செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் 3 உ முதல் ஒள வரை ஆசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர் முனைவர் பி. தமிழகன் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் - 3 உ முதல் ஔ வரை ஆசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர் முனைவர் பி. தமிழகன் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2018 பக்கம் : 20+436= 456 விலை : 570/- தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்:  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 344 கட்டமைப்பு: இயல்பு  படிகள் : 1000   கணினி & நூலாக்கம் : நல்லதம்பி, கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006. கடப்பாட்டு உரை தமிழ் இயற்கை இயங்கியல் வழிப்பட்ட ஒலி, வரி, வடிவுகளையும் இயற்கை இயங்கியல், மெய்யியல், வாழ்வியல், படைப்பியல் என்பவற்றை அடிமனையாகவும் கொண்ட மொழி. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்னும் மூல முழக்கத்தை முழுவதாகக் கொண்டது நம்மொழி என்பதை ஓராற்றான் விளக்குவதாக அமைந்தது இக் களஞ்சியம். ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் என்பவை இல்லாமல், வெளிப்பட எவரும் அறிந்து கொண்டுள்ள வழக்கு, செய்யுள் என்பவை கொண்டே விளக்குவது இக்களஞ்சியம். இதனை, ஊன்றியும் விரும்பியும் கற்பார் தாமும் இவ்வாய்வு செய்ய வியலும் என்பதைத் தூண்ட வல்ல ஆய்வும் இது! ஆதலால், படிப்பாளியைப் படைப்பாளி ஆக்கவல்லது என்பதை என் பட்டறிவுத் தெளிவாகக் கண்டு வருகிறேன்! எளிமையாய் - ஆழ்ந்த நுணுக்கங்களை - ஓரளவு கற்றாரும், கொள்ள வழிகாட்டும் `கைவிளக்கு அன்னது இது. இதனை முதல் - இடை - நிறைவு என்னும் மூன்று நிலை களிலும் உற்ற பெறலரும் உதவுநராக இருந்து முற்றுவித்ததுடன், தமிழ் உலகப் பயன்பாட்டுக்கும் வழியமைத்துத் தந்த `கலங்கரை விளக்கம் செம்மொழிச் செம்மல் முனைவர் திருத்தகு க. இராமசாமி அவர்களே ஆவர். ஆதலால், அவர்களை நெஞ்சாரப் போற்றுவது என் தலைக்கடனாம்! திருவள்ளுவர் தவச்சாலை நிறுவன வழியே இப்பணி செய்ய வாய்த்த அளவில் சொற்றிரட்டியும் மெய்ப்புப் பார்த்தும உதவிய பெருந்தகு கேண்மையும் உழுவலன்பும் உடைய முனைவர் பெருந்தகை கு. திருமாறனார் அவர்களுக்கும் எம் எழுத்துப்பணியைத் தம் பணியாக் கொண்டு தொடர்ந்து செய்துவரும் தொய்விலாத் தொண்டர் மெய்ப்புப் பார்த்தலில் வல்லார் முனைவர் பி. தமிழகனார் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியுடையேன். என் எழுத்தைப் படியெடுத்தும், கொங்கு வட்டார வழக்குச் சொற்களைத் தொகுத்தும் உதவிய புலவர் கலைமணியார் அவர்களுக்கும், இப்பணியில் இல்லை எனினும் உழுவ லன்பாலும் உரிமைப் பேற்றாலும் என் எழுத்துகளைப் படியெடுத்து உதவிய திருக்குறள் செம்மல் பெரும்புலவர் மு. படிக்கராமு அவர்களுக்கும் பெருநன்றியும் வாழ்த்தும் உடையேன். இத்தொகை அனைத்தையும் கணினிப்படுத்தியும், மெய்ப்புப் பார்த்தும், வரவு செலவு கணக்கைத் தக்க வகைத் தணிக்கைக்கு உரியவையாகச் செய்தும், பணிநிறைவை ஒப்படைத்தும் பெருநன்றாற்றிய கவனகச் செம்மல் முனைவர் கலை. செழியனார் அருந்தொண்டைப் பாராட்டி நன்றி பெரிதுடையேன். பணி நிறைவுப்பயன், தமிழ் கூறு நல்லுலகப் பயன்பாடு ஆதல் வேண்டும் என்பது தானே! இல்லாக்கால் செய்த பணியால் ஆவதென்ன? செய்யாமை ஒப்பது தானே! அவ்வாறு ஆகாமல் தாய்த்தமிழக ஆர்வலர்களுடன், அயலகத் தமிழ்ப் பெருமக்களாக விளங்கினும் தாய்த்தமிழக ஆர்வலர்களிலும் மேம்பட்ட ஆர்வலர்களாகக் குவையத்து, அமெரிக்கா, கனடா, மலையகம், சிங்கபுரி, ஈழம் முதலாக வாழ்வார் ஆர்வத் தளிர்ப்பும் தூண்டலும் முன்னிற்கும் பேறு வியப்புக்கும் பெருநன்றிக்கும் உரியதாம்; இப்பெருமக்கள் அனைவர் உள்ளமும் ஓருருவாக வாய்த்து, கருவி நூற்பணியைத் தொகை தொகையாக வகைப்படுத்தி வான் பெருந்தொண் டாகச் செய்தலே எம் பிறவிக் கடன் எனக் கொண்ட தமிழ்ப் போராளி திருமிகு கோ. இளவழகனார் வெளியீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயற்கரிய செய்வார் பெரியர் என்பதை நிலைநாட்டியதைப் போற்றுவதன்றி என் சொல்வேன்? களஞ்சியம் கணினிப்படுத்திய அளவில் நிறைவுறுமா? பத்துத் தொகுதிகளையும் ஒருமுறைக்கு மும்முறையாய் முழுதுற மெய்ப்புப் பார்த்தல், எளிமைப் பாடா? கண்புரை வளர்ந்தாலும் இடைத்தடை நேர்ந்தாலும் இத்தொண்டு தமிழன்னை தளிர்க்கும் தொண்டு என்று இமைப் பொழுதும் சோராது கடனாற்றிய கடப்பாட்டாளர் மெய்ப்புச்செம்மல் முனைவர் பி. தமிழகனார்க்குப் பெருங்கடப்பாடு உடையேன்; பதிப்புச் சுமையை ஏற்றமை என் சுமை ஏற்றமையாம்! வாழிய நலனே! வாழிய நலனே! இரா. இளங்குமரன் களஞ்சியம் வளமான வீடுகள் கட்டி வாழும் நிலக்கிழார் பெருநிலக்கிழார் ஆகிய உழவர்கள், தங்கள் வீட்டின் உட்பகுதியில் களஞ்சியங்கள் அமைத்திருப்பர். களஞ்சியம் இருக்கும் வீடு என்றால் வளமிக்க உழவர்வீடு என்பது பொருள். களத்தில் வரும் தவசங்கள் பயறு வகைகள் ஆகியவற்றை அங்கே பூச்சியரிப்பு, மட்குதல் ஏற்படாவகையில் தளத்தின்மேல் உயர்த்தியும் புன்கு வேம்பு ஆகியவற்றின் தழைகளைப் பரப்பியும், பாதுகாப்பர். அவ்வாண்டு முழுமைக்கும் பயன்படும். அடுத்த ஆண்டு விளைவு குறைந்தாலும் களஞ்சியப் பொருள் கவலையின்றி வாழ உதவும். ஏருழவர் போலச் சொல்லேர் உழவராம் சான்றோர் நூல்கள், அக்காலத்தார்க்கே அன்றி எக்காலத்தார்க்கும் பயன்படும் வகையில் பாதுகாத்துப் பயன் கொள்ளச் செய்வது நூல் களஞ்சியமாகும். இந்தியப் பரப்பில் தமிழ் மொழியில் தான் முதன்முதல் `கலைக் களஞ்சியம் உருவானது என்பது பெருமிதப்படத்தக்கதாம். இப்பொழுது தமிழ்மண் பதிப்பகத்தால் வெளியிடப்படும் செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் செவ்வியல் மொழிக் கொடையாக வந்து, தமிழ்மண் பதிப்பக வெளியீட்டால், தமிழ்கூறு நல்லுலகப் பொருளாவது, செம்மொழிச் செம்மல் முனைவர் திருமிகு க. இராமசாமி அவர்கள் தூண்டல் வழியாகத் துலங்கிய துலக்கமாகும். ஆதலால் படைப்பாளன் என்ற நிலையில் நெஞ்சார்ந்த நன்றியுடையேன். இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். தமிழ்க் களஞ்சியம் மொழியின் வளம், அம்மொழியைப் பேசுவோர் பயன்படுத்தும் சொற்களாலும், அம் மொழியில் உள்ள இலக்கண, இலக்கிய வகைகளாலும் அறியப்படும். தமிழின் வளம் இலக்கியங்களிலும் மக்கள் வழக்குகளிலும் நிறைந்துள்ளது. சொற்களின் வளமும், பெருக்கமும் மொழியின் சிறப்பைக் காட்டும். சொற்களின் பெருக்கைக் காட்ட எத்தனையோ நிகண்டுகளும், அகராதிகளும், களஞ்சியங்களும் தமிழில் வந்துள்ளன. இவற்றுள் பல பிறமொழிச் சொற்களையும் தமிழ்ச் சொற்களாய்க் கருதிப் பொருள் தந்துள்ளன. பிற மொழிகளில் ஏறிய தமிழ்ச் சொற்களும் வேற்றாடை உடுத்தியுள்ளன. அவற்றை அறிந்து தமிழெனக் காட்ட, மொழி உணர்வும், இலக்கிய இலக்கணப் புலமையும், தமிழ் முழுதறி தகுதியும், மக்கள் வழக்குகளை வழங்கும் சூழலில் கேட்டறிதலும், சொற் பொருளாய்வும், சொல்லியல் நெறிமுறைகளும், வேர்ச் சொல்லாய்வும், கூர் மதியும் நிறைந்திருக்க வேண்டும். இத்தமிழ்ச் சொற் களஞ்சியம் சொற்களின் பொருளை மட்டுமா தருகின்றன? சொற்களின் வேரும், அதன் விரிவும், அவற்றின் விளக்கமும், சான்றுகளும், மக்களின் பொது வழக்கும், வட்டார வழக்கும், யாழ்ப்பாணத் தமிழ் வழக்கும் செறிந்துள்ள தமிழ்க் களஞ்சியமாம். ஒரு வினைச் சொற்கள் தொகை தொகையாகிய தொகை இக்களஞ்சியம். `அடித்தல் சொல்லடியாக 145 சொற்கள் உண்ணல் வகைகள், ஊர்ப் பெயர் ஈறுகள் (504) நோய் வகைகள் (229), நோய் வினைகள் (216), மதில் பொறி வகைகள் (28) மலை வகைகள் (25) முதலிய எத்தனையோ வகைகளும் தொகைகளும் அடங்கியுள்ளன. இவற்றின் தொகுப்பு கற்பாரை வியக்க வைக்கும்! இக் களஞ்சியத் தொகுதிகளுள் நூற்றுக்கணக்கில் மரபுத் தொடர்கள், இணை மொழிகள், ஒலிக்குறிப்புகள், அவற்றின் விளக்கங்கள் அடங்கி யுள்ளன. சொற்கள் விளக்கத்திற்கு அன்றாடச் செய்திகளும் (செய்தித்தாள்கள்) சான்றாகின்றன. சிற்றிலக்கிய வகைகள் தொண்ணூற்றாறு என்பர். ஆனால், பற்பல நூறுவகைகள் உள்ளமையை இக்களஞ்சியம் காட்டும். மேனாட்டு உடைகளை மாட்டியதால் தமிழர் மேனாட்டார் ஆகாரன்றோ? பஜ்ஜி ஏதோ பிறமொழி என்றே மயங்கி நிற்பர். அது பச்சைக் காய்கறிகளால் செய்யப்படுவது. தேவநேயப் பாவாணர் உடன் பழகியமையாலும், அவர் நூல்களைத் தோய்ந்து தோய்ந்து கற்றமையாலும், அவரே பாராட்டியமையாலும் ஐயா, பல சொற்களுக்கு வேர்ச்சொல் வழி மூலமும் கிளையும் காட்டியுள்ளார். புழுதி, பூழ்தி, பூதி. பல சொற்களின் பொருள் வேறுபாடுகளும் காட்டப்பட்டுள்ளன: விரைப்பு- விரைப்பு; விறைப்பு - தொய்வின்மை; இக்களஞ்சியம் தவசங்களாம் சொற்கள் கொட்டப்பட்டு நிறைந்துள்ளது. படிப்பார் தத்தமக்குத் தேவையான தவசங்களை அள்ளி அள்ளிப் பயன் கொள்ளலாம். எவ்வளவு அள்ளினும் என்றும் குறையாது இக்களஞ்சியம். தமிழரின், மொழி, இன, இலக்கிய, இலக்கணம் ஆகியவற்றின் வரலாறு, பண்பாடு, நாகரிகங்களின் அடங்கல்களைப் படை படையாகத் திரட்டித் தொகுத்து வெளியிடும் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் முதலிடம் பெற்றிருக்கிறது. ஐயா முதுமுனைவர், இளமை முதல் தொகுத்த சொற்களஞ்சியங்களைச் சேர்த்துச் சேர்மானமாக்கித் திரட்டித் தந்துள்ளார்கள். தமிழர்களே! இங்கே வம்மின்! களஞ்சியம் கொண்மின்!! தமிழை வளர்மின்!!! பி. தமிழகன். அணிந்துரை செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் என்னும் இந்நூல் இன்று நம்மிடையே வாழும் தொல்காப்பியராக விளங்கும் மூத்த தமிழறிஞர் செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஏறத்தாழ 8000 தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் விளக்கத்தினை மேற்கோள் சான்றுகளுடன் வழங்கும் இந்நூல் தோராயமாக 3254 பக்கங்களில் பத்துத் தொகுதிகளாக வெளிவந்து தன்னேரிலாத தமிழ் மொழிக்குத் தனிப்பெருமை சேர்க்கும் முன்னோடிப் பணியாக அமைந்துள்ளது. அகரமுதலிகளில் இடம்பெறாத சொற்கள், மரபுச்சொற்கள், வட்டார வழக்குச் சொற்கள், பழமொழிகள் போன்றவை இக்களஞ்சியத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்க தாகும். இசை, மருத்துவம், கல்வெட்டு, அறிவியல் ஆகிய துறைகள் சார்ந்த இன்றியமையாத சொற்களுக்கும் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. அகரத்தில் தொடங்கும் சொற்களுக் கான பொருள் விளக்கங்கள் மட்டுமே 276 பக்கங்களில் முதல் தொகுதியாகவும் தனித் தொகுதியாகவும் அமைந்திருப்பது நூலின் செறிவையும் விரிவையும் பறை சாற்றுவதாக அமைந்துள்ளது. அயன் மொழிச் சொற்கள் அறவே தவிர்க்கப் பட்டிருப்பது நூலின் தனிச்சிறப்பாகும். சொற்பொருட் களஞ்சியப் பணியை நிறைவேற்றும் வகையில் நூலாசிரியருக்குத் தூண்டுதலாக அமைந்தது ஒல்காப் புகழ் தொல்காப்பியமே. குறிப்பாக, எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே (தொல். 640) என்னும் நூற்பா. இந் நூற்பாவினை மூல முழக்கமாகக் கொண்டது தமிழ்மொழி என்பதை விளக்கும் பொருட்டே இக்களஞ்சியம் உருவாக்கப் பட்டதென நூலாசியிர் குறிப்பிட்டுள்ளார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் காட்டியவாறு ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் எனக் காணாமல் வெளிப்படையாக அறியக்கூடிய சொற்களுக்கு மட்டுமே அமைதியும் திரிபும் பொருள் விளக்கமும் காட்டுவது இக்களஞ்சியம் என்பதும் நூலாசிரியர் கூற்றாகும். பொருள் விளக்கங்களினூடே கீழ்க்காணும் தொல்காப்பிய நூற்பாக்களின் பயன்பாட்டினையும் உணரலாம். பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லின் ஆகும் என்மனார் புலவர். (தொல். 641) தெரிபுவேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும் இருபாற் றென்ப பொருண்மை நிலையே. (தொல். 642) பொருட்குப் பொருள்தெரியின் அதுவரம் பின்றே. (தொல். 874) பொருட்குத் திரிபில்லை உணர்த்த வல்லின் (தொல். 875) மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா. (தொல். 877) ஒரு பொருள் பல சொற்கள் மிகவும் நுட்பமாய் ஆராயப் பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. `அழகு பொருண்மையைக் குறிக்கும் 67 தனித்தமிழ்ச் சொற்களை அடையாளங்கண்டு . நுட்பமான விளக்கங்களைத் தந்திருப்பது ஆசிரியரின் நுண்மாண் நுழபுலத்திற்கும் வளமான பட்டறிவிற்கும் சான்றா கவிளங்குகிறது. பெருமதிப்பிற்குரிய ஐயா இளங்குமரானாரின் நெடுங்கால அவா இந்நூல் வெளியீட்டின் வழி நிறைவேறியுள்ளமை மகிழ்வளிக்கிறது. இது காலத்தை வென்றுநிற்கும் நிலைத்த பணி. தமிழ் ஆய்வாளர்களுக்குக் கிட்டியுள்ள தலைசிறந்த நோக்கீட்டு நூல். உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் இந்நூலினை வரவேற்றுப் போற்றுவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. களஞ்சியப் பணி ஒரு தொடர் பணி. இப்பத்துத் தொகுதிகளை அடித்தளமாகக் கொண்டு தொடர்ந்து நூற்றுக்கணக்கான தொகுதிகள் வெளிவந்து தமிழிற்கு வளம்சேர்க்க வேண்டும் என்பது என் அவா. தனித்தமிழ்ப் பற்றாளராகவும் அரிய தமிழ் நூல்களின் பதிப்புச் செம்மலாகவும் விளங்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ. இளவழகனார் இக்களஞ்சியத்தை அருமுயற்சியுடன் சிறப்புற வெளிக்கொணர்ந்திருப்பது பாராட்டிற்குரியதாகும். முனைவர் க. இராமசாமி முன்னாள் பேராசிரியர் - துணை இயக்குநர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர் முன்னாள் பொறுப்பு அலுவலர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை நுழைவுரை தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் புதைந்து கிடக்கும் அறிவுச் செல்வங்களைத் தனக்கே உரிய நடையில் இருந்து தமிழின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் அய்யா இளங்குமரனாரின் நினைவாற்றலை நினைந்து நினைந்து மகிழ்பவன். அவர் அருகில் இருக்கவும், அவருடன் உரையாடவும், வாழ்நாளில் எனக்குக் கிடைத்த bபரும்nபறாகவும்fருதுகிறேன்.bkhÊPhÆW பாவாணர், செந்தமிழ் அறிஞர் இலக்குவனார்,மூதறிஞ®செம்மšவ.சுப. மாணிக்கனார் முதலான பெருமக்களை எட்டி இருந்து பார்த்தவன். அவர்களின் அறிவு நலன்களைக் படித்துச் சுவைத்தவன். இப் பெருமக்களின் மொத்த உருவமாக அய்யா இளங்குமரனாரைப் பார்த்து நெஞ்சம் நெகிழ்பவன். அய்யா அவர்களின் அறிவுச் செல்வங்களைக் கடந்த காலத்தில் பேரளவில் எம் பதிப்பகம் வெளியிட்டு அவரின் உழைப்பை தமிழ்கூறும் உலகுக்கு அளித்ததில் நிறைவு அடைகிறேன். இன்று உங்கள் கைகளில் தவழும் செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் எனும் இவ்வருந்தமிழ்த் தொகுப்பை உருவாக்குவதற்கு எவ்வளவு காலம் உழைத்திருப்பார் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். வியந்து போகிறேன். இச்செந்தமிழ்த் தொகுப்பு தமிழ் அகராதி வரலாற்றில் தமிழுக்குப் புது வரவாகும். இதுவரை யாரும் செய்ய முன்வராத பெரும்பணி யாகும். அய்யாவின் இலக்கிய, இலக்கணப் பெரும்பரப்பைத் தாங்கிவரும் இப்பொற் குவியலை உலகத் தமிழர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பாவாணர் போல் வேர்காட்டி, வளம் கொடுக்கும் சொற்கடலாய் வாழும் அய்யாவின் பேருழைப்பால் விழைந்த இலக்கிய இலக்கணக் களஞ்சியத்தை வெளியிடுவதன் மூலம் என்னையே நான் பெருமைப் படுத்திக் கொள்கிறேன். என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பேறாகக் கருதுகிறேன். அய்யாவின் 75ஆம் (30.01.2005) அகவை நிறைவை திருச்சித் திருநகரில் தமிழர் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நிகழ்வில் புலமைக்குத் தலைவணக்கம் எனும் நிறைவுமலரினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு மகிழ்ந்தது. அந்த மலரில் மலேசியப் பாவரசு சு.ஐ.உலகநாதன் எழுதிய பாடலினை கீழே சுட்டியுள்ளேன். வாய்த்திருக்கும் அகவையெலாம் வரலாறு படைக்கின்றார் iவயகமேtந்துnபாற்றுe« முன் சான்றாக வாழும் `ஐயா அவர்களால் உருவாக்கப்பட்ட இக்களஞ்சியத்தை தமிழ் உலகுக்கு வழங்குவதில் பெருமையும், பூரிப்பும் அடைகிறேன். கோ. இளவழகன் ஆசிரியர் விவரம் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பிறப்பு : 30. 1. 1930 பெற்றோர் : இராமு - வாழவந்தம்மை (உழவர்குடி) ஊர் : சங்கரன்கோவில் வட்டம், வாழவந்தாள்புரம் கல்வி : தொடக்கக் கல்வி -உள்ளூரிš நடுநிலை¡கல்É -பாவாண®பயின்wமுறம்òபள்Ëவித்துவா‹ -தமிழ்¤தேர்î -தனி¤தேர்வ® ஆசிரியர் பணி : தொடக்கப் பள்ளி - 16ஆம் அகவையில் தொடக்கம் உயர்நிலைப் பள்ளி - தமிழாசிரியப்பணி ஆய்வுப்பணி : பாவாணருடன் - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் - கலைச் சொல் விளக்கம் தொகுப்புப் பணி, தமிழக வட்டார வழக்குச் சொல் தொகுப்புப் பணி. தமிழ்ப்பணி : கட்டுரை, கவிதை, கதை, நாடகம், காப்பியம், இலக்கண - இலக்கிய உரை - தமிழ்ச் சொல்லாய்வு - பழந்தமிழ்நூல் பதிப்புகள் - தனிமனித - இலக்கண - இயக்க, இசை, வரலாறு. தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் - நாடகம். குழந்தைப் பாடல்கள் - ஆய்வுப் பொழிவு - தொகுப்பு நூல்கள் நாளொன்றுக்கு 18 மணிநேர எழுத்துப் பணி திருவள்ளுவர் தவச்சாலை நிறுவி இயக்குதல். செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் ... நூல்கள் : சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணிவாசகர் பதிப்பகம், ஈரோடு குறளாயம், திருவள்ளுவர் தவச்சாலை, தமிழ்மண் பதிப்பகம் வழி 420க்கும் மேல் வெளிநாட்டு பயணம் : தமிழீழம், சிங்கப்பூர், மலேயா, அமெரிக்கா முதலிய நாடுகளில் தமிழ் அமைப்புகளில் பொழிவுகள். திருமணம் நிகழ்த்துதல் : தமிழகம், சிங்கப்பூர், மலேயாவில் 4000க்கும் மேற்பட்ட தமிழ்நெறித் திருமணங்கள் நிகழ்த்துநர். இயக்கப்பணி : தமிழகத் தமிழாசிரியர் கழகம், உலகத் தமிழ்க் கழகம், தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், திருக்குறள் பேரவை, ஈரோடு குறளாயம், தமிழ்ச்சான்றோர் பேரவை விருது : இலக்கியச் செம்மல், செந்தமிழ் அந்தணர், முதுமுனைவர் முதலியன. பதிப்பாசிரியர் விவரம் முனைவர் பி. தமிழகன் பிறப்பு : 5. 10. 1946 பெற்றோர் : பிச்சை - மீனாட்சி (வேளாண்குடி) ஊர் : இலால்குடி வட்டம், குமுளூர் கல்வி : தொடக்கக் கல்வி - உள்ளூர் நடுநிலைக் கல்வி - இருங்கலூர் உயர்நிலைக் கல்வி - பூவாளூர் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளி புலவர் - கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் தமிழியல் இலக்கிய இளைஞர், முதுகலை, கல்வியியல் முதுகலை, தனித் தேர்வர் ஆய்வு : தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம், சங்க இலக்கியத்தில் மரபியல் சொற்கள் ஆசிரியர்கள் : முதுபெரும்புலவர் அடிகளாசிரியர், பாவலரேறு பாலசுந்தரனார் ஈடுபாடு : சங்க இலக்கியம், பத்தி இலக்கியங்கள், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், நாட்டுப்புறவியல் ஆசிரியப் பணி : திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசுப் பள்ளிகளில் 33 ஆண்டுகள் தமிழாசிரியர், பணி நிறைவுக்குப்பின் ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்லூரியில் பேராசிரியர் பணி தொடர்தல். இயக்கப் பணி : தமிழியக்கம், பாவாணர் தமிழியக்கம், திருவள்ளுவர் தவச்சாலை நூல்கள் : தமிழகத் தொல்பொருள் ஆய்வு (வ்ட்பீது கீகுநூழ்ஙூ) வழக்குச் சொல் அகராதி (ர்மயூரூயுகுயிகீஞ்ணூ நிகுபீய்நூக்ஷி) பதிப்புப் பணி : முதுமுனைவர் இரா. இளங்குமரனாரோடு இணைந்து தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட முதுமொழிக் களஞ்சியம், சங்க இலக்கியம். பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம் எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் `உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கைகளை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். நூலாக்கத்திற்கு உதவியோர் ஆசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் பதிப்பாசிரியர்: முனைவர் பி. தமிழகன் கணினி மற்றும் நூல்வடிவமைப்பு: திரு. நல்லதம்பி (யாழினி கணினி) திருமதி. கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: முனைவர் பி. தமிழகன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. உ முதல் ஔ வரை உ வரிசைச் சொற்கள் உ: உ:1 தமிழகர வரியில் ஐந்தாம் எழுத்து; மூன்றாம் குறில் ; உகரம் என்பதும் . உ:2 சுட்டெழுத்துகள் மூன்றனுள் ஒன்று. சேய்மைச் சுட்டும் அண்மைச் சுட்டும் ஆகாமல், இரண்டன் இடைப்பட்டதாகவும் உயரச் சுட்டாகவும் இருப்பது உகரமாம். உ:3 தமிழ் எண்முறையில் இரண்டு என்பதன் குறி. எட்டு இரண்டு என்பவை அ, வ எனக் குறிக்கப்படுதல் அகர விளக்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. உ:4 ஊகாரச் சுட்டு, உகரச் சுட்டாகக் குறுகி நின்றது. ஊங்கு > உங்கு: ஊது > உது. உ:5 தனக்குரிய மாத்திரையாகிய ஒன்றில் இருந்து அரை மாத்திரையாகக் குறுகி நிற்கும் குற்றியலுகரம் ஆவது. உ:6 குற்றியலிகரப் புணர்வை ஆக்குவது. வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும் தீமை ïyhj brhyš” -âU¡. 291 எ-டு: எனப்படுவது யாது > எனப்படுவ தியாது. உ:7 எழுதத் தொடங்கும் போது, அதன் தொடக்கமாக - இறை வாழ்த்தொடு தொடங்கும் அறிகுறியாக - ஏட்டெழுத்துப் பிற்காலத்தும் இக்காலத்தும் வழக்கில் உள்ள தலைப்புத் தொடக்க எழுத்து. உஃது: உது என்பது வருமொழி முதலில் உயிர்வருங்கால், உஃதாக மாறும், ஈருயிர் தமிழில் ஒன்றி வருதல் இல்லை என்னும் முறையால். உது + ஓ = உஃதோ. அது அஃது எனவும், இது இஃது எனவும் வருதல் போல், உது உஃது Mகியது. உகப்பு:“உகப்பே உயர்வு என்பது தொல்காப்பியம் (789). உயர்வுப் பொருளொடு மகிழ்வுப் பொருளும் தருவது உகப்பு ஆகும். உவப்பு. உகப்பு ஆயதாம். உவகை நிலை உண்டாம் நிலைக் களங்களைத் தொல்காப்பியம் சுட்டும்: செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென்று அல்லல் நீத்த உவகை நான்கே -தொல். 1205 பெருஞ்செல்வம், பேரறிவு , பெருந்துய்ப்பு, மகிழ்வூட்டும் விளையாட்டு என்பவை அவையாம். உயர்வொடு உவகையும் ஒன்றியமை உகப்பு, உவப்பு ஆகிய இரண்டன் ஒன்றிப்பை விளக்கும். உவப்பே உவகை என்பதும் தொல்காப்பியம் (789). உகவை என்பதும் இது. முகவை இன்மையின் உகவை இன்றி -புறம். 368 உகம்: உகம்:1 அரங்கத்தில் இசையும் கூத்துமாகத் தொடங்கும் குழுவினர் தலைப்பாட்டு அல்லது கூட்டியப் பாட்டு உகம் எனப்படும். தலைப்பாட்டாவது உகம் -சிலப் . 14:15 அடியார்க். உகம்:2 உக்கம் > உகம் = தலை. உக்கத்து மேலும் -கலித்.94 பொருள்: தலைக்கு மேலும் நச். உகவை: உவகை > உகவை. * உகப்பு காண்க. உகாஅய்: ஒரு மரம். உகா நிறமும் புறா நிறமும் ஒத்தது என்றும், அதன்காய் குயிலின்கண் போன்றும் மணிக்காசு போன்றும் இருக்கும் என்றும், அதன் காய் மிளகு போன்ற சுவையது என்றும் கூறுவர். புன்கால் உலறுதலை உகாஅய் -நற்.66 புன்கால் உகாஅய் -குறுந். 274 புல்லரை உகாஅய் -குறுந். 363 உகாஅய் மென்சினை உதிர்வன கழியும் -அகம்.293 என்பனவற்றால் இலை தழை காய் முதலியவற்றை உதிர்த்து வறிதாய் நிற்கும் உகாஅ மரத்தின் அவ்வியல்பே பெயராக அமைந்தமையை உணரலாம் . உகு + காய் = உகாய் > உகாஅய். உகுக்கும் = பறியாமல் உதிர்க்கும் காயையுடைய மரம். ஓ.நோ கொய்யா உகிர்: உகிர் = நகம். நகம், பறவைக்கும் விலங்குக்கும் நண்டு முதலாம் ஊரிகளுக்கும் உள்ள உறுப்பாம். பறவை விலங்கு ஆயவற்றின் நக அமைப்பு. அவற்றின் செயல் என்பவற்றை அறிந்தால்தான், அப்பெயரீட்டின் அருமை புலப்படும். அவ்வுகிரின் கூர்மை, செழுமை ஆயவன்றி வளைவும் நெடுமையும் கொண்டமையால் உணவைப் பற்றவும் பகையை வெல்லவும் துணையாகின்றது. மகளிரின் உகிர் கீரை வகையை எளிமையாய்க் கிள்ளி எடுக்கப் பயன்படுதல் குறிக்கப்படுகின்றது. குருதி ஒழுகவும் உயிர் ஒழியவும் கீரை முதலிய கொய்யவும் பயன்படும் உகிர். அச்செயல்களைக் கொண்டே பெயர் பெற்றுள்ளது. குருதி உக உயிர் உக (குருதி ஒழுக) என்பன எண்ணத் தக்கவை. உகு + இர் = உகிர். உகுதல் என்பதற்கு உதிரல், அழலல், சிந்தல், சொரிதல், பொடியாதல், விடுதல் முதலாம் பொருள் களைத் தருதலை அகர முதலிகள் குறிக்கும். உகுக்க வைக்கும் உறுப்பின் பெயர் உகிர் என்றாயது. கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇ புறம்.43 வள்ளுகிர் அரிமான் வழங்கும் சாரல் பதிற்.12 குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரல் முருக. 52 தடிதடி பலபட வகிர்வாய்த்த உகிரினை -பரி. 4 கிளிவாய் ஒப்பின் ஒளிவிடு வள்ளுகிர் பொருந. 34 வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த குப்பை வேளை -சிறுபா. 136-7 தொடியும் உகிரும் படையாக நுந்தை கடியுடை மார்பிற் சிறுகண்ணும் உட்காள் வடுவும் குறித்தாங்கே செய்யும் -கலித். 82 அலக்சாந்தர் - போரசார் புலிநகப் போர் (உகிர்ப்போர்) நினைவில் எழும் அல்லவோ! நகம் ஒன்று கெட்டுப் போனாலும், அதன் உள்ளிருந்து ஒரு நகம் தோற்றமுறுதலும் உண்டு. அஃது, உகுத்தல் ஆதலால் அவ்வகையாலும் பொருந்தக் கூடும். உகுதல்: உதிர்தல் ஒழுகுதல் சொரிதல் ஆகிய பொருள்களில் உகுதல் வரும். கனி உதிர்தல், கண்ணீர் ஒழுகுதல், மழை சொரிதல். மேலிருந்து கீழே இறங்குதல் இழிதல் அல்லது ஒழுகுதல் உகுதல் ஆயது. ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுட -சிலப். 20:54 உகுநை: உகுதல் = உதிர்தல், ஒழுகுதல். நெற்கதிரில் இருந்து நெல் உதிரச் செய்யும் முதுநிலை ஈதாம். நோய் என ஒன்று இன்றி முதிர்வு மிகலால் ஒழுகிப் போகும் நிலை இது. இதனால் இவவகையில் உதிராப் பயிரினம் உண்டாக்கியுள்ளனர். உக்கரை: உக்கரை:1 உ+ கரை = உக்கரை. சுட்டுப் பெயர்.அக்கரை, இக்கரை என்பவை போல் வந்தது உக்கரை. இரண்டற்கும் இடைப்பட்ட கரை உக்கரையாம். ஒ.நோ.: உ + பக்கம் = உப்பக்கம். உக்கரை:2 உகரம் உயரம் பொருள் தரும். ஆதலால் உக்கரை என்பது மேலுலகைச் சுட்டியது. இக்கரை . துக்கரை bfhsலே -òறம்.357 உக்கல்: மீனவர் mல்லதுgரதவர்tழக்குச்bசால்ïது.miy மேலும் மேலும் எழும்புதலை உக்கல் என்பர். உ என்பது உயர்வு, உயரம், உச்சம் என்னும் பொருளில் வருவது. அது, உயர்ந்தெழும் அலையைச்சுட்டியது. மேடான ஓரிடப் பெயர் உக்கல் எனப் படுதலும் அறியலாம். உக்காரி: உரு > உக்கு + ஆர் + இ = உக்காரி; அது பிட்டு. பிட்டு - பிடித்து வைக்கப்பட்ட மாவு; உலர் ஈரப்பதம் உடையது; பொல பொல என உதிர்வது. ஆதலால் உக்காரி எனப்பட்டது. உகுதல் = ஒழுகுதல்; உதிர்தல், பிதிர்தல் (திவா). உக்காரை: இனிப்பு என்னும் பொருளில் உக்காரை என்பது. பார்ப்பனர் வழக்காக உள்ளது.அக்கார அடிசில் என்பது கற்கண்டு முதலிய இனிப்புச் சோறு. உ என்பது உயர்வுப் பொருள் தருதலால் உயர்ந்த - விருப்புடைய - இனிப்புணவு குறித்து உக்காரை என வழங்குகின்றது. உக்காரை - உக்காரி (த. சொ. அ). உக்குதல்: உட்குதல் > உக்குதல் = அஞ்சி ஒடுங்குதல். உருமுரற் றன்ன உட்குவரு முரசம் -புறம்.197 பிள்ளை எதைக் கண்டதோ? என்னவோ? உக்கிப் போய்விட்டது என்பது மக்கள் வழக்கு. உசத்து: உயர்த்து என்பது போலியாய்(ய-ச) உசத்து எனப்படும். அயர்ச்சி - அசத்தி எனப்படுவது போல. உசத்து என்பது உயர மாகக் கட்டப்பட்ட அணையைக் குறிப்பது சேரன்மாதேவி வட்டார வழக்காகும் உசத்தி என்பது உயர்த்தி என்னும் பொருளில் வருதல் பொது வழக்காகும். உசாத்துணை: உசாவுதல் = கலந்துரையாடல், உண்மை காண்பதற்கு ஆராய்தல்,வழக்கில் சான்றுகளை வினாவுதல் என இந்நாளில் வழங்குகின்றது. அதற்கென அமைந்த ஊர்ப் பொது இடம் சாவடி அது, உசாவடி உகரம் கெட்டுச் சாவடி என நின்றது. பழநாளில் தலைவிக்கு அமைந்த தோழிகள் இருவகையர். ஒருவகையர் உசாத்துணை; மற்றொருவர் அசாத்துணை. உசாத்துணை என்பார் தலைவிக்கு நலமானவற்றை எண்ணி வினாவி ஏற்றவை செய்யும் துணை. தலைவியின் அயர்வு மனக்கவலை போக்குவார் அசாத்துணை. சேயாறு சென்று துனைபரி அசாவாது உசாவுநர்ப் பெறினே நன்றுமன் -குறுந். 269 பொருள்: நெடிய வழியைக் கடந்து விரைகின்ற குதிரைகள் தளர வேண்டாமலே நின் கருத்தென்னாம் என வினாவுவாரைப் பெற்றால் நன்றாம் உசாவுவார் = கருத்தறிவார். நலங்கேழ் அரிவை புலப்பு அசா விடவே -குறுந். 338 உசாவுதல் மிக நுண்மையானது என்பதை, உசாவின் அன்ன நுண்ணிடை -பெருங்.5:6:5 என்றும், உசாப் போல உண்டே மருங்குல் -யா.கா.ஒழிபு.8மேற் என்றும் வரும் உவமைகளால் அறியலாம். உசாவடி: உசாவு + அடி = உசாவடி = ஊர் விசாரணை நிகழும் இடம். அரசியல் அதிகாரிகள் ஆண்டுதோறும் தலைமையூர் களுக்குச் சென்று தங்கியிருந்து அப்பகுதி ஊர்களைப் பற்றிய அனைத்து ஆய்வுகளையும் நிகழ்த்தும் பொது இடம். அரசு வரி வாங்கும் நிலையமுமாகும். சாதிவரி இனவரி வெட்டிவரி மற்றும் உசாவடியில் கட்டும் வரிகளும் (க.க.அ.மு 65) உசுப்பல்: உசுப்பல் = எழுப்பல், ஏவிவிடல். நாயை உச் உச் எனக் கூப்பிடல் உண்டு. உச்சுக் காட்டல், ஊச்சுக் காட்டல் - அழைத்தல்; அது படுத்திருந்தால் எழுப்புதலும், ஒன்றன் மேல் ஏவுதலும் உசுக்காட்டல் என வழங்கும் .அவ்வழக்கத்திலிருந்து உறங்குபவரை எழுப்புதல் உசுப்பல் என ஆயிற்று. எப்படி உசுப்பியும் எழும்ப வில்லை என்பது கும்பகன்ன உறக்கத்தாரை எழுப்புவார் குறை கூறல். உசும்பல் = எழும்புதல். அணிலைப் பிடிக்க நாயை உசுக்காட்டுவார் மிகப்பலர். உசுப்புதல்: உயிர்ப்புதல் > உசுப்புதல் = உயிர்போனது போல் கிடப்பவனை- கிடப்பதை - எழுப்பி விட்டு உயிர்த் துடிப்புடைமை யாக்குவது. * உசுப்பல் காண்க. உசும்பல்: உசும்பல் = எழும்பல். அதிர்ப்பின் உசும்ப -பெருங். 3:13:59 குழந்தை உசும்பிவிட்டது ஓடிப் போய்த் தூக்கு என்பது வழக்கு. உச்சந்தலை: உச்சம் + தலை = உச்சந்தலை; உச்சம் > உச்சி, தலை உச்சி, உச்சந்தலை எனப்பட்டது. இலக்கணப் போலி. உச்சந்தலையில் வெயில் அடிக்கிறது; துண்டைப் போட்டுக் கொள் என்பது உலக வழக்கு. உச்சிக்கிளை, உச்சி மேடு, உச்சிப் பிள்ளையார் என உச்சம் உச்சியாகவும் வழங்கு கின்றது. உச்சியில் விளக்கெண்ணெய் வைத்துத் தேய்; சூடு குறையும் என்பதும் வழக்கு. உச்சி எடுத்தல், வகிடு எடுத்தலாம். உச்சினால் போல் எறி என்றால் தலையில் படுமாறு குறிபார்த்து எறி என்பதாம். பின்னர்க் கூர்மையாய் உரிய இடம் பார்த்து எறி என்றாயது. உச்சம்: உச்சு > உச்சம். உகரச்சுட்டு, உயரச்சுட்டுமாம். மிகக் கூடுதல். வெயில் இன்றைக்கு உச்சமாக அடிக்கிறது; குடையும் செருப்பு மில்லாமல் வெளியே தலைகாட்ட முடியாது என்பது வழக்கு. வியாழன் உச்சத்தில் இருக்கிறான் இப்பொழுது என்பது கணியம். * உம்பர் காண்க. உச்சி: உச்சி:1 உயரம். தலையின் உச்சி (உச்சந்தலை); உச்சி முகர்தல்; உச்சி குளிர்தல் என்பவை வழக்கு. உச்சிக் குடத்தர் -அகம். 86 உச்சி:2 மூக்கின் உச்சி. மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி நற் -149 உச்சி:3 வான்முகடு, மலை முகடு, கூரை முகடு, நெடுவரை உச்சி -அகம்.22 உச்சி:4 உச்சிப்பொழுது. உச்சிப் பொழுதாயிற்று, வேலையைச் சுருக்காக முடி என்பது மக்கள் வழக்கு. உச்சி:5 உச்சிக்கிளை, உச்சாணிக் கொப்பு. உச்சி:6 உச்சி = சரியாக. உச்சினாற் போல எறி என்பது மக்கள் வழக்கு. உச்சுக்காட்டல்: படுத்திருக்கும் நாயை எழுப்பி விடச் செய்யும் ஒலிக்குறிப்பு. உச் உச் என்றதும் நாய் எழுந்து முன்னே நிற்பதை வெருட்டும். உசுப்புதல் = எழுப்புதல். உசுப்புக் காட்டுதல் > உச்சுக் காட்டுதல். * உசுப்பல் காண்க. உச்சுக் கொட்டல்: உச்சுக் கொட்டல்:1 கேட்டல், ஒப்புக் கொள்ளல், வருத்தம் தெரிவித்தல். உச் உச் என்பது வாயின் ஒலிக்குறிப்பு. ஒருவர் வருந்தக் தக்க அல்லது உணர்வூட்டத் தக்க ஒரு செய்தியைச் சொல்லும் போது அதனைக் கேட்பவர் வாயால் உச்சிட்டுக் கொண்டு கேட்பது வழக்கம். அவ்வாறு கேட்பதை உச்சுக் கொட்டல் என்பர். உச்சுக் கொட்டுதல் என்பது ஏற்றுக் கொள்ளுதல், ஒப்புக் கொள்ளுதல், வருத்தம் தெரிவித்தல் முதலிய பொருள்களைத் தருவதாய் வழக்கில் உள்ளது. சொல்லும் போது உச்சு உச்சு என்று கேட்டு விட்டு இப்பொழுது சொல்வதைப் பாரேன்; செய்வதைப் பாரேன் என்று மாறுபட நடக்கும் போது இடித்துக் காட்டுவதும் வழக்கே. * ஊம் போடல் காண்க. உச்சுக் கொட்டல்:2 சுவையான பண்டம் தின்றவர் அதனை மேலும் விரும்பிக் கேட்டால், என்ன உச்சுக் கொட்டினாலும் இனி இல்லை ; தீர்ந்து போய்விட்டது என்பது மக்கள் வழக்கு. உச்சுதல்: மேல்நோக்கி எறிதல். உச்சி நோக்கி எறிதல் உச்சுதல் ஆயது; உச்சுதல் விரைந்து மேலே குறி வைத்து எறிதலுமாம். உச்சை: கதிர் தலைக்கு நேராக வரும் நேரத்தை உச்சை என்பது குமரி மாவட்ட வழக்காகும் . உச்சிப் பொழுது, உச்சி வேளை என்பது பொதுவழக்குக்காகும். உச்சியார்த்தை என்பது தருமபுரி வட்டார வழக்கு. தலையின் மேற்பகுதியை உச்சந்தலை என்பது பொதுவழக்கே. உடக்கு: உடக்கு:1 சண்டை இடுவதை உடக்கு என்பது குமரி மாவட்ட வழக்கு உடற்றுதல் (போரிடுதல்) என்பது இலக்கிய வட்டார வழக்கு உடற்று என்பது உடக்கு என மக்கள் வழக்கில் உள்ளது. உடக்கு:2 திருகாணிச் சுரையின் உட்புரி (வெ. வி. பே). உடக்கு:3 உடக்கு = உடல். உடக்கைத் தகர்த்தே உயிரை யமன் கொள்கையிலே-பட்டினத் . பா. (த.சொ.அ) உடங்கு: உடங்கு:1 உடன் + கு = உடன்கு > உடங்கு = ஒருங்கு, உடனாகி. உடங்கமர் ஆயமொ டேத்தினம் தொழுதே -பரிபா. 19: 105 பொருள்:உடன்மேவிய சுற்றத்தோடு ஏத்தி வாழ்த்தினேம் (ப.உ.) கடுங்கதிர் முத்தும் கைபுனை மலரும் தடந்தோட் கொப்ப உடங்கணிந்து -பெருங். 2: 22: 230-231 உடங்கு:2 உடங்கு = ஒத்து. உடங்குயிர் வாழ்க வென்று -மணிமே. 10:64 உடம்படிக்கை: இருவரும் ஒத்து எழுதும் உறுதிப்பாட்டு எழுத்து உடம்படிக்கை எனப்படும். ஆள்பவர் வரலாற்றில் அவர்கள் செய்த உடம்படிக்கைச் செய்திகள் உண்டு. * உடம்பாடு காண்க. உடம்படுமெய்: உடம்(ன்) + படு + மெய் = உடம்படுமெய். உயிரீற்றுச் சொல்லின் முன் உயிர் முதல் சொல் வருமானால் அவ்விடத்து இரண்டு உயிர்களுக்கும் இடையே. அவ்வுயிர்களை உடம்படுத்துவதற்கு - இணைப்பதற்கு - ஒரு மெய் யெழுத்து வரும். அம்மெய்யெழுத்திற்கு உடம்படு மெய் என்பது பெயர். ஈருயிர்கள் இணைதல் இல்லை; இணைக்க வரும் மெய் (உடல்) எழுத்து உடம்படு மெய்யாயிற்று. அவ்வாறு வரும் எழுத்துகள் ய், வ் என்பவை. இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை உயிர்வழி வவ்வும் ஏமுன் இருமையும் உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும் -நன்.162 யகர உடம்படுமெய். இ. மணி + அடித்தான் = மணியடித்தான் ஈ. தேனீ + எங்கே = தேனீயெங்கே ஐ. பாலை + அருந்து = பாலையருந்து வகர உடம்படுமெய். அ. மண + அடி = மணவடி. ஆ. பலா + அது = பலாவது. உ. வழு + இல்லை = வழுவில்லை. ஊ. பூ + எங்கே = பூவெங்கே. எ. எ + இலை = எவ்விலை. ஒ. நொ + அருமை = நொவ்வருமை. ஓ. நோ + இல்லை = நோவில்லை ஔ. கௌ + அழகிது கௌவழகிது. ஏமுன் இருமை ( ய, வ) ஏ. சே + அடி = சேயடி; சே + அடி = சேவடி. 19ஆம் நூற்றாண்டில் ஓ என்பதும் ஏ யைப் போல் இருமை உடம்படு மெய்களையும் ஏற்கும் வழக்கம் புகுந்தது. எ-டு: கோ + இல் = கோயில்; கோ + இல் = கோவில். ஆனால் பழந்தமிழாட்சி கோயில் என்பதே, இல்லொடு கிளப்பின் இயற்கை யாகும் -தொல். 293 உடம்பாடு: உடம்(ன்) + பாடு = உடம்பாடு. உடன்பட்டு - ஒன்றுபட்டு- ஏற்றல்; உடன்பாடு > உடம்பாடு ஆகும். உடம்பாடில் லாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போ டுடனுறைந் தற்று -திருக். 890 ஓர் அரசுக்கும் மற்றோர் அரசுக்கும் ஒப்புகையான செய்தியை அல்லது திட்டத்தை எழுதி இருபக்கத்தவரும் ஒப்பமிடுதல் உடம்படிக்கை ஆகும். ஈரூரினர்க்கும் ஈருறவினர்க்கும் இத்தகைய உடம்படிக்கைகள் எழுதப் படுவதும் உண்டு. வரலாற்றுத் துறையில் உடம்படிக்கை எழுதுதலும் அதனை மீறலும் பகைத்தலும் போரிடலும் மீள உடம்படிக்கை எழுதுதலும் காணலாம். உடம்பிடி: உடன்பிடி > உடம்பிடி. வேலின் ஒருவகையான முத்தலை வேல் முக்கூறுபட்ட அது தாக்குங்கால் முக்கூறும் ஒன்றனோடு ஒன்று இணைந்து மூவேல் முனையும் ஒருங்கே தாக்கலால் உடம்பிடி எனப்பட்டது. உடம்பு: உடல். * உடல் காண்க. உடல்: உடல்:1 உடல் = வைப்பு முதல். உடம்பு, யாக்கை, மெய் முதலாம் பெயர்களைடைய உடல் முதலாகு பெயராக நிற்கும். உயிர் உடலோடு இருக்கும் காலமே வாழ்வுக் காலமாகக் கொள்ளப்படும். வாழ் முதலாவது அது. எம்முதலுக்கும் முதலாவது உடல் முதலேயாம். முதலைக் கொண்டே, வேண்டும் முதலைத் தேடலாம்; முதன்மையும் உறலாம்; முதல்வனையும் அடையலாம்; முதல்வனும் ஆகலாம். கல்வெட்டு வழியே வைப்பு முதலாகவும் அறிய வருகின்றது. அறச் செயல்களுக்கு வைப்பு நிதி வைத்து அதன் வட்டியை மட்டும் எடுத்துப் பயன்படுத்தும் வழக்கம் பண்டே இருந்தது. அவ்வைப்பு நிதியாகிய முதல் உடல் என வழங்கப்பட்டது. திருவாபரணம் திருப்பணிக்கு உடலாய்ச் செல்வதாக முதல் குடுத்த காசு இருபது உடல்கொண்டு பூசையும் திருப்பணியும் செலுத்து வதாகவும் உடல் கோளுக்கு இன்னாயனார்க்குத் தேவ தானமாக விட்டநிலம் (க.க.அ.மு 66) உடல்:2 உடல் = உடம்பு. உழலுதலுக்கு எப்பொழுதும் இடமாக இருப்பதால் உடல் எனப்பட்டது என்பது பண்டு தொட்ட கருத்து. உழலுதல் > உடலுதல் > உடல் என்பது வழிப்பொருள். இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ என வினாவி இல்லை என்றது வள்ளுவம்(1029). உடற்றுதல் என்பதற்கு அழித்தல், உலைத்தல், சிதற அடித்தல், சினத்தல், துரத்தல், பகைத்தல், பொருதல், வருத்துதல் முதலாம் பொருள்களை அகர முதலிகள் தருகின்றன. உடற்குறையாகக் குறள், செவிடு, மூங்கை, கூன், குருடு, மருள், உறுப்பிலி எனவும், உடற்குற்றமாகப் பசி,நீர் வேட்டல், அச்சம், வெகுளி, உவகை, வேண்டல், நினைப்பு, உறக்கம், நரை, நோய், இறப்பு, பிறப்பு, மதம், இன்பம், வியப்பு, வியர்ப்பு, கையறவு எனவும் கூறுவர். மேலும் தலையில் சொண்டு, சொறி, ஈர், பேன், சொட்டை, வழுக்கை; மூக்கில் சளி; வாயில் உமிழ்நீர்; காதில் குறும்பி; கண்ணில் பீழை, வியர்வை, நீர், மலம் எனவும் கூறி இவ்வுடல் நிலையற்றது பொய்யானது அழிவது என வெறுப்பர் இதற்கு இடையே இவ்வுடல் மெய் எனவும், இவ்வுடற் பொறிகளின் வழியேதான் ஐயறிவும் ஆறாம் அறிவும் தெய்வப் பேறும் பெற வேண்டும் எனவும் இவ்வூனுடல் ஆலயம் எனவும் கூறிய மெய்யுணர்வாளர்களும் இருந்தனர். பொய்த் துறவர் பார்வைக்கும் மெய்த்துறவர் பார்வைக்கும் உள்ள இடைவெளி மலைக்கும் மடுவுக்குக்கும் உள்ள இடைவெளி போன்றதாயிற்று. உடலைப் போல் உயர்படைப்பு ஒன்றில்லை என்பது சுட்டிக் காட்ட வேறொன்று வேண்டுவது இல்லை. சிற்றோட்டை பட்டால் பந்து படுத்து விடுகிறது! உந்துகளில் தேய்வை (டயர்) உளவே! அவற்றின் உள்ளே இருப்பது. காற்றுத்தானே! அக்காற்று எத்தனை கல்(டன்) சுமை தாங்குகிறது. தேய்வையில் சிறு துளை விழுந்து விட்டால்? ஆனால் கண்ணுக்குத் தெரியும் ஓட்டை ஒன்பது இருந்தும் உயிர் உலாவும் காலமெல்லாம் உலாவிக் கொண்டுளதே! உறங்கும் போதும் உலாவுகிறதே! ஒவ்வோர் அணுவினும் உலாவுகிறதே! குடலியக்கம் குருதியியக்கம் மூச்சியக்கம் உடலியக்கம் எல்லாம் தாமாக இயங்குகின்றனவே! இதன் மூலம், ஒரு பனித்துளி அளவினும் சிறிய விந்து தானே! அதன் விளைவு எத்தகைய விந்தை - வியப்பு - ஆகின்றது. அதனால் இவ்வுடல் உயிருடன் நலமாக நீடச் செய்தல் கடமை என்பது காட்ட clš> உடம் > உடம்பு > உடமை எனக் கருதி வாழ வேண்டும் என்பதாலேயே, உடலை முதல் என்றனர் இலக்கணர். முதலாகு பெயர், சினையாகுபெயர் என்பவை அறியின் வாழ் முதல் என்பது உடலே என்பது புலப்படும்! வாழ் முதலாம் இறை கோயில் கொண்ட இடம் வாழ் முதலாகத்தானே இருக்க வேண்டும் இதனால்தானே மெய்யுணர்வில் மேம்பட்ட திருமூலர். உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பி னுள்ளே உறுபொருள் கண்டேன் உடம்பி னுள்ளே உத்தமன் கோயில் கொண்டான் என்று உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே -திருமந். 725 என்றாராம். உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார் -திருமந். 724 என்றும் அவர்தாமே கூறினார். உடலுதல் - உடற்றுதல் - நோயும் தீமையும் பகையும் பிறவும் உடற்ற என்பதை விடுத்து, அவற்றை உடற்ற - அழிக்க - வாய்த்தது உடலே எனக் காணல், உடல் உயிர் உலகு ஆகிய எவற்றுக்கும் வேறும் பெருமையும் ஆவதாம். முதல் இலார்க்கு ஊதியம் இல்லை (திருக். 449) என்பது எத்தகு தேர்ச்சியுரை. முதலாம் உடல் பிறப்பு முதல் இறப்பு வரை முதல்வன் வாழ்விடம் எனக் கொண்டு வாழ்வார் வாழ்வு முதல்வன் வாழ்வுதானே! அம்முதல்வன் வாழ்வு வாழ் முதல் வாழ்வு என உடலோம்பல் உயிரோம்பல் உலகோம்பல் கொள்வோம்! உடம்பைப் பெற்ற பயன் அதுவே. உடல் அழகா எனின், பொய்யுடல் புகழுடல் என வகுத்த நுண்ணியர் நோக்கு என்ன, அழியும் உடலால் அழியா உடலைப் பெறுதல் போல அருமை முதல் ஏதாவது உண்டா? இட்ட வித்துத்தானே விளைவாம்! பொய்யாய்ப் போவதாம் உடல் என்றும் மெய்யாய் இருக்கும் உடலைத் தருகின்றது என்றால் பொய்யுடலா இது! மெய்யுடல் தந்த மெய் அது என்பது மெய்யல்லவா! உடல்:3 தமிழர் கண்ட மெய்யியல் கோட்பாடு ஒலி எழுத்து எழுப்ப - வரி எழுத்து எழுத-த் தொடங்கும் போதே எழும்பிய சான்று, உயிர் எழுத்து மெய்யெழுத்து முதலாம், குறியீடு. மெய் யெழுத்தை உடல் என்றனர். ஏன்? * உயிர் காண்க. உடல் பற்றிய பெயர்கள் உடல் (உடன்): உயிருடன் சேர்ந்தே இயங்குவது அல்லது உயிருடன் இருப்பது. உடம்பும் அது. கூடு: (கூடு போல்வது) குஞ்சு பொரித்த பின் தொடர்பு நீங்கும் முட்டைக் கூடு போல உயிரைவிட்டு நீங்குவது குடம்பை அல்லது கூடு. (திருக். 338). மெய்: (போர்வை, மெய்மை). உயிரை மேலாகப் பொதிந் திருப்பது; ஓருயிர் இருப்பையும் இயக்கத்தையும் ஒழிந்த பின்னரும் மெய்ப்பிக்கும் வடிவுடையது. யாக்கை: (கட்டப்பட்டது). தோல் நரம்பு எலும்பு தசை அரத்தம் முதலிய எழுவகைத் தாதுக்களால் யாக்கப் பெற்றிருப்பது அல்லது முடையப் பட்டிருப்பது யாக்கை அல்லது முடை. கட்டை: (இயக்கமற்றது). உயிர் நீங்கியபின் கட்டை போலக் கிடந்து எரிவது அல்லது மண்ணோடு மண்ணாய்ப் போவது (தேவ. 219). உடக்கு;(உடல் > உடக்கு(தசை) ).உள்ளீடு அற்ற உடம்புக் கூடு மேனி: (மேல் > மேனி) உடம்பின் மேற்புறம். உடற்றுநர்: உடனாவர் நண்பர்; உடற்றுநர் ஆவார் பகைவர். உடற்றுநர். உடலுநர் எனவும் சொல்லப்படுவார். கடல்கொளப் படாஅது உடலுநர் ஊக்கார் கழல்புனை திருந்தடிக் காரிநின் நாடே -புறம்.122 உய்தல் யாவது நின் உடற்றி யோரே -பதிற். 84 உடனடி: உடன் + அடி = உடனடி(உடனே) வாங்கிய கடனை உடனடியாக (உடனே) மீளக் கட்டியாக வேண்டும் என்னும் இக்கட்டும் ஏற்படும். வீட்டுச் செலவும் சரி, நாட்டுச் செலவும் சரி, உடனடிச் செலவு என்பதற்கு ஓர் இருப்புத் தொகை கட்டாயம் வேண்டும். குற்ற வழக்குகளின் சான்றுகளை உடனடியாக எடுக்காவிட்டால் மறைக்கப்படுதல் இயல்பு. உடனடி என்பது நெருக்கடிதான்! அந்நெருக்கடியும் சில ஆக்கங்களை ஆக்கும். உடனுக்குடன் என்பதும் இது. உடனிலை: உடன் + நிலை = உடனிலை. உடல் நிலை எனப் பிரிப்பின் உடல் பற்றிய நிலையாகிவிடும். அது நலம் வினாதல். உடனிலை = ஒன்று பட்டிருத்தல் அல்லது கூடியிருத்தல். உடனிலை:1 ஓரிடத்து இருத்தல். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்தாரைக் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது. துறை - உடனிலை (புறம். 58) உடனிலை:2 உள்ளத்தால் ஒன்றுபட்டிருத்தல். ஒருவீர் ஒருவீர்க் காற்றுதிர் இருவீரும் உடனிலை திரியீர் -புறம். 58 உடனிலை மெய்ம்மயக்கு: உடன் + நிலை + மெய் + மயக்கு = உடனிலை மெய்ம்மயக்கு. ககரம் முதல் னகரம் இறுதியாகிய பதினெட்டு மெய்களில் ர, ழ என்னும் இரண்டு மெய்கள் நீங்கிய பதினாறு தம்முடன் தாம் வந்து மயங்கும் (கூடி நிற்கும் அல்லது உடன்நிற்கும்). அஃது உடனிலை மெய்ம்மயக்கமாம். எ-டு: சுக்கு, அங்ஙனம், அச்சம், மஞ்ஞை, பட்டு, திண்ணம், பத்து, வெந்நீர், அப்பன், அம்மை, மெய்யன், அல்லி, தெவ்வர், பள்ளம், காற்று, அன்னை. சுக்கு என்பதில் உள்ள க் என்னும் மெய்யை அடுத்துள்ள கு என்பதில் க் உ என்னும் எழுத்துகள் உடனிலை மெய்ம் மயக்கு உற்றிருத்தலைக் காண்க. இவ்வாறே பிறவுமாம். உடனுறை: உடன் + உறை = உடனுறை. ஒருவரோடு ஒருவர் ஒன்று கூடி வாழ்தல். ஒருவரோடு ஒருவர் என்பது தலைவன் தலைவியரைக் குறித்ததாம். சிறப்பு வகையில் பிறரைக் குறிப்பதாயினும் பொதுவகையில் குறிப்பது தலைவன் தலைவியரையே. உடனுறை வாழ்க்கைக் குதவி யுறையும் கடவுளர்கண் தங்கினேன் -கலி. 93 இடையில் காட்சி நின்னோடு உடனுறை வாக்குக உயர்ந்து பாலே -புறம்.236 உடன்கடன்: முன்பின் இல்லாமல் கேட்டவுடன் கொடுக்கவும், கொடுத்ததை மீளக் கேட்டவுடன் தருவதுமாகிய கடன் உடன்கடனாம். அதனை எழுத்தால் வரைந்து தருதல் உடன்கடன் முறி, உடன்கடன் ஓலை, உடன்கடன் வரைவு என வழங்கும். இக்கடனுக்கு வட்டி உண்டு. ஆனால், ஈடு பொருள் இல்லை. கையெழுத்திடலும் சான்றிடலுமே கடன் தொகைக்கு ஈடாம். அதனால் கடன் பெற்றவர் செலுத்தத் தவறினாலும் செலுத்த முடியா நிலையில் இருந்தாலும் சான்றொப்பம் இட்டார்மேல் நடவடிக்கை எடுக்கப்படுவதும், தண்டமாகச் செலுத்துவதும் நடைமுறைக்காட்சி. அதனால், ஏற்பது இகழ்ச்சி என்பதற்கு இதனைக் கூறுவாரும் உளர். பிணைபட் டெவர்க்கும் பின்சொல் தீது என்பாரும் உளர். உடன்கட்டை ஏறல்: உடன் + கட்டை + ஏறல். உடன் = கணவனுடன். கணவன் இறந்து சுடலையில் கட்டைமேல் வைக்கப் பட்டானாகிய அவனொடு அவன் மனைவி உடன் கட்டை ஏறி உயிர் ஒடுக்குதல் உடன்கட்டை ஏறலாம். தீப்பாய்ந்த அம்மை எனப்படுவார் இவர். மிக்க என் கணவன் வினைப்பயன் உய்ப்பப் புக்குழிப் புகுவேன் என்றவள் புகுதலும் -மணிமே. 16: 27-28 இவ்வழக்கம் ஆங்கிலர் ஆட்சிக் காலத்தில் இராசா ராம் மோகனர் முதலோர் முயற்சியால் திருவர் (lord) பெண்டிங்கு என்பாரால் சட்டத்தின் வழியே தடுக்கப்பட்டது. உடன்கேடன்: உடன்கேடன்:1 உடன் + கேடன் = உடன்கேடன். உடன்கேடன் = கேடுற்ற போதும் உடனிருந்து தானும் கேட்டை அடைபவன். தாமும் தம்மோடு உடன்கேடான நெஞ்சமே யாயிருந்தது நாலா. 3946 உரை. உடன்கேடன்:2 உடனிருந்து கெடுப்பவனும் உடன்கேடன் எனப்படுவான். அவன் உட்பகை, இரண்டகன் ஆவன். உடன்படுத்தல்: உடன்படுத்தல்:1 உடன்படுத்தல் > உடம்படுத்தல். தலைவன் மனைவியரை ஒன்றுவிக்கும் பார்வை உடம்படுத்தல் எனப்படும் (தொல். 1042). உடன்படுத்தல்:2 காதலன் காதலியர், தம் பெற்றோர் தம் காதலை ஏற்காமல் மணத்தடை இடுவர் எனின், தாம் உடன்போக்கு மேற்கொள்ள நேரும். அதற்குத் தலைவனோ தலைவியோ தயங்கின் தோழி இருபாலும் உடன்படுத்தி உடன்போக்குக் கொள்ள வைப்பாள். அவள் செயல் உடன்படுத்தல் (உடம்படுத்தல்) ஆகும். தலைவன் தலைவியர் கொள்வது உடம்படுதல் உடம்பாடு எனப்படும். * உடன்போக்கு காண்க. உடன்பாடு: இருவர் உடன்படுவதும், பலர் உடன்படுவதும், நாடுகளும் பல நாடுகளும் உடன்படுவதும் உடன்பாடு எனப்படும். உடன்பாட்டை எழுத்துருவாக்குவதும் உடன்பாடு ஆகும். உடன்படிக்கை என்பதும் அது. உடன்பாடு உடம்பாடு, உடம்பிடி எனவும் வழங்கலாயிற்று. உடன்போக்கு: தலைவன் தலைவியர் தம் மணத்திற்குப் பெற்றோர் தடையாய வழித் தாமே வேறிடம் போய் மணங்கொள்வதற்குப் போதல் உடன்போக்கு (உடம்போக்கு) ஆகும். உடன்போக்கின் போது மற்றை ஊராரால் மணச்சடங்கு நிகழ்தலும், உடன்போக்கு மீட்சியில் தம் குடும்பத்தில் மணச்சடங்கு நிகழ்தலும் பண்டை வழக்கமாம். உடன்போக்கு வகை போக்கறி வுறுத்தல் போக்குடன் படாமை போக்குடன் படுத்தல் போக்குடன் படுதல் போக்கல் விலக்கல் புகழ்தல் தேற்றல் என்று யாப்பமை உடன்போக் கிருநான்கு வகைத்தே -நம்பி. 181 உடன்வயிற்றோர்: ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர். பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும் -புறம். 183 உடன்வயிற் றோர்கள் -சிலப். 10: 227 உடன்பிறப்புஎன்றும், உடம்பிறப்பு என்றும், பிறப்பு என்றும் மக்கள் வழக்கில் சுருங்கினும் பொருள் அதுவேயாம். உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா என்பதை மாற்றி வாழ்வாரே - வாழ்ந்து காட்டுவாரே - உடன்பிறப்பு என்பதன் சான்றாவார் இருவர் களப்போரில் நிற்கின்றனர். உடன்பிறப்பை உணர்த்தி நெறிகாட்டிய மண் தமிழ்மண்! ஒருகுடற் படுதர ஓரிரை துற்றும் இருதலை ஒருபுறா என்னும் பிறப்பினர் இப்படி எதிரிடை யாகலாமா எனக் கேட்டது தகடூர் யாத்திரை. அதனை இன்றுவரை கேட்டதா தமிழ்மண்? உடு: உடு:1 உடு = உடுத்து என்னும் ஏவல் உடுத்தல் = சுற்றிக் கட்டுதல். நீராரும் கடல்உடுத்த நிலமடந்தை -மனோன். தமிழ். உடு:2 விண்மீண். விண்மீனையும் விண்மீன் வடிவாகக் காட்டும் உடுக்குறியையும் காணின் வட்டமாதல் தெளிவாம். உடு:3 மதிலைச் சூழ அமைந்திருக்கும் அகழ். கோட்டை வட்டமாதல் போல் அதன் அகழும் வட்டமாதலால் உடு எனப்பட்டதாம். உடுக்குறி: உடு + குறி = உடுக்குறி உடு = விண்மீன், குறி = அடையாளம். விடுபாட்டுக் குறியாகவும், அடையாளக் குறியாகவும் இது பயன்படுகின்றது. எ-டு: * * * உடுக்கை: உடுக்கை:1 உடுக்கை = உடுப்பு; உடுத்திய உடை. உடுக்கை இழந்தவன் கைபோல -திருக். 788 உடுக்கை:2 இசைக்கருவி வகையுள் ஒன்றான தோற் கருவிகளுள் ஒன்று உடுக்கை. பேரிகை படகம் இடக்கை உடுக்கை உடுக்கு என்பது இது. உடுக்கடித்தல் பேயோட்டல் இன்றும் ஒழியாமல் சிற்றூர்களில் உண்டு. உடுப்பு: வட்டமாகச் சுற்றிக் கட்டும் உடை உடுப்பு ஆயிற்று. உடு > உடை. உடு என்னும் விண்மீன் பெயரும் வட்டம் குறித்ததே. வட்டுடை என்பது போர் வீரர் உடுத்திய உடைவகையுள் ஒன்றாம். உடுக்கை, உடுக்கு என்பனவும் வட்டம் குறித்தனவே. * கோடங்கி காண்க. உடும்பு: உடும்பு ஊர்வதாம் ஓர் உயிரி. உடு = வட்டம். உடும்புப் பிடி என விடாப்பிடியைக் குறிப்பர். உடும்பின் வாலைப் பற்றி அதன் வாயில் தந்துவிட்டல் அதனை விடாமல் பற்றிக் கொண்டு பற்றுக் குறடுபோல் வளைந்து சுருண்டு கிடக்கும். உடும்பு வேட்டையர் உடும்பைப் பற்றி அவ்வாறு வாலைப் பற்றச் செய்து வளையங்களைக் கம்பில் கோத்துக் கொண்டு வருவதுபோல் வருதலைக் கண்டால் உடும்பின் இயல்பும் அப்பெயரிட்டார் அறிவுக் கூர்ப்பும் விளக்கமாம். உடும்பியம் என்பது பெரம்பலூர் - ஆற்றூர்ச்சாலை வழியில் உள்ளதோர் ஊர். உடும்புக்கு இரண்டு நாவுண்டு என்பர் (வெ.வி.பே). அதனால் உடுப்பு நாக்கன் என்பது பொய்யனை - இரண்டகனை-க் குறிக்கும் என்பதும் அது. பாம்புக்குப் பிளவு பட்ட நாக்குள்ளதை நினைவு கூரலாம் அதனைப் பிண்ணாக்கு (பிள் நாக்கு) என்றார் காளமேகர்(தனிப்). உடை: உடை:1 உடு + ஐ = உடை சுற்றிக் கட்டும் ஆடை . உடு = வட்டம். நீராரும் கடல் உடுத்தலால் நிலமகள் கடலாடையள் ஆகவில்லையா? மரவுரி என்பது என்ன, மரத்திற்கு உடையாக இருந்ததுதானே! உடை:2 முள் மரவகைகளுள் உடை மரம் என்பது ஒன்று; வறண்ட நிலத்து மரம் அது. ஒட்டடை, உடை, கருவேல்,வெள்வேல், சடைவேல் என்பவை அவ்வினத்தவை. பாஞ்சாலங்குறிச்சி நாட்டுப்பாடலில் , ஒட்டரங்காடாம் ஒடங்காடாம் எனவரும். உடை:3 உடைக்க என்னும் ஏவல். தேங்காய் உடை என்பது மக்கள் வழக்கு. உடைப்பில் போடல்: தள்ளிவிடல். உடைப்பை அடைக்க மண்ணையும் கல்லையும் போடுவர். சிலர் எரிச்சலால் உதவாக்கரைப் பிள்ளைகளையும் வேலைக்காரரையும் உன்னை உடைப்பில் வைக்கலாம், உடைப்பில்தான் போட வேண்டும் என்பர். சில வேலைகளைச் செய்யாது தவிர்த்தலைக் கிடப்பில் போடல் என்பதுடன் உடைப்பில் போடல் என்பதும் உண்டு. முன்னது பள்ளத்தில் தள்ளல், பின்னது காலத்தைத் தள்ளல். உடைப்பில் போட்டு மூடப்பட்டது வெளிப்படுமா? புதைபொருள் ஆய்வார்க்கு ஒரு காலத்துப் புலப்படலாம். உடைமை: உடையராம் தன்மை, உடைமையாம். உடை அகலாமல் சுற்றியும் பற்றியும் காக்கப்படுவது போலக் காக்கப்படுவது உடைமையாகும். உலக உடைமையாம் முழுமையில் இருந்து உடைத்து நாம் நமக்கென எடுத்துக் கொள்ளும் பொருளே உடைமையாம். பருப்பொருளாம் உடைமையும், நுண்பொருளாம் உடைமையும் என உடைமை இரண்டாம். நிலபுலம் முதலியன முன்னது; அன்பு அறிவு முதலியன பின்னது. உடைமையுள் ஒன்றாகப் பொருளுடைமையை வள்ளுவர் வைத்திலர். பத்து உடைமைகளைக் கூறியவர், பொருளின் இன்றியமையாமையைப் பலபட விரித்தவர் பொருளுடைமையை உடைமையாகக் கூறாமை நோக்கத் தக்கது. அறிவுடைமை, அன்புடைமை முதலியவை தம்மைவிட்டு என்றும் போக விடாமல் வாழும் வாழ்வே வாழ்வாம் ! அவ்வாறு பொருளைப் போகவிடாமல் வாழும் கருமி வாழ்வு வாழ்வாகாது! இரவினும் இழிவு அக்கரவு வாழ்வு! என்பதால் உடைமையாகக் கூறினார் அல்லர் என்க. உடைமையுள் தலையாய உடைமை, உள்ள முடைமை யாகும். உள்ளமுடைமை உடைமை (திருக். 592); உடையர் எனப்படுவது ஊக்கம் (திருக். 591) என்பவை அவை. உடையார்: உடையார்:1 உடைமை + ஆர் = உடையார் = உடைமையாகக் கொண்டவர் இறைவர், அரசர், குருவர், தலைவர் முதலோர்க்குரிய விருதுப் பெயர். அல்லது மதிப்புறு பெயர். நம்மை உடைய சக்கரவர்த்தி ஸ்ரீ இராசராசதேவர், உடையார் ஸ்ரீ இராசராச தேவர், ஸ்ரீ இராச ராஜிவரம் உடையார் உடையார் சர்வ சிவபண்டித சைவாச்சாரியார் (க.க.அ.மு.26) உடையார்:2 உடையார் ஒரு குலப்பெயர்; உடையார்பாளையம் உடையாப்பட்டி என்பவை ஊர்ப்பெயர்கள். உடையார்:3 உடையாதவர், ஒன்றுபடுத்துபவர். அவர் தங்கமானவர்; எவர் கூட்டையும் உடையார் (ம. வ) உட்கண்: உள் + கண் = உட்கண் = மனக்கண். நெஞ்சென்னும் உட்கண் -நாலா. 2612 உட்காய்ச்சல்: உட்காய்ச்சல்:1 உள் + காய்ச்சல் = உட்காய்ச்சல். உடலின் புறத்தே வெளிப்படாமல் உள்ளே இருக்கும் வெப்பு அல்லது காய்வு உட்காய்ச்சல் எனப்படும். உட்காய்ச்சல்:2 உள்ளே உண்டாம் பொறாமை, காய்ச்சல் இல்லாமலே காய்தலாதலால் அது உட்காய்ச்சல் எனப்படும். உட்காந்தி என்பதும் அது. உட்கார்தல்: உட்கார்தல்:1 உட்கு + ஆர்தல் = உட்கார்தல். உடலுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் உண்டாம் உளைச்சலை ஓய்ந்து இருந்து அகற்றிக் கொள்ளுதல் உட்கார்தலாம். உட்கார்தல்:2 புறத்தே போகாமல் வீட்டின் உள்ளேயே - குச்சிலின் உள்ளேயே இருத்தல். பெண்கள் முதற் பூப்படைந்து அதன் சடங்கு நிறைவேறும் வரை வீட்டின்புறத்துக் குடிசை யமைத்து உள்ளேயே இருக்கும் நிலை உட்கார்தலாம். பூப்பு நீராட்டின் பின் வீட்டொடு கூட்டுவது என்பது அண்மைக் காலம் வரை இருந்த சிற்றூர் வழக்கு. தாய்மாமன் முறையினரே அக்குடிசை அமைப்பர். நீராட்டு முடிந்தபின் குடிசையை எரித்து விடுவர். உட்காழ்: உள் + காழ் = உட்காழ் = உள் வயிரம். உட்காழ் ஈன்ற ஒருகோல் -பெருங். 3: 12: 70 அகக்காழ் என்பதும் இது. உட்கிடை: உள் + கிடை = உட்கிடை. உட்புகுந்த நிலை இருப்பு. ஓரூரிற்கு அமைந்த எல்லை,புறவூர் எல்லைக்குள்ளும் சென்று அமைந்திருப்பதும், அவ்வாறே ஒரு கூற்றம் மற்றொரு கூற்றத்து எல்லையைக் கடந்திருப்பதும் உட்கிடை என்பதாகும். இவ்வூர் நிலமாய்ப் புறவூரில் உட்கிடையான நிலங்கள் (தெ.கல். தொ.4: 423) (க.க.அ.மு.65) உட்கடை, உக்கடை என்பனவும் இது. உட்கு: உள் + கு = உட்கு. நினைக்கும் போதெல்லாம் - உள்கும் போதெல்லாம் - உண்டாகும் அச்சம் உட்கு ஆகும். கராஅந் துஞ்சும் கல்லுயர் மறிசுழி மராஅ யானை மதந்தப ஒற்றி உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் -அகம். 18 வயப்புலி, புகர்முகம் சிதையத் தாக்கிக் களிறட்டு உருமிசை உரறும் உட்குவரு நடுநாள் -நற். 383 நனவில் ஏற்பட்ட அஞ்சுதகு செயல் கனவிலும் கண்டு அஞ்சுதல் உண்டு. (கலி. 49) உட்குதல்: உள்குதல் > உட்குதல். உள்ளுதல் = நினைத்தல். உள்ளத்துக் கொள்ளல் உள்குதலாம். உள்ளத்துத் தோன்றிய தம் நிலைக்கிரங்கலால் ஏற்படும் உளைச்சலும் ஒடுக்கமும் உட்குதல் ஆகும். உள்கினேன் -தேவா. என்பார் அப்பரடிகள். உட்கை: உள் + கை = உட்கை = உள்ளங்கை. பெருந்தேன் கண்ட இருக்கை முடவன் உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து சுட்டுபு நக்கி யாங்கு -குறுந்.60 பொருள்: பெரிதாகிய தேனிறாலைக் கண்ட முறுகிய கால் களையுடைய நடத்தலும் நிற்றலுமின்றி இருத்தற்றொழிலையே யுடைய முடவன், உள்ளங் கையினைச் சிறிய உண்கலமாகக் குவித்துக் கொண்டு நிலத்தே இருந்தபடியே இருந்து, அத்தேனி றாலைப் பன்முறையும் ஏனைக் கையால் சுட்டிக்காட்டித் தன் வறுங்கையை நக்கினால் போல்(உரை/ பொ. வே. சு.). உட்கொளல்: உள் + கொளல் = உட்கொளல் > உட்கோள். வாயின் உட்பெய்து கொள்ளுதலை உட்கொளல் என்றனர். உள்ளே கொள்ளுதல் என்பது சொற்பொருள். சீலமோ டணிந்து உட்கொண்டு -கந்தபு. திரு. 83 உட்கொளல் கருத்துச் சொற்கள்: உட்கொளல் உயிரிகளின் இயற்கை; உயிர் வாழ்வுக்கு இன்றியமையாதது உட்கொளல். பருப்பொருள், கூழ்ப்பொருள், நீர்ப்பொருள், ஆவிப்பொருள் எனப் பல்வகைப்பொருளும் உட்கொளற்குரியவை. காட்சிப்பொருள் கருத்துப்பொருள் என்பனவும் உட்கொளற்குரிமைப் பட்டவை. இவ்வுட்கொளல் கருத்துப் பற்றிய சொற்களை எண்ணுங்கால் தமிழ்ச்சொல்வளம் தெளிவாக விளங்கும். அதே பொழுதில் இங்குச் சுட்டப் பெறாத சொற்கள் சிலவும் ஆய்வார்க்குத் தோன்றக்கூடும். அச்சொற்கள் ஆய்வாரை மேலும் வியப்பில் ஆழ்த்தும். அசைத்தல் முதலாக விழுங்குதல் ஈறாக அகர வரிசையில் 102 சொற்கள் இவண் காட்டப்பெற்றுள்ளன. இச்சொற்களின் தழுவு சொற்கள் சிலவும் சுட்டப்பெற்றுள்ளன. இவற்றை விளக்குதற்கென அமைந்த சொற்களும் சில உள. பதம் என்னும் ஒரு சொல்லுக்கு மட்டும் இலக்கணச் சான்றின்றி இலக்கியச் சான்று சுட்டப்பெறவில்லை. மற்றவை யனைத்தும் இயன்ற அளவில் இருவகை வழக்குகளாலும் விளக்கப் பெற்றுள. சில சொற்கள் ஒத்தனபோல் தோன்றினும் அவற்றுள் நுண்ணிய வேறுபாடுண்மை குறிக்கப் பெற்றுள்ளன. கறித்தல், கடித்தல்; உதப்புதல், குதப்புதல், குதட்டுதல் காண்க. இலக்கண இலக்கிய நூல்கள், நிகண்டுகள், அகராதிகள், ஆய்வுக்கட்டுரைகள் ஆகியவற்றில் இடம்பெற்ற சொற்கள் இவற்றில் உண்டு. சில, வழக்குச் சொற்களாகவும் வட்டார வழக்குச் சொற்களாகவும் உண்டு. இவற்றுள் அகரமுதலியில் இடம்பெறாதனவும் உண்டு. ஆனால், அனைத்தும் செந்தமிழ்ச் சொற்களே. பிறமொழிச் சொற்கள் பெருக வழக்குள்ளவை எனினும், அவை தமிழ்சொல்வளம் காட்டாதது மட்டுமன்றித் தமிழ்ச்சொல்வள அழிப்புக்கு இடனாகி வழங்குபவை. ஆகலின் அவை விலக்கப் பெற்றனவாம். இவ்வாய்வால் தமிழ்ச்சொல்வளம் அறியலாம். சொற்களின் பொருளும் வரலாறும் அறியலாம். சொற்களின் ஆட்சி பழமை, புதுமை ஆகியனவும் அறியலாம். புத்தாக்கச் சொற்படைப்புக்கும் துணை வாய்க்கும். அகரமுதலிகளில் இணைக்கப்பெற்றுச் சொற்பெருக்கமும் செய்யலாம். ஆய்வாளர் ஆய்வுக்குத் தக்க தூண்டுதல் கிட்டும். இவ்வுட்கொளல் கருத்துப் போல், பற்பல கருத்துகளுக்கும் ஆய்வு வேண்டத் தக்கதே! 1. அசைத்தல் மேலும் கீழும் அல்லது இடமும் வலமும் அசைத்தல் அசையாகும். ஆடு மாடுகள் அசை போட்டு உண்ணல் அசை போடல் அசையிடல் எனப்பெறும். அசைபோட்டுத் தின்னும் ஆவைத் தலைமாணாக்கர்க்கு உவமைப்படுத்தும் நன்னூல். புல் கண்ட இடத்துத் தின்று, நீர்கண்ட இடத்துக் குடித்து, நிழல் கண்ட இடத்துப் படுத்து அசைபோடுவது ஆவின் இயல்பாம். தின்ற உணவை மீண்டும் வாய்க்குக் கொண்டுவந்து மென்று உள்ளே இறக்குதலை அசைமீட்டல் என்பர்.மீட்டும் மெல்லுதலை அசை வெட்டல் என்பர். நஞ்சினை அசைவு செய்தவன் என்பது தேவாரம் (581- 3) 2. அடைத்தல் உடைப்பு பள்ளம் ஆகியவற்றை முறையே அடைப்பதும் மூடுவதும் போல் வயிறுமுட்ட உட்கொள்ளல் அடைத்தலாம். கதவடைத்தல் போலவும், வழியடைத்தல் போலவும் (திருக்.38; புறம். 151) உணவு புகுவாய் முட்ட உண்பது எனினும் ஒப்பதே. புட்டவல் பட்டாணி பொரிதேங் குழலப்பம் மட்டவிழும் தோசை வடையுடனே - சட்டமுடன் ஓயாமற் சோறுகறி யுண்டையுண்டை யாய் அடைக்கும்-தனிப்.4:825 3. அதுக்குதல் வெதுப்பு மிக்க உணவை, வாயின் இருபுறங்களிலும் மாறி மாறி ஒதுக்கித் தின்னல் அதுக்குதலாம். இனிப் பல்லும் பல்லும் பட அமுக்கிப் பதம் பார்த்தலும் அதுக்குதலாம். கண்ணப்ப நாயனார் இறைவர்க்குப் படைக்க விரும்பிய ஊனைச் சுவை பார்த்ததைக் கூறும் சேக்கிழார், வாயினில் அதுக்கிப் பார்த்து என்பார். (பெரிய. கண். 118) அதைப்பு என்பது தடிப்பு, வீக்கம் என்னும் பொருள் தரும் சொல். கடைவாய் விம்முமாறு போட்டு ஒதுக்கித் தின்னுதல் அதைத்தல் என்பதாம். (வ) 4. அமுக்குதல் இரண்டு இதழ்களையும் திறவாமல் வாயை மூடிக் கொண்டு தின்னல் அமுக்குதல் எனப்படும். சாக்கு அல்லது தாட்டில் பருத்தியைத் திணித்துத் திணித்து வைத்தலை அமுக்குதல் என்பது வழக்கு. எவருக்கும் தெரியாமல் எடுத்து முழுமையாய் விழுங்கி விடுவதை அமுக்குதல் என்பதும் வழக்கு. ஒரே அமுக்காக அமுக்கிவிட்டாய் என்பதும், பெரிய அமுக்கடிக் காரன் என்பதும் வழக்கு. தெரியாமல் உண்பதைக் குறித்த இவ்வழக்கு, தெரியாமல் மறைக்கும் சூழ்ச்சியத்தை அமுக்கடி எனக் குறிப்பதாயிற்று. 5. அம்முதல் குழந்தை தாயின் மார்பில் பாலருந்தல் அம்முதலாம். அம்மம் - மார்பு; அம்மம், குழந்தை யுணவு என்னும் பொருள் தரும் சொல்; குழந்தைக்குத் தாய்ப்பாலே இயற்கையுணவு ஆகலான். அன்னே உன்னை அறிந்து கொண்டேன் உனக்கஞ்சுவன் அம்மந் தரவே என்பது நாலாயிரப் பனுவல் (பெரியாழ்.3) பாலூட்டும் தாய் அம்மு அம்மு என்று கொஞ்சிக் கொண்டே பாலூட்டுவது கண்கூடு. 6. அயிலல் அயிலல், அயிறல் என்பவை உண்ணுதலைக் குறிக்கும் சொற்கள். அயினுதல் என்றும் வழங்கும். பாலும் , பால் போலும் நீர்த்த உணவும் கொள்ளுதல் அயிலுதலாம். அயினி என்பது சோற்றையும், அயினி நீர் என்பது சோற்று நீரையும் குறிக்கும். உகுபால் அயிலுற்றிடு பொழுதத்தினில் என்பது கந்தபுராணம் (சரவண. 33). ஆன பல் கடல்களும் அயிறல் மேயினான் என்பதும் அது (சிங்.27) பால்விட் டயினியும் இன்றயின் றனனே என்பது புறானூறு (77) 7. அரக்கல் அரக்குதல் என்பதும் அரக்கலேயாம். அரக்கம் என்பது அரைத்தலையும் முழுதும் உண்ணுதலையும் குறிக்கும் (ம.த.ச.அ). மரங்களில் இலைதழைகளை முழுதுமாய் ஒட்ட வெட்டுதலை அரக்கல் என்பதும், அரக்கவெட்டுதல் என்பதும் வழக்கு. அவ்வழியே முழுதும் உண்ணுதலைக் குறித்திருக்கலாம். 8. அரித்தல் பூச்சி புழுக்கள் தின்னுதல் அரித்தல் எனப்பெறும். கணச்சிதல் அரித்த என்பது சிறுபாணாற்றுப்படை (133). செல்லரித்த ஓலை செல்லுமோ? என்பது திருவரங்கக் கலம்பகம் (59). பூச்சி புழுக்கள் அரித்துத் தின்பது போல நொய்தாக அரித்துத் தின்பது அரித்தலாம். 9. அருந்துதல் சிறிது சிறிதாகத் தின்னுதல் அல்லது குடித்தல் அருந்துதல் ஆகும். இதனைச் சூடாமணி நிகண்டு அருந்திடல் என்னும் (9.6) நெய்ம்மிதி அருந்திய என்பது புறநானூறு (299) அருந்து மெல்லடகு ஆரிட அருந்தும் என்பது இராமாயணம் (சுந்.344). அருந்துதல் தண்ணீர் குடித்தல் ஆதலை, தண்ணீர் அருந்தி என வரும் தாயுமானவரால் அறியலாம் (அருளி. 11). நுகர்தல் என்னும் பொருளில் வருவதை ஆருயிர்கள் பயனருந்து மமருலகம் என்னும் கோயிற் புராணத்தால் அறியலாம்(வியாக். 6). இனி, இது விழுங்குதல் பொருளிலும் வரும் என்பது அங்கவற்றையும் பற்றி அருந்தினான் எனவரும் கந்த புராணத்தால் விளங்கும் (இரண்டாம் நாள். சூர. 65). 10. அரைத்தல் அம்மியில் இட்டு அரைப்பது போல ஓயாது ஒழியாது தின்று கொண்டிருப்பது அரைத்தல் ஆகும். அரைசிலை என்பது அம்மி. அரைத்தற்குரிய பொருள்களுக்குச் செலவிடுவது அரை செலவு ஆகும். அரைசிலை குமிழ்ப்பு வடித்தல் என்பது தைலவகைப் பாயிரம் (2). 11. அளித்தல் அருள் பெருக உண்ணுமாறு செய்வது அளித்தல் ஆகும். அளியாவது அருள். அளித்து அயில்கின்ற வேந்தன் என்றார் திருத்தக்க தேவர் (சீவக. 192). இடுதல், ஈதல் போல்வது அளித்தலாம். கொடுத்தல் என்னும் பொதுப் பொருளில் நீங்கி, உணவு உண்பித்தல் என்னும் சிறப்புப் பொருளில் வந்ததாம். 12. அளைதல் மழலைக் குழந்தை கையால் உணவை அளாவி உண்ணுதல் அளைதலாகும். இன்னடிசில் புக்கு அளையும் தாமரைக்கைப் பூநாறும் செய்யவாய் மக்கள் என்றார் புகழேந்தியார் (நள. கலிதொ. 68). மதுவுண்பது, அளைதல் எனப்பெறும் என்பது, அளைவது காமமடு நறவு என்னும் சிந்தாமணியால் புலப்படும் (கேம. 140). 13. ஆர்தல் வயிறு நிரம்ப விரும்பி உண்ணுதல் ஆர்தலாகும். ஆர்தல் நிரம்புதல் விரும்புதலுமாம். வயிறார உண்ணுதல் என்பது வழக்கு. ஆர்பதம் என்பது உணவாகும் ஆர்பதம் நல்கும் என்று கூறும் பதிற்றுப்பத்து (66). ஆர்பதம், ஆர்பதன் என்றும் வரும் (பதிற்.55).ஆர்த்தல் என்பது உண்பித்தல், நுகர்வித்தல் பொருளவாகும். வருநிதி பிறர்க்கார்த்தும் என்பது சிலம்பு (மங்கல. 33) தனப்பால் ஆர்த்தி என்பது கந்தபுராணம் (பார்ப்ப. 27). 14. ஆவுதல் ஆவென வாயைத் திறத்தல் ஆவுதலாம். ஆவென வாயைத் திறந்து வாங்கி யுண்ணுதலும் ஆவுதல் எனப்பெற்றது. காசினிக்கும் வெண்ணெய்க்கும் செம்பவளம் ஆவென்றான் என்று திருவேங்கடமாலை, ஆவெனலை உண்ணுதலாகக் குறிக்கும் (16). ஆவு ஆவு என்றும், அவக்கு அவக்கு என்றும் - தின்னுகிறான் என்பன, பேரார்வத்தால் விழுங்குதலைக் குறிக்கும் வழக்குகளாம். 15. ஆற்றுதல் அகற்றுதல் என்பது ஆற்றுதல் ஆயிற்றாம், புகட்டுதல் என்பது போட்டுதல் என்று ஆயினாற் போல. பசிமிக்குக் கிடந்தாரின் பசி வெப்பு அகலுமாறு உண்பித்தல் ஆற்றுதலாம். பசியாறல் பசியாற்றல் என்பன வழக்குகள். ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் என்பது நெய்தற்கலி(16). 16. இடுதல் இட்டார் பெரியர்; இடாதார் இழி குலத்தார் உப்பிலாக் கூழிட்டாலும் என்று வரும் இடங்களில், இடுதல் என்பது ஈதல் பொருளில் வந்தாலும், வயிற்றுக்கும் ஈயப்படும் என்னும் இடத்துப் போல உட்கொளல் பொருளிலும் வரும். மடியகத் திட்டாள் மகவை என்னும் சிலம்பு இதற்குச் சான்றாம் (9:22). இடுகுழி இடுகாடு எனவரும் வழக்குகளைக் கருதுக. 17. இரையெடுத்தல் பறவை பாம்பு முதலியவை உணவு கொள்ளுதல் இரையெடுத்தல் எனப்படும் (ம.த.ச.அ). கோழி தின்னுதலை இரையெடுத்தல் என்பது வழக்கு. அவ்வாறே சிறு தீனிகளைப் பொறுக்கித் தின்பதை இரையெடுத்தல் என்பதும் இரை போடல் என்பதும் வழக்கு என்ன, இரை எடுத்தாயிற்றா? இரை போட்டாயிற்றா? என்று வினவுவாரை நாட்டுப்புறங்களில் காணலாம். துரை, இரை எடுக்கிறார் என்பது முள்ளால் குத்தியுண்ணும் முறை நோக்கி எழுந்ததாகலாம். இரைக்கே இரவும் பகலும் திரிந்து என்பார் பட்டினத்தார் (திருக்கா. 5). இரைதேர்வண் சிறுகுருகே என விளிக்கும் திருவாய்மொழி. (1.4.5.) 18. இழுத்தல் புகை, காற்று போன்றவற்றை உட்கொளல் இழுத்தல் எனப்படும் புகை பிடித்தலைப் புகையிழுத்தல் என்பதுண்டு. மூச்சு இழுத்தல், மூச்சு இரைத்தல் இழுபறியாகக் கிடக்கிறார் என்பர் இழுத்தல், உறிஞ்சுதல் என்னும் பொருளிலும் வரும் உறிஞ்சி இழுத்தல் என்பதும் வழக்கே. 19. இறக்குதல் மேல் இருந்து கீழ்வரச் செய்தல் இறக்குதலாகும். உமிழ்நீர் உட்கொள்வதை இறக்குதல் என்பர். இறக்கும் தறுவாயில், வாயில் பால்விட்டு இறங்குகிறதா? இறங்கவில்லையா? என்று ஆய்வது வழக்கு. உனக்கு இது இறங்காது என்று எள்ளுவதும், மடக்கு என்று இறக்கு என்று மருந்துண்ணக் கட்டளை யிடுவதும் காணும் நடைமுறைகள். 20. இறைத்தல் தெளித்தல், பொழிதல், கொட்டுதல் ஆகிய பொருளில் வரும் இறைத்தல் என்னும் சொல், உட்செலுத்துதல் பொருளிலும் வரும். வினையர் இன்னிசை செவிதொறும் இறைப்ப என்பது அது (உபதேச. சிவபுண். 318). 21. ஈதல் இரவலனுக்குத் தருவது போல் உயிர் வாழ்வு கருதிச் சிறிதளவே உணவு தருதல். ஈ என்பது இழிந்தோன் கூற்று என்னும் தொல்காப்பியம் (928). ஈயென இரத்தல் இழிந்தன்று என்னும் புறநானூறு (204). சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்றார் திருவள்ளுவர் (412). 22. உட்கொளல் உட்கோள் என்பதும் அது. வாயின் உட் பெய்து கொள்ளு தலை உட்கொளல் என்றனர். உள்ளே கொள்ளுதல் என்பது சொற்பொருள். சீலமோ டணிந்து உட்கொண்டு என்பது கந்தபுராணம் (திருக்கல். 83) 23. உட்செலுத்தல் வயிற்றின் உள்ளே செலுத்துதல், வயிற்றின் உள்ளே தள்ளுதல் என்னும் பொருளில் வருவது இது. செல்லும் செல்லாததற்கு, அவன் இருக்கிறான் என்று எதையும் கழிக்காமல் உண்பவனைக் குறிப்பது வழக்கு. ஊசி வழியே மருந்தும் ஊட்டமும் செலுத்துவதும், உட்செலுத்துதலாம். உட் செலுத்துதல் பெரும்பாலும் கட்டாயத்தால் நிகழ்வதாம். 24. உண்ணுதல் உணல் என்பதும் அது. சோறும் நீரும் நீர்ப்பொருள்களும் உட்கொள்ளுதல் உண்ணுதலாம். உணலினும் உண்டது அறல் என்னும் திருக்குறளும் (1326)உண்ணாமை கோடி யுறும் என்னும் ஔவையார் தனிப்பாட்டும் சோறுண்ணுதலைக் குறிக்கும். உண்ணுநீர் என்னும் கலித்தொகை நீர் உணவையும், உண்டாட்டு என்னும் புறத்துறை, மதுவும் சோறும் கறியும் உண்டு மகிழ்தலைக் குறிப்பதாம். 25. உதப்புதல் வாயில் இருந்து உணவு வெளியே வரும்படி மிகுதியாக வைத்துச் சவைத்துண்ணல் உதப்புதலாம். ஆடு அசைபோட்டுக் கடைவாய்ப்புறம் உணவைத் தள்ளி இறக்குதலும் உதப்புதல் எனப்படும். 26. உய்த்தல் கன்றைத் தாயின் இடத்தில் செலுத்திப் பாலுண்ணச் செய்தல் உய்த்தலாகும். உய்த்தல் செலுத்துதல் பொருளில் வருதல் காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் எனவரும் திருக்குறளால் விளங்கும் (440). இனிப் புலிப்பால்பட்ட ஆமான் குழவிக்குச் சினங்கழி மூதா பாலூட்டுதல் போல்வனவும் உய்த்தலாம்(புறம். 323). 27. உருங்குதல் அச்சுறுத்தி அடித்துத் தின்னுதல் உருங்குதல் எனப் பரிபாடலில் ஆளப்பட்டுள்ளது. பருந்து பாம்பைப் பற்றியுண்ணல் உருங்குதல் எனப்படுகின்றது. விடமுடை அரவின் உடலுயிர் உருங்கு உவணம் என்பது அது (44:2) உவணமாவது பருந்து. கருடன் என்பது அது. 28. உருட்டித்தள்ளல் கவளம் போல் சோற்றை உருண்டை உருண்டையாய் ஆக்கி மெல்லாமல் கொள்ளாமல் உட்கொள்வது அல்லது விழுங்குவது உருட்டித் தள்ளுதலாம். அள்ளிப் பிசைந்து உருட்டி என்பது சைவ சமய நெறி (பொது. 186). 29. உறிஞ்சுதல் இதழ் சுருக்கி நீரை ஊச்சிக் குடித்தல் உறிஞ்சுதலாகும். மூக்கால் பொடியை இழுத்தலை, உறிஞ்சுதல் என்பது வழக்கு. வழியும் மூக்கைத் துடைக்காமல் உள்ளிழுப்பவனை மூக் குறுஞ்சி எனப் பட்டப் பெயர் வைத்தழைப்பதும், மூக்குறுஞ்சி மொட்டைக் காளை தைதை என எள்ளல் பாட்டு. இசைப்பதும் சிறுவர் வழக்கம். ஒரு துறவி பிறவெல்லாம் துறந்தும் பொடியைத் துறவானாய், மூக்குத் தூளே, உன்னை நான் துறக்கமாட்டேன் உறிஞ்சுவேன் உறிஞ்சு வேனே என்றது புதுப்பாட்டு. 30. உறிதல் உறிஞ்சி அல்லது துளைத்தண்டு வழியே நீரையும் நீர்மப் பொருள்களையும் உறிஞ்சிக் குடித்தல் உறிதல் ஆகும். இந்நாளில் இளநீர், குளிர்நீர்க் குடிவகை ஆகியவற்றை உறிஞ்சியால் உறிஞ்சிக் குடித்தல் பெருகிய வழக்கமாம். 31. ஊச்சுதல் ஊச்சு ஊச்சென ஒலியெழ உறிஞ்சிக் குடித்தல் ஊச்சுதல் எனப்படும். பிணைமான் இனிதுண்ண வேண்டிக் கலைமாத்தன் கள்ளத்தின் ஊச்சும் என்பது ஐந்திணை ஐம்பது (37). 32. ஊட்டுதல் குழந்தைகட்கும், நோயர்கட்கும் பாலும் சோறும் முதலியன உண்ணச் செய்தல் ஊட்டுதலாம். சோறு கவளமாக உருட்டித் தரப்பெறுதலாலும் ஊட்டுதலாம். மழவிளங்கன்றைத் தாய் மடுவில் உண்பித்தலும் ஊட்டுதலே. ஊட்டி என்று சங்கைக் குறிப்பதும், ஊட்டுப்புரை என அட்டிலைக் குறிப்பதும் அறியத் தக்கன. பண்டைத் தாய்மார் எனக் குறித்த ஐவருள், ஊட்டுத் தாய் என்பாரும் ஒருவர் என்பதும் அறியத் தக்கது. அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட என்பது நாலடி (1) 33. ஊதுதல் வண்டு தேனீ தும்பி ஆகியவை தம் சுரும்பினால் பூவுள் தேனை உறிஞ்சிக் குடித்தல் ஊதுதல் எனப்படும். தேம்பட ஊதுவண்டு இமிரும் (187) தண்கமழ் புதுமலர் ஊதும் வண்டு (290) என்பவை நற்றிணை. ஊதுலைக் குருகு, உள்ளூது ஆவி என்பவை புறச்செலவு பற்றியது என்பது, வண்டு மலரூதுதல் உட்செலவு பற்றியது என்பதும் இவண் கருதத்தக்கன. 34. ஊப்புதல் பருப்பொருளும் அதனொடும் அமைந்த நீரும் கலந்து இருக்கப் பருப்பொருள் வாயுள் புகாது நீர்மப் பொருள் மட்டும் புகுமாறு இதழ் நெருக்கி உறிஞ்சிக் குடித்தல் ஊப்புதலாம். இஃது ஊச்சுதல் சூப்புதல் என்பவற்றின் வேறாதலை அவற்றொடு ஒப்பிட்டுக் காண்க. 35. எடுத்தல் கோழி நீரை எடுத்து மேனோக்கி வாயைத் தூக்கிக் குடிப்பது போலக் குடித்தல், எடுத்தலாம், இனி, எடுத்துண்ணுதல் கருதியது எடுத்தல் என்றுமாம். இரையெடுத்தல் என்பது வழக்காறு இரையெடுத்தல் காண்க. 36. ஏற்றுதல் ஊசி குழாய் இவற்றின் வழியே மருந்து உணவு முதலிய வற்றை உள்ளே செலுத்துதல் ஏற்றுதலாகும். ஊட்டநீர், உயிர்வளிநீர், அரத்தம் ஆயன ஏற்றுதல் மருத்துவத்துறை நடவடிக்கை. ஏறி இயக்குதலாலும், சாலையும் நீரையும் ஏற இயக்குதலாலும், ஏற்றம் என்னும் பெயர் பெற்ற தென்பது இவண் கருதத்தக்கது. 37. ஒதுக்குதல் உணவை ஒரு கன்னப் புறத்தில் ஒதுக்கிப் பதமாக்கி எண்ணுதல் ஒதுக்குதலாகும் பல்லுக்குப் புறத்தே கடைவாய்ப் பகுதியில் வெற்றிலைத் தம்பலத்தை நெடும்பொழுது ஒதுக்கி வைத்து இன்புறுவாரை நாட்டுப்புறத்தில் இன்றும் காணலாம். சிறுவர் இன்பண்டங்களை ஒதுக்கிவைத்து உண்டல் 38. கடித்தல் வன்மையான பண்டங்களைப் பல்லால் வலுவாகக் கடித்துத் தின்பது கடித்தலாம். கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி என்று நாலடியார் கூறும் (156). கடித்தல் வேறு; கறித்தல் வேறு, கறித்தலை ஆங்குக் காண்க. 39. கப்புதல் அசை போடாதும், இதழ் மூடியும் வாயுள் அடக்கித் தின்னுதல் கப்புதலாம். புகைமூடி அல்லது மண்டிக் கிடத்தலைப் புகை கப்பிக் கிடக்கிறது என்பது வழக்கு. கோழி, நொய் நொறுங்கு தவிடு இவற்றைக் குழைத்து வைத்ததைத் தின்னுதல் கப்புதல் எனப்பெறும். கப்பி என்பது, தவசமணி நொறுங் கலாகும். கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும் குப்பை கிளைப்போவாக் கோழி என்று கூறும் நாலடியார் (341). அப்பம் அவலெள் அதிரசமும் தோசையும் கப்புவதும் போச்சே கனிந்து -தனிப். தத்துவப் பிரகாசர் 40 கரும்புதல் ஒன்றை ஓர் ஓரத்தில் இருந்து சிறிது சிறிதாகப் பல்லால் கரும்பித் தின்னுதல் கரும்புதலாகும். கரும்பினைத் தின்னும் முறைமை கருதியமைந்த தொழிற் பெயர் கரும்புதல் என்க. காய் கனி முதலியவற்றை எலி தின்னுதலை, எலி கரும்புதல் என்பர். 41. கறித்தல் மென்மையான பண்டங்களையும் காய்கறிகளையும் தின்னுதல் கறித்தலாம். காய் கறிகளைத் தின்னுதல் வழியில் கறித்தல் தொழில் பெயர் வந்திருக்கலாம். கறித்தலினும் கடித்தல் என்பது வன்பொருள்களைக் கடித்துத் தின்னுதலாம். இன்னம் பசும்புல் கறிக்கல்லா இளங்கன்று என்பார் குமரகுருபரர்(மீனாட். பிள்) விலங்குகள் கதிர், பயறு, குழை, பூ, இலை முதலியவற்றைக் கறித்தலைப் பற்றியே, தொகை நூல் பாடல்கள் குறித்தல் அறியத் தக்கதாம் ஆதலால் மாந்தர் உண்ணுதலைக் குறித்தல் பிற்கால வழக்கென்க. எயிற்றால் கறித்தான் சில என அனுமனைச் சுட்டுவார் கம்பர்(உயுத். 1836). 42. குடித்தல் நீர்வகை உணவுகளைப் பொதுவகையாக உட் கொள்ளு தல் குடித்தல் ஆகும். குடித்தல், கவ்விக் குடித்தல், மண்டியிட்டுக் குடித்தல், அள்ளிக் குடித்தல் எல்லாம் குடித்தல் வகைகளே. பண்டைக் குடிநீர்க் குளமே ஊருணி என்பதையும், பிற வகைகளுக்குப் பயன்படுத்தத் தக்கதாய் ஊர்க்கு அணித்தாய் அமைந்த நீர்நிலையே ஊரணி என்பதையும் எண்ணுக. குடிநீர் வாரியத் துறையையும் மதுக் குடிக் கேட்டையும் கருதின் குடிப்பெருமை சிறுமை ஒருங்கு விளங்கும். 43. குதட்டுதல் கால்நடைகள் அசைபோட்டு வேண்டியதை உட்கொண்டு வேண்டாதவற்றை வெளியே தள்ளுதல் குதட்டுதலாம். கன்று முதலியன பால்குடித்து வாயுதப்புதலைக் குதட்டுதல் என்றும் கூறுவர்(தமிழ்ப் பேரகராதி). 44. குதப்புதல் எச்சில் தெறிக்கச் சப்புகொட்டி மென்று உண்ணல் குதப்புதல் எனப்படும். உதப்புதல் உணவு மிகுதியாக வாயில் இருத்தலால் நிகழ்வது குதப்புதல் வாய்ச் செய்கை மிகுதியால் நிகழ்வது இவை, இவற்றின் வேறுபாடு. 45. குத்துதல் குத்தி எடுத்துத் தின்னுதல் குத்துதலாம். உரலில் குத்துதல் புறஞ்செலல் ஆயினும், முள் குத்துதல் அகஞ்செலல் ஆதல் அறிக. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து என்பதில் வரும் குத்துதல் குத்தியெடுத்துத் தின்னுதலாதலை அறிக. 46 கொட்டுதல் மெல்லாமலும் அரைக்காமலும் உணவை அப்படி அப்படியே விழுங்குதலைக் கொட்டுதல் என்பர். இந்தா இதையும் கொட்டிக்கொள் என்று பெருந்தீனியர்க்குத் தருவது வழக்கு. கொட்டில் என்பது களஞ்சியத்தைக் குறிக்கும். களஞ்சியத்துக் கொட்டுவது போலக் கொட்டுவது என்னும் குறிப்புடையது இச்சொல். 