செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் 2 ஆ முதல் ஈ வரை ஆசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர் முனைவர் பி. தமிழகன் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம் - 2 ஆ முதல் ஈ வரை ஆசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர் முனைவர் பி. தமிழகன் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2018 பக்கம் : 20+324= 344 விலை : 430/- தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்:  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 344 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000   கணினி & நூலாக்கம் : நல்லதம்பி, கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006. திரைகடல் ஓடியும் திரவியம் தேடச்சென்ற மண்ணில் இருந்துகொண்டு தாய் மொழியாம் தமிழின் மேல் வற்றாத பற்றுக்கொண்டு வாழும் தமிழ் உள்ளங்களை முதலில் வணங்குகிறேன். இவ்வருந்தமிழ்க் களஞ்சியம் முதல் தொகுதி வெளிவருவதற்குப் பொங்கு தமிழ் மன்ற அமைப்பினர் வெளியீட்டுச் செலவிற்கு முழுமையாக உதவினர். உதவிய தமிழ் உள்ளங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.கடப்பாட்டு உரை தமிழ் இயற்கை இயங்கியல் வழிப்பட்ட ஒலி, வரி, வடிவுகளையும் இயற்கை இயங்கியல், மெய்யியல், வாழ்வியல், படைப்பியல் என்பவற்றை அடிமனையாகவும் கொண்ட மொழி. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்னும் மூல முழக்கத்தை முழுவதாகக் கொண்டது நம்மொழி என்பதை ஓராற்றான் விளக்குவதாக அமைந்தது இக் களஞ்சியம். ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் என்பவை இல்லாமல், வெளிப்பட எவரும் அறிந்து கொண்டுள்ள வழக்கு, செய்யுள் என்பவை கொண்டே விளக்குவது இக்களஞ்சியம். இதனை, ஊன்றியும் விரும்பியும் கற்பார் தாமும் இவ்வாய்வு செய்ய வியலும் என்பதைத் தூண்ட வல்ல ஆய்வும் இது! ஆதலால், படிப்பாளியைப் படைப்பாளி ஆக்கவல்லது என்பதை என் பட்டறிவுத் தெளிவாகக் கண்டு வருகிறேன்! எளிமையாய் - ஆழ்ந்த நுணுக்கங்களை - ஓரளவு கற்றாரும், கொள்ள வழிகாட்டும் `கைவிளக்கு அன்னது இது. இதனை முதல் - இடை - நிறைவு என்னும் மூன்று நிலை களிலும் உற்ற பெறலரும் உதவுநராக இருந்து முற்றுவித்ததுடன், தமிழ் உலகப் பயன்பாட்டுக்கும் வழியமைத்துத் தந்த `கலங்கரை விளக்கம் செம்மொழிச் செம்மல் முனைவர் திருத்தகு க. இராமசாமி அவர்களே ஆவர். ஆதலால், அவர்களை நெஞ்சாரப் போற்றுவது என் தலைக்கடனாம்! திருவள்ளுவர் தவச்சாலை நிறுவன வழியே இப்பணி செய்ய வாய்த்த அளவில் சொற்றிரட்டியும் மெய்ப்புப் பார்த்தும உதவிய பெருந்தகு கேண்மையும் உழுவலன்பும் உடைய முனைவர் பெருந்தகை கு. திருமாறனார் அவர்களுக்கும் எம் எழுத்துப்பணியைத் தம் பணியாக் கொண்டு தொடர்ந்து செய்துவரும் தொய்விலாத் தொண்டர் மெய்ப்புப் பார்த்தலில் வல்லார் முனைவர் பி. தமிழகனார் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியுடையேன். என் எழுத்தைப் படியெடுத்தும், கொங்கு வட்டார வழக்குச் சொற்களைத் தொகுத்தும் உதவிய புலவர் கலைமணியார் அவர்களுக்கும், இப்பணியில் இல்லை எனினும் உழுவ லன்பாலும் உரிமைப் பேற்றாலும் என் எழுத்துகளைப் படியெடுத்து உதவிய திருக்குறள் செம்மல் பெரும்புலவர் மு. படிக்கராமு அவர்களுக்கும் பெருநன்றியும் வாழ்த்தும் உடையேன். இத்தொகை அனைத்தையும் கணினிப்படுத்தியும், மெய்ப்புப் பார்த்தும், வரவு செலவு கணக்கைத் தக்க வகைத் தணிக்கைக்கு உரியவையாகச் செய்தும், பணிநிறைவை ஒப்படைத்தும் பெருநன்றாற்றிய கவனகச் செம்மல் முனைவர் கலை. செழியனார் அருந்தொண்டைப் பாராட்டி நன்றி பெரிதுடையேன். பணி நிறைவுப்பயன், தமிழ் கூறு நல்லுலகப் பயன்பாடு ஆதல் வேண்டும் என்பது தானே! இல்லாக்கால் செய்த பணியால் ஆவதென்ன? செய்யாமை ஒப்பது தானே! அவ்வாறு ஆகாமல் தாய்த்தமிழக ஆர்வலர்களுடன், அயலகத் தமிழ்ப் பெருமக்களாக விளங்கினும் தாய்த்தமிழக ஆர்வலர்களிலும் மேம்பட்ட ஆர்வலர்களாகக் குவையத்து, அமெரிக்கா, கனடா, மலையகம், சிங்கபுரி, ஈழம் முதலாக வாழ்வார் ஆர்வத் தளிர்ப்பும் தூண்டலும் முன்னிற்கும் பேறு வியப்புக்கும் பெருநன்றிக்கும் உரியதாம்; இப்பெருமக்கள் அனைவர் உள்ளமும் ஓருருவாக வாய்த்து, கருவி நூற்பணியைத் தொகை தொகையாக வகைப்படுத்தி வான் பெருந்தொண்டாகச் செய்தலே எம் பிறவிக் கடன் எனக் கொண்ட தமிழ்ப் போராளி திருமிகு கோ. இளவழகனார் வெளியீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயற்கரிய செய்வார் பெரியர் என்பதை நிலைநாட்டியதைப் போற்றுவதன்றி என் சொல்வேன்? களஞ்சியம் கணினிப்படுத்திய அளவில் நிறைவுறுமா? பத்துத் தொகுதிகளையும் ஒருமுறைக்கு மும்முறையாய் முழுதுற மெய்ப்புப் பார்த்தல், எளிமைப் பாடா? கண்புரை வளர்ந்தாலும் இடைத்தடை நேர்ந்தாலும் இத்தொண்டு தமிழன்னை தளிர்க்கும் தொண்டு என்று இமைப் பொழுதும் சோராது கடனாற்றிய கடப்பாட்டாளர் மெய்ப்புச்செம்மல் முனைவர் பி. தமிழகனார்க்குப் பெருங்கடப்பாடு உடையேன்; பதிப்புச் சுமையை ஏற்றமை என் சுமை ஏற்றமையாம்! வாழிய நலனே! வாழிய நலனே! இரா. இளங்குமரன் களஞ்சியம் வளமான வீடுகள் கட்டி வாழும் நிலக்கிழார் பெருநிலக்கிழார் ஆகிய உழவர்கள், தங்கள் வீட்டின் உட்பகுதியில் களஞ்சியங்கள் அமைத்திருப்பர். களஞ்சியம் இருக்கும் வீடு என்றால் வளமிக்க உழவர்வீடு என்பது பொருள். களத்தில் வரும் தவசங்கள் பயறு வகைகள் ஆகியவற்றை அங்கே பூச்சியரிப்பு, மட்குதல் ஏற்படாவகையில் தளத்தின்மேல் உயர்த்தியும் புன்கு வேம்பு ஆகியவற்றின் தழைகளைப் பரப்பியும், பாதுகாப்பர். அவ்வாண்டு முழுமைக்கும் பயன்படும். அடுத்த ஆண்டு விளைவு குறைந்தாலும் களஞ்சியப் பொருள் கவலையின்றி வாழ உதவும். ஏருழவர் போலச் சொல்லேர் உழவராம் சான்றோர் நூல்கள், அக்காலத்தார்க்கே அன்றி எக்காலத்தார்க்கும் பயன்படும் வகையில் பாதுகாத்துப் பயன் கொள்ளச் செய்வது நூல் களஞ்சியமாகும். இந்தியப் பரப்பில் தமிழ் மொழியில் தான் முதன்முதல் `கலைக் களஞ்சியம் உருவானது என்பது பெருமிதப்படத்தக்கதாம். இப்பொழுது தமிழ்மண் பதிப்பகத்தால் வெளியிடப்படும் செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் செவ்வியல் மொழிக் கொடையாக வந்து, தமிழ்மண் பதிப்பக வெளியீட்டால், தமிழ்கூறு நல்லுலகப் பொருளாவது, செம்மொழிச் செம்மல் முனைவர் திருமிகு க. இராமசாமி அவர்கள் தூண்டல் வழியாகத் துலங்கிய துலக்கமாகும். ஆதலால் படைப்பாளன் என்ற நிலையில் நெஞ்சார்ந்த நன்றியுடையேன். இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். தமிழ்க் களஞ்சியம் மொழியின் வளம், அம்மொழியைப் பேசுவோர் பயன்படுத்தும் சொற்களாலும், அம் மொழியில் உள்ள இலக்கண, இலக்கிய வகைகளாலும் அறியப்படும். தமிழின் வளம் இலக்கியங்களிலும் மக்கள் வழக்குகளிலும் நிறைந்துள்ளது. சொற்களின் வளமும், பெருக்கமும் மொழியின் சிறப்பைக் காட்டும். சொற்களின் பெருக்கைக் காட்ட எத்தனையோ நிகண்டுகளும், அகராதிகளும், களஞ்சியங்களும் தமிழில் வந்துள்ளன. இவற்றுள் பல பிறமொழிச் சொற்களையும் தமிழ்ச் சொற்களாய்க் கருதிப் பொருள் தந்துள்ளன. பிற மொழிகளில் ஏறிய தமிழ்ச் சொற்களும் வேற்றாடை உடுத்தியுள்ளன. அவற்றை அறிந்து தமிழெனக் காட்ட, மொழி உணர்வும், இலக்கிய இலக்கணப் புலமையும், தமிழ் முழுதறி தகுதியும், மக்கள் வழக்குகளை வழங்கும் சூழலில் கேட்டறிதலும், சொற் பொருளாய்வும், சொல்லியல் நெறிமுறைகளும், வேர்ச் சொல்லாய்வும், கூர் மதியும் நிறைந்திருக்க வேண்டும். இத்தமிழ்ச் சொற் களஞ்சியம் சொற்களின் பொருளை மட்டுமா தருகின்றன? சொற்களின் வேரும், அதன் விரிவும், அவற்றின் விளக்கமும், சான்றுகளும், மக்களின் பொது வழக்கும், வட்டார வழக்கும், யாழ்ப்பாணத் தமிழ் வழக்கும் செறிந்துள்ள தமிழ்க் களஞ்சியமாம். ஒரு வினைச் சொற்கள் தொகை தொகையாகிய தொகை இக்களஞ்சியம். `அடித்தல் சொல்லடியாக 145 சொற்கள் உண்ணல் வகைகள், ஊர்ப் பெயர் ஈறுகள் (504) நோய் வகைகள் (229), நோய் வினைகள் (216), மதில் பொறி வகைகள் (28) மலை வகைகள் (25) முதலிய எத்தனையோ வகைகளும் தொகைகளும் அடங்கியுள்ளன. இவற்றின் தொகுப்பு கற்பாரை வியக்க வைக்கும்! இக் களஞ்சியத் தொகுதிகளுள் நூற்றுக்கணக்கில் மரபுத் தொடர்கள், இணை மொழிகள், ஒலிக்குறிப்புகள், அவற்றின் விளக்கங்கள் அடங்கியுள்ளன. சொற்கள் விளக்கத்திற்கு அன்றாடச் செய்திகளும் (செய்தித்தாள்கள்) சான்றாகின்றன. சிற்றிலக்கிய வகைகள் தொண்ணூற்றாறு என்பர். ஆனால், பற்பல நூறுவகைகள் உள்ளமையை இக்களஞ்சியம் காட்டும். மேனாட்டு உடைகளை மாட்டியதால் தமிழர் மேனாட்டார் ஆகாரன்றோ? பஜ்ஜி ஏதோ பிறமொழி என்றே மயங்கி நிற்பர். அது பச்சைக் காய்கறிகளால் செய்யப்படுவது. தேவநேயப் பாவாணர் உடன் பழகியமையாலும், அவர் நூல்களைத் தோய்ந்து தோய்ந்து கற்றமையாலும், அவரே பாராட்டியமையாலும் ஐயா, பல சொற்களுக்கு வேர்ச்சொல் வழி மூலமும் கிளையும் காட்டியுள்ளார். புழுதி, பூழ்தி, பூதி. பல சொற்களின் பொருள் வேறுபாடுகளும் காட்டப்பட்டுள்ளன: விரைப்பு- விரைப்பு; விறைப்பு - தொய்வின்மை; இக்களஞ்சியம் தவசங்களாம் சொற்கள் கொட்டப்பட்டு நிறைந்துள்ளது. படிப்பார் தத்தமக்குத் தேவையான தவசங்களை அள்ளி அள்ளிப் பயன் கொள்ளலாம். எவ்வளவு அள்ளினும் என்றும் குறையாது இக்களஞ்சியம். தமிழரின், மொழி, இன, இலக்கிய, இலக்கணம் ஆகியவற்றின் வரலாறு, பண்பாடு, நாகரிகங்களின் அடங்கல்களைப் படை படையாகத் திரட்டித் தொகுத்து வெளியிடும் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் முதலிடம் பெற்றிருக்கிறது. ஐயா முதுமுனைவர், இளமை முதல் தொகுத்த சொற்களஞ்சியங்களைச் சேர்த்துச் சேர்மானமாக்கித் திரட்டித் தந்துள்ளார்கள். தமிழர்களே! இங்கே வம்மின்! களஞ்சியம் கொண்மின்!! தமிழை வளர்மின்!!! பி. தமிழகன். அணிந்துரை செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் என்னும் இந்நூல் இன்று நம்மிடையே வாழும் தொல்காப்பியராக விளங்கும் மூத்த தமிழறிஞர் செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஏறத்தாழ 8000 தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் விளக்கத்தினை மேற்கோள் சான்றுகளுடன் வழங்கும் இந்நூல் தோராயமாக 3254 பக்கங்களில் பத்துத் தொகுதிகளாக வெளிவந்து தன்னேரிலாத தமிழ் மொழிக்குத் தனிப்பெருமை சேர்க்கும் முன்னோடிப் பணியாக அமைந்துள்ளது. அகரமுதலிகளில் இடம்பெறாத சொற்கள், மரபுச்சொற்கள், வட்டார வழக்குச் சொற்கள், பழமொழிகள் போன்றவை இக்களஞ்சியத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்க தாகும். இசை, மருத்துவம், கல்வெட்டு, அறிவியல் ஆகிய துறைகள் சார்ந்த இன்றியமையாத சொற்களுக்கும் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. அகரத்தில் தொடங்கும் சொற்களுக் கான பொருள் விளக்கங்கள் மட்டுமே 276 பக்கங்களில் முதல் தொகுதியாகவும் தனித் தொகுதியாகவும் அமைந்திருப்பது நூலின் செறிவையும் விரிவையும் பறை சாற்றுவதாக அமைந்துள்ளது. அயன் மொழிச் சொற்கள் அறவே தவிர்க்கப் பட்டிருப்பது நூலின் தனிச்சிறப்பாகும். சொற்பொருட் களஞ்சியப் பணியை நிறைவேற்றும் வகையில் நூலாசிரியருக்குத் தூண்டுதலாக அமைந்தது ஒல்காப் புகழ் தொல்காப்பியமே. குறிப்பாக, எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே (தொல். 640) என்னும் நூற்பா. இந் நூற்பாவினை மூல முழக்கமாகக் கொண்டது தமிழ்மொழி என்பதை விளக்கும் பொருட்டே இக்களஞ்சியம் உருவாக்கப் பட்டதென நூலாசியிர் குறிப்பிட்டுள்ளார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் காட்டியவாறு ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் எனக் காணாமல் வெளிப்படையாக அறியக்கூடிய சொற்களுக்கு மட்டுமே அமைதியும் திரிபும் பொருள் விளக்கமும் காட்டுவது இக்களஞ்சியம் என்பதும் நூலாசிரியர் கூற்றாகும். பொருள் விளக்கங்களினூடே கீழ்க்காணும் தொல்காப்பிய நூற்பாக்களின் பயன்பாட்டினையும் உணரலாம். பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லின் ஆகும் என்மனார் புலவர். (தொல். 641) தெரிபுவேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும் இருபாற் றென்ப பொருண்மை நிலையே. (தொல். 642) பொருட்குப் பொருள்தெரியின் அதுவரம் பின்றே. (தொல். 874) பொருட்குத் திரிபில்லை உணர்த்த வல்லின் (தொல். 875) மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா. (தொல். 877) ஒரு பொருள் பல சொற்கள் மிகவும் நுட்பமாய் ஆராயப் பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. `அழகு பொருண்மையைக் குறிக்கும் 67 தனித்தமிழ்ச் சொற்களை அடையாளங்கண்டு அவற்றிற்கு நுட்பமான விளக்கங்களைத் தந்திருப்பது ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலத்திற்கும் வளமான பட்டறிவிற்கும் சான்றாக விளங்குகிறது. பெருமதிப்பிற்குரிய ஐயா இளங்குமரானாரின் நெடுங்கால அவா இந்நூல் வெளியீட்டின் வழி நிறைவேறியுள்ளமை மகிழ்வளிக்கிறது. இது காலத்தை வென்றுநிற்கும் நிலைத்த பணி. தமிழ் ஆய்வாளர்களுக்குக் கிட்டியுள்ள தலைசிறந்த நோக்கீட்டு நூல். உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் இந்நூலினை வரவேற்றுப் போற்றுவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. களஞ்சியப் பணி ஒரு தொடர் பணி. இப்பத்துத் தொகுதிகளை அடித்தளமாகக் கொண்டு தொடர்ந்து நூற்றுக்கணக்கான தொகுதிகள் வெளிவந்து தமிழிற்கு வளம்சேர்க்க வேண்டும் என்பது என் அவா. தனித்தமிழ்ப் பற்றாளராகவும் அரிய தமிழ் நூல்களின் பதிப்புச் செம்மலாகவும் விளங்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ. இளவழகனார் இக்களஞ்சியத்தை அருமுயற்சியுடன் சிறப்புற வெளிக்கொணர்ந்திருப்பது பாராட்டிற்குரியதாகும். முனைவர் க. இராமசாமி முன்னாள் பேராசிரியர் - துணை இயக்குநர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர் முன்னாள் பொறுப்பு அலுவலர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை நுழைவுரை தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் புதைந்து கிடக்கும் அறிவுச் செல்வங்களைத் தனக்கே உரிய நடையில் இருந்து தமிழின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் அய்யா இளங்குமரனாரின் நினைவாற்றலை நினைந்து நினைந்து மகிழ்பவன். அவர் அருகில் இருக்கவும், அவருடன் உரையாடவும், வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும் பேறாகவும் கருதுகிறேன். மொழிஞாயிறு பாவாணர், செந்தமிழ் அறிஞர் இலக்குவனார், மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் முதலான பெருமக்களை எட்டி இருந்து பார்த்தவன். அவர்களின் அறிவு நலன்களைக் படித்துச் சுவைத்தவன். இப் பெருமக்களின் மொத்த உருவமாக அய்யா இளங்குமரனாரைப் பார்த்து நெஞ்சம் நெகிழ்பவன். அய்யா அவர்களின் அறிவுச் செல்வங்களைக் கடந்த காலத்தில் பேரளவில் எம் பதிப்பகம் வெளியிட்டு அவரின் உழைப்பை தமிழ் கூறும் உலகுக்கு அளித்ததில் நிறைவு அடைகிறேன். இன்று உங்கள் கைகளில் தவழும் செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் எனும் இவ்வருந்தமிழ்த் தொகுப்பை உருவாக்குவதற்கு எவ்வளவு காலம் உழைத்திருப்பார் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். வியந்து போகிறேன். இச்செந்தமிழ்த் தொகுப்பு தமிழ் அகராதி வரலாற்றில் தமிழுக்குப் புது வரவாகும். இதுவரை யாரும் செய்ய முன்வராத பெரும்பணி யாகும். அய்யாவின் இலக்கிய, இலக்கணப் பெரும்பரப்பைத் தாங்கிவரும் இப்பொற் குவியலை உலகத் தமிழர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பாவாணர் போல் வேர்காட்டி, வளம் கொடுக்கும் சொற்கடலாய் வாழும் அய்யாவின் பேருழைப்பால் விழைந்த இலக்கிய இலக்கணக் களஞ்சியத்தை வெளியிடுவதன் மூலம் என்னையே நான் பெருமைப் படுத்திக் கொள்கிறேன். என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பேறாகக் கருதுகிறேன். அய்யாவின் 75ஆம் (30.01.2005) அகவை நிறைவை திருச்சித் திருநகரில் தமிழர் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நிகழ்வில் புலமைக்குத் தலைவணக்கம் எனும் நிறைவுமலரினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு மகிழ்ந்தது. அந்த மலரில் மலேசியப் பாவரசு சு.ஐ.உலகநாதன் எழுதிய பாடலினை கீழே சுட்டியுள்ளேன். வாய்த்திருக்கும் அகவையெலாம் வரலாறு படைக்கின்றார் வையகமே வந்து போற்று நம் முன் சான்றாக வாழும் `ஐயா அவர்களால் உருவாக்கப்பட்ட இக்களஞ்சியத்தை தமிழ் உலகுக்கு வழங்குவதில் பெருமையும், பூரிப்பும் அடைகிறேன். கோ. இளவழகன் ஆசிரியர் விவரம் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பிறப்பு : 30. 1. 1930 பெற்றோர் : இராமு - வாழவந்தம்மை (உழவர்குடி) ஊர் : சங்கரன்கோவில் வட்டம், வாழவந்தாள்புரம் கல்வி : தொடக்கக் கல்வி - உள்ளூரில் நடுநிலைக் கல்வி - பாவாணர் பயின்ற முறம்பு பள்ளி வித்துவான் - தமிழ்த் தேர்வு - தனித் தேர்வர் ஆசிரியர் பணி : தொடக்கப் பள்ளி - 16ஆம் அகவையில் தொடக்கம் உயர்நிலைப் பள்ளி - தமிழாசிரியப்பணி ஆய்வுப்பணி : பாவாணருடன் - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் - கலைச் சொல் விளக்கம் தொகுப்புப் பணி, தமிழக வட்டார வழக்குச் சொல் தொகுப்புப் பணி. தமிழ்ப்பணி : கட்டுரை, கவிதை, கதை, நாடகம், காப்பியம், இலக்கண - இலக்கிய உரை - தமிழ்ச் சொல்லாய்வு - பழந்தமிழ்நூல் பதிப்புகள் - தனிமனித - இலக்கண - இயக்க, இசை, வரலாறு. தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் - நாடகம். குழந்தைப் பாடல்கள் - ஆய்வுப் பொழிவு - தொகுப்பு நூல்கள் நாளொன்றுக்கு 18 மணிநேர எழுத்துப் பணி திருவள்ளுவர் தவச்சாலை நிறுவி இயக்குதல். செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் ... நூல்கள் : சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணிவாசகர் பதிப்பகம், ஈரோடு குறளாயம், திருவள்ளுவர் தவச்சாலை, தமிழ்மண் பதிப்பகம் வழி 420க்கும் மேல் வெளிநாட்டு பயணம் : தமிழீழம், சிங்கப்பூர், மலேயா, அமெரிக்கா முதலிய நாடுகளில் தமிழ் அமைப்புகளில் பொழிவுகள். திருமணம் நிகழ்த்துதல் : தமிழகம், சிங்கப்பூர், மலேயாவில் 4000க்கும் மேற்பட்ட தமிழ்நெறித் திருமணங்கள் நிகழ்த்துநர். இயக்கப்பணி : தமிழகத் தமிழாசிரியர் கழகம், உலகத் தமிழ்க் கழகம், தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், திருக்குறள் பேரவை, ஈரோடு குறளாயம், தமிழ்ச்சான்றோர் பேரவை விருது : இலக்கியச் செம்மல், செந்தமிழ் அந்தணர், முதுமுனைவர் முதலியன. பதிப்பாசிரியர் விவரம் முனைவர் பி. தமிழகன் பிறப்பு : 5. 10. 1946 பெற்றோர் : பிச்சை - மீனாட்சி (வேளாண்குடி) ஊர் : இலால்குடி வட்டம், குமுளூர் கல்வி : தொடக்கக் கல்வி - உள்ளூர் நடுநிலைக் கல்வி - இருங்கலூர் உயர்நிலைக் கல்வி - பூவாளூர் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளி புலவர் - கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் தமிழியல் இலக்கிய இளைஞர், முதுகலை, கல்வியியல் முதுகலை, தனித் தேர்வர் ஆய்வு : தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம், சங்க இலக்கியத்தில் மரபியல் சொற்கள் ஆசிரியர்கள் : முதுபெரும்புலவர் அடிகளாசிரியர், பாவலரேறு பாலசுந்தரனார் ஈடுபாடு : சங்க இலக்கியம், பத்தி இலக்கியங்கள், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், நாட்டுப்புறவியல் ஆசிரியப் பணி : திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசுப் பள்ளிகளில் 33 ஆண்டுகள் தமிழாசிரியர், பணி நிறைவுக்குப்பின் ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்லூரியில் பேராசிரியர் பணி தொடர்தல். இயக்கப் பணி : தமிழியக்கம், பாவாணர் தமிழியக்கம், திருவள்ளுவர் தவச்சாலை நூல்கள் : தமிழகத் தொல்பொருள் ஆய்வு (வ்ட்பீது கீகுநூழ்ஙூ) வழக்குச் சொல் அகராதி (ர்மயூரூயுகுயிகீஞ்ணூ நிகுபீய்நூக்ஷி) பதிப்புப் பணி : முதுமுனைவர் இரா. இளங்குமரனாரோடு இணைந்து தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட முதுமொழிக் களஞ்சியம், சங்க இலக்கியம். பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம் எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் `உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கைகளை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். நூலாக்கத்திற்கு உதவியோர் ஆசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் பதிப்பாசிரியர்: முனைவர் பி. தமிழகன் கணினி மற்றும் நூல்வடிவமைப்பு: திரு. நல்லதம்பி (யாழினி கணினி) திருமதி. கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: முனைவர் பி. தமிழகன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. ஆ முதல் ஈ வரை ஆ வரிசைச் சொற்கள் ஆ: ஆ :1 அகரத்தின் நெடில், அகரத்திற்குரிய ஒலிப்பு முயற்சியும் ஒலி நீட்சியும் உடையது ஆ. ஆ சொல்லு என்பதால் அதன் இயல் தோற்றம் புலப்படும். ஆ, ஆ ஆ ஆ ஓ என்பவற்றால் அதன் எழுச்சிநிலை, இரங்கல் நிலை, இசைநிலை, வியப்பு நிலை முதலியவை விளங்கும். ஆ :2 ஆ = ஆக, ஆறு. ஆவார் பகர்வர் - நாலடி. 256 இழுகினான் ஆகாப்ப தில்லையே - பழ. 29 ஆ :3 வினாப்பொருளது. எயா முதலும் ஆவோ ஈற்றும் ஏஇரு வழியும் வினாவா கும்மே - நன். 67 ஆ :4 எதிர்மறைப் பொருளது. உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான் - நாலடி.9 ஆ :5 ஆ = ஆன், ஆவு. ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் - புறம். 9 ஆ :6 தமிழ் ஏழிசையுள் முதலிசை குரல் எனப்படும். அக் குரலைக் குறிக்க அகரநெடிலாம் ஆஎன்பதை வழங்கினார். ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் இவ்வே ழெழுத்தும் ஏழிசைக் குரிய குரலே துத்தம் கைக்கிளை உழையே இளியே விளரி தாரம் என்றிவை எழுவகை இசைக்கும் எய்தும் பெயரே - திவா.1884 ஆ :7 சோறு; பண்டம். வாயைத் திறந்து இதனை வாங்கிக் கொள் என்பதை, ஆ வாங்கிக் கொள் என்பது வழக்கு. ஆ சொல்லு என்று சொல்வதும் வாயைத் திற என்பதற்கே யாம். ஆ= வாயைத் திறத்தலையும், வாயைத் திறந்து உண்ணும் உணவையும் குறிப் பாயிற்று. இது மதுரை வட்டார வழக்கும் பொது வழக்குமாம். ஆஅம் : ஒரு மரம் ; அது தளிர்த்தால் வினைமேற் சென்றார் தம் வினைமுடித்து மீள்வர்! உங்கள் வினை முடிந்தது. செல்க என்பது போல் தளிர்த்தலால் அவ்வாக்கக் குறிப்பொடு ஆம்ஆஅம் எனப்பெயர் கொண்ட மரம். இந்நாளில் இதன் பெயர் ஆச்சா என்பது. ஆயிற்றா என்பதன் வழு ஆச்சாவாம். ஆஅம் தளிர்க்கும் இடைச்சென்றார் மீள்தரின் யாஅம் தளிர்க்குவேம் மன் -கலித். 143 ஆஅய் : ஆஅய் = வள்ளல். * ஆய் காண்க. ஆஅல்: ஆஅல் = ஆரல் விண்மீன் * ஆரல் காண்க. ஆஆ: உணர்வுக்குறி. ஆ ஆ இழந்தான், ஆ ஆ என்னே ஆவா என்றே ஆர்த்தனர் ஒருசார் - யா.கா. 27 மேற். ஆகக்கடைசி: தேர்ந்தெடுத்து ஆக - எண்ணியாக -க் கடைசியில் உள்ளவர் - உள்ளது - ஆகக்கடைசி. ஆகக்கடைசியில் உள்ளாய் ஆகக்கடைசி ஆளாக வந்தான் அதன்மேல் கடைசி இல்லா நிலை ஆகக் கடைசியாம் (ம.வ.) ஆகடியம்: ஆ + கடியம் = ஆகடியம் ஆ = ஆக்கம். ஆக்கமாம் ஒன்றைக் கடிந்து எள்ளிப் பேசுதல் ஆகடியாம். இட்டுக்கட்டி இழிமைப்படுத்தலும் ஆகடியமே. சிலுவைச் செம்மலை ஆகடியம் பலபேசிஇழுத்துச் சென்றதை எ.ஆ. கிருட்டிணர் கூறுவார். (இரட்சி. யாத். சிலுவைப்பாடு.) இவர் காலத்திற்கு முன்னவராம் அருணகிரியார் ஆகடியத்தை. அஞ்சு பூதம் உண்டு ஆகடியக் காரர் இவர் - திருப். 156 எனப்பாடுகிறார். ஆகட்டும்: ஆக + அட்டும் = ஆகட்டும். அப்படியே ஆகச் செய்வேன். ஒருவர் ஓர் ஏவலைச் சொல்லுங்கால் ஆகட்டும்என்று அவ்வேவல் கேட்பார் மறுமொழி தருவர். அவ்வாறே - கூறியவாறே - செவ்வையாகச் செய்வேன் என்பதாம். போய் வரட்டுமாஎன்று ஒருவ கூறினால். ஆகட்டும் என்பது அவ்வாறே செய்யுங்கள்என்பதாம். ஆதலால், இருபால் இயைபையும் காட்டுவது ஆகட்டும் என்பது. ஆகட்டும் பார்க்கலாம்என்பது உரிய வாய்ப்பு வரட்டும்; நீங்கள் சொல்லியதைச் செய்யலாம் என்பதாம். மறுக்கவில்லை; வாய்த்தால் செய்யலாம்என்பது இதன் கருத்தாம். ஆகட்டும் பெருவழக்கமாக உள்ள சொல். ஆகமம்: ஆக்கமானவை என ஆய்ந்து சொல்லப்பட்ட நெறிகளையுடைய படைப்பு நூல். ஆக்கமம் > ஆகமம். ஆகம் =ஆக்கம். எ-டு: சிவனிய ஆகமம் (சைவாகமம்) ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ (திருப்புகழ்) கிறித்தவ ஆகமம் வேதாகமம் (வேதியம்) ஆகம்: ஆகம் :1 ஆகம் = உடல். ஆர்க்கப்பட்டது. ஆர்க்கம் > ஆக்கம் > ஆகம். நரம்பு எலும்பு தோல் முதலியவற்றால் கட்டப்பட்டது; உடல் ஆக்கை என்பதும் அது. கட்டுதற்குப் பயன்படும் புளிய வளார், கருவேல் வளார் ஆயவை ஆக்கை எனப்படும். ஆகம் ஆலயமா வுளான் -கம்ப. பால. 960 * யாக்கை காண்க. ஆகம்:2 ஆகம் = ஆக்கம், நலப்பாடு. ஆக்கம் என்பதன் தொகுத்தல் அது. ஆகமாக ஒரு வேலை செய்யமாட்டான்; ஆகமாக எதையாவது செய்யான்என்பவை வழக்கில் சொல்லப்படுவன. உருப்படியான - ஆக்கமான என்பது இதன் பொருளாம். இது முகவை வட்டார வழக்கு. ஆகம்:3 ஆகம் = மார்பு. முலையாகம் பிரியாமை - கலித். 2 ஆகம்:4 ஆகம் = மனம். கூடாதாரில் திரியும் நீயும் ஆகம் குளிர்ந்தாயோ -கம்ப. கிட். 27 ஆகாக்கடை: ஒரு வேலைக்கோ ஓர் ஆட்டத்திற்கோ ஆள் எடுக்கும் போது இருபக்கத்தினரும் ஒவ்வொருவராக எடுத்து எவரும் எடுக்காமல் தள்ளப்பட்டவர் ஆகாக்கடையாம். எந்த ஒன்றற்கும் ஆகாத தள்ளுகடையர் அவர். (ம.வ.) ஆகாவழி: செல்லக் கூடாத வழியில் சென்று செய்யக் கூடாதவை செய்து சீரழிவாரை ஆகாவழி என்பது மக்கள் வழக்கு. ஆகாவழி யில் சென்று அழிவாரை ஆகாவழி என்பது மக்கள் படைத்த உவமையாகுபெயர். ஆகாறு: ஆகு + ஆறு= ஆகாறு; பொருள் வரும் வழி; வருவாய். ஆகாறு அளவு இட்டிது ஆயினும் - திருக். 478 ஆகியிருத்தல்: உண்டாகியிருத்தல் அல்லது கருக்கொண்டிருத்தல் என்பது பெருவழக்கு. ஆகியிருப்பவள். ஆய் எனப்பட்டாள். ஆய் = தாய். தம் + ஆய் = தாய். வயிறுவாய்த்தல் என்பதும் அது. கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனேஎன்பது நாலாயிரப் பனுவல் (719) ஆகி வந்தது: ஒரு குழந்தையை அல்லது வளர்ந்தவரைத் திருத்த முயன்று பார்த்து முடியா நிலையில், முடிவு கட்டியது போல் உவர்த்துச் சொல்வது ஆகிவந்தது. அவ்வளவுதான்என்பது. ஆகி வந்தது = கருவாகி உருவாகி வந்தது. உள்ளது போகாது இல்லது வாராது என்ற மெய்யியல் எளிமைக் கோலத்தில் விளையாடுவது இது. ஆகு: ஆகு :1 பெருச்சாளி, பேரெலி, பொண்டான். சாலி = பெரும்பானை, மிடாப்பானை. சாலி > சாளி. பெருத்த உடலுடையது; ஆகுதல் = பெரிதாதல். உடல் பெரிதாகுதல் உடைய உயிரி, ஆகு. ஆகு மூடிகமாம் பெருச்சாளி - திவா. 472 ஆகு :2 உடலும் உள்ளமும் (வலிமையும்) ஒருங்கே ஆகி வந்தது ஆகு; பன்றி. விரைந்து பல்கி, உருத்திரண்டு பருப்பது அது. ஆக்கையால் திரண்டதும் அஞ்சாத் தன்மையதும் ஆதலைக் கருதி இடப்பட்ட பெயர் ஆகு என்பதாம். இதற்குரிய பெயர்களே இதன் விளக்கமாக அமைகின்றன. அவை: அரி, இகுளி, எறுழி, ஏனம், கரன்மா, கருமா, களிறு, கனலி, கேழல், கோட்டுமா, கோணி, கோலம், மோழல், வல்லுளி, முதலன (வெ.வி.பே.) அடிக்கும் கோலுக்கு அஞ்சாமல் அக்கோல் மேல் ஏறி அடிப்பாரை அஞ்சுவிக்கும் தன்மையும், அதன் கொடிய சீறலும் கண்டால் இப்பெயரின் அருமை புலப்படும். * பன்றி காண்க. ஆகுபெயர்: ஒரு பொருளின் இயற்பெயர் அப்பொருளைக் குறியாமல் அப்பொருளொடு தொடர்புடைய பிறிதொரு பொருளுக்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயராம். ஆக்க ஆகும் பெயர் ஆகுபெயர் ஆயிற்று. எ-டு: ஊர் உவந்தது ஊர் என்னும் இடப்பெயர் ஊரிலுள்ள மக்களைக் குறித்து வந்தது. ஆகுபெயர் வகைகள் பொருளாகு பெயர். இடவாகு பெயர். காலவாகு பெயர், சினையாகு பெயர், குணவாகு பெயர், தொழிலாகு பெயர், எண்ணலளவை ஆகுபெயர். எடுத்தலளவை ஆகுபெயர், முகத்தலளவை ஆகுபெயர். நீட்டலளவை ஆகுபெயர். சொல்லாகு பெயர், தானி (இடத்தில் உள்ளது) ஆகுபெயர், கருவியாகு பெயர், காரிய ஆகுபெயர், கருத்தா ஆகுபெயர், உவமையாகு பெயர், அடையடுத்த ஆகுபெயர், இருமடியாகு பெயர், மும்மடி யாகுபெயர், விடாத ஆகுபெயர், விட்ட ஆகுபெயர், இரு பெயரொட்டு ஆகுபெயர் என விரிவது ஆகுபெயர். ஆகுலம்: ஆகு+ உலம்= ஆகுலம். ஆகு= ஆக்கம்; உலம் = உலந்து - கெட்டுப் - போனது. ஆகுலம் = ஆக்கக் கேடு. ஆகுல நீர பிற - திருக். 34 பொருள்: பிறவெல்லாம் ஆக்கக் கேடானவை ஆகுளி: தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்று; அது சிறுபறையாம். ஆகுளிப் பறை, முழவொடு உடனாகி ஒத்திணைந்து முழங்கியதை நாம் அறிய முடிகிறது. அதனால் முழவொடும் உடனாகி இசைப்பதால் ஆகுளி ஆயது. ஆகு + உளி = ஆகுளி: உளி = உள்ளிடத்தது. குரல்புணர் நல்யாழ் முழவொ டொன்றி நுண்ணீர் ஆகுளி இரட்ட - மதுரைக். 605 -606 திண்வார் விசித்த முழவொ டாகுளி நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில் - மலை. 3-4 ஆகோள்: வெட்சி மறவர் பகைப் புலத்து ஆக்களைக் கவர்ந்து வருதல் ஆகோள் என்னும் புறத்திணை. வெட்சி நிரை கவர்தல் - தொல். 1003நச்.அடிக். ஆகோள் பூசல் மாற்றே - தொல். 1008 ஆதந்தோம்பல் - தொல் 1003 ஆதந்தோம்பல் = புல்கண்ட இடத்து மேயவிட்டும் புனல் கண்ட இடத்துக் குடிக்கவிட்டும் நிழல் கண்ட இடத்துப் படுக்க விட்டும் ஆவைப் பேண வேண்டுமாகலின் ஆதந்து ஓம்பல் என்றார். ஆக்கம்: ஆகின்ற நலம், வளம் ஆயவை எல்லாம் ஆக்கம் ஆம். ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் - திருக். 594 ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை - திருக். 463 ஆக்கமும் கேடும் - திருக். 642 ஆக்கம் கெட்டவன் (ள், ர் ) (வசைச்செல்) - ம. வ. உணவு முதலியவை ஆக்கல் ஆக்கமாம் உண்டாக்கல் உளதாக்கல் எனப்படும். உலகம் யாவையும் தாமுள வாக்கலும்(கம்ப. 1). கடவுள் உரு வாக்கம் என்பதும் அது. தெய்வம் கருப்பொருளாதல் தொல். 964. ஆக்கவினைக் குறிப்பு: ஆக்கம் என்பது ஆதல் பொருளது. ஆக்கவினைக் குறிப்பு என்பது ஆதல் காரணம் பற்றி வரும் வினைக்குறிப்பு ஆகும். இதில் ஆக்கச் சொல் விரிந்து வருதலும் தொக்கு வருதலும் உண்டு. எ-டு: கல்வியால் பெரியன் ஆயினான்- ஆயினான் என்னும் ஆக்கச்சொல் விரிந்து நின்றது. கல்வியால் பெரியன் - ஆயினான் என்னும் ஆக்கச் சொல் தொக்கு நின்றது. ஆனால் இயற்கை வினைக்குறிப்பாயின் - விரியாமலும் தொகாமலும் - இயல்பாக நிற்கும். எ-டு: தந்தை நல்லர் ஆக்கிப் போடல்: பெற்றோர் தம் பிள்ளை வயிறு வாய்த்து 7 அல்லது 9 திங்கள் ஆயபின் பிறந்த வீட்டுக்கு அழைத்து மகப்பேறு ஆயபின் புகுந்த வீட்டுக்கு விடுப்பர். தம் வீட்டுக்கு அழைத்தலை ஆக்கிப் போடல் என்பர். உற்றார் உறவினரை அழைத்துப் பல்வேறு சோறுவகை களை ஆக்கிப் போட்டு அழைக்கும் அழைப்பு ஆக்கிப் போடல் எனப்படும். வீட்டுக்கு அழைத்தல், வளைகாப்புப் போடல் எனவும் கட்டுச் சோறு ஆக்கல் எனவும் வெவ்வேறு பெயரால் இது வழங்குகின்றது. இச்சடங்கு மகளிரே செய்வது. வளையல் போடு வது, சந்தனம் பூசுவது, பூச் சொரிவது, பாவைப் பாடல் பாடுவது என ஆக்கிப் போடல் நிகழும். கணவரையும் சிறப்பித்து அவர்க்குப் புத்துடை, மாலை வழங்கி மகிழ்வர். ஆக்கியம்: சொற்றொடரை ஆக்கி வைக்கும் எழுவாய்; பெயர். ஆக்கு + இயம் = ஆக்கியம். எழுவாய் = தோன்றுமிடம், எழுமிடம். தென்னக வண்டி எழும்பும் ஊர் எழுமூர் எனப்படல் நல்ல படைப்புச் சொல். ஆக்கினை: ஆக்கு + இனை = ஆக்கினை. ஆக்கும் - ஆக்கப்படும் - துயர், ஆக்கினையாம். இனைதல் = வருந்துதல். உண்டாகும் துயரினும் உண்டாக்கும் துயரே அகலாததாய் அழுத்தும் என்க. அடித்தாரைச் சொல்லி யழு ஆக்கினைகள் செய்திடுவோம் - தாலாட்டு. ஆக்கை: யாக்கை > ஆக்கை. யாக்கை = யா என்னும் மரத்தின் பட்டை. கட்டுக் கட்டுவதற்குக் கட்டு கயிறாகப் பயன்படுகிறது. அது ஆக்கை என, கட்டு நாராகப் பயன்படும் புளிய வளார். கருவேல் வளார் ஆகியவற்றைக் குறிப்பதாயிற்று. கூரை வேய்தற்கு இன்றியமை யாதது ஆக்கையாம். யாக்கையாம் உடல் நரம்புகளாலும் எலும்புகளாலும் கட்டுற்றிருத்தலால் யாக்கை, ஆக்கை எனப்பட்டதாம். யாக்கை நிலையாமை நாலடியில் ஓர் அதிகாரப் பெயர். ஆங்கரை: ஆம் + கரை = ஆங்கரை. நீர் ஓட்டத்தாலேயே அமைந்த கரை ஆங்கரை ஆகும். தானே தனக்குக் கரை அமைத்துக் கொண்டது போல் ஆகிய அதனை ஆங்கரை என்றும், அதன் சார் ஊர் ஆங்கரை என்றும் வழங்குதல் காணலாம். திருச்சிக்கும் திருத்தவத்துறைக்கும் இடையே அமைந்த காவிரிக் கரையூர் ஆங்கரையாகும். ஆங்காலம்: ஆகும் காலம் > ஆங்காலம். ஆங்காலம் மெய்வருந்த வேண்டா தனிப்பாடல் ஔவையார். எண்ணாத நலங்களெல்லாம் எய்திவரும் காலம் ஆங்காலம் . ஆகூழ் ( திருக். 371), ஆகாறு போல. ஆங்கிலியர் : ஆங்கிலம் > ஆங்கிலி > ஆங்கிலியர். ஆங்கில மொழி பேசுவார் ஆங்கிலர் எனப்பட்டார். ஆங்கிலக் கலை பயில்வித்த என்றார் பாரதியார். ஆங்கிலரை ஆங்கிலியராகப் பெயர்த்து . ஆங்கிலியர் அந்தாதி பாடினார் வண்ணச் சரபம் தண்டபாணி அடிகள். ஆங்கிலர்க்கு எதிராய் அவர்கள் அகல வேண்டும் என்றும் அழிய வேண்டும் என்றும் தமிழ்த்துறவியர் ஒருவர் கொடுத்த முதல் விடுதலைக் குரல் இஃதாம். நூறு பாடல்களையுடையது இது. ஆசாகு: ஆசு + ஆகு = ஆசாகு. களப்போரில் தன் வீரர்களைத் தாங்குவோனாய், அவர்களுக்கு முந்துற நின்று போர் வெற்றி தந்த வீறுடையன் ஒருவன் படைக்குக் காவலனாகத் திகழ்ந்தமையால் ஆசாகியவன் என்று பாரட்டப்பட்டான். ஆசு = பற்றுக்கோடு. பற்றாசு என்பதும் அது. அத்தகை வீரன் ஒருவனை, அவன் களப்போரில் சிறந்துபட, ஆசா கெந்தை - புறம். 235 எனப் பரவி வழிப்பட்டனர். ஆசிரியர்: ஆசு + இரியர் = ஆசிரியர் = குற்றம் அற்றவர். குற்றம் குறைகளைக் களைபவருமாம். குற்றமற்றவரே குறை களையவும் தக்கார் என்பது உலகு கொள்ளும் குறிப்பு. ஆசிரியர், ஆசான், கணக்காயர், குரு, ஈகையர், கொடைஞர், ஓதுநர், பார்ப்பார், புலவர் என்பன வெல்லாம் ஆசிரியரைக் குறிக்கும் அருமைச் சொற்கள். குற்றமில்லாமை, நூல் தேர்ச்சி, செம்மை, கொடை நலம், பயிற்றல், ஆய்தல், புலமைச்சீர் என்னும் சிறப்பியல்களால் பெற்ற பெயர்கள் இவை, அனைத்தும் தனித்தமிழ்ச் சொற்களே. வீட்டுக்கும் நாட்டுக்கும் உலகுக்கும் ஒளியுண்டாக்கும் - களியுண்டாக்கும் - உயர்வுண்டாக்கும், பெரும் பொறுப்புடையார் ஆசிரியப் பெருமக்களே யாவர். ஆசிரியர் என்பார் ஏட்டுக் கல்வி கற்பிப்பார் மட்டுமல்லர். ஏட்டுக் கல்வி கற்பிப்பாரே ஆசிரியர் என்ற அளவில் பொருட் சுருக்கம் அமைந்தமையே, ஆசிரியரின் பணிச் சுருக்கமும் புகழ்ச் சுருக்கமும் ஆயிற்றாம். ஆசிரியர் என்பார் எக்கலைக்குரியர் என்பது இல்லை. மருத்துவர் ஆசிரியர்; சிற்பர் ஆசிரியர்; கொல்லர், கொத்தர், தச்சர், தட்டர் ஆகியோரெல்லாம் ஆசிரியர்; ஓவியர், வண்ணக்கர், ஒப்பனையர், துன்னர் ( தையற்காரர்) சிலம்பர், மல்லர் இன்னரெல்லாரும் ஆசிரியர். பயன்கலை ஆயினும் கவின்கலையாயினும் தாம் கற்றதைப் பிறருக்கும் கற்பிப்பார் எவரோ அவரெல்லாரும் ஆசிரியர். நூலியற்றுவார், உரை காண்பார், பதிப்பிப்பார் இதழ் நடத்துவார், பொறி இயக்கம் கற்பிப்பார் இன்னர் ஆசிரியர் அல்லரோ ! நட்டுவர் என்பார், இசைஞர் என்பார், யாழர், குழலர், முழவர், தண்ணுமையர் என்பார் இன்னவரும் ஆசிரியர் தாமே ! இவ்வாறு விரிவமைந்த ஆசிரியர் தொழில், ஏட்டுக் கல்வி கற்பிப்பாரே ஆசிரியர் என்னும் அளவில் சுருங்கினாலும் வழி காட்டுவாரும் பயிற்சி தருவாரும் ஆசிரியர் என்றே வழங்கும் வழக்கம் இன்றும் மறைந்து விடவில்லை என்பது உண்மை. ஆசினி: ஆசினி = ஒருவகைப் பலா. ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று முட்புற முதுகனி பெற்ற கடுவன் - புறம். 158 பழைய உரையாசிரியர், ஆசினியோடு அழகு பெற்ற பலாவின்கன் ஆசைப்பட்டு முள்ளைப் புறத்தேயுடைய முதிர்ந்த பலாப் பழத்தைப் பெற்ற கடுவன் என உரைவரைகிறார். ஆசினி என்பது ஒரு மரம். ஈரப் பலா என்பாரும் உளர் என விளக்கமும் வரைகிறார் (ப. உ). பலவின் வகையுள் ஆசினி என்பதும் ஒன்றாதலின் பலவின் பழம் போலவே ஆசினியும் முட்புறம் கொண்ட கனியாகவே கொள்ளலாம். ஆசு = பற்று; பற்றாசு, முள், தோல், உள்தோல், நார் பயினன்ன பசை, சுளை அதனுள் விதை எனப் பற்றிக் கிடப்பதும், எப்பழமும் கொள்ளாத அளவு இனிமையும் நறுமையும் உடைமையும் இயைய ஆசு + இனி = ஆசினி எனப் பெயர் பெற்றதாம். ஆசினிப் பழம், குடம் போன்றது (குடக்காய் ஆசினி நற். 44); முதிர்ந்து வெடிப்பது (அரலை உக்கன நெடுந்தாள் ஆசினி மலை. 138) என்பவை பலாவை ஒப்பன. ஆசு : ஆசு : 1 ஆசு = பற்றாசு. இரண்டு இரும்புகள் பற்றிக் கொள்ளுமாறு இடையே இணைக்கப்படும் மற்றோர் இரும்பு பற்றாசு எனப்படும். ஆசு : 2 எதுகையின் இடையே ஆசு எழுத்து வைக்கப்படும் எதுகை, ஆசிடை எதுகை, ஆசெதுகை என்பதும் அது. காய்மாண்ட தெங்கின் ஏமாங்கதம் - சீவக. 31 ய், ர், ழ் என்பன ஆசு எழுத்துகள் எனப்படும் ( யா.கா.41) ஆசு : 3 தச்சு வேலை செய்யத் தொடங்கும் அடையாளம் ஆசு எனப்படல் உண்டு. ஆசு : 4 ஆசு + ஆன் = ஆசான் ; ஆசு = பற்றாசு. பயில்வார்க்குப் பற்றுக் கோடாக இருப்பவன் ஆசான். ஆணை ஆசாற்கு அடியுறை செய்யும் மாணி போல மதக்களிறு படிய - பெருங். 3:9:58-59 ஆசு : 5 ஆசு = குற்றம். ஆசு இரியன் = குற்றமற்றவன். அரியகற்று ஆசற்றார் - திருக். 503 ஆசிரியர்க்க - தொல். 316 ஆசை : ஆசு = குற்றம்; பற்றுக்கோடு. ஆசை = குற்றங்களுக்கெல்லாம் பற்றுக்கோடாக இருப்பது. அளவின்றி விரிவதாம். ஆசை நீப்பதே பேரா இயற்கைப் பேறாம் ( திருக்.370) அவம் செய்வார் ஆசையுள் பட்டு - திருக். 266 அவா என்னும் துன்பத்துள் துன்பம் - திருக். 269 ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் - திருமந். 2570 ஆச்சல்: ஆய்ச்சல் > ஆச்சல் = மேலாய் மிதத்தல். அமரவோ உண்ணவோ வாய்க்குமோ என ஆய்ந்து பார்த்தல் ஆய்ச்சலாம். பின்னே, பறவை ஈ முதலியவை மேலே ஆய்தல் போல், நீரின் மேல் மிதத்தல் ஆச்சல் எனப்பட்டது. குளிக்கப் போனால் ஆச்சலில் மணிக்கணக்கில் இருப்பார் என்பது மக்கள் வழக்கு. ஆஞ்சிக் காஞ்சி : காஞ்சி என்னும் புறத்திணைத் துறைகளுள் ஒன்று ஆஞ்சி. களம் சென்ற கணவன் பகை வென்று மார்பில் காயமுற்று மாண்டான். அவன் எந்தக் கருவியால் மாய்ந்தானோ அதே கருவியைக் கொண்டு தானே தன்னை மாய்த்துக் கொள்ளுதல் ஆஞ்சிக் காஞ்சியாம். களஞ்சென்று, கணவன் உடலை ஆய்ந்து காணல்; அவன் எக்கருவியால் மாண்டான் என்பதை ஆய்ந்து காணல்; தான் அவனொடு முடிதலே பேறு என ஆய்ந்து தன்னை முடித்தல் என ஆய்ந்து ஆஞ்சி எனப்பட்டது. காஞ்சியாவது நிலையாமை. நீத்த கணவற் றீர்த்த வேலிற் பேஎத்த மனைவி ஆஞ்சி - தொல். 1025 * காஞ்சி காண்க ஆஞ்ஞான்: ஆஞ்ஞான் = அப்பன் ; அஞ்ஞான் > ஆஞ்ஞான். வடமலை ஆஞ்ஞான் - வடமலையப்பன். என் சரிதம் பக். 15 ஒ.நோ. : அஞ்ஞை = அம்மை. அஞ்ஞை > ஆஞ்ஞை. ஆஞ்ஞை நீ ஏங்கி அழல் - சிலப். 9:24 அஞ்ஞை = அன்னாய் - அடியார்க். ஆஞ்ஞை: அஞ்ஞை > ஆஞ்ஞை = அன்னை ஒ.நோ. : ஆஞ்ஞான் x ஆஞ்ஞை ஆஞ்ஞை முறையர் என்றோர் குடியினர் உளர். அவர் அப்பெயரால் இன்றும் அழைக்கப் பெறுகின்றனர். ஆடணி: ஆடு + அணி = ஆடணி = ஆடுதற்கு ஏற்ப அழகு செய்யப் பட்ட இடம். கூடுகொள் இன்னியம் கறங்கக் களனிழைத்து ஆடணி அயர்ந்த அகன்பெரும் பந்தர் -அகம்.98 ஆடலன்: ஆடல் + அன் = ஆடலன். பயிலிருள் காடமர்ந் தாடிய ஆடலன் - பதிற், கடவுள். பொருள்: ஆட்டத்தை யுடையவன் ஆகிய கூத்தப் பெருமான் ( ஔவை சு. து. உரை) ஆடலன் பாடலன் மேய பரங்குன்றை -தேவா . ஞான. பரங் ஆடல்: ஆடல் : 1 ஆடு + அல் = ஆடல் ஆடு = அசைவு முதலாம் இயக்கம்; அல் = சொல்லீறு. விளையாடல், கூத்தாடல், போராடல், உரையாடல், உண்டாடல், திண்டாடல், கொண்டாடல், மன்றாடல், பேயாடல், களவாடல், இவ்வாடல் பின்னிலை. ஆடல் : 2 ஆடல் என்பது, ஆட்டு எனவும் வரும். விளையாட்டு, கூத்தாட்டு, போராட்டு முதலாகக் கொள்க. ஆடல் : 3 ஆடல் என்பது, ஆட்டம் எனவும் வரும். கூத்தாட்டம், போராட்டம், உண்டாட்டம், திண்டாட்டம் முதலாகக் கொள்க. ஆடவர்: ஆடவர் : 1 ஆள் + அவர் = ஆளவர் > ஆடவர். ஆடவர் = ஆண்கள். ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் - திருக். 1003 எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே - புறம். 187 ஆடவர் : 2 ஆடு = வெற்றி; ஆடவர் = வெற்றி வீரர். ஆடு = போராடுதல். ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல்வேல் சாத்தன் -புறம். 242 ஆடவிடல்: ஆடவிடல் = அரங்கேற்றம். ஆட்டத்திற்குப் பயிற்சி தந்து அரங்கேற்றுதல் வழக்கம். அறையில் ஆடி அம்பலத்தில் ஆடல்என்னும் பழமொழியே இதனைத் தெளிவாக்கும். இந்நாளில் ஆடவிடலாம் அரங்கேற்றம் வெள்ளமெனப் பெருக்கெடுக்கின்றன. பாட்டரங்கம். ஆட்டரங்கம், பழமைய. முன்னதற்குச் சங்க நாள் அரங்கேற்றம் சான்று. பின்னதற்குச் சிலப்பதிகார அரங்கேற்றுக் காதை சான்று. இந்நாள் அரங்கேற்றங்கள் அவைக்களந்தோறும் நிகழ் தலை இன்றைய நிகழ்ச்சிப் பகுதி காட்டும். கிழமை இதழ்கள், நாளிதழ்கள் ஆகியவற்றின் கலைப்பகுதியும் காட்டும். ஆடாமணி: ஆடாத மணியை ஆட்டி அரிவை ஒருத்தி அறங்கேட்ட காலை, வேந்தன் வருந்தி அவளிடத்துச் சென்று கேட்டலைப் பற்றிக் கூறுவது ஆடாமணி என்பதாம். வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுட - சிலப். 20:53-54 என்பதையும், கண்ணகியார் வழக்குரையையும் இணைத்துக் கொண்டெழுந்த இலக்கிய வகை ஈதெனலாம். இதன் இலக்கணம். வாயின் மணிநா அசையாமற் செய்மின்னாள் வாயின் மணிமுற் றுற அசைக்க - வேயிறைவன் பூசலிட்டுப் பின்மேவப் பூட்டி உரைப்பதுவே வாசமிகும் ஆடா மணி - பிர. திர.9 ஆடாமேனி: ஆடாமேனி : 1 அசையா உடல்; ஓகவிருக்கையில் ஓகம் வல்லார் இருக்கும் நிலை ஆடாநிலையாம். பொறி புலன் கட்டுண்டும் மூச்சுக்காற்றுச் செறிவுண்டும் நிலையில் திரியா தடங்கிய ஒடுக்கநிலை ஆடா மேனி நிலையாம். நீடிய சடையோ டாடா மேனிக் குன்றுறை தாபதர் -நற். 141 ஆடாமேனி:2 ஓகத்தொரு நிலையில் ஒடுங்கியமையால் நீராடல் இல்லாத உடலினர் என்பதுமாம். முன்னது, பின்னத்தூரார் உரை; பின்னது ஔவை சு.து. உரை. ஆடி: ஆடி:1 ஆடு + இ = ஆடி ( கண்ணாடி) தன் முன் உள்ளவற்றின் நிழலைத் தன்னுள் கொண்டு ஒளி செய்வது ஆடியாம். நிழலாடுதலால் அறிய வைப்பதை ஆடி என்றனர். கண்ணாடி என்பதும் அது. வெளியிருப்பாரைக் காட்டி உள்ளிருப்பாரைக் காட்டா ஆடி இருந்தமை மணிமேகலைப் பளிக்கறை புக்க காதையால் விளங்கும். பாங்கில்வந் திடுநரை படிமக் கண்ணடி - கம்ப. அயோத்.3 ஆடியின் இயல்பு, அடுத்தது காட்டும் பளிங்கு எனப்படும் (திருக். 706) ஆடி:2 ஆடித்திங்கள். காற்றின் கடுமையால் இயற்கைத் திணை களையும் ஆட வைக்கும் காலம். அம்மி பறக்கும் ஆடிக் காற்று என்பது பழமொழி. * மாதம் காண்க. ஆடி அடங்கல்: ஆடி அடங்கல் = அமைதல். ஆடாத ஆட்டம் ஆடியவன் எவ்வளவு காலம்தான் ஆட முடியும்? ஆடிய மட்டும் ஆடிவிட்டுப் பொருள் சுண்டவும், உடலின் உரம் சுண்டவும், குருதி சுண்டவும், நாடி நரம்புகள் சுண்டி இழுக்கவும் பழைய ஆட்டம் போட முடியாமல் வேறுவழி யின்றி அடங்குதல் உண்டு. இதனை ஆடி அடங்கல் என்பர். ஆடி அடங்கிய பின்னராவது தெளிவு ஏற்படுமா ? பெரும் பாலோர்க்கு இல்லை. மூதா (கிழப்பசு) இளம் புல்லைத் தின்ன முடியாமல் (பல்போய் விட்டமையால்) நாவால் நக்கி இன்புறல் போல மன அசை போட்டுக் கிளுகிளுப்பதை விடுவது இல்லை. ஆடிய ஆட்டத்தின் முதிர்ச்சி எளிதில் போகுமா? ஆடிப்பாவை: ஆடியில் தோன்றும், தோற்றம் அசைய அசையத்தானும் அசைவதை அன்றி அறிந்தோ உணர்ந்தோ செய்வதில்லை. அவ்வாறு தனக்கென ஒரு தன்மையில்லாமல் பிறர்க்குத் தக - ஆட்டுவதற்குத் தக - ஆடுவாரை ஆடிப்பாவை என்பர். ஆடிநன் னிழலின் நீடிரும் குன்றம் காட்டுவார் போல் கருத்து வெளிப்படுத்து -சிலப். நூற்கட். 15-16 தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை போல - குறுந். 8 ஆடிப்போதல்: ஆடிப்போதல் = அஞ்சி நடுங்கல். அதிர்ச்சியான செய்தியைக் கேட்ட ஒருவன், நான் அச்செய்தியைக் கேட்டு ஆடிப்போய் விட்டேன்எனக் கூறுவ துண்டு. நடுக்கம் உண்டாகும் போது தலை கால் கை நாடி நரம்பு பேச்சு எல்லாமும் ஆடுதல் உண்மையால் ஆடிப்போதல் அல்லது ஆடி விடுதல் என்பது அஞ்சி நடுங்குதலைக் குறிப்பதாயிற்று. செய்தியை அன்றிக் கொடிய விலங்குகளைக் கண்ட போதும் அஞ்சி நடுங்கல் இயற்கையே, அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப் பிணங்கல் சாலா அச்சம் நான்கே - தொல். 1202 என்றார் தொல்காப்பியர் (1202). ஆடிவிடுவார் என்பதை அறிந்து கொண்டால், அவ்வாட்டம் கண்டு மகிழ்தற்கே ஆட்டி வைக்கும் ஆள்களும் இல்லாமல் இல்லையே. ஆடு: ஆடு:1 ஆடு - குறிப்பாக வெள்ளையாடு - தன்முன்னங்கால்களைத் தூக்கி ஆடுதலும், போராடுதலும் கண்ட கூர்ங்காட்சியர் ஆடு எனப் பெயரிட்டனர். அதன் வெற்றித்திறம் நோக்கி ஆடு ஆடல் என்பவற்றுக்கு வெற்றிப் பொருளும் தந்தனர். ஆடு ஆடு என்ப - புறம். 85 x.neh.: காற்றில் அசைதலால் துணி ஆடை எனப்பட்டது. ஆடு கொடிப்படை என்பார் கம்பர் (2324). ஆடு:2 ஆடு = வெற்றி. ஆட்டிற்கு ஆளுமை உண்டு என்பதைக் கிடைகளில் செம்மறிக்கடா முட்டுவதைக் கண்டு அறிந்ததுண்டு. ஒரு வெள்ளை ஆட்டுக்கடா தன் ஆளுமையைக் காட்டியது. உண்மை வீரம் ஒளிவிட்டுக் களிப்பூட்டியது. வெள்ளையாட்டுக் கடாவைக் கண்டு நாய்கள் ஆறு ஏழு கூடின. காதைத் துளைத்து எடுக்கக் குரைத்தன ; சீறின; பிடுங்கி விடுவது போல் வந்தன. ஆனால் ஐந்தாறு அடிகளுக்கு எட்டத்தில் நின்று, அவை அடாவடிச் செயல்களை வைத்துக் கொண்டனவே அன்றி நெருங்கின அல்ல. ஆடு ஆடவில்லை; அசையவில்லை; அத்தனை நாய்களின் குரைப்புக்கும் ஆர்ப்புக்கும் செம்மாந்து நின்று தன் ஆளுமையை நிலை நிறுத்தியது. அஞ்சினால்தானே அச்சுறுத்தல் எழும்? அஞ்சா ஆட்டைக்கண்டு அடங்கிச் சென்றன நாய்கள். எவ்வளவு நேரம்தான் குரைக்க முடியும்? ஆடுகொளக் குழைந்த தும்பை - புறம். 21 ஆடு கொள் வியன்மார்பு - புறம். 211 ஆடு கொள் முரசு - அகம். 335 ஆடு மலி உவகை - புறம். 165 ஆடு:3 அடு > ஆடு. அடுதல் = சமைத்தல். ஆடுநனி மறந்த கோடுயர் அடுப்பு - புறம். 164 * அடுதல் காண்க. ஆடுகளம்: ஆடுகளம்:1 களம் = இடம். கூத்தாடும் இடம். கூத்தர் ஆடுகளம் கடுக்கும் (ஒக்கும்) - புறம். 28 வாடல் உழிஞ்சில் விளைநெற் றந்துணர் ஆடுகளப் பறையின் அரிப்பன ஒலிப்ப - அகம். 45 ஆடுகளம்:2 வேலன் வெறியாடும் இடம். ஆடுகளம் சிலம்பப் பாடி - முருகு. 245 அணங்குறு மகளிர் ஆடுகளம் கடுப்ப - குறிஞ்சி. 175 ஆடுகள மகள் (விறலி) ஆடுகள மகன் (கூத்தன்) - குறுந். 31 ஆடுதல்: ஆடுதல் என்றதும் நம் மனத்துத் தோன்றுவது மயிலின் ஆட்டமேயாகும். உவகை மீக்கூர்ந்த மயில், தன் தோகைகளை அகல விரித்து ஆடும். அகல விரிந்த அதன் தோகைத் தொகுதி ஆலவட்டமெனத் தோன்றும். அகல் வட்டமே ஆலவட்டமாகிச் சிவிறியை-விசிறியைக் - குறித்தது. இதனை, நீல ஆலவட்டம் விரித்தாற் போலத்தன் கோலக் கலாவம் கொளவிரித்து - ஓர் இளமயில் ஆடுவது நோக்கி நின்றாள் எனவரும் களவியல் உரையால் (2) அறியலாம். ஆடு தின்னாப் பாளை : ஆடு தின்னாத குறுஞ்செடி இது. பெரு வரப்பாகவும் கரையாகவும் உள்ள பகுதிகளில் வளரும். பயிர்களுக்கு வேலிபோல் அமைவது. மருத்துவ நலம் உடைய இது. கசப்பு மிக்கது. ஆடு தின்னாது ஒதுக்கும் செடி இது என்பது கண்டு மக்கள் இட்டு வழங்கிய பெயர். இதனையும் ஒரு கடி கடித்துப் பார்த்துத் துப்புவது ஆட்டின் இயல்பு. மற்றை மாடு முதலான எதுவும் இதனைத் தின்னா. ஆடுமகள்: ஆடுமகள் : 1 ஆடுமகள் = விறலி. அரிக்கூட் டின்னியம் கறங்க ஆடுமகள் கயிறூர் பாணி - குறிஞ்சி. 193-4 ஆடுமகள் குறுகின் அல்லது பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே - புறம். 128 ஆடுமகள் : 2 வெறியாடுபவள், தேவராட்டி. மஞ்ஞை ஆடுமகள் வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும் - குறுந்.105 ஆடுவினைக்கா: ஆடு + வினை + கா = ஆடுவினைக்கா. ஆடு = விளையாடுதல்; வினை = செயல்; கா = சோலை, பூங்கா. ஆடுதல் புரிய அமைக்கப்பட்ட பூங்கா ; அது மாளிகையின் மாடங்களில் மகளிர் ஆடுவதற்காக அமைக்கப்பட்டது. மாடத் தகத்து ஆடுவினைக்கா - பெருங். 14 :15 ஆடூஉ: அடு > ஆடு > ஆடூ > ஆடூஉ போர்க்களம் சென்று பகையடும் திறமுடையார்; வீடு காவல் பொறுப்பை முற்றாக மகளிர்பால் விடுத்து, நாடுகாவல் பொறுப்பை முற்றாக ஆடவர் கொண்ட அந்நாள் காவல் நிலை வரலாற்றுப் பதிவுச் சொல் ஆடூஉ. வினையே ஆடவர்க்குயிரே என்பதால் ஆடவர் என்பதன் பொருள் விளக்கமாம். ஆடு என்பது வெற்றிப் பொருளது. வினைமுடித்து வெற்றியொடு திரும்பியவன் ஆடூஉ எனச் சிறப்பியலால் வழங்கப் பெற்றுப் பின்னர்ப் பொதுமையில் ஆணைக் குறிப்பதாயிற்று. ஆணை முன்னிலைப் படுத்தி விளியாகக் கூறப்படும் பாடல் ஆடூஉ முன்னிலை எனப்பட்டது. நளிகடல் தண்சேர்ப்ப ஆடூஉ முன்னிலை. களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே - புறம். 312 னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல் -தொல். 489 * மகடூஉ, மைந்தன் காண்க. ஆடை: ஆடை:1 ஆடை = உடை காற்றில் ஆடுவது காற்றாடல் ; காற்றாட உலவி வருதல் வழக்கம்; காற்றில் ஆடும் கருவி காற்றாடி; துணியுடை காற்றில் ஆடலால் ஆடை எனப்படும். ஆடு கொடிப்படை என்பார் கம்பர் (2324). ஆடைபோல் பால்மேல் படிவது பாலாடை பாலாடை போலும் நூலாடைஎன்பது உவமை. நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து என்பார் பாரதிதாசனார். பனையின் செதும்பு பின்னலாடை போல் இருத்தலால் பன்னாடை எனப்படும் நெய்யரி என்னும் வடிகட்டி போல் பதனீரை வடிகட்டுவது அது. பன்னை + ஆடை = பன்னாடை . பன்னை > பனை. ஆடை:2 ஆடை = விளையாடல். ஆடையிலே எனை மணந்த மணவாளாஎன வள்ளலார் கூறுவது, விளையாடையிலேஎன்பதன் தொகை. ( திருவருட். 4091) ஆடை : 3 ஆடை = கார்காலம் ஆடையும் கோடையும்என்னும் இணைமொழியில் வரும் ஆடை, கார்காலம் என்னும் பொருளது. குளிரால் ஆட வைக்கும் காலம் ஆடை. ஆனி ஆடி மாதக் கொந்தலிலே குளிர் ஆடுகள் போல் கொடுகி நிற்போம்என்பார் கவிமணி. (மலரும் மாலையும்) காற்றால் தவழும் முகில் மழை பொழியும் கார்காலம் என்பது அது. ஆட்காட்டிக் குருவி : ஆள் + காட்டி + குருவி = ஆட்காட்டிக் குருவி. ஆள் வருகையைத் தன் ஒலியால் அறிவிக்கும் குருவி. பிறர் கண்ணில் படாமல் கரவு வாழ்வு வாழ்வார்க்கு இக்குருவி பெரும் பயன் செய்வதாம். மற்றைப் பறவை விலங்குகளுக்குத் தற்காப்புச் செய்வதாகவும் அமையலாம். காட்டுள் செல்வார் எவரும் இக்குருவியை இன்றும் அறியக் கூடும். ஆட்கொள்ளல்: ஆள் + கொள்ளல் = ஆட்கொள்ளல். ஒருவர் ஒப்படைத்த பொன்னையும் பொருளையும் அடைக்கலமாக ஒப்படைத்துக் காப்பது போலத் தன்னையே ஒப்படைத்துக் காக்க வேண்டிக் கொண்டவாறு காத்தல் ஆட் கொள்ளலாம். அடிமையாகக் கொள்ளல் என்பதுமாம். என்னையும் ஆட்கொண்டருளி -திருவா. 10:4 அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே யனையாய் யென்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ - திருவா. குழைத்த.7 ஆட்சை: ஆட்சி > ஆட்சை. ஆளுகை, ஆளுமை என்னும் பொருளது ஆட்சை என்பது. ஞாயிறு திங்கள் முதலியவற்றின் கிழமை (உரிமைப்) பொருள் போல, ஆட்சை என்பதும் ஆளுரிமைப் பொருளதாகக் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது. ஆட்டங்காட்டுதல்: விளையாட்டாகப் பேசியும் நடித்தும் ஏமாற்றுதல் ஆட்டங்காட்டலாம். என்ன ஆட்டங்காட்டுகிறான் பார்த்தாயா? நான் ஏமாறு வேனா? என்பாரும் உளர். அவரும் ஆட்டங் காட்டுவார்க்கு ஏமாறாமல் இருக்கமாட்டார். ஏனெனில் ஆட்டங் காட்டுவார் திறம் அத்தகையது. நடிப்பானால், நம்பாமல் தீரா நடிப்புஅது. ஆட்டங் கொடுத்தல்: ஆட்டங் கொடுத்தல் = உறுதிப்பாடில்லாமை. பல் ஆடுதல், கற்றூண் ஆடுதல், சுவர் ஆடுதல், உறுதியாக நிற்க வேண்டியவை உறுதியின்றி ஆடுதலை ஆட்டங் கொடுத்தல் என்பர். ஆடுதல் அசைதல் ஆகியவை காற்றால் நிகழ்பவை. அவ்வாறு காற்றால் ஆடுதல் இன்றிப் பற்றுக்கோடு உறுதியாக இல்லாமையால் நேர்வதையே ஆட்டங் கொடுத்தல் என்பர். ஆடக் கூடாதது ஆடுவதே ஆட்டங் கொடுத்தல் எனலாம். இவ்வழக்கிலிருந்து, அவர் பதவி ஆட்டங்கொடுத்து விட்டது அவர் நிலைமை ஆட்டங் கொடுத்து விட்டது என்பன போல வழக்கில் வந்து விட்டன. குடும்பமே ஆட்டங் கொடுத்து விட்டது என்பது பேரிழப்பு அல்லது பேரதிர்ச்சியால் நிகழ்வதாம். ஆட்டங் கண்டு விட்டது என்பதும் இது. ஆட்டபாட்டம்: ஆட்டம் = தாளத்திற்குத் தக்கோ, தகாதோ ஆடுவது ஆட்டம். பாட்டம் = ஆட்டத்திற்குத் தக்கோ, தகாதோ பாடுவது பாட்டம். பாட்டு, பாட்டம் என வழங்குதல் இதனால் அறியலாம். சொல்லால் ஆடுதல், பாடுதல்களைக் குறிப்பதாயினும், இலக்கணையாய் வேறு குறிப்பினதாம். பிறரைப் படாப்பாடுபடுத்திய கொடியவர்களுக்கும் முதுமை, வறுமை, நோய்மை, முதலியன வந்து வாட்டுமல்லவோ! அந்நிலையில் அவர் தம் பழநாள் கொடுமைகளைச் செய்ய இயலாதவராய் அயர்ந்து ஒடுங்கி ‘என்ன? என்று கேட்பதற்கும் ஆளின்றிக் கிடப்பரன்றோ! அந்நிலையில் அவரை ஆட்ட பாட்டமெல்லாம் ஒடுங்கிவிட்டது. அவர் ஆடிய ஆட்ட மென்ன? பாட்டமென்ன? எல்லாம் எங்கே போனது? என்று இகழும் வழக்கைத் தழுவியது இது. ஆட்டம் போடல்: ஆட்டம் போடல் = தவறான நடக்கை. ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடினான்என்பதிலுள்ள ஆட்டமே இவ்வாட்டம் போடல். குழந்தைகள் ஆடல், கலையாடல் ஒழிந்த கீழ்நிலை ஆடல் இவ்வாடல். இதனை விளக்கவே ஆடாத ஆட்டம் எனப்பட்டது. பண்புடையவர் ஆடாத ஆட்டம் இவ்வாட்டம்.சூதாட்டம், களியாட்டம், பாலாட்டம் முதலாய ஆட்டம் ஆடாத - ஆகாத - ஆட்டம். நளன் கதை, தருமன் கதை நாடறிந்த கேடாக இருந்தும் அவ்வாட்டத்தை அரசே ஊக்குகின்றது. இன்றேல், சூதாட்டு, களியாட்டு நிகழுமா? பரிசுச் சீட்டு என்பது என்ன ? மதுக்கடை உரிமம் என்பது என்ன ? பொது மக்களை ஆடாத ஆட்டத்திற்கு ஆளாக்கிவிட்டால், அரசின் ஆடாத ஆட்டங்கள் அரசுக்கு வாராது என்னும் அடிப்படையா? ஆடாத ஆட்டம் அழிவின் தொடக்கம் என்க! ஆட்டாமா(வு): தோயை இட்டவி வடைக்கு ஆட்டும் மாவு அரிசி, உழுந்து முதலியவை. முகப்பொடியாகப் பயன்படும் பொருள்களை அரைத்தெடுத்த மாவு, உணவுக்காக ஆட்டப்படாத மாவு, ஆதலால் ஆட்டாமாவு என முகப் பொடியை வழங்குதல் செட்டிநாட்டு வழக்கு. புட்டாமாவு என்பதும் இது. பிட்டு என்பதன் திரிபு புட்டு அதற்குப் பயன்படாத மாவு, முகப்பொடி மாவு. ஆதலால் புட்டா மாவு எனப்பட்டதாம். ஆட்டி: ஆட்டி : 1 ஆளன் x ஆட்டி. ஆள்பவன் = ஆளன்; ஆள்பவள் = ஆட்டி. எ-டு மனையாட்டி, மூதாட்டி, அரசாட்டி,விழவு மூதாட்டி, பெருமாட்டி ஆட்டி:2 மறுப்பின்றி எதனையும் ஏற்றுக் கொள்பவன்/ள் ஆட்டி. தலையாட்டி என்பது அது. ஆட்டி : 3 வினையெச்சம். கரும்பாட்டிக் கட்டி சிறுகாலை கொண்டார் - நாலடி.34 ஆட்டி வைத்தல்: துயருறுத்தல், சொன்னபடி செய்வித்தல். ஆட்டுதல் இன்புறுத்தலுமாம், துன்புறுத்தலுமாம். குழந்தையைத் தொட்டிலில் போட்டு ஆட்டுதலும், ஊஞ்சலாட்டு தலும் இன்பமாம். ஒருவரைத் தலைகீழாகக் கட்டிப் போட்டு ஆட்டினால் அத்துன்பத்தைச் சொல்வானேன்? இன்ப துன்பங்களுக்குப் பொதுவான ஆட்டுதல் சொன்னபடி எல்லாம் செய்ய வைத்தல் பொருளில் வருவது வழக்கு. அவள் ஆட்டி வைக்க அவன் ஆடுகிறான்! அவனாகவா இந்த ஆட்டம் போடுகிறான்என்பர். இதில் ஆட்டுதற்குத் தக ஆடுதல் விளங்கும். அச்சுறுத்திச் சொல்லியவாறெல்லாம் செய்யச் செய்பவர் செயல் ஆட்டி வைத்தல் ஆகும். பாவைக் கூத்தில் ஆட்டுவார் ஆட்டத்திற்கு ஏற்பப் பாவை ஆடும். ஆட்டு வார் ஆட்டத்தை ஆடி காட்டும்; அது போல்வார் ஆடிப்பாவை அனையர். அவனைப் பிடித்த நோய்முகன் (சனி) ஆட்டுகிறது. அவன் என்ன செய்யவான் என்பதில் கோளாட்டம் குறிக்கப்படுகிறது. ஆடுதலுக்கு நடுக்கம் அச்சம் முதலிய பொருள்கள் உண்மையால் அவ்வழி வந்தது ஆட்டி வைத்தலாம். ஆட்டுகின்றநீ அறிந்திலை போலும் ஐவர்பக்கம் நான் ஆடுகின் றதனை - திருவருட். 