமுதல் நான்கினும் குறைபா டுடையது காப்பிய மென்று கருதப் படுமே - தண்டி. 10 * காப்பியம் காண்க. சிறுகாலை வைகறைப் பொழுது. பிச்ச தேவர்க்குச் சிறுகாலைக்குப் போனகம் பழவரிசி இருநாழியும் (தெ. க. 2. 2. 35) சிற்றஞ் சிறுகாலை - நாச்சி. திரு. சிறுகால் சிறுகால் = தென்றற் காற்று. மென்கால், இளங்கால் என்பனவும் இது. தென்னன் தமிழின் உடன்பிறந்த சிறுகால் அரும்ப- மீனாட்.பிள். இளங்கால் குறிச்சி என்பது ஓர் ஊர்ப்பெயர். சிறுக்கன் சிறுக்கன் = சிறிய வயதினன். சிறுக்கி எனப்பெறும் வழக்கு மக்களிடம் உண்டு. அதுவசைப் பொருளாக வழங்குவது. சிறுக்கன் என ஆண்பாற்குக் கூறுகிறது. மாச்சோறு தின்ற சிறுக்கன் அதன்கண் வீழ்ந்த தூளியினைத் தின்றான் (வீரசோ. உரை 41, பெருந்தே.). சிறுசொல் சிறுமைப்படுத்தும் சொல் அல்லது பழிச்சொல். சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தர் - புறம். 72 பொருள்: புல்லிய வார்த்தைகளைக் கூறிய சினம் பொருந்திய வேந்தர் ப.உ. சிறுசோறு குழந்தையர் வீடு கட்டி விளையாடுதலில் சோறாக்கி விருந்து படைத்தல் போல்வதாம் ஒரு விளையாட்டு. இயல்பாக வழங்கும் சோறு சிறுசோறுமாம். போர்க்குச் செல்லுங்கால் வீரர்க்கு வழங்கும் சோறு பெருஞ்சோறு எனப்படும். பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் - பெயர். சிறு சோற்றானும் என்பது (புறம். 235) குறைந்த அளவினது என்னும் பொருளது. சிறுபதம் என்பதும் இது. சிறுபதம், தண்ணீர் என்பதுமாம். கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்- புறம். 74 பொருள்: கேளல்லாத கேளிருடைய உபகாரத்தால் வந்த தண்ணீர் ப.உ. சிறுதூக்கம் சிறுதூக்கம்:1 தூக்கம் = தூங்கும் (தொங்கும்) மணிமாலை. திருப்பட்டிகை முகம் ஒன்றிச் சவியினுள்ளால் சிறுதூக்கம் மூன்றே நாலித் தலையில் விடக்குடையன் எட்டில் கட்டின பொத்தி எட்டும் க.க.அ. சிறுதூக்கம்:2 பகலில் சிறிது பொழுது உறங்கும் உறக்கம். அமர்ந்தும் சாய்ந்தும் உறங்குவது (ம.வ.). குட்டித் தூக்கம் என்பதும் அது. சிறுத்தை சிறுத்தது சிறுத்தை; பெரும்புலி அல்லாத சிறுபுலி, சிறுத்தை என்றும் சிறுத்தைப்புலி என்றும் வழங்கப்படுகிறது. விடுதலைச் சிறுத்தை என்பதோர் இயக்கம் தமிழகத்து ஏற்பட்டுள்ளது. ஈழப் போராளிகள் புலி என்றது கொண்டு இட்ட பெயராகலாம். சிறுநீர் சிறிதளவாக நீர் வாய் வழி வெளிப்படு நீர். குடித்த அளவு நீர், உண்ட உணவு வழிநீர் ஆயவற்றின் அளவில் சிறியது (குறைந்தது) ஆதலால் சிறுநீர் எனப்பட்டது. இடக்கரடக்கு, ஒன்றுக்கு. * நீரல்நீர் காண்க. சிறுபறை தோற்கருவி வகைகளுள் ஒன்று சிறுபறை. அதற்கு நேர் பெரியது பெரும்பறை. பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் பத்தில் சிறுபறைப் பருவம் என்பதும் ஒன்று. சிறுபாடு இது சிறுவாடு எனவும் வழங்கும். சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த மகளிர் தேட்டு சிறுவாடு எனப்படுதல் நெல்லை, முகவை வழக்காகும். பாடு என்பது உழைப்பு. பெரும்பாடு, அரும்பாடு என்பவற்றில் பாடு வருதல் நோக்குக. பாடுபடுதல் என்பதையும் எண்ணலாம். சிறுதனம், சீதனம், சீர்தனம் என்பதும் உண்டு. கல்வெட்டுகளில் சிறுதனம் என அலுவல் பதவிப் பெயரும் உண்டு. உடையார் ரீ ராஜதேவர் சிறுதனத்தும் பெருந்தரம் கோவன் அண்ணாமலையான கேரளாந்தக விழுப்பரையன் தெ.இ.க. 2:2:47 சிறுபுறம் சிறுபுறம்:1 புறம் = முதுகு; சிறுபுறம் = முதுகளவில் சிறியதாம். பின்கழுத்து. சிறுபிடர் என்பதும் அது. சிறுபுறம் மறைத்து அழகுற அணிந்து - சிலப். 6: 106 அடியார்க். சிறுபுறம்:2 தக்கார் வாழ்வுக்குத் தக்கவாறு அரசு வழங்கும் கொடை சிறுபுறம் எனப்படும். வரியிலி அல்லது இறையிலி அது. சிறுபுறமென நூறாயிரம் காணம் கொடுத்து - பதிற். பதி. 7 சிறுபுறம் = சிறுகொடை; அறப்புறம் என்புழிப் போல (சீவக. 76 உ.வே.சா. அடிக்குறிப்பு) சிறுபேராளர் சிறிய வயதிலேயே பெருமைக்குரிய அல்லது பெரியவர் தமக்குரிய தன்மை அறிவு செயல்வீறு உடையாரைச் சிறுபேராளர் என்பர். * சிறுமுதுக் குறைவி காண்க. சிறுமுதுக்குறைவி சிறு + முதுக்கு + உறைவி = சிறுமுதுக்குறைவி. சிறிய வயதிலேயே பேரறிவும் பெருங்குணமும் பெருந்தகைச் செயலும் உடையவள் சிறுமுதுக்குறைவியாம். கண்ணகியார் சிறுமுதுக்குறைவி எனப்பாராட்டப் பட்டார் (சிலப். 16:68). சிறுமேதாவியார்: கடைச்சங்க மிருந்தாருள் ஒருவர் சிறுமேதாவியார் (சிலப். உரைப்பாயிரம்.) சிறுப்பெரியார் என்பார் நம்மாழ்வார். இளம்பூரணர், இளமையிலேயே முழுதறிவு பெற்றவர்; தொல்காப்பிய முதல் உரையாசிரியர். ஆதலால் உரையாசிரியர் எனப்படுவார் அவர். சிறுமுறி சிறுமுறி = பற்றுச் சீட்டு. நெல்லைப் பெற்றுக் கொண்டமைக்கு நில உரிமையாளர் பயிரிட்டு நெல்லளப்பாரிடம் கொடுக்கும் பற்றுச்சீட்டு. மக்கட் சேவகர் கொண்டு சிறுமுறி எடுத்துத் தேவை செய்விக்கவும் க.க.சொ.அ. சிறுமை பெருமைக்கு மாறாம் சிறுமைத் தன்மை சிறுமை. பண்புத் தொகை இது. செம்மை சிறுமை சேய்மை தீமை - நன். 135 சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன் - சிலப். 16:68 பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை அணியுமாம் தன்னை வியந்து - திருக். 978 சிறுவன், சிறியன் சிறுவன் என்பது அகவையால் இளமையானவன் என்னும் பொருளது. சின்னத் தனமானவன், சிறு செயல் செய்பவன் என்னும் பொருளது சிறியன் என்பது. சிறுவன் என்பதற்குப் பெண்பால் சிறுமி. செந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர்க்கு இந்த நூல் உரியது என்று மலரும் மாலையும் என்னும் தம் நூலைப் படையலாக்கினார் கவிமணி. ஆயிரங்களான நீதி யவை உணர்ந்த தருமன் சூதாடியதால் சீச்சீ சிறியர் செய்கை செய்தான் என ஏசப்பட்டான் பாரதியாரால். சிறுவன், சிறியன் என்பவை இருவேறு பொருளன. பொருளறிந்தே சிறுவன், சிறியன் என்பவற்றைப் பயன்படுத்த வேண்டும். அகவை இளமை கருதியது சிறுவன். செய்கைச் சிறுமை கருதியது சிறியன். இவனுக்கு அகவைக் கட்டு இல்லை. அதனால்தான், செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர் செயற்கரிய செய்கலா தார் என்றார் திருவள்ளுவர் (26). சிறுவெண் காக்கை நீர்க்கோழி போல நீர்நிலைகளில் மீன்பிடித்து உண்டு, நீர்சார் குறுந்தூறு, மரங்களில் வாழ்வது. காக்கை போல் கரிய நிறத்ததே எனினும் கழுத்தின் கீழ்ப்பகுதி மட்டும் சற்றே வெளுத்திருப்பதால் சிறுவெண் காக்கை எனப்பட்டதாம். மலையகம் சுமத்திரை சாவகம் ஆகிய நாடுகளிலும் வாழ்வது இது. கார் காலத்து இவண் வாழும் இப்பறவை, அது முடிந்ததும் அயலிடம் சென்று, மீண்டும் கார் காலத்து வந்துவிடும். குறுகக் குறுகப் பறந்து குறுமரங்களிலேயே ஓய்ந்து தங்கியிருக்கும், இவை தேவைப்படும் போது நாடுவிட்டு நாடும் போவது எண்ணத் தக்கதாம்! தேவைப்படும் போது, சோம்பனுக்குப் பிறர்க்கு வாராச் சுறுசுறுப்பு வந்து விடுகிறதே! நீரில் மூழ்கும் போது தலையும் வாலின் ஒரு பகுதியும் மட்டுமே வெளியே தெரியும். நீர்க்குள் நெடிது மூழ்கி யிருக்க வல்லது. மீனைப் பிடித்ததும் மேலே வந்து அண்ணாந்த நிலையில் வாயை அசைத்து அசைத்துத் தின்னும். வலசை போய் வேட்டையாட வல்லது இக்காக்கை. நீர்நிறைந்த நீர்நிலையில் மீனும் குறைந்திருந்தால் அவை தப்பிவிடாமல் இருக்க வரிசைபிடித்துச் சென்று மீன்களை ஓரிடத்துக் கூட்டிக் கூட்டாக வேட்டையாடி யுண்பன அவை. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை என்னும் அடி, பத்துப்பாடல்களிலும் முதலாம் அடியாக வருவது ஐங்குறு (2:7). கருங்கோட்டுப் புன்னைத் தங்கும் நீத்துநீர் இருங்கழி இரைதேர்ந்துண்டு பூக்கமழ் பொதும்பர்ச் சேக்கும் இருங்கழித் துவலை ஒலியில் துஞ்சும் இருங்கழி மருங்கின் அயிரை ஆரும் அறுகழிச் சிறுமீன் ஆரமாந்தும் வரிவெண் தாலி வலைசெத்து வெரூஉம் இருங்கழி இனக்கெடிறு ஆரும் துறைபடி அம்பி அகமணை ஈனும் பொன்னிணர் ஞாழல் முனையிற் பொதியவிழ் புன்னையம் பூஞ்சினைச் சேக்கும் இருங்கழி நெய்தல் சிதைக்கும் சிறை சிறை:1 சிறை = சிறகு. பறவை கோழி ஆயவற்றின் இருபாலும் அமைந்து பறக்க உதவும் இறகுத் தொகுதி. சிறை:2 பருந்தின் பற்றுதலில் இருந்து குஞ்சைப் பாதுகாக்கச் சிறகுள் ஒடுக்கும் கோழி போல் பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்ட அறச்சாலை, சிறை. தீயோர் அழிவு செய்யாமலும், தீயோரைப் பிறர் அழித்துவிடாமலும் காக்க அமைந்த அரண் சிறை. சிறை:3 கற்சிறை. ஓடும் நீரைத் தேக்கிக் காக்க அமைக்கப்பட்ட அணைக்கட்டு; கல்லால் கட்டப்பட்டு நீரைப் போகவிடாமல் தேக்கிக் காத்தலால் கற்சிறை. கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமை - தொல். 1009 எ-டு: கல்லணை. சிறைவான் புனல் தில்லை - திருக்கோ. 1 சிறை:4 சிறை = அழகு. சிறை என்பது சிறைச்சாலைப் பொருளது அன்று. அடக்கி வைப்பது எல்லாம் சிறை எனப்படும். அவ்வகையில் பழங்கால அரண்மனைகளின் உட்பகுதியாம் அந்தப்புரம் சிறை எனப்பட்டது. வேற்று நாட்டு மகளிரைப் பற்றிக் கொண்டு வந்தும் சிறைப்படுத்தினர். அவர்கள் தங்கல் வேளம் எனப்பட்டது. வேளகம் (விருப்பமிக்க இடம்) என்பதே வேளம் ஆயிற்றாம். அந்தப்புரம் வேளகம் ஆகியவற்றில் இருந்த மகளிர் அழகு மிக்கவராக இருந்தமையால் அழகிய பெண்களைச் சிறை என்பதும் வழக்காயிற்று. அவள் பெரிய சிறை; அவளைத் தேடி ஆளுக்கு ஆள் போட்டி போடுவார்கள் என்பதில் சிறை அழகிய பெண் எனப்பொருள் தருதல் அறியலாம். அழகைத் தன்னகத்துச் சிறைப்படுத்திக் கொண்டவள் சிறை எனப்பட்டாள் என்பதுமாம். சிற்றில் சிறு + இல் = சிற்றில். சிற்றில் நற்றூண் பற்றி - புறம். 86 பேரில் என்பதன் எதிர்நிலை சிற்றில். பேரில் கிழத்தி (அகம். 86). இடப்பரப்பு, உயரம் முதலியவற்றில் சிற்றளவு கொண்ட வீடு. சிற்றில் சில்லைச் சிறுகுடில் எனப்படும். சிலம்பு (16:147) சில்லக்குடி என்பது, கல்லக்குடி - முதுகுன்றத் தொடரி வழி நிலையங்களுள் ஒன்று. சில்லான், ஓணான் வகையில் சிறியது. சிறிய ஊற்று = சிற்றூற்று. சிறிய அன்னை = சிற்றன்னை. சிற்றப்பா முறைப்பெயர். சிற்றரசு, குறுநில அரசும், சின்னராசு என்பாரின் தமிழாக்கப் பெயருமாம். சிற்றின்ப மாலை தலைவன் கனவின்கண் ஒருத்தியைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து இன்புற்றதைத் தன் உயிர்த்தோழனிடம் உரைத்ததாக நேரிசைக் கலிவெண்பாவால் கூறுதல் சிற்றின்ப மாலை. அநுராக மாலை என்பதும் அது (வ). தொன். 283 உரை. கனவில் ஒருத்தியைக் கண்டுகேட் டுண்டுயிர்த் தினிமை யுறப்புணர்ந் ததைத்தன் இன்னுயிர்ப் பாங்கற்குத் தலைமகன் பகர்ந்த தாக நேரிசைக் கலிவெண் பாவான் நிகழ்த்துதல் அநுராக மாலையாம் ஆயுங் காலே - மு.வீ. 1048 சினம் சின் > சினம். சிறிதாகத் தோன்றிப் பெருந்தீமை செய்வது. சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி - திருக். 306 ஆறுவது சினம் - ஆத்தி. சினை சின் > சினை. சிறிதாகத் தோன்றிப் பெரிதாக வளர்வது. சினை:1 மரக்கிளை. மரத்தின் உறுப்பு. சினை அலர் வேம்பன் (சிலப். 16:149) சினை:2 உடல் உறுப்பு. சினை ஆகுபெயர் சினை:3 கருவுறல்; மாடு சினைப்பட்டுள்ளது ம.வ. சினை:4 மூங்கில்; ஒன்று பலவாய்ப் பணைத்து வருவது. சினைத்தல் சினைத்தல், மேலெழுதல் என்னும் பொருளில் இலக்கிய வழக்குச் சொல்லாகும். அது, சீர்காழி வட்டாரத்தில் முட்டையிடுதல் என்னும் பொருளில் வழங்குகின்றது. சினை = முட்டை; சினையாகு பெயர், ஆகுபெயர் வகைகளுள் ஒன்று. அறுசில் கால அஞ்சிறைத் தும்பி நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும் - ஐங். 20 சினையிட்டிலி கருவுற்றார்க்குப் பயறு வகையொடு செய்து தரப்படும் இட்டிலி (இட்டவி)யைச் சினையிட்டிலி என்பது முகவை, நெல்லை வட்டார வழக்கென அறிய வருகின்றது. பொது வழக்காகாமல் குறித்த இட - இன - வழக்காக இருக்கலாம். சின்னது நணியது சின்னது = இடைப்படக் குறுகுறு நடக்கும் சிறுகுழந்தை. நணியது = பிறந்து அணியதாம் குழந்தை. ‘சின்னது நணியது எல்லாரும் நலமா? என உற்றார் உறவினர் வினவுவர். நண்ணுதல் = நெருக்கம், அண்மை. நண்ணுதலை யுடையது நணியது ஆயிற்றாம். நணியது புனிறு என வருதல் இலக்கிய வழக்கு. நணியது என்பதன் நெருக்கத்தைக் குறுநணி காண்குவதாக என்னும் புறநானூற்று அடி கூறும் (209). சின்ன பின்னம் (சின்னம் பின்னம்) சின்ன பின்னம்:1 சின்னம் = தனிமைப் படுத்துதல். பின்னம் = சிதைவு படுத்துதல். போர்க் களத்தின் நிகழ்வாகச் சின்னா பின்னம் என்பது வழங்கும். போரில் புகுந்து ஒருவனை வீழ்த்த வேண்டும் எனின், அவனை முதற்கண் மற்றை வீரர்களிடத்திருந்து தனிமைப் படுத்துதலும், பின்னர்த் தனிமைப் படுத்தப்பட்ட அவனை உறுப்பறுத்தல் முதலியவற்றால் சிதைத்தலும் வழக்கம். அவற்றுள் சின்னம் தனிமைப் படுத்துதல் பொருளதாம். தனிச் சொல்லைச் சின்னம் என்பார் தொல்காப்பியர். பின்னமாவது முழுமையைக் குறைத்த குறையாம். பின்னக் கணக்கால் பின்னப் பொருள் அறிக. சின்னபின்னம் செய்து என் சினத்தைத் தீர்வனேல் - கம். அயே. 988 சின்ன பின்னம்:2 சின்னம் = ஊதுகொம்பு பிடித்துச் செல்லும் முன்னிலை. பின்னம் = பின்னிற்கும் நிலை. போரில் சின்னம் முற்படுதல் வழக்காறு. வீரர் பின்னே செல்வர். வலிமையிலாப் படைவீரர் தோல்வி காணுமிடத்துப் புறமுதுகிட்டுத் தப்பியோடுவதும் உண்டு. அப்போது சின்னம் பிடித்தவர் பிற்பட வீரர் முற்பட ஓடித் தப்புவதைச் சின்ன பின்னம் என்பதும் வழக்கே. அவ்வாறு செய்தலைச் சின்னா பின்னப் படுத்துதல் என்பதும் தக்கதே. சின்னப்பூ சின்னம் = அடையாளம். அரசனது சின்னங்களை விரித்துக் கூறுவது சின்னப்பூ ஆகும். நேரிசை வெண்பாவால் அரசனது சின்னங்கள் ஆகிய பத்தங்கத்தினைச் சிறப்பித்து நூறு, தொண்ணூறு எழுபது, ஐம்பது, முப்பது என்னும் தொகை வரப் பாடப் பெறுவது அது. பத்தங்கங்கள் மலை, ஆறு, நாடு, ஊர், பரி, களிறு, கொடி, முரசு, தார், பெயர் என்பன. மிக்க நேரிசை வெண்பா அதனால் தக்க தசாங்கந் தன்னை நூறு தொண்ணூ றெழுப தைம்பது முப்பஃ தெண்ணிப் பாடிற் சின்னப் பூவே - இலக். பாட். 86 நேரிசை வெண்பாவின் முற்பாதியில் சின்னத்தின் செய்தியும், பிற்பாதியில் பாட்டுடைத் தலைவன் இயற் பெயரும் வைத்து இணைத்துப் பாடப் பெறும். மலையும் ஆறும் நாடும் ஊரும் பரியும் களிறும் கொடியும் முரசும் தாரும் பெயரும் எனத்தெரி பத்தும் சொல்லும் எல்லையின் முதற்குறட் கண்ணே சின்னத் தொழிலை மன்ன வைத்துப் பின்னர்க் குறளுட் பாட்டுடைத் தலைவர் இயற்பெயர் வைத்தவர்க் குரிமை தோன்றும் செயல்பெற வைப்பது சின்னம் அதுவே ஆதிப் பாவின் அதனினம் வருமே - பன்னிரு. 239 அமரர்க்கும் அரசர்க்குமே சின்னப்பூ பாடுதல் உரித்து என்பர். உரைத்த தசாங்க மாவன பத்தாக நிரைத்து வருவது நேரிசை வெண்பா அமரரைச் செங்கோல் வேந்தரைச் செப்புதல் சின்னப்பூவாம்; ஏனை யோர்க்குத் தசாங்கமல் லாதன என்ப இயல்புணர்ந் தோரே - நவநீத. 40 மேற். சின்ன மாலை மயக்க வடிவஞ்சி யானணி சிறக்க வியத்தல் மிளிர்சின்ன மாலை - பிர. திரட். 27 என்பது இதன் இலக்கணம். தளை மயக்கமடைந்த அடிகளையுடைய வஞ்சிப் பாவால் அழகு நலம் சிறக்குமாறு வியப்பு விளங்கக் கூறுதல் சின்ன மாலை எனப்படும் என்பதாம். சின்னமாவது அழகு. அணி சிறக்க வியத்தல் என்பதால், நலம்புனைந் துரைத்தல் என்பது கொள்ளப் பெறும். எப்பொருள் பற்றியும் கூறலாம். எனினும் மயக்க வடிவஞ்சி என்பதால் மயக்கத் தக்க வடிவழகமைந்த மங்கை ஒருத்தியை நயஞ் சிறக்க வியந்துரைத்தல் என இரட்டுறலாலும், குறிப்பாலும் கொள்ளலாம். சின்னம் பேசல் சின்னத் தனமாக என்றும் சிறுதனமாக என்றும் வழங்கும் பொது வழக்கு, செட்டிநாட்டுப் பகுதியில் சின்னம் பேசல் என்று வழங்குகின்றது. சின்னம் பட வருத்தம் செய்தாலும் தன்னியல் மாறாதவை பல. பொன்னும் கரும்பும் புகழ்பாலும் சந்தனமும் சின்னம் படவருத்தம் செய்தாலும் - முன்னிருந்த நற்குணமே தோன்றும் நலிந்தாலும் உத்தமர்பால் நற்குணமே தோன்றும் நயந்து - நீ.வெ. 64 சின்ன வீட்டுப் பொழுது திருச்செங்கோடு வட்டாரத்தில் மாலைப் பொழுதைச் சின்னவீட்டுப் பொழுது என்பது வழக்காம். அது குழுவழக்காக இருந்து பின் வட்டார வழக்கு ஆகியிருக்க வேண்டும். சின்ன வீடு என்பது பொருள் வெளிப்படை. சின்னீர் சில் > சின் + நீர் = சிறிதளவு நீர். சிலச்சில துளியளவாகிய நீர், சின்னீர். கூவலின் உயிர்த்த சின்னீர் - கம். ஆர. 729 கூவல் = கிணறு. * சிறுநீர் காண்க.  சீ வரிசைச் சொற்கள் சீ சகர ஈகாரம். நெடில். வெறுப்புக் குறி. சீத்தல் = அழித்தல். சீவு. சீழ். சீக்கும் நீக்கும், அழிக்கும், துடைக்கும். சீய்க்கும் > சீக்கும். பாய்திரைப் பரவை ஞாலம் படர்இருள் சீக்கும் பண்பின் ஆய்கதிர்க் கடவுள் - கம். கிட். 998 பாயிருள் சீய்க்கும் தெய்வப் பரிதி - கம். உயுத். 607 சீட்டுக்கவி இன்னார் விடுக்கும் ஓலையை இன்னார் கண்டு இன்னது செய்க என்னும் முறையமைப்பில் வருவது சீட்டுக்கவியாம். சீட்டுக் கவியில் பாடுவோன் புகழும் இடம்பெறும் என்பது, மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும் தன்னைப் புகழ்தலும் தகும் என்னும் நன்னூல் பாயிரக் குறிப்பால் புலனாம். அன்றியும், ஏடாயிரம் கோடி எழுதாது தன்மனத்து எழுதிப் படித்த விரகன் இமசேது பரியந்தம் எதிரிலாக் கற்ற கவிவீர ராகவன் விடுக்கு மோலை என்பது போல வருவனவும் சான்றாம் (தனிப்). திருமந்திர ஓலை, திருமந்திர ஓலை நாயகம், ஓலைக் கணக்கர் என்பவையும் வரலாற்றுச் செய்திகள். காவியங்களில் ஓலை போக்கும் செய்திகள் உண்டு. பதினொன்றாம் திருமுறையில் வரும் திருமுகப் பாசுரம் சீட்டுக் கவியேயாம். அந்தகக் கவிராயர், மாம்பழக் கவிச்சிங்க நாவலர், சரவணப் பெருமாள் கவிராயர் முதலியோர் யாத்த சீட்டுக் கவிகள் மிகப்பல. முன்னிருவர் விடுத்த சீட்டுக் கவிகளும் தனிநூலாமளவு பெருக்கமுடையவையாம். வறுமை தந்த வளர்தமிழ் ஆகும் ஆற்றுப்படை போல்வது. இச்சீட்டுக் கவியும் எனின் தகும். தூதின் சாயலும் சீட்டுக்கவியில் உண்டு என்பது, ஆய்வார்க்குப் புலப்படும். சீட்டுக் கவியின் இலக்கணம், சீட்டுக் கவியே செப்பும் வரன்முறை தெய்வ வணக்கமும் தேசிகன் வணக்கமும் தன்பெரும் புகழ்ச்சியும் தலைவன் புகழ்ச்சியும் எய்தல் ஆசிரிய விருத்தத் தியம்பலே - பிர. தீப. 96 சீண்டுதல் சீண்டுதல் = தொல்லை தருதல். சீண்டுதல் என்பது தீண்டுதல் என்னும் சொற்போலத் தொடுதல் என்னும் பொருள் தருவது. ஆனால், தொடுதல் பொருளிலும் இத்தொடுதல் எரிச்சலை யூட்டுகின்ற அல்லது அருவறுப்பை உண்டாக்குகின்ற தொடுதலாம். சினத்தில் அரிசினம் என்பதொன்று. அது ஓயாமல் தொல்லை தருதலால் உண்டாகும் சினம். அச்சினம் உண்டாகு மாறு பாடாகப் படுத்துதலே சீண்டுதலாம். என்னதான் பொறுத்தாலும் என்னதான் உதவி செய்தாலும் அவன் சீண்டுவதை விட மா ட்டான் என்பது வழங்கு மொழி. சீந்தி ஓடு கொடி வகையுள் ஒன்று சீந்தி என்பது. அது ஓடுகால் எனப்படும் நீரோடைப் பொருளில் பேராவூரணி வட்டார வழக்காக உள்ளது. சிந்தி > சீந்தி; வழிந்து ஒழுகுவது என்னும் பொருளது. சீந்துதல் சேந்துதல் > சீந்துதல். சேந்துதல் = அள்ளி எடுத்தல். வாங்குதல், பெறுதல், கேட்டல் என்னும் பொருளமைந்த பெருவழக்குச் சொல். அவளைச் சீந்துவார் இல்லை என்பது பெண் கேட்டு வருவார் இல்லை என்னும் பழிப்புச் சொல். காய்கறி சீந்துவார் இல்லாமல் கிடக்கிறது என்பது விலைக்கு வாங்குதல் பொருளது, இவை முகவை மாவட்ட வழக்கு. சீந்தை மூக்குச் சிந்திக் கொண்டிருப்பானை(ளை)ச் சீந்தை என்பது பொருந்துவது. சீந்தை என்பது சிந்தும் சளியைக் குறிப்பதாக விளவங்கோடு வட்டாரத்தில் உள்ளது. மூக்குச் சீந்தி என்பது சிலர்க்குப் பட்டப்பெயர். அழுபவள் என்பது பொருள். சீப்பு சீத்தல் > சீப்பு = சீவுதல். சீத்தல் = அகற்றுதல். கால் சீக்கும் இருளகற்றும். காய் சீவுதல் = வேண்டாதது அகற்றல். தலை சீவுதல் = தலையைக் கொய்தல்; முடி மயிரைச் சரிசெய்தல். வாழைச் சீப்பு = சீவி எடுத்த ஒரு கற்றை. கனைசுடர் கால்சீயா முன் - சிலப். 9:79 சீமாறு கூட்டுமாறு, பெருக்குமாறு என வழங்கப்படும் வாரியல், பெரியகுளம் வட்டாரத்தில் சீமாறு என வழங்கப்படுகின்றது. சீத்தல் என்பது துடைத்தல், நீக்கல் என்னும் பொருளது. சீத்தலுக்கு உரியமாறு சீமாறு ஆயது. கால்சீக்கும் என்பது இலக்கிய ஆட்சி. துடைப்பக்கட்டை என்பது போலச் சீவக் கட்டை என்பது கொங்கு நாட்டு வழக்கு. சீரகம் சீர் + அகம் = சீரகம். சீரகம்:1 மசாலை - உசிலை-ப் பொருளில் ஒன்று. சீரகம்:2 வீடு பேறு. மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்- தனிப். சீரகம்:3 சிறந்த இல்லம்; இல்லப் பெயர். சீரகம்:4 உள்ளுறுப்பாம் குடலைச் சீர்மைப் படுத்துவது. சீரக்கம் சீறக்கம் > சீரக்கம். சிறுமைப் படுத்துதல் சீறக்கமாய்ப் பின்னர் வல்லினம் இடையினத் திரிபாகியிருக்க வேண்டும். இகழ்தல், கேலிசெய்தல் என்னும் பொருளில் சீரக்கம் என்னும் சொல் செம்பட்டி வட்டார வழக்கில் உள்ளது. சீராட்டு என்பது போன்றது இது. சீராட்டுதல், பழித்தல் பொருளிலும் வருதல் உண்டு. சீரணம் சீர் + அணம் = சீரணம்; உண்ட உணவு செரித்துச் சீராதல். அவ்வாறு ஆகாமை, அல் சீரணம். அசீரணம் என்பது அது. அல் என்பது அவாக நின்றது. x.neh.: அல் நாகரிகம் > அநாகரிகம். சீரணி சீரணி:1 சீர் + அணி = சீரணி. சிறந்த அணி - படைவரிசை; இந்நாள் மக்கள் படைவகுப்பு. சீரணி:2 சிறந்த அணிகலம். சீரணி அணிகொளச் செப்புவாய் - கம். உயுத். 4183 சீரணி:3 ஓர் இனிப்புப் பண்டத்தின் பெயர். சீரம் சீரம் = சீரை, மரவுரி, உடை. நெடுஞ்சீரம் அன்று கொடுத்தவள் - கம். அயோ. 1013 சீராட்டும் பாராட்டும் சீராட்டு = ஒருவருக்கு அமைந்துள்ள சிறப்புகளை எடுத்துக் கூறுதல். பாராட்டு = ஒருவரைப் பற்றிய ஆர்வத்தால் புகழ்ந்து கூறுதல்; புனைந்து கூறுதலுமாம். சீர் = சிறப்பு; இவண் சிறப்பைக் கூறுதல் ஆயிற்று. சிறப்பிலாத் தன்மைகள் உளவாயின் அவற்றைக் கூறாது விடுப்பினும், இல்லது கூறுதல் இல்லையாய்ச் சிறப்பை மட்டும் தேர்ந்து கூறுவது இதுவாம். பார் = பரவிய தன்மையது. குறையுடையவை இருக்கு மாயினும் அவற்றைக் கூறாததுடன், இல்லாத தன்மைகளையும் இயைத்து இனிது மகிழப் புனைந்து கூறுதல் பாராட்டாகாது. ஆனால் இதுகால் சீராட்டும் பாராட்டும் ஒப்ப இயல்கின்றன. சீராளன் சீர் + ஆளன் = சீராளன். சீர் சிறப்பு என்பது இணைச்சொல். செம்மையை ஆள்பவன்; செம்மையானவன். சீராளன் = பெயர், ஆண்பால். சிறுத்தொண்ட நாயனார் மகன் பெயர் சீராளன். சீரிடம் சீர் + இடம் = சீரிடம் = சிறந்து வாய்த்த இடம். சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு - திருக். 821 எடுத்த செயலை எளிதில் முடிக்கத் தக்க இடம், சீரிடம் என்க. சீரை சீரை > சீலை > சேலை = மகளிர் உடை. சீரை என்பது சீர், சீர்த்தி (கீர்த்தி) வழிவந்த சொல். சீர்த்தி மிகுபுகழ் தொல்காப்பியம் (796). உடை மானக் காப்பொடு, மதிப்புப் பொருளாகவும் இருப்பதால் சீரை எனப்பட்டது. அணியெல்லாம் ஆடையின் பின், ஆடைபாதி ஆள்பாதி என்பவை பழமொழிகள். சீரை சுற்றித் திருமகள் பின்செல என்பது கம்பர் சொல். (அயோ. 527) சீரை என்பது சீலை எனப்பட்டது. அதன் வழு வழக்காகவும் பெரு வழக்காகவும் உள்ளது சேலை ஆகும். சீலை என்பது பிழை எனவும் கருதுவார் உண்டு. குமரி மாவட்ட வழக்கில் சீரை என்பது அச்சு மாறாமல் அப்படியே வழங்குகின்றது. மக்கள் வழக்கு, மாறா இலக்கிய வழக்காக இருத்தற்குச் சான்று இன்னது. சீயம் சேயம் > சீயம். சிவந்த நிறத்ததாம் சிங்கம் அல்லது அரிமா. அரி = சிவப்பு. ஒ.நோ.: சேந்தன், சேயரி, சேயொளி, சேவல். செங்கட் சீயம் - கம். உயுத். 607 சீர் செவ்விதில் அல்லது சீர்மையில் அமைந்தது. சீர்மை உடைய ஒருத்தி சீர்த்தி எனப் பெற்றாள் (மணிமே.). சீர்த்தி கீர்த்தியாய் வடமொழி வழக்குப் பெற்றது. சீர்த்தி மிகு புகழ் என்பது தொல்காப்பியம் (796). மிகுபுகழ் உடையது அழகுடையதுமாம். காந்தியாரின் அழகு தனிப் பேரழகு ஆயதும் அவர்தம் பொக்கைவாய்ப் புன்முறுவல் எவரையும் வயப்படுத்தியதும் அவர்தம் சீர்த்தியால் வாய்த்ததாம். சீர் சிறப்பு சீர் = சிறந்த பொருள்களை உவந்து தருதல். சிறப்பு = முகமும் அகமும் மலரச் சிறந்த மொழி களால் பாராட்டுதல். சீர் வரிசை; சீர் செய்தல் எனத் திருமணவிழா, பூப்பு நீராட்டு விழா ஆகியவற்றில் நிகழ்த்தப் பெறும் நிகழ்ச்சிகளால் சீர் என்பதன் பொருள் புலப்படும். சிறப்பு என்பது உணர்வால் சிறப்பித்தலாம். ஒப்புடன் முகமலர்ந்து உபசரித் துண்மை பேசி உப்பிலாக் கூழிட்டாலும் உண்பதே அமிர்தமாகும் என்னும் மொழியில் கொடைப் பொருளைக் கொடுக்கும் தன்மையே மதிப்பீடாக்கல் புலப்படும். சீர் செய்தல் சீர்செய்தல்:1 செம்மைப் படுத்துதல். சீர்செய்தல்:2 சிறப்புச் செய்தல்; மங்கல விழாவுக்குரிய பொருள்களைக் கொண்டுபோய்க் கொடுத்தல். சீர் செனத்து சீர் = சிறந்த பொருள் வாய்ப்பு. செனத்து = மக்கட் கூட்டம். சீர் சிறப்பு என்பதில் சீர் என்பதன் பொருளைக் காண்க. சிறந்த பொருள்களைப் பரிசாக வழங்குவதுடன், பெருங்கூட்டச் சிறப்பும் பார்ப்பவரை வியப்பில் ஆழ்த்துதல் கண்கூடு. ஆள் கூட்டங் கண்டே ஒருவன் சிறப்பை மதிப்பிடுதல் உலகநடைமுறை. அவனுக்கென்ன நாலு பேர் இருக்கிறார்கள் என்பது ஒரு பாராட்டு. செனம் = சனம்; செனம், செனனம், செனகன், செனனீ, சென்மம் என்பவை முறையே மக்கள், பிறப்பு, தந்தை, தாய், முற்பிறப்பு என்னும் பொருள் தரும் வடசொற்களாம். அவன் சீர் செனத்தியான ஆள் என்பதும், சீர் செனத்திக்குக் குறைவில்லை என்பதும் வழக்கம். சீர் செனத்து, இருபிறப்பி. சீர்தூக்கல் சீர் = துலைத்தட்டு; தூக்கல் = தூக்கி நிறுத்தல். சீர் தூக்கல் = சரக்கெடையை நிறுத்தறிந்தாற் போலப் பொருள்களின் இயல்பை எண்ணியறிதல். பாடல், கருத்து ஆகியவற்றைச் செவ்வையாக ஆராய்ந்து கூறுதலும் சீர்தூக்கலாம். தூக்கு = பாடல். சீர்தூக்கி ஆராய்ந்து என்னும் பொருள்தரும் இச்சொல், தெய்வத் திருவுருவைத் தூக்கிச் செல்பவரைச் சீர்தூக்கி எனப் புதுக்கோட்டை வட்டார வழக்கிலுள்ளது. சீர் என்பது சீர்பாதம் என்பது போலத் தெய்வத் திருவுருக் குறித்து நிற்கிறது. சீர்தூக்கியர்க்கு அரசு இறைநிலம் தந்தமை வழக்கு. சீர்த்தனம் (கீர்த்தனம்) சீர்த்தி என்பது மிகுபுகழ்; சீர்த்தி, கீர்த்தி யானாற் போல, சீர்த்தனம் கீர்த்தனம் ஆயிற்று. சீர்த்தி, சீரர் என்னும் பெயர்களே கீர்த்தி, கீரர் என ஆயிற்று என அறிக. சிறந்த இசையமைப்புடைய பாடலே சீர்த்தனம். இது கீர்த்தனை சங்கீர்த்தனம் எனவும் வழங்கப்படுகின்றது. இவ்வகையில் இராம நாடகக் கீர்த்தனை நந்தனார் சரித்திரக் கீர்த்தனை என்பன குறிப்பிடத் தக்கன. இக்கீர்த்தனை களின் இடை இடையே உரைநடையும் இடம்பெறும். முந்தை நாடகமும் தெருக்கூத்தும் இவ்வகையிலேயே இயன்றன. பசனைக் கோயில்கள் என்னும் பெயரால் கோயில் விளங்கிய இடங்களிலெல்லாம் பசனைக் கீர்த்தனங்கள் மிக வழங்குகின்றன. கிறித்தவர்களும் வழிபாட்டுக்கு இக்கீர்த்தனை முறையைக் கையாண்டனர். சர்வ சமய சமரசக் கீர்த்தனை என்னும் வேதநாயகர் நூல் இவ்வகையில் சமயப் பொதுமை வாய்ந்து திகழ்கின்றது. பாவாணர் இளந்தை நிலையில் எழுதியது கிறித்தவக் கீர்த்தனம் என்பது. சீர்த்தி சீர் > சீர்த்தி. சீர்த்தி மிகுபுகழ் - தொல். 796 சீர்த்தி = செம்மை; பெயர், பெண்பால். சீர்த்தி மிகுபுகழ் என்பது தொல்காப்பியம். சீர்த்தியின் பொருள்விளங்க, ஓங்கி ஓங்கி வளர்ந்துயர் சீர்த்தி என்றார் கம்பர் (பால. 1197). சீர்த்தி என்னும் பெண்பாற் பெயர் பண்டை வழக்கில் இருந்ததே. சீர்த்தி, கீர்த்தியாயமை பிற்கால வழக்கு. அதற்கு வடசொல் முத்திரை குத்தப்பட்டது அக்காலத்தேதான். சீலம் சீரிய ஒழுக்கம் சீலமாம். அஃதுயர்ந்தோர் சீர்மைச் சான்று ஆதலால் சீர் > சீல் > சீலம் ஆயது. x.neh.: நீர் > நீல் > நீலம். மேலோர் சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் - கம். அயோத். 8 சீலி சீலன் = ஆண்பால் பெயர். சீலி = பெண்பால் பெயர். பெண்பால் தெய்வம் குடிகொண்ட ஊர் சீலி. கொள்ளிட வடகரையது. உத்தமர் சீலி. சீலை சீலை என்பது துணிவகையுள் ஒன்றைக் குறிப்பிடும் பொது வழக்கினது எனினும் அது தரகு என்னும் பொருளில் பொற்கொல்லர் வழக்கில் உள்ளதாம். ஆடுமாடு விற்று வாங்கும் தரகர்கள் கைமேல் துணிபோட்டு மறைத்து விரல் பிடித்துப் பேசும் வழக்கத்தில் இருந்து வந்திருக்க வேண்டும். சீலை, சேலை சீலை, சேலை என்பவை இரண்டுமே சொல்லவும் எழுதவும் பெருவழக்காக உள்ளன. இரண்டும் சரியாக முடியாது. ஒன்று சரியாக இருத்தலே முறை. இரண்டும் சரியான வடிவு என்றால் இரண்டு வேறு பொருள் தருவனவாக இருத்தல் வேண்டும். பொதுமக்கள் வழக்கும் சொல்லியல் முறையும் நமக்குத் தெளிவூட்டுகின்றன. சீலைத்துணி, சீலைக்காரி, சீலையைக் கிழித்துக் கொண்டா திரிகிறேன். சீலைப்பேன் என்பன பொதுமக்கள் வழக்கில் இன்றும் உள்ளவை. அவர்கள் சீலை என்பதைச் சேலை எனக் கூறார். கூறினால், படித்தவர்கள் கூறக் கேட்டு அவர்கள் படித்தவர்கள் பேச்சுச் சரியாக இருக்கும் என்னும் தப்புக் கணக்கால் செய்யும் பிழையாக இருக்கும். படித்தவர்களே சேலை எனப் பெருவழக்குப்படுத்தி வருகின்றனர். எழுதியும் வருகின்றனர். சீலை நெய்வாரும் விற்பாரும் கூட இதற்கு விலக்கல்லர். சீரை என்பது பழஞ்சொல். ஆடை பாதி ஆள்பாதி என்னும் பழமொழிக்கு மூலமாவது சீரை என்னும் சொல். ஒருவனுக்குச் சிறப்பாக அமைந்தது சீரை எனப்பட்டது. சீரை சுற்றித் திருமகள் பின்செல என்பது கம்பர் வாக்கு (அயோத். 527). சீரை என்னும் சொல் திரிந்து சீலையாக நிற்கிறது. நீர் என்பது அதன் நிறத்தால் நீல் ஆவது சொல்லியல். அதன் நீளல் தன்மையால் நீள் ஆதலும் விளக்கம். சேல் என்பது மீன், கெண்டை மீன், அம்மீன் போல் பிறழ்வும் பொலிவும் உடைமையில் சேலை எனப்பட்டது என்பது பொருந்தப் பொய்த்தல் என்னும் நெறிப்பட்டதாகும். சீரம் என்பது சீரைப் பொருளதே. சீரம் அழகுப் பொருள் தருவது போல், சீலமும் அழகுப் பொருள் தரும். சிறப்புப் பொருளும் தரும். ஆதலால், சீரை சீலையாகச் சொல்லப்படுதலே பிழையற்றதாகும். சேலை பிழையுற்ற வடிவமாகும். சீலை துணி சீலை = புடைவைகள். துணி = மற்றைத் துணிகள். துண்டு, வேட்டி, அறுவை, கூறை முதலியவை வெட்டுதல் பொருளில் வந்தவை. துணி என்பதும் துணிக்கப்பட்டது என்னும் பொருளில் வந்ததாம். சீலைப்பேன் சீலை முதலாம் துணியில் பற்றும் பேன். யாழ்ப்பத்தர்ப் புறங்கடுப்ப இழைவலந்த பஃறுன்னத் திடைப்புரை பற்றிப் பிணிவிடாஅ ஈர்க்குழாத்தோ டிறைகூர்ந்த பேஎற்பகையென ஒன்றென்கோ - புறம். 136 தமிழ்மானம் காத்தவன், மாற்றுடை காணாமையால் பேற் பகைக்கு - பேனான பகைக்கு - ஆளானதைப் பதிவாக்கியது இப்பாட்டு. இதனைப் பதிவாக்கியவர், துறையூர் ஓடை கிழார் என்பார். சீலையைக் கிழித்தல் சீலையைக் கிழித்தல் = கிறுக்காதல். துணியைக் கிழித்தல், கிழித்துக் கொண்டிருத்தல் என்பனவும் சீலையைக் கிழித்தல் போல்வதே. கிறுக்கு என்னும் பொருள் தருவதே. மூளைக் கோளாற்றில் ஒருவகை, அகப்பட்ட துணிகளைக் கிழிப்பதும், அக்கிழித்த துணியை உடலில் நினைத்த இடங்களி லெல்லாம் கட்டிக் கொள்வதும் ஆகும். அவ்வழக்கில் இருந்தே சீலையைக் கிழித்தல் என்பதற்குக் கிறுக்கு என்னும் பொருள் வந்தது. எனக்கு அறிவு சொல்கிறாய்! நான் சீலையைக் கிழித்துக் கொண்டா இருக்கிறேன் என்பது புரியாது பேசுவார்க்குச் சொல்லும் மறுப்புரை. சீவல் சீவு > சீவல். சீவப்பட்ட பொருள் சீவல் ஆகும். சீவல், சீவுதல் என்னும் தொழிற் பெயருமாம். தலைசீவுதல், மரத்தைச் சீவுதல், மாட்டுக் கொம்பு சீவுதல் என்பவை ம.வ. உருளைக் கிழங்குச் சீவல், வாழைக்காய்ச் சீவல் எனச் சீவல் பண்டங்கள் பலவகை. சீவாந்தி சிவப்பந்தி > செவ்வந்தி > சீவாந்தி = அந்தி மாலை. பூவரசம் பூ மஞ்சள் நிறத்தது. மற்றை அரசு பூவாது. இது பூத்தலால் பெற்ற பெயர் பூவரசு என்பது. அப் பூ வண்ணமும் அந்தி மாலை வண்ணமும் ஒப்ப இருத்தலைக் கண்டு வழங்கிய சொல் சீவாந்தி. சற்றே சிவப்பும் மஞ்சளும் கலந்த அந்திமாலை வானம் போன்ற வண்ணம் உடையது என்னும் பொருளது. பொதுமக்கள், போற்றும் புலமைத் தோன்றலாகிய தோற்றம் காட்டுவன இன்னவை. இது குமரி மாவட்ட வழக்கு. செவ்வந்தி என்பதைக் கருதுக. செவ்வந்திப் புராணம் ஒருதொன்ம நூல். சீவி விடல் தலை சீவி விடல், கொம்பு சீவி விடல் என்பவை பொதுவழக்கு. அமைதியாக இருப்பவரை அவருக்குப் பகைவர் மேல் அல்லது நட்புடையார் மேல் இல்லதும் பொல்லதும் சொல்லி ஏவி விடுதல் - சண்டைக்கு ஆட்படுத்தல் - சீவி விடலாகும். கொம்பு சீவல் என்பதும் இது. சீழ் உடலில் காயம் பட்டால் சீழ் பிடித்து விடுகிறது. சீழ் என்பது என்ன? குருதியில் உள்ள வெள்ளை யணு செத்துப்போய் வெளிப்படுதலே சீழ் ஆகும். நோயாக்கும் நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடி யதனால் இறந்த வெள்ளை யணுக்களே சீழ். அதன் நிறம் வெள்ளை ஆதலால்தான் சீழும் வெள்ளையாக இருக்கிறது. சீத்தல் = அழித்தல்; கொல்லுதல். சீத்தலால் வெளிப்படுவது சீழ். கதிர் தோன்றி இருளை அழித்தலால் அதனைச் சீக்கும் என்பர். தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத் துய்க்கும் - புறம். 400 சீறிடம் சிறுமை + இடம் = சீறிடம் = சிறிய இடம். ஒருபிடி படியும் சீறிடம் - புறம். 40 சீறியாழ் சிறிய + யாழ் = சீறியாழ். கைவழி என்னும் சிறிய யாழ் சீறியாழ். எ-டு: சிறுபாணாற்றுப்படை. சீறியாழ் செவ்வழி பண்ணி - புறம். 144 சீற்றம் சீறு > சீற்றம் = மிகு சினம் கொள்ளல். சீறுதல் என்பதும் அது. கொதியழல் சீற்றம் - சிலப். பதி. 44 பொருள்: மிக்க சினத்தால் வெவ்விய அழல் (உரை, அடியார்க்.). சீனம் சீனம் ஒரு பெருநாடு. பழநாளில் தமிழ்நாட்டொடு பெருந்தொடர்பு உடைய நாடு. போகர் என்னும் சித்தர் சீனநாட்டுக்குப் பலமுறை சென்று வந்தமை வரலாறு. சீனநாட்டுப் பொருள்களுள் ஒன்று சீனி. * சீனி காண்க. சீனி சீனி:1 சீனத்தில் இருந்து இறக்குமதியாய சருக்கரை. சீனத்தில் இருந்து இவண் எய்திய பொருள்கள் சீனப்பெயர் பெற்றன. அவற்றில் சீனி மட்டும் தனிப்பெயர் பெற்றது. மற்றவை: சீனக்கற்கண்டு, சீனக்காரம், சீனவெடி, சீனச்சரம், சீனச்சூடம் என்பன. சீனத்தவர் என்றார் பாரதியார். சீனரைச் ஜீனர் என்பார் இலர். ஆனால் சீனியைச் ஜீனி என்பாரே மிகப்பலர். ஏன்? பொருளறியாமை மட்டுமன்று, அப்படிச் சொல்வதிலே ஒரு காதல்! சீனி:2 படகை நிறுத்துவதற்கு நங்கூரம் பாய்ச்சுவர். நங்கூரம் பாய்ச்சிவிட்டால் படகு துறை சேர்ந்தது மட்டுமன்று. பிரிந்து சென்றவரும் பிரிந்து இருந்தவரும் இணைந்து மகிழும் இன்பப் பெருக்காகவும் அமைதலால் நங்கூரம் போடுதலைச் சீனி என வழங்குவது சீர்காழி (மீனவர்) வட்டார வழக்காக உள்ளது. சீனி = இனிமை.  சு சூ வரிசைச் சொற்கள் சு சகர உகரமாம் இதனைத் தொல்காப்பியர் உச்சகாரம் என்பார். சகரத்தின் மேல் (ச்) உகரம் (உ) ஏறியது. உச்சகாரம் இருமொழிக் குரித்தே - தொல். 75 உச்சகாரமொடு நகாரம் சிவணும் - தொல். 79 சுக்காதல் சுக்கு + ஆதல் = சுக்காதல் = உலர்ந்து போதல், மாவாதல். சுக்கு தன் நீரை அறவே இழந்தது. நன்றாக உலர்ந்து போனது. அதனால் சுக்கு என்பது உலர்தல் பொருளுக்கு அல்லது காய்தல் பொருளுக்கு உரியதாயிற்று. சுக்காக நொறுக்குதல் என்பதில் சுக்கு என்பதற்கு மாவு என்னும் பொருள் உள்ளமை வெளிப்படும். சுக்காக நொறுங்கிவிட்டது என்பது வழக்காட்சி. சுக்குச் சுக்காக நொறுங்கிவிட்டது என்பது மிக நொறுங்குதலைக் குறிப்பதாம். வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன? என்பது ஒரு தனிப்பாட்டுத் தொடர். ஈரப்பதனற்ற சுக்கைப் போல் ஈவிரக்கமற்றவனைக் கருதிச் சுட்கம், கஞ்சத்தனம் எனப்பொருள் கொண்டது. சுட்கம் செய்யாதே என்பது திருச்சிராப்பள்ளி வட்டார வழக்கு. சுக்கு சுக்கு = ஒருவகை மருந்துப் பொருள். சுக்கு என்பது காய்ந்து உலர்ந்த பொருள். சுக்காகக் காய்ந்துவிட்டது என்பது தமிழுலக வழக்கு. இஞ்சி என்னும் ஈரப்பொருள் வற்றக் காய்ந்தும் அவிக்கப்பட்டும் நீர்ப்பதம் நீங்க உலர்த்தப்பட்டும் உருவாக்கம் பெற்றது சுக்கு ஆகும். சுள் + கு = சுட்கு, சுக்கு. சுள் = சூடு. பாறை வகையுள் ஒன்று சுக்காம் பாறை. அது நீர்ப்பதனற்ற பாறையாகும். திரிகடுகத்துள் ஒன்று சுக்கு. மற்றவை மிளகு, திப்பிலி. * இஞ்சி காண்க. சுடக்குப் போடல் சுடக்குப் போடல் = இழிவுபடுத்தல். சுடக்கு, சொடக்கு; ஒலிக்குறிப்பு. கைவிரலை மடக்கிச் சுடக்குப் போடல் உண்டு. அன்றியும் இருவிரலையும் கூட்டி ஒலி உண்டாக்கலும் உண்டு. அவ்வாறு ஒலி உண்டாக்கி நாயைக் கூப்பிடல் எவரும் அறிந்தது. சுடக்குப் போட்டுக் கூப்பிடு என்றால், நாயைக் கூப்பிடுவது போலக் கூப்பிடு என்பது குறிப்புப் பொருளாம். நீ பார்! நான் சொன்னபடி செய்யத் தவறினால் சுடக்குப் போட்டுக் கூப்பிடு என்பது பல்கால் கேட்கும் செய்தியாம். ஒருவருக்கொருவர் உண்டாம் போட்டி, தருக்கம், பகை இவற்றால் சொல்வது இது. * நொடி காண்க. சுடச்சுட மறுமொழிக்கு உடன் மறுமொழி. சுடச்சுடத் தோசை, சுடச்சுட வடை எனச் சூட்டொடும் உள்ள பொருளைக் குறிப்பது பொது வழக்கு. ஆனால், ஒருவர் சினந்தோ மறுத்தோ கூறினால் அவரினும் கடிந்தோ மறுத்தோ சொல்லி அவர் வாயை அடக்குதலைச் சுடச்சுடக் கொடுத்தல் என்பது ம.வ. பதிலுக்குப் பதில் சாடல் என்பது அது. சுடர் சுடர், சுடரோன் என்பன கதிரோனைக் குறிக்கும். அது தோன்றும் போது, செந்நிறத்தோடு விளங்குவதால் செஞ்சுடர், செங்கதிர், செஞ்ஞாயிறு, செய்யோன் எனப்பட்டது; அதன் வெப்பத்தால் வெஞ்சுடர், வெய்யோன் எனப்பட்டது. வெண் நிறத்தால் வெண்சுடர் வெண்கதிர் எனப்பட்டது. இவ்வாறே கதிர், ஆழி, பருதி, பரிதி முதலாம் பெயர்களும் வெவ்வேறு காரணங் களால் அதற்கு அமைந்தன. சுடரின் நீங்காத் தன்மை சுடுதலும் சுடர்தலுமாம். தீ சுடும்; தீ சுடரவும் செய்யும். அதனால் தீச்சுடர் என்பது பெயர் ஆயிற்று. இறந்தோரை எரிக்கும் அல்லது சுடும் இடம் சுடுகாடு; சுடலை என்பதும் அது. சுடலைக்கான் என்பது மணிமேகலை (11:25); இடுக ஒன்றோ, சுடுக ஒன்றோ என்பது புறநானூறு (239) இடுதலால் அமைந்த பெயர் இடுகாடு! சுடுதலால் அமைந்த பெயர் சுடுகாடு! இந்நாள் உலகம் மின்னுலகம்; எதிலும் மின்; எங்கும் மின். அம்மின்னாற்றல் நீரிலிருந்து வருவது. கரியிலிருந்து வருவது எனப்பல திறத்தன. எவ்வகையில் வரினும் சுடர் விடுவன. நீரிலிருந்து ஆம் தண்ணீரில் இருந்து வந்தாலும் சுடர்விடும். அது, சுடுதல் உடையதே; சூடு உடையதே! சுடுதல் இல்லாமல் சுடர் இல்லை; திங்கள் முதலாம் கோள்கள் சுடர்கின்றனவே அவை சுடுவதில்லையே என்னும் வினாவும் கிளரும்! கோள் என்னும் பெயரீடே இவ்வினவத்திற்கு விடை தருகின்றதே! தன்னொளி உடையதன்று கோள்; பிறிதொன்றினிடம் இருந்து கொண்ட ஒளியுடையது அது. கொண்டதால் - கொள்வதால் - பெற்ற பெயரே கோள். எரியும் தீ கண்ணாடியில் தெரியும் போது அது சுடுமா? சுடரே தெரியும். இக்காட்சியை எண்ணுக. மின், குமிழ்விளக்கா? குழைவிளக்கா? குழையாவிளக்கா? சுடாதிருக்கிறதா? சுடவே செய்கின்றது; சுடரும் அது சுடுகின்றது; சூடு பிறக்கிறது; சுடுபடுகிறது; சுடர் விடுகிறது. இஃது இயற்கையியல்; அல்லது இயற்கை நியதி. இவ்விளக்கங்களை யெல்லாம் இரண்டே சொற்களால் இணைத்துச் சொல்லி விடுகிறார் முதற்பாவலராம் திருவள்ளுவர். அது, சுடச்சுடரும் என்பது. முழுக்குறளும் இதோ: சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு - திருக். 267 துன்பம் வாட்ட வாட்ட - வருத்த வருத்த - அதனைத் தாங்கிக் கடனாற்ற வல்லார்க்கு அவ்வாட்டுதலும் வருத்துதலும் என்ன செய்யும்? சுடச்சுடச் சுடர் பெருகும் பொன் போல் ஒளியைத் தரும்; புகழைத் தரும்; ஆற்றலைத் தரும்; பட்டுப் பட்டுப் பட்டொளி செய்யத் தரும்! உலக வரலாற்றை ஒரு மேலோட்டப் பார்வை பார்த்தால் புரியுமே! சுடர்ந்த பெருமக்களெல்லாரும் சுடப்பட்டனரா? வருத்தப்பட்டனரா? இலரா? ஒரு காந்தி யடிகளை எடுத்துக் கொண்டாலே உண்மை புரிந்து விடுமே! உலகப் புகழ் வாய்ந்த இலிங்கனார், மார்க்கசார், இலெனினார் இன்னோர் பட்ட பாடுகள் இவ்வளவா அவ்வளவா? கலில் கிப்பரான் என்பார் கூறினார், கோதுமை மணியை அடித்து - நொறுக்கி - அரைத்து - ஆட்டி - பிசைந்து - சுட்டு - வாட்டி - வதக்கியதால் அல்லவா அதற்கு அச்சுவை உண்டாயிற்று; பக்குவம் உண்டாயிற்று; இல்லாக்கால் அது உணவாம் சிறப்புறுமா? தங்கம் படும் பாட்டைக் காண வேண்டுமா? நாடு கடந்து நாடு, கடல் கடந்து கடல் வரை - காண வேண்டுவதில்லை. தங்கவயலுக்குச் சென்று கண்டால் போதும்! எவ்வளவு ஆழமாகக் குடைந்து, பாறையை உடைத்து, அத் தங்கப் பாறையைத் தவிடு பொடியாக்கி, அதனை அரைத்துக் கூழாக்கி, கூழில் இருந்து தங்கப்படிவைப் பிரித்து, அப் படிவைத் திரட்டிக் கட்டியாக்கி முத்திரையிட்ட அளவில் முடிகின்றதா? தங்கத்தில் செம்பைச் சேர்க்க உருக்க வேண்டாவா? உருக்கிச் சேர்த்த சேர்மானத்தை நூலாக இழுத்து இழுத்து ஆக்குவதால்தானே அணிகலத்திற்கு இழை என்பது பெயர். நூலுக்கும் இழை! நூல் போலும் தங்கக் கம்பியால் செய்த அணிக்கும் இழை! அதனை அணிபவளுக்கும் இழை! ஆம்; ஆயிழை, சேயிழை, ஒள்ளிழை, ஒளியிழை, மாணிழை இன்னன. பொன் பொலிவு! பொன், பொலம்! பொன் பொற்பு! பொலிவு, பொலம், பொற்பு என்பனவெல்லாம் அழகு! சுடர்! சுடல் தீயால் மட்டுமா? வாயால் சுடல் இல்லையா? மனத்தால் சுடல் இல்லையா? கண்ணால் சுடல் இல்லையா? இன்னும் இன்னும் எத்தனைக் சுடல்கள் வாழ்வில்! சுடலுக்குச் சருகு எரியும்; மரம் எரியும்! அறிவுடைய மாந்தனும் எரியலாமா? சுடலைச் சுடரேற்ற வந்த வாய்ப்பாகக் கொள்பவன் உலகுக்கு ஒரு சுடராகத் திகழ்கின்றான். தமிழ்ச் சுடர் தரும் வாழ்வியல் செய்தி ஈது. சுடலை சுடல் + ஐ = சுடலை. இறந்தார் உடலைச் சுடுதற்கு அமைந்த இடம் சுடலை; சுடுகாடு என்பதும் இது. சுடலைக் கானம் என்னும் மணிமேகலை (11:25). சுடலைப் பொடி பூசி - தேவா. ஞான. சுடுமண் சுடுமண் = செங்கல். சுடாத மண்ணாலும், சுடுமண்ணாகிய செங்கல்லாலும் கட்டடங்கள் கட்டப்பட்டன. சுட்டமண் செந்தீப் படலால் செந்நிறத்ததாய்ச் செங்கல் எனப்பட்டது. செங்கல்லால் கட்டப்பட்ட வீடு, மாளிகை, கோயில் என்பவை சுடாத மண்ணினும் சிறப்புற்றன. அதனால், சுடுமண் ஓங்கிய நெடுநிலை வரைப்பு - மணிமே. 3:127 என்று சுட்டப் படலாயிற்று. பெரிதும் அரண்மனைகள் கோயில்கள் சுடுமண்ணால் கட்டப்பட்டன. சுட்ட பழம் வெயிலில் - தழலில் - போட்டுப் பழுப்பதுதான் சுட்டபழம் எனப்படுதல் பொதுவழக்கு. சூடுள்ள நீரை - குடிப்பை - ஆற்றி அல்லது ஊதிக் குடித்தல் வழக்கம். நெல்லிக்கனி அத்திப்பழம் நாவற்பழம் முதலியவை தாமே கீழே விழுந்தால் மண், மணல் படும். அதனைத் தின்பார் அப்பழத்தில் ஒட்டிய தூசி, மண், மணலைப் போக்க ஊதி ஊதித் தின்னல் வழக்கம். சுடுவதை ஊதித் தின்னலும் குடித்தலும் போல் இவற்றையும் ஊதித் தின்னலால் சுட்ட பழம் எனல் வழக்காயிற்று. அதற்கு எதிரிடை சுடாத பழம். அதாவது மண்ணில் விழாமல் பறித்த பழம். அதை ஊத வேண்டியதில்லை அல்லவா! வேலன் ஔவை கதையாகப் புனைந்த கதை, சுட்டபழம் சுடாத பழம் என்பது. காரான் மேய்க்கும் சிறுவன், பாட்டி, சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என வினவிய போது சுடாத பழம் வேண்டும் என்ற ஔவைக்குச் சிறுவன் நாவலை உதிர்க்க ஔவை ஊதித் தின்ன, பாட்டி, பழம் சுடப் போகிறது நன்றாக ஊதித் தின் என்பது அது. தாம் தோற்றதாகக் கருதிய ஔவை, கருங்காலிக் கட்டைக்கும் நாணாக்கோ டாலி இருங்கதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில் காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான்தோற்ற தீரிரவு துஞ்சாதென் கண் எனப் பாடினார் என்பது தனிப். சுட்டு சுட்டு:1 சுட்டெழுத்து. ஒன்றை அல்லது ஒரு கருத்தைச் சுட்டிக் காட்டற் குறியாக வரும் எழுத்து சுட்டெழுத்து. அவை, அ, இ, உ என்பன. இச்சுட்டு இருவகைப்படும். ஒன்று; சொல்லோடு நின்று சுட்டுவது; அகச்சுட்டு. அவன், அவள். மற்றொன்று சொல்லின் புறத்தே நின்று சுட்டுவது; அவ்வீடு, இத்தோட்டம். (அகம் = உள்; புறம் = வெளி). உகரச் சுட்டு முன்னர்ப் பெருகி வழங்கிப் பின்னர் அருகிப் போயது. உவன், உது; உக்கரை, உப்பக்கம். அ, இ ஆகிய சுட்டு, சொல்லாக விரிந்து அந்த இந்த, அப்படி இப்படி என வரலுண்டு. ஆங்கு ஈங்கு ஊங்கு என நீளலும் உண்டு. சுட்டு:2 சுட்டிக் கூறத்தக்க பெருமையும் சுட்டு எனப்படல் உண்டு. பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும் மறவாதே நோற்பதொன் றுண்டு - பிறர்பிறர் சீரெல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல் - நீதிநெறி. 20 பலர் கூடிய அவையில் ஒருவர் நம்மைக் கவர்கிறார்; நம்மால் சுட்டத் தக்கவர் ஆகிறார்; அச் சுட்டு நிலை அவர் தோற்றம் இயல் செயல் சொல் வகையால் ஏற்பட்டதாம் இது. சுட்டும் சுடர்விழி என்ற பாரதியார் வாக்கும் இது. சுட்டு:3 வினாவகையுள் ஒன்று சுட்டு வினா. சுட்டு மறைநேர் ஏவல் வினாதல் - நன். 