ஹோரேஸ் வால்போல் கடிதங்கள் முதற் பதிப்பு - 1956 இந்நூல் 2002இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. கடிதம் - 1 பள்ளிப் பழக்கம் (சார்ல்ஸ் லிட்டில்டனுக்கு) செல்ஸி, ஆகஸ்டு 7, 1732 என் அருமைமிக்க சார்ல்ஸ், தாங்கள் நகரைவிட்டுப் புறப்பட்டுச் செல்வதற்கு முந்திய இரவில் நான் தங்களை ஒரு சிறிது நேரந்தான் சந்தித்துப் பேச முடிந்தது. ஆனால், அச்சிறிது நேரச் சந்திப்பில் எனக்குக் கிடைத்த மகிழ்ச்சியே இப்போது தங்களை விட்டுப் பிரிந்திருப்பதால் ஏற்படும் துயரத்தைப் பெருக்கப் போதுமானது, சிறிதுநேரச் சந்திப்பில் நமக்கிடையே நிகழ்ந்த துண்டுத் துணுக்குப் பேச்சு இவ்வளவு மகிழ்ச்சியூட்டுமாயின், தொடர்ந்து உறவாட முடியு மானால் அதனால் எவ்வளவு நல்லின்பம் ஏற்படாது! நாமிருவரும் ஈட்டன் கல்விச்சாலையில் ஒருங்கே கழித்த இன்பப் பொழுதுகளை நான் அடிக்கடி எண்ணி எண்ணி இன்புறுவதுண்டு. அதுபோல நாம் இருவரும் கலந்துபேசிக் களிக்க வேண்டும் என்று அவாவுறுகிறேன். பள்ளித் தோழர் களிடையே பொதுவாக வழங்கும் பொழுது போக்குகளைவிட மிகவும் உயர்வுடைய ஆயிரம் தனி அனுபவங்கள் நமக்கு உண்டு. மற்றப் பெரும்பாலான பிள்ளைகளைப் போல் வலுவற்ற அப்பாவிப் பையன்களை அடிப்பதிலும், அடியும் தள்ளும் பட்டாலும் கும்பலுடன் கூடிக்குதிப்பதிலும் நாம் நேரத்தைப் போக்காதிருந்ததுபற்றி நாம் எவ்வளவோ பெருமைகொள்ள வேண்டும். நம் பொழுதுபோக்குகள் இவற்றுக்கு எவ்வளவு மாறானவை! அவற்றை ஒருவருக்கொருவர் நினைவூட்டி மகிழ்ச்சியைப் பெறும்நாள் என்றோ! என் அருமை சார்ல்ஸ், தங்கள் இருப்பிடம் ரேக்ஸியி லிருந்து எவ்வளவு தொலைவிலிருக்கிறது என்பதை அன்புகூர்ந்து தெரிவியுங்கள். ஏனெனில், நான் அவ்விடம்வரை வரவிருக்கிறேன். உங்கள் இடம் அருகிலிருந்தால், அங்கேவந்து ஒரு நாள் உங்களுடன் கழிப்பேன். தங்களுக்குக் கடிதம் எழுதுவதற்குத் தகுந்த செய்திகள் இல்லா திருப்பதைச் சாக்காகக் கொண்டு என் ‘சிறு கவிதைகள்’ ஒன்றிரண்டை இத்துடன் அனுப்பிவைக்கிறேன். தங்கள் பார்வைக்கு அதில் எதுவும் இருக்க முடியாதானாலும், அவற்றை நீங்கள் கட்டாயம் வாசிப்பீர்கள் என்பதை நான் அறிவேன்; ஏனெனில், அவற்றை அனுப்புபவன் இக் கடிதம் எழுதும், தங்கள் அன்பூழியன், -------------- கடிதம் - 2 நட்பின் திறம் நண்பர் அறிவர்! (இதுவுமது) ஈட்டன், ஆகஸ்டு 28, 1734 என் அருமைமிக்க சார்ல்ஸ், நம் நட்பினிடையே ஏற்படும், ‘இனிய பொறாமை’ உணர்ச்சி பற்றி நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆம், என்னிடம் அதேவகை யுணர்ச்சி நட்பினிடையே கலந்துள்ளது. நம் நட்பின், ‘நயமிக்க நாகரிக’த்தை நாம் ஒருவருக்கொருவர் குறிப்பாய் உணர்வதுடன் இவ்’வினிய பொறாமை மூலமும் ஒருவர் நட்பை ஒருவர் எளிதில் அறிந்துகொள்கிறோம். எனது நேசத்தை நன்கு ஆராய்ந்து அது குறைவுடையது என்று நீங்கள் தீர்ப்புக் கூறியிருக் கிறீர்கள். ஆனால், நானும் அதேபோல ஆராய்ந்து மறுபுறம் தீர்ப்புக் கூறியிருப்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். குறைகளை மறுப்பதை விடுத்து விளக்குவதானால் (நான்தான் முதலில் விளக்கந்தருகிறேன் என்பதைக் கவனிக்க), நான் ஊரில் குளிரும் காய்ச்சலும் கண்டிருந்து நேற்றுதான் இங்கே வந்தேன். நட்பருமை அறியாத என் மூட உறவினர், நண்பர் தொடர்பில்லாதிருப்பதுவும் ஒரு நோய் என்று உணராமல், உங்கள் கடிதங்களை நான் காணாமல் மறைத்து வைத்திருந்தனர். உண்மையில் என் அருமைச் சார்ல்ஸின் கடிதங்களை நான் பார்க்க முடிந்திருந்தால், என் நோய் விரைவில் தணிவுற்றிருக்கும் என்பதை அவர்கள் எப்படி அறிந்திருக்கமுடியும்? ஆகவே, வறியவருக்குப் பயன் படாமல் சிறிது சிறிதாகச் சேர்த்துவைக்கப் பட்ட பொற்றிரள் போல அவை எனக்குத் தெரியாமலே எனக்காகச் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. வறியவன் பெற்ற செல்வம்போல் அவை இப்போது மகிழ்ச்சியும் தருகின்றன. இத்தகைய சாக்குப்போக்குகளாலும், விளக்கத்தாலும் உங்களுக்குச் சோர்வையுண்டு பண்ணுவது அம் மகிழ்ச்சிக்காகக் காட்டும் நன்றியாகாது. மேலும் மன்னிப்புக் கோருகிறேன் என்ற ஒரு சொல்லே உங்கள் மன்னிப்புக்குப் போதியதா யிருக்கும் போது, அத்தனை விளக்கங்கள்தான் ஏன்? தங்களுக்குக் கடிதம் எழுதுவதில் எனக்கு உள்ள மகிழ்ச்சியில் ஒரு சிறு கூறாவது என் செயலாளர் ரெண்டலுக்கு இருந்திருந்தால் இந்தக் கடிதம் எழுத இன்னும் ஒருசில நிமிடங்கள் தந்திருப்பார். மீண்டும் ஒரு தடவை தங்கள்பால் என் அன்பையும் மதிப்பையும் தெரிவித்துக்கொள்ளும், தங்கள் அரிய நண்பர், -------------- கடிதம் - 3 பண்பாளர் பண்பும் நண்பர் பண்பும் (இதுவுமது) ஆகஸ்டு 18, 1735 அரிய சார்ல்ஸ், தங்களைக் காணவும் தங்களுடன் பேசவும் துடித்துக் கொண்டிருந்த எனக்கு இப்போது இன்னொரு துடிப்பு ஏற்பட்டி ருக்கிறது. ஹேக்ளிக்கு வரும்படி அழைத்த அழைப்பின் ஆர்வத் திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற துடிப்புத்தான்! எனது தோழர் பெருமகனார்* இந்நகருக்கு வந்து விட்டார். ஆனால், அவர் செப்டம்பரில் வாரிக்ஷயருக்கு வரவிருக்கிறார். அச்சமயம் தாங்கள் ஹேக்ளியில் இருப்பதானால், நான் கட்டாயம் தங்களுடன் ஒருநாள் தங்குவேன். எனதரும் நண்பர் சார்ல்ஸிடம் என்னைப் போலவே கான்வேப் பெருமகனாரும் நன்றியுடையவ ராயிருக்கிறார். அதன் பயனாக அவர் எனக்கு ஒரு மிகக் கடும்பொறுப்பும் தந்துள்ளார். உங்கள் நல்லெண்ணத்திற்குத் தக்க வகையில் அவர் நன்றியைத் தங்கட்குத் தெரிவிக்கும் கடமையை அவர் எனக்கு அளித்துள்ளார்! நம் பழகிப்போன நட்பினிடையே இத்தகைய நய-விநயங்கள் வேண்டுவது எதற்காக என்று நீங்கள் எண்ணலாம். ஆம், இவற்றைச் சொல்லாது விடுவது கேடில்லைதான். ஆனால், நாம் நண்பர்களாதலாலே, இவற்றைக் கூறுவதனாலும் கேடில்லை யல்லவா? நண்பர் களிடையே சொல்லளவில் நன்றியுரைகளும் பண்பாட்டுரை களும் தேவையில்லையானாலும், நன்றியுணர்வும் பண்பாட் டுணர்வும் உள்ளத்தில் ஏற்படும்போது அவற்றைக் காட்ட அவ்வுரைகள் மிகவும் அவசியமே யாகும் என்று கூறவேண்டும். உண்மையில் அரசவைப் பண்பாளர்கள் சொல்லால் கூறும் நயவிநயங்களெல்லாம் பண்புடை நண்பர்கள் உள்ளத்தில் உணர் பவை மட்டுமே. அவ்விருவர் மொழிகளிலுள்ள வேற்றுமை யாவதெல்லாம் பண்பாளர் மொழி, வெறும் வாய்மொழி யாகவும் நண்பர் மொழி உள்ளார்ந்த வாய்மையுடைய மொழியாகவும் இருப்பவையே. நண்பர் உணர்வுடையவர், ஆயின் அது பண்பாளர் மொழி களால் இக் கடிதத்தை இவ்வுறுதியுடன் முடிக்கிறேன். தங்கள் ஊழியனும் நேசமிக்க நண்பனுமான, -------------- கடிதம் - 4 பயண வர்ணனை (திரு. அடிசன் பாணியில்) கவிஞர் ‘தாமஸ் கிரே’யாருக்கு கேம்பிரிட்ஜ், 1735 அன்புடையீர், நான் இத்தாலி* நாட்டில் சுற்றுப்பயணம் செய்யப் போவதாகச் செய்தித்தாள்களில் வந்த குறிப்பை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். பயணங்களைப்பற்றி திரு. அடிசன் விரித்துரைக்கும் ‘பாணி’யிலேயே ஆனால், அவரால் கூறப்படாத செய்திகளைக் குறிப்பிட்டு எழுத விரும்புகிறேன். 1735 அக்டோபர் 9 ஆம் தேதியன்று நான் லம்பர்தியாவின் தலை நகரான லோதான் அல்லது லுக்தெனியம்* என்ற நகரிலிருந்து நாலுபரிகள் பூட்டிய தேரிலேறிப் புறப்பட்டேன். காலை பதினொரு மணிக்கு ரோமர்களால் ‘சுவேதாலயம்’* என்ற ழைக்கப்படும் இடத்தையடைந்தேன். மகாகவி வர்ஜில் தம் வருங்கால உணர்வினால் இவ்விடம் பற்றியே, ஈங்கிதை இயற்றியோன் எண்ணமழித்திட்டு வீங்குறு காலம் பெயரியல் பொழிந்ததே என்ற கருத்துப்பட எதிர்கால உரை பகர்ந்துள்ளார். இங்கே பண்டை ரோமகச் சின்னங்கள் மிகுதியில்லா விடினும் மார்க் அரீலியஸின் உருவச் சிலை ஒன்று உண்டு. ஆங்கிலேயர் இவ்வரசனை குவிக்ளியல்மா தெர்ஜா என்றும் வில்லியன் அரசர் என்றும் கூறுவது உண்டு; சில பண்டிதர்கள் ஸென்ட் ஜார்ஜும் அவனோடு போரிட்ட அரக்கனும் என்று கூடக் கூறுவர். இச்சிலை லோதானில் கிரேட் கிராஸிலுள்ள சார்லிமேனின் சிலைபோல் குதிரை மீதமர்ந்ததாய் அமைந்துள்ளது.*இவ்விடத்திலிருந்த ஒரு கோயிலில் இயேசுவின் இறுதி விருந்தைச் சிலையுருவாக்கிய கலைஞனை மடத்தலைவன் அவமதித்ததனால், அவன் மடத்தலைவனுருவில் துரோகி ஜூடாஸ் இஸ்காரியட்டை இயற்றி விட்டானாம். அத்துடனமை யாமல் அவன் அதன்கீழ் எழுதிய பாசுரத்தில், இழிவினுக்குரியோய்! ஈனயூதாஸ்யான் என்று நீ செருக்கடைந்திடாதே பழியினில் அவனுனை ஒவ்வுறான் பழிசெய் தஞ்சினன் அதன்பினர் அவனே! என்று குறிப்பிட்டானாம்!2 இங்கிருந்து நாங்கள் ஆங்கிலத்தில் ஸ்ட்ராட்ஃபோர்டு என்று அழைக்கப்படும் ‘சிலாபார்’ நகர் சென்றோம். மகாகவி விர்கில் இந் நகரைப் பற்றிக் கூறுகையில், “மற்ற நகரங்கள் மாசுடைய ஆகையினால் முற்றும் அடித்தொறுக்கி முடித்தனர் கற்பாறையிதை” என்று புகழ்ந்துள்ளார். இதனை யடுத்துள்ள நகரம் ஆங்கிலத்தில் (வில் என்று பொருள்படும்)’ ‘ஆர்க்’3 ஆகும். இது கடந்து எப்பினோ சென்றேன். இறுதியில் நான் கேம்ப்ரிட்ஜ் என்று அறியாதார் கூறும், ‘பாவியா’ப் பல்கலைக்கழக நகரம் (இதனை மட்டும் திரு. அடிஸன் குறிப்பிடுகிறார்) சென்றடைந்தேன். திரு. அடிஸன் விளக்கிக் கூறாதவற்றையெல்லாம் நீங்கள் இங்கே விளக்க முறையில் கண்டுகளிக்கலாம் என்று நினைக்கிறேன். என்றும் தங்கள் ......................... கடிதம் - 5 மண வாழ்த்துப்பாக்கள் (ஜார்ஜ் மாண்டேகுவுக்கு) அரசர் கல்லூரி, மே, 2, 1736 அன்புடையீர், தாங்கள் எழுதிய மணவாழ்த்துப்பாவைப் பார்த்தபோது நானே மணமகனாயிருந்து மணமுடித்துக் கொண்டிருந்தாலல் லாமல் இவ்வளவு உணர்ச்சிகரமான மணவாழ்த்துப்பா என்னால் எழுதமுடியாது என்று எண்ணாமலிருக்க முடியவில்லை. ஆனால், அதேசமயம் அப்படி நான் மணமுடிப்பதாயிருந்தாலும், உங்களால் இவ்வளவு நல்ல பாட்டு எழுத முடியும் என்று தெரிந் திருக்கக் கூடுமாயின், உங்களைக் கொண்டே ஒரு திருமண நூல் ஒன்று எழுதுவித்திருப்பேன். தங்களைப் போன்ற காலத்துக் கேற்ற கவிஞரின் கவிதைமூலம் ஓர் ஓவியக் கலைஞரைவிட மிகுதியாகவே மணமகளான இளவரசி1 தம் வனப்புக்களை உணர்ந்துகொள்ளல் கூடும். எதிர்கால நம்பிக்கை என்னும் நற்றெய்வம் தங்களை ஆழத்தில் புதைத்து வைத்துப் புதியதோர் ‘பாண்டோராவின்’* பெட்டியை இக் கவிஞர்கள் இளவரசியாருக்கு அளிக்கக்கூடும். பல கவிஞர்கள் தம் மட்டுக்கு மிஞ்சிய வினயம் காரணமாக, மாதரிடம் இலத்தீன் பேச்செடுக்கக் கூடாதென்று எண்ணி ஆங்கிலத்திலேயே அவர்கள் புகழ் பாடிவிடுவர். இது அவர்களுக்கு நன்மையே. அப்படியும் அவர்கள் அதை அறிந்துகொண்டுவிடுவார்கள் என்று அஞ்சவேண்டுவதில்லை என்றே எண்ணுகிறேன். ஏனெனில், எழுதுபவர்களே என்ன எழுதுகிறோம் என்றும், அறிவதில்லை! நீங்கள் பொருந்தா வேண்டுகோள் ஒன்றை எனக்கு விடுத் திருக்கிறீர்கள், உங்கள் கடிதங்களை நான் எரித்துவிடவேண்டு மென்று நானும் அதேபோல விசித்திரமான ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன், என் கடிதங்களை நீங்கள் காத்துப் பேணுங்கள் என்று உண்மையில் உங்களுக்கு என் கடிதங்கள் பயனுடையவையாயிருக்கும்படி. செய்ய வேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அவற்றை எழுத்தில்லா வெள்ளைத் தாளாக அனுப்புவதுதான்! காசுபெறாத கழிவுத் தாளுக்கு அரை அணா (அரைப் பென்னி) செலவு செய்வதைவிட, ஒரு காசு பெறுமானமுள்ள தாளுக்காக அதைச் செலவு செய்வது மேலல்லவா? இனிவரும் கடிதங்கள் சற்றுச் சுவையாகவும் ‘என் அரிய ஜார்ஜ், என் அரிய ஹாரி’ என்ற தொடர்களுடையவையாகவுமே இருக்கும். ஸ்பெயினிலிருந்து ஒரு ‘டான் ஹொரேஷியோ’வும் போர்ச்சுகலிலிருந்து ஒரு ‘டான் ஜார்ஜியோ’வும் கடித மூலம் சதுரங்கமாடுவது போலிராது. ஆயினும், ஒரு விதத்தில் நம் கடிதங்கள் என்றும் சதுரங்கமாடும் கடிதங்களாகவே இருக்கட்டும். கடிதம் எழுதிக்கொண்டே நம் வாழ்நாள் முழுவதும் கழியட்டும்! என்றும் என் அருமை ஜார்ஜின் நண்பன் கடிதம் - 6 பெருமையும் சிறுமையும் தாம்தர வருமே (இதுவுமது) அரசர் கல்லூரி, மே 6, 1736 அன்புடை ஜார்ஜ், பழஞ்செய்திகளைப் பற்றிப் பேசுவதில் இன்பமுண்டு என்று தாங்கள் கூறுவதை நான் முழுமனதுடன் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், பழஞ்செய்திகளை நினைப்பதில் மென்மேலும் மகிழ்ச்சியைப் பெருக்க உதவும் புது நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் ஏற்படுகின்றன என்று என்னால் கூற முடியாது. நம் வயதில் சென்றகால இன்பங்களை எண்ணிப் பார்க்கும்போது, இன்னும் அதே வகையான இன்பங்களை நுகரும் ஆற்றல் நமக்குப் போய்விடவில்லை என்ற கருத்து மேலும் பெருமகிழ்ச்சியூட்டு கின்றது என்றே எண்ணுகிறேன். மேலும் வரலாற்றில் பிறர் செயல்களாக நாம் படிக்கும் மிகப்பெரும் நிகழ்ச்சிகள்கூட, அவற்றைப் படிப்பவர் நினைவில் தோன்றும் ஆர்வமிக்க சிறு செயல்களை நோக்க, மிகவும் முசிவுடையவை என்றே கூறலாம். வாழ்வின் இளமைக் காலச் செய்திகள் ‘பிட் வைர’த்தின்* நுண் பொடிகள் போன்றவை. அதன் சிறு பகுதிகளும் தாயக எண்ணங் களை விட விலைமதிப்புமிக்கவையும் நேர்மையும் உடையவை; அதன் இதய நாளங்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக் குறிக்கோளு ரைகள் தம் மீது பொறிக்கப் பெற்றவை. உலகெங்கும் வென்றடக்கிய அலெக்ஸாண்டர் வெற்றி யுணர்ச்சி கூட ஒரு பள்ளியின் பிள்ளைகளை அடக்கியாளும் பையன் நுகரும் மகிழ்வு நுகர்ச்சிக்கு ஈடு செலுத்தாது. சிறுவர்கள் கட்டும் போலியான கற்பனைக் குடியரசாட்சியில் அவர்கள் சின்னஞ்சிறு சூழ்ச்சித் திறங்கள், சிறு திட்டங்கள், கோட்பாடுகள் ஆகியவை அவர்கள் இளமைக்காலக் கருத்து முழுவதையும் கவர்வதுடன் நில்லாமல், நடுவயது வாழ்விற்கும் அடிப்படையாகிச் செயலாற்றலற்ற முதுமையிலும் நினைவாற்றலால் நுகரும் இன்பங்களுக்குத் தலையூற்றுக்கள் ஆகின்றன. முதுமை இரண்டாவது பிள்ளைமைப்பருவம் என்று கூறப்படுவது மற்றெல்லா வகைகளையும்விட இவ்வகையிலேயே முற்றிலும் பொருத்தமுடையது ஆகும். ஏனெனில், அவர்கள் கற்பனை வடிவில் தம் பிள்ளைமைப் பருவத்தில் மற்றுமொரு முறை வாழ்கின்றார்கள். மற்றும் சிறுவர் நிலையில் காதலின் விதை தோன்றிக் கருவுயிர்த்து அரும்பிய வகை, அதனால் இன்னதென் றறியாத இன்பக்கூச்சம், அது சார்ந்த உள்ளுணர்ச்சிகளின் மலர்ச்சி, முதன்முதல் அவைகள் சென்று படர்தற்கேதுவான பொருள்கள், பொருள்களின் தகுதிக்கு ஒவ்வாத ஆர்வமிக்க அவ் அவாக்களின் வளர்ச்சி, பொருள் அழிந்த பின்னும் அழியாது வளர்ந்த அவற்றின் உணர்ச்சிப் பெருக்கம், காதலுக்கா ளானவர்கள் தொடர்பு நீங்கினும் நீங்காத காதலின் புதுமைகள் ஆகியவையனைத்தும் முதுமையின் கற்பனைச் செல்வங்களா கின்றன. என் அரிய ஜார்ஜ், ஈட்டன் விளையாட்டுக் களங்களில் நம் வாழ்வு முழுவதும் நாம் எத்தனை கற்பனை ஆட்டங்கள் நடத்தியுள்ளோம்! ஜேம்ஸ் அரசர் காலமுதல் ஜார்ஜ் அரசர் காலம் வரை வாழ்ந்துவரும் மணமாகா முது கன்னியின் ஆடையணிகளில் ஏற்படும் மாறுதல்கள்கூட அக்கற்பனைக் களத்தில் நம் வாழ்வில் ஏற்படும் உருமாற்றங்களுக்கு ஈடாகுமா? முதுமை என்ற பால வளைவின் கீழாகத் திறந்த மதகின் வழியே ஊடறுத்துப்பாயும் கானாற்று வெள்ளமாகிய வாழ்க்கை நினைவுகளின் தாளத்திற்கேற்ப நான் என் கருத்துக்களாகிய ஆட்டுமந்தையை யோட்டிக் கொண்டு என் உள்ளக் குழலில் சிறுபண்ணூதி வந்துள்ளேன். இம் முதுமை இன்பங் காரணமாக, ஒரு பேரரசு எனக்குக் கிட்டி அதனை ஆள்வதிலும், அதனைத் துறந்து மாற்றுருவில் எங்கேனும் தனியாக முல்லைநில வாழ்வு வாழ்வதிலேயே மகிழ்ச்சி மிகுதியாயிருக்கும். இலத்தீனக் கவிஞர் விர்ஜிலின் எண்ண அலையிலிருந்து இடைக் காலப் புனைகதையான கிளீலியாவை அணுகியதும் பண்டை முல்லைப் பாணியினின்றும் தற்கால இத்தாலியப் பண்ணைக்கு என் மனம் தாவுகிறது. என் கற்பனைப் பார்வையில் நம் தலைநகரின் அரண்மனையாகிய வின்ட்ஸார் மாளிகை ரோம் அல்லது இத்தாலி அரசர் மாளிகையாகவே கனிவு பெறுகின்றது. நம் பொதுமக்கள் பேரவையை (ழடிரளந டிக ஊடிஅஅடிளே) ரோமர்களின் மூத்தோரவை (ளுநயேவந) ஆகவே எண்ண விரும்புகிறேன். எனதாருயிர் நண்பரே, தம் பழங்கதைப் பேச்சு என்னை எவ்வளவு தொலைவு இட்டுச் செல்லுகிறது என்று காண் கின்றீர்கள் அல்லவா? ஆனால், இவற்றை எழுதும் மகிழ்ச்சியை விட இவை பற்றி உங்களுடன் பேசுவதினால் ஏற்படும் மகிழ்ச்சி இன்னும் மிகுதியாகவே இருக்கும். நான் எந்நாளும் முற்றிலும் பள்ளிப் பையனாயிருந்த தில்லை. இது வருந்தத்தக்கதா அன்றா என்று என்னால் கூறமுடியவில்லை. பட கோட்டிகளை எதிர்த்துப் படை திரட்டிப் போராடுவது, கிரிக்கட்டுப் பந்தயப் போட்டியிடுவது முதலியவை பின்னினைவுகளுக்கு மிக நல்ல ஊற்றுக்கள் ஆகலாம். ஆனால், அவற்றினும் சிறு செயல்களிலிருந்து கிட்டத்தட்ட அதே போன்ற மகிழ்ச்சியைப் பெறும் கற்பனைத் திறம் எனக்கமைந்தது பற்றி இறைவனுக்கு நான் நன்றி செலுத்தவேண்டும். நான் ரோமநாட்டு வரலாறு படித்து முடித்தது கல்விச்சாலையிலன்று; அதனை யடுத்துள்ள சோலையில். என் மன்னர்கள், வீரர்கள், புத்தகப் ‘பூச்சி’கள் அல்லர்; மெய்யாகவே ஆடுமாடுகளை மேய்த்த இடையர்களும் கலப்பைகளால் ‘மண்’ணுலகைக் கீறித் துவைத்த வீர உழவர்களுமேயாவர், என் ரோமநாட்டு வரலாற்றில் உலகெலாம் ஒரு முக்குடைக்கீழ் ஆண்ட ‘முப்பெருந்தலைவர்’* சார்ல்ஸும் நீங்களும் இவ்வெளியேனுமே. அம் முறையில். தங்கள் மாறா அன்பன், .................................. கடிதம் - 7 ஆக்ஸ்ஃபோர்டு (சார்ல்ஸ் லிட்டில்டனுக்கு) அன்புமிக்க சார்ல்ஸ், நான் இப்போதுதான் ஆக்ஸ்ஃபோர்டைப் போய்ப் பார்வை யிட்டேன். அதனை ஒரு தடவை பார்த்தால், மீள எப்படித்தான் மனம் வரும்? இப்போது அதனைப் பார்த்தபின் இனித் தங்களைக் கேம்பிரிட்ஜுக்கு அழைக்க எனக்கே மனம் வராது. ஆயினும், உங்களுடன் கலந்து பேச விரும்புகிறேன். அதற்காகவாவது வரமாட்டீர்களா! ஸர் எட்வர்டு நீலை இங்கே கண்டேன். அவர் என்றுமிருப்பது போலவே இன்றும் தோற்றமளிக்கிறார். அவருடன் பேச நேரமில்லாமல் போயிற்று. அவரது மனமார்ந்த நிறைந்த நகைப்பொலி கேட்க வேண்டுமென்று எனக்கு எவ்வளவோ ஆவல்! தனியே உலாவித் திரிவதில்தான் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஆனால், இவ்விடத்தருகில் ஓடும் ஆற்றின் கரையில் உலாவிய போது, துனபங்கலந்த மகிழ்ச்சியே எனக்கு ஏற்பட்டது. ஏனெனில், இங்கேதான் - ஒரு லிட்டில்டன் இன்று உலாவப்பெறும் இவ்வாற்றில்தான் முன்பு மற்றும் இரு லிட்டில்டன்கள் ‘நீருட் கலந்தனர்’ இங்கே, பாடியாடும் ஓர் பைதல் நாள் முற்றிட நீடியோடு நீரொழுக்கருகே செல; அகல் தடங்கரை அடிநின் றகல்வுற இகலு நீர்த்தடம் இன்னுயிர் வெளவவும்; அன்பு சான்ற (ஆ, உயிர்போம் அன்பு வம்பதாம் உயிர்போயின், நல் அன்புமே!) இளவல் தன்முனைக் காத்திட ஏகியே. தளைபிணைந் தெனத் தானும் மடிந்தனன் இணையிழந் தனன் இகலினன் தன்னுயிர்; பிணையு மன்புத் துணைவரீர்! உம்செலவு அழுங்கல் சாலுவதோ? அன்று! இகபரம் ஒழுங்கின் ஒன்றாய் நுகருதிர் ஒப்பவே! யாம் அழுங்குதல் கண்டனனோ, இணை தாம் அகன்தடம் ஆடுதல் கண்ணுறான், கொடி நெடுந்தலை தாழ்த்துக் குழைந்துளம் மடிந்து யாற்றின் புத்தேள் வளைந்தேகியே கோடுவன் சுழலார்ந் துயிர்த்தேங்கிப்பின் கூடும் மற்றொரு லிட்டில்டன் என்று கொண் டாடும் இன்று குமிழியிட் டோங்கியே; துணையிழந் தினித் துயருறல் வேண்டிலான்; துணைக்கிணை தனியோர் முதலெய்தியே. இப் பாடலால் தம் நற்சுவைக்குத் தொந்தரவு கொடுப்பதற்கு மன்னிப்பீர்களாக; ஆக்ஸ்ஃபோர்டு மனத்தகத்தே தூண்டிய உணர்ச்சிப் பயன்தான் அது. அதனிடை உலாவுதலால் அவ்வுணர்ச்சி கருத்துயிர்த்துத் தம் நட்பினால் உருவம் பெற்றது. அதன்படி அன்பரீர், உம் நண்பன், ...................... கடிதம் - 8 மதநம்பிக்கையும் பெண்டிரும் (ஜார்ஜ் மாண்டேகுவுக்கு) அரசர் கல்லூரி, மே 30, 1736 அருமந்த ஜார்ஜ், தங்கள் நயமார்ந்த உரைகளால் பெட்ரோனியஸ் ஆர்பிட்டர் நூலில் தங்களுக்கு எவ்வளவு ஈடுபாடு ஏற்பட்டுள்ளது என்று காண்கிறேன். அவரைத் தாங்கள் மனமாரப் பாராட்டு வதையும் நான் கேட்டிருக்கிறேன். ஆனால், தங்கள் பாராட்டைவிட எனக்கு மகிழ்வூட்டுவது யாதெனில், அப்பாராட்டின் பயனாக அவரைப் பின்பற்றி நீங்கள் உரை இடைகலந்த பாட்டு எழுதுவதே. இதற்கு எதிராக நான் உங்களுக்குப் பாட்டு இடைகலந்த உரைநடைப்பகுதி ஒன்றை அனுப்ப எண்ணுகிறேன். இங்கே நான் இங்ஙனம் குறிப்பது தாங்கள் விரும்பியபடி உரைவிளக்கத்துடன் கூடி எழுதப்பட்ட கேம்பிரிட்ஜ் பாராட்டு பாடலையேயாகும்.* அதில் ‘தாவில்லை’ (கேடில்லை) என்னும் படியானவற்றையே பகர்த் தெழுதி யுள்ளேன். ஆயினும், விடுபட்ட இதுவும் அனுப்பப்படுவதி லுள்ளதைவிடக் கேடுடையதாய் இருக்கமுடியாது என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாகும். அணிமையில் “போலிச் சமயம் பற்றி ஃபிலேமனுக்கும் ஹிடாஸ் பிஸுக்கும் இடையே நிகழும் உரையாடல்” என்ற முகப்புடன் ஒரு சிறு வெளியீடு வந்துள்ளது. இதை ஆக்கியவர் மாக்டலன் கல்லூரி உறுப்பினரான திரு. கவன்ட்ரி என்பவர். அவர் ஆண்டில் இளைஞராயினும், அவர் நூல் மிகவும் நயமுடையதேயாகும். நகரத்தில் அது கிடைக்கவில்லையானால், பாக்களுடன் நான் அதை அனுப்புவேன். இவ்வாசிரியர் குருட்டு நம்பிக்கைகளுக்கு ஒரு புதுக்காரணம் கூறி விளக்கியுள்ளார். அது நேர்மையுடையதாகவும் எனக்குப்படுகிறது. அவர் கூறும் காரணம் வேறு எதுவுமன்று; காதல் முறிவினால் ஏற்படும் கசப்பேயாகும். அவர் இச்செய்தியைப் பரக்க ஆராய்ந்து முடிவுகட்டவில்லையாயினும் பொதுவாக இக் குருட்டு நம்பிக்கைகளனைத்தும் பெண்களின் காதலார்வத்திலிருந்தே பிறக்கின்றன என்கிறார். உண்மையில் பதினாலுக்கும் இருபத்து நாலுக்கும் இடைப்பட்ட பெண்கள் எவரும் அவர் கோட்பாடுகளை ஏற்பார்கள் என்பதில் ஐயமில்லை. தம் ஆர்வத்துக்குரியவர் இறந்துவிட்டால், தம் அன்பின் திறமத்தனையும் மறு உலகத் தினுடனேயே - அவர் சென்றிருக்கும் உலகத்துடனேயே இணைக்கப்பட்டுவிடும் என்பதையும் பெண்கள் எவரும் உண்மையில் ஒத்துக்கொள்ளவே செய்வார்கள். காதலரை யிழந்தவர்கள் யார்தான் குமரியன்னையின் நோன்பிருக்க மாட்டார்கள்? யார்தான் தம் காதலருக்கு நடுகல்லும் மசூதியும் கட்ட மாட்டார்கள்! எஃபீஸியஸ் கோயிற் கன்னியரைப் போல* ஓயாது ஒழியாது அதனைக் கண்ணீராற் காத்து விழித்திருக்க மாட்டார்கள்! இறந்தபின் காதலருடன் கடைசி யுறக்கங்கொள்ள விரும்பாத பெண் ஒரே ஒருத்தியைப் பற்றித்தான் நான் கேள்விப் பட்டிருக்கிறேன். அது ஒரு ஜெர்மன் மாது. வழக்கம்போலக் கணவன் இடதுகைப் பக்கம் இறுதித்துயில் கொள்ள மறுத்து அவள் தனி மசூதியில் துயில ஏற்பாடு செய்தாளாம்! ஒருவேளை ஜெர்மனியிலுள்ள இவ் இடதுகைப்பக்க வழக்கத்தை அவள் வெறுத்திருக்கக்கூடும். நேற்றுக் காதல் உறுதிபற்றிய சிறிய உரையாடல் பாட் டொன்று தென்பட்டது. அவ்வுரையாடல் பிரயாணி ஒருவனுக்கும் ஒரு கூழைப்புறாவுக்கும் இடையே நிகழ்கின்றது. பெடைப் புறாவின் காதற் பிரிவுத் துயராக்கி நான் அதனை மொழிபெயர்த்திருக்கிறேன். பிரயாணி : இரங்கு தீங்குரல் புறவமே இரங்கொழித் தேகுதி! ஏகுதி! மரஞ்செறிதரு காட்டிடையே தனி மயங்கல் ஈங்கேனோ? புறா : வருந்துபுன்கணீர் காணுதி ஈங்கிது காதலுரவோர்க்கே? பிரயாணி : கரந்து சூழ்வலை வில்லிவை காதலர்க் கொன்றன அஞ்சிலையோ? புறா : புரிந்துகொல்கில அவையெனில் என்துயர் கொல்லுமென் றிருப்பேனே? இவ் வெள்ளை வரிகள் கண்டும் என்னை நீங்கள் மன்னிப்பீர் களென்று நம்புகிறேன். அதிலும் இவை முற்றிலும் மொழி பெயர்ப்பாக எழுதப்பட்டுவிடவில்லை. இயற்கையாய் என்மாட்டு நிகழ்ந்த இரக்க உணர்ச்சியின் பயனாகவே இவை எழுந்தன. ஆற்றியும் ஆறாத துயருள் ஆழ்ந்து தவிக்கும் என் விதவை மணிப்புறாவைக்கண்டே இவ் வரிகளை நான் எழுதினேன். பண்பறியா வேட்டைக்காரன் ஒருவனின் துப்பாக்கியால் அதன் துணை உயிர்நீத்தது. அதன்பின் அது செயலற்றுக் கையிழந்தவர் போல் கதறிக் கூவுவது கேட்க எவர் மனமும் கனிவுறாமல் இராது. அதனைக் கண்டிரங்கும்போது என் மனம் தனக்கெனத் துயரடைவது போலவே இருக்கிறது. உண்மையில் மனித வகுப்பில் ஒரு பெண் இதே நிலையில் எப்படித் துன்பப் படுவாளோ அதே வகையிலேயே இப் பெண்புறாவும் துன்பப்படுகிறது என்பதில் ஐயமில்லை. “என்ன செய்யலாம் அம்மா! அவர் மிகவும் நல்லவர், ஆட்டுக்குட்டி போன்ற சாது. அவர் போய்விட்டார். நீ அபாக்கியவதிதான். ஆனால், இனிப் பொறுத்துத்தானாக வேண்டும். மனிதனாகப் பிறந்தாலும் பிராணியாகப் பிறந்தாலும் வருகிற துன்பத்தைப் பொறுத்துத் தானாக வேண்டும். நீ அறிவுடைய பறவையின மல்லவா? பொறுத்துக்கொள்” என்று அதற்கு நான் ஆறுதல் கூறிவருகிறேன். காதல் பிரிவு பறவைகளறிவைக்கூடப் பாதிக்குமானால் மனிதரைப் பாதிப்பதில் என்ன வியப்பு. இதே உணர்ச்சியுடன், உங்கள் உண்மை நண்பன் ................ கடிதம் - 9 கவிதையும் அறிவு நூல்களும் (ரிச்சர்டு வெஸ்ட்டுக்கு) ஆகஸ்டு 17, 1736 அருமை வெஸ்ட்டு, கவிஞர் கிரே பர்ன்ஹாமில் வந்திருக்கிறாராம். ஆயினும், என்ன காரணமோ, அவர் ஈட்டனுக்கு வராதிருப்பது வியப் பாகவே யிருக்கிறது. நம் நால்வர் சந்திப்பின்* இடமாகிய இதனருகில் வந்தும் அதைப் பார்வையிட வராமலிருக்க முடியுமா? நால்வரும் ஒன்றுகூடுவது என்ற எண்ணமே மிக இனிய தொடர்புகளை எழுப்பவல்லது. நம் நால்வருக்கும் தாயக முறையுடையது இந்த ஈட்டன் கல்விச்சாலையே. இப்பொது மரபிலிருந்து தொடங்கி நாம் இரு கிளைகளாகப் பிரிந்து ஒரு கிளை ஆக்ஸ்ஃபோர்டுக்கும் மறு கிளை கேம்பிரிட்ஜுக்கும் சென்றுவிட்டோம். இம்மரபின் தலைப்பிள்ளை போன்ற தாங்கள் தாயக வீட்டுச் செல்வத்தின் முழுச்சொந்தக்காரராய்ப் போய்விட்டீர்கள். அதன் வட்டச் செலவுத் தொகைக்கே உரிய இளவல்கள் போன்ற நாங்கள் மூவரும் - அதாவது லங்காஷயர், தாமஸ், ஹோரேஸ் ஆகியவர்கள் அவ்வழிவரும் சிறு செல்வத்தையே மூன்றாகப் பங்கிட்டுக் கொண்டுள்ளோம். தங்களை விட்டுத் தங்கள் செல்வத்தை நாங்கள் அவாவ வில்லை யாயினும், தங்கள் செல்வத்தை விட்டாவது தங்களைப் பெற அவாவா திருக்க முடியவில்லை. நான் கூறிய உருவகத்தையே இன்னும் நீட்டிப் பார்ப்பதானால், மூத்த தமையன் நிலையிலுள்ள நீங்கள் அப்படியே தந்தை செல்வமான கவிதையை வைத்தாளு கிறீர்கள். ஆனால், இளவல்களாகிய நாங்களோ, தருக்கம், மெய் விளக்கம் (யீhடைடிளடியீhல) கணக்கியல் (அயவாநஅயவiஉள) அதில் ஏதேனும் ஒரு தொழில் துறையை மேற்கொண்டு பிழைத்துப்போக வேண்டியவர்களாயிருக்கிறோம். இவ்வகையில் உண்மையிலேயே நானும் ஓர் இளவலாக நேர்ந்துள்ளது. அப்படியும் எத் தொழில் துறையிலும் தேர்ச்சி பெறாது போய்விட்டால், போதிய செல்வம் (கவிதை) உடைய நீங்கள் என்னை ஆதரித்து உங்கள் பெருந்திரட் செல்வத்திலிருந்து எனக்குச் சிறிது உதவுவீர்களா? தண்கலைப் பொதிகையின்* மேன்மைமிக்க இன்னுண வுண்டு பழகிய எனக்குக் கலையன்னை* தரும் மற்ற முரட்டு உணவுகளை நாடி இறங்க மனம் வருவதில்லை. தருக்கந்தரும் வாதஉடை எனக்குப் பிடிப்பதில்லை. அது மட்டுமன்றி, வாதமூலம் நிறமற்றது என நிலை நிறுவிய உடையை அணிவதையும் நான் வெறுக்கிறேன். மெய்விளக்க நூலார் பலரின் கல்நெறியிலும் நான் விழுந்து பல்லுடைக்கமுடியாது. இவை பயனுடையவை என்பதை நான் அறியாமலில்லை. அவற்றை ஓரளவு கற்றுணரவும் நான் விரும்பாமலில்லை. ஆனால், அவற்றை மட்டும் கற்பதால் நாகரிக இலக்கியத்துக்கு ஒருவன் புறம்பாகிறான். இவ்வுலக அறிவே அவனுக்கு இல்லாது போகிறது. இவற்றில் ஊடாடுவார் பலருக்கும் உலகைத் தாமாக அறியும் வாய்ப்புக் குறைவு. அவற்றிலேயே அடைபட்டுக் கிடப்பதால் அறிந்தவையும் மறந்துபோய் வரவர அவ்வறிவு குறைந்து போகவே இடமுண்டு. கணக்கியல் பற்றிய மட்டில், அதன் உச்சநிலைப் பேரறிஞர்கள் உலகிற்குப் பெரும் பயன் விளைவிப்பவர்களே. ஆனால், இரண்டாந்தரத்தவர் பெரும்பா லோரும் ஒரு சிறிது உரையாடி ஊடாடுவதற்குக் கூடத் தகுதியற்ற வர்கள். அவர்கள் விண்மீன்களிடை உலவுவர்; ஆனால், அவற்றினூடாகக் காணும் ஆற்றல் அவர்களுக்கு இருப்பதில்லை. நான் இங்கே குறிப்பதெல்லாம் நான் அத் துறையாள ரிடையே காண்பதைமட்டுமே; அவர்களிடையே இருந்து வாழ்வதனால்கூட எனக்கு வேறு எதுவும் எழுதமுடியாமல் போகிறது. கடிதம் எழுத நினைக்கும் போதெல்லாம் என் கண்முன் நிற்பது இணை சதுரமும் (சாடிஅbடிரள) இயல்பு விதிகளும் (யஒiடிஅள) தான்; இணை சதுரத்தின் எதிர் பக்கங்கள் ஒப்பு டையவை! முக்கோணத்தின் மூன்று கோணங்களும் சேர்ந்தது ஓர் நேர்க்கோணம்! அப்பப்பா! இவையெல்லாம் எவருக்கும் தெரிந்தவை தானே. இங்ஙனம் கண்டிக்கும்போது எனக்கு நினைவு வருகிறது. தங்கள் கடிதங்களிலும்கூட இதே வகைப்பண்பு ஒன்று இருக்கிறது. உங்களை ஒரு தடவை பார்த்தவர்கள் உங்களை உள்ளும் புறமும் அறிந்துகொள்வார்கள். உங்கள் கடிதங்களிலோ உங்களையே தான் பார்க்கலாம். அவற்றைப்படிக்க இன்பமாக இருக்கிறது. அதுவும் உங்களுடன் பேசுவதில் உள்ள இன்பத்தைப் போல்தான். ஆனால், ஒரே விஞ்ஞானச் சூழலில் இருக்கும் எனக்கு இதுவும் ஓர் அரிய விடுதலையே. உங்கள் உண்மை நண்பன், ................. கடிதம் - 10 ஆல்ப்ஸ் யாத்திரை (இதுவுமது) ட்யூரின், நவம்பர் 11, 1739 ஆம், பாடல்சான்ற பண்பார் இத்தாலி நாட்டு மண்ணில் தான் நிற்கிறோம் இப்போது! ஆயினும், உண்மையிலேயே இத்தாலியில் நிற்கிறோமா என்று வியப்பு அடையாதிருக்க முடியவில்லை. (எதிர்பார்த்ததற்கும் காண்பதற்கும் உள்ள வேறுபாடு அவ்வளவு!) கேனிஸ் மலையின் மிக உயர்ந்த கொடுமுடியில் மனவேறு பாட்டுப் பேய் தாண்டவமாடியது. அது புளிப்புமிக்க சாராய உருவில் தோன்றி ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலுள்ள மலைவாணர் நரம்புகளுள் புகுந்து என்மீதும் கிரே மீதும் அவர்களை ஏவிவிட்டது. எங்கள் பெட்டி (நாற்காலி) வண்டிகளைத் தூக்கிச் சென்ற அவர்கள் பெட்டியுடன் பெட்டி மோதவிட்டனர். வெண் முகில்களே தோழராக, இம்மென்னுமுன் பல்லாயிர அடி செங்குத்தான பாறைகளின் மீதிருந்து ஆழக் கசங்களில் விழுந்து விடுவோமோ என்ற நிலையில் இடுங்கிய ஆபத்தான பாதையில் செல்லும் எங்கள் மனநிலையை நீங்களே ஊகித்துக்கொள்ளலாம். வெள்ளாடுகளின் பிளவுற்ற குளம்புகள்கூட நடக்கமுடியாத அப்பாதை! சிறிது அசதி ஏற்பட்டால், மீளமுடியாத பனிமூடிய ஆழ்ந்த கசங்களுள் உயிர் வாழ்வைத் தொலைக்க வேண்டியது தான்! நாங்கள் லையான்ஸ் நகரிலிருந்து புறப்பட்டு எட்டு நாளாகிறது. ஆல்ப்ஸ் மலை ஏறத் தொடங்கியும் நான்கு நாட்களாயின. கரடு முரடான கொடும் பாறைகளே எங்கும் காட்சியளித்தன. மக்கள் அதற்குமேல் கரடு முரடானவர்கள். இத்தகைய இடத்தை, என் அருமை வெஸ்ட்டு, இனி எக்காலமும் மீண்டும் கண்ணுறா திருக்கும்படி கடவுள் காப்பாற்ற வேண்டும். கேனிஸ் மலையடிவாரத்திலேயே நாங்கள் எங்கள் வண்டியை விட்டிறங்கி அதனைப் பூட்டுப்பூட்டாகக் கழற்றிக் கட்டிக் கோவேறு கழுதைகளின் மீது ஏற்றிக்கொண்டோம். தண்டயங்களுடன் இணைத்த கை நாற்காலிகளில் நாங்கள் எடுத்துச் செல்லப்பட்டோம். நாய்த்தோலால் செய்யப்பட்ட சட்டை, கையுறை, தோள் துண்டு (அரககள), கரடித்தோல் போர்வை ஆகியவற்றை அணிந்து கொண்டோம். மலையுச்சியில் வந்தபோது நாற்புறமும் மேலும் கீழும் கவிந்து மூடிய பனிக்காட்டைப் பார்க்க வேண்டுமே! இப் பனியுலகை விட்டுத் தப்பிச் செல்லுவோம் என்று என்னால் நம்பக்கூடவில்லை. மலையின் மறுபுற இறக்கம் இரண்டு லீக் (ஆறு கல்) தொலைவுதான் இருந்தாலும், கிட்டத்தட்டச் சுவர்போல் செங்குத்தாகவும், கொடும்பாறைகள் நிறைந்ததாகவும் இருந்தது. இத்தகைய பேய்ப்பாதையில் எளிதில் நடமாடித் திரிவதே வியப்புக்கிடமானது. ஆனால், மனித நம் அறிவுக் குட்பட்ட மனிதர் - நடக்கவே முடியாத அச் சரிவில் மலைவாணர் கள் ஒரே ஓட்டமாக ஓட முடிந்தது! இதற்கிடையே எங்களையும் எங்கள் வேலையாட்களையும் சேர்த்துப் பன்னிரண்டு மனிதர் களையும் எங்கள் மூட்டை முடிச்சுகளையும் தூக்கிச் செல்லும் கோவேறு கழுதைகள் ஆகியவற்றையும் அவர்கள் இழுத்துச் செல்ல வேண்டியவர்களாயிருந்தனர்! ஒருநாளைக்கு முன்பு இங்கே வருந்தத்தக்க நிகழ்ச்சி ஒன்று ஏற்பட்டது. அது மிகவும் எதிர்பாராததாதலால், என் பிரயாண அனுபவம் முழுவதையுமே கசப்பாக்கப் போதியது. பயணத்தின் போது நான் என்னிடமிருந்த சார்ல்ஸ் மன்னர் வளர்ப்பினம் சார்ந்த ஒரு சடைநாயைக் கொண்டு வந்திருந்தேன். காலாற அதை வண்டிக்கு வெளியே விட்டு வைத்திருந்தோம். அதுவும் குதிரை களைச் சுற்றிச் சுற்றித் தத்திப் பொத்தி நடந்து கொண்டிருந்தது. மனத்தைக் கவரத்தக்க இக் காட்சியினிடையே தேவதாரு நிரல் களிடையேயிருந்து திடுமென ஒரு குட்டி ஓநாய் வந்து அதைக் கழுத்தைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு போயிற்று. என்ன செய்தி என்று திரும்பிப் பார்க்குமுன் அக் குட்டி ஓநாய் நாயுடன் உயர்ந்த பாதைப்பக்கம் ஓடிச் சென்றுவிட்டது. இடுங்கிய பாதையில் கோவேறு கழுதைகளின் பின்னிருந்த வண்டிக்காரர்கள் அதனைச் சென்றெட்ட முடியவில்லை. ஒருவன் சாட்டையா லடித்தும் அது ஓநாயை இன்னும் வேகமாகத் துரத்தியதேயன்றி வேறுபயன் தரவில்லை. வண்டிக்காரர் கெடுபிடி கண்டு விழித்த நான் கூகூ என்று கதறினேன். ஆனால், போன நாய் போனதாகவே முடிந்தது. பட்டப்பகலில் நடுஉச்சிப் போதில் சுடமுடியாமல் ‘எக்கச் சக்கமாக’த் துப்பாக்கியுடன் நின்றிருந்த எங்கள் கண்முன்னேயே என்னால் கண்போல் பாவித்து வளர்க்கப் பெற்ற அந் நாய் பறிபோனது என் பிரயாண உணர்ச்சி முழுமையிலும் உள்ள உற்சாகத்தைக் கெடுத்து விட்டது. சாம்பெரி என்னுமிடத்தைக் கடந்து வரும்போது அப் பக்கம் இலத்தீன மொழியில் ஒரு கல்வெட்டு இருப்பது கண்டு அதனைப் பகர்த்தெடுத்துக் கொண்டேன். மிகமோசமான பாழுங் கிடங்கு போலிருந்த இவ்விடத்திலும் உயர்ந்த பாறைமீது செதுக்கப்பட்டிருந்த இக் கல்வெட்டு மிகச்செப்பம் வாய்ந்த இலக்கிய நயமுடையதாயிருந்தது என் வியப்பைத் தூண்டியது. பாஸதே சூஸே யருகில் இரு மலைகளுக்கிடையில் பாறைமீது உயரமான ஒரு கோட்டை கட்டப்பட்டிருந்தது. அதன்பின் மூன்று லீக் (ஒன்பது கல்) நீளமுள்ள இடைவழிப் பாதை ஒன்றின் வழியாகச் சென்று டியூரின் நகரை யடைந்தோம். இத்தாலிய அழகிளஞ் செல்வியின் முதற் புன்முறுவல் போன்றிலங்கிய இந்நகர் நான் பார்த்த நகர்களனைத்திலும் வனப்பு மிக்கதோர் சிறுநகராகும். புறச்சேரிகள் பத்திருபது. அடுக்கப்பட்டமைந்த அருவருக்கத்தக்க தற்கால நகரங்களில் ஒன்றல்ல அது. அழகிய வேலைப் பாடமைந்த சின்னஞ்சிறு முத்துக் கோவைபோல அது அமைந்திருந்தது. தூய்மையும், கட்டமைப்பும், வடிவுச் சிறுமையும், புதுமையும், ஒழுங்கும் இப் பழநகரின் சிங்காரச் சிறப்புக்கள். வெளிப்புறம் எளிமை தோன்ற அமைந்த மன்னர் அரண்மனை உட்புறத்தில் கலைச் செல்வம் நிறைந்து காணப்பட்டது. கண்கவர் வண்ணங்கள், பொன் முலாம் பூச்சுக்கள், நிலைக் கண்ணாடிகள் ஆகிய