47. கொத்துதல் கொத்தி எடுத்துத் தின்னுதல் கொத்துலாகும். குத்துதல் கொத்துதல் ஆயிற்று. கொத்தித் திரியும் கோழி என்றார் பாரதியார். இனிக் களை குத்தியும் களை கொத்தியும் வெவ்வேறாதல் போல் குத்துதலும், கொத்துதலும் வேறு படுவனவுமாம். கொக்கு மீனைக்குத்தி எடுப்பதற்கும், கோழி புழுவைக் கிண்டிக் கிளைத்துக் கொள்வதற்கும் உள்ள வேறுபாடு அறிக. 48. கொந்துதல் பனங்காய் முதலியவற்றை அரிவாளால் வெட்டிக் கொந்திக் குதறி(குறுக்கு மறுக்குமாக வெட்டி)த் தின்னுதல் கொந்துதலாகும். அணில் முதலியவை குதறிக் கடித்து உண்ணுதலைக் கொந்துதல் என்றும் கூறுவர்(பேரகராதி) துன்புறுத்துதல் பொருளில் கொந்துதல் என்னும் சொல் வருதலை நான்மணிக் கடிகை குறிக்கும். கொந்தி இரும்பிற் பிணிப்பர் கயத்தை என்பது அது(10). 49. கொள்ளுதல் வாங்கிக் கொள்ளுதல், ஏற்றுக் கொள்ளுதல் போல உட்கொள்ளுதலும் கொள்ளுதல் எனப்பெறும். உண்டைகொள் மதவேழம் (கம்ப. கடிமணப். 28) 50. கொறித்தல் மணி, கொட்டை, தவசம், பருப்பு முதலியவற்றை அணில் தின்னல் போல் நுனிப் பல்லால் கடித்துத் தின்னல் கொறித்த லாகும். குளிருக்குக் கொறி என்று பயறு கடலைகளை வறுத்துத் தருவது இன்றும் சிற்றூர் வழக்கமாம். கடித்தலுக்குக் கடைவாய்ப் பல்லும், கொறித்தலுக்கு முன்வாய்ப் பல்லும் பயன்படல் வேறுபாடாம். 51. கோடல் கொள்ளுதல், கோடல், கோள் என்பவை உட்கொள்ளு தலையும் குறிக்கும். உணவு வகையை உட்கொள்ளுதலினும் அறிவு வகைகளை உட்கொள்ளுதலைக் குறித்தே கோடல் ஆளப்பெற்றுள்ளது. கற்றலைக் கோடன் மரபு என்றும், கற்பித்தலைக் கொடுத்தல் என்றும் கூறுவது நூல் வழக்கு (நன். 40). கற்பவனைக் கொள்வோன் என்பதும் நூல் வழக்கே (நன். 36). பறித்துக் கொள்ளுவதற்கும், உண்ணுதற்கும் உரிய பக்குவ நிலையைக் கோட்பதம் என்பது பண்டை வழக்கு (புறம். 120). 52. சப்புதல் கண்ணமுது தேன் முதலியவற்றைச் சப்புகொட்டிச் சுவைத்து உண்ணல் சப்புதலாகும் சப்புச் சப்பெனல் ஒலிக் குறிப்பாகும். சப்பென அறைதல் என்பதில் அவ்வொலிக் குறிப்பறியக் கிடக்கின்றதாம். கன்று தாயின் மடியில் வாய் வைத்துப் பால் இழுத்துக் குடித்தலும் சப்புதலாம், விரலைச் சப்புதல் போல்வதாகலின். 53. சவட்டுதல் வெற்றிலை பாக்கு போல்வனவற்றையும் சுவைமிக்க பண்ட வகைகளையும் பல்கால் மென்றும் நாவில் புரட்டியும் சாறு கொள்ளுதல் சவட்டுதலாம். களப்போரில் வாட்டுதலைச் சவட்டுதல் என்னும் பதிற்றுப்பத்து (84). கதிர் அடித்து வைக்கோலைச் சவட்டுதல் உழவர் வழக்கு. அவ்வாறே பல்கால் புரட்டிப் புரட்டி மென்று நைத்தலால், சவட்டுதல் ஆயிற்றாம். 54. சவைத்தல் பல்கால் மென்று சுவை கொள்ளல், சவைத்தலாம். சவைத்தற்கென்றே சவையம் என ஒன்று (சூயிங்கம்) கடைகளில் விற்பது நாம் அறிந்ததே ! சவ்வுமிட்டாய் என்பதும் சவைத்தற் கென் றமைந்ததே. 55. சாப்பிடுதல் சப்புச் சப்பென வாயொலி எழுமாறு உண்ணுதல் சாப்பிடுதல் ஆகும். சப்பிடுதல், சாப்பீடு - சாப்பாடு என வந்தது. நன்றாகச் சாப்பிடுபவனை அல்லது சாப்பாடே குறியாக இருப்பவனைச் சாப்பாட்டு ராமன் என்பது இக்கால வழக்கு. 56. சுவைத்தல் பக்குவ நிலை அல்லது சுவைநிலை அறியுமாறு உண்ணல். வேக்காடு, காரம், உப்பு முதலியவை செவ்விதன் அமைந்துளவா என்பதை அறிவதற்கு வேக்காட்டின் போதே சுவைத்துப் பார்த்தல் வழக்கு. இதன் வழியாக, ஒரு பானை சோற்றுக்கு ஓரவிழ்து பதம் என்னும் பழமொழி எழுந்தது. சுவை பார்த்தல் சுவைத்தல் என்க. இனி, மழவிளங்குழவி தாயின் மார்பில் பாலுண்ணல் சுவைத்தல் என்பதாம். சுவைத்தொ றழூஉம் தன்மகத்து முகம் நோக்கி என்பது புறம் (164). ஏனது சுவைப்பினும் தேனது வாகும் என்னும் தொல்காப்பியம் (பொருள். 144) சுவைதரினும் என்னும் பொருட்டது. விழியாக் குருளை மென்முலை சுவைத்தலைச் சுட்டுவார் பேராசிரியர் (தொல். மரபு. 8) 57. சூப்புதல் எலும்பின் உள்ளீட்டை உறிஞ்சிக் குடித்தலும்; சூப்புப் போல்வனவற்றை இதழ் நெருக்கிக் குடித்தலும் சூப்புதல் ஆகும். சூப்பிப் பருகுதல் சூப்புதல் என்க. சூப்புதற்காக அணியப் படுத்தப் படுபவை சூப்பு எனவே வழங்கப் பெறுதலும் அறிக. சூப்புங்கால் சூப்பு சூப்பு என ஒலி உண்டாதல் கருதி இப்பெயர் எய்தி இருக்கலாம். 58. சூன்றல் நுங்கு போல்வனவற்றை விரலால் குடைந்து அல்லது நோண்டித் தின்னல் சூன்றல் ஆகும். சூன்று என்பதற்கு அகழ்ந்து குடைந்து என்னும் பொருள்கள் உண்மை, நிழல் சூன்று உண்ட நிரம்பா நீளிடை என்னும் அகத்தால் (381) புலப்படும். நுங்கு சூன்றிட்டன்ன என்பது நாலடியார் (44). 59. செலுத்துதல் தேய்வை (இரப்பர்)க் குழாய் வழியாகவோ ஊசி வழியாகவோ உணவு மருந்து உயிர்வளி முதலியன உடலின் உட்புகச் செய்தல் செலுத்துதலாம். இறை செலுத்துதல் என்றும் உள்ள வழக்கு. செலுத்து மட்டும் செலுத்திவிட்டால் சிவனே என்று கிடப்பான் என்றும் பழமொழி, வேட்கை மீதூர நிரம்ப உண்பதைக் குறிக்கும். 60. சேர்த்தல் செலுத்துதல், கொட்டுதல் போன்றது சேர்த்தல். இது எனக்குச் சேராது இது எனக்குச் சேரும் என்று வழங்கும் வழக்கால், சேர்தல் சேர்த்தல் என்பவை உட்கொளல் பொருளில் வருதல் விளங்கும். சேராமையும் ஒவ்வாமையும் (allergy) என்பதாம். 61. தருதல் ஈதல், கொடுத்தல் போல்வது தருதல். பசிவெப்பு அடங்கத் தருவது கொண்டு தருதல் என்பது உட்கொளல் பொருள் தருவது ஆயிற்று, தருகை நீண்ட தயரதன் என்னும் இடத்துத் தருதல் கைச் செயல் ஆயினும், உண்ணுதல் பொருளில் வாய்ச்சொல் ஆயிற்றாம். 62. தள்ளுதல் கொட்டுதல் போல்வது; சுவை பாராமல் மெல்லாமல் கொள்ளாமல் வயிற்றுள் தள்ளுதல். சரக்கு (சாராயம்) நூறு தள்ளு; சரியாகப் போகும் என்பதில் தள்ளுதல் குடித்தலைக் குறித்தது. 63. தாங்குதல் தாங்கும் அளவுக்கு அல்லது கொள்ளும் அளவுக்கு உட்கொள்ளுதல் தாங்குதல் ஆகும். மேலும் மேலும் வலியுறுத்தி உண்பிக்கப் பெறும் ஒருவர் இனித் தாங்காது என்று மறுப்பது கொண்டு தாங்குதல் என்பது தாங்கும் அளவு உண்ணுதலைக் குறித்தல் அறியப் பெறும். 64 திணித்தல் உண்ணமாட்டாத குழந்தைக்கு வலுக் கட்டாயமாக உணவைக் கொள்ளாத அளவுக்கு உட்செலுத்துதல் திணித்தல் ஆகும். தலையணைக்குப் பஞ்சு திணித்தல் போலத் திணிக்கப் பெறுவது என்னும் பொருளுடையது. திணிதல் செறிவும் நெருக்கமுமாதல் மண்டிணிந்த நிலனும் என்னும் புறப்பாட்டால் விளங்கும்(2). 65. திற்றல் இது, தின்னல் போல்வதே. தேனொடு கடமான்பாலும் திற்றிகள் பிறவு நல்கி என்னும் கந்தபுராணப் பாட்டு (வள்ளி. 76) திற்றிகள் தின்பவைகள் எனக் குறித்து வந்தது. 66. தின்னுதல் சிறு தீனி வகைகளை மென்று தின்பது தின்னுதலாம். இது தின்னுகை என்னும் வழங்கும். சிதலை தினப்பட்ட ஆல மரத்தைச் சுட்டும் நாலடியார் (197). தினற்பொருட்டாற் கொள்ளாது என்று தொடரும் திருக்குறள் (256). இதனால் ஊன் முதலியன தின்பதையும் தின்னுதல் குறித்தல் புலனாம். ஊன் தின்பவர்க்கு என்பார் வள்ளுவர் (252). 67. தீட்டுதல் நன்றாக வயிறு முட்ட உண்ணுதலைத் தீட்டுதல் என்பது நாட்டுப்புற வழக்கு. ஒரு தீட்டுத் தீட்டி விடுவான் என மிக மிக உண்பவனைச் சுட்டிக் கூறுவர். இடித்து உமிபோக்கிய பின் ஒட்டிய தவிடு போக்குதலைத் தீட்டுதல் என்பது வழக்கு. இனித் தீற்றுதல் தீட்டுதலாக வருதலும் கூடும். தீற்றுதல் காண்க. 68. தீற்றுதல் உண்ணுதல் பொருள் தரும் சொல். நென்மா வல்சி தீற்றி (343) என்னும் பெரும்பாணாற்றுப் படை அடிக்கு, நெல்லையிடித்த மாவாகிய உணவைத் தின்னப் பண்ணி எனவரும் நச்சர் உரையால் இப்பொருள் தெளிவாம். புற்கற்றை தீற்றி (புற்கற்றையைத் தின்னச் செய்து) எனவரும் சிந்தாமணி (3105). 69. துய்த்தல் உயிர்வாழ்வுக்குக் கட்டாயமாக வேண்டும் அளவு மெல்லிய உணவு வகைகளைக் கொள்ளுதல். இது துத்தல், துற்றல் என்றும் வரும். துய்ப்பு துப்பு ஆகியும் உண்ணுதலைக் குறிக்கும். துராஅய் துற்றிய துருவை என்னும் பொருநராற்றுப் படைக்கு (103) அறுகம் புல்லால் திரித்த பழுதையைத் தின்ற செம்மறிக் கிடாய் என்று வரும் நச்சர் உரை துற்றல் பொருளைத் தெரிவிக்கும். துப்பார்க்கு எனவரும் குறளால் துப்பு உண்ணுதலைக் குறித்தல் விளங்கும். துற்று என்பது சிறிதுணவு என்னும் பொருளில் வருதல் துற்றுணவு இன்றிச் சோர்வல் என வரும் இரட்சணிய யாத்திரிகத்தால் வெளியாம். துப்புக் கெட்டவன் என்னும் வழக்கில் வரும் துப்பு துயப்பு இன்மையாம் வறுமையைச் சுட்டி வந்ததாம். துய் - உணவு. நக்கவா துக்கவா என்னும் இணைச்சொல்லில் துக்க என்பது துய்க்க என்பதாம். 70. துவைத்தல் வாய் வைத்துச் சப்பி இழுத்துப் பால் குடித்தல்; தாய்ப்பால் மறவாக்குட்டியைத் துவைக்குட்டி என்பதும் துவைக்குப் பால்தா என்பதும் ஆட்டு மந்தையில் கேட்கும் செய்திகள். துவைத்தல் ஒலித்தல் பொருளில் வருதலும் கருதத் தக்கது. 71. துவ்வுதல் துய்த்தல் போல்வது. துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் எனவரும் குறளால் துவ்வுதல் உண்ணுதல் பொருட்டதாதல் புலப்படும் (42). தான் துவ்வான் என வருவதும் அது (திருக். 1002). 72. தொடுதல் தலைமை உணவுக்குத் தக்க துணை யுணவு கொள்ளுதல் தொடுதல் ஆகும். தொடுகறி என்னும் பெயரும், தொட்டுக் கொள்ள என்ன இருக்கிறது? என்னும் வினாவும் தொடுதல் உண்ணுதல் பொருட் குரிமையை விளக்கும். வட்டிலைச் சூழ அமைந்த தொடுகறிக் கலங்களை நாள்மீன் விராய கோள்மீன்களுக்கு உவமை காட்டும் சிறுபாண்(242-5) 73. தொலித்தல் அவனை விட்டோம் தொலித்துப் போடுவான் என்னும் வழக்கால் எவருக்கும் இல்லாமல் முற்றாக உண்ணுதலைத் தொலித்தல் குறிப்பது விளங்கும். தொலைத்தல் அழித்தலாகலின் அச்சொல் தொலித்தலாக மருவியது எனினும் ஆம் . தொலித்தல் உமிபோக்கல் என்னும் பொருளில் வழங்கப் பெறும் சொல். 74. நக்குதல் தேன், குழம்பு, பாகு முதலியவற்றை நாவால் தொட்டுச் சுவைத்து உட்கொள்வது நக்குதலாம். இது நால்வகையால் உண்ணுதல் என்பதில் ஒரு வகையாம். மற்றவை உண்ணல், பருகல், கடித்தல் என்பனவாம். நக்கு நாயினும் கடையெனப் புகலும் நான்மறையே என்பது நாவுக்கரசர் தேவாரம். 75. நுகர்தல் உண்டி முதலியவற்றால் இன்புறுதலும், நன்னெறிப் படர்ந்து விண்ணுலகு புக்கார் இன்புறுதலும் நுகர்ச்சியாம். இந்நாளில் நுகர்பொருள், நுகர்வோர், நுகர்பொருள் அங்காடி என்பன பெருவழக்கின. தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும் (புறம். 214), அம்பிகையோடு நுகர்ந்து களித்தனன் (சிவரக. தேவிமேரு கயிலை. 10) என்பவற்றைக் கருதுக. 76. நுங்குதல் நுங்கு, நொய், நுறுங்கு போல்வனவற்றை நோண்டி அல்லது சுரண்டித் தின்னுதல். நுறுங்கு குற்றுமித் தவிட்டை, நுங்கினான் பசிகள் ஆற என்பது இரட்சணிய யாத்திரிகம். விழுங்குதல் பொருளில் நுங்குதல் வருவதை, பாயும் மெம்புகை நுங்கான் (சேதுபு. சேதுச. 32) இந்தனஞ்சேர் கானகத்தை நுங்கும் எரிபோல் (பிர. காண். 13: 20) என்பவற்றைக் காட்டி நிறுவும் தமிழ்ச் சொல்லகராதி. 77. நொறுங்குதல் நொறுங்கித் தின்னல் நொறுக்குதலாகும். முறுக்கு, சீவல் சேவு முதலியவற்றை நொறுக்கித் தின்பர். இவ்வாறு தின்பதை நொறுக்குத் தீனி என்பது வழக்கு நொறுங்கத் தின்று நோயகற்று என்னும் பழமொழி நன்றாக மென்று தின்னுதலைக் குறிப்பதாம். 78. பசியாறல் பசித்துக் கிடந்தவன் தன் பசித்தீ ஆறுமாறு உண்ணுதல். ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர் ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே யுலகின் மெய்ந்நெறி வாழ்க்கை -மணி. 11. 12-14 பசிப்பிணி என்னும் பாவியது தீர்த்தோர் இசைச்சொல் அளவைக் கெந்நா நிமிராது -மணி. 80-81 என்பனவும் பசிப்பிணி மருத்துவன் பண்ணன் என்று பாராட்டப் பெறுவதும் நோக்கத்தக்கன. பசிப்பாழி என்பது உடலுக்கு ஒரு பெயர் என்பதும் அறியத் தக்கது. 79. படைத்தல் நடுகற்கும் இறைவர்க்கும் இல்லுறை தெய்வத்திற்கும் சோறு முதலியன படைத்து அவிப்பொருளாய் உண்பித்தல். சோறு முதலியவற்றைப் பரிகலம் உண்கலம் முதலியவற்றில் இடுதல் படைத்தலாம். பந்திக்கு முந்து படைக்குப் பிந்து என்னும் வீர நிலைப் பழமொழியாய் வழங்குவதாம். படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணல் படைத்தல் வினையை உணர்த்துவது. படைத்தல் உணவு, பல்வகைப்பட்ட பெருஞ்சோற்றுத் திரளை என்பது கருதுக. 80. பதம் பதம் என்பது சோற்றைக் குறிக்கும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு பொறுக்கு பதம், என்பது பக்குவமாக வெந்த சோற்றைக் குறிக்கும். பதம் உண்டல் பொருளில் வருவதைப் பிங்கல நிகண்டு சுட்டும். சோறு என்னும் பொருளைச் சூடாமணி சுட்டும் இவ்விரண்டையும் தமிழ்ச் சொல்லகராதி சுட்டும். சோற்றின் பெயர் சோறு உட்கொளலுக்கு ஆகி வந்ததாகலாம். பதம் பார்த்தல், சோறு கறிகளை வாயிலிட்டுச் சுவை பார்த்தல் வழக்கு நோக்கத்தக்கது. 81. பருகுதல் ஆர்வ மீதூர நீர் குடித்தல் பருகுதல் ஆகும். விருப்பத்துடன் கற்க வேண்டும் என்பதைப், பருகுவன் அன்ன ஆர்வத்தனாகி என்று நன்னூல் குறிக்கும். பருகுதல் நால்வகை உண் திறத்தில் ஒன்றாகும். பருகுதல் என்பதற்கு விழுங்குதல் பொருள் உண்மையை நச்சினார்க்கினியர் குறிப்பார்(பொருந. 104). பருகு வன்ன வேட்கை என்று, காட்சிப் பருகுதலைக் காட்டுவார் பெருஞ்சித்திரனார் (புறம். 207). 82. பிடித்தல் ஆவி, வேது, புகை முதலியவற்றை உட்கொள்வது பிடித்தல் எனப்பெறும். நிரம்ப உண்ணுதலை மூக்கு முட்டப் பிடித்தல் என்பது வழக்கு. பிடித்தல் என்பதற்கு உட்கொள்ளுதல், மனத்திற்குப் பிடித்தல் முதலிய பொருள்களைத் தரும் தமிழ்ச் சொல்லகராதி. புகை பிடிக்காதீர் என்று எத்தனை எழுதிப் போட்டாலும் விடாப்பிடியாகப் பிடிப்பவரைப் பார்க்கிறோம் இல்லையா? 83. புகட்டுதல் சங்கு கெண்டி முதலியவற்றால் பால் மருந்து முதலியவற்றைப் புகச் செய்தல் புகட்டுதலாம். பாடம் புகட்டுதல் என்பதும் அவ்வாறு உட்செலுத்துதல் வழி வந்ததே. மூங்கில் கொட்டத்தால் மாடுகளுக்கு நீரும் மருந்தும் புகட்டுவதும் உண்டு. நாவந்தி அல்லது நாவரணை பற்றிய மாடுகள் நீரை விரும்பிக் குடியாமையால் இவ்வாறு செய்வார் புகட்டுதல் என்பது போட்டுதலாகத் திரியும். அமுதுண் வாய் செவிதிறந்து புகட்ட என்பது திருவிளையாடல் புராணம் (விடையுறு. 4) 84. புகுத்துதல் ஊசி வழியாக மருந்தும் நீருணவும் செலுத்துதல் புகுத்துதலாகும். புகட்டுதல் சங்கு முதலியவற்றால் என்பதும், புகுத்துதல் ஊசி வழியாய் என்பதும் வேற்றுமை. 85. பொறுக்கப் பிடித்தல் வயிறு முட்ட உண்ணுதல் பொறுக்கப் பிடித்தல் எனப்படும். புகட்டுதல் எனப்படும். சிலர் வயிற்றுக்கு வஞ்சகம் கூடாது என்று பொறுக்கப் பிடிப்பர். பொறுக்கப் பிடிப்பார் பொருமித் துன்புறுவதும் உண்டு. இது பொதுக்கப் பிடித்தல், பொதுமப் பிடித்தல் எனவும் வழங்கும். 86. பொறுக்குதல் ஒவ்வொன்றாகத் தேர்ந்து பொறுக்கித் தின்னுதல் பொறுக்கு மணி என்பது எண்ணத் தக்கது. விரவல் என்னும் சிற்றுண்டியில் கிடக்கும் கடலைப் பருப்பை விரும்பி முதற்கண் பொறுக்கித் தின்னல் கண்கூடு. புறா. பொறுக்கித் தின்பதை இயல்பாக உடையது. 87. போடுதல் போகடுதல் என்பது போடுதலாயதாம். வெற்றிலை பாக்குப் போடுதல். ஊசி போடுதல் என்பவை வழக்கில் உள்ளவை. 88. போட்டுதல் புகட்டுதல் என்பது போட்டுதல் என திரிந்ததாம். பாட்டி அடித்தாளோ பால் போட்டும் கையாலே என்னும் தாலாட்டுப் பாட்டு. போட்டுதலைக் காட்டும், போட்டு என்பது போகவிட்டு என்பதன் மரூஉ என்பர். ஒள்ளிகல் அரக்கர் போட்டோடு நாள் என்பதை அவர் எடுத்துக்காட்டுவர், (தமிழ்ச் சொல்லகராதி) 89. மடுத்தல் நிறைய உண்ணுதலும். நிறையக் குடித்தலும் மடுத்தலாம். மடுத்தல். உண்ணுதலை அன்றி உண்பித்தலையும் குறிக்கு என்பதை ஒண்டொடி மகளிர் மடுப்ப என்பதால் புறநானூறு கூறும் (56). மண்டியிட்டுக் குனிந்து கை கூட்டி அள்ளிப் பெருக உண்ணுதல் மடுத்தலாம் என்பதைத் திருவிளையாடல் சுட்டும் (குண். 14). 90. மண்டுதல் சுவை பாராமல் கண்ணை மூடிக் கொண்டு நிரம்பச் குடித்தல் மண்டுதல் என்பது வழக்கு. மண்டுதல் ஆவலாகப் பருகுதல். மிகக் குடித்தல் என்று சொல்லும் தமிழ்ச் சொல்லகராதி. கண்ணை மூடி மண்டி விடு என்று குழந்தைகளை வலியுறுத்துதல் இன்றும் வழக்கே. 91. மாந்துதல் தேக்கெறியுமாறும், புளிப்பு ஏப்பம் வருமாறும் நிரம்ப உண்ணுதல். குடித்தலுமாம் (பிங். 2000). உண்டு செரியாமல் அல்லது தொக்கமாய் இருத்தலை எடுத்தல் மாந்தம் எடுத்தல் எனப்பெறும். மாந்தி மாந்தித் துயின்றது தானையெல்லாம் என்பது இராமகாதை (உயுத். 4229). 92. மிசைதல் விருந்தினரைப் பேணி எஞ்சிய மிச்சிலை உண்ணுதல். மிச்சில் மிசைவான் என்பது திருக்குறள் (85). மிசைவு என்பது உணவு பொருட்டது. ஆகலின். மிசைதல் உண்ணுதல் ஆயிற்று என்பதாம். கலையுணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் சிலைகெழு குறவர்க் கல்குமிசை வாகும் என்னும் புறப்பட்டால் (236) மிசைவு உணவாதல் புலப்படும். செங்கால் பலவின் தீம்பழம் மிசையும் என்னும் நற்றிணை (232) உண்ணுதலைக் குறிக்கும். 93. முக்குளித்தல் மாடு தன் மூக்கைத் தொட்டியில் உள்ள நீர், ஊறல், காடிநீர் இவற்றுள் செலுத்திக் குடித்தல் முக்குளித்தல் எனப்படும். முக்குளிக்கும் போது மூச்சுக் குமிழிட்டு நீருக்கு மேலே வரும்; முக்குளித்தல் ஒலியும் கேட்கும், தொட்டி நிரம்பி நீர் கிடந்தாலும் அடிமட்டத்தில் இருக்கும் கட்டிப் பொருளை முக்குளிக்கும் மாடு தின்றுவிடும். அத்தகையவற்றை முக்குளிப்பான் என்பதுண்டு. நீருள் மூழ்கி மூச்சடக்கி இருத்தலை முக்குளித்தல் என்பதும் கருதுக. முத்துக்குளித்தல் வழியாக வந்ததோ என்பது கருதத்தக்கது. இனி மொக்குள் என்பது நீர்க்குமிழைக் குறித்தலின் மொக்குளித்தல் என்பது திரிந்ததோ எனவும் கருதலாம். 94. முழுங்குதல் விழுங்குதல் என்பது முழுங்குதலாகத் திரிந்தது எனலாம். இரண்டற்கும் வேற்றுமை முழுங்குதல் என்பது முழுமையாக ஒன்றை விழுங்குவதைச் சுட்டுவதாகலாம். மலை முழுங்கி மகாதேவன் என்று சிலரை உவமையாகச் சொல்லுவது அறிக. முழுமையில் இருந்து முழுத்தம் வந்தது போல. இதுவும் அமைதற்கு இடனுண்டாம். முழுக்காட்டுதல். முழுக்காளி (முத்துக் குளிப்பவன்) என்பவற்றையும் எண்ணலாம். 95. மெல்லுதல் வெற்றிலை முதலியவற்றைப் பல்லால் கடித்துத் தின்னல் மெல்லுதல் ஆகும். மெல்லல் என்பதும் அது. மெல்லிலை என்பது மெல்லிய இலை என்னும் பண்பைக் குறிக்காமல் மெல்லுதற்கு ஏற்ற இலையென வினையைக் குறிக்கும் என்பது சிந்தாமணி (2403). வெற்றிலையை மெல்லல் என்பதே மரபு என்பதை வெற்றிலையை யுண்ண வென்றல் மரபன்மையின் என்றும். பாகு, பசிப்பிணி தீர நுகரும் பொருளன்மையின் என்றும் நச்சினார்க்கினியர் இவண் குறித்தார். குளிருக்கு ஏதாவது மெல்லேன் என்று பயறுகளை வறுத்துக் கொடுத்தல் சிற்றூர் வழக்கு. 96. மேய்தல் ஆடு மாடு முதலியன புல் முதலியவற்றை மேலாகத் தின்னுதல். நுனிப்புல் மேய்தல் என்னும் தொடர். மேய்தல் பொருளை விளக்கும். விலங்குண்ணுதலைக் குறிக்கும் மேய்தல். தீ எரித்தலையும் சுட்டும் என்பது வீட்டையும்தான் மேய்ந்தான் என்னும் தனிப்பாடலால் புலப்படும். ஆடு மாடுகளை மேயச் செய்வாரை மேய்ப்பர் என்பதும். கிறித்து பெருமான் தம்மை மேய்ப்பர் என்று கூறியதும். மேய்ச்சல் நிலம் என நில ஒதுக்கீடு செய்வகையும் கருதத்தக்கன. முகில் கடலில் நீர் குடித்தலை கலங்கு தெண்டிரை மேய்ந்து என இலக்கண வகையால் கூறினார் திருத்தக்க தேவர் (சிந்தா. 32). 97. மொக்குதல் வாய் நிரம்ப அள்ளிப் போட்டுத் தின்னல் மொக்குதல் எனப்படும். இது நொக்குதல். மொதுக்குதல் எனவும் வழங்கும், குதிரைக்குக் கொள் கட்டித் தின்ன வைக்கும் பையை மொக்குணி என்பது உண்டென அறிதலின் (திருவாசகம், திருவிளையாடல்) அப் பை போல உதப்பிய கன்னம் தோன்றுதல் கொண்டு மொக்குதல் என்னும் சொல் ஆகியிருக்கக் கூடும். மொக்குணி என்பது மொக்கை, பரியது என்னும் பொருளில் வழங்குதல் அறியத்தக்கது. முக்கல் என்பதற்கும் உண்ணுதற் பொருள் தரும் பேரகராதி. 98. மொசித்தல் மொசிதல் என்பது மொய்த்தல் பொருளில் வருவதுடன் (பதிற்.11) தின்னல் பொருளிலும் வரும் என்பது புறநானூற்றால் விளங்குகிறது. மையூன் மொசித்த ஒக்கல் என்பது அது (96) செம்மறியாட்டுத் தசையைத் தின்ற சுற்றம் என்பது அதன் பழையவுரை. 99. வாங்குதல் காற்று வாங்குதல், மூச்சுவாங்குதல், யானை கவளம் வாங்குதல் போல்வன வாங்குதலாம். இழுத்தல். ஏற்றுக் கொள்ளல் பொருள், வாங்குதலுக்கு உண்டு எனச் சூடாமணி நிகண்டு சொல்லும். 100. வாய்க்கிடல் வாய்க்கிடல் என்பது இறந்தோர் வாய்க்கு அரிசி போடல் என்னும் வழக்கம் பற்றியது. உழையாமல் ஊர்சுற்றித் திரிந்து துன்புறுத்தும் தடிமாக்களைப் பெற்ற தாயும் மனநோவால், உனக்கு வாய்க்கரிசி போட வேண்டுமே என்று சொல்வதில் வாய்க்கிடல் உண்ணுதல் பொருட்டதாம். 101. விழுங்குதல் மெல்லாமலும் பற்படாமலும் மருந்து முதலியவற்றைத் தொண்டைக்குள் போட்டு இறக்குதல் விழுங்குதல்; விழுங்குதல் கீழே விழச் செய்தல் போல்வதாம். விழுதல், விழுது முதலியன கருதுக. உட்கொளல் முறை: அசைத்தல் = விலங்குபோல் அசையிட்டுத் தின்னுதல். அதுக்குதல் = சூடான உணவை வாயின் இரு புறத்திலும் மாறி மாறி ஒதுக்குதல். அரித்தல் = பூச்சி புழுப் போலச் சிறிது சிறிதாய்க் கடித்தல். அருந்துதல் = சிறிது சிறிதாய்த் தின்னுதல் அல்லது குடித்தல். ஆர்தல் = வயிறு நிரம்ப உண்ணுதல். உண்ணுதல் = எதையும் உட்கொள்ளுதல். உதப்புதல் = வாயில் இருந்து வெளிவரும்படி மிகுதி யாய்ச் சுவைத்தல். குதப்புதல் என்பதும் இது. உறிஞ்சுதல் = ஒன்றிலுள்ள நீரை வாயால் உள்ளிழுத்தல். ஒதுக்குதல் = ஒரு கன்னத்தில் அடக்குதல். கடித்தல் = கடினமானதைப் பல்லால் உடைத்தல். கரும்புதல் = ஒரு பொருளை ஓரத்தில் இருந்து சிறிது சிறிதாய்க் கடித்தல். கறித்தல் = மெல்லக்கடித்தல். குடித்தல் = கலத்திலுள்ள நீரைப் பொது வகையில் வாயிலிட்டு உட்கொள்ளுதல், குதட்டுதல் = கால்நடை போல் அசையிட்டு வாய்க்கு வெளியே தள்ளுதல். கொறித்தல் = ஒவ்வொரு கூல மணியாய்ப் பல்லிடை வைத்து உமியைப் போக்குதல். சப்புதல் = சுவைத்து ஒன்றன் சாற்றை உட் கொள்ளுதல். சவைத்தல் = வெற்றிலை புகையிலை முதலியவற்றை மெல்லுதல். சாப்பிடுதல் = சோறு உண்ணுதல். சுவைத்தல் = ஒன்றன் சுவையை நுகர்தல். சூப்புதல் = கடினமானதைச் சப்புதல் தின்னுதல் = மென்று கொள்ளுதல். நக்குதல் = நாவினால் தொடுதல். பருகுதல் = கையினால் ஆவலோடு அள்ளிக் குடித்தல். மாந்துதல் = ஒரே விடுக்கில் அல்லது பெரு மடக்காய்க் குடித்தல் முக்குதல் = வாய்நிறைய ஒன்றை யிட்டுத் தின்னுதல். மொக்குதல் என்பதும் இது. மெல்லுதல் = பல்லால் அரைத்தல். மேய்தல் = மேலாகப் புல்லைத் தின்னுதல் விழுங்குதல் = மெல்லாமலும் பல்லில் படாமலும் விரைந்து உட்கொள்ளல் மிசைதல் = மிச்சில் உண்ணுதல் (சொல். ஆரா. 55) உட்செலுத்தல்: வயிற்றின் உள்ளே செலுத்துதல். வயிற்றின் உள்ளே தள்ளுதல் என்னும் பொருளில் வருவது இது. செல்லும் செல்லாததற்கு. அவன் இருக்கிறான் என்று எதையும் கழிக்காமல் உண்பவனைக் குறிப்பது வழக்கு. ஊசி வழியே மருந்தும் ஊட்டமும் செலுத்துவதும், உட்செலுத்துதலாம். உட் செலுத்துதல் பெரும்பாலும் கட்டாயத்தால் நிகழ்வதாம். உட்சொல்: உட்சொல்:1 பொதுச்சொல்லுக்கு உட்பட்ட சொல் உட்சொல்லாகும். மான் பொதுச்சொல் அதன் உட்சொல் புள்ளிமான், கவரிமான் என்பவை. பொதுச்சொல்லை மீச்சொல் என்றும் கூறுவர் (த.இ.வி.வி.பக். 122). உட்சொல்:2 ஒருவர்தம் மனச்சான்றாகக் கிளரும் உணர்வு நிலைச் சொல். உட்சொல் (என்மனச் சான்று) அவ்வாறு சொல்ல வில்லை; புறச்சொல்லைப் பற்றியேன் கவலைப்பட வேண்டும் என்பது மக்கள் வழக்கு. உட்சொல்:3 நாடகக் களத்தில் தனிநிலையில் கூறும் சொல். தனிமொழி என்பதும் அது. உட்டாங்கு: உள் + தாங்கு = உட்டாங்கு. பிறர்க்கு வெளிப்படுத்தாமல் உள்ளத்தே அமைத்துக் கொள்ளுதல் உட்டாங்கு ஆகும். பட்டாங்கு உணர்ந்து உட்டாங்கு இயற்றி - பெருங். 2:8:45 உட்பகை: உள் + பகை = உட்பகை. ஒரு குடிப்பிறப்புள், ஓர் அமைப்புள், ஓர் இனத்துள் உண்டாகும் பகை உட்பகையாம். புறப்பகை எழுபது கோடியினும், உட்பகை ஒன்று உண்டானால் அதுவே அழித்து விடும் என்பார் வள்ளுவர். பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும் -திருக். 639 தெவ்வோர் = பகைவர்; அவர் அயலிடத்தார் அல்லர்; அவரும் பக்கத்தில் இருப்பவர்தாம்! ஆனால் உள்ளாக இருப்பார் அல்லர் என்றது நினைக்கத் தக்கது. பேரினம், பெருங்குடும்பம், பெரும்பெரும் அரசு ஆகியவைகளின் வீழ்ச்சியும் அழிவும் உட்பகையாலேயே என்பதைத் தமிழக வரலாறு நன்கு காட்டும். உலக வரலாறும் மெய்ப்பிக்கும். உட்பகை பெரிதுவேண்டா; எட்பிளவு அளவு இருந்தாலும் போதும் அது, உள்வாங்கு மண்ணாம் அளற்று மண் தன்னிடம் வந்தாரை வெளியே விடாது உள்வாங்கிக் கொள்வது போலக் கொண்டுவிடும் என்பார் திருவள்ளுவர். உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும் -திருக் . 883 உட்பகைப் பட்டாரைக் காக்கப் பிறர் முயற்சி செய்தாலும், அவரும் மீளார். முயற்சி செய்வாரும் அழிவார் என்பதை உணருமாறு அளற்று மண்ணில் சிக்கினாரைக் காக்க எவர் போனாலும் அவரும் மீளார் என்பதைக் கொண்டு தெளிவித்தார் வள்ளுவர். காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு -திருக். 500 என்றும், அண்ணாத்தல் செய்யா தளறு -திருக். 255 என்றும் அவர் கூறியதை எண்ணல் நற்றெளிவாம்! தெளி வுடையவர் உட்பகைக்கு இடம் தாரார் ! உட்பகை உண்டாகா வாறு விழிப்பாக இருந்து வாழ்வார், வாழவும் வைப்பார் என்க. அகத்தாரே தன்னலம் நோக்கியும், கலாம் பற்றியும் தம் இனத்தாரைப் புறத்தாரான பகைவர்க்குக் காட்டிக் கொடுத்தல். தேவ. 2: 218 உணங்கல்: உணங்கு > உணங்கல் = உலர்தல். காய்தல். நீர்ப்பதத்தை வெயிலும் காற்றும் உண்ணுதலால் உணங்கல் எனப்பட்டது. படலை முன்றில் சிறுதினை உணங்கல் புறவும் இதலும் அறவும் உண்கெனப் பெய்தற்கு எல்லின்று பொழுதே - புறம். 319 அறவும் = மிகவும். உணர்தல்: ஒன்றன் உள்ளீட்டை அல்லது ஒருவர் உள்ளீட்டைத் தாமும் உள்வாங்கிக் கொண்டு அவ்வுள்ளீட்டினரால் உணர்தல் ஆகும். உணர்வின் அருமை, உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே - தொல். 876 என்னும் நூற்பாவினால் விளக்கமாம். உணர்தல், உணர்வு, உணர்ச்சி என்பவை ஒரு பொருள என்பதை இந்நூற்பாவே விளக்கும். ஒன்றைச் சொல்லிப் பயன்படுத்த விரும்பினால் அவ் வுணர்வைக் கொள்ளத்தக்காரிடம் கூறுதல் வேண்டும்; அது வளரும் பயிர்க்கு வான்மழை போல் பயன்படும் என்பதை. உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று - திருக். 718 என்று வள்ளுவரால் கூறப்படும். புணர்வினைக் காட்டிலும் உணர்வே உயர்வும் உரிமைச் சிறப்பும் உடையது என்பதைப், புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும் - திருக். 785 என்னும் வள்ளுவமும் பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழன் வாழ்வியலும் காட்டும். உணர்வு நிலையொடு ஒப்ப நோக்கி ஆயத்தக்கது ஒன்று உண்டு. அது, உண்ணும் உணவு, உண்ணும் உணவுக்கும் எண்ணும் உணர்வுக்கும் தொடர்பு உண்மை, உணவு உணர்வு என்னும் சொல்லமைவாலே நன்கு புலப்படும். உணர்தல் என்பது உலர்தல் என்னும் பொருளில். உலரப் போடுதல் என்பது உணரப் போடுதல் என மக்கள் வழக்கில் உள்ளது வழுவென அறிக. உலர்தல் = காய்தல். ஈரப்பதன் நீங்கல்; ஆலாற்றுதல் என்பது அது. ஆல் ஆவது நீர். ஆற்றுதல் = அகற்றுதல். உணர்ந்தோர்: உலர்தல் என்பது காய்தல், உலர்தல் உணர்தல் எனப் பொதுமக்கள் வழக்கில் உள்ளது. உலர்ந்து போன இஞ்சியைச் சுக்கு என்பது பொதுவழக்கு. அதனை உணர்ந்தோர் என்பது நெல்லை வட்டார வழக்காகும். உணர்வுக்குறி: உணர்வு + குறி = உணர்வுக்குறி. நகை அழுகை முதலாம் உணர்வுகளை அல்லது மெய்ப்பாடுகளை உணர்த்தும் குறி உணர்வுக் குறியாகும். எழுதுவார் கொண்ட உணர்வைப் படிப்பாரும் உணர, உணர்த்தும் அடையாளம் அதுவாம். எல்லா உணர்வுக்கும் பொதுவாகிய அதனை வியப்புக் குறி என்பது தவறாம். ஆஆ! அந்தோ! ஏஏ! ஓஓ! ஐயோ! அம்மம்ம! அருமையான காட்சி! என்னே அழகு! இறந்து போனாரா! உணவு: உட்கொள்வது உணவு ஆயது: உண்ணுதல் ஊண் என்றாயது. உண்பது உண்டியும் ஆயது. உண்டியே உயிர் ஆதலால். உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோர் - புறம். 18 எனப்பட்டனர். உண்டியாவது நிலம் தந்ததும் நீர்தந்ததும் ஆதலால். உணவெனப் படுவது நிலத்தொடு நீரே - புறம்.18 என்றனர். உணவு வழியே உயிர் காக்கப்படுதலால் அவ்வுணவு வழிப்பட்டதே உணர்வு என்றனர். உணர்வு மேம்பாடும் உணர்வுக் கீழ்பாடும் உணவுடன் இணைந்தது என்பதை நம் முந்தையர் உணர்விக்குமாறு அவ்வுணவு வகையை இருபால் படுத்தினர். ஒருவகை புல் உணவு; மற்றொரு வகை வல் உணவு. புல் வகைப் பயிர்கள் வழியே கிடைக்கும் உணவு புல் உணவாகும். வல் உணவு என்பது வல்சி, வல்சியாவது ஊன்! ஊன் வழிப்பட்ட உணவு வல் உணவு ஆகும். புல்லுதல் என்பது பொருந்துதல் புல்லிக் கிடந்தேன் என்பது வள்ளுவம் (1187). புலால் என்பது புல்லுதல் (பொருந்துதல்) அற்றது. இரண்டையும் உணவாகக் கொள் வாரும் உளர். புல்லுணவே கொள்வாரும் உளர். ஒரு சிறு குறிப்பு. உங்கள் உடல் நலனுக்குப் புலால் உண்ணக்கூடாது என மருத்துவர்கள் கட்டளை யிடுகின்றனர். எந்த மருத்துவரும் புல் உணவை உண்ணக்கூடாது எனக் கூறுவது இல்லை. தமிழகத்தில் குறித்த நாள்களில் புலால் உண்ணல் ஆகாது என அதனை விரும்பியுண்பாரும் நோன்பாகக் கொள்கின்றனர். அவ்வாறு புல் உணவு உண்ண ஆகா நாள் என எந்நாளும் ஒதுக்கப்படல் இல்லை. இஃது உடல்நலக் குறிப்பே அன்றிச் சமயம் சார்ந்தோ அருள் அருளின்மை சார்ந்தோ கூறியவை அல்ல. அவை கருத்து வேறுபாட்டுக்கு உரியவை. பலவகைத் தடைவிடைகளுக்கு உரியவை. உணவு வகை உண்பன = சோறும் களியுமாகச் சமைக்கப் பெறும் நெல் புல் முதலியன உண்பன. தின்பன = காய்கறிகள் தின்பன. பருகுவன = பாலும் பதனீரும் பருகுவன. நக்குவன = தேனும்நெகிழ் நிலைப் பொருளும் நக்குவன. (தேவ. 2.222) உணா: உணவு > உணா. புறவு > புறா ஆயது போல. உணங்குணாக் கவரும் கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை - பட். 22, 23 பொருள்: உணங்குணா = உலர வைக்கப்பட்ட - காயப் போடப்பட்ட - உணவாகிய நெல். உண்கடன்: உணவுக்காகப் பெறும் கடன் உண்கடனாம். பிற கடன்களைப் பெறுவதினும் உண்கடன் பெறு நிலை நெஞ்சம் உருகச் செய்வதாம். உண்கடன் பெறுநிலை ஒருவர்க்கு ஏற்பட்டுவிட்டால் மானத் தாழ்வாகவே கொள்ளப்படுதல் கண்கூடு. இரவலர் நிலைக்குத் தள்ளி விடுவது அஃதாம். அந்நிலையில் கடனுதவி செய்தார்க்கு மீளக் கொடுக்க வாய்த்தும் கொடாமல் முகமாறல் எத்தகைய பண்பாட்டுக் குறை. இதனைக் கலித்தொகை சுட்டுவதுடன் பண்டும் இவ்வாறே இருந்தனர் என்கிறது! மக்கள் மனநிலை மாறாதோ? உண்கடன் வழிமொழிந் திரக்குங்கால் முகனும்தாம் கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே றாகுதல் பண்டுமிவ் வுலகத் தியற்கை அஃதின்றும் புதுவது அன்றே - கலித். 22 உண்டுறுதி: நிலபுலங்களையோ குடியிருப்பிடத்தையோ போக்கியமாக எழுதி வைப்பது உண்டு. ஒற்றி(ஒத்தி) என்பது அது. உரிய காலத்தில் உரிய தொகையை வழங்கி மீட்டுக் கொள்ளும் உரிமையது அது. அதனை உண்டுறுதி என்பது கம்பம் வட்டார வழக்கு. ஒற்றிக் கலம் என்பது கல்வெட்டு வழக்கு. உண்டுறை: உண்டுறை:1 உண் + துறை = உண்டுறை. நீர் உண்ணும் துறை. உண்டுறை நிறுத்திப் பெயர்ந்தனன் - குறிஞ்சிப். 237 உண்டுறை:2 உண்டு + உறை = உண்டுறை. பயில்வாரும் பணி செய்வாரும் உண்டு உறையும் இடம் உண்டுறை விடுதி என இந்நாள் பெருக விளங்குதல் கண்கூடு. பழைய உண்டுறை தந்த புதுப்பொருள் இஃதாம். பள்ளிகள் கல்லூரிகள் தொழிலகங்கள் என்பவற்றில் சிலர் கூட்டாகச் சேர்ந்து அமைத்துக் கொள்ளும் முறையிலும் உண்டுறை விடுதிகள் பெருகியுள்ளன. உணவகங்கள். உணவு விடுதிகள். தங்குமிடங்கள். முதியோர் இல்லம் என்பவை வேறு, வேறானவை. உண்டை: உருண்டை > உண்டை உண்டைப் பிறக்கம் அண்டம் என்பது திருவாசகம் (திருவண்.). அண்டம் = உலகம். வில்லுருண்டை, வில்லுண்டை; உருண்டைக் கட்டி, உண்டைக்கட்டி என்பவை மக்கள் வழக்கு. உண்டையாக விளங்குவது உலகம் என்பதனால் உலகுக்கு அண்டம் என்னும் ஒரு பெயரும் வழங்கினர். அண்டமாவது முட்டை, விதை. இவை இரண்டும் உருண்டை வடிவினவேயாம். ஆதலால் உலகம் உருண்டை என்பதை விளக்குவனவே உண்டை, அண்டம் என்பவை என்க. உண்டைக்கோல்: கவண், கவணை, கவட்டை, என்பவை ஒருபொருள் பல சொற்கள். உருண்டையான கல் அல்லது உருட்டித் திரட்டிய மண் கொண்டு குறிவைத்து அடிக்கும் எய்கருவி அது. அதனை உண்டைக் கோல் என்பது திருவில்லிப்புத்தூர் வட்டார வழக்கு ஆகும். உண்ணாக்கு: உள் + நாக்கு = உண்ணாக்கு. வாயுள் இரண்டு நாக்குகள் உள. ஒன்று வெளிப்படத் தெரிவது. மற்றொன்று அந்நாக்கின் மேலே வெளிப்படத் தெரியாமல் உள்ளே இருப்பதாம். அதனால் அதனை அண் நாக்கு என்றும் கூறுவர். அண் = மேலே; அண்ணம் = மேல்வாய். அண்ணாக்கக் குடி என்பதில் அண்ணாக்கில் படத் தூக்கிக் குடி என்னும் பொருளில் இருத்தல் அறிக. அண்ணாந்து பார்த்தல், அண்ணாமலை என்பவை எவரும் அறிந்தவை. உண்ணா நோன்பு: உண் + ஆ + நோன்பு = உண்ணா நோன்பு. ஒரு கொள்கையை முன்வைத்தோ மருத்துவ நலப்பாடு கருதியோ இறைமை வேண்டுதல் எண்ணியோ உண்ணா நோன்பு மேற்கொள்வர். காந்தியடிகள் பன்முறை உண்ணாநோன்பு கொண்டது வரலாறு. பழநாளில் இது பாடுகிடத்தல். வடக்கிருத்தல் எனப் பட்டன. ஒவ்வொன்றும் உண்ணா நோன்பு எனினும் பொதுமை பெறினும் வேறுபட்ட அடிப்படை யுடையவை. உண்ணாமல் தின்னாமல்: உண்ணுதல் = சோறு உட்கொளல். தின்னுதல் = காய்கறி, சிற்றுண்டி (சிறுதீனி) ஆகியவற்றைத் தின்னுதல். உண்ணாமல் தின்னாமல் ஐயோ வென்று போவான் என்பதில் இவ்விணைமொழி யாட்சி காண்க. உண்ணுதல் பேருணவும் தின்னுதல் சிற்றுணவுமாம். தின்னலால் தீனிப் பெயர் பெற்றதும் அறிக. தின் > தீன் > தீன் > தீனி. தினற்பொருட்டால் என்னும் குறளும் (256). பகுத்துண்டு என்னும் குறளும் (322) விளக்கந்தரும். உண்ணாழிகை: உள் + நாழிகை = உண்ணாழிகை. நாழிக்கிணறு என்பது வட்டமான கிணறு. உறைக்கிணறு என்பதும் அது. நாழி = மூங்கில் பண்ணை; அதுவும் வட்டம்; நாழிகை வட்டில் என்பதும் வட்ட வடிவினது. ஆதலால் உள் நாழிகை என்பது கருவறை. வட்டவடிவில் அமைக்கப்பட்ட தொல் பழங்கால மரபுச் சொல்லாய்ப் பின்னைக் கருவறைப் பெயராய் அமைந்திருக்க வேண்டும். உள் வட்டம், கருவறை. உண்ணாழிகை என்பவை ஓரொப்பவை என்க. உண்ணாழிகை வாரியம்; உண்ணாழிகை பரியாரம் செய்மாணி என்பவை கல்வெட்டில் இடம் பெற்றவை. (க.க.அ.மு.67) உண்ணி: உண் + ண் + இ = உண்ணி. குருதியை உண்ணும் ஓர் உயிரி. ஆடுமாடுகளின் உடலில் ஒட்டிக் குருதியைக் குடித்து வாழும் உயிரி இது. இதனை ஒழிக்கத் தும்பைச் சாறு தடவ வேண்டும் என்றும், கடலை எண்ணெயும் கடுகு விழுதும் (அரைவையும்) கலந்து தேய்த்துக் குளிப்பாட்ட வேண்டும் என்றும் சித்த மருத்துவர் கூறுவர் (மரபுசார் மூலிகை வழி மருத்துவம்). உண்ணுதல்: உண்ணுதல்:1 உண் > உண்ணு > உண்ணுதல். உணல் என்பதும் அது. சோறும் நீரும் நீர்ப் பொருள்களும் உட்கொள்ளுதல் உண்ணுதலாம். வாய்வழியாகத் தொண்டை குடல் என உள்ளே உள்ளே செல்லுதலால் உட்கொளல் உண்ணுதல் எனப்பட்டது. உணலினும் உண்டது அறல் என்னும் திருக்குறளும் (1326) உண்ணாமை கோடி யுறும் என்னும் ஔவையார் தனிப்பாட்டும் சோறுண்ணுதலைக் குறிக்கும். உண்ணுநீர் என்னும் கலித்தொகை (51) நீர் உணவையும், உண்ணற்க கள்ளை என்னும் திருக்குறள் (922) நீர்ம உணவையும் குறிக்கும். உண்டாட்டு என்னும் புறத்துறை, மதுவும் சோறும் கறியும் உண்டு மகிழ்தலைக் குறிப்பதாம். உண்ணுதல்:2 விலங்கு, பறவை முதலியவை மட்டுமல்லாமல், ஆடை ஒரு வண்ணத்தை ஏற்றல் உண்ணுதல் ஆகச் சொல்லப்பட்டது. உயிரி உட்கொளல் போல்வதன்றித் தன்கண் பதியச் செய்தல் அல்லது படியச் செய்தல் உண்ணுதலாம். நீல்உண் பச்சை -அகம். 217 என்பது அது. அழுக்குப் படிந்தால் துணியில் அழுக்குண்டது என்பது வழக்கு. உண்ணுதல் வகை உண்ணல் - சோறு முதலியவை. தின்னல் - காய். கனி முதலியவை. நக்கல் - தேன். ஐந்தமுது முதலியவை. பருகல் - நீர், மோர் முதலியவை இவற்றை இவ்வாறே வழங்குதல் பண்டு bjh.ட்L இன்று வரை தொடருமாயினும் பண்டே மாற்றமுற்றனவும் உண்டு. கள் பருகுதல் வகையைச் சார்ந்தது; பருகுதலும் குடித்தலும் அதுவே. குடி, குடியைக் கெடுக்கும் என எழுதி வைத்துக் கொண்டே குடிக்கத் தருவதும், எழுத்தைப் படித்துக் கொண்டே குடியைக் கெடுக்கத்தானே நாங்கள் வந்தது எனக் குடிப்பது குடியாக இல்லாமல், உணவைக் காட்டிலும் உயிராக ஆகி விட்டதால் குடிப்பார் நோக்கில் மதுக்குடி அல்லது கட்குடி குடியில்லை; உணவே ஆயிற்று. ஆதலால் வள்ளுவம் கள்ளுண்ணாமை என்றது. மோர் குடித்தல் பால் குடித்தல் அல்லது மோர் பருகல் பால் பருகல் அல்லது மோர் அருந்துதல் பால் அருந்துதல் இதுகால் மோர் சாப்பிடுகிறீர்களா? பால் சாப்பிடுகிறீர்களா? என்ன சாப்பிடுகிறீர்கள் என்று சாப்பாடு போட்ட மகிழ்வைக் கொள்ளுதல் வழக்கமாயிற்று. * உண்ணுதல் காண்க. உண்முரண்: உள் + முரண் = உண்முரண் = உட்பகை வெம்முரண் வேழத்து வெஞ்சினம் அடக்கிய உண்முரண் அறாஅ - பெருங். 1:47:80-81 உண்மை: உண்மை:1 உண் > உண்மை = உள்ளதாம் தன்மை. நெஞ்சத்து உண்மை அறிந்தும் -ஐங்குறு. 139 பொருள் : நெஞ்சத்தில் உள்ளதை அறிந்தும் உண்மை:2 உள் + மை = உண்மை = உள்ளத்தின் வெளிப்பாடு; உண்மை, வாய்மை, மெய்மை என்னும் மூன்றனுள் முதலாவது உண்மை. உளத்தின் தூய வெளிப்பாடு உண்மையாம். உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் - திருக். 294 உள்ளும் புறமும் ஒத்திருப்பது உண்மை. உள்ளம், வாய், மெய் ஆகிய முக்கரணங்களும் ஒருங்கே உண்மையில் ஒத்திருத்தல் வேண்டும். இவ்வியல்பை அறிந்தே உண்மை, வாய்மை, மெய்ம்மை என உண்மைக்கு முப்பெயரிட்டனர் முன்னோர். உள்ளத்தைப் பற்றியது உண்மை வாயைப் பற்றியது வாய்மை மெய்யைப் பற்றியது மெய்ம்மை உள்ளத்தோடு பொருந்தாது சொல்லோடும் மெய்யோடும் மட்டும் பொருந்துவது ஒரு போதும் உண்மை யாகாது. உளத்தோடு பொருந்திய உண்மை உரைப்பவர் திருந்திய ஒழுக்கமுடையவராயிருத்தல் திண்ணம் (தேவ.2:221) உண்மை அறிவு: உண்மை அறிவாவது பெற்றோர் வழியே பிறப்போடு கொண்ட அறிவாகும். ஒருவன் பெற்றோர் அறிவும், அவர் பெற்றோர் அறிவும், அவர்தம் முந்தையர் அறிவும் ஆகிய அறிவே உண்மை அறிவு. எனின், அதற்கு உரிமை பூண்ட பெற்றவர்கள், தம் குடிநலப் பேற்றுக்காகத் தங்களை எவ் வெவ்வாறெல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும். உண்மையாவது, உண்மை; பிறப்பு வழியால் உள்ளமை. உதடு: வாயிதழ்கள் உதடு என மக்களால் வழங்கப்படுகிறது. வாயிதழ் பருத்தவரை உதடன் என்றும் உதடி என்றும் பட்டப் பெயரிட்டு வழங்குவர். இதழ்கள் ஒன்றை ஒன்று முட்டுவது போலும் தாக்குவது போலும் இருத்தலால் பொதுமக்கள் உதடு என்றனர். கழுதை எற்றுதலை உதைத்தல் என்பர்; நாம் ஆடும் கால்பந்து உதைபந்து என வழங்கப்படும். உதடு தந்த கொடைகள் இவையா? கழுதை உதை தந்த கொடைகள் இவையா? சுவையாக எண்ணலாம்! உதப்புதல்: வாய் நிறைப் போட்டு மெல்ல முடியாமல் திணறுதலை உதப்புதல் என்பர். உதப்பும் வாய் பருத்துத் தோன்றும்; பருத்தல் தடித்தல் பொருள் தந்தது உதப்புதல்; ஆடு அசை போட்டுக் கடைவாய்ப் புறம் உணவைத் தள்ளி இறக்குதலும் உதப்புதல் எனப்படும். உதைக்காய் என்பது பிஞ்சுநிலை நீங்கிப் பழமாகுமுன் சதைப்பற்று மிக்குத் தோலை முட்டுமளவு பருத்த புளியங்காய் ஆகும். உதைக்காய் ஊதைக்காய் எனவும் வழங்கும். குளிர்ந்து தடித்த காற்று ஊதைக் காற்று எனப்படுதலை எண்ணலாம். வாய் அடங்க வெளிப்படாமல் உள்ளே புரட்டிப் புரட்டி மெல்லல் குதப்புதல் ஆகும், உதவாக்கரை: பயனற்றவன். நீரை நெறிப்படுத்தி நிறுத்துவதற்கும் ஓடச் செய்வதற்கும் பயன்படுவது கரை. அக்கரை உதவும் கரையாகும். அச்செயலைச் செய்யப் பயன்படாத கரைகளும் உண்டு. அவை நீர் வந்தவுடனே கசிந்தும் கரைந்தும் உடைப்பெடுத்தும் போய்விடும். அவை உதவாக்கரை. அப்படியே குடும்பத்துக்கு உதவும் மகன், உதவும் கரை போன்று நலம் செய்வான். உதவாத மகன். உதவாக்கரையாக இருந்து, இருப்பதை எல்லாம் கெடுத்தொழிப்பான். உதவாத கரை போல்வானை உதவாக்கரை என்றது உவமைப் படுத்தமாம். உதவாக்கடை என்பது வழு வழக்கு. உதவி: ஈ, தா, கொடு என்பவற்றின் வழியாக வரும் ஈதல். தருதல். கொடுத்தல். என்பவற்றினும் உயர்வும் மதிப்பும் உடையது உதவுதலாம் உதவியாம். செய்த நன்றியை நினைத்து அவர்க்குச் செய்யும் நன்றியே உதவியாம். இத்தன்மையை விளக்கும் வகையால் திருவள்ளுவர், தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல் - திருக். 67 என்றும், மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்லெனும் சொல் - திருக். 70 என்றும் கூறியவற்றால் அறியலாம். ஒப்ப மதித்து உரிய வகையில் செய்யாக் கொடையை உதறிச் சென்ற சங்கச் சான்றோரை எண்ணல் வேண்டும். காணாது ஈத்த இப்பொருட்கு யானோர் வாணிகப் பரிசிலேன் அல்லேன் - புறம். 208 என்றும், அறவிலை வணிகன் ஆயலன் -புறம். 134 என்றும் வரும் புறப்பாடல்களால் பெறுவோர் கொடுப்போர் பெருமிதம் நன்கு விளங்கும். அன்றியும் உதவுவோர் பெருமிதத்தினும் பெறுவோர் பெருமிதமே மேம்பட்டது என்பதைத் திருவள்ளுவர், உதவி வரைத்தன் றுதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து - திருக். 105 என உரைத்துள்ளார். உதவி என்பதன் ஒப்பும் உயர்வுமாம் பொருள் காலச்சூழலில் தாழ்ந்து உதவித்தலைவர், உதவிச் செயலர் என்னும் அமைப்புப் பொறுப்பாளர்களின் நிலையில் உயர்வு தாழ்வு கருதப்பட்டுத் துணைத் தலைவர். துணைச் செயலர் ஆயதும், அத்துணையும் இணை என்னும் ஒப்புப் பொருளை இழந்து போயதும் ஆம். உதவி இருபால் ஒப்புச் செயற்பாடுகளாம். புரவலர் இரவலர் என்னும் வகையுள், வள்ளல்களையும் சான்றோர் களையும் வைத்துவிடல் ஆகாது. பெருஞ்சித்திரனார், இரவலர் புரவலை நீயும் அல்லை புரவலர் இரவலர்க் கில்லையும் அல்லர் இரவலர் உண்மையும் காணினி இரவலர்க்கு ஈவோர் உண்மையும் காணினி - புறம். 192. என்று கூறித் தாம் பரிசாகப் பெற்ற யானையை வெளிமானுக்கு விட்டுச்சென்ற பெருமிதப்பாட்டுக் கூறும் வஞ்சின நிலைவேறு, சங்கச் சான்றோர் ஆகிய அவர், குமணனைப் பாடிப் பெற்ற பரிசிலை, முதிரத்துக் கிழவன் திருந்துவேல் குமணன் நல்கிய வளனே -புறம். 193 என்றதை நினைக. நல்கியது என்பது ஈந்தது தந்தது கொடுத்தது அன்று; மதித்து வழங்கியது. அது நல்குதல் எனப்படும். பல்கலைக்கழக நல்குகையை எண்ணின் அது விளக்கமாம். உதள்: உது + அள் = உதள், உது = உயரமானது; அள் = செறி வுடையது. ஆட்டுக் கடா, மறி யாட்டினும் உயரமும் மயிர்ச்செறிவும் உடைமையால் உதள் எனப்பட்டது வலிமை மிக்கது என்பது குறிப்பாம். உதள நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றில் கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கும் - பெரும். 151 - 153 செம்மறியாடுகளும், வெள்ளையாடுகளும் கட்டி வைக்கப் படாமல் இருந்தமையும் கடாக்கள் கட்டி வைக்கப் பட்டமையும் கருதுக. உதியன்: உத்தியன் > உதியன். உத்தி = உயர்ந்தது, உயரமானது. கிளை வாய்க்கால்களில் நீர் செலுத்தும் தலைவாய்க்கால் கரை உத்தி எனப்படும். எப்பொழுதும் அவ்வுத்தி கண்காணிக்கப் பட்டு ஓட்டை உடைப்பு சரிவு இல்லாமல் இருக்கச் செய்வர். உத்தி திரட்டல் என்பது அதன்பெயர். உச்சியில் அணியும் அணிகலம் உத்தி எனப்படும். உத்தி ஒருகாழ்நூல் உத்தரியம் -கலித். 96 உத்தி பொறித்த புனைபூண் -கலித். 97 உத்தி என்பது உயரம், உயர்வு என்னும் பொருள் தரலாலும் உதியஞ் சேரல் என்பான் பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்துக் குரிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தந்தை என்பதாலும், சேரர் குடி முதல்வனாம் அவன் புறநானூற்றின் முதற்பாடல் அவனைப் பற்றிய அரிய பெரிய வலிமை, பெருமை ஆகியவற்றை எடுத்துரைத்தலாலும், பாரதப் போரில் இருபடையினர்க்கும் ஒருங்கே உணவளித்துக் காத்தமையால் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் எனப்பாடு புகழ் பெற்றதாலும் அவன் வழியினர் உதியர் எனப்பட்டனராம். உகரம் உயர்வின் வேர். எ-டு: உச்சி, உப்பல், உம்பர், உந்தி. உதிரப்பட்டி: உதிரம் + பட்டி = உதிரப்பட்டி. உதிரம் = பூவிழுதல் போலவும், தேன் சொட்டுச் சொட்டாக விழுவது போலவும் விழும் குருதி உதிரமாம். போரில் இறந்த வீரர்களின் வழியினர்க்கு அரசு வழங்கும் கொடை நிலம் உதிரப்பட்டி என்பதாம் (க.க.அ.மு. 70). உதிரம்: உதிர் + அம் = உதிரம். பூ உதிர்தல் போல் உதிர்வதால் உதிரம் எனப்பட்டது. சொட்டுச் சொட்டாக யானையின் கையில் இருந்து உதிரம் ஒழுகுதல், பவழம் சொரி பைபோல் இருப்பதாகக் களவழி நாற்பது(14) கூறுதல் விளக்கமிக்க உவமையாம். உதிரல்: உதிர் + அல் = உதிரல். உதிர்ந்த பூ; உதிரிப்பூ. ஒளிர்சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு -பரிபா. 7 உதிர்வை என்பதும் இது. பல்சினை உதிர்வை -அகம். 393 இவ்வுதிர்தல் தவச மணியாம். உதிர்த்தல்: மானங்கெடல். அவள் உதுத்துப் போட்டவள் எல்லாம் உதுத்திட்டுத் திரிகிறாள் என்பவை ஒழுக்கமில்லாதவள்; மானங்கெட்டவள் என்னும் பொருளில் சொல்லப்படும் பழிப்புரை. உதிர்த்தல். என்பது பூவுதிர்த்தல், காயுதிர்த்தல் போல இருப்பதை இழந்து விட்டதை உணர்த்துவதாம். பெண்மைக்கு உரியதெனக் கருதும் பண்புகளை இல்லாமல் செய்துவிட்டவள் என்பதே உதிர்த்தவள் என்பதன் பொருளாம். ஆண்பாலுக்கும் இவ்வசை மொழியுண்டு. அவன் உதிர்த்துப் போட்டவன் என்பதும் வழக்கே. பருப்பொருள் உதிர்தலைக் குறித்த இது பண்பு இழப்பைக் குறிப்பதாக வழக்கிற்கு வந்தது. உது: உ + து = உது . உ = சுட்டு; து = சொல்லீறு. தொலைவிலும் இல்லாமல் பக்கத்திலும் இல்லாமல் சற்றே தள்ளி இருப்பது. அது இது உது எது -நாலா. 2902 உதுக்காண் என்பது சுட்டிக் கூறுதலாகும். தோழி! உதுக்காண் இருவிசும் பதிர மின்னிக் கருவி மாமழை கடல்முகந் தனவே -நற். 329 உவக்காண் என்பதும் இது. மடந்தை உவக்காண் தோன்றுவ ஓங்கி -நற். 237 பொருள்: மடந்தை ஊங்கே காணாய், விசும்பில் ஓங்கித் தோன்றுவன (உரை, ஔவை. சு.து) உதைத்தல்: கழுதை உதைத்தல் என்று கழுதை காலால் எற்றுதலை மக்கள் குறிப்பர். இரண்டு உதை போடு எல்லாம் சரியாகும் என்பர். உதைத்தல் எற்றுதல் பொருளில் வருகிறது. பழநாளில் அம்பு தைத்தல் உதைத்தல் எனப்பட்டது. பொழிகணை உதைப்ப -அகம். 24 கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி எய்போல் கிடந்தான் என் ஏறு -புறப். வெண். 174 உத்தர மந்திரி: உ + தரம் + மந்திரி = உத்தரமந்திரி = தலைமையமைச்சர்; உ = உயர்ந்த. தென்னவன் உத்தர மந்திரி ஆயின இயக்கஞ்செல்வன் ஆணத்தி ஆகவும் (வீரபண்டியன் சிவகாசிச்செப்பேடுகள்). (க. க. அ. மு. 69). * மந்திரி காண்க. உத்தரம்: உ + தரம் = உத்தரம். உகரம் உயர - மேலே - என்னும் பொருளது . வீட்டின் முகட்டில் பாவு கட்டையாக இருக்கும் பருமரம் உத்தரம் எனப்படும். தெற்கின் நிலச் சரிவையும், வடக்கின் நில உயர்வையும் பார்த்தால் வடக்கு உத்தரம் எனப்பட்டதன் பொருள் புலப்படும். உயரப் பொருள் தருவனவே முகட்டு உத்தரமும், நிலவுயர்வு காட்டும் வடக்காம் உத்தரமுமாம். * உத்தரவு காண்க. உத்தரவு: உ + தரவு = உத்தரவு. உ = உயர்வு. உயர்வான பொறுப்பில் இருப்பவர் தம் கீழே உள்ளவர் களுக்கோ நாட்டு மக்களுக்கோ இவ்வாறு இருக்க வேண்டும், இவ்வாறு செய்ய வேண்டும் என்று ஆணையிடுவது உத்தரவு எனப்படும். மேலிடத்து ஆணை என்பதாம் அது. பெருநிலக்கிழார் அல்லது குறுநில மன்னர் தம் குடி மக்களுக்கும் தொழிலர்க்கும் ஆணையிட்டுக் கூறல் அறிந்தவர் அவ்வாணை இடுவாரையே உத்தரவு என்னும் வழக்கு உண்டு. உத்தரவு இடுவார் பெயர் உத்தரவு ஆதல் ஆகுபெயராம். உத்தரவு வருகிறது; உத்தரவு போகிறது என்பர். சேற்றூர் வழக்கில் கேட்டது. உத்தி: உத்தி:1 உத்தி திரட்டல் = வரப்பை உயர்த்துதல். (வேளாண். வழ) உத்தி:2 தலை உச்சியில் அணியும் ஓர் அணிகலம். தெய்வ உத்தி என்பது அது. தெய்வ உத்தி -முருகு. 23 கவின்பெற்ற உத்தியொரு காழ் -கலி. 96 உத்தி:3 உயர் நோக்கு அல்லது நுண்நோக்கு. தொல்காப்பிய உத்திவகை. ஒத்த காட்சி உத்திவகை விரிப்பின் நுதலியது அறிதல், அதிகார முறையே, தொகுத்துக் கூறல், வகுத்து மெய்ந் நிறுத்தல், மொழிந்த பொருளோ டொன்ற அவ்வயின் மொழியா ததனை முட்டின்று முடித்தல், வாரா ததனான் வந்தது முடித்தல் வந்தது கொண்டு வாராத துணர்த்தல் முந்து மொழிந்ததன் தலைதடு மாற்றே ஒப்பக் கூறல், ஒருதலை மொழியே தன்கோள் கூறல், முறைபிற ழாமை, பிறன்உடம் பட்டது தான்உடம் படுதல், இறந்தது காத்தல் , எதிரது போற்றல் மொழிவாம் என்றல், கூறிற் றென்றல். தான்குறி யிடுதல். ஒருதலை யன்மை, முடிந்தது காட்டல், ஆணை கூறல், பல்பொருட் கேற்பின் நல்லது கோடல், மறுதலை சிதைத்துத் தன்துணிபு உரைத்தல், பிறன்கோட் கூறல், அறியாது உடம்படல், பொருள்இடை யிடுதல், எதிர்பொருள் உணர்த்தல், சொல்லின் எச்சம் சொல்லியாங்கு உணர்த்தல், தந்துபுணர்த்து உரைத்தல், ஞாபகம் கூறல், உய்த்துக்கொண்டு உணர்த்தலொடு மெய்ப்பட நாடிச் சொல்லிய அல்ல பிறஅவண் வரினும் சொல்லிய வகையால் சுருங்க நாடி மனத்தின் எண்ணி மாசறத் தெரிந்து கொண்டு இனத்திற் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்; நுனித்தகு புலவர் கூறிய நூலே -தொல். 1610 உத்திகட்டல்: இது விளையாட்டில் கலந்து கொள்பவர்களை இரு பிரிவாகப் பிரித்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் ஒத்தவராகத் தேர்ந்து கொள்ளுதல் உத்தி கட்டலாகும். உத்திக்கு உத்தி என்பது ஒப்புத் தரம் காட்டும். உழவுத் தொழிலில் உத்தி கட்டல் என்பது தண்ணீர் ஓடிப்பாய்ந்து பரவலாக நிற்பதற்குத் தக ஒப்புரவாக்கி வரப்புக் கட்டுதலாகும். இதனை உத்தி நிரட்டல் என்றும் சொல்வதுண்டு இது தென்தமிழக வழக்கு. உத்தியார் உரியார்: உத்தியார் = ஒத்த திறமுடைய உத்தியார். உரியார் = இருவருள் தேர்ந்தெடுக்கப்பட்ட உரிமையுடைய ஒருவர் உரியார். சிறார் விளையாட்டில் ஆட்டத்திற்கு ஆள் எடுக்கும் போது கேட்கும் இணைச்சொல் இது. ஒற்றைக்கு ஒற்றையை உத்திக்கு உத்தி என்பர்; ஒத்திவன் ஒத்தியாகி உத்தியானான். மணலைக் கயிறாகத் திரித்தவன் வேண்டுமா? வானத்தை வில்லாக வளைத்தவன் வேண்டுமா? என்று தலைமை ஆட்டக் காரனிடம் உத்தியாக வந்தவர் கேட்பார். அவன் எவனென்று சொல்கிறானோ அவன் தங்களுக்கு முன்னே பேசி வைத்துக் கொண்ட பெயர்ப்படி உத்தியாகப் போவான். உந்தி:1 உந்தி = கொப்பூழ் ; வட்டம் என்னும் பொருளது. நீர்ச்சுழல், தேருருள் போன்றது என்னும் உவமையால் அதன் வட்டப் பொருள் விளங்கும். புனல்சுழிபுரையும்....உந்தி” -பெருங். 2: 7: 24-27 உந்திகள் நாலுடை உந்திரத்திடை -பாரத. பதின்மூன்ற,12 மகளிர் வளையமிட்டு மேலெழும்பி யாடும் ஆட்டம் உந்தீபற என்பது திருவாசகம். பெரிது பெரிது புவனம் பெரிது புவனமோ நான்முகன் படைப்பு நான்முகனோ கரியமால் உந்தியில் வந்தோன் - ஔவை. தனிப். அவ்வாங் குந்தி அமைத்தோளாய் - அகம். 390 பொருள்: அழகிய உந்தியினையும் மூங்கில் போன்ற தோளினையும் உடையாய் * கொப்பூழ், கொப்புளம் காண்க. உந்தி:3 உந்தியைப் போல் விளங்கும் ஆற்றிடைக்குறை அல்லது அரங்கம். குரூஉப்புனல் உந்தி நிவந்துசெல் நீத்தம் - மதுரைக். 245- 256 உந்தி:4 யாழ் உறுப்புகளுள் ஒன்று. கவடுபடக் கவைஇய சென்றுவாங்கு உந்தி -மலைபடு. 34 உந்தி:5 உந்தி = பள்ளத்திடையே உயர்ந்துபடு மேடு. தொப்புள் என்பது உந்தி எனப்படுதல் பொதுவழக்கு. அதன் வடிவமைப்பு நடுமேடும் சுற்றிலும் பள்ளமும் உடையதாக இருக்கும். இதனைக் கருதிய கருத்தால் சுற்றுப் பள்ளத்திடையே உயர்ந்துபட்ட மேட்டை உந்தி என்பது ஏலக்காய், தேயிலைத் தோட்ட வழக்காக உள்ளது. உந்திக்கமலம்: தாமரை நீருள் இருந்து உந்தி - எழும்பி - மேலே மலரைக் கொண்டது போல் தாயின் வயிற்றுக் கொடிவழியே சேய்க்குரிய உணவு உயிர்ப்பு ஆயவை செல்லும் கொடி தொடர்பு உடையது ஆதலால் கொடிவழி என்னும் பெயருண்டாயது. அக்கொடிப் பிணைப்புடைய இடம் வட்டமாய்த் தாமரை இதழ் போலவும் அதன் பொகுட்டுப் போலவும் இருத்தலால் உவமையால் உந்தித் தாமரை என்றும் உந்திக் கமலம் என்றும் சொல்லப்பட்டது. கரியமால் உந்தியின் வந்தோன் நான்முகன் என்பது நீர்மேல் நிற்கும் தாமரையைக் கொண்ட புனைவு வழியதாம். உந்தி பறத்தல்: உந்து, உந்துதல், உந்து வண்டி, உந்து பந்து இன்ன வெல்லாம் இக்கால ஆட்சிச் சொற்கள். இவற்றின் மூலவைப்பு உந்தி பறத்தல் உந்தீபற என்பவற்றில் உள. பெரியாழ்வார் பாடிய உந்தி பறத்தல் பாடிப்பற என்னும் முடிவுடையது. ஆயின், உந்தி பறந்த ஒளியிழையார்கள் சொல் என வரும் பதிக இறுதிப் பாடல் உந்தி பறத்தலைத் தருவதுடன். ஒளியிழையார் உரிமையையும் தருகின்றது. கலித்தாழிசையால் அமைந்தது ஆழ்வார் பாடல். பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் வகைசெய்து நஞ்சுமிழ் நாகம் கிடந்தநற் பொய்கைபுக்(கு) அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட் டருள்செய்த அஞ்சன வண்ணனைப் பாடிப்பற - அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற இனி வேறொரு வகைக் கலித் தாழிசையால் வருகின்றது. மணிமொழியாரின் திருவுந்தியார். அதில் ஒரு பாடல்: வளைந்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புரம் உந்தீபற ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற உந்திபற ஏன் உந்தீபற என்றானது? காவிரி இசைக்காகக் காவேரி யாகவில்லையா? இவ்வுந்திப் பனுவல் உந்தி வளர்ந்ததால் சோமசுந்தர நாயகரின் சித்தாந்த உந்தியார் நூற்று மூன்று பாடல்களை உடையதாயிற்று. உந்து: உந்துதல் = முன் அல்லது மேல் தள்ளுதல். உந்தீபற - திருவா. உந்து உந்து விளையாட்டு. சிற்றுந்து, பேருந்து, மகிழ்வுந்து, கரட்டுந்து, துள்ளுந்து என்னும் ஊர்திகள், உந்தித் தள்ளு என்பது உலக வழக்கு. உந்தூழ்: உந்து = ஊழ் = உந்தூழ். உந்துதல் = உயர்ந்தெழுதல்: ஊழ்த்தல் = மலர்க்கொத்து விரிதல் இணரூழ்த்தும் (திருக். 650). மூங்கில் புல்லினம் சார்ந்தது; பண்ணை பிடித்து வருவது. நெடு நெடு என விரைந்து வளர்வது; பொதுவகையில் இவ்வாறு இருக்க மலை மூங்கிலோ பாரியதாக வளரும். அதன் வளர்த்தியும் அதன்பூவும், அதன்பயனாம் நெல்கொத்தும் அதற்கு உந்தூழ் என்னும் பெயருடைய தாக்கிற்று. உரிதுநா றவிழ்கொத்து உந்தூழ் கூவிளம் - குறிஞ். 65 ஊழுற் றலமரும் உந்தூழ் - மலைபடு. 132 உயர்தலும் (உந்துதலும்) கொத்துக் கொத்தாகவும் பூவும் நென்மணியும் கொழித்தலானும் உந்தூழ் எனப்பட்டதாம். உந்தை: உம் = தந்தை = உந்தை. உந்தை போலவே எந்தை நுந்தை என்பனவும் வரும். உம் தந்தை, எம் தந்தை என்பன பொருளாம். உப்பக்கம்: உ +பக்கம் = உப்பக்கம். இப்பக்கமும் ஆகாமல் அப்பக்கமும் ஆகாமல் இடையே நின்று மேலே எழும்பிய பக்கம் உப்பக்கம் உகரச் சுட்டு உயரமும் ஊடும் காட்டுவதாகும். ஊழையும் உப்பக்கம் காண்பர் - திருக். 610 உப்பக்கம் நோக்கி உபகேசி தோள்மணந்தான் - திருவ. மாலை உப்பங்காற்று: கடலில் இருந்து வரும் காற்று உப்பங் காற்று என்று வழங்கப்படுதல் நெல்லை வட்டார வழக்கு. உவர்த்தன்மை அமைந்ததும். நிலம் சுவர் ஆயவற்றை உவர்த்தன்மையால் உப்பி உயரச் செய்வதுமாம் அக்காற்று உப்பங்காற்று ஆயது. வயிற்றுப் பொறுமல், உப்புசம் என்பது எண்ணத் தக்கது. தென்கிழக்கு மூலையை உப்பு மூலை என்பதும் தென்தமிழக வழக்காம். உப்பங்காற்று பயிர்களை நன்கு வளரச் செய்யும் என்பர். உப்பளம்: உப்பு + அளம் = உப்பளம். உப்பு அள்ளி எடுக்கப்படும் இடம். நெய்தல் வாணர் மீனளம் கொள்ளுதல் உப்பளம் கொள்ளுதல் என்னும் இருவகைத் தொழிலாலும் மற்றைக் குறிஞ்சி முல்லை மருத வளங்களைப் பெற்றமை கால்வணிகம், சுமை வணிகமாம். அவர்கள் கல வணிகச் சிறப்பு பரதவர் என்னும் புகழைத் தந்து நாவலந் தேயத்திற்குப் பரதவர் நாடு என்னும் பெயரும் தந்தது. உப்பிலி: தஞ்சை மாவட்ட வழக்கில் உப்பிலி என்பது ஊறுகாயைக் குறித்து வழங்குகிறது. உப்பு நிறையப் போட்டு ஊற வைப்பதே வழக்கம். அதற்கு உப்பிலி (உப்பு இல்லாதது) என்பது முரணாக உள்ளது. தப்புச் செய்வாரைத் தப்பிலி என்பது போன்ற மங்கல வழக்கெனக் கொள்ளலாம். எனினும் அப்படிக் கொள்ள வேண்டியதில்லை. மோர், தயிர் உணவுக்கு வேறு எத்தொடு கறிகள் இருப்பினும் ஊறுகாய் வைத்தலே நாடறி வழக்கு. அவ்வுணவுக்கு ஒப்பில்லாத தொடுகறியாக இருப்பதால் ஒப்பிலி எனப்பட்டு, உப்பிலி யாகியிருக்க வேண்டும். ஒப்பிலியப்பனையே உப்பிலியப்பன் ஆக்கவல்லார் ஊறுகாயைத் தானா மாற்றிவிடமாட்டார்? உப்பு: கடல்நீர் காய்தலால் உப்பி மேலெழுவது உப்பு எனப் பட்டது. ஒருவர் பருத்துத் தோன்றினால் உப்பிப் போனார் என்பர். செரிக்காமல் மேலெழுதலை உப்புதல், உப்புசம் என்பர். உப்புடைய நீர் உவர் நீர்; அந்நீர் பரவுநிலம் உவர்நிலம். உப்பு மிகுதியானால், உவர்ப்பு (வெறுப்பு) ஆகிவிடும். உப்பு மிகுதி யானால் உப்புக் கடுக்கிறது என்பர். கடு = நஞ்சு; கடுப்பு = வெறுப்பு. ஆறு சுவையுள் ஒன்றாம் உப்புக்குச் சுவை என்ற பொருளும் உண்டு. கூடலில் தோன்றிய உப்பு என்பதில் (1328) இனிப்புச் சுவையாதல் காண்க. உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல் - திருக். 1302 என்பதால் அளவோடு புலவி இருக்க வேண்டும் என்பதை அளவாக இருக்க வேண்டும் உப்புக்கு ஒப்பிடுவார் வள்ளுவர். உப்பூரிகுடி கிழார் என்பார் பெயர் இறையனார் களவியலில் இடம்பெறும். உப்புப் பிசிர்ப் பெயரால் அமைந்த பிசிர்க்குடியினர் பிசிராந்தையார் நட்பின் கொள்கலமாய் நாடு கொள்ளப்பட்டவர் என்பது உலகறி செய்தி (புறநானூறு). உப்புக்குத்தி: முகவை வட்டார வழக்கில் குதிங்காலை, உப்புக் குத்தி என்னும் வழக்கம் உண்டு. உப்புதல் உயர்தல்; குந்துதல், குத்த வைத்தல் என்பவை காலை மடிக்காமல் நிறுத்தி அமரும் நிலையாகும். குத்துக்கால் என்பது கமலைக்கிணற்றின் இறைவைச் சால் வடம் தாங்கும் மரத்தூண்களாம். அதற்கு, மேற்குத்துக் கால் என்பதும் உண்டு. குத்துதல் குற்றுதலாம்; அதாவது ஊன்றுதல். குத்தி, குதி யாகத் தொகுத்தது. உப்புசம்: வயிற்றுப் பொறுமுதலை மருத்துவ வழக்கில் உப்புசம் என்பர். ஆனால், காற்றுப்பிசிறாமல் வெப்பு மிக்கு இருத்தலை உப்புசம் என்பது நெல்லை வட்டார வழக்காகும். உப்புச் சப்பு: உப்பு = உப்புச்சுவை. சப்பு = விரும்பத்தக்க மற்றைச் சுவைகள். உப்புச்சுவை இல்லாமல் இருக்கிறது என்று சுவையற்ற உணவைக் குறிப்பது வழக்கம். உப்பின் முதன்மை கருதி அதனை முன்னர்க் குறித்து, மற்றைச் சுவைகளைப் பின்னர்க் குறிப்பர். சப்பு, சாப்பிடுதலின் மூலம். சப்புக் கொட்டி உண்பது சப்பு. கண்ணமுது (பாயசம்), தேன் ஆயவை சப்புக் கொட்டிச் சுவைத்து உண்பதால் ஏற்பட்ட ஒலிவழிப் பெயர் அது. சுவையானவற்றை விரும்பியுண்ணுதல் உயிரிகளின் பொதுவியல்பு. முற்றுந்துறந்த துறவியரும் சுவைக்கு அடிமையாதல் உண்டெனின் பிறரைச் சொல்வானேன். செவிச்சுவை விரும்பாராய் அவிச்சுவை விருப்பாளரை மாக்கள் என்பார் வள்ளுவர். ஆனால் அவரும் உப்பமைந்தற்றால் புலவி என்பார். அறுசுவை என்பவை இப்பொழுது அறுசுவையாகவோ உள? எண்ண முடியுமோ? எத்தனை எத்தனை இணைப்பு - கலப்புச்சுவைகள்? உப்புதல் : உ = உயரம். உப்பு = மண்ணில் இருந்து உயர்ந்து எழுவது. உப்புதல் = உப்புப் போல் உயர்ந்து பருத்துத் தோன்றுவது. உப்பர் = உயர்பொருள் ஈட்டிய செல்வர். உப்புசம் = வயிறு உப்பிப் போய் - காற்றால் பருத்து இருத்தல்; உப்பளம் = உப்பு அள்ளும் கடல்சார் நிலம். உப்புநீர்: உப்புத் தன்மை அமைந்த அல்லது உப்புக் கரைசலாய நீர் உப்புநீர் எனப்படுதல் பொதுவழக்கு. உப்புநீர் என்பதைக் கண்ணீர் என்னும் பொருளில் வழங்குதல் தென் தமிழ்நாட்டு வழக்காகும். கண்ணீர் உப்புத்தன்மை உடைமையைக் குறிக்கும் ஆட்சிஇது. உமட்டியர்: உமணர் = உப்பு வணிகர், உமட்டியர் = உப்பு வணிகப் பெண்டிர். மகாஅர் அன்ன மந்தி.... உளரியல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற கிளர்பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும் - சிறுபாண். 56, 60-61 உமணர்: உமண் + அர் = உமணர் = உப்பு வணிகர். உமண் = குடிப்பெயர். உப்பு எடுத்தல் விற்றல் ஆகிய தொழில்களில் ஈடுபட்டவர் உமணர் எனப்பட்டனர். உவர்மண் - உப்புமண் நிலத்தவர் உமணர் எனப்பட்டார். அவர் பெண்டிர் உமட்டியர் எனப்பட்டனர். ஈத்திலைக் குப்பை ஏறி உமணர் உப்பொய் ஒழுகை எண்ணுப மாதோ - புறம். 116 பல்லெருத் துமணர் பதிபோகு நெடுநெறி - பெரும்.65 உமண்: உ(ப்பிய) மண் > உமண் > உமணர், உப்புதல் = மேலெழும்பு தல். உப்பு எடுத்தல், விற்றல் ஆகிய தொழில் செய்வார் உமணர். தெண்கழி விளைந்த வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றிய கொடுநுக ஒழுகை உரனுடைச் சுவல பகடுபல பரப்பி உமண்உயிர்த் திறந்த ஒழிகல் அடுப்பு - அகம்.159 மரங்கோள் உமண்மகன் பெயரும் பருதிப் புன்தலை சிதைத்த வன்தலை நடுகல் - அகம். 343 உமர்: உம் + அர் = உமர் = உம்மவர்; எமர், எம்மவர் போல. எங்ஙனம் தேறுவர் உமர் - நாலா. 3673 உமல்: உமல்:1 மீனவர் தம் மீன் கூடையை உமல் என்பது வழக்கம். மற்றைக் கூடைகளிலும் மீன் அள்ளி வரும் கூடை - வலையில் இருந்து மீனைக் கொட்டும் வகையில் அகலமும் உயரமும் உடையதாக இருப்பதால் உமல் எனப்பட்டதாம். ஓங்கியும் ஏங்கியும் ஒலியெழுப்பி அழும் அழுகை ஓமலிப்பு என்பது தென் தமிழக வழக்கு. உமல்:2 அட்டளை, நிலைப்பேழை என்பவை பொருள் வைப்பிடப் பெயர்கள். புத்தகங்கள் வைக்கவும் பயன்படுகின்றன. அட்டளை சுவரில் தட்டுத் தட்டாக அமைக்கப் பட்டவை. நிலைப்பேழை என்பது பீரோ என்பதன் பொருட்சொல். ஈழத்தில் புத்தகம் வைக்கும் இடம் உமல் என வழங்குகின்றது. உம் என்பது உயரப் பொருளது. அல் சொல்லீறு. உமல், உயரமான இடப்பொருள் தரும் சொல்லாட்சி உ =உயரம். உ + தரம் = உத்தரம்; உயரமானது; உயர்ந்த தரமானது. உமி: உம் + இ = உமி. உம் = மேல். அரிசியின் மேலாக ஒட்டிக் கொண்டு இருப்பது - காப்பரண் போல இருப்பது - உமியாகும். உமி இல்லையானால் முளைப்பது இல்லை. பண்டு முளைப்ப தரிசியே யானாலும் விண்டுமி போனால் முளையாதாம் - ஔவை. உமை: உம் + அம்மை = உம்மம்மை > உம்மை > உமை. உம் = உயர்வு; உம்பர் = உயர்நிலையர். உயர்ந்த அம்மையாம். இறைவி. ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே - அகம். கடவுள் உமையொடு புணர்ந்த காம வதுவை - பரி.5 உம்பர்: உம்பர்:1 உம்பர் = உப்பால். உ = உயர்வு. பால் = பக்கம். அப்பால் இப்பால் என்பது போல் உப்பால் என்பதும் உண்டு. அப்பாலுக்கும். இப்பாலுக்கும் இடைப்பட்டதாய், தொலைவினதாய், உயரமானதாய் இருப்பவை உப்பால் எனப்பட்டன. உம்பர் என்பதும் அது. இப்பால் இமயத்து இருந்திய வாள்வேங்கை உப்பாலைப் பொற்கோட் டுழையதா எப்பாலும் - சிலப்.1:65-66. பனிபடு சோலை வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் -அகம்.211 உம்பர்:2 உம்பர் = தொலைவான இடம். முன்னாள் உம்பர்க்கழிந்த என்மகள் - நற். 198 உம்பர்:3 உம்பர் = மேலே. கல்பிறங்கு மாமலை உம்பரஃது எனவே - நற்.62 உம்பர்:4 வானவர். அகில்கெழு கமழ்புகை வாய்வாய் மீபோய் உம்பர் இமைபு இறப்ப - பரிபா.17 இறப்ப = நீங்க. உம்பல்: உப்புதல் - உயர்தல். உப்புதல் > உப்பல் > உம்பல் > உயர்ந்த யானை. உயரத்தாலும் பருமையாலும் யானை உம்பல் எனப்பட்டதாம். உம்பல் அகைத்த ஒண்முறி யாவும் - மலைபடு. 429 யா - ஒருவகை மரம்; யாவின் பட்டை யானை விரும்பி உண்பது. உம்பளிக்கை: கொடை வகைகளுள் ஒன்று. உண்பு அளிக்கை உம்பளிக்கை ஆயிற்று. உணவு உடை உறைவு ஆகியவற்றுக்காக உதவிய நிலபுலம் பொருட்கொடை உம்பளிக்கையாம். முதியோரைப் பேணற்கு வைத்த வைப்புப் பொருள் இது. உம்பளிக்கை பெற்றார் காலத்தின் பின்னர் அவர் மக்களுக்குச் சேர்வது நாட்டு வழக்காகும். உம்பற் காடு: உம்பலால் புகழ் பெற்ற காடு, உம்பற்காடு. குமட்டூர் கண்ணனார் உம்பற் காட்டு ஊர்களை இறையிலியாகப் பெற்றார். பரணர் உம்பற்காட்டு வருவாயைப் பெற்றார் என்பவை பதிற்றுப்பத்து தரும் செய்திகள். (பதிற். பத்.2:5) உம்பல் காடு - யானை மிக்க காடு. உம்பர் - உயர்ந்தவர், மேலோர். இன்றைய ஆனை மலை... உம்மா: உம்மா:1 குமரி வட்டாரத்தில் அம்மா என்பது உம்மா எனப்படு கிறது. உன் அம்மா என்பது உ(ன் அ)ம்மா ஆயிற்று. என்தாய் என்பது யாய் என்றும், நின் தாய் என்பது ஞாய் என்றும் வழங்கப்பட்ட பண்டையோர் வழக்கை எண்ணலாம். என் அம்மா என்பதை எம்மா, எம்மோ என்பது நெல்லை, முகவை வழக்கே. எம்மோய் என்பது கம்பர் சொல். உம்மா:2 உம்மா = முத்தம். இது சென்னை வழக்கு. உன் அம்மாவுக்கு ஒன்று கொடு என்பது உம்மா ஆகியிருக்கலாம். உம்மை: உம் + ஐ = உம்மை; ஐ = தாய், உம் தாய், உம்மை, நும்மை என்பனவும் எம்தாய், உம்தாய் என்னும் பொருள்களிலே வரும். உம்மோய் என்பதுவும் அது. உம் தாய் என்பதாம். உயக்கம்: உயா > உயங்கு > உயக்கம். உய்தற்கு அரிய வறுமையும் வாட்டமும் உயக்கமாம். உயாவே உயங்கல் -தொல். 852 இலம்பாடு அகற்றல் யாவது புலம்பொடு தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம்? -புறம்.381 பொருள்: வறுமையை போக்குவது கூடாதாம், ஆதரவற்ற தனிமைத் துயருடனே வள்ளியோரைச் சூழ்ந்து திரியும் வருத்தத்தையும் யாம் போக்குவோம் (உரை, ஔவை.) உயவல் பெண்டு: உயவு அல் பெண்டு > உயவல் பெண்டு. துன்பம் அகன்று எப்படியும் வாழ வேண்டும் என்னும் எண்ணம் உடைய பெண். ஒ.நோ.: உய்வு > உயவு; கவ்வு > கவவு. கவவுக்கை நெகிழாமல் - சிலப். 1 : 61 உயவல் பெண்டிரேம் அல்லேம்.... நள்ளிரும் பொய்கையும் தீயும் ஓரற்றே - புறம். 247 பொருள்: உயவல் பெண்டு = கைம்மை நோன்பால் வருந்தும் பெண்டிருள்ளேம் அல்லேம்யாம். நீர் செறிந்த பெரிய பொய்கையும் தீயும் ஒருதன்மைத்து (பழைய உரை) உயவுத்துணை: உயவுத்துணை > உயாத்துணை > உசாத்துணை, துயரொழிந்து உய்வதற்கு அமைந்த துணை உயவுத்துணை நள்ளென் யாமத் துயவுத் துணையாக - அகம். 103 கங்குல் உயவுத்துணை யாகிய துஞ்சா துறைவி - அகம். 298 * உசாத்துணை காண்க. உயவுநெய்: வண்டியின் அச்சில் போடப்படும் பசை எண்ணெய் உயவுநெய் எனப்படும். வண்டி சிக்காமல் கீச்சிடாமல் செல்லப் போடப்படுவது இது. உயவு > உய்வு = பாதுகாப்பு. வண்டி மை என்றும், மசகு என்றும் சொல்லப்படும். வைக்கோல் துணி ஆகியவற்றைக் கருக்கி எண்ணெய் விட்டுக் கலக்கி மசைநெய் அல்லது மசகாக உழவர் பயன்படுத்துவர். அஃதால் உயவுநெய் உட்குளிக்குமாறு - பழமொழி. 385 உயிரின மாலை (உயிர் வருக்க மாலை): அகர முதல் அஃகேனம் ஈறாக அமைந்துள்ள பதின்மூன்று எழுத்துகளுக்கும் ஒவ்வொரு பாடலாக அமைந்த சிறு நூல் உயிர்வருக்க மாலையாகும். இவ்வகையில் எழுந்த ஒரு நூல் மதுரை மீனாட்சி யம்மை உயிர் வருக்க மாலை என்பதாம். வருக்கக் கோவை, வருக்க மாலை என்பவற்றில் வரும் எழுத்துகளில் உயிர் வருக்கத்தை மட்டும் வாங்கிக் கொண்டு அமைவதால் உயிர் வருக்கமாலை என்னும் பெயர் பெற்றது. மீனாட்சி யம்மை உயிர்வருக்க மாலையின் ஒவ்வொரு பாடல் முடிவும், வருமடியர் குறைதீர வரமருளும் அதிகார மதுரை மீனாட்சி யுமையே என முடிகின்றது. பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய வகையான் அமைந்தது இந்நூல். உயிருடம்படுவி: உயிர் + உடம்பு = அடுவி = உயிர் உடம்படுவி = மனைவி. உவர்நீங்கு கற்பின்எம் உயிர்உடம்பு அடுவி -அகம். 136 தூய கற்பினை யுடைய என் உயிர்க்கு உடம்பாக அடுத்தவள் (வாய்ந்தவள்). உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன மடந்தையொ டெம்மிடை நட்பு - திருக். 1122 உயிர்: உயிர்:1 உய் + இர் = உயிர். உய்ப்பதும் உய்விப்பதுமாம் வாழ்முதல். இயக்குவது, செலுத்துவது; ஆன்மா. உயிர்:2 உயிர் போல உய்ப்பதும் உய்விப்பதுமாம் எழுத்து. எழுத்துகளின் வகையுள் (உயிர். ஆய்தம், மெய், உயிர்மெய்) முதல்வகை. உயிர் எழுத்து, ஆவி எழுத்து எனவும் படும். மெய்யை இயக்கும் எழுத்து; உயிர்மெய் = உயிரொடு கூடிய மெய். ஆய்தம்= தனிநிலை. உயிர்:3 உயிர் போன்றது என்மகன் என்கண் என்உயிர் - கம்.அயோ.கைகே.36 தமிழை என்உயிர் என்பேன் - பாவேந்தர் உயிர்க்காரர்: உயிர்போன்ற நட்பினரை உயிர்க்காரர் என்பது குமரிமாவட்ட அகத்தீசுவர வட்டார வழக்காகும். உயிர் பகுத்தன்ன (உயிரைப் பகுத்து வைத்தாற்போன்ற) ஈருடல் ஓருயிர், இருதலை ஒருபுறா, கவை மகவு என்பனவெல்லாம் உயிரொன்றிய காதலையும் நட்பையும் குறிப்பனவாம். உயிர்மெய்: உயிர்போல் தனித்து இயங்குவதும் இயக்குவதாம் எழுத்து உயிர் எழுத்து. உடல்போல் அமைந்து உயிரால் இயக்கப்படு வதாம் எழுத்து மெய் எழுத்து. உயிரும் மெய்யும் கூடிய எழுத்து உயிர்மெய்யெழுத்து. இப்பெயரீடுகள் மெய்யியல் மேம்பாட்டுக் குறியீடுகள். எழுத்தின் பெயரை அறிவிக்கும் வகையாலேயே மேம்பட்ட மெய்யியலை அறிந்து கொள்ளச் செய்யும் உயரிய உத்தியினதாம். உய்தம்: உய்தற்கு ஆகும் பண்பு உய்தம் ஆகும் . உய்தம் என்பது அன்பு, நட்பு என்னும் பொருளில் நெல்லை வட்டார வழக்கில் உள்ளது. உன் உய்தக்காரன் உன்னைத் தேடி வந்தான்; அவனுக்கு அவன் உய்தக்காரன் என்பர். உராய்வு இல்லாமல், செல்ல வண்டி அச்சில் தடவும் நெய்க்கு - உயவு நெய் என்பது பெயர். உயவு > உய்வு > உய்தம் ஆயது. உயவு நெய் பசை மசை எனவும் வழங்குதல் உண்டு. பசை என்பது ஒட்டும் தன்மையது ஆதலால் நட்புக்கும் கொள்ளப்படும். அது பொருள் கருதிச் சேரும் நட்புக்கும் ஆயிற்று. உய்த்தல்: உய்த்தல்:1 உய்வு > உய்த்தல். கேடின்றிச் செலுத்துதல், இயக்குதல், காவற்சாகாடு, உய்த்தல் தேற்றான் ஆயின் பகைக்கூழ் அல்லல் பட்டு மிகப்பல். உய்த்தல்:2 சேர்த்தல். உய்த்தீட்டும் தேனீக் கரி - நாலடி.10 உய்த்தல்:3 கன்றைத் தாயின் இடத்தில் செலுத்திப் பாலுண்ணச் செய்தல் உய்த்தலாகும். உய்த்தல் செலுத்துதல் பொருளில் வருதல். காதல காதல் அறியாமை உய்க்கிற்கின் என வரும் திருக்குறளால் (440) விளங்கும். இனிப் புலிப்பால் பட்ட ஆமான் குழவிக்குச் சினங்கழி மூதா பாலூட்டுதல் போல்வனவும் உய்த்தலாம் (புறம் 323) உய்யக்கொண்டான்: பழஞ்சோறு எனப் பொதுமக்கள் வழங்குவதை மாலியர் (வைணவர்) உய்யக் கொண்டான் என்பார். உயிர் உய்ந்து இருப்பதற்காக உண்ணப்படும் சோற்றை உய்யக் கொண்டான் என்றனர் அப்பெயரால் திருச்சி மாநகரை ஒட்டி ஓடும் கால்வாய் ஒன்று உண்டு. உரக்குண்டு: குண்டு என்பது உருண்டை என்னும் பொருளை அன்றி ஆழம் என்னும் பொருள் தருவது. பள்ளமாக அமைந்த வயல் வளமுடைய ஊர், குண்டு எனவும் வழங்கும். எ-டு: வெற்றிலைக்குண்டு (வத்தலக்குண்டு). கூத்தியார் குண்டு (நட்டுவாங்கம் பிடித்தார்க்கு வழங்கப்பட்ட ஊர்). தழை இலை மட்கி உரமாவதற்காக இட்டு வைக்கும் இடம் குழியாக இருப்பதால், அதனைக் குண்டு என்னும் ஆட்சி உண்டாகி, உரக்குழியை உரக்குண்டு என வழங்குதல் குமரி மாவட்ட வழக்கில் உள்ளது. உரட்டான்கை: உரன் = வலிமை; உரம் இல்லாதது, உரட்டான்; வலக் கையினும் இடக்கை வலிமையைப் பழகாமையால் வலிமை குறைந்ததாக உள்ளது அல்லது ஆக்கப்பட்டது. இடக்கைப் பழக்கம் உடையார்க்கு அக்கை வலிமை வலக்கையினும் மிக்கதாக இருத்தல் அறியத்தக்கது. உரட்டான்கை என்பது இடக்கையைக் குறித்தல் கருவூர் வட்டார வழக்கமாகும். சென்னைப் பகுதியிலும் அவ்வழக் குண்டாம். அது சென்றடைந்ததாகலாம். ஆ என்பது எதிர்மறை இடைநிலை. உரம்: உரம்:1 ஓரறிவு உயிரிகள் வளமாக வளர்வதற்குப் போடப்படும் எரு, குப்பை, வண்டல் முதலியவை உரமாகும். பயிர்க்கு இயற்கை உரம் செயற்கை உரம் என உரம் போடுதல் நாம் அறிந்தது. உரம் என்பது என்ன? ஊட்டம்! அந்த ஊட்டம் - ஊற்றம் ஆகிப் பயிரை வளர்க்கிறது. விளைவு தரச் செய்கிறது. உரம் போடாமல் பயிர் நலிந்து கிடக்கிறது என்பது மக்கள் வழக்கு. ஏரினும் நன்றால் எருவிடுதல் - திருக். 1038 உரம்:2 வலிமை, ஊக்கம், மாந்தர் இயல் செயல்களுக்கு மன வலிமையே அடிப்படை ஆக்கம் ஆதலால் அவை உரம் எனப்பட்டன. உண்டவன் உரம் செய்வான் என்பது பழமொழி. உரன் அகத்துண்டாயின் - கலி.121 உரனென்னும் தோட்டியான் - திருக். 24 உரம்ஒருவர்க்கு உள்ள வெறுக்கை - திருக்.600 உரம்:3 அறிவு. வாழ்வின் வெற்றிக்கு மூலம் அறிவு ஆதலாலும் அதுவே எல்லாச் செல்வங்களையும் ஈட்டித் தருவது ஆதலாலும் அறிவு என்னும் பொருள் தந்தது. உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து - திருக். 24 உரம்:4 குடல். தவழும் அல்லது புரளும் குழந்தைகளின் குடலில் உண்டாம் ஏற்றமாற்றம் உரம் எனப்படும். அதனைக் குழந்தைக்கு உரம் பாய்ந்துள்ளது (அல்லது உரம் போட்டுள்ளது) குடலைத் தட்ட வேண்டும் என மருத்துவச்சியிடம் கொண்டு செல்வதும், அவர் விளக்கெண்ணெய் தடவிக் குடல் நீவலும் சிற்றூர் வழக்கம். குடல் தட்டுதல் என்பதும் அது. உரம்:5 உரம் = மார்பு. நிறையுயிர் முயற்சியின் உள்வளி துரப்ப எழுமணுத் திரள்உரம் கண்டம் உச்சி - நன்.74 உரம்:6 மதில். வலிமையாக இருக்க வேண்டும் ஆதலால் அதனையும் உரம் என வழங்குவதை அகராதி காட்டுகிறது. உரன் என்பதும் இது. உரல்: பழநாளில் உருளைக் கல்களைக் குடைந்து இடிவாய் அமைத்துப் பயன்படுத்தியதால் உருள் > உரள் > உரல் ஆயிற்று. இந்நாளினும் சிற்றூர்களில் உலக்கை போட்டு இடிக்கும் கல்லுரல் உருளை வடிவில் இருப்பதும். அதனை வேண்டு மிடங் களுக்கு உருட்டிச் சென்று நிலைப்படுத்துவதும் காணலாம். அறையுரல் என்பது குறிஞ்சி வாணர் பழநாளில் பயன் படுத்தியது. அது பாறையில் செய்யப்பட்ட உரலாகும். (கலித். 41,43). அறையுரல் நிறைய ஐவனப் பாசவல் - பெருங் 2:14:50 சித்த மருத்துவர் மருந்தாக்க உரல் கலவம் ஆகும். * கலவம் காண்க. உரவி: உரம் என்பது வலிமை. உரவி என்பது வலிமையுடையது. இடைவெளி மிகப்படப் பாய்ந்து செல்லும் பாய்ச்சையை (பாச்சையை) உரவி என்பது திருவில்லிப்புத்தூர் வட்டார வழக்காகும். உரம், உரன் என்பவற்றின் வழிவந்த பெயரீடு இது. உரவு: உரம் = வலிமைப் பொருளது ஆதலால் அதன் வழிவந்த உரவு என்பதும் அப்பொருள் தந்தது. வலிமையொடு பெருக்கப் பொருளும் இணைந்தது அது. வள்ள நீரும் வெள்ள நீரும் வேறுபடும் அல்லவோ! ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால் - நாலடி.175 உரன்: உரன் என்பது வலிமை என்னும் பொருள் தரும் சொல்; அறிவு என்பதும் உரன் என்பதன் பொருளாகும். வெறும் வலிமையோ, வெறும் அறிவோ பயன் செய்வன இல்லை. இரண்டும் கூடியமையே முழு வாழ்வாகச் சிறக்கும். பொதுவகையில் உள்ளதாம் வலிமை. அறிவு ஆயவை மிகுமாயின் அதனை உரன் என்றும் உரம் என்றும் குறித்தனர். மிகுந்த ஆற்றலும் மிகுந்த அறிவும் சுட்டிய உரன் பொதுமையில் அறிவு, ஆற்றல்களைக் குறிப்பதாயிற்று. வாழ்க்கைக்கு வலிமையும் வேண்டும்; அறிவும் வேண்டும். அறிவிலா வலிமை முரட்டுத்தனமாகும். வலிமையிலா அறிவு கோழைத்தனத்தை ஆக்கும். இரண்டும் ஒருங்கே அமைந்த ஒருவன் உரவன்; உரந்தன். அவன் ஆட்சி புரிந்த பகுதி உரத்த நாடு: ஒரத்தநாடு என ஒலி திரிதல் உலகியற்பட்ட மொழியியல். உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் -திருக். 24 என்னும் இடத்தில் அறிவு என்னும் பொருளும். உரமொருவற்கு உள்ள வெறுக்கை - திருக். 600 என்னும் இடத்தில் வலிமை என்னும் பொருளும் உரன் என்பதற்கு உள்ளமை தெளிவிக்கும். உரி: உரி:1 மரம் பட்டையை உரிக்கிறது. பாம்பு சட்டையை உரிக்கிறது. நாம் பழங்களையும் கடலை முதலியவற்றையும் உரிக்கிறோம்; புலவுக் கடையார் ஆடு மாடுகளின் தோலை உரிக்கிறார். புலித்தோலாம் உரியும் மான்தோலாம் உரியும் துறவர் உடையாதல் மட்டுமன்றி, இறைவர் உடையும் ஆயமை தொன்மச் செய்தி. புலித்தோலை அரைக்கசைத்து, மான்தோல் பள்ளி என்பவை இலக்கிய ஆட்சிகள். கரியுரி போர்த்த கண்ணுதல் திருவிளையாடல் செய்தி. உரியாவது தோல்; மெய் என்பது அது. தொட்டறிவு அல்லது உற்றறிவு உடையது தோல். உரியே உரிமை வேராம். உரிவை என்பதும் இது. வாரணத் துரிவையான் - கம்ப. பால. 1343 உரி:2 உரி என்பது பெயர் வினை இடை உரி என்னும் சொல்வகையுள் நான்காவதாம். சொல் என்னும் உரிமையைத் தன்னிடத்து அடிச் சொல்லாகக் கொண்டது எச்சொல்லோ அச்சொல் உரிச்சொல்லாம். ஒவ்வோர் உரிச்சொல்லும் பலப்பல சொற்கள் உருவாக்கமுற அடிமணையாக இருப்பதை ஆய்ந்து காண்க. கூர் என்பதோர் உரிச்சொல். மிகுதிப் பொருள் தருவது. கூர் என்பதன் அடியாகக் கூர்தல், கூர்ப்பு, கூர்மை, கூரம், கூரல், கூரன், கூரியது, கூரியம், கூருதல், கூரை, கூர்ச்சு, கூர்ப்பம், கூர்மம் முதலிய சொற்கள் உருவாயமை காண்க. உரி:3 பழைய முகத்தலளவைகளுள் ஒன்று உரி என்பது. அஃது அரைப்படி என்னும் அளவினது. ஒருவேளையில் ஒருவர் உண்ணும் உணவுக்குரிய தவச அளவு உரி என அமைந்திருக்கக் கூடலாம். உரி:4 கடலையை உரி; பலாப்பழத்தை உரி என்பது போல் ஏவல். உரிச்சொல்: நால்வகைச் சொற்களுள் ஒன்று. இசை குறிப்பு பண்பு ஆயவற்றுக்கு உரிமை பூண்ட செய்யுட் சொல் (தொல். 