1073 என இறைமை ஆட்டுதலாகக் கூறுவர். ஆட்டுதல்: அரைத்தல், சாறு பிழிதல். மாவு ஆட்டுதல், எண்ணெய் ஆட்டுதல், கரும்பு ஆட்டுதல் என்பவை வழக்கில் உள்ளவை. இனித் தொட்டில் ஆட்டுதல், காலாட்டுதல் என்பவை வேறான ஆட்டுதல் வழிப்பட்டவை. மாவு ஆட்டுதல் போன்ற ஆட்டுதல் அரைத்தல், சாறு பிழிதல் முதலிய வழியில் வருவன. ஆட்டப்படும் பொருளின் தோற்றம் முழுவதாக மாற, அரைத்தோ கசக்கிப் பிழிந்தோ உருச்சிதைப்பதே ஆட்டுதல் எனப்படும். இவ்வாறு நிலைமாறச் செய்வது முதல் வகை ஆட்டுதல். சொன்னவாறெல்லாம் செய்ய வைப்பதும் ஆட்டுதலே. அது பின்னுள்ள வகையைச் சேர்ந்தது. ஆட்டி வைத்தல் என்பது அது. காலாட்டுதல் என்பது தறி நெய்தல் பொருளது. காஞ்சிக்குச் சென்றால் காலாட்டிப் பிழைக்கலாம் என்பது பழமொழி. ஆட்டு மந்தை: ஆட்டு மந்தை = சிந்திக்காத கூட்டம். ஆட்டு மந்தையாக இருக்கிறார்களே மக்கள்; சிந்திக்கிறார் களா?என்று மேடையில் பலரும் சொல்வது வழக்கமாக உள்ளது. கிடையில் கிடக்கும் ஆட்டு மந்தையில் ஒன்று எழும்பி நடந்து விட்டால், அது எங்கே போகிறது? ஏன் போகிறது? என்பதைப் பற்றி அறிந்து கொள்ளாமலே ஒன்றை ஒன்று தொடர்ந்து மந்தை முழுவதும் போய்விடும். இவ்வாறே, ஒருவர் சொல்வதைக் கேட்டு அதைச் சிந்திக்காமலேயே ஆமாம் எனத் தலையாட்டும் கூட்டம், ஆட்டு மந்தையாகச் சொல்லப்படுவது வழக்கமாயிற்றாம். நாட்டு மாந்தரை எல்லாம் ஆட்டு மந்தையாய் எண்ணிவிட்டார் - பாஞ்சாலி சபதம். ஆட்டை: ஆட்டை:1 ஆட்டை = ஆண்டு. கதிரோன் கோள்கள் சுழற்சியைக் கொண்டு தீர்மானிக்கப் படுவது ஆண்டு. கதிரோனைக் கொண்டு தீர்மானிப்பது கதிர்மானம்; திங்களைக் கொண்டு கணக்கிடுவது திங்கள் மானம்; மானமாவது அளவீடு. ஆட்டை என்பது ஆண்டு > ஆட்சி > ஆட்டை என ஆகியது. அவன் பன்னீராட்டைப் பருவத்தான் என்பது இறையனார் களவியல் உரை. ஆட்டை:2 விளையாட்டைச் சிற்றூர்ச் சிறார் ஆட்டை என்பர். ஆட்டை முடிந்தது என்பர். ஆட்டை:3 ஆட்டை = முறை, தடவை. விளையாட்டில் ஒருமுறை ஆடுதல் இருமுறை ஆடுதல் என்பவை ஓராட்டை , ஈராட்டை எனப்படும். இன்று விடுமுறை ஆதலால் மூவாட்டையும் ஆடலாம் என்பர். ஒருமுறை ஆடும் ஆட்டம் ஓராட்டை என்பதாம். உனக்கு எத்தனை ஆட்டை சொல்வது ? உனக்காய்த் தெரியாதா என்பது மக்கள் வழக்கு. ஆட்டை: 4 ஆட்டை = திருடுதல். ஆட்டை போட்டுவிட்டான் என்பது திருடிவிட்டான் எனும் பொருளில் வழக்கில் உள்ளது. * ஆண்டு காண்க. ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போடல்: ஆட்டைத் தூக்கிக் குட்டியில் கோடல் = முறை மாற்றிச் செலவிடல். ஆயர்கள் வழக்கம் ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போடலும் குட்டியைத்தூக்கி ஆட்டில் போடலுமாம். பாலூட்டுதற்காகச் செய்யும் வேலை இது. இவ்வழக்கிலிருந்து வந்தது இத்தொடர். ஒரு வகைக்கென உரிய ஒரு தொகையை வேறொரு வகைக்குச் செலவிடலும், வேறொரு வகைக்கென உரிய தொகையை இன்னொரு வகைக்குச் செலவிடலும் பிறகு மாற்றிச் சரிக்கட்டலுமாக இருப்பவரை இப்பழமொழியால் குறிப்பர். இன்னது இன்னதற்கென இல்லாமல் எதையும் எதற்கும் செலவிடும் வழக்கம் உள்ளவர்களைஇவ்வாறு குறிப்பர். ஆணம்: ஆணம்:1 ஆரணம் > ஆணம். பாதுகாப்பதில் தலைப்பட்டதும், கருவி கொண்டு காப்பதும் ஆகிய முன்கையை அரணம் என்கிறது பெருங்கதை, அரணம் ஆணமாகக் கூறப்படுகிறது. ஆண முன்கை அடுதும் - பெருங். 1: 56 : 110 அடுதும் = வெட்டுவோம். ஆணம்:2 ஆணம் = விருப்பம். யாணுக் கவினாம் என்பது தொல்காப்பியம். யாணர் என்பது வருவாய் உடையவர் ; கலியாணர் - மிகு வருவாயினர். கவினும் வருவாயும் ஆகிய ஆணம் உடைமையின் இந்நகர் காண்க பெருங்.2:7 :65 ah‹> யாணம் > ஆணம் ஆயது பொருள், யாங்கள்விரும்புதலால் இந்நகரைக் காண் பீர்களாக. ஆண முடைத்தாய்க் கொடுப்பன் - பெருங். 3:25 :152 ஆணம்:3 ஆணம் = குழம்பு. பருப்பு ஆணம். புளி ஆணம் முதலியன திருச்சி மாவட்ட மக்கள் வழக்கு. ஆணம்:4 ஆணம் = தொடுகறி. (பொதுவழக்கு) ஆணம்:5 ஆணம் = அன்பு. பிறரை ஆட்படுத்தும் இயல்பு அன்பு ஆதலால் ஆணம் எனப்பட்டது. ஆணமில் பொருள் எமக்கமர்ந்தனை ஆடி - கலித். 1 ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்கு - நாலடி. 374 ஆணி : ஆணி: 1 அகழ் - அகண் - அகணி - ஆணி. அகழ்ந்து அல்லது ஆழ்ந்து செல்வது அகணி >MÂ. எ-டு: அகழ்ந்து செல்வது அகப்பு > ஆப்பு அகழ்தலால் அமைந்தது அகழி > ஆழி. அகழ்ந்து சோறு கறி எடுக்கப் பயன்படும் எடுகலம் அகப்பைழூஆப்பை. உள்ளே செலுத்தப்படும் கூர்முனையுடைய மரம், இரும்பு முதலியவை ஆணியாகும். அகத்தே செலுத்தப்படுவதால் அகணியாய் ஆணியாய் ஆகியது. பனைமடலின் உள்நார் அகணி நார் எனப்படும். அதன் வெளி நார் புறணி நார் எனப்படும். சுக்கில் புறணி நஞ்சு கடுக்காயில் அகணி நஞ்சு என்பது மருத்துவக் குறிப்பு. ஆணியும் ஆப்பும், அகழும் பக்கம் கூர்மையன, அதனால், அகழ்ந்து செல்லும் கூர்மையானவை ஆணியாயின. எ-டு மரத்தின் நேர்கீழாக இறங்கி ஆழ்ந்து செல்லும் வேர் ஆணிவேர்; மற்றவை பக்கவேர், சல்லிவேர். காலில் தைத்த கல் முள் வெளிவராது உள்ளே இருந்து கெட்டிப்பட்டு வலி தருவது கால் ஆணி எனப்படும். சிலந்திக் கட்டியின் அடிமூல வேர் ஆணிவேர். அழுத்தி ஆணியை அகற்றாவிடின் மீண்டும் கட்டி திரண்டுவிடும். ஆணி : 2 யாழுறுப்புகளுள் ஒன்று ஆணி. உலர்ந்த மரக்கட்டையால் ஒரு பக்கம் கூர் நுனையாக்கி உறுப்புகள் அசைவற செலுத்தப்படுவது. அது உலர்ந்த கட்டையில் இருந்து (சுள்ளி) செய்யப் பட்டதாலும் உட்செலுத்தப்படுவதாலும் ஆணி எனப்பட்டதை விரித்து விளக்கமாகச் சுள்ளாணி என்பது மக்கள் வழக்காயிற்று. இலங்குதுளை செறிய ஆணி முடுக்கி - மலை.27 சுள் + ஆணி = சுள்ளாணி. இனிச்சுள் என்பது வெப்பு, உறைப்புப் பொருளது. ஆதலால் சுள்ளிடச் செறிந்து வைக்கப் பட்ட ஆணி ஆதலால் சுள்ளாணி என்பதுமாம். * சுள், சுள்ளி என்பவை காண்க. ஆணி : 3 நுகக்கோலின் ஊடே ஓர் ஆணி இருக்கும். இது இருபக்கச் சமன்மை அடையாளம். ஆதலால் ஆணி என்பது நடு, நடுவு நிலை எனப்பட்டது. நுகத்துப் பகலாணிஎன்பது தஞ்சை வாணன் கோவை. நெடுநுகத்துப் பகல் போல நடுவு நின்ற நன்னெஞ்சினர் என்பது பட்டினப்பாலை (206-207). இனிப் பொன்மாற்றை அளவிட்டுக் காணப் பயன்படுவது உரையாணி. உரையாணி போட்டு மதிப்பிட்டவை ஆணிப்பொன், ஆணிமுத்து, ஆணிப் பொன், ஆணிமுத்து என்பவை தரப்பாடு செய்யப்பட்டதன் அடையாளமமைந்த பொன்னும் முத்துமாம் துளைப்பொன் என்பதும் அது. ஆணி : 4 உறுப்புகள் இருக்க வேண்டும் நிலையில் விலகாதும் கழலாதும் இருக்கச் செய்வது ஆணி ஆதலால் ஆணிக்கு அடிப்படை (ஆதாரம்) என்னும் பொருள் உண்டாயிற்று. உழுவார் உலகத்தார்க்கு ஆணி - திருக். 1032 உலகிற்கு ஆணியாகப் பலர்தொழ - நற். 139 ஆணி வகைகள் அச்சாணி : வண்டி அச்சின் இருபாலும் அமைத்த முளையாணி. ஊசி ஆணி : கொண்டை இல்லாத ஆணி. ஊற்றாணி : கலப்பையில் உள்ள ஆணி. எழுத்தாணி : எழுதப் பயன்பட்டது. ஓடாணி : அணிகலத் திருகாணியாக உள்ளது. கடையாணி : நுகக்கோலின் இருபாலும் உள்ளாக அமைந்தது. கொண்டையாணி : அடித்து இறக்கும் கொண்டை உள்ள ஆணி. சுள்ளாணி : கூரைக் கைம்மரத்தில் உள்ள குச்சி ஆணி. செருகாணி : ஓராணியுடன் செருகும் ஆணி. திருகாணி : ஓடாணி என்பதும் இது. மரையாணி : துளையிடும் ஆணி. முறுக்காணி : வரியமைந்த ஆணி. ஆணை: ஆணை:1 ஆள் > ஆண் ; ஆள்மை > ஆண்மை, ஆளுமை. ஆளுமை உரை, ஆணையாயிற்று. ஆடவர் மகளிர் இருபாலர்க்கும் பொதுத்தன்மை ஆளுமை, ஆணை, ஆண்மை (ஆளுமை) ஆட்சி ஆயவை. ஆணை = கட்டளை; உறுதிச்சொல் ஆணை ஆசாற்கு அடியுறை செய்யும் மாணி போல மதக்களிறு படிய - பெருங். 2: 9:58 வழக்கியல் ஆணையிற் கிளத்தற்கும் உரியன் - தொல். 1453 ஆணை:2 ஆளுமை வாய்ந்தான் ஒருவன் இன்னது செய்வேன்; செய்யேன் ஆகில் இப்பழி எனக்கு எய்துவதாக எனச் சூள் உரைத்தல் ஆணையாம், இதனைச் சூளுரை, வஞ்சினம் என்பதும் இருவகை வழக்குமாம். * சூளுரை, வஞ்சினம் காண்க. ஆண்கூடல்: உலாப் போழ்தில், மகளிர் கூட்டத்திடையே, தன் காதல் மங்கை வருதல் கண்டு, அக்கூட்டத்தினின்று அவளை விலக்கிக் காமன் அன்ன தலைமகன் அவள் உறுப்புகளின் அழகினைப் புகழ்ந்து கூறிக் கூடுதல் ஆண் கூடல் என்பதாம். பவனி மின்னார் கூட்டமயற் பாவை வரல்கண்டு திவளார் நீக்கியெதிர் செவ்வேள் - அவளுறுப்புக் கூறல் ஆண் கூடல் - பிர. திர.17 ஆண்டகை: ஆள் > ஆண். ஆண் + தகை = ஆண்டகை. ஆளும் தன்மையால் சிறந்தவர் ஆண்டகை எனப்பட்டார். கிறித்தவக் குருவர்க்குக் குருவரை ஆயர் என்பர். அவரை ஆயர் ஆண்டகை என்பது வழக்கு. பொதுவில் உயர்தகைமையைக் குறிக்கும் அச்சொல் கலித்தொகையில் இடம் பெற்றுள்ளது. அரிய விளக்கமாய் வந்த அது: ஒன்று, இரப்பான்போல் எளிவந்தும் சொல்லும் உலகம் புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன் வல்லாரை வழிபட் டொன்றறிந் தான்போல் நல்லார் கட்டோன்றும் அடக்கமு முடையன் இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க வல்லான் போல்வதோர் வன்மையு முடையன் அன்னான் ஒருவன்தன் ஆண்டகை - கலித் . 47 அண்டகை விறல்வேள் - ஐங். 250 ஆண்டலை: ஆண் + தலை = ஆண்டலை. ஆண்மகன் தலைபோன்ற தலையையுடைய ஒரு பறவை ஆண்டலை. கூகை ஆந்தை வகையைச் சேர்ந்தது. ஆந்தையின் தலை ஆண்மகன் தலையொத்து இருத்தலை எவரும் அறியக் கூடும். குரங்கின் தலையோடு ஒப்பது என்றும் கூறுவர். அழுகுரல் கூகையோ டாண்டலை விளிப்பவும் - பட். 258 ஆண்டலை வழங்கும் கானுணங்கு கடுநெறி - பதிற்.25 நீண்டபலி பீடத்தில் அரிந்து வைத்த நெடுங்குஞ்சிச் சிரத்தைத் தன்னினமென் றெண்ணி ஆண்டலைப்புள் அருகணைந்து பார்க்கு மாலோ - கலிங். கோயில். 16 என்பதில் ஆண்டலை கண்டு ஆண்டலைப் பறவை மயங்கிய மயக்கினை அறிக. ஆண்டவர்: ஆட்சி நடத்துதல் ஆளுதல் எனவும், ஆளுபவர் மறைய அவரை ஆண்டவர் என இறந்த காலத்தால் அழைக்கப் படுதலும், அவரை வழிபட்டுக் கொண்டாடுதலையும் எண்ணின் ஆட்சியர் ஆண்டவர் எனப்பட்டது விளக்கமாம். மன்னனைக் காணல் மாலைக் காணலாகக் கொள்ளப் பட்டமையும், மன்னன் காவலன் ஆதலால் காவல் கடவுள் பொறுப்பாளன் எனப்பட்டமையும் எண்ணத்தக்கதாம். பின்னே பழனியாண்டவர் என்பதும் ஆண்டவராகிய கிறித்து ஏசு என்பதும் நாகூர் ஆண்டவர் என்பதும் சமய வழியில் இறைமைப் பொருள் ஆக்கப்பட்டவையாம். ஆண்டி: பொறி, புலன்களைச் சென்ற இடத்தால் செல்லவிடாது அடக்கிக் காக்கும் - அடக்கியாளும் - பற்றற்ற வீறுடையார் ஆண்டி எனப்பட்டனர். அந்நிலை மிக உயர்நிலை. இந்நாளில் இரந்துண்ணும் கை ஏந்தி வாழ்வர் ஆண்டி எனப்படுகின்றனர். ஆட்சியாம் ஆளுகை மேற்கொண்டவன் ஆண்டி எனப்பட்டான். ஆண்டான் அடிமைஎன்பது வழக்கு . நிலபுல ஆட்சி கொண்டவன் ஆண்டான், ஆண்டி எனப்பட்டான். ஆண்டிச்சி என்பது பெண்பால். அறங்காவல் ஆட்சிக் காவல் உடையாரும் ஆண்டி எனப் பட்டனர். அவர்கள் தெய்வநிலையராகக் கொள்ளப்பட்டமை யால் தெய்வநிலையரும் ஆண்டி எனப்பட்டனர். அதனால் மடத்துத் தலைமையர் ஆண்டி எனப்பட்டனர். அவர்கள் அறக்கொடை பெற்று அதனைக் காக்கும் கடமை மேற் கொண்டமையால் ஆண்டிப் பண்டாரம் எனப்பட்டனர். பண்டாரமாவது களஞ்சியம் , கருவூலம். அவர்கள் இயல்செயல்கள் நோக்கிக் கோவணாண்டி, பூச்சாண்டி, சடையாண்டி, மொட்டையாண்டி, பேயாண்டி, ஓட்டாண்டி, இருளாண்டி, மாயாண்டி, மலையாண்டி, வேலாண்டி எனப்பட்டனர். இயல்பாலோ வறுமையாலோ துறவர் கோலம் கொண்டு வீடுதோறும் இரந்துண்டு வாழ்வாரும் ஆகியவரின், ஆண்டியின் கோலம் கண்டவர்கள் “பஞ்சத்து ஆண்டியா?, பரம்பரை ஆண்டியா? என வினவினர். இவ்வாண்டியர் வளமுடையராக இருப்பினும் இரவலர் எனக் கொள்ளப்பட்டனர். மூக்காண்டி என்பது இப்பிள்ளையாவது தங்கட்டும் என்று இறையருள் வேண்டி மூக்குக் குத்தப்பட்டவர். நகையாண்டி (நையாண்டி) என்பவர் சிரிப்பு மூட்டவல்லர், அப்படிப்பட்டவர் மேளம் நகையாண்டி மேளம் (நையாண்டி மேளம்) ஆகும். ஆண்டி கூடி மடங்கட்டுதல்: ஆண்டி கூடி மடங்கட்டுதல் = செயல் நிறைவேறாமை. திருமடப் பொறுப்பாளர், செல்வாக்காளர் , தொண்டால் சிறந்தோர், பற்றற்ற தூயர் ஆயோர் இவ்வாண்டியரல்லர். உழையாமல் உண்ண ஒருவழி கண்ட போலி ஆண்டியர். அவர்கள் சிலர் கூடி இப்படி ஒரு மடம், இப்படியொரு கிணறு, இப்படியொரு தோட்டம்எனப் பலப்பல திட்டமிட்டுப் பேசி, பசி வந்ததும் ஓட்டையோ சட்டியையோ தூக்கிக் கொண்டு பிச்சை எடுக்கப் போகின்றவர். கூடும் போது தாடியசைப்பாலே திட்டமிட்டு, பசி வந்ததும் மறப்பவர். ஆகலின், அவர்களின் நிறைவேறாத் திட்டம் போடுவதை அறிந்தவர், ஆண்டி கூடி மடங்கட்டியது போல்தான் உங்கள் திட்டம் இருக்கும்என்பர். ஆண்டியர்: காலையில் சங்கு ஊதி எழுப்புவர் ஆண்டியர் எனப்படல் யாழ்ப்பாண வழக்கு. திருச்சிராப்பள்ளி வட்டாரத்தில் பொழுது அடையும்போது கோயிலில் விளக்கேற்றி ஊரவர் விளக்கேற்றச் சங்கு ஊதும் வழக்கம் இருந்ததுண்டு. அவரும் ஆண்டியர் எனப்பட்டார். ஆண்டு: ஆண்டு = ஆளுதல், ஆட்சி கொள்ளுதல். கதிரோனைப் புவி ஒருமுறை சுற்றி வரும் கால அளவு ஆண்டு ஆகும். கதிரோன் வானத்தில் விண்மீன்களைச் சார்ந்து புவியை ஒருமுறை சுற்றிவரும் தோற்றக் காலம் (Apparent Time) எனவும் கொள்ளலாம் . ஆதலால் இந்த ஆண்டுக்கு மீன்வழி ஆண்டு (Sidereal Year) எனப் பெயர். இதன்கால அளவு ஏறத்தாழ 365, 2564 கதிரவ நாட்கள் (Mean Solar Days) ஆகும், (அறிவியல் களஞ்சியம்.) * ஆட்டை காண்க. ஆண்டு மாறி: ஆண்டு மாறி = வாழ்ந்து கெட்டவன், வாழ ஒட்டாதவன். ஆண்டு என்பது ஆட்சி செய்து என்னும் பொருளது. மாறி என்பது இவ்வாட்சி நிலை மாறியது என்னும் பொருளது. சிலரை வசை கூறு முகத்தான் இவ்வழக்கு உள்ளது.ஆண்டு மாறி நீ தொட்டது எது விளங்கும் என்பர்.ஆண்டு மாறி நீ பார்த்தாலே பச்சை மரமும் பட்டுப் போகுமேஎன்பது இன்னும் உச்சப் பழமொழி. வாழ்ந்து கெட்டவன் என்பதால் எந்த ஒன்றையும் வாழவிட மாட்டான் என்னும் பொருள் தருவதாக வழக்கில் அமைந்துள்ளது. ஆண்டை: ஆண்டையடிமை என்பவை இணைச் சொற்கள். ஆணை இட்டுத் தம் ஏவலராகக் கொள்பவர் ஆண்டை எனவும், ஆண்டையின் சொற்படி நடந்தே ஆக வேண்டிய அடிமையர் அடிமை எனவும் பட்டனர், பழநாளில் விலைக்கு வாங்கும் அடிமை முறை இருந்தமையால். ஒன்னார்க் கடிமை புகுத்தி விடும் எனவும், விற்றற் குரியர் எனவும் வள்ளுவம் (608,1080) வழங்கிற்று. ஆண்மலி ஊர்வம்: களப்போரில் நின்று ஆண்கடன் புரிந்தான் ஒரு வீரன். தலை துண்டிக்கப்பட்டதாக அவன் உடல் மேலெழுந்து ஊர்வது ஆண்மலி ஊர்வம் எனப்பட்டது. அது, ஆண்மலி ஊபம் எனப் பதிற்றுப்பத்தில் இடம் பெற்றுள்ளது. தலைதுமித் தெஞ்சிய ஆண்மலி யூபமொடு உருவில் பேய்மகள் கவலை கவற்ற - பதிற்.67 ஆண்மலி யூபம் என்றது ஆண்மை மிக்க யூப மென்ற வாறுஎன்பது பழைய உரை. யூபம் (வ) = தூண்; தூண் அசையா நிலையது என்பதை எண்ணின் அவ்வொப்பு மீள்பார்வைக் குரியதாம். உயிரற்ற உடல் ஆடாது நிற்றலும் ஆகாது; துள்ளித் துள்ளி விழவே செய்யும். ஆதரவு: ஆ + தரவு = ஆதரவு. ஆக வேண்டியவற்றைத் தருதல் ஆதரவாம். ஆதரவு இடம் உதவுதல், பொருள் உதவுதல் முதலான உதவிகள் ஆதலால் அவ்வாதரவு என்பது அரவணைப்பு, அன்பு என்னும் பொருளுடன் விரிந்தது. ஆதரிப்பார் ஆருமில்லை என்னும் ஏக்கத்தை நீக்குவார் அன்பரே அன்றி அறவரும் அருளரும் ஆவார் அல்லரோ. அடியேன் ஆதரித் தழைத்தால் என்பதால், அன்புப் பெருக்காம் ஆர்வ நிலையில் மணிவாசகர் கூறுதல் வெளிப் படுகிறது (திருவா.29.4). அன்பீனும் ஆர்வ முடைமைஎன்பது வள்ளுவம்(74). ஆதல்: ஆகுதல் > ஆதல். ஆக்கமாக அமைதல், உண்டாதல் என்பதன் தொகைச் சொல் ஆதல் ஆகும். ஆதல் + ஆல் = ஆதலால் என்றும் ஆகை யால் என்றும் ஆதலின் என்றும் வரும். ஆதல் நின்னகத் தடக்கி - புறம்.91 அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது - திருக்.248 ஆதலால் அரிக்கு ஆகண்டலன் தனக்கு - கம்ப. ஆரண்.912 ஆகையால் தகவிழந்து - கம்ப. கிட். 551 ஆதலின் அந்தண ரேயும் ஆகிலேம் - கம்ப. ஆரண். 131 ஆதலினால் எனில் ஆதல் + இன் + ஆல் என இன் சாரியை ஒட்டாம். ஆதலால் என்பதே பொருளாம். ஆகலால், ஆகலின் என்பனவும் இவ்வழிப்பட்டனவே. ஆதன்: ஆ- முன்மையும் முதன்மையும் சுட்டிய சொல் ஆதலின் ஆ > ஆது > ஆதன் (முன்னவன் தலைவன்) எனத் தலைமைப் பொருள் தரும் செந்தமிழ்ச் சொல்லாகும். ஆதன் என்னும் இயற்பெயரும் அப்பெயரடியாகத் தோன்றிய ஆதனூர், ஆதமங்கலம், ஆதம் பாக்கம் என்னும் இடப்பெயர்களும் தமிழ்நாட்டில் மிகுதியாக இன்றும் காணப்படுதல் போன்றே எல்லாத் திரவிட மொழிகளிலும் காணப்படுகின்றன. ஆகும் ஆக்கங்களுக் கெல்லாம் அடிப்படையாக இருப்பது ஆதன் ஆம். ஆதன் = உயிர். உயிரே வாழ்வு ஆதலால் அது. ஆதன் எனப்பட்டது. வாழ்வார்க்கு உயிரே போல் இருந்து உதவிய ஒரு தலைவன் ஆதன் எனப்பட்டான். வாழி ஆதன் வாழி அவினி என (ஐங்குறு. 1-10) வேட்கைப் பத்தில் பத்துமுறை வாழ்த்தப் பட்டவன் அவன். ஆதன் அவினி, ஆதன் அழிசி, ஆதன் எழினி, ஆதன் உங்கன்,ஆதன் ஓரி என்பவர் ஆதன் வழியினர். நெடுங்காலம் நலமாக வாழ்தற்கு உதவும் எனப்பட்ட நெல்லிக் கனியை அச்சிறப்புக் கூறாமல் தன் உள்ளத்தே இருத்தி ஔவைக்கு வழங்கியமையால் அவ்வதியர் கோமானை, சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத் தடக்கிச் சாதல் நீங்க எமக்கீத் தனையே என்று பாடிய அருமைப் பாடலில் வரும் ஆதல் நீடிய வாழ்வினதாதல் விளக்கமாம். அழியா வாழ்வு என்பதையே, சாதல் நீங்க என்றும் நஞ்சுண்டும் இறவா நீலமணி மிடற்றன் போல மன்னுக பெரும என்றும் கூறியதை எண்ணினால் ஆதல் சிறப்பு விளங்கும். இனி, ஆதன் என்பதற்குப் பார்வை இல்லாதவன் அறிவில்லாதவன் என்னும் பொருள்கள் உளவாதலை அகர முதலியில் காண்கிறோமே எனின், அவை, இல்லாதவன் என்பது முற்குறையும் இடைக்குறையும் கொண்டு ஆதன்அமைந்ததாம். முன்பொருள் செய்யாதார் ஆதரே - சிறுபஞ். 20 இத்தொடரில் ஆதர் எனும் சொல்லாட்சி அறிவில்லாத வனைக் குறித்தது. அறிவில்லாதவன், பார்வை இல்லாதவன் எனும் இரு பொருளவைகளின் சொல்லமைவு வெவ்வேறாம் என்க. இவ்வாறு முன்னும் இடையும் கெட்டுச் சொல் வருமோ எனின் கையகத்தது > கைத்து > கைதுஎன வழங்கும் சொல்லமைதி காண்க. கையகத் ததுவது பொய்யா காதேஎன்றும் ( புறம்.101) கையது வேலேஎன்றும் (புறம்.100) வரும் ஔவையார் பாடல்களை அறிக. கைது என்பது சிறைப்படுத்தல் என வழங்குவது மக்கள் வழக்கு. அது வேற்றுச் சொல் அன்று. ஆக்கம் ஆவதற்கும் கேடு ஆவதற்கும் அடிப்படையாக இருப்பது மனம் ஆதலின் அஃதும் ஆதன் எனப்பட்டது. ஆதாயம்: ஆது+ ஆயம் = ஆதாயம். ஆகி வந்ததாம் கூடுதல்தொகை, ஆதாயம் ஆகும். முதல், வரவு, செலவு, உழைப்பு ஆயவற்றுக்கு உரிய தொகை போக எஞ்சிய கூடுதல், வருவாய் ஆதாயம் எனப்படும்., ஆதாயம் இல்லாமல் ஆற்றில் போவாரா? என்னும் பழமொழி, ஆற்றிலே போகும் போதும், ஆதாயம் இருந்ததால்தான் போவார் என்றால், காலினும் கலத்தினும் ஈட்டும் வணிகர்கள் ஆதாயம் இல்லாமல் எதனையாவது செய்வார்களா என்பதாம். இனி, ஆ+ தாயம் எனலும் ஆம். தாயம் = சொத்து ; தாய பாகம் என்பது சொத்துப் பிரிவினை. பழநாளில் தாய்வழி உடைமையே இருந்தமையால் அது தாயம் எனப்பட்டது. பழஞ்சேரலம் தாய்வழி உடைமையது என்பது வரலாற்று மெய்ம்மம். ஆதலால். ஆய் வருகின்ற ஆகின்ற சொத்து என்பது ஆதாயப் பொருளாம். * தாயம் காண்க. ஆதாளி: குழந்தைகள் கையில் அகப்பட்ட இலை, தழை, குச்சி ஆயவற்றை எடுத்துக் கொண்டு ஆவோ ஐயாவோ என்று கூச்சலிடுவது ஆதாளி எனப்படும். ஊரெல்லாம் ஆதாளி உனக்கென்ன ஒட்டுத் திண்ணை என்று கூட்டத்தோடு போகாத பிள்ளையைக் கேட்பதுண்டு. வாய்க்கூச்சலும் தாள் ( கால் ) பாய்ச்சலும் இணைய ஆதாளி என அமைந்ததாம்! இப்படி ஆதாளி போட்டு ஆடுவது குழந்தைத்தனம்! அது பெரியவர் சண்டையாகி விடக் கூடாது என்பது முதியவர் கவலை. ஆதி: அது > ஆது. எனது > எனாது. ஆது+ இ = ஆதி. அது, ஆது, படர்க்கைச் சுட்டுகள். அப்பால், அக்கால் என இடத்தொலைவும் காலத் தொன்மையும் காட்டுவது ஆதி. ஆதியில் தோன்றிய அன்னை(அம்மை) ஆதி எனப்பட்டாள். அவள் தோன்றிய காலமும் இடமும் ஆதி ஆதலால் ஆதி எனப்பட்டாள். ஆதியில் தோன்றிய அப்பனும் ஆதி எனப்பட்டான். ஆதி இருபாற் பொதுவாயிற்று. தந்தை தாய் இருவரும், ஒருவராகிய உயிரைத் தருதலால் இருவரும் ஆதி எனப்பட்டனர். * ஆதன் காண்க. ஆதி:1 அது > ஆது > ஆதி; தொல் பழமையது அது ஆகலின் ஆதி எனப்பட்டது. முதல் முதன்மை என்னும் பொருளது. ஆதி பகவன் - குறள்.1 காரி ஆதி, ஆதி அருமன், ஆதி மந்தியார் என்பார் சங்கப் பாடலில் இடம் பெற்றவர். ஆதி:2 முதன்மையான ஓட்டம். வள்பு வலித்தூரின் அல்லது முள்ளுறின் முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா - அகம். 104 ஆதி: 3 ஆதி என்னும் முதல் ஓட்டம் - நற். 81 ஆதி:4 முன்னை நிலைமை. ஆதிக் கொளீஇய அசையினை ஆகுவை வாதுலன் வாழிய நீ - கலித். 96 ( ச.இ.பொ.க.) ஆதிரை : ஆதிரை : 1 ஆ + திரை = அழகாய் அமைந்த வரிசை. அருமையாக அமைந்த விண்மீன்கள் ஆறு, மூவிரட்டை அணியாய் தனியொளி பரப்புதல் கண்ட விண்ணியல் முதுகண்ணர் அவ்வறுமீன் தொகுதியை ஆதிரை என்றும், ஆரல் என்றும் வழங்கினர். ஆர் + அல் = ஆரல். ஆர் = அருமையானது; அல் = சொல்லீறு. அவ்வறுமீன் மூவிரட்டைவரிசையைக் கீற்றாக இழுத்தால் நுகக்கோல் போல் தோற்றம் தருதலால் நுகக்கோல் மீன் மேற் கால் மீன் கார்த்திகை வெள்ளி என மக்கள் வழங்கினர் (பரி.11) * யாத்திரை காண்க. ஆதிரை : 2 ஆதிரை மீன் வழியாகப் பெற்ற பெயருடைய ஒருமகள், ஆதிரை என்பாள். மணிமேகலை கைக்கண் இருந்த அமுத சுரபியில் முதற்கண் ஆருயிர் மருந்தாம் அமுதமிட்டு, வற்றா வளச் சுரப்பாய் வையகத்தார் பசித்துயர் தீர்க்கும் மருந்து வழங்கிய தவப்பெரு நங்கை. பெருகி வரும் அலை அலையாம் மக்கள் கைகளில் ஆருயிர் அமுதூண் வழங்க மூலவளாம் அவள் ஆதிரை எனப்பட்டாள். ஆதிரை மீனாய்ப் புகழுற்று விளங்கவுமானாள். * ஆரல் காண்க. ஆதிரையான்: ஆதிரையான்:1 ஆதிரை செம்மீன் கூட்டம்; அக் கூட்டத்தினை ஒத்த செவ்விய நிறத்தான் சிவன்; ஆதலால் அவன் ஆதிரையான் என அடியார்களால் புகழப்பட்டான் (கலித். 150) ஆதிரையான்:2 செவ்வேள் நிறமும் செங்கதிர் நிறமாதலால், அவ்வாதிரைச் செம்மீன் வடிவினனாகக் கொள்ளப்பட்டான் (பரி. 8). * ஆரல் காண்க. ஆதொண்டை: ஆ + தொண்டை = ஆதொண்டை ஆ = ஆக்கை, கட்டுக்கொடி போல்வது. மாங்காய் போல் காய் காய்ப்பது; அக்காய் வற்றலாக்கிப் பொரித்து உண்ணத் தக்கது. ஆதொண்டைக் கொடி சுற்றி வந்த பிள்ளை ஆண்ட நாடு தொண்டை நாடு எனப்படுவது. மக்கள் வழக்கில் ஆமாண்டை எனப்படுகின்றது ஆதொண்டை. ஆத்த: ஆர்த்த > ஆத்த = பிணைக்கப்பட்ட; பொருந்துதலுற்ற. ஆத்த அன்பின் அரும்பெறற் காதலி - பெருங். 2:16:91 பொருள்: பொருந்திய பேரன்பால் பெறுதற்கு அரியளாகப் பெற்ற தலைவி. ஆத்திரை: யாத்திரை என்னும் சொல் யகரம் ஒழிந்து ஆத்திரையாக வந்தது. ஒ.நோ.: யாறு > ஆறு. கள்ளிற் கேளிர் ஆத்திரை - குறுந். 293 * யாத்திரை காண்க. ஆநிரை: ஆ + நிரை = ஆநிரை; ஆவின் கூட்டம்; ஆனிலையும் ஆம். நிரை = வரிசை: நிரல் > நிரை. நிகழ்ச்சி நிரல் இந்நாள் பெரு வழக்கு. நிரலே என்பது முறையாக வரிசையாக என்னும் பொருளது. நிரல் நிறை, அணிகளுள் ஒன்றும், பொருள்கோளுள் ஒன்றுமாம். முன்னது நிரல்நிறை அணி; பின்னது நிரல்நிறைப் பொருள்கோள். ஆனிரை மேய்க்க நீ போதி - திவ். பெரியாழ். 2,7,1 நிரை என்பதும் ஆனிரையே என்பது வெட்சி நிரை கவர்தல், நிரை மீட்சிச் சருக்கம்(வில். பார.) என்பவற்றால் விளங்கும். ஆந்தை: ஆந்தை என்னும் பறவைப் பெயர் சங்கக்காலப் பெயர்களுள் இல்லை. ஆண்டலை, ஊமன், குடிஞை, குரால், கூகை, கோட்டான் என்னும் பெயர்களே காணப்படுகின்றன. இப்பெயர் களுள் ஆண்டலை என்பதே ஆந்தைப் பெயரை மரூஉ நிலையில் வழங்கியிருக்கக்கூடும் என்பர். ஆண்டலை > ஆண்டை > ஆந்தை. மன்ற முதுமரத் தாந்தை குரலியம்ப என்று ஐந்திணை எழுபதிலும் (33). ஆந்தை குறுங்கலி கொள்ள என்று கைந்நிலையிலும் (21) ஆந்தை இடம் பெறுகின்றது. கூகையோ டாண்டலை பாட ஆந்தை கோடதன்மேற் குதித்தோட வீசி என்பதால் ஆண்டலை, ஆந்தை என இரண்டையும் பிரித்துக் காட்டுகிறார். ஆந்தையின் நோக்கினை நோக்குவார் அதன் பருமை சுற்றுவரி, கூர்த்த நோக்கு இவற்றை நோக்கக் கவிகண் நோக்கு என்பதன் விளக்கமாகத் தோன்றும். பார்வை குறைந்தவர் கண்மேல் கை கவித்துக் கூர்த்தும் ஆழ்ந்தும் பார்த்தல் போல் இருந்தலால் ஆழ்ந்த பார்வையது எனக்கருதி ஆழ்ந்தை எனப் பெயரிட்டுப் பின்னர் ழகர ஒற்றுக் கெட்டு ஆந்தை ஆகி இருக்கக் கூடும் எனலாம். மேலும் எண்ணவும் வைக்கும் சொல் இஃதாம். வாழ்வும் வீழ்வும் வாவும் வீவும் என வழங்கியது போல் ஆழ்ந்தை ஆந்தையாகியது என ஒப்பிட்டுக் காண்க. ஆந்தை மிகச்சிறப்பாகக் கேட்கவும் பார்க்கவும் கூடியது; வெறித்து நோக்கும் இரண்டு கண்களும் நேரடியாக முன்னோக்கி யிருக்கும். மனிதர்களைப் போன்ற பரப்பாழப் பார்வை ஆந்தைக்கு உண்டு. ஆந்தை அலறல் சாவின் முன்னறிவிப்பு என்று மக்கள் கருதுகின்றனர். ஆந்தையின் அலறல் எண்ணிக்கை கொண்டு சகுனம் சொல்லும் பழக்கம் நம்நாட்டில் உண்டு. இதனைப் பஞ்சாங்கங்களிலும் காணலாம். மூட நம்பிக்கையே இவற்றுக்குக் காரணம் (அறிவியல் களஞ்சியம் 2.) இவற்றையும் காண்க. ஆப்பம்: ஆப்பம் = சிற்றுண்டி வகைகளுள் ஒன்று. தோசையிலும் ஆப்பம் என்பது மிக்க மாவுத் தடிப்பு உடையது. மாவிட்டு வழித்தெடுக்கும் முருகல் தோசையையும் ஆப்பத்தையும் நோக்க மும்மடங்கு நான்கு மடங்குப் பருமை புலப்படும். அகத்தே மாவு மிகப்பெற்றமையால் பெற்ற பெயர் அது. அகப்பம் > ஆப்பம். ஆப்பத்தில் ஒருவகை ஊத்தப்பம் என்பது. அதன் பெயரே அதன் இயல்பைக் காட்டும். ஊத்தம் = தடிப்பானது, பருமனானது. ஊதுதல் = பருத்தல். ஆப்பி:== ஆ + பீ = ஆப்பீ = ஆவின் பீ, ஆப்பீ > ஆப்பி சாணாகம், சாணகம், சாணம், சாணி எனப்பல வகையால் உரையாலும் மக்கள் வழக்காலும் அறியப்படுவது அது. கணவனை இழந்தாள் ஒருத்தி அவனுக்குப் படையல் வைத்து வழிபடும் இடத்தை ஆப்பியைக் கண்ணீரே நீராக வழியக் குழைத்து மெழுகுகிறாள். அதனை. அழுத லானாக் கண்ணள் மெழுகும் ஆப்பிகண் கலுழ்நீ ரானே என்கிறது புறப்பாடல் (249) ஆப்பிடுதல்: அகம் + படுதல் = அகம்படுதல் > ஆப்படுதல் > ஆப்பிடுதல். அகம் = உள், உள்ளாகப்படுதல். உள்ளாக்கப்படுதல். ஆப்பிட்டுக் கொண்டாய், இனித் தப்ப முடியாதுஎன்பது வழக்கு. ஆப்பிட்டான். ஆம்பிட்டான், அம்பிட்டான் என்பவையும் இது. ஆப்பு: ஆப்பு : 1 உள்ளே செலுத்தப்படும் மர - இரும்பு - முளை ஆப்பு எனப்படும். அகப்பு = உட்செல்வது, செலுத்தப்படுவது. அகப்பு > ஆப்பு. அகணி, ஆணியாதல் ஒப்பது இது. அகம் = உள்; உள்ளிடம். மரம் அறுப்பாரும், விறகு பிளப்பாரும் ஆப்புப் பயன் படுத்துதலைக் கண்டு தெளிக.ஆப்பசைத்த குரங்குபோல என்பதொரு பழமொழியும் கதையும் உள்ளமை அறிக. ஆப்பு:2 ஆப்பு வைத்தல் என்பது கட்டுப்படுத்தல் பொருளில் வழங்கும். அவனுக்கு ஆப்பு வைத்துவிட்டான் என்பர். ஆப்பு மாடு கட்டும் முளைக்கம்பு எனப்படுதலால் கட்டிப்போடுதல் பொருள் தந்தது. ஆப்பை: அகப்பை > ஆப்பை. பானை சட்டி அகத்துள் இருப்பதை அள்ளி எடுக்கும் அகப்பை என்பதன் முதல் இரு குறில்களும் ஒரு நெடிலாகி அப்பொருளே தந்தது. எ-டு: சிவப்பு > சேப்பு ஆமக்கன்: அகம் > ஆம் + அக்கன் = ஆமக்கன். வீட்டுக்குத் தலைவனானவனை ஆமக்கன் என்பது முகவை வட்டார வழக்கு. அகம் = வீடு; அக்கன், தவசம் காசு பொருள் ஆகியவற்றை உடையவனாகிய தலைவன் அல்லது கணவன். ஆமணக்கு: அகம் + அண் + அக்கு = அகமணக்கு > ஆமணக்கு. அகம் > ஆம். எ-டு: அகத்தாள் > ஆத்தாள். அகம் = உள்; அண் = மேல்; அக்கு = சாரியை. உள்ளிருந்து மேனோக்கி வெடிப்பது ஆதலால். ஆமணக்கு எனப்பட்டது. பருத்தியும் வெடிக்கும்; பலாவும் வெடிக்கும். அவ்வெடிப்புக்கும் ஆமணக்கு வெடிப்புக்கும் வேறுபாடு உண்டு. ஆமணக்கு வெடிப்பு ஒலி கேட்கும். உயரே அரையடி ஓரடி அதன் முத்து எழும்பும். ஆமணக்கு நெய்யே, விளக்கெண்ணெய், முத்தெண்ணெய், மருந்தெண்ணெய் (குழந்தைகள் மலக்கழிப்புக்குப் புகட்டுவது) எனப் பலவகையாகச் சொல்லப்படும். ஆமணக்கு முத்து, கொட்டை முத்து, முத்துக் கொட்டை எனவும் வழங்கப்படும். ஆமணக்குக்கு ஆமண்டகம், ஆமண்டம் என்றும் பெயர்கள் உள்ளமையையும் ஆமணக்கு வகைகளையும் சாம்பசிவனார் மருத்துவ அகர முதலி விரியத் தரும். ஆமாம்: ஆம் + ஆம் = ஆமாம். ஒருவர் சொல்லும் கருத்தை ஆகும் எனத்தாம் ஒப்பளிக்கும் முறையால் ஆம் எனவும், அதனை இரட்டித்துக் கூறும் வகையால் ஆமாம் எனவும் வழங்குகின்றது. ஈழத்தில் ஒப்புதலை ஓம் என்பது வழக்கு. பாரதியார் தம் அறுபத்தாறு என்னும் பாடலில், ஓமெனப் படுவது ஆமெனப் படுவதாய்என்பார். சொல்லியதை மறுக்காமல் ஏற்றுக் கொள்வாரை ஆமாம் சாமிஎனல் மக்கள் வழக்கு. ஆமா(ன்): ஆவினைப் போல்வதொரு விலங்கு ஆமான் என்பதாம். ஆமா என்பதும் இது. ஆபோலும் ஆமா என்றக்கால் ஆமா கண்டறியாதான் காட்டுட் சென்றவழி அதனைக் கண்டால் ஆ போலும் என்னும் உவமையே பற்றி ஆமா இதுவென்று அறியும் ஆகலான் என்பதுஎன்னும் பேராசிரியர் விளக்கத்தால் ஆமா பற்றி அறியலாம் (தொல். உவம். 1) புலியால் கொல்லப்பட்டது தாய் ஆமான். அதன் குட்டிக்கு அமைந்த முதிய ஆன் பாலூட்டுவதைக் காட்டுகிறது புறப்பாட்டு (323). புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச் சினங்கழி மூதாக் கன்றமர்ந் தூட்டும் ஆமான் ஆவைப் போல அமைந்த இயல்பினது ஆதலின், மந்திதன் குட்டிக்கு ஆமான் மடுவை அதுக்கிப் பாலை ஊட்டு வதைக் காட்டுகிறது நற்றிணைப் பாட்டு(57) தடங்கோட் டாமான் மடக்கண் மாநிரை குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தெனத் துஞ்சு பதம் பெற்ற துய்த்தலை மந்தி கல்லென் சுற்றம் கைகவியாக் குறுகி வீங்குசுரை ஞெமுங்க வாங்கித் தீம்பால் கல்லா வன்பறழ் கைந்நிறை பிழியும் ஆமின்: ஆகுமின் > ஆமின் = ஆவீராக. முன்னையிர் ஆமின் - பெருங். 2:9:262 பொருள்: முன்னை நீவிர் இருந்தாற்போல ஆவீராக அடங்கலா அட்ட வேலான் ஆணையின் ஆமின் -சீவக. 556 பொருள்: பகைவரை அழித்த வேலையுடையவன் ஆணைப்படி ஆவீராக ஆமை: அகழ் ஆழ்; அகல் ஆல்; பகல் பால், பகுதி பாதி என வருவன போல, அகம் ஆம் என இருகுறில் ஒரு நெடிலாகி ஒற்றொடு கூடி வரும். இம்முறையால் அகம் ஆம் ஆகி, ஐ என்பதுடன் சேர ஆமை என வருதல் வியப்பில்லை. ஆனால் அதனை அவ்வாறு பொருளுணர்ந்து பெயரிட்ட முன்னோர்களின் பொருளுணர் தேர்ச்சித் திறம் நினைதோறும் நினைதோறும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கு உரியதாய் விளங்குகின்றதாம். ஆமை தன் உறுப்பை உள்ளிழுத்தல் சுரித்தல் எனப்படும். ஆமை தலைபுடை சுரிப்பஎன்றார் கம்பர் (பால. 63). உறுப்புகளை அகத்தே சுருக்கிக் கொள்ளும் உயிரியை (அகமையை) ஆமை என்று பெயரிட்ட அருமை பாராட்டும் பான்மையதாம். * அகம் காண்க. ஆம்: ஆகும் என்பதன் தொகுத்தல் ஆம். ஆகும் என்பது ஒப்புக் கொள்ளுதல். ஒருவர் சொல்லும் ஒன்றை ஏற்றுக் கொள்வது ஆம் எனல் ஆகும். அதனை உறுதியாகக் கொள்வது ஆம் ஆம் ஆமாம் ஆகும். எதனைச் சொன்னாலும் சிந்திக்காமல் ஒப்புக் கொள்பவரை ஆமாம் சாமி எனல் மக்கள் வழக்கு. எ-டு “அவன் ஓர் ஆமாம் சாமி; அவன் சொல்வது கணக்கு ஆகுமா? ஒ.நோ.: நோகும் > நோம். நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே- குறுந். 202 ஆம்பல்: ஆம்பல்:1 அம் > அம்மு > அம்முதல் = குவிதல். அம்பல் > ஆம்பல். பகலில் குவிதலும் இரவில் மலர்தலும் உடையது ஆம்பல் ஆகிய அல்லி. எல்லா மலர்களும் குவிந்து தோன்றி விரிந்து மலரும் இயல்பினவை. ஆனால் ஆம்பலோ விரிந்தும் குவிந்தும் பல்கால் விளங்குதலால் அக்குவிதல் சிறப்பு நோக்கி ஆம்பல் என வழங்கினர். ஆம்பல்:2 ஆம்பல் = பேரெண். குவிதலும் மலர்தலும் உடைய தாமரையும் ஆம்பலும் நீர்நிலைகளில் அடர்ந்து செறிந்து மலர்ந்து விளங்கிய எழிலில் வயப்பட்ட முந்தைத் தமிழர் தாமரை ஆம்பல் என்பவற்றையும் அவை நிற்கும் நீர்நிலையின் துளிப் பெருக்கத்தையும் எண்ணினர். எண்ண இயலாமல் பேரெண்களாகக் கொண்டனர். அவ் வெண்களைத் தாமரை, வெள்ளம், ஆம்பல் எனப் பெயரிட்டனர். ஆசிரியர் தொல்காப்பினார்க்கு முந்துறவே இதனைக் கண்ட சிறப்பால் அவர், ஐ ஆம், பல்எனவரும் எண்ணுப் பெயர்களைச் சுட்டினார். ஐ = தாமரை; அம் = வெள்ளம்; பல் = ஆம்பல். ஐ அம் பல் என வரூஉம் இறுதி அல்பெயர் எண்ணினும் ஆயியல் திரியாது - தொல்.393 என்றார். அல்பெயர் என்றது பொருட்பெயர் அல்லாத எண்ணுப் பெயர். ஆம்பல்:3 ஆம்பல் = பண் ஆம்பல் குழல் என்பது ஆம்பல் தண்டு வடிவில் செய்யப் பட்ட குழல். ஆம்பலந் தீங்குழல்எனப்படுவது அது. அவ்வொலி பிரிந்தாரை வருத்துவது. இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும் ஆம்பலங் குழலின் ஏங்கிக் கலங்கஞர் உறுவோள் - நற்.113 ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி - சிலப் . 17:20 ஆம்பி: ஆம்பி:1 ஆம்பல் ஆகிய அல்லிப் பூப்போல் வண்ணமும் வடிவும் கொண்டதால் ஆம்பி எனப்பட்டது. அது காளான். வெண்ணிறத்தில் தோற்றம் தந்தாலும் மறுநாளே கருநிற மாய் மாறியும் கசிந்தும் போவதால் காளான் எனவும் காளாம்பி எனவும் பெயர் கொண்டது. மழையும் ஈரமுமாம் பதத்தில் தோன்றும் அது, அடுதல் இல்லாத அடுப்பில் முளைத்துக் கிளர்ந்ததாகப் பெருந்தலைச் சாத்தனார் பாடுகிறார் (புறம். 164) ஆம்பி : 2 ஆம்பி வடிவாகிய வட்ட வடிவில் அமைந்த இறைசால் - பன்றிப் பந்தர்- ஆம்பி எனப்பட்டது( மதுரைக்91-92). யானையால் எற்றப்படும் கொற்றர் குடை பசுக்களால் எற்றப்படும் காளாம்பி போலுள்ளதாக வியப்புறுகிறார் பொய்கையார். ஆவுதை காளாம்பி போன்ற - களவழி.36 ஆயம்: ஆயம் : 1 ஆய்ந்தெடுத்து அமைக்கப்பட்ட குழு; குழுவினர், ஆயக்காரர். (சிலப்.5:156)ஆயம் : 2 இப்பொருளுக்கு இவ்வளவு வரியென ஆய்ந்து தீர் மானிக்கப்பட்ட வரி, ஆயவரி, சுங்கம், உல்கு என்பவை அவை. ஆயம் : 3 இவ் விளைவுக்கு இவ்வளவு நிலவரி எனக் கணிக்கப்பட்ட தீர்வை; ஆயக்கட்டு. ஆயம் : 4 மகளிர் கூட்டம்; ஆய்ந்தெடுத்த ஒத்த மகளிர்கூட்டம்; ஆயத்தார் என்பார் அவர். ஓரை ஆயத்து ஒண்டொடி மகளிர் - புறம்.176 அலமரல் ஆயமொடு யாங்கணும் படா அல் -அகம்.7 ஆயம் : 5 சூதாடு கருவி, சூதாடுவார். உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும் - குறள்.933 ஆயம்:6 ஆனிரை = ஆவின் கூட்டம் ( பசுக்கூட்டம்) கன்றமர் ஆயம் கானத் தல்கவும் -புறம்.230 உணங்கூன் ஆயத்து ஓரான் தெண்மணி பைய இசைக்கும் - நற்.37 ஆயம்:7 ஆட்டினம். இடையன், சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப் புலிதுஞ்சு வியன்புலம் - புறம். 54 ஆயர்: ஆயர் : 1 ஆ > ஆய > ஆயர். முல்லை நிலத்தில் வாழ்பவராய் ஆக்களை வளர்த்துக் காப்பவராய் ஆவின் பயனை உலகுக்கு வழங்குபவர் - தொல்பழ நாள் தொட்டு வாழ்பவர்- ஆயர் ஆவர், ஆய்ச்சி, ஆய்மகள் என்பவை பெண்பாற் பொர். ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப் பெயர் - தொல். 970 ஆயர் :2 ஆக்களை மேய்க்கும் மேய்ப்பர் போல மக்களுக்கு மெய்யியல் வழிகாட்டியாய் மேதக்க காவலராய் ஆய்ந்து அமர்த்தப்பட்ட இறைமைத் தொண்டர். எ-டு : ஆயர் ஆண்டகை. (கிறித்தவக் குருவர்) ஆயா : ஆய்+ ஆய் = ஆயாய் > ஆயா. ஆய் = தாய். ஆய் ஆய் தாயைப் பெற்ற தாய். முறைப் பெயராம் இது. இந்நாளில் மருத்துவமனைத் தொண்டு செய்வாரை ஆயா என வழங்கும் வழக்காக உள்ளது. மழலையர் பள்ளிகள், மழலையர் காப்பகங்கள் முதலிய வற்றில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்பவரையும் ஆயா என்பது இந்நாள் வழக்கு. ஆயான்: ஆயன் ஆக்களை வளர்ப்பவன், மேய்ப்பன் என்பானும் அவன், புத்தர் கிறித்து திருமூலர் கண்ணன் ஆனாயர் என்பார் குருத்துவ நிலையில் வாழ்ந்தவர். ஆக்களுக்கு ஆயன் போல மாணவர்களுக்குக் குருவாக வாழ்ந்தவர் ஆயான் எனப்பட்டனர். மற்றும் ஆய்ந்தறிதலும் அறிந்ததை எடுத்துரைத்தலும் கடமை யாக உடைய ஆசிரியன் ஆயான் எனப்பட்டான் எனலுமாம். ஆயான் என்பதற்குக் குரு என்னும் பொருள் வழக்கு கல்லிடைக் குறிச்சி வட்டாரத்ததாகும். ஆயிடை: ஆ = அகரச் சுட்டு நீளல். இடை = இடைப்பட்ட நிலம். ஈரிடங்களைச் சுட்டி அவற்றுக்கு இடைப்பட்ட நிலத்தை ஆயிடை என்பர். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் - தொல்.பாயிரம் ஆயிடைப் பிரிவு: ஆ+ இடை = ஆயிடை. ஓதுதல், தூது, பொருள், போர் வகைக்குப் பிரிவது போல் சேயிடை (அயலிட)ப் பிரிவு இல்லாமல் தான் இருக்கும் ஊரிலேயே பிரிவது ஆயிடைப் பிரிவாம். அது பரத்தையில் பிரிவு என்பர்.(கள. காரி.43உரை) ஆயிரங் காலத்துப் பயிர்: திருமணத்தை ஆயிரங் காலத்துப் பயிர் என்பர். மூன்று மாதம், ஆறு மாதம், ஓராண்டு எனப் பயன் பயிர்கள் உண்டு. அக்கால வெல்லையில் பயன் தந்து நின்றுவிடும், அப்பயிர்கள். ஆனால், திருமணம் வழி வழியாகக் கொண்டும் கொடுத்தும் பெருக்கத்தோடேயே வருவது ஆகலின் ஆயிரங் காலத்துப் பயிர் எனப்படுவதாயிற்று. பயிர் என்பது உயிர்ப்பொருள், அவ்வுயிர்ப் பொருளொடு உணர்வு அறிவு இயக்கம் ஆகியவெல்லாம் கூடிய பயிர், மக்களாம் பயிர், அப்பயிர்த் தொடர்பு காலமெல்லாம் செழித்து வளரக் கருதிய வழக்கிலிருந்து வந்தது. ஆயிரங் காலத்துப் பயிர் என்பது. ஆயிரம்: ஆயிரம் : 1 அயிரம் > ஆயிரம். அயிரை என்பது சிறு மீன்; எண்ணற்றவை ஒரு சேரத் திரியும். அயிர் என்பது குறுமணல், கண்டு சருக்கரை. இவற்றை எண்ணிக் காணல் அரிது. இவ்வாறு மிகப்பல என்னும் எண் குறிக்கும் அயிரம் > ஆயிரம் ஆயிற்று. அயிரம் என்பது 1000 மாத்தம் குறித்த (கி.மீ.)புத்தாக்கக் கலைச்சொல். ஆயிரம். அயிர் = நுண்மணல். அயிர் - அயிரம்- ஆயிரம். நுண்மணலும் கடற்கரை மணலும் ஏராளமாயிருப்பதால் மணற் பெயர் ஒரு பெருந் தொகைப் பெயராயிற்று. வாழிய, நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே - புறம்.9 (தேவநே.2) * எண்ணிக்கை காண்க. ஆயிரம் : 2 (சகத்திராங்கி) ஒரு பாடல் போல் ஒரு பாடல் இல்லாமல் தொடர்ந்து ஆயிரம் பாடல்களையுடையது சகத்திராங்கி எனப்படும் ஆயிரம் என்னும் நூலாம். ஒரு பாடலை அடுத்தும் அதே பாடலாக இல்லாதிருத்தல் என்பதும் பாடல் ஆயிரம் என்பதும் இந்நூல் அடிப்படை. இருபாடல் தானும் இயையாமை என்பது குறிப்பாம். பாவெவையும் கூறியொன்று பார்த்தாலொன் றாயிராது ஓய்விலெண் ணாயிரமா உற்றதுதான் -மேவு சகத்திராங்கி ஓய்வில் எண், ஆயிரமா உற்றதுஎனப் பிரித்துப் பொருள் காண்க. இன்றேல் எண்ணாயிரமாகி விடும். திருவரங்கத் திருவாயிரம், தில்லைத் திருவாயிரம் பழனித் திருவாயிரம் கதிராயிரம் தெய்வத் தருவாயிரம் என்பவை தண்டபாணி அடிகள் அருளியவையாம். ஆனால் இவ்வாயிரங்கள் ஒன்று பார்த்தால் ஒன்றாய் இராதவை யல்ல. ஏழாயிரப் பிரபந்தம் என ஒரு நூலும் அடிகளார் யாத்துளார். அதிலுள்ள பாடல்கள், வாழ்த்துடன் 7008. ஆயிற்று போயிற்று (ஆச்சு போச்சு) ஆயிற்று = செய்ய வேண்டிய செயல்கள் எல்லாமும் செய்தாயிற்று. போயிற்று = என்ன செய்தும் பயன்படாமல் உயிர் போயிற்று. ஒருவர் உயிர் உள்ளுக்கும் வெளிக்குமாக ஊசலாடிக் கொண்டிருக்கும் வேளையில் நாடியிருக்கிறதா? பால் இறங்குகிறதா? ஆள் குறிப்புத் தெரிகிறதா? எனப் பலவாறாக ஆய்ந்து பார்ப்பது வழக்கம். உயிர் உள்ளேயா வெளியேயா என்பது தெரியாமல் உற்றார் உறவுகள் திகைப்புற்றுக் கொண்டிருக்கும் வேளையில் ‘என்ன நிலையில் இருக்கிறது? எனபார்க்கு ஆச்சு போச்சு என்று கிடக்கிறது என்பர். எல்லாரும் சம மென்பது உறுதியாச்சு(பாரதியார்) என்பது போல ஆச்சு போச்சு என்பவை இலக்கிய வழக்கும் பெறலாயின. ஆயுள்: ஆகி உள்ள நாள், ஆயுள் ஆகும். ஒவ்வோர் உயிருக்கும் ஆகியுள்ள நாள் உண்டென்னும் நம்பிக்கை பண்டே இருந்தது. நினைக்கென வரைந்த நாள் - மலைபடு.557 என்பது ஆயுள் விளக்கமாம். வரைந்த = அளவிடப்பட்ட. ஒன்றுபத் தடுக்கிய கோடிகடை இரீஇய பெருமைத் தாகநின் ஆயுள் தானே -புறம்.18 இதனைப் புகழுடம்பு நோக்கிய வாழ்த்தாகக் கொள்ளலாம். ஆய்: ஆய்:1 அம்மா ஆய்க்கு வருகிறது; ஆய்க்குப்போக வேண்டும்; ஆய்வந்து விட்டதுஎன்பவை தாய்சேய் வழக்குச் சொற்கள். ஆய் என்பது மலம் என்னும் பொருளில் வழங்குகிறது. உண்ட உணவு எரிப்பு அல்லது செரிப்பு ஆயதால் வெளிப்படும் மலம், ஆய் எனப் பட்டதாகும். ஆ உணவு ஆதலால், அது செரித்து அற்றுப் போனது ஆய் எனப்பட்டதாம். ஆய்:2 குழந்தை தொடக்கூடாத அருவறுப்புப் பொருளை ஆய் என ஒலியால் காட்டுவது வழக்கம். ஆய்:3 ஆய்விட்டது, ஆய்ப்போனது என்பவை ஆகிவிட்டது ஆகிப் போனது என்னும் பொருளில் வழங்கும். ஆய்:4 ஆய் = தாய் ஆகி இருந்தவள் ஆய். ஒரு பெண் கருக்கொண்டு இருத்தலை ஆகி இருக்கிறாள், உண்டாகி இருக்கிறாள் என்பது மக்கள் வழக்கு. கருவினைத் தாங்கி (ஆகி) இருப்பவள் ஆய் எனப் பட்டாள். தம் என்னும் உரிமையால் தம்+ ஆய் ஆகித் தாய் எனப்பட்டாள். தம் என்னும் உரிமைச் சொல் தமக்கை (தம் அக்கை), தமையன் ( தம் ஐயன்), முதலியவற்றில் வெளிப்பட வருதல் அறிக. ஆயின் ஆய் ஆயாய் என்றாகி ஆயா என வழக்கில் உள்ளது. ஆய் : 5 ஆய் = ஒரு வள்ளல்; ஆய் அண்டிரன் என்பது அவன் பெயர். உறையூர் ஏணிச் சேரி முடமோசியார் என்னும் புலவர் பாடிய சிறப்பால். மோசி பாடிய ஆயும் - புறம். 158 என்றும் சிறப்புற்றவன் . வள்ளல் எழுவருள் ஒருவன்,(புறம்). அவன் ஆட்சி கொண்டது பொதியப் பகுதி ; ஆங்குள ஆய்குடி அவன் பெயர் சொல்வது. ஆய்ச்சி: ஆயர் குடிப்பெண். ஆச்சி என்று மாறி அன்னை என்னும் பொதுப் பொருள் தருவதாயிற்று. மாதரி ஆயர் முதுமகள் எனப்பட்டாள் (சிலப்.15:118). ஆய்ச்சியர் குரவைசிலம்பில் ஒரு காதை. ஆய்தம்: ஆய்தம் பழந்தமிழ்ச் சொல்; ஆய்த இறுதி, ஆய்தத் தொடர், ஆய்தப்புள்ளி, ஆய்தப் பெயர் ஆய்த பகரம், ஆய்தம் என்பன தொல்காப்பியத்தில் பயில வழங்குவன. ஆயுதம் என்பதோ வடசொல். சங்க நூல்களிலும் சங்கம் சார்ந்த நூல்களிலும் வாராத சொல். பிற்காலத்துப் புகுந்து பெருக்கமாக வழங்கப்பெறும் சொல், சான்று ஆயுத பூசை. பழங்காலத்தில் போர்க் கருவிகள் படைக் கலங்கள் எனப் பெற்றன. படைக் கருவிகள் வைக்கப் பெற்ற இடங்கள் படைக் கலக் கொட்டிகள் எனப் பெற்றன. படை என்னும் சொல் படையையும் படைக்கலத்தையும் குறித்தது. பின்னாளில் படையும், படைக்கலமும் ஆயுதம் ஆயின. படைக்கலக் கொட்டில்கள் ஆயுத சாலை ஆயிற்று. படைக்கல வழிபாடு, ஆயுத பூசை ஆயிற்று. வேற்கோட்டமே படைவீடு என்பதையும் அறிக. அறியார் ஆயுத, ஆய்த வேறுபாடு அறியாமல் எழுதினர் என விடலாம். அறிந்தவர்களும் ஏன் அப்படி எழுதினர். ஆய்த எழுத்தின் வடிவத்தை முப்பாற் புள்ளி என்றார் தொல்காப்பியர்.ஆய்தப்புள்ளி என்றும் சுட்டினார்(423). முப்புள்ளி வடிவை விளக்கக் கேடயம் (மெய்ம்மறை) என்னும் கருவியை உவமை காட்டினர் சிலர். கேடயத்தில் மூன்று வட்டங்கள் உண்டு. ஆகலின் வடிவ உவமை கூற அது வாய்ப்பாக இருந்தது. அக்கேடயம் அது போன்ற அமைப்புடைய எழுத்தைக் குறிக்கும் எனக் கொண்டு, கேடயம் ஓர் ஆயுதம் ஆகலின் , ஆய்த எழுத்தைஆயுதம் எனக் காரணம் காட்டினர். கேடயத்தை மட்டுமா உவமை காட்டினர் ஆய்தத்திற்கு? அடுப்புக் கூட்டுப் போல்வதோர் எழுத்து என்று உவமை கூறினர். அடுப்புக் கூட்டும் ஆய்தம்தானோ? சமையல் செய்தற்குக் கருவியாம் ஆகலின் பொருந்தும் எனப் பொருத்தம் காட்டவும் துணிவர் போலும். இனி, இறைவன் முக்கண்ணை ஆய்த எழுத்து வடிவுக்கு உவமை காட்டினர். வன்ன ஆய்தம்நேர் நாட்ட முற்ற வள்ளல் என்பது தணிகைப் புராணம் (நைமி.6). மெய்யாரணங்கள் தடவிய ஆய்த விழியினர்என்பது பாண்டித் துரைத் தேவர் நான்மணி மாலை(2). இறைவன் முக்கண்ணும் ஆயுதம் தானோ? ஆய்தம் என்ற ஓசைதான், அடுப்புக் கூட்டுப் போல மூன்று புள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு, ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் என்றார். அதனை இக்காலத்தார் நடுவு வாங்கி யிட்டெழுதுப இதற்கு வரிவடிவு கூறினார்”என்றார் நச்.(தொல்.2). இனி ஆய்தம் என்பதன் பொருள் என்ன? ஆசிரியர் தொல்காப்பியனாரே ஆய்தம் என்பதன் பொருள் உள்ளதன் நுணுக்கம் என்று கூறியுள்ளார்.ஆய்தல்-நுணுகுதல்; ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்றார் தொல்காப்பியனாரும்என்றார் சிவஞான முனிவர் (சிவஞானபாடி 7:3) தமிழ்மொழியில் வழங்கப் பெறும் எழுத்தொலிகள் எல்லாவற்றிலும் ஆய்தம் நுணுகிய ஒலியுடையது என்பது விளங்க உள்ளதன் நுணுக்கம் என்றார் ஆசிரியர். ஆய்வு, ஆராய்வு என்பனவும் நுணுக்கப் பொருள் வழிவந்த சொற்களே! ஆயுதம், கருவி , கூத்துப் பயிலிடம்,படைக்கலம்என்னும் முப்பொருள் களைத் தர, ஆய்தல் என்பது, ஆராய்தல், காய் முதலியவைகளைப் பிரித்தெடுத்தல், தெரிதல், தெரிந்தெடுத்தல், நுண்மை, முன்னுள்ளதனிற் சிறியதாதல், வருந்துதல், அழகமைதல் அசைதல், சோதனை செய்தல், கொண்டாடுதல், கொய்தல், காம்புகளைதல், நுழைந்து பார்த்தல் என்னும் பதினான்கு பொருள்களைத் தருதல் தமிழ்ச் சொல்லகராதி வழியே அறிக. ஆய்த எழுத்தை மரபும் பொருள் நிலையும் கருதி ஆய்தம் என்றே எழுதுக! மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்என்பது தொல்காப்பியர் துணிபு(1591). ஆய்தல்: கீரை ஆய்தல், கொத்தவரை ஆய்தல் என்பன பொதுவழக்கு. கொள்ளத் தக்கதைக் கொண்டு, கொள்ள வேண்டாததைத் தள்ளுதல் ஆய்தல் எனப்படும். ஆய்தல், ஆராய்தல் என்பவற்றின் அடிமூலமும் பொருளுமாக விளங்குவது இச்சொல்லாட்சியாம். தொல்காப்பியர்க்கு முன்னைத் தொல்வழக்குச் சொல் இது. மீன் ஆய்கிறதுஎன்பது, மேலே மிதக்கிறது என்னும் பொருளு யது. தட்டான் ஆய்கிறது என்பதும் அது மேலே பறக்கிறது என்பது பொருளாம். ஆய்தல் மேலிட்டுத் தோன்றல் என்னும் சிறப்பை விளக்குவது இது. ஏன் ஆய்கின்றன? உணவு கிடைக்குமா? உட்காரலாமா என அவை ஆய்கின்றன- ஆராய்கின்றன என்க. இவ்வாய்தல் இயல் பூக்கமாம். * ஆராய்தல் காண்க. ஆய்தல் வகை ஆய்தல் = கொள்ளுவ கொண்டு தள்ளுவ தள்ளல். ஆராய்தல் = ஆய்ந்ததை மேலும் ஆழமாக ஆய்தல். ஓர்தல் = ஒன்று ஒன்றாக, பகுதி பகுதியாக எடுத்துக் கொண்டு ஆய்தல். சூழல்,சூழ்ச்சி = பலபல எண்ணி, பலருடன் எண்ணி ஆய்தல். தூக்கு = சமன்கோலில் ஒரு பொருளை வைத்து எடை காணல் போல், நடுவுநிலையாக ஆய்தல். தெரிதல் = ஆயும் பொருளைத் தெரிந்து கொண்டு தெரிந்தவர்களைக் கலந்து கொண்டு ஆய்தல். தெளிதல் = ஆய் பொருளில் அகற்ற வேண்டும் பகுதிகளை அகற்றித் தெள்ளிதின் ஆய்தல். தேர்தல் = தெரிந்து தெளிந்து கொண்ட முடிவைத் திட்டவட்டமாக நிறுவுமாறு ஆய்தல். நுணுகுதல் = நுண்ணிதின் ஆய்தல். நுளைதல் = உள்ளடங்கிக் கிடக்கும் எல்லாம் வெளிக்கொணர்ந்து ஆய்தல் உசாவுதல் = உளவு காண்பார் போலப் பலரையும் பலவகையும் ஆய்தல். எண்ணுதல் = படிப்பு - கேட்பு- சான்று ஆயவற்றை மட்டும் கொண்டு முடிவு எடுக்காமல் ஆழ்ந்து அகன்ற நுண்மையதாய் எண்ணி ஆய்தல். ஆய்ந்து ஓய்ந்து (ஆஞ்சு ஓஞ்சு): ஆய்ந்து = ஆராய்ந்து பார்த்து ஓய்ந்து = ஒன்றும் செய்ய முடியாமல் சோர்ந்து இதைச் செய்வேன்; அதைச் செய்வேன் எனப் பலபல வகையாய் ஆராய்ந்து பலபல செயல்களில் ஈடுபட்டுச் செய்த ஒருவன், ஒன்றிலும் வெற்றி கொள்ள இயலாமல் ஒடுங்கிவிட்ட நிலையில் அவனை ஆஞ்சு ஓஞ்சு அடங்கிவிட்டான் என்பர். ஓய்தல் ஒன்றும் செய்ய முடியாமல் அமைந்து விடுதல். ஆய்வு: முதற்கண் உலகியல் வழக்கில் ஆய்வு என்பதற்குள்ள பொருளைக் காண்போம். காய் ஆய்தல் என்பதொரு வழக்கு. கொத்தவரை (சீனியவரை) என்னும் காயை ஒடித்தல் அறுத்தல் நறுக்கல் என்று கூறாமல் ஆய்தல் என்பதே நாட்டுப்புற வழக்கு. முற்றியது, பிஞ்சு ஆகியவற்றை விலக்கிக் கறிக்குத் தக்க பதம்- பக்குவம்- அமைந்த காயைப் பறிப்பது, காய் ஆய்தல் எனப்படும். இது பறித்தல் நிலையில் சொல்லப்படும் ஆய்தல் ஆட்சி. பின்னர், அக்காயை கறிவைத்தற்கும் ஆய்தல் உண்டு. அவ்வாய்தல் நுனிக்காம்பும், அடிக்காம்பும் அகற்றுதல்; முதுகு நரம்பு எடுத்தல்; அளவிட்டு ஒடித்தல் என்பவாம். பறிக்குங்கால் முற்றல் ஒரு வேளை வந்துவிடின், அதனை இவ்விரண்டாம் ஆய்தலில் விலக்கி விடுவர். அதனால், வேண்டுவ கொண்டு விலக்குவ விலக்கல் ஆய்தல் எனப்படுகிறது என்பது விளங்கும். இனிக் கீரை ஆய்தல் என்பதும் வழக்கே. கீரையுள் ஒரு வகை அறுகீரை; அது அறைக்கீரை எனப்படும். அறுத்தல் என்பது அறை என்னும் இருவகை வழக்கினும் உண்டு. எ-டு அறிவறை போதல்(சிலப்.20:25); அலுவலர் அறை. கீரை ஆய்தலில் பழுத்த இலை, அழுகல் இலை அகற்றல், தண்டின் நரம்பு போக்கல், மாசு தூசு விலக்கல் என்பனவெல்லாம் நிகழும். இவ்வாறு போக்குவ போக்கி, ஆக்குவ ஆக்கல் ஆய்தலாம். ஆதலால், ஆய்தல் என்பது நுண்ணிதாய் நோக்கித் தள்ளுவ தள்ளிக் கொள்ளுவ கொள்ளல் என்பதாய் முடியும். இவற்றை ஆய்தல் என்னும் இக்காலச் சொல்லாட்சியுடன் ஒப் பிட்டுக் காணின் உண்மை விளங்கும். ஆய்தல் என்பதும் ஆராய்தல் என்பதும் பழநூல் ஆட்சி யுடையவை. நாடுதல் என்பதும் ஆய்தல் பொருளதே. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் -திருக்.504 நாடி பார்த்தலும் ஆய்தலே அதனால். நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்பதும் மருந்தில் இடம் பெற்ற குறளே(948). ஆய்தலுக்கும் ஆராய்தலுக்கும் வேறுபாடு உண்டோ? நுண்ணிதாக உண்டு. ஆர் என்பது அது. ஆர் என்பது அருமை, நுண்மை என்னும் பொருளது.ஆராய்ச்சி, ஆராய்வு என்பவை நுண்ணிய அல்லது கூரிய ஆய்வு என்பதாம். ஆய்வுக்கு நுண்மைப் பொருளுண்டோ எனின் அதனைத் தொல்காப்பியனார்க்கு முன்னை இலக்கணரும் கண்டனர் என்பது தெளிவு. தமிழ் எழுத்துகளிலெல்லாம் நுணுகிய ஒலியுடைய எழுத்தை ஆய்தம்(ஆய்த எழுத்து) எனக் கண்டதே அதனைத் தெளிவாக்கும். அதனை, ஆய்தம் என்பது உள்ளதன் நுணுக்கம் என்று தொல்காப்பியம் கூறும்(813). உள்ளது = தமிழில் உள்ள எழுத்துகள்; நுணுக்கம்=அவ்வெழுத்துகளிலெல்லாம் நுண்ணிய எழுத்து. ஒலியளவு குறைந்த எழுத்துகளுக்குப் புள்ளியிட்டு வெளிப் படக் காட்டல் பண்டே வழக்காயிருந்தது. மெய்யெழுத்தின் அளவு அரமாத்திரை; அதன் விளக்கம் அதன் உச்சியில் புள்ளி வைத்தšமரபு. குற்றியலுகரம், குற்றியலிகரம் என்பவை அரை மாத்திரை அளவின. அவற்றின் மேல் புள்ளி வைத்து மாத்திரைக் குறையுடையது என வெளிப்படக் காட்டல் முந்தை வழக்கம். மெய்யெழுத்திலும், குற்றியலுகர குற்றியலிகர எழுத்து களிலும் குறைந்த ஒலியுடைய எழுத்து ஆய்தம். அதனால் அதன்வடிவை முற்றிலும் புள்ளியாக அமைத்துக் கொண்டனர். அதனை முப்பாற் புள்ளி என்பதும் வழக்கே. ஆய்தம், அஃகன்னா அஃகேணம் எனவும் அழைக்கப் படும். அஃகுதல் குறைதல், நுணுகுதல் என்னும் பொருள் தரும் சொல். அறிவு, அஃகி அகன்ற அறிவு எனத் திருவள்ளுவரால் ஆளப்படும்(175). ஆரச்சுவர்: ஆரை = மதில். ஆரைச் சுவர் > ஆரச்சுவர். வீட்டைச் சுற்றி எழுப்பும் சுவரை ஆரைச்சுவர் என்பது முகவை வழக்கு. ஆரம் = வட்டம், வளையம், மாலை. ஆரை பழமையான இலக்கிய வழக்குச்சொல். ஆரம்: ஆர் + அம் = ஆரம்;ஆர்= அருமை. ஒத்ததும் பொலிவுடையதுமாம் மலர், மணி,முத்து முதலியவற்றைப் பொருந்தக் கட்டிய மாலை ஆரம் ஆகும். ஆர்த்தல் = கட்டுதல், பொருந்துதல், நிரம்புதல், வளைதல். ஆர்த்த சபை - தனிப். ஔவை நெஞ்சார வாழ்த்துகிறேன் - மக்கள் வழக்கு ஆரக்கால் = வண்டிச் சக்கரத்துக்கால் - உழவர் வழக்கு ஆரைச் சாகாடு - புறம்.60 ஆரம்:1 ஆர் + அம் = ஆரம் = முத்து; முத்தின் வண்ணமும் வனப்பும் கருதிய பெயர் இது. அருமையாக அமைந்தது. ஆரம் : 2 வளைவான நெற்கூடு;நெற்களஞ்சியம் ஆரப்பெயர் பெறும். எ-டு: கொட்டாரம் கொட்டுதல் = குவித்து வைத்தல். ஆரம் : 3 தேவாரம் = தெய்வ உறையுளாம் ஊர். சின்னமனூர் சார்ந்ததோர் ஊர்; தேனி மாவட்டம். ஆரம் : 4 அரிய மணம் அமைந்த சந்தனம். குறத்தி மாட்டிய அறற்கடைக் கொள்ளி ஆரம் ஆதலின் அம்புகை அயலது சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும் - புறம்.108 ஆரல்: ஆரல் : 1 ஆரல் = கார்த்திகை விண்மீன். 3000 விண்மீன்களை உள்ளடக்கியுள்ள ஆரல் மண்டலத்தில் ஆறு விண்மீன்களைத் தொலைநோக்கியின் துணையின்றிக் காணலாம். இவ்வாறு விண்மீன்கள் அமைப்பு மண் அகழ்வோர் போன்ற அமைப் புள்ளது. கடற்செலவு தொடங்குவது முடிப்பது என்பவற்றை இதனைக் கொண்டே செய்தனர். குளிர் காலம் கோடைக் காலங்களைக் கணக்கிடவும் ஆரல் பயன்பட்டது. அறி. களஞ். ஆர் + அல் = ஆரல் = அருமையானது; ஆர் = அருமை; உள்ளத்தைக் கவர்வது. அல் = சொல்லீறு. செந்நிறத்ததாய் மூவிணையாய் இருக்கும். அறு மீன்கூட்டம் ஆரல் எனப்பட்டது. ஆரற் பிறந்தோன்(முருகன்) - பரி.9 ஆரல் : 2 அருமையான சிவப்பு கருஞ்சிவப்பு வண்ணத்தில் துள்ளி விளையாடிக் காண்பார் உள்ளத்தைத் துள்ள வைக்கும் சின்னஞ் சிறுமீன் ஆரல் எனப்பட்டது. கதிர்மூக்கு ஆரல் - புறம்.349 ஒழுகுநீர் ஆரல் - புறம்.25 ஆரல் : 3 ஆர் + அல் = ஆரல். ஆராய்ந்தமைத்த அரிய மதில் ஆரலாம். இஞ்சி நொச்சி எயில்சுற்று புரிசை பந்தம் வரைப்பு காப்பு அரண்காவல் ஆரல் ஓதை பிராகாரம் வேலி சீர்சாலம் வேணகை மதிலெனச் செப்புவர் வன்சிறை உவளகம் ஆரையும் வரையார் - திவா.986 * ஆதிரை காண்க. ஆராட்டு: அர் + ஆட்டு = ஆராட்டு. ஆர் ஆரோ என்று சொல்லிக் குழந்தையைத் தொட்டிலில் இட்டு ஆட்டுதல் ஆராட்டு ஆகும். தாலாட்டு என்பதும் இது. ஓராட்டு என்பாரும் உளர். ரோ ரோ என்பது ரோராட்டு ஓராட்டு எனப்பட்டது. * ஆராரோ, தாலாட்டு காண்க. ஆராய்வு: ஆர் + ஆய்வு = ஆராய்வு. ஆய்வின் மேலும் நுணுகி ஆழ்ந்து ஆய்வது ஆராய்வாம். ஆர் = அருமை, நிறைவு. வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று - திருக்.584 ஆராரோ: குழந்தைகளை உறங்க வைப்பதற்கு தாயார் பாடும் பாட்டு ஆராரோஎன்பது. வெற்றொலியோ இசைப்பொலியோ அன்று; பொருள் பொதிந்தது இது. “ஆர் ஆராரோ!ஆர் இவரோ! ஆர் ஆரோ என்பது தொட்டிலில் - ஏணையில் - கட்டிலில் உறங்கக் கிடக்கும் இவர் வருங்காலத்தில் ஆர் ஆரோ? , ஆர் இவரோ?ஆர்ஆராரேhஎனஆர்வப்பெருக்கhல்எதிர்கhலநோக்கில் பாடப் படுவது இது. செங்குட்டுவனா, இளங்கோவா, வள்ளுவரா, மங்கையர்க் கரசியா, காரைக்காலாரா, ஆண்டாளா, - ஆர் ஆரோ, ஆரிவரோ என்னும் பொருள் பொதி தொடர் ஈதாம். ஏனெனில் தம்மக்கள் புகழ்வாழ்வில் தந்தையிலும் தாயே சீரிய ஆர்வத்தாள் என்பதால், வள்ளுவர் ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்என்றதை எண்ணின் புலப்பாடாம். ஆரிக்கும்: பாவைமார் ஆரிக்கும் பாடலோ பாடல் என்பது சிலப்பதிகாரத்தில் இடம் பெற்ற தொடர் (29:26) இது பாவைமார் ஆரிரக்கும் பாடலோ பாடல்என்பதன் பிழையான பாடம். ஆரிக்கும் என்பது செவ்விய பாடம் . ஆத்தி மாலையை விரும்பும் என்பது பொருள். பிழையான பாடத்தால் அகராதியில் ஏறிய சொற்களுள் ஒன்று. ஆரிக்கும் - ஒலிக்கும் எனப் பொருள் கொண்டனர் ( அகராதி நினைவுகள் ச.