386 பொருள்: வஞ்சிக்கு வழியாது? என்றவழி இதுவென்றும், மாவீழ் நொச்சி என்பதற்குப் பொருள் யாது? என்றவழி வண்டு வீழ்ந்து தேனுண்ணும் நொச்சிப்பூ என்றும் கருதிக் கூறும் தொடக்கத்தன எல்லாம் சுட்டு (உரை, சங்.). சுட்டி சுட்டி:1 செய்யக் கூடாத செயல்களைச் செய்து துயரூட்டுபவன். சுட்டி, என்பது சுட்டெரிப்பவன் என்னும் பொருளில் வருவதாம். அதிலும் படுசுட்டி என்பது அவனுக்கும் பெரிய சுட்டி அல்லது சுட்டியில் தேர்ந்த சுட்டி. என் பிள்ளைகளில் நல்லவன் கூரை மேல் கொள்ளிக் கட்டையோடு நிற்கிறானே அவன்தான் என்றானாம் ஒரு தந்தை. அத்தகையன் செயல் சுட்டி விளக்கமாம். சுட்டி:2 அமைவான குழந்தைகள் இடையே ஒரு குழந்தை செய்யும் குறும்புச் செயல், குறும்புப் பேச்சு ஆயவை காண்பாரை வயப்படுத்தி விடுகிறது. அச்சிறுவன் அல்லது சிறுமி சுட்டிக் காட்டப்படும் இயல்பால் சுட்டி எனப்படுதல் வழக்கு. இது என்ன அது என்ன என்று பார்ப்பவனும், கேட்பவனும் இது வேண்டும் அது வேண்டும் என்று வாங்கித்தர ஓயாமல் ஏவுபவனும் ஆகிய துருதுருப்பும் சுறுசுறுப்பும் உள்ள குழந்தையைச் சுட்டி என்பது மக்கள் வழக்காம். பலருள்ளும் தன் இயல் செயல்களால் சுட்டிக் கூறத் தக்கதாகவும் அக்குழந்தை இருத்தல் கண்கூடாம். எ-டு: சுட்டிப்பயல், சுட்டிப் பிள்ளை, சுட்டித்தனம், சுட்டிக் காட்டும் தன்மை சுட்டி எனப்பட்டதாம். சுட்டி:3 சுட்டித்தனம் என்பது சுட்டி எனப்படுதல் பொதுவழக்கு. ஆனால் சுட்டு அடிப்படையில் சுட்டி என்பது அதற்காக என்னும் பொருளில் சீர்காழி வட்டாரத்தில் வழங்குகின்றது. அதைச் சுட்டி (அதற்காக) இப்படியா பேசுவது? அடிப்பது? என்பது வழக்கு. தென்தமிழக வட்டாரங்களிலும் இப்பொருள் வழக்கு உண்டு. சுட்டி:4 கணினித் திரையில் உள்ளவற்றைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பொறியின் பெயர் சுட்டி (Mouse) என்பதாகும். சுணக்கம் சுறுசுறுப்பு (சுணைப்பு) இல்லாமை சுணக்கம். காலத்தாழ்வு ஆதலைச் சுணக்கம் என்பது ம.வ. என்ன சுணக்கம்? காலையிலேயே எதிர்பார்த்தேன்; இப்படிச் சுணக்கமாக வேலை செய்தால் என்றைக்கு முடிப்பது? என்பவை ம.வ. ஓடுதல் படுத்தலாகக் கிடக்கும் நாயைச் சுணங்கன் என்னும் ம.வ. எண்ணத் தக்கது. சுணக்கு ஒரு நிலத்தின் முடங்கிய பகுதியைச் சுணக்கு என்பது நெல்லை வழக்கு. அதனை நீர்ச்சுழல் என்னும் பொருளில் வழங்குவது மதுரை வழக்கு. சொணக்கு என்றும், சோணை என்றும் வழங்குவது முகவை வழக்கு. முடங்கி ஒட்டியுள்ள காதைச் சோணை என்பதும், அக்காதுடையவரைச் சோணைக் காதினர் என்று பட்டப் பெயரிட்டு வழங்குவதும் முகவை வழக்கு. ஆதலால் வளைதல் ஒடுங்குதல் பொருளில் சுணக்கு என்பது பொது வழக்காகத் தென்தமிழகத்தில் இடங் கொண்டுள்ளது எனலாம். சுணங்கன் தெருத்தெருவாக ஓடல், ஓடிவந்து படுத்தல், மீள எழுந்து ஓடல்; மேலும் படுத்தல் என இருக்கும் நம்நாட்டுச் சிற்றூர் நாயைச் சுணங்கன் என்பது ம.வ. சுணக்கமாகக் கிடப்பது சுணங்கன் ஆயது. வேலையில் காலத்தாழ்வு சுணக்கம் என்று வழங்குதல் வழிவந்தது இது. * சுணக்கம் காண்க. சுணங்கு பொன்போலும் தேமல். சுடுபொன், சுணங்கொடும் ஒப்பது. ஆதலால் பொன்போன்ற தேமல் சுணங்கு எனப்பட்டது. பூம்பராகம் எனப்படும் மகரந்தம், பொன் போலும் பொலி வுடையது. ஆதலால் சுணங்கு, தாது எனவும் வழங்கும். தா = பரவுதல்; து = சொல்லீறு. சுணங்கு ஒன்றாய்ப் பின் பலவாய்ப் பரவலாலும் தாதன்ன நிறமுடைமையாலும் தாது எனப்பட்டதாம். சுணங்கு தலைவனால் பாடு புகழுக்கு உரித்தாவது. அவனை அவ்வழகு வாட்டும் வனப்பினதுமாம். சுணைப்பு சுணைப்பு = மானவுணர்ச்சி. ஒருதரம் சொன்னால் தெரியாதா? உனக்குச் சுணைப் பில்லையா? என்பது நாஞ்சில் நாட்டு வழக்கு. உனக்குச் சுணையில்லையா என்பது தமிழ்நாட்டு வழக்கு. (வேர்ச். கட். 206) சுண்டப் போடல் சுண்டப் போடல் = பட்டுணி போடல். சுண்டுதல், காய்தல். நீர் வற்றிப் போகக் காய்தல் சுண்டுதல் எனப்படும். சுண்டை வற்றல், காய்தலாலும் சிறியதாதலாலும் பெற்ற பெயர். சுண்டக் காய்ச்சிய பாலில் சுவை மிகுதியாம். வயிற்றுள் ஒன்றும் இல்லாமல் போமாறு பட்டுணி போடலும், நரம்புகள் சுண்டி இழுக்குமாறு பட்டுணி போடலும் சுண்டப் போடல் எனப்படும். வயிற்றைச் சுண்டப் போட்டால்தான் வழிக்கு வருவாய் என்பது வழக்கு மொழி. சுண்டான் சிற்றெலியைச் சுண்டெலி என்றும், சுண்டான் என்றும் வழங்குதல் பரவலான வழக்கு. சிறுவிரல் சுண்டுவிரல் என்பதும் கருதலாம். சிறிய கலையத்தைச் சுண்டான் என்பது நெல்லை வழக்காகும். அண்டா, குண்டா என வரும் ஏன வகைகளை எண்ணலாம். பொண்டான் என்பது பேரெலி அல்லது பெருச்சாளி. சுண்டு சுண்டு விரல், சுண்டி விளையாடல் என்பவை பொது வழக்கு. உழவர், சுண்டு கயிறு உண்டு. சுண்டு என்பது உதடு என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டாரத்தில் வழங்குகின்றது. உதட்டுக்கு எப்படி இப்பெயர் வந்தது. பீடியை இரண்டு சுண்டு சுண்டினால் என்பது பேச்சு வழக்கு. பீடி குடித்தல் அல்லது பிடித்தலைச் சுண்டு என்பது உண்டு ஆதலால், அதனைச் சுண்டும் உதடு சுண்டு எனப்படுவதாயிற்று. சுண்டு சுழி சுண்டு = நரம்பு சுண்டி இழுக்கும் ஒரு நோய். சுழி = தலை முதலிய இடங்களில் மயிர் சுழித்து அமையும் ஓர் அமைப்பு. முன்னதைச் சுண்டு வாதம் என்பர். வாதம் என்பதற்கு வளி என்பது தமிழ். சுழியாகக் கிடப்பது சுழி. சுழல், சுழிவு என்பவற்றைக் கருதுக. பிள்ளையார் சுழி என்பதும் வழக்கே. ஆசிரியர் சுழித்துவிட்டார் என்றால் மதிப்பெண் ஒன்றும் இல்லை என்பது பொருள். மாடுகள் பிடிப்பவர் சுண்டு சுழி பார்த்தே பிடிப்பர். தங்களுக்கு ஆகும் ஆகாது என்பதைச் சுண்டு சுழிகளைக் கொண்டே தீர்மானிப்பர். சுழியன் சேட்டைக் காரன் என்பதும் சித்திரைச் சுழி இரட்டைச் சுழி என்பதும் வழக்கே. சுண்டெலி சுண்டெலி, எலிவகையில் சிறியது. பெரிய எலி பேரெலி எனவும், பெருச்சாளி எனவும் பொண்டான் எனவும் வழங்கும். பொண்டான் = பெரிய எலி; சுண்டான் = சிறு எலி. காய் வகையுள் சிறிய ஒன்று சுண்டை. சிறியகாய் என்னும் பொருளது. உழவுக்குப் பயன்படும் வடக்கயிறு, வால்கயிறு என்பவற்றினும் சிறியது சுண்டு கயிறு. அது மாட்டைச் சுண்டி இழுத்து ஓட்டப் பயன்படுத்துவது. ஐவிரல்கள், பெருவிரல், சுட்டுவிரல், நடுவிரல், ஆழிவிரல், சுண்டுவிரல் என்பன. சுண்டு விரலே சிறுவிரல். யாழ் நரம்பைச் சுண்டுதற்கு உதவுவது. சிறுவிரல் தடவிப் பரிமாற (நாலா. 282) கண்ணன் குழல் ஊதுதலை ஆழ்வார் பாடல் அழகாகச் சொல்லும். உள்ள அளவில் சுருங்க - வற்ற-க் காய்ச்சுதல் சுண்டக்காய்ச்சுதலாம். மெலிந்து சிறுத்தவனைச் சுண்டெலி எனல் பட்டப் பெயர். சுண்ணம் சுர் > சுள் > சுண் > சுண்ணம். சுடப்பட்ட மாக்கல் சுண்ணம் ஆயது. நறுமணப் பொருள்களை வறுத்துச் சுண்ணம் இடித்தல் வழக்கும் உண்டாயது. சுண்ணம் ஆகிய சுண்ணாம்பு கட்டட வேலைக்குப் பெரும்பயனாயது; வெள்ளை யடிக்கவும் உதவியது. சுண்ணப்பொடி முகப்பூச்சுப் பொடியாய்ச் சிறந்தது. சுண்ணாம்பு காளவாயிலில் உருவாகியது. சுண்ணப்பொடி இடித்தல் சுண்ணம் இடிப்பு வள்ளை (உலக்கை)ப் பாட்டு எனக் கலைநலம் பெற்றது. வள்ளைப்பாட்டு சிலம்பில் பொலிவு பெறும் (29:26-28). திருப்பொற் சுண்ணம் திருவாசகத்தில் மணக்கும். சுதை சுட்டெடுக்கப்பட்ட கல்மாவு (சுண்ணாம்பு) சுதை எனப்பட்டது. கோபுர வேலையைச் சுதை வேலை எனலாம். சுதையாம் சுண்ணாம்பு வெண்மை நிறமானது. அதனோடு வண்ணம் கலந்து வண்ணச் சுதையாக்கியோ, சுதையுருச் செய்து வண்ணம் தீட்டியோ இருவகையாலும் வேலை நடந்தன. சுதை வேலையால் கலைவளம் ஓங்கி உயர்ந்தது. அக்கலை வல்லார் மண்ணீட்டாளர் எனப்பட்டனர். x.neh.: ஓவியர் - கண்ணுள் வினைஞர் எனப்பட்டனர். திருக்கோயில் கலைவளம் அடித்தளம் தூண் சுவர் முகடு ஆயவை கல்லால் ஆயவை. ஆனால், கோபுரம் முழுவதும் சுதை வேலைப்பாட்டு விளக்கமாம். எல்லா வேலைகளையும் முடித்து வண்ணமும் வனப்பும் செய்து நிறைத்து, இறுதியிலேதான் கண்ணைத் தீட்டி வண்ணம் ஆக்குவது வழக்கம்! அக்கண்ணமைவே அக்கலையின் உச்ச நிலையாய் ஓங்கும். செய்தவனே கையெடுத்து வணங்கும் மாட்சி, பெற்ற பிள்ளைக்குத் தாய் தாலாட்டு இசைத்தல் போல் திகழும். கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டாளரும் - சிலப். 5:30 பொருள்: மண்ணீட்டாளர் = சிற்பாசாரிகள் அடியார்க். சுமடு சுமை + அடை = சுமையடை > சுமடு. தலையில் சுமை வைத்துச் செல்வார் அச்சுமை தலையில் அழுத்தாமல் இருக்கத் தலைமேல் துணியை வளையமாய்ச் சுருட்டி வைத்துக் கொண்டு செல்வது வழக்கம். அச்சுருள் அடை சுமை அடை எனப்பட்டது. அது சும்மாடு என இந்நாள் வழங்கப்படுகிறது. சங்கக் காலத்தில் அது சுமடு என வழங்கப்பட்டது. (பெரும்பாண். 159) பழநாள் சாலைகளில் சுமை தாங்கிகள் இருப்பதை இன்றும் காணலாம். சுமை தூக்குவோர் சங்கம் பெருநகரங்களில் புத்தாக்கம் பெற்றுளது. சுமை தாங்கி சுமை தாங்கி = பொறுப்பாளி. கால்நடையாகவே பெருவழிச் செலவு இருந்த நாளில், வழியில் ஆங்காங்குச் சுமையை இறக்கி வைப்பதற்காகப் போடப்பட்டது சுமைதாங்கி, இவ்வறச் செயலைச் செய்தல் வயிறு வாய்த்து மகவு தங்காமல் போனவர்க்கும் மகவு தங்குமென நம்பிக்கை ஊட்டியமையால் அத்தகையவரும் இவ்வறச் செயலைத் தலைப்பட்டுச் செய்தனர். அச்சுமை தாங்கி எப்படித் தாங்க முடியாச் சுமையைத் தாங்கி உதவுவதுடன், அப்பொருளை வைத்தது வைத்தபடி எடுத்துக் கொண்டு போதற்கும் வாய்ப்பாக உதவுகிறதோ அப்படி, தலைமையாள் இல்லாத குடும்பத்திற்குத் தலைமையாக இருந்து தாங்குவாரைச் சுமைதாங்கி என்பது வழக்காயிற்று. அதனால், சுமை தாங்கி என்பதற்குப் பொறுப்பாளி என்னும் பொருள் வந்தது. குடிதாங்கி என்று ஒரு வள்ளல் இருந்தமை வரலாறு. அடிதாங்கிகளாக இருந்தாரும் இருப்பாரும் வள்ளுவர் கூறுவதுபோல் இறந்தாரை எண்ணிக் கொண்டற்று (திருக். 22) என்பதாம். சும்மை சும்மை > சுமை. சுமை தூக்குபவர், அல்லது கல், மரம் முதலியன தூக்குபவர் ஒன்றாக ஒலி எழுப்பி ஒருமுகப்படத் தூக்குவர். ஒலித்து எழுப்பும் பாரம் மகர ஒற்றுக் கெட்டுச் சுமையாயது. பின்னே சும்மை என்பதற்கு ஒலி என்றும் பொதுப்பொருள் உண்டாயது. கலிச்சும்மை வியலாங்கண்- புறம். 22 பொருள்: மிக்க ஆரவாரத்தை யுடைய அகன்ற இடத்து ப.உ. சுரக்கட்டை தவளை பல்வேறு நிலைகளில் பல்வேறு ஒலிகளை எழுப்பும்; பல தவளைகள் சேர்ந்தும் ஒலிக்கும். பலர் கூடிப்பாடுதல், தாளம் போடுதல் போல் ஒலி இருத்தலால் அதனை எழுப்பும் தவளையைச் சுரக்கட்டை எனப் பேரிட்டு வழங்கினர். இது, மதுரை சார்ந்த பாலமேட்டு வட்டார வழக்கு. சுரம் = இசை; பாசுரம் = பாடல். சுரண்டுதல் சுரண்டுதல் = சிறிது சிறிதாகக் கவர்தல்; உதவி கேட்டல். சொறி சிரங்குக்காகக் கையால் சுரண்டல் உண்டு. களை சுரண்டல், சட்டி பானை சுரண்டல் என்பவையும் சுரண்டுதல் என்பதன் நேர் பொருளன. சுரண்டுதற்குரிய கருவி சுரண்டி எனப்படும். ஒருவர் ஒரு பொறுப்பை ஒப்படைத்திருந்தால் அப்பொறுப்பால் வரும் வருவாயைச் சுருங்கச் சுருங்க எடுத்துத் தனதாக்கிக் கொள்ளல் சுரண்டல் எனப்படும். உழைப்பைச் சுரண்டலும் சுரண்டலே. இச்சுரண்டலில் வேறானது. உதவி கேட்டல் பொருள் தரும் சுரண்டல். என்ன கையைச் சுரண்டுகிறான் தலையைச் சுரண்டுகிறானே என்ன என்பவை எதனையோ எதிர்பார்த்து நிற்பதைச் சுட்டும் குறிப்புகளாம். சுரபுன்னை புன்னை மரம் வீட்டின் பகுதியில் வளர்க்கப் படுவதாயிற்று. அப்புன்னை காட்டில் வளர்வதும் உண்டு. அது சுரபுன்னை எனப்பட்டது. சுரம் வெப்பமிக்க நிலம். புன்னைக்காய், எண்ணெய்க்குப் பயன்படுவது. நும்மினும் சிறந்தது நுவ்வை யாமென்று அன்னை கூறினள் புன்னையது சிறப்பே - நற். 172 சுரம் சுர் + அம் = சுரம். ஒருவருக்குக் காய்ச்சல் நோய் வந்தால் அவரிடம் ‘ஜுரம் எப்படி இருக்கிறது? என்று வினவுவதும், அதற்கு அவர், ஜுரம் இறங்கிவிட்டது என்றோ, ஜுரம் இன்னும் வாட்டுகிறது என்றோ மறுமொழி கூறுவதும் நாம் கேட்பனவே. காய்ச்சல் என்பது போலவே சுரம் என்பதும் பழந்தமிழ்ச் சொல்லே எனினும் ஜுரம் என்றே எவரும் சொல்லியும் எழுதியும் வருதலால் அது வடசொல் என்ற முடிவிலேயே, தெளிவுடையவரும் அமைந்து விட்டனர். சுரம் என்று எழுதுபவரையும் அயல் எழுத்தை விலக்கித் தமிழ் இயல்புக்கு ஏற்றவாறு எழுதுபவராகவே எண்ணி, ஒரு புறப் பார்வையோ ஓர்அகப்பார்வையோ பார்க்கின்றனர். சுரம் என்னும் செந்தமிழ்ச் சொல், எப்படி வடசொல்லாகக் காட்சி வழங்குகிறது? நம் வீட்டுக் குழந்தைக்கு மாற்றுச் சட்டை மாட்டி, வேற்றுக் கோலம் புனைந்து வேறொருவர் ஏய்த்தது போல, ஓர் எழுத்தை மாற்றி வேற்றெழுத்தைப் புகுத்தியதன் விளைவால் நேர்ந்ததேயாம். இந்த ஜுரம் தமிழ்மொழிக்குச் சுரமாக வல்லவோ அமைந்து விட்டது. நோய்ச் சுரத்தை மருந்தால் ஒழிக்கலாம். இந்த ஜுரத்தை தெளிந்த அறிவினால் அன்றி ஒழிக்க முடியாதே! ஆயும் அறிவுக்கு அழுத்தமான திரையும் அல்லவோ வழிவழியாகப் போடப் பெற்று வந்திருக்கிறது. சுரம் என்னும் சொல் தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளது. தொகை நூல்களிலும் மிகுதியாக இடம் பெற்றுள்ளது. சுரத்து உய்த்தல், சுரநடை, சுரத்திடை அழுங்கல், சுரத்திடைக் கண்டோர் கூறல் இன்ன பல துறைகளை அகத்தொகை நூல்களும் பிற்காலக் கோவை நூல்களும் கூறும். சுரம் என்பதற்குப் பழம் பொருள் பாலை நிலம் என்பதும், பாலை நில வழி என்பதுமாம். இச்சுரம் என்பது சுரன் என வழங்கப் பெறுதலும் வழக்காறே. நலம், நிலம், அறம், வரம் என்பன முறையே நலன், நிலன், அறன், வரன் என வழங்கப் பெறுதல் போல்வதே அது. நீரின்மை, நிழனின்மை, எரி பரவுதல், ஓரறிவுயிரும் உய்யாமை என்பனவாம் அவலங்களும் புலவர்களால் பாடு புகழ் பெற்றன. பற்றி எரியும் சுரமே எனினும் புலமைப் பாடல் பெற்ற அளவில், அவண் பயில்வார்க்குத் தண்ணிதாய் அமைந்து விடுவதை இலக்கியக் கலைஞர் நன்கனம் அறிவர். சுடர் சுட்ட சுரம் என்கிறது புறம் (136); அழலன்ன வெம்மை என்கிறது கலி (11); நிழலுரு விழந்த வேனிற் சுரத்தை விளக்குகின்றது மதுரைக் காஞ்சி (313-4). நினைத்தாலும் சொன்னாலும் குறித்தாலும் நடுக்கம் உண்டாம் என்பதைச் சுட்டினும் பனிக்கும் சுரம் என்று சுட்டி அமைகின்றது மலைபடுகடாம் (398). இம்மலைபடு கடாத்தின் குறிப்பை வாங்கிக் கொண்ட கம்பர், நினையும் நெஞ்சமும் சுடுவதோர் நெடுஞ்சுரம் (வனம்புகு. 38) என்பதுடன், எரிசுடர்க் கடவுளும் கருதின் வேம் (தாடகை. 5) என்றும் கூறினார். இனிச் செயங்கொண்டாரோ, தாம் புனைந்துரைக்கும் பாலையின் ஓரோ ஒரு மணலை எடுத்து அதனைக் கடலில் போட்டிருந்தால் இராமன் கடலில் அணைகட்ட வேண்டியதே இருந்திராது; கடல்நீர் முழுவதையும் அவ்வொரு மணலே உறிஞ்சி வற்ற வைத்திருக்கும் என்று புனைந்தார். சுரம் என்னும் சொல் வெப்பத்தைக் குறிப்பது எப்படி? அதை அறிந்தால் தானே, காய்ச்சலை அச்சொல் குறிக்குமா என்பதை அறிந்து கொள்ள முடியும்! சுர் > சூர்; சுர் > சுள் > சூள் > சூளை. சுள் என்று வெயில் அடிப்பதை எவரே அறியார்? வெயிலடிப்பு மட்டுமா சுள் என்று அடிக்கிறது! வளாறு, தடி முதலியவற்றால் அடிப்பதும் சுள் என்றும் சுளீர் என்றும் சுள்ளாப்பாக என்றும் சொல்லப் பெறுவதாயிற்றே. தினவு எடுத்தோ, உடல் எரிவுண்டோ, செந்தட்டி முதலியவை பட்டோ எரியுண்டானால் சுள்ளுச் சுள்ளு என்று எரிகின்றது என்று கூறுவதை இன்றும் நாட்டுப் புறங்களில் கேட்கக் கூடுமே! வெயில் உறைத்தல் போல உறைக்கும் மிளகாய்க்கும், மிளகு ஆகியவை கலந்த பொருளுக்கும் சுள்ளாப்பு என்னும் பெயர் வழக்கில் உண்டு. மதுக்குடியர் வெறிக்குத் துணையுறுத்தும் துணைப் பொருள் அல்லது கறிப்புப் (கடிப்புப்) பொருளுக்குச் சுள்ளாப்பு என்னும் பெயருண்மை அகர முதலிகளிலும் இடம் பெற்றதேயாம். அம்மட்டோ? மதுவெறி சுள்ளென்று ஏறுவதாகக் குடி வேட்கையர் கூறிக் குளிர்கின்றனரல்லரோ! வெயில் வாட்டுதலால் காய்ந்து போன குச்சி, பச்சை மரத்தில் ஒட்டிக் கொண்டு இருந்தால் கூடச் சுள்ளி என்றன்றோ பெயர் பெறுகின்றது. முதிர்ந்த புளிய மரத்தின் பட்டையுலர்ந்து பக்கு விட்டதற்கும் சுள்ளி என்பது பெயரே! சுள்ளல் என்பதும் சுள்ளியேயாம். உடனே பற்ற வைத்துச் சமைத்தற்குச் சுள்ளி பொறுக்குதல் சிற்றூர்ச் சிறார் பணிகளில் தலையாய ஒன்றாம். சுள்ளெனக் கடித்துத் துன்புறுத்தும் சில உயிரிகள் சுள்ளுப் பூச்சி, சுள்ளெறும்பு, சுள்ளாஞ் சுருக்கு, சுள்ளிடுவான் என்னும் பெயர்களால் வழங்கப் பெறுகின்றன. வெப்பம், உறைப்பு, வலி முதலிய பொருள் தந்த சுள் என்னும் சொல் மேலும் பொருளால் விரிந்து சினம் என்பதையும் சுட்டுவதாயிற்று. சுள்ளம் என்பது சினம் என்னும் பொருள் தருவதாயிற்று. சுள்ளாப்பித்தல் என்பதற்கு அடித்தல், உறைத்தல், எரித்தல், சூடுகாட்டல், சுருக்கேற்றல் முதலிய பொருள்கள் பின்னே கிளைத்தன. சுள்ளென்று உறைக்கப் பற்றிப் பிடிக்குமாறு அறையப் பெறும் மரத்து ஆணி, சுள்ளாணி எனப்பெயர் பெறும். கைம்மரத்தில் சுள்ளாணிக் குச்சி உண்டு. கதவு நிலைகளின் பூட்டு வாய்ப் பொருத்துகளுக்குச் சுள்ளாணி வைத்து இறுக்கி இழைப்பதைத் தச்சுத் தொழிலில் காணலாம். சுள்ளாணியாகப் பெரும்பாலும் கல் மூங்கில் பிளாச்சுகளையே பயன்படுத்துவர். மூங்கிலுக்குச் சுண்டகம் என்னும் பெயர் உண்மை கருதத் தக்கது. சுள் வழியாகத் தோன்றிய ஒரு சொல் சுளுந்து ஆகும். அது சூந்து என்றும் இடைக்குறைந்து முதனீண்டு வழங்கும். காய்ந்த அல்லது உலர்ந்த தட்டைகளையும் சுள்ளிகளையும் சேர்த்துக் கட்டித் தீமூட்டிச் சுழற்றும் ஒருவகை விளையாட்டே சுளுந்து ஆகும். கார்த்திகைத் திருவிழா, பொங்கல் விழா, விளக்கு வரிசை விழா (தீபாவளி) ஆகிய விழாக்களின் போது சுளுந்து விளையாடுதலைச் சிற்றூர்களில் இப்பொழுதும் காணலாம். தீமூட்டிச் சூடேற்றிப் பொருள்களை உண்டாக்கும் பழம் பணிக் களங்கள் சுள்ளை என வழங்கப் பெற்றன. அவை பானைச் சுள்ளை செங்கல் சுள்ளை சுண்ணாம்புச் சுள்ளை என்பன. சுள்ளை என்பது சூளை என்றும் வழங்கப்பெறும். சூளைப் பெயராலேயே அமைந்த ஊர்களும் குடியிருப்புகளும் உண்மை, முந்து அவை சூளையாய் இருந்தமையைப் புலப்படுத்தும் சான்றுகளாம். காய்ந்து உலரும் பொருள் சுருங்குதல் கண்கூடு. ஆதலால் சுள்ளல் என்தற்குச் சிறுமைப் பொருளும் உண்டாயிற்று. அதனால், அகர முதலிகள் சுள்ளல் என்பதற்கு வளமை யற்றது என்றும், சுள்ளலி என்பதற்கு உயரத்திற்குத் தக்க பருமை யற்றது என்றும் பொருள் கூறுகின்றன. சுள் என்பது சுள்ளு என்றாகிச் சுண்டு என்றும் மாறும். அப்பொழுதும் அதன் அடிப்பொருளான வெப்பம் சினம் சிறுமை முதலியவும் தொடரும். கல்லையும் கிளிஞ்சில் முதலியவற்றையும் சுட்டெரித்து நீறாக்குவதால் கிடைப்பது சுண்ணம், சுண்ணாம்பு என்பன. சுண்ணாம்பின் பயன் நாடறிந்தது. சுண்ண வெண்ணீறு, இறைமைப் பொருளாயிற்று. சுண்ணமிடித்தல் கலைத்திறம், திருத்தக்க தேவராலும் ஆளுடைய அடிகளாராலும் பாடு புகழ் பெற்றது. உலர்ந்து வற்றலாகிப் பயன்படும் ஒருவகைக் காயைத் தரும் செடி சுண்டைச் செடி எனப் பெறுவதும், அதன் காய், சுண்டைக்காய் எனப் பெறுவதும் அதன் வற்றல், சுண்டை வற்றல் எனப் பெறுவதும் மீண்டும் சுட வைத்த கறியும் குழம்பும் சுண்டைக் கறி, சுண்டைக் குழம்பு எனப் பெறுவதும், வற்றக் காய்ச்சுதல் சுண்டக் காய்ச்சுதல் எனப் பெறுவதும் வழக்காறே. சுண்டற் கடலையை அறியார் எவர்? சுண்டல் கிடைக்கும் என்று கூடக் கோயில்களில் கூடும் கூட்டமும் உண்டன்றோ! நீரை மிகுதியும் இஞ்சி (இழுத்து) வாளிப்பாக வளர்த்தலால் இஞ்சிப் பெயர் பெற்ற மூலப்பொருள், உலர்ந்து சுண்டிப் போதலால் சுண்டி என்றும், சுண்டியம் என்றும் பெயர் பெறும். சுக்கு என்பதும் அதன் பெயரே! சுக்கல் என்பது காய்தல், சுக்கல், சுக்கான் பாறை, சுக்கானீறு (சுண்ணாம்புக் கல் நீறு), சுக்கான் கீரை (புளிக்கீரை, புளிச்சக் கீரை) என்பவற்றைக் கருதுக. சுண்டு என்பதற்குச் சிறு என்னும் பொருள் உண்மையைச் சுண்டெலி சுண்டுவிரல், சுண்டுவில், சுண்டுகயிறு, சுண்டன் (மூஞ்சுறு) சுண்டாங்கி (சிறிது) சுண்டிகை (உள்நாக்கு) என்பவற்றால் கண்டு கொள்க! கதிரோன் வெப்பத்தின் வழியே பிறந்த சுள் என்னும் சொல், தீயின் வெப்பத்திற்கு மாறுங்கால் சுர் என்னும் ஒலிக் குறிப்புச் சொல்லாகி மிகப்பல சொற்களாக விரிந்துள்ளதாம். சுர் வழியே வரும் சொற்களைக் காணின், சுரத்தின் மூலம் மிகமிகத் தெளிவாகும். சுர் என்பதில் இருந்து பிறக்கும் சொற்களுள் ஒன்று சுருக்கு என்பது அது வலியையும், விரைவையும் குறிக்கும். சுருக்கென முள் தைத்தது என்பது கேள்விப் படுவதே. உடலில் சில பகுதிகளில் ஏற்படும் குத்தல்களைச் சுருக்குச் சுருக்கெனக் குத்துவதாகக் கூறுவர். சுள்ளாஞ் சுருக்கு என ஓர் உயிரி உண்மை நாம் முன்னரே அறிந்ததே. சுருக்காக வா என்னார் எவர்? சுர் என்பது சுருசுரு என இரட்டைச் சொல்லாய் விரிந்து எரிவையும், ஊர்தலையும் குறிக்கும். தேட்கடி, பூரான்கடி, நட்டுவாய்க் காலியின் கடி, பாம்பின் கடி முதலியவற்றைச் சுரு சுரு என்று வலி ஏறுகின்றது என்பது வழக்கே. தீ சுருசுரு என்று பிடித்து எரிவதாகக் கூறுவதும் வழக்கே! சுடுபடும் பொருள் அல்லது காயும் பொருள் சுருங்குவது இயல்பு. இலை வாடிச் சுருங்குவதும், சுருக்கம் நிமிராமல் சுருண்டு போவதும் கண்கூடு. உடல் வாளிப்பும் குருதி வளமும் குன்றும் போது, தோற்சுருக்கம் உயிரிகளுக்கு உண்டாகி விடுகிறது. பழுத்த பழங்களும், வெயிலடிபட்ட காய்களும், சூடுபட்ட கிழங்குகளும் பிறவும் சுருங்கிப் போகின்றன. ஆதலால், வெதுப்பத்தால் பொருள்கள் சுருங்குவதைத் தெரிந்து கொள்ளலாம். வெப்பக் கரணியம் கருதி இடப் பெற்ற இச்சுருளல் பெயர், பின்னே பொருளால் விரிந்து சுருள்பவற்றுக்கெல்லாம் ஆயிற்று. சிலருக்குக் குடுமியும் கூந்தலும் சுருட்டையாக விளங்குவதும், சுருட்டை சோறு போடும் எனப் பழமொழி வழங்குவதும் அறிந்தனவே. சுருட்டைக்கு அழகுண்மை, சுருளா நிமிர் முடியரும் தம் முடியைச் சுருட்டிச் சுருட்டி வளைத்து விடுவதால் அறியக் கிடக்கிறது. சுருட்டையின் புகழ் ஒன்றா? இரண்டா? சுருட்டைப் பாம்பு உண்டு; சுருட்டை விரியன் என்னும் பாம்பும் உண்டு; சுருட்டை என்னும் ஒருவகை இலை நோயும் உண்டு; சுருள்பவை எல்லாம் சுருட்டைகள் தாமே! பழமையான சுருளலும் சுருட்டையும் புதுமைக் கோலமும் கொண்டன. சுருட்டு என்னும் பொய்ப்பழிச் சொல்லுக்கும் மூலமன்றோ சுருள்! பிறர் பொருளைக் கவர்வதைச் சுருட்டிக் கொண்டு போதல் என்றும் இறந்து போதலைச் சுருட்டிக் கொண்டு போய்விட்டது என்றும் கூறுவதும் வழக்கே யன்றோ! சுருட்டல் அல்மங்கலப் (அமங்கலப்) பொருளில் மட்டும் நின்று விடவில்லை. வெற்றிலையையும் ஓலையையும் சுருள் என்று பெயர் சொல்ல வைத்தது. திருமண அழைப்புக்குச் சுருள் வைத்து அழைத்தலும், திருமணப் பரிசு வழங்குதற்குச் சுருள் வைத்தலும் வழக்கே! சுருள் என்பது சுருட்டி வைத்த வெற்றிலை யாகலின், அவ்வெற்றிலையை வைத்து அழைத்தலும், அவ்வெற்றிலை யொடு பணம் வைத்துக் தருதலும் சுருள் என்னும் பெயர் பெற்றன. சுருள் வைத்து அழைத்துவிட்டால் பகை மறந்து உரிமையால் ஒன்றுபடுதல் வேண்டும் என்பது நம்மவர் கொள்கை. சுருள் வழியே பிறந்த சுருணை என்னும் சொல்லுக்கும் ஓலைச் சுருள், வெற்றிலைச் சுருள் என்னும் பொருள்களும் உண்டு. இவற்றுடன் சுருள் வாளையும் சுருணை என்பது குறிக்கும். யானைத் தோட்டி வளைவுடையதாகலின் அதனையும் சுருணை என்பர். சுருட்டி என்பது ஓர் அராகம் (இராகம்). சுழலும் இசையமைதியால் பெற்ற பெயர் அது. சுருட்டி என்னும் பொது அராகத்தில் செஞ்சுருட்டி என்பது ஒரு சிறப்பு அராகம். கூத்தரங்கில் பயன்படுத்தப் பெறும் திரைக்குச் சுருட்டி என்பது ஒரு பெயர். வேட்டியைச் சுருட்டிக் கட்டிக் கொண்டால் விரைந்து நடக்கலாம் என்பதை நடையர் நன்கு அறிவர். சுருட்டிக் கட்டிய வழக்கே, முழுக்கால் சட்டை, அரைக்கால் சட்டை ஆகியவற்றுக் கெல்லாம் முன்னோடி! உலக முழுவதும் பண்டு வழங்கிய அரசர் உடைகளை ஆராய்ந்தால் இது தெளிவாகும். சுருட்டி மடக்கவும், விரிக்கவும் தக்க வகையில் அமைந்த சிவிறிக்குச் (விசிறிக்குச்) சுருட்டி என்பதும் பெயர். சுருங்கி என்பது ஒரு செடி; தொட்டாற் சுருங்கி என்பதும் தொட்டாற் சிணுங்கி, தொட்டால் வாடி என்பனவும் அதன் விளக்கப் பெயர்கள். ஆமை சுருக்கி என்னும் பெயரால் குறிக்கப் பெறும். அச்சம் நேரும் பொழுதில் கால்களையும் தலையையும் சுருக்கிக் கொள்வதால் சுருக்கிப் பெயர் பெற்றது அது. அறுகீரையாம் அறைக்கீரை, அறுத்தறுத்துச் சுருக்கமுறுவதால் அதனையும் சுருக்கி என்பர். வயிற்றையும் சுருக்கி வாயையும் சுருக்கி, வலிமை வனப்புகளையும் சுருக்கி அருமை பெருமைகளையும் சுருக்கும் வறுமையைச் சுருக்கி என்பது தேர்ந்த தெளிவால் நேர்ந்தளித்த கொடையே யாகும். இனிச் சுருக்குதல் கணக்கையும், சுருக்கி எழுதும் மொழிப் பயிற்சியையும் சுருங்கச் சொல்லும் மொழியழகையும் சான்றோர் எவரும் அறிவர். சுருக்குப் பையில் பணம் போட்டு இடையில் கட்டிக் கொள்ளுதல் முந்தையர் வழக்கு. சுருக்குப் போட்டுச் சாதலும் சாகடித்தலும் உலகெங்கும் வழங்கும் பொதுவழக்கே. சுர் என்பதனுடன் ஐகார ஈறு சேர்தலால் சுரையாகும். சுரையாவது துளை என்னும் பொருள் உடையது. அத்துளையும் புறத்துளையன்று; உட்டுளையாம், உட்டுளையுடைய கொடிகளைக் குறித்த சுரைப்பெயர், ஒருவகைத் தனிக் கொடிக்கு வழங்குவது பொதுச் சிறப்புப் பெயராம். மா என்பது விலங்கு என்னும் பொதுப் பெயர்க்குரியது. ஆயினும் யானைக்குப் பொதுச் சிறப்புப் பெயராய் வழங்குவது போன்றது இது. புறத்தே மூடி உள்ளே துளை யுடைய ஒன்று உள்வெதுப்ப முடைமை தெளிவு. பொந்து, துளை, வளை, பொத்தல், பத்தல் என்பன வெல்லாம் சுரைப்பொருள் சார்ந்த சொற்களே! இவையெல்லாம் உள்வெதுப்பமுடையவை என்பது கருதுக. சுரங்கம் என்னும் சொல்லையும் கருதுக. சுரை என்பது உள் வெதுப்பத்தின் மூலங் கொண்டு பிறந்த சொல்லாயினும், துளை என்னும் பொதுப் பொருளில் வழங்குவ தாயிற்று. அதனால் காதணி, மூக்கணி, காலணி, தோளணி, கையணி முதலியவற்றின் பூட்டுவாய்ப் பொருத்துகளுக்குச் சுரை என்னும் பெயர் உண்டாயிற்று. சுரை இருந்தால், அதனைப் பூட்டி வைத்தற்கு ஆணி வேண்டுமே! அது, சுரையாணி என்னும் பெயர் பெற்றது. திருகாணி, ஓடாணி, பூட்டாணி, பொதுக்காணி என்பவை சுரையாணி வகைகளாம். சுர் என்பதில் இருந்து நாம் குறித்த இச்சொற்களும், குறித்துக் காட்டாத இன்னும் பல சொற்களும் பகுதி பகுதியாய்த் தொகுதி தொகுதியாய் இருந்தும், அடிக் கரணியம் திட்டத் தெளிவாகத் தெரிந்திருந்தும், சுரச் சொல்லை வடசொல்லாய் - வன்படியாய்க் - கையாள்வது நெஞ்சறிந்து செய்யும் வஞ்சமே யாம்! விழித்தால் அன்றி, இச்சூழ்ச்சிகள் ஒரு நாளும் ஒழியா! சுரயம் சுர் என்பது சூடு, சுடர் என்பவற்றின் அடிச்சொல். வெப்பப் பொருள் தருவது. சுரம், காய்ச்சல் எனப்படுதலும், பாலைவனம் எனப்படுதலும் இதனை விளக்கும். சுரம் என்னும் பொதுவழக்குச் சொல் நாகர்கோயில் வட்டாரத்தில் சுரயம் என்று வழங்குகின்றது. சுடுதல் பொருளும் தருகிறது. சுரிகை சுரி > சுரிகை = சுருள் வாள். சுருள்வாளைச் சிறப்பாகக் குறித்த அது, பொது வகையில் வாளையும் இடைவாளையும் குறிப்பதாயிற்று. கொன்றுயிர் குடிப்ப மென்னாச் சுரிகைவாள் உருவிக் கொண்டான் - கம். உயுத். 1651 சுரியல் சுரிதல் = வளைதல். சுரியல் = வளைந்த முடிமயிர். என்னைப் பார்த்து முகத்தைச் சுரித்துக் கொண்டான் என்பதில் சுரித்தல் என்பது முகத்தைத் திருப்பிக் கொள்ளல் ஆகிய வளைவுப் பொருள் இருத்தல் அறிக (ம.வ.) சுரிகுழல் அணிவாரும் - கம். பால. 1280 வளைந்த மூக்கையுடைய சங்கு சுரிவளை எனப்படும். சுரிவளை மேய்வன - கம். பால. 66 சுருட்டி சுருட்டி:1 நாடக மேடைகளில் அமைக்கப்படும் திரையைச் சுருட்டி என்கிறது, சாத்தனார் கூத்தநூல். சுருண்டும் விரிந்தும் மேடைக்குப் பயன் செய்யும் அதனைச் சுருட்டி என்றது தகும். தெண்டிரை எழினி காட்ட - கம்ப. பால. 36 எழினியை இழுணி என்பது கூத்த நூல். புகைக் குடியாகக் கொள்ளும் சுருட்டு, சுருட்டலாலும், சுருண்டு இருப்பதாலும் பெற்ற பெயர் அது. சுருட்டிக் கொண்டு போவாரும் சுருட்டி எனப்படல் உண்டு. சுருட்டி என்பது அராக (இராக) வகையுள் ஒன்று. செஞ்சுருட்டி என்பது அது. எழினி என்பது பழந்தமிழ்ச் சொல். திரை என்பது மக்கள் வழக்குச் சொல். சுருட்டி:2 கடலுள் எழுந்து மேலே 30, 40 அடி தாவிக் கரை கடந்து ஊர் ஊராய் உள்ளவற்றையெல்லாம் ஒரே சுருட்டில் சுருட்டிச் செல்வது சுனாமி அலை. 26.12.2004 அன்று விடியல் 6 மணியளவில் ஏற்பட்ட அவ்வலையால் தமிழகம், புதுவை, அந்தமான், சுமத்திரா, இந்தோனீசியா, இலங்கை ஆயவற்றில் ஐம்பதாயிரம் பேர்களுக்கு மேல் உயிரிழந்தனர். பல இலக்கம் பேர் குடியிருப்பு முதல் அனைத்தும் இழந்தனர். சுனாமி அலை ஒரே சுருட்டாகச் சுருட்டிச் செல்வதால் சுருட்டி எனல் தகும். இதனைக் கடல்கோள் என்றது பழந்தமிழ்நூல். ஆழிப்பேரலை என்றது அறிவியல் நூல். சுனாமி என்றது யப்பான் மொழி. யப்பானில் இப்பொழுது (11.03.2011, 12.03.2011) ஏற்பட்ட நில நடுக்க அதிர்வலை 6-ஐத் தாண்டியதன் விளைவு கொடியது, பல அதிர்வுகள். தொடர்ந்தன; சுருட்டியும் (சுனாமியும்) கிளர்ந்தது; அணுவுலைகள் வெடித்தன. நுங்கு நுரைகள் வெள்ளத்தில் போவது போலச் சொல்லொணா விரைவில் மகிழுந்து சரக்குந்து வீடு படகு கப்பல் என மிதந்து சென்றன. அடுக்குமாடிகள் பலப்பல சுக்கல் சுக்கலாகச் சிதறின; பல்லாயிர மக்கள் இறந்தனர்; இடிபாட்டில் சிக்கி வெளிப்பட முடியாமலும் ஆயினர். இயற்கை ஊழின் வலியை வெல்ல மனிதனுக்கு அறிவும் இல்லை! ஆற்றலும் இல்லை! ஊழில் பெருவலி யாவுள? - திருக். 380 என்னும் வினாவே கிளர்கின்றது. சுருட்டி மடக்கல் சுருட்டி மடக்கல் = அடங்கிப் போதல். பூனையையோ பன்றியையோ கண்டு சீறிப்பாய்ந்து குரைக்கும் நாய், தன்னில் வலிய நாய் வந்தால் வாலைச் சுருட்டி மடக்கி இரண்டு கால்களுக்கும் இடையே வைத்துக் கொண்டு ஓடும். அதுபோல ஏழை எளியவரைப் படாப்பாடு படுத்தும் சிலர், வலிமையானவர்களைக் கண்ட அளவில் வாயை மூடி, கைபொத்தி, குனிந்து வளைந்துசொன்னதைக் கேட்டு நடப்பர். இத்தகையரை அடாவடிக்காரனைப் பார்த்தால் வாலைச் சுருட்டிக் கொள்வான்; ஆளைப் பார் ஆளை; இப்பொழுது அவனை மருட்டட்டுமே என்பர். சுருட்டி மடக்கல் வலிமையைக் கண்டு நிமிருமா? மெலிமைக்கன்றோ நிமிரும்? சுருணை சுருள் என்பது வெற்றிலைச் சுருள். எழுதி வைக்கப் பட்ட ஓலை ஆவணத்தையும் சுருள் எனக் குறித்தல் உண்டு. ஓலைச் சுருள் என்பது பின்னது. இச் சுருள் என்னும் பொதுச்சொல் சுருணை எனத் தென்தமிழக வட்டார வழக்காக உள்ளது. சுருத்து உருத்து > சுருத்து. பிறர்க்கு உண்டாம் துயர், கண்ணில் பட்டதும் வெளிப்படும் அன்பு, உருத்து. அவனுக்கு என்ன செய்தும் சுருத்து இல்லை. உருத்து சகர ஒற்றுப் பெற்றுச் சுருத்து ஆயது. சுரும்பு சுரும்பு = வண்டு வகையுள் ஒன்று. மற்றவை ஞிமிறு, மிஞிறு. சுரும்பு என்பது துதிக்கை போலும் உறிஞ்சு குழாய். அதனை உடைமையால் சுரும்பு எனப்பட்டது. சுரும்பு சூழ் பொய்கை - சிலப். 10:83 சுருள் சுருள்:1 மணமகள் வீட்டார்க்கு மணப்போதில் செய்யும் கொடை சுருள் எனப்படும். இதனைப்,பெண்வீட்டவர் சுருள் (தமி. ஒழு. 615) என்பர். வெற்றிலையில் பணம் வைத்துச் சுருட்டித் தருதலால் சுருள் எனப்பட்டது. சுருளாவது: சுருட்டிய இலையுள் வைக்கும் பணம். சுருள்:2 சுருள் என்பது கஞ்சா என்னும் போதையிலையைக் குறிப்பதாகத் திண்டுக்கல் வட்டார வழக்கில் உள்ளது. அதனைச் சுருட்டிப் புகைத்தல் வழியால் சுருட்டு என்னும் பெயர் ஒப்பப் பெயர் கொண்டு வழங்கப்பட்டதாகும். சுருள் வைத்தல் சுருள் வைத்தல் = பணம் தருதல். சுருள் வைத்தல், சுருள் வைத்து அழைத்தல் என்பனவும் வழக்கில் உள்ளனவே. சுருள் என்பது பணத்தைக் குறிக்கிறது. சுருள்பணம் எவ்வளவு வந்தது என்பதில் பொருள் தெளிவாக உள்ளது. ஆனால், சுருளுக்கும் பணத்திற்கும் என்ன தொடர்பு. வெற்றிலையைச் சுருள் என்பது வழக்கு. வெற்றிலையில் சுருட்டி மடக்கித் தருதல் என்னும் வழக்கில் இருந்து அது வந்தது. அதில் பணம் வைத்து வழங்குதல் உண்மையால் சுருள் என்பதற்குப் பணம் என்னும் பொருள் உண்டாயிற்றாம். * இலைவயம் காண்க. சுரை சுரை:1 கொடி வகையுள் ஒன்று. அக்கொடியில் காய்ச்சுரை, பேய்ச்சுரை என இருவகையுண்டு. காய்ச்சுரை உணவுப் பயனாம். பேய்ச்சுரை நச்சுத் தன்மையான காயை உடையது. சுரை என்பது துளை. கொடியைப் பார்த்தாலும் காயின் முற்றல் குடுக்கையைப் பார்த்தாலும் துளையுள்ளமை அறியலாம். உணவுப் பொருள் நீர் கொண்டு செல்லச் சுரைக் குடுக்கை பயன்படும். சுரைக்குடுக்கை இயற்கை வழங்கிய குடம் அன்னது. சுரை:2 காதணியைக் காதின் துளையுள் செருகி அதற்குக் காப்பாகத் திருகி போடுவர். அத்திருகி துளையுள் புகுவதால் அது சுரை எனப்படும். சுரை = ஓட்டை (அ) துளை. சுரைக்குடுக்கை சுரைக்குடுக்கை = ஓயாப் பேசி. சுரைக்குடுக்கை என்பது முற்றிக் காய்ந்து போனதாகும். அதனைக் குலுக்கினால் சலசல என ஒலி உண்டாகும். மெல்ல அசைத்தாலும் ஆளசைக்காமல் காற்றால் உருண்டாலும் கூட ஒலிக்கும். அதனால் சளசள என ஓயாமல் பேசுபவனைச் சுரைக்குடுக்கை என்னும் வழக்கு உண்டாயிற்று. வாகை நெற்று சலசலப்பதைச் சங்கப் பாடல் காட்டும். கிலுகிலுப்பைக்கு உவமையும் படுத்தும். மக்கள் வழக்கோ ஓயாப் பேசியைச் சுரைக் குடுக்கையாகச் சொல்கிறது. சுர் சுர் என்பது தீ எரிதல் வழியாக ஏற்படும் ஒலிக்குறிப்பு. சுரீர் என்பது எறும்பு, தேனீ முதலியன கடித்த துயரைச் சுட்டும் சொல். சுரீர் எனக் கடித்துவிட்டது என்பது மக்கள் வழக்கு. வெப்பு மிக்க நிலம் சுரம்; உடல் வெப்புறுதலும் சுரமே. வெப்புமிக்க நிலக்குடைவு சுரங்கம் எ-டு: பொற்சுரங்கம் நிலக்கரிச் சுரங்கம்; வெப்புடைய பால் உண்டாதல் சுரத்தல், சுரத்தலையுடைய ஆ, சுரவி (சுரபி). வெப்புறும் ஒன்று சுருங்கும், சுருங்குதல் சுரிதல் வழியது. சுரிதல், வளைதல். தீப்பட்ட பொருள் சுரியும், சுருங்கும். சுரிதல், வளைதல். சுருளுதல் சுருங்கை, நிலத்தகத்துள் அமைந்த வெப்புடையதும் சுருங்கியதுமாம் வழி. சுள்ளாஞ் சுருக்கு ஓர் உயிரி. சர் = விரைவு; சர் சர் என்று அறு. சரம் = விரைந்து செல்லும் அம்பு. சுடுசரம். தொடர்ந்து அமைந்த மாலை சரம். சரக்கு = வெயிலில் காய்ந்த அல்லது உலர்ந்த பொருள். பலசரக்கு, பலசரக்குக் கடை. சரடு = உலர்ந்த நாரால் அல்லது நூலால் ஆயது;காய்ச்சி உருக்கிச் செயப்பட்ட கழுத்தணி. சரட்டு = விரைந்து. சரட்டென்று வா ம.வ. சார் + பு = சார்பு - சார்ந்தது. சார் + அல் = சா ரல்; சார்ந்த இடம்; சரிவான இடம். சார் + அம் = சாரம்; சார்ந்து எழுப்பிய பலகைப் பரப்பு; கட்டடம்கட்டுவார் நிற்பதற் கமைத்தது. எ-டு: சாரப்பள்ளம் (ஊர்) சார் + தல் = சார்தல், சேர்தல், அடைதல். சார் + இ = சாரி, ஒன்றோடு ஒன்று சார்ந்து செல்லல் ஓடல்.எறும்புச் சாரி; குதிரை ஓட்டம். சார் > சேர். சேரல் = சேர வேந்தன். சேரன் = சேர வேந்தன். சேர்ப்பன் = சேர்ப்பாகிய கடலுக்குரியவன். சேர்ப்பு = கடல்சார்ந்த இடம். சேர்க்கை = ஒன்றோடு ஒன்று சேர்தல்; நட்பு. சேக்கை = தங்கும் இடம்; கூடு. சேர்த்தி = நட்பு. சேர்மானம் = ஒன்றோடு ஒன்று அல்லது பல சேர்க்கப்பட்டது. சேர்வை = கூட்டு. சுர் + அம் = சுரம் = 1. காய்ச்சல் நோய் 2. பாலை நிலம் சுரங்கம் = உள்வெப்புடைய நிலத்துள்ளறை, வழி. சுரத்தல் = வெதுப்பமைந்த பால். சுரவி = பால்தரும் மாடு. சுர் + அர் = சுரர்; வெதுப்பூட்டுமதுப் பருகுபவர். சுர் + இ = சுரி = சுரிதல்; வெப்பத்தால் வளைதல். சுர் + ஈர் = சுரீர் = வலி ஏற்படுமாறு சுடுதல்; கடித்தல். சுருக்கம் = பரியதைச்சுருக்கியதுசுருக்கவுரை, சுருக்குக் கயிறு. சுருளல், சுருட்டை. வெப்பத்தால் முடி வளைதல்,ஒரு நோய். சுருவை = தீயில் எண்ணெய் நெய் விடும்கரண்டி. சுருங்கை = நிலத்துள் வழி. சுரும்பு = உறிஞ்சு குழாயுடைய ஈ. சுர் > சுள் = சுள் என்று வெயிலடிக்கிறது. சுள்ளி = காய்ந்த குச்சி. சுள்ளாஞ்சுருக்கு = ஓர் நச்சுயிரி. சுள்ளாப்பு = உறைப்பு, மிளகாய். சுள்ளை > சூளை = சுண்ணாம்புச் சூளை, செங்கல் சூளை. சுர் > சூர். சூர் = அச்சுறுத்தும் அணங்கு. சூரல் = சூரல் என்னும் முட்செடி; சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளிர் ஆரணங் கினரே - யா.வி. 73 சூரன் = அச்சுறுத்துவோன்; வீரன். சூரி = கத்தி. சுவடி, சோடி இரண்டு என்பதைக் குறிக்க இரட்டு, இரட்டை, இணை, துணை, பிணை முதலிய இனிய தமிழ்ச் சொற்கள் இலக்கிய வழக்கு உலகியல் வழக்கு ஆகிய இருவகை வழக்குகளிலும் பயில வழங்குகின்றன. இவற்றொடு சோடி என்னுமொரு சொல்லும் பெருக வழங்குகின்றது. இதனை ஜோடி என்று எழுதுவதும் சொல்வதும் அழுத்தமாக உள்ளன. ஜோடி என்று எழுதாமல் சோடி என்று எழுதினால் வடமொழி வெறுப்பர் என்று சொல்வாரும் உளர். அச்சொல்லின் உண்மைப் பிறப்பு, உறுதிப் பட்டால் அன்றித் தமிழரும் ஏற்றுக் கொள்ளார். ஏனெனில், அவர்களுள் பலரும் ஜோடியைத் தானே ஜோடித்து மகிழ்கிறார்கள். பழங்காலத்தில் எழுதுபொருளாக ஓலை இருந்ததென்பது வெளிப்படை. ஓலையொடு ஏடு என்பதும் அதற்கொரு பெயர். புல்வகை உறுப்புகளைச் சொல்ல வந்த ஆசிரியர் தொல்காப்பியனார், தோடே மடலே ஓலை என்றா ஏடே இதழே பாளை என்றா ஈர்க்கே குலையென நேர்ந்தன பிறவும் புல்லொடும் வருமெனச் சொல்லினர் புலவர் என்று அவர்க்கு முந்தைப் புலவர் வழங்கிய மரபினைக் குறிப்பிடுகிறார் (1586). ஏட்டில் எழுதுவார் தம் விருப்புக்கு ஏற்ற அளவில் பனை ஓலையை ஓர் ஒழுங்குற முறித்தோ, நறுக்கியோ, கிள்ளியோ ஏடு எடுப்பர். ஆகலின் ஏடு முறி என்றும், நறுக்கு என்றும், கிள்ளாக்கு என்றும் பெயர் பெற்றது. ஓர் ஏட்டிலேயே ஒருவர் எடுத்துக் கொண்ட நூல் முற்றுப் பெறுவதில்லை. ஆதலால், பல ஏடுகளை ஓரளவில் எடுத்துத் தொகுக்க வேண்டியதாயிற்று. ஓர் ஏட்டுடன் ஒப்பிட்டு ஓரளவில் எடுப்பதைச் சுவடி சேர்த்தல் என்பது வழக்கு. ஒன்றோடு ஒன்றை, ஒப்பான அளவாக்கி நறுக்கிச் சேர்ப்பதால், இரண்டைச் சுவடி என்னும் வழக்கம் ஏற்பட்டது. சுவடி என்னும் சொல் தோன்றிய வரலாறு இது. சுவடி என்பதற்கு இணை, இரண்டு, இரட்டை என்பதே பொருள். உருவமும் பருவமும் ஒத்த இரண்டு பிள்ளைகளைச் சுவடிப் பிள்ளைகள் என்பதும், ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு இணை சேர்க்கும் காளைகளைச் சுவடிக் காளைகள் என்பதும் - நாடறிந்த செய்தியே. இச்சுவடிகள் இணைப் பொருள் தருவனவேயாம். நாட்டுக்கு நாட்டு மட்டம் - நாமிரண்டும் சோடி மட்டம் என்பதொரு நாட்டுப் புறப்பாட்டு! இவ்வாறு இரண்டு என்னும் பொருள் தரும் சுவடியாம் சோடி ஒரு சோடி செருப்பு, ஒரு சோடி வேட்டி எனப் பேச்சு வழக்கிலும் வழங்குகின்றது. சுவடியிலிருந்து பிறந்தது சுவடு என்னும் சொல். எப்படி? இரண்டு கால்கள் நிலத்தில் படியும் - பதியும் - படிவை அல்லது பதிவைச், சுவடு என்பது இலக்கிய வழக்கு. பிரிவு மேற்கொண்ட தலைவியைப் பரிவு மேற்கொண்ட செவிலித்தாய் தேடி வரும் போது சுவடு கண்டு இரங்கல் என்பதொரு துறையில் புலவர்கள் பாட்டியற்றல் அகப்பொருள் இலக்கணச் செய்தி. சுவடு கண்டு என்பது, தலைவியின் கால் தடம் கண்டு என்னும் பொருள் தருவதாம். மாதர் பிறைக் கண்ணி யானை மலையான் மகளோடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன் யாதும் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது என்பது அப்பரடிகள் வாக்கு (தேவா. 4:3.1). இதில், சுவடு கால் தடத்தைக் குறிக்கும். கால் தடத்தைக் குறிக்கும் சுவடு குதிரையில் ஏறுதற்குக் கால் வைக்கும் அங்கவடியையும் குறிக்கலாயிற்று. மயிலேறி விளையாடும் மகிழ் முருகனுக்குக் குதிரை மயில்தானே! அம் மயிலேறும் பக்கரையையும் சுவடாகக் கொண்டனர். அதனால் அகர வரிசையாளர், சுவட்டுக்கு அங்கவடி, பக்கரைகளையும் இணைத்தனர். இனிச் சுவடி சோடி யானது போலச் சுவடு சோடு ஆகியது. காலுக்குச் சோடில்லை என்பது புலவர் ஒருவரின் பெருங்கவலை, சோட்டால் அடிப்பேன் என்பது சினத்தான் செருக்குரை. ஒப்பிணைப் பொருளாம் சுவடியில் இருந்து, சுவடித்தல், சுவடிப்பு, சுவடணை என்னும் தொழிற்பெயர்கள் பிறந்தன. தேர், பல்லக்கு, அரங்கம், ஆட்டக் களம், மன்றம், மாளிகை முதலியன அழகுறுத்தப் பெறும்போது, இப்பாலும் அப்பாலும் ஒப்பு நோக்கி, இணை இணையாய்ச் செய்தலுடைமையால் அவ்வழக்குறுத்தும் கலைச்செயல் இப்பெயர்களைப் பெற்றது. இவையே பின்னர்ச் சோடித்தல், சோடிப்பு, சோடணை என்றாயின. இவற்றையும் வடமொழித் தாக்கர் விடுவரா? ஜோடித்தல், ஜோடிப்பு, ஜோடணையாக்கி மகிழ்ந்தனர். ஒப்பிணைப் பொருளால் வளர்ந்த சுவடு இரு பதிவாம் தடங்களையும் குறித்ததில் இருந்து வளர்ந்தது. நடந்தும் ஓடியும் அழுந்தித் தடம் பட்டுப் போன வழியையும் பெருவழியையும் குறிக்கலாயிற்று. தேரின் சுவடு நோக்குவர் (அயோ. தைல. 82) என்று குறிக்கும் கம்பர் மண்ணின் மேலவன் தேர்சென்ற சுவடெலாம் மாய்ந்து விண்ணின் ஓங்கியது (ஆரண். சடா. 165). என்று முடித்தார் மண்ணின் தடத்தை விடுத்து விண்ணின் தடத்துக்கும் எழும்பினார் ஆளுடைய அரசர். அண்டங் கடந்த சுவடும் உண்டோ? அனலங்கை ஏந்திய ஆடலுண்டோ? என்பது அவர் வாக்கு (தேவா. 6:97:1) இவண், சுவடு அடையாளப் பொருட்டது. சுவடு தன் பொருளில் மேலும் வளர்ந்தது; நீர் ஒழுகும் தடம், புண், தழும்பு இவற்றையும் குறிப்பதாயிற்று. யானையின் மதம் பாய் தடம் மதம் பாய் சுவடு என்றும், யானைச் சுவடு என்றும் வழங்கலாயிற்று. குருதி கொட்டிய தடத்தைச் செம்புனற் சுவடு நோக்கி இது நெறி என்று சுட்டுகிறார் கம்பர் (உயுத் மகரக். 29) ஏனைய புண்ணும் தழும்பும் வெளிப்படை. அழுந்திய தடத்தில் இருந்து சுவடு அழுந்திய மரபு சுட்டும் சொல்லாகவும், கொங்கு வேளிரால் கொண்டாடப் பெறுவதாயிற்று. சொல்லினன் வினவும் சுவடுதனக் கின்மையின் என்றார் அவர் (பெருங். உஞ். 24:79). இங்குச் சுவடு, மரபு அல்லது அடிப்பட்ட வழக்கினைக் குறிக்கிறது. வழித் தடத்தில் இருந்து வாழ்வுத் தடத்துக்கு வந்த வழி இது. சுவடி, சுவடு என்னும் தனித்தமிழ்ச் சொற்களின் வழி வந்த சோடி, சோடு, சோடித்தல், சோடிப்பு, சோடணை என்னும் சொற்களை, இனியேனும் ஜோடி, ஜோடு, ஜோடித்தல், ஜோடிப்பு, ஜோடணை என வேற்றெழுத்தால் எழுதும் இழிவினைத் தமிழர் ஒழிப்பாராக! எழுத்து ஏமாற்றம் என்றும் நிலைக்காது என்றும் என்றேனும் உண்மை ஆய்வால் வெளிப்பட்டே தீரும் என்றும் அறிஞர்கள் ஆய்ந்து தெளிவுறுத்துவார்களாக! சுவர் சுவல் > சுவர். சுவல் = தோள். தோள் மேல் தலை இருப்பது கண்டு, சுவர் மேல் முகடு கூட்டி வேய்ந்து குடியிருப்பு ஆக்கினர். அந்நிலையில் சுவல் வழியாகச் சுவர்ப் பெயர் வாய்த்தது. கூரை வேயப் பயன்படுத்தும் புல்லை முடிமுடியாகக் கட்டி அடுக்கி வேய்ந்தனர். சுவலுக்கும் சுவருக்கும் உள்ள அமைவுத் தொடர்பு இது. முடி வேய்ந்தவர் முடிவேந்தர் எனப்பட்டனர். முடிகளால் வேயப்பட்டது முகடு எனப்பட்டது. எ-டு: கொன்றை வேந்தன் மூவேந்தர். முடியும், முகடும் உயரமான தலையாக இருந்தமையால் அவை முடிவு என்னும் பொருளில் - அதற்கு மேலே எதுவும் இல்லை என்னும் பொருளில் முடி - முடிவு எனப்பட்டன. முடி =முடிந்த இடம். சுவல் மக்கள் தோள்பட்டை சுவல் எனப்படும். தலைமேல் சுமை கொள்வது போல் தோள்மேல் சுமை கொண்டு போதலும் வழக்கம். சுமையைத் தூக்குதலே தொழிலாகக் கொண்டவர் தோள் தழும்புபட்டு - காய்த்துப் போய் - இருக்கும். தழும்பு அல்லது வடு சுவல் எனப்பட்டதாம். சுவலழுந்தப் பல்காய சில்லோதிப் பல்லிளைஞர் - புறம். 139 பொருள்: தோள் வடுப்படப் பலமுட்டுகளையும் காவிய (சுமந்த) சிலவாய மயிரையுடைய பல இளையோர் ப.உ. சுவை சுவை, சுவைப்பொருள், சுவை உறுப்பு, சுவைத்தல் என்பவை தொடர்புடையவை. நான்கும் கூடியே சுவைத்தல் அல்லது சுவைப்பு நிகழும். நா, கண், தோல், செவி, மூக்கு என உறுப்புகள் ஐந்தும் உள்வாங்கிச் சுவைப்பனவே எனினும், நாவே சுவைக்குச் சிறப்புரிமை பெற்றது. ஆதலால், சுவையொளி ஊறு ஓசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு என்றது திருக்குறள் (27). சுவைகள் ஆறு என எண்ணப்படினும் அவற்றின் கூட்டுக் கலப்பால் உண்டாக்கப்பட்ட சுவைகள் எண்ணற்றுப் பெருகியுள்ளன. இனிப்பு என்றால் ஒருவகையா? இப்படியே பிற சுவைகளுமாம். சுவைத்தல் பக்குவ நிலை அல்லது சுவைநிலை அறியுமாறு உண்ணல். வேக்காடு, காரம், உப்பு முதலியவை செவ்விதின் அமைந்துளவா என்பதை அறிவதற்கு வேக்காட்டின் போதே சுவைத்துப் பார்த்தல் வழக்கு. இதன் வழியாக ஒரு பானை சோற்றுக்கு ஓரவிழ்து பதம் என்னும் பழமொழி எழுந்தது. சுவை பார்த்தல் சுவைத்தல் என்க. இனி, மழவிளங்குழவி தாயின் மார்பில் பாலுண்ணல் சுவைத்தல் என்பதாம். சுவைத்தொ றழூஉம் தன் மகத்து முகம்நோக்கி என்பது புறம் (164). ஏனது சுவைப்பினும் தேனதுவாகும் என்னும் தொல்காப்பியம் (பொருள். 144) சுவை தரினும் என்னும் பொருட்டது. விழியாக்குருளை மென்முலை சுவைத்தலைச் சுட்டுவார் பேராசிரியர் (தொல். மரபு. 