மதிப்பேறிய வேலைப்பாடுகள் உடையதாகவும் சிதறிக்கிடந்த அழகுமேடை யாகவும் அது காட்சியளித்தது. மக்கள் உள்ளங்கவர் மன்னன் கோயில் இது என யாவரும் கூறிவிடலாம். நேற்றிரவு இத்தாலியக் களிநாடகம் (ஊடிஅநனல) ஒன்று கண்டோம். அது குட்டிச்சாத்தானரங்கில் குறளிகள் ஆடிய கூத்துப் போன்ற புரளி நாடகமாகவே இருந்தது. இது தவிர “லா ரெப்ரெஸந்தா ஃஜியோனெ தெல் அனிமா தன்னத்தா” என்ற பெருமித வீரமுடைய உயர் நாடகம் (கூசயபநனல) ஒன்றும் பார்வையிட்டோம் பழிகாரியாகிய பாவை ஒருத்தி மும்மை இறை வடிவின் (கூசinவைல) முன் வந்து பணிந்து வணங்கி நிற்கிறாள். இயேசு கிறிஸ்துவும் கன்னிமரித் தாயும் உள்வருகின்றனர். திருமகனார் சீற்றங் கொண்டு சினந்து செல்கிறார். ஆனால், அன்னை இரக்கப்பார்வையுடன், `பிள்ளை சினமடைந்துள்ளான்; நான் என்னாலானதைச் செய்கிறேன்’ என்கிறாள். நாடகம் முடிந்தபின் பெருமக்கள் தங்கியிருந்த இடத்தில் நாங்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டோம். பல விளை யாட்டுக்கள், சீட்டாட்டங்கள் நடைபெற்றன; மொத்தம் 78 பேர் இருந்தோம்; ஆங்கிலேயரும் சிலர் இருந்தனர். லிங்கன் பெரு மகனார், ஸ்பென்ஸ், நம் கவிதைப் பேராசிரியர் மற்றும் பலர் இருந்தனர். வாய் திறக்கவருமோ வராதோ என்னும்படி பேசாமடந்தையாக இருந்த ஓர் ஆங்கிலேயரும் உடனிருந்தனர். மணிக்கணக்காகப் பொம்மையாயிருந்த அவர் தற்செயலாக ‘நல்லது’ என்று வாய் திறந்து ஒரு சொல் சொல்லவே அப் புதுமைகண்டு அனைவரும் சிரித்து விட்டோம். இதனால் அவர் வாய் மீண்டும் அடைத்துக் கொண்டது. நான் ஒன்றும் விவரமான செய்திகள் எழுதுவதில்லை என்று நீங்கள் குறை கூறுவதை எண்ணியே இவ்வளவு நுணுக்கமான செய்திகளைக் கூடக் குறித்தேன். போதுமா? நின்றதும் இருந்ததுமாக எவ்வளவு செய்தி அப்பா! நிற்க. தற்போதைக்கு உங்கள், ...................... கடிதம் - 11 நாட்டுப் பண்பாடுகள் (இதுவுமது) ஃபிளாரென்ஸ், ஜனவரி 24, 1740 அருமை வெஸ்ட்டு ரோமுக்குச் சென்றபின் உங்களுக்கு ஏடுகள் எத்தனை எழுதித் தள்ளுவேன் என்று தெரியாது. ஆனால், ஃபிளாரென்ஸி லிருந்து எதுவும் அனுப்ப மனம் வரவில்லை. எத்தனையோ சிறு செய்திகள் பார்த்துப் புன்முறுவலுடன் நுகர்தற்கானவை இருக்கத்தான் செய்கின்றன. ஆயின், அட கடவுளே, ஒன்றேனும் கிறுக்கித்தள்ளத் தக்கதாயில்லை! வாய்மையை உரைப்பதனால், ‘கலே’யில் வைத்து எல்லாம் புதுமையும் வியப்புமாகவே இருந்தன. இங்கே தலைக் கோமகன் சித்திரச் சாலையைப் பார்ப்பதுபற்றி அங்கே பரபரப்புடன் கண்வு கன்டுகொண்டிருந்தது எனக்கு நினைவிலிருக்கிறது. ஆனால், அச்சாலையினூடாக நடமாடும் இப்போது எத்தகைய உணர்ச்சிக்குமிடமில்லாது சப்பென்றிருக்கிறது. நம் ஸென்ட் பால்ஸில் செல்லும்போது இருப்பதுபோலவே எல்லாம் சாதாவாக இருக்கிறது. நம் நன்மதிப்பைப் பெற்ற பல பெருமக்கள் சிலைகள் இருக்கின்றன. ஆனால், எங்கே பார்த்தாலும் என்றும் எந்நேரமும் பார்க்கும் காட்சிகளையே பார்த்தாற் போலிருக்கிறது. மனிதரும் அதுபோல் ஒருவரைப் பார்த்தால் ஒருவரைப் பார்க்க வேண்டிய தில்லை. எல்லாரும் ஒரே மட்ட ரகமாய் ஒரே கம்பனிச் சரக்குகள் போல் இருக்கின்றனர். நிகழ்ச்சிகளிலும் உரையாடல்களிலும் இப்படியே. இங்கிலாந்தில் தேர்தல் நாட்களில் காணப்படும் அரவம், குடிகாரரிடையே காணலாகும் அமளி குமளி, பொது மகளிர் பேசுவது போன்ற வெற்று ஆரவாரப் பேச்சு இவையே நிரந்தரமாக எங்கும் எப்போதும் காணப்பெறுகின்றன. சிலசமயம் இவ்வகை ஒரேதர மக்களே பல உடை பேதங்களுடன் மடாதி பதிகளாகவும், மணமான பெண்களை அடுத்து ஒய்யாரக்காதல் புரிபவர்களாகவும் மற்றும் தோற்றமளிக்கிறார்கள். இப்பயணங்களாலெல்லாம் நான் காணும் ஓர் உண்மை யாதெனில், நாட்டுப் பண்பாடு பற்றிய மட்டில் ஏடாகோடமா யுள்ளவர்கள் ஆங்கிலேயர்கள் மட்டுமே என்பதுதான். ஃபிரஞ்சுக் காரர், இத்தாலியர் ஆகியவர்களிடையே வழுக்கள், இழுக்கங்கள், குறைபாடுகள் இல்லை என்பதில்லை. ஆனால், அவையெல்லாம் தேசிய வழுக்கள், தேசிய இழுக்கங்கள், தேசியக் குறைபாடுகளே. அவற்றுள் ஒன்றும் தனிப்படத் தனி மனிதரிடம் கவனிக்கத் தக்கவையாக இருப்பது கிடையாது. இங்கிலாந்தில் மக்கள் குணாதிசயங்கள் மனிதருக்கு மனிதர் எவ்வளவோ வேறுபடு கின்றன. ஒவ்வொருவர் குறைகளும் அவர்களுக்கே சிறப்பானவை. இப் பலபல வகை வேறுபாடு ஓரளவு நம் தட்ப வெப்ப நிலையினாலும், ஓரளவு நம் அரசியல் முறைகளாலும் ஏற்படுவதாகும். முதலது காலாகால மாறுபாடுடையதாய் நம்மையும் சித்திர விசித்திரமுடையவர்களாக்கி அமைக்கிறது. மற்றதோ அவரவர் விருப்பு வெறுப்புக்களின்படி அவரவரை நடக்கவிட்டு வைக்கிறது. இவ் விசித்திர வேறுபாடுகளை எதிர்க்காது ஒட்டியொழுகும் ஒப்புரவு ஒருவருக்கு உண்டானால், இங்கே அவர் சுமூகமாக வாழலாம். ஆனால், ஆங்கிலேயர் வாழ்க்கை கட்டணச் சீட்டில்லாத ஒரு நாடகக் காட்சியாய்க் களிப்பூட்டவல்லது. லண்டனில் ஒருவாரம் நிகழும் நிகழ்ச்சிகள், இத்தாலியில் ஒரு ஆண்டுக்குச் செய்திகளாய்விட வல்லன. இத்தாலி நாட்டில் மனிதர் வாழ்க்கை யிலேயே குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் இரண்டே இரண்டுதான். ஒன்று மணவினை நிகழ்வது; மற்றொன்று மணமான பெண் பகட்டாக விளையாட்டுக் காதல் புரியும் ஒரு தோழனுடன் ஊடாடுவது. எவரைக் கண்டாலும் கேட்கப்படும் சாதாரணக் கேள்விகள் கணவன் யார், போலிக் காதல் கிழவர் யார் என்பவையே. இவை தெரிந்தால் அவர்களைப் பற்றித் தெரிய வேண்டியவை யெல்லாம் தெரிந்தாயிற்று. இந்த மட்டரக உணர்ச்சியைப் பார்க்க ஸ்பானிய நாட்டுப் போர் வரலாறு ‘தாவிலை’! இச்சிறு செயல்களை நல்ல வினையமாகக் கொண்டு செலுத்தும் வகையைப் பார்த்தால் இரு நாட்டவருமே ஸ்பானிய நாட்டினர் என்று தோற்றும்! ஆம், நான் ஐரோப்பா பற்றிக் கூறும் ஒரு பழஞ்சொல் நினைவிருக்கிறதா? அதைக் கேட்க நீங்கள் எப்போதும் சிரிப்ப துண்டல்லவா? ஆம் “எல்லாரும் எல்லாம் செய்கிறார்கள். ஒன்றாலும் ஒன்றும் பயன் விளைவதில்லை.” இவ்வுரை முற்றும் உண்மை என்பதை இப்போது காண்கிறேன். என் புத்தாராய்ச்சி களையும் எண்ணக் கோட்டைகளையும் சுருங்கிய செப்பமிக்க அளவிலேயே தருகிறேன் என்பதை நீங்கள் கவனிக்கலாம். பழைய இளவரசர் பற்றிய கதை ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். மூன்றாண்டுப் பயணம் செய்து அவர் ஒரே ஒரு தேங்காய் ஓடு ஒன்று கொண்டுவந்தாராம்! அதை உடைக்க, அதில் ஒரு பட்டுச்சவுக்கச் சுருள் இருந்தது. அதில் உலகின் அரசர் அரசியர், நாடுகள் பற்றிய யாவும் தீட்டப்பட்டிருந்தனவாம். ஆனால், , பட்டுறையை அவிழ்த்தபோது உள்ளேயிருந்து ஒரு சிறு குச்சுநாய் வெளிவந்து தலை குலுக்கிக் காது நிமிர்த்து நடன மாடிற்றாம்! என் கடிதங்கள் இப் பழங்கதையை உங்களுக்கு நினைவூட்டவல்லன. தங்கள் பழம் பாடலுக்கிணையாகப் பாடல் கிடைத்தால் அதை அனுப்புவேன். அதற்கிடையில் இப் போதைக்குத் தங்கள் பாடலுக்கு நன்றி. தங்கள் என்றும், ....................... பி.சே.: கடிதம் முடிந்தபின் ஒன்றும் எழுதவில்லையென்ற உணர்ச்சி உள்ளது. ஆனால், இப்போதும் மாறுபாடற்ற நிலை தான். எழுதியதையே திரும்பத் திரும்பவும் எழுதிவிட்டேன். இனி மறு கடிதம். கடிதம் - 12 ‘பண்டைப் புகழ்’ ரோம் (இதுவுமது) ரோம், ஏப்ரல் 16, 1740 (சூ.ளு.) என் அரிய வெஸ்ட்டு, புதுமைகள் என்றும் புதுமையாயிருப்பதில்லை மேலும் இங்குள்ள பல புதுமைகளும் முன்பே நமக்கு வரலாறு, பயண விரிவுரை, கேள்வி ஆகியவற்றில் அடிபட்டவையே. ரோம் நகரிலுள்ள ஸென்ட் பீட்டர் கோயில்பற்றி நான் உங்களுக்கு எழுதுவது வெஸ்ட்மிஸ்டர் ஆபிபற்றி நீங்கள் எனக்கு எழுதுவது போலத்தான் இருக்கும். ஆயினும், நட்புணர்ச்சியின் தூண்டு தலால் என் எண்ணங்கள் மூலம் சில இடங்கள் பற்றிக் கூறுவேன். மினர்வா மெடிக்கா (மருத்துவதேவி) கோயிலின் அழிபாடு குறித்த அச்சுப்படம் நீங்கள் பாத்திருக்கலாமே. அத்தகைய அகன்ற பரப்பின் நடுவில் ஒரு சிங்கார மாளிகையிலிருப்பதாகப் பாவித்துக் கொள்ளுங்கள். இது ஒரு தோட்டத்தின் நடுவில் அமைந்துள்ளது. சிறிது தொலைவில் இரண்டு சுரங்கக் குகைகள் அல்லது நிலவறைகள் இருக்கின்றன. இவற்றில் அகஸ்டஸ் காலப் புதைதாழிகள் வைக்கப்பட்டுள்ளன. பல சுவர் மாடங்களில், எழுத்துக்கள் செதுக்கப்பட்ட தாழிகள் அவற்றுள் இருக்கின்றன. பண்டைச் சித்திர வேலைப்பாடமைந்த மேற்கட்டி, எண்ண ஓவியங்கள் தீட்டிய சுவர்கள் கண்களைக் கவர்கின்றன. இதிலிருந்து செல்லும் நிலத்துக் குள்ளமைந்த நடைபாதைகள் பல அரும்பெருங் கட்டடச் சுவர்களில் போய் முடிகின்றன. தோட்டங்களின் சுவர்களோ கால்வாய்களின் சுவர்களாகவே அமைந்துள்ளன. நுழைவாயிலோ பண்டை ரோம்நகர் வாயில்களில் ஒன்று. அழகு மிக்கதாயிருந்திருக்க வேண்டும் என்று தோற்றும் இவ்விடம் இப்போது கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. அதன் பயன் முழுவதும் காய்கறிப் பழத் தோட்டமாக அது உதவுவதே. இந்த நிலையிலாவது ரோம் என்ற பெயருடன் ஏதோ ஒன்று இருக்கும்போது அதைப் பார்க்க வந்தோமே என்று எனக்கு ஒரு மனநிறைவுதான். இன்னும் சில பல ஆண்டுகள் கழிந்தால் இங்ஙனம் பெயருக்குக்கூட ரோம் என்று ஒன்று இருக்குமா என்பது ஐயத்துக்கிடமானதே. இன்றைய ரோமர்கள் அறியாமை யில் ஒரு புறமும் வறுமையில் ஒரு புறமும் ஆழ்ந்து தன்னிலை மறந்திருக்கிறார்கள். ஆகவே, இங்கே எல்லாம் புறக்கணிக்கப் பட்டும் படிப்படியாக அழியும்படி விடப்பட்டும் கிடக்கின்றன. சிங்கார மாளிகைகள் எல்லாம் பழுதாகிச் செப்பனிடாது தாழ்வுறுகின்றன. அரண்மனைகளின் பராமரிப்பு நிலையில் படங்கள் யாவும் பதனழிந்து வருகின்றன. லுடாவிஸி மாளிகையில் செம்பளிங்குக் கல்லால் செய்த மாபெரும் தலை வடிவில் கண்ணும் வாயும் குகாகாரமான வெறும் தொளை களாயிருக்கின்றன. கார்டினல் கார்ஸினி முதலியோர்களது பேராசைபிடித்த அட்டூழியச் செயல்களால் ரோம் நகரின் செல்வநிலை முழுவதுமே பாதிக்கப்பட்டுள்ளது. வறுமையை உண்டுபண்ணிய அவர்களை இன்று அவ் வறுமை பீடித்துக் கொண்டது. முப்பது நூறாயிரம் முடிப்பொன்கள் (உசடிறளே) அவரால் சேர்த்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆயினும், இன்று அவர்கள் பின்னோர்களின் செல்வ உயர்வு மட்டமாய் விட்டது. ரோமில் இன்று அரசிளங்கோக்கள் தம் உணவு வகையில் ஒரு நாளைக்குச் செலவு செய்யத் துணியும் உச்ச அளவு மதிப்பு 18 அணாக்கள்தான் என்றால் உயர் வகுப்பினர் வாழ்க்கைத்தர உயர்வு எவ்வளவு என்பதை ஊகித்துக் கொள்ளலாம் உணவு மதிப்பை அரைமுடிப் பொன் (2 ரூபாய்) அளவுக்குக் கொண்டு செல்லத்தக்கவர் மிகமிகச்சிலரே. கார்டினல் ஆல்பனி இரு வேளை உணவுக்கு ஒரு முடிப்பொன் (4 ரூபாய்) செலவிடுவது பெருத்த ஊதாரித்தனமாகக் கருதப்படுகிறது. இப் பெருமக்கள் விருந்தளிப்பது அருமை; சுற்றத்துடன், அன்பருடன் உண்ணுவது என்பதே கேட்கப்படுவ தில்லை. போப்பாண்டவரின் பின்னோர்களணளவர்கள் நிலையோ இன்னும் தாழ்வுற்றது. அவர்கள் பழைய உயர் குடியினரைவிடத் தம்மை உயர்ந்தவராகக் கொள்ள எண்ணிய தால் அவர்கள் உயர்குடியினருடன் ஊடாடாமல் சமூகத்தில் பின்னும் புறக்கணித்தொதுக்கப் படுகின்றனர். அவர்கள் வறுமை காரணமாக, பொதுமக்களும் உயர்குடியினரையே அவர்களை விட மதிக்க நேருகிறது. ரோமின் இந் நிலையில் என் மனம் எழுச்சியற்றதாகவே இருக்கிறது. அதிலும் காலை நேரங்களிலும் மாலை நேரங்களி லேயே முசிவு மிகுதியாகிறது. அச் சமயங்களில் நான் உங்களை நினைத்துக்கொள்கிறேன் என்று சொன்னால் அது உங்களைச் சிறப்பித்ததாகாது. ஏனெனில், எந்நேரத்திலும் தங்கள் நினைவு எழுச்சியூட்ட வல்லதேயாகும். இங்குள்ள சூழ்நிலை இவ் விடத்தில் உள்ள ஆங்கிலேயர் மதிப்பையும் குறைக்கிறது; மற்ற வெளி நாட்டவர் மதிப்பையும் குறைக்கிறது. பெரிய பெரிய ஆங்கிலப் பட்டங்கள், ஃபிரஞ்சு, ஜெர்மன் பட்டங்களை இங்கே காசுக்கு ஐந்து ஆறு ஆகக் காணலாம். ஆஷ்டன் கடிதம் வந்து சேர்ந்ததென்று அவரிடம் கூறுக; விரைவில் மறுமொழி எழுதுவேன்; ஆனால், தற்போது நெருக் கடியால் எழுதக் கூடவில்லை. இத்துடன் இக் கடிதத்தை நிறுத்த விரும்புகிறேன். ஆனால், நிறுத்தவிடாமல் கிரே ஓர் அரிய செய்தி கூற விரும்புகிறார். அருமை யெல்லாம் வேறொன்றுமில்லை. வழக்கமான காட்சி விரிவுரைதான், தன் தாளையும் மையையும் வீணாக்காமல், அடுத்தவர் கடிதங்களுடன் கடிதம் ஒட்டும் அவர் வேலைதான். அவர் மொழியில் காலிஸியம், காப்பிட்டேல் முதலிய கட்டடங்களைப் பற்றிக்கூற மனமும் இடமும் இல்லை. பார்கிஸ் இளவரசர் ஓர் ஆங்கிலேயரிடம் கூறிய மொழியில் கூறுவதானால் ‘அவையனைத்தும் மனிதர் புலி கரடிகளுடன் போரிடுவதற்கு உரிய இடங்கள்’ என்று கூறலாம். இன்று செயின்ட் பீட்டர் கோயிலில் எல்லாவற்றையும் யாரும் பார்க்க விடப்படுகிறார்கள். விளக்குகளால் அணி செய்யப்பட்ட ஒரு பெருஞ் சிலுவை உள்ளே தொலைவில் தோன்றுகிறது. அதனை நோக்கிப் பெருங்கூட்டம், கறுப்பும் சிவப்பும் வெள்ளையும் உடுத்து அடித்து விழுந்து நெருக்கி வழிகிறது. பலர் பாவ மன்னிப்புக்கு நெஞ்சை அடித்துப் புடைக்கின்றனர். ஒருவன் அரைக்கு மேல் ஆடையின்றிக் கசையால் தன்னைத்தான் அடித்துக்கொண்டு உடலெல்லாம் தன் குருதியைத் தானே சிந்திக் கொள்கிறான். இவ்வரிய நோன்புப் பணியிடையே அவன் மூன்று தடவை மூர்ச்சையானான். அதைக்கண்ட நான்கூட இரண்டு தடவை உணர்விழந்தேன். எண்ணியதைவிட மிகுதி விரிவுரை எழுதிவிட்டேன்; அது என் திட்டத்திற்கு மாறானது; ஆகவே அன்பர்கட்கு வணக்கத்துடன், என்றும் உன் நட்புள்ள ............................. கடிதம் - 13 மண்ணுள் மறைந்த நகரம் (ரிச்சர்டு வெஸ்ட்டுக்கு) நேப்பிள்ஸ், ஜூன் 14, 1740 (சூ.ளு.) அன்புமிக்க வெஸ்ட்டு, பயணக்காரர் எதை யெடுத்தாலும் இடங்களின் விவரங்கள் காணலாம். ஆகவே எத்தகைய இடக் காட்சிகளையும் நான் விரித்துரைக்க விரும்புவதில்லை என்று நீங்கள் அறிவீர்கள். ஆனால், இன்று நாங்கள் பார்த்த இடம் பயணக்காரர் பார்த்திராதது; புதுமை மிக்கது. ஏனெனில், அது மண்ணுக்குள்ளிருந்து அகழ்ந்து காணப்பட்டுள்ளது. இத்தகைய அதிசயத்தை நீங்கள் என்றும் கேட்டிருப்பீர்களா? அல்லது இனியாவது கேட்கக் கூடுமா? அதிலும் இது நகரம் போன்ற சித்திரமன்று, நகரமே ஒரு பெரிய முழு ரோம் நகரமே இப்படி அகப்படுமென்று யார் கனவு கண்டிருக்கக்கூடும்? நகரத்தில் இப்போது மக்கள் இல்லை. ஆனால், அது மக்களால் முரட்டுப் படையெடுப்பாளர்களிடமிருந்து பாது காப்பதற்காகப் புதைத்துவிடப்பட்ட நகரும் அல்ல; ஏனெனில், நகர மக்களும் நகருடன் புதையுண்டே போயினர். ரோம வரலாற்றில் டைட்டஸின் காலத்தில் நில நடுக்கத்துடன் விசூவியஸ் எரிமலையிலிருந்து தீக்குழம்பு எழுந்து பல நகரங் களை மூடிவிட்டதாக அவர் கூறுவதை நீங்கள் அறிந்திருக் கலாமே. அந் நகரங்களில் இதுவும் ஒன்று. இது முற்காலங்களில் ஹெர்க்குலேனியம் என்று வழங்கப்பட்ட தென்று தோற்றுகிறது. இந் நகரம் நேப்பிள்ஸிலிருந்து மூன்று கல் தொலைவிலுள்ள போர்ட்டிஸி என்ற சிறு நகரத்தின் பக்கம் காணப்படுகிறது. நேப்பிள்ஸ் அரசர் மாளிகையும் இப் போர்ட்டிஸி நகரில்தான் இருக்கிறது. இந் நகரம் இருப்பது ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் தற்செயலாகக் கண்டுபிடிக்கப் பட்டதாம்! கட்டடங்களுக்காக மண்ணைத் தோண்டிய இடத்தில் சிலைகள் அகப்பட்டன. அதுகண்டு பின்னும் தோண்ட, மேலும் சிலைகள் அகப்பட்டன. தோண்டத் தோண்ட, இன்னும் சிலைகள் மட்டுமன்றி வீடும் தெருவும் வாழ்க்கைச் சாதனங்களும் பிற மக்கள் வாழ்க்கைப் பகுதிகளும் கண்டெடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இதுவரை அகழப்பட்ட பகுதி ஒரு கல் தொலைவரை உள்ளது. ஆனால், அகழும் வேலை மிகவும் விழிப்புடனும், தடங்கல்களுடனும்தான் செய்யப்பட வேண்டியிருக்கிறது; ஏனெனில், தற்கால நகரம் அதற்கு நேர் மேலே அமைந்திருப்ப தனால் கவனக் குறைவாக அகழ்ந்தால் புதிதும் கெட்டுப் பழைய நகரத்தின் அமைப்பும் தெரியமுடியாமல் போய்விடும். இது காரணமாக இப் பாதாளத்திலே தெருக்களை முற்றிலும் அகழாமல் குறுக்கும் நெடுக்குமாகத் தெருவில் ஒரு பகுதியும் வீட்டில் ஒரு பகுதியும் வீடுகளின் முன்னும் பின்னுமாக ஓராள் புகும் அகல உயரத்திற்கு இடுங்கிய இடைவழிகளாக அனைத்தும் தோண்டப் பெற்றுள்ளன. புதைந்து கிடக்கும் நகரம் எனவே எல்லாம் இடிந்து தகர்ந்து கிடக்கும் என்றே நீங்கள் கருதிவிடலாம். ஆனால், ஒன்றிரண்டு தூண்களும் கம்பங்களும் தவிர மற்றவை பெரும்பாலும் நிலையாக நின்றபடியே நிற்கின்றன. கோயிலுள் மாசுமறுப் படாமல் இரு தூண்களும் இடைவளைவும் அவற்றின் சாயலாகப் படும் ஒரே முழுமையாகத் தென்படுகின்றன. இவ்விடமும் சரி, வீடுகளும் மற்றக் கட்டடங்களும் சரி, எல்லாமே செங்கல்களால் கட்டப்பட்டு மேலே நீறும் சுண்ணமும் தீட்டப்பட்டுள்ளன. வீட்டின் எல்லாப் பகுதிகளும் ஒரே வண்ணமாக, அதாவது, பின்னணி வண்ணம் பற்றிய மட்டில், சிவப்பாகத் தீட்டப் பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட கோயிலேயன்றி அரைமதி வடிவுடைய ஒரு நாடக அரங்கும் குற்றங்குறையில்லாமல் அகழ்ந்து வெளிப் பட்டுள்ளது. அதன் படிகள் வெண்கல்லாலாயவை. இருக்கைகளும் நல்ல நிலையிலுள்ளன. சிலைகளுடன் மனித எலும்புகள் பலவும், அரிசியும், சில சித்திரங்களும், சில பதக்கங்களும், அகப் பட்டுள்ளன. சித்திரங்கள் இதுவரைக் கண்டெடுக்கப்பட்ட பண்டைக் காலச் சித்திரங்களெல்லாவற்றையும்விட மேம்பாடு உடையவை என்று கருதப்படுகின்றன. இவற்றை நாங்கள் இன்னும் பார்க்கவில்லை. அவை மன்னர் அரண்மனையில் வைக்கப் பட்டுள்ளன. வீடுகளிலும் கட்டட உத்தரங்களிலும் பல கருகியிருந்த நிலையிலும் அப்படியே நிற்கின்றன. மரத்தின் வடிவமைப்புப் பலவிடங்களிலும் கரியுருவத்திலும் தோற்றுகின்றன. ஆனால், அவற்றைத் தொட்டவுடன் அவை பொடிந்து விடுகின்றன. இச்சில கூறுகளன்றி அந்நகரத்தை மூடிய தீக்குழம்பு வெள்ளத்தின் தடம் அவற்றிடையே மிகுதி தெரியவில்லை. தீ அவற்றை எரிக்குமுன் குழம்பாறுகள் அவற்றை மூடி இறுக்கின வாதல் வேண்டும். ஆராய்ச்சியறிவுடைய புலவர் யாரேனும் இந் நகரத்தை வந்து பார்வையிட்டால் மனித நாகரிகம் பற்றிய விளக்கங்கள் எவ்வளவோ ஏற்படலாகும். அகழ்வு வேலையையே அத் தகையவர்கள் இயக்குவதானால் இன்னும் செய்திகள் பல உருச் சிதைந்து மறையாமல் பேணப்படக்கூடும். ஆனால், இங்கே வேலைத்தலைவர் ஆன்ற அறிவமைதியுடன் அமர்த்தப்படுவ தாகத் தெரியவில்லை. இது வகையில் அவர்கட்கு ஒரு மன்னிப்பு உண்டு. இத் துறையில் இன்றைய உலகின் அறிவே மட்டமா யிருக்கிறது. இதுபோன்ற அனுபவம் உலகில் வேறு எங்கும் இதற்குமுன் இருந்தது கிடையாது.* மற்ற ரோம நகரங்களில் காணப்படும் செய்திகள் முற்றிலும் இவ்வகைக்கு உதவுபவை யல்ல. ஏனெனில், அவை இடைக்கால பிற்காலத் திருத்தங்கள் மாறுபாடுகள் உடையவையாயிருக்கக்கூடும். பண்டைய ரோம நாகரிகத்தை அப்படியே கண்கூடாகக் காட்டும் சின்னம் இதுவொன்றே என்னலாம். மேற்குறிப்பிட்டபடி இதனுடன் இதே பகுதியில் வேறு நகரங்கள் மூடப்பட்டதாகத் தெரிய வருவதனால் அவற்றையும் அகழ்ந்து கண்டால் ஒப்புமையாராய்ச்சிக்குப் பெரிதும் அவை பயன்படலாம். தற்கால ஆராய்ச்சி உலகிற்கு இவற்றாலேற்படும் அறிவு மிகவும் பெரிதாகும். ஏனெனில், ரோமர்களும் பிற பண்டை நாகரிக மக்களும் தம் காலத்துக்கு முற்பட்ட கால அறிவுபெற எத்தகைய அகழ்வாராய்ச்சிகளும் நடத்தியது கிடையாது. அவர்கள் அகழ்ந்து காண முயன்ற தெல்லாம் பொற்புதையலேயன்றி அறிவுப் புதையலன்று. வரலாற்றுணர்ச்சியும் அவ்வகையார்வமும் அக்காலத்திற்கு அப்பாற்பட்டவையே. இவ்வகழ்வாராய்ச்சியுடன் கிரே அனுப்பியுள்ள இந் நகரம் புதையுண்ட வரலாறு பற்றிய ஸ்டாட்டியஸின் வர்ணனையை ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் பயனுடையதாகும். இத்துடன் தங்கள், ............................. கடிதம் - 14 தாயின் பிரிவு (சார்ல்ஸ் லிட்டில்டனுக்கு) செப்டம்பர் 18, 1737. அன்புமிக்க சார்ல்ஸ், உங்கள் அன்புகனிந்த கடிதத்திற்கு நான் ஏன் மறுபடி எழுதவில்லை என்று நீங்கள் இப்போது வியப்படைய மாட்டீர்கள். அதன் காரணமாகிய துன்ப நிகழ்ச்சியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். என் இன்பங்களை யெல்லாம் நீங்கள் கண்டறிந்துள்ளீர்கள்; தாயிழந்த நிலையில் என் துன்பத்தையும் நீங்களே உய்த்துணர்தல் கூடும். ஒருவனை யாவரிலும் மிகுதியாக நேசித்த ஒருவர் பிரிவு என்ற நிலையில் மட்டும் இப்பிரிவு இருந்திருந்தால்கூட நான் அதனை இப்போது பொறுப்பதைவிட எவ்வளவோ எளிதாகப் பொறுத்திருப்பேன். உண்மையில் நானும் அவரை மிகவும் நேசித்தேன். தங்கள் நட்புரிமை இதுபற்றி உங்களுக்கு எழுதும் உரிமை தருமாயினும், தங்கள் பற்றிய நல்லெண்ணம் என் துயரைத் தங்களிடம் மிகுதி சார்த்தத் தூண்டவில்லை. குதித்தெழும் என் துன்ப நினைவுகளை நான் ஓரளவு அடக்கி வைத்துக்கொள்கிறேன். எனினும் அந் நினைவுகளின் ஒரு கூற்றினை உங்கள்பால் தெரிவிக்க விரும்புகிறேன். அது தாங் களும் கேட்க விரும்பத்தக்க ஒன்றே. அது யாதெனில், இறுதி நேரத்தில் என் அன்னையார் காட்டிய வியத்தகும் அமைதியும் பொறுமையுமே. பெண்டிரில் மிகச் சிலருக்கே இத்தகைய அமைதி இருக்கக் கூடும். ஆடவரில்கூடப் பலருக்கும் இதைவிட அமைதி இருக்க முடியாது. இறப்பதற்கு மூன்று நான்கு நாட்களுக்கு முன்பிருந்தே அவர் ஒரு நீர்க்கோள் பற்றிக் குறிப்பிடுவதை விடக் குறைந்த அளவிலேயே அது பற்றிக் குறிப்பிட்டார். கடைசி இரண்டு மணி வரை அவர் நினைவிழக்கவில்லை. நினைவிழந்த இறுதி நொடி வரை அச்சமோ, கலக்கமோ அணுவளவுமில்லை. இவ் எண்ணம், என் அரிய சார்ல்ஸ், என் துயருக்கிடையும் ஒருவகை ஆறுதலே யாகும். ஆயினும், இத்துன்ப நினைவுகளின் சுழலிலிருந்து விடுபடு வதற்காகவே வீடு துறந்து கேம்பிரிட்ஜில் வந்து சேர்ந்தேன். இங்கிருந்தே உங்களுக்கு எழுதுகிறேன். செப்டம்பர் 18, 1737 தங்கள் என்றும், திரு. டாட் தங்கட்குத் தம் நேச உறுதி அறிவிக்கிறார். ............................. கடிதம் - 15 பிரிட்டிஷ் அரசியல் மன்றம் (ராபர்ட் மானுக்கு) வெள்ளி, ஜனவரி 22, 1742 அன்புடையீர், வியாழன்தோறும் தவறாமல் உங்களுக்குக் கடிதம் எழுதி வந்திருந்தும் நேற்று எழுதத் தவறிவிட்டது பற்றி மன்னிக்கக் கோருகிறேன். இத் தவறுதலுக்குக் காரணம் வேறு ஒன்றும் இல்லை. அரசியல் மன்றில் ஒருமணி வரை அடைபட்டுக் கிடந்ததுதான். அதைவிட்டு வெளியே வரும் போது முற்றிலும் சோர்வுற்று அரைப் பிணமாகத்தான் வந்தேன். ஸர். ராபர்ட் அப்போதும் முழு எழுச்சியுடையவராகவே இருந்ததால் என் உடன் பிறந்தார்களுடன் அவரை உணவருந்த விட்டுத் தனியே ஓய்வெடுத்துக் கொண்டேன். அவர் என்னைவிட நாற்பது ஆண்டு மூத்தவராயிருந்தும் ஊக்கத்தில் என்னைவிட இளைஞராகவே இருக்கிறார். மன்றின் இடை ஓய்வு திங்கட்கிழமையுடன் முடிந்தது. பள்ளிப் பையன் இடைவேளை ஓய்வை நுகர்வதைவிட நான் இதனை வரவேற்றுக் களிப்படைந் திருந்தேன். செவ்வாயன்று ஒரு ஸ்காட்லாந்துத் தேர்தல் பகுதியில் தேர்தல் நடந்தது. எங்கள் சார்பாளர் தோல்வியுற்றார். இத் தோல்விக்கு மன்றப் பொறுப் பாளர் (ளுhநசகைக) மீது ஸான்டிஸ் பழிவாங்கித் தீர்த்துக் கொண்டார். புதன் அன்று வணிகராயிருந்த நகரத்தலைவர் 300 வணிகர் கையொப்பமிட்ட மனுவொன்றைக் கொண்டு வந்தார். ஒருபுறம் நாடக ஆசிரியராகவும் மறுபுறம் வணிகராகவும் இருப்பது போதாது. பொதுத் தொண்டிலும் ஈடுபட்ட இந்தத் தங்கச் சங்கிலிக்காரர் திறம்பற்றி அவர் மன்றத்திற்கு வருமுன்னிருந்தே எவ்வளவோ துதி பாடப்பட்டது. ஆனால், இங்கே அவர் அபினியுட் கொண்டவர் போல மிரளமிரள விழிப்பதும் தூங்குவதுமன்றி எதுவும் செய்வதாகக் காணோம். வியாழனன்று, அதாவது நேற்று வேலை மிகுதி இராதென்றுதான் நினைத்தோம். ‘யார்க்’க்கில் ஒரு தேர்தலுக்காக உறுப்பினர்களில் ஐவர் சென்றிருந்தனர். ‘போக்ளார்க்’ பெருமக்கள் (மூன்று உடன்பிறந்தார்கள்) நாட்டுப் பேரழகியா யிருந்த தம் அன்னை பிரிவினைக் கொண்டாடச் சென்றிருந்தனர். இதுகாரணமாக நமக்கு எளிதில் பெரும்பான்மை கிடைக்கு மென்றும் இன்றைய நடைமுறைகள் சந்தடியின்றி நடைபெறும் என்றும் நம்பப்பட்டது. ஆனால், மூன்று மணிக்கு கூட்டம் இனி முடிவுற்று விடும் என்றிருந்த நேரத்தில், எங்கிருந்தோ அவர்கள் (எதிர் கட்சியார்) தங்கள் கேள்விகளைத் தொடங்கிவிட்டார்கள். ஒன்று பதவிகளின் எண்ணிக்கைகளை வரையறுக்க வேண்டு மென்ற கோரிக்கை. இத்தகைய கோரிக்கைகள் பெருமக்கள் அவையில் தள்ளப்படுவது உறுதியாதலால் பொது அவை அவற்றை நிறைவேற்றிப் போவது வழக்கம். ஆனால், கர்னல் சோல்மண்டலி “உறுதியளிக்கவிருக்கும் பதவிகளை மட்டும் வரையறுக்கிறீர்களா? அல்லது இருக்கும் பதவிகளைக் கூடவா?” என்று ஒரு கேள்வி கேட்டார். கட்சிகள் மாறும்போதெல்லாம் பதவிகளும் மாறும். இம் மாற்றத்தாலேயே புதிய கட்சி தன் புதுப்பலத்தை நிலைப்படுத்திக் கொள்ள முடியும். ‘டாம்’ தேநீர் விடுதியில் வைத்து திரு. புல்ட்னி பொருளமைச்சர் ஆவது; செஸ்டர்ஃபீல்டும் கார்ட்டெரெட்டும் அரசியல் செயலாளர்களாவது முதலாகப் பல திட்டங்கள் வகுத்து உறுதி செய்யப்பட்டதாம்! ‘சம்பள முதலாளி யாராகப் போகிறார்’ என்று யாரோ கேட்டார்கள். ‘அந்த அளவுக்கு நாங்கள் இறங்கிவிடமாட்டோம்’ என்றார் நம்ப்ஸ் எட்வின். திரு. புல்ட்னி இருபத்தொருவர் அடங்கிய இரகசியக் குழுக்கோரிக்கை ஒன்றைக் கொண்டுவந்தார். பணியாளர்களைப் பரிசீலனை செய்வதற்கான இக் குழுவின் அடக்குமுறை உரிமை களைப் பலர் எதிர்த்தனர். ஆனால், , திரு. புல்ட்னி இது எந்தத் தனி மனிதரையும் எதிர்ப்பதற்கென்று ஏற்படுத்தவில்லை என்றார். தனிமனிதர் குற்றங்களைக் கண்டிப்பது நேர்மைதான் என்று மறுகட்சியார் ஒருவர் கூறவே, ஸர். ராபர்ட் எழுந்திருந்து எதிர் கட்சியினர் எவ்வளவு பகையம்புகள் வீசியும் இருபது ஆண்டு களாகத் தன்னை அசைக்க முடியவில்லையென்றும், இன்று குறை கூறும் திரு டாடிங்டன் அண்மைவரை தான் கூறும் பழியில் தானே பங்கு கொண்டவராயிருந்தவரே யென்றும் வீறாப்புடன் கூறி முடித்தார். குற்றமற்ற கட்சியே இயற்கைப்படி வெற்றி யடைந்தது என்ற தொனிப்புடன் அவர் உட்கார்ந்தார். இரு கட்சியிலும் பல உறுப்பினர் அழகிய பேச்சுக்கள் ஆற்றினர். புல்ட்னி, பிட், கிரென்வில், ஸர் ராபர்ட், ஸர் வில்லியம் யங், பாக்ஸ் முதலியவர் பேச்சுக்கள் குறிப்பிடத்தக்கவை. நம் நண்பர் கோக்ஸர் ராபர்ட் வால்போலைப் பாராட்டிப் பேசினார். உடனே ஸர். ஃபிரான்சிஸ் டாஷ்வுட் எழுந்து தாம் இதற்கு மாறான கருத்தையே கேள்விப்படுவதாகவும் வெளிநாட்டவர் ஸர் ராபர்ட்டை மிகவும் இழிவாகவே பேசுவதாகவும் குறிப்பிட்டார். இப்பேச்சு ஒழுங்குக்கு மாறானதென நிறுத்தப் பட்ட போதும் ‘அவர் உறுப்பினரைப்பற்றி அவமதிப்பாகப் பேசப்படாதென்று எனக்குத் தெரியும். நானே அப்படிப் பேசவில்லை. அப்படி அந்தப் பாழாய்ப் போன ஃபிரெஞ்சு நாட்டார் பேசினதாகத்தான் நான் குறிப்பிட்டேன்’ என்று மீண்டும் தன் பேச்சை வற்புறுத்திவிட்டு உட்கார்ந்தார். குழு அமர்வை எதிர்த்தவர்களை எதிர்த்து அதனை ஆதரிக்க திரு புல்ட்னி இறுதியில் மிக உருக்கமாகப் பேசினார். ஆனால், 250 மொழிக்கு 253 மொழியாக அது தோற்றது. மொழி யெண்ணிக்கை நேரம் உண்மையிலேயே உருக்க மான நேரமாக இருந்தது. இரண்டு சார்புகளிலும், மொழி யுரிமைப் போருக்காகக் கிழவர்கள், நோயாளிகள் முதற்கொண்டு தூக்கி வரப்பட்டனர். ஸர் வில்லியம்காரிடன் மரணப் படுக்கை யுடனேயே கொண்டுவரப்பட்டார். அவர் மகனுக்கு ஒரு கப்பல் தலைமைப்பதவி கொடுக்கப்பட்டிருந்தும் அவர் நன்றியில்லாமல் நமக்கெதிராக மொழிகொடுக்க இந்த நிலைமையில் வந்தது வியப்பே. ஆனால், மகன் பதவி போயிற்று என்பதை அவர் அறியாதிருந்தார். நம் கட்சி ‘நல்லோர்’ சிலர் அதை அவரிடம் கூறினர். அவர் ‘எதற்காக இது கூறவேண்டும். நான் நாட்டுக்கு என் கடமையைச் செய்தே தீருவேன்’ என்றார். பாவம்! மரணத்தறுவாயில் வீர உணர்ச்சியற்ற நம் கால நாகரிகத் தினிடையே பிறவாமல் ரோம நாகரிக காலத்தில் பிறந்திருந்தால் அவர் பெருமைப்படுத்தப்பட்டிருப்பார். கட்சிகள் தம் காரியங் கைகூடுவதற்காகச் செய்யாத செயலோ துணியாத சூழ்ச்சியோ கிடையாது என்னலாம். ஒருவன் தன்மொழியை ஒரு சார்பாளருக்குக் கொடுக்கா விட்டால் அவன் பதவி அவனிடமிருந்து எடுக்கப்படலாம். வழக்கு முதல்வர் பதவிக்கு ஓர் ஆளைச் சிபாரிசு செய்வதற்காக இளவரசரும் நகரமுதல்வருக்கு (ஆயலடிச)க் கடிதம் எழுதி யுள்ளதாகத் தெரிகிறது. ஆஸ்வால்டு என்ற ஸ்காத்லந்து இளைஞன் ஸர் ராபர்ட்டிடம் உறுதி செய்துவிட்டு எங்களுக்கு எதிராக மொழிதந்தான். இதுபற்றி அவனிடம் கேட்ட போது ஸர் ராபர்ட்டுக்கு ஏற்கெனவே பெரும்பான்மை மொழி கிடைத்து விட்டதென்றுதான் கேள்விப்பட்டதாகச் சாக்கு கூறினானாம். எதிர்க் கட்சியினரான திரு. யங் காரியத்தில் வெற்றி பெற்றாலும் ஸர் ராபர்ட்டே நன்றாகப் பேசியதாகத் திரு புல்ட்னியும் மற்றையோரும் பாராட்டினர். இனி வேறு செய்வதற்கொன்று மில்லாததனால் கூடிய மட்டும் மதிப்புடன் பின்வாங்குவதென்று முடிவு செய்யப்பட்டது. ஸர் ராபர்ட்டும் நண்பர்களும் திரும்பிச் செல்லும் வழியில் பெருத்த மதிப்பும் பாராட்டும் நல்கப்பட்டது. இரகசியக் கமிட்டி கூடும் அன்று என் உடன்பிறந்தார் ராபர்ட்டு ‘நோயாளிகள்’ ஆன சிலரைத் தன் வீட்டுக்கழைத்து, (வீட்டினையடுத்திருந்த) மன்ற அவைக்குப் பக்கவாயில் வழியாக அவர்களை அனுப்ப எண்ணியிருந்தார். ஆனால், பக்கவாயில் முன்புற மிருந்து ‘தேசபக்தர்’ (எதிர்க் கட்சியினர்)களால் பூட்டிடப்பட்டதுடன், பூட்டின் தொளைகளும் மணலால் மூடப்பட்டு விட்டன! ஸர் தாமஸ் ராபின்ஸனுக்கு இறுதியில் ஒரு வகையாக ‘பர்படாஸ்’ அரசியல் தலைவர் பதவி கிடைத்துவிட்டது. கிடைத்தவகை மட்டும் விசித்திரமானது. லிங்கன் பெரு மகனாருக்கு அவர் வீடு பிடித்தமாயிருந்தது. ஆகவே அதை வாடகைக்கு விட வேண்டும் என்று உறுதி வாங்கியபின் அவர் ஸர் தாமஸுக்கு அப் பதவியைப் பெற்றுத் தந்தார். பெர்ஸிவல் பெருமகனார் அரசியல் மன்றின் பேச்சாளர். அதற்கான பயிற்சி பெறும்படி அவர் தம் வீட்டிலேயே ஒரு குட்டிமன்றம் கூட்டிப் பேசிப் பழகிவந்தார். அவர் வீட்டிற்கு இத்தகைய மன்ற நேரங்களில் யாரும் வரவிடப்படுவதில்லை. ஒருநாள் அங்ஙனம் மறுக்கப்பட்ட ஒருவர் கட்டாயப்படுத்தவே, காவலாள் ‘ஐயா, மன்ற உறுப்பினராக நடிப்பவருள் நீங்கள் ஒருவரானால் உள்ளே விடுகிறேன். இல்லையானால் விட முடியாது’ என்றானாம். இரண்டு தாள்களுக்குமேல் எழுதியாய் விட்டமையால் இத்துடன் முடிக்கிறேன். தங்கள் இசைப்பாடல் தொகுதியும், அரசியல் பாடலும் பெற்று மகிழ்ச்சி... மிக நீளமாய்விட்ட இக்கடிதத்தைத் திரும்பவாசிக்காமலே அனுப்புகிறேன். மன்னிக்கவும். இங்ஙனம் தங்கள், .............. கடிதம் - 16 பதவியும் பட்டமும் (இதுவுமது) லண்டன், ஃபிப்ரவரி 4, 1742 அன்புடையீர், உங்களுக்கு எழுதவேண்டியது, தெரிவிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது; எழுத நேரமில்லையே என்று வருந்து கிறேன். இன்னும் ஒரு வாரம், இரண்டு வாரம் வரை எல்லாம் அவசர கோலமாய்த்தானிருக்கும். என்ன எழுதுகிறேன் என்று கவனியாமல்தான் எழுதவேண்டியிருக்கும். அதை நீங்கள் பொருட் படுத்த மாட்டீர்களென்று நம்புகிறேன். நான் உங்களுக்குக் கடிதம் எழுதும் இந்த நேரத்தில்கூட நகர முழுவதுமே வீட்டுக்குள் வந்து கூடிக்கொண்டிருக்கிறது. ஸர் ராபர்ட் இதற்குள் மூன்று தொகுதிகளுடன் பேசிவிட்டார். இன்னும் தொகுதி தொகுதியாக மக்கள் வந்துகொண்டே யிருக்கின்றனர். மக்களின் திரள் வீட்டின் மற்ற அறைகளையும் கூடங்களையும் நிரப்பி என் அறைக்குள்ளும் பொங்கி வருகின்றனர். இதெல்லாம் ஏதோ பெரிய வெற்றி விழாவுக்கான முன்னுரை என்று நீங்கள் எண்ணலாம். ஆனால், விழா வேறொன்றுமில்ல. ஸர் ராபர்ட் வால் போலின் பழைய பெயரும் பட்டமும் இன்றுடன் ஒழிகிறது; ஆர்ஃபோர்டுக் கோமான் என்ற பெயருடனே அவர் இனி வாழ்வார். பேரும் புகழும் படைத்த பழைய பட்டம் அதனோடு இணைந்திருந்த பதவியுடன் போகிறது! இப்பெரு மாறுபாட்டை நீங்கள் உணர நான் அதற்குமுன் நடந்தவற்றை முதலில் அறிவிக்க வேண்டும். சென்ற வாரம் பொது அவையில் சிப்பன்ஹாம் தேர்தல் பற்றிக் கூப்பாடு எழுந்தது. நம் கட்சித் தேர்வாளர்கள் இருவர் எதிரிகள் பற்றிய முறையீடுகள் கொண்டுவந்தனர். ஒன்று இது 235க்கு 236ஆக ஒருமொழிக் குறைவால் தோற்றது. அதுமுதல் நானும் என் சிற்றப்பனாரும் உடன்பிறந்தாரும் ஸர் ராபர்ட்டைப் பதவி துறந்து விடும்படி வேண்டினோம். ஆனால், ஞாயிறு இரவு வரை அவர் மனம் உறுதிப்படவில்லை. செவ்வாயன்று 16 மொழிக்குறைவுடன் நம் கட்சி தோற்றது. உடனே ஸர் ராபர்ட்டு பொது அவைத் தோழர் சிலரிடம் தாம் பதவி துறக்க விருப்புடையவராயிருப்பதாகக் கூறினார். அன்று காலையே அவர் இளவரசருக்கும் இது பற்றி எழுதிவிட்டார். அத்துடன் அவருக்கிருந்த எதிர்ப்பு ஓய்ந்து போயிற்று. ஏனெனில், அடுத்த வாரம் அவர் பதவி துறப்பு ஏற்கப்பட்டு அவர் பெருமக்கள் அவையுறுப்பினராய் விடுவார். அதற்கிடையில் ஏற்படும் மாறுதல் வில்லிங்டன் பெருமகன் பொருள் மன்றத் தலைவராவதுதான் (ழநயன டிக கூசநயளரசல) குறைவு. ஆனால், மாறுதல் எதுவும் அத்துடன் நிற்க முடியாதென்பது உறுதி. எப்படியும் இளவரசர் இத்துடன் மனநிறைவு பெறுவார். ‘தேசபக்தர்’ குழு நுழைவு பெறுவது உறுதி. சென்ற இரவே பல களியாட்ட விளக்கங்கள் (ஊடிஅயீடிளநள) ஏற்றப்பட்டன. ஆயினும், உண்மையில் இவை அவ்வளவு ஒளி விளக்கம் பெறவில்லை. ஏனெனில், வீழ்ச்சியடைந்த எந்த அமைச்சரும் ஸர் ராபர்ட் பெற்ற புகழைப்போல், வீழ்ச்சியடைந்த பின் பெறவில்லை. அவர் மன்னரிடமிருந்து விடைபெறச் சென்றபோது மன்னர் அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டார். புதிய பட்டயத்துடன் அடிக்கடி அவர் தம்மை வந்து பார்ப்பார் என்று தாம் நம்புவதாகப் பாராட்டுரைத்தார். உண்மையில் அவர் வழக்கம்போல் லண்டனிலேயே யிருப்பார்; பெருமக்களவையில் இருந்து கொண்டே அமைச்சரவைக்கு உதவிபுரிவார். அதுமட்டுமன்று; ஸர் ராபர்ட் வால்போல் மதிப்புடன் வகித்த பணி எதனையும் தாம் ஏற்கப்போவதில்லை என்று திரு. பெல்ஹாம் உறுதி கூறினார். ரிச்மண்ட் கோமான் ஸர் ராபர்ட்டிட மிருந்து தாம் பெற்ற குதிரைப் படைத்தலைவர் பதவியை அவருக்குப் பிற்பட்டுத் தாம் வகிப்பதில்லை என்று அதனைத் துறந்துவிட்டார். ஸர் ராபர்ட்டுடன் நெருங்கிய நட்புறவில்லாத அவர் செய்த இச் செய்கை ஸர் ராபர்ட்டின் மதிப்பை உயர்த்திற்று. என்னளவில் முன்னைய நிலையில் இருந்துவந்த கவலை. தயக்கம், பொறாமைகள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு ஓய்வுடனி ருப்பது பற்றி மகிழ்ச்சியுறுகின்றேன். இப்போது நான் வேண்டு மென்றே எங்குஞ் செல்கிறேன். ஒரு மாதிரியாகப் பார்ப்பவர் களும் உருட்டிப் பார்ப்பவர்களும் கண்டு பழகிப் போகட்டும் என்பதற்காக. ஆனால், எங்கும் நயநாகரிகச் சொல்லன்றி வேறு எதுவும் காட்டப்படவில்லை. ஹார்ட்டிங்டன் பெருமகன் கோக், ஃபிட்ஸ் வில்லியம் யாவரும் வந்து கண்டனர். வேறு சிலர் வந்து கண்ணீர் கசிந்தனர். டெக்ஸ் ஃபோர்டுப் பெருமகனும் வேறு பலரும் வந்து மகிழ்ச்சி கூடத் தெரிவித்தனர். உறவினரின் புதிய பட்டத்திற்காக. இத்தனை நாடகங்களுக்கிடையே நான் அனுதாபப்பட வேண்டுவது மூன்றே மூன்று பேரிடம்தான். ஒன்று மன்னர்; தம் அமைச்சரைத் தாமே துறக்கும்படி அவர் வற்புறுத்தப்பட்டதை எண்ணி, இரண்டாவது வில்லிங்டன் பெருமகன்; அவர் மிகவும் முதுமை யெய்தியது பற்றியும் இளமையிலும் இப் பொறுப்பு ஏற்கும் திறம் பெறாது போனது பற்றியும்! மூன்றாவது என் தங்கை*. அவளுக்கு இப்போது கோமகன் மகள் என்ற நிலை தரப்பட வேண்டும், பிறப்பினால் அதை அடைய முடியாது என்பதனால். மேலும் புதிய பதவியில் உயர்குடிப் பிறப்பன்றி வேறு தகுதியற்ற பலருடன் அவள் கைகுலுக்க வேண்டிய வளாகிறாள்.” அர்கைலின் மருமகன் ஸ்டிராஃபோர்டுப் பெருமகன் இல்லத்துக்கு நான் இன்று விருந்துண்ணப் போகிறேன். புதிய நிலைக்கேற்றபடி உயரப் பறக்க நாங்கள் பழகிக் கொள்வதை நீங்கள் காணலாம். முக்கியமான செய்திகளைக் குறிப்பிட்டு விட்டேன். விவரங்கள் பல அறிய நீங்கள் விரும்பலாம். இது இயற்கை; ஆனால், அன்பரீர், இங்கே எனக்கு நேரம் குறைவு என்பதை நினைத்துக் கொள்ளுங்கள். தாங்கள் அதிக சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டாம்; உங்கள் உடன் பிறந்தார்களுள் நெட் (எட்வர்டு லூயி மான்) இங்கு வந்து பாராட்டுரை தந்தார்; கால் நொந்து கண் கரிந்துபோனார். முதலில் உங்களுக்கு முன்னவர் செயல் பிடிக்கலாம். பொறுத்துப் பார்த்தால் பின்னவர் நிலையும் என் நிலையும் பிடிக்கக்கூடும். தங்கள் அன்றுபோல் என்றும், .......................... கடிதம் - 17 முகமூடி நாடகம் (இதுவுமது) மிகவும் உடற் சோர்வுடன் இக் கடிதம் எழுதுகிறேன். எனக்கு மண்டையிடியும் தலைகனமும் எவ்வளவு என்று எவராலும் எண்ணிப் பார்க்க இயலாது. நார்ஃபோக் கோமாட்டியின் முகமூடி நாடகத்துக்குச் சென்றிருந்து காலை 5 மணிக்குத்தான் திரும்பினேன். ஆயினும், 11 மணிக்குள் எழுந்திருக்க வேண்டியதாயிற்று. ஏனெனில், பெருமக்கள் அவையில் புதிதாக உறுப்பினராகும்படி என் தந்தை ரிச்மண்டிலிருந்து வந்து புறப்படவிருந்தார். அரசியல் துறையிலிருந்து இப்போது அவர் விலகியுள்ளார். அதனால் நிலைமைகள் ஓரளவு திருந்தியுள்ளன. மன்ற இடைக்காலத்தில் நான்கு அரசியற் குற்றச்சாட்டு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்று ஸர் ராபர்ட்டுக் கெதிரானது. இதற்குக் காரணம் பழைய அரசர் கால்வழியினராகிய போலி இளவரச (ஞசநவநனேநச)ரிடம் நட்புடைய ஒருவரைச் சார்ந்து அவர் செயலாற்றியது எனப்படுகிறது. ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகளைவிட நேரடியான எதிர்ப்புக்களும் ஏற்பட்டுள்ளன. நாடகமேடையில் வரும் உறுப்பினர் சாடையாக அவரை எதிர்த்துப் பேசலாயினர். எடுத்துக்காட்டாக ராபர்ட் எஸ்ஸெக்ஸ் கோமான் மீதுள்ள குற்றச்சாட்டை இத்தொனியுடன் நடித்து மக்களிடையே உணர்ச்சி யெழுப்பினர். ஆயினும், இப்போதைய அரசாங்கம் எதிர்ப்பாளரிடையே எதிர்க் கட்சியான பழமைக்கட்சி (கூடிசநைள) இல்லாமலே செய்துவிட்டது. பதவி ஏற்க வந்தவர்களை யெல்லாம் சேர்த்து அது ஓர் அவியலாக்கியுள்ளது. இளவரசருக்கோ அரசரிடமே செல்வாக்கில்லை. யாரோ எவரோபோல நலம் உசாவுவதுடன் அவர்கள் உறவு நின்று விடுகிறது. அவர்கள் உறவினை நம் கோமகனும் பெருமக்கள் அவையில் செஸ்டர் ஃபீல்டுப் பெருமகனும் தவிர ஏனையோர் ஆர்வத்துடன் வரவேற்கவில்லை. இவ் வரசியல் செய்திகளிடையே நேற்றைய நேர்த்தியான முகமூடி நாடகம்பற்றிக் கூற மறந்துவிட்டேன். மொத்தத்தில் அங்கே அய்ந்நூறு பேருக்குமேல் பலவகைப்பட்ட அழகிய உயரிய ஆடையணிகளுடன் வந்திருந்தனர். அவ்வளவு உடை வகைகளையும் அணிமணி வைர வகைகளையும் நான் இதற்கு முன்பு பார்த்ததே கிடையாது. அருவருக்கத்தக்க ஸ்காட்லாந்து அரசியின் உருவில் வந்தவர் பலர். அவர்களிடையே ஒருவர் மூத்த ஷாட்வெல் செல்வி! வேல்ஸ் இளவரசிகூட அவ்வுருவில்தான்; அவர் முழுக்க முழுக்க வைரங்களால் இழைக்கப்பட்டிருந்தார். இந் நிலையிலும் அவர் முகமூடி யெடுக்கவேயில்லை. அரச குடும்பத்தினர் எவருமே முகமூடி துறக்காமலிருந்தனர். பிறர் அவ்வப்போது துறந்துறவாடினர். கான்வேப் பெருமாட்டி ஸ்காத்லந்தரசி மேரிஸ் டூவர்ட் உருவில் ஒரே அழகுக் கோவை யாய் வந்திருந்தார். யூஸ்டன் பெருமகனாரும் பெருமாட்டியும் ஆண் பெண் படை வீரராகக் காட்சியளித்தனர். முகமூடிகளில் மிகச் சிறந்தவை ரிச்மண்ட் கோமக்கள் துணைவரின் எட்டாம் ஹென்றி, ஜேன்ஸெய்மர் உருவமைந்த முகமூடி உருக்களே. இருவரும் மிக விலையுயர்வான ஆடையணி யுடன் வனப்பு மிக்கவராகக் காணப் பெற்றனர். டென்மார்க்குக் காரராக ஒருவரும் டான் குவிக்ஸாட் ஆக அவர் பாதுகாவலரும் வந்தனர். எல்லா நாட்டினரும் எல்லா வரலாற்றுக் காலத்தவரும் விரவியிருந்த அக் காட்சி உலகிறுதி நாளை (னுயல டிக துரனபநஅநவே) நினைவூட்டியது. அக் கற்பனைக் காட்சியிலிருந்து இதனைப் பிரித்துக் காட்டும் பண்புகளுள் அக் கற்பனைகளில் ஆடம் பரமிராதது ஒன்று; நடிப்பவர் நடிப்புப் பெருமை மற்றொன்று. நான் இந் நடிப்புக் குழாத்தில் அரங்க சீஃப்பாகச் சென்றேன். நடிப்பவருள் மிகவும் கேலிக்குரிய நடிப்பு நடித்தவர்கள் பாம்ஃப் ரெட் கோமானும் கோமாட்டியுமே. கையில் நெடுங் கோலுடன் தீர்த்த யாத்ரிகர் போல ஒருவரையொருவர் இடித்துக் கொண்டு வந்தனர்............ ஹாலந்து வழித் தங்கள் கடிதம் வந்துசேர்ந்தது; மறு கடிதம் வரை. தங்களன்புள்ள, ..................... கடிதம் - 18 பகட்டும் பொய்ம்மையும் (இதுவுமது) லண்டன், ஏப்பிரல் 22, 1742 இக்கடிதத்தின் அளவிலிருந்தே நான் மிகுதி கூறுவதற்கு எதுவும் கிடையாது என்று காணலாம். நகர முழுவதுமே ஈஸ்டர் பண்டிகைக்காக நகரைவிட்டு வெளியே போயிருக்கிறது. இங் கிருப்பதெல்லாம், நகர்த்தூசி, கிழடுகட்டைகள், இரகசியக் கமிட்டி ஆகியவைகள்தான். பண்டிகை கொண்டாடுபவர்களும் வேறு எதைப்பற்றியும் பேசக்காணோம். இரகசிய இலாகாச் செலவு பற்றியே எல்லாரும் கிசுகிசுவென்று பேசிக்கொள்ளு கிறார்கள். திருத்தகை. ஜான் ராய்டன் மட்டும் (இவர் இத்தாலிச் செய்திகளில் புலி என்று எங்களுக்குத் தெரியுமே!) யாரும் கேட்காமலே எல்லாரிடமும் சென்று எல்லாம் கூறிக்கொண்டி ருந்தார். “சென்ற வாலிங் ஃபோர்ட் தேர்தலில் நானே இரண்டாயிரம் பொன் செலவு செய்திருக்கிறேன். சரியான வழியில் செலவு செய்வததனால் இன்னும் 1500 பொன் தருவதாக மார்லிப் பெருமகன் கூறினார்” என்றார் அவர். `மார்லி அத்தொகைகளை எங்கிருந்து பெற்றார்’ என்று கேட்டதற்கு அவர், `எனக்குத் தெரியாது! முதலமைச்சரிடமிருந்தே பெற்றிருக்க வேண்டும் என்று நம்புகிறேன்’ என்றார். இவ்வுரையே வழக்குமன்றில் கூறப்பட்டால் ஒரு சான்றுரையாகப் போதியது. ஆனால், எதிரிகள் ஒவ்வொரு உறுப்பினரையும் இது வகையாக உசாவ விரும்புவதாகக் கேள்வி. இப்பேச்சு எழுந்ததே. எட்ஜ் கோம்ப் பெருமகனாக்கப்பட்டார்! ஏனெனில், அவரே கார்ன்வால் தேர்தல் தொகுதி விற்பனைக்குரிய முக்கிய கையாள் என்று நம்பப்படுகிறது. இச் செயல் நிகழ்ந்தகாலை திருத்தகை, ஜான் காட்டன், “இனி நியூகேட்டுக்கும் பெருமக்கள் அவைக்கும் உள்ள வழியில் கிடக்கிறது உங்கள் தகவல்” என்றார். ஃபிளான்டர்ஸ் (ஹாலந்து) நாட்டுக்கு நம் படைகள் வருகிற சனிக்கிழமை மாலை புறப்படுகின்றன. முதல் தொகுதியில் ஜயாயிரம் வீரர் இருப்பர். மொத்தம் பதினாறாயிரம் வீரர் செல்வராம். ஹேக் நகரில் ஸ்டேர் கோமானுக்கு எவ்வளவு வெற்றி கிட்டிற்று என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், ஆஸ்திரியப் படைகளின் முன் பிரஷிய அரசன் ஓடியது கேட்டு மகிழ்ச்சியடைகிறேன். உண்மையில் இவ்வோட்டம் கோழைத் தனத்தால் நிகழ்ந்தது அன்று. அதனினும் கொடிய ஒரு தீக்குணத்தினால் அமைந்தது ஆகும். அதாவது நயவஞ்சமாக உடனிற்கும் நேசநாட்டினரைக் காட்டிக் கொடுப்பதற்காகவே... ரேன்லக் பூங்காவில் ஒரு பெரிய நாடக மாளிகை கட்டப் படுகிறது; கட்டடம் இன்னும் முடியவில்லை; ஆனால், மாடி யறைகள் நிறைய சிறு உணவு விடுதிகள் அமைந்துள்ளன. இக் கட்டடம் பன்னீராயிரம் பொன் செலவில் கட்டப்படுகிறது. கட்டட முடியுமுன்பே விடுதிகளால் பெருந்தொகை கிடைக் கிறது. நேற்றுமட்டும் 3880-க்கு மேற்பட்ட மக்கள் உண்டி யருந்தினர். நுழைவுச் சீட்டு ஆளுக்கு 18 அணா ஆகின்றது. ஒரு பொன்னில் (20 வெள்ளியில்) 4 வெள்ளி வரிகொடுத்துக் கேவலம் உணவுவிடுதிகள் கட்டும் நாம் எவ்வளவு ஏழைகள் என்று பாருங்கள். இப்போது புதிய இசை நாடகமொன்று நடைபெறுகிறது. லான்ட்ஸ்டௌன் பெருமாட்டியின் புதல்வி செல்வி ஹாமில்டனிடம் தோழியாயிருக்கின்றார். இச்செல்வி புரூக் சீமாட்டியாக வரவிருக்கிறார் என்று நீங்கள் அறிவீர்கள். இச்சிறு பெட்டைக் கோழிகள்தான் இனி எத்தகைய முட்டைகள் இடுமோ! உங்கள் கடிதம் காண அவா! எது கண்டாலும் எழுதுக. தாங்கள் எழுதும் எதுவும் அறிய ஆவல்! இங்ஙனம் தங்கள், ..................... கடிதம் - 19 சிறு செய்திகள் ஐ (இதுவுமது) நடுவேனில் நாள் - 1742 அன்பார்ந்த ஹோரேஸ், அமைதியின் கீதத்திடையே இக்கடிதம் எழுதுகிறேன். கடற்படைத் தலைவரின் போர்க்குரல் கீதம் சிறிது ஓய்ந்திருக் கிறது. அதற்கிடையே சில ஆயிரம் ஃபிரஞ்சு மக்கள் அழிவுடன் பிரேக் நகர் வீழ்ச்சியடைந்த வெளிநாட்டுப் போர்ச் செய்தியும் மகிழ்ச்சிக்குரியதாயிருக்கிறது. போலந்து அரசர் உடன்படிக்கை செய்யவிருக்கிறார் என்று ஒவ்வொரு நாளும் கூறப்பட்டு வருகிறது. ஆயினும், பிரஷ்யர் அதற்கு 16 நாள் தவணைக்கு மேல் கொடுக்கமாட்டார்கள் என்று உறுதியாக அறிகிறோம். இரகசியக் குழு அறிக்கையைச் செவ்வாயுடன் முடித்து விடப் போவதாகக் கூறப்படுகிறது; என்று குறிப்பிடவே விரும்புகிறேன். ஏனெனில், அரண்மனைத் திரைமறைவு எனக்குத் திறக்கப்படவில்லை. அவர்களை நம்பி நானாகப் பொய்க்காளாய் விடுவதினும் அவர்கள் பேரில் பொறுப்புப் போட்டுக் ‘கூறப்படு கிறது, கூறுகிறார்கள்’ என்று அடை கொடுப்பது நல்லதல்லவா? ஸ்க்ரோப் விவகாரத்தை ஓய்த்து விட்டாயிற்று. அவர் பொருள் துறைச் செயலாளராயிருப்பதால் அவருக்குத் தொல்லை கொடுக்கக் கூடாதென்று பொருளமைச்சரும் திருத்தகை ஜான் ரஷெட்டும் பேசினர் - அப்பப்ப! இந்த அமைச்சியல் என்பதே ஒரு தனி மொழிதான். ஆனால், மனம் வைத்தால் அந்த மொழியை ஒரு வாரத்திற்குள் படித்துவிடலாம். இப்போது நகரில் இருக்கும் உறுப்பினர் மிகச்சிலர்; அவர்களும் குழுவின் நண்பர்களல்லர். இந் நிலையில் அரசியல் காலநிலை காட்டும் பொறி போன்ற என் சிற்றப்பனார் மூலம் ஒருவாறு நிலைமைகளின் போக்கை அறிந்துகொள்கிறேன். இவ் வாரத்தில் அவரிடம் ஒரு பெருமாறுதல் காண்கிறேன். இதற்கு முன் எப்போதுமே வாய்திறந்து பேசாத அவர் இவ்வாரம் மூன்று தடவை பேசிவிட்டார். பாத் கோமகன் பட்டம் முதலிய உயர் உரிமைத்தாள்களை திரு. புல்ட்னி சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டு சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறார். இரண்டு வாரத்துக்குள் அவை கொடுக்கப்பட்டுவிடும். இதற்குள் இத்தாலிய நண்பர் மூலம் ஒரு சுவைமிக்க மறை செய்தி பற்றிக் கேள்விப்படுகிறேன். அது முற்றிலும் உண்மைதானா என்று என்னால் கூறமுடியாது. இத்தகைய செய்திகள் உண்மை யானால் நமக்கு எச்சரிக்கை; அன்றானால் வேடிக்கைத் துணுக்கு! அது நம் (ரிச்கோர்ட்) கோமகன் தம் காதலியுடன் திடீரென்று ஓடிப்போன செய்தி பற்றியது. வாஃ டென்டாங்க் என்ற ஜெர்மன் ஒருவரிடமிருந்து அவர், அந்த ஜெர்மனியருக்கு எதிராகக் காதற்பழி செய்ததாகவும், அதுபற்றித் தம்முடன் மற்போருக்கு வரும்படியும் ஒரு கடிதம் அவருக்கு வந்ததாம்*. நம் கோமகன் இதற்கு மறு மொழியே தரவில்லையாம். அவர் கூரிய அறிவு தம் விலை மதிப்பேறிய உயிரை ஒரு ஜெர்மன் மூர்க்கன் வாள் வீச்சுக் கிடையே பரீட்சை செய்ய விரும்பவில்லை போலும்! ஆனால், அம்முரட்டு ஜெர்மன் தானே நேரில் வந்து மறுமொழி கோரப் போவதாக அறிவித்தான். எனினும் கோமகன் இதற்கெல்லாம் இளைத்தவராயில்லை. ஜெர்மன் வந்து பார்க்கும்போது கோமகன் அங்கேயில்லை. அதுமட்டுமன்று, கோமகன் திரும்பி ஃபிளாண்டர்ஸ் வருமுன், ஜெர்மன் வீரர் இறந்து போய்விட்டார்! இக் காதல் வீரரைக் காதலித்த வீரக் காதலியின் பெருமை தான் என்ன? எனக்குமட்டும் ஓர் ஆற்றாமை உண்டு. அவ்வீரப் பெண்மணி கவசமணிந்து அவர் காதலைக்காக்கப் புறப்பட்டிருக்க வேண்டும். பெண்களின் காதலுக்காக ஆண்கள் போரிடலா மானால், ஆண்களின் காதலுக்காகப் பெண்கள் ஏன் போரிடலா காது?... லாரேயின் தலைமகன் (ஞசiஅயவந) அம்மைநோயால் இறந்ததாகக் கேள்விப்படுகிறேன். அவர் வகையில் என் பரிந் துரையை அனுப்புக. அவர் சொற்றிறம், நடைத்திறம் அவரால் விட்டுச் செல்லப்பட்டவர்கள், அவர் பிரிவுக்கு வருந்தும்படி செய்யமாட்டார் என்றே எண்ணுகிறேன். அவர் உற்றாரிடம் கூட அவ்வளவு மிருகத்தனமாக நடந்துகொண்டார்! அவருக்கான பரிந்துரை ஆசாரப் பரிந்துரையாகவே இருக்க முடியும். சொற்செல்லன் திரு. பிட் வந்துள்ளார். லிங்கன் பெருமானா ரில்லத்தில் அவருடன் இன்று விருந்து கொள்கிறேன். தம் நலம் தெரிவிக்க வருகிற வேனிற்பருவத்திற்குள் முழு உடலுரம் பெற்றுவிடுவீர்களென்றும் நம்புகிறேன். வணக்கம். தங்கள், ............ கடிதம் - 20 சிறு செய்திகள் ஐஐ டௌனிங் தெரு, ஜூன் 30, 1742. அன்புடையீர், இப்போது மணி 6 ஆகிறது. மன்ற அவையிலிருந்து இப்போதுதான் வந்தேன். புதிய அமைச்சரவை ஒரு வாரமாகக் குழு அறிக்கையை ஒருவாறு முடித்துவிட முயன்றது. ஆனால், அவர்களை அவர்கள் கடமை யுணர்ச்சி இயக்கியதேயன்றி ஆர்வம் இயக்கவில்லை. அவர்கள் எவ்வளவு முயன்றும் மொழியெடுக்கும் அறைக்கு அவர்கள் ஆட்கள் திரளவில்லை. அறிக்கையை அச்சிடுவதா வேண்டாமா என்ற கேள்வி வந்தபோது, நகைச்சுவை மிக்க உறுப்பினரான வெல்ட்டர்ஸ் கார்ன்வால் “முந்திய அறிக்கையின் `ஒன்றுமில்லாமை’ கண்டவர்கள் இந்த அறிக்கையின் `ஏதேனும் உள்ளமை’ காணச் சற்று மகிழ்வர். ஆகவே இதனை அச்சிடக் கோருகிறேன். மேலும் அச்சிட்ட பிறகாவது அரசர் ஒருவேளை அதனைப் பார்க்க நேரலாமல்லவா?” என்றார். நகைச்சுவை செயலுக்குத் தூண்டுவது அரிதாயினும், அவர் கூறியபடி அச்சிடப் படலாம்; ஆனால், முறையான இடத்திலல்ல*. தங்கள் ஜூன் 24 ஆம் நாள் கடிதமும் திரு. சூட்டின் கடிதமும் பெற்றேன். அதற்கும் முந்திய கடிதத்திற்கும் மறுமொழி எழுதுகிறேன். என் கடிதங்களில் பிறர் கை படுவதுபற்றி நீங்கள் கவலைப்படுவது காண்கிறேன். ஆனால், இப்போது தங்கள் கடிதங்கள் திறக்கப் படாமலே வந்து சேருகின்றன. படகுகளின் தொல்லைகளாலும், புயல்களாலும் கடிதங்கள் நிலைகெடலாம் என்று கூறவிரும்புகிறேன். திரு. புல்ட்னிக்கு ஏதாவது புதுத்தொல்லைகள் ஏற்பட்டுள் ளனவா என்று கேட்டிருக்கிறீர்கள். புல்ட்னி போன்ற சஞ்சல புத்தியுடையவர்களுக்குப் புதுத்தொல்லை தேவையேயில்லை. பழய தொல்லைகளையே புதுப்புது உருவில் மாற்றியமைத்துத் தொல்லையனுபவிப்பதுதான் அவர்கள் வேலை....... தன் குடிப்பெயரேயுடைய மற்றொருவரை மணந்த மடீராவிலுள்ள ஒரு கோமான் மகள் கதை எனக்கு மிகவும் நகைப்பை ஊட்டியது. ‘மடீராவன்றி வேறு பேச்சுப் பேசாத’ உமது நண்பர் பற்றிய குறிப்பும் அப்படியே. இங்கே பாம்ஃபிரட் பெருமாட்டி அதனைக் கேட்டு ‘மடீராவா! அது என்ன மொழியோ? மடீரா ஐரோப்பிய அரசர் கீழ்ப்பட்டதாதலால் அம்மொழியும் ஓர் ஐரோப்பிய மொழியாகத்தான் இருக்க வேண்டும்’ என்றாள்! என்னே அவள் வறண்ட நகைச்சுவை! இங்கே இன்னொரு சுவைமிக்க கதை! கிறித்துவ மதத்தை உலகெங்கும் பரப்புவதில் ஊக்கங் கொண்ட ஒரு சமயப் பற்றாளர் குழுவினரை வரவேற்றது, ஒரு சமயப்பணித் தலைவர் “எவ்வளவோ மூடநம்பிக்கைகளுள் ஆழ்ந்த அமெரிக்க இந்தியரிடையே எம் ஜெருசலத்துத் தந்தை குரல் எத்தகைய இன்பந்தந்துள்ளது என்பதை நீங்கள் இங்கே யாரைக் கேட்டாலும் உணரலாம்” என்றாராம்! அதன்பின் அங்கே பக்கத்தில் வந்த `கறுப்பன்’ ஒருவனிடம் `சென்ற ஞாயிறன்று கோவிலில் அப்பமும் ஒயினும் தரப்பட்டு ஆற்றப்பட்ட அருள் வழிபாடு உனக்கு இன்பகரமாயிருந்த தல்லவா?’ என்று அவர் கேட்டார். அவன் “ஆம் ஆனால், ஒயினுக்குப் பதில் `ரம்’ கொடுத்திருந்தால் இன்னும் இன்பகரமா யிருந்திருக்கும்” என்று கூறினானாம். சமயப்பணியாளர் சினமடைந்தனர்; ஆனால், சமயக் குழுவினர் மகிழ்ச்சியேயடைந்தனர். ஓர் ஏலக் கூட்டத்தில் உங்கள் நண்பர் ஒருவரைக் கண்டேன். உங்கள் நண்பர் என்பதற்காகவே பேசினேன். அவர் தம் கடிதம் எதற்கும் நீங்கள் மறுமொழி எழுதவில்லை என்று குறை கூறினார். ‘நீங்கள் இதுவரை எழுதிய கடிதம் ஒன்றுதான். அதற்கு `அவர் மறுமொழி எழுதியது எனக்குத் தெரியும்’ என்றேன்... இந்த நண்பர் யார்’ என்று கூறவேண்டுமா? பெய்ஸ்லிப் பெருமகன் என்று நீங்களே அறிந்துகொண்டிருப்பீர்கள்.... இங்கே அரசருக்கு எதிரான ஒரு சதிபற்றிப் பேச்சாயிருக் கிறது. அது யாரோ எழுதிய ஒரு கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பேச்சு. திரு. சூட்டுக்கு நாளை எழுதுவேன். தங்கள், .......... கடிதம் - 21 ரிச்சர்டு வெஸ்ட்டு மீது இரங்கற்பா (இதுவுமது) 1. சிறியவர் பல்லோர் சிறப்புற வாழ்ந்தனரே, கறையிலாச் சீரியோய்! கல்லறையில் தாழ்ந்தனையே! அறிவுநற் பண்புவெள்ளம் அலைகடல்போல் தழையாமே அடைக்கும்தா ழிடும்காலன், அந்தோ பழியாமே! 2. பண்பிற் பயின்று பரந்தமைந்த நின்உள்ளம் வெம்பு துயரிடையும் மேவலிலதே கள்ளம்! அம்பொன் அழலிடை மாற்றுயர்தல் போலேநீள் துன்பத்திடை பொறுமைதோய்ந்த குன்றமானாய்நீ? 3. கண்ணோட்டம் உள்நோட்டம்; கருதுறாய் சிறுசூழ்ச்சி; கருத்தகல மதற்கோநின் கண்ணகல மத்தாட்சி; உண்ணெகிழ்ந்த தோதுதும்நா, உன்உளத்தின் மெய்த்தூது; ஓங்குமுயர் உண்மையன்றி ஏதும் என்று முணராது. 4. மைக்கோ லறியா தொருச்சார்பு, புகழ்ச்சியிலே; வைக்கோ லளவும் வழுவிலாய், இகழ்ச்சியிலே! மெய்க்கோ லமாக மேவுநின் வாய்மொழியே விரிதரும் கருத்தோடை திரியுநறும் பொழிலே! 5. தாழ்விலா வாழ்வினாய்! தாழ்வுரையும் வாழ்வுரையே? சார்ந்த வசையினும் இசையுரையாம் காழ்வுரையே தாழ்வும் சிறுமையும் தாம்கண் டொளிக்குநீள் வாழ்வும் பெருமையும் காட்டும் பளிக்குநீ! 6. மெய்வந்த நின்புகழ் விரிதர வொண்ணாதே தெய்வந் தடைந்த தெனவுளத் தெண்ணாதே, பொய்வந்த எம்வாழ்வில் பொன்றாமற் காத்ததே உய்யும் புகழ்உலகில் எனமகிழ் பூத்ததே! கடிதம் - 22 நாட்டுப்போக்கும் மக்கள்போக்கும் (இதுவுமது) டௌனிங் தெரு, ஜூலை 14, 1742. நாள்வாரிக் குறிப்பு பதவி ஏற்றத் திருவேட்டின் இரண்டாம் அதிகாரம் தொடங்கும் முறை இது. 1. இதோ காண்க, பதவியேற்றம் நாடிப் பாடுபட்ட மக்கள் தலைமுறைகள் இவை இவை என. 2. இருபது நல்லாண்டுகளாகப் பதவியேற்றம் நாடிப் பாடுபடும் அவர்கள் அதனைக் கண்டிலர். ஆம். இருபது முழு ஆண்டுகளாக அவர்கள் ஏமாற்றப் பாலைநிலத்தே தம் கால்கள் தேய்ந்து குறுகும்படி நடந்து அலுத்தனர்........... இவ்வாறாகச் செல்கின்றது அந்த ஏடு. விவிலிய நூல் பாணியை விடுத்துக் கூறுவதானால் ஸர் ராபர்ட் ப்ரௌன் முதலாக ஓரிருபது பேருக்கு இன்னாருக்கு இன்ன பதவி எனத் திட்டமிட்டு எழுதிய பட்டியலுடன் ஸர் ராபர்ட் அரசனைச் சென்று கண்டார். அரசனோ ஸர் ராபர்ட் பொது அவை விடுத்துப் பெருமக்கள் அவையில் இடம் பெற்றாலன்றி எவருக்கும் பதவி தர முடியாதென்று கூறினான். ஸர் ராபர்ட் அதன்படி செய்ததும் அனைவருக்கும் பதவியளிக்கப் பட்டது. ஸர் ராபர்ட் பட்டம் பெற்றார். அனைவரும் அரசன் கைக்கு முத்தமிட்டு அவரவர்க்குரிய பங்கை எளிதில் பெற்றனர். பாராட்டுகளும் நன்றியுரைகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இந்த நல்ல தருணத்தில் என் விகடப் பேச்சுப் பலருக்கும் கோபமூட்டியிருக்க வேண்டும். இந்தத் தேசியப் பதவித் திட்டத்தில் ‘போலி இளவரசர்’ சேர்ந்து மன்னர் பதவி கோரும் திறம் அவருக்கு இருந்திருந்தால், அவர் கூட எளிதில் மன்னரா யிருக்கலாம் என்றேன் நான்! ‘கவர் பெருமகனுக்கு ஏன் முன்னமே பதவி கிடைக்க வில்லை, பதவிகள் கிட்டவில்லையா?’ என்று கேட்டார் ஒருவர். ‘பதவி உண்டு. கைலைத்தெய்வம் (கிறித்துவர் பாணியில் ரோம் நகர்த்தெய்வம்) பதவிக்கு ஆளைத்தான் இன்னும் பிறப்பிக்க வில்லை என்று யாரோ விடையிறுத்தனர்! உலகம் சுழன்று வருகிறது என்பது எவ்வளவு உண்மை! பழைய முறைகள் ஒழியவில்லை, புத்துருவம் மட்டுமே அடைகின்றன. தங்களுக்குக் கடிதம் எழுதும் இந் நேரத்தில்தான் என் மூட்டை முடிச்சுக்களைக் கட்டி வைத்துக் கொண்டு அவற்றி னிடையே இருந்து எழுதுகிறேன். இந்த இல்லம் ஸான்டிஸ் பெருமகனாருக்கு வில்லிங்டன் பெருமகனாரால்* தங்கிடமாக அளிக்கப்பட்டிருந்தது. அவர் வெளியேறும்படி உடனே எச்சரிக்கை அனுப்பியுள்ளார். ஒரு சில கல்தொலைவில் ஸர் ராபர்ட்டுக்கு ஓர் இல்லம் இருக்கிறதாம். அதனால் இம்மாற்றம் சுருங்கச் சொன்னால் வேறு இல்லம் வாய்க்கும் வரை நாங்கள் நார்ஃபோக்குக்குச் செல்கிறோம். விசிப்பலகை, நாற்காலி முதலிய யாவும் பூட்டுப் பூட்டாகக் கழற்றிக்கட்டப்பட்டு இங்கே நாற் புறமும் தாறுமாறாகக் கிடக்கின்றன. அதற்கிடையே தூய திரு. ஜான் போலத் திட்டியும் பழித்தும் ஆணையிட்டும் ஆரவாரம் செய்துகொண்டும் நான் நின்று கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றிலும் ஜானைச் சுற்றி இருந்த உயிர்களினும் விசித்திரமான பல்வகை உயிர்கள் உள்ளன-கரிய மீசையும் கரிய காலடிகளும் உடைய என் பூனை, என் நாய் முதலியவற்றைப் பார்க்க, அவை இன்னும் என் பழம் பெருங்குடிக்கு* இலக்காகவே இங்குக் குடி கிளம்பும்போது காணப்படுகின்றன என்று தோன்றும். சென்ற வாரம் முகமூடி நாடகத்தில் 100 ஆடவரும் 8 பெண்டிரும் இருந்தனர். அவர்களுள் இருவர் ஆய்ச்சியர் உருவில் காணப்பட்டனர். அரசரும் இவர்களிடையே இருந்து காட்சி களைக் கண்டுகளிப்புற்றார். அவர் அணிந்த பட்டுடை அவர் மெய்வடிவை மறைத்தது. ஒரு மாது ஆணுடை தரித்து உருவத்தை முற்றிலும் மாற்றி மூக்கை மறைத்து வந்திருந்தார். அதனையறிந்து கொண்ட மற்றொரு மாது அவளிடம் சென்று ‘அம்மா’ மூக்கில்லாமல் ஆண் தோற்றமளிக்கும் முதல் பெண்மணி நீங்கள்தான்’ என்றார். நேற்றிரவு ஓரிடத்தில் தீப்பற்றிக்கொண்டதாகக் கேள்விப் பட்டு அப்பக்கம் சென்றேன். என் வண்டி அக் கூட்டத்தினிடையே செல்ல முடியாது போகவே, இறங்கிச் சற்று ஒதுக்கமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாரும் பரபரப்புடனும் கவலை யுடனும் இருந்த அந்த நேரத்திலும் ஒருவர் அமைந்து களிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். தீயணைக்கும் முயற்சி களைக் கண்டு அவர் சற்று வெறுப்புடன் ‘இன்னும் இரண்டொரு மணி நேரம் தீயை விட்டு வைத்திருக்கக் கூடாதா, என்ன! அதற்குள் இத் தீயால் இல்லத்துக்கு ஒரு முடிவு ஏற்படக் கூடுமே’ என்று வாய்விட்டு ‘வாழ்த்திக்’ கொண்டிருந்தார். ஆனால், தீ நன்கு பரவக்கூடுமானால்கூட வால்போல் வீட்டுக்குப் பரவ முடியா தென்பதை அவர் கருதிப் பார்க்கவில்லை. வேறு சிலர் இலண்டனில் முன்பு ஏற்பட்ட பெருந் தீக்களைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். ஒரே ஒரு வேலைக்காரப் பெண் பத்து ஆண்களின் வலிவுடன் தண்ணீர் வாளிகளைத் தூக்கிச் சென்று தீயணைப்புக்கு உதவிக் கொண்டிருந்தாள். எங்கள் வீட்டுக்கு நான் சென்ற போது தீ அதற்குள் தடைப்பட்டுவிட்டதாதலால் நொடிகளில் சிலபகுதி வெக்கையால் கருகியது தவிர மீதிப் பொருள்கள் அப்படியப்படியே பயணத்துக்கு உகந்த நிலையில் இருப்பது கண்டேன். நீங்கள் வாங்க விரும்பிய படத்தை ஸர் ராபர்ட் விரும்புவது உறுதி. அவர் விரும்பாவிட்டால் கூட எப்பாடுபட்டும் நான் வாங்கிக் கொள்ளவே விரும்புகிறேன். ஆதலால் அதை எப்படியும் வாங்குக. உங்கள் உடன் பிறந்தார் வழி உங்கள் கடிதம் ஒன்று பெற்றேன். நீங்கள் குறிப்பிட்ட பூனைகள் தந்த தொல்லை பற்றிக் கேட்க உண்மையில் வருந்துகிறேன். அவற்றை நான் எனக்காக விரும்பவில்லை; இஸ்லேப் பெருமகனாருக்காகக் கோரினேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந் நட்புரிமைக்கு மன்னிக்கக் கோருகிறேன். இங்ஙனம் தங்கள், ............ கடிதம் - 23 ஆட்சியாளரும் பொதுமக்களும் (இதுவுமது) என் சிறு கடிதத்தைக் கண்டு குறைகூறி நீங்கள் நெடுநீளக் கடிதம் எழுதியுள்ளீர்கள். ஆனால், இன்னும் எனக்கு அதிகம் எழுத ஒன்றும் அகப்படவில்லை. அரசியல் மன்றின் நீண்ட நாளைய கூட்டம் முடிவுற்றது. அதோடு இரகசியக் குழுவும் மறக்கப்பட்டு விட்டது. அதனை மறவாது நினைவில் வைத்திருப்பவர் ஒருவர் மட்டுமே. அவரே பாக்ஸ்டன். பாவம் அக் குழுவினால் தாம் பதவியிழந்ததை அவர் மறக்கமுடியாது. ஆர்ஃபோர்டு பெரு மகனார் இன்று அரசவைக்குச் சென்றார். அவருக்கு வழக்கமான மன எழுச்சியுடனும் நகைச்சுவையுடனும் அவர் புதிய அமைச்சர்களைப் பற்றிப் பேசினார். “அப்பாடா! ஒருவகையில் மன்றக்கூட்டம் முடிவடைந்தது. அதனுடன் பாக்ஸ்டனுக்கும் பெல்லுக்கும் எனக்கும் சுதந்திரம் கிடைத்து விட்டது” என்றார். விருந்தினர் சந்திப்பின்போது மன்னர் அவருடன் மிகவும் அளவளாவிப் பேசினார். மன்னர் அவரைத் தனியே இட்டுச் சென்று பேசக்கூடும் என்று புதிய அமைச்ச ரவையினர் அஞ்சினர்: பழைய அவையினர் எதிர்நோக்கினர். ஆனால், அவர் அங்ஙனம் செய்யவில்லை... நகரில் இப்போது மிகுதி ஆட்கள் இல்லை. ஆயினும், இங்குப் புதிய அமைச்சர்கள் வகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி பலருக்கு மிகவும் கிளர்ச்சி தந்துள்ளது. சென்ற ஞாயிறன்று அவர்கள் நியூக்காஸில் கோமானால் அளிக்கப்பட்ட ஒரு விருந்துக்குச் சென்றிருந்தனர். அங்கே அவர்களுடன் அவர்கள் வேலையாட்கள் பெரிதும் குடித்துக் களித்திருந்தனர். இதன் பயனாக அவர்கள் திரும்பிவரும் வழியில் நியூ பார்க்கிற்கு அருகில் வண்டியோட்டி முன்பெட்டியிலிருந்து உருண்டு விழுந்து விட்டான். கார்ட்டெரட் பெருமகனார் உட்பட வண்டியிலிருந்த பெருமக்கள் அனைவரும் இறங்கிப் பக்கத்திலிருந்த வழிவிடுதி யாளரிடம் நகருக்குச் செல்லும்வகை தெரிவிக்க முடியுமா என்று கேட்டனர். ஆர்ஃபோர்டுப் பெருமகனாரின் வண்டியோட்டியின் உதவியால் சென்றாலன்றி வழியில்லை என்று கூறப்பட்டது. அவர் உதவுவார் என்றும் உறுதி கூறப்பட்டது. வேறு போக்கின்றி அங்ஙனமே கோரியதன்பேரில் நகர் செல்ல முடிந்ததாம்! ஸெர்ட்டெஸி என்ற இத்தாலி நண்பர் இத்தகைய வேளாண்மைக் குன்றான ஆர்ஃபோர்டைக் காண விரும்பிச் சென்றார். ஆனால், அக்கோமகனுக்கு ஆங்கிலமும் இலத்தீனும் அன்றி வேறெந்த மொழியும் பேசவராது என்பதை நீங்கள் அறிவீர் களன்றோ? ஸெர்ட்டெஸிக்கோ இரண்டு மொழிகளிலும் ஒரு சொல்கூட விளங்காது. ஆயினும், அந்த அப்பாவி இத்தாலியர் பேச்சிடையிலும் மற்றச் சமயங்களிலும் அடிக்கடி தம் நினைவுக் குறிப்பேட்டை எடுத்து மூன்றாவது ஏற்றமுடைய அடை மொழிகள் நிறைத்து* எல்லாவற்றையும் விரித்துரைத்தாராம். அண்மையில் இங்கே வருந்தத்தக்க மோசமான கூட்டுக் கொலை ஒன்று நடந்துள்ளது. குடிவெறி கொண்ட சில நகர் காவலர் பெண்கள் பலரைத் தெருவில் செல்லும்போது ‘ஒழுங்கு மீறினர்’ என்று கூறி இழுத்துச் சென்று சிற்றறை ஒன்றில் கதவையும் பலகணியையும் மூடி அடைத்து விட்டனர். மூச்சுவிடக் காற்றில்லாமல் காலை விடிவதற்குள் நால்வருக்கு மேல் இறந்துவிட்டனர். அவர்கள் எவரிடமும் 18 பென்னிக்கு (18 அணா) மேலில்லையாம். சிறிது தண்ணீர் தருவதானால் 18 பென்னியை யும் தருவதாகச் சிலர் மன்றாடியும் தண்ணீர் மறுக்கப்பட்டு அவர்களும் உயிர் துறந்தனராம். 18 பென்னிக்கு மேற்பட்ட துட்டு உடையவர்களாக இருந்திருந்தால் அவர்கள் இப்படி அடை பட்டிருக்க மாட்டார்கள் என்று கூறத் தேவையில்லை. குடியினால் வருங்கேட்டை மட்டுமன்றி ஏழை யாய்ப் பிறக்கும் கேட்டையும் இது விளக்குகிறது என்று கூற வேண்டும். தங்களுடைய ஜூலை 15 ஆம் தேதி கடிதமும் அதனுடன் இளவரசர் இளவரசி கடிதங்களும் வந்து சேர்ந்தன. இளவரசி யார், தங்கள் நட்பின் பயனாக, ‘இந்த இங்கிலாந்தில் மட்டுமன்றி சீனா, இந்தியா, இந்தியத் தீவுகள் ஆகிய எவற்றிலும் எப்பொருளிலும் எனக்குக் குறையில்லை யென்றாக்கி யுள்ளீர்கள்’ என்று குறித்துள்ளார். இத்தாலியில் ‘மெடிஸி’ குடியினர் வள்ளல் குடியினர் என வழங்கப்பட்டது போல என் குடியும் வழங்கப்பட்டு அதேபோல் கொடுங்கோலரசாட்சிக்கு வழி கோலுமோ என்னவோ? நான் இங்ஙனம் அஞ்சுவதற்குக் காரணமில்லாம லில்லை. எங்கள் பொருள்களை டௌனிங் தெருவிலிருந்து அகற்றும்போது ஸர் ராபர்ட்டிடம் எம் முன்னோரான நார்ஃபோக் பெருமானார் வரவு செலவுக் கணக்குப் புத்தகம் ஒன்று அகப்பட்டது. அதிலிருந்து அவர் மன்றத்தில் உறுப் பினராக லண்டனில் இருந்த 3 மாதம் 10 நாட் காலத்தில் அவர் செலவு செய்த மொத்தத் தொகை 64 பொன், 7 வெள்ளி, 5 காசு (பென்னி) என்று தெரிய வந்தது. என் பாட்டனாராகிய இந்த நார்ஃபோக் பெருமானார் ஆண்டு ஒன்றுக்கு 2000 பொன் வருவாய் உடையவர் என்பதை நினைக்க இத்தொகை வியப்புக் கிடமாயிருக்கிறது. உண்மையில் இது இன்று நாங்கள் அரசவைக்குச் செல்லும் போது வீசிக்கொள்ள வாங்கும் விசிறிகளுக்குப் பற்றாது! ஆர்ஃபோர்டு பெருமகனார் மன்றத்திற்குப் போனபோது கார்ட்டரெட் பெருமகனார் வண்டியோட்டித் தந்துதவியதற்காக நன்றி தெரிவித்தார். கூட நியூகாஸில் கோமகனும் இருந்தார். என் தந்தை (ஆர்ஃபோர்டு) ‘ஐயரீர், கோமகன் உங்களை எப்போது குடைமறித்தாலும் சரி, நான் உங்களுக்கு உதவி செய்யச் சித்த மாயிருப்பேன்’ என்றார். பிற தங்கள் மறுகடிதம் கண்டு. ........................... கடிதம் - 24 வெற்றிக் கொண்டாட்டம் (ஹோரேஸ் மானுக்கு) வெள்ளி நண்பகல், ஜூன் 24, 1743. இக் கடிதத்தை அவசர அவசரமாக எழுதுகிறேன்; என்ன எழுதுகிறேன் என்று தெரியாத அவசரம். ஒரு போர்ச்செய்தி, ஒரு வெற்றிச் செய்தி! அது பற்றி மகிழ்ச்சியா, அன்றா என்று கூடக் கூறமுடியவில்லை. ஏனெனில், எம் நண்பர்கள் பற்றி எச்செய்தியும் வரவில்லை. நியூகாசில் கோமானிட மிருந்து நம் பெருமகனாரிடம் எம் தூதன் இப்போதுதான் வந்திருக்கிறான். இவன் மூலம் போர்க்களத்திலிருந்து கார்ட்டரெட் பெருமகனார் எழுதிய கடிதத்தின் பகர்ப்பு ஒன்று வந்துள்ளது. போரின் கொந்தளிப்பில் அரசன் ஈடுபட்டிருந்தான். ஆனால், கேடு எதுவுமில்லை. கோமகனுக்குக் காலில் காயம்பட்டது; ஆனால், இக்காயம் மிக இலேசானதே. ஆரெம்பர்க்குக் கோமகனுக்கு மார்பில் காயம். உயர்தரப் பணியாளர்களிடையே இறந்தவர்கள் தளபதி கிளெய்ட்டனும் தானாதிபதி பியர்ஸுமே. இவ்வளவே எனக்குக் கிட்டிய செய்திகள். அன்று காலை ஃபிரஞ்சு மக்கள் 25,000 வீரர்களுடன் மெய்னி நகரைக் கடந்துவந்தனர். ஆனால், இவர்கள் முறியடிக்கப் பட்டுப் பின்னடைந்தனர். நம் பக்கம் இரண்டாயிரவரும் அவர்கள் பக்கம் நாலாயிரவரும் சேதமாயினர். பலஃபிரஞ்சு அதிகாரிகளும் குதிரைப்படை வீரரும் மாண்டனர். நம் ஹானோவேரிய அரச மரபினர் பாராட்டத்தக்க செயலாற்றியுள்ளனர்; அத்துடன் முன்னேறித் தாக்கியவர்கள் அவர்களல்லர்; பேரரசு அவாவா லுந்தப்பட்ட எதிரிகளே. மொத்தத்தில் பொதுமக்கள் இருபக்கமும் போற்றும் தகைமைகள் நமதே. இப்புதுப் புகழ் நம் பழங்கறைகள் பலவற்றையும் போக்கப் போதியது. நம் திறத்தில் படைவீரர் எத்தனைபேர் என்பது தெரியவில்லை. ஒரு முப்பதினாயிரம் பேருக்குமேலிராதென்று எண்ணுகிறேன். ஏனெனில், ஹானோவேரியரும் ஹெஸ்ஸியரு மாகப் பன்னீ ராயிரம்பேர் அவர்களுடன் சேரவில்லை என்று அறிகிறோம். ஆம். என் அவசரத்தில் போர் எங்கே நிகழ்ந்ததென்று கூறக் கூட மறந்துவிட்டேன்! நான் குறிப்பிடுவது டெட்டிங்கன் போர் பற்றியது என்பதை உணர்க. (உணவு வேளைக்குப்பின் எழுதியது): அன்புடையோய்! இப்போது ஆர அமர இருந்து எண்ணி எழுதுகிறேன். என்னால் இவ்வெற்றி பற்றி எவ்வளவு மகிழ்ச்சியடையக்கூடுமோ அவ்வளவு மகிழ்ச்சியடையவே விரும்புகிறேன். ஆயினும், கார்ட்டரெட் பெருமகனாரோ, கடிதமெழுதிய பிறரோ என் மனத்திலிடம் பெற்றவர்களைக் கருத்தில் கொண்டா விவரம் எழுதியிருக்கக் கூடும் என்று எண்ணாமலிருக்க முடியவில்லை. அடுத்த அஞ்சல் வருவது நாளைக் காலைதான் - ஆனால், அப்போதுகூட இத் தகைய செய்திகள் வரமுடியா; இன்னும் அதற்கு நாட்கள் பல செல்லக் கூடும். ஆனால், அதற்கிடையில் ஒன்று கட்டாயமாகக் கூறலாம் - அரசர் புகழடைய இது எத்தனை நல்ல வாய்ப்பு! படையின் ஒரு கிளைப்பிரிவின் தலைமையை ஏற்பது அவர் தகுதிக்கு எவ்வளவு குறைந்ததென்று கூறப்பட்டது. ஆனால், இடர் நிறைந்த இடம் நாடியது மதிப்புக்கேடானதன்று என்று பெருமகனார் வலியுறுத்திக் கூறுகிறார். இப்படைகள். ஃபிரஞ்சுப் படைத்துறையின் வீர மலர்க்கொழுந்துகள்; அவர்கள் இனி மீண்டும் போரார்வத்தைத் தூண்டமாட்டார்கள். ஏனெனில், இத்தகைய வெற்றி இன்னும் ஒன்றுமட்டும் கிடைத்தால் போதும். ஃபிரான்சு நாட்டில் வட கோடியிலிருந்து தென்கோடி வரை நாம் தங்குதடையின்றிச் சென்று விடலாம். ஒரு வகையில் ஒரு ஃபிரஞ்சுப் போரில் இறங்கிவிட்டோம்; அதன் தொடக்கச் செயல் மிகச் சிறந்ததே. நம் கார்ட்டரெட் பெருமகனார் நலமும் ஸ்டேர் பெருமகனார் நலமும் நாடி இனிய தேறல் பருகினர். “திருந்திய செயல் இது. செய்வது யாரெனக் கவலை வேண்டாம்” என்று அவர் கூறுகிறார். அவர் கருத்துகள் எவருடையவற்றிலிருந்தும் பிரிந்த தனிப்பட்ட கருத்தே. தொடக்கத்திலிருந்தே “ஸ்பெயினுடன் சேர்ந்து நம்மை எதிர்ப்பதற்கு மாறாக இப்போது இந்த ஜெர்மன் போரிலீடுபட்ட தனால், அவர்கள் எவ்வளவோ நல்வாய்ப்பை இழந்து விட்டார்கள்” என்று அவர் கூறுகிறார். அஞ்சல் நேரமாவதற்குள் இன்னும் ஏதேனும் கேள்விப் பட்டால் எழுதுவேன். ஆனால், இவ் வெற்றி பற்றி இக் கடிதத்துக்கு முன் உங்களுக்குச் செய்தி தெரிந்திருக்குமா என்பதைக் குறியுங்கள். என்னிடமிருந்தே அதனை நீங்கள் முதலில் அறியவேண்டும் என்பது என் அவா. சனிக்கிழமை (மாலை) ஆம். எல்லாம் முற்றிலும் நலமாகவே முடிந்துள்ளது. எனக்கு அறிமுகமானவர்களில் கூட ஒருவரும் இறந்ததாகச் செய்தி வரவில்லை. ஆகவே பொறுத்துச் செய்தி வரவர, கலப்பற்ற மகிழ்ச்சியே பெருகுகிறது. மேலும் வெற்றிதந்த படைகள் நாம் முன் கேள்விப்பட்டபடி பதினோராயிரம் கூட அல்லவாம்; பதினைந்தே பதினைந்து படைப் பிரிவுகள் தானாம். தம்மிலும் இருமடங்கு பெரிய படை மீது அவர்கள் வெற்றி யடைந்தது வியப்பே. இச் செய்தியை நம் பெருமகனாருக்குச் சோல் மண்டலிப் பெருமகனார் தெரிவித்து எழுதினாராம். எதிர்தரப்புத் தலைவர்கள் மிகுந்த வீரங்காட்டிப் போராடின தாகவே தெரிகிறது. இதைக் கேட்க, ஃபிரஞ்சுப் படைவீரர்கள் தான் அவர்கள் தோல்விக்குக் காரணம் என்று கூறவேண்டி யிருக்கிறது. படைத் தலைவர்களில் 150 பேர் வரை காயமுற்றுத் தம் பார்வையிலேயே சிறைப்பட்டவரிடையே இருந்தனர். என்று மன்னர் மருத்துவர் ரான்பி கூறுகிறார்........ அஞ்சல் வரும் நேரத்தில் நம் குதிரைப் படைகள் எதிரிகளைத் துரத்திக்கொண்டு தானிருந்தனவாம்.........சுருக்கிக் கூறினால் இவ்வெற்றி எல்லா வகையிலும் முழு நிறைவுடையதே. இப்போரின் வீரச்செயல்கள் எத்தனையோ கதைகதை யாய்க் கூறப்படுகின்றன. ஆல்பிமார்ல் கோமகன் குதிரை ஓடுகையிலேயே அது சுடப்பட்டு நெடுந்தொலைவில் போய் விழுந்ததாம். ஒரு படைவீரன் தான் வீழ்த்திய படைத்தலைவர் அரைச்சட்டையைக் கட்டிக்கொண்டு இத்துடன் என் வாழ்நாளைக் கழிப்பேன் என்றானாம். மற்றொருவன் போர்க்களத்தருகாமையில் ஒரு வண்டியில் அமர்ந்து போர்க் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த கார்ட்டரெட் கோமகனிடம் வந்து “இதோ இந்தக் கைக் கடிகாரத்தை வைத்துக் கொள்ளுங்கள். இது இறந்த படைத்தலைவர் ஒருவரிடமிருந்தது. இன்னும் பல அகப்படும்; சென்று வருகிறேன்” என்றானாம். இத்துடன் இன்று நிறுத்துகிறேன். இனி நாளைவரை, வணக்கம்! இப்போர் முதல் நிகழ்ச்சி போல் பிறவும் துலங்குமாக. (திரு சூட் பார்வைக்கு) அன்புக்குரியீர், இன்று நான் உம்மையும் நீர் என்னையும் எல்லாரும் நம்மையும்...... எல்லாரும் எல்லாரையும் பாராட்ட வேண்டியதுதான்! ஆயினும், இப்போது நீங்கள் மட்டின்றிக் குடித்து உங்கள் பக்கவாதத்தைப் பெருக்கிக் கொள்ளாதீர்கள்! ஆனால், இங்கே நான் குடிப்பதை நிறுத்தவும் முடியாது; மட்டுப்படுத்தவும் முடியாது-ஃபிரெஞ்சு மது ஒருபுறம். மன்னர் வெற்றிப்பாடல் மதுவும் கோயிலில் வெற்றிபற்றி நன்றி கூறி முடித்ததும் பாடப்படும் கடவுட்பாடல் மதுவும் மறுபுறம். எங்கும் விருந்துகள், சொக்கப்பனைகள், விழாக்கள், யாழொலி, முரசொலி, ஆடல்பாடல்களால் நாங்கள் செயலிழந்து நிற்போம். பொதுமக்களோ எங்களனைவரின் ஆட்டத்தைப் பொய்யாக்கி மன்னன் வாழ்க வாழ்க என்றும் பெருமக்கள் தலைவர்கள் ஒவ் வொருவரும் வாழ்க என்றும் கூக்குரலிட்டுக் கத்தித் திரிகின்றனர். லவல் பெருமகனார் கூறுகிறபடி. “ஜான் தன் கடமையைச் செய்துவிட்டான்; இதற்காகத் தெய்வங்களுக்கு நன்றி செலுத்துவோமாக.” “இத்துடன் மறு கடிதம் வரை” என்றும் தங்கள், ஜான், மார்ல்பரோக் கோமகன். கடிதம் - 25 அறிமுகம் (ஹோரேஸ் மானுக்கு) டிசம்பர் - 1743 அன்புடையீர்! ஃபிளாரென்ஸுக்கு வரும் ஸர் வில்லியம் மேய்னார்டைப் பாராட்டறிமுகம் செய்துவைக்கும்படி நெருங்கிய நண்பர் ஒருவர் விரும்புகின்றார். அவர் அங்கே தங்கும் காலத்தில் அவருக்குத் தாங்கள் செய்யக்கூடும் ஆதரவுகளுக்கு நான் கடமைப்பட்ட வனாவேன். சிறப்பாகத் தாங்கள் கிரேயான் இளவரசருக்கும் (இளவரசியாருக்கும்) மதாம் சுவரே ஸுக்கும் மற்ற என் அன்பர் களுக்கும் அவரை அறிமுகம் செய்துவைக்கவும் கோருகிறேன். அவர்களனைவரும் எனக்குக் காட்டும் அதே உபசரிப்பை அவருக்குத் தந்து என்னைப் பெருமைப்படுத்துவார்களென்று நம்புகிறேன். தங்கள், .............. கடிதம் - 26 அரசியலும் அரசியல் தலைவரும் (தகைத்திரு. ஹென்ரி ஸெய்மூர் கான்வேக்கு) ஆர்லிங்டன் தெரு. ஜூன் 29, 1744 அன்புகெழுமிய ஹாரி, என் முந்திய கடிதம் வந்துசேர ஏன் அவ்வளவு சுணங்கிற்று என்பதை அறியமுடியவில்லை. ஏனெனில், உங்கள் கடிதம் எனக்கு மிக விரைவில் கிடைத்துவிட்டது. அஞ்சல் நிலையப் பரிசீல னையினால் சுணக்கமாயிற்று என்று கூறுதல் பொருந்தாது. அரசியலின் துறையில் அத்தகைய மனப்பான்மை இருந்ததென்று என்னால் நினைக்க முடியவில்லை - இருந்தால் இறைவன்தான் நம்மைக் காக்கவேண்டும். ஈட்டனில் நான் படிக்கும்போது கூடக் கட்டாயமாகப் படிக்கவேண்டிய பாடத்திட்டங்களுக்கு மேற் பட்டு திரு. ப்ளாண்ட் மிகுதிப்படியான படிப்பு வேலை கொடுத்த போது நான் மறுத்துவிட்டேன். உள்ளதைப் படிப்பதே நம் அறிவு நிலைக்கு மேற்பட்டது....... ஆகவே, ஒன்றும் தேவைக்கு மேல் சிந்தனைக்கு நான் இடம் கொடுப்பதில்லை. அந்த அளவு நான் அறிவற்றவன் என்று கூட ஒப்புக்கொள்ளத் தயங்குவ தில்லை. இங்ஙனம் கூறும்போது நான் எங்கேனும் எவரையேனும் மறை முகமாகத் தாக்குவதாக நீங்கள் எண்ணிவிட வேண்டாம். அப்படி நீங்கள் எண்ணிவிடக்கூடாது என்பதற்காகவே எனக்குக் கிட்டிய ஒரு புதிய கவிதையின் சில வரிகளைக் கீழே தருகிறேன். எழுதுபவர் அது முற்றிலும் ஒரு சார்பற்றதென்றே வலியுறுத்தி யுள்ளார். எனினும் அது தற்போதைய அமைச்சவையில் ஒருவரால் எழுதப்பட்டதென்பது தெளிவாகக் காணப்படும். அது ‘போப்’ எழுதியது என்ற முறையில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், நான் குறிக்கும் பகுதி தவிர மீந்தவை மிகவும் கீழ்த்தரத் திறனுடையவை. பர்ட்டன் தாம்ப்ஸன் என்ற இரு மருத்துவர் களின் அறியாமைப் பூசலிடையே ஆசிரியர் தாம் வதைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கிறார். அதன்பின் இதனையே உவமையாகக் கொண்டு உலகின் தீங்குகள் பலவும், அரசியல் உட்பட, இத்தகைய தலைவர் பூசல்களாலேயே விளைகின்றன வென்று கூறுகிறார். இந்நிலைக் கெது காரண மெனவின வுதியேல் மன்னிலைக்கரு மருத்துவ ராமவர் பூசல்! துன்னு ‘தாம்ப்ஸ‘னும் `கிரேட்டரா’ ஸவனுமார்த் தடர்த்துப் பின்னி நின்றனர் பேதையர், பேதைமை தருவார். அடிமை தாம், எனின் அடிமைகள் ஆக்குதல் தாமே; படியுளோர் அவைக் கறிவுரை அளிப்பவர் தாம் தாம்; கடிதின் வேற்றுமை யகற்றுவர் யாருளர்! தாம் தாம்; முடிவிலாதிந்த முறையினில் பொருதனர் அவர்தாம். அகல் ஐரோப்பிய நிலத்தினுக் கமைதியை அளிப்போம்; இகலமைச் சர்கள் மன்னர்கள் தமையியக் கிடுவேம்; புகலு சட்டங்கள் அமைத்திடுவேம்; படை வகுப்போம் நிகரிலேம் முடியாதவை முடிப்பமென் றுரைப்பார். வீறு‘பர்ட்ட’னின் வேறலன் வீர’பிளம்போஸஸ்; கூறு நீதியில் குலவுவர்; முடிகொள முடிப்பார்; சீறு சொல்லினர், சீற்றமில்லோரென நடிப்பார்; மாறு சொல்லுமுன் வாய்மையு ளேமென வகுப்பார். தருமமைப்பினில் தம்முள மிலதெனப் பகர்வார்; விரும்பு நண்பரை விரும்பிலர், பகைவரோ டிசைவார்; உரிமை வேட்கையர், புகழிழப் பச்சமு முடையார், தெரிவர் பல்குழு வோரிடைத் தமக்கொரு குழுவே. போரெழுப்புவர், போரினை அகந்தனில் விரும்பார், நேர்மையோடதை வெளிப்பட உரைத்தலுஞ் செய்யார்; தீர்ந்த நன்முடிபற்றவர் தெளிவறு தலையார், தேர்ந்த வீரரும் அல்லர்மன், தீயரும் அலரே. டச்சு அரசியலார் செய்தி வெளியீடு (கெஜட்)களில் வருமுன் எந்தச் செய்தியையும் நீங்கள் எழுதவேண்டாமென்று கோருகிறேன். ஏனெனில், நான் கூறியதை எவரேனும் அறிந்து நம் அமைச்சவையினரிடம் கூறிவிட்டால் அவர்கள் ஏதாவது அச்சப்பட்டுத் துடிதுடித்துப் போகப் போகிறார்கள்! அத்துடன் அதன்மூலம் நம் தனிப்பட்ட கடிதங்களின் பிற செய்திகளும் உடைத்துப் பார்க்கப்பட்டு அம்பலமாகக் கூடுமல்லவா? நான் எழுதுவது உங்களுக்கேயன்றி வேறு யாருக்காவது ஆயின், இங்ஙனம் நான் கூறுவது தற்பெருமை என்றும், என் தந்தை நீங்கலான மற்ற அமைச்சரைப்பற்றி நான் இழிவான எண்ணங்கள் உடையவன் என்றும் எண்ணிவிடுவார்கள். ஆனால், , என் அரிய ஹாரி, உங்கட்குத் தெரியும் நான் அவரைப்பற்றியும் அவ்வளவான உயர் கருத்துக் கொண்டிருப்பவனல்லன் என்று. இக் காலப் பெருமக்களைப்பற்றி நான் இக் கருத்துக் கொண்டுள்ளது சரிதானா என்று காண வேண்டுமா? நம் கடல்துறைத் தெய்வமான அட்மிரல் மாத்யூஸ்டன் கர்க்கிலிருந்து படையெடுப்பு எதிர்பார்க்கப்படும் இந் நேரத்தில், பிரெஸ்ட் கப்பற்படை ஆங்கிலக் கால்வாயில் திரிந்து கொண்டிருக்கும் போது, மெடிட்டரேனியன் கடலைச் சுற்றித் திரிவானேன்? அப் படையெடுப்புக்கு எதிராக 6000 டச்சுத் துருப்புகளையே அனுப்புகிறார்கள்; ஆனால், அதேசமயம் நம் படை வீரரில் 20,000 பேர் ஃபிளாண்டர்ஸில் வீணே இருந்துவருகின்றனர். இங்கிலாந்தைப் பாதுகாக்க ஆங்கிலப்படைகளுமில்லை. டச்சுத் துருப்புக்களும் அனுப்பப்பட்டு விட்டன. கடற்றுறையிலும் இதே நடப்புத்தான். மெடிட்ட ரேனியனிலிருந்து பதினைந்து கப்பல்களும் டச்சுக்காரரிடமிருந்து இருபதும் வரவழைத்திருந்தோம். முன்னவை வந்து சேர மூன்று மாதங்கள் பிடிக்கும். பிந்தியவை பற்றியோ டச்சுக்காரர் பதினான்கு அனுப்பமுடியாத நிலையி லுள்ளனவென்றனர். அனுப்புவதாகக் கூறிய ஆறிலும் நான்கே அனுப்பினர். இந்த அழகில் நம்மிடமே இருந்த கப்பல்களில் ஐந்து மேலை இந்தியத் தீவுகளுக்கு அனுப்பப்பட்டன. இருபது இத்தீவுகளிலிருந்து வரும் ஸ்பானியக் கப்பல்களைச் சூறையாடச் சென்றன. நம் பிள்ளைகள் ஒரு விளையாட்டுக் கணக்குப் போடுவார்கள். ஒரு எண்ணை எண்ணிக்கொள். அதைப் பாதியாக்கு. இரட்டித்துக்கொள். பத்தைச் சேர்த்துக்கொள். இருபதைக் கழி. முதல் தொகையில் பாதியைக் கூட்டு. சேர்த்த தெல்லாம் கழி. இப்போது தொகை கூறட்டுமா, என்று நம் பித்தலாட்டம் இதனை நினைவூட்டுகிறது. என் கடிதத்தைப் பார்த்து நான் எங்கும் செல்வதில்லை; சோம்பி வீட்டினுள்ளேயே அடைபட்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ளா தேயுங்கள். உண்மையில் நான் நாள் தவறாமல் இரவு ரான்லாக் செல்கிறேன். இப்போது அதன் புகழ் வாக்ஸ் ஹால் புகழை மிஞ்சிவிட்டது. எவரும் வேறு எங்கும் செல்வதில்லை - அனைவரும் அங்கேதான் செல்கின்றனர். நம் செஸ்டர்ஃபீல்டுப் பெருமகனார் தமக்கு வரும் அஞ்சல் களனைத்தையும் அவ்விடத்தின் முகவரிக்கே வரும்படி கூறிவிட்டார். அங்கேயே குடியிருக்க விரும்பும் அளவு அவருக்கு அதில் விருப்பம்! உங்களுக்கு அது புதிதானால் அதனை என் காவிய வருணனைத் திறமுழுவதும் காட்டி வருணிக்க ஒப்புக்கொள்வேன். மன்னர் இளங்கோக்கள் காற்சுவடு படாத இடத்தில் அங்கே யாரும் கால் வைக்க முடியாது. வாயிற் படியில் கால் பட்டாலே அது வேல்ஸ் இளவரசர் சுவட்டிலோ கம்பர்லந்துக் கோமகன் சுவட்டிலோ தான்படும். ஆனால், அங்கே எல்லாத் தரத்து மக்களையும் காணலாம் - கிராஃவ்டன் கோமகன் முதல் அகதி நிலையப் பிள்ளைகள் வரை - டௌண் ஷெண்டுப் பெருமாட்டி முதல் பூனைக்குட்டி வரை - சாண்டிஸ் பெருமகனார் முதல் தங்கள் அன்புக்குரிய இவ்வேழை வரை. இங்ஙனம் தங்கள் நண்பன், ..................... கடிதம் - 27 இயற்கை நட்பு (இதுவுமது) ஆர்லிங்டன் தெரு, ஜூலை 20, 1744 அன்புமிகும் ஹாரி, உங்களுக்கு நான் எழுத எண்ணிய எண்ணங்கள் மிகப் பலவாதலால் இக் கடிதத்தில் நீங்கள் ஓர் ஒழுங்கைக் காண முடியாது. ஆனால், மொத்தத்தில் என் உட்கோளையும் என் உள்ளார்ந்த நட்புணர்ச்சியையும் நீங்கள் காணமுடியுமானால், நான் மன நிறைவடைவேன். தங்களிடமிருந்து தனிப்பட்ட நம்பிக்கைக் கடிதம் கிடைத்த தில், அதுவும் எதிர்பாராத இந்தச் சமயத்தில் கிடைத்ததில் எனக்கு எல்லையற்ற அகமகிழ்வு. ஆயினும், கடைசியாகப் பெற்ற உங்கள் கடிதத்தின் தேதியைப் பார்க்க, உங்களிடம் வந்தனவாக நான் அறியும் சில கடிதங்களை நீங்கள் அக் கடிதம் எழுதும் சமயம் வரைப் பார்க்கவில்லை என்று தெரியவருகிறது. நான் அக் கடிதங்களை வாசித்துப் பார்க்கவில்லையானாலும், அவை ஆழ்ந்த சிந்தனைக் குரியவையாயிருந்திருக்க முடியாது. அவற்றால் தங்களுக்குச் சில மாதங்களாவது வீண் கவலைகளே பெருகியிருக்கக்கூடும். இவ்வளவு தொலைவிலிருந்து இச்சிறு பூசல்கள் பற்றி நானானால் எழுதியிருக்க மாட்டேன். எழுதத் தேவையுண்டு என்று எண்ணியிருக்கவும் மாட்டேன். அவை உங்களுக்கு எழுதப்பட்டுள்ளன என்று நான் கேள்விப்பட்டதுமே, அச் செய்திபற்றிய என் கருத்தையும் தெரிவிக்க எண்ணினேன். ஆயினும், உங்கள் உடன்பிறந்தார் விருப்பத்திற்கிணங்கி அதனையும் நான் அனுப்பாதிருக்கும்படி நேர்ந்தது. அவ்வுடன்பிறந்தாரே அதுபற்றி உங்களுக்கு எழுதும்படி விட்டுவிட்டேன். அவர் உங்களிடம் அதனைத் தெரிவித்த முறையின் புத்திசாலித் தனத்தைப் பார்க்க நான் வருந்தினேன். நான் உங்கட்குத் தர இருந்த நல்லறிவுரையைத் தரமுடியாது போய் விட்டதே யென்றும் கழிவிரக்கம் கொள்ள இடம் ஏற்பட்டு விட்டது. அதுமட்டுமன்றித் தாங்கள் இப்போது விரும்புகிறபடி அதனை இப்போதும் முழுதும் தர முடியாதவனாகிறேன். ஏனெனில், என் விருப்பத்திற்கு மாறாகத் தாங்கள் நான் குறிப்பிட்டிருந்த செய்தியை முறித்துக் கொண்டுவிட்டீர்கள். என் கோபத்தினால் கூட அதன் காரணம் பற்றி நான் எண்ணும் எண்ணம் தவறான தாயிருக்கும் என்று என்னால் நம்பக்கூட வில்லை. என் அன்புக்குரியவரிடம் நான் எவ்வளவு மனந்திறந்து பேசுபவன் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். அதன் பயனாகத் தாங்களும் மறைப்புத் திரையைச்சுற்றி விட்டிருந்தால் நான் பெருமகிழ்ச்சியடைவேன் என்பதும் உங்களுக்குத் தெரிந்ததே. தங்களிடம் எனக்குள்ள வருத்தம் யாவும் இவ் வொளிப்பு ஒன்றி னாலேயே. உங்கள் உள்ளார்ந்த விருப்புக்குரிய இச் செய்தியில் நான் எதுவும் மிகுதியாகப் பேசாமலிருந்ததற்குக் காரணம் அதுபற்றி நீங்கள் வாளா இருந்ததன்றி வேறன்று. ஆயினும், என் அருமை ஹாரி, இப்போது இதே அறிவுரையை நான் எப்படித் தருதல் கூடும்? உங்களிடம் இதுவகையில் ஓர் உறுதிகொள்ளும் ஆற்றல் இருக்கக்கூடும் என்று, அதுவும் ஆளில்லாத சமயத்தில் ஏற்படக் கூடுமென்று நான் எப்படி எதிர்பார்க்கலாம்? ஏற்படினும், ஆளைக் கண்டவுடன் அது மறையத்தானே செய்யும்? மேலும் நீங்கள் மணம்புரிந்து இன்பம் எய்த நேர்ந்தால், அவ்வாழ்வைத் தடுக்க முயன்றேன் என்று என் மீது கடுப்புக் கொள்ளாதிருக்க முடியுமா? தாங்கள் நேர்மையும் நாணயமும் உடையவர் என்பதை நான் அறியாமலில்லை. ஆனால், குறிப் பிட்ட சூழ்நிலையில் எவரும் நான் இவ்வகையில் என் தனி நலத்தால் தூண்டப்பட்டேன் என்று தான் எண்ணுவர். தாங்கள் தொடர்பறுக்க விரும்பும் வகையில் காணும் எல்லாக் காரணங் களையும் நானும் உணர்கிறேன். ஆயினும், தங்கள் செல்வ நிலையால் மாறுபாடு ஏற்படுகிறது என்பது இதுவரை அதற் கிருந்த தடைகளை விடப் பெரியதன்று. உங்கள் செல்வநிலை மனமார இத்தகைய செயலை மேற்கொள்ளும் நிலையில் என்றுமே இருந்தில்லை என்றபோதிலும், அம்மாது நல்லாள் அந் நிலையிலேயே மன நிறைவடையுமளவு தம்மைக் காதலித் திருந்தாள். இன்றைய மாறுபாடு அவள் உணர்ச்சியை மாற்றி விட்டிருக்கும் என்று நினைக்க அவளைப்பற்றிய என் எண்ணம் இடந்தராது. ஏனெனில், அவள் ஒன்றுமில்லாத நிலையி லேயே தம்மைப் பிறரிடையே தேர்ந்து ஏற்றுக்கொண்டவள். இதுபற்றி நான் இன்னும் எவ்வளவோ கூறமுடியும். ஆயினும், இதுபற்றி இப் புறமும் அப் புறமும் எதுவும் அறிவுரை கூறாமல் உங்களையே சிந்திக்க விட்டுவிட எண்ணுகிறேன். உங்கள் புதுத் தொடர்பு களுக்குப்பின் (அவை எவ்வளவு உறுதியுடையவையோ, நான் அறியேன்), உங்களுக்காக அவள் எத்தனையோ நல்ல காதலர்களைத் தள்ளிவிட்டு வந்ததை யறிந்தும், அவளை இப்போது துறந்து, அவள் இப்போது மீண்டும் தன் பழைய நிலையைத் தொடர விடுவதா; அல்லது தங்கள் நிலையில் ஒரு முன்னேற்றம் தெய்வச்செயலாக ஏற்படும்வரை அவளுடன் நீங்களும் பொறுத்திருந்து அவளை மணம் புரிந்துகொள்வதா என்பதை உங்கள் ஆராய்வுக்கே விட்டுவிடுகிறேன். என் உயிருக்குயிரான ஹாரி, இதுவகையாக நான் இதற்கு மேல் ஏன் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை என்பதை நீங்களே உணரக்கூடும். ஒரு தொடர்பை முறிப்பது சரி என்று பட்டா லல்லாமல் நான் முறிக்கும்படி கூறுபவன் அல்லன். நீங்கள் இது வரையில் அறிந்துகொள்வது நேர்மையாயிருக்கக் கூடாதாவென்று நான் விரும்புவதனாலேயேதான் இன்று நான் அங்ஙனம் அறிவுரை தரக் கூடவில்லை. எனவே, இப்போது நீங்கள் தரும் வாய்ப்பைப் பயன்படுத்தி நட்புக்குரிய அத்தகைய செயலை நான் செய்யாமைக்கு மன்னிக்கக் கோருகிறேன். ஆனால், அவ் வாய்ப்பைக் கொடுத்தமட்டில் எனக்கு மிகவும் மன நிறைவே. தங்கள் செல்வ நிலையின் போதாமையைக் காண்பதிலும் எனக்கு வருத்த மிகுந்திருக்கக்கூடுமாயினும், என் செல்வத்தை நீங்கள் பகிர்ந்துகொள்ளும் படி கோரும் வாய்ப்பு எனக்கு மகிழ்ச்சியையே தருகிறது. என் செல்வம் எதிர்கால உறுதிகுலைந்ததாயிருப்பதா நான் அளிக்கக்கூடியதெல்லாம் தற்கால நலனே. அதை உளமாரப் பகிர்ந்துகொள்ள அழைக்கிறேன். என் தந்தை வால்போல் பெருமகனார் ஓராண்டில் பத்துத்தடவை கையொப்பம் செய்வதற்கு ‘மாச்சல்’ பட்டு வருவாயில் 300 பொன் குறைத்துவிட்ட பின்னும், என் செல்வத்திலிருந்து எனக்கு 2000 பொன் வருகிறது. எனக்குக் கடன் பொறுப்புக்களும் உறவினர் சார்பான வில்லங்கங்களும் எதுவும் இல்லை. உண்மை கூறுவதானால் இதனைச் செலவு செய்வதற்கான தனிப்பட்ட வழிகள் கூட எனக்கு எதுவும் இல்லை. நான் என் தந்தையுடனேயே வாழ்வதனால் அதில் கால்பங்குகூட என்னால் செலவாவதில்லை. வேறுவகையின்றிச் சோம்பல் வாழ்விலேயே அதனை வலிந்து செலவு செய்கிறேன். எனினும் இயற்கையில் சோம்பேறி நான் யாயினும் சிறு செலவுகளைச் சுருக்கும் அளவு தன்னடக்கம் என்னிடம் இல்லாமலில்லை. என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய நண்பர்கள் வாழ்வை இன்பகரமாக்கப் போதிய அளவில் நான் மீத்து வைத்தும் உள்ளேன். இத்தகைய வேண்டுகோளைச் செய்பவர்க்கு எவ்வளவு உணர்ச்சித் தடைகளும் கூச்சமும் இருக்குமோ அவ்வளவும் அதனை ஏற்பவர்க்கும் இருக்கும் என்பதை நான் அறிவேன். அதிலும் பண்பாளர்களுக்கும் மதிப்புரிமையுடையவர்களுக்கும் இத்தகைய கோரிக்கையைக் கேட்கவே மனத்தாங்கல் ஏற்படும். ஏற்பதிலோ கேட்கவேண்டியதில்லை. அத்தகைய கோரிக்கையைச் செய்ய முன்வரும் எனக்கும் ஓரளவு அந்நிலை உண்டு என்பதை நீங்கள் அறியக்கூடும். ஆயினும், நண்பன் என்ற முறையில் என் உரைக்குச் செவிசாய்க்கக் கோருகிறேன். நட்பு என்ற ஒன்று உலகில் உண்டாயின், அது இத்தகைய தறுவாய்களிலேயே பயன் படுத்தத்தக்கது. இத்தகைய கோரிக்கையை ஏற்க இடமில்லாத போது அதனை அளிப்பதும் இயலாது. தாங்கள் இதனை ஏற்பதில் தவறில்லை என்று காட்டவே நான் என்னைப்பற்றியும் சில கூறவேண்டியவனாகிறேன். உலகில் பிறரைவிட என்னிடம் நற்குணங்கள் குறைவு; குறைபாடுகளும் வழுக்களும் சற்று மிகுதி யாகவே உள்ளன என்பதை நான் உணர்கிறேன். இதை நான் பொதுவாக ஏற்றுக் கொள்வதில்லையாயினும் அடிக்கடி சிந்திப்பதுண்டு. எப்போதும் ஆண்மையுடனும் அறிவுத் திறத்துடனும் செயலாற்ற வேண்டும் என்று நான் விரும்புவது முண்டு. விரும்பினால் ஆற்றவும் முடியும். அவ்வகையில் என் அன்புக்குரிய ஒருவருக்காக என் செல்வத்தைப் பேணுவதைவிட வேறு நல்ல தொடக்கம் ஏது? நான் மடிமையும் மடமையும் உடையவன் என்பதைத் தாங்கள் அறிவீர்கள் (அறிவீர்கள் என்பது எனக்குத் தெரிந்ததே): புதிதாக இருபது பேரைக் கண்டாலும் இருபது பேருடனும் ஒப்புரவு காட்டி நட்பாவதே என் வழக்கம். ஆனால், இத்தகைய இடங்களில் உள்ளூர என் ஆர்வம் பதிவதில்லை. தங்களையோ இடைவிடாது தொடர்ச்சியாக நான் மனமார நட்பாடியுள்ளேன் என்பது உங்களுக்குத் தெரியும். வேறு எவரினும் தங்களிடம் மிகுதி நட்புரிமை கொண்டுள்ளேன் எனத் தங்களிடம் அடிக்கடி கூறியுள்ளேன். அது வகையில் உலக முழுமைக்கும் உறுதிகாட்டவே நான் விரும்புகிறேன். நான் எங்கேனும் உண்மையில் பற்றுதல் வைத்திருத்தால் (பற்றுடையேன் என்பதையே பலர் மறுக்கக்கூடும்) அது கட்டாயம் என் தாயிடம் தான். தாங்களோ அவள் வழியில் எனக்கு மிக நெருங்கிய உறவினர். உங்களுக்கு நான் எத்தனை செய்தாலும் அவளுக்கு நான் பட்ட கடனையும் நன்றியையும் முழுதும் தெரிவிக்க அது போதாத தாகவே இருக்கும். இவ் வெல்லாக் காரணங்களையும் எண்ணிப் பார்த்து என் உள்ளம் நிலைத்து உறுதிப்பட்டுவிட்ட இவ்வொரு செயலில் - உங்கள் செல்வ நிலையை எளிதாக்குவதில் - என் கோரிக்கையை மறுக்க மாட்டீர்கள் என்று நட்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்............... தங்கள், ................ கடிதம் - 28 நாட்டு வரலாறும் மனித வரலாறும் (ஹோரேஸ் மானுக்கு) ஆர்லிங்டன் தெரு, ஜூலை 22, 1744 அன்பரே, சிலகாலமாகத் தமக்கு ஒன்றும் எழுதாததன் காரணம், எழுத எதுவும் இல்லாததுதான். நம் நட்பிடையே அதை விளக்கவேண்டிய தேவையில்லை. ஆனால், நட்புணர்ச்சியைப் புதுப்பிக்கவே இதுவும் எழுதுகிறேன். அத்துடன் கடிதம் எழுதும் கடமையாவது எழுதுவதற்கான செய்திகளைத் தூண்டி என் இயற்கைச் சோம்பலைக் குறைக்க உதவுமென்று எண்ணுகிறேன். கடிதப் போக்குவரத்துக்குத் தங்களைப் போன்ற சிறந்த எழுத்தாளர் கிடைத்திருப்பது என் நற்பேறு. நெடுநாள் நேரில் காணாதவிடத்து; தனி நண்பருக்குரிய தொடர்புகள் குறைந்து விடுகின்றன. கடிதங்களுக்கு உயிர்நிலையான இச்சிறு செய்திகள் நண்பர்களிடையே வாழ்க்கை வரலாறுகளாய் விடுகின்றன. ஹோரேஸ் மான், ஹோரேஸ் வால்போல் வரலாறுகள் இத்துறையில் ‘குவிக்போர்டின்’, ‘கிளாரெண்டன்’ வரலாறு களுக்கு இணையாகின்றன. வரலாறு என்றவுடன் எனக்கு நாட்டு வரலாறு நினைவுக்கு வருகிறது. அவ்வகையில் ‘மொக்காலனி’ போன்றவர்கள் இன்று உயிருடனிருந்தார்களில்லையே என்று எண்ணாதிருக்க முடிய வில்லை. ஏனெனில், வரலாறும் கலையும் இன்றுபோல் ஒன்றுக்கு முதவாதார் கையில் என்றுமிருந்ததில்லை. நம் லண்டன் நகரம் நீண்டநாள் அரசியலை அடக்கியாண்டு பழகிய பழக்கத்தால் இப்போது இலக்கியத்தையும் வரலாற்றையும் கூட அடக்கியாள முற்பட்டுவிட்டது. அவர்கள் கார்ட் என்ற ஒரு கோயில் பிரசார கனிடம் ஆண்டுக்கு 50 பொன் விழுக்காடாக ஏழாண்டுக்குப் பணம் தருவதாகப் பேசி இங்கிலாந்து வரலாறு எழுதுவிக்க முனைந்துள்ளனர். நகர் முதுமக்கள் நால்வரும் நகர உறுப்பினர் அறுவரும் நூலாதாரங்களையும் நூல் போக்கையும் மேற்பார்வையிட அமர்த்தப்பட்டுள்ளனர். பொதுவில் சாக்கடை மேற்பார்வையாளராயிருப்பவர்களே இங்ஙனம் இலக்கிய அறிவியல் மேற்பார்வையாளராகவும் அமர்த்தப்பெற்றனர்! உண்மையில் சேரிகள் பற்றிய அறிக்கையும் இங்கிலாந்தின் வரலாறும் ஒரு தன்மையுடையவை என்றே அவர்கள் எண்ணி விட்டனர் போலும்! இனி நூல்கள் பல்கலைக் கழகங்களின் பெயர் பொறித்து வெளியிட வேண்டுவதில்லை. கோயில் மதில்களுக்கு ‘வெள்ளையடிப்பவர்’களாகிய கோயில் வேலையாட்களே ‘ஜேம்ஸ் ஸ்மித் - தாமஸ் ஜான்ஸன் குழுவினர்’ என்ற பெயர் பொறித்து நூல்களையும் ‘கறுப்பு’ அடித்து வெளியிட்டுவிடலாம். தற்போது ஐரோப்பாவெங்கும் பெருஞ்செயல்கள் நிகழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் ‘கேட்டோவின் முடிவும் ரோம் நகர் வாழ்வுமாய்’ இருந்து வருகிறது. இவற்றையெல்லாம் பற்றி நான் ஒன்றும் எழுதக்காணோமே என்று வரலாற்றாசிரியத் தோழராகிய நீங்கள் வியப்படைந்திருப்பீர்கள். ஆனால், உண்மையில் எனக்கு இங்கே ஒன்றும் தெரியவில்லை. ரைன் பகுதியில் சார்ல்ஸ் இளவரசர் முன்னேறும் முன்னேற்றத்தால் எதுவும் சாய்ந்து விடவில்லை. நேர்மாறாகப் பிஃரஞ்சுப் படைகளும் ஃபிளாண்டர்ஸிலிருந்து முன்னேறியே வருகின்றன. மேலும் இப்போது கவுண்ட்டி ஸாக்ஸின் படைகள் குறைந்தும் நம்மவை கூடியும் இருசார்பும் ஒத்திருப்பதனால் நம் படைகள் ஷெல்ட் ஆற்றைக் கடந்து அப்படைகளை எதிர்நோக்கிச் செல்கின்றன என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் என் நாட்டு அரசியலில் நான் இன்னும் போட்டியற்ற ஆட்சிதான் புரிகிறேன். என் ஆட்சி மீது வேறு படையெடுப்பு எதுவும் இல்லாததனால் நான் என் வீட்டைப் பிறரிடம் ஒப்படைத்து விட்டு, என் வீட்டுப் பழம்பொருள்கள், குடும்பத் தெய்வங்கள், குடிபடைகள் எல்லாவற்றுடனும் புறப்பட்டு ஐந்தாறு வாரம் சைபீரியா சென்று தங்க முற் பட்டுள்ளேன். என் தந்தையின் நண்பர் சர்லண்டுக் கோமகனார் ஏற்கெனவே அங்கு இருந்துவருகிறார். மிடில்ஸெக்ஸ் பெருமகனார் ஷானன் பெருமகனாரின் புதல்வி செல்வி பாய்லை மணக்கவிருக்கிறார். மணமகளுக்கு முப்பதினாயிரம் பொன் வருவாய் இருக்கிறது. அவள் தாயை யாரும் நுகந்திக்காவிடில்* அவளுக்கு இன்னும் பெரும்பொருள் வரும். பெண் குள்ளமாகவும் அழகற்றவளாகவுந் தானிருக்கிறாள் - ஆனால், அவளிடம் நல்ல புலமை உண்டு. இளைஞர் சர்ச்சிலுக்கு ஒரு புதல்வி இருக்கிறாள். அவள் தாய் இசைக் கூத்துக்காரி. பாட்டியோ அத்துறையில் பேர்போன திருவாட்டி ஒஸ்டு ஃபீல்டு. இசைக்கூத்தைப்பற்றி நான் அன்றொரு நாள் மிகவும் கண்டித்துப் பேசிக் கொண்டிருந்தேன்... டௌண் ஷெண்ட் பெருமாட்டி அப்போது “ரிச் பெரு மாட்டி, நடிகை மாண்டிஸெல்லி தன் இடம் மாற்றுவதுபற்றி மனமுடைந்து கொள்கிறாள்” என்றார். நான் உடனே `அதனால் மிகுதி நட்டம் ஏற்படாது; நடிகையாகவே மனதை உடைத்துடைத்து அந்த இடத்திற்கு இப்போது வாடகை அவ்விடத்தின் விலையைவிட ஏறியிருக்கும்; என்றேன். டௌண்ஷெண்டுப் பெருமாட்டி தன் உருவப்படத்தின் அச்சுப்படிகளைத் தானே முயன்று விற்பனை செய்விக்கிறாள். அதில், பேருலகின் வாணிகத்தின் பீடுடைய முதலிதுவே யாருமிதன் வழிப்பிறவார் இவ்வுலகில் இல்லையென்க என்று எழுதப்பட்டிருந்ததாம். இன்னுமொரு விசித்திரமான உருவப்பட அச்சுப்படி பர்லிங்டன் பெருமாட்டி வெளியிட்ட தம் புதல்வி யூஸ்டனுடைய தாகும். அதன் பின்புறம், டாரதி பாய்ல் பெருமாட்டி ஒரு காலத்தில் தம் தாய் தந்தையர் இன்பத்திற்கும் மன நிறைவுக்கும் உரியவராய் இருந்தனர், கண்டவர் எல்லார் கருத்திலும் உயர்ந்தவர் அறிந்தவர் யாவர் அறிவின் பாராட்டும் பெற்றவர் பிறப்பு மே 14, 1724; மணம் அக்டோபர் 10, 1742. இவ் வச்சுப்படி அன்னார் பிரிவுக்கு ஏழு வாரங்களுக்குப் பின் நினைவுத்துணையாக வரைந்த ஓவியத்திலிருந்து அன்னார் பிரிவால் ஆறாத்துயரடைந்துள்ள அன்னார் அன்னையரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. டாரதி பர்லிங்டன் நான் இப்போது ஒரு புதுப் பக்கத்தில் தொடங்கி எழுதுகிறேன் - முந்திய வரியில் பர்லிங்டன் பெருமாட்டி பெயரிருப்பது கண்டு அவர் கையொப்பமிட்டெழுதியதோ என்று தோற்றி விடாதிருப்பதற்காக, இவ்வச்சுப்படிகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் எத்தனையோ தான் வரைந்து அச்சிட்டிருக்கிறார். இச் செயல் துன்பத்தைப் பெருக்குவதாதலால் நான் ஒத்துக் கொள்ளவில்லை. ஆயினும், அதன் கீழ்வரிகள் எவ்வளவோ கவர்ச்சியானவையே. எனக்கு முன்பு தெரிந்த ஒரு சிறு உருவம் இன்று என்னிடம் அறிமுக உரிமை கோரி வந்தது. அது வேறுயாருமன்று. ஃபிளாரென்ஸில் நாம் கண்டோமல்லவா, அந்த ஜெனோவாக் காரர் அப்பேதுஸ்ஸோதான். அவரிடம் நான் நயமாகவே நடந்து கொண்டேன். ஃபிளாரென்ஸுக்குப் போவதென்றால் எனக்கு எப்போதும் மனமிணங்கிவிடும். ஆகவே என் அரிய நண்ப, இன்னும் சில நாள் என் வரவுக்குக் காத்திருங்கள், ‘அமைதியெனும் புயல்’ வீசும் முதல் வீச்சிலேயே நான் அங்கே வந்து சேர்ந்துவிடுவேன். தங்களுக்கு என்மீது விருப்பமில்லாம லிருக்கக் கூடும் - நீங்கள்தான் எனக்கு இருவரிகூட எழுத வில்லையே - ஆனால், என்றும் போல் ஃபிளாரென்ஸ்மீது உங்களுக்கு உவப்பு இருக்கத்தானே செய்யும்? நம் பழைய ஃபிளாரென்ஸ் நங்கை கார்ட்டெரெட் சீமாட்டியைப் பற்றி எழுதினால் உங்களுக்குப் பிடித்தமாயிருக்காதா? அவள் நாளைக்கொரு வண்ணமாகத்தான் உடையுடுத்திவருகிறாள். ஆனால், என்றும் அவை அவளுக்கு இணைவதில்லை. தம் பழைய மருகியர் தோள்மீது சார்ந்து அவள் இன்றும் காட்சி யளிக்கிறாள். டுவீடேல் பெருமகனார், பாத் ஹர்ஸ்ட் பெருமகனார் ஆகிய இருவரும் அவள் நன்மதிப்புத் தோழராய் உடன் வருகின்றனர். லிங்கன் பெருமகனாரின் மீதுள்ள அவள் கடுஞ்சினம் இன்னுந் தீர்ந்தபாடில்லை. அவள் தோழர் குழுவின் மரபறியாத ஸ்பானியக் கோமகனாருள் ஒருவர் அவளிடம் “லிங்கன் பெருமகனார் செல்வி பெல்ஹாமிற்குத் தாம் நல்ல கணவனாயிருக்கப் போவதாக உறுதி கூறியுள்ளார்” என்றார். அவள் உடனே சட்டெனத் திருப்பித் தன் பார்வையால் அவரைச் சுட்டெரித்து “அறிவேன் நான், அவர் உறுதியின் உறுதியை” என்றாள். அவளைப்பற்றிய வேடிக்கைப் பாடல் இதோ! படத்தில் கண்ட விருந்தினை விருந்தினுக் குரியவர் உண்ணமாட்டார் அவள் அழகும் அதை அறிந்தோர்க்கு உதவாது நொண்டியும் கிழமும் கண்டு மகிழும்மே. இத்துடன் விடைபெற்றுக் கொள்கிறேன். இதோ சில விருந்தினர்கள் வருகின்றனர். மன்னிக்கக் கோருகிறேன். தங்கள், ........... கடிதம் - 29 வெளிநாட்டுச் செய்திகள் (இதுவுமது) ஆர்லிங்டன் தெரு, ஆகஸ்டு 6, 1744 சார்லஸ் இளவரசரைப் பற்றி நான் ஒன்றும் எழுதவில்லை; ஏனெனில், நாங்கள் கேட்கும்போதே நீங்களும் அவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்க வேண்டும். செய்தி வடகோடி வந்து இத்தாலி மீளுவதற்கு முன்பேகூட நீங்கள் கேட்டிருக்கலாம். ஃபிளாண்டர்ஸி லிருந்து செய்தி எதுவுமில்லை; நாம் முன்னேறிச் செல்கிறோம் - அவர்கள் பின்னேறிச் செல்கிறார்கள் - எப்படி இரண்டு மாதங் களுக்கு முன்னால் நாம் பின்னேற அவர்கள் முன்னேறினரோ, அதுபோல, ஆனால், இப்போதைய பண்ணே நம் காதுகளுக்கு இனிக்கத்தக்கது. ஸ்டேர் பெருமகன் ஸ்காட்லாந்துக்குச் சென்றிருக்கிறார். மன்னருக்கு இப்போது அவர் மீதில் மிக விருப்பம். அப்பயணத்தை மேற்கொண்டதன் காரணமாக அன்றொருநாள் அவர் கூறினார்;” ஸ்டேர் பெருமானார் ஃபிளாண்டர்ஸில் இருந்தாரில்லை! படைத்தலைவர் ‘லேடு’ நல்ல தலைவர்தான்; ஆனால், அவரிடம் விருவிருப்புக் கிடையாது. நான் என் நாள் முறைத் தொழுகையுடன் “ஸ்டேர் பெருமகன் விருவிருப்பு எம் அரசரையும் தாக்கிவிடாதிருக்குமாக” என்று வேண்டுதல் செய்துவருகிறேன். உங்களுக்கு நான் முதன் முதல்லா ஷெட்டார்டியின் வீழ்ச்சி பற்றிக் கூறியபோது என்னாலேயே அதை நம்பமுடியவில்லை. ஆனால், இப்போது அது உலகறிந்த செய்தியாய்விட்டது. ஆனால், ஒரு ரஷ்யப் பேரரசியின் வாழ்வில் அரசியல் வாழ்வும் காதல் வாழ்வும் ஒன்றுதானே! இப்போதைய ரஷ்ய அரசி உண்மையில் ஒரு ‘வீர அல்லியரசி’தான்...... நான் வேறு புதிய செய்தி எதுவும் கூறுவதற்கில்லை; ஏனெனில், நான் நார்ஃபோக்குக்குச் செல்லப் புறப்பட்டிருக் கிறேன். இங்கே எனக்கு அறிமுகமாக வேண்டியவராக யாரும் இல்லை - அவ்வளவுக்குப் போதிய காலம் இங்கே தங்கிவிட்டேன். இனி அடுத்த அலை மோதும்போது என் பரிவாரத்தில் கடைசிப் பலகையாகிய நானும் அடித்துக்கொண்டு போகப் பட்டு விடுவேன். நான் இங்கே இன்னும் பின்தங்கியிருப்ப தெல்லாம் ஃபிளாண்டர்ஸிலிருந்து ஏதேனும் திடுக்கிடும் செய்தி வந்து விடுமோ என்றெண்ணித்தான். அத்தகைய அச்சத்திற்கு இடமிராது என்று இப்போது உறுதியாகத் தெரிகிறது. நம் படைகள் கௌண்ட் டி சாக்ஸ் படைக்கு மிகவும் பெரிது. அவர்கள் பத்துப் பெரிய நகரங்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டுமாதலால், படைகள் அங்கேயும் அனுப்பப்பட வேண்டும் - அங்ஙனம் அனுப்பினால் அப்படை பின்னும் குறையும்; குறைவுபட்டாலோ நகரங்கள் நம் கைவசப்பட்டு விடும். உங்கள் ஜூலை 21ஆம் நாளைய கடிதம் வந்து சேர்ந்தது. தாங்களனுப்பிய நியோப்போலிய பொடிச் சிமிழ் பெற்றுக் கொண்டேன். ஆனால், அத்துடன் அனுப்பியதாகச் சொல்லும் கான்வேப் பெருமகனார் துப்பாக்கிகள், ஹார்ட்டிங்டன் பெருமக னாரின் காய்கறி விதைகள் முதலியவை அந்தக் கட்டில் ஏன் இல்லை என்று தெரியவில்லை. அவற்றைக் கொண்டுவந்த திரு. வெஸ்டாக்கையும் நேரில் பார்த்தாயிற்று. ஆகவே மாத்தியூஸிடம் தான் அதுபற்றி உசாவ வேண்டும். தங்கள், ........... கடிதம் - 30 மன்னரும் பெருமக்களும் (இதுவுமது) ஆர்லிங்டன் தெரு, அக்டோபர் 10, 1744. என் கடைசி கடிதத்தின் பின் தங்கள் கடிதங்கள் இரண்டு மூன்று வந்துவிட்டன. அவையாவையுமே ஃபிளாரன்ஸில் தங்கள் நிலைமை பற்றிக் கவலைக் கிடந்தருகின்றன. அரசியின் மனம்போன போக்குக் கெல்லாம், அமைச்சர் ஆட்டிவைக்கும் ஆட்டமும் ஆஸ்ட்ரியக் குருதி மரபும் எத்தனை தூரம் காரணமாயுள்ளது? ஸைலீஷியாவில் ஒரு சிறு பகுதியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்றாள்; ஸைலீஷியா முழுவதும் போயிற்று. தன்னால் கைப்பற்ற முடியாத நேப்பிள்ஸ் உரிமையை விட்டுக் கொடுத்து நடுநிலையுரிமைபெற மறுக்கிறாள். அதனால் டஸ்கனியையும் இழக்க இருக்கிறாள். இப்போது எல்லாம் தாறுமாறாகவே நடைபெறுகிறது. ஸார்டீனிய அரசன் முறியடிக்கப்பட்டு விட்டான். இப்போது கோனி பிடிபட்டுள்ளது. நம் முதல் தரமான கப்பல் விக்டரியை இழந்து விட்டோம்- அத்துடன் ஸர் ஜான் பால்செனும் 900 பேர்களும் மாண்டனர். கப்பலுக்கு மட்டுமே நமக்கு இருநூறாயிரம் பொன் செலவாகியுள்ளது.