வை) ஆரியம்: ஆர் = அழகு, அருமை , சிறப்பு. ஆரியம் = கேழ்வரகு. தவசங்களுள் ஒன்றாய கேழ்வரகு ஆரியம் எனவழங்கும். கேழ்வரகுக் கதிர் முற்றுமுன் பால் நிலையில் பச்சையாகக் கசக்கித் தின்னவும், அனலில் வாட்டித் தின்னவும் சுவையாக இருத்தல் கண்டும், எத்தீங்கும் எவ்வெதிரிடைத் தன்மையும் இல்லாததாய்ப் பற்றியக் கட்டு இன்றி எவரும் உண்ணத் தக்கதாதல் கண்டும் இப்பெயரிட்டனர். அன்றியும் இனிப்பு நோயர்க்கு ஏற்ற உணவு அது என்றும் போற்றப்படுகிறது. ஆனால் மூளைக் கூர்ப்பை மட்டுப் படுத்தும் அது என்றும் கூறுவார் உளர். அறிஞர் மு. வ. அவருள் ஒருவர். கையின் விரல்களை மடிப்பதைப் பூட்டிய கை என்பர். கேழ்வரகின் கதிர் கையைப் பூட்டிய அமைப்பில் இருத்தலால் பூட்டை எனப்படும். பூட்டையாவது கட்டமைப்புடைய கதிர். ஆர் என்பதன் பொருள்களுள் ஒன்று, கட்டு என்பது. ஆர்த்த பேரன்பு ஆர்த்த சபை (தனிப். ஔவை) என்பவற்றில் வரும் ஆர்த்தல் அப்பொருளது. ஆதலால் கட்டமைந்த கேழ்வரகுக் கதிர், ஆரியம் (ஆர் இயம்) எனப்பட்டதாகலாம். சேலம் தருமபுரி பகுதி வழக்கு இது. ஆரியம் என்னும் மொழிப்பெயர் பொதுவழக்கு. ஆரியர்: ஆங்கிலத் துரைமார் என்றதுபோல வெண்ணிறத்தராக இருந்தமையால் அழகிய நிறத்தவராக ஆரியர் என்றனர். ஆரியர் என்பார் இமயப்பகுதியில் வாழ்ந்தவர்; வடக்குக் கணவாய்களின் வழியாக இந்தியாவுக்கு வந்து வடபுலத்துத் தங்கியவர்; அவர்கள் படையும் கொடியும் உடையராய்ப் பகைத்தமையால் அவர்களை வென்ற வேந்தன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனப் பாடுபுகழ் பெற்றான். ஆரியர்கள் கூத்து ஆரியக் கூத்து ஆகும். ஆரியர் கூறும் தமிழை நகைச்சுவைக்குச் சான்றாகக் கூறுவார் பேராசிரியர் (தொல்.1198). மிலேச்சராரியர்(பிங்.797). ஆரை: ஆரை : 1 ஒருகால் நான்கு இலைப் பந்தலாய் அழகிய தோற்றம் தரும் நீர்ச்செடி ஆரை என்பதாம். ஒருகால் நாலிலைப் பந்தலடி -கம்ப. தனிப். என்பதற்கு ஆரையடா சொன்னாய்என்னும் விடை தந்ததாய்ப் புலமைப் பிணக்குக் கதையுண்டாக வாய்த்த அருமைப் பெயர் ஆரை. ஆலக்கீரை என்பது மக்கள் வழக்கு. ஆரைக்கீரை மெல்லிய தெனினும் அதன் வகைசார் ஆரை ஒன்றன் ஊட்டமும் ஊற்றமும் பெரிதாகலின் அது வல்லாரை எனப்பட்டதாம். வல்லாரை நினைவாற்றலைப் பெருக்கும் என்பது பெரும் பரப்புச் செய்தி. ஆரை :2 வண்டிச் சக்கரம் ஆரை எனப்படும் (ஆரைக்கால்). ஆரைச்சாகாடு - புறம்.60 ஆரை : 3 குடத்தில் துளையிட்டு வட்டையில் உள்ள துளையில் கழறுதல் அசைதல் அறவே இல்லாமல் சிக்கெனப் பொருத்தப் பட்ட அருமைப்பாடு உடையது ஆரை.அதன் அரை வட்டக் கால்கள் செங்கதிர் எழுச்சி போல் தோற்றம் தரும். ஒரு வீரன் உடலில் வேல்கள் பல மொய்த்துக் கிடத்தல் குடத்தில் இருந்து எழும் ஆரைக்கால்களை ஒப்பதாம் என்று உவமையாவதும் ஆரை. ஆரை : 4 வண்டியின் மேல் அமைந்த கூடு அல்லது கூண்டு ஆரையாம். ஆர்த்தல் = கட்டுதல்; தாழையின் பாயைப் பின்னிக் கூடாக்கிக் கட்டுதலால் ஆரை எனப்பட்டது. அதன் தோற்றம் முதலை வாயைத் திறந்தது போல் உள்ளதாம். நீர்வாழ் முதலை ஆவித் தன்ன ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம் -அகம்.301 “ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்”எனவரும் பெரும் பாணாற்றுப் படையில் ‘ஆரை’ என்னும் பாயைத் தொத்துளிப் பாய் என்பார் நச்(50) ஆரை : 5 அருமையான பொறிகளும் கருவிகளும் அமைந்ததும், பாதுகாப்பாக இருந்து பகையழிக்கும் வீரர்களுக்குரிய ஏப்புழை ஞாயில், ஏந்து நிலை அரணம் உடையதுமாய்ப் பகைவர் நெருங்குதற்கு அரிய மதில் ஆரை எனப்பட்டது. புரிசைபுற் பாயோர் புதலு மாரை -பிங்.3137 * ஆரல் காண்க. ஆரை : 6 ஆரை = ஊர்; ஆர் = வளைவு; ஆரை = வளைந்தமைந்த கோட்டை. . அக்கோட்டை யமைந்த ஊர். எ-டு: புளியாரை; புளிய மரங்களே காவல் காடு போல் அமைந்தது புளியாரை. (இனிப் புளியாரை என்பதொரு சிறு கொடியாம்; வல்லாரை போல்வது; ஆனால் மூவிலையும் புளிப்புச் சுவையும் உடையது. வல்லாரை ஓரிலை உடையது.) ஆர்: ஆர் = ஆத்தி; ஆர் = அருமை ; அருமையான மருந்தாவது. போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெரும் வேந்தர் மலைந்த பூவும் -தொல்.1006 என்னும் தொல்காப்பிய வழியில் வாய்த்த ஊர் ஆர்க்காடு. அதுமட்டுமா? ஆரணி, ஆர்ப்பாக்கம் என்பனவும் செங்கற்பட்டு மாவட்டம் சார்ந்தவை. ஆர் என்பது ஆத்தி என்பதாம் . பேர் > பேர்த்தி ; ஆர் > ஆர்த்தி, பேத்தியும் ஆத்தியும் எண்ணலாம். ஆர் என்னும் ஆத்தி இலை, புண்ணுக்கு இடித்துக் கட்டும் உயரிய பச்சிலையாம். புண்ணை அகற்றும் அது, அகற்றி, ஆற்றி, ஆத்தி எனத் தொல்காப்பியர் காலத்தேயே திரிபடைந்ததெனின் அதன் பழமைதான் என்ன? ஆர்கலி: ஆர்+ கலி = ஆர்கலி. ஆர்த்தல் = ஒலித்தல் ; கலி = மிகுதல். ஒலி மிகுதியாதல் பொருளில் வருவது ஆர்கலியாம். ஆர்கலி யாணர்த் தரீஇய கால்வீழ்த்துக் கடல்வயிற் குழீஇய அண்ணலங் கொண்மூ நீரின்று பெயராது -புறம்.205 இது முகில் முழக்கம். இருங்கழி இழிதரும் ஆர்கலி வங்கம் -புறம். 400 இது கடல் முழக்கம். ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்என்பது முதுமொழிக் காஞ்சி. முழுநூறு பாட்டுக்கும் அமைந்த முதல் முழக்கம். ஆர்தல்: வயிறு நிரம்ப, விரும்பி உண்ணுதல் ஆர்தலாகும். ஆர்தல் நிரம்புதலும் விரும்புதலுமாம், வயிறார உண்ணுதல் என்பது வழக்கு. ஆர்பதம் என்பது உணவாகும். ஆர்பதம் நல்கும்என்று கூறும் பதிற்றுப்பத்து(66). ஆர்பதம், ஆர்பதன் என்றும் வரும் (பதிற். 55). ஆர்த்தல் என்பது உண்பித்தல், நுகர்வித்தல் பொருளாகும். வருநிதி பிறர்க் கார்த்தும் - சிலப் . மங்.33 தனப்பால் ஆர்த்தி - கந்த. பார்ப்ப.27 ஆர்பதம்: ஆர்பதம் = உண்ணத்தக்க உணவு. ஆர்தல் = விரும்பி உண்ணல்; பதம்= பக்குவமான உணவு. தேரில் தந்தவர்க்கு ஆர்பதன் நல்கும் - பதிற்.55 பசிதினத் திரங்கிய இரும்பேர் ஒக்கற்கு ஆர்பதம் -புறம்.370 ஆர்பதன் என்பதும் இது. ஆர்ப்பாட்டம்: ஆர்ப்பு + ஆட்டம் = ஆர்ப்பாட்டம். முழக்கமும் உணர்வு வெளிப்பாட்டுக் குறிகளும் கொண்டது ஆர்ப்பாட்டம். இந்நாளில் பெருவழக்குச் சொல். ஆர்வம்: பலநாள் உண்ணாதும் பருகாதும் பசித்துக் கிடந்தான் ஒருவன், உணவும் நீரும் கிடைக்கப் பெற்றால் எத்தகு விருப்பத்துடன் உண்ணவும் பருகவும் செய்வானோ அத்தகு விருப்பம் ஆர்வமாம். ஆர் = அருந்துதல், உண்ணுதல், பருகுதல்; ஆர்வு = விருப்பு. பயிலுதற்கு வேட்கை கட்டாயம் வேண்டும் என்பதைப் பருகுவன் அன்ன ஆர்வத்த னாகி என்பார் நன்னூலார்(40) ஒன்றன் மேல் அல்லது ஒருவர்மேல் அன்பு கொண்டால் அவ்வன்பு ஆர்வத்தைப் பெருக்கும். அவ்வார்வம் நட்பைக் பெருக்கும் என்பதை. அன்பீனும் ஆர்வ முடைமை அதுவீனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு என்பார் திருவள்ளுவர் (74). அன்பு வழிப்பட்ட ஆர்வ மிக்கவர். ஆர்வ மாக்கள் -நற்.146 எனப்படுவர். அர்வ நன்மொழி ஆஅய் -சிறுபாண்.99 அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச் செற்றமும் உவகையும் செய்யாது காத்து ஞெமன்கோல் அன்ன செம்மைத் தாகிச் சிறந்த கொள்கை அறங்கூ றவையம் - மதுரைக்.489-492 அறங்கூறவையத்தார், அச்சம், அவலம், ஆர்வம் முதலன அற்ற சமன்மையர் ஆகலின் இவ்வாறு கூறப்பட்டார். துறவர் நிலையும் இதுவே. ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும் -திருக்.370 ஆர்வு என்பதும் இது. ஆலகம்: நீர் வேட்கையைத் தணிப்பதும், நீர்ப்பதன் மிக்கதும், நீர்க்குச் சுவையூட்டுவதும், வறண்ட நிலத்தும் வறண்ட காலத்தும் வளமாக வளம் தருவதும் ஆகிய நெல்லியை ஆலகம் என ஆய்ந்த அருமையால் பெயரிட்டனர். ஆர் = நீர். எ-டு ஆலங்கட்டி. ஆலத்தி எடுத்தல்: ஆலத்தி எடுத்தல் என்பதொரு வழக்கம் உண்டு. அது மங்கல வினையாகக் கருதப் பெறுகிறது, ஆலத்தி எடுத்ததை மரமொடு மரம் எடுத்தார்(ஆலும் அத்தியும் மரப் பெயர்களன்றோ) என்றார் சுந்தர கவிராயர் (தனிப்). நீரைச் சுற்றி அல்லது சுழற்றி எடுப்பதே ஆலத்தி எடுத்தலாம். மஞ்சள், அரிசி, மலர் முதலியன கலந்த மங்கல நீரால் சுற்றுதலே ஆலத்தி எனல் அறிக. அதனை அப்பொருள் விளங்க ஆலாற்றி எடுத்தல் எனப் பெயர் சூட்டினர். பின்னே அச்சொன் மூலம் அறியாராய் ஆலத்தி, ஆலாத்தி என அகர வரிசை நூல்களும் பிற நூல்களும் வழங்கியுள்ளன. ஆற்றுதல், சுழற்றுதல் , சுற்றுதல் என்னும் பொருட்டது. இதனை ஆலத்தி வழித்தல் என்கிறது ஈடு (1.8.9). ஆலமரப் பெயர்வகை: ஆலமரம் = வீழ்துகள் ஊன்றி ஊன்றி அகலமாய் விரியும் மரம். ஆல் என்பதும் அது. அகல் > ஆல். கால்மரம் = வீழ்துகளாம் கால்களையுடைய மரம். கால்மரம் > கான்மரம். கோளி = கொத்துக் கொத்தாகக் காய்க்கும் மரம். தொன்மரம் = மிகப் பழமையானதும் பெருமைக் குரியதுமாம் மரம். முதுமரம் பழமரம் என்பதும் அது. பால்மரம் = இலை முதல் எப்பகுதியும் பிரிக்கப் பால் வழிவதாம் மரம். பாலி என்பதும் அது. வடமரம் = வட்டமான இலையையுடைய மரம். ஆலம்: ஆல் > ஆலம் = நஞ்சு. ஆல் என்பது நீர்,நீர்க்கட்டி, முகில் , மழை , மழைத்துளி எனப்பொருளால் விரிந்தது. நீர்ப்பெருக்காம் பொய்கையும் ஆறும், சுனையும், மடுவும், கடலும் முகிலும், கொண்டலும் வானும் எந்நிறமாகக் காட்சி வழங்குகின்றன எனின், கரு நிறமே-கரு நீல நிறமே என எவரும் கூறுவர். நீருக்கு நிறமில்லை என அறிவியல் உலகம் மெய்ப்பிப்பினும், அந்நிறத்தோற்றம் உண்மை பொதுவில் அறிந்ததே. நீருக்குப் பொதுவாய் அமைந்த இந்நிறத்தாலேயே நீல் என்னும் சொல் உண்டாயது. அவ்வாறே நீர்ப்பெயர் சுட்டும் ஆல் என்பதற்கும் ஆலம் என்பதற்கும் கருமை என்னும் பொருள் உண்டாயிற்றாம். நீல், நீலம் ஆவது போல், ஆல் ஆலம் ஆகும் என்க. நஞ்சு என்னும் பொருள் தரும் சொற்களை முதல் நிகண்டாசிரியர் திவாகரர். கடுவே ஆலம் காள கூடம் விடம் காளம் கரளம் காரி நஞ்சே என்று (538) கூறுவர். இவற்றுள் கடு, காளம், காள கூடம், கரளம் , காரி என்பவை கருமைப் பொருள் தருவனவே என்பது கருதுக. இனி இறைவன், ஆலமுண்ட நீல கண்டன் என்றும். நீல மணி மிடற்று ஒருவன் (புறம்.91) என்றும், காரி யுண்டிக் கடவுள்(மலை.83) என்றும் குறிக்கப் பெறும் பெற்றி ஓர்க. நஞ்சின் நிறம்ஆலம்ஆதல் (கருநிறம் ஆதல்) போல, நஞ்சுண்ட உயிரியின் நிறம் ஆலம் ஆதல். கொள்க .எரிவிடம் முறையே ஏறித் தலைக்கொண்ட ஏழாம் வேகம் தெரிவுற எயிறும் கண்ணும் ¹ மேனியு«கருகி¤தீய்ந்J விரிவுரை குழறி ஆவி விடக்கொண்டு மயங்கி வீழ்வான் - பெரிய,அப்பூதி,27 எனவரும் சேக்கிழாரடிகள் வாக்கால் நஞ்சுண்டான் உடல் உறுப்புகள் கருவண்ணம் கொள்ளல் கண்டு கொள்க. ஆலகோலத்தின் நஞ்சுஎனத் தேவாரம் வெளிப்படக் காட்டலும் கொள்க.ஆலகோலம் என்பது கருநிறம். சிவம், சிவல், சிவலை, கரி,கறுப்பு, காவி, துவரை, மஞ்சள், வெள்ளை என்பன வெல்லாம் வண்ணப் பெயரே தம் பெயராய்ப் பொருள் பொதிந்த சொற்களாய் விளங்குமாப் போல.ஆலம் என்பதும் வண்ணப் பெயராய் நஞ்சினைக் குறித்ததாம். ஆலம்மன்: வான் சிறப்பும் மாமழை போற்றுதலும் கண்டது தமிழகம். மழையை மாரி என்பர். மாரி வழிபாடு மழை வழிபாடே! மாரியின் பெயர்களுள் ஒன்று முத்துமாரி என்பது. இது முத்துப் போன்ற மழைத்துளி என்னும் பொருள்தரும். மழைத் துளியை முத்துக்கு உவமை காட்டுதல் இலக்கியங்களில் பெருவழக் குடையது. முத்துமாரி என்பது போல மாரிக்கு அமைந்த மற்றொரு பெயர் முத்தாலம்மன் என்பது. முத்து ஆலம் அம்மன் என்னும் முச்சொற்கூட்டே இப்பெயர். இங்கு ஆலம் என்பது நீர்க் கட்டியே. முத்தாலம்மன் என்னும் பெயர் பெருவழக்காக இருந்தும் அதன் பொருள் உணராராய்த் திருத்தம் செய்வார் போல முத்தாரம்மன் ஆக்கிக் கொண்டு வருகின்றனர். அதுவே திருந்திய வடிவம் என்றும் மகிழ்கின்றனர். முத்துமாலை அணிந்தவன் எனக் காரணம் கண்டு முத்து மாலை எனவும் பெயர் சூட்டிக் கொள்கின்றனர். இவற்றால் இப்பழஞ் சொற்பொருள் மூடுண்டு போதலை அறிக. ஆலயம்: ஆலை என்னும் சொல்அம் என்னும் சாரியை பெறும் போது யகர உடம்படு மெய்யும் பெற்று ஆலையம் என்று ஆகும். ஐகாரத்திற்கு அகரம் போலி ஆகலின்ஆலையம் ஆலயம் ஆகும். கோயில். கோட்டம் என்பவை திருச்சுற்றுக் கொண்டு சுற்றி வரும் ஆலயமாதற்கு நெடுநாள்கள் ஆயின. கோயில் விரிவடைந்தது; மண்தளி;கல்தளியாயது; யானை கட்டும் மாலும் திருச்சுற்றும் கொண்டு திகழ்ந்தது. இந்நிலையில் ஆலயம் என்னும் அருமைப் பெயர் ஏற்றது. பெரிய கோயில்களில் யானைகள் இருந்தன. அவ்யானை கட்டுமிடம் ஆலை எனப் பண்டு வழங்கப்பட்டது. பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த பெருங்களி றிழந்த பைதல் பாகன் அதுசேர்ந் தல்கிய அழுங்கல் ஆலை வெளில்பாகழாக் கண்டுகலுழ்ந் தாங்கு -புறம். 220 அந்நாளில் கார்க்கரும்பின் கமழாலை(பட்.9) இருந்தது. செக்கு ஆலை ஊர்க்கு வேண்டியிருந்தது. ஆலை என்பது சுற்றிவருதல் ஆதலால் திருச்சுற்றுகள் கோயிலில் உண்டாக ஆலையம் (ஆலயம்) எனப்பட்டது. பின்னே பொதுப்பெயராய் எல்லாக் கோயில்களுக்கும் பெயராயிற்று. ஆலயம் தொழுவது சாலவும் நன்று -ஔவை. ஆலல்: ஆலர் = அசைவு, ஆட்டம். அசைவு, சுழற்சி, ஆட்டம் என்பன வெல்லாம் எப்படி உண்டாகின்றன? கையையும் காலையும் பிற உறுப்புகளையும் அகலச் செய்தலால் இவை பிறக்கின்றன. ஆல்,ஆலல், ஆலுதல் என்பனவாய் அசைவு, ஆட்டம் என்பவற்றைக் குறித்தன. அகலிகையை ஆலிகை என்றார் கம்பர்(நட்புக்.6). அகலிகை > ஆலிகை. ஓ,நோ அகல் > ஆல். ஆலல் என்பதற்குரிய பொருள்களுள் தூங்குதல் (தொங்குதல்) என்பதும் ஒன்று. ஆதலால் தலைகீழாகத் தொங்கும் தனித் தன்மையுடைய வௌவால் ஆலாலம் எனப்பெற்றது. ஆலவட்டம்: ஆலவட்டம் = விசிறி மயில் தோகையைக் கொண்டே ஆலவட்டம் செய்யப் பெற்றது. பின்னே பிறவற்றாலும் செய்யப்பெற்றது. எனினும் முதற்கண் அமைந்த பெயரே, மயில் தோகை மாறிப் பிறவற்றால் ஆலவட்டம் அமைந்த பின்னரும், பெற்றதென்று அறிக. பீலியந் தழைபிணித் திட்ட வட்டமும் ஆலியங் கசைப்பன ஆல வட்டமும் -சூளா. 1885 என்றும். நீல ஆலவட் டத்தின் நிறங்கொளக் கோலும் பீலிய -சூளா.21 என்றும் வரும் தொடர்களால் மயில் தோகையால் ஆலவட்டம் அமைந்தமை அறியப் பெறும். அகல விரிந்த தோகை போன்ற வட்ட வடிவ விசிறிக்கு ஆலவட்டம் என்னும் இயற்கையொடு பொருந்திய பெயர் உண்டாகியது. சித்திரம் பயின்ற செம்பொன் ஓலை முத்துவாய் சூழ்ந்த பத்திக் கோடசைஇச் சிரற்சிற கேய்ப்பச் சிப்பம் விரித்த கவற்றுவினைப் பவழங் கடைந்துசெய் மணிக்கை ஆலவட்டம் நாலொருங் காட -பெருங்.1:34: 214-8 என்பதன் மூலமும். அணித்தகு பவழம் ஏற்பப் கடைந்துமுத் தழுத்தி அம்பொன் துணித்தடி விளிப்பு சேர்த்தித் தொழுதகச் செய்த வண்கை மணிச்சிரற் சிறகு நாண வகுத்தசாந் தால வட்டம் பணித்தகு மகளிர் வீசிப் பாவையைக் குளிர்ப்பித் தாரே- சிந்தா.2478 என்பதன் மூலமும் ஆலவட்டத்தின் அமைப்பு நன்கு விளங்கும். இச்சிந்தாமணிக்கு உரைகண்ட நச்சினார்க்கினியர், பொற்ற கட்டை நறுக்கி விளிம்பிலே சேர்த்துப் பீலியிட்டுச் சிச்சிலியின் சிறகு நாண வகுத்த சந்தன ஆலவட்டத்தாலே வீசுதல் தொழிலுக்குத் தக்க மகளிர் வீசிப் பாவையைக் குளிர்ப்பித்தார் என்கஎன்று எழுதிப் பீலியிட்டு என்று சுட்டியதையும் கருதுக. பீலியாவது மயில் தோகை. மயில் தோகையால் ஆலவட்டம் செய்யப் பெற்றமையால் ஆலவட்டத்திற்குப் ‘பீலி’ என்றதொரு பெயரும் உண்டாயிற்று.(சூடா.நிக.7:38) தோகையை அகல விரித்து ஆடுதலால் அமைந்த ஆலி ஆலுதல் ஆலுகை ஆகிய சொற்களுக்கு, அசைவு, ஆட்டம் என்னும் பொருள்கள் உண்டாயின. ஆலவன்: ஆலவன் :1 ஆல் நீர் ஆதலால், ஆலில் துயில்பவன் எனப்பெறும் திருமால் ஆலவன் எனப் பெற்றான். ஆலவன் :2 திங்கள் தண்ணியது ஆகலின்அத்தன்மை விளங்க அதுவும் ஆலவன் என வழங்கப் பெற்றது. ஆலவாய்: தமிழ் வளர்த்ததும் புலவர் அவையம் பொலிந்ததும் ஆகிய பழமதுரைக்கு ஆலவாய் என்பதொரு பெயருண்மை அறிவோம். திருவிளையாடற் புராணத்தில் திரு ஆலவாயான படலம் என்பதொரு படலமும் அது முதல் நூன் முடிய அமைந்த பெரும்பகுதியுடைய திருவாலவாய்க் காண்டம் என்பதொரு காண்டமும் உள்ளமை எவரும் அறிந்ததே. பாம்பின் வாயால் எல்லை காணப்பெற்ற நகராகலின் மதுரை ஆலவாய் எனப்பெற்றது என்பதைத் திருவிளையாடல் விரிக்கின்றது. ஆலம் என்பதற்கு நஞ்சு என்னும் பொருள் உண்மையால் அதன் வழியாகப் பாம்புக்கு ஆகிப் பாம்பின்வாய் எனப் பொருள் பெற்று, அவ்வாயால் எல்லை காட்டப் பெற்ற ஊருக்கு ஆயிற்று என்னும் கதை வளர்ந்தது. ஆல் என்பது நீர். வாய் என்பது இடப் பொருட்டு ஆதலைக் கண்வாய், கால்வாய், கயவாய், தத்துவாய், இல்வாய், ஆல்வாய், வாய்த்தலை எனவும் தலைவாயில், குடவாயில், குணவாயில் முதலிய ஊர்ப் பெயர்களும் காட்டும். அன்றியும் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்தும், அதன் உருபுகளுள் வாய் என்பதும் ஒன்று என்பதும் இவண் அறியத் தக்கதாம். அறியவே, ஆலவாய் என்னும் பெயர் மதுரைக்கு ஆகிய வகை புலப்படும். நளிகடல் முன்னியது போலும் தீநீர் வளிவரல் வையை வரவு: வந்த மதுரை மதில் பொரூஉம் வான்மலர் தாஅய் அந்தண் புனல்வையை ஆறு என்பது பரிபடல் (12) இதில் வையை யாறு பெருக்கெடுத்துக் கடல்போல் வருவதும், வந்து மதுரை மதிலை முட்டிக் கொண்டு செல்வதும் குறிக்கப் பெற்றன. இக்காரணத்தால் ஆலவாய் எனப் பெயர் பெற்றது உண்மையாகவும், பின்னே புதுக்கதை கண்டு பழவரலாறு புதையுண்டு போயிற்று என்க! ஆலவாய்க்குரிய இப்பொருளில் ஐயுறுவார் உளராயின் திருச்சீரலைவாயை (திருச்செந்தூர்) நினைவாராக. அலைவாய்க்கரை என்பதும் ஓர் ஊரே; வாய்த்தலை என்பதும் அப்படியே. ஆலவாலம்: ஆலவாலம் என்பது ஒரு சொல். இது வயலையும் பாத்தியையும் குறிக்கும். நீர் வளமிக்க நெடும் பாத்தியே ஆலவாலம் எனப்பெறும். வாலம் நெடுமை என்னும் பொருள் தருதல் இன்றும் வழக்கில் உள்ளதேயாம். வாலமாக நீண்டுள்ள நிலம் வாலி என்று வழங்கப் பெறுகிறது. துணி நீளமாகக் கிழிந்துபட்டால் வாலமாகக் கிழிந்து விட்டது என்பர். ஆலம் = நீர். ஆலாப்பறவை: ஆலாய்ப் பறத்தல் என்பதொரு சொலவடை நாட்டில் வழங்கப் பெறுகிறது. ஆலாய்ப் பறத்தல் என்பது என்ன? பேராசைப்பட்டுப் பேயராய் அலைவாரையே ஆலாய்ப் பறக்கிறார் என்கிறோம். பறத்தல் என்பதால் அஃதொரு பறவை என்பது தெளிவாம். அப்பறவையின் பெயர், ஆல் என்பதாம் அப்பறவை போல் பறப்பதையே உவமையால் கூறப் பெறுகிறது. அல் ஆலா என வழங்கப் பெறும் பறவைக்கும் நீருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறியின் வியப்பு உண்டாகும். ஆலா - பறவையில் ஒரு வகை, கடற்பகுதியில் வாழ்வது; அதன் கழுத்து. தலை , மார்பு, வயிறு, வால் ஆகியவை வெளுப்பும், உடலின் மற்றைப் பகுதிகள் கருஞ்சிவப்புமாக இருக்கும். இது, கடல்மேல் இளைக்காமல் சளைக்காமல் நாளெல்லாம் சிறகடித்து வட்டமிட்டுப் பறக்கும்; பெருங் கூச்சலிட்டுக் கத்தும்; இணை சேரும் காலங்களில் மற்றைக் காலங்களைவிட மிகுதியும் பறந்து அலைந்து கூக்குரலிடும். மற்றொரு பறவையும் ஆலா என்றே வழங்கப் பெறுகின்றது. அதற்கு ஆற்றுக் குருவி என்பதொரு பேரும் உண்டு. தகைவிலான் குருவி (தயிலாங்குருவி) என்பதும் இப்பறவையே. தண்ணீருக்குள் மூழ்கி, முழுமையாய் மறைந்து போய்ப் பின் வெளியே வரும் . தண்ணீருக்கு மேல் இங்கும் அங்கும் பறந்து அலகைக் கீழ்நோக்கி வைத்துக் கொண்டு மீன் கூட்டம் வருவதைப் பார்த்துச் சட்டென மூழ்கிப் பிடிக்கும். இது மரத்தில் தங்குவது இல்லை. தண்ணீர்க் கரையிலேயே இருக்கும் . நீருக்கும் இதற்கும் உரிய தொடர்பே ஆலா என்னும் பெயரை இதற்குச் சுட்டியதாம். இனி இப்பறவையின் தகைப்பு இலாப் பறத்தல் சிறப்பு உணர்ந்தே தகைவு இலான் என்னும் பெயரிடப் பெற்றது என்பதும் அறிக. தகைவு - தகைப்பு; தகைப்பாவது இளைப்பு. நீர் மட்டத்தில் ஒழியாமல் அலைந்து திரியும் இப்பறவை 11000 கல் தொலைவு கூட வலசைபோகும் என்பர். இதன் இயல்பினை முழுதுற அறிந்த நுண்ணறிவால் பெயர் சூட்டியுள்ள பெற்றிமை நினைதோறும் இன்பம் தரும். ஆலாய்ப் பறத்தல்: ஆலாய்ப்பறத்தல் : 1 பேராசைப்பட்டு ஆலிலை காற்றில் அங்கும் இங்கும் சுற்றிச் சுழல்வது போல் பலப்பல தேடப் பறத்தல். “ஏன்தான் இப்படி ஆலாய்ப் பறக்கிறானோ தெரிய வில்லை”என்பர்.(ம,வ) ஆலாய்ப்பறத்தல் : 2 ஆல் ஆய் குருவி (ஆலாக்குருவி) நீர்மட்டத்தின் மேல் மீனைத் தேடித் தேடிப் பறக்கும். அது போல் பறத்தலுமாம் , ஆல் = நீர்; ஆய் =ஆய்தல். ஆலி: ஆலி : 1 நீர்க்கட்டி. நீர். குளிர்ச்சி மிகுதியால் நீர், கட்டியாதல் . உறைந்து பாறையாதல் என்பவை கண்கூடு. சில போழ்துகளில் மழைத்துளியுடன் பனிக்கட்டிகளும் வீழ்வதுண்டு.அதனை ஆலங்கட்டி மழை என்பர். நீர் கட்டியாதலை ஆலங்கட்டி என்றது சிறந்த தேர்ச்சியாகும். ஆலங்கட்டியை இலக்கியம் ஆலி என வழங்கும். ஆலி இருப்பைப்பூ, மராஅம்பூ, ஈங்கைப்பூ, முத்து, கழங்கு ஆகிய வற்றுக்கு உவமையாகக் கூறப் பெற்றுள்ளது. (அகம்.95,125,211,282,334) ஆலியின் தன்மை, தண்மழை ஆலி சூர் பனிப் பன்ன தண்வரல் ஆலி ஆலியின் நிலந்தண்ணென்று கானங்குழைப்ப என்று குறிக்கப் பெற்றுள்ளது (அகம். 211, 304, 314) மழை பொழிதலைத் துவலை பெயலை துளியே மாரி உறை பெயல் ஆலி உதகம் சிதறி தூவல் சீகரம் தூறல் வருடம் எனத் திவாகரம் (145) கூறும். துளியும் நீர்கொள் ஆலங் கட்டியும் மழையும் ஆலி எனவகுத் தனரே எனப் பிங்கலம் (3147) கூறும். ஆழ்வார்களுள் ஒருவராகிய திருமங்கை மன்னர் ஆட்சி புரிந்த நாடு ஆலி நாடு எனப் பெற்றது. அவர் ஆலி நாடர் எனப் பெற்றார். புனல் நாடு எனப்பெறும் சோணாட்டுப் பகுதியே ஆலி நாடு என்பதும், புனலும் ஆலியும் பொருளால் ஒன்று பட்டவையே என்பதும் கருதுக. புனலூர், புனல்வேலி என ஊர் பெயர்கள் உண்மையும் எண்ணுக. ஆலி என்பதோர் ஊர் சீகாழிக்கு அணித்தே உள்ளதும், அதற்குத் திருக்கோயில் சிறப்பு உள்ளதும், சிவனியமும் மாலியமும் போற்றும் அடியார் பெருமக்கள் அவ்வூரில் தோற்றமுற்றதும் கற்றோர் அறிவர். அது திருவாலிஎன்பதாம். திருவாலி நீர்வளச் சிறப்பால் புனல் ஆலிஎனப் பாடுபுகழ் பெற்றது. பாடியவரும் ஆலிநாடராம் திருமங்கை மன்னரே (திவ்.1211,1212,1214,1217). அன்றியும் அதன் நீர்வளப் பெருக்கால், அந்தண் ஆலி(1329) என்றும் பல்பணையால் மலிந்து எங்கும் ஆடல் ஓசை அறா அணி ஆலி(1192) என்றும் கூறப்பெறுகிறது. திருவாலிக்குத் திருவாலி வயல் என்பதொரு பெயர் (1200). வயலாலி என்றும் அதனைக் கூறுவர் (1204). தண்பணை சூழ் வயலாலி -1210 வாவியந் தண்பணை சூழ் வயலாலி -1216 மணிகெழுநீர் மருங்கு அலரும் வயலாலி -1199 அணிநீலம் மடைநின் றலரும் வயலாலி - 2027 அன்னம் துயிலும் அணிநீர் வயலாலி - 2674 அள்ளல் அம்பூங் கழனி அணி ஆலி - 1208 என்றெல்லாம் விரித்துரைக்கப் பெற்றுள்ளது. இத்திருவாலிக்குப் புகழ் சேர்க்கப் பிறந்த பெருமகனார் திருவாலியமுதனார் என்பார். அவர், திருவிசைப்பாப் பாடிய ஒன்பான் பெருமக்களுள் ஒருவர். அமுதனார் சிறந்தோங்கிய இடம் ஆலி இப்பெயர் பெற்றார் என்பது தெளிவாவதுடன், ஆலியே அமுதம் என்பதும் இரட்டுறலால் விளங்கும். திருவாலிப் பெருமாள், வயலாலி மணவாளன்; பெருமாட்டி அமிழ்த கடவல்லி; ஆலியும் அமுதும் இணையும்காட்சி ஈது! ஆலி : 2 கள்,தேன். ஆலி என்பதற்குக் கள், தேன், தேனீ, காற்று, பூதம் முதலிய பொருள்களும் உண்டு என்பதை அகரவரிசை நூல்களிலும் நிகண்டு நூல்களிலும் காணலாம். இப்பொருள்களுக்கும் ஆலி என்பதற்கும் உள்ள தொடர்பு என்ன? ஆலி என்பது மழை, மழைத்துளி, நீர்ப்பெருக்கு முதலிய வற்றைக் குறித்தமையால், அவ்வாறே துளித்தும், வழிந்தும், பெருகியும் செல்லும் கள்ளையும் தேனையும் குறித்தலாயிற்றாம் ஆயின், இப்பொருள்கள் பின்னை விரிந்த விரியேயன்றி முன்னை மூலத்தின் அமைந்தது அன்றாம். ஆகலின், இச்சொற்பொருள் ஆட்சி பிற்கால நூல்களிலேயே இடம் பெற்றுள்ளது என்க. மதுவும் தேனும் மழையொடும் ஒப்ப ஒழுகலும் சொரிதலும் உடையவோ? எனின். சற்றே உயர்வு நவிற்சி எனக் கொள்ளினும் இலக்கிய வழக்கில் காணக் கூடியவேயாம். நறவுப் பிழிந்திட்ட கோதுடைச் சிதறல் வாரசும்பு ஒழுகும் முன்றில் -புறம்.114 என்றும். அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே -புறம். 109 என்றும், பாரியின் பறம்பு மலையில் நறவும் தேனும் ஒழுகுவதும் சொரிவதும் சொல்லப் பெற்றமை கொள்க. நுங்கிற் கள்ளின் உகுவார் -அகம்.256 அருந்தியும். மேற்றுறைக் கொளீஇய கழாஅலில் கீழ்த்துறை உகுவார்-அகம்.356 அருந்தியும் யாமை செருக்கித் திரிவதை அகப்பாடல்கள் காட்டு வதையும் காண்க! இவை இவ்வாறாக. ஆலைவாய்க் கரும்பின் தேனும் அரிதலைப் பாளைத் தேனும் சோலைவாய்க் கனியின் தேனும் தொடைஇழி இறாலின் தேனும் மாலைவாய் உகுத்த தேனும் வரம்பிகந் தோடி வங்க வேலைவாய் மடுப்ப வுண்டு மீனெலாம் களிக்கு மாதோ! -கம்ப, பால.41 என்னும் கம்பர் பாட்டில் தேனும் கள்ளும் பெருக்கெடுத்தலும் மீனும் பிறவும் களிப்புறலும் அறிவோர், பின்னை நாளில் ஆலிக்கு இப்பொருள்கள் உண்டாகிய அடிப்படையை உணர்வார். ஆலி ஆட்டம்: பொய்க்கால் குதிரை என்பதோர் ஆட்டம் பழமையானது. குதிரை வடிவப் பொ(ய்)ம்மையுள் புகுந்து ஆடிய அவ்வாட்டம், பின்னே வெவ்வேறு வகைக் கோலங்கொண்ட மாந்தர். தெய்வப் பொ(ய்)ம்மைகளையும் தூக்கிக் கொண்டு ஆடும் ஆட்டமாக வளர்ந்தது. அதற்கு ஆலி என்னும் பெயர் உண்டு என்பதை எவரும் அறிவர். ஆடற் பொருளில் அப்பெயர் வந்தது தெரிக. ஆடல், அசைதல், சுழலல் என்பவை காற்றுக்கு இயற்கை ஆதலால், ஆலி என்பது காற்றையும் குறிப்பதாயிற்று. அகலுதலால் அமைந்தது அன்றே ஆலி! அகற்சிக்கு அமைந்த பல சொற்களுள் பூ என்பதும் ஒன்று. அவ்வகற்சிப் பொருள் கரணியமாகவே அரும்பு விரிந்த பின் பூ என்றும், அகன்ற புவி பூ என்றும் குறிக்கப் பெற்றனவாம். ஆகவே,பூதம் என்பதும் (மண், விண், தீ, நீர், காற்று) ஒன்றிலிருந்து ஒன்று விரிந்தது, ஆகலின்பெற்ற பெயராயிற்று என்க. பூதம் விரிவுறுதலை, கருவளர் வானத் திசையிற் றோன்றி உருவறி வாரா ஒன்றன் ஊழியும் உந்துவளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும் செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியும் அலையிற் றுண்முறை வெள்ளம் மூழ்கியார் தருபு மீண்டும் பீடுயர் பீண்டி யவற்றிற்கும் உள்ளீ டாகிய இருநிலத் தூழியும் என்றும், ஒன்றனிற் போற்றிய விசும்பும் நீயே இரண்டின் உணரும் வளியும் நீயே மூன்றின் உணரும் தீயும் நீயே நான்கின் உணரும் நீரும் நீயே ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே என்றும் வரும் பரிபாடல்களானும் (2, 13), காற்றிற் பெருவலி இருவராகி என்னும் திருநாவுக்கரசர் தேவாரம், பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி என்பது முதலாக வரும் திருவாசகம் (போற்றித் திருவகவல் 37) என்பவற்றானும் பூதவிரிவை அறிந்து கொள்க. கொள்ளவே, ஆலிக்குப் பூதப் பொருள் கூறிய பொருத்தம் விளங்கும். ஆலு: ஆலு = ஆந்தை. ஆந்தைக்குப் பெரிய விழிகள் உண்டு. அவற்றில் பரந்த கண்மணிகளும் உண்டு. அதன் பார்வை இருளை ஊடுருவித் துளைத்து நெடுந் தொலைவுக்குச் செல்ல வல்லது. வட்ட வடிவமான தட்டை முகத்தில் ஆந்தையின் கண்கள் பொருந்தி இருப்பதால், அது, ஒரு பக்கமாகப் பார்க்க வேண்டு மென்றால் முகத்தை வளைத்துத் திருப்பியே பார்த்தல் வேண்டும். உடலை அசைக்காமல் தலையை மட்டும் அசைத்துப் பார்க்கத் தக்க அரிய அமைப்புடையது ஆந்தை. அவ்வருமையான சுழல் அமைப்புக் கண்ட அரிய நுண்ணோக்குடைய முந்தையோர், அச்சிறப்பு வெளிப்படும் வண்ணம் ஆந்தைக்கு ஆலு எனப் பெயர் சூட்டினர். அதன் ஒலிக் கடுமையும் ஆலு என்பதற்குத் துணை போவதாயிற்று. இனி, ஆலு என்பதற்கு நீர், நீர்க்குடம், நீர்ச்சால், மிதவை என்னும் பொருள்கள் உண்மை, நீர் என்பதன் வழியாக வந்தவையாம். ஆலுதல் : ஆல் > ஆலு > ஆலுதல் = அசைதல், ஆரவாரித்தல். ஆடுதல் உண்டாக வேண்டுமாயின் உள்ளக் கிளர்ச்சி உண்டு என்பது வெளிப்படை. மழை மேகம் கண்டும் இள வெயிலுடன் கூடிய சாரல் கண்டும் மயிலாடல் இயற்கை. தன் துணை அருகே இருக்க அகமுவந்து மயில் ஆடல் கண்கூடு. அது போழ்தில் ஆடலுடன் கூப்பிடுதலும் (அழைத்தலும்) குரல் எழுப்பி மகிழ்தலும் இயற்கை. ஆகலின் ஆலுதல் என்பதற்குக் கூப்பிடுதல், ஆரவாரித்தல் என்னும் பொருள்கள் உண்டாயின . மகிழ்தல், நிறைதல், செருக்குதல் என்னும் பொருள்களும் அதன்மேல் தோன்றின. ஆலுதல் : 1 ஆலுதல் =அசைதல். ஆலியங் கசைப்பன ஆல வட்டமே -சூளா. 1885 என்னும் தொடரும், கடல் முழுங்குதிரை முழவின் பாணியிற் பைபயப் பழம்புண் உறுநரின் பாவை ஆலும் -நற்.378 என்னும் தொடரும் ஆலுதலுக்கு அசைதல் பொருள் உண்மையை விளக்கும். இதில் நற்றிணை பழம் புண்பட்டோன் அந் நோவால் புரள்வதற்கு அலை புரள்வதை ஒப்பிட்டுக் காட்டியது அசைவுக்கு அருமை விளக்கமாம்.. ஆலுதல் : 2 ஆலுதல் = ஆடுதல். பயில்பூஞ் சோலை மயிலெழுந் தாலவும் -புறம்.116 பழனக் காவில் பசுமயில் ஆலும் -பதிற்.27 பழன மஞ்ஞை மழைசெத் தாலும் -பதிற்.90 என்பவற்றில் ஆலுதல் ஆடற் பொருளில் வந்தன. ஆலுதல் : 3 ஆலுதல் = அழைத்தல். மடக்கண்ண மயில் ஆல -பொருந. 190 மழைவரல் அறியா மஞ்ஞை ஆலும் -ஐங்.298 என்பவை அழைப்புப் பொருளில் வந்தவை. ஆலுதல் : 4 ஆலுதல் = ஆரவாரித்தல். மஞ்ஞை ஆலும் -பெருந்.435 மயில் ஆலும் -கலித்.36 என்பவை ஆரவாரித்தல் பொருளில் வந்தவை. இனி, மயிலின் அசைவு ஆட்டம், அழைப்பு, ஆரவாரங் களுக்கு உரிமை பெற்றிருந்த ஆலுதல், பிற பறவைகளுள் சில வற்றுக்கும் வேறு சிலவற்றுக்கும் அப்பொருள்களைத் தரும் வகையில் விரிந்தது. அன்னச் சேவல் மாறெழுந் தாலும் -புறம்.128 என அன்னமும், மாநனை கொழுதி மகிழ்குயில் ஆலும் -நற்.9 எனக் குயிலும், களிமயில் குஞ்சரக்குரல குருகோ டாலும் -அகம்.145 எனஆனையங் குருகும். கம்புள் கோழி பெடையோ டாலும் -ஐங்.85 எனக் கம்புள் கோழியும், சுரும்பு களித்தாலும் -ஐங்.342 எனச் சுரும்பும், களி வண்டு ஆல சூளா.758 என வண்டும் ஆலுதல் கொண்டன. இனி, இவ்வாலுதல் இப்பறவைகளை அன்றிக் குதிரைக்கும் உரிமை பூண்டது. குதிரையின் விரைந்த செலவும், தாவி எழும்புதலும், அணிவகுப்பும் பறவைக் கூட்டத்தையும், அலை கடலையும் ஒக்கும், ஆகலின் குதிரையொடும் ஆலுதல் இணைந்தது. ஆடும் பரி என்றும் ஆடல்மா என்றும் குறிப்பது போலவே, ஆலும் புரவி என்றும் (சிலப் .26:84) ஆலுமா என்றும் (சூளா.1363) கூறுவர். குதிரையின் நடை ஆடு நடை எனப்பெறும் பணை நிலைப் புரவி ஆலும் என்னும் சிலம்பும் (13:147) காலியற் புரவி ஆலும் என்னும் புறமும் (178) குதிரை ஆலுதலைக் குறிப்பன. குதிரை வளையமிட்டு நிமிர்ந்து தாவுதலை ஆலவட்டமிடல் என்பதும் கருதத்தக்கது. ஆலுதலுக்குரிய முழக்கப் பொருள் கடலுக்கும், முரசுக்கும், கார் முகிலுக்கும் உண்மையால் அவையும் ஆலுதல் சொல்லை ஏற்றன. பரவையின் ஆலும் - நற்.378 ஆலித்த முரசு - சூளா.1827 ஆலுமா மழை - சூளா .21 அஞ்செவி நிறைய ஆலின -முல்லைப் .89 என்பவற்றை அறிக. ஆலை: ஆல் என்பதில் இருந்து வந்த சொல் ஆலை ஆகும். ஆலை என்றதும் இப்பொழுது நினைவுக்கு வருவது பஞ்சாலை முதலிய பெரிய தொழிற்சாலைகளே ஆம், ஆனால், முன்னாளில் ஆலை என்றால் கரும்பு ஆலையையே குறித்தது. இப்பொழுது சருக்கரை ஆலை என வழங்கப் பெறுகிறது. ஆலைச் சரக்கு என்றால் சுவைமிக்க அருமைச் சரக்கு என்னும் பொருள் உண்டு அது என்ன ஆலைச் சரக்கா என வினவும் வினாவே ஆலைச் சரக்கின் அருமையைப் புலப்படுத்தும். ஆலை இல்லா ஊரில் இலுப்பைப்பூ சருக்கரை ஆலைக் கரும்பும் வேலைத் துரும்பும் போலானேன் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பு போல என்பவை பழமொழிகள். ஆலைகள் வைப்போம் - கல்விச் சாலைகள் வைப்போம் என்று பாரதியாரும் (தேசிய கீதங்கள் - பாரததேசம் 9) ஆலையின் சங்கே நீ ஊதாயோ -மணி ஐந்தான பின்னும் பஞ்சாலையின் என்று பாரதிதாசனாரும் (இசையமுது 1- 7) பாடினர். இந்நாளில் எங்கும் ஆலைகள், ஆலைத்தொழிலாளர்கள்! ஆனால், ஆலைச் சொல் மூலம் என்ன? ஔவைக்கு அரிய நெல்லிக்கனி வழங்கி அழியாப் பெருமை கொண்ட அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினியை ஔவையாரே, அந்தரத்து அரும்பெறல் அமிழ்தம் என்ன கரும்பிவண் தந்தோன் பெரும்பிறங் கடையே -புறம்.392 என்று கூறுகிறார். இந்நாட்டில் இல்லாத கரும்பை வேற்று நாட்டில் இருந்து கொணர்ந்து அருமை செய்தவனின் வழி வந்தவன் பொகுட்டெழினி என்கிறார். இதனால் அதியமானின் முன் னோரே கரும்பை இந்நாட்டுக்குக் கொணர்ந்து பெருக்கியவர்ஆவர். அவருக்குப் பின்னே நாடெல்லாம் பரவி வளர்வதாயிற்றாம் என அறியலாம். ஆலை : 1 ஆலை = எந்திரம். சங்கச் சான்றோர் நாளிலேயே கரும்பு ஆட்டும் எந்திரம் தோன்றிவிட்டது என்பதை, கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது இருஞ்சுவல் வாளை பிறழும் -புறம். 322 என்றும், கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும் -ஐங்குறு.55 என்றும், கணஞ்சால் வேழம் கதழ்வுற் றாங்கு எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை -பெரும்.259-60 என்றும் வருவனவற்றால் அறியலாம். எந்திரத்திற்கு ஏத்தம் என்னும் பெயருண்டு என்பது, மழைகண் டன்ன ஆலைதொறும் ஞெரேரெனக் கழைகண் ணுடைக்கும் கரும்பின் ஏத்தமும் என்னும் மலைபடு கடாத்தால் (340-341) அறியப் பெறும். ஆலை என்பது ஆட்டும் பொறி என்றும், அப்பொறி யுள்ள இடத்துக்கு அப்பெயர் ஆயது என்றும் கொள்ளுமாறு ஆலை - ஆகுபெயர் என்றார் நச்சினார்க்கினியர் (பெரும். 200-201) ஆலையில் கரும்பு ஆட்டப் பெற்றதையும் , கரும்பின் கண் உடைந்து சாறு ஒழுகியதையும், அதனைக் காய்ச்சுங்கால் புகை சூழ்ந்ததையும், கரும்பாலைப் பக்கம் மணம் கமழ்ந்ததையும் சங்க நூல்கள் சாற்றுகின்றன. ஆலைக்கு அலமரும் தீங்கழைக் கரும்பே -மலை.119 அடூஉம் புகைசூழ் ஆலை -பெரும்.261 பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து - சிலப். 10:151 கார்க் கரும்பின் கமழாலை -பட்.9 என்பவற்றைக் காண்க. ஆலைச் செய்தியைக் காணும் நாம், இவ்விடத்தில் சிற்றாலை என்று ஊர்ப் பெயரும், செக்காலை என இடப்பெயர்களும் உண்மை அறிதல் நலமாம். செக்கில் எண்ணெய் எடுத்தலை ஆலைத் தொழிலாகக் குறிக்கப் பெறுதல்.ஆட்டுதலால் வந்தது எனக் கொள்க. .ஆலையடித்தல், ஆலை ஆட்டுதல், ஆலை ஓட்டுதல், ஆலைக்குழி ஆலைத் தொட்டி. என்பனவெல்லாம் கரும்பாலை தொடர்பாக வளர்ந்த சொற்கள். ஆலை பாய்தல் என்பது மனச் சுழற்சி என்னும் பொருளில் வள்ளலாரால் வழங்கப் பெறுகிறது. (திருவருட். விண்.406) ஆலை:2 ஆலை =யானை கட்டும் கூடம். இனி யானை கட்டும் கூடத்திற்கு.ஆலை என்னும் பெயருண்டென்று புறப்பாட்டு ஒன்றால் புலப்படுகின்றது. பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த பெருங்களி றிழந்த பைதற் பாகன் அதுசேர்ந் தல்கிய அழுங்கல் ஆலை வெளில்பா ழாகக் கண்டுகலுழ்ந் தாங்கு என்று, கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானுழைச் சென்று மீண்டு வந்து உறையூர் கண்ட பொத்தியார் அழுது பாடிய பாட்டில் அவ்வரிய ஆலைச் சொல் உள்ளமை காண்க (புறம்.220) ! யானைக் கூடத்திற்கு ஆலை என்னும் பெயர் உண்மை யைப். பெரிய சோற்றை யுண்டாக்கிப் பல்யாண்டு பாதுகாத்த பெரிய களிற்றை இழந்த வருத்தத்தினையுடைய பாகன், அவ்வியானை சேர்ந்து தங்கிய இரக்கத்தையுடைய கூடத்தின்கண் கம்பம் வறிதே நிற்கப் பார்த்துக் கலங்கின தன்மை போலஎன இதற்குப் பழைய உரைகாரர் உரை வரைந்தமை கொண்டும் தெளிக. யானைக்குரிய பெயர்களுள் நால்வாய் என்பதும் ஒன்று, தொங்குகின்ற வாயையுடையது என்னும் கரணியத்தான் அமைந்தது அப்பெயர். தூங்கல் என்பது மற்றொரு பெயர். ஓய்வின்றி இப்பாலும் அப்பாலும் தலையை அசைத்துக் கொண்டே இருத்தலால் யானைக்கு வந்த பெயர் இது. வஞ்சிப் பாவின் ஓசை அசை நடையது, ஆகலின், தூங்கல் இசையன வஞ்சி என்றார் அமித சாகரர் (யா.வி.90). அசைதலை யுடைய யானை நிற்கும் இடமாகலின் அப்பொருள் தழுவி யானைக் கூடத்திற்கு ஆலைப் பெயரை அமைத்துக் கொண்டார் பொத்தியார் என்க! ஆலைச்சரக்கு: ஆலைச்சரக்கு = அரும்பொருள். ஆலை, தொழிற்சாலை; சுவை நலமும் கவினும் அமைந்தது ஆலைப் பொருள். அப்பொருட் கவர்ச்சியால், விலையாகும் தன்மையது. ஆலைச்சரக்கு முன்னாளில் சீமைச் சரக்கு எனவும் சொல்லப்பட்டது. சீமை எண்ணெய் என மண்ணெண்ணெய் குறிக்கப்படுதலும் அறியத் தக்கது. சிலர் தங்கள் பொருளை உயர்த்தியும் விலையைக் கூட்டியும் சொன்னால் ஆமாம்; ஆலைச் சரக்கு; இந்த விலை சொல்ல வேண்டியதுதான்என்று ஒதுக்குவர். ஆலைச் சரக்கு என்பதற்குக் கிடைத்தற்கரிய அரும் பொருள் என்பது பொருளாம். ஆலோலம்: ஆல் + ஓலம் = ஆலோலம். ஆலோலம் என்னும் சொல்லுக்கு அசைதல், அலைதல் , நீரொலி, புள் ஓட்டும் ஒலி என்னும் பொருள்களை அகர வரிசை நூல்கள் தருகின்றன. ஒல், ஓல், ஓலம்,ஓலை - என்பன ஒலித்தல் கரணியங் கொண்டு வந்த சொற்கள். ஆல் ஓல் என்னும் இரண்டு சொற்கள் இணைந்து அம் என்னும் சாரியை ஏற்று ஒரு சொல்லாய் நின்றன. ஆடியும் பாடியும் தினைப்புனத்துக் கிளியோட்டும் மகளிர் செய்கை ஆலோலம் எனப் பெற்றது. அவர்கள் பாட்டோடும் ஆலோலம் என்னும் முடிநிலையும் இருந்தது. ஆதலால், அம்மானை, கோத்தும்பி, பூவல்லி என்பன போலஆலோலம் என அது பெயர் பெற்றது. பூவைகாள் செங்கட் புறவங்காள் ஆலோலம்! தூவிமா மஞ்ஞைகாள் சொற்கிளிகாள் ஆலோலம்! கூவல் சேர்வுற்ற குயிலினங்காள் ஆலோலம்! சேவல்காள் ஆலோலம்! என்றாள் திருந்திழையாள் என்பது வள்ளியம்மை ஆலோலப் பாட்டு (கந்த. வள்ளி.54) இச்சொல்லாட்சி பிற்கால வழக்காகும். ஆல்: அகல் > ஆல் ஆதல். அகலுதல் பொருள் தரும் இவ்வகல் என்னும் சொல்லில் இருந்தே, தொல்காப்பியனார்க்கும் தொல்பழமையான நாளி லேயே ஆல் என்னும் சொல் தோன்றியிருந்ததாம் ஆகலின், நம் தென்மொழியின் தொன்மையும் முன்மையும் என்றும் மாறாச் சீரிய பின்மையையும் காட்டுதற்கு ஆல் போல்வரும் சொற்கள் மறுக்க ஒண்ணாச் சான்றுகளாம். பூல்வேல் என்றா ஆல்என் கிளவியொடு ஆமுப் பெயர்க்கும் அம்இடை வருமே என்பது தொல்காப்பிய நூற்பா(376). அகல் என்பது ஆல் என எவ்வாறு மாறியது? ஏன் மாறியது? என அறிதல் வேண்டத்தக்கதே. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவேஎன ஆணையிட்டுரைக்கும் ஆசிரியர், தொல்காப்பியனார் மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா என்றும் விளக்கினார். எதிரே செல்லும் பரிய ஊர்தி ஒன்றையோ, கவர்ச்சிமிக்க காட்சி ஒன்றையோ கூடக், கண்டேன் இல்லையே அவ்வழியாகத்தானே வந்தேன் எனக்கேதும் தென்படவில்லை என்ன ஐயா வியப்பு அந்த வழியாகத்தானே வந்தேன், எனக்குத் தெரியவில்லையே ஏதோ அரிச்சலாகப் பார்த்தேன்; தெளிவாகப் புலப்படவில்லை இன்னவாறாக உரைப்பாரைக் கண்டும் கேட்டும் உள்ள நாம், மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா(வெளிப்படப் பார்த்த பார்வையில் தோன்றாது) என்பதை ஏற்றுக் கொள்ளலே சால்பாகும். பாம்பறியும் பாம்பின் கால்என்பது போல் அறிய வல்ல, பொருண்மை விளக்கச் சொற்கள் உளவாதல் கண்கூடு. எனினும், வண்டு சென்ற வழியைக் கண்டு கொள்ளல் அரிதாதலும், சான்று காட்டி நிலை நாட்டத் தக்க மூலக்கூறு அழிந்து பட்டிருத்தலும் ஆகியவற்றால் எல்லாச் சொற்களும் பொருள் குறித்தலை விழிப்பக் கண்டறிய இயலுமென எவரும் கூறார். அவ்வாறு எல்லாச்சொற்களின் பொருட்பாடும் விழிப்பத் தோன்றாமை யால், எல்லாச் சொற்களும் பொருள் குறித்தன ஆகா என்போர், நுண்மாண் நுழைபுலம் உடையவர் ஆகார் என்பதை அன்றி, எண்மதியுடையரும் ஆகார் என்பதே தகும். இஃது இவ்வாறாக ,அகல் ஆல் ஆகிய இயன் முறையை அறிவோம். அகல் என்பதன் முதல் நீண்டு, ககரம் கெட்டு, லகர ஒற்றுடன் கூடி, ஆல் என ஆயிற்றாம். இச்சொல்லாக்கம், ஒலியளவு குறையாமல் பொருள்நிலை மாறாமல் புகுந்த சொல்லியன் நெறிமுறை ஆகும் அக என்னும் இணைக்குறில்களின் மாத்திரை அளவும் ஆ என்னும் நெடிலின் மாத்திரை யளவும் ஓரளவாக இருத்தல் - இரண்டு மாத்திரை அளவாக இருத்தல்- அறிக. இந்நெறியான் வரும் சொற்கள் எண்ணற்றுப் பல்கியிருத்தலின் ஓரிரு சான்று காட்டி விளக்க வேண்டுவது இல்லையாம். ஆல் என்பதற்கும் அகல் என்பதற்கும் இயல்பால் அமைந்துள்ள தொடர்பு என்ன? ஆல் என்பது ஒரு மரப்பெயர் என்பதும், அம்மரம் ஏனைய மரங்களினும் அகன்று விரிந்து செல்லும் தன்மையது என்பதும் எவரே அறியார்? ஆலின் அகற்சி அருமை பெருமைகளைப் பாண்டியன் அதிவீரராமன், தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையொடு மன்னர்க் கிருக்க நிழலா கும்மே -வெற்றிவே.17 என்றதும், அழகின் சிரிப்பில் பாவேந்தர், ஆயிரம் கிளைகள் கொண்ட அடிமரம் பெரிய யானை போயின மிலார்கள் எங்கும் பொலிந்தன பவழக் காய்கள் காயினை நிழலால் காக்கும் இலையெலாம் உள்ளங் கைகள் ஆயவூர் அடங்கும் நீழல் ஆலிடைக் காண லாகும் என்றதும் கேட்டு ஆம் ஆம் என்று ஏற்பதையன்றி எதிரிட்டு உரைக்கவும் எண்ணுவரோ? ஆலின் அடிமரம் பூச்சியரித்தும் பொந்து வீழ்ந்தும் அற்றுப் போயினும் கூட, அதன் வீழ்துகள் அம்மரத்தை முழுதுறத் தாங்கிப் பழுதற விளங்குவதைக் கண்ணாரக் கண்டு களிப்புற்ற ஒரு நல்லோர், ஈதொன்றே குடிநலம் காக்கும் குணத்தோர் சால்பு எனத் தெளிந்தாராய்ச், சிதலை தினப்பட்ட ஆல மரத்தை மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்கு குதலைமை தந்தைகண் தோன்றிற்றான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும் -நாலடி.197 எனப் புகன்றுள்ள பொருளுரை ஆல் பெற்ற பேறே யன்றோ! ஆலின் விரிவுக்குச் சான்றும் வேண்டுமோ? அடையாற்றில் அமைந்திருந்த ஆலமரத்தினைக் கண்டால், மூக்கின் உச்சி சுட்டு விரல் சேர்த்து வியந்து நோக்காது ஒழிவரோ? மரங்களுக்கெல்லாம் ஒரு காலே இருக்க ஆலுக்கு மட்டும் எத்தனை எத்தனை கால்கள்? வீழ்துகள் எல்லாம் கால்கள் தாமே! ஆகலான் அன்றோ, ஆலமரத்திற்குக் கால்மரம் என்பதொரு பெயரும் ஆயிற்று. ஆலமரம் நெடுங்காலம் வாழும் இயல்பினது. ஆகலின், அச்சிறப்பு வெளிப்பட அதனைத் தொன்மரம் என்றும் முதுமரம் என்றும் மூதாலம் என்றும் வழங்கினர். சங்கச் சான்றோர் இதனைத் தொன்மூதாலம் என்றது (குறுந்.15, அகம்.251) மிகத் திட்ப நுட்பம் செறிந்ததாம். அகல மரமே ஆலமரம் என்பதற்குச் சான்று கல்கத்தா தாவரவியல் தோட்டத்தில் உள்ள ஆலமரம் 1782-இல் ஓர் ஈச்சமரத்தின் முடியில் விழுந்த வித்தில் இருந்து முளைத்தது. அதன் மிக நீண்ட விட்டம் கிழக்கு மேற்கில் 300 அடி; தெற்கு வடக்கில் 288 அடி; அடி மரத்தின் சுற்றளவு 51 அடி; முடியின் சுற்றளவு 938 அடி; உயரம்85 அடி; நிலத்தில் ஊன்றிய விழுதுகள் 464; அது நிற்கும் நிலப்பரப்பு 1 1/2 ஏக்கர். “சத்தாரா”மாவட்டத்தில் ‘வைசத்கர்’ கிராமத்தில் ஒரு மரம் கி.மே.442 அடி; தெ.வ.595 அடி; முடியின் சுற்றளவு 1587 அடி இருந்தது”என்றும், “ஏழாயிரம் மக்கள் தங்கக் கூடிய ஒரு மரம் ‘நருமதை’ ஆற்றுத் திட்டு ஒன்றில் இருந்தது”என்றும் “இருபதினாயிரம் மக்களுக்கு நிழல்தரக் கூடிய மரம் ‘ஆந்திராப் ’ பள்ளத்தாக்கில் இருந்தது”என்றும் அறியப் படுகின்றன.(கலைக் களஞ்) ஆலமரம் நிழல் கருதி வளர்க்கப் பெறும் மரம், ஆகலின் தனியார் தம் நிலத்து வைத்து வளர்த்தல் பெரும்பாலும் இல்லை. அது பொது மரமாகவே எங்கும் வளர்க்கப் பெறுவதாயிற்று. அன்றியும்இறையுறை கோயிலாகவும் பொதுமக்கள் கூடும் மன்றமாகவும் விளங்கிற்று. அதன் பெயரால் பண்டுதொட்டு இன்று வரை விளங்கி வரும் ஊர்கள் எண்ணற்றவை. ஆலங்குடி வங்கனார், ஆலத்தூர் கிழார், ஆலம்பேரி சாத்தனார் என்னும் சங்கச் சான்றோர் ஊர்ப் பெயர்கள் ஆலொடு விளங்குவனவாம். ஆலஞ்சேரி மயிந்தன் என்பான் ஊருண் கேணி நீரே போல உதவியாளனாக இலங்கியதையும், அம்பர் நாடன் ஆலங்குடிக்கோன் என்பான் பேராண்மை சிறக்க விளங்கியதையும் வரலாற்றால் அறிகிறோம். ஆலங்குளம், ஆலடிப்பட்டி இன்ன வாறாக ஊர்கள் இந்நாள் விளங்குபவை மிகப்பல. இறைவன், 1. ஆலமர் கடவுள் 2. ஆல்கெழு கடவுள் 3. ஆலமர் செல்வன் எனப் பெறுவதும், ஆலந்தளி ஆலக்கோயில் என்னும் பெயர்கள் உண்மையும் ஆலுக்கும் இறைக்கும் உள்ள தொடர்பினைப் புலப்படுத்தும். ஆலமரத்துறை இறைக்குப் பூப்பலி, புனற்பலி முதலியன இடப்பெறுதலை, நெடுவீழ் இட்ட கடவுள் ஆலத்து உகுபலிஎன உரைக்கும் நற்றிணை(343). ஆலங்காடு பெற்ற தெய்வப் புகழும், ஆலங்கானம் பெற்ற வீரப் புகழும் நாடறிந்தவை. ஆல் ஊர் மன்றமாக விளங்குவது இன்றும் காணக் கூடியதே. ஆலின் கீழ் இருந்து அறமுரைத்த செய்தி தொன்மங்களில் (புராணங்களில்) கண்டதே. ஆலடி என்பது போல் காலடி என்பதும் கால்மரமாம் ஆலமரத்து அடியே, ஊர்ப்பெயர் அது. கல்லத்தி, கல்தாழை, கல்வாழை என்பது போல் கெட்டியான ஆல் கல்லால் ஆகும். ஓரால் இருந்த ஊர் ஒற்றையாலங்குளம். ஈரால் இருந்த ஊர் ஈரால். இவை நெல்லை மாவட்டத்தவை. கொடிக் கொடியாகப் படரும் ஆலமரம் கொடியாலம். கொடியாலம் திருச்சி- கருவூர்ச் சாலைக் காவிரித் தென்கரையூர். படராத ஆலமரம் பாடால் என்பது. பாடாலூர் ஊர்ப்பெயர். திருச்சி - பெரம்பலூர் நெடுஞ்சாலையின் இடையே யுள்ள ஊர். படராத அவரை - குத்துச் செடியான அவரை - வகை, பாடாவரை என்பது காண்க. ஓரால மரம் இருந்து பட்டுப்போக அவ்விடத்தே மீண்டும் வந்த ஆல், மறுக்கால், ஊர்ப்பெயர் மறுக்காலங்குளம். குட்டையான ஆலமரம் குற்றாலம்; இவ்வூர்ப்பெயர்கள் பல. குறும்பனை, குறும்பலா, கூழைப்பலா என்பவை போன்றது காய்க்காத ஆலமரம் கோளில் (ஆல்). கோள் = காய் கொள்ளுதல். கோள் இல் = காய் கொள்ளுதல் இல்லாதது. அத்தகு பலா கோளிற்பலா. பால் மரவகையுள் தலைமையானது ஆல்மரம். ஆல் மரம் உலகளாவிய வாழ்வினது. ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்னும் பழமொழி அதன் மருத்துவப் பயன்காட்டும். ஆலமரத்தின் சிறப்பு அகற்சியே - தேவ, நே.2 ஆல்- ஆலி: ஆல் = நீர். தீயின் தன்மை மேல்நோக்கி எரிவது. நீரின் தன்மை கீழ்நோக்கிப் பாய்வது. கீழ்நோக்கிப் பாய்வதுடன் அகலப் பரவுதலும் அதன் தன்மையாம். பாய்தல் என்பதன் பொருள்தான் என்ன? பா பாய், பாய்தல், பாய்ச்சுதல், பார், பார்வை, பாவுதல், பரவல், பரவை முதலியன வெல்லாம் அகலுதல் (பரவுதல்) பொருளால் வந்த சொற்களே. நீருக்கு இயற்கையான அகலுதல் தன்மையை நுனித்து அறிந்த முந்தையோர் அதற்கு அகல் என்றும் அகலி என்றும் பெயரிட்டனர். அப்பெயர்களே பின்னாளில் ஆல் என்றும் ஆலி என்றும் வழங்கலாயின. ஆலின் மேலால் அமர்ந்தான் என்பது ஈடு (திருவாய்.9.10:1) இது நீர் என்னும் பொருள் தந்தது. ஆல் வெள்ளம் என்னும் பொருள் தருதலை மாறன் அலங்காரம் குறிக்கும் (262). ஆல் என்பதற்கு நீர் என்னும் பொருள் உண்மையை வழக்கின் வழியே காண்போம். நீர்ப்பதனுடைய தவசத்தையோ, தட்டை தாள்களையோ உலர்த்துதற்கு வெயிலில் காயப் போடுதலை ஆல் அகற்றுதல் என்பதே ஆலாற்றுதல் என்பதாம். இப்பொருள் காணாமையால் அச்சொல்லை அகர வரிசை நூல்கள், ஆல்வாட்டு - உலர்ச்சி; ஆல்வாட்டுதல் - சிறிது காயச் செய்தல்; ஆல்வாடுதல் -சிறிது காய்தல். ஆலாட்டு - ஆல்வாட்டு; ஆலவாட்டு - வெயிலில் வாட்டுகை என்று குறிப்பிடுகின்றன. அகற்றுதல் என்பதே ஆற்றுதல் என்று ஆகியது. ஆல்பூல்: ஆல் = ஆலமரம் பூல் = பூலாஞ்செடி ஆல் என்றால் பூல் என்கிறான் என்பது பழமொழி. ஆல் பூல் என்பவை பெயரளவால் ஒத்துத் தோன்றுபவை. ஆனால் எத்தகைய ஒப்புமையும் சுட்டிக் சொல்ல இல்லாதவை ஒன்றுக்கு ஒன்று ஒவ்வாததை ஒப்பிதமாகக் கூறுவாரை ஆல் என்றால் பூல் என்கிறான்என்பார். ஆலும் வேலும் பல்லுக்குறுதி பூலுக்குப் போகம் பொழியும் இவை பல் துலக்குதற்கு ஆகும் குச்சிகளைத் தருவன. ஆல்வள்ளி: அகல் > ஆல் ; அகன்று பரவிக் கவையும் கப்புமாய் இருக்கும் கிழங்கு ஆல்வள்ளி. கிழங்கு வகையுள் ஒன்று; அமெரிக்க நாட்டில் இருந்து வந்தது இது. ஏழிலைக் கிழங்கு, குச்சிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, கப்பைக் கிழங்கு, சவ்வரிசிக் கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு, ஆள் வள்ளிக் கிழங்கு எனப்பல பெயர்களை யுடையது. இக்கிழங்கு ஊட்டத்திறம் மிக்கது. ஆவணத்தெரு: ஆவணம் + தெரு = ஆவணத்தெரு கடைவீதி ஆவணம் தெரு. திட்டப்படுத்தி அமைக்கப்பட்ட கடைத்தெரு ஆவணவீதி என்பதும் அது. ஆவண வீதிப் பூவணம் திருவிசை. கரு.7 :1 ஆவணக்களம், ஆவணக்களரி என்பவை உரிமை - உடைமைப் பதிவு நிலையங்கள். ஆவண மாக்கள்: ஆவண ஓலையை ஆராயும் மக்கள் ஆவண மாக்கள் ஆவர். கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார் பொறிகண் டழிக்கும் ஆவண மாக்கள் -அகம். 77 கயிற்றால் பிணித்தலை யுற்ற குடத்திலுள்ள ஓலையை எடுத்துக் கொள்தற்கு அக்குடத்தின் மேலிட்ட இலச்சிணையை ஆய்ந்து நீக்கும் அவ்வோலையை ஆராயும் மக்கள்என்பது இதன் பொருள். ஆவணம்: ஆவணம் : 1 ஆ + வண்ணம் > ஆ + வணம் = ஆவணம். (ஆம் + வண்ணம் > ஆவண்ணம் > ஆவணம்) ஆகிய வண்ணம் ஆகின்ற வண்ணம் ஆகும் வண்ணமென வினைத்தொகை வழிவந்த பெயராட்சி ஆவணம் . இன்னது இன்னவாறு இன்னார்க்கு இன்னவகைக்கு இன்னாரால் ஆதல் வேண்டும் என்னும் திட்டப்படுத்தலில் அமைந்தது ஆவணம் ஆகும். ஆவணம் காட்டி ஆட்கொண்ட செய்தி தடுத்தாட் கொண்ட புராணத்தால் தெளிவாம். ஆட்சியில் ஆவணத்தில் அன்றிமற் றயலார் தங்கள் காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் -பெரிய .தடுத்.56 ஆவணம் : 2 ஆவணம்= அங்காடி, கடைவீதி. உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அருமையும் அழகும் வாய்ந்த பொருள்களை அமைவுற வைக்கப்பட்டுள்ள கடைகள் நிறைந்த தெரு ஆவண வீதி ஆகும். அவர் அவர்க்கு ஆகும் வகைகளில் எல்லாம் தெரிந்தெடுத்துக் கொள்ளும் வகையில் அமைந்தமையால் ஆவணம் எனப்பட்டதாம். ஆவணம் : 3 ஆவணம் ஓர் ஊர்பெயராகவே (புதுக்கோட்டை மாவட்டம்) அமைந்துள்ளது. அரசு ஆவணப்படுத்திக் கொடை யாக வழங்கிய புலவர் முற்றூட்டுப் போல் இருக்கலாம். அத்தகு புலமையாளர் இருந்திருக்கக் கூடும். ஆவண வோலை: ஆவணம் ஓலை = ஆவணம் எழுதப்பட்ட ஓலை. உரிமை ஓலை. அண்ணலோர் விருத்தன் போல்வந் தாவண ஓலை காட்டி - கந்த வழிநடை .12 ஆவரை: ஆவரை, குத்துச் செடி வகையினது; பொன்னிறப் பூக்களைக் கொத்துக் கொத்தாக உடையது. அதனை ஆடு மாடு ஆகியனவும் தின்பதில்லை. அதனால் அதனை நிலத்தின் கரையாகிய வரப்பின்மேல் வேலியாக வளர்த்தனர். நாட்டுக்கு மலை(வரை)எல்லை ஆனால் போல, நிலத்திற்கு எல்லையாக வைக்கப்பட்ட இது ஆ + வரை = ஆவரைஎனப்பட்டது, எல்லையாயது ஆவரையாம். இதனை இதன் பொன்னிறப் பூக்கொண்டு பொன்னாவரை எனவும் வழங்குவர். பொன்னா வரை இலைகாய் பூ என முடியுமாறு காளமேகப் புலவர் ஒருபாட்டுப் பாடியுள்ளார் (தனிப்.). ஆவரம்பட்டி, பொன்னாவரம்பட்டி என ஊர்ப்பெயர்கள் உண்டு. ஆவிரை என்பாரும் உளர். அற்றுப் போன மணம் உடையது என்பது அதன் பொருள். மணமற்ற பார்வைப் பூ அது. விரை = மணம். மடலேறும் தலைவன் பூளை, எருக்கு ஆகிய மலர்களுடன் ஆவிரை மலரையும் சூடுவான் என்பது கலித்தொகை குறுந் தொகை ஆயவற்றில் பெருவரவாக உள்ளது(கலி. 138,139:173). பூளையும் எருக்கும் நறுமணமற்ற மலர்கள் என்பது எண்ணத் தக்கது. ஆவரையின் துவர்ப்பயன் பெரிது. அதனால் அப்பூவை உலர்த்திப் பொடியாக்கித் தேநீராகப் பயன்படுத்துதல் உண்டு. நறிய சுவையுடையது அது. நச்சிலாக் குடிப்பென இயற்கை மருத்துவர் கூறுவர். ஆவல்: ஆவு + அல் = ஆவல்; ஆவுதல் = கட்டித் தழுவுதல். அல் = சொல்லீறு. தழுவித் தழுவித் தாவிப் பற்றிச் செல்வது ஆவல்; ஆசை என்பதும் அது. ஆரா இயற்கை அவா - (திருக்.370) என்பது ஆவல் விளக்கம். அவாவும் அதுவே. x.neh.: வாவி - வாவிச் செல்வது, வாவல்; வௌவால். ஆவி: ஆவி : 1 உயிர்; காற்றாக இருக்கும் ஒன்று உயிராக ஆவது ஆவியாம். ஆவிதான் போனபின் ஆரே அநுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம் -ஔவை. தனிப். ஆவி : 2 உயிர் எழுத்து. உயிரியக்கம் போல் இயங்குவதும் இயக்கு வதும் ஆகிய எழுத்து. ஆவி யரழ இறுதி -நன்.161 ஆவி : 3 நீராகவும் பாலாகவும் இருப்பவை வெண்ணிறப் புகையாக ஆவதால் ஆவியாம். எ-டு: நீராவி, பாலாவி, வெள்ளாவி எள்ளற இயற்றிய நிழல்காண் மண்டிலத்து உள்ளூது ஆவியின் பைப்பய நுணுகி மதுகை மாய்தல் வேண்டும் -அகம்.71 குறையறச் செய்யப்பட்ட உருவம் காணும் கண்ணாடியில் ஊதிய ஆவிமுன் பரந்து பின் சுருங்கினாற் போல் சிறிதாகக் குறைந்து என் வலிமை அழிந்து போதல் வேண்டிய தாயிற்று என்பது இதன் பொருள். ஆவியர்: ஆவி என்பான் வழிவந்த பழநாள் ஆள் குடியினர் ஆவியர் எனப்பட்டனர். முருகன் நற்போர் நெடுவேள் ஆவி -அகம்.1 முழவுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி -அகம். 61 ஆவியர் தலைவன் ஆவியர் கோ எனப்பட்டான். புதுமலர் கஞல இன்று பெயரின் அதுமன் எம்பரிசில் ஆவியர் கோவே -புறம். 147 ஆவுதல்: ஆவென வாயைத் திறத்தல் ஆவுதலாம். ஆவென வாயைத் திறந்து வாங்கி உண்ணுதலும் ஆவுதல் எனப் பெற்றது. காசினிக்கும் வெண்ணெய்க்கும் செம்பவளம் ஆவென்றான் என்று திருவேங்கட மாலை (16), ஆ வெனலை உண்ணுதலாகக் குறிக்கும். ஆவு ஆவு என்றும், அவக்கு அவக்கு என்றும் - தின்னு கிறான் என்பன பேரார்வத்தால் விழுங்குதலைக் குறிக்கும் வழக்குகளாம். ஆவுதி: ஆவின் நெய்விட்டு எரியோம்புதலால் ஆவுதி எனப்பட்டது; அது வேள்வி. அமரர்ப் பேணிவும் ஆவுதி அருத்தியும் -புறம்.99 நெய்ம்மலி ஆவுதி -புறம்.15 ஆவுரிஞ்சு குற்றி: ஆ + உரிஞ்சு +குற்றி = ஆவுரிஞ்சு குற்றி. ஆ=ஆன், மாடு, ஆடு; உரிஞ்சுதல் = உராய்தல், தேய்த்தல் ; குற்றி = கற்றூண். ஆடு மாடுகளுக்கு உண்டாம் தினவை; உராய்ந்து போக்கிக் கொள்ளுமாறு அருளாளரால் நட்டுவைக்கப்பட்ட நடை வழித்தூண் ஆவுரிஞ்சு குற்றி. ஆவுரிஞ்சு தறி, ஆதீண்டு குற்றி (திவா.) என்பனவும் இது. ஆழி: உருளை, (சக்கரம்) வட்டம், ஆழமானது. அகழி > ஆழி. ஆழமான கடலும், அக்கடல் கோல் ஆழமாய் வட்டமாய் அமைக்கப்பட்ட அகழியும் ஆழி எனப்பட்டன. வட்ட வடிவான பிறவற்றையும் குறித்தது ஆழி. எ-டு கணையாழி. * அகழ் காண்க. ஆழ்வார்: இறைமை நேயப் பொய்கையில் ஆழ்ந்து தணியாப் பேரின்பம் பெற்று அப்பேற்றால் அமுத இசையொடு நாலாயிரப் பனுவல் பாடியோர் ஆழ்வார் எனப்பட்டனர். அவர் பன்னிருவர்: பொய்கையார், பூதத்தார், பேயார், திருமழிசையார், குலசேகரர், பெரியாழ்வார், ஆண்டாளார், தொண்டரடிப்பொடியார், திருப்பாணர், திருமங்கையார், மதுரகவியார், நம்மாழ்வார் என்பார் ஆளாதல்: பெண்பிள்ளை பூப்படைதலை, ஆளாதல் என்பது பொது வழக்கு. அதுவரை சிறுபிள்ளை, புரிவு தெரியாதவள் என்றும், இப்பொழுது பெரியவள், புரிவு தெரிந்தவள் என்றும் அடை யாளப்படுத்தும் சொல் இது. ஆளாதல் என்பது சிற்றூர் மக்கள் வழக்கு. சமைதல், திரளல், வயதுக்கு வருதல், பெரியவளாதல், பூப்படைதல், குச்சிலுக்கு இருத்தல் எனப் பலவும் வட்டார வழக்குகளாம். முதுக்குறைதல் என்பது இலக்கிய வழக்கு. முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே மலையன் ஒள்வேற் கண்ணி முலையினம் வாராள் முதுக்குறைந் தனளே -யா.வி.73 மேற். மணத்தகுதி உடையவள் என்பதன் சான்று ஆதலால் ஆள் எனப்பட்டாள். இல்லாள், அகத்தாள் (ஆத்தாள்) என்பவற்றை நினைக. இவ்விழாச் சடங்கு மஞ்சள் நீராட்டு எனப்படும். ஆளான ஆள்: பெரிய ஆள். ஆள் என்பது ஆளும் உடைமையால் பெற்ற பெயர். ஆள் எனின் ஆளுமை வேண்டும்.பெண்ணும் ஆளே! ஆணும் ஆளே! பிள்ளையும் ஆளே! எத்தனை ஆள் என்பதில் ஆண் பெண் பிள்ளை என்னும் பாற்பாகுபாடு இல்லை என்பது அறிக. ஆள்இயல் பாலுக்குத் தக அமையும் அவ்வளவே. அவ் வப்பாலின் இயலில் மிக ஆளுமை உடையார் ஆளான ஆள் எனப்படுவார். ஆள்களில் ஆள் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆள் என்னும் பொருளதாம் ஆனானப்பட்ட ஆள் என்பதும் இத்தகையதே. ஆளி: ஆளுரிமையரும், ஆளுரிமை உடையதும் ஆளியாம். ஆளி : 1 ஆளுகை - ஆட்சி- யுடையவன் ஆளி. கொற்கை ஆளி -வெற்றிவே. 1 ஊராள்பவர் ஊராளி. வில்லாளி, வேலாளி, அறிவாளி, பண்பாளி, பேச்சாளி, எழுத்தாளி முதலியவற்றால் ஆளுரிமை விளங்கும். கரையாண்டவர் கரையாளி, கரையாளர்.ஆளி, ஆளரும் ஆவார். ஆளி : 2 காட்டை ஆளும் அரிமா (சிங்கம்) ஆளி எனப்படும். விலங்குகளில் வலியது அது. அதன் எழுச்சியும் எடுத்த முழக்கும் காட்டை ஒடுக்கும் ஆளுமையுடையன. மீளி முன்பின் ஆளி போல -புறம். 