782). மக்கள் வழக்கில் பயில வாராமையால் ஆசிரியர் தொல்காப்பியர் இன்ன உரிச்சொல் இன்ன பொருளில் வரும் என விளக்கிக் கூறினார். பிற சொற்களுக்கு அவ்வாறு பொருள் கூறினார் அல்லர். உரிச்சொற்களுள் எல்லாமும் அடிச்சொற்களாகக் காட்டப் பட்டில. அலமரல் தெருமரல் கூர்ப்பு வார்தல் என்பன தொழிற்பெயர்கள். குரு மல்லல் மழவு முதலியன பெயர்ச் சொற்கள் எனப் பலவாறு விரித்து உரிச்சொல் என்பது செய்யுட் சொல்லே என்றும் அதற்குப் பிறவாறு கூறல் எல்லாம் போலி என்றும் தெரிந்து கொள்க (தேவ. 2:264) * உரி:2 காண்க. உரிஞ்சல்: உராய்தல் என்பது உரிஞ்சுதல் எனப்படும். மதிலை நெருங்கி உரிஞ்சுதலால் கதிரோன் சிவப்புற்றான் என்பது மனோன்மணீய உயர்வு நவிற்சி. செறிவுடைய செடி கொடி மரம் நிறைந்த காட்டில் சென்றால் அவை உரிஞ்சுதலும் குருதி வடியச் செய்தலும் அறியலாம். புதர்க்காட்டை உரிஞ்சல் என வழங்குதல் காரைக்குடி வட்டார வழக்காகும். உரிது: உரியது > உரிது. உரியதாம் பொழுது. வாய்ப்புள்ள பொழுது. உரிதினில் காவல் மன்னர் கடைமுகத் துகுக்கும் போகுபலி வெண்சோறு போலத் தூவவும் வல்லன் - புறம். 331 உரிது நாறி: உரிது நாறி = தனக்கு உரித்தாக நாறுவது (மணப்பது). உரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ் - குறிஞ். 65. நச். உரித்தல்: வைதல். தோலை உரித்தல் என்பது வழக்கு. அதனால் தோலுக்கு உரி என்றும் உரிவை என்றும் பெயருண்டு. இவ்வுரித்தல் உடையை உரித்தல் என்பதிலும் இவற்றைக் கடந்தது மானத்தை உரித்தல் என்பது. மானம் ஒரு மூடு திரை. அதனைக் கிழிப்பது, அகற்றுவது போல உரித்தல் வழக்கு வந்தது. இன்னும் மூக்கை உரித்தல் என்பதும் வழக்கு. மூக்கை உரித்தல் நாற வைத்தல் என்னும் பொருளது. இது வசைமொழி யாதல் அறிக. நாறினவன் (ள்) என்பது வசைப்பட்டம். உரித்துக்காட்டல்: வெளிப்படப் பேசல். ஏனையா மூடிமூடிப் பேசுகிறாய்? உரித்துக்காட்ட வேண்டியதுதானே! மானம் இருப்பவனுக்கு அல்லவா மறைத்துப் பேச வேண்டும். இவனை உரித்துக் காட்டினால்தான் தைக்கும் என்பது வெளிப்படுத்தும் வேட்கையுரை. தோலை உரிப்பு போல உரித்துக் காட்டல்; உடையை உரிப்பது போல உரித்துக் காட்டல் என்பவை வெட்ட வெளியாகச் சொல்லல் என்பதாம். உரிப்பொருள்: மாந்தப் பிறவிக்குப் பிறப்பொடு வந்து முடிவுகாறும் இருக்கும் உணர்வுப் பொருள் உரிப்பொருளாம். உரிப்பொருள் தந்த உரிப்பொருளே உயிரிகளாம். அவ்வுயிரிகளுள் ஆறறிவுயிரியாம் மாந்தரே மன அறிவினர். ஆதலால், அவர்கள் பெற்ற மொழியறிவால் அவ்வுணர்வுகளைப் பதிவாவணம் ஆக்கியுளர். அகத்தே கொள்ள வேண்டியதாம் பொருளைப் புறப்பொருள் போல் புலப்படுத்த நம் முந்தையர் ஒரு வழி கண்டனர். அவ்வழி ஒப்பற்ற வழியாம். இன்னார் என்னும் பெயரும், இன்ன ஊரார் என்னும் இடமும் இன்றி உணர்வுகளை மட்டும் பொதுவகையால் பதிவு செய்வதே அவ்வழியாம். உரிப்பொருள்கள் ஐந்தனையும் அவற்றின் முன்பின் சார்புகளையும் வகுத்துளர். அவை, புணர்தல் புணர்தல் நிமித்தம்; பிரிதல் பிரிதல் நிமித்தம்; இருத்தல் இருத்தல் நிமித்தம்; இரங்கல் இரங்கல் நிமித்தம்; ஊடல் ஊடல் நிமித்தம் என்பவை. இவ்வுரிப் பொருள்கள் ஐந்தற்கும் ஐந்தைந்து அதிகாரங்களாய்க் காமத்துப் பாலை 25 அதிகாரங்களில் வகுத்துக் காட்டிய அருமை வள்ளுவனார்க்கு உண்டு. காமத்துப் பால் அதிகாரங்களைக் காண்க. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனப்படும் அகத்துப் பொருளாம் இம்முப்பொருள்களுள் முதற் பொருளினும் கருப்பொருளும், கருப்பொருளினும் உரிப் பொருளும் சிறந்தவை என்பதும், உரிப்பொருள் இடம்பெறா அகப்பாடல், அகப்பாடல் அன்று என்பதும் தொல்லாசான் துணிவாம். முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே நுவலுங் காலை முறைசிறந் தனவே - தொல். 949 உரிமட்டை: உரிமட்டை என்பது தேங்காய் நெற்றை உரித்து எடுத்த மட்டை ஆகும். அம்மட்டையை உரிக்கும் கருவிக்குக் குத்துத்தரம் என்றும், உரி என்றும் பெயர். உரிமட்டை கயிறு ஆக்குவதற்கு வேண்டும் நார் எடுக்க உதவும். அதன் கழிவு முன்னை பயனற்றதென எண்ணப்பட்டது. இதுகால் அதுவும் பயனாம் எனக் காண்கின்றனர். உரிமட்டையை அடுப்புக்குப் பயன் கொள்வார் உளர். அதனைக் கயிறாக்கலே நலப்பாடாகும். எத்தகு பொருளின் மதிப்பும் அதன் பயன்படுத்தத்தால் சிறப்புறல் கண்கூடு. உரிமம்: உரிமை + அம் + உரிமம். ஒரு கடை நடத்துவதற்கு ஒரு வண்டி யியக்குவதற்கு அரசிடம் ஒப்புகை பெறுதல் வேண்டும். ஒரு பள்ளி முதல் நிறுவனம் தொடங்குவதாயினும் தொழிலகம் தொடங்கு வதாயினும் அரசுப் பதிவு பெறல் வேண்டும். இவற்றைப் பெறும் சான்று உரிமம் ஆகும். இது பழவழிப்பட்ட புத்தாக்கச் சொல்லேயாம். முன்னை ஆயப்பதிவு முறை, வரிமுறை வழிவந்தது இது. மேலும் ஊருக்கு உழைக்கும் தொழிலாளர்க்கு ஆண்டுக்கு வீடுதோறும் இவ்வளவு தவசம், பணம் தரல் கடமை என்னும் முறை நாட்டு நடவடிக்கையில் இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை இருந்தது. உரிமச்சட்டம் போற்றப்படவில்லை எனின், அரசுக்கு உரிமத்தைப் பறித்துக் கொள்ளவும் உரிமம் உண்டு என்பது நடைமுறைச் செய்தி. உரிமை: உரிமை:1 உரியதாம் தன்மை. ஒருவர்க்கு உரியதாக அமைந்தது எதுவோ அது உரிமை ஆகும். பிறப்பொடு வந்த உரிமையும் தம் முயற்சி வகையால் வந்த உடைமை உரிமையும் பொறுப்பு வகையால் வந்த உரிமையும் என உரிமை பல வகைப்படும். அருங்கறை அறைஇசை வயிரியார் உரிமை ஒருங்கமர் ஆயமோடு ஏத்தினர் தொழவே - பரி.10 பொருள்: குற்றமின்றி இசைக்கின்ற இசைக்குரிமை யுடையவராகிய பாணரும் கூத்தரும் மேவிய கூட்டத்தோடு ஒருங்கு ஏத்தித் தொழ (பழைய உரை). உரி என்பது தோல்; உரிவை என்பதும் அது தோல் கழன்ற வித்து முளைத்தல் இல்லை. அவ்வாறே உரிமை இழந்தார்க்கு உடைமை - பதவி - ஆயவை தாமே அகன்று போம். ஒவ்வொரு பிறவிக்கும் கடமை உண்டு; அவ்வாறே உரிமையும் உண்டு. இரண்டும் காசின் இருபக்கங்கள் அனையவை. அகங்கையும் புறங்கையும் போன்றவை எனினும் ஆம். உள்ளது உரியது என்பது இணைச்சொல். மரபு வழியால் வந்த சொத்து உரியது. உரிமை:2 மண உரிமை. உரிமை செப்பினர் நமரே -குறுந். 351 பொருள்: நம் சுற்றத்தார் நீ உரியையாம் தன்மையை உடம்பட்டுக் கூறினர் (பெருமழை) உரிமை:3 விடுதலை. நாமிருக்கும் நாடு நமதென்ப தறிந்தோம் - அது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் பூமியில் எவருக்கும் அடிமை செய்யோம் -பாரதியார் உரிவை: உரித்தெடுக்கப்பட்ட தோல்; தோலாடை; மரவுரியாம் ஆடை. மானின், உரிவை தைஇய ஊன்கெடு மார்பின் என்பெழுந் தியங்கும் யாக்கையர் - திருமுரு. 128-130 இது மான் உரியாம். அம்புகொண் டறுத்த ஆர்நார் உரிவை - அகம். 269 இது மரவுரியாம். அரவின் அவ்வரி உரிவை - அகம். 327 இது பாம்புரியாம். உரு: உரு > உருவு = உருவம். ஒன்றில் இருந்து ஒன்று உருவிக் கொண்டும் உருக்கொண்டும் வெளிப்பட்டது உருவாகும். தோற்றப் பொலிவு, கண்ட அளவில் கண்டார் உளம் கவர்ந்து வயப்படச் செய்யும் வலியது. கவர்ச்சி என்பது ஆர்வத்தால் நெருங்கவும் அள்ளூறிக் கொள்ளவும் ஏவுவது ஆகலின் தோற்றம் உடையவர் ஏற்றம் மிக்கவரே. அத்தோற்றம் காண்பார் கருத்தைக் கவர்தலால் வியப்புப் பொருளாயிற்று. அதனால், உரு உட்காகும் - தொல். 785 உட்குடையாள் ஊர்நாண் இயல்பினாள் -நாலடி . 384 உருவாய் அருவாய் -கந்தரநுபூதி . 51 உருக்கம்: உள்ளம், உடற்பொறிகள் எல்லாமும் உள்வாங்கும் இயல்புடையவை. முன்னிற்பார் முகம் கண்டு நம்முகம் மகிழும் கவலும். முகத்துக்கு முகம் கண்ணாடி ஆதலால் வருந்தத் தக்க நிலை ஒன்றைக் கண்ணால் காணுங்கால் தாமே அதனை அடைந்ததாகி உள்ளம் நெய்யாக உருகுதல் அன்பாளர், அருளாளர், நல்லறிவாளர், அந்தண்மையர் இயல்பாம். அவர்கள் காட்டும் உயிர்நேயம் நெய்யுருக்குப் போன்றது ஆதலால், அனல்பட்ட அளவில் உருகும் நெய்போன்ற தாதலால் உருக்கம் எனப்பட்டது. உருக்கு: உருகி வழியும் இரும்புநீர், கட்டியாய் உறைய அதனைத் தட்டிச் செறிவாக்கிக் கம்பியாகவும் தகடாகவும் வார்ப்படம் செய்தல் உருக்கு எனப்படும். வலுமிக்கது அஃது ஆயினும், அதன் உருகு நிலையால் - உருக்கப்பட்டு எடுத்தலால் - உருக்கு எனப்பட்டது. உருக்காலைகளின் பெருக்கம் உலகாளுகின்ற காலம் இது என்பது வெளிப்படை. உருங்குதல்: அச்சுறுத்தி அடித்துத் தின்னுதல் உருங்குதல் எனப் பரிபாடலில் ஆளப்பட்டுள்ளது. பருந்து பாம்பைப் பற்றி யுண்ணல் உருங்குதல் எனப்படுகின்றது. விடமுடை அரவின் உடலுயிர் உருங்கு உவணம் என்பது அது(4:42) உவணமாவது பருந்து; கருடன் என்பதும் அது. உருட்டித் தள்ளல்: கவளம் போல் சோற்றை உருண்டை உருண்டையாய் ஆக்கி மெல்லாமல் கொள்ளாமல் உட்கொள்வது அல்லது விழுங்குவது உருட்டித் தள்ளலாம் அள்ளிப் பிசைந்து உருட்டி என்பது சைவ சமய நெறி (பொது. 186). உருட்டுப் புரட்டு: உருட்டுப் புரட்டு:1 ஏமாற்றுதல். ஒரு பொருளை உருளச் செய்தல் உருட்டு; அதனை நிலைமாறத் திருப்பிப் போடுதல் புரட்டு. உருளை இயல்பாக உருளும். அதனை உருளச் செய்தல் உருட்டு. தூண் உருளாது. அதனைக் கம்பியால் கோலிப் புரளச் செய்தல் புரட்டு. பொருள்களை உருட்டுதல் பூனை, நாய் முதலியவை செய்யும். திருடர்களும் உருட்டிப் புரட்டி எடுத்துக் கொண்டு போவர். உருட்டுப் புரட்டை இங்கே வைத்துக் கொள்ளாதே என விழிப்பாக எச்சரிப்பாரும் உண்டு. உருட்டுப் புரட்டு:2 உருட்டு = ஒன்றைப் போகும் போக்கிலேயே தள்ளிவிடுதல். புரட்டு = ஒன்றை நேர்மாறாக அல்லது தலைகீழாக மாற்றிவிடுதல். உருளல் புரளல் வேறுபாட்டைச் சாலைச்சீர் உருளை உருளற்கும், கற்றூணைப் புரட்டற்கும் உள்ள வேறுபாடு கண்டு தெளிக. கற்றூணைப் புரட்டுவார் அத்தூணுக்குக் கீழே உருளைகள் வைத்து எளிதாகப் புரட்டிச் செல்லுதல் அறிக. உருளல் புரளல் என்பவை ஏமாற்றுக் கருவியாய் உருட்டுப் புரட்டெனச் சொல்லப்படுகின்றனவாம். உருட்டினும் புரட்டு, சிக்கல் மிக்கதாம். உருத்து: அன்பு என்னும் பொருளில் உருத்து என்னும் சொல் தென் தமிழக வழக்கில் உள்ளது. என் மேல் அவன் மிக உருத்தானவன் என்பர் . உருத்தானவன் உருத்தில்லாதவன் என்பது நல்லது பொல்லதில் வெளிப்பட்டுவிடும் என்றும் வழங்குவர். உரிமை மிக்க அன்பு உருத்து ஆகும். உரித்து என்னும் சொல் வழிப்பட்டது. உயிர் உரிமைச் சான்று அன்பே என்பது, அன்பின் வழியது உயிர்நிலை, அன்புடையார் என்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்பவற்றால் விளங்கும். உருத்துதல்: உராய்தலால் ஏற்படும் துயரம் உருத்துதல் ஆகும். கண்ணில் தூசிபட்டால் அது கண்ணை உருத்தி நீர் வழியச் செய்யும். அந்நீரே உருத்தும் தூசியை அல்லது துகளை வெளித்தள்ளும் இயற்கையுடையது. ஆனால் அவ்வாறு வாராமல் சிக்கிக் கொண்டால் அதனை எடுக்கும் வரை அது படுத்தும் பாடு பட்டார்க்கே புலனாம். உருத்துதல் கொடுமை உருத்திரம் என்னும் கடுஞ் சீற்றத்தின் குறியாயிற்று. உருத்திரன் என்னும் வேத காலச் சிறு தெய்வம் அழிப்புக் கடவுள் எனப்பட்டான். ருத்ரா - வழக்கு. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது சிலம்பு வலியுறுத்தும் முக்கொள்கைகளுள் ஒன்று. புகார்க் கோவலனை ஊழ், மதுரைக்குக் கொண்டுவந்து கொலைக்கு உருத்தியதைக் கூறினார் ஊழை வென்ற அடிகள். உருபா: உருவம் அமைந்த காசும், காசுத்தாளும் உருபா ஆகும். ஒரு நாட்டின் காசும், காசுத்தாளும் அந்நாடு கொண்ட அடையாள உருவத்தையும், காசு அல்லது தொகை முதலியவற்றையும் காட்டுதல் அறிக. வ. ரூப. இது வேதத்திலேயே இடம் பெற்றுவிட்டது. அரசன் உருவம் அல்லது வேறொன்றன் உருவம் கொண்டது உருவா அல்லது உருபா. நாட்டுப்புற மக்கள் உருவா என்றே சொல்வர். வ. ரூப்ய - ரூபா. இச்சொல் வடசொல்லாகத்தான் தோன்றிற்று. ஆயின், உருவம் என்னும் தென் சொல்லினின்று திரிந்ததாகும். வகரம் பகரமாகத் திரிதல் இயல்பே. (வே. சொ. க) உருவு - உருபு, அளவு - அளபு, அளபெடை = செய்யுளில் எழுத்து நீண்டு ஒலித்தல். உருபு: உருவு > உருபு, உருவு = தோற்றம். இன்னதற்கு இது அடையாளமானது என்பது காட்டுவது உருபு ஆகும். வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை என்னும் ஐந்தொகைகளுக்குரிய அடையாள மாக வரும் உருபுகள் ஐவகையாம். அவை வேற்றுமை உருபு, வினையுருபு, பண்புருபு, உவமை யுருபு, உம்மை உருபு என்பன. உருமம்: வெயில் அடித்தல் காற்று அடித்தல் என்பவை மக்கள் வழக்கு. தடியால் அடித்துத் தாக்குதல் கொடுமையையும் ஆக்கலால் அவ்வழக்கு உண்டாயது. வெயிலின் வெப்பம் தலையில் தாக்கிச் செயலற்றுப் போகச் செய்வது உண்டு. கதிர்த்தாக்கம் என்பது அதன் பெயர். கடுங்கோடை வெயில் இலையும் அசைதலில்லா ஒருமிப்பு-வியர்வை சொட்டச் சொட்டத் துடைக்கும் நிலை - இடியா இடியாய் வருத்தும் இதனை உருமம் என்றனர். பொதுமக்கள் முன்னே கூறியவாறு ஒருமிப்பு என்றனர். அஃது உருமிப்பாம். உருமு + அம் = உருமம். உருமு > உருமம் = அச்சம், இடி. உரும், உருமம், உருமுக்குரல், உருமுதல், உருமேறு, உருப்பம் என்பவை ஒருவழிச் சொற்கள். உருமல்: முணகுதல், வைதல். உரும் + அல் = உருமல், உருமுதல் என்பதும் இது. உருமுதல் இயற்கையுடையது. உருமு எனப்படும் இடி. ஆனால் அதனை உருமு என்பதையன்றி உருமல் என்பது இல்லை. உருமல் என்பது நாய் குரைத்தலைக் காட்டுவதே வழக்கு. இக்கால இளைஞன் அல்லது சிறுவன் வெளியே இருந்து வருவான் அவன் ஊர் சுற்றி அலைவதை விரும்பாத தாத்தாவோ தந்தையோ வெறுப்பாகச் சொன்னாலும் முணகினாலும் தனக்குத்தானே உருமலுக்கு ஒன்றும் குறைவு இல்லை என்பதும் அதைச் சொல்லிச் சிரிப்பதும் பருவச் செயலாகப் போய்விட்டது. * உரும் காண்க. உருமால்: உரு + மால் = உருமால். உரு = ஒளி; மால் = உயர்ந்தது, பெரியது. ஒளியுடையதும் உயரமானதுமாம் தலையில் கட்டும் பட்டுப்பாகை உருமால் எனப்படும். பட்டுப் பளபளப்பும் வண்ணக் கரையும் பூவேலைப்பாடும் பிற குஞ்சங்களுடன் கூடியும் பிறரைக் கவர்வதாகவும், தலையை மிக உயரமாக்கிக் காட்டுவதாகவும் உள்ளமையால் இலக்கிய நலம் விளங்க உருமால் எனப்பட்டது. சிற்றூர்த் தலைமையர் உருமால் கட்டுதல் வழக்கு. இறந்தோர்க்குச் செய்யும் இறுதிச் சடங்கில் மொட்டை போட்டவர்க்கு உருமால் கட்டுதல் இன்றும் நடைமுறை வழக்கு. இலக்கிய வழக்கும் பொது வழக்கும் இணைந்து நடையிடும் சொற்களுள் ஈதொன்று. இதனைப் பொதுவழக் கெனல் தகும். உருமி: உரும் + இ = உருமி; உருமுவதுபோல் இசைக்கும் தோற்பறை இது. உருமிக் கொட்டு என்றும் கூறுவர். ஒப்பாரிப் பாடல் உருமியை உள்ளடக்கி வெளிப்படுதல் உள்ளத்தை உருக்கும். உருமி ஒலியும் இரங்கல் உணர்வை ஏற்படுத்தி உருகச் செய்து விடும். உருமிப்பு: உருமம் என்பது காற்று விசிறுதல் இல்லாமல் இறுக்கமாக வியர்வை உண்டாகும் நிலையைக் குறிப்பதாம். உருமம் > உருமிப்பு. ஒருமிப்பு என்றும் கூறுவர். உருமநிலை உண்டாயின் மழை பெய்யும் என்பர். உரும் = இடி . இதனைக் கருதலாம். இது தென் தமிழகப் பொது வழக்கு. உருமு: உர் > உருமு = இடி உரும் = ஒலிக்குறிப்பு. உருமல் உருமு ஆகியவை உரும் வழியாக உருவாகிய சொற்கள். உரும் ஒலி இடியையும், இடிபோன்ற அச்சம் தரும் உயிரிகளின் ஒலியையும் குறிக்கும். இவற்றின் மேல் மக்கள் சினமுறுதலை, என்ன உருமுகிறாய்? என வழக்கில் உண்டாகிறது. மறவர் உருமு நலன் அதிர்க்கும் குரல் -பதிற். 30 கூங்கை மதமாக் கொடுந் தோட்டி கைந்நீவி நீங்கும் பதத்தால் உருமுப் பெயர்த் தந்து -பரிபா. 10 உரும்: பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள -தொல். 848 உரும்எறிந் தாங்கு -புறம். 36 பொருள்: இடியேறு எறிந்தாற் போல உருமுச்சிவந் தெறியும் -நற். 104 இடி ஒலி அஞ்சாதவற்றையும் அஞ்சாதவரையும் அச்சப் படுத்துதல் கண்கூடு. அதிரும் முரசொலி இடியொலி ஒப்பதாகக் கூறப்படும். உருமிசை முழக்கென முரசம் இசைப்ப -புறம். 373 நாய் குரைத்தல் அச்சமூட்டுவதாகலின் அதன் ஒலியை உருமுதல் என்பது வழக்கு. அது சினந்து எழுவார் செயலுக்கும் ஆகி சும்மா உருமாதே என்பதாயிற்று.தீப்பற்றி முழக்கொடும் எரிதல் உரறுதல் ஆகும். கனை எரி உரறிய மருங்கு -புறம். 23 உரு என்பதும் அச்சப் பொருள் தருதல். உருஉட் காகும் -தொல். 785 என்பதால் விளங்கும். உருகெழு ஞாயிறு -புறம். 25 பொருள்: உட்குப் பொருந்திய ஞாயிறு என்பது பழைய உரை. கண்டோர் அஞ்சுமாறு பல தேர்களை ஒரே பொழுதில் செலுத்த வல்ல இளஞ்சேட் சென்னி வேந்தன். உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி -பொருந. 130 எனப்பட்டான். அரசின் ஆணை அறநெறிச் செல்லார்க்கு அச்சம் தருவதாகலின் உரு எனப்படும். உருவும் புகழும் ஆகி -புறம். 6 பொருள்: உட்கும் புகழுமாகப் பரந்த என்பது பழைய உரை. உருப்ப என்பது தீப்பற்றி எழுதலாம். முலைபொலி ஆகம் உருப்ப நூறி -புறம். 35 பொருள்: முலை பொலிந்த மார்பம் அழல அறைந்து கொண்டு (பழைய உரை) இடியும் அழலும் அச்சுறுத்தும் இணைந்து உரும் வருதல் அறிக. உள் வெப்புற்று வியர்வை சொட்டலை உருப்பமாக உள்ளது என மக்கள் வழங்குவதை எண்ணுக. அச்சுறுத்துவாரை உம் உருமலுக்கு நான் அஞ்சமாட்டேன் என்பதும் வழக்காயிற்று. உருவம்: உரு > உருத்தல் = தோன்றுதல் தோற்றம் தரும் ஒன்று உருவம். தோற்றம் தாராது கருத்தளவில் தோற்றம் தருவது அருவுருவம் அல்லது அருவம். உருவாய் அருவாய் -கந். அனு. என்பது அருணகிரியார் வாக்கு உருவா: உருவா > உருபா * உருபா காண்க. உருவாஞ் சுருக்கு: உருவு + ஆம் + சுருக்கு = உருவாஞ் சுருக்கு கயிற்றால் ஒன்றைக் கட்டி முடிப்புப் போடுவர். அம்முடிப்பு எளிதில் அவிழ்க்குமாறு போடுவது - உருவிக் கொண்டு வருமாறு போடுவது - உருவாஞ் சுருக்கு எனப்படும். முன்னாளில் வணிகர்களிடமும், பொதுமக்களிடமும் பணம் போட்டு இடுப்பில் செருகிக் கொள்ளுமாறு வைத்திருந்த பை சுருக்குப் பை எனப்பட்டது. பை வாயைத் திறக்கவும் மூடவும் சுருக்குக் கயிறுடையது அது. உருவாரம்: பொ(ய்)ம்மை மண்ணால் செய்வதுண்டு அவர்கள் மண்ணீட்டாளர். குயவர், வேளார் (வேள் = மண்) என வழங்கப்படுவர் குலாலர் என்பது பின் வழக்கு. வெண்ணிக் குயத்தியார் புகழ் வாய்ந்த பெண்பாற் புலவர். குயவர்கள் தாம் உருவாக்கும் பொம்மையை உருவாரம் என்பது தொழில் வழி வழக்கு ஆகும். ஆரம், வாரம் வளைதல் பொருள் வனைதல் என்பதும் வளைதல் பொருளதே. கலங்களும் பொம்மைகளும் வளைவமைப்பு உடையனவையே. உருவால் அரிசி: வெந்தயம் என்பது மசாலைக்கும், மருந்துக்கும் பயன்படும் கடைச்சரக்குப் பொருள். அதன் வடிவமைப்புக் கருதித் தக்கலை வட்டாரத்தார் அதனை உருவால் அரிசி என்பர். உரு அழகாகும். வால் மிளகு, வால்பேரி - என்பவற்றை எண்ணலாம். உருவி: உருவி:1 உருவு + இ + உருவி . உருவிக் கொண்டு வருவதுமாம் உருவிகள். முன்னது புல்லுருவி; பின்னது நாயுருவி. உருவி:2 உருவத்தையுடையவர் உருவி. ஓவியம் உட்கும் உருவி -பெருங். 2: 46: 72 உருவி:3 தோற்றம் அறிய வருவது உருவி; தோற்றம் அறிய வாராதது அருவி. உருவி x அருவி. உருவு கதிர்: உருவு + கதிர் = உருவு கதிர் . உருவு = உருவிச் செல்லுதல் , உருவம் ஒளி உடலுள் உருவிச் சென்று உருவைக் காட்டுதலால் அவ்விரு தன்மையும் ஒருங்கமைய அமைந்தது உருவு கதிராம். எக்சுக் கதிர் (x-ray) என்பதன் பொருள்பொதி மொழியாக்கம் இது. உருவுதல்: பறித்தல், தடவல். மொச்சைக்காய் உருவுதல் ஒரு பறிப்பு முறை. ஒவ் வொன்றாக எடுக்காமல் ஒரு கையை மடக்கிக் கூட்டிப் பிடித்துக் கொத்தாகப் பறித்தல் உருவுதலாம். கட்டில் இருந்து ஒரு நோட்டை எடுத்தல் உருவித் தருதல் எனப்படும். உருவி உருவித் தந்தவன்; பேச மாட்டாய் என்பது இகழுரை. சுளுக்கு ஏற்படுமானால் விளக்கெண்ணெய் தேய்த்து உருவுதல். தடவுதல் என்பது உருவுதல் வினைக்கு முன் வினை தடவி உருவல் என்பது இணை முறை. இடக்கரடக்கலாகவும் இவ்வுருவல் வழங்கும். உருவெளி: உரு + வெளி = உருவெளி. உள்ளத்தே உள்ள ஒரு வடிவு, புறத்தே தோற்றம் தருவதாக அமைந்த மயக்கக் காட்சி உருவெளி, உருவெளிக் காட்சி, உருவெளித் தோற்றம் என்பனவாம். உருளரிசி: உருள் + அரிசி = உருளரிசி. உருண்டை வடிவாக அமைத லால் கொத்துமல்லியை உருள் அரிசி என வழங்கினர். (வெ.வி.பே.) உருளாயம் : உருள் + ஆயம் = உருளாயம். வட்டு என்னும் சூதுக்காய் வடிவம் வட்டம். அவ்வுருள் கொண்டு ஆடும் சூதர் கூட்டம் உருளாயம். உருளாயம் ஒவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும் - திருக். 933 உருளை: உருளை:1 உருள் + ஐ = உருளை. உருண்டை அல்லது உருளை வடிவில் அமைந்த கிழங்கு உருளை எனப்பட்டது. உருளை:2 உருளை என்பது கமலை ஏற்றத்தில் அமைந்த ஓர் உறுப்பு. வால் கயிறு, உருளை மேல் ஏறும் இறங்கும். உருளை:3 ஆடு மாடு முதலியவை விலைமாறும் தரகர் வழக்கில் உருளை என்பது பணம் என்னும் பொருளில் வழக்கப்படுகிறது. சில இடங்களில் இதனை வட்டம். என்றும் சக்கரம் என்றும் வழங்குதல் உண்டு. காசு, பணம் என்பவற்றின் வடிவு கருதி வழங்கும் வழக்கம் ஈதாம். உருளோசு: குமரி மாவட்ட மூக்குப் பேரி (பீரி) வட்டாரத்தார் கடிகாரத்தை உருளோசு என வழங்குவர். உருளோசு என்பது முசிறி வட்டார வழக்கு. கடிகார வடிவும், முள்கள் சுழலும் வடிவும், சக்கரங்களின் வடிவும் உருளையாதலால் இவ்வழக்கு ஏற்பட்டது. உருள்: உருள்:1 உருள்தல் = உருண்டு ஓடுதல். உருண்டு ஓடுதற்குரிய ஆழி (சக்கரம்) உருள் எனப்படும். உருள்பெருந் தேர் - திருக். 667 உருள்:2 உருள் போன்ற கடம்பு மலர். உருளிணர்க் கடம்பு - பரி. 5, 21 உருள்தலின் அடிப்படை வடிவு உருண்டை, உண்டை, வட்டம், வளையம், உருளி, உருளை என்பனவும் இது. உரை: உரை:1 உள்ளிருந்தெழும் காற்று இதழ் நா பல் அணம் ஆயவற்றின் செயலால் ஒலியாகின்றது. அவ்வொலி தோன்றும் இடம் உரம் எனப்படும். நிறைஉயிர் முயற்சியின் உள்வளி துரப்ப எழும்அணுத் திரள்உரம் கண்டம் உச்சி மூக்குற் றிதழ்நாப் பல்அணத் தொழிலால் வெவ்வே றெழுத்தொலி யாய்வரல் பிறப்பே -நன். 74 என்பதால் உரமாகிய இடத்துத் தோன்றி வெளிப்பட்டது. உரை எனப்பட்டதாம். உரம் = மார்பு. ஒலியியல்பாக அமைந்து பொருட்பயன் கருதி உரைக்கப்படுவது. உரைநடை எனப்பட்டது. அதனால் ஒருவருக்கொருவர் கருத்துணரும் களிப்பு உண்டாவதால் உரையாடல் உரையாட்டு உரைப்பாட்டு என்று வழக்கில் ஊன்றியது. உரை:2 ஒலி மேலெழுந்து வரல் இயல்பால் உயர்வுப் பொருள் தந்தது. உரை:3 உராய்ந்து பார்த்தல் உரை ஆதலால் மாற்றறிதல் என்னும் பொருள் தந்தது. உரை:4 உரை என்னும் ஏவலாதல் வெளிப்படை. உரை:5 யாப்பியல் வளம் கொண்டு யாக்கப்பட்ட பாடல்களில் பொருளும் நயமும் கற்பார் உணரும் வகையில் உரை எழுதும் மரபு உண்டாயது. உரை எத்தன்மைத்து எனின், உரையாணி யிடப்பட்ட ஆணிப்பொன் ஒப்பதாகும் என்பதாம். உரையாணி இடப்பட்ட பொன் துளைப்பொன். ஆணிப்பொன் என வழங்கப்படும். நூலாசிரியன் நோக்கும் போக்கும் நுண்ணிதிற் கண்டு, நூலாசிரியனாய் உரையாசிரியன் மாறிப் புகுந்து உரைக்கும் உரையே உரையாம். மற்றை உரை மாசுரை; குறையுரை; ஓரப்பார்வை பார்க்கும் உரை; நூலாசிரியர்க்குச் சிறுமை சேர்க்கும் உரை என்க. உரை என்னும் ஏவல் மொழி, உரைக்கும் உரை ஈதாம். அரிதாக இருந்த உரைநடையைப் பெரிதாக வளர்த்தலில் ஆங்கிலவர்க்குப் பெரும்பங்கு இருந்தது. இந்நாளில் பாடலே உரைநடைக்கு வருதலாயிற்று. உரைகல்: உரை + கல் = உரைகல். உரைத்து (உராய்ந்து) பொன் மாற்றுக் காணும் கல்; கட்டளைக்கல் (திருக்.505) என்பதும் இது. தன்னை உராய்ந்ததன் தரத்தை உரைக்கும் கல் எனினும் தகும். நறுந்தா தாடிய தும்பி பசுங்கேழ்ப் பொன்னுரை கல்லின் நன்னிறம் பெறூஉம் - நற். 25 உரைகல், உரை எனவும் வரும். பொன்னுரை கடுக்கும் திதலை - முருகு. 145 உரைப்பாட்டு: பழநாளில் உரையிடை யிட்ட பாட்டு, உரைப்பாட்டு, உரைப்பாட்டு மடை என உரையும் பாட்டுமாய் அமைந்த நூல்கள் இருந்தமை உரையாசிரியர்களால் அறியப்படுகின்றது. உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் என்னும் சிலப்பதிகாரம் அதற்குச் சான்றாகத் திகழ்கின்றது. பாரதியார் வசன கவிதை என எழுதினார். இது கால் புதுக்கவிதை எனப் பூரித்து உலா வருகின்றது. அதனால் கவிஞர் கூட்டம் வெள்ளம் போல் பெருக்கெடுக்கின்றது. எப்படியும் எழுதலாம் எதையும் எழுதலாம்! ஏதோ எழுதுபவர் எண்ணிக் கொண்டு எழுதுவதைப் படிப்பவர் பொருள் செய்து கொள்ள வேண்டும். ஆனால் சில புதுப் பாவலர்கள் கருத்துவளம் மொழிவளம் பேணி எழுதுவது பாராட்டத்தக்கதாம். உலகம்: உல் > உலம் > உலகு > உலகம். உலகம் என்னும் பெயரே அதன் வடிவம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அன்றியும் அது வலமாகச் சுழல்வது என்பதையும் காட்டுகிறது. உல், உலம், உலா முதலிய சொற்களின் விளக்கம் கண்டால் இவ்வுண்மை எளிதில் விளங்கும். சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் - திருக். 1031 உலமரல் அலமரல் என்பன கழற்சிப் பொருளன. உலகம் உருண்டை என்றும் சுழல்வது என்றும் இந்நாள் அறிவியல் ஆய்வாளர் கூறுவதையும் உலகம் என்னும் சொல்ல மைப்பையும் உணர்வோர் வியவாமல் இரார். உலகம் பழந்தமிழ்ச் சொல்; வள்ளுவர் முதற்குறளிலேயே வழங்கும் சொல். உலக வழக்கு: வழக்கு வகை இரண்டு. அவை உலகியல் வழக்கு, செய்யுள் வழக்கு என்பன. வழக்கும் செய்யுளும் என்னும் தொல்காப்பியப் பாயிரம் கூறும் வழக்கு உலகியல் வழக்கும் செய்யுள் வழக்குமாம். அது, தமிழ்கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் என்பது. வழக்காவது சில சொற்பிறந்த அக்காலத்து இஃது அறத்தை உணர்த்திற்று. இது பொருளை உணர்த்திற்று; இஃது இன்பத்தை உணர்த்திற்று; இது வீட்டை உணர்த்திற்று என்று உணர்விப்பது என்று நச்சினார்க்கினியர் விளக்கம் வழங்கினார் (தொல். பாயி.). இக்காலத்தில் கற்றாரும் கல்லாரும் தம் பேச்சு வழக்கில் இடம்பெற்று நூல்வழக்கில் இடம் பெறாதனவாம் சொற்கள். காலம்தொறும் இடம் தொறும் பல்லாயிரக் கணக்கில் வழங்கலுறுகின்றன. உயிர்மொழி என்பதற்கு நூல்களையன்றி அப்பேச்சு வழக்குச் சொற்களின் ஆய்வும் தெளிவும் வேண்டும். மொழிவளம் அதில் பல்கியுள்ளன என்பதும் புத்தாக்கச் சொற்களுக்குப் பெரும்பயனாம் என்பதும், தொடர்ந்து மொழியின் உயிர்நிலையாக விளங்குவது அச்சொற்கள் என்பதும் போற்றித் தொகுக்க வேண்டுவனவாம். இலக்கிய வழக்கு அல்லது நூல் வழக்குச் சொற்களின் எண்ணிக்கைக்கு மேலும் வழக்குச் சொற்களே மிகுதியாக இருக்கும் என்பது ஒரு வட்டாரத்து வழங்கும் சொற்களைத் தொகுத்துக் காணும் போதே தெளிவாகப் புலப்பட்டு சொற்பஞ்சமில்லாச் சுடர்மொழி தமிழ் என்பது எவர்க்கும் தெள்ளத் தெளிவாகப் புலனாம். உலகாணி: மதுரை மாவட்டம் திருமங்கலம் சார்ந்ததோர் ஊரின் பெயர் உலகாணி என்பது. உலகாணி என்பது உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்னும் வள்ளுவத் தொடர்வழி வந்த பெயர். உழவு மேம்பாடும் அதனால் உலகம் எய்தும் நலமும் குறித்த அரிய பெயரீடு அஃதாம். ஆம் உலகத்தார்க்கு ஆணி என்பதே உலகத்தேர்க்கு ஆணி என்னும் உள்ளுறையாகக் கொள்ளத்தக்க சிறப்புடையதாம். உழுவார் உலகத்தார்க் காணி அஃதாற்றா தெழுவாரை எல்லாம் பொறுத்து - திருக். 1032 பொறுத்து என்பது தாங்கி. சுமந்து என்னும் பொருள தாதலை உணரலாம்! உலகாணி ஒரு திருக்குறள் பிழிவு! உலக்கல்: உலக்கல் > உலைக்கல். உருண்டைக்கல். அக்கல் உடைய தொழிலகம் உலைக்களம், உலைக்கூடம். கொல்லர் பட்டடைக் கல், உலைக்கல் ஆகும். உலக்கை: உலம் = உருண்டை. உலக்கல் = உருண்டைக்கல். உருண்டைக்கல்லால் அமைக்கப்பட்டது. உலக்கை என்பதைச் சித்த மருத்துவர் மருந்தாக்கக் கல் உரலையும் அதன் உலக்கைக் கல்லையும் காண்பார் அறியலாம். அவ்வாறு உருண்டைக் கல்லாக உரலும் உலக்கையும் இருந்து பின்னர் மரத்தாலும் இரும்பாலும் இரண்டன் இணைவாலும் உலக்கை உண்டாயினவாம். இந்நாளில் அவ்வுரலும் உலக்கையும் பொறியாகி விட்டமையால் அவை காட்சிப் பொருளாகி விட்டன. சித்த மருத்துவ உலகம் இன்னும் கலவம் கல்லுரல் பயன்படுத்துகிறது. உலக்கை கொழுந்துவிடல்: நடவாதது நடத்தல். உலக்கை உலர்ந்து போன மரத்தால் செய்யப்படுவது. பட்டையும் பசையும் அற்ற அது தளிர்ப்பது எப்படி? கொழுந்து விடுவதுதான் எப்படி? நடக்கக் கூடியதன்று, வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தாலும் உலக்கை தளிர்க்கப் போவது இல்லை. கொடாக் கையன் ஒருவன் ஒன்றைக் கொடுக்கக் கண்டால் உலக்கை கொழுந்துவிட்டது போல் என்பர். குந்தாணி வேர்விட்டது. போல என்பதும் இத்தகையதே. உலக்கைக் கழுந்து: கூர்மை இல்லாமை, உலக்கைகளுள் கழுந்துலக்கை என்பதொன்று. அது பூண்தேய்ந்ததாகும். மழுங்கிய கூருடைய அது கழுந்து எனப்படும். அதைப் போல அறிவுக் கூர்மை யில்லாத மடவரைக் கழுந்துலக்கை என்றோ உலக்கைக் கழுந்து என்றோ சொல்வது வழக்கில் உள்ளது. கழுந்து இடிப்பதற்கு உதவாது. இடித்ததை அதன்பின் தீட்டுவதற்குப் பயன்படுவது. அதுபோல் சொல்லிய அளவில் புரியாமல் மீண்டும் சொல்லிச் சொல்லி விளக்கினால் புரியும் நிலையில் இருப்பவரே கழுந்தராம். கழுந்தராய் உன் கழல் பணியாதவர் - கம்ப. காப்பு.9 உலங்குண்ட விளங்கனி: உலங்கு + உண்ட + விளங்கனி = உலங்குண்ட விளங்கனி. விளம் = விளா; உலங்கு = பெருநுலங்கு, ஒலுங்கு, கொசு என்பனவும். அது விளாம்பழத்தில் மொய்த்தவாறே அதிலுள்ள சுவையைக் குடித்துவிடும் என்பதொரு நம்பிக்கையில் ஏற்பட்டது உலங்குண்ட விளங்கனி என்பது. தேரை, வேழம் என்பவை போல உலங்கு என்பதொரு நோயாம். உள்ளீடு அற்றுப் போகச் செய்வது. உலண்டு: உல் > உல > உலண்டு. உருண்டையான பட்டுப்புழுக் கூடு உலண்டு எனப்படும். உலம் உருண்டை யாவது போல், உலண்டு என்பது உருண்டை வடிவானது என்பதை விளக்கும். மேற்பாட் டுலண்டின் நிறனொக்கும் புன்குருக்கண் - கலித். 101 பொருள்: உயர்ந்த கொம்பிடத்தே வைத்த உலண்டினது நிறத்தை ஒக்கும் புல்லிய நிறத்தைத் தன்னிடத்தே யுடைய எருத்து (உரை, நச்.) உலமரல்: உலமரல்:1 உலமரல் = சுழற்சி. உலமருதல் > உலமரல். உலமரல் வருத்தம் உறுதுமெம் படப்பை - அகம். 18 உலமரல்:2 வருத்தம். வறண்மரத் தன்ன கவைமருப் பெழிற்கலை அறலவிர்த் தன்ன தேர்நசை ஓடிப் புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு - அகம். 395 உலமருவோர்: உலமருவு + ஓர் = உலமருவோர். சுழன்று, அலைக்கழிந்து வருந்துவோர். செம்புற் றீயல்போல ஒருபகல் வாழ்க்கைக் குலமரு வோரே - புறம்.52 பொருள்: செம்புற்றினின்றும் புறப்பட்ட ஈயலைப் போல ஒருபகற் பொழுதின் கண் வாழும் உயிர் வாழ்க்கையின் பொருட்டுச் சுழல்வோர் (பழைய உரை). சுழற்சிப் பொருளதாகிய அலமரல் என்பது உலமரல் என வந்தது (ஔவை. சு.து.) உலம்: உல் + அம் = உலம். உல் = உருண்டை. உலம் கலந்த தோளினான் என்பது சிந்தாமணி, உலம் என்பது உருண்டைக்கல். இதனை இளந்தாரிக்கல் இளவட்டக்கல் என்பர். * இளவட்டக்கல் காண்க. உலவை: உலவை = உலர்ந்து வறண்டு போன மரக்கிளை. உலர்தல் = காய்தல்; நீர் வற்றிப் போதல். உயங்கல் யானை நீர்நசைக்கு அலமரச் சிலம்பி வலந்த வறுஞ்சினை வற்றல் அலங்கல் உலவை அரிநிழல் அசைஇ - அகத்.199 உலா: உலா:1 உலவு > உலா. உலாவுதல் = நடத்தல். மூளை உழைப்பாளர் களுக்கு உலாவுதல் கட்டாயக் கடமையாக உள்ளது. உடல்நலம் கருதிய உலவுதல் அது. முதியவர்க்குரிய உடல்நலப் பயிற்சியும் உலாவுதலே. நாள் உலா எழுந்த கோள்வல் உளியம் - அகம். 81 பொருள்: விடியற் காலத்தே எழுந்து உலாவிய தன் இரையைக் கொள்ளுதலில் வல்ல கரடி (உரை, ந.மு.வே.) உலா: உலா சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இடைக்காலத்தும் பிற்காலத்தும் இச் சிற்றிலக்கிய வகை உண்டாயிற்று. மூவருலா ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டது. பின்னே எழுந்த உலா நூல் பலவாம். உலாதல் இயல்பு வலமாகச் சுற்றுதல் ஆகும். அதனால் ஊர்வலம். நகர்வலம் என்பவை உண்டாயின. இளம் பருவத் தலைமகன் ஒருவனைக் குலம் குடிப்பிறப்பு, மங்கல வழிமுறை இவற்றின் இன்னான் என்பது தோன்றக் கூறி, அவன் மாதரார் நெருங்கிய பெருவீதியில் உலா வரப் பேதை முதலிய ஏழு பருவப் பெண்களும் கண்டு தொழுததாக நேரிசைக் கலி வெண்பாவாற் கூறுவது உலா ஆகும். உலாப் புறம் என்பதும் இது. முடி புனைந்த மன்னருமாய் இருபத்தொரு பிராயத்துக்கு உட்பட்டவர்களுக்கும் தேவர்களுக்கும் உலாப் பாடலாம்; அல்லார்களுக்கு ஆகாது என்பார் நவநீதப் பாட்டியல் உரைகாரர். எழு பருவ மாதர்க்கும் உரிய பெயரையும் அவர்களின் ஆண்டளவையும். ஐந்து முதலே ழாண்டும் பேதை எட்டு முதனான் காண்டும் பெதும்பை ஆறிரண் டொன்றே ஆகும் மங்கை பதினான் காதிபத் தொன்பான் காறும் எதிர்தரு மடந்தை, மேலாறும் அரிவை ஆறு தலையிட்ட இருபதின் மேலோர் ஆறுந் தெரிவை, எண்ணைந்து பேரிளம் பெண்ணென் றோரும் பருவத் தோர்க்குரைத் தனரே - இலக். பாட். 99-103 இவ்வியாண்டுகளைப் பிறவாறுங் கூறுப. பேதைக் கியாண்டே ஐந்துமுதல் எட்டே பெதும்பைக் கியாண்டே ஒன்பதும் பத்தும் மங்கைக் கியாண்டே பதினொன்று முதலாத் திரண்ட பதினா லளவும் சாற்றும் மடந்தைக் கியாண்டே பதினைந்து முதலாத் திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பு அரிவைக் கியாண்டே அறுநான் கென்ப தெரிவைக் கியாண்டே இருபத் தொன்பது ஈரைந் திருநான் கிரட்டி கொண்டது பேரிளம் பெண்டுக் கியல்பென மொழிப - பொய். பன். 221-227 இனிப் பெண்பாலார்க்குக் காட்டியவாறே ஆண் பாலர்க்கும் பருவமும் ஆண்டும் காட்டினார் உளர். அவர் காட்டுமாறு: பாலன் யாண்டே ஏழென மொழிப மீளி யாண்டே பத்தியை காறும் மறவோன் யாண்டே பதினான் காகும் திறவோன் யாண்டே பதினைந் தாகும் பதினா றெல்லை காளைக் கியாண்டே அத்திற மிறந்த முப்பதின் காறும் விடலைக் காகும்; மிகினே முதுமகன் - அவி.பன். 229-234 ஆடவர்க்கு உலாப்புறம் கொள்ளுதற்குரிய உயரெல்லை நாற்பத்தெட்டு யாண்டளவு என்றும் குறித்தார் உரை. நீடிய நாற்பத் தெட்டின் அளவும் ஆடவர்க் குலாப்புறம் உரித்தென மொழிப - பன்னிரு. 235 உலாமடல்: கனவில் காரிகை ஒருத்தியைக் கண்டு களித்த ஒருவன் அவளை அடைவது கருதி மடலூர்வேன் என்று கலி வெண்பாவால் கூறுவது உலா மடலாகும். கனவின் ஒருத்தியைக் கண்டு புணர்ந்தோர் நனவில் அவள்பொருட் டாக நானே ஊர்வேன் மடலென் றுரைப்ப துலாமடல் - இலக். பாட். 97 உலா என்னும் பனுவலும், மடல் என்னும் பனுவலும், ஒரு சார் இயைந்த தன்மையதாகப் பெறுதலின் உலாமடல் எனப் பெற்றது. மடல் உலா என மாற்றி யியைப்பின் மடலூர்தல் என்னும் பொருளே பட்டமையுமாகலின் உலாமடல் என்றாராம். * மடல் காண்க. உலாவணி: இசுலாமிய சமயச் சார்பால் தமிழ் இலக்கிய வகை பெற்ற பெருக்கத்துள் ஒன்று உலாமணி யாகும். உலாவணி பாடுதலில் தேர்ச்சி மிக்க புலவராகத் திகழ்ந்தவர் உறையூர் சித்திரகவி சையத் இமாம் பாவலர் ஆவார். உலாவணி என்ற சொல்தான் தற்போது இலாவணியாக மாறி வழக்கில் இருந்து வருகிறது. இல் + ஆ + அணி எனப் பிரித்துக் காட்டிப் பொருள் கூறுவாரும் உண்டு. உளம் என்னும் வீட்டில் குடிபுகுந்த ஆத்மாவுக்கு அழகு சேர்ப்பது என்பதாகக் கருதுவார்கள் என்பார் மதனீ (இசுலாமியத் தமிழ் இலக்கியக் கட்டுரை: பக். 309) எரிந்த கட்சி எரியாத கட்சி ஏசலிப்பும், காமன் எரிப்புப் பற்றியும் உலாவணி உண்டு என்பதை விளக்குவதொரு நூல். அஃது எரியாத கட்சி சிங்காரக் கேள்விலாவணி என்பது. அதனை இயற்றியவர் பட்டமும் பெயரும் தமிழ் நாடெங்கும் புகழ்பெற்ற காமதகனக் கண்டனக் கட்சிக் கவிக்கேசரி தஞ்சை முத்தமிழ் வித்துவ பாப்புதாசர் என்பது. மன்மதன் பண்டிகைக் கேள்வி: காமன் பண்டிகை என்று வருடந் தோறும் காணும் மாசிப்பிறை கண்டவுடனே நீங்கள் ஆமணக்கு பேய்க்கரும்புத் தட்டை கொண்டு அருமையுடன் நட்டுவைக்கோற் பிரியைச் சுற்றிப் பாமரர்கள் ராட்டி ஒன்றைத் தொங்க விட்டுப் பங்குனி மாதப் பருவமட்டும் அங்கே நேமமதாய்க் கடலை மொச்சை தேங்காயிட்டு நெறியாகக் கொளுத்தச் சொன்ன புராணம் காட்டே உலகில் மன்மதன் எத்தனை என்று ஒரு கேள்வியைப் போடுகின்றது அது. மால்மகள் மதனென்குதொரு புராணம் மலர்வேதன் மகனென்குதொரு புராணம் பால்வண்ணன் மகனென்குதொரு புராணம் பகர்தர்மன் மகனென்குதொரு புராணம். சால்வண்ணன் மகனென்குதொரு புராணம் சங்கல்பன் மகனென்குதொரு புராணம் வேள்மதனித் தனைப் பேரைநூல் சொன்னாலே வெந்தமதன் எந்தமதன் விளம்புவீரே! எரிந்த கட்சியைப் பாடிக் கெட்டழிந்தவர்களைக் கூறி, பாப்புதாசன் அறைவதைக் கேட்டு வாயை மூடு மூடு எனப் புத்தகம் மூடுகின்றது. இலாவணி வெண்பா, விருத்தம், இசைப்பாடல்களாக இயல்வதையும் தருக்க நெறியில் நடப்பதையும் இந்நூலால் அறியலாம். உலுப்புதல்: பறித்துக் கொள்ளல், பலரையும் ஒருங்கு அழித்தல். மரத்தில் உள்ள காய்களை விழுத்தட்டுதல் உலுப்புதல் எனப்படும். உதிர்த்தல் என்பதும் அது. புளியம்பழம் உலுப்புதல் என்பது பெருவழக்கு. உலுப்பியபின் மரத்தில் பூம்பிஞ்சு, பிஞ்சு, ஊதுகாய் அல்லது ஊதைக்காய், செங்காய், காய், கனி என்பன வெல்லாமும் இல்லையாய் உதிர்ந்து போம். கிளையை ஆட்டியோ கோல் கொண்டு அடித்தோ அலைக்கும் பேரலையில் எல்லாமும் உதிர்ந்து மரம் வெறுமையாகிப்போம். அது போல ஒரே வீட்டில் முதியவர் இளையவர் என்று இல்லாமல் பலர் ஒரு நோயில் மாண்டு போனால் குடும்பத்தையே உலுப்பிவிட்டது என்பர். கொள்ளை நோய் விளைவு பல குடும்பங்கள் உலுப்பப்படுதலாம். உலுப்பை: பலபேர் கூடி நின்று (மொய்த்து) தருவதும் எழுதுவதும் மொய் எனப்படுதல் பொது வழக்கு. ஈ மொய்த்தல், எறும்பு மொய்த்தல் என்பவற்றை எண்ணுக. இனி நெல்லி, புளி முதலியவற்றை உதிர்த்தலை உலுப்புதல் என்பது வழக்கு. உலுப்பினால் கிளைகளைப் பற்றி அசைத்தால் கூட்டி அள்ளும் அளவுக்குப் பொது பொதுவென உதிரும். அதுபோல் குவியும் மொய்ப் பணத்தை உலுப்பை என்பது அறந்தாங்கி வட்டார வழக்காகும். உலை: உலை:1 உலைதல் = அலைதல், அழிதல், கலைதல், கெடுதல், சீரழிதல், மனங்கலங்கல், வலுக்குறைதல், வருந்தல் (வெ.வி.பே.) உலை:2 சோறாக்கும் உலை. மூட்டப்பட்ட எரியால் நீர் கொதித்தலும், அரிசி வேதலும், பொங்கலும், உள்ளமையால் உலை எனப்பட்டது. பல்கோட்டு அடுப்பில் பால்உலை இரீஇக் கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர் - அகம். 141 உலை:3 கொல்லர் உலைக்கூடம். மிதி உலைக்கொல்லன் முறிகொடிற் றன்ன கவைத்தாள் அலவன் - பெரும். 207-208 உலைக்கல்: உலை + கல் + உலைக்கல் + கொல்லர் உலைக்கூடத்தில் உள்ள பட்டடைக்கல். உலைக்கல் அன்ன பாறை - குறுந்.12 சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு - திருக். 821 உலைக்குருகு: கொல்லன் உலைக்களத்தில் உள்ள துருத்தி. குருகு = நாரை. நாரையின் அலகொடு கூடிய வாய்போலத் துருத்தி இருத்தலின் உவமையாகு பெயராய்த் துருத்தி, குருகு எனப்பட்டதாம். கொல்லன் ஊதுலைக் குருகின் உள்ளுயிர்த்து - நற். 125 * துருத்தி காண்க. உல்கு: ஒல்கு > உல்கு = சிறிய அளவினதாக அரசுக்குச் செலுத்தும் (சுங்க) வரி. உல்கும் வரக்கூலியும் நாங்களே பட்டு அளந்து தரவு கொள்வோமாகவும் (க.க.அ.மு.73) சாத்தொடு வழங்கும் உல்குடைப் பெருவழி - பெரும். 80-81 உவகை: உவகை:1 ஒருவகை வரி. மகிழ்பொழுதாக விநோதம் காண்பதற் கமைந்த வரி. ஊரிலோ நாட்டிலோ நிகழும் மக்கள் மகிழ்ச்சிக்குரியதான இளவரசு பிறத்தல், புதிய அரசனுக்கு முடிசூட்டல் போரில் தம்முடைய மன்னன் பெற்ற வெற்றி விழா ஆகிய சிறப்புகட்குரியதாக மக்கள் மகிழ்வுடன் செலுத்தும் காணிக்கை. உகப்பார் பொன் என்பதும் இது (க.க.அ.மு.64). கேளிக்கை வரி எனப்படுவது போன்றது. உவகை:2 உவத்தல் உவப்பு ஓகை என்பவையும் இது. உவவு > உவா. உவவுமதி முழுமதி. பிறைமதியாய், வளர்மதியாய் நிறைமதி அல்லது முழுமதியாய் ஆவது போலப் பெருகிவளர் மகிழ்வு, உவகை எனப்பட்டது. *உவப்பு உகப்பு ஆதலையும் பொருளையும் உகப்பு என்பதில் காண்க. உவச்சர்: உவச்சர் என்பது ஒரு குடிப்பெயராக வழங்கப்படுகிறது. உவச்சர் மேளகாரர் எனப்படுவார். கொட்டு முழக்குவார்க்கு வழங்கும் கோயிற்கொடை உவச்சக்காணி என வழங்கப்படுதல் கல்வெட்டுச் செய்தி. குற்றாலத்துப் பகுதியில் உவச்சர் என்பார் கோயில் பூசகர் என வழங்கப்படுகிறார். உவச்சு: உவப்பு > உவச்சு. தாமே விரும்பிச் செய்யும் அல்லது உவந்து செய்யும் திருப்பணி. திருக்கோயில்களில் செயகண்டி (சேகண்டி), தாரை, காளம் முதலிய இசைக்கருவிகளை, நாள்வழிபாட்டிலும் விழாக்களிலும் இசைக்கும் தொழில். இத்தொழில் செய்வார் உவச்சர். உவச்சு எட்டாள் கொண்டு கொட்டுவாராக ஊர் நன்மை தீமைக்கு உவச்சு கொட்டவும் உவச்சன் தலைப்பறை கொட்டுவோன் ஒருவனுக்குக் குறுணிநெல் (க.க.அ.மு.73) உவட்டுதல்: வெறுத்தல். உட்கொண்ட உணவு உவர்த்து (வெறுத்து) அல்லது ஒவ்வாமல் மேலே வருவது உவட்டுதல் ஆகும். எனக்கு உவட்டுகிறது உணவு வேண்டாம் என்பது வழக்கு. இழிபால் அருவி உவட்டெறியும்- மீனா.பிள்.24 என்பது நீர்மப் பொருள் மேலெழுதல். உவணம்: அவண் இவண் உவண் என்பவை சுட்டிடப் பெயர்கள். அவ்விடம் இவ்விடம் உவ்விடம் என்னும் பொருளவை. அப்பக்கம் இப்பக்கம் உப்பக்கம் என்பவற்றுள் முன்னவை இரண்டும் இருவகை வழக்குகளிலும் இன்று உள்ளவை. உப்பக்கம் அருவழக்காய் அமைந்தது. ஊழையும் உப்பக்கம் காண்பர் என்பது வள்ளுவம் (620). அப்பக்கமும் இன்றி இப்பக்கமும் இடைப்பக்கமாய்ப் புறங்காட்டி நிற்பதே உப்பக்கமாம். உக்கடை, உக்கரை என்பவை ஊர்கள். குருவி காகம்போல் பறவாமல் (இவண்) புறாவைப் போல் உயரத்துயரம் பறவாமல் (அவண்) இடைப்பட விண்ணில் (உவண்) பறக்கும் பறவை உவணமாம். உவணம் என்பதற்கு உயர்ச்சி, கருடன், கழுகு, பருந்து என்னும் பொருள்களை அகராதி காட்டும். உவணப் பறக்கும் பறவை உவணம். செவ்வாய் உவணம் - பரிபா. 2:60 உவணச்சேவல் உயர்த்தோன் கோயில் - சிலப். 14:8 உவப்பு: உவ > உவப்பு. உவ = மிகுதல், மிகுதி. மிகுந்த மகிழ்வு உவப்பு, உவகை எனப்படும். உவகை > ஓகை ஆகும். உவப்பு உகப்பு எனக் ககரத் திரிபும் பெறும். உகப்பே உயர்தல்;உவப்பே உவகை - தொல். 789 உவமம்: உவ > உவம் > உவமம். ஒன்றனைக் காணுங்கால் ஏற்படும் உவகை, ஒன்றனைக் கேட்கும் காலும் அதனைக் கண்ணில் கண்டால் போன்ற உவகையைத் தருவது யாது, அஃது உவமையாம். ஆம்! இதுவும் அதுவும் ஒவ்வும் ஒவ்வும் எனச் செய்யும் ஒவ்வியம் ஓவியம் ஆயமை போல. ஒவ்விய வொன்றைக் கவினுற உரைக்குங்கால் உளத்துண்டாம் உவப்பே உவமை ஆயிற்றாம். உவமை என்னும் சொல்லில் உவ என்பது வினைப்பகுதி. மை என்பது விகுதி. ஆகவே உவ என்பதே உயிர்நாடியான உறுப்பு என்றார் பாவாணர் (தேவ.) நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவழக் கூர்வாய் செங்கால் நாராய் என்னும் உவமையைப் பாவலன் வாய் கூறியது கேட்டுக் காவலன் பெற்ற களிப்பு பெருவரலாறாகி விடவில்லையா? இதோ பொய்கைப் புலவன் தாம் அமைத்த உவமையை எண்ணி எத்தகு உவகை கொள்கிறார். ஓஓ உவமன் உறழ்வின்றி ஒத்ததே காவிரி நாடன் கழுமலம் கொண்டநாள் மாவுதைப்ப மாற்றார் குடையெலாம் கீழ்மேலாய் ஆவுதை காளாம்பி போன்ற புனல்நாடன் மேவாரை அட்ட களத்து - களவழி. 36 பசுக்களால் எற்றுண்ணும் காளான் போலக் களிறுகளின் எற்றுதலால் பகைவேந்தர் குடைகள் எற்றப்பட்டு வீழ்கின்றனவாம். உவமையால் பொருள் புலப்பாடு ஆதலை, உவம இயல் மேற்பொருள் புலப்பாடு கூறிய மெய்ப்பாட்டியலோடு இயைபுடைத்து, என்னை? உவமத்தாலும் பொருள் புலப்பாடே கூறுகின்றான் ஆகலின். எங்ஙனமோ எனின், ஆபோலும் ஆமா என்றக்கால் ஆமா கண்டறியாதான் காட்டே சென்றவழி அதனைக் கண்டால் ஆபோலும் என்னும் உவமையே பற்றி ஆமா இதுவென்று அறியுமாகலான் என்பது என்று விளக்குகிறார் பேராசிரியர் (தொல். பொருள் உவம்.1) உவமைக் கொள்கலம் சங்கச் சான்றோர் பாடல்கள் என்பதை அறிந்தால் அதன் அருமையும் பயனும் சுவையும் நன்கு புலனாம்! உவகை ஊற்றுக்கண் உவமை என்க. உவகை கொண்டான் ஒருவன், அவ்வுவகையைப் பிறரும் தாம் கண்டவாறே கண்டு மகிழச் செய்து வைத்த சொல்லோவியம் உவமை எனல் சாலும். உவரி: கடல்சார்ந்த உவர்மண் நிலத்தில் உண்டாகிய ஊர் உவரி யாகும். கீழைக்கடல் முகவை மாவட்டத்து ஓர் ஊர் உவரி. பிசிர் என்பதும் அது. உவர்: உவர் > உயர். உ, உயரப் பொருட்டது. உச்சி, உயர்வு. உயர்ந்து எழும்பும் மண் உவர்மண். அம்மண்ணின் சுவை உவர்ப்பு. உவர்ப்பு > உப்பு. உவர்நீர்ப் பெருக்குடைய கடல் உவரி. பண்டை ஊர்ப்பெயர்களுள் ஒன்று உவரி; அது கீழைக் கடல் சார்ந்திருந்த துறைமுகம். தெண்கண் உவரிக் குறைக்குட முகவை - அகம். 207 அறுகுளத் துகுத்தும் அகல்வயற் பொழிந்தும் உறுமிடத் துதவா துவர்நிலம் ஊட்டியும் வரையா மரபின் மாரி - புறம். 142 களர் நிலம் என்பதும் இது. * களர் காண்க. உவர்மண்: களர் நிலத்துமண் உவர்மண். உளைமண் என்பதும் இது. இம்மண்ணின் மேற்படிவு பழுப்பு நிறமானது. உவர் மண்ணை எடுத்துக் கரைத்துத் தெளிநீரை உலரவிட்டால் உவர்மண் எடுக்கலாம். இப்படிவு அப்பளக் காரம் எனப்படும். அப்பு + அளம் + காரம். அளம் = உப்பு; உப்பளம். உவர்மண் கறைபோக்கலாம். சலவைக்குச் சவர்க்காரம் போல் பயன்படும். உவர் > சவர். காழியர், கவ்வைப் பரப்பின் வெவ்வுவர்ப்பு ஒழியக் களரி பரந்த கல்நெடு மருங்கின் - அகம். 89 உவர்க்கண் ஊர்ப் புல்லங்கீரனார் என்பார் சங்கச் சான்றோருள் ஒருவர். உவலிப்பு: உவல் > உவலி > உவலிப்பு. உவப்பு நிலையை அழித்தது உவலிப்பு. வெறுப்பை ஆக்குவது என்னும் பொருளது. உவலிப்பு ஓமலிப்பு (ஓவலிப்பு) எனவும் வழங்கும். உன்னோடு ஓமலிப்பாகப் போய்விட்டது என்பது வழக்கு. உவவுமதி: உவவுமதி = முழுமதி அல்லது நிறைமதி. உவவுமதி > உவா. உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை - புறம்.3 மகிழ்வால் நிறைதல் உவகையாம். ஒளியால் நிறைதல் உவாவாம். உவியல்: அவியல் > உவியல். அகரம் உகரமாய் உயிர்த் திரிபு இது; இத்திரிபு புலவு அவியலுக்குரிய தாயிற்று. பலவகைக் காய்கறிகளை இட்டு அவிப்பது அவியல், அதனொடும் அவியல் புலவைக் கலந்து உண்ணலால் உவியல் ஆயது போலும்! பன்றி கிழங்கு தோண்ட உழுத உழவு; குறவர் உழாது விதைத்த தினை; நன்னாளில் புதிதுண்ண வேண்டி மரையாவைக் கறந்த பாலொடு மான்தடி புழுக்கப்பட்ட புலால் நாறும் பானை; உலைநீராக வார்த்துச் சந்தன விறகால் உவிக்கப்பட்ட சோறு இப்படி ஓர் உவியல்! (புறம். 168) குறுமுயலின் குழைச் சூட்டொடு நெடுவாளைப் பல்லுவியல் பழஞ்சோற்றுப் புகவு அருந்தி -புறம். 395 இப்படி ஓர் உவியல். தமிழருக்குச் சொல்லுக்கா பஞ்சம். உவை: கள் என்பது பல என்பதன் இறுதி(ஈறு) எ-டு: அவர்கள். பூரியர்கள், மரங்கள். பயிருக்கு இடையூறாகச் செறிந்து கிடக்கும் புல் பூண்டுகள் களை எனப்படும். களைக் கொட்டு ஒரு கருவி. களைகட்டல் - தொழில்; அது களை வெட்டுதலாம். குமரி மாவட்டத்தில் உவை யென்பது களையைக் குறிக்கும் வழக்குச்சொல்லாகும். உவை செறிவு என்னும் பொருளில் வருதல் இது. உவோச்சனார்: உவச்சு + அன் + ஆர் = உவோச்சனார். உவச்சு > உவோச்சு. உவச்சு = நெய்தல் நிலம். இவர் பாடிய அகப்பாடல்கள் 32. அவற்றுள் 31 பாடல்கள் நெய்தல் திணை சார்ந்தவை. ஒன்று குறிஞ்சித் திணைப் பாடல் எனினும் நெய்தல் சார்ந்த குறிஞ்சியேயாம். ஆதலால் நெய்தல் நிலப் பெயரால் உவோச்சனார் எனப்பட்டார். வகர ல கர வேறுபாடு பெரிதும்இல்லாச் சிக்கலால் உலோச்சனார் எனப்பட்டார். உவோச்சனார் எனப் பாட வேறுபாடு கொண்டார். உழக்கு: உழக்கு:1 உழ > உழக்கு; ஏவல் பொருளது. உழக்குதுல் = மிதித்தல், கலக்குதல், அதரித்திரித்தல். உழக்கு:2 அளவைக் கருவி. கலப்பை மண்ணைக் கிழித்து உள் செல்லுதல் உழவாகும் அது போல் தவசக் குவியலுள் புகுந்து முகப்பது உழக்கு என்னும் முகத்தல் அளவைப் பெயராயது போலும் ! ஆழாக்கு, உழக்கு, உரி, நாழி, மரக்கால் , கலம் என்பவை பழநாள் முகத்தலளவைக் கருவிகள். அவை மூங்கிலின் கணுவுக்குக் கணு அறுத்து அமைக்கப்பட்டது. ஆதலால், வெதிர் உழக்கு நாழியாற் சேதிகைக் குத்திக் குதிரை உடல் அணி -கலி. 96 செய்வதைக் கலித்தொகை உரைக்கிறது. உழத்தல்: உழத்தல் = துயருறுதல். யாப்புப் பிணி உழக்கும் -பெருங். 2: 17: 70 உழத்திப் பாட்டு: உழவர் புகழ் உலகறிந்தது; உழவு என்றோர் அதிகாரம் வள்ளுவ வாய்மொழியாக இலங்குவதும், ஏர் எழுபது, திருக்கை வழக்கம் என்னும் நூல்களைக் கம்பர் இயற்றியதும் உழவின் பெருமையை விளக்குவனவாம். ஏரோர் களவழி என்னும் தொல்காப்பியச் செய்தியும் ஏர்மங்கலம் பாடும் இளங்கோவடிகள் இசைச் செய்தியும் எண்ணத் தக்கன. உழத்திப் பாட்டு என்னும் நூல்வகையைப் பன்னிரு பாட்டியல் (164) தருகின்றது. அதன் இலக்கணத்தை, புரவலற் கூறி அவன்வா ழியவென் றகல்வயற் றொழிலை ஒருமை உணர்ந்தனன் எனவரும் ஈரைந் துழத்திப் பாட்டே என்கின்றது. பத்துப்பாட்டே அளவாகவும், புரவலர் புகழ் கூறி வாழ்த்துவதும் உழுதொழில் திறம் கூறுவதுமே பொருளாகவும் இவ்வுழத்திப் பாட்டு சுட்டப் பெறுகின்றது. உழத்திப் பாட்டின் வளர்ச்சியே பள்ளு என்னும் நூலாம். * பள்ளு காண்க. உழவை: உழலுதல் = சுழலுதல். உழலுதலாக அமைந்தது உழலையாம். தொழுவிலும் தோட்டத்திலும் மாடுகள் உள்ளே புகாதிருப்பதற்கு அமைக்கப்படுவது உழலை ஆகும். நுழை வாயிலின் இருபாலும் துளையிட்ட மரத்தூண் அல்லது கற்றூண் நிறுத்தி அத்துளைகளில் கம்புகளைத் செருகி வைப்பது உழவையாம். குறுக்கே உட்செலுத்தும் கம்புகள் எப்பாலிருந்தும் செலுத்தவும் எடுக்கவும் தக்கதாக இருக்கும். பழங்காலக் கோட்டைக் கதவுகளின் உள்தாங்கலாக அமைக்கப்பட்ட எழூஉ அமைப்பைப் பின்பற்றி உழவர் அமைத்துக் கொண்டது இவ்வுழலையாம். உழலை, மரத்தைப் போல் தொட்டன ஏறு -கலித். 106 தொட்டன = நுழைத்தன. உழவாரத் தொண்டு: உழவாரம் + தொண்டு = உழவாரத் தொண்டு. உழவாரம் = உழவுத் தொழிலுக்குப் பயன்படும் களைக் கொத்தி, மண்வெட்டி போன்றதொரு கருவி. அதனைக் கொண்டு அப்பரடிகள் திருக்கோயில் திருத்தொண்டு செய்தார். அதன் வழியாக உடலுழைப்பால் செய்யும் பொதுத் தொண்டு உழவாரத் தொண்டு என இந்நாள் வழங்குகிறது. உழவாரத் திருப்பணி உழவாரப் பணி என்பனவும் இது. உழவு: உழவு:1 உளவு > உழவு. உள் > உள > உளவு. மண்ணின் உள்ளே துளைத்துச் செல்லும் கலப்பையால் செய்யும் தொழில் உளவு. முன்னை ளகரம், பின்னை ழ கரத் திரிபு உழுதலாம் தொழில் உழவாம். உழலுதல் என்பது சுழலுதல்; வட்டமிடல். உழவுத் தொழில் செய்வார் உழவர் எனப்பட்டனர். உழவு என்பது ஏரால் வட்டமடித்து நிலத்தை அகழ்தலாகும் அதனையே, சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை திருக். 1031 என்றார். உழுதல் தொழிலும், அதன் துயர்ப்பாடும் விளக்கவே சுழன்றும் என்றும், உழந்தும் என்றும் கூறினார். பலவகைத் துயர்களுக்கும் இடமாகி உழலும் தொழில் உழவேயாம். உழத்தல், உழப்பு, உழைச்சல், உழலல் ஆகியவையும் அவ்வழிப்பட்ட சொற்களும் பலவகைத் துயர்களுக்கும் இடமாதல் பொருளவே யாம். இயற்கையொடு போராட்டம். பருவம் தவறாமல் பாடுபடும் முயற்சி, ஒவ்வொரு நாளும் புரிய வேண்டும் கட்டும் காவலும் ஆயவெல்லாம் கடுமை மிக்கனவே. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழவுக் கோலும் மிஞ்சாது என்பது பழமொழி. இயற்கை தவறினால் அதன் விளைவை முற்றாக அடைபவர் உழவரே. ஆனால், உழுவாரே உலகத்தார்க்கு ஆணி என்பதும் உழவினார் கைம்மடங்கின் விழைவதுவும் விட்டேம் என்பார்க்கும் வாழ்வில்லை என்பது உண்மை. ஈரம்பட்ட செவ்விப் பைம்புனத்து ஓரே ருழவன் போலப் பெருவிதுப் புற்றன்றால் நோகே யானே -குறுந். 131 என்பது உழவன் துயர். பிற்காலப் பாடல் ஒன்று; ஆவீன மழைபொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாக மாவீரம் போகுதென்று விதைகொண் டோட வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச் சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத் தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பம் தீண்டக் கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக் குருக்களோ தட்சணைகள் கொடுவென் றாரே -இராமச்.தனிப். துயரமிக்க தொழில் எனத் தம் தொழிலுக்குப் பெயரிட்டி ருப்பாரா, பெயரிட்டிருந்தாலும் ஏற்பாரா என்னும் ஐயம் வரலாம். ஆனால் உழவு என்னும் சொல் தோன்றிய பின் அத்தொழில் செய்வார் அடையும் துயர்களைக் கண்டு கொண்டும் உண்டாய சொற்களாம் உழத்தல்,உழலல், உழற்றல் முதலியவை எனின் சிக்கல் இல்லையே. உழவால் உழவர் எனப் பெயர் கொண்ட அவர்கள், ஏற்றம் இறைத்தல், நீர் பாய்ச்சல், களைகட்டல், உரமிடல் வண்டி யோட்டல் களமடித்தல் முதலாம் தொழில்களைச் செய்தாலும் இவற்றுக்குத் தலைப்பட்ட உழவாலேயே உழவர் எனப் பட்டனர். உழவினார் , உழுவார் என்பாரும் அவர். உழத்தியர் என்பார் உழவப் பெண்டிர். * உழலை காண்க. உழவு :2 உழுதல் தொழிலை உழவு என்பது பொது வழக்கு. ஆனால் மாட்டுத் தரகர், உழவர் ஆயோரிடை உழவு என்பது வயது என்னும் பொருளில் வழங்குகின்றது. உழுவதற்கு ஏற்ற வயது என்பது கொண்டு அதன் அடிப்படையில் இரண்டு உழவு, மூன்று உழவு என வயது மதிக்கப்பட்டிருக்க வேண்டும். வேந்தர்களின் ஆட்சியாண்டும்,துறவோரின் ஆட்சியாண்டும் கணக்கிடப்படு வதை எண்ணலாம். உழிஞை மாலை: பகைவர் ஊர்ப் புறஞ்சூழ, உழிஞைப் பூமாலை சூடிப் படை வளைப்பதைக் கூறுவது உழிஞை மாலையாகும். உழிஞை மாலையே ஒன்னர் ஊர்ப்புறம் ஒருங்குடன் வளைக்க உழிஞைத்தார் சூடிப் படைசெலும் பண்பைப் பகர்தல் என்ப -பிரப. தீபம். 13 முப்பது பாடல்களை உடையது உழிஞை மாலை எனப் பிரபந்த மரபியல் கூறும். முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும் அனைநெறி மரபிற் றாகும் என்ப -தொல். 1011 என வரும் நூற்பா இவண் கருதத்தகும். உழிஞ்சில்: வாகை. வாகையின் பூ மெல்லிய துய்களாக அமைந்தது. மென்காற்றிலும் உழலுவது. அப்பூவைக் கண்டு வாகையை உழிஞ்சில் என்றனர் முந்தையோர். உளைப்பூ என்பதும் அதுவே மயிர்க்கால்களைப் போல மெல்லியது அது என்பது நோக்கத் தக்கது. உழலுதல் = அசைதல் சுழலுதல். துய்வீ வாகை -பதிற். 43 கள்ளியங் காட்ட கடத்திடை உழிஞ்சில் -அகம். 53 உழுஞ்சில் எனவும் இது வழங்கியது. உழுந்து: உழுஞ்சிலங் கவட்டிடை இருந்த பருந்து -புறம். 370 உழுந்து இந்நாளில் பெரிதும் சிற்றுண்டி வகைக்கே பயன்படுத்தப் படுகிறது. இட்டவி, தோயை, வடை முதலிய வற்றுக்குப் பயன்படல் எவரும் அறிந்தது. ஆனால் பழநாளில் உயர்ந்த விருந்துணவாகவும், பேருண்டி யாகவும் பயன்பட்டது. கேழ்வரகுக் களிபோல் உழுந்தங்களி கிண்டித் திருமண விருந்துக்குப் படைத்தனர். உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை பெருஞ்சோற் றமலை நிற்ப -அகம். 86 பொருள்: உழுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த செவ்விய குழைதலையுடைய பொங்கலோடு பெரிய சோற்றுத் திரளையை உண்டல் இடையறாது நிகழ (உரை வே.வி) துழந்து அடுதல் போல் (குறுந். 167) உழந்து (கிண்டி, கிளறி) அடுதற்கு உரியதை உழுந்து என்றனர். இன்றும், உழுந்தங் களி உணவு சிற்றூர்களில் காணலாம். உழுவல்: உழு + வ் + அல் = உழுவல். உழுவல் அன்புடையீர் எனக் கடிதங்களில் சிலர் எழுதக் காண்கிறோம், அந்த உழுவல் என்பதன் பொருள் என்ன? விடாது தொடரும் அன்பு என்பது இதன் பொருளாம் (வெ.வி.பே). உழுது பண்படுத்தப்படும் நிலம் போல வழிவழியாகச் செவ்விய வகையில் தொடரும் பழமை எனப்படும் உயரன்பே உழுவலன்பாம். உழு என்பதன் (உழவு) அடியாக வரும் சொல். அன்பு நண்பு ஆயவற்றின் தொடர்ச்சி கை செய்தூண் மாலையவர் (திருக். 1035) தொடர்ச்சி போல்வதாகலின் உழுவல் எனப்பட்டதாம். அவ்வன்பு கிழமையை (உரிமையை) அறுத்திடாததும், உரிமையை விட்டுத் தராததுமாம் அன்பாம். உழுவை: உழுவை:1 உளுவை > உழுவை. அடர்ந்த காடு, புதர் ஆயவற்றுள் பிற உயிரிகளும் பிறரும் அறியாவாறு மறைந்திருந்து தாக்கும் புலி உழுவையாம். கடையலங் குரல வாள்வரி உழுவை பேழ்வாய்ப் பிணவின் விழுப்பசி நோனாது இரும்பனஞ் செறும்பின் அன்ன பரூஉமயிர்ச் சிறுகட் பன்றி வருதிறம் பார்க்கும் -அகம். 277 வாலைச் சுழற்றிய சுழற்றில் வலிமையை வரப்படுத்திப் பாய்ந்து தாவும் திறத்தால் உழுவை எனப்பட்டதுமாம். உழலும் வாலையுடையது உழுவை என்ப. உழுவை:2 மீன் வகையுள் ஒன்று. பூச்சி வகையுள் ஒன்றுமாம். மணலொடு ஒன்றித் துளைத்தும் கோடிட்டுச் செல்லும் மீனும் நீர்ப்பூச்சியும் உழுவை எனப்படும். உழுவை:3 பொறிவகையில் உழுபொறி உண்டாகியுள்ளது. ஏர் என்றும் கலப்பை என்றும் நம் முன்னோர் பயன் கொண்ட கருவி. அறிவியல் வளத்தால் உழுவை கண்டு பயன்படுத்துகிறது. உழு கருவியை உழுவை என்றது நயமிக்கதாம். உழுவைக்குப் பின்னர் இதுகால் இழுவையும் வாய்த்துளது. * இழுவை காண்க. உழை: உழை:1 உழை = உழைக்க என்னும் ஏவல் உழை = இடப்பொருளது; என்னுழை வந்தான் எனின் என்பக்கம் வந்தான் என்பதாம். ஏவலும் இடமும் உழை தருவானேன்? ஏவுவார் ஓரிடத்தும், ஏவல் புரிவார் தொலைவாம் ஓரிடத்தும் இருப்பினும் இந்நாள் அறிவியல் வளத்தால் செயலாற்ற இயல்வதாம். ஆனால், அவரே ஓரிடத்தர் எனின் மிக நலமாம். முந்தை நாளில் உழைக்க ஏவுவாரும் உழைப்பாரும் பக்கம் பக்கமாக இருந்து ஒரு கண்காணிப்பில் செய்யப் பட்டதை இவ்விரு பொருள் தரும் உழை வெளிப்படுத்துகிறது. கண்காணி, கண்காணிப்பு, கண்காண, கண்காணகர் (துணைவேந்தர்) என்னும் பழஞ்சொற்களும் புதுச்சொற்களும் இதனைக் காட்டும். கண்காணி கங்காணி எனத் தோட்டத் தொழில் பதவியாயிற்று. நெருங்கி இருந்து உதவுவார் உழையர் எனப்பட்டனர். உழை:2 உழை என்பது மான் என்னும் பொருளும் தந்தது. கூட்டம் கூட்டமாக ஒன்றனோடு ஒன்று உழையதாக - நெருங்கி ஒன்றியதாக இருந்தமையால் மான் உழை எனப்பட்டது. பகடுதுறை ஏற்றத்து உமண்விளி வெரீஇ உழைமான் அம்பிணை இனன்இரிந் தோட -அகம். 173 பெயினே, விடுமான் உழையினம் வெறுப்பத் தோன்றி இருங்கதிர் நெல்லின் யாணர் -நற். 311 உழை:3 யாழ் நரம்புகளுள் ஒன்று. அது நான்காம் நரம்பு. உழை எனப்படுவது. இப்பாலுக்கும் அப்பாலுக்கும் ஊடுபட்டு நிற்பது உழையாயிற்று. கிளைக்குற்ற உழைச்சுரும்பின் கேழ்கெழு பாலையிசை ஓர்மின் (பரிபா. 11) உழைச்சல்: உழைப்பால் உண்டாகும் உடல் உறுப்புகளில் உண்டாம் அலுப்பு உளைச்சல், நெருக்கடி இடர் பழி ஆகியவற்றால் உண்டாகும் மனத்துயர் உழைச்சல் ஆகும். உழலுதல், உழலல், உழத்தல் என்பன வெல்லாம் மன வொருமைப்பாடு இல்லா நிலைப்பட்டனவாம் கை கால் உழைச்சல் என்பது வழக்கு. உழைப்பு: உழு > உழை > உழைப்பு. உழவுத் தொழிலின் அடிப் படையாகத் தோன்றிய சொல் உழைப்பு ஆகும். எல்லா உழைப்புகளும் பண்டு உழவின் அடிப்படையில் அமைந் திருந்தமை எண்ணத் தக்கது. தச்சு, கொல்லு, நெயவு, வளைவு முதலியவற்றை எண்ணுக. *` தொழில் காண்க. உழையாச் சோறு: உழையா + சோறு = உழையாச் சோறு. உழையாமல் உண்டு திரிவதே வாழ்வாகினாரை உழையாச்சோறு எனல் மக்கள் வழக்கு. வெட்டிச்சோறு, தண்டச்சோறு என்பனவும் இது. உழையாச் சோற்றுக்கு உழைப்பருமை எப்படித் தெரியும்? உளருதல்: உள் > உளர் > உளர்தல். காற்று உள்புகுமாறு கூந்தலுள் விரல்களை விட்டு உலரச் செய்தல். உரைத்த சாந்தின் ஊரல் இருங்கதுப்பு ஐதுவரல் அசைவளி ஆற்றிக் கைபெயரா ஒலியல் வார்மயில் உளரினள் கொடிச்சி -அகம். 102 உளவு: செல்லுதற்கு அரிய இடத்தும் உட் சென்று கேட்டற்கு அரிய செய்திகளையும் கேட்டு, ஆங்காங்குள்ள நிலைகளை ஐயப்பாடு இல்லாமல் அறிய வல்ல ஒற்று உளவு ஆகும். வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வ தொற்று -திருக். 584 உளவுக்கு, ஒற்று வேவு வேய் என்பவை திவா. உளவு, உளவுத்துறை என்பவை அதன் இயலுணர்ந்த பின்னைச் சொல்லாம். உளறுதல் குழறுதல்: உளறுதல் =பொருளறிவாரா முதியர் பேச்சு. குழறுதல் = பொருளறிவாராக் குழவியர் பேச்சு. வாய்தடுமாறுதல் உளறுதல் ஆகும். நாவளைவு நெளிவுப் பயிற்சி வாராமையால் குழறுதல் நிகழும். உளறுதல் பழிப்புக்கு இடமாகும். குழறுதல் இளையரிடத்திருந்து வருங்கால் குழலினும் யாழினும் இனிதெனத் துறவோராலும் கொள்ளப் படும். உளி: உளி:1 உள் + இ = உளி. மரத்தின் உள்ளே துளைக்கவும் செதுக்கவும் இருப்புருக்கால் ஆகிய உளி பயன்படுத்தப்பட்டது மரத்தின் உள்ளே துளைத்தும் செதுக்கியும் செல்வதால் உளி எனப் பட்டது. உள்ளே செல்வது உளி. பின்னே மற்றைத் துளை யிடுவதற்கும் உளி பொதுப் பெயராயிற்று. அறுக்கும் போது, அறுக்கும் மரப்பகுதியை அகலப்படுத்த வைக்கும் ஆப்பு வேறானது. அகப்பு > ஆப்பு. அகலப்படுத்துவது பின் வழக்கில் உளிக்கும் ஆப்புக்கும் வேறுபாடு இல்லா நிலையும் உண்டாயிற்று. உளிவாய், வெம்பரல் அதர குன்றுபல நீந்தி -அகம். 33 தசநான் கெய்திய பணைமருள் நோன்தாள் இகன்மீக் கூறும் ஏந்தெழில் வரிநுதல் பொருதொழி நாகம் ஒழியெயி றருகெறிந்து சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன் கூருளிக்குயின்றஈரிலை.....gh©oš” நெடுநல். 155-120 உளி:2 ஒருவரை நினைந்து ஆர்வத்தால் அழைப்பது விளி எனப்படுதல் பொதுவழக்கு. உள்ளி அழைக்கும் இதனை உளி என்பது Éளவங்கோடுtட்டாரtழக்காகும்mவனைcளிv‹றால்அtனைக்கூ¥பிடுஎ‹னும்ghUsjh«. உளியம்: உளி + அம் = உளியம் = கரடி. உளி போன்ற நகத்தை உடையது. காம்பமல் இறும்பில் பாம்புபடத் துவன்றிக் கொடுவிரல் உளியம் கெண்டும் வடுவாழ் புற்றின் வழக்கரு நெறியே -அகம். 88 உளு: உள் + உ = உளு. மரத்தின் உள்ளே துளைத்துச் செல்லும் ஒரு வகைப் புழு. இந்தப் பலகை கதவுக்கு ஆகாது உளுப்பிடித்துள்ளது என்பது உலக வழக்கு. உளுவை: மணலின் உள்ளாக எளிதில் மறையும் ஒரு வகைச் சிறுமீன் உளுவைக் குஞ்சுக்கு நீச்சுக் கற்றுத்தர வேண்டுமா? உளுவையை விட்டுக் குரவையைக் பிடி என்பவை பழமொழிகள். குரவை = பெரிய மீன். * உழுவை காண்க. உளை: உளை:1 உள் + ஐ = உளை = உள்வாங்கும் மண். உளைமண் = சேறு, அளறு. உளை:2 உலை > உளை > உளைவு. மேலும் கீழும் ஆடி அசைதல்; பிடரி மயிர், உளைமான் துப்பின் -அகம். 102 உளை:3 உளைதல் = உள்வலி உண்டாதல். உள்குதல்: உள்குதல் = நினைதல். * உட்குதல் காண்க. உள்வரி: உள் + வரி = உள்வரி. இறையிலி நிலங்கட்கு வரியிலாரும் வரிக்கூறு செய்வாரும் கணக்கில் உட்படுத்தி எழுதியதற்குரியது உள்வரியாகும் இது கணக்கில் எழுதியதற்கு இடும் சிறுவரியாகும். முன்பு காணியுடைய மன்றாடிகளுக்கே காணியாய் பதினொன்றாவது பாசன முதல் அந்தராயம் பாட்டம் உள்பட தேவநாதம் இறையிலியாக இட்டு வரியிலாரும் வரிக்கூறு செய்வார்களும் எழுத்திட்ட உள்வரி தரச் சொன்னோம் (க.க.அ.மு) உள்வாங்கல்: உள்வாங்கல்:1 கடல்நீர் படிப்படியே நிலத்தில் இருந்து பின்வாங்குதலை உள்வாங்கல் என்பர். பலவேளைகளில் கடற்கரைப் பகுதிகளில் உள்வாங்கலும், மேலெழலும் நடைமுறையாகி விட்டமையால் பருவநிலை அறிவிக்கும் அறிவியல் ஆய்வர் அச்செய்திகளை மக்கள் அறிய வெளிப்படுத்தி வருதல் இந்நாள் வழக்கமாயிற்று. உள்வாங்கலை நம்பி உடனே புகுதல் ஆகாது; மேலேழும்பி வந்து இழுத்துப் போதலும் உண்டு. ஆதலால் கடலோர மக்களுக்கும் பரதவர்க்கும் அக்குறிப்பு மிகத் தேவையானதாம். உள்வாங்கல்:2 சொல்வார் கருத்தைக் கேட்பார் புரிந்துகொண்டு மனத்திற் கொள்ளல் உள்வாங்கல்:3 ஆழக்குழி தோன்றுதல். திடீரென்று மண் உள்வாங்கி விட்டது உள்ளக் களித்தல்: உள்ள + களித்தல் = உள்ளக்களித்தல். உள்ள = நினைக்க. உள்ளத்தில் நினைத்த அளவிலேயே உண்டாகும் மகிழ்ச்சி உள்ளக் களித்தலாம் . அக் களித்தல் காதலால் ஏற்படுவதாம். உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு -திருக். 1281 உள்ளது உரியது: உள்ளது = கையிலுள்ள பொருள்; தங்கம், வெள்ளி, பணம் முதலியன. உரியது = மனை, நிலம் முதலிய உரிமைப் பொருள். உள்ளது உரியதை விற்றாவது செய்ய வேண்டியதைச் செய்துதானே தீர வேண்டும் என்பது. இதனினும் உச்சமானது வில்லாததை விற்றாவது கொடு என்பது. வில்லாதது என்பது தாலி! மனை, நிலம் முதலியன விற்பார் வாங்குவார்க்கு இதனை வழிவழியாய் ஆண்டு அனுபவித்துக் கொள்வீர்களாகவும் என உரிமைப்படுத்தும் உறுதிமொழி எழுத்து வழியாகத் தருதல் அதன் உரிமையைத் தெளிவாக்கும். எனவே, வழிவழி யுரிமை யாகவோ, விலைமானம் தந்து வாங்குதல் உரிமையாகவோ வந்த பொருள் உள்ளது எனப்படும். உள்ளம்: உள் + அகம் = உள்ளகம் > உள்ளம். ககரம் தொகுத்தல் வகை யால் உள்ளகம், உள்ளம் ஆயது. அகம் அம் ஆதல் தொகுத்தல். எ-டு: th‹ + mf« = thdf« ; fh‹ + mf« = fhdf« > fhd«.> வானம், உள்ளுதல் = நினைத்தல்; உள்ளும் பகுதி உள்ளமாம். உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் -திருக். 282 உள்ளற்க உள்ளம் சிறுகுவ -திருக். 798 கல்வி என்னும் , உள்ளத்தே பொருளிருக்க உலகெல்லாம் தேடி உழல்வதேனோ? -விவேக உள்ளாட்டம்: உள் + ஆட்டம் = உள்ளாட்டம். வெளிப்படத் தோன்றும் ஆட்டத்தின் உள்ளாக இருவர் கூடிப் பேசிக் கொண்டு மூன்றாமவரைத் தோற்கடிப்பது உள்ளாட்டமாகும்.. கள்ளாட்டம் ஆடினாலும் உள்ளாட்டம் ஆடக் கூடாது என்பது .களவு செய்தலிலும் உட்களவு ஒருவர்க்குரிய பங்கைக் குறைத்து விடுவது. இத்தகைய உள்ளாட்டத்தால் ஒதுங்கியவர் களைக் கொண்டு காவல்துறை கள்ளாட்டத்தாரைப் பற்றிக் கொள்ளல் வழக்காக உள்ளது. தீய களவிலும் உட்களவாவது உள்ளாட்டம். உள்ளார்ப்பு: உள் + ஆர்ப்பு = உள்ளார்ப்பு > உள்ளாப்பு. உள்ளத்தே அடக்கமின்றி ஆரவாரம் செய்தல். உள்ளதைச் சொன்னால் உள்ளாப்பு: அதைச் சொல்ல வில்லையானால் நொள்ளாப்பு. * நொள்ளை காண்க. உள்ளாலை: உள் + ஆலை = உள்ளாலை. கோட்டைக்குள் அமைந்த சுற்றிடம். தஞ்சாவூர் உள்ளாலைப் பாண்டி வேளத்து இருக்கும் இடையன் பனையூர் காரி (த.பெ.கோ) (க.க.அ.மு). உள்ளாலை கணபதியார்க்கு நாட்போனகம் இருநாழி (க.க.அ.மு) உள்ளாளி: நோட்டம் பார்ப்பவன், கூட்டுக் கள்வன். உள்ளாள் மறைவாகவும் துணையாகவும் இருந்து பணி செய்யும் ஆள். அவன் உள்ளாளி எனவும் ஆவான். அவன் செயல் உள்ளாம். ஆளுமை ஆளின் தன்மை. எந்தத் திருட்டுக்கும் . உள்ளாள் இல்லாமல் முடியாது. உள்ளாள் ஒருவன் துப்புத் தந்தால்தான் வெளியாள் புகுவான். வெளியாள் புகுந்து திருடும் போது உள்ளாள் குறிப்புத் தருவான்; பாதுகாப்புத் தருவான். கள்ளாளியை விடு ஐயா, உள்ளாளியைக் கண்டுபிடி. தானே துப்புத் துலங்கும் என்பது வழக்கு. உள்ளாறு: உள் + ஆறு = உள்ளாறு. ஆற்றின் உள்ளே அமைந்த திட்டு உள்ளாறு ஆகும். அரங்கம் என்பதும் துருத்தி என்பதும் உள்ளாறு என்பதும் ஒரு பொருள. அரங்கம் = திருவரங்கம்; துருத்தி = திருப்பூந்துருத்தி. உள்ளாறு = நெல்லை மாவட்டத்து ஓர் ஊர். உள்ளாற்றுக் கவலை -புறம். 219 கவலை = இரண்டாகப் பிரியும் வழி. உள்ளான்: உள்ளான்:1 உள் + ள் + ஆன் = உள்ளான். நீரின் உள்ளே சென்று மேலே வரும் பறவை; நிலத்துள் குழி தோண்டிச் செடி கொடி அடிக்கீழ் உறையும் பறவை உள்; உள்ளான் என்பது அது. உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும் -சிலப். 10 : 117 உள்ளான் :2 உள்ளிருக்கும் உயிரோடும் இருப்பவன், உள்ளான். இல்லுள் அல்லது ஓரிடத்துள் இருப்பானும் உள்ளானே. உள்ளான்:3 (வி) உள்ளுதல் = நினைத்தல்; நினையாதிருப்பவன் உள்ளான். உள்ளி: உள் + ள் + இ = உள்ளி. நிலத்தின் உள்ளே இருக்கும் பூண்டு ஈர வெண்காயம், ஈரவுள்ளி. வெண்காயம் (வெங்காயம்) உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இல்லாமையால் உள்ளில் என்பது ஈறு குறைந்து உள்ளி எனப்பட்டதுமாம். வெள்ளைப் பூண்டு பல் பல்லாக இருப்பதும், உள்ளி வெறும் இதழ்த் தோலாகவே இருப்பதும் எண்ணத் தக்கவை. உள்ளிங்கம்: இங்குதல் இஞ்சுதல் என்பவை இழுத்தல் என்னும் பொருளன. உள்ளாக இழுக்கும் ஒன்று உயரம் தணிதல் வெளிப்படை. நாணம் தரும் செய்தி ஒன்றனைக் கேட்டுத் தலைகுனிதல் என்றும் நல்லோர் இயல்பு. இது, கருமத்தால் நாணுதல் ஆகும். இத்தகு நாணத்தை உள்ளிங்கம் என்பது மதுரை வட்டார வழக்காகும். உள்ளிருப்பு: உள்ளிருப்பு:1 உள் + இருப்பு = உள்ளிருப்பு. சேமிப்பு நிதி பண்டாரத்தின் மூலப் பொருளான இருப்பு நிதி (க.க.அ.மு). உள்ளிருப்பு:2 அலுவலகத்தின் உள் இருந்துகொண்டே பணி செய்யாமல் போராடுவதை உள்ளிருப்புப் போராட்டம் என்பது இன்றைய வழக்கு. உள்ளி விழா: உள்ளி விழா என்பதொரு விழா; அவ்விழா பழந் தமிழகத்தில் கொண்டாடப் பட்டதாக அறிகின்றோம். இரவுக்குறியாக வரும் தலைவனுக்கு உண்டாகும் தடைகளுள் ஒன்றாக உள்ளி விழா இறையனார் களவியலில் சுட்டப் படுகிறது. மதுரை ஆவணி அவிட்டமே, உறையூர்ப் பங்குனி உத்திரமே, கருவூர் உள்ளி விழாவே இவை போல்வன இரவுக்குறி இடையீட்டுக்குக் காரணமான ஊர் துஞ்சாமைக்கு எடுத்துக் காட்டாகக் கூறப்பட்டுள்ளது. ஊரே இரவெல்லாம் கூடியிருந்து உறங்காமல் விழா எடுத்தலால் தலைவன், தலைவியைக் காணத் தடையாயிற்று என்பதாம் (கள. 16- உரை). கொங்கு நாட்டவர், தம் இடையில் மணிகள் கோத்த கோவையைக் கட்டிக் கொண்டு தெருவில் ஆடும் ஆட்டம் உள்ளி விழா என்பதையும், அவ்வாட்டம் ஊரவர் அனைவராலும் பல்காலும் பேசப்படுவது என்பதையும், கொங்கர், மணியரை யாத்து மறுகின் ஆடும் உள்ளி விழா -அகம். 368 என்னும் செய்யுள் அறிய வைக்கின்றது. இதைப் பாடியவர் மதுரை மருதனிள நாகனார். ஆதலால் தமிழகப் பரப்பெல்லாம் அறியப்பட்ட விழா உள்ளி விழா என்பதை உணரலாம். மேலும் கொங்கு நாட்டு விழா கருவூரில் சிறப்பாக ஆடப்பட்டது என்பதால் கருவூர் அளவும் கொங்கு நாடு பரந்திருந்தமையும் புலப்படும். மேல் வரைக்கு அப்பால் வானவர் நாடு என வழங்கப்பட்டமை உண்டு. இவற்றால் அந்நாளில் உள்ளி விழா தமிழகப் பரப்பெல்லாம் அறியப்பட்ட மகிழ்வுடைய விழா என்பது தெளிவாகின்றது. தலைவியின் மணக் கொடையாகப் பெறும் பொருளைக் கருதின், கழுமலத்தில் வெண்குடையொடு பகைவரை அகப்படுத்திய நற்றேர்ச் சோழனின் பங்குனித் திங்களில் விழா எடுக்கும் உறந்தையொடு, உள்ளி விழா எடுக்கும் வஞ்சியும் சிறிதாகும் (ச.இ.பொ.க) என்பதால் வஞ்சிச் சிறப்பு உள்ளி என்பதறியப்படும். ஆனால், உள்ளி விழா எதற்காக எடுக்கப்பட்டது என்பது புலப்படவில்லை. ஆவணி அவிட்டம், பங்குனி உத்திரம் என்பவை சமயம் சார்ந்த விழாக்கள் என அறியலாம். உள்ளி அச்சார்பு இல்லாமல் பொங்கல் விழாப் போலப் பொது விழாவாக இருந்திருக்க வேண்டும் என எண்ண அப்பெயர் தூண்டுகிறது. உள்ளுவது அல்லது உள்ளப்படுவது உள்ளி ஆகும் மாந்தர் உள்ளும் உயர்வினது. தம் முந்தையர்களும், அவர்கள் வழங்கிய வாழ்வியல் கொடைகளும். அவற்றை வழிவழி வளர்த்து நமக்கு வைப்பு நிதியமாக வழங்கிய பேறும் எண்ணிய மகிழ்வின் வெளிப்பாடே உள்ளி விழாவாக இருக்கலாம் எனத் தோன்றுகின்றது. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அவர் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே - அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே - இதை வந்தனை கூறி மனத்தினில் இறுத்தி வாயுற வாழ்த்தேனோ? என்று புதுமைப் பாவலர் பாரதியார் பூரித்துப் பாடவில்லையா? இவ்வாறு, நாடு, மொழி, இனம், பண்பாடு ஆயவற்றை எண்ணி எண்ணி அவ்வெண்ண முதிர்வால் நாட்டு விழாவாக உள்ளி விழா நிகழ்ந்திருக்க வேண்டும் என முடிவு செய்யலாம்! வேறு தெளிவான சான்றுகள் வாய்க்கும் வரையேனும், இக் கருத்தைக் கொள்ளுதலில் குறையில்லை. வேறு கருத்துக் கிடைப்பினும் இக்கருதுகோள் ஏற்கத்தக்க - போற்றத்தக்க - கருதுகோளாக இருக்கக் கூடுமே யன்றித் தள்ளத் தக்கதாகாதாம். உள்ளீட்டு வகை: உள் + ஈட்டு + வகை =உள்ளே இருக்கும் பொருள் வகை. சாறு = நீர் போல் இருப்பது. சோறு = கட்டிச் சோறு போல் இருப்பது. சதை = வாழை, மா முதலியவற்றின் உள்ளீடு. சுளை = சீத்தா, பலா முதலியவற்றின் உள்ளீடு. அரிசி = நெல், கம்பு முதலியவற்றின் உள்ளீடு. பருப்பு = அவரை, துவரை முதலியவற்றின் உள்ளீடு. - தேவ. 3: 55 நீர் = தேங்காயில் இருப்பது தகணை = பனங்காயில் இருப்பது. நார் = பனம்பழத்தில் இருப்பது. உள்ளேன்: உள்ளேன் > உளேன். திண்ணைப் பள்ளிக் காலம் முடிந்து அரசினால் ஏற் படுத்தப் பள்ளிகளில் மாணவர் வருகைப் பதிவு உண்டாயிற்று. காலை மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் மாணவர் வருகைப்பதிவு எடுக்கப்படும். மாணவர் பெயரை ஆசிரியர் வரிசையாகச் சொல்ல மாணவர் எழுந்து உள்ளேன் ஐயா என்பது வழக்கம். இது, உளேன் ஐயா என்றும் வழங்கியது. உள்ளேன் என்பது வகுப்புக்கு வந்துள்ளேன் என்பதாம். உள்ளொட்டி: உள் + ஒட்டி = உள்ளொட்டி. உடுத்த உடையின் உள்ளுடையாக, உடுக்கும் இறுக்குடை உள்ளொட்டியாம். அவை மேல் உள்ளொட்டி கீழ்உள்ளொட்டி என இருவகையாம். இவை உடற்காப்பு மானக்காப்பு இரண்டற்கும் இன்றியமை யாதவை யாகும். துணிக் கடையின் ஒரு பகுதி உள்ளொட்டிப் பிரிவாக உள்ளமை எவரும் அறிந்தது. உள்ளொட்டிக்கெனவே தனிக்கடைகளும் உண்டு. பழநாள் போர்ப்புறம் ஆகிய திருப்பூர் உள்ளொட்டி உருவாக்கத்தில் சிறந்து நிற்கின்றது. உறக்காட்டுதல்: உறங்காமல் படுத்தும் குழந்தையை உறங்க வைத்தல் உயர்கலை. அதனைக் குறிக்கும் வகையால் உறக்காட்டுதல் என்பது தென் தமிழக வழக்கு. தாலாட்டுதல், பாடுதல், குருவி பொம்மை நிலா முதலியவை காட்டி அழுகையை நிறுத்திச் சோறூட்டி உறங்கச் செய்தல் என்பவை தழுவியது உறக்காட்டுதலாம். உறங்கும் நிலைகள்: படுத்தல் = கிடப்பு நிலை அடைதல். சாய்தல் = கால்நீட்டிக் கொண்டு தலையைச் சாய்த்தல். கிடத்தல் = உறங்காது படுக்கை நிலையில் இருத்தல். கண்வளர்தல் = கண்ணை மூடுதல். துஞ்சுதல் = கண்ணை மூடித் தூங்குதல். தூங்குதல் = தொட்டிலிலாவது தூங்கு கட்டிலிலா வது கண்படை செய்தல். உறங்குதல் = ஒடுக்க நிலையடைந்து அயர்ந்து தூங்குதல் -தேவ. 3: 55 துயிலுதல் = பஞ்சணையில் படுத்து உறங்குதல். கண்படை = கண்ணை மூடிக் கொண்டு சிந்தித் திருத்தல். கண்ணயர்தல்= சோர்வுடன் படுத்துறங்குதல். உறல் பெறல்: உறல் = உறுதல்; மிகுதியாக உண்டாதல்; வேண்டுவ வேண்டுமாறு கிடைத்தல். பெறல் = பெறுதல்; ஒருவர் அல்லது ஒன்று தரப்பெறுதல். நாடென்ப நாடா வளத்தன என்பது பயனுறல்; நாடல்ல நாட வளந்தரு நாடு என்பது பயன் பெறல். பயனுறல் நாட்டில் நற்சான்று; பயன்பெறல் நாட்டின் அற்சான்று. நற்சான்றுப் பட்டி என்பதும், கொளா நல்லி என்பதும் முகவை மாவட்டத்தும் ஈரோடு மாவட்டத்தும் அமைந்த ஊர்கள். முன்னது நச்சாந்துப் பட்டியாய்ப் பொருள் புலப்படாது ஆயிற்று. பின்னது கொளக்கொளக் குறையா கூழுடை வியனகர் என்னும் சங்கச் சான்றோர் உரையை நினைவூட்டுவதாயிற்று. உறி: உறு + இ = உறி. கயிறு வலிமையுடையதாக இருத்தலால் உறி எனப்பட்டது. உறுதல் = சேர்தல்; ஒன்றொடு ஒன்றோ பலவோ சேர்தல் நான்கு கயிறுகள் அல்லது அதற்கு மேற்பட்ட கயிறுகளைத் தலைப்பில் முடியிட்டுச் கட்டிக் கீழும் மடியிட்டுக் கட்டி மேலிருந்து தொங்கவிடுதல் உறியாம். நெய், இனிப்பு முதலாம் பண்டங்களில் எறும்பு புகாமல் காக்க உறிகள் கூரை முகட்டில் இருந்து தொங்குமாறு செய்தல் சிற்றூர் வழக்கம். உறிக்கலயம் எனத் தனியே வைத்திருப்பதும் வழக்கம். பின்னே உறியடி என்பதொரு விழா உண்டாயிற்று. உறிக் கொண்ட வெண்ணெய் -நாலா. 3605 உறியார்ந்த நறுவெண்ணெய் -நாலா. 1143 திண்கால் உறியன் பானையன் அதளன் -அகம். 274 உறிக்கா: உறி + கா = உறிக்கா. இருபக்கங்களும் உறிகளைக் கொண்ட கா (காவு தடி > காவடி) உறிக்காவாம். உறிக்கா ஊர்ந்த மறுப்படு மயிர்ச்சுவல் - பெரும். 171 மறு = தழும்பு; சுவல் = தோள். உறிஞ்சுதல்: இதழ் சுருக்கி நீரை ஊச்சிக் குடித்தல் உறிஞ்சுதலாகும். மூக்கால் பொடியை இழுத்தலை உறிஞ்சுதல் என்பது வழக்கு. வழியும் மூக்கைத் துடைக்காமல் உள்ளிழுப்பவனை மூக் குறுஞ்சி எனப் பட்டப்பெயர் வைத்தழைப்பதும் மூக்குறுஞ்சி மொட்டைக் காளை தைதை என எள்ளல் பாட்டு இசைப்பதும் சிறுவர் வழக்கம். ஒரு துறவி பிறவெல்லாம் துறந்தும் பொடியைத் துறவானாய். :மூக்குத் தூளே உன்னை நான் துறக்க மாட்டேன் உறிஞ்சுவேன் உறிஞ்சு வேனே என்றது புதுப்பாட்டு. உறிதல்: உறிஞ்சி அல்லது துளைத் தண்டு வழியே நீரையும் நீர்மப் பொருள்களையும் உறிஞ்சிக்குடித்தல் உறிதல் ஆகும். இந்நாளில் இளநீர், குளிர்நீர்க் குடி வகை ஆகியவற்றை உறிஞ்சியால் உறிஞ்சிக் குடித்தல் பெருகிய வழக்கமாம். உறுகண்: உறுகண் = உற்ற பெருந்துயர். உள நிலையைக் காட்டும் உறுப்புகளுள் கண்ணே முதன்மைப் பட்டதாகலின் அலக்கண் இடுக்கண் உறுகண் பழங்கண் புன்கண் எனத் துன்பத்தைச் சுட்டும் சொற்கள் பலவாயின. உறு = மிகுதி காட்டும் உரிச்சொல் ஆதலால் மிகுதுயர் என்னும் பொருளதாயிற்று. உரையீர் ஆயினும் உறுகண் செய்யேன் - சிலப். 