* இவ்வளவுக்கும் மாறாக நமக்கு நம் சார்பில் கிட்டியுள்ள செய்தியெல்லாம் பிரஷ்யர்மீது நம் சார்ல்ஸ் இளவரசர் பெற்ற திடீர் வெற்றியே, பிரஷ்ய அரசன் பதினாயிரம் வீரரை யிழந்ததுடன் ஒரு பீரங்கிக் குண்டினால் இரு கால்களையும் இழந்துவிட்டான் என்று அறிகிறோம். என்னளவில் அவன் கால்களை இழந்தது போரிலும் அன்று, குண்டினாலும் அன்று; ஓடிச் செல்லுகையில் விழுந்து முறிந்ததனாலேயே என்று எண்ணுகிறேன். அத்துடன் இச் செய்தியைக் கொண்டுவருவது ஒரு யூதன்; ரைன் பகுதி நுழைவுபற்றிய முதல் செய்தி கொணர்பவனும் அவனே. நண்பரே, இச் செய்திகள் எவையாலும் நான் எங்ஙனம் ஆறுதல் பெறமுடியும், ஃபிளாரென்ஸில் அமைதி நிலவித் தம்மைப்பற்றி நான் கவலைப்படும் நிலையிருக்கும் வரையும்? எழுதும் இந்த மைக்கோல்கூட அவ்வெண்ணத்தால் நடுக் குறுகிறது! நம் பழைய மங்கையர் ஸாரா மார்ல்பரோ, கிரென்லில் கோமாட்டி ஆகிய இருவரும் நேற்று மாலை புறப்பட்டு விட்டனர். ஸாராவுக்காக முன் கூட்டி எழுதப்பட்டுள்ள மணப்பாமாலை இனி வெட்டிச் சீர்திருத்தப்பட வேண்டும். ஏனெனில், மாமியார் இப்போது கோமாட்டியாய்க் குடும்பம் உயர்வு பெற்றுவிட்டது. இப்புதிய பட்டம் பாடலெங்கும் மிளிரவைக்க வேண்டும்...... கிழவன் மார்ல்பரோவின் இறுதிப் பத்திரத்தைப் பற்றித் தெரிந்தவுடன் எழுதுகிறேன். வால்போல் பெருமகனார் இளைஞர் கார்டினருக்கு ஒரு கடிதம் எழுதுவதாகக் கூறியுள்ளார்.... கப்பல் தளபதி மாத்யூஸை நான் இன்னும் பார்க்கவில்லை. அவர் மிகவும் பைத்தியமாகவே காணப்படுகிறார். முந்நிறச் சூட்டுடன் அவர் பூங்காவில் காணப்பெற்றாராம். இது எதற்காக என்று கேட்டபோது “ஓ ஒர்ம்ஸ் உடன்படிக்கை! ஒர்ம்ஸ் உடன் படிக்கை’ என்று கத்தினாராம்!...... போஷாம்ப் பெருமகனார் மறைவு அவர் பெற்றோர்களுக்குத் தாங்கொணாத் துயரம். ஆனால், ஸாமர்ஸெட் பெருமக்களின் செருக்கிற்கு இது ஒரு நல்ல படிப்பினையேயாகும். இப்போது தான் அவர் அப்பாவி ஹெர்ட்ஃபோர்டுப் பெருமகனுக்கு எழுதியுள்ளார். இப் பேரிடி தான் செய்த கொடுமைகளுக்கான தெய்வத் தண்டனையே யென்றும் தன் பிள்ளையின் மறைவுக்கு ஒரு வகையில் தானே காரணமென்றும்! பாவம், ஹெர்ட்ஃபோர்டு நல்ல மனிதன்; இக் கிழட்டுக் கொடுங்கோலனால் அவர் பட்ட அவதி கொஞ்ச நஞ்சமன்று. இத்துடன் ஸாமர்ஸட் பதவியும் ஸர் எட்வர்ட் ஸெய்மூருக்குச் செல்லும். அப் பதவி ஏற்பட்டதுமுதல் மிக அநீதமாக அது அவர் குடியிலிருந்து பிரித்துவைக்கப்பட்டு வந்துள்ளது. முதல் பதவியாளர் அப் பதவியைப் பெறாது ஹெர்ட்ஃபோர்டாகவே இருக்கும்போது ஒரு பெருங்குடிச் செல்வியை மணந்து ஒரு பிள்ளையைப் பெற்றார். பிள்ளையின் 20-ஆவது வயதில் தாய் இறந்தாள். அப் பிள்ளையே போஷாம்ப் பெருமகன் தந்தை. அதன்பின் அவர் ஆன் ஸ்டான்ஹோப் என்ற அழகியைக் காதலித்து மணந்தபோது தன் ஸாமர்ஸட் பதவியை போஷாம்பிடமிருந்து பிரித்துவிட ஏற்பாடு செய்துவிட்டார். ஸர் எட்வர்ட் செய்மூர் இந்த போஷாம்ப் மரபில் வந்தவர். மன்னர். வில்லியம் (மூன்றாமவர்) இங்கிலாந்தில் வந்திறங்கிய போது ஸர் எட்வர்டை நோக்கி “ஸர் எட்வர்டு, தாம் ஸாமர்ஸெட் பெருமகன் குடியினர் அல்லவா?” என்றாராம் ஸர் எட்வர்டு, “இல்லை அரசே; ஆனால், அவர் என் குடியினர்தான்” என்றாராம்! லிங்கன் பெருமகனார் சென்ற செவ்வாயன்று மணம் புரிந்து கொண்டார். மிடில்ஸெக்ஸும் மணக்க இருக்கிறார். ஃபிரெஞ்சு மன்னர் மாதாம் டிஷாட்டொரொவை மெல்ல நீக்கி வைத்த செய்தி உங்களுக்குத் தெரியுமா? இதில் ஸாய்ஸான் தலைமகன் (க்ஷiளாடியீ) நடந்து கொண்ட முறை மிகவும் கேவலமானது. அனைவர் முன்னிலையிலும் அவளிடம் “மன்னர் உங்களுடன் கொண்டிருந்த மறைந்த உறவு பொது அறிவாய்விட்டபடியால் அவர் மன மாற்றமும் இப்போது வெளிப்படையாக அறிவிக்கப் படுகிறது. இனி தமக்கு அரசவையில் நுழைவுரிமை கிடையாது.” என்று கூறி மீண்டும் அரசரை நோக்கி,” தங்கள் விருப்பம் இது தானே அரசே” என்று முகதலிக்க, அவரும் வெட்கம் விடுத்து, `ஆம்’ என்றார். இது மட்டுமோ? அவளுக்குத் தரப்பட்ட உரிமைச் சம்பளம் நிறுத்தப்பட்டது. அவள் பரிந்துரைத்து அமர்த்தப்பட்ட ஏவலர், அரண்மனை அலக்குக் காரர் கூட நீக்கப்பட்டு விட்டனர்! இத்தனை அவக்கேட்டுக்கும் முத்தாய்ப்பாகச் சூதுவாதற்ற அரசி மாறுபாட்டைப் பொறுத்திருந்து ஏற்கத் தாங்காது அரசன் உயிரையும் உடலையும் ஆட்கொள்ளும்படி நகருக்குள் வெற்றி கரமாகப் புகுந்து அரண்மனை சேர்ந்தாள்! இங்கே நான் கேள்விப்பட்ட ஸ்காட்லாந்து வீரனொரு வனின் கடமை யுணர்ச்சியும் எளிமையும் எனக்குக் கவர்ச்சியும் நகைச்சுவையும் ஊட்டின. அதையும் இவ்வுயர் உலகச் செய்திகளிடையே உங்களுக்குத் தெரிவிக்காமலிருக்க முடியவில்லை. படை வீட்டிலிருந்து ஊர் சென்ற அவன் திரும்பப் படை வீட்டுக்கே விரைந்து சென்றுகொண்டிருக்கையில் திரு. ஸெல்வின் அவனைக் கண்டாராம். ‘ஏன் இவ்வளவு அவசரமாய்த் திரும்பிச் செல்கிறாய்’ என்று கேட்டதற்கு அவன் “அதிகாரி ஒருவருக்குப் போன ஆண்டு ஒரு கையுறை காணாமற் போயிற்று. இப்போது அதைக் கண்டெடுத்துவிட்டேன். அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வரப்போகிறேன்” என்றானாம்! கடமையைச் செய்ததனால் பாராட்டும் தக்கதொரு சிறு பரிசும் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவன் முகத்தில் புதைந்த புன்முறுவல் உருவில் ஒளி கான்றது. ஆனால், ஸெல்வினுக்கு இன்னும் நகைப்பூட்டிய செய்தி யாதெனில், அந்தக் கையுறையை எங்கே இழந்து தன் காரியத்தைக் கெடுத்துக்கொள்ள நேருகிறதோ என்ற அச்சத்தால் அவன் அக் கையுறையைத் தன் விரல்களில் மாட்டிக் கொண்டே சென்றதுதான்! இத்துடன் விடைகொள்ளுகிறேன். என் சித்தமெல்லாம் ஃபிளா ரென்ஸிலேயே தங்கியுள்ளது. தங்கள் ......... கடிதம் - 31 பெரிய இடத்துச் செய்திகள் (இதுவுமது) ஆர்லிங்டன் தெரு, நவம்பர் 9, 1744 இங்கே எத்தகைய நிகழ்ச்சிகளும் இல்லாமலே இருந்து வருகிறது. செய்திகளுக்காகக் காத்திருக்காமலே எழுதத் தொடங்குகிறேன். குறிப்பிடத்தக்கதாக மிடில்ஸெக்ஸ் பெருமகனாரின் திருமணம் தவிர எதுவுமில்லை. அதுவும் மணமுடித்த ஒரு வாரத்திற்குப் பின்தான் தெரிய வந்தது. அதுவும் மணப்பெண் கூறித்தான் தெரியவந்திருக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். மணமகனும் அவர் குடும்பத்தாரும் வாளா இருப்பதைக் காண அவர்கள் அதனை என்றும் வெளியிட எண்ணாமலே இருந்திருப்பர் என்று தோற்றுகிறது. அவள் குழந்தை பெற்றிருந்தால்கூட சாக்வில் குடியினர் எவரும் அவள் பெயரைக் காப்பாற்ற முன்வந்து ஒரு சொல் அருளியிருக்க மாட்டார்கள் போலும்! ஆனால், நம் பழைய நண்பர் பாம்ஃப்ரட் குடியினர் தம் வெற்றித் திருமண உறவை அடக்கி வைத்திருக்க முடியாதன்றோ? புதிய கிரான்வில் பெருமாட்டி தாம் தம் புதிய இல்லத்தின் தலைவியானபின் முதல் தடவையாக நேற்றுத் தன் வீட்டு விருந்தில் தலைமைப் பொறுப்பேற்றார். நான் அவர்கள் உள்ளார்ந்த நண்பனன்றோ? நானும் போயிருந்தேன். ஆனால், கூட்டுறவு ஒன்றும் சுவைப்பு இல்லை. ‘விஞ்சல்ஸுக்கள் ‘பாத்’கள் முதலிய குடியினர் சிலரும் ‘ஃபார்மன்’ குடியினர் முழுதும் வந்திருந்தனர். சில வெளி நாட்டு அமைச்சர்களும் அரசியல் கட்சியினர் சிலரும் கலந்துகொண்டனர். நம் பாம்ஃப்ரட் பெருமாட்டி என்னைப் பார்த்து, “பெருந்தகையீர், நீங்கள் கிரிஃபோனவுடன் இன்னும் கடிதப் போக்குவரவு வைத்துக் கொண்டிருக்கிறீர்களா?’ என்று கேட்டார். “கிடையாது. உண்டியும் குடிவகையுமிட்டு என் வயிற்றைக் கெடுப்பதனால் அங்கே செல்லுவதையும் நிறுத்தி விட்டேன்” என்றேன். அதற்கு அவர் “ஓகோ, உங்கள் தொடர்பு வெளிப்பட்டு விடும் என்று நினைத்தீர்கள் போலிருக்கிறது” என்றார். உடனே குடும்ப மூதாட்டி தம் பழைய ஆடம்பர நடையில், ‘தங்கள் அமைச்சரவைத் தகுதிக்கு அது வேண்டியதே’, என்றார். இது என் நிலையை அவ் விடத்தில் எப்படி ஆக்கியிருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். அமைச்சர் என்னை நன்கு பாராட்டியுள்ளார்: என் பேட்டிக்குப் பகரப் பேட்டியும் அளித்துள்ளார். இம்மரியாதையை என் தந்தை செய்தது கிடையாது. இவ்வார ‘ஈவ்னிங் போஸ்ட்’ (‘மாலை அஞ்சல்’) இதழில் மார்ல்பரோவின் இறுதிப் பத்திரத்தின் விவரங்களைப் பார்த் திருப்பீர்கள். எதிர்பார்த்தபடி. அது ஊதாரித்தனம் வாய்ந்ததாகவே உள்ளது. ஆனால், அதில் எனக்குச் சுவைதரும் பகுதி ஒன்றுதான். மார்ல்பரோக் கோமகன் வாழ்க்கையை யாரும் பாட்டாக எழுதி வெளியிடப்படாதென்று ஒரு தடை போட்டதுடன் பாட்டெழுதும் பண்புடையோரான கிளவர் மாலெட் துணைவர்களுக்கு ஆளுக்கு நூறு பொன் விட்டுவைத்து அவர்கள் அவ் வாழ்க்கையை ‘உரை நடை’யிலேயே எழுதும்படி கோரியிருக்கிறார். இதில் கண்ட நகைச்சுவைத் திறம் எண்ணி எண்ணி மகிழத்தக்கது. அவர்கள் லியோனிடாஸைப்பற்றி* எழுதிய வீரப்பாடலின் அனுபவமறிந்து லியோனிடாஸின் விதவையே ஆவியுருவில் வந்து அவருக்குட் புகுந்து இந்த இறுதி விருப்பத்தைத் தூண்டியிருக்க வேண்டும்! பிற பொதுச்செய்திகள் பலவும் நம் பக்கம் சாதகமாகவே உள்ளன. சார்ல்ஸ் இளவரசர் பொஹீமியாவில் உள்ளார். கோனி முற்றுகை கைவிடப்பட்டது. ஃப்ரைபுர்க் கூடக் கைவிடப்படும் நிலையிலேயே உள்ளது. கவலைப்படக்கூடியது டஸ்கனிப் பகுதிப் போர் ஒன்றே. புதிய போர்க்களம் ஏற்பட்டாலும் அதுபற்றிக் கவலைகொள்ள வழியுண்டு. இன்னும் இரண்டு வாரத்தில் அரசியல் மன்று கூடும் எதிர்க்கட்சியின் மனப் பான்மையை இன்றும் ஒன்றும் முன்கூட்டியறிந்து கொள்வதற்கில்லை. இத்துடன் விடைபெறுகிறேன். ‘சூட்ஸு’க்கு என் வணக்கம் தெரிவிக்க. மற்றவர்கட்கும் அவ்வப்போது என் நலஉசாவுச் செய்தி தெரிவிக்கக் கோருகிறேன். இளவரசியாரையோ கிரிஃபோனாவையோ (அவர் விருந்துணவெண்ணி வயிறு இப்போதே கூப்பிடுகிறது) நான் என்றும் மறந்து விடவில்லை. தங்கள், .............. செஸ்டர் ஃபீல்டின் கடிதங்கள் முதற் பதிப்பு 1957 இந்நூல் 2002இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது கடிதம் - 1 மதிப்பும் தகுதியும் ஜூலை 24, 1739. என் அருமைச் சிறுவ. அண்மையில் நான் உன்னுடன் வந்திருந்தபோது கடிதம் எழுதும் பழக்கத்தை நான் ஏன் விட்டுவிட்டேன் என்று நீ கேட்டா யல்லவா? அக்கேள்வி உண்மையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி யையே கொடுத்தது. என் கடிதங்கள் உன் விருப்பத்துக்கு உகந்தவையாயிருந்தன என்பதையும் அவற்றை நீ பொருட்படுத்தி வாசித்தாய் என்பதையும் அது காட்டுகிறது. அப்படியானால் நான் இனி அடிக்கடி கடிதம் எழுதுவது உறுதி. நீ உன்னிப்பாகவும் விருப்பத்துடனும் வாசிப்பதானால், என் கடிதங்கள் உனக்கு மிகவும் பயனுடையவையாய் இருக்கும் என்பது உண்மை. ஆனால், நீ அங்ஙனம் படிக்காவிட்டால், அக் கடிதங்கள் என் உழைப்பையும், நேரத்தையும் வீணாக்க மட்டுமே உதவும். அதோடு நீ உன்னிப்பாய்ப் படிக்காவிட்டால், படித்த செய்திகள் உன் மனத்தில் நிலையாய்த் தங்கமாட்டா. நான் அவற்றின்மூலம் கருதும் பயனுமில்லாமல் போய்விடும். கவனமாக நீ படிக்காவிட்டால் படிக்காதிருப்பதே நல்லது; நீ படிக்காதிருப்பின் நான் முயற்சி எடுத்து எழுதாதிருப்பது நல்ல தல்லவா? கடிதங்கள் புத்தகங்களைப்போல மீண்டும் மீண்டும் படிக்கத் தக்கவையல்ல. ஆனால், அக் காரணத்தினாலேயே அவை நன்கு மனத்திலிருத்திப் படிக்கவேண்டுபவை யாகும். ஏனெனில், அவற்றை ஒருமுறை படித்து என்றென்றைக்கும் பயன்படுமளவு நினைவில் பதிக்கவேண்டும். படிப்பு, விளையாட்டு ஆகிய உனது மற்ற வேலைகளுக் குரிய நேரத்தில் நீ அவற்றை வாசிக்கவோ, அவற்றுக்கு விடை எழுத முனையவோ கூடாது. ஏனெனில், நீ படிக்கும்போது விளை யாட்டைப் பற்றியோ விளையாடும்போது படிப்பைப் பற்றியோ நினைக்கக் கூடாதல்லவா? அதுபோலக் கடிதம் வாசிக்கும் போதும், எழுதும்போதும், நீ வேறு எதுவும் செய்யக்கூடாது. நீ கவனமில்லாது செய்யும் எந்த வேலையிலும் உன் நேரம் இரு மடங்கு வீண்செலவாகும். ஏனெனில், அப்போது செய்த வேலையை மீண்டும் நீ செய்தாக வேண்டும். முதல் தடவை செய்ததைவிட மிகுதியான முயற்சியில்லாமல் இரண்டாம் தடவை ஒரு காரியத்தைச் செய்ய முடியாது. வாழ்க்கையின் முதன்மையான செய்திகளுள் மதிப்பு என்பது ஒன்று. தக்க செயலைத் தக்க இடத்தில் செய்வதன் மூலமே. அம்மதிப்பு ஏற்படும். பல செய்திகள் ஒரு இடத்திலும் ஒரு சமயத்திலும் தகுதியுடையவையாய் இருக்கும். ஆனால், வேறோரிடத்தில் அதுவே தகுதி யிழந்து மதிப்பற்றதாகிவிடும். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் விளையாடுவது தகுதியுடையதாகவே எண்ணப்படும். ஆனால், கண்டகண்ட இடத்திலும் காலத்திலும் பட்டம் பறக்க விட்டுக் கொண்டிருப்பதோ, அல்லது திரு. மெய்ட்லண்ட் (ஆசிரியர்) முன்னிலையில் ‘நாயும் புலியும்’ ஆடுவதோ தகுதியுடையதாக மாட்டாது. பாடுவதும், ஆடுவதும் கேளிக்கைக் கூட்டங்களில் பொருத்த மானதே. ஆனால், வழிபாட்டிடத்திலோ பிரிவுக் கொண்டாட்டத் திலோ பாடியாடுபவன் பித்தனாகவே கொள்ளப்படுவான். தகுதியும் மதிப்பும் அறியாதவன் உலகத்தால் மதிக்கப்பட மாட்டான். உன்னளவில் அவையில்லாமல் திரு. மெய்ட்லண்ட் உன்னை மதிக்க மாட்டார் என்பது உறுதி. அவர் மதிக்காமல் நான் உன்னை மதிக்கப் போவதில்லை. எம் இருவர் மதிப்புமே உனக்கு உலக மதிப்புக்கு வழிகாட்டும். ஆகவே, எல்லாச் செய்திகளிலும் அவர் கூறியவற்றைக் கருத்துடன் கேட்டு மனமார ஆராய்ந்து அதன்படி நடப்பாயாக. உன் அன்புள்ள தந்தை, கடிதம் - 2 செய்யுள் நடையின் பயன் பாத், அக்டோபர் 26, 1739. செய்யுள் நடையும் மேடைச் சொற்பொழிவு நடையும் பலவகையில் ஒன்றுக்கொன்று மாறுபட்டவையே. ஆயினும், இரண்டும் ஒரே வகை அணிகளையே பெரும்பாலும் கையாள் கின்றன. இரண்டிலும் உருவகங்கள், உவமைகள், தொடர் உருவகங்கள் (உருவகக் கதைகள்) ஆகியவை மலிந்துள்ளன. ஆகவே, மொழியின் தூய வடிவத்தையும் சரி, பெருஞ் சொல்லாளர்களின் அணிநயங்களையும் சரி, உரைநடையில் கற்பதிலும் எளிதாகச் செய்யுள் நடையில் கற்கலாகும். செய்யுளின் மொழிநடைப் போக்கு உரைநடையைவிட வீறுடையதாகவும் மேம்பட்டதாகவும் அமைந்துள்ளது. அதோடு உரைநடையில் ஏற்கப்படாத பல உரிமைகள் அதற்கு உண்டு. இவற்றையே செய்யுள் வழக்கு, செய்யுள் வழுவமைதி என வழங்கு கிறோம். செய்யுளையும் உரைநடையையும் நீ உன்னிப்பாகப் படித்தால் இரண்டின் வேறுபாடுகளையும் நீ எளிதில் காணலாம். செய்யுளில் எதுவும் நேரடியாகவும் எளிய தோற்றத்துடனும் கூறப்பவடுவதில்லை. உரைநடையிலேயே அங்ஙனம் கூறப் படுவதுண்டு. செய்யுள் அவ்வுரையை விரிவுபடுத்திப் பல நயங்களுடன் அணி செய்கின்றது. எடுத்துக்காட்டாக ஊர் காவலன் ஒருவன் வாய்மொழியில் காலை நேரத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘என்ன மூடாக்கான காலைப்போது’ என்று கூறலாம். இது அப்படியே கூறப்பட்டால் முற்றிலும் உரைநடையேயாகும். இதனையே (இலத்தீன் மொழியின்) நாடகமாகிய ‘கேட்டோ (ஊயவடி)வில். “அழுத்து மாமுகில் சுமையினால் காலையம்போத்தின் கழுத்து வாங்கிட வைகறை ஈர்த்தது பகலே.” என்று கவிஞர் குறிக்கிறார். இந்நடை செய்யுளுக்கு மட்டும் உரியது; உரைநடைக்குப் பொருந்தாது. ஆயினும், இதன் சொற்கள் ஒவ்வொன்றும் செய்யுள், உரைநடை ஆகிய இரண்டுக்கும் பொது உரிமை உடையவையே. உனதன்புமிக்க தந்தை, .................. கடிதம் - 3 சொற்பொழிவு பாத், நவம்பர் 1, 1739. சொற்பொழிவு அல்லது பேருரை என்னும் கலைபற்றி மீண்டும் கூற விரும்புகிறேன். வாழ்க்கையின் எல்லாத் துறை களிலும் அது பயனுடையது; மிகப்பல துறைகளில் அது இன்றி யமையாத் தன்மையுடையது. ஆகவே, நீ அதை உன் மனத்தை விட்டு என்றும் அகலாதிருக்கும்படி பதித்துக்கொள். நாட்டு மன்றத்திலும் சரி, கோயில் மன்றத்திலும் சரி, வழக்கு மன்றத்திலும் சரி, இக் கலை பயிலாமல் ஒருவன் மேம்பாடு பெறமுடியாது. பொதுவாக வாழ்க்கை உரையாடலில்கூட வழக்க மாகவும் எளிதாகவும் தகுதியறிந்து திட்பத்துடன் உரையாடுபவன், அவ்வாற்றலில்லாதவன் அல்லது திருத்தமற்ற பேச்சாளனைவிட எவ்வளவோ எளிதில் உயர்வடையத் தக்கவன் ஆவான். சொற்பொழிவுக் கலையின் குறிக்கோள் மக்களை நம் கருத்துக்கியையத் தூண்டுவதாகும் என்று முன்னமே கூறி யுள்ளேன். அங்ஙனம் தூண்டுவதற்கு அவர்கள் நம்மிடம் மகிழ்ச்சியும் விருப்பமும் உடையவர்களாகச் செய்வதே முதற்பெரும் படியாகும். ஆகவே, நீ நாட்டுமன்றில் பேசினாலும் சரி, கோயில் மண்டபத்தில் பேசினாலும் சரி, வழக்கு மன்றில் வாசித்தாலும் சரி உன் பேச்சைக் கேட்பவர்கள் அப்பேச்சில் மகிழ்ந்து அதனைக் கவனித்துக் கேட்கும்படி செய்ய வேண்டும். சொற் பொழிவுக் கலையின் உதவியின்றி இவ் விருப்பத்தையும் கவனத்தையும் உண்டுபண்ண முடியாது. பிறர் கவனத்தை ஈர்ப்பதற்கு அவர்கள் பேசும் மொழியை நீ பேசினால் மட்டும் போதாது. அதைத் தூய தனி நடையில் இலக்கணப் பிழையின்றிப் பேசினால்கூடப் போதாது. அதனை நயத்துடனும் நாகரிகத்துடனும் வழங்கவேண்டும். அதாவது பொருளை ஆற்றல்பட நன்கு தெரிவிக்கும் சொற்களைத் தேர்ந் தெடுத்து, அவற்றை அழகுபட அடுக்கிக் கூறவேண்டும். கூறும் கருத்துக்களை விளக்கவும் அழகுபடுத்தவும் ஆங்காங்குத் தக்க உருவகங்கள், உவமைகள் முதலிய அணிகளைப் பயன்படுத்துவது சிறப்புத் தரும். இவையனைத்துக்கும் உயிர் போன்றது நகைச்சுவையும் சொல்திறமும். இவை சொற்பொழிவில் மட்டு மன்று, வாழ்க்கைத் துறையிலே கூட வேண்டியவை. எடுத்துக்காட்டாக, உன் ஆசிரியர் திரு. மேத்தேரிடம் ஒருநாள் மாலை நேர ஓய்வு கேட்கவேண்டுமென்று வைத்துக் கொள். ‘ஆசிரியரே, ஒருநாள் மாலை ஓய்வு வேண்டும்’ என்று கூறினால் போதுமா? ஓய்வுதரும் உரிமை அவரிடமே இருப்ப தனால் அவர் மனங்குளிர்ந்து இயல்பாகவே ‘ஓய்வுதரல் நல்லது’ என்று எண்ண வைக்க வேண்டும். உன் கோரிக்கையும் நேரடியாக முனைப்புடையதாகயிருக்கக் கூடாது. “ஆசிரியரவர்களே, தாங்கள் கூறிய வேலைகளைச் சரிவர முடித்துள்ளேன் என்று எண்ணுகிறேன். அது தமக்கு மன நிறைவை யளிக்கும் என்று நம்புகிறேன்,” என்று உன் கடமையை நிறை வேற்றியதை முதலில் நினைவில் கொண்டுவருதல் வேண்டும். அதன்பின் `நல்ல வேலை செய்பவர்களுக்கு, ஓய்வும் வேலைக்கான நல்வாய்ப்பும் தருவதே யாகும்.’ எனத் தாங்கள் நினைவூட்டி யுள்ளீர்கள். எனக்கு அத்தகைய நல் ஓய்வுக்கு ஒரு வழி ஏற்பட்டுள்ளது. கடற்கரையிலுலாவி ஓய்வுடன் பயனும் பெற விரும்புகிறேன்,” என்று உன் விருப்பத்தைக் கூறுவாய். அதன்பின் `அது தமக்கு நன்றெனத் தோன்றுமாயின் அருள்கூர்ந்து விடைதரக் கோருகிறேன்’ என நயமாக விருப்பந் தெரிவிப்பாய். இறுதியில் இவ்வோய்வு நேரத்தை நன்கு பயன்படுத்திக்கொள்வதாக உறுதி கூறி முன்கூட்டி ஆசிரியர் அன்புக்கு நன்றி தெரிவிப்பாய். வாழ்க்கையின் சிறு நிகழ்ச்சியிலேயே சொல் நயத்திற்கும் நேர்மைக்கும் இவ்வளவு விலையானால், நாட்டின் பொதுவாழ்வில் எவ்வளவு அவை விரும்பத் தக்கவை என்று கூறவேண்டியதில்லை யல்லவா? எனது இக்கடிதங்கூட உன்னை என் விருப்பத்திற்கிணங்கச் செய்வதற்கான ஒரு சிறு சொற்பொழிவுதானே! உன் நல்வாழ்வு கோரும், ........................ கடிதம் - 4 பண்டைய உரோமநாட்டு வரலாறு நவம்பர் 20, 1739. அருமைச் சிறுவ, நீ இப்போது உரோம அரசின் வரலாற்றைப் படித்துக் கொண்டு வருகிறாய். அதனை அதன் தகுதியும் பயனும் அறிந்து அதற்கேற்பக் கவனத்துடனும் ஆர்வத்துடனும் கற்றுவருவாய் என்று நம்புகிறேன். வரலாற்றின்மூலம் நமக்குக் கிடைக்கும் பயன் என்ன? நமக்கு முன்னிருந்தவர்கள் குணங்குறைகளை எடுத்துரைத்து அவை நமக்கு வாழிகாட்டியாகும்படி வரலாறு தருகின்றது. ஆகவே, அக் குணங்குறைகளைப் பற்றி நாம் சரிவரச் சிந்திக்க வேண்டும். இவ்வாற்றல் வரலாறு நம்மிடையே நற்குணங்கள்மீது பற்றை வளர்த்து அவற்றை நாம் வாழ்க்கையில் மேற்கொள்ளும்படி செய்கிறது. ஏனெனில், முற்காலப் பெரியோர்கள் எவ்வெக்குணச் சிறப்பால் தம் காலத்தில் மதிப்பும் புகழும் அடைந்தார்கள்; எவ்வெப் பண்புகளினால் அன்றிலிருந்து இன்றளவும் சிறப்பாக மதித்துப் போற்றப்படுகிறார்கள் என்பதை நாம் கற்றறிகிறோம். இவ் வகையில் உரோம நாட்டு வரலாறு சிறப்பானது. நற்குணங்கள் வீரம், பெருந்தன்மை, பரந்த மனப்பான்மை ஆகிய வற்றின் மேம்பாட்டுக்கு வேறு எவ்வரலாற்றையும்விட அது மிகுதியான எடுத்துக்காட்டுகளும் விளக்கங்களும் தருகின்றது. உரோமநாட்டுத் திறலாளர் (சர்வாதிகாரி)களும் வெளி நாட்டு ஆணையாளர் (ஊடிளேரடள)களும் அந் நிலைக்கு வருமுன் உழவர்களாயிருந்து ஏர் பிடித்த கையால் வாளும் செங்கோலும் பிடிக்க முன்வந்தார்கள் என்பதை நீ காண்பாய். அது மட்டுமோ? தம் பெருஞ்செயல்கள் முடிந்ததுமே இவர்கள் மறு பேச்சின்றி ஏரும் கலப்பையும் நாடிச் சென்று விடுவதுண்டு. உரோம அரசின் மாபெருந் தலைவருட் பலர் இறக்கும் போது மற்ற மக்களைவிட வறியராய் இருந்து அரசியலார் செலவில் அடக்கம் செய்யப்பட வேண்டியவரா யிருந்தனர்! இத்தகைய வீரர் வாழ்ந்த நாட்டு வரலாறு ஒரு படிப்பினையே யன்றோ? சாம்னியர் நாட்டில் போர் புரியச் சென்ற ‘கூரியஸ்’ கையில் செப்புக்காசுகூட இல்லாமல் அவதிப்பட்டான். சாம்னியர் பலர் பொருள்தர முன்வந்தனர். ஆனால், அவன் அதனை மறுத்து ‘கைநிறையப் பொருள் இருப்பதை நான் உயர்வாக மதிக்கவில்லை. கைநிறையப் பொருள் உடையவர்களை ஆக்கியழிக்கும் ஆற்றலும் ஆதரிக்கும் பெருமையுமே நான் விரும்புவது என்றானாம்! இந் நிகழ்ச்சியை உரோம அரசின் பெருஞ் சொல்லாளர் ஸிஸரோ பெருமையுடன் குறித்துள்ளார். உரோமப் பேரரசின் மாபெரும் படைகளை நடத்திய தலைவனும் அவ்வரசின் பகைவர்களை ஒறுத்தடக்கிய பெருந் திறல் வீரனுமான ஃபிளேவியஸ் போர்க்களத்தினருகே படை வீட்டில் தான் பயிரிட்ட சிறு கிழங்கும் காய் கனியும் பறித்து அவற்றை மட்டுமே உண்பது வழக்கம் என்று உரோம நாட்டு வரலாற்றாசிரியர் ஸெனக்கா கூறுகிறார். ஸீப்பியோ என்ற தலைவன் ஸ்பானிய நாட்டை வென்று பலரைச் சிறைப்பிடித்தான். சிறைப்பட்டவருள் ஸ்பானிய அரசன் புதல்வியும் ஒருத்தி. அவள் ஒப்பற்ற அழகி. அவள் ஒரு சிற்றரசனை மணந்து கொள்ளச் செல்லும்போது சிறைப்பட்டாள். அவள் தந்தை அவளை விடுவிக்கும்படி பெருந் தொகையை விடுதலைப் பொன்னாக ஸீப்பியோவின் காலடியில் வைத்தான். ஆனால், ஸீப்பியோ அவள் ‘இப்போது என் மகள்; என்று கூறி அவள் மன்றல் நன்கொடையுடன் விடுதலைப் பொன்னையும் சேர்த்து அவள் கணவனிடம் அனுப்பினான். இலக்கியங்களுக்கும் இலக்கியமாகத்தக்க இது போன்ற செய்திகளில் பல உரோம வரலாற்றில் காணும் முத்துக்கள். இத்தகைய பெருங்குணங்களும் பெருஞ்செயல்களும் உன் வாழ்க்கை இலக்குகளாய் இருக்கட்டும்! உனதன்பார்ந்த, ................ கடிதம் - 5 கல்வியின் அருமையும் கல்லாமையின் சிறுமையும் திங்கட் கிழமை அரும்பெறல் சிறுவ, திரு.மேத்தேர் (ஆசிரியர்) நேற்று எழுதிய கடிதத்தில் உன்னைப் பற்றிக் குறித்தது, நான் எதிர்பார்த்ததுமன்று; நான் விரும்பி அவாவி நிற்பது மன்று; உனக்கு நல்லறிவு கற்பிக்க அவர் எடுத்துக்கொள்ளும் முயற்சி பெரிது; அதற்கு நீ இத்தகைய கைம்மாறு செய்வது தவறு. மேலும் நீ நல்ல பேர் எடுக்காதவனா யிருந்தாலும் அத்தனை கேடில்லை. கெட்டவன் என்று ஒதுக்கி விடலாம். ஆனால், நீ நல்லவன் என்று உன் அருமுயற்சியால் பெயர் எடுத்துவிட்டாய். எடுத்த ஒரு பெயரை வீணே கெடுக்கலாமா? கெடுத்தால் முன் செய்த முயற்சியத்தனையும் வீணாகவல்லவா போகும்? உன் வயதுள்ள மற்றச் சிறுவர்களையெல்லாம்விட உன் கல்வி உழைப்பால் நீ இப்போது மிகுதியாக அறிவுடையவனாய் விட்டாய். அப்பெருமையால் மற்றவர்கள் விரைவில் உன்னைத் தாண்டி முன் சென்று முதற்பரிசை எளிதில் அடையவிடுவதா? மேற்சென்று அதை அடைய உனக்குத் திறமில்லை யென்றும் சொல்ல முடியாது. நீ சற்று முயன்றால் வெற்றி உனதென்று உனக்கே தெரியும். அறிவிற் குறைந்தவரும் முயற்சியில் குறைந்தவரும் உயர்வுபெறப் பார்த்தும், நீ உன் அறிவையும் முயற்சியையும் பயன்படுத்தாதிருக்கலாமா? அறிவில்லாத ஒருவனைப்பற்றிய ஃபிரெஞ்சுப் பாடல் ஒன்று உண்டு. கோலாஸ் என்ற அவ் அறிவிலியின் வாழ்வை அப்பாடல் எப்படிக் குறிப்பிடுகிறதுபார்! கோலாஸ் பிறந்தான் அதன்பின் இறந்தான் பிறந்தபின் இறந்ததே கோலாஸின் வாழ்வு’ கோலாஸைப்போல நீ வாழமாட்டாய் என்பதை நான் அறிவேன். ஆனால், உலகம் பெருங்குறையை மன்னித்தாலும் சிறு குறையை மன்னிக்காது. கோலாஸின் குறையில் சிறிது உன்னிட மிருந்தாலும் அறிவுலகம் உன்னைக் கோலாஸ் என்றழைக்கும் ஏன், நானே அழைப்பேன். அதை நீ விரும்பாவிடில் அப்பெயரை உன்னிடமிருந்து தொலை தூரத்தில் அகற்ற முயற்சி செய். நீ இப்போது திரு. ரோலின் இயற்றிய ‘பண்டைய உலக வரலாறு’ படித்து வருகிறாய் உன் பக்கத்தில் உலகப் படத்தை வைத்துக்கொண்டு படி. அதில் வரும் இடப்பெயர்களைப் படத்தில் பார்த்துக்கொண்டு படிப்பதால் அவை உன் மனத்தில் பதியும்; அவற்றின் தொடர்புகளும் விளங்கும். இடவரையறை யில்லாத கதை பின்னணி வண்ணம் இல்லாத படம்போல் சுவை குன்றிவிடும். உன் நற்பெயரை நாடும், .......................... கடிதம் - 6 பேச்சொழுங்கும் நடையொழுங்கும் புதன்கிழமை அன்பார்ந்த சிறுவ, கழிந்த ஞாயிற்றுக்கிழமை திரு. போடன் இல்லத்தில் நீ பண்புமுறைவழுவாது நடந்துகொண்டது பற்றி நான் எவ்வளவு மெச்சினாலும் தகும். இளமையிலேயே நன்னடத்தையில் ஆர்வங் காட்டும் உனக்குக் கூறும் நல்லுரைகள் வீண்போகா என்ற மனஉறுதி மேலும் அவ்வழியில் உன்னை மேம்படுத்தப் பல செய்திகளைக் குறிப்பிடத் தூண்டுதலாயிருக்கிறது. ஆகவே, அம்முறையில் சில கூறுகிறேன். மக்கட் குழாத்தினிடையே ஒருவனுக்கு நன்மதிப்பும் உயர்வும் தரக் கல்வியும் நற்குணமும் பெருமிதமும் எவ்வளவு இன்றியமையாதவையோ அவ்வளவும் நல்லொழுக்கமும் நற்குடி நாகரிகமும் பிறர் அன்பிற்கும் பிறரிடை நல்வரவேற்புக்கும் இன்றியமையாதவை ஆகும். இவற்றுள் முன் கூறப்பட்ட கல்வி, பெருந்தன்மை முதலிய சிறப்புக்கள் பொதுப்படையாக எல்லாரும் எளிதில் பெறத்தக்க பேறுகள் அல்ல. எல்லாரும் அவற்றை மதிப்பிடுவதற்கு உரியரும் அல்லர். ஆனால், நல்லொழுக்கம், நாகரிக நடை ஆகியவை யாவரும் கண்டறிந்து ஒழுகக்கூடியவை. யாவரும் எளிதில் கண்டு மதிப்பிடக் கூடியவையும் கூட ஆகவே, பெறுதற்கெளிதானவையும், பயனாற் பெரிதானவையும் ஆன இக் குணங்களைப் பேணாதிருப்பது செல்வமிருந்தும் பயன்படுத்தாத நிலையை ஒத்தது. நல்லொழுங்கு எது என அறிவமைதிமட்டுமே காட்ட வல்லது. ஏனெனில், ஓரிடத்தில் ஒரு மனிதனிடம் ஒரு தருணத்தில் நல்லொழுங்காயிருப்பது வேறு ஒரு மனிதனிடம் வேறிடத்திலும் தறுவாயிலும் பொருந்தாதிருப்பதுண்டு. ஆயினும், எப்போதும் எல்லா இடத்தும் பொதுவாயமையும் சில அடிப்படைப் பண்புகளும் உண்டு. எடுத்துக்காட்டாக, எவரிடம் பேசும் போதும் அவர்களிடம் இணக்கத்தையோ மறுப்பையோ தெரிவிக்கும் போது மொட்டையாக, ‘ஆம்’, ‘இல்லை’ என்று கூறுவதைவிட ‘ஆம் ஐயா’, ‘ஆம் அம்மா’, ஆம் அண்ணா’, ஆம் தம்பி’ எனத் தக்க முன்னிலைத் தகுதி விளியுடன் சேர்த்துக் கூறுவதுதான் சிறப்புடையது உரையாடுபவர் பிற நாட்டார். ஆனால், , அல்லது உயர்வான பட்டங்களை உடையவரானால் அல்லது பிற குழு வினர் ஆனால், அதற்கேற்ப அவ்வவர் தகுதிக்கேற்ற மதிப்புச் சொற்களையோ, அவருக்குரிய பட்டங்களையோ கையாளலாம். மேலும் உன்னிடம் பேசுபவர்களுக்குத் தக்க மறுமொழி கூறாமலிருப்பதும், முகத்தைத் திருப்பிக்கொண்டு மறுமொழி தருவதும், பேசாது வேறிடம் செல்வதும் தகாத செய்கைகள். ஏனெனில், அது அவர்களை நீ இழிவுபடுத்துவதன் அறிகுறிகள் ஆகும். அதுபோலவே ஓரிடத்தில் சென்றவுடன் இருக்கைகளில் சிறந்த ஒன்றை நீ முந்திக் கைக்கொள்வதும் தவறு ஆகும். உணவு மேடையில் (கூயடெந) உனக்குக் கிடைத்தவற்றை முந்தி உட்கொள்ள முனைதலும் அவ்வாறே எல்லார் நலத்தையும் பேணியபின் தன் நலம் நாடுதலே நல்ல ஒழுங்குமுறை ஆகும். பிறருடன் நயமும் இணக்கமும் காட்டப்பழகிய நற்பண் பாளர்கள் அந் நயத்தினையும் இணக்கத்தினையும் முயற்சியின்றி எளிமையுடன் கைக்கொள்வர். வலிந்து செய்வதாகவோ பிறருக் காகச் செய்வதாகவோ நடந்துகொள்ள மாட்டார். இவ்வெ ளிமையால் மக்கள் உன் பண்பாட்டை மட்டுமன்றி, அப் பண்பாடு இயற்கையால் உண்டாகக் காரணமாக இருந்த உன் குடும்பத்தின் பண்பாட்டையும், நீ பழகும் தோழமைக் கூட்டுறவின் பண் பாட்டையும் பற்றி மதிப்புக்கொள்வர்*, ஆங்கிலேயர் வலிந்து மேற்கொள்ளும் இவ்விணக்கப் பண்பை ஃபிரஞ்சு மக்கள் பழக்கத்தால் தம் இயல்பாக்கிக் கொண்டு விட்டனர். அவர்களுக்கு அவர்கள் மொழி எவ்வளவு இயல்பானதோ அவ்வளவு இந் நற்பண்பும் இயல்பாய் விட்டதாகத் தோற்றுகிறது. வெளிநாட்டாருடன் ஆங்கிலேயர் எளிதில் பழக முடியாததற்கும் ஃபிரெஞ்சு மக்கள் மிக எளிதில் நெருங்கிப் பழக முடிவதற்கும் இது ஒரு தலையான காரணம் ஆகும். வெட்கப்படத்தக்க செயலை நீ என்றும் செய்ய வேண்டாம்; ஆனால், நேர்மையான செயலைச் செய்வதற்கு நீ என்றும் நாணவும் செய்யாதே. ஆயினும், நயநாகரிகத்துடன் அந் நேர்மையான செயலைச் செய்யாவிட்டால், நாகரிக மில்லாமைக்காக நீ வெட்கப்படவேண்டியதேயல்லவா? ஆகவே, நேர்மையான செயலையும் நீ நயநாகரிகத்துடன் செய்வாயாக. பிறரிடம் கூடுமானபோதெல்லாம் இணக்கமுடைய நயமான சொற்களை வழங்க ஒருவன் கூசுவானேன்? உயர் பண்புடையவரிடம் இச் சொற்களைக் கூறுவதனால் பிறர் நகைப்பரே என்று எண்ணுபவர் அப் பண்பாளர் உலகில் இடம் பெறாது போவர். ஆங்கில இடைத்தர மக்கள் இங்ஙனம் உயர்ந்தோருடன் கூட்டுறவுகொள்ளும் வாய்ப்பின்றி ஒதுங்குவர். ஆனால், ஃபிரெஞ்சு மக்களில் பலர் தம்முடன் ஒத்தவருடன் எவ்வளவு எளிமையுடன் பழகுவார்களோ அதே எளிமையுடன் இவ்விணக்க மொழிகளின் உதவியால் அரசருடனும் பழகத் தயங்குவதில்லை. முடிவாக, இணக்கமும் எளிமையும் நற்குடிப் பிறப்பின் சின்னங்கள்; அவை உயர் பண்புடையவருடன் எளிதில் உறவாடத் துணைசெய்து உன்னையும் உயர் பண்புடையவருட் சேர்க்கும். இணக்கமின்மையும் நல்லொழுங்கு பேணாமையும் பண்புடையுல கினின்றும் உன்னை ஒதுக்கிவிடும். தகுதியில்லா நாணமோ பிறரது உள்ளார்ந்த நகைப்புக்காளாக்கி மதிப்பிழக்கச் செய்யும் கல்வியில் முன்னேறிவரும் நீ கவினடையிலும் பயின்று விட்டால், கற்றறிந்தார் குழுவில் மட்டுமன்றிப் பண்புடையார் குழுவிலும் இடம் பெற்று இரட்டிப்புச் சிறப்புப் பெறுவாய். ஆங்கில நாட்டுச் சிறுவர்களிடையே ஆண்டில் உன்னை ஒப்பவர்கள், தன்மையில் உன்னை ஒவ்வாத நிலைமை அடைவாய். உனதன்புள்ள, ................... கடிதம் - 7 ஒப்புரவும் மக்கட் கூச்சமும் ஸ்பா, ஜூலை 25, 1741. தன்மதிப்புக் காத்தல் நல்லொழுக்கம் ஆகியவற்றால் நன்மதிப்பும், கல்வி, அறிவு, திறமை ஆகியவற்றால் மேம்பாடும் ஒருவனுக்குக் கிடைக்குமாயினும், பண்பாட்டினால் மட்டுமே மக்கள் உறவு கிடைக்கும் என்று நான் பல தடவை உனக்கு வற்புறுத்திக் கூறியிருக்கிறேன். இவற்றுள் பண்பாடு என்பது மிகச்சிறிய செய்திகளில் கவனம் செலுத்தும் பழக்கத்தால் மட்டுமே வருவதாகும். அவற்றை நூல்களிலோ, கல்லூரிகளிலோ படிக்க முடியாது; உலக வாழ்க்கையிலிருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும். கல்வி கற்க, மொழியறிவு வேண்டுவதுபோல, உலக வாழ்க் கையிலிருந்து இவற்றைக் கற்றுக்கொள்ள, நுட்பங்களை ஆய்ந்துணரும் கூரறிவும் கவனிப்பும் அவற்றைச் செயற்படுத்தும் நடைப்பழக்கமும் வேண்டும். இவையில்லாத விடத்தில் சிறு காரியங்களும் மலையாகத் தோற்றும். வெளித் தோற்றத்தில் மிகச் சிறியதாகத் தோற்றும் திறமை காரியத்தில் மிக அரிதாகிவிடுவதுண்டு. அதுவே, பொது அவை களிலும் நல்லோர் குழுவிலும் ஏற்படும் அவைக் கூச்சம். இது நல்லோருடன் பழகாததனாலோ அல்லது பழகும்போது அவர்கள் நடை உடை தோற்ற இயக்கங்களைக் கூர்ந்து கவனிக்காததனாலோ ஏற்படுவதாகும். தோற்றம், நடை, சொல், செயல் ஆகிய எல்லாத் துறை களிலும் பண்புடைமை என்பது வெளிப்பார்வைக்கு மிக எளிமை யாகவே காணப்படும். ஆயினும், கூர்ந்து கவனித்துப் பழகா விட்டால் செயலில் அவை மிகமிக அரிதாகிவிடுகின்றன. இக் காரணத்தினாலேதான் வாழ்க்கையில் மிக உயர்வடைந்த பின்கூடப் பலரிடம் குறிப்பிடத்தக்க நடைக் கோட்டம், சொற்சோர்வு முதலிய ஒளிவு நெளிவுகள், நகையாடற்குரிய பழக்கங்கள் ஆகியவை காணப்படுகின்றன. ஒருவன் உயர்வடைந்தபின் இவை மக்களால் புறக்கணிக்கப்படலாம்; ஆனால், உயர்வடைய விரும்புபவர்கட்கும் மக்கள் நேசத்தை அவாவுபவர்கட்கும் இவை தடைகளேயாகும். பலர் இத்தகைய நடை நெறிவுகளாலும் குறைகளாலும் நகைப்புக்கும் இழிப்புக்கும் ஆளாகின்றனர். மேற்குறிப்பிட்ட கோட்டங்கள் உன்னிடம் இல்லாமலிருக்க வேண்டுமானால் நீ நல்லோருடன் பழகுவதுடன் அவர்கள் நடை உடை தோற்றங்களை நன்கு கவனித்துப் பழகவேண்டும். நல்லோர் பழக்கம் பற்றிய கவலை உனக்கு ஏற்பட வேண்டாம்; அப் பழக்கத்தை உண்டுபண்ணுவது என் பொறுப்பு. ஆனால், அவர்கள் இயல்புகளை ஆராய்ந்துணர்ந்து அவற்றைப் பழக்கத்தில் கொண்டு வரும் பொறுப்பு உன்னுடையது. இவ் வகையில் இடையறா விழிப்புணர்வு வேண்டியதாகும். வாழ்க்கையில் எல்லாத் துறை களுக்குமே ஓரளவு இப்பண்பு வேண்டியதல்லவா? போதிய விழிப்புணர்வின்மையாலும் தன் மறுப்பினாலும் பலர் தம் மதிப்பைக் கெடுக்கும் சிறு தவறுதல்களுக்கு ஆளாகின்றனர். அவர்கள் வாயிற்படியில் கால் தட்டி இடறுவர்; குடை முதலிய பொருள்களைப் பொது அவையில் தடாலென நழுவி விழச் செய்வர். தம் இடமறியாது அமர்வர். குடிநீர்க் கிண்ணம், உண்டித்தட்டு ஆகியவற்றைச் சட்டென எடுப்பர்; திடுமென வைப்பர்; விரைந்துண்ணுவர். வெப்பமிக்க நீரை எடுத்தும் குடித்தும் இடர்ப்படுவர். பொதுவாக எச்செயலினும் உல குடனொப்புரவு பேணாது தனிநிலை நின்று பலர் கவனத்துக்கும் கண்டனத்துக்கும், நாளடைவில் மதிப்புக் குறைவுக்கும் ஆளாவர். சிலர் எப்போதும் தும்மல், இருமல் ஆகியவற்றுக்கு ஆளாவர். சிலர் பெரு விரல்களை ஆட்டியும், பிற பொருள்களை உருட்டியும், கையைக் கடித்தும், துணிமணிகளைக் கடித்தும் அருவருப்புக்கு ஆளாவார்கள். இன்னும் சிலர் கையை என் செய்வது, எங்கே வைப்பது என்றறியாமல் இங்கும் அங்கும் பரந்து பொருளற்ற செயல் செய்யவிடுவர். சிலர் இன்னதைத்தான் பார்ப்பது இயல்பு என்றறியாமல் அங்கும் இங்கும் விழித்துக் கண் பார்வையைப் பரப்புவர். இன்னுஞ் சிலர் இச்சிறு செயல்கள் பற்றிய மனக் குழப்பத்தை மறைக்க ஒரே வழியில் அல்லது ஒரே இடத்தில் எங்கும் விழித்துக்கொண்டிருப்பர். இவையனைத்தும் சிறுகுறைகள். சட்ட நூலார் தண்டைக்குரியவை என்று கூறுபவையோ ஒழுக்க நூலார் கண்டிப்பவையோகூட அல்ல. ஆயினும், நன்மக்கள் மதிப்புக்கும் கூட்டுறவுக்கும் இவை தடைகள் ஆகும். செய்யக்கூடாதவை இவை என்ற இவ் வரையறையால், செய்யத் தக்கவற்றை நீ அறிந்துகொள்ளலாம். தோற்ற நடைகளிலுள்ள இச் சோர்வுகளைப் போலவே சொல்லிலும் சோர்வுகள் உண்டு. கொச்சை மொழி, தெளிவும் திருத்தமும் அற்ற ஒலிப்புமுறை, கீழான உரை வழக்குகள், உவமைகள் ஆகியவை அவற்றை வழங்குபவன் பழகும் மக்கள் தரத்தை விளக்கிவிடும். சூழ்நிலையை நன்கு கவனிக்கக் கூர்ந்த அறிவு மட்டுமன்று, பரந்த விரைந்த அறிவும் வேண்டும். இவை பெரிதும் பழக்கத்தால் வளர்ச்சியடைபவையே. கண்டவுடன் பொருளின் பண்பு முற்றும் அறிதல், பல பொருள்கள் அல்லது மக்கள் பண்புகளையும் கவனித்தல், கண்டது கொண்டு காணாதவற்றையும் உய்த்தறிதல் ஆகியவை கவனிப்பின் பல கூறுகள் ஆகும். இக் கவனிப்பும் முயற்சியற்றதாக இருத்தல் வேண்டும். வாழ்க்கையில் உயர்வடைய வேண்டும் என்ற குறிக்கோளில்லாதவனுக்கு ‘முயற்சி இல்லா’ இவ்வியற்கை முயற்சி எளிதில் அமையாது. ஆகவே, உயர் நோக்கம், அறிவு, பொறுமை ஆகியவற்றுடன் வாழ்க்கையாகிய ஏட்டைத் திட்பமுடன் கற்பாயாக. வாழ்க. உனதன்புள்ள, ............... கடிதம் - 8 பிறர்க்கென வாழ்தல் ஸ்பா, ஆகஸ்டு 6, 1741. அன்புடைச் சிறுவ, நீ அனுப்பித் தந்த கட்டுரைகளும் கவிதைகளும் எனக்கு மகிழ்ச்சியூட்டின. ஆனால், உன் ஆசிரியர் திரு. மேத்தோர் முன் போலன்றி இப்போது உன்னைப்பற்றிச் சிறப்பாகக் கூறுவது எனக்கு அதனினும் மிகுதியான மகிழ்ச்சியைத் தருகிறது. ‘புகழை நாடுபவன் தகுதியை வளர்க்கக் கடவன் என்பது ஓர் இலத்தீனக் கவிஞர் வாக்கு. அதனை நீ பின்பற்று மளவும் புகழ் உன்னை நாடும். அதுமட்டுமன்றி உன் விருப்பங்களனைத்தையும் நான் நிறைவேற்றும் செயலாளனாகவுமிருப்பேன். நீ தகுதியை நாடாவிடில் புகழ் கிட்டாததுடன் என் ஆதரவும் உனக்குக் குறைந்துவிடும். நீ பாடல் எழுதத் தொடங்கியுள்ளது பற்றி மகிழ்ச்சியடை கிறேன். காணும் பொருள்கள் பற்றிச் சிந்திக்கும் வழக்கத்தை இது உன்னிடம் வளர்க்கும். பாடல்களைப் படிப்பதால் பிறர் எண்ணங்களை மட்டும் அறிகிறோம். பாடல் எழுதுவதனால் நாமே எண்ணத் தொடங்குகிறோம். ஆகவே, இவ்வாறு உன் எண்ணங்களை நானறியும்படி எழுதியனுப்பு. ‘லூகன்’ என்ற இலத்தீன் நூலில் ‘கேட்டோ’வைப் பற்றிய ஒரு செய்தி கூறப்படுகிறது. கேட்டோ தான் தனக்கெனப் பிறந்ததாக எண்ணாமல் மனித வகுப்பினுக்காகவே பிறந்ததாக எண்ணினானாம். உண்மையில் மனிதன் தன் நலம், தன் இன்பம் ஆகியவற்றுக்கு மட்டுமே பிறந்தானா அல்லது நான் பிறந்து வளரும் குழாத்தின் நலனுக்காகப் பிறந்தானா என்பது பற்றிய உன் கருத்துக்களை எனக்கு எழுது. இதுபற்றி ஒன்று உறுதியாகக் கூறமுடியும். ஒவ்வொரு மனிதனும் மக்கட் குழுவினிடமிருந்து பல