207 நனந்தலை கானத்து ஆளி யஞ்சி .fLŠNš மடப்பிடி அஞ்சும் -அகம். 78 ஆளி : 3 பறவைகளுள் ஒன்று அரசாளி (இராசாளி) அது வலியன், வலசார், வல்லூறு என்றெல்லாம் வழங்கப்படுவது. பறவையில் பெரிய பருந்தையும் அறையவல்ல ஆற்றல் உடையது. எல்லா வற்றையும் எழுச்சியால் அடக்கும் அப்பறவை எழால் எனப்படும். ஆளி : 4 ஆளுகைப்பரப்பு ஊர்,கூற்றம், கோட்டம், மண்டலம், நாடு என்னும் வட்டம், மாவட்டம், மாநிலம், நாடு என்று விரிவுற்ற நிலையில் அடையாளப் பொருளாக ஆள்வோரால் ஆளி (விரலாளி) வழங்கப்பட்டது. ஏனாதி, காவிதி, எட்டி முதலிய பட்டம் பெற்றவர்க்கு ஆளி வழங்கினார். ஆளியின் வட்ட வடிவு பின்னே ஆழி எனவும் ஆயிற்று. அறவாழி என ஆள்வோரும் இறையும் வழங்கப் பெற்றனர். புத்தர் அறவாழி (தர்ம சக்கரம்) உருட்டியவரானார். அசோகர் அவ்வாழியை ஆளுகை அடையாளப்படுத்தினார். மக்களாட்சி மலர்ந்த பின்னர் அவ்வாழியே இந்திய அரசின் முத்திரை ஆயிற்று. வட்ட வடிவத்தால் ஆளியாம் கடல், ஆழத்தால் ஆழியும் ஆயிற்று. நீடாழி உலகம்எனவும் பட்டது (பாரத. பாயிரம்) ளகரம் முன்னையதும், ழகரம் பின்னையதுமாம் என்பது மொழிவல்லார் முடிபு. அவ்வாறே ற, ன காலப்பின்மை உடையது என்பதும் அவர்கள் முடிபு. ஆளிடு பதுக்கை: ஆள் + இடு + பதுக்கை = ஆளிடு பதுக்கை.-பெருங். 1: 52 : 28 பாலை நில வழியே செல்வாரைக் கொன்று அவர் உடலை மூடிவைத்த கற்குவியல். பதுக்கை, மறைத்து வைக்கப்பட்ட கற்குவியல். ஆளில் பெண்டு: ஆள் + இல் + பெண்டு = ஆளில் பெண்டு. ஆள் = ஆளன், கணவன்; கணவனை இழந்த கைம்மையர் அவர். ஆளில் பெண்டிர் தாளில் செய்த நுணங்குநுண் பனுவல் -நற்.353 ஆளில் பெண்டிர் நூற்றல் தொழிலை மேற்கொண்டமை யால் பருத்திப் பெண்டிர் என்று வழங்கவும் பட்டார். பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன -புறம் 125 பனுவல் = நூல். ஆளும் பேரும்: ஆள் = நிமிர்ந்த அல்லது முழுத்த ஆள். பேர் = ஆள் என்று பெயர் சொல்லத்தக்க சிறார் அல்லது இளைஞர். பெரிய தூணையோ தடியையோ தூக்க வேண்டிய போது பெரிய ஆள்களின் எண்ணிக்கை குறைந்திருக்குமானால் சிறுவர் களையும் சேர்ந்து பிடிக்குமாறு கூறுவர். அந்நிலையில் ஆளும் பேருமாகப் பிடியுங்கள் என்பர். ஒத்த ஆட்டக்காரர்களைப் பிரித்து ஆடும் ஆட்டத்திற்கு ஒருவர் இருவர் குறைவாரானால் ஒப்புக்குச் சப்பாணி என இணையாக அமர்த்திக்கொண்டு ஆடும் வழக்கத்தை இதனுடன் ஒப்பிட்டுக் காணலாம். ஒப்புக்குச் சப்பாணி என்பது உப்புக்குச் சப்பாணி என வழங்குகின்றது. ஆள், பேர், புள்ளி, தலை என்பவை பொதுவில் ஆள்களைக் குறிக்குமாயினும் இவண் பொது நீங்கி, பேர் என்பது பேருக்கு ஆளாக இருக்கும் சிறாரைக் குறித்ததாம். ஆளோடி: ஆளோடி : 1 ஆள் + ஓடி = ஆளோடி. வீட்டு முகப்பு இருந்து உட்கூடம் செல்லும் வரையுள்ள நடைபாதை ஆளோடி எனப்படும். ஆள்கள் அனைவரும் போய் வருதலால் அந்நடை பாதைப்பகுதி ஆளோடி எனப்பட்டதாம். * இடைகழி காண்க. ஆளோடி : 2 கிணற்றின் கட்டுமானத்திற்கும் கிணற்றுக்கும் இடைப்பகுதி. ஆளோடியில் கிடக்கும் புல்லைப் பிடுங்கு என்பது மக்கள் வழக்கு. ஆள்: ஆள் : 1 ஆளுமையுடையவர் ஆள் ஆவர். * ஆளான ஆள் காண்க. ஆள் : 2 ஆள் = கணவன். *ஆளில் பெண்டிர் காண்க. ஆள் : 3 ஆள் = அடிமை. ஆள் + படல் = ஆட்படல்; ஆட்படல் என்பது அடிமைப் படல் ஆகும். பெருமையும் சிறுமையும் ஆகிய இருவகை ஆட்படல் உண்டு. இறையர், குருவர், துறவர், அறிவர், அருளர், பெரியர் என்பார்க்கு ஆட்படல் பெருமையது. தோல்வியால், இழிமை யால், வறுமையால், மானக்கேட்டால் அடிமைப்படல், விலைப் படல் இழிமையது. ஆளின் பிறப்பு ஆளியாதலேயாம்! அதுவே பெருமிதமாம். * ஆட்கொள்ளல் காண்க. ஆள் அம்பு: ஆள் = ஆள் துணை அம்பு = அம்பு முதலிய கருவித் துணை. ஆள் அம்பு அவனுக்கு நிரம்ப வுண்டு; அவனை நெருங்க முடியாது அவனுக்கென்ன ஆள் அம்புக்குக் குறைவில்லை என்பன வழக்காறுகள். ஆட்செல்வாக்கும் படைக்கருவிச் செல்வாக்கும் ஒருவனுக்கு இருந்தால் அவனை எவரும் நெருங்கித் தொல்லை தர நினைக்கவும் மாட்டார்கள். இந்நிலைமை சுட்டி யெழுந்தது ஆள் அம்பு இணைமொழி. ஆள் காந்தி: வேண்டா ஆளைக் கண்டதும் எரிந்து விழுபவன் அல்லது எரிந்து விழுபவளை ஆள் காந்தி என்பது கோட்டாறு வட்டார வழக்கு. காந்தல் = வெப்பம், எரிவு. காந்துதல் = சுடுதல். ஆளைக் கண்டு எரிதல் ஆளல்லாப் பிறவி இயல்பு போலும்! ஆள்புலம்: ஆளுகைக் குரியதாக வரையறுக்கப்பட்ட இடம் ஆள்புலம் என ஈழத்தமிழர் வழக்கில் உள்ளது. புலம் பொது வகையில் நிலம் என்னும் இடப்பெயராக நிற்கிறது. நிலபுலம் என்னும் இணைச் சொல்லில் வரும் புலம், புன்செய் என்னும் பொருளது; நிலம் நன்செய் என்னும் பொருளது. ஆளுகைப் பரப்பிடம் என்னும் அளவொடு மக்கள் தொகையும் சுட்டுவதாகிறது ஆள்புலம் என்பது. முந்நீர்ப் பழந்தீவு பன்னீ ராயிரம் என்பது கல்வெட்டு! ஆள்விளை: ஆள் = ஆளுமை உடையவர்; வினை =செயல். ஒல்லுவ தொல்லும் என்றலும் யாவர்க்கும் ஒல்லா தில்லென மறுத்தலும் இரண்டும் ஆள்வினை மருங்கிற் கேண்மைப் பாலே -புறம். 196 திருக்குறளில் ஆள்வினையுடைமை என்பதோர் அதிகாரம் உண்டு (62). பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி -திருக். 618 ஆள்வீடு: முன்பகுதியும் குறியாமல், பின்பகுதியும் குறியாமல், வீட்டின் நடுப்பகுதி குறிப்பது ஆள்வீடு என்பதாகும். இது நாட்டுக் கோட்டையார் வழக்கு. குடும்பத்து ஆள்களே தங்கியும் பழகியும் இருக்கும் வீடு ஆள்வீடு. இல்லாள், மனையாள் என்பவற்றில் வரும் ஆள் ஆளுமைப் பொருளதாதல் கருதுக. ஆள் கணவன் மனைவியர் இருவரையும் குறித்தல், ஆளில் பெண்டிர் என்னும் வழக்கால் அறியலாம். ஆளன் = கணவன்; ஆட்டி = மனைவி. குடும்பத்தில் உள்ள அவர்கள் மட்டுமே பழகும் வீடு, ஆள்வீடாம். ஆறகம் (சட்கம்): ஆறு பாடல்களை யுடையதொரு சிறு நூல் ஆறகம் (சட்கம்) எனப்படும். சட்கத்தை விருதை சிவஞான யோகிகள் அறுமணி எனப் பாடியுள்ளார். தண்டபாணி யடிகளும் இயற்றியுள்ளார். இவ்வறுமணி ஒரே வகை யாப்பால் ஆறு பாடல்களும் பாடப்படுவதாம். ஆறலை கள்வர்: ஆறு + அலை + கள்வர் = ஆறலை கள்வர். ஆறு = வழி; அலை = அலைத்தல் = துன்புறுத்தல். வழிச்செல்வாரைத் துன்புறுத்தி உள்ளவற்றைப் பறிக்கும் களவு வாழ்வர். ஆறலை கள்வர் படைவிட அருளின் மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை -பொருந. 21-22 ஆறறிவு: ஆறு +அறிவு = ஆறறிவு. உயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவரை வளர்ச்சி பெற்றவை. மக்கள் அறிவு ஆறறிவு. மக்கள் தாமே ஆறறி வுயிரேஎன்றார் தொல்காப்பியர் (1532). மெய் வாய் மூக்கு கண் செவி என்னும் ஐம்புல அறிவாகிய ஊறு, சுவை, முகர்வு, ஒளி, கேள்வி என்பவற்றொடு ஆறாம் அறிவாம் மன அறிவும் (எண்ணுதல் நினைதல்) சேர, அறிவு ஆறாம். இஃது இன்ன தன்மையதுஎன உணர்ந்து அறிதலால் அறிவு எனப்பட்டது. ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே -தொல். 1526 ஆறறிவு உயிரிகள் : புல்லும் மரமும் மெய்யறிவாம் ஊறு என்னும் ஒன்றே உடையவை. நத்தை இப்பி ஊறுடன் நாவறிவும் உடைய ஈரறிவின. கறையான் எறும்பு மூக்கறிவாம் மூன்றாம் அறிவும் கொண்டவை. நண்டும் வண்டும் கண்ணறிவாம் நான்காம் அறிவும் உற்றவை. விலங்கும் பறவையும் செவியறிவாம் ஐந்தாம் அறிவும் உற்றவை. மக்கள் மட்டுமே மன அறிவாம் ஆறாம் அறிவும் பெற்றவர். புல்லும் மரனும் ஓரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே நந்தும் முரளும் ஈரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே சிதலும் எறும்பும் மூவறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே நண்டும் தும்பியும் நான்கறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே மாவும் மாக்களும் ஐயறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே மக்கள் தாமே ஆறறி வுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - தொல். 1527-32 மக்கள் தாமே ஆறறி வுயிரேஎன்று தேற்றேகாரம் தந்து நூற்பாவை முடித்த பின்னர்ப் பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பேஎன்று ஒட்ட வேண்டியது என்ன? பின்னூலார். மக்கள் தேவர் நரகர் உயர்திணை என்று ஒவ்வா ஒட்டு ஒட்டியதற்கு ஒப்புதல் வேண்டுமென்று, ஏடு பெயர்த்து எழுதிய எவரோ ஒருவர் உரை காண்பதற்கு முற்படவே மூலநூல் பாடத்தொடு ஒட்டுப் போட்டுவிட்டார்! ஒட்டு ஒட்டே என்பதைத் தேற்றேகாரம் காட்டித் தந்து விடுகிறது. ஆறாடாயம் : ஆறு + ஆடு + ஆயம் = ஆறாடாயம் = ஆற்றுநீரில் விளையாடும் கூட்டம். ஆறாடாயமொடு அணிவிழா அமர்தல் - பெருங். 2:11:35 பொருள்: நீர் விழா ஆடும் மகளிர் குழுவொடு மகிழ்தல் ஆறு : 1. நிலத்தை ஊடறுத்துக் கொண்டு செல்லும் நீர்ப்பெருக்கு ஆறிடு மேடும் மடுவும் போலாம் செல்வம் -ஔவை. தனிப். 2. ஆறு = நன்னெறி ஒழுக்காறாக் கொள்க -திருக். 161 3. ஆறு = வழி அறத்தாறு இதுவென வேண்டா -திருக். 37 4. ஆறு என்னும் எண். ஆறறி வதுவே அவற்றொடு மனனே -தொல்.1526 5. ஏவல். ஆறுவது சினம் -ஔவை . ஆத்தி.2 ஆறுகள்: அடையாறு = கடலை அடைய நெருங்கும் ஆறு. அரிசில் ஆறு = சிற்றூறலாய்ப் பெருகி வரும் ஆறு. அரிசில் = சிறிது சிறிதாய் அரித்து வருவது. ஆளியாறு = அரிமாப் பாய்ச்சலென வரும் ஆறு. உப்பாறு = உவர்நிலம் வழிவரும் ஆறு. உள்ளாறு = பேராற்றின் ஊடமைந்த ஓடை வழிச் செல்லும் ஆறு. கண்ணாறு = மடையில் இருந்து வரும் ஆறு. கயத்தாறு = குளத்தில் இருந்து வரும் ஆறு. காட்டாறு = காட்டுவழி வரும் ஆறு. குடமுருட்டியாறு =வளைந்து உருட்டி ஓடும் சிற்றாறு. குண்டாறு = ஆழமாகச் செல்லும் ஆறு. கொடுமுடி = வளைந்தோடிச் செல்லும் ஆறு. கொள்ளிடம் = பேராற்றில் மேற்படும் பெருக்குநீர் வழிந்தோடும் ஆறு. கோட்டாறு = வளைந்து வரும் ஆறு. சிற்றாறு = சிறிய ஆறு. சுருளியாறு = சுருண்டோடும் சுழல்மிக்க ஆறு. சுள்ளியாறு = வெதுப்பமான நீரோடும் ஆறு. சேயாறு = செந்நிலத்து வழிவரும் ஆறு. சோலையாறு = சோலைகளின் ஊடு வரும் ஆறு. தெள்ளாறு = தெளிந்த நீரோடும் ஆறு. நெட்டாறு = நெடிய ஆறு. நொய்யலாறு = சிறுவரத்தமைந்த ஆறு. பாலாறு = வெண்ணிற ஆறு. பெண்ணையாறு= பனைமரக் காட்டிடையே வரும் ஆறு. பேராறு = மிகப்பெரிதாய் ஓடும் ஆறு. பேரியாறு = பெரிய ஆறு. மணலாறு = மணல் வெளிப்பட ஓடும் ஆறு. மண்ணியாறு = நீராடுதுறை மிக்க ஆறு. மலட்டாறு = நீர் வரத்திலா ஆறு. வலஞ்சுழி = வலமாகச் சுழித்து ஓடும் ஆறு. வறட்டாறு = வறண்டு போய ஆறு. வானியாறு = உயரமான மலையில் இருந்து வரும் ஆறு. வெட்டாறு = புதுவதாக வெட்டி அமைக்கப் பட்ட ஆறு. வெள்ளாறு = வெள்ளப் போது மட்டும் பெருகி வரும் ஆறு. வைப்பாறு = நிலத்தடி நீர் கொண்டு உதவும் ஆறு. மேலும் அறிய கல்லாறுகாண்க. ஆற்றுப் பெயர்கள் ஊர்ப்பெயராகவும் இருத்தல் அறிக. * ஆற்றுவகை காண்க. ஆறு வழியாக வருசொற்கள்: நீர் நிலத்தை அறுத்துக் கொண்டு ஓடுவதால் பெற்ற பெயர் அறு > ஆறு. ஆற்றங்கரைகளே மக்கள் மா ஆயவற்றின் நடை வழியாக இருந்தமையால் ஆறு என்பதற்கு வழி என்னும் பொருள் உண்டாயது. ஆற்றங்கரைகளே மக்கள் குடியிருப்பிடங்க ளாகவும், விளைவிடங்களாகவும் ஆகியமையால், உலக முழுவதும் ஆற்றங்கரை நாகரிகம் சிறந்து விளங்கியது. ஆறு வழியாக வந்த சொற்கள் மிகப்பல. அறத்தாறு = அறவழி. புறத்தாறு = அறத்திற்கு மாறான வழி மறத்தாறு = வீரவழி, பாவ வழி. நல்லாறு = நல்வழி. அல்லாறு = நல்லதற்கு மாறாம் வழி. அழுக்காறு = அழுக்கு வழி, பொறாமை. ஒழுக்காறு = ஒழுக்க வழி. இழுக்காறு = இழுக்கும் வழி, பழிவழி. இழுக்கு = இழிவு. ஆகாறு = ஆகும் வழி; கால்வாய் ; வரவு. போகாறு = போகும் வழி ; வாய்க்கால் ; செலவு. இன்னவை பண்படிப்படை யுடையவை. ஆறுதல் தேறுதல் : ஆறுதல் =மனம் ஆறுதற்குத் தக்கவற்றைக் கூறுதல் தேறுதல் = ஆறிய மனம் தெளிதற்குத் தக்கவற்றைக் கூறுதல் நிகழாதவை நிகழ்ந்த காலையில் ஆறுதல் தேறுதல் இன்றித் தவிப்பார் உளர். அந்நிலையில் ஆறுதல் தேறுதலாய் அமைவார் அரியரும் அருமையாருமாம். கெட்ட காலை விட்டர் என்னாது, நட்டோர் என்பது நாட்டினை நன்றுஎன்பது பெருங்கதை (2: 9: 118-119) இளைப்பாறுதல் , களைப்பாறுதல், ஆகியவற்றினும் மன ஆறுதல் அருமையே! தேர்வுகளில் தேறுவாரும் முதன்மையில் முதன்மையாய்த் தேறுவாரும் மனத்தில் தேறுதல் கொண்டா ராய்க் காணல் அருமையே! ஆறுமணி (சடானனம்) : நான்மாணி மாலைக்குரிய வெண்பா, கலித்துறை, அகவல் , விருத்தம் இவற்றுடன் கலிப்பாவும், தாழிசையும் இயன்று அறுமணியாகித் தொடர்வது ஆறுமணி (சடானனம்) எனப்படும். கலிப்பாவும் தாழிசையும் நான்மணிமேற் காட்டல் நலத்துறு சடானன நற்பா என்பது பிரபந்தத் திரட்டு (13) * நான்மணி மாலைகாண்க. ஆறெழுத்தழகு: ஆறெழுத்தழகு =ஆறெழுத்து அலங்காரம். திருமுருகன் ஆறெழுத்துளைப் பற்றி நூறு பாட்டுப் பாடுதல் ஆறெழுத் தணியாம். ஆறு எழுத்து சரவணபவ முருகாய நம என்பவை. தண்டபாணி அடிகள் ஆறெழுத்தலங்காரம் பாடி யுள்ளார். அதிலுள்ள பாடல்கள் மொத்தம் 103. ஆற்றமாட்டாதவன்: எச்செயலையும் செய்ய இயலாதவனை ஆற்றமாட்டாதவன் (ஆத்தமாட்டாதவன்) எனப் பழிப்பர் . ஆற்றுதல், செயலாற்றுதல். ஒன்றுக்கும் உதவாதவன், உழையாதவன் என்பது பொருளாம். ஆற்றுதல் என்பதொன் றலந்தவர்க் குதவுதல் -கலித். 133 ஆத்தமாட்டாதவனுக்கு ஐம்பத் திரண்டு அறுவாள் என்பது பழமொழி. இது பொது வழக்கு ; பெருவழக்கு. ஆற்றல்: போர்த்திறம்; அழிப்பாற்றலால் அமைதிப்பணி யாற்றல் அது. ஆற்றல் மாண்பை உலகம் ஆண்மையினிடம் (ஆளுமை யுடையாரிடம்) மிக முந்தை எதிர்பார்க்கிறது. ஆதலால், முழு முதல் இலக்கண ஆசிரியர் தொல்காப்பினார். ஆற்றலொடு புணர்ந்த ஆண்பால் -தொல். 1549 என்றார். போரில்லாத உலகைக் காண வேண்டும் எனின் அதற்கும் அறப்போரோ மறப்போரோ செய்தே ஆக வேண்டியுள்ளது. உலக அமைதிக்கென நிறுவப் பெற்றுள்ள அனைத்து நாடுகளின் அமைப்பும் உலக அமைதி காக்கப் படை வைத்திருத்தலும், போர் செய்தலும் வேண்டியே உள்ளன. ஆகலின், பகை அழித்தல் ஓர் ஆற்றலாக உலகம் கொண்டுள்ளது என்பது வெளிப்படை. அரைசுபடக் கடக்கும் ஆற்றல் -பதிற்.34 உறுமுரண் கடந்த ஆற்றல் -புறம். 135 அருஞ்சமம் கடக்கும் ஆற்றல் -புறம்.397 அரும்பகை தாங்கும் ஆற்றல் -தொல்.1022 அருங்குறும்பு எறிந்த ஆற்றல் -அகம்.342 இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றல் -மலை.73 பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல் -புறம் .229 அமர்க் கடந்த நின் ஆற்றல் -புறம்.66,99 இவை பகை கடக்கும் ஆற்றல். புறப்பகையை அடக்குதலினும் அகப்பகை அடக்குதலே அருமை என்னும் கருத்துச் சான்றோரிடையே அரும்பியது. புலன் ஐந்தும் வென்றான்தன் வீரமே வீரம்எனப் போற்றப் பெற்றது. அத்தகைய அடக்கத்தரைப் பெருவீரர் (மகாவீரர்) எனவும் பாராட்டினர். நோற்றலின்ஆற்றல் என்றார் திருவள்ளுவர் (269) அவரே ஐந்தவித்தான் ஆற்றல் பற்றியும் உரைத்தார்(25). மாறுபட்டு நிற்பார் மாறுபாட்டை அகற்றுதலும் எளிய செயல் அன்று;அருஞ்செயலே; ஆகலின், அதனைப் புணர்த்தல் ஆற்றல்என்றார் தொல்காப்பியனார்(1075). ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து) ஊதியம் இல்லை உயிர்க்கு -திருக். 231 என்னும் தெளிவுடையவரே கொடையாளராகத் திகழ்வர். அத் தகையர் அருமையைத் தாதா கோடிக்கு ஒருவர் என்பர். ஆகலின், ஓம்பாது ஈயும் ஆற்றல் புறநானூற்றில் புகழ் பெறுகிறது(22). இனி, வள்ளுவர் மூன்று தலையாய ஆற்றல்களைக் குறிக்கிறார். அவை, ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் -திருக். 225 ஆற்றுவார் ஆற்றல் இகழாமை -திருக். 891 ஆற்றுவார் ஆற்றல் பணிதல் -திருக்.985 என்பவை அவை. பசியாற்றுதலை, வாடுபசி ஆற்றிய பழிதீர் ஆற்றல் என்று புகழ்ந்து பாடும் புறநானூறு(227). பெருமை, அறிவு, முயற்சி என்னும் மூன்றையும் ஆற்றல் என்று சூளாமணி சொல்லும். அதற்கு மேம்பட்ட ஆற்றல் சூழ்ச்சி என்னும் அது. ஆற்றல் மூன் றோதப் பட்ட அரசர்கட் கவற்றின் மிக்க ஆற்றல்தான் சூழ்ச்சி என்ப -சூளா.250 என்பது அது. தன்னுயிர் கொடுத்தல் அருமையினும் அருமைப்பட்டது. பொன்னைக் கொடுப்பாரும் தன்னைக் கொடுத்தல் அரிதே காண்! அதனைக் கொடுக்கும் ஆற்றலை, ஆற்றலோ டாண்மை தோன்ற ஆருயிர் வழங்கி வீழ்ந்தார் என்கிறது சிந்தாமணி(2267). எடுத்த செயலை இடைத்தடையின்றி இனிது நிறைவேற்று தலும் ஆற்றலே. அது தொழிலாற்றல் (பதிற்.28) என்பது. இவற்றுள் எல்லாம் அகற்றலே ஆற்றலாய் அமைந்துள்ள சீர்மை அறிக. ஆற்றல் என்பதற்கு அகர முதலி நூல்கள், அறிவு ஒத்தல், கூட்டல், செய்தல், தணித்தல், தாங்குதல், நிலைபெறுதல், நீங்குதல், பெருமை, பொறுத்தல், முயற்சி, வலிமை, வன்மை, வெற்றி இன்ன பல பொருள்களைத் தருதலும் கருதுக. ஆற்றி(அகற்றி): ஆற்றி என்பது ஆத்தி எனப் பன்றியைக் குறிக்கும் சொல்லாகக் குற்றாலப் பகுதியில் வழங்கப்படுகிறது. திறந்த வெளியில் கழித்தலும் அதனை உண்டு கழித்தலும் (அகற்றலும்) கருதி இட்டு வழங்கப்பட்ட பெயர் இது. வெளியே வந்தால் உள்ளே போ என்னும் நிலைமை இல்லாமையால், ஏற்பட்ட இழிமையும், அடைத்து உணவு இட்டு வளர்க்காத இழிமையும் விளக்கும் பெயர் இது. ஆற்றுச்சிறப்பு(நதிவிசேடம்): தலைவன் நாட்டின் ஆற்றினைச் சிறப்பித்து, மற்றை ஆறுகளின் இயலை இகழ்ந்து காமுகர் கூடும் குறியிடத்திற்கு ஆற்றில் அடித்து வரப்படும் மலரை உவமையாக்கிக் கூறுதல் ஆற்றுச் சீர் என்னும் நதிவிசேடமாம். இறைவன் நதியை எடுத்துமற்ற வற்றைக் குறியிகழ்ந்து காமக் குணத்தார்-குறியிடத்துக் காற்று மலரையுவ மானித்தல் எந்நாளும் ஆற்ற நதிவிசே டம் -பிர. திர.66 காற்றுக்கும் மலருக்கும் உவமையாக்கிக் கூறுதலுமாம். ஆற்றுதல்: அகற்றுதல் என்பது ஆற்றுதல் ஆயிற்றாம், புகட்டுதல் என்பது போட்டுதல் என்று ஆயினாற் போலப், பசிமிக்குக் கிடந்தாரின் பசி வெப்பு அகலுமாறு உண்பித்தல் ஆற்றுதலாம். பசியாறல் பசியாற்றல் என்பன வழக்குகள். ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் -கலித்.133 என்பது நெய்தற் கலி. பசியாறி விட்டீர்களா? என ஒருவரைக் காணுங்கால் வினவுதல் மலையகத் தமிழர் வழக்கு. ஆற்றுப்படை : பரிசு பெற்று வருவார் ஒருவர், பரிசு பெறக் கருதிப் போவார் ஒருவரை வழியிடைக் கண்டு, தாம் பெற்ற வளத்தையும், அதனை அருளிய தலைவன் நாடு, ஊர், புகழ், கொடை முதலியவற்றையும் கூறிப் பரிசு பெற்று வர வழிப்படுத்துதல்- ஆற்றுப்படுத்துதல் - ஆற்றுப்படை யாகும் இதனை, கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கம் என்று கூறும் தொல்காப்பியம் (பொருள்.91) புரவலன் பரிசில் கொண்டு மீண்ட இரவலன் வெயில்தெறும் இருங்கானத் திடை வறுமை யுடன்வரூஉம் புலவர் பாணர் பொருநர் விறலியர் கூத்தர்க் கண்டப் புரவலன் நாடூர் பெயர்கொடை பரா அய் ஆங்குநீ செல்கென விடுப்பதாற் றுப்படை எனப் புலவரையும் இணைத்துக் கொண்டார் பன்னிரு பாட்டிய லுடையார்(320). ஓங்கிய அதுதான் அகவலின் வருமே புலவராற் றுப்படை புத்தேட்கு முரித்தே என யாப்பையும் உரைத்து புலவராற்றுப் படைக்கொரு விளக்கமும் தருகிறது அப்பன்னிரு பாட்டியல்(321-22). புலவர்கள் வாழ்த்துநலம் நிறைந்த பொருநைப் பாணரைக் கூத்தரை நீள்நிதியம் பெறும்படி ஆற்றுப்படுப்பன ஆசிரியம் பெறுமே என்று நவநீதப் பாட்டியல், ஆற்றுப் படையே அகவல் பாவால் விறலி பாணர் கூத்தரில் ஒருவர் பரிசுக்குச் சென்ற பாவலர் புகழும் கொடையும் கொற்றமும் வழியிடைக் கூறலே என்று பிரபந்த தீபமும் ஆற்றுப்படை இலக்கணத்தை எளிவரக் கூறும். திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறு பாணற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்) என்பவை பழமையான ஆற்றுப்படை நூல்கள். சங்கப் பாடல்கள் வேறு சிலவற்றிலும் ஆற்றுப்படையுண்டு. இவற்றுள் வரும் செய்தியைக் கொண்டே, ஆற்றுப்படை இலக்கணம் தோற்றியதெனலாம். மாணாக்கர் ஆற்றுப்படை, ஆசிரியர் ஆற்றுப்படை, தொண்டர் ஆற்றுப்படை, தமிழ்மகள் ஆற்றுப்படை எனக் காலத்துக்கேற்ற புதுப்பொருட்கு இருப்பாகவும் ஆற்றுப்படை பெருகி வருகின்றது. ஆற்றுவகை: ஆறு = வழிநடையாகக் கரை அமைந்த ஆறு. உந்தி = சுழல் உடைய ஆறு. ஒலியல் = நீண்டு பெருகி ஓடும் ஆறு. ஓணம் = எழுந்தும் விழுந்தும் ஓடும் ஆறு. குடிஞை = குடிநீர்க்கு உதவும் ஊற்றினை மிக்கஆறு. சிந்து = அலைநீர்த் துளி கரைமேல் எழ விரைந் தோடும் ஆறு. தடினி = மழை பெய்யும் போது மட்டும் ஓடும் ஆறு. திரை = திரை பெருகி எழப் பொங்கி ஓடும் ஆறு. துறை = ஆடுதுறை கூடுதுறைகளையுடைய ஆறு. துனி = வறண்ட சிற்றாறு. புனல் = பூவும் நுரையும் பொங்கிப் பெருகி யோடும் ஆறு. வருபுனல் = வற்றாமல் காலமெல்லாம் ஓடும் ஆறு. * ஆறுகள் காண்க. ஆனந்தக் களிப்பு: அனந்தம் > ஆனந்தம். அனந்தம் = அளவில்லாமை; ஆனந்தம் = அளவிலா மகிழ்வு. இரண்டடிகளாய் ஓரெதுகை யுடையதாய் ஒவ்வோர் அடியும் மூன்று சீர்களும் தனிச் சொல்லும், பின்னும் நான்கு சீர்களும் உடையதாய்ச் சிந்து நடையில் வருவது ஆனந்தக்களிப்பு எனப்பெறும். கடுவெளிச் சித்தர் ஆனந்தக் களிப்பும், வள்ளலார்ஆனந்தக் களிப்பும் காண்க. நந்த வனத்திலோர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டு வந்தானொரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி இவ்வாறு முப்பத்து நான்கு பாடல்களை உடையது கடுவெளிச் சித்தர் ஆனந்தக் களிப்பு. இதன் எடுப்பு, பாபம்செய் யாதிரு மனமே - நாளைக் கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான் என்பதாம். ஞான மருந்திம் மருந்து - சுகம் நல்கிய சிற்சபா நாத மருந்து என்னும் எடுப்பும் அருட்பெருஞ் சோதி மருந்து - என்னை ஐந்தொழில் செய்தற் களித்த மருந்து பொருட்பெரும் போக மருந்து - என்னைப் புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து என்பது முதலாகத் தொடுப்பும் அமைவது வள்ளலால் ஆனந்தக் களிப்பு. இவ்வானந்தக் களிப்பின் இயைபும் வெண்டளைச் சீர்மையும் சந்தமும் இனிக்க இயலல் அறிக. தனித்தொகுதியாம் அளவுக்கு ஆனந்தக் களிப்புப் பாடிய வள்ளலார் ஆனந்த மேலீடும் பாடுகிறார். ஆனந்தப் பெருக்கில் இசையொடு இசைக் கருவியும் இயையும் என்பதை வெளிப்படுத்துகிறார். ஊதூது சங்கே என்றும், சின்னம்பிடி என்றும் வரும் முழக்குச் சொற்களால் இதனை அறியலாம். ஆனந்தக் களிப்பு இவ்விலக்கணம் அமைய நான்கடிப் பாடலாக வருவதும் உண்டு. ஆனந்தப் பையுள்: மகிழ்வொடு கூடிய துயர்; துயரையும் தாங்கித் துயர்க்குத் துயர் செய்யும் துணிவு. இடும்பைக்கு இடும்பை படுப்பதும், துன்பத்தைத் துன்புறச் செய்யும் துணிவும், இடுக்கண் வருங்கால் நகுதலும், இன்பத்துள் இன்பம் விழையாமையுமாம் இயல்பும் உடைமையாவது உள்ளமுடைமையே என்னும் உறுதிப்பாடும் உடையார் இயல்பு ஆனந்தப் பையுள்- தாமே தாங்கிய தாங்கரும் பையுள் -தொல். 1025 ஆனந்தம்: அனந்தல் = கடல், விரிந்தது, வளமிக்கது. அனந்தம் = மிகுதி. அனந்தம் >Mdªj«. உளதாகிய - உளத்தாகிய - பெருமகிழ்வு ஆனந்தமாம். நந்துதல் - மிகுதல்; குறைவில்மை. குறைவில்லா விளக்கு, நந்தா விளக்கு எனப்படும் . நுந்தா விளக்கு என்பதும் அது. நந்தா விளக்கே நாமிசைப் பாவாய் - மணிமே. 14: 18 மூதானந்தம் , ஆனந்தப் பையுள் என்பவை புறத்துறைகள் (தொல். 1025). அவலத்தையே ஆனந்தமாகக் கொண்ட அகநிலைப் பாடுகள் இவை. ஆதலால், அல் + நந்தம் = அனந்தம் > ஆனந்தம் எனப்பட்டதாம். மெய்யாகக் கழிவிரக்கம் உள்ளதைக் களிப்பாகக் கொண்டமையால் அல் நந்தம் ஆனந்தம் ஆயது என்க. * ஆனந்தப் பையுள் , மூதானந்தம் காண்க. ஆனாயர் : ஆன் + ஆயர் = ஆனாயர்; ஆயருள் ஆக்களை மட்டுமே மேய்ப்பார் ஆவினத்தாயர், ஆனாயர் எனப்படுவார்; கோவலர் என்பாரும் அவர். கோ = பசு. நாயனார் அறுபத்து மூவருள் ஒருவரான ஆனாய நாயனார். ஆவினத்தாயர் ஆவர். கலித் தொகை ஆயர் பிரிவுகளைக் காட்டும் (102). கோட்டினத்து ஆயர் = எருமை வளர்ப்பார் கோவினத்து ஆயர் = ஆன் வளர்ப்பார் புல்லினத்து ஆயர் = ஆடு வளர்ப்பார் ஆனால் : ஆனால் : 1 ஒருவர் ஒன்றைச் சொல்ல ஒப்புவது போல் ஒப்பி, ஒரு வகையால் மறுப்புக் கூறுவார். ஆனால், அப்படி ஆனால், அவ்வாறானால்என்று தொடங்குவது கேட்கிறோம். நீங்கள் சொல்லியபடி நடந்தால் நிகழ்ந்தால் இவ்வாறாம் என மறு கருத்தொன்றைக் கூறுவார் தொடங்கும் தொடக்கச் சொல் இது. எ-டு: வருவான்; ஆனால் வராமலும் இருப்பான் போகலாம்; ஆனால் பணம் வேண்டுமே ஆனால் : 2 ஆயினால் என்னும் பொருள் தருவது. எ-டு: “எப்படியானால் எனக்கு என்ன?”, ஏதானால் என்ன?. ஆனானப் பட்டவன்: ஆன + ஆன + பட்டவன் =ஆன ஆனப்பட்டவன் = மிகப் பெரியவன். ஆனவன் என்பது பெரியவன் என்னும் பொருளது. ஆகி வந்தவன் என்பது போன்ற வழக்கு அது. ஆளாதல் பெரிய வளாதல் என்பவற்றில் வரும் ஆக்கப் பொருள் ஆதல் போல் ஆனவன் என்பது வந்ததாம். ஆனவன் என்பது இருமுறை யடுக்கி ஆனானப்பட்டவன் என்றாகியது. ஆனானப் பட்டவனெல்லாம் ஆலாகப் பறக்கும் போது இவனெல்லாம் எந்த மட்டுஎன்பது வழக்கு. அம்மி பறக்கும் ஆடிக் காற்றில் எச்சில் இலை எம்மட்டுஎன்பது போன்ற வழக்குத் தொடர் ஈதாம். ஆனிலை : ஆன் + நிலை = ஆனிலை. கருவூர்த் திருக்கோயில் திருவானிலையாம். ஆனிலை அப்பர் என்பது இறைவன் பெயர். ஆன் பொருநை, ஆன் பொருந்தம் என்னும் ஆறு, கருவூர்ப் பக்கம் செல்லும் ஆறு. அது ஆம்பிரவதி என வழங்குகிறது. விண்ணுலகம் ஆனிலை யுலகம் என வழங்கப்பட்டது. கோவுலகம் என்பதும் அது. மேலது ஆனிலை உலகம் -புறம்.6 மேலது ஆகிய கோவுலகம்என்கிறது புறநானூற்றின் பழைய உரை ஆவும் கோவும் - ஆன் (பசு) என்பதே. ஆனிலைப் பள்ளி : ஆன் வளம் கொள்ளும் ஆயர் குடியிருப்பு. பள்ளி ஊர்ப் பெயராதல், திருச்சிராப்பள்ளி. ஆனிலைப் பள்ளி அளைபெய் தட்ட வானிணம் உருக்கிய வாஅல்வெண் சோறு - அகம். 107 ஆனை: யானை என்பது யகர ஒற்றுக் கெட்டு ஆனை என வழங்கும். ஆறு (யாறு), ஆடு (யாடு) என்பவை போல. யானை (ஆனை) பரு அல்லது பெரு விலங்கு ஆதலால் ஓரினத்தில் பருத்ததை ஆனை என அடைமொழி தந்து வழங்குவர். எ-டு: ஆனைக்கோரை, ஆனைத்தும்பை, ஆனை நெருஞ்சி, ஆனைப் பிரண்டை, யானைக்கால் நோய் ஆனைக்கால் எனவும் வழங்கும். ஆனைத் தொழில்: ஆனை பிறந்த நாடு, அதன் குலநன்மை, அதன் உயர்ச்சி, அளவு, அகவை, சினத்தின் பொருட்டால் நிலை நின்று நீக்குதல், சினத்தால் கொலை புரிதல் ஆகியவற்றைக் கூறிப் பின்பு அரசன் அதனை அணையிற் பிணித்தவாறும் வஞ்சிப்பாவால் கூறுதல் ஆனைத் தொழிலாகும். ஆனைத் தொழில் அருந்தொழில் என்பது. இவன் பெரிய ஆனைத் தொழிலைச் செய்யா நிற்க என்னும் ஈட்டுரையால் (7:4:3) புலப்படும். பிறந்த நிலம்குலம் ஓக்கம் அளவு பிராயம் எழில் சிறந்த மாக்கோபக் கிரமத்தில் விட்டகதிர் சினத்தால் இறந்துயிர் கோடல் செயக்கண்டிறை கந்தினிற் பிணித்தல் உரைத்திடும் வஞ்சி உரமுடை யானைத் தனித் தொழிலே - நவநீத. 49 இவ்வானைத் தொழில் இலக்கணத்தை. மூவகை நிலனும் மூவகை நிறைவும் பல்வகைத் தேயமும் எழுவகை உறுப்பும் வருணமும் யாண்டும் ஐவகைக் கொலையும் இருவகை நடையும் ஐவகை உணர்வும் உடையோர்ப் பேணலும் உளப்படப் பிறவும் கண்ணிய வேளாண் பாவின் நலம்பெற எண்ணி உரைப்ப தியானைத் தொழிலே எனப் பன்னிரு பாட்டியல் பகரும். ஆனைத் தொழிலை அகவற் பாவால் இயற்றதலும் உண்டு என்பதை, அகவலும் உரித்தென அறைகுநர் உளரே - பன்னிரு. 282 என்பதனால் அறியலாம். ஆனைந்து: ஆன் ஆய பசு பால் என்னும் அமுது ஒன்றைத் தந்தாலும், அப் பால் வழியாகப் பெறும் வளங்கள் ஐந்தாம். அவை ஆனைந்து எனப்படும் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் என்பவை. அவ்வைந்தும் ஒன்றுளே ஓரைந்து உளதாதல் பற்றி இதனைச் சிறப்பிக்கும் வகையால் ஆனைந்து என்றனர். இனி நீர் மலம் என எண்ணின் தோல், கொம்பு எனப் பிறவும் உளவாதலால் அவ்வாறு எண்ணுவதில்லை. ஆனை விருத்தம்: யானையைப் பற்றிப் பத்து ஆசிரிய விருத்தம் பாடுவது ஆனை விருத்தம் என்னும் சிறு நூலாம் (நவநீத. 41). ஆனையைப் பற்றி வெண்பாவினால் பாடுதலும் உண்டு என்றும் அதற்கு ஆனைப்பா என்பது பெயர் என்றும் பிரபந்தத் திரட்டுக் கூறும். விரி > விரிவு > விருத்தம், விருத்தி. நாற்சீர் அளவடியின் மிக்கு வருவது விருத்தமாம். ஆன்: மா என்னும் ஒலியால் மாடு எனப் பெற்றது ஆன்; அது கட்டப்பட்ட இடம் மாடு - பக்கம் - எனப்பட்டது. வீட்டை அடுத்தே கட்டியதால்! மாடு உழவுக்கும் வருவாய்க்கும் மூலமாக இருந்தமையால் மாடு செல்வம் எனப்பட்டது. ஆனை உயிராகப் போற்றிமையாலும் அன்னை எனப் போற்றியமையாலும் ஆன்மா என்பது உயிர்க்கு ஆகியது. போர்க்காலத்தும் அது துயருறக் கூடாதென்று ஆதந்தோம்பல் போரறமாகக் கொள்ளப்பட்டது. சிவனியம் மாலியம் இரண்டும் ஆவையும் ஆனையும் போற்றின. சான்று காளையும் ஆனுமாம் (பக). ஆன்மா என்பது ஆத்மா எனப்பட்டது. ஆனிலையப்பர் பசுபதீசுவரரானார். ஆ ஆன் ஆனது என்பதை. ஆ மா கோ னவ் அணை யும்மே என்றது நன்னூல் (248). குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள் அளைவிலை உணவிற் கிளையுடன் அருத்தி நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள் எருமை நல்லான் கருநாகு பெறூஉம் - பெரும். 162- 165 கருங்கல் இடைதோ றானிற் பரக்கும் யானைய முன்பிற் கானக நாடனை நீயோ பெரும - புறம். 5 ஆன்பயம்: பயம் = பயன். ஆனின் பயனாம் பால் தயிர் மோர் வெண்ணெய் நெய் என்னும் ஆனைந்து ஊன்கொண்ட வெண்மண்டை ஆன்பயத்தான் முற்றழிப்பவும் - புறம். 386 ஆன்பொருநை: மலைநாடு வானவர் நாடு எனப்படும். அம்மலையின் உயரத்தில் இருந்து வீழும் அருவியொடு கூடிய ஆறு வானி எனப்பட்டது. பின், வான் பொருந்தம் > ஆன் பொருந்தம் > ஆன் பொருநை யாயது. இதுகால் ஆம்பிரவதியாக ஓடுகிறது. பல ஆறுகள் பொருந்தும் பேராறு பொருந்தமாம். பொருநை என்பதும் அது. செந்தமிழும் சந்தனமும் திசையெல்லாம் பரிமளிக்க மந்தவளி உமிழ் மலைய வளர்குடுமி நின்றிழிந்து கொந்தவிழு மலர்வீசிக் குளிர்கெழுமுத் தெடுத்துறைத்து முந்தவெழு புனற்பொருனை முழுவளத்த தந்நாடு என்பது பொருநை வளப்பாடல் (குமரகுருபரர்). பொருநை = தாம்பிரவருணி. ஆன்றோர்: அகன்றோர் > ஆன்றோர். அறிவான் அகன்றோர்; பண்பால் நிறைந்தோர். ஆலுதல் = நிறைதல். அகலுதல் இடத்தால் அகலுதல், அறிவால் அகலுதல், கேள்வியால் விரிதல் என விரிந்து பண்பால் விரிந்தவர் என்னும் பொருளும் தருவதாயிற்று. இடத்தால் அகன்றவர் இருவகையர், பொருள் முதலியவை தேடவும் போர், தூது எனச் செல்லவும் பிரிவோர் தம் இடம் விட்டுப் பிறிதோர் இடத்திற்குச் சென்றவர். அவர் அகன்றோர் என்றே சொல்லப்பட்டார். ஆன்றோன், ஆன்றோள் எனப்பாற்படுத்தும் வழக்கமும் பண்டே இருந்தது. ஆன்றோள் கணவஎன்பது பதிற்றுப்பத்து (55). *அகன்றோர் காண்க. ஆன்றோர் :1 ஆன்றோர் = தேவர், மண்ணக வாழ்வு முடிந்து விண்ணகம் சென்றாராகக் கொள்ளப்பட்ட இறந்தோர் ஆன்றோர் (தேவர்) எனப்பட்டனர். நீங்கி ஆன்றோர் அரும்பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும், சென்றுதாம் நீடலோ இலரே - அகம். 213 என்றது தேவரைக் குறித்தது. ஆன்றோர் : 2 ஆன்றோர் = துறவர். உண்ணாமையின் உயங்கிய மருங்கின் ஆடாப் படிவத்து ஆன்றோர் -அகம். 123 என்றது துறவரைக் குறித்தது. இல்லறம் துறந்தவர் ஆகலின் இவர் அகன்றோர் > ஆன்றோர் எனப்பட்டார். ஆன்றோர் : 3 ஆன்றோர் = சான்றோர் நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி ஆன்றோர் செல்நெறி - நற். 233 என்றது சான்றோரை ஆன்றோர் என்றதாம். அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க் கில்லை -குறுந். 184 ஆன்றோர் செல்நெறி வழாஅச் சான்றோன் ஆதல் நன்கறிந்தனை தெரிமே -நற். 233 ஆன்றோர், சான்றோர் வேறுவேறு ஆதல் காட்டினார். இருவர் இயல்பும் இணைதல் கண்டே ஆன்றோர் சான்றோர் வேறுபடா வழக்கில் அமைந்து ஒருமையாதல் சிறப்பும் கொள்ளப்பட்டதாம். ஆன்றோர் : 4 ஆன்றோர் = கணவன், பிரிவுற்ற தலைவனை ஆன்றோர் என்பதும் அருகி வழங்கியது என்பது. மான்கண் மகளிர்க் கான்றோர் -புறம். 374 என்றதால் புலப்படும். ஆன்றோர் : 5 ஆன்றோர் = கேள்வியர். செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து - திருக். 413 என்றது கேள்வி அறிவு மிக்காரைக் கூறியதாம். அவியுணவின் ஆன்றோர் வாய்ச்சுவையாம் உணவைத் தேடித் தேடி உண்ணும் பேருண்டியர் போலச் செவிக் சுவையாம் கேள்வியைக் கேட்டுக் கேட்டுத் திளைப்பவர்.  இ வரிசைச் சொற்கள் இ:1 தமிழ் அகர வரியின் மூன்றாம் எழுத்து: உயிர்க்குறில்; மேற்பல்லின் அடியை நாவின் அடி விளிம்பு பொருந்துவதாலும் கண்டத்தின் காற்றாலும் வெளிப்படும் ஒலி. இஈ எஏ ஐஎன இசைக்கும் அப்பால் ஐந்தும் அவற்றோர் அன்னஅவைதாம். அண்பல் முதல்நா விளிம்புறல் உடைய - தொல். 86 இ:2 சுட்டெழுத்து: இவன், இவள், இவர், இது, இவை (அகச் சுட்டு), இவ்வீடு, இச்சோலை (புறச்சுட்டு). இ:3 அரை என்னும் எண்ணுக் குறி. எ-டு: க இ; ஒன்றரை. இ:4 ஈகார அளபெடையின் இன எழுத்து. எ-டு : ஒரீஇ ; தழீஇ. இ:5 வினை எச்ச ஈறு. எ-டு: இன்றி. இ:6 தொழிற்பெயர் ஈறு. எ-டு : அறிவி இ: 7 இ எனப் பல்லைக் காட்டுதல். எ-டு : இ எனப் பல்லைக் காட்டினால், நீ செய்தது மறந்து போகுமா? இ என்று பல்லைக் காட்டி நிற்க உனக்கு வெட்கமா யில்லை! என்பவை மக்கள் வழக்கு. இஃது : இது என்பதற்கு முன் உயிர் முதன் மொழி வந்தால், இது என்பது இடையே ஓர் ஆய்தம் பெற்று இஃது என ஆகும். ஏஎ இஃதொத்தன் நாணிலன் -கலித். 62 ஒத்தன் = ஒருத்தன். இ முன் உயிர் வரல் உயிரொடு உயிராம். அவ்வாறு ஒன்றா. ஓர் ஒற்று அல்லது உடம்படு மெய் வருதல் வேண்டும். ஆய்தம் ஒற்றியல் உடையதாகலின் அது வந்தது. * உடம்படுமெய் காண்க. இகணை : இகண் + ஐ = இகணை. அகண் > இகண். இகத்தல் = கடத்தல். மற்றை மரங்களினும் உயர்ந்து பொலிவுடன் விளங்கும் மரம் இகணையாம். விசும்புற நிவந்த மாத்தாள் இகணை - அகம். 131 நிவந்த = உயர்ந்த. இகத்தது: இகம் + அத்து + அ+து = இகத்தது. அகத்தது = உள்ளடங்கியது; அகரச்சுட்டு. இகத்தது = உள்ளடங்காது கடந்தது; இகரச்சுட்டு. கடத்தல் : காணா வகையில் பொழுது நனி இகப்பினும்- தொல். 1055 நீங்கல் : பதிஇகந்து நுகர்தலும் -தொல். 1137 மிகுதல் : அடி இகந்து வரினும் கடிவரை இன்றே - தொல். 1439 இகரம்: இ+கரம் = இகரம். கரம் = சாரியை. அகர இகரம் ஐகாரம் ஆகும் -தொல். 54 இக்கின் இகரம் இகரமுனை அற்றே -தொல். 126 இகலன்: இகலன் : 1 இகல் + அன் = இகலன். இகலன் = நரி, இகல் = பகை; இகலன் = பகைவன். இப்பெயர் ஆயரால் நரிக்கு இடப்பட்டதாதல் தெளிவு. எத்தனை காவல் இடையேயும் புகுந்து ஆட்டைக் கவர்ந்து செல்லும் நரி. அதனால் ஆடு மேய்ப்பான் தன் பகையாக நரியைக் கருதிக் கூறியதாம். ஆயன் அன்றிக் குடிசை வாழ் மக்கள் தம் கோழிகளை நரி கவர்ந்து போகக் கண்டு இட்ட பெயர் என்பதுமாம். நரிக்கு இடம் தந்தால் கிடைக்கு இரண்டாடு என்பது பழமொழி. இகலன் வாய்த்துற்றில் தோற்றம் - களவழி. 28 இகலன் : 2 இகல் + அன் = இகலன் = பகைவன் (வெ.வி.பே.) இகல்: இகல்:1 இகத்தல் = கடத்தல்; ஓடச்செய்தல். நெருங்கியவரையும் அகன்று செல்லவும் பகைக்கவும் செய்வது இகல் ஆகும். இகல் என்பது எவ்வநோய் என்றும் (854). துன்பத்துள் துன்பம் என்றும் (855). இகல் கொள்வார் விரைந்து அழிவர் என்றும் (856) வள்ளுவர் கூறுவார். உடன்பாடு இல்லாத மாறுபாடே இகல் ஆகும். இசலிப்பு, ஏசலிப்பு என்பவை மக்கள் கூறும் இகல் விளக்கமாம். இப்படி ஏசலிப்புப் போட்டால் என்ன நடக்கும் குடும்பம் விளங்குமாஎன்பர். குடிப்பொருள் அன்று நும்செய்தி தொடித்தேர் நும்மோர் அன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி உவகை செய்யுமிவ் விகலே -புறம். 45 குடிப்பிறந்தார் மாறுபாடு மற்றையோர்க்கு மகிழ்வாம்; இகல் விடுக என்பது இதன் கருத்தாம். x.neh.: அடுத்த வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி - பழமொழி. இகல்:2 ஒன்றனோடு ஒன்று மிக்கு விளங்குதலும் இகலுதலாம். பகலினோடு இகலுவ படர்மணி - கம்ப. பால. 76 இகழுநர்: தம்மை இகழ்பவர், பகைவர். இகழுநர் இசையொடு மாயப் புகழொடு விளங்கிப் பூக்க நின் வேலே -புறம்.21 இகத்தல்= கடத்தல்; நண்பு நிலை கடந்தவர். இகழ்வு: இகழ்வு: 1 இகழ் + உ= இகழ்வு. நேயமும் அறமும் நீங்கியவராய்ச் செய்யும் செயல் இகழ்வு, இகழ்ச்சி, இகழல் என்பவையாம். இகத்தல் = கடத்தல், நீங்குதல். இகழ்விலன் இனியன் யாத்த நண்பினன் புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே -புறம். 216 இகழ்வு: 2 பொழுதைத் தக்க வகையில் போற்றிக் கடப்பாடு செய்யாது காலம் கழித்தல் இகழ்வாகும். இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக - திருக். 539 இகழ்வு > இகழ்ச்சி. இகழ் என்பதும் இது. இகுளை: இகுநள் > இகுளை = தோழி. இகுதல் = மழைபோல் சொரிதல்; உள்ளார்ந்த நேயத்தால் உயிரன்னளாய் விளங்கும் தோழி, இகுளை எனப்படுவாள், இரு தலை ஒரு புறாவன்ன உரிமை வாழ்வர் அவர் ஆதலால் இகுளை எனப்பட்டாள். சீதநாட்டார் தோழனை எலுவன் என்றும், தோழியை இகுளை என்றும் வழங்குவர்என்பது நன்னூல் உரை (273. சங்.). தோழியை இகுளை என்பது. இனையல் வாழியோ இகுளை - ஐங். 467 தலைவிக்காக அன்பைச் சொரிந்து நிற்பவள் இகுளையாம். இகத்தல் அகல்தம் நீங்கல் பகைத்தல் இகுதல் நெருங்கல் ஒன்றல் நட்டல் இகுபவள், இகுளை, தலைவிக்குத் தோழியும், தோழிக்குத் தலைவியும் இகுளை ஆவர் என்பது அகநிலைத் தேர்ச்சிப் பாடாம். தலைவி தோழியை இகுளை எனல். பானாட் கங்குலும், அரிய அல்லமன் இகுளை - அகம். 8 தோழி தலைவியை இகுளை எனல்: எவன்கை யற்றனை இகுளை - அகம். 201 இக்கட்டு: இறுக்கிக் கட்டிப் போட்டது போன்ற செயலற்ற நிலை; பேரிடர்ப்பாடு. இக்கன்னா என்பது தடை செய்தல்; கட்டு = கட்டிப் போட்டது போன்ற நிலை. இக்கட்டாம் வருவ தெல்லாம் -தண்டலை. 88 இக்கன்னா போடல்: தடைப்படுத்தல், நிறுத்திவிடல். ஒருவரிடம் ஓருதவியைப் பெறுதற்கு முயன்று. அது வெற்றி தரும் அளவில் ஒருவரால் தடுக்கப்பட்டு நின்று விடுவதுண்டு. அந்நிலையில் உதவி பெறாது ஒழிந்தவர். அவர் இக்கன்னாப் போட்டு விட்டார். அவர் இக்கன்னாப் போடவில்லை யானால் எப்பொழுதோ நடந்திருக்கும்என்பார். இக்கன்னா என்பது தடுத்தல் பொருளில் வருவது. முற்றுப் புள்ளி வைத்தல் என்பது நிறுத்துதலைக் குறிப்பது போல் இக்கன்னாவும் நிறுத்துதலேயாம். இக்கன்னா என்பது மெய்யெழுத்து; அதிலும் வல்லினப் புள்ளியில் முதல் எழுத்து. அதனால் இவ்வெழுத்தைச் சுட்டி நிறுத்தப் பட்டதைக் குறிக்கும் வழக்கம் உண்டாயிற்றாம். இக்கென: இக்கு + என = இக்கென. இக்கென = இக்கென்று சொல்லும் பொழுதுக்குள் விரைந்து. சொல்லொக்கும் கடிய வேகம் - கம்ப. பால. 412 x.neh.: இம்மெனும் முன்னே - காள. தனிப். இங்க: எங்கும் அகலாது இருந்த இடத்திலேயே தங்குதல் இங்க என்பதாம். ஆர்சூழ் குறட்டின் வேல்நிறத்து இங்க -புறம். 283 வண்டியின் குடத்தில் ஊன்றிய ஆரக்கால்கள் போல மார்பில் தைத்த வேல்கள் பெயராமல் தங்கினஎன்பது இதன் பொருளாம். வியனிலத்து இங்க - பெருங். 1:55:143 இங்கண்: இங்கண் : 1 இ > இங்கு > இங்கண், இ = கட்டு; கண் = இடம். இங்கண் = இவ்விடம். இங்கண் மா ஞாலம் - நாலா. 3799 அங்கண் மா ஞாலம் போல நாலா அகராதி. இங்கண் : 2 இங்கண் = இப்பொழுது இங்கண் அல்லதொன்றின்னமும் கேட்டியால் -கம். யுத் 4164 இடப்பெயர் காலப் பெயரும் சுட்டும் எ-டு: யாண்டு = காலம்; யாண்டு = இடம். இங்கித மாலை: காமப் பகுதி கடவுளும் வரையார் என்னும் முறையால் (தொல். 1029). பாடப் பெறுவது இங்கித மாலையாகும். அதன்கண் வெளிப்படைப் பொருள் ஒன்றும் உட்பொருள் ஒன்றும். அமைந்திருத்தலை வள்ளலார் பாடிய இங்கித மாலையுள் கண்டறிக. 166 பாக்களால் அமைந்த இவ்விங்கித மாலை அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்த யாப்பில் வந்ததாகும். இங்கிதமாலை பாடாண்டிணையின் பாற்பட வரும் என்பதும், வினாவும் விடையுமாக இயலும் என்பதும் வள்ளலார் வாக்கால் அறியக் கிடக்கின்றன. இதன் உள்ளீடு எள்ளல் என்னும் அசதியாடற் பொருளாயும் கிடத்தல் சுவை பெருக்குவதாம். பிட்டின் நதிமண் சுமந்த வொற்றிப் பிச்சைத் தேவர் இவர்தமை நான் தட்டின் மலர்க்கை யிடத்தெதுவோ தனத்தைப் பிடியு மென்றுரைத்தேன் மட்டின் ஒருமூன் றுடனேழு மத்தர் தலையீ தென்றுசொலி எட்டி முலையைப் பிடிக்கின்றார் இதுதான் சேடி என்னேடி(3) ஓதனம் = சோறு; ஓதனத்தைப் பிடியும் என்ன அவர் தனத்தைப் பிடித்தார் என அசதியாடல் காண்க. ஒரு மூன்றுடன் ஏழு மத்தர் என்பது பதுமத்தர் (நான்முகன்) எனச் சுவை மிகுத்தல் அறிக. இங்கிதம் தெரியாதவன்என்னும் நாட்டு வழக்கிலுள்ள இங்கிதம் நூற்பெயரீட்டை வழங்கியிருக்கலாம். இங்கிதம் : இஞ்சு + இதம் = இஞ்சிதம் > இங்கிதம். ஒருவர் உணர்வை அல்லது குறிப்பை வாங்கிக் கொள்ளும் இனிய தன்மை. மந்திரக் கிழவர்தம் முகத்தால் எழுதி நீட்டிய இங்கிதம்- கம்ப. அயோ. 45 குறிப்பில் குறிப்பு உணரும் தகைமை இங்கிதமாம். இங் கிதம் தெரியாதவன்; என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் பேசிவிட்டான்என்பது வழக்கு. இங்கு : இங்கு : 1 இங்கு = குழந்தையின் ஒலிக்குறிப்பு; சங்கு என்பதன் முதற்குறை. இங்கு : 2 சங்கால் புகட்டப்படும் பால். தாயும் சேயும் சொல்லிச் சொல்லி மகிழும் சொல். இங்கு : 3 இவ்விடம். என்னையிங் கெய்து காரணம் - கம்ப. சுந்.1115 அங்கிங் கெனாதபடி எங்கும் - தாயுமா. இசகு பிசகாக ஏமாறுதல்: இசகு (இசைவு) = ஒருவன் இயல்பு இன்னதென அறிந்து அவனுக்குத் தக்கவாறு நடந்து ஏமாற்றுபவனிடம் ஏமாறுதல். பிசகு (தவறு) = தன் அறியாத் தன்மையாகிய தவற்றால் ஏமாறுதல். எந்த ஒரு குற்றத்திலாவது வன்பு துன்புகளிலாவது மாட்டிக் கொண்டவர், இசகு பிசகாக மாட்டிக் கொண்டேன் என்பது வழக்கு. வெள்ளறிவுடையான் பிறர் ஏமாற்றுக்கு ஆட்பட்டபோது அவனைப் பிறர் இசகு பிசகாக ஏமாறிப் போனான் என்பதும் வழக்கு. ஒருவரைத் தம்பால் வயப்படுத்தி அவரிடம் உள்ளவற்றைத் தட்டிப் பறித்தற்குத் தணியா ஆர்வமுடையவர் என்றும் உளரன்றோ? அவர்க்கு வயப்பட்டு உள்ளதை உரியதை இழந்து ஓலமிடுவாரும் என்றும் உளரன்றோ! இவர்கள் வழியாக வழங்கப் பெறும் இணைச் சொல் இது. இசித்தல்: இசித்தல் : 1 ஈரப்பொருள் தரும், இசித்தல் என்பது, அதன் நீரை இழுக்கப்பட்ட நிலையில் உலர்தல் என்னும் பொருள் தந்தது. அப்பொருளில் பரமக்குடி வட்டாரத்தார் இசித்தல் என்பதற்கு உலர்தல் பொருள் கொள்கின்றனர். இசித்தல் : 2 கை, கால், நரம்புகள் இழுத்தல் அல்லது சுண்டுதல் இசிப்பு நோய் எனப்படும். இசிபதம் : ஈரப்பதம் என்பது இசிபதம் என்று வழங்கப்படுவது உசிலம்பட்டி வட்டாரத்தில் ஆகும். குளிரால் வரும் நோய் இழுவை: அது, இசுவு என வழங்கப்படும். இசிவு குளிரால் வருவதால் குளிர்பதம் இசிபதம் எனப்படுகிறது. * இசித்தல் காண்க. இசை : இசை : 1 இயை > இசை. ஒன்றனோடு ஒன்று பொருந்தி இயைவது (இசைவது) இசை. ஆடற்கமைந்த ஆசான் தன்னொடும் யாழும் குழலும் சீரு மிடறும் தாழ்குரல் தண்ணுமை ஆடலோ டிவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து - சிலப். அரங். 25- 28 என்றும், குழல்வழி நின்றது யாழே: யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே; முழவொடு கூடிநின் றிசைத்த தாமந் திரிகை - சிலப். அரங். 139- 142 என்றும் வருவன காண்க. இசைக்கருவிகளின் இசை ஒன்றோடு ஒன்று இசைந்து ஒன்றாகியமை அறிக. இசை : 2 இசை கேட்பவற்றையும் கேட்பாரையும் இசைப்பது. சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிப்பக் குறுவெயர்ப்புரு வம்கூட லிப்பக் கோவிந்தன் குழல்கொ டூதின போது பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக் கறவையின் கணங்கள் கால்பரப் பிட்டுக் கவிழ்ந்திறங் கிச்செவி யாட்டகில் லாவே - நாலா. திவ். 282 என்பதால் விளங்கும். இசை : 3 பாடலும் இசைப்பண்ணும் இசைதல். பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல் - திருக். 573 என்பதால் தெளிவாம். இசை : 4 அசையே ஆயினும் இசையோடு இயைய வேண்டும் என்பது. அசைத் திசை கோடலின் அசையே - யா.கா. 1 மேற். என்பதால் புலப்படும். இசை : 5 இசை = புகழ். தனிப்பெருந் தகைமை உடையவரும். தளரா முயற்சியால் வினைத்திறத் துயர்ந்தாரும், பொதுநலப் புரிவால் மேம் பாடுற்றாரும், கலைவளங் கொழித்தாரும் களப்போரில் வீறு காட்டினாரும் அடையும் அழியாப் புகழ், அவர்கள் திறத்திற்குத் தகத் தகவுற இயைந்தமையால் அதுவும் இசை எனப்பட்டதாம். அப்புகழே, ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில் என்றும், ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதிய மில்லை உயிர்க்கு என்றும் பொய்யாமொழியாரால் புகலப்பட்டதாம். (233, 231) இசை (புகழ்) விருதுகள் 1. இசைக்கழல் தேர்நூறு, குதிரை ஆயிரம், யானை நூறு, காலாள் பதினாயிரம் போரில் மடிய வென்ற வெற்றியன் இடக்காலில் அணியும் வீரவெண்டயம். 2. இசைச்சிலம்பு யானையைக் கொன்ற வீரன் இடக்காலில் அணியும் மணித் தொடரி (சங்கிலி). 3. இசைப்புணை ஆயிரம் வீரரை வென்றவன் இடக்காலில் அணியும் தொடரி. 4.இசை மணி பதினாயிரம் பேரை வென்ற வீறுமிக்கான் இடக்காலில் அணியும் பொற்றண்டை. 5. இசைவளை குதிரை நூறு போர்க்களத்தில் வென்ற வீரர் காற்பெரு விரலில் அணியும் வளையம் (வெ.வி.பே.) இசைகுடிமானம்: திருமண இசைவு உடன்பாட்டை எழுதுதல் இசைகுடி-மானம் என வழங்குதல் செட்டிநாட்டு வழக்கு. குடும்பமாக ஆகும் ஏற்பாடு குடிமானம் ஆயிற்று. இரு சாராரும் (கொடுப்பார் கொள்வார்) இசைதல் இசைவாயிற்று. இசைகேடு: இசை + கேடு = இசைகேடு இசை = ஏற்றுக்கொண்ட, ஒப்புக்கொண்ட ஒப்புக்கொண்ட பணி நிகழாமல் இடையே நிகழ்ந்த தீங்கு (தடை ) க.க.அ.மு. இசையியல்: ஒன்றன் செயல் அல்லது ஓர் உறுப்பின் செயல் இசையாகாது. ஒன்றனோடு ஒன்றோ, ஒன்றனோடு பலவோ இசையுங்கால் - இணையுங்கால் - எழுவதே இசையாகும். கண்ட இசை எனினும் கருவி இசை எனினும் இசைத்துச் செய்யும் பொருள்கள் எனினும் பலவின் கூட்டால் - இசைவால் - ஏற்படுவனவேயாம். இசை இயற்கையில் அரும்பிச் செயற்கையால் விரிவாக்கம் பெற்றதாம். காற்றின் அசைவு, நீரின் அசைவு, தீயின் எரிவு, விண்ணின் ஓசை, உயிரிகளின் உணர்வு வெளிப்பாடு எல்லாம் இசைவால் ஏற்படும் இசையேயாம். இவ்விசையால் உயிர்கள் தளிர்க்கும்; மகிழும். அவலமும் எய்தும்; அஞ்சும் அத்தனை மெய்ப்பாடுகளுக்கும் இடமாம். ஊணையும் மறக்கும், உறவையும் மறக்கும்; உறைவிடமும் மறக்கும். குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட மழலை வண்புனம் நல்லியாழ் செய்ய - மணிமே. 4:3-4 இயற்கை இசை வெள்ளப் பெருக்கு பெரும் பெருக்காம். அருவி முழவாக வில்லையா! அருவியின் துள்ளலும் ஆற்றுச் செலவும் கலித்துள்ளல் ஆகவில்லையா? இசைவல்ல பாணர் சிறப்பும் ஆடலும் பாடலும் கூடிய கூத்தர் சிறப்பும் விளக்கச் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படையாம் மலைபடுகடாம் என்பவை சாலாவா? யாழ்வகை, குழல்வகை, தோற்கருவி வகை, மற்றைக் கருவிப் பெருக்கம் எல்லாமும் தானே தமிழை இசைத்தமிழோடு இசைத்து முத்தமிழ் ஆக்கியது. இசைவல்லர் என்ன பெற்றார்? பொருள் பெற்றார்; போற்றுதல் பெற்றார்; புகழும் பெற்றார்; ஈதல் இசைபட வாழ்தல் என்பது வள்ளுவம் (231). அவ்வீதலை இசையீதற் கொடை வளமாக்கிய இசைஞர் பாணர் ஆவர். ஆதலால் இசை. புகழ் என்னும் அழியா நிலையையும் வழங்கியது. இசை = இசைதல்; ஒப்புதல். இசையும் எனினும் இசையா தெனினும்(நாலடி. 152), ஒருவர்க்கு ஒருவர் இசைந்து- ஒத்து - நடப்பது இசைவாம். இசைந்து ஒன்றுபட்ட குடிவாழ்வு, குமுகவாழ்வு, நாட்டுவாழ்வு, உலக வாழ்வு ஆகியவையே வாழ்வாம். பேசும் பறவை, கிள்ளையாம் கிளிப்பிள்ளை என்றால் பாடும் பறவை குயிலாம். குயிலிசை கொளுத்திக் காட்டலைக் கண்டோமே! இசையும். புகழும்இசைதலும் இயற்கை இன்பியல் சுரப்புகளாம். இசைவு: இயைவு > இசைவு. இசைவு = ஒப்புகை; பொருந்துகை அவரைவந் தணைவதோர் இசைவு கொண்டார் - கம்ப. உயுத். 103. இசைவுத்தீட்டு: இசைவு + தீட்டு = இசைவுத்தீட்டு இசைவு = ஒப்புகை தீட்டு = தீட்டப்பட்ட - எழுதப்பட்ட, ஓலை, அல்லது சீட்டு. சபையார் அனுமதித்தபடி எழுதப் பெற்ற சாசனம் க.க.அ.மு. இச்சம்: இச்சம் > இச்சை = ஆசை, விருப்பு இச் என்னும் முத்தக்குறிப்பு ஆறா அன்பு வழிபட்டது என்பது வெளிப்படை குழந்தை நேயம், காதலர் நேயம், முதியர் நேயம் என உலக நேய ஒலிக்குறிப்பு இச்சமாம். உணர்த்த உணரா ஒள்ளிழை மாதரைப் புணர்த்திய இச்சத்துப் பெருக்கத்தில் -பரி.7 என வையை வெள்ளப் பெருக்கொடு உள்ளப் பெருக்கிணைந்து இச்சத்தைப் பாடுகிறார். மையோடக்கோவர். இச்சிடல்: இச்சிடல் = முத்தம் தருதல். இச் என்பது ஓர் ஒலிக் குறிப்பு. மெல்லிய உதடுகள் ஒட்டி ஒலி எழுப்புவதால் உண்டாவது. ஓர் இச்சுக் கொடு என்று குழந்தைகளைத் தாய்மார் கேட்பது உண்டு.இச் காதல் பொருளாயிற்று. இச்சை, இச்சித்தல் என்பவை விருப்பம் என்னும் பொதுப் பொருளில் இருந்து காதல் சிறப்புப் பொருளுக்கும் இடமாகி இறுக்கமாகப் பற்றிக் கொண்டது. இஞ்சநிலம்: மணற்பாங்கான நிலத்தை இஞ்சநிலம் என்பது திருவாதவூர் வட்டார வழக்கு. இஞ்சுதல் நீரை இழுத்தல். இஞ்சி என்னும் பயிரின் பெயரும், இஞ்சி என்னும் மதிலின் பெயரும் நீரை உள்வாங்குதலால் கொண்ட பெயர்களாம். இஞ்சி: இஞ்சி:1 இஞ்சு + இ = இஞ்சி. நீரை இழுத்து வைத்துக் கொள்ளுதல் இஞ்சுதலாம். இஞ்சிக் கிழங்கு அதுவாம். மஞ்சளும் இஞ்சியும் மயங்கரில் வலயத்து -சிலப். 10:74 இஞ்சி:2 இஞ்சி = மதில். அரைமண் இஞ்சி நாட்கொடி நுடங்கும் - புறம். 141 அரைத்த மண்ணால் செய்யப்பட்டது இது. செம்பிட்டுச் செய்த இஞ்சி - கம்ப. உயுத். 1378 செம்புருக்கு நீர்விட்டுச் செய்யப்பட்டது இது. இஞ்சுதல் நீரை இழுத்துக் கொள்ளுதல். * உறிஞ்சுதல் காண்க. இஞ்சி:3 கடுகடுப்பான முகமும் வெடுவெடுப்பான சொல்லும் உடையவரை இஞ்சி எனப் பட்டப் பெயரிட்டு வழங்குவது பொதுவழக்கு. இஞ்சியின் எரிச்சலை வெளிப்படுத்துவது இது இஞ்சி தின்ற குரங்கு போலஎன்பது பழமொழி. இஞ்சி:4 மணலில் நீர்விட்டால் உடனே நீர் உறிஞ்சப்பட்டு உள்ளே போய்விடும். இஞ்சி என்பது உறிஞ்சுதல் பொருளது. இது உறிஞ்சுதலைக் குறியாமல் வந்ததை வெளிவிடாமல் உள்வாங்கிக் கொள்ளும் கொடாக் கண்டனாம் கருமியைக் குறிப்பது செட்டிநாட்டு வழக்கு. இஞ்சி வேர்: இஞ்சி என்பது தொன்று தொட்டுத் தமிழ்நாட்டில் விளைந்து வரும் மருந்துப் பூண்டு. இஞ்சி மலைபடுகடாத்திலும், பதிற்றுப்பத்திலும் இடம் பெற்றுள்ள சொல். இஞ்சியை இஞ்சிவேர் இஞ்சிக் கிழங்கு. இஞ்சிப் பாவை என்றும் சொல்வது வழக்கம். இஞ்சுதல் என்பது நீரை உள்ளே இழுத்தலாம். இஞ்சு- இஞ்சி; இஞ்சி காய்ந்தால் சுக்கு; சுக்கு, நீர் வற்றியது. சுள் - சுட்டு - சுக்கு. இஞ்சி x சுக்கு. இஞ்சி கிறித்துவுக்கு முற்பட்டே மேனாடுகளுக்கு ஏற்றுமதியான பொருள்களுள் ஒன்று. ம. இஞ்சி, கு, இஞ்சி, கோ, இஞ்ச், பர், சிங்கி வேர, மேலையாரியச் சொற்களெல்லாம் இஞ்சி என்னும் தமிழ் வடிவைப் பெரிதும் ஒத்திருக்க, வடமொழியாளரோ இஞ்சிவேர் என்பதைச் ச்ருங்கவேர் எனத் திரித்து, மான் கொம்பு போன்ற வடிவினது என்று வலிந்தும் நலிந்தும் பொருளாகக் கூறி வடசொல்லாகக் காட்ட முயல்வர். ச்ருங்க என்பது கொம்பு என்று மட்டும் பொருள்படும். இஞ்சிவேர் பொதுவாகக் கிளை கிளையாக இருப்பது பற்றி அதை மான் கொம்போடு ஒப்பிட்டு, மான் என்னும் சொல்லையும் சேர்த்துக் கொண்டனர். வேர என்பது உடம்பு என்னும் பொருள் படுவதே அன்றி வேர் என்னும் பொருள் கொண்டதன்று. (வடமொழி வரலாறு பக். 87) இடக்கர்: இடம் > இடக்கர். இடத்தொடு கூடிய சொல்லும் செயலும் இடக்கர் எனப்படும். இடம் சிறப்பு நிலையில் சான்றோர் அவையைக் குறித்து அவர்முன் எப்படிப்பேசவும் நடக்கவும் வேண்டுமோ அப்படிப் பேசி நடத்தல் இடக்கர் அடக்கு எனப்படும். இது மங்கல வழக்கு வகைகளுள் ஒன்றாம். செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியார் அகத்து - திருக். 694 சான்றோர் இடத்துக்குத் தக நடவாதார் இடக்கர் எனப் பட்டனர்; பின்னர் எவர்க்கு எனினும் இடர் செய்வார் இடக்கர் எனப்பட்டனர். இடத்துக்குத் தக அடங்கல் இடக்கரடக்கு. இடத்தில் - அவையில் - கூறத்தகாத சொல்லை விலக்கி அதனை அறியும் வகையில் நயமாகக் கூறுவது அவையல் கிளவி எனப்பட்டது. அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல் என்பது தொல்காப்பியம் (925) நீரல் நீர் (நீர் அல்லாத நீர் = சிறுநீர்); கால்கழுவி, முகம் கழுவி வருதல்; பீ என்பதைப் பவ்வீ எனவும், உப்பகாரம் உச்சகாரம் (பு, சு.) எனவும் வழங்குதல் இடக்கரடக்காம். மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு - சிலப். 3: 166 இவளுக்குப் பரியம் என்னாதே மாலைக்குப் பரியம் என்றது இடக்கரடக்கு(அடியார்க். சிலப். அரங். 166) இலக்கியவாணர் தம் நூலில் அவையடக்கம் என்று கொண்டதும், தொல்காப்பியர் அவையடக்கியல் (1370) என்றதும் எண்ணத்தக்கவை. * அவையடக்கியல் காண்க. இடக்குமுடக்கு: இடக்கு = எளிமையாக இகழ்ந்து பேசுதல் முடக்கு = கடுமையாக எதிரிட்டுப் பேசுதல் நகையாண்டியாக இருப்பவனை இடக்கன் என்பதும். வண்டியில் பூட்டப்பட்ட மாடு செல்லாமல் குணங்கினால் இடக்குச் செய்கிறது என்பதும் வழக்கு. முடக்கு, மடக்கு என்னும் பொருளதாம். மடக்கி எதிர்த்துப் பேசுதல் மடக்கு என்றும் முடக்கு என்றும் ஆயிற்று. முடக்குதல் மேற்செல்ல விடாமலும் சொல்லவிடாமலும் தடுக்கலாம். எதிரிட்டுத் தடுத்தல் மடக்குதல் என வழங்குவதும் அறிக. இடங்கர்: இடம் > இடங்கு > இடங்கர். x.neh.: முடம் > முடங்கு + அர் = முடங்கர். முதலை வகையுள் ஒன்று இடங்கர்; மற்றொன்று கராம். தான் இருக்கும் இடத்தில் பிற உயிரிகளையோ, மக்களையோ புகவிடாமல் அழிக்கும் தன்மையுடையதால் இடங்கர் எனப் பட்டதாம். இடத்தால் அணையும் பெயர்: அவரவர் வாழிடத்தாலும் பிறந்த இடத்தாலும் பெற்ற பெயர் இடத்தால் அணையும் பெயராம். எ-டு: மலைவாணர், வெற்பர், மலையர், கடல்வாணர், சேர்ப்பர், பரதவர். இடம்: இடம்:1 இடு + அம் = இடம், நிலம் இடம் சிறிதென்னும் ஊக்கம் துரப்ப(புறம். 8) வேண்டுவ எல்லாம் இடுவதற்கும் - வழங்குதற்கும் - எதனையும் இட்டு வைப்பதற்கும் உரியது இடமாகும். இலமென் றசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும் - திருக். 1040 நிலம் வேண்டுவ வழங்கல் இது. இடும் இடம் இடுகாடு எனல் அறிக.இடம் இடன் எனவும் படும். * வையகம் காண்க. இடம்:2 இடப்பக்கம், வலம் x இடம் இடம்பட வீழின் -புறம். 190 இடக்கை x வலக்கை. வலப்பக்கமே சுழல்வது இயற்கை; ஊர்வலம். நகர்வலம் என்பதும் வழக்கு. வலக்கைக்கே மிகு பயிற்சி தருதலால் வலம், வலிமை, வெற்றி என்னும் பொருள்களைத் தந்தது. இடக்கைக்குப் பயிற்சி தாராமையால், இளக்கை > இடக்கை (இளக்கம் = மென்மை). இடக்கைப் பழக்கத்தர்க்கு வலக்கை இளக்கையாம். இடம்பாடு: இடம்படு > இடம்பாடு = இடம் பெருகுதல்; பெருகிய இடம்; அஃதாவது விரிவு. இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் -நாலடி. 116 எந்நூற் கண்ணும் இடம்பா டுடைய முந்நூற் றொருவர் - பெருங். 3:19, 189-190 இடர்: இடு + அர் = இடர் இயற்கையாலோ மாந்தர் முதல் உயிரிகளாலோ தம்மாலோ இடைப்புகுந்து வருந்தச் செய்வது இடர் ஆகும். இடுக்கண், இடையூறு இடறல் முதலியவை இவ்வழிச் சொற்களாம். ஆழிதாய் இடராழி யிடையேவீழ்ந் தழிவேனோ - கம்ப. சுந். 324 இடரிலா முகத்தாள் - கம்ப. அயோத். 