8). இச்சுவைத்தல் சவைத்தல், சப்புதல் என மக்களால் வழங்கப்படும். சுழலி சுழல்வது சுழிலி; சுழல வைப்பதும் சுழலி. கால் கைவலி (கால் + கை = காக்கை வலி) உண்டாயவர் சுழல்தலால் அந்நோயைச் சுழலி என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும். கிறுக்குப் பிடித்தவர்க்குத் தலைச்சுழற்சியும் அவர் ஓரிடத் திராது சுற்றலும் கருதிக் கல்வளை வட்டாரத்தார் அதனைச் சுழலி என வழங்குவர். ரிவால்வர் என்பதைச் சுழலி என்றார் பாவாணர். சுழல் சுற்றுதல் சுழலல் அலமரல் தெருமரல் எல்லாம் ஒரு பொருளவை ஆதலால், அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி என்றார் தொல்காப்பியர் (794). சுழல்வது யாது? அது, சுழலி! சூறைக்காற்றைச் சுழல்காற்று என்பது மக்கள் வழக்கு. சுழிக்காற்றும் சுழற்காற்றே. கலங்கரை விளக்கைச் சுழல்விளக்கு என்பதும் மக்கள் வழக்கே. நீரில் சுழல் பகுதி உண்டு. சுழல்மரம் ஆற்றில் சுழல், சுழி என்பவை உண்டு. நீரின் சுழற்சியால் ஏற்பட்டவை அவை. சுழல்மரம் என்பதோ திரிகை. கல்லால் திரிகை வருமுன் மரத் திரிகையே பயன்பட்டது. அதனை முன்னோர் சுழல்மரம், திரிமரம், திரிகை என்றனர். திரிகை அரவைப் பொறி வரவால் அடங்குவதாயிற்று. சுழற்றி துளையிடப் பயன்படும் கருவி துரப்பணம் எனப்படும். துளைத்துத் தோண்டப்பட்ட கிணறு துரவு ஆகும். தோட்டம் துரவு என்பது இணைச்சொல். சுற்றித் திருகுதலே துரப்பணத்தின் செயற்படுத்தம். ஆதலால், அதனை ஒப்பச் சுழற்றி என்னும் சொல்லால் வழங்குதல் சிவகாசி வட்டாரத்தில் தச்சுத் தொழிலர் வழக்கில் உள்ளது. சுழி சுழியாவது: வளைதல் வட்டமாதல். அதனால் எண்குறியா வட்டத்தைச் சுழி என்பர். சுழியம் என்பதும் வழக்கு. மாடுகளுக்குச் சுழி சுண்டு பார்த்தே எவரும் விலைபேசி வாங்குவர். மதிப்பெண் போடாமல் வட்டம் போட்டதைச் சுழித்தல் என்பர். உருண்டை வடிவ இனிய பருப்பு உண்டி சுழியம். சுசியம் என வழங்கப்படு கிறது. தொப்புள் எனப்படுவது உந்திச் சுழி என வழங்கும். * சுழல் காண்க. சுழிவு நெளிவு சுழிவு = திறமையாக நடந்து கொள்ளல். நெளிவு = பணிவாக நடந்து கொள்ளல். ஒன்றைச் சாதிக்க விரும்புவர் திறமையைக் கொண்டோ, பணிவுடைமையைக் கொண்டோ சாதித்துக் கொள்ளுதல் கண்கூடு. அதனைக் கருதி வந்தது இவ் இணைமொழியாம். அவன் சுழிவு நெளிவு அறிந்தவன் எனச் சிலரைப் பாராட்டுவர். சூழ்ச்சி, சூழ்வு என்பவை அறிவு ஆராய்ச்சி வழிப்பட்டவை. அவையே சுழிவாம். சுழிவு வல்லார் சூழ்வார் எனப்படுவார். முன்பு நற்பொருளில் வந்த சூழ்ச்சி இப்பொழுது தந்திரம் (ஏமாற்று) என்னும் பொருளில் வழங்குகின்றது. நெளிதல் அல்லது வளைதல். அதாவது வணங்கிய கையும் இணங்கிய நாவும் உடையவராக விளங்குதல். சுழைதல் சுழல்தல் என்னும் சுற்றுதல் பொருளில் சுழைதல் என்பது குமரி மாவட்ட வழக்கில் உள்ளது. குழல் என்பது குழையாவது போல் சுழல் என்பது சுழையாயது. சுளகு சுலவு > சுளவு > சுளகு. சுலவுதல் = உலவுதல், சுற்றுதல். தவசவகை பயறு பருப்புவகை ஆயவற்றை அள்ளிப் போட்டுப் புடைத்தல் தெள்ளுதல் நாவுதல் கொழித்தல் கோசுதல் நீவுதல் எனப் பலவகையால் தூய்மை செய்யப்படும் கருவி சுளகு ஆகும். முறம் என்பதும் அது. சுளுக்கி சுறீர் என்று வலியேறக் கடிக்கும் சுள்ளான் சுருக்கியைச் சுளுக்கி என்பதும், சுள்ளான் சுளுக்கி என்பதும் வடமதுரை வட்டார வழக்காகும். சுளுக்கி பொது வழக்கு என்னுமாறும் பெருவழக்கினதாகும். சுளை சுள் > சுளை. சுள் = வெப்பு. சுளை = வெப்பத்தால் வெடித்து வெளிப்படுவது. எ-டு: பருத்திச் சுளை, பலாச் சுளை. தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே - புறம். 110 பருத்தி செடியிலேயே வெடிப்பதும், பலாப்பழம் மரத்திலேயே வெடிப்பதும் இயற்கை. சுள்ளாப்பு சுள்ளாப்பு = தொடுகறி. சுள்ளென்று வெயிலடித்தல், சுள்ளென்று உறைத்தல் எனச் சொல்வது வழக்கு. சுள்ளென்று உறைப்பது மிளகு, மிளகாய் என்பவை. அவ்வாறு உறைப்பு மிக்க கறியும் சுள்ளாப்பு எனப்படும். கள், சாராயம் குடிப்பவர் குடிக்குத் துணைப் பொருளாகப் பயன்படுத்தும் உறைப்பான கறிகள் சுள்ளாப்பு என வழங்கப்படுகின்றது. சுள்ளான் சுள் என்று வெயில் அடிக்கிறது. சுள் என்று தேள் கடித்தது என்பது பொது வழக்கு. சுள் என்று வலிக்கக் கடிக்கும் கொசுவைச் சுள்ளான் என்பது சென்னை வழக்கும் தருமபுரி வழக்குமாகும். சுள்ளான் சுருக்கு என்பது கடி எறும்பு. சுறுசுறுப்பாக இருப்பவனைச் சுள்ளான் என்பது மதுரை சார்ந்த கோச்சடை வட்டார வழக்காகும். சுள்ளி சுள்ளி என்பது சிறுவிறகு; குச்சி. அதன் சிறுமை கருதிச் சிறுமியைச் சுள்ளி என்பது மதுரை வட்டார மிதி இழுவையார், குதிரை வண்டியர் வழக்காக உள்ளது. சுறவு கடல்வாழ் சுறவு என்பது தொல்காப்பியம் (1543). அதன் ஆணினை ஏறு எனல் மரபு என்பதும் அது. அரிமா, கரிமா, காளை (ஆகுபெயரால் காளை போல்வான்) ஏறு எனப்படுதல் பெருவழக்கு. இவையெல்லாம் வீறுமிக்கவை என்பது வெளிப் படை. இவ்ஏறு என்னும் பெயரைச் சுறவு கொண்டிருத்தலால், அதன் வன்மையும் செயற்பாடும் அச்சுறுத்தலும் புலப்படும். சுறவின் கூர்மையான பல்லையும், வலிய வாயையும், சுழற்றியடிக்கும் வாலையும், ஊடுருவித் தாக்கும் திறத்தையும், கூட்டம் கூட்டமாகத் திரியும் நிலையையும் சங்கச் சான்றோர் தெளிவாகக் கண்டு உரைத்துள்ளனர். வாள்வீரர்கள் சுழன்று தாக்குவது போலத் தாக்குவன ஆதலால், சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப என்றது புறப்பாடல் (13). அதனைக், கொல் ஏற்றுச் சுறவினம் என்கிறது கலித்தொகை (123). சுறா, எறிசுறா (குறுந். 318; கலி. 131; நற். 303; அகம். 350), கடுஞ்சுறா (நற். 199, 392), கோட்சுறா (நற். 78, 207, 215; அகம். 340), வயச்சுறா (குறுந். 230, 269; அகம். 190), வாட்சுறா (அகம். 150), வாள்வாய்ச் சுறவு (அகம். 187) எனப் பயில வழங்கப்பட்டுள்ளது. சுறவு, சுறா, சுறவம் எனப்பல வடிவுகளில் வழங்குகின்றது. கடல் வாழ் சுறவு, கழியிலும் வாழ்ந்தமை கழிச்சுறா என்பதாலும் (அகம். 120), சுறவம் கழிசேர் மருங்கு என்பதாலும் (நற். 27) விளங்கும். சினைச் சுறவின் கோடு நட்டு வழிபட்டமை, பட்டினப் பாலையால் விளங்குகின்றது (86). சுறா ஏறு எழுதப்பட்ட மோதிரம் தொட்டாள் என்கிறது கலித்தொகை (84). சிலம்பின் பூட்டுவாய் சுறாவின் வாய்போல் அமைந்தமையையும் கலித்தொகை கூறுகிறது (92). சுறா, ஓதப் பெருக்கின் போதும் தாக்குதலும் (அகம். 300) துணைச் சுறாவொடு இருக்கும் போது தாக்குதலும் (நற். 67) சுட்டப்பட்டுள. சுறவின் கோடு தாழையின் மடலுக்கு ஒப்பான தோற்றம் தருதலால், சுறவுக் கோட்டன்ன முள்இலைத் தாழை (நற். 19). எனப்படுகின்றது சுறவு தன் வாயாலும் வாலாலும் சுழற்றி யடிக்கும் அடியில் தெருவில் மழைத்துளி வாரி அடிப்பது போல் உள்ளதாக நற்றிணை நவில்கின்றது (132). திருந்துவாய்ச் சுறவம் நீர்கான் றொய்யெனப் பெருந்தெரு உதிர்தரு பெயலுறு தண்வளி சுறா வலையைக் கிழிப்பதையும், பரதவர் உடலைக் கிழித்துப் புண்படுத்துவதையும் சங்கப் பாடல்கள் தெளிவிக்கின்றன (நற். 303, 392 குறுந். 269). காற்றிலே ஒருவகைச் சுழல்காற்று; சுழிக்காற்று, சூறைக் காற்று, சூறாவளி என்பனவும் அது. அக்காற்றுப் போல் சுழன்றும், வாலைச் சுழற்றியும் தாக்கியழிக்கும் தறுகண்மையால் சுறவு, சுறவம், சுறா எனப் பெயர் பெற்றதாம். சுறவு, சுழற்சியாம். சுறவம் ஓரைப் பெயராய்த் தைத்திங்கள் குறிப்பதாயிற்று. சுறாமீன் காட்சியரங்கில் அது வாலால் அடித்துத் தெறிக்கும் நீர்ச்சாரல் படுதற்காகவே அக்காட்சி மேடை முன்முன் வளாகத்தில் இருப்பாரைக் காணலாம். சுற்றம் ஒருவரை ஒட்டி உறவாகச் சுற்றி இருப்பவர் சுற்றம் ஆவர். சுற்றத்தார் என்பார் அவர். சுற்றி இருத்தல் என்பது ஒருவருக்கு ஒருவர் உதவியாய் உறுதுணையாய் ஒன்றிய நட்பாய் இருத்தலே யாகும். சுற்றத்தால் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன் - திருக். 524 சுற்றத்தார் தேவ ரோடும் தொழநின்ற கோசலை - கம். அயோ. 723 சுற்றம் சூழல் சுற்றம் = உடன்பிறந்தவர், கொண்டவர் கொடுத் தவர் முதலியோர் சுற்றம் ஆவர். சூழல் = சுற்றத்தார்க்குச்சுற்றமாகஅமைந்தவரும் அன்பும் நண்பும் உடையாரும் சூழல் ஆவர். சுற்றமும் சூழலும் வந்திருந்து சிறப்பிக்க வேண்டும் என்று மங்கல விழாக்களுக்கு அழைப்பது வழக்கமாம். சுற்றம் அணுக்கமான அல்லது நெருக்கமான வட்டமும், சூழல் அடுத்த வட்டமுமாம். உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா என்பதால் சுற்றம் உடன்பிறந்தாரைச் சுட்டுதல் அறிய வரும். சுற்றாடல் சுற்றுச் செலவு. நாம் சுற்றுலா, சுற்றுச் செலவு என்பவற்றை ஈழத் தமிழர் சுற்றாடல் என வழங்குகின்றனர். ஆடல் ஆடுதல் பொருளொடு ஆளுதல் பொருளும் தருவது. கையாளல் என்பது கையாடல் என வழங்குதல் அறிக. சொல்லுதல் சொல்லாடல் என வழங்குமாறு, சுற்றுதல் சுற்றாடல் என வழங்குகின்றது. சுற்றி வளைத்தல் சுற்றி வளைத்தல் = நேரல்லா வழி. வட்டம் சுற்றி வழியே போ என்பது பழமொழி. உரிய வழிப்படி போதல் வேண்டும் என்பதைக் குறிப்பது அது. இச்சுற்றி வளைப்பு அத்தகையதன்று. ஏதோ ஒன்றை மனத்தில் வைத்து, அதற்குச் சார்பான மற்றவற்றைப் பேசித் தாம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளலே சுற்றி வளைத்தலாம். சுற்றி வளைத்தல் வேட்டைத் தொழிலில் காணக் கூடியது. குறி வைத்துக் கொண்டு ஒருவர் ஓரிடத்து இருப்பார். பிறர் வேட்டை விலங்குகளைச் சுற்றி வளைத்துக் குறிக்குக் கொண்டு வந்து சேர்ப்பர். வேட்டையர் நோக்கு வெற்றியாக நிறைவேறிவிடும். ஆகலின், நேரல்லா வழி என்னும் பொருளதாயிற்று. சுற்றுதல் உடலைச் சூழ உடை உடுத்தல். சீரை சுற்றித் திருமகள் பின்செல - கம். அயோ. 527 சுனை சுனை > சுனைத்தல் > சுனைப்பு = உள்ளிருந்து துளைத்து மேலெழுதல் சுனைப்பு. சுனை = மலைப்பாறையிடை எழுந்த நீரூற்று. வான்கண் ணற்று அவன்மலையே வானத்து மீன்கண் ணற்று அதன் சுனையே - புறம். 109 சுனைவாய்ச் சிறுநீரை - மான் பருகுதல் வழியாக மனையோம்பல் மாண்பை உரைக்கும் ஐந்திணை ஐம்பது (38). சிறுநீர், சின்னீர், சிறிது நீர். மாடு துள்ளுதல், துள்ளி நடத்தல் சுனைத்தல் எனப்படும் (ம.வ.).  சூ வரிசைச் சொற்கள் சூ சகர ஊகாரம். நெடில். ஓரெழுத்து ஒருமொழி. கோழி வெருட்டல் குறி. மெது (சூதானம்). சூடாகப் பேசுதல் சூடாகப் பேசுதல் = சினந்து பேசுதல். உள்ளம் வெதும்பிப் பேசுவதால் சூடாகப் பேசுதல் எனப்படும். வன்மையாகச் சொல்லும் சொல் சுடுசொல் எனப்படும். தீயினாற் சுட்டபுண் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு - திருக். 129 என்பதும், வில்லம்பு சொல்லம்பு என வரும் வழக்கும், நின் குலத்தைச் சுட்டதடா என் வாயிற் சொல் என வரும் கம்பர் தனிப்பாட்டும் சூடாகப் பேசுதல், சுடுசொல் என்பவற்றை விளக்கும். உள்ளத்தின் சூடு, சொல்லின் சூடாகக் குறிக்கப் படுகிறதாம். தண்ணிய நாட்டில் சூடாகப் பேசுதல் இனிமைப் பொருளாம். வெப்ப நாட்டில் சூடாகப் பேசுதல் தீமைப் பொருளாம். இவற்றைக் கருதுக. வெம்மை வேண்டல் என்பது தொல்காப்பியம் (812). சூடு சூடு:1 சுடு > சூடு. நெற்கதிர் முற்றி அறுவடைப் பருவம் கொண்டால் அரி அரியாக இட்டு, கட்டாகக் கட்டிக் களம் கொண்டு வந்து எளிமையாக மணிகள் உதிர்ந்து விழுமாறு செய்யச் சூடு அடுக்குவர். அரிஅரியாக அடர அடுக்கி வட்ட வடிவில் அமைத்து முகடும் கூட்டுதல் சூடு ஆகும். சுடுமாறு அடுக்கப்படுவதால் அது சூடு எனப்பட்டதாம். சூட்டுக்கல், சூடடித்தல் என்பவை உழவர் வழக்கு. சூடடித்த வைக்கோலைக் களத்தில் பரப்பி மாடு கட்டிப் பிணையல் இட்டு, உதிராதிருந்த நெல்லை உதிரச் செய்வர். சூடு:2 மாடுகளுக்குச் சூடு போடுதல் உண்டு. மருத்துவத் துறையிலும் சூடு போடுதல் உண்டு. வாளால் அறுத்துச் சுடுதலைக் குலசேகர ஆழ்வார் சுட்டுகிறார் (நாலா. 691). பூச்சூடுதல் முடிசூடுதல் எக்காலத்தும் உள்ள வழக்கங்கள். இவை சூட்டுதல் வழி வந்தவை. சூட்டுதலால் தலைமேல் வைத்தல் - கவித்தல். இவற்றால் சூட்டு என்பதற்குத் தலை என்னும் பொருள் உண்டாயிற்று. சூடு சொரணை சூடு = தீயது அல்லது தகாதது; ஒருவர் செய்யும் போதோ சொல்லும் போதோ உண்டாகும் மனவெதுப்பு. சொரணை = மான உணர்வு. சூடு சொரணை இல்லாதவன் என்றோ சூடு சொரணை கெட்டவன் என்றோ பழிக்கும் வழக்க நடைமுறைப்பட்டது இது. எரிகிறது; எரிச்சலைக் கிளப்பாதே என்பவை சூடு என்பதை வெளிப்படுத்துவன. ஒன்று, தன் உடலில் படுவது தெரியாமல் இருப்பவரைச் சொரணை இல்லாதவன் என்பர். இங்குச் செய்யும் அல்லது சொல்லும் ஒன்று மனத்துத் தைக்காமல் இருத்தல் சொரணை யில்லாமை எனப்பட்டதாம். சூடு படுதல் சூடு படுதல் = அஞ்சுதல். சூடு கண்ட பூனை பாலைப் பார்த்ததும் ஓடுதல் விகடராமன் கதை. பன்றி வேட்டையில் வெருண்டு வந்த நாய் சோற்றுப் பானையைக் கண்டு ஓட்டம் பிடித்தது என்பது பழமொழி. நாயால் கடியுண்டவன் நாயைக் கண்டாலே கடியுண்ட உணர்வினனாதல் உளவியல். இவற்றைப் போல்வதே சூடுபடுதலாம். விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கெனக் கையை எடுப்பதைப் போல் என உவமை காட்டினார் பாவேந்தர். சுடுபட்ட பட்டறிவு இருந்தால் சுடு பொருளைக் கண்ட அளவானே அஞ்சுதல் கண்கூடு. இவ்வகையால் சூடுபடுதல் என்பதற்கு அச்சப் பொருள் உண்டாயிற்றாம். சூடுபிடித்தல் சூடு பிடித்தல் = கிளர்ச்சி உண்டாதல். பச்சை விறகில் பற்றிய தீ உடனே சூடு பிடித்து எரிவது இல்லை. பற்றிப் பற்றி எரிந்து சூடு பிடித்துவிட்டால் பின்னர் அனல் கக்கி எரியும். அவ்வாறு சில உள்ளமும் அமைதியாகவும் அடக்கமாகவும் இருக்கும். ஆனால், அவ்வமைதியும் அடக்கமும் வேளைவரும் போது இருந்த இடமும் தெரியாமல் மறைந்து போம். கிளர்ச்சியுண்டாகிய அந்நிலையைச் சூடு பிடித்தல் என்பது வழக்கு. இப்பொழுதுதான் வேலை சூடு பிடித்திருக்கிறது; விளையாட்டு சூடு பிடித்திருக்கிறது என்பது நடைமுறை. சுறுசுறுப்பு அல்லது கிளர்ச்சி உண்டாகிவிட்டது என்பது பொருள். சூடேற்றல் சூடேற்றல் = வெதுவெதுப்பான சுவைநீர் பருகுதல். குளிராகக் குடித்தல், வெதுப்பாகக் குடித்தல் எனக் குடிவகைகள் இரண்டு. அவற்றுள் வெதுப்பாகக் குடிப்பன தேநீர், குளம்பி (Coffee) கோகோ, சுவைநீர் (போன்விட்டா) முதலியன வாம். இவற்றுள் முன்னவை இரண்டும் பெருவழக்கில் உள்ளவை. எங்கும் கிடைப்பவை. அடிக்கடி குடிப்பவை. அவற்றைக் குடிப்பது சூடேற்றலாக வழக்கில் உள்ளது. சூடு போடுதல், சூடு வைத்தல், சுடுதல் என்பவை இல்லாமல் சுடுநீர்க் குடிகளைக் குடிப்பது சூடேற்றலாக வழங்கப்படுவது வழக்குச் சொல்லாம். சூடேற்றி விட்டு வந்து பார்க்கலாம், வாருங்கள் என்பது அலுவலக உரையாடற் செய்தி. அமைவான ஒருவரை, ஒருவர் மேல் ஏவிவிடுதலும் சூடேற்றலாக வழக்கில் உண்டு. சூட்டு உச்சிக் கொண்டையைச் சூட்டு என்பது இலக்கிய வழக்கு. தலையில் முடி வைப்பது முடிசூட்டு ஆகும். சுடுதல் வழியாகச் சூட்டுக்கோல் என்பது வரும். தீப்பற்ற வைக்க உதவும் ஓலையைச் சூட்டு என்பது விளவங்கோடு வட்டார வழக்காகும். சூட்டுக்கோல் சுடு > சூடு > சூட்டு + கோல் = சூட்டுக்கோல். மாட்டுக்கு உண்டாம் சிலநோய்களுக்குச் சூடு போடுதல் தமிழக வழக்கு. தீயில் காய வைக்கும் கம்பியைச் சூட்டுக்கோல் என்பது வழக்கு. உடைமை அடையாளம் காட்டவும் மாடுகளுக்குச் சூடு போடுவதும் உண்டு. சில சாமியாடிகள் சூட்டுக்கோல் சாமிகள் எனப்படுவர். அவர்கள் பிறர்க்கே அன்றித் தமக்கும் சூடு போட்டுக் கொள்வது உண்டு. சூண்டை சூண்டை = சுழற்சி. தக்கலை வட்டாரத்தில் தூண்டில் என்பது சூண்டை என வழங்குகின்றது. சுழற்றிப் போடுதலாலும், சுழற்றி எடுத்தலாலும் ஏற்பட்ட பெயராகலாம் அது. சூதர் சூழ்து > சூது + அர் = சூதர்; சூழ்ந்திருந்து (சூது) ஆடுபவர். சூது ஆடுபவர் சூதர். அவர் அவை சூதர் அவை. சூதர் கழகம் என்பதும் அது. சூதும் வாதும் வேதனை செய்யும். * சூது காண்க. சூது சூழ்து > சூது. சுற்றியிருந்து ஆடும் ஆட்டம். எ-டு: வட்டு = வட்டாட்டு வட்டினும் சூதினும் வான்பொருள் வழங்கி (மணிமே. 16:7) வட்டும் சூதும் வட்டமாக அமர்ந்து ஆடும் ஆட்டம். வட்டிப்பு = மீண்டும் மீண்டும் சுற்றிச் சுழன்று வருதல். வட்டி = மீள மீள வாங்குதல். சூப்புதல் எலும்பின் உள்ளீட்டை உறிஞ்சிக் குடித்தலும் சூப்புப் போல்வனவற்றை இதழ் நெருக்கிக் குடித்தலும் சூப்புதலாகும். சூப்பிப் பருகுதல் சூப்புதல் என்க. சூப்புதற்காக அணியப்படுத்தப் படுபவை சூப்பு எனவே வழங்கப் பெறுதலும் அறிக. சூப்புங்கால் சூப்பு சூப்பு என ஒலி உண்டாதல் கருதி இப்பெயர் எய்தி இருக்கலாம். ஆனால், வீட்டில் தொடு கறியாகப் பயன்படுத்தப்படுவன அவ்வாறு அழைக்கப்படுவது இல்லை. இது குடியர் வழக்காம். சூல் சூல் = கருவுறல். சொல்லரும் சூல் எனச் சிந்தாமணியில் நெற்பயிர் கருவுறல் சூல் எனப்பட்டது (53). கார்முகில் மழைபெய்தலால் சூல் கொண்டது எனப்படும். மகளிர் மகப்பேறு வயிறு வாய்த்தல் சூலுறுதல் (சூலுற்றார் கருக்கொண்டார் வயிறு வாய்த்தார்) என வழங்குவர். விலங்கு கருக்கொள்ளலும் சூலுற்றதெனக் கூறப்படும். சூல்முதிர் மடமான் (மணி. 23:113). சூல், சூலம் என்னும் படையாம். சூலப்படையாள் சூலி, திரிசூலி எனப்பட்டாள். பேயிலும், சூற்பேயைப் பரணி நூல் சுட்டும். இடக்கி மடக்கி தொடக்கி உழற்றும் நோய் சூலை நோய் எனப்படும். அப்பரடிகள் வரலாறு அதற்குச் சான்று. சூல்காப்பு மகப்பேற்று அழைப்பு வளை காப்பு விழா என வழங்குதல் பொதுவழக்கு. கருவுற்ற மகளிர்க்கு வளையல் அல்லது காப்புப் போடுவதால் அது சூல் காப்பு என நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது. சூழம் நாவைச் சுழற்றி அடிப்பதால் உண்டாகும் ஒலியைச் சீட்டி என்பர். சீட்டி என்பதைச் சூழம் என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும். சூழ் > சூழல் = சுழற்றல். சூழம் = சுழற்றியடித்தல். சீழ்க்கை > சீட்டி. சூழ்க்கை > சூழம். சூழி சூழ் > சூழி. வட்ட வடிவாக அமைந்த தலையணி சூழி எனப்படும். பல அணிகள் சூழ இடையே அமைந்த தலையணி அஃதாம். சூழிகை சூழிகை = கள், மது. பருகினாரைத் தலைசுற்றச் செய்வது. ஆதலால் சூழிகை எனப்பட்டது (வெ.வி.பே). சூழ்ச்சி சுற்றியிருந்து ஆராய்வது (முற்பொருள்). சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் - திருக். 671 சுற்றியிருந்து அல்லது சுற்றி வளைத்துக் கெடுப்பது (பிற்பொருள்). சூழ்ச்சிக்காரன் அவன் ம.வ. பலவகையாலும் ஆராய்தல், பலரொடும் ஆராய்தல். சூழாமல் தானே முடிவெய்தும் - திருக். 1024 சூழ்ச்சிய வென்றி (சித்திரவுபாய செயம்) எல்லா வகைகளிலும் ஏற்றம் பெற்றுத் திகழும் நங்கை ஒருத்தியைப் பல்வேறு திறங்களால் வெற்றி கொள்ளுதல் சூழ்ச்சிய வென்றி (சித்திரவுபாய செயம்) எனப்படும். ஒப்பாமல், எத்தொழிலி னும்விருதாம் ஏந்திழையை யேசெயித்தல் சித்ர வுபாய செயம் - பிர. திர. 45 என்பது இதன் இலக்கணம். விருதாம் ஏந்திழை = விருது பெற்று விளங்கும் பெண். தமிழறியும் பெருமாள் கதை போல்வன இவ்வகையில் அமைந்தவையாம் (விநோத ரச மஞ்சரி). சூள் சூல் > சூள். வயிறு வாய்த்து வளர்தல் சூலாகும். நெஞ்சத்து உண்டாகிய ஒரு கருத்து வளர்ந்து முதிரக் கூறும் கூற்றும் அக்கூற்றுவழி உறுதிக் கோட்பாடும் சூள் ஆகும். வஞ்சினம், நெடுமொழி என்பன சூள் வழியவே. சூறாவளி சூறை > சூறா. சூறை = சுழற்சி; வளி = காற்று. சுழன்றடிக்கும் காற்று சூறைக்காற்று, சூறாவளி, சூறை எனப் பலவாறு வழங்கும். சூறைக் காற்று மண்ணில் கிடந்தவற்றை அள்ளி எட்டா உயரத்தில் கொண்டு சென்று எங்கோ போட்டுவிட்டுப் போவது போல் கொள்ளை கொண்டு போவாரைச் சூறாவளி என்பது மக்கள் வழக்கு. அவர், சூறாவளி எனப்பட்டப் பெயரிட்டு அழைக்கப்படுதலும் உண்டு. அதைப் பெருமையாகக் கொள்வாரும் கூட உண்டு என்பது மானக் கேடு. சூன் உள்ளே துளைத்தல் சூலல் ஆகும். சுழன்று துளைத்தல் அது. சூல்நோய், சூலைநோய் என்பவை அவ்வாறு குடரைச் சுழற்றி வலியூட்டுவதால் பெயர் கொண்டவை. சூலம் என்பது கருவிப் பெயர். சூல் > சூன் ஆகும். உள்ளே பூச்சி துளைத்துச் செல்லும் கேடு சூன் எனப்படும். இது தென்தமிழக வழக்குச் சொல். சூத்தை என்பதும் அதன் வழி ஏற்பட்ட சொல்லாம். சூன்றல் நுங்கு போல்வனவற்றை விரலால் குடைந்து அல்லது நோண்டித் தின்னல் சூன்றல் ஆகும். சூன்று என்பதற்கு அகழ்ந்து குடைந்து என்னும் பொருள்கள் உண்மை, நிழல் சூன்று உண்ட நிரம்பா நீளிடை என்னும் அகத்தால் (381) புலப்படும். நுங்கு சூன்றிட்டன்ன என்பது நாலடியார் (44).  செ சே சை வரிசைச் சொற்கள் செகில் சேகில் > செகில் = சிவந்த நிறக் காளை. சே = சிவப்பு. குரூஉச் செகில் - கலி. 105 சேகில் என்பதும் பாடம். செக்கர் செக்கர்:1 சிவந்த வானம் செக்கர் வானம் எனப்படும். சிவப்பைச் செக்கச் செவேர் என அழுத்திக் கூறுதல் வழக்கு. செக்கர்கொள் பொழுதினான் ஒலிநீவி இனநாரை முக்கோல்கொள் அந்தணர் முதுமொழி நினைவார்போல் - கலி. 126 செக்கர்:2 செக்கில் எண்ணெய் ஆட்டுபவர். செக்கு சிக்கு > செக்கு. ஆட்டுவன தன்னுள் சிக்குமாறு செறிய இட்டு, ஆட்டி எடுக்கும் பொறி செக்கு ஆகும். எள், தேங்காய், ஆமணக்கு, வேப்பமுத்து ஆயவற்றை உலர்த்திச் செறியக் கல் அல்லது மர உரலில் இட்டு, மாடு ஓட்டிச் சுழலச் செய்து, எண்ணெய் எடுக்க உதவும் பொறி செக்காகும். உரலில் இட்டு உலக்கைக்குத் தப்ப முடியுமா? என்பது பழமொழி. மரம், கல் ஆகிய செக்குகளில் ஆட்டிய காலம் போயது. ஆலைகளில் எண்ணெய் ஆட்டி எடுக்கும் காலம் இது. புன்னை, எண்ணெய்ப் பனை முதலிய கொட்டைகள், சூரிய காந்தி விதை, தவிடு முதலியவற்றில் இருந்தும் எண்ணெய் எடுக்கப்படுகிறது. பொறிகள் அமைப்புகள் மாறினாலும் செறித்துச் சிதைத்து ஆட்டி எடுத்தல் அவ்வகையாகவே உள்ளது. கரும்பாட்டுதல் பழநாள் தொட்டே உண்டு. கார்க்கரும்பி கமழாலை என்கிறது பட். 9. செக்காலை, செக்காலைத் தெரு என ஊர்ப்பெயர்களும் தெருக்களும் செக்கடி என்பதும் இன்றும் மறையாமல் உள. செக்கானூரணி என்பது மதுரை சார்ந்ததோர் பேரூர். செக்கிறை என்பது செக்காட்டுவார் அரசுக்குச் செலுத்தும் வரி. செக்காட்டுவார் செக்கார் என்றும், செக்கு வாணிகர் என்றும் வழங்கப்பட்டனர். செங்கல் சுமத்தல் செங்கல் சுமத்தல் = சீரழிதல். செங்கல் சுமந்து சீரழிந்தேன் என்னும் மரபுத் தொடர் செங்கல் சுமத்தல் வழக்கையும் அதன் சீரழிவுப் பொருளையும் ஒருங்கே விளக்குவதாம். செங்கற் சுமை, கடுஞ்சுமை, ஏற்றல், இறக்கல், தூக்கல், சுமத்தல், எடுத்தல், கொடுத்தல் எல்லாம் கனத்தல். அலுப்பு உண்டாக்கும் தொழிலில் செங்கற்சுமை குறிப்பிடும் ஒன்றே. செங்கற் சுமையர் எவ்வளவு உண்டாலும் உடல்தேறார். கூலி எப்படி? சிற்றாள் கூலி! சிற்றாள் வேலை எட்டாள் வேலை என்னும் சிறப்புப் போதுமே! செங்கல் மங்கல் செங்கல் = செவ்வானமாகத்தோன்றும் மாலைப் பொழுது. மங்கல் = செவ்வானம் இருண்டு மங்கிக் காரிருள் வரத் தொடங்கும் முன்னிரவுப் பொழுது. நான் அங்கே போகும் போது செங்கல் மங்கல் பொழுதாக இருந்தது என்பது வழக்கு. சுடுமண் செந்நிறம் பெறுதலால் செங்கல் எனப்படுவது அறிக. மங்கல் என்பது செந்நிறம் மங்கி இருள் வருதலைக் குறித்ததாம். செங்களம் செம்மை + களம் = செங்களம் = குருதியால் சிவந்துபோய போர்க்களம். செங்களம் படக்கொன் றவுணர்கணம் தேய்த்த செல்லுறழ் தடக்கை - யா.கா. 22 மேற் கருங்களம் என்பது ஏரோர் களம். முன்னது தேரோர் களம். (தொல். 1022) செங்காந்தள் காந்தள் வகையுள் ஒன்று, செங்காந்தள்; மற்றொன்று கருங்காந்தள். காந்தள் என்றால் செங்காந்தளையே குறிக்கும். கழல்தொடிச் சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே - குறுந். 1 குருதிப் பூ = சிவந்த பூ. காந்தட்டே = காந்தளையுடையது. செங்காய் பிஞ்சும் அன்றிக் கனியும் அன்றி இடைப்பட்ட சீரிய காய் செங்காயாம் (ம.வ) சரியான காய்நிலை என்பது அது. கருங்காய் என்பது கனிவதற்கு ஏற்ற பருவம் வாயாத காய். செங்குட்டுவன் சிலம்பின் வஞ்சிக் காண்டச் சிறப்பினன்; கண்ணகியார்க்குத் திருக்கோயில் எடுத்த பெருமையன். அவன் நிறத்தால் பெயர் பெற்றதே செம்மை அடை என்பர். வண்ண அடையாளம் எண்ணத்தகு சிறப்பன்று. செங்கோற் சிறப்பால் பெற்ற பெருமைப் பெயர் அது. செம்மை சிறுமை சேய்மை தீமை வெம்மை புதுமை மென்மை மேன்மை திண்மை உண்மை நுண்மை இவற்றெதிர் இன்னவும் பண்பிற் பகாநிலைப் பதமே - நன். 135 என்பது பண்புப் பகாநிலைச் சொற்கள் பற்றிய நூற்பா. இந்நூற்பாவிற்கு உரைவரைந்த பெருமக்கள் செம்மைக்குக் கருமை வெண்மை முதலியனவற்றை எதிர்ச்சொல் எனக் காட்டினர். இவை, இன்னவும் என்பதனுள் அடங்கும். கருமை முதலிய நிறங்கள் செம்மை போன்றனவே அன்றி எதிரிடையானவை அல்ல என்பது எவரும் அறிந்ததே. சிறுமைக்குப் பெருமையும், சேய்மைக்கு அண்மையும், தீமைக்கு நன்மையும் போலத் தன்மையால் எதிரிட்டவை அல்ல, கருமை முதலியவை. செம்மையின் எதிர்ச்சொல் கொடுமை என்பதாம். கொடுங்கோல் என்பதை அறிக. செம்மையாவது நேர்மை; வளையாத் தன்மை. ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை - சிலப். 15:120:121 என்பது அடிகள் வாக்கு. கோவலர் கைக்கண் உள்ள கோல் ஓரொருகால் அலைப்பது ஆகலின், கொடுங்கோல் கோவலர் (முல்லைப்பாட்டு) என்கிறார் நப்பூதனார். இனி அவர் கைக்கோல் வளைவுடையது என்பதைச் சுட்டுவதுமாம். செம்மை செவ்விய தன்மையாம் நேர்மை ஆகலின், நடுவு நிலைமை என்பதாம். நடுவு நிலைமையாவது ஒருபால் கோடாமை. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி என்னும் குறள்மணி (118) நடுவு நிலைமையை உவமையால் நன்கனம் வலியுறுத்தும். மேலும், நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்னெஞ்சினோர் என்னும் கடியலூர் உருத்திரங் கண்ணனார் வாக்கும் (பட். 206-207), நுகத்துப் பகலனையாய் என்னும் பொய்யா மொழியார் வாக்கும் (தஞ்சை. 48), செம்மையின் ஆணி என்னும் கம்பன் வாக்கும் காணத் தக்கன (அயோத். 1112). ஒருபால் சாயாத நடுவு நிலைச்செம்மை, செப்பம் எனவும் பெறும். செப்பம் உடையான் செவ்வியான் எனப்பெறுவான். சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின் என்றும், செப்பம் உடையவன் ஆக்கம் என்றும், செப்பமும் நாணும் ஒருங்கு என்றும், செவ்வியான் கேடும் என்றும் வரும் குறள்மணிகளைத் (119, 112, 951, 169) தெளிக. நேர் கிழக்கைச் செங்குணக்கு என்றும், சரிவின்றி நிமிர்ந்தெழுந்துள்ள மலையைச் செங்குன்று செங்கோடு என்றும், நேரிய கூரிய அம்பைச் செங்கோல் என்றும், நேரிய பார்வையைச் செந்நோக்கு என்றும், இருவகை வழக்கினும் உண்மை காண்க. இவற்றை நோக்கச் செங்குட்டுவன் என்பது செவ்விய நேரிய - நடுவுநிலை போற்றிய குட்டுவன் என்பது போதரும். அகச்சான்று காட்டின் அன்றோ ஏற்கும் எனின் காட்டுதும். (1) மதுரைச் சாத்தனார் மலை நாட்டுக்குச் சென்று செங்குட்டுவனைக் கண்டு கோவலற்கு உற்றதும், கண்ணகி வழக்கும், தென்னவர் கோமானும் தேவியும் பட்டதும், கண்ணகி மலைநாட்டுக்கு வந்ததும் ஆகிய செய்திகளை ஒழிவின்றி உரைத்தார். அதனைக் கேட்டவுடன், எம்மோ ரன்ன வேந்தற் குற்ற செம்மையில் இகந்தசொற் செவிப்புலம் படலும் உயிர்பதிப் பெயர்ந்தமை உறுக வீங்கென வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது - சிலப். 2: 95-99 என்று செங்குட்டுவன் கூறும் உரைமணி அவன் செங்கோல் தெய்வத்திற்குத் தலை வணங்கித் தாழாத் தொண்டியற்று தனிப்பேரடியான் என்பதைத் தெள்ளிதின் விளக்கும். (2) மேலும், பாண்டியன் தான் செய்த பழிக்குக் கழுவாய், தானே தேடிக் கொண்டதை வியந்து பாராட்டும் செங்குட்டுவன், ஆள்வோருக்கு உண்டாம் அல்லல்களைக் கூறுமுகத்தான் தன்செங்கோல் நாட்டச் சீர்மையைப் புலப்படுத்துகின்றான். மழைவளங் கரப்பின் வான்பேர் அச்சம் பிழையுயிர் எய்திற் பெரும்பேர் அச்சம் குடிபுர வுண்டுங் கொடுங்கோல் அஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்ப மல்லது தொழுதக வில் - சிலப். 25:100-104 என்பது அவன் வாக்கு. (3) இனி, வடநாட்டின்கண் நிகழ்ந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் நாவினைக் காவாக் கனகன் விசயன் முதலாயவர், தென்னாட்டு வேந்தர் இமயத்தில் இலாஞ்சினை பொறித்த நாளில் எம்போலும் வேந்தர் ஈங்கில்லை போலும் என்றுரைத்த மொழியைத் துறவோர் வழியாகக் கேள்வியுற்ற செங்குட்டுவன், வடநாட்டின்மேற் படை கொண்டு செல்ல விழைந்திருந்தான். அவ்விழைவைப் பத்தினிக் கற்கோள் விரைந்து தூண்டிற்று. வஞ்சினம் கூறி வடநாட்டுச் செலவு மேற்கொள்கிறான் செங்குட்டுவன். வஞ்சினமாவது நெடுமொழி. இன்னது பிழைப்பின் இதுவாகியர் எனத் துன்னருஞ் சிறப்பின் வஞ்சினம் (தொல். புறத். 24) என்னும் சிறப்புடையது வஞ்சினம். உயிரெனப் போற்றும் ஒன்றையோ பலவற்றையோ சுட்டிக் கூறி வஞ்சினம் கூறப் பெறும் என்பதை இலக்கியம் கற்ற, எவரும் அறிவர். அவ்வாறாகச் செங்குட்டுவன் கூறும் வஞ்சின மொழி யாது? கடவுள் எழுதவோர் கற்கொண் டல்லது வறிது மீளுமென் வாய்வாள் ஆகிற் செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப் பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பிற் குடிநடுக் குறூஉம் கோலேன் ஆகென - சிலப். 26:14-18 முழங்குகின்றான். குடிநடுக் குறூஉம் கோலை எவ்வளவு கொடுமையாகக் கருதினான் செங்குட்டுவன் என்பதை விளக்க வேறு சான்று வேண்டுவ தின்றாம். (4) இனிச் செங்குட்டுவன் வடநாட்டுச் செலவினை மேற்கொண்டு கங்கைக் கரைக்கண் இருந்த காலையில், தென்னாட்டினின்று போந்த மாடலன் என்னும் மறையோன் பாண்டிநாட்டு நிலைமையையும், சோணாட்டுச் செய்தியையும் தானே விரித்துரைக்கின்றான். பொழுது போய பின்னர்ச் செங்குட்டுவன் மாடலனை மீண்டும் தானே அழைத்து, இளங்கோ வேந்தன் இறந்த பின்னர் வளங்கெழு நன்னாட்டு மன்னவர் கொற்றமொடு செங்கோற் றன்மை தீதின் றோவென - சிலப். 27:159-161 வினவுகின்றான். தன் மைத்துன வளவனுக்கு இருந்த தாயவுரிமைப் போரைத் தகர்த்து அரசாக்கி நிறுத்தியவன் செங்குட்டுவன். அச்செயல் முடித்த பின்னர் வடநாட்டுச் செலவு மேற் கொண்டான். ஆகலின் அச்சோணாட்டுச் செங்கோற்றன்மை தீதின்றோ என வினாவுகின்றான். இவ்வினாவினால் தன்னாட்டில் மட்டு மன்றி எந்நாட்டிலும் செங்கோற் றன்மை சீருற விளங்க அவாவியவன் செங்குட்டுவன் என்பது விளக்கமாம். (5) செங்குட்டுவன் மலைவளங் காணச் சென்ற காலையில் ஏழ்பிறப்படியோம் வாழ்க நின் கொற்றம் என வீழ்ந்து வணங்கிய குன்றக் குறவர், கான வேங்கைக் கீழ் நின்ற காரிகை வானம் போகிய இறும்பூது நிகழ்ச்சியைக் கண்டவாறு கூறினர். கலங்கி நின்ற அக்காரிகை சேரர் நாட்டகத்து இவ்வாறு அல்லல்பட்டு ஆற்றாது அழுங்குவார் இலர் என்று உறுதியாகக் கருதினர். ஆகவே, எந்நாட் டாள்கொல் யார்மகள் கொல்லோ நின்னாட் டியாங்கண் நினைப்பினும் அறியோம் - சிலப். 25:61-62 என்றனர். குன்றுவாழ் மக்களே கோன்முறை கோடாக் கோன்மை தம் நாட்டில் நிகழ்வதாகக் குறிக்கொண்டு வாழ நெறிப் படுத்திய காவலன் செங்குட்டுவன் என்னின் அவன் செங்கோல் சீர்மை என்னே! (6) வஞ்சி மூதூரில் மகிழ்ந்திருந்தான் குட்டுவன். அப்பொழுது எழுந்த முழுமதியைக் கூறவந்த அடிகட்குக் குட்டுவன் குடிபுறந் தரும் கோன்மையே முன்னின்றது. ஆகலின், குடிபுறந் தருங்கால் திருமுகம் போல உலகுதொழத் தோன்றிய மலர்கதிர் மதியம் - சிலப். 28:38-39 என்றார். செங்குட்டுவன் குடி புறந்தரூஉம் செங்கோன்மையை விளக்கும் உவமை யாகலின் கருதத் தக்கதாம். (7-8) செங்குட்டுவன் விளியாக அறக்கோல் வேந்தே (28:96) என்றும், செங்கோல் வேந்தே (28:157) என்றும் அடிகளார் கூறியுள்ளமையும் அவன் அவையத்தைச் செங்கோல் வேந்தன் திருவிளங்கு அவையம் (2:144) என்று கூறியுள்ளமையும் நோக்குதற்குரியன. (9) செங்குட்டுவற்கும் இளங்கோவடிகட்கும் உழுவலன்பு பூண்ட முத்தமிழ் ஆசான் சாத்தனார், மணிமேகலை வஞ்சி மாநகர் புக்க காதையில் ஆங்கு ஆட்சி புரிந்தவன், செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன் (26:77) என்று குறிக்கின்றார். இவ்வாற்றால் எல்லாம் செங்குட்டுவன் என்பதும், அவன் செங்கோற் குட்டுவன் என்பது தெளிவாம். இஃதிவ்வாறாக, நம் சேரல் பெருந்தகை குட்டுவன் எனத் தனித்தும் வழங்கப்படுவன்; இவனுக்குரிய அடைச்சொல்லாகிய செம்மை இவனது நிறம்பற்றி வழங்கப்பட்டதாகும். இது பற்றியே, மணிக்குட்டுவன் என்றும் இவன் வழங்கப் பெற்றவன் என்று சாசனமொன்றால் தெரிகின்றது எனச் சேரன் செங்குட்டுவன் ஆசிரியர் மு.இராகவர் கூறியுள்ளார். மேலும், நாமக்கல் சாசனத்தில் சேரரின் முன்னோருள் மணிக்குட்டுவன் என்பவனும் ஒருவனாகக் காணப்படுகின்றான் என்றும், அவன் நன்னூல் மயிலைநாதர் உரையில் காட்டப்பெறும் திருமணிக் குட்டுவன் ஆகலாம் என்றும், மணிக்குட்டுவன் என்று கொள்ளத்தகும் என்றும், அதற்கு மணத் தக்காளி மணித்தக்காளி என வழங்குவது சான்று என்றும் மணி என்பது ஈண்டுச் செம்மணியான மாணிக்கமாம் என்றும் கூறியுள்ளார். புறச்சான்றுகளைத் தேடிப் படைத்துச் செங்குட்டுவன் பெயர்க்கு ஆக்கி நிறத்திற்கு நிறுவுதலினும் அகச்சான்றுகள் நிரம்பிக் கிடக்கும் நேர்மை அடையைப் புறக்கணிக்க இயலாது என்பதறிக. மணிக்குட்டுவன் அல்லது மணக்குட்டுவன் என்பதைத் தக்க சான்று இன்றிக் கொள்ளுதற்கு இயலாது. அதனையே கொள்ளுவதற்கியலாத போது அவன் நிறத்தைக் கோடல் என்பது சிறிதும் இயலாததாம். இனி, மணி என்பது செம்மணி என்று மட்டும் குறிக்கும் என்பதன்று. அது செம்மணியையும் குறிக்கும். கருமணியையும் நீலமணியையும் பச்சை மணியையும் பிற மணிகளையும் குறிக்கும். மணிவண்ணன் என்பது திருமாலைக் குறிக்கும் பெயர்களுள் ஒன்று. மணி ஆண்டுச் செம்மணியாமோ? அது கருமணியாம்! கருமணியைக் கண்டு கொண்டேன் கருமணியைக் கோமளத்தை என்பவை ஆழ்வார் உரைமணிகள். கருமணியிற் பாவாய் என்பது வள்ளுவர் வளமணி. ஆகலின் மணி செம்மணி என்றே கோடல் சால்பன்று; இடத்தையும் பொருளையும் கருதி ஏற்ற பொருள் தருவதாம் அது. அவ்வாறாகக் குட்டுவனின் உடன்பிறந்தாராய அடிகளாரோ, உழுவலன்பராய சாத்தனாரோ, தன் மைந்தன் குட்டுவன் சேரற்கு நல்லாசிரியராகத் தேர்ந்து கொண்ட ஐந்தாம் பத்துப் பாடிய பரணரோ செங்குட்டுவன் நிறத்தை அடைமொழியால் கூட - உவமையால் கூட - காட்டினர் அல்லர். செங்கோற் றன்மையைச் செம்மாந்து பல்கால் பாராட்டியுள்ளனர். ஆதலால் செங்குட்டுவன் நிறம் செம்மை கருமை இவற்றுள் யாதாயினும் ஆகுக! அஃதவற்குப் பெருமை தரும் ஒன்றன்று. அவன் செங்கோன்மையே உண்மைச் சான்றுடையதும் பெருமை மிக்கதும் ஆம் என்க. நிற அடை என்றால் அவன் பிள்ளைமைப் பருவத்தே இடம் பெற்றிருக்கக் கூடும். தன்மை அடை எனின் அரசேற்று நாடெல்லாம் செங்கோற்றன்மை பெருகப் பரவிய பின்னரே ஏற்பட்டிருக்கக் கூடும் என்று எண்ணிப் பார்க்க வேண்டுவதும் முறைமை. அதற்குத் தக்க குறிப்பொன்றும் உள்ளது. பதிற்றுப்பத்தில் உள்ள ஐந்தாம் பத்து பரணரால் பாடப்பெற்றது. செங்குட்டுவன் ஐந்து இடங்களில் 42, 43, 45, 47, 49 குட்டுவன் என்றே குறிக்கப் பெற்றுள்ளான். செங்குட்டுவன் முற்பகுதி வரலாற்றைக் கூறுவது சிலப்பதிகாரம் என்பதும், இவ்விரண்டையும் தொகுத்துச் சுட்டுவது பதிற்றுப்பத்து ஐந்தாம் பதிகம் என்பதும் இவண் நோக்கத் தக்கதாம். குட்டுவன் என்னும் குடிப்பெயர் தாங்கியவன் தன் செங்கோற் சீர்மையால் செங்குட்டுவன் ஆகிப் புலவர் பாடும் புகழாளனாகத் திகழ்ந்தான் என்பது உறுதியாம். காந்தி என்று அழைக்கப் பெற்ற பெரியார் பின்னை நாளில் மகாத்மா காந்தி என்று போற்றப் பெற்றமை கண்கண்ட சான்று அன்றோ! செங்குணக்கு செம்மை + குணக்கு = செங்குணக்கு. செம்மை = நேர்மை. நேர்கிழக்கு செங்குணக்கு என்பதாம். செங்கிழக்கு என்பதும் அது. செங்குணக் கொழுகிய சம்பாபதி - மணிமே. பதி. 13 செங்கை செம்மை + கை = செங்கை. கொடையால் சிவந்த கை செங்கை. ஈந்து சிவந்தது மால்சீதக் காதி இருகரமே - படிக். தனிப். செங்கோடு செம்மை + கோடு = செங்கோடு. செம்மை = நேர்மை; கோடு = மலையுச்சி. செங்கோடு நேராக அமைந்த மலையுச்சி. எ-டு: திருச்செங்கோடு. நெடுவேள் குன்று = திருச்செங்கோடு (சிலப். 23:190 அரும்.) குன்றம் = கொடுங்கோளூர்க்கு அயலதாகிய செங்குன்று என்னும் மலை. அது திருச்செங்கோடு என்பவாலெனின் அவரறியார்! என்னை? அத்திருச்செங்கோடு வஞ்சி நகர்க்கு வடகீழ்த் திசைக் கண்ணதாய் அறுபதின் காத ஆறுண்டாக லானும் அரசனும் உரிமையும் மலை காண்குவமென்று வந்து கண்ட அன்றே வஞ்சி புகுதலானும் அது கூடாமையின் என்க. (சிலப். பதி. 1-9 அடியார்க்.) செங்கோல் செம்மை + கோல் = செங்கோல். செங்கோல்:1 நேர்மையான அரசு. செங்கோன்மை திருக்குறள் அதிகாரம் (55). செங்கோல்:2 சிவந்த அம்பு. செங்கோல் அம்பு - குறுந். 1 அஞ்சிப் புறங்கொடுத்தார் அடைக்கலம் என்றார் முதலியவர்பாற் செல்லாமைச் சிறப்பால் செங்கோல் ஆயது. செங்கோல் விருத்தம் அரசர்தம் செங்கோற் சீர்மை குறித்து ஆசிரிய விருத்தம் பத்துப் பாடுவது செங்கோல் விருத்தம் என்னும் பெயர் பெறும். இதனைக் கோல் விருத்தம் என்றும் கூறுவர் (நவநீத. 41). செங்கோன்மை அரசனால் செய்யப்படும் முறையினது தன்மை. அம்முறை ஒருபாற் கோடாது செவ்விய கோல் போறலின் செங்கோல் எனப்பட்டது (பரிமேலழகர்). செவ்விதாகிய முறை செய்தலுடைமை. குற்றமும் குணமும் தூக்கி ஆராய்தலால் கோல் என்றார். அது கோடாமையால் செங்கோல் ஆயிற்று (மணக்குடவர்). ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை - திருக். 541 செச்சை செச்சை:1 சினந்த (சிவந்த) கண்ணையுடைய ஆட்டுக்கடா. வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போல - புறம். 286 செச்சை 2 செம்மறி யாட்டின் மணம் அல்லது நெடி செச்சை எனப்படும் (ம.வ.) செச்சை:3 வெட்சி மலர். பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன் - அகம். 48 மரம் வெட்சி எனினும் அதன்பூ சிவப்பு ஆதலால் செச்சை எனப்பட்டது. வெட்சியின் அடியும் சிவப்பு என்பது செங்கால் வெட்சி என்பதால் விளங்கும் (திருமுருகு. 21). செடி செடி:1 வெண்டைச் செடி, பருத்திச் செடி. செடி:2 செடி = நாற்றம். செடி, இலை, வேர், பட்டை இவற்றுக்கு வெவ்வேறு மணம் உண்டு. பூக்களோ மணம் பரப்புதல் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. நன்னாரி வேர், வெட்டி வேர், நறுமையான மரு, மருதோன்றி, பச்சை துளசி இலைகள் மணம் உள்ளவை. வேம்பு, அதி மதுரம், கடுக்காய் முதலிய பட்டைகளும் மணமுள்ளவை. ஆனால், சில செடிகள் மிகத் தொலைவுக்குக் கூட மூக்கை வருத்தும் நாற்றம் உடையவையாக உள்ளன. அவற்றால் செடி என்பதற்கு நாற்றப் பொருள் உண்டாயிற்று. செடி என்பது நாறுபவனைக் குறிக்கும் வசைச் சொல்லும் ஆயிற்று. செடி:3 செடி = பேய். மரம் செடி கொடி என்னும் இயற்கையுள் ஒன்றாகிய செடி இருட்போதில் ஆடுதலும் அதன் நிழலசைவும் அச்சம் உண்டாக்கக் கண்டவர்கள் செடி என்பதற்குப் பேய் என்னும் பொருள் கண்டனர். இது விளவங்கோடு வட்டார வழக்காகும். ஓராளும் கறுப்பு உடையும் பேய் என அஞ்சுதலைப் பாவேந்தர், பாண்டியன் பரிசில் குறிப்பிடுவார். செட்டை சிறகு என்பதைச் செட்டை என்பது மக்கள் வழக்கு. அது மேலெழும் செருக்குப் பொருள் - தலைக்கனப் பொருள் - தருவதாக அமைந்தது. உன் செட்டையை ஒடித்து விடுவேன், துள்ளாதே என்பது மக்கள் வழக்கு. செருக்கை அழிப்பேன் என்பதாம். செண்டித்தல் செண் > செண்டு > செண்டித்தல் = மேலெழுதல், துள்ளல். குதிரை இயல்பு, வாவுதலாம் தாவுதல். அது செண்டித்தல் எனப்படும். அது ஓடிப் பழகும் - பழக்கப்படும் - திறந்த வெளி செண்டுவெளியாம். செதுக்கி களை கொத்தி, களை சுரண்டி, களைக் கொட்டு என்பவை புல் அல்லது களைச் செதுக்குவதால் பெயர் பெற்றவை. செதுக்கும் கருவியைச் செதுக்கி என்பது பொருந்திய வட்டார வழக்காகப் பெரிய குளம் பகுதியில் வழங்குகின்றது. செத்தை செதும்பல் செத்தை = உலர்ந்து போன இலை சருகு முதலியவை. செதும்பல் = உலர்ந்து போன இலை சருகு முதலியவை செதுமி அல்லது செம்மிக் கிடத்தல் செம்மிக் கிடத்தல். செத்தை உலர்ந்து போன ஒன்றைக் குறிக்கும். செதும்பல் எனின் செத்தைகள் பல செறிந்து கிடத்தலைக் குறிக்கும். மடை, நீர்ப்பிடி அடைத்துக் கிடந்தால் செத்தை செதும்பல் அடைத்துக் கொண்டிருக்கும், எடுத்தால் சரட்டென நீர் போகும் என்பது வழக்கம். செறிந்து கிடத்தல் செம்மல் எனப்படுவதை அறியின் செதும்பல் விளக்கமாம். செந்தட்டி செம்மை + தட்டி = செந்தட்டி. பட்டால் கொடிய எரிவை உண்டாக்கும் செடி செந்தட்டி. பகைவரைப் பாடாய்ப் படுத்துபவர் பட்டப் பெயர் செந்தட்டி. கடிய நெடுவேட்டுவன் என்பது போன்ற கடுமையன் பெயர். செந்தட்டிக் காளை - மக்கள் பெயர். வரகுண ராம செந்தட்டி - சிற்றரசர் பெயர். சிவகிரி, நெல்லை மாவட்டம். செந்தட்டியாபுரம் - ஊர்ப்பெயர்; நெல்லை மாவட்டம். செந்தமிழ் செம்மை + தமிழ் = செந்தமிழ். கருந்தமிழ் என ஒன்றில்லாமையால் இனமில்லாத அடைமொழி, செம்மை என்பது. செங்கதிர், செந்தாமரை என்பவற்றில் செம்மையைக் கதிரில் இருந்தும் தாமரையில் இருந்தும் பிரிக்க முடியாமை போலச் செம்மையைத் தமிழில் இருந்தும் பிரிக்க முடியாது. ஆதலால் தற்கிழமைப் பொருளது. தமிழுக்கு வாய்த்த முதல் அடைமொழி செம்மை என்பதே. செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம் தொல். பாயிரம். செந்தமிழ் என்பதே செவ்வியல் மொழி எனப்பட்டதாம். மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட மாதிகை இதழ் செந்தமிழ் (1901). செந்தமிழ்ச் செல்வி மாதிகை இதழ் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டது (1921). உயர்தனிச் செம்மொழி என்னும் கட்டுரை செந்தமிழ் முதல் இதழிலேயே வந்தது. எழுதியவர் பரிதிமால்கலைஞர். செம்மொழித் தகுதியை நடுவண் அரசு ஏற்றுக் கொண்ட ஆண்டு: 2009. செந்தமிழ் மாலை எப்பொரு ளேனும் இருபத் தெழுவகை செப்பின நெறியது செந்தமிழ் மாலை என்பது பன்னிரு பாட்டியல் (306). பாவானும் இனத்தானும் பாடுவாருமுளர் என்றும், நான்கு முதற்பாவானாதல் ஒருபாவின் இனத்தானாதல் பாடுக என்பாருமுளர் என்றும் அதிற் குறிப்புரையுளது. எப்பொருளேனும் என்றிருப்பினும் செந்தமிழ் மாலை என்பதாகலின், தமிழ்மொழி பற்றிய தமிழ் அகப்புறப் பொருள் பற்றிய செந்தமிழ்ப்பா எனக் கொள்க. தமிழ்ஞான சம்பந்தர் என்றும் தமிழ்மாலை என்றும் அங்கயற்கணாயகி குறஞ் செந்தமிழிற் பாட என்றும், இவை போன்றும் வருமாட்சிகளால் தெய்வ இசைத் திருப்பாடல்கள் இச்செந்தமிழ் மாலையாம். இருபத்தெழுவகை என்றது யாப்பியல் வேறுபாட்டை என்றறியலாம். செந்தொடை செம்மை + தொடை = செந்தொடை. செம்மை = இயற்கை யழகுடையது. யாப்பில் தொடை வகையுள் ஒன்று செந்தொடை என்பது. புனையா ஓவியம் போன்றது அது. எதுகை, மோனை முதலாம் தொடை எதுவும் இயையாமல் எழுத்து அசை சீர் தளை அடி அமைந்து பொருள் மயக்கம் இன்றி இயற்கையில் அமைந்ததே செந்தொடையாம். மலர்களில் ஒருவகை, கொன்றை. அதன் இளந்தளிரும், அரும்பும், பூவும் கொத்துக் கொத்தாகவும் சடைக்கற்றை போலவும் விளங்குவது. அக்கொன்றையின் கற்றை போன்ற தொடுத்தல் பின்னல் கட்டல் முதலிய இல்லாத் தொடையைச் செந்தொடை என்றனர். செந்தொடையும் செய்யுட் பொலிவு செய்யுங்கால் கொன்றையும் கடம்பும் போல நின்றவாறே நின்று தொடைப் பொலிவு செய்யும் என்பதாம் (தொல். 1360 பேரா.). மழலைச் சொல்லைச் செஞ்சொல் என்பதை எண்ணலாம். செங்கீரைப் பருவம் பிள்ளைத் தமிழ்ப் பருவங்களுள் ஒன்று. அது மழலையைப் பாடுவது. கீர் > கீரை = ஒலி. செந்நா செம்மை + நா = செந்நா. செம்மையைச் சொல்வது அன்றி அதற்கு மாறானதை மறந்தும் சொல்லா நா, செந்நா. செந்நாப் போதார் திருவள்ளுவர் பாரி பாரி என்றுபல வேத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் - புறம். 107 செந்நெறி செம்மை + நெறி = செந்நெறி; செவ்வையான வழி, இடரிலா வழியுமாம். செவ்விதனைத் தவறாத முறை அல்லது வழி, செந்நெறி. மதுரைச் செந்நெறி கூறு - சிலப். 11:58-59 * சென்னெறி காண்க. செப்பனிடல் செப்பம் > செப்பன். செப்பனிடல் = செம்மையாக்கல். சிதைவு உடைவு இயக்கமின்மை முதலாம் குறைகளை அகற்றிச் செவ்விய நிலைக்கு ஆக்குதல் செப்பனிடலாம். பழுது பார்த்தல், சீர்செய்தல் என்பனவும் அது. பொழுது காட்டி பழுது பார்க்குமிடம் என்பது ஒரு விளம்பரம். செப்பு செப்பு = துடைப்பு, துடைப்பம். சொல்லுதல், செம்பால் ஆகியது என்னும் பொதுப் பொருளில் நீங்கிச் செப்பு என்பது, செப்பம் செய்யும் கருவிப் பொருளாகக் கன்னங்குறிச்சி வட்டாரத்தில் வழங்குகின்றது. துடைப்பம் என்பது அதன் பொருள். செப்பம் = செம்மை, தூய்மை. கன்னங்குறிச்சி குமரி மாவட்டம். செம்பன் செல்வப் பிள்ளை என்பதைச் செம்பன் என்பது களியக்காவிளை வட்டார வழக்காகும். செம்பு காய்ச்சி உருக்கிச் செய்யப்பட்ட காசு உடைமையும், செம்பொன் என்று வழங்கும் வழக்குடைமையும் செல்வமாக வளர்க்கும் பிள்ளைக்கு ஆயது. செம்மல் என்பதும் நிரம்புதல் பொருளதாம். செம்பாகம் செம்மை + பாகம் = செம்பாகம். செம்பாகம்:1 மிகச்சரியான பங்கு. செம்பாகம் அன்று பெரிது - திருக். 1092 செம்பாகம்:2 மிகச் சரியான பக்குவம். கண்ணமுது (பாயசம்) செம்பாகமாக உள்ளது என்பது மக்கள் வழக்கு. செம்பு சிவந்த நிறத்தையுடைய மாழை (பொலம்). செம்பொன் என்பதும் அது. செம்புறழ் புரிசை - புறம். 37 செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர் - கம். உயுத். 1378 செம்பால் செய்யப்பட்ட ஏனம் செம்பு. செப்பு என்பதும் இது. செப்புக்குடம் ம.வ. செம்புலம் செம்புலம்:1 செம்மை + புலம் = செம்புலம். செவல் நிலம் (அ) செம்மண் நிலம். செம்புலப் பெயல் நீர் போல - குறுந். 