நன்மைகள் பெறுவது உறுதி. அவன் உலகில் தனியேயொரு மனிதனாகப் பிறந்திருந்தால் இதை அவன் அடைய முடியா தல்லவா? ஆகவே தனக்குப் பிறக்கு முன்பே பல நன்மைகள் செய்துவைத்த குழுவிற்குத் தானும் பிறப்பில் நன்மை செய்ய வேண்டுவது கடமையன்றோ? கடமை மட்டுமன்று. கடன் என்று கூடக் கூறலாம். ஒருவன் தன் மொழியில் நூல் எழுதி அதனை வளம்படுத்த முயல்வது இக் கடனில் ஒரு பகுதியேயாகும். தன் மறுப்புப் பற்றியும் செயற்சோர்வு சொற்சோர்வுகளைப் பற்றியும் முந்திய கடிதத்தில் எழுதியிருந்தேன். அதுபோலவே மனச் சோர்வுகளும் உண்டு. உன்னுடன் பழகுபவர் பெயர்கள், பதவிகள் ஆகியவற்றை மறந்து இதோ அன்பர்! என்னய்யா-உன்-பெயர், இதோ ‘என்னமோ-ஊர்-அம்மா’ என்றும்; ஐயா, வெள்ளைச் சட்டை ஐயா என்றும் ஒருவரை அழைப்பது மிக வெறுக்கத்தக்கது. பட்டம் பதவி உடையவர்களை அள வில்லாமல் குறிப்பதும் அவற்றை மாற்றித் தாறுமாறாக அழைப்பதும் அவமதிப்புக்கு ஆளாக்கும். தெரியாத கதைகளை அல்லது நிகழ்ச்சிகளைப் பாதி கூறிப் பின் மீதியை மறந்து விட்டேன் என்பதும் இத் திறத்தது. யாரோ சொன்னார்கள் என்று மேற்கோள் காட்டக்கூடாது. கூறியதைத் திருத்தமாகத் தெளிவாகக் கூறு; நன்கு உறுதியாகத் தெரிந்தவற்றையே கூறு. இங்ஙனம் செய்யாவிட்டால் பிறரை மகிழ்விப்பதற்கு மாறாகப் பிறருக்கு உவர்ப்பு ஏற்படும்படியாகிவிடும். பேசும்போது குரல்நயம், ஓசை நயம், உரை நயம் ஆகிய வற்றில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சிலர் வாயைத் திறவாது இறுக்கிக் கொண்டும். பல்லைக் கடித்துக்கொண்டும் பேசுவர். இதனால் உரை திருத்தமற்றும் ஓசை இனிமையற்றும் போகிறது. அவர்கள் சில சமயம் பிறருக்குப் புரியாதபடி முணுமுணுக்கிறார்கள். சிலர் வேகமாகப் பேசுவதால் பிறர் அவர்கள். இன்னின்ன பேசினார்கள் என்று பின் தொடர்ந்துணர முடிவதில்லை. சிலர் எப்போதும் செவிடருடனேயே பேசிப் பழகியவர்களைப் போல் மிக உரத்துப் பேசுவர். வேறுசிலர் தம் நினைப்பையே பிறர் அறிந்தவர் போன்று வாய்க்குள்ளாகவும் குறிப்பாகவும் பேசி மக்கள் தொடர்பை விலக்குவர். இவ் வெல்லாத் தீய வழக்கங்களும் நீக்கத்தக்கவை. தூய உடலும் தூய எண்ணமும் உடையவனாய் நல்லோசையுடன் கூறுபவற்றைக் கூற நீ பழக வேண்டும். பிறர் ஏற்குமாறும், ஏற்று மகிழுமாறும் அவற்றைக் கூற முயற்சி செய்யவேண்டும். இச்சிறு எச்சரிக்கைகள் இல்லாக் குறையால் அறிவு நிரம்பிய பலர் மக்களுடன் நல்லுறவும் நல்லுணர்வும் இல்லாது போகிறார்கள். மறு கடிதம் வரை, உன் அன்புள்ள, .............................. கடிதம் - 9 கடமையும் இன்பமும் பாத், அக்டோபர் 4, 1746. உனக்குக் கடிதம் எழுதுவதில் நான் எவ்வளவோ உழைப்பும் நேரமும் செலவிடுகிறேன். ஆயினும், இவையெல்லாம் பயனுடைய தாகுமா என்று பல சமயம் நான் கவலைப்படுவதுண்டு. காரணம் முதியோர் அறிவுரை இளைஞர்கட்குப் பொதுவாகப் பிடித்தமா யிருக்கமாட்டாது என்பதுதான். ஆயினும், உன் இயற்கையறிவில் எனக்கு நம்பிக்கை உண்டு. அறிவுரை கூறுபவர், அறிவுரை கேட்பவர் நலனேயல்லாது வேறு நலனுடையவராயிருந்தால், அறிவுரையின் உள்ளார்ந்த நோக்கமும் அறிவுரையாளர் நலனை ஒட்டியதாக இருக்கக்கூடும் என்று ஐயப்படக் காரண முண்டாகலாம். என்னைப்பற்றிய வரையில் உன் நலனே யல்லாது வேறு நலன் எனக்கில்லை என்பதை நீ அறிவாய். ஆகவே மற்ற முதியோர் அறிவுரைகளை மட்டுமின்றி இளைஞர் அறிவுரை களைவிடக் கூட என் அறிவுரை தூய்மையுடையதாக யிருக்கத்தக்கது. அறிவுலகம் தந்தை என்ற முறையில் உன் கடமைகள் இவை யெனக் கூறும் உரிமையை மட்டுமன்றி, இதனைச் செய் என்று கட்டளையிடும் உரிமையையும் எனக்குத் தந்துள்ளது. பொருளுலகமோ பொருள் வகையிலும் உன்னை என்னைச் சார்ந்து வாழ வைத்திருக்கிறது. இங்ஙனம் அறிவுரையில்லாமலேயே உன்னை என் விருப்பப்படி நான் நடத்த முடியும்; நீ மீறினால் உன் வருவாயை நிறுத்தவும் என்னால் கூடும். இவ்வளவு ஆற்றலி ருந்தும் உனக்கு அறிவுரை தருவது, உன் நலனை உனக்கறிவிப்பது, சில சமயம் நயமாக வேண்டுவது எதனால்? உன் நலன், என் நலன்; உன் இன்பம், என் இன்பம் என்பதனால் மட்டுந்தானே! இதுகாறும் பெரிய செய்திகளிலும் மிக நுட்பமான செய்தி களிலும் உன் கடமைகள் இவை இவை என அறிவித்திருக்கிறேன். ஆனால், கடமை எவ்வளவு இன்றியமையாததாயினும், இன்ப மன்று வருங்காலப் பயனை எண்ணிக்கூட நிகழ்கால இன்பத்தைக் கைவிடுவது அரிது பல இளைஞர் வேட்கையால் கடமைகளை மறப்பதற்கு இதுவே காரணம். ஆனால், கடமை, இன்பம் ஆகிய வற்றின் உண்மையான இயல்புகளை அறிபவர் களுக்கு அவை இரண்டும் மெய்யாக ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவையல்ல என்பது விளங்கும். ஏனெனில், கடமையே உண்மையான இன்பம்; எதிர்கால நிலையான இன்பங்களுக்கு அடிகோலுவது கடமையே. கடமைகள் இன்பத்துக்கு உதவுபவை மட்டுமல்ல; உண்மை யான இன்பத்துக்கு அவை இன்றியமையாதவை ஆகும். ஏனெனில், இன்பங்கள் அனைத்திற்கும் அடிப்படையான உயர்நிலை இன்பம் ஒருவன் பிறரால் தன்னை ஒத்த வயதுடையவர்களுள் சிறப்புடை யவன் என்று மதிக்கப் படுவதேயாகும். உன்னை ஒத்த பிறர் உன்னிலும் மிக்கவர் என்று கருதப்படுவதே இதற்கு மாறான உண்மைத் துன்பம் அல்லவா? உன் கல்வியிலும் மேம்பாட்டிலும் நான் எடுத்துக்கொள்ளும் அரும்பெரு முயற்சியை அறிபவர்கள், இவ்வளவிருந்தும் நீ முன்னேற்றமடையவில்லை என்று கூறும் போது உன் மனத்துன்பம் இன்னும் மிகுதியாகவே இருக்க வேண்டும். நீ பிறரைவிட உயர்வடைய நான் உன்னைத் தூண்டுவது உன் தற்பெருமையைப் பெருக்குவதற்காக மட்டுமன்று. அத்தற் பெருமைகூட விரும்பத்தக்க ஒன்றே; ஆனால், அதனினும் விரும்பத்தக்கது அதற்கான உண்மைத் தகுதியேயாகும். அது வெறும் தற்பெருமையன்று, பிறர்க்கு நலம் பயப்பது. உண்மையில் ஒருவன் பேரறிஞனாயிராமல் பிறரால் அறிஞன் என்று புகழடைதல் கூடும். பிறருக்கு அறிவைக் காட்டுமளவு பல துறைகளில் சிறிதுசிறிது அறிந்திருப்பதின் மூலம் இப்புகழ் கிட்டும். இதனால் தற்பெருமை மட்டுமே கிடைக்கும். உலகம் நன்மை பெறாது. துண்டு துண்டாகக் கற்ற மேலீடான அறிவு ஒரே கோவையாகமாட்டாது உருப்படியாக உதவவும் செய்யாது. ஆதலால்தான் ‘கற்கக் கசடறக் கற்பவை’, ‘ஆழ்ந்து கற்க’ என்னும் அறிவுரைகள் தரப்படுகின்றன. *அரைகுறை அறிவினால் ஆரிடர் விளையும்; அறிவுச் சுனை நீர் அள்ளிப் பருகுக; அன்றேல் விடுக்க. என்ற திரு. போப் அறிவுரை பொன்போல் போற்றத்தக்கது. சிதறிய மேற்புல்லறிவுடையவன் போலிப் புலவனேயாவான். என் இளமையில் ஏதேனும் ஒரு துறையிலேனும் ஆழ்ந்த அறிவுச் சுரங்கத்தில் உழைத்திராவிட்டால் நான் எவ்வளவு அவப்பேறு டையவனாயிருப்பேன் என்று நான் அடிக்கடி எண்ணுவதுண்டு. இப் பருவத்தில் அவ்வுழைப்பின் பயன் மட்டும் இல்லாதிருந்தால் நான் என்ன செய்யக்கூடும்? பல அறிவிலிகள் இளமையை வீணாக்கி முதுமையில் மாலையும் இரவுமிருந்து கற்று உடல் நலத்தையும் மூளைக் குளிர்ச்சியையும் கெடுப்பதுபோல நானும் கெடுத்து, வட்டிநாடி முதலையும் இழக்கத்தானே வேண்டிவரும்! அல்லது அறிவில்லாததன் பயனாய்க் கீழோர் உறவை நாடி அக் கீழோரும் புறக்கணிக்கத்தானே வாழவேண்டும்? அங்ஙனம் நான் வாழ்வதைவிட மாள்வதே மேல் என்று நான் எண்ணுவேன். இம் முதுமையில் எனக்குக் களைகணாய் இருப்பது நூல்களே ஸீஸரோ கூறுவதுபோல் ‘நூல்கள் முதுமையின் ஆதரவு, இளமையின் அணிகலன்; அறிஞர் தொடர்பிற்கு இடையீடு, இன்பவாழ்விற்குத் திறவுகோல்.’ நூலறிவைப் புகழ்வதால் நான் உரையாடலையும் இன்பங் களையும் பழிக்கவில்லை. ஆனால், அவ்வின்பங்களும் அறிவுடைய வர்கட்கே முழுமையும் பயன்படும். இன்பம் என்பது ஒரு குணம்; அது அறிவு என்னும் பொருளைச் சார்ந்தே நிற்கும். உடலில்லாத அழகு ஏது; இருப்பினும் அது உயிரிலாப் பொருள்களின் அழகு போல் இன்பங் கொடுக்குமேயன்றி இன்பம் துய்க்காதன்றோ? ஆகவே, இளமையில் உன் இன்பத்தை அறிவோடொன்று படுத்திப் பேரின்ப வாழ்வுக்குச் சேமகலமாக அறிவைத் திரட்டி வைப்பாயாக. மழைக் காலத்தில் விதைத்து வேனிற்காலத்தில் வளர்த்துக் குளிர்காலத்தில் அறுத்தெடுத்துப் பயன்பெறுவது போல இளமையில் அறிவு விதைத்து முதுமையில் துய்ப்பாயாக. அறிவுபற்றி என்னுரைகளை இத்துடன் நிறுத்திக்கொள்வேன். அவற்றைச் செயற்படுத்தும் வேலை திரு ஹார்ட்டி* னுடையது. நூலறியும் அறிவு ஒரு சிறு பகுதி; போக மீந்த அனைத்தும் உலக வாழ்வில் பெறவேண்டியதே. அதில் மிகச்சிறந்த வாய்ப்பு உரையாடலிலேயே கிடைக்கும். ஆனால், இவ்வறிவும் அறிவு டையார் உரையாடலில் மட்டுமே கிடைக்குமாதலால் அறிவின் பெரும்பகுதிக்கு நூல்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணம் ஆகிறதென்று காணலாம். இக் கடிதத்தை நீ ஒரு தடவைக்கு இருதடவை வாசித்தல் நல்லது. ஒரு தடவைகூட நீ முற்றிலும் வாசிப்பாயோ என்ற ஐயத்துடன் இதை இவ்விடத்தில் முடித்துக்கொள்கிறேன். உன் அன்புமிக்க தந்தை, ................... கடிதம் - 10 வாழ்க்கையும் பயணமும் பாத், அக்டோபர் 9, 1946. அருமைச் சிறுவ, ஹீடல்பர்க்கிலிருந்து ஷாஃப்ஹோஸென் செல்லும் பயணத்தில் அடைந்த பல இன்னல்களைப்பற்றி நீ எழுதி யிருந்ததை நான் படித்துப் பார்த்தேன். வைக்கோல் சாக்குப் படுக்கை, கன்னங்கரிய அப்பங்கள், நெடுநேர இடை நிறுத்தங்கள் ஆகியவை அப் பயணத்தில் எனக்குத் துன்பமும் முசிவும் தந்தன. இவற்றை வாசிக்கும்போது ஒரு வகையில் வாழ்க்கையும் ஒரு பயணந்தானே. அதன் இன்னல்களுக்கு இவை நல்ல உவமை களாகலாம் என்று எனக்குத் தோன்றிற்று. உண்மையில் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் நேரிடும் தற்செயலான நிகழ்ச்சிகள், மன வருத்தங்கள், தொல்லைகள் ஆகியவை பற்றிச் சிந்தித்துப் பார்த்தால் அவை பல வகையிலும் பயணத்தினிடையே நேரும் எதிர்பாராத் தடங்கல் களையும் சுணக்கங்களையும் நினைவூட்ட வல்லன. வாழ்க்கைப் பயணத்தில் அறிவாற்றலே ஒருவனை உய்த்துச் செல்லும் ஊர்தி; வாழ்க்கையின் வெற்றியும் வெற்றியின் தன்மையும் அறிவாற்ற லாகிய ஊர்தியின் வலிவு மெலிவுகள், குறைவு நிறைவுகள், உறுதிப்பாடு ஆகியவற்றைப் பொறுத்தவை. ஆனால், ஊர்தி குறைவற்றுச் சிறப்புடையதாயிருந்தால் கூட வழியின் கரடுமுரடுத் தன்மை, உடைப்புகள் ஆகிய வற்றாலும், தங்கலிடங்களின் வசதிக் குறைவுகளாலும் விலக்க முடியாத துன்பங்கள் அடிக்கடி நேரிடக்கூடும். வழிகளின் கோளாறுகளால் குற்றமற்ற ஊர்திகளிலும் குற்றங்கள் ஏற்படுமாதலால் அவற்றை அவ்வப்போது சீர்திருத்திப் பேணிவர வேண்டும். வாழ்க்கையிலும் இதுபோலவே நல்லறிவுடைய வனுக்கும் பிறர் தவறுதல்கள் காரணமாகவோ சூழ்நிலைகள் காரணமாகவோ இன்னல்கள் நேரலாம். அவற்றால் அறிவு, நினைவாற்றல், மனமகிழ்ச்சி ஆகியவை ஊறுபடலாம். அத்தகைய நேரங்களில் அமைதியுடன் இவற்றைச் செப்பம்செய்து உடல், உள்ளப் பண்புகளைப் பேணல் வேண்டும். வாழ்க்கையின் பல தோல்விகளுக்கு வித்தாயமைவது மெத்தனம் அல்லது கவனமின்மை ஆகும். உனது குணங் குறைகளை நான் நன்கு ஆராய்ந்து வருபவன் என்று உனக்குத் தெரியுமே. உன்னிடம் நெஞ்சுக் கனிவுபற்றியோ அறிவு பற்றியோ மிகுதி குறை கூறுவதற்கில்லை ஆயினும், மேற்குறிப்பிட்ட மெத்தனமும் அதன் பயனாகக் கவனமின்மை, மடிமை, காலங் கடத்தல் ஆகிய தீமைகளின் வித்துக்கள் மிகுதியாயிருக்கின்றன. முதுமையில் அவற்றைச் சற்று மன்னித்துக்கொள்ளவுங்கூடும். ஆனால், இளமையில் இவை மன்னிக்கத் தகாதவை. அறிவையும் உள்ளத்தின் வளர்ச்சியையும் தடைப்படுத்தி உள்ளூர நின்று வாழ்க்கையை இவை அரித்துவிடும். இவற்றுள் மற்றெல்லா வற்றுக்கும் காரணமாயுள்ளவை மெத்தனமும் கவனமின்மையுமே. இவற்றால் முயற்சி கெடுவது மட்டுமின்றி, அறியத்தக்க பொருள் கண்முன் இருக்கும்போதும் இவை அறியும் முயற்சியைக் கெடுத்து அறிவு வளர்ச்சியைத் தடுக்கின்றன. மக்களிடையே பழகும்போது பிறர் தன்மையை ஆராய்ந்தறிதல், அவர்களை மகிழ்விக்கும் முறைகளை உய்த்துணர்தல் ஆகியவற்றுக்கும் அவை தடையாகின்றன. மேற்கூறிய தீம்புகளால் வாழ்க்கைப் பயணத்தில் தீமைகள் வருவதற்கு வழி ஏற்படும்; வந்த தீமைகளை எதிர்த்துப் போராட முடியாத மெலிவும் உண்டாகும். இவற்றை விலக்கியபின் உன் வாழ்க்கைக் குறிக்கோள் எதுவாயினும் அதனை நீ சென்றடைவது எளிது. முயற்சியால் ஆகாத பொருளில்லை என்று கூறலாம். முயற்சியால் அறிவு, புகழ், நற்குணம் ஆகிய எதனையும் வளர்த்துப் பேணிக்கொள்ளலாம். எந் நிலையை நீ விரும்பினாலும் விடா முயற்சியால் பெறலாம். முயற்சியால் மட்டும் பெறத்தகாதது என ஒன்றைக் கூறவேண்டுமானால் அது கவிஞனாதல் ஒன்றே; ஆனால், இங்கும் கவிதையின் தன்மையை அறிதல், அதன் நலங்களைத் துய்த்தல் ஆகியவை முயற்சிக்குட் பட்டவையே. உள்ளூரக் கவிதையாற்றல் இருந்தால் கவிஞனாவதற்கும் முயற்சி பேருதவி செய்யும் கவிதை நீங்கலான மற்ற அறிவுத்துறைகள் எல்லாம் முயன்று பெறத்தக்கவையே. பெருங் காரியங்களில் எவரும் எளிதில் கவனம் செலுத்துவர். சிறு திறங்களில், சிறிய செய்திகளில் மெத்தனமாயும் புறக்கணிப் பாயும் இருத்தல் இயல்பு. நடை உடை, உடலமைதிகள், ஓசை, பேச்சுத் திருத்தம் ஆகியவற்றில் சின்னஞ்சிறு வழுக்களும், சோர்வு களும்கூட பிறர் வெறுப்பையும் நகைப்பையும், ஏளனத்தையும் உண்டுபண்ணக் கூடும். ஆகவே, அவற்றின் வகையில் மிகவும் உன்னிப்பாயும், விழிப்பாயும் இருத்தல் வேண்டும். மேலும் இவ்வுன்னிப்பு இயற்கையாகவும் மக்கட்கு மிஞ்சிய ஆரவார மில்லாமலும் இருக்கவேண்டும். அவற்றின் பயனை நோக்கி அவற்றில் கவனம் செலுத்தினாலும் அவை சிறு செய்தி களாதலால் பெருக விளம்பரப்படுத்தவோ வற்புறுத்தப் படவோ தக்கவையல்ல. ஆகவே மட்டுக்கு மிஞ்சி இவற்றில் கவனம் செலுத்துவதாகக் காட்டிக்கொள்பவனும் பிற செய்திகளை விட்டு இவற்றில் கவனம் செலுத்துகிறவனும் பகட்டாளர்கள், பசப்பர்கள் என இழிக்கப்படுவர். இவ்விருதிறத் தீங்குகளிலி ருந்தும் தப்ப வழி வரம்புடன் இவற்றைத் திருத்திக் கொள்வதே யாகும். பிறரிடையே இழிக்கப்படாத அளவு நடை உடைச் சிறப்பும் வேண்டும். தனித்துக் குறிப்பிட அல்லது குறிப்பாகக் கவனிக்கப்படும் அளவுக்கு அவற்றை நாடவும் கூடாது. இந் நடுநிலையே நாகரிகத்தின் பொன் நெறியாகும். மக்கள் தமக்குச் செய்த தீங்கைக்கூட மறந்து விடக்கூடும். தம்மை ஒருவர் இழிவுபடுத்திய அல்லது அவமதித்த இடத்து, அச் செயல்களை என்றும் மறக்கமாட்டார். பலர் எப்படியாவது இதற்குப் பழிவாங்கப் பார்ப்பர். இவ்வகையில் ஏற்படும் தொல்லை பயணத்தில் ஊர்திகளில் செல்பவர் மற்ற ஊர்தி ஓட்டுபவர்களைப் பழிப்பதையும் அவர்கள் ஊர்திகளுக்கு ஊறு விளைவிப்பதையும் ஒக்கும். இப்பூசல்கள் வாழ்க்கைப் பயணத்தின் நேர்மையான போக்கில் இடையூறுகளை வருந்தி அழைப்பதாகும். நான் அருமுயற்சியால் எழுதும் கடிதங்களை ஐந்துக் கொன்றாவது நீ பயன்படுத்துவாய் என்று நம்புகிறேன். உன் அன்புள்ள, ................ கடிதம் - 11 தந்தையும் மகனும் (1) லண்டன், டிசம்பர் 2, 1746 அன்புச் சிறுவ, திரு. பொஷெட் என் நண்பனுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தற்செயலாக உன்னைப்பற்றிப் பாராட்டிப் புகழ்ந்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். நான் சென்ற வாரம் நோய்வாய்ப் பட்டிருந்தபோது நீ கொண்ட கவலையும் ஆதரவும் தந்தையாகிய என் உள்ளத்திற்கு உரமூட்டும் மருந்தாய் உதவின. உன் அன்புக்கு நான் நன்றி கூற வேண்டும். ஏனெனில், அன்பும் நன்றியும் இயற்கைக் கடமைகள் என்று கூறப்படினும் உலகில் எவ்வளவு அருமையாயிருக்கின்றன! நான் உன் வரையில் எடுத்துக் கொள்ளும் கவலை உன் நன்றியறிதலைப் பெற்றுள்ளதனால், அது வீண் போகாது என்று நான் எண்ணுகிறேன். உன்னிடம் எந் நிலையிலும் மாறா அன்புடைய உன் தந்தை, ................ கடிதம் - 12 தந்தையும் மகனும் (2) லண்டன், டிசம்பர் 9, 1746. அன்புச் சிறுவ, இவ்வஞ்சலிலேயே திரு. ஹார்ட்டுக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன். எனக்குக் கடிதம் எழுதக் கூட நேரமில்லாதது நெருக்கடியா யிருக்கிறது. ஆயினும், லாசேனில் உனக்கு இன்றிய மையாது உதவியாயிருக்கக்கூடும் வகையில் இரண்டொரு வரி எழுதாதிருக்க முடியவில்லை. எனக்குத் தற்செயலாக நேர்ந்த விபத்தினாலாகிய காயம் சற்று ஆறிவருகிறது. அக் காயத்தைவிட அதற்குரிய காரணம் தான் கவலைக்குரியது. அரசியல் பணியில் ஈடுபட்டிருக்கும் நான்1 இம்முதுமையிலும் ஓய்வொழிவின்றி வேலை செய்வதால் மூளைச்சூடு ஏற்பட்டு அடிக்கடி மயக்கமும் உணர்வின்மையும் உண்டாகிறது. அத்தகைய மயக்கமே விபத்தில் என்னை மாட்டியது. நீ மட்டும் இன்னும் ஒரு மூன்று நான்கு வயது மிகுந்தவனாயிருந்தால், ஒருவேளை என் வேலைகளைப் பகிர்ந்து எனக்குச் சற்று கைத்தாங்கலா யிருந்திருப்பாய். ஆயினும், உன் காலத்தை நீ நன்கு பயன்படுத்தினால் விரைவில் எனக்கு உதவியாயிருக்கும் முறையில் நீ பக்குவமடையலாகும். அந் நிலை எய்த, நீ தற்கால ஐரோப்பிய மொழிகளை நன்கு பேசவும் எழுதவும் கையாளவும் கற்றுக் கொள்ளவேண்டும். அதோடு அரசியலில் திறமையுடன் செயலாற்றப் பல நாடுகளின் சட்டதிட்ட முறைகள், அரசியலமைப்பு முறைகள், பண்பாடுகள், நிலஇயல், வரலாறு, காலப்போக்கின் வளர்ச்சிகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நீ நன்காராய்ந்தறிதல் வேண்டும். இத் தகுதிகள் எல்லாம் பெற்றால் நேரடியாக என்னையடுத்து அல்லாவிட்டாலும் சற்று இடையிட்டாவது நீ என் பணியிடத்தைப் பெறுதல் கூடும். உலகில் சிலரே தம் நேரத்தை நன்கு பயன்படுத்துவர், மிகச்சிலரே முழுநேரத்தையும் நன்கு பயன்படுத்துவர். நீ நான் விரும்புகிறபடி உன் முழுநேரத்தையும் நன்கு பயன்படுத்து கிறாயா? பயன்படுத்துதல் என்று இங்கே கூறும்போது நான் உழைப்பையும் கல்வியையும் மட்டும் கூறவில்லை. அறிவுடன் துய்க்கப்பட்ட எல்லா இன்பங்களும் மக்கள் கூட்டுறவுத் தோழமை, உலாவல், குதிரையேற்றம், முதலியவை பொழுது போக்குக்களாயினும் பயனற்ற வீண் பொழுதுபோக்குக்களல்ல சோம்பியிருத்தலும், அலைந்து திரிதலும், பிதற்றலும், கீழோர் கூட்டுறவுமே வீண் பொழுது போக்குகள் இன்பத்துக்குக்கூட நேரம் முட்டுப்பாடா யிருக்கும் தற்கால வாழ்வில் ‘போனால் வராத’ அரிய நேரத்தை நீ வீண் செலவிட மாட்டாய் என்று நம்புகிறேன். லாசேனில் நீ எல்லாரிடமும் நயமாக ஒப்புரவுடன் நடந்து கொள்கிறாயா? சிறப்பாகப் பெண்களிடத்தில், ‘அகலாது அணுகாது’ மதிப்பும் விருப்பும் பெறும்படி நடப்பதே ஒப் புரவுடையவனா யிருப்பதற்கு நல்ல சான்று. லாசேன் பெண்கள் பொதுவில் உன்னைப் பாராட்டுகின்றனரா? அப்பாராட்டுப் பெற்றால் என்போன்றார் பாராட்டு உறுதி. உனதன்புள்ள, ............ கடிதம் - 13 மெய்யான இன்பமும் அதைப் பெறும் வழிகளும் லண்டன், மார்ச் 27, 1747. அன்புடைய மைந்த, இன்பமென்பது ஒரு பாறை. இளைஞர்கள் பெரும்பாலும் அதிற் சென்று மோதுகின்றனர். அவர்கள் தங்கள் படகின் எல்லாப் பாய்களையும் முழு அளவில் விரித்து அதனைப் பெருவேகத்துடன் செலுத்துகிறார்களாயினும், திசைக்காட்டு கருவியோ சுக்கானோ இல்லாதவர்களாயிருக்கின்றனர். இக் காரணத்தினால் அவர்கள் நாடும் இன்பம் அவர்களுக்குக் கிட்டாததுடன் அவ்வின்ப வேட்டையே அவர்களுக்குத் துன்பம், அவமதிப்பு, இழப்பு, ஆகியவற்றை விளைவிக்கின்றன. இங்ஙனம் இளைஞர் இன்பவேட்டையைக் கடிவதனால் நான் வேதாந்தி களைப் போல இன்பத்தைப் பழிப்பதாகவோ அதன்மீது சமயப் புரோகிதர் போலக் காய்வதாகவோ எண்ணிவிடாதே. நான் விரும்புவதெல்லாம் இன்பவிளக்க அறிஞனென்ற (நுயீiஉரசநயn) முறையில் இன்பத்தின் மெய்ம்மை யியல்பை விளக்கி அதனை அடையும் வழியில் உன்னை உய்ப்பதும், அதுவகையில் தப்பான எண்ணங்கொண்டு தடுமாறாமல் உன்னைக் காப்பதும் மட்டுமே. இளைஞர்கள் அனைவரும் இன்ப வாழ்க்கையையே தம் இலக்காகக் கொள்கின்றனர். ஆனால், இன்ப வாழ்க்கை எது என்னும் செய்தியில் அவர்கள் தங்கள் விருப்பு வெறுப்புக் களையும் அறிவையும் அனுபவத்தையும் வழிகாட்டியாகக் கொள்ளாமல், பிறர் இன்பமென்று கூறுவதனை ஆராயாது இன்பமென்றே கொண்டு நம்பிக்கை மீது ஏற்றுக்கொண்டு விடுகின்றனர். மக்கள் பொதுவாக இன்ப வாழ்க்கையினன் என்று ஒருவரைக் கூறும்போது கீழான குடியன், கூத்தியன் என்ற பொருளிலேயே வழங்குகின்றனர் அல்லது மனம் போனபடி நடப்பவன், ஊதாரி ஆகியவர்களை அப்பெயரால் குறிக்கின்றனர். இப்போது உரையை நம்பி அங்ஙனம் வாழ்வதே இன்ப வாழ்வு என ஏமாறுபவர் பலர். உன் நல்வாழ்வுக்காக அறிவுரை தரும் முறையில் என் நாணத்தை விட்டு உண்மையை வெளியிடுவதானால், இந் நம்பிக்கையில் இளமையின் தொடக்கத்தில் நானே பெருந்துன்பத்துக்கு ஆளாயிருக்கிறேன். பிறரால் இன்ப வாழ்வினன் என்று கொள்ளப்பட வேண்டும் என்ற ஆர்வத்தில், அதில் எனக்கு இன்பம் எதுவும் தோன்றவில்லை என்பதைக்கூட நான் கவனிக்க மறந்தேன். குடிவகைகளை நான் இயல்பாக எப்போதும் வெறுத்தவன், ஆயினும், அவ் வெறுப்பை அடக்கிக் கொண்டு குடித்து அடுத்த நாள் நோய்க்கும் ஆளானேன். இவ்வளவும் உயர் குடியினன் என்று கருதப்படுவதற்குக் குடிவகை இன்றியமையாதது என நான் எண்ணினதனால்தான். குடிவகை போலவே சூதாட்டமும் எனக்கு என்றும் பணமுடையிருந்ததில்லை. எனவே, பணம் தட்டிப் பறிக்கும் ஆவலினால் நான் சூதாடவேண்டிய கீழ்நிலை யுடையவனா யிருக்கவுமில்லை. ஆயினும், உயர்குலத்தவர்க்கு அது அவசிய மான பண்பு என்று எண்ணியதால் விருப்பமும் பற்றுமில்லாமலே அதில் ஈடுபட்டேன். இதனால் என் வாழ்நாளில் மிகச் சிறந்த இளமைப் பகுதியில் 30 ஆண்டளவும் துன்பத்தையும் தொல்லை களையும் இடையூறுகளையும் வலிய வரவழைத்தவனானேன். நான் மேற்கொண்ட இப் போலி நச்சு வாழ்விற்கு அணி தரும்படி அடிக்கடி அகடவிகடப் பேச்சுக்களும் சொற்களும் சூளுரைகளும் வழங்கத் தொடங்கினேன். ஆனால், அதனால் ஏற்படும் இழுக்கத்தையும் அவமதிப்பையும் கண்டு இவ் வழக்கங் களை விரைவில் கைவிட்டு விட்டேன். கீழோர் உலக நடையெனப் பசப்பித் திரியும் நடையை உலக நடையென நம்பியும், அவர்கள் இன்பம் எனக் கொண்ட கோலத்தை இன்பமென நம்பியும் நான் உண்மையின்பங் களனைத்தையுமே இழந்து வந்தேனென்று கண்டேன். அதுவும் அரும் பொருளை இழந்தும், பொருளினு மரிய உடல் நலத்தைக் கெடுத்தும் அம் மெய்யின்பங்களை இழந்தேன். போலியின்பத்தை நாடியதற்கு இவை நல்ல தண்டனைகளாயின. என்னுடைய இந்த அனுபவங்களால் நீ எச்சரிக்கையும் படிப்பினையும் பெறுவாயாக. உன் இன்பங்களை நீ உன் விருப்பம் அறிவு ஆகியவற்றால் ஆய்ந்து தேர்ந்தெடுத்துக்கொள். பிறர் அவற்றை உன்மீது சுமத்த விடாதே. உலகப்போக்கை இலக்காகப் பின்பற்ற எண்ணாதே. இயற்கை அமைதியைப் பின்பற்று. உன் இன்பங்களின் தற்போதைய உணர்ச்சிப் பயனை மட்டுமன்றி அவற்றின் நிலையான பயன்களையும் எண்ணிப்பார். இவ்வளவும் செய்தால், இன்பத்தைத் தேர்ந்தெடுக்க உன் பொது அறிவே உதவி செய்யும். எனக்கு இன்று முதுமையில் கிடைத்திருக்கும் அறிவோடு இனிப்புது வாழ்வு பெற முடியுமானால் நான் கற்பனை இன்பங் களை நாட மாட்டேன்; உண்மையான இன்பங்களைத் தேடி யடைவேன். உணவும் பருகுநீரும் உரிமையாக உட்கொள்வேன். அவற்றின் இன்பம் துய்ப்பேன்; ஆனால், அவை துன்பத்திற்கு ஏதுவாகும் அளவுக்குச் செல்லாமல் நிறுத்தி விடுவேன். இளமையில் முதுமையெய்தியவர்கள் போல இருபதாண்டி லேயே நோன்பும் துறவும்பற்றிப் பேருரையாற்ற மாட்டேன். ஆயினும், , என் இன்பப் போக்கினை மட்டுப்படுத்தி உடல் நலம் பேணுவேன். தம் உடல் நலத்தினும் தற்போதைய இன்பம் பெரிதெனக் கொள்பவருடன் சேரவோ, வீணில் அவரை எதிர்த்துப் பகைக்காளாகவோ முனைய மாட்டேன். அறிவுரை தருவதிலும் அறிவைப் பின்பற்றி வாழ்வது பிறர்க்குக்கூட நற்பயன் விளைவிக்கும். இன்பப் பொழுதுபோக்குக்காகவும் ஒப்புரவுக் காகவும் களியாட்டங்களில் கலப்பேன்; ஆனால், அதில் ஆழ்ந்து, துன்பம் வருவித்துக்கொள்ளத் தலைப்படேன். நான் நூல்களை-நல்ல நூல்களை வாசிப்பேன்; ஆனால், அவ்வப்போது ஓய்வுக்காகவும், ஓய்வைப் பயன்படுத்தி அறிவை வளர்ப்பதற்காகவும், மக்கள் கூட்டுறவை நன்மக்கள், உயர் மக்கள் கூட்டுறவை நாடி அவர்கள் உரையாடலில் கலப்பேன்; ஆடவர், பெண்டிர் குழுவுடன் கலந்து சிற்றுரையாடுவேன்; அதனால் உளப்பண்பாடும் அமைதியும் பெறுவேன்; ஆனால், சிறுமையை மேற்கொள்ளுமளவு அதில் திளைக்கமாட்டேன். விருந்தும் குடியும் பொழுதுபோக்காகக் கொண்ட எந்த உயர் குழுவினரும் குடித்துத் தள்ளாடுபவனையும் உருள்பவனையும் விரும்பாரன்றோ? சிறு சொல்லாடி நகைமுகம் கொள்ளும் நன்மக்கள் என்றேனும் பிதற்றித் திரியும் பித்தனை விரும்பு வாரோ? இத்தகையோர் நல்ல குழுவில் இடமும் பெறார். ஆகவே உண்மை யின்பமும் நல்வாழ்வும் இன்பத்தை ஒரு கருவியாக நாடி அதன் நடுநிலை காத்தலேயன்றி வேறன்று. இதுகாறும் இன்பம் என நான் கூறிவந்தது ஐம்பொறி இன்பத்தையே மன இன்பம் இவற்றினும் உயரியது. அது அளவு கடவாமற் காக்க வேண்டும் இயல்புகூட அற்றது; அதன் இயல்பே அளவுடன் நிற்பதாகும். நன்னெறி நிற்றல், அறச் செயல் செய்தல், கல்வியறிவு ஆகியவைகள் நிலையான இன்பங்கள், உற்றிடத்துதவும் இன்பங்கள்; இவ்வின்பங்களை எப்பாடுபட்டும் நீ வளர்த்தல் வேண்டும். உனதன்புள்ள, ............. கடிதம் - 14 அகமும் புறமும் லண்டன், ஏப்ரல் 3, 1747. அன்புமிக்கச் சிறுவ, இக் கடிதத்தை நான் எழுதுகையில், பொன்கரையிட்ட முழுச் சிவப்பு மேற்சட்டை, பூவேலை செய்த அரைச் சட்டை, மற்றும் பல அணி மணிகள் உடைய ஒரு கனவான் உருவம் என் மனக்கண் முன் தோற்றமளிக்கிறது - ஆம், நான் பிறர் மூலம் கேட்டறிந்த செய்திகள் உண்மையானால், அதுவே இக் கடிதத்துக்குரியவரின் - உன் - உருவம் தத்தம் கைத்திறத்தின் பயனான நூல் ஒவ்வொரு ஆசிரியருக்கும் உகந்ததாகவே இருக்கும் என்று கூறப்படுவதுண்டு. ஆனால், உன்னைப்பற்றி நான் மட்டுமன்றி ஆசிரியர் திரு. ஹார்ட்டும் மிகச் சிறப்பான மதிப்புரை தருவது கேட்டு நான் மகிழாமல் இருக்க முடியவில்லை. இந்நூலுக்குச் செம்மையான கட்டடமிட்டுப் புறத்தே பொற் பூச்சுப் பூசிய அவரே அதன் அக எழுத்தின் தன்மையையும் சிறப்பித்தற்கு உரியவர். ஒரு நூலின் புறச்சார்பான கட்டத்தின் பகட்டு புறக் கண்ணைக் கவரும்; எவரையும் அதனைக் கையிலெடுத்துப் பார்க்கச் செய்யும். ஆனால், புறத்தோற்றத்தில் அழுந்திய போலி அறிஞர் பலர் நூலின் சிறப்பினை விடுத்துக் கட்டடத்தின் சிறப்புடன் அமைத்துவிடுவர். அறிவாராய்ச்சி யுடையவர்களோ நூலின் உள்ளடக்கத்தை ஆராய்ந்து புறத் தோற்றத்துக்கு அது ஒத்ததாக இராவிட்டால் உடனே அதை எறிந்துவிடுவர். இங்ஙனம் எறிவது நூலின் தகுதியின்மைக்காக மட்டுமன்று; புறத்தோற்றத்திற்குப் பொய்மை உண்டுபண்ணிவிட்டதற்காக அதனை இன்னும் மிகுதியாக வெறுப்பர். உலகுக்கு நான் வெளியிட இருக்கும் என் (புதல்வனாகிய) நூலை அறிஞர் கவர்ச்சியுடன் ஏற்று அகத்தோடு புறத்தை இணைத்து ஆராய்ந்து பார்ப்பர் என்றும், அவர்களுள் தலைசிறந்த மதியுரைஞர் அது இணக்கமும், பொருத்தமும், திட்பமும், உயிர்ப்பும் உடையதெனப் போற்றுவர் என்றும் நான் நம்புகிறேன். நீ*நடுநிலக்கடல் (ஆநனவைநசசயநேயn ளுநய) பகுதியில் நம் நாட்டு வெற்றி பற்றித் தெரிவித்ததற்கு நன்றி. இத்தாலி நாட்டு உப்பளங்கள் பற்றிய உன் விரிவுரை உன் காட்சியறிவிற்கு நல்ல சான்றேயாகும். இனிய பண்டங்களுக்கு உப்பிடுவது அவற்றின் சுவையை அளவு டையதாக்குவதற்கே என்று நீ குறிப்பிட்டிருப்பது போற்றத்தக்கது. ஆம்! அதுபோலவே உணர்ச்சி, அறிவு, இன்பம், நகைத்திறம் ஆகியவற்றையும் மட்டுப்படுத்தி நடுநிலை காக்கும் அக உப்பு ஒன்று உண்டு - அதுதான் ஒப்புரவு. இதனைக் ‘கலை உப்பு’ அல்லது ‘அட்டிக்’ உப்பு என்பர். (நடுநிலைப் பண்பு பேணிய அதேனியர் நாட்டின் பெயர் அட்டிக்கா என்பது). புற உப்பும் அகவுப்புமாகிய இவ்விரு உப்புக்களையும் பயன்படுத் தினால் நம் உடலும் உளமும் நிலை பேறுடையவையாகும். திரு ஹார்ட்டுக்கும் பிற நண்பர்கட்கும் என் வணக்கங்கள். உன் அன்புமிக்க தந்தை, ...................... கடிதம் - 15 ஒன்றே செய்யவும் வேண்டும், ஒன்றும் நன்றே செய்யவும் வேண்டும் லண்டன், ஏப்ரல் 14, 1747. அன்புக்குரிய மைந்த, உன் கல்வி கேள்வி, நடை உடை செயல் ஆகியவைபற்றி உன் ஆசிரியர் உன்னைப் பாராட்டி எழுதுவது கண்டு எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆயினும், அவற்றுக்குக் காரணமான நீ ‘நன்று செய்தோம் நாம்’ என்ற அக நிறைவால் என் மகிழ்ச்சியில் ஒரு சிறிது பெற்றால் போதும்; நான் உனக்கு எவ்வகை அறிவுரையும் கூறவேண்டிவராது. ஏனெனில், அம்மகிழ்ச்சியே உன்னை மேன்மேலும் ஆக்க நெறியிலும் செம்மை நெறியிலும் முன்னேறத் தூண்டும். உன் திருத்தத்திற் கேற்ப மகிழ்ச்சி மிகுதியாகும்; மகிழ்ச்சிக்கேற்பத் திருத்தம் மிகுதி யாகும் இருவகை மிகுதியும் உனக்கு நன்மையே விளைவிக்கும். ‘நீ செய்வது யாதாயினும் சரி, செய்வதனை நன்றாகச் செய்; அதே சமயம் வேறொன்றினைச் செய்து கொண்டிராதே’, என்று நான் அடிக்கடி நன்றாக அறிவுறுத்தி வந்திருக்கிறேன். இதனால் நீ எப்போதும் புத்தகப் பூச்சியாய் அதில் அடைபட்டுக் கிடக்க வேண்டுமென்பதோ மற்றக் கேளிக்கைகளில் நேரம் போக்கக் கூடாதென்பதோ என் கருத்தன்று. உண்மையில் நீ புத்தகங்களைப் படிப்பது எவ்வளவு முக்கியமானதோ அவ்வளவும் உன் கேளிக்கைகளும் முக்கியமானவை என்றே நான் எண்ணுகிறேன். மேலும் புத்தகங்களை எவ்வளவு திட்டமிட்டுக் கண்ணும் கருத்துமாக நீ வாசிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேனோ, அவ்வளவு திட்டத்துடனேயே கேளிக்கையிலும் ஈடுபட வேண்டு மென்று நான் விரும்புகிறேன். ஏனெனில், நன்றாகக் கல்லாதவனும் உழைக்காதவனும் கேளிக்கைகளினால் வரும் இன்பத்தை நன்றாகத் துய்க்கவோ, கேளிக்கைகளை நன்கு துய்க்காதவன் புத்தகங்களை அறிவாற்றலுடன் கற்கவோ முடியாது. ஆனால், இவ்விரண்டுக்குமே அடிப்படையான இன்றியமையாப் பண்பு யாதெனில், ‘ஒன்று செய்யும் காலத்தில் ஒன்றையே முழுமனதுடன் செய்யவேண்டும்’ என்பதாகும். ஒரு பொருளில் முழுக்கவனமும் செல்ல வேண்டுமானால் மற்றெல்லாப் பொருள்களையும் அந்த நேரத்தில் முற்றிலும் மறந்தாக வேண்டும். கணக்கிலீடுபட்டாராய்பவன் நடன நயத்திலீடுபடலாகாது; கணக்குலகிலேயே முழுவதும் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு காரியமாக முடித்த பின் மறுகாரியம் செய்ய முற்பட வேண்டுமே யன்றி ஒன்றனடுவில் மற்றொன்றோ, ஒன்றனுடன் மற்றொன்றோ மற்றும் பலவோ செய்தலாகாது. ஒருவேளை நேரமில்லாததனால் ஒன்றுக்கு மேற்பட்ட வற்றை ஒருங்கு செய்யலாமே என்று நீ கருதலாம். இது தவறு. ஒவ் வொன்றாகக் காரியம் செய்தலே காரியங்களனைத்தையும் மிகக் குறைந்த காலத்தில் செய்து முடிக்கும் வகையாகும். ஒவ் வொன்றாக எல்லாக் காரியங்களையும் செய்து முடிக்க ஒரு நாள் போதா தானால், ஒருங்கே அவற்றைச் செய்ய ஓராண்டு கூடப் போதாதென்றே கூறிவிடலாம். ஒரு நாட்டின் குடியாட்சியில் பொறுப்பான பதவி தாங்கிய ஒருவர் தம் பணிமுறை வேலைகளனைத்தையும் சரிவர முடித்தபின் பொது அவைகளிலும் கலந்துகொண்டு, அதன்பின் பொது மக்கள் விருந்து மண்டபங்களுக்கும் ஒழுங்காய்ச் செல்வாராம். இவ்வளவையும் எப்படித் திறம்பட ஆற்ற ஓய்வும் ஊக்கமும் கிடைத்த தென்று ஒரு நண்பர் அவரிடம் வினவினார். அவர் அதற்குக் கூறிய மறுமொழி கவனிக்கத் தக்கது. “உண்மையில் இதைப்போல் எதுவும் அவ்வளவு எளிதன்று ஒரு சமயத்தில் ஒன்றே செய். அதோடு இன்றுசெய்ய வேண்டுவதை நாளைக் கடத்தி வைக்காதே. உன் வேலைகள் நொடியில் முடிவதுடன், நேரம் எப்போதும் மிகுதியாகவே இருக்கும். இப்படிச் செய்பவனுக்குச் சிந்தனை வேலைகளை முடிக்க நேர முண்டா?’ என்பதல்ல. `நேரத்தைப் பயன்படுத்தப் புது நடை முறைகள் எவையேனும் உண்டா?’ என்பதே.” இங்ஙனம் ஒரே வேலை, ஒரே நேரம் என்ற பழக்கம் நாகரிக மக்களின் பண்பாட்டிற்கு அறிகுறி பலவறை ஒருங்கு நெருக்கிச் செய்தல்; அரைகுறையாகச் செய்தல்; காலங் கடத்தல்; விரைந்து செய்தல்; இது செய்வதா, அது செய்வதா என்று ஊசலாடுதல் ஆகிய யாவும் சிறுமனத்தவர்க்குரிய அறிகுறிகள் ஆகும். உன் கல்விப் பயிற்சித் திட்டத்தில் இப்படிப்பினைகளைப் பின்பற்றுவாயாக. ஜெர்மனியில் உனக்கு ஏற்பட்ட இழப்பின் ஒரு பகுதியை திரு ஹார்ட் (ஆசிரியர்) உனக்குச் சரிசெய்து தந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அது எனக்கு முற்றிலும் உடன்பாடே ஏனெனில், உன் முன்னேற்றம் எனக்கு மன நிறைவு தருகிறது. அதன் பயனாக அவர் கொடுத்த பகுதியுடன் மறு பகுதியையும் நான் உனக்குத் தருவித்து உன் இழப்பை முற்றிலும் சரிசெய்ய ஏற்பாடு செய்துள்ளேன். உன் எதிர்கால நலத்தில் நீ கண் விழிப்புடன் நடந்தால், உன் எதிர் காலத்துக்கு மட்டுமன்றி இப்போதைக்கும் உனக்குப் பயனுண்டு என்பதை நீ இப்போது காண்கிறா யல்லவா? உன் மன விருப்பங்களனைத்தையும் இங்ஙனம் நிறைவுறப் பெறும் ஆற்றல் உன்னிடமேயிருக்கிறது. எங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதன் மூலம் உன் விருப்பங்கள் யாவும் தாமாகவே நிறைவேறிவிடும். நலம். உன் அன்புள்ள, .................... கடிதம் - 16 பயணமும் பயணக் குறிப்புகளும் லண்டன், ஜூன் 30, 1747. அன்புமிக்கச் சிறுவ, ஸ்விட்ஸர்லாந்தில் பிறர் உன்னிடம் மிக நயமாகவும் வினய மாகவும் நடந்து கொண்டார்கள் என்று கேட்க நான் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். ஏனெனில், வினயமாக நடக்கத் தெரிந்தவர்களையே பிறரும் வினயமாக நடத்தக்கூடும். ஸ்விட்ஸர்லாந்தில் பயணம் செய்த தலைமகன் பர்னட் (க்ஷiளாடியீ க்ஷரசநேவ) அப் பயணம் பற்றிய விவரத்தை நூலாக எழுதிச் சென்றுள்ளார். ஸ்விட்ஸர்லாந்திலேயே தங்கி வாழ்ந்த திரு. ஸ்டான்யன் அந் நாட்டைப் பற்றிய தலைசிறந்த நூல் ஒன்று எழுதியுள்ளார். ஆனால், அந்நூல்களின் பெயர்களெல்லாம் நீ அந் நாட்டில் பயணம் செய்து அவ்வனுபவத்தை எழுதியபின் மங்கிவிடக் கூடுமல்லவா? அத்தகையதோர் நூலை நீ எழுதி முடித்ததும் அதன் முதற்படி ஒன்றை என் பார்வைக்கு அனுப்புவாய் என்று நம்புகிறேன். வேடிக்கையை விட்டு வினையமாகப் பேசுவதானால், நீ இப்போதே ஒரு நூலாசிரியனாய்விட வேண்டுமென்று நான் ஆத்திரமடையவில்லை. ஆனால், என்றேனும், ஒருநாள் நூலாசிரி யனாக வேண்டுமானால்கூட, நீ உன் கண்களை விழிப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றைப் பரக்க ஓடவிட்டு, அதேசமயம் நுணுக்கமாகப் பொருள்களைக் கவனிக்கச் செய்ய வேண்டும். நுணுக்க மென்பதனால் ஒவ்வொரு நாழிகைக் கல்லையும் விளக்குக் கம்பங்களையும் ஆராய வேண்டுமென்று நான் கூறவில்லை. பொது அறிவுக்கு உதவும் மிகச் சிறு செய்திகளையும் அறியவேண்டும் என்றுதான் குறிப்பிட விரும்புகிறேன். எடுத்துக்காட்டாக, ஒரு நகரத்துக்குச் சென்றால் அது நகராட்சி உரிமையுடையதா அன்றா; அதனை ஆள்பவர் யார்; எம்முறையில் ஆளப்படுகிறது; அங்கே ஏதேனும் தனிச் சிறப்பு டைய பழக்க வழக்கங்களுண்டா; ஏதேனும் தனி உரிமைகள் உண்டா என்பன போன்ற செய்திகளை ஆராய்ந்தறிய வேண்டும். இச் செய்திகள் சில தாமாகத் தெரிய வரலாம். ஆயினும், அவற்றை உள்ளத் திரையில் பதிவு செய்யும்படி மனம் விழிப்பாயிருக்க வேண்டும். அடிக்கடி தாமாகக் கிடையாத விவரங்களை நாடிச் சென்றாய வேண்டும். இவ்வகையில் பெரிதும் உதவி கிட்டுவது, நகர மக்களில் எத்தகையோருடன் நாம் ஊடாடுகிறோம் என்பதைப் பொறுத்தது. ஆகவே, அறிவுடையோர் உறவே யாண்டும் நாடுக. அவசரவேலை காரணமாய் இக் கடிதத்தை இங்கே நிறுத்த வேண்டியிருக்கிறது. தற்போதைக்கு இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். நலம். உன் அன்புள்ள, ................ கடிதம் - 17 கடிதம் எழுதுதல் - ஒரு கலை லண்டன், ஜூலை, 20. 1747. அன்புச் சிறுவ, இக் கடிதத்துடன் உன் தாயின் கடிதம் சேர்க்கப்பட்டி ருக்கிறது. அதனுள்ளாக என் தமக்கையார் உனக்கு ஒரு கடிதம் வைத்தனுப்பியிருக்கிறார். அவர்கள் தம் கடிதத்தை எனக்குக் காட்டவில்லை. ஆயினும், உன் மறுமொழிக் கடிதத்தை எனக்குக் காட்டுவது உறுதி. ஆகவே, அம் மறுமொழிக் கடிதத்தின் முன்மாதிரிப் படிவமொன்றை உனக்கு அனுப்பியிருக்கிறேன். நீ இன்னும் கடிதம் எழுதுவதில் தேர்ந்து பெண்டிருக்குக் கடிதம் எழுதும் அளவு பயிற்சி பெற்றுவிடவில்லை யாதலால் இங்ஙனம் நான் உனக்கு உதவ முன்வருவதை நீ பொறுத்துக்கொள்ள வேண்டும் இதில் தொடக்கக்கால உதவியின்றி நீ தேர்ச்சி பெற முடியாது. கடிதம் எழுதுவது ஓர் அருங்கலை - கடிதங்களும் பலவகைப் பட்டவை. இலத்தீன் எழுத்தாளரும் பெருஞ்சொற் பெருக் காளருமான ஸிஸரோ தம் நண்பர் அட்டிகஸுக்கு எழுதிய கடிதங்கள் எளிய, அன்பு கனிந்த நடை உடையவை. ஆயினும், அவை நல்ல இலக்கியமும் ஆகும். வேறு சில வகைக் கடிதங்கள் தொழில் பற்றியவை. தொழிற் கடிதங்கள் எவ்வாறு எழுத வேண்டும் என்பதைத் தனிப் பாடப் பயிற்சி செய்துதான் நீ அறியுமுடியும். இதில், இலக்கிய நடை, அன்புக் கனிவு, நகைச்சுவை ஆகியவை விலக்கப்பட வேண்டும். உணர்ச்சியை அடக்கிய - நய நாகரிகம் மிக்க, தெளிந்த நடையும், தொழில்மரபு வழக்கு மாறாத சொற்படிவங்களும் இதில் இன்றியமையாதவை. இன்னும் சில கடிதங்கள் இன்பப் பொழுது போக்கானவை. இவற்றையும் சிலர் இலக்கியம் போலக் கற்றாய்கிறார்கள். இது தவறு. பயணக் காலத்திலும் ஓய்விலும் இன்பப் பொழுது போக்காக மட்டுமே இவை படிக்கத்தக்கவை. இக் கடிதத்தைத் தொடர்ந்தெழுத நேரமில்லாமல் விடுகிறேன் நலம். உன் தந்தை, ...................... கடிதம் - 18 நட்பும் தோழமையும் லண்டன், அக்டோபர் 8, 1747. அன்புமிக்க மைந்த, உன் வயதில் இளைஞர்கள் உள்ளம் மிகவும் சூதுவாதற்றது. ஆகவே, உலகின் மாயச் சுழல்களில் அவர்கள் பாதுகாப்பற்ற வர்கள் ஆகிறார்கள். ஒருபுறம் அவர்கள் சூழ்ச்சியாளர்கள் சூழ்ச்சிக்கு ஆளாய் விடுகிறார்கள். மற்றொருபுறம் அனுபவமற்ற வர்களின் அறியாமையால் ஏற்படும் இன்னல்களிலும் அவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள். இதற்குக் காரணம் யாது? “நான் நண்பன், நான் நண்பன்” என்று கூறிக்கொண்டு அவர்களை அண்டும் ஒவ்வொரு அறிவிலியையும், ஒவ்வொரு நயவஞ்சகனையும் அவர்கள் நண்பன் என்றே மனமார நம்பி, நண்பனாக நடத்திவிடுகிறார்கள். என் மைந்தனே, நீ இப்போதுதான் உலக வாழ்க்கையைத் தொடங்குகிறாய். இக் குழிகளில் நீ விழாதிருக்க வேண்டுமானால், நண்பர்களென்று உன்னை அண்டி வருகிறவர்களிடம் நீ எச்சரிக் கையாகப் பழகிக்கொள்ள வேண்டும். அவர்களனைவரிடமும் நயமாகவும் நாகரிகமாகவும் நடந்து கொள். ஆனால், அதே சமயம் எப்போதும் விழிப்பாகவும் இருந்து வா. உன்னைக் கண்டதுமே தாம் நண்பராய் விட்டதாக யாராவது பசப்பி விட்டால், உன் தற்பெருமை காரணமாக அப்பண்பு உன்னிடம் உள்ளூர இருப்பதாக மகிழ்ந்து, அதை நம்பிவிடாதே. ஏனெனில், உண்மையான நட்பு என்றும் திடுமென உண்டாவதும் அன்று. விரைந்து வளர்வதும் அன்று. முற்றி வளர்ந்த மரக்கிளையுடன் தான் புதிய ஒட்டு மாங்கன்று ஒட்டமுடியும். அது போலவே நல்ல உணர்ச்சிப் பழக்கமிருந்து, ஒருவருக்கொருவர் நற்பண்புகளைப் பறிமாறிக் கொள்ளத் தொடங்கிய பிறகுதான் நட்புப் பிறக்கும். நட்பு என்ற பெயருடன் இளைஞர்களிடையே ஒருவகை உறவு ஏற்படுவதுண்டு. அது உண்மையில் நட்பன்று தெய்வச் செயலாக, நட்பைப் போல் அது நீண்டநாள் நிலைபெறுவதும் இல்லை. ஆனால், அது நிலவும் காலத்தில் இனிமையுடைய தாகவே காணப்படும். ஒரு முறை ஒருவரை ஒருவர் கண்ணுற்ற தனால் அது தோற்றிவிடும். குடி, கீழான வாழ்க்கை ஆகிய பொதுப் பழக்கங்களில் ஈடுபடுவதனால் அது விரைந்து வளரும் இது நல்ல நட்பேயன்றோ! இதனை நட்பு என்பது ஒரு இடக்கரடக்கலேயன்றி வேறன்று. உண்மையில் அது நல்வாழ்வுக்கும் ஒழுக்கத்துக்கும் எதிரான ஒரு கூட்டுச் சதியே. குற்ற வழக்குமன்றத் தலைவர்கள் இதனைச் சட்டப்படி குற்றமாக்கித் தண்டனை செய்தால் எவ்வளவோ நன்றாயிருக்கும்! இந்‘நண்பர்கள்’ ஒருவருக்கொருவர் பணங் கொடுத்து உதவுவர். தங்கள் பாதுகாப்புப் போர்களிலும் தாக்குதல் போர்களிலும் ஒருவருக்கொருவர் உதவுவதாகக் கூட்டொப்பந்தம் செய்து கொள்வர். ஆனால், இத்தனை ஒற்றுமையையும் சட்டென ஒரு சிறு நிகழ்ச்சி வந்து தடந் தெரியாமல் நிறுத்திவிடும். அதன்பின் அவர்கள் புதுக் கூட்டுறவு நாடிப் பழங் கூட்டுறவை மறப்பர். அதுமட்டுமோ? ஒருவரை மற்றவர் காட்டிக் கொடுக்கவோ, அவர்கள் முன்னாளில் நம்பகமாகக் கூறிய மறை செய்திகளை வெட்ட வெளிச்சமாக எடுத்துரைத்து அவமதித்து நகையாடவோ தயங்க மாட்டார்கள். தோழமைக்கும் நட்புக்கும் நீ வேற்றுமை அறிதல் வேண்டும். மனதுக்கியைந்த மிகச் சிறந்த தோழன்கூட அடிக்கடி மிகத் தகாத, மிகவும் இடர்தரும் நண்பனாய்விடக்கூடும். பிறர் உன்னைப்பற்றிக் கொள்ளும் கருத்துப் பெரும்பாலும் உன் நண்பரைப்பற்றி அவர்கள் அறிந்த கருத்தாகவே இருக்கும். இது அவ்வளவு தவறானதுமன்று. “ஒருவன் யார்யாருடன் கூடி வாழ்கிறான் என்று சொல்லு, நான் அவன் எத்தகையவன் என்று சொல்லி விடுவேன்.” என்று ஸ்பானியப் பழமொழி உண்டு. ஒரு மூடனையோ போக்கிலியையோ நண்பனாகக் கொண்ட ஒருவன் பல செய்திகளில் மறைந்தொழுகும் இயல்புடையவனாகவே இருப்பான் என்று மக்கள் எண்ணுவது இயல்புதானே! தீயவர்கள், அறிவிலிகள் ஆகியவருடன் நட்பாடவேண்டாம் என்று நான் கூறுவதிலிருந்து, அவர்களைப் பகைத்துக்கொள்ள வேண்டுமென்று கூறுவதாக நீ எண்ணிக்கொள்ளக் கூடாது. அவர்கள் பெரும்பாலும் தீமையில் முனைந்தவர்களாகவும் பலவகைக் கூட்டுறவு உடையவர்களாகவும் இருத்தல் கூடும். ஆகவே, அவர்கள் நட்பும் பகைமையும் எதுவும் தீமை தருவதே. அவர்களிடம் நட்புமின்றிப் பகைமையுமின்றிப் பொது முறையில் விலகியிருந்து கொள்வதே சாலச் சிறப்புடையது. ஆயினும், அவர்கள் பகைமையினும் நட்பு மிகவும் தீமை தருவது என்பதை நினைவில் வைக்க வேண்டும். அவர்கள் நட்பையும் பகைமையையும் விலக்கி அவர்களை நொதுமலராகக்கொள்ள நல்லவழி ஆவது அவர்களையும் மற்ற அயலார்களையும் மேற்போக்காக நண்பர்களைப்போல் நயநா கரிகத்துடன் நடத்துவதேயாகும். அவர்களை விலக்குவதற்காகக் கூட ஒதுங்கி நடந்தால் அவர்கள் வெறுப்பும் பொறாமையும் கொள்வர். அவர்களை அறியாத பிறர் நீ அன்பற்றவன் என்று கொண்டுவிடவும் கூடும். நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு அடுத்தபடியான சிறப்புடையது நல்ல தோழர்களைத் தேர்ந்தெடுப்பதாகும். கூடிய மட்டும் உன்னிலும் உயர்ந்தவர்கள் கூட்டுறவையே நீ நாடல் நல்லது. கீழானவர்களுடன் கூடுவதினால் நீ கீழ்மை அடைவது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு மேலானவர் உறவால் நீ மேன்மை உறுவதும் உறுதி. உன்னிலும் மேலானவர் என்று இங்கே நான் குறிப்பிடுவது பிறப்பில் மேலானவர்களையன்று. உண்மையில் மேன்மைகள் எனப்படும் பலவற்றுள்ளும் மிகக் குறைந்த மேன்மை இதுவே. நான் பாராட்டும் மேன்மை குணச்சிறப்பையும் உலகில் மக்கள் மதிக்கும் மதிப்பின் சிறப்பையுமேயாகும். நன்மைதரும் கூட்டுறவு வாழ்க்கை இருவகைப்படும். ஒன்று உலகியல் வாழ்வில் உயர்ந்தோர் கூட்டம் அவர்களே அரசவை களிலும் நல்லின்ப வாழ்வுக் குழாங்களிலும் சிறப்பெய்தி யுள்ளார்கள் மற்றொன்று புலனெறி வாழ்க்கைப் பொலிவுடையார் கூட்டுறவு. இத்தகையோர் யாதானுமொரு கலை, அல்லது அறிவியல் துறையிலோ, அல்லது வேறுவகைச் சிறப்பிலோ மேம்பாடுடையவர்கள். இவ்விரு வகையினருள் எவர் சிறந்தவர்? என்னைப் பொருத்தவரையில் ஐரோப்பாக் கண்டத்தின் பேரரசர், இளங்கோக்கள் ஆகியவர்களுடன் வீற்றிருப்பதினும். திரு. அடிசன், திரு. போப்* ஆகிய செம்மொழிச் செல்வரிடையே இடம் பெறுவதையே நான் எவ்வளவோ மேலானதாகக் கருதுவேன். நல்ல உயர்ந்த கூட்டம் எது என்பதில் சிறிது கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், தாழ்ந்த கூட்டம் எது என்பதை எடுத்துக்காட்டுதல் எளிது. உன்னுடன் உறவாடுவதால் தனக்குப் பெருமை கிடைப்பதாகக் கூறிக்கொண்டு உன் நடை உடை, சிறுகுணங் குறைகள் ஆகியவற்றைப் பலபடப் பாராட்டுபவன் எவனோ, அவன் ஐயமின்றித் தாழ்ந்த இயல்புடையவன் என்று ஒதுக்கத்தக்கவனாவான். அடுத்தபடியாக எவன் கூட்டத்தில் தானே முதன்மையுடையவன் என்று தருக்குகிறானோ அவன் சிறுமையுடையவன் ஆவான். முன்னவன் இழிக்கத்தக்கவன்; வெறுக்கத்தக்கவன். பின்னவன் எள்ளி நகையாடத்தக்கவன். “உயர்ந்த கூட்டத்தையே ஒருவன் எப்போதும் நாடிப் பெறமுடியுமா? அது எப்படி முடியும்?” என்று நீ கேட்கலாம். முடியும், கட்டாயம் முடியும்! ஆனால், அதை அடைவது, அதை நாடித் தேடுவதாலன்று; அதற்கான முறையில் நீ உன்னைத் தகுதி செய்துகொள்ளுவதால் மட்டுமே. உன் பொருள் நிலை அதற்கு மிகுதியுந் தடையாகாது. உன் தகுதியும் நயமான நடையும் எவ்வுயர் கூட்டத்திடையேயும் உனக்கு வழி செய்து தரும். உன் அறிவு, உயர்ந்தோர்மாட்டு உன்னை அணுகச் செய்யும்; உன் ஒழுக்கம், உன் கூட்டுறவில் அவர்களை மகிழச் செய்யும். நான் அடிக்கடி உனக்குக் கூறி வந்துள்ளபடி, ஒழுக்கமும் நாகரிகமுமே மற்றெல்லாச் சிறப்புக்களுக்கும் சிறப்புத் தருபவை. அவை இல்லாத இடத்தில் அறிவு, திறங்கள் ஆகிய எவை நிறைவுடை யவையாயிருந்தாலும் பயன்பெறமாட்டா. நீ லீப்ஸிக் நகரை அடைந்ததும் அங்குள்ள என் நண்பர்க ளிடமிருந்து நீ அங்கே போய்ச் சேர்ந்தது பற்றியும், உன்னைப் பற்றித் தாங்கள் கொண்ட முதலெண்ணங்கள் பற்றியும் கேட்க விரும்புகிறேன். ஆம், இது உண்மையே. ஆதலின் நீ மிகவும் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும். ஏனெனில், நண்பர்கள் என்று நான் குறிப்பிடுபவர்கள் எல்லாரும் ‘ஆயிரந்தலை ஆதிசேடன்’கள்; அவர்கள் தம் ஈராயிரம் கண்ணாலும் உன்னை ஆராய்ந்தறிந்து, தம் ஆயிர நாவுகளால் எனக்கறிவிப்பர். அவர்கள் கண்டதையே கூறுபவர். அவர்கள் எத்தகைய செய்திகளைத் தெரிவிக்கப் போகிறார்கள் என்பது உன்னைப் பொறுத்ததே. இது உன் மனதில் இருக்கட்டும்! வாழ்க. உன் அன்பிற்குரிய, .................... கடிதம் - 19 பிறர்க்கு இனியனாதல் எவ்வாறு? லண்டன், அக்டோபர் 16, 1747, அன்பார்ந்த சிறுவனே, பிறர்க்கினியனாய் வாழ்வது ஒருவனுக்கு இன்றியமையாது வேண்டப்படும் பண்புகளுள் ஒன்று. ஆயினும், அது பெறுவதற் கரியது. அதற்கான ஒழுங்கு முறைகள் எதனையும் வகுத்துக் கூறவும் முடியாது. உன் அனுபவத்திலிருந்தே அவற்றை நீ அறியவேண்டும். ஆயினும், பிறருக்கு இனியனாயிருப்பதில் வெற்றியடைவதற்கான அடிப்படை ஒழுங்கு ஒன்றை நான் கூறக்கூடும். அது, ‘பிறர் உன்னிடம் எவ்வகையில் நடக்கவேண்டும் என்று நீ விரும்புவாயோ, அவ்வாறே அவர்களிடம் நட’ என்பதே. உன் பண்புத் திறங்கள், சுவைத் திறங்கள் ஆகியவற்றுக்குப் பிறர் சலுகை காட்டினால் உனக்கு இன்பம் ஏற்படும் என்பதை நீ காணலாம். ஆகவே பிறர் பண்புத் திறங்களுக்கும் சுவைத் திறங்களுக்கும் நீ சலுகை காட்டி நடத்தல் நலம். நீ சாரும் குழுவின் இயல்பையும் குறிப்பையும் ஏற்று நட; உன் இயல்பையும் குறிப்பையும் அக்குழு மீது சார்த்தவோ சார்த்துவதாகக் காட்டிக்கொள்ளவோ கூடாது. பிறர் அமைதியுடனிருக்கும் நேரம் நீயும் அமைதியுடன் நட; பிறர் பொழுதுபோக்கும் நேரம் நீயும் பொழுது போக்கை மேற்கொள், ஒவ்வொரு தனி மனிதனும் குழுவின் உறுப்பினன் என்ற முறையில் குழுவுக்கும் குழுவில் பெரும்பாலாருக்கும் செய்ய வேண்டும் இன்றியமையாக் கடப்பாடு இது. நீண்ட கதை அல்லது நிகழ்ச்சியை விரித்துரைத்தல் முற்றிலும் விலக்கத்தக்கது. சமய வாய்ப்பறிந்து குறிப்பாகக் கூறினாலும், கூடியமட்டும் சுருங்கக் கூறு. பிறர் வேண்டினாலன்றி அவர்கள் நேரத்தை நீ வீணாக்க முயலவில்லை என்பதை உன் சொல்லிலும் நடையிலும் விளக்கிக்காட்டு. உன் உரையாடலில் தன் முனைப்புக்கு இடம் இருத்தல் தகாது. உன் எண்ணம், உன் விருப்பம், உன் வாழ்க்கை நிகழ்ச்சிகள், உன் கோட்பாடு ஆகியவற்றை அடிக்கடி கூறாதே. அவைகள் உனக்கு விருப்பமானவையா யிருக்கலாம். பிறருக்கு அப்படியிருக்க வேண்டுமென்பதில்லை. உன் திறம் தெரியவரும்படி உனக்குகந்த பொருள்கள்மீது பிறர் உரையாடலைத் திருப்ப நீயாக முயற்சி செய்யக் கூடாது. உன் கருத்துக்களைத் குறிக்கும் போது ஒரு தனிமனிதன் கருத்து என்ற அளவில் அடக்கத்துடனும் நயத்துடனும் கூறு. உணர்ச்சியின் வேகமோ வெம்மையோ தோன்ற உரையாடாதே. அடிப்படை வேறுபாட்டால் உரையாடலில் சிக்கல் வருமானால், அப்போது அதனை வாதாடி முடிக்க முயலலாகாது; வேறு பொருள்பற்றிப் பேசுவோம் என்று உரையாடலை மாற்றல் வேண்டும். ஒரு குழுவில் நன்மையானதா யிருக்கக்கூடும் சொல் அல்லது பொருள், வேறொரு குழுவுக்குப் பொருந்தாது. அதுவே மாறானதா யிருக்கலாம். ஆகவே, அவ்வக்குழுவின் குறிப்பறிந்து ஒழுகு. தனி மனிதர் எவரிடமேனும் நீ செல்வாக்குப் பெற விரும்பினால் அவர்கள் சிறப்புத்திறம் எது, அவர்கள் பெருங் குறைபாடு எது என்பதை நீ அறிதல் வேண்டும். சிறப்புக்களின் தகுதி முழுமையையும் பாராட்டு. குறைபாடுகள் வகையில் அவற்றின் தகுதிக்கு மேம்படச் சலுகை காட்டுதல் வேண்டும். இதனால் அவர்கள் குற்றங்களையும் குணங்களாகக் கூற வேண்டும் என்பதில்லை. குற்றங்களைக் குற்றமாகக் கூறுவதே நலம். ஆனால், பெருங்குற்றமல்லாத, பிறருக்குத் தீங்கில்லாச் சிறு குறைபாடுகள் எல்லாரிடமும் உண்டு. அவற்றுக்குச் சலுகை காட்டுவதால் யாருக்கும் கெடுதல் இல்லை. அதனை உடையவர்க்கு அச்சலுகை மகிழ்ச்சியை உண்டு பண்ணு வதுடன், உனக்கு அவர்கள் மாறா நட்பையும் தரும். சில பெரியார்கள் தம் தனிச் சிறப்புக்களை அறிந்தும் வேறு சிறப்புக்களை உள்ளூர அவாவுவர். அவர்கள் தனிச்சிறப்புக்கள் யாவரும் அறிந்தவையாயிருந்தால் அதனைப் பரப்புதல் அவர்களுக்கு எத்தகைய மகிழ்ச்சியும் தராது. அவர்களிடம் அவ்வளவு சிறக்க விளங்காத பண்புகளைப் புகழ்வதை அவர்கள் விரும்பக்கூடும். எடுத்துக்காட்டாக (ஃபிரஞ்சு) அமைச்சர் ரிச்லு ஒப்பற்ற அரசியல் தலைவர். அதனை அவரும் அறிவர். ஆனால், அவர் சிறப்படைய விரும்பிய துறை அரசியல் அன்று, இலக்கியமே. அதில் அவர் ரஸீன் போன்றவருடன் ஒப்பாக விளங்க விரும்பினார். இச் சிறப்பை அவர் அடைந்தவர் என்று யாரும் கூறமுடியாது. இந் நிலையில் ‘அவர் கவிதை பல திறங்களில் ‘ரஸீன்’ திறம் ஒத்தது - சில துறைகளில் அதனினும் மிக்கது’ எனக் கூறுவதனால் அவருக்கு மகிழ்ச்சி ஏற்படு மன்றோ? இங்ஙனம் கூறுவது பொய்யாகுமே என்று நீ கூறலாம். ஆனால், யாரேனும் ஒருவரை ஏமாற்றுவதனாலேயே பொய் பொய்ம்மைப் பழிக்கு உரியதாகும். ரஸீனின் பெருமை ரிச்லுவிடம் இல்லை என்பதை யாவரும் அறிவர். அவருக்கும் மனமாரத் தெரியும். உன் புகழ்ச்சியுரையால் எவரும் அறிவுப் பிறழ்ச்சி அடைய மாட்டார்கள். அவரும் நீ கூறுவதைத் தடுக்க மாட்டார். அதன் பயன் எவ்வகைப் பழியுமில்லாமல் அவர் அடையும் மகிழ்ச்சியும், நீ பெறும் நட்பும் மட்டுமே. பெண்கள் உடலழகைச் சற்றுப் புகழ்வதும் இத்துறை சார்ந்ததே அழகு, பாடல், நாகரிகம், உடை ஆகியவற்றில் உண்மையைச் சற்றுக் கூட்டியும் குறைத்தும் நயமாக அவர்கள் மகிழப் பேசுவது பொய்ம்மையோ புகழ்ச்சியோ கூட அல்ல. அவர்கள் பெண்பாலர் என்ற அளவில் காட்டும் சலுகை மட்டுமே. உலகின் உயர்தர மக்கட் குழுவில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி என் வாழ்நாள் அனுபவத்தில் அறிந்த வற்றையே உனக்குக் கூறுகிறேன். இன்று அறிந்ததை நான் அன்று அறிந்திருந்தால் எனக்கு எவ்வளவோ நன்மையாயிருந்திருக்கும். ஆனால், அவற்றை அறியும் அறிவுக்கு விலையாக நான் 53 ஆண்டுகள் வாழ்வைக் கொடுக்க வேண்டியிருந்தது. நான் அடைந்த இவ்விழிப்பை நீ பயன்படுத்திக் கொண்டால், நான் கொடுத்த விலைக்கு நான் வருந்த வேண்டியது இல்லை. உனது பயன் என் பயனாகும் அல்லவா? உனக்கு எல்லா நலனும் விளைக. உன் அன்புமிக்க தந்தை, ............................ கடிதம் - 20 காலமும் இளமையும் லண்டன், டிசம்பர், 1747. நீ கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் மிகவும் விரும்பும் பொருள் ஒன்று உண்டு. அதனை அறிந்து கொள்ளாமல் அவதியுறுபவரே பலர். ஆதலால் நீ அதனை முழுமனதுடன் கவனம் செலுத்தி உணர வேண்டும். அப்பொருள் வேறு எதுவுமில்லை, ‘காலமும், அதன் பயனும் மதிப்பும்’ என்பதே. மிகுதி அறிவுத் திறமற்றவர்கள் கூட இதனை மேற்போக்காகக் கூறுவதுண்டு என்பது உண்மையே. ஆனால், அதனை அடிக்கடிக் கூறுவதனாலோ கேட்பதனாலோ கூட அதன் பயன் மனத்தில் பதியாது. நம் வாழ்க்கையில் இன்றியமையா வேண்டுதலாயிருக்கும் மணிப்பொறி (கடிகாரம்) ஒவ்வொன்றிலும் காலத்தின் அருமை பற்றி ஏதேனும் ஒரு வாசகம் பொறுத்தேயிருக்கிறது. ஆயினும், அப்பொறியைப் பயன்படுத்துவோர் அவ்வாசகத்தைப் பயன் படுத்துவதில்லை. தம் வாழ்க்கை யனுபவத்திலிருந்தே காலத்தின் பயன் பற்றிய எண்ணம் எழாதவர்களுக்கு அதனை வாசக உருவில் காண்பதாலோ, கேட்பதாலோ பயன் ஏற்படுவதில்லை. உன்னை நான் அறிந்த அளவிலும், உன் கடிதங்களை வாசித் தறிந்த அளவிலும், நீ உண்மையாகவே காலத்தின் பயனை அறிந்து அதனை நன்கு பயன்படுத்தும் கவலை உடையவனா யிருக்கிறாய் என்றே நான் எண்ணுகிறேன் - எண்ணிப் பெருமையும் அடைகி றேன். ஆகவே காலத்தின் அருமை பற்றிப் பலபட விரித்துரைத்து ஒரு கட்டுரை வரைய நான் விரும்பவில்லை. ஆயினும், உன் எதிரில் இப்போது உள்ள இளமைக் காலத்தை - அதிலும் வரும் இரண்டு மூன்று ஆண்டுகளை நீ எவ்வாறு கழிப்பது நலம் என்பதை உனக்குத் கூற விரும்புகிறேன். இவ்வகையில் நான் உனக்கு முதன்மையாக வற்புறுத்திக் கூற வேண்டுவது ஒன்றே - கல்வித் துறையில் நீ எவ்வளவு அரிய காரியம் செய்து முடிக்க விரும்பினாலும், எவ்வளவு அறிவைத் தேடிக்கொள்ள விரும்பினாலும், அதற்குரிய காலம் பதினெட்டு வயதுக்கு முன்னேதான். அதன்பின் உன்னை நான் எதுவும் படிக்கும்படி கூறமாட்டேன் - கூறினாலும் மிகுதி பயனிராது. ஏனென்றால், அவ் வயதுக்குப்பின் உனக்குப் படிக்கச் சமயமும் படிப்பதற்கான மனநிலையும் அகப்படமாட்டா. இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் நீ அவ்வயதை அடைந்து விடுவாய். இச் சிறு காலமே உன் அறிவுப்புலத்தின் விதைப்புக் காலம். அதற்குப்பின் விதைத்ததை உரமிட்டு வளர்த்துப் பாதுகாத்து அறுவடை செய்ய வேண்டிய காலம் மட்டுமே. அறிவுதேடும் வகையில், நூல்கற்கும் வகையில், நீ எவ்வளவு குறைந்த அளவு கற்க விரும்பினாலும், எவ்வளவு கூடுதலான அளவு கற்க விரும்பினாலும், அதனை இந்த இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே கற்றாக வேண்டும். அதன்பின் கற்க முயலுதல் வீணாகும். இப்பருவத்தில் நீ கற்பதெல்லாம் பின்னாட்களில் ஒன்று பத்துப் பலவாய்ப் பெருகுமாதலால், இப்பருவத்தில் கல்வியில் எவ்வளவு கடுமை அல்லது தொந்தரவு இருந்தாலும் நீ பொருட் படுத்தலாகாது. அது மட்டுமன்று, கல்வியின் கடுமையே அதன் விரைவின் அளவு ஆகும். எவ்வளவு கடுமை தோன்றுகிறதோ அவ்வளவு அறிவு விதைப்பு விரைவில் நடைபெறும். குறிப்பிட்ட அக் காலத்துக்குள் உச்ச அளவு அறிவுப் பயிர் விதைக்கப்படும். உன் எதிர்கால வாழ்நாள் முழுவதும் அப்பயிரின் அறுவடையால் ஒளிபெறும். இளமைக்காலத்தின் சிறப்பான பயனையும் அருமையையும் அறிந்தோர் அக் காலத்தின் ஒவ்வொரு கணத்தையும் பொன்னே போல் போற்றுவர் என்பது உறுதி. ஏனெனில், வேறெப் பருவத் தையும்விட அப்பருவத்திற்கே, ‘சென்ற நாள் மீளாது; சென்ற காலம் சென்றதே’ என்ற அறிவுரை முழுவதும் பொருத்த முடையது; உண்ணல், உடுத்தல், வெளிச் செல்லல் முதலிய இன்றியமையாச் செயல்களுக்கான சமயத்தைக்கூடப் பின் நாட்களில் அவற்றை ஆர அமரச் செய்தல் தகும் என்று கொண்டு பல அறிஞர்கள் அதையும் இலக்கிய நூல்கள் வாசிப்பதில் செலவிடுவதுண்டு. அதனால் இளமையின் முழுப்பயனை அவர்கள் எய்துவர். வாழ்க்கை நிகழ்ச்சிகளிடையே இடைவேளைகளில் கூடச் சிறு சிறு அளவில் வாசித்துணர இலக்கியம், கவிதை ஆகியவை பெரிதும் ஏற்புடையவை. அறிவியல் நூல்களும், கவிதைகளில் சிலவும் ஆழ்ந்து தொடர்ச்சியாய்ப் பயிலத் தக்கவை. ஆனால், பெரும்பாலான இலக்கியங்கள் அங்கு மிங்குமாக ஒரு தடவை படிப்பதனாலேயே பயன்தரத்தக்கவை. இடைவேளைகளில் அவற்றை மிகுதியான அளவில் பயில்பவன் வாழ்க்கையின் பரந்த அனுபவங்களை யாவரினும் மிகுதியாக அறிய வகை தேடியவன் ஆவான். உன் இளமைக்காலம் பற்றியவரையில் உன்னுடன் நான் ஒரு பேரம் செய்துகொள்ள விரும்புகிறேன். உன் பதினெட்டாம் வயது முடிவு வரை நீ எப்பாடுபட்டாவது என் விருப்பப்படி நடந்து எனக்கு மனநிறைவு உண்டுபண்ண முயற்சியெடுத்துக்கொள். அதன்பின் உன் வாழ்க்கை முழுமையிலும் நீ விரும்பிய யாவும் நான் செய்ய உறுதி கூறுகிறேன். உன் இரண்டு மூன்று ஆண்டுகளின் சுதந்திரத்தைக் கொடுத்து அதன் பின்வரும் பல ஆண்டுகளுக் குரிய உன் சுதந்திரத்தைப் பெறுவது உனக்கு ஆதாயம் அல்லவா? உன் மேம்பாட்டை விரும்பும் உன் தந்தை, ................................ கடிதம் - 21 ‘சிறு துரும்பும் பல்லுக்குத்த உதவும்’ ஜனவரி 2, 1748. அருமந்த சிறுவ, லீப்ஸிக்கில் நீ வகுத்துள்ள நேரத்திட்டம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. அதன்படி நீ நடந்தால் நீ பெரும் பயனடைவது உறுதி. வைகறை முதல் முன்னிரவு வரை அது கடமை, கட்டுப்பாடு நிறைந்து காணப்படுகிறது. அறிவிலி எவனாவது கண்டால், நீ தனக்கென நேரம் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை என்று கூறக் கூடும். ஆயினும், அறிவுக் கண் கொண்டு பார்த்தால் நீ உன் நேரம் முழுவதையும் உனக்கெனக் கொண்டு விட்டாய் என்பது விளங்கும். உண்மையில் நீ உன் நேரத்தை நல்ல முதலீடாக வைத்துப் பயனாகிய நல்ல வட்டியை நிறையப் பெறப்போகிறாய் என்பது உறுதி. உயர்ந்தோர் பழக்கத்தையே நீ நாடவேண்டும் என்று முன் கடிதங்களில் தெரிவித்திருக்கிறேன். ஆனால், வாழ்க்கையில் நம் முடன் கலப்பவர்களில் பதினான்கு பேர்களில் பன்னிருவர் அறிவாலோ நாகரிகச் சிறப்பாலோ மேம்பாடற்ற மக்களாகவே இருப்பது இயல்பே. உயர்ந்தோர் பழக்கத்தையே நீ நாட வேண்டும் என்பதனால் மேம்பட்ட இருவரை மட்டுமே நாடி மற்றவர்களை முற்றிலும் நீ விலக்கவேண்டும் என்பதில்லை. அவர்களை விலக்குவதாகக் காட்டிக்கொள்வதோ கடிந்து கொள்வதோ கூட நலமன்று; நாகரிகமுமன்று. அவர்களுடன் பழகும் முறையாவது: வேண்டாதவர்கள் நீயாக விரும்பாமல் வந்தால் நீயாக விலகாமல் இருந்து கொண்டு இயல்பாகப் பிரிவதுபோல் அவர்களை விட்டுப் பிரிதல் வேண்டும். அதற்கிடையே ‘சிறு துரும்பும் பல்லுக்குத்த உதவும்’ என்ற முறைப்படி அவர்களால் அடையத்தக்க நற்பயன்களை அடைதலும் சாலும். மேம்பாடற்ற அத்தகையோருள் பரந்த பல நாட்டு அனு பவமுடையவர்களிருந்தால் அவர்களிடம் உசாவிப் பொது அறிவுகள் பல பெறலாம். லீப்ஸிக்கில் அத்தகையோர்களுடன் சற்று நெருங்கிக் கூட உறவாடிப் பொது மக்கள் பேசும் (ஜெர்மன்) மொழியை நீ ஆராய்ந்துணர்ந்து கொள்ளலாம். இவையன்றி அவர்களையும் அவர்கள் குணங்குறைகளையும் கண்டறிவது உலகியல் அறிவை வளர்க்கும். ஆயினும், அவர்களுள் நீயும் ஒருவனாய் ஊடாடாது பார்த்துக்கொள்க. இத்தகைய நடுநிலை நெறியில் பழகினால், மேம்பட்டவர் உறவும் எளிதில் கிடைக்கும் - சில சமயங்களில் அவர்கள் மூலம் கூட அவை கிடைக்கக்கூடா தென்றில்லை. உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பாகுபாடு நெருங்கிப் பழகு வதற்காகவேயன்றிப் பழகுவதற்காக அன்று. உண்மையில் முற்றிலும் பயனற்றவர், பயனற்றது என்பதே கடவுள் படைப்பில் கிடையாது. கூப்லண்டுச் சீமாட்டிக்கு உன்னை அறிமுகப்படுத்தியுள் ளேன். அவர் நாகரிக முதிர்ச்சியும் அறிவுத் திறமும் உடையவர். ஆகவே, அழைப்பு வந்த அளவுக்கு அவர் கூட்டுறவைப் பயன் படுத்திக்கொள். மாதர் கூட்டுறவிடையே ஒருவேளை திட்பமான அறிவு வளர்ச்சிக்கு இடம் ஏற்படாதிருக்கலாம். ஆனால், நாகரிகமும் மெல்லியல்புகளும் வளர அது மிகவும் உதவும். ஃபிரஞ்சு மக்கள் இப்பழக்கத்தினாலேயே ஆங்கிலேயரை விட இனிய நடை உடையவராய் இருக்கின்றனர். உன் கடிதங்களிலிருந்தும் ஆசிரியர் கடிதங்களிலிருந்தும் நீங்கள் எழுதிய கடிதங்கள் பல எனக்கு வந்துசேரவில்லை யென்றும், அதே போல என் கடிதங்கள் பல உங்களிடம் வந்துசேரவில்லை என்றும் அறிகிறேன். தற்செயலாய் அவற்றைக் குறிப்பிடாவிடத்து எவை வந்து சேரவில்லை என்று இருபுறமும் தெரிய இடமிராது. ஆகவே, ஒவ்வொரு கடிதத்திலும் வந்துசேர்ந்த கடிதங்கள், தேதிகள் ஆகியவற்றைக் குறிப்பிடுதல் வேண்டும். நானும் அவ்வாறே செய்வேன். உன்னிடமிருந்து எனக்குக் கடைசியாகக் கிடைத்த கடிதம் நவம்பர் 25ஆம் தேதி எழுதப்பெற்றது. அதற்கு முந்திய கடிதம் செஸ்டர்ஃபீல்டு சீமாட்டிக்கு* எழுதிய கடிதத்துடன் வந்தது. தேதி நினைவில்லை. செஸ்டர்ஃபீல்டு சீமாட்டி உனக்கு மறுமொழி எழுதுவர்; நலம். உன் தந்தை, .................... கடிதம் - 22 அரசியற் பணியும் தகுதியும் லண்டன், சனவரி 15, 1748. அன்புச்சிறுவ, வருகிற ஆண்டுப் புத்தாண்டு நாளுக்கு எனக்கு நீ அனுப்பு வதாகக் கூறும் பரிசு வாக்குறுதியைக் கேட்டு மகிழ்ச்சி.அதை எவ்வளவு உயர்வுடையதாகச் செய்கிறாயோ அவ்வளவும் எனக்கு மன நிறைவுதான். ஆயினும், , நான் விரும்பும் மிகச் சிறந்த பரிசு தகுதிவாய்ந்த புதல்வனை உடையேன் என்ற எண்ணமே. ஆகவே, புத்தாண்டுதோறும் உன் தகுதிகளைப் பெருக்கிக் காட்டுவாய் என்று எண்ணுகிறேன். ஆண்டுதோறும் அதன் வளர்ச்சி நோக்கிக் களிப்பதினும் சிறந்த பரிசு நான் விரும்பவில்லை. ஜெர்மன் பேரரசர் அவையில் தணிக்கையாளர் (ஹளளநளளடிச) பணியை நீ அவ்வளவாக விரும்பவில்லை என்றும், இங்கிலாந்தி லேயே பணி ஒன்றை நீ நாடுவதாகவும் அறிகிறேன். அப்படி யானால் நம் பல்கலைக் கழகங்களுள் ஒன்றில் கிரேக்கப் பேராசிரி யராயிருப்பது பற்றி உன் கருத்து யாது? அதன் ஆண்டு வருவாய் மிகுதி; சிறப்புமுடையது. அதற்காகக் கிரேக்க மொழியில் வேண்டும் அறிவோ, நீ இப்போது அம்மொழியில் அடைந் துள்ளதைப் பார்க்கிலும் மிகக் குறைவே. இதையும் நீ விரும்பவில்லையானால், உன் விருப்பந்தான் யாது என நான் அறியவேண்டும். நீ அரசியல் துறையில் ஈடுபட விரும்புகிறாய் என்று ஆசிரியர் தெரிவிக்கிறார். அப்படியானால் நீ எனக்குப் பின் நான் அமர்ந்துள்ள பணியிலேயே நாட்டமுடையவனா யிருக்கிறாய் என்றுதான் எண்ணவேண்டி யிருக்கிறது. அது எனக்கு மகிழ்ச்சியே. நீ அதனை அடைய ஒருங்கும்போது அதனை நான் துறந்துவிட அட்டியில்லை. நீ என் பின்னவனாவதானால், நான் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் ஓய்வு பெற்றுக் கொள்வேன் என்பது உறுதி. ஆனால், அரசியற் பணியிலீடுபடுவதற்கு நீ இன்னும் மிகுதியான தகுதிகள் பெறவேண்டும். அரசியற் பணியில் புகழ்பெற விரும்புபவன் பல நாடுகளின் அரசியலமைப்பையும் வகையையும் தேர்ந்தறிதல் வேண்டும். பேரரசுகளின் தோற்ற வளர்ச்சி ஒடுக்கங்கள், அவற்றிற்கான காரண காரியத் தொடர்புகள் முதலியவைகளை ஐயந்திரிபற உணர்தல்; ஒவ்வொரு நாட்டின் வலிவு மெலிவுகள், அதன் செல்வ வளங்கள், வாணிக விவரங்கள் ஆகியவற்றை அறிதல்; இன்னும் பல நாட்டு மொழிகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை நுனித்துணர்தல் ஆகிய யாவும் அரசியற்பணி ஏணியின் படிகள் ஆகும். இவையன்றி கோப தாப உணர்ச்சிகளை அடக்குதல்; விருப்பு வெறுப்புக்களைச் சொல்லிலும் தோற்றத்திலும் வெளிப்படா தடக்குதல்; பொருளற்ற சிற்றுரைகளில் ஈடுபட்டுச் சிறுநடை பயின்றும் தன்மதிப்புக் கெடாதிருத்தல்; ஆள் தரமறிந்து நடத்துதல்; மறுக்க வேண்டியதை வினயமாக மறுத்தல்! வேண்டிய இடத்தில் கவர்ச்சிகரமாகப் பேசிக் காரியமுடித்தல்; கொடுப்பதை நயமாகக் கொடுத்து நயமொழி பகர்ந்து அதன் மதிப்பை இரட்டித்தல்! பொய்யுரை கூறாமலே வேண்டா உண்மையை அடக்கும் திறன்; பிறர் தோற்றத்தி லிருந்தும் நடையிலிருந்தும் அவர்கள் குணம், எண்ணங்கள் ஆகியவற்றை உய்த்துணரும் ஆற்றலுடையவனாயிருத்தல்; கபடமற்ற தோற்றத்துடன் கருத்துக்களை; அடக்கி வைத்தல் ஆகிய எண்ணற்ற சிறுதிறங்கள் அரசியல் வல்லுநன் வெற்றி வாழ்வுக்கு இன்றியமையாதவை. மூன்று அஞ்சல் முறைகள் இன்றுதான் ஒன்றாக வரவிருப் பதால் உன் கடிதங்களுள் எதுவும் இன்னும் என் கைக்கு வரவில்லை. உன் வெற்றிகளை எதிர்பார்த்து நலமடைய அவாவும். உன் தந்தை, ................. கடிதம் - 23 பணியாட்கள் லண்டன், பிப்ரவரி, 13, 1748. அன்புச்சிறுவ, லீப்ஸிக்கில் நீ உன் நேரத்தை ஒழுங்காய்ச் செலவு செய்வது பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் குறிப்பிட்ட ஜெர்மன் மொழிச் சொற் பொருள்களை விளக்கியமைக்கு நன்றி. இன்னும் ஒரு (டுயனேளயளளயn என்னும்) சொல்லின் பொருளை விளக்கும்படி கோருகிறேன். ஜெர்மன் மொழியை நன்கு பழக ஒரு ஜெர்மன் பணியாளை அமர்த்திக்கொள்வதென்ற உன் முடிவு மிக நல்லதே. ஆனால், அவன் ஆங்கிலமோ ஃபிரஞ்சோ அல்லது உனக்குத் தெரிந்த வேறு மொழி எதுவுமோ தெரியாதவனாய் ஜெர்மன் மொழி மட்டும் தெரிந்தவனாகப் பார்த்துத் தெரிந்தெடு. அதோடு புதுப்பணியாள் எடுப்பதில் நீ ஒரு முறையைக் கையாளுவது இன்றியமையாதது. புதிய ஆள்வரவு தன் நிலையையும், உரிமையையும், நாளடைவில் தன் இடத்தையும் போக்கி விடக்கூடும் என்று பழைய ஆள் நினைக்க இடம் தராமல் பார்த்துக்கொள். புதிய ஆளுடன் பழைய ஆளையும் வைத்துக் கொள்வதோடு பழைய ஆளின் ஊதியம், மதிப்பு ஆகிய எவற்றையும் அவன் பழமை சார்ந்த உரிமையாகத் தந்து அவனை மதிப்பில் உயர்த்திவிடு. பழைய ஆள் தன் பணியை மற்றொருவன் செய்வதால் தனக்கு உண்மையில் உயர்வு வந்ததென்று கருதச்செய். அத்துடன் இடைக்கிடையே பழைய ஆளின் பணிப்பொறுப்பு விலகி விட வில்லை என்று காட்டி அவனையும் அவ்வப்போது அவ்வேலை செய்யச் சொல். பணியாட்கள் சொன்ன சமயம் வேலை செய்து மற்றச் சமயம் வேலை செய்யாதிருப்பவர்கள் என்று எண்ணிவிடாதே. அவர்கள் முற்றிலும் பணத்திற்கே கட்டுப்பட்டவர்கள். பணத்தால் மட்டும் அவர்களை ஆட்டி வைக்கலாம் என்றும் எண்ணாதே. மக்கள் சமூகத்தில் நாகரிகம் தொடங்கிய நாளிலிருந்து எத்தனையோ எழுதாச் சட்டங்கள், குறிப்புணர்ச்சிகள் ஆகியவை பணியாட்கள், பணித்தலைவர்கள் முதலியவர்கள் தொடர்பைக் கட்டுப் படுத்துகின்றன. பணியாட்களுக்கும் தனிமதிப்பு, விருப்பு வெறுப்பு உண்டு. உண்மையில் பணித்தலைவர் உணர்ச்சிகளின் ஆற்றலை விடப் பணியாட்களின் உணர்ச்சிகளுக்கு ஆற்றல் மிகுதி. தன் மதிப்புக்கு ஊறு ஏற்பட்டபோது, தான் பணியாள், எதிரி தலைவன் என்ற சிலந்தி நூல்தளை அறுந்துவிடும். அப்போது பணியாள் மனித நாகரிகத்தின் தொடக்கக்கால மனிதனாய் விடுவான்! திரு. ஃபிளெமிங், திருவாட்டி ஃபிளெமிங் இருவரும் உன்னை வானளாவப் புகழ்ந்துள்ளனர். அது கேட்டு மகிழ்ச்சி யடைந்தேனானாலும் என்னால் அவர்கள் புகழுரையை நம்பமுடியவில்லை. நீ தற்பெருமையற்ற எளிய நடையுடையவன், ஆனால், தன்மதிப்பு விடாது காக்கிறாய் என்றும்; இன்ப வாழ்வின் நயநாகரிக ஒளி உடையவன். ஆனால், நல்வாழ்வின் உரம் கைவிடாத தோற்றமுடையவன் என்றும் அவர்கள் கூறினர். உன் வயதுள்ள ஒரு ஆங்கிலேயனிடம் அவர்கள் கூறுவதில் பாதி தன்மையில் இருந்தால் கூட அது மிக அருமையான சாதனை என்றே நான் பெருமையாகக் கொள்வேன். ஒருமாதம் ‘பாத்’ நகர் சென்று தங்கி அங்குள்ள மருந்துநீர்க் குளிப்பால், முற்றிலும் உடல்நலம் பெற முடியாவிட்டாலும், சற்று நலிவகற்றவாவது செய்யலாம் என்று எண்ணுகிறேன். அங்கிருந்து விரிவாக எழுதுவேன். நலம். உன் தந்தை, .................. கடிதம் - 24 இயற்கையும் செயற்கையும் லண்டன், ஏப்ரல் 1, 1748. அன்புமிக்க மைந்த, மூன்று அஞ்சல் முறைகளாக உன்னிடமிருந்தோ திரு. ஹார்ட்டிட மிருந்தோ யாதொரு கடிதமும் வரவில்லை. பெரும் பாலும் லீப்ஸிக்குக்கும் இவ்விடத்துக்குமிடையே ஏதேனும் விபத்து நேர்ந்திருக்கக்கூடும் என்பதே அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். இவ்வளவு தொலைவான இடங்களிடையே யுள்ள அஞ்சல் போக்குவரத்துக்களில் அங்ஙனம் நேரிடுவது இயல்பே. இத்தகைய சமயங்களில் கடித வகையில் நான் கொண்டுள்ள ஒரு கோட்பாடு எனக்கு மிகுதியும் ஆறுதலாக உதவுகிறது. நன்மை இயல்பென்றும் தீமை தற்செயலாக நிகழ்வதென்றும் நான் எண்ணுவதனால், கடித மூலம் ஏதேனும் இடையூறு நேர்ந்ததெனக் கேட்டாலன்றி நீ நலமா யிருப்பதாகவே எண்ணிக்கொள்கிறேன். ஆகவே, எவ்வகைக் கடிதமுமில்லாத வேளைகளில் தீமை எதுவும் கிடையாது என்று எண்ணிக் கொள்வேன். உடல் நலத்தைப்பற்றி குறிப்பிட்டதை ஒட்டி அதுவகையில் உனக்குச் சில சொல்ல விழைகின்றேன். மட்டான வாழ்வு, மட்டான இன்ப நுகர்வே உடல் நலங் காக்கச் சிறந்த வழி. ஏனெனில், இயற்கையின் அமைதி உடல்நலமே யன்றி நோயன்று. நாமாக வலிந்து பெறுவது நோயே யன்றி உடல்நல மன்று. வந்த நோய் குணமடைவதுகூட இயற்கையினாலேயேயன்றிச் செயற்கையாலன்று. மருத்துவன் செயற்கையாகத் தரும் மருந்துகளால்தான் நோய் குணப்படுகின்றது என்று பொதுவாக மக்கள் எண்ணுகின்றனர். இது ஆய்ந்த உண்மையன்று; ஏனெனில், மருத்துவன் செய்வதெல்லாம் செயற்கையால் ஏற்பட்ட நோயினை ஓரளவு செயற்கையால் தடுத்து இயற்கையின் குணப்படும் செயலுக்கு வழி விடுவதுதான். சிறப்பாக உன்போன்ற இளைஞர்களுக்கு உடலின் இளமை இயற்கை தந்துள்ள பெருஞ் செல்வமாகும். இயற்கை வழி நிற்பதால் அவ்விளமை நீடிக்கும், வலிவு குன்றாதிருக்கும். மட்டற்ற வாழ்க்கை நிலைகள், குடி, மட்டற்ற இன்பம் ஆகியவற்றாலோ, தவறான மருந்துகளினாலோ இயற்கையைத் தடுக்காவிட்டால் இயற்கையும் இளமையும் சேர்ந்து நோய் வராமல் தடுப்பதுடன் வந்துவிட்ட நோயைக்கூடத் துரத்த வல்லன. ஆயினும், செயற்கைப் போக்கில் நெடுந்தொலை சென்றுவிட்ட தற்கால சமூக வாழ்வில் இளமையேதான் வாழ்வை அழிக்கும் தீமைகள் வர வழிவிடும் அகன்ற வாயிலாய் அமைந்துள்ளது. ஆகவே, கூடியமட்டும் இயற்கை வாழ்வு வாழ்வதுடன், உடற்பாதுகாப்பு