1061 இடவம்: இடவம் > இடபம். இடவம் என்பது காளை. தன்மேல் ஏற்பட்ட - இடப்பட்ட - சுமையையெல்லாம் தாங்கி ஏறமாட்டாத மேட்டு இடத்தும், இறங்க மாட்டாத பள்ளத்து இடத்தும் செல்வதால் அதன் சிறப்புக் கருதி இடவம் என்றனர். அந்த இடவத்தை முன்னும் இடையும் திரித்து ரிஷபம் ஆக்கினர். மேடலக்கினம் இடப இலக்கினம் என்பவை மேஷம் ரிஷபம் ஆகியன இது குறித்த இலக்கில் இயக்குவது என்பது. அதுவும், லக்னம் ஆக்கப்பட்டது. இடா: பொருள்களை இட்டு வைப்பதற்காகச் செய்யப்பட்ட பெருங்கூடை. . நாரால் பின்னப்படுவது இறை கூடை என்பதும் இது. மழை பெய்தால் தலைக்குக் குடைபோலத் தாங்குதலால் இறை கூடை எனப்பட்டது. ஒ,நோ. மிடா = பெரும்பானை; தாழி. இடி: இடு + இ = இடி, மேலிருந்து கீழிறங்குதல் இயற்கை இடியாம். இடித்தல் என்பது கீழிறக்குதல், உள்ளிறக்குதல் ஆகும். இடுவது உள்ளே வைப்பது எனப்பட்டுப் பின்னே கொடுப்பது என விரிந்தது. இடி ஒன்று மரத்தின் மேல் வீழ்ந்து, மரத்தைப் பிளந்து வேர்வழி இறங்கி வேர்மேல் இருந்த நீர்த்தொட்டியைத் தூக்கி யடித்து வேரில் கட்டியிருந்த கன்றுக் குட்டியைக் குப்புறத் தள்ளிச் சாவ அடித்துக் குழியும் பறித்ததைக் கண்டு அதன் இடிமானத்தை உணர முடிந்தது. கருமுகில் முட்டலால் உண்டாம் மின்னலும் இடியும் அச்சப் பொருளாயின. உரும் என்பது இடி. பேம்நாம் உரும்என வரூஉம் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள -தொல். 848 இடியின் காப்புக்காகவே இடிதாங்கிகளை அமைத்தாலும் அச்சம் அச்சம்தானே! படையும் நடுங்க வைக்கும் பாம்பும் இடிக்கு அஞ்சுமாமே! இடி கூட மறந்து போகும். ஆனால் இல்லாத - பொல்லாதவற்றை இட்டுக்கட்டி இடிப்பார் இடிப்பே மாறா இடிப்பாக இருக்குமே! மாவிடித்தல், சுண்ணம் இடித்தல், மருந்து இடித்தல், சுவர் இடித்தல் என எத்தனை எத்தனை இடித்தல்கள் இருந்தாலும் இடி என்றால் பளிச்சிட்டுத் தோன்றுவது வானிடியாம். இடியுண்ட நாகமென அச்சமுமே முந்து நிற்பதாம். கடுவொடுங்கு எயிற்ற அரவுத்தலை துனிப்ப. இடியென முழங்கு முரசு - புறம். 17 இடிகல்: பாக்கினை மெல்லும் பல்வலிமையில்லாதார் அப்பாக்கை இடித்துப் பொடியாக்கி, வெற்றிலையோடும் சேர்த்து இடித்து மெல்லுவர். அவ்வாறு பாக்கை இடிக்கப் பயன்படுத்தும் கல்லை இடிகல் என்பது குமரி வட்டார வழக்கு. கல் பின்னே இரும்பு, எல்லியம் ஆயவற்றால் ஆயது; சிறிய உரல் உலக்கை ஒப்பவை அவை. இடிச்சொல்: இடி + சொல் = இடிச்சொல். நெருங்கியிருந்து இடித்துரைக்கும் சொல். இடிச்சொல் பொறாஅ இலக்கண வினைஞர் -பெருங். 1:38:345 இடிஞ்சில்: கிழிஞ்சில் போன்ற நீர்வாழ் உயிரி ஒன்றனை இடிஞ்சில் என்று வழங்குதல் தலைக்குளம் என்னும் வட்டார வழக்காகும். இடுதல் = சிறிதாக இருத்தல். இப்பொருளால், கிழிஞ்சில் வகையில் அதற்குச் சிறிதாக உள்ளது இடிஞ்சில் என அறியலாம். இடித்துரைத்தல்: இடித்துரைத்தல் = கண்டித்துரைத்தல். இடிக்காமல் இடிப்பது இடித்துரை. சொல்லிடியே இவ்விடி. ஒரு குறை கண்டால் அன்பு, நட்பு, பதவி, செல்வம், செல்வாக்கு இவற்றைக் கருதிச் சிலர் அமைதியாக இருப்பர். சிலர் ஆமாம் போடுவர். சிலர் தூண்டியும் விடுவர். இவற்றால் ஒன்றன்மேல் ஒன்றாகக் கேடே உண்டாம். ஆனால், அறிவறிந்த சான்றோர் இடித்துரைக்க வேண்டியதை வேண்டிய பொழுதில் வேண்டிய அளவில் செய்யத் தவறார். இடிப்பார் இல்லையா? கெடுப்பார் வேறொருவர் வேண்டுவதில்லை என்பார் திருவள்ளுவர். * குத்திக் காட்டல் காண்க. இடிபடுதல்: இடிபடுதல் = வசைக்கு ஆட்படுதல். ஒருவருக்கு ஒருவகைப் பழக்கம் இருக்கும். அப்பழக்கத்திற்கு மாறாக ஒன்றைச் செய்தால் அவருக்குப் பிடிப்பது இல்லை. மாறாகச் செய்ததைப் பொறுத்துக் கொள்ளும் மனமும் அவர்க்கு இல்லை. அதனால் கண்டபடி வசைமொழிதல் கண்கூடு. அவரிடம் அதைச் சொல்லிவிட்டு தம்மால் இடிபட முடியாது அவரிடம் அதைச் செய்தால் அவ்வளவுதான் நம்மால் இடுபட்டு முடியாது என்பர். இடிபடுதல் என்பது கம்பியால் குத்துதல் போலவும், உலக்கையால் இடித்தல் போலவும் செய்வதாம். இடி என்பது இடித்துக் கூறும் வசை, இடித்துக் கூறும் அறிஞர் உரை போல்வ தன்று. இது உணர்ச்சி வயப்பட்டவர் வசைமொழியாம். இடியப்பம்: இடிமாவைப் பிசைந்து உருட்டிச் செறிவாகத் தட்டிப் பிழிந்து வேகவைக்கப்படும் சிற்றுண்டி இடியப்பம் என்பது இற்றை நிலை. இடி = இடித்த மாவு. அப்பம் = உருட்டித் தட்டி அமைப்பது. மாவை உருட்டி அகலுமாறு அடித்துச் சட்டியில் அவிக்கப்பட்ட அது பின்னே கூழாக்கிப் பிழிந்து நீரில் வேக வைப்பதாய் உருக்கொண்டது. சந்தனத்தை அப்பல், அப்புச் சுவர், அப்பளம் என்பவற்றில் உள்ள அப்பின் பொருள் அறிக. அப்பம் > ஆப்பம். போட்டான்கல் ஆப்பச் சட்டி கீறிடவே என்னும் குழந்தையர் பாடலால் ஆப்பம் சட்டியில் வேக வைக்கப்பட்டதை அறியலாம். இடி விழுதல்: இடி விழுதல் = கொடுந்துயரச் செய்தி கேட்டல். முகில் மோதுங்கால் மின்வெட்டலும் குமுறலும் இடி விழுதலும் எவரும் அறிந்தது. இங்கே இடிவிழுதல் என்பது, அவ்விடியால் அடையும் துன்பம் போன்ற துன்பம் அடைவதே கூறப்படுகிறது. குடும்பத்தின் பாதுகாப்பாம் தந்தையோ தாயோ திடுமென இயற்கை எய்திவிட்டால், குடும்பம் இடிவிழுந்தது போல் மீளாத் துயருக்கு ஆளாகும். அதனை இந்த இடியைத் தாங்க முடியுமா பேரிடி இதற்கு மேல் என்ன இருக்கிறது?எனக் குடும்ப நிலை அறிந்தோர் வருந்திக் கூறும் உரையால் இடிவிழுதல் என்பதன் பொருள் புலப்படும். இடுக்கண்: இடு > இடுக்கு = நெருக்குதல்; நெருக்கடியாதல். எதைப்பற்றியும் எண்ணவும் செய்யவும் இயலாத நெருக்கடி நிலையே இடுக்கண் ஆகும். இடுக்கண்கால் கொன்றிட வீழும் என்பதும், நல்லாள் உள்ள குடி, இடுக்கணை வென்று நிமிரும் என்பதும் வள்ளுவம் (1030). இடுக்கண், இடும்பை, என்பதுமாம். இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர் என்று இடுக்கணை வெல்லும் வீறும் மாந்தர்க்கு உண்டு என்பதைத் தெளிவிப்பார் வள்ளுவர் (623). * இடும்பை காண்க. இடுக்கான்: இடுக்கு என்பது நெருக்கம், சிறிது என்னும் பொருளது. கிழியஞ்சட்டியில் சிற்றளவினதாக இருப்பதை இடுக்கான் என வழங்குவது குமரி மாவட்டத் தலைக்குள வட்டார வழக்காகும். இடுக்கி: இடுக்கி:1 இரு கவையாய் இடையில் உள்ள பொருளை அகல விடாமல் பற்றுவதாய் அமைந்த பற்றுக் கொடிறு. இடுக்கி:2 புகுதற்கு இடுக்கணாக நெருங்கி அமைந்த இடம், கற் பாறைப் பிளவு, வீட்டுக் கடவு ஆயவை இடுக்கியாம். இடுக்கி:3 சேரலத்தில் ஓர் இடப்பெயர் இடுக்கி. இடுக்கி:4 இடுப்பில் ஒன்றை வைத்துக் கொண்டு செல்லுதல் இடுக்குதலாம். இடுக்கி: 5 கண்ணைச் சுருக்கிப் பார்த்தல். என்ன? இடுக்கிக் கொண்டு பார்க்கிறாய்?என்பது மக்கள் வழக்கு. * கிடுக்கி காண்க. இடுக்கு முடுக்கு: இடுக்கு = மிகக் குறுகலான வழியும் தெருவும். முடுக்கு = மிகக் குறுகலானதும் பல இடங்களில் முட்டித் திரும்புவதும் ஆகிய வழியும் தெருவும். இடுங்கிய கண்ணாக்கிவிட வல்லிதாம் வறுமை இடுக்கண் எனப்பட்டதனை எண்ணுக. இடுக்கிப் பொறியை எண்ணினால் இதன் பொருளமைதி நன்கு தெளிவாம். முக்குத்தெரு, முடுக்குத் தெரு என்பவற்றையும், முட்டி முடங்குதல் என்பவற்றையும் எண்ணுக. முடுக்கு, முடுக்கர் எனவும் படும். முடுக்கரும் வீதியும் - சிலப். 7:5:187 கவலை = முடுக்கு வழிகள்; சிலம்பு 14:214 அடி யார்க்கு நல்லார். இடுதல்: இடுதல் : 1 இடுதல் = ஈதல் இட்டார் பெரியர்; இடாதார் இழி குலத்தார்உப்பிலாக் கூழிட்டாலும்என்று வரும் இடங்களில் (ஔவை. தனிப்.) இடுதல் என்பது ஈதல் பொருளில் வந்தன. இடுதல் : 2 இடுதல் = உட்கொளல். வயிற்றுக்கும் ஈயப்படும் என்னும் இடத்துப் போல உட்கொளல் பொருளிலும் இடுதல் வரும். மடியகத்திட்டாள் மகவை என்னும் சிலம்பு இதற்குச் சான்றாம் (9:22) இடுகுழி இடுகாடு எனவரும் வழக்குகளைக் கருதுக. இடுதேள் இடுதல் : இடுதேள் இடுதல் = பொய்க்குற்றம் கூறல்; பொய்யச்ச மூட்டல். தேள் நச்சுயிரி; அதனைப் பார்த்த அளவானே நடுங்குவார் உளர். அதனைப் பற்றிக் கேட்டிருந்ததன் விளைவால் உண்டாகும் அச்சம் அது. கடிபட்டோருள் வாய்நுரை தள்ளி, இறப்பின் எல்லைக்குப் போய்விடுவாரும் உளர். அத்தேள் அச்சத்தினைப் பயன்படுத்தி ஏதோ ஓர் இலை, சருகு, தாளை எடுத்துத் தேள் தேள் என இடுவது போல அச்சமூட்டுதல் இடுதேள் இடுதல் என்பதாம். இடுதேள் இடும் வழக்குப் பழமையானது என்பது சிலப்பதிகாரத்தின் வழியே அறியக் கிடக்கிறது. இடுதேளிட்டு என்றன்மேல்பொய்ப்பழி சூட்டினார் எனக் கண்ணகி வாக்காக இடம் பெறுகின்றது. நடுங்க வைக்க நாயென்றும், பேயென்றும், ஒன்றரைக் கண்ணன் என்றும் கூறும் வழக்குப் போல, இடுதேள் இடுதல் செய்வகை அச்சுறுத்தலாக உள்ளதாம். இட்டனர் ஊரார் இடுதேளிட் டென்றன்மேல் - சிலப். 9:48 இடுதேளிட்டு - தேள் கொட்டப்படுவார் காணாமல் தேளல்லாத தொன்றை மறைய மேலே போகட்டுப் பயப்படப் பண்ணுதல்; தேளென்று பொய்யே ஒன்றை இட்டாலொப்ப சிலம்பு - அரும். உரை. “தேளிடப்படுவார் காணாமே தேளல்லாத தொன்றை மறையக் கொடுவந்து மேலேயிட்டு அவரைக் கலங்கப் பண்ணுதல்; பாய்ச்சுத் தேள் என்பாருமுளர்.”- அடியார்க். இடும்பை : இடும்பு + ஐ = இடும்பை, இடும்பு = இடையே புகுந்து வருத்தும் - வாட்டும் - துயரம். எம் இடும்பை தீர்ப்பார் யார்? என்று வினவுவார் வினவ, இடும்பைக்கு இடும்பை படுப்பாரும் இருந்தனர். உணர்வோர் யார்என் இடும்பை தீர்க்கெனக் கிளக்கும் பாண -புறம். 155 கிளக்கும் = வினவும். இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர் - திருக். 623 இடும்பையாம் குடலுக்கு இடும் உணவு கிடையாமை போல இடும்பை உண்டா? அதனால்தான் வள்ளலார். பசித்தோர் முகம்பார்என்றார். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்என்பது புறநானூறு (18). இடுவை: இடு + வை = இடுவை. இடு என்பது நெருக்கம். சிறு என்னும் பொருளது. இடுக்கான தெருவையோ வழியையோ இடுவை என்பது தூத்துக்குடி வட்டார வழக்காகும். இடை: இடை:1 இடை என்பது பலபொருள் ஒரு சொல். முதலுக்கும் இறுதிக்கும் இடையே நிற்பது இடையாகும். முதற்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் என்னும் பெயர்களை அறிக. குறிஞ்சி மருத நிலங்களுக்கு இடையே அமைந்த முல்லை இடை எனப்பட்டது. இடைக்காடு என்பதும் அது. துலையின் நா நடுவே நிற்றல் போன்ற நடுவு நிலை இடை எனப்படும். இடைநாள், இடையிரவு என்பவை நண்பகல், நள்ளிரவுகள் ஆம். இடைசெவ்விய இடமும் காலமும் ஒருங்கே சுட்டும். உடையோர் போல இடையின்று குறுகி -புறம். 54 இடை: 2 இடை = இடுப்பு; இடுங்கிய - சுருங்கிய - அளவினது. உடலின் மேல் கீழ் ஆயவற்றின் இடையே சுருங்கிய அளவினதாக இடுப்பு இருத்தலே சிறந்த உடற்கட்டு என்பது உடல்நூல். எ-டு: சிற்றிடை, நூலிடை, கருமி சொல்லும் சொல் போலும் இல்லையோ என்னும் இடை. இடைகழி: ஓரிடத்திருந்து ஓரிடத்தை அடைவார் ஊடுபட்ட இடத்தைக் கடத்தல் வேண்டுமாகலின் அவ்விடம் இடைகழி எனப்பட்டது- வீட்டு முகப்புக்கும் கொல்லைக்கும் கடக்கும் இடமாய் அமைந்தது. இடைகழி எனப்பட்டது. உலக இடைகழியைச் சுட்டுகிறது புறப்பாடல் (175). திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த உலக இடைகழி யறைவாய் நிலைஇய மலர்வாய் மண்டிலம் திண்ணிய ஆர் சூழ்ந்த சக்கரம் இயங்குதற்குக் குறைக்கப் பட்ட வெள்ளிமலைக்கு அப்பாலாகிய உலகத்திற்குக் கழியும் இடைகழியாகிய அற்றவாயின் கண் நிலைபெற்று விளங்கும் பரந்த இடத்தையுடைய கதிர்மண்டலம்என்பது இதன் பொருளாம். வீட்டில் அமைந்த இடைகழி, டேழியாய் ரேழியாய் வழுவுற்று வழங்குகிறது. வீட்டு இடைகழியை. குறுந்தொடை நெடும் படிக்காற் கொடுந்திண்ணைப் பஃறகைப்பில் புழைவாயில் போகிடை கழி மழைதோயும் உயர்மாடம் என்று படமாக்கிக் காட்டுகிறது (பட். 142-145) இடைகழி நாடு: ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்குச் செல்ல இடையே வழியாய் அமைந்த நாடு இடைகழிநாடு. அது சென்னைக்குத் தென்மேற்கில் அமைந்திருந்தது. அந்நாட்டு நல்லூரில் பிறந்தவர் இடைகழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்பார். அவர் ஓய்மாநாட்டு நல்லியக் கோடனைத் தலை வனாகக் கொண்டு சிறுபாணாற்றுப்படை பாடினார். * இடைகழி காண்க. இடைக்காடு: குறிஞ்சிக்கும் மருதத்திற்கும் இடையே அமைந்த முல்லைக் காடு இடைக்காடாகும். இடைக்காட்டில் இருந்ததோர் ஊரின் பெயரும் இடைக்காடு. அவ்வூரினர் இடைக்காடனார் என்னும் புலவர். சங்கச் சான்றோருள் ஒருவர் இவர். செங்காடு, தலைக்காடு, மேல்காடு என்பனவும் உண்டு. முல்லைவளம் உடையவை இவை. நாடா கொன்றோ காடா கொன்றோ என்று ஔவையார் குறிப்பிட்ட நாடு. மருதம்; காடு, முல்லை; அவல் மிசை என்றவை நெய்தல், குறிஞ்சி என்பனவாம். புறம். 187 இடைக்குன்றூர்: குன்றின் இடையே அல்லது குன்றுகளின் இடையே அமைந்த ஊர் இடைக்குன்றூர், குன்றிடையூர் என்பது முன்பின் மாறியது. இல்வாய் வாயில் ஆயதுபோல். குன்று =சிறுமலை அம்மலை சார்ந்த ஊர், குன்றூர், குன்றக்குடி, குன்றத்தூர் குன்றூர் குன்னூராம். குன்றக்குடி குன்னக்குடியாய், குன்றத்தூர், குன்னத்தூராய் ஆயின. குன்றம் என்பதேயும் ஊர்ப்பெயர் ஆயது; அது குன்னமாயிற்று. குன்றம் குணமாவதும் உண்டு. நெற்குன்றம் நெற்குணம் ஆயதுபோல். இடைக்குன்றூர் கிழார் சங்கச் சான்றோர். குன்றூர் (குன்னூர்) ஒற்றைக்கல் மந்து (உதகை) சார்ந்தது. குன்றக்குடி, திருமுருகன் கோயில் கொண்ட ஊர், குன்றத்தூர் சேக்கிழார் பிறந்த சிறப்பூர், நெற்குன்றம், நெற்குன்ற வாண வள்ளல் ஊர், குன்றத்தூர் குன்றை என் மரூஉ ஆயது, (சேக். பிள்.) இடைச்சொல்: இடை + சொல் = இடைச்சொல் இடு, இடுக்கு, இடுதல், இட்டிடை, இடைவெளி, இடையூறு, இடைத்தடை, இடைநிலம் (முல்லை) இடையாவார் என்பன வெல்லாம் வழங்கு சொற்கள், பயன்பாட்டுச் சொற்கள் கட்டுமான வேலையில் இரண்டு கற்களை அல்லது இரண்டு செங்கற்களை வைக்க எத்தகு சேர்மானக் கற்கள் எனினும் இடைவெளியுண்டு. அவ்விடைவெளியை மறைக்கவும் இணைக்கவும் வலுவாக்கவும் இடையே கலவை அப்புவர், ஊற்றுவர், அழுந்தத் தேய்ப்பர், இல்லாக்கால் தனித்தனி நின்று கற்கள் நகர்ந்தும் சரிந்தும் சாய்ந்தும் போகலாம். இவ்வாறு, இரண்டு சொற்களுக்கு இடையே இரண்டையும் இணைக்கும் சொல்லாக வருவது இடைச் சொல்லாகும். முத்தமிழ் எனில் இயல் இசை நாடகம் என்போம். முப்பழம் எனின் வாழை மா பலா என்போம். இவை இடையே எதுவும் இல்லாமல் உள்ளதே எனின், சொல்வகையால் வெளிப்பட இல்லை எனினும் நம் எண்ணத்தில் இயலும் இசையும் நாடகமும் என்றும் வாழையும், மாவும், பலாவும் என்றும் இருக்கவே செய்கின்றன. இவ்வாறு இடையே வரும் உம் மறைந்தாலும் உள்ளதேயாம். உம் என்பது ஓர் இடைச்சொல். * தொகை காண்க. இடைத்தங்கல்: இடை + தங்கல் = இடைத்தங்கல் ஓரிடத்திற்கு அல்லது ஓரூர்க்குச் சென்று சேர முடியா நிலையில் இடையே தங்கி மேலே புறப்பட்டுச் சேர்தல் வழக்கம். அதுகால், இடையே தங்கும் இடத்திற்கு இடைத்தங்கல் என்பது பெயர். தங்கும் இடம் தங்கல் ஆயிற்று. திருத்தங்கல் என்பதோர் ஊர் முகவை மாவட்டத்து. அதன் பழம் பெயர் தங்கால் என்பது. தண்கால் என்றும் கூறுவர். தங்கால் திருத்தங்காலூர் - சிலப். 23:75அரும். இடைத்தேர்தல்: இடை + தேர்தல் = இடைத்தேர்தல் சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்திற்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட ஒருவர் இடையே விலகினாலும், விலக்கப் பட்டாலும், இயற்கை எய்தினாலும், அவர் இடத்தை நிரப்புவ தற்காக நடத்தப்படும். வாக்கெடுப்பு இடைத்தேர்தலாகும். வழக்கமான மொத்தத் தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்து நடத்தப்படும் தேர்தலாதலால் இடைத்தேர்தல் எனப்பட்டது. மக்களாட்சி முறையில் இடைத்தேர்தல் கட்டாயம் உண்டு. இடைத்தேர்வு என்பது பயிலகங்களில் ஆண்டுத் தேர்வு களுக்கு முற்பட இடை இடையே வைக்கப்படும் தேர்வு. திருப்புதல் தேர்வு, பருவத் தேர்வு என்பனவும் உள. இடையர்: முல்லை நிலத்து வாணராம் ஆயர் இடையர் எனப்படுவார். அவர் நிலம் குறிஞ்சிக்கும் மருதத்திற்கும் இடைப்பட்டதாகலின் இடையர் எனப்பட்டார். இடத்தால் கொண்ட பெயர் இது. இடைநிலமாவது முல்லை. ஆவோம்பலால் ஆயர் என்றும், கோவினக் காவலர் ஆகலின் கோள் என்றும் பெயர் பெற்றனர். கோ =பசு. பாசிலைத் தொடுத்த உவமைக் கண்ணி மாசுண் உடுக்கை மடிவாய் இடையன் -புறம். 54 மகளிர் ஆய்ச்சியர், இடைச்சியர் எனப்பட்டன. இடையன் சேந்தங் கொற்றன், இடையன் நெடுங்கீரனார் என்பார் சங்கச் சான்றோர். இடையறாது: இடை + அறு + ஆ + து = இடையறாது. இடையறுதல் இல்லாமல்; இடையீடு இன்றி. சிறப்பு இடையறாத -பெருங். 3:3:43 இடையற்றுப் போகும் சிறப்பு முழுதுறு சிறப்பு ஆகாமை யால் இடையறாச் சிறப்பு என்றார். இடையறா வெட்டு: இடையறாவெட்டு:1 இடையன் வெட்டு இடையறா வெட்டு என்பது பழமொழி. ஆடு மேய்ப்பான் ஆடு தின்னும் வகையில் மரம் செடிகளை வளைத்துக் கொடுப்பான். வளைக்க முடியா மரம் எனின் மரத்தின் கிளை துண்டிப்பு ஆகா வகையில் வெட்டிக் கிளையைத் தாழவிட்டு ஆட்டைத் தின்னச் செய்வான். அவன் வெட்டும் வெட்டு கிளையின் இடையே அற்றுப் போகா வகையில் இருப்பதால் அது, இடையறா வெட்டு எனப்படும். இடையறா வெட்டு:2 இடைவெளி இல்லா வகையில் வயல் வெட்டுதல் உண்டு. சிறிது நிலம் உடையார் ஏர் உழாமல், மண் வெட்டியாலேயே இடைவெளி இல்லாமல் வெட்டித் தொளியாக்கி நெற்பயிர் நடுவது அதுவாம். இடையூறு: இடை + ஊறு = இடையூறு, உறுவது ஊறு. இடை உறு > இடை ஊறு. எடுத்த முயற்சியின் இடையோ, செல்லும் வழியின் இடையோ எதிர்பாராது உறும் ஊறு (துயர்) இடையூறு (தடை) ஆம். இடையூற்றை வெல்லத் துணிந்தான். இடையூற்றுக் கிடையூறாய் யான்காப்பன் பெருவேள்விக்கு எழுகஎன்கிறான். (கம்ப. பால. 329) இடைவார்: இடை + வார் = இடைவார். தலைக்கும் காலுக்கும் இடையே அமைந்த இடுப்பு இடை ஆகும். வார் = நீளம். நீளப்பட்டை அல்லது தோல். வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள - தொல். 800 உடையைக் கட்டுதற்காகவும், இடுப்பு வலிக்கு மருத்துவப் பயனாகவும் பணப்பாதுகாப்புக்காகவும் பயன்படுவது இடை வார். இதுகால், இடைவார் வணிகப்பயன் செய்பொருளாயிற்று. இடைவாள்: இடை + வாள் = இடைவாள். இடை = இடுப்பு, வாள் = ஒளியுடையதும் நெடிய பட்டையுடையதும் வெட்டுவாய் அமைந்ததுமாம் கருவி. இடுப்பில் தொங்கவிடும் வாள் ஆதலால் இடைவாள் ஆயிற்று. அது, உடையோடு உடையாய் ஒன்றுதலால் உடைவாள் எனவும் பெயர் கொண்டது. அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த -கம்ப. உயுத். 4316 இட்டடி முட்டடி: இட்டடி = இட்டு அடி, இட்டடி; கால் வைக்கும் அளவுக்குக் கூட இடைஞ்சலான இடம். முட்டடி = முட்டு அடி, முட்டடி; காலின் மேல் கால்வைத்து முட்டுகின்ற அளவு மிக நெருக்கடியான இடம். இட்டடி முட்டடியான இடம் என்பதில் இப்பொருள் உண்டாயினும் இட்டடி முட்டடிக்கு உதவுவான் என்பதில் இதன் நேர் பொருள் இல்லாமல் வழிப்பொருளே உண்டாம். இட்டடி என்பது, தம் கையில் எதுவும் இல்லாத நெருக்கடியையும், முட்டடி என்பது எவரிடத்துக் கேட்டும் எதுவும் பெறமுடியாத முட்டுப்பாட்டையும் குறித்தனவாம். அந்நிலையி லுள்ள போதும் உதவுபவனை இட்டடி முட்டடிக்கு உதவுவான் எனப் பாராட்டுவார். முட்டுப்பாடு = வறுமை. அது எதுவும் கிட்டுதற்கு இல்லாமல் முட்டுதல் வழியாக வந்தது. தட்டுப்பாடும் அது. இட்டம்: இடு > இட்டு > இட்டம் = விருப்பம். ஒருவர்க்குத் தேவையானதும் இன்றியமையாததும் ஆகிய ஒன்றைத் தருதல் பெருவிருப்புக்கும் பாராட்டுக்கும் உரியதை அன்றி, நன்றிக்கு உரியதுமாம். ஆதலால் இடுதல் வழியாக விருப்பம் என்றும் பொருள் உண்டாயது. இடுதல் = தருதல், ஈதல். இட்டார் பெரியோர்என்பது ஔவையார் மொழி. இட்டம் என்பது பொருள் பொதிந்த சொல். ஓருடையைக் கொடுத்தால் அதனைக் கோடி என்னும் அருமை கருதுக. ஈத்துவக்கும் இன்பம், இடுதலால் ஏற்படுவதுதானே! இட்டவி: இட்லி என்கின்றனர்; இட்லிக் கடை என்றே கடைப் பெயர் சொல்லவும் படுகிறது. இட்லிக்காரி என்று அழைக்கப் படுபவர்களும் உளர். இவ்விட்லி மொழியியற்படி சரியானது அன்று. இட்டிலி என்றே வழங்க வேண்டும் என்று தமிழ் கற்றோர் கூறுவர். ட் என்னும் வல்லினப் புள்ளியெழுத்தை அடுத்து அதே உயிர்மெய் யெழுத்து வருவதே இலக்கண முறைமை. வட்டம், அட்டளை, பெட்டி, வட்டு என்னும் சொற்களைக் கொண்டு இதனை அறியலாம். இட்லி என்பது தவறு; இட்டிலி என்பது சரி என்றாலும் அச்சொல் பொருளுடையதாக இல்லை. பொருளில்லா ஒன்று சொல்லாகாது என்பது தமிழ் இலக்கணம் (தொல். 640) சிலர் இட்டிலியை இட்டெலி என வடிவு திரித்துச் சொல்வது உண்டு. அவர்கள் அதனைத் திருந்திய வடிவம் எனக் கருதியே வழங்குகின்றனர். இட்டெலி ஐந்தாறு தின்றோம் என்பீர் - நீங்கள் ஏதும் கருணை இலீரோ? அம்மா! பட்டினி யாக இறந்திடினும் - நாங்கள் பாவம் பழிசெய்ய மாட்டோம் அம்மா ! -கவிமணி; மலரும் மாலையும் பக். 173 இதனால் இட்டெலி எனச் சொல்லும் வழக்கும் தெரிகின்றது. இட்டலி, இட்டிலி, இட்டெலி - இம்மூன்று வடிவங்களும் பொருளோடு பொருந்தவில்லை. அலி, இலி, எலி என்பவை இட்டொடு ஒட்டவில்லை. அறிஞர் மு.வ. கதைகளில் இட்டளி என எழுதினார். இட்டு அளிப்பது எனும்பொருள் கருதி இருக்கலாம். இடுதல் மாவை எடுத்து இடுதல் என்று கொண்டாலும் பொருந்தவில்லை. இனிச்சிலர் இடுதளி என்பர். கோயிலுக்குட் தளி என்பது பழம் பெயர். மண்ணால் ஆய கோயில் மண்தளி (மண்டளி); கல்லால் ஆய கோயில் கல்தளி (கற்றளி); கல்வெட்டுகளில் அறிய வரும் செய்தி இது. இக்கோயில்களில் வழங்கப்படும் உணவு தளிகை (தளுகை) என்பது. சிற்றூர்களில் இந்நாளிலும், தளுகை போடல் தளுகை தருதல் என்னும் வழக்குண்டு. இவற்றைக் கருதியவர் இடு தளி, இடும் உணவு என்னும் பொருளதாகக் கருதுவர். இட்டிலி இத்தனை ஈடு எடுத்தேன் என்பதும் வழக்கு. ஈடு என்பது மாவு இட்டு வேக வைக்கும் தட்டைக் குறிப்பது. இட்டு வேக வைக்கும் தட்டை ஈடு என்பது வழக்கில் இருப்பதால், ஈடுதளி ஈட்டளி ஆகலாம் என்பாரும் உளர். இவையெல்லாம் நெஞ்சில் பதியுமாறு ஒட்டவில்லை என்பது வெளிப்படை. திருப்பதித் திருக்கோயில் கல்வெட்டு ஒன்றில், இட்டவி என்னும் சொல் ஆளப்பட்டிருப்பதாகக் கல்வெட்டு அறிஞர் சி.கோவிந்தராசனார் உரைத்தார். அவியல் அறிந்ததுதானே! அவிதல் அறியாததா? அவியுணவு என்பதைத் திருக்குறள் ஆள்கிறது (413). இட்டவியை அவியல் என்றே வழங்கும் வழக்கும் உண்டு. இட்டு அவிப்பது இட்டவி என்பது பொருந்துகின்றது. இட்லி, இட்டிலி என வழங்கும் சிற்றுண்டி செய்முறையை நோக்குதல் வேண்டும். அப்பண்டம் ஆக்கும் கொப்பறையில் மாவு விட்டு வேகவைக்கத் தக்கவாறு குழிகள் அமைந்த தட்டுகள் உண்டு. அத்தட்டுகள் கொப்பறையைப் பொறுத்து அகலம் அமைந்து குழிகளும் கொண்டு இருக்கும். அக்குழிகளில் மாவு இடுவர். மாவு இடும் தட்டுக்கு ஈடு என்பது பெயர். இடு > ஈடு. எத்தனை ஈடு எடுக்க வேண்டும்? ‘X® <£oš v¤jid FÊfŸ? என்பது வழக்கம். ஈட்டில் மாவை இட்டு அவித்து எடுப்பதால் அச்செயலை நோக்கி இட்டு அவிப்பதால் - இட்டவி எனப்பெயர் இட்டனர். மக்கள் வழக்கில் அப்பெயர் மாறிப்போயது. இட்டாலி: நிலத்தின் எல்லையாகப் போடப்படும் வேலியைக் கொங்கு நாட்டார் இட்டாலி என்பர். இது இடுமுள் வேலி என்பதன் சிதைவாகலாம். வேல முள்ளால் அமைக்கப்பட்ட காவல் வேலி எனப் பட்டது. நிலத்திற்கு வேலி போலக் கடல் சூழ்ந்திருப்பதால் கடலுக்கு வேலி என்பதன் அடியாக வேலை என்னும் பெயர் உண்டாயிற்று. இட்டிகை: இட்டு > இட்டி; கை = சொல்லீறு; ஒட்டுகைபோல. இட்டிகை = இட்டு இடித்துக் கெட்டிப்படுத்தப்பட்டது; அது கட்டளையுள் செறித்துத் தட்டி வேக வைத்த சுடுமண் செங்கல். இட்டிகைப் படுகால் - பெருங். 3:4:37 செங்கலால் கட்டப்பட்ட படி இட்டிடை: இட்டு + இடை = இட்டிடை. இட்டிடை = சிற்றிடை. இட்டிடையின் மின்னிப் பொலிந்து - திருவா. 7:16 இட்டிடைகழி: இட்டு + இடை + கழி = இட்டிடைகழி. கடந்து செல்லுதற்கு அரிதும் இடரும் ஆகிய வழி. முட்டும் முடுக்கும் இட்டிடை கழியும் -பெருங். 33:16 * இடைகழிகாண்க. இட்டிது: இடு > இட்டு = சிறிது; இட்டு + இது = இட்டிது. இட்டிது = மிகச் சிறிது. ஆகாறு அளவு இட்டிது -திருக். 478 கல்பொளிந் தன்ன இட்டுவாய்க் கரண்டையர் -மலை. 482 இட்டுவாய் = சிறியவாய். இட்டு: இட்டு = இடம் அகலாமல் சுருங்கியது. கல்லிடித் தியற்றிய இட்டுவாய்க் கிடங்கின் -மதுரைக். 730 மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன இட்டுவாய்ச் சுனைய - குறுந். 193 இட்டுக்கட்டுதல்: உண்மை இல்லாததை உண்மைபோல் புனைந்து கூறுதல் இட்டுக் கட்டுதலாகும். இட்டுக் கட்டுதலில் மன்னன் எனப் புகழ்வது போல் இகழ்வது உண்டு. இதைக் கதை கட்டுதல், கயிறு திரித்தல், வடம் உருட்டல் எனப் பலவாறு வழங்குவர். ஏட்டைக் கெடுத்தவை பொய்யும் புனைவும் என்பது பொய்யை மெய்யாகக் கூறலும் பொருந்தாததையும் நடவாததையும் இட்டுக் கட்டிக் கூறுதலுமாம். இட்டு நீர்: மணவிழா நிறைவேறி மணமகள் கையை மணமகன் கையில் பிடித்து ஒப்படைத்து நீர் வார்த்தலை இட்டுநீர் என்பது மதுக்கூர் வட்டார வழக்கு. மணவிழாவைக் கொடைவிழா என்பது பழவழக்கம். இடுதல் என்பதும் கொடுத்தலேயாம். இட்டார் பெரியோர் இட்டு உண்க என்பவை கொடுத்தல். பொருள் தரும் பொதுவழக்கு. இவ்விடுதல் சிறப்பு வழக்கு. இட்டுறை: இடு > இட்டு = சிறியது. இடுப்பு, இடை, இடுக்கண், இடுக்கு என்பவெல்லாம் சிறு என்னும் பொருள் வழிச் சொற்கள். இடுங்கிய வழியை இட்டுறை என்பது சிங்கம் புணரி வட்டார வழக்கு. உறை என்பது வழி என்னும் பொருள் தருகின்றது. உறுவது வருவது என்னும் பொருளதாதல் அறிக. சிறிய உறைக்கிணறு என்பதும் இட்டுறையாம். இணக்கம் வணக்கம்: இணக்கம் = ஒருவர் குணத்திற்குத் தக இணங்கிப் போதல். வணக்கம் = பணிந்த மொழியும் வணங்கிய கையுமாக அமைந்து போதல். இணக்கத்தால் ஒருவரை வயப்படுத்தலாம்; வணக்கத் தாலும் வயப்படுத்தலாம். இணக்க வணக்கம் இரண்டும் உடைய ஒருவர் எவரையும் வயப்படுத்துதல் எளிமையாம். இணக்க வணக்கம் உண்மையாக இல்லாத நிலையில் அவற்றால் விளைந்துள்ள தீமைகளுக்கு எல்லையே இல்லையாம். தொழுத கையுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து என வள்ளுவர் எச்சரித்தார் (திருக். 828). இணர்: இண் + அர் = இணர் இண் = செறிந்தது, விரியாதது; இணர் = பூங்கொத்து. இணரூழ்த்தும் நாறா மலர் -திருக். 650 என்பதால், இணர் மலரா முகிழ்நிலை என்பதை அறியலாம். மருதின் ஒள் இணர் அட்டி -முருகு.28 முகிழ் நிலையில் சொல்லப்பட்ட இணர், மலராகவும் மலரிதழாகவும் பின்னே கொள்ளப்பட்டது. தேங்கமழ் மருதிணர் கடுப்ப -முருகு. 34 கடுப்ப = ஒப்ப, போல. நாறிணர்ப் பைந்தார் -கலிட். 90 இணர் எரி: இணர் = கொத்து , தொகுதி; எரி = நெருப்பு. பக்கம் பரவி மூண்டெழும் தீ, இணர் எரி யாகும். இணர் = பூ தொகுதியாகவும் (கொத்தாகவும்) பல இதழ் களின் தொகையாகவும் அமைந்தது. இணர் எரி தோய்வன்ன என்பது, பூங்கொத்து தீயிற் பட்டாற் போன்ற என்னும் பொருளது (திருக்.308) இணுக்கு: செடி கொடிகளில் இணை இணையாக அமைந்த இலை களை இணுக்கு என்பது மக்கள் வழக்கு. அவற்றை இணையாகப் பறித்தலையும் இணுங்கு என ஏவுவர் . இணுங்குதல் கொய்தல் பொருளது. முற்காலத்தில் மகளிர் வடிந்துவீழ் காதினராக- தோளைத் தொடக் காது வளர்ப்பவராக - இருந்தனர். காதை அறுத்தலை (அணிகலத்தைத் திருட)க் காதை இணுங்கிவிட்டான் என்பர். இணர்,இணை,இணங்கு,இணக்கம்என்பனஎண்ணத் தக்கன. துணிக்கப் பட்டது துணுக்கு ஆவது போல் இணுங்கப் பட்டது இணுக்கு ஆயது. இணை: இணை = இரண்டு. இணைதல், ஒன்றனோடு ஒன்று சேர்தல் இணைதல் ஆதலால் இணை என்பது இரண்டைக் குறிப்பதாயிற்று. இணையடி இணைக்கை இணைசேர்தல் என்பவை இருவகை வழக்குகளிலும் உள்ளவை. இரு காமத் திணை யேரி -பட்.9 அமைக்கவின் கொண்ட தோளினை -கலித்.21 இணையடி நீழல் -தேவா. திருநா. செய்யுளில், குறில் ஆகிய இரண்டு அல்லது குறில்நெடில் ஆகிய இரண்டு எழுத்துகள் இணைதல் இணையசை அல்லது நிரையசை எனப்படும். முதலிரு சீர்கள் மோனையால் ஒன்றுதல், இணை மோனை; முதலிரு சீர்கள் எதுகையால் ஒன்றுதல், இணை எதுகை; முதலிரு சீர்கள் முரணால் ஒன்றுதல், இணை முரண்; முதலிரு சீர்கள் அளபெடையால் ஒன்றுதல், இணை யளபெடை; இறுதிச்சீரும் அதன்முன் சீரும் இயைபால் ஒன்றுதல், இணை யியைபு எனஇணை விரியும். நிரையசையை இணையசை என்பது காக்கைபாடினியார் முறை. இணைமணி மாலை என்பது இருவகைப் பாவால் அமைந்த நூறுபாடல்களை உடைய சிற்றிலக்கியம். இணைக்கை: கைகள் இரண்டும் இணைந்து செயல்படும் கூத்து இணைக்கையாம். இணைக்கை வகை பதினைந்தாகும். இணைக்கை, இரட்டைக்கை, பிணையல் என்றும் வழங்கும். ஒன்றனோடு ஒன்று பிணைந்தது பிணையாம்! இணைந்ததால் இணையாயது போல் பிணைந்ததால் பிணையாயிற்றாம். (சிலப்.3:18 அடியார்க்.) இணைசேர்தல்: இணை = இரண்டு. ஆணும் பெண்ணுமாம் விலங்கு பறவை மக்கள் கூடி மகிழும் நோக்கொடு சேர்தல் இணை சேர்தலாகும். ஒவ்வோர் உயிரியும் இணை சேர்தற்கென அமையும் பருவ காலம் உண்டு என்பது கண் கூடு. பறவை இணை சேர்தல் வலசையாதல் உலகறி செய்தி. இணைசேர்த்தல் என்பது இந்நாள் வழக்கமாயிற்று. மந்தை யோடில்லாத மாடுகளுக்குப் பொலிகாளை தேடி இணைத்தல் அது. உழவர் தம்மிடம் ஒரு மாட்டுக்குத் தக்க மாடு ஒன்றனை வேளாண் பணிக்குத் தேடிச் சேர்த்தலும், ஒரு மாட்டை வாங்கி அதன்பின் அதற்கு இணையாம் மாட்டைத் தேடிப் பிடித்தலும் வழக்கம். அதுவும் இணை சேர்த்தல் எனப்படும். இணைமணி மாலை: வெண்பா இரண்டு வந்து பின் கலித்துறை இரண்டு வந்து அவ்வாறே நூறு பாட்டான் முடிவது இணைமணி மாலையாகும். வெண்பாக் கலித்துறை தாமிவையாம் வருபா விரண்டிரண்டாற் தம்முன் மாறின்றி நூறுவரின் பெருமான் விழியாய் இணைமணி மாலை புகல்வர்களே(நவநீதப். 37) வெண்பாவும் அகவலும் இணைந்து அந்தாதியால் நூறு வருவது வெண்பா அகவல் இணைமணிமாலை என்றும், வெண்பாவும் கலித்துறையும் இணைந்து அந்தாதியாய் நூறு வருவது வெண்பாக் கலித்துறை இணைமணி மாலை என்றும் கூறுவாரும் உளர். வெண்பா அகவல் வெண்பாக் கலித்துறை இரண்டிரண் டாக இணைத்து வெண்பா அகவல் இணைமணி மாலை வெண்பாக் கலித்துறை இணைமணி மாலை யாகும் -முத்துவீ. 1050 பிரபந்த தீபம் இணைமணி மாலை இலக்கணத்தை, இணைமணி மாலை இலக்கணம் இயம்பலில், வெண்பா அகவல் வெண்பாகலித்துறைஇரண்டிரண் டந்தாதித் திருநூறு இயம்பலே என்கிறது(9). நூறு பாடலை இருநூறு பாடலாக்கிக் கொள்கிறது இது. மாலை என்னும் பெயருண்மை முடி முதல் (அந்தாதி) நடையது என்பதை வெளிப்படுத்தும். இணையம்: இணை + அம் = இணையம்; ஒன்றோடு ஒன்று இணங்கிச் செயலாற்றும் bபாதுஅமைப்òஇணைaம்.பல அமைப்புகŸ, பலதுறைகள், பல நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து செயல்படச் செய்யும் பொதுவியக்க அமைப்பு இணையம் எனப்படும். புத்தமைப்பாம் பன்னாட்டு வானூர்தி இணையம், விண்வலை . முதலாம் இணையங்கள் எண்ணத்தக்கவை. * ஒன்றியம் காண்க. இணையர்: இணை + அர் = இணையர். கணவன் மனைவியராம் இருவரை இணையர் என்பது வழக்கம். ஒருவருக்கு ஒருவர் ஏற்றத் தாழ்வு இல்லாத ஒப்பானவர் என்பதை உணர்த்தும் வகையில் இணையர் என்னும் பெயரீடு உண்டாயிற்றாம். இந்நாளில், இன்ன இணையரின் மகனுக்கும் இன்ன இணையரின் மகளுக்கும் திருமணம் நிகழும் என அழைப்பிதழ் வெளியிடுதல் கண்கூடு. ஒ. neh.: இணைமாலை, இணையடி. இணையா வினைக்கை; இணை + ஆ = இணையா (த); வினைக்கை = செயல்புரியும் கை. இணையாத கையால், அதாவது ஒற்றைக்கையால் அருஞ்செயலாற்றல் இணையா வினைக்கை ஆகும். கூத்து (நடன)க் கை இதுவாம். இவ்வகையால் 33 நளி நயங்கள் (நட்டுவங்கள்) கூறப்பட்டுள. பிண்டி என்பதும் ஒற்றைக்கை என்பதும் இதன் வேறு பெயர்கள்(சிலப். 3:18 அடியார்க்.) இண்டு; இண் + து = இண்டு. செறிந்த முள்களை யுடையது இண்டு. இடையே செல்ல இடந்தராமல் குருதி வழிய வழியக் குத்துதலால் இண்டு இடுக்கு எனப்படும். அவன் இண்டு இடுக்கில் மாட்டிக் கொண்டான்? எப்படித்தான் மீள்வானோ தெரியவில்லை என்பது வழக்கு. ஈர்ங்கை > ஈங்கை என்பதும் இண்டே என்பர். இண்டிவர் ஈங்கைய சுரனே -நற்.2 இண்டு படர்ந்த ஈங்கை என்பதால் இரண்டும் வேறாதலும் புலப்படும். * ஈங்கை காண்க. இதக்கை: இதம் + கை = இதக்கை; இதம் = மென்மை; கை = சொல்லீறு. இதக்கை = நுங்கின் மேல் இருக்கும் மெல்லிய இளந்தோல். யானை நடுகல்லை ஆள் எனக் கருதி எற்றியதால் அதன் கால்நகம் நுங்கின் இதக்கைபோல் ஒடிந்ததாம். அத்தம் நடுகல் ஆளென உதைத்த கான யானைக் கதுவாய் வள்ளுகிர் இரும்பனை இதக்கையின் ஒடியும் - அகம். 365 இதண்: இதழ் > இதண் > இதணம். இதண் = பரண்; இதணம் என்பதும் இது. இதழ் = பூ, இலை, தழை: கால்கள் நட்டோ, மரக்கிளைகளின் மேலோ ஊடும் பாடும் கம்புகள் பரப்பி இலைதழைகளைப் பொதும விரித்துப் பாயலாக்கிக் காவல் காக்கவும், படுத்துக் கொள்ளவும் அமைக்கப்பட்டது இதண் ஆகும். வேங்கை பாவமை இதணம் ஏறி - நற் 373 கல்மிசைத் தனிநிலை இதணம் - நற். 194 * பரண் காண்க. இதம்: இதம் பதம் என்பதோர் இணைச்சொல். இதம் = இனியது; பதம் = பக்குவமானது. இவ்வினைச் சொல்லின் இதம். இதவு என வரல் வழக்கு. இதவும் இனியது என்னும் பொருளதே. இதம்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட் டாலும் என்றார் மகாகவி பாரதியார். இதம்பதம்: இதம்பதம்:1 இதம் = இனிமையாகப் பேசுதல். பதம் = பக்குவமாகப் பேசுதல். இதம் என்பது இனிமையாகவும் இனிய சொல்லையும் சுட்டும். இதமாகப் பேசுதல் என்பது கேட்பவர் விரும்பப் பேசுதலாம். பதம் என்பது பக்குவம். வேக்காட்டு நிலையைப் பார்த்தல், பதம் பார்த்தல் என்பதும் விளைவை அறுக்கும் பதமாக இருக்கிறது என்பதும் கருதுக. இனி, கடைந்து பக்குவ மாகத் திரட்டப்பட்ட வெண்ணெய் பதம் எனப் படுவதையும் பதனீர் உண்மையையும் கருதுக. புகும் வேளை சரியாக இருக்க வேண்டும் என்னும் குறிப்பில் பதனன்று புக்கு எனவரும் புறப்பாட்டு, பதம் = செவ்விய பொழுதாம் செவ்வி. இதம்பதம்:2 இதம்பதம் சொல்பவர்க்கும் கேட்பவர்க்கும், செய்பவர்க்கும் செய்யப் பெறுவர்க்கும் நன்மை பயத்தலால் இதம்பதத்திற்கு நன்மை என்னும் பொருளும் உண்டாயிற்று. பயன்நோக்கிய படைப்பு இப்பொருளாம். இதல்: இதல் = சிவல் என்னும் பறவை. காடை என்றும் கவுதாரி என்றும் கூறுவர். சில்லை சிச்சிலி என்றும் கூறுவர்; சின்னஞ்சிறு பறவை அது. அதன் சிறப்பு கால்நகம் செம்முல்லை அரும்பு போல் இருக்கும் என்பது. புதன் மிசைத் தளவின் இதல்முள் செந்நனை - அகம். 23 புதரின் மீது படர்ந்த செம்முல்லையினது சிவல் முள்ளைப் போன்ற சிவந்த அரும்புஎன்பது இதன் பொருள். இதல்முள் ஒப்பின் முகைமுதிர் வெட்சி - அகம். 133 சிவல்முள்ளை ஒத்த முற்றிய முகையுடை வெட்சிஎன்பது இதன் பொருள். இம் முள் நகச்சிறப்பு நோக்கி இதல் எனப் பட்டதாம். இதல் = முள் என்பது செ.சொ.பொ. அகரமுதலி. இதவு: இனியது; இதம் என்பதும் இது. இதவார் குலசேகரன் என்கிறது அழகர் கலம்பகம் (காப்பு.3) * இதம் காண்க. இதழகல் அந்தாதி: இதழொட்டா எழுத்துகளை அமைத்து அந்தாதித் (முடிமுதல்) தொடைபடப் பாடப்படுவது இதழகல் அந்தாதியாம். உ, ஊ, ஒ,ஓ, ஔ என்னும் உயிரெழுத்துக்களும், இவற்றின் வரிசையும், ப், வ், ம் என்னும் ஒற்றும் இவற்றின் உயிர்மெய் யெழுத்துகளும் இதழொட்டிப் பிறப்பன. ஆகலின் இவற்றை விலக்கிப் பாடுவதே இதழகல் பாவென்க. பொருள் தருவதாய் முடி முதல் தொடை பட அமைவது ஏகத்தாள் இதழகலந்தாதி எனப்படும். இதழகல் எழுத்துகளை யுடையதாய், ஒரு தொடை அமைவுடையதாய்ப் பாடப்பட்ட ஒரு நூல், ஒரு தொடைச் செய்யுள் நிரொட்டகக் குகனந்தாதி என்பதாம். இதனையும் தண்டபாணி அடிகளே அருளினார். இந்நூலின் 102 பாடல்கள் உள. * ஏகபாத நூற்றந்தாதி காண்க. திருவரங்க இதழகல் அந்தாதி, திருநெல்வேலி இதழகல் அந்தாதி என்பவையும் தண்டபாணி அடிகளால் பாடப் பட்டவையே. முன்னதில் 32 பாடல்களும் பின்னதில் 33 பாடல் களும் உள. இதழகல் அமைவுடையதாய், ஓரடியே மடங்கி நாலடியாய் அடிதொறும் வேறுவேறு பொருள் தருவதாய் முடிமுதல் (அந்தாதித்) தொடைபட அமைவது ஏகத்தாள் இதழகலந்தாதி எனப்படும். ஏகத்தாள் = ஓரடி. இதழகல் பா (நிரொட்டகம்): நிரொட்டி, இதழொட்டாப் பாட்டு என்பனவும் இது உ, ஊ, ஒ,ஓ, ஔ, ப,ம, வ, ஆகிய இவை இதழ் குவிந்தொலிக்கப் பிறப்பன. ஆதலின், இவை வாராமல் பாடுவது நிரொட்டகம் ஆகும். ஆறிரண்டாம் ஆவியும் ஐயிரண்டாம் ஆவியும் மாறிகந்த உஊவும் ஔவும் - கூறில் வகர பகர மஃகான் வந்தணையாச் செய்யுள் நிகரில் நிரொட்டி எனல் -யா.வி.96 மேற். இதழ்குவிந் தியையா தியல்பது நிரொட்டியாம் - மாற. 274 உஊஒஓ ஔபம வஇவற் றியையு சேராநி ரொட்டத் திறத்து - தண்டி. 97 நிரொட்டியாயும், யமகமாயும் அந்தாதியாயும் வந்த நூல் நிரொட்டக யமக அந்தாதி எனப்பெறும். திருச்செந்தில் நிரொட்டக யமக அந்தாதி, திருத்தில்லை நிரொட்டக யமக அந்தாதி என்பவை போல்வன எடுத்துக்காட்டாம். எ-டு: யானைக்கண் டங்கரி சென்றேத் தெழிற்செந்தி லின்றடைந்தே யானைக்கண் டங்கரி யற்கங் கயிலையை யேய்ந்ததகை யானைக்கண் டங்கரி சேரெண்டிக் காக்கினற் கீநலிசை யானைக்கண்ட டங்கரி தாகிய சீர்க்கதி யெய்தினனே திரு. நிரொ. அந். இதழ்: இதழ் : 1 இதமாகப் பொருந்தி இருப்பது இதழ். மலர் இதழ், வாயிதழ், கண்ணிமை முதலாயவை இதமாகப் பொருந்தி இருத்தலை அறிக. இதவு, கதவு என்பவற்றின் சொற்பொருளைக் காண்க. அகவிதழ், புறவிதழ் என இருப்பினும் ஒன்றற்கு ஒன்று இயைபாக - இணைவாக - அரணாக இருப்பதை எண்ணுக. இதழருமை, கிழமையிதழ், திங்களிதழ் ஆண்டிதழ் என விரிவுறுதலும் கருதுக. இதழ் : 2 பூவின் இதழ்கள் போல் வாய்மலர்க்கு உரிய இதழ்கள் (உதடுகள்) இரண்டு. இவற்றை மீ இதழ், கீழ் இதழ் என்பர். மீகீழ் இதழுறப் பம்மப் பிறக்கும் -நன். 81 மேல் இதழும் கீழ் இதழும் ஒட்டப் ப என்னும் எழுத்தும் ம என்னும் எழுத்தும் உண்டாகும். இவ்வெழுத்துகள் வாராமல் பாடும்பாட்டை இதழ் ஒட்டாப் பாட்டு என்பர். அதனை இதழ் அகல்பா என்றும் கூறுவர். இதழ் குவிபா: இதழ் அகல் பா தோன்றிய பின், ஏன், இதழ் குவி பா இருத்தல் கூடாது? என்னும் எண்ணத்தால் பிறந்தது இதழ் குவி பா ஆகும். இதழொட்டிப் பிறக்கும் எழுத்துகளாலேயே பாடல் அமைவது இஃதாகும். இப் பாவகையில் வரும் எழுத்துகள் இதழ் ஒட்டிப் பிறப்பதால் இப்பாவுக்கு, இதழ் ஒட்டகம் எனப் பெயர் சூட்டலாம். இதழொட்டாப் பாட்டு (நிரொட்டகம்) என்னும் பெயரைக் கருதுக. இதள்: இதள் > இதழ். இதழ் என்பது பின் வரவினது. முன்னை வடிவு ளகரமாம் இதள். இதள் என்பதன் பொருள் இதழ் வரவால் சுருங்கியது. அது, தன் பழைய நிலையை விடாமல் இதள் என்னும் பாதரசத்தைக் குறிப்பதாயிற்று. எப்படிப் பிரிப்பினும், எத்தனை வகையாகப் பிரிப்பினும் அதன் மலரன்ன திரள் நிலை மாறாமை காண வியப்பாம். இதள்ழூ இதளியம் = பாதரசம் என மருத்துவ இயலில் காணப்படுகிறது.- மூலிகை அகராதி இதா: இதா = இதுவா. இது + ஆ = இஃதா என்பது இதுவா என்றும் ஈதா என்றும் வழக்கில் ஊன்றியது. இதுவா கேட்கிறாய்; ஈதா வேண்டும்; இதையா சொல்கிறாய்; ஈதா உன் வழக்கு என்பவை மக்கள் வழக்கு. இதை: இதை : 1 இதை = புதிய கொல்லை நிலம்; தூறு முள் முதலியவற்றை வெட்டியும் எரித்தும் ஆக்கிய புது நிலம் கொல்லையாம். புதுக்கொல்லை என்பதும் வழக்கு. பழங்கொல்லையை முதை என்றும் மூதை என்றும் வழங்கியமையால் புதுக்கொல்லையை இதை என்றனர். இதை என்பது புதுச்சொல் அன்று பழஞ்சொல்லே. இதைச்சுவல் கலித்த ஈரிலை நெடுந்தோட்டுக் கவைக்கதிர் வரகு - அகம்.393 இதைப்புன வரகின் அவைப்புமாண் அரிசி -அகம்.394 வரகும் தினையும் முல்லைக் கொல்லை விளைவாம். இதை:2 இதை = கப்பலின் பாய்மரம்; இன்பம் தருவது. வாலிதை எடுத்த வளிதரு வங்கம் பல்தரு பண்டம் இழிதரும் பட்டினம் -மதுரைக்.536-537 பருவக் காற்றறிந்து நாவாய் செலுத்தினாலும் அக்காற்றுத் தள்ளிச் செல்லச் செய்வது பாய்மரமே ஆதலால் அதனையே நம்பிக் கலம் செலுத்தினர். வானியைந்த இருமுந்நீர்ப் பேஎ நிலைஇய இரும்பௌவத்துக் கொடும்புணரி விலங்கு போழக் கடுங்காலொடு கரைசேர நெடுங்கொடி மிசை இதையெடுத்து இன்னிசைய முரச முழங்கப் பொன்மலிந்த விழுப்பண்டம் நாடார நன்கிழி தரும் என்னும் மதுரைக்காஞ்சி யடிகள் (75-82) இதையால் எய்தும் பேற்றை ஓவிய மாக்குகின்றது. இதையும் கயிறும் பிணையும் இரியச் சிதையும் கலத்தைப் பயினால் திருத்தும் திசையறி நீகானும் என்னும் பரிபாடல் (10) இதைச்சிதைவே எல்லாச் சிதைவுமாம் என்பதை எண்ண வைக்கிறது. கப்பலோட்டிக்கும் கப்பலில் உள்ளார்க்கும் கப்பலில் உள்ள பொருள்களுக்கும் கப்பல் வருகையை எதிர்பார்த்திருப்பார்க்கும் அந்தப் பாய்மரக் காட்சிதானே தொலைவில் இருந்தே காட்சியின்பமும் மாட்சியின்பமும் வழங்குவது. அதனால் அப்பாயையே இனியதாகக் கருதி இதை என்றனராம். புதுக்கொல்லை இதையும், பாய்மர இதையும் இன்ப நலமாக்கல் ஊடகமாகக் கொள்ளத் தக்கதாம் இதம் (இன்பம்) தருவனவற்றை இதை என்றது இனிய ஆட்சியாம். இதோ: இஃது + ஓ = இஃதோ > இதோ. இஃதோர் வாய்ப்பு. இதோ வந்து நின்றதென் மன்னுயிரே -திருக்கோ.39 இனி, இதோள் > இதோ ஆயதெனின், இவ்விடத்தே என்னும் பொருளதாம். இதோளி இதோள் என்பவை இவ்விடம் என்னும் பொருள்தரும் பழஞ்சொற்கள். (தொல். எழுத். 398 உரை, தொல். பொருள். 392 உரை.) இதோளி: இதோளி = இவ்விடம். இப்பழந்தமிழ்ச் சொல்லாட்சி இன்றும் முசிறி வட்டப் (சூரம்பட்டி) பகுதிகளில் வழக்கில் உள்ளது. நேற்று உன்னை இதோளிப் பார்த்தேனே, மறந்துவிட்டாயா?என்பது மக்கள் வழக்கு. இத்தனை: இவ்வெண்ணிக்கை. ஒவ்வொன்றாக எண்ணி அவ்வெண்ணை இத்தனை எனல் வழக்கு. எத்தனை ஆடு, எத்தனை மாணவர் என்பது போல் எண்ணிக்கை வழிப்பட்டது இத்தனை என்பது. எத்தனை என்னும் பெயருக்கு மறுமொழி இத்தனை என்பது ஆகலின் அதுவே தெளிவிக்கும். இத்தனைநாள் உயர்த்துகையே -திருநூற். 85 இத்தால்: இஃதால் > இத்தால் = இதனால் என்னும் பொருளது. வந்து தொடரும் இத்தால் -தாயு. ஆகார.15 இத்தி: இத்தினி என்பது சின்னஞ் சிறியது என்னும் பொருளது. எனக்கு இத்தினி கொடுத்தாள் என்பது சிறிது கொடுத்தாள் என்னும் ஏக்கப் பழிப்புரை. இத்தி என்பது சின்னஞ்சிறு விதைகளை உடைய மரம் என்பதாம். ஆல், அரசு என்பவற்றிலும் இத்தி என்பது சிறிய விதைகளை மட்டுமன்றிப் பழமுமே சிறியதாம். நிழலும் அவ்வாறே சிறிதாம். புல்லரை இத்திப் புகர்படு நீழல் -அகம். 77 இத்துணை: இத்துணை = இவ்வளவு. தினைத்துணை, பனைத்துணை எள்துணை (எட்டுணை) என்பவை தினையளவு பனையளவு, எள்ளளவு என்னும் பொருளன. துணை, அளவைப் பெயர் என்பது இதனால் விளக்கமாம். எத்துணை எவ்வளவு என்பதானால் போல், இத்துணை இவ்வளவாயிற்றாம். கைம்மாறு இத்துணை என்பதொன் றில்லேன் -பெருங். 3:1: 183 இத்தனை இத்துணை என்னும் இரண்டும் இவ்வளவு என்னும் பொதுப்பொருள் தருதலும் முன்னரே உண்டாகிவிட்டது. இத்தை: இஃதை > இத்தை = இதனை ஓ,நோ.: அஃகம் > அக்கம். ஆய்தம் ககரம் ஆவது போல் தகரம் ஆகியது; இத்தை யாயும் அறிவுடைய னாய் -சிவ. சித்.11:1 * இத்தால் காண்க. இந்தா: இந்தா = இது மக்கள் பெருவழக்குச் சொல்; அண்மைக் காலத்தது. இங்கே பார், இங்கே வா, இதை வாங்கிக் கொள் என்னும் பொருள்களில் ஊன்றியுள்ளது. இந்தப் பொருள் வேண்டும்என்று ஒருவர் கேட்கிறார். கொடுப்பவர் இந்தப் பொருளா? இந்தாஎன்று சொல்ல, இவ்வாட்சி பரவியிருக்கலாம். இன்னும் செவ்விய விளக்கம் தோன்றலாம். இந்திரவிழா: மருதநில வேந்தனாம் இந்திரனுக்கும் காவிரிப்பூம் பட்டினத்துப் பண்டு எடுக்கப்பட்ட விழா (சிலம்பு 5) அவ்விழாவின் எச்சமாக இக்கால் உள்ள விழா போகிப் பண்டிகை என்பது. போகியாவான் இந்திரன். தைத்திங்களுக்கு முதல் நாள் - மார்கழியின் இறுதிநாள் அவனைக் குறித்து எடுக்கும் விழா பொருளறிவாராப் புனைவாய்ப் பழையன கழித்துப் போக்கும் நாளாய் நிகழ்கின்றது. போகியாவான் மழைக்குரியனாய்த் துய்ப்புகளுக்கெல்லாம் மூலமாக இருப்பவன் என்னும் பொருளதாம். வேந்தன் மேய தீம்புனல் உலகம் -தொல். 951 இந்திரன்: இந்திரன்:1(ஐந்திரன்) ஐம்புல அடக்கத்திற்கு எடுத்துக்காட்டாகக் காட்டப் படுபவன் இந்திரன். அடக்கம் அமரருள் உய்க்கும் (திருக். 121) என்பதால் அடக்கம் தெய்வ நிலையாதல் விளங்கும் ஐம்புலன்களையும் நெறிமுறையால் அடங்கிய மேலோன் ஒருவனே இந்நிரன் என்பான். அவன் செய்ததாகச் சொல்லப்படும் நூலே ஐந்திரம். இந்திரன்:2 இயன்திரன் > இந்திரன். இயன்திரம் = இயந்திரம் > எந்திரம். இயக்கவல்ல திறத்தவன் இந்திரன் எனப்பட்டான். விண்ணவர் கோமான் எனச் சிலம்பில் (11:99) பாடப்பட்டவன். வேந்தன் எனக் தொல்காப்பியரால் சொல்லப்பட்ட மருதநில மேலோன்(951). இந்திரனாம் தலைவனை உடையவர் இந்திரர் (தேவர் ) எனப்பட்டனர். இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் தமியர் உண்டலும் இலரே -புறம்.182 இப்படி: இ+ படி = இப்படி; இ = சுட்டு. சுட்டு, வினாக்களொடு படி ஒட்டுதல் அறிக (அப்படி, எப்படி). படி = படிவது, பதிவது , கால் படிவது வழியாக ஏற்பட்டது. படியும் பதியும் ஆம். ஏறி இறங்க உதவும் படி, படிக்கட்டு , படித்துறை என்பவை உள. பதி குடியிருப்பாய் அதன் பெயராய் அமைந்தது திருப்பதி; பதியின் தலைவனும் மக்களும் பதி ஆயினர். பதிஎழூஉ அறியாப் பழங்குடி -சிலப். 1:15 ஒன்றைப்போலவே ஒன்றை உருவாக்குவது படி, படி யெடுப்பு, படியோலை, படிவம் என வளர்ந்தது. இவ்வாறு என்னும் பொருளில் இப்படி என வந்தது. இவ்வாறு கூறு வதற்குச் சான்று, இப்படிக்கு என மடல்களில் எழுதும் வழக்கு உண்டாயது. இப்படியாற் சமைக்கப்பட்ட நூலிற் சொல்லுகிற படியே எல்லா இலக்கணமும் தோற்றின அரங்கு சிலப். 3: 106. அரும். இப்பர்: வணிகர் வகையர் மூவருள் இப்பர் என்பார் ஒருவர். இப்பி= சங்கு, முத்து, முத்து வணிகராக இருந்தவர் இப்பர் எனப்பட்டார் போலும். மற்றை இருவர் கவிப்பர் என்பாரும் , பெருங்குடி வணிகர் என்பாருமாம். கவிப்பர் என்பார் மன்னர்க்கு முடிக்கலம் செய்வாராகலாம். பெருங்குடி வாணிகன் பெருமட மகளே என்று கண்ணகி சுட்டப்படுவதால்(சிலம்பு.2:76) மாநாய்கன் ஆகிய கலவணிகன் பெருங்குடி வணிகன் ஆகலாம். “வணிகர் இப்பர் கவிப்பர் பெருங்குடியர் என்று மூன்று பாலார்”என்று நச்சினார்க்கினியர் வரைகிறார் .(சீவக.. 1756) இதன் விளக்கமாக, வணிகர் மூவகையர் என்பதும் அவர்கள் இலக்கணமும் பின்னுள்ள வெண்பாவால் விளங்கும். இப்பர் கவிப்பர் பெருங்குடி வாணிகரென்று ஒப்புடைய மூவர் உரைக்குங்கால் - தப்பில் மிதியடியே றானைமிசை நோக்கினர்கள் காணா நிதியுடைய ராவர் நிலத்து (சீவ சம்போதனை 6, லோகாதிகாரம் 42) இஃது எதிர் நிரல்நிறைஎன வரைகிறார் உ.வே. சாமிநாதையர். எதிர் நிரல்நிறை என்பதால், பெருங்குடி வணிகர் மிதியடி மேலும், கவிப்பர் காளையின் மேலும், இப்பர் ஆனையின் மேலும் செல்லும் முறைமையர் ஆதல் விளங்கும். இப்பர் பரதர் வைசியர் கவிப்பர் எட்டியர் இளங்கோக்கள் ஏர்த்தொழிலர் பசுக்காவலர் ஒப்பினால் நாய்கர் வினைஞர் வணிகரென்று அத்தகு சிரேட்டிகள் செட்டிகள் பெயரே என்கிறது திவாகரம். * கவிப்பர் பெருங்குடியர் காண்க. இப்பி: இப்பி = சிப்பி. இகரம் சகர ஒற்றுப் பெற்றது. ஓ,நோ.: எண் > சேண் நித்திலம் பொதிந்த இப்பி போல -பெருங்.2: 11 : 48 நித்திலம் = முத்து. பன்மீன் கொள்பவர் முகந்த இப்பி -அகம்.298 இமிர்தல்: இம் > இமிர் > இமிர்தல் இம் = ஒலிக்குறிப்பு; இமிர்தல் = ஒலித்தல். சுரும்பு என்னும் ஈ இனம் இமிர்தல் உடையது. சுரும்பு இமிர்ந்து இம்மென -கலித்.119 இம்மெனலும் இமிர்தலும் இயைந்தமையும் அதனைச் செய்தது சுரும்பு என்பதையும் இம்முச்சொல்லில் முருகமையக் காணலாம். இமிர்தல் > ஞிமிர்தலாம். அதனால் சுரும்பு ஞிமிறு ஆயதாம். * ஞிமிறு காண்க. இமில்: இம் + இல் = இமில். இமில் = எழுதல், எழுச்சியுறல்; திமில் = காளையின் கழுத்தின் மேல் எழுந்து எழிலுறத் தோன்றுவது இமில். இம்மென உடனெடுத் தெழுந்து சேறுமோ -கம்ப. உயுத்.3444 காளையின் எழிலும் எழுச்சியும் காட்டுவது இமிலே ஆம். இமில் தகர ஒற்றுப் பெற்றுத் திமில் என வழங்கும். எழிலேற் றிமிலின் ஏற்ப முடித்தான் -சீவக. 2437 * திமில் காண்க. இமிழ்: இமிழ் : 1 இனிமை; இமிழிசை = இனிய இசை. இமிழ் கனிப் பிறக்கம் -கம்ப,கிட்.854 இமிழ்:2 இனிய இசை. தெரி இமிழ் கொண்டநும் இயம் போல் இன்னிசை -மலை.296 இமிழிசை யருவியொ டின்னியங் கறங்க -முருகு. 340 இமிழ்:3 இமிழ் = ஒலி. மண்கணை முழவின் இன்கண் இமிழ்விற்கு எதிர்வ -பரிபா.22 புள்ளினம் இமிழும் -புறம். 15 இமைப்பொழுது: கண்ணை இமைக்கும் பொழுது இமைப்பளவு ஆகும். எழுத்துகள் ஒலிக்கும் அளவு மாத்திரை என்னும் அளவால் அளக்கப் பட்டது. கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை -தொல்.7 இயல்பெழு மாந்தர் இமைநொடி மாத்திரை -நன்.100 அதனையும். உன்னல் காலே ஊன்றல் அரையே முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே எனப் பகுத்தனர். இக்குறிப்பு கண்ணிமை, கைந்நொடி இரண்டற்கும் பொருந்தும். இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க - திருவா.சிவபு.2 இமைப்பளவு என்பதும் இது. இமையம்: இமைத்தல் = ஒளிவிடுதல்; கதிரொளி கிளர்த்தும் கண்ணொளி திறந்து உயிரிகளெல்லாம் கிளர்ச்சியுறல் கண்கூடு. இமையுடைய உயிரிகள் இமைதிறத்தலால் ஒளி செய்யும் இயங்காப் பனிமலை கதிரொளி பட்டதும் வெள்ளிப் பனியால் ஒள்ளொளி செய்தல் இமைத்தல் கோலவும், பிறமலைகளை எள்ளி நகைத்தல் போலவும் தோற்றலால் இமைத்து ஒளி செய்யும் மலையை இமையம் - இமயம் என்றனர். பன்னகமும் நகுவெள்ளிப் பனிவரை -கம்ப.பால.324 x.neh.: இமையம் > இமயம் ; தமையன் > தமயன். பனிமலைப் பளிச்சொளியால் கருநிறக் காகமும் பொன்னிறப் பொலிவுறும் என்பதை. . . . . . . . . . பனி மா லிமயப் பொருப்பகம் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும் பொன்னிறமாய் இருக்குமென் றிவ்வா றுரைக்குமன் றோஇவ் விருநிலமே -யா.கா.3 இமைக்கும் ஒள்ளொளியால் இமையம் ஆகி, இமயம் ஆயிற்று. குமரியொடு வடவிமயத் தொருமொழிவைத் துலகாண்டசேரலாதன் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் -இவை பெயர்கள். பொற்கோட் டிமயமும் பொதியிலும் போன்றே புறம்.2 என இமயவரவு பெருவரவாக உள்ளது சங்க இலக்கியம். இமையார்: இமை + ஆ+ ஆர்= இமையார். இறந்தவர் கண் இமைத்தல் இலது. ஆதலால் இமையாதவர் - இமையார்- எனப்பட்டனர். இறந்தவர் மேலுலகாம் வானுலகம் எய்துதலாகக் கொண்டனர். ஏனெனில் புகையும் காற்றும் மேலெழல் காணலால், இறந்தாரும் மேல் உலகு சென்றனர் என்று கொண்டனர். ஆதலால் தேவர்கள் இமையார்; இமையவர் எனப்பட்டனர். கண் இமைத்தலால் தேவர்கள் அல்லர் மாந்தர் எனத் தேர்ந்த புனைவுகள்பலவாறுஎழுந்தனவாம்(நள..53) வாடாப் பூவின் இமையா நாட்டத்து நாற்ற உணவி னோரும் -புறம். 62 வாடாத கற்பகத்தின் தாரினையும் இமையாத கண்ணிமை யும் நாற்றமாகிய உண்டியையும் உடைய தேவர் பழைய உரை. தேவர் கால் நிலம் படாமையும் வியர்வரும்பாமையும் பின்னவர்கள் கொண்டனர். இம்: இம்:1 ஒலிக்குறிப்பு ; கண்கலங்கி அழுதல் ஒலி. இம்மென் றலமரல் மழைக்கண் தெண்பனி மல்க -அகம்.398 இதனைப் பாடியவர் இவ்வொலிக் குறிப்பால் இம்மென் கீரனார் எனப்பட்டார். இம்மென இசைக்கும் குடமுழவு -பெருங். 3:14 : 186 இம்:2 மழை பெய்யுமொலி. இம்மென இயங்கு மாமழை யுறையினும் -புறம்.367 இம்:3 விரைவு. இம் என்பதை ஒலிக்க உண்டாம் பொழுது. இம்மென உடனெடுத் தெழுந்து சேறுமோ? -கம்ப. உயுத். 3444 இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும் அம்மென்றால் ஆயிரம்பாட் டாகாதோ -காள.தனிப். இம்பர்: இம்பர்:1 இம்பர் = இவ்வுலகு உம்பர் இல்வழி இம்பரில் பல்பிறப்பு -மணிமே. 26:38 இம்பர் இவணே -திவா. 1016 இம்பர்:2 இம்பர் = இவ்விடம். இம்பர் போம்படித் தன்று செங் குருதிய திழிவே-சூளா.7.155 * உம்பர் காண்க. இம்பல்: இடும்பல் > இம்பல் = இடுக்கு. அந்த இம்பலில் எப்படிப் போவது? வழக்கு. எழும்பல் > எம்பல் > இம்பல். கொஞ்சம் எம்பு; வேர் வந்து விடும் வழக்கு. ஒட்டுப் பலகை எம்பி விட்டது வழக்கு, எழும்பி > எம்பி. இம்பிட்டு: இம்பு +இட்டு = இம்பிட்டு. இம் = சிறிது, இம்மி = சிறிதளவு. சிறிதளவு; கையைக் காட்டி இவ்வளவு என்பது இம்பிட்டு எனப்படும், ஒன்றைச் சொல்லி முடித்து இம்பிட்டுத் தான் என்பதும். கணக்குப் பார்த்து உனக்கு இம்பிட்டுத்தான் தர வேண்டும்என்பதும் வழக்காகும், அம்பிட்டு (அவ்வளவு) எம்பிட்டு (எவ்வளவு) என்பனவும் இவ்வகைப்பட்ட வழக்கே, இம்மி: ஒரு சிற்றளவு, இம்மியன நுண்பொருள்கள் ஈட்டி நிதி யாக்கி - சீவக, 495 இம்பி = மத்தங்காய்ப் புல்லரிசி; குறைந்ததோர் எண்ணுமாம். நச். உரை. அணு எட்டுக் கொண்டது தேர்த்துகள்; தேர்த்துகள் எட்டுக் கொண்டது இம்மி; இம்மி எட்டுக் கொண்டது எள்ளு; எள்ளு. எட்டுக் கொண்டது நெல்லு; நெல்லு எட்டுக் கொண்டது பெருவிரல், சிலம்பு. 3:97-100 அடியார்க். ஒன்றின் பத்துலக்கத்து எழுபத்தையாயிரத்து இருநூற்றில் ஒரு பங்கு என்கிறது ஆறுமுக நாவலரின் பாலபாடம். இம்மை: இகரச் சுட்டு இம் ஆகிச், சுட்டு நிலை யுற்றது. இம் + ஐ = இம்மை : இவ்வுலக வாழ்வு : இப்பிறப்பு. இம்மைச் செய்தன யானறி நல்வினை -சிலப். 15: 91 இம்மைப் பிறப்பில் பிரியலம் -திருக். 1315 அம்மை, உம்மை, எம்மை என்பனவும்இவ்வாறே. இயக்கம்: இயற்கை இயங்குதல் இயக்கு, இயக்கம் எனப்பட்டது. செல்மழை இயக்கம் காணும் -நற். 44 விளம்பழம் கமழும் கமஞ்சூல் குழிசிப் பாசம் தின்ற தேய்கால் மத்த நெய்தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும் - நற்.12 இது மத்தின் இயக்கம், குறைவினை முடித்த நிறைவின் இயக்கம் -அகம்.351 இது வினைமேற் சென்றான் மீட்சி இயக்கம். இயங்குதல் வழியாக ஏற்பட்டது இயக்கம்: இயங்காமை, தேக்கம். இயக்கம் நடத்தல், இசைத்தல், நடத்துதல் என்னும் பொருள்களைத் தரும். பழஞ்சொல்லாம் இது, தனித்தமிழியக்கம், இசைத்தமிழ் இயக்கம் எனப் புதுப்பொலிவும் உற்றது. இயக்குநர் என்னும் பதவிப் பெயரும், திரைப்படம் பிடித்து இயக்குவார் பெயரும் ஆயது. இயக்கன், இயக்கி எனத் தெய்வப் பெயரும் இயக்கர் என்பார் பதினெண்கணத்துள் ஒருவகையர் எனவும் தொன்மங்கள் உண்டாயின, இயக்கி இயக்கன் என்பவை மக்கள் வழக்கில் இசக்கியம்மன், இசக்கியப்பன் என வழக்கும் பெற்றன. மூச்சு இயக்கம், காற்று இயக்கம், நீர் இயக்கம் ஆயவை ஓட்டம் எனப் பொருள் தருவனவாம். இயங்கு திணை: தாமாக இயங்காத உயிரிலிப் பொருள்களும், ஓரறிவு நிலைத்திணையாம் புல் பூண்டு செடி கொடி மரம் ஆயவும் இயங்காத் திணையாம். உயர்திணை அஃறிணைப் பகுப்பு வேறு. இயங்கு திணை இயங்காத் திணைப் பகுப்பு வேறு என்பதை அறிக. ஈரறிவு முதலாம் ஐயறிவுப் பொருள்கள் உயர்திணை யல்லவை எனினும், இயங்குதிணை யாவனவாம். இயங்காத் திணை: ஈரறிவு உயிரி முதலாம் உயிரிகளும், மக்களும் இயங்கு திணையாம். இயங்குதல் தானாக இடம் விட்டுப் பெயர்தல் ஆகும். இயற்கை இயக்கமாம் கதிர் மதி முதலியவும் நிலம் நீர் கால் முதலியவும் இயங்குவன எனினும் அவை உயிரிலியாகலின் இயங்குதிணை ஆகா. அவற்றின் இயற்கையே இயங்கியல்; இல்லையேல் பேரழிவாக்குவனவாம். இயந்திரம்: இயன் + திரம் = இயன்திரம் > இயந்திரம் > எந்திரம். ஒ. neh.: மன்திரம் > மந்திரம். திங்களும் நுழையா எந்திரப் படுபுழை -புறம். 177 பொருள் : திங்களாலும் நுழையப் படாத பொறிகளைப் பொருந்திய இட்டிய வாயில் பழைய உரை. கரும்பின் எந்திரம் சிலைப்பின் -புறம். 322 கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்ற -ஐங். 55 இயம்: இயம் = இசைக்கருவிகள். இறைவு > இசைவு . ஒன்றனோடு ஒன்று இயைவாய் இயைந்தவை இயை > இசை ஆயின. விசிபிணிக், கூடுகொள் இன்னியம் கறங்க ஆடலும் ஒல்லார் பாடலும் மறந்தே -புறம். 153 வாங்கு மருப்பு யாழொடு பல்லியம் கறங்க - புறம். 