40 செம்புலம்:2 பண்படுத்தப்பட்ட நிலம். பண்படுத்தப் பட்ட நிலத்தில் விழும் நீர் ஓடாமல் உள்வாங்கி மண்ணோடு தண்ணிதாய்க் கலந்து மிகுநலம் செய்யும் அதனால், நிலத்தொடு நீரியைந் தன்னார் (திருக். 1323) என்றார் செந்நாப் போதார் செம்பை நெல்லுக்கு வரும் செம்புள்ளி நோய். நெல்லின் தாளில் நீளவாட்டத்தில் நீளமாகத் தோன்றுவது. செம்பு நிறத்தில் நெல்தாளில் விழும்புள்ளி செம்பை எனப்பட்டது. செம்பொருள் செம்மை + பொருள் = செம்பொருள். செம்மை = நேர்மை, நடுமை, உண்மை. செவ்விதின் ஆய்ந்து முடிவு செய்தல் அறிவுப் பயன். அவ்வறிவே மெய்யறிவு. செம்பொருள் காண்ப தறிவு - திருக். 358 செம்போர் செம்மை + போர் = செம்போர். போர் = அமர், புள்ளி. செம்போர்:1 அறநெறி தவறாத போர். செம்போர்:2 சிவந்த புள்ளிகளை யுடைய மாடு. செம்போர்க் காளை ம.வ. புகர் > போர் = புள்ளி. செம்மல் செம்மல்:1 செதும்புதல் > செம்மல். செம்முதல் இறுக்கமாகப் பற்றிக்கொள்ளல் செத்தை செதும்பல் இணைச்சொல். செம்முதல் என்பதும் அது. செம்மல்:2 செவ்விய தன்மையால் நிறைந்த மேலோர். கரிய செம்மல் ஒருவனையே தந்திடுதி - கம். பால. 327 செம்முள்ளி சிவந்த நிற இதழ்களையும் முள்போன்ற சுணைகளையும் உடையது செம்முள்ளி. சிறுநீரகச் சிக்கலை நீக்கி அதிலுள்ள உப்பை அகற்றிச் சிறுநீரைப் பெருக்க வல்லது செம்முள்ளிப் பூ; அதன் நிறம் மஞ்சள். அதன் இலையும் இப்பயன் செய்யும். பூ இலை ஆகியவற்றைக் காய வைத்துப் பொடியாக்கிக் கழாயமாக்கிக் குடிக்கலாம். இதனொடு நெருஞ்சில் மூக்கிரட்டை மாவிலிங்கப் பட்டை என்பவற்றையும் சேர்த்தல் நலமென்பர் - தினமலர் (10.10.2010). செயலமர்வு செயல்திட்ட ஆய்வுக் கூட்டம், கூடல் செயலமர்வு என ஈழத் தமிழரால் வழங்கப்படுகிறது. சுருங்கியதும் தெளிவு உடையதுமாம் ஆட்சி இது. திட்டமிட்டுச் செயலாய்வு முறைவகுத்து நிறைவேற்றுவது அக்கூட்டக் கடனாம். நிறைவேற்றல் கூட்டம் என வழங்குதல் அரிய வழக்கு. தென்னிந்திய சைவ சித்தாந்தக் கழகச் செயற்குழுக் கூட்டம் நிறைவேற்றற் கூட்டமெனத் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆட்சி செய்தது. செய் செய்:1 விளைநிலம், நிலம். உழுதும் உரமிட்டும் பயிரிட்டும் போற்றும் நிலம் செய் என்பதாம். மிகப்பல பணி செய்து பயன்காண வேண்டியது நன்செய் (நன் = மிகுதி). ஓரளவு பணி செய்தலால் விளையும் நிலம் புன்செய் (புன் = குறைந்தது, சிறிது). * நிலம் புலம் என்னும் இணைமொழி காண்க. செய்:2 செய்கை. பெருஞ்செய் ஆடவர் - புறம். 199 மிக்க செய்கையுடைய ஆளுமையர் செய்:3 செம்மை. செய் + அன் = செய்யன் = செம்மையன். செய்யரைச் சேர்ந்து ளாரும் செய்யராய்த் திகழ்வ ரன்றே - கம். பால. 1210 செய்கை செய்யும் செயல் செய்கை எனப்படும். செய் கை என விட்டு இசைத்தால் செய்யும் கை என்று ஆகும். ஈழத்தமிழில் செய்கை என்பது பயிரிடுதல் என்னும் பொருளில் வழங்குகின்றது. காளான் செய்கை என்பது ஈழ வழக்கு. பயிர் செய்தல் என்பது செய்கையாக வழங்குகின்றது. செய் = பயிர் செய்யப்படும் நிலம். அவை, நன்செய்; புன்செய். இச்செய்களில் செய்யப்படும் தொழில் செய்கை எனப்படுதல் பொருள் பொதிந்த சிறப்புடைய ஆட்சியாகும். செய்யாள் செய்யன் = நேரியன்; நேரிய வழியில் - செவ்விய வழியில் - நடப்பவனும் செவ்விய வழியில் பொருள் தேடிச் செவ்விய வழியில் செலவிடுபவனும் செய்யான். செய்யன் செவ்வியன் என்பானும் இவன். நிலத்தை நிலமகள், மண்மகள் என்பது போல் செல்வத்தைச் செய்யாள் என்பது மரபு. மாதர் காதல் (தொல். 811) ஆதலின் விரும்பத் தக்கவற்றைப் பெண்மைப் படுத்திய மரபு வழியில் வந்தது செய்யாள் என்னும் பெயராம். திரு, திருவின் செல்வி, திருமகள், செய்யாள் என்பனவும் இது. முயற்சி திருவினை ஆக்கும் - திருக். 616 அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந் தோம்புவான் இல் - திருக். 84 * முகடி காண்க. செய்யுள் அறமுதல்நான் கென்றும் அகமுதல்நான் கென்றும் திறனமைந்த செம்மைப் பொருண்மேல் - குறைவின்றிச் செய்யப் படுதலால் செய்யுள் - யா.வி. 55 மேற். பா, பாட்டு, தூக்கு என்பனவும் அது. செரிமானம் எரிமானம் > செரிமானம். உண்டது அறல், செரிமானம் ஆகும். மானம் = அளவு. செரிப்பு = எரிப்பு. உண்ட உணவு எரித்து அற்றுப் போன அளவு செரிமானம் ஆயிற்று. எரிப்பு > செரிப்பு. சகர ஒற்றுச் சேர்ந்து அதே பொருள் தரும் சொல்லியல் முறை. x.neh.: ஏண் > சேண். செருக்கள வழி வேந்தன் நிகழ்த்திய நிலைபெற்ற புகழ் வாய்ந்த போர்க்களச் செய்தியை நேரிசை வெண்பாவினாவது, இன்னிசை வெண்பா வினாவது, பஃறொடை வெண்பாவினாவது பாடுவது செருக்கள வழி எனப்பெறும். இதனைப் போர்க்கள வழி என்றும் கூறுவர். இக்களவழி, பாடல் அளவுடனும் பெயர் பெறுதல் உண்டு என்பது களவழி நாற்பது என்னும் நூற்பெயரால் அறியக் கிடக்கின்றது. தலைவன் செய்த நிலைபெறு புகழ்புனை நேரிசை வெண்பா இன்னிசை வெண்பாப் பஃறொடை வெண்பா மறக்கள வழியே - பன்னிரு. 315 நேரிசை இன்னிசை பஃறொடை வெண்பா போரின் களவழி புகலப் படுமே - பன்னிரு. 316 செருப்பு செரு = போர்; செருப்படி = போர்க்களம்; படி = இடம். செருப்பு அடி எனப்பிரிப்பின், செருப்பின் கீழ் என்பது பொருளாம். போர்க்களத்திற்குச் செல்வார் கால்காப்பாகக் கொண்டது செருப்பு. அது, அடி, மேற்கூடு, கட்டுவார் என்பவற்றைக் கொண்டு காலின் அடி, மேற்பரடு, கணுக்கால் ஆகியவற்றை மூடிக் காக்கும் வகையில் அமைந்தது காண்க. அடிபுதை அரணம் என்பது பழவழக்கு. மூடு செருப்பு என்பது மக்கள் வழக்கு. பாதக்கூடு என்பதும் அது. காலணி என்பது புத்தாக்கச் சொல். செருவை செருகி வைக்கப்படுவதைச் செருவை என்பது மூக்குப் பீரி வட்டார வழக்காகும். செருகி வைக்கப்படும் ஓலைக்குச் செருவை என்பதும் பெயர். அப்பெயரை வேலி என்னும் பொருளில் வழங்குவது தூர்த்துக்குடி (மேடாக்கிச் செய்த குடி) வட்டார வழக்காகும். ஓலை செருகி வேலிகட்டும் வழக்கில் இருந்து வந்தது அது. செலவு செல் > செல > செலவு. செல்லுதல் செலவு. செலவு:1 கையில் இருந்து பொருளைச் செலவிடல். செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது - பாரதி. 66 செலவு:2 ஓரிடத்தில் இருந்து மற்றோரிடம் செல்லுதல். சுற்றுச் செலவு ம.வ. செலவு:3 நிலத்துள் தங்கும் உயிரிகள் தாம் சென்றுவர அமைத்த புடை, பொந்து, வளை ஆயன. செலவு:4 போர்க்குச் செல்லுதல் பற்றிய நூல். எ-டு: செங்கோன் தரைச்செலவு. செலவுப் பெட்டி கடுகு சீரகம் மிளகு முதலியவற்றை இட்டு வைக்கும் பெட்டியில் ஐந்து தட்டுகள் இருப்பதால் ஐந்தறைப் பெட்டி என்பது பெயர். அதனைச் செலவுப் பெட்டி என்பது ஒட்டன்சத்திர வட்டார வழக்கு. செலவு என்பது அரை செலவு ஆகும். அரை செலவு என்பது அரை பொருள் செலவு என்பதாம். அம்மியை அரைசிலை என்பார் வீரமாமுனிவர் (சதுரகராதி). செலாவத்து சென்று வருமாறு அகன்ற இடமாக இருத்தல், தடையின்றி நடக்குமாறு அகன்றிருத்தல் செலாவத்து ம.வ. செலாவத்தாக உட்காருங்கள்; இடம்தான் உள்ளதே; இப்படி நெருக்கி இருப்பானேன் செலவாய்த்து > செலாவத்து. செலுக்கு செலுக்கு என்பது செல்வாக்கு என்னும் பொருளில் முகவை வட்டார வழக்காக உள்ளது. செல்வாக்கு என்பதன் இடையெழுத்துகள் விடுப்பட்ட வடிவம் இது. ஓரிடத்துக் கூறப்பட்ட சொல் பல்வேறு இடங்களுக்குச் சென்று வழங்குவதே செல்வாக்கு. அது தன்பொருள் இழந்து செல்வத் தொடர்பு கொண்டதாயிற்று. செல்வம் செலுக்குதாம்; வாசற்படி வழுக்குதாம் என்பது திருச்சி வட்டாரப் பழமொழியாகும். செலுத்துதல் செலுத்துதல்:1 தேய்வை (இரப்பர்)க் குழாய் வழியாகவோ, ஊசி வழியாகவோ உணவு மருந்து உயிர்வளி முதலியன உடலின் உட்புகச் செய்தல் செலுத்துதலாம். செலுத்துதல்:2 இறை செலுத்துதல் என்றும் உள்ள வழக்கு. இறையாவது வரி. செலுத்துதல்:3 செலுத்து மட்டும் செலுத்திவிட்டால் சிவனே என்று கிடப்பான் என்னும் பழமொழி, வேட்கை மீதூர நிரம்ப உண்பதைக் குறிக்கும். செல்லல் செல் = ஏவல், செல்லுதல். பிறர் உள்ளகம் கொள்ளச் (செல்லச்) சொல்லுதல்; சொல்லிய சொல் ஓரிடத்து நில்லாது பலரிடத்தும் பலவிடத்தும் பலகாலத்தும் செல்லுதல் செல்வாக்கு. செல்லுதல், உலாவ, நாடு காண, கட்டற்று மகிழ்வோடு செல்லுதல், செல்லிடம் - வெற்றி கொள்ளத்தக்க இடம்; செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் (குறள். 301). செல்லுதல் = வெல்லுதல், நிறைவேறல். செல் + அல் = செல்லல். செல்வாக்கு மகிழ்வு வெற்றி அற்றுக் கட்டுற்றுத் துயரொடும் இருக்கும் ஏக்கநிலை செல் அற்றநிலை, செல்லல். ஆதலால் செல்லல் இன்னல் இன்னாமையே என்றது தொல்காப்பியம் (787). தோள் நெகிழ்த்த செல்லல் (குறுந். 111). செல்லாதே என்பது உரிப்பொருள் அல்லாப் பொதுப்பொருள். செல்வம் செல்வம் என இங்கு நாம் காண்பது பொருட் செல்வமே. கல்வி, கேள்வி முதலிய செல்வங்கள் வள்ளுவத்தில் சொல்லப்பட்டிருப்பினும் அவற்றை விலக்கி, இங்குப் பொருட் செல்வமே செல்வம் எனக் கூறப்படுகின்றது. செல்வம் என்னும் ஆட்சியும் வள்ளுவத்தில் நிரம்ப உண்டு. நன்றியில் செல்வம் ஓரதிகாரப் பெயர். பொருள் என்ற அளவிலும் செல்வப் பொருளைக் குறிப்பதுண்டு. பொருள் செயல்வகை என்பது செல்வப் பொருளைக் குறிப்பதே. பிற இடங்களிலும் பொருள் என்பது செல்வம் குறித்து வருதல் பெருக்கமாக உண்டு. திரு என்பதும் செல்வத்துக்கு ஒரு பெயரே; வெறுக்கை என்பதும் அத்தகையதே. செல்வம் என்பது ஓரிடத்தில் தங்காமல் சென்று கொண்டே இருக்க வேண்டியது என்னும் பொருளது. அதனால், இல்லாமல் போய்விட வேண்டும் என்னும் பொருளது அன்று. நீர் தேங்கிக் கட்டுக் கிடையாகி விட்டால் மூக்கடை நாற்றம் மட்டுமோ உண்டாம்? நச்சுயிரிகள் தோன்றி நோயைப் பெருக்கிக் கெடுக்கவும் செய்யும். பாய்ச்சல் நீராகிப் பயன்படாமல் அல்லது குடிநீராக இருந்து பயன்படாமல் விளைவுக் கேடும் செய்யும். பொருள் தேக்கமும் அத்தகையதே. நீர்த் தேக்கக் கேட்டினும் கேடாவது பொருள் தேக்கக் கேடு, அது பற்றுள்ளம் என்றும், கருமித் தனம் என்றும் சொல்லப்படும், வடிகட்டிய இறுக்கத்தின் செயற்பாடாகும். செவிமடுத்தல் கேட்டல் என்னும் பொருளில் வழங்குவது இச்சொல். தமிழகத்து அரிதாக வழங்கும் இச்சொல், ஈழத்தில் பெருவழக்காக உள்ளது. மடுத்தல், பருகுதல் பொருளது. வாய்மடுத்தல் அது. செவியால் பருகுதல் என இலக்கணை வகையால் அமைந்தது. செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே என்பது அறிந்த பாடல்தானே! செவியறிவுறூஉ பெரியோர்களிடத்துச் சினங்கொள்ளாது அடங்கி இருத்தல் கடன் என்னும் அவையடக்கியல் பொருளைப் பற்றி வருவது செவியறிவுறூஉ ஆகும். இது வெண்பா யாப்பிலும் ஆசிரிய யாப்பிலும் வரும். அன்றியும், செவியறிவுறூஉ மருட்பா என ஒன்று இருத்தலால் இது வெண்பா முன்னாக ஆசிரியம் பின்னாக இருபா இணைப்பாய் இயலும் மருட்பா யாப்பிலும் பாடப்படுமென அறியலாம் (தொ. பொ. 419). புற நானூற்றில் செவியறிவுறூஉப் பாக்கள் சில உள. கடவுள் வாழ்த்தினை அடுத்து வைக்கப் பட்டுள்ள தொடக்கப் பாடல்கள் நான்கும் செவியறிவுறூஉத் துறைப்பாற் பட்டதாக இருத்தலும் நான்காம் பாடலும், தாயில் தூவாக் குழவி போல ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே என்று வருவதால் செவியறிவுறூஉ ஆதலும் கூடும் எனக் கருத இடமிருப்பதாலும் ஆள்வோர்க்கு இச்செவியறிவுறூஉ எத்தகு இன்றியமையாதது என்பது தெளிவாம். காய்நெல் லறுத்து எனத் தொடங்கும் செவியறிவுறூஉ (புறம். 184). அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடு பெரிது நந்தும் மெல்லியன் கிழவ னாகி வைகலும் வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதப வெடுக்கும் பிண்டம் நச்சின் ... ... ... தானும் உண்ணான் உலகமும் கெடுமே என்பது இலக்கணமாய் அமைதலோடு, எங்கும் என்றும் ஆள்வோர் கொண்டொழுகத் தக்க அருமையும் தகவும் உடையதாம் என்பது தகும். செவியன் பல்லியைப் பார்த்தால் பார்த்த பார்வையிலேயே பல்லி என்பதை அதன் பல் அடையாளம் காட்டிவிடும். அவ்வாறே முயலைப் பார்த்தால் அதன் செவிநீளம் தனி அடையாள மாகிவிடும். செவியின் நீட்சி கண்டவர் முயலைச் செவியன் என்றனர். அவர்கள் குமரி மாவட்ட நடைக்காவு வட்டாரத்தார். செவிலி செவ்வை > செவ்வி > செவிலி. உரிய பொழுதில் உரிய பேணுதலை உரிய செவ்விய வகையில் செய்யும் தாய்மைத் தகையள் செவிலி. செவிலித்தாய் என்பாளும் அவள். அப் பழம்பெயர் மீளாட்சியே இற்றை மருத்துவச் செவிலியர், வானூர்திச் செவிலியர் என்பாரும். அப்பேரும் பெற்றியும் பேணுதலும் அமைந்தார் பழம்பாடு புகழ் மீளப் பெற்றவருமாம். செவ்வி செவ்வி:1 செவியாம் உறுப்பு கேட்டு மகிழவும், மீளவும் கேட்க விரும்பவும், அச்சொல்லால் உறவும் நட்பும் உருவாகவும், உயரிய செயற்பாடுகளைச் செய்யவும் ஆகியவை நேர்தலால் அச்செவ்விய பொழுதும் செயலும் செவ்வி எனப்படலாயிற்று. ஒருவரைக் காணப் போவதன் நோக்கு நலம் வினாவவே எனினும் கலந்துரையாடல் இல்லாக் காட்சி என்ன காட்சி! கண் கொண்டு காணலொடு செவிகொடுத்துக் கேட்டலும் செவ்விதாக அமையும்பொழுதே செவ்வியாம்! செவி தந்து கேளான் செவ்வியன் அல்லன் தானே! அருஞ்செவ்வி இன்னா முகத்தான் - பேய் தானே (திருக். 565). செவி கொடுத்துக் கேட்கும் பொழுது செவ்வி எனப்பட்டுப் பின்னர்த் தக்க பொழுதெல்லாவற்றையும் குறிக்கும் பொதுமை எய்தியது. செவ்வி அருமையும் பாரார்; கருமமே கண்ணாயினார் என்பது தனிப்பாட்டு. செவ்வி:2 செவ்விதாக அல்லது தகவுற அமைந்தது. அமைப்புச் செம்மை அழகுச் செம்மையாதல் வெளிப்படை . ஒன்று எவ்வாறு அமைய வேண்டுமோ அவ்வாறு அமைதல் செவ்விது. ஆகலின் எவர் உள்ளத்தையும் கொள்ளை கொள்வதாம் அது. காண்பார்க்கு இன்பமும் நலமும் செய்யும் காலம் செவ்வி எனப் பெறும். செவ்விது நன்மை தருவது நேர்மையானது எனவும் பொருள் தரும். இவ்வெல்லாம், அழகுக்கும் உண்மையின் செவ்வி எனப் பெற்றதாம். செம்மை வழிவந்த செவ்வையும் இவண் எண்ணத் தக்கதே. செழி செழுமை > செழிமை > செழி. செழுமை, செழிப்பு, செழிமை, செழி என ஆகும். செழுமையான மண்ணைச் செழி என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு. சேற்றுமண் தொளிமண் எனப்படுவது பொதுவழக்கு. தொளி உழவு நெல் நடவுக்கு உரியமண். செழிப்பான பயிர், செழிம்பான வாழ்வு என்பனவும் இவ்வழிப்பட்டனவே. செழியர் செழியர் = பாண்டியர். செழியர் - செழுமை - வளமை - யானவர். செழிமை - செழுமை; செழிப்பு செழுமை மிக்க நிலவளம், கடல்வளம், புலமை வளம் எல்லாம் உடைமையால் செழுமையர் ஆக விளங்கிய அவர் செழியர் எனப்பட்டார். முத்து வளம் பாண்டியர்க்கு - செழியர்க்கு - செழுமை சேர்த்தது. கவாட முத்து, கொற்கை முத்து உலக வளம் தந்தது. மீன் வளம், பவழப்பாறை என்பவை அவர்கள் உடைமைகள். குமரித் துறைவர் அவர். நிலந்தரு திருவின் செழுமையர். புலமை வைப்பகமாம் தொல்காப்பியர் முதலாம் நூல்வள நுண்மதிச் செழுமையர் வாழ்ந்த மண். இமயத்தினும் முன்னையதாம் பொதியம், குமரி, பன்மலை, இடைவள நாடு என்பன வெல்லாம் அவர்தம் செழுமைகள்! அதனால் செழியர் அவர். செழுமை செழுமை குலாவும் ஒன்றில் அழகுண்மை எவரும் அறிந்ததே. செழுமை யற்ற ஒன்றும் செழுமையான ஓவியத்தும் பாவியத்தும் பயிலுங்கால் அழகுற இலங்குவது வெளிப்படை பாலைப் பாக்களில் காணும் சுவை அழகே யன்றோ! செறு பன்றி நாட்டாரும், அருவா நாட்டாரும் செறுவைச் செய் யென்றும் சிறுகுளத்தைக் கேணி என்றும் கூறுவர் என்பது நன்னூல் உரை (273). செறு என்பது செறிந்தடர்ந்த காடு; சிறுதூறு முள்வகை அடர்ந்தது. அதனை முற்றாக அழித்து வயல் நிலமாக்கியது முந்தை வேந்தர் செயல். அதனைக் காடு கெடுத்து நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கி, முயல் பாய்ந்த வெளி கயல்பாயச் செய்தல். இவை அருஞ்செயலாகப் பாடுபுகழ் பெற்றன. பண்படுத்தம் செய்யப்பட்ட நிலம் செறு ஆகும். நூறு செறு ஆயினும் - புறம். 184 மலங்குமிளிர் செறு - புறம். 61 செறுவாய் என்னும் பெயரொடு ஊர்கள் உள்ளமை தொழுதூர், திட்டக்குடி வட்டாரங்களில் காணலாம். அதனைச் செருவாய் எனின் போர் நிகழ்ந்த இடம் எனக் கொள்ள வேண்டும். சென்னி சென்னி என்பார் சோழர். அவர் பட்டப் பெயர்களுள் இளஞ்சேட் சென்னி என்பதொன்று. சென்னியர் புகழ்கூறும் சென்னிகுளம், சென்னி மலை, சென்னி நகர் என்பன. வடசென்னி மலை என்பதும் ஒன்று. சோழர்கள் கடற்படை கொண்டவர். கப்பல் வாணிகம் புரிந்தவர். கப்பல் தொடர்பு நாவாய் தொடர்பு ஆதலால், அதனை உடையார் நாயகர், நாய்கர் எனப்பட்டனர். கண்ணகியின் தந்தை மாநாய்கன். அவன் சோழ நாட்டான்; கலவணிகன். சென்னி நாய்கன் ஆட்சி புரிந்த பழைமையது சென்னை. அதன் பழைமை சாற்றுவது ஆத நுங்கன் என்பான் ஆட்சிபுரிந்த நுங்கன்பாக்கம். கோடன் - நல்லியக் கோடன் என்பான் ஆட்சி புரிந்த கோடம்பாக்கம் இன்றும் விளங்குவன. வேங்கடம், புல்லி என்னும் கள்வர் கோமான் ஆட்சி செய்த இடம். புல்லிய வேங்கடம் என்பது புல்லி என்பானின் திருவேங்கடம் என்பதாம். சென்னி நகர் (சென்னை) பழ வரலாறு மேலும் ஆய வேண்டிய ஒன்றாம். பட்டினத்தார் ஒடுக்கம், ஒற்றியூர், பல்லவபுரம், மீனம்பாக்கம், குன்றத்தூர் மாமல்லை, காஞ்சி, வேலூர் இன்னவை எல்லாம் எண்ணி வரலாற்றைத்தொகுப்பின் அதன் தமிழ்ப்பழமை துலக்கமாம். செய்திரங் காவினைச் சேட்சென்னி - புறம். 10 சென்னெறி செல் > சென் + நெறி = சென்னெறி = செல்லும் நெறி; போகும் வழி. சித்திர கூடத்திற் சென்னெறி பகரென்ன - கம். பால. 680 * செந்நெறி காண்க  சே வரிசைச் சொற்கள் சே சகர ஏகாரம்; ஓரெழுத் தொருமொழி. சே:1 சே = சிவப்பு; செம்மரம். சேவும் குரவும் - பெருங். 1:51:45 சேதா = சிவந்த ஆன். சேதாம்பல் = சிவந்த ஆம்பல். சேம்பு = சிவந்த கிழங்கு. சே:2 சே = காளை. சேமுதற் பிறவும் ஊரும் இறைவர் - கம். பால. 692 சேகரம் சேகரம் = நட்பு. சேகரம், சேர்ந்திருத்தல் என்னும் பொருளது. இவனுக்கும் அவனுக்கும் சேகரம் என்பர். இதனால் நட்புப் பொருள் இதற்குண்மை விளங்கும். சேர்ந்த வீடுகள், சேர்ந்த நிலங்கள் ஆகியவை ஒரே சேகரமாக உள்ளன எனப்படும். சேர்ந்திருத்தல் என்னும் பொருளுடைய சேரகம் என்னும் சொல்லின் எழுத்துகளாகிய ரகர ககரங்கள் இடம் மாறிச் சேகரம் ஆயின எனினும் பொருள் மாற்றமின்றி வழங்குகின்றது. சிவிறி என்பது விசிறியாகவும் கொப்புளம் என்பது பொக்களமாகவும் வழங்குவது போல என்க. சேக்காய் குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பழமொழி. குழந்தையை விரும்பி அரவணைத்து அது விரும்புவதைத் தந்து வந்தால் எந்தப் பிள்ளையும் உறவாகிவிடும். வெள்ளை நிறத்தில் எந்த நிறமும் படிவது போல் பிள்ளை மனமும் விரும்புபவர்மேல் படியும். அதனால் தருமபுரி வட்டாரத்தில் குழந்தையைச் சேக்காய் என்று வழங்குகின்றனர். சேர்ந்து கொள்ளும் - ஒட்டிக் கொள்ளும் தன்மையினது என்பது பொருள். சேக்கிழார் சே + கிழார் = சேக்கிழார். சே = செம்மை, சிவப்பு, ஆன். செவ்விய வேளாண்மைத் தொழிலர்; சோழ நாட்டின் அமைச்சர்; பெரியபுராணம் இயற்றிய பெருமையர். சேக்கிழார்மேல் அமைந்த பிள்ளைத்தமிழ், திரிசிரபுரம் பெரும்புலவர் மீனாட்சி சுந்தரனார் இயற்றியது. சேக்கை சேர்க்கை > சேக்கை. சென்று சேரும் இடம், தங்குமிடம். சேக்கை:1 தங்குதல். கோழி சேக்கும் கூடுடைப் புதவின் - பெரும்பாண். 52 சேக்கை:2 உறங்குதல். பொய்கை நாரை போர்விற் சேக்கும் - புறம். 209 சேக்கோள் சே + கோள் = சேக்கோள். சே = ஆன்; கொள்ளுதல், கோள். பகைவர் நாட்டு ஆக்களை வெட்சி மறவர் போர்க் குறியாகக் கவர்ந்து வருதல் சேக்கோளாம். ஆகோள் என்பதும் இது. ஆதந்தோம்பல் - தொல். 1003 சேடு சேடு:1 சேடு = அழகு. சே, சேண், சேடு என்பவை உயர்வு என்னும் பொருள் சுட்டுவன. செழுமைப் பொருள் போலவே, உயர்வுப் பொருளும் அழகேயாம். ஆதலால், சேடு எனப் பெற்றது அது. நரை திரை மூப்புக்கு ஆட்பட்ட அன்னையின் ஓவியம், உள்ளத்துச் சுரக்கும் உயரன்பால் தெய்வமாகத் திகழ்வது இல்லையா? சேடு:2 சேடு = உயர்வு. கொட்டச் சேடு என்பது இடப் பெயரும் ஊர்ப் பெயருமாம். சேண் > சேடு. சேட்டன் = மூத்தான்; சேட்டை = மூத்தவள். உயர்ந்த மலைமுகட்டுக்குச் சேடு என்பதும் அது சார்ந்த ஊரைச் சேடு என்பதும் பொருந்திய அமைவாம். சேய்மைச் சுட்டு, சேய்மை இடம், சேய்மை விளி என்பனவும் சேண் என்பதும் எண்ணத் தக்கன. தனக்கு மூத்தான்(ள்) தோழமையே பெரும்பயன் செய்யும் என்பதால் தோழன், தோழியர் சேடன் சேடி என வழங்கப் பெற்றார் என்பதும் எண்ணத் தக்கது. சேட்புலம் சேண்புலம் = சேட்புலம். சேண் = தொலைவு, அப்பால். தம்மிடம் அல்லாத தொலைவிடம் சேட்புலம் ஆகும். புலம் = இடம். நிலபுலம், புலம் பெயர்தல் எண்ணுக. கூப்பிடு குரலிசை சேட்புலத் திசைப்பவும் - பெருங். 1:52:60 * புலம் காண்க. சேணோன் சேண் > சேணோன். பரணையின் மேல் இருந்து காவல் புரிபவன். சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி - குறுந். 150 பொருள்: மரத்தின் உச்சியிற் பரணின் மீது இருக்கும் குன்றவன் கொளுத்திய நன்மணமுள்ள புகையை யுடைய கொள்ளி (உரை உ.வே.சா.) சேண் ஏண் > சேண் = உயரம், அப்பால். ஏண் சகர ஒற்றுப் பெற்றுச் சேண் ஆயது. சேணுலாவிய நாளெல்லாம் - கம். அயோ. 231 சேதிகை சேது > சேதி > சேதிகை. செய்யப்படும் வண்ணக்கோல வனப்பு, சேதிகை எனப்பட்டதாம். மகளிர் புனைகோலங்களுள் ஒன்று சேதிகை. மற்றைக் குதிரை மாடு ஆயவற்றின் உடலிலும் சேதிகை செய்தல் அந்நாள் வழக்குப் போலும். அதற்கு உழக்கு நாழி ஆயவை கொண்டு வட்டமமைத்து வனப்புச் செய்தனராகலாம். பிற்காலப் பச்சை குத்துதலை எண்ணலாம். வெதிர் உழக்கு நாழியால் சேதிகைக் குத்திக் குதிரை உடலணி போலநின் மெய்க்கட் குதிரையோ கவ்வி யது - கலி. 96 பொருள்: மூங்கில் உழக்காலும் நாழியாலும் சேதிகை என்னும் பெயரையுடைய தொழில்களாக வண்ணங்களைத் தோய்த்துக் குத்தின குதிரை உடலிற் பக்கரை போல (சேணம் போல) நின் மெய்க்கண் கவ்வியது குதிரையோ கூறாய் என்றாள் (உரை நச்.). சேது சேது = சிவந்த நிறத்தது. சேது > கேது = செந்நிறப் பாம்பாக இட்டுக் கட்டிக் கூறப்படும் சிவந்த மறைப்பு. திங்களைப் பாம்புகொண் டற்று - திருக். 1146 சேந்தன் சேந்தன்:1 சிவந்தவன் > சேந்தவன் > சேந்தன் = முருகன். சேந்தன்:2 திவாகர நிகண்டு இயற்றிய ஆசிரியர் திவாகரர்க்குப் புரவலனாக இருந்தவன் சேந்தன். திருவிசைப்பாப் பாடியவருள் ஒருவர் சேந்தனார். சேந்தி தவசம் போட்டு வைக்கும் கூடு அல்லது புரையில் அதனை அள்ளியெடுத்தற்கென அமைக்கப்பட்ட வழிக்குச் சேந்தி என்பது திருவாதவூர் வட்டார வழக்காகும். சேந்துதல் = அள்ளுதல்; நீர் முகத்தல் சில இடங்களில் நீர் சேந்துதல் என வழங்கும். சேப்பான் சிவப்பு > சேப்பு. சிவப்பான் என்பது சேப்பான் என்று ஆகியது. வெற்றிலை பாக்கு இரண்டையும் சுண்ணாம்புடன் சேர்த்து மெல்ல, வாய் சிவப்பேறும். சிவப்பேறச் செய்யும் இலைபாக்கைச் சேப்பான் என்பது சீர்காழி வட்டார வழக்காகும். வெற்றிலை பாக்குப் போடுதல் என்றாலே சுண்ணாம்பும் சேர்ந்ததே. சேமம் ஏமம் > சேமம்; ஏ, சகர ஒற்றுப் பெற்றது. சேமம் = பாதுகாப்பு. சேமக் கலம், சேமச் செப்பு. பேருந்து, சரக்குந்து, மகிழ்வுந்து, திறவையுந்து, மிதியுந்து, துள்ளுந்து என உந்து வகைகள் பல உலா வரக் காணும்நாம், அவற்றின் காலுருள்கள் (Tyres) பழுதுற்றால் உடனே பயன் கொள்வதற்காகப் பதிலிகளோடு அவை செல்வதையும் காண்கிறோம். பதிலிகளாம் அக்காலுருள்களுக்கு எப்பெயர் வைக்கலாம் என நாம் எண்ணுங்கால் புறப்பட்டுப் புன்முறுவல் காட்டுகின்றது, ஒரு புறப்பாட்டு. எருது இளையது; நுகக்கோலில் புதுவதாகப் பூட்டப்பட்டது; மேடறியாமல் பள்ள மறியாமல் இழுக்கக் கூடியது; வண்டியிலோ பாரம் மிக்குளது. வண்டியின் நிலை என் னாம்? வண்டியின் அச்சு முரிந்தால் வண்டியோட்டம் என்னாகும்? அச்சாணி இல்லா வண்டி முச்சாணும் ஓடாதே! அச்சிலா வண்டி அரை விரலம் (அரை அங்குலம்) கூட அசையாதே! கடல் உப்பு அள்ளிக் கல்நாடு (மலைநாடு) செல்லும் வண்டி உரிய இடத்தை அடைய வேண்டுமே! இவற்றை எண்ணாமல் உப்பு வணிகர் புறப்பட முடியாதே! உமணராம் உப்பு வணிகர் இவற்றை எண்ணிப் பார்த்தனர். வண்டியின் பார் தாங்கும் நெடிய கீழ் மரத்தின் கீழே ஓர் அச்சினைக் கட்டிக் கொண்டு சென்றனர். அவ்வச்சை எப்பெயரிட்டு வழங்கினர்? சேம அச்சு என்பது அவர்களும் அவர்கள் தந்தையரும் அவர்கள் முந்தையரும் வழங்கிய பெயர். சேமம் = பாதுகாப்பு; பாதுகாப்புக்காகச் சேமித்து வைக்கப்பட்ட அச்சு. உமணர் கீழ்மரத்து யாத்த சேம அச்சு என்பது புறநானூற்றுத் தொடர். ஔவைப் பாட்டி அருளிய அருமைப் பாட்டில் இடம் பெற்றுள்ளது இது (102). பாட்டி வைத்த பழந்தேட்டு, வழிவழிப் பேரர்க்கு வளமாகத் திகழ்வது போல் சேமம் பெருகி வருகின்றது! எப்படி? நாம் மேலே சுட்டிய பேருந்து முதலியவற்றின் பதிலியாம் உருள்களுக்குச் சேம உருள் (Stepney Wheel) என்னும் மொழி யாக்கத்தை உதவுகின்றது. பாதுகாப்புக் காவல் படையை (Reserves) சேமப்படை எனவும், அவர்கள் குடியிருப்பைச் சேமப்படைக் குடியிருப்பு எனவும் வழங்க உதவுகின்றது. ஓஓ! ஔவையாரை நாம் இவ்வளவு பயன்படுத்திக் கொண்டுள்ளோமோ என்று வியப்புறும் போதே, மின்னற் கீற்றுகள் பலப்பல பளிச்சிட்டு நம் கண்களைப் பூத்துப் போகச் செய்கின்றன. சேமவில்லைச் சுட்டுகின்றது சிலம்பு (2:42). ஒருபெருங் கரும்புவில் இருகரும் புருவமாக என்பதற்குச் சேமவில்லையும் கூட்டி என்றார் அடியார்க்கு நல்லார். காமன் சிலை இரண்டு என வரும் சிந்தாமணிக்குக் காமன் தன் கையில் வில்லையும் சேம வில்லையும் என்றார் நச்சினார்க்கினியர் (2065). காமனார் சேமவில் என்னும் தக்கயாகப் பரணிக்குக் காமனாருடைய சேமவில்லை ஒன்றுக்கு இரண்டுள்ளன என்று சேமப் பெருக்கைக் காட்டினார் அதன் உரையாசிரியர் (23). சேமத் தேரைக் கொண்டு வந்து நிறுத்துகின்றார் கம்பர். சேயிரு மணிநெடுஞ் சேமத்தேர் என்பது அது. தேருடன் மட்டுமோ நின்றார் கம்பர்? சேமத்தார் வில் (பால. 1187); சேமத்திண் சிலை (உயுத். 2301); சேமப்படை (உயுத். 1323); சேமவில் (ஆர. 922); சேம வெம்படை (உயுத். 1323) என்பனவற்றையும் நிறுத்துகின்றார். சேமம் பதிலியாம் பொருள் அளவினும் விரிந்து, பாதுகாப்பு என்னும் பொருள் நிலைக்கு வளர்வதையும் நாம் காண்கின்றோம். அயலார் பார்க்கக் கூடாமல் அமைத்துக் காக்கும் திரையைச் சேமத்திரை என்கிறது பரிபாட்டு. கன்னிப் பெண்டிர்க்குக் காவலாளராய் அமைந்து, அக்காவற் கடமையைக் கருத்துடன் செய்யும் உரிமைப் பாட்டியரைச் சேம மட நடைப்பாட்டியர் என்கிறது அதே பரிபாட்டு (10). காவல் வீரர் கடமை புரிந்து பின்னர் ஓய்வு கொண்ட பொழுதைச் சேமம் மடிந்த பொழுது எனக் காட்டுகிறது குறிஞ்சிப் பாட்டு (156). பாடிவீட்டுக் காவல் கொண்டிருப்பினுங் கூட யாமப் பொழுதில் உறங்க வேண்டும் உடல்நலக் கட்டாயத்தைப் பிற்கால ஔவையார் பாட்டு, சேமம் புகினும் யாமத் துறங்கு என்கிறது. இவற்றையெல்லாம் விஞ்சக் கொடி கட்டிப் பறக்கின்றார் குறுந்தொகைப் பாட்டர் ஒருவர். பனிநாளில் குளிர்நீர் பருக எவரே விரும்புவர்? வெதுவெதுப்பாம் நீர் பருக எவரே விரும்பார்? வெதும்பிய நீரை வெதுப்பம் குறையாமல் போற்றி வைத்துக் கொள்ளவும் வேண்டும்போது அவ்வெதுப்புடனே பருகவும் வாய்ப்பாக ஒரு கலம் இருந்தால் எவ்வளவு வாய்ப்பாக இருக்கும்? Thermos flask-ï‹ பயன் கொள்ளும் நமக்கு அதனைக் கண்டறியாப் பழங்கால நிலைமை இரங்கத் தக்கதாக வன்றோ தோன்றுகின்றது! ஆனால் குறுந்தொகையார் நம் இரங்கத் தக்க நிலைமையை உண்ணகையும் வெண்ணகையும் ஒருங்கு காட்டிச் சுட்டுகின்றார். Thermosflask என்னும் ஒரு கலத்தைப் படைத்து எவரோ தந்தார். அதற்கு ஒரு சொல்லையும் நீங்கள் படைத்தீர்கள் இல்லையே! உங்களால் முடியவில்லை என்றாலும் யான் படைத்து வைத்துள்ள சொல்லை எடுத்துப் பயன்கொள்ளவும் முடியவில்லையோ என்கிறாரே! பனி நாளிலும் விரும்பத்தக்க வெதும்பிய தெளிந்த நீரைத் சேமித்து வைக்கும் செப்பு யாது? சேமச் செப்பு அது வெப்பம் வெளியே போய்விடாமல் சேமித்து வைக்கும் செப்பு ஆதலால் அப்பெயர் என்பதை, அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்ச் சேமச் செப்பு என்கிறார் (277). சேமப் பாதுகாப்பு எத்தனைச் சேமிப்புகளுக்கு இடமாகியுள்ளது. வைப்பகங்களில் (Bank) வாடகைக்குக் கிடைக்கும் பாதுகாப்புப் பெட்டகம் சேமப் bg£lf«(safty locker) ஆகலாமே. Savings Bank - சேம வைப்பகம் ஆகலாமே. Savings Bank Account - சேமக் கணக்கு ஆகலாமே. Ware House - சேமக் கிடங்கு ஆகலாமே. பாதுகாப்பின்றிச் சேமிப்பு நிலைக்குமா? நீடுமா? நலக்கேடின்றி அமையுமா? ஆகலின், சேமப் பாதுகாப்பு, நலப்பாடும் ஆயிற்று. சேமம்; சேமம் அறிய ஆவல் என அஞ்சல் வினவலும், சேமம் தானே என நேர்வினவலும் ஆயிற்று. சேமம் சேமிப்பு என்பன எத்தனை எத்தனை கலைச்சொல்லாக்கம் கொள்ள வாய்த்துள்ளன. வாய்க்கவும் உள்ளன. ஒன்றில் இருந்து ஒன்று பெருகுதல் தானே இயக்கச் சான்று! உயிர்ப்புச் சான்று. ஒன்று ஒன்றாகக் கூடித் தானே கோடியும் கோடாகோடியும்! ஒன்று கொடுத்தாலும் கோடி என மகிழ்வது, உடைக்கு மட்டுமன்று, சொல்லுக்கும் ஆம். சேரங்கை சேர் + அங்கை = சேரங்கை. அகம் + கை = அங்கை. ஒரு செரங்கை உப்புக்கொடு பிறகு தருகிறேன் எனச் சிற்றூர்களில் கைம்மாற்றுமுறை அண்மைக் காலம் வரை இருந்தது. உள்ளங்கை அறிவோம். அது அங்கை (அகம்கை) எனவும் சொல்லப்படும். இது உள்ளங்கை அளவு அன்றி விரல்சேர்த்துக் கூட்டிய உள்ளங்கை அளவு குறிக்கச் சேரங்கை எனப்பட்டது. இனி, இரண்டு கைகளும் சேர்ந்த கூட்டுக்கை சேரங்கை என்பதுமாம். உழவர் களத்துக்கு வந்து கேட்பார்க்கு ஒரு கையால் அள்ளி வழங்கார். கூட்டுக்கை கொண்டே வழங்குதல் உண்மையால் கூட்டுக்கை என்பதும் பொருந்துவதாம் (ம.வ.) சேரர் சேரர்:1 சேர் + அர் = சேரர். சேரல், சேரலர், சேர்ப்பர், சேரர் என்பவை எல்லாம், கடல்சார்ந்த நாட்டினர் என்பதால் பெற்ற பெயராம். வானவர் என்று சேரரை வழங்குதல் வானளாவிய மலை நாட்டினர் என்னும் பொருளிலேயாம். குட்ட நாட்டை உடைமையால் குட்டுவர் என்றும் கருமலை நாட்டினர் ஆதலால் இரும்பொறை என்றும் வழங்கப்பட்டனர். நாடன் என்கோ ஊரன் என்கோ கருங்கடல் சேர்ப்பன் என்கோ யாங்கனம் மொழிகோ ஓங்குவாள் கோதையை - புறம். 49 சேர்ப்பன் என்பது சேரனையும், நாடன் என்பது பாண்டி யனையும், ஊரன் என்பது சோழனையும் குறிப்பனவாம். மலைவளமும், கடல்வளமும் சேரர் உடைமையாம். வானவர் நாடனை நீயோ பெரும என்பதாலும் வான வரம்பன் என்பதாலும் மலைநாடன் என்பதாலும் சேரர் பாராட்டப் பட்டனர். சேரர் வழிமுறை வரலாற்றுக் கோவை பதிற்றுப்பத்து. சேரர் இளங்கோ தந்த காப்பியக் கொடை சிலம்பு. ஐங்குறு நூற்றுத் தொகையாக்கத் தலைமையன் யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை. சேரர்:2 சாரல் என்பது மலைச்சரிவு நிலம். அதனால் சாரல் நாடன் எனப்பட்டான். சாரல் என்பது அன்னீறு பெற்றுச் சாரலன் என்றாகும். அது பின்னர்ச் சேரலன் எனத் திரிந்து குடமலை நாடனைக் குறித்தது. சேரலன் என்பது ஈற்றயல் தொக்குச் சேரன் என்றாயது. சேரன் என்பதும், செய்வன் என்பது செய்வல் என்று திரிந்தாற் போல் ஈறு திரிந்து சேரல் என்றாயிற்று. மான் என்னும் ஈறு சேரின், சேரன் என்பது சேரமான் என்றாம். மான் என்பது மகன் என்பதன் மரூஉ என்பார் பாவாணர் (தமிழ் வரலாறு 45). கடல் சேர்ந்த நிலத்தைச் சேர்ப்பு என்றும், அந்நிலத்துத் தலைவர்களைச் சேர்ப்பர் என்றும் கூறுவது தமிழ்நூல் வழக்கு. அவ்வழியே நோக்கின் சேரநாடும் தொடக்கத்தில் சேர்ப்பு நாடென விளங்கிப் பின் சேர நாடெனத் திரிந்து விட்டது. சேர்ப்பர் சேரர் ஆயினர். சேர்ப்புத்தலை சேர்த்தலை எனவும் சேர்ப்புவாய் சேர்த்துவாய் எனவும் வழங்குவது காண்க. (சேரமன்னர் வரலாறு 57, 58). சேரல் சேரலன் ஆயது. தென்னவன் சேரலன் சோழன் (திருவாசகம்). செருமா உகைக்கும் சேரலன் காண்க (திருமுகப் பாசுரம்) என்னும் இலக்கிய வழக்குகளை நோக்குக. சேரலன், கேரலன் ஆகிப் பின்னர் கேரளன் ஆயது. (பழந்தமிழ். 101). சேரி சில வீடுகளே சேர்ந்திருக்கும் குடியிருப்பு அல்லது சிற்றூர். பேரூரைச் சேர்ந்தமைந்ததாகலின் சேரி எனப்பட்டது. எ-டு: பார்ப்பனச் சேரி, வண்ணக்கச் சேரி, ஏணிச்சேரி. பண்டைக் காலத்தில் ஒன்றாகச் சேர்ந்திருந்த ஒரு குலத்தார் வீட்டுத் தொகுதிக்குச் சேரி என்று பெயர். (தொல். சொல். 49 அடிக். கந்தசாமியார், பாவாணர்). ஓரூர் வாழினும் சேரி வாரார் சேரி வரினும் ஆர முயங்கார் - குறுந். 23 சேர்க்கை சேர்க்கை = நட்பு, தொடர்பு. சேர்ந்திருக்கும் தன்மை சேர்க்கை, சேர்க்காளி, சேத்தாளி என்பனவும் சேர்ந்திருத்தலே. இவையெல்லாம் நட்பைக் குறிப்பனவே. உன் சேர்க்கைதான் உனக்குக் கேடு; பார்த்துக் கொண்டிரு என்பது எச்சரிப்புரை. சேர்க்கையாளி சேர்க்கையாளி > சேக்காளி = நண்பன். சேர்தல் நட்பாதல். சேரிடம் அறிந்து சேர் சேராத இடந்தனிலே சேர வேண்டா என்பவை நல்லுரைகள். சிற்றினம் சேராமை திருக். 46 அதிகாரம். சேக்கை = தங்குமிடம். * சேக்கை காண்க. சேர்தல் ஒத்துக் கொள்ளுதல், ஏற்றல், ஒன்றுதல். இது எனக்குச் சேராது, இது எனக்குச் சேரும் என்று வழங்கும் வழக்கால் சேர்தல் சேர்த்தல் என்பவை உட்கொளல் ஏற்றல், ஒவ்வுதல் பொருளில் வருதல் விளங்கும். சேராமை ஒவ்வாமை (Allergy) என்பதாம். சேர்ப்பு சேர்ப்பு = கடல். ஆறுகள் பலவும் சேரும் இடம் சேர்ப்பு. கடல்சார் நாட்டரசன் சேர்ப்பன். சேர்ப்ப என்பது விளி. மலிகடல் தண்சேர்ப்ப - நாலடி. 73 மாநீர்ச் சேர்ப்ப - குறுந். 49 சேலம் ஒரு பேரூர்ப் பெயர். சேரலர் என்பார் சேரர். அவர் நாட்டகத்ததாக இருந்ததோர் ஊர்ப்பெயர் சேரலம். சேரலம் என்னும் சொல்லின் ரகரம் மறைந்து சேலம் என இந்நாள் வழக்கில் உள்ளது. அவ்வூர் வாழ்நர் பின்னாள் இடப்பெயர்ச்சியால் ஏற்பட்டவை நக்க சேலம், சின்ன சேலம் என்பன. சமணர் நாகர் என்பார் நக்க சாரணர் நாகர் எனப்படுவார் (மணிமே. 16:115) அச்சமயச் சார்புடைமை காட்டுவது நக்க சேலம் என்னும் பெயர். சேரலம் என்பது கேரளம் எனத் திரிந்து மலையாளம் ஆயது. சேவகம் சேவகம்:1 சே + அகம் = சேவகம். செவ்விய உள்ளத்தோடு தொண்டு செய்தல் சேவகம் ஆகும். சேவகன், சேவகம் செய்பவன். அவன் செய்யும் செயல் சேவை. சேவகம்:2 சே = காளை. காளை போன்று வலிமையாகக் கடமை புரிதல், வினை யாண்மை மிக்கான் சேவகன். மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பா டுடைத்து - திருக். 624 சேவகன் சேவகம் செகுத்த சேவகன் - கம். அயோ. 77 சேவல் சே + அல் = சேவல். கோழி இனத்தில் ஆண். சிவந்த கொண்டையும், சிவந்த தாடையும் உடையது சேவல். அல், சொல்லீறு. சேவற் பெயர்க் கொடை, மாயிருந் தூவி மயிலலங் கடையே - தொல். 1548 சேவை தொண்டு என்னும் பொருளில் சேவை எனப்படுவது பொது வழக்கு. ஆனால் இடப்பொருளில் பக்கம் என வழங்குதல் நெல்லை வட்டார வழக்காகும். மடத்துச் சேவை, காட்டுக்குச் சேவை என்பவை மடத்துப் பக்கம், காட்டுக்குப் பக்கம் என்னும் பொருளவை. இடியாப்பத்தைச் சேவை என்பது பார்ப்பனர் வழக்கு. செவ்விய ஊண் என்னும் பொருளது. சேறு செல் > சேல் > சேறு = செல்லுதல். கால் வைத்ததும் உள்ளே செல்லும்படி கொழுமையாக்கப் பட்டதும் நீரொடு கலந்த நிலத்ததும் ஆகிய மண் சேறு ஆகும். மண் என்பது செறிவு (திணிவு) உடையது. அந்நிலை அற்ற மென்மண் சேறு ஆகும். சேறாக்குதல் செயற்கை. இயற்கைக் களர் உவர்மண் வேறு. இது கழனியாம் விளை நிலத்தினது. சேறும் தொளியும் சேறு = நீரொடு கூடிக் குழைந்த மண் சேறு ஆகும். தொளி = நெல்நடவுக்காக உழுது கூழாக்கப்பட்ட நெகிழ்வான அல்லது குழைந்த நிலம் தொளியாகும். நடவில் தொளி நடவு என்பதொன்று. கைவைத்த அளவில் நாற்றுப் பயிர் சேற்றுள் தொளதொளப்பாகப் போய் ஊன்றிக் கொள்ள வாய்ப்பானது அது. ஆகலின், தொளி எனப்பட்டதாம். சேறு, நீரொடு கூடிக் குழைந்த மண் எனினும், கட்டிப்பட்ட இறுக்கமும் உடையதாம். சை வரிசைச் சொற்கள் சை சகர ஐகாரம். நெடில். வெறுப்புக் குறி. சே என்னும் பொருள் தரும். சையல் சரிதல், சாய்தல் என்பனவும் சரிந்து சாய்தல் என்பதுவும் பொது வழக்குச் சொற்கள். சாய்தல் என்பதைச் சையல் என நிலக்கோட்டை வட்டாரத்தார் வழங்குவர். இது சாய்ந்து சரிதல் என்பதன் தொகுத்தல் ஆகும்.  சொ சோ ஞ வரிசைச் சொற்கள் சொகினம் சொகினம் > சகுனம். ஒரு செயலைத் தொடங்க அல்லது ஓரிடத்திற்குச் செல்லப் பார்க்கும் குறி சொகினம். சங்கச் சான்றோர் ஒருவர் பெயர் தும்பைச் சொகினனார். சொகினம் பார்த்தல் சகுனம் பார்த்தலாக வழக்கில் உள்ளது. தும்பைச் சொகினனார் (புறம். 249 ஔவை. சு.து.) சொல்லும் குறியாக இருத்தலால் சொகுனம் > சொகினம் ஆகி யிருக்கலாம். சொகுசு இயல்பாக அமைந்த அமைவிலும் உயரிய அமைவும் கவர்ச்சியும் நலமும் அமைந்த வாழ்வு சொகுசு வாழ்வு எனப்பட்டது. உழைப்பு இல்லாமல் வாழ்பவர் சொகுசு ஆன வாழ்வினர் எனப்பட்டனர். இதுகால் பேருந்துகளில் சொகுசு வண்டி என்னும் பெயர் பளிச்சிடுவதுடன் பல மடங்குக் கட்டணம் வாங்கவும் வைக்கின்றது. சொக்க - கவர - வைப்பது சொகுசு எனப்படுவதாயிற்று என்க. பழநாளில் பணக்காரர் சொகுசு வாழ்வினர் எனப்பட்டனர். இப்பொழுது சொகுசு வண்டி உலா வராத இடமில்லை. சொக்கப்பனை கோயில் விழாக்களின் போது கொளுத்தப்படும் நிகழ்ச்சிகளுள் ஒன்று சொக்கப்பனை என்பது. பனை மரம் ஒன்றனை நிறுத்தி, அதன் மட்டை ஓலை முதலியவற்றால் சுற்றும் சூழ மூடி, தீமூட்டி எரிப்பது சொக்கப்பனை யாகும். இது முகவை நெல்லை வழக்கு. ஒளியால் கவர்ந்து சொக்க வைக்கும் பனை சொக்கப்பனை. சொக்கம் கண்டாரைக் கவரும் உயர்ந்த பொன். சொக்கப் பொன் மாற்றுக் குறையாப் பொன். சொக்கன்= சொக்க வைப்பவன். உள்ளங் கவர் கள்வன் தேவா. ஞான. சொக்கி = பெண்பால். பிறரை மயக்குவதற்கு யாரோ சொக்குப்பொடி போட்டு விட்டார் என்பது ம.வ. சொக்கன் சொக்கு என்பது அழகு, விருப்பு முதலிய பொருளது. சொக்கன் என்பது ஆட் பெயராக இல்லாமல் குரங்கு என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்கில் உள்ளது - சொக்குதல், வளைந்து கூனியிருத்தல் பொருளதாகும். அதனால் குரங்குக்கு ஆகியது. சொக்கு சொக்க வைப்பது யாது? அதன் பெயர் சொக்கு சோமசுந்தரரைச் சொக்கன் என்றே குறிக்கும் நம்பி திருவிளையாடல். அச் சொக்கன் ஆட்டத்தில் சொக்கியவள் சொக்கியாம் உமையம்மை! கவர்வது, மையூட்டுவது, தூயது என்னும் பொருள் தரும் சொக்கு என்னும் சொல், அத்தகவால் அழகையும் சுட்டுவதாம். சொங்கல் ஆழம் என்னும் பொருளில் சீர்காழி வட்டாரத்தில் சொங்கம் என்னும் சொல் வழங்குகின்றது. சுரங்கம் என்னும் துளைத்தல் பொருட்சொல் சொங்கம், சொங்கல் என்றாகி இருக்கலாம். சொங்கி உள்ளீடு அற்றதைப் பதர் என்பது பொதுவழக்கு. உள்ளீடு இல்லாத கதிரைச் சொங்கு என்பது நெல்லை வழக்கு. சொங்கி என்பது பயனற்றவன் என்னும் பழிப்புப் பொருளில் நெல்லை வழக்கில் உள்ளது. சோளத்தின் மேலொட்டிய தோல் சொங்கு எனப்படும். அதனால் சொங்குச் சோளம் என்றொரு சோள வகையும் உண்டு. சொங்கு சோகை சொங்கு = தவச மணியின் மேல் ஒட்டியுள்ள பக்கு. சோகை = கரும்பு சோளம் முதலியவற்றின் தோகை. சொங்கு நிரம்ப உடைய சோளம் சொங்குச் சோளம் என வழங்குகின்றது. அது சிவப்புச் சோளம் எனவும் பெறும். அதன் சொங்கு பெரிதாகவும் சிவந்தும் இருக்கும். சோகை என்பது தோகை என வழங்குவதாம். தோகை என்பதே சோகை யாயிற்று எனக் கொள்க. சொடி வெடிப்பு என்பது சுறுசுறுப்பு எனப்படும். இது பொது வழக்கு. சொடி என்பது சுறுசுறுப்பு என்னும் பொருளில் குமரி மாவட்ட வட்டார வழக்காக வழங்குகின்றது. சொடிதல் என்பது பயிர்களின் கதிர் காய்ந்து வளைதல் பொருளில் முகவை, நெல்லை வழக்குகளில் உண்டு. சொட்டை சொட்டுதல், துளிதுளியாக நீர் விடுதல் ஆகும். சொட்டுச் சொட்டாக எண்ணி நான்கு சொட்டு விட்டுக் குடி என்பது மருத்துவ வழக்கு. பயிர் நிலத்தின் ஒரு பகுதியில் முளையாமலோ, கருகியோ போய்விட்டால் என்ன சொட்டையா? என்பர். முடி முழுமையாக உதிர்தல் மொட்டை. ஆங்கு ஆங்கு உதிர்ந்து வழுக்கை ஆதல் சொட்டை. மயிர் சொட்டிவிட்டதால் ஏற்பட்ட பெயர். இது பொதுவழக்காகும். சொண்டு சொள் > சொண் > சொண்டு. சொள் = அரிப்பு; அரிக்கும் பூச்சி. தலையிலும் உடல்தோலிலும் அரிப்பு ஆக்கும் தோல்படை சொண்டு ஆகும். அது சொறியச் செய்தலால் சொண்டு சொறி என்னும் இணைச்சொல்லாயது. அவ்வாறே சொள்ளும் சொண்டும் என்பதும் இணைச்சொல் ஆயது. சொண்டு, தலையில் உண்டாகும் வெண்ணிற நுண்படர். சொண்டு சொள்ளை சொண்டு = காய்கறி பழங்களின் வெளியேயுள்ள சுணை, பக்கு, வெடிப்பு முதலியவை சொண்டு எனப்படும். சொள்ளை = அவற்றின் உள்ளே அமைந்துள்ள கேடு சொள்ளை எனப்படும். சுணை மிக்க ஒன்று பூசுணை என்பதை அறிக. அதன் காம்பு இலைகளில் முள்போல் அமைந்த அமைப்பையும் வெண்ணிறச் சுணையையும் கருதுக. சுணைபடுதலால் அரிப்பு உண்டாகும். அரிப்பு உண்டாகாமை சுணை கெட்டதாம். மான மற்றவனைச் சூடு சொரணை இல்லாதவன் என்பதால் அறிக. சொரணையும் சுணையும் ஒப்பாம். சொண்டு சொறி சொண்டு = தோலில் பக்குக் கிளம்புதல். சொறி = தினவுண்டாக்கும் பொரி கிளம்புதல். தோலில் உண்டாகும் பக்கு சொறியும் போது உதிரும். மீனின் உடலில் உள்ள செதில் போல்வது அது. தோல் வண்ணத்திற்கும் அதற்கும் வேறுபாடு உண்டு. சொறி என்பது சொறி சிரங்கின் மூலமானது. வேர்க்குருவிற்கும் சொறிக்கும் வேறுபாடுண்டு. ஆயின் இரண்டும் உடல் வெதுப்பால் ஏற்படுவனவேயாம். சொதி நெல்லை வட்டார விருந்துகளில் தனிச் சிறப்பாக இடம் பெறுவது சொதி என்பதாம். கட்டியாகவோ, களியாகவோ, சாறாகவோ, நீராகவோ இல்லாமல் சொத சொதப்பாக - இளமையான கூழ்ப்பதமாக அமைந்த சுவையுணவு - கண்ணமுது போன்றது - சொதியாகும். சொதி யில்லாமலா விருந்து என்பது பழிப்புச் சொல். சொத்தை சொள்ளை சொத்தை = புறத்தே ஓட்டை பொத்தல் முதலியவை உடைய காய்கறிகள். சொள்ளை = வெளியே தெரியாமல் உள்ளே கெட்டுப் போன காய்கறிகள். சொத்தை என்பது சூன் என்றும் சூனம் என்றும் சூத்தை என்றும் வழங்கும். சொள்ளை உள்ளே கேடுடையதென்பது வெளியே பார்த்தால் வெள்ளை; உள்ளே பார்த்தால் சொள்ளை என்னும் பழமொழி விளக்கும். சொந்தக் காலில் நிற்றல் கால் உறுப்புக் குறை இல்லாப் பிறவியர் எவரும் சொந்தக் காலில் நிற்பவரே. அவர்களுக்கு ஊன்றுகோல், தள்ளுகூடு வேண்டுவது இல்லை. அவர்கள் சொந்தக் காலில் நிற்பார் எனக் கூறப்படுவது இலர். தம் வருவாயால் தாம் பிறரை எதிர்பாராமல் தம் இயல்பான வாழ்வுக்காகப் பிறரை நாடாமல் வாழ்பவர் எவரோ அவரே சொந்தக்காலில் நிற்பவராம். அவன் கற்றென்ன? செல்வம் உற்றதுமென்ன? சொந்தக் காலில் நிற்கத் திறம் கெட்டவன் என்பது மக்கள் வழக்கு. சொந்தம் சொம் + தம் = சொந்தம். தம் சொத்தாக மதிக்கத்தக்கவர்கள் - வாழ்பவர்கள் - எவரோ அவர்தம் சொந்தம் எனப்படுவர். சொத்தைக் கவர இருப்பவர்கள் அல்லர் அச் சொந்தம் எனப்படுபவர். தம் சொத்து உதவுவது போல் உதவுவாரே சொந்தம் என்பவராம். சொம் சொம்:1 சொம் என்பது பழஞ்சொத்து என்னும் பொருளில் இலக்கிய வழக்குச் சொல்லாகும். அப்பொருளில் மாறாமல் குமரி மாவட்டக் கோட்டூர் வட்டார வழக்கில் சொம் என்பது வழங்குகின்றது. சொம்:2 மென்மைக் குறிப்பு. பந்து, சொம்மென வீழ்தல் கண்டாள் - குண்டல. 46 சொருகுசட்டி ஒரு சட்டியுள் இன்னொரு சட்டி வேறொரு சட்டி எனப் பல சட்டிகளை உள்ளடக்கி வைப்பதும், அதைத் தூக்காகப் பயன்படுத்துவதும் வழக்கம். அடுக்குச் சட்டி என்னும் பொதுவழக்குடைய அதனைச் சொருகு சட்டி என்பது செட்டிநாட்டு வழக்காகும். சொலித்து மூங்கிலின் உள்ளே வெண்ணிறத்ததாய்ப் பட்டுப் போல் பளிச்சிடுவதாய்ப் படிந்துள்ள பொருளை அதன் ஒளியால் சொலித்து என்றனர். பட்டுநூல் எவ்வாறு இயற்கைக் கொடையோ அவ்வாறு கிடைத்த கொடையே சொலித்து. பின்னே பளபளப்பு ஒளியுடையவை சொலிப்பதாகின. ஜூவாலை வழியாக ஏற்பட்ட ஜொலிப்பு வடசொல். சொலித்து வழியாக ஏற்பட்ட சொலிப்பு தமிழ்ச்சொல்லேயாம். சொலித்து - சிறுபாண். 236 சொலுசு முகட்டில் இருந்து தூம்பு வழியாக இறங்கி வழியும்நீர் விழும் இடத்தைச் சொலுசு என்பது திருவாதவூர் வட்டார வழக்காகும். சலசல, சளசள என்பவை போலச் சொலசொல என ஒலிக்குறிப்பாகிச் சொலிசு சொலுசு என வழக்கில் வந்திருக்கலாம். சொலு சொலுன்னு மழை பெய்கிறது என்பது சூரம்பட்டி வட்டார வழக்கு. சொலுஞ் சொலும்ன்னு மழை பெய்கிறது என்பது குமுளூர் வட்டார வழக்கு. சொல் சொல் என்பது பலபொருள் ஒரு சொல். அதற்குரிய பல பொருள்களுள் நெல் என்பதும் ஒன்றாகும். நெல்லில் பால் பிடியாப் பதர் அல்லது பதடியை எவரும் நெல் என்னார்; பால்பிடித்து மணி திரளாத அரைக்காயை நெல் என்னார்; மணி திரண்டும் கறுத்துச் சிறுத்த கருக்காயை நெல் என்னார். மணி திரண்டதையே நெல் என்பார்! அந்நெல்லே சொல்லின் பொருளை உவமை வகையால் விளக்க வல்லதாம். பொருளற்றது சொல்லன்றாம். எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே என்பது தொல்காப்பியம் (640). சொல் (நெல்) சூல், பசும் பாம்பாய்த் தோன்றுதலையும், அது மணி பிடிக்குமுன் தகவிலாச் செல்வர் போல் தலை நிமிர்ந்து நிற்றலையும், மணி முதிர்ந்த பின்னே கல்விதேர் மாந்தர் போல் தலை தாழ்ந்து வளைதலையும் உவமையால் சுட்டினார் திருத்தக்க தேவர் (சீவக. 53). பயனிலாச் சொல்லைச் சொல்வானையும் அதனைக் கேட்பானையும் அதனை நன்றென நயந்து பாராட்டுவானையும் ஒருங்கே பதடி எனச் சுட்டினார் பொய்யாமொழியார் (196). பயனற்ற நாளைப் பதடி வைகல் என்ற சான்றோர் பெயரே பதடி வைகலார் ஆயது (குறுந். 