வகையிலும் விழிப்பாகவும் முன்னெச்சரிக்கை யாகவும் இருக்கவேண்டும். தற்கால நிலையில் செயற்கையான துணை முறைகளும்கூட இதற்கு வேண்டி வருவது உண்மை. உடற்பயிற்சி, ஊட்ட மருந்துகள், நற்பழக்கங்கள் ஆகியவை இவ்வகையில் கவனிக்கத்தக்கவை. பண்பாட்டில் உயர்ந்தோர், பண்பாட்டில் இழிந்தோர் ஆகியவர்களிடையே உள்ள வேறுபாடு ஒரு நல்ல படிப்பினை யாகும். கூவி விற்கும் வாணிகர்களில் எத்தனையோ பேர் மில்டன், லாக், நியூட்டன் ஆகியவர்களைவிட உடற்கட்டும் வனப்பு முடை யவர்களாயிருக்கக் கூடும். ஆனால், , அதனால் அவர்கள் அப் பெரியார்களுக்கு ஒப்பாய் விடுவார்களா? உடல் நிலை விடுத்து உளநிலைகளை ஒப்பிடுவதனால் அவர்களுக்கும் அப்பெரியார் களுக்கும் உள்ள தொலைவு அவர்கள் குதிரைகளுக்கும் அவர் களுக்கும் உள்ள தொலைவுக்கு ஒப்பானதாகும் என்று கூறலாம். இவ்வளவு வேறுபாட்டை அளிக்கும் பண்பாட்டை நீ எப்பாடு பட்டாயினும் பெற்றாக வேண்டும்; வளர்த்தாக வேண்டும். இம்முயற்சிகளும் சிறுமையிலும் இளமையிலுமே செய்யப்பட வேண்டும். பண்பாடு அருமுயற்சியினாலேயே வரத்தக்கது என்பதனால் அதுவே முற்றிலும் பெருமை சிறுமைக்குக் காரணம் என்று நினைத்து விடக்கூடாது. பண்பாடு, புலமை இல்லா இடத்திலும் இயற்கையே அரும் பெறல் உயர்வு வகுத்தல் உண்டு. மில்டன், பென் ஜான்ஸன் போன்றவர்களை ஒத்த பண்பாட்டுச் சூழல், புலமை ஆகியவற்றின் உதவியில்லாமலேயே ஆங்கிலப் பெருங் கவிஞர் ஷேக்ஸ்பியர் இயற்கையின் வன்மையால் பெருமை யடைந்தவர் ஆவர். இத்தகைய பெருமைகள் வந்தவிடத்துப் போற்றத்தக்கவையே யன்றிக் குறிக்கோளாகக் கொண்டு முயன்றடையத் தக்கவை யல்ல. ஆயினும், பண்பாடு இவ் விடத்திலும் உயர்வுதரக் கூடாததன்று. ஷேக்ஸ்பியர் தம் இயற்கையறிவுத் திறத்தால் எல்லாக் கவிஞர்களையும் தாண்டிய புகழுடையவராயினும் புலமையும் பண்பாட்டுச் சூழலும் இருந்திருந்தால் இன்னும் மெருகுபெற்றுச் சிறப்படைந்திருப்பர் என்பதில் ஐயமில்லை. உலகப் பெருங்கவிஞராகிய அவர் கவிதையில் மிகப் பொதுப்படையான கவிஞன் நூலில் கூடக் காண முடியாத பல தவறுகள், மட்டுமீறிய மிகையுரைகள் இடைவந்து கண்ணூறாய் அமையாமல் இருந்திருக்கும். எவர் கட்டுப்பாட்டுக்கும் உட்படாது ஆங்காங்குச் சிறிதளவு காணப்படும் இவ்வியற்கை வளத்தை விட்டு மற்ற வகையில் பார்த்தால் ஒரு மனிதன் மேம்பாடும் சிறப்பும் அவனது 15-ஆம் ஆண்டு முதல் 25-ஆம் ஆண்டுவரை பெறும்பேறுகள், பயிற்சிகள் ஆகியவற்றின் பயனேயாகும். அப்பருவத்திலுள்ள நீ இப்போது உன்னையே படைத்தாக்கும் பொறுப்பிலீடுபட்டிருக் கிறாய். உன்னை உயர்வுடையவனாகவும் நீயே இப்போது படைக்க முனையலாம்; தாழ்ந்தவனாகவும் படைத்துவிடலாம். நீ இவ்வகையில் கவனக்குறைவாய் இருப்பாய் என்று நான் அஞ்சவில்லை. ஆனால், முதன்மை துணைமை திரித்தறியு மாற்றலில் வழுவி, நூலறிவு மொழியறிவு போன்ற பெரிய செய்தி களைக் கவனிப்பதுடன் நின்று விடுவாயோ என்றே அஞ்சுகிறேன். தேரின் தூண், கும்பம், துகில், கொடி ஆகியவை போன்ற இவற்றைக் கவனித்து அச்சாணி, வடக்கயிறு வளையங்கள் முதலியவை போன்ற சிறு திறங்கள் விட்டுவிடுவாயோ என்றே அஞ்சுகிறேன் அவ்வகையில் விழிப் பாயிருப்பாயாக. உன் தந்தை .................. கடிதம் - 25 மன்னர் திருமுன் லண்டன், மே 27, 1748. உனது 16ஆம் தேதி கடிதம் கிடைத்தது. ஸர் சார்ல்ஸ் வில்லியம்ஸ் உனக்குப் பலவகைகளில் துணைதந்தாதரித்தது பற்றி நீ அதில் குறிப்பிட்டிருந்ததனால், உன் சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதியிருக்கிறேன். ஒரு மன்னர் அவையில் நீ முதன் முதலாக அடைந்துள்ள உன் அனுபவம் உனக்குப் பெருமையளிப்பதேயாகும். உனக்குத் தரப்பட்ட இச் சிறப்பு மரியாதையை நீயும் மரியாதையுடன் நன்கு வரவேற்றிருப்பாய் என்று நம்புகிறேன். தாழ்ந்த கூட்டுறவும் குறைவான கல்வி கேள்விப் பயிற்சியும் உடையவர்கள் இப்பெருமையை எப்படி ஏற்பதென்று தெரியாமல் குழப்பமடைந்திருப்பர். மன்னரிடம் நேருக்கு நேர் பேச வாய்ப்பு வந்தபோது அதற்கேற்றபடி தகுதி பெறாமல் நாக்குக் குழறி நாண மடைந்து குழம்பியிருப்பர். ஆனால், பண்பாடுடையவர் ஒரு போலந்துப் பிரஜையிடம் எவ்வளவு சாதாரணமாகப் பழகுவாரோ அதே அளவில் சாதாரணமாகப் போலந்து மன்னரிடமும் பழகுவார். இங்கிலாந்தின் உயர்தரப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றின் பயிற்சிகள் அனைத்தும் முற்றுப் பெற்ற பின்னும்கூட எத்தனையோ இளைஞர்கள் மன்னர் முன்னிலையில் போனவுடன் கால்மீது நிற்கிறோமா, தலைமீது நிற்கிறோமா என்றறியாது திண்டாடியுள்ளனர். சிலர் நிலத்தையே பார்த்துக் கொண்டும், சிலர் கைகால் பறக்கப் படபடத்துத் தொப்பியைக் கீழே போட்டும், மைப்புட்டிகளை உடைத்தும் நகைக்காளாகி யுள்ளனர். நீ பண்பாடுடையவர் போலவே மன்னருக்கு, மன்னர் என்ற முறையில் மதிப்பும் தந்து, மனிதன் என்ற முறையில் மனிதருடன் மனிதராக அளவளாவியது கேட்டு மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டேன். சார்ல்ஸ் வில்லியம்ஸ் உனக்களித்த சிற்றுண்டிச் சாதனங் களை உன் அன்னைக்கு நன்கொடையாய் அளிப்பாய் என்று கோருகிறேன். அவளுக்கு நீ மகன் என்ற முறையில் கடமை யுடையவன் மட்டுமல்ல; உன்னிடம் காட்டிய அளவு கனிவு, உனக்காகச் செய்த பல உதவிகள் ஆகியவற்றுக்கு நீ எவ்வளவோ நன்றியறிதல் காட்ட வேண்டியவனாய், அதைக்காட்ட வாய்ப்பேற்பட்ட சமய மெல்லாம் நீ எவ்வளவு காட்டினாலும் தவறாகாது. டிரெஸ்டன் நகர் பற்றிய உன் விரிவுரை காண நான் மிகவும் ஆவலுள்ளவனா யிருக்கிறேன். நான் இதற்கு முன் அனுப்பியுள்ள சில வினாக்களுக்கும் நீ விடை யெழுதி அனுப்புவாய் என்று நம்புகிறேன். இத்துடன் தற்காலிகமாக விடைகொள்கின்றேன்; கடவுள் உன்னைக் காப்பாராக. உன் தந்தை, ........................ கடிதம் - 26 சொல் நயமும் சொல்லாடல் நயமும் லண்டன், ஜூன், 21, 1748. அன்புமிக்க சிறுவ, உன் உச்சரிப்புக் கோளாற்றையே என்மனம் ஓயாது எண்ணி எண்ணி அலைக்கழிக்கின்றது. அதுபற்றி நான் மிகவும் கவலை கொள்வதனால் இக் கடிதத்தில் மட்டுமன்றி இன்னும் பல கடிதங்களிலும் அதை வற்புறுத்தி எழுதலாம் என்று எண்ணுகிறேன். இக் குறைபாட்டை இப்போதே நான் அறிந்தது பற்றி உன்பொருட்டாகவும் என் பொருட்டாகவும் நான் மகிழவேண்டும். எச்சரிக்கையும் திருத்தமுமின்றி இதனை இப்படியே விட்டுவிட்டால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் பெருங்கேடு வரும். மரத்தில் கீறலை வைத்துக் கொண்டு வீணை செய்து அழகுபடுத்துவதால் என்ன பயன்? நடையுடை நன்றாயிராவிடில் உன்னை யார் பார்க்க விரும்புவார்கள்? உச்சரிப்புத் தெளிவாயிராவிட்டால் நீ பேசுவதை யார் கேட்கப் போகிறார்கள்? ஸிஸரோவும் குவின்டிலியனும் இவ்வகையில் என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா? நடையுடைதோற்ற நயத்தைப் பற்றி இருவருமே மிகவும் வற்புறுத்திக் கூறியிருக் கிறார்கள். ஸிஸரோ அவற்றுடன் விடவில்லை. சொற் செல்வன் என்று பெயரெடுக்க வேண்டுமானால் ஒருவன் உடல் வனப்பும் குரல் கவர்ச்சியும் உடையவனாயிருக்க வேண்டும் என்று கூட அவர் அழுத்தந் திருத்தமாகக் குறிப்பிடுகிறார். மக்கள் குழுவிடையே அவர்கள் இருவரும் பெற்ற படிப்பினைகள் இவை. பொதுவாகப் பெண்டிரும் சரி, ஆடவரும் சரி, அறிவின் கவர்ச்சியில் ஈடுபடுவதைவிட உணர்ச்சியின் கவர்ச்சிலேயே மிகுதி ஈடுபடுவது இயல்பு. உணர்ச்சி ஐம்பொறிகள் வழியாகவே செயலாற்றுகிறது. சிறப்பாக, மக்கள் கண்ணுக்கு நல்ல காட்சி, காதுக்கு நல்ல கேள்வியின்பம் ஆகியவற்றினா லேயே ஒருவரிடம் எளிதில் பற்றுக் கொள்வர். இவ் வழிகளால் பொதுமக்கள் உள்ளங்கவர்ந்து தன் முதற் சொற்பெருக்கு மூலமே வாழ்க்கையை வெற்றிகரமாக்கியவர்கள் பலர் உண்டு. இனிய தோற்ற நடை உடை இயக்கங்களில் பாதி உள்ளம் பறிகொடுத்து, மறு பாதியையும் பெரிதும் நயமான சொல் நடையில் ஈடுபடுத்திய பின், மக்கள் பேசுபவன் கருத்தை ஆழ்ந்து அலசிப் பாராமலே ஏற்றுக்கொள்ள முனைந்து விடுவார். இவற்றில் மாறுபாடுடைய வர்களைப் பற்றி முதலிலேயே தப்பெண்ணம் கொண்டு விடுகின்றனர். உன்னைப் பொறுத்தவரையில் உன்வடிவின் தோற்றத்தில் குறைபாடில்லை. உன்குரலிலும் இயற்கைத் தவறு எதுவும் இல்லை. ஆனால், இவ் இயற்கைக் கோளாறுகளிருப்பவர்கூட இனி நடையுடை இயக்கங்களாலும் தெளிந்த உச்சரிப்பினாலும் சரிக்கட்டிக் கொள்கின்றனர். அப்படியிருக்க, நீ இயற்கை வடிவ வாய்ப்பும், குரல் வாய்ப்பும் உடையவனாயிருந்தும், உடைகளின் கவனக் குறைவினாலும் நடைப்பழக்கமின்மையாலும், உறுப்பியக்கங்களைக் கவனித்துச் சரிப்படுத்தாதனாலும் உன் நிறைவைக் குறைத்துக் கொள்கிறாய். மன்னர்களும், இளங்கோக்களும் ‘இவர் நமக்காகப் பேசுவாரா, இவர் பேச்சில் நம் பெயர்மிளிருமா, இவர் தொடர்பு மூலம் எதிர் காலத்தில் நாம் அழியாப் புகழ் பெறுவோமா?’ என்று ஏங்குவதற்குக் காரணமான பெருமதிப்புடைய உரோம நாட்டுப் பெருஞ் சொற்கொண்டல், ஸிஸரோ. அப்படிப்பட்டவர் ராஸியஸ் என்ற நடிகருக்காகப் பேரவையில் பேச முனைவானேன்? அவர் எடுப்பான தோற்றத்திலும் மெய்யியக்கங்களிலும் இன்சொல்லிலும் ஈடுபட்டல்லவா? அறிவுத்திறம் சொல்திறம் ஆகியவற்றில் அச் சொல்லின் செல்வருக்கீடாகாத அந்நடிகர் தம் தோற்ற இனிமை, நடிப்பினிமை ஆகியவற்றாலன்றோ தம்மினும் மிக்க அச்சொல்லின் செல்வரையும் ஈடுபடுத்தினார்! உலக மக்கள் உன் அறிவுத்திறத்தால் உன் சொல் நயத்தை மதிக்க மாட்டார்கள். உன் சொல் நயத்தால் உன் அறிவுத்திறத்தை மதித்து விடுவார்கள். ஆகவே, அறிவுத்திறம் பெறுவதற்காக எடுத்துக் கொள்ளும் உழைப்பைவிடச் சொல்திறத்தின் நயம் பெற நன்கு உழைக்கக்கடவாய். தெளிந்த உச்சரிப்பும் உணர்ச்சி கெடாதசொல்லொழுக்கும் உன்னால் சாதிக்க முடியாதவை யல்ல. இவற்றுக்கு அடுத்தபடி உன் உடைத் தோற்றத்தில் நீ கவனம் செலுத்த வேண்டும். மெய்யியக்கங்களைத் தனிமையில் நிலைக் கண்ணாடி முன் பழகியாயினும் சீர்திருத்திக் கொள்ள வேண்டும். உனக்குத் தெரிந்தவரான திரு...........என்பவர் நல்லறிவு டையவராயிருந்தும் அவலத் தோற்றமொன்று மட்டும் உடைய வராயிருந்தார் என்பதை நீ அறிவாயன்றோ? அவரை நல்லறிஞர் என்று நான் அறிமுகப்படுத்தியிருந்த இடங்களில் பலவற்றி லிருந்து, ‘என்ன ஐயா, உங்கள் மதிப்புரை இவ்வொரு தடவை முற்றிலும் தவறிவிட்டதே; நீங்கள் கூறியது போன்ற அறிவுத்திறம் அவரிடம் ஒரு சற்றும் இல்லையே,’ என்று கூறப்பட்டது. எனவே தோற்ற நடை உடைகள் எவ்வளவு ஒரு மனிதனின் அறிவுத்திறம் விளங்காமல் போகச் செய்கிறது என்பதைக் கவனித்துப்பார். ஒருவனது நய நாகரிக நடை உடை தோற்றத்தில் பெண்டிர் பெரிதும் ஈடுபடுவார்கள். நாகரிக சமூகத்தில் பெண்கள் கருத்தே செல்வாக்கு மிக்கது என்று கூற வேண்டுவதில்லை. இவ்வகையாலெல்லாம் உன்னை இடித்துக் கூறும் உரிமை பெற்ற அறிவுரையாளர் இருப்பது உன் நற்பேறு என்று நீ கருதல் தகும். நண்பர் ஒருவன் நற்குணத்தை அவாவுவர். தலை சிறந்த மெய்நண்பர் அவ்வப்போது சிறுபிழைகளை இடித்துரைத்துத் திருத்துவர். ஆனால், நற்குணத்தை ஆக்கும் பொறுப்பை நண்பர் உடையவராகார். ஏனெனில், நற்குணம் இருந்தபின் அன்றோ நட்பு ஏற்படும்? உன் தந்தை, ..................... கடிதம் - 27 முன்னேற்றத்தைத் தடுக்கும் இருவகைக் கேடுகள் லண்டன், ஜூலை 26, 1748. அருமந்த சிறுவ, உள்ள நிலைகளில் ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு நிலைகள் உண்டு - ஆனால், வளர்ச்சிக்குக் கேடு செய்வதில் இரண்டும் ஒருவகைதான். ஒன்று புற்றை மலையென மலைக்கும் மிடிமை. மற்றொன்று மலையைப் புற்றென நினைக்கும் அவல உணர்ச்சி நிறைந்த மடமை. இவ்விருவகை நச்சு மன நிலைகளும் உன்னிடம் இல்லை. அவை பற்றாது விழிப்பாயிருத்தல் வேண்டும். மிடிமையுள்ளங்கொண்ட சோம்பேறி எப்பொருள் களையும் ஆழ்ந்து நோக்கமாட்டான். ஒரு செயலின் முதல் தடையே அவனுக்கு இறுதித் தடையாய் விடும். கால்தடுக்கி விழச்செய்யும் கல்லுக்கும், தடுத்து நிறுத்தி விடும் வானளாவிய மலைக்கும் அவனளவில் வேற்றுமையில்லை. சிறிது தடங்கலும் தொந்தரவும் இல்லாமல் பெரும்பாலும் எதையும் அறிய முடியாதாதலால் அவன் பொதுப்படையிலும் பொதுப்படை யான தாழ்ந்தபடிப் பொது அறிவளவிலேயே நின்றுவிடுவான். ஒரு சிறு தொந்தரவைப் பெரிதாயெண்ணி அறிவுப் பேரொளியை முற்றிலும் அவன் இழந்து விடுகிறான். அவன் எப்பொருளையும் எளிது என்றோ, கடிது என்றோ, மிகக் கடிது என்றோ அரிது என்றோ கூறான்; முடியும் முடியாது என்ற இரு வகையில் எவற்றையும் அடக்கிவிடுவான். தான் முயன்று செய்யத் தயங்குபவற்றை யெல்லாம் ‘முடியாதவை’ என்று கூறித் தன் முயற்சியின்மையை மறைக்கப் பார்ப்பான். பிறரிடம் அவன் பேசும்போது எவரும் அவனிடம் புதுமை, ஆழ்ந்த கருத்து ஆகியவற்றை எதிர்பார்க்க முடியாது. பொது அறிவுடை யோரும் தம் அறிவிற்கு அவனறிவு தாழ்ந்தது என்றெண்ணி அவனைப் புறக்கணிப்பர். எல்லாத் துறைகளிலும் ஆழ்ந்த அறிவு பெறுவது ஒருவனுக்கு முடிவதுமன்று, வேண்டுவதுமன்று. அது அவ்வத் துறையின் வல்லுநருக்கே வேண்டுவது. சிறப்பான துறைகளில் ஆழ்ந்த அறிவு இல்லாததை யாரும் ஒரு குறையாகக் கொள்ளவும் மாட்டார். ஆனால், ஏதேனும் ஒரு துறையிலோ அல்லது பொது வாழ்வுக்குரிய ஏதேனும் ஒரு பகுதியிலோ ஆழ்ந்த அறிவு இருப்பதை அறிஞரிடம் யாவரும் எதிர்பார்ப்பர். பல துறைகளில் வல்லுநரளவு இல்லை யாயினும் பொதுமக்களை விடச் சற்று ஆழ்ந்த அறிவும் அனுபவமும் இருப்பதும் அறிஞர் கடனாகும். இவ்வகை பரந்த அழுந்திய அறிவு பெரு முயற்சியின்றிப் பெற முடியாது. சோம்பேறிக்கு நேரெதிரிடையான குறைபாடுடையவன் படபடப்பும் பொறுமையின்மையும் துச்ச மனப்பான்மையும் உள்ளவன். இவனுக்கு எப்போதும் வேலை, ஆனால், ஒரு வேலைக்கும் நேரமிராது. எதுவும் எளிதென்பான், ஒன்றும் சாதிக்கமாட்டான். பெரிய காரியங்களுக்குத் தேவையான ஊக்கத்தைச் சிறு பொருள்களில் சிதறடிப்பதால் இவன் சோம்பனிலும் பயனற்ற சோம்பனாய் விடுகிறான். ஒரு நாட்டின் அரசியலில் இத்தகையோர் அரசவை மினுக்குகளையும் நடிப்புகளையுமே அரசியலாகக் கொள்வர்; அரசியல் கோட்பாடு, அமைப்பு நிலையங்களில் தோற்ற வளர்ச்சி ஆகியவற்றை அறிந்தியக்கும் செயல்வீரம் அவர்களுக்கு வர மாட்டாது. சோம்பனை ஒருவரும் மதிக்கமாட்டார். ஆனால், அவனைக் கண்டஞ்சி விலகார். மேற்போக்காகப் படபடத்துத் திரிபவனையும் வாழ்க்கையின் மினுமினுப்பிலீடுபடுபவனையும் நல்லோர் அஞ்சி விலகுவர். முழுமையும் மிடியனும் மடையனும் ஆனவன் வெறுக்கத் தக்கவன் என்பதை நீ அறிவாய். ஆனால், மிடிமையும் மடமையும் சிறு அளவில் பலரிடமும் இருக்கலாம். அவற்றின் இயற்கைக் கூறுகள் எல்லாரிடமும் உண்டு. ஓட்டமில்லா நீரில் பாசி படர்வது போல் அவை உள்ளத்தில் படரத் தொடங்கும். அறிவாகிய நீரோட்டத்தால் அவற்றை அண்ட வொட்டாமல் விலக்க வேண்டும். ஆராய்ச்சியாலும் கேள்வியாலுமே அறியாமை அகலும். ஆராய்ச்சிக்கு உள்ளச் சோம்பல் தடை. ஆனால், வினாவுவதற்குப் பலரும் தயங்குவர். பிறருக்குத் தொல்லை கொடுக்கிறோமே என்று, கேட்பவர் கேள்வியை உணர்ந்து கவனித்துக் கேட்கும் வகையில் கேள்விகள் கேட்டு அறிவை வளர்க்க வேண்டும். அறிவை நாடி ஒருவரிடம் கேள்வி கேட்பவன் அவர் நேர வாய்ப்பறிந்து நயமாகவும் பணிவாகவும் கேட்கவேண்டும். அவசியமானால் அவருடன் சென்றும், அவருக்கு உற்றிடத்துதவியும், அவர் மனத்தைக் கனிய வைத்து மெய்யறிவு பெற வேண்டும். இதில் மிடிமை மட்டுமின்றி நாணம், தயக்கம் ஆகியவை குறுக்கிடக் கூடாது. அறிவுத்துறையில் மட்டுமன்றிப் பழக்க வழக்கங்கள், நடையுடை தோற்றம் ஆகியவற்றைத் திருத்துவதிலும் மிடிமை மடமை இரண்டும் அகற்றுதல் வேண்டும். எனது புதிய வீட்டை திரு. லிட்டில்டன் பெரிதும் பாராட்டி யுள்ளார். அதன் நூல்நிலைய அறையை அணி செய்யுமாறு ஸிஸரோவின் அரையுருவச்சிலை ஒன்றைத் தேர்ந்து வைத்திருக்கி றேன். அது மிகவும் நேர்மையும் நன்னிலையும் உடையது. ஆயினும், இரண்டொரு ஆண்டுகளுக்குள் நீ அறிவுத் திறத்துடன் இங்கே வருங்கால், அச் சிலையினும் அந்நூல் நிலையத்தை அணிசெய்யும் பொருளாக உன்னை மதிப்பேன். திரு. ஹார்ட்டுக்கு என் வணக்கம் தெரிவி. அவர் மீண்டும் உடல் நலம் அடைந்துவருவது கேட்டு மகிழ்ச்சியடைகிறேன். உன் அன்புள்ள தந்தை, ............................ கடிதம் - 28 வாசிப்பும் கல்வியும் லண்டன், ஆகஸ்டு 31, 1748. மன்ஸ்டர் உடன்படிக்கை முதல் தற்போது வரையுள்ள ஃபிரான்சின் நடவடிக்கைகள் பற்றிய உன் மதிப்புரை மிகவும் நேர்மையானது. அம் மதிப்புரையிலிருந்து நீ வரலாற்று நூல்களை வாசிப்பதுடன் நில்லாமல் சிந்தனைசெய்து கற்கிறாய் என்று அறிகிறேன். வாசித்தல் என்பது எழுத்து வடிவில் கண்ணுக்குக் காணும் பொருளை நாவால் ஒலித்தல் என்று மட்டுமே பொருள்படும். பலர் தாம் என்ன வாசிக்கிறோம் என்பதை அறியாமல் வாசிக்கிறார்கள். கண் காண்பதை நா ஒலிக்கிறதேயன்றி உள்ளம் அதில் ஈடுபடுவதில்லை. வேறுசிலர் வாசிப்பதை மனத்தில் படியவைத்துக் கொள்கிறார்கள். இது படித்தல் ஆகும். வாசித்தலைவிட இது ஒரு படி மேலாயினும் இதில் மனத்தில் நினைவாற்றல் மட்டுமே செயலாற்றுகின்றது. நூலிலுள்ளதை உள்ளத்தில் கொள்வதன்றிச் சிந்தனைக்கு இடமில்லை. கற்றல் என்பது வாசித்து, படித்து, சிந்தித்து மனத்தில் புதுக் கருத்துக்களை உருவாக்குவது ஆகும். வாசிப்பு, படிப்பு ஆகியவற்றுடன் நிற்பவர்கள் நினை வாற்றல் (ஞாபக சக்தி) தவிர மற்ற ஆற்றல்களை இழப்பது மட்டுமின்றி நினைவாற்றலிலும் நாளடைவில் குறைபட்டே வருவார்கள். ஏனெனில், படிக்கும் செய்திகளைப் பற்றிச் சிந்திக் காமல் அவற்றை ஒழுங்குபடுத்தித் தொகுத்துக் கொள்ளவோ நிலையாக மனத்தில் கொள்ளவோ முடியாது. அவர்கள் நினைவிலிருக்கும் செய்திகள் குப்பை கூளம் போலத் தொடர்பற்ற ஒருசில செய்திகளேயாகும். சிந்தனையால் அறிந்த பொருள்கள் தொகுக்கப்பட்டால் நினைவாற்றலின் பரப்பு மிகுந்து மேலும் அறியும் ஆர்வமும் வளர்ச்சியடையும். உனது கட்டுரை நீ கசடறக் கற்கிறாய் என்று காட்டுகிறது. அம்முறையிலேயே இன்னும் முன்னேறிச் செல்க. நூலிலுள்ள வற்றை மனத்தில் தங்க வைக்கும் சிறந்தவழி ஆசிரியர் கூறியதை அப்படியே மேற்கொள்ளாது வரலாற்றுமுறை, காரிய காரண விளக்கம், ஒற்றுமை வேற்றுமை, வகுப்பு தொகுப்பு ஆகிய முறை களால் அதனை ஒழுங்குபடுத்திப் புத்தறிவுக்கு விதை ஆக்குவ தாகும். இத்தகைய சிந்தனைக்கே பகுத்தறிவு என்று பெயர். அதன் பயனாய்க் கிடைக்கும் புத்தறிவே மெய்யறிவு ஆகும். ஒரு நூலாசிரியர் கூறிய பொருளின் மெய்ம்மையை உய்த்தறிய வழி அதேபொருள் பற்றிக் கூறும் மற்ற நூல்களைக் கற்று ஒப்பிடுவதாகும். பின் வாசிப்பவன் அவற்றுள் தன் அறிவால் எது மெய் என விளக்கம் பெறுதல் வேண்டும். வலராற்று நூல்களில் செய்திகளைக் கூறும் பகுதிகள், ஆசிரியர் விளக்கக் கோட்பாடு தரும் பகுதிகள் ஆகியவற்றின் வேற்றுமை காண்க. முற்பகுதி படிக்க வேண்டியது மட்டும். பிற்பகுதி சிந்தனைக்கும் ஒப்பீட்டுக்கும் புத்தாராய்ச்சிக்கும் உரிய பகுதி ஆகும். தற்போதைய ஃபிரான்சு அரசியலின் தனியியல்புபற்றி நீ கூறுவது உண்மை. 2 கோடி மக்களும் 16 கோடிப் பொன்னுக்கு மேற்பட்ட வருவாயு முடைய இப்பெரிய நாட்டின் செல்வம், கொள்கை, ஆற்றல் யாவும் ஒரு தனிமனிதன் அதாவது, அரசன் கையில் முழுமையும் இருப்பதால் செயல் துறையில் ஃபிரான்சின் ஆற்றல் மிகப் பெரியது. மற்ற நாடுகளின் செல்வம், படை முதலிய யாவும் பலர் சார்பில் குடிமக்கள் கட்சிகள் கையிலிருப்பதால் மற்ற நாடுகள் பல சேர்ந்தால்கூட ஃபிரான்சளவு வலிவு பெறுவதரிதா யிருக்கின்றது. காரணம் அவை பல; ஃபிரான்சு ஒன்று. அவற்றுள் உரிமையாளர் பலர்; ஃபிரான்சில் ஒருவர். உனக்கு அரசியலிலும், அரசியல் நூல்களிலும் ஆர்வம் மிகுதியாயிருப்பது இயல்பு. நீ அரசியல் பணியை மேற்கொள்ள விரும்புவதனால் அத் துறையில் உன்னறிவு விரிவாகட்டும்! நலம். உன் அன்புள்ள தந்தை, ................................. கடிதம் - 29 செல்வமும் சிக்கனமும் லண்டன், ஜனவரி 10. 1749. உனது டிசம்பர் 31ஆம் நாளைய கடிதம் பெற்றுக் கொண்டேன். நான் அனுப்பிய பரிசு உனது நன்றியறிதலுக் குரியதா யிருந்தது கண்டு மகிழ்ச்சி. உண்மையில் அப்பரிசின் மதிப்பு அந் நன்றி யறிதலின் மதிப்புக்குக் குறைந்ததாயினும், அதை நீ நன்கு பயன்படுத்திக் கொண்டாய் என்று கேட்டால் நான் இன்னும் மகிழ்ச்சியடை வேன். இப்போது நீ உலக வாழ்க்கையில் முன்னிலும் அதிகமாக ஈடுபட்டிருக்கிறாய். அங்ஙனம் ஈடுபடுவதற்காகவே உன் கைச் செலவுப் பணத்தை அதிகமாக்குகிறேன். இது தவிர அவசிய மென்று நான் நினைக்கும் செலவுகளையெல்லாம் அதிகப்படி யாகவே நான் ஏற்றுக்கொள்வேன். ஓரளவு உன் செலவினங்கள் இனி உன் விருப்பத்தையே பொறுத்ததாதலால் செலவிடும் உன் உரிமையை நீ எவ்வாறு பயன்படுத்துவது நன்மை தரும் என்பதைப் பற்றிச் சில செய்திகள் கூற விரும்புகிறேன். உனது மேம்பாட்டுக்கு, உன் நல்வாழ்க்கையின் நல்லின் பங்களுக்கு வேண்டிய பொருள்கள் எவற்றையும் நீயும் தாராள மாய்ச் செலவு செய்யலாம். நானும் தங்குதடையின்றி அனு மதிப்பேன். மதிப்பாக வாழ்வதற்கு வேண்டிய தங்கவிடம், உடை, தட்டுமுட்டுச் சாதனங்கள், நல்ல நூல்கள், போக்குவரவுச் செலவுகள் ஆகிய யாவும் என் கணக்கில் உன் மேம்பாட்டுக்கான செலவுகளேயாகும். நல்லின்பங்கள் என்று நான் குறிப்பவை யாதெனில்; வறுமையாலும் இடைஞ்சலாலும் தொல்லைப்படும் நண்பர், நன்மக்கள் ஆகியவர்கட்கு உதவிசெய்தல்; அறச் செயல்கள்; பெரியோர், நன்மை செய்தோர் ஆகியவர்களைப் பாராட்டுவதற்கான அன்பளிப்புக்கள், சிற்றுண்டிகள், பொது விருந்துகள், கேளிக்கைகளில் கலப்பதற்கான செலவு ஆகியவை. இவையனைத்தையும் ஒழுங்கான செலவுகளாகவே நான் கொள்வதால் அவை உன் கைப்பணத்திற்கு மேற்போய் விட்டாலும் நான் அட்டியின்றிக் கொடுப்பேன். நான் மறுக்கப் போகும் செலவு கீழோர் கூட்டுறவு, சோம்பேறி வாழ்க்கை, அவற்றின் பயனான சச்சரவுகள், வழக்குகள், ஆகியவகைச் செலவுகளே. இவை வீண் செலவுகள் ஆகும். வீண் செலவுகள் என்பவை அறிவிலிகள் தமக்கு நன்மதிப்போ பயனோ இல்லாத முறையில் செய்யும் செலவுகளும் வருவாயின் அளவறியாது செய்யும் செலவுகளும் ஆகும். அவை உண்மையில் செலவுகளேயல்ல. பொருளை வீசியெறிந்து அழிப்பதேயாகும். அறிவுடையோர் தம் நேரத்தை அதன் பயனை எண்ணிச் செலவிடுவது போலவே, பணத்தையும் செலவிடுவர். நேரத்தில் ஒரு நொடியையும் வீணாக்காதது போலவே அவர்கள் பணத்திலும் ஒரு செப்புக்காசுகூட வீணாகச் செலவு செய்ய மாட்டார். ஆனால், வீண் செலவிடுதல் எவ்வளவு தவறோ, அவ்வளவும் நற்பயன், நன்மதிப்பு, ஆகியவற்றுக்கு இன்றியமையாத நேரங்களில் பொருளைச் செலவிடாமல் கஞ்சத்தனமா யிருப்பதும் தவறேயாகும். பலர் ஒழுங்கற்ற சிறுமைப்பட்ட காரியங்களில் பணத்தை இறைத்து விட்டு, அதன் பயனாய் நற்காரியங்களுக்குச் செல விடாமலும் கையை விரித்துக் காட்டியும் ஈயாது, கஞ்சன் என்று பெயர் வாங்குகின்றனர். ஆகவே இவ்விதம் செலவு செய்யத் தக்கதா, அன்றா என்று பாராமல் செலவிடாதே. செலவு செய்வதற்கு கணக்கு வைத்தல் நல்ல முறை. இதனால் நமக்கு ஏற்படும் முட்டுப்பாடு அவ்வீண் செலவினால் வந்தது என்றறிந்து, அது மீண்டும் ஏற்படாமல் காக்கலாம். வீண் செலவுகளைப் பெருக்க உதவும் தீய பழக்கங்கள் ஆவன; கடனாக வாங்கிப் பழகுதலும், பொருள் கொடுக்க வேண்டிய இடத்தில் கடன் வைத்தலும், கணக்கு வைத்தலும் ஆகும். சில்லறையான செலவுக் கணக்குகளை வாராவாரமோ மாதா மாதமோ உடனுக்குடன் தீர்த்துவிடு. கணக்கு எழுதுவதில் உருப்படியான செலவுகளை மட்டும் எழுது. மற்றவற்றை சில்லறைச் செலவு என்று இறுதியில் மொத்த மாகச் சேர்த்தால் போதும். சிறு செலவுகள் குறிக்கும் நேரம் அதன்பயன் நோக்க வீண்நேரம் ஆகும். அதுவும் உலோபிக் குணத்தின் ஒரு பயனாகும். மொத்தத்தில் செலவு என்பது நல்வாழ்வு முதலிய வாழ்க்கைப் பயன்களின் வரவை எதிர்நோக்கிச் செய்யும் நல் வாணிகமேயன்றி வேறன்று. செலவில்லாத வரவோ, வரவில்லாத செலவோ கிடையாது என்பதை உணர்பவன் வீண் செலவுக்கு ஆளாகான். கடன்மூலம் பொய்யான வரவுக்கும் ஆளாக மாட்டான். வரவு செலவு என்பது உண்மையில் உலகில் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பண மூலம் பரிமாறிக் கொள்வதன்றி வேறன்று. வேறு பயனெதுவும் உண்மையி லில்லாமல் இன்பத்துக்கு அல்லது மதிப்புக்கு ஒருவன் செலவு செய்தால் அது வீண் செலவே - அவ்வின்பம், அல்லது மதிப்பு வாழ்க்கையை உயர்த்தும் பயனை வரவாகக் கொண்ட இடத்தில் மட்டுமே அது செலவாக அனுமதிக்கத்தக்கது. இயல்பாகவே சிக்கனமுடைய உனக்கு எது செலவு செய்யக் கூடாதென்று மிகுதி கூறவேண்டுவதில்லை. எது செலவிட வேண்டியது என்பதே வற்புறுத்திக் கூறவேண்டுவதாகும். நலம். உனதன்புள்ள, ...................... கடிதம் - 30 குருட்டு நம்பிக்கைகளும் பகுத்தறிவும் லண்டன், பிப்ரவரி 7, 1749. அன்புடைச் சிறுவ, உனக்கு இப்போது தனக்கென ஆராய்ச்சி செய்யும் வயது வந்து விட்டது. இந்த வயதிலும் இதற்குப் பின்னும் கூட ஆராய்ச்சியி லீடுபடத் தொடங்காமலிருக்கும் பெரும்பாலான மக்களைப் போலல்லாமல், நீ இவ் வயது முதற்கொண்டே ஆராய்ந்தறியும் செல்வத்தை அடைவாய் என்று நம்புகிறேன். இவ்வறிவுரையை நான் உனக்கு இருவகை உரிமையால் வற்புறுத்தக்கூடும். ஒன்று ஆராய்ச்சியின் நற்பயனை அறிந்தவன் என்ற முறையில். இன்னொன்று உன் வயது கழிந்தும் நான் முற்காலங்களில் பல நாள்வரை ஆராய்வதை மேற்கொள்ளாது உழன்று பிற்பட்டுப் படிப்பினை யடைந்தவனென்ற முறையில். நான் அண்மைவரைக்கூட ஆராய்ச்சியிலீடுபடாமல் எவ்வளவோ நற்பயன்களை இழந்துள்ளேன் என்பதை உன்னிடம் வெளிப்பட நாணாது சொல்லத் தயங்கவில்லை. எனது தவறு உன் மேம்பாட்டுமூலம் சரி செய்யப்படும் என்ற காரணத்தினால். 16 அல்லது 17 வயதுவரை ஆராய்ச்சியறிவு இன்னதென்பதை அறியாமலே நான் கழித்தேன். அதுமட்டுமன்று. அதற்குப் பின்னும் பல ஆண்டுகள் உண்மை ஆராய்ச்சியில்லாமலே கழிந்தன. என்னுடன் வாழ்ந்த மக்களின் கருத்துக்களையோ, நான் படிக்க நேர்ந்த புத்தகங்களின் கருத்துக்களையோ நான் மேற் கொண்டேன். அவை சரியா, தப்பா என்று சிந்தித்துப் பார்த்ததே கிடையாது. ‘அவ்வப் போது அத்தகைய கருத்துக்கள் தவறா யிருந்ததைக் கண்ட போதும்கூட, அவை தவறா அல்லவா என்று காணும் தொந்தரவு எடுத்துக்கொள்ளாமல், தவறுகளுக்கு ஆளாய் வந்தேன். தானாக ஆராய்வதிலும் பிறரிடம் கேட்பதிலும் சோம்பல் தடையாயிற்று. சில சமயம் எல்லாரும் கொண்ட கருத்து நாகரிகக் கோட்பாடாதலால் அதுபற்றிக் கேட்பது தவறு என்று எண்ணினேன். ஆனால், நான் ஆராய்ச்சி செய்யத் தொடங்கியவுடன் நான் முன் கொண்டிருந்த பல கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என்று கண்டேன். குருட்டு நம்பிக்கைகள் பல என்னிடமிருந்தன. குருட்டு நம்பிக்கை என்னும்போது சிறு பிள்ளைகள் நம்புகிற பூச்சாண்டி, பேய், மந்திரவாதம் ஆகியவற்றை நான் குறிப்பிடவில்லை. வயது வந்தவர்களிடையேயும் அறிஞர்களிடையேயும் கூட ஆராயாது ஏற்றுக்கொள்ளப்படும் முடிவுகளையே குறிப்பிடுகிறேன். இக் குருட்டு நம்பிக்கைகளில் ஒன்று, எல்லா அறிவும் எல்லா உயர்வும் கிரேக்க நாகரிகத்துடன் ஓய்ந்தழிந்து விட்டன என்பதே. கிரேக்க இலக்கிய ஆர்வத்தாலும் அவற்றைப் பற்றிய தற்கால மதிப்புரைகளாலும் எழுந்த எண்ணமே இது. அதன்பயனாக சென்ற 2500 ஆண்டுகளாக உலகில் எத்தகைய அறிவுமுன்னேற்றமோ ஒழுக்க உயர்வோ கிடையாதென்று மனப்பூர்வமாக நம்பினேன். ஹோமர், வர்ஜில் முதலிய பண்டைய கிரேக்க, இலத்தீனக் கவிஞர்களிடம் கறையேயிருக்க முடியா தென்றும்; மில்டன், டாஸோ முதலிய தற்காலக் கவிஞர்களிடம் அவர்கள் சிறப்புடனொத்த சிறப்பே இராது என்றும் எண்ணினேன். இலக்கியத்துறையில் மட்டும் இவ் வெண்ணமிருந்தால் அத்தனை கேடில்லை. இலக்கியத்தைப் போலவே நாகரிகம், அரசியல், அறிவியல் ஆகிய எல்லாவற்றிலும் தற்கால ஐரோப்பிய நாகரிகம் மிகக் கீழ்த்தர மானதென்று எண்ணினேன். இது எவ்வளவு பிழையான எண்ணம் என்று இன்று அறிகிறேன். சமயத் துறையிலும் என் நாட்டினர் சமயமாகிய ஆங்கிலிகக் கோட்பாட்டை (கிறிஸ்துவ சமயத்தின் ஆங்கில நாட்டுக் கிளைச் சமயத்தை) முழு உண்மை வாய்ந்த தென்றும் மற்றவை பொய்யா னவை என்றும் நான் எண்ணினேன். நான் எண்ணுவதுபோலவே அவ்வச்சமயத்தவரும் எண்ணியிருப்பர் என்பதை உணராது, அவர்கள் பொய்மையைப் பிடிவாதமாக நம்புகிறார்கள் என்று சீறினேன். அவரவர் தத்தம் சமயத்தை உண்மையாக நம்புமிடத்து எதனையும் குறைகூறாது ஒப்புரவுடன் நடப்பதே நமது உண்மைப் பற்றுக்கு நாம் தரும் மதிப்பு என்பதை இப்போது உணர்கிறேன். இவற்றைவிட நடைமுறையில் கேடு தரும் மற்றொரு நம்பிக்கை உயர் குடியினர் பின்பற்றுவதெல்லாம் நாகரிகத்தின் இன்றியமையாக் கூறுகள் என்று நான் நம்பியதேயாகும். இங்ஙனம் பலரும் கூறுவது கேட்டு என் ஆராயா முடிபு வலுப்பெற்றுவந்தது. ஒழுக்கமின்மை, குடி, புகை குடித்தல், வீண்செலவு ஆகியவையில்லாமல் நாகரிகம் இருக்க முடியாது என்று எண்ணினேன். இத் தீமைகளனைத்தும் இருந்தும்கூட நாகரிகம் அவற்றைக் கணிக்கச் செய்யும் அளவுக்கு உயர்வுடையது என்று மட்டும் இப்போது நான் நம்புகிறேன். நாகரிகத்தின் கவர்ச்சியிலீடுபட்டு உயர்வுற்ற மக்கள் தம் உள்ளார்ந்த குறைபாடுகளையும் அதனுடன் சேர்த்துக்கொண்டு பகட்டு கிறார்கள் என்பது இப்போது எனக்கு விளங்குகிறது. குடி, புகை குடித்தல் ஆகியவை இல்லாவிட்டால் நாகரிகம் ஒரு சிறிதும் கெடாது என்பது மட்டுமன்று; அது மாசு நீங்கிய பத்தரை மாற்றுப் பொன் போல் இன்னும் ஒளி வீசத்தக்கது. அவற்றை இன்று மக்கள் புறக்கணிப்பதெல்லாம் தேனில் உள்ள புழுக்களைப் புறக்கணித்து அவற்றுடனேயே தேனை உண்பது போன்றதே. நாகரிகம் அடிமைத்தனம் அன்று; நாகரிகத்திலும் அடிமைப் பட்டவன் பிறர் ‘நாகரிகம்’ என்று கூறுவதை மேற்கொண்டவனன்றி நாகரிகம் வளர்ப்பவனோ, நாகரிகத்தில் பங்கு கொள்பவனோ ஆகமாட்டான். தீய பழக்கங்களைப் பிறர் மதிப்புக்காக நாகரிகமாக மேற்கொள்பவர் அவ்வப்போது அதே பிறர் அவற்றை மதியாது ஏளனம் செய்வதைக் காணலாம். அவர்கள் அதை ஏற்பதாகக் காட்டிக்கொள்வதெல்லாம் தம் குறையை மறைப்பதற்கே யன்று, அது குறையன்று என்று எண்ணுவதாலல்ல; தம்மினும் அவ்வக் குறையை மிகுதியாக உடையவரை அவர் ஏளனம் செய்வதிலிருந்து இதை உணரலாம். எனவே அறிவு வளர்ச்சியையும், உண்மையான நாகரி கத்தையும் நீ நாடினால் உன் பகுத்தறிவைப் பயன்படுத்து; அதனையே நிமிர்ந்து வற்புறுத்து. பலருக்காக ஒப்புரவு செய்; பகுத்தறிவைப் பறிகொடுத்துப் பொய்யுரை மேற்கொண்டு பசப்பாதே. வேறு எதனில் சோம்பலுக்கு இடங் கொடுத்தாலும், முயற்சி எடுத்துக்கொள்ளத் தயங்கினாலும், சிந்தனையை மேற்கொள்வதில் சோம்பலும் தயக்கமும் கொள்ளாதே. கற்றவர், நாகரிக மக்கள் ஆகியவர்களிடம் பல நம்பிக்கைகள் படிந்திருப்பதுபோலவே, நாடு, உலகு ஆகிய துறைகளிலும் நம்பிக்கைகள் படிந்திருப்பது உண்டு. உலகில் சமயங்கள், கட்சிகள், கோட்பாடுகள் ஆகியவை பகுத்தறிவு மூலம் பரவுவதைவிட, மூட நம்பிக்கைகள், தன்னலங்கள் ஆகியவற்றின் மூலமே பரந்துள்ளன என்று கூறலாம். முன்னோர், அயலார், நாட்டுப் பெரும்பான்மை மக்கள் ஆகியவர்களிடமிருந்தே நாம் நம் சமயம், கோட்பாடுகள் முதலியவற்றைக் கொள்கிறோமே யன்றி, நாமாகச் சிந்தித்தல்ல. அறிவும் ஆராய்ச்சியும் பெற்றவர் சிந்தித்து இவற்றுள் சார்பு, எதிர்ப்புக் காட்டாவிடினும், சிந்தித்து உண்மை நிலை அறிந்து கொள்ளலாமல்லவா? உன்னைச் சிந்தனைக்கும் ஆராய்ச்சிக்கும் இக் கடிதம் தூண்டும் என்று நம்புகிறேன். உன் அன்புள்ள தந்தை, ............................. கடிதம் - 31 போலி நண்பர்-ஓர் கற்பனை உரையாடல் லண்டன், செப்டம்பர் 11, 1749. அன்புடை மைந்த, உன்னைப்பற்றி எல்லாவகையிலும் திருப்திகரமான தகவல் களையே கேட்கிறேனாயினும், அதனாலும் உன்னைப்பற்றிய என் கவலையும் பீதியும் அதிகரிக்கின்றதே தவிரக் குறைவதாகக் காணோம். இது ஒரு புதிராகவே இருக்கின்றது. உன்னைப் பற்றி நான் உயர்ந்த நோக்கங்களுடன் பெரிய மனக் கோட்டைகள் கட்டிக்கொண்டிருப்பதால் ஒவ்வொரு புதுச் சூழ்நிலையிலும் அக் கோட்டை தகர்ந்து விடுமோ எனப் புது அச்சம் உண்டாகிறது. அதனால் தந்தை என்ற உரிமையைக்கூட விட்டு விட்டு ரோமின் புதிய சூழ்நிலையில் நீ விழிப்பாயிருக்க வேண்டும் என்று உண்மையான அன்புரிமையுடன் உன்னை வேண்டிக்கொள்ள விரும்புகிறேன். நான் நெடுநாள் கவலையுடன் உழைத்ததன் பயனையும் அதனைப் பின்பற்றி இது காறும் நீ எடுத்துக் கொண்ட ஊக்கமிக்க முயற்சிகளையும் இந்நகர் வாழ்வில் நீ பாதுகாத்துப் பேணுவாயாக. நீ அண்மையில் சில நாள் நோய்வாய்ப்பட்டிருந்ததனால் உனது பயிற்சி சில காலம் தடைப்பட்டிருந்தது. அதற்கு இப்போது சரி செய்ய வேண்டிய சமயம் ஆகும். ஆகவே, அடுத்த ஆறு மாதங்களும் காலை நேரங்களில் நாள்தோறும் 6 மணி நேரம் திரு ஹார்ட்டுடனிருந்து கற்பதில் நீ செலவிடவேண்டும் என்று விரும்புகிறேன். காலைநேரம் இங்ஙனம் உழைப்பில் சென்றால் மாலையை இன்பப் பொழுதுபோக்கில் கழிப்பது அவசியமே. நான் அதனை ஒத்துக்கொள்வது மட்டுமல்ல, அதையும் வற்புறுத்தி வகைப்படுத்தித் தருகிறேன். நன்மக்கள் செல்லும் அவைகள், நடனமன்றங்கள், காட்சிகள் ஆகியவற்றில் நீ பொழுதுபோக்கலாம். இவ்வளவும் என் விருப்பமாயினும் அவை உன் விருப்பத்துடனும் பொருந்தும் என்றே நம்புகிறேன். ஆனால், இன்னொரு சாரார் விருப்பம் வந்து இதில் குறுக்கிடும் என்று நான் அஞ்சுகிறேன். ரோம் நகரில் தம் பொருளையெல்லாம் குடியிலும் இன்பவேட்டையிலும் செலவு செய்து கடன்பட்டும், அவ்வேட்டையை விட்டு நீங்க மனமில்லாத இளைஞர் பலர் உண்டு. இவர்கள் பிற செல்வ இளைஞர்களைத் தூண்டி இன்ப மயக்கத்திலீடுபடுத்தி அவர்களைச் செலவிடும்படி செய்து தாமும் அதில் பங்கு கொள்ள முனைவர். இத்தகையோர் பிற இளைஞர்களை இதில் ஈடுபடுத்துவதை ஒரு கலையாகக் கொண்டவர். அதற்காக அவர்கள் விரிக்காத வலையும் மேற்கொள்ளாத சூழ்ச்சிகளும் கிடையாது. உன் போன்ற ஆங்கில இளைஞர் வகையில் அவர்கள் சூழ்ச்சி இன்னும் கவர்ச்சி உடையது. ஏனெனில், அவர்கள் இங்கிலாந்தின் புகழ் பாடுவர். நாட்டுப்பற்றாகிய இனிய வெறி மற்ற வெறிகளுக்கு இட்டுச் செல்ல உதவும். அவர்களில் மிகப்பலர் ஆங்கில நாட்டி னராதலின் உன்னுடன் நாட்டுறவும் கொண்டாடுவர். அவர்கள் பசப்பு மொழிகளைத் தட்ட உனக்குதவுவது உன் தன்னாக்க விருப்பமும் என்னிடம் கொண்ட அன்பும் பணிவுடைமையும் இணக்கமும் மட்டுமே. உன் பண்புகளையும் அவர்கள் குணங்களையும் அறிந்த என் கண்முன் அவர்கள் உன்னிடம் பேசும் உரையாடல் கற்பனை செய்யக் கூடாததல்ல. அது இவ்வாறு இருக்கும் இவ்வாறு இருத்தல் நலம் என்று எண்ணுகிறேன். அவர்கள் அழைப்பை மறுக்கும் சிக்கலான பிரச்சனையில் என் கற்பனை உரையாடல் உதவுமாதலால் அதனைக