11:124 உறுதி முறி: உறுதி + முறி = உறுதி முறி. கடன் வாங்குவார் அக்கடன் தொகையையும் அதற்குரிய வட்டியையும் அத்தொகை மீளத்தரும் காலம் முதலியவற்றையும் எழுதிக் கையெழுத்திட்டு, சான்றொப்பங்களுடன் வழங்கும் ஆவண எழுத்து உறுதி முறி ஆகும். பழநாளில் பனை ஓலையில் எழுதப் பட்டமையால், அவ்வோலைப் பெயராம் முறி என்பதால் வழங்கப்பட்டது. * ஆவணம், இறுதி முறி காண்க. உறுப்பறிவிக்கை (அவயவ அறிக்கை): உடலின் ஒவ்வோர் உறுப்பையும் விளித்து இன்னது செய்க என்பது அது. * உறுப்பு மாலை காண்க. உறுப்பறை: உறுப்பு + அறை = உறுப்பறை. உறுப்பு அற்றுப் போதல். அற்றுப்போகச் செய்தல். உறுப்பறை குடிகோள் அலைகொலை என்று வெறுப்ப வந்த வெகுளி நான்கே -தொல். பொருள். 356 பொருள்: உறுப்பறை என்பது கை குறைத்தலும் கண் குறைத்தலும் முதலாயின முறஞ்செவி மறைப் பாய்பு முரண்செய்த புலிசெற்று - கலி.52 உறுப்பு: புறத்தே உள்ளவற்றைத் தன்பால் உறப்பெறுவது உறுப்பு ஆகும். உறுவது சீர்தூக்கும் நட்பு தனக்கு வர இருப்பதை அல்லது தான் உற இருப்பதை அளவிடும் நட்பு மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் உருவப் பொறிகளும். மனம் என்னும் அருவப் பொறியும் புறத்தே இருப்பவற்றை உள்ளே கொள்ளும் இயல்பினதாதலின் உறுப்பு எனப்பட்டதாம். உறு > உறுஞ்சுதல் = உட்கொள்ளல்; உள்ளிழுத்தல். உறிஞ்சிக்குடி என்பது உலக வழக்கு. ஊச்சுதல் என்பதும் இது. உறுப்பு மாலை (அங்க மாலை): ஆண் பெண் என்னும் இருபாலார்க்கும் உரிய உடல் உறுப்புகளை வெண்பாவினாலாவது வெளி விருத்தத் தினாலாவது அழகுறுத்தி அந்தாதியாகப் பாடுவது உறுப்பு மாலை (அங்கமாலை) எனப்பெறும். மிக்க உறுப்பை வெண்பா விருத்தம் தொக்கவொரு முறையால் தொடர்வுறப் பாடுதல் அங்க மாலை யாமெனப் பகர்வர் - இலக். வி.75 காவுந்தி யுந்தன்கைதலை மேற்கொண் டொருமூன் றவித்தோன் ஓதிய ஞானத் திருமொழிக் கல்லதென் செவியகந் திறவா காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு நாம மல்லது நவிலா தென்னா ஐவரை வென்றோன் அடியிணை அல்லது கைவரைக் காணினும் காணா வென்கண் அருளறம் பூண்டோன் திருமெய்க் கல்லதென் பொருளில் யாக்கை பூமியிற் பொருந்தா தருகர் அறவன் அறிவோற் கல்லதென் இருகையுங் கூடி ஒருவழிக் குவியா மலர்மிசை நடந்தோன் மலரடி யல்லதென் தலைமிசை யுச்சி தானணிப் பொறாஅ திறுதியில் இன்பத் திறைமொழிக் கல்லது மறுதர வோதியென் மனம்புடை பெயராது - சிலப். 10:192- 208 எனக் கவுந்தியடிகள் வாக்காக இளங்கோவடிகள் கூறும் பகுதியும் எண்ணத் தக்கதாம். பரிதிமாற்கலைஞர் பாடிய அவயவ அறிக்கை பாவலர் விருந்தில் இடம் பெற்றுள்ளது. உறை: உறை:1 உறு > உறை. உறு = மிகுதி. சால உறு நனி மிகல் உறு தவத்தீர் உறுபொருள் உறை:2 துளி போலும் உறை (மோர்) மிகுதியான பாலை உறையச் செய்துவிடுகிறது. அதனால் அம்மோர்க்கு உறை என்றும் உறைமோர் என்றும் பெயராயிற்று. உறை:3 நிலத்தில் இருந்தும் நீரில் இருந்தும் நீரை முகந்து கொண்டு வானில் படர்ந்த முகில் திரண்டு கூடி மழை பொழிதல் உறை எனப்பட்டது. உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோரே - புறம். 35 உறை:4 மூடுதல், போர்த்துதல் குளிர் மிகுதியாம் காலத்தில் பனிக் கட்டியால் மலையை மூடிவிடுகின்றது. அப்பனி உறைபனியாம். உறை:5 தலையணை மெத்தை ஆயவற்றில் அழுக்குப்படாமல் இருக்கத் தைத்துப் போடப்படும் போர்வை தலையணை உறை, மெத்தை உறை எனப்படுகிறது. உறை:6 ஒப்படைக்கப்பட்ட பொருள் உறையாம். கையுறை. உறை:7 செவியேற்று நெஞ்சக் களனில் வைக்கத்தக்க அரும் பொருளாம் உரை, வாயுறை. செவியுறை எனப்படும். உறை:8 கிணறு, உரல் ஆயவற்றுக்கு உறை போடல் உண்டு. உறை:9 அஞ்சல் உறை என்பது அஞ்சல் கூடு. உறை:10 நூல்களுக்கு அட்டை போடுதல் உறை போடுதலாம். உறை:11 செம்பும் தகரமும் உடனாக்கி உறையச் செய்தலால் உறை எனப்பட்டது. அது வெண்கலம். உறை என்பது எட்டுப் பங்கு செம்பும் ஒரு பங்கு தகரமும் கலந்த கலப்பு மாழையே உறை. இது செம்பு போலத் தனிமாழை யன்மையாலும் வெண்ணிறக் கல வடிவிலேயே மக்கள் இதைக் கண்டமையாலும் கருமிய (காரிய) ஆகு பெயராய் வெண்கலம் என்னும் பெயர் பெற்றது. செம்பு, கும்பா, கிண்ணம், குடம், வட்டில் முதலிய கலங்களும் மாடவிளக்கு, குத்துவிளக்கு, பாவை விளக்கு முதலிய திரிவிளக்கு வகைகளும், வாள், கறண்டி முதலிய கருவிகளும் உறையால் செய்யப்பட்டன (தேவ.) உறைக்கிணறு: உறை = வட்டம்; உறை = சுடுமண்ணால் ஆகிய உறை(வட்ட)க் கிணறு. பறழ்ப்பன்றிப் பல்கோழி உறைக்கிணற்றுப் புறச்சேரி - பட். 75-76 உறையூர்: உறை + ஊர் = உறையூர். உறையத் தக்க இடமாகக் கொண்டு எழுப்பப்பட்ட ஊர் உறையூர் எனப்பட்டது. ஊர் என்றாலே உறையூர் என்னும் பெருமை அதற்கு உண்டாயது என்பதை நோக்கிய அளவில் அதன் சிறப்புப் புலப்படும். சோழ அரசர் தலைநகராக விளங்கும். பேறும் பெற்றது அது. இதற்கொரு பழம் பெயர் கோழி என்பது. சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறந்தானும் வரந்தரும் இவளோர் பத்தினிக் கடவுளாகுமென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமும் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே என்பது உரைபெறு கட்டுரை (சிலம்பு). கோழி என்றது, ஒரு கோழி நிலமுக்கியத்தால் யானையொடு பொருது அதனைப் போர் தொலைத்தல் கண்டு அந்நிலத்திற் செய்த நகர்க்குப் பெயராயிற்று. முறஞ்செவி வாரணம் முன்சம முருக்கிய புறஞ்செவி வாரணம் - சிலப். 10:247-248 மேலும் அடியார்க்கு நல்லார், முற்காலத்து ஒரு கோழி யானையைப் போர் செய்து தொலைத்தலான் அந்நிலத்தில் செய்த நகர்க்குக் கோழி என்பது பெயராயிற்று என்பர். புறஞ்சிறை வாரணம் என்றது சிலேடை. புறத்தே சிறையை யுடைய கோழியும் புறஞ்சேரியை யுடைய உறையூரும். புறஞ்சிறைப் பொழிலும் (14:1) என்ப மேலும் ஆகலின் - அடியார்க். கோப்பெருஞ் சோழனைச் சுட்டும் பிசிராந்தையார் உறந்தையோன் என்கிறார் (புறம்). அதனால் உறந்தை மரூஉப் பெயராம். உறையூர்ப் பெருமையை என்றும் உரைக்கும் புலமைத் தோன்றல்கள் பலப்பலர். உறையூர் இளம்பொன் வாணிகனார். உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார். உறையூர்ச் சல்லியன் குமரனார். உறையூர்ச் சிறுகந்தனார். உறையூர்ப் பல்காயனார். உறையூர் மருத்துவன் தாமோதரனார் உறையூர் முதுகண்ணன் சாத்தனார். உறையூர் முதுகூத்தனார். உறையூர் முது கொற்றனார். என்பார் உறையூரில் இருந்த சங்கப் புலவர்கள் ஆவர். உற்றார் உறவினர்: உற்றார் = குருதிக் கலப்புடையவர் உற்றார். உறவினர் = குருதிக் கலப்புடையவர்க்குப் பெண் கொடுத்த உறவினர். உற்றார் = உடன் பிறப்பாக அமைந்தவர். உறவினர் = பெண் கொடுப்பால் உறவாவர். உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன் என்பதில் ஊர், ஊரைச் சார்ந்த உறவினரைக் குறித்ததாம். உற்றது உரைத்தல், உறுவது கூறல் என்பவற்றில் உள்ள கால வேறுபாடு கருதுக. * ஒட்டு உறவு காண்க. உன்னம்: உன்னம்:1 அன்னப் பறவையின் பெயர்களுள் ஒன்று உன்னம். அன்னப்பறவை குறித்த காலத்து வலசை புறப்பட்டுக் குறித்த காலத்து மீள வருதல் உண்டு என்பதைக் கண்டு இட்ட பெயர் உன்னமாம். உன்னம்:2 உன்ன நிலை என்பது ஒரு புறத்துறை. உடல்வேந் தடுக்கிய உன்ன நிலையும் - தொல். 1006 உன்னம்:3 உன்னம் என்பது ஒரு மரம்; நல்லதாயின் தளிர்த்தும், அல்லதாயின் உலறியும் நிமித்தம் காட்டும் மரம் என்பர். காலக் குறிப்புணர்த்துதல் கொண்டு அதற்கு அப்பெயர் வழங்கப்பட்டது. உன்ன மரத்த துன்னருங் கவலை - புறம். 3 உன்னம்:4 உன்னம் என்பதற்குப் படகு என்னும் பொருள் வழக்கு. திருச்செந்தில் வட்டார வழக்காகும். அவர் வளக்குறி காட்டுவதாக அதனைக் கொண்டு மீனவர் வழங்கிப் பொது வழக்காகி யிருக்கலாம். உன்னிப்பு: உன்னுதல் = நினைத்தல். உண்மைகளை நிறுவச் சான்று காட்டுதல் வேண்டும். சான்றுகள் வாய்க்காமல் சொல்லுவார் தம் கருதுகோளாகவே உறுதிப்படுத்தக் கருதுவது உண்டு. இம்முறை ஆய்வுமுறையொடு கூடியதன்று. அதனால் அக்கருதுகோளை ஏற்காதவர், இது உன்னிப்பு எனத் தள்ளிவிடுவர்.  ஊ வரிசைச் சொற்கள் ஊ: ஊ:1 உயிர் வரிசையில் ஆறாம் எழுத்து. ஊ:2 உயிர் நெடில் வரிசையில் மூன்றாம் எழுத்து. ஊ:3 ஊது, ஊதை, ஊன், ஊக்கு முதலியவற்றின் முதனிலை. ஊ:4 இதழ் குவிந்து வாய் ஊதுதலால் (புடைத்தலால்) வெளிப்படும் ஒலி வடிவடைவுடையது. ஊ:5 ஊப்புல் என்பது ஊகம்புல். ஊக்குப் போன்ற முள்ளுடையது. ஊ:6 கோழி பறவை ஆகியவற்றை ஓட்டும் ஒலிக்குறிப்பு. உ ஊ - அதன் அடுக்கு அல்லது இரட்டிப்பு. ஊ:7 மேலே எழும்புதல் உயர்தல் ஆகிய பொருள் தரும் முதனிலை. ஊ:8 ஊகாரம் என்பது காரச் சாரியை பெற்றது. ஊகார இறுதி ஆகார இயற்றே(தொல், 264) ஊ:9 ஊ = ஊன். ஊ என்பதற்கு இறைச்சி என்பது பொருள். தொல். 269 ஊகம்: ஊகம்:1 ஊகு + அம் = ஊகம். ஊகம்புல் என்பதொரு புல். நாயுருவிக் காய் போல் இருக்கும். அதன் காயில் ஊக்குப் போன்ற வளைந்த முள் உண்டு. அது விலங்கு பறவை மாந்தர் அணுகிய போது உடலிலும் உடையிலும் ஒட்டுப் போட்டது போல் ஒட்டிக் கொள்ளும். வேறிடம் சென்று அதனை எடுத்து அல்லது உதறிப் போட்டால் ஆங்கே தன் இனத்தைப் பெருக்கி விடும், இதோ, அச்சிறுபுல்! எத்தகு கொள்கையொடு வளர்கிறது பார் என்று இனநலப் பேற்றைக் காட்டுவர் பேராசிரியர் சுந்தரனார் (மனோன்மணியம்), ஊக்குப் போலும் முள் உடைமையால் ஊகம் எனப்பட்டது. ஊக்கு முள்ளும், பற்றிக் கொள்ளும் தன்மையும் உடையதாதல் அறிக. ஊகம்புல் இயற்கை; ஊக்கு என நாம் காண்பது செயற்கை; ஊக்கு கூக்கு என உலகப் பரவலானது வியப்பான செய்தி. ஊகம்:2 குரங்கும் முசுவும் ஊகமும் - தொல். 1521 என்பதால் குரங்கினத்தில் ஊகம் என்பதொன் றுண்டு என்பதை அறியலாம். அதன் முன்னங்கால்களின் நகம் வலியதாய்ப், பற்றிக் கொள்ளவும், குடைந்து எடுக்கவும் தக்கதாய் அமைந்த சிறப்பாய் ஊகப் பெயர் பெற்றதாம். ஊகாரம்: ஊ + காரம் = ஊகாரம், ஊ என்னும் எழுத்து காரம் என்னும் எழுத்துச் சாரியை பெற்றது. நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி - தொல். 445 ஊ ஓரெழுத்து ஒருமொழி ஆதலால் ஊகாரக் கிளவி (சொல்) என்றார். ஊக்கமின்மை வகை: நெடுநீர் = விரைந்து செய்யக் கூடியதை நீட்டித்துச் செய்யும் இயல்பு. மடி = முயற்சி செய்யாது வாளா இருக்கும் சோம்பல். மறவி = செய்ய வேண்டியதை மறந்துவிடுதல். துயில் = பகலும் தூங்குதல் அல்லது தூக்க நிலையில் இருத்தல். - தேவ. 8:78 ஊக்கம்: உய்க்கு > ஊக்கு + அம் = ஊக்கம். உய்த்தல் = இயக்குதல், உயர்த்துதல், செலுத்துதல், மேன்மேல் உயர்த்துதல் ஊக்குதலாம். ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை - திருக். 594 அசைவிலா ஊக்கம்; தளரா ஊக்கம். உரன், உள்ளம், என்பனவும் ஊக்கமேயாம். உரம் ஒருவற் குள்ள வெறுக்கை - திருக். 600 உள்ளம் உடைமை உடைமை - திருக். 592 ஊக்கார்: ஊக்கு + (ஆ) + ஆர் = ஊக்கார் = முயலார். ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார் - திருக். 453 ஊக்கி: உய்க்கு ஊக்கு + இ = ஊக்கி. ஊக்கத்தை உண்டாக்குவது ஊக்கியாம். இயல்பாக உள்ள வலிமையை மேலும் உயர்த்திப் பெருக்குவது ஊக்கி. இயல்பை ஊக்குவது இயல்பூக்கி. ஊட்டமிக்க உணவும் ஊக்கியாம். ஊக்கி இயற்கையாக அமையின் உயர்ந்தே சென்று நலமாக்கும். ஊக்கி செயற்கையாக அமையின் ஊக்குவதுபோல் தோற்றி இரட்டை மடங்கோ பன்மடங்கோ தளர்ச்சியை உண்டாக்கித் தீராக்கேடு செய்யும், ஊக்கியின் தன்மையைப் பொறுத்தது. அவ்வூக்கியைக் கொண்டார் நலப்பாடும் பொலப்பாடுமாம். ஊக்கத்தின் ஊக்கியால் - உடலின் ஊக்கியால் - செயலின் ஊக்கியால் செம்மையின் ஊக்கியால் - அமைவன உயிர் ஊக்கிகளாம். ஊங்கண்: உங்கண் > ஊங்கண் = உயர்ந்த இடம்; ஆங்கு, ஈங்கு என்ப வற்றின் இடைப்பட்ட இடம். ஆங்கண் ஈங்கண் போல்வது ஊங்கண். இடூஉ ஊங்கண் இனிய படூஉம் - நற், 246 ஊங்கு: ஊங்கு:1 ஆங்கு ஈங்கு என்பவை போல ஊங்கு என்பதும் சுட்டுப் பெயர். ஊங்கண் என்பதும் அது. ஊங்கெலாம் ஊறுமா கட மாமதம் ஓடுமே - கம்ப. பால. 257 ஊங்கு:2 மேலானது. அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை - திருக். 32 ஊங்கூங்கு: ஊங்கு + ஊங்கு = ஊங்கூங்கு = இடையிடையே. வாங்குமிசைத் தூண்டில் ஊங்கூங் காகி - நற். 299 ஊசல்: ஊசல்:1 உயிர் ஊசலாடுகிறது என்பது வழக்கு, போய்ப் போய் வரும் உயிர் ஊசலாட்டாமாக இருக்கிறது, ஊசலாட்டம் வழியாக ஏற்பட்ட ஊசல், ஊஞ்சலாக வீடுகளில் உள்ளது. காதுகளில் தொங்கல் தொங்கட்டான் என உள்ளது. கடிகார இயக்கம் ஊசலைக் கொண்டமை கண்கூடு. ஊசல் சிற்றிலக்கிய வகையுள் ஒன்றாம். ஊசுதல், ஊசல் எனப்படுதல் வேறு. * ஊசுதல் காண்க. ஊசல்:1 ஊசலாடுவதாகப் பாடப்பெறும் ஒருவகைச் சிறுநூல் ஊசலாயிற்று. சிலப்பதிகாரத்தில் ஊசல்வரி என வரிப்பா உண்டு. ஓரைவர் ஈரைம் பதின்மர் உடன்றெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் பொறையன் மலையன் திறம்பாடிக் கார்செய் குழலாட ஆடாமோ ஊசல் கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ ஊசல் என்பது சிலம்பிலொரு பாட்டு. பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் ஊசல் பத்தில் ஒரு பங்கைப் பற்றிக் கொண்டது. பின்னே, ஊசல் தனிநூல் உருக்கொண்டது. கோயில்களில் திரு ஊசல், திருப்பொன்னூசல் என விழாக்கள் எடுப்பது வழக்கு, இறைமையில் தோய்ந்த அடியார்கள் இவ்வகையில் பாடி மகிழ்ந்துள்ளனர். மணிமொழிப் பெருந்தகை பாடியது திருப்பொன்னூசல். திருவரண் குளத்தீசர் திருவூசல் என்பது ஆவணப் பெரும்புலவர் வேலாயுதனார் இயற்றியது. அதில் முதற்பாட்டு: அருளாட அருளம்மை அப்ப ராட அருள்நிறைந்த பெரியோர்கள் களிப்புற் றாடப் பொருளாடப் புவன மெலாம் செழித்தே ஆடத் புண்ணியமும் புகழறமும் தழைத்தே ஆடத் தெருளாடு ஞானமெலாம் கதிப்புற் றாட செந்தமிழும் பாவலரும் சிறப்புற் றாட மருளாடு மக்கள்மனம் மகிழ்ந்தே ஆட மாட்சிமிகும் அரண்குளத்தீர் ஆடீர் ஊசல் இவ்வூசல் 36 பாடல்களை யுடையது. அகவல் விருத்தம் கலித்தா ழிசையால் பொலிதரும் கிளையொடும் புகலுவ தூசல் என்று ஊசல் இலக்கண கூறும் இலக்கண விளக்கப் பாட்டியல் (185). ஊசல் கலித்தாழிசையால் வரும் என்பார் நவநீதப் பாட்டியலார். ஊசன்: எந்தச் செய்தியும் உண்மையும் கூறாமல் அமுக்கடியாக இருப்பவனை ஊசன் என்பது முகவை வட்டார வழக்காகும், ஊசு + ஊச்சு = உள்வாங்குதல். உள்வாங்குதலை அன்றி வெளியிடாது வைப்பவன் ஊசன் எனப்பட்டான். ஊசி: உ, ஊ இதழ்குவிவே இதழ் குவிதலால் ஊ என்னும் ஒலி உண்டாகும். ஊச்சு, ஊச்சுஊசு ஊசு என்பன ஒலிக்குறிப்புகள். உச்சு ஊச்சு முதலியவை உதடு குவிந்து கூர்மையாகும். நிலையில் பிறத்தலால் குவிதல் கூர்மையாதல் பொருள்களைத் தந்தன. வாயிதழ்களை நெருக்கிச் சுருக்கி உறிஞ்சுதல் ஊச்சுதல் ஆகும். ஊச்சும் வாய்போலச் சுருங்கி அமையும் வடிவு ஊசி, ஊசிக் கோபுரம். அடி பெருத்து நுனி சுருங்கிச் செல்வது ஊசி எனப்பட்டது. தையல் ஊசி; குண்டுடைய ஊசி குண்டூசி. குண்டு - உருண்டை; கொண்டை ஊசி என்பவை ஊசி வகைகளுள் சில. பழங்கால எழுத்தாணிக்கு ஊசி என்பது பெயர். எழுதுதற்கு அரிய எழுத்துடையது ஊசிமுரி. இடைக்காடர் இயற்றியது அது. ஊசிக்கால்: ஊசி + கால் = ஊசிக்கால் குத்துக்கால் என்பது சம்மணம் (சப்பணம்) போடாமல் கால் ஊன்றி அமர்தலாகும். கமலையிலும் குத்துக்கால் உண்டு. இதனை ஊசிக்கால் என்பது நெல்லை வட்டார வழக்கு. ஊசிவாலி: ஊசி போன்ற வாலை உடையது, ஊசிவாலி; அகன்று சுருங்கிச் சுருங்கி ஊசிபோல் அமைந்த பறவை; கதுவாலி என்பது அது. கதுப்பு = கூர்மை. ஊசுதல்: உண்பனவும் பருகுவனவும் பதன்கெட்டும், நாற்ற மெடுத்தும், பூசணம் பூத்தும் போதல், ஊசுதல், ஊசிப்போதல் எனப்படும். ஊச்சுதல் = குடித்தல்; ஊசுதல் = உண்ணல். ஊசிப் போதல் அல்லது ஊசுதல் உண்ணவும் பருகவும் ஆகாது போதல். ஆசைப் பட்டால் ஊசிப் போகும்என்பது பழமொழி. ஒருவன் வடை ஊசிப் போனதுஎன்றான்; ஆம் நூலும் இருக்கிறது என்றான் மற்றொருவன்; தையலுக்கு ஆகாதுஎன்றான் இன்னொருவன். மக்கள் சொலவடை இது. ஊசப் பண்டம் குப்பையிலேஎன்பது மக்கள் வழக்கு. ஊச்சுதல்: ஊச்சு > ஊச்சுதல். ஊச்சு ஊச்சென ஒலியெழ உறிஞ்சிக் குடித்தல் ஊச்சுதல் எனப்படும். பிணைமான் இனிதுண்ண வேண்டிக் கலைமாத் தன் கள்ளத்தின் ஊச்சும்என்பது ஐந்திணை ஐம்பது (37). ஊச்சுப்பிள்ளை: ஊச்சுப்பிள்ளை என்பது பால்குடி பிள்ளை. அதற்குப் பசி உண்டாகிவிட்டால் இடம் சூழல் எண்ணாமல் பால் குடிக்க அடம் செய்யும். என்ன வகையில் ஏமாற்றினும் தன் எண்ணத்தை மாற்றாது. அவ்வாறு சொல்லியது கேளாமல் அடம்பிடிக்கும் வளர்ந்தவர்களை ஊச்சுப்பிள்ளை என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும். ஊடம்: ஒருவர் நடவடிக்கைகளை அவர் அறியாமல் அறியும் உளவு வேலையை அல்லது ஒற்று வேலையை ஊடம் என்பது கோட்டூர் வட்டார வழக்காகும். ஊடு புகுந்து (உள்புகுந்து) அறிவது ஊடம் ஆயிற்று. ஊடல்: கூடும் கூடும் சேர்தல் கூடல். கூட விடாமல் ஊடே உண்டா கும், ஒரு மனத்தடை ஊடல் ஆகும். அது பொய்ச்சினமாம். ஆதலால் கூடல் இன்பம் சிறக்க ஊடல் இன்றியமையாதது என்பது அகப் பொருள். ஊடல் மருதத் திணையின் உரிப்பொருள். உணர்ப்பு வயின் வாரா ஊடல் - தொல்.1096 ஊடல் மாலை: ஊடுதல், ஊடுதல் நிமித்தம், ஊடல் நீக்கம் ஆகியவை பற்றிய இலக்கியம் ஊடல் மாலை என்பது. ஊடல் மாலையை நவநீதப் பாட்டியல் சுட்டும் (66) அது : தொழிலால் தொக்கன ஊசல், ஊடன் மாலை, கூடன் மாலை போல்வன என்பது. திருக்குறளிலுள்ள புணர்ச்சி விதும்பல், நெஞ்சொடு புலத்தல், புலவி, புலவிநுணுக்கம், ஊடலுவகை என்பவற்றைக் காண்க (அதி: 129, 133) ஊடும் பாடும்: ஊடு = ஊடு ஊடாகக் கலக்கமான இடம். பாடு = பயிர் பட்டுப்போன இடம். ஊடும் பாடும் பயிர் நடவேண்டும்; மிகக் கலக்கமாக இருக்கிறது பயிர் என்பது உழவர் குடியின் உரை, ஊடு ஊடாகப் பயிரில்லாத இடம் ஊடு ஆகவும் பயிர் பட்டுப்போன இடம் பாடு ஆகவும் குறிக்கப்பட்டன. கண்ணை மூடுதல் கண்பாடு எனப்படும். படுத்தல் என்பதும் அது. பயிர்படுத்துவிடுதல் பாடு எனப்படுகின்றதாம். ஊடும் பாவும்: ஊடு + உம் = ஊடும். பா + உம் = பாவும். ஊடு = ஊடை எனப்படும் குறுக்கு நூல். பா = பாவு எனப்படும் நெடுக்கு நூல். ஊடும் பாவும் சீராக வாராக்கால், இழையறுந்தும் திண்டும் திரடுமாகித் தோன்றும். ஊடு என்பது ஊடை எனவும் படும். ஊடை நூல் ஓடத்தின் வழியே பாவின் ஊடே ஊடே சென்று வருவதாம். துணி நெய்வோர் ஊடையும் பாவையும் ஒருங்கே கண்காணித்துக் கொண்டே இயக்குவர். ஊடாடுதல்: ஊடு + ஆடுதல் = ஊடாடுதல் திரிதல் சுழலுதல். மீன்கொண்டு ஊடாடும் வேலை - கம்ப. ஆரண். 638 தேன்கொண்டு ஊடாடும் கூந்தல் - கம்ப. ஆரண். 638 ஊடுருவல்: ஊடு + உருவல் = ஊடுருவல். ஊடே உருவிச் செல்லல். முற்றிலும் காணல். வெங்களன் ஊடுருவ - கம்ப,உயுத். 1703 ஊட்டல்: ஊட்டல்:1 ஊட்டு + அல் = ஊட்டல். உண்ணச் செய்தல் அல்லது உண்பித்தல் பாலூட்டல், சோறூட்டல். ஊட்டல்:2 ஒரு பண்பை ஏற்றிக் கூறுதல். பேதைமை ஊட்டலும் - தொல். 1060 ஊட்டம்: ஊட்டு + அம் = ஊட்டம். ஊட்டப்பட்ட உணவால் உண்டாகும் உடல்வலிமை ஊட்டமாகும். அவனுக்கு ஊட்டத்துக்கு எந்தக் குறைவுமில்லை; அதனால்தான் அந்த உடம்புஎன்பது மக்கள் வழக்கு. ஊட்டி: ஊட்டி:1 சங்கு, குழந்தைகளுக்குப் பால் புகட்டும் சங்குக்கு ஊட்டி என்பது பெயர். பால் புகட்டப் பயன்படுவதால் அப்பெயர் பெற்றது. .ஊட்டி:2 சங்கு போன்ற அமைப்புக் கொண்டிருத்தலால் கண்டத்தை - கழுத்தை - ஊட்டி என்றனர், அதற்குச் சங்கு என்னும் பெயருள்ளமையும் அறிக. சங்கை நெரித்தல் என்பது போலவே, ஊட்டியை நெரித்தல் என்பதும் சினத்தில் கூறும் வழக்கில் உண்டு. ஊட்டி:3 அகத்தீசுவர வட்டாரத்தில் பன்றியை ஊட்டி என வழங்குகின்றனர். அது மக்கள் உண்டு கழித்தலை உண்பது கொண்டு வழங்கப்பட்டதாகலாம். பாட்டி என்னும் சொல் லுக்குத் தொல்பழ நாளில் பன்றி என்னும் பொருள் இருந்ததைத் தொல்காப்பிய வழியே அறிய வாய்க்கின்றது. இனி ஊட்டி என்பது பூட்டியைப் பெற்ற ஓட்டியைக் குறிப்பதாகிய வழக்கு. உரல் ஒரல், உலக்கை ஒலக்கை என்பவை போல உகர ஒகரத் திரிபாகலாம். ஊட்டு: முன்னோர்க்கும் தெய்வங்களுக்கும் படைத்து வழிபடும் விழாவை ஊட்டு என்பது கோட்டூர் வட்டார வழக்கு ஆகும், நெல்லை வழக்கும் அது. உண்ணச் செய்தல் ஊட்டுதல் ஆகும். ஊட்டுத்தாய், ஊட்டுப் புரை, ஊட்டி என்பவை நினைக உள்ளே செலச் செய்தல் ஊட்டுதல். குழந்தைகட்கும், நோயர்கட்கும் பாலும் சோறும் முதலியன உண்ணச் செய்தல் ஊட்டுதலாம். சோறு கவளமாக உருட்டித் தரப்பெறுதலாலும் உருட்டித் தருதல் ஊட்டுதல் ஆயது எனவுமாம். மழவிளங்கன்றைத் தாய் மடுவில் உண்பித்தலும் ஊட்டுதலே. அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட - நாலடி.1 ஊணன்: ஊண் + அன் = ஊணன். உண்பதிலேயே நாட்டம் கொள்பவன் ஊணன் ஆவன். ஊணன் ஆண்பால்; ஊணி பெண்பால். ஊணி அஃறிணையுமாம். வாயுணர்வின் மாக்கள் - திருக். 423 அவியுணவின் ஆன்றோர்! - திருக். 413 எனப்படுவார் இவர். சாப்பாட்டு ராமன்எனப்படுவானும் இவன்; இது பொதுவழக்கு. ஊணாகம்: ஊண் + ஆக்கம் = ஊணாக்கம் > ஊணாகம். ஊணால் காத்து வளர்க்கப்படும் உடல் ஊணாக்கமாம் ஆக்கம் > ஆகம் ஆகியது. ஆகம் = உடல். உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே உண்டி முதற்றே உணவின் பிண்டம் -புறம்.18 ஊண்சாலை: ஊண் + சாலை = ஊண்சாலை = உண்ணுமிடம். ஊண் = உண்ணுதல்; சாலை = அகன்ற இடம். இந்நாளில் உண்ணுதற்காக அமைந்த விடுதிகள் உணவகம். ஊண்சாலை, உண்டிச்சாலை என்பன. இவை கட்டணம் பெற்று உணவு வழங்கும் இடங்கள். காசின்றி உண்ணும் இடங்கள் ஊணகம், ஊணில், ஊட்டுப்புரை என்பன. ஊதாரி: ஊது + ஆர் + இ = ஊதாரி. ஆர் = பொருந்துதல். ஊதுதலைத் தனதாக்கிக் கொண்டவன்; ஊதுதல் = வேண்டா வழிகளில் செலவிடுதல். புகை ஊதுவது போல பொருளை ஊதித் தள்ளும் செலவாளிகள்; வேண்டா வழிகளிலும் தீய வழிகளிலும் செலவிடுபவர்கள். x.neh.: இளந்தாரி, இளமை + தாரி; இளமையைத் தம்மிடம் கொண்டவர். ஊதுதலைத் தம்மிடம் கொண்டவர் ஊதாரி. ஊதாரித்தனம்: ஊது + ஆர் + இ = ஊதாரி. இருப்பதைப் பெரிதாக்கிப் போலிப் பெருமை காட்டி உள்ளதைத் தொலைத்தல் ஊதாரித்தனம். ஆர் = ஆர்த்தல் = செருக்குதல் ஆர்ப்பவன் ஆரி. ஊதுதல் = புடைத்தல். ஊதிப் பெருக்கல் ஆதலால், உள்ளதன் சுருக்கமும் வெளிப்படக் காட்டும் பெருக்கமும் புலப்படும். முந்திரிமேல் காணி மிகுவதேற் கீழ்தன்னை இந்திரனா எண்ணி விடும் - நாலடி. 346 ஊதி: ஊது + இ = ஊதி. ஊதுதலால் ஒலியுண்டாக்கும் கருவி ஊதியாகும். உடற்பயிற்சி தருவார்க்கும், காவல்துறையர்க்கும். போக்குவரத்துத் துறைக் கட்டுப்பாட்டாளர்க்கும் ஊதி மிகப்பயன் கருவியாக உள்ளது, எரிவிறகு, கரி விறகுக் காலத்தில் அடுப்பூதியாகிய குழல் மிகுபயன் செய்தது. கொல்லர் உலைக்களத்தும், கரி எரிவதற்குக் காற்று வழங்கும் ஊது உலைக் குருகு உண்டு. அதன் பயனும் மின் பயன் ஆகிய பின் குறைதலாயிற்று. காம்போதி என்னும் ஓர் அராகம் இசையுலகில் சிறப்பு மிக்கது. அது மூங்கில் குழாயில் வண்டு ஊதி ஒலிப்பது போன்றது என்பதால் அரிகாம்பூதி என்றும் அரிகாம்போதி என்றும் வழங்கலாயிற்று. அரி = வண்டு; காம்பு = மூங்கில். ஊதிகை: ஊது > ஊதி > ஊதிகை > பரப்புகை, முல்லை மல்லிகை ஆகியவை பக்கமெல்லாம் மணம் பரப்புதலால் அவை ஊதிகை எனப்படும். வண்டும் ஈயும் புகுந்து ஒலி செய்து தேன் எடுத்தலால் ஊதிகை எனப்பட்டதுமாம். ஊதுதல் = தேன் எடுத்தல். ஊதியம்: மிகுவரவு, மிகை வரவு, ஊதுலையின் பையில் காற்றுப் புகுந்து புடைப்பது போலவும், ஊதும் வாயின் புடைப்புப் போலவும் பெருத்துவரும் வருவாய் ஊதியம் ஆகும். பலூன் என்பதை ஊத்தாம் பை, ஊத்தாம் பெட்டி எனல் குமரி மாவட்ட வழக்கு. பருத்த உடல் ஊதுடல் எனவும், வாத (காற்று) உடல் எனவும் வழங்கும். நீர்மிக்க குளிர்காற்று ஊதைக் காற்று எனப்படும். ஊதை நாடி வளி என வள்ளுவரால் ஆளப்படும். ஊதிப் புடைத்த புளியங்காய் ஊதைக்காய் (உதைக்காய்) எனப்படுதல் மக்கள் வழக்கு. முதல்இலார்க்கு ஊதியம் இல்லை(திருக். 449) என்பது வள்ளுவம். பேதைமை என்பது ஏதம் கொண்டு ஊதியம் போக விடல் (திருக். 831) என்பதும் எண்ணத்தக்கது. “thœjÈ‹ Câa« v‹D©lh«”vd Édhî« ehyo.(12). ஊதியம் மிகுவருவாய் என்னும் பொருளினொடு, இந்நாளில் பெறும் சம்பளத்தையும் குறிப்பாதாயிற்று. மாத ஊதியம் > மாதச் சம்பளம்; ஊதியப் பட்டி என்பது மாதச் சம்பளப் பட்டி எனப்படுகிறது. ஊதிவிடல்: தோற்கடித்தல். பொரிகடலையில் உள்ள உமியை மெல்லென ஊதினாலே பறந்து போய்விடும். நெல்லுமி புடைத்தலால் போகும். நெற்சாவி காற்றில் தூற்றுதலால் போகும். ஊதுதலால் அப்பால் போவது மெல்லுமியாகும் . ஊதப்போகும் உமிபோல்வார் எனத் தோற்றவர் இயலாமையும், ஊதியவர் வலிமையும் புலப்பட ஊதிவிடல் ஆட்சியில் உள்ளதாம். ஊது காமாலை: உடல்பருத்துத் தோன்றும் ஒருவகை நோய். இயற்கையான உடற்பருமன் இல்லாமல், நோயால் உடல் பருத்தல்; ஊதை அல்லது சோகை உடலாதல். ஊது காமாலை சோகை - திருப். 790 (செ.ப.க.அ.) ஆளைக் கண்டு மயங்காதே அது ஊதுகாமாலை என்பது பழமொழி. ஊது கொம்பு: ஊது + கொம்பு = ஊது கொம்பு. இசைக்கருவி வகைகளுள் ஒன்று ஊது கொம்பு, கொம்பு, நீண்டு வளைந்த குழல்; வாங்கால் என்பதும் அது, கொம்புக்காரன் ஏந்தல் என்பதோர் ஊர் முகவை மாவட்டம் சார்ந்தது கொம்புக்காரன் = ஊதுகொம்பு உடையவன். ஊதுதல்: ஊதுதல்:1 காற்றை இழுத்து வாயை நிரப்பி வெளியேற்றுதல் ஊதுதல் ஆகும். வாயே ஊதும் (ஊதிப்போகும்) குழலூதுதல் = சமைத்தற்குத் தீப்பற்ற வைக்கக் குழலூதுதல். அதற்குரிய கருவி குழலாகும். அடுப்பு அணைந்து விட்டது ஊது(ம.வ.) இசைத்தல் = கோவிந்தன் குழல்கொடு ஊதின போது(நாலா. திவ். 282) பருத்தல் = அவர் ஊதிப் போனார் (ம.வ.) புகைவிடுதல் = ஊதுவது விளையாட்டாகத் தெரியும்; புகை தெரியும் ஆனால் அது ஆளையே புகைப்பது தெரிந்தாலும் தெரியாது என்பது உலக வழக்கு. ஊதுவது சுருட்டு, வெண்சுருட்டு, பீடி, கஞ்சா முதலியன புகைப்பது. துருத்தி ஊதுதல் = கொல்லர் உலைக் களத்தில் ஊதுதல். விரைவாக ஊது என்பது உலைக் கள ஏவல். விளக்கை அணைத்தல் = விளக்கை ஊதி அணை ஊதுதல்:1 வண்டு, தேனீ, தும்பி ஆகியவை சுரும்பினால் பூவுள் தேனை உறிஞ்சிக் குடித்தல் ஊதுதல்எனப்படும், தேம்பட ஊதுவண்டு இமிரும்(187) தண்வய புதுமலர் ஊதும் வண்டு(190) என்பவை நற்றிணை. ஊதுலைக் குருகு, உள்ளூது ஆவி என்பவை புறச் செலவு பற்றிது என்பதும் வண்டு மலரூதுதல் உட்செலவு பற்றியது என்பதும் இவண் கருதத்தக்கன, ஊது விரியன்: பாம்பு வகைகளுள் ஒன்று. அப்பாம்பு தீண்டினால், தீண்டப்பட்டவர் உடல் பருக்கும். அதனால் ஊது விரியன் எனப்படும். விரியன் வகையுள் ஒன்று இது. சுருட்டைப் பாம்பு ஒன்றும் ஊது சுருட்டை எனப்படும். பாம்புகள் விரியன், சுருட்டை என இருவகைப் படினும் இவற்றின் விளைவு ஊதச் செய்தலால் ஒருவகையாம். ஊதை: ஊது + ஐ = ஊதை. ஊதல் = தடித்தல், பருத்தல் ஊதிய குளிர்காற்று. ஊதைக்காற்று எனப்படும். வாழைக்காய் உருளைக்கிழங்கு முதலியவை ஊது நோயைக் - கால் கை வீங்குதலை - ஆக்கலால் ஊதைப் பொருள் எனப்படும். வாதம் பித்தம் கோழை என்பவற்றுள் வாதம் ஊதை என்பதாம். ஊத்தப்பம்: ஊது > ஊத்து > அப்பம் = ஊத்தப்பம். ஊதுதல் = பருத்தல், பருத்த தோசை ஊத்தப்பமாகும் வெங்காயம். சேர்ந்தது வெங்காய ஊத்தப்பம். ஊத்தம் போடுதல்: முற்றிய வாழைக்காய், முற்றிய மாங்காய் ஆயவற்றைப் பழுக்க வைப்பதற்கு வைக்கோல் மூடிவைப்பர். புகை போடுவர். இவற்றுக்கு ஊத்தம் போடுதல் என்பது பெயர். காய் பழுத்தால் சற்றே பெருக்கும். அது ஊதுதல் ஆகும். ஊதுதற்குப் போடுதல் ஊத்தம் போடுதல் ஆயிற்று. ஊத்தி: ஊத்தி = வயிறு. ஊற்றி என்பது ஊத்தி என மக்கள் வழக்கில் உள்ளது. ஊற்றப்படும் பொருள் சேரும் இடம் வயிறு. ஆதலால் அதனை ஊத்தி என வழங்குதல் விளவங்கோடு வட்டார வழக்காகும். ஊத்திக்கூடு: ஊதி > ஊத்தி + கூடு = ஊத்திக்கூடு. குழந்தைகள் ஊதி விளையாடுதற்குத் தக அமைந்த நீர்ப்பூச்சிக் கூடு ஊத்திக் கூடு என வழங்குகின்றது. ஆற்று மணலில், வரிகள் அமைந்த அச்சிறு கூடுகளை இயல்பாகப் பார்க்கலாம். அவற்றில் இருந்த பூச்சிகள் வெளியேறிய பின் உள்ள வெறுங்கூடுகள் அவை. அவ்வூதியை ஊதினால் சிறிதளவு ஒலியுண்டாகும். ஊத்தை: ஊது > ஊத்து + ஊத்தை. பல்லில் அழுக்குச் சேர்ந்து பருத்தல்; கலங்களில் அழுக்குச் சேர்தலுமாம். ஊத்தை போகப் பல்லைத் தேய்என்பது உலக வழக்கு. ஊப்புதல்: பருப்பொருளும் அதனொடும் அமைந்த நீரும் கலந்து இருக்கப், பருப்பொருள் வாயுள் புகாது நீர்மப் பொருள் மட்டும் புகுமாறு இதழ் நெருக்கி உறிஞ்சிக் குடித்தல் ஊப்புதலாம். இஃது ஊச்சுதல் சூப்புதல் என்பவற்றில் வேறாதலை அவற்றொடு ஒப்பிட்டுக் காண்க. ஊமர்: ஊம் + அர் = ஊமர். பேச வராமல் மூக்கொலியால் ஊம் ஊம் என்பவர் ஊமர். ஊமையர், மூங்கையர் என்பாரும் இவர். ஊமர் உரைப்பொருள் புணரும் கேள்வியரல்லர் . கம்ப. உயுத். 732 ஊம் என்பதும் ஊமரைக் குறிக்கும் கூனும் குறளும் ஊமும் செவிடும் -புறம். 28 * மூங்கை காண்க. ஊமல்: ஊம் + அல் = ஊமல். ஊதிப்பருக்கும் கிழங்கு அற்ற பனங்கொட்டை எரிபொருளாகப் பயன்படுவது; அதன் கரி ஊமற்கரி (செ.ப.க.அ.) ஊமைக் குழல்: சொல் வாராமல் காற்றியக்கத்தால் ஒலிக்கும் இசைக்குழல் ஊமைக்குழல் எனப்படுகிறது. இசைக்குழல் இசைப்பார்க்கும் இடைவெளி உண்டு. இவர்க்கு இவ்விடைவெளியும் இல்லாமல் ஊதும் பயிற்சி பெரிதும், அரிதுமாம். கம்பர் நாளிலேயே இவ்விசைக் கருவி பயன்பட்டது என்பது அறியப்படுகின்றது. அன்றியும் ஒருபாடலில் எத்தனை இசைக்கருவிகள் கூறப் பட்டுள என்பது வியப்பாகின்றது. கும்பிகை திமிலை செண்டை குறடுமாப் பேரி கொட்டும் பம்பைதார் முரசம் சங்கம் பாண்டில்போர்ப் பணவம் தூரி கம்பலி உறுமை தக்கை கரடிகை துடிவேய் கண்டை அம்புலி கணுவை ஊமை சகடையோ டார்ந்த அன்றே -உயுத். 2397 ஊமைக்குறும்பு: வெளியே தெரியாமல் குறும்பு செய்தல். சிலர் தோற்றத்தால் மிக ஊமையாக இருப்பர். ஆனால் ஓயாது பேசித் திரிவர். செய்யாத குறும்புகளையும் செய்துவிடுவர். அத்தகையவரையே ஊமைக் குறும்பு என்பர். குறும்பு குசும்பு என வழக்கில் உள்ளது. இங்கு ஊமை என்பது ஊமைத் தன்மையைக் குறியாமல், மிகுதியாக வெளிப்படப் பேசாமல் என்னும் பொருள் தருவதாம். ஊமைக் குறும்பன் ஊரைக் கெடுப்பான் என்பது பழமொழி. ஊமைக்காயம்: அடிபட்டு அரத்தம் வெளிப்படாமல் உள்ளாகக் கட்டி பட்டுத் தோல் சிவந்து தோன்றும் உட்காயம். ஊமை = அரத்தம் வெளிப்படாமல் உள்ளுறைதல், கன்றிப் போதல் இவண் காயம் என்பதாம். ஊமையடி என்பதும் ஊமை வீக்கம் என்பதும் இது. காயம், வடு என்பவை வேறாம். ஊமை யெழுத்து: ஊமை + எழுத்து = ஊமையெழுத்து. தானே ஒலித்தல் இல்லாத எழுத்து ஊமை எழுத்தாம். அது மெய்யெழுத்தாகும். க் என்பதை இகரம் முன் சேர்ந்து இக் எனவும், அகரம் பின்சேர்த்துக் க எனவும் சொல்ல இயலுமே அல்லாமல் க் என ஒலிக்க முடியாமை அறிக. இவ்வாறே மெய்யெழுத்துகள் எல்லாவற்றையும் அவற்றை மட்டுமே ஒலிக்க முடியாமையால் ஊமை எழுத்து என்றனராம். ஊமையெழுத்து = மெய்யெழுத்து (வி) ஊம் போடல்: ஒப்பிக்கேட்டல் ஊம் போடலாம். ஒருவர் ஒரு செய்தியை அல்லது கதையைச் சொல்லும் போது, அதனைக் கேட்டுக் கொண்டு வருவதற்கு அடையாளமாக வாயால், ஊம் கொட்டல் வழக்கம். படுத்துக் கொண்டு பேசும் போது ஊம் கொட்டவில்லை என்றால் உறங்கி விட்டதாகப் பொருள். விருப்பமில்லாத செய்தியைத் தவிர்ப்பதற்காகச் சொல்பவர் உறங்குவதாக எண்ணிக் கொள்ளுமாறு கேட்பவர் ஊம் போடாமல் விட்டு விடுவதும் உண்டு. ஊம் என்பது ஆம் என்றும் ஒலிக்கும். ஓர் ஊம் ஒப்புக் கொள்ளல் அடையாளம். ஈர் ஊம் போடல் (ஊம் ஊம் > ஊகூம்) மறுப்பின் குறிப்பு. ஊம் என்பது சாரியையோடு ஊங்காரம் எனப்படும். ஊரங்கணம்: ஊர் + அங்கணம் = ஊரங்கணம். ஊர்க்கழிவு வடிகால்,. ஊரங்கணமாம். வீடுதோறும் வழியும் அங்கண நீர், ஊரங்கண வடிகாலில் வீழ்தலும் பள்ளம் நோக்கி ஓடலும் ஆறு குளங்களை அடைதலும் காண்பனவே. ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால் - நாலடி.. 175 உரவுநீர் = பெருக்குடைய நீர், ஆறு * அங்கணம் காண்க. ஊரடங்கல்: ஊர் நிலங்களைப் பற்றி எல்லா வகையான விளக்கங் களையும் உடைய கணக்கு ஊரடங்கல் ஆகும் ஊரடங்கில் நன்செய், புன்செய், கடமையும்- (க.க.அ.) ஊரணி, ஊருணி: ஊரணி, ஊருணி இவ்விரு சொற்களும் நீர் நிலைமை குறிப்பனவே எனினும் வேறுபட்டன. ஊர் + அணி = ஊரணி, ஊர்க்கு அணித்தாக இருக்கும் நீர்நிலை ஊர்க்கும் அணித்தே பொய்கைஎன்னும் குறுந்தொகை ஊரணிப் பொருளை நன்கு விளக்குகின்றது. (103) ஊருணி என்பது ஊரவரால் உண்ணப்படும் நீரை உடையது என்னும் பொருளது. ஊருண் கேணிஎன்னும் குறுந்தொகை (399) அச்சொல்லையும் பொருள் பெற விளக்கும். ஊருணி நீர் நிறைந்தற்றேஎன்னும் குறளும் (215), ஊருணி நீர் நிறையவும்என்னும் கம்பர் வாக்கும் (அயோ. 82) கற்றோர் அறிந்தன. குடிநீர்ப்பயன் கொள்ளும் குளம் ஒன்றும், குளித்தல், ஆடுமாடு குளிப்பாட்டல், கலங்கழுவுதல், சலவை செய்தல் என்பவற்றுக்கெனக் குளம் ஒன்றும் ஆக இருவகைக் குளங்கள் ஊரவர் பயன் கருதிப் பண்டே அமைக்கப்பட்டன. இன்றும், செட்டிநாட்டுப் பகுதியில் எல்லாம் அவ்விரு வகை நீர் நிலைகளும் இருத்தல் கண்கூடு. ஊரணி, இட அணிமைப் பொருள் நிலையில் நின்றது. ஊருணி உண்ணும் வினை அடிப்படைப் பொருள் நிலையில் நின்றது. ஊரணி வேறு; ஊருணி வேறு; இவற்றை ஒன்றென மயங்குதல் பிழை. தனித்தனிப் பொருட்சிறப்புடையன இவை. ஊரவை: ஊர் + அவை = ஊரவை. ஊர் ஆட்சிக்குச் சோழர் நாளில் அமைக்கப்பட்ட அவை ஊரவை யாகும். ஊரான் கணம் என்பாரும் இவர். குடவோலை வழியாக இவர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். அவ்வவ் வாண்டு ஊர்வாரியம் செய்யும் பெருமக்களே இடக்கடவராகவும்(க.க.அ.மு.) ஊரழியப் போதேன்: பகைவரால் ஊர் அழியும் நிலையில் அப்போரில் தலைப்படாமல் ஓடிப் போகமாட்டேன்என்னும் வீறு. ஊரழியப் போதேன் என்று பட்டான் செங்கம்நடுகல் (க.க.அ.க.) பட்டான் = இறந்தான். ஊரழைப்பு: ஊர் + அழைப்பு= ஊரழைப்பு . பூப்பு நீராட்டு, திருமணம் முதலிய மங்கல விழாவுக்கு ஊரவர் அனைவரையும் வீடு வீடாகச் சென்று வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது ஊரழைப்பாகும். ஊர்க்குள்ள பொதுக்கூட்டத்திற்கு ஊரவர் வர அழைப்பு, ஊர்சாற்றுதல் (ஊர்சாட்டுதல்) எனப்படும். ஊர் சாற்றுவார் தமுக்கடித்துக் கூடச் செய்து, இன்ன செய்தி என உரைப்பர். ஊரன்: ஊர் + அன் = ஊரன் = மருத நிலத்தலைவன் நாடன் என்கோ ஊரன் என்கோ - புறம். 49 குறிஞ்சி முல்லை வளர்நிலையில் மருதம் ஆகும். ஆதலால், ஊரமைப்புச் சிறந்தது. அதனால், மருதநிலத் தலைவன் ஊரன் எனப்பட்டான். ஊராண்மை: ஊராண்மை:1 ஊர் + ஆண்மை. ஆண்மை > ஆளுமை; ஆட்சி ஊரவை யின் ஆட்சி. ஒவ்வோர் ஊரிலும் அதன் ஆளுமைக் கென்று (நிர்வாகத்திற்கென்று) அமைக்கப்பட்ட ஊர்ச்சபையும் அதனுள் அடங்கிய வாரியங்களும் கூடிய செயல்முறைக் கூட்டம் ஊராண்மையாம்.ஊராண்மையில் வேறொன்றாக்கி (க.க.அ.மு.) ஊராண்மை:2 ஊர் + ஆண்மை = ஊராண்மை. ஆண்மை, ஆளுமை ஊராண்மையாவது ஊர்ந்து செல்லும் உயர்ந்த ஆளுமைப் பண்பாகிய கண்ணோட்டம். பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு - திருக்.773 வீரத்திலும் வீரம், போரிடை ஆற்றாது நின்றான் மேல் காட்டும் அருளிரக்க உதவியாம். ஊராயி: ஊர் + ஆய் = இ = ஊராயி. ஊரவர்க்கு அன்னைத் தெய்வ மாக அமைந்தது ஊராயி அம்மையாம். ஆய் = தாய். இ=பெண்பால் ஈறு. ஊரும் உலகப் பகுதியே ஆதலால் ஊராயி, உலகாயியும் ஆம். ஆதலால் உலகம்மை என்பதும் சில ஊர்த் தெய்வப் பெயர்களாம். உலகத்தையே அப்பனாக்கிய பாட்டு, பாரதிதாசனார் பாடிய உலகப்பன் பாட்டு. உலகப்பன் உலக நாதனும் ஆதலால், அப்பெயராளன் அமைத்த அறநூல் உலகநீதி ஆயிற்று. ஊரார்: ஊர் + ஆர் = ஊரார். ஊரார் = ஊரவர், ஊரினர். ஊரீ ரேயோ ஒள்ளழல் ஈமம் தாரீரோயோ - மணிமே. 16:23,24 ஊரீரேயோ = ஊரவர்களே. ஊராளி: ஊர் + ஆளி = ஊராளி = ஊர் ஆட்சி செய்பவர். ஆளி = அரிமா. விலங்கரசு எனப்படுவது அது. வில் வல்லார் வில்லாளி; எழுத்துவல்லார் எழுத்தாளி. வல்லார் ஆளுமை வல்லார் ஆதலால், ஆளி எனப்பட்டார். ஆளியை ஆளன் எனலும் வழக்கு. வில்லாளன், எழுத்தாளன். ஆளன் என்பது அடைச்சொல் கொள்ளவில்லையேல் கணவன் பொருள் தந்தது. ஆளன் = கணவன். ஊரி: ஊரி:1 உயர் > ஊர் + இ = ஊரி. நிலத்தடியாம் வளை, பொந்து, புடை ஆயவற்றில் இருந்து உயரே வருவன உயரியாய் - ஊரியாய் - வழங்கப் பெற்றவனவாம். ஊர்வன என்பதை ஊரி என வழங்கினர் என்பதன் சான்று ஆகடூரி, அகடு = வயிறு. வயிற்றால் ஊர்ந்து செல்லும் பாம்பு அகடூரி எனப்பட்டதாம். கல்வி .ஊர்ந்து செல்லக் கற்பிக்கும் இடம் கல்லூரி எனப்பட்டது. கலத்தற் காலம் கல்லூரி கொட்டிலர் - சிந்தா. 993 ஊரி:2 புல்லுருவி. ஒரு மரத்தின் ஓட்டாகத் தோன்றி அதன் நீரையும் ஊட்டத்தையும் உருவி உறிஞ்சி வாழ்வதால் புல்லுருவி எனப்பட்டதாம். ஊரி:3 ஊர்ந்து செல்லும் முகில் ஊரியாம். ஊரின்னிசை: பாட்டுடைத் தலைவன் ஊரினைச் சார இன்னிசை வெண்பாவினால் தொண்ணூறேனும் எழுபதேனும், ஐம்பதே னும் பாடுதல் ஊரின்னிசை எனப்பெறும். பாட்டுடைத் தலைமகன் ஊரைச்சார இன்னிசை வெண்பா எழுபான் இருபஃ தேனும் எழுபா னேனும் ஐம்பஃ தேனும் இயம்புவ தூரின் னிசையே - முத்துவீ.1093 ஊரும் சேரியும்: ஊர் = பேரூர் சேரி = பேரூரைச் சேர இருந்த சிற்றூர். ஊரும் சேரியும் என்பவை தனித்தனியாக இருந்த பேரூரும், அதனைச் சேர இருந்த சிற்றூருமாம். ஊஉர் அலரெழ சேரி கல்லென - குறுந். 262 ஊரும் சேரியும் உடனியைந் தலரெழ - அகம். 220 ஊரோம்பல்: ஊர் + ஓம்பல் = ஊரோம்பல் = ஊரவரை முழுதுறப் பேணிக்காத்தல் ஊரோம்பலாம். ஊரோம்பல் மேற்கொண்ட வண்மையர் கொடையும், வலிமையர் பாதுகாப்பும் ஊரவர் நலத்திற்கு உறுதுணையாக இருந்தமையால் அவர்கள் ஊரவர் வழிபடும் தெய்வநிலை எய்தினர். கருப்பன், செவத்தியான், மதுரைவீரன், மாடசாமி, முனியப்பன் என வழிபாடு செய்யப் பெறுவார் பண்டு ஊரோம்புநராக இருந்தவராம். ஊர்: ஊர் என்னும் பெயர் தமிழ்நாட்டில் மிகுதி; சிற்றூர், பேரூர், ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் என்பன வெல்லாம் இன்று எங்கும் கேட்கப்படுவன, ஊர், பழந்தமிழ்ச் சொல், தொல்காப்பியத்திலேயே ஊர்ப்பெயர் உண்டு. ஊரும் பேரும்என்னும் இணைமொழி எவரும் அறிந்தது. அப்படி ஒரு நூற்பெயரும் தோன்றித் தமிழ்நாட்டு ஊர்ப் பெயர்களைச் சுவையாகக் கூறியது. ஊர், தமிழ்நாட்டுக் குடியிருப்புப் பெயர் எனினும், தமிழ்ச்சொல் எனினும். உலகப் பழம்பெயராகியமையை உலக வரலாறு காட்டுகின்றது, உலகுக்குத் தமிழ் தந்த கொடை அது. அண்டை அயல் நாடுகளிலும் ஊர்ப்பெயராட்சி உண்டு. இதுகால் தமிழ் வழக்கு இல்லா வடநாடு, அண்டை நாடுகளிலும், ஊர்ப்பெயர் உண்மை எவரும் அறிந்ததே ஊர் என்னும் பெயர் எப்படி வந்தது. மலைமேலே வீடு எழுப்பினாலும் சரி, மலையடிப் பள்ளத்தாக்கில் வீடு எழுப்பினாலும் சரி - உயரமான இடத்தைத் தெரிந்து கட்டுவதே வழக்கம். சாலையிலும் வீடு உயரமாக - மேடாக இருக்க வேண்டும் என்று திட்டப்படுத்திக் கட்டுவதும் நடைமுறை. பள்ளத்தில் தேங்குதல் நீரியல்பு. மேட்டிலிருந்து நீர் வழிந்தோடுதலும் இயல்பு அதனால் மேட்டுக்குடி என்றாலும் சரி, வறுமைக்குடி என்றாலும் சரி, தன் குடியிருப்பை நிலமட்டத்திற்கு மேல் உயர்த்திக் கட்டுவதே அறிவியலுடன் கூடிய நடைமுறை. அம்முறையை விளக்குவதாகச் சொல்லை முன்னையோர் படைத்துக் கொண்டமை அச்சொற் சிறப்புடன். அப்படைப்பாளர் சிறப்பையும் காட்டுவதாம். உயர் என்பது ஊர் ஆகியது. இரு குறில் ஒரு நெடிலாக மாறிப் பொருள் மாறாதிருத்தல் என்பது சொல்லியல் நெறிமுறைகளுள் ஒன்று. அம்முறைப்படி ஆகிய பெயர்களுள் ஒன்று ஊர் என்பது. x.neh.: பெயர் > பேர்; பெயர்வை > பேர்வை; வியர்வை > வெயர்வை > வேர்வை. ஊர் என்பது பொதுப்பெயர், உயர்வான இடத்தில் அமைந்தது என்னும் பொருளது. அதற்கு முன்னாகச் சிறப்புப் பெயர்கள் அமைந்தன. சிறப்புப் பெயர்கள் பொதுப் பெயரை விலக்கித் தனிப்பெயரைக் காட்டுவதற்கு வந்தன என்க. கொடி என்னும் பொதுப்பெயர் அவரைக்கொடி என்னும் போது மற்றைக் கொடிகளிலிருந்து தனித்துக் காட்டவில்லையா, அது போல். எ-டு: மலையூர், ஆற்றூர், சேற்றூர், நாவலூர், ஊரெனப் படுவது உறையூர் என்னும் பழமொழி அவ்வூர்ச் சிறப்பை உணர்த்துவது. ஊர் காப்பாளர்: நகர் காவலுக்காக அரசால் அமைக்கப்பட்டவர் ஊர் காப்பாளர். அவர் காவல் திறவோராகத் தக்க நூல்களைக் கற்றவர் துணிவு மிக்கவர். பகற்காவலினும் இரவுக்காவல் அருமை அறிந்து கடனாற்றுபவர். நகரவர் இனிதாகத் துயில் கொள்ளுமாறு கட்டமைந்த காவல் புரிபவர். வயக்கன்று பார்க்கும் வயப்புலி போலத் துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர் அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த நூல்வழிப் பிழையா நுணங்குநுண் தேர்ச்சி ஊர்காப் பாளர் - மதுரைக். 643 - 647 ஊர்கொலை: வெட்சி மறவர்கள் பகைவர் ஊரை அழிப்பது ஊர்கொலையாம் விரைபரி கடவி வில்லுடை மறவர் குறையழல் நடப்பக் குறும்பெறிந் தன்று - பு.வெ.17 ஊர்கொலை என்பது இரண்டாவதன் தொகைநிலைத் தொடராகலான் மிகாது இயல்பாயிற்று. (பெருமழைப்) ஊர் கோள்: ஊர்கோள்:1 பகைவர் ஊரைப் பற்றிக் கொள்ளல் ஊர்கோள் என்னும் புறத்துறையாம் ஊர்கோள்:2 திங்களையும் ஞாயிற்றையும் புவிநிழல் மறைத்தலால் உண்டாம் கருநிழல் செந்நிழல் (இராகு. கேது) ஊர்கோள் என்பதாம். திங்களைப் பாம்புகொண் டற்று - திருக். 1146 ஊர்க்கற் செம்மை: ஊரில் பொன் நிறுப்பதற்கென அரசு முத்திரையிட்டு வழங்கிய எடைக்கல் ஊர்க்கல் செம்மையாம். செம்மை = நடுவுநிலைமை; செப்பம். பொன் ஊர்க்கற் செம்மை முப்பதின் சுழஞ்சு - க.க.அ.மு. ஊர்க்காலி: ஊர் + காலி = ஊர்க்காலி = ஊரில் உள்ள கால்நடை. அவை பெரிதும் ஆ, ஆன், காரான், என்பவை. காரான் = எருமை. ஊர் மாடுகளை மேய்ப்பவர் உண்டு. அவர் மேய்ச்சல் நிலத்திற்குக் கொண்டு சென்று மேய விட்டும் நீர்நிலை கண்டு குடிக்கவிட்டும் மாலைப்போதில் ஊர்க்குள் விடுபவர் ஊர்க்காலி எனப்படு வார், மாடுகளும் ஊர்க்காலி எனப்படும். பால் விற்பவர். பால் எனப்படுவது போல, வேற்றூர் மாடுகள் எனின் நிலத்தடி உரத்திற்குப் பயனாகும் வகையில் நில உரிமையர் ஏற்பாட்டின்படி அவர் நிலத்தில் மந்தை போடுவது வழக்கம். கிடைபோடல் என்பது அது கிடை = படுத்துக் கிடத்தல். வெளியூர் மாடுகள் கிடை மாடுகள் எனவும் படும். ஊர்க்குருவி: ஊர் + குருவி = ஊர்க்குருவி. வீட்டு மாடங்களில் கூடு கட்டி வாழும் சிறிய குருவி. அடைக்கலான் குருவி என்பதும் இது, ஊர்க்குருவி சிவல்காடை முதற்பிறவும் ஈன்றாள் - கம்ப ஆரண். 203 ஊர்சுற்றி: ஊர் சுற்றி வருவாரை ஊர் சுற்றி என்பது வழக்கம். உலகம் சுற்றி, தெருச்சுற்றி என்பவையும் இவ்வழக்கினவே. கள்ளிக்குடி, பெட்டவாய்த்தலை வட்டாரங்களில் ஊர்சுற்றி என்பது பன்றியைக் குறிப்பதாக உள்ளது. ஊர்ச்செரு: பகைவரால், காவற்காடும் அகழியும் அழியாமல் நொச்சி மறவர் போரிடுவது பற்றிய புறத்துறை இது, (பு.வெ.5:3) ஊர்தண்டல்: ஊர்களில் வரி வாங்குதல் இவ்வூர் ஊர்தண்டல் நெற்குன்ற முடையார் திருநட்டப் பெருமானான தென்னவன் மூவேந்த வேளார்(க.க.அ.மு.) ஊர் தரப்படி: அந்த அந்த ஊர்களில் உள்ள நிலத்தின் தரத்திற்கு ஏற்ப வாங்கும் வரி. இந்த நிலத்துக்கு ஊர் தரப்படி நெல்லுஇறுக்கக் கடவதாகவும்(க.க.அ.மு.) ஊர்தல்: ஊர்தி மேல் ஏறிச் செல்லுதல்; இது, பின்னே ஊர்தியின்றி நடந்து செல்லுதல் பொருளும் தருவதாயிற்று. ஊர்தல் ஈண்டுப் போதன் மேற்று - சீவக. 286. நச். ஊர்தி: காளை, எருமை, குதிரை, ஒட்டகம் முதலியவற்றின் மேலும், உருளைகள் அமைந்த வண்டியின் மேலும் மாந்தன் செலவு (ஊர்தல்) மேற்கொண்டான். அந்நிலையில் அவை ஊர்தி யாயின. ஊர்தி வால்வெள் ஏறே - புறம். கடவுள் என இறைவன் ஊர்தியைக் குறிக்கின்றது சங்கப்பாட்டு. நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் பற்றிச் சுட்டுகிறது மற்றொரு சங்கப் பாட்டு (நற். 210). கால்நடை ஊர்தி, கால் உருள் ஊர்தி என்னும் அளவில் ஊர்தி நின்று விடவில்லை. மண்ணில் ஊர்ந்து பறப்பதாக உள்ள வான ஊர்தியை அறிவோம். வான ஊர்தி என்னும் சொல் நாம் படைத்துக் கொண்ட புதுச்சொல் அன்று; பழஞ்சொல். புதிதாகக் கண்ட பொறிக்குப் பழம்பெயர் ஒன்றைத் தெரிந்து கொண்ட கலைச்சொல்லாக்கமே அது. விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி - புறம் 27 என்பதும் சங்கப்பாட்டே . ஆளிருந்து இயக்குதல் இன்றி வானில் இயங்கும் ஊர்தி என்கிறது அது. ஊர்தியில் ஆள் இன்றிக் கீழேயுள்ள நிலையத் தொடர்பால் இயக்கப்படும் இந்நாற் வானவூர்திக்கும் வலவன் ஏவா வானவூர்திஎனப்பெயர் தந்துள்ளமை அறிக. குருவி பறக்கும் வீட்டின் மேல் கொக்கு பறக்கும் அதற்கு மேல் காக்கை பறக்கும் அதற்கு மேல் பருந்து பறக்கும் அதற்கு மேல் புறாப் பறக்கும் அதற்கு மேல் எல்லாம் உயரப் பறந்தாலும் என்மனம் போலப் பறந்திடுமோ? என்பது இளையோர்க்குக் கற்பித்த பள்ளிப் பாடல். இன்றோ (வான) ஊர்தி பறக்கும் அதற்கு மேல். (செயற்கைக்) கோள்கள் பறக்கும் அதற்கு மேல் என்பவற்றையும் இணைக்கலாம். இப்பாடலின் வினா தரும் செய்தி, எட்டா உயரம் பறப்பது உள்ளம்என்பதாம்! அஃது எத்தனையோ உயர்வுகளைக் காண்கிறது! உள்ளத் தனையது உயர்வுஎன்னும் வள்ளுவம் (595), பேராண்மையினும் உயர்ந்தது ஊராண்மை என்றும் அது பேசும். அவ்வுயர்வை ஊர்ப் பெயரைக் கண்ட போதே நம்முன்னோர் அமைத்துக் கொண்டது அருமையாம். ஊர்த்துவம்: ஊர் > ஊர்த்து > ஊர்த்துவம். ஊர்வதற்கு எடுத்த அடி போல அடி ஒன்றை மேலே தூக்கிய நிலை ஊர்த்துவ நிலையாகும். ஊர்த்துவ தாண்டவம், தூங்கிய திருவடி என்பவை அவை. குஞ்சித பாதம் என்பதும் அது, எடுத்த பொற்பாதம்என்பார் நாவுக்கரசர் (தேவா.) ஊர் நேரிசை: பாட்டுடைத் தலைவன் பெயரினைச் சார்ந்து நேரிசை வெண்பாவை தொண்ணூறேனும், எழுபதேனும், ஐம்பதேனும் பாடுதல் ஊர் நேரிசை பெறும். இன்னிசை போல இறைவன் பெயரூர் தன்னின் இயல்வது தானே ரிசையே - இலக்.பாட். 707 ஊரைச் சார உரைப்பதூர் நேரிசை - முத்துவீ, 1095 ஊர்ப்பட்டது: அங்கே பார்! ஊர்ப்பட்ட ஆள்என்பது மக்கள் வழக்கு. ஊர்ப்படுதல் ஊரெல்லாம் ஒருங்கு கூடிய கூட்டம் - பெருங்கூட்டம் என்பதாம். ஊர்ப்பட்ட விலை, ஊர்ப்பட்ட வெள்ளம் என்பனவும் மிகுதிப் பொருள் தருவனவே. முன்பு ஒற்றை வீடு; ஒற்றைக்கடை எனப்பட்டவை இன்று ஊர்ப்பட்ட வீடுகளையும் ஊர்ப்பட்ட கடைகளையும் கொண்டு நகரங்களாக உள்ளமை கண்கூடு. ஊர் என்பது பேரூரும் சுட்டும் என்பது சோழன் தலைநகராக இந்த உறையூரை எண்ணின் விளங்கும். ஊர்ப்புறம்: ஊர் + புறம் = ஊர்ப்புறம் = ஊரின் பக்கம். ஊரைச் சுற்றியுள்ள இடம். பெருநிரை ஊர்ப்புறம் நிறையத் தருகுவன் - புறம். 258 புரம் = ஊர்ப்பெயர் ஈறு, புறம் = பக்கம், புறப்பொருள். * புரமும் புறமும் காண்க. ஊர்ப்பெயர் ஈறுகள்: தமிழகத்தின் ஊர்ப்பெயர்கள் தமிழக இயற்கை வளம் வரலாறு பண்பாடு முதலியவற்றின் பெட்டகமாக இருப்பவை. தனிப் பேராய்வுக்கும் உரியவை. அவ்வகையில் முன்னரே வெளிவந்தஊரும் பேரும் என்னும் நூல் சிறப்பாகச் சுட்டத் தக்கது. பின்னர் ஊராய்வு பற்றிய மாவட்ட - வட்ட ஆய்வு நூல்கள் சில வெளிவந்துள்ளன; வரவும் உள்ளன. ஊர்ப்பெயர்களின் முன்னை அமைந்தது சிறப்புப் பெயரால். பின்னை அமைந்தது, பொதுப் பெயராம், பொதுப்பெயர் எண்ணிக்கையையும் வரம்புகட்டல் அரிது என்றால் சிறப்புப் பெயர்ப் பட்டி அரசு ஆவணங்கள் வாக்காளர் பட்டியல் அனைத்தையும் திரட்டினால்தான் இயலும். ஆதலால் பொதுப்பெயர் மட்டுமே அறிந்த தெரிந்த அளவால் பட்டியலிடப்படுகின்றன. பொதுப்பெயர் ஒவ்வொன்றும் பொருளொடு கூடிய பெயர்கள். இயற்கையை மறந்த பின்னை ஆட்பெயர்கள் பெருகி, ஆட்பெயர்களே பெயராம் வகையில் அமைந்து வருகின்றன. ஊர், பட்டி, புரம் முதலியவை ஊர்ப்பெயர்களின் பொதுப் பெயர்களுக்கு சான்றாகும். இத்தொகுப்பில் ஊர்ப்பெயர்களின் பொதுப்பெயர் அகரவரிசையில் ஏறத்தாழ 500 தரப்பட்டுள. தனிப்பெரும் ஆய்வும் விளக்கமும் எடுத்துக் காட்டும் தர வேண்டியவை இவை. ஆதலால் பெயர்ப்பட்டியல் அளவில் அமைகின்றதாம். ஊர்ப்பெயர் ஈறு- எடுத்துக்காட்டு: அகம் - ஏரகம் அகரம் - நயினார் அகரம். அடக்கி - அமர் அடக்கி. அடம் - பல்லடம். அடி - அரசடி, காலடி, கோயிலடி அடை - வெள்ளடை. அடைப்பு - மூன்றடைப்பு அட்டி - ஆவட்டி அணி - பகையணி, பிராந்தணி, ஆரணி, பேரணி, உருகணி. அணை - திருப்புல்லணை, கல்லணை, வெள்ளியணை, அந்தகம் (ன்) - மதுராந்தகம், சிங்களாந்தகம், சோழாந்தகம் அத்தி - திருவத்தி, கல்லத்தி. அதிகை - திருவதிகை அத்திரி - காளத்திரி, வெள்ளத்திரி அந்தை - சேரந்தை, கீரந்தை, புல்லந்தை,மாறந்தை அமலை - ஊன் அமலை (குவியல்) அம் - ஏமம், முதிரம் அம்பர் - இன்னம்பர், கோழம்பர் அம்பல் - அம்பல், காரம்பல்,அஞ்சத்தம்பல். அம்பலம் - திருச்சிற்றம்பலம் அம்பி - கீழம்பி, மேலம்பி அயம் - கோட்டயம். அரங்கம் - திருவரங்கம். அரண் - மேலரண், கீழரண் அல் - கல்லல், மல்லல், வாங்கல். அளம் - பேரளம். அறை - வெள்ளறை, எட்டறை ஆச்சி - நாகாச்சி, மணியாச்சி ஆடானை - திருவாடானை ஆடி - தில்லையாடி, வாளாடி ஆட்சி - அருளாட்சி, விருப்பாட்சி ஆட்டம் - திருவிடையாட்டம். ஆணம் - வீராணம். ஆணி - சங்காணி ஆரம் - கொட்டாரம். ஆலம் - குற்றலாம், கொடியாலம். ஆல் - படர்ந்தால், ஓரால், ஈரால் ஆலி - திருவாலி ஆலை - செக்காலை (காரைக்குடியின் ஒரு பகுதி) ஆவடி - ஆவடி ஆவணம் - ஆவணம் (தஞ்சை மாவட்டம்) ஆவி - நீராவி. ஆறு - செய்யாறு, மூன்றாறு (மூணாறு), கோட்டாறு, அடையாறு ஆறை - பழையாறை ஆனம் - வண்டானம் இ - சேந்தனி, நாகனி இடைக்கழி - திருவிடைக்கழி. இந்திரம் - மகேந்திரம், சுசீந்திரம் இயம் - இராங்கியம்,வாஞ்சியம், தொட்டியம். இயல் - இரணியல். இருக்கை - நல்லிருக்கை, வேளிருக்கை இருப்பு - சேரந்தை பிள்ளை குடியிருப்பு இரும்பை - இரும்பை இலங்கை - மாவிலங்கை இல் - கிடங்கில், பொதும்பில், கள்ளில், செந்தில், இலஞ்சி - இலஞ்சி (குற்றாலம் சார்ந்தது) இலி - கோளிலி ஈச்சுரம் - நாகேச்சுரம். ஈரம் - கண்டீரம் உடைப்பு - மூன்றுடைப்பு (மூணுடைப்பு). உருட்டி - பண்ணுருட்டி. உவரி - உவரி (முகவை மாவட்டம்). உள் - திருவெவ்வுள். உள்ளம் - சாத்தன் உள்ளம். ஊதி - கொம்பூதி. ஊரணி - கல்லூரணி, செக்கானூரணி ஊர் - உறையூர், இறையூர், ஆரூர் ஊறு - முத்தூறு, முத்தூற்றுக் கூற்றம். ஊற்று - தாழையூற்று செக்கானூற்று எஃகா - திருவெஃகா எட்டி - தென்னெட்டி எந்தை - திருவிட எந்தை. எயில் - கானப்பேரெயில் எவ்வுள் - திருஎவ்வுள். ஏந்தல் - முத்தரசன் ஏந்தல், கொம்புக் காரன் ஏந்தல். ஏந்தி - சங்கேந்தி. ஏமம் - சிற்றேமம் ஏயம் - காங்கேயம். ஏரி - பொன்னேரி, முகப்பேரி, தச்சனேரி, புத்தேரி, ஏறை - ஏறை ஏனாதி - ஏனாதி (முகவை மாவட்டம்) ஐ - அழுந்தை, இருப்பை, ஈர்ந்தை முகவை ஒட்டி - வழுக்கல் ஒட்டி ஓகம் - மாறோகம் ஓடு - பேரோடு, சிற்றோடு ஈரோடு, வெள்ளோடு ஓடை - சாம்பன் ஓடை, கல்லோடை கங்கை - சிவகங்கை கடம் - வேங்கடம், திருவேங்கடம் கடல் - சிறுகடல், திருக்கடல் (செங்கை) கடவு - கிணற்றுக்கடவு கடிகை - கடிகை (சோளங்கிபுரம்) கடுகு - கடுகு (செங்கை) கடை - ஒற்றைக்கடை (ஒத்தக்கடை) கட்டளை - கட்டளை (நெல்லை மாவட்டம்) கண் - கண், எண்கண் கண்டம் - மணிகண்டம், முடிகண்டம் கண்டிகை - பெரும் பெயர்க் கண்டிகை, நெட்டேரிக் கண்டிகை கண்டை - மலைக்கண்டை புன்னைக்கண்டை (செங்கை) கண்ணி - குவளைக்கண்ணி (நெல்லை) கமுதி - கமுதி கரடு - கரடு கரணை - கரணை, பள்ளிக்கரனை (சென்னை) கரம்பை - குருவிக்கரம்பை கரிசல் - குலையன் கரிசல் கருவல் - கருவல். கரை - உக்கரை, நீலாங்கரை, பாலக்கரை கலை - தொட்டிக்கலை கல் - திண்டுக்கல், குண்டக்கல். கழனி - புதுக்கழனி. கழி - திருவிடைக்கழி. களப்பு - மட்டக்களப்பு களம் - திருவேட்களம், திருநெடுங்களம் களர் - திருக்களர் கா - கோலக்கா, திருத்தண்கா காசி - தென்காசி, சிவகாசி காஞ்சி - காஞ்சி. காடு - திருவேற்காடு, களக்காடு, ஏர்க்காடு, ஆர்க்காடு காணி - வேளாண்காணி, காமக்காணி காத்தான் - மானங்காத்தான், கானாடு காத்தான் காணம் - மரக்காணம் காரணை - திருக்காரணை காரோணம் - நாகைக் காரோணம் காயல் - புன்னைக்காயல், மஞ்சள்காயல். காலி - கருங்காலி (செங்கை) கால் - திருத்தண்கால், மணற்கால், வெள்ளக்கால் காவல் - வாரியங்காவல் காவிதி - காவிதி காவு - ஆரியங்காவு காவேரி - நடுக்காவேரி காழி - காழி, சீர்காழி கானம் - மாகானம், கொடும்பை மாகானம். கானல் - கோடைக்கானல் கிணறு - மல்லாங்கிணறு, காரைக்கிணறு, காவல்கிணறு கிளர் - கருப்பக்கிளர். குட்டம் - சூரியக்குட்டம், சோனைக்குட்டம் குடி - காரைக்குடி, குன்றக்குடி குடிகாடு - குடிகாடு, இலப்பை குடிகாடு குடியிருப்பு - குடியிருப்பு குண்டம் - திருவைகுண்டம் குண்டு - வெற்றிலைக் (வத்தலக்)குண்டு, `கடமலைக்குண்டு குத்தி - புலிகுத்தி, பன்றிகுத்தி. குப்பம் - மேட்டுக்குப்பம் குப்பி - நெய்க்குப்பி குப்பை - நெற்குப்பை குமணம் - குமணம் குமுழி - குமுழி > குமினி (செங்கை) குவளை - திருக்குவளை குழி - ஊற்று (ஊத்து)க் குழி, திருமாணிக்குழி. குளம் - கரிசல்குளம், பெரியகுளம் குறிச்சி - பிச்சக்குறிச்சி, ஆழ்வார் குறிச்சி குறுக்கை - திருக்குறுக்கை குன்றம் - திருப்பரங்குன்றம், திருக்கழுக்குன்றம் குன்று - செங்குன்று, நெடுங்குன்று கூடல் - கூடல், நான்மாடக் கூடல் கேணி - திருவல்லிக்கேணி, காரைக்கேணி கை - வலங்கை கொட்டாய் - எட்டுக்கொட்டாய், `காட்டுக் கொட்டாய் (கொட்டகை) கொண்டல் - கொண்டல். கொண்டான் - செப்பேடு கொண்டான், ஈழம்திரை கொண்டான். கொண்டை - திருநறுங்கொண்டை கொந்தகை - கொந்தகை கொம்பு - முக்கொம்பு, தாடிக்கொம்பு கொல்லி - கொல்லி. கொல்லை - பூங்கொல்லை கொற்கை - கொற்கை கோடி - தனுக்கோடி கோடு - திருச்செங்கோடு கோட்டம் - குமரகோட்டம் கோட்டகம் - கோட்டகம் > கோட்டயம். கோட்டை - புதுக்கோட்டைபழங்கோட்டை, அறுப்புக்கோட்டை கோணம் - அரக்கோணம். கோப்பு - கோப்பு கோம்பை - கோம்பை கோயில் - நாகர் கோயில், மன்னார்கோயில் கோரை - தண்டாங்கோரை கோலம் - திருவிற்கோலம் கோல் - திரக்கோல் கோழி - கோழி, சங்கடம் - பாடிய சங்கடம் சடை - கோச்சடை சத்திரம் - ஒட்டன் சத்திரம், பழுவூர்ச்சத்திரம் சந்தை - புதன்சந்தை சலவாதி - சலவாதி சாந்தன் - குவளைச் சாந்தன் சாரம் - சாரம் சாலை - குறுக்குச்சாலை சாவடி - தட்டான்சாவடி சிக்கல் - சிக்கல் சிந்தாமணி - சிந்தாமணி சிதை - முன்சிதை சினம் - கைச்சினம் சீத்தை - மேலச்சீத்தை சீலம் - குணசீலம் சுரம் - திருவிடைச்சுரம் சுருட்டி - மீன்சுருட்டி சுருளி - சுருளி சுழி - வலஞ்சுழி, திருச்சுழி, சுழியல் - திருச்சுழியல் சூலம் - திரிசூலம் செஞ்சடை - செஞ்சடை செஞ்சி - செஞ்சி செம்பியம் - செம்பியம் செயல் - கீழைச்செயல் செருவாய் - கீழைச்செருவாய், மேலைச்செருவாய் செறு - கீழைச்செறு, மேலைச்செறு சேகரம் - குணசேகரம், குலசேகரம் சேத்தி - திருப்பாச்சேத்தி சேரலம் - சேரலம், சேலம். சேரி - கூடுவாஞ்சேரி, சோலைசேரி சேறை - திருச்சேறை சோமாசி - சோமாசி. சோலை - மாஞ்சோலை சோழன் - வீரசோழன் ஞீலி - திருப்பைஞ்ஞீலி. தக்கோலம் - தக்கோலம் தங்கல் - வேடன்தங்கல், திருத்தங்கல் தட்டி - பொட்டி தட்டி, கூடை தட்டி தட்டு - ரெட்டி தட்டு தட்டை - வேப்பந்தட்டை தணிகை - திருத்தணிகை தண்டலம் - தண்டலம் தண்டலை - திருத்தண்டலை தரவை - தரவை, புத்திர தரவை தலம் - கவித்தலம். தலை - பெருந்தலை, சீத்தலை தளி - தளி, தாங்கல் - வேடன்தாங்கல் தாங்கி - அறம்தாங்கி, முடிதாங்கி தாண்டம் - மார்த்தாண்டம் தாயம் - திருவலிதாயம். தாவு - பெரியதாவு (குமரி மாவட்டம்) தாழை - தழுதாழை (பெரம்பலூர்), கூடுதாழை, பெரியதாழை தாள் - திருப்பனந்தாள், ஆலந்தாள் தானம் - தேவதானம், தில்லைத்தானம், திருநெய்த்தானம். தானி - உத்தமதானி (தஞ்சை) திட்டு - வாணன் திட்டு திட்டை - தென்குடித்திட்டை, கோத்திட்டை திண்டல் - திண்டல் திரம் - பவுத்திரம் தில்லை - திருத்தில்லை. தீர்த்தம் - பாணதீர்த்தம் தீர்த்தான் - அச்சம் தீர்த்தான். தீவட்டி - தீவட்டி துருக்கம் - துருக்கம், தந்தி துருக்கம். துருத்தி - திருப்பூந்துருத்தி துள்ளம் - துள்ளம் (சென்னை). துள்ளி - மீன்துள்ளி. துறை - திருச்செந்துறை,திருவாவடுதுறை, திருப்பராய்த்துறை தெரு - தெற்குத்தெரு (மேலூர்) தேயம் (தேசம்) - பிரமதேயம், ஒழுகின தேசம், ஏழுதேசம். தேவன் - அருண்மொழித்தேவன். தேரி - புத்தேரி (தேரி = மணல்மேடு) தேவி - வானவன்மாதேவி, சேரன் மாதேவி, சோழன்மாதேவி தேனி - தேனி. தொட்டி - விளத்தொட்டி தொண்டி - கீழ்கடல் தொண்டி, மேல்கடல் தொண்டி. தோட்டம் - பூந்தோட்டம் (தஞ்சை), தண்டன் தோட்டம். தோண்டி - பூத்தோண்டி தோப்பு - சேத்தியா தோப்பு. தோன்றி - தான்தோன்றி. நகரம் - நகரம், அல்லி நகரம் நகர் - நகர், திருநகர், நகரி - நகரி, ஆழ்வார் திருநகரி. நத்தம் - நத்தம், ஆவல் நத்தம், நந்தி - நந்தி, நல்லூர் - பெருவளநல்லூர் நள்ளி - நள்ளி நாடு - ஆண்மறை நாடு, வல்லநாடு, ஆப்பநாடு நாவல் - நாவல் நாழி - பெருநாழி நியமம் - பகுதி நியமம் நிலம் - நன்னிலம் நிலை - தென்னிலை, மைந்நிலை நீறு - திருநீறு நெடுமறம் - நெடுமறம் நெறி - தண்டலை நீள்நெறி நேரி - நாங்குநேரி நோக்கம் - வாலிநோக்கம் பட்டடை - ஒட்டர்பட்டடை, வெளிப் பட்டடை , கள்ளகம்பன் பட்டடை பட்டணம் - காவேரிப்பட்டணம், தேவிப்பட்டணம், கரிகாற்சோழன்பட்டணம். பட்டி - மேட்டுப்பட்டி, கலிங்கில்பட்டி பட்டினம் - காவிரிப்பூம் பட்டினம், சென்னைப்பட்டினம். பட்டு - செங்கழுநீர்ப்பட்டு (செங்கல் பட்டு) இருவேலிப்பட்டு படை - செங்கப்படை படைவீடு - படைவீடு பண்டம் - பண்டம் பண்டாரி - பண்டாரி பண்ணி - பண்ணி பண்ணை - ஏழாயிரம் பண்ணை பதி - திருப்பதி, இரட்டைத் திருப்பதி. பந்தல் - தண்ணீர்ப்பந்தல் பரப்பி - பொன்பரப்பி பரப்பு - கண்டன் பரப்பு (குமரி) பழஞ்சி - தென்பழஞ்சி (பழஞ்செய்) பழனம் - திருப்பழனம் பழனை - பழனை பள்ளம் - முந்நீர்ப் பள்ளம், மேலப்பெரும் பள்ளம் பள்ளி - திருக்காட்டுப்பள்ளி, சிக்கல் பள்ளி பறக்கை - பறக்கை (கயத்தாற்றுப் பகுதி) பற்றி - பொன்பற்றி பற்று - கோயிற்பற்று. பனை - ஏழ்பனை (நாடு) கூட்டப்பனை (குமரி மாவட்டம்) பாக்கம் - மருவூர்ப்பாக்கம், பட்டினப் பாக்கம், காவிதிப்பாக்கம் பாடல் - இதம்பாடல் பாடி - வாழைப்பாடி, வாணியன்பாடி, தரங்கம்பாடி பாடு - மணப்பாடு. பாணம் - யாழ்ப்பாணம் பாண்டி - வீரபாண்டி, நிலையாம் பாண்டி, பூதப்பாண்டி பாதிரி - பாதிரி பாலை - வடபாலை, திருக்கழிப்பாலை, திருப்பாலை பாளையம் - உத்தமபாளையம், மேலைப் பாளையம், ஆரப்பாளையம் பாறை - மணற்பாறை, சிப்பிப்பாறை, மைப்பாறை, பிசிர் - பிசிர் பிடாரம் - ஓட்டப்பிடாரம் பிள்ளை - இளம்பிள்ளை புகார் - பூம்புகார் பிள்ளை - இளம்பிள்ளை புகார் - பூம்புகார் புணரி - சிங்கம்புணரி புதல் - இரும்புதல் புரம் - விழுப்புரம் (வில்லுப்புரம்) வாழவந்தாள்புரம் புரளி - எருமைப்புரளி, புரி - அளகாபுரி, சிவபுரி புரிசை - புரிசை (காஞ்சிபுரம்) புரை - சென்னைப்புரை புலம் - தென்னம்புலம், ஆயக்காரன்புலம், முந்திரிப்புலம் புலி - ஐவாய்ப்புலி புழை - ஆலப்புழை, மலம்புழை புளி - பந்தல்புளி, கட்டப்புளி புறம் .- திருப்போர்ப்புறம் (திருப்பூர்) புறம்பயம் - புறம்பயம். பூண்டி - பூண்டி, திருச்சின்னம்பூண்டி பூவணம் - திருப்பூவணம் பூவந்தி - பூவந்தி. பூளை - இரும்பூளை பெயற்று - நீர்ப்பெயற்று பெருமழை - மேலைப்பெருமழை, கீழைப் பெருமழை பேடு - தொழுப்பேடு, மெய்ப்பேடு, கோயம்பேடு பேட்டை - சோமரசன் பேட்டை, கம்பரசன் பேட்டை, முந்தியாலுப்பேட்டை பேர் - திருப்பேர் பேரி - விசுவநாதப்பேரி, தென்திருப்பேரி. பேரை - தென்திருப்பேரை பை - கொடும்பை பொட்டணம் - பொட்டணம் பொட்டல் - கோவலன் பொட்டல் பொதிகை - பொதிகை பொதும்பு - பொதும்பு பொய்கை - பொய்கை பொழில் - பைம்பொழில் (பம்புளி), ஆலம்பொழில் பொன் - பசும்பொன். போகி - தேர்போகி மங்கலம் - திருமங்கலம்,சதுர்வேதி மங்கலம், சேர்ந்தபூமங்கலம் மங்கை - திருமங்கை, வரகுணமங்கை, சீவரமங்கை, உத்தரகோசரமங்கை மடம் - புதுமடம், ஆண்டிமடம் மடு - செம்மடு மடை - பத்தமடை, பாலாமடை, காரைமடை மணம் - நரிமணம்,இல மணம்(வேடச் சந்தூர்) மணலி - மணலி மணி - பெருகமணி, சிறுகமணி, குழுமணி மண்டகப்படி - மண்டகப்படி மண்டபம் - கருமண்டபம், அம்மா மண்டபம். மதுரை - மதுரை, வடமதுரை, மானவீரன் மதுரை மத்தி - பரமத்தி மந்து - ஒற்றைக்கல்மந்து (உதக மண்டலம்) மயிலம் - மயிலம் மரம் - நெடுமரம் மருகல் - திருமருகல் மருது - திருவிடைமருது. மலம் - கழுமலம். மலி - பூந்தண்மலி மலை - ஏழுமலை, தென்மலை, பறங்கிமலை மல்லி - மல்லி, கத்தமல்லி (முகவை சார் ஊர்) மல்லை - மாமல்லை. மழிசை - திருமழிசை மழை - பெருமழை மறித்துக்கட்டி - வெள்ளைமறித்துக்கட்டி மனம் - அத்திமனம் மன் - முடிமன் மா - செங்கண்மா மாகறல் - மாகறல் மாகாளம் - அம்பர்மாகாளம் மாங்குடி - நத்த மாங்குடி மாடம் - தான்தோன்றி மாடம், தூங்கானைமாடம். மாணிக்கம் - கரியமாணிக்கம், நெடிய மாணிக்கம், குல மாணிக்கம் மாரி - ஓயாமாரி. மாவடி - மாவடி. மூன்று மாவடி (மதுரை அழகர் கோயில்) மாளிகை - சோழன் மாளிகை மான் - அந்தமான், வலங்கைமான் மிழலை - திரு வீழிமிழலை, மிழலை, முசிறி - முசிறி முடி - சடைமுடி, கோடிமுடி முட்டம் - முட்டம், திருமுட்டம் முட்டி - வாரை முட்டி முடி - திருக்கடைமுடி முண்டம் - முண்டம் முரம்பு - முரம்பு முனை - முள்ளுமுனை முள்ளி - முள்ளி முற்றம் - வஞ்சிமுற்றம், சத்திமுற்றம், குளமுற்றம். மூக்கு - குடமூக்கு மூடு - முளகுமூடு (முளகு- மிளகு) மூலை - சூரியமூலை மெட்டு - போடிமெட்டு மெய்யம் - திருமெய்யம் (திருமயம்) மேடு - வாய்மேடு, மணல்மேடு, மங்கலமேடு, கல்லாமேடு மேனி - பொன்மேனி, நென்மேனி மையல் - மையல் வசலை - வசலை வஞ்சி - வஞ்சி வடலி - புனைவடலி, தலைவன்வடலி வண்டல் - வண்டல் வண்டி - கிழவண்டி வந்தி - அயவந்தி, வாழவந்தி வயம் - இடவயம் வயலி - மேலவயலி, கீழவயலி. வயல் - பிரண்டைவயல், புத்தன்வயல், நெடுவயல் வரம் - மிச்சாவரம், அயனாவரம் வலசு - வலக, ஓலவலசு வலசை - வலசை, கடுக்காய் வலசை வலம் - புலிவலம், வலிவலம், வேட்டவலம் வல் - கோவல் வல்லம் - வல்லம், திருவல்லம், வாணியவல்லம் வல்லார் - வல்லார். வழி - பெருவழி. வளம் - கோவளம். வளாகம் - மடவார் வளாகம். வளைவு - மேலை வளைவு, கீழை வளைவு, தெற்கு வளைவு, வடக்கு வளைவு வனம் - நந்திவனம், இடும்பவனம் வாகை - வாகை வாங்கல் - வாங்கல் (கருவூர்) வாசல் - அன்னவாசல், புனவாசல் வாசி - மனவாசி, வாரணவாசி, திருவாசி வாஞ்சியம் - திருவாஞ்சியம் வாடி - ஏர்வாடி, மகேந்திரவாடி வாடை - பண்டாரவாடை வாணம் - வெட்டுவாணம். வாயில் - தலைவாயில், நெடுவாயில், நேரிவாயில், கழனிவாயில் வாய் - கீழ்ச்செருவாய், மேற்செருவாய் வாய்ச்சி - பொழில்வாய்ச்சி > பொள்ளாச்சி வாய்த்தலை - வாய்த்தலை, பேட்டை வாய்த்தலை. வாய்வழி - அறைவாய்வழி > ஆரல்வாய்மொழி > ஆறாம்பொழி வாலி - கொண்டவாலி, திருவாலி வாவி - கோடல்வாவி, கரடிவாவி வாழ்க்கை - வாழ்க்கை, எட்டிவாழ்க்கை வாழ்வு - சித்தன் வாழ்வு, மருதன்வாழ்வு, வாளாடி - வாளாடி. வாணி - பூவாணி > பவானி விச்சி - விச்சி விடந்தை - திருவிடந்தை விடுதி - பாலவிடுதி, வெட்டன் விடுதி விண்ணகர் - அரிமேய விண்ணகர் விருத்தி - பட்டவிருத்தி விழி - வானவிழி விளமர் - விளமர் விளை - பெருவிளை, திசையன்வினை வீடு - ஒற்றைவீடு > ஒத்தவீடு வீதி - கீழ்வீதி வீரை - வீரை வெண்ணி - வெண்ணி வெளி - மந்தைவெளி, வடக்குவெளி வெள்ளிலை - முதுவெள்ளிலை வென்றான் - எப்போதும் வென்றான், மூவரை வென்றான் வென்றி - பகைவென்றி வேலி - புனல்வேலி, நெய்வேலி, திருநெல் வேலி, குடவேலி வைகல் - வைகல் இன்னும் விரிய ஆய்ந்தால் மிகப்பலவாகப் பெருகும். ஊர்மன்றம்: ஊர்மன்றம் = ஊர்ப்பொதுமன்றம் ஊரவையம் அன்னாய் இவனோர் இளமா ணாக்கன் தன்ஊர் மன்றத்து என்னன் கொல்லோ - குறுந், 33 ஊர்வன: உயிர் வகைகளுள் ஊர்வன என்பவை ஒரு பிரிவின, அவை பள்ளம், குண்டு, குழி, பொந்து, புடை, பொத்தல், புற்று, வனை என்பவற்றுள் இருப்பன. இவை அனைத்தும் நிலத்தின் மட்டத்தின் கீழே அமைவன. இவற்றினின்று வேண்டுமெனின் உயர்ந்தே வர வேண்டும். ஆதலின் உயர்ந்து வருதல் (உயர்தல்) ஆயிற்று. அவற்றைச் செய்வன ஊர்வன என்றம் ஊரி என்றும் பெற்றன. * ஊரி காண்க. ஊர் வெண்பா: பத்து நேரிசை வெண்பாக்களால் ஊரது சீர் உரைப்பது ஊர் வெண்பா எனப்பெறும் (நவநீதப், 41) வெண்பா வாற்சிறப் பித்தூர் ஒருபான் பாவிரித் துரைப்பதூர் வெண்பா ஆகும் -முத்துவீ. 1096 ஊழடி முட்டம்: ஊழ் + அடி + முட்டம் = ஊழடி முட்டம். ஊழ் = முறைமை; முட்டு = முட்டுப்பாடு. நல்ல நடைவழி போல் தோன்றி போகப் போக முடியாமல் முட்டித் திரும்பும் வழி ஊழடி முட்டம் எனப்பட்டது. ஊழடி முட்டம் - குறிஞ்சி, 258 பொருள்: முறையடிப்பாடாய்ப் பின்பு வழி முட்டாய் இருக்கும் இடங்கள்(நச்) ஊரில் காடும் ஊழடி முட்டமும் - பெருங். 1:52:32 ஊழல்: ஊழ் + அல் = ஊழல் ஊழ் = முறை; ஊழல் = முறையற்றது, முறை கேடானது. அறநெஞ்சம் அகன்று விட்ட நாட்டில் வெள்ளப் பெருக்காகப் பெருகுவது ஊழலே யாகும். ஊழல் புகுந்தஇடம் உருப்படவா செய்யும்? ஊழல் ஒழிக்க வேண்டியவரே ஊழலர் ஆனால், ஊழல் ஒழியவா செய்யும்என்பவை மக்கள் வழக்கு. ஊழற்சதை: ஊழல் + சதை = ஊழற் சதை, கட்டமைந்த உடலுக்குரியதன்றி முறையற்றுப் பருத்து ஊதிய தசை (சதை) ஊழற்சதை எனப்படும். ஊழைச் சதை என்பது இது. * ஊது காமாலை காண்க. ஊழி: ஊழி:1 இயற்கையால் இயலும் ஒரு பெரிய கால அளவு ஊழி வாழி பூழியர் பெருமகன் - புறம். 387 ஊழி:2 ஒருவர் வாழ்நாள் அளவு. நின் ஊழி வாழ்க - பதிற்.11 ஊழியம்: ஊழ் = இயம் = ஊழியம். ஊழ் = முறைமை. ஊழியம், குறித்த திட்டம் மாறாமல் செயலாற்றுதல். அவ்வாறு செயலாற்றுவார் ஊழியர் எனப்படுவார். அரசுப் பணியாளர் ஊழியர் எனப்படுதல் இக்கால வழக்கம். அவர்கள் ஊழியர் பதிவேடு உடையவர்கள் ஆவர் முற்காலத்து இறை நிலை - அற நிலைத் - தொண்டு செய்தார் ஊழியர் எனப்பட்டார். அவர் வாழ்வுக்கு ஊழியம் செய்த நிறுவனம் பொறுப்பு எடுத்துக் கொண்டது. தொண்டூழியம் என்பது அவர் பொருள் ஊதியத்தினும் உயர்வு ஊதியம் கருதிய பெருமையர் என்பது விளக்கமாம். ஊழையாடு: மூக்கில் இருந்து ஒழுகும் சளியை ஊழை என்பது வழக்கம். ஒட்டாத சதை ஊழைச் சதை எனப்படும். ஆட்டு வகையுள் ஒன்றாகிய செம்மறியாட்டை ஊழையாடு என்பது ஒட்டன் சத்திர வட்டார வழக்கு ஆகும். ஒழுகும் மூக்குக் குறித்தது இது. ஊழை என்பது சிலர்க்குப் பட்டப் பெயர். மூக்குறுஞ்சி என்பதும் அது. ஊழ்: ஊழ் என்பது திருக்குறளில் ஓரதிகாரப் பெயர். அதில் ஆகூழ், போகூழ், இழவூழ், ஆகலூழ் என ஆள்கின்றார். உலகத்து இயற்கையே ஊழாம். அதனையே, இருவேறு உலகத்து இயற்கை என ஊழில் எண்ணிக்கை கூறினார். அவ்விருவகையே ஆகூழ், போகூழ் என்பன. பால் வகை என்பனவும் ஊழ்ப்பகுப்பு ஊழ் வகை என்னும் இவ்விரண்டைக் குறிப்பனவே. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம்ஆகிய ஊழியலை வான் சிறப்பில் பேசினார் வள்ளுவர். உலகத்து இயற்கை, ஆக்கமுமாம் அழிவுமாம். ஆக்கப் பொழுதில், அழிவு விளைவுமுண்டு. அழிவுப் பொழுதிலும் ஆக்க விளைவும் உண்டு. அழிவை வெற்றி காணல் கூடும்! அஃதவர் தம் ஊக்கத்தான் - அறிவுத் திறத்தான் உண்டாக்க வேண்டும். அவற்றுக்கு ஈடு தர முடியாமல் சோர்ந்து விடலு முண்டு. முன்னது முயற்சியின் வெற்றி! பின்னது ஊழின் வெற்றி. ஊழ்த்தல் என்பது முதிர்தல் பொருளது. மலர் ஊழ்த்தல் வள்ளுவரால் பேசப்படுகின்றது. (650) பருவமுற்ற ஊழ்முகை (புறம்.399 நற்.116) ஊழ்படு முதுகாய்(குறுந். 68) ஊழணி தைவரல்(தொல். பொருள். மெய்ப்,14) என்பன நல்வினை தீவினையோடு பட்ட ஊழ்கள் அல்லவாம். இயற்கை முறையும், ஒழுங்குமே ஊழாம். ஊழை வெல்லுதற் கென்றே, அறிவுடைமை, தெரிந்து செயல்வகை, ஊக்கமுடைமை மடியின்மை ஆள்வினையுடைமை இடுக்கண் அழியாமை, வினைத்திட்பம் என இன்ன பல அதிகாரங்களை வகுத்துரைத்தார் வள்ளுவர். அறிவியல் உலகம் மேற்செலும் தீயைக் கீழ்ப் பாய வைக்கிறது. கீழ்ப்பாயும் நீரை மேற் செலுத்துகிறது. காற்றிலா இடத்தை அமைக்கிறது. காற்றைக் கடிதெழும்பச் செய்கிறது. நீரில் நெருப்பைக் காண்கிறது, ஏறா விண்ணில் ஏறுகிறது. MÆD« ï›Éa‰if bt‰¿fŸ všyh« áy ntisfËš njhšÉahš Ko»‹wdnt ïªÃiyÆnyna ‘CiHí« c¥g¡f« fh©g®”(620) v‹gJ« “Cʉ bgUtÈ ahîs?”(383) என்பதும் மாறி மாறி ஒளி செய்வனவாகின்றன, ஊழ்முறை: ஊழ் = முறைமை. ஊழ்முறை = முறை முறையே ஊழ் ஊழ் என்பதும் இது. ஊழ்முறை வணங்கி நின்ற அஞ்சன மேனியானை - கம்ப. 430 ஊழ்மை: ஊழ் + மை = ஊழ்மை = முறைமை ஊழ்மையில் கண்ணபிரான் கழல்வாழ்த்துமின் உன்னித்தே - நாலா. 3070 ஊழ்வினை: ஊழ் + வினை = ஊழ்வினை. ஊழ்வினை உருத்துவந் தூட்டும் - சிலப், பதிக இதில், ஒருவர் செய்த வினை, செய்தவரை விடாமல் சென்றடையும் என்னும் வினைக் கொள்கையை இளங்கோவடி கள் குறிக்கிறார். பொதுமக்கள் தலைவிதி என்றும் புலமக்கள் வினைப்பயன் என்றும் கூறுகின்றனர், ஊளன்: ஊளன் என்பது ஆண் நரியையும், ஊளி என்பது பெண் நரியையும் குறித்து வழங்கும் கொங்கு நாட்டுச் சொல். நரியின் குரலை ஊளையிடல் என்பது தமிழகம். தழுவிய பொதுவழக்கு. அதனைக் கலைச்சொல்லாக்கி மகிழ்கிறது, கொங்குநாடு. ஊளி உலவு சயினியின் காளி என்பது மேட்டு மாகாளியம்மன் அந்தாதி (65) ஊள் ஊள்: ஊள் ஊள் என்பது அழுகைக் குறிப்பு. குழந்தைகள் அது வேண்டும் இது வேண்டும் என ஓயாது அழுது கேட்கும் போது, நீ என்னதான் ஊள் ஊள் என்று அழுதாலும் கிடையாது. தொண்டைதான் வற்றிப்போகும்என்பது வழக்கு. ஊறல்: ஊறல்:1 ஊறு + அல் = ஊறல். புளிப்புக்காக ஊறவிடப் பட்டது ஊறல் ஆகும். ஊறல் (காடி, புளிங்காடி) மாடுகளுக்குத் தகைப்பு நீக்கித் தண்ணிது ஆக்கும். ஊறல்:2 சாராய ஊறல். பலவகைப் பட்டை, எரியம், பழவகை ஆகியவற்றைப் புளிக்க விடப்பட்ட மது, ஊறல்:3 மண்ணில் இருந்தும் மணலில் இருந்தும் வெளிப்படுத்தும் ஊறுநீர் ஊறல் ஆகும், ஊற்று என்பதும் இது, கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை - திருக். 414 ஆற்றுப் பெருக்கற் றடிசுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஔவை. ஊறல்:4 சாறு. கரும்பின் ஊறல் = கரும்புச்சாறு. ஊறல்:5 எயிறூறும் நீர், வாயில் ஊறல் ஒழுகுகிறது என்பதுமக்கள் வழக்கு. வாலெயிறு ஊறிய நீர் - திருக். 1121 ஊறல்:6 தினவு. தோலில் உண்டாம் ஊற்றுணர்வு, தினவு. ஊறல்கால்: ஊற்றுநீர் பெருகி வழிந்தோடும் கால்வாய்(க.க.அ.மு.) ஆற்றுநீர்க்கால் என்பதும், ஊற்றுநீர்க்கால் என்பதும் வேறு வேறானவை ஊரல் = ஊர்தல், ஊறல் = ஊறுதல். ஊறு: ஊறு:1 உறு > ஊறு. எதிர்பாரா வகையில் ஒரு முயற்சியில் இடையே தடையாக உறுவது ஊறு ஆகும். x.neh.: பெறு > பேறு முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும் படுபயனும் பார்த்துச் செயல் - திருக். 676 இடையூற்றுக் கிடையூறாய் யான்காப்பன் - கம்ப. பால. 329 ஊறுபாடு, இடையுறவு, இடையூறு என்பனவும் இது. ஊறு:1 ஊறு என்பது தொடுதல் உணர்வு; அஃது உற்றறிவு, மெய்யறிவு என்பன. ஊறு:2 ஊறுகின்ற எச்சிலை ஊறு என்பது உசிலம்பட்டி வட்டார வழக்கு. ஊறுகாய்: எண்ணெய் மசாலை உப்பு முதலியவற்றில் ஊறவைத்த இலாமிச்சை, மாங்காய், நாரங்காய் நெல்லிக்காய் முதலியவை ஊறுகாயாம். தயிருணவுக்கு வேறு காய்வகைகளிலும் ஊறுகாயே பெரும்பங்களிப்புச் செய்யும் மாதக்கணக்கில் கெட்டுப் போகாமல் காத்துப் பயன்படுத்துவர். ஊறுகாய் ஊறுதலால் அமைந்தது வாயூறவும் வைப்பது ஊறுகாய்த் தொழிற்சாலையும் விற்பனை யகங்களும் பெருகிவரும் காலம் இது. ஊற்றம்: ஊறு > ஊற்று + அம் = ஊற்றம் = ஊறி வளர்ந்து பெருகிய வலிமை. நின் ஊற்றம் பிறர் அறியாது - புறம். 385 உணவாலும் உடற்பயிற்சியாலும் கடிய உழைப்பாலும் உண்டாகும் மனவலிமையும் உடல் வலிமையும் ஊற்றமாம். இனி ஊற்றுப்போல் உண்டாகும் சிந்தனை வளமும் ஊற்றமாம். ஊற்றம் மக்கள் வழக்கில் ஊத்தம் என வழங்குகிறதுஅவனுக்கு ஊத்தம் கூடிப் போச்சு என்பது மக்கள் வழக்கு. ஊற்றாங்கால்: கிணறுகளில் நீர் ஊறுதற்கு வாய்ப்பாக அமைந்த குளம் குட்டைகளை ஊற்றாங்கால் என்பது கொங்கு நாட்டு வழக்கு. ஊற்று ஆம் கால். கால் என்பது நீர் வரத்தாகும் வழியாகும். ஊற்று: நீருக்காக ஆற்றில் தோண்டப் பெறுவது. உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும் கல்லூற்று உழியூறும் ஆறேபோல் - நாலடி, 185 ஊற்றுக்கால்: ஊறு > ஊற்று + கால் = ஊற்றுக்கால். கால்வாயினின்று தூம்பின் வழி ஊற்றாக அமைக்கப்பட்ட சிறு வாய்க்கால் (க.க.அ.மு.) ஊற்றுதல்: ஊற்று + தல் = ஊற்றுதல். தல் = தொழிற்பெயர் ஈறு. ஊற்றுச் சுரப்பது போல் வழியவிடுதல் ஊற்றுதல் ஆகும். மழை மிகப் பொழிதலை மழை ஊற்றி விட்டது மழை ஊற்றோ ஊற்றென்று ஊற்றிவிட்டதுஎன்பன மக்கள் வழக்கு. பால் ஊற்றுதல் என்பது இறந்தார்க்குச் செய்யும் மூன்றாம் நாள் சடங்கு. ஊற்றும் ஊற்றுக்கோலும்: கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை - திருக். 414 இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல் - திருக். 415 என்பவை கேள்விஅதிகாரத்தில் வரும் குறள்கள். முன்பின்னாகத் தொடரும் குறள்கள். இக்குறள்களில் ஊற்று என்றும், ஊற்றுக்கோல் என்றும் வரும் இரண்டிற்கும் ஊன்றுகோல்பொருளே பலரும் கூறினர். உறுதி நூல்களைத் தான் கற்றிலன் ஆயினும் அவற்றின் பொருள்களைக் கற்றறிந்தார் சொல்லக் கேட்டு அக்கேள்வி ஒருவனுக்குத் தளர்ச்சி வந்துழிப் பற்றுக் கோடாம் துணையாகலான் என்பதும். வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்றுகோல் போல் உதவும், காவற் சாகாடு உகைப்பார்க்கு ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள்- என்பதும் - இவற்றுக்குப் பரிமேலழகர் உரைகள். முதற்குறள் விளக்கத்தில் ஊன்று என்றும் ஆகு பெயரின் னகரம் திரிந்து நின்றது என்று. ஊன்று ஊற்றாகியதனைச் சுட்டினார் பரிமேலழகர். பிறர் பிறரும் ஈரிடத்தும் ஊன்று கோலையே கூறினர், கேள்விப் பயனை விளக்க, ஈரிடத்து ஒரே உவமையை அடுத்தடுத்த பாடல்களிலே வள்ளுவர் வைத்தார் என்பது எண்ணித் தெளிவு கொள்ளத் தக்கதாம், முதற்பாடலில், ஒற்கத்தின் ஊற்று, அடுத்த பாடலில் இழுக்கல் ஊடையுழி ஊற்றுக்கோல், ஊற்றுக்கோல் என்பது ஊன்று கோலே ஐயத்திற்கு அறவே இடமில்லா ஆட்சி அது. இழுக்கல் (வழுக்கல்) வேறு தெளிவுறுத்துகின்றது. மேலாய்வுக்குரியது ஒற்கத்தின் ஊற்றே யாம். ஊற்று என்பது வெளிப்படு பொருளே ஆற்றுப் பெருக்கால் அடிசுடும் அந்நாளும் அவ்வாறு ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்என்பது எவரும் அறிந்ததே ஆற்றுக்கண் அடைத்தாலும் ஊற்றுக்கண் உதவும்என்பதும் பழமொழி. வான் வறண்ட காலத்தும் தான் வறளாமல் உதவும் ஊற்றே இவண் சுட்டியதாம். ஒற்கம் என்பது, ஒரு ஒல்கு என்பதன் வழி வந்த சொல். ஒல்குதல், தளர்தல், குறைதல், கருங்குதல், வறுமையுறல், அடங்குதல், நலிதல், மெலிதல் ஆகிய பொருள்களைத் தரும். ஒற்கம் என்னும் சொல்லாட்சி திருக்குறளில் இவ்வோரிடத்து மட்டுமே உள்ளது. மழை பெய்யாமை, வானம் பொய்த்தல், வானம் வறத்தல் எனப்படும். அதன் விளைவு வளங்குன்றல், நீர்மை குன்றல் எனப்படும். இவை வான் சிறப்புக் குறளாட்சிகள். ஆகலின் ஒற்கம் என்பது மழை பொய்த்து வளங்குன்றலைக் குறித்தல் ஒல்குதல் என்பதன் வழியே பொருள் கொள்ள வழி செய்கின்றது. ஆதலால், மழை பொய்க்க, ஆறு வறள நேரினும் ஊற்றுக்கண் திறந்து உதவுவது போல், கற்குங் காலத்துக் கற்கத் தவறியவரும் கேள்வியால், ஓரளவு நலத்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதை விளக்குவதாக இக்கருத்து அமைந்துள்ளது என்பதே நேர் பொருள் ஆகும். தொட்டனைத்தூறும் மணற்கேணி என ஆளப்படும் கேணி வேறு . தோண்டுதல் - கருவி கொண்டு தோண்டுதல் - அளவினது மண்வெட்டி கொண்டு மணற்கேணியாக்கி உறையிட்டு நீர் எடுத்துப் பயன் கொள்வது வழக்கு. இவ்வூற்று அத்தகைத்தன்று. கையால் மணலைப் பறித்து ஆக்குவது, காலைக் கொண்டு மணலைக் கிளறி ஊற்றாக்குதலும் நடைமுறை. ஆகலின், கேணியும் ஊற்றும் அளவு, முயற்சி ஆகியவற்றால் மிகுதியும் குறைவும் உடையவை. அவை கல்விக்கும் கேள்விக்கும் ஏற்பத் தனித்தனியே உவமை கூறப்பெற்றன என்க. கல்விப் பயன் ஆற்று நீரோட்டம் அன்ன பயன் செய்வது எனவும், கேள்விப் பயன் ஊற்று நீர்ச் சுரப்பு அன்ன பயன் செய்வது எனவும் கண்டு கொள்ள இப்பொருள் உதவும். கற்றில னாயினும் கேட்கஎன்பதற்குப் பொருந்தி நிற்கும். ஊனம்: ஊனம்:1 ஊன் + அம் = ஊனம். ஊனால் ஆய உடலில் உண்டாய உறுப்புக்குறை ஊனம் ஆகும். ஊனம் குற்றம் குறை என்னும் பொருளிலும் வரும். காணார் கேளார் கால்முடப் பட்டோர் - மணிமே. 