281 இமிழிசை அருவியொ டின்னியம் கறங்க - முருகு. 240 செய்தொழில் சிலதரும் இயவர் - பெருங். 1: 57:64 * இசை காண்க. இயலசை: நேர் நிரை என்னும் அசைகள் இரண்டும் இயலசையாம். தனியசையாம் இவை இயலசையாம். குறில் தனித்தும் ஒற்றடுத்தும், நெடில் தனித்தும் ஒற்றடுத்தும் வருவன நேரசை. குறில் இணைந்தும் ஒற்றடுத்தும், குறில் நெடில் இணைந்தும் ஒற்றடுத்தும் வருவன நிரையசை. நேர் நிரை என்பவையே நேர் நிரை அசையாதல் அறிக. இயலடி: நாற்சீரால் வரும் அளவடி இயலடியாம். மிகையும் குறையும் ஆகாமையால் நாற்சீரடி இயலடியாம். யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா -புறம். 192 இயல்: இயல் > இயல்பு = தன்மை. இயல் செயல் என்பது இணைச்சொல்; இயல் என்பது இயற்கை வழிப்பட்டதையும், செயல் என்பது செயற்கை வழிப்பட்டதையும் குறிக்கும். இயங்கு பொருள், இயங்காப் பொருள் ஆகிய இவற்றின் தன்மை இயல் ஆகும், இப்பொருள்கள் செயல்படும் போது உண்டாம் செயற்கையும் இயல் எனவே கொள்ளப்படுதல் வழக்காயிற்று. இருவகை வழக்குகளிலும் இயற்கை வழி இயலும் செயற்கை வழி இயலும் காண வருகின்றன. சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம் இயல் என்பதற்குத் தன்மை, இயற்றுதல், இயங்குதல், சாயல், இலக்கணம்., இயற்கை,. அசைதல், இலக்கியம், பொருந்துதல், அழகு, ஒப்பு, அன்பு என்னும் பன்னிரு பொருள்களைக் காட்டுகின்றது, இயல்:1 இயல் = தன்மை துளங்கு இயலால் பணை எருத்தில் -புறம் 15 பொருள்: அசைந்த தன்மையோடு பெரிய கழுத்தினையும் காலியல் புரவி ஆலும் -புறம். 178 பொருள்: காற்றுப் போலும் இயல்புடைய குதிரை ஆலிக்கும், இயல்:2 இயல் = இயற்றுதல், இயல்தேர் வழுதி - புறம். 52 பொருள்: இயற்றப்பட்ட தேரினையுடைய வழுதி (பழைய உரை) இயல் தேர்ச்சென்னி - புறம். 61 பொருள்: இயற்றப்பட்ட தேரினையுடைய சென்னி (பழைய உரை) இயல்:3 இயல் = இயங்குதல் புள்ளியல் கலிமா -அகம்.64 பொருள்: பறவையை விரைவு கொண்ட செருக்குடைய குதிரை, தொன்றியல் மரபின் மன்றல் அயர -அகம்.112 பொருள்: தொன்று தொட்டுவரும் முறைப்படி வதுவை நிகழ்த்த. இயல்:4 இயல் = சாயல் மெல்லியல் கலிமயில் அகலம் - நெடுதல்.99 பொருள்: மெல்லிய சாயல் பொருந்திய மயில் அகவும் மயிலியல் சேயிழை மகளிர் - அகம். 369 பொருள் : மயில் போலும் சாயலுடைய சிவந்த அணிகளை அணிந்த மகளிர், இயல்:5 இயல் = இலக்கணம், அரசியல் பிழையாது அறநெறி காட்டி - மதுரைக், 191 மெய்யூர் அமைச்சியல் மையூர் கிழான் - பதிற், பதி, 9 பொருள்: அரசியல் = அரசு இலக்கணம்; அமைச்சியல் = அமைச்சு இலக்கணம் இயல்:6 இயல் = இயற்கை. திருந்திய இயல்மொழி - பதிற், 24 பொருள்: பிறர் திருத்த வேண்டாதே இயல்பாகவே குற்றத்தினின்றும் நீங்கித் திருந்திய மொழி. இயலறைக் குருசில் - பதிற், 24 பொருள் : இயல் என்றது பாசறைக்குள்ள இயல்பை (பழைய உரை). இயல் : 7 இயல் = அசைதல், செண்இயல் சிறுபுறம் - அகம்.59 பொருள்: கொண்டை அசைதலையுடைய முதுகு, இயல்:8 இயல் = இலக்கியம், இன்னியல் மாண்தேர்ச்சி இசைபரி பாடல் - பரி, 11 இயல்:9 இயல் = பொருந்துதல், களி இயல் யானை - புறம். 66 ஆடு இயல் அழல் குட்டம் -புறம். 229 இயல்: 10 இயல் = அழகு, பேரியல் அரிவை - பதிற். 52: 18 இயல்: 11 இயல் = ஒப்பு, ஏற்றியல் எழில் நடைப்பொலிந்த மொய்ம்பின் ஆட்டன் அத்தி - அகம், 236 இயல்:12 இயல் = அன்பு. தொல் இயல் வழாஅமை - கலித்.2 பொருள்: பழைய உழுவலன்பு வழுவாமை நச். இயற்றுதல் என்னும் ஒன்று நீங்கிய பதினொன்றும் இயல்வழிப் பட்டனவேயாம், இயல்:13 இயல் = முத்தமிழில் ஒன்று. மூவகைத் தமிழுள் முதல் தமிழ் இயல் ஆகும், இயல்:14 நூலின் பெயராதல்: களவியல். இயல் :15 நூலின் பகுதிப் பெயராதல்; பிறப்பியல், புணரியல். இயல் : 16 செய்ய முடிவதும் வழங்க முடிவதும் இயல் ஆதல் ; இயல்வது கரவேல் (ஔவை. ஆத்தி,3) இவையும் செயல். வழிவந்தவையே யாம், இயவர்: இயவு + அர் = இயவர், இயவு = இசை. இசைக்கருவி இயவர் இசைத்தலில் வல்லார் கண்டத்திசை. கருவியிசை என்னும் இரண்டும் வல்லார் இயவராம், மண்ணுக முரசம் கண்பெயர்த் தியவர் கடிப்புடை வலத்தர் தொடித்தோள் ஓச்ச - பதிற், 19 இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும் ஆம்பலங் குழல் - நற்.113 * இசை காண்க. இயவு: இயங்குவதற்கு உரிய வழி இயவு ஆகும், இயவிடை வருவோன் - மணிமே, 13:16 இயவை என்பதும் இது, இயங்குவதற்குரிய வழிகள் சில இருப்பினும் இடரிலாததும் இனியதுமாம் வழியாக இருப்பதையே தேர்ந்து செல்வர், மதுரைக்கு வரும் கோவலன் கண்ணகியரை அழைத்துவரும் கவுந்தியடிகள் வயலும் சோலையும் அல்லது யாங்கணும் அயல்படக் கிடந்த நெறியாங் கில்லை - சிலப், 1:10:94-95 என்றதும். ஆற்றுப்படை நூல்களில் செல்லும் வழிகள் கூறியதும் ஆகியவை இயவுகளாம், இயவுள்: இயவுள் :1 வியனுலகம். ஒன்றனோடு ஒன்றும் ஒன்றனுக்கு ஒன்றுமாய் நின்று இயைந்து இயங்குதலை உளதாகக் கொண்டதை இயவுள் என்றனர் முந்தையர். அதனை இறைமையாகவும் கொண்டனர், பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள் - முருகு, 274 கடவுள் என்பதும் அது, இயவுள் :2 வழி நடத்தும் தலைமை கொம்மை வாடிய இயவுள் யானை - அகம்,29 திரண்ட மத்தகம் வாடலுற்ற வழிநடத்தும் தலைமை யானை மற்றை யானைகளுக்குப் பருகவும் உண்ணவும் ஆவன செய்து தான் உண்ணும் தகைமை இருத்தல் தலைமையது ஆதலால். அதன் மத்தகம் வாடிற்றாம், இயவுள் = வழி: வழி நடத்தும் தலைமை யானை இயவுள் எனப்பட்டதாம். இயற்கை : இயற்கை = இயல்பு, இயற்கையாக அமைந்த தன்மை இயற்கையாம். இயற்கை யாவது கைபுனைந் தியற்றாக் கவின் பெறு வனப்பு - திருமுருகு.17 மண்திணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலைஇய தீயும் தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பூதத்து இயற்கை போலப் போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சிய தகலமும் வலியும் தெறலும் அளியும் உடையோய் - புறம். 2 மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும் காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம் - புறம். 35 இயற்கை எய்துதல்: இயற்கை எய்துதல் = இறத்தல்; இயற்கையோடு உடலும் உயிரும் சேர்ந்து விடுதல். இயற்கை ஐவகை மூலப்பொருள்களை உடையது. அவை வெளி, வளி,தீ, நீர், மண் என்பன. இவை ஐம்பூதங்கள் எனப்படும். ஐம்பூதங்களால் அமைந்தது உலகம். இவ்வைம் பூதங்களாலும் அமைந்தவையே உலகப் பொருள்கள். அவற்றுள் ஒன்றாகிய மூச்சுக் காற்று, வெளிக் காற்றொடு சேரவும், உடல் தீயுண்டோ, மண்ணுள் புதையுண்டோ, மண்ணோடு மண்ணாகி விடவும் நேரும் நிலை. இயற்கையோடு இயற்கை ஒன்றி விடுவதாக இருத்தலால் இயற்கை எய்துதல் என்பது வழக்கமாயிற்று. இலக்கணர் இறத்தல் என்னாமல் இவ்வாறு கூறுதலை மங்கல வழக்கு என்பர்.இறத்தல் என்பதும் கூட மங்கல வழக்காம். இறத்தல், கடத்தல் என்னும் பொருளது. இயற்சொல்: இயல் + சொல் = இயற்சொல். கற்றார்க்கும் கல்லார்க்கும் ஒப்பப் பொருள் விளங்கும் உலக வழக்குச் சொல் இயற்சொல்லாம். செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும் தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல் - நன். 371 இயற்றுதல்: நூல் இயற்றுதல் , சட்டம் இயற்றுதல் என இயற்றுதல் வழக்குப் பெறும். இவை கருத்துப் பொருள்கள் அல்லது நுண்பொருள்கள் ஆகும். இயற்றுதல் பருப்பொருளில் வாராது. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் வகுத்தலும் - திருக். 385 என்பவை அரசு இயற்றும் நடைமுறை விதிகள் அல்லது சட்டங்களாம். ஆதலால் இயற்றியான் உலகைப் படைத்தான் என பொருள் தாராது. சட்டம் இயற்றியவன், விதிகளை வகுத்தவன் என அரசனை அல்லது ஆள்பவனையே குறிக்கும். இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் - திருக். 1062 என்பதிலுள்ள உலகியற்றியான், உலகியல் நெறிகளை அமைத்த ஆள்பவன் எனப் பொருள் தருவதாம். இயன்மொழி வாழ்த்து: இக்குடிப் பிறந்தோர்க் கெல்லாம் இக்குணம் இயல் பென்றும் அவற்றை நீயும் இயல்பாக வுடையை என்றும், இன்னோர் போல் நீயும் இயல்பாக ஈவாயாக என்றும் உயர்ந்தோர் அவனை வாழ்த்துவதாகக் கூறுவது இயன்மொழி வாழ்த்தாகும். இக்குடிப் பிறந்தோர்க் கெல்லாம் இக்குணம் இயல்பென் றுநீயும் அவற்றை யுடையை என்றும் இன்னோர் போல்நீயும் இயல்பாக ஈயென்றும் உயர்ந்தோர் எடுத்தமற் றவனை வாழ்த்துவ தாக வழுத்தல் இயன்மொழி வாழ்த்தா மென்ன வழுத்தினர் புலவர் - முத்துவீ. 1128 இயன் மொழி வாழ்த்து, பாடாண் திணை என்னும் புறத்துறை சார்ந்தது என்பது, தொல்காப்பியத்தால் அறியப் பெறும். புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் இயன்மொழி வாழ்த்து உண்டு. இயைபு: இயைதல் = கூடுதல். இயைபே புணர்ச்சி -தொல். 792 இயைபுத் தொடை என்பது ஐந்தொடைகளுள் ஒன்று. இதன் இலக்கணம் இறுதி இயைபு என்பது. (யா. கா. 16) தமிழனென்று சொல்லடா தலைநமிர்ந்து நில்லடா - நாமக்கல் பாவலர் இயைபு வண்ணம் இருபது வகை வண்ணங்களுள் ஒன்று (தொல். 1469). இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே -தொல். 1474 என்பது இதன் இலக்கணம். அரவி னதிர வுரீஇய வரகு கதிரின் மென்மை வன்மைக்கு இடைநிகர்வாகிய எழுத்தான் வருதலின் இயைபு வண்ணம் என்றான் (பேரா. தொல். செய்.) இரக்கம்: இரக்கம்:1 இளக்கம் > இரக்கம். இளகிய மனத்தின் வெளிப்பாடு இரக்கம், இரங்கல், ஈரம் உருக்கம் முதலியவையாம். இரக்கம், தம்மேல் இரக்கமும், பிற உயிர்கள் மேல் இரக்கமும் என இருவகையாம், இளமைப் பருவம் கடந்து பெருமூதாளர் நிலையை அடைந்து நோய்க்கும் ஆட்பட்ட தொடித்தலை விழுத்தண்டினார் இளையோர் மகிழ்வாடல் கண்டு தம் முந்தை நிலையொடும் ஒப்பிட்டு இரங்குகிறார், இனிநினைந் திரக்க மாகின்று - புறம். 243 என்று பாடலைத் தொடங்குகிறார். பால் வேறுபாடு இல்லாமல் இளையவர், கரையவர் மருளத் திரையகம் பிதிர நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து குளித்துமணற் கொண்ட கல்லா இளமை அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ என ஏங்குகிறார். தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற்று இரும்இடை மிடைந்த சிலசொல் பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே என நோகிறார் தாம் செய்த செயலுக்குத் தாமே வருந்துமாறான நிலையும் உண்டாவ துண்டு ; அவர், தற்சிந்தனையும் நல்லவையாற்றும் இயல்புமுடையார். அவர், செய்து இரங்கா வினையினர் (புறம்.10). எற்றென் றிரங்குவ செய்யற்க -திருக். 655 எனப் போற்றுபவர். இரந்து கையேந்துவார் நிலை இரங்கத் தக்கதேயாம்! இரப்பார்க்குக் கரப்பார் நிலையும் இரங்கத்தக்கதேயாம். இரவச்சம் என்னும் அதிகாரப் பொருள் வள்ளுவர் உருகிய உருக்கச் சான்றாம். இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும் -திருக். 1069 என்பது அவ்வதிகார முழுப்பிழிவாம். இளியே இழவே அசைவே வறுமையென விளிவில் கொள்கை அழுகை நான்கே - தொல். 1199 என்பதும், மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு யாப்புற வந்த இளிவரல் நான்கே - தொல். 1200 என்பதும் இரக்கத்திற்கும் இரங்கலுக்கும் உரியவையாம். இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகம் காணும் அளவு என்பதாக இருந்தாலும் இரங்கல் துயர் இரங்கல் துயரேயாம்! இரவலர் என்றும் புரவலர் என்றும் உள்ள நிலஉருக்குவதாயினும் அந்நிலையை நம்முந்தையர் வரலாற்று ஆவணமாக நம் கைக்குக் கிடைத்து அவர்கள் ஆளுகை, ஆளுமை, பண்பாடூ நாகரிகம் புலமைப்பேறு, புலமைவீறு என்பவை முந்துலகம் பேரொளியாய்த் திகழ்தல் கண்டு இன்றும் என்றும் மகிழவாய்க்கும்பெருமையதாம் * இரவலர் புரவலர் காண்க. இரக்கம்: 2 இளக்கம் > இரக்கம். இல்லை என இரந்து வருவார்க்கு (இரவலர்க்கு) உதவும் வகையில் காட்டிய பரிவும் கொடையும் இரக்கம் எனப்பட்டுப் பின்னர் எவ்வுயிர் படும் துயரம் கண்டும் உருகும் அருள் நிலையாக வளர்ந்தது. இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி யன்று -திருக். 1051 இரக்கின் றோர்களுக் கில்லைஎன் னார்பால் இரத்தல் ஈதலாம் - திருவருட். 880 அழுதபிள்ளை பால் குடிக்கும் என்னும் பழமொழி எண்ணத்தக்கது. இரங்கல்: இரங்கல் :1 தன்நிலை யறிந்தும் பிறர்செயல் அறிந்தும் உண்டாம் இளகிய அல்லது உருகிய நிலையின் வெளிப்பாடு இரங்கல் ஆகும். இதனால் இரங்கல் என்பது, நெய்தல் திணையின்உரிப்பொருளாதšபழமையாdநெறி,இவ்விரங்கyஅகத்திzநூல்கŸபரக்க¡கூறுகின்றன. திருக்குறளும் இரங்கலுக்கு உறுப்பு நலனழிதல், நெஞ்சொடு கிளத்தல், நிறையழிதல், அவர்வயின் விதும்பல் , குறிப்பறிவுறுத்தல் என ஐந்ததிகாரங்களைக் கொண்டுள்ளது. அகப்பொருள் சார்ந்த இவ்விரங்கல் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கியும் நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து உருகியும் திளைக்கும் இறைமைக் காதல் ஏக்கத்திற்கும் வளர்ந்தது. இவ்வகையில் திருவாசகம், திருவருட்பா நாலாயிரப் பனுவல் ஆகியவற்றில் பெருக்கமான பாடல்கள் உள. அழுங்கல், அழிதல், முறையீடு, ஆற்றாமை எனப் பல வடிவங்களையும் பெற்று இரங்கல் வெளிப்பட்டது உண்டு. இரங்கல் :2 மண்ணவர் மயங்க விண்ணுலகு சென்றவன் பண்பினைப் புகழ்ந்து நொந்து வருந்தியது. கையறு நிலை என்பதும் இது இதனை, வெருவரும் வாளமர் விளிந்தோற் கண்டு கருவி மாக்கள் கையற வுரைத்தன்று என்றும் (30). வியலிடம் மருள விண்படர்ந் தோன் இயல்பேத்தி அழிபிரங் கின்று என்றும் (80) புறப்பொருள் வெண்பா மாலை கூறும். இறந்த காலத் திரங்கல் என்பது பட்டினத்தார் பாடியது இரங்கல் கையறு நிலைப் பொருளாதல் ஆங்குக் காண்க. இரட்டுறல் வெண்பா (சிலேடை வெண்பா): இரட்டுறல் (சிலேடை) இருபொருள்பட வருதல், சிலேடை யமைய இயற்றப் பெற்ற வெண்பாக்களால் அமைந்த நூல் சிலேடை வெண்பா எனப் பெறும். சிலேடை வெண்பாக்களின் முன் இரண்டடிகளும் சிலேடையாகவும், பின் இரண்டு அடிகளும் மடக்காகவும் அமையும். ஊர்ப் பெயரால் சிலேடை வெண்பாப் பாடப் பெறுதலால் அவ்வூர்ப் பெயருடன் சிலேடை வெண்பா என்பதும் சேர்ந்து வழங்கும், தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவரால் இயற்றப் பெற்ற கலைசைச் சிலேடை வெண்பா; நமச்சிவாயக விராயரால் இயற்றப்பெற்ற சிங்கைச் சிலேட வெண்பா’ ஆகியவற்றைக் காண்க. சிலேடை வெண்பா நூறு பாக்களைக் கொண்டதாகும். இரட்டுறற் கடல் (சிலேடா சாகரம்): பெரிய கடலுக்கும் பெருமை மிக்க இறைக்கும் உவமை கூறி, முடிவில் அக்கடலுக்கும்மங்கைக்கு«வேந்தனுக்கு«ஒப்பாக¡கூறுதšஇரட்டுற‰கடšஎனப்படு«சிலேடhசாகர«என்பதாம். இச்சாகரம் சிஃறாழிசைப் பாடலாதல் வேண்டும். சேர்ந்தமான் வாரிக்கும் சீரிறைக்கு மேயுவமித்து ஆர்ந்தவுடன் வாரிக்கும் மங்கைக்கும் - வேந்தன் புரையப் புகலல் புகழ்சிலே டாசா கரம்சிஃ றாழிசையிற் காட்டு -பிர. திர. 47 இரட்டைக்கிளவி: இரட்டைக்கிளவி:1 இரட்டை = இரண்டு ; கிளவி = சொல் கிளத்தலால் (சொல்லுதலால்) அமைவது கிளவி. எ-டு: கிளவி ஆக்கம். (தொல். சொல். முதலியல்) இரட்டைச்சொல் பிரியாமல் இரண்டாகவே இயைந்து நின்று ஒரு பொருள் தரும். இரட்டைக் கிளவி இரண்டிற் பிரிந்திசையா -தொல். 531 எ-டு: குறுகுறு , கலகல. மதமத என்பது இரட்டைக் கிளவி ;மதமதப்பா«பொருŸதருவJ . மத எனப் பிரியுங்கால் அச்சொல், மதவே மடனும் வலியும் ஆகும் எனப் பொருள் தருதல் உண்டு (தொல். 860). எ-டு மதக்களிறு. இரட்டைக்கிளவி:2 அடையும் அடையடுத்த பொருளும் என்னும் இரண்டு சொற்கள் சேர்ந்த நிலையும் இரட்டைக் கிளவியாம். இரட்டைக் கிளவி இரட்டை வழித்தே -தொல். 1243 எ-டு: செந்தாமரை; செம்மை, அடை; தாமரை, பொருள். இரட்டைச் bசால்kடக்கு:xnu சொல் இருமுறை மடக்கி நான்கடிக் கண்ணும் வந்து பொருள் வேறு பயப்பது இரட்டைச் சொல் மடக்கு (யமக) மாலை எனப்பெறும். இந்நூல் கட்டளைக் கலித்துறையால் வரும். புரசை அட்டாவதானம் (எண் கவனகம்) சபாபதி முதலியா ரால் பாடப்பெற்ற திருத்தணிfஇரட்டை¢சொšயமfமாலை”30கட்டளை¡கலித்துறை¥பாக்களாšஅமைந்துள்ளது. இரட்டை மணிமாலை: வெண்பாவும் அதன்பின் கலித்துறையும் முறையே வந்து இருபது பாட்டான் முடிவது இரட்டை மணிமாலை யாகும். இரட்டை மணிமாலை இயம்புங் காலை வெண்பாக் கலித்துறை விரவிப் பப்பத்தும் நேரிசை வெண்பா ஆசிரிய விருத்தம் இவற்றாம் இருபதந் தாதித் தியம்பலே -பிபந்த தீபம் 8 வேறொரு வகையாலும் இரட்டை மணிமாலை கூறுவர். பெண்பா விருத்தம் வியப்புற இருபஃ தெண்பட உரைப்பது இரட்டை மணிமாலை -இலக். பாட்.69 இரட்டையாப்பு: செய்யுளின் ஓரடியில் வரும் ஒரு சொல்லே அவ்வடி முழுவதும் வருதல் (தொல். 1348). இரட்டை அடிமுழு தொருசீர் இயற்றே -யா. வி. 51 ஒருசீர் அடி முழுதும் வருவ திரட்டை -யா. வி. 51 மேற். எ-டு: ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும் விளக்கினில் சீரெரி ஒக்குமே ஒக்கும் குளக்கொட்டிப் பூவின் நிறம் -யா. வி. உறுப்.51 இரட்டைத் தொடை என்பதும் இது. இரணை: ஈர் > இர்+ அணை = இரணை. இரணை = இரண்டு, இரண்டும் இயைந்து நிற்பது இரணையாம். ஈர் + இணை = ஈரிணை எனின் இரண்டு இரட்டையாம். செம்பேர் இரணை அலவன் - நற். 123 பொருள்: சிவந்த பெரிய இரட்டையாக நெருங்கியிருக் கின்ற ஞெண்டுகள் (பின்னத். அ. நா.) பாடம்: இரணை என்பது ஈரணையாகக் காட்டப்பட் டுள்ளது. ஔவை சு. து. பாடம்: சேர்ப்பேர் ஈரளை அலவன் உரை: கடல் நிலத்துக் குளிர்ந்த வளையின்கண் வாழும் அலவன் இரத்தி: இரத்தி: 1 இரத்தி > இத்தி > இச்சி. சிவந்த பழத்தையுடையது ஆதலால் இத்தி எனப்பட்டது. இத்தி > இச்சி என வழங்குகின்றது இலந்தை என்பதும் சிவந்த பழம் உடையதால் இத்தி என வழங்குகின்றது. இரத்தி நீடிய அகன்றலை மன்றம் -புறம். 34 மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல் -புறம். 325 இவை ஊர் மன்றமாக அமைந்த இரத்தி ஆதலால் இற்றை இச்சி மரமாம் இரவம் என்பதும் இது. இரத்தி:2 உழையணந் துண்ட இறைவாங்கு உயர்சினைப் புல்லரை இரத்தி -நற். 113 என்றது இலந்தையாம். மானினம் (உழை) வளைத்து உண்ண வாய்த்தமை கருதுக. அரத்தம் இரத்தமாகவும்; அராகம் இராகமாகவும் உயிர்த்திரிபுற்றமை போல் அரத்தி இரத்தியாகி இருக்க வேண்டும். அர் என்னும் வேர் சிவப்பு அடிப்படை யுடையதாதலால். இரந்தூண்: இரந்து + ஊண் = இரந்தூண். இரந்து உண்ணும் உணவு; எடுத்து உண்ணும் உணவு, இல்லில் உரிமை உடையவர்க்கு உரியது. இரந்து உண்ணும் உணவு, இரப்பு ஏற்று வருவார்க்கு உரியது. இரந்தூண் நிரம்பா மேனி -குறுந். 33 பொருள்: ஏற்றுண்ணும் உணவினை உடைமையின் நன்கு வளர்ச்சி பெறாத உடல் தாம்தாமே வேண்டுவ எடுத்துண்ணும் விருந்து முறை இக்காலப் பெருவிருந்து முறைகளுள் ஒன்று. அஃது எடுத்தூண் ஆகும் பாத்தூண்(பகுத்தூண்) முறைமை பண்டே அமைந்தது. * இரவு 2 காண்க. இரப்பு: இரப்பு : 1 இரத்தல் . தம் நிலைக்குத் தாமே வருந்துபவராய், இருண்ட மனத்தராய் ஒளிதேடுபவராய் இருப்பார் இரவலர்; அவர்கள் நிலை இரத்தல், இரப்பு, இரவு என இருண்மை அடியாய் அமைந்தது. இல்லாமையால் இருப்பாரிடம் தருவரெனக் கேட்டல் இரப்பு ஆகும். இரப்பாரை இல்லாயின் -திருக். 1058 இரப்பான் போல் -கலித். 47 இரப்பு : 2 இரப்பு = வேண்டுதல். யா அம் இரப்பவை , பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால் அருளும் அன்பும் அறமும் மூன்றும் உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே - பரி.5 இரப்புணி: இரப்பு + உணி = இரப்புணி. இரந்து வாங்கி உண்ணுதல் இரப்பு உண்ணலாம். இல்வாழ்வினர் எனினும் அண்டை அயல் வீடுகளுக்குச் சென்று ஆங்குள்ளாரிடம் கேட்டுப் பெற்று உண்பவர் இரப்புணி எனப்படுவார். இவர் இரவலரானார் அல்லர். இருந்தும் இல்லாராக இரந்து உண்ணும் இல்வாழ்வர். இரப்புணிக்கு என்ன பஞ்சம்? கேட்டுத் தின்பான் கேளாமலும் தின்பான் என்பது வழக்கு. இரலை: இர் > இரல் > இரலை. இர் = கருமை வேர், x.neh.: இருள். இரவு. இரால், இரலை மான் வகையுள் ஒன்று. fÇa be‰¿ kÆiuí«., இரும்பன்ன கரிய முறுக்குண்ட கொம்பையும் உடையது, புல்வாய் இரலை நெற்றி அன்ன பொலமிலங்கு சென்னிய பாறுமயிர் -புறம், 374 எனப் பாணன் கரிய முடிக்கு இரலைமானின் நெற்றிமயிர் உவமையாக்கப் படுகின்றது, இரலையின் கொம்பு, இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற் பரலவல் அடைய இரலை தெறிப்ப -அகம், 4 எனப்படுகிறது, பொருள்: இரும்பை முறுக்கிவிட்டாற் போன்ற கரிய பெரிய கொம்பினையுடைய இரலை மான்கள் பரல்களையுடைய பள்ளங்களில் துள்ளிக் குதிக்கவும். இவற்றால் இரலை என்னும் பெயரின் பொருள் தெளிவாம், வெண்ணிற முதுகு வரியுடைய இரலையும் (அகம், 129) உளதே எனின் கரிய நிறத்தால் கரும்பெனப் பெயர் பெற்றது அதன் பின்னர் வெள்ளைக் கரும்பும் வரப் பெறவில்லையா. அது போல் என்க. இரவச்சம்: இரவு + அச்சம் = இரவச்சம். இரவுப் பொழுது உண்டாம் அச்சம். இருளச்சம் களவச்சம் அன்று இது. இல்லை எனப் போய்ப் பிறரிடம் இரந்து வாழும் வறுமைக்கும் இழிமைக்கும் உண்டாகும் அச்சம். ஏற்கச் செல்லுமிடத்து இல்லை எனின் கேட்டும் வசை கூறின். ஏற்றும் வாழும் மானம் இழப்பு அச்சம். இரக்க வேண்டா; இரக்கச் செல்லின் இல்லை என்பார்; ஆதலால். இரக்கச் செல்லாதீர் என்பதை வலியுறுத்தலே இரவச்சமாம். இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவின்மின் என்று -திருக். 1067 இரவலர்: இரவலர் என்னும் சொல் தொல்காப்பியத்தில் இடம் பெறவில்லை. இரவு என்பது இரத்தல் பொருளில் ஓரிடத்து (927) வந்துளது. இரவலர் மதுரைக்காஞ்சி நற்றிணை. குறுந்தொகை. ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு. புறநானூறு ஆகிய பாட்டு தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளது, தமிழர் வரலாறு ஆவணமாக விளங்கும் பதிற்றுப்பத்தில் ஏழு இடங்களிலும் புறநானூற்றில் இருபத்தோர் இடங்களிலும் வந்துளது, மற்றை நூல்களில் வந்தவை (பாட்டு தொகைகளில்) எட்டு இடங்களே. இரத்தல் என்பதை இரவு என்று காட்டினார் தொல்காப்பியர் என்பதை அறிந்தோம். இரவு + அலர் என்று பிரித்து இரவலர் எனின் இரவில் மலர்ந்த மலர் எனவும். இரவில் சொல்லப்படும் அலர் ( பழி)ச் சொல் எனவும் ஆகிவிடும். இரவு + அல் + அர் = இரவலர் எனப்பிரிப்பின் இரவலராம். இனி இரவு வலர் எனப்பிரிப்பின் இரத்தலில் வல்லவர் எனப்பொருள் தரும். இரத்தலில் வல்லார் என்பது காவலர், நாவலர். பாவலர் என்பது போலப் பெருமை தருமா? இழிமையைப் பழஞ்சான்றோர் ஒப்பி எற்பரா? ஏற்பார் அல்லர். இரவு அல் அர் புலமைச் சான்றோரும் கலைவல்லாரும் இரந்து வந்தாரே எனினும். அவர் இரவல் வாழ்வினர் அல்லர், இரந்தூண் வாழ்வினராக அவரைக் கொள்ளல் கூடாது, பொருளால் நீவிர் உலகுக்கு உதவுவதுபோல் அவர்கள் தம் புலமையாலும் கலையாலும் உலகுக்கு உதவும் வண்மையர். அன்றியும் அவர் இன்றே போல என்றும் இரப்பவர், அல்லர், அவரே தாம் பெற்ற இக்கொடையையும் புரவலரே போல உலகுக்கு உதவுவார். அவரே வள மிக்காராம் நிலையில் தமக்குப் புரவலராக ஒருகால் இருந்தார்க்கும் இல்லார்க்கும் புரவலராக விளங்கக் கூடும் என்னும் மெய்ப்பொருள் கண்டே இரவலர் என்றனர், இரவு + அல் + அர் = தக்கோர் இரத்தல் இரப்பன்று; அவர் இரப்பவர் அல்லர், புரப்பவரும் ஆவர் என எண்ணின் இச்சொற்படைப்பு விந்தையினும் விந்தையாம், இரப்புணி வாழ்வனாகப் புலவனை எண்ணியிருந்தால், அவனுக்கு யானைப் பரிசும், பல்லாயிரம் பொன் பரிசும், நாட்டு வருவாயும் வழங்குவரா முடிவேந்தரும் வேளிரும்? அவர்கள். புலவர் பாடும் புகழுடைமையே உடைமையுள் உடைமை எனப் போற்றி இருப்பரா? புலவர்க்கு அரசுக் கட்டில் வழங்கியிருப்பரா? (அரிசில்கிழார்); புலவன் கையில் தம் புதல்வனை ஒப்படைப் பாரா? (பதிற். செங்குட்டுவன்); கவரி வீசுவரா? (பெருஞ்சோல் இரும்பொறை-புறம். 50); அவனை அவர் பாடியது எனச் சுட்டுவரா? (பதிற்.) சங்கச் சான்றோர் எனப்படுவரா? (உரைகள்) இரவலர் புரவலை நீயு மல்லை புரவலர் இரவலர்க் கில்லையு மல்லர் இரவலர் உண்மையும் காணினி இரவலர்க் கீவோர் உண்மையும் காணினி நின்னூர்க் கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த நெடுநல் யானையெம் பரிசில் கடுமான் தோன்றல் செல்வல் யானே - புறம். 162 என இரவலனாக இருப்பார் (பெருஞ்சித்திரனார்) பெருமிதம் பேசுவரா? அவரே எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே என்பரா? (புறம். 163) எனவே. இரவு அல்லர். இரவலர் என்க. * புரவலர் காண்க. இரவல்: இரவல் என்பது பழஞ்சொல்லே. இரவலர் என்பதில் இரவல் உள்ளது அறிக. இந்நாளும் இரவல் கேட்பாரும். இரவல் இல்லை இரவல் கேளாதீர் என்பாரும், உள்ளமை எவரும் அறிந்தது, இரவல் சாப்பாடு என்பது சிலர்க்குப் பட்டப் பெயர், இரவல் கேட்டல் இழிவாகக் கொள்ளாமல். இருப்பவர் கொடுத்தால் என்ன? என்று துடிப்பாரும் அல்லது தடிப்பாரும் உளர். இரவல் இனாம் என வழங்குதல், முகலாயர் ஆட்சியில் இனாம் (வரியில்லா நிலம்) ஊர்கள் இருந்ததன் வழிவந்த சொல்லாம். இலவயம் (இலைவயம்) என்பது அன்புடன் வழங்கும் கொடை. ஓசி என்றொரு சொல் வழக்கில் உள்ளது, அது பழமை வழிப்பட்ட சொல், அலுவலகப்படி (பிரதி) என்னும் பொருளுடையது (O.C) வேறு. * ஓசி காண்க. இரவி: இர் > இர > இரவி. இருளை அல்லது இரவை அகற்றுவது இரவி. இரவி என்பான் தன்புகழ்க்கற்றை மற்றை ஒளிகளைத் தவிர்க்கு மாபோல் -கம்ப. அயோ. 1038 மற்றை ஒளிகளையே தவிர்ப்பது, இருளைத் தகர்ப்பது ஆகுமல்லவோ! இரவு: இரவு:1 இர் > இரா > இரவு. இராப்பொழுது. கதிரொளி இராத பொழுது. x.neh.: புறா > புறவு; அரா > அரவு; நிலா > நிலவு. கதிர் மறைய இருளுற்ற பொழுது இரவு ஆகும். குறியெனப்படுவது இரவினும் பகலினும் - தொல். 1076 இரவுக் குறியே இல்லகத் துள்ளும் - தொல். 1077 அல்லும் பகலும். இரவும் பகலும் என்னும் இணைச் சொற்கள். இரவை முன்மைப் படுத்துதல் எண்ணத் தக்கது. இருள் அகல ஒளி வருதல் அன்று. ஒளிவர இருள் அகலும் என்பதே நேரிய முறை. இருள் நீக்கமும். ஒளி ஆக்கமும் ஒரே பொழுதில் உண்டாவது கதிரோன் ஒளியாலேயாம். மதியில் ஒளி இருப்பினும் கதிரொளி போல் முழுதுறவும் பளிச்சீடும் பாரிப்பும் ஆகாதாம். அன்றியும் கதிரொளிக் கொடையே மதி ஒளியுமாம். கதிர், நாள்; மதி கோள். எண்ண எண்ணத் துயரமாம் ஓர். இரவுக் காட்சி காண்க. மாரி இரவின் மரங்கவிழ் பொழுதின் ஆரஞ ருற்ற நெஞ்சமொ டொராங்குக் கண்ணில் ஊமன் கடற்பட் டாங்கு - புறம். 238 என்பது அது. மழைக்காலம்; இரவுப் பொழுது. கப்பல் செல்கிறது; அக்கப்பலில் இருப்பவன். கண்ணில்லாதவன். ஊமையன்; கப்பல் கவிழ்ந்து போகிறது; கடலுள் வீழ்கிறான்! அவன் ஏதாவது ஒன்றைப் பற்றிக் கரை சேர முடியுமா? எவரையாவது கூவி அழைத்துக் கரை சேரும் வழி காண முடியுமா? என் செய்வான்? இருள் மட்டுமா துயர்! எல்லாமும் துயர வளையங்கள் அல்லவா! வெளிமான் என்னும் வள்ளல் துஞ்சியபின். பெருஞ்சித்திரனார் பாடிய கையறு நிலைப்பாட்டு இது, இரா என்பதும் இரவே. நீடுக மன்னோ இரா -திருக், 1329 இரவு:2 ஈதா கொடு எனக் கிளக்கும் மூன்றும் இரவின் கிளவி ஆகிடன் உடைத்தே - தொல். 927 இரவு என்பது இரத்தல் பொருளும் தரும். உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர் இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவெனச் சொல்லிய வன்மை தெளியக் காட்டிச் சென்றனர் - குறுந். 283 இரவினும் = இரத்தலினும். இராப் பொழுதுக்கும் இரங்கத்தக்க ஒரு பாட்டு. கூவல் குரால் ஆன் படுதுயர் இராவில் கண்ட உயர்திணை ஊமன் பொருள்: கிணற்றுளே வீழ்ந்த குராற் பசு படுந்துயரை இராப் பொழுதில் கண்ட மூங்கையன் - ஊமையன் அஃறிணை ஊமன் என்பது கோட்டான். உயர்திணை ஊமன் என்பது மாந்த ஊமன். பசு இரவுப் பொழுதில் கிணற்றில் விழுந்துவிட்டது. ஊமன் ஊர் அறிய எவ்வாறு விளங்கச் சொல்வான். ஊமன் கண்ட கனாப் போல என்பது பழமொழி, இரவுப் பொழுது விளக்கம்: அல், அல்லி = கதிரொளி அற்ற பொழுது. அல்கல் = ஒளி குன்றிய பொழுது இரவு = இருள் உள்ள பொழுது எல்லி = கதிரொளி இல்லாப் பொழுது. எல்லில் > எல்லி. கங்குல் = தீமூட்டி குளிர் போக்க வேண்டும் பொழுது. தீ மூட்டி அச்சம் அகற்ற வேண்டும் பொழுது.மாம். யாமம் = கட்டுண்டு கிடக்க வைக்கும் பொழுது; யா = கட்டு ஏமம் = பாதுகாப்பு வேண்டும் பொழுது. ஏம் = பாதுகாப்பு. இராகி: இர் > இரா > இராகி = கேழ்வரகு. இரா இரவு இருள் முதலாய இர் வழிச் சொற்கள் கருமை நிறம் காட்டும் அவ்வகையில் கருநிறத் தவசம் இராகி எனப்பட்டது. கேழ்வரகு என்பதும் அது. வரகுடன் ஒப்பிட்டால் கேழ்வரகு பளபளப்பு உள்ளமை விளங்கும். விராகி என்பதும் வழக்கு. ஐவிரல் மடக்கிய பூட்டுப் போன்ற கதிரை யுடையதால் வழக்குற்ற பெயர். பூட்டியகை போன்றதால் இராகிக் கதிர் பூட்டை எனப்படும். * இராகு. கேழ்வரகு காண்க. இராகு: இர் > இரா > இராகு = கருநிழல். இர் = கருமைக் கருத்து வேர். இராகு = கரும்பாம்பு; இது தொன்ம வழக்கு. எழுமதி உண்ணும் இராகு - சேதுபு. தேவிபு. 56 இராட்டு: இரட்டு > இராட்டு. இரட்டுதல் = விசிறுதல், சுழற்றுதல். இராட்டு = வட்ட வடிவான தேன்கூடு; இறால் வாலைச் சுழற்றியடிக்கும் மீன். இராட்டு இறாட்டு. இராட்டை = சக்கரச் சுழற்சியால் நூற்கும் கருவி. இராட்டினம் = கீழேயும் மேலேயுமாய்ச் சுழன்று வரும் சுழலி. ரகரம் றகரத்திரிபு வகையால் இராட்டு இறாட்டு எனவும் இரால் இறால் எனவும் ஆயின. இராப்பாடி: இரவுப் பொழுதில் ஒவ்வொரு வீட்டின் முன்னும் நின்று அவ்வீட்டுக்கு வரும் நல்லவை பொல்லவை இவை எனக் கூறிச் சொல்லும் குறிகாரனை இராப்பாடி என்பது தென்தமிழக வழக்காகும். இவ்வாறு இராப்பாடியாக வருபவர் சக்கம்மாள் என்னும் தாய் வழிபாட்டினராகிய கம்பளத்தார் (காம்பிலி தேயத்திருந்து வந்தவர்) ஆவர். அவர்கள் பாஞ்சாலங்குறிச்சிப் பகுதியர். இராப்பாடி பகற்பாடி: இராப்பாடி = இரவில் பாடிக்கொண்டு வரும் குறிகாரன் அல்லது குடுகுடுப்பைக் காரன். பகற்பாடி = பகலில் உழவர் களத்திற்குப் பாடிக் கொண்டு வந்து தவசம் பெறும் புலவன்; களம் பாடி என்பவனும் அவன். இராப்பாடி யாமக் கோடாங்கி எனவும் பெறுவான். அவன் நடை உடை தோற்றம் சொல் ஆகியவை கண்டு அஞ்சினராய். அவன் கூறும் குறிச்சொல்லைக் கேட்கும் ஆர்வலராய்க் கதவு சாளரப் புறத்திலிருந்து மறைந்து கொண்டு கேட்கும் வழக்கம் உண்டு. நேரில் காசு தவசம் தராமல் மறைவில் இருந்து கொண்டே கதவுக்கு வெளிப்புறத்தில் முறத்தில் வைத்து எடுத்துக் கொள்ளச் செய்வதும் உண்டு. பகலில் வந்து வாங்கிக் கொண்டு போவாரும் இந்நாளில் உளர். வேடமென ஒன்றில்லாமல் தமக்குத் தெரிந்த பாடல்களை. இடத்திற்கு ஏற்பச் சொல்லி இரக்கும் எளிய பாடகர் பகல்பாடியாவர், பண்டை ஏரோர் களவழி தேரோர் களவழி என்பவற்றின் எச்சம் பகற்பாடி யாகலாம். இராமம் போடல்: ஏமாற்றுதல்.. இராமன் தெய்வப் பிறப்பு என்றும். திருமால் தோற்றரவு (அவதாரம்) என்றும் கூறப்படுபவன், அவனை வழிபடும் அடியார்கள் அவன் திருப்பெயர் நினைந்தும் சொல்லிக் கொண்டும் போடும் திருமண் காப்பு இராமம் என வழக்கில் ஊன்றியது. இராமனுக்கு அடையாளம் இராமம் என்க. இராமம் நாமம் எனப் பிழையாக வழங்கவும் ஆயிற்று. இராமம் போடுவதை நாமம் போடுதல் என்றும் நாமம் சாத்துதல் என்றும் சொல்லப்படுவதாயிற்று. பட்டை நாமம் எனவும் அடையாளம் காட்டப்பட்டது. தனக்கு இராமம் சாத்துதல் வழிபாட்டு அடையாளம், ஆனால் அடுத்தவர்க்கு இராமம் சாத்துதல் என்பது ஏமாற்றுதல் ஆயிற்று. எனக்கு நாமம் போட்டுவிட்டான் என்று ஏமாந்தவன் ஏமாற்றியவனைச் சொல்வது வழக்கம். நான் விழிப்பான ஆள் என்றவன் அறியாமல் உறங்கும் போதில் போடப்பட்ட நாமத்தால் இவ்வழக்கம் ஏற்பட்டிருக்கலாம். இராமம் சாத்துதல் (ஏமாற்றுதல்) மரபுத்தொடராம். இரா வடக்கு: இரா = இரவுப் பொழுது. வடக்கு = வடக்குத்திசை இரவுப் பொழுதில் இயற்கை எழுப்பலாம் ஒன்று. இரண்டுக்கு வடக்குப்பக்கம் பார்த்து இருத்தல் கூடாது என்பது அத்தியூர் அக்கிரகாரத்து வழக்கமாம். ஒருவர் அவ்வாறு இருக்க ஊர்க்காவற்காரன் அவரை அயலூரார் என்றும் திருடர் என்றும் தீர்மானித்தானாம். இரவில் வடக்குத் திசை நோக்கி அற்ப சங்கையைத் தீர்த்துக் கொள்வது அநாசாரமாகும். ஆசாரம் நிரம்பிய அத்தியூரில் இரா வடக்கு இல்லை யாதலால் அவர் வேற்றூரார் என்று காவலன் அறிந்து கொண்டான். இந்த வரலாறு அவ்வூராரினது ஆசார சீலத்தை விளக்குகிற தல்லவா! (என் சரித்திரம் உ.வே.சா.15) இருக்கை: இருக்கை = இருக்குமிடம், இருக்கும் ஊர். இருக்கும் நிலை. பாசறை. கோட்டை முதலிய பலவற்றையும் குறிக்கும் சொல் இருக்கையாம். அமர்ந்திருத்தல் குடியிருத்தல் காவல் இருத்தல் உறக்கத்தில் இருத்தல் என்னும் இருத்தல்களும் இவ்விருக்கை வழியவே. இனி. வழியே வருவாரைத் தட்டிப் பறிக்க இருப்பார் இருக்கை. (எதிர்பார்த்திருக்கும் இருக்கை)யும் உண்டு. பார்வல் இருக்கை - புறம்.3 ஒவ்வொரு நாளும் கொடை நலம் புரிய இருக்கும் இருக்கை; வேறொன்று. நாள்மகிழ் இருக்கை - புறம். 29 நூல் ஆய்வுக் கட்டில் அமைத்தல் என்பது ஆய்வு இருக்கை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதிதாசனார் மற்றும் பெரியார் ஆய்விருக்கைகள் உள. இருங்கு: இரு = கரு. கருஞ்சோளம் இருங்குச் சோளம் எனப்படும். இதனை அடர்த்தியாக நாற்றங்காலில் விதைப்பது போல் விதைத்தலால் நாற்றுச் சோளம் எனவும் வழங்குவர். இச்சோளம் கரியது; வலியது; ஊட்டமிக்கது; இதனை ஊறப்போட்டு ஆட்டி மாவாக்கிப் புளிக்கவைத்து மாட்டுக்குக் குடி நீருடன் கலந்து குடிக்க வைப்பர். வறுமை நிலையில் இருங்குச் சோளம் மக்கள் உணவுக்கும் பயன்படல் உண்டு. இச்சோளம் கெட்டி மிக்கதாக இருத்தலால் இறுங்கு எனல் உண்டு. அப்பெயரும் போற்றத்தக்கதே. இருசி: வயதுக்கு வந்தாள் என்றாலே பூப்டைந்தாள் என்பதாகும். ஆனால் சிலர் வயது வந்தும் பூப்படையாதிருத்தல் உண்டு. அத்தகையவரை இருசி என்பது புதுக்கடை வட்டார வழக்கு. மகப்பேறு இல்லாதவரை இருசி என்பதும் உண்டு. அது பொது வழக்கு. பூப்படையாதவள் மகப்பேறு வாய்த்தல் இல்லாமையால் இருபொருளுக்கும் உரியதாயிற்று. இருசொல் அழகு: பாறை இடிவதேன்? பாம்பு ஓடுவதேன் ஆலிலை உதிர்வதேன்? இராவழி நடப்பதேன்? இவை இரண்டும் இரண்டு வினாக்களாக வருவன. ஆயினும் இரண்டற்கும் விடை ஒன்றே. இவை வாய்மொழி இலக்கியமாக ஊன்றி வளர்ந்தமையால் ற, ர, ன, ந, ள, ழ வேறுபாடு இல்லாதும் வரும். முன்னதற்கு அடிப்பாரற்று; அடிப்பாரற்று என்பது விடை பின்னதற்குப் பறிப்பாரற்று; பறிப்பாரற்று என்பது விடை. இத்தகைய நாட்டியல் வழக்காறே ஏட்டியலிலும் இடம் பெற்றுப் பனுவலுமாயிற்று. இருசொல் அழகு அன்றி முச்சொல் அழகு என்னும் நூலும் வெளிவந்ததைச் சுட்டுகின்றது தமிழ் இலக்கிய வகையுள் வடிவம் என்னும் நூல் (304-5) இருதலை மணியன்: ஒரு நிலைப்படாதவர் இருதலை மணியன் என்னும் பெயரே பாம்பின் தன்மையைத் தெளிவாக்கும். இருபக்கமும் தலைபோல் தோற்றம் அமைந்தது அப்பாம்பு. அன்றியும் இப்பாலும் அப்பாலும் செல்லுவதும் உண்டு என்பது வழக்கு. அதன் வழி எழுந்தது இது. எதிரிடையானவராக இருவர் இருந்தாலும் அவ்விருவர்க்கும் தகத்தகப்பேசியும் செய்தும் இருப்பக்கமும் நன்மை பெறுபவர் இருதலை மணியன் எனப்பழிக்கப்படுவர். அவர் ஒரு நிலைப்படாதவர் என்பது குறிப்பாம். இருநூறு: இரு நூற்றாண்டு வாழ்க. ஒருவர் தும்முங்கால் நூறு என்று வாழ்த்துவர். நூறாண்டு வாழ்க என்பதன் சுருக்கம் நூறு என்பதாம். தும்முதல் கேடு என்னும் கருத்தால், அந்நிலையின்றி நலம் பெறுக என்னும் வாழ்த்தாக மாற்றிக் கூறுவது வழக்காயிற்று. அத்தும்மல் மீளவும் உடனே வருங்கால் இருநூறு என்பர். இரு நூறாண்டுகள் வாழ்க என்பது அவ்வாழ்த்தின் உட்கிடையாம். இருநூறு என்னும் எண்ணுப்பெயர் வாழ்த்தாக அமைதல் இங்கு எண்ணத்தக்கதாம். தும்முதல் பிறர்நினைப்பதன் குறி என்னும் எண்ணம் பண்டயுண்டு என்பதற்குத் திருக்குறளில் வரும் ஊடற் குறிப்புகள் சான்றாம்(1317,1318). இருந்தை: இருந்தை : 1 இரு = இருந்து > இருந்தை. இரு = கரிய. கருப்பான. இருந்தை கருப்பு நிறமுள்ள கரி, இருந்தை : 2 வையைக் கரையில் இருந்த ஓர் ஊர். இவ்வூரைப் பரிபாடல் (திருமால்1) இருந்தையூர் அமர்ந்த செல்வ என்பதால் அறியலாம். இவ்வூரில் இருந்த ஒரு புலவர் இருந்தையூர் கொற்றன் புலவன் என்பார். இருந்தையூர் கருங்கோழி மோசியார் என்னும் புலவர் ஒருவரும் இருந்தார். அவர் ஊர் திருக்கோவலூர் வட்டத்திலுள்ள இருந்தை ஆகலாம் என்று உ.வே.சா. குறிப்பிடுகிறார் (குறுந்.) ச.இ.பொ.க) இருந்தையூர்ச் செல்வனை இருந்த வளமுடையார் என்று கூறி இக்கோயில் மதுரைக் கூடலழகர் கோயில் என்பர் மு.இராகவ ஐயங்கார். (ஆராய்ச்சித் தொகுதி) இருபா இருபது: பத்து வெண்பாவும் பத்து அகவலும் ஈறுமுதல் (அந்தாதித்) தொடையால் இருபது இணைந்து வருவது இருபா இருபதாகும். அகவல்வெண் பாவும் அந்தாதித் தொடையால் இருப திணைந்து வரவெடுத் துரைப்பது இருபா இருபஃ தென்மனார் புலவர் - முத்துவீ. 1089 இருபிறப்பு: இருபிறப்பாளர் என்பது உடற்பிறப்பு, அறிவுப் பிறப்பு என இருமை குறித்தலும். மன்னவரும் துறவரும் இரு பிறப்புப் பேறு கருதிப் பின்னொரு பெயர் பெறுதலும் எண்ணத் தக்கன. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் என மறுநாளுக்கும் செல்லா அமைவு. இப்பிறப்பை விடுத்து - அப்பிறப்பை அறிந்துணரவும் கூடா அயற் பிறப்பில் வருதலினும் அப்பிறப்பிலேயே அடைவன அடைதல் முறை யெனக் கொள்ளத் தூண்டுகின்றன. ஒரு பிறப்பில் வந்த இக்கட்டைத் தாண்டிவிட்டால் மறுபிறவி எடுத்தான் என்றும் முப்பிறவி கண்டான் பிழைத்தது புதுப் பிறப்புத்தான் என்றும் வரும் வழக்காறுகள் எண்ணத்தக்கன. பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் மீளுமிவ் வியல்பும் இன்னே மேல்வரு மூப்பு மாகி நாளுநாம் சாகின் றோமால் நமக்குநாம் அழாத தென்னே என்னும் குண்டலகேசிப் பாட்டும். ஒரு பிறப்பிலேயே ஏழு பிறப்பும் உண்டு என்னும் வள்ளலார் கருத்தும் ஏழு திரை விலகி ஒளி காணும் ஏற்பாடும் கருதினால். சில தெளிவுகள் உண்டாம். மேலும், சித்தம் திருத்தல் செத்துப் பிறத்தல் என்னும் தொடரும் அப்பெயரிய நூலும் தந்தார் திரு.வி.க. அதனையும் நோக்குதல் வேண்டும். சட்டம் எப்படி ஒருவர் பிறப்பு, இறப்பு எல்லைக் கூறுபட நின்று ஒழுங்குறுத்தத் தீர்மானிக்கின்றதோ. அப்படியே இயற்கைச் சட்டமாம் அறமும் தீர்மானிக்கின்றது எனல் சாலும். இருபிறப்பாளர்: பூணூல் இடுவதற்கு முன்பு ஒரு பிறப்பும் பின்பு ஒரு பிறப்புமாகிய இருபிறப்புடைய பார்ப்பனர் (ச.இ.சொ.களஞ்சியம்) ஒன்று புரிந்தடங்கிய இருபிறப்பாளர் - புறம். 367 பொருள்: அந்தணர் என்போர். பார்ப்பார் அரசர் வணிகர் வேளாளர் எனவரும் பலருள் அருளறம் மேற்கொண்டு முற்றத்துறந்த துறவிகளாவர் ஔவை சு; உ.வி. முத்தீச் செல்வத்து இருபிறப்பாளர் - திருமுரு.182 இருபெயர் ஒட்டுப்பெயர்: இருபெயர்களாவன பொதுப்பெயர், சிறப்புப்பெயர் ஆகிய இரண்டு பெயர்கள். ஒட்டு என்பது இருபெயர்களும் ஒன்றை ஒன்று அடுத்து ஒட்டி இருத்தல் (தொல். 598) அவரைக்கொடி. இதில். அவரை சிறப்புப்பெயர் அக்கொடியைக் குறிக்கும் பெயர். கொடி பொதுப்பெயர்; எல்லாக் கொடிகளுக்கும் உரிய பெயர். இருப்பு: இருப்பு:1 இரும்பு > இருப்பு = இரும்பால் ஆகிய பூண். இருப்பு முகம்செறிந்த ஏந்தெழில் மருப்பில் கருங்கை யானை - புறம். 369 இருப்பு :2 இருப்பு = இருத்தல். மதியிருப்பன்ன மாசறு சுடர்நுதல் - அகம். 193 இருப்பு :3 குடியிருப்பு. ஒன்று மொழி ஒலியிருப்பு - மதுரைக். 143 ச.இ.பொ.க. இருப்பை: இருப்பை : 1 இருப்பை > இலுப்பை. இரு = கருமை; கரிய நிறத்தது இருப்பையாம். இரு பெரிய என்பதுமாம். இலுப்பை ஒரு வகை மரம். இனிய பூ உடையது. ஆலை இல்லாத ஊர்க்கு இலுப்பைப்பூ சருக்கரை என்பது பழமொழி. இரும்பு போல வலிமை மிக்கது. ஆதலின் இருப்பையாய் இலுப்பை ஆகியது. இலுப்பை விதையில் இருந்து எண்ணெய் எடுப்பர். அது விளக்கு எரிக்கப் பயன்படும். அதன் எண்ணெய், பட்டை முதலியவை நல்ல மருத்துவப் பொருள்களாம். அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை -அகம்.9 அத்த இருப்பை - அகம். 15 ஓங்கு சினை இருப்பை - அகம். 81 கருங்கோட்டு இருப்பை - அகம். 171. 247 கோடு = கொம்பு. திரள் அரை இருப்பை - அகம். 275 திரள் அரை = திரண்ட அடி இருப்பையின் அடி. தவசம் இட்டு வைக்கும் குதிர் போன்றது என்பதை. குதிர்க்கால் இருப்பை என்கிறது அகம் (321); அவ்வரையும் (அடியும்) குறுகியது அன்று நெடியது என்பதை. நீடுநிலை அரைய செங்குழை இருப்பை என்கிறது அதே அகம் (331) இருப்பை பற்றிய குறிப்புகள் பாட்டு. தொகைகளில் 17 இடங்களில் இடம் பெற்றுள, அவையனைத்தும் பாலை நில மரம் இருப்பை என்பதைக் காட்டுகின்றன. வாவலும் கரடியும் அதன் பழத்தை விரும்புதலைப் பல பாடல்கள் சுட்டுகின்றன. இருப்பை:2 இருப்பை என்பதோர் ஊரின் பெயர். வீரனாகவும் வள்ளலாகவும் விளங்கிய விராஅன் என்பானது ஊர் அது. விராஅன் மலை விராலி மலையாக இதுகால் உள்ளது. அதனை அடுத்த ஊர் விராஅன் ஊராக இருந்து விராலூராக வழங்குகின்றது. மலிபுனல் வாயில் இருப்பை அன்னஎன் ஒலியியல் கூந்தல் நலம்பெற -நற். 260 தேர்வண் விராஅன் இருப்பை - நற். 350 என இருப்பை பாடுபுகழ் பெற்றது. இருமணம்: இரண்டு மணம். ஒருவனைக் காதலித்துப் பிறிதொருவனை மணத்தல். இருமணம் கூடுதல் இல்லியல் பன்றே - கலித். 114 இருமருந்து: இருமருந்து = உயிர்களுக்கு இன்றியமையாத நீரும் உணவும். மருந்து போல் உயிர் காப்பவை ஆதலின் அவை மருந்து எனப்பட்டன. இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன் - புறம். 70 ஆருயிர் மருந்து - மணிமே.11:48 இருமல்: இர் > இரும் > இருமல்; இரு = பெரிய. இர் என்பது ஓர் ஒலிக்குறிப்பு. மூச்சு இரைப்பு தொண்டை வறட்சி முதுமை ஆயவற்றால் இயல்பான மூச்சுத் திணறலும் கோழை அடைப்பும் அதை வெளிக்கொண்டு வர இயலாத் துயரும். முற்றிய இருமலாம். இருமல் இடைவிடாது தொடர்ந்து வருதலைத் தொடித்தலை விழுத்தண்டினார் என்னும் பெருமூதாளர் பதிவு செய்துள்ளார். தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற்று இரும்இடை மிடைந்த சிலசொல் பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே - புறம். 243 பரிதிமாற் கலைஞர் ஓயா இருமலுக்கு ஆட்பட்டார். அதுகால் இருமல் பெருமல் செய்கிறது என்றார். இரு = பெரு என்னும் பொருளதாம். இருமல் பெரிய மற்போர் புரிகின்றது என்றது இயல்பான பொருள் விளக்கமாம். இருமனப் பெண்டிர்: இருமனப் பெண்டிர் என்பார் நன்னெறி வரம்பில் நில்லாத மகளிர். அவர்கள் பண்பிலார் என்றும். பொருள் விழைவார் என்றும். வரைவு (ஒழுக்க வரம்பு). இலார் என்றும் கூறப்படுவார். அவர் வழியில் பொருளைத் தொலைத்தல் ஒரு வகை. வைப்பு என்பது பொருள். வைப்பாட்டி என்பது பொருளை ஆட்டிப் படைப்பவள் என்னும் பொருள் தருவது. அத்தகு ஆடவரும் இல்லாமல் இல்லை. அவர் வயப்பட்ட மகளிர் உடைமையும் வெளியே சொன்னால் வெட்கமென விட்டொழிந்து கெட்டொழிந்து போதலும் உண்டு. இருபாலுக்கும் உள்ள பிழையை ஒருபால் மேல் உலகம் சொன்னாலும் அவனை வள்ளுவம் விட்டு வைக்கவில்லை. பரத்தன் என்று சுட்டவே செய்தது. இருமுடி: இருமுடி = சமமான இரண்டு முடிப்புடைய சுமை. மலைமேல் ஏறுவார் தமக்கு வேண்டும் பொருள்களை இரு சமமாகப் பகுத்துத் துணிகளில் முடிந்து இரண்டையும் இடைவெளிப்பட ஒன்றாகக் கட்டித் தலைமேலோ தோளிலோ கொண்டு செல்லும் சுமை முடி இருமுடியாம். பாரம் ஏற்றுவார் இருபாலும் சமமாக அமையச் செய்தலைக் காவடியால் அறியலாம். நிரைப்பரப் பொறைய (அகம். 207) என்பதால் சுமையை மேல்மேல் வைத்த பாரம் அதுவாம் என அறியலாம். ஒருதலையான் இன்னாது என்பதும். காப்போல (காவடி போல) இருதலையானும் இனிது என்பதும். காதல் வாழ்வுக்கே அன்றிச் சுமை தூக்குதற்கும் இனிதாம் (திருக். 1196) சேரலம் ஐயப்பன் கோயில் செல்வார் இருமுடி கட்டிச் செல்லுதல். மலையேறியர் கொண்ட பண்டை வழக்கு வழியதாம். இருமுது குரவர்: இரு + முது + குரவர் = இருமுதுகுரவர். குருவர் > குரவர். தாய் தந்தையர் ஆகிய மூத்த பெருமக்கள். பிறந்த குழந்தையர்க்குப் பெற்றோரே முதலாசிரியர் ஆகலின் குருவராம். அவர் குரவர் எனப்பட்டார். எம்முது குரவர் என்னுற்றனர் கொல் - சிலப். 16:60 இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன் - சிலப். 16:67 குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும் - புறம்: 34 இருமுதுமக்கள் என்பாரும் இவர். இரும்புக் கடலை: இரும்புக் கடலை = கடினம். கடலை விரும்பியுண்ணும் உண்டியாம். நிலக்கடலை (மணிலாக் கொட்டை) கொண்டைக் கடலை என்பவற்றின் வடிவிலே செய்யப் பட்ட இரும்புக் கடலையை வாயிலிட்டு மென்றால் பல் என்னாம்? பல்லை உடைக்கும் இரும்புக் கடலை செய்வார் இல்லை. அப்படி ஒருவர் செய்து தின்னச் சொன்னால் எப்படி இருக்கும்? இனியதும் எளியதும் பொருள் நயம் மிக்கதுமாம் பாடல்கள் பாடுவதை விடுத்துப் பொருட்பயன் இல்லாமல் கடுமையாக அமைந்த பாக்களை இயற்றுவது, இரும்புக் கடலை செய்து விற்பது போன்றதாம். பயனற்ற செயல் மட்டுமன்று மொழியைப் பாழாக்கும் செயலுமாம் என்பதைச் சொல்வது இரும்புக் கடலை என்னும் மக்கள் வழக்கு. இரும்பொறை: இரும்பொறை:1 இரும் + பொறை = இரும்பொறை. பொறை = பெரிய பாறை, மலை. கழைக்கண் இரும்பொறை ஏறி விசைத் தெழுந்து குறக்குறு மாக்கள் தாளம் கொட்டும் -நற். 95 இரும்பொறை:2 சேரர்குடிப்பெயர். பெரிய மலையாம் பகுதியை ஆட்சி புரிந்தவர். பெருஞ்சேரல் இரும்பொறை (பதிற். பதி. 8) இருவி: இரு + வி = இருவி. முதன்முறையில் கதிரையும் தட்டையையும் அறுத்துவிட்டுப் பின்னர்க்கிளைத்து வந்த தினைப்பயிர் இருவி எனப்படும், ஒரு பயிரே இருமுறை விளைவுப் பயன் தரலால் இருவி எனப்பட்டது. இருவி வேய்ந்த குறுங்கால் குரம்பை - குறிஞ்சிப். 153 கொய்யா முன்னும் குரல்வார்பு தினையே அருவி ஆன்ற பைங்கால் தோறும் இருவி தோன்றின பலவே - அகம். 28 இருவேல்: இரு = இரண்டு. கருமை. இருவகைப்பட்ட வேலமரங்கள் அவை வெள்வேல். கருவேல். இனி. இரு கருமைப் பொருளதாதலின் கருவேல் என்பதுமாம். இருவேல் பட்டு என்பது ஓர் ஊர்ப் பெயர். இருள்: இருள் : 1 கதிரொளி மறைந்த நிலையில் தோன்றிக் கப்புவது இருள்; இருட்டு என்பதும் அது, அவ்விருள் கருநிறத்தது, அதனை இருள்நிறம் என்பர். இருள்நிறப் பன்றி என்பார் தொல்காப்பியர் (1568) இருளும் உண்டோ ஞாயிறு சினவின் - புறம்.90 இருள்:2 அறிவு ஒளிப் பொருளாகக் கொள்ளப்படும். ஆதலால் அறியாமையையும், மயக்கத்தையும் இருள் என்பர். இடைதெரிந்துணரும் இருள்தீர் காட்சி - பெரும். 445 இடை = இடம்: காட்சி = அறிவு. இருள்:3 இரவுப் பொழுது இருள் பொழுது எனப்படும். இருளின், இனமணி நெடுந்தேர் ஏறி - புறம். 145 இருள்:4 இருண்டுவரும் மாலையும் இருள் மாலை எனப்படும். மாலைப் பொழுது வருதலை. இருள்வர என்கிறது புறம் (144). இருள்:5 அச்சமூட்டும் இருள் துன்பப் பொருளும் தரும். இருள் யாவதோ நின்நிழல்வாழ் வோர்க்கே - புறம். 102 இருள்: 6 இருள் உலகம் என்று நிரயம் (நரகம்) சுட்டப்பட்டது. இருள் உலகம் சேராத வாறு - திரிகடு.90 இருளுவா என்பது காருவாவை (அமாவாசை) இருள்மதி என்றது பரிபா.11. இருளப்பன். இருளாயி என்பவை ஆண்பால் பெண்பால் பெயர்களாக வழங்கின. இருளன் தெய்வமாக வழிபடப்படுபவன். இருள் அழகுப் பொருளாயிற்று பாரதிதாசனார்க்கு. அனைத்துள்ளும் அழகு நீயே - அழ. சிரி. இருளேஉன் பெருமை என்னே! - அழ. சிரி. நீகிரோ என்று கூறின் உளைச்சல் படுபவன் கருப்பன் என்பதில் (Black Men) களிப்படைகிறான். கடவுள் கொடை கருமை என்கிறான். வயிரமே கருமை அல்லவா! இருள்:7 இருள் என்பது இருட்டு ஆவது பொதுவழக்கு. ஆனால் இருள் என்பது பேய் என்னும் பொருளில் தென்னகப் பொது வழக்காக உள்ளது. இருளடித்து விட்டது என்பர். ஓர் ஆளும் கறுப்பு உடையும் பேய் என்பது பாண்டியன் பரிசு. இருட்டு. இருளன். இருளாண்டி இவ்வழிச் சொற்கள். இருள்வாசி: இருள் + வாசி = இருவாச்சி. இரவுப் போதில் மணம் பரப்பும் பூச் செடி இருள்வாசியாம். இதனை மக்கள் இருவாச்சி என வழங்குவர். இதன் பழம் பெயர் நள்ளிருள் நாறி என்பது. குறிஞ்சிப்பாட்டில் வரும் பூக்களுள் ஒன்று நள்ளிருள் நாறி. நரந்தம் நாகம் நள்ளிருள் நாறி - குறிஞ்சிப்.94 நள் இருள் = நடு இரவு அல்லது யாமம். நாறி = மணம் பரப்புவது. இரை: இரை : 1 இரை = ஒலி இர் + ஐ = இரை > இரைதல் > இரைச்சல் > இரைப்பு > இளைப்பு. இர் என்பது ஒலிக்குறிப்பு. தாய்க்கோழி குஞ்சுகளோடு உலாவி உணவு கிடைக்கும் இடம் கண்டதும் இரையும் (ஒலிக்கும்). அவ்வொலி கேட்ட குஞ்சுகள்அதனை அணுகித் தின்னும். உணவு ஊட்ட இரைதல் போலவே குஞ்சுகளைக் காக்கவும் இரையும். பருந்து வட்டமிடும் குஞ்சுகளை இரைந்து (கூவி) அழைத்துத் தன் சிறகுகளுள் ஒடுக்கும். காகத்திற்கு உணவு கிடைத்தால் அந்த மகிழ்ச்சியில் கரையும். இரைதலும் கரைதலும் ஒலித்தலேயாம். இரைதல் இரைச்சல் என்பவை சந்தை இரைச்சல், சண்டை இரைச்சல் எனப் பெருகின. இரை :2 இரை = உணவு. இரைந்து அழைத்தும், இரைந்து மகிழ்ந்தும் உண்ணும் உணவு இரை எனப்பட்டது. ஆட்டையும் ஆயன் அழைப்பொலி செய்து அழைத்து, இலை தழைகள் உண்ணச் செய்வான். இவற்றால் ஊர்வன பறப்பன நடப்பனவாம் உயிரிகள் இரைதல் வழியால் உண்ணும் உணவு இரை எனப்பட்டது. இரைச்சல் இரைதல் கரைதல் வழியே வந்த உணவு இரை எனப்பட்டதுடன், உண்ட உணவு தங்கும் குடற்பை இரைப்பை எனப்பட்டது. இரைக்குடல் என்பதும் இது. உயிரிகள் அலகு, நகம் முதலியவற்றால் இரையெடுத்தல் போல் ஊசி. கம்பி. கரண்டி ஆகியவற்றால் உண்ணும் அயல் நாட்டார் ஊண்முறை, துரை இரையெடுக்கிறார் என்னும் வழக்குக்கு இடமாயிற்று. ஈன்றிளைப் பட்ட கொடுவாய்ப் பேடைக்கு அல்கிரை தரீஇய மான்று வேட்டெழுந்த செஞ்செவி எருவை . . . . . . . புலவுப் புலிதுறந்த கலவுக்கழி கடுமுடை கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் - அகம்.3 உடல் உள் உறுப்புகளுள் இரைப்பை ஒலி எழுப்புதல் இரைதல் அவரவர் அறியக் கூடியதே. இரைதல் தொடங்கி இரைப்பு ஏற்படும். இரைப்பு ஏப்பம் ஆகும். புளிப்பேப்பம் என்றும் கூறப்படும். இரை:3 இரை = நோய். இரைப்பு மிக்க நிலையில் இளைப்பு எனவும். இளைப்புநோய் ஈளைநோய் எனவும் வழங்கும். இரை:4 இரை = நாங்கூழ்ப்புழு மண்ணை உண்டு அதனை வளமாக்கி வெளியே தள்ளுவதே வாழ்வாகிப் போன மண்புழுவாம் நாங்கூழ்ப்புழு இரை என வழங்குதல் அறியப்படுகிறது. நாக்குப்பூச்சி என்பதும் அது. (செ.சொ.பி.) இரை தண்ணீர்: இரை = தீனிவகை தண்ணீர் = குடிநீர் உயிரிகளை வளர்ப்பார் இரை தண்ணீர் வைத்தலில் கருத்தாக இருக்க வேண்டும். வாயில்லா உயிர். அது என்ன கேட்குமா? நாம்தான் இரை தண்ணீர் பார்க்க வேண்டும் என்று கூறும் வழக்கம் உண்டு. இவ்வழக்கத்தால் ஆறறிவு உயிரியாம் மாந்தரும், உண்டு நீர் பருகுவதை இரை தண்ணீர் பார்க்க வேண்டும். என்று கூறுவதும் வழக்காயிற்று. கோழிக்கு இரை வைத்தல்; மாட்டுக்குத் தீனிபோடல் என்பவை மரபுகள். இரைப்பெட்டி: கோழி தின்னும் தீனி இரை எனப்படும். அதன் வழியாக இரை போடுதல் என்பது தின்பது, உண்பது என்னும் பொருளில் வழங்கலாயிற்று. உண்பது வயிற்றைச் சேர்வதால் அதனை இரைப்பெட்டி என்பது புதுக்கோட்டை வட்டார வழக்கு. இறைப்பெட்டி என்றால். நீர் இறைக்கும் இறைவைப் பெட்டி. சால், கூடை, கூனை என்பவற்றைக் குறிக்கும். இரையெடுத்தல்: பறவை பாம்பு முதலியவை உணவு கொள்ளுதல் இரையெடுத்தல் எனப்படும் (ம.த.ச.அ.) கோழி தின்னுதலை இரையெடுத்தல் என்பது வழக்கு. அவ்வாறே சிறு தீனிகளைப் பொறுக்கித் தின்பதை இரையெடுத்தல் என்பதும் இரை போடல் என்பதும் வழக்கு. என்ன இரை எடுத்தாயிற்றா? இரை போட்டாயிற்றா? என வினவுவாரை நாட்டுப் புறங்களில் காணலாம். இரைக்கே இரவும் பகலும் திரிந்து என்பார் பட்டினத்தார் (திருக்கா. 5). இரைதேர் வண்சிறு குருகே என விளிக்கும் திருவாய்மொழி. இலகு: இலகு : 1 இல் > இல > இலகு. எடை - கனம் - இல்லாதது; நொய்மையானது; எளிமை யானது. அந்த வேலையை இலகுவாகச் செய்யலாம்; இலகுவாக இருவர் செய்யும் வேலைக்கு நால்வரா? என்பவை மக்கள் வழக்கு. இலகு :2 இலகுதல் = ஒளி செய்தல். விளங்குதல். இலங்கு > இலகு என ஆயது அது. இலகொளிச் சிலாதலம் தொழுது - சிலப். 10:25 இலக்கணப் போலி: இலக்கணம் + போலி = இலக்கணப் போலி. இலக்கணம் போல்வது இது; ஆயின் இலக்கணம் அன்று என்பதாம். ஆனால். வழக்கியல் இரண்டனுள் ஒன்றாகிய இயல்பு வழக்கினது இது. ஆதலால் தள்ளவும் ஆகாது என்பதாம். இலக்கணம் உடையது; இலக்கணப் போலி மரூஉஎன் றாகும் மூவகை இயல்பும் -நன். 267 இயல்பு = இயல்பு வழக்கு. இல்முன் என்பதை முன்றில் என்றும். நகர்ப்புறம் என்பதனைப் புறநகர் என்றும். புறவுலா என்பதை உலாப்புறம் என்றும். கண்மீ என்பதை மீகண் என்றும். கோவில் என்பதைக் கோயில் என்றும். பொதுவில் என்பதைப் பொதியில் என்றும் வழங்கும் இவை போல்வன இலக்கணப் போலி (நன். இராமாநு.) * கோயில் காண்க. இலக்கணம்: இலக்கு + அண் + அம் = இலக்கணம். இலக்கு = குறி; இலக்கம் உடம்பு இடுப்பைக்கு - திருக்.627 அண்ணுதல் = நெருங்குதல். அம் = பெருமைப் பொருள் ஈறு. இலக்கணம் என்பது பழந்தமிழ்ச் சொல். அது தொல்காப்பியத்தில் பல்கால் இடம் பெற்றுள்ளது. புறத்திணை இலக்கணம் - தொல். 1002 இழைபின் இலக்கணம் - தொல். 1498 என இலக்கணச் சொல்லாட்சிகளைச் சுட்டுகிறார் தொல்காப்பியர். செய்யுள் மருங்கின் மெய்பெற நாடி இழைத்த இலக்கணம் -தொல். 1499 என்றும். ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கின் ஆகிய உயர்சொற் கிளவி இலக்கண மருங்கில் சொல்லா றல்ல -தொல். 510 என்றும் இலக்கணச் சொல்லாட்சிகளை மேற்கொள்கிறார். இலக்கு - இலக்கணம் சிறந்த நடைக்கு எடுத்துக் காட்டாக அல்லது கற்றோர் பின்பற்றும் இலக்காகக் கூறப் பெறும் மொழியமைதி (Grammer)” (வ.மொ.வர.பக்.90) இசை கூத்து முதலிய கலைகளுக்கும் பண்டே இலக்கணம் இருந்தமை. இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து என வரும் சிலம்பால் அறியவரும். இவ்வடிக்கு வரும் அரும்பத உரை அடியார்க்கு நல்லாருரை ஆகியவற்றால் அவ்விலக்கண நூல் சான்றுகளையும் விரிய அறியலாம். தமிழ், இலக்கண வரம்புடைய மொழி என்பதைக். கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப் பசுந்தமிழ் ஏனை மண்ணிடைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப் படக் கிடந்ததா எண்ணவும் படுமோ என்று பரஞ்சோதியார் கூறுவார். (திருவிளை. பாயிரம்) தொல்காப்பியர் நாளில் மூன்று இலக்கணமாக (எழுத்து. சொல். பொருள்) இருந்தது எனினும். ஐந்திலக்கணக் கூறுகளும் (யாப்பு. அணி) அமையவே இருந்தது. பின்னே எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்தாகியது. பொருளும் அகப்பொருள் புறப்பொருள் எனத் தனித்தனியாயது. அதன்மேல் பாட்டியல் என ஒன்றும் சேர்ந்தது. ஆறாம் இலக்கணம் ஏழாம் இலக்கணம் என்பனவும் ஏற்பட்டன. கிடைத்த தமிழ் இலக்கண நூல்களுள் தொன்மையும் விரிமையும் கட்டமைவும் உடையது தொல்காப்பியமே. இலக்கணை: இலக்கு + அண் + ஐ = இலக்கணை. ஒன்றன் இலக்கணத்தை மற்றொன்றுக்குத் தந்துரைப்பது இலக்கணையாகும். இலக்கணை என்பது ஒரு பொருளினது இலக்கணத்தை மற்றொரு பொருளுக்கு வைத்துச் சொல்வது. அது விட்ட இலக்கணை, விடாத இலக்கணை, விட்டுவிடாத இலக்கணை என மூவகைப்படும். அவை வருமாறு. சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெறுந்துணையும் நின்றதுகொல் நேர்மருங்கிற் கையூன்றி - முன்றில் முழங்கும் கடாயானை மூரித்தேர் மாறற்கு உழந்துபின் சென்றவென் நெஞ்சு எனின், மருங்கும் கையும் ஊன்றுதலும் முதலிய இலக்கணங்கள் நெஞ்சினுக்கு இல்லாததனாலே விட்ட இலக்கணை. கங்கையின்கண் இடைச்சேரி, புளித் தின்றான் எனின். இடைச்சேரி கங்கையில் இல்லாவிடினும் அதன் கரையில் இருத்தலும். புளியைவிட்டு அதன் பழத்தைத் தின்றலும் உண்மையால் விடாத இலக்கணை. அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப் பகல்கான் றெழுதரும் பல்கதிர் பரிதி எனின், இருளைக் குடித்தலும் பகலைக் கக்குதலும் பரிதிக்கு இல்லாததனாலும் இருளைப் போக்குதலும் பகலைத் தருதலும் அதற்கு உண்டாதலினாலும் விட்டுவிடாத இலக்கணை (நன். இராமா. 