323). பயனில சொல்லாமை சுட்டிய வள்ளுவரே, சொல்வன்மை கூறியது சொற்பயன் கருதியேயாம். ஆதலால், சொல் என்பது மணி போன்றது என்பதும். உள்ளீடு உடையது என்பதும் விளங்கும். சொல்லையும் நெல்லையும் ஒப்பக் குறிக்கும் சொல் என்பதாலே முன்னோர் சொல்லிய பொருளும் விளக்கமும் இவையாம். சொல்லாகிய நெல்மணியால் உணவுக்குச் சொன்றி என்பது பெயர். சோறு என்பதும் சொல் என்பதன் வழியாக வந்த பெயரே. நெல்லால் ஆக்கப்பட்டதையே குறித்த சோறு என்னும் சிறப்புப் பெயர். பின்னர் எத் தவசத்தால் ஆக்கிய உணவையும் பொதுவாகக் குறிக்கும் சொல்லாக விரிந்தது. அவ்வளவிலும் நில்லாமல் கள்ளிச் சோறு, கற்றாழஞ் சோறு என்றும் விரிந்தது! சோற்றுக் கற்றாழை என்னும் பெயரையும் வழங்கியது! சொல் வழி வந்த சோற்றின் ஆட்சிகள் இவை. சொல்லுதல் வகைகளைக் குறிக்க ஏறத்தாழ நாற்பது சொற்கள் தமிழில் உள என்பதைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் பாவாணர் (பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் பக். 27,28). சொல்லின் ஆட்சி எப்படி எப்படி யெல்லாம் திகழ்கின்றது! அவரைப் பார்த்தேன்; வாய் திறந்து ஒரு சொல் கூடச் சொல்லவில்லை; அவ்வளவு செருக்கு என்று பழி சொல்வது இல்லையா? இதனால், பண்பாட்டின் சின்னம் சொல் என்பது புலப்படும். நீங்கள் ஒரு சொல் சொன்னால் போதும்; கட்டாயம் நடந்துவிடும் என்பதில் சொல்வாக்கின் செல்வாக்கு வெளிப்படுகின்றதே! சொற்றுணை மிக உயர்ந்த துணையாம்! தன்னந் தனியே காட்டு வழி போகின்றவனுக்குச் சொற்றுணை போல் எந்தத் துணையும் உதவுவது இல்லையே! அவன் பாடிச் சொல்லும் சொல்லே அவனுக்குத் துணையாவது அருமை அல்லவோ! சொற்றுணை என்பது பேச்சுத் துணை தானே. அது தானே, நாத்துணை வாய்த்துணை என்பனவும்! சொற்கோ, சொல்லின் வேந்தர், நாவுக்கரசர், வாக்கின் வேந்தர் என்றெல்லாம் சொல்லப்படும் அப்பரடிகள், இறைவனைச் சொற்றுணை வேதியனாக அல்லவோ கண்டார்! அருணகிரியார்க்குச் சந்தச் சொல் சொட்டச் சொட்ட வந்ததால் அல்லவோ, வாக்கிற்கு அருணகிரி ஆனார். ஒருத்திக்குப் புகுந்த வீட்டில் ஒரு பேச்சுத்துணை கட்டாயம் வேண்டும். அவள் தன்னை ஒத்த அல்லது இளைய அகவையினளாகவும் வேண்டும்; அக்குடும்பத்தின் உறுப்பாகவும் வேண்டும். இவ்வெல்லாம் அமைந்தவள் தன் கொழுநன் உடன்பிறந்த தங்கை என்பது எவ்வளவு பொருத்தம்! அவளுக்கு ஒரு பெயர் நாத்துணையாள் என்பதே அது. இந்நாளில் நாத்துணாள் என்று வழங்குகின்றது. இளங்கோவடிகளார் இதனை, நாத்தூண் நங்கை என்பார் (சிலப். 16:19). உள்ளங் கலந்து உரையாடும் துணை உண்டு; உற்றுழி உதவி உவகையூட்டும் துணையும் உண்டு. அத்துணைகள் முறையே உசாத்துணை அசாத்துணை எனப்படும். இவை பழமையான சொல்லாட்சிகள். நூலுக்கு அழகுகள் இவையெனப் பத்துக் கூறுவர். முன்னை அழகுகளுள் தலையாயது சுருங்கச் சொலல்; பின்னைக் குறைகளுள் முதன்மையானது கூறியது கூறல் எனப்படும். நூலழகே சொல்லழகு என்பது குறிப்பாம். பாட்டியல் நூல்களிலே ஆனந்தக் குற்றம் என ஒன்று சொல்லப்படும். ஆனந்தக் குற்றங்களுள் சொல்லானந்தம் என்பது சொற்குற்றமேயாம். மட்டு, தேறல், ஊறல், குடி, கள், மது இப்படி எத்தனை பெயர்கள் இருந்தாலும், தண்ணீர், வெள்ளைக் குதிரை என எத்தனை மாற்றுப் பெயர்கள் இருந்தாலும் கட்குடியர் வழக்கமாக இலக்கண நூல்களில் சொல்லப்படுவது சொல்விளம்பி என்பதாம். குடியர்கள் ஏன், மயக்கும் கள்ளைச் சொல்விளம்பி என்று தங்களுக்குள் சொல்லிக் கொள்ள வேண்டும்? குடித்தவன் தன் வாயில் வந்ததை எல்லாம் உளறி விடுவான் அல்லனோ! மறைக்க வேண்டியது - சொல்லக் கூடாதது - என அவன் அடக்கிக் கொள்ள மாட்டாமல் அவிழ்த்து விட்டு விடுவான் அல்லவோ! அதனை வெளிப்படுத்தும் பொருட் பெயரே சொல்விளம்பி என்க! சொல் என்பதற்குக் கள் என்பதும் ஒரு பொருள். தன் பிள்ளையை ஊரார் மெச்சிவிட்டால் கள் வெறி ஏறும் என்பது நாமறியாத பாட்டா? குடிக்காமலே, சொல்வெறியில் எத்தனை பேர்கள், ஆடாத ஆட்டமெல்லாம் ஆடக் கண்ணேரில் காண்கின்றோம் அல்லவோ! தென்னுண் தேனின் செஞ்சொல் என்றார் கல்வியில் பெரியவர். அவரே சொல்லொக்கும் கடிய வேகச் சுடுசரத்தையும், சொல்லலங்காரப் பண்பாகச் செல்லும் அம்புகளையும் புனைந்தார். வில்லம்பிற் சொல்லம்பே மேல் என்று அவர் பாடிய தனிப் பாட்டொன்றும் காட்டும்! வள்ளுவரோ, சொல் வல்லாளரைச் சொல்லே ருழவராகச் சுட்டினார்; உழவு பாடிய கிழவர் அவரல்லரோ! சும்மா இரு, சொல்லற என்பதும் சொல்லால் முழக்கிலோ சுகமில்லை என்பதும் சொல்லிச் சொல்லித் தழும்பேறியவர்கள், சொல்வதை எல்லாம் சொல்லிவிட்டு, அமைந்த நிறைநிலை. அதற்கும் கூட, சொல்லே வேண்டி வந்தது! இவை சொல்லின் பெருமை என்பதையன்றி வேறென்ன? அதனால்தான், சொல்லாத சொல் - மறைச் சொல் என அகரமுதலிகள் சொல்கின்றன. சொல்லின் வகைகளைச் சொல்லி முடியாது! வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது சொல்லுக்கும் பொருந்துவதே! சொல்லை எண்ணி எப்படிக் கணக்கிட்டு விட முடியும்? விண்ணக மீனை எண்ணுவது போன்ற முடிவற்ற வேலையாகவே முடியும்? சொல் அமைவும் பொருள் விரிவும் பாவாணர் அடி எனும் சொல்லைச் செயப்படுபொருள் குன்றிய வினையாகக் கொண்டு 49 பொருள்களையும், செயப் படுபொருள் குன்றாத வினையாகக் கொண்டு 64 பொருள் களையும், பெயர்ச்சொல்லாகக் கொண்டு 32 பொருள்களையும் கூறுகின்றார். அடித்தல்: (செ.கு.வி.) 1. விளையாடுதல்: குண்டடித்தல், கோலியடித்தல், நொண்டியடித்தல். 2. தனியாக அல்லது கூடிக் கூத்தாடுதல்: கூத்தடித்தல், கும்மியடித்தல். 3. துடித்தல்: இருநாளாய் எனக்குக் கண்ணடித்துக் கொள்கிறது. 4. சாடை காட்டுதல்: அவன் அவளைப் பார்த்துக் கண்ணடிக்கிறான். 5. உடம்பு சுடுதல்: அவனுக்குக் காய்ச்சல் அடிக்கிறது. 6. பூசுதல்: வீட்டிற்கு வெள்ளையடிக்க வேண்டும். 7. அலப்புதல்: நாள் முழுவதும் அரட்டையடிக்கிறான் (உலகவழக்கு). 8. அசைதல்: வேட்டி காற்றில் படபடவென்று அடிக் கிறது (உ.வ.). 9. மணியடித்தல்: கோயில் மணியடிக்கிறது. 10. காற்று வீசுதல்: புயற்காற்றடிக்கிறது. 11. மூக்கிற்குப் புலனாதல்: பூக்கடைக்குப் போனால் நல்ல மணமடிக்கிறது. 12. ஒளிர்தல்: மின்னல் அடிக்கிறது. 13. ஆக்க வாய்ப்பு (அதிர்ஷ்டம்): அவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது. 14. தாக்குதல்: வாடையடிக்கிறது, பனியடிக்கிறது. 15. இயங்குதல்: குதிரை பின்னுக்கடிக்கிறது. 16. சேறு தெறித்தல்: வண்டிவரும் போது விலகு, சேறடிக்கும் (உ.வ.). 17 .நீந்துகையில் கைகால் அசைத்தல்: நீச்சடித்தல். 18. திரும்புதல்: குப்புற அடித்து விழுந்தான். 19. சூளுரைத்தல்: திருடவில்லை என்று தலையிலடித்துச் சொல். 20 .உணர்வு கெடுதல்: மயக்கமடித்து விழுந்தான். 21. தேர்வில் தவறுதல்: அவன் தேர்வில் கோட்டடித்து விட்டான். 22. சுண்டுவில்லடித்தல்: நான் போன போது மாட்டுக் காரப்பையன் கவட்டை யடித்துக் கொண்டிருந்தான். 23. மார்பில் அறைதல்: பெண்கள் மாரடித்து அழுகிறார்கள். 24. துளையடித்தல்: சுவரில் இப்படியா துளைக் களடிப்பது? 25. பூசுணம் பூத்தல்: மூடி வைத்த பலகாரத்தில் பூஞ்சான் அடித்துவிட்டது. 26. படர்தல்: பாசியடித்த குளத்தில் இறங்காதே. 27. மழித்தல்: தம்பிக்கு மொட்டையடி. 28. தங்குதல்: அது மூதேவியடித்த முகம். 29. ஒரு திசை நோக்கியியங்குதல்: காக்கை வலமடித்தது. 30. புலம்புதல்: நடுச்சாமத்தில் பேயடித்துப் போகும். 31. மலங்கழிதல்: மூன்று முறை வயிற்றாலடித்தது. 32. நெஞ்சு பதைத்தல்: இருவர் நெஞ்சமும் அடித்துக் கொண்டன. 33. திரிதல்: ஊரையெல்லாம் சுற்றியடித்துவிட்டு வந்தான். 34. தீம்பு செய்தல்: செல்வச் செருக்கால் கொட்ட மடிக்கிறான். 35. ஒட்டாரம் பண்ணுதல்: எருது மொண்டியடிக்கிறது. 36. சாய்தல்: வண்டி பள்ளத்தில் போனபோது ஓசார மடித்துவிட்டது. 37. நடித்தல்: அவனுக்கு நோயில்லை; நோயாளி போல் நாடக மடிக்கிறான். 38. புறப்பட்டுப் போதல்: விடுமுறைவிட்டதும் ஊருக்கு அடித்து விட்டான். 39. வீணாக வருத்திக் கொள்ளுதல்: ஏன் இப்படி அடித்துக் கொள்கிறாய்? 40. காலில் கட்டியடித்தல்: இந்தப் பேராசிரியர் திறம் மறைமலையடிகளாரின் காலில் கட்டியடிக்கக் கூடக் காணாது. அடி செயப்படுபொருள் குன்றா வினையாக அமைந்து பொருள்படுதல்: 41. தண்டித்தல்: அடிக்கும் ஒரு கை; அணைக்கும் ஒரு கை (பழமொழி). 42. தோற்கருவி இயக்குதல்: அவன் நன்றாக மிருதங்கம் அடிப்பான். 43. மணியொலிப்பித்தல்: நிலையத்தில் மணியடித்த வுடன் வண்டி புறப்பட்டுவிட்டது. 44. சிறகு இயக்குதல்: குஞ்சு, சிறகடித்துப் பறந்துபோய் விட்டது. 45. கல்லெறிதல்: கல்லால் ஒரு மாங்குலையை அடித்து விட்டான் (உ.வ.). 46. தண்ணீரைப் பீய்ச்சுதல்: முகத்தில் தண்ணீரை அடி. 47. மருந்து தெளித்தல்: புன்செய்களுக்குப் பூச்சி மருந் தடித்தான். 48. மோதுதல்: அலையடிக்கிறது. 49. துவைத்தல்: வேட்டியை இரண்டடி அடித்துத் தா. 50. மாப்பிசைதல்: அப்பத்திற்கு மாவடிக்க வேண்டும். 51. உடைத்தல்: நிலத்தை உழுதபின் கட்டி யடிக்க வேண்டும். 52. போரில் தாக்குதல்: எல்லைப் போரில் எதிரிக்கு நல்ல அடி. 53. வண்டி குலுங்குதல்: பேருந்து ஓடுகையில் தூக்கி யடிக்கும். 54. காலங்கடத்துதல்: வாங்கிய கடனைக் கொடுக்காமல் இழுத்தடிக் கிறான். 55. முத்திரை பொறித்தல்: முத்திரை யடித்தல். 56. பதித்தல்: நிலத்தில் முளையடிக்க வேண்டும். 57. அச்சிடுதல்: அச்சடிக்கும் இடம். 58. பொறியில் தைத்தல்: ஒரு சட்டையை அடித்துக் கொடு. 59. வெட்டுதல்: நீர்ப்பாசனத்திற்கு ஒரு கிணறடிக்க வேண்டும். 60. கல்லால் கருவி சமைத்தல்: அம்மி, திரிகை, யுரல் அடிக்குமிடம். 61. வீடுகட்டுதல்: மரத்தாலடித்த மனை. 62. படமாடம் (Tent) அமைத்தல்: சர்க்க நடத்தக் கூடாரம் அடித்திருக்கிறார்கள். 63. நகையாடிக் கூறுதல்: மணமகனைப் பெண்கள் நையாண்டி யடிப்பது வழக்கம். (இதுகால், கிண்ட லடித்தல் பெருவழக்கு.) 64. குறைசொல்லுதல்: அவன் கட்டின வீட்டுக்கு வக்கணையடிப்பான். 65. ஓட்டுதல்: வண்டியடித்தல், ஏரடித்தல், பிணை யடித்தல். 66. வண்டியில் கொண்டு வருதல்: நாலுவண்டி மணலடித்தான். 67. உள்விழுதல்: எருக்கம்பால் அடித்தல் வேண்டும். 68. வாரிக் கொண்டுபோதல்: நெல்லை வெள்ளமடித்துக் கொண்டு போனது. 69. கவர்தல்: கோழிக் குஞ்சைப் பருந்து அடித்துக் கொண்டுபோனது. 70. நீக்குதல்: அந்த மாணவன் பெயரை அடித்து விட்டார்கள். 71. மறுத்தல்: அவன் சொல்வதையெல்லாம் அடித்துப் பேசு. 72. வெல்லுதல்: அவனை ஓட்டப் பந்தயத்தில் அடித்து விட்டான். 73. வென்று பெறுதல்: அவன் பேச்சுப் போட்டியில் ஒரு வெள்ளிக்கிண்ணத்தை அடித்துவிட்டான். 74. கொல்லுதல்: அவன் பேயடித்துச் செத்தான். 75. அழித்தல்: திரௌபதி வஞ்சினம் கவுரவர் மரபை அடித்துவிட்டது. 76. மனப்பாடஞ் செய்தல்: பாடத்தை உருவடித்து விட்டான். 77. கையாளுதல்: ஆங்கிலமும் தமிழும் கலந்தடிக்கிறான். 78. அரித்தல்: புத்தகத்தைப் பூச்சியடித்துவிட்டது. 79. வழித்தல்: அண்ணனுக்கு மீசையடி. 80. கழித்தல்: சிறுவன் நின்றுகொண்டே அடிக்கிறான் (நகை). 81. அழுத்துதல்: வண்டியில் முன்பாரம் அடிக்கிறது. 82. விதை நசுக்குதல்: அது காயடித்த காளை (உ.வ.). 83. தொலைவரி விடுதல்: உடனே வரச்சொல்லி தந்தியடித்தான். 84. சாய்த்தல்: காற்று, வேலியை அடித்துவிட்டது. 85. நைத்தல்: இந்த வேரையடித்துப் புண்ணில்மேல் வைத்துக்கட்டு (உ.வ.) அடி எனும் சொல் பெயர்ச் சொல்லாக அமைந்து பொருள் தருதல்: 86. கீழ்ப்பாக்கம், கீழ்ப்பகுதி: அடிவயிறு, அடிவாரம், அடித்தளம். 87. கீழிடம்: மரத்தடியில் உட்கார். 88. மண்டி: (Sediment) (மண்டியை) அடியிலுள்ளதைக் கீழே ஊற்று. 89. கால்தடம்: இம்மண்ணில் பதிந்துள்ள அடி எவ்வழிச் செல்லுகிறது? 90. பன்னிரு அங்குலம்: அந்தத் தேரின் உயரம் 106 அடி. 91. செய்யுள் வரிகள்: குறளடி, சிந்தடி, அளவடி. 92. தொடக்கம்: நடுவின் முடிவின் அடியின் நன்றான பொருள் (ஞானவாசிட்டம்). 93 .மூy« (Source): இதனடியாக இது பிறந்தது. 94. கடவுள் (Supreme Being): ஆரேயறிவார் அடியின் பெருமை (திருமந்திரம் 2126). 95. giHik(Antiquity): அடியிட்ட செந்தமிழின் (தாயு.) 96. வழிமரபு: வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம். 97. மரவேர்: அடியற்ற மரமென்ன அடியிலே வீழ்ந்து (தாயு.) 98. சொல்வேர்: முகம் எனும் சொல் முகு எனும் அடியினின்று பிறந்தது. 99. இசைப்பாட்டின் பல்லவி: ஆயிரம் பாட்டிற்கு அடிதெரியும், ஒரு பாட்டிற்கும் உருத் தெரியாது (பழமொழி). 100. செல்வம் (Riches, wealth) அடியுடையார்க் கெல்லாம் சாதித்துக் கொள்ளலாமே (ஈடு 4-2:9) (செந். செல். சிலம்பு-85, பரல்-7 மாசி) சொல்லாமல் கொள்ளாமல் சொல்லாமல் = எண்ணியது இன்னது என்று சொல்லாமல். கொள்ளாமல் = எண்ணியதற்கு ஏந்தானதைப் பெற்றுக் கொள்ளாமல். ஊருக்குச் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டான் என்பதில் சொல்லாமல் என்பது விடைபெறாமல் என்பதையும், கொள்ளாமல் என்பது வழிச் செலவுக்கு வேண்டும் தொகை பெறாமல் என்பதையும் குறிக்கும். சொல்லிக் கொள்ளாமல் என்றாலும் இப்பொருள் தருவதேயாம். செலவு உரைத்தலும், வழிச்செலவு தந்து விடை தருதலும் வழக்காக இருந்த நாளில், அவ்வழக்கில் இருந்து வந்தது இது. சொல்லுதல் வகை சொல்லுதல் வகைகளைக் குறிக்க ஏறத்தாழ நாற்பது சொற்கள் தமிழில் உள என்பதைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் பாவாணர் (பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும் பக். 27,28). 1. அசைத்தல்: அசையழுத்தத்துடன் சொல்லுதல். (அசை அழுத்தம் Accent) அசைத்து இசை கோடலின் அசையே அசைத்தல் நாவை நிலைமாற்றி இயக்குதல். 2. அறைதல்: அடித்து (வன்மையாய் மறுத்து)ச் சொல்லுதல். எ-டு: அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான் - திருக். 1076 செவிப்பறை அதிருமாறு வன்மையுடன் கூறுதல். 3. இசைத்தல்: ஓசை வேறுபாட்டுடன் சொல்லுதல். இயை > இசை. உள்ளம் ஒன்றிக் கேட்குமாறு இனிதுறக் கூறல். இசைதல் = ஏற்றல், ஒப்புதல். புகழ்ச்சி மொழிகள் அமையச் சொல்லுதலும் இசைத்தலாம். 4. இயம்புதல்: இசைக்கருவி இயக்கிச் சொல்லுதல். இயம் = இசைக்கருவி. பல் இயம் = பல்லியம்; பலவகை இசைக்கருவி முரசியம்பின என்பது சிலம்பு (மங்.). 5. என்னுதல்: என்று சொல்லுதல். என்ன சொல்லுவது என்னும் பொருளிலும் இச்சொல் ஆளப்படும். என்னுதல் கின்ற தேழை எயினனேன் என்பது கம்பர் மொழி. 6. ஓதுதல்: காதிற்குள் மெல்லச் சொல்லுதல். பிறர் அறிந்து கொள்ளக் கூடா வகையில் கேட்பவர் காதில் மட்டும் விழுமாறு சொல்லுதல். ஓதுதல் = கற்றல். ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டா- உலக. 7. கத்துதல்: குரலெழுப்பிச் சொல்லுதல். எ-டு: கழுதை கத்துதல். ஏன் கத்துகிறாய்? மெதுவாகப் பேசு என்பது வழக்கு. 8. கரைதல்: அழைத்துச் சொல்லுதல். காகம் கரைதல், காகம் தனக்கு மகிழ்வு உண்டாம் பொழுதில் கரைவதும், அவ்வொலி கேட்டு மற்றைக் காகங்கள் வருவதும் கரைதல் - அழைத்தல் - சான்று. காக்கை கரவா கரைந்துண்ணும் (திருக். 527). 9. கழறுதல்: கடிந்து சொல்லுதல். சொல்வார் கடுமையுரை கேட்டு மறுத்துச் சொல்லவோ, கேட்டுக் கொண்டு இருக்கவோ முடியாமல் அகலுமாறு சொல்லுதல். கழலுதல் = அகல்தல். 10. குழறுதல்: நாத்தளர்ந்து சொல்லுதல். 11. கூறுதல்: கூறுபடுத்திச் சொல்லுதல். 12. சாற்றுதல்: பலர் அறியச் சொல்லுதல். 13. கிளத்தல்: இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்லுதல். 14. கிளத்துதல்: குடும்ப வரலாறு சொல்லுதல். 15. குயிலுதல்: குயிற்று - குயில் போல் இன்குரலில் சொல்லுதல். 16. செப்புதல்: வினாவிற்கு விடை சொல்லுதல். 17. நவிலுதல்: நாவினால் ஒலித்துப் பயிலுதல். 18. நுதலுதல்: ஒன்றைச் சொல்லித் தொடங்குதல். 19. நுவலுதல்: நூலின் நுண்பொருள் சொல்லுதல். 20. நொடித்தல்: கதை சொல்லுதல். 21. பகர்தல்: பண்டங்களைப் பகுத்து விலை சொல்லுதல். 22. பன்னுதல்: நிறுத்தி நிறுத்திச் சொல்லுதல். 23. பறைதல்: மறை (இரகசியம்) வெளிப்படுத்திச் சொல்லுதல். 24 பனுவுதல்: செய்யுளிற் புகழ்ந்து சொல்லுதல். 25. புகலுதல்: விரும்பிச் சொல்லுதல். 26. புலம்புதல்: தனக்குத் தானே சொல்லுதல். 27. பேசுதல்: ஒரு மொழியிற் சொல்லுதல். 28. பொழிதல்: இடைவிடாது சொல்லுதல். 29. மாறுதல்: உரையாட்டில் மாறிச் சொல்லுதல். 30. மிழற்றுதல்: மழலை போல் இனிமையாய்ச் சொல்லுதல். 31. மொழிதல்: சொற்களைத் தெளிவாகப் பலுக்கிச் சொல்லுதல். 32. வலித்தல்: கேட்பார் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல். 33. விடுதல்: மெள்ள வெளியிட்டுச் சொல்லுதல். 34. விதத்தல்: சிறப்பாய் எடுத்துச் சொல்லுதல். 35. விளத்துதல்: விரித்துச் சொல்லுதல். 36. விள்ளுதல்: வெளிவிட்டுச் சொல்லுதல். 37. விளம்புதல்: ஓர் அறிவிப்பைச் சொல்லுதல். சொல்வகை பெயர்ச்சொல் = ஒருகாலைக்கு ஒருகாலை பெயர்தல் இயற்கையமைந்த சொல். எ-டு: தளிர், துளிர், கொழுந்து, இலை, பழுப்பு, சருகு இவற்றின் வளர்வாம் பெயர்நிலை அறிக. பிள்ளை, குழவி, குமரம், காளை, வாலியம், முதியம், பெருமுதியம் என ஒரு பிறப்பில் ஆகும் பெயர்நிலை அறிக. வினைச்சொல் = வினவுதற்கு இடமாக அமைந்து சொற்றொடரின் பயன்நிலையாக அமை சொல். எ-டு: படித்தான் - வினைமுற்று. படித்த - பெயரெச்சம் (படித்த புத்தகம்). படித்து - வினையெச்சம் (படித்து முடித்தான்). இடைச்சொல் = பெயர்ச்சொல் வினைச்சொல் ஆயவற்றின் இடத்தைச் சார்ந்ததாய் அமைந்த சொல். எ-டு: அவனும் நானும்(சொல்லின் இடையிலும் ஈற்றிலும் நின்றது) வருவான் போலும்(சொல்லின் ஈற்றில் நின்றது) முன்னது பெயரைத் தழுவியது; பின்னது வினையைத் தழுவியது. என்னைக் கண்டான் - ஐ, இரண்டாம் வேற்றுமை உருபு, சொல்லின் இடையே நின்றது. மற்றவன் - மற்று, சொல்லின் முதலில் நின்றது. இடையாவது இடம்; நடுவே என்பதன்று இடைச் சொல் மூவிடத்தும் வருதல் அறிக. உரிச்சொல்= சொல்லின் அடிச் சொல்லாய் - அரிய பலவற்றின் மூலச் சொல்லாய் - அமைந்த சொல். எ-டு: செய்யுட்கே உரிய அருஞ்சொல் அன்று. எளிதில் மக்கள்வழக்கில் வரும் சொல்லும் உண்டு. ஆர்தல் = நிறைதல். வயிறார உண்டேன், நெஞ்சார வாழ்த்து கிறேன். கூர்= கூர்மையான கத்தி, கூர்மையான படிப்பாளி. கொடு= வளைவு; புளித்துக் கொடுகுகிறது. சொள் சொள் என்பது அரிப்பு, கடிப்பு என்னும் பொருளில் வழங்கும் சொல். அது கடிக்கும் கொசுவைக் குறிப்பதாகப் பழனி வட்டாரத்தில் வழங்குகின்றது. சொள் சொள்ளென அரிப்புத் தாங்க முடியவில்லை என்பது நெல்லை, முகவை வழக்குகளாம். சொள் சொள் இரட்டைச் சொல். சொள்ளை சுள் > சொள் > சொள்ளை. வெப்பத்தால் கீறியது உடைந்தது கெட்டுப் போனது ஆயவை சொள்ளை எனப்படும். மண்பானை கீறினாலும் பொத்தலானாலும் சொள்ளை எனப்படும். காய்களில் வெப்பு வகையால் உண்டாகும் நோயும் சிதைவும் சொள்ளை எனப்படும். புழு உருவாகித் துளைக்கப்பட்ட காய் சூன் என்றும் சொத்தை என்றும் சொள்ளை என்றும் கூறப்படும். சொள் என்பதற்கு அரிப்பு என்னும் பொருளும், வாய்நீர் வடிவு, சொள்ளு என்றும் வழங்கப்படும். சொறிசிரங்கு அரிசிரங்கு சொறிசிரங்கு = பெருஞ்சிரங்கு. அரிசிரங்கு = சிறுசிரங்கு. முன்னது இடைவெளிபடப் பெரிது பெரிதாகக் கிளம்பும்; நீரும் புண்ணும் உண்டாம். பின்னது இடைவெளியின்றி வியர்க்குரு போல இருக்கும். ஓயாமல் அரித்தலால் தேய்த்துக் கொண்டிருக்க நேரும். சொறி சிரங்கன் சொறியாமல் இருந்தாலும் இருக்கலாம்; ஆனால், அரிசிரங்கன் சொறியாமல் இருக்க முடியாது. ஆதலால், சொறி சிரங்கனை நம்பினாலும் அரி சிரங்கனை நம்பக் கூடாது என்பர். சொன்றி சொல் > சொன் > சொன்றி = சோறு. சொல் = நெல். சொல்லரும் சூல்பதம் எய்தி - சிந். 53 நெல்லரிசியால் ஆய சோறே சோறு எனப்பட்டுப் பின்னர் மற்றைத் தவசச் சோறுகளையும், சோளச்சோறு, தினைச்சோறு எனக் குறிப்பதாயிற்று. அதன்மேல் பனையின் உட்செதும்பு தென்னையின் உட்செதும்பு கள்ளி கற்றாழை ஆயவற்றின் உட்செதும்பும் கூழும் சோறு எனப்பட்டன. மேலும் விரிவுற்று, மூளைச் சோறு எனவும், என்றும் நிலைபெற்ற இன்பமாம் எனக் கருதிய வீடுபேறும் சோறு எனப்பட்டன. தென்பாண்டி நாட்டார் சோற்றினைச் சொன்றி என்பர் - நன். 273. சங்.  சோ வரிசைச் சொற்கள் சோ மழை பெய்யும் ஒலிக்குறிப்பு; சலவை செய்வார் ஒலிக்குறிப்பு; சோ என்னும் அரண். ஓரெழுத்து ஒருமொழி. சோங்கண் சோங்கண் என்பது ஓரக்கண் என்னும் பொருளில் அகத்தீசுவர வட்டார வழக்காக உள்ளது. ஓரக்கண் என்பது கடைக்கண். பால் வழிப்பட்ட பார்வையைக் குறிப்பது அது. சோரக்கண் என்பது சோங்கண் என ஆகி வழக்குப் பெற்றிருக்கக் கூடும். சோரம் போதல், இடக்கரடக்கு. சோங்கு சோங்கு:1 சொங்கு > சோங்கு. உள்ளீடு இல்லாததை, இருந்தும் வலிமை இல்லாததைச் சோங்கு என்பது பொதுவழக்கு. மதுரை மாவட்டத்தில் சோங்கு என்பது கொடுமை என்னும் பொருளில் வழங்குகின்றது. கோண், கோணல் என்னும் பொருளில் நெல்லை வழக்கு உள்ளது. சோங்கு:2 சோங்கு = உயர்தல். இந்த மரம் சோங்காக இருக்கிறது என்பதும், நல்ல சோங்கான ஆள் என்பதும் வழக்கில் உள்ளவை. சோங்கு என்பது ஓங்குதாங்கு என்னும் இணைமொழிப் பொருளை ஒருங்கு கொண்டதாம். உயரம் அதற்கு ஏற்ற உடற்கட்டு ஓங்குதாங்கு எனப்படும். அத்தன்மை யுடையதே சோங்கு என்க. வளர்ந்தவர் நெட்டை, கொக்கு; கனத்தவர் குதிர், உரல்; இரண்டும் ஒருங்கமைந்தவர் சோங்கானவர். தேக்கு, தோதகத்தி போன்ற மரங்களில் சோங்குக்குத் தனிச்சிறப்பு உண்டு. பாரி சோங்கான (ஓங்குதாங்கான) ஆள் என்பதைப் புறநானூறு காட்டுகிறது. சோங்கு = பாய்மரம். கப்பலின் செலவுக்குக் காற்றுப் போக்கில் தள்ளிச் செல்லப் பாரிய மரமும் விரிந்த பாயும் வேண்டும். பாய்மரம் உயரமாக இருந்தால்தான் பெரிதாகப் பாய்கட்டவும், காற்றுத் தள்ளவும் வாய்க்கும் ஆதலால் அதனைச் சோங்கு என்றனர். சோகை சோகை:1 சோர்கை > சோகை. சோர்வுற்ற நிலையில் கிளர்ச்சியற்றிருக்கச் செய்யும் நோய்; மனம் சார்ந்த இந்நோய் பின்னே உடல்சார்ந்து விடுகின்றது. செயலறவால் கால்கை தடிப்பும் இயக்கமின்மையும் உண்டாகி விடுகின்றது. படுத்தது படுத்தது, இருந்தது இருந்ததென ஆகின்றது. சோகை:2 கரும்பு, சோளம், நெல் முதலியவற்றின் தோகை பொதுமக்கள் வாயால் சோகை எனப்படுதல் வழுவாம். சோடை சோடை:1 சோர்வு. மயல்சோடை எல்லாம் தணிக்கின்ற தருவே என்பதில் சோடை இப்பொருளதாதல் புலப்படும் (திருவருட்.). சோடை:2 சோடை = உள்ளீடு இல்லாமை. நிலக்கடலையுள் சோடை யுண்டு. சோடை எனப்படுவது பருப்பு இல்லாமல் வெற்றுக் கூடாக இருக்கும் கடலை யாகும். கடலையில் சோடை மிகுதி என்றும், சோடை போகவில்லை என்றும் கூறுவது வழக்கம். அவ்வழக்கில் இருந்து அவன் ஒன்றும் சோடையில்லை என்றும் அவன் சோடை என்றும் வழக்கூன்றின. அறிவாற்றல், செயல் தேர்ச்சி இன்மை சோடையாகவும், அவையுண்மை சோடை இன்மையாகவும் வழங்குகின்றன. சொங்கு சோடை எனச் சிலர் தன்மையைச் சுட்டுவது உண்டு. சொங்கும் சோடையும் என்பது ஒரு பொருள். * சொங்கு காண்க. சோணாடு சோழர் + நாடு = சோணாடு. ஒ.நோ.: வாணர் = வாழ் + நர். சோணாட்டெல்லை - கம். தனிப். சோதா சோதா = உரமில்லாத பருமை. நடக்க மாட்டாமல் உடல் பருத்துச் சுறுசுறுப்பு இல்லாத குழந்தையைச் சோதா என்பர். பெரியவருள் சோதாவும் உண்டு. சொன்னால் சோதா ஏற்பாரா? சண்டைக்கு வந்து விடுவாரே. அதனால் குழந்தைச் சோதாவே நிலைபெற்றது. சொத சொத என்பது அளற்று நிலத்தன்மை. மழை சிறிது பெய்து நின்று விட்டபின் நடைவழி சொத சொதப்பாகச் சேறு பட்டுக் கிடக்கும். சொத சொத என்று கிடக்கிறது என்பர். எருமைத் தொழுவமும் சொதசொதப்பாக இருக்கும். இச்சொத சொதப்பாம் தன்மை போல் தசை கொழ கொழ என இருப்பது சோதாவாம். இன்னும் எட்டு வைக்காத சோதாப் பயல் என்பது சோதாச் செயன்மையுரை. சோதாக் கடா என்றும் கூறுவர். இது முகவை நெல்லை வட்டார வழக்கு. சோமாறி சொம் > சோம் + மாறி = சோமாறி. சொம் = சொத்து, பொருள். மாறி = பிறர் பொருளைத் தன்பொருளாக மாற்றி எடுத்துக் கொண்டு போய்விடுபவன்; திருடன். சோமாறுதல் நீர் மிக வெப்பமாக இருந்தால் அதில் வேண்டுமளவு தண்ணீர் விட்டு ஏற்ற வெப்பநிலை ஆக்குவர். அதனைச் சோமாறுதல் என்பது ம.வ. வெந்நீர் மிகச் சூடாக உள்ளது. தண்ணீர் விட்டுச் சோமாறு என்பர். ஏமம் > சேமம் ஆகும். சேமம் = பாதுகாப்பு. சேமம் > சேம் > சேமாறுதல் > சோமாறுதல் ஆகியிருக்கலாம். சோரன் சோரன்:1 சோர்வு கண்டு திருடிச் செல்பவன் சோரன் எனப்படுவான். சோரன்:2 காவல்காரன் சோர்வை அறிந்து ஒதுங்கிப் போய் மேயும் ஆடு. சோரன்:3 ஒழுக்கம் கெட்டவன். (ம.வ.) சோர்வு சோர்வு என்பது, அயர்வு தளர்வு நெகிழ்வு மறதி மெலிவு களவு தவறு முதலாய பல்பொருள் தரும் சொல். இப்பொருள்களுள் எதுவே யாயினும் ஆக்கம் தாராது. இவற்றை விலக்கினார் தம் நிலையில் மட்டும் அல்லாமல், குடும்ப நலமும் காத்தாராம்! மனைவி சோர்ந்தால் குடும்பமே சோர்ந்ததாம். அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது என்பது பழமொழி. மனையாள் சோர்ந்த வீடு என்றும் விழுந்த வீடே யன்றி எழுந்த வீடு ஆகாது. இது கண் காணும் காட்சி! சோர்ந்து கிடக்கும் பொறுப்பில்லாக் கணவனையும் இயக்கவல்ல இயக்கியாம் மனைவியே சோர்ந்து விட்டால் விடிவில்லை என்பது வெளிச்சம்! சோலை சொலித்து = பளபளப்புடையது; ஒளி செய்வது. காம்பு சொலித்தன்ன அறுவை - சிறுபாண். 236 பொருள்: மூங்கில் ஆடையை உரித்தா லொத்த மாசில்லாத உடை (உரை: நச்.) மூங்கிலின் உள்ளே உள்ள மெல்லிய வெண்படலம்; நூலாம்படை போல்வது; ஒளியுள்ளது. கழைபடு சொலியின் இழையணி வாரா ஒண்பூங் கலிங்கம் - புறம். 383 மூங்கிலாகிய கோலின் உட்புறத்தே பெயர்த்தெடுக்கப்படும் வெள்ளிய தோல் போல நெய்யப்பட்டுள்ள இழைகளின் வரிசை கண்ணுக்குப் புலப்படாத சொலி, கலிங்கத்துக்கு உவமை (குறிப் உ.வே.சா.). மாந்தளிர் போலும் உடம்பு மாமேனி (பொன்மேனி) என்பதாம். இலைக்குத் தகடு என்பது பெயர்; தகடு = பொன், பொலிவு, பொற்பு. மரத்தின் இலைகள், பிஞ்சுகள், காய்கள், கனிகள் ஆயவை கதிரொளி பட்டதால் பட்டொளி செய்யும். சோலைக்கு ஒருபெயர் பொங்கர் என்பது. பொங்கர் = பொலிவு; காண்போரைக் கவர்வது; அழகு மிக்கது. பொதும்பு பொதும்பர் என்பனவும் சோலையே. வெயிலிடைப் படா நிழலும் தன்மையும் அமைந்தவை அவை. வெயில்நுழை பறியாக் குயில்நுழை பொதும்பர் - மணிமே. 4:5 இவையெல்லாம் சோலையின் எழிலும் ஒளியும் தண்மையும் கவினும் காட்டுவன. ஆதலால் சொலிப்பு உடையதாம் அது சோலைப் பெயர் பெற்றதாகலாம். சொலிப்பு > சோலிப்பு > சோலை. சோழக் கொண்டல் சோழ நாட்டுப் பக்கம் இருந்து நீர் கொண்டு வந்து பொழியும் முகிலைச் சோழக் கொண்டல் என்பது நெல்லை நாட்டு வழக்காகும். வட கிழக்குப் பருவக் காற்றைக் குறிப்பது அது. கொண்டல் = நீர் கொண்டு வரும் மேகம். சோழர் சோழர் என்பார் வளவர் எனவும், கிள்ளியர் எனவும் புனல்நாடன் எனவும் பெயர் பெற்றனர். வளமிக்க மருத நிலத்தவர் ஆதலால் வளவர் எனப்பட்டார். காடு கெடுத்து நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கியதால் கிள்ளி எனப் பெயர் பெற்றனர். நீர் வளமிக்க காவிரிக் காவலர் ஆதலால் புனல்நாடர், நீர்நாடர் எனவும் பெயர் பெற்றனர். உறையூரைத் தலைநகராகக் கொண்டமையால், ஊரன் எனப்பட்டனர். செம்மையாம் நடுவு நிலைச் சால்பால் செம்பியர் எனப்பட்டனர். ஆனால், சோழர் எனப்பட்டது தெளிவாகத் துலங்கவில்லை. பாவாணர் சொல்வது: சோழநாடு நெல்லிற்கு அல்லது சோற்றிற்குச் சிறந்ததனால் நெல்லைக் குறிக்கும் சொல் என்னும் சொல்லினின்று அப்பெயர் பெற்றிருக்கலாம். சொல் - (சோள்) சோழம் - சோழன். x.neh.: கல் - கள் - காள் - காழ் - காழகம் = கருமை. சோளப் பெயரினின்று பிரித்துக் காட்டவும் சோழம் என்னும் வடிவு வேண்டப் பெறும். சோழநாடு முதற்காலத்தில் நெல் மிகுதியாய் விளைக்கப்பட்டதுமன்றித் தானாய் விளைந்த நிலமாகவும் இருந்திருக்கலாம். மாந்தரால் விளைக்கப்படும் பயிர்களெல்லாம் முன்பு தாமாய் விளைந்தவையே. நிலைத்திணையால் ஒரு நாடு பெயர் பெறுவது இயல்பே. ஏழு தீவுகளுள் நாவலந் தீவு, இறலித்தீவு, இலவந் தீவு, குசைத் தீவு, தேக்கந் தீவு என்னும் ஐந்தும் நிலைத்திணையாற் பெயர் பெற்றவை. முழுகிப் போன, குமரிக் கண்டத்திலும் ஏழ்தெங்க நாடும் ஏழ் குறும்பனை நாடும் இருந்தமை காண்க (தமிழ்வரலாறு பக்.44). ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலம்திரித லான் ஞாயிற்று வழியர் சோழர்; அவர் திகிரி கதிரோன் சுழல்வது போல் உலகத்துச் சுழல்கிறது; ஆதலால் அஞ்ஞாயிற்றைப் போற்றுகிறோம். இது சிலப்பதிகாரத்து மங்கல வாழ்த்துப் பாடலிற் கூறும் இரண்டாம் வாழ்த்து. இதன் நிறைவிலேயும் உலக வலம் வரும் அவன் ஆளுகையையே சொல்லி நிறைக்கிறார். உப்பால் உயர்கோட் டுழையதா எப்பாலும் ஒருதனி யாழி உருட்டுவோன் எனவே சோழருள் புகழ்வாய்ந்த ஒருவன் கரிகாலன் அவன் முன்னோர் பற்றிய ஒரு சிறப்பைப் புறநானூறு பாடுகிறது. வளிதொழி லாண்ட உரவோன் மருக களியியல் யானைக் கரிகால் வளவ! - புறம். 66 என்பது அது. பருவக்காற்றின் நிலையறிந்து கடலில் கலம் செலுத்திய பேரறிவும் பேராற்றலும் வாய்ந்தவர் வழியில் வந்தவனே என்பதால் கதிர் வலம் சுழலல் போல், கலம் கடல் ஞாலம் சுழன்றமை சுட்டப் படுகின்றது. சோழனிடம் வழக்குரைத்து நடுவுநிலை காண வந்த முதியர் இருவர், அவன் இளமையை அறிந்து இவனா நம் வழக்கியல் அறிந்து நேரிய வகையில் முடிவு கூற வல்லான் என வழக்கைக் கூறாதே திரும்பியதறிந்து, நரைத் தலையனாய் அவர்கள் முன் தோன்றி இருவரும் ஒப்ப நடுமை கூறிய சிறப்பு பழமொழியில் (21) பாடப்பட்டுள்ளது. உரைமுடிவு காணான் இளமையோன் என்ற நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச் சொல்லால் முறைசெய்தான் சோழன்; குலவிச்சை கல்லாமல் பாகம் படும் என்பது அது. சூழ்ச்சி என்பது பலரொடும் பலகால் கலந்து பேசித் தெளிவான முடிபு எடுப்பதாகும். சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் எனவும், சூழ்ச்சி முடிபு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது எனவும் பொய்யாமொழி (திருக். 445, 671) புகல்வதாம் சூழ்ச்சித் திறம் மேதக்கவராம் சோழர். வஞ்சகச் சூழ்ச்சியாக எண்ணும் இந்நாள் மக்கள் வழக்கொடு, நெஞ்சக நிறைவாம் நடுமையில் ஆய்ந்து செயற்படுத்திய அந்நாள் சூழ்ச்சியை எண்ணுதல் ஆகாது. சோழ வேந்தர், ஊர் எனக் காணப்பட்டது உறையூர். ஊரெனப் படுவது உறையூர் பூவெனப் படுவது பொறிவாழ் பூவே என்பது வழங்கு மொழி. உறையூர்ச் சிறப்புகளாக இலக்கியங்களில் அரிய பதிவு ஆவணமாகியுள்ளது ஒன்று. அது உறையூர்க்கண் இருந்த சான்றோர் அவையம். சான்றோரும் உண்டு கொல் சான்றோரும் உண்டுகொல் (சிலப். 16:54-56) என்று கண்ணகியார் மதுரையில் வினா எழுப்பிய சான்றோர் உண்டு என்பது அவர் பிறந்த நாட்டில் திகழ்ந்த புகழ் அவையமே யாம். சான்றோர் அவையம் சென்று ஒருவன் தன்னிலை கூறினான் எனின், தீராச் சிக்கலும் தீர்ந்து நலம் பெறுவான் என்னுமளவு தமிழகம் முழுதறியத் திகழ்ந்தது சோழர்தம் உறந்தை அவையமே யாம். முன்னைச் சோழர் இமய வெற்றி கண்டு புலிப்பொறி, பொறித்ததுண்டு. பின்னைச் சோழருள்ளும் இராசராசனும் இராசேந்திரனும் இலங்கை அந்தமான் நக்கவரம் மாலைத் தீவு மலையகக் கடாரம் என்பன வெல்லாம் வென்ற பெருமை கொண்டனர். கங்கை கொண்டான், கடாரங் கொண்டான், சிங்களாந்தகன் என்றெல்லாம் சிறப்புப் பெற்ற ஊர்ப் பெயர்கள் அவர்கள் வீறுகாட்டும் சான்றுகள். சூழும் வெற்றியும் சூழும் நாடு பற்றலும் சூழும் அறிவுத் திறமும் சூழும் அறிவர் அவையமும் ஆகியவெல்லாம் ஒருங்கே எண்ணுங்கால் சூழர் என்னும் பெயர், சோழர் எனப் பண்டே ஆயதோ என எண்ணச் செய்கின்றது. சூழ்ச்சியம் என்பது நுண்திறமாம். கரிகாலன் கட்டிய கல்லணை உலகளாவிய பொறித்திற முன்னோடி அல்லவோ! முன்னைச் சூழ்திறம் போலவே பின்னையும் திகழ்ந்த சான்று காட்டப்பட்டதே எனின், சோழர் பெயர்க்கு முன்னைச் சான்றுகளே சான்றாம்! பின்னையும் அவர்நிலை இருந்தவாறு அறியச் சொல்லப்பட்டதாம். தஞ்சைப் பெருவுடையார் கோயில் கலைமாண்பும், கங்கை கொண்ட சோழபுரக் கோயில் சிறப்பும், சோழவள நாட்டுக் கோயில்களின் எண்ணிக்கையும் எல்லாம் சோழர்களின் பன்மாண் கலைச்சிறப்பைக் காட்டுவன அல்லவோ! சங்கம் கண்ட பெருமை பாண்டியர்க்கு உண்டு எனினும், பட்டினப்பாலை கூறும் கடல்வழி வணிக வளம் சோழர்க்கு அமைந்தது போல் அவர்களுக்கு அமைந்திலவே. கவாட முத்தும், கொற்கை முத்தும் சேரர் மிளகும் உலகளாவிய புகழெய்தச் சோழர் கலங்கள் அல்லவோ கடல் உலாக் கொண்டன. உலகம் சூழும் புகழால் சூழர் சோழர் எனப் பெயர் பெற்றிருக்கலாமோ என எண்ணச் செய்கிறது! மேலும் தெளிவு கிடைத்தால் தமிழ் நலமேயாம்! சோழியன் சோழியன் = சோழ நாட்டினன். எ-டு: சோழியன் ஏனாதி திருக்குட்டுவன் (புறம். 394). சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது பழமொழி. * ஏனாதி காண்க. சோளம் உடலில் அரிப்பு உண்டாக்குவது சொள் எனப்படும். அச்சொள்ளை உடைய தவசம் சோளம். அத்தவசத்தின் மூடி போல் அமைந்தது சொள் ஆகும். அது பட்டால் உடல் எரியும் அரிக்கும். சொள்ளுச் சொள்ளென அரிக்கிறது; சோளப் பொட்டுப் பட்டுவிட்டது என்பது மக்கள் வழக்கு. சோளத்தில் மிகத் தடித்த சொள் உடையது சொங்கு எனப்படும். அதற்குச் சொங்குச் சோளம் என்பது பெயர். நாற்றுச் சோளம், கருஞ்சோளம் என்பதும் அதன் பெயர். சோனைமாரி சோவென மழை பொழிகிறது என்பது மக்கள் வழக்கு. சோவென விடாது மழை பொழிதல் சோவென மாரி பொழிவதாய் வழங்கிச் சோனாமாரி என இந்நாள் கூறப்படுகிறது. சோனை மாரி = விடாமழை; தொடர்மொழி.  `ஞ வரிசைச் சொற்கள் ஞஞ்ஞை நை நை எனக் கத்தி எதனையும் சொல்ல மாட்டாது எதைச் செய்தாலும் பயன்படாமல் மயங்கி நிற்க வைத்தல். நளிநய (அவிநய) வகையுள் ஒன்று. ஞஞ்ஞை = நைந்நை. ஒ.நோ.: ஞமலி > நமலி; ஞமன் > நமன். ஞஞ்ஞை யுற்றோன் அவிநயம் நாடிற் பன்மென் றிறுகிய நாவழி வுடைமையும் நுரைசேர்ந்த கூம்பும் வாயும் நோக்கினார்க் குரைப்போன் போல உணர்வி லாமையும் விழிப்போன் போல விழியா திருத்தலும் விழுத்தக வுடைமையும் ஒழுக்கி லாமையும் வயங்கிய திருமுக மழுங்கலும் பிறவும் மேவிய தென்ப விளங்குமொழிப் புலவர் - சிலப். 1:3:13 அடியார்க். மேற். ஞமலி நமலி > ஞமலி = நாய். நம்மை நெருங்கி யிருப்பதும் சுற்றிச் சுற்றி வருவதும் பெருகக் குரைப்பதும் பெருகிய அளவில் குட்டி போடுவதும் ஆகியது ஞமலியாம் நாய். அமலுதல் = நிறைதல், நெருங்குதல். அமலுதல் > PkYjš> ஞமலி. தொடர்ப்படு ஞமலி - புறம். 74 ஞமன் சமன் > ஞமன். ஞமன் = நடுவு நிலையாளன். தெரிகோல் ஞமன் - புறம். 6 உள்ளார் இல்லார் பெரியர் சிறியர் என்னாமல் உரிய காலத்தில் உரியது செய்யும் சமனாளன் ஞமன் என்பதாம். இனி நமன் என்பதன் வழியது ஞமன் எனின் நமக்குத் தீரா உறவாளன் கூற்றுவன் ஆதலால் அவன் நமன் எனப்பட்டான். நமன் > ஞமன். எமன் என்பதும் எம்மவன் என்பதேயாம். எமக்கு உரியவன் என்பது. ஞமன்கோல் சமன்கோல் > ஞமன்கோல் = நிறைகோல். நடுவு நிலைமைக்குச் சான்றானது அது. ஞெமன்கோல் என்பதும் அது. * சமன்கோல் காண்க. ஞாட்பு நாட்பு > ஞாட்பு. ஞாட்பு = போர். ஞாட்பினுள் எஞ்சிய - களவழி. 2 வீரராவார் நாளும் பொழுதும் போரிலிலேயே ஈடுபட வேண்டும் என்னும் ஆர்வத்தராய் ஈடுபடலால் நாட்பு > ஞாட்பு ஆயதாம். விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து - திருக். 776 ஞாண் நாண் > ஞாண் = நாணம், வளைதல், கயிறு, நாணல் புல். சாவ நோன்ஞாண் - புறம். 14 * நாண் காண்க. ஞாதி உறவினர் சுற்றத்தவர் என்னும் பொருளது இச்சொல். நாதி என வழங்குகின்றது. கேட்பதற்கு ஒருநாதி இல்லை என்பர். ஞாய் = தாய்; எம்தாய் ஞாய். யாயும் ஞாயும் யாரா கியரோ! என்பது குறுந்தொகை. ஞாய்வழியர் ஞாதியர்; நாதியர் ஆயது. ஞாயில் ஏயில் > ஞாயில். ஏப்புழை ஞாயில் - பு. வெ. 86 ஆதலால் ஏயில் > ஞாயில் ஆயதாம். கோட்டை மதில்மேல் மேடையில் இருந்து அம்பு ஏவுதற்கு இடமாவது ஞாயில் எனப்பட்டது. ஞாயிறு ஞாயிறு = கதிரோன். ஞாய் + இறு = ஞாயிறு. ஞாய் = தாய். இறு = எங்கும் தங்குவது. கோள்களுக்குத் தாயன்ன மூலமாக அமைந்ததும், அவற்றுக்கு ஒளி தருவதும் மாறி மறையா ஒளியுடையதுமாம் அது ஞாயிறு எனப்பட்டது. ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் - சிலப். 1:1 ஞாய் ஞாய் = என் தாய். ஞாயும் யாயும் யாரா கியரோ? - குறுந். 40 ஞான் > நான். நானாகிய என் தாய் ஞாய். * யாய் காண்க. ஞாலம் ஞாலம் = உலகம். ஞாலுதல் = நாலுதல், தொங்குதல், சுழலுதல். ஞாலுதலை உடையது ஞாலம். ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின் - திருக். 484 ஞான்று (நாண்டு) கொண்டான் என்பது மக்கள் வழக்கு. ஞாழல் ஞாலல் > ஞாழல் = புலிநகக் கொன்றை. கொத்துக் கொத்தாகத் தொங்கும் மலர்களையுடைய கடற் கானல் நிலைத் திணை ஞாழல். ஞாலல் = தொங்குதல். கன்னி நறுஞாழல் கையேந்தி - சிலப். 7:9 ஞாளி நாளி > ஞாளி = நாய். நாலி > நாளி. நாலி = தொங்குதல். எப்பொழுதும் நாவைத் தொங்கப் போடுதலால் நாலி ஞாளியாயது. ஞாறு ஞாறு என்பது நாற்று என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது. நாறு என்பது நாற்று. எ-டு: ஞான் > நான்; ஞாறு > நாறு. ஞாறு என்பது தொல்பழ வழக்கு. யாறு > ஆறு; யானை > ஆனை என்பவை போல. நாறுதல் = முளைத்தல். ஞானம் ஞானம்:1 யான் > நான் > ஞான். தன்மைப் பெயர். ஞான் + அம் = ஞானம். தன்னை அறியும் அறிவு ஞானம். தன்னை அறிந்தான் தலைவனை அறிந்தான்; ஆகலின், ஞானம் பொதுமையுற்று அறிவுப் பொருள் தந்தது. ஞானமிக்கான் ஞானி ஆனான். ஞானநூல் = மெய்யியல் நூல். மெய்கண்டார் அருளியது சிவஞான போதம்; அதன் வழியது சிவஞான சித்தியார். ஞானம்:2 ஞானம் என்பது அறிவுப் பொருட்டதாம் சொல்லெனினும், மெய்யறிவுப் பொருளிலேயே ஞானப் பெயர் நூல்கள் சுட்டுகின்றன. சட்டைமுனி ஞானம், அகத்தியர் ஞானம், உரோமர் ஞானம், திருமூலர் ஞானம், சுப்பிரமணியர் ஞானம், காகபுசுண்டர் ஞானம் எனப் பல நூல்கள் சித்தர் தொகுதியுள் உள்ளன. சட்டை முனி நாயனார் முன்ஞானம் நூறு; பின்ஞானம் நூறு எனவும் இரு நூல்கள் உள்ளன. இவ்விரண்டுமே எண்சீர் விருத்தங்களால் ஆனவை. முன்பின் என்பன காலமுறைச் சுட்டே ஆகலாம். சித்தர் ஞானம் கூறும் நூல்கள் பெரும்பாலும் எண்சீர் விருத்தங்களாலேயே அமைந்துள. பிற பாவினப் பாவகைகள் அரிதாகவே உள. ஞான்று ஞால் > ஞான் > ஞான்று = பொழுது. அலப்பென் தோழி அவர்அகன்ற ஞான்றே - குறுந். 41 ஞாலத்தின் (உலகத்தின்) சுழற்சியால் ஏற்படுவது பொழுது. ஞாலம் = உலகம். ஞாலுதல் > நாலுதல் = தொங்குதல். அவன் நான்று கொண்டு இறந்து விட்டான் என்பது உலக வழக்கு. ஞான்று, இடமும் பொழுதும் குறிக்கும் சொல். இவ்விரண்டும் கூடியது ஒன்றனோடு ஒன்று தொடர்புடையது ஞான்று. யாண்டு, முன், பின் என்பனவும் நிலமும் பொழுதும் குறிப்பனவே. ஞிணம் நிணம் > ஞிணம். ஊன்தசை, ஊன் நீர். பைஞ்ஞிணம் பருத்த பசுவெள் ளமலை - புறம். 177 ஞிமிறு வண்டு வகையுள் ஒன்று. இம் > இமிர் > ஞிமிர் > ஞிமிறு என ஆயது. ஒலியின் வகையால் பெற்ற பெயர் இது. தும்பி, சுரும்பு என்பவை இவ்வண்டு வகையினவே. மதுகரம் ஞிமிறொடு வண்டினம் பாட - சிலப். 25:20 ÁØÈ நீலி என்பது வாழையுள் ஒருவகை. நீலி ஞீலி ஆகும். பைஞ்ஞீலி என்னும் ஊர் பாடுபுகழ் பெற்றுத் திருப் பைஞ்ஞீலியாகக் கொள்ளிட வடகரையில் விளங்குகின்றது. ஞெகிழம் நெகிழம் > ஞெகிழம். நெகிழ்தல் இடம்பெயர்தல்; இடம்பெயர்ந்து ஒலித்தல். கோடீர் இலங்குவளை ஞெகிழ - குறுந். 11 ஞெகிழம் = சிலம்பு; அதன் உள்ளிடு பரல். இடம்பெயர்ந்து ஒலித்தலால் பெற்ற பெயர். அரசுறை கோயில் அணியார் ஞெகிழம் - சிலப். 18:25 * கழல் காண்க. ஞெகிழி நெகிழி > ஞெகிழி. ஞெகிழி = தன்முன் உள்ளதை வெதுப்பி உருக்கியும் கருக்கியும் நெகிழச் செய்வது, அது தீ. சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி - குறுந். 150 ஞெண்டு நண்டு > ஞெண்டு. நள் = குளிர்; நள் + து = நண்டு. நண்டு = குளிரிலே வாழ்வது. நீர் நிலைகளைச் சார்ந்து வளையமைத்து வாழ்வதும் நீர்நிலையுள் வாழ்வதுமாம் அது நளிர், நளிரி, குளிர் எனவும் வழங்கும். கொக்கின் பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு - குறுந். 117 ஞெமல் ஞமல் > ஞெமல். ஞெமல் = நிரம்புதல், நிறைதல், மிகுதல், செறிதல். ஞெமிடுதல் ஞெமிடுதல் = கயக்குதல் (கசக்குதல்) கதிர், பயற்றுக்காய் முதலியவை கையால் கசக்கிப் பச்சையாகவே தின்னப் படுவன. ஞெமிடுதல், நிமிண்டுதல் என இக்காலத்துத் திரிந்து வழங்கப்படுகிறது. (நற். 22 பின்.அ.நா.). கைவிரல்களால் தோலைப் பிதுக்கி விளையாடும் இளையர் நிமிட்டாம் பழம் என்று அதனைக் கூறுவர். முந்துவிளை பெருங்குரல் கொண்ட மந்தி அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டுதன் திரையணல் கொடுங்கவுள் நிறைய முக்கி - நற். 22 ஞெமுங்கல் ஞெமுங்கல் = அழுந்தல், அழுங்கல். மின்னுறழ் இளமுலை ஞெமுங்க - குறுந். 314 ஞெமை நிமை > ஞெமை. நிலைத்திணை வகையுள் ஒன்று. அம்மரத்தை நமை ஓமை என்பர். (தமிழரும் தாவரமும் பக். 388). ஞெமைத்தலை, ஊன்நசைஇ ஒருபருந் திருக்கும் - குறுந். 285 ஞெரேர் ஞெரேர் = விரைந்து, ஒலிக்குறிப்பு. ஞெரேரெனக், கவைத்தலை முதுகலை காலின் ஒற்றி - குறுந். 213 ஞெரேரெனத் தலைக்கோள் வேட்டம் - பொருந. 141 பொருள்: ஞெரேரென = கடுக (உரை, நச்.). ஞெலி நலி > நெலி > ஞெலி - நெருப்பு. ஞெலிபுடன் நிரைத்த - கலிட். 101 பொருள்: நெருப்பைச் சேர நிரைத்தாற் போன்ற (நச். உரை). ஞெலிகோல் ஞெலிதல் = சுழலுதல், சுற்றுதல். ஞெலிகோல் = தீயுண்டாக்கப் பயன்படுத்தும் தீக்கடை கோல் ஞெலிகோலாம். இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போல - புறம். 315 ஞெள்ளல் அள்ளல் > ஞள்ளல் > ஞெள்ளல் = சேறு. நள் > ஞெள் = செறிவு. ஞெள் + அல் = செறிவற்ற மண்ணை யுடையது. கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண் - புறம். 15 ஞெள்ளல் = சேறமைந்த தெரு.  த வரிசைச் சொற்கள் த தமிழ் அகர வரியின் வல்லின எழுத்தில் நான்காவதாகவும் உயிர்மெய் யெழுத்தில் ஏழாவதாகவும் அமைந்த எழுத்து. தகரமுதல் தகர ஔகாரம் ஈறாகிய பன்னீரெழுத்தும் மொழி முதலாக வருவது. உயிர்மெய் வரிசையில் இவ்வாறு பன்னீரெழுத்தும் சொல்முதலாக வருவனவற்றுள் இஃது இரண்டாம் எழுத்தாம். எஞ்சியவை க, ந, ப, ம என்பன. அதோ, இதோ, அந்தா, இந்தா என்பவற்றின் குறையாகத் த பார் எனச் சுட்டும் மக்கள் வழக்கு உண்டு. தகடு பூவின் புற இதழ். கதிரொளிபட்ட அளவில் தகதகவெனப் பளிச்சிட்டுக் காட்டிய பூவிதழ் தகடு எனப்பட்டுப், பின்னர் மற்றைப் பொன் செம்பு முதலிய மாழைத் தகடுகளையும் குறிப்பதாயிற்று. கருங்கால் வேங்கை மாத்தகட் டொள்வீ இருங்கல் வியலறை வரிப்ப - ஐங்குறு. 219 தகடூர் தகடூர் என்பது இந்நாளைத் தரும்புரியின் பழம் பெயர் ஆகும். தகடூர் என்னும் பெயரைப் பதிற்றுப் பத்து வழங்குகின்றது (பதி. 8). தகடூரின் தென்கிழக்கில் ஏழு (அயிரம்) கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அதமன் கோட்டை என்னும் ஊர் அதியமான் கோட்டை என்பதன் சிதைவே ஆகும். அதியமான் கோட்டையின் சிதைபாடுகளை இன்றும் காணலாம். கோட்டையும் சிதைந்து, கொண்ட பெயரும் சிதைந்து போய நிலைமையிலும் தன் பழவரலாற்றை நினைவூட்டும் அதியமான் கோட்டை வாழ்வதாக! அதியமான் நினைவு தோன்றப் புதுவதாம் நிலையம் ஒன்றும் கிளர்ந்துளது. தகடூர் தகடை, தகட்டூர், தகடாபுரி என்னும் பெயர்களாலும் வழங்கியது. தகடு என்னும் சொல் பல பொருள்களைத் தரும். அவற்றுள் தகட்டு வடிவப் பொருள், பொன், பூவின் புற இதழ் ஆகிய முப்பொருள்களிலும் சங்கத்தார் ஆண்டுள்ளனர். அவற்றுள்ளும், கருந்தகட் டுளைப்பூ மருது - முருகு. 27 தூத்தகட் டெதிர்மலர் - நற். 52 வேங்கை மாத்தகட் டொள்வீ - புறம். 202 கருங்கால் வேங்கை மாத்தகட் டொள்வீ - ஐங்குறு. 219 கானப் பாதிரிக் கருந்தகட்டு - அகம். 261 எனப் பூவின் புறவிதழ் என்னும் பொருளே பயில வழக்குப் பெற்றுள்ளது. பொன்னின் வேறுபடுத்துதற்கு நாறாத் தகடு என்றும் கூறப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு அகவிதழைப் பாதுகாக்கும் புறவிதழ் போன்ற மதிலை உடையது என்பார் புலவர் பாண்டியனார் (எழினி. 12). ஆனால் அதியமானின் குதிரைமலை, தகடாக அமைந்தது. அதன் வழியது தகடை, தகடூர் என்பது இயற்கை இயைபினது. எ-டு: மட்டப்பாறை, குட்டைப்பாறை, தட்டைப்பாறை, சிப்பிப் பாறை என்பவற்றை நோக்குக. தகணை தகணை:1 ஒரு நெடுமரத்தைத் துண்டிப்பார் கோடரியால் குறுக்கே குறுக்கே தரித்துப் பிளப்பது வழக்கம். அக் குறுக்கு வெட்டுக்குத் தகணை என்பது நெல்லை வட்டார வழக்கு. தகணையைப் பத்தி என்பது திருமங்கல வட்டார வழக்கு. ஒரு கடனைப் பலகால் பகுத்துத் தருதலும் பெறுதலும் தவணை எனப்படும் வழக்கத்தை எண்ணலாம். தவணை > தகணை. கரும்புத் துண்டைத் தகணை என்பதும் வழக்கு. தகணை:2 முதலுக்குரிய தொகையும் வட்டியும் தவணை தவணையாக வழங்குதல் தவணை. ஒரு பாறையைப் பெயர்த்தல் வரை வைத்துப் பிளத்தல் தகணையாம். பனம் பழத்தைச் சீவித் துண்டு துண்டுத் தகடுகளாக எடுப்பதைத் தகணை என்பது குமரி முதலிய தென் தமிழக வழக்கு. தகத்தக ஒளிக்குறிப்பு தகதக என்பது. தங்கம், தகத்தக என மின்னுகிறது ம.