13:111 என்பார் ஊனராம். ஊனம் இல்லை= குற்றம் - குறை - இல்லை. ஊனக்குறை= உடற்குறை ஊனம்:3 இறைச்சி வெட்டுவதற்கு அடிமணையாகப் பயன்படுத்தின மரக்கட்டை ஊனம் எனப்பட்டமை பதிற்றுப்பத்தில் அறிய வருகின்றது. எஃகாடு ஊனம் கடுப்ப மெய்சிதைந்து - பதிற். 67 ஊனீர்: ஊன் + நீர் = ஊனீர். மகளிர்க்குப் பாலுணர்வு மிகையால் உண்டாகி வழியும் நீர் ஊனீர் என்பதாம். கனவு நிலையில் கூட வழிவதாம். அது வேட்கை மிக்கார்க்கே வருவதன்றிப் பொதுவாக அமைவதன்று ஊனீர். இது திருச்சிராப்பள்ளி வட்டார வழக்கு. ஊனுருக்கி: ஊன் + உருக்கி = ஊனுருக்கி. ஊன் = உடல் ஈளை நோயால் என்பும் தசையும் உருகுதலால் அதனை ஊன் உருக்கி என்றனர். என்புருக்கி என்பதும் இது. மூச்சுத் தகைப்பும் என்பு வெளிப்படும் மெலிவும் உண்டாக்கும் இந்நோய் மருந்தாலும் உணவாலும் பருவநிலை அறிந்து பேணிக் கொள்ளலாலும் முற்றாமல் காக்கவும், இல்லாமல் போக்கவும் கூடியதேயாம். ஊனெய்: ஊன் + நெய் = ஊனெய். மீன் கொழுப்பை உருக்கி எடுத்த நெய், விளக்கு ஏற்றுவதற்கு அது பயன்பட்டது. மீன் நிணம் தொகுத்த ஊன்நெய் ஒண்சுடர். - நற். 215 இந்நாளில் மீன் எண்ணெய் மருத்துவப் பயன் செய்வதாயிற்று. ஊன்: ஊன்:1 ஊ + ன் = ஊன் ஆ மா, கோ என்பவற்றுடன் னகர ஒற்றுச் சேர்ந்து ஆள், மான், கோன், என நிற்கும் என்பது போல், ஊ தே என்பனவும் னகர ஒற்றுப் பெற்று ஊன், தேன் என ஆகும். ஊதிப், பருப்பதற்கு உரியது ஊன்ஆகும். அஃது உடலாம். ஊஎன் ஒருபெயர் ஆவொடு சிவணும் - தொல். 298 ஊன் = இறைச்சி; ஊன்சோறு. அட்டான் றானா கொழுந்துவை ஊன்சோறு - புறம். 113 ஊன்:2 தசை, புலால் என்னும் பொருள் தருவது ஊன். ஆனால் அது எரியும் விறகில் இருக்கும் நீர் வடிவைக் குறித்தல் காரைக்குடி வட்டார வழக்கு ஆகும். ஊனி என்பது அமுக்கிராக் கிழங்கு என்பது மூலிகை அகராதி. ஊன்பொதி பசுங்குடை: ஊன் கொண்டு செல்வதற்காகப் பச்சைப் பனை யோலையை மடித்துக் கூடாகச் செய்ததைப் பழநாளில் பயன்படுத்தினர் என்றும் அதற்கு ஊன் பொதி பசுங்குடை என வழங்கினர் என்றும் இத்தொடரால் அறியலாம். ஊன்பொதி பசுங்குடையார் என ஒரு புலவர் சங்கச் சான்றோர் வரிசையில் உளர். அவர் பெயரால் நான்கு பாடல்கள் உள (புறம், 10, 203, 370, 378) இவர் இயற்பெயர் அறியப் படாமல், இப்பசுங்குடையைப் பயன்படுத்தியமையாலோ இத்தொடரைப் பயன்படுத்திப் பாடியமையாலோ இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம். ஆனால், இவர் பாடல்களில் இத்தொடர் இல்லாமையால், இத்தொடர் அமைந்த பாடல் தொகை நூல்களில் இடம் பெறாமல் போயிருக்க வேண்டும் என எண்ணலாம் ! நுங்குகளை இப்பசுங்குடையில் கொண்டு செல்வது பொது வழக்கு, இன்றும் காண்பது. இவர் பயன்படுத்திய இம்முறை பிறரை எண்ணச் செய்து இப்பெயரீட்டுக்கு ஆட்படுத்தி யிருக்கவும் கூடும். ஊன்றுதல்: மழை கால் ஊன்றுதல். கற்கால் ஊன்றுதல். நிலை வைத்தல். ஊன்றி நடத்தல். ஒரு செயலலை அழுத்திச் செய்தல். நாற்று நடவு செய்தல். இன்னவை நிலைபெறச் செய்யும் ஊன்றுதல் வழிப் பட்டவையாம். ஊன்றுநிலை: ஓர் இடத்தில் பணிசெய்து அப்பணியை விடாமல் குறித்த காலத்திற்குச் சம்பளம் இல்லா விடுப்புப் பெற்று, வேறொரு வேலை செய்து மீளவைத்து முன்னைப் பணியைத் தொடர்தல் ஊன்றுநிலை எனப்படும். வேலைப் பாதுகாப்புக்காகச் செய்வது ஊன்றுநிலை. இவ்வூன்றுநிலை இருபால் இசைவாலும் செய்வதாம். ஊன்றுவை யடிசில்: ஊன் + துவை + அடிசில் = ஊன்றுவை யடிசில். சோறு வேறு என்னா ஊன்துவை அடிசில் - பதிற். 45 பொருள்: சோறுவேறு ஊன்வேறு எனப்பிரித்துக் காணமுடியாதபடி யமைந்த ஊன் குழையச் சமைத்த சோறு, உரை. ஔவை. சு.து. செவ்வூன் தோன்றா வெண்துவை முதிரை -பதிற். 55 என்பதும் இது.  எ வரிசைச் சொற்கள் எ: எ:1 உயிர்வரியில் ஏழாம் எழுத்து இது. ஒரு மாத்திரை யளவுக் குற்றெழுத்து அப்பழ நாளில் எகரக் குறில் தலைமேல் ஒரு புள்ளி பெற்றது.எ என்பது ஏகார நெடிலாக நின்றது. அதனால், மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல் எகர ஒகரத் தியற்கையும் அற்றே என்றார் தொல்காப்பியர் (15,16). புள்ளி பெற்ற எகரம் குறிலாம். அதனால் ஏரி ஓர் புள்ளி பெற எரியாம் என ஒரு சொலவடை எழுந்தது. நீர்நிலையோர் புள்ளி பெற நெருப்பாம். நீர்நிலை = ஏரி; நெருப்பு = எரி. (நன்.98 சங். அடிக்) எ:2 ஏழு என்னும் தமிழ் எண். ஏழைந்து மையன்னா என்பது சிறுபிள்ளையர் விளையாட்டுச் சொலவடை. ஏழு = எ; ஐந்து = ரு; மையன்னா ? எருமை. எட்டைந்து மையன்னா என்பதும் அது. எட்டு = அ; ஐந்து = ரு; ika‹dh> அருமை. எ:3 வினா எழுத்து. எ + அன் = எவன் எ + அள் = எவள் எ + அர் = எவர் எ+ து = எது எ + வை = எவை எ + அளவு = எவ்வளவு எ + ஆறு = எவ்வாறு எ + படி = எப்படி எ = துணை = எத்துணை எ+ எவர்=எவ்வெவர் எ:4 இரட்டை அடுக்கு. எ + ஏழு = எவ்வேழு எ + எட்டு = எவ்வெட்டு எஃகம்: எஃகம்: எஃகு + அம் = எஃகம். எஃகுதல் = மேலே எடுத்து ஏவுதல். எஃகம், எஃகு = வேல், வாள். கூரியதாய் வடிக்கப்பட்ட வேலை மேலே தூக்கி வரும். இவனைத் தடுத்து நிறுத்துங்கள்; தடுத்து நிறத்துங்கள் எனத் தடுக்கவும், தடைபடாமல் கன்றை நோக்கிவரும் காராப் போல் தன் தோழனுக்கு உதவவரும் வீரனை, வடிமாண் எஃகம் கடிமுகத் தேந்தி ஓம்புமின் ஓம்புமின் இவணென ஓம்பாது தொடர்கொள் யானையிற் குடர்கால் தட்பக் கன்றமர் கறவை மான முன்சமத் தெதிர்ந்ததன் தோழற்கு வருமே - புறம். 275 ஒப்பற்ற வீரன் ஒருவனைப் பாடிய இவரை ஓரூஉத்தனார் என வழங்கினர். இவர் பாடல் இவ்வொன்றேயாம். எஃகுளம் கழிய இருநில மருங்கின் அருங்கடன் இறுத்த பெருஞ்செய் யாளன் - புறம். 282 எகினம்: எகினம்: 1 எகின் + அம் = எகினம். எக்கும் (தூவும்) தூவிகளை உடையதால் எகினம் எனப்பட்டது. அன்னத்தின் ஒரு பெயர் எகினம் (பிங்,3221). எஃகி வெப்பப்படும் தூவியுடையதால் எகினம்எனப்பட்டது என்பர் (சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம். 104). தன் சேவலொடு புணர்ந்த அன்னப்பேடை அப்புணர்ச்சி யான் உருகி உதிர்த்த வயிற்றின் மயிர் எஃகிப் பெய்த பலவகை அணைஎன்பது சிலப்பதிகார உரை (27:208, 209). முட்டையிடும் அன்னம் தன் வயிற்றிலுள்ள மெல்லிய தூவியைப் பிய்த்து முட்டைகளின் மேல் மூடிப் பாதுகாக் கின்றது. இதன் காரணமாகவே புணர்ச்சியின் போது உதிர்ந்த தூவி என்று கருதினர் என்பது தெரிகின்றதுஎன்பர் (புள்ளின விளக்கம். 104). துணைபுண ரன்னத் தூநிறத் தூவி இணையணை -நெடுநல், 132, 133 இணைபுணர் எகினத் திளமயிர் செறிந்த துணையணைப் பள்ளி - சிலப். 27 ; 208, 209 வைக்கோல் சணல் ஆயவை வெப்புடையவை, ஆதலால் மகப்பேற்றுக்கு வைக்கோலைப் பரப்பி அதன் மேல் துணி விரித்து தாயும் சேயும் படுப்பது சிற்றூர் வழக்கம், பழுக்க வைக்க வேண்டும் என்னும் காய்களை வைக் கோலில் பரப்பி மூடி வைத்தலும் அதன் வெப்பச் சான்றாம். அன்னத்தின் தூவியைப் பரப்பவது அத்தகைய வெப்பக்குறிப்பை இயற்கை அருளியது என எண்ணி மகிழத் தக்கதாம். எகினம்:2 எகினம் = நாய். காவல் பணியால் பிறவற்றை நெருங்க விடாமல் காக்கும் நாய் கவர வருவனவற்றைச் சிதற அடித்தலால் நாயை எகினம் என்றனர். நெல்லுழு பகட்டொடு கறவை துன்னா ஏழகத் தகரோடு எகினம் கொட்கும் - பெரும், 325-326 எகினம்:3 எகினம் = கவரிமான். நெடுமயிர் எகினத் தூநிற ஏற்றை குறுங்கா லன்னமோ டுகளும் - நெடு. 91-92 அன்னம் போல மயிர் உதிர்த்தலால் கவரி மானும் எகினம் எனப்பட்டது. எகினம்:4 அருவா வடதலையார் புளியை எகினம் என்பர் என்பது நன்னூல் உரை (273) எகின்மர மாயின் ஆண்மர இயற்றே - தொல். 336 ஏனை எகினே அகரம் வருமே - தொல். 337 புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை - தொல். 244 எனவும் தொல்காப்பியம் கூறும். ஆதலால், புளியும் எகினும் அவரால் வழங்கப் படுதல் விளங்கும். எகின் காட்டுப் புளியாதல் வேண்டும். எகின் என்பது வெப்பு; வெப்புமிக்க மரம் எகின் எனப்பட்டது. புளியின் நிழலும் புன்கின் தழலும்என்பது பழமொழி. புளியின் பொட்டு (இலை) மிகச்சிறியது. காற்றில் எளிதாக உதிர்ந்து பரவுவது. அத்தூவும் தன்மையால் புளி எகினப் பெயர் பெற்றதாகலாம். மற்றொன்று புளியம்பழம் தோடு சதை விதை என்பவை ஒட்டாத் தன்மைய. பழம் இயல்பாய் முதிர்ந்து உதிரும் தன்மைய என்பதும் எண்ணத் தக்கவை. பறித்தல் இன்றிக் காற்றில் உதிரலும் உலுப்ப உதிரலும் புளியம்பழ இயல்பாம். பழம் உலுப்புதல்என்பது வழக்கு. அன்னமும் கவரி மாவும் ஆண்மரமும் நாயும் புளியும் புளிமரப் பெயரும் எகினம் - பிங். 3221 ஆண்மரம் என்பது (தொல். 304) பூத்துக் காயாது உதிரும் மரம் ஆண்மரம், ஆதலால் எகினம் எனப்பட்டதாம். எக்கச்சக்கம்: எக்கம் = எக்குதல், மேலேழும்புதல். சக்கம் = கீழே தாழ்ந்து குனிதல். இவ்விரண்டிற்கும் தொட முடியாத அளவு இடைவெளி உண்டு. எக்கச்சக்கமான கூட்டம் எக்க சக்கமான செலவு என்பவை வழங்குத் தொடர்கள். எக்கர்: எக்கு + அர் = எக்கர். எக்குதல் = மேலெடுத்துத் தள்ளுதல், குவித்தல். ஆறு அள்ளிச் சென்று போகட்ட மணல்மேடு எக்கர் ஆகும். காற்று அள்ளிக் குவித்ததும் எக்கர் ஆகும். சிறக்கநின் ஆயுள் மிக்குவரும் இன்னீர்க் காவிரி எக்கர் இட்ட மணலினும் பலவே -புறம், 43 கடுவளி தொகுப்ப ஈண்டிய வடுவாழ் எக்கர் மணலினும் பலவே -புறம் 55 எக்கலிப்பு: ஏக்கலிப்பு > எக்கலிப்பு. நெஞ்சைத் தூக்கி நிறுத்தி அடாவடி ஆர்ப்புகளால் பிறரைக் கலக்குதல் எக்கலிப்பு ஆகும். அதனைப் பலர் சேர்ந்து ஒரே முறையில் செய்வது ஏக்கலிப்பு ஆகும். எக்கலிப்புக்கும் ஏக்கலிப்புக்கும் அழிவு காலம் வராமல் போகாதுஎன்பது மக்கள் வழக்கு. எக்கல்: மார்பை மேலே தூக்குதல் எக்கல், எக்குதல் எனப்படும். அதுபோல் அலை கரைமேல் ஏறித்தள்ளும் மணல் மேடு எக்கர் எனப்படுதல் இலக்கியப் பழவழக்கு - எக்கர் என்பதன் போலியாக (ர்-ல்) எக்கல் என்பது மணல்மேடு குறித்தல் திருவரங்க வட்டார வழக்காகும். இது பேராவூரணி வட்டார வழக்காகவும் உள்ளது. எக்களிப்பு: எக்களிப்பு:1 எக்கு + களிப்பு = எக்களிப்பு. எக்குதல் = உயர்தல், மிகுதல், மேலெழுதல். மிக்க களிப்பு எக்களிப்பு ஆகும். அவன் எக்களிப்பும் எசலிப்பும் எப்பொழுது ஒழியுமோ?என்பது உலக வழக்கு. எக்களிப்பு:2 எதிர்க்கு + அளிப்பு = எதிர்க்களிப்பு > எக்களிப்பு உண்டதோ குடித்ததோ உள்ளே சென்று குடலுக்கும் போகாமல் மேலே தொண்டைக்கு வருதல் எக்களிப்பாகும். எக்களிப்பாக இருக்கிறது; வாந்தி வரும்போல உள்ளது என்பது உலக வழக்கு. எக்காளம்: எக்காளம்:1 வளைந்து மேலெழும் ஊது கொம்பு. பேரொலியுடையது, காகளம் என்பதும் இது, எக்காளம்:2 உள்ளம் செருக்கி உரைத்தல். என்னைப் பார்த்தால் உனக்கு எக்காளமாக இருக்கிறதுஎன்பது மக்கள் வழக்கு. எக்கி: எக்கு + இ = எக்கி. எக்கு = நீரை அள்ளி மேலே பீச்சும் கருவி, நீரைப் பீச்சுதலால் பீச்சாங்குழல் என்பதும் இது. நெய்த்தோர் நிற அரக்கின் நீரெக்கி - பரிபா. 16:12 இந்நாளில் கிணற்றில் இருந்து நீரை எடுக்கக் காலால் மிதிக்கும் மிதி எக்கிகள் உண்டு. திருமண வரவேற்பு விழா வரவேற்பு ஆயவற்றில் பன்னீர் எக்கலும் எக்கிப் பீச்சும் பொறி வழியே தூவலும் நடைமுறையில் காணலாம். எக்கு: எக்கு என்பது இடுப்பு என்னும் பொருளில் அகத்தீசுவர வட்டாரத்தின் வழக்கமாக உள்ளது. ஒக்கலை என்பது இடுப்பு என்னும் பொருளில் நாலாயிரப் பனுவலில் (2990) இடம் பெற்றுள்ளது. சுருங்கிய இடுப்பு அல்கு, அஃகு, அக்கு என்றாகும். அகர எகரத் திரிபாகவோ, ஒகர எகரத் திரிபாகவோ இஃது இருக்க வேண்டும். ஒக்கல் என்பது இடுப்பு என்னும் பொருளில் வருதல் நெல்லை மாவட்ட வழக்கு. எங்கடா: எங்கு + அடா = எங்குடா. எங்கு = எவ்விடம்; அடா = விளி. எங்கடா போவது எங்கே நில்நில் - கம்.ஆர, 899 எங்கண்: எங்கு + கண் = எங்கண் = எவ்விடம், எப்படி. எங்கண் விளைந்த திவற்கு -கம்.பால. 1186 எங்கனம்: எங்ஙனம் > எங்கனம் = எவ்வாறு. வேதம் எங்கனம் அங்கனம் - கம். உயு. 183 எங்கை: எங்கை:1 எம் தங்கை எங்கையாம். தம் தங்கை தங்கையாய் நிற்கும்; நும் தங்கை நுங்கையாம். இவை எங்காய், தங்காய், நுங்காய் என விளியாம். எங்காய் நீ நின் மருகியருடன் ஓர்ந்து - தமிழக ஒழுகு. 1757 எங்கை: 2 எம் + கை = எங்கை, எமது கை என்னும் பொருளது (வ). எசனை: இசைவாக ஒருவர் ஒருவருடன் இருத்தலை எசனையாக (இசைவாக) இருப்பதாகக் கூறுவது தென் தமிழக வழக்கு. இசைவு > virî> எசனை ஆகியிருக்கலாம். ஒரு பலகையை மற்றொரு பலகையுடன் இசைப்பதை இசைவு என்பது எண்ணத்தக்கது. எசனை என ஓர் ஊர்ப்பெயர் உள்ளது; பெரம்பலூர் சார்ந்தது அது. எச்சம்: எச்சம்:1 ஒருவர் வாழ்வில் பெற்றவை, அமைந்தவை ஆயவற்றில் அவர் இறந்து போன பின்னரும் அவரை நினைவூட்டுமாறு எஞ்சி நிற்பது எதுவோ அது எச்சமாம். தக்கார் தகலிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும் - திருக். 114 எச்சம்:2 புகழுக்கும் பழிக்கும் சான்றாகிய இவ்வெச்சம் மக்கள் வழக்கில் காக்கை எச்சம், குருவி எச்சம் என அவற்றின் மலத்தைக் குறிப்பதாயிற்று, எச்சில் என உமிழ்நீரைக் குறிப்பதாயிற்று. *எச்சில் காண்க. எச்சம்:3 பிறப்பு முழுதுறாக் குறைநிலை, எச்சம் எனப்படும். சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும் கூனும் குறளும் ஊமும் செவிடும் மாவு மருளும் உளப்பட வாழ்நர்க்கு எண்பேர் எச்சம் - புறம். 28 எச்சம்:4 முடியாச் சொல் எச்சச் சொல்லாம். பெயரெச்சம் - வந்த, படித்த வினையெச்சம் - வந்து, படித்து முற்றெச்சம் - முடிந்தது போல் முடியாதது. வந்தனன் சென்றான். *ஈரெச்சம் காண்க. எச்சரிக்கை எச்சரிக்கை = முன்னறிவித்தல். அரசன் திருவோலக்கத் திற்கு வருங்கால் அல்லது உலா வருங்கால் அவ்வரசனை முன்னிலையாக்கி, அவையில் உள்ளார்க்கு அவ்வரசன் வருகையை எச்சரித்துப் பாடுவது, எச்சரிக்கை என்னும் சிற்றிலக்கிய வகையாகும். செலவுக்குத் தடையில்லாமல் ஒதுங்குக என்னும் அறிவிப்புமாம். அரசன் திருவோலக்கத்தில் வீற்றிருக்கும் போது அவ்வரசன் தன்மை இத்தகையது என அவையில் உள்ளார்க்கு எச்சரித்தலும் இவ்வெச்சரிக்கையே யாம். அரசனை அன்றி இறைவன் திருவருகை, திருவோலக்கம் ஆகியவற்றை எச்சரித்துப் பாடுவதும் உண்டு. திருப்போரூர் முருகன் எச்சரிக்கை என்பது இவ்வகையைச் சார்ந்தது. பிறைசூடிய சடையானருள் பிள்ளைப் பெருமானே மறையோர் நிறை போரூர்வரு மன்னாஎச் சரிக்கை பராக்கு எனக் கட்டியங் கூறுவதையும், அமைதிஎன முறை மன்றங்களில் கூறும் வழக்குண்மையையும் கருதுக. எச்சவன் இளைச்சவன் (எய்த்தவன், இளைத்தவன்): எய்த்தவன் = நலிந்து போனவன். இளைத்தவன் = களைத்துப் போனவன். இனி, எய்த்தவன் உடல் நலிவுக்கு ஆட்பட்டவனும், இளைத்தவன் பிறர் இளக்காரப் படுத்துதற்கு ஆட்பட்ட வனுமாம். எய்த்தவன் இளைத்தவன்! என்றால் ஏறிக்கொண்டா மிதிப்பது?என்பது நல்லவன் வினா! சடுகுடு ஆட்டத்தில் மூச்சு விட்டுவிட்டால் எச்சுப் போனான் என்பர். எச்சில்: உடல்கழிவாக உண்டாயவற்றை வெளியே தள்ளுதல் எச்சிலாகும். கோழை, சளி முதலியவை எச்சிலாம். எச்சில் பலவுள மற்றவற்றுள் இயக்கம் இரண்டும் இணைவிழைச்சு வாயில் விழைச்சிவை எச்சிலிந் நான்கு - ஆசா.7 எச்சிற்கலை: எச்சில் + கலை = எச்சிற்கலை. கலை = இலை பிறர் உண்டு வெளியே போகட்ட இலையில் உள்ளதை எடுத்து உண்பவர் எச்சிற் கலைஎனப்படுவர், பிச்சையும் கிடையா நிலையில் வயிற்றுத் தீத்தணியச் செய்யும் வறுமை மட்டுமன்று மானக்கழிவுச் சான்றுமாவது இது. எச்சிற்கை ஈரக்கை: எச்சிற்கை = உண்டபின் கழுவாத கை. ஈரக்கை = உண்டு கழுவிய பின், ஈரத்தைத் துடையாத கை. எச்சிற்கையோ ஈரக்கையோ உதற மாட்டான் எனக் கருமிகளைப் பழித்துரைப்பர். எச்சிற் கையை உதறினால், அதில் ஒட்டியுள்ள ஒன்றிரண்டு சோற்றுப் பொறுக்குகள் உதிர்ந்து போம் என்றும், ஈரக்கையை உதறினால் அதில் படிந்துள்ள நீர்த்துளி வீழ்ந்துவிடும் என்றும், எண்ணிக் கையை உதறமாட்டானாம்! இத்தகையவனை எருமைத்தோலில் வடிகட்டிய கஞ்சன்என்பர். எருமைத் தோலைக் கொண்டு வடிகட்டினால் ஏதாவது வடியுமா? நெய்யரி, சல்லடை, பன்னாடையைக் கொண்டு வடிகட்டினால் வழியும், எருமைத்தோலைக் கொண்டு வடிகட்டினால்? எச்சு: எச்சம் என்பது மிகுதி (மீதி)யாக வைத்துச் செல்வது என்னும் பொருளது. எஞ்சுதல் என்பதும் மிகுதல் பொருளதே. தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் என்னும் குறளில் எஞ்சுதல் (மிகுதல்) என்னும் பொருளிலேயே வந்துளது. எச்சு என்பது மிகுதி என்னும் பொருளில் பழனி வட்டாரத்தில் வழங்குகின்றது. எடுத்தல்: எடுத்தல்:1 கோழி நீரை எடுத்து மேனோக்கி வாயைத் தூக்கிக் குடிப்பது போலக் குடித்தல், எடுத்தலாம். இனி, எடுத்துண்ணுதல் கருதியது எடுத்தல் என்னுமாம். இரை யெடுத்தல் என்பது வழக்காறு. * இரையெடுத்தல் காண்க. எடுத்தல்:2 திருடுதல் எடுத்தவன் யார்?ம.வ. எடுத்தல்:3 ஒலி மிகுத்துக் கூறுதல். எடுத்தல் படுத்தல் நலிதல்-நன். 88 எடுத்தாட்டல்: ஒருவர்க்குரியதை ஒருவர் முன்னின்று செய்தல். நம்மால் என்ன செய்ய முடியும் எனச் சில செயல்களைச் சிலர் கைவிட்டு விடுவர். அவர்க்கு வேண்டியவர் அல்லது வேண்டியவராக முன் வருபவர். நாம் என்ன அப்படி விட்டு விடுவது; நீங்கள் பாட்டுக்கு என் பின்னால் வாருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் எனத் தலைப்பட்டுச் செய்வர். இத்தகையவர்கள் செயலை எடுத்தாட்டுதல் என்பது வழக்கு. அவர் செயலைப் படுக்கப் போட்டுவிட்டார். இவர் அதனை எடுத்து ஆட விடுகிறார். ஆதலால் இவ்வாறு கூறப்படுகிறதாம். எடுத்தாள்தல்: எடுத்து + ஆள்தல் = எடுத்தாள்தல். ஒருவர் கூறிய சொல்லையோ கருத்தையோ நாம் ஏற்றுக் கொண்டு அதனை நம் கருத்துக்கு வலுவாக ஆள்வது எடுத்தாள்தல் ஆகும். மேற்கோள் என்பதும் இது. * மேற்கோள் காண்க. எடுத்துக்காட்டு: ஒருவர் சொல்லும் கருத்துக்கு ஒத்த கருத்தை மற்றொருவர் சொல்லியிருந்தால் அதனைத் தம் கருத்துக்கு வலுவாக எடுத்துக் காட்டுவது எடுத்துக்காட்டாகும். அணிவகையில் எடுத்துக் காட்டுவமை என்பதும் ஒன்று. அது உவமை உருபு இல்லாத உவமையாக இருக்க, உருபை எடுத்துக் காட்டுவதால் எடுத்துக் காட்டுவமையாம். எடுத்துவிடல்: புனைந்து கூறுதல். உள்ளதை உள்ளபடி கூறாமல் இட்டுக் கட்டியும் பொய்யும் புளுகும் புனைந்தும் கூறுவது சிலர்க்கு மாறா இயற்கையாக இருப்பதுண்டு. அத்தகையவர், அவ்வாறு சொல்வதில் தமக்குள்ள தேர்ச்சியை எண்ணித் தாமே பூரிப்பதும் உண்டு. அதனைப் பாராட்டிக் கேட்பவரும். புகழ்ந்து பேசுபவரும் இருந்துவிட்டால் கேட்க வேண்டியதில்லை. சுண்டைக்காயே அண்டத்தை அசைக்கும் கதையாகி விடும். அத்தகையவன் செயலை எடுத்துவிட்டான் பாருங்கள் என்பவரும், நீ சும்மா எடுத்துவிடு என்பவரும் அவனைப் புகழ்பவர் போல் மகிழ்பவர் என்பதை அவன் உணர்வானா? எடுத்துவிட்டுக் குரைத்தல்: தூண்டித் தூண்டிச் செய்தல். நாய்க்கு இயற்கை குரைப்பு. புதுவதாகத் தெரியும் காட்சியும், புதுவதாகக் கேட்கும் ஒலியும் நாயை எழுப்பிவிட்டுக் குரைக்க வைக்கும். இனத்தைக் கண்டால் குரைக்க மாட்டா நாயும் குரைத்தல் பிறப்போடேயே வந்துவிட்டது போலும். தன் இனத்தைக் கண்டதும் இங்கு இருப்பது அறிவிப்பதாகவும் கொள்ளலாம்! சில நாய்கள் குரைத்து அச்சங் காட்ட வேண்டிய இடத்திலும் குரைக்காமல் கிடக்கும். அவற்றை உசுப்பிவிட்டு அல்லது தூக்கிவிட்டு அது குரைத்தால் எப்படி இருக்கும்? ஒரு செயலைத் தானே விரும்பி உணர்வோடு செய்யாமல் தூண்டித் தூண்டிச் செய்பவன் செயலைப் பார்த்து, ‘எடுத்துவிட்டுக் குரைப்பது என்னதான் செய்துவிடும்? என்று எள்ளுவது வழக்கு. எடுத்தெறிதல்: ஒருவர் கூறும் கருத்தை ஏற்காமல் மறுத்துப் பேசுவதை என்ன இப்படி எடுத்தெறிந்து பேசுகிறாய்என்பர். ஏற்காமையொடு எதிர்ப்பும் அடங்கியது எடுத்தெறிதல் ஆகும். கொடுத்த ஒன்றை ஏற்காமல், அதனை வாங்கி வீசி எறிவது போன்றது இது. எடுத்தேறி: எடுத்தேறி:1 எடுத்து + ஏறி = எடுத்தேறி. எங்கேயோ பிறந்து வளர்ந்து எங்கேயோ வாழ வந்து குடியேறிவரை எடுத்தேறி என்றும் வந்தேறி என்றும் கூறுவர். வந்து + ஏறி = வந்தேறி. எடுத்தேறி (வந்தேறி)க்கு உள்ள மதிப்பு உள்ளூராளுக்கு இராதுஎன்பது மக்கள் வழக்கு. எடுத்தேறி:2 தனியே முயன்று செய்ய வேண்டிய வேலை. குடியிருப்பை ஒட்டி நிலம் இருந்தால் வேலை செய்தல், காவல் கண்காணிப்பு ஆகியவற்றுக்கு வாய்ப்பாக இருக்கும். ஆனால், இடைவெளி மிக்கு நிலம் இருந்தால் போய் வரவே பொழுது மிகுதியும் செலவாகும். அதனால் எடுத்தேறிப் போய் வேலை செய்ய வேண்டியிருந்ததால் வேலை அரைபாதிதான் முடிந்ததுஎன்பர். எடுத்தேறுதல் என்பது இடைவெளிப்பட்டு முயன்று நிலத்தைப் சேர்ந்து வேலை செய்தல் என்னும் பொருள் தருதல் அறிக! எடுத்தேறிப் பார்க்க வேண்டியிருப்பதால் அதனை விற்று விட்டுச் சேர்ந்தரணை நிலத்தை வாங்கி விட்டேன்என்பதில் இது மேலும் தெளிவாம். எடுப்பு: வைப்பாள், வைத்த குறி. எடுப்பு = எடுத்தல். தனக்கென எடுத்து வைத்துக் கொள்ளல் எடுப்பாகும். தவறான செயலும் எடுப்பே. தவறான தொடர்பும் எடுப்பே. இரண்டையும் குறிக்க நீ எடுத்த எடுப்புச் சரியில்லைஎன்பர். எடுத்துக் கொண்ட ஒருத்தியைத் தன்பொறுப்பில் வைப்பதால் வைப்பு, வைப்பாள், வைப்பாட்டி ஆகிறாள். அவன் அவனுக்கு வைப்பாக இருப்பது போல அவள் வைத்த தெல்லாம் வரிசையாய் அவன் வைப்பெல்லாம் அவள் வைப்பாக ஆக்கி அவனை ஆட்டி வைக்கிறாள். அதனால், மூதாள் - மூதாட்டியாவது போல வைப்பாள் வைப்பாட்டியானாள். தொடுப்பு என்பதும் இது. எடுப்புத் தண்ணீர்: பயிர் நடவு செய்த பின் மூன்றாம் நாள் அப்பயிர் நிமிர்வதற்காக விடும் தண்ணீர் எடுப்புத்தண்ணீர். வேளாண்மை முறையில் இன்றியமையாதது இஃதாம். கங்களவு, தண்ணீர் என்பதும் இது. நெல்லை, முகவை வழக்கு. * கங்களவு காண்க. எடுப்பும் தொடுப்பும்: எடுப்பு = ஒரு வினாவை எழுப்புவது அல்லது ஒரு பாடலின் முதற் பாதியை இயற்றுவது. தொடுப்பு = எழுப்பிய வினாவுக்குத் தொடுத்து விடைதருவது அல்லது பாடலுக் குரிய பிற்பாதியைத் தொடுத்து இயற்றுவது. எடுப்பு முற்பட எடுப்பது; தொடுப்பு எடுப்புக்கு ஏற்க உடனே முடிப்புத் தருவது. வினாவிடைப் பாடல்கள், விடுகதைப் பாடல்கள், மனக்கணக்குகள் என்பனவெல்லாம் எடுப்பு தொடுப்புகளாக நிகழ்த்தப் படுவதுண்டு. தொடுப்பு முடிப்பு எனவும் கூறப்படும். இன்னவாறு தொடங்கி இன்னவாறு முடிக்க வேண்டும்என்றவாறு ஒருவரே எடுத்து முடிப்பதும் உண்டு. இரட்டையர்கள் எடுப்பு முடிப்பு, இருவரும் இணைந்தே செய்தவை பொன்னுசாமித் தேவரும் முத்துராமலிங்க சேதுபதியும் சரவணப்பெருமாள் கவிராயரும் வினாவிடை வெண்பா எடுப்பு முடிப்பாகப் பெருகப் பாடினர் (தனிச் சிந்) காளமேகமோ கேட்டவாறெல்லாம் பாடினார் (தனிப்). எடை: எடை:1 எடு + ஐ = எடை. துலாக் கோலைக் கையில் எடுத்து மேலே தூக்கி நிறைபோடுவதால் எடை எனப்பட்டது. எடை:2 கனம் அவன் முன்னைக்கு இப்போது எடை போட்டிருக் கிறான் என்பது கனம் என்னும் பொருளது. (உலக வழக்கு) எடைகட்டல்: எடைகட்டல்:1 பால் காய்ச்சும் போது தண்ணீர் சேர்க்கும் அளவு சேர்த்துக் காய வைத்தல் எடை கட்டுதல் எனப்படும். பாலுக்குத் தக நீரை அளவிட்டுச் சேர்த்தல் எடைகட்டுதல் ஆயிற்று. தேநீர்க் கடையினர் வழக்குச் சொல் இது. எடைகட்டல்:2 ஆடு குட்டி போட்டு அக்குட்டி இறந்துவிட்டால் ஈன்ற ஆட்டிற்குப் பால்கட்டித் துயரூட்டும். அதனை ஆட்டுக்கு எடைகட்டி விட்டது என்று கூறுவர். அந்நிலையில் ஆடு புல்லும் தின்னாது; நீரும் பருகாது; நிலையும் கொள்ளாது. இந்நிலை ஈன்ற தாய்க்கும் ஏற்பட்டுத் துயருறல் உண்டு. பாவேந்தர் பாடல் ஒன்றில் பசி தீர்த்த பாவை என இடம் பெறுகிறது அது. எடைபோடுதல்: எடைபோடுதல்:1 நிறுத்தல், துலைக்கோல் (தராசு) எடுத்துப் பொருளையும் எடைக்கல்லையும் போட்டு நிறுத்தல். எடை போட்டுத்தான் தருவோம்; கைக்கணிசமாகத் தர முடியாதுமக்கள் வழக்கு. எடைபோடுதல்:2 அறிவு பண்பு செல்வம் ஆயவற்றை அறிவால் அளவிடுதல். அவர் எடைபோட்டால் தப்பாது; சரியாக இருக்கும். ஒரு நொடியில் எடைபோட்டு விடுவார்என்பது மக்கள் வழக்கு. எட்டம்: உயரம், நீளம். கையைத் தூக்கி எட்டுகிறது எட்டவில்லை என்பதும். காலால் நடந்து செல்லுதல் எட்டு வைத்தல் எட்டுப் போடுதல் என்பதும் எட்டம் என்பதன் பொருளை விளக்கும். எட்டத்திற்கு எதிர்ச்சொல் கிட்டம் என்பதாம். கிட்டம் = அருகு; அண்மை. அங்கே போவது இயலாது எட்டாக் கையில் உள்ளது உலக வழக்கு. எட்டாக்கை = தொலைவான - செல்ல இயலாத - இடம். கை = இடப் பொருளது. கண்கால் கடை இடைஎன்னும் ஏழாம் வேற்றுமை உருபுகள் (நன்.203) போல்வது. எட்டாக்கை: எட்டாத நீண்ட கையைக் குறிக்காமல், மிகத் தொலைவான இடத்தைக் குறிப்பது எட்டாக்கை. இது வட்டார வழக்குச் சொல்லாகும். மிகத் தொலைவான இடத்தில் உள்ள நிலம், ஊர் முதலியவற்றை அது எட்டாக்கையில் உள்ளது. நமக்குப் போய்வர வாய்க்காது என்று கூறுவர். கை = இடம்; எட்டுதல் = நெருக்கம். எட்டி: எட்டி:1 எட்டு + இ = எட்டி பிறரால் எட்டுதற்கு அரிய செல்வத்தை ஈட்டியவன் ஈட்டி என்பான். வேந்தனால் பழநாளில் பெருஞ்செல்வத்தால் இளங்கோக்கள் என்பார்க்கு (வணிகர்க்கு) வழங்கப்பட்ட விருது எட்டியாகும். எட்டி குமரன் - மணிமே. 4:58 எட்டி சேரி- என்பதோர் ஊர் நெல்லை மாவட்டம் சார்ந்தது. எட்டிக்கு வழங்கப்பட்டவை எட்டிப்பூ எட்டிபுரவு என்னும் சிறப்புகள். பெருநேச்சரத்து எட்டி மண்ணன்க.க.அ.மு. எட்டி:2 கசப்புச் சுவையுடைய காயைத் தரும் ஒருவகை மரம். பிற கசப்பு எதுவும் எட்ட முடியா அளவு மிகைக் கசப்பு உடைமையால் இப்பெயர் பெற்றிருக்கலாம். எட்டிக்காய் வேம்பு இவற்றின் கசப்பை மாற்ற முடியுமா? என்பது பழமொழி. எட்டி:3 விரைவு முன்னே ஒருவர் போகிறார். பின்னே ஒருவர் வருகிறார். பிந்துகிறார்; அதனால் எட்டி - விரைவாக என்னை நெருங்கி - வாஎன்பது உலக வழக்கு. எட்டிரண்டு: எட்டு + இரண்டு = எட்டிரண்டு. எட்டிரண்டு தமிழ் எண்களில் அ உ எனப்படும், அ+ எட்டு; உ = இரண்டு. * அஉ காண்க. எட்டு: எட்டு:1 ஏழின்மேல் உயர்ந்த எண் எட்டு. எட்டு:2 விரைவு. எட்டுப்போட்டு வாஉலக வழக்கு, வரைந்து வா என்பது பொருள். எட்டு:3 இறப்புக்குச் செய்யும் எட்டாம்நாள் சடங்கு. அது பங்காளிகள் செய்வது. எட்டுக்கும் கூடுவான் எழவுக்கும் கூடுவான்என்பது பழமொழி. எட்டு:4 எள் + து = எட்டு. எள்ளைத் தின் என்னும் ஏவல். து=தின். எட்டு:5 எட்டுத்தொகை என்னும் நூல் தொகுதி. அவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல். கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பவை. எட்டுக்கும் எழவுக்கும் கூடுதல்: இறப்புச் சடங்குகளுள் எட்டு என்பது எட்டாம் நாள் நிகழும் பங்காளிகள் நிகழ்ச்சி. எழவு என்பது (இழவு) பதினாறாம் நாள், கொண்டு கொடுத்தவர் செய்யும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொண்டவர் மற்றொன்றில் பங்கு கொள்ளல் முறையாகாது. ஆதலால் முறைகேடாகச் செயலாற்றுபவரை, எட்டுக்கும் கூடுவான், எழவுக்கும் கூடுவான்என்பது தென்தமிழக வழக்கு. இது பழமொழித் தன்மையும் அடைந்துவிட்டது. எட்டெட்டந்தாதி: ஒருவகை யாப்பில் எட்டுப் பாடலாக எட்டு வகை யாப்பில் பாடப்பட்ட 64 பாடல்களைக் கொண்ட நூல் எட்டெட்டந்தாதி. இவ்வகையில் அமைந்தது காஞ்சி காமாட்சி எட்டெட்டந்தாதி யாகும். (ஓலைச் சுவடி நூலகம் 240, 241) எட்டேகால்: தமிழ் எண் முறையில், எட்டு - அ, கால் - வ இரண்டை யும் இணைக்க அவ என்றாகும். எட்டேகால் இலட்சணமே- அவலட்சணமே ஔவை. தனிப் தவம் x அவம். (திருக். 266) எண்: எண்:1 ஒன்று இரண்டு முதலாக என்னும் எண்ணுப் பெயர்கள் எண்ணிக்கைக் குறியாயின. ஒன்றொன்றையும் ஆராய்தலும் தெளிதலும் நேர்ந்து முடிபு செய்தலும் எண்ணல் - ஆராய்தல் - ஆயது. கருதுதல், சிந்தித்தல், உன்னுதல் முன்னுதல் முதலனவும் எண்ணுதலாயின. எண்களைக் கொண்ட அறிவியல் பொருளியல் ஆகியவை எண் எனப்பட்டன. எண்ணும் எழுத்தும் என்பது எண்ணிக்காணும் துறை களையும் எழுதிக்காக்கும் துறைகளையும் சுட்டுவனவாக அமைந்தன. எண்:2 எள் என்பது எள், எண் என்றாயது. எள் + நெய் = எண்ணெய் ஆயது. எள்ளின் சிறிதளவு எள்மை > எண்மை ஆயது. எண்மை = எளிமை. இன்சொல் எண்பதத்தை ஆகுமதி பெரும - புறம். 40 எண்:3 எண்பது, எண்ணூறு, எண்ணாயிரம் என்பவற்றில் வரும் எண் என்பதன் மூல எண் எட்டு என்பதாம். ஏழு எண்ணு என்பன அல்ல; ஏழு எட்டு என்பனவே அவை. எட்டு நூறு, எட்டாயிரம் (எண்ணூறு, எண்ணாயிரம்) என்னும் வழக் குண்மையும் எண்ணுக. எண்தேர் செய்யும் தச்சன் - புறம். 87 எண்நாள் திங்கள் - புறம்.118 ஒன்றென இரண்டென மூன்றென நான்கென ஐந்தென ஆறென ஏழென எட்டெனத் தொண்டென - பரிபா.3 எண்கு: எண் + கு = எண்கு = கரடி. எண்ணி எண்ணி உண்ணும் இயல்பையும் உளி போன்று நகங்களையும் உடைமையால் எண்கு என்றும், உளியம் என்றும் பெயர் பெற்றது. கருநிறம் உடைமையால் கரடி எனப்பட்டது. இருப்பைப் புதுப்பூவைத் தின்று கொன்றைப் பழங்களை உண்டது (அகம்.15) இருப்பைப் பூவை உண்டதை அகம், 15, 95, 149, 171, 267, 275,331 என்பவையும் காட்டுகின்றன. இருப்பைப் பூவை வெறுத்தால் கறையான் புற்றை அகழ்ந்து புற்றாஞ்சோற்றை உண்ணுதலை அகம். 112, 149, 247, 257, 207, நற். 125, 325, 336 என்பவை விரித்துரைக்கின்றன. கரடி சுவையை எண்ணி எண்ணி உண்பதையே பெரும்பாலும் சங்கச் சான்றோர் காட்டுதல் எண்கு என்னும் பெயரின் பொருளைத் தெளிவிக்கும். எண் கூற்றிருக்கை: எழு கூற்றிருக்கையின் வளர்ச்சி எண் கூற்றிருக்கையாம். இவ்வகைப் பாடல் அருளியவர் வண்ணச் சரபம் தண்டபாணி அடிகளாவார். ஏழோடு அமைந்தது எழு கூற்றிருக்கை. அதன் மேல் எட்டாக உயர்ந்து நிற்பதே எண் கூற்றிருக்கையாம். எண் சுவடி: எண் என்பது எண்ணாலாய கணக்கு. கணக்கில் அடிப்படை எண் வரிசை. கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் முதலியவை. இவற்றை மனப்பாடம் செய்தல் முன்னைத் தமிழ்ப்பள்ளி முறை. எண் சுவடி மனப்பாடம் ஆகியிருந்தால் மனக்கணக்கு எல்லாமும் சொல்லிய அளவிலேயே விடையும் கண்டு விட முடியும். இதுகால் எண்சுவடி முறை வழக்கில் இல்லாமல் போயிற்று. 1 X 16 = 16 16 X 16 = 256 எளிமை இல்லையா, பெருக்கல் முதலிய சொல்லுவதற்கு இளமை யிலேயே நல்ல பயிற்சி தரப்பட்டமையால் பெரிய பெரிய கணக்குகளையும் மனக்கணக்காகச் செய்ய முடிந்தது. நிறுத்தலளவை: ஒரு பொதி வெங்காயம், நான்கு உருபா, கால்துலாம் என்ன விலை?என ஆசிரியர் வினாவி அவர், ஒன்று இரண்டு மூன்று என்று சொல்லும் பொழுதே கற்பலகையில் விடையை எழுதிக் கீழே போட்டு விட வேண்டும் அதற்கு உதவியது எண்சுவடி. ஒரு துட்டு என்பது விடை. ஒரு பொதி பன்னிரண்டு துலாம்; கால் துலாம் என்றால் ஒரு பொதியில் 48 கால் துலாம். ஒரு ரூபாவிற்கு 48 துட்டு. ஆதலால் கால் துலாம் ஒரு துட்டு அல்லது நான்கு சல்லி. உருபாவுக்கு 192 சல்லி. முகத்தலளவை: ஒரு மூடை அரிசி எட்டு ரூபா; 1/2 படி என்ன விலை? என்பது வினா. இதற்கு விடை ஓரணா. ஒரு மூடைக்கு 64 படி; 64 படி 8 உருபா என்றால் ஒரு ரூபாவுக்கு எட்டுப் படி; ஒருபடி அரைக்கால் உருபா. அரைப்படி மாகாணி உருபா அல்லது ஓரணா, அல்லது 12 சல்லி. இந்த வெங்காயமும் அரிசியும் இவ்விலையிலா இருந்தன? கணக்குக்காகத்தானா? இல்லை இல்லை! 1937-38 இல் விற்கப்பட்ட வாங்கப்பட்ட விலை 64 படி நிலக்கடலை உருபா. 2 கோணிச்சாக்கு விலை இல்லை! மலைப்பா, வியப்பா? எண்ணலளவை: ஒருவர், அப்பப்பா கிளி நூறுஎன்றான். பறந்த கிளிகள், தப்பப்பா உன் கணக்குஎன்றன. சரியான கணக்கென்னஅவன் வினா. எங்களையும், எங்களைப் போலவும், எங்களின் பாதியும். பாதியில் பாதியும். உன்னையும் சேர்த்தால் நூறு. கிளியின் விடை எத்தனை கிளிகள் பறந்தன? இது ஆசிரியர் வினா, பறந்த கிளிகள் 36 என்பது விடை. எண்சுவடி எப்படி எண் சுவடியாகிறது! முக்காலுக்கு ஏகாமுன் முன்னரையில் வீழாமுன் அக்கா லரைக்கால்கண் டஞ்சாமுன் - விக்கி இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி ஒருமாவின் கீழரையின் றோது முக்கால், அரை, கால், அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா, கீழரை இவையெல்லாம் பழைய எண்கள். இறைவனைப் பற்றிய பாடலில் இப்படி எண்களைக் காட்டி எண்ண வைக்கிறார் காளமேகர் (தனிப்.) இவையெல்லாம் எண்சுவடிக் காலத்தில் முதல் மூன்று வகுப்பில் கூட்டுக்குரல் எழுப்பிய சுவடி எண்கள். “கீழ்வாய் இலக்கம், மேல்வாய் இலக்கம், குழிமாற்று நெல் இலக்கம் முதலிய கணக்கு வாய்பாடுகளை யுடையது எண் சுவடி.”(என்சரி. பக்.84) எண் செய்யுள்: பாட்டுடைத் தலைவனது ஊரினையும் பெயரினையும் பத்து முதல் ஆயிரம் பா அளவும் பாடி அவ்வெண்ணாற் பெயர் தருவது எண் செய்யுளாம். ஊரையும் பேரையும் உவந்தெண் ணாலே சீரிதிற் பாடல் எண்செயு ளாகும் - இலக். பாட். 88 பாரியது பாட்டு, கபிலரது பாட்டுஎனச் செய்தோன் பெயர் பற்றி வருவனவும் கொள்கஎன்பார் இலக்கண விளக்கப் பாட்டியலார். பாட்டுடைத் தலைவன் ஊரும் பெயரும் பத்துமுதல் ஆயிரம் அளவும் பாடி எண்ணாற் பெயர்பெறல் எண்செய்யுளாகும் - முத்துவீ. 1080. எண்ணிக்கை: எந்த எண்ணும் தோன்றாத காலம். எந்தச் சொல்லும் தோன்றாத காலம். பறவை போல் விலங்குபோல் மக்கள் வாழ்ந்த காலம். ஆனால், அவற்றினும் உணர்வு வெளிப்பாடு அவர்களுக்கு உண்டாகிவிட்ட நிலை, கைச் சைகை முகக்குறி வாயோசை உண்டாகிவிட்டதால். அது இது எனச் சுட்டுதற்கு விரலைப் பயன்படுத்தினர், ஒன்றைச் சுட்ட அதனோடு ஒன்று வர இரண்டு விரலைக் காட்டவும். மேலொன்று வர மூன்று விரல் காட்டவும் நான்கு விரல் காட்டவும் ஐந்து விரல் காட்டவும் வளர்ந்தனர். கை விரல்கள் ஐந்தும் மடக்கவும் நீட்டவும் உதவிய பயிற்சியும் அவர் பார்வையும் இணைந்து கையளவிலேயே ஐந்து எண் வரை எண்ணப் பழகிவிட்டனர். கையோடு கை சேர, விரலோடு விரல்கூட இரு கை விரல்களும் தூண்டிய தூண்டுதல் பத்து வரை எண் கிடைக்க வழிசெய்தது. ஒரு கையின் ஐந்தோடு நின்றுவிட்ட மாந்தரும் இருந்தனர் (உரோமர்). இரு கைகளோடு இருகால்களும் சேர இருபதாக எண்ணிய மாந்தரும் தோன்றினர் (ஆங்கிலவர்). தமிழ் மாந்தர் பத்தொடு வரம்பு செய்து, மீளவும் அதனொடு ஒன்று இரண்டு என்று கூட்டிப் பத்துப் பத்தாக்கி, அதனையும் பத்தாக்கி, மேலே மேலே பதின்மத்தில் விளங்கியமை இக்கால நிலைவரை ஈடிலாக் கொடையாகத் திகழ்வது வியப்பினும் வியப்பாம். ஒன்று: இது தமிழ் முதல் எண் ஒன்று = கூடு, சேர், பொருந்து ஒன்று ஒரு முழு எண். அவ்வொன்றுள் இன்று நூறு காசுகள் உண்டு. ஆங்கிலர் காலத்தில் நூற்றுத் தொண்ணூற்றிரண்டு சல்லிகள் இருந்தன. அதன் முற்பட்ட நாளில் முந்திரி, காணி, மா என்னும் காசுகள் இருந்தன. இது எண்ணலளவையில்! இவ்வாறு நீட்டல் அளவை, முகத்தல் அளவை, நிறுத்தல் அளவை என்பவையிலும் இருந்தன. கீழ்வாய் இலக்கம் மேல்வாய் இலக்கம் என எண்கள் வழங்கின. இவ்வாறு ஒன்றன் உட்பட்ட தொகுப்பெல்லாம் பொருந்திக் கூடிச் சேர்ந்து ஒன்றுதலால் ஒன்றாயது. அவ்வொன்று, ஒன்றுபட்டு நிற்கும் ஒற்றுமை ஒருமை. ஒத்ததறியும் உயர்வு ஒப்பு நிற்றல், ஒக்க ஊழ்தல் ஒட்டி உறைதல், ஒண்டி இருத்தல், ஒருமிக்க ஆதல், ஒருமுகப்படல், ஓர்மை, ஒருவன், ஒருத்தி, ஒருவர், ஒருங்கிணைதல் என விரிந்து விளங்கியது. அந்தச் சிறப்பு, தனிச்சிறப்பாம். இரண்டும் ஒன்றாதல். மூன்றும் ஒன்றாதல், நான்கும் ஒன்றாதல். கோடியும் ஒன்றாதல், வீடு ஒன்றாதல், நாடு ஒன்றாதல் உலகம் ஒன்றாதல் எனப் பிரிந்து நின்ற ஒன்று விரிந்து நின்று தன்னுள் அமைந்து அடக்கிக் கொள்ளும் அருமை அளவற்ற சிறப்பினதாம். அவ்வொன்றின் சொல்லமைவு குற்றியலுகர ஈற்றுச் சிறப்பினது. அச்சிறப்பு இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, தொண்டு, பத்து நூறு என்னும் எண்களின் ஈறுகளும் குற்றியலுகரமாகவும் முற்றியலுகரமாகவும் (ஏழு) நிற்க முன்னோடியாக அமையும் தனிப்பெருஞ் சிறப்பினதாயிற்று. இரண்டு நான்கெழுத்தெண் எனினும் இகர ஒலி குன்றி ரெண்டு என்றாதலும் மற்றை எண்கள் எல்லாம் இரண்டெழுத்து மூன்றெழுத்து என்னும் அளவில் மிகாமையும் எடுத்த ஒன்றை அடுத்த அமைவுச் சிறப்பாம். ஒருமித்த வில்லாளி ஒருவன் ஓரி எனவும், கூட்டத்தில் இருந்து பிரிந்த யானை ஓரி எனவும், தனித்து நிற்கும் குரங்கு ஓரி எனவும், ஒருமுகப்பட்ட கல்வியை, ஒருமைக்கண் தான்கற்ற கல்வி(திருக். 398) எனவும், கட்டமைந்த ஒழுக்கமிக்காள், ஒருமை மகள் (திருக்.974) எனவும், ஒன்று என்பது ஒருமை எண் எனவும், ஒருவன் ஒப்பற்றவன் இறைவன் எனவும் நிற்றல் இருவகை வழக்குகளிலும் அறிவனவாம். ஒன்றா உலகம் இது; இதில் அழியாத ஒன்றே ஒன்று புகழ்என்பது வள்ளுவம் (233). இரண்டு: ஒன்றும் ஒன்றும் இரண்டு, இரண்டு இரு எனவும் ஆகும். ஒன்று ஒரு ஆவது போல இருகண், இருசெவி, இருகை எனவரும். இரண்டு, இரட்டு, இரட்டை, இரட்டிப்பு, இரண்டகம் எனவும் வரும். எ-டு: இரட்டுநூல், இரட்டையர், இரட்டிப்பாகத் தருதல் இரண்டகம் செய்தல். ஈரல், ஈரிலை, ஈரி எனவும் வரும் ஓர் ஓரி ஆவதுபோல ஈர் ஈரியாயது. ஈரி என்பது இரண்டாக்குதல் பொருளில் ஈர்தல் ஆகும். இலையை ஈர்ந்தான். ஈர்வாய் வலம்பட விரித்தார். ஈர்வாய் = வெட்டுவாய், அரிந்த பக்கம். இரண்டு, இரண்டு இரண்டாகப் பெருக்கவும் செய்யும் ஒன்றை இரண்டு இரண்டு ஆக்கிச் சுருக்கவும் செய்யும். இரட்டிக்கும் செயலும் இரண்டாக்கும் செயலுமாகிய இரண்டும் செய்யும் இரண்டு. ஊர் இரண்டு பட்டால் கூந்தாடிக்குக் கொண்டாட்டம்- பழமொழி. இரண்டன் இயைபு, கூடல் ஆயவற்றால் அமைவதே எவ்வுயிரித் தோற்றமும் இயக்காற்றலுமாம். அதன் தொல் பழஞ்சான்று ஓரறிவு உயிரியாம் பூவையும் அதன் காய் கனியையும் கருதிப் பார்க்க விளங்கும். அதன் விரிவாக்கமாகிய இரண்டன் இயைபே உலகமாம். ஆனால் உலகத் தியற்கை எல்லாமும் இரு வேறு வகைப் பட்டனவே. ஆக்கமும் கேடும் நீக்கமற நிறைந்தனவேயாம். ஒன்றியைந்த இரண்டே இரு வேறாதல் ஆக்கமாம். நிலமும், நீரும் தீயும், வளியும், வெளியும் கேடும் செய்வது கண்முன் கண்டு கொண்டு இருப்பதேயாம். ஒற்றை விரலால் சுட்டிக் காட்டியவன் மற்றொரு விரலையும் தனித்தனி நிற்பதை ஒன்றாக்கி இரட்டையை உணர்ந்து போற்றினான். ஒரு தலையில் இருகண், இருசெவி, இருவாய், இருமூக்கு, இருநாக்கு, இருகன்னம், ஈரிதழ், ஈரிமை இருதாடை, இருமூளை இருப்பதை எண்ணினான். இரண்டு கால், இரண்டு கை, இரண்டு குரல்வளை, இரண்டு நுரையீரல், இரண்டு குடல், இரண்டு கழிவாய் என்பவற்றைக் கண்டு கொண்டான். இரண்டிரண்டாம் இவை ஓரியக்கமாக்க ஓருயிர் இருப்பதை உணர்ந்தான். உயர உயர உடல் இயக்கம் உயிரியக்கம் அவனை வளர்த்துக் கொண்டு வந்தன. மூன்று: இருவிரலால் எண்ணியவன் மூன்றாம் விரலையும் நீட்டினான் அல்லது மடித்தான். ஒன்று இரண்டு என்பவற்றின் மேல் எழுந்த எண் மூ ஆயிற்று. மூ > மூக்கு. முற்கு - மூக்கு - எங்கு எழுந்தது? மூக்கில் எழுந்தது. மூக்கின் வடிவென்ன? முப்பட்டை வடிவு. முக்கோண வடிவு. ஆம் மூக்கின் வடிவு. இருவிரலால் எண்ணியவன் - மூன்றாம் விரலை நீட்டியவன் - மூக்கில் படியச் செய்தான். முப்பட்டை முக்கோணம் மூன்று என்பவை மூக்கு வடிவால் புலப்பட்டது. பின்னே முக்கடல் முக்குடை முச்சந்தி மும்மை என வளர்ந்தன. தான் நிற்கும் இடம், முன்னுள்ள இடம், அப்பாலிடம் எனவும் மூவிடம் புலப்பட்டது. நடந்த காலம், நடக்கிற காலம். வரப்போகிற காலம் எனவும் முக்காலம் விளக்கமாயது. இடம் காலம் என்பவற்றுள் எல்லாமும் அடங்கிக் கிடக்கக் கண்டான். இடமும் காலமும் இல்லாமல் தான் இல்லை. எதுவும் எலையும் இல்லை என்பதை உணரலானான். அவையே முதற் பொருள் எனத் தீர்மானித்தான். நான்கு; மூன்று விரலை நீட்டியவன் அடுத்த விரலையும் நீட்டினான். கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு எனப் பக்கங்களை எண்ணினான். மூக்குக்குக் கீழே நாநீண்டும் வளைந்தும் புரண்டும் உயர்ந்தும் தாழ்ந்தும் செயல்படல் தெளிந்தான் நாஎன்றான். நா > நாங்கு > நான்கு என ஆயது. மலை, காடு, வயல், கடல் என இடம் நான்கையும் மழை வெயில் காற்று பனி எனக் காலநிலை நான்கையும் எண்ணிப் பார்த்தான். இடம் நான்காவது காலமும் நான்காவது. மேலும் நோக்கினான். ஐந்து: நான்கு விரலை நீட்டியவன். எஞ்சியிருந்த ஒரு விரலையும் நீட்டினான். ஐந்தும் ஒன்றாக விரிய, குவிய, மூடக் கண்டான் வியந்தான்! ஐ வியப்பாகியது ஒரு விரல் பயனினும் ஐவிரல்களின் கூட்டுப் பயன் கொள்ளை மகிழ்வாயது. அள்ளவும் கொள்ளவும் அடிக்கவும் இடிக்கவும் அந்த ஐந்து விரல்கள் போதாமல் அடுத்த கையும் கூடக் கண்டான். அக்கையும் இக்கையும் கூடல் எண்ணினான். ஐந்து விரலொடு அடுத்த கைவிரலைத் தொடுத்தால் முடிந்து போகாமல் தொடர்வதைக் கண்டான். ஆறு: எண் அறுத்து = அற்றுப் - போகாமல், ஆறு ஆகியது. எண்ணம் பெருகியது. ஒருகால் நிலைத்திணை, இருகால் மாந்தர், நாற்கால் விலங்கு இவற்றொடு அறுகால் வண்டு ஈ ஆகியவற்றைப் பார்த்தான். ஐவிரல்கள், ஒருதலை மற்றை ஐவிரல்கள் ஒருமை. இருகைகளையும் ஒன்றாய் ஒட்டினான்! என்ன வியப்பு! எதிர் - எதிராம் தக்க விரலொடு ஒட்டி நீர் மேல் நின்ற அழகிய ஒரு மலர் மொக்கெனத் தோன்றியது இருகையும் இணைந்து கூட்டிய கை விரித்தும் குவித்தும் உருண்டும் திரண்டும் பெருகியும் சுருங்கியும் கோலங்கள் காட்டின. இரண்டு - இரண்டு என்று கண்கள் காதுகளையும், மூக்கு வாய் ஆகியவற்றையும் விரலால் குறித்தான். தலை ஒன்றுள் ஆறு புலப்பட்டது. அவன் எண்ணம் மேலும் எழுந்தது. அள்ளி யுண்ட உணவின் சுவையை உணர்ந்தால்; இனிப்பு, உறைப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உப்பு எனப் புலப்பட்டன. ஆறு பருவம் (ஆறு பெரும் பொழுது) ஆறு பொழுது (சிறு பொழுது) ஆறு அறிவு என்பனவும் படிப்படியே கண்டான். ஏழு: எழு > ஏழு. எழுந்தது கதிர்; பொழிந்ததுமழை. மழைத்துளியால் வானில் வண்ணமாலை வில்லாய் - வான வில்லாய் - வளைந்து நின்று, வா - வந்து பார் எண்ணிப்பார் என்றது! எண்ணினான்! மயங்கினான், தயங்கினான்; ஐந்தா ஆறா அதன் மேலா ஆர்வத்தால் எண்ணினான். ஆறாம் விரலுக்கு மேல் எழுந்தது ஏழாயிற்று. கண்ணைக் கவர்ந்த கதிரைப் போல், காதில் தவழ்ந்தது இசை! ஒன்று இரண்டு என்று கூர்ஞ் செவியன் எண்ணினான் ஏழ்வகை புலப்பட்டது; ஏழ் இசை தந்தது ஏழ் - யாழ் - எனப்பட்டது. ஓரிலையில் ஏற்றம் இறக்கம் மடிப்பு என அமைந்து ஏழு இலைக் காட்சி தந்தது. ஏழிலையெனப் பெயரிட்டான், அடுத்த விரல் ஒட்டிநின்று எட்டிப்பார்த்து நிமிர்ந்தது. எட்டு: மூன்றாம் விரல் உயரம் போல் எட்டாம் விரலும் உயரமாகத் தோன்றியது. எட்டம் உயரம் ஆயது; எட்டுதல் இயல்பாகப் பொருந்தும் ஏற்றம் உணர்ந்தான், அவன் கையால் உடலை அளந்தான்; எட்டு முறை அளக்க வைத்தது. உடலின் அடியாம் அடியினை அகல அகல வைத்தான் எட்டு எனப்பட்டது. எட்டாவது நடை; எவ்வளவு நடந்தாலும் எட்ட முடியவில்லை என எட்டாத் தொலைவு கண்டான். எழும்பி எழும்பி எக்கி எக்கிப் பிடித்தும் பிடிக்க முடியா உயரம் கண்டான்; எட்டா உயரம் எனத் தீர்மானித்தான். நேருக்கு நேராய் நான்கு நிலை எண்ணியவன் ஊடு ஊடாக வரும் கோணத் திசைகளை எண்ணினான். எண் கோணம் கண்டான். உண்ணும் தவச வகைகளை ஒன்று ஒன்றாக எண்ணினான். எண் கூலங்களைக் கண்டு வியந்தான். எட்டு, மேலும் மேலும் எண்ண வைத்தது. தொண்டு (ஒன்பது): இருக்க நடக்க எடுக்க படுக்க ஏற இறங்க ஓட ஆட, உதவும் உடல் இயங்குமாறு இயக்குவதை எண்ணினான். காற்று இல்லையானால் உடல் இயங்காது. உணவு நீர், ஆயன இல்லையானாலும் உடல் கிடந்து விடும். அப் பொழுதுக்கு மட்டுமன்றி எப்பொழுதுக்கும் உணவும் நீரும் காற்றும் கட்டாயம் வேண்டும். அம்மூன்றும் எப்படி உடலுக்குள் செல்கிறது? உலாவுகிறது? இயங்குகிறது? இயக்குகிறது? அதற்குத் தொண்டு இருக்கிறது. தொண்டாவது துளை; துளை தெரியவில்லையே! மூக்குத் துளை வாய்த்துளைகள் போல் அவை தெரியவில்லையே! ஆனாலும், மூக்குத் துளைக்கும் வாய்த்துளைக்கும் தொடர்துளை இருக்கிறது, இத்துளை வாங்கி அத்துளை வழியே செல்லச் செலுத்துகின்றது; செல்கிறது அங்கும் தொண்டுகள் துளைகள் இல்லாமல் முடியாது. உடலினுள் உள்ள உறுப்புகள் எல்லாம் தொண்டும் துளையுமாக இருக்க வேண்டும். தொண்டு வழியே வந்த காற்றும் உணவும் தொண்டு வழியே சென்று தங்கிவிட்டால் தொண்டு தாங்குமா? எவ்வளவுதான் தாங்கும்? அதனால் மேலே தொண்டுகள் இரண்டு உள்ளது போல் உள்ளே சென்றது வெளியேறத் தொண்டுகளும் இரண்டு உண்டு. ஆஆ! இவையெல்லாம் தொண்டு என வெளிப்பட என்ன தொண்டு காட்டுகின்றது. காட்டும் தொண்டு உள்ள இடம் ஆம், தொண்டை ! தொண்டு என்னும் எண் மூலம்! கண்ணுக்குத் தெரியாத் துளைகள் பல்லாயிரம் இருக்கலாம்! ஆனால் தெரிந்த துளைகள் வாய்வழித் தொண்டை ஒன்று மட்டும்தானா? இல்லை வெளிப்படத் தெரியும் தொண்டுகள் - கண்கள் இரண்டு காதுகள் இரண்டு - மூக்குத் துளைகள் இரண்டு - நீர்வாய் மலவாய் இரண்டு. ஆகத் தொண்டுகளை எண்ணினால் தொண்டுதானே! தொண்டு வியப்புக்கும் வியப்பானது. ஓட்டைப் பானையுள் நீர் நில்லாது; ஓட்டைக் குழலில் ஓசை வராது. ஓட்டைத் தொண்டு, தொண்டு (ஒன்பது) இருந்தும். உயிர் போய்விடாமல் இருக்கிறது. கிடக்கும் போது கிடந்து நடக்கும் போது நடக்கிறது தொண்டு இருந்தாலும் இந்தத் தொண்டு ஓடவிடாமல் ஒழுக விடாமல் வாங்கும் உயர்ந்த தொண்டு. எண்ணஎண்ண என்ன இன்பம், ஆம் அது தொண்டின் இன்பம், தொண்டாம் விரல் நிமிர்ந்ததும் இறுதிப் பெருவிரல் தான் மட்டும் என்ன? தொண்டுதானே என் இடம்! ஆம் என் இருப்பிடம்! தொண்டோடு நான் ஒட்டாமல் நின்றால் தொண்டின் பயன் என்ன? துலக்கமென்ன? தொண்டைப் பற்றுவேன்; பற்றியே நிற்பேன் என்று பற்றியது பெருவிரல். ஐந்து, ஒருகை விரலைந்து பத்து, இருகை விரல் பத்து எனக் குழந்தையர் பாடல் எழும்ப முந்தை முதல்வன் ஆனான் அவன். குறிப்பு: அருமையான தொண்டை ஒழிய விட்டுவிட்டு மேலே நின்ற ஒன்பதை இழுத்து வந்து தொண்டின் இடத்திலே பிற்கால மாந்தன் விட்டுவிட்டான். அது தொல்காப்பியர் காலந்தொட்டே ஆகிவிட்டது. அவர் தொண்டும் கொண்டார் (தொல். bghUŸ.406); x‹gJ« bfh©lh®, gÇghlÈY« ïu©L« ïl« bg‰wd.(3). மலைபடுகடாம் தொண்டு படு திவவைக் காக்கின்றது. (21). தொண்டாயிரவர் என்பதை நூலும் வழக்கும் போக்கடித்துவிடவில்லை. பத்து (பற்று): என்ன வியப்பு! கண், காட்சிகளைப் பற்றுகிறது; காது, ஓசை ஒலிகளைப் பற்றுகிறது; மூக்கு, மணத்தைப் பற்றுகிறது; நா சுவையைப் பற்றுகிறது; தோல், வெப்பு தட்புப் பற்றுகிறது; எண்ணம், எவ்வெவற்றையோ பற்றுகிறது; பற்றிப் பற்றிப் பற்றே வடிவாய் நிற்பதா உடல்? பற்றே உடலும் உள்ளமும் ஆனால். பற்றுதலை விடுவது எப்பொழுது? பற்றைப் பற்றிக் கொண்டே இருந்தால் பற்றாளியாகவே கிடக்க வேண்டியதுதான்! போக வேண்டியது தான்! பற்றற்றதைப் பற்ற வேண்டாவா? பற்றற்றது பற்றிக் கொள்ள வேண்டாவா? பற்று அற்றால் அல்லவா பற்றற்றதற்குப் புக இடம் உண்டு! பற்றே மூடை மூடையாய் மண்டிக் கிடக்க விட்டால் பற்றற்றது பற்றிக் கால் வைக்கவாவது முடியுமா? பற்றற்றது என்னைப் பற்ற நான் பற்றற்ற இருப்பாக என் உடலையும் உளத்தையும் ஆக்க வேண்டும். வெற்றிடத்தில் விரைந்து காற்றுப் புகுவது போல் பற்றற்ற இடத்துப் பற்றற்றது, தன்னிடம் இது என்று தானே புகுந்து விடும்! தங்கியும் விடும்! பிறகு உடலுக்குக் உள்ளத்திற்கும் உரிய பாடும் பணியும் பசியும் நிறைவும் பிரிவும் எல்லாம் எல்லாம் பற்றற்றதற்கும் பற்றற்றதைப் பற்றியதற்கும் உள்ள பங்கும் பாடும்! கையும் கையும் பற்றின! விரலும் விரலும் பற்றின! பற்றற்றது பற்றற்றதைப் பற்றியது போல் பற்றின; தாமரைக் குவிமுகை போலக் கூடின பற்று எனப்பட்டது. இனத்திரிபாய்ப் பத்தாயிற்று. நிலை பெற்றும் போயிற்று. பற்றி பத்தியாயிற்று! பக்தியும் ஆயிற்று. முற்றி முத்தியாயிற்று! முக்தியும் ஆயிற்று. மணப்பற்றி மணப்பத்தி ஆயிற்று. வயிற்று வலி வயித்து வலி ஆகவில்லையா? ஆற்றுக்குப் போவது பற்றி ஆத்துக்குத்தானே போகிறோம்! பற்றுத் தேய்த்தல் பத்துத் தேய்ப்பு ஆய பின் எதுதான் தேயாது? பாவம்! பத்துப்பாட்டும் ! பதிற்றுப்பத்தும்! அப்பொழுதே பற்றுக்குப் பத்துப் போட்டாகிவிட்டபின் இனி மாற்ற முடியுமா? தொண்டைத் தொலையவிட்டு ஒன்பதைப் பற்றிக் கொண்டவன் பற்றைப் பற்றுவானா? பற்றற்றதைப் பற்றுவானா? நமக்குத் திருவள்ளுவர் அழைப்பு விடுகிறார். பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு -திருக். 360 ஆழ்வாரும் அழைப்பு விடுகிறார். அற்றது பற்றெனில் உற்றது வீடு - நாலா. 2690 நூறு: குழந்தை தும்மல் போட்டால் போதும்! தாயின் வாய் நூறு என்னும்! மீண்டும் தும்மினால் இருநூறு என்னும்! ஏன்? அக்குழந்தை எத்துயரும் வாராமல் நூறாண்டும் இருநூறாண்டும் வாழ வேண்டுமாம்! நூறு என்னும் எண் எப்படி வந்தது? நூறு என்பது தூள். எளிதாக உடையும் சிப்பி கால்பட்டாலும் கைபட்டாலும். எளிதில் உடைந்து நூறாகிவிடும். ஆம்! தூள் தூளாகிவிடும்! அதனை நூறு என்றனர். கோட்டு (சங்கு) நூறு (தூள்) என்றனர். பத்துக்கு மேல் பலபத்தாகிய அதனைக் கண்டவர் பத்துப் பத்தை அத்தூளின் பெயரால் நூறு என்றனர். நூறு, இருநூறு, முந்நூறு எனப் பத்து நூறு விரிந்தது. பத்துப் பத்து என்று எண்ணியவர்,அதனை நூறு எனக் கண்டதால் ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு என விளக்கமுற்றன. ஆயிரம்: காட்டில் சென்றால் செடி கொடி மரம் எண்ணத் தொலையுமா? வானைப் பார்த்தால் வெள்ளிகளை எண்ண முடியுமா? கடல் மீனைப் பார்த்தால் கணக்கிட முடியுமா? ஆற்று மணலைக் கையில் அள்ளினால் அதனைத்தான் எத்தனை என எண்ணி முடிப்பது எப்படி? ஆற்று நுண் மணலின் பெயர் அயிர். ஆற்று நீரில் உலாவும் நுண்மீன் அயிரை. பனையின் கற்கண்டுத் தூளும் அயிர். அவனை அயிர் பற்றிக் கொண்டது; அயிர் > அயிரம் > ஆயிரம் கண்டான். ஆயிரம் பல நூறாய்- பத்து நூறாய் - எண்ண உதவியது. ஆயிரம் காக்கைக்கு ஒரு கல் என்பதைப் பட்டறிவு காட்டிற்று. ஆயிரம் அகலவில்லை. நூறு என வாழ்த்திய தாய்மை. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண் ணாவுன் செவ்வடி செவ்விதிருக் காப்பு -நாலா. 1 என்று பெரியாழ்வார் வாயால் இறைமைப் பாட்டாகியது! இலக்கம்: எல் = விளக்கம், ஒளி. எல்லே இலக்கம் என்பது தொல்காப்பியம் (754). இலக்கு = குறிக்கோள். இவ்வளவு தேடுவேன் என முயற்சியும் திறமும் உடையான் ஒருவன் முயன்று தேடும் பொருள் இலக்கமாம். இலக்கம் தேடுபவன் தனிப்பெரும் தலைவனாம் (அதிபதி). இலட்சாதிபதி (ம.வ). நூறாயிரம் பண்டை வழக்கு. இலக்கம் பின்னை வழக்கு. கோடி: ஓடி ஓடித் திரியும் மாந்தன் எந்தக் கோடியையும் எட்ட முடியவில்லை. தென்கோடி, வடகோடி, மேல்கோடி, கீழ்கோடி, தெருக்கோடி எல்லாம் பார்த்துவிட்டான். கோடியைக் கடை கோடியாகவே கண்டான். மண்ணைவிட்டு நீரிலும் போனான்; கோடியைக் கண்டான் அல்லன். அவனே, முடியா அதுவே முடிவு எனத் தெளிந்து கோடியைக் கண்ட அமைதியில் நின்றான். கோடி என்பது கடைசி என்பது மட்டும் அவனுக்கு அகலவில்லை. நூறாயிரம், பத்து நூறாயிரம், நூறுநூறாயிரம் (இலக்கம், பத்து இலக்கம், நூறு இலக்கம்) என எண்ணினான்! விரிந்தது மேலும் மேலும் எண்ண இருந்தது. எண்ண முடியாது கைவிட்டவன், நீர் நிலையை நோக்கினான். ஒரு கொடியா, இரண்டு கொடியா? எத்தனை எத்தனை எண்ணத் தக்கன இவற்றின் பெயரே எண்ண முடியா அவ்வெண். தாமரை, ஆம்பல் (அல்லி) ஆயவற்றை எண்ண முடியாது. அவை நிற்கும் நீர் நிலையின் துளியையும் எண்ண முடியாது ! அது வெள்ளம்! வெள்ளமோ வெள்ளம்! என எண்ணினான். தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பவற்றின் இறுதி ஐ, அம், பல் என்பவை. இவ் ஐ,அம்,பல் என்பவையே எண்களாக இருக்கட்டும் எனத் தீர்மானித்தான். அதனைத் தொல்காப்பியர் வரை ஏற்றுக் கொண்டனர் (393). அவர் தோளின் மேல் ஏறி இருந்து பார்க்கும் பேரர்கள் பார்வை விரிந்தது. எண்ண முடியாததை எண்ணியதாகச் சொல்லி முடிப்பதென்ன? எண்ண முடியாமல் போனால்தானே! எண்ணுவோம் என எண்ணினர் கோடி, கோடா கோடி, கோடானு கோடி, அடுக்கிய கோடி என எண்கள் குவிந்தன. கோடி எண் வரிசையாக இட்டாலும் எண்ணத் துணிந்து விட்டான் எண்ண வல்ல மூளையன் ! ஆனால் எண்ண எண்ண மூளையைப் பயன்படுத்தினான்! உலகம் உய்ய எண்ணும் எண்ண விரிவாம் நெஞ்சை மட்டும் பயன்படுத்துதலைச் சுருக்குகிறான் ! சுருக்குகிறான்! சுருட்டைப் புழுவாகிறான்! ஒன்றைக் கோடியாகக் கொள்ளும் உவகையை வழங்கும் நாளே அவன் வாழப் பிறந்த நாள்! வாழ வைக்கப் பிறந்தநாள். எண்ணெய்: எள் + நெய் = எண்ணெய். எள்ளின் உருக்காகிய எள் நெய், எண்ணெய் எனப் பட்டது. பின்னே அப்பெயரே பொதுப் பெயராய்த் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், முத்தெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் முதலாகப் பெயர் கொண்டது. அதன் விரிவாக்கம், வேப்பெண்ணெய், புன்னை எண்ணெய் எனவும் ஆலிவு எண்ணெய் எனவும் மீன் எண்ணெய் மயில்கால் எண்ணெய் எனவும் மண்ணெண்ணெய், கல்லெண்ணெய் (petrol), கரியெண்ணெய் (diesel) எனவும் ஆயின. எட்செடியில் இருந்து கொடி, மரம், கல், மண் என விரிந்தமை அறிக. இவற்றைத் தேங்காய் நெய், கடலை நெய், கன்னெய், மண்ணெய் என வழங்குதல் சாலும் எனவும் நாம் எண்ணலாம். எண்ணெழுத்து மாலை: முதற்பாடல் எண் முறையிலும் அடுத்த பாடல் எழுத்து முறையிலும் அமைந்து தொடர்வதால் எண்ணெழுத்து மாலை என்னும் பெயர் பெற்றது. இளம்பாவலர் வேங்கடராமனாரும், அருட்பாவலர் சேதுராமனாரும் முறையே எண்ணும் எழுத்தும் பாட இரட்டையர் யாத்த நூலாய் இலங்குவது, மதுரைப் பரிபூரண விநாயகர் எண்ணெழுத்து மாலை என்பதாம். இந்நூல் கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் நூற்று எட்டனைக் கொண்டுள்ளது. எழுத்துகள் அகரம் முதல் அஃகேனம் முடிய முறையாகத் தொடர்ந்து பின்னர்க் க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன என்னும் உயிர்மெய் வரிசையுள் ங ணழ ள ற ன என்பவை ஒன்றும், இரண்டும், எஞ்சியவை மூன்றும் ஆகிய எழுத்துகளை ஏற்றாங்குக் கொண்டுள்ளது. அம்மாலையின் அருமைப்பாடு பாராட்டத்தக்கது. எனினும் டடம், டவுள், டக்கை, டமருகம், டவண்டை, டிண்டிமம், டாகினி, ராசினி, ரீங்காரம், லாகினி, லவணம், லாசகன், லுத்தன் என வரும் ஆட்சிகள் ஏற்கத்தக்கன அல்ல. ழகரந் தனக்கே உரித்தா வுடைத்தமிழ் ளகர மெய் சேர்கள வாரண மாப்பிள்ளையாய் றச்சேர் இடை இலியும் பிலியும் ஆற்றல னவ்விரண் டாமெழுத் தாக்கொள் வசரக என்னும் ஆட்சிகள் அருமையிலும் அருமையாம். இலக்கிய வகையுள் இவ்வெண்ணெழுத்து மாலைக்கு முற்பட எழுந்தது வைணவி எண்ணெழுத்து மாலையாம். அதனை இயற்றியவர் இவ்விரட்டையருள் இளவலராம் வேங்கடராமனாரே எண்பதம்: எண் + பதம் = எண்பதம். எள் > எண் = எளிமை. பதம் = பக்குவம். காணுவதற்கு எளிமையாக வாய்ப்புத் தரும் நிலை எண்பதம் ஆகும். காட்சிக்கு எளியன் என்பது அது. - (திருக். 386) இன்றுகண் டாங்குக் காண்குவம் என்றும் இன்சொல் எண்பதத்தை ஆகுமதி பெரும - புறம். 40 எண் பதன்: உண்பதற்குரிய பதனமைந்த உணவு எட்டு. அவை, நெல் வரகு, சாமை, தினை, இறுங்கு, கேழ்வரகு, கொள், உழுந்து (புறம். 346) எண்பித்தல்: எண்பு > எண்பித்தல் = மெய்ப்பித்தல். உரிய சான்றுகளை வழங்கித்தாம் கூறுவதை மெய்மை என எண்ணுமாறு, உணருமாறு செய்தல் எண்பித்தல் ஆகும். எண்மை: எள் + மை = எண்மை. எண்மை = எளிமை; எள்ளின் அளவு போல் அளவிடல். அதனால் செருக்கின்றி - செம்மாப்பின்றி - எளிமையாக வாழ்தல். எளிமை இறைமை ஆதலால் எளிவந்த பிரான் என இறைமை சுட்டப்படும். எதிரும் புதிரும்: எதிர் = எதிர்த்திசை. புதிர் = எதிர்த்திசைக்கு எதிர்த்திசை. இருவர் எதிரிட்டுப் போதலையும், பேசுதலையும், இருத்தலையும் முறையே எதிரும் புதிருமாகப் போகின்றனர். எதிரும் புதிருமாகப் பேசுகின்றனர், எதிரும் புதிருமாக இருக்கின்றனர் என்பர். புதிர் என்பது எதிர்க்கு எதிராயது. விடுகதையைப் புதிர் என்பது வழக்கு. புதிர் போடுதல் என்பதும் உண்டு. தொல்காப்பியர் நாளில் பிசி எனப்பட்டதே பின்னர்ப் புதிர் என்பதாகவும் விடுகதையாகவும் வழங்கப்படுகின்றதாம், விடுகதை மாறிமாறிக் கேட்டு விடுவிக்கப் பெறுவது என்பது அறிந்தால் புதிரின் பொருள் புலனாம். எதிர்காலம்: வருதற்குரிய காலம், வருங்காலம். எதிர்காலம் என்பது தொழில் பிறவாமை (தொல். சொல். 200. சேனா.) எதிர்குதிர்: எதிர் = ஒன்றன் ஒலிக்கு மாறு ஒலி செய்தல். குதிர் = எதிர் ஒலிக்கு மாறு ஒலி குதிர். எதிரொலிக்கு எதிரொலியாம். குரல்கேட்ட கோழி குன்றதிரக் கூவ மதநனி வாரண மாறுமா றதிர்ப்ப எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு மலைமுழை -பரிபா. 8:19-22. எதிர்குதிர் = மறுதலை. எதிர்குதிர் என்பது உலகவழக்கு பழைய உரை). எதிர்நூல்: எதிர் = மறுதலை. முதல் நூலின் முடிந்த பொருளை யாதானும் ஒரு காரணத்தால் பிறழ வைத்தல் (இறை.1) எதிர்மறை: மறை = மறுத்தல். தன்னால் சொல்லப்பட்ட பொருளில் மாறுபட்டு வருவது (தொல். சொல். 252.தெய்.) எதிர்மை: தோன்றுதல்; தோற்றம். எதிர்மை பொருளென விரும்பி - பெருங். 5:1:119 எதிர்வரும்: நிகழும், மேல்வரும் செல்லாநின்ற என வழங்கும் நாட்குறிப்பை, ஈழத்தில் எதிர்வரும் என்கின்றனர். எதிர்வரும் இருபதாம் திகதி (தேதி) என்பது போல வழங்குகின்றனர். இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்பவை முக்காலப் பெயர்கள் என்பதால் அமைந்த வழக்கு இது. எதுகை: எதிர்கை > எதுகை. எதிர்தல் = முன்நிற்றல், முன்னிடம். மோனை முதல் எழுத்து அதன் முன்நிற்கும் எழுத்து எதுகையாகும். பிரியுங் காலத்து எதிர்நின்று சாற்றிய - தொல். 1096 எ-டு: இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய்கவர்ந் தற்று - திருக். 100 முதல் எழுத்துகள் அளவால் ஒத்திருக்க இரண்டாம் எழுத்து அவ்வெழுத்தாகவே வருதல் எதுகையாம். அதன் இனமும் கொள்ளப்படும். எதுகை மோனை: எதுகை = இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகை. மோனை = முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை. எதுகை மோனை இல்லாத பா பாவன்று, பாவின் அழகு எதுகை மோனைகளில் தொக்கிக் கிடத்தல் கண்கூடு. செய்யுள்களுக்கு உரிய எதுகை மோனை பழமொழி களிலும் பயில வழங்கும். ஆடிப்பட்டம் தேடி விதை, சித்திரை மாதப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம் - இவை எதுகை. தைப்பனி தரையைப் பிளக்கும், மாசிப்பனி மச்சைப் பிளக்கும் - இவை மோனை. எதுகை மோனை, மக்கள் வாக்கில் எகனை மொகனை என வழங்கப்படுகின்றது. எத்தும் ஏமாற்றும்: எத்து (எற்று) = எதைச் சொன்னாலும் ஏற்காமல் எற்றிவிட்டு (தள்ளிவிட்டு)ப் போதல். ஏமாற்று = நம்புமாறு செய்து நம்பிக்கைக் கேடு ஆக்குதல். எத்தும் ஏமாற்றும் அவன் சொத்து எத்துவான் இல்லாவிட்டால், ஏமாற்றுவான்; அதுதான் அவன் தொழில் உன் எத்தும் ஏமாற்றும் இங்கே செல்லாது என்பன வழக்கு மொழிகள். எற்றுதலால் மனத்துயர் மட்டுமே உண்டு; ஏமாற்றுதலால் பொருள் இழப்பும் அதன் வழியே மனத்துயரும் உண்டு. அதனால் எத்தனோடு சேர்ந்தாலும் ஏமாத்துக் காரனோடு சேராதே என்பார். எந்தாய்: எந்தாய் = எம் தாயே; எம் தந்தையே. எம் தாய் என்னும் சொற்களை இணைக்க எந்தாய் என்று ஆகும். எம் + தந்தை = எந்தை. எந்தை என்பது விளியாக வரும்போது எந்தாய் என ஆகும். இந்நுட்பத்தைக் கண்டு கொண்ட குமரகுருபரர், எம் தாயே எனவும், எம் தந்தையே எனவும் கூறாமல் எந்தாய் எனக் கூறினாலே இருவரும் பிரிவிலா ஒருநிலையில் காணல்கண்டு களிகூர்கிறார் (மீனாட். பிள். 23). * ஒருவர் காண்க. எந்திரம்: இயன்திரம் > எந்திரம். எந்திரம் = பொறி. கரும்பின் எந்திரம் சிலைப்பின் -புறம், 322 x.neh.: மன்திரம் = மந்திரம். தன்திரம் = தந்திரம். ஏத்தம் என்பதும் இது. கழைகண் உடைக்கும் கரும்பின் ஏத்தம் - மலை.341 எந்திரன்: இயன் + திரன் = இயந்திரன் > எந்திரன். பொறிகளால் மாந்தன்போல் அமைக்கப்பட்டுச் செயலாற்றும் செயற்கை உரு எந்திரன். இடப்பட்ட கட்டளைப் பதிவின்படி கடனாற்றும் இயங்குரு அஃதாம். எமன்: எம் + அன் = எமன். நுமன், நும்மவன் ஆவது போல் எமன் எம்மவன் என்னும் பொருளதாம். எமர் எம்மவர் என்னும் பொருளதாம். (நன்.275 மயிலை.) எமன் கூற்றுவன் என்னும் பொருளில் பின்னே வந்தது. எவரும் இறுதியில் துணை நில்லார்! எமனே கொண்டு போவான்; அவனே எமக்கு உற்ற உரிமையன் ஆதலால் எமன் என்றனர் என்பர். எமி: எம் + இ = எமி; எமி = தமி; எமியம் = தமியம். எம்மைத் தவிர்த்து எவரும் இல்லாமை; தமித்து (தனித்து) நிற்கும் நிலை எமியம்: எமி + அம் = எமியம். தமியம் என்பது தாம் தமித்திருத்தல். அப்பொருளில் யாம் தமியம் (தமியேம்) என்பது எமியம் என ஆட்சி பெற்றது. எமியம் துணிந்த ஏமம்சால் அருமிளை - குறிஞ். 32 எமிய மாக ஈங்குத் துறந்தோர் - குறுந். 172 எம்பரும்: எம்பர் + உம் = எம்பரும் = எவ்விடமும். இம்பர், உம்பர் போன்றது. எம்பரும் நோக்கினர் - பெருங். 2:7:116 எம்பி: எம்பின் > எம்பி. எமக்குப் பின் பிறந்தவன்; தம்பி. எம்பி நல்லன் நல்லன் -கம்.அயோ. 786 மாயையின் மானென எம்பி வாய்மையால் சொன்ன சொற்கொளேன் - கம்.உயுத். 2726 ஒ.நோ.: தம்பின் > தம்பி. எம்புதல்: எழும்புதல் > எம்புதல். எம்புதல் > மேலே தூக்கி எழுப்புதல், நிமிர்த்தல். அந்தக் கல்லைக் கடப்பாரையால் ஓர் எம்பு எம்பு, தூக்கிவிடலாம் என்பது மக்கள் வழக்கு. எம்மான்: மகன் > மான்; எம்மகன் > எம்மான். மகன் மான் என மாறி மீப்புகழ் சேர்த்தது எம்மானாம். புண்டரிகக்கண் எம்மான் -கம். உயுத். 251 x.neh.: பெருமகன் > பெருமான். எம்முன் : எமக்கு முன்பிறந்தவன்; அண்ணன். எம்முனார் என்பதும் அது. எம்முன் யாண்டையான் -கம். அயோ. 882 எம்முனார் எனக்குச் செய்த உதவி - கம். உயுத். 444 எம்மே: எம்மே:1 எம் + ஏ = எம்மே = எங்களை. எவ்வம் களைந்த எம்மே - குறுந். 354 எம்மே:2 ஏ அம்மே எம்மே (விளி) ம.வ. எம்மை: எம்மை:1 எம் + ஐ = எம்மை. ஐ = தாய், தந்தை, தலைவன். எம் தாய், எம் தந்தை, எம் தலைவன். ஒ.நோ.: என் + ஐ = என்னை; என்தாய், என்தந்தை, என்தலைவன். எம்மை:2 இம்மை, உம்மை, அம்மை என்பன போல எம்மை என்பது எப்பிறப்பு என்னும் பொருளில் வரும். எவ்வுலகம் என்னும் பொருளிலும் வரும். எம்மை:3 எங்களை. எம்மைத் தீண்டாதீர் - பெரிய. திருநீல. எம்மோய்: எம்தாய் என்பதை எம் ஓய் எனப்பயன்படுத்துகிறார் கம்பர். ஆரண மறையோன் எந்தை அருந்ததிக் கற்பின் எம்மோய் - கம்.ஆரண். 274 என்பது அது. ஆய் என்னும் தாயின் பெயர் ஓய் என இவண் வழங்கப்பட்டுள்ளது. எம் + ஓ = எம்மோ. எம்மோ எனத் தாயரை விளிப்பது இன்றும் உண்டு. அதனுடன் ய் சேர்ந்து எம்மோய் எனப்பட்டமை ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வழக்கெனக் கொள்ள வாய்க்கின்றது. இயற்பெயர் விளிப்பெயர் ஆவது போல (அம்மை, அம்மா) விளிப்பெயர் இயற்பெயராதற்குச் சான்றாகக் கூடும் (எம்மோய், எம்மை) எயில்: எய் + இல் = எயில். எயில் = மதில், கோட்டை எய்யும் பொறிகளைத் தன்னகத்துக் கொண்ட கோட்டை எயில் ஆகும். கடிமிளைக் குண்டு கிடங்கின் நெடுமதில் நிலைஞாயில் அம்புடை ஆரெயில் - பதிற். 20 எயில் அமைந்த கடற்கரை ஊர், எயிற்பட்டினம். மணிநீர் வைப்பு மதிலொடு பெயரிய பனிநீர்ப் படுவிற் பட்டினம் -சிறுபாண். 352-353 எயிறு: எய் + இறு = எயிறு. எயிறு = பல்; எய் = முள், அம்பு. எய் போல் அமைந்து, கடிப்பதும், வெட்டுவதும், உடைப்பதும் அரைப்பதும் ஆகிய செயலைச் செய்யும் பல் எயிறு எனப்பட்டது. கடுவொடுக்கு எயிற்ற அரவு -புறம். 17 இது பாம்பின் பல். பிள்ளை வெருகின் முள் எயிறு -புறம். 117 வாணகை யிலங்கெயிற்று அமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர் -பதிற். 51 இது மகளிர் எயிறு. வாலெயிறு ஊறிய நீர் -திருக். 1121 இது காதல் மகளிர் எயிறு. எயிறு > ஈறு ஆதல் ம.வ. எயினர்: எயின் + அர் = எயினர். எய்யுநர் > எயினர்; அம்பு ஏவலில் வல்லார். இவர் மகளிர் எயிற்றியர். தொடுதோல் அடியர் துடிபடக் குழீஇக் கொடுவில் எயினர் -பட். 265-266 மன்றவிளவின் மனைவீழ் வெள்ளில் கருங்கண் எயிற்றி காதன் மகனொடு கான இரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும் - புறம். 181 எயிற்றியர் என்பாரும் எயினர் பெண்டிரே. எயிற்றியனார் என்பார் சங்கச் சான்றோருள் ஒருவர் (குறுந். 286). எயினந்தையார் என்பாரும் சங்கப்புலவர் (நற். 43). எயினந்தை மகனார் இளங்கீரனார் என்பார் பெயரால் இவர் மகனாரும் சங்கச் சான்றோர் என்பதை அறியலாம். இளங்கீரனார் என்பாரும் இவரும் ஒருவரே என்பர். இவ்விருவர் பெயர்களாலும் உள்ள பாடல்கள் 16. குறுந்தொகை 116 நற். 3, 62, 113, 269, 308, 346, அகம். 3,225,239, 289, 299, 361, 371, 395, 399. எயினன்: எயினர் குடியில் பிறந்த வள்ளல் ஒருவன் எயினன். அவன் புகழ் பாடும் பாடல்கள் 2. (புறம். 351, அகம். 181) அவன் ஊர் வாகை; அவன் பட்டுக் கிடந்த களத்து வெயில் அவன் மேல் படாமல் பறவைக் கூட்டம் வட்டமிட்டது என்பது அவன் தனிப்புகழ்ச் செய்தி. எய்: எய் = முள், அம்பு, எய்ப்பன்றி என்பதும் இது. எய், எய்தல் பொருளது. அம்பு செலுத்துதல் எய்தலாம். பன்றி வகையுள் ஒன்று எய்ப்பன்றி; மக்கள் வழக்கில் முள்ளம்பன்றி என்பதாம். தன்பகை என ஒன்று நெருங்கும் போது தன் உடலிலுள்ள முள்களை உதறி அதனைத் தாக்குதலால் காத்துக் கொள்ள வல்லது அது. சேயளைப் பள்ளி எஃகுறு முள்ளின் எய்தெற விழுக்கிய கானவர் அழுகை -மலைபடு. 300-301 எய்துதல்: எய்த அம்பு குறியை அடைவது போல் எண்ணி முயன்றதை அடைதல் எய்துதலாம். எய்துதல் = அடைதல். அவ்வாறு அடையாமை எய்யாமையாம். எய் > எய்யா > எய்யாமை. பொய்யாமை அன்ன புகழில்லை; எய்யாமை எல்லா அறமும் தரும் -திருக். 296 எய்யாமை, எய்துதற்கு அருமையானதாம். எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல் -திருக். 489 அரிய வாய்ப்புக் கிட்டிய போதும் உரியது செய்யாதார் எப்படிப் பெரியர் ஆவர்? எய்ப்பில் வைப்பு: எய்ப்பு > எய்ப்பில் = தளர்ச்சியில், முதுமையில். வைப்பு = பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இது தாயுமானவர் இறையை நோக்கி இட்ட பெயர். முதுமைக் காலத்தில் வைப்புநிதி போல் ஆறுதல் வழங்கும் இறைவன் என்னும் பொருளது. அப்பா என் எய்ப்பில் வைப்பே -பராபர. 25 எய்ப்பினில் வைப்பே என்பதும் இது. நல்லடியார் எய்ப்பினில் வைப்பே -தேவா. 818 பி.எப். (P.F) என்பது ஓயவுக்காலப் பாதுகாப்புத் தொகையாக இருப்பதால் அதனை எய்ப்பில் வைப்பு என்பது புத்தாக்கக் கலைச்சொல்லாம். எரி: எரி:1 எர் > எரி. எர் = சிவப்பு. சிவந்த நிறத்தது நெருப்பு அல்லது தீ. ஆதலால் சிவனை, எரி எள்ளுவன்ன நிறத்தன் -பதிற். கட. என்றார். நெருப்பை இகழ்ந்தாற் போன்ற சிவந்த நிறத்தன் எரியின் நிறமும் சிவன் நிறமும் ஒன்றாதல் செவ்வண்ணத்தாலேயேயாம். எரியை ஒத்த பசும்பொன் -புறம். 69 எரி:2 எரி என்பது பெயராதலொடு ஏவலுமாம். எரிக்க, எரியூட்டுக எனும்பொருளது. எரி:3 எரி = எரி கொள்ளி (விண்மீன்). அகன்ஞாலம் பெரிது வெம்பினும் மிகவானுள் எரிதோன்றினும் புறம். 395 எரி:4 எரிமலர் = தாமரை. எரிமலர் சினைஇய கண்ணை -பரிபா.1 எரிமலர் எருக்கு மலருமாம். எரிசேரி: எரிசேரி என்பது நாஞ்சில் வட்டார வழக்கில் குழம்பைக் குறிக்கிறது. எரிப்பு மிகச் சேர்க்கப்பட்ட குழம்பு எரிசேரி. அது காரக்குழம்பு என்பது. வற்றல் குழம்பு. சுண்டக்குழம்பு என்பவை முகவை, நெல்லை மாவட்ட வழக்குகள். அன்றியும் பொதுவாக்கு மாகும். எரிச்சல்: இது எரிதல் பொருளது. எரிச்சல் எனவும் வயிற்றெரிச்சல் எனவும் வரும். ஆனால் அறந்தாங்கி வட்டாரத்தில் எரிச்சல் என்பது எரிபொருளாம், விறகைக் குறிக்கிறது. எரிப்பு என்பது விறகைக் குறித்தல் முகவை, நெல்லை வட்டார வழக்காகும். எரிச்சல் நமைச்சல்: எரிச்சல் = காந்தல். நமைச்சல் = தினவு எடுத்தல். கண்ணெரிச்சல் என்பது கண் காந்துதலாம். அது வெப்பத்தால் ஏற்பட்டதாம். வயிற்றெரிச்சல் என்பதோ மன எரிச்சலைச் சுட்டி நிற்பதாம். ஊறுதலும் அதனால் உண்டாகும் வலியும் தினவு, அல்லது நமைச்சலாம். செந்தட்டிச் செடி தட்டுப்பலாச் செடி ஆகியவை பட்ட இடம் கடுமையான நமைச்சல் உண்டாக்கும். நமைச்சலுக்குச் சொறிந்தால் புண்ணாகித் துன்பம் மிகும். எரிநாள்: எரிகப்பிக் கொண்டு வாட்டுவது போல வெயில் வாட்டும் நாள். சித்திரைத் திங்களில் முன்னேழு பின்னேழு என வரும் பதினான்கு நாள். அக்கினி நட்சத்திரம் என்பர்(வ). எரியோம்பல்: எரி = தீ; ஓம்பல் = பேணி வளர்த்தல். எரிவேள்வி செய்தல் எரியோம்பலாம். கற்றாங்கு எரியோம்பி -தேவா. 1.1 எரு: எரு:1 எரு = புழுதி, பொடி, துகள். மண் பொடிந்து - காய்ந்து - உலர்ந்து போதல் வேற்று உரம் வேண்டாமலும் தன் உரமாகச் சிறக்கும். அதனால் மட்பொடி, இலைப்பொடி, பூம்பொடி என்பன வெல்லாம் எரு எனப்பட்டன. தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும் -திருக். 1037 ஆதலால் எரு பொடி என்றும் பொருள் தந்தது. உரப் பொடி என்பதும் இந்நாள் வழக்கு. தாதெரு மறுகு -புறம். 215 நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றில் கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கும் இடுமுள் வேலி எருப்படு வரைப்பு -பெரும். 152-154 எரு:2 எரு என்பது ஆடு மாடு முதலியவை தந்த உரம். எருது தருவது எருவாய். மற்றையவற்றுக்கும் விரிவுற்றது. புழுதி, பொடி , துகள் என்பனவும் எரு என்றாயின. பொது வகையில், உடலில் உள்ள வெப்பால் எரிக்கப் பட்டது எரி > எரு என்றாயதுமாகலாம். கழிப்பு வாயை எருவாய் என்பது வழக்கு. ஆட்டெரு அவ்வாண்டு ; மாட்டெரு மறுவாண்டு என்பது பழமொழி. இவையும் பிற உயிரிகளின் எரிகழிவும் எருவாதல் அறிக. எருவு என்பதும் இது. மன்றத்து எருவின் நுண்தாது -குறுந். 46 எருகுணி: அச்சம் பெரிதுடையானை எருகுணி என்பது நெல்லை மாவட்ட வழக்கு. எருகுதல் அஞ்சுதல் அஞ்சுவார்க்கு நீரும் மலமும், அச்சமுற்ற போதில் பல்கால் வரும். எருகுதல் என்பது கழிதல். எரு என்பது மலம். அழுகுணி என்பதை எண்ணலாம். x.neh.: அழுகணி என்பது அழுகுணி என மக்கள் வழக்கில் பிழைபட்டது போல் எருகணி என்பதும் பிழைபட்டதாம். எ-டு: அழுகணிச் சித்தர். அழு = கண்ணன் = அழுகணி. எருவு > எரு + கண்ணண் =எருகணி. கண்ணி > கணி. கயற்கண்ணி > கயற்கணி (குற். குற.) எருக்கு: எரிக்கு > எருக்கு. எருக்கம் என்பதும் இது. எரியின் தன்மையாம் வெப்பினைத் தன்னகத்துக் கொண்டு, பூவின் நிறமும், பாலின் நஞ்சும் பாலற்றுப் பழுத்த இலையின் நிறமும் எரி இயல்பின ஆதலால் எருக்கு எனப்பட்டது. குவிஇணர் எருக்கின் ததர்பூங் கண்ணி -அகம். 301 நல்லவும் அல்ல குவியிணர்ப் புல்லிலை எருக்கம் -புறம். 106 எருக்கு மிக்க காட்டில் அமைந்ததோர் ஊர் எருக்காட்டூர். எருக்காவது எருக்கஞ் செடி. அவ்வூரினர் எருக்காட்டூர் தாயங் கண்ணனார் என்பார்; சங்கச் சான்றோர் தாயங்கண்ணனார், எருக்காட்டூர் தாயங்கண்ணனார் என்னும் பெயர்களால் 11 பாடல்கள் கிடைத்துள. எருது: ஏர்து > எருது. ஏர்த் தொழிலுக்குப் பயன்பட்ட காளை ஏர்து > எருது எனப்பட்டது. ஆனுக்கும் காளைக்கும் உள்ள பளிச்சிட்ட வேறுபாடு திமில். அதனால் அதனை எருத்து, எருத்தம் என வழங்கினர். பின்னர் அது விரிவுற்றமையை எருத்தம் என்பதில் காண்க எருதே இளைய நுகம்உண ராவே -புறம். 102 எருத்தடி: எருத்து + அடி = எருத்தடி. அகவற் பாவின் ஈற்றயலடி (இறுதியடிக்கு முன்னுள்ள அடி) எருத்தடி எனப்படும். இறுதி தலை ஆதலால் அதற்கு முற்பட நிற்கும் அடி அதன் கழுத்துப் போல்வதாகலின் எருத்தடி எனப்பட்டதாம். முதல் அடி அடியாகவும், முடிபு அடி முடியுமாகக் கொள்க. எருத்தடி நைந்து -யா.கா. 35 எருத்து: எருத்து:1 எருது > எருத்து > எருத்தம். எருது ஆகிய ஏற்றின் அடையாளமாகவும் பொலிவாகவும் இருப்பது எருத்தம் எனப்படும் திமில் ஆகும். ஏறு போல் பீடு நடை என்பதற்கு ஏற்ப நடக்குங்கால் பொலிவூட்டும் சிறப்பினது. முதற்கண் திமில் எனப்பட்ட எருத்து கழுத்து பிடர் முதலியவற்றையும் குறிப்பதாயிற்று. யானை எருத்தம், சேவல் எருத்தம், மான் எருத்தம் என வளர்ந்தது. இவை கழுத்தாம். எருத்து வவ்விய புலி -புறம். 4 பொருள்: மான்முதலாயினவற்றின் கழுத்தைக் கவ்விய புலி பழைய உரை. இகழ்பாடுவோர் எருத்தடங்க -புறம். 40 பொருள்: நின்னை இழித்துரைப்போல் கழுத்திறைஞ்ச பழைய உரை இதுமக்கள் கருத்து எருத்து:2 கலிப்பா, பரிபா என்னும் இருபாக்களிலும் எருத்து என்பது ஓர் உறுப்பாம். கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு -தொல். 1378 எருத்தே கொச்சகம் அராகம் சிற்றெண் -தொல். 1409 எருந்து: எரி > எரு > எருந்து. எரி = ஒளி; எருந்து = ஒளியமைந்த கூடு. ஒ.நோ.: எரிமணி = ஒளிமணி. ஒளிமிக்கது முத்து. ஒளிமுத்து என்னும் மக்கள் பெயரும் உண்டு. முத்திருந்த கூடும் வெண்ணிறமானது. அதனால் முத்துக்கூடாம் சிப்பியையும் சங்கையும் எருந்து என்று வழங்கினர். மகா அர் அன்ன மந்தி மடவோர் நகாஅர் அன்ன நளிநீர் முத்தம் வாள்வாய் எருந்தின் வயிற்றகத் தடக்கித் தோள்புற மறைக்கும் நல்கூர் நுசுப்பின் உளரியல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற கிளர்பூண் புதல்வரொடு கிலுகிலி யாடும் -சிறுபாண். 56 - 61 வாள்வாய் எருந்து = வாள்போலும் வாயையுடைய கிளிஞ்சில் நச். எருமண்: வண்டல் மண். நீரால் அள்ளியும் தெள்ளியும் உருட்டிக் கொண்டு வந்த வண்டல் மண் பயிருக்கு நல்லுரம் ஆதலால் அம்மண் எருப் போலும் மண் எனக் கொண்டு எருமண் என்றனர். வண்டல்மண் தலையில் உள்ள அழுக்கைப் போக்குதலால் சிற்றூர் மக்கள் அரைப்பு. சீயக்காய் போலத் தலைக்குத் தேய்த்து முழுகுதல் வழக்கம். யாம்எம் கூழைக்கு எருமண் கொணர்கம் சேறும் குறுந். 133 எருமண் = களிமண், கரம்பை. கூந்தல் நறுமண் என்னும் பெருங்கதை (1: 40: 28) எருமை: இருமை > எருமை. இருள், இருட்டு, இரவு, இரா என்பவை போல்வன இருமை வழிச் சொற்களாம். இருமை, எருமையாய்க் கருமைப் பொருள் தந்தது. கார் ஆன் என்பதும், காரான் பசு என்பதும் புலவர் வழக்கும் மக்கள் வழக்குமாம். * எரு காண்க. எருமை மறம்: அஞ்சாத் துணிவும் அதிரத் தாக்குதலும் உடையது எருமை. அவ்வெருமை போல் துணிவும் தாக்குதலும் கொண்டவீரன் பழநாளில் எருமை எனப் பாடுபுகழ் பெற்றான். ஒருவன் ஒருவனை உடைபடை புக்குக் கூழை தாங்கிய எருமை -தொல். 1018 பொருள்: தனது உடைந்த படைக்கண்ணே ஒரு படைத் தலைவன் சென்று நின்று அங்ஙனம் கெடுத்த மாற்று வேந்தன் படைத்தலைவனை அவன் எதிர்கொண்டு நின்ற பின்னணி யோடே தாங்கின கடாப் போலச் சிறக்கணித்து நிற்கும் நிலைமை (உரை. நச்) சீற்றம் கனற்றச் சிறக்கணித்துச் செல்லுங்கால் ஏற்றெருமை போன்ற இகல்வெய்யோன் - மாற்றான் படைவரவு காத்துத்தன் பல்படையைப் பின்காத்து இடைவருங்கால் பின்வருவார் யார்? -மேற். நச். எருமையூரன் என்பான் ஒரு குறுநில மன்னன்(அகம். 36). எருமை வெளியனார் என்பார் ஒரு புலவர்; எருமையூர் (மைசூர்) பழநாளில் எருமை நாடு என வழங்கப்பட்டது இப்புலவர் எருமை நாட்டு வெளியம் என்னும் ஊரினர் உ.வே.சா. அகம் 73 ஆம் பாடலும், புறம் 273, 303 ஆம் பாடல்களும் இவர் பாடியவை. இவர் மகனார் எருமை வெளியனார் மகனார் கடலனார் எனப்பட்டார். எருவும் தழையும்: எரு = ஆடு மாடு முதலியவற்றின் உரம். தழை = செடி கொடி மரம் முதலியவற்றின் இலை தழை உரம். எருத் தழை எருவுந் தழையும் எனவும் வழங்கும். எருவும் தழையும் போட்டால்தானே கதிர்திரட்சி இருக்கும் நிலத்தில் எருவுந் தழையும் போடக்கூட முடியவில்லை என்பவை உழவர் வழக்காறுகள். எருவை : எரி > எரு + வை = எருவை. எருவை, சிவப்பு நிறமுடைய பருந்து செம்பருந்து என்பது மக்கள் வழக்கு. கழுகொடு செஞ்செவி எருவை திரிதரும் - புறம். 370 எரியும் தீக்கங்கு போன்ற நிறத்தது அஃதாதலால் கங்கம் எனப்படும். கங்கம் வந்துற்ற செய்ய களம் என்பார் கம்பர் (உயுத். 