269) இலக்கத்தகடு: உந்து வகை எதுவாயினும் உரிமை பெறும்போது. அவ்வுந்தின் எண், இடக்குறிப்பு அமைந்த தகவல் தரப்படுகின்றது. அத்தகவல் வண்டிக்குக் கட்டாயத் தேவை. நம்பர் பிளேட் என வழங்கும் அதனை ஈழத்தமிழர் இயல்பாக இலக்கத்தகடு என வழங்குகின்றனர். செய்தித் தாள்களிலும் இச்சொல் வழங்குகின்றது. இலக்கம்: இலக்கம்:1 ஏழு வண்ணம் காட்டி எழுந்த கதிரில்தான் எத்தனை எத்தனை ஒளிக்கற்றை நெற்கதிர் போலவோ எண்ணக் கூடும் ஒளிக்கதிரை எண்ணக் கண்ணொளி தாங்குமா? ஒளியை மட்டுமே பார்த்தான். அந்த ஒளியிலேயே ஒன்றிவிட்டான்! விண்ணிலே ஒளி! ஆனால் மண்ணிலே அதுபட்ட இடமெல்லாம் பட்டொளி! நீரா, நிலமா, காடா, கரையா, பறவையா, விலங்கா எங்கும் பட்டொளி எல்லாம் பட்டொளி! நூறா? நூறு நூறா? ஆயிரமா? ஆயிரம் ஆயிரம்! எது? கதிரொளிப் பரப்பு! பரப்பில் பட்ட பளிச்சு! பளிச்சுக் காட்டிய உயிரிகள் - உயிரிலிகள்! எங்கும் ஒளி! எல்லாம் அதன் ஒளி! இவ்வொளி வெள்ளத்தை - ஒளி வெள்ளப் பளிச்சினை - எண்ணத் தொலையுமா? தொலையா இலக்கம்! தொலையா இலக்கு! எல்லே இலக்கு ஆம்! மாந்தனுக்கு எல்லா ஒளியும் எல்லால் வாய்த்து இலங்கும் இலக்கமாயிற்று! இலங்கமாயிற்று! பின்னே அச்செங்கதிர் லிங்கமாயது, தொல்பழ இலக்கம் போயது. கதிர் இலக்கம், மாந்தர்க்கு இலக்கம் என்னும் எண்ணாயிற்று. இலக்கைத் தொலைத்துவிட்ட இவன், பொய்யும் புனையும் பொருந்த வடம் திரித்தான்! தெருத்தெருவாக இழுத்துத் திக்குத் திசையற்றுத் திரிகிறான்! உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிற்றை -முருகு. 1-2 பாடம் பண்ணுகிறான். x¥ã¡»wh‹!ஓதுகிறான் ! கதிரோனைக் காட்சியில் இருந்து அகற்றிவிட்டுக் கையால் தடவி எதையோ தேடுகிறான். காலம் மாறுகிறது, கருத்துத் தெளிவில்லாமலே கடந்து போகிறது. ஆனால், எல்லே இலக்கம் என்ற தொல்லோன் தன் சொல்லால் இலங்கும் இறையைக் காட்டிக் கொண்டே நிற்கிறான். இலக்கம் : 2 அம்பு எய்வார் தப்பாமல் எய்வதற்கு அடையாளமிட்டு அவ்விடத்தில் அம்பு படுமாறு ஏவுவர். அவ்விடம் முதற்கண் மரத்தின் இலையாக இருந்தமையால் அதனை இலக்கு என்றனர். இலக்கு அல்லாமல் ஓருருவம் செய்து அதன்மேல் அம்பு, வேல் ஆகியவை ஏவிப் பயிலல் வழக்கமாகியது. அதனையும் இலக்கம் என்று வழங்கியதுடன் குறி என்றும் வழங்கினர். இகலினர் எறிந்த அகலிலை முருக்கின் பெருமரக் கம்பம் போலப் பொருநர்க் குலையாநின் வலன்வா ழியவே -புறம். 169 இவ்விலக்கம், இலக்கணம், இலக்கியம், குறி (நூல்), குறிக்கோள் என்னும் சொற்களுக்கு மூலமாயது. தோல் துவைத் தம்பிற் றுளை தோன்றுவ நிலைக்கொராஅ இலக்கம் போன்றன -புறம். 4 கம்பமொடு துளங்கிய இலக்கம் போல -புறம். 260 இவ்விலக்கம் குறி பார்த்து ஏவற்கு வைக்கப்படுதலால் குறி எனவும் பெயர் பெற்றது. மேலும் முருக்கமரம் அம்புவேல் துளைக்கத் தக்க மென்மையதாகலின் அதனையே இலக்கம் அல்லது குறியாகக் கொண்டனர். இலக்கியம்: இலக்கு + இயம் = இலக்கியம். குறிக்கோளை நயமுற இயம்புவது இலக்கியமாம் அரைசியல் பிழைத்தோர்க் கறம்கூற் றாவதூஉம் உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை யுருத்துவந் தூட்டுமென் பதூஉம் சூழ்வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதி கார மென்னும் பெயரால் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் என்னும் சிலப்பதிகாரப் பதிகச் செய்தியான்(55-60) இலக்கியக் குறிக்கோள் விளக்கமாம். இலக்கியம், பேரிலக்கியம்(காப்பியம்), சிற்றிலக்கியம் என இருபாற்படும். * சிற்றிலக்கியம் காண்க. இலக்கு: இலக்கு = குறி, குறிக்கோள். அம்பு ஏவுவார் ஒரு குறியைக் கூர்ந்து நோக்கி, அக்குறி பிழையா வகையில் அம்பு ஏவுதல் வழக்கும், அக்குறி பழங்காலத்தில் இலையாகத் தெரிந்து கொண்டைமையால் இலை > இலக்கு ஆயதும், பின்னே மரமும், செய் பொய்மையும் பிறவும் குறியாகக் கொண்டு அம்பு, வேல் முதலியவை ஏவலால் இலக்கு இடப் பொருள் தருவதும் இலக்கத்துக் கண்டோம். அந்த இலக்கு = அவ்விடம். இந்த இலக்கு = இவ்விடம் எனப் பொருள் தந்தது. இலக்கு, இலக்கம் எனவும் ஆகியது. எண்களின் மதிப்பு அது நிற்கும் இடத்தால் அறியப்படுதல் காண்க. ஒன்று என்னும் எண், 8 ஆம் இடத்தில் (இலக்கத்தில்) நின்றால், 1கோடியாகி விடுகின்றது அல்லவா! காவலர், படைஞர் துமிக்கி (துப்பாக்கி) சுடும் பயிற்சிக் களம், சுழல் காட்சியரங்குகளில் கத்தி வீசல் ஆயவை பண்டை இலக்கு வழிப்பட்டவையாம். வேட்டையாடல், கவண் சீவல், கல்லெறிதல் என்பவையும் இலக்கு நோக்கியவே, இலங்கறிவு: இலங்கு + அறிவு = இலங்கறிவு. இலங்கறிவு என்பது விளங்கிய அறிவாகும். ஓரறிவு முதல் ஐயறிவு வரை வளர்ந்த உயிர் அதன்மேல் மனவுணர்வு பெற்றுப் பகுத்தறியும் ஆற்றல் பெறு நிலையே இலங்கறிவு பெறுதல் ஆகும். ஆதலால் பகுத்தறிவு என்பதற்கு வள்ளுவர் வழங்கும் கலைச்சொல் இலங்கறிவு என்பதாகும். விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரொ டேனை யவர் - திருக். 410 இலங்கை யீழம்: இலங்கை + ஈழம் = இலங்கை யீழம். இலங்கையையும் ஈழத்தையும் தனித்தனியாகச் சுட்டுகிறது பெருங்கதை. இலங்கை ஈழத்துக் கலந்தரு செம்பு -1: 58: 37 இலங்கைக் கண்ணுள்ள ஈழம் என்பதுமாம். ஈழத்துத் தச்சன் கடைந்த இணைச்செப்போ -யா.வி.செய். 9. மேற் இலஞ்சி: இலங்கு > இலஞ்சு > இலஞ்சி, உள்ளம் கொள்ளை கொள்ளும் நீர்ப்பரப்பும், நீர்ப்பெருக்கும், பின்னிப் பிணங்கும் கொடிச் செறியும் பூப் பொலிவும் கொண்டமையால் இலங்கும் நீர்நிலை இலங்கி எனப் பெற்று இலஞ்சி யாயது என்க. மலையும் காடும் மணியன்ன தூய நீரும் துள்ளும் மீன்வகைகளும் பயிலும் ஞிமிரும் தும்பியும் புள்ளும் ஊரலும் ஆகிய எல்லாம் இயற்கை இறைமைக் காட்சியவாதல் கண்கூடு. கைபுனைந் தியற்றாக் கவின் பெறு வனப்புடைய அவ்வியற்கைப் பேரெழில் வயப்பட்டோர் இலங்கி எனல் வியப்பன்று. இலஞ்சி நீர் நலத்தை, கூனும் குறளும் ஊமும் செவிடும் அழுகுமெய் யாளரு முழுகின ராடிப் பழுதில் காட்சி நன்னிறம் பெற்று வலஞ்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும் -சிலப். 5: 118 - 122 எனும் அடிகளால் அறியலாம் இலஞ்சி குற்றாலம் சார்ந்த நீர் வளமிக்க ஓர் ஊர்ப் பெயராம். இலஞ்சியம் தாலாட்டில் கொஞ்சும் உவமையும், மகளிர் பெயருமாம். இலஞ்சியம்: இலஞ்சியம் = அருமை, அழகு. இலஞ்சி என்பது பன்னிற மலர்கள் வனப்புறத் திகழும் கண்கவர்நீர்நிலையாம். ஏரி ,குளம், கண்வாய், என்பவற்றினும் எழில் வாய்ந்தது இலஞ்சி. ஆகலின் தேவர்களால் அமைக்கப்பட்டது எனப் புனைந்து கூறும் தொன்மக் கதைகள் உளவாயின. இலஞ்சியின் அழகும் அருமையும் இலஞ்சியம் என்னும் சொல்லை உண்டாக்கி அதற்கு அப்பொருள்கனை உண்டாக்கின. ‘இலஞ்சியமாக ஒரே ஒரு பிள்ளை’ ‘நீ ஒருவன்தான் இலஞ்சியமாக இருக்கிறாயா? என்னும் வழக்குகளால் இலஞ்சியத்தின் அருமை விளங்கும். அரியது அழகியதுமே யன்றோ! இலம்பாடு: இலம் + பாடு = இலம்பாடு. (இலம்படு > இலம்பாடு) இலம்பாடு = பொருள் இல்லாமல் படும் வறுமைப்பாடு. இலம்பாடு உழந்த என் இரும்பேர் ஒக்கல் -புறம். 378 ஒக்கல் = சுற்றம். இலம்பாடு அகற்றல் யாவது? புலம்பொடு தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம் -புறம். 381 இலவசம்: இலவசம் பெருவாக்குச் சொல். இலவச வாசக சாலை இலவச மருத்துவமனை இதனை வாங்கினால், இது இலவசம் நான் என்ன இலவசமாகவா கேட்கிறேன் என்பன, எங்கும் வழங்குவன. இலவசம் = விலையின்றிப் பெறுவது அல்லது கொடுப்பது. இலவசமாய் = விலையின்றி என்று அகராதிகள் கூறுகின்றன. பொருள் வாக்குச் சரியே எப்படி இலவசம் இப்பொருளுக்கு இசைந்து வருகின்றது? இலவசம் என்பதை இலவியம் என்பதும் உண்டு. அது பிழை வழக்கு. ஆதலால் அதனைக் கருத வேண்டியதில்லை இலவசத்தைக் கருதலாம். இலவசம் தமிழ்ச்சொல் அன்று என்று கருதியவர்கள் இலவசப் படிப்பகம் என்பதைக் காசிலாப் படிப்பகம் என்றனர். இலவசம் என்பதை ஓசி என்பாரும் உளர். காசுக்குத்தான் கேட்கிறேன்; ஓசியாகவா கேட்டேன் என்பதில் அப்பொருள் விளங்கும். இனாம் என வழங்கும் வேற்றுச் சொல்லும் இலவச உரிமைப் பொருட்டதே. இலவசம் வந்த வகையைக் காண்போம். வீடு தேடி வந்த ஒருவர் ‘அது தரவில்லை’ ‘இது தரவில்லை ’ என்று குறை சொல்வாரானால் அதை விரும்பாத வீட்டுக்காரர், ‘உங்களை நாங்கள் வெற்றிலை வைத்தா அழைத்தோம்?’ என்றோ, ‘இலை பாக்கு வைத்தா அழைத்தோம்? என்றோ இடித்துரைப்பதை அறியாதவர்களா நாம்? இலைபாக்கு வைத்து அழைப்பது, விரும்பி வரவேற்பதன் அடையாளம். மங்கல நிகழ்ச்சிகளுக்கு இலை பாக்கு வைத்து அழைக்கப் பெறுதல் கண்கூடு. மங்கல விழாவுக்குச் செல்பவர்கள் சுருள் வைப்பதையும், சுருள் தருவதையும் இன்றும் காணலாமே; சுருள் என்பது என்ன? வெற்றிலையைச் சுருட்டித் தருவதே சுருள்! வெறும் வெற்றிலையா இருக்கும் சுருளில்? ஊடே மணமும் இருக்கும் அன்றோ! வெற்றிலைச் சுருளில் பணம் வைத்துத் தருதலாம் சுருள் என்பது அன்பளிப்புத் தொகையைக் குறிப்பதாக அமைந்தது. வெற்றிலை வழங்குதல் வரவேற்பு, வெற்றிலை வழங்குதல் மங்கலம், வெற்றிலை வழங்குதல் அமைதி, இவை வெற்றிலைச் சிறப்பு. வெற்றிலையை இலை என்றாலே போதும். விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. இலைபாக்கு பெரு வழக்கு. வெற்றிலைக்கு அடை என்பதொரு பெயர்; அடைப்பை என்பது வெற்றிலைப் பையைக் குறிக்கும். அடைக்காய், வெற்றிலையோடு போடப்படும் பாக்கு: அடைப்பைக்காரன் முன்னாளில் அரண்மனைகளில் வெற்றிலை மடித்துத் தந்த பணியாளன். இலை என்பது வெற்றிலையைக் குறிப்பது போல் அடை என்பதும் வெற்றிலையைக் குறித்தல் அறிக. மதிக்கத் தக்க பெருமக்களுக்கு இலையில் பணம் வைத்து அன்பளிப்பாக வழங்குதல் நாட்டு வழக்கம் . தட்டத்தில் வெற்றிலை வைத்து அதன் மேல் பணம், பழம், உடை முதலியவை வைத்து வழங்குதலும் வழக்கமே. இவை திரும்பப் பெறும் எண்ணத்தில் தரப்படுவன அல்ல. காணிக்கை போல், தெய்வப் படையல் போல் தருவன . ஆதலால், இலை வயமாகத் தந்த அப்பொருள், இலவசமாய்த் திரும்பப் பெறாத அன்பளிப்புப் பொருளாய் அமைந்தது. மதிப்பாக அளித்த கொடை வழியே வந்த அச்சொல், பின்னர் இலையில் வைக்காமல் எதிர் நோக்குதல் இன்றிக் கொடுக்கும் எக்கொடையையும் குறிப்பதாயிற்று. இலை வயம் என்னும் இரண்டு சொற்களும் தேய்ந்தும் மாறியும் இலவசம் என்னும் ஒரு சொல்லாகி வழங்கி வருகின்றன. இலைவயம் எவ்வளவு மதிப்பானது! இலவசத்திற்கும் தான் என்ன, மதிப்புக் குறைவா? அதனைப் பெற எவ்வளவு ஆர்வம் ? இலவசம் என்றால் எனக்கு இரண்டு; என் அண்ணனுக்கு இரண்டு. காசு என்றால் எனக்கும் வேண்டா! என் அண்ணனுக்கும் வேண்டா (ம.வ.) இலவு: இல் > இல > இலவு. இலவு காத்த கிளி என்பதொரு மரபுத்தொடர்; பழமொழியுமாம். இலவு பூத்துக் காய்த்தலைக் கண்ட கிளி, காய் கனியுமெனக் காத்துக் கிடக்குமாம். காயோ கனியாமலே நெற்றாகி வெடித்துப் பஞ்சு பஞ்சாகப் பறந்து போகுமாம்! கிளியும் ஏமாற்றத்தால் பறந்து போகுமாம். கனியாதல் இல்லாத காய், கனமில்லாத மெல்லிய பஞ்சு; இலை தானும் அறவே இல்லாமல் உதிர்ந்து போகும் பருவ நிலை! இவ்வாறு மூன்று இல்லாமை உடையதை இலவு என்ற முற்பாட்டன், நம் முற்பாட்டுக்கும் பாராட்டுக்கும் உரியவனாம். இலவம் பஞ்சில் துயில் -ஆத்திசூடி.26 இன்று நாம் காணும் இலவமரம் வெளிநாட்டில் இருந்து வந்தது; சங்கநூலில் காணப்படும் இலவம் பரியது; உயரமானது; செம்பூவினது என்பர் (சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம். பக்.108) இலைஇல மலர்ந்த முகையில் இலவம் -அகம். 11 இலைஇல மலர்ந்த இலவம் -அகம். 185 இலவ மரத்தின் பூ செந்நிறத்தது ஆதலால் அதனை எரிப்பூஎன்பர். எரிப்பூ இலவம் -ஐங்குறு. 368 எரிநிறத் திலவு -சிலப். 5: 214 எரி நிறம் = செந்நிறம் . இலவம் என்பது இது. இலாமிச்சை: இலாம் + இச்சை = இலாமிச்சை; இச்சையை இல்லாமல் ஆக்குவது இலாமிச்சை; போக உணர்வை மட்டுப் படுத்தும் இயல்பினது என்பர். பெரியவர்களைக் காணுங்கால் அவர்களுக்கு மங்கல மகிழ்வுச் சான்றாகத் தரப்படுவது இலாமிச்சையாகும். இதன் பயன் புலக்கட்டுப்பாட்டுக்கு உரியதாய் நலமும் செய்கின்றது. வீட்டுக்குப் புளி; காட்டுக்குப் புலி என்பது பழமொழி. காட்டு உயிரிகளைத் தேடி இரையாக்கும் புலி போல். புளிச்சுவை உணர்ச்சியைத் தூண்டிக் கேடாக்கும் என்பதால் இலாமிச்சை நடைமுறைக்கு வந்ததாம். அயல் வரவு அஃதாயினும் முன்னைப் புளியினும் மதிப்புப் பெற்றுவிட்டது. அதன் வடிவம் நிறமும் புறத்தூண்ட.ல்கள் என்பதும் எண்ணலாம். உருட்சிக்கு நீட்சி; புளிப்புக்கு அப்பன் என்று பெரியவர் ஒருவர்க்குப் புளியம் பழத்தைத் தெனாலிராமன் வழங்கினான் என்பதொரு கதை. இலை: இலை:1 மரம் செடி கொடிகளின் தலையாய உறுப்பு இலை. அது இல்லையானால் மொட்டை எனப்படும். காய்,பூ இல்லையானாலும் மொட்டை எனப்படுவதில்லை. பிற எல்லாம் இருந்தும் தான் இல்லாமையே அதன் இல்லாமை ஆக்குதல் சிறப்பால் இலை எனப்பட்டதாம். இலையற மலர்ந்தது ஒன்று இலவம் எனப்பட்டது அறிக மரவகை உறுப்புகளைக் கூறும் தொல்காப்பியம், இலையே முறியே தளிரே கோடே -தொல். 1587 என்று இலையை முதன்மைப் படுத்தியதும் எண்ணத்தக்கதாம். இலை:2 இலை போலும் வடிவமைந்த படைக்கருவி இலை எனப்படும். ஒளிறு இலைய எஃகேந்தி -புறம். 26 எஃகு = வேல். சூர் மருங்கு அறுத்த சுடரிலை நெடுவேல் -முருகு.46 அம்பு ஈட்டி ஆயவையும் இலைவடிவில் இருத்தலால் இலை எனப்படும். இலைக்கீரை: முட்டை போன்ற வடிவும் நிறமும் உடைய வெளிநாட்டுக் கீரையைக் கண்டபோது முட்டைக்கோசு என்றனர். கோசுச் கீரை என்றும் கூறினர். இலைக்கீரை என்பது நெல்லை வட்டார வழக்கு பொதுமக்கள் ஆட்சியே புலமை மிக்கோர் ஆட்சியினும் பொருந்தியதாக அமையும் என்பது மிதிவண்டி என்னும் ஆட்சியால் விளங்கும். அதுபோன்றதுஇலைக்கீரை என்பதுமாம் இலைக்கொடி: இலை + கொடி = இலைக்கொடி. = வெற்றிலைக் கொடி இளந்தெங்கு கதலி இலைக்கொடி -நாலா. 1230 இலைதழை: இலை = ஒரு காம்பிலோ ஓர் ஈர்க்கிலே, உள்ள இலக்கு இலையாம். தழை = குச்சி கொப்புகளில் அமைந்துள்ள இலைத் தொகுதி தழையாகும். குழை என்பதும் அது. ஒரு காம்பில் உள்ளது வெற்றிலை; ஓர் ஈர்க்கில் பல இலக்காக உள்ளவை வேப்பிலை புளியிலை போன்றவை. தழை குழை என்பவை ஆடு தின்னுதற்குக் கட்டுவனவும், உரத்திற்குப் பயன்படுத்துவனவுமாம். தழையுரம் என்பதும் குழைமிதித்தல் என்பதும் வேளாண் தொழிலில் பெருக வழங்குவன. இவை பசுந்தாள் உரம் இயற்கை உரம் உயிர் உரம் எனப்படுவன. இலையமுது: இலை + அமுது = இலையமுது. இலை = வெற்றிலை, இறைவனுக்குப் படைக்கும் வெற்றிலை. சந்தி ஒன்றுக்கும் அடைக்காயமுது நாலுக்கும் இலையமுது எட்டுக்கும் ஆக நெல்லு (க.க.அ.மு) இலையான்: இலை வைத்திருப்பவனையோ, இல்லாதவனையோ குறியாமல் ஈ என்னும் பொருளில் இலையான் என்பது யாழ்ப்பாணத்தில் வழங்குகின்றது. ஈ பெரிதும் இலையில் ஒட்டி உறையும் இயல்பு கண்டு இட்ட பெயராகும் இது, இலைவயம்: இலைவயம் = அறக்கொடை. மதிக்கத்தக்க பெருமக்களுக்கு வெற்றிலையில் வைத்துப் பணக்கொடை புரிவது வழக்கம். இலையின் வயமாக வழங்கப்படுதலின் இலைவயம் ஆயிற்று. பெரியவர்களுக்குத் தருதல் காணிக்கை, கையுறை, அடியுறை, தட்சணை என இதுகால் வழங்குகின்றது. * இலவசம் காண்க. இலேசு: இல் > இலே > இலேசு. எளிமையானது; பாரமற்றது. இலகு என்பது போன்றது. குறித்த தொகை தந்து அதற்குத் திங்களுக்கு இவ்வளவு வட்டி என வாங்கும். வணிகம் புரிபவர் உளர். வட்டிக் கடை எனக் கடைகளும் உண்டு*. வாங்கியமுதலுக்கு வட்டியும் ஊதியமும் மிகுந்து முதலையே செலுத்த முடியாமலும் உள்ளது உரியது என்பவை இழந்து போதல் இல்லாமலும் வட்டியும் ஊதியமும் இலேசாக இருக்க வேண்டும் என்னும் வணிக அற நெஞ்சம் அதற்கு இலேசு எனப் பெயரிட்டது. இதனைச் சிந்தாமணி வழங்கியது. வாணிகம் ஒன்றும் தேற்றாய் முதலொடும் கேடு வந்தால் ஊணிகந் தீட்டப் பட்ட ஊதிய வொழுக்கி னெஞ்சத்து ஏணிகந் திலேசு நோக்கி இருமுதல் கெடாமை கொள்வார் -சீவக. 770 பொருள்: ஊணைக் கைவிட்டுத் திரட்டப் பட்ட முதலோடே ஊதியத்திற்கும் ஒரு கேடு வந்தால் அவ்விரண்டினும் ஊதியமாகிய நடப்பின் மேலே நெஞ்சத்து நடக்கின்ற திண்மையைக் கைவிட்டு இரண்டையும் இழப்பதில் முதல் பெறுகையும், ஊதியமென்று பார்த்துப் பெரிய முதல் கெடாதபடி அதனைக் கொள்வார் நின் குலத்தோர் (வணிகர்) (உரை, நச்.) இலேசு இந்நாளில் இலாபம் என வாங்குகிறது. முன்னாளில் ஊதியம் எனப்பட்டது. ஊதியம் இழந்தாலும் முதலை இழந்து விடாமல் பார்த்தலே வணிகச் சீர்மை என்பதாம். *ஒரு பொருளை வாங்கிய விலையோடு ஊதியமும் சேர்த்துக் கூட்டி விற்பது வழக்கம். வட்டி, ஊதியம் ஆகிய இரண்டும் சிறிய அளவாக இருப்பின் இருபாலும் நலமாம் என்பதைச் சொல்லாமல் சொல்வது இலேசு. இல்: இல் = இல்லம். இல் + அகம் = இல்லகம் > இல்லம். ஓ.நோ: வானகம் > வானம். இல், இடப்பொருள் தரும் உருபுமாம். இல்லுக்கு உரியவன் இல்லவள், இல்லாள். இல்லதென் இல்லவள் மாண்பானால் (திருக்.53) என்பது வள்ளுவம். புறத்தே உண்டாகும் துன்பம் துயரம் போட்டி பொறமை வஞ்சம் சூது முதலியவைக்கு இடமில்லாமல் அமைந்தது இல் ஆகும். ஆங்கு அன்பு, அறம், பொறுமை, அருள், அமைதி முதலியவையே வீற்றிருக்க வேண்டும் என்பது சொற்குறிப்பாகும். இல் பின்னொட்டாக வரும், மனை இடப் பெயர்கள் வருமாறு: 01. அட்டில் 02. ஈனில் 03. ஊணில் 04. ஓய்வில் 05. ஓரில் 06. குச்சில் 07. குடில் 08. குற்றில் 09. கொட்டில் 10. கோயில் 11. சிற்றில் 12. துச்சில் 13. புக்கில் 14. பேரில் இல்பொருள் உவமை: இல் + பொருள் + உவமை = இல்பொருள் உவமை. இல்பொருள் = இல்லாத பொருள்; உலகியலில் காணுதற்கு இல்லாத ஒன்றனை உவமையாக்கிக் கூறுவது இல்பொருள் உவமை. வலியில் நிலைமையால் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று -திருக்.273 பொன்மலர் நாற்றம் உடைத்து -நீதிநெறி. 5 இல்லம்: இல்லம்:1 இல்லகம் > இல்லம். இரவுக் குறியே இல்லகத் துள்ளும் -தொல். 1077 பசிப்பிணி மருத்துவன் இல்லம் -புறம். 173 * இல்காண்க. இல்லம்:2 இல்லம் என்பதொரு மரம். இல்ல மரப் பெயர் (தொல். 313) இல்ல மரம் என்பது தேற்றா மரம். தேற்றாங் கொட்டை கலங்கல் நீரின் அழுக்கையும் மண்ணையும் போக்கித் தெளிய வைக்கும் . கலங்கலை இல்லாமல் ஆக்கலால் இல்லம் எனப் பெயர் பெற்றது. முல்லை இல்லமொடு மலர -அகம். 364 இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து நலம்பெற்றாள் -கலித். 142 பொருள்: தேற்றாவினுடைய விதையைக் கொண்டு கலந்தே மெல்லத் தேற்றக் கலங்கிய நீரில் சிதைவு தெளியுமாறு போலத் தன் சிதைவு தெளிந்து பழைய நலம் பெற்றாள் (உரை. நச்.) இல்லறம் : இல் + அறம் = இல்லறம். இல்லறம் = இல்லின் கண் இருந்து செய்யும் அறம்; இல் = இல்லம், வீடு இருவகை அறவாழ்க்கைகளுள், இயல்பானதும் பெரும் பான்மையானதும் உலக நடப்பிற்கு இன்றியமையாததும் துறவறத்திற்கும் இன்றியமையாததும் உலகிலுள்ள ஐம்புல இன்பமும் நுகர்வதும் முறைப்படி கடைப்பிடிக்கப்படின் வீடு பேற்றையும் தருவதும் நல்லறமென்று உயர்ந்தோரால் சிறப்பிக்கப் பெறுவதுமானது இல்லறம் (பாவாணர், திருக்குறள் மரபுரை இல்லறவியல்) அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை -திருக்.49 இல்லற மல்லது நல்லற மன்று -கொன். வேந். இல்லற வெள்ளை: வண்ணமும் வெண்பாவும் ஒன்பதாக இல்லறச் சீர்மை குறித்து இயம்புவது இல்லற வெள்ளையாம். கலைதரு வண்ணமும் வெள்ளையும் ஒன்பான் நிலைபெறப் புணர்ப்பினஃ தில்லற வெள்ளை -பன்னிரு.301 இனி,இல்லற வெள்ளை, வெண்கலிப்பா ஒன்றானும் சந்தவகை ஒன்பதினானும் வெண்பா ஒன்பதினானும் வரும் என்பாரும் உளர் என்பார் பன்னிரு பாட்டியலார்(301) * மங்கல வெள்ளை காண்க. இல்லாள்: இல் + ஆள் = இல்லாள், இல்லத்தில் ஓர் ஆளாக இருப்பதுடன் இல்லத்தை ஆளுரிமையும் உடையவள் இல்லாளாம். அகத்தாள் மனையாள் என்பனவும் இது. இல்லத்தின் வறுமை நோய் குறை ஆயவை இல்லாமல் ஆக்குபவளும் அவளாகவே இருத்தலின், இல்லதென் இல்லவள் மாண்பானால் எனப் பொய்யாமொழி விளக்கியது(53). இல்லி: உள்ளே உள்ள நீர்மப் பொருளை இல்லாமல் ஆக்குவது இல்லியாம் துளை. எ-டு: இல்லிக் குடம் (ஓட்டைக் குடம்) சிறிய துளை இருப்பினும் பெருங்குடநீரும் ஒழுகிப் போய்விடுதல் கண்கூடு. ஆசிரியர் கற்பிக்கும் பாடம் நூலில் கற்கும் செய்தி - ஆகியவற்றை மனத்துக் கொள்ளாமல் போகவிடுபவர் இல்லிக் குடம் போன்றவர் என்பது நன்னூல். அன்னம் ஆவே மண்ணொடு கிளியே இல்லிக் குடம்ஆடு எருமை நெய்யரி அன்னர் தலைஇடை கடைமாணாக்கர் -நன். 38 மிகச்சிறிய ஓட்டையை இல்லி என்பது நெல்லை வழக்கு. கண்ணுக்கு வெளிப்படலில்லாத் துளையைக் கருதியும் இவ்வாறு வழங்கப்பட்டிருக்கலாம். இல்லையோ என்னும் இடை என்பதை நிளைக்கலாம். இல்லுறை தெய்வம்: இல் + உறை + தெய்வம் = இல்லுறை தெய்வம். இல்லத்தின்கண் வாழ்ந்த + வாழ்கின்ற - தெய்வம் ஆகிய முன்னோர். கொடியிடையார், அகன்ற மனையிட மெங்கும் கதிரோன் மறைந்த மாலைக் காலத்தே அரும்பு புரி நெகிழ்ந்த முல்லையினது ஒளிமலரை நெல்லோடே தூவி இல்லுறை தெய்வத்தை வணங்கி மாணிக்க விளக்கை மைவிளக்கோடே எடுத்தனர் சிலம்பு. 9: 1-4, அடியார்க். இல்லுறை தெய்வ மன்னார் -சீவக. 1095 இல்லுறை கடவுள் என்பதும் இது. இல்லெலி: இல் + எலி = இல்லெலி = வீட்டெலி. வல்சி இன்மையின் வயின்வயின் மாறி. இல்லெலி மடிந்த தொல்சுவர் -புறம். 211 * எலி காண்க. இவர் (தல்): அவர் என்பார் சேய்மையர்; இவர் என்பார் அண்மையர்; ஆயினும் தன்னின் வேறாய் - அப்பாலாய் இருப்பவர் இவ்வகையால் இவர் என்பது விரிதல் - படர்தல் பொருள் தந்தது. இவர் என்பது பரந்த, படர்ந்த, அகன்ற, விரிந்த என்னும் பொருள்களைத் தந்தமை மேல்வருவனவற்றால் அறிக. இவர் அடுக்கம், இவர் அமை, இவர் இற்றி, இவர் ஈங்கை, இவர் எக்கர், இவர்க, இவர்தரும், இவர் திமில், இவர் திரை, இவர் துறுகல், இவர்ந்த, இவர்ந்து, இவர்பீர், இவர்பு, இவர்புற்றம், இவர்பொதியில், இவர்மணல், இவர்முல்லை, இவர்வேர், இவர்வேலி, இவரும் என்பவை பாட்டு, தொகைகளில் இடம் பெற்றவை. ( ச.இ.சொ.) இவ்வனைத்தும் படர்தல் பொருளவும் படர்தலால் உண்டாம் உயர்தல் பொருளவுமே உடையவையாம். இவறன்மை: இவறல் + தன்மை; ஈவு அறுதல் > ஈவறல் > இவறல். ஈயாத் தன்மையே இவறல் தன்மையாம். ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை -திருக். 1003 கருமித் தனம் என்பது மக்கள் வழக்கு. இவுளி: இவர்தல் = மேலெழுந்து - பாய்தல் - தாவுதல் உடைய குதிரை. இவரும் இயல்பினதாம் குதிரை இவுளி எனப்பட்டது. வளிநடத்தன்ன வாச்செலல் இவுளி -புறம். 197 வளி = காற்று; வாச்செலல் = தாவிச் செல்லல். காற்கடுப் பன்ன கடுஞ்செலல் இவுளி -அகம்.224 காற்கடுப்பு = காற்றின் விரைவு. இழத்தலும் இழிதலும்: இழத்தல் = ஒரு நிலையில் இருந்து அகலுதல்; அப்பாலாய் அகன்று விடுதல். இழிதல் = ஒரு நிலையில் இருந்து கீழே இறங்குதல்; நிலையில் சரிந்துஅல்லது தாழ்ந்து அதனைத் தழுவி இருப்பது. இவ்விரண்டையும் திருக்குறளில் காணலாம். ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை -திருக். 463 இழத்தொறூஉம் காதலிக்கும் சூது -திருக். 940 தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்த கடை -திருக். 964 இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் -திருக். 133 இழத்தலும் இழிதலும் பொருள் வகையில் இவ்வாறு வேறுபடுதல் தெளிவாகும். உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு -திருக். 788 என்னும் குறளில் வரும் இழத்தல் இழிதலாக இருக்க வேண்டும் எனக் கருதுவார் உளர். அதனை விரித்துவிளக்கியும்வருகின்றனர். உண்மை என்ன? உடுக்கை இழிந்தவன் என்றால் உடை நெகிழ்ந்தவன் என்பது பொருள். நெகிழுங்கால் கை தானாகவே போய் அணைக்கும் - அரவணக்கும் - அகலவிடாது கட்டும். இது நடைமுறைச் செய்தியே! ஆயின், அவ்விழிதலினும் இழிவானது இழக்கும் நிலை. தெருவிலோ - சாலையிலோ - கூட்டத்திடையிலோ ஒருவனை இழிவு படுத்துவதற்காக - மானக்கேட்டை ஆக்குவதற்காக - கட்டிய உடையைப் பறிக்கும் வன்கொடுமையில் தலைப்படுகின்றான் ஒருவன், தனித்தோ சேர்ந்தோ இருக்கும் இயல்பான சூழலில், தானே நெகிழும் உடையைப் போய் கை நெகிழ விடாமல் காக்கும் நிலைமை வேறு. ஒருவன் வலிந்து மானம் கெடுக்க உடையைப் பறிக்கும் நிலை வேறு. பாஞ்சாலியை இழிவு செய்ய மன்னர் அவைக்கு இழுத்துச் சென்று துகில் உரிந்த கடுவாய்த்தனம் போல்வது அது அந்நிலை ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு நேர்ந்தால் பறிப்பவன் கண்ணில் படாமல் தன்னுறுப்பைக் காக்க வேண்டிய மானவுணர்வு உயிரினும் விஞ்சியிருக்குமேயன்றோ! அப்போது மானம் கெடாமல் காக்க விரையுங் கை எத்தகு விரைவும் வலிவும் பொருந்தியதாக இருக்கும்? பறிப்பவன் உடையைத் தொடு முன்னேரே பறிப்பவன் கையைப் பறித்து வீழ்த்த முந்திய கை,தன் கூடாமையால் தன் உடையைத் தன் உடலில் இருந்து நீங்கவிடாமல் காக்க முடியாத கை என்ன செய்யும்? தன் மறையுறுப்பை மெய்ம்மறை யென - கவசமெனக் காக்குமே யன்றோ? அந்நிலையைச் சொல்வது இழத்தலேயாம் இழிதல் அன்றாம் ! இக்காட்டு வழி போயினான் கூறை கோட்பட்டான் என்பது ஒரு முதுமொழி. இலக்கணர் எடுத்துக்காட்டும் மொழி. இது உறுதிப்பாட்டை உரைக்க வந்த கால மயக்க மொழி. ஆங்குக் கோட்படுதல் - கொள்ளப்படுதல் - வழிப்பறியாளர்கள், உடைமையைப் பறிசெய்வதுடன் உடையைப் பறிசெய்வதையும் உரைப்பது அது. தானே இழியும் உடையினும் பிறரால் உடை இழக்க நேருங்கால் உண்டாம் உணர்வு வேகம் கருதின் இழத்தலின் இடப்பொருத்தம் இனிது விளக்கமாம் ஆதலால் உடுக்கை இழந்தவன் கை என்பதில் பாட வேறுபாடு காண வேண்டியதில்லை. அப்படிப் பாடம் சுவடிச் சான்றொடும் கூடியதும் இல்லை. புதிது காணின் பொருளொடு பொருத்தி வருவதும் இல்லை! இழவு: இழத்தல் = உயிரை இழத்தல் ; இழத்தல் , இழவாம், இளிவே இழவே அசைவே வறுமையென விளிவில் கொள்கை அழுகை நான்கே -தொல். 1199 இழவு சொல்லல், இழவு கேட்டல் என்பவை மக்கள் வழக்கு. இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டி கொடுத்தவை தாஎன் சொல்லினும் இன்னா தோநம் இன்னுயிர் இழப்பே -குறுந். 349 இழி: கையில் இருந்த அல்லது உரிமையாய் இருந்த ஒன்றை இழப்பது இழப்பு. உயிரோடு இருந்த ஒருவர் உயிர் பிரிதலும் (கூடு பிரிதலும்) உறைந்த வீடு பிரிதலும் இழவு. ஒரு நிலையில் இருந்து கீழே இறங்குதல் இழிவு. ஒருவர் உயர்வை இறங்கச் செய்வது இழிப்பு. பழிகூறுதல்,இழித்தல்,மலையில் இருந்து அல்லது உயரத்தில் இருந்து கீழே இறங்குதல் இழிதல். இழிவு செய்வது இழிமை; இழிமைப்படுத்துல். இழிவு: தாம் இருந்த நிலையில் இருந்து தாழ்தல் இழிவாம். இழிவு இளிவெனப் படுதல், முன்னை வழக்கு. தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை -திருக். 964 தொலைவாகி இரந்தோர்க்கொன் றீயாமை இளிவு இல்லென இரந்தோர்கென் றீயாமை இளிவு இடனின்றி இரந்தோர்க்கொன் றீயாமை இளிவு -கலி.2 இழுக்கு என்பது இது. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் -திருக்.133 * இழத்தலும் இழிதலும் காண்க. இழுக்கல் : இழுக்கல் : 1 ஊன்றிய காலை நிற்க விடாமல் இழுக்கும் வழுக்கு நிலம். இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல் -திருக். 415 * இழுக்கு நிலம் காண்க. இழுக்கல் : 2 கால் ஊன்றி நில்லாமை போல் சொன்ன சொல்லில் ஊன்றி நில்லாமையும் இழுக்கல் ஆகும். அஃது ஒழுக்கக் கேடாம். இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் -திருக். 135 இழிந்த பிறப்பு: ஆறறிவுக்குக் கீழாம் அறிவுப் பிறப்பு. இழுக்கல்:3 இழுக்கல் = குறித்த காலத்து வராமல் வழுவுதல். இழுகினான் ஆகாப்ப தில்லையே முன்னம் எழுதினான் ஓலை பழுது -பழ.160 ஆ = ஆறு இழுக்கல் : 4 இழுக்கல் = கேடு. நட்பு என்பது உறுதிப்பாட்டு உள்ளத்து வழியது. அந்நிலை தவறுதல் - இழுக்கல் - ஆகும் . நட்புச் சால்புடையார் நண்பரைப் பழித்துரைப்பார் உரைக்குச் செவி கொடார். கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின் -திருக். 808 இழுக்கு நிலம் : வழுக்கி இழுக்கும் நிலம் இழுக்கு நிலமாம். இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல் திருக். 415 நூழிலும் இழுக்கம் ஊழடி முட்டமும் -குறிஞ்சிப். 258 இழுது : இழுது :1 இழுது = வெண்ணெய். நெய் மத்தினை இழுத்துக் கடைதலால் கிடைப்பதால், வெண்ணெய் உருக்காகிய நெய் இழுது எனப்பட்டது. இருங்கட் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப -புறம். 65 இழுது :2 வெண்ணெய் போலும் நிணம். இழுதின் அன்ன வான்நிணக் கொழுங் குறை -புறம். 150 பொருள் : நெய் இழுது போன்ற வெள்ளிய நிணத்தை யுடைய கொழுவிய தடியை (ப.உ) இழுத்தல் : புகை, காற்று போன்றவற்றை உட்கொளல் இழுத்தல் எனப்படும். புகை பிடித்தலைப் புகையிழுத்தல் என்பதுண்டு. மூச்சு இழுத்தல் , மூச்சு இரைத்தல் என்பன வழக்கில் உள்ளன. இழுத்தல், உறிஞ்சுதல் என்னும் பொருளிலும் வரும். உறிஞ்சி இழுத்தல் என்பதும் வழக்கே. இழுபறி (இழுப்புப் பறிப்பு) இழுப்பு = உயிரைப் போகவிடாமல் போரட்டத் துடன் மூச்சை உள்ளிழுத்தல். பறிப்பு = உள்ளே போன மூச்சு தங்க மாட்டாமல் வெளியேறல். உயிர் ஊசலாடுகிறது என்னும் உவமைத் தொடர் இழுபறியை விளக்குவதாம். ஒரு தொல்லை போய் மறு தொல்லை, அதுபோய் வேறொரு தொல்லையென வாட்டமுறுவாரை இழுபறி என்பதும், ஒத்து வாழ்க்கை நடத்தமாட்டாத கணவன் மனைவியர் இழுபறிப் பிழைப்பு என்பதும் உண்டு. கயிறு இழுவைப் போட்டியில் இழுபறி உண்டல்லவோ! அதனை ஒப்பிட்டுப் பார்க்கலாம். காடு வா வா என்கிறது; வீடு போ போ என்கிறது என்னும் பழமொழி இழுபறியை நன்கு தெளிவிக்கும். தேர்தல் வேட்பாளர் வாக்குச் சீட்டு எண்ணிக்கை மாறி மாறி ஏறியும் இறங்கியும் வருமானால் இழுபறியில் இருக்கிறார் என்பது மக்களாட்சி வாக்கு. இழுமிச் சேவு : இழுமென் மொழியால் விழுமியது நுவலல் என்பது தொல்காப்பியம் (1494). இழும் என்பதற்கு இனிமை என்பது பொருள். இப்பொருளில் இனிப்புச் சேவை, இழுமிச் சேவு என வழங்குவது நெல்லைப் பகுதி வழக்காகும் தமக்கு இன்பம் தரும் மொழியைத் தம் + இமிழ் = தமிழ் என வழங்கியது எண்ணத் தக்கது. இதன் விரிவான விளக்கமாக அமைந்தது தமிழ் என்னும் பெயரிய நூலாகும். இழுவை: இழுவை : 1 இழு + வை = இழுவை. குறித்த பொழுதில் எதையும் செய்து முடியாமல் இழுத்துக் கடத்துதல் இழுவையாகும். அவன் பெரிய இழுவைக்காரன் அவனிடம் எந்த வேலையும் வாங்க முடியாது என்பது மக்கள் வழக்கு. இழுவை : 2 இழுவை = முட்செடி. முள்மரம். முள் பற்றி இழுக்கும் தன்மை யுடையது. ஆதலால் முள்மரம் இழுவை எனப்பட்டது. இழுவை :3 கிணற்றில் இருந்து நீர் இறைத்தல். இழுவை வடம், இழுவைக் கயிறு, இழுவைப் பெட்டி முதலியவை இறைவைப் பொருள்கள். இழுவை :4 இழுவைப் பொறி வேளாண்துறைப் பொறி; உழுவை பொறி இழுவைப் பொறி என்பவை அவை. இழை: இழை :1 நூல்; பஞ்சில் இருந்து நூலாக இழுக்கப் படுதலால், இழை எனப்பட்டது. பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாக -நன்.24 இழை :2 அணிகலம் ; பொன்னை உருக்கிக் கம்பி இழையாக்கிச் செய்யப்படுதலால் அணிகலம் இழை எனப்பட்டது. மறம்பாடிய பாடினி யும்மே ஏருடைய விழுக்கழஞ்சில் சீருடைய இழை பெற்றிசினே -புறம்.11 இழை :3 இழையை - அணியை - அணிந்தவள். முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் வாரிரும் கூந்தல் வயங்கிழை ஒழிய வாரேன் வாழிய நெஞ்சே -பட். 213 - 215 இழை : 4 நூல் இழை போல நீண்டமைந்த குடரை இழை என்பது மதுரையை அடுத்த திருமங்கல வட்டார வழக்கு. இடைவிடாது ஒழுகும் நெய் இழுது எனப்படுவது எண்ணத்தக்கது. விழுது என்பது வெண்ணெய். * விழுது காண்க. இழை : 5 அப்ப வகை. இழைசூழ் வட்டம் என்பது இலக்கிய ஆட்சி. இழைசூழ் வட்டம் பால்கலந் தவைபோல் - பெரும். 378 இழைதல்: இயல்புக்கு மாறாக இனிக்கப் பேசி மகிழ்தல். இழை = இழைக்கப்பட்ட அணிகலம் ; இழை = இனிய பாகு. இனிக்கப் பேசி இணைய ஒட்டிக் கொள்ளல் இழைதல் ஆயது. என்னவோ தெரியவில்லை; இழைகிற இழைவு புலப்படவில்லை என்பது மக்கள் வழக்கு. இழைபு : வனப்பு வகை எட்டனுள் ஒன்று. தடங்கல் இல்லாமல் நெய்யொழுக்குப் போல ஒழுகும் நடையது இழைபு ஆகும். ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்து ஓங்கிய மொழியான் ஆங்ஙனம் ஒழுகின் இழைபின் இலக்கணம் இயைந்த தாகும் -தொல். 1498 இழைப்புளி: இழைப்பு + உளி = இழைப்புளி. மரத்தை ஒழுங்குறுத்தி மெருகேற்றும் கருவி இழைப் புளியாம். இழைத்தல் கருவி உருளிக் கூடு எனப்படும். அதனுள் உள்ள இழைப்புளி மரத்தைச் சமனாக்கி மெருகேற்றுவது. உளி = உட்செல்வது. தச்சுக் கருவி இது. இழையாடுதல்: இழை + ஆடுதல் = இழையாடுதல் நல்ல புதிய துணிகளில் கூடச் சில சிறு பொத்தல்கள் இருப்பது உண்டு. விலைமானம் மிக்கதாய அத்துணியை அப்பொத்தல் இருந்தது புலப்படத் தெரியாமல் இழையாடுதல் உண்டு. அதே நூலில் அதே நிறத்தில் வேறுபாடு தெரியாமல் கையால் தைத்தலும் பொறியால் தைத்தலும் வழக்கம். அதனை இழையாடுதல் என்பர். இழைவாங்கி: இழை = நூலிழை. நூலிழையைத் தன் காதில் வாங்கித் தையற்பணிக்கு உதவும் ஊசியை இழைவாங்கி என்பது காரியாபட்டி வட்டார வழக்கு. இழை = இழுத்து ஆக்கப்படும் நூல். பஞ்சிதன் சொல்லா பனுவல் இழையாக என்பது நன்னூல் (24). இழை நக்கி நூல் நெருடும் என்பது திருள்ளுவ மாலை. இளகியம்: இளகியம்:1 இளகு + இயம் =இளகியம். இளக்கமாகச் செய்யப்பட்ட மருந்து. இளகியம், இலேகியமாக வழக்கில் உள்ளது. இளகியம்:2 விரைவில் இளகும் மாழை ஈயமாம். இதனை இளகியம் என்பர். இளக்காரம் எக்காரம்: இளக்காரம் = பிறரை மெலிதாக அல்லது இழிவாக மதித்தல். எக்காரம் = தன்னைப் பெருமையாகக் கருதிச் செருக்குதல். இளம் = மென்மை, மெலிதாக நினைத்தல். மென்மையான கை, இளக்கை - இடக்கை. இளம் இடம் ஆயது. எக்காரம் ஏக்காரம்; ஏக்கழுத்தம் என்பது எக்கழுத்தம் ஆயினாற்போல ஏக்காரம் எக்காரம் ஆயிற்றாம். ஏக்காரம் = இறுமாப்பு. உன் இளக்காரமும் எக்காரமும் எப்பொழுது ஒழியுமோ? என ஏக்கத்துடன் வசைமொழிவதுண்டு. இளங்கால்: இளங்கால்:1 இளமை + கால் = இளங்கால் ; மெல்லிய தென்றல் காற்று. இளங்கால் தூதன் -சிலப் .8 : 9 இளங்கால் :2 முதிர்ச்சியடையாத வெற்றிலைக் கொடிக்கால். இலைபறிக்க நாளாகும்; இளங்கால்தானே என்பது மக்கள் வழக்கு. இளங்குடி: இளங்குடி:1 இளங்குடி = இரண்டாம் மனைவி. இளங்குடியை இரண்டாம் தாரம் என்பது பொதுவழக்கு. இளைய குடியாள் என்பது வெளிப்படை. இளங்குடி:2 உரிய பொழுதுகளில் அல்லாமல் ஊடு ஊடு உண்ணல் பருகல் என்பவற்றை இளங்குடி என்பது குமரி மாவட்ட வழக்கு. இளங்கொடி: இளமையான கொடி என்னும் பொருளில் பொதுவழக்குச் சொல்லாகும். இது கன்றீன்ற மாட்டின் நச்சுக்கொடியை இளங்கொடி என்பது வட்டார வழக்குச் சொல்லாகும். இது தென்தமிழக வழக்கு. இளங்கோயில்: இளமை + கோயில் = இளங்கோயில். பழைய கோயில்களைப் புதுப்பிக்குங்கால், அக்கோயில் திருப்பணி நிறைவுறும் வரை, இறைவன் திருமேனியை வைத்து வழிபடுதற்கு ஆக்கப்பட்ட சிறிய கோயில் இளங்கோயிலாம். இளமை = சிறியது; இளங்கோயில் = சிறிய கோயில். திருச்சொகினூர் திருவேங்கடத்து எம்பெருமான் அடிகளுக்கு எழுந்தருளுவித்த திருவிளங் கோயில் பெருமாள் திருச்சானூர்க் கல்வெட்டு. (க.க.அ.மு) இளநீர்: இளமை +நீர் = இளநீர். குரும்பை நிலை நீங்கி முற்றல் நிலை ஆகாமல் இடைப்பட்ட தெங்கங்காய் நிலை இளநீர் ஆகும். நீரும் கெட்டியற்ற மெல்லியதாய், பருப்பும் இளையதாய் வழுக்கை நிலையில் இருப்பதே இளநீர் ஆகும். தெங்கின் இளநீர் உதிர்க்கும் -புறம். 29 தென்னை நல்கிய குளிரிள நீரும் -பாவே.மு. தொ. இளநீர்க் கட்டு: குழந்தைகட்கு வரும் ஒருவகை நோய். இளநீர் கட்டு என்பது குழந்தைகளுக்கு வரும் உள்நாக்கு, கன்னத் தடிப்பு. குளிர் பனியால் குழந்தையர் கழுத்து கன்னப்பகுதி வீங்குதலை இளநீர்க்கட்டு என்பது சிற்றூர் வழக்கு. அதற்குப் பற்றுப் போட்டு ஆற்றுவதும் அவர்கள் செய்முறை. இளநீர் வழுவை: இளமை + நீர் + வழுவை = இளநீர் வழுவை. இளநீருடன் அமைந்திருக்கும் வழுக்கை வழுவை எனவும் வழங்கும். திருமஞ்சனம் ஆடி அருள இளநீர் வழுவை - நாழி இளநீருக்கு நாலிள நீராக -க.க.அ.மு. இளந்தாரிக்கல்: இளமை + தாரி +கல் = இளந்தாரிக்கல். இளந்தாரி = இளையவன்; காளை. சிற்றூர், மந்தையில் அல்லது மன்றில் உருளையான கற்கள் மூன்று இருக்கும். அக்கற்கள் ஒன்றில் ஒன்று பெரியதாய் அமையும். மணமுடிக்க விரும்பும் இளந்தாரி அல்லது இளவட்டம் அக்கற்களை ஒவ்வொன்றாய் மார்பிலோ தோளிலோ படாமல் தலைக்கு மேல் தூக்கி எறிய வேண்டும் அவ்வாறு எறிந்து விட்டால் மணவாளத் தகுதி வந்ததாகக் கொள்வர். இதனை இளவட்டக்கல் மாப்பிள்ளைக் கல் என்றும் வழங்குவர். இளந்தேன்: இளமை + தேன் = இளந்தேன். இளந்தேன் = மழலை. இளந்தேன் மொழி. மழறுதேன் என்பதும் இது. (நாலா. 3466) இளமரக்கா: இளமையாக மரங்களே அமைந்த பூஞ்சோலை. கன்னியங் கடிநகர் காணவா வுடைய இளமரக் கா -பெருங். 3: 12: 55 -6 கன்னியங்கடிநகர் = கன்னிமாடம். இளமை: இளமை = மென்மை; இளந்தளிர், இளம்பிஞ்சு முதலியவை எளிதில் உதிர்தலும் உடைதலும் கண்கூடு. ஆதலால் இளமை மென்மை என்பது புலனாம். இளமை வேலை செய்வதற்கு உரிய பருவமன்று; கற்க உரிய பருவம் . ஆதலால், இளமையில் கல் இளமைக் கல்வி சிலையில் எழுத்து என்றும் சொல்லப்பட்டன. வளரும் வளமைக்கு இளமையே மூலமாம். இளமையின் இகந்தன்று மிலனே வளமையில் தன்னிலை தீர்ந்தன்று மிலனே -குறிஞ்சிப். 244 -5 இளமையிற் சிறந்த வளமையும் இல்லை -பழமொழி இளமையை விரும்பார் எவரும் இரார். சங்கநாளில் வாழ்ந்த அறிவர், அரசர் பெயர்களைக் காண்க. இளங்கண்டீரக்கோ, இளங்கீரந்தையார், இளங்கீரனார், இளங்குமணன், இளங்கோசர், இளஞ்சேரன், இளஞ்சேரல், இரும்பொறை, இளந்தத்தன், இளந்திரையனார்,இளந்தேவனார், இளநாகனார், இளம்பல் கோசர், இளம்பழையன் மாறன், இளம்பாலாசிரியன், இளம்புல்லூர்க் காவிதி, இளம்பூதனார், இளம்பெருஞ்சென்னி, இளம்பெருவழுதியார், இளம்போதியார், இளமாணாக்கன், இளவிச்சிக்கோ, இளவெயினனார், இளவெயினியார், இளவெளிமான், இளவேட்டனார் என்னும் பெயர்களே அறிய வாய்த்தவை. விடுபட்டவை எத்தனை எத்தனை பெயர்களோ? இளங்கோ வடிகள் முதலான பெயர்களின் பட்டியல் மிக நீண்டது. இளவேனில், இளநீர், இளம்பிள்ளை முதலான பெயர்கள் எண்ணப்படத் தக்கனதாமே! இளமையை இறைமையாகக் கண்டது தமிழகம். முருகு அது இளமுருகன். இளங்கண்ணன், இளவல், இளையர் என்பவை வெளிப்படச் சுட்டும் இளமைகள். இளவேனில்: வேனில் = கோடை வெயில் காலம். இளவேனில் அக்கோடை தோன்று முன்னைக் காலநிலை வெப்பமும் மிகாததாய் தட்பமும் வாட்டாததாய் இனிய தென்றல் தவழும் பருவம் இளவேனிலாம். காரே கூதிர் முன்பனி பின்பனி சீரிள வேனில் வேனில் என்றாங்கு இருமூன்று திறத்தது தெரிபெரும் பொழுதே -நம்பி. 11 என்று அறுவகைப் பருவம் கூறுவர். ஆவணி முதலாக இரண்டு இரண்டு மாதங்களாகக் கார் முதல் எண்ணுவர். இளிவரல்: இளி +வரல் = இளிவரல்; எண்வகை மெய்ப்பாடுகளுள் ஒன்று. இளப்பமாக எண்ணுதல் இளிவரல் ஆகும். மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு யாப்புற வந்த இளிவரல் நான்கே -தொல். 1200 இழிவரல் பின்வரவு; முன்வரவு இளிவரல். இளிவு என்பது அவ்வாறேயாம். இளிவென்னும் ஏதப்பாடு -திருக். 464 இளைப்பாறுதல்: இளைப்பு + ஆறுதல் = இளைப்பாறுதல். இளைப்பு = மூச்சு இரைப்பு. ஒருவர் அரசு அலுவலர். அவர்க்கு ஐம்பத்தெட்டு வயது ஆனால் ஓய்வு பெறுகிறார். அவர் நடுவண் அரசு அலுவலர் எனின் அறுபது வயது வரை பணியாற்றி ஓய்வு பெறுகிறார். ஓய்வு= வேலையில் இருந்து ஒழிவு. ஓய்வு பெறுதலை ஈழத்தமிழர் இளைப்பாறுதல் என வழங்குகின்றனர். களைத்துப் போன ஒருவர் சற்றே ஓய்வெடுப்பதை இளைப்பாறுதல் என்பது தமிழக வழக்கு. இளைப்பாறுதலைக் களையாறுதல் என்பது தஞ்சை வழக்கு. இளைப்பு = மூச்சு இரைப்பு. இறகு: இறங்கு > இறகு. உடற்பகுதியின் இறுதியில் இருந்து கீழே இறங்குவன இறகுகள் ஆகும். விலங்குகளுக்கு வால் போலவும், மாந்தர்க்கு முடி போலவும், பறவை இனங்களுக்கு அமைந்தது இறகு; சிறகில் இருந்து (இருபக்கங்களில் இருந்து) இறங்குபவை இறகு எனப்பட்டன. இருங்கழி துழைஇய ஈர்ம்புற நாரை இறகெறி திவலையில் பனிக்கும் பாக்கம் -நற். 127 ஏம இன்துணை தழீஇ இறகுளர்ந்து காமரு தும்பி காமரம் செப்பும் -சிறுபாண். 76-77 இறக்கப்படுகின்றனர்: இறக்கின்றனர், இறப்பு என்பவை உயிரிழப்பு வழியாக ஏற்பட்டவை. இறத்தல் = கடத்தல். உடலில் இருந்து உயிர் கடந்து செல்லல் இறப்பு ஆகும். சுவரின் நீண்டு செல்லும் வாரம், இறைவாரம் - இறவாரம் என வழங்குதலும், ஏட்டைக் கட்டி இறவாரத்தில் வை என்னும் பழமொழி உளதாதலும் அறியலாம். இறக்கின்றனர் என்பது இயல்பாக ஏற்பாடும் சாவு. ஆனால் இறக்கப்படுகின்றனர் என்பது சாகடிக்கப்பட்டனர் என்னும் பொருளில் ஈழத்தமிழில் வழங்குதல் நாட்டு நிலையை இயல்பாக வெளிப்படுத்தும் பட்டயமாக உள்ளது. சில சொற்கள் வரலாற்று ஆவணமாகும். அத்தகைய, மக்கள் ஆவண வரலாற்றுச் சொற்களுள் ஒன்று இறக்கப்படுகின்றனர் என்பது. இறக்கம்: இறக்கமாக அமைந்த சரிவு இறக்கம் எனப்படும். ஏற்ற இறக்கம் என்பது முரண் இணை. உண்ட உணவு எரித்துப் போதலால் செரிப்பு இறக்கம் எனப்படுதல் குமரி மாவட்ட நட்டாலை வழக்காகும். குடலில் இருந்து இறங்குதல் பொருளது அது. இறக்கான்: எலிவளைகள் பெரும்பாலும் நிலமட்டத்திற்குக் கீழாகவே இருக்கும். மேட்டிற்கு அல்லது நிலத்திற்கு அடியாக இறங்கலான இடத்தில் இருப்பதால் எலிவளைக்கு இறக்கான் என்னும் பெயரை வழங்குதல் கருங்கல் வட்டாரத்தில் உள்ளது. இறக்குதல்: மேல் இருந்து கீழ்வரச் செய்தல் இறக்குதலாகும். உமிழ்நீர் உட்கொள்வதை இறக்குதல் என்பர். இறக்கும் தறுவாயில், வாயில் பால்விட்டு இறங்குகிறதா ? இறங்கவில்லையா? என்று ஆய்வது வழக்கு. உனக்கு இது இறங்காது என்று எள்ளுவதும், மடக்கு என்று இறக்கு என்று மருந்துண்ணக் கட்டளையிடுவதும் காணும் நடைமுறைகள். இறக்கை: இறங்குதல் = உயரத்தில் இருந்து கீழ்வருதல். இறங்குவது, இறக்கை: இறகு என்பது அது. இறங்கு > இறகு. சிறகு என்பதை இறக்கை என்று வழங்குதல் அதன் கீழிறங்குதல் வழியதேயாம். சிறகின் ஒரு சினை அல்லது உறுப்பு இறகு ஆகும். மயில் இறகு என்பது ஓர் இறகையே குறிக்கும். இறங்குதுறை: இறங்குதுறை:1 இறங்கு + துறை = இறங்குதுறை. இறங்குதல் = உயரத்தில் இருந்து கீழே இழிதல். நீராடுவதற்காக ஆற்றில் இறங்குவதற்காக அமைக்கப்பட்ட துறை இறங்கு துறை. இறங்குதுறை:2 ஆடுமாடுகள் நீருண்ணுதற்கும் குளிப்பாட்டற்கும் என ஏரி குளங்களில் அமைக்கப்பட்ட அல்லது அமைந்த வழி. இறங்குதுறை:3 நாவாய்களிலிருந்து வரும் பொருள்களை இறக்கிக் கரைக்கு எடுத்து வருவதற்காக அமைக்கப்பட்ட துறை. இறடி: இறு + அடி = இறடி. இறடி = தினை. கொழுமையாக வளர்ந்த தினைக்கதிர் வளைந்து நீண்டு அப்பயிரின் அடி வரை தொங்குதலால் இறடி எனப்பட்டது. இறங்கு குரல் இறடி -பெருங். 1: 46: 104 குரல் = கதிர். இறந்தார்: இறந்தார் எனில் கடந்தார் என்பதே பொருள். வரை இறந்த, அளவிறந்த என்பவற்றில் உள்ள இறந்த என்பதற்குக் கடந்த என்னும் பொருள் உண்மை விளங்கும். உலகைக் கடந்து உடலில் இருந்து உயிர் பிரிந்து செல்லும் நிலையில் சிறந்தாராக மதிக்கப்பட்டார் ஆதலால் இறந்தார் என்பதற்குக் கடந்தார், இறப்புற்றார் என்பவற்றுடன் சிறந்தார் என்னும் பொருளும் உண்டாயிற்று. இம்முப்பொருள் வகையும் குறளினகத்துக் காணக் கூடியனவே. கடந்து - மறைஇறந்து (திருக். 1138); இறத்தல் - இறல் முறையான் (திருக். 885); சிறப்பு - இறந்தமைந்த சார்பு (திருக்.900) இறப்பு: இறப்பு - சாவு, மிகுந்த, கடந்த, சிறப்பு முதலாம் பொருளமைந்த சொல். * இறந்தார் காண்க. இறவு: இறவு = இறால்மீன். இறவு = வளைவு; இறை > இறா > இறவு. இறை = வளைவு. நெருப்பின் அன்ன செந்தலை அன்றில் இறவின் அன்ன கொடுவாய்ப் பெடையொடு -குறுந். 160 கொடுவாய் = வளைந்தவாய். வளைவு குறித்து வந்த பெயர் இறவு என்பதை அதன் முதுகும் விளக்கும். வாள் சுறவொத்தன -கம்ப. உயுத். 3459 இவ்வாள் சுருள்வாள். இருங்கழி முகந்த செங்கோல் அவ்வலை முடங்குபுற இறவோடு இனமீன் செறிக்கும் -அகம்.220 முடங்குபுறம் = வளைந்த முதுகு. இறுங்கு: பல்லின் ஒரு பெயர் எயிறு என்பது. அதன் அடிப்பகுதியாகிய ஈறும் எயிறு என வழங்கப்படும். கோட்டாறு வட்டாரத்தில் இறுங்கு என்பது பல்லின் ஈறு என்னும் பொருளில் வழங்குகிறது. இறுங்கு என்பது கருஞ்சோளத்தின் பெயராதல் பொதுவழக்கு இறுங்குச் சோளம் என்பது கருஞ்சோளம்; வெள்ளைச் சோளம், முத்துச் சோளம், செஞ்சோளம் என்பவற்றின் வண்ணவகை. இறங்குகுரல் இறடியொடு இறுங்கு -பெருங். 1: 46: 104 இறுதி: இறு > இறுதி. இறு = முடிவு, அழிவு, இறப்பு. யார்கண்ணும் இகந்துசெய்து இசைகெட்டான் இறுதிபோல் வேரொடு மரம் வெம்ப -கலித். 10 பொருள்: யாவரிடத்தும் உலக ஒழுக்கத்தைக் கடந்து தீங்குசெய்து பின்பு புகழில்லை யானவனுடைய முடிவு காலத்து அவன் கிளையே அன்றி அவனும் கெடுமாறு போல மரம் சினை(கிளை)யே யன்றி வேரோடே நின்று வெம்புமாறு (நச்.) இறுதிமுறி: ஒருவர் தம் வாழ்நாள் காலத்திற்குப் பின் தம் நிலபுலம் பங்குபாகம் வீடுமனை முதலியவை இன்னார் இன்னார்க்கு இவ்விவ்வாறு தரப்பெற வேண்டும் என்று தம் விருப்ப ஆவணமாய் எழுதி வைப்பது இறுதி முறியாகும். விருப்ப ஆவணம் என்னும் முறையில் இதுகால் பத்திரப் பதிவு செய்து உரியகாலம் வரை காப்பில் வைக்கப்பட்டு ஆவணம் எழுதியவர் விருப்பப்படி நடைப்படுத்தப் படுகிறது. ‘will’ என அது விளங்குகின்றது. எழுதி வைத்தவர் தாமே மாற்றி எழுதக் கருதினாலும் அதற்கும் இடம் தருவது விருப்ப ஆவணமாகும். * ஆவணம், உறுதி முறி காண்க. இறும்பு: இறும் > இறும்பு = குறுங்காடு; சிறுகாடு என்பது அது. இறும் = செறிவு, அடர்த்தி. கங்குல், துயில்மடிந் தன்ன தூங்கிருள் இறும்பு -புறம். 126 பொருள்: இராப் பொழுதுதான் ஓரிடத்தே உறங்குவது போன்ற செறிந்த இருளை யுடைய சிறுகாடு பழைய உரை. மாநிழற் பட்ட மரம்பயில் இறும்பின் ஞாயிறு தெறாஅ -மலை 271-2 தெறாஅ = சுடாது இறும்பூது: இறும் + பூது = இறும்பூது. இறும் = செறிவு; மிகுதி. பூது = பூதிப்பு, பூரிப்பு. மிகுந்த பூரிப்பு; புதிது கண்ட வியப்பின் வழி ஏற்படுவது இறும்பூது. கட்புலம் காண விட்புலம் போயது இறும்பூது -சிலப்.பதி.8-9 பகைவர் தேஎத் தாயினும் சினவா யாகுதல் இறும்பூதாற் பெரிதே -பதிற். 32 பொருள்: பகைவரிடத்தாயினும் நீ சினவாதொழிகின்ற பொறை எமக்குப் பெரிதும் வியப்பாக நின்றது பழைய உரை. இறை: இறை:1 தங்குதல் பொருளில் இறை ஆளப்பட்டுள்ளது. இறுத்தல் தங்குதல்; இறுத்தல் > இறை. ஈர்க்குழாத்தோ டிறைகூர்ந்த பேஎற் பகையென ஒன்றென்கோ -புறம்.139 பொருள்: ஈரினது திரளோடு தங்குதல் மிக்க பேனாகிய பகையை ஒரு பகை என்பேனோ? பழைய உரை. இறை:2 எங்கும் தங்கியிருக்கும் கடவுளும் இறை எனப்படும் இறைவன் என்பதும் அது. இறை இருங்குன்றத் தடியுறை இயைக -பரிபா.15 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் -திருக்.10 இறை:3 தன் ஆளுகை இடத்தெல்லாம் தங்கியிருக்கும் ஆள்வோனும் இறையாம் இறைவன் எனலும் அது. இறைகாக்கும் வையக மெல்லாம் -திருக். 547 கொடியன்எம் இறையெனக் கண்ணீர் பரப்பிக் குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக புறம். 72 இறை:4 இறைவானம் = மழை நனையா வகையில் தாழ அமைக்கப்பட்ட கூரை. இறப்பு (இறைப்பு) என்பதும் அது. இல் இறைச் செரீஇய ஞெலிகோல் போல -புறம்.315 ஞெலிகோல் = தீக்கடை கோல் இறை:5 இறை = வளைவு. சில்வளை சொரிந்த மெல்லிறை முன்கை -அகம்.19 இறைவரை நில்லா வளை -நற்.263 இறை:6 இறை = திறை. திருந்துவேல் அண்ணற்கு விருந்துஇறை சான்ம் என -மலைபடு. 319 இறை:7 சிறிது. இறையும் ஞானம் இலாத என்புன் கவி -கம்ப அவைய. இறை:8 கோடு (வரி) நேரிறை முன்கை வீங்கிள வளை -அகம் . 336. இறைசல்: மழைத்துளி வீட்டுள் வருவதை இறைசல் என்பது தென்னக வழக்கு. இறைவாரம் என்பது தாழ்வாரம் ஆகும். அது மழை நீர் உள்ளே வராமல் காப்பதாகும், ஏட்டைக் கட்டி இறைவாரத்தில் வை என்பது பழமொழி, தாழ்வாரத்தின் வளையில் பொருள்களைச் செருகி வைத்தல் வழியாக வந்தது. இறைசால்: இறைசால்:1 கமலை ஏற்றத்தில் நீர் நிறைக்கும் சால்; கூனை என்றும் ஆம்பி என்றும் கூறுவர். முன்னது மக்கள் வழக்கு. பின்னது இலக்கிய வழக்கு. ஆம்பியே அன்றி, ஆம்பியும் கிழாரும் வீங்கிசை ஏத்தமும் ஓங்குநீர்ப் பிழாவும் -சிலப். 10 : 110-111 என்பார் இளங்கோவடிகள். பொருள்: ஆம்பி = பத்தர்; கிழார் = பூட்டை; பிழா = இடா அ.ப.உ இறைசால் :2 அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலவரி இறைசால் எனப்பட்டது. இறுசால் என்பது மக்கள் வழக்கு. தீர்வை, தீர்வை ஆயம் என்பவை இந்நாள் வழக்கு. இறைச்சி: இறைச்சி : 1 ஒரு செய்யுளில் ஆளப்படும் சொல் தன் பொருளை உணர்த்துவதுடன் ஆங்குப் பயன்படுத்தப்பட்டுள்ள கருப் பொருளுக்கு அமைந்த பிறிதொரு பொருளையும் உணர்த்துவது இறைச்சியாம். இறைச்சியில் பிறக்கும் பொருளுமார் உளவே திறத்தியல் மருங்கில் தெரியு மோர்க்கே -தொல். 1176 இறைச்சி தானே பொருட்புறத் ததுவே -தொல். 1175 இறைச்சி :2 ஊட்டமும் ஊற்றமும் தங்கியிருப்பதாகக் கொள்ளப்படும் ஊன்; தசை. இறைச்சி இல்லாமல் இறங்கவில்லை என்பது மக்கள் வழக்கு. இறைச்சிக் குன்றாக்கி னானே -சீவக. 801 இறைதட்டு: இறை + தட்டு =இறைதட்டு இறைதட்டு =வரி செலுத்த இயலாமை யாண்டு ரு(5)-ஆவது பசானம் சாவியாய் இறைதட்டினமையின் (க.க.அ.மு) இறைத்தல்: தெளித்தல், பொழிதல் கொட்டுதல் ஆகிய பொருளில் வரும் இறைத்தல் என்னும் சொல், உட்செலுத்துதல் பொருளிலும் வரும். வீணையர் இன்னிசை செவிதொறும் இறைப்ப- உபதேச. சிவபுண். 318 என்பது அது. இறை நல்கல்: இறை = தம்மோடு தங்க - உறையச் - செய்தல். நல்கல் = கொடை வழங்கல். தம்மோடு தங்கச் செய்து அவர் விரும்புவ கொடுத்து விடுத்தல். விருந்திறை நல்கும் நாடன் எங்கோன் கழல்தொடி ஆஅய் அண்டிரன் -புறம்374 விருந்திறை நல்கியோன்.............. கரும்பிவண் தந்தோன் பெரும்பிறங் கடையே -புறம். 392 இறைபட்டறை : கால்வாய் ஏரி ஆகியவற்றின் நீர் வாய்ப்பு இன்றிக் கேணி நீரால் பாய்ச்சப்படுவதைச் செங்கற்பட்டு வட்டாரத்தார் இறைபட்டறை என்கின்றனர். மற்றைத் தென்னகப் பகுதியில் இறைவை எனப்படுவது கமலை ஆகும். கேணியில் இறைப்பது இறைபெட்டி எனப்படுகிறது. இறைமாட்சி மாலை : வெண்கலிப்பாவால் அரசன் வெற்றிச் சிறப்புகளை யெல்லாம் உரைப்பது இறைமாட்சிமாலை (இராசாங்கமாலை) என்பதாம். வெண்கலியா லேவிருதுண் டானவெல்லா மேயுரைத்தல் மண்ணுலகில் ராசாங்க மாலையாம் -பிர.திர.19 இறைமை: இறைமை : 1 ஆட்சிக்கு அடிப்படை வரி, வரி என்பது இறை எனப்பட்டது. இறுப்பது செலுத்துவது, இறுசால் என இன்றும் நிலவரி செலுத்தப்படுதல் அறிக. வரி வாங்குதல், வரி தண்டுதல்; வரி தண்டுவோர், தண்டலர்; தண்டலர் தலைவர் தண்டல் நாயகர்; மாவட்ட ஆட்சியாளர்க்குப் பின்னாளில் தண்டல் நாயகர் என்னும் பெயரீடு வந்ததே வரி வாங்குதலால்தான். தடி தூக்கியவன் எல்லாம் தண்டல்காரன் என்னும் பழமொழி வரி தண்டுதலை உரைக்கும். எங்கும் தங்கும் ஒளியுடைய வேந்தனாகிய இறைவர்க்குச் செலுத்தும் வரி இறை எனப்பட்டது. இறையாவது இறுத்தல்; செலுத்துதல். எழுத்தறிவித்தவன் இறைவன் எனப் பாராட்டப் பட்டமை போல் குடி காவல், நாடு காவல், அறங்காவல் கொண்டவனும் இறைவன் என மதிக்கப்பட்டான். முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் -திருக். 388 என்னும் இறைமாட்சிக் குறள் எழுந்தது. இறைமை:2 இறைமை என்பது ஆட்சியுரிமை என்னும் பொருளில் ஈழ வழக்கில் உள்ளது. கடல், வான்வழி இறைமைக்குப் புலிகள் உரிமை கோர முடியாது என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்தது என்பது ஈழச் செய்தித்தாள் குறிப்பு. இறைமை உரிமை: ஓர் அரசு தன் நாட்டுக் குடியுரிமையர் எவர்க்கும் பொதுமையாக - காவல் கடனாக- வழங்கியாக வேண்டி, பறிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டிய கட்டாய உரிமை இறைமை உரிமையாகும். அவ்வுரிமை வழங்காத நாடு, இறைமை உரிமை நாடாகாது. ஈழத்து நாளிதழ்களில் இறைமை உரிமை நாள்வழிச் சொல்லாகக் காணப் படுகின்றது. மேடைகளில் பேசப் படுகின்றது. அவ்வுரிமை இருக்கும் நாட்டினும் இல்லா தொதுக்கும் நாட்டில்தானே அச்சொல்லின் துடிப்பு வெளிப் படும். இறையாண்மை (sovernity) என்பதும் இது. இறையனார்: கொங்குதேர் வாழ்க்கைஎன்பதோர் பாட்டு எவரும் கேட்டது. அது குறுந்தொகைப் பாட்டு என்பதால் அறியப்பட்ட அளவினும் தருமி கதைக்கு மூலமான பாட்டு என்னும் திருவிளையாடல் திரைப்படத்தால் தெரு விளையாட்டாளரும் தெரிந்து கொண்ட பாட்டாயிற்று. கொங்குதேர் வாழ்க்கைப் பாடலைப் பாடியவர் பெயர் இறையனார் என்பதே! அவர் இறைவனாராக எப்படி ஆனார்? இறையனார் இறைவனார் என்னும் பெயர்களில் உள்ள வேறுபாட்டை அறியாதவர் இணைத்த இணைப்பாக இஃது இருக்க வேண்டும். அல்லது வேண்டுமென்றே இறைமைப் படுத்த எண்ணியவர் முனைப்பாக இருக்க வேண்டும்! இவற்றுள் பின்னதே கொள்ளத்தக்கதாம். ஏனெனில் இவ்விணைப்பைப் படைத்தவர்கள் புலமை இல்லார் அல்லரே! அறிவுப் புலத்தில் தலைப்பட்டவர் என்னத் தக்கவர் ஆவரே! இறையனார் பெயர், கொங்குதேர் வாழ்க்கைப் பாடலுக்கு மட்டும்தானா இறைவனாருடன் திரிக்கப்பட்டது? இல்லை. இறையனார் அகப்பொருள் என்றும். இறையனார் களவியல் என்றும் வழங்கப்பட்டு வரும் நூலுக்கும் இறைவனோடு தொடர்பு உண்டாக்கி, அதற்கேற்பப் புனைவுகளும் புகுத்தி வைக்கப்பட்டன! இறையனை, இறைவனாக எத்துணைப் புனைந்தும் பெயர்கள் மட்டும் இறையனாகவே நின்று விட்டமையே, மெய்ந்நிலை காட்ட வாய்ப்பாயிற்றாம். இறையன் என்பதும் இறைவன் என்பதும் ஒரு பொருள் தரும் சொற்களா? எங்கேனும் இறையனை இறைவன் என்றும் இறைவனை இறையன் என்றும் போலி முறையாகவேனும் காண்பது உண்டா? இல்லாமலும் கட்டும் ஒட்டும் இதுகாறும் விட்ட பாடில்லையே! குறுந்தொகை முதற்பதிப்பு சௌரிப் பெருமாள் அரங்கனார் பதிப்பு. அது 1915இல் வெளிப்பட்டது. கொங்கு தேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடலின் தலைப்பில் இறையனார் பாடியது எனப் பொறித்துள்ளார். பாடினோர் பெயர்ப் பட்டியலில் இறையனார் எனப் பெயரிட்டதுடன் அடைப்புக்குறிக்குள் கூடன் மேவிய ஆடன் மேவினார் எனவும் பதித்தார், மேலும் அதில். இறையனார் தருமிக்கு இயற்றித் தந்தது. இறையனார் ஆலவாயடிகள் என்று விளக்கமும். திருவிளையாடற் கதையும் செறிக்கப்பட்டன. பாடலிலோ. அதன் திணை துறை அமைப்புகளிலோ திருவிளையாடல் செய்திக்கு இடமுண்டா? இது இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த வழித் தலைமகளை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடு பட்டு நின்ற தலைமகள் நாணின் நீக்குதற் பொருட்டு மெய்தொட்டுப் பயிறல் முதலாயின அவள்மாட்டு நிகழ்த்திப் பாடு மாற்றாற் கூடிய தனது அன்பு தோற்ற நலம் பாராட்டல் என்பது பாடல் துறைக் குறிப்பு, இக்குறிப்பு பழம் புலவர் ஒருவரால் குறிக்கப்பட்டது. பாடலுக்கு உரிய உரை விளக்கம் காண்பதற்கு ஒளிச் சுடராக இருப்பது இது. இதில். தருமி இல்லை; இறைவனும் இல்லை; இயற்கைப் புணர்ச்சியும். தலைவனும் நலம் பாராட்டலுமே உள! இவ்வாறாகப் பழ மரபில் வழுவி வளர்த்துப் போக நேர்வானேன் என ஐயம் கிளைத்தல் இயற்கை, நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக் கிழி தருமிக் கருளினோன் காண் என்பது அப்பரடிகள் வாக்கு. அதனைக் கொண்டும் பிற புனைவுகளைக் கொண்டும் திருவிளையாடலில் தருமிக்குப் பொற்கிழி யளித்த திருவிளையாடல் கிளர்ந்தது. இப்பின்னை நூல்கள் பின்னுவதை முன்னை நூலில் முடிபோட்டு விட்டனர். அதற்கு வாய்ப்பாக இருந்தது பெயரிலமைந்த ஓரெழுத்தல்லாப் பிற எழுத்துகளின் பொருத்தம், அரங்கனார் பதிப்பில் மட்டும்தானா இக்கதை இணைப்பு? 