வ. தகத்தகாயம் என்பார் பாரதியார். பாரடியோ வானம் தகத்தகாயம் - பாரதி. பாஞ். தகத்தக என அமைந்தது தங்கம். * தகடு காண்க. தகரம் தகர் + அம் = தகரம். அல் மணத்தை அகற்றி (அ) தகர்த்து நல் மணமாம் நறுமணம் தரும் மயிர்ச்சாந்து. துவரப் புலர்ந்து தூமலர் கஞலித் தகரம் நாறும் தண்ணறுங் கதுப்பின் புதுமண மகடூஉ - அகம். 141 மகளிர் தகரம் பூசியது இது. எண்ணெய் நீவிய சுரிவளர் நறுங்காழ்த் தண்ணறுந் தகரம் கமழ மண்ணி - குறிஞ். 107-108 ஆடவர் தகரம் பூசியது இது. தகர் மோதுவதில் முனைப்புடையது செம்மறியாட்டுக் கடா. ஆதலால் அதனை மோத்தை என்று பொருந்தப் பெயரிட்டு வழங்கினர். அம் மோத்தைக்குத் தகவொரு பெயரும் இட்டனர். அது தகர் என்பது. தகர்ப்பது - முட்டி மோதி அழிப்பது - தகர் தானே! தகர் வென்றி என்பது புறத்துறைகளுள் ஒன்று. போர் வீரர் தம் வீரமும் வெற்றியும் மேலும் மேலும் பெருக வேண்டிக் காண்பது தகர்களை மோதவிடலாம். ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து - திருக். 466 தகர் என்னாது பொருதகர் என்றும், தாக்கற்கு என்றும் கூறிய அருமை அறிக. மாந்தன் மோதிக் கொள்ளப் போர்ப் பயிற்சி தரும் பொருதகர் பொருந்தி வாழுமோ? தகவு தக்கது எனச் சான்றோரால் பாராட்டப்படும் பண்பு தகவு ஆகும். தகுதியானது எது வோ, அது தகவு. தகுதி எனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின் - திருக். 111 எடுத்துக் கொண்டதன் முழுமையும் குறையாத் தகுதியதாக இருக்க வேண்டும். அவர் தகவுக்கு நிறைவான நிலைத்த அடையாளம். அவர் உலகில் வைத்துப் போகும் உயர்ந்த செயற்பாட்டுச் சான்றுகளே. எண்ணம் அன்று; சொல் அன்று; செயல்! செயற்கரிய செயல். தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தால் காணப் படும் - திருக். 114 தகுதி என்பதும் இது. தகுணி தணிவு என்பது தகுணி, தகணி என வழங்குதல் திருவாதவூர் வட்டார வழக்காகும். தணிந்த ஓசையுடைய இசைக் கருவி ஒன்று தகுணிச்சம் என வழங்கப் பெறுதலை நோக்கின் தகுணி என்பதன் தணிவுப் பொருள் விளக்கமாகும். தகை தகை:1 தகை = அழகு. தகவும், தகவாம் தன்மையும் தகையாம். அன்பு, அருள், ஒழுங்கு, பெருமை அமைந்தது அழகின்றி யமையுமோ? ஆகலின், தகையும், தகைமையும் அழகெனப் பெற்றன. பெருந்தகை, தகையோர் என்பவை உயரிய தன்மை என்பதன் வழிப்பட்ட இலக்கிய வழக்குச் சொற்கள். தகை:2 தகைப்பு = களைப்பு, சோர்வு. ஓடி வந்தால் தகைப்பு ஏற்படும். மாடு வேலை செய்து வேலை விடுதலைத் தகைப்பாறுதல் (தைப்பாறுதல்) என்பர். தகைப்பின் மூலம் தகை. தகை என்பது நீர் வேட்கையாகும். தகையாக இருக்கிறது தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது தென் தமிழக வழக்கு. தகைசான்ற சொல் சொற்காத்தல் என்பது இருவகைய. ஒன்று தான் சொல்லும் சொல்லைக் காத்தல், மற்றொன்று பிறர் சொல்லும் நற்சொல்லைக் காத்தல். சொல்லுக்குக் கூற்று என்பதொரு பெயர். பலர் தம் செயலால் இயலால் நல்லராக இருந்தும், தம் சொல்லால் பழிக்கும் துயர்க்கும் ஆளாவதைக் காணும் போது, சொல்லுக்குக் கூற்று என்று பெயர் சூட்டிய முந்து முதல்வனை, மாலை சூட்டி மகிழ வேண்டும் என்பது தோன்றும்! பல்லக்கு ஏறுவதும் சொல்லாலே; பல் உடைபடுவதும் சொல்லாலே என்னும் பழமொழியினும் தெளிவாகச் சொற்பயன் குறித்துச் சொல்லிவிட முடியுமா? யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு என்று திருவள்ளுவர் (திருக். 127) தெளிவாகக் கூறினார். நன்மைக்கும் தீமைக்கும் இடமாக இருக்கும் சொல்லைக் காத்தவர், புகழைக் காத்தாராம்! சொல்லை மட்டும் சொல்லித்தான் பிறர் பழிப்பாரா? செயலைச் சொல்ல மாட்டாரா? இயல்பைச் சொல்ல மாட்டாரா? அவர் கூறும் பழி தன்னளவில் நிற்பது இல்லையே! பிறந்த குடும்பம் புகுந்த குடும்பம் என்பவற்றுக்கும் தாவுமே! ஆதலால், பிறர் கூறும் பழிக்கு ஆளாகாமை சிறப்பாம். ஏனெனில், பழிக்கு ஆளாகா வாழ்வே அறவாழ்வு என்பது வள்ளுவம் (திருக். 49). தகைவு தகைவு:1 தக்கது அன்று என ஒதுக்கத் தக்கது தகைவு ஆகும். அத் தகைவு பின்னே ஆகாது என எதனைத் தடுப்பதையும் குறிப்பதாயிற்று. தகைதல் = விலக்குதல், தடுத்தல். தகைவு:2 தகைவு = கட்டுப்படுதல், ஏற்றல். ஒரு பொருளை விலைக்குத் தருவாரும் பெறுவாரும் ஒப்புக் கொண்டு கட்டுப்படுதல் அல்லது ஏற்றல் தகைவு என்பது ம.வ. அந்த விலை தகையவில்லை என்பர். தக்கணம் தக்கு + அணம் = தக்கணம். தக்கு = பள்ளம்; அணம் = பொருந்துதல். தணிவான நிலப்பரப்பினால் தக்கணம் எனப்பட்டது. தக்குத் தொண்டை. அடித்தொண்டை ம.வ. (பாவாணர்). தக்கது தக்கவர்கள் தக்கது என ஏற்கத் தக்கது, தக்கது ஆகும். தக்கவர் என்பார் தகுதியால் தக்க செயல் செய்யும் தகவால் உயர்ந்தோர் ஆவர். தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும் என்பது திருக்குறள் (114). தக்க திருப்பணியும் அறக்காவலும் இறைமைக் கடனும் செய்வார் என்று தேர்ந்தெடுக்கப்பட்டுத் திருக்கோயில்களுக்கு அமர்த்தப் பெறுவார், தக்கார் என அழைக்கப்படுதல் இற்றை நாள் நிலை. தக்கது மன்ற மிக்கோன் கூற்று - பெருங். 2:14:72 தகவு, தகுதி என்பதும் இது. என்சிறுமையின் இழிந்து நோக்கான் தன்பெருமையின் தகவு நோக்கிக் ... ... கனவென மருள வல்லே நனவின் நல்கியோனே - புறம். 387 வரையளந் தறியாத் திரையரு நீத்தத் தவல மறுசுழி மறுகலிற் றவலே நன்றுமற் றகுதியும் அதுவே - புறம். 238 தக்கம் தருக்கம் > தக்கம். தடை என்னும் பொருளில் தக்கம் என்பது விருதுநகர் வட்டார வழக்காக உள்ளது. தடுக்கல், தடுக்கு, தடுக்கம் என்பவை தடுத்தல், நிறுத்துதல் பொருள் தருவனவாம். தட்டுத் தடங்கல் என்பது இணைச்சொல். இனித் தருக்கம் என்பதும் தடுத்து நிறுத்துதல் பொருளில் தொகுத்துத் தக்கமாகி யிருக்கவும் கூடும். தக்கி முக்கி தக்குதல் = அடி இடறுதல். முக்குதல் = மூச்சுத் திணறுதல். உடல் பருத்தும் அகவை முதிர்ந்தும் உள்ளவர் உயரமான இடத்திற்கு ஏறுவது கடுமையானது. அப்படி ஏறுங்கால் அடி தள்ளாடுதலும், மூச்சு இரைத்தலும் உண்டாம். அந்நிலையில் அவர் தக்கிமுக்கி ஏறுவார். இதனைத் தத்தி முத்தி என்பதும் உண்டு. தக்கு தக்கு = பள்ளம், குழி. தொண்டையின் கீழ்ப்பகுதி தக்குத் தொண்டை எனப்படும். * தக்கணம் காண்க. தக்கு முக்கு தக்கு= தடை, தடுப்பு, தாழ்வு என்னும் பொருளது. முக்கு= மூச்சு முட்டுதல், பெருமூச்சு வாங்குதல். மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குதல் என்னும் பொருளது. வடக்கு உயரத் தாழ்ந்த தெற்கு தக்கணம் எனப்படுவதறிக. தக்கை கனமற்ற பழுப்பு என்பது தக்கை என வழங்கும். காது குத்தித் தக்கை வைப்பது முன்னை வழக்கம். புட்டிகளின் மூடி தக்கையாகும். இனி விருதுநகர் வட்டாரத்தில் எழுத்தை அழிக்கும் தேய்வையை (இரப்பரை)த் தக்கை எனல் அறியப் பெறுகின்றது. தேய்வை = தேய்ப்பான், அழிப்பான். தக்கோலம் தக்கோலம்:1 ஐவகை நறுமணப் பொருள்களுள் ஒன்று. அதனைக் காட்டு வெற்றிலை என்பர். சிவந்த வாயை மேலும் சிவக்கச் செய்வதும் நறுமணம் ஊட்டுவதுமாம் அது. மற்றை நறுமணப் பொருள்கள்: இலவங்கம், ஏலம், கருப்பூரம், சாதிக்காய் என்பன. தக்கோலம் = காட்டு வெற்றிலை (வெ.வி.பே.). தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடி - நாலடி. 43 தக்கோலம்:2 ஓரூர். அரக்கோணம் சார்ந்ததோர் ஊர். மலையகத்திலும் இவ்வூர்ப் பெயரிய ஊர் உண்டு. அதற்குத் தலைத் தக்கோலம் என்பது பெயர். கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் இருந்ததாகத் தாலமி சுட்டுகிறார். அந்நகர் பண்டைத் தமிழர்களால் ஆக்கப்பட்டது என்பர். ஆதலால் அதற்கு முன்னது தமிழகத் தக்கோலம் என்பர். பழங் கற்காலக் கருவிகள் இப் பகுதியில் கிடைத்துள்ளன (வாழ்வியல் களஞ். 9:718, 719). தங்க இழை தங்கத்தை உருக்கி நூலிழைபோல் ஆக்கிச் செய்யப்படும் முறையால் இழை நூலையும் அணிகலத்தையும், அணிகலம் அணிந்தவரையும் குறித்தது, பொதுவழக்கு. இந்திய நாட்டின் தங்க இழை எனத் தேர்வு செய்யப்பட்டது சணல்நார் ஆகும். சணல்நார்ப்பயன் கருதிய பெயரீடு இஃதாம்; அழகுப் பொருள் ஆக்கத்திற்கும் பயன்பொருள் ஆக்கத்திற்கும் பயன்படுதல் நோக்கிய பெயரீடு இது. கற்றாழை நார் ஒன்றும் குறைந்ததில்லை. அதனை முன்வைத்திருந்தால் சணலை வென்றிருக்கும். புளிச்சை நாரும் அப்படியே! ஆனால் சணல்போல் வடநாட்டு விளைபொருள்களாக இல்லாமல் தமிழகப் பொருள்கள் ஆயினவே இவை! எப்படி முதன்மையுறும்? தங்கச் சிந்து தங்கமே என்னும் விளியுடன் வரும் சிந்து தங்கச் சிந்து எனப்பெறும். முன்னடி நான்கு சீர்களையுடையதாகவும் இறுதியடி இருசீர்களை யுடையதாகவும் எதுகைத் தொடையுடன் அமைந்து, தங்கமே என்னும் தனிச் சொல்லுடனும் எடுப்புடனும் முடியும். தங்கச் சிந்து இரண்டடி முதல் பல அடிகளாகவும் வரும். தங்கரித்தல் தங்கியிருத்தல் என்பது தங்கரித்தல் எனத் திருமங்கலம் மதுரை வட்டாரங்களில் வழங்குகின்றது. நெல்லைப் பகுதியிலும் கேட்கலாம். தங்குதல் பொருளது இது. அவன் ஓரிடத்தில் தங்கரிக்க மாட்டான் என்பர். தங்கரிக்க முடியாது என்பது காத்தல் என்னும் பொருளில் வழங்கலும் உண்டு. தங்கரித்தல் = தடுத்து நிறுத்துதல். தங்கல் தங்குமிடம் தங்கல் ஆகும். நாம் வாழும் ஊரில் இருந்து வேறோர் ஊர்க்குச் சென்று குறித்த கால அளவு தங்கினால் அவ்விடம் தங்கல் ஆகும் (Reside). தங்கல் என்னும் ஊர்ப்பெயர்கள் உண்டு. * தண்கால் காண்க. தங்கள் தன் > தம் > தங்கள். படர்க்கைப் பலர்பாற் பெயர். அன்றியும் முன்னிலையாரையும் படர்க்கைச் சிறப்புப் பெயராக வழங்கும் வழக்காகவும் உள்ளது. எங்கள் உங்கள் தங்கள் என்பவை தன்மை முன்னிலை படர்க்கைகள். தங்கள் உதவி காலத்தால் வாய்த்ததால் கடன் தொல்லையில் இருந்து மீண்டேன்; கவலையும் போனது என்பது முன்னிலைச் சிறப்புப் பெயர் படர்க்கைச் சிறப்புப் பெயராயதாம். இனி முதல் நீண்டு தாங்கள் என்பதுமாம். நாங்கள், நீங்கள், தாங்கள் என மூவிடங்களுக்குமாம். தங்காலம் காலம் என்பதே மழைக்காலத்தைக் குறித்தல் வழக்கு. காலப்பயிர், கோடைப்பயிர் என்பது உழவர் வழக்கு. காலம், தற்காலம் எனவும் வழங்கும். தன் என்பது மழையைக் குறிப்பது பழவழக்கு. தற்பாடிய தளியுணவிற் புள் என்பது வானம்பாடி பற்றிய பட்டினப்பாலை அடி (4). தற் காலம் > தன்காலம் > தங்காலம் எனப்படும். திருச்செந்தூர், நெல்லை வட்டாரங்களில் தங்காலம் என்பது மழைக்காலம் குறித்து வழங்குகின்றது. தங்கு தடை தங்கு = தங்குகிற அல்லது நிற்கின்ற நிலை. தடை = தடுக்கப்பட்ட நிலை. தங்கு தடை இல்லாமல் வரலாம் என்றும், தங்கு தடையில்லாமல் பேசு என்றும் கூறக் கேட்கலாம். தானே ஒரு காரணத்தால் தடைப்பட்ட நிலையோ, பிறரால் தடுக்கப்பட்டு நிறுத்தும் நிலையோ இல்லாமல் வரலாம் பேசலாம் என்பதாம். தங்குதல் தன்வினையும், தடை பிறர்வினையுமாகக் கருதுக. தங்கை அங்கை என்னும் இளையவள் பெயர். தம் என்னும் உறவுரிமை ஒட்டுடன் தம் + அங்கை = தமங்கை > தங்கை ஆயது. தம் + அக்கை = தமக்கை ஆவது போல. தங்காய், தங்கையே என்பன விளிகள். தசும்பு நீர்க் குடத்தைத் தலையிலோ இடுப்பிலோ கொண்டு செல்லும் போது நீர் அலம்பும்! அலம்புதல் அசைதல். அது தளம்புதல், தளும்புதல் எனவும் வழங்கும். நீர் தளும்பல் போலவே மது (கள்ளு)க் குடம் கொண்டு போகும் போதும் தளும்பும். அதனைத் தசும்பு துளங்கு இருக்கை என்னும் பதிற்றுப்பத்து (42). அப் பெயராலேயே அப்பாட்டு வழங்குகின்றது. வண்டியில் கொண்டு செல்லும் மதுக்குடநீர் அசைவு பற்றியதும். அதன் அடிமணையாம் இருக்கை பற்றியதும் அத்தொடர். தசை தசை:1 தச்சு > தச்சை > தசை. ஒன்றோடு ஒன்று செறிந்து சேர்ந்து கட்டுற்று நிற்பது. தசை நார் என்றும் ஊன் என்றும் கொழுப்பு என்றும் கூறப்படுவது. யாக்கை என்னும் கட்டமைவுக்கு மூலக்கட்டமைப்பாய் உடல் தோற்றமாய் வலுவாய் வளமாய் அமைவது தசையாம். அதன் அளவு குன்றலும் கூடலும் உடலுக்கு நோயும் துயருமாம். மான்தசை சொரிந்த வட்டி- புறம். 33 தசை:2 செழுமை, செல்வம். தசையாக இருந்த போது கொடையாளன்தான்; இப்போது வெறுங்கையாய் விட்டது. என்ன செய்வான்? என்பது ம.வ. தசை கெட்டவன் = வலிமையும், வளமையும் இல்லாதவன். பசை கெட்டவன் என்பதும் இது. தச்சக்காணி தச்சர்களுக்குரிய காணியாட்சி நிலம்; தச்சர் தம் தொழிலுரிமைக்காக இறையிலி நிலமாக அரசால் தரப்பட்டது. இவ்வூர்த் தச்சக்காணி செம்பாதியுடைய தச்சன் வடுகனாதன் க.க.சொ.அ. தச்சு தைத்து > தத்து > தச்சு. ஒன்றோடு ஒன்று இணைத்து வேலை செய்வது தச்சு ஆகும். தைத்தல் என்பதும் அதுவே. தச்சு வேலை, கல்தச்சு, மரத்தச்சு என்பவை. தச்சுச் செய்தல் என்பது மனைகோலக் கால்கோள் செய்தலாகும். இப்பொழுது அப்பொருள் அறிவாராமல் பூமிபூசை ஆக்கிவிட்டனர். நிலத்தை அளந்து கயிறிட்டு முளைக்கால் ஊன்றி மஞ்சள் நீரிட்டு வழிபடுதலும் தச்சுப் பார்ப்பவர்க்குச் சிறப்புச் செய்தலும் அது. தச்சு வேலை செய்வார் தச்சர். வைகல் எண்தேர் செய்யும் தச்சன் - புறம். 87 தஞ்சம் தஞ்சமாவது எளிமை; வேண்டுவவெல்லாம் இயல்பாகவும் எளிதாகவும் கிடைப்பது தஞ்சமாகும். தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே - தொல். 751 எண்மையாவது எளிமை. தஞ்சம் நீ இவ்வுலகம் தாங்குவாய் - கம். அயோத். 945 தஞ்சு என்பதும் அது. தஞ்செனத் தன்மயமாக்கும் தன்மை - கம். ஆரண். 492 தஞ்சி தஞ்சம் என்பது அடைக்கலம் என்னும் பொருளது. பாதுகாப்பாக வைத்திருத்தல் காத்தல் என்னும் பொருளில் வழங்கும் தஞ்சம் என்பது தஞ்சி என அகத்தீசுவரம் வட்டார வழக்கில் உள்ளது. தஞ்சி என்பது பை என்னும் பொருளது. பொருட் பாதுகாப்பாகிய பையைத் தஞ்சி என்பது பொருள் பொதிந்த வழக்காகும். தடச்சட்டி தேர் அகலமானதாயின் தடந்தேர் எனப்படும். தட என்பது அகன்ற பெரிய உயர்ந்த என்னும் பொருள் தரும் உரிச்சொல் தடந்தாள் நாரை என்பது குறுந்தொகை (349). அகன்ற சட்டியாகிய அகல், ஒட்டன்சத்திர வட்டாரத்தில் தடச் சட்டி என வழங்கப் பெறுவது இலக்கிய வழக்கும் மக்கள் வழக்கும் ஒத்தியலும் சான்றாம். தடம் தட என்பதோர் உரிச்சொல். பெருமைப் பொருள் தருவது. பலர் நடந்த வழி தடம் எனப்படும். தடவுநிலைப் பலவு (புறம். 140). கமலைத் தடம் என்பது ஏற்றக் கிணற்றில் மாடு முன்னும் பின்னும் சென்று வரும்வழி. தடம் பெரிய நீர்நிலை. தடாகம் என்பதும் அது. தடம் மாறல் தடம் மாறல் = ஒழுங்கற்ற வழியில் நடத்தல். தடம் என்பது செல்வதற்கென்று உரிய நேர்வழி அல்லது திட்டப்படுத்திய வழி. அத் தடத்தை மாறி வேறு தடத்தில் போவது என்பது முறைகேடு, ஒழுங்கின்மை என்னும் பொருள் தருவதாம். ஓட்டப் பந்தயத்தில், கோடு போடுவதும் அவரவர் கோட்டில் ஓட வேண்டும் என்பதும் ஒழுங்குமுறை. சிலர் புறப்படும் இடம் சரியாக இருக்கும். ஓடும் போது தடம் மாறி விடுவர். இறுதியில் உரிய தடத்திற்குப் போய் வெற்றி பெற்று விடுவர். இது தடமாறலை விளக்கும். தட்டுக் கெடுதல், தட்டழிதல் என்பனவும் இப்பொருளதே. தடவல் தடவல் = இல்லாமை, தடவை. பொருள் நிரம்ப இருந்தால் அள்ளிக் கொள்ளலாம்; குறைவாக இருந்தால் எடுத்துக் கொள்ளலாம்; தேடிப் பிடித்து எடுக்கும் அளவில் இருந்தால் தடவித்தான் எடுக்க வேண்டி வரும். அவ்வாறு தடவி எடுக்கும் அளவு சுருங்கிப் போவதே தடவல் எனப்படுவதாம். இப்பொழுது தடவலாக இருக்கிறது; பிறகு பார்க்கலாம் என்பதில் இல்லாமைக் குறிப்புண்மை அறிக. சோறு தடவல், கறி தடவல் என்பதும் இது. இனித் தடவை என்பதும் தடவல் என வழங்கும். மூன்று தடவல் கேட்டான் என்றால் மூன்று முறை கேட்டான் என்பதாம். தடவுதல் நீவுதல் தடவுதல்= ஒன்றில் ஒன்று படுமாறு தழுவிப் பரப்புதல். நீவுதல்= தடவியதை அழுந்தத் தேய்த்து விடுதல். தடவுதல் முற்படு செயல்; நீவுதல் பிற்படு செயல். ஒரு களிம்பைக் காலிலோ கையிலோ தொட்டு வைத்துப் பரவச் செய்தல் தடவுதலாம். அதனை ஏற்ற வண்ணம் மேலும் கீழும் பக்கங்களிலும் தசை நிலைக்கு ஏற்றவாறு அழுத்தித் தேய்த்து உருவுதல் நீவுதலாம். தடவித் தடவி நீவுதலும், நீவி நீவித் தடவுதலும் வழக்காறு. ஒற்றடம் வைத்து நீவுதலும் உண்டு. அங்குத் தடவுதல் இல்லையாம். கால் வலிக்கிறது இக்களிம்பைக் கொஞ்சம் தடவி நீவுங்கள் என்பது நடைமுறை. பாறுமயிர்க் குடுமிக்கு எண்ணெய் நீவுதலைச் சுட்டும் புறநானூறு (279). தடறு தடுத்து நிறுத்துவது (அ) தடையிட்டு நிறுத்துவது. தடறு = நீர்நிலையின் கரை. நாரை வாழ் தடறு கம். கிட். 938 தடா தடா:1 தடா என்பது தடவு ஆகும். தடவும் கயவும் நளியும் பெருமை என்பது தொல்காப்பியம் (803). ஒரு பெருவகை மரம் இது. பெரிய மரம் ஆதலால் தடா எனப்பட்டது. நீண்டு பெரிதாக வளர்வது இம்மரம். தடவின் ஓங்கு சினை என்கிறது குறுந்தொகை (160). சினை = கிளை. தடா:2 தடா = பெரிய பானை. தட > தடா. தட = அகன்ற பெரிய. தடந்தோள், தடந்தேர். தடா = பெரும்பானை; மிடாப்பானை என்பதும் அது. தடாக எழில் (தடாக சிங்காரம்): தலைவன் உலாவரல், சோலையிலும் மலர்ப்பொய் கையிலும் உலாவுதல், மின்போலும் கன்னி யொருத்தியைக் காணல், இருவரும் மையலுறல், மகிழ்தல் ஆகியவற்றை யெல்லாம் பாடல் தடாக சிங்காரம் எனப்படும் தடாக எழிலாம். மன்பவனி சோலை மலர்மலி வாவிவர மின்னொருத்தி மின்போல் வியனெய்தக் - கன்னிக்கு இறைமோகத் தாற்சோலை ஏற்றவெலாம் பாடல் அறியுந் தடாகசிங்கா ரம் - பிர. திரட். 12 தடாகம் தடாஅகம் > தடாகம்; அகம் = இடம். பெரிய நீர் நிலை தடாகம் ஆகும். தாமரைத் தடாகம் என்பது தாமரைக் குளமாம். ஊர்ப் பெயரும் அது. தடாதகை பிறரால் வெல்ல இயலாப் பெருங்குணமும் பெருந்திறமும் பெருவீறும் உடையவள் தடாதகையாம். மலையான் மகளாகக் கூறும் தொன்மம். மலையான் மகள் என்பது தேவா. திருநா. அவளையும் ஒரு வகையால் வென்றான் இறைவன்; மணமும் கொண்டான்; என்பது திருவிளையாடல். தடாரி தடம் > தடா > தடாரி. பெரியதாம் தோற்பறை தடாரியாம். பேரிகை படகம், தாவில் தடாரி. சல்லரி பம்பை தடாரி தக்கை பல்வகைப் பறையின் பெயர்ப்பால வாகும் - திவா. தடி தடி என்பது தடித்தது. வெட்டுதல், தசை முதலிய பல பொருள்தரும் இருவகை வழக்குமுடைய சொல். அப் பொதுப் பொருள் அன்றி, தடி என்பது ஏர்க்கால் என்னும் பொருளில் சிங்கம் புணரி வட்டார வழக்காக உள்ளது. ஏர்த்தடி என்பது முகவை வழக்கு. தடிநிலம் அகன்ற நிலத்தைத் தடியால் அளவிட்டுப் பிரித்த, துண்டு நிலம். அந்நில அடையாளக் கற்குறி ள. கீழ்புலச் செய்தடி ள நிலன் ஏற்றித் தடி ஒன்பது தெ.க.தொ. 14:44 தடிவிளையாட்டு சிலம்பு விளையாட்டு பழமையானது. அது சிலம்பாட்டம், கம்பாட்டம் எனவும் வழங்கும். பெட்டவாய்த்தலை வட்டாரத்தில் சிலம்பாட்டம் தடிவிளையாட்டு எனப்படுகிறது. தடிக்கம்பு, ஊன்றுதடி என்பன கம்பு என்னும் பொருளில் வருதல் அறியலாம். தடி தூக்கியவன் எல்லாம் தண்டற்காரன் என்பது கொடுங்கோல் குறித்த பழமொழி. தடுமாற்றம் தடுமாற்றம்:1 தடுத்து உரைத்தல். மாற்றம் = மறுத்து மொழிதல். தடுத்தும் மறுத்தும் மொழிதலாம். மறுமாற்றம் என்பதும் இது. தடுமாற்றம்:2 சொல் தடையாதல். வழக்குரைஞர் கேட்ட வினாவுக்குச் சாட்சி தடுமாறிப் போனான். தடுமாற்றம்:3 கால் தளர்வால் நிலைமாறி விழுதல். முதுமை, விழிப்பின்மை ஆயவற்றால் உண்டாவது. முதுமைத் தடுமாற்றம் தள்ளாடுதல் எனவும் வழங்கும். இந்தத் தள்ளாடும் வயதிலும் இப்படி அலைய வேண்டுமா? என்பது ம.வ. தடுமாற்றம்:4 கலக்கம். வீழ்வார்கண் தோன்றும் தடுமாற்றம் ஞாலத்துள் வாழ்வார்கட் கெல்லாம் வரும் - கலித். 145 தடைச்சட்டி உலைபொங்கி வழியாமல் மூடிக்கு ஊடே வைக்கும் நீர்ச்சட்டியைத் தடைச்சட்டி என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும். தடுத்து நிறுத்தும் சட்டி தடைச் சட்டியாம். பொதுமக்கள் பார்வையில் விளங்கும் பட்டறிவுச் செயல் அறிவியல் கூறு அமைந்தது என்பதை விளக்கும் ஆட்சிகளுள் ஈதொன்று. தடைவிடை தடை= தடுத்துக் கேட்கும் வினா. விடை= தடுத்துக் கேட்கும் வினாவிற்குத் தரும் மறுமொழி. மேனிலைத் தேர்வுகளிலும், வாதாட்டு அரங்குகளிலும் தடைவிடை ஆட்சியுண்டு. தடைவிடைகளால் நிறுவுக என்பது வினாவின் அமைதியாம். இக்கடாவுக்கு விடை என்னை? என்பதில் வரும் கடா என்பதன் பொருள் வினா என்பதாம். இவ்வினா பொதுவாக வினவப்படுவதாம். தடை அத்தகையதன்று. எழுப்பப்பட்ட கருத்தைத் தடுத்து அல்லது மறுத்து வினாவுவதாம். தடை என்பது தடுக்கும் இயல்பினவற்றை யெல்லாம் தழுவிப் பின்னே பொருளால் விரிந்தது. தட்டல் தடு > தட்டு > தட்டல். ஒன்றை ஒன்று தடுத்தலும், முட்டலும், ஒலியெழுப்பலும் தட்டல் என்பதாம். காலும் காலும் நடையில் தட்டல், முட்டி தட்டல், கையும் கையும் தட்டல், பாராட்டல். ஒருவர் நடக்கும் போது கல்தட்டல் என்பவை எல்லாம் வழக்கில் உள்ளவை. கொட்டுத் தட்டல் என்பது பறைமுழக்கல். ஓடும் நீரைத் தடுத்து அணைகட்டி நிறுத்தல் தட்டல் என்பது பழநாள் வழக்கு. தட்டோர் அம்ம இவண் தட்டோரே தள்ளா தோரிவண் தள்ளா தோரே - புறம். 18 தட்டோர் = நீரைத் தடுத்து நிறுத்தினோர் தம் புகழையும் போகாமல் நிறுத்தினோர். நீரைத் தடுத்து நிறுத்தாதோர் தம் புகழையும் நிலை பெறச் செய்யாதோர். தட்டோர் x தள்ளாதோர். தட்டழி (கொட்டி) ஒருமுகத் தோற்பறை; தம்பட்டம். தமுக்கு என்பது மக்கள் வழக்கு. ஊர் அவையம் கூடுவதற்காக அறையப் பெறும் பறை. கார்த்திகை நான்று தட்டழி கொட்டி பெருங்குறி சாற்றி மண்டபத்தே கூட்டி (க.க.சொ.அ.). தட்டி அழைப்பதால் தட்டழை எனப்பட்டுப் பின்னர்த் தட்டழியாகி இருக்கலாம். தட்டி தட்டி என்பது தடுப்பு என்னும் பொருளில் வழங்குவது பொதுவழக்கு. தட்டி பின்னல், தட்டி யடித்தல் என்பவை வழங்கு சொற்கள். தென்னங்கீற்றால் முடைபவை தட்டி என்றும் தடுக்கு என்றும் வழங்கும். இனித் தட்டி என்பதும் தட்டட்டி என்பதும் மாடியைக் குறித்தல் முகவை, மதுரை வழக்குகள் ஆகும். தடுக்கு, தடுப்பு, தடை, தட்டு என்பன வெல்லாம் ஒருவழிச் சொற்கள். தட்டிக் கழித்தல் தட்டிக் கழித்தல் = சொல்லியதைக் கேளாமல் ஒதுங்குதல் (மழுப்புதல்). ஒன்றைச் சொன்னால் அதற்குத் தக்கவாறான ஒரு மறுப்பை அல்லது காரணத்தைச் சொல்லிச் சொன்னதைச் செய்யாமல் ஒதுங்குபவரைக் கண்டு என்ன தட்டிக் கழிக்கிறாயா? என்பது வழக்கு. தட்டிக் கழிப்பதில் பெரிய ஆள்; எதைச் சொல்லுங்களேன், அதற்கும் ஒன்று அவன் வைத்திருப்பான் என்பதும் கேட்பதே. இங்கே தட்டுதல், கழித்தல் என்னும் சொற்களுக்கு நேர்பொருள் இல்லை. இரண்டும் சேரும் பொழுது மழுப்புதல் பொருள் தருதல் கண்டு கொள்க. தட்டிக் கொடுத்தல் தட்டிக் கொடுத்தல் = பாராட்டல். ஒரு செயலைச் சிறப்பாகச் செய்து முடித்தாலும், ஒரு போட்டியில் வென்றாலும், பாராட்டத் தக்க பண்புடன் நடந்து கொண்டாலும் அவ் வேளையில் தட்டிக் கொடுத்தல், தழுவிக் கொள்ளல் ஆகியவை நிகழ்த்துவர். ஆதலால் தட்டிக் கொடுத்தல் என்பதற்குப் பாராட்டுதல் என்னும் பொருள் உண்டாயிற்றாம். தட்டிக் கொட்டி தட்டுதல் = மண் கலங்களைக் கையால் தட்டிப் பார்த்தல். கொட்டுதல் = தட்டிப் பார்த்த பின்னர், விரல் மடித்துக் கொட்டிப் பார்த்தல். தட்டிக் கொட்டிப் பாராமல் மண்கலங்களை வாங்குவதில்லை. அவ் வழக்கம் வெண்கலக் கலங்களுக்கும் வளர்ந்தது. பின்னர் ஒருவரை ஏதாவது கேட்டால், என்னைத் தட்டிக் கொட்டிப் பார்க்கிறாயா? என்னும் அளவுக்குச் சென்றுள்ளது. தட்டுதல், ஓட்டை உடைவு கீறலைக் காண உதவும். கொட்டுதல், வேக்காட்டை அறிய உதவும். தட்டிக் கொட்டுதல் ஆய்வு நோக்கினது. ஆதலால், ஆய்வுப் பொருள் தட்டிக் கொட்டுதலுக்கு வந்தது. தட்டி முட்டி தட்டுதல் = இடறுதல். முட்டுதல் = தலையில் படுதல் தக்கி முக்கி என்னும் இணைச்சொல் போல்வது இது. தட்டுதல் பெரும்பாலும் காலில் தட்டுதலையும் அல்லது கால் தட்டுதலையும், முட்டுதல் பெரும்பாலும் தலையில் முட்டுதலையும் அல்லது தலைமுட்டுதலையும் குறிக்கும். தட்டி விழுதல் என்னும் வழக்கையும் முட்டு முட்டு என்று குழந்தைகளுக்கு முட்டுக்காட்டுதலையும் கருதுக. தட்டுதல், தடுக்குதலாம். தட்டு தட்டு என்பது ஓர் ஒலிக்குறிப்பு; ஒன்றனோடு ஒன்று மோதுவதால் ஆவது. அவ்வொலி தட்டுத்தட்டு; தடதட எனலாயது. ஒன்றன் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்துதல் தட்டு ஆகும். ஓடும் மாட்டின் கொம்பைப் தட்டாதே என்பது பழமொழி. தட்டுதல் இயக்கத்தைத் தடுப்பதாகின்றது. கதவு மூடி இருப்பதைத் தட்டுகிறோம் அவர்கள் செய்வதை நிறுத்தி நம்மைப் பார்க்கச் செய்கிறது அது. காலில் கல்தட்டுதல், கட்டிய உடையே தடுத்தல் உண்டு. உறங்குவாரை எழுப்புதல் தட்டி எழுப்புதல், உறக்கத்தைத் தடுத்து எழுப்புவது அது. ஓடும் நீரைத் தடுத்துப் பயன்படுத்துவது வாழ்நாளைப் போகாமல் நிலைநிறுத்துவது என்பது புறப்பாடல் (18). தட்டோர் அம்ம இவட்டட் டோரே தள்ளா தோர்இவண் தள்ளா தோரே தள்ளாதோர் = தடாதோர். தட்டி ஒரு செய்பொருள். மறைப்பு அது; பிறர் பார்வையை மறைக்கத் தட்டி கட்டுவது வழக்கு. தட்டிச் செய்யும் பொருள் தட்டம். தட்டியமைத்த வடிவம் தட்டை; தட்டுதல் வழியாக ஒலிப்பது தட்டைப் பறை; கல் ஒன்றோடு ஒன்று தட்டாமல், கை ஒரு கல்லை எடுக்கும் போது மற்றொரு கல்லை அலுக்காமல் ஆடும் விளையாட்டு தட்டாமாலை; தட்டாமல் தொடரும் கல்லொழுங்கு. தட்டாம்பூச்சியின் உடலைப் பார்த்தால் தட்டுத் தட்டாக நெடுவாக்கில் தலைமுதல் வால்வரை இருக்கக் காணலாம். இப்பூச்சி மேலேறிக் கீழே வருவது போல் கல்லை எறிந்து பிடித்து விளையாடும் விளையாட்டு தட்டாங்கல் விளையாட்டு எனப்படுகிறது. தடுப்பது தடை; காலைத் தடுக்கும் வாழைநார் தடை எனப்படும். புள்குறி, காண்பார் சொகினத் தடை (சகுனத்தடை) என்பர். தட்டை வடிவில் அமைந்த பாறை தட்டைப் பாறை; பயறு வகையுள் உருண்டு திரளாப் பயறு தட்டைப்பயறு எனப்படும். தட்டுத் தட்டாக அமைந்த சோளம், கம்பு, கரும்பு, நாணல் ஆகியவற்றின் தாள் தட்டை எனப்படும். சோளத்தட்டை, கம்மந்தட்டை, கரும்புத்தட்டை, நாணல் தட்டை. தடுத்து நிறுத்தத் தடைபடாமல் ஓட அமைந்த ஓட்டம் தட்டோட்டம்; விளையாட்டு கிளித்தட்டு. தட்டிச் செய்யப்பட்ட வட்ட வடிவப் பொருள் தட்டம் (தாம்பாளம்). தட்டித் தொழில் செய்யும் கம்மகாரருள் ஒரு பிரிவர் தட்டார். கட்டை வண்டியில் பாரம் போடுவதற்குத் தட்டி கட்டுதல் வழக்கம். போடப்பட்ட பொருள்கள் வெளியே போகாமல் தடுப்பது அது. மாட்டுக்கு வைக்கோல் தாள் முதலியவை போட்டுத் தின்பதற்கு வெளியேறாமல் அவற்றைத் தடுக்கத் தட்டி அமைப்பர். தட்டுத் தட்டாக வரிசையுற அமைந்தமையால் தேன்கூடு தட்டு எனப்பட்டது. தென்னங் கீற்றைத் தடுத்துத் தடுத்துப் பின்னுதல் தட்டு ஆகும். அதனை மறைப்பாகக் கட்டுதல் தட்டி எனப்படுகிறது. மறைவு, மறிசல் என்பனவும் அது. கால்படம் வரை தொங்கும் வேட்டியைத் தடுத்து மேலே எடுத்துக் கட்டுதல் தட்டுடையாகும்; தற்றுடை என்பதும் அது. தார்ப்பாய்ச்சை எனவும் சொல்லப்படும். தட்டுதல் வறுமைப் பொருள்தரும். தட்டுப்பாடு என்பதும் அது. உணவுத் தட்டுப்பாடு, மின் தட்டுப்பாடு, தண்ணீர்த் தட்டுப்பாடு என எண்ணற்ற தட்டுப்பாடுகள் உண்டு. தட்டிக் கொடுத்தல் பாராட்டுதலாகும். சில இடங்களில் உனக்கு இரண்டு தட்டுத் தட்டினால்தான் ஒழுங்குக்கு வருவாய் என்பது மக்கள் வழக்கு. கலங்களில் தட்டு, காதணியில் தட்டு, தேன்தட்டு, அட்டளைத் தட்டு, தட்டுப் பலகை எனத் தட்டுகள் மக்கள் வழக்கில் பெருகி அமைந்துள. தட்டு, தட்டம் எனப்படும் இடமும் உண்டு. தட்டு என்பது தட்டை என்னும் பொருளில் பழனி வட்டார வழக்காக உள்ளது. தட்டுத் தடை என்பது இணைச்சொல். தட்டுப்படுதல் தோன்றுதல் பொருளது. கண்ணில் தட்டுப்பட்டாள் என்பது பாவேந்தர் பாடிய அழகின் சிரிப்பு. தட்டுதல் என்பது கிடைத்தல் என்னும் பொருளில் சீர்காழி வட்டார வழக்காக உள்ளது. தட்ட மாட்டேன் எனப் போகிறது என்பது முகவை வழக்கு. அதுவும் கிடைத்தல் பொருளதேயாம். தட்டு தாம்பாளம் தட்டு= திருநீறு, சூடன் வைக்கும் சிறுதட்டு. தாம்பாளம்= தேங்காய், பழம், வெற்றிலை வைக்கும் பெருந்தட்டு. தாம்பாளத்தின் உள்ளே தட்டு அடங்கும் கோயில் வழிபாட்டுக்குத் தாம்பாளம் தட்டு இரண்டும் கொண்டு செல்வது வழக்கம். அகலம் பெரிது சிறிது என்பது மட்டுமல்லாமல் அமைப்பு முறையிலும் இரண்டற்கும் வேறுபாடு உண்டு. இனித் தாம்பாளத்தைப் பெருந்தட்டு என்பதும் உண்டு. தராசுத்தட்டு, இட்டவித் தட்டு, உண்கலத் தட்டு எனப்பிற தட்டுகளும் உள. தட்டுத் தடங்கல் தட்டு = ஒன்றைச் செய்ய முனைவார்க்கு முதற்கண் ஏதேனும் தடையுண்டாகு மானால் அது தட்டு எனப்படும். தடங்கல் = அச் செயலைச் செய்யுங்கால் இடை இடையே ஏற்படும் தடைகள் தடங்கல் எனப்படும். சிலர் எடுத்துக் கொண்ட செயல்கள் தொடக்க முதல் இடையூறு எதுவுமின்றி இனிது முடிவதாய் அமையும். அவர், தட்டுத் தடங்கல் இன்றிச் செய்து முடித்ததாக மகிழ்வர். தடையுண்டானால் தடந்தோள் உண்டு என்பது புரட்சி உரை. தட்டுத் தடுமாறி தட்டுதல் = ஏதாவது ஒன்று இடறுதல். தடுமாறுதல் = இடறுதலால் வீழ்தல். இது, தட்டுத் தடுமாறி எனவும் வழங்கும். தட்டுதல் தடையாதலாம். தடுமாற்றம் என்பது கால் தள்ளாடுதல் மிகுமுதியரோ ஒளியிழந்தவரோ நடத்தற்கும் தட்டித் தடுமாறுதல் கண்கூடு. தள்ளாடுதல் தள்ளமாடுதல் எனவும் வழங்கும். தள்ள மாட்டாமல் இருக்கிறேன் என்பது இறப்பு வரவில்லையே என்னும் ஏக்கத்தில் வருவது. * தக்கிமுக்கி, தட்டி முட்டி என்பவை காண்க. தட்டுத்தட்டுதல் உன்னை ஒருதட்டுத் தட்டினால்தான் ஒழுங்காக வேலை பார்ப்பாய் என்பதில் தட்டுத் தட்டுதல் என்பது அடித்தல் பொருளில் வருகின்றதாம். தட்டிக் கொடுத்தலுக்கு எதிரிடை, தட்டுத் தட்டுதல். தட்டுமாறல் ஓட்டப் பந்தயத்திலும் - வரிசையிட்டுக் களை வெட்டு கதிரறுப்பு நடக்கையிலும் - அவரவர்க்குரிய தட்டில் (வரம்பில்) நின்று இயங்கல் வேண்டும். இல்லையேல் தட்டுமாறல் என்பர். அவரவர் வரம்பில் செயல்பட வேண்டும் என்பது இது. அவ்வாறு செய்யாரைத் தட்டுமாறி என்பர். திருமண உறுதிப்பாட்டு நிகழ்வில், மணமகன் வீட்டாரும் மணமகள் வீட்டாரும் தாம்தாம் கொண்டு வந்திருந்த தட்டுகளை (பழங்கள் மலர்மாலை உடை முதலியவை யுடையவை) தாய்மாமன்மார் எடுத்துத் தட்டுமாற்றி மணமக்கள் பெற்றோர்களிடம் வழங்கி, அவர்கள் தம்பிள்ளைகளுக்கு வழங்கி, உடையை உடுத்துக் கொண்டு அவைக்கு வரச் செய்தலைத் தட்டுமாற்றல் என்பது வழக்கமாகும். மாறலுக்கும் மாற்றலுக்கும் எவ்வளவு வேற்றுமை! எவர்கொல் பண்ணவர்கள் எவர்கொல் மண்ணவர்கள் எதுகொல் பொன்னுல கெனத்தட்டு மாறவும் எனக் குமரகுருபரர் ஒரு தட்டுமாறலைச் சுட்டுகிறார். இவண் தட்டுமாறல் தடுமாறலாம். * தடம் மாறல் காண்க. தட்டு முட்டு தட்டு = உண்ணற்கும் மூடுதற்கும் அமைந்த தட்டம் மூடி போல்வன. முட்டு = அடுக்களை அல்லது சமையற் கட்டில் நெருங்கிக் கிடக்கும் பானை, சட்டி, அண்டா குண்டா முதலிய பொருள்கள். தட்டு முட்டுப் பொருள்கள் என்பது கைக்கும் காலுக்கும் தட்டவும் முட்டவும் இருப்பவை. எனினும், எடுக்க வைத்திருக்கும் பொருள்களாம். தட்டு = தட்டுதல்; முட்டு = முட்டுதல்; வினை. தட்டு = தட்டம் போல்வன; முட்டு = முட்டி; பெயர். பாளை சீவி முட்டி கட்டுதல் வழக்கம். பிச்சை முட்டி என்றொரு வழக்கும் உண்டு. தட்டு வண்டி மேல்மூடு இல்லாமல் முன்னும் இருபக்கங்களிலும் தட்டு வைத்த ஒற்றை மாட்டு வண்டியைத் தட்டுவண்டி என்பது நாகர் கோயில் வட்டார வழக்காகும். அவ் வழக்கம், பின்னர்க் குதிரை இழுக்கும் மூடு வண்டிக்கும் பெயராயிற்று. மேல் தடுப்பும் உடையது மூடு அல்லது கூண்டு வண்டி. தட்டூடி தட்டு + ஊடி = தட்டூடி. தட்டு அமைத்து ஊடுபலகை பரப்பி அமைத்த கட்டிலைத் தட்டூடி என்பது நாகர்கோயில் வட்டார வழக்காகும். வாயாடுவது வாயாடி ஆவது போல, ஊடாடுவது ஊடாடியாயது. பலகைக் கட்டில் ஊடும் பாவும் பலகையாக இருத்தலைக் காண்க. தட்டை தட்டை:1 கோலால் தட்டி யெழுப்பின் ஒலி உண்டாக்கும் தோற்பறை வகையுள் ஒன்று தட்டை. பறவை யோட்டுவதற்குப் பயன்படுத்தும் தோற்பறை தட்டை. தட்டை:2 சோளம், கேழ்வரகு, வரகு, தினை ஆகிய பயிர்களின் தண்டு, தட்டை எனப்படும். ஊடு ஊடு தடுத்த வரை அல்லது கணுக்களை உடையவை என்பதை அறிக. தட்டை:3 மாவைத் தட்டிப் போட்டு வட்டத் தகடாகச் செய்யப்படும் சிறு தீனி தட்டை எனப்படும். * தட்டு காண்க. தட்டை தாள் தட்டை = கரும்பு, சோளம் முதலியவற்றின் அடித்தண்டு. தாள் = நெல், புல் முதலியவற்றின் அடித்தண்டு. தட்டையும் தாளும் புல்லினத்தனவே. எனினும், அவற்றின் அடித்தண்டு தட்டை, தாள் எனப் பகுத்து வழங்கப்படுகின்றன. ஓலை, கீற்று, தோகை என்பன புல்லினத்திற்குரிய பல்வேறு இலைகளே அல்லவோ, அது போல என்க. மாட்டுக்குத் தட்டை தாள் சேர்த்துப் படப்பை போட்டுக் கொள்ளுதல் வேளாண் தொழிற்குரியதாம். தட்டொலி தட்டொலி = கருமார் தட்டார் ஆயோர் பட்டடை அமைத்துத் தொழில் செய்தற்குக் கட்டும் வரி. தட்டாரக் காணி என்பதும் இது. தட்டாரப் பணிசெய் காணி (தெ.க.தொ. 5:515). தணத்தல் தணத்தல் = பிரிதல். பிரிதல் வழியால் மனத்தில் வெதுப்பு - வெப்பு - உண்டாதலால் தணத்தல் எனப்படும். தழல் > தணல் = வெப்பு. மணந்தனை அருளாய் ஆயினும் பைபயத் தணந்தனை யாகி உய்ம்மோ - ஐங். 83 தணல் தண் + அல் = தணல் = தண்மை அற்றது; வெப்பு. தழல் என்பதும் இது. தழல்கொண்டு வாடா தம்பி - அண்ணன் கையை எரித்திடுவோம் - பாரதி. பாஞ். தணிகை தணி + கை = தணிகை. கை = இடம். தணிந்த இடம், தணிகை. இருபாலும் உயர்ந்த மலைகளுக்கு இடையே தணிவாக உள்ள மலை தணிகை; திருத்தணி. தொன்மக் கதை, திருமுருகன் சினம் தணிந்த இடம் என்பது. தண் தணி > தண். வெயிலாலும் நெருப்பாலும் வெதும்பியிருந்த நீர் வெப்பிலாப் போழ்திலும் வெப்பிலா இடத்திலும் தன் வெம்மை தணிதலால் தண்மை ஆயது. தண்கதிர், தண்சுடர் என நிலவும், தண்கால் எனத் தென்றல் காற்றும் குறிக்கப்பட்டன. மனவெப்புத் தணிதல் ஆறுதல் இளகுதல் குளிர்தல் எனப்படலாயிற்று. தண்ணெனல், தண்மை என்பவையும் குளுமைப் பொருள் தந்தன. தண்கதிர் மண்டிலம் - அகம். 277 தண்தமிழ் என்பது பயில்வார்க்கு உண்டாகும் உள்ளக் குளிர்மை பற்றியது (பரி. திர. 8). தண்ணீர் x வெந்நீர். தண்கால் தண்கால் என்பது பழமையானதோர் ஊர். தண்கால் = தண்ணிய தென்றல் காற்று. தண்கால் = நீர்வளமிக்க கால்வாய்; கால்வாய் வாய்ந்த ஊர். பழந்தண்கால், திருத்தங்கல் என வழங்குகின்றது. அப் பெயர்க்குத் தகப் புனைவும் உண்டு. திருத்தங்கிய இடம் என்பார். இப் பெயர்மாற்றம் அப் பழைய வரலாற்றின் மறைப்பாகி ஊரவர்க்கும் உண்மை புரியாமல் ஆக்கிவிட்டது. தண்கால் ஊரில் வாழ்ந்த சங்கப் புலவர், தண்கால்பூண் கொல்லனார் (புறம். 326). பூண்கொல்லர் = தட்டார். தண்டக மாலை (புணர்ச்சி மாலை) வெண்பாவினால் முந்நூறு செய்யுட் கூறுவது தண்டக மாலையாகும். வெண்புணர்ச்சி மாலை என்பதும் இது. பாவகை, வெண்பா; பொருள்வகை, புணர்ச்சி; ஆகலின் வெண்புணர்ச்சி மாலை என்றார். வெண்பா வான்முந் நூறு விரிப்பது தண்டக மாலையாம் சாற்றுங் காலே - முத்துவீ. 1068 தண்டத்துக்கு அழல் வேண்டும் செலவுக்கெனத் தேடிவைத்த பொருளை வேண்டாச் செலவுக்குக் கட்டாயமாகச் செலவிட நேரும் போது அதனைத் தண்டத்துக்கு அழுததாகக் கூறுவது ம.வ. வேண்டும் என்றா செலவழித்தேன்; தண்டத்துக்கு அழுதேன் என்பர். தண்டயம் சிவிகை என்னும் ஊர்தி, பல்லக்கு, தண்டியல் என வழக்கில் உள்ளது. சப்பரம் என்பது கோயில் உலா ஊர்தி. இவ் வூர்தி களுக்குப் பயன்படுத்தப்படும் கம்பு வளைய வேண்டுமாறெல்லாம் வளைந்து தருவதும் வளை என்னும் பெயருடையது மாகிய மூங்கில் ஆகும். தண்டியலுக்குப் பயன்படுவதாம் மூங்கிலைத் தண்டயம் என்பது நாகர்கோயில் வட்டார வழக்காகும். தண்டலை தண் + தலை = தண்டலை. தலை = இடம்; இது காக்கள் மல்கிய இடம். தண்டலை; தண்டலைப் புத்தூர்; குளிர் தண்டலை - ஊர்ப்பெயர்கள். தண்டலையார் சதகம் - சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தண்டவாணிகம் தண்டத்திற்குரிய பொருளை விற்கும் வணிகம். விற்றற்குக் கூடாது எனப்பட்ட பொருளை விற்பது தண்டத்திற்குரிய வணிகமாகும் (க.க.சொ.அ.). தண்டா தசுக்கா தண்டா = வரி வாங்க அல்லது வரி தண்ட வந்தவனா? தசுக்கா = கொழுத்துப் போய் வந்தவனா? நான் அவனிடம் நடந்தது என்ன என்று கேட்டேன். உடனே அவன் தண்டா தசுக்கா என்று குதித்து விட்டான் என்பது வழக்கு. அரசு வரி தண்ட வந்தவன் அடாவடி ஆணை செலுத்து வதையும், தடி தூக்கியவனெல்லாம் தண்டக்காரனா என்பதையும் கருதினால் தண்டா என்பதன் பொருள் விளங்கும். தண்டு என்பது படை; தசுக்கு என்பது கொழுத்த ஊன். தண்டு தண் + து = தண்டு. தண்ணீரில் தோன்றும் கொடி, தண்டு. தாமரைத் தண்டு. அது வளர்ந்த வகை காண்க. தாமரைக்கு மட்டுமோ தண்டு நின்றது, குவளைத் தண்டு, அல்லித் தண்டு என நீர்க் கொடிக்கு வளர்ந்தது. கீரை வகையுள் ஒன்று தண்டங்கீரை அல்லது தண்டுக்கீரை. அதனைக் கீரைத் தண்டு என்பதும் வழக்கே. அது தண்டை மட்டும் குறிப்பதாம். சிறுகீரை, அறுகீரை (அறைக்கீரை) வேளைக் கீரை, அகத்திக் கீரை, முருங்கைக் கீரை என்பவற்றுள் கீரை பொதுப் பெயராயும் முன்சொல் சிறப்புப் பெயராயும் இருத்தல் தெளிவு, அவ்வாறு நோக்கத் தண்டுக் கீரையின் முதற்சொல்லே சிறப்புப் பெயர் என்பது விளங்கும். தண்டு என்பது எது? அதன் வேரற்ற தூரே தண்டென்க. சிறுகீரையும் அறுகீரையும் கொடி வகை; தண்டுடையன அல்ல. அவற்றை விலக்கித் தண்டுக் கீரை தன் தூர்த் தடிப்பைச் சிறப்பாகக் கொண்டதாம். தண்டி தடி அன்றோ! தண்டங்கோரை எனக் கோரையுள் ஒன்றற்கு விரிந்தது. மூங்கில் தண்டு, நாணல் தண்டு, வாழைத் தண்டு எனப் பெருகியது. தண்டு விளக்கு (Tube Light) எனப் புத்தாட்சியும் பெற்றது. மூக்காந்தண்டு, காதுத்தண்டு, முதுகந்தண்டு (முள்ளந்தண்டு) என்று உடல் உறுப்புகளுக்கும் தாவியது. காதில் போடும் தண்டொட்டியொடும் கூட ஒட்டிக் கொண்டது. நிலைத் திணையின் (தாவரத்தின்) அடிப்பகுதியாம் தண்டு, தண்டி என்னும் கனப் பொருளும் தந்தது. தடி என இடைக் குறையாகி, வேப்பந்தடி, தேக்கந்தடி எனவும் வழங்கலாயிற்று. ஊன் தடி எனவும் ஊன்றியது. தடி தடிப்பு என வளர்ந்தது. தோல்தடிப்பு வலுத்து உள்ளத் தடிப்புக்கும் இடந்தந்தது. தடிமன், தடுமன், தடுமம் என மூக்குத் தடிப்பு நோய்ப் பெயரும் ஆயிற்று. தடி, தடியன், தடிச்சி என உவமையால் குறியீட்டுப் பெயரும் ஆயிற்று. தடி, தடிதல் (வெட்டுதல்), அகற்றுதல் என்னும் வினைக்கு மூலமும் ஆயது. தண்டு, தட்டு ஆகித் தட்டையும் ஆயிற்று. தடி இவ்வளவில் நிற்கத் தண்டுக்குச் செல்வோம். தண்டு, தடி அல்லது கோல் என்னும் பொருளில் வளர்ந்தது அன்றோ! தளர்நடை முதியர் தண்டூன்றிச் செல்லுதல் வழக் காயிற்று. தண்டு கால் ஊன்றிச் செல்லும் முதியனை மணிமேகலை உரைக்கும் (14:30). தொடித்தலை விழுத்தண்டினைப் புறப்பாடல் விளக்கும் (243). தொடியாவது வளைவு; வளையலுக்குத் தொடி என்னும் பெயரும் வளையல் தொடுத்தல் என்னும் வழக்கும் உண்மை அறிக. தொடுவை என்னும் கருவி, வைக்கோல் திரட்டுதற்காகக் களப்பணியாளர் கையகத் திருப்பதும் அறிக. வளைந்த தலையை அல்லது உச்சியை உடைய தண்டு (கம்பு) தொடித் தலைத் தண்டாம். அது கால்போல் பயன் தந்து தளர்ச்சி நீக்கும் தகவு நோக்கி விழுத்தண்டு (சிறந்த தண்டு) எனப்பட்டதாம். தொடித்தலை விழுத்தண்டு என்று ஆட்சி செய்த புலவர் பெயரை ஒழிய விட்ட புலவர் உலகம், அவர்தம் சொல்லாட்சி கொண்டே அவர்க்குப் பெயர் சூட்டிப் போற்றி வைத்தமையால் தொடித்தலை விழுத்தண்டினார் என்றொரு புலவரை நாம் அறிய வாய்த்ததாம். தண்டு (கோல்) கொண்டு போருக்குச் செல்வது பண்டை வழக்கு. ஆதலால் தண்டுக்குப் படை என்னும் பொருள் உண்டாயிற்று. படைத்தலைவர் தண்ட நாயகர் எனப்பட்டார். தண்டடித்தல் என்பது படைஞர் பாளையம் இறங்குதலாயிற்று. போரின் மேல் தண்டெடுக்க என்பதும் (382) தண்ட நாயகர் காக்கும் என்பதும் (386) கலிங்கத்துப் பரணி. இனி, வரி வாங்கச் செல்வார் தண்டு கொண்டு சென்றனர். தண்டு கொண்டு வரி வாங்கியதால் வரி தண்டுதல் என வழக்காயிற்று. அதனை வாங்குபவர் தண்டலர் தண்டற்காரர் எனப்பட்டனர். அவர்கள் தலைவர் தண்டல் நாயகர் ஆனார். தடி தூக்கியவன் எல்லாம் தண்டல்காரன் என்னும் பழமொழியும் தண்டல் நாயகர் என்னும் கல்வெட்டு மொழியும், மாவட்ட ஆட்சியாளரைத் தண்டல் நாயகர் என வழங்கும் மொழியாக்கமும் கருதத்தக்கன. வரி தண்டுதற்கு ஆள் வருகிறது; அவரவர் வரியைச் செலுத்துக! என்பதற்கு அடையாளமாக அறையப்பட்ட பறை தண்டறை. அது தண்டோர் தண்டோரா எனப்பட்டது. ‘v‹d j©nlhuh¥ nghL»whŒ? என்பது இன்றும் வழங்கு மொழி. வரி கட்டுதற்கு மறுத்தாலோ, குற்றம் செய்து எதிரிட்டாலோ அவரைத் தண்டால் (கோலால்) மாட்டுவது (அடிப்பது) வழக்கமாக இருந்தது. அதன் வழி வந்ததே தண்டனை! பின்னர்ச் சிறையடைப்பும், பொருட்பறிப்பும் பிற பிறவும் தண்டனைப் பொருளில் வளர்ந்தன. கடுமொழியும் கையிகந்த தண்டமும் என்பது திருக்குறள் (567). தண்டமும் தணிதி பண்டையிற் பெரிதே என்பது புறம் (10). தண்டு எடுத்தவனின் கொடுமைக்கு அஞ்சிக் கொடுத்த கொடுமை தண்டத்துக்கு அழுதல் ஆயிற்று. தடியனுக்குப் போடும் வெட்டிச் சோறு - போடாவிட்டால் எதுவும் செய்வானே அதனால் - தண்டச் சோறு எனப்பட்டது. தடியனுக்கு அஞ்சி வணங்கியதே தண்டனிடுதலாய்த் தெண்டனிடுதலாய் வழங்கி, இறைவழிபாட்டுக்கும் ஏறியது. தடியன் என்பான் தடியுடையவனும் தடித்தவனும் தானே. தடி என்பது ஊன் ஆதல் ஊன் தடி பிறப்பினும் என வரும் புறப்பாட்டால் புலப்படும் (74). தண்டி என்பதோர் பெயர்! தண்டித்தவர் பெயரே தண்டியாயிற்று. அவரே தண்டியடிகள் நாயனார் என்பார். தந்தை சொற்படி தாளறத் தண்டித்தவர் அவர். தாளறத் தண்டித்த தண்டி என்பது சிவரகசியம் (பாயிரம். 7). தண்டு கொண்டவன் தண்டன் எனப்பட்டான். அப்பெயராலே மாந்தர் பலர் இன்றும் உளர். தண்டும் அதனொடு வேலும் கூடிய படைக்கலம் தண்டு, தண்டம் எனவும் பட்டது. தண்டாயுதம் என்பது தென்மொழி வடமொழியாம் இருமொழிப் பிறப்பி! அவற்றின் வழிப்பட்டனவே தண்டாயுதன், தண்டபாணி என்னும் முருகன் பெயர்கள் தண்டுமாரி என்னும் அம்மை பெயரே அதன் பொருள்விளக்கம் புரிவிக்கும். அப்படியே தண்டு விநாயகர் என்பதும். தண்டு படைக்கருவியாக மட்டும் நின்று விடவில்லை. தண்டு வலித்தல் படகுக்கு உண்டன்றோ! தண்டுதானே குயக்கலம் செய்தற்குச் சுழற்றுக்கோல்! தேர் உந்துதற்கு ஆகும் சவளமரம் தண்டு கோல் எனப்பட்டதே. வில் தண்டு, வீணைத் தண்டு, சமன்கோல் (தராசுத்) தண்டு, காவடித் தண்டு என்பவை பல்வேறு பயன்தண்டுகள். ஆணுறுப்பும் தண்டென வழக்கில் நின்றது. இரட்டை (மிதுனம்) என்னும் விண்மீன் தோற்றம் தண்டு போல் இருத்தலால் அது, தண்டு எனப்படும். மூங்கில் தண்டு முகத்தல் அளவுக் கருவியாகவும் ஒருகால் பயன்படுத்தப் பட்டது. ஒரு கணுவுக்கு அடியிலும் அதன்மேற் கணுவுக்கு அடியிலும் அறுத்துத் தூக்கு ஆக்குவதும் பழவழக்கு. அத்தண்டு, கூழும் கஞ்சியும் கொண்டு செல்லப் பயன்படுத்திய வழக்குண்டு. மதுப்பெய் தண்டும் இலக்கிய ஆட்சியில் உண்டு. மூங்கில் தண்டு கொண்டு செய்யப்பட்ட ஊர்தி தண்டிகை யாயது. அது வள்ளுவர் காலத்தில் சிவிகை எனப்பட்டது. தண்டிகைக் கனகராயன் பள்ளு என்பதொரு சிற்றிலக்கியம். தண்டிகை, செல்வச் செருக்கர் ஊர்தியாக இருந்ததும், துறவு மடத்தர் ஊர்தியாக இருந்ததும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் கண்டது. கம்புப் பொருளில் இருந்த தண்டு, கம்பிப் பொருளும் தருவதாய் விரிந்தது. அப்பொழுது கரும்பொன், செம்பொன், வெண்பொன் முதலிய கனிமக் கம்பியும் தண்டாகவும், தண்டின் திரிபாகவும் வழக்கில் ஊன்றியது. விளக்குத் தண்டு பழமையானதே. வள்ளுவர் வாய்மொழியை விளக்குக்கு ஒப்பிட்டுச் சொல்லுகிறது திருவள்ளுவ மாலைப் பாட்டொன்று. அறம், தகளி; பொருள், திரி; இன்பு, நெய்; சொல், தீ; குறட்பா, தண்டு என்கிறது அது. திருகிப் பொன்னெடுந் தண்டில் திரண்டவால் என்னும் கம்பர் தொடரால் பொற்கம்பி தண்டெனப் பட்டதை அறியலாம் (சுந். 1193). கோட்டை வாயில்களின் உட்காப்பாகப் பரிய தடிகளைக் குறுக்கிட வைப்பது பண்டை வழக்கு. துளையிட்ட பரிய தூண்கள் இருபாலும் நிறுத்தி, அதன் துளைக்குள் தடியைச் செருகி வைத்த அந்நடைமுறையே இந்நாள் கதவுகளில் அமைக்கும் அடிதண்டாவுக்கு மூலம். இரும்புப் பட்டைதானே அடிதண்டா! நெடிதாகவும் வலிதாகவும் செய்யப்படுவதும், தொடர்வண்டி ஓடுதற்கு வழியாய் அமைக்கப்படுவதும் ஆகியது தண்டவாளம். தண்ட வாலம் என்னும் பெயரே தண்டவாளம் ஆயிற்றாம். வாலம் - நீளம்; வால் - நெடியது, நெடிய கிழிவு வாலமாகக் கிழிந்ததெனக் கூறப்படும். நீண்டு குறுகிய நிலம், வாலம் எனப்படும். குரங்கு முதலியவற்றின் வாலையும், வாலி என்னும் பெயரையும் கருதுக. குழந்தைகளுக்கு மெல்லிய கம்பி வளையத்தைக் காலில் போடுவதும், சற்றே பெரிய குழந்தை ஆனபின் அதனைக் கழற்றிவிட்டுத் தண்டை போடுவதும் அறிக. பருப்பொருளால் விரிந்த தண்டு, கருத்துப் பொருளாம் நுண்பொருளாயும் விரிந்தது. தண்டின் செயல் அலைத்தலும் அலைக்கழித்தலுமாகலின் தண்டுக்கு அப்பொருள்கள் உளவாயின. பராரை வேவை பருகெனத் தண்டி என்பது பொருநராற்றுப் படை (104). இதில் வரும் தண்டி என்பதற்குப் பல்கால் அலைத்து எனப் பொருள் கூறினார் நச்சினார்க்கினியர். தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ என்னும் மலைபடுகடாத்தின் தண்டிக்கும் அப்பொருளே அவர் கூறினார் (415). தண்டுதலாம் அலைத்தலால் நீங்குதல் உண்டாம். அதனால், யான் தண்டவும் தான் தண்டான் என்னும் புறநானூற்றின் தண்டுதல் நீங்கல் பொருளில் வந்தது (384) தண்டா நோய் என்பது இப் பொருளில் வந்த திருக்குறள் (1171). தண்டுடன் தண்டு மோதுங்கால் அது போர்தானே! ஆதலால் போர்ப் பொருளும், போரிடுவார் பகைவர் ஆதலால் பகைப் பொருளும் உண்டாயின. தண்ட லில்லாது உடன்கூட்டல் என்பது கூர்ம புராணம் (சூத. 33). தாள்நிழல் நீங்கிய தண்டலர் என்பது சேது புராணம் (மங்கல. 8). தண்டாது இரப்பினும் என்று தொல்காப்பியம் கூறியது போல் (பொருள். 99) தண்டாது பெருகுவது தண்டு போலும்! தண்ணடை தண் + நடை = தண்ணடை. நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே என்னும் புறப்பாடலில் (312) வரும் நல்நடை, நன்செய் நிலம் ஆகும். இத் தண்ணடை நீர்வளம் சார்ந்த நிலம் என்பதாம். நீரருகே சேர்ந்த நிலமுளதாய் என்றார் ஔவையார் (தனிப்.). புண்ணொடு வந்தான் புதல்வற்குப் பூங்கழலோய் தண்ணடை நல்கல் தகும் - பு.வெ.மா. 48 தண்ணீர் காட்டுதல் தண்ணீர் காட்டுதல் = தப்பி விடுதல். ஒரு கொள்ளைக் கூட்டம் கட்டுப்பாடான அந்த ஊர்க்குத் தண்ணீர் காட்டியிருக்கிறது, உனக்கு ஒருநாள் தண்ணீர் காட்டாமலா விடுவான்; அப்பொழுது உண்மை புரியும் என்பன போன்ற வழக்குகள் தண்ணீர் காட்டுதல் என்பதற்குத் தப்பி விடுதல் என்னும் பொருள் உள்ளதை விளக்கும். தப்பிவிடுதலும் நயவஞ்சக மாக ஏமாற்றித் தப்பி விடுதலாம். தண்ணீர் தெளித்தல் என்பது தாரை வார்த்தல் என்பது போன்றதே. தாரை வார்த்தல் என்பது கொடைப் பொருள். தண்ணீர் தெளித்தல் என்பது கழித்துக் கட்டல் என்னும் பொருளதாம். உன்னைத் தண்ணீர் தெளித்து விட்டார்கள் என்றால் உன்னைக் கைவிட்டு விட்டார்கள், புறக்கணித்து விட்டார்கள், ஒதுக்கி விட்டார்கள் என்னும் பொருள் தருவதாம். கொடுத்த பொருள், கொடுத்தவர் உரிமையை விட்டு நீங்கிவிடுவதே யன்றோ! அப் பொருளில் வருவது தண்ணீர் தெளித்தலாம். தண்ணீர்க்கால் அங்கணம் என்னும் இருவகை வழக்கும் அமைந்த சொல், தண்ணீர்க்கால் என்றும், தண்ணீர்க்கிடை என்றும் குமரிமாவட்ட மேல்புர வட்டார வழக்காக உள்ளது. ஓடும் நீர் கால்; ஓடாமல் கிடக்கும் நீர் கிடை; இவ் விருவகையிலும் (ஓட்டமும் தேக்கமும்) உள்ளமை கண்கூடு. தண்ணீர்ப்பழம் தற்பூசுணை என்னும் நீர் வளமிக்க காயைச் சென்னை வட்டாரம் தண்ணீர்ப் பழம் என வழங்குகின்றது. தென்தமிழகப் பகுதியில் தண்ணீர்க்காய் எனக் கறியாக்கியுண்ணத் தக்க காய் உண்டு. சுரைக்காய் (குண்டுச் சுரைக்காய்) போன்றது அது. தற்பூசுணை என்பதில் உள்ள தன் என்பது தண்ணீர்ப் பொருளது. தற்காலம் = கார்காலம், மழைக்காலம். தற்பாடிய தளியுணவு (பட். 3). தற்பூ என்பது கொச்சையும் வழுவுமாம். தண்ணுமை தணிந்த ஓசையுடைய தோற்பறை தண்ணுமையாகும். தடாரிக்கு நேர்மாறு ஓசையுடையது. தாழ்குரல் தண்ணுமை - சிலப். 3: 27 குழல்வழி நின்றது யாழே; யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே - சிலப். 3:139-140 தண்ணுமை, தடாரி எனத் தோற்பறைகளை அடுக்கிக் கூறியது நயமான முரண். ததர்தல் ததர்தல் = சிதறுதல். பூம்பராகம் எனப்படும் மகரந்தம் காற்றில் இயற்கையாகச் சிதறிப் பரவுதலால் ததர்தல் ஆகும். வண்டுகளாலும் ததர்தலாகும். சிதர்சிறை வண்டின் செவ்வழி புணர்த்த ததரிதழ் ஞாழல் தாழ்சினை - பெருங். 3:9: 26-27 ததர்தல் சிதர்தலாதல், மிதிதோற் கொல்லன் பொதியுலைச் செந்தீத் ததர்வன போலச் சிதர்வன சிந்தி - பெருங். 1:58: 9-10 ததும்புதல் ததும்புதல்:1 ததைதலால், நிறைதலால் - மிகுதலால் - உண்டாவது ததும்புதல் ஆகும். ததும்புதல் தளும்புதல் எனவும் வழங்கப்படும் (ம.வ.). ஏரியில் நீர் ததும்பி வழிகிறது ம.வ. நெருங்கிப் பலர் இருத்தலும் ததும்புதல் ஆகும். குறும்பல் குறும்பில் ததம்ப வைகி - புறம். 177 ததும்புதல்:2 ஒலித்தல். நீர் மிக்குத் தாவலால் ஒலித்தல் உண்டாம். ஆதலால் ஒலித்தல் பொருளும் உண்டாயது. திருமணி அம்பலத்து இமிழ்முழாத் ததும்ப - பெருங். 1:34:140 ததைதல் தகைதல் > ததைதல் = தடுத்தல், செறிதல். ஒன்றை ஒன்று தடுத்தல், நெருங்குதல், செறிதல். ததைப்பச் செறிந்த நெய்தல் - ஐங். 155 ததையிலை வாழை - ஐங். 460 தத்தம் தம் தம் என்பது தத்தம் ஆகின்றது. கொடுத்தல் என்னும் பொருளது. வந்தவர்களுக் கெல்லாம் தத்தம் பண்ணி விட்டான் என்பது பழமொழி. தம் பொருளை வந்தவர் தம் பொருளாகக் கொள்ளுமாறு தருதல் தத்தம் ஆகும். தத்து என்பதும் அத்தகு மக்கட் கொடையே. ஒரு வயல் நீர், அதனை அடுத்த வயலுக்குச் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட மடையைத் தத்துவாய் மடை என்பது உழவர் வழக்கு. தத்தித் தாவி தத்துதல் = தவளை போல் இடைவெளிபடச் செல்லுதல். தாவுதல் = முயல்போல் பெரிதளவு இடை வெளிபட உயர்ந்து தாவுதல். தத்துதலும் தாவுதலும் இடைவெளிபடத் துள்ளிச் செல்லுதல் எனினும் முன்னது; நிலத்தினின்று மிக உயராமையும், மிக இடைவெளி படாமையும் உடையது. பின்னது; உயரமும் இடைவெளி மிகவும் உடையது. தத்துதல்; தாவுதல் குழந்தையர் விளையாடல்களில் இடம்பெறும். போலிகை ஆட்டங்களில் இவை இடம்பெறும். தத்து ஒரு குடும்பப் பிள்ளையைத் தம்பிள்ளையாக எடுத்து வளர்ப்பது தத்து ஆகும். ஓரிடம் விட்டு ஓரிடம் வருதல் தத்துதல். தத்துதல் தத்தித் தத்திச் செல்லுதல், தாவுதல். தத்துதல் இடைவெளிப்படச் செல்லுதலால் தத்துதலும் தாவுதலும் நிகழ்வனவாம். தத்துதல் கிளி, தத்தை எனப்பட்டது. நீர் தத்தித் தாவிச் செல்லும் மடை தத்துவாய் மடை யாகும். தத்துநீர் வரைப்பிற் கொற்கைக் கோமான் - சிறுபாண். 62 தவளை தத்துதல், தவளைப் பாய்த்து எனப்படும் (நன். 19). தத்துவான் நீர்தத்திச் செல்லும் மடைவாய், தத்துவாய் மடை என்றும், தத்திச் செல்லும் கிளி தத்தை என்றும், தத்திச் செல்லும் விட்டில் தத்துக்கிளி என்றும் வழங்குதல் பொதுவழக்கு. தத்திச் செல்லும் பாய்ச்சையைத் தத்துவான் என்பது இலத்தூர் வட்டார வழக்காகும். தத்தை தத்து + ஐ = தத்தை. தத்திச் செல்வது தத்தை. தத்தை = கிளி; விட்டில் வகையுள் ஒன்று. தத்தித் தத்திச் செல்வதாலும், கிளி போலும் பசுமை நிறம் உடைமையாலும் தத்துக் கிளி எனப்படுகிறது. தத்திச் செல்லுதல் ஒரு விளையாட்டு. தாவுதலுக்கு முன்னிலை தத்துதல். * தத்துவான் காண்க. தந்தனாப் பாடல் தந்தனாப் பாடல் = வறுமைப் பாடல். துந்தனாப் பாடல் என்பதும் இப்பொருள் தருவதே. பிச்சைக்கு வருபவர் பாட்டுப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் வருதல் வழக்கமாதலின், பாட்டுப் பாடுதல் என்னும் பொருளில் தந்தனாப் பாடுதல், துந்தனாப் பாடுதல் என வந்ததாம். பஞ்சப்பாட்டுப் பாடுதல், வறுமைப்பாட்டுப் பாடுதல் என்பனவும் வறுமை நிலையைக் குறிப்பனவே. தந்தனா என்பது இசைமெட்டு. வண்ணப் பாடல்களிலும் இடம் பெறுவது; * தாளம் போடுதல் காண்க. தந்தார் தந்தவர். இத் தந்தவர் பெற்றோர். என்னதான் தந்தவராயினும் அவர் பெற்றவராகவே மகிழ்ந்தனர். ஏனெனில், மக்கட்பேறு - அறிவறிந்த மக்கட்பேறு - பழிபிறங்காப் பண்புடை மக்கட்பேறு - பெற்றாரே பெற்றார் என்னும் பாராட்டுப் பெறுதலால், பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற - திருக். 61 இத் தந்தார் கொடையாளரிற் கொடையாளராம் பெற்றோர். பிள்ளைப் பேறுற்றதால் அவர்க்குப் பெற்றோர் என்னும் பெருமை ஆயது. ஆனால் ,அப் பிள்ளையைப் பெற்றதால் அவர் பெற்ற பெருமை என்ன என்பதைப் பொறுத்தே அவர் பெற்றவராம் பெருமை அடைகிறார். பிள்ளைகளைப் பெற்ற பேறு உலகப் பேறாக ஆதலல்லவோ அவர்கள் பெற்ற பேற்றின் பயன். தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது - திருக். 68 என்பதை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும் அல்லவோ! தந்தை தம் + அந்தை = தம்மந்தை > தமந்தை > தந்தை. கருவைத் தந்தவன் தந்தை எனின் இயல்பாக இருப்பினும் தாய், தமக்கை, தமையன் முதலனவொடு பிரிவின்றித் தம் என்னும் உறவுரிமை ஒட்டிருத்தலே பொருந்துவதாம். அந்தை, அந்துவன் என்னும் பெயர்கள் எண்ணத் தக்கவை. தபுதல் தபு + தல் = தபுதல். தவிர்தல் > தபுதல். தபுதல் = நீங்குதல், அழிதல், இறத்தல். துகள்தபு சிறப்பின் சான்றோர் பக்கம் - தொல். 1022 காதலி இழந்த தபுதார நிலையும் - தொல். 1025 தபுதாரம் தபு + தாரம் = தபுதாரம். தபு = நீங்குதல்; தாரம் = தன்னைத் தன் கொண்டவனுக் காகவும், கொண்டவன் குடும்பத்துக்காகவும் முழுவதாகத் தந்தவள்; மனைவி. தபுதார நிலை - தொல். 1025 தப்பல் தப்பல்:1 கூட்டத்தில் இருந்து தனித்து ஒதுங்கிய விலங்கு தப்பல் என வழங்கப்பட்டது. அப்பொருள் இற்றை வரை இலக்கிய வழக்கில் உண்டு. நாமதனைத் தப்பினால் நம்மையது தப்பாதோ என இரட்டையர் பாடலாயிற்று. தப்பிப் பிழைத்தவர் தப்பிப் பிறந்தவர் என்பன. ம.வ. தப்பல்:2 தப்புதல் என்பது துணியைத் தோய்த்தல் (துவைத்தல்) பொருளில் வருதல் இன்றும் வழக்கே. தப்பு தப்பு என்னும் ஒலி வகையால் ஏற்பட்டது அது. தப்பை இசைக் கருவிகளுள் ஒன்று. மூங்கில் பிளாச்சும் தப்பையாம். கூரை வேய உதவுவது அது. தப்பு செய்ய வேண்டும் முறை தவறிச் செய்தலும் சொல்ல வேண்டும் முறை தவறிச் சொல்லலும் தப்பாம். நீ செய்தது தப்பு; சொன்னதும் தப்பு என்பது ம.வ. தப்பு என்பது இவ் விடங்களில் தவறு என்னும் பொருளில் வரும். தப்பும் தவறும் என்பது இணைமொழி. ஒரு கட்டுள் அல்லது கண்காணிப்புள் இருந்த ஒன்று கண்காப்பிடத்திலிருந்து கண்காணிப்பவர் அறியா வகையில் மறைந்து விடுதல் தப்பிப் போதலாகும். சாகக் கிடந்தவர் பிழைத்தல் கூற்றுவனிடமிருந்து தப்பி விட்டதாகக் கருதித் தப்பிப் பிழைத்தவர் என்பர். நல்ல குடும்பத்தில் அக் குடும்பத்துக்குத் தகவிலாப் பிள்ளை - சிறந்த பிள்ளை - பிறந்துவிட்டால் தப்பிப் பிறந்த பிள்ளை என்பர். * தப்பல் காண்க. தப்புத் தண்டா தப்பு = கொண்டொழுகத் தக்க கடைப்பிடியைக் கொண்டொழுகாது தப்புதல். தண்டா = தண்டனைக்குரிய குற்றத்தில் மாட்டிக் கொள்ளுதல். தப்புத் தண்டாவில் மாட்டிக் கொள்ளாதே, தப்புத் தண்டா செய்து மாட்டிக் கொள்ளாதே என்பவை அறிவுரைகள். தப்பும் தவறும் என்பதில் தப்பு என்பதன் விளக்கம் அறிக. தண்டா = தண்டத்திற்கு உரியது தண்டம். அது தண்டா என நின்றது. தண்டா தவிர்க்கத் தக்கவையுமாம். முதுமொழிக் காஞ்சியில் வரும் தண்டாப் பத்து இப் பொருளது. தப்புத்தாளம் தப்பென்னும் ஒலிக் குறிப்புடைய தோற் பறை. அதற்கு ஏற்பத் தாளமிடல் தப்புத்தாளம். ஒருவர் தம் குற்றத்தில் இருந்து தம்மை விலக்கிக் கொள்வதற்காகச் சொல்லும் சூழ்ச்சிச் சொல்லுக்கு ஒத்து ஒருவர் பேசுதல் தப்புத்தாளம் போடல் எனப்படும். தண்டனைக் குரியவர் தப்புச் செய்பவரும் அவர்க்குத் தாளம் போட்டுச் சான்றானவரும் ஆவர். தப்பும் தவறும் தப்பு = கொண்டொழுகத் தக்க கடைப்பிடியைக் கொண்டொழுகாது தப்ப விடுதல். தவறு = செய்ய வேண்டும் ஒன்றைச் செய்யாது தவறி விடுதல். தப்பு தவறு என்பவை குற்றம் என்னும் ஒரு பொருளே தருவன எனினும், முன்னது தன் கடைப்பிடி யொழிந்த குற்றத்தையும், பின்னது செய்யத் தவறும் குற்றத்தையும் குறிப்பதாம். தப்புதல் தப்பித்தல் என்பவற்றைக் கருதுக. பாண்டியன் தவறு இழைப்ப என்பதையும் இறந்தாரைத் தவறினார் என்பதையும் எண்ணுக. தப்பைக் காட்டிலும் தவறு கொடிது என்பதையும் தவற்றுக்கு மூலம் தப்பு என்பதையும் எண்ணுக. இக்கால், இரண்டும் வேறுபாடற வழங்குகின்றதாம். தப்பை தப்புத் தப்பு என ஒலி எழுப்பும் தகடான மூங்கில் சில் தப்பை எனப்படும். துணியைத் தப்புத் தப்பென ஒலியுண்டாக அடித்துத் துவைப்பது தப்புதல் ஆகும். நீரோட்டமான இடத்தில் துவைத்த துணி, நீரால் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போவது தப்பிப் போதல் ஆகும். பின்னர் அது, காணாமல் போதல் என்னும் பொருள் கொண்டது. சப்பை, உடலுறுப்புப் பற்றியது. தப்பை மர உறுப்பு வழியது. தமக்கை தம் + அக்கை = தமக்கை. உரிமை உறவுப் பெயர்கள் தம் என்னும் ஒட்டுப் பெறுதல் தமிழியல். தம் + ஆய் = தாய்; தம் + ஐயன் = தமையன். * அக்கை காண்க. தமர் தம் + அர் = தமர். தம்மவர் என்பார் தமர் ஆவர்; உறவாக நட்பாக இருப்பார் அவர். தமரெனின் யாவரும் புகுப - புறம். 177 தமிழவேள் இப்பட்டம் பெற்றோன் ஒருவன் வீரபாண்டியன் அமைச்சனாகவும் அவன் படைத்தலைவனாகவும் தமிழ் வடமொழிப் புலமையனாகவும் இருந்தவன். காஞ்சியைச் சேர்ந்தவன். தண்டமிழோடு ஆரியம் வல்ல தமிழவேள் தெ.க.தொ. 14:87 தமிழைக் காக்கும் கடமை கொண்டோர்க்கு வழங்கும் உயர் விருதாக இக்காலத்தும் வழங்குகின்றது. எ-டு: தமிழவேள் உமாமகேசுவரனார். தமிழ் தமிழ் என்பது தமிழினத்தர் தாய்மொழி. மண்தோன்றி அதன் பின்னர்ப் படிப்படியே உயிர்கள் தோன்றி மக்கள் தோன்றி, அவர்களும் முகக்குறி, கைக்குறி முதலியவற்றால் குறிப்புணர்த்தி ஒலிக் குறிப்புகளின் வழியே மொழியைக் கண்டனர். அதனால் தமிழ்மொழி தோன்றிய பின்னரே தமிழர் என்று இனமும், தமிழகம் என மண்ணும் பெயர் கொண்டன. பின்னே தோன்றிய மொழியே முன்னவற்றுக்குப் பெயர் தந்தது. 1. தமிழர் அரவர்: அரவம் என்பது ஒலி. அரவமில்லாமல் இரு என்று கூறுவதை அறியார் யார்? பாம்பு செல்லுங்கால் ஒலி செய்தலை - ஒலி எழுப்புதலைக் - கொண்டு தானே அரவம் எனப் பெயர் சூட்டினார்! ஆடும்போதே இரையும் என்றாரே காளமேகப் புலவர். இரைச்சல் அரவம் தானே. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்னும் பழமொழி புதுவது அன்றே. அரவம் ஆட்டேல் என்றாரே ஔவையார். அதியமான் படைவீரர் ஆண்மையை, அடிக்கும் கோலுக்கும் அஞ்சாமல் எதிர்த்து மண்டும் ஆடரவத்திற்கு ஒப்பாக்கிக் கூறினாரே சங்கச் சான்றோருள் ஒருவராகிய ஔவையார். இவற்றையெல்லாம் நோக்கப் புலப்படுவது என்ன? தமிழ் வீரர் பாம்பென வருத்துவதாக அயன்மொழிப் படைவீரர் கருதினர். அதனால் அவர்கள், தமிழ் வீரர்தம் போர்க்கு ஆற்றாமல் அஞ்சி ஓடுங்கால் அருவர் அருவர் என்றனர் என்க. ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்; உடலின் நிழலினை ஓட அஞ்சினர்; அருவர் வருவரெனா இறைஞ்சினர்; அபயம் அபயம் எனா நடுங்கியே என்பது கலிங்கத்துப் பரணி (போர். 48). அரவர் என்பது தமிழ்ச்சொல்லே யன்றோ; அயன்மொழி யாளர் கூறியதென்ன எனின், அவர்மொழி, தமிழ்மொழி வழிப்பட்டதே யன்றோ! கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும் என்பது பேராசிரியர் சுந்தரனார் பாட்டேயன்றோ! படை வீரரையே அரவர் என்றதும் அரவாளு என்றதும்; பின்னேதான் அவர் பேசிய மொழிக்கு அரவம் எனப் பெயராயதும், இவண் நோக்கத் தக்கனவாம். 2. தமிழ் எழுத்து வடிவம். எழுத்து என்பது காரணப் பொருட்டது. எழுதலாலும், எழுதுதலாலும் எழுத்தாயிற்று. காற்று எழுந்து முயற்சி வகையால் ஒலியாக எழுவது ஒலி எழுத்து; வடிவு கொண்டு எழுதுதலால் அமைவது வரி எழுத்து. இவ்விரண்டன் பொருளும் ஒருங்கே விளங்குமாறே எழுத்து என்னும் சொல்லை முந்தையோர் படைத்தனர். அஆ இழந்தான் என்றெண்ணப்படும் - நாலடி. 9 ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல் - குறுந். 28 கூஉக் கூஉ மேவு மடைமைத்தே - பரிபா. 19 ஏயே இவளொருத்தி பேடியோ - சிந். 652 ஏஎ எல்லா மொழிவது காண்டை - கலி. 64 ஏஎ ஓஒ எனவிளி ஏற்பிக்க ஏஎ ஓஒ வென் றேலா அவ்விளி - பரிபா. 19 ஓஒ உவமன் உறழ்வின்றி ஒத்ததே - களவழி. 36 ஓஒ கொடிதே - நாலடி. 88 ஓஒ.... நிலஞ்சேர்ந்தனனே - புறம். 285 உயிரொலிகள் எல்லாம் உணர்வொலிகள் என்பது இவ்விலக்கிய ஆட்சிகளால் நன்கு விளங்கும். வழக்கிலும், ஆஆ! அப்படியா! இ ஈ.... வாங்க ஆ! ஓ! ஐயாவோ உஊ, ஒஓ, ஐ, ஔ என்பனவெல்லாம் உணர்வுக் குறிகளாக வழங்கி வருகின்றன. இவ்வுணர்வொலிகளே உயிரொலிகளாக அமைந்துள்ளனவாம். இவ்வுணர்வொலிகள் மாந்தர் இனப்பொதுப்பொருள் என்பதை அ, இ, உ, எ, ஒ என்னும் உயிர் எழுத்துகளையும் கி, ணி, மி, ளி, ஹி என்னும் ஆங்கில எழுத்துகளையும் மாறி மாறிச் சொல்லிப் பார்த்த அளவானே புலப்படும். இவ்வொலிகள் விலங்கு, பறவைகளின் கூப்பீடாகவும் உணர்வொலியாகவும் வெளிப்படலும் கண்கூடு. ஒலிவடிவம் இவ்வாறமைய வரிவடிவம் பற்றிக் காண்போம். எழுத்து இன்னதென்ன அறியா இளங்குழந்தையிடம் எழுதுகோல் ஒன்றைத் தந்தால் வட்டம், வட்டம், சுழி, சுழி, வளையம் வளையமாகவே கிறுக்கித் தள்ளும். நேர்கீற்றாகப் போட இயலாது. வட்டம் என்பது இயற்கை வடிவம். மற்றைச் சதுரம், முக்கோணம், அறுகோணம், நேர்வரி என்பவை செயற்கை வடிவம். வளர்ந்தவர்களாலும் கூட நேர்வரியிட ஒரு கோலின் துணையே வேண்டியுள்ளது. அதனை நேர்செய்து நேராய்ப் போடுதற்கும் இயல்வதில்லை. எத்தனையோ வளைவும் திருகலும் ஏற்படுதலே இயற்கை. நேர்கோடு போட்டுப் பழக்கமில்லை என்றே சிலர் கைவிரித்து விடுவர். இயற்கை வடிவம் வட்டம் என்பது எப்படி? கதிர், திங்கள், விண்மீன், உலகம் ஆகியவை எவ்வடிவில் உள்ளன? சூறைக்காற்று எப்படி அடிக்கிறது? நீர்ச்சுழல் எப்படிச் சுழல்கின்றது? வானம் எப்படித் தெரிகின்றது? மலையின் தோற்றம் எப்படிக் காணுகின்றது? மழைத்துளி எவ்வடிவில் வீழ்கின்றது? நீர்த்துளியோ எண்ணெய்த்துளியோ துணியில் பட்டால் எப்படிப் பரவுகிறது? நீரில் கல் விழுந்தால் அலை எப்படி எழுகின்றது? பறவைகள் எப்படி வட்டமிடுகின்றன? விலங்குகள் எப்படிப் படுக்கின்றன? ஆடையின்றி வாடையில் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீஇப் படுக்கும் மாந்தன் எப்படி முடங்கிக் கிடக்கிறான்? இவற்றுக்கெல்லாம் வட்டம் என்பதுதானே மறுமொழி! ஆகலின் வட்டம் இயற்கை வடிவம் என்க. பழங்கால எழுத்துகள் வட்டெழுத்து, கண்ணெழுத்து, கோலெழுத்து, ஓவிய எழுத்து என்றெல்லாம் வழங்கப் பெற்றன. வட்டெழுத்து கல்வெட்டுகளில் பயன்படுத்தப் பெற்றமை அறிஞர்களால் கண்டுபிடிக்கப் பெற்றுள. கண்ணெழுத்துப் பற்றி இளங்கோவடிகளார் குறிப்பிடுகிறார். கோல் என்பது திரட்சி. அதுவும் வட்ட வடிவொடு இயங்கியது என்பது விளங்கும். ஓவிய எழுத்து வட்ட வடிவ எழுத்தாகும். இன்னும் பலவகை எழுத்துகளை யாப்பருங்கல விருத்தி வழங்குகின்றது. காலந்தோறும் எழுத்துகள் அமைந்திருந்த வடிவத்தைக் கலைக்களஞ்சியம் காட்டுகின்றது. இங்கே குறிக்கப்பெற வேண்டிய செய்தி ஒன்றே. தமிழ் எழுத்துகள் எப்படி இயற்கை ஒலியால் ஒலிக்கப் பெற்றனவோ, அப்படியே இயற்கை வடிவாம் வட்டத்தில் அமைய எழுதப் பெற்றன என்பதே. கோடு என்பதன் பொருள் வளைவு என்பதேயாம். யாழ்கோடு என்பார் வள்ளுவர். கவடும் கோடும் கண்டனவே! கோடுபோடுதல் என்றாலே வளைவாகச் சுழித்தலைக் குறிக்குமாதலின் நேர்கோடு என்று விளக்கும் நிலைமை உண்டாயதை எண்ணுக. 3. தமிழ், திரமிளமான வகை: ட்ரமிள் என்பது தமிழையும், ட்ரமிளர் என்பது தமிழரையும் ட்ரமிளம் என்பது தமிழகத்தையும் குறிக்குமானால், அக்குறிப்புகள் தமிழ்த் தொன்னூல்களில் பயில வழங்க வேண்டுமே! தமிழ்நூல்களில் எல்லாம் தமிழும், தமிழரும், தமிழகமுமே பயில வழங்க, வடமொழி நூல்களில், ட்ரமிள் ட்ரமிளர் ட்ரமிளம் என வழங்கினால் என்ன காரணம்? தமிழ் என்னும் சொல்லைச் செவ்விய நிலையிலே சொல்ல வராதாரும் தம்மொழி இயல்புக்கு ஏற்பப் பிறமொழிச் சொற்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்னும் மொழிப் புலமையாளரும் தமிழ் என்னும் சொல்லைத் ட்ரமிள் என அமைத்துக் கொண்டனர் என்பதேயாம். மொழிக்கு முன்வராத தனி மெய்யெழுத்தில் சொல் தொடங்குவது ஒன்றே அது தமிழ் மரபுக்கு ஏற்காதது என்பதை வெளிப்படுத்துமே! அன்றியும், வடசொல் மரபுக்கு மெய்ம் முதலாதல் உரியது என்பதும் விளங்குமே! ஆங்குத் தானே ப்ரம்மரம் த்யானம் க்ரமுகம் இன்னவாறாக மெய்ம்முதல் சொற்கள் உண்டு. 4. தமிழ் - பொருள் தமிழ் என்னும் மொழியின் பெயராய் அமைந்த தமிழ் என்னும் சொல்தானும் தமிழ்ச்சொல் இல்லை என்பாரும் உளராயினர். நகைப்புக் குரியதாம் இச்செய்தி எனினும், நன்கு ஆராயத்தக்க அளவுக்குக் கடப்பாடும் உண்டாயிற்று. ஏனெனில், அத்துணைப் பொல்லாப் புனைவுகள் பொருந்தப் புனைய வல்லாரால் நெட்ட நெடுங்காலமாகவே புனைந்து புனைந்து பறையறையப் பெற்றுள. தமிழ் என்னும் சொல்லுக்கு வழங்கப்பெறும் பொருள்களை யெல்லாம் தொகுத்துக் கண்ட பின்னரே, அப்பொருள் நிலையும் சொல்லமைதியும் நோக்கி ஒரு முடிவுக்கு வருதல் கூடும். ஆகலின் தமிழ் என்னும் சொல்லுக்கு வழங்கப்பெறும் பொருள்கள் இவையென முதற்கண் காணலாம். தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபு என்னும் சிறுபாணாற்றுப் படையும் (66), தமிழ் முழுதறிந்தோய் என்னும் புறநானூறும் (50) தமிழ்வரம் பறுத்த என்னும் சிலம்பும் (8:2) தமிழ் என்பதற்குத் தமிழ்மொழி என்னும் பொருளுண்மையைக் குறித்தன. தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன் என்பதிலுள்ள தமிழ், தமிழ் வழங்கும் நாட்டைக் குறித்து வந்தது (புறம். 51). அருந்தமிழ் ஆற்றல் (சிலப். 26: 161) தண்டமிழ் இகழ்ந்த (சிலப். 28:153) என்னும் இடங்களில் வரும் தமிழ், தமிழ்வேந்தரைக் குறித்தது. தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானம் என்பதும் (புறம். 19), வண்டமிழ் மயக்கம் என்பதும் (சிலப். 25:158) தமிழ் என்பதற்குத் தமிழர் வீரர் என்னும் பொருளுண்மை விளக்கின. தமிழ் என்பது பொருளிலக்கணத்தைக் குறிக்கும் என்பது தள்ளாப் பொருளியல்பிற் றண்டமிழ் என்னும் பரிபாடலால் (9:25) விளங்கும். தமிழ் அகப்பொருள் என்னும் பொருளைத் தரும் என்பது, இந்நூல் என் நுதலிற்றோ எனின், தமிழ் நுதலிற்று; எனவரும் இறையனார் அகப்பொருள் உரையால் விளங்கும் (1). அகப்பொருளுள்ளும், களவொழுக்கம் தமிழ் எனப் பெறுதல் பெருங்கதையால் விளங்கும் (4.17:67). வடவெழுத்தை விலக்கி வந்த எழுத்தாலே கட்டப் பெற்ற ஒலியளவைக் கூறுபாடும், இயலிசை நாடகம் என்னும் முத்தமிழ்களும் தமிழ் என்று கூறப் பெறுதல் உண்டு என்பது ஆடல்பாடல் இசையே தமிழ் என்னும் சிலப்பதிகாரத்திற்கு அரும்பத வுரையாசிரியரும், அடியார்க்கு நல்லாரும் எழுதிய உரையால் தெளிவாகும். தமிழ் என்பது தேவாரத் திருப்பதிகத்தைக் குறித்தல் ஆளுடைய பிள்ளையார் பாடல்களில் பயிலக் காணலாம். கூத்து என்னும் பொருளைத் தமிழ் என்னும் சொல் தரும் என்பது இருவகைக் கூத்தும் என்னும் சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் வரைந்த உரையால் புலப்படும் (3:12). ஓசை வகையுள் தமிழ் என்பதும் ஒன்று என்பதும் அவர் உரை தெரிவிக்கும் (6:35). தமிழ் என்பது தமிழறவோரைக் குறித்து வருதல் தண்டமிழ் நல்லுரை என்பதாலும் (சிலப். 28:209), நங்கையாகவும் அரசியாகவும் உருவகித்து வருதல் தமிழ்ப்பாவை என்பதாலும் (சிலப். 12:1:48, மணிமே. பதி. 25) அறியப்பெறும். தமிழ் வேலியாக (காவலாக) அமைதலைப் பரிபாடல் திரட்டு (8) தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம் என்றுரைக்கும். தமிழ், தெய்வ மென்னும் பொருட்டதாதல் தமிழணங்கு என்பதால் வெளியாம். இவையெல்லாம் தமிழ் என்னும் சொல்லுக்கு வெளிப்படை யாகவும், குறிப்பு வகையாகவும், தழுவல் வகையாகவும், சார்பு வகையாகவும் அமைந்த பொருள்களாம். தமிழ் என்பதற்கு இனிமை, நீர்மை என்னும் பொருள்கள் உண்மை, நிகண்டுகளாலும் இலக்கியச் சான்றுகளாலும் வெளிப்படும். இனிமையும் நீர்மையும் தமிழென லாகும் என்பது பிங்கலம். தமிழென்ப தினிமை நீர்மை என்பது சூடாமணி. தமிழுக்கு இனிமைப் பொருளுண்மையால், தமிழ்தழீஇய சாயலவர் என்றார் திருத்தக்க தேவர் (சீவக. 2026). தமிழ்ப் பாட்டிசைக்கும் தாமரையே என்றார் கம்பர் (இராமா. பம்பைப். 29). இன்பம். இயற்கையின்பமும் செயற்கையின்பமும், பேரின்பமும் சிற்றின்பமுமாகப் பகுக்கப்படுதல் உண்டாகலின் தமிழின்பம் எத்தகைத்தெனக் காட்டுவான் விரும்பிய திருத்தக்க தேவர் இன்றமிழ் இயற்கை யின்பம் என்றார் (2063). தமிழின்பம், சிற்றின்பம் அன்று; பேரின்பமே எனக் கண்டோர் தமிழென்ப தினிமை முத்தி என்றனர். முத்தியின்பத்திற்கு வித்தாக இருக்கும் இறைமையே தமிழ் எனக் கொண்டாரும் உளர். அவர், தமிழ்சிவம் இனிமையெனும் தனிப்பொருளாம் எனக், கழாரம்பர் பேரிசைச் சூத்திரம் ஒன்றைக் காட்டி நாட்டுவர். புல்லாணித் தென்னன் தமிழை என்பதால் தமிழைத் திருமாலாக்கினார் (பெரிய திருமடல். 131) திருமங்கை ஆழ்வார். தமிழ் இனிமையாவதுடன் நெடிது வாழவைப்பதுமாம் என்பதால், அமிழ்தமெனக் குறிப்பர். இப் பொருளும் இன்பப் பொருள் தழுவியதேயாம். தமிழ் தமிழ் எனப் பல்கால் அடுக்கி யுரைக்க அமிழ்து அமிழ்து என வருதலைச் சுட்டுவர் அவர். தமிழுக்கு அமுதென்று பேர் என்று பாடுவார் பாவேந்தர். நீர்மை என்னும் பொருளும் தமிழ் என்பதற்குக் கண்டனர் அல்லரோ! நீர்மை என்பது தன்மையாகும். எத்தன்மையோ எனின், தண்மை, நன்மை, தூய்மை, மென்மை முதலியவாம். நீர்மையின் பொருளாழம், நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்நீர பேதையார் நட்பு என்னும் குறளில் (782) வரும் நீர நீரவர் என்பவற்றால் புலப்படும். தமிழின் நீர்மைகளை ஆய்ந்த மொழிஞாயிறு பாவாணர், தொன்மை, முன்மை, எண்மை (எளிமை), ஒண்மை (ஒளிமை), இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை எனப் பதினாறாய் எண்ணுவார் (தமிழ் வரலாறு - முகவுரை). 5. தமிழ்மொழி நிலம் முன்னதேனும், அதன்கண்ணேதான் மாந்தரின் தோற்றம் கிளர்ந்ததேனும், அம் மாந்தரிடத்து மொழித்திறம் அமைந்த பின்னரே பெயரீடு நிகழ்ந்திருக்கும் என்பது வெளிப்படை. ஆதலால், தமிழ் என்பது மொழிப் பெயராய், அதன் பின்னர் அம் மொழியைப் பேசும் மாந்தர் பெயராய், அதன் பின்னரே அவர் வாழும் நாட்டின் பெயராய்ப் பிறபிறவாய் அமைந்திருத்தல் வேண்டும். இவ் வமைதியால் தமிழ் என்பது மொழியின் பெயராக முகிழ்த்தது என்பதே தகும். ஏனை மொழிநிலை எவ்வாறாயினும், தமிழ்மொழி நிலைக்கு இம்முறை முற்றிலும் தகும். இனித் தொல்தமிழ் நிலப் பரப்பாகிய குமரிக்கண்டம் தமிழ்நாடு என்னும் பெயருடன் இருந்ததில்லை. ஏழ் தெங்கநாடு ஏழ் மதுரை நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ்குன்றநாடு, ஏழ் குணகாரை நாடு, ஏழ் குறும்பனை நாடு என்பனவும் பன்மலை நாடு என்பதுமே அங்கிருந்த நாட்டின் பெயர்களாய் அறியப் பெறுகின்றன (சிலப். 8:1-2 அடியார்க்.). தென்பகுதி கடல் கொண்ட பின்னரும், தமிழ் வழங்கிய நிலப்பகுதி, வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பெனவே வழங்கப்பெற்றது (தொல். 1336). புறப்பாடல்கள் பலவும் தமிழ்நாட்டை மூவருக்கு உடைமையாகப் பகுத்துக் கூறுகின்றனவே யன்றி ஒரு நாடாகக் கூறின வல்ல (35, 109, 110, 205, 357). புறத்தில் ஒரு பாடல் தமிழ் நிலத்தைத் தமிழகம் என்கிறது (168). அதுவும் தமிழ்மொழி வழங்கும் நிலம் என்னும் பொருளிலேயே ஆள்கின்றது. எஞ்சிய நூல்களில் தமிழகம் உண்டேனும் ஒரு நாட்டின் பெயராய் வழங்கிற்றில்லை. பிற்காலத்திலும் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு, தொண்டை நாடு, துளுநாடு, கொங்குநாடு எனப் பகுத்து வழங்கப் பெற்றனவேயன்றித் தமிழ்நாடு என ஒரு நாடாக வழங்கப் பெறவில்லை. தமிழகம், தமிழ்நாடு என்று வழங்கப் பெற்றன வெல்லாம் தமிழ்மொழி வழங்கும் நிலம் என்னும் பொருளிலேயே வழங்கப் பெற்றுள்ளன. தமிழ் என்னும் சொல் தோன்றிய பின்னரே அம்மொழி பேசுவார் அர் என்னும் ஈறு சேர்ந்து தமிழர் என்னும் பெயர் எய்தினர் என்பது வெளிப்படையாகலின், தமிழ்நாடு என்னும் பெயருக்கும், தமிழர் என்னும் பெயருக்கும் மூலப் பொருளாய் அமைந்தது தமிழ் என்னும் மொழிப் பெயரேயாம். தமிழ்மொழி பேசும் மக்கள் அனைவரும் தம் மொழியால் ஆய நாட்டை ஒருவர் ஆட்சியாகக் கொள்ளாமைக் குறையும், பலவாகப் பிரியினும் ஒருதலைமைக் கீழ் ஆட்சி நடைபெறாப் பிழையும் தமிழகம், தமிழ்நாடு எனப் புலமையர் வழக்கில் - நூல்வழக்கில் - இருந்தும், மக்கள் வழக்கில் இல்லாமல் ஆயிற்று! அந்நிலை அன்றே இல்லாமை, தமிழர் தம் பழமையும் பெருமையும் விரிவும் மிக்க ஒரு நாட்டைக் கொண்டிருந்தும் இற்றைவரை உலக நாட்டமைப்பில் ஒருநாடென்னும் உறுப்புரிமை பெறவில்லை என்பதை அறியின், தமிழர் ஒருமைப்பாட்டின் கட்டாயம் புலப்படல் உறுதி. 6. தமிழும் திராவிடமும் தமிழில் பிரயோக விவேகம் என்பதொரு நூல். அதனை இயற்றியவர் சுப்பிரமணிய தீட்சிதர் என்பார். அவர், வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் இலக்கணம் ஒன்றே என்ற அடிப்படை முரண்பாட்டில் நூல் செய்தவர். அந்நூலில் தமிழ் என்னும் சொல்லைத் தமிழ் என்று சொல்வாரா? நூலின் பெயரே பிரயோக விவேகம் ஆயிற்றே! அதன் பிரயோகம் எப்படியிருக்கும்? வடநூல்களில், தமிழ் ட்ரமிள என வழங்கப் பெற்றிருந்தது. தீட்சிதர் பார்வையில் இவ்வழக்குப் பளிச்சிட்டது! ட்ரமிள என்பதில் இருந்துதான் தமிழ் வந்தது என விவேகமாக முடிச்சுப் போட்டார். அம்முடிச்சுப் போட்டு முந்நூறு ஆண்டுகட்கு மேலாகியும் இன்னும் அவிழ்க்க முடியாததாகவே இருக்கிறது. அறிவாளிகள் போடும் முடிச்சிற்கு அவ்வளவு வலிமை! திரமிள தமிழ் ஆய்வு பற்றித், தமிழ் வரலாற்றில் இரா. இராகவ ஐயங்கார் குறிப்பிடுகிறார்: வடநூலார் பெயரிடுவதற்கு முன் தமிழர்க்கும் தமிழுக்கும் பெயரே இல்லை எனல் சிறிதும் பொருந்தாது. வடமொழியாளர், தமிழரையும் தமிழையும் கண்டு அவருடன் பயின்று அவர் மொழிப் பெயரை அவர் வாயாற் கேட்டு அவர் சொற்ற தொன்றைத் தம்மொழி வழக்கிற்குரிய ஓசையில் வைத்து திரமிளர் என வழங்கினர் எனத் துணியலாம். தாம் வழங்கிய மொழிக்குப் பெயரே இடாமல் பல்கலைத் துறைகளிலும் சிறந்து விளங்கிய நாட்டினர் ஒருவர் இவ்வுலகில் இருந்தனர் என்பது ஆராய்ச்சிக்கு இயைவதன்று. அன்றியும், தமிழ் என்னுஞ் சொல் இயற்றமிழ்ச் சொல் என்பதே பண்டைத் தமிழாசிரியர் துணிபு ஆகும். இதனைத் தமிழென் கிளவியும் அதனோரற்றே (தொல். 685) என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தான் அறியலாகும். தொல்காப்பியர் தமிழியற் சொற்களுக்கே புணர்ச்சி விதி கூறுகின்றாரல்லது பிறநாட்டுச் சொற்களுக்கில்லை என்பதை இவ்விலக்கணங் கற்றார் நன்கறிவர். இதனால், இது தமிழியற் சொல்லே யாதல் ஒருதலை என்றார் (தமிழ் வரலாறு - முதற்பாகம் 45). வடமொழித் திரமிளம் வெருட்டப்பட்டது என்னும் பொருளது. தமிழோ இனிமையும் நீர்மையும் எனப் பொருளமைதி யுற்றது. இத்தகைய எதிர்நடைச் சொற்கள் ஒருவழிப் பட்டதாதல் மொழியிலக்கணத்தோடு முரண்பட்டது என்பதைப் பெரும் புலவர் இரா. இராகவர் மேலும் குறிப்பிட்டார். பொருளொற்றுமை யுடைய இருவேறு மொழிகளுள் சிற்சில ஒலியொற்றுமையைக் கண்டு அவற்றுள் ஒன்றை மற்றதன் சிதைவென்றும் திரிபென்றும் மொழி வல்லார் கொள்வர். வெவ்வேறு பொருள்படும் இருவேறு சொற்களுட் சில ஒலியொற்றுமை கண்டு ஒன்று மற்றதன் சிதைவெனக் கொள்ளத் துணியும் மொழியாராய்ச்சியாளர் எங்குமில்லை என்பது தெளிந்ததொன்று (தமிழ் வரலாறு 5). தமிழ் என்னும் சொல்லே வடவரால் ட்ரமிளம் என வழங்கப் பெற்றது என்பதை அத் தமிழ் வரலாற்றில் சான்று காட்டி விளக்கியுள்ளார் அவர். அவ் விளக்கம் அறியத் தக்கதொன்றாம்: கமுகு என்பதை வடமொழியாளர் க்ரமுகம் என வழங்குவர். இவ்வாறே தமிழ் என்பதைத் திரமிள என வழங்கினர். இவ்வாறு ரேபங் (ரகரங்) கொடுத்துத் தமிழ்ச் சொல்லை வடசொல்லாக்குதல் வடமொழியாளர் வழக்கமாகும் என்பதே அது (தமிழ் வரலாறு 11-12). 7. தம்முரிமைத் தமிழ்மொழி தம் என்னும் உரிமைப் பெயர் தழுவிய இம்முறைப் பெயர்களையும் அரும்பொருட் பெயர்களையும் போலவே, தமிழ் என்பதும் சொந்தங் குறித்து வந்த சொல்லேயாம். தம் என்பதே அதன் முதற் சொல்லாம். அடுத்துவரும் சொல் யாதெனத் தெளிவோம். கழகக் காலப் புலவர்களுள் கீரனார் பெயர் பெற்றோர் பலர். அவருள் ஒருவர் இம் என் கீரனார் என்பவர். அவர் பாடிய அகப்பாடலுள் இம்மென்னும் சொல்லை அமைப்புறப் பெய்துள்ள அருமை நோக்கி இம்என் கீரனார் எனப் பெற்றார் (அகம். 398). இம் எனல் இன்னோசை; அன்றியும், மெல்லோசை, வண்டுகளின் முரலுதல் இம் என்னும் ஒலிக் குறிப்பால் உரைக்கப் பெறும். வண்டினம் முரலுதல், தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட எனக் கம்பரால் குறிக்கப் பெறும். இம் மெனும் ஒலிக்குறிப்பு, இனித்தலையும் குறிக்கும். அப்பொழுது, இமிழ் ஆகும். வண்டினம், இமிழ் என்பவை இசைபோலும் மெல்லிய ஒலி, தேன்போலும் இனிமை என்னும் பொருளுக்கு உரியவாய்ப் பின்னர்ப் பிற பொருள்கள் சில தழுவி விரிந்தன. 8. தம்முரிமைத் தனிப்பற்று ஒருவர் தாம் பிறந்த மண்ணின் மேல் பற்று வைத்தலும், பிறந்த குடியின்மேல் பற்று வைத்தலும், தம் பெற்றோர் மக்கள் சுற்றம் இவர் மேல் பற்று வைத்தலும், தாம் பேசும் மொழியின் மேல் பற்று வைத்தலும் இயற்கையானவை. முற்றுந் துறந்த துறவியராலும் விலக்க வொண்ணாப் பற்றுகள் இவை என்பதை வரலாறுகள் காட்டுகின்றன; இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. அறம் பாட வந்த திறவோராம் வள்ளுவர், தம்பொருள் என்ப தம்மக்கள் என்றார் (63). தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ் அமிழ்தினும் சிறந்தது என்றார் (64). தம் மக்கள் மழலை மொழியே குழலினும் யாழினும் இனிதெனக் குறித்தார் (66). தம்மினும் தம்மக்கள் அறிவுடைமையே மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இன்பம் செய்யுமென மொழிந்தார் (68). தம்மகனைச் சான்றோன் எனக் கேட்டதாய் ஈன்ற பொழுதினும் இன்புறுதலை இயம்பினார் (69). இவையெல்லாம் மக்கட்பேறு என்னும் ஒரு பத்துப் பாடல்களுக்குள்ளேயே! தம் இல்லத்திலே இருந்து தாம் தேடியதை உண்பதைத் தம் அன்புக் காதலியுடன் இன்புற வாழ்தலுக்கு ஒப்பாக இணைத்துப் பொருட்பாலிலும் பேசுகிறார் (1107). தம்சுற்றம் (584) தம் குடி (1021) தம் மனையர் (720) தங்குடை (1034) என்பன வெல்லாம் பேசப் பெறுகின்றன. தமர் என்பது பயில வழங்கப் பெறுகின்றது. தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு என்பது உரிமைப் பொருளுக்குப் பேருரிமையுடையது போலும்! தம்மானை விரும்பாத சாதியார் உளரோ? என்னும் துறவோர் வாக்கு எவ்வளவு துலக்கமிக்கது என்பது தம்முரிமை பற்றி எண்ணுவாரால் உணரக் கூடியதே! தம் என்னும் உரிமை - சொந்தங் கொண்டாடும் உரிமை - மக்களுக்கு தமிழ் மக்களுக்கு - எத்தகைய இயல்பானது என்பதை அவர்கள் வழங்கும் முறைப் பெயர்கள் நன்கு வலியுறுத்தும். அதனைத் தூ.சு. கந்தசாமியார் எண்ணி யெழுதியுள்ளார். முறைப்பெயர் முறைமை: ஆய் என்பது பெற்றவளைக் குறிக்கும் பெயர். அப் பெயருடன் தம் என்னும் கெழுதகை யுரிமை யெய்தத் தம் + ஆய் = தாய் ஆகி வழக்கில் உள்ளதுவே. அப்பன் என்னும் பெயர் தம் என்னும் உரிமையுடன் செறிந்து தம் + அப்பன் = தமப்பன் (தகப்பன்) ஆகியது. தந்தை என்னும் பெயர் தமப்பனைக் குறித்து வருதல் அறிந்ததே. ஒரு காலத்தில் அந்தை என்னும் பெயர் இருந்து தம்முரிமைச் சொல் தழுவத் தந்தையாகி இருத்தல் வேண்டும் எனக் கொள்ளல் தகும். முறைப் பெயர்கள் உணர்ச்சிக் குறிப்புகளாக வருதல் கண்கூடு. அப்பா, அப்பப்பா, அப்பே, அப்பப்பே, அப்பப்போ, ஐய, ஐயா, ஐயையா, ஐயையே, ஐயையோ, அச்சா, அச்சோ, அச்சச்சோ, அத்தா, அத்தே, அத்தை, அத்தோ இன்னவாறாக உணர்வுக் குறிப்புகளாய்ச் சொற்கள் வழங்குதல் இருவகை வழக்கிலும் காணப் படுபவையே. அந்தோ (ஐயோ) என்னும் உணர்வுக் குறிப்பு மிகத் தொன்மையது. அந்தீற்று ஓவும் அன்னீற்று ஓவும் தொல்காப்பியத்துச் சுட்டப் பெறும் சிறப்பின. அந்தீற்று ஓ - அந்தோ; அன்னீற்று ஓ - அன்னோ; இவ்விரண்டும் தந்தை தாயர் பெயர்களின் வழி வந்த உணர்வுச் சொற்களேயாம். அன்னோவுக்கு மூலம் அன்னை எனின் தெளிவு. அந்தோவுக்கு மூலம் அந்தை என்பதாக இருந்திருக்கும் என உணரலாமே! அந்த அந்தை என்னும் முறைப்பெயர் தொல்காப்பியர் காலத்திற்கு முற்படவே வழக்கிழந்து விட்டது எனக் கொள்ளலாம். சாத்தந்தை, கொற்றந்தை, கீரந்தை, ஆந்தை, பூந்தை முதலிய சொற்களின் புணர்ப்பெல்லாம் சாத்தன் + தந்தை = சாத்தந்தை; கொற்றன் + தந்தை = கொற்றந்தை முதலியனவாக இடர்ப்பட்டுச் செறிக்க வேண்டியதில்லையாம். சாத்தன் + அந்தை = சாத்தந்தை; கொற்றன்+ அந்தை = கொற்றந்தை என்பன போல இயையத் தக்கவாய்ப் புணர்ப்புற்றிருக்கும் என்க. ஆகலின், அந்தை என்னும் பெயர் தம் என்னும் உரிமை தழுவப் பெறுதலால் தந்தையாக நிலைத்தது எனக் கண்டு கொள்க. அக்கை என்பாள் உடன்பிறந்த மூத்தாள் அல்லளோ! அவள், தம் என்னும் உரிமை செறிதலால் தமக்கையாயதும், அங்கை என்னும் இளையாள் தம்முரிமையால் தமங்கையாய்த் தங்கையாய் மரூஉப் பெற்றதும் தெளிவேயாம். இனித் தம் முன்னும் பின்னும் உளரே! அவர் தம்முன், தம் பின், தம்பி என்பனவாக வழங்கப் பெறுகின்றனர் அல்லரோ! ஐயன் என்பது அண்ணனையும் குறிக்கும். அவ்வையன் முன் தம் என்னும் உரிமை இணையத் தமையனாக வழங்குகின்றது. தமர், தமன், தமள், தம்மோன், தம்மோள், தம்மோர், தம்மான், தம்மாமி, தம்மாய், தம்மோய் என்பன வெல்லாம் தம் என்னும் சொந்தங் காட்டி வந்த சொற்களாதல் தெளிவேயாம். இவ்வகையில் தம் + இமிழ் = தமிழ் ஆயது. தமக்கு இன்பமும் நலமும் விருப்பும் தொடர்பும் ஆயது எதுவோ அதைத் தமிழ் என்றனர். தமிழ் என் கிளவி எனச் சொல்லும் ஆயது (தொல். 385). தமக்கு இன்பம் செய்வது என்பதைத் தாமே இடலன்றி அயலார் இட்டனர் என்பது, அயலார் தம் முதன்மையும் மேன்மையும் முழுக்கரவும் ஏமாற்றும் கொண்டு படைத்து அல்லது புனைந்து கூறியதன்றி உண்மை அன்றாம். சமகிருதம் என்பது அம்மொழி, அம்மொழிக்கு இட்ட பெயராமே அன்றி அயலார் இட்டது ஆகாது என்பது தெளிக! இனி, தங்களுக்குரிய உயர்ந்த இனியவற்றைக் கூறுங்கால், இழுமென் மொழியால் விழுமியது நுவலல் என்றார் தொல்காப்பியர் (1494). தங்கள் உயிராய் உணர்வாய் அமைந்த மொழியைத் தமக்கு இன்பம் செய்வதாய்ச் சொல்லல் நனிநாகரிக இயற்கையாம். 9. திராவிடம் பொருள். ட்ராவிடம் ட்ரமிளம் என்பவற்றின் பொருள்தான் என்ன? துரத்தப்பட்டது என்பதே பொருளாம். ஒருவர், தம் முந்தையர் வழிவழியாக - வளப்பெரும் பொருளாக வழங்கிவரும் தாய்மொழியைத் துரத்தப்பட்டது என்று பெயரிட்டு வழங்கு வரோ? அதனைப் பெருமையாகப் பேசிப் பேறு சொல்லித் திளைப்பரோ? அயலவர், பழிக்கு முகத்தான் அமைத்துக் கொண்ட சொல்லே ட்ராவிடம் எனல் விளங்கத் தக்கதாம். தமிழ்சொரி சிந்தாமணித் தொகை ஒரு கதையை எடுத்துக் கொண்டு, தமிழ் நலமெல்லாம் கெழும முடிமுதல் (அந்தாதி) அடைவால் பாடுதல் தமிழ்சொரி சிந்தாமணித் தொகை எனப்படும். அந்தாதிப் பாக்கதை யாதல் தமிழ்சொரி சிந்தாமணித் தொகை யாம் - பிர. திர. 44 தமிழ்ப்பரணி கொண்டோன் முதல் இராசாதிராசன் (கி.பி. 1042 - 1052); இவன் முதல் இராசராசனின் பேரன். பாண்டிய நாடு, சேரநாடு, மேலைச் சளுக்கிய நாடு, இலங்கை ஆகிய நாடுகளை வென்றவன். இவனைப் பற்றிப் பாடப்பட்ட நூல் பரணி. தன் நாடையில் தமிழ்ப்பரணி கொண்டோன் (தெ.க.தொ. 5:607). இப்பரணி கிடைத்திலது. தமுக்கடித்தல் தமுக்கடித்தல் = பலர் அறியச் சொல்லல். ஊர் சாற்றுதல் என்பது இன்றும் வழக்கில் உள்ளது. கையில் தமுக்கு என்னும் ஒருபக்கப் பறை வைத்து அடித்துக் கொண்டு இடை இடையே நிறுத்தி, ஊரவர் அறிய வேண்டும் செய்தியைக் கூறும் வழக்கத்தில் இருந்து தமுக்கு அடித்தல் என்பது பலரறியச் செய்தல் என்னும் பொருள் தருவதாயிற்று. உன்னிடம் ஒன்று சொன்னால் போதும்; தமுக்கடித்து விடுவாயே என்பது இப்பொருளை விளக்கும். இந்நாளிலும் ஊராட்சி மன்ற அறிவிப்பு, ஏலம் விடுதல் ஆகியன தமுக்கடித்து அறிவிக்கப் பெறுவது உண்மையே. முன்னாளில் யானை மேல் இருந்து பறையறைந்து அறிவித்தல் வழக்கமாக இருந்தது. தமையன் தம் + ஐயன் = தமையன். தமக்கு மூத்தோனாம் - அப்பனுக்கு ஒப்பானவனாம் - அவன், தமையன் எனப்பட்டான். தந்தை தளரினும் மறையினும் குடிதாங்கி அவனாகலின் தமையன் எனப்பட்டான். சிதலை தினப்பட்ட ஆல மரத்தை மதலையாய் மற்றதன் வீழ்ஊன்றி யாங்கு குதலைமை தந்தைகண் தோன்றின்தான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும் - நாலடி. 197 தம் தம்:1 தன் என்னும் ஒருமைப் பெயரின் பன்மைப் பெயர், தம் என்பதாம். தம் மக்கள் - திருக். 63 தம்மின் தம்மக்கள் - திருக். 68 தம் இல் இருந்து தமதுபாத் துண்டற்றால் - திருக். 1107 தம் > தாம் ஆகும். தாமின்புறுவது (திருக். 399). தம் + தம் = தத்தம், தந்தம் எனவும் ஆகும். தத்தம் கருமமே கட்டளைக்கல் - திருக். 505 அவர்பொருள் தந்தம் வினையான் வரும் - திருக். 63 தம்:2 முத்தைத் தம்மென - பதிற். 85 பொருள்: முன்னே தம்மின் என்று (ப.உ.). தம் = தாரும் என்பதன் விகாரம் (பொருந. 101, நச்.). தம்பலத்தார் வெற்றிலை பாக்கு மென்று திரட்டிய உருண்டை தம்பலம் எனப்படும். தம்பலப் பூச்சி எனச் செம்பூச்சி யொன்றை மழைநாளில் புல்வெளியில் காணலாம். சிவப்பு நிறத்தால் பெற்ற பெயர். வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகிய மூன்றன் கூட்டால் அமையும் தம்பலம் போன்ற ஒட்டுடையவர் - உறவினர் - தம்மை, தம்பலம் என்பது நிலக்கோட்டை வட்டார வழக்காகும். தம்பலப்பூச்சி மழைக்காலத்தில் புல்வெளியில் பெருக்கமாகத் தோன்றி உலாவும் ஒரு பூச்சி தம்பலப்பூச்சி எனப்படும் (ம.வ.). தம்பலம் என்பது வெற்றிலை பாக்குப் போட்டு மென்ற திரட்டு. சிவந்த நிறத்தது. அந் நிறத்துப் பூச்சிக்கு ஆனது. வெற்றிலை மென்ற தம்பலம் கலித்தொகையில் இடம் பெறுகிறது. சிவந்த நிற மண் பரப்பில் அமைந்ததோர் ஊர்ப்பெயர் தம்பலம். பெரம்பலூர் மாவட்டத்தது. தம்பலம் சிவப்புப் பொருளது தம்பலம். செவல் நிலம் அமைந்த ஊர் தம்பலம் எனப்படுதல் அறியலாம். பெரம்பலூரின் பக்கம் தம்பலம் உண்டு. வெற்றிலை மென்றால் வாய் சிவக்கும். துவரும் (பாக்கு) சுண்ணமும் (சுண்ணாம்பும்) மெல் இலையொடு சேர்த்து மென்ற அளவில் அம் மெல்லிலைத் தம்பலத்தின் நிறம் என்ன? சிவப்புத் தானே! மழைநாள் விடியல் பொழுதில் புல்வெளியில் செம்பட்டு நிறமாய் நகரும் பூச்சியின் பெயர் தம்பலப்பூச்சி இல்லையா? தம்பலம் தருதல் (இலைமென்று தருதல்) சிற்றூர் முதியர் வழக்கன்றி இலக்கியமும் ஏறிவிட்டது (கலித். 65). தம்பல் என்பதும் இது. வெள்ளிலைத் தம்பல் குப்பை - கம்ப. கிட். 472 பசும்புல்லும் செம்பூச்சியும் இணைந்த தோற்றம் புலவனைக் கவர்ந்து மணிமிடை பவழமாய் உவமையுற்று, அகநானூற்றின் முப்பகுதியுள் ஒரு பகுதிப் பெயரும் ஆயிற்றே. தம்பி தம் + பின் = தம்பின். தமக்குப் பின்னால் பிறந்தவன் என்னும் பொருளில் வரும் இம்முறைப் பெயர் இறுதி னகர ஒற்றுக் கெட்டுத் தம்பி என நின்றது. தம்பியர், பன்மை (கம்ப. கிட். 263). நும்பின், எம்பின் என்பனவும் நும்பி, எம்பி என்றாயன காண்க. தம் மணத்தேர்வு (சுயம்வரம்) இலக்கியங்களில் வரும் சுயம்வரப் படலப் பொருளைத் தனியே வாங்கிக் கொண்டு அமைந்த அமைப்புடையது சுயம்வரம் எனப்படும் தன்மணத் தேர்வு நூலாம். பெற்றோன் மகள்வதுவை பேசியே தேசங்கட் குற்றோலை போக்க வுறமன்னர் - வெற்றியவன் மான்வதுவை செய்ய மகிழ்கலிவெண் பாவுரைத்தல் தேனே சுயம்வரப்பேர் செப்பு - பிர. திர. 61 மணம்பேசுதல், மன்னர்களுக்கு ஓலை போக்குதல், வந்த வேந்தருள் தேர்தல், அல்லது ஏதேனும் ஒரு வகையான் போட்டி வைத்துத் தேர்தல், வென்றவன் மணத்தல் ஆகிய செய்திகளைக் கலிவெண்பாவால் பாடுதல் தம்மணம் (சுயம்வரம்) என்னும் இலக்கிய வகை என்க. நள வெண்பாவிலும், பாரதத்திலும் வரும் சுயம்வரப் படலங்கள் அறியத் தக்கன. மன்னர் மணம் குறித்த சிற்றிலக்கிய வகையினது இது. பொது நிலைப் பாற்பட்டதன்றாம். களவின் வழிக் கற்புநெறி சிதைவுற்ற நிலையில் புறப்பட்ட சிற்றிலக்கிய வகை இது. இந்நாளில் மணவேட்கையர் இருபாலினரையும் ஓரிடத்துக் கூட்டித் தெரிவு செய்தலும், தெரிவு செய்தார் பலர்க்கும் ஓரிடத்தில் ஓரமைப்பு மணம் நடத்துவித்தலும் காண முடிகின்றது. தம்முன் தமக்கு மூத்தவனாம் அண்ணன் தம்முன் ஆவான். தம்முன் முழுதுற நின்றதுபோல் தம்பின் நில்லாமல் இறுதி னகர ஒற்றுக் கெட்டுத் தம்பி என நின்றது. எம்முன், நும்முன் என்பனவும் வழக்கே. வானமாள என் தம்முனை வைத்தவன் - கம்ப. கிட். 330 தயநாத்து உன் தயநாத்துக் கெல்லாம் நான்மசிய மாட்டேன் என்பது நெல்லை வழக்கு. தயநாத்து என்பது கெஞ்சுதல் - மன்றாடுதல் - பொருளது. நாற்று - நாத்து என்றாதல் வழக்கு. தயை - தயவு - தய என நின்றது. நாறுதல் என்பது முளைத்தல்; வெளிப்படுதல் தயவு ஏற்பட நீ கெஞ்சினாலும் நான் உதவமாட்டேன் என்பது பொருளாம். மசிதல் என்பது குழைவு கொள்ளல் பொருளது. மசித்தல் = கடைதல். தயிர் தை + இர் = தையிர் > தயிர். x.neh.: பை + இர் = பயிர். தைத்தல் = பிரை குத்தல். பிரை குத்தல் என்னும் மக்கள் வழக்கே தை என்பதை விளக்கும். பிரை விடல், பிரைமோர் விடல், பிரை குத்தல், உறைமோர் விடல், உறைவிடல் எனப் பலவும் மக்கள் வழக்குகள். தயிருடைக்கும் மத்தென்ன உலகைநலி சம்பரன் - கம். ஆரண். 199 தோயும் வெண்டயிர் மத்தொலி துள்ளவும் ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார் - கம். பால. 59 தரகு ஒரு பொருளைத் தரவும் பெறவும் ஊடாக இருந்து பெறும் தொகை தரகு ஆகும். அதனைச் செய்வார் தரகர். அதைச் செய்வதும் வணிகம் ஆகியமையால் தரகு வாணிகம் எனப்பட்டது. ஆடு, மாடு, மனை, நிலம், வீடு என இருந்த தரகு இப்பொழுது வேளாண் பொருள் அனைத்தும் தரகு வாணிகமாக மாறிவிட்டது. விளைவிப்பாரினும் தரகர்க்கே எவ்வகையிலும் இழப்பில்லா வருவாயும், இருந்த இடத்திருந்தே பேசி முடித்து வருவாய் பெறுதலும் ஆயிற்றாம். இக்கூறைத் தரகு ஆயத்தில் முதலாய் வருங்காசு தேவர் பெறுவாராகவும் (தெ.க.தொ. 17:452). தரங்கு அரங்குதல் = தேய்த்தல், தடவுதல், வருடல், அரங்கு > தரங்கு. தகர ஒற்று மிகல். புல் செதுக்கும் அல்லது களை செதுக்கும் கருவியைக் களைக் கொட்டு, களை கரண்டி, களைகொத்தி, சுரண்டி எனல் பொது வழக்கு. தரங்கு என்பது வில்லுக்குழி வட்டார வழக்கில் களை சுரண்டியைக் குறித்தல் அரிய சொல்லியல் நெறி, எளிமையாய் மக்கள் வழக்கில் இடம்பெற்ற சான்றாம். தரங்கு என்பது குதிங்கால் என்னும் பொருளில் கருங்கல் வட்டார வழக்கில் இடம் பெற்றுள்ளது. தரைதல் = ஊன்றுதல்; என்னும் வழியது அது. தரவு தரவு:1 பெற்றுக் கொண்டதற்குச் சான்றாகத் தரப் பெறும் சீட்டு. இவர் கையால் தரவு கொள்வோமாகும் (தெ.க.தொ. 5:215) பற்றுச்சீட்டு, ஏற்புச் சீட்டு என்பவற்றினும் தரவு எளிமையும் இனிமையும் அமைந்த கலைச்சொல். இதற்கு எதிர்நடைச் சான்று என்னும் பெயரும் உண்டு. தரவு:2 தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம் என்னும் கலிப்பா உறுப்பில் தலைப்படச் செய்தி தருவது தரவு எனப்பட்டது. நாடகத் தொடக்கமாகத் தரப்பெறும், தரு என்பது எண்ணத் தக்கது. நாடகக்காட்சிப் பொருளை முந்துறத் தருவது தரு. தரவை தரங்கம், கடல் அலை; கடல். தரங்கம்பாடி கடல்சார் ஊர். தரங்கம் என்னும் கடற்பெயர் தரவை எனப் பரமக் குடி வட்டார வழக்கில் உள்ளது. பரவை என்பது கடற்பெயர். பரவை > தரவை. வல்லொற்று மாற்றம் இது. பல்வகை வளங்களையும் கடல் தருவதால் தரவை என்பதுமாம். நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் - திருக். 17 தரு வேர் முதல் அனைத்தும் மக்கட்பயனுக்குத் தருதலால் தரு எனப்பட்டது. தருநிழல் என்பார் வள்ளலார். உணவா, நீரா, மருந்தா, உடையா, உறைவிடமா அது தாராமல் நமக்கு எதுவுண்டு? தருவே தருதல், தருகை, தருமம் ஆயவற்றின் மூலம். தருதல் ஈதல், கொடுத்தல் போல்வது தருதல், பசிவெப்பு அடங்கத் தருவது கொண்டு தருதல் என்பது உட்கொளல் பொருள் தருவது ஆயிற்று. தருகை நீண்ட தயரதன் (கம்ப. பாயி.) என்னும் இடத்துத் தருதல் கைச் செயல் ஆயினும், உண்ணுதல் பொருளில் வாய்ச் செயல் ஆயிற்றாம். தருமச் சிறப்பு (தரும விசேடம்): வஞ்சித் தாழிசை யாப்பால் முப்பத்திரு வகை அறங்களையும் எடுத்துரைத்தல் தருமச்சிறப்பு (தரும விசேடம்) என்னும் இலக்கிய வகையாம். முப்பத்திரண்டறம் முற்ற வஞ்சித் தாழிசையிற் செப்பல் தரும விசேடமாம் - பிர. திர. 45 அறம் 32; ஆதுலர்க்குச் சாலை, ஓதுவார்க்குணவு, அறுசமயத்தார்க்கு உண்டி, பசுவுக்கு வாயுறை, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அறவைச் சோறு, மகபெறுவித்தல், மகவு வளர்த்தல், மகப்பால் வார்த்தல், அறவைப் பிணம் சுடுதல், அறவைத் தூரியம், சுண்ணம், நோய்க்கு மருந்து, வண்ணார், நாவிதர் கண்ணாடி, காதோலை, சேலை, கண்மருந்து, பெண்போகம், பிறர்துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம், தடம், சோலை, ஆவுரிஞ்சு தறி, விலங்கிற்குணவு, ஏறுவிடுத்தல், விலை கொடுத்து உயிர் காத்தல், கன்னிகாதானம் (வெ.வி.பே.). இவை, ஒரு காலத்து ஒருவகை எண்ணிக்கை கொண்டு எண்ணப் பட்டவையாம். எண்ண எண்ண ‘எண்ணிக்கை உயரும் அறத்தை எண்ணிச் செயலன்றி எண்ணிக்கையால் வரம்பிடல் கூடுமோ? வள்ளுவ அறம் வாய்ச்சொல்லளவில் நின்ற காலையில் வந்தேறிய சரக்கெனல் வெளிப்படையாம். முழுதற வடிவே முப்பத்திருவகை அறம் பாலித்த (காஞ்சிப் புராணத்) தொன்மச் செய்தி எவரும் அறிந்ததே. அறம் வளர்த்த நாயகி என்னும் அம்மை பெயரை அறியலாமே! தருவை கால்வாய் ஓடை முதலியவற்றின் நீரால் அமைந்த ஏரிகள், குளங்கள் ஆயவை நெல்லை மாவட்ட வழக்கில் தருவை என வழங்கப்படுகின்றன. தருவது பெற்றுத் தருவதாம். நீர்நிலைக்குத் தருவை என்னும் பெயரீடு இருப்பது சிறப்புமிக்க ஆட்சியதாம். எ-டு: புத்தன் தருவை. தலசு தலைசு என்பது ஐகாரம் அகரமாதல் முறைப்படி வந்தது. தலைமையானது, தலைமை என்னும் பொருளது அது. பெரியகுளம் வட்டாரத்தில் தலசு என்பது தலைவர் என்னும் பொருளில் வழங்குகின்றது. தலைமை பொது வழக்கும், பெரு வழக்குமாம். தலைச்சன் என்பது தலைமகன் என்னும் பொருளது. சேரல வழக்கு. தலை தலை என்பது தலையைக் குறித்தல் பொது வழக்கு. அது தலையைக் குறியாமல் ஆள், ஆளுக்கு எனக் குறித்தல் உண்டு. அதுவும் பொது வழக்காகிவிட்டது. தலைக்கு ஐந்து கொடு என்பதில் ஆளுக்கு என்பதே பொருள். இது பெரும் பிழைப் பொதுவழக்காகத் தலா என வழங்குகின்றது. துலை என்னும் ஏற்ற இறைவைப் பொறியும் தலாக் கிணறு, தலா எனப் பிழை வழக்குக் கொண்டுள்ளது. தலை கவிழ்தல் தலை கவிழ்தல் = இழிவுறுதல். ஒருவர் செய்த பிழையைச் சுட்டிக் காட்டும் போது, சுட்டப் பட்டவர் மானியாக இருப்பின் அவர் தலை கவிழ்தல் இயற்கை. தலை கவிழ்தல் என்பது இதனால் இழிவுப் பொருள் தருவதாயிற்று. புகழ் அமைந்த மனையாளை இல்லாதவனுக்கு ஏறு போல் பெருமிதமாக நடக்கும் நடை இல்லை என்றார் திருவள்ளுவர். ஏறு போல் நடையாவது தலையெடுத்து நிமிர்ந்து செல்லும் நடையாம். களவு கண்டுபிடிக்கப்பட்டுக் குற்றவாளியாக ஊர் மன்றத்தில் நிறுத்தப்பட்டவன் தலைகவிழ்ந்து காலால் நிலங்கிளைத்தலைக் குறித்துக் காட்டலுண்டு. தலைகவிழ வைத்து விட்டாயே என்று தம் தொடர்பாளர் செய்த குறைக்காகப் புண்படுவார் கூறுவரெனின் தலை கவிழல் இழிவு நன்கு புலனாம். தலைகாட்டாமை தலைகாட்டாமை = முன்வராமை. தலை என்பது உறுப்பைக் குறியாமல் உறுப்புடையானைக் குறிப்பதாம். தலைக்கு இரண்டு என்றால் ஆளுக்கு இரண்டு என்பது போன்ற வழக்கு உடையதாகும் இது. பல நாள் பார்க்காதிருந்த ஒருவரைப் பார்க்க நேர்ந்தால் தலையைக் காணவில்லையே; வெளியூர் போயிருந்தீர்களா? என வினவுதல் பெரும்பான்மையர் வழக்கு. நீ செய்த செயலுக்கு என்முன் தலைகாட்ட எப்படித்தான் முடிகிறது? என்று வருந்துவதோ, தலைகாட்டினாயோ பார் என்று எச்சரிப்பதோ வழக்கில் உள்ளவையே. தலைக்கட்டல் தலைக்கட்டல் = சீர்செய்தல். தலைக்கட்டல் என்பது தலையைக் கட்டுதல் என்னும் பொருளைக் குறியாமல் சீர்செய்தல், சரிசெய்தல் என்னும் பொருளில் வருவது உண்டு. நீங்கள் தலைக்கட்டாவிட்டால் பெரிய பெரிய விளைவுகள் எல்லாம் ஏற்பட்டிருக்கும் என்பதில் இப்பொருள் உண்மை விளங்கும். தலைப்படுதல் என்பது முன்னின்று செய்தலையும், தலைக்கட்டல் என்பது முன்னின்று காத்தலையும் குறித்தமை நோக்கத் தலை என்பதன் முதன்மை, தலைமைப் பொருள்கள் விளங்கும். தன்னைக் கட்டல் என்பதும் இது (ம.வ.). தலைக்கட்டு தலைக்கட்டு = கணவன் மனைவி மக்கள் ஆகிய குடும்பம். தலை என்பது ஆள் என்னும் பொருளது. தலையை எண்ணுதல் ஆளை எண்ணுதலாம். தலைக்கட்டுக்குத் தக்க கோயில்வரி, ஊர்வரி வாங்குதல் இன்றும் நடைமுறை. ஒரு கணவன், மனைவி அவர்களின் குழந்தைகள் என்னும் அளவே தலைக்கட்டு எனப்படுகிறது. ஆகலின், பொதுக்குடும்பம் என்னும் அளவில் குறைந்து பொதுக்குடும்பத்தின் ஓர் உறுப்பாகிய சிறு குடும்பத்தின் அளவே தலைக்கட்டாகும். இந்த ஊரில் ஐந்நூறு தலைக்கட்டு இருக்கிறது எனக் கணக்கிடுவர். ஆனால், முந்நூறு வீடுகள் கூட அவ்வூரில் இரா. இரண்டு மூன்று தலைக்கட்டுகளும் ஒரு குடும்பத்தில் இருத்தலுண்டு. கூட்டுக் குடும்பம் என்பது பல தலைக் கட்டுகளை யுடையது. தலைக்கோலி ஆடல் மகளிர்க்குத் தரப்பெறும் விருது தலைக்கோலி என்பதாம். தலைக்கோல் தானம் - சிலப். 3:3 திருவிடை மருதூரில் உள்ள திருமால் கோயில் பெயர், தலைக்கோலி விண்ணகர் என்பது. திருவாரூர் திருவீதி வடசிறகில் பதியிலாரில் உமையாழ்வியான அழகிலு மழகிய தேவத் தலைக்கோலி தெ.க.தொ. 17:600 தலைச்சமாடு தலைத்த மாடு > தலைச்சமாடு. தலை = முதல், முதன்மை; மாடு = செல்வம். தலைச்சமாடு, தலைச்சான் மாடாகவும் சொல்லப்படும். தலைச்ச மாடாக வைத்த பூலாஞ்செய் மூன்றுமா (தெ.க.தொ. 5:590). தலைச்சான் மாடாக வைத்தோம் (தெ.க.தொ. 19:173). தலைதடவல் தலை தடவல் = சுரண்டுதல், முழுவதும் பறித்தல். தலையில் ஈரும் பேனும் சேர்ந்து விட்டாலும் அழுக்குப் பிடித்து விட்டாலும் தலையைச் சொறிவதோடு அல்லாமல் சுரண்ட நேரும். கையால் தலையைத் தடவுவதுடன் விரல்களால் சொறிந்து தினவைப் போக்கிக் கொள்ளல் காணக் கூடியதே. இத் தலை தடவலில் சுரண்டுவதும் உண்டாகலின் பிறர் செல்வத்தைச் சுரண்டுவதைத் தலைதடவலாகக் கூறும் வழக்கம் உண்டாயிற்று. இனித் தலையைத் தடவல் அன்பின் அடையாளம். அவ்வாறு தலையைத் தடவி அன்பை வெளிப்படுத்துவது போல் மயக்கித் தம் தேவையை நிறைவேற்றிக் கொள்ளலும் தலை தடவலாக வழங்குவதாம். தலை தடவல் என்பதில் மற்றொரு பொருளும் உண்டு. தலையை முழுக்கத் தடவி மழிப்பது போல, உள்ளவற்றை எல்லாம் பறித்துக் கொள்வதாம். தலைப்பாகை தலையில் பாகுபடச் சுற்றிக் கட்டும் எழிற்கோலம். தலைப்பாகை அணிதல் ஆசிரியர், வழக்குரைஞர் அடையாளமாக ஆங்கிலர் காலத்தில் இருந்தது. அது பழநாளில் ஆள்பவர், ஊராளிகள், பொதுமக்கள் வழக்கிலும் இருந்தது. உழைப்பாளர் தலைப்பாகை, தலைக்காப்பரணமாக இருந்தது. வெயில் மழைக்காப்பு அது. தலைப்பா கட்டி ஊனுணவகப் பேர் உலாவரல் இந்நாள் புதுமை. தலைப்பிணி விலக்கு தலைப்பிணி விலக்கு = சீயக்காய். தலையில் முடி சேர்ந்து கற்றையாகி விடாமல் - சடையாகி விடாமல் - தனித்தனி முடியாகப் பயன்படுத்தும் காய் சீயக்காய் ஆகும். சீத்தல் = அழுக்கு நீக்குதல். தலைப்பிணி விலக்கு என்பது முடிசேர்தலை மட்டுமன்றிச் சொண்டு, சொறி, ஈர், பேன் என்பனவும் பற்றாமல் செய்வது என்பதை எண்ணினால் மேலும் இவ்வழக்கின் சிறப்பு விளங்கும். இது நெல்லை வழக்கு. தலைமுழுகல் தலைமுழுகல் = தீர்த்து விடல், ஒழித்து விடல். சிக்கு அழுக்கு ஆகியவற்றைப் போக்கத் தலைமுழுகுதல் தமிழர் வழக்கம். எண்ணெய் தேய்த்துச் சீயக்காய் தேய்த்து நீராடல் வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் எனவும் திட்டப்படுத்தியுள்ளனர். இத்தலைமுழுகல், முழுகுதலைக் குறியாமல், தலை முழுகுவதால் உண்டாகும் (அழுக்குப்) போக்குதல் - விலக்குதல் - பொருளைக் கொண்டு வழக்கத்தில் உள்ளதாம். உன்னைத் தலைமுழுகி விட்டேன் என்று ஒரு கணவன் மனைவியைப் பார்த்துச் சொன்னால், உன்னைத் தீர்த்துவிட்டேன் என்பது பொருளாகும். இனி, ஒருவர் இறந்தால் நீரினில் மூழ்கி நினைப்பொழிதல் உண்மையால், ஒழித்துவிடல் பொருளும் அதற்கு உண்டாம். தலையாட்டிப் பிழைப்பு தலையாட்டிப் பிழைப்பு = ஆமாம் ஆமாம் என்று சொல்லிப் பிழைத்தல். தன்னலம் நாடும் ஒருவன் எவர் என்ன சொன்னாலும் ஆமாம் ஆமாம் என்று சொல்வதை அன்றி மறுப்பதே இல்லை. ஆமாம் என்பதை வாயால் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தலையாட்டலை மறவார். அதனால் அத்தகையர் தலையாட்டி எனவே பட்டப்பெயர் பெறலும் உண்டு. கோயில் மாடுகளுக்குத் தலையாட்டும் பயிற்சி தந்து என்ன சொன்னாலும் தலையாட்ட வைப்பார் உளர். அம்மாடு போலத் தலையாட்டுவாரைத் தலையாட்டிப் பொம்மை, ஆமாம் சாமி என்பதும் வழக்கே. தலையிடுதல் தலையிடுதல் = பங்கு கொள்ளல்; ஊடு புகுதல்; தீர்த்து வைத்தல். எங்களுக்குள் ஆயிரம் இருக்கும் நீங்கள் இதில் தலையிட வேண்டியதில்லை என்பது பங்கு கொள்ள வேண்டா ஊடு புக வேண்டா என்னும் பொருளவாக அமையும். நீங்கள் தலையிட்டால் அல்லாமல் சீராகாது என்பதில் தலையிடுதல் தீர்த்து வைத்தல் பொருளதாக அமைகின்றது. தலையீடும் இப்பொருள் கொள்வதே. தலையில் அடித்தல் தலையில் அடித்தல் = உறுதி கூறல். தலையில் அடித்துச் சொல்கிறேன் என்றால் உறுதி மொழிகிறேன் என்பது பொருள். உறுதிமொழிவார் துணியைத் தாண்டல், பிள்ளையைத் தாண்டல், தெய்வத்தின் மேல் ஆணை கூறல், கையடித்தல், தலையில் அடித்துக் கூறல் நெஞ்சில் கை வைத்துக் கூறல் என்பன வெல்லாம் வழக்கில் உள்ளவை. வாக்கை மட்டும் உறுதியாக்காமல், மற்றொரு செயல் உறுதியையும் கொண்டது இது. தலை தொட்டேன் என வரும் இலக்கிய ஆட்சி, தலையில் அடித்து உறுதி கூறல் பழமையை உரைக்கும். தலையில் அடித்துச் சொல்லவா என்றால் உறுதி சொல்லவா என்று வினவுதலாம். தலையைக் குலுக்கல் தலையைக் குலுக்கல் = மறுத்தல். தலையாட்டுதலுக்கு எதிரிடையானது தலையைக் குலுக்குதலாம். தலையாட்டல் என்பது ஒப்புகை; தலையைக் குலுக்கல் என்பது மறுதலிக்கை. ஆட்டுதல் என்பது ஒருமுறை, இருமுறை தலையசைத்தலாக அமையும். குலுக்கல், பல்கால் அசைத்தலாக இருக்கும். ஊம் என்பது ஏற்றுக் கொள்ளலையும் ஊகூம் என்பது ஏற்றுக் கொள்ளாது மறுத்தலாக இருப்பதையும் அறிக. தலையாட்டிக் கெட்ட நீ இப்பொழுது ஏன் குலுக்குகிறாய் என்பதில் ஆட்டல், குலுக்கல் இரண்டன் பொருளும் தெளிவாம். தலைவைத்தல் தலைவைத்தல் - தலையளி செய்தல், உடனிருத்தல், சோறளித்தல், படைக்கலம் வழங்கல் பாராட்டெடுத்தல், பரிசு வழங்கல் முதலியன. தலை வைத்தல் - தலைவனாக வைத்தலுமாம். தவல் தவல் = தவிர்தல். நீங்கல் பொருளது. இலக்கிய வழக்கு. இகலின் மிகலினிது என்பவர் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து - திருக். 856 தவசம் தவ என்னும் அடிச்சொல் சுருங்கிய சிறுகிய என்னும் பொருள்தருவது. உண்ணவும் தின்னவும் கறிக்கவும் பயன்படும் உணவுப் பொருள்களுள் தவசம் (தானியம்) என்று சொல்லப்படுவன அளவால் சுருங்கி அல்லது சிறுகியிருத்தல் அறிக. ஒன்பான் கூலம் என்றும் பதினெண்வகை என்றும் அவை கூறப்படும். * தவம் காண்க. தவசி தவத்தன்மை வாய்ந்தவரைத் துறவி என்பது பொதுவழக்கு. இப்பெயருடையாரும் உளர். தவசிப் பிள்ளை என்பார் துறவர் மடத்துச் சமையல்காரரைக் குறித்துப் பின்னர்ப் பொதுவகையில் சமையல் செய்வார்க்கு ஆயிற்று. இது தென்தமிழக வழக்கு. தவணை பாறைகள் சில தகடு தகடாகப் பிளவுபட்டு அடுக்கடுக்காக இருக்கும். அடுக்குப் பாறை எனப்படும். அடுக்கில் ஒரு பிளவைத் தகணை என்பர். அத்தகணை ஒன்றை எடுத்து அதன் கீழ்த்தகணை பக்கத்தகணைகளைக் கடப்பாறைக் கம்பியால் வெடிபோடாமல் உளி வைத்து அடியாமல் எடுப்பர். அவ்வாறு, வாங்கிய ஒரு தொகையை மொத்தமாகத் தராமல் தகணை எடுப்பது போல் எடுப்பது தவணை எனப்பட்டது. தவணைக் கடன் உலகளாவிய வணிக வகையாயிற்று. கரும்பின் வரைக்கு வரை இடையிட்ட பகுதி தகணை எனப்படுவதும் எண்ணத் தக்கது. கரும்பு பல தகண்களை உடையது. இரு தகண்களைத் தறித்து ஊன்றிப் பயிரிடுவது கரும்பு பயிரிடு முறையாம். தகணை கணு எனவும் வழங்கும். தவம் தவம் என்பது தனிச் சிறப்பினது. நோன்பு என்பதும் அது. அந்நிலையும் புறக்கோலம் கொள்ளாதது மட்டுமன்று; புறக்கோலம் பொய்க்கோலமாதலைக் கண்டித்துக் கூடா ஒழுக்கம் (கைக்கொள்ளக் கூடாத ஒழுக்கம்) என்று பெயர் சூட்டும் செய்வது. தவ என்பது ஓர் உரிச்சொல். அது மிகுதி என்னும் பொருள் தருவது. அருள் மிகுதியுடைமை காட்டித் தவம் என நின்றது. மற்றொன்று, தவ் என்பது சுருங்குதல் பொருளது. கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து - திருக். 1144 என்பதால் அச்சுருங்குதல் பொருள் விளக்கமாம். தம் தேவையைச் சுருக்கிச் சேவையைப் பெருக்கல் தவம் என்பதுமாம். மேலும், தவம் என்பதன் பொருள் இன்னது என்பதை மயக்கம் இல்லாமல் அறிந்து கொள்ள வேண்டி, அதனை எடுத்த எடுப்பிலேயே எளிமையாய், அதே பொழுதில் அருமையாய்க் கூறுகிறார் வள்ளுவர். உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு - திருக். 261 என்பது அது. தமக்கு உண்டாகும் துன்பங்களைப் பொறுத்தலும் மற்றை உயிர்களுக்குத் தாம் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும் என்கிறார். தவ வடிவம் இன்னது எனப் பலர் பலவகையால் கூறியமையால், அற்றே தவத்திற்கு உரு என்றார். காவி, கெண்டி, முக்கோல், பலகை, தோல், நூல், மணிமாலை எனப்பல தவமெனக் கொள்ளுவாரை எண்ணி உண்மை உரைத்தது இது. வீடு துறத்தலும் மனை மக்கள் துறத்தலும் காடு புகலும் கடுநோன்பு கொள்ளலும் வள்ளுவத் தவ வழியுமன்று; பழந்தமிழ் நெறியுமன்று; இல்லறம் ஒன்றே அறம்! அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை, அறத்தான் வருவதே இன்பம் என்பன குறளியல். துறவோ எனின், இல்லறஞ் சிறந்த நாளில் கணவன், தன் மனைவியொடும் மக்களொடும் சுற்றத்தொடும் இருந்து செய்யும் பொதுநலச் செயல்கள் செய்தலாம். அதனால், அத்துறவு தம்நலம் நீங்கிப் பொதுநலப் பொறுப்பில் தலைப்பட்டுக் கடமை புரிதலாம். பள்ளிக் கல்வி தேர்ந்தார், கல்லூரிக் கல்வி கற்றலைப் போல அமைந்த வளர்நிலையே இல்லறச் செயற்பாட்டின் மேலோங்கிய துறவற நிலை என்க! இதனைத் தொல்காப்பியக் கற்பியல், காமஞ் சான்ற கடைகோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே என்று கூறும் (51) சிறந்தது பயிற்றல் என்றதே தவம். இறந்ததன் பயன், அது காறும் வாழ்ந்த இல்வாழ்வின் பயன். தவழ்தல் தவழ்தல் > தாழ்தல். குழந்தை தலைதாழ்ந்து மண்டியிட்டு நடக்கத் தொடங்கும், தொடக்க நிலை தவழ்தலாகும். கிடத்தல், புரளுதல், பிறழ்தல், தவழ்தல் என்பவை நடப்பதற்கு முன்னிலைகள்! தவழ்ந்து தலைதூக்கிக் கையுயர்த்திக் காலூன்றி அடி எடுத்து வைத்தல் நடத்தலாம். தவளை தவழ்ந்து செல்லும் ஓர் உயிரி. குழந்தை நடக்கத் தொடங்கு முன் இயங்கும் தன் இயக்கம் தவழ்தல் என வழங்கப்படுதல் அறிக. கால் அமைப்பு, கை அமைப்பு, தலைஅமைப்பு, இயக்கம், நிலம் தழுவல் இன்னவெல்லாம் தவளை தவழ்தலை ஒப்ப இருத்தல் அறிக. ர, ற என்பவை ஒப்ப, ழ ள என்பவை ஒப்பப் பயன்படுத்திய காலமும் உண்டு என்றறிக. எ-டு: தேர்வு தேறினான் கரி > கருப்பு > கறுப்பு. சூல்தவளை நீருழக்கும் - கம். ஆரண். 346 தவள முத்தம் குறுவாள் - சிலப். 7:20 தவளும் முத்து = தவச மணி. உலக்கை இடிக்க இடிப்புக்கு ஆட்பட்ட தவசம் உரலை விட்டு வெளியே துள்ளல். துள்ளி வெளியேறலைத் தடுக்க உறைப்பெட்டி உரல்மேல் வைப்பர். எனினும் மணிகள் சிதறல் கண்கூடு. அது தவளலாம். மனைஅளகு வள்ளைக்கு உறங்கும் என்பது வள்ளுவமாலை. உலக்கை போட்டுக் குற்றுதலால் வெளியே சிந்தும் மணிகளைத் தின்னவந்த கோழி உலக்கை போடுவார் பாடல் கேட்டுத் தீனியை மறந்து பாடலிசையில் உறங்கிப் போகுமாம்! தவளும் மணிகளைப் பொறுக்கித் தின்னவே கோழி வந்தமை மணி தவளலை விளக்கும். தவளைக் குரங்கு நிலையையும் கதவையும் இணைக்கும் வளைகம்பித் தாழ்ப்பாளைத் தவளைக் குரங்கு என்பர். வளை கம்பியைப் பெறும் வளைவு கொண்டி எனப்படும். ஒன்றைத் தன்னிடம் கொள்வது கொண்டி எனப்பட்டது. கொள்ளையடிப்பது கொண்டி எனப்படுதல் பண்டை வழக்கு. முகவை, நெல்லை வட்டார வழக்கில் தவளைக் குரங்கும் கொண்டியும் உள. தவளை நோய் தவளை தத்துவதெனத் தத்திப் பற்றும் ஏலச் செடியின் நோய் தவளை நோய் எனத் தோட்டத் தொழில் புரிபவர் வழக்கில் உள்ளது. தேரை, யானை என்பவை நோய்ப் பெயராக இருப்பது போன்றது இத் தவளை என்னும் நோய்ப் பெயருமாம். தவறிவிட்டார் தவறு செய்துவிட்டார் என்பது பொதுப்பொருள். இறந்துவிட்டார் என்பது சிறப்புப் பொருள். தவறு செய்தலையும் இறப்பையும் ஒரே சொல்வகையால் குறிப்பது ஏன்? தவறு செய்பவன் உயிரோடு உலவினாலும் இறந்தானாகவே சான்றோர் எண்ணத்தில் இருப்பர் என்பது இதன் உட்பொருளாம். தவறிப்போதல், தவறி விழுதல் என்பவை காணாமல் போதலும், தடுக்கி விழுதலுமாம். தவல் > தவறு > தவறுதல். * தப்பு காண்க. தவறு தவல் > தவறு. தவல் = விழுதல், நீங்குதல், இறத்தல் பொருளது. தவறு நிலையில் இழிதல், புகழ் நீங்கல், இறந்தவர்க்கு ஒப்பாதல் என்னும் பொருள் தருவனவாம். அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க் குண்டோ தவறு - திருக். 1154 தவி தவிசு என்பது பலகை. இருப்புப் பலகை, தட்டுப் பலகை எனப்படும். அகப்பை வகையில் தட்டகப்பை என்பதும் ஒன்று. குமரி மாவட்டத்தில் தவி என்பது அகப்பை என்னும் பொருள் தருதலை நோக்கச் சோற்றுச் சட்டுவம் மரத்தால் ஒரு காலத்தில் இருந்தமையை உணரலாம். தவிசு தவிர் > தவி > தவிசு. நிலத்தில் இருக்கும் இருப்பைத் தவிர்த்து மேலிருக்கச் செய்யும் உயர இருக்கை தவிசு ஆகும். பணிந்துமணி செற்றுபு குயிற்றிஅவிர் பைம்பொன் அணிந்த தவிசு இட்டதில் அருத்தியோடு இருத்தி - கம். பால. 322 தவிடு தவு > தவிடு. தவு > தபு = நீக்குதல் பொருளது (தொல். 1025). அரிசிக்கும் உமிக்கும் இடையே இருக்கும் ஒட்டுமி தவிடு ஆகும். தவிடு நீக்கியே அரிசியை ஆக்குவதற்குக் கொள்வர். தவிடு போக்கவே கழுந்துலக்கை உண்டு. தவிடு எண்ணெய்ப்பதம் உடையது. ஆதலால், தவிட்டு எண்ணெய் என எடுத்து வணிகப் பொருளாகிவிட்டது. பருத்தி விதை, பிண்ணாக்கு ஆகிய இவற்றுடன் தவிடு மாட்டுக்கு நல்ல உணவுப் பொருளாகின்றது. கோழியின் தீனியாகத் தவிடு பெரிதும் பயன் செய்கின்றது. தவிட்டை இனிப்புக் கலந்து உருட்டிச் சிற்றுணவாக்கலும் வழக்கு. தவிட்டை மெச்சினாள் பொக்கை வாய்ச்சி என்பதால் பல் இல்லார்க்கும் அஃது உணவாதல் விளங்கும். தவித்தல் நீர் பருகுதலை விரும்பும் பெருவேட்கை, தவித்தலாகும். தவிக்கிறது தண்ணீர் தருக என்பது வழக்கு. தவித்த வாய்க்குத் தண்ணீர் தரவுமா பஞ்சம் என்பதும் வழக்கு. நீர் வேட்கை போல் கல்வி, ஆய்வு, கண்டுபிடிப்பு ஆயவற்றின் மேல் உண்டாகும் பெரு வேட்கையும் தவிப்பாம். அதனைக் கண்டுபிடிக்க அவரைக் காண, அதனைப் பெறத் தவியாய்த் தவிக்கிறேன் என்பது மக்கள் வழக்காயிற்று. பருகுவன் அன்ன ஆர்வம் என்பது தவிப்பு. அதனை நீங்குவது தவிர்ப்பு ஆயது. தவிப்பு தவிப்பு:1 தவிர்ப்பு > தவிப்பு. கையில் இருந்த ஒன்று தவிர்ந்து - நீங்கிவிட்டால் அதனைக் கண்டடையும் வரை கால் ஓயாது. கண்மூட முடியாது. அதிலும் குழந்தைகள் தவிர்ந்துவிட்டது என்றால் சொல்ல வேண்டியது இல்லை. காணாமல் போனது; கண்டடைந்தோம்; களிப்புறு வோம் என்பது நல்லோர் உரை. உன்னைத் தேடித் தவியாய்த் தவித்தேன் என்பது ம.வ. தவிப்பு ஆவது தவிர்ந்து போனதால் ஏற்பட்ட ஏக்கம் துயர். தவிப்பு:2 தண்ணீர் தவிக்கிறது என்பது நீர் வேட்கை வழியது. தவுள் பனங்கொட்டையின் உள்ளீடாக இருக்கும் பருப்பைத் தவுள் என்பது தூத்துக்குடி வட்டாரத்தார் வழக்கு. கரும்பின் கணுவூடு துண்டு தவணை தவண் எனப்படுவது போல வழங்கும் வழக்கு இது. தவண், தவுள் என்பவை கவளம் என்பது போல் உட்கொள்ளல் பொருளில் வழங்குதலை அறியலாம். தவ்வாண்டை தவ்வி ஆடுதல் தவ்வாண்டை. நீருள் தாவி விளையாடுதலைத் திருவில்லிப் புத்தூர் வட்டாரத்தார் தவ்வாண்டை என்பர். விளையாட்டு விளையாண்டோம் என்பதில் ஆட்டு, ஆண்டு ஆயது போல ஆயது இது. தவ்வுதல் = தாவுதல். மேலெழும்புதல் பொருளது தாவுதல். சோர்வுறல் பொருளது தவ் என்பது இது மதுரை வட்டார வழக்குமாம். * தவம் காண்க. தழல் தழல் = தீ. தன்முன் உள்ள எதனையும் தழுவிக் கொள்வதால் தழல் எனப்பட்டது. அது தண்ணீரைத் தழுவுங்கால் தன் வெம்மையை இழந்து போவதால் தணல் எனப்பட்டது. வெதுப்புதலும் தணிதலும் உண்மையால் தழல் எனவும் தணல் எனவும் ஆயின. மற்றும் ஒன்று; பொதுவகையில் அது தண்மை (குளிர்மை) அற்றது ஆதலால் தண் + அல் = தணல் எனப் பெற்றதுமாம். தழுகை வழுவழுப்பு என்பதன் வழிவந்த பெயர் வாழை. அது தழுதழுப்பு என்பதன் வழியாக ஏலக்காய்த் தோட்டத்தார் வழக்கில் அறிய வருகின்றது. வாழை இலையைத் தழுகை என்கின்றனர். இனித் தழுகை என்பது இறந்தார்க்குப் பன்னிரண்டாம் நாள் செய்யும் கடனாகக் கம்பம் வட்டாரத்தில் வழங்குதல், வாழை யிலையில் படைத்தல் வழியாக ஏற்பட்டிருக்கலாம். மற்றொன்று இறந்தவர்க்குப் படைக்கும் படையல் தெய்வப் படையலாய்க் கொண்டு, தளுகை எனப்படவும் கூடும். தளி = கோயில்; தளிகை > தளுகை = கோயிலில் தரும் தெய்வ உணவு. * தளிகை காண்க. தழும்பு புண் ஆறிப் போன வடு தழும்பு எனப்படும். தோலின் வியர்வைக்கால், மயிர் என்பவை இல்லாமல் தழுதழுப்பாக இருப்பதால் பெற்ற பெயர் அது. வழுதுணங்காய்த் தோல் போல்வது. தழும்பன் என்பவன் ஒரு குறுநில மன்னன். தழும்பால் பெயர் பெற்றவன். இரும்பாண் ஒக்கல் தலைவன் பெரும்புண் ஏஎர் தழும்பன் - நற். 300 பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும் - புறம். 200 தளவு தளதளப்பு, ஒளியுடையதாதலால் தூய வெள்ளை ஒளியுடைய முல்லை மலர் தளவு எனப்பட்டது. ஒளிமிக்க மலர் முல்லை. ஆதலால் மகளிர் வெண்ணிறப் பல்லுக்கு முல்லைத் தளவும், முத்தும் உவமை சொல்லப்பட்டன. பச்சை அரிசி தூய வெண்ணிறத்தது ஆதலால் அரிசிப்பல் என்பது ம.வ. தளி தளி = மழை. புல்முதலாம் எவற்றையும் தளிர்க்கச் செய்வது மழையாதலின் தளி என்பது மழையாயிற்று. கருவி வானம் தண்தளி சொரிந்தென - பதிற். 76 தற்பாடிய தளி உணவின் புள் - பட். 3 தளிகை தளி = கோயில்; தளிகை = கோயிலில் வழங்கப்படும் தெய்வ உணவு அல்லது திருவுணவு. இது ஐயங்கார் என்னும் குடியினரால் சமையல் என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. தளிமம் குளிர்ச்சி, திருக்கோயில், மழை, விளக்கு முதலிய பொருள் தரும் தளியின் அடியாகப் பிறந்த தளிமம் அழகுப் பொருளுக்கு உரிமை பூண்டதாம். உளத்திற்கு உவகையும் நிறைவும் தருவனவெல்லாம் அழகின் இருக்கையாகலின் தளிப் பொருளெல்லாம் அழகின் மூலமேயாம். தளிர் பொதிந்திருந்த இயற்கை இலையாய் வெளித்தள்ளுதல் தளிர் ஆகும். வெளித்தள்ளல், வாழை குலைதள்ளல் என்பதால் விளங்கும். தள்ளை என்பதற்குத் தாய் என்னும் பொருள் உளதாதல், மகவை ஈனல் (தள்ளல்) பொருள் கொண்டேயாம். தளிர் மேலும் பெரிதாக எழும்புதல் துளிர் ஆகும். துள்ளுதல் மேலெழுதல் நீர்துள்ளல் துளி. மீன் துள்ளல், மான்துள்ளல், துள்ளாட்டம், துள்ளுகுட்டி என்பவை வழக்கில் உள்ளவை. துள்ளித்தூண் முட்டுமாம் கீழ் - நாலடி. 64 தளுக்குதல் தளுக்குதல் = நடிப்பால் மயக்குதல். தளுக்கு என்பது உடலை வளைத்தலும் நெளித்தலுமாம். உடலை வளைத்தும் நெளித்தும் இயற்கைக்குப் பொருந்தா வகையில் குழைவர் சிலர். அவரைத் தளுக்குபவராகக் குறிப்பர். இந்தத் தளுக்குடன் அணிகலன், ஆடை, பூச்சு, புனைவு எல்லாம் காட்டிப் பசப்புபவரும் உண்டு. அதனை மினுக்குதல் என்பர். இந்தத் தளுக்கும் மினுக்கும் எவரைக் கெடுக்கவோ? எனப் பார்த்த அளவானே கூறுவதுண்டு. அதற்கு மயங்கி அழிபவர்களும் பலப்பலர். தளுக்குதலும், மினுக்குதலும் உடையவர் மயங்க வைத்துத் தம் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வஞ்சர் என்க. இவை பாற்பொதுவின எனினும், பெண்டிரைப் பற்றியே பெருவழக்காக உள்ளது. தளை போடுதல் தளை போடுதல் = திருமணம் செய்வித்தல். கழுதைக்குத் தளை போடுதல் வழக்கம். முன்னங்கால் இரண்டையும் சேர்த்துத் தளைந்துவிட்டால் அது ஓடிப் போகாது. போனாலும் எளிதில் கண்டுபிடித்துக் கொள்ளலாம். தளையாவது கட்டு. ஒருவன் வீட்டில் கட்டுப்பட்டு இருப்பதற்கு வழி தாலி கட்டித் திருமணம் செய்து விடுவது என்ற கருத்தால் தளை போடுதல் என்பது திருமணத்திற்கு ஆகியது. கட்டிக் கொள்ளுதல், தாலி கட்டுதல், கட்டிய மனைவி என்பவற்றில் வரும் கட்டுதல் திருமணத்தைக் குறிப்பதாம். ஊர் வழி சுற்றாமல், மனைவியை நினைத்து வீடு தேடி வருவதற்கு உதவியாகத் திருமணம் இருப்பதைக் கருதித் தளைபோடுதல் என்பது வழக்காயிற்று. திருமணத்தைத் தாலிகட்டு என்பதும் ம.வ. தாலிகட்டும் பொழுது கொட்டும் மேளம், கட்டி (கெட்டி) மேளம் எனப்படும். தள்ளமாட்டாமை தள்ள மாட்டாமை = அகற்ற முடியாத நெருக்கம். ஒருவரைச் சார்ந்து ஒருவர் இருப்பார். அவரைத் தம்மால் தாங்கக் கூடிய வளமும் வாய்ப்பும் இல்லாவிடினும் அல்லலோடு அல்லலாக அவரைத் தாங்கித் தீர வேண்டிய கட்டாய நிலையை உண்டாக்கி இருக்கும். தள்ளி விட நினைத்தாலும் அவ்வாறு தள்ளி விட முடியா நிலைமை இருத்தல், தள்ள மாட்டாமை ஆயிற்று. தள்ளி விட்டால் கெட்டழிந்து போக வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்னும் உறுதியால் தள்ளாதிருக்க நேர்கின்றதாம். தள்ளி முள்ளி தள்ளி = மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கியும் அடித்தும் நகர்த்துதல். முள்ளி = தாற்றுக் கோலால் அதை இடித்தும் காயை முள்ளியும்நகர்த்துதல். சண்டி மாட்டைத் தள்ளி முள்ளி ஓட்டுதல் வழக்கம். அவ்வழக்கத்தால் தோன்றிய இணைச்சொல். சுறுசுறுப்பில்லா தவர்களை வேலை வாங்குதற்குத் தள்ளி முள்ளி வேலை வாங்க வேண்டியிருப்பதாகக் கூறுவதாயிற்று. தள்ளுதல் ஏவி ஏவிச் செய்வித்தலும், முள்ளுதல் இடித்துரைத்தும் திட்டியும் செய்வித்தலும் குறித்தது. தள்ளி வைத்தல் தள்ளி வைத்தல்:1 தள்ளி வைத்தல் = ஒதுக்கி வைத்தல். தள்ளி வைத்தல் என்பது இருவகையாக வழக்கில் உள்ளது. ஊரொடு ஒத்துப் போகாதவரை அல்லது ஊரை எதிர்த்து நிற்பவரை ஊரவர் தள்ளி வைப்பது ஒருவகை. அவரும் அவர் குடும்பத்தவரும், ஊரோடு தொடர்பு, கொடுக்கல், வாங்கல் எதுவும் செய்ய முடியாமல் தடுத்து நிறுத்தப்படுவர் என்பது அது. கணவன் மனைவியரிடையே கருத்து வேறுபாடு உண்டானால் ஒருவரை ஒருவர் தள்ளி வைப்பதும் உண்டு. இது, இந்நாளில் சற்றே பெருகி வருவது புலப்படுகின்றது. மகளிர் ஆடவரைத் தள்ளி வைப்பதும் அரிதாகத் தோன்றுகின்றது. தள்ளி வைத்தல்:2 ஒதுக்கி வைத்தல் என்னும் பொதுப்பொருளில் நீங்கி, பூப்புற்ற பிள்ளையைத் தனித்திருக்க வைத்தலைத் தள்ளி வைத்தல் என்பது உசிலம்பட்டி வட்டார வழக்கில் கேட்க முடிகின்றது. ஒதுக்கம், ஒதுக்கி வைத்தல் போல்வது இது. குச்சிலுள் வைத்தல் என்பது முகவை வழக்கு. தள்ளுதல் கொட்டுதல் போல்வது; சுவை பாராமல் மெல்லாமல் கொள்ளாமல் வயிற்றுள் தள்ளுதல். சரக்கு (சாராயம்) நூறு தள்ளு; சரியாகப் போகும் என்பதில் தள்ளுதல் குடித்தலைக் குறித்தது. தள்ளை தள்ளை என்பதைத் திசைச் சொல்லாகப் பழைய உரையாசிரியர்கள் உரைப்பர் (நன். 273). தள்ளை என்பது தாயைக் குறிப்பது. குலை தள்ளும் வாழையைத் தள்ளை என்பது இலக்கிய வழக்கு. அவ்வாறே ஈன்ற தாயை வாழைப் பெயரால் குறிப்பது ஈனுதல் பொருளிலேயேயாம். வாழை குலை தள்ளுதல் ஈனல் எனப்படும். வாழைக்குத் தானீன்ற காய் கூற்றம் என்பது இலக்கியச் சான்று. ஈனா வாழை மக்கள் வழக்கு. தள்ளையைத் தாய் என்னும் பொருளில் வழங்குதல் குமரி மாவட்ட வழக்கு. தறி தறி:1 நெய்தற்பொறி. நெய்தல் தொழிற் கருவிக்குத் தறி என்பது பெயர். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பது வழங்குமொழி. தறியில் போடப்படும் பாவு ஒரு தெரு நீளம் இருக்கும். ஒருபாவில் தொடர்ச்சியாகப் பல சீலைகள் நெய்யப்படும். அப் பாவினை நெய்து முடித்து வெட்டுவாய்ப்படி கூறு செய்து தனிச்சீலை எடுத்தலால் அதற்குக் கூறை என்பது பெயர். கூறைச்சீலை என்பது திருமணச் சீலை என்றும், அது நெய்த இடம் கூறைநாடு என்றும் பெயர் பெற்றன. ஆடவர் பயன்படுத்தும் வேட்டி, வெட்டி எடுப்பதாலும்; துண்டு துணி என்பவை துண்டுபோடுதல் துணித்தல் என்பவற்றாலும் பெயர் பெற்றவை. கூறை, வேட்டி, துண்டு, துணி என்பவை அறுத்து எடுத்தலால் அறுவை எனப்பட்டன. அறுவை வீதி பெருநகர்களில் இருந்தது. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டன் என்பது சங்கப் புலவர் ஒருவர் பெயர். இவ்வாறு கூறு போடல், வெட்டுதல், துண்டாக்குதல், துணித்தல், அறுத்தல் என்பவற்றொடு கிழித்தல் (கிழி - துணி) என்பவை எல்லாம் செய்தற்குரிய நெய்தற் பொறிக்கு எப்பெயர் சூட்டுதல் தகும்? தறி என்பது எத்தகைய பொருள் பொதிந்த பெயர்! தறி:2 தறிக்கப்பட்ட - துண்டிக்கப்பட்ட - கற்றூண், மரத்தூண். உழவர் காஞ்சியங் குறுந்தறி குத்தி - அகம். 346 மழுவென்றது வாய்ச்சியை; தறிகையுமாம் - புறம். 306 மரத்தைத் தறிக்கும் கருவியைத் தறிகை என்பது புறம் (ப.உ.). தறி:3 ஏவல். தறிக்க, துண்டிக்க என்னும் பொருளது. தறி:4 சட்டைப் பொத்தானைத் தறி என்பது யாழ்ப்பாண வழக்கு. தறித்து - வெட்டி - ஓட்டையாய இடத்தை மூடுவதால் பெற்ற பெயர்தறி. ஆண்கள் காது குத்திக் கொண்ட நாளில் அத்துளையில் போட்ட அணிகலம் தறிப்பு என்றமை எண்ணத் தக்கது. தறிகெடுதல் தறி என்பது நிலைபெறல், ஊன்றுதூண். தறிகெடுதல் என்பது நிலைகெட்டு அலைதல் பொருளது. இது அழித்தல் என்னும் பொருளில் கம்பம் வட்டார வழக்காக உள்ளது. நிலைமாறுதல் கருத்து வழியாகக் கிளர்ந்ததாகலாம். தறி கெட்டவன் தறி கெட்டவன் = நிலைத்து ஓரிடத்து அமையாதவன். தறி என்பது தூண். தறியில் மாடு கன்று யானை முதலியன கட்டப்பெறும். மாடு கட்டும் தறி, கட்டுத்தறி, கட்டுத்துறை எனவும் வழங்கும். தறி போடுவதற்கும் அடிப்படை தறியே. அப் பெயரே அத்தொழிற் பெயராக அமைந்தது. தறி நிலை பெறுதல் பெற்றமையால், நிலை பெறாமல் திரிபவனைத் தறி கெட்டவன் என்பது வழக்காயிற்று. தறிசு தறியில் போடப்படும் பாவின் நூல் கெட்டிப்படவும், பிசிர் இல்லாமல் இருக்கவும் கேழ்வரகுக் கூழ்ப்பசையை நீராளமாகப் பையில் இட்டு அக் கசிவைப் பாவில் படச் செய்தல் பாவு தோய்வார் வழக்கம். அக்கூழ்ப் பசையில் நீராளமானது பரப்பப்பட்ட பாவில் படிய எஞ்சிய கட்டியான கூழ், தறிசு எனப்படும். தறிக்குப் பயன்படுத்திய பசைக் கூழைத் தறிசு என்பர். அதனை வாங்கிக் குடிநீரொடு கலக்கி மாடுகளைக் குடிக்கச் செய்வர். இதனைப் பயன்படுத்திப் பால் பயனும் பெருக்க நெசவாளர் பால் மாடு வளர்ப்பதும் வழக்கமாகும். அது வினையால் வினையாக்கிக் கொள்ளல் ஆகும். தறுகண் தறு + கண் = தறுகண் = அஞ்சாமை. கண் = சொல்லீறு; தறு = மடங்கச் செய்தல். மடங்கா உள்ளமுடைமை. அஃதாவது அஞ்சாமை. தறுகட் பன்றி - ஐங். 361, 362 தறுகணாளர் குடர்தரீஇத் தெறுவர - அகம். 77 தறுகணாளர் = அஞ்சா வீரர். தற்காத்தல் பிறருக்கு உதவியாக எவர் வாழ வேண்டும் என நினைத்தாலும், அவர் தம் உடலை நன்றாகப் பேணிக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு பேணிக் கொள்ளாவிடின், எவருக்கு உதவியாக இருக்க வேண்டும் என அவர் எண்ணினாரோ, அவர்க்கே பாரமாகி விடுவார். ஆதலால், தற்காத்தல் அனைவருக்கும் வேண்டியதாகும். அதிலும், குடும்பத்தின் வாழ் முதலாகிய மனைவிக்குக் கட்டாயம் வேண்டியதாகும். கணவன் தானே தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் மறவாமல் கூறும் வள்ளுவர் (திருக். 43) மனைவி தன்னைக் காத்தலையும் வலியுறுத்துகிறார். உடல் என்பது எலும்பும் தோலும் நரம்பும் தசையும் பிறவுமாம். புன்படைப்பன்று; அரும்பெரும் நன்படைப்பு அது. அதனை ஒப்பாம் அரும்படைப்பு அரிதாம். அதனால்தான், உடலை முதல் என நம் முன்னோர் வழங்கினர். முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை என்பது வள்ளுவம் (திருக். 449) அம்முறையில் உடல்நலம் இல்லையானால் உளநலம் உண்டோ? அறிவு நலம் உண்டோ? இயக்க இன்பம் உண்டோ? வாழ்வாங்கு வாழும் வகைதான் உண்டோ? ஆதலால், தற்காத்தல் என்பது தன்னைச் சார்ந்த பண்பியல் செயலியல் எல்லாவற்றையும் குறிப்பது எனினும் தன் உடல்நலம் காத்தலே முதலும் முதன்மையும் உடையதாகும். தானும் செய்வன செய்யான்; பிறர் ஏவவும் செய்யான்; அவன் எவர்க்கு எப் பயனைச் செய்வான்? அதனால், அவன்தன் தொடர்புடையார்க்கெல்லாம் தான் போகும் அளவும் நோயே ஆவான் என்கிறது (திருக். 848) வள்ளுவம். அதனால், தற்காவார் தமக்கே யன்றிக் குடும்பத்திற்கே நோயாவர் அல்லரோ! தற்காலம் தற்காலம்:1 தற்காலம் = மழைக்காலம் என்பது. தன் = மழை; நீர் கொண்ட முகில். தற்பாடி என்பது வானம்பாடியின் ஒரு பெயர். தற்பாடிய தளியுணவின் புள் என்பது பட்டினப் பாலை (3). தற்காலம் = மழைக்காலம். காலம் என்பதே கார்காலத்தினையே குறித்தல் காலச்சோளம், காலப்பருத்தி என்பவற்றால் விளங்கும். வெப்பமிக்க காலத்தில் வருவன கோடைச் சோளம், கோடைப் பருத்தி என வழங்கும். ஆதலால், காலம் என்பதே மழைக்காலம் எனல் அறிக. தற்செயல் என்பது தன்செயலாக அமையாமல் காலத்தின் செயலெனக் கொள்ளப்படுதலும் அறிக. தற்காலம்:2 தற்பொழுது, தற்செயல், தற்போக்கு முதலியவை வன்கணம் வரலால் தன்காலம் தன்பொழுது, தன்செயல், தன்போக்கு வழிவந்த னகர, றகரத் திரிபு வடிவேயாம். தன்னார்வம் தன்னாணை தன்னோக்கு முதலியவை உயிரும் மென்கணமும் வர னகர ஒற்றாகவே நின்றனவாம். இத் தன்னும் பொதுமை வழிப்பட்டதே. எவர்கட்டுக்கும் ஆட்படாமல் எதனை நோக்கியும் பொழியாமல் பொதுமை இறைமைப் புகழ் வெளிப்பாடாய் அமையும் வான் என்னும் வெளி தொட்டு எல்லாமும் ஆகியது தான், தன் என்பது ஆழ நோக்கினால் புலப்படும். தற்கொண்டான் பேணல் தற்கொண்டானாகிய கணவனைப் பேணல் மனைவி கடமையோ? தன் தந்தையையும் தாயையும் தன் துணையையும் பேணிக் கொள்வதையே தன் தலைமையான கடமையாக மேற்கொண்டு (திருக். 41) கணவனைப் பேணுதல் மனைவிக்கு வேண்டுமா என்பது வினாவாகாது. ஆக்கி வைக்கப்பட்ட சோறு கறிகள்தாம். அவரவர் அள்ளிப் போட்டுக் கொண்டு உண்ணலாகாதோ? மனைவியே பரிமாற வேண்டும் என்பது நிலை ஆணையா? ஏன், அவன் அவளுக்கும், அவள் அவனுக்கும் பரிமாறி உடனிருந்து உண்டு பார்க்கட்டுமே! அவ்வின்பம் அன்றோ இன்பம்! இருவர்க்கும் பிறந்த நாள் உண்டே! அவள் பிறந்த நாளுக்கு அவன் எண்ணி எண்ணித் துணி எடுத்தலும், அவன் பிறந்த நாளுக்கு அவள் கருதிக் கருதித் துணி எடுத்தலும் கொண்டால் அவ்வின்பத்திற்கு இணை உண்டா? அவரவர்க்கு அவரவரே எடுத்துக் கொள்ளுதலில் அத்தகு இன்பம் காண இயலுமா? ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பது என்ன? ஊரவர் அனைவர் வளர்ப்பும் அப் பிள்ளைக்கு உண்டு என்பதுதானே! தற்கொண்டானைப் பேணுவாள் எவளும், அதனினும் மேலாகத் தான் பேணப்படுகிறாள் என்பதே உண்மையாம். தற்பூசுணை தண்ணீர்ப் பூசுணை என்பது மக்கள் வழக்கில் தற்பூசணியாக உள்ளது. நீர்வளம் மல்கியமையாலும், தண்ணியதாகியமையாலும், பூசுணை போன்றமையாலும் இப்பெயர் பெற்றது. கோடை நாளின் பெருவணிகப் பொருள் களுள் ஒன்றாக விளங்குகிறது இது. முழுவதாகவும் கீற்றுப் போட்டும் விற்பார் உளர். சரக்குந்துகளில் வந்து குவியல் குவியலாய்த் தெருவோரங்களில் கிடப்பதைப் பெருநகரங்களில் காணலாம். தற்பூசுணை என்பது தகும். தன்காலம் என்பது மழைக்காலம்; அது தற்காலம் எனப்பட்டது. தற்பூசுணை என்பது நீர்மிக்க பூசுணை எனக்கொள்ள இத்தொடர் உதவும். * பூசுணை காண்க. தற்று பழந்தமிழர் உடை உடுத்த வகையுள் ஒன்று தற்றுடை. இந்நாளில் அது தார்ப்பாய்ச்சை எனப்படுகிறது. அத்தார்ப் பாய்ச்சை அடிதொட அமைவது. அதனைத் தடுத்து மேலேற்றி வரிந்து கட்டுதல் தற்றுடை எனப்படும். களரிப் பயிற்சியர், போராளர் உடை வட்டுடை; இவ்வுடை அதனினும் சற்றே நீளமாய், தாருடையில் குறுகியதாய் அமைவது. குடிசெய்வல் என்னும் ஒருவர்க்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் என்பதில் உள்ள அத் தற்று, இத்தற்றுடையாம். மடி = உடை. தனம் தன் + அம் = தனம். தன் உடைமைகளுள் தனிச் சிறப்பாகக் கருதப்படுவது. பொன், செல்வம். தனம் தரு நன்கலம்- அகம். 153 பொருள்: பொன்னைக் கொண்டுவரும் நல்ல மரக்கலம். தனிநிலை உயிர், மெய், உயிர்மெய், குறில், நெடில் என்பன வெல்லாம் பல எழுத்துகள் ஆயவை. ஆய்தம் மட்டும் ஒரோ ஓர் எழுத்து ஆதலால் அது தனிநிலை எனப்பட்டது. தனிமை என்பது ஒன்று. தனியன் தனியன்:1 தன் கூட்டத்தில் இருந்து பிரிந்து தான் ஒருவனாக இருப்பவன் தனியன் (ம.வ.). தனியன்:2 ஒருவனாக இருப்பவன். தனிமகனார் ஒரு புலவர் பெயரீடு (நற். 153). தனியன்:3 ஒரே ஒரு பாடல். ஒருவரைப் பற்றிய ஒரு சிறப்புப் பாடல் நாலா. திவ். தமியர் என்பது சிறப்புப் பன்மையும், பன்மையுமாம். தனியூர் ஒவ்வொரு வளநாட்டிலும் சிறந்த ஊராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஊர் தனியூர் எனப்படும். இது சோழர்கால நாட்டுநடைமுறை. விருதராச பயங்கர வளநாட்டுத் தனியூர், திருநாரையூர் (தெ.க.தொ. 12:1:153). தனிவெண்பா ஒன்றற்கு ஒன்று தொடர்பில்லாமலும், தனித்தனியே முடியக் கூடியதும், முடிமுதல் யியைபு (அந்தாதி) இல்லாமல் இயல்வதும் ஆகிய வெண்பாக்களால் அமைந்ததொரு நூல் தனிவெண்பா எனப்படுகின்றது. தனிப்பாடல் திரட்டு, தனிப்பாசுரத் தொகை என்னும் ஆட்சிகளை நினைக. திருவண்ணாமலையில் இருந்த குகை நமசிவாயர் அருளிச் செய்த திருவருணைத் தனிவெண்பா இவ்வகையில் எண்ணத் தக்கது. அதில் 35 வெண்பாக்கள் உள. ஒரே ஓர் ஊடக இயைபு இப்பாடற்கு உண்டு எனின், அஃது அண்ணாமலையார் திருப்பெயரே. தன் தன்னைக் குறிப்பது தன் ஆகும். தன்மை என்பது அது. தன்னை மட்டும் குறிப்பது தன்மை ஒருமை. தன்னொடும் தன்னைச் சார்ந்தாரையும் குறிப்பது தன்மைப்பன்மை. மூவிடங்களுள் தன்மை முதலிடமாம். தன்னைத்தான் கொண்டொழுகின் - திருக். 974 தன் என்பதிலுள்ள னகர ஒற்று றகர ஒற்றாதலும் உண்டு. தற்கொண்டான் வளத்தக்காள் - திருக். 56 தன்காலில் நிற்றல் தன்காலில் நிற்றல் = பிறர் உதவி கருதாதிருத்தல். ஒருவர் தன் காலில்தான் நிற்பார். அவ்வாறு தன் காலில் நிற்பதைக் குறியாமல் தன் முயற்சியால், தன் துணிவால், தன் பொருளால் வாழ்வதே, அல்லது பிறரை எதிர்நோக்காமல் வாழ்வதே தன்காலில் நிற்றலாகக் கூறப்படுவதாம். ஆதலால், தன் காலில் நிற்றல் என்பது பிறரை எதிர்பாராது வாழும் வாழ்வைக் குறிப்பது அறிக. கால் என்பது ஊன்றுதல். ஊன்றி நிற்கத் தன்கால் உதவுமே யன்றி, ஒட்டுக்கால் உதவி எப்படியும் ஒட்டுக் காலாகத்தானே இருக்கும்? ஒட்டுக் காலில் நிற்கவே ஆகிவிட்டால் தன்காலில் நிற்கவே முடியாதே. தன், தம் மூவிடப் பெயர்கள் எவை? எனின், தன்மை முன்னிலை படர்க்கை எனத் தமிழறிந்தார் தட்டின்றிக் கூறுவர். முதலாம் ஆள் இரண்டாம் ஆள் மூன்றாம் ஆள் எனல் ஆங்கில நெறி. தன்மை என்பது மண்ணின் தன்மை, நீரின் தன்மை, காற்றின் தன்மை எனப் பூதங்களின் இயல்பாகுமே! புல்லின் தன்மை, மரத்தின் தன்மை, பாம்பின் தன்மை, பறவையின் தன்மை, விலங்கின் தன்மை என விரியுமே. ஏன், என் தன்மை, உன் தன்மை, அவர் தன்மை எனப் பெருகுமே. என்னைக் குறிப்பது என்மை இல்லையா? முன்னிற்பாரை - முன் நிற்பதை-க் குறிப்பது முன்மை ஆகாதா? படர்க்கையில் இருப்பவர் அல்லது இருப்பது அல்லவோ தன்மை! என்தன்னை, நுன் தன்னை, அவன் தன்னை என மூவிடத்தும் தன் வருகின்றதே? என் தந்தை (என்றந்தை)நுன் தந்தை (நுன்றந்தை)தன் தந்தை (தன்றந்தை) எம் தந்தை (எந்தந்தை)நும் தந்தை (நுந்தந்தை)தம் தந்தை (தந்தந்தை) இவ்வாறு அல்லவோ தந்தையின் மூவிடப் பெயர் அமையும். கொண்டது என்றன்னைக் கொடுத்தது நின் தன்னை - திருவா. வந்தவன் தன்னை - கம். அயோத். எந்தை நுந்தை தந்தை எந்தாய் நுந்தாய் தந்தாய் எம்மையன் நும்மையன் தம்மையன் எம்பின் நும்பின் தம்பின் எமக்கை நுமக்கை தமக்கை எங்கை நுங்கை தங்கை எம்மான் நும்மான் தம்மான் எம்மோய் நும்மோய் தம்மோய் ஏன் மூவிடங்களிலும் தன், தம் என்பவை ஒட்ட வேண்டும்? என்னையும், என் தன்னையாக; நின்னையும், நின்றன்னையாக; நான்பார்த்தலே - மதிப்பிடலே - பேணலே - தகுநெறி. ஏனெனில் என்னை யானாகப் பார்ப்பது தற்சார்பு. அப்பொழுதும் தன் சார்பே! நின்னை முன்நிற்பானாகப் பார்ப்பது முகச்சார்பாம். என்னையும் நின்னையும் எற்சார்பும் முற்சார்பும் இல்லாமல் தற்சார்பாக - படர்க்கைச் சார்பாகப் பார்ப்பதே நடுவுநிலைப் பார்வையாம். ஆதலால், மூன்றாம் இடத்ததாம் படர்க்கையைத் தன்னை, தம்மை என்பவற்றொடு ஒட்டி என்றன்னை, நின்றன்னை, எந்தம்மை, நுந்தம்மை என அமைத்தனராம். வியப்பினும் வியப்பாம் இக்கட்டமைப்பை உண்டாக்கிய தொல்பழஞ் சான்றோர் அறிவுக் கூர்ப்பையும் மெய்யியல் மேம்பாட்டையும் உயரிய நேயத்தையும் பாராட்டச் சொற்களுண்டா? இத் தன்மை என்பவை, தன்னறிவு தன்கடன் தன்னலம் தன்னிலை என்ற அளவில் நில்லாமல், தம்பொருள், தம்மக்கள், தமர், தம்மில், தமதுண்ணல் என்றும் தம் இமிழ் (தமிழ்), தம் அந்தை (தந்தை), தம் ஆய் (தாய்), தம் ஐயன் (தமையன்) முதலாம் முறைப்பெயர் முன்ஒட்டாயும், எவர் தம்மையும் எல்லார் தம்மையும் எவை தம்மையும் எனப் பின்னொட்டாகவும் வருதல் பொதுமையில் புணர்ந்து கலந்து ஒன்றாகும் உயர்வை விளக்கும். தன்மம் தன்கொடையாகக் கொடுப்பது தன்மம்; கொடுப்பவன் தன்மி எனப்படுவான். தருமி என்பானும் அவன். கொடை, பழக்கத்தால் வாராமல் பிறப்பொடும் இயல்பாக வந்தவற்றுள் ஒன்று. ஆதலால் தன்மை எனச் சிறப்புப் பெயராய் அமைந்து பின்னர்ப் பொதுமைக் கொடைப் பெயராயிற்று. தன்னைக் கொடுப்பதும் அதன் மேனிலையாக அமையும். வாள்தந் தனனே தலைஎனக் கீய - புறம். 165 தன்னக் கட்டுதல் மாறுபட்டு இருப்பாரை அல்லது மனம் மாறி இருப்பாரைச் சரிப்படுத்துவதைத் தன்ன(னை)க் கட்டுதல் என்பது முகவை, மதுரை வட்டார வழக்குகள். வாங்கிய கடனைத் தீர்ப்பதும் தன்னக் கட்டுதல் ஆகும். தன்னை தன் + ஐ = தன்னை = தமையன். ஐ = பலபொருள் ஒருசொல். மேனாள் உற்ற செருவிற் கிவன்தன்னை யானை எறிந்து களத்தொழிந் தனனே - புறம். 279 தன்னைமார் தன்னைமார், தன்னையர் என்பவை தமையன்மார் என்னும் பொருள் தருவன. மாட்சி யவரிவள் தன்னை மாரே - புறம். 342 தன்னையர் ... ... ... வெருவரு தலையர் - புறம். 337 