1233) தலை வெளுத்து உடல் சிவந்திருக்கும் பருந்து. கழுகெனினும் அமையும் - (புறம். 64ப.உ) எலி: எல் > எலி. எல் = ஒளி, வெண்மை. வெண்ணிறமானது என்னும் பொருளில் எலி எனும் பெயர் ஏற்பட்டது. பின்னர்க் கருநிறத்தது உருவாயதால் காரெலி என எலியுடன் கார் என்பது முன்னொட்டாயது. கருநிற எலி தோன்றிய பின்னர் இயல்பாக எலி என வழங்கப்பட்டது, வெள்ளெலி எனப்படுவதாயிற்று. அதன் வழியில் பேரெலி மூஞ்செலி (மூஞ்சூறு) என்பவை வந்தன. ஒ.நோ.: கருநிறக் கரும்பு பின்னே வெண்ணிறக் கரும்பும் உண்டாகிய நிலையில் வெள்ளைக் கரும்பு, செங்கரும்பு, பேய்க்கரும்பு எனப்பட்டவை போல. எலி வகை: தமிழகத்தில் 16 வகை எலிகள் காணப் படுகின்றன. இவற்றில் கரம்பை எலி, புல்லெலி, வயலெலி, சுண்டெலி, கல்லெலி, வெள்ளெலி போன்றவை பயிர்களைக் கெடுக்கக் கூடியவை. ஒரு பெண் எலி அதன் குட்டிகளொடு குட்டி போட்டு ஆண்டுக்கு 1270 எலிகளாகப் பெருகும். ஆண்டுக்கு நான்கு முதல் ஆறு முறை குட்டி போடும். எலியின் பல் மாதம் ஒன்றுக்கு 1 செ. மீ. நீளம் வளரும். அதனைக் கட்டுப்படுத்தவே பயிர்களை வெட்டிச் சேதப்படுத்துகிறது. (செய்தி தினமணி 18. 11.2010) எலியும் பூனையும்: எலியும் பூனையும் பகை என்பர். பூனையைப் பெரிதும் வளர்ப்பதே எலித் தொல்லையை ஒழிப்பதற்கே. ஆகலின், இரையாம் எலியைப் பூனை பற்றுதல் அதன் இயற்கைத் தேவை. பகைமையால் தாக்கி அழிப்பதன்று. தன் பசிப்பகையால் அழிப்பது. பூனையின் அழிப்பைப் பார்த்தவர், எலியும் பூனையும் பகையானவை எனக் கருதினர். பகை என்பது ஒன்றோடு ஒன்று மாறுபடலும், போரிடலும் அன்றோ! ஆனால், இங்கே ஒன்று தாக்குகிறது மற்றொன்று தப்பியோட முயல்கிறது. இதில் பகை என்ன உள்ளது? ஆயினும் பகைக் கருத்தால் இணையாத இருவரைக் குறிக்கும் போது அவர்கள் எலியும் பூனையும் போல இருக்கின்றனர் என்கின்றனர்.இவ்வழக்குச் சொல் பகைமைப் பொருள் தருவதாம். எலும்பிலி: எலும்பு + இலி = எலும்பிலி = என்பிலது. இலி = இல்லாதது. எலும்பிலாத உயிரி; அவை புழு, பூச்சி வகை உயிரிகள் . நாக்கு எதுவும் பேசும் என்பது ம. வ. எலும்பு: எல் > எலு > எலும்பு. எல் = ஒளி, விளக்கம். எலும்பு வெண்ணிற முடையது. நரம்போடு எலும்பு அணிந்து -திருவா. 12: 11 * என்பு காண்க. எலும்பு முரிவு: எலும்பு முரிவு = எலும்பு ஒடிதல். பொது மருத்துவத் துறை சார்ந்த மருத்துவமனைகளில் தனிப்பிரிவுடையதாக எலும்பு முரிவு மருத்துவம் உள்ளது. எலும்பு முரிவு மருத்துவமே பார்க்கும் நிலையங்களும் உள. எலும்பு முரிவு மருத்துவம்என்பது கலைச் சொல்லாக்கமாம். மருத்துவ வளர்ச்சியில் எலும்பு முரிவு எளிய மருத்துவமாகி விட்டது. எலும்புருக்கி: எலும்புருக்கி:1 எலும்பு + உருக்கி = எலும்புருக்கி. ஒரு வகை நோய். தசையைக் குறைப்பதே அல்லாமல் எலும்பின் வலிமையை யும் குறைக்கும் - உருக்கி வலுவறச் செய்யும் - நோய் எலும்புருக்கி நோயாம். என்புருக்கி, காசம் என்பனவும் இது. எலும்புருக்கி:2 எலும்புருக்கி = திருவாசகம். கற்பவரை உருக்குதல் கொண்டு, என்புருக்கி என வியந்து திருவாசகத்தைப் பாராட்டுவர் (நால். நான்) எலுவன்: எலு > எலு > எலுவன். தனக்கு உரிமை பூண்டு உதவும் நண்பாய் விளங்குபவனும் எல்லா, எல்லே, ஏலே என அழைக்கப்படும் அருமையுடைய வனும் ஆகிய தோழன், எலுவன் ஆவான். எலுவல் என்பவனும் இவன். எலுவை எனல் தோழி என்னும் பெண்பால் வழியதாம். எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப -குறுந். 129 எம்முறு நண்பஎன்பது பாடம். (நன். 307. சங்). எலுவ என்பது விளி வடிவம். உனக்கு எலுவை ஆகுவதென் எண்ணம் -பார. நாடு. கரந். 33 சீதநாட்டார் தோழனை எலுவன் என்றும் , தோழியை இகுளை என்னும் வழங்குவர் என்பது தன்னூல் உரை (273 - சங்.) தோழியை இகுளை என்பது, இனையல் வாழியோ இகுளை -ஐங். 467 தலைவிக்காக அன்பைச் சொரிந்து நிற்பவள் இகுளையாம். சுற்றமும் தோழியும் இகுளை என்ப -பிங். 3157 இகுதல் நெருங்கல் ஒன்றல் நட்டல் ஆதலால், இகுபவள் இகுளை. நெருங்கல் ஒன்றல் ஒட்டல் மூன்றும் இயைதல் அறிக. எல்: எல்:1 எல் என்னும் சொல், விளக்கம் (ஒளி) என்னும் பொருள் தருவது. எல்லே இலக்கம் -தொல். 754 இலங்குதல் = விளங்குதல். இடையியலில் இடம்பெற்ற இது உரிச்சொல் அன்றோ எனின், அதுகுறைச் சொல்லாகி நிற்கும். இது குறையின்றி நிற்றலால் இடைச்சொல்லாயிற்று என்கிறார் தெய்வச்சிலையார். எல்லே விளக்கம் என்பது இளம். பாடம். உமணர் காதல் மடமகள் சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி நெல்லின்நேரே வெண்கல் உப்பென அகம். 140 எல்:2 பகல். எல்லிடைக் கழியுநர்க்கு ஏம மாக -பெரும். 66 எல்:3 இரவு. எல் ஒளிவிளக்கமே யன்றி இருள் விளக்கமும் சுட்டும் என்பது சான்றோர் பாடல்களால் புலனாகின்றது. எல்லிடைப் படர்ந்தோனே -புறம். 301 எல்லினிர் புகினே -மலைபடு. 416 பொருள்: இராக்காலத்தை உடையிராய்ச் செல்லின் (உரை. நச்) எல்:4 ஞாயிறு. விளக்கம் தருவது ஞாயிறு கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக் கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர் -முருகு. 74-75 எல்லு என்பதும் இது. எல்: 5 அழகு. விளக்கமுடையது அழகேயாம். எல்லினை பெரிதெனப் பன்மாண் கூறி -அகம். 150 எல்லரி: எல் + அரி = எல்லரி; எல் = விளக்கம். அரி = ஒலி. விளக்கமிக்க ஒலியுடைய சல்லிகை என்னும் இசைக்கருவி. நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி -மலை. 9-10 எல்லா, ஏழா: எல், இலங்குதல் விளங்குதல் ஒளி செய்தல் என்னும் பொருளவாம். அன்பு விளங்க ஆளப்பட்ட சொல் எல்லா என்பது. அது . எல்லா, ஏலா, ஏலே என அன்பு விளியாயிற்று. எல்லா, ஏழாவாய்ப் பெண்டிரை அழைக்கும் விளியாயிற்று. இழைக்கப் பட்ட இழையாம் அணிகளை அணிவதால், ஏழா ( ஏ இழை, ஏ இழாய்) எனவும் ஆயிழாய், சேயிழாய், ஒள்ளிழாய், மாணிழாய் முதலனவாகவும் வழங்கலாயிற்று. எல்லே இளங்கிளியே என்பது இளமையரை விளித்தது (நாலா. 488) எல்லாம்: எல் + ஆம் = எல்லாம். எல் = ஒளி. கதிரொளியால் தோன்றிக் கண்ணொளியில் பட்டவை அனைத்தையும் குறிக்கும் தொகைச்சொல் எல்லாம் என்பதாம். காட்சிப் பொருட் பெயராக இருந்த அது, கருத்துப் பொருளுக்கும் ஆயது. கண்டவை எல்லாம் பொய்யா? கருதியவை எல்லாம் பொய்யா? என்பதில் காட்சிப் பொருளும் கருத்துப் பொருளும் இருத்தல் அறிக. எல்லாரும், எல்லோரும் என்பனவும் இவ்வழியவை. எல்லி: எல் + இல் = எல்லில் > எல்லி. ஒ.நோ.: உள் + இல் = உள்ளில் > உள்ளி. எல்லில்லாப் பொழுது, இருட் பொழுது ஆகிய இரவுப் பொழுது. வல்வில் இளையரொடு எல்லிச் செல்லாது -அகம். 120 எல்லி, ஓங்குவரை அடுக்கத்து உயர்ந்த சென்னி மீனொடு பொலிந்த வானில் தோன்றி -அகம். 153 எல்லியம்: எல் + இயம் = எல்லியம். எல் =ஒளி. எவர் சில்வர் என்னும் மாழையை எல்லியம் என்னல் தகும். எப்பொழுதும் ஒளி குன்றாமல் இருப்பதால் இப்பெயரீடு தகுவதாம் கலைச்சொல்லா கின்றது. எல்லு: எல் = ஒளி, கதிரோன், பகல்பொழுது. எல்லும் எல்லின்று -குறுந். 179 நெல் - நெல்லு என்றும், பல் - பல்லு என்றும் சொல்லப்படுவது போல் எல் - எல்லு எனப்படும். எல்லு என்பது எலும்பு என்னும் பொருளில் குமரி மாவட்ட வட்டார வழக்காக உள்ளது. எல்லை: எல்லை:1 எல் > எல்லி > எல்லை. எல் = ஒளி, கதிர், கதிரோன். எல்லா எல்லை எல்லையும் தோன்றார் குறுந். 285 எல்லை:2 எல்லை = அளவு , வரையறை. கதிரோன் ஒளி படிகின்ற அளவு கொண்டே இடமும் காலமும் கணிக்கப்பட்டன ஆதலால் கால எல்லை, இடவெல்லை என்பன ஏற்பட்டன. ஒரு கோலை நட்டு அதில் அல்லது சுவரில் படியும் நிழல், மரநிழல், வீட்டின் நிழல் என்பவை படியும் இடத்தால் காலத்தை அளப்பது வழக்கம். நிழல் இங்கே வந்துவிட்டது; இப்பொழுது பத்துமணி என்ற ஒருவருக்குப் படியாதவன் கணக்கு என்றார் மாம்பழக் கவிச்சிங்க நாவலர். அவர் படியாதவனா என்று சினந்தார். படி ஆதவன் - படிகின்ற கதிரவன் - கணக்கு என்று அமைதி கூறினார் என்பது நிகழ்வு. எழுநாள் இரட்டி எல்லை -சிலப் . 23: 193 என்பது கால எல்லை, எல்லை கழியப் புல்லென் றன்றே குறுந். 310 எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்றே -குறுந். 355 பெருங்கடற்கு எல்லை தோன்றினும் -குறுந். 373 எல்லை என்பது கதிரோன்; பகற்பொழுது; முடிவு , வரம்பு என்னும் பொருள்களில் வந்தன இவை. கதிரோன் ஒளியாலேயே பகல் இரவாம் கால எல்லை, இட எல்லை ஆயவை இருவகை வாக்குகளிலும் உள்ளமையும் வரம்பு என்னும் அளவீடு கிடைத்தலையும் அறிக. எல்லையூர் என ஊர்ப் பெயரும், எல்லைக்கல் என வரம்புப் பெயரும் எல்லையம்மன் எனக் காவல் தெய்வப் பெயரும் மக்கள் வழக்கில் உள்ளமை அறியத் தக்கவை. எல்லை தருநன்: பகற்பொழுதைத் தருபவன் ஆகிய கதிரோன். பன்மாண், எல்லை தருநன் பல்கதிர் பரப்பி -பொரு. 232-233 பொருள்: பல்லுயிர்களும் மாட்சிமைப் படுத்தற்குக் காரணமாகிய பகற் பொழுதைத் தரும் கதிரோன் தன்னிலையை விட்டுப் பல கிரணங்களைப் பரப்புகையாலே (உரை. நச்.) எல் = ஒளி, பகல், விளக்கம். அதனைத் தருபவன் கதிரோன். எவண்: எ + (வ்) + அண் = எவண். எவண் = எவ்விடம்; அண் = இடம். அவண் = அவ்விடம்; இவண் = இவ்விடம்; உவண் = உவ்விடம் என்பவை போல. எவன்: எவன்:1 எ + (வ்) + அன் = எவன்; வினா. யாவன் என்னும் வினாவும் அது. எவன்:2 என்ன. வானுயர் தோற்றம் எவன்செய்யும்? திருக். 272 எவ்வம்: எவ்வுதல் = எழும்புதல். குடி பெயர்ந்து போதல். குடிபெயரா நிலையே செழுமைநிலை எனப்பட்டது பழங்காலம். குடியெழுஉ அறியாமை பழங்குடிப் - பழநகரப் - பெருமையாம். அந்நிலையில் பிறிதூர்க்குச் செல்லுதல் ஆங்குப் பிழைக்க இயலா வறுமைப்பட்டு வெளியேறலாகக் கருதப்பட்ட துயரம் எவ்வம் எனப்பட்டது பின்னர் அவ் எவ்வம் துயரம் என்னும் பொதுப்பொருள் கொண்டது. எவ்வம் என்னும் சொல் வறுமைத்துயர், பிரிவுத்துயர் இரண்டைப் பற்றியே மிகுதியாகக் கூறுதல் பழம்பொருளே புதுமைக் காட்சியதாதல் விளங்கும். எவ்வி: எவ்வுதல் = எழும்புதல்; எவ்வச்செய்வான், எவ்வி. வறுமையால் வாடி வருவார் வாட்டம் போக்கி வீழ்ந்த குடியை எழச் செய்யும் வள்ளல் ஒருவன் பெயர் எவ்வி என்பதாம். அவன் வண்மை யறிந்தோர் சூட்டிய பெயர் இது. இவன் மிழலைக் கூற்றத்தினான். இவன் ஊர் நீடூர். நீழல், உறத்தூர் என்பவை (அகம். 266.366) எவ்வி பொருது பட்டு வீழ்ந்த போது பாணர் தம் யாழின் கோட்டை ஒடித்தனர் என்பது அவன் பெருமையைப் பறைசாற்றுவதாம் (அகம். 115). எவ்வியின் தொல்குடி எனப் பொய்யா நாவிற் கபிலர் பாடுதல் தனிச் சிறப்பாகும் (புறம். 202). எவ்வும்: ஏவும் > எவ்வும் = அம்பு செலுத்தும். எவ்வும் சிலையுடை வேடர் -நாலா. 238 எவ்வை: ஔவை (அவ்வை) தெளவை (தவ்வை) இவை உறவுப்பெயர் ஆவது போல் எவ்வை என்பதும் உறவுப் பெயராம். தவ்வை = அக்கை. தம் அவ்வை > தம்மவ்வை > தவ்வை = அக்கை. எம் அவ்வை > எம்மவ்வை > எவ்வை= தங்கை. அம்மை, அவ்வை, அம்மா, அவ்வா என்பன பெண்பால் பொதுமைப் பெயர்கள். தம் உரிமை பாராட்டிய பெயர்கள் இவை தமக்கை, தங்கை என்பவை போல, எமக்கை, எங்கை என்பவையும் அத்தகையன. எவ்வை எம்வயின் வருதல் வேண்டுதம் என்ப ஐங். 88 எவ்வைக்கு எவன் பெரிதளிக்கும் என்ப -ஐங். 89 இவ்வீரிடங்களே பழந்தமிழ்ச் சொல்லடைவில் இடம் பெற்றவை இதனை ஆட்சி செய்தவர் ஓரம்போகியார். எழால்: எழால்:1 எப்பறவையும் எழ முடியா உயரத்து எழலால் எழால் என்றனர். அது வல்லூறு; வலியன், வலசார் என்னும் பெயர்களை உடையவை. இதனைப் புல்லூறு என்னும் ச. இ. பொ. க. புன்புற எருவைப் பெடைபுணர் சேவல் குடுமி எழா லொடு கொண்டுகிழக் கிழிய -பதிற். 36 எழால்:2 எழூஉம் இனிய ஓசையும்,ஓசையைத் தரும் யாழும் எழா அல் எனப்படும். எழால் எனவும் வழங்கும். பாடல் பற்றிய பயனுடை எழா அல் பொருநர். 56 பொன்புனை நரம்பின் இன்குரல் சீறியாழ் எழா அல் வல்லை -நற். 380 எழிலி: எழில் > எழிலி. எழிலை உடையது எழிலி. எழிலி = மழை முகில். வையக வனப்புக்கும் வாழ்வியல் வனப்புக்கும் எழுச்சிக்கும் அடிப்படையாம் முகிலை எழிலி என்றது தனிப்பெரும் சொல்லோவியமாம்! வான்சிறப்பாகும் அதன் ஒழுக்கே ஒழுக்க மூலமெனில் எழிலெல்லாவ ற்றினும் எழில் எழிலிதானே! பாடிமிழ் பனிக்க.டல் பருகி வலனேர்பு கோடுகொண் டெழுந்த கொடுஞ்செலவு எழிலி பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை -முல்லைப். 4-7 எழில்: எழு + இல் = எழில். உள்ளத்தின் எழுச்சிக்கு இடனாக அமைந்தது எழில் . அழகு உள்ளத்தற்கு எழுச்சியூட்டலின் எழில் ஆயிற்றாம். எழிலி என்னும் முகிற் பெயர் எழுதலானும், எழுச்சியூட்டலானும் அமைந்ததாதல் அறிக. கதிர் எழுதல், மதியம் எழுதல், மலர் எழுதல், மீன் துள்ளல், பறவை கிளர்தல், மண்ணில் முளை எழுதல் ஆகிய எழுதல் எல்லாமும் எழிலாதல் கண்கூடு. அழகின் சிரிப்பு என்பது எழில் விளக்கமேயாம். முருக்குத் தாழ்பெழிலிய நெருப்புற ழடைகரை -பதிற். 23 எழில் இயற்கையின் கொடை. அக்கொடையின் வழிவந்ததே செயற்கை எழில். இயற்கை எழிலே எழிலாகக் கொள்ளப் பட்டமை. கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பு முருகு. 17 என்பதால் புலப்படும். எழினி: எழினி:1 எழு > எழுனி = ஓவியத் திரை எழிலின் இருக்கையாவது எழினி. எழிலியும் வானும் வையக எழிலும் ஒப்ப - ஒவ்வ - வரைந்த ஓவியத் திரை எழினி என்பதாம். தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்கக் கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளைகண் விழித்து நோக்கத் தெண்திரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ -கம். பால. 35 பழநாளில் வேந்தர் படுக்கும் உள்ளறைத் திரையே எழினியாக இருந்து பின் நாடக மேடை ஏறியதாம். திருமணி விளக்கம் காட்டித் திண்ஞாண் எழினி வாங்கிய ஈரறைப் பள்ளியுள் முல்லை. 63,64 இளங்கோவடிகள், ஒருமுக எழினி, பொருமுக எழினி கரந்துவரல் எழினி என மூவெழினி படைத்தார். சாத்தனார் கூத்தநூல் எழினியை, இழுனியாக்கி இருபத்தொருவகை காட்டியது. எழினி:2 அதியமான் நெடுமானஞ்சியின் பெயர் எழினி என்பதாம். அதியமான் மகன் பொகுட்டெழினி என்பான். புலமையர் கலைவல்லார் என்பாரை அன்றி நாடே நெடுமானஞ்சியின் செங்கோலாட்சியால் உள்ளம் உவந்து பாராட்டிய விருதே எழிலின் இருக்கையாம் எழினி என்பதாகவும், கைமாறு வேண்டாக் கடப்பாட்டு மாரியன்ன கொடையன் எழினி என்பதாகவும் கொள்ள வாய்க்கின்றது. கன்றமர் ஆயம் கானத் தல்கவும் வெங்கால் வம்பலர் வேண்டுபுலத் துறையவும் களமலி குப்பை காப்பில வைகவும் விலங்குபகை கடிந்த கலங்காச் செங்கோல் வையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாள் பொய்யா எழினி -புறம். 230 பொருள்: கன்றை மேவிய ஆனிரை மேய்ந்த காட்டிடத்தே பிறிதொன்றால் ஏதமின்றிக் கிடப்பவும், சுரத்தில் நடத்தலால் வெம்மையுற்ற காலினை யுடைய வழிப்போவார் தாம் வேண்டிய இடத்தே தங்கவும், களத்தின்கண் நிறைந்த நெற்பொலி காவலின்றியே கிடப்பவும் எதிரில் நின்று தடுக்கும் பகையைத் துரந்த நிலங்கலங்காத செவ்விய ஆட்சியினையும் உலகத்தார் புகழ்ந்த விளங்கிய போரைச் செய்யும் ஒள்ளிய வாளினையும் தப்பாத மொழியினையுமுடைய எழினி (ப.உ.) உள்ளங்களில் எல்லாம் எழுந்து கோலோச்சுபவன் எழினிதானே! எழீஇ: எழுவி > எழீஇ = எழுப்பி. வீணையை எடுத்து ஒரு கையில் வைத்துக் கொண்டு மற்றைக் கையால் மீட்டுவது எழுவுதல் என்றும். எழீஇ என்றும் வரும். வீணை எழீஇ வீதியில் நடப்ப -பெருங். 2: 9: 57 எழு: உள் எழுவாரையும் உள் எழுவதையும் தடுத்து நிறுத்தும் வலிமையுடையதும், வலிமை மிக்க கோட்டைக் கதவுக்கு உள்ளாகக் குறுக்கே முட்டாக அமைக்கப் பட்டதுமாகிய வலிய தடுப்பு மரம் எழுவாகும். எழூஉ என்பதும் இது. எழுதல், எழுச்சியொடு புகுதல்; போர்க்காலத்தில் கோட்டைக் கதவினை யானையை மோதவிட்டுத் தகர்த்துப் படைகள் உள்ளே புகுவது வழக்கம். அவ்வாறு கதவை மோதுங்கால் அதன் காப்பாக இருப்பது எழு என்பதாம். இதுகால் வீடுகளின் கதவுக்குப் போடும் அடிதண்டா பழைய எழுவின் எச்சமாம். எழு = கணைய மரம் எனப்படும். கணை திரட்சிப் பொருளது. * கணை காண்க. எழுக: எழு + க =எழுக. எழுவாயாக என்னும் வியங்கோள். எழுமின் என்பதும் அது இவ்வியங்கோள் வேண்டுதல் பொருளது. எழுந்தருளுக எழுந்தருளல் என்பவை சிறப்புநிலை ஆட்சியின. எழு கூற்றிருக்கை: எழு அறையாகக் குறுமக்கள் (சிறுவர்) முன்னின்றும் புக்கும் போந்தும் விளையாடும் பெற்றியால் வழுவாமையால் ஒன்று முதலாக ஏழு இறுதியாக முறையானே பாடுவது எழு கூற்றிருக்கையாகும். ஒன்று இரண்டு ஒன்று என்று வந்து பின் ஒன்று என்னும் எண் வந்து இரண்டு, மூன்று என்று ஏறிப் பின்னர் இரண்டு ஒன்று இரண்டு மூன்று நான்கு ஏறிக் கீழிறங்கி மீண்டும் ஏறி இவ்வாறு எழு என்னும் எண் வரையில் அமையும் இவ்வெழு கூற்றிருக்கையின் எண் முடிநிலை ஏழு வரைக்கும் சென்று ஒன்றில் அமைவதும் உண்டு. இருவகை எழு கூற்றிருக்கைக்கும் எடுத்துக்காட்டு யாப்பருங்கல விருத்தியுட் காண்க(96) தமிழ் ஞான சம்பந்தர் இயற்றிய திருவெழுகூற்றிருக்கையும், திருமங்கை மன்னர் இயற்றிய திருவெழு கூற்றிருக்கையும் காண்க. கோதில் ஏழறை ஆக்கிக் குறுமக்கள் முன்னின்றும் புக்கும் போந்தும் விளையாடும் பெற்றி யால்வழு வாமை ஒன்று முதலாக ஏழீ றாய்முறை யானே இயம்புவ தெழுகூற் றிருக்கை யாகும் -முத்துவீ. 1123 எழு கூற்றிருக்கைக்கோர் எடுத்துக்காட்டு. ஓர் ஒரு பொருளாய், இரண்டாய் ஒன்றி ஒன்றிரண்டின்றி மூவிரு நெறியோர்க்கு ஒருமை கண்டிருமையின் மூவா நாற்பயன் முத்தமிழ் இருங்கடலோ மூன்றும் நாலும் கூடிய தொகைப்படு கோலங் கொளலும் ஐவர் ஒற்றென நாற்றிசை பரவ மூவரும் தானாயிருப்பது மறைத்து ஓர் ஓரனிருஞ் சபை மூப்பினர் தம்முகம் நால்ஐந்தில் ஆறி யேற்றலும் ஐந்நாற் றோளின் மூன்றுல கெடுத்தோன் இருகூ றாவிழ ஒருகணை ஏவலும் ஓருருள் இரதனை முக்கணன் நான்முகன் ஐயர்கோன் முதலினர் அறிய மறைத்தலும் ஏழுரு திணையும் இளைப்பாறப் பிணித்திட்டு ஐம்பால் ஓதி அணங்கனாட் பெறலும் நாற்கால் மும்மதத்து இருமருப் பொருமா உய்யக் கானத்து ஓடிச் சேறலும், மாமறை ஒலிசால் மணிமதில் அரங்கக் கோயில் நாப்பண் கொடும்பற் பேழ்வாய் ஆயிரம் காட்டும் அரவப் பாயலின் மேற்றுயில் குவியா விழித்திரு மாலே இவ்வெழு கூற்றிருக்கை திருவரங்கத் திருவாயிரத்து உள்ளது. ஆசிரியர் தண்டபாணி அடிகள். இருக்கை அமைப்பு. É É Ê É É Ê Ë Ê É É Ê Ë Ì Ë Ê É É Ê Ë Ì Í Ì Ë Ê É É Ê Ë Ì Í Î Í Ì Ë Ê É É Ê Ë Ì Í Î Ï Î Í Ì Ë Ê É இத்திருவரங்கத் திருவாயிரத்தில் வரும் எழு கூற்றிருக்கை ஒன்று, என்று தலைப்பெண் தந்து பின்னர் ஒன்று எனத் தொடர்கிறது. இது பிறர்பாடிய எழு கூற்றிருக்கையினும் புத்தமைப்பினதாம். எழு கூற்றிருக்கை அந்தாதித் தொகைபட வருவது எழு கூற்றந்தாதியாம். தண்டபாணி அடிகள் பாடிய சமயாதீத எழு கூற்றந்தாதி 87 பாடல்களை யுடையது. * எண் கூற்றிருக்கை. ஒன்பான் கூற்றிருக்கை காண்க. எழுச்சி: எழு > எழுச்சி. எழுச்சி = புறப்படுதல்; ஓரிடத்தில் இருந்து ஓரிடத்திற்குச் செல்ல எழுவது எழுச்சியாம். படையெழுச்சி என்பது படைச்செலவு. படுக்கையில் இருந்து எழுதல், பள்ளி எழுச்சி, கதிரோன் தோற்றமுறல், கதிர் எழுச்சி. காதில் உண்டாகும் சீழ், நோய் எழுச்சி என மக்களால் வழங்கப்படுகிறது. அது வெளுத்துத் தோன்றி வெண்சீழ் வழிதலால் வெளுச்சி என்று வழுவாக வழங்குகிறது. எழுஞாயிறு: எழு + ஞாயிறு = எழுஞாயிறு. எழுதல் = தோன்றுதல். தோன்றி எழும் கதிரோன். எழுகதிர், எழுசுடர் என்பனவும் அது. * ஞாயிறு காண்க. எழுதம்: சுவர்மேல் விழுந்த நீர் சுவர்வழியே வழியாமல் சுவரைவிட்டுச் சொட்டுமாறு அமைக்கப்பட்ட நீட்டிய செங்கலை எழுதம் என்பது கொத்தர் வழக்கு. சுவர்ப்பக்கம் முழுவதும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் அமைப்பு அது. எழுதத்தைக் கொஞ்சம் நீட்டிப் போடுங்கள் என்பது வழக்கு. எழுதாக்கற்பு: தமிழுக்கு வரிவடிவம் ஒலிவடிவம் என இரண்டு வடிவங்களும் உண்டு. சில மொழிகளுக்கு வரிவடிவம் இல்லை. வடமொழி நெடிய காலம் எழுத்தின்றிச் செவி ஒலியாகவே விளங்கியது. சுருதி என்றது (கேட்கப்படுவது) அதனாலேயே ஆம். இந்தியாவுக்கு ஆரியர் வந்த பின்னரே எழுத்தில் எழுதிப் படிக்கும் வழக்கம் ஏற்பட்டது. சங்க நாளில் வேதம் எழுத்தின்றி ஓதப்பட்டதால் அதனை எழுதாக் கல்வி (எழுதாக்கற்பு) என்றனர். படிவ உண்டிப் பார்ப்பன மகனே எழுதாக் கற்பின் நின்சொல் - குறுந். 156 பொருள்: எழுதாக் கற்பு; எழுதாக் கிளவியைக் கற்ற கல்வி; அதாவது வேதமுணர்தல் (உ.வே.சா.) எழுதாக்கிளவி: கிளவி = சொல். கிளத்தலால் = சொல்லுதலால் - கிளவி எனப்பட்டது. எ-டு: இரட்டைக்கிளவி: இரட்டைச் சொல். கிளவியாக்கம், தொல்காப்பியச் சொல்லதிகாரத்தின் முதல் இயல் ஆகும். உறுதி எழுதுதல் இல்லாமல் வாக்கால் கூறிய உறுதிமொழி -என்சரிதம் 682 எழுதி: எழுது + இ = எழுதி. எழுதுதற்குரிய கருவி எழுதியாம். எழுதி எங்கே என்பது வழக்கு. எழுதில்லக்காரி: திருமணச் சடங்கு நடத்தும் பெண்மணியை எழுதில்லக்காரி என்பது திருச்செந்தூர் வட்டார வழக்கு. திருமணச் சடங்கு கரணம் எனப்பட்டதும், கரணம் செய்வார் கரணத்தியலார் எனப்பட்டதும், மகளிர் நடத்தும் கரணச் சடங்கே நம் பண்டை மணச்சடங்கு என்பதை அகநானூறு (86) குறிப்பதாலும் இவ்வழக்கத்தின் மூலங்கள் அறியவரும். மேலும் பூப்பு நீராட்டு, திருமணச் சடங்கு என்பவை இந்நாள்வரை தொல்குடி வழியரிடத்தெல்லாம் மகளிர் நடத்துவதாகவே இருத்தலும் அறியத்தக்கது. புதல்வர்ப் பயந்த திதலையவ் வயிற்று வாலிழை மகளிர் நால்வர் கூடி - அகம். 86 எழுதுகோல்: பென் (Pen) என்பதை எழுதுகோல் எனத்தமிழில் வழங்குகிறோம். எழுத்தும் பழஞ்சொல்; கோலும் பழஞ்சொல். எழுதுகோல் என்பதோ புதுச்சொல் என எண்ணுகிறோம். எழுதுகோல் என்பது வள்ளுவத்தின் வழியாக நமக்குக் கிட்டியதாம். எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் என ஓர் உவமையைக் காட்டுகிறார் வள்ளுவர் (1285). எழுதுங்கால் கோல் என்பதில் இடைநின்ற காலை நீக்கி எழுதுகோல் ஆக்கிக் கொண்ட அமைவு இஃதாம். நல்ல கலைச்சொல்லாகி விட்டது. முன்னாளில் ஊசி, ஆணி என்பனவே ஏட்டில் எழுதப் பயன்பட்டன. தாளில் எழுதும் நிலைமை வந்த பின் மையில் தோய்த்து எழுதும் நிலை உண்டாகிறது. பேனா என்பதை இறகி என்றும், பௌண்டன் பென் என்பதை ஊற்றுக்கோல் என்றும் பெயர்த்தனர். ஆனால் எழுதுகோல் நிலைத்துவிட்டது. பென்சில் என்பதற்கு எழுதுகோல் என மொழிபெயர்க்கிறார் பாரதியார். அது கரிக்கோல் என வழங்குகிறது. இப்பொழுது. பால் பாயிண்டு பேனா என்பது பந்து முனை என வழங்கப்படுகிறது. இவையெல்லாம் புத்தாக்கங்கள். எழுத்தர்: எழுத்து + அர் = எழுத்தர். எழுதுவதைப் பணியாகக் கொண்டவர் எழுத்தர் எனப்பட்டார். அலுவலக நடைமுறைகளை எழுதுபவர் அவர். முன்னாளில் ஊர்வரி வகை எழுதியவர் கணக்கர், கணக்கப் பிள்ளை என வழங்கப்பட்டார். ரைட்டர் என்பதற்குரிய மொழியாக்கமாக எழுத்தர் என்பது அமைந்தது. எழுத்தாணி: ஏட்டில் எழுதுவதற்குப் பயன்படுத்திய கருவி எழுத்தாணி எனப்பட்டது. ஆணி என்பது பலபொருள் தரும் சொல் ஆகலின் வெளிப்பட விளக்குவதற்காக எழுத்தாணி என்னும் பெயரைப் பெற்றது. பித்திகைக் கொழுமுகை ஆணி என்று இளங்கோவடிகள் (சிலப். 8:55) உரைப்பதால் ஆணி என்னும் பெயர் வழக்கும் புலப்படும். எழுத்தாணியை ஊசி என்னும் வழக்கே மிகுதியாக இருந்தது என்பதை இலக்கியங்களால் அறியலாம். கையெழுத்தூசி (சிந்.1767) என்றும், செம்பொன் ஊசி (சிந். 369) என்றும் சிந்தாமணி எழுத்தாணியைச் சுட்டுகின்றது. மொய்யிலை வேல்மாறன் களிறு மருப்பு ஊசியாக மறங்கனல் வேல்மன்னர் உருத்தகு மார்பு ஓலையாக வையகமெல்லாம் எமது என்று எழுதுவதை முத்தொள்ளாயிரம் (பாடல் 21) எழில்மிக இயம்புகிறது. சீவகன் அகன்ற மார்பம் ஓலையாக அசனி வேகம் என்னும் களிற்றின் மருப்பு ஊசியாக எழுதுவிப்பேன் எனக் கட்டியங்காரன் கழறுவதைக் காட்டுகிறது சிந்தாமணி (பாடல் 1121) எழுத்தாணியை ஓலை தீட்டும் படை என்று கூறுகிறது திவாகரம் (செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி). அதற்கு ஊசி, கண்டம், ஆணி என்னும் முப்பெயர்கள் உண்மையையும் அது வெளியிடுகின்றது. எழுதுகோல் என நாம் இப்பொழுது வழங்கும் பெயரைச் சூடாமணி நிகண்டு கூறுகிறது. அதற்கு அடிப்படை எழுதுங்கால் கோல்காணாக் கண்ணே போல்என வள்ளுவர் வழங்கும் உவமையே என்பது புலப்படுகின்றது (திருக். 1285). நாளென ஒன்றுபோல் காட்டி என்பதால் நாம் நாட்காட்டி என்பதைப் படைத்தும் கொள்ளவில்லையா! அதுபோல் என்க! எழுத்தாணிகளில் குண்டெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத் தாணி என வெவ்வேறு வகையுண்டு (என் சரிதம், பக். 812) கிளிமூக்கு எழுத்தாணி என ஒரு வகையும் உண்டு. வாரெழுத்தாணிக்குப் பனையோலையினாலே உறை செய்து அதற்குள் செருகி வைப்பார்கள். மடக்கெழுத்தாணிக்குப் பிடி இருக்கும். மடக்கிக் கொள்ளலாம். அந்தப்பிடி மரத்தினாலோ தந்தத்தினாலோ மாட்டுக் கொம்பினாலோ அமைக்கப்படும் ஒரு பக்கம் வாருவதற்குக் கத்தியும் மறுபக்கம் எழுதுவதற்கு எழுத்தாணியும் அமைந்ததைப் பார்த்தே பேனாக்கத்தி என்ற பெயர் வந்ததென்று தோன்றுகின்றது. ஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு பக்கம் இரண்டு எழுத்தாணியும் உள்ள மடக்கெழுத்தாணிகளும் இருந்தன (நல்லுரைக் கோவை-1, பக். 144- 145) எழுத்தாணியும் கத்தியும் இணைந்திருப்பதைக் கண்ட ஒரு புலவர் காளமேகப் புலவரிடம் எழுத்தாணி என்று எடுத்துச் சூரிக் கத்தி என முடியுமாறு ஒரு வெண்பாப் பாட வேண்டினார். அப்படியே அவர் பாடினார். எழுத்தா ணிதுபெண் ணிதனைமுனி காதில் வழுத்தா ரணக்குகனை வாதுக் - கழைத்ததுவும் மாரன்கை வின்மான்முன் காத்ததுவும் நன்றாகும் தீரமுள்ள சூரிக்கத் தி என்பது அப்பாடல். பொருள் மயக்காகிய பிசிச் செய்யுள் (விடுகவி) திணை திரிந்து வரும் என்பதற்குச் சேனாவரையர், எழுதுவரிக் கோலத்தார் ஈவார்க் குரியார் தொழுதிமைக் கண்ணணைந்த தோட்டார் - முழுதகலா நாணிற் செறிந்தார் நலங்கிள்ளி நாடோறும் பேணற் கமைந்தார் பெரிது என்னும் வெண்பாவைக் காட்டிப் புத்தகம் என்னும் பொருள்மேல் திணை திரிந்து வந்தவாறு கண்டு கொள்க என்று எழுதுகிறார் (தொல். சொல். 449). ஏடு எழுத்தாணி ஆகியவற்றின் செல்வாக்கை இவை காட்டுவனவாம். (ஏட்டை உயர்திணைப் பெண்டிராக்கிக் கூறியமையால் திணை திரிதல் என்றார். இஃது இரட்டுறல் அணி, எழுதுவரிக் கோலம், ஈவார்க்குரிமை, மைக்கண் அணைதல், நாணிற் செறிதல், பேணற் கமைதல் ஆகியவை ஏட்டிற்கும் மகளிர்க்கும் பொது. வரிக்கோலம் - வரிவடிவம்; ஓவியத்தெழுதும் - அழகிய வடிவம்; தொழுதி - தொகுதி; தோடு - இதழ்; நாண் - கயிறும் நாணமும்; பேணல் - விரும்பல்.) ஏட்டில் எழுதுவது பற்றியும் இவ்விடத்தில் அறிதல் தகும். எழுதுபவர்கள் எழுத்தாணியை வலக்கையில் பிடித்துக் கொண்டு இடக்கையில் ஏட்டைப் பிடித்திருப்பார்கள். எழுதும் பொழுது இடக்கைப் பெருவிரல் நகத்தில் சிறிதளவு பள்ளஞ் செய்து அந்த இடத்தில் எழுத்தாணியைச் சார்த்திக் கொண்டு எழுதுவார்கள். நாம் இக்காலத்தில் காகிதத்தில் எழுதுவதைப் போன்ற வேகத்தோட ஏட்டில் எழுதுவதுண்டு (நல்லுரைக் கோவை -1, பக்.148) அழகுற எழுதுவதன் அருமையையும் அதனைப் பழுதற வாசிப்பதன் அருமையையும் உணர்ந்த ஔவையார். எழுதரிது முன்னம் எழுதிய பின்னர்ப் பழுதறவா சிப்பரிது என்றார். பனையேட்டிலே முத்துக் கோத்தாற் போல எழுதுவார் இருந்தனர் என்றால் அவர்தம் கைவண்ணத்தை எவ்வளவு பாராட்டினும் தகும். அத்தகைய கைகளே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் நம் கலைச்செல்வங்களை அழியாமல் நமக்கு எடுத்து வழங்கிய வள்ளன்மைத் திருக்கை களாம். எழுத்தாளர்: எழுத்து + ஆளர் = எழுத்தாளர். கதை, கட்டுரை முதலியவை எழுதுபவர் எழுத்தாளர் எனப்படுவார். இவர் எழுத்தை ஆள்பவர் எனப்பட்டார். இவர் தாமே படைத்து எழுதுபவர்! எழுத்தரோ பார்த்தோ கேட்டோ உரிய படிவமுறையில் எழுதுபவர். இவரோ எழுத்துக்குரிய படைப்பாளர்! ஆய்வாளர்! நூல்களும் இதழ்களும் கதைகளும் நாடகங்களும் பிறவும் இவர் உருவாக்கத்தால் உலா வருவன. இவர் சொல்லேர் உழவர் (திருக். 872) ஆவர். அன்றியும் சொல்லம்பரும் (கம்பர். தனிப்.) ஆவர். எழுத்திலா ஓசை: எழுத்து + இ(ல்)லா + ஓசை = எழுத்திலா ஓசை. ஓசை, இயற்கை ஓசையாம். சங்கொலி, முரசொலி, கடலொலி, காற்றொலி, விண்ணொலி ஆயனவாம். முற்கு, வீளை, கோழை முதலியவும் அன்னவே. ஒசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே -அப்பர், தேவா. ஓசை = இயற்கை வழியது; பொருள் கருதியதன்று. ஒலி = மாந்தர் முயற்சியாலாவது; பொருளுற்றது. எழுத்து: எழுத்து:1 எழுதப்படுவது எழுத்து என்பது பொதுவழக்கு. எழுத்து என்பது எழுதப்பட்ட கடிதத்தைக் குறித்தல் குமரி மாவட்ட வழக்காகும். என் எழுத்து வந்ததா? நீங்கள் போனதும் ஓர் எழுத்து எழுதுங்கள் என்பது உரையாடலில் வருவது. எழுத்து:2 அவனுக்கு எழுதிய எழுத்து அவ்வளவுதான் என்பது பொதுவழக்கு. தலைவிதி என்பது இதன் பொருள். அன்று எழுதியதை அழித்து எழுத முடியுமா? என்பதும் அதுவே (பழ). எழுத்து:3 இது என் எழுத்து என்பது என் கைச்சான்று என்பதாம். எழுபது: எழுபது:1 ஏழு + பத்து = ஏழுபத்து > எழுபது. எழுபது என்னும் எண்ணிக்கை. எழுபது:2 எழுபது பாடல்களைக் கொண்டதொரு நூல். சிற்றிலக்கிய வகை சார்ந்தது. ஏர் எழுபது; ஐந்திணை எழுபது எழுபா எழுபது: ஏழுவகைச் சமயங்களுக்கும், ஏழுவகை யாப்பினால் பப்பத்துப் பாடலாக எழுபது பாடலால் அமைந்த நூல் எழுபா எழுபது ஆகும். இந்நூலில் வரும் ஏழ்வகைச் சமயங்கள் கதிரவன் (சௌரம்) சிவனியம் (சைவம்) உமையியம் (சாக்தேயம்) மாலியம் (வைணவம்) பிள்ளையாரியம் (காணபத்தியம்) குமரனியம் (கௌமாரம்) பொது என்பனவாம். இவ்வெழுவகை வழிபாட்டுக்கென்றே ஏழுநாள்கள் அமைந்ததாகக் கொள்வார் தண்டபாணி அடிகள். எழுபா எழுபஃது என்பது அவ்வடிகளார் யாத்த ஒரு நூலாம். எழுபிறவி: ஏழு பிறவி > எழு பிறவி. ஒரு பிறவியிலேயே ஏழு பிறவி உண்டு என்பார் வள்ளலார். மீள் மீள் பிறவிகள் ஏழு என்றும் கூறுவர். எழுமலை: ஏழுமலைத் தொகுதி எழுமலை என்றும் ஏழுமலை என்றும் பெயர் பெற்றது. வேங்கடம், திருப்பதி என்பனவும் அது. பழம்பெயர் வேங்கடம் என்பது வடவேங்கடம் என்பது தொல். பாயி. வேங்கட நெடுவரை என்பது சங்கச்சான்றோர் உரை (அகம். 85) வேங்கட மலைப்பகுதி கள்வர் கோமான் புல்லி என்பவனால் ஆளப்பட்டது அதனால் புல்லியின் வேங்கடம் எனப்பட்டது. (புறம். 385). எழுமை: எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் (திருக். 107), ஒருமைக்கண் தான் கற்ற கல்வி எழுமையும் ஏமாப்புடைத்து (திருக். 398) என்பனவற்றை நோக்க ஒரு பிறப்பில் அமையும் வளர்நிலையே சுட்டப்படுகின்றன என்பது விளங்குகின்றது. நம் இளந்தைப் பருவத்தில் கற்ற கல்வியும் பெற்ற நலங்களும் இறப்பின்காறும் தொடர்ந்து வருதலால் இது விளங்கும், முந்தைப் பிறப்பு எப்பிறப்பு என்பதையே அறிவரா நிலையில், அக்காலத்து நிகழ்ந்தவையை மறவாது போற்றுதல் என்பது எப்படி? நன்றி அறிதல் என்பது எப்படி? ஒருமைக்கண் என்பது ஒருமுகப்பட்ட நோக்கில் என்றும், ஒருமை என்பது ஒருப்பட்ட தன்மையில் என்றும் வள்ளுவப் பொருளாட்சி இருத்தல் நோக்க வேண்டியதாயுள்ளது. அறிதோறும் அறியாமை கண்டற்று என்பதால் அறிவின் வளர்நிலை தெளிவாகும். எழுவகை அளவு: ஏழு > எழு. நிறுத்து அளத்தல், பெய்து அளத்தல், சார்த்தி அளத்தல், நீட்டி அளத்தல், தெறித்து அளத்தல், தேங்க முகந்து அளத்தல், எண்ணி அளத்தல் (தொல். 7. நச்.) நிறுத்தளத்தல் = துலாம் முதலிய அளவைகளால் நிறுத்தளத்தல். பெய்தளத்தல் = ஒன்றினுட் பெய்தளத்தல் என்றது, கலம் முதலியவற்றில் தேக்கி அளத்தல். சார்த்தியளத்தல் = ஒன்றனளவோடு மற்றொன்றனளவை ஒப்பிட்டு நோக்கி அளத்தல். தெறித்தளத்தல் = ஒன்றனைப் புடைத்து ஒலியை உண்டாக்கி அதனைச் செவியாற் கேட்டு நிதானித்து அளந்து கோடல். அது மத்தளம் வீணை முதலியவற்றைப் புடைத்து அவற்றொலியைச் செவி கருவியாக அளந்து கோடல். தேங்கமுகந்தளத்தல் = நாழி முதலியவற்றான் அளத்தல்.(சி. கணேசையர் குறிப்பு.) நீட்டியளத்தல், நீட்டலளவை. எண்ணியளத்தல், எண்ணலளவை. இவற்றின் பொருள் வெளிப்படை. எழுவகை மதம்: ஏழு > எழு. மத்து > மத்தம் > மதம் = திரண்ட கருத்து. நூலாசிரியர்க்குரிய கொள்கை ஏழு; அவை எழுவகை மதமாம். எழுவகை மதமே உடன்படல் மறுத்தல் பிறர்தம் மதமேற் கொண்டு களைவே தாஅன் நாட்டித் தனாஅது நிறுப்பே இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே பிறர்நூற் குற்றம் காட்டல் ஏனைப் பிறிதொரு படாஅன் தன்மதம் கொளலே - நன்.11 பொருள்: நூல் தழுவிய மதங்கள் பலவாயினும் தலைமை பற்றி மதம் ஏழென்பது நூல் வழக்கா மென்க (சங்.உரை.) * வகை மதம் காண்க. எழுவாய்: எழுவாய்:1 எழு + வாய் = எழுவாய். வாய் = இடம். எழும் இடம் எழுவாய். சொற்றொடர் எழுதற்குரிய இடம் எழுவாயாம். எழுவாய் உருபு திரிபில் பெயரே -நன்.295 எழுவாய்:2 எழுக என்னும் ஏவல். எ-டு: தம்பி எழுவாய் எழுவுதல்: எழுவு > எழுவுதல். எழச்செய்தல். யாழ், வீணை என்பவற்றை இசைத்து ஒலியெழச் செய்தல் எழுவுதல் ஆகும். தெளிந்தவன் எழுவ - பெருங். 1:37:122 எழுஉதல், எழீஇ என்பனவும் அது. வீணை எழிஇ வீதியில் நடப்ப - பெருங். 2:9:57 கூட்டி எழூஉதல் என்மனார் புலவர் - தொல்.6 எளிது: எள் > எளிமை > எளிது. எள், மிகமிக மென் கூலம். அதனைப் போல் மெல்லிய சொல்லும், மெல்லிய வாழ்வும் உடைமை எளிய வாழ்வாம் எளிமை இறைமை என்பர். எளிவந்த பிரான் எனப் பாராட்டுவர். எளிமை பெருமையே அன்றி இழிமை அன்றாம். எள்: வலுவற்ற எளிய செடியில் விளையும் சிறிய வித்து எள் ஆகும். எளிமை, எண்மை என்பவற்றின் அடிச்சொல்லாகும் நிலையைப் பெற்றது இது. எள்மை, எண்மை, எளிமை; எள்குதல் எள்ளுதல் இவ்வழிச் சொற்கள். நகைப்புக்குரிய நிலைக்களம் நான்கு என்பதை. எள்ளல் இளமை பேதைமை மடனென்று உள்ளப் பட்ட நகைநான் கென்ப என்பார் தொல்காப்பியர் (1198). எள்ளல் இகழ்தல் பொருளது. அதன் அளவு எள் அளவு எள் துணை (எட்டுணை) எனப் பட்டது. எள்ளுதல், எள்ளுதலாவது பார்த்தலும் உரையாடு தலும் செய்யாமை. எள்ளுதல் என்னும் உளவினை. இகழ்தலாகிய வாய்வினையையும், புறக்கணித்தலாகிய செய்வினையையும் தழுவும். (திருக். மர. உரை. 752) எள் எவ்வளவு சிறிதோ அவ்வளவு சிறிதாக எண்ணிப் பேசுதலாம். எள்ளல்: எள் + அல் = எள்ளல். எள்ளல் = இகழ்தல் எள்ளல் இளமை பேதைமை மடன் - தொல். 1198 எள்ளே போல் சிறிதாக எண்ணி இகழ்தல். எள்ளல் ஆகும். எள்ளும் தண்ணீரும் இறைத்தல்: இயற்கை எய்தினாரைப் புதைத்து மூன்றாம் நாள் புதைகுழிமேல் பாத்தி கட்டி எள் விதைப்பர்; பிரண்டை முதலிய கொடியும் நடுவர்; தண்ணீர் விடுவர். அதனை எள்ளும் தண்ணீரும் இறைத்தல் என்பர். இறந்தார்க்கு இடுகாட்டில் செய்யும் மூன்றாம் நாள் சடங்கு ஆகும். எரியூட்டப்பட்டதானால், இச்சடங்கு தீயாற்றுதல் எனப்படும். எரிகரியைச் சேரத்திரட்டிப் பாத்திபோல் அமைத்து நீர்விடல் அது. எறும்பு: எறுழ் = வலிமை, தூண், தடி. எறும்பு = வலிமை மிக்க ஓர் உயிரி; மூவறிவினது; தன்னைப் போல் பன்மடங்கு சுமையை ஈர்த்துச் செல்ல வல்லது. பொய்யா எழிலி பெய்விட நோக்கி முட்டை கொண்டு வற்புலம் சேரும் சிறுநுண் எறும்பு - புறம். 173 எறும்பி என்பதும் இது. எறும்பி: எறும்பி:1 எறுழ் = வலிமை; வலிமை மிக்கது எறும்பி. எறும்பி அளையில் குறும்பல் சுனைய - குறுந். 12 எறும்பி:2 யானை. யானை வழிபாடு செய்ததாகத் தொன்மம் கூறும் திரு எறும்பியூர் (திருவரம்பூர்) திருச்சிராப்பள்ளியைச் சார்ந்தது. திருவெறும்பூர் என வழங்குகின்றது. எறும்பி = யானை வெ.வி.பே. எறுழ்: எறுழ்:1 இறு > எறு > எறுழ் = வலிமை. தோல் பெயரிய எறுழ் முன்பின் -புறம்.7 பொருள்: யானையைப் பெயர்த்த மிக்க வலிமையினையும் உடைய(ப.உ.) பனைத்திரள் அன்னபரேர் எறுழ்த்தடக்கை - அகம். 148 பொருள்: திரண்ட பனையை ஒத்த பருத்த அழகிய வலிய வளைந்த கை. (வே.வி.) எறுழ்:2 எரி > எரு > எறு > எறுழ் = எறுழ மரம். எரிபுரை எறுழம் -குறிஞ். 66 எற்சோறு: எல் + சோறு = எற்சோறு = திருக்கோயில்களில் உச்சிப் போதில் அடியார்களுக்கு அளிக்கும் சோறு. (க.க.சொ.அ.) எற்படுகாலை: எல் + படு + காலை = ஏற்படு காலை. காலை = பொழுது. எல்படும் பொழுது. கதிர் மறையும் மாலைப் பொழுது எற்படுகாலை யாகும். எற்படு பொழுதின் இனம்தலை மயங்கிக் கட்சி காணாக் கடமா நல்லேறு - புறம். 157 எற்படு பொழுது என்பதற்கு எற்பாடாகிய காலத்தே என அடியார்க்கு நல்லார் இரு சொற்களையும் ஒப்பக் கூறுவார் (சிலம்பு. 14:85) எற்பாடு: எல் + பாடு = எற்பாடு எல் = கதிர்; பாடு = படுதல், மறைதல். கதிர் மறைந்து இருள் பெருகும் பொழுது எற்பாடு எனப்படும். எற்பாடு நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும் - தொல். 954 எற்றுநூல்: கல் உடைப்பாரும், மரம் அறுப்பாரும் உடைப்பு அறுப்புகளை நேராக்குதற்கு நூலில் மஞ்சள், பச்சை, வெள்ளை, கருமை வண்ணம் தோய்த்து நூலைச் சுண்டி இழுத்து நேர்காண்பர். மரக்கோட்டம் தீர்க்கும் நூல் -நன். 25 இஃது எற்றுநூல் எனப்படும். எற்றை: என்றை > எற்றை. எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் - நாலா. 202 எற்றைக்கும் = காலமெல்லாம். x.neh.: இன்றை > இற்றை. என்பு: என்பு = எலும்பு. எல் + பு என்பது என்பு ஆயிற்று. எல் என்பது பளிச்சிடும் ஒளியாகும். கதிர் தோன்ற இருள் விலகுதல் இயற்கை. கதிரோனுக்கு எல் எல்லி எல்லவன் எல்லோன் என்பன வெல்லாம் பெயர்கள். ஒளியால் பெற்ற பெயர் அது. அதுபோல் வெண்ணிறத்ததாம் தன்மையால் பெற்ற பெயரே எலும்பு என்பது. சுட்டுக் கருக்கினாலும் கருமையடையாத வெண்மையது எலும்பு. இவ்வெலும்பு எலும்பால் ஆகிய உடலைக் குறிப்பது ஆகுபெயர். அன்பிலா உயிர் என்புதோல் போர்த்த கட்டுமான உடலேயன்றிக் கனிவுறையும் உடல் ஆகாதாம் (திருக்.80). என்று: எல் > என் + து = என்று எல் = ஒளி. என்று = ஒளியுடையது. என்றூழ் = கதிரோன். அன்று; அல் + து = அன்று; அற்றுப் போனது. இன்று; இல் + து இன்று; இல்லாமல் போனது. ஆனால் என்றும். ஒளியுடையது. எதிர்காலம் ஒளியுடையதாக அமையத் திட்டமிட்டு வாழ்க என்பதன் குறிப்பு என்று என்பதாம். இன்று போல் என்றும் வாழ்க என்பது ம.வ. என்றூழ்: எல் > என்று > என்றூழ். ஊழ் = இயற்கை. என்றூழ் = கதிர். வெப்பு, வெப்புக்காலம். கதிரோன். என்றூழ் மாமலை மறையும் -குறுந். 25 வெப்பு. என்றூழ் நின்ற புன்றலை வைப்பு -அகம். 21 வெப்புக்காலம் (கோடை) என்றூழ் வாடுவறல் போல -புறம். 75 என்ன: உவமை உருபுகளுள் என்ன என்பதும் ஒன்று. அன்ன இன்ன என்பவை அன இனஆவது போல, என்ன என்பதும் என என நிற்கும். என்ன என்னும் உவமை உருபு,உலகியல் வழக்கில் என என்று நிற்கும். என என்று வருமிடத்தெல்லாம் உவமை உருபு நிலையில் நிற்பதில்லை. என்று என்னும் பொருள் பயப்ப நிற்பதே மிகுதி. இஃது அறியத்தக்கதாம். போவேன் எனச் சொன்னான் என்பதில் என என்பதற்கு என்று என்பதுதானே பொருள் ! என என்பது இவ்விரு பொருட்டாயும் வருதலை நுணுகியே அறியக் கூடும். பொக்கென வா! பொக்கெனப் போ! என்பவை நடை முறையில் உள்ளவை. பொக்கென என்பது விரைவாக என்னும் பொருள் தருதல் வெளிப்படை . பொக்கு என்பதற்கு விரைவுப் பொருள் எப்படி வந்தது. உழவடைக் களத்தில் பொலி போடுங்கால் பொக்கு (பொய்க்கு) விரைந்து தள்ளிப் போய் விடுதல் கண்கூடு. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது பழமொழி. காற்றுள்ள போதே தூற்றினால் மணிபிடித்த தவசம் நேர் கீழே விழும். அரைமணித் தவசம் அதன் வயிறாக விழும்; கருக்காய் அதற்கும் அப்பால் விழும்; பொக்கு (பொய்க்கு) பொட்டு என்பவை அவற்றுக்கு அப்பால் எட்டத்தில் போய் விழும். இவற்றைக் கண்ட பட்டறிவுடைய பொது மக்கள்! பொக் கெனப் போ பொட்டெனப் போ என்றும் பொக்கென வா! பொட்டென வா என்றும் வழங்குவாராயினர். பொக்கும் பொட்டும் காற்றில் பறப்பது போல விரைந்து வா! என்பதே பொருளாம். இதனால் பொக்கென, பொட்டென என்பவை பொக்குப் போல பொட்டுப் போல என்னும் பொருளதாதல் அறிக. பொக்கு, பொட்டு என்பனவே பதர் பதடி என வழங்கப்படுவனவாம். பட்டென வா; போ என்பவை குறிக்கு பட்டு என்பது என்ன? பட்டு என்பது ஒளியையும், ஒலியையும் குறிக்கும் சொல். பட்டுப் பட்டென மின்வெட்டுகிறது! பட்டொளி செய்கிறது; பட்டென்று அறைந்தான் என்பவை வழக்கில் உள்ளவை மின்வெட்டுதற்கும் ஓர் அறை அறைதற்கும் ஆகும் பொழுதில் விரைந்து வா என்பதே பட்டென வா என்பதன் பொருளாம். இவ்வாறே படக்கென என்பது நரம்பு சுண்டுதலையும், சடக்கென என்பது ஒன்றை xo.த்jiyí«, கடக்கென என்பது வண்டி உருளை ஒருசிறு பள்ளத்தில் விழுந்து எழுதலையும் , பொசுக்கென என்பது வெதுப்பும் நிலத்தில் அல்லது தீயில் இருந்து காலடி எடுத்து வைத்தலையும் பசக்கென என்பது வழுக்கி விடுதலையும், துண்ணென என்பது நடுக்கம் நடுக்குதலையும் ஒப்புகையால் சுட்டுவனவாம். இவற்றில் வரும் என என்பதும் போல என்னும் பொருள் தருவதாம். இவ்வாறே செக்கெனச் சுற்றல் என்பது விரைவின்மை யையும், தடம் மாறாமையையும் உவமையால் குறிப்பதாம். தொக்கென நினைத்தல் என்பது இளைப்பாக அல்லது இளப்பமாக எண்ணலாம். தொக்கு அரைபட்டது. இனிச் சிக்கெனப் பிடித்தல் என்பது சிக்கென்று பிடித்தல் எனப் பொருள் தருவதாம். சிக்கென என்பது இறுக்கமாக எனப் பொருள் தரும் சொல். சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவ தினியே! என்பது மணிமொழி. (திருவா. பிடித்த. 8) சிக்குடை என்பது இறுக்கவுடை; சிக்கம் என்பது இறுக்கமாகப் பொருளைச் சேர்த்து வைத்துக் கொள்ளல். குழந்தைகள் கூந்தலைச் சீருறப் பேணுதல் இல்லாமையால் சிக்கு விழுதல் எவரும் அறிந்தது. அச்சிக்கே பலர்க்குச் சடையாக - சடைசடையாகக் காட்சி வழங்கும் ! அச்சடைக் கற்றை, பிரிக்க முடியா வண்ணம் சிக்கிப்போய்ச் செறிந்துபோய்க் கிடக்கும் அதனைக் கொண்டே சிக்கென என்னும் வழக்கு எழுந்தது சிக்கம் என்பதற்குக் குடுமி கூந்தல் என்னும் பொருள்களும் உறி என்னும் பொருளும் வந்தது இதனால்தான். சிக்கமே குடுமி நாமம் சீப்புடன் உறியும் ஏற்கும் -சூடா. 11 சிக்கென என்பது போன்றது கச்சென என்பதும், கிச்சென என்பதும். கச்சு என்பது மகளிர் மார்புறை. அதனை இறுக்கிக் கட்டல் உண்மையால் கச்சு என்பது இறுக்குதல் பொருள் தருவதாயிற்று. கச்சு மட்டுமா இறுக்கிக் கட்டுவதாய் உள்ளது? கச்சையும் அப்படித்தானே, கச்சை கட்டுதல் என்பது கச்சையாம் இடைவாரில் இருந்து போர்ப் பொருளும் தருவதாயிற்று. சண்டைக்குப் போவார் உடை நெகிழாமல் இருந்தால்தானே இரு கைகளையும் பொருதல் ஒன்றுக்கே பயன்படுத்த முடியும் அதனால் போருக்குப் போவார் கச்சை கட்டுதலைக் கொண்டு, கச்சை கட்டல் என்பது போரிடல், போருக்கு அழைத்தல் எனப் பொருளாயிற்று. கச்சை என்பது மெய்ம்மறையாம் கவசத்திற்கும் ஆயது. மெய்ம்மறையாம் ஓடுடைய ஆமை கச்சன் எனப்பட்டது. ஏறு தழுவச் செல்வார் இடுப்பில் கட்டுவது கச்சை எனப்படுவது அன்றி, ஏற்றின் கழுத்திலும் கச்சை கட்டல் உண்டு அதனை அவிழ்ப்பார்க்கு, அவ்வேற்றின் கொம்பில் சுற்றப்பட்ட துணிமணி என்பன வெல்லாம் உரியனவாம். ஏறுதழுவுதலும் ஒருவகைப் போர்தானே! இனிக் குழந்தையரும் தொழில் செய்வாரும் கச்சை கட்டுதல் உண்டு .அது கச்சணம் எனப்படும். கச்சு -அண் - அம் என்னும் முச்சொற்கட்டே கச்சணமாம். அண் என்பதும் கச்சுப் போலவே நெருக்குதல் இறுக்குதல் பொருள் தரும்சொல். இடையில் அரை நாணில் மிக இறுக்கிக் கட்டப்படும் தாய்ச்சீலையே கச்சணம் எனப்படும் அதனைப் பழநாளில் குறியிறை என்றனர். இறையாவது இறுக்கிக் கட்டப்படுவது குறி என்பது வெளிப்படை. அவ்விடத்தைக் கோவணம் கௌசணம் என்பவை பற்றிக் கொண்டுள. கச்சு என்பது (கச்சணம்) போல ஆடவர் இடையில் இறுக்கிக் கட்டும் இலங்கோடு என்பதையும் குறிக்கும். கச்சின் ஒலித்திரிபே கிச்சென வந்ததாம் கிச்சென்று கட்டு என்று கயிற்றை இழுத்துக் கட்டுதலைக் குறிப்பர். குப்பென வியர்த்தல் என்பது ஒருசேர முளைக்கும் பயிர் முளைபோல வியர்த்தலாம். நாற்றங்காலில் விதை முளைத் தலையும், குப்பல், குப்பம், குப்பை என்னும் ஆட்சிகளையும் கருதுக. இனி, வெள்ளென என்பது பொழுது விடிய, அல்லது பொழுது புறப்பட எனப் பொருள் தரும் இவ்வென என்பது என்றமைய என்றாக என்னும் பொருள் தரும். இவ்வாறே நச்செனத் தும்மல், நக்கென வைத்தல் என்பவை ஒலிக்குறிப்பு வழியே வருவன. இவ்வாறு என என்பது உவமை உருபாகவும் என்று என்னும் பொருளதாகவும் வருதல் ஆய்வார் அறியத்தக்கதே. கண்ணென எனவரும் உவமையும் வருகென வருதலும் நாம் அறியாதனவா? என்னங்க: மனைவி தன் கணவரை விளித்தல். என்ன அவர்களே என்பது முடிந்த அளவும் தேய்ந்து என்னங்க என வழங்குகின்றது. அவர்கள் அவன்கள் அவங்க என மாறும். என்னங்க என்பது, பெரியவர்களை மதித்து வினாவும் வினாப் பொதுமையுடையது. எனினும் அப்பொதுமை நீங்கி மனைவி ஒருத்தி தன் கணவனைக் கூப்பிடும் கூப்பீடாக அமைகின்றது. ‘v‹d§f c§fis¤ jhnd’ ‘v‹d§f, nghfyhkh? என்பவற்றை அறிக. அவங்க என்ன சொல்லுவாங்களோ என்பதில் அவங்க என்பதும் கணவனைக் குறிப்பதே அவர் என்பதும் அது. அவர் ஊருக்குப் போயிருக்கிறார்; வரவும் சொல்கிறேன் என்பது ம. வ.  ஏ வரிசைச் சொற்கள் ஏ: ஏ:1 தமிழ் அகரவரியின் எட்டாம் எழுத்தும் நான்காம் நெடிலுமாம் எழுத்து. ஏ:2 ஏகாரம் தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே ஈற்றசை இவ்வைந்து ஏகா ரம்மே என்றும் தெளிவின் ஏயும் என்றும் கூறும் தொல்காப்பியம் (742, 746). ஏ:3 ஏ = அம்பு, ஏவு. ஏ:4 ஏப்புழை ஏப்புழை ஞாயில் ஏந்துநிலை அரணம் -பு. வெ.86 ஏ:5 ஒரு கால அளவு. ஏ எனும் மாத்திரத்து -கம். உயுத். 1493 ஏ:6 ஏ = உயரம், ஏற்றம், மிகுதி; மேல் எழுதல் என்னும் பொருள்களின் அடிச் சொல். ஏக்கம் = மேலெழும் துயர்நிலை ஏங்குதல் = மேலெழுந் துயரொடும் அழுதல் ஏச்சு = மிகு பழி ஏட்டை = உயர்ந்த ஓலை; வளர்நிலைப்பருவம் ஏண் = உயரம்; ஏணை; பரணை, தொட்டில், ஏணி. ஏத்துதல் = மிகப்புகழ்தல். ஏத்தம் = மிகுசெருக்கு. ஏத்தாப்பு = மேலாடை ஏத்தாளர் = புகழ்வோர் ஏந்துதல் = மேலே கையைத் தூக்கி வாங்கல், தருதல் ஏப்பம் = மேலெழும் வயிற்றுக்காற்று. ஏம்பல் = ஓங்கிய கவலை ஏய்தல் = கூரை முகடு பொருந்துதல் ஏர் = உயரமான உழுபொறி ஏல் = ஏற்றுக் கொள்ளல் ஏவ் = ஏப்பம் விடுதல். ஏழ் = எழுதல், எழும்பல். ஏள் = ஏளிதம் - இகழ்தல்; ஏளனமும் அது ஏற்றம் = ஏறு பொறி மேட்டு வழி ஏன் = வினாவி மேல் விடை கேட்டல். ஏ:7 விளி. ஏ அட = ஏட; ஏ அடா =ஏடா ; ஏஅடே = ஏடே; எ அடி =ஏடி, ஏட்டி. ஏஎ: இரக்கக்குறிப்பு. ஏஎ பாவம் -சிந். 290 அவன் ஆண்டன்மை குறைந்ததற்கு இரங்குகிறார். (உரை. நச்) ஏகலைவன்: ஏ + கலைவன் = ஏகலைவன். ஏவும் கலையில் இணையின்றி விளங்கியவன் ஏகலைவன். ஏ கலை = அம்பு. ஏவும் - எய்யும் - கலை. எய்கலை என்பதும் ஏகலையாம். எய் கலை, எயின் எனப்படும். எயின் வல்லார் எயினர் (வேடர்) பெண்பால் எயினி, எயிற்றி. ஏகல்: ஏகல்:1 ஏகுதல் > ஏகல் = செல்லுதல். அசைவு பெரிதுடையீர், ஏகல் ஆற்றீர் -பெருங். 5: 2: 35 ஏகல்:2 ஏகு + அல் = ஏகல். ஏகாதீர்; செல்லாதீர் அரசன் ஆணையால் ஏகல் கம். அயோ. 314 ஏகாலி: ஏழ் + காலி =ஏழ்காலி > ஏகாலி. பழநாளில் சலவையாளரைச் சிற்றூரார் ஏகாலி என அழைப்பது வழக்கம். இதுகால் இன்னார்க்கு இன்ன தொழில் என்பது இல்லாமல் எவர்க்கும் எத்தொழிலும் என ஆயமை நல்ல மாற்றமேயாம். அவரை ஏகாலி என்றது ஏனெனில், அவர்க்குக் கால் இரண்டு; கழுதைக்குக் கால் நான்கு; பொதி சுமக்கும் அது அவர் உடைமை அல்லவா! அவர் வைத்திருக்கும். கவைக்கம்புக்குக் கால் ஒன்று. ஆக ஏழுகாலொடும் இயங்கலால் ஏழ்காலி எனப்பட்டு ஏகாலி ஆனார். ஏகாலிக்கு ஆண்டுக்குத் தலைக்கட்டுக்கு இவ்வளவு என்னும் உரிமை (சுதந்திரம்) உண்டு. ஏக்கம்: ஏக்கு + அம் = ஏக்கம். ஏங்குதல், ஏக்கம். இல்லை என்பதாலும் இழப்பாலும் தேட்டத்தாலும் உண்டாகும் பெருமூச்சும் வேட்கையும். இறக்கமுற்றானென ஏக்க மெய்தினான் -கம். ஆரண். 195 ஏக்குறுதல் என்பதும் இது. ஏக்கழுத்தம்: கல்லாதான் தான்காணும் நுட்பமும் காதிரண்டும் இல்லாதான் ஏக்கழுத்தம் செய்தலும் சிறுபஞ். 3 ஏக்கழுத்த மிக்குடைய ஈகையின் -நீதிநெறி. 244 ஏக்கழுத்தம் = தலையெடுப்பு (உரை, நச், சிந்தா, காந். 4) ஏங்கல் தாங்கல் (ஏங்குதல் தாங்குதல்): ஏங்கல் = ஏங்கத் தக்க வறுமையும் துயரும் கூடிய நிலை தாங்கல் = ஏங்கத் தக்க நிலையில் தாங்கியுதவு வாரும் இல்லாத நிலை. உனக்கு என்ன? ஏங்கல் தாங்கலுக்கு ஆள் இருக்கிறார்கள் என்பது வாக்கு. ஏங்கல் தன்னிலையில் தாழ்வு; தாங்கல் பிறர் முட்டுப்பாட்டுக்குத் தாங்கியாக வேண்டிய இக்கட்டு. இவ்விருநிலைக்கும் உதவியாக இருப்பவன் ஏங்கல் தாங்கலுக்கு உதவுபவனாம். ஏங்கலுக்கு உதவுவாரும் தாங்கலுக்கு உதவுதல் அரிது. ஆகலின் அவ்வருமை கருதியே ஏங்கல் தாங்கலுக்கு உதவுவான் என்று சிறப்பிப்பர். தாங்குதல் என்பது வீழ்வாரை எடுத்து நிமிர்த்துதலாம். சுமைதாங்கி, குடிதாங்கி, அறந்தாங்கி என்பவற்றை எண்ணுக. மண்தாங்கி எனக் கூரைவீட்டு அட்டளைக் கம்பு உள்ளதையும் அறிக. ஏங்குதலால் உண்டாவது ஏக்கம். மூச்சு, ஏறுமாறாக இயங்குவது ஏங்குவதாம். குழந்தை ஏங்கி ஏங்கி அழுகிறது என்பார். அம்மாவைக் காணாமல் குழந்தை ஏங்கிவிட்டது என்பர். பொறுமிப் பொறுமி அழும் அழுகையும் பெருமூச்சும் ஏங்குதல் குறியாம். ஏங்குதல் தாங்குதல் என்பது இணைச்சொல். ஏங்கு வார்க்குச் தாங்குவார் இல்லையானால் அவர் நிலை என்னாம் என்பது பேரேங்குதலாம். ஏசல்: ஏசல்:1 இகல் > இகலிப்பு > ஏசலிப்பு > ஏசல். இகல் = மாறுபாடு; ஒருவர் மேல் உண்டாம் முரண்பாடு மாறுபட்ட எண்ணத்தை உண்டாக்குகிறது. அது மனமாற்றமாய் - வசையாய், பகையாய் ஆகின்றது. வசை கூறல் ஏசல், ஏசுதல் எனப்படும். ஏசுவதை விட்டு எப்பொழுது ஒன்றாவீர் என்பது தாய்மார் கூறும் குடும்பப்பாடு. இகல் வழிவந்த ஏசல், பொதுவகைப் பழியாகவும் ஆயது. ஏசி இடலின் இடாமை நன்று என்பது ஔவையார் தனிப்பாடல். ஏசல்:2 பள்ளு நூல்களில் இடம்பெறும் மூத்தாள் இளையாள் போராட்டுரை ஏசல் நூலாக உருக்கொண்டது எனலாம். ஒரு கணவனுக்கு அமைந்த மனைவியர் இருவர் ஏசலாக எழுந்த நூல், கணவன் மனைவியர் ஏசலாகவும், இருவர் தத்தம் வழிபடு தெய்வ ஏசலாகவும் வளர்ந்தது. வீட்டுச் சண்டை தெருச்சண்டை, சமயப் போர்,கட்சிப் போர், நாட்டுப் போர் எனப் பெருகியும், பெருக்கியும் வரும் உலகியல் ஏசல் நூலின் மூலம் எனல் கருதத் தக்கதாம். வள்ளி தெய்வயானை ஏசல் பல ஊர்களில் உண்டு பாவநாசம் இறைவன் வயிராச நாயகருக்கும் உலகம்மை நாயகிக்கும் நடந்த ஏசலைக் குறும் ஏசற் பிரபந்தத்தில் ஒரு செய்தி: குற்றமொன்றும் செய்யாக் கொலைவேடர் கோன்விழியைப் பற்றிப் பிடுங்கியது பாவமன்றோ? என்பது அம்மை குற்றச் சாற்று கொற்றமுறும் மாவலியைக் காலிடை வைத்துகந்து நன்றிகொன்ற பாவமெவர் செய்வார் பணிமொழியே? என்பது ஐயன் மாற்றுச் சாற்று ஏசியவர் ஏசிக் கொண்டே இருப்பின் என்னாம்? ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் -திருக். 1330 என்பது போல், இவ்வேசலும் இறுதியில் இருமையிலா ஒருமை எய்துத லோடு நிறைவுறும். நீரும் குளிர்ச்சியும்போல் நீங்காக் குணகுணியாய்ச் சீரொன்றும் சக்தி சிவமாகி விளங்கும் காட்சியைக் கூறுகிறது பாவநாசம் ஏசற் பிரபந்தம். கலிவெண்பாவினால் ஏசல் நூல் இயலும். அகவல் நடையிடுவதும் உண்டு. ஏசாமை: ஏசு + ஆ + மை = ஏசாமை = இகழாமை. ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி -சிலப். 20: 57 ஏச்சல்: ஏமாற்றுதல் என்பதை ஏச்சல் என்பது அம்பா சமுத்திர வட்டார வழக்கு. இது ஏய்த்தல் என்பதன் கொச்சை வடிவு ஆகும். ஏச்சுப் போட்டேன் ஏச்சுப் போட்டேன் என்பது கூத்துப்பாட்டு. ஏச்சுப் பேச்சு: ஏச்சு = பழித்தல் பேச்சு = திட்டுதல் ஏசுதல் = ஏச்சு; பேசுதல் = பேச்சு; ஏசி இடலின் இடாமை நன்று என்றார் ஔவையார் (தனிப்). ஈவான் இகழாமை வேண்டும் என்பது வள்ளுவம் (223). இகழ்தல் வேறு; திட்டுதல் வேறு; முன்னது குறை கூறுதல்; பின்னது வசை கூறல். வசைச் சொல்லைத் தொல்காப்பியர் வைஇயமொழி என்பார் இசை வசை என்னும் முரண் எவரும் அறிந்ததே. பேச்சு, பொதுமைக் குறிப்பில் இருந்து நீங்கி வசைப்பேச்சை இவண் சுட்டியது. பேச்சு என்பது திட்டுதல் பொருளில் இதுகால் மிகுதியாக வழங்குகின்றது. ஏடகம்: ஏடகம்:1 ஏடு + அகம் = ஏடகம் ஏடகம் பொதிதார் -கம். அயோத். 242 புறவிதழ் ஒடித்து அகவிதழ் கொண்டு செய்யப்பட்ட மாலைநாலா.mf. ஏடகம்:2 திருவேடகம் என்னும் ஊர். ஏடகூடம்: ஏடம் = செருக்கு, தடித்தனம். கூடம் = மறைப்பு; வஞ்சகம். ஏட கூடமாகப் போயிற்று ஏட கூடமாக நடக்கலாமா? என்பவை வழக்கில் உள்ளவை. இவ்விரு வகையும் கொள்ளத் தக்கவை அல்ல என்பதும் தள்ளத் தக்கவை என்பதும் வெளிப்படை. ஏட கூடம் ஏடா கூடம் எனவும் வழங்கும். ஏடு: ஏடு:1 நம் முன்னோர் பயன்படுத்திய எழுது பொருள் பனை ஓலையாகும். சில நாட்டினர் ஒருவகைக் கோரைப் புல்லின் தாள்களையும் மூங்கில் சில்களையும் எழுது பொருள்களாகப் பயன்படுத்தினர். ஆடு மாடு முதலியவற்றின் தோல்களையும் எழுதுபொருளாகப் பயன்படுத்திய நாடுகளும் உண்டு. நம் நாட்டின் இயற்கைக்கு ஏற்றவாறு பனையோலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர் எனலாம். பனையுள் தாளிப்பனை என்பது ஒன்று. அதனைத் சீதாளம் என்றும் கூறுவர். அதன் ஓலையையும் எழுதுவதற்குப் பயன்படுத்தினர். மற்றும், மாதவி கோவலனுக்குத் தாழை மடலில் முடங்கல் வரைந்த செய்தியைத் தாழை முடங்கல் வெண்தோடு எனச் சிலம்பு (8:49) தெரிவிக்கிறது. ஆதலால் தாழை மடலையும் எழுதுவதற்கு நம் முன்னோர் பயன்படுத்தினர் என அறியலாம். (முடங்கல் என்பது ஓலையைச் சுருட்டுதலால் வந்த பெயர். * ஓலை காண்க. ஏடு:2 ஏடு = மலர் இதழ், மலர். ஏடவிழ் திருவொடும் -கம். பால. 192 ஏடறு கோதையர் -கம். அயோத். 283 ஏடு:3 காய்ச்சிய பால் மேல் படியும் பாலேடு. ம. வ. ஏடுகோளாளர்: ஏடு + கோள் + ஆளர் = ஏடுகோளாளர் = ஏடு கொண்டு எழுதுபவர். ஏடுகோளாளர் எனையரென் றெண்ணி -பெருங். 1: 37: 153 ஏட்டிக்குப் போட்டி: ஏட்டி = விரும்புகின்ற ஒன்று. போட்டி = விரும்பும் ஒன்றுக்கு எதிரிடையாக வரும் ஒன்று. ஏடம், ஏடணை என்பவை விருப்பம்; விரும்பும் ஒன்று ஏட்டியாம். விரும்பி முயலும் ஒன்றற்கு எதிரிடையாக மற்றொன்று முட்டும்போதுதானே போட்டி தொடங்குகின்றது. போட்டியில் நல்ல போட்டியும் அல்ல போட்டியும் உண்டு உலகமே போட்டி உலகம்தான். ஆனால் எதனையும் ஏற்காத ஏட்டிக்குப் போட்டி உள்ளச் சிறுமையால் ஏற்படுவதாம். போட்டிக்கு முடிவு உண்டோ? போட்டியாகி ஒன்றன் அழிவும். ஒன்றன் ஆக்கம் போன்ற அழிவும் கூடி இரண்டும் அழிந்து படவேயாகும். ஏட்டுவினைக் கணக்கர்: ஏடு + வினை + கணக்கன் = ஏட்டுவினைக்கணக்கன் =ஏடு எழுதுதல் படித்தல், ஏடு போக்க முத்திரையிடல், ஏடு போக்கல் என்பவற்றில் வல்ல அறிவன். ஏட்டுவினைக் கணக்கன் ஈடறிந்து -பெருங். 4: 10: 95 ஏட்டை: ஏ அடி என்பது ஏட்டி எனப் பெண்பால் விளியாவது பொது வழக்கு. ஏ அடா என்பது ஏடா என்பதும் பொதுவழக்கே. ஏட்டைப் பருவம் என்பது இளமைப் பருவம் குறித்தல் இலக்கிய வழக்கு. ஏட்டை என்பது பெண்பால் விளியாக வழங்கப்படுதல் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கு ஆகும். ஏணும் கோணும்: ஏண் = உயரம். கோண் = வளைவு அல்லது கோணல். ஏண் உயர்வுப் பொருள் தருதல் ஏணியை எண்ணிக் காண்க. ஏண் உயரமாதல் சேண் என்பதிலும் அறிக. உயர்ந்த தோளை ஏணுலாவிய தோள் என்றார் கம்பர் (அயோத். 231). கோணல் வளைவாதல், கோணுதல் கூன், கூனி, கூனை, குனிவு முதலியவற்றில் கண்டு கொள்க. கோணற்கால், கோணல் நடை, கோணன் என்னும் ஆட்சிகளில் கோணல் தெளிவாம். ஏணை: ஏண் என்பது உயரம் ஏணி உயரே செல்வதற்கு உதவும் கருவி. ஏணை என்பது உயர்த்திக் கட்டப்படும் தொட்டிலைக் குறித்தல் வட்டார வழக்காகும். ஏண்: ஏண் = உயரம். உயரமான அகன்றதோள். ஏணுலாவிய தோளினான் என்பதை ஏணும் கோணும் என்பதில் காண்க. உயரே செல்வதற்குரிய மரப்படி - மாழைப்படி ஆயவை ஏணி. குழந்தைகளை உறக்காட்டக் கட்டப்படும் தொட்டில் ஏணை. வானில் இருப்பவராகச் சொல்லப்படும் தேவர், ஏணோர். ஏணிப்படியில் நுழைந்து நுழைந்து வருவது, ஏணி மயக்கம். இது விளையாட்டு வகைகளுள் ஒன்று. வட்டரங்குக் காட்சிகளுள் ஒன்றுமாம் இது. ஏதம்: ஏதம் = குற்றம், தீமை. எதிரிடுவதாம் தீமை ஏதமாம். இரவிடைக் கழிதற்கு ஏதம் இல் -சிலப். 13: 13 ஏதலன்: ஏது + அல் + அன் = ஏதலன். ஏது = துணை. துணையல்லானாம் பகைவன் ஏதலன் ஆவான். ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா -நாலா. 1418 ஏத்தாப்பு: ஏத்தார்ப்பு > ஏத்தாப்பு. தோள்மேல் ஏறப்போட்ட துண்டு ஏத்தாப்பு. அவ்வேத் தாப்பு சிலரிடம் செருக்கின் அடையாளமாகத் தோன்றும். அன்றியும், ஆர்ப்பும் அடாவடித்தனமும் செய்வதால் ஏத்தார்ப்பு எனப்பட்டது. ஆர்ப்பு = ஆர்த்தல், ஆரவாரித்தல். ஏத்தாப்புக்காரன் வருகிறான்; எதிரே போகாதே என்பது வழக்கு. ஓர் ஊரின் பெயர் ஏத்தாப்பூர். சேலம் சார்ந்தது அது. மேட்டு நிலம் என்பதால் அப்பெயர் பெற்றதாகலாம். ஏந்தல்: கையில் எடுத்துக் தருதல், தூக்கித் தருதல் என்பவை ஏந்துதல் ஆகும். இது பொதுவழக்கு. உயரமான இடத்தையும் உயரமான இடத்தில் உள்ள ஏரியையும் ஏரி சார்ந்த ஊரையும் குறிப்பது முகவை நெல்லை மாவட்ட வழக்குகள். எ-டு: முத்தரசனேந்தல், முடிவைத்தானேந்தல், கொம்புக்காரனேந்தல். ஏந்து: ஏ > ஏந்து. ஏந்துதல் மேலே எடுத்துத் தருதல்; கையை உயரே தூக்கித் தரும் பொருளை வாங்கக் கூறுதல் ஆயவை ஏந்து என்பதாம். ஏற்ற வாய்ப்பை ஏந்து என்றார் பாவாணர். ஏந்து உயர்வுப் பொருள் தருதலால் ஏந்தல் உயர்ந்த மகனையும், உயரமான இடத்தில் அமைந்த ஏரியையும் ஏந்தல் குறிப்பதாயிற்று. உயர்ந்தோரை விளிப்பது ஏந்தல் ஆயது. ஏப்பம்: ஏ > ஏப்பு > ஏப்பம். உண்டபின் மேலேழும் காற்று; ஏயென்னும் ஓசையொடும் எழுதலால் ஏப்பம் ஆயது. ஏப்பத்தைக் கேட்டாலே ஊரறியும் ம.வ. ஏய்ப்பு > ஏப்பு ஆதல் வேறு. ஏமம்: ஏம் + அம் = ஏமம் = பாதுகாப்பு. எம் பொருள் எம்மவர் எனக் காக்க வந்தவர் - காக்க வந்தது - ஏமமாம். காமக் கடல்மன்னும் உண்டே; அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல் திருக். 1164 ஏமம் சாமம்: ஏமம் = போர்க்களத்தில் அல்லது பகையில் பாதுகாப்பாம் துணை. சாமம் = நள்ளிருளில் அல்லது அச்சத்தில் உளனாம் துணை. ஏமம் = பாதுகாப்பு; ஏமப் புணை என்பது பாதுகாப்பு மிகுந்த மிதப்பாம் (திருக். 1164). கடலில் செல்வார் கலம் கவிழநேரின் ஏமப்புணை கொண்டு உய்வர். ஏமஞ்சாராச் சிறியவர் என்று சொல்வார் வள்ளுவர். ஏமம் அரண் பொருள் தருதல் உண்டு (திருக். 815) யாமம் என்பது சாமம் ஆயிற்று. அஞ்சாமல் தனிவழியே போக வேண்டா என்பது ஔவையார் மொழி. ஆனால் பாது காப்பில்லாத நண்பரொடு செல்லுதலினும் தனிமையில் போதல் சீரியது என்பது வள்ளுவம் (814). ஏமம் சாமம் பாராமல் உதவிக்கு நிற்பான் என்பதொரு பாராட்டுரை. ஏமாசடை: ஏம + ஆசு + அடை = ஏமாசடை . ஆசு = பற்றிக்கொள்வது. ஒருவருக்கு ஒருவர் பரிந்து பேசுவதை ஏமாசடை என்பது மதுக்கூர் வட்டார வழக்கு. அவனுக்கு அவன் ஏமத்துக்கு வரு கிறான் என்பது முகவை மாவட்ட வழக்கு. ஏமம் என்பது பாது காப்பு. பரிந்துவருதல் பரிந்து பேசுதல் என்பவை பாதுகாப்புக்கு உரியவையே. ஏமாப்பு: ஏமார்ப்பு > ஏமாப்பு. ஏம் = பாதுகாப்பு; ஆர்ப்பு = ஆரவாரம் செய்தல். தனித் திருக்கும் நிலையில் அடங்கி ஒடுங்கிக் கிடப்பவர் தக்க சூழலும் தக்க கூட்டமும் தக்க வாய்ப்பும் வாய்க்கும் இடத்தில் ஆரவாரம் செய்து தங்களுக்குப் பெருவலிமை இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் செருக்கு ஏமாப்பு ஆகும். உன் ஏமாப்பெல்லாம் இங்கேதான்; உன்னைக் கவனிக்கும் இடத்தில் கவனித்துக் கொள்கிறேன் என்பது மக்கள் வழக்கு. ஏமாறி: ஏம் + மாறி = ஏமாறி. பிறர் ஏமாற்றுவதற்கு இடமாக இருப்பவன். ஏமாறுபவன் - ஏமாறி ஆம். ஏமாறி இருக்கும் வரை. ஏமாற்றுக்காரன் இருக்கவே செய்வான் என்பது தேர்ந்த வழக்கு. ஏமாற்றம்: ஏம் + மாற்றம் = ஏமாற்றம். ஏம் = பாதுகாப்பு; மாற்றம் = மாறிப்போதல். தனக்குப் பாதுகாப்பாக இருக்கும் உதவியாக இருக்கும், தாங்குதலாய் இருக்கும், வரவேற்பு இருக்கும், எண்ணியது நிறைவேறும் என்று நம்பியிருந்த இடத்தில் அது கிட்டா விட்டால், நம்பியிருந்தேன்; ஏமாற்றமாகி விட்டது என்பது வழக்கு. எதிர்பார்ப்பு இல்லையா? ஏமாற்ற மில்லை என்பது பட்டறிவுத் தெளிவு. ஏமாற்றுபவன் ஏமாற்றி; ஏமாறுபவன் ஏமாறி. ஏம்பல்: ஏம்பல்:1 எழும்பல் > ஏம்பல். கிளர்ச்சியும் மகிழ்வும் எழும்புதல் ஏம்பலாம். உலகு காவலன் ஏம்பலோடு எழுந்தனன் - கம்.பால. 273 ஏம்பல்:2 ஏம்பு + அல் = ஏம்பல். மகிழ்வற்ற நிலை; வருந்துதல். “ஏம்பலின் மேலை வினையால் முடியும்” - கம்.கிட். 860 ஏயர்: அம்பு ஏவுதலில் வல்லார் ஏயர் எனப்படுவார். அக்குடியில் பிறந்த ஒருவர் ஏயர் கோன் கலிக்காமர் நாயனார். ஏயர் தம் ஏவுதல் திறத்தில் தவறார். ஆதலால் அவர் எண்ணியது. எண்ணியபடி நிகழும். ஆதலால் ஏய்தல் என்பதற்குப் பொருந்துதல் என்னும் பொருள் எய்தியது. எய்துதல் என்பது எண்ணியதை அடைதலும் ஏய என்பது உவமை உருபும் ஆயின. இயைவ ஏய்ப்ப - நன். 367 ஏயா: ஏ + ஐயா = ஏயா. ஏ, யா என்னும் இரு நெடில்களால் ஆயது. ஈரெழுத்துகளையும் ஒன்றாகக் கூட்டின் ஏ ஐயா என்பதன் தொகுத்தலாகும். ஏயா எங்கே போகிறீர்? ஏயா உமக்கு நான் சொன்னதென்ன? என்பவை மக்கள் வழக்கு. எய்தல் = பொருந்துதல்; ஏயா = பொருந்தாதது என்பது புலமையர் வழக்கு. ஏய்த்துவாழி (எத்துவாழி): பிறர் சொல் கேளாமல், அவர் உதவியைப் பெற்று உண்டு உடுத்து வாழ்பவனை எத்துவாழி என்பர். ஏய்த்து வாழி என்பதன் பிழைவடிவு அது. வாழி = வாழ்பவன் (ள்). தட்டிக் கழித்தல், சாக்குப் போக்குச் சொல்லுதல் என்பவை எத்துவாழியர் கைம் முதல் சரக்காகும். இது தென்தமிழக வழக்கு. ஏய்ப்பு சாய்ப்பு (ஏப்ப சாப்ப): ஏய்ப்பு = ஏமாற்றுக்கு உட்படுதல். சாய்ப்பு = சாய்ப்புக்கு அல்லது வீழ்த்துதலுக்கு உட்படுதல். அவள் ஏப்ப சாப்ப ஆள் இல்லை என்பதும் என்னை என்ன ஏப்ப சாப்பையா நினைத்து வருகிறாயா? என்பதும் கேட்கக் கூடிய வழக்குகள். ஏய்ப்பு சாய்ப்புக்கு ஆட்படுபவன் ஏமாளி எனினும், அதன் மூலம் ஏமாறுதல் வீழ்தல் இரண்டையும் தழுவியதாம். ஏமாற்றுதல் இழிவுபோல், ஏமாறுதலும் இழிவுதானே! ஏமாறாப் பெருமித மொழி இது. ஏரகம்: ஏர் + அகம் = ஏரகம். ஏர் = அழகு; அகம் = வீடு, ஊர், உள்ளம், சில இல்லங்களுக்கு ஏரகம் எனப் பெயருண்டு. ஏரகம் = திருக்கோயில் உள்ள ஊர். ஏரகத் துறைதலும் உரியன் - முருகு. 189 ஏரகத்துச் செட்டியா ரே - தனிப். ஏரணம்: ஏர் + அணம் = ஏரணம். ஏர் = ஏருழவு; அணம் = பொருந்துதல். ஏருழவு போல் குறுக்கும் மறுக்கும் உழுது களைகளை அகற்றி விளை நிலமாக்குவது போல் ஒரு கருத்தைப் பலவகையாய் ஆய்ந்து போக்குவ போக்கிச் செப்பப்படுத்தல் ஏரணமாம். தருக்கம் என்பது பின்னை வழக்கு. ஏரணம் உருவம் யோகம் - தனிப். ஏரல்: ஏர் + அல் = ஏரல் = சங்கு. ஏர் = எழுச்சி. அல் = சொல்லீறு. சங்கும் அழகு; அதன் கூடும் அழகு; முத்து அழகுக்கும் அழகு, எழுச்சி யூட்டும் எழில் ஏரல் எனப்பட்ட அருமை பெரிதாம். ஏரல்வளம் கொழுமிய ஏரல் என்னும் ஊர் பழங்கொற்கை சார்ந்து விளங்கும் ஊர். ஏராளம்: ஏர் = கலப்பை; ஆள் + அம் = ஆளம் = ஆளின் தன்மை. ஏராளம் = உழவன் வருவாய் போல் மிகுதியாய் இருத்தல். உழவன் நேரடியாயும், மிகுதியாயும் உணவுப் பொருளை விளைவித்தலின் பொருள் மிகுதி ஏராளம் எனப்பட்டது. அம் மிகுதியினாலேயே உழவன் வேளாண்மை செய்து வேளாளனாயினான். வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் (சொல்.கட்.) ஏர் உழவர்கள் ஏர் வழியாகப் பெற்ற வளத்தை உழைத்தவர் உழையாதவர் ஏழை பாழை எனப்பாராமல் இயன்ற வகையால் உதவுதல் வழியாக ஏற்பட்ட கொடைப் பெருக்கச் சொல் ஏராளம் என்பதாம். இது பொதுவழக்கு. ஏரான்: ஏர் + ஆன் = ஏரான் = முன்னேர்க்காரன்; முதலாக வந்தவன். சற்றே முற்காலம் வரை - இருபதாம் நூற்றாண்டின் இடைகடைப் பகுதிவரை - திண்ணைப் பள்ளிகள் இருந்தன. அங்கே மாணவர்கள் ஒருவருக்கு முன்னதாக ஒருவர் வந்து விடுதல் நடைமுறை. ஆசிரியர் வீட்டுத் திண்ணை அல்லது வீட்டின் பகுதியே பெரும்பாலும் பள்ளியாக இருப்பதுண்டு. ஊர் மடம் என்பனவும் உண்டு. ஆதலால் பள்ளிக்கு நேரம் காலம் என்னும் மணிக்கணக்கில்லாக் காலம் அது. முதலாவதாகப் பள்ளிக்கு வருபவன் ஏரான் எனப்பட்டான். அவனுக்கு மட்டும் அடியில்லை. பின்னே வரவர அடிபெருகும். இந்த, ஏரான் என்பது உழவின் வழி வந்த வழக்காகும். முன்னேர்க்காரன் ஏரான் எனப்படுவான். இவனோ முன் வந்ததால் ஏரான். பள்ளிக்கு ஏரானாக வருதற்குப் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் நானே ஏரான் என ஒருவன் மகிழ்வோடு வர அவனுக்கு முன்னாக வந்த ஏரான் இருமிக் காட்டுவான்! mJ ïUkyh?,. இடியன்றோ! ஏரி: ஏர்த் தொழிலுக்குப் பயன்பட அமைக்கப்பட்ட நீர்நிலை ஏரி. ஏரி அருகே நிலம் என்பது சிறப்பு மிக்கது. ஒன்றோடு ஒன்று இணைந்த ஏரி, இரட்டேரி (இரட்டை ஏரி); ஒன்றோடு ஒன்று சார்ந்த ஏரி கூட்டேரி; கால் வரத்து இல்லாத வானம் பார்த்த ஏரி, காட்டேரி; ஓரேரி நீர் மற்றோர் ஏரிக்கு நீர் வழங்க அமைந்தது, ஓட்டேரி. ஏரி இருந்து நீர் நிற்க இயலா வகையில் திட்டுப்பட்டுப் போனது திட்டேரி, திட்டாற்றேரி (திட்டாத்தேரி). வானம் பார்த்து வறண்ட ஏரி, அண்ணாத்தேரி; பெரிய ஏரி பேரேரி; பேரேரி என்பவை பெரும்பாலும் பேரி எனப்பட்டன. விசுவநாதப்பேரி, கிருட்டிணப் பேரி முதலியன கருதத்தக்கவை. பேரேரியில் இருந்து வந்த ஆறு அல்லது பெரிய ஆறு பேராறு. கயத்தில் இருந்து வந்த ஆறு கயத்தாறு போல. மிகப்பெரிய ஏரி, சமுத்திரம் (வ), கடல் எனப்பட்டன. ஊர்ப்பெயர்களும் ஆயின. நீர் வரத்தின் முகப்பில் இருந்த ஏரி முகப்பேரி; ஏரியின் நீர்ப்பெருக்கு வனப்பும் பயன்பாடும் உள்ளங் கொள்ளை கொள்வன. அதனால் ஏரிநீர் நிறைந்தனைய செல்வன் கண்டாய் என்றார் அப்பரடிகள் (தேவா). ஏரிக் காவல் புரிய ஏரிக்கரையில் கோயில்கள் எழுப்பப்பட்டன. மக்கள் கண்காணிப்பும் இயல்பாக வாய்க்கும் அல்லவோ! எ-டு: ஏரி காத்த இராமர் கோயில். ஆட்சி புரிந்தோர் ஏரி வாரியம் அமைத்து நீர்வளம் நிலவளம் பேணலால் குடிவளம் காத்தனர். ஏரிமண் வளமான இயற்கை உரம். ஏரி உள்வாய்மேடுகள் நிலமற்றோர்க்குப் பொது விளைநிலம் ஆயின. மரப்பயன், மீன்வளம் என்பவை ஊர்க்கு வருவாயாக ஏரி தந்தது. ஏரி தூர் வார்தல் ஊர்க்கடனாகக் கொள்ளப்பட்டது. ஏரி அதனை ஆக்கி அமைத்தோரின் வரலாற்றுச் சின்னமாகவும் திகழ்கின்றது. ஏரியைத் தூர்த்துக் குடியிருப்பாக்குதல் இக்கால அழிவியல் சான்று. இவ் ஏரி அழிவால், நிலத்தடி நீர் கொண்ட பயிரிடல் கெடுவதாயது; மழைநீர்ச் சேர்ப்பு ஒழிந்தது. ஏரும் கலப்பையும்: கலப்பை = ஏர்த் தொழிலுக்குரிய கருவியாம் கலப்பை. வேளாண் தொழிலில் பலப்பல வேலைப் பிரிவுகள் இருப்பினும் உழவுத் தொழில் எனவும், உழவர் எனவும் பெயர் வழங்கும் உழவை விளக்கும். திருவள்ளுவர் கூறியது உழவு என்பதே. மேல்மண் கீழ்மண் கலக்க வைக்கும் கருவி கலப்பையாம். கலப்பைக்கு ஏர் எனப் பெயர் உண்டு. ஏர்க்கால் என்பது கலப்பைக் குத்தியில் நுழைக்கப் பெற்று நீண்டு நுகக் கோலுக்குச் செல்லும் தடியாம். ஏர் என்பது உழுதல் தொழிலில் வருவதை ஏரினும் நன்றால் எருவிடுதல் என்னும் குறள் தெளிவிக்கும் (1038) ஏரைக்கட்டுதல்: ஏர் = கலப்பை; உழுத கலப்பையைக் கழற்றி நுகக்கோல் கயிறு ஆயவற்றைக் கட்டித் தோளில் தூக்கிக் கொண்டு வருதல் வேளாண் தொழில் வழக்கு. வேலை முடிந்த சான்று அது. ஒருவர் படிப்பை முடித்தல், பணியை முடித்தல், தொழிலை முடித்தல் என்பவை ஏரைக் கட்டுதலாக வழக்கில் உள்ளது. கலப்பையைச் சார்த்துதல் என்பதும் அது. கலப்பையாவது ஏர். ஏரோட்டம்: ஏர் + ஓட்டம் = ஏரோட்டம் தேர் ஓட்டம் திருவிழாவாம். அவ்வாறே பழநாளில் தலையுழவு அடித்தல் ஏரோட்ட விழாவாக நிகழ்ந்தது. ஊர் ஊர்க்கும் ஊர்ப் பெரியவர் அல்லது பெருநிலக் கிழார் தம் நிலத்தில் ஏரோட்டிய பின்னரே பிறர் தம் ஏரோட்டல் வழக்கம். அதற்கென வெள்ளிக் கலப்பை வைத்திருப்பர். உழவு தொடங்க அடையாளம் ஊரவர்க்கு அறிவிப்பதஃதாம். ஏரோட்டம் இல்லையேல் தேரோட்டம் எது? என்பது பழமொழி. ஏர்: ஏர்:1 அழகு உள்ளத்தின் எழுச்சியால் தோன்றும் அழகு, எழில். “ஏர்குலாம் முகத்தினாள்” - f«.கிட். 615 * அழகு காண்க. ஏர்:2 எழுச்சிப் பொருட்டது. ஏர் என்பது ஏர்பு என்றுமாம். வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு என்றார் நக்கீரர் (முருகு. 1,2). ஏர் முதன்மைப் பொருளதுமாம். தொழில்களுக் கெல்லாம் முதன்மையானது ஏர்த் தொழில். பள்ளிக்கு முற்பட வருபவனை முற்காலத்தில் ஏரான் எனச் சொல்லிய வழக்கு ஆகியவற்றைக் கருதி முதன்மைப் பொருள் கொள்ளலாம். ஏர்ப் பின்னது உலகு என்று அதன் முதன்மையைத் தெரிவித்தார் அல்லரோ பொய்யா மொழியார்? (1031). ஏர் எழுபது கம்பர் இயற்றிய நூல். உழுங்குலத்தில் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே என்பார் அவர். ஏர்க்காடு: ஏர் + காடு = ஏர்க்காடு. காடு வகைகளுள் ஒன்று ஏர்க்காடு. கொத்துக்காடு, கூப்புக்காடு என்பவை. போல் அன்றி, ஏருழுது பயிரிடும் வகையில் விரிந்து பரவிய சமனிலைக் காடு ஏர்க்காடாகும். கோடைக் கானல், ஒற்றைக்கல் மந்து என்பவற்றொடு ஏர்க்காட்டை நோக்கின் புலப்படும். ஏர்க்காடு கோடை வாழ்விடங்களுள் ஒன்று. சேலம் சார்ந்தது. ஏர்மங்கலம்: பருவம் - பட்டம் - அறிந்து பயிர் செய்வதற்கு வழிகாட்டி யாக ஊர்க்கு முதலேர் விடுதல் விழாவாகக் கொண்டாடப் பட்டது. அதனைப் புலமையோடு பாடு பொருளாக்கி வாழ்த்துரைத்த நூல் ஏர்மங்கலமாம். ஏரோர் களவழி தேரோர் களவழி எனக்கூறும் தொல்காப்பிய (1022) வழியது இந்நூல் படைப்புகள். * ஏரோட்டம் காண்க. ஏலமாட்டாதவன்: இயல > ஏல + மாட்டதவன் = ஏல மாட்டாதவன். உள்ளத் துணிவு இல்லாமல் உடல் நலமில்லாமல் ஒரு செயலைச் செய்ய இயலாமல் இருப்பவரை ஏலமாட்டாதவர் என்பர். ஏல மாட்டாதவரை ஏன் தொல்லைப் படுத்துகிறாய் என்பது ம.வ. ஏலம்: ஏலம்:1 மணம். ஏலம் = மணப்பொருள். அப்பொருளைக் குறியாமல், குழந்தையின் வாயை. ஏலவாய் என்பது மணக்கும் வாய் என்னும் பொருளதாம். கரும்பு, இனிப்பு, வேம்பு, கசப்பு எனப் பொருள் தருவது போல ஏலம் மணப்பொருள் தருகின்றதாம். எச்சேர்மானமும் இல்லாமல் மணத்தொடு பொருந்தி வந்தது ஏலம்; மற்றும் மற்றைப் பொருளொடு பொருந்தி அதற்கும் மணமூட்டுவது. ஏல் + அம் = ஏலம் = பொருந்துதல், ஏற்றல். ஏலம்:2 போட்டி வணிகங்களுள் ஒன்று ஏலம் போடுதல் என்பது. ஒரு பொருளின் விலையினை அடிமட்டத்தில் தொடங்கி அதனை விரும்புவார் விரும்பு தொகைக்குக் கேட்டு உயர்த்திச் சென்று கட்டுமான விலை வந்தால் அப்பொருளைத் தருவதும், இல்லையானால் ஏலம் கேட்டவருள் கூடிய விலை கேட்டவர்க்கு, ஒரு பரிசு தந்து ஏலமிட்ட பொருளை விடுத்து மற்றொரு பொருளை ஏலம் விடுதலும் வழக்கம். ஏலம் என்பது இயலும் > ஏலும் > ஏலம் என ஆயிற்றாம். இயலும் விலைக்குக் கேட்பதும் இயலும் விலைக்குக் கொடுப்பது மாம் வாணிக முறையின் பெயராயிற்றாம் இது. ஏலச்சீட்டு, ஏலம் போடுதல், ஏலத்துக்கு விடுதல் என்பவை மக்கள் வழக்கு. ஏலவே: இயற்கையாக என்பது இயற்கை எனவே என வழங்கப் படும். இது ஏற்கெனவே என மருவி வழங்குகின்றது இது ஈழத்தமிழரிடையே ஏலவே என வழங்குகின்றது. இயலும், இயலாது என்பவை ஏலும், ஏலாது என வழங்குதலை எண்ணிப் பார்க்கலாம். இயற்கை, ஏற்கை, இயலும் ஏலும். ஏலாக்குறை: இயலா > ஏலா + குறை = ஏலாக்குறை. ஊருக்கு எவ்வளவோ செய்த பெரியவர்; இப்பொழுது ஏலாக்குறை! என்ன செய்வார்? என்பது ம.வ. ஏலாச்சார்: ஏலாச்சார் என்பார் சமண சமய அறிவருள் ஒருவர். அவரே திருவள்ளுவர் என்பது சிலர் கருத்தாக உலாவுகின்றது. சமயச் சார்பு வள்ளுவரைச் சமயச் சார்பு காட்டல் சமய முறை ஆகலாம்; சால்பு முறை ஆகாது, வள்ளுவர்க்கோ அச்சமயத்தார்க்கோ பெருமை செய்வதும் ஆகாதாம். ஏலாதி: ஏலம் + ஆதி = ஏலாதி. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. கணிமேதையார் என்பார் இயற்றியது. எண்பது வெண்பாக்களை வுடையது. ஏலம் முதலாம் மணப்பொருள்கள் போல் மணம் பரப்பும் செய்திகளையுடையது ஏலாதி. ஏலாதி என்பது, ஏலம் இலவங்கம் மிளகு திப்பிலி சுக்கு நாவல் என ஆறு பொருள்கள். அவ்வாறே பாடற்கு ஆறு செய்திகளையுடைய நூல் ஏலாதி எனப்பட்டது. எ-டு : நிறையுடைமை நீர்மை உடைமை கொடையே பொறையுடைமை பொய்ம்மை புலாற்கண் - மறையுடைமை வேயன்ன தோளாய் இவையுடையான் பல்லுயிர்க்கும் தாயன்னான் என்னத் தகும் -ஏலாதி.6 இப்பாடற்கண் ஆறு பொருள்கள் இடம்பெற்றமை அறிக. ஏலையா: ஏல் + ஐயா = ஏலையா. படகு வலிப்பார் ஒரு முகமாக ஒரே சீரில் அதனை இயக்கக் கொடுக்கும் ஒலி ஏலையா! அவ்வொலி கேட்டதும் அதனைப் பிறரும் சொல்லிப் படகு வலிப்பர். ஏலேல சிங்கன் என்பான் கலவணிகன். ஏலேல சிங்கன் கப்பல் ஏழ்கடலும் சுற்றும் என்பது பழமொழி. அவன் வள்ளலாகவும் திகழ்ந்தவன். அவன் படகு வலிப்பார் அவ்வாறு ஒலி எழுப்பியது, பின்னர்ப் பிறர் பிறரும் மேற் கொண்டனர் என்பது மரபுவழிச் செய்தி. திருவள்ளுவர்க்கு அவன் நண்பன். புரவலன் என்ற புனைவும் உண்டு. ஏல்வை: ஏல் + வை = ஏல்வை = இயல்வதாம் (ஏல்வதாம்) பொழுது. வாழ்த்திடும் ஏல்வை - கம். அயோ.1070 ஏவக்கேள்வி: விலைப்புள்ளி, ஒப்பந்தப் புள்ளி எனப்படுவன செட்டி நாட்டு வழக்கில் ஏவக்கேள்வி என வழங்குகிறது. இன்ன வேலை என்பதற்கு இவ்வளவு எனக் கேட்டு அல்லது எழுதித் தந்து பெறுவது ஏவக்கேள்வியாகும். ஏவம் = ஏவப்பட்ட வேலை. கேள்வி = கேட்டு எடுத்தல், ஒப்பந்தம் போல்வது அது. ஏவது: ஏவுவது > ஏவது. வேலை வாங்குதல். ஏவி - கட்டளை இட்டு - வேலையைச் செய்ய வைத்தலாம். அவரை ஏவாவிட்டால் அவராக எதுவும் செய்யார். நீங்கள் சொல்லவில்லை. நான் செய்யவில்லை என்று சொல்லிவிடுவர். ஏவி ஏவியே வேலை வாங்குதல் ஏவது ஆகும். ஏவாமல் தாமே எண்ணிச் செய்வார் வாய்ப்பது பெரு நலமாம். அவர் குறிப்பறிந்து ஏவல் செய்வாராவர். ஏவா மக்கள் மூவா மருந்து - பழமொழி. ஏவது மாறா இளங்கிழமை முன்னினிது - இனியவை.3 யான்கண் டனையர் என்இளையரும் - புறம். 191 ஏவம்: ஏவு + அம் = ஏவம். பிறரால் ஏவப்பட்டுச் செய்யும் குற்றம் ஏவமாம். தம் குற்றத்தோடு பிறர் ஏவச் செய்யும் குற்றம் இரட்டைக் குற்றமாம். ஏவம்பாராய் இன்முறை நோக்காய் அறமெண்ணாய் ஆவென் பாயோ அல்லை மனத்தால் அருள்கொன்றாய் நாவம் பாலென் ஆருயிர் உண்டாய் இனிஞாலம் பாவம் பாரா தின்னுயிர் கொள்ளப் போகின்றாய் -கம். அயோ. 225 ஏவம் ஏவும் அம்பு என்னும் பொருளும் தரவில்லையா? பொய்ப்புனைவாலும் பொருளாலும், மருட்டலாலும் ஏவிச் செய்வார் கொலை கொள்ளை கொடுமை என்பவைதானே பேரவலமாய்ப் பேரறைகூவலாய் உலகை அழித்து வருதல் கண்கூடு அல்லவா! ஏவம், எத்தகு பொருள் பொதி சொல்! ஏவல்: ஏவல்:1 ஏவு > ஏவல் = கட்டளை. ஏவிச் செய்யும் செயலும் பணியும் ஏவலாம். ஏவல் வினை - கட்டளை. எ-டு: விரைந்து வா ஏவலர் என்போர் அலுவல் பணியாளர். அம்பு ஏவுதலும் ஏவலேயாம். ஏவல்:2 ஏவு + அல் = ஏவல் = ஏவாதே. பகளி என்னும் கூற்றினை ஏவல் -கம். கிட். 363 ஏழிலைக் கிழங்கு: ஓரிலையில் ஏழு இலை இருப்பது போல் பிளவுபட்ட இலைகளை யுடையது இது. கிழங்குச்செடி. குச்சிக் கிழங்கு, குச்சி வள்ளி, ஆல்வள்ளி, கப்பக்கிழங்கு, மாக்கிழங்கு, மரக்கிழங்கு என வட்டாரம்தோறும் வழங்கும் சொற்களாக உள. சவ்வரிசி ஆக்கத்திற்கும் சேமியா ஆக்கத்திற்கும் பயனாவது. வேளாண் பொருள், ஆலைப் பொருள் ஆயது இது. ஆற்றூர், சேலம் வட்டாரங்களின் செல்வப் பயிர் இது. ஏழிலைப் பாலை: ஏழ் + இலை + பாலை = ஏழிலைப்பாலை. ஏழு நிரையாக அடுக்கிய நீண்ட இலைகளையுடைய பாலை. யானையின் மதநீர் என மணம் உடையது. படுமதம் நாறப் பூத்த ஏழிலைப் பாலை -கம். பால. 903 ஏழை: பொருள் வறுமை யுடையரை ஏழை என்பது உண்டு. ஏழ்மை என்பதும் இது. வளமிக்கார் தம்மை ஏழை என்பது அறிவு, ஆற்றல், பண்பு இன்னவை குறைந்ததாகக் கொண்டு கூறும் பணிவுடைமைச் சொல்லாவது இது. ஏழைமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ? -கம். அயோ.1007 ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா -நாலா. 