1937இல் வெளிப்பட்ட முனைவர் உ.வே.சாமிநாதர் பதிப்பு. 1946இல் வெளிப்பட்ட பெரும் பேராசிரியர் இரா. இராகவர் பதிப்பு. 1985இல் வெளியிட்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்பு ஆகிய எல்லாவற்றிலும் இறையனார் பெயர் உண்டு இறைவனார் திருவிளையாடலும் உண்டு. அகப்பாட்டுக்குச் சில தனி ஒழுங்குகள் உண்டு. அவற்றுள் தலையாவது. மக்கள் நுதலிய அகனைந் திணையும் சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅ! - தொல். அகத். 54 என்பது. அகப்பாடலில் தலைவன் தலைவி எனப்பெயர் ஆளப்படுதல் அன்றி. அவர் பெயர் இன்னதென ஆளப்பெறுதல் வழக்கில்லையாம். இந்நுட்பமும் நாகரிகமும் பண்பாடும் வியந்து வியந்து போற்றத் தக்க விழுப்பமுடையவை யாம். ஆதலால், குறிப்பாகத் தலைவன் தலைவியர் பெயர் உரைத்தலும், சார்த்தி யுரைத்தலும் ஆகிய முறைகளை அறவே கடிந்து, அறமுறை நிலை பெறுத்தி வந்தனர். இப்பெயர்ச் சுட்டு நூற்பாவும், அதன் தொடர்பான ஆய்வுகளும் மிக விரிவுடையவாகலின் இவ்வளவில் அமைவாம். கொங்கு தேர் வாழ்க்கை எனத் தொடங்கும் குறுந் தொகைப் பாடல் குறிஞ்சித் திணை சார்ந்தது. நலம் புனைந் துரைத்தல் துறையது. ஆக அகத்திணையில் தலைப்பட்ட பாடலில் குறிப்பாகவேனும் பாண்டியனும், அவன்தன் துணை பற்றிய கூந்தலாய்வும் இடம் பெறுத்த எண்ணார். இடம் பெறுத்த எண்ணின், குறுந்தொகை நானூற்றில் ஒன்றாக இப்பாடலை எண்ணவும் எண்ணார்! ஆகலின் பின்னைப் புனைவை முன்னை நூலுக்கு ஏற்றியுரைத்தல் முறைகேடாம். சங்கச் சான்றோருள் ஒருவர் நல்லிறையனார் என்பார். அவர் பாடிய பாடல் புறம். 393. அவர் பெயரை நல்லிறைவனாகக் காட்டாமல் அப்படியே அமைய எப்படியோ விட்டு விட்டமை, இவ்வாய்வுக்கு இனிய வாய்ப்பாயிற்று. அவர் பாடிய பாட்டுக்கு ஏற்பப் புனைகதை ஒன்று புகாமையும். நல் என்னும் அடையொன்று, முன்னின்று தடையொன்று செய்தமையால். அப்பாடல் பாடாண்திணைக் கடைநிலைப் புறப்பாடலாய்ச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பாடியது ஆகலானும் திரிப்புக்கு இடமின்றி உய்ந்ததாம்! குறுந்தொகை 394ஆம் பாடலை இயற்றியவர் குறி யிறையனார் எனப்படுகிறார். அவர் தம் பாட்டில் இளஞ்சிறார் களைக் குறிக்குங்கால், குறியிறைப் புதல்வர்என்கிறார். இத்தொடர் நயமுணர்ந்த சான்றோர். பெயரறியா அப்புலவர் தமக்கொரு பெயர் சூட்டு விழா நிகழ்த்தி நிலை பெறுத்தினர்! குறியிறையாராகவே இன்றும் காட்சி வழங்குகின்றார். இனி இறையன், இறைவன் என்னும் பெயர்களைக் கருதுவோம்! இறைவன் என்னும் சொல் தொல்காப்பியத்தால் அரசன் என்னும் பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. இறைவன் வீழ்ந்தென (தொல். புறத். 17) என்பது அது. திருக்குறளில் அச்சொல் ஈரிடங்களில் கடவுளையும் (5,10) மூன்றிடங்களில் அரசனையும் (690, 733, 778) குறித்து வந்துள்ளது. ஆக இறைவன் என்பது ஆளும். அரசனையும் ஆண்டவனையும் குறித்து வருவது புலப்படும். ஆண்டவன் என்பது ஆண்ட (ஆட்சி செய்த) அரசனையும், இறைவனையும் குறித்தல் இயல்பு நடைமுறையே! ஆண்டை என்பதும் அடிமை என்பதும் இன்றும் ஒழிந்தனவோ? ஆண்டவனும் ஆள்பவனும் இறைவன் எனப்பட்டனரே யன்றி. இறையன் எனப் பெற்றனர் அல்லர் என்பது இவற்றால் தெளிவாம். இனி, இறையவன் இறையோன் எனச் சங்கநூல் சார்ந்த சிலம்பு மேகலைகளில் இடம்பெற்றுள அவை. இளம்பிறை சூடிய இறையவன் - சிலப். 28:87 நுதல் விழி நாட்டத் திறையோன் -சிலப். 9:30 இறையோன் கூறும் - சிலப். 15:162 இறையோன் கேட்டு - சிலப். 27:142 இறையோன் செவ்வி -சிலப். 27:148 இறையோன் செவி -சிலப் 28:188 நுதல்விழி நாட்டத் திறையோன் - மணிமே 1:154 என்பன. துணையன், துணைவன் என்பவற்றில் யகர லகர வேறுபாடு மட்டும்தானே! ஆனால் எவனும் ஒருவர்க்குத் துணையன் ஆகலாம்! ஆனாலும், எவனும் ஒருவர்க்குத் துணைவன் ஆக முடியுமா? இவ்வாறே, துறையன் துறைவன் நிறையன் நிறைவன் தலையன் தலைவன் என்பவற்றையும், கணயன் கணவன் கலயன் கலவன் புலயன் புலவன் என்பவற்றையும் எண்ணின் எத்தகு பொருள் வேறுபாடு? ஓர் எழுத்துத் திரிபு வருதலே பொருள் திரிபு குறிப்பதற்காகத் தானே! இறையனுக்கும் இறைவனுக்கும் உள்ள பெயர்ப் பொருள் வேறுபாடு என்ன? இறைவன் என்பது இயற்பெயர். இறைவன் என்பது பொறுப்பால் அல்லது நிலையால் அமைந்த பெயர். இறையன் என்பது சிறப்புப் பெயர். அதாவது ஒருவருக்கே உரிய பெயர். இறைவன் என்பது பொதுப்பெயர். அதாவது அரசராவார் எவர்க்கும், ஆண்டவராகக் கருதப்படுவார் எவர்க்கும் உரிய பொதுப் பெயர். இறையன் என்பது, தனித்து நின்று இன்னார் எனத் தெரிவிக்கும் பெயர். இறைவன் என்பது, முன்னடை, பின்னடை, செய்தி ஆகியவை கொண்டு இன்னார் எனத் தெரிவிக்கும் பெயர். இறையன் என்பது பெயர் வழிப்பட்ட பெயர். இறைவன் என்பது வினைவழிப்பட்ட பெயர். இறை கூர்தல் (எங்கும் தங்குதல்) உடையான் எவனும் இறைவனே! இறை தண்டுவான் என்னும் இறைவனே! இப்பொதுக் கரணியம் கருதாத தனித்தன்மை கருதிய கரணியப் பெயர் இறையனாம். ஆயின், இறையன் என்னும் பெயர்க்குப் பொருள் என்ன என்னும் வினா எழுதல், இயற்கையாம் இறை என்பது உயர்வு என்னும் தன்மைப் பொருளது. ஏந்து கொடி இறைப்புரிசை என்பது புறப்பாட்டு (17) பகைவர் எடுத்த கொடியை உடைய உயர்ந்த மதில்என்பது இதன் பழைய வுரை. இறையர் என்பதற்கு உயர்ந்தவர் உயர் புகழாளர் என்பது பொருளாம். திருவள்ளுவ மாலையில் அசரீரி நாமகள் பாடல்களை அடுத்து, உக்கிரப் பெருவழுதியார் முதலிய புலவர்களின் பாடல்களுக்குத் தலைமைப் பாடலாக இறையனார் பாடல் உண்மை இதனைத் தெளிவிக்கும். அவர் புலவர் தலைவராக இருந்தவர் என்பதையும் தெளிவிக்கும். இறையிலி நிலம்: இறை இலி நிலம் = வரிஇல்லாத நிலம். ஊர் நத்தமும் ஸ்ரீ கோயில்களும், குளங்களும், ஊடறுத்துப் போன வாய்க்கால்களும் பறைச்சேரியும் கம்மாளச் சேரியும் சுடுகாடும் உள்ளீட்டு இறையிலி நிலங்களும்தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டு - க.க.அ.மு. இறைவன்: இறைவன் : 1 இறை + வ் + அன் = இறைவன். இறை = தங்குதல்; எங்கும் தங்கியிருப்பவன், அரசன். அரசன் ஆணை அவன் ஆள் நிலமெல்லாம் தங்கி யிருத்தலால் அவன் இறைவன் எனப்பட்டான். நல்லிறைவன் பொருள் காக்கும் தொல்லிசைத் தொழின் மாக்கள் - பட்.120-121 இறைவன் தாட்குத வாதே - புறம். 18 இறைவன் : 2 ஊராள் தலைவனும் இறைவன் எனப்பட்டான். தொண்டி, அஃதெம் ஊரே அவனெம் இறைவன் - புறம். 48 இறைவன்:3 உலகத் தலைவனாம் கடவுளும் இறைவன் எனப் பட்டான். இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - திருக்.5 இற்பழி: இல் + பழி = இற்பழி. இல் = குடும்பம், குடி; குடும்பத்துக்கு உண்டாம் பழிப்பு. வினையினேன் வந்த இற்பழி யுண்டது - கம்ப. ஆரண். 948 தகைசான்ற சொற்காத்தல் இல்லத்தோர் கடனாம். இற்பழி அனைத்து நலனும் கெடுக்கும். இற்பிறப்பு: இல் + பிறப்பு = இற்பிறப்பு. நற்குடிப் பிறப்பு என்பதே இற்பிறப்பாம். இற்பிறப் பென்ப தொன்றும் இரும்பொறை என்ப தொன்றும் கற்பெனும் பெயர தொன்றும் களிநடம் புரியக் கண்டேன்- கம்ப. சுந். 1312 இற்பெருங்கிழமை: இல் + பெருமை + கிழமை = இற்பெருங்கிழமை யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையில் - சிலப். 2: 89 பொருள்: இல்லறத்தை நடத்தும் பெரிய உரிமைப்பாடு (உரை. ந.மு.வே.) அருளுடைமை, அன்புடைமை, இனியவை கூறல் முதலிய இல்லறப் பகுதி எல்லாம் அடங்கும்(அடியார்க்.) இற்றுப்போதல்: இறுத்து > இற்று. தைத்து போதல் ஒ.நோ. அறுந்து > அற்று ஒரு கயிறு நலிந்தும் புரி கழன்றும் துண்டிப்பாகும் நிலையை அடைந்தால், இற்றுப் போயிற்று, இற்றுப் போகும் என்பது வழக்கு. இற்றை: இன்று + ஐ = இன்றை > இற்றை. இற்றை நாள் = இன்றை நாள்; இற்றைப் பொழுது - இப்பொழுது ஈரிதழ்த் தாரோய் இற்றை நாளால் - பெருங். 1:47:11 இற்றைப் போர்ப் பெருஞ் சீற்றம் என்னோடு முடிந்திடுக- கம்ப. கந். 318 இனம்: இனம் = கூட்டம், சுற்றம். இன் + அம் = இனம். இனிமை செய்தலை யுடையவர் இனமாம். இனிமை செய்வார் உற்றார் உறவினர் மட்டுமல்லர்; அன்பர் நண்பர் ஆய எவரும் இனிமை செய்வாராகலாம். அவரெல்லாம் இனமே. இனம், சிற்றினம் சேராமை, பெரியாரைத் துணைக்கோடல் என்னும் அதிகாரப் பொதுமை அறியத் தக்கது. திருக். 46, 45 (அதி). மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனம்தூய்மை தூவா வரும் - திருக். 455 தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில் - திருக். 446 இனம் கனம்: இனம் = உற்றார் உறவினராகிய சுற்றப் பெருக்கம். கனம் = வீடு நிலம் பணம் முதலாய பொருட் பெருக்கம். இனம் கனம் இருந்தால் மதிப்பிருக்கும் மடியில் கனமில்லை; வழியில் பயமில்லைஎன்னும் பழமொழிகளில் கனம் பொருள் என்னும் பொருளாதல் விளங்கும். கனவான் என்பதறிக. இனம் இனத்தோடு வெள்ளாடு தன்னோடு என்பதில் இன விளக்கம் இருப்பது அறிக. இனி: இன் + இ = இனி. இனி = இப்பொழுது. இனிமேல் = இப்பொழுதுக்கு மேல் வரும் பொழுது. இனியே, தொடிமாண் சுற்றமும் எம்மும் உள்ளான் - அகம். 17 இனி நினைந்திரக்கம் ஆகின்று - புறம். 243 இந்தப் பொழுது இனிய பொழுதேஎன்று நினைத்து வாழ்க என இச்சொல் ஏவுவது போலும்! இனிப்பு: இனிப்பு : 1 இன் > இனி > இனிப்பு. இனிப்பான பண்டம். இனிப்பு நாவல். இனிப்பு மாதுளை. இனிப்பு : 2 இனிப்பு = இனிப்பான நிகழ்வு. இனிப்பு என்ன இருக்கிறது? என்ன இனிப்பு? ஏதாவது சிறப்பா? வேறு ஒன்றும் இல்லை பையன் தேர்வில் முதல்நிலையில் வென்றிருக்கிறான். பிள்ளைக்குப் பிறந்த நாள். அதுதான் இனிப்பு இனிப்பு : 3 இனிப்பு = வெற்றி போனது என்ன இனிப்பா புளிப்பா? காயா பழமா என்பதும் இது. இனிமம்: இனிப்பான உணவு இனிமம் எனத்தக்கது. ஆனால் இனிமை கருதாமல் கோயிலில் தரப்படும் தளிகையை இனிமம் என்பது கோட் டாறு வழக்கமாகும். இன்பம் செய்வது என்னும் பொருளது அது. இனைதல்: இன் + நைதல் = இன்னைதல் > இனைதல் இன்பம் இல்லாமல் போய் வருந்துதல். வர வேண்டிய நலப்பாடு வாராது அஃது இன்மையால் வருந்துதல். குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே - புறம். 143 குழலினும் இனைகுவள் பெரிதே - ஐங். 306 தனியவர் இடும்பைகண் டினைதியோ எம்போல இனியசெய் தகன்றாரை உடையை யோநீ - கலித். 129 இன்சொல்: இனிமை + சொல் = இன்சொல். இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது -திருக். 99 இன்சொல் இலக்கணம். இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக். 91 இன்ப மடல்: * மடல் காண்க. இன்பம் : இன்பம்: 1 இன் > இன்பு > இன்பம், இனிமையானது எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும் - தொல். 1169 குறியா இன்பம் எளிதில் நின்மலைப் பல்வேறு விலங்கும் எய்தும் - அகம்.2 இன்பம்:2 முப்பொருளுள் ஒன்று. இன்பமும் பொருளும் அறமும் என்றாங்கு - தொல். 1038 இன்பு என்பதும் இது. இன்புளி: புளிப்பே மிக்க புளியும் உண்டு, புளிப்பொடு இனிப்பும் உடைய புளியும் உண்டு. அப்புளியைப் பிழிந்து பாகு செய்தால் சிறிதளவே இனிப்புச் சேர்த்தாலும் பெரிதளவு இனிக்கும். இன்புளிப்பாகுஎன்பது அது. ஈயல் பெய்து அட்ட இன்புளி வெஞ்சோறு - அகம். 394 வெஞ்சோறு = விரும்பத்தக்க சோறு. இன்மை: இன்மை = இல்லாமை இன்பம் இல்லாமைக்கு அடிப்படையாம். இன்மை. பொருள் இன்மை, வறுமை. இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது - திருக். 1041 பொருள்: ஒருவனுக்கு வறுமை போல இன்னாதது எது என்று வினவின், வறுமை போல இன்னாதது வறுமையே பிறிதில்லை இன்னாதது துன்பம் செய்வது, ஒப்பது இல்லை. எனவே மிக்கது இன்மை சொல்ல வேண்டாதாயிற்று (பரிமே.). கையது கடன்நிறை யாழே மெய்யது புரவலர் இன்மையில் பசியே - புறம். 69 நின் கையகத்தது, இலக்கண முறைமை நிரம்பிய யாழ்; உடம்பின் கண்ணது, ஈத்தளிப்போர் இல்லாமையால் பசிபழைய உரை. இன்றியமையாமை: இன்றி + அமையாமை = இன்றியமையாமை. இல்லாமல் முடியாதது; கட்டாயம் இருந்தே ஆக வேண்டியது. யாப்புற இன்றியமையா தியைபவை எல்லாம் - தொல். 1604 இன்றி யமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல் - திருக். 961 இன்றி யமையா இருமுது மக்களும் - பழ. நா. 303 இன்று: இன்று :1 இல்லை என்னும் பொருளது. உப்பின்று புற்கை உண்கமா கொற்கை யோனே - நன். 172 மயிலை. நிலையின்று ஆகும் ஐஎன் உயிரே - தொல். 285 இன்று:2 நிகழ்கின்ற நாளை இன்று என்கிறோம். அன்று, அற்றை என்றும் இன்று, இற்றை என்றும் பாரி மகளிரால் புறநானூற்றில் பாடு புகழ் பெற்றன. இன்று என்பதற்கு வேறு பொருள் இல்லையா? உண்டு! இல்லை என்பது அது. இன்று வாழும் வாழ்வே வாழ்வென எண்ணாதே! நாளையும் நாளையும் நிலை பெற வாழத் தக்க நல்லாக்கச் செயல்களைச் செய் என ஏவும் ஏவல் சொல்லே இன்று என்பதாம். இன்று என்று எண்ணி. நாளை வாழ வாழ்க! இப்படியெல்லாம் எண்ணியா இச்சொற்களைப் படைத்தார்கள்? ஆம்! இதனினும் ஆழமாக எண்ணாமல் படைத்திருப்பார் என்று நினைப்பதே பிழையில்லையா? நுண்மாண் நுழைபுலத்து ஆழங்கால் பட்டவர் அவராம். நேற்று இன்று நாளை என்னும் மூன்றுள் முந்திய நொடி கடந்து போனது; நாளை என்பது அடுத்த நொடி அவ்வாறானால் இன்று என்பது இந்நொடி. ஆதலால் இன்று என்பது இல்லையாயிற்று. இன்று செலினும் தருமே -புறம். 171 கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன் இன்றுநம் ஆனுள் வருவனேல் அவன்வாயில் கொன்றையம் தீங்குழல் கேளாமோ தோழி - சிலப். 17:19 இன்றைக்கு இருப்பாரை நாளை இருப்பரென எண்ணவோ இடமில்லை - தாயு. திரட். இன்றைக்கு இன்றை என்பவும் இது. இன்று போகலாம், இன்றைக்குப் போகலாம்என்பவை மக்கள் வழக்கு. இன்னணம்: இன்னணம்: 1 இவ்வாறு. ஈங்கிவள் இன்னணமாக - மணிமே. 8:1 இன்னணம்:2 இன் + அணம் = இன்னணம். இன்னபடி, இன்னவாறு, அண்ணுதல் = பொருந்துதல் அஞ்சல் எழுதி இறுதியில் ஒப்பமிடுவார். இப்படிக்கு என எழுதிக் கையொப்பமிடுவர். அதற்கு ஒப்ப. இன்னணம் இங்ஙனம் என்பனவும் வழக்கில் உள்ளன. இன்னர்: இன்னவர் > இன்னர். இன்னர் = இத்தகையர். அவன் இன்னர் இனியர் என்பதறிந்து பேச மாட்டான். பட்டுப்பட்டும் பாழாகப் போகிறான்உலகவழக்கு. இன்னரை நன்னர்ப் பெற்றேம் நாம் - பெருங் 3:19. 213-214 இன்னல்: இன்னல் : 1 இன் = இனிமை. இன்சொல் இன்சொல் இனிதீன்றல் குறள். இன்உரை - இன்னுரை யாவர்க்குமாம் இன்னுரை தானே திருமந். 109 இன்உயிர் - இன்னுயிர் இன்னுயிர் தந்தெமை ஈன்றவர் இன் சுவை - இன்சுவைப் பாகு. இன்சீர் - இன்சீர் இயைய வருவதாயின் - தொல். 1287 இன் + அல் = இன்னல் = இனிமை யற்றது. இன்னல் இன்னாமையே - தொல். 787 இன்னா அருஞ்சுரம் நீந்தி நீயே என்னை இன்னற் படுத்தனை - அகம். 212 இன்னல் : 2 இனிமையற்றது எனத்தோன்றும் எண்ணம், சொல், செயல், காட்சி, கலை, தொழில், தொண்டு என்பவை எல்லாமும் இன்னலேயாம். உயிரிகளின் பிறவி நோக்கு துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமுமே யாதலால் இன்னலை வரு முன்னரேயே எண்ணி எண்ணி வதைதல் உறுதியிலா நெஞ்சிற்கு உண்டாயிற்று. இன்னலைக் கண்டு வாழ்வே வெறுத்துப் போதலும் கண்கூடு ஆயிற்று. இன்னலற்ற முழுதுறு இன்பம் உண்டா உண்டா எனத் தேடித் தேடி நாளெல்லாம் உழல்வதாயிற்று. அதற்கு அமைதியாக வீடு பேறு நிலைத்த இன்பம் எனப் புனைவுகள் பலப்பல உண்டாயின. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என அமைதியும் எழுந்தது. இன்னாது: இன்+ ஆ + து = இன்னாது. இனிமை இல்லாதது. இன்னாது இனனில்ஊர் வாழ்தல்; அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு - திருக். 1158 இன்னாமை: இன் + ஆ + மை = இன்னாமை. இனிமை இல்லாமை, துன்பம். இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன் ஒன்னார் விழையும் சிறப்பு - திருக். 630 இன்னார்: இன்னார்:1 இன் + ஆர் = இன்னார். இன்னவர், இத்தன்மையர், இம்முறைப் பட்டவர். உதயணன் ஓலை.. மானனீகை காண்க - பெருங். 4:13:63-65 கோசலத் தரசன் ஓலை மங்கை வாசவத் தத்தை காண்க - பெருங். 4:14, 117-118 இன்னார் ஓலை இன்னார் காண்க என்றல் உ.வே.சா. பெருங். பக். 970 இன்னார்: 2 இன் + ஆ + ஆர் = இன்னார். ஆ = எதிர்மறை. இனிமை யற்றவர்: பகைவர், இன்னாதார் என்பவரும் இவர். இன்னார் இனியர் என்னாது எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே - புறம். 163 இன்னிசை இன்னிசை:1 இனிமை + இசை = இன்னிசை. இன் = இனிமை. இன்சொல் = இனியசொல். பொருட்பொலிவும் இனிய ஓசையும் கருதிப் புலவன் இது தகுமென அமைத்துப் பாடும் பாவகை இன்னிசை என்பதாம். இவ்வகையில் இன்னிசைச் சிந்தியல், இன்னிசை மாலை, இன்னிசை வெண்பா முதலியவை. இன்னிசை:2 இனிய இசை, இனிய இசைப்பாடல், இன்னிசைக் கருவி, இனிய புகழ். இன்னிசை முரசம் - பெருங். 5:9:63 இன்னிசை வீணை - பெருங். 1:38:197 இன்னிசைக் கிளவி இறைமகன் இசைத்தலின் - பெருங். 3:22:86 இன்னிசைத் தொகை: இன்னிசை வெண்பா எழுபதேனும் தொண்ணூறேனும் தொடுத்துப் பாடின் அஃது இன்னிசைத் தொகை எனப்பெறும். தொகை = தொகுக்கப்பட்டது. தொண்னூ றேனும் எழுப தேனும் இன்னிசை தொடுப்பின் இன்னிசைத் தொகையே - பன்னிரு. 288 இனிதின் ஓசை மேம்பா டுடைமையின் இன்னிசை என்பர் தொன்னெறிப் புலவர் - பன்னிரு. குறிப்பு பக். 42 இன்னினி: இன் + இனி = இன்னினி. இப்பொழுதுக்கு இப்பொழுதே இந்நொடிக்கு இந்நொடியே. இன்னினியே செய்க அறவினை இன்னினியே நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேளலறச் சென்றான் எனப்படுத லான் - நாலடி. 29 இன்னே என்பதும் இது ஒன்றே செய்யவும் வேண்டும்; ஒன்றும் நன்றே செய்யவும் வேண்டும்; நன்றும் இன்றே செய்யவும் வேண்டும்; இன்றும் இன்னே செய்யவும் வேண்டும் - கபி. அக.  `ஈ வரிசைச் சொற்கள் ஈ : ஈ - தமிழ் நெடுங்கணக்கின் இரண்டாம் நெடில். அ, ஆ, இ, என்பவை போலவே எழுதப்பட்டு இகரத்தின் மேல் நெடிற்குறியாக மேல் வளையம் பெற்றது. ஆ கீழ் வளையம் பெற்றது போன்றது. இவ்வளையம் நெடில் இகர அடையாளமாக இருந்ததால் கீ, சீ, தீ, நீ, பீ, மீ, என்பவை போல அமைந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ஈகாரம், இகரத்தின் மேல் வளைவு பெற்றமை வள்ளலார், என்றி ஆல்பிரட் கிருட்டிண பிள்ளை ஆயோர் எழுத்துகளால் அறிய வருகின்றன. ஈ = இயற்கை ஒலி; அவ்வொலியால் பெயர் பெற்ற பறக்கை உயிரி ஈயாம். இது > ஈது; இங்கு > ஈங்கு ; இங்கனம் > ஈங்கனம் என இகரம் ஈகாரமாகியும் பொருள் மாறா நிலை கொண்டது. குறில் முன்னதா நெடில் முன்னதா எனின் தோற்றிய முறையில் நெடிலே முன்னதாம். ஏனெனில். நெடிலே பொருள் தரும் ஓரெழுத்து ஒருமொழி. ஆதலால், அந்நெடில் தோற்றமே முதல் தோற்றமாய்ப் பின்னர் மொழிவளம், விரிவாக்கம் ஆயவை கருதிக் குறில்கள் தோற்றமுற்றனவாம். அவ்வகையில் நெடிலின் குறுக்க வடிவே குறில் என்க. ஈயெனப் பல்லைக் காட்டாதே என்பது மக்கள் வழக்கு. ஈதா கொடுவெனக் கிளக்கும் மூன்றும் இரவின் கிளவி ஆகிடன் உடைத்தே -தொல். 927 அவற்றுள். ஈஎன் கிளவி இழிந்தோன் கூற்றே - தொல். 928 இரவின் கிளவி = இரத்தல் சொல். கொடுப்போனிலும் பெறுவோன் இழிந்தோன் எனின் எனக்கு இதனை ஈ என்பான், ஈ என்பது ஈக என்பதாம். ஈ என்பானுக்கு வழங்குதல் ஈதல். ஈகை. ஈத்தல். ஈப்பு எனப்பல வடிவச் சொற்கள் ஆயின. ஈ வழியே ஈன், ஈனல், ஈன்றாள், ஈன்றோர் என விரிவுற்றது. தன் உடலையும் உயிரையும் பொது நலத்திற்கு வழங்கும் பெருந்தகைமை ஈகம் எனப்பட்டது. கொடையாளர் ஈவார் எனவும், கொடைப் பொருளாம் பொன் ஈகை எனவும் பெயர் கொண்டன. பொருட்கொடையினும் உயர்கொடை, புலமைக்கொடை அக்கொடையை வழங்குபவர் ஆகிய ஆசிரியர் ஈவோன் எனப்படுவார், அவர் தன்மை ஈவோன் தன்மையாம், அவர்தரும் கல்விக்கொடை ஈதல் இயற்கை எனப்படும், ஈதலைப் பெறுவான் ஏற்பான் ஆதல் போலக் கல்வியைப் பெறும் மாணவனும் ஏற்போன் என்றும் அவன் கேட்டல் தன்மை ஏற்போன் தன்மை எனவும் படும். இவை நன்னூல் ஆட்சிகள் (36,40) தொல்காப்பியப் பாயிர முகப்பு, நன்னூல் பாயிரப் பகுதியும் இவற்றை விரித்துரைக்கும். ஈயின் தேன் சேர்ப்பு ஈட்டுதல் ஆயிற்று. ஈட்டி வைத்த அல்ல, தேடி வைத்த தேன் தேட்டு ஆயிற்று. ஈட்டிய தேட்டுத் தானே ஈகைப் பொருள் ஆகும். ஈயார் தேட்டைத் தீயார் கொள்வார் என்னும் இரட்டுறல் ஈயார் கொடையாம், ஈஆகிய உயிரியார் தேடிவைத்த தேட்டாம் தேனைத் தீப்பந்தம் உடையவர் அத்தீயால் ஈயை ஒட்டித் தேனைக் கொள்வர் என்பதும், ஈயும் தன்மை இல்லாத கருமியார் தேடி வைத்த செல்வத்தைத் தீயவர்கள் கொள்ளை, களவு, திருட்டு எனக் கொள்வர் என்பதும் அவ்விரட்டுறல் பொருள். கமலத்தை நாடும் ஈ ஒன்று; முதற்குறைக் கமலத்தை (மலத்தை) நாடும் ஈ மற்றொன்று. பின்னது மாந்தர்க்கு நோய்ப் பரப்பியாகி விடுகின்றது. உண்ணும் உணவு, பருகும் நீர் முதலியவற்றில் நச்சுயிரிகளையும் அழுக்கையும் சேர்த்து விடுவதால் காடிக் கஞ்சியானாலும் மூடிக்குடிஎன்றனர். இவ் ஈக்களை நெருங்காமல் ஓட்ட ஒரு கருவி அல்லது பொறி செய்து முன்னவர் பயன்படுத்தியுள்ளனர். அதற்கு ஈச்சோப்பி என்பது பெயர். ஈச்சோப்பி = ஈப்பீணி, ஈயோட்டிஎன்பது யாழ்ப்பாண அகராதி. சிலர் கடையில் வாணிகம் நடைபெறாது. ஆனால் ஈ மொய்த்தல் குறையாது. ஆதலால் வணிகர் ஈயை ஓட்டுதலே வேலையாகக் கொண்டிருப்பார், அவர் கடையில் வாணிகம் நிகழவில்லை என்பதை ஈயோட்டுகிறார்என்று உள் நகைப்பார் உளர். ஈ சிற்றுயிரி, அதன் சிறகும் சிறிது, காலும் சிறிது ஆதலால், ஈச்சிறகு அன்ன சிற்றளவுக் கொடையையும், ஈக்கால் அன்ன வரியையும் இலக்கியங்கள் பதிவு செய்தன. ஈச்சிறகு அன்னதோர் தோல்அறினும் - நாலடி.41 ஈக்கால் போன்ற வரி, வயிரத்தில் இருத்தல் வயிரக் குற்றங்களுள் ஒன்று என்பது தட்டார் வழக்கு. தட்டார் என்பார் பொற்கொல்லர். சிற்றுயிரியாம் ஈயின் ஒலிக்கொடை வழியே எத்தனை சொல் தேட்டுகளை நம் முந்தையர் படைத்துக் கொண்டனர் என்பது வியப்பினும் வியப்பாம். ஈகம்: பொன்னையும் பொருளையும் அன்றித் தன்னையும் கொடுப்பது ஈகமாம் (தியாகம்), எ-டு: என்பும் உரியர் பிறர்க்கு -திருக், 72 ஈகை: ஈகை:1 ஈகை = இல்லை என்னு இரந்து வந்தவர்க்குத் தாமும் இல்லை என்று கூறாமல் கொடுத்து அவர்வறுமையும் துயரும் அகற்றுதல். ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து) ஊதியம் இல்லை உயிர்க்கு - திருக். 231 இழையணி நெடுந்தேர் களிறொ டென்றும் மழைசுரந் தன்ன ஈகை. . . நள்ளி - அகம். 238 ஈகை:2 ஈகை = மேகம். ஈ எனக் கேட்பார்க்கு இல்லை யெனாமல் ஈவது ஈகையாம். கேளாமலும் ஈயும் சிறப்பும் உண்டு என்பதால் ஈகை என்பதற்கு முகில் (மேகம்) என்னும் பொருளும் உண்டாயிற்று. கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரி - திருக். 211 ஈகை:3 ஈகை = பொன். ஏற்பவர் என்பெறினும் பெறுவர் எனினும், பொன் பெறுதல் சிறப்பு நோக்கி ஈகைக்குப் பொன் என்னும் பொருளும் உண்டாயிற்று. ஈகைவான் கொடியன்னாள் - சிலப். 1:1:24 ஈகை அரிய இழை: இழை = அணிகலம்; இழைக்கப்பட்டதால் இழை எனப்பட்டது. இழையை அணிந்தவர் ஆயிழை, சேயிழை என்பன போல் அழைக்கப்பட்டனர். இரப்பார்க்கு ஈய இயலா அணி, ஈகை அரிய இழையாம். அதுமங்கல அணியாகிய தாலியாம். ஈகை அரிய இழையணி மகளிரொடு சாயின் றென்ப ஆஅய் கோயில் - புறம். 127 பொருள்: கொடுத்தற்கரிய மங்கலிய சூத்திரத்தை அணிந்த மகளிர்பழைய உரை ஈக்குடி: ஈ + குடி = ஈக்குடி. நெல் கதிர் பால்பிடிக்கும் பருவத்தில் ஈ அப் பாலைக் குடித்து விடுதலால் மணியின்றிச் சாவியாகிப் போகும் கதிர் ஈக்குடி எனப்படும். ஈக்குடி நோயின் பெயரும் ஆயிற்று. ஈங்கம்: ஈங்கம் = சந்தனம். நறுமணம் வழங்கும் தன்மையால் ஈங்கம் எனப் பெற்றதாகலாம். (மலை) ஈங்கனம்: இங்கு > ஈங்கு. ஈங்கனம் = இங்ஙனம், இவ்வாறு. ஈங்கனம் கனையிருள் எல்லை எய்தினான் - சீகை.1942 ஈங்கை ஈர்ங்கை > ஈங்கை. தன்முள்ளால் பற்றிக் கொண்டு கிழிக்க வல்ல கொடி; ஈர்தல் = கிழித்தல் ஈங்கு இண்டு என்பனவும் அது. ஈங்கை மலை என்பது ஈங்கோய் மலையாம். ஈங்கை இறை நிலையை விளித்தது. ஈங்கோயே(நூல்: ஈங்கோய் எழுபது) ஈசன் : ஈயன் > ஈசன். ஈயன் = ஈபவன், படி வழங்குபவன் ஈயன், யகரம் சகரமாதல் மொழி இயல். x.neh.: நேயன் > நேசன்; நேயம் > நேசம்; இலவயம் > இலவசம். ஈந்து சுரப்பவன் ஈச்சுரன் எனப்பட்டான். அவன் திருக்கோயில் ஈச்சுரம் ஆயது. முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே - முருகு. வெண்.7 ஈசு: மானம் என்னும் பொருளில் ஈசு என்பது எழுமலை வட்டாரத்தில் வழங்குகின்றது. ஈசுரன், ஈச்சுரன், ஈசுவரி என்பவை பெருமைக்குரிய இறைவன் இறைவியரைக் குறிப்பது கருதலாம். மானம் என்பது பெருமை என்னும் பொருளில் வருதல் அறிந்ததே. ஈசை: ஈசை = ஏர், கலப்பை ஈயும் இறைமையாக எண்ணி ஏரைத் தொழுத வேளாண்மையர் தம் உளம் ததும்பிய நன்றியுணர்வால் ஈசை எனப் பெயர் சூட்டினர். ஈதல் இசைபட வாழ்தற்கு அடிமூலமாக இருக்கும் ஏரும் கலப்பையும் ஈசை யெனப் பெயர் பெற்ற இசைமை எண்ண எண்ண இனிப்பதாம். ஈச்சம் : ஈர்ந்து > ஈந்து > ஈச்சு > ஈச்சம் > ஈச்சை = குறுந்தூறு வகையுள் ஒன்று; புல்லினம். ஈர்க்கும் அரம் போன்ற மடல் உடைய பாலை நிலக் குறுந்தூறு அது. ஈர்ந்து பேரீந்து என்பவை இயல்பான ஈந்தில் பெரியது; பாலை நிலத்துப் பயிர்; அதன் பயனே ஈச்சம் பழம், பேரீச்சம் பழம் ஆகும். பழநாளில் ஓர் ஊரின் பெயர் ஈர்ந்தூர்; ஆங்கிருந்த வேளாண் வள்ளல், ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் என்பான். சோணாட்டு எரிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனாரால் பாடுபுகழ் பெற்றவன் அவன். தமிழகத்தில் கள்ளி, கற்றாழை போல ஈர்ந்துதவும் புறம்போக்கு நிலப் பயிராக உள்ளமை இன்றும் காணலாம். ஈச்ச நத்தம், ஈச்சம் பட்டி, ஈஞ்சார் நடுவப்பட்டி என்பவை ஊர்ப்பெயர்கள். ஈச்சி: ஓயாமல் ஈயென ஒலிவர ஒலித்துத் திரியும் பறக்கும் உயிரியை ஈ என்பது நாடு தழுவிய வழக்கு. அதனை ஈச்சி என்பது குமரி மாவட்ட வழக்கு. அச்சி இச்சி அத்தி இத்தி என்பவை பெயரீறுகளாக இருக்கும் வழக்குத் தழுவியது ஈச்சி என்பது. ஈ(இ)ச்சி = ஈச்சி. ஈச்சோப்பி: நோய்க்கு இடம் தரேல்என்பதற்கு முன் அறிந்து கொள்ள வேண்டியது. ஈக்கு இடம் தரேல் என்பது ஈ நெருங்காமல் இருப்பதற்கு ஒரு பொறி வைத்திருந்தனர். அதன் பெயர் ஈச்சோப்பி, ஈச்சு = ஈ, ஓப்பி = ஓட்டி ஈயோட்டி என்பதும் அது. * ஈ காண்க. ஈஞ்சு: ஈந்து, ஈச்சு, ஈஞ்சு, ஈச்சை என்னும் பல வடிவங்களில் வழங்கும். இக்குறுந்தூறாகச் செறிந்து அடர் மடலாய் வளர்ந்து அணுக முடியா முள்தாங்கி இருப்பதால் ஈர்ந்து ஈந்து ஆகி ஈஞ்சு முதலிய வடிவுகளைப் பெற்றது. * ஈச்சம் காண்க. ஈஞ்சை: குத்திக் குடைச்சலெடுக்கும் கொடுஞ்சொற்களைக் கேட்டுத் துடித்தவர், தன் துடிப்பை யெல்லாம் ஒன்றாக்கி அக்கொடுஞ் சொல்லுக்கு இட்டபெயர் ஈஞ்சை என்பது. ஈஞ்சை = இகழ்ச்சி, கொலை, நிந்தை என்பது அகராதிப் பொருள் (வெ.வி.பே.) இழிஞ்சை > ஈஞ்சை என்க. ஈடணம்: ஈடு + அணம் = ஈடணம். அண்ணம் > அணம், அணம் = அண்ணுதல் நெருங்குதல், செறிதல், அடைதல். ஈடணம் = புகழ், ஈட்டிச் செறிதலால் புகழ் ஈடணம் எனப்பட்டது. புகழ் எவரை அடையும்? புகழத்தக்க செயல். எண்ணம், சொல் உடையாரையே அடையும். புகழ், தேடிப் போய் அடையும் பொருள் அன்று. அது, தேடி வந்து தானே புகும் பொருள். ஆதலால், புகழ்பட வாழாதார் தம் நோவார் என்றது திருக்குறள் (228) ஈடன் : ஈட்டு > ஈடு + அன் = ஈடன், பொருள் புகழ் வலிமை திறமை ஆயவற்றை ஈட்டியவன், (த.சொ.அ.) ஈடிகை: ஒருவர் தாம் எண்ணும் எண்ணத்தைக் கட்டுரை, கதை, உரை, பா எனப்பதிவு செய்து உலகுக்கு வழங்குதல் ஈடிலாக் கொடையாகும். இக்கொடையை வழங்கக் கருவியாக இருந்தது பழங்கால ஆணி, ஊசி எனப்பட்ட எழுத்தாணி. இக்காலத்தில் எழுதுகோல்கள், எழுதுகோலை ஈடிகை என்பது அரிய வழக்காம். அகர முதலிகளில் இடம் பெற்ற சொல்லும் பொருளும் இஃதாம். (வெ.வி.த.பே.) ஈடிணை: ஈடு = உயர்வு. இணை = ஒப்பு. உயர்வாகவாவது ஒப்பாகவாவது சொல்ல முடியாத ஒன்றை ஈடிணை இல்லாதது என்பர். சதைப் பிடிப்பு உடையவனை ஈடு பிடித்திருக்கிறான் என்பதையும், தேடி வைத்திருப்பவனை ஈட்டி வைத்திருக்கிறான் என்பதையும் நினைக. ஈட்டின் பேரில் கடன் கொடுப்பவர், தாம் கொடுக்கும் பொருளுக்கும் மிகப் பெறுமானமுடைய பொருளை ஈடாகப் பெற்றுக் கொள்வதையும் எண்ணுக. இணை ஒப்பாதல் இணையடி, இணைப்புறா, இணை மாலை இணைச்செயலர் என்பவற்றால் கொள்க. ஈடு: ஈடு : 1 இடு > ஈடு. ஒரு பொருளுக்கு ஒப்பாக ஒரு பொருளை இடுவது ஈடு எனப்படும். தங்கம் வெள்ளியைத் தந்து ஈடாகப் பணம் பெறுவதும், நிலபுலம் வீடு ஆயவற்றை ஈடு வைத்துப் பணம் பெறுவதும் பெருந்தொழிலாகவே நிகழ்கின்றது. ஆலைப் பொருள்கள், பொத்தகங்கள் ஆயவற்றைக் காப்பீட்டுக் கழகம். வைப்பகம் ஆயவற்றில் பிணை வைத்துப் பணம் வாங்குவதும் வழக்கமாகிவிட்டது. ஈடு : 2 பாடல்களுக்கு ஈடாக - ஒப்பாக - அமைந்த உரை, நூலுக்கு ஒத்த ஈடாகவே கொள்ளப்பட்டது. நூலாசிரியர்க்கு ஈடாக உரையாசிரியர் புலமை மதிக்கப்பட்ட பெருமையால் நாலாயிரப் பனுவல் உரைகள் ஈடு எனப்பட்டன. ஈடு :3 ஒருவர் ஈதல் ஊழியாலும் ஈட்டி வைத்த பண்பு அறிவுகளாலும் பிறரினும் மேலோங்கி நிற்றல் ஈடு இணை என்றும். ஈடு இணையற்றவர், ஈடு இணை இல்லாதவர் என்றும் ஈடு சோடு இல்லாதவர் என்றும் வழங்கப்படும். இவை புகழ் மதிப்பீடுகளாம். ஈடு :4 உடற்கனம், நல்லுணவு, உண்ணல், கவலையிலா வாழ்வு இவற்றால் உடல் பருத்தல் இயற்கை. தசை ஈட்டப்பட்டதால் ஈடு எனப்பட்டது. முன்னைக்கு இப்பொழுது ஈடு வைத்துள்ளார் என்பர். ஈடு :5 ஈடு இணைஎன்பது இணை மொழி. ஈடும் எடுப்பும் என்பதும், ஈடும் சோடும்என்பதும் இணை மொழிகளே. ஈடு : 6 தேனீ சேர்த்து வைத்த தேன் தட்டு. ஈடு :7 இட்டவி வேக வைக்கும் குழித்தட்டு. எத்தனை ஈடு எடுக்க வேண்டும்?என்பது மக்கள் வழக்கு. ஈடு கட்டல்: வாங்கிய ஒன்றற்கு இணையாகச் செலுத்துதல். அவர்க்கு ஈடு கட்டி விட்டேன். கவலை விட்டது(ம.வ.) ஈடு கொடுத்தல்: ஒப்பாகக் கொடுத்தல்; ஒப்பாக எதிரிட்டு நிற்றல், முன்னது ஈடுகட்டல் போல்வது பின்னது தன்னினும் வலியவனுக்கு, இணையாக, விளையாடல், உரையாடல், போராடல் முதலிய வற்றில் குறையாது ஒப்ப நிற்றல். அவர்க்கு ஈடு கொடுப்பது என்ன எளியதா? ஆனால், திறமையாக ஈடு கொடுத்தாய்!”(ம.வ.) ஈடு சோடு: ஈடு = உயர்வு என்னும் பொருளதாதலும் அதன் விளக்கமும் ஈடு இணை என்பதில் காண்க. சோடு = சுவடு; சுவடாவது ஒப்பு. சுவடிப் பிள்ளைகள், சுவடிக் காளைகள், சுவடிப்பு என்பவற்றில் ஒப்புப் பொருள் உண்மை அறிக. ஒரு முறியை எடுத்து, அதற்கு ஒப்பாக இன்னொரு முறியை எடுத்து இணை சேர்ப்பதையே சுவடி சேர்ப்பது என்பதையும், அதுவே சுவடியாயிற்று என்பதையும் கருதுக. இணைக்கால்களும் தடமும் சுவடு எனப்படுவதையும் கொள்க. ஈடுபாடு: ஈடுபடுதல் > ஈடுபாடு. எந்தத் தொழிலை எடுத்தாலும் ஆர்வத்தோடு முனைப்பாக ஈடுபட்டால்தான் வெற்றி பெற முடியும். போட்டி உலகில் ஈடுபாடு காட்டாமல் வெற்றி பெற முடியாதே! அவனுக்கு எதிலும் ஈடுபாடு இல்லை! பரம்பரைச் சொத்தை விற்றுத்தான் செலவிடுகிறான். (ம.வ.) ஈடெடுப்பு: ஈடு என்பதன் பொருளை ஈடு இணை என்பதில் காண்க. எடுப்பு என்பது உயர்வு என்னும் பொருளதாம். எதில் உயர்வு என்பார்க்கு ஈடு ஆகிய உயர்வினும் உயர்வு என்னும் பொருள் தருவது எடுப்பு என்க. எடுத்த கழுத்து, எடுப்புத் தண்ணீர், எடுப்பாகப் பேசுதல் என்பவற்றில் உயர்வுப் பொருள் உண்மை அறிக. முதல் தண்ணீர் பாய்ச்சப் பெற்ற நடுகைப் பயிர்க்கு மீண்டும் தண்ணீர் விடுதல் எடுப்புத் தண்ணீர் எனப்படும். அத்தண்ணீர், அப்பயிரின் வாட்டம் போக்கி நிமிர்ந்து நிற்க வைத்தற்குரியதாம் என்பதால். ஈடேறுதல்: ஈடு + ஏறுதல் = ஈடேறுதல் = மேல் நிலைக்கு உயர்தல், ஈடு = ஒப்பு; ஏறுதல் மேற்செல்லுதல். என்னை நீ ஈடேற்றற்கு அருள்செய்க - பார. நச். 5 (த.சொ.அ.) ஈடை: ஈட்டப்பட்டது ஈடை. உழவர் ஈட்டுதற்கு அடிப்படையாம் ஏர்க்காலும், ஒருவர் தம் வாழ்வில் ஈட்ட வேண்டியதாம் புகழும் ஈடையாம்(த.சொ.அ.) ஈடு > ஈட்டு + அம் = ஈட்டம். பொருள் அறிவு புகழ் முதலியவை ஈட்டுதலால் அமைபவை. ஈட்டுதலால் அமைந்த அவை ஈட்டம் எனப்படும். ஈட்டம் எல்லாம் தமக்கே என்றிருப்பவர் புகழை ஈட்டார். ஆதலால், ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் - திருக். 1003 என்றார் திருவள்ளுவர். ஈட்டுபவை பெருக்கமுறுபவை ஆதலால் செறிவு. கூட்டம் முதலிய பொருள்களும் அதற்கு உண்டாயின. ஈட்டுதல் ஈண்டுதலும் ஆகும். ஈண்டுதல் = நெருங்குதல், செறிதல் ஈட்டல் : ஈட்டல் = தொகுத்தல், சேர்த்தல் இயற்றலும் ஈட்டலும் - திருக். 385 ஈட்டல் பொருள் - ஔவை தனிப். ஈட்டி: ஈட்டி:1 ஈட்டி = கருவி வகைகளுள் ஒன்று. மேல் குத்தும். அம்புதுளைக்கும். ஈட்டியோ ஒருவர் உடலில் புகுந்தால் வெளியே இழுக்கும் பொழுது கருவி மட்டும் வெளிவராது. அக்கருவியின் உள்பிளவு அமைப்பு, அது பட்ட இடத்தில் உள்ள தசையையும் இழுத்துக்கொண்டு வெளியே வரும். ஆதலால் தசையை ஈட்டிக் கொண்டு வரும் அக்கருவியை ஈட்டி என்றனர். ஈட்டி எட்டு மட்டும் பணம் பாதலம் மட்டும்என்பது பழமொழி. ஈட்டி எழுபது என்பது ஒட்டக்கூத்தர் பாடியதொரு நூல். ஈட்டி:2 ஈட்டி என்பது ஒரு மரம்; மற்றை மரங்களிலும் வன்மையையும் கனத்தையும் ஈட்டி வைப்பதால் அதனை ஈட்டி என்றனர் (செ.சொ.பொ.அகர. முதலி.) அம்மரத்தை ஈட்டி என்னும் கருவிக்குப் பயன்படுத்துதலால் அப்பெயர் பெற்றது என்றும் கூறுவர். ஈட்டிக்காரன்: ஈட்டி + காரன் = ஈட்டிக்காரன். வட்டியும் முதலும் எந்நிலையிலும் விட்டுத்தராமல் வட்டி வாங்கும் பொருட்குறியர். ஈட்டி போல் பாய்ந்து, கொடுத்த கடனையும் வட்டியையும் கூட்டிக் கூட்டி ஈட்டி போல் இழுத்துக் கொள்ளும் பணத்தால் பணம் பண்ணுவாரை ஈட்டிக்காரர்என்பது பொருள் பொதிந்த வழக்காம். வட்டிகொண்டு ஈட்டும் பட்டிப்பதர் என்னும் வசை, இத்தகையரை எண்ணியே வந்தது போலும். ஈட்டுக்கு ஈடு: சரிக்குச் சரியாக - அளவுக்கு அளவாகத் தருதல், நெல்லும் உப்பும் சரிக்குச் சரி என்பது ஈட்டுக்கு ஈடு. (ம.வ.) ஈட்டு முறி: ஒருவரிடம் பெற்ற பொருளுக்கு ஈடாகப் பொருள் தந்தோ கையெழுத்திட்டு உறுதி எழுதியோ தரும் ஆவணம் ஈட்டு முறியாகும். முறியாவது ஓலை நறுக்கு. பழநாள் எழுது பொருள் அஃதாகலின் அப்பெயர் பெற்று இன்று தாளாக மாறியும் அப்பெயரே வழங்குகின்றது. ஒ.நோ: மரக்கால். ஈணை: இணை > ஈணை > பனைநார். இணைத்துக் கட்டும் கயிறாகவும் கூடை பெட்டி முதலியன பின்னிப் பிணைக்க ஆவதால் ஈணை எனப்பட்டதாம். ஈண்டு: இங்கு > ஈங்கு > ஈண்டு = இங்கு, செறிவு. ஈண்டறம் பூண்டார் பெருமை -திருக். 23 ஈண்டு நீர்: ஈண்டு + நீர் = ஈண்டு நீர், ஈண்டு = செறிவு; செறிந்த நீர், கடல், ஈண்டுநீர் மிசைத் தோன்றி - கலித். 100 அருவி நீர், ஆற்று நீர், ஏரி நீர் ஆயவற்றினும் கடல்நீர் செறிவாதல் அறிக. உப்புக் கடுத்தல் என்பதே அதன் செறிவு காட்டும். ஈதல்: ஈ = ஓர் உயிரி; தல் = தொழிற் பெயர் ஈறு. ஈயின் - தேன் ஈயின் - கொடை - தேட்டு . ஈயின் கொடை. ஈதல் ஈகை ஈவு ஈகம் என்பவற்றின் மூலம், ஈ தேடி வைத்தலே ஈட்டுதலே கடனாகக் கொண்டது. ஈட்டியவற்றை நாம் கொள்வது அதன் ஈகையால் தானே! இரவலனுக்குத் தருவது போல் உயிர் வாழ்வு கருதிச் சிறிதளவே உணவு தருதல், ஈ என்பது இழிந்தோன் கூற்றுஎன்னும் தொல்காப்பியம் (928). ஈயென இரத்தல் இழிந்தன்றுஎன்னும் புறநானூறு (204). சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்என்றார் திருவள்ளுவர் (412) ஈதா: ஈதா = இதுவா > ஈதா > இந்தா (இதைப் பார், இதை வாங்கு). அறிந்திலேன் ஈதா - பரி.8 ஈத்தை: ஈத்தை > ஈதை = இல்லாதது. வறுமை நோய் ஆயவற்றால் துன்பமுறுதல். ஈதைகள் தீர்க்கும் நாமத் திராமனை எண்ணி - கம்ப. உயுத். 2277 ஈதை: உள் வயிரம் இல்லாத புல்லினப் பயிர்களின் அடியை ஈத்தை என்பர். மூங்கிலை ஈத்தை என்பது மதுரை மாவட்ட வழக்கு. வலுவற்ற அடியுடைய தட்டையை ஈத்தை என்பது முகவை மாவட்ட வழக்கு. மெலிந்தவனை ஈத்தை என எள்ளலும் இவ்வழிப்பட்டதே. கதிர் விட்டும் மணிபிடியாப் பயிரை ஈத்தை என்பதும் முகவை வழக்கு. ஈந்து: ஈர்ந்து > ஈந்து, தாழை வகையைச் சார்ந்த நிலைத்திணை. ஈந்து > ஈச்சு > ஈச்சை, ஈச்சம் பழம், பேரீச்சம் பழம் என ஊட்டமிக்க பழத்தை வழங்குவது அதுவாம். * ஈச்சம் காண்க. ஈப்புலி: ஈ + புலி = ஈப்புலி. மெலிவுடைய உடம்பினரை ஈப்புலி என்பது கண்டமனூர் வட்டார வழக்கு. மெலிவுடையார் எனினும் அவர், வலுவான செயலுடையவராக இருப்பார். மாட்டீ பெரியது. ஒட்டிக் கொண்டு குருதியை உறிஞ்சி எடுப்பது. அவ்வாறு உறிஞ்சு வாழ்வு, ஈப்புலி வாழ்வாம். ஈமம்: ஈம் + அம் + ஈமம்; இடுகாடு. இறந்தார் உடலை இட்டு வைக்கும் இடம், அவரை இட்டு வைக்கும் கலம், ஈமக்கலம், இடுதல் சுடுதல் என்னும் இரண்டும் உண்டேனும், இட்டு வைக்கும் இடுகாடே ஈமமாம். ஊரீ ரேயோ ஒள்ளழல் ஈமம் தாரீ ரோ - மணிமே. 16:23:24 என்பது இடுதலும் ஈடுதலும் கொண்ட பொதுமைய தாயிற்று. ஈ மொய்த்தல்: ஈ மொய்த்தல் = அடித்தல். சொல்வதைக் கேள்; இல்லையானால் உன் முதுகில் ஈ மொய்க்கப் போகிறதுஎன்பர். கேளாவிட்டால் அடிப்பாராம்; அடித்தால் புண்ணாகுமாம்; புண்ணானால் ஈமொய்க்குமாம். இவற்றை எல்லாம் அடக்கி ஈமொய்க்கும்ஈ மொய்க்கப் போகிறதுஎன்கிறார். இஃது எச்சரிக்கைக் குறிப்பாம். அந்நிலை ஏற்படாமல் ஒழுங்காக நடந்து கொள்; எனக்குச் சினமூட்டாதே, சிறுமைப்படாதே என்பது எச்சரிக்கையாகும். ஈயம்: ஈயம்:1 இளகியம் > ஈகியம் > ஈயம். செம்பு வெள்ளி தங்கம் முதலாம் எந்த மாழைகளினும் இளக்கமும் இளகுதலும் உடைமையால் இளகியமாய் = ஈயமாய் - ஆயது. அதன் இளக்கம், எளிதில் நெகிழ்தலாலும், இளகுதல் எளிதில் ஈயம் பூச உருகு தலாலும் வெளிப்பட அறியலாம். ஈயம்:2 பாதிரி என்னும் மரப்பெயராக வழங்குகின்றது. வெண்மையும் மஞ்சளும் கலந்த அதன் அழகிய மலர்கள் பறிக்காமலே எளிதாகத் தாமே உதிர்தலும் பூ முதிர்ந்து வாடு முன்னரே உதிர்ந்து விடுதலும் கண்டு வழங்கப்பட்ட பெயராகலாம். சொல்லா மலேபெரியர் சொல்லிச்செய் வார்சிறியர் சொல்லியும் செய்யார் கயவரே - நல்ல குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடில் பலாமாவைப் பாதிரியைப் பார் - தனிப் பாதிரிப்பூ வைக்கப்பட்ட கலம் பன்னாள் மணமுடைய தாதலும் அதில் விடப்பட்ட தண்ணீருக்கும் மணத்தை ஊட்டுதலும் அறியத் தக்கவையாகும். ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு - நாலடி. 139 உதிர்தல் இளக்கமும் படிந்ததை வழங்கும் இளக்கமும் ஆகிய ஈதல், ஈயப் பெயரைப் பாதிரிக்குத் தந்ததாம். ஈயல்: ஈயல் > ஈசல், ஈ + அல் = ஈயல்; ஈ அல்லாத - ஈப்போன்ற - பறக்கும் உயிரி. செம்புற் றீயல் போல ஒருபகல் வாழ்க்கை - புறம். 52 ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறுத்த குறும்பி வல்சிப் பெருங்கை ஏற்றை - அகம். 8 ஈசல் மக்கள் வழக்கு, ஈசல் பறக்கிறது மழை வரும் ஈயை: ஈயை:1 ஈ+ ஐ = ஈயை. ஈயை = இஞ்சி, நீரை உள்ளே இழுத்துக் கொள்வது. இஞ்சுதல் = உறிஞ்சுதல். *இஞ்சி காண்க. ஈயை:2 ஈயை = இண்டு. அடுத்து வந்ததை இழுத்துக் குத்தும் முள்ளுடைய செடி. ஈங்கை என்பதும் இது. ஈயோட்டல்: ஈயோட்டல் = விலையாகாமை. ஈயோட்டல் நலப்பாடு (துப்புரவு) கருதிய செயல். ஆதனினும் ஈக்கு இடம் கொடாமல் இருப்பது மிக நலப்பாடு. நீர்ப்பொருள், இனிப்புப் பொருள் ஆகியவற்றையே ஈ நாடித் தேடி வரும். அவற்றை ஓட்டா விட்டால் மொய்த்துக் கிடக்கும். அதனைக் காண்பவர் அப்பொருளை வாங்க மாட்டார். விலை போகா. அப்பொருளை ஈ விட்டு வைக்குமோ? ஈயோட்டுவதே விற்பவர்க்கு வேலையாகிப் போகும்; அதனால் வணிகம் நன்றாக நடைபெறாத கடைக்காரரை ஈயோட்டுகிறார் என்பது வழக்கமாயிற்று. பின்னர் விற்பனை நடைபெறாமல் படுத்துவிட்ட எந்தக் கடையும் ஈயோட்டலாயிற்று. * ஈ காண்க. ஈரசை: ஈர் + அசை = ஈரசை = இரண்டசை, ஈர் = இரண்டு. தேமா, புளிமா என்னும் மாச்சீர், கருவிளம், கூவிளம் என்னும் விளச்சீர் ஈரசை எனப்படும். தேமா புளிமா கருவிளம் கூவிளம் சீரகவற்காம் - யா.கா.7 ஈரசைச்சீர் அகவற் சீராம். ஈரசை நாற்சீர் அகவற் குரிய -யா.கா.6 ஈரடி: ஈர் + அடி = ஈரடி: ஈர் = இரண்டு. ஈரடி வெண்பா குறள். நாலடி ஈரடி கற்றவனிடம் வாயடியும் கையடியும் செல்லாதுஎன்பது பழமொழி. ஈரடி = திருக்குறள் அரங்கக் கோவையை உள்வாங்கிய சொலவடை ஒன்று மானடி, காலடி, மேலடி, நாலடி, ஈரடிஎன்பது. மான் போன்றவளே உன் அடியை என் காலடி மேலேயே வைத்து வா; அப்படி வந்தால் நாலடியாக - நாலு தடமாகத் தோன்றா, இரண்டடிகளாக - ஒருவர் நடந்த நடையாகத் தெரியும் என்பதாம். ஈரணம்: ஈர் + அணம் = ஈரணம். ஈர் > ஈரம், அணவுதல் = தழுவி அல்லது பொருந்தியிருத்தல். எப்பொழுதும் ஈரப்பதம் உடைய களர்நிலம் ஈரணம் எனப்படும். கடுவெயிற் காலத்தும் உள்ளீரம் வாங்காமல் சதசதப்பாக இருப்பது களர் நிலமாம். ஈரணை: ஈர் + அணை = ஈரணை, ஈரணை = இரு கருத்துகளை எண்ணி ஒருப்படாமல் மயங்குதல், ஒரு பொழுதில் ஒரு கருத்தை உறுதியாகக் கூறாமல் இரண்டு கருத்துகளை வைத்து மயங்குதல் ஈரணை எனப்படும். ஈரடி என்பதும் ஈரட்டு என்பதும் இருநிலைப்படப் பேசுதலாம். அவன் ஈரணையாகப் பேசினான்; ஈரட்டாகப் பேசினான். அவன் பேச்சைக் கேட்டுச் சரிக்கு வரமாட்டான் என ஒதுங்கிவிட்டேன்என்பது வழக்கு. ஈர நைப்பு: ஈரம் + நைப்பு = ஈர நைப்பு; ஈரப்பதம் கொண்டு தனக்குரிய தன்மை நமைத்துப்போய் இருத்தல். நமைத்தல் > நைத்தல் > நைதல் மட்கிக் கெட்டுப்போதல். வைக்கோல் ஈர நைப்பாக இருக்கிறது. வெயிலடிக்காமல் மூட்டம் போட்டுள்ளது. உலரவில்லையானால் மாட்டுக்கு ஆகாது. குப்பை கூளந்தான்என்று உழவர் கூறுவர். நெல் ஈர நைப்பாக உள்ளது. காயப்போட்டால் மூடைக்கு நான்கு படி குறைந்து போகும். இப்படியே அடுக்கி வைத்தால் மக்கி (மட்கி)ப் போகும்என்று வணிகர் கூறுவர். ஈரலிப்பு. ஈரநெய்ப்பு என்பனவும் இது. ஈரமும் நெய்யிழுது போலும் ஒழுகு நிலையும் கொண்டமையால் ஈரநெய்ப்பு ஆயதாம். ஈர மானி: ஈரம் + மானி = ஈரமானி; மானி = அளவுக்கருவி காற்றில் உள்ள ஈரத்தை அளந்து காட்டும் கருவி வெப்பத்தை அளக்கும் வெப்பமானி போல்வது. ஈரம்: ஈரம்:1 ஈர் + அம் = ஈரம். ஈர்தல் உள் இழுத்தல்; ஒரு பொருள் தன் உள்ளே இழுத்து வைத்துக் கொண்ட நீர்ப்பதம் ஈரம் ஆகும். மண் ஈரம்; சுவர் ஈரம். ஈரத்தைத் தன்னுள் கொண்ட வெண்காயம், ஈர வெண்காயம் என்றும் ஈர உள்ளி (ஈருள்ளி) என்றும் வழங்கப்படும். ஈரம்:2 ஈரத் தன்மையாம் இரக்கம், நெஞ்சில் ஈரம் இருந்தால் பெற்றவனை இப்பேச்சுப் பேசுவாயா? ஈரங்கெட்ட பிழைப்பு என்ன பிழைப்பு?என்பது வழக்கு. ஈரம் சாரம்: ஈரம் = ஈரமுள்ள இடம். சாரம் = ஈரமான இடத்தைச் சார்ந்த இடம். ஈரம் சாரம் இருப்பதால் இந்த மரம் வளமாக இருக்கிறது என்பர். என்ன ஊட்டமும் நில நேர்த்தியும் இருந்தாலும் நீர்வளம் இல்லையானால் என்ன ஆகும்? ஊட்டத்தை எடுத்துத் தருவதற்கும் வாட்டத்தைத் தவிர்ப்பதற்கும் அந்த நீர் தானே வேண்டும்? ஈரலித்தல்: ஈரப்பதமாக இருத்தல். தவசம், வைக்கோல் முதலியவை நன்றாகக் காயாமல் ஈரத்துடன் இருப்பின் அவற்றை ஈரலிப்பாக உள்ளது என்பது திருச்செந்தூர் வட்டார வழக்காகும். * ஈரநைப்பு காண்க. ஈரல்: ஈரல் = இரண்டாக அமைந்த உறுப்பு, கல்லீரல், மண்ணீரல், ஈர் = இரண்டு, ஈர் > ஈரி = இரண்டு. ஒ.நோ. ஓர் > ஓரி. ஈரறிவு: ஈர் + அறிவு = ஈரறிவு ஈர் = இரண்டு நந்தும் முரளும் ஈரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - தொல். 1528 ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே - தொல். 1526 உற்றறிதலாம் ஊறும், நாவறிவாம் சுவையும் ஆகியவை ஈரறிவு உயிரிகள். ஈரால்: ஈர் + ஆல் = ஈரால், ஈர் = இரண்டு; ஆல் = ஆலமரம். இரண்டு ஆலமரங்கள் உள்ள இடத்து உண்டாகிய ஊர் ஈரால், நெல்லை மாவட்டத்தது. ஈரி: ஈரி:1 இரண்டு நொண்டியடிக்கும் ஆட்டத்தில் இருவர் இருவராகப் பிரிப்பது ஈரி எனப்படும். ஒருவர் ஒருவராகப் பிரிப்பது ஓரி என்பதுபோல; நொண்டியடித்தலைக் கொக்கான் ஆட்டம் என்பர். ஒற்றைக்கால் ஊன்றி, ஒற்றைக்கால் தூக்கி நிற்றல் கொக்கின் ஓய்ந்து ஆயும் நிலை. * ஓரி காண்க. ஈரி:2 ஈரப்பதம் உடையதும் ஈரி ன்று வழங்கும். ஈரிழைத் துணி: ஈர் + இழை + துணி = ஈரிழைத்துணி. ஊடும் பாவும் ஒற்றை இழையொடு மற்றுமோர் இழையைச் சேர்ந்து ஈரிழையாக்கி நெய்யப்படும் துணி ஈரிழைத்துணி எனப்படும். இரட்டை நூலால் நெய்யப்படும் துணி இரட்டு எனவும் சொல்லப்படும். இரட்டையாவது இரண்டு. ஈரிழைத்துணி போர்வை, விரிப்பு, கட்டில் கச்சை, சாய்விருக்கை ஆயவற்றுக்கு உரிய கெட்டித் துணியாம் அல்லது முரட்டுத் துணியாம். ஈரிழைத் துணி, ஈரிழைத் துண்டுமாம். நீராடித் தலை துவர்த்தவும் கட்டிக் கொள்ளவும் தக்கது. ஈருயிர்க்காரி: ஈர் + உயிர் + காரி = ஈருயிர்க்காரி. இரண்டு உயிராக இருப்பவள். கருக்கொண்டு மகப்பேற்றுக்குரிய காலம் வந்த தாயை ஈருயிர்க்காரி என மக்கள் வழங்குவர். அவரைச் சினந்து யாராவது சொன்னதும் பாவம் ஈருயிர்க்காரி; ஒன்றும் சொல்லாதேஎன்பர். அக்காலத்தில் அவர் வருந்தின் சேய் உயிர்க்கும் தீமையாம் என்னும் உளவியல் - மருத்துவ இயல் - மெய்யியல் - வழிப்பட்ட குறிப்பு இஃதாம். ஈருருளி: ஈர் + உருளி = ஈருருளி. இரண்டு உருளைகளை (சக்கரங்களை) உடையது. ஈருருளி யாம். ஒரு காலத்தில் மரக்குதிரை என்றும். துவிச்சக்கர வண்டி என்றும் அழைக்கப்பட்டது. பின்னே ஈருருளி எனப்பட்டது. இதுகால், மிதிவண்டி என்பதே பொருந்த அமைந்து நிலை பெற்றது. உருளை, உருளி என்பவை பழஞ்சொற்கள். உழவு, தச்சு முதலிய தொழில்களில் பயன்படுத்தப்படும் சொற்கள். ஈருள்ளி: ஈர உள்ளி > ஈருள்ளி. நீர்ப்பதனுடையதும், உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இல்லாததுமாம் பூண்டு. உள்ளில் > உள்ளி, உள் ஒன்றும் திண்ணிதாக இல்லாத தோலாயது. ஈர வெண்காயம் என்பதும் இதன் பெயர். ஈரெச்சம்: ஈர் + எச்சம் = ஈரெச்சம். ஈர் = இரண்டு; எச்சம் = எச்சச்சொல். முற்றுப் பெறாமல் முற்றுப் பெற வேறொரு சொல்லை வேண்டி நிற்கும் குறைச்சொல், எச்சச்சொல் எனப்படும். அவை பெயரெச்சம், வினையெச்சம். எ-டு: படித்த பாடம். (பெயரெச்சம்) படித்துமுடி. (வினையெச்சம்) ஈரெட்டு: இரண்டு எட்டு, பதினாறு என்பது ஒன்று: இரண்டு எண்ணம் என்பது மற்றொன்று. அவன் எண்ணம் ஒருப்படவில்லை. எப்பொழுதும் ஈரெட்டாகவே பேசுகிறான்என்பது மக்கள் வழக்கு. ஒருநிலைப்படா நிலை ஈரெட்டாம்; ஈரொட்டு என்பதும் இது. ஈரெண் கூலம்: ஈர் + எண் + கூலம் = ஈரெண் கூலம். ஈரெண் = பதினாறு; கூலம் = தவச வகை; உண்பொருள். பதினாறு வகைப்பட்ட உண்பொருள். அவை; நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கு (சோளம்), தோரை (குளநெல்), இராகி (கேழ்வரகு), எள், கொள், பயறு, உழுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை. ஈர்: ஈர்:1 ஈரத்திலும் அழுக்கிலும் ஒட்டிக் கொள்வதும், ஈர்ந்து (இழுத்து) எடுக்கப்படுவதுவுமாம் ஒட்டுண்ணி ஈர் ஆகும். அதனைக் கூந்தலில் இருந்து அகற்றப் பயன்படுத்தும் கருவி ஈர்வலி (ஈரை இழுத்து எடுப்பது) என்றும், ஈரை அகற்றுதல், அதனைக் கொல்வதாகலின் அக்கருவி ஈர்கொல்லி என்றும் மக்கள் பொருள் பொதிய வழங்குகின்றனர். ஈர் பேன் - இணைச்சொல், ஈர் இழுத்து எடுக்கப்படா விட்டால் பேனாக உருவாகும். அதனை ஈர்வலியால் எடுக்க இயலாது. பேன் சீப்பு வேண்டும். ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம் உள்ளே பார்த்தால் ஈரும் பேனும் என்பது பழமொழி. இறைகூர்ந்த பேஎற் பகையென ஒன்றென்கோ - புறம். 136 பேஎற் பகை = பேனாகிய பகை. ஈர்:2 ஓர் எண். இரண்டு > இரு > ஈர். ஒன்று ஓர் ஆவது போல இரண்டு ஈர் ஆயது. வருமொழி முதல் உயிரெழுத்தாயின் ஒரு ஓர் ஆவது போல. இரு ஈர் ஆகும். எ-டு: ஈரோடு, ஈரிலை ஈர்:3 பிள என்னும் பொருளது. ஈர்தல் அறுத்தல் பிளத்தல் உடைத்தல் இரண்டாக்கல். இலை ஈர்வாய் வலப்புறமாக இட்டுண்ணல் தமிழக வழக்கு. ஈர்:4 ஈரம், ஈரப்பதம். எ-டு: ஈர்ம்புறம் = ஈரமான பக்கம். ஈர்க்கு: தென்னை பனை ஓலைகளின் முதுகாக உள்ள இணைப்பு ஈர்க்காகும். இரண்டு பக்கங்களுக்கும் இடைப்பட்டது ஈர்க்கு எனப்பட்டது. பனையின் ஓலை, தாழை மடல் ஆயவற்றின் ஓலையையும் மடலையும் பயன்படுத்துவார் அவற்றின் முதுகாக உள்ள பகுதியை ஈர்த்துவிட்டு ஓலையையும் மடலையும் பயன்படுத்துவதால் ஈர்க்கு எனப்பட்டதுமாம். ஈர்க்கு = கிழிக்கப்பட்டது. ஈர்ங்கை: ஈரமுள்ள கை அல்லது கழுவிய கை. ஈர்ங்கை விதிரார் கயவர் -திருக். 1077 எச்சிற் (ஈரக்) கையால் காக்கை ஓட்டாதவன் (கருமி) என்பது மக்கள் வழக்கு. ஈர்மை: ஈர்மை:1 ஓர்மைப்படாமல் இரண்டு பட்டுப் பேசுதலும் செய்தலும் ஈர்மை எனப்படும். ஓர்மை அற்றது ஈர்மையாம். ஈர்மை:2 ஈரத்தன்மை, குளிர்ச்சி. ஈர்வலி: ஈர் + வலி = ஈர்வலி, வலித்தல் = இழுத்தல். ஈரிழுத்தற்குரிய கருவி ஈர்வலியாம். ஈருருவி ஈர்கொல்லி ஈர்வாங்கி என்பனவும் இது. உருவல், வலித்தல், வாங்கல் மூன்றும் இழுத்தலேயாம். ஈர்வலிப் பல்லை இறுக்கிப் பிடித்தால் ஈர்கள் வெடித்துப் போதலால் ஈர்கொல்லி எனப்பட்டதாம். * ஈர் காண்க. ஈவித்தல்: ஈவித்தல் = பங்கிடுதல். ஈவு = பங்கு செய்து - பாகம் பிரித்துத் தருதல். தாய் பாகத்தைப் பிரித்தல் ஈவித்தலாய்ப் பின் சமக்கொடைப் பொருள் தந்தது. ஈவிரக்கம்: ஈவு = கொடை கொடுத்தல். இரக்கம் = அருள் புரிதல். சாதல், சாவுஎன ஆவது போல் ஈதல், ஈவு ஆகியது. பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருந்துவாரைக் கடிகின்றது புறப்பாடல் (127) இரக்கம் என்பது அருள் என்னும் பொருளதாதல் வெளிப் படையாம். ஈவிரக்கமில்லாத பாவிஎனப் பிறர்க்கு உதவானைப் பழித்தல் எவரும் அறிந்த செய்தியே. இறைவன் அருளும் ஈவும், கணக்கில் பங்கிட்டுத் தரும் ஈவும் இவண் எண்ணுக. ஈவு: ஈவு:1 ஒப்பப் பகுத்துக் கொடுப்பது. எ-டு: வகுத்தல் கணக்கில் வரும் ஈவு. ஈவு :2 இயற்கை இறைமைக் கொடையால், ஒப்புரவாக வழங்கப்படுவது. ஈவு:3 ஆசிரியர் கற்பிக்கும் கல்விக் கொடை. . எ-டு: ஈவோன் இயற்கை - நன். 36 ஈவு தாவு: ஈவு = கொடை என்னும் பொருள் தருதல் ஈவிரக்கம் என்பதில் கண்டதே தாவு = பணிவு என்னும் பொருளது. வீழ்வு என்பது வீவு ஆவது போலத் தாழ்வு என்பது தாவு ஆயிற்று. மலையடிப் பள்ளத்தாக்குகளையோ பிற பள்ளங்களையோ தாவு என்பது வழக்கு. மேடு தாவு என முரண் தொடையாகவும் வழங்கும். இங்குத் தணிவு என்பது ஒருவர் நிலைக்குத் தணிந்து சென்று அவர்க்குப் பணிவுடன் உதவுதலைக் குறித்து வந்தது. ஈவார்க்குத் தாவும் வேண்டும் என்பதை எவ்வம் உரையாமை ஈதல்என்பார் வள்ளுவர் (223). ஈவோன்: ஈவோன்:1 ஈகின்றவன் ஈவோன். கொடையாளன், பொருட் கொடையாளன். ஈவோன்: 2 கற்பிப்பவன். அறிவுக் கொடையாளன். ஈதல் இயல்பே இயல்புறக் கிளப்பின் -தொல். பாயிரம். ஈவோன் தன்மை ஈதல் இயற்கை - நச். ஈழம்: ஈழம் = பொன். இழை இழையாக இழுக்கவரும் மாழை ஈழம் (பொன்) எனப்பட்டது. பொன்னின் பெயரால் அமைந்தது ஈழம். நின்னாடு பொன்னாடுஎன்னும் இரட்டுறல் எண்ணத்தக்கது. ஈளை: ஈளை : 1 இளை > ஈளை = கோழை, சளி இளைப்பை - மூச்சிரைப்பை உண்டாக்குவது எதுவோ அது ஈளை எனப்படும். ஈளைநோய் உருக்கி நோய் (காச நோய்) எனப்படும். ஈளையோ டேங்கு கிழவன் - நாலா. 1483 ஈளை:2 மண்வகையுள் ஒன்று. அளறு, அள்ளல், களர் என்பவை அவை. என்பு உமி கூர்ங்கல் களிஉவர் ஈளை துன்ப நீறு துகள் இவை இன்றி - சிலப். 3:95-96 அடியார்க். உள் இளக்கமாக அமைந்த மண் ஈளை. ஈறிலி: ஈறிலி:1 ஈறு + இலி = ஈறிலி, இறுதி இல்லாதது; முடிவற்றது; என்றும் இருப்பது. அஃது இறை. ஈறில் ஒண்பொருள் - நாலா. 2919 ஈறிலி:2 புகழ். ஈறில வண்புகழ் - நாலா. 2919 x.neh.: மண்தேய்த்த புகழ் (சிலப். 1:36) ஈறிலி:3 இன்பம். ஈறிலின்பத் திருவெள்ளம் -நாலா. 3071 ஈறு: ஈறு:1 எயிறு > ஈறு = பல்லீறு; பல் நிற்கும் தாங்கு தாடை ஈறு ஆகும். ஈறு:2 ஈறு = கால ஈறு; இறுதி. காலமும் இடமும் முடிநிலையைக் காட்டுவது ஈறு; முடிவு, எல்லை, இறப்பு என்னும் பொருள் தருவது. ஈறு:3 ஈறு = சொல் ஈறு; விகுதி என்பார் நன்னூலார். ஈறு என்பார் தொல்காப்பியர். ஈற்றா: ஈற்று + ஆ = ஈற்றா. ஈற்றுப் பசு, ஈன்றணிமையான பசு, ஈனுதல், மகப்பேறு பெறுதல். கன்று அல்லது குட்டி போடல், கற்றா என்பதும் இது. கன்று ஆ. * கற்றா காண்க. ஈனல்: ஈன் + அல் = ஈனல். பெறுதல், குட்டிபோடுதல், முட்டை இடல், கதிர் தள்ளல், குலை தள்ளல், ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் - திருக்.69 * ஈன்றாள் காண்க. ஈனாத்தாயர்: ஈன் + ஆ+ தாயர் = ஈனாத்தாயர். தாம் பெறாமல் பெற்றெடுத்த தாய் போல் அமைந்து தலைவியை வளர்க்கும். செவிலித்தாயர். மணிசெய் மண்டைத் தீம்பால் ஏந்தி ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள் -அகம். 105 பெற்ற தாயை விலக்கி வேறுபடுக்க ஈனாத்தாயர் என்றார், ஈன்றதாய் வேறொருவர் ஆதலால். ஈனா வாழை: கன்று என்னும் பெயர் ஆவின் கன்று எருமைக்கன்று என்பது போல, வாழையும் குலைதள்ளிக் காய்த்தலை ஈனுதல் என்பர். அவ்வாறு குலைத்தள்ளா வாழை ஈனா வாழை எனப்படும். ஈனா வாழையும் பக்கம் கிளைத்துக் கன்று ஈனல் உண்டு. குலை தள்ளலால் தள்ளை என்னும் தாயின் பெயரைக் கொண்டது வாழை. கன்று ஈனுதலால் வாழை, ஈன்றாள் பேற்றையும் எய்துகின்றதாம். ஈனில்: ஈன் + இல் = ஈனில் ஈனல் = மகப்பேறு பெறுதல். மகப்பேறு பார்க்கும் இடம் - மகப்பேறு ஆகுமிடம் ஈனில் எனப்படும். பறவைகள் கூடி வாழும் வாழ்வுக்குக் கூடி உழைத்துக் கட்டியது கூடு. அக்கூட்டைக் கட்டிய காரணம் முட்டையிட்டு அடைகாத்துக் குஞ்சு பொரித்து அதனை வளர்த்தற்கேயாம். பறவைகள் கூடு கட்டுதலை, ஈனில் இழைத்தல் என வழங்குவர். பேடைச் செவ்வி நோக்கி ஈனில் இழைக்க - பதினோ. திருவாரூ, 19 (த.சொ.அ.) ஈனும்: ஈனும் = கொடுக்கும். ஈயும். தெருவில் வலம்புரி தரளம் ஈனும் - நாலா. 1184 ஈனோர்: ஈ > ஈன் > ஈனோர் = இவ்வுலகத்தோர். இசுரச் சுட்டு நீளல் ஈன் = இவ்விடம் இவ்வுலகம் ஈனோர்க் கெல்லாம் இடர்கெட இயன்றது - மணிமே. 28:132 ஈன்: ஈன்:1 இன் > ஈன். இனிமை ஈன் துழாய் மாயனையே - நாலா. 2644 ஈன் தேன் முரல - நாலா. 1801 ஈன்:2 பொழிதல், சொரிதல் ஈன்பனி நனைந்தது - நாலா.918 மழை கருவுயிர்த்தது எனப்படலால் ஈன் சொரிதல், பொழிதல் எனப்பட்டது. ஈன்மர்: ஈன்மர் = பெறுவர், பெறுபவர். ஈன்மரோ இவ்வுலகத் தானே - புறம். 74 ஈன்றாள்: ஈன்றவள் > ஈன்றாள்= மகப்பேறு பெற்றவள்; தாய். ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் - திருக். 656 ஈன்றோர்: ஈன்றவர் > ஈன்றோர் = பெற்றோர்; தாய், தந்தை. 