1418 ஏழை எம்போகி (எண்போகி) ஏழை = ஏழ்மைக்கு அல்லது வறுமைக்கு ஆட்பட்டவன். எண்போகி = எண்ணத் தக்கபேறு எதுவும் இல்லாதான். ஏழை எம்போகிக்கு இரங்க வேண்டும் என்று கூறுவர். ஏழைக்கு உதவுதலை வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை என்பதால் அருள்வார் வள்ளுவர் (221). வறுமையோடு உறுப்புக் குறையும் உற்றார் எண்போகி எனப்படுவார். போகி = போகியவர், போயவர். காணார், கேளார், கால் முடமாயோர், பேணா மாந்தர், பிணிநோய், உற்றோர் யாவரும் வருக என்னும் மணிமேகலையார் அழைப்பில் இடம் பெறுவார் எண்போகியார். எண்பேரெச்சம் என்பது பண்டை ஆட்சி (புறம். 28) மக்கட் பிறப்பிற் சிறப்பில்லாத குருடும், வடிவில்லாத தசைத்திரளும் கூனும் குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் உளப்பட உலகத்து உயிர்வாழ்வார்க்கு எட்டு வகைப்பட்ட பெரிய எச்சம் (புறம் .28, பழைய உரை) இந்நாளில் மாற்றுத் திறனாளியர் எனப் போற்றப்படுவார் அவர். ஏழை எளியவர்: ஏழையர் = ஏழ்மைக்கு ஆட்பட்டவர். ஏழ்மை = வறுமை. எளியவர் = பிறரால் எளிமையாக எண்ணப் பட்டவர். ஏழை எளியவர் பிறரால் போற்றப்பட வேண்டியவர். ஆனால் அப்பிறரோ ஏழை எளியவரை மேலும் ஏழைமைக்கும். எளிமைக்கும் ஆட்படுத்துபவராக ஆகிவிடக் கூடாது. உயர்த்தத் கடமைப்பட்டவர். அதனைச் செய்யாததுடன் தாழ்த்தவும் முனைதல் கொடுமை. எளிமை ஏழைமையுள் அடங்காது. செல்வருள்ளும் எளிமைப்படுவர் உளர். எளிமையாவது சிறுமை. சிறுமையால் பெறும் சிறுமை. எளிதென இல்லிறப்பான் என்னும் வள்ளுவம்(145) எளிமைச் சிறுமையை விளக்கும். ஏழை பாழை: ஏழை = வறுமையாளி. பாழை = வெறுமையாளி. ஏழையின் விளக்கம் ஏழை எம்போகி என்பதில் காண்க. பாழ்= வெறுமை. பாழ் என்பது பழமையான சொல். வெற்றிடமாம் வான்வெளியைப் பாழ் எனக் கூறும் பரிபாடல் (3: 77) பாழாய்ப் போன பாவி பாழும் பழியும் என்பன வசை யுரையும், இணைச்சொற்களுமாம். ஏழை பாழைக்கு உதவுதல் வேண்டும் என்பது அறவுரை. வறுமை என்பது இன்மைப் பொருள்தரினும் முழுவதும் இன்மை யன்றாம். ஆனால் வெறுமை, அறவே இன்மையாம். ஏழ்படிகால்: எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படிகால் -நாலா. 6 என்பார் பெரியாழ்வார். எழுமை எழுபிறப்பு என்பார் வள்ளுவர் (107). மகன், தந்தை, பாட்டன், பூட்டன், ஓட்டன், சேயோன், பரன் என்பார் தந்தைவழி. மகள், தாய், பாட்டி, பூட்டி, ஓட்டி, பழையோள், பரை என்பார் தாய்வழி. ஏளனம்: எள் > ஏள் > ஏளனம். எள்ளின் சிறுமைபோல் எண்ணி இகழ்தலும் பழித்தலும் ஏளனமாம் (ம.வ). ஏளை: இளமை > ஏளமை > ஏளை = இளமை. ஏளை தாரம் இயம்பிய வண்டுகள் -கம்.உயுத். 971 ஏறக்குறைய: ஏற = அளவுக்குச் சற்றே உயர. குறைய = அளவுக்குச் சற்றே குறைய. மிகச் சரியாகச் சொல்ல முடியாத ஒன்றை ஏறக்குறைய என்பது வழக்கு. திட்டமாக வரையறுக்கப் படாததற்கே ஏறக்குறைய சற்றே ஏறக்குறைய சற்றே ஏறத்தாழ என்பதும் உண்டு. குறிப்பாக எண் தொடர்பான செய்திகளிலேயே ஏறக்குறைய முதலியன பெரிதும் வழங்கப்படும். ஏறக்குறைய ஈராயிர உருபா செலவாகும் என்பது போல வரும். ஏறக்குறைய முடிந்த நிலைதான் என்பது போல அருகி வழங்கும். தோராயமாக என்பதும் வழக்குச் சொல்லாக உள்ளது. * கூடக்குறைய காண்க. ஏறல்: ஏறல் என்பது ஏறுதல் என்னும் பொதுப்பொருளில் வழங்குதல் எங்கும் உள்ளது. முறை மன்றத்தின் தீர்ப்பை ஒப்பாமல் மேல் முறையீடு செய்வதை ஏறல் என்பர். திருப்பரங்குன்ற வட்டார வழக்கு இது. மேல்மன்றம் ஏறல், ஏறலாயிற்று. ஏறி: ஏறு + இ = ஏறி. உயரமாக ஏறுகின்றவன் ஏறி ஆவன். மலையேறி, மரமேறி என்பவை மட்டுமல்லவே விண்ணேறிச் செல்வாரும் உளரல்லரோ! பாம்புகளில் ஒன்று கொம்பேறி மூர்க்கன் என்பது. மடி என்னும் சோம்பல் ஏறிக் கொண்டவர் சோம்பேறி. இவர் ஏறி அல்லர், சோம்பு இவர் மேல் ஏறிக் கொள்கிறது. அதன் ஆட்சியின் அடிமைப்பட்டவர் இவர். ஏறாத மேட்டில் ஏறினேன் என்பார் வள்ளலார். (உரைநடை) ஏறினகுடி: புதிதாகக் குடியேறிய மக்கள் அவர்களிடம் வரி வாங்காதிருக்கும் கட்டளை (தெ.கல்.3: 1: 12). இவ்வூர்ஏறினகுடிகளை....வாலக்காணமும் கொள்ளப் பெறாதோமாகவும் க.க.சொ.அ. ஏறு: ஆண் விலங்கு, ஏவல் வினை. உயிரின் இயற்கையாகிய அருந்துதல், பொருந்துதல் ஆகியவற்றில் பொருந்துதல் வகையால் பெற்ற பெயர் இது. அரிமா, காளை சேவல் முதலியவை பொந்துதற்குப் பெட்டை(பெடை) மேல் ஏறுதல் இயற்கை கொண்டு எழுந்த பெயர். ஆடவர்க்கும் இப்பெயர் உண்மை, எய்போல் கிடந்தான் என்ஏறு என்பதால் புலப்படும். ஏறு போல் பீடுநடை என்னும் வள்ளுவம் (59) உவமை வகையால் ஆடவரைச் சுட்டி நின்றது. நுனிக்கொம்பர் ஏறினார் என்பது மரம் ஏறுதல் சுட்டும். ஏறு ஏவலாதல், படியேறு எனலால் அறிக. ஏறும் ஏற்றையும்.... ஆண்பால் பெயரென மொழிப -தொல். 1501 ஏறுகாலம்: ஏறு + காலம் = ஏறுகாலம். சிலர்க்குப் புகழ், செல்வம், பதவி முதலியவை எய்தும் போது, அவர்க்கு ஏறுகாலம்; இல்லையானால் இப்படி யாகுமா? என்பது ம.வ. ஏறுசாத்து: ஏறு + சாத்து = ஏறுசாத்து . ஏறு = காளைமாடு; பொதி சுமக்கும் மாடாம் சாத்து = வணிகம். பொதி சுமக்கும் மாடு பொதிமாடு. அதன்மேல் பொருட் பொதிகளை - மூடைகளை - ஏற்றிச் சென்று வணிகம் செய்யும் கூட்டம் பொதிசாத்து ஆகும். சாத்தொடு வழங்கும், உல்குடைப் பெருவழி -பெரும். 80,81 க.க.அ. ஏறுமாறு: ஏறு = ஏறுதல் அல்லது ஏக்காரம் அமைதல். மாறு = மாறுதல் அல்லது தாழ்ச்சி அமைதல். ஏறுக்குமாறு என்றால் முரண்படுதலாம். ஏறும்போது மாறுதல், இறங்குதல். இறங்கும் போது மாறுதல் ,ஏறுதல். இவை ஏறுக்கு மாறு எனப்படும். ஒருவர் ஏற்றுள்ள கருத்துக்கு மாறாக ஒருவர் கூறும் போது, உன் பேச்சு எப்போதும் ஏறுக்கு மாறாகத் தான் இருக்கும் என்னும் இக்கால வழக்கு எண்ணத்தக்கது. ஏறுமா றாக நடப்பாளே யாமாகில் கூறாமல் சந்நியாசம் கொள் -ஔவை. தனிப். ஏறுக்குமாறு எவருக்கும் பயனாகாதது. மெய்யான இணை வாழ்வுக்கு ஆகுமா? ஏறுமாறு ஏற்கும் இக்குன்று -பரிபா. 18:6 ஏறுமாறு என்பது பகைத்தற்கு ஓர் உலகவழக்கு (ப.உ). ஏறுமாறு, ஏற்ற மாற்றமுமாம். ஏறுமுகம்: அவர் தொட்ட தெல்லாம் துலங்குகிறது; எல்லாம் அவர்க்கு ஏறுமுகம் தான் என்பது மக்கள் வழக்கு. இயல்பான வளர்ச்சி யில்லாமல் பெருவளர்ச்சி யுறுவதை ஏறுமுகம் என்றும் ஏறுகால் என்றும் மக்கள் வழங்குவர். இதற்கு எதிர் இறங்குமுகம், இறங்குகால் என்பவை * ஏறுகாலம் காண்க. ஏற்றப்பாட்டு: ஏற்றம் + பாட்டு = ஏற்றப்பாட்டு. ஏற்றம் = நீர் இறை பொறி. ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு இல்லை என்பது பழமொழி. மூங்கில் இலைமேலே எனத் தொடங்கும் ஏற்றப் பாட்டை முழுவதும் அறிவதற்காகக் கல்வியில் பெரியவரையே காக்க வைத்த கதையே ஏற்றப் பாட்டின் ஏற்றம் கூறும். ஏ = உயர்வு; ஏண், ஏணி, ஏர், ஏற்றம், ஏறு எல்லாம் உயர்வுப் பொருள். ஏறி நடையிடுதலாலேயே ஆழ் கிணற்று நீர், மேல் மட்டப் பொருளாகின்றது. ஏறி, ஏறு நடையிட அமைந்த பொறி ஏற்றம் ஆயிற்று. ஏணி ஏற்றம், மலையேற்றம், ஏற்ற இறக்கம் அறியாதவையா? மற்றும் கிணற்று ஆழத்துள்ள நீரை மேலே எடுத்து ஏறக்கொண்டு வந்து நிலத்துக்குப் பாய்ச்சுதலும் பயன்படுத்துதலும் எண்ணத்தக்கவை ஏற்றம் பழைமைப் பொறி. ஆயின் ஏற்றப்பாட்டு எனும் தனிப்பனுவலாட்சி பிற்பட்டதே. மருத வளங் கூறுங்கால் இடம்பெற்ற ஏற்றச் சிறப்பு, பின்னே வளர்ந்த நிலை இது வெற்றிலைக் கொடிக்கால் என்றால் ஏற்றம்தான்! ஏற்றப் பாடல்தான்! கூட்டுறவால் குடிசைகள் குலாவும் நிலைக்களம், ஏற்றமிறைத்தல் எனலாம். வேலையை விளையாட்டாக்கும் ஏற்றம், இசைக்கும், கணக்குக்கும் பத்திமைக்கும் புனைவுக்கும் எல்லாம் இடமாதல் பாராட்டுக்குரிய நிலை. ஞானக் குறவஞ்சி பாடி, ஞானக் கும்மி ஆடும் சித்தர், ஞான ஏற்றமும் ஏறுகிறாரே! பிள்ளையாரும் வாரி! பிள்ளையாரு மங்கே பெருத்த மூலா தாரம் சிறுத்த இதழ் நாலாம் பாடல் தொடர்கிறது. இரண்டுடனே வாரி, மூன்றுடனே வாரி, நாற்பதியால் எட்டு என எண்ணிக்கையும் போடுகிறது. இராமயோகி தந்த இராசயோகி சேடன் எனப் பாட்டாளி முத்திரையுடன் முடிகின்றது. மோனை இயையுடைய குறளடியாக நடையிடுகின்றது. இவ்வேற்றப் பாட்டு; குசேலர் ஏற்றப்பாட்டு 1500 அடிகளால் இயல்கின்றது! ஏற்றமில்லையா! பாவேந்தரும் ஏற்றப்பாட்டு பாடிப் பகுத்தறிவு ஏற்றம் படைத்தார். எ-டு: ஒழுக்கம். இன்சொல் இனிதாகும் - பெண்னே இன்னல் செய்ய வேண்டாம். உன்னருமை நாட்டில் - பெண்ணே உண்மை நிலைகாண்பாய்! இந்நிலத்தின் தொண்டில் - நீ ஈடுபட வேண்டும் பத்துடனே மூன்று- நீ பகுத்தறிவைப் போற்று ஏற்றமாற்றம்: ஏற்றம் = ஏறுதல். மாற்றம் = அதற்கு மாறாம் இறக்கம். ஏற்றம் + மாற்றம் = ஏற்றமாற்றம். ஏற்றமும் மாற்றமும். தங்கத்தின் விலை எப்பொழுதும் ஏற்றமாற்றமாயதுதான் என்பது மக்கள் வழக்கு. ஒருநாள் ஏறும் மறுநாள் இறங்கும். ஒரே விலையில் தொடர்வது இல்லை. உலகியம் தழுவிய நிலை அது. கணக்கு கணக்காக இருக்க வேண்டும் ஏற்றமாற்றம் கூடாது ம.வ. ஏற்றுதல்: பாரம் ஏற்றுதல் எவரும் அறிந்தது. மருத்துவமனைகளில் ஊசி குழாய் இவற்றின் வழியே மருந்து உணவு முதலியவற்றை உள்ளே செலுத்துதல் ஏற்றுதலாகும். ஊட்ட நீர், உயிர்வளி நீர், அரத்தம் ஆயன ஏற்றுதல் இந்நாள் மருத்துவத்துறை நடவடிக்கை. அரங்கேற்றுதல் இந்நாளில் பெருவரவு. ஏற்றாக்கால் ஏற்றுமதி ஏது? இறக்குமதி ஏது? ஏற்றி (ஏத்தி)ப் புகழ்தலால் சிலர் அடையும் பதவி, பரிசு உண்மை உழைப்பர் அறிவர்க்கு இல்லையல்லவா! * ஏற்றம் காண்க. ஏற்றுமதி: ஏறு (ஏற்று) = ஏற்றுமதி. மதி = அளவிட்டுக் காண்பது, மதிப்பிடுவது. ஒரு நாட்டுப் பொருள் மற்றொரு நாட்டுத் தேவைக்குக் கப்பலில் ஏற்றிக் கடற்செலவு வழியாக அந்நாட்டுக்குச் செல்லும் வாணிகம் ஏற்றுமதி எனப்படும். பழநாளிலேயே ஏற்றுமதி இறக்குமதி என்பவை தமிழகத்தில் நிகழ்ந்தன. நீரினின்று நிலத்தேற்றவும் நிலத்தினின்று நீர்ப்பரப்பவும் அளந்தறியாப் பலபண்டம் வரம்பறியாமை வந்தீண்டி -பட். 129-132 ஏனத்தெறி: ஏனத்து + எறி = ஏனத்தெறி. ஏனம் = பன்றி; முள்ளம்பன்றி. எறி-முள்ளம் பன்றி உதிர்த்தலால் ஆகிய முள்ளாகிய அம்பு. கானத்தகிலும் ஏனத்தெறியும் -பெருங். 1: 58: 86 ஏனம்: பன்றியின் பெயர்களுள் ஒன்று ஏனம் என்பது. ஏனம் என்பது அடுகலப் பானை சட்டி ஆயவை. மண்ணால் ஆக்கிச் சுட்டெத்த பானை முதலியவை. அவை கருநிறத்தவை. பன்றி வேட்டையில் வெருண்ட நாய், சோற்றுப் பானை கண்டு ஓட்டமெடுத்தது என்பது பழமொழி. சோறாக்கும் பானை நிறம் கருமை ஆதலால் பன்றி என்னும் எண்ணம் உண்டாயதாம். தினைக்கு ஏனல் என்பது பெயர்; கருந்தினையே ஏனல் என்பது. ஏனம், ஏனல் ஆகியவற்றில் கருநிறம் கொண்ட பெருவிலங்கு ஆகிய யானை ஏனை என்னும் தொல்பெயர்த் திரிவு என்பர். கரி, களிறு, களபம் என்பவை கருநிறம் கருதிய யானைப் பெயர்கள். இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும் -தொல். 1568 ஏனாதி: வேந்தரால் வீரர்க்கு அளிக்கப்பட்ட உயர்ந்த விருது ஏனாதி. மாராயம் பெற்ற நெடுமொழி -தொல். 1009. பொருள்: வேந்தனாற் சிறப்பெய்திய அதனால் தானே யாயினும் பிறரே யாயினும் கூறும் மீக்கூற்று சிறப்பாவன ஏனாதி காவிதி முதலிய பட்டங்களும் நாடும் ஊரும் முதலியனவும் பெறுதலுமாம். தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சேர் ஏனாதி பட்டத் திவன் (நச். உரை) ஏனோரை வென்று நின்ற பெற்றியன் ஏனாதி எனப்பட்டான். ஏனோர், இவண் பகைவர். ஏனாதி திருக்கிள்ளி என்பான் சங்கச் சான்றோர் பாடு புகழாளன் (புறம். 167). ஏனாதி முகவை மாவட்டத்தோரூர். ஏனென்று கேட்டல்: தடுத்தல், தட்டிக் கேட்டல். ஏன் என்பது வினா; எனினும் அவ்வினாத்தன்மையைக் கடந்து தடுத்துக் கேட்டல் என்னும் பொருளிலும் வளர்ந்துள்ளது. ஏன் என்பதற்கு ஆள் இல்லாமல் போனதால் எதுவும் செய்யலாம் எனத் துணிந்துவிட்டான் ஊரில் அவன் இல்லை; ஏனென்று கேட்க ஆளில்லை; எது எதுவோ தலைகால் தெரியாமல் ஆடுகின்றதுஎன்பன போன்றவற்றில் ஏன் என்பது தடுத்தல் பொருளில் வருவது தெளிவாகும். தட்டிக் கேட்டல் என்பது தடுத்து நிறுத்திக் கேட்டல் என்பதாம். ஏனோ தானோ: ஏனோ = என்னுடையதோ. தானோ = தன்னுடையதோ; அதாவது அவனுடையதோ. ஒரு செயலைச் செய்வான் தன்னுடையது எனின் மிகமிக அக்கறை யுடனும் ஆர்வத்துடனும் செய்வான். அத்தகையனும் பிறனுடையதெனின் ஆர்வமும் கொள்ளான், அக்கறையும் காட்டான். இவனோ என்னுடையது என்று அக்கறை காட்டிச் செய்வானும் அல்லன்; பிறனுடையது என்று அறவே புறக்கணிப்பானும் அல்லன். இரண்டும் கெட்டானாய்ப் பட்டும் படாமல் செய்கிறான் என்பது ஏனோ தானோ எனச் செய்தலாகியது. என் என்பது ஏன் என நீண்டது. ஏன் பொருள் ஏன் எண்ணம் என நீள்வது பேச்சுவழக்கில் உள்ளனவே. தான் என்பது படர்க்கைப் பெயர். ஏன்: எது, என்ன, எவர் முதலாம் எகர வினாக்கள்போல், ஏன், ஏது என்பனவும் வினாக்களாம். எதனையும் அப்படியே நம்பாமல் ஏனென்று கேட்டுத் தனக்குச் சரியானது என்று தோன்றுவதை ஏற்றலே பகுத்தறிவாம்! ஏனென்று தமக்குள் ஒவ்வொன்றையும் வினாவித் தெளிந்தவரே அறிவரும், புதியன கண்டவரும், மெய்யுணர் வாளரும் ஆயினர். ஆதலால், ஏனென்று கேள் என்பது அறிவர் ஏவலாயிற்று. ஏன்முதலாக வினாவும் கையின் குறியே உலகோரால் வினாக்குறி எனப்பட்டமை அறிக.  ஐ வரிசைச் சொற்கள் ஐ:1 தமிழ் வரியில் ஒன்பதாம் எழுத்தும் ஐந்தாம் நெடிலும் ஆகிய எழுத்து. ஐ:2 ஐந்து என்னும் எண். ஐந்தலை அரவு -பரிபா. 19 ஐ:3 தலைவன். என்னை, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே (புறம். 84) ஐ:4 அரசன், இறைவன். அணங்கரும் கடுந்திறல் என்னை - புறம். 78 பொருள்: வருத்துதற் கரிய வலியை யுடைய என் இறைவன் பழைய உரை. ஐ:5 தந்தை. என் ஐ வாழிய பலவே -நற். 136 ஐ:6 வியப்பு. அழல்பொழி யானையின் ஐஎனத் தோன்றும் (அகம். 223) ஐ:7 அழகு. ஐமென் தூவி அணை (அகம். 289) ஐ:8 மென்மை. அரவு நுங்கு மதியின் ஐயென மறையும் (அகம். 114) ஐ:9 விரைவு. பிறை. செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி (குறுந். 307) ஐ:10 ஒலிக்குறிப்பு. சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் நள்ளென் யாமத்து ஐயெனக் கரையும் குறுந். 262(ச.இ.சொ.பொ.க) ஐ:11 அம்மை என்பதன் ஈறு ஆகிய ஐ, ஆ போலவே தாயைக் குறிப்பதாயிற்று. அவ் ஐ இரட்டிப்பாய் அம்மையைப் பெற்ற அம்மையைக் குறிப்பதாய் ஐ ஐ (ஐயை) என வழங்கலாயிற்று. காவுந்தி ஐயை, ஐயை ஐயை கோட்டம் என்பவை சான்றுகள். ஐ:12 புணரொலி எழுத்து. அ, இ. அகர இகரம் ஐகார மாகும் -தொல். 21 அகரத் திம்பர் யகரப் புள்ளியும் ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் -தொல். 56 எ-டு: அய் ஐகாரம் சொல்லிடையில் யகரத்தை அடுத்து வரும் போது ஒரு மாத்திரையாகவும் குறுகும். எ-டு: அரையர். ஐ:13 கோழை - சளி. கோழை கட்டிவிட்டது என்பது ம.வ. ஐகாரம்: ஐ + காரம் = ஐகாரம். காரம் எழுத்துச் சாரியை. ஐகார இறுதி -தொல். 280 ஐகான் என்பது இது. கான் என்பது சாரியை. ஐகான் இறுமொழி என்னும் நன்னூல் (202) ஐங்காயம்: ஐந்து + காயம் = ஐங்காயம். ஐங்காயம் = காய்ந்து உலர்ந்த பொருள்களாகிய ஐந்து சரக்குகள். அவை மிளகு, மஞ்சள், சீரகம், கடுகு, மல்லி (க.க.சொ.அ) ஐங்குரவர்: ஐந்து + குருவர் = ஐங்குரவர். குருவர் > குரவர். குரு = ஒளி (தொல். 786) வாழ்வின் ஒளியாக அமைந்தவர். ஒளியாவது வாழும் போதில் உண்டாகும் பெருமை. நின்ற ஒளி திருக். 698 ஐங்குரவர் தந்தை, தமையன், ஆசிரியன், அறிவன், அரசன் என்பார். ஐங்கூந்தல்: ஐந்து + கூந்தல் = ஐங்கூந்தல். நாறைங்கூந்தல் -அகம். 65 ஐவகைக் கூறுபாடு அமைந்த கூந்தல்; அவை, 1. குழல் 2. அளகம் 3. கொண்டை 4. பனிச்சை 5. துஞ்சை. குழல் = நீண்டு வளர்ந்தது. அளகம் = அள்ளி முடிய அமைந்தது. கொண்டை = இறுக்கிக் கட்டி ஊசி குத்துவது. பனிச்சை = பல வகைப் பகுப்புடையது. துஞ்சை = முதுகில் வழிய விடுவது. கோதையார் மயிரும் மயில் தோகையும் கூந்தல் -பிங். 3417 ஐம்பால் என்பதும் இது. ஐந்து பகுதிப்பட்ட கூந்தல். ஐஞ்சுட்டு: முந்தியல் தமிழன் முதலாவது கை கால் சைகையையும், கண் சாடையையும், முகக் குறிப்பையும் கருத்து வெளியிடும் வாயில்களாகக் கொண்டிருந்து பின்பு, வாய்ச் சைகை காட்டு முறையில் சில ஒலிகளைப் பிறப்பித்தான். சேய்மைச் சுட்டாக வாயைப் படுக்கையாய் அகலித்த போது ஆ என்னும் ஒலியும், அண்மைச் சுட்டாக வாயைக் கீழ் நோக்கி விரித்த போது ஈ என்னும்ஒலியும், முன்மைச் சுட்டாக வாயை முன்னோக்கிக் குவித்த போது ஊ என்னும் ஒலியும், உயரச் சுட்டாக வாயை ஒடுக்கி நட்டுக்கு அகலித்த போது ஓ என்னும் ஒலியும் பிறந்தன. இவை வாய்ச் செய்கை ஒலிகள். பின்னர் வயிறார உண்டபின் அடி வயிற்றினின்று மேனோக்கி யெழும் காற்று ஏகார வடிவாய் வெளிப்பட்டதினின்று ஏ என்னும் ஒலி எழுகைச் சுட்டாகக் கொள்ளப்பட்டது. இங்ஙனம் ஆ ஈ ஊ ஏ ஓ என்னும் தனியொலிகளான ஐந்நெடில்களும் சுட்டொலிகளாக முதலாவது தோன்றின(சு.வி). ஐது: ஐ + து =ஐது =அரியது, மெல்லியது, உயர்ந்தது. ஐது தொடை மாண்ட கோதை -குறுந். 32 ஐதே காமம் -குறுந். 217 ஐந்தகம்: ஐந்து + அகம் = ஐந்தகம் ; ஐந்து பாடல்களைத் தன்னகத்துக் கொண்டதொரு சிற்றிலக்கிய வகை. ஒ.நோ: பத்துப் பாடல்களை யுடையது பதிகம். எட்டுப் பாடல் களை யுடையது எட்டகம் (அட்டகம்) ஐந்து என்பதும் இது. செந்தமிழ்ச் செல்வி ஐந்து, திருக்குறள் ஐந்து (பாவாணர் பாடல்கள் பக். 62 - 64) ஐந்தடக்கி: ஐந்து + அடக்கி = ஐந்தடக்கி = ஆமை. நான்கு கால்களையும் தலையையும் வேண்டும் போது உள்ளிழுத்து - சுரித்து - மேலோட்டுக்குள் மறைத்துக் கொள் வதால் ஐந்தடக்கி எனப்பட்டது. உறுப்படக்கி என்பதும் இது. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் -திருக். 126 ஐந்தடித்தல்: ஐந்து + அடித்தல் = ஐந்தடித்தல். அஞ்சடித்தல் எனக் கொச்சை வழக்கில் உள்ளது இது. ஐந்து = ஐம்பொறி. அடித்தல் = அடித்துப் போட்டது போல் செயலற்றுக் கிடத்தல். ஐம்பொறி .சோம்பிக் கிடப்பவனை அஞ்சடிச்சுக் கிடக்கிறான் என்பது நெல்லை வழக்கு. ஐந்தறிவு: ஐந்து + அறிவு = ஐந்தறிவு. வரையறுத்து வரையறுத்து அறியப் படுவது எதுவோ அது அறிவு ஆகும். அவை தொடுதலாம் உற்றறிவு அல்லது மெய்யறிவு; சுவையறியும் நா அறிவு; முகர்வதாம் மூக்கறிவு ; காணலாம் கண்ணறிவு ; கேட்டலாம் செவியறிவு என்பவை முறையே மெய் வாய் மூக்கு கண் செவி அறிவு என்பவை. ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே -தொல். 1526 ஐந்தறைப் பெட்டி: ஐந்து + அறை + பெட்டி = ஐந்தறைப் பெட்டி. சமையலுக்குத் தேவையாம் அரைசெலவுப் பொருள்களைப் போட்டு வைக்கும் பெட்டி ஐந்தறைப் பெட்டி எனப்பட்டது. அதில் மஞ்சள் சீரகம் மிளகு மல்லி பூண்டு என்பவை போடப்படும் கடுகு உப்பு முதலியவை தனித்தனியே வைக்கப்பெறும். இந்த ஐந்தறைப் பெட்டி ஐந்து என்றும் வழங்கப்பட்டது. ஐந்தும் மூன்றும் இருந்தால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள் என்பது பழமொழி. ஐந்து = ஐந்தறைப் பெட்டியில் வைக்கும் ஐந்து பொருள்கள்; மூன்று = பால் தயிர், நெய் என்பவை வெண்ணையும் மோரும் இவற்றுள் அடக்கம். ஐந்தாம் படை: ஐந்து + ஆம் + படை = ஐந்தாம் படை. முன்னாளில் காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை, யானைப்படை என நேருக்கு நேர் போரிடும் படைகள் நான்கிருந்தன. அவற்றை நாற்படை என்பர். அப்படை செய்யும் அழிவினும் இழப்பினும் மிகச் செய்வதொரு படை, காட்டிக் கொடுத்துப் பழிவாங்கும் உட்பகையாகிய படையாம் , ஆதலால் உட்பகையாம் காட்டிக் கொடுத்தலை ஐந்தாம் படை என்பது மக்கள் வழக்காயிற்று. படுப்பது (அழிப்பது) படை; எடுப்பது எடை, கொடுப்பது கொடை என்பவை போல. ஐந்தார்: ஐந்து + தார் = ஐந்தார் . தார் = பொருள். நுகர் பொருள் ஐந்தனையுடையது, பனை. அவை பனம்பழம், பதனீர் , பனாட்டு, கற்கண்டு, கிழங்கு என்பவை. இனி எழுது பொருளாம் ஏடும், வாரையும், சட்டமும், பெட்டி பொட்டான்,குடை முதலியனவும் கொடுக்கும் கொடைமரம் பனை ஆதலால் அதனைக் கற்பகம் என்றனர். ஐந்திணை: ஐந்து + திணை = ஐந்திணை. திணை = திண்ணியதாய நிலம், திண்ணியதாம் ஒழுக்கம். திணை:1 நிலம், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை. திணை:2 ஒழுக்கம், புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் (தொல். 948,951,960) திண் + மை = திண்மை > திணை. கற்பென்னும் திண்மை -திருக். 56 ஐந்திணைச் செய்யுள்: புணர்தல் பிரிதல் இருத்தல், இரங்கல், ஊடலாகிய ஐவகை ஒழுக்கங்களையும் விளக்கும் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் ஐந்து திணைகளையும் தெளிந்து கூறுதல் ஐந்திணைச் செய்யுளாகும். உரிப்பொருள் தோன்ற ஓரைந் திணையும் தெரிப்ப தைந்திணைச் செய்யு ளாகும் -இலக். பாட். 89 புணர்தல் முதலிய ஐந்துரிப் பொருளும் அணிபெறக் குறிஞ்சி முதலிய ஐந்திணை இணையும் இயம்புவ தைந்திணைப் பாவே -முத்துவீ. 1043 ஐந்திலக்கணம்: ஐந்து + இலக்கணம் = ஐந்திலக்கணம். தமிழ் இலக்கணம் முதற்கண் எழுத்து, சொல், பொருள் என மூன்றாக நடையிட்டது. எழுத்தும் சொல்லும் பொருளும் என்னும் தொல்காப்பியம் (பாயிரம்). பின்னர்ப் பொருள் இலக்கணக் கூறாகிய அகம், புறம் என்பவை பொருளிலக்கண மாகவும், செய்யுளியல் யாப்பிலக்கணமாகவும், உவமையியல் அணி இலக்கணமாகவும் தனித்தனியாகி ஐந்திலக்கணம் எனப்பட்டது. இதனை, எழுத்து முதலாம் ஐந்திலக்கணமும் தோய்ந்து பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து -கந். கலி. 119 என்றார் குமரகுருபரர் அகப்பொருள் புறப்பொருள் என்பனவும் தனித்தனிப் பாடு பொருளாயின. எழுத்தும் சொல்லும் சின்னூல் நன்னூல் முதலன; பொருள் இறையனார் களவியல் புறப்பொருள் வெண்பாமாலை முதலன; யாப்பு யாப்பருங்கலம், காக்கை பாடினியம் முதலன; அணி தண்டியலங்காரம், மாறனலங்காரம் முதலன; ஐந்திலக்கணமும் கொண்டவை இலக்கண விளக்கம். முத்துவீரியம் முதலன. மேலும், பாட்டியல் என ஓரியலுண்டாயது. பன்னிரு பாட்டியல், நவநீதப் பாட்டியல் முதலன. அறுவகை இலக்கணம் என ஒன்றை விரித்தார் வண்ணச் சரபம் தண்டபாணி அடிகள் புலமை இலக்கணம் என்பது அது. ஐந்து: ஐந்து:1 ஐந்து என்னும் எண். பத்து நூறு முதலியவற்றின் அடி எண். ஐந்து:2 அகவை. ஐந்திலே வளையாதது ஐம்பதில் வளையுமா? என்பது பழமொழி. ஐந்து:3 சமையல் பொருள் ஐந்து. * ஐந்தறைப் பெட்டி காண்க. ஐந்தை: ஐ > ஐந்தை = கடுகு. ஐ வியப்புப் பொருளது (தொல். 868) உருவால் சிறியதாய் பெரியதாய் அமைவது வியப்பாம். கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பது பழமொழி. கடுகு பொரிதல் விரைவு, கடுகுதல் (விரைதல்) கடி (உரிச்சொல்) என்பவற்றின் அடிச்சொல் ஆயது. ஐந்தொழில்: ஐந்து + தொழில் + ஐந்தொழில். இயற்கை இறைமையின் இயங்கியல் வகையாக நிகழும் படைப்பு, காப்பு, மறைப்பு, அழிப்பு, அருளல் என்பவற்றை ஐந்தொழில் என்பர். சமயம் சார்த்துதல் சமயவாணர் வழக்கு. ஐமார்: ஐ + மார் = ஐமார் = உடன்பிறந்த தமையன்மார். மாட்சியர் அவரிவள் தன்ஐ மாரே -புறம். 342 ஐம்படை விருத்தம் (ஐம்படைப்பா): சக்கரம், வில், வாள், சங்கு, தண்டு ஆகிய ஐம்படைகளையும் அகவல் விருத்தத்தால் பாடுவது ஐம்படை விருத்தம் எனப்பெறும். திருமால் காக்க எனும் பொருட்டாகக் குழந்தைகளுக்கு அணிவிக்கும் ஐம்படைகள் இவை என்க. சக்கரம் தனுவாள் சங்கொடு தண்டிவை ஐம்படை அகவல் விருத்த மாகும் -பன்னிரு. 291 திருவரங்கத் திருவாயிரத்திலுள்ள ஆயுத பஞ்சகம் இவ்வைம்படை விருத்தமாம். ஐம்பால்: ஐம்பால்:1 பால் = பகுப்பு, பக்கம். எ-டு: அறத்துப்பால் (பகுப்பு) மேல்பால்(பக்கம்). ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின் பால் என்பவை அவை. ஐம்பால் மூவிடம் -நன். 142 ஐம்பால்:2 பால் = பகுப்புடைய கூந்தல். ஐம்பால் = ஐந்து பகுப்புடைய கூந்தல். புயலெனப் புறந்தாழ்வு இருளிய பிறங்குகுரல் ஐம்பால் -அகம். 126 பொருள்: மேகம் எனும்படி முதுகில் தாழ்ந்து இருண்டு விளங்கும் கொத்தாய ஐந்து பகுப்பையுடைய கூந்தல் ஐம்பாலார் = மகளிர். மணங்கமழ் ஐம்பாலார் -கலித். 131 * ஐங்கூந்தல் காண்க. ஐம்புலன்: ஐந்து + புலன் = ஐம்புலன். புல் = பொருந்துதல். பொறி, பொருளைப் பொருந்தி நின்று அறியும் இயல்பினது. அது புலன் ஆகும்; புலம் என்பதும் அது பொறிபுலன், இணைச்சொல் புலன் வழியாக உண்டாவது புலமை ஐம்புலன். கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள -திருக். 1101 * ஐம்பொறி காண்க. ஐம்பூதம்: ஐந்து + பூதம் = ஐம்பூதம். பூ > பூதம் என விரிவடைந்தது ஒன்றில் இருந்து ஒன்றாக விரிவடைந்த இயற்கை அது. அவை வெளி, வளி, ஒளி, நீர், நிலம். உருவறி வாரா ஒன்றன் ஊழியும் உந்துவளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும் செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற் றுண்முறை வெள்ளம் மூழ்கி யார்தருபு மீண்டும் பீடுயர் பீண்டி அவற்றிற்கும் உள்ளீ டாகிய இருநிலத் தூழியும் -பரிபா. 2 நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் -தொல். 1589 ஐம்பெருங்குழு: ஐ + பெருமை + குழு = ஐம்பெருங்குழு. ஆட்சித்துணையாய்ப் பண்டை நாளில் அமைக்கப்பட்ட ஐவகைக் கூட்டத்தார் அவர் ஒற்றர், படைத்தலைவர், தூதர், காலக்கணியர், அமைச்சர் என்பார். ஐம்பொறி: ஐந்து + பொறி = ஐம்பொறி. உள்வாங்கலும் வெளிவிடலும் முதலாம் இயக்கங்களை யுடையது பொறி. மெய், வாய், கண், மூக்கு, செவி என்பவை. அவை பொறிகளால் உண்டாகும் அறிவு, புலன் ஆகும். பொறிகளின் செயற் புலப்பாடே அவையாம். பொறிவாயில் ஐந்து -திருக். 6 * ஐம்புலன் காண்க. ஐம்மை: ஐ + மை = ஐமை = அழகமைந்தது. அரியும் தகடும் அடரும் ஐம்மை -பிங். 2237 ஐ = அழகு; வியப்புறச் செய்வது. வியப்பாகும்-தொல். 868 அரி = செவ்வரி; தகடு = இளந்தளிர். அடர் = பொற்றகடு. ஐயம்: ஐ + அம் = ஐயம். வியக்கத்தக்க வகையில் ஒன்றை ஒப்பத் தோன்றி, ஊன்றி நோக்கிய போது அதுவாகவோ அன்றாகவோ உண்மை புலப்படும் காட்சியும் கருத்தும் ஐயமாம். ஒரு பொருண்மேல் இருபொருட் டன்மை கருதிவரும் மனத்தடுமாற்றம் (தொல். பொருள் 260 போர) ஐவியப் பாகும் -தொல். 868 ஐயப் படாஅ தகத்த துணர் வானை -திருக். 702 குற்றியோ மகனோ தோன்றும் உரு? -நன். 385. சங் ஐயத்தால் வரும் வினா உண்மை உணர்தற்கும் கோடற்கும் வரும் (மயிலை). * வினாவகை காண்க. ஐயம்பிடுங்கி: குறி கூறுதல் என்பது வருபவர் முகக்குறி சொற்குறி கொண்டு கூறுவதே யாகும். குறிகண்டு கூறுவார் குறி கூறுவார் ஆவர். குறிப்பறிதல், குறிப்பறிவுறுத்தல் என்பவை திருக்குறள் அதிகாரத் தலைப்புகள். கொண்டுவரும் செய்தியை யறிந்து அதற்குத் தக்கவாறு கூறுபவர் ஆதலால், கோள் + தாங்கி = கோடாங்கி எனப்படுவார். குறிகேட்டு வருபவர் கேட்கும் ஐயத்தை வாங்கிக் கொண்டு நம்பும் வகையால் குறி கூறுதலால் குறிகாரரை ஐயம் பிடுங்கி என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும். ஐயர்:1 திருமணம் முதலாம் கரணங்களை அமைத்த அறிவினர்; தலைமையர். பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப -தொல். 1091 ஐயர்:2 தமையன்மார். பன்மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய எந்தையும் செல்லுமார் இரவே -அகம். 240 ஐயர்:3 முனிவர். ஆசறு காட்சி ஐயர் -குறிஞ்சிப். 18 ஐயர்:4 அந்தணர். வையைதேம் மேவ வழுவழுப் புற்றென ஐயர்வாய் பூசுறார் ஆறு -பரி. தி. உ. ஐயர்:5 கணவர். குறவர் மடமகளிர் தாம்பிழையார் கேள்வர்த் தொழுதெழலாற் றம்மையரும் தாம்விழையார் தாம்தொடுத்த கோல் -கலித். 39 ஐயர்:6 கொங்குநாட்டில் அப்பா என்னும் முறைப்பெயர் ஐயர் என்றும் ஐயார் என்றும் மிக இயல்பாக வழங்கப் படுகிறது. ஐயவி: ஐ > ஐயவி= கடுகு. கடுகின் சிறுமையும் அது வெடிக்கும் பெருமையும் சுவை யேற்றும் நலமும் கண்டு வியந்தவர் ஐயவி என்றனர் ஐ = வியப்பு. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பது பழமொழி. ஐயவி அன்ன சிறுவீ ஞாழல் -குறுந். 50 * ஐந்தை காண்க, ஐயா: ஐயா என்னும் விளிச்சொல் தென் தமிழகப் பகுதியில் மதிப்பு மிக்க சொல். ஆனால் சென்னைப் பகுதியில் அப்பா என்னும் சொல்லே மதிப்புமிக்க சொல். இச்சொல் வழக்கு அறியாமல் பேசுவதால் இடர்ப்பாடு உண்டாதலும் கண்கூடு. ஐயுணர்வு: ஐந்து + உணர்வு = ஐயுணர்வு மெய் வாய் மூக்கு கண் செவி யுணர்வு. உணர்வு என்பது. அறிவும் தெளிவும் ஓழிவும் உணர்வெனல் -பிங். 3191 ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு -திருக். 354 ஐயறிவு என்பதும் இது. ஐயோ: ஐ ஓ. வியப்புக்குறி. மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ ஐயோஇவன் என்பதோர் அழியா அழ குடையான் -கம்ப. அயா. 6:1 ஐயாவோ என்பது அவலப் பொருள் தருவது. ஐயாவோ என்று அழுவோன் முன்னர் -மணி. 8:43 ஐயகோ என்பதும் இது. ஐவகைத்தாயர்: பெற்றதாய் ஒருவர் எனினும் பேணுதாய் நால்வர் செல்வக் குடிகளில் இருந்தனர். அவர். 1. வளர்ப்புத் தாயாம் செவிலித்தாய். 2. ஊட்டி வளர்க்கும் ஊட்டுத்தாய். 3. தாயில்லா அல்லது நோயுற்ற தாயின் பிள்ளைக்குப் பாலூட்டு தாய். 4. தூக்கி எடுத்து ஆடல் பாடல் காட்டும் கைத்தாய். என்பார். வறியர் வாழ்வில் ஐந்தாயரும் ஒரு தாயரேயாம். ஐவணம்: ஐ + வணம் = ஐவணம். ஐ = அழகு; வண்ணம் > வணம் = நிறம். அழகிய நிறத்தது ஐவணம். ஐவணம் = மருதேன்றி பச்சை வண்ண இலை எனினும் அரைத்து நகம், உள்ளங்கை முதலியவற்றில் அப்பினால் அழகிய சிவப்பாகத் தோன்றுவது ஒப்பனைப் பொருளாக ஆவது. ஐவணை என்பதும் இது. * ஐவணை காண்க. ஐவணை: ஐந்து விரல்களுக்கும் ஆழி (மோதிரம்) போடுதலை ஐவணை என்பது உசிலம்பட்டி வட்டார வழக்கு. திருமணத்தின் போது பூட்டப்படுவது அது. வணை என்பது வளைவு (மோதிரம்) குறித்தது. வணங்குதல் = வளைதல். ஐவண்ணம்: ஐ + வண்ணம் = ஐவண்ணம். நெல்லைக் குற்றுவதற்கு வழங்கிக் குற்றியபின் ஐவண்ணமாக அளந்து பெறுதல். அவை அரிசி, நொய், நொறுங்கு, தவிடு, உமி. (க.க.சொ.அ) ஐவளம்: ஐ + வளம் = ஐவளம் = ஐந்து வகையான மலைவளம். அரக்கு, இறலி, செந்தேன், மயிற்பீலி, நாவி என்பவை -பரிபா. 18 உரை. ஐவனம்: ஐ + வனம். மலையில் கிடைக்கும் வியப்பான பொருள். நெல் மருதத்தில் கிடைக்கும். நெல், மலை மேல் கிடைத்தல் வியப்பு இல்லையா? பயிரில் வரும் நெல், மூங்கிலில் வருவது மேலும் வியப்பு இல்லையா? அதனால் ஐவனம் எனப்பட்டதாம். இதனை வெதிர் நெல் என்பதும் உண்டு. வத்தாத நெல்லின் -யா. வி. 62 மேற். சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே -புறம். 109 புல்லிலை வெதிர நெல்லிளை காடே -அகம். 367 வெதிர் = மூங்கில். ஐவாந்தழை: மகிழ்வாக வாழும் வாழ்வின் அடையாளங்களுள் ஒன்று மருதோன்றி. அரைவையைப் பூசி கால், கைகளைச் சிவப்பேற்றல். இனிய வாழ்வின் அடையாளமாகக் கொள்வதால் மருதோன்றி நெல்லை வட்டாரத்தில் ஐவாந்தழை என வழங்கப் படுகின்றது. ஐ = அழகு. வாழும் என்பதில் ழு மறைந்து விட்டது. வீழ்வு - வீவு என்றும் வாழ்வாசி வாவரசி என்றும் வழங்கப்படுவதை நோக்கலாம். ஐவிரலி: ஐந்து விரல்களைக் கொண்ட கையொப்ப இருப்பதும் சிவந்த நிறத்ததுமாம் காந்தள் பூ ஐவிரலி எனப்படும் (மக்கள் வழக்கு). வெண்காந்தள் செங்காந்தள் என இருவகை இருத்தலால், செங்காந்தள் குருதிப்பூ (செம்பூ) எனப்படும். குருதிப் பூவின் குலைகாந் தட்டே -குறுந். 1 தீவிரி காந்தள் என்பது பாண்டிக் கோவை (இறைய) காந்தட்டு = காந்தளையுடையது.  ஒ வரிசை சொற்கள் ஒ: அகரவரியில் ஒன்பதாம் எழுத்தும், ஐந்தாம் குறிலும் ஆகியது. ஒ என்னும் ஒகரம். இற்றை ஒகரம் பண்டு ஓகார நெடிலாக இருந்தது. ஒகரத்தின் மேல் புள்ளியிட்டால் அந்நாளில் ஒகரம் எனப்பட்டது. தொல்லை வடிவின எல்லா எழுத்துமாண் டெய்தும் எகர ஒகரம் மெய்புள்ளி -நன். 98 புள்ளி பெறும் எழுத்துகள் எகரம், ஒகரம், மெய் என்றமை யால் ஒகரம் புள்ளி பெற்றுக் குறிலாக இருந்தமை தெளிவாம். இதனை விளக்கும் வகையில், நேரிழையார் கூந்தலினோர் புள்ளிபெற நீள்மரமாம் என்று தண்டியலங்காரம் ஓர் எடுத்துக்காட்டுக் காட்டியது (97). கூந்தல் ஓதி (பழநாளில் ஒதி). அக்கூந்தல் (ஓதி) ஓதி மேல் புள்ளி வைத்தால் ஒதி யாகிவிடும் ஒதி = மரம். ஒக்க: ஒக்க:1 ஒருமிக்க, ஒரு மொத்தமாக. ஒக்கக் கொண்ட காசு -க.க.சொ. அ. ஒக்க:2 ஒன்றுபட்டு. ஒக்கக் கூடிக் கொண்டு ஊரே நின்றது என்பது மக்கள் வழக்கு. ஒக்கலை: குழந்தையரைத் தம்மோடு ஒக்க அணைத்துக் கொண்டு இருக்கச் செய்யும் இடுப்பு; மருங்கு. ஒக்கலை மேலிருந் துன்னையே சுட்டிக் காட்டுங்காண் -நாலா. 57 ஒக்க வைத்து இடுக்கிக் கொள்ளும் இடம் ஒக்கலை. ஒக்கல்: ஒரு குடி வழியில் பிறந்து, கொண்டும் கொடுத்தும், கேளும் கிளையுமாய் வாழ்பவர் ஒக்கலாம். தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங் கைப்புலத்தார் ஓம்பல் தலை -திருக். 43 ஒக்கிடுதல்: ஒக்க + இடுதல் = ஒக்கவிடுதல் > ஒக்கிடுதல். ஒரு பொருள் பழுதாகிவிடுமானால், அப்பழுது நீக்கி அது முன்னிருந்த நிலைக்கு ஆக்குதல் ஒக்கிடுதலாம். முன் இருந்ததொப்பச் செய்து மீளப் பயன்படுத்த ஆக்குதலே ஒக்கிடுதல் என்க. பலப்பல பொருள்களையும் ஒக் கிட்டுத் தருவார் ஊர்தோறும் உளர். ஒசியல்: ஒசி > ஒசியல். ஒசி = வளைவு; ஒடிதலுக்கு முன்னாம் நிலை, ஒசிவு. பெருங்களிறு வாங்க முரிந்துநிலம் படாஅ நாருடை ஒசியல் -குறுந். 112 பொருள்: பெரிய களிறு உண்ணும் பொருட்டு வளைக்க வளைந்து நிலத்தில் படாத பட்டையை உடைய ஒடிந்த கிளை உரை உ.வே.சா. ஒச்சம்: ஒச்சம் = குற்றம். மாடு பிடிப்பவர் மாட்டில் சுண்டு, சுழி, பல், நடை, கொம்பு, வால் முதலியவற்றைப் பார்வையிட்டு, ஒன்றும் குறை இல்லை என்றால் ஒச்சம் எதுவும் இல்லை; வாங்கலாம் என்பர். ஒச்சம், குறை என்னும் பொருளதாம். உழவர், தரகர் வழக்கு இது. உள்ள குறையை ஒளித்து (ஒளிச்சு)க் காட்டும் குறை ஒச்சம். ஒளிச்சு + அம் = ஒளிச்சம் - ஒச்சம். ஒஞ்சரித்தல்: ஒருச்சரித்தல் > ஒஞ்சரித்தல் = ஒரு பக்கமாகச் சரிதல். ஒரு பக்கமாகச் சாய்ந்து படுத்தல். ஒஞ்சரிப்பாகப் படுத்தால் இன்னும் ஒருவர் படுக்கலாம் என்பது மக்கள் வழக்கு. ஒருச்சாய்தல் என்பதும் இது. ஒடக்கான்: ஓணான் என்னும் ஊரியை ஒடக்கான் என்பது கொங்கு நாட்டு வழக்கு. பாறை மரம் ஆகியவற்றை ஒட்டிக் கிடப்பதால் ஒடக்கான் எனப் பெயர் பெற்றதாகலாம். ஒடு, ஓடு என்பவை ஒன்றோடு ஒன்று இணைக்கும் இணைப்புச் சொற்கள். ஒடு - ஒடக்கு - ஒடக்கான். ஒடம்படி: ஒடம்படி:1 உடன்படி > ஒடம்படி > ஒடம்படி = மாடியுடன் படிவது; ஏணி. மாடியில் ஏறுவதற்குப் படிக்கட்டு அமைக்காமல், ஏணிப்படி அமைத்து, அவ்வேணியை மாடித்தளத்தில் சார்த்தி, அதன் வழியாக ஏறும் வாயில் ஒடம்படி வாயில் என்றும், படி, ஒடம்படி என்றும் வழங்கப்படுதல் நெல்லை, முகவை மாவட்ட வழக்குகள். அவ்வாயில் அடைப்பு, பூட்டு உடையதாக இருத்தலும் உண்டு மாடியுடன் பொருந்திய படி உடன்படி என வழங்கி ஒகரத்திரிபு பெற்றிருக்கும் இது நாஞ்சில் நாட்டு வழக்கிலும் இருத்தலால் தென்தமிழக வழக்கு எனலாம். ஒடம்படி:2 மாதந்தோறும் பெறும் படியை ஒடம்படி என்பது நாஞ்சில் நாட்டு வழக்கு. உடன்பட்டு ஏற்றுக் கொண்ட தொகை உடம்படி எனப்பட்டு ஒடம்படி என உகர ஒகரத்திரிபாகி இருக்கும். உடன்படிக்கை - உடம்படிக்கை - ஒடம்படிக்கை என்பவற்றை நினைக. உடன்பாடு என்பது உடம்பாடு என வருதலை வள்ளுவத்தில் காணலாம். உடம்பாடு இலாதவர் வாழ்க்கை -திருக். 890 ஒடியல்: ஒடி + அல் = ஒடியல் = பனங்கிழங்கு ஒடித்துத் தின்னுமாறு அமைந்த கிழங்கு ஆதலால் பனங்கிழங்கு ஒடியல் எனப்படும் அதனை மாவாக ஆட்டினால் ஒடியல் மா என்பார். ஒடியன்: ஒடியன் என்பது பனங்கிழங்கைக் குறிக்கும் சொல்லாக யாழ்ப்பாண வழக்கில் உள்ளது. கிழங்கை ஒடித்துத் துண்டாக்கிப் பயன்படுத்துவதால் ஒடியன் என்பதாம். ஒடிவை: ஒடி + வை = ஒடிவை. ஒடிந்து - இடைவெளிபட்டு - உண்ணல். ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு -அகம்.301 பொருள்: இடையறல் இன்றிப் பொருளைப் பாதுகாவாது உண்டு வேங். விள . ஒடுக்கம்: ஒடுக்கம்:1 ஒடுங்கிய நிலை; ஒடுங்கிய = மறைந்த இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந் திருந்த வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய் -புறம். 259 ஒடுக்கம்:2 அவன் அடக்க வொடுக்கமான பிள்ளை என்பது மக்கள் வழக்கு. அமைதியாம் அடக்கம் போற்றுவதோடு, அடாத்தனம் எதுவும் செய்யாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வது. ஒடுக்கம்:3 துறவியர் அடக்கமாகிய இடம். ஒடுக்கமான - குறுகான - இடம் . ஒடுக்கம் என்று சொல்லப்படும். அடக்கத்தின் பின்னர் நிகழ்வது ஒடுக்கம். அதனால் அடக்க ஒடுக்கம் என்னும் வழக்கம் உண்டாயிற்று. அடக்கம் அடங்கும் தன்மையைக் குறியாமல் மூச்சை முழுவதாக நிறுத்தி விடுவதைக் குறிப்பது போல், ஒடுக்கம், ஒடுங்கிய இடத்தைக் குறியாமல், அடங்கிவிட்டவர்களை ஒடுக்கி வைக்கப்பட்ட புதை குழி மேடையையும், அதனைச் சூழ எழுந்த கட்டடப் பகுதியையும் குறித்து வழங்கலாயிற்று. துறவியர்களின் ஒடுக்கங்கள் தமிழகத்தில் பலப்பல இடங்களில் இருப்பதும், ஆங்கு வழிபாடுகள் நிகழ்வதும் கண்கூடு. சில ஒடுக்கங்கள் சிவலிங்கக் குறியுற்றுக் கோயிலாதலும் உண்டு. ஒடுக்கான்: ஒடுக்கு + ஆன் = ஒடுக்கான் = ஆமை. தலையையும் கால்களையும் முதுகு ஓட்டுக்குள் ஒடுக்கிக் கொள்வதால் ஆமை ஒடுக்கான் எனப்பட்டது. உறுப்படக்கி என்பதும் இது. * ஒடக்கான் காண்க. ஒடுக்கு: ஆட்சியாளர் மக்களுள் மாறுபட்டாரையோ தமக்கு ஆகாதவரையோ ஒடுக்குதல் ஒடுக்கு ஆகும். ஒடுக்கெடுத்தல்: ஒடுக்கெடுத்தல்:1 சுடக்குப் போடுதல் என்பதை ஒடுக்கெடுத்தல் என்பது வழக்கு. விரலை நீட்டி மடக்கிச் சடக்கென அல்லது சுடக்கென ஒலிவரச் செய்வது சுடக்கு - சொடக்கு - என்பது. அது ஒடுங்கிய அல்லது சுருங்கிய நரம்பை இழுத்து நீட்டி விடுதல் ஒடுக்கு(சுடக்கு) எடுத்தல் எனப்படுகின்றது. ஒடுக்கெடுத்தல்:2 ஈயம் பித்தளை முதலாம் கலங்களின் வளைவு குழி முதலியவற்றைச் செப்பப்படுத்தல் ஒடுக்கெடுத்தல் எனப்படும். ஒடுங்கி: ஊழியழிவில் எல்லாவற்றையும் தன்னுள் ஒடுக்கும் இறையை ஒடுங்கி என்பது சிவனியம்(சிவஞான போதம்.1) ஒடுங்குதல்: வெளிப்படாது மறைந்திருத்தல், மெலிதல் ஆயவை ஒடுங்குதல் ஆகும். ஒட்டகம்: ஒட்டு + அகம் = ஒட்டகம். அகம் = உள், வயிறு. ஒட்டிய வயிற்றையுடையது ஒட்டகம். குறைந்த அளவு உணவையும் நீரையும் உட்கொண்டு வறண்ட பகுதிகளில் மிகுந்த தொலைவு பயணம் செய்யும். ஒட்டகங்களால் மாதக்கணக்கில் நீரில்லாமல் வாழ முடியும் (அறி.கள. 6:518) குறும்பொறை உணங்கும் ததர்வெள் ளென்பு கடுங்கால் ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும் -அகம். 245 அல்குபசி = எடுக்கும் உணவு மிகக்குறைதலால் உண்டாகிய மிக்கபசி. ஒட்டை என்பது இது (வெ.வி.பே) . ஒட்டை- வயிறு ஒட்டிக் கிடத்தல். ஒட்டடை: ஒட்டு + அடை = ஒட்டடை. சுவர் முகடு முதலியவற்றை ஒட்டி அடைந்த பூச்சி புழுக்கூடு சிலந்திவலை, தூசிதும்பு ஆயவை ஒட்டடையாம். ஒட்டி அடைவது ஒட்டடை. ஒட்டறை என்பது பிழைவழக்கு. ஒட்டடை தட்ட உதவும் துடைப்புக்கம்பு, ஒட்டடைக்கம்பு. இதுகால் ஒட்டடையை உறிஞ்சி பொறியை அறிவியல் தந்துள்ளது. ஒட்டணி: ஒட்டு + அணி = ஒட்டணி. கருதிய பொருள்தொகுத் ததுபுலப் படுத்தற்கு ஒத்ததொன் றுரைப்பின் அஃ தொட்டென மொழிப -தண்டி.52 சொல்ல நினைத்ததைச் சொல்லாமல் அதனை ஒட்டிய ஒன்றைக் கூறிக் கூற வந்த பொருளை அறியச் செய்வது ஒட்டணி பிறிது மொழிதல் என்பதும் அது. கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து என்னும் குறள்(496).இடமறிந்து செயலாற்றச் கூறியதாதல் அறிக. ஒட்டப்போடல்: பட்டுணி போடல். ஒட்ட - வயிறு ஒட்ட வயிற்றுக்குச் சோறு தீனி இல்லாக்கால் குடர் ஒட்டி, வயிறும் ஒட்டிப் போம். ஒரு வேளை - ஒரு நாள்-பட்டுணி என்பதின்றிப் பலநாள் பட்டுணி என்றால் முதுகு எலும்பொடு வயிற்றுத் தோலும் ஒட்டிப் போனது போல் குடைபட்டுப் போகும். அதனை ஒட்டப் போடுதல் என்பர். உன்னை ஒட்டப் போட்டால்தான் ஒழுங்குக்கு வருவாய்; வேளை தவறாமல் வயிறு முட்டப் போட்டால் சரிப்பட மாட்டாய் எனத் திட்டுவர். பட்டு என்பது இடை இடைவிட்டு. உணி=உண்பது. இடை இடை விட்டு- பல வேளைகள் சில நாள்கள் இடைவிட்டு- உண்பதே பட்டுணியாம். * பட்டுணி காண்க. ஒட்டர்: ஒட்டர தேயத்தார் ஒட்டர் எனப்பட்டனர். அங்கிருந்து இவண் வந்த மாடு ஒட்டான்மாடு > ஒட்டாமாடு ஆயது. ஒட்டர் நத்தம் > ஒட்டநத்தம். பழம் பொதினியாம், பழனி சார்ந்தது அது. ஒட்டர் பெரிதும் கற்றச்சராக உளர். ஒட்டாரம்: ஒட்டு + ஆரம் ஒட்டாரம். எடுத்துக் கொண்ட கருத்து ஏறுக்குமாறாக- முரணாக - இருந்தாலும் அதனை விடாப்பிடியாகக் கொள்வது ஒட்டாரம் ஆகும். விடாப்பிடி வாதம் முரண்டு என்பனவும் இது. ஒட்டாரம் பேசுவதை நீ எப்பொழுதுதான் விடுவாயோ! உனக்கே வெளிச்சம் என்பது மக்கள் வழக்கு. ஒட்டி: ஒட்டி:1 ஒட்டு + இ = ஒட்டி. ஒட்டிய திறத்தவர் இருவர் தங்களுக்குள் திறவர் என்பதைக் காணவும் காட்டவும் செய்யும் போட்டி அல்லது பந்தயம் ஒட்டி என்பதாம். ஒட்டி எட்டிப் பிடித்திட்ட அம்மனை -மீனா. பிள். 79 ஒட்டி = பந்தயம் கூறி. ஒட்டி:2 ஒட்டி = ஒன்று ஒட்டிக்கு இரட்டி உழவு, ஒட்டிக்கு இரட்டி வேலை என்பவை மக்கள் வழக்கு. ஒட்டி:3 ஒட்டுவார் ஒட்டிநோய். சுவரொட்டி(ஆட்டிறைச்சியுள் ஒரு வகை) என்னும் ஊன், சுவரொட்டி விளக்கு, சுவரில் ஒட்டும் விளம்பரம் என ஒட்டுவன. ஒட்டியாணம்: ஓர் அணிகலம். இறுக்கிக் கட்டிய உடையை ஒட்டி மேலும் இறுக்கிக் கட்டிய இடை யணிகலம் ஒட்டி ஆணமாம். யாண் = அழகு. யாணுக் கவினாகும் -தொல். 864 யாணு > ஆணு > ஆணம். அழகுக்கு அழகு செய்யும் அணி ஆகலின் ஒட்டியாணம் எனப்பட்டதாம். ஒட்டியும் வெட்டியும்(கூறுதல்): ஒட்டி = ஓராற்றான் இயைந்து கூறுதல். வெட்டி = நேர்மாறாக மறுத்துக் கூறுதல். ஒட்டிப் பாடவோ? வெட்டிப் பாடவோ? என்பது புகழேந்தியார் வினா! ஒட்டக்கூத்தர் அரசவைப் புலவர்; ஆதலால் அவர்க்கு இறக்கம் வாராதிருக்க இரக்கம் கொண்ட சோழன், ஒட்டிப் பாடுக என்றது புலவர் புனைவுச் செய்தி. ஒட்டுதலும் வெட்டுதலும் எதிரிடை என்பது வெளிப்படை . வெட்டுதலும் ஒட்டுதலும் தையற் கலையாக விளங்குதல் கண்கூடு. ஒட்டு: ஒட்டு:1 ஒட்டுவதற்குரிய உருபை வேண்டி நிற்கும் தொகைச்சொல் ஒட்டாகும் வேற்றுமைத் தொகை, வினைத்தொகை பண்புத் தொகை , உவமைத் தொகை உம்மைத் தொகை, அன்மொழித் தொகை என அவை ஆறு (தொல். சொல். 1 இளம்.) ஒட்டு:2 ஒன்றோடு ஒன்று அல்லது ஒருவரோடு ஒருவர் ஒட்டுவது ஒட்டு ஆகும். செவியில் அணியப்படும் தோடு என்னும் அணிகலத்தை ஒட்டு என்பது செட்டிநாட்டு வழக்கு. ஒட்டியது போல் அணிவதால் ஒட்டு ஆகச் சொல்லப்பட்டிருக்கும். இனிப் பொன்னோடு மணியை ஒட்டிச் செய்யப்படும் அணி, தோடு ஆதல் கொண்டும் அப்பெயர் பெற்றிருக்கலாம். ஒட்டு:3 ஒரு செடியொடு அல்லது மரத்தொடு மற்றொரு செடியை அல்லது மரத்தை ஒட்டுவது ஒட்டு எனப்படும். ஒட்டுக் கன்று ஒட்டு மா என்பன பெருவழக்கு. வேளாண் அறிவியல் கொடை ஒட்டாகும். ஒட்டுக்குடி: ஒட்டு + குடி = ஒட்டுக்குடி. ஒருவர் குடும்பத்தை ஒட்டியிருந்து அக்குடும்ப உதவியால் வாழும் குடி ஒட்டுக்குடி எனப்படும். ஒட்டுக்குடி ஓரக்குடி என்பது இணைமொழி. ஒட்டுண்ணி: ஒட்டு + உண்ணி = ஒட்டுண்ணி. மரம் செடி கொடிகளைப் பற்றி அழிக்கும் மாவுப் பூச்சியை அழிக்க ஒட்டுண்ணி என்னும் மருந்து கண்டுபிடித்துள்ளனர். x£oa ó¢áia c©gjhš - mÊ¥gjhš - x£L©Â vd¥g£ljh«.(ntsh©Jiw) ஒட்டுப்பலகை: ஒட்டு + பலகை = ஒட்டுப்பலகை. செயற்கையால் உண்டாக்கப்பட்ட மரத்தகடுகளை ஒட்டி மரப்பலகை அல்லது மரச்சட்டம் போல் செய்தது ஒட்டுப் பலகையாம். பிளைவுட் என்பது அது. ஒட்டுப்போடல்: கிழிந்த துணியையும் உடைந்தவற்றையும் தைத்தும் சேர்த்தும் ஆக்குவதை ஒட்டுப்போடல் என்பது மக்கள் வழக்கு. ஒட்டுறவு: ஒட்டு = குருதிக் கலப்பு நெருக்கம் உடையவர் ஒட்டு. அவரவர் உற்றார். உறவு = கொண்டும் கொடுத்தும் உறவு ஆயவர், உறவு. தாய் தந்தை உடன்பிறந்தார் மக்கள் என்பார் ஒட்டு ஆவர். கொண்டு கொடுத்த வகையால் நெருக்கமாவார் உறவு ஆவர். இனி உற்றார் உறவு என்பதில் உற்றார் எனப்படுவார் ஒட்டு என்க. கேளும் கிளையும் என்பதிலும் கேள் என்பது ஒட்டையும் கிளை என்பது உறவையும் குறிக்கும். ஒரு வேரில் இருந்து நீர்பெறும் மரம் செடிகள் ஒட்டு எனப் பெறல். அறிக ஒட்டார் = பகைவர் எனப்படுவார். * உற்றார் உறவு காண்க. ஒண்டிக்கட்டை: ஒற்றையாள் தவிர எவரும் இல்லாத குடித்தனம் ஒண்டிக்கட்டை எனப்படுதல் நெல்லை முகவை வழக்கு. அதனை ஒற்றைப் பேரன் என்பதும் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி என்பது உத்திக்கு உத்தி என்பது போன்றதாம். இது சிறுவர் விளையாட்டு வழக்கு. ஒண்டு: ஒண்டு > ஒண்டி = தனிமை. ஒண்டியான் ஒண்டிக்காரன், ஒண்டிக்கட்டை, ஒண்டி சண்டி முதலிய வழக்குகளை நோக்குக (வேர்ச். கட். 110) ஒண்டுக்குடி ஒட்டுக்குடி: ஒண்டு (ஒன்று)க் குடி = வீட்டோடு வீடாக வைத்துக் கொண்டுள்ள குடும்பம் ஒண்டுக்குடி. ஒட்டுக்குடி = வீட்டுக்கு அப்பால், எனினும் வீட்டின் எல்லையுள் தனியே வைக்கப்பட்டுள்ள குடும்பம் ஒட்டுக்குடி. ஒன்றாகிய குடும்பத்தின் சமையல் வரவு செலவு முதலியவை எல்லாம் ஒன்றாயவை. ஒட்டுக்குடியில் அவையெல்லாம் தனித்தனியானவை. ஆனால் வீட்டு எல்லைக்குள் இருத்தல் என்னும் இட நெருக்கம் மட்டுமே ஒரு வீட்டுத்தன்மை குறிப்பதாம். ஒண்ணடி மண்ணடி: ஒண்ணடி = ஒன்று மண்ணடி = மண். அடி என்பது அடியைக் குறிக்காமல் சார்ந்த இடத்தைக் குறித்து வந்தது மரவடி தேரடி செக்கடி என்பவற்றை அறிக. எந்த ஒன்றுக்கும் மண்ணுக்கும் உள்ள சார்பு மிக அழுத்தமானது. விட்டுப் பிரியாத, விட்டுவிட இயலாத சார்பு; ஒருகால் விட்டு விலகினும் எதிர்ப்பாற்றலால் நேர்வதுஅது. பின்னே ஒருகால் அவ்வெதிர்ப்பாற்றல் விலகியதும் பற்றி நிற்கும் ஈர்ப்பு அதற்கு உண்டு. இணைந்திருக்கும் உறவுகளை ஒண்ணடி மண்ணடி என்பர். எப்படி ஒண்ணடி மண்ணடியாக இருந்தார்கள்; இப்படிச் சண்டை போடுகிறார்களே என்பர் வேறுபாடன்மை சுட்டுவது ஒண்ணடி மண்ணடியாம். ஒண்மை: ஒள்( ஒண்) + மை = ஒண்மை = ஒளியுடையது. ஒள் + ஒளி = ஒள்ளொளி ; பேரொளி. ஒளியில் அழகுண்மை இக்காலச் சர மின் விளக்குக் காண்பார் அறிவர். ஒதி: ஒதிய மரம். பலகை சட்டம் முதலியவற்றுக்கு உதவாததென ஒதுக்கப்படும் மரம் ஒதியாகும். எரிக்கத்தானும் மற்றைய விறகு போல் ஆகாது. ஒதிபருத்து உத்திரத்துக்கு ஆகுமா? என்பது பழமொழி ஒதியனென் என்பார் வள்ளலார் (திருவருட். 3453) உதி என்பதும் இது. ஒதுக்கம்: கூட வந்தாள்; காணவில்லை; எங்கேயோ ஒதுங்கி விட்டாள் போலிருக்கிறது என்பர். பெரியவர் வருகிறார் ; ஒதுங்கி நில்லுங்கள் என்பர். சாலையில் ஓரமாகப் போகாமல் உள்ளே - ஊடே - போனால் வண்டிக்காரர் ஒதுங்கிப்போ என உரத்து ஒலிப்பர்; மணியடிப்பர்; ஒலிப்பானை அழுத்துவர். என்னப்பா அந்த வெல்லத்தை எவ்வளவு நேரமாக ஒதுக்கிக் கொண்டிருக்கிறாய் என்றும், பாட்டி ஒதுக்கிய தம்பலத்தைத் துப்பிவிட்டுச் சாப்பிட வா என்பதும் மக்கள் வழக்கு. விரைவாக ஒதுங்க வேண்டும்; ஒதுக்கிடம் எதுவும் தெரியவில்லை என்பது இயற்கையின் அழைப்பு வெளிப்பாடு. அயற்பாலினர் அரவம் இல்லாமல். ஆடவரும் மகளிரும் தனித்தனியே கழிப்பிடம் நாடுதல் இந்நாட்டில் பெருவழக்கு. சிற்றூர்களில் இன்றும் அந்நிலை மாறிற்றில்லை. அப்படி ஒதுங்கும் இடத்திற்கு ஒதுக்கம் என்பது பெயர். ஒதுங்குதல் அப்படி நீர் கழித்தலுக்கும், மலங்கழித்தலுக்கும் ஒதுங்கி மறைதலைக் குறித்து வந்ததாம். இவ்வொதுக்குதல்கள் எல்லாமும் இடைப்படாமல் - ஓர் ஓரத்தில் செல்ல, விலக, இருக்க உண்டாகியவையாம். ஒதுக்கம் பழஞ்சொல். நடை என்பதைக் குறித்தது. இலங்குவளை தெளிர்ப்ப வீசிச் சிலம்புநகச் சில்மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி -அகம். 261 பொருள்: ஒளிபொருந்திய வளைகள் ஒலிக்கக் கையை வீசிச் சிலம்பொலி விளங்கச் சிலவாய மெல்லிய நடைகொண்டு மெல்ல மெல்லச் சென்று (வேங். வி) மெல் ஒதுக்கின் வளைக்கை விறலிஎன் பின்ன ளாக -புறம். 135 பொருள்: மெல்லிய நடையினை யுடைய வளையை அணிந்த கையை யுடைய விறலி என் பின்னே வர (பழைய உரை) ஒதுக்கு என்பது ஒதுக்கப் பொருளாம் நடையைத் தருவதை இதனால் அறியலாம். ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழைய ளாகும் சீதைதன் நடையை நோக்கிச் சிறியதோர் முறுவல் செய்தான் என்று கம்பரும் ஒதுங்குதலை நடையாகவே காட்டினார் (ஆரண். 229) போக்குவரத்தும், பெரும் பெரும் சாலையும், சாலைப் போக்குக் குறிகளும், எழுத்துகளும், போக்குவரத்துக் காவலர் கண்காணிப்பாளர்களும் எனப் பெருகிய இக்காலத்து வாழ்வியல் கட்டளையாகிய ஓரம் போதலைச் சொல்லாலேயே படைத்த பண்டைப் படைப்பாளர் தகவினை எண்ணிப் பார்த்தால் வியப்பினும் வியப்பேயாம். நாகரித்தினும் நாகரிகமாம் ஒதுங்குதலை, வருணச் சாயத்தால் பிறப்பொக்கும் மக்களை இழிவிலங்கினும் விலங் காக்கிய கொடுமை, பெருங்கொடுமை என்பதைச் சுட்டாமல் தீராது. இன்ன வருணத்தான் இத்தனை அடித்தொலைவு ஒதுங்கிச் செல்ல வேண்டும் என்னும் பாழ்நெறி அண்மைக் காலம் வரை ஆட்சியிலிருந்தது. தீண்டல் தீட்டினும் கொடியதல்லவா காண்டல் தீட்டு நீதி என்ற அல்நீதி! ஒதுக்குதல்: உணவை ஒரு கன்னப் புறத்தில் ஒதுக்கிப் பதமாக்கி உண்ணுதல் ஒதுக்குதலாகும். பல்லுக்குப் புறத்தே கடைவாய்ப் பகுதியில் வெற்றிலைத் தம்பலத்தை நெடும்பொழுது ஒதுக்கி வைத்து இன்புறுவாரை நாட்டுபுறத்தில் இன்றும் காணலாம். சிறுவர் இன்பண்டங்களை ஒதுக்கி வைத்து உண்டல் கண்கூடு. ஒதுக்கு மருந்து: குடலைத் தூய்மைப்படுத்திக் கசடுகளை வெளியேற்றப் பயன்படுத்தும் மருந்தை ஒதுக்கு மருந்து என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு. வேண்டாதவற்றை ஒதுக்கித் தள்ளுவதால் ஒதுக்கு எனப்பட்டது. பொங்கல் நாளில் பழையன கழித்தலும், தாறுமாறாகக்கிடக்கும் பொருள்களை ஒதுக்கி ஒழுங்கு படுத்துவதும் எண்ணத்தக்கன. ஒத்தடம்: ஒற்றடம் > ஒத்தடம். அடிபட்ட வீக்கம் அரத்தக்கட்டு ஆயவற்றுக்குச் சாணி ஒத்தடம், புண்ணுக்கு மஞ்சளெண்ணெய் ஒத்தடம் என ஒத்தடம் தருதல் கைமருத்துவம். ஒத்தணம் என்பதும் இது. ஒற்றி ஒற்றி எடுப்பதால் ஒற்றடம்- ஒத்தடம்-எனப்பட்டது. ஒத்தாசை: ஒத்த + ஆசை = ஒத்தாசை; உதவி. ஒருவரைப் போல் ஒருவர் விருப்பமாய் வந்து உதவுதல், ஒத்தாசையாகும். பக்கத்து வீட்டுக்காரர் எனக்கு எப்பொழுதும் ஒத்தாசையாக இருப்பார் என்பது மக்கள் வழக்கு. ஒத்தி: ஒத்து + இ = ஒத்தி. இருவரோ பலரோ ஒத்துச் செய்வது ஒத்தியாகும். ஒருவர் இடத்தை-வீட்டை - தொழிலகத்தை ஒருவர்பால் ஒரு தொகைக்கு ஒப்படைத்துக் குறித்த காலத்தில் உரிய தொகை தந்து மீட்டுக் கொள்ளல் ஒத்தியாம். இருவரும் எழுதிக் கொள்ளலும் ஆவணப் பதிவு செய்தலும் வழக்கே. இதனைக் காலத்தில் திருப்பாமை சால இழப்புக்கு ஆளாக்கலும் முறை மன்றம் ஏற்றலும் உண்டு. ஒத்திகை: நாடகம் அரங்கில் நடிக்குமுன், பாட்டு, உரையாடல், நடிப்பு ஆயவற்றை மனப்பாடமாக்கிக் கதையமைப்பு மாறாமல் எழுத்தில் உள்ளதை ஒத்து அப்படியே அம்பலத்தில் ஆட வேண்டும் என்பதற்கு ஏற்ப முன்னே பயிற்சி செய்வதே இவ்வொத்திகை யாகும். இந்நாள் திரைப்படம், சின்னத்திரை, மற்றைக் கலை நிகழ்வுகள் எல்லாவற்றுக்குமே ஒத்திகை உண்டு. சொற்பொழிவு கூட ஒத்திகை செய்தே சர்ச்சில் பேசுவார் என்பர். இப்பொழுது மாணவர் மேடையேறுமுன் ஒத்திகை பார்ப்பது வழக்கம். ஒத்துமா: ஒன்றோடு ஒன்று ஒன்ற - ஒட்ட - ச் செய்வது ஒற்றடம் - ஒற்று எனப்படும். இவை ஒத்தடம்(ஒத்தணம்) ஒத்து எனவும் வழங்கும். முகத்திற்குப் போடப்படும் மணப் பொடியை ஒத்துமா என்பது திருவில்லிப்புத்தூர் வட்டார வழக்கு. மணப்பொடியை ஒத்துபஞ்சில் ஒத்தி எடுத்து எடுத்து முகத்தில் ஒத்துதலால் ஒத்துமா எனப்படுகின்றதாம். ஒத்தூதல்: ஒத்தூதல்:1 ஒத்து + ஊதல் = ஒத்தூதல் முன்னிசைப்பார்க்குத் தகப் பின்னிசைத்தல் (ஒத்திசை ) ஒத்தூதல் எனப்படும். குழலிசைப்பார் மாறி மாறி இசைக்கவும் பொருளொடு இசைக்கவும் வைத்த வாயை எடாமல் குழலூது வாரை ஒத்திசைப்பார் என்பர். அவரை ஊமைக்குழல் என்பது மக்கள் வழக்கே. ஒத்தூதல்:2 ஒருவர் சொல்வதை அப்படியே ஏற்று ஆமாம் ஆமாம் எனலும் ஒத்தூதலாம்; அவர் சொல்லியவாறே சொல்லலும் அது. ஒப்படை: ஒருவர் ஒருவரிடம் ஒப்படைத்த ஒன்றை, உரியவர் வந்து கேட்கும் போது ஒப்படைப்பது, ஒப்படை ஆகும். ஒப்படை, அடைக்கலம் போலப் போற்றிக் காத்து உரிய வகையில் ஒப்படைப்பது. ஒப்பாணை: ஒப்பு + ஆணை = ஒப்பாணை. ஓர் அலுவலகத்திற்கு விடுக்கும் வேலைத்திட்டம், வேண்டுகை முதலியவற்றுக்கு இசைவு வழங்கும் ஆணை ஒப்பாணை எனப்படும். ஒப்பாணை வந்துவிட்டது! வேலை தொடங்கலாம் எனபர். ஒப்பாவது இசைவு ஏற்பு. ஒப்பாரி: ஒப்பு + ஆர் + இ = ஒப்பாரி. உனக்கு - உமக்கு ஒப்பார் யார்? எவரும் இலர் என்பது இறத்தார். சிறப்பியல் கூறி அழுதலாம். ஒருவர் இயற்கை எய்திய போது மகளிர் ஒப்பாரி வைத்து அழுவது தமிழக வழக்கு. ஒப்பிதம்: ஒப்பு + இதம் = ஒப்பிதம். ஒருவர் சொல்லும் கருத்தை ஒருவர் ஏற்றுக் கொள்ளுதல். நீங்கள் சொல்வது எனக்கும் ஒப்பித்தம்தான் என்பது வழக்கு ஒப்புக் கொள்ளுதல் ஒப்பிதமாயிற்று. ஒப்பித்தல்: கேட்டது அல்லது படித்தது மாறாமல் ஒப்பக் கூறுவது ஒப்பித்தல் ஆகும். பழநாளில் ஒப்பித்தலே கல்வியாக இருந்தது உண்டு. அரிவரி, எண்சுவடி, ஆத்திசூடி முதலிய எல்லாமும் முன்னைத் தொடக்கப் பள்ளியில் நடைமுறைக் கல்வியாக இருந்தது. ஒப்பித்து: ஒப்பச் செய்யப்பட்ட அழகை ஒப்பித்து (ஒப்பாகச் செய்து) என்கிறார் நச். மேதகு தகைய மிகுநலம் எய்தி, குலைந்த ஒப்பனைகளைப் பின்னும் பெருமை தருகின்ற அழகினையுடைய மிகுகின்ற நன்மையுண்டாக ஒப்பித்து (அழகு செய்து) என்பதுஅது (மதுரைக். 565). ஒப்பு: ஒப்பு = ஒன்றைப் போல ஒன்றாக ஒப்பிட்டு அமைக்கப் பெற்றது. ஒப்பத் தோன்றி உவவனம் (மணிமே. 3: 169). காட்சிக்கு ஒப்ப அமைக்கப் பெற்றது ஒவ்வியம்; அஃது ஓவியமானது அறிக. எந்த வேலைப்பாட்டையும் இடப்பாலும் வலப்பாலும் ஒப்ப அமைத்தலும் அறிக. ஒப்புக்கு: ஒரு செயலில் அல்லது நிகழ்வில் ஊன்றி ஒன்றுபட்டுச் செய்யாமல் தாமும் பங்கு கொண்டதாகக் காட்டிக் கொள்வதை ஒப்புக்கு வந்தார், நின்றார், போனார் என்பர். ஒப்புக்கு = அடையாளத்திற்கு. ஒப்புரவு அறிதல்: ஒப்புரவு என்பது உழவுத் துறையில் வழங்கப்படும் பண்படுத்தற் சொல். மேடு பள்ளமாக இருக்கும் நிலத்தைச் சமப்படுத்துதல் ஒப்புரவு ஆகும். அதனைச் செய்யாவிடின் மேட்டு நிலத்தில் நீர் நில்லாமல் பள்ளத்திற்குச் சாய்ந்து விடும். நிலம் ஒரு நிலைப்படின், நீரும் ஒரு நிலைப்படும். பயிர்களுக்கும் ஒரு நிலைப்பட நீரும் உரமும் கிட்டும். விளை பயனும் அவ்வாறே ஒரு நிலைப்பட வாய்க்கும். ஒப்புரவின் இன்றியமையாத் தேவையை யும் பயனையும் இவ்வுழவடைச் சொல் இனிது விளக்கும். உள்ளாரும் இல்லாருமாய், இருபால் பட்டுக் கிடக்கும் உலகில், எல்லாரும் உள்ளாராய் இருக்கும் நிலையே உய்வாகும் நிலை என்பதைத் தம் கூர்த்த அறிவாலும், பேரார்ந்த நெஞ்சாலும் கண்டு கொண்டதால்தான், ஒப்புரவறிதல் என்னும் வள்ளுவம் அன்றே பிறந்ததாம். இல்வாழ்வின் நிறைவு அவ்வொப்புரவுக்கு வழி கோலுவதாக அமைதல் வேண்டும் என்பது வள்ளுவ நெஞ்சமாகும். ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எல்லாரும் ஒரு நிலையராதல் வேண்டும் என்பது வள்ளலாரியம். ஒப்பேற்றுதல்: ஒப்பு + ஏற்றுதல் = ஒப்பேற்றுதல் = காலம் தள்ளல், சரிக்கட்டல். பிறர் பிறர்க்கு ஒத்தபடி உண்ணவோ உடுக்கவோ வாய்ப்புப் பெறவோ முடியாத நிலையில் இருப்பவர்கள், தங்கள் நிலைமை வெளியாருக்கு வெளிப்படாத வண்ணம் பிறருக்கு ஒப்பாகத் தாமும் வாழ்வது போலக் காட்டிக் கொள்வர். இருப்பதை உண்டு உடுத்தாலும் வெளியாருக்குப் புலப்படா வண்ணம் திறமையாக நடந்து கொள்வர். இதற்கு ஒப்பேற்றுதல் என்பது பெயர். ஏதோ ஒப்பேற்றி வந்தால் இப்படியா காலம் போய்விடும்! காலம் மாறினால் எல்லாம் சரியாகிவிடும் என்னும் நம்பிக்கையோடு அவர் இருப்பர். ஒய்யாரம்: பொய்ப் புனைவு, செருக்கு. சின்மலர் சூடல் என்பது அடக்க ஒடுக்கத்தின் அறிகுறி. ஆனால் சிலர் சின்மலர் சூடாமல் பன்மலர் சூடல் உண்டு. அப் பன்மலரும் சுமை எனக் காட்சியளிப்பதும் உண்டு. அத்தகு பன்மலர்க் கொண்டை ஒய்யாரக் கொண்டை எனப்படும். அக்கொண்டை ஒப்பனையும் அதனையுடையார் நடையுடையும் எவரையும் புதுப்பார்வை பார்க்க வைப்பதாய் அமைந்திருக்கும். அத்தகையவரை ஒய்யாரி என்பர். ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம்; உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும் என்பது பழமொழி. சிங்காரி ஒய்யாரி என்பது நாடகப் பாட்டு. ஒய்யென: ஒய்யென:1 ஒய் + என = ஒய்யென. ஒய் = ஒலிக்குறிப்பு. ஒய்யென:2 விரைவு. அடித்தனன் அடித்தலோடும் ஒய்யென வயிரக்குன்றத் துருமினேறு இடித்ததொத்த -கம். உயுத். 2529 ஒய்யென:3 இரங்கல். ஒய்யெனப் புலம்புதரு குரல புறவுப் பெடை குறுந். 79 எய்யென என்பதும் இது. ஒருக்கணித்தல்: ஒருக்கு + அணித்தல் = ஒருக்கணித்தல். குப்புறவோ மல்லாக்கவோ படுக்காமல் ஒருபக்கம் சாய்ந்து நெருங்கிப் படுத்தல். ஒருக்கணித்துப் படு இடம் போதாது என்பது மக்கள் வழக்கு. ஒருக்கம்: ஒருக்கு + அம் = ஒருக்கம் = மனம் ஒன்றுபடல்; மனம் அமைதல். ஒருக்குதல்: ஒருக்கு + தல் = ஒருக்குதல் = ஒன்றாக்குதல். ஒருக்கி நிரல் பொரூஉ -பெருங். 3: 20: 95 ஒருக்கு என்பதும் இது. ஒருங்குண்ணி: ஒருங்கு + உண்ணி = ஒருங்குண்ணி இரண்டு வேறுபட்ட உயிரிகள் உண்ணலில் ஒன்றுபட்டு இருப்பதை ஒருங்குண்ணியாக அறிவியலார் கொள்வர். உண்ணலை அன்றி உறவாடல் இயங்கல் எதிரியைத் தாக்கல் என்பவற்றிலும் இணைதலைக் கூறுவர். (வாழ். கள. 6:609) ஆடு துறையில் அடுபுலியும் புல்வாயும் கூடநீர் ஊட்டிய கொற்றவன் என மாந்தாதாவை மூவருலா சுட்டுதல் எண்ணத் தகும். புல்வாய் = மான். கோழி, புறா, காகம், அணில், நாய், குரங்கு என்பன வெல்லாம் மலையகப் பற்றுமலை (பத்துமலை) முருகன் முன்றில் வளாகத்தில் ஒருங்குண்ணவும் ஒருங்குலாவவும் காணலாம். எருமையும் ஆவும், செம்மறியாடும் வெள்ளாடும், ஒத்துக் கூடிப் போதல், அரிதாகக் கோழியும் குரங்கும் ஒத்துலாவல் மாந்தர்க்குப் பாடம் அல்லவா! ஒருதலை: பல எண்ணங்களையும் பலர் எண்ணங்களையும் ஆய்ந்து அனைவரும் ஒத்துக் கொண்ட ஒரு முடிபு ஒருதலை எனப்படும். அதற்கு உறுதி என்பது பொருளாயிற்று. ஒருதலைக்காதல்: ஒரு + தலை + காதல் = ஒருதலைக்காதல். தலைவன் தலைவியர் ஆகிய இருவருள் ஒருவர் விரும்புதலும் ஒருவர் அதுபற்றி எண்ணாராய் இயல்பாகப் பழகுதலும் ஒருதலைக் காதலாம். ஒருதலைக் காமம் என்பதுமாம் இது. காமம் சாலா இளமை யோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்தி நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால் தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச் சொல்லெதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே - தொல். 996 ஒருதலைப்பக்கம்: இருவர் கருத்தைக் கேட்டு அக்கருத்துகளுள் உண்மையும் நடுமையும் கொள்ளாமல் ஒருவர் சார்பில் பேசுதலும் முடிபெடுத்தலும் ஒருதலைப் பக்கமாம். (ம.வ.) ஒருதிணை மாலை: ஒரு திணையில். ஒரே துறை குறித்த பாடல்களால் அமைந்த நூல் ஒரு திணை மாலை எனப்பெறும். திருமருங்கை ஒரு திணைமாலை என்பது இதற்கு எடுத்துக்காட்டாகும், இது, மருத்துவாழ் மலை (மருங்கூர்) முருகனைக் குறித்துக் குறிஞ்சித் திணையில் குறை நயத்தல் என்னும் துறையில் பாடப்பெற்ற 108 பாடல்களை யுடையதொரு நூலாகும். ஒருதுறைக் கோவை: அகத்துறையுள் ஒரோ ஒரு துறையினை எடுத்துக்கொண்டு பாடுவது ஒரு துறைக்கோவை எனப்பெறும். இக்கோவை கட்டளைக் கலித்துறையால் வரும். நாணிக்கண் புதைத்தல் என்னும் ஒரு துறைக்கு நானூறு பாடல்கள் பாடினார் அமிர்த கவிராயர் என்பவர். அது நாணிக்கண் புதைத்தல் என்னும் ஒரு துறைக்கோவைஎன்னும் பெயரால் வழங்கப்பெறுகிறது. அதே துறையில் அதே அளவில் இராசராசேசுவர சேதுபதி ஒரு துறைக் கோவையும் உண்டு. அது பெரும்புலவர் இரா. இராகவ ஐயங்காரால் இயற்றப்பட்டது. நூறு பாடல்களால் அமைந்த ஒருதுறைக் கோவைகள் பல. ஒருத்தல்: ஆண்பாற் பெயர்களுள் ஒன்று ஒருத்தல். மான், புலி, மரை, கவரி, கராம் (முதலை) யானை, பன்றி, எருமை ஆயவற்றின் ஆண் ஒருத்தல் எனப்படும். ஆணும் பெண்ணும் இணைய நிற்பின் ஆணின் பருமை உயரம் தோற்றம் ஆயவை விளங்கித் தோன்றலின் ஒருத்தல் எனப்பட்டதாம். புல்வாய் புலியுழை மரையே கவரி சொல்லிய கராமொடு ஒருத்தல் ஒன்றும் - தொல். 1535 வார்கோட் டியானையும் பன்றியும் அன்ன - தொல். 1536 ஏற்புடைத் தென்ப எருமைக் கண்ணும் - தொல். 1537 ஒருபது கூற்றிருக்கை: ஒன்பது கூற்றிருக்கையின் மேல் வளர்ச்சியே இந்நூலாம். இவ்வகையும் பாடியவர். எண் கூற்றிருக்கை, ஒன்பது கூற்றிருக்கை என்பவற்றை அருளிய தண்டபாணி அடிகளே ஆவர். அவர் அருளியது விட்டுணு ஒருபது கூற்றிருக்கை என்பது. ஒருபா ஒருபது: அகவலும் வெண்பாவும் கலித்துறையும் ஆகிய இவற்றில் ஒன்றனால் அந்தாதித் தொடையில் பத்துப் பாடல்கள் பாடுவது ஒருபா ஒருபது எனப்பெறும். வெண்பா அகவல் என்னும் இரண்டு பாவகையால் வரும் ஒருபா ஒருபது எனக் கூறும் பன்னிரு பாட்டியல் (338). வெள்ளை யாதல் அகவல் ஆதல் தள்ளா ஒருபஃ தொருபா ஒருபது முத்துவீரியம் மூவகைப் பாவைச் சுட்டும் (1088). அகவல் வெண்பாக் கலித்துறை ஆகிய இவற்றுள் ஒன்றினால் அந்தாதித் தொடையால் ஒருபஃ துரைப்பது ஒருபா ஒருபது ஒருபூ: ஒருபோகம், ஆண்டுக்கு ஒருமுறை விளைவு. ஒருபூ நிலம் அரைக் காணி - க.க.சொ.அ முப்பூ விளையும் நிலம், ஒருபூவுக்கும் இப்போது தண்ணீர் வரத்து இல்லை என்பது இற்றை மக்கள் வழக்கு. ஒருபொருள் பன்மொழி: ஒரே பொருளைத் தரும் பல சொற்கள் ஒருபொருள் பன்மொழியாம். பரிய விலங்காம் யானையின் பெயர்களாகத் திவாகர நிகண்டு 38 பெயர்களைத் தருகிறது. அவை, தும்பி கடிவை புகர்முகம் தோல்கரி உம்பல் வயமா பகடு நால்வாய் கரிணி குஞ்சரம் கயமே களபம் மருண்மா தந்தி மாதங்கம் ஒருத்தல் களிறு சிந்துரம் கறையடி எறும்பி வழுவை வாரணம் வேழம் வல்விலங்கு நாகம் மதகயம் அத்திஇபம் கும்பி போதகம் உவாவே தூங்கல் மாதிரம் மறமலி கைம்மா ஆம்பல் கோட்டுமா பிறவும் புழைக்கை யோடுயானைப் பெயரே பிங்கலம் 45 பெயர்களைத் தருகிறது. வெள்ளி விழாப் பேரகராதி 65 பெயர்களைத் தருகிறது. எது மிக்கும் பெருகவும் சிறந்தும் விளங்குகின்றதோ அதன் பெயர்களுள் வரவரப் பெருக்கமாம்! கடலிலா நாட்டில் கப்பல் பெயர் பெருகுமா? யானையிலா நாட்டில் யானைப் பெயர் இவ்வாறு பல்குமா? எருமை யன்ன கருங்கல் இடைதோ றானில் பரக்கும் யானைய முன்பின் கானக நாடனை நீயோ பெரும என்றும், ஒரு சூல் பத்து ஈனுமோ? என்றும் கேட்ட மண் தமிழ்மண்! (புறம். 5, 130) இச்சொற்களின் விளக்கம், யானையில் காண்க. ஒரு போகு: முன்னிலையாலும், படர்க்கையாலும் கடவுளைப் பழிச்சுதல் (வாழ்த்துதல்) ஒரு போகு ஆகும். கலிப்பாவிற்குரிய ஆறு உறுப்புகளுள் வண்ணகமோ எண்ணோ இரண்டுமோ குறையினும் ஒரு போகு என்பதேயாம். போகு = உரிய உறுப்புகளுள் சில போவது. அதாவது குறைவது போகு ஆகும். கலி உறுப்புகள் மயங்கியும் மிக்கும் குறைந்தும் வரினும் கொச்சக ஒரு போகு என்று கூறுவர். ஒரு போகு தேவர்களைப் பாடுதலால் தேவபாணி எனவும் பெறும். அது திருமாலுக் குரியதாம். மற்றும் சிவபெருமானுக்கும் முருகனுக்கும் உரித்தாக வும் கூறுவர். வேந்தன் அறச்செயல், குடிநிலை, அறிவுத்திறம் ஆகிய வற்றை வாழ்த்துதலும் ஒரு போகியற்கை என்பர். தன்மை முன்னிலை படர்க்கையுட் டன்மை ஒழித்திரு வகையுள் ஒன்றால் கடவுட் பழிச்சும் ஒருபோ கிருமூன் றுறுப்பும் அமைந்தொருங் கியலும் நயந்திகழ் கலியுள் வண்ணகம் போகினும் எண்ணே போகினும் ஓதிய உறுப்பாற் பேர்புகன் றனரே - பன்னிரு. 206 வரன்முறை பிறழ உறுப்பு மயங்கி மிக்கும் குறைந்தும் வருவது கொச்சக ஒருபோ காமென உரைத்தனர் புலவர் - பன்னிரு. 207 ஒரு வருக்கப்பா: ஒருவகை அல்லது ஓரின எழுத்துகளாலேயே பாடப்பட்ட பாடல்களையுடைய நூல் ஒருவருக்கப்பா எனப்படும். இஃது முடிமுதல் தொடர்பொடும் வருவதும் உண்டு. தாதிதூ தோதீது திதத் தத்தி தாதத்தி எனவரும் தனிப்பாடல்கள் இவ்வகைக்குச் சான்று. தண்டபாணி அடிகள் இத்தகர வருக்கத்தாலே ஒரு வருக்கப்பா இயற்றியுள்ளார். * ஓரெழுத் தந்தாதிகாண்க. ஒருவர்: ஒருவன் ஒருத்தி என்பாரைச் சிறப்புப் பன்மை கொண்டு கூற அமைந்தது ஒருவர் என்பதாம். ஒருவர் என்பதற்கு ஒப்பற்றவர் என்னும் பொருளும் உண்டு. ஒருவர் என்பதற்கு மிகமிக அரியதோர் பொருளைக் குமரகுருபரர் கண்டார். ஒருவனாகிய அப்பனையும், ஒருத்தியாகிய அம்மையையும் பிரித்துக் கூறாமல் ஒருங்கே சேர்த்துக் கூற வாய்ந்த அரிய தமிழ்ச்சொல் ஒருவர்எனக் காண்கிறார். ஒருவன், ஒருத்தி ஆகிய இருவரையும் பிரியாமல் இணைக்க வாய்த்தது ஒருவர் என்னும் சொல் என வியக்கிறார். ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உருவொன் றாலவ் வுருவைஇஃ தொருத்தன் என்கோ ஒருத்தி என்கோ இருவருக்கும் உரித்தாக ஒருவர் என்றோர் இயற்சொல் இல தெனின்யான்மற் றென்சொல் கேனே - சிதம்பரச். 54 * எந்தாய் காண்க. ஒருவன்: இறைவன். ஒருவன் ஆண்பாற் பெயர். படர்க்கைப் பெயர்; பொதுமைத் தன்மை யமைந்த பெயர். ஆனால், எவனையும் குறிக்கும் ஒருவன் என்னும் பெயர் எவனொருவனையும் குறியாமல் அவன் ஒருவனையே குறித்து வருமிடமும் வழக்கில் உண்டு. அவன் ஒருவன் இறைவன். அவனன்றி அணுவும் அசையாது; அவன் ஒருத்தன் பார்த்துக் கொண்டிருக்கிறான்; ஒருவன் துணை; அந்த ஒருவனை எவரும் ஏமாற்ற முடியாது என்பவற்றில் வரும் அவன். அவனொருவன் என்பவை இறைவனுக்காதல் அறிக. ஒருவ போற்றி என்பதொரு போற்றி (திருவா. போற்றி. 124) ஒருவுதல்: உருவுதல் > ஒருவுதல் > விலகுதல், தவிர்தல்; மருவுதலுக்கு முரண். மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு - திருக். 800 என்றும். யானை அனையவர் நண்பொரீஇ நாயனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் - யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கும் நாய் - நாலடி 213 என்றும் வருவனவற்றால் ஒருவுதல் இப்பொருட்டதாதல் புலப்படும். ஒருஉதல் என்பதும் இது. ஒரூஉதல்: ஒருவு > ஒரூஉ + தல் = ஒரூஉதல் = விலக்குதல், நீக்குதல், தவிர்த்தல். நாற்சீரடியில் முதற்சீரும் நான்காம் சீரும் மோனை, எதுகை, முரண், அளபெடை ஆயவற்றால் இயைந்து இடையிரு சீர்களும் மோனை முதலிய பெறாமல் வருதல் ஒரூஉ மோனை, ஒரூஉ எதுகை, ஒரூஉ முரண், ஒரூஉ அளபெடை எனப்படும். இடை இருசீர்களில் ஒருவுதலால் ஒரூஉ எனப்பட்டது. இயைபு இறுதியும் முதலும் இயையும். மற்றவை முதற்சீரோடும் இயைய இயைபு இறுதிச் சீரொடும் இயையும். ஒரூஉவாம் இருசீர் இடைவிட்டது -யா.கா. 19 எடுத்துக்காட்டு ஆங்குக் காண்க. ஒரூஉ வண்ணம் என்பதும் உண்டு, ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும் -தொல். 1483 ஒரூஉத்தனார் சங்கச் சான்றோருள் ஒருவர் (புறம். 275) ஒரூஉத்தனார்: சங்கச் சான்றோருள் ஒருவர் இவர். புறநானூற்றில் 275 ஆம் பாடல் ஒன்று மட்டுமே இவர் பாடலாகக் கிடைத்துள்ளது. அப்பாடல் பொருட்கொண்டே இவர்க்குப் பெயருண்டாகி இருக்க வேண்டும். ஒருவீரன், வடிமாண் எஃகம் கடிமுகத் தேந்தி ஓம்புமின் ஓம்புமின் இவணென ஓம்பாது தொடர்கொள் யானையிற் குடர்கால் தட்பக் கன்றமர் கறவை மான முன்சமத் தெதிர்ந்ததன் தோழற்கு வருமே என்பது அப்பாடல். ஓம்புமின் ஓம்புமின் எனத் தடுக்க முயன்ற வீரரால் தடைப்படாது ஒருவிக் கொண்டு உதவியமையைப் பாடியதால் ஒரூஉத்தனார் எனப்பட்டார் எனலாம். ஒருவனை ஒருவன் உடைபடை புக்குக் கூழை தாங்கிய எருமை (தொல். 1018) என்பதற்கு மேற்கோள் காட்டுவார் இளம்பூரணர். ஒலிக்குறிப்பும் சொல் வடிவும்: சொற்றன்மை நிரம்பிய ஒலி சொல்லும், நிரம்பா ஒலி, ஒலிக்குறிப்பும் ஆகும். மண்ணும் மரமும் போலக் கருவி நிலைப்பட்டவை ஒலிக்குறிப்புகள்; குடமும் பெட்டியும் போலச் செய்பொருள் நிலைப்பட்டவை சொற்கள் என்பார் பாவாணர் (முதல் தாய்மொழி, பக்.5) எம்மொழியில் மிகுதியான ஒலிக்குறிப்புகள் சொல் வடிவுற்று விரிவடைந் துள்ளனவோ அம்மொழி இயற்கை மொழி என்றும் முந்தை முதன் மொழி என்றும் கொள்ளப்படும். மாந்தன் அறிவுநிலை பேச்சறியாக் குழந்தையின் அறிவு நிலையில் இருந்த காலத்திலேதான் ஒலிக் குறிப்புகள் சொல்வடிவு பெறுதற்குரிய முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பது எண்ணத் தக்கது. ஒலிக்குறிப்பு வழியே சொல்லாகி விரிவுற்றவை தமிழில் மிகப்பல. அவற்றுள் ஒன்று குர் என்னும் ஒலிக்குறிப்பாகும். குர் என்பது குரங்கின் வழியே மாந்தன் பெற்ற ஒலிக்குறிப்பு. குரங்குகள் அஞ்சினாலும் சினந்தாலும் களித்தாலும் சண்டையிட்டாலும் குர் குர் என்னும் ஒலியெழுப்புதல் எவரும் அறிந்ததே. ஒலியின் வன்மை மென்மை அடுக்கு ஆகியவை வேறுபட்டாலும் ஒலிப்பு அடியாகிய குர் மாறுவதில்லை. குர் குர் எனப் பல்கால் ஒலிக்கும் ஒலியைக் கேட்ட மாந்தன் அவ்வொலி எழும்பிய உயிரிக்குக் ‘F®¡F®’> குர்க்கு > குரங்கு எனப் பெயரிட்டான். குரங்கை நேரில் காணா இடத்திலும் அதனைக் குறிப்பதற்கும் குர் ஒலி பயன்பட்டது அவ்வொலி பலரிடத்தும் பரவியது. குவாகுவா என்பது வாத்தைக் குறிப்பது போல் குர் குர் என்பது குரங்கைக் குறித்துப் பின்னே அவ்வொலி வழியே குரங்கு என்னும் பெயர் உண்டாகிப் பொதுமக்கள் ஆட்சியிலும் புலமக்கள் ஆட்சியிலும் இடம் பெற்றிருக்க வேண்டும். இது சொல் வளர்ச்சியின் இயல் நெறியாம். ஒலிக் குறிப்பால் தோன்றிய குரங்கின் பெயர் வழியே அதன் வடிவு, இயல்பு,செயல் என்பவற்றால் பல சொற்கள் கிளைத்தன. பல்லாயிரம் ஆண்டுகளாக இருவகை வழக்குகளிலும் அவை இடம் பெற்று இந்நாள் வரைக்கும் பெருவாழ்வு வாழ்ந்து வருகின்றன. மேலும் மேலும் பெருக்கமுற்றும் வருகின்றன. மீன்களுள் சுறா என்பது ஒன்று; அச்சுறா வகையுள் ஒன்று குரங்கன் சுறா; இது கூனிய - வளைந்த - வடிவால் பெற்ற பெயராம் குரங்கு மூஞ்சி என்பதும் ஒப்பீட்டு வகையால் அமைந்ததே. கட்டை வண்டியில் பார்க்கட்டை (போல்) நிலத்தில் படாவண்ணம் வளைவாகத் தாங்கு கட்டை அமைப்பது வழக்கம் அதன் வடிவு கருதிக் குரங்குக் கட்டை எனப்படுதல் உழவர் நடைமுறை. மழை இறைச்சல் வீட்டில் வராமல் இருப்பற்குப் பலகணி மேல் அடிக்கும் வளை தட்டுக்குக் குரங்குத் தாழ் என்பது பெயர். இனிக் கொக்கி மாட்டும் தாழ்ப்பாள் குரங்குத் தாழ்ப்பாள் என்று சொல்லப்படுவதும், குரங்குவாற் பூட்டு என ஒருவகைப் பூட்டு வழக்கில் இருப்பதும் குரங்கின் வடிவு வழிப்பட்டனவே. கூரையின் கீழே சுவர் மட்டத்தில் அமைக்கப்படும் பரணி, அல்லது பரணை அதன் வளைவு கருதிக் குரங்கு மச்சு எனப்படுதல் வழக்காகும். கேழ்வரகுக் கதிர் அமைப்பு குரங்கின் இறுக்கிய கை போல் இருத்தலைக் கண்டவர் அதற்குக் குரக்கன் எனப் பெயர் தந்தனர். மரக்கிளையில் மறைந்திருந்து வழியே செல்வாரை வருத்திப் பறிப்பவரின் இயலும் செயலும் கருதிய சங்கச் சான்றோர். குரங்கன்ன புன்குறுங் கூளியர் -புறம். 176 எனக் கூறியமை கருதத் தக்கது. குரங்குக் கைபோல் நரம்பு சுண்டி இழுத்தல் குரக்கு வலி குரக்குக் கைவலி குரக்கைவலி குரக்கை எனப் பல வடிவுகளில் வழங்கப்படுதல் எவரும் அறிந்ததே. பிறை நிலாவின் வளைவு குரங்கின் வளைவை ஒருவர்க்கு நினைவூட்டியமையால் குரங்கி என்றொரு பெயரைப் பெற்றது. குரங்குதல் வளைதல் ஆயபின், வளைந்தது தாழ்தலும், தாழ்ந்தது குறுகுதலும் இயற்கையாகலின் புலவர்கள் ஆட்சியில் இப்பொருள்கள் விரிந்தன கவி என்னும் குரங்கின் பெயர் வழியே கவித்தல் , கவிப்பு, கவிழ்த்தல், கவிழ்தல், கவிகை எனப் பல சொற்கள் விரிந்தமை இவண் ஒப்பிட்டுக் காணத் தக்கதாம். இலைசெறிந்த மரக்கிளை தாழ்தல் இயற்கை. அதனைக் குறிக்கும் சிந்தாமணி இலைப்பொழில் குரங்கின(657) என்கிறது. குதிரையின் பிடரி மயிர் வளைந்து படிவது; ஓடுங்கால் எழுந்து ஆட்டம் செய்வது இவ்வியல் கண்ட சங்கச் சான்றோர், குரங்குளைப் புரவி -அகம். 376 என்றும், குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி -அகம். 4 என்றும் கூறினர். குரங்குளை (குரங்கு + உளை) என்பது வளைந்த தலையாட்டம். கரும்புப் பூவைக் கண்ட ஒரு சான்றோர், மழையில் நனைந்த கொக்குப்போல் அஃது இருப்பதாகக் கண்டார். அவர்தம் நுண்ணிய பார்வை கொக்கு என்ற உவமை அளவில் அமையாமல் நனைந்த கொக்கு என்று தெளிந்து குரங்கின் கவிழ்வு இவற்றை ஒருங்கே எண்ணி உவகையடையுமாறு வளைய என்பதற்குக் குரங்க என்னும் சொல்லை நயமாக ஆண்டுளார். கருப்பின் கணைக்கால் வான்பூ மாரியங் குருகின் ஈரிய குரங்க -அகம். 235 என்பது அது. வளைந்த ஒன்று குறுகியதாகும் எனக் கண்டோமே! அதனைக், குரங்கா ஆற்றல் எம்பியோ தேய்ந்தான் என்னும் கம்பர் வாக்கு தெளிவிக்கும் (பாசப்.5) குரங்குப்பிடி கடும்பிடி; விடாப்பிடி ஆதலால், விடாப்பிடி குரங்குப்பிடி எனப்படலாயிற்று. ஓட்டு முகட்டுக்குப் போடப்படும் காரை அமுக்குக்குக் குரங்குப் பட்டை என்பது ஒரு பெயர். பனை மட்டையின் அடிப்பகுதியாம் வளைந்திருக்கும் பிடிப்புப் பகுதிக்குக் குரங்கு மட்டை என்பது பெயர். குரங்கு செயலற்று ஓய்ந்திருத்தல் அரிது. ஆதலால், அதன் ஆட்டத்தை நினைத்துக் குரங்காட்டம் எனப்படலாயிற்று. குரங்காட்டிப் பிழைக்கும் பிழைப்பு வயிற்றுப் பாட்டால் ஆங்காங்கு நிகழ்த்தல் கண் கூடு. குரங்கு மனம் என்பது உளவியல் தேர்ச்சி. சிறுவர் குறு குறுப்பும் துறுதுறுப்பும் பெரியவர்கள் பார்வையில் சேட்டையாகத் தோன்றலாயிற்று. அச்சேட்டையை யும் குரங்குச் சேட்டை தனதாக்கிக் கொண்டது. இனிக் குரடு கொரடு; குரண்டு கொரண்டி (ஒரு வகை முட்செடி) என்பவற்றின் பெயரும் குரங்கின் வளைவுப் பொருளால் ஏற்பட்ட செய்பொருட் பெயரும் இயற்செடிப் பெயருமாம். ஒலிக் குறிப்புகளை எல்லாம் தொகுத்து அதன் வழியே வளர்ந்து- செழித்த- சொற்களை யெல்லாம் பட்டியலிட்டுக் காட்டல், மொழியின் இயற்கையையும் முதன்மையையும் நிலைநாட்டுதற்கு அசைக்க முடியாச் சான்றாகத் திகழும் என்பதை இக் குர் என்னும் ஒலிக்குறிப்புக் காட்டுதல் உறுதியாம். ஒலியந்தாதி (ஒலி முடிமுதல்): பதினாறு கலை ஓரடியாக வைத்து இவ்வாறு நாலடிக்கு அறுபத்து நான்கு கலை வகுத்து, வண்ணமும் கலை வைப்பும் தவறாமல் அந்தாதியாக முப்பது செய்யுள் பாடுவது ஒலியந்தாதி என்று சொல்லப்படும். ஈட்டிய ஈரெண் கலை வண்ணச் செய்யுள் இயைந்த முப்பான் கூட்டிய நீடொலி அந்தாதி -நவநீத. 39 தத்தம் இனத்தின் ஒப்புமுறை பிறழாது நாலடி ஈரெண் கலையொடு முப்பது கோலிய தொலியந் தாதி யாகும் -பன்னிரு. 267 ஈரொலி யாகிய எண்ணான்கு கலையெனச் சீரியற் புலவர் செப்பினர் கொளவே வண்ணகம் என்ப தொலியெனப் படுமே -பன்னிரு. 269 ஒலியந்தாதியையே ஒரு சாரார் பல் சந்த மாலையென்று அடக்குவர் என்பார் நவநீதப் பாட்டியல் உரையுடையார். அவர் வண்ணம் என்பதும் வகுப்பு என்பதும் ஒன்று என்பாரை மறுத்து அஃது(வகுப்பு) ஆசிரிய விருத்தம் ஆதலும் அறிக. என்றார். ஒலியந்தாதியை அளவியல் தாண்டகம் என்பாரும் உளர் என்பதை. மூவெட்டி ரண்டெழுத்தாய் மூன்றடி நான்காய்ச் சந்தம் பாவதன் மீத் தாண்டகமுப் பானாக மேவலொலி யந்தாதி என்பார் பிரபந்தத் திரட்டுடையார் (74). ஒலியந்தாதியை ஒலியலந்தாதி என்றும் வழங்குவர். அவர் பதினாறு கலை எட்டுக் கலையாக வரவும் பெறும் என்றும் வெண்பா, அகவல், கலித்துறை ஆகிய இம் மூன்றையும் பத்துப் பத்தாக அந்தாதித்துப் பாடுவதும் ஒலியலந்தாதி யாகும் என்றும் கூறுவர். பதினாறு கலையோர் ஈரடியாக வைத்து நாலடிக் கறுபா னாலுகலை வகுத்துப் பல்சந்த மாக வணங்கலை வைப்பும் வழுவாதந் தாதித்து முப்பது செய்யுட் பாடுவ தெட்டுக் கலையானும் வரப்பெறும் அன்றியும் வெண்பா அகவல் கலித்துறை பப்பத் தாக அந்தா தித்துப் பாடு வதுமாம் ஒலியலந் தாதி -முததுவீ. 1082 இனி, 64 கலைச் சந்தப் பாடல்கள் பாடல்கள் 30 முடிமுதல் (அந்தாதித்) தொடையமையப் பாடப்படுவதை முதல் ஒலியலந்தாதி என்றும், அதிற் பாதியளவாக 32 கலைச் சந்தப் பாடல்கள் அமைப்பதை நடு ஒலியல் அந்தாதி என்றும் கூறும் வழக்குண்டு. முதலொலியல் அந்தாதி, பேரொலியல் அந்தாதி என வெவ்வேறாக இரண்டு ஒலியலந்தாதிகளை அருளியுள்ளார் தண்டபாணி அடிகள். இஃது எவரும் பாடாத அருமைப் பாடுடையதாம். முதல் என்பது முதன்மையையும் சுட்டும் அல்லவோ! ஒலுங்கு: ஒல் > ஒலு > ஒலுங்கு. ஒல் என்பது ஒலி. ஓயாமல் கொசுவின் ஒலி கேட்டவர், அவ்வொலி கொண்டு வழங்கிய பெயர் ஒலுங்கு என்பதாம் காதருகே வந்து பறக்கும் போது அதன் ஒலி மிக நன்றாகக் கேட்கும். காதுள்ளும் புகுந்தும் ஒலிக்கும். ஒலுங்கு பலவாய் மொய்த்து ஒலித்தலால் மொலுங்கு எனவும் நுண்ணிய அம்பு தைப்பது போல் கடித்தலால் நுளம்பு எனவும், கொச கொச எனக் கிடக்கும் சேறு வதிகளில் உருவாகி உரைவதால் கொசு எனவும் வழங்கப்படும் நுளம்பும், கொசுவும் வேறுவேறு எனக் கூறும் திவாகரம் (3). ஒல்: ஒல் என்பது ஓர் ஒலிக்குறிப்பு. மேட்டில் இருந்து இறங்கும் ஆற்றுநீர் ஒல்லெனத் தவழ்வதைத் திருவிளையாடல் கூறுகிறது. ஒல் என்பது மெல்லொலியைக் குறிக்கும். அது வல்லொலியானால் கல் என ஒலிக்கும். ஒல்லென ஒலித்துச் செல்லும் நீர் மெல்லியதாய், வளைவு நெளிவு உடையதாய்ச், சுருங்கித் துவள்வதாய் இருத்தலால் ஒல்குதல் என்பதற்கு அருகுதல், குறைதல், குழைதல், தளர்தல், துவள்தல், மெலிதல் ஆகிய பொருள்கள் உண்டாயின். ஒல்கி என்பதே ஒல்லி என மெலிவைக் குறிப்பதாயிற்று. ஒல்லி என்பது ஒல்லட்டை ஒல்லாடி என்றும் வழங்கப்படும். தேங்காய் உள்ளீடாகிய பருப்புச் சுருங்கித் தேய்ந்து இருக்குமானால் அதனை ஒல்லி மேய்ந்ததென்பர். ஒல்லிக்காய் உதவாது எனத் தள்ளுவர். ஒலிசெல்லும் விரைவென விரைந்து செல்லது செலவு ஒல்லை எனப்படும். ஒல்லையுள் தோட்டத்துள் புக்கு -பெரிய. அப்பூதி. நீரும் நீரும் கலந்து இரண்டற ஒன்று படுதல் ஒல்லுதல் ஆகும். அதனால் இணங்குதல், இசைதல், பொருந்துதல், கூடுதல், சேர்தல் அடைதல் என்னும் பொருள்கள் ஒல்லுதலுக்கு உண்டாயின. ஒல்லாமை என்பது ஒல்லுதலுக்கு எதிர்ச்சொல். அதனால், இணங்காமை, இசையாமை, பொருந்தாமை முதலிய பொருள்களைத் தந்தது. ஒல்லார், பகைவரும் ஆனார். ஒல்லுநராவார் நண்பர். ஒழுகறை: ஒழுகு + அறை = ஒழுகறை; ஒழுகவிடப்பட்ட உருக்கு ஒழுகு அறை. அறையாகச் செய்யப்பட்டது அறை. உருக்கிரும்பால் வார்த்து உருவாக்கப்பட்டதும் உடைத் தற்கும், வேறு திறவு போட்டுத் திறப்பதற்கும் அரியதும் பல்வேறு சூழ்ச்சியங்களை யுடையதுமாம் இரும்பு நிலைப்பேழை ஒழுகறை எனப்படும். அவ்வொழுகறை போன்ற வலியன் பிறரால் ஒழுவாளி எனப்பட்டு ஒழுவாடி என்று வழங்குகின்றது. ஒழுவாடி எப்படி இளைத்துப் போனாய் என உரிமை யால் நலம் கேட்பார் உரைப்பது முகவை வழக்கு. ஒழுகறைப் பெட்டி செய்தல் திண்டுக்கலின் பெருமை மிக்க தொழிலாம். ஒழுகு: நடைமுறை வழியாகச் செய்யப்படும் கடமைகள் உரைக்கும் நூல் ஒழுகு எனப்படும். ஒழுகு வகை கூறும் நூல் ஒழுகு ஆயது. எ-டு: கோயில் ஒழுகு ; திருமலை ஒழுகு. நாலா . திவ். அக. தமிழக ஒழுகு என்னும் வாழ்வியல் சட்டம் என்னும் நூல் விருதை சிவஞான யோகிகளால் இயற்றப்பட்டது. ஒழுக்கம்: வழியும் குலமும் ஆசாரமும் ஒழுக்கம் -பிங். 3243 நடைவழி, கால்வழியாம் மக்கள் தொடர்ச்சி, நல்லொழுக்கமாம் நன்னடை என்பவை அவை. அடக்கத்தை இடமாகக் கொண்டு வளர்வது- வளமாக விளங்குவது- ஒழுக்கம். ஒழுக்கம் என்பது என்ன? வானில் இருந்து ஒழுகும் நீர் ஒழுக்கே ஒழுக்கு எனவும் ஒழுக்கம் எனவும் பெயர் பெற்றது. பின்னர் அவ்வொழுக்குப் போல மாசற்று ஒழுகும் ஒழுக்கம் அல்லது நடத்தை, ஒழுக்கம் எனப்பட்டது. இவ்விரு பொருளும் காண்பார் காணுமாறே வள்ளுவர், வானின் றமையாது ஒழுக்கு -திருக்.20 என்றார். நீர் என்பதன் வழி வந்ததே நீர்மை என்னும் தன்மை. நீர் நிலத்தை ஊடறுத்துச் செல்லுதலால் பெயர் பெற்ற ஆறு. வழி என்பவை நீர் வழிக்கும் நீர்மை வழிக்கும் பொருந்தியமை யால்தான். நல்லாறு, நல்வழி, ஒழுக்காறு, இழுக்காறு, போகாறு, ஆகாறு முதலாகப் பல ஆட்சிகள் எழுந்தன. ஆகலின் ஒழுக்கம் மனத் தூய்மையில் இருந்து உண்டாகும் நடத்தையாம். ஒழுக்கம் இது என்பதற்கு அளவை எது? ஒழுக்கம் என்பதற்குரிய அளவை உயர்ந்தோர் நடையும், அவர்கள் இயற்றிய நூல்களும் என்கிறார் திருவள்ளுவர். ஒருவர் ஒழுகுவதைப் பின்பற்றி ஒருவர் ஒழுகி வளர்ந்ததுதானே உலகம்! ஆதலால் ஒழுக்கமுடையவரைப் பின்பற்றி நடப்பதே ஒழுக்கம் என வரம்பு காட்டினார்(140). ஒழுக்கம் இருபால் பட்டவை. அவை அகவொழுக்கம் புறவொழுக்கம் என்பன. அகவொழுக்கம் பண்பாடாகத் திகழும் . புறவொழுக்கம் நாகரிகமாக விளங்கும். இரண்டும் ஒன்றாக நாகரிகப் பெயர் பெறும் நிலையும் உண்டு! பண்பாட்டுப் பெயர் பெறும் நிலையும் உண்டு. ஆன்றோர் என்பதும் சான்றோர் என்பதும் வேறு வேறு பொருள் வழி வந்தவை. ஆனால் ஒரு வழிப்பட்டவை போல இந்நாளில் வழங்கப்பட்டு விட வில்லையா? அதுபோல்! ஒழுக்கவி: ஒழுக்கு + அவி = ஒழுக்கவி. நாள் முறையாக வழிபாட்டுக்கு அவித்துப் படைக்கப்படும் உணவு. ஒழுக்கவிக்கும் நந்தா விளக்குக்கும் -க.க.சொ.அ ஒழுக்கு = முறை, நடைமுறை. ஒழுக்கை: ஒழுக்கு > ஒழுக்கை = நடை வழியாக நிலத்திற்கு ஊடு அமைக்கப்பட்ட பாதை. தெற்கு நோக்கிப் போன ஒழுக்கைக்கு மேற்கு -தெ.கல்.5.677 ஒழுகை: வரிசையாகச் செல்லும் வண்டிகளை ஒழுகை என்பதும், வரிசையாகச் செல்லும் எறும்புகளை ஒழுக்கு என்பதும் பழமையான இலக்கிய வழக்கு. உமணர் உப்பொய் ஒழுகை -புறம். 116 சிறுநுண் எறும்பின் சில்ஒழுக்கு -புறம். 173 ஒழுங்கை: ஒழுங்காக அமைந்த தெருவை ஒழுங்கை என்பது யாழ்ப்பாண வழக்கு. இவ்வாட்சியால் தெருவமைப்பு விளங்கும். ஒளி: ஒள் > ஒளி. ஒருவர் தம் வாழ்நாளில் தேடிக் கொண்டு தமமோடு இருக்கச் செய்யும் பெருமை ஒளி. இதனை நின்ற ஒளி என்பார் வள்ளுவர் (698). வாழும் போதே உடன் நிற்பது அஃது. வாழ்வு நிறைந்தபின்னும் தொடர்ந்து இருக்கும் பெருமை, புகழ் அஃது அழியாது என்பது புகழல்லால் பொன்றாது நிற்பது ஒன்று இல் என்னும் வள்ளுவத்தால் விளங்கும்(233). ஒளியும் புகழும் வாழும் போதும் வாழ்ந்து முடிந்த பின்னரும் முறையாய் வருவன என்பதை, உண்ணான் ஒளி நிறான் ஓங்கு புகழ்செய்யான் என்னும் நாலடி (9). ஒளிவு மறைவு: ஒளிவு = சொல்லப்பட வேண்டியவற்றுள் சில வற்றை ஒளித்துச் சொல்வது. மறைவு = சொல்லப்பட வேண்டியவை எல்லா வற்றையும் வெளிப்படாமல் மறைத்து விடுவது. ஒளிவு மறைவு இல்லாமல் சொல்ல வேண்டும்; ஒளித்து மறைத்துச் சொன்னால் உயிரையும் பார்க்க மாட்டேன் என்பன போல்வன நடைச்சொற்கள். ஒருபால் மறைப்பு ஒளிவும், முழுதுறு மறைப்பு மறைவுமாம். ஒறுத்துவாய்: ஏனங்கள் உடைந்தோ நெளிந்தோ போனாலும், மண்வெட்டி கோடரி வாய்முனை சிதைவாய் விட்டாலும் கொறுவாய் ஆகிவிட்டது என்பர். அது பழங்காலத்தில் கதுவாய் எனப்படுதல் இலக்கிய இலக்கண ஆட்சிகள். மேற்கதுவாய், கீழ்க்கதுவாய் என்பவை தொடை வகை. அக்கதுவாய் கொறுவாய் எனப்பட்டதுடன் ஒறுவாய், ஒறுத்துவாய் என வழங்குதல் கீழைச் செவல்பட்டி வட்டார வழக்காகும். ஒற்றடம் வைத்தல்: அடித்தல் ஈமொய்த்தல் போல்வது இது. தடித்தனமோ பிடிவாதமோ செய்தால், ஒற்றடம் வைக்க வேண்டுமா? என்பர். அடிப்பாராம்; வீங்குமாம்; அதற்கு ஒற்றடம் வைக்க நேருமாம். இவற்றை உள்ளடக்கிய குறிப்பு ஒற்றடம் வைத்தலாம். ஒற்றி ஒற்றி எடுப்பதால் ஒற்றடம். அடம் - ஈறு; கட்டடம் என்பதில் வருவது போல, சாண ஒற்றடம், சாம்பல் ஒற்றடம், துணி ஒற்றடம், வெந்நீர் ஒற்றடம், மண் ஒற்றடம், உப்பு ஒற்றடம், என அதன் வகை பல. அவை கை மருத்துவம் சார்ந்தவை; சிற்றூர் வழக்கு, அவ்வழிப்பட்ட ஆட்சி அடித்தலுக்கு ஆயது. * ஈமொய்க்கும் காண்க. ஒற்றாடல்: ஒற்று = ஆள்தல் = ஒற்றாள்தல் > ஒற்றாடல். ஒற்றரை ஆளும் தன்மை ஒற்றாடலாம். ஓர் ஒற்றன் கண்ட உண்மையை வாங்கிக் கொள்ளல். அவ்வுண்மையின் உண்மையை மற்றோர் ஒற்றாலும் மேலும் ஓர் ஒற்றாலும் தேர்ந்து உறுதி செய்தல். ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியா வகையில் செய்தல். ஓர் ஒற்றரைப் பாராட்டலும் பரிசு வழங்கலும் சிறப்புச் செய்தலும் எவரும் அறியா வகையில் ஆக்கல். (திருக்குறள் அதிகாரம் ஒற்றாடல்; அதிகார எண் 59) ஒற்று: ஒல் + து = ஒற்று. ஒல்= பொருந்துதல். ஓர் உண்மையை அறிந்தும் சான்றுடன் தெளிந்து, அதனை மேலும் பல சான்றுகளால் உறுதி செய்வதே ஒற்று ஆகும். ஒற்றறியச் செல்வார் அவர் ஒற்றர் என அறியா வகையில் தோற்றம். உரையாடல், காலமும், இடமும் அறிதல், ஆயப்படு வாரொடு வேறற ஒன்றுதல், எவ்வகையிலும் ஐயப்படா இயல், குறிப்பறிதல், எத்துயர் வரினும் பிறர் அறியக் காட்டாமை என்னும் பண்புகளும் செயல்களும் பொருந்துதலே ஒற்று ஆகும். ஒற்றும் உரைசான்ற நூலும் - திருக். 581 மக்கள் வழக்கில். ஒற்றுக் கேட்டல் என்பது, இருவர் பேசுவதை அவர் அறியாமல் காது கொடுத்துக் கேட்டலாம். * ஒற்றாடல் காண்க. ஒற்றைசற்றை (ஒத்த சத்த): ஒற்றை = தனிமை. சற்றை = கயமை அல்லது கீழ்மை. ஒற்றை சற்றையாய்ப் போகாதே ஒற்றை சற்றையில் போகாதே என்பன போல ஒற்றை சற்றைவழக்கில் உள்ளது. தனித்துப் போதல் ஒற்றையாம். தகுதி இல்லாதவர் துணை யுடன் போதல் சற்றையாம். கூடார் கூட்டைப் பார்க்கிலும் தனிமையே நல்லது என்பது கண்கூடு. ஒற்றையில் செல்வதையும், தீயவர் துணையுடன் செல்வதையும் விலக்க வந்தது இவ்விணை மொழி. ஒற்றையா இரட்டையா: சிறுவர் போட்டியிட்டு விளையாடும் ஆட்டத்தில் ஒற்றைக்கு ஒற்றையா, இரட்டைக்கு இரட்டையா என வினாவுவர். ஒற்றை ஒருவர், இரட்டை இருவர். ஒத்தைக்கு ஒத்தை வா பார்க்கலாம் என்பது சிறுவர் வழக்கு; பெரியவர் வழக்குமாம். ஒன்பது: ஓர் எண் என்பது எவரும் அறிந்தது. ஆனால் மக்கள் வழக்கில் வேறாக உளது. ஒன்பது = பேடு (அலி). ஒன்பது உரூபாத் தாள் என்பதன் சுருக்கமே ஒன்பது என்பதாம். ஒன்று இரண்டு ஐந்து பத்து நூறு ஆயிரம் எனப் பணத்தாள் உண்டே யன்றி ஒன்பது உருபா என்பது இல்லை. ஆதலால் ஒன்பது என்பது இல்லாதது என்னும் குறிப்பினது. ஆண்மை இழந்த பேடியின் தோற்றம், பெண்மைக் கோலமாகத் தோற்றம் தரும். கொண்டை வைத்தல், பூச்சூடல். மஞ்சட் குளிப்பு ஆயவும் உண்டு. பேச்சும் நடையும் பெண்மைச் சாயலாய் அமையும். இத்தகையரை ஒன்பது என்பர். இது செல்லுபடி யாகாதது என்பது குறிப்பாம். இத்தகையர் சுண்டல், கடலை வணிகம் செய்தல் காணக் கூடியதே. இப்பழ வழக்கை மாற்றி அரவாணியர், திருநங்கையர் என வழங்கும் வழக்கம் ஆன்ம நேயமாய்ப் பாராட்டத் தக்கதாம். இத்தகு பிறப்பினருள்ளும் திறவோர்கள் எத்தனையோ பேர்கள் உளர்! மாற்றுத் திறனாளியர் என்னும் மதிப்புறு சொல்லும் மாந்த நேயத்தால் வழங்கப்படுகின்றது. ஒன்பது கூற்றிருக்கை: எண் கூற்றிருக்கைக்கு மேல் வளர்ந்த வளர்ச்சியுடையது. இவ்வொன்பது கூற்றிருக்கை. சிவபெருமான் மேல் ஒன்பது கூற்றிருக்கை பாடியவர் தண்டபாணி அடிகள். * எழுகூற்றிருக்கை எண் கூற்றிருக்கை காண்க. ஒன்று: முதல் எண், கூடு என்னும் ஏவல். எண் என்பது சிந்தித்தல் பொருளது. ஆதலால் அதன் அருமை அக்குறியீட்டால் புலப்படும். ஒன்று என்பது எண்ணின் முதலாக மட்டும் இல்லாமல், உலகம் ஒன்றுபட்டு உய்யும் உய்வு நெறி காட்டுவதாகவும் அமைந்துள்ளமை. நம்மவர் ஆழ்ந்த சிந்தனை வளம் உரைப்பதாம். ஒன்று தொழிற்பெயரானால் ஒன்றுதல் ஆகும். ஒன்று என்பதன் வழியதே ஒற்றுமை. ஒற்று என்றும் நாட்டுப்பணி நலம் கொள்வார்க்கும் ஒற்றி (ஒன்றி) அறியும் ஒரு தகைமை வேண்டும் என்பதை உணர்த்துவது. இயற்கை அழைப்பும் ஒன்றுக்கு என இடக்கரடக்காகிப் பண்பாட்டுப் பெருமை கொண்டது. ஒன்றானாலும் ஒரு கோடி என்பது கொடைச் சிறப்பும் கொண்டார் சிறப்பும் காட்டுவன. ஒன்றாக நல்லது கொல்லாமை - திருக். 323 ஒன்றுகூடல்: ஒரு நோக்கம் கொண்டு பலரும் கூடும் கூட்டத்தை ஒன்று கூடல் என்கின்றனர் ஈழத் தமிழர். ஒருவர் ஒருவராக வந்து கூடும் கூட்டம் என்பதை இச்சொல் தெளிவிக்கும். ஒருங்குறல் என்பதனினும் தெளிவுடையது ஒன்று கூடல். ஒன்றுக்குள்ளே ஒன்று (ஒண்ணுக்குள்ளே ஒண்ணு): ஒன்று = ஒரு பெரும் பிரிவு. உள்ளே ஒன்று = பெரும் பிரிவினுள் ஒருசிறு பிரிவு. ஓரினத்திற்குள்ளோ, ஒரு குடிவழியினுள்ளோ பகை பிளவு உரசல் முரசல் ஏற்பட்டால், ஒண்ணுக்குள்ளே ஒண்ணு; பொறுத்துப் போக வேண்டாமா? என்பர். அவன் யார்? நீ யார்? என்று எண்ணிப் பார்க்க வேண்டாமா? என்றும் கூறுவர். இனத்துள் அல்லது குடும்பத்துள் பிளவு கூடாது என்னும் பெருநோக்கில் எழுந்தது இது. நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் பகைத்து நிற்கக் கண்ட பண்டைப் புலவர் நீயும் சோழன் அவனும் சோழன். இப்படியா பகைத்து நிற்பது? என்று வினவவில்லையா? (புறம். 45) அவ்வினாவுக்குள்ளே இருப்பது ஒன்றுக்குள்ளே ஒன்று என்பதே யல்லவோ!  ஓ ஓள வரிசைச் சொற்கள் ஓ: அகர வரிசையில் பதினொன்றாம் எழுத்தும் ஆறாம் நெட்டெழுத்துமாம். ஓ என்பது ஓரெழுத்து ஒருமொழி. அது தரும் பொருள்கள் விளிப்பு, வியப்பு, ஒலிக்குறிப்பு முதலியவாம். ஓவின் பொருளை, மதகுநீர் தாங்கும் பலகை என்றனர் நன்னூல் உரையாளர்கள் (107). அவ்வோவாம் மதகு நீரில் இருந்து ஒலிக்கும் ஒலியை. ஓவிறந்து ஒலிக்கும் ஒலி - சிலப். 1:10:109 என்பார் இளங்கோவடிகள். ஓ என்பது விளிப்பாம் அழைப்பு. அப்பாவோ, அம்மாவோ, அண்ணாவோ முதலாக ஓகாரம் அழைப்பின் ஒட்டீறாக வரும். ஓஒ உவமன்உறழ் வின்றி ஒத்ததே - களவழி. 36 என்னும் பொய்கையார் வாக்கு வியப்புப் பொருளது. ஓஓ ஓகோ என்பவை திகைப்புப் பொருளவை; ஐயமுமாம். ஒவாமல் > ஓயாமல் > இடையீடு இல்லாமல் என்னும் பொருளது. ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை என்பது (திருக். 653) ஒழிதல், விட்டு விடுதல் பொருளது. ஓவில் இருந்து நீர் ஓடல் ஓடு ஆயது. ஓடு ஏவலாயதுடன் நீர் ஓடும் வழியும் அவ்வழியில் உள்ள ஊர்ப்பெயரும் ஆயது. வெள்ளோடு சித்தோடு பேரோடு ஈரோடு என்பன போன்றவை. ஓடு என்னும் செய்பொருள் நீர் ஓடுமாறு செய்த செய்பொருளுக்கு ஆயது, நீரில் ஓடும் மிதவை ஓடம் எனப் பெயர் பெற்றது. நீர் ஒழுகும் துளை ஓட்டை எனப்பட்டது. பணம் இருப்பது ஓட்டமாகவும், பணம் இல்லாமை ஓட்டமில்லாமையாகவும் மக்கள் வழக்கில் உண்டாயிற்று. ஓடம் விடும் ஆற்றங்கரையூர் ஓடாத்தூர் (ஓடாற்றூர்). காதில் அணியும் அணியின் திருகாணி ஓடாணி எனப்பட்டது. ஓ மேலெழல் பொருள் தருவதாய் ஓங்காரம், ஓங்காரித்தல் என ஆயின. ஓம் ஆகி இணைத்தல் பொருள் ஈறாகவும் ஒப்புதலாகவும் அமைந்தது. வந்தோம்; படித்தோம். என்ன ஓம் போடவில்லையே ஒப்பவில்லையா? என்பதில் ஓம், ஆம் என்பதாம். ஓம் என்பதுவே ஆமெனலாய் என்றார் பாரதியார் (பாரதி அறுபத்தாறு). ஓமாம் புலியூர் என்பது தேவாரப் பாடல் பெற்றதோர் ஊர். ஓம் என்பதை ஆமென் என்பது விவிலியவாணர் வழிபாட்டு நிறைவு. ஓம்புதல் பேணுதல் பொருளது. விருந்தோம்பல், உடலோம்பல். ஓம்பினேன் கூட்டை வாளா - தேவா. ஒற்றியூர். என்பது அப்பரடிகள் மொழி. ஓலம் அவலக்குரல்; ஓலாட்டு = தாலாட்டு; உயர்ந்த இருப்பில் இருப்பது ஓலக்கம். (தெய்வத் தொடர்பினது திருவோலக்கம்). ஓலை = ஒலியுடையது. அது பொதுப் பெயர் ஆயது. ஆலோலம் என்பது கிளியோட்டும் குரல். ஓவாய் என்பது பல்போய ஓட்டை வாய். பானை குவளை சட்டி முதலியவை வாய் சிதைதலும் ஓவாயே. ஓகாரம்: ஓ + காரம் = ஓகாரம்; காரம் - சாரியை. ஓகர நீட்சியாம் ஓகாரம் உயர்தல். ஓங்குதல், மேலெழல் பொருளில் வரும். எ-டு: ஓசை, ஓக்குதல், ஓச்சுதல், ஓங்குதல், ஓங்கல், ஓலம். ஓக்களித்தல்: ஓக்கம் = உயர்வு; அளித்தல் = வெளியேற்றல், தள்ளல். உண்ட உணவு ஓவெனும் ஒலியுடன் தொண்டைக்கு மேல் வந்து தள்ளுதல் ஓங்காரித்தல். உவட்டல், உவட்டெறிதல் என்பனவும் இது. ஓக்காளம்: ஓ + காளம் = ஓக்காளம். வாந்தி எடுத்தல் ஓங்காரித்தல் என்பது பொதுவழக்கு. அது ஓக்காளம் எனப்படுதல் நெல்லை வட்டார வழக்கு. ஓ என்னும் ஒலியுடன் வாந்தி எடுத்தலால் அவ்வொலிக் குறிப்பு அடிப்படை யில் ஆயவை இவை. ஓங்கல்: உயர்ந்து வளர்ந்த மலை, ஓங்கல் இடைவந்து (தண்டி). உயர்ந்து (ஓங்கி) வளர்ந்த யானை ஓங்கல் எனப்பட்டது. உயர்ந்தோங்கு செல்வத்தான் - சிலப். 1:32 ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - பாரதியார் ஓங்கு தாங்கு: ஓங்கு = உயரத்தில் மிக்கிருத்தல் தாங்கு = கனத்தில் மிக்கிருத்தல். ஓங்கு தாங்கான மரம் என்றும். ஓங்கு தாங்கான ஆள் என்றும் வழங்குவது உண்டு. ஓங்குதல் மட்டுமானால், நெட்டப்பனை கோக்காலி கொக்கு என்று பழிக்கப்படும். தாங்குதல் மட்டுமானால் செக்கு உரல் குந்தாணி புளிமூட்டை கடகப்பெட்டி இன்னவாறு பழிக்கப்படும். நல்ல உயரமும். அதற்கேற்ற கட்டான உடற்கனமும் வாய்த்திருப்பின் பாராட்டப்படும், அதுவே. ஓங்கு தாங்கு என்பதாம். சங்கநாள் பாரி ஓங்கு தாங்காக இருந்ததால் பாரி என்னும் பெயர் பெற்றான். அவன் இயற்பெயர் மறையப் புகழ்ப்பெயரே நின்றதாம். * பாரி காண்க. ஓசி: ஓசு > ஓசி. ஓசி என்பது வரலாற்றுச் சிறப்புடைய ஒரு சொல். பழநாளில் காசு இல்லாமல் அறச்செயலாக ஆற்றிலும் கழி முகத்திலும் படகு விடுதல் உண்டு. அப்படகுக்கு அறவி நாவாய் என்பது பெயர். அறங்கருதிக் கட்டணம் இல்லாமல் ஆறு கடக்க வருவாரை அழைத்து அக்கரை சேர்ப்பது அதன் செயற்பாடாம். நாவாயை ஓட்டுவார் ஓசுநர்: ஓச்சுநர் = செலுத்துபவர், ஓட்டுபவர், இயக்குபவர். அவ்வோசுநர்; காசு வாங்கார். ஆதலால் படகில் செல்லுதல் ஓசி எனப்பட்டுப் பின்னர் மீள்பெறல் இல்லாமல் கொடுக்கும் கொடை ஓசி எனப்பட்டதாம். ஓசிக்குத் தந்ததை ஊசிற்று என்றானாம் என்பது பழமொழி அறவி நாவாய் - மணிகே. 11:25 ஓசூர் என்னும் பெயர் பழநாளில் பெருநீர் நிலைப் பகுதியாய் ஓடம் விடும் இடமாய் இருந்திருக்கக் கூடுமென இற்றை நீர்நிலை வளாகமே எண்ண வைக்கின்றது. ஓசுநர்: ஓச்சுதல் = ஓட்டுதல், செலுத்துதல். கப்பல் இயக்குபவர் ஓசுநர் எனப்பட்டார். ஓசை ஒலி : ஓசை = பொருளற்றது; இயற்கை வழிப்பட்டது. ஒலி = பொருளுற்றது; மாந்தரால் படைக்கப்பட்டது. ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயேஎன்பது அப்பர் தேவாரம். நீரின் சலசலப்பு. காற்றின் உராய்வு; இடியின் வெடி; முகில் முழக்கு இவையெல்லம் ஓசையாம்; உயிரிகள் அல்லா இவற்றின் ஓசையில் உணர்வு சிறிதும் இன்றாம்; உணர்வொடு கூடா ஒன்றில் பொருளாய்வது பொருந்துவதன்றே. உயிரிகளின் இன்பு துன்பு அச்சம் வெகுளி அரவணைப்பு அரற்று ஆய உணர்வு வெளிப்பாடாகவும், மொழிவல்லார் குறிப்பு வெளிப்படை எனக்கொண்டு உணர்த்தியும் உணர்ந்தும் வரும் பொருள் வெளிப்பாடாகவும் கிளர்வன வெல்லாம் ஒலியாம். காகா என்பது ஓசை, காக்கை, காகம் என்பவை ஒலி. ஓசைவற்றல்: காய்ந்து உலர்ந்த மிளகாய் வற்றலை ஓசைவற்றல் என்பது எறையூர் (இறையூர்) வட்டார வழக்கு. காய்ந்த வற்றல் விதை ஒட்டாமல் ஒலிப்பதைக் கேட்கலாம். குரங்கு, தன் குட்டியின் அழுகையை நிறுத்த வாகை நெற்றை அசைத்துக் கிலுகிலுப்பை போல் ஒலித்துக் காட்டி அழுகையை அமர்ந்துதலைச் சங்கச் சான்றோர் பாட்டில் காணலாம். கிளர்பூண் புதல்வரொடு கிலுகிலி யாடும் - சிறுபாண். 61 ஓடவில்லை: ஒன்றும் தெளிவாகவில்லை, செயல்பட முடியவில்லை என்பதை ஓடவில்லை என்பர். திடுமென்று நிகழாத ஒன்று நிகழ்ந்துவிடும். அதிர்ச்சிக்கு உரியதோ எதிர்பார்ப்பு இல்லாததோ நிகழ்ந்துவிடலாம். அந்நிலைக்கு ஆட்பட்டவர் எனக்கு ஒன்றும் ஓடவில்லை என்பர். என்ன செய்வதென்று தெரியவில்லை என்பதே ஓடவில்லை என்பதன் பொருளாம். இங்கு ஒடுதல் என்பது எண்ணத்தின் ஓட்டத்தையே குறித்தது. செயலற்றுப் போன நிலையையே ஓடவில்லை என்பது குறிக்கின்றதாம். சிக்கலான வினாவை எழுப்பி விடை கேட்கும் போதும் எனக்கு ஒன்றும் ஓடவில்லை; நீங்களே மறுமொழி சொல்லுங்கள்என்பதும் வழக்கில் கேட்பதே. ஓடன்: ஓடு + அன் = ஓடன் = ஆமை. ஓடு உடைமையால் பெற்ற பெயர் (வெ.வி.பே.) ஓடு: ஓடும் இயற்கையுடையது நீர், அதன் ஓட்டம் நீரோட்டம் எனப்படும். நீரோட்டமே குருதியோட்டத்திற்கும். தேரோட்டத் திற்கும் பிறபிற ஓட்டங்களுக்கு மெல்லாம் மூலவோட்டம்! நீரோட்டம் கண்ணுக்குத் தெரிய மேலோட்டமாகவும் ஓடும். கண்ணுக்குத் தெரியா உள்ளோட்டமாகவும் ஓடும். எப்படியும் நீரோட்ட இயற்கை. பள்ளம் நோக்கி ஓடுவதேயாம். ஓடும் நீர் ஓடி ஓடி ஒரு வழியை உண்டாக்கும். நீர் ஓடும், நிலத்து வழிக்கு என்ன பெயர்? ஓடு என்பதே முதற்பெயர். நீரோடும் நிலத்திற்கு அமைந்த ஓடு என்னும் பெயர். அதனைச் சார்ந்த ஊர்ப் பெயர்க்கும் சேர்ந்தது. எரியோடு, வெள்ளோடு, சிற்றோடு, பேரோடு, ஈரோடு என்பன ஊரோடும் சேர்ந்த ஓடுகள். நீர் ஓடும் நிலவழியும், அதனைச் சார்ந்த ஊரும் மட்டும் ஓடாக அமைந்ததனவோ? ஓடு விரிந்தது. ஓடு ஓர் ஏவலாயிற்று. ஓட்டு என்பதும் ஏவலாயிற்று. நீர் வழிவதற்காகச் சரியாகப் போடப்படும் செய்பொருளுக்கும் ஓடு என்னும் பெயர் வந்தது. முகடாக இருந்து பாதுகாக்கும் அத்தன்மையைக் கொண்டமையாம் தலையோடு, தேங்காய் ஓடு. இவற்றின் ஒப்புமையால் திருவோட்டுக்கும் பெயராயிற்று வறையோட்டிற்கும் வாய்ந்தது. வறை = வறுத்தல். ஓடு ஓடும் சொல்லோட்டங்கள் விரிந்தன; நெஞ்ச ஊட்டம் போலப் பல்கின. ஓடு ஐ என்னும் ஈறு பெற்று ஓடை ஆயிற்று. ஓடு பெற்ற முதற்பொருளையும் ஓடை பெறலாயிற்று. உப்போடை, பாலோடை, மயிலோடை செம்போடை என்பவை ஓடைப்பெயர். ஓடைக்கு நான்கு பொருள்களை ஓட விடுகின்றது யாப்பருங்கல விருத்தி (51) ஓடையே ஓடையே ஓடையே ஓடையே கூடற் பழனத்தும் கொல்லிமலை மேலும் மாறன் மதக்களிற்று வண்பூ நுதல்மேலும் கோடலங் கொல்லைப் புனத்தும் கொடுங்குழாய் நாடி உணர்வார்ப் பெறின் என்பது அது. கூடற் பழனத்து ஓடை = ஓடைக்கொடி. கொல்லிமலை மேல்ஓடை = மலை வழி. மதக்களிற்று நுதல் மேல் ஓடை = யானையின் நெற்றிப் பள்ளம். கொல்லைப் புனத்து ஓடை = நீரோடை. வெள்ளம் என்பது நீர்ப் பெருக்கின் பெயர். ஏன்? வளமாகப் பெய்த மழைநீர் பெருக்கெடுத்து நுங்கும் நுரையுமாக வெண்ணிறத்தோடு வருவதால் அதன் நிறம் கருதி வெள்ளம் எனப்பட்டது. வெள்ளி (விண்மீன்), வெள்ளை (கள்), வெள்ளை (சுண்ணாம்பு, சலவை) முதலியவற்றைக் கருதுக . வெள்ளம், பால்நுரைப் போர்வை போர்த்து - திருவிளை. திருநாட்.10 வருவதாகப் புலமையாளர் கட்டுவதும் கருதுக. வெள்ளம், முதற்கண் புதுநீர்ப் பெருக்கைக் குறிப்பதாகத் தோன்றிப் பின்னர் நீர்ப் பெருக்கைக் குறித்து, அதன்பின் நீரைக் குறிப்பதாக விரிந்தது. வெள்ளத்திற்குரிய நீர்ப்பொருளை மலையாளத்தார் சிக்கெனப் பற்றிப் போற்றிக் கொண்டுள்ளனர். நல்லவற்றை எல்லாம் கைவிடுதலில் வல்ல நாமோ, வெள்ளத்தின் முதற் பொருளை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை விட்டுவிட்டோம். அம் முதல் வெள்ளத்தை அடித்துக் கொண்டு போகவும் பிரவாகம் வந்தது. எப்படியோ வெள்ளம் நிலைத்து விட்டது. வெள்ளோடு என்னும் பேரும் ஊரு மாறாச் சான்றுகளாய் உள்ளன. வெள்ளப் பெருக்கின் போது மட்டும் நீரோடும் ஓடு வெள்ளோடு என்க. நீருக்கு நிறமில்லை என்பது அறிவியல். ஆனால். நிலத்தில் பட்ட நீருக்கு நிலத்தின் நிறமே நிறமாய் ஆகிவிடுவது கண்கூடு. அன்புடைய தலைவன் தலைவியர் நெஞ்சக் கலப்பு, நிலத்தொடும் இயைந்த நீருக்கு ஒப்பாகத் தோன்றியது, ஒரு புலவர்க்கு. அவர். செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சத் தாம்கலந் தனவே - குறுந்.40 என்றார். அவர் பெயர் இன்னதென அறியாத தமிழகம். அவரை அவர்தம் உவமையாலேயே செம்புலப் பெயல் நீரார் என நிலை பெறுத்திற்று. செம்புலம் என்பது பண்படுத்தப்பட்ட நிலம் என்னும் பொருளதுமாம். நிலத்தொடு நீரியைந் தன்னார் என்பது திருக்குறள் (1323). நீரின் நிறத்தால் செங்குளம், கருங்குளம் எனக் குளப் பெயர்களும் அவற்றைச் சார்ந்த ஊர்ப் பெயர்களும் ஏற்பட் டுள்ளமை ஆங்காங்கு அறியக் கூடியனவே. போர்க்களத்தில் பெருக்கெடுத்த குருதி வெள்ளம், உடைபட்ட முரசத்தின் உள்ளே பாய்ந்து ஓடுவது செங்குளத்துத் தூம்பின் வழியே நீர் ஓடுவது போன்றது என்கிறது களவழி நாற்பது (4). செங்குளம் என்பது செந்நிற நீர்ப் பெயரால் பெற்ற பெயர் என்றால், ஓடைப் பெயர்ஒன்று செந்நிற நீர் ஓடுதலால் எரியோடை எனப் பெயர் பெற்றது. எரி வண்ணம் எவ்வண்ணம்? அவ்வண்ணம் செவ்வண்ணம்! எரி எள்ளுவன்ன நிறத்தன் எவன்? அவன் சிவன் எனப்படும் செம்மேனி அம்மான்! எரிமலர் இலவம் எரிமருள் தாமரை எரிமருள் வேங்கை எரிபுரை எறுழம் எரியவிர் உருவின் செயலை என்பவை எல்லாம் செவ்வண்ணத்தைக் காட்டுவனவே. செவ்வோடு எரியோடு என்க. இனி, ஈரோடு பற்றி எண்ணலாம். புனைவில் தலைப்பட்ட காலம் தொன்மக்காலம். பல்லிரு காதம் பல்லிடுக்கு முக்காதம்என்றால் ஆமாம்! Mkh«! எனத் தலையாட்டும் காலம் தொன்மக் காலம்! (தொன்மம் = புராணம்)= அக்கால நிலையில் ஈரோட்டுக்கு அமைந்த புனை கதை. ஒரு காலத்து, நான்முகன் ஐந்தலையனாக இருந்தானாம். அவன் தலை ஒன்றைச் சிவன் கிள்ளினானாம்! அத்தலை யோட்டில் இருந்து குருதி வழிந்து கொண்டிருந்ததாம்! அவ் ஈர ஓடு சிவன் கையைக் கவ்விக் கொண்டு விடாமல் இருந்ததாம். பின்னர் விடுபட்ட இடம் ஈரோடாம்! பெயர் வகை வந்த வகை ஈதாம். கேழ்வரகில் நெய்யொழுகிய கதைதான் இது! உண்மை என்ன, இரண்டு ஓடுகள் உடைய இடம் ஈரோடு எனப்பட்டது. ஓரோடு சிற்றோடு மற்றோர் ஓடு பேரோடு இன்னும் இரண்டும் தனித்தனியே ஓடுகளாகவும், ஊர்களாகவும் உள்ளன. அவ்வீரோடும் சார்ந்த ஊர் ஈரோடு. ஓடுவளை: நெடிதாக ஊர்ந்த மூங்கில் ஓடுவளை எனவும் ஓடி வளை எனவும் பழனி வட்டாரத்தில் வழங்குகின்றன. வளை என்பது மூங்கிலின் பெயர்களுள் ஒன்று. ஓடு என்பது நெடுமை குறிக்கும் ஒட்டு ஆகியது. ஓடெடுத்தல்: இரத்துண்ணல், துறவோர் திருவோடு என்னும் ஓட்டை எடுத்து ஊண் வாங்கி உண்ணல் உண்டு. திருவோடு தேங்காய் ஓடு போன்றதாகிய ஒரு மரத்தின் காயோடே யாகும். துறவு மேற் கொள்ளாத பிச்சையர் மண்சட்டியை எடுத்து இரந்துண்பதும் உண்டு. அதுவும் ஓடு எனப்படும். வறுப்பதற்குரிய ஓடு வறையோடு என்றும், கட்டடத்து மேற்றளத்தில் பரப்பும் சிற்றோடு, தட்டோடு என்றும் வழங்கப்படுதல் அறிக! ஓடெடுத்துக் கொண்டு பிச்சையேற்று உண்பதே ஓடெடுத்தல் என வழக்காயிற்று. தமக்கு ஏழ்மையுண்டு என்பதை ஏற்க மனமில்லாத மானர், நானென்ன ஓடெடுத்துக் கொண்டா திரிகிறேன்என்பர். மானக்கவாரம் எனப்படும் அந்தமான். நிக்கோபாரில் திருவோட்டுக்காய் மரம் மிகுதியாம். ஓடை: ஓடை என்பது, ஒடுங்கிய பாதையாகிய ஒற்றையடிப் பாதை நடைபாதை ஆகியற்றைக் குறித்தல் குமரி மாவட்ட வழக்கு. ஆறு, வழியாதலை நினைக. ஓடை உடைப்பு: ஓடை = நிலத்தை ஊடறுத்துக் கொண்டு ஓடும் நீரால் அமைந்த ஓடுகால் அல்லது பள்ளம். உடைப்பு = ஓடையின் கரை நிலம் உடைப்பெடுத்துப் பள்ளமாவது. நீர் ஓட்டத்தால் அமைந்தது ஓடை; உடைதலால் அமைந்தது உடைப்பு என்பதாயிற்று. உடைதல் மனம் உடைதல். படை உடைதல் முதலிய உடையதலுக்கும் விரிந்தது. ஓட்டமில்லாமை: அஃதாவது வறுமை. ஓட்டம் என்பது இயக்கம்; அதிலும் விரைந்த இயக்கம் பணவாய்ப்பு இருந்தால் பலவகை ஓட்டங்களும் ஒருவர்க்குச் சிறப்பாக இருக்கும். பண ஓட்டமே மற்றை ஓட்டங்களுக்கு அடிப்படை. பணமிருந்தால் சமையல் சாப்பாடு கொண்டாட்டமாக இருக்கும். நடையுடை சிறப்பாக இருக்கும். போக்குவரவும் நிகழும், தொழில் தட்டின்றி விளங்கும். பணவோட்ட மில்லா விட்டால் எல்லாமும் படுத்துவிடும். ஆதலால், ஓட்டமில்லை என்பது கையில் காசு போக்குவரத்து இல்லை என்பதைக் குறிக்கும். பணம். பத்தும் செய்யும் என்பது பழமொழி. பொருளானாம் எல்லாம்என்பது திருக்குறள் (1002). பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு(திருக். 247) என்னும் போது, ஓட்டமென்ன இருக்க முடியும்? ஓட்டம்: ஓட்டப்பந்தயம் = ஓடும் வினை. வெள்ளோட்டம் = புதிதாக ஓட்டம் பார்த்தல். கண்ணோட்டம் = அருள்வெளிப்பட நோக்கல். ஓட்டம் சீராயுள்ளது = கொடுக்கல் வாங்கல் சீராக இருத்தல். ஓட்டன்: ஓட்டன்:1 பூட்டனுக்குத் தந்தையை ஓட்டன் என்பது முறை மரபு ஓட்டனுக்கு மேல் உறவில்லைஎன்பது பழமொழி. ஓட்டன் என்பான், நடையாம் ஒழுக்கம் கற்பித்த முற்பாட்டனாம் பூட்டனுக்கு முன்னோன். * பூட்டன் காண்க. ஓட்டன்:2 ஓட்டன் என்னும் பெயர் தரகன் என்னும் பொருளில் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது. ஓய்வில்லாமல் இங்கும் அங்கும் திரிந்து தரகு வேலை பார்ப்பதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். ஓடிப்போய்ச் செய்தி தருபவனை ஓட்டன் என்பது ஈழத்து வழக்கு. ஓட்டை: ஓட்டமாய் ஓடும் நீர் துளை ஒன்று வாய்த்தால் அவ்வழியே சொட்டும், ஒழுகும், கொட்டும், ஓடும் நீர் ஒழுக உண்டாய இடம் ஓட்டை எனப்பட்டது. ஓட்டத் தடையாய ஓட்டை, பின்னே நீர் மட்டுமன்றிக் காற்றுச் செல்லும் வாயும் (வழியும்), துளையும் ஓட்டை எனப்படலாயிற்று. பெரிதாக அமைந்து நீர் ஓடும் ஓட்டை மோட்டை எனப்படுதல் உழவர் வழக்கு. ஓட்டை உடைசல் போட்டு வைக்கத் தனியிடம், ஓட்டை உடைசல் ஒக்கிடத் தொழிலகம், ஓட்டை உடைசல் வாங்க வாணிகம் எனப் பரவி வழங்குதல் தொடர்ச்சியாம். ஓட்டை உடைவு: ஓட்டை = துளை (வெடிப்பு கீறல் முதலிய வற்றையும் தழுவும்). உடைவு = உடைந்து போனது. ஓட்டை விழுந்த கலங்களையும் ஒருவகையாகப் பயன்படுத்திக் கொள்வர். ஆனால் உடைந்து போனதைப் பயன்படுத்துவார் இலர். அவ்வுடைவும் கைபிடி கழுத்துப் பகுதியில் இருப்பின் பிறிதொன்று வாங்கிக் கொள்ள இயலாதார் பயன்கொள்வது உண்டு. ஓட்டை உடைவு பழுதுபார்க்கவும் ஈயம் பூசவும் வருவார் உண்டு. விலைக்கு வாங்க வருவாரும் உண்டு. அவர்கள் ஓட்டை உடைசலை நீட்டி முழக்கிக் கேட்பது நாடறிந்தது. ஓட்டை ஒழுகல்: ஓட்டை = தண்ணீர் ஓடுமளவுப் பெருந்துளை ஒழுகல் = தண்ணீர் கசிந்தொழுகு மளவுச் சிறுதுளை ஓட்டை யோடத்தோடு ஒழுகலோடம் - நாலா. திவ். .அ ஓட்டைக்கை: சிக்கனமில்லாத கை. ஓட்டைப் பானையோ, சட்டியோ, உள்ள பொருளை ஒழுகவிட்டு விடும். ஓட்டைப் பானையைப் பாடம் கேட்ட அளவில் மறந்துவிடும் மாணவனுக்கு ஒப்பாகக் கூறுவர், இலக்கணர். நீர் வைப்பதற்கு உரியது ஓடு (குடம், சட்டி, பானை) அதில் ஓட்டை விழுந்தால் ஒழுகவிட்டு விடுமல்லவா? சிலர் கையைக் காட்டு என்பர். கூட்டுக்கை வைத்துக் காட்டு என்பர். கைவிரல்களைக் கூட்டி நீட்டினால் விரலுக்கு விரல் ஓட்டை - இடைவெளி - இருந்தால், உனக்கு ஓட்டைக்கை காசு தங்காது என்று சொல்லி விடுவர். இது குழந்தைகள் விளையாட்டிலும் உண்டு. செலவாளிகள் என்பதற்கு அல்லது சிக்கனமில்லாதவர் என்பதற்கு ஓட்டைக்கை என்பது வழக்கு. ஓணி: ஓணி என்பது கம்பம் வட்டார வழக்கில் ஒற்றையடிப் பாதையைக் குறித்து வழங்குகின்றது. ஒன்றி, ஒண்டி, ஓரி என்பவை போல ஓணி என்பதும் ஒற்றை என்னும் பொருளில் வழக்குப் பெற்றிருக்கலாம். இது கண்டமனூர் வட்டார வழக்குமாம். ஓதாக் கல்வி: வள்ளலார் வரலாற்றையும் வாக்கையும் படித்தவர்கள், ஓதாக் கல்வி என்னும் செய்தியை அறிவர். ஓதாக் கல்வி என்பது என்ன? ஓதாமலே - பயிலாமலே - ஒருவர் பேரறிவினைப் பெற்றுவிட முடியுமா? முடியும் எனில், கற்றுணர்ந்த - கற்பித்த - பெருமக்களுக்குப் பெருமை சேர்க்குமா? படியாமலே ஒருவர் பேரறிவு பெற்றார் என்பது அவர் தமக்குமே பெருமை சேர்க்குமா? படிக்காத மேதை என்னும் புனைவும் பள்ளிப் படிப்பின்மையைக் கருதிக் கூறியதே யன்றி அவர்கள் படிப்பறிவே இல்லாதவர்கள் என ஒரு தலையாகக் கூறுவதன்றே. தனியே எவ்வளவு படித்தனர்; பட்டறிவுற்றனர். வள்ளலார் பாக்களிலும் உரைநடை நூல்களிலும் முடங்கல்களிலும் பொதுளி நிற்கும் முந்தையோர் நூற்குறிப்புகள் எத்துணை எத்துணை! இலக்கண இலக்கிய மேற்கோள் செய்திகள் தாம் எத்துணை எத்துணை! திருக்குறளை, வள்ளலார் போல முழுது முழுதாகப் பொன்னே போல் போற்றிக் கொண்டவர் தமிழுலகில் அரியர்! முதல் திருமுறையிலுள்ள நெஞ்சறிவுறுத்தல் ஒன்று சாலுமே! நால்வர் நான்மணி மாலையின் தனி சிறப்பென்ன? நால்வர் வாக்குகளிலே தேக்கிய பிழிவின் வழிவன்றோ பெருக்கெடுத்தது அது? சிவப்பிரகாச அடிகள். நால்வர் அருள்மொழிகளைப் பயிலாமல் நால்வர் நான்மணிமாலை இயற்றியிருப்பரோ? வள்ளலார் அருளிய ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை. ஆளுடைய அரசுகள் அருள்மாலை, ஆளுடைய நம்பிகள் அருள்மாலை, ஆளுடைய அடிகள் அருள்மாலை ஆகியவற்றைக் கற்போர், வள்ளல் பெருமகனார் உள்ளம், அந்நால்வர் பாடல்களில் தேக்கெறியத் தெவிட்டியமையே பாவெள்ளமெனப் பெருக்கெடுத்த தென்பதை மறுக்கவும் துணிவரோ? தாயுமானவர், பட்டினத்தார், சேக்கிழார், திருமூலர் இன்னோர் திருப்பாடல் குறிப்புகள், செய்திகள், வரலாற்றடைவுகள், திருக்கோயில் வைப்புகள், அடியார் அருள் விளக்கங்கள் இன்னவற்றை யெல்லாம் ஓரோட்டமாய்க் கற்பாரும், செம்பொருட் பேரேட்டு நூல்களிலே வள்ளலார் தோய்விலர் எனத் துணிவரோ? அன்பர்களுக்கு விடுத்த முடங்கல்களிலேயுள்ள மருத்துவக் குறிப்புகளைக் காண்பார், வள்ளலார் சித்த மருத்துவ நூல்களிலே நுழைபுலம் இல்லார் எனச் சொல்வரோ? மதுரைத் திருஞானசம்பந்தர் திருமடத்தடிகளார்க்கு விடுத்த முடங்கலையும் தமிழ் என்னும் சொல் குறித்த விளக்கவுரைகளையும் கற்போர் வள்ளற் பெருமகனார் வளமான இலக்கணத் தேர்ச்சியில் ஐயுறவும் கொள்வரோ? எத்துணை யாப்பு வகைகளையும் வண்ண வகைகளையும் வள்ளலார் வளப்படுத்தியுள்ளார்! எத்துணை அகத்துறைகளை வனப்புறுத்தியுள்ளார்! பிற்கால இசை வகைகளில் எத்துணை ஏற்றங் காண்பித்துள்ளார்! இவையெல்லாம் ஏடெடுத்துப் படியாமல் வந்தனவோ? ஏடறியேன் எழுத்தறியேன்; பாடறிவேன் படிப்பறியேன் என்பது போலக் கற்றறியாத மெட்டுப் பாவலர் அல்லர். அப்பாடலைப் பாடியவரும் அத்தகையர் அல்லர்! படத்திற்காகப் பாடியது அது! அவர் கற்றறிந்த சால்பினரே. ஆனால். அவர் கற்ற கல்வி, ஓதிக் கற்ற கல்வியன்று. ஓதாது கற்ற கல்வியேயாம். சொல்லாய்வு ஒன்றே சொற்பொருள் விளக்கத்தைத் தெள்ளிதின் காட்டவல்லது. ஓதுதல், ஓதாமை என்பவை எவை? கடலுக்கும் கடல் அலைக்கும் ஓதம் என்பது ஒரு பெயர். அப்பெயர் வந்தது எதனால்? இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்தலால் ஓதம் என்னும் பெயரை அவை பெற்றன. ஓதம் என்பது ஓதையாய் ஒலிப்பொருளும் தருவதாயிற்று. இடையீடில்லாது தெய்வத் திருக்கோயிலில் பண்ணிசைத்துப் பாடுவார். எவர்? அவர் ஓதுவார் அல்லரோ? ஓதுவார் தமை நன்னெறிக்குய்ப்பது இறை புகழே யன்றோ! ஆகலின் அவற்றை இசைப்பார் ஓதுவார் ஆயினர். மறப்பினும் ஒத்துக் கொளலாகும்என்றாரே வள்ளுவர் (134) அவ்வோத்து ஓதப்படும் மறையே யன்றோ! இடைவிடாது பயிலும் பயிற்சியுடைய மற்போர் வீரர்களுக்கும் பயில்வான் பெயருண்மை நோக்கியும் ஓதுவார் பெயர்ப் பொருளைத் தெளியலாமே! ஓதுவது ஒழியேல் ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டா நூறு நாள் ஓதி ஆறுநாள் விடத் தீரும்என்பவை நாம் அறியாதவையோ? பாடம் ஏறினும் (பாடை ஏறினும்) ஏடது கைவிடல் என்பதும் புதுவதோ? பொது அறிவினார்க்கும் பல்கால் ஓதி அழுந்தப் பதித்து வைத்தால்தான் பதிவாகி நிற்கும்! ஆனால் கருவிலே திருவுடையார்க்கு ஒருகால் கேட்ட - படித்த - அளவானே அழுந்தப் பதிவாகிவிடும். அவர்கள் பொதுமக்கள் எனப் பல்கால் வருந்திப் பயில வேண்டுவதில்லையாம். ஆகலின், அவர்கள் கற்ற கல்வி ஓதாக் கல்வி என்னும் ஒருபெருஞ் சிறப்புக்கு உரியதாயிற்றாம். மாம்பழக் கவிச்சிங்க நாவலர் ஒரு பாடலை ஒரு முறை கேட்ட அளவானே ஒப்பித்ததை வரலாறு கூறுகின்றது. ஏடாயிரம் கோடி எழுதாது தன் மனத்து எழுதிப் படித்த விரகன் எனத் தம் வரலாற்றை அந்தகக் கவி வீரராகவன் குறிப்பிடுகின்றார். வெண்பா இருகாலில் கல்லானை வெள்ளோலை கண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளே என்று ஔவையார் தனிப்பாடல் எள்ளி நகையாடுகிறது. அண்மைக் காலத்தில் மதுரையில் திகழ்ந்த பண்ணிசை வல்லார் திருப்பதியார் ஒரு பாடலை இருமுறை கேட்ட அளவானே அருமையாக இசையுடன் பாடுதலை நேரிடையில் ஆய்ந்து கண்டுள்ளேம். திருக்குறள் எண் கவனகர் கோயில்பட்டி இராமையனார் நினைவாற்றல் திறம் சொல்வார் சொல்லிறந்து செல்லும் தகைத்தாய்த் திகழ்கின்றது. நூறு கவனகம், இருநூறு கவனகம் எனச் செய்தாரும் செய்வாரும் உள்ள மண் தமிழ்மண்! இவையெல்லாம், நெஞ்சில் குத்தி உருப்போட்டு வரப்படுத்திக் கொள்வனவாய் அமைவன வல்ல! வள்ளலார் திறம், ஒருமுறை படித்தாலே - கேட்டாலே - எழுதினாலே பச்சை மரத்தில் பதியும் ஆணியெனப் பதிந்ததாகலின் அக்கல்வி ஓதாக் கல்வி எனப் பெற்றதாம். இன்னும் தெளிவு வேண்டுமோ? தேன்படிக்கும் அமுதாம்தின் திருப்பாட்டைத் தினந்தோறும் நான்படிக்கும் போதென்னை நானறியேன்; நாவொன்றோ ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும் தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனிந்தீஞ் சுவைகலந்தென் ஊன்கலந்து வுயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே இப்பாடல்களை நோக்குக. நம்மை மறந்து தாமே நூலாகி ஊனும் உளமும் உயிரும், உயிருக்கு உயிரும் ஒன்றியும் கலந்தும் பாடிப் பெற்ற ஒருமைப்பாட்டுக் கல்வியை அறிவோர், வள்ளலார் பெற்ற ஓதாக் கல்வியைத் தெளிவர் ஓதாக்கல்வி திருக்குறளில் உள்ளது என்றார் வள்ளலார் ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப் புடைத்து என்பதே ஓதாக்கல்விக் குறள் (398). அது ஒருமுகப்பட்டுக் கற்கும் கல்வி! எழுமை வருங்காலமெல்லாம்! ஒருமை மகளிர் என்பாரும் வள்ளுவரே (974). ஓத்து: ஓதும் நூலுக்கு ஓத்து என்பது பெயர். ஓதுதல் என்பது பல்கால் பயிலுதல் ஆகும். நாளும் தவறாமல் படிக்கப்படுவதும் சொல்லப்படுவதுமே ஓதுதல் ஆகும். அத்தகைய நூலை ஓத்து என வழங்குகின்றார் திருவள்ளுவர். மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் - திருக். 134 * பார்ப்பான் காண்க. ஓமலிப்பு: ஏசிப் பழிப்பதை ஓமலிப்பு என்பது நிலக்கோட்டை வட்டார வழக்காகும். மறுதலிப்பு என்பது போல, ஓமலிப்பு என்பது ஒப்புக் கொள்ளாமைப் பொருளில் வருகின்றது. பேதலிப்பு என்பது அச்சப் பொருளது. பொது வழக்கு. ஓங்காரிப்பு வெளித்தள்ளல் ஆனால் போல, ஓமலிப்பு புறம் தள்ளலாம். ஓம்: ஓம் என்பதற்கு ஆம் என்னும் பொருள் கொள்ளல் யாழ்ப்பாண வழக்கு. அவ்வழக்கு குமரி மாவட்டத்திலும் உண்டு. நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ ஓம் போடவில்லையே எனல் உண்டு. பாரதி அறுபத்தாறில் ஓம் என்பதுவே ஆமெனலாய்எனவரும். * ஓ காண்க. ஓம்படை: ஓம்படை:1 தலைவனொடு தலைவியை மணம் கூட்ட உடன்படுத்தி உடன்போக்குச் செல்ல விடுங்கால். செல்லும் நெறி சேம நெறியாக என வாழ்த்தி விடுத்தல் ஓம்படையாம் (தொல். 581) ஓம்படை:2 இறந்தாரையும் இனிதுறைக என வாழ்த்துதல் ஓம்படையாம். இறுதிக் காலத் துறுதி யாகிய ஓம்படைக் கிளவி - பெருங். 1:53:40 எனப்படுகிறது அது. ஓய்வு ஒழிவு: ஓய்வு = வேலையின்றி ஓய்ந்திருத்தல். ஒழிவு = ஒரு வேலை முடித்து வேறொரு வேலையில் அல்லது பொழுது போக்கில் ஈடுபட்டிருத்தல். ஓய்வு ஒழிவு இல்லை எனப் பலர் குறைப்பட்டுக் கொள்வர். சிலர்க்கோ ஓய்வு ஒழிவு அன்றி வேலையே இல்லை என்னும் நிலைமையும் உள்ளது. ஓய்வு என்பது படுத்துக் கொள்வதே என்று கருதுவாரும் உளர். அவர் ஓய்வு சாய்வு என்னும் இணைச் சொல்லுக்கு இலக்கியமானவர். ஓய்வுவாடி: ஈழத்தில் வவுனியாவில் உள்ள சுற்றுலாத் தங்கல் மாளிகைக்குப் பெயர் ஓய்வுவாடி என்று இருக்கின்றது. வாடி என்பது மரக்கடைக்குப் பெயராக இருத்தல் தமிழகம் கண்டது. ஓய்வு மாளிகை பயணியர் விடுதியாகவும் உள்ளது. வாடி என ஏன் பெயர் பெற்றது? ஓய்வுக்கு வாடிக்கையாகத் தங்குவதற்கு உரிய இடம் என்னும் பொருளில் இப்பெயர் இடப்பட்டிருக்கக் கூடும். வாடி (வாடிக்கை) என்பது பல்கால் தொடர்பான பொருளது. ஓரகத்தார்:1 ஓர் + அகத்தார் = ஓரகத்தார்; ஒத்ததாம் உள்ளத்தார். ஓரகத்தார்:2 ஓரம் அகத்தார் > ஓர அகத்தார் > ஓரகத்தார். நடுவு நிலைமை அற்று ஓரப்பார்வை பார்க்கும் இரண்டகத்தார். ஓரகத்தா ரெல்லாம் ஓரகத்தார் தாமா? உள்ளடுப்புக் கொள்ளி முடிந்தாற் போல ஆள் இல்லையா? (ம.வ.) ஒருப்பாடு இல்லாமல் ஒட்டியிருப்பவர் இவ்வோரகத்தார். ஓரகத்தார் :3 ஓர் + அகத்தார் = ஒருவீட்டார் (அகம் = வீடு) ஓரகத்தி: ஓர் + அகத்தி = ஓரகத்தி ஒரே குடும்பத்தில் பிறந்த பிறப் பினரின் வாழ்க்கைத் துணையாய் வாய்த்தவர் ஓகரத்தி எனப்படுவர். ஓர் அகத்து வாழ்பவர் ஓரகத்தர் - ஓர்ப்படியார் என்பாரும் அவர். * ஓர்ப்படியார் காண்க. ஓரடி நூறு (ஏகபாத நூற்றந்தாதி): ஓரடியே நான்கடியாக மடங்கி வர, ஒவ்வோர் அடிக்கும். பொருள் வேறுபட்டு வருவது ஏகபாதமாம். இவ்வாறு ஏகபாதம், நூறு கொண்டு அந்தாதித் தொடை பெற வருவது ஏகபாத நூற்றந்தாதி எனப் பெயர் பெறும். பெரும்புலவர் அரசஞ் சண்முகனாரால் ஏகபாத நூற்றந்தாதி ஒன்று இயற்றப்பட்டது. அதன் முதற்பாடற்கு மட்டும் நூறு பொருள் விரித்துக் கூறி உரையெழுதியுள்ளார். ஆளுடைய பிள்ளையார் திருப்பிரமபுரப் பதிகம் ஒன்றை ஏகபாதத்தியற்றி யுள்ளார் ஏகபாதம் = ஓரடி; ஏகபாதத்தை ஏகத்தான் என்பார் தண்டபாணி அடிகள். அம்பா லிகையத்தங் கோடலங் கஞ்சத்த னத்தனையே அம்பா லிகையத்தங் கோடலங் கஞ்சத்த னத்தனையே அம்பா லிகையத்தங் கோடலங் கஞ்சத்த னத்தனையே அம்பா லிகையத்தங் கோடலங் கஞ்சத் தனத்தனையே என்பது அரசஞ் சண்முகனார் பாடிய எகபாத நூற்றந்தாதியின் முதற்பாடலாம். கடவுள் வாழ்த்து, அவரே கருப்பொருள் எழுதிய மையால் பொருள் காண முடிந்தது. பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுப் புலமை அளவுகோல்களில் இத்தகைய தொன்று. ஓரப்பார்வை: ஒருபால் சாய்ந்த நெஞ்சக் கேட்டைக் காட்டும் பார்வை ஓரப்பார்வை. அவ்வோரப்பார்வை வேறு. காதல் கண்ணாகிய கடைக்கண் பார்வை வேறு. காதலியர் கடைக்கண் காட்டி விட்டால் காளையர்க்கு மாமலையும் சிறுகடுகாம் - பாரதிதாசன். ஓரம்: ஓரம்:1 நடுவு நிலை தவறித் தீர்த்தல், ஓரம் சொல்லல். மன்றோரம் சொன்னார் மனை, வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமேஎன்பது தனிப்பாடல். ஓரம்:2 சாலை முதலியவற்றின் ஊடு செல்லாமல் ஒரு பக்கக் கடைசியில் செல்லல், ஓரம் செல்லல் சாலை விதி இது. ஓரம்:3 ஓரம் = நிலத்தில் கலப்பையால் உழ வாய்க்காமல் மூலை முடங்கிகளில் ஒதுங்கிய பகுதி ஓரக்கால் வெட்டல் என்பது வேளாண் வழக்கு. ஓரம்:4 சீலை, வேட்டி முதலியவை இழை பிரியாமல் இருக்க ஓரம் தைத்தல் வழக்கம். ஓரம் சாரம்: ஓரம் = ஒன்றன் கடைசிப் பகுதி. அல்லது விளிம்பு. சாரம் = கடைசிப் பகுதியை அல்லது விளிம்பைச் சார்ந்த இடம். ஓரமும் ஓரம் சார்ந்த இடமும் ஓரம் சாரம் ஆயிற்றாம். ஓர் அம் என்பது ஓரகம் என்பதன் தொகுத்தலாம். ஓரிடம் என்னும் பொருள் தரும் இச்சொல், ஒன்றன் எல்லை முடிவைக் குறித்து வந்தது. அதனைச் சார்ந்து அப்பால் உள்ள இடம் சாரமாம். ஓரம் சாரமாகப் போ என்பது வழக்கு. சார்பு, சாரல், சாரியை, சாரம் (கட்டட வேலைக்குப் பயன்படுத்தப்படும் பரண்) என்பவற்றைக் கருதுக. ஆக, ஓரிடத்தின் உட்கடை ஓரமும், புறக்கடை சாரமும் ஆம் எனக் கொள்க. ஓரம் சாரம் ஆகாது என்பது நடுவுநிலை பற்றிய கருத்தில் வந்தது. ஓரி: ஓர் + இ = ஓரி, ஓரி:1 ஒன்று. தாயம் என்னும் விளையாட்டில் உருட்டும் புளிய முத்துகளில் தேய்க்கப்பட்ட வெள்ளைப் பக்கம் மேலாக ஒன்று கிடைந்தால் அதனை ஓரி என்பவர். அவ்வாறே இரண்டு கிடந்தால் ஈரி என்பர். ஓரி:2 ஒப்பற்றது. ஓரிக் குதிரை - சிறுபாண்.112 ஓரி:3 கூட்டத்தில் இருந்து ஒதுங்கிய குரங்கு யானை ஆகியவை ஓரி எனப்படும். ஓரி பாய்தலில் மீதழிந்து - புறம். 109 ஓரி:4 ஓரி என்பது ஒற்றைப் பெரும் பேய் எனக் குற்றால வட்டாரத்திலும், நீளம் என்னும் பொருளில் திருவாதவூர் வட்டாரத்திலும், ஒல்லி என்னும் பொருளில் மதுரை வட்டாரத்திலும் வழக்கில் உள்ளது. ஓரி:5 பண்டைத் தண்டமிழ் வாணர்களால் வள்ளல்களாகச் சிறப்பிக்கப் பெற்ற எண்மருள் ஒருவன் ஓரி, அவன் கொல்லி மலைக்கோமான். வில்லாண்மைச் சிறப்பால் வல்வில் ஓரி என வழங்கப் பெற்றவன். ஆதன் ஓரி என்று சுட்டப் பெற்றவன்; படை கொண்டு வந்த முள்ளூர் மன்னன் காரியோடும் பொருது புகழுடம்பு எய்தியவன். இவனுக்கு அமைந்த ஓரிப் பெயர்க் கரணியம் காண்போம். ஓர் என்னும் முன்னிலையுடன் இ என்னும் இறுதிநிலை இணைந்த பெயரே இது. ஒன்று என்பது ஓர் என்றும் ஒரு என்றும் வருதல் தொல் பழவழக்கே. (தொல். எழுத் 437, 438) ஒன்று என்பது ஒன்று என்னும் எண்ணுப் பெயராவதுடன். ஒரு பேராற்றலைக் குறிப்பதாகவும் வழங்கி வருகின்றது. உலகத்தை ஒன்று இயக்குகிறது என்பது உலகளாவிய கொள்கை அந்த ஒன்றற்கு உருவம் தர விரும்பியவர்கள் ஒருவன் ஆக்கினர். ஒருவன் துணை ஒருவனே தேவன் ஒருவன் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்னும் இருவகை வழக்குகளையும் கருதுவார் ஒருவன் எனப் பெறுபவன் இறைவன் என்பதை அறிவர். ஒன்று எனப் பெறும் எண். முதல் எண். ஆதி எண் என்பதும் அது; ஆதலால் இறைவன் முதல் முதல்வன் ஆதி பகவன் ஆதி என வழங்கவும் பெற்றான். மேலும் நான் நீ என்னும் தன்மைப் பெயரும் முன்னிலைப் பெயரும். ஒழிந்த படர்க்கை ஒருமைப் பெயராகிய அவன் என்பது. வழிநிலைப் பெயர்ச் சொல்லாக வாராக்கால், இறைவனையே குறித்தலும் வழக்கு. அவன் இருக்கிறான்அவன்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு ஆவதைச் செய்யுங்கள் என்பனவெல்லாம் வழக்கில் உள்ளனவே அவனன்றி அணுவும் அசையாது என்று சொல்லாதவர் இல்லை. ஒன்று என்பது ஒன்றுவிக்கும் ஊழைக் குறிப்பது தொல்காப்பியத்தால் அறியப் பெறும் தலைவனையும் தலைவியையும் ஒன்றுபடுத்தும் ஊழ் தலைப்பட்டுச் செயலாற்று கிறது. அதனை, ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப -தொல்.பொருள். களவு.2 என்பார். ஒன்று. ஒன்றித்து இருந்தலாம். ஒற்றுமையையும் குறிக்கும் ஓர் ஒரு என்பவையும், எண்ணுப் பெயர்கள் ஆதலோடு ஒப்பின்மை, ஒப்புமை உருபு, தனிமை ஆகிய பொருளையும் தரும். ஒரு தனி ஆழி - சிலப். 27:138 உருவப் பல்பூ ஒரு கொடி வளைஇ - நெடுநல். 113 ஆனின் னகரமும் அதனோர் அற்றே - தொல். எழுத. 124 ஒருதானாகிப் பொருது களத்தடலே - புறம். 76 ஓர் என்பதன் வழியாக ஓர்தல், ஓர்ப்பு, ஓர்வு, ஓரம், ஓரை முதலியனவும் ஓரி என்பதும் பிறக்கும். ஓர்தல் என்பது ஆராய்தல், கூர்ந்து கேட்டல் ஆகிய பொருள்களைத் தரும். ஒருமுகப்பட்ட கூர்ப்பின் அடிப்படையில் ஆய்வு உண்டாகுமே அன்றிப் பலவகையாகச் சிதறிய புலனால் அறிவும் கேள்வியும் தலைப்படா. ஓர்தல் என்பது கருத்தின்றிக் கேட்டலைக் குறியாமல் கூர்ந்து செவியைத் தீட்டிக் கேட்டலையே குறிக்கும்; ஓர்வு என்பதும் ஓர்தல் போன்றதே யாம். திரிபுரி நரம்பின் தீந்தொடை ஓர்க்கும் - பட். 254 மாதர் வண்டின் நயவருந் தீங்குரல் மணநாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் - நற். 244 நறுஞ்சே றாடிய வறுந்தலை யானை நெடுநகர் வரைப்பில் படுமுழா வோர்க்கும் - புறம். 68 ஓர்ப்பு என்பது ஆடவர் இயல் நலம் நான்கனுள் ஒன்று. மற்றையவை அறிவு, நிறை, கடைப்பிடி என்பன; ஓர்ப்பாவது மனத்திடன். ஓர்மம், ஓர்மை, ஓர்மிப்பு என்பனவும் இதுவே. I«òyD« x‹whf¢ brY¤j tšyh®¡F mšyJ kd¤âl‹ thuhnj! ஐம்புலனும் வென்றான்தன் வீரமே வீரமாம் என்பதை நோக்குக! ஓரை என்பது மகளிர் விளையாட்டும், விளையாடும் இடமும், விளையாடும் மகளிரும், விளையாடற்காம் பொருளும் முதலியவற்றைக் குறிக்கும். ஒத்த பருவத்து, ஓருணர்வொன்றிய மகளிர் உவகைப் பெருக்கால் ஒன்றுபட்டு ஆடும் ஆடற் குறிப்பால் ஓரையாயிற்று. விளையாடும் மகளிரை ஓரை மகளிர் என்றும் (குறுந். 316) அவர்கள் கூட்டத்தை ஓரை ஆயம் என்றும் (குறுந். 48) கூறுவர். ஓரை மகளிரின் ஒப்பாந்தன்மையை, “உடன்பிறந்து, உடன் வளர்ந்து, நீர் உடனாடிச், சீர் உடன்பெருகி, ஓல் உடனாட்டப் பால் உடன் உண்டு, பல் உடன் எழுந்து, சொல் உடன் கற்றுப் பழமையும் பயிற்சியும் பண்பும் நண்பும் விழுப்பமும் ஒழுக்கமும் மாட்சியும் உடையார்”என்னும் களவியல் உரையால் நன்கு அறியலாம்.(2) ஓரை என்னும் மற்றொரு பொருள் பொதிந்த சொல்லும் உண்டு. நாளும் கோளும் நல்லவனவாகவும் எல்லா நலங்களும் இனிது இயைப்பனவாகவும் கணியரால் தேர்ந்து கொள்ளப் பெறும் முழுத்தமே ஓரை என்பதாம். இதனால் ஓரை முழுநிறை பொருள் பொதி செந்தமிழ்ச் சொல்லாதல் கொள்க! முழுத்தம் என்னும் வழக்கு இன்றும் வழக்கில் இருக்கவும் முகூர்த்தத்தில் முழுக்காடுவோர் தமிழறிந்தோர் ஆகார். இனி, ஓரி என்பதைக் காண்போம். ஓரி என்பது ஒன்று என்பதையும், தனித்துத் திரியும் விலங்கையும், ஒரு பெற்றோர்க்குப் பிறந்த தனி மகவையும், ஒரு தானாக ஓங்கிய ஒரு திறவோனையும் குறிக்கும். இவற்றின் வழியே பலபல பொருள்களும் கிளைத்துப் பெருகும். ஓரிப் புதல்வன்என்னும் கலியையும் (114) ஓரி மாங்காய் என்னும் குழந்தைப் பாட்டையும். ஓரி, ஈரிஎன எண்ணும் சிறார் விளையாட்டையும் எண்ணுக! ஒரு குடிக்கு ஒரு மகவாகப் பிறந்தார்க்கு ஓரி எனப் பெயர் சூட்டல் வழக்குண்மையும் கருதுக! கூட்டத்தில் இருந்து பிரிந்து ஒரு கோட்பாட்டால் தனித் துறையும் குரங்கு, நரி முதலியவற்றையும், பொதுவாக விலங்கின் ஆணையும், ஓரி என்னும் வழக்குண்மை அறிக! அழல்வாய் ஓரியோ டறுகை பம்பி - பட். 257 ஓரி கொள்ளைகொண் டுண்ணவும் - சீவக. 2310 என்பன நரியையும், அணிநிற ஓரி - புறம். 109 புன்றலை ஓரி - குறுந். 221 நீனிற ஓரி - மலை. 524 என்பன குரங்கையும் குறிப்பன. பாய்ந்தும் தாவியும் செல்லுதலில் வல்ல குரங்கும் நரியும் ஓரி என்றாற் போலவே, குதிரை என்பதற்கும் ஓரிப் பெயர் இருந்திருக்க வேண்டும். அவ்விலங்குகளினின்று குதிரையாம் ஓரியைத் தனித்துக் காட்டற்கே ஓரிக் குதிரை (சிறு.111) என்றார் போலும் எனக் கருத நேர்கின்றது. தனித்த ஆண் விலங்கைக் குறிக்கும் ஓரி என்னும் சொல் பின்னர் ஆண்மக்கள், ஆண் விலங்கு இவற்றின் மயிரையும் குறிக்கலாயிற்று. ஊட்டுளை துயல்வர ஓரி நுடங்க - பொருந. 164 மேல்பால் உரைத்த ஓரி - பெரும். 172 இனி, ஓரி என்பான் கொடையாண்மை. மழவர் பெருமகன் மாவள் ஓரி - நற்.52 மாரி வண்மகிழ் ஓரி - நற். 265 திண்தேர்க் கைவண் ஓரி - குறுந். 199 கருவி வானம் போல வரையாது வழங்கும் வள்ளியோய் - புறம்.204 என்பனவற்றால் புலப்படும். இத்தன்மையால் ஓரி உலவாக் கொடை வள்ளல்களுள் ஒருவன் ஆனான். ஆனால், அவன் படையாண்மை யாலேயே ஓரிப் பெயர் பெற்றான் என்பது தகும். வல்வில் ஓரி - நற்.6 குறுந். 108 அகம்132, புறம் 128 பழவிறல் ஓரி - நற். 320 அடுபோர் ஆனா ஆதன் ஓரி - புறம் 153 இவை ஓரியின் படையாண்மைக் குறிப்புகள். ஆயின் இவற்றால் அவன் ஒப்பற்றவன் என்று உறுதி செய்தற்கு இல்லை? என்னெனின் இவ்வாண்மை வேந்தர்க்குப் பொதுத் தன்மையே யாம். ஓரிக்கெனச் சொல்லும் சிறப்பாண்மை அன்றாம். அவனுக் கென அமைந்த, அவன் ஒருவனுக்கே அமைந்த தனிச் சிறப் பாண்மையை நேரில் கண்டு நெகிழ்ந்து போய் உரைக்கிறார் வன்பரணர். வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறி துறீஇப் புழற்றலைப் புகர்க்கலை உருட்டி உரற்றலைக் கேழற் பன்றி வீழ அயலது ஆழற் புற்றத் துடும்பிற் செற்றும் வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன் ஓரி கொல்லோ அல்லன் கொல்லோ -புறம். 152 யானையை வீழ்த்திய அம்பு, புலியின் பெரிய வாயுள் புகுந்து அதனை வீழ்த்திப் பின்னர் ஒரு புள்ளி மானையும் பன்றியையும் வீழச்செய்து, அடுத்திருந்த புற்றிற் கிடந்த உடும்பில் தைத்து நின்றது! ஓரியின் இவ்வொப்பற்ற திறனுக்கு ஈடாகப் பண்டையோர் பாடற் சான்று ஒன்றும் இன்றாம்! பிற்காலப் புனைந்துரைப் பாடல்கள், மேருவை உருவு மென்றால் விண்கடந் தேகு மென்றால் பாரினைக் கடக்கு மென்றால் கடல்களைப் பருகுமென்றால் -கம்.உயுட். 1238 என வருவது போன்ற ஒப்பிடுதல் ஆய்வுக்கு உரியதன்றாம். வில்லுக்கு ஒருவனாக விளங்கிய ஏந்தலின் வலிய வில்லாண்மையைச் சுட்டு முகத்தான் ஓரி என்றும், அதனை விளக்கு முகத்தான் வல்வில் ஓரி என்றும் பண்டையோர் பெயர் சூட்டி மகிழ்ந்தனர் எனக் கொள்க. வில்லாண்மையில் சிறந்தமை வீறு பெற்று விளங்கிய பிற்காலத் தல்லவோ, பிறந்த காலத்தன்றோ பெயர் சூட்டுவது? பிற்காலத்தே இவன் இன்னவாறிருப்பவன் என்பதை உணர்ந்தோ பெயர் சூட்டினார்?என்று மறுப்பார் உளராயின், நாம் பயில வழங்கும் பண்டையோர் பெயர்களுள் பலவும் பிறந்த நாளிட்ட பெயரன்று. சிறப்பாலும் சீர்மையாலும் வீற்றாலும் விழுப்பத்தாலும் பெற்ற பெயர்களே என்றும், இந்நாளிலும் துறவுப் பெயர், முடிசூட்டுப் பெயர், தூநீர் முழுக்குப் பெயர், பட்டப் பெயர், மொழித்தூய்மைப் பெயர் இன்னவாறெல்லாம் இருத்தலைக் காண்கின்றோமே என்று அமைக! கங்கை கொண்டான், கடாரங்கொண்டான், ஈழந்திறை கொண்டான், கொல்லங் கொண்டான், முடி வணங்கான், தகடூர் எறிந்தான், கருவூர் ஏறினான் என்பன போல்வனவற்றை எண்ணுக! வில்லாண்மையே ஒப்பிலாது ஒரு மாமணியாய் ஓங்கிய திருமாமணிஓரி எனக் கொள்க! தமிழர்தம் வாக்கின் வலு வின்மையும் மடிமையும் குடிமைத் தாழ்ச்சியாய், வில்லுக்கு ஓரி என்னும் விழுப்பத்தைத் தாராது ஒழிந்ததாம் என்பதை எண்ணுக! ஓரெழுத்தந்தாதி: ஓரெழுத்தே செய்யுள் முழுமையும் வந்து அந்தாதித் தொடையால் அமையும் நூல் ஓரெழுத்தந்தாதியாகும். ஓரெழுத்தந்தாதி குற்றுயிரான் வந்த மடக்கு. நெட்டுயிரான் வந்த மடக்கு. ஒரு மெய்யான் வந்த மடக்கு என்று பகுக்கப்படும். கருப்பையா பாவலர் என்பார் ஓரெழுத்தந்தாதி நூல் ஒன்று யாத்துள்ளமையைத் தமிழ்ப் புலவர் அகராதி வெளிப்படுத்து கின்றது (பக். 100). திருச்சுழியல் ஓரெழுத்தந்தாதி, கழுகுமலை ஓரெழுத்தந்தாதி என்பவை இவ்வகைய (தனிச்செய்யுட் சிந்தாமணி 348) எ-டு: தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைத்ததா தூதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது - தண்டி. மேற். 65 இது தகர எழுத்தொன்றான் வந்த செய்யுள். * ஒரு வருக்கப்பா பார்க்க. ஓரை: நாளும் கோளும் ஒன்றுபட்டமைந்த நற்பொழுது ஓரையாம். ஒன்றுபட்ட வயதுச் சிறுமியர் ஓரை ஆயம் எனப்படுவர். அவர்கள் கூடியாடும் ஆடல் ஓரை என வழங்கும். * ஓரி காண்க. ஓர்சு: ஓர்சு என்பது ஒழுங்கு படுத்துதல் என்னும் பொருளில் முகவை மாவட்ட வழக்கில் உள்ளது. களத்து வேலை ஓர்சு ஆகிவிட்டது. நெல் தூற்றி ஓர்சு ஆகிவிட்டது. என்பவை வழக்குத் தொடர்கள். ஓர் ஒழுங்குபடுதல் ஓர்சு எனப்படுகின்றது, ஓர்தல்: ஓர் + தல் = ஓர்தல், தல் = சொல்லீறு. ஓர்தல் = ஒருமுகப்பட்டு ஆராய்தல். ஓராமை = ஒருமுகப்பட்டு ஆராயாமை. ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து - திருக். 541 எண்பதத்தால் ஓரா முறைசெய்யா மன்னவன் - திருக். 548 ஓலுப்படல்: அல்லறுறல் ஓலுறுத்தல், விளையாட்டுக் காட்டல், ஆடிப்பாடல், மகிழ்வுறுத்தல் பொருளது . செல்வக் குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களுள் ஒருத்தி, ஓலுறுத்தும் தாய் அவ்வோலுறுத்தல் குழந்தையின் அழுகை அமர்த்தி இன்புறுத்தல். இவ் வோலுப்படல் என்பது மகிழ்வு , இழத்தல் மட்டுமன்றி அல்லலுறுதலுமாம். படல் என்பது இழப்புச் சுட்டும் பொருளிலும் உண்டாதல் பொருளிலும் வரும். அழிதல், கெடுதல் பொருளிலும் வரும். பயிர் படுகிறது பயிர்பட்டுப் போனது என்பவற்றிலுள்ள படுதல் அறிக. பட்டமரம் என்பதும் அறிக. ஓலை: ஒல் > ஓல் > ஓலை . ஓல் = ஒலிக்குறிப்பு. பனை ஓலையே ஓலை என்றவுடன் நினைவில் வரும் தென்னை, கீற்று, பனை ஓலை. ஒல்லுதல் = பொருந்துதல், இணைதல். பனை ஓலை பதனீர் பருகும் பட்டை ஆகும்; குடை என்பதும் அது. பசுவெள் ளமலை, இரும்பனங் குடையின் மிசையும் - புறம்.177 அமலை = சோறு; மிசையும் = உண்ணும். மழைக்கும், வெயிலுக்கும் காப்பாக விளங்கும் குடையாகவும் . வீட்டுக்கூரை வேய்வாகவும், பாயாகவும் பெட்டி தட்டு முதலியவாகவும் பெரும்பயன் செய்யும். இப்பயன்களை யெல்லாம் வெல்லும் பயனாகப் பனை ஓலை, ஏட்டுச் சுவடியாய் நம் மொழிவளம் காத்து இற்றைச் செம்மொழித் தகுதியை உலகுக்கு வழங்கியுள்ளது. ஏட்டுக் கொடை நம் தேட்டுக் கொடையெனச் சிறக்கின்றது. சுவடிப் பயனொடு, ஓலையே ஆட்சியாக நடந்தமை அறியலாம். ஓலை என்பது வெற்று ஓலையை அல்லாமல் முடங்கல் எழுதப்பட்ட ஓலையையும் குறித்தது. ஓர் அரசர் மற்றோர் அரசருக்குத் தூதர் வழியே முடங்கல் அனுப்புதலை ஓலை போக்குதல் என்பர். இத்தகைய முடங்கல் ஓலையின் மேல் முத்திரையிட்டு அனுப்பும் வழக்கமும் இருந்ததைக் கலித்தொகை (94:42) சிலப்பதிகாரம் (13:76) முதலியவற்றால் அறியலாம். ஓலைக் கடிதத்தை ஓலைப் பாசுரம் எனவும் வழங்குவர் என்பதை அடியார்க்கு நல்லார் உரையாலும் (சிலப். 13: 93-95). நச்சினார்க்கினியர் உரையாலும் (சிந்தா. 1653, 2147) அறிய முடிகின்றது. மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும்என்னும் நன்னூல் (53) தொடரால் புலவர்கள் வள்ளல்களுக்கு எழுதும் கடிதக் கவி ஓலைத்தூக்கு என்றும் சீட்டுக் கவி என்றும் பெயர் பெற்றது. சோழர் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த குடவோலை முறை தனிச் சிறப்பு வாய்ந்தது. அவ்வோலை, பெயரும் குடும்பும் தகுதியும் பிறவும் எழுதப் பெற்ற சீட்டே ஆகும். கடன் ஒப்பந்தம் முதலியவை எழுதிய ஓலை ஆவண ஓலை ஆகும். ஆவணங்கள் பாதுகாப்பில் வைக்கப் பெற்ற இடம் ஆவணக் களரி எனப் பெற்றது. ஆவணத்தின் முதல் ஓலை மூல ஓலை என்றும், அதற்கு பதில் ஓலை படியோலை என்றும் பெயர் பெற்றமை சுந்தரர் வரலாற்றால் விளங்கும். அரசராயினார் கூறும்செய்தியை ஓலையில் எழுதுவார் திருமந்திர வோலை என்றும், அவர்கள் தலைவராக இருப்பார் திருமந்திர வோலை நாயகம் என்றும் பெயர் பெற்றனர். அரசரின் செயல் நடவடிக்கை முதலியவற்றை எழுதுவார் பட்டோலை என்றும், கணக்கெழுதுவார் ஓலைக் கணக்கர் என்றும், ஊர் நடவடிக்கைகளை அவையோர்க்குப் படித்துக் காட்டுவார் நீட்டோலை என்றும் பெயர் பெற்றனர். நீட்டோலை வாசிக்க மாட்டாதவர் அறிவுடையார் பழிப்புக்கு ஆளாயினர் (வாக்.13) வெள்ளோலை கண்பார்க்க கையால் எழுதார் ஔவையாரால், வெண்பா இருகாலில் கல்லானை, வெள்ளோலை கண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளே எற்றோமற் றெற்றோமற் றெற்று என இகழப்பட்டனர். ஓலையுள் முதிர்ந்தது முற்றல் ஓலை; காய்ந்த ஓலை, வற்றல் ஓலை எனப்படும். இளவோலையோ குருந்தோலை, பச்சோலை, சாரோலை எனப்படும். இவ்விருவகை ஓலைகளும் எழுதுவதற்குப் பதனாக அமையா. முதிரோலையோ இளவோலையோ நெடுங்காலம் உழைக்கவும் மாட்டா. ஆதலால் இவ்விருவகை ஓலைகளையும் விலக்கி இடைப்பட்ட ஓலையையே எழுதுவதற்குத் தேர்ந்தெடுப்பர். முதற்கண் வாளமான ஓலையைத் தேர்ந்து அவரவர் விருப்பம் போல் ஓர் அளவாக நறுக்கி எடுத்துக் கொள்வர். இதனாலேயே ஓலைக்கு நறுக்கு என்றும் முறி என்றும் பெயர்கள் வந்தன. நறுக்கி எடுப்பதை, ஓலை வாருதல் என்பர். ஓலையை ஒத்த அளவாக நறுக்கி இணை சேர்த்தலைச் சுவடி சேர்த்தல் என்பர். சுவடி என்பது இணையான ஓலை என்பதேயாம். இணையான தடத்தைச் சுவடு என்பதும், இணையான காளைகளைக் சுவடிக் காளைகள் என்பதும், இணையான பிள்ளைகளைச் சுவடிப் பிள்ளைகள் என்பதும் இன்றும் கேட்கக் கூடியவையேயாம். இணை என்னும் பொருள் தரும் சுவடி சோடி யாயிற்று. அதனை ஜோடி ஆக்கியது எழுத்து மாற்று வேலையாம். அளவாக நறுக்கி எடுத்த ஓலைகள் வலுவுடையனவாகவும், பூச்சியால் அரிக்கப்படாதனவுமாக இருப்பதற்கு, வெந்நீரில் போட்டு ஒரு சீராக வெதுப்பி எடுத்துக் காய வைப்பர். பனிப் பதப்படுத்துவதும் உண்டு. அதன் பின்னர் ஓலையின் நீளத்திற்குத் தக்கவாறு ஒரு துளையோ இரு துளைகளோ இடுவர். புத்தகங் களுக்கு அட்டை கட்டுவதுபோல எட்டுச் சுவடியின் இருபக்கங் களிலும் இரண்டு மரச் சட்டங்களைச் சேர்ப்பர். இச்சட்டத் திற்குக் கம்பை என்பது பெயர். நிலைக் கதவு மேலுள்ள சட்டம் கம்பை எனப் பெறுதல் இன்றும் வழக்கில் உள்ளது. கம்பு = மரக் கிளை. அதனைப் பிளந்த தகடும் சட்டமும் கம்பை எனப்பட்டன. ஏட்டுச் சுவடியைக் கட்டுவதற்குக் கயிற்றைப் பயன் படுத்துவர். கயிற்றின் தலைப்பில், பனையோலையை அதன் ஈர்க்குடன் கிளிமூக்குப் போலக் கத்தரித்துக் கட்டியிருப்பர். அதற்கு கிளிமூக்கு என்பது பெயர். அது, கயிறு உருவிக் கொண்டு வாராமல் தடுக்கும் தடையாகும். ஒற்றைத் துளையுடைய சுவடியைக் கயிற்றால் மட்டும் கட்டுவர். இரட்டைத் துளைகளை யுடைய சுவடிகளைப் பொருந்தும் சட்டத்தின் ஒரு துளையில் சுள்ளாணி என்னும் ஒரு குச்சியைப் பொருத்தி யிருப்பர். சுள்ளாணியை நாராசம் என்றும் (வ) கூறுவர். ஏட்டின் ஒரு துளையைச் சட்டத்தில் உள்ள சுள்ளாணியில் பொருந்துமாறு சேர்ப்பர். மற்றொரு துளை வழியே கயிற்றை இழுத்துக் கட்டுவர். சுள்ளாணி, கட்டும் ஏடுகள் கலையாமலும் உதிர்ந்து போகாமலும் காக்கும் . சட்டங்களோ, ஏடு பழுதுபட்டுப் போகாமல் இருக்க உதவும். சுவடிச் சட்டங்களின் மேல் ஓவியங்கள் எழுதுவதும் வண்ணங்கள் தீட்டுவதும் உண்டு. ஓலைச் சுவடிகளே என்றாலும் காணக் காணக் களிப்பூட்டுவனவான அமைப்புகளில் அவற்றைச் செய்வர் . சில ஏட்டுச்சுவடிகள் உருண்டைக் கழிகள் போலவும், சிவலிங்கம் போலவும் இருக்கும்என நல்லுரைக் கோவை கூறுகிறது. (1, பக். 143) மஞ்சளை அரைத்து ஏடுகளில் பூசுவர். வசம்பு, மணித்தக்காளி இலைச்சாறு, ஊமத்தை இலைச்சாறு, மாவிலைக் கரி, அறுகம்புல் கரி ஆகியவற்றைக் கூட்டிக் சேர்த்த ஒருவகை மையையும் தடவுவர். இவற்றால் ஏட்டிலுள்ள எழுத்துத் தெளிவாகத் தெரியும். கண்ணுக்கும் குளிர்ச்சி யுண்டாகும். ஏடும் பூச்சி முதலியவற்றால் அரிக்கப்படாது. ஏடுகளில் இவ்வாறு மை தடவிப் படிக்கத் தொடங்கு வதால், ஏடு படிக்கத் தொடங்குவதை மையாடல் என்று கூறும் வழக்கம் உண்டாயிற்று. தமிழைக் குழந்தையாக்கிக் கொஞ்சும் தமிழ் விடு தூது என்னும் நூல், ஏடுகளில் மஞ்சள் பூசுதலையும் மை தீட்டுதலையும் உட்கொண்டு, மஞ்சட் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்டமிக வளர்ந்தாய் என்று பாராட்டுகிறது. சுவடிகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்திய பலகையைத் தூக்கு என்பர். அசை என்றும் கூறுவர். கவளி என்பார் சேக்கிழார். செல்வக் குடும்பங்களில் தூக்குகளைத் தூக்கிச் செல்வதற்கெனத் தனி ஆள்களை ஏற்படுத்தியிருப்பர். அவர்களுக்குத் தூக்குத் தூக்கி என்பது பெயர். தூக்குத் தூக்கி என்பதொரு நாடகம் அண்மைக் காலம் வரை நடந்தது. சுவடிகள், குழந்தைகள் போல அசையாகிய தொட்டிலில் கிடப்பதைத் தமிழ் விடு தூது. பள்ளிக்கூ டத்தசையாம் பற்பலதொட் டிற்கிடத்தி தள்ளிச் சிறார் கூடித் தாலாட்டி என்று தாலாட்டுகிறது. ஓலையும் ஏடும் மிகப் பழமையான சொற்கள். புல்லினத்தின் உறுப்புகளைக் கூறும் ஆசிரியர் தொல்காப்பியனார், தோடே மடலே ஓலை என்றா ஏடே இதழே பாளை என்றா ஈர்க்கே குலையென நேர்ந்தன பிறவும் புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர் - தொல். பொருள்.மரபு.86 என்று கூறுமுகத்தான், தமக்கு முந்தைப் புலவர்கள் காலந் தொட்டே இவ்வழக்குண்மையைத் தெரிவித்தார். இந்நாளில் தாள் என நாம் வழங்குவதும் புல்லின் உறுப்புப் பெயரேயாம். பேபிரைசு என்னும் ஒருவகைப் புல்லின் தாளே பேப்பர் என்னும் பெயருக்கு மூலம் என்பர். காலம் கடந்தும், இடங் கடந்தும் சில அடிப்படைகள் மாறா என்பதற்குத் தாளும் பேப்பரும் எடுத்துக்காட்டாம். சுவடி என்னும் சொல் இப்பொழுது பெருக வழங்குகின்றது. நூல் நிலையத்தைச் சுவடிச் சாலை என்பார் பாவேந்தர் பாரதிதாசனார். ஆசிரியர் கொங்கு வேளிர், பட்டுச் சுவேதமொடு பாட்டுப்புற மெழுதிய கட்டமை சுவடி பற்றிய கையினர் - பெருங். 3:1:120,121 என்பார். பொத்தகம் என்னும் சொல்லையும் அவர் வழங்குகின்றார். அறநிலை பெற்ற அருள்கொள் அவையத்து நிறைநூல் பொத்தக நெடுமணை ஏற்றி - பெருங். 1:36:225,226 என்பது அது. பொத்தகக் கட்டும் பொத்தகக் கைவினையும் அவரால் பேசப்படுகின்றன. சிந்தாமணியும் பொத்தகம் என்னும் சொல்லை ஆள்கின்றது (பாடல் 2009) கலைமகள் வாழ்த்தாக உள்ள ஒரு வெண்பா பொத்தகமும் ஞானத்து முத்திரையும் (பெருந்தொகை 118) எனத் தொடங்கு கிறது. மொழிக்கு முதலாம் எழுத்துகளுக்கு எடுத்துக்காட்டுத் தரும் நேமிநாதவுரை (7), பகர வரிசைக்குப் படை, பாடி, பிறை, பீரம், புறம், பூமி, பெற்றம், பேதை, பைதல் பொத்தகம் போதம், பௌவம் என்கின்றது. இதனால் அவர் காலத்தில் புத்தகம் என்பதனினும் பொத்தகம் என்பதே பெருவழக்காக இருந்தது என்பது புலப்படும். ஏனெனில் அவர் பகர உகரத்திற்குப் புத்தகம் என்பதையே காட்டியிருக்கலாம் அல்லவா? நன்னூல் உரையாசிரி யர் சங்கர நமச்சிவாயர் பல பொருளான் இயைந்த ஒரு பொருள் என்பதற்குப், பலவின் இயைந்தவும் ஒன்றெனப் படுமே அடிசில் பொத்தகம் சேனை அமைந்த கதவ மாலை கம்பல மனைய என்பதை எடுத்துக்காட்டாக வழங்கியுள்ளார் (நன். 260) புத்தகம் என்னும் சொல்லும் முன்னரே வழங்கியதை அறிய முடிகின்றது. புத்தகம் தொகுத்து வைத்தும் புலமை பெறாதாரைக் கருதிப், புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள்தெரியார் உய்த்தக மெல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப் போற்றும் புலவரும் வேறே, பொருள்தெரிந்து தேற்றும் புலவரும் வேறு என்கிறது நாலடியார் (318) கையினிற் படைகரந்த புத்தகக் கவுளி ஏந்தி முத்தநாதன் செல்வதைச் சேக்கிழாரடிகள் உரைத்ததை முன்னே கண்டோம் (பெரிய. மெய்ப்பொருள் 7). இந்நாளில் புத்தகம் என்னும் சொல்லே பெருவழக்காக உள்ளமை எவரும் அறிந்ததே. * ஏடு காண்க. ஓலை எழுதுதல்: திருமண உறுதி எழுதுவதை ஓலை எழுதுதல் என்பது பொதுவழக்கு. இருவீட்டாரும் இசைந்து எழுதிய எழுத்து அது. இருவரும் ஊர்ப்பெரியவர் முன்னிலையில் அவர்கள் சான்றுடன் எழுதி அதன்படி மண நிகழ்வு நடத்துதல் வழியாக ஏற்பட்டது. கிறித்துவ சமயச் சடங்கிலும் ஓலை எழுதுதல், ஓலை வாசித்தல் என்பவை உண்டு. ஓலை என்பது திருமணக் கரணங்களுள் ஒன்று. ஓலை வருதல்: சாவுச் செய்தி வருதல் ஓலை வருதல் என்பதும், சாவு வரும் என்பதை ஓலைகிழிந்து போகும் என்பதும் நெல்லை முகவை மாவட்ட வழக்கு. இறப்புச் செய்தி ஓலை வழியே அறிவிக்கப்பட்ட அடையாளம் இது. ஓவாய்: பல்லெல்லாம் போனவர் வாயை ஓவாய் என்பது நெல்லை மாவட்ட வழக்கு. ஓ என்பது ஏரி, குளம் ஆகியவற்றின் மடைநீர்த் தடுப்பாகிய பலகை. மதகு நீர் தாங்கும் பலகை என்பது அது. அப்பலகை எல்லாம் அகற்றப்பட்டது போன்ற வாய் ஓவாய். பொழுவாய் எனவும் வழங்கும். பொள்ளல் என்பது ஓட்டை, பொள் - பொளு - பொழு என ஆகியிருக்க வேண்டும். இதுவும் நெல்லை மாவட்ட வழக்கே. ஓவாய் ஓழுவாய்: ஓவாய் = பல் போனவாய் ஒழுவாய் = நீர் வழியும் ஓட்டைவாய். ஓ = ஓவுதல்; ஓவுதலாவது, ஒழிதல், நீங்குதல் என்னும் பொருட்டது பல் ஒழிந்து இடைவெளிப்பட்டுப் போனவாய் ஓவாய் எனப்படும். ஓவாய் = ஒழுகும் வாய், ஒழுவாய் என நின்றது. பல் போய் பின்னர்த் தடையின்றி நீர் ஒழுகுதல் உளதாகலின் ஒழுவாய் எனப்பட்டது. ஓவாயன் ஒழுவாயன் என்பவை நகையாண்டிப் பெயர்கள், இப்பெயர்களாக நிலைத்தாரும் உளர். ஓவிதி: ஓய்வு பெற்ற இருப்பதை ஓவிதி என்பது வேடசெந்தூர் வட்டார வழக்கு. வேலையில்லாமல் இருப்பதை ஒழிவாக இருத்தல் என்பது தஞ்சை வட்டார வழக்கு. ஒழிவு, பிற ஒழிந்து போதல். ஓவியம்: ஓவியம்:1 ஒன்றற்கு ஒன்று ஒப்பாகக் கூறப் பெறுவது உவமையாகும். உவமை, அணிகளின் தாய்; அவள் புனைந்து நடிக்கும் பல்வகைக் கோலங்களே பல்வேறு பொருள் அணிகள். அதனால்தான், ஆசிரியர் தொல்காப்பியனார் உவமவியல் என ஓர் இயல் வகுத்த அளவில் செய்யுள் அணிநலம் உரைத்தார். உவமைக்கு அமைந்த ஒப்புத் தன்மை வேறு சில கலைகளுக்கும் மூலமாக அமைந்தது. பொரு என்பது ஒப்பு; ஒருவரைப் போல வடிவும் உடையும் தாங்கி நடிக்கும் கூத்தர் பொருநர் எனப் பெற்றனர். அன்றியும் ஒத்த இருவீரர் தம்முள் தாக்குதல் பொருதல் என்றும், அவர்கள் பொருநர் என்றும் பெயர் பெற்றமை இவ்வொப்புத் தன்மையாலேயாம். இதனால் பொரு என்பதும் ஓர் உவமை உருபாகக் கொள்ளப் பெற்றது. ஒவ்வுதல் என்பது பொருந்துதல் சிலவற்றை ஒவ்வும் எனக் கொள்ளுவதும். சிலவற்றை ஒவ்வாது எனத் தள்ளுவதும் எவர் வாழ்விலும் காணக் கூடியவையே. ஒவ்வாமையே இந்நாளில் ஒரு நோயாக மருத்துவ உலகம் உரைக்கின்றது. அவ்வொவ் வாமையே (Allergy) உடலோடும். உள்ளத்தோடும் ஒவ்வாமை நோயின் மூலம் என்பது சரிதானே! இனிப் பருந்தும் நிழலும் போலப் பண்ணும் இசையும் என்பர். இதுவும் பொருந்துதல்தானே; இப்பொருந்துதல் எப்பெயரால் அழைக்கப் பெறுகிறது. இசை என்னும் ஒப்புப் பெயரால் அழைக்கப் பெறுகிறது. இசை இசைவு என்பவை யெல்லாம் ஒப்புக் கொண்டு உவப்புறக் கூடியவையே; எவ்வுயிர்க்கும், எவ்வுயிரிக்கும் உயிராம் இறைக்கும் இசைவூட்டும் இன்பத்தை இசை என்று பெயரிட்டு அழைக்கும் சிறப்பை இயம்பவும் வேண்டுமோ? இயம்புதல் என்பதுதான் என்ன? இசை போல இனிக்க உரைக்கும் மொழிதானே இயம்புதல் இயம் என்பதும் இசையே! இனி ஓவியத்தைக் காண்போம்; ஒவ்வ வரைந்த ஒன்றே ஓவு, ஓவியம்; ஓர் உருவைக் கண்டான் ஒருவன், அதனைக் காணாக் காலும், அதனை ஒருவன் தீட்டி வைத்த காட்சி கண்டு, அவ்வுருவைக் கண்டான் போலக் களிகூரச் செய்வதும், ஒவ்வும் ஒவ்வும் இது அதுவே என ஏற்கச் செய்வதும் ஓவியம் ஆகும். ஓவியம், கண்டாரை வயப்படுத்த வல்லது. அவர்கள் நோக்கைத் தன்பால் நிறுத்த வல்லது. ஆகலின், ஓவியரைக் கண்ணுள் வினைஞர் என்றனர் முன்னோர். கண்ணுள் வினைஞர் என்பதற்கு நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழிலை நிறத்துவார் என்றார் நச்சினார்க்கினியர் (மதுரைக் . 517 உரை). ஓவு, ஓவம், ஓவியம் என்பன ஒருபொருள் தரும் சொற்களே! இச்சொற்கள் தொல் பழ நாளிலேயே ஒரு வழக்கில் இருந்தன. ஓவியத் தொங்கலும், ஓவியத் திரையும், ஓவியப் படாங்களும், ஓவிய மேற்கட்டுகளும் ஆங்காங்குப் பயன்படுத்தும் அழகுச் செல்வங்களாக விளங்கின. இயற்கைக் காட்சிகளையும் செயற்கைக் காட்சிகளையும் உள்ளது உள்ளவாறு தீட்டிக் காட்டத் தொடங்கிய ஓவியம் கற்பனைக் கோலம் தாங்கும் கவர்ச்சிக் கலையும் ஆயிற்று. பாவிகம் பாடும் பாவலர்களைப் போல, ஓவியம் போடும் ஓவியர்களும் ஒத்த புகழுக்கு உரியராயினர். ஓவியர் ஓவர்என்றும் ஓவ மாக்கள் என்றும் அவர்கள் செய்யும் ஓவியத் தொழில் ஓவச் செய்தி என்றும் வழங்கப் பெற்றன. ஒவ்வ வரையப் பெற்ற ஓவியம், புலமைச் செல்வர்களால் உவமைப் பொருளாகவும் வழங்கப் பெற்றது. ஓர் அழகிய நீர்த்துறை, ஓவத்தன்ன உண்துறை - சிறுபாண்.70 எனப்பெறுகிறது. கவின்மிக்க பரந்த இடம், ஓவத்தன்ன இடனுடை வரைப்பு எனப் பெறுகிறது (புறம். 251; நற். 182). ஓர் அழகிய வீடும், அழகிய பெருமாளிகையும், ஓவதன்ன வினை புனை நல்இல் என்றும் (பதிற். 61) ஓவத் தன்ன உருகெழு நெடுநகர் என்றும் (பதிற். 88) கூறப் பெறுகின்றன. இனிக் காப்பியக் காலத்திலும் பிற்காலத்திலும் ஓவியக் கலை வளம் பெற்ற செய்தியை அறிய முடிகின்றது, சிற்றன்ன வாசல் ஓவியத்திற்கு உலகப் புகழ் உண்டு என்பது அறிந்த செய்தியே. திருப்பரங்குன்றத் திருக்கோயிலின் ஒருகால் திகழ்ந்த எழுத்துநிலை மண்டபம் ஓவியக் கூடமே. எழுதெழில் அம்பலம் என்பதும் அதுவே, அதன் சிறப்பைப் பரிபாடல் விரித்துரைக்கின்றது. (பரிபா. 18, 19) ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும் கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை மாதவி சிறப்பை மணிமேகலை பாடுகின்றது. (2:81-2). ஓவியம்: 2 ஓவியம் = அருமை. ஓவியம் பொது வழக்கில் சித்திரத்தைக் குறிக்கும். ‘Újhdh XÉa«! அது என்ன ஓவியமாய்ப் போய்விட்டது என்னும் பேச்சு வழக்கில் அஃது அருமைப் பொருளில் நெல்லை மாவட்டத்தில் வழங்குகின்றது. ஓவியம்:3 ஓவியம் = அழகு. ஓவியம் அழகாக இருத்தலின் அழகுக்கே ஓவியம் என்னும் பொருளும் உண்டாயிற்று. நீ பெரிய ஓவியம் என்பதில் அழகு அருமை என்னும் இரண்டும் சுட்டிய எள்ளல் உண்மை அறிக. ஓவு: கூரை, ஓடு, மாடி ஆகியவற்றில் இருந்து மழைநீர் சேர்ந்து வழியும் இடத்தை ஓவு என்னல் நெல்லை மாவட்ட வழக்கு. ஒழி - ஒழிந்திருத்தல் - ஓவு ஆகலாம். நீங்குதல் ஆகிய ஒரூஉ என்பது ஓவு ஆவதும் சொல்லியல் முறையே. பல் போய ஓட்டை வாயை ஓவாய் என்பது எண்ணத்தக்கது. ஓவுதல்: ஒரூஉதல் > ஓவுதல் = நீங்குதல். உன் நினைப்போவி நின்று - கம். உயுத். 3990  ஔ காரச் சொற்கள் ஔ: ஔ:1 தமிழ் அகரவரியில் பன்னிரண்டாம் எழுத்தும், நெடில் வரிசையில் இறுதி எழுத்தும் ஔ ஆகும். ஔவென ஒலிக்க இதழ்கள் குவிதல் புலப்படும். குவியும் அன்பு, ஆசை என்பவற்றின் விளக்கமாக அமைந்தது அது. ஔகாரம் ஔகான் என்பனவும் இது. எ-டு: ஔவை: ஔவியம் ஔ:2 ஔ = அழைத்தல், வியப்பு (வெ.பே.அ.) ஔ:3 அவ் என்பது அஉ என்பதும் ஔ என்பதன் போலி வடிவம். ஔ:4 உயிர் எழுத்துகளுள் தனித்து இறுதியில் வாரா எழுத்து இஃது. ஔ = ஐயமும் துணிவும் ஆமென்பர் சேனாவரையரும் (தொல்.சொல். 281). நச்சினார்க்கினியரும் (தொல்.சொல். 283). ஔகாரக் குறுக்கம்: ஔகாரம் எனக் கூறுமிடத்தன்றிச் சொல்லின்கண் வருங்கால் தன் இரண்டு மாத்திரை அளவில் குறுகும். ஔ என்பது நெட்டெழுத்தாகலின் இரண்டு மாத்திரை அளவினதே யாம் என்பது தொல்காப்பியர் முறை. நன்னூலார் ஒன்றரை மாத்திரை என்றார். ஔவை, வௌவினாள் எனச் சொல் முதல் வருவதன்றி இடையும் ஈறும் வருவதில்லை. முந்தை வந்திருக்கும் எனக் கொண்டே உரையாளர்கள் வந்தவழிக் காண்க. வந்துழிக் காண்க என்றனர். ஔவியம்: ஔவியம்:1 ஔவியம் > அவ்வியம். ஒன்றனை மனத்தால் பற்றுதல் அவ்வியமாம். அவ்வித்து அழுக்கா றுடையான் - திருக். 167 ஔவியம் பேசேல் - ஆத்திசூடி. ஔவியம்:2 ஔவியம் = அழுக்காறு (பொறாமை). பிறராக்கம் கண்டு மனம் பொறாமை ஔவியம் ஔவையார்: ஔவையார் என்பது உறவுப் பெயராக உயர்ந்தது. தாயைப் பெற்ற தாய் ஔவை, ஔவா எனப்பட்டார். சங்கக் காலம் தொட்டு ஆத்தி சூடி என்னும் மழலைத் தமிழ்வரை பாடிய ஔவையார் பலர். ஔவைக் குப்பம் என ஊருண்டு. ஔவையார் வழிபாடு பெரும்பாலான சிற்றூர்களில் இன்னும் உண்டு. மகளிரே - மகளிர் மட்டுமே - இருந்து வழிபடும் வழிபாடு அது. பண்டை ஔவையார் அமைதித் தூதராகத் திகழ்ந்தவர். இடையில் இருந்த ஔவையார் சமயக் கடமையில் ஆழ்ந்தவர். பிந்தை ஔவையார் மழலையர் கல்வி நூல்களின் பெயரால் உலகியலறம் உயரிய நிலையில் நிலை பெறுத்தியவர். அகராதி வகுப்பின் முதல்வர் எனத் தக்காராக விளங்கிய பெற்றியர். பெண்கல்வியின் பெருமை என்னென்ன என்பவற்றை விளக்கும் அருமைச் சான்று ஔவையார். அதனால் ஔவை தமிழ்த்தாய் என்றார் பாரதிதாசனார். எதை இழந்தாலும் ஔவையாரை இழவோம் என்றார் பாரதியார். கற்றது கைம்மண்ணளவு என்னும் அருமைத் தொடர் உலகவர் உள்ளங்கொள்ளை கொண்ட தொடராம்!  தமிழ்மண் பதிப்பில் இளங்குமரனார் தமிழ்வளம் - 1-40 1. வழக்குச்சொல் அகராதி வட்டார வழக்குச் சொல் அகராதி 2. இணைச்சொல் அகராதி இலக்கிய வகை அகராதி 3. உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம் (அகரவரிசை) 4. இலக்கண அகராதி (ஐந்திலக்கணம்) 1. எழுத்து, 2. சொல், 3. பொருள், 4. யாப்பு, 5. அணி 5. புறநானூற்றுக் கதைகள் 1. அந்த உணர்வு எங்கே? 2.பெரும் புலவர் மூவர் 3. பண்டைத் தமிழ் மன்றங்கள் 6. திருக்குறள் ஆராய்ச்சி - 1 7. திருக்குறள் ஆராய்ச்சி - 2 8. திருக்குறள் கதைகள் 9. திருக்குறள் கட்டுரைகள் 10. காக்கைபாடினியம் 11. களவியற் காரிகை 16 12. தகடூர் யாத்திரை - மூலமும் உரையும் 13. யாப்பருங்கல விருத்தி - (பழைய விருத்தியுரையுடன்) 14. தமிழ்க் கா.சு கலைக் களஞ்சியம் 15. தமிழ் வளம் - சொல் 16. தமிழ் வளம் - பொருள் 17. புறத்திரட்டு 18. வாழ்வியல் வளம் 19. தமிழர் வாழ்வியல் இலக்கணம் 20. 1. கல்விச் செல்வம் 2. இருசொல் அழகு 3. தனிப்பாடல் கனிச்சுவை 4. பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி 21. சான்றோர் வரலாறு: அரசஞ்சண்முகனார், வேதநாயகம் பிள்ளை, தாமோதரனார் 22. தமிழ்மலை, மறைமலையடிகள் ஆராய்ச்சித்திறன் 23. பாவாணர் - பொன்மொழிகள் - உவமைகள் 24. பாண்டி நாட்டுப் புலவர்கள் 1,2 25. தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு, திரு.வி.க. தமிழ்த் தொண்டு 26. திருவரங்கர் வரலாறு 27. வ.சு. வரலாறு 28. ஈரோடு வேலா (வரலாறு), குணநலத் தோன்றல் குப்புமுத்து ஐயா 29. கவிஞர் தாகூர் - பிணி தீர்க்கும் பெருமான், அறப்போர், இரு கடற்கால்கள் 30. அண்ணல் ஆபிரகாம், அறவோர் அமைதிப் பணிகள், உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம் 31. மதுரைக் கோயில் வரலாறு, மதுரைத் திருக்கோயில், திருவிளையாடற் கதைகள், மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் 32. அன்பும் அறிவும், பழனி பாலநீதி, நீதிபோத வெண்பா, நீதி சாரம் 33. சிற்றருவி (குழந்தையர் பாடல்), வானவில், முல்லாவின் கதைகள் முப்பது 34. வள்ளுவர் வழியில் வள்ளலார், வள்ளலார் கண்ட சாகாக் கலை 35. பரிபாடலில் திருமுருகன், பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்) 36. சொல்லியன் நெறிமுறை - அகல், செந்தமிழ்ச் சொல்வளம், வேர்ச்சொல் விரிவு, பேரகத்தியமும் புதிய ஐந்திறமும், தொல்காப்பியர் காலம் 37. சிவ வாக்கியர், குதம்பைச் சித்தர், சிவஞானபோதம் 38. திருமுருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா, திருவருணைக் கலம்பகம், மதுரைச் சொக்கநாதர் திருவிளையாடல் அம்மானை, மீனாட்சியம்மை குறம் - இரட்டை மணிமாலை 39. வாழ்வியல் வழிநடை, வையகம் தழுவிய வாழ்வியல், வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும் 40. வள்ளுவமும் வாழ்வியலும், திருக்குறள் நோக்கு, திருக்குறளில் ஒப்புரிமை, தரக்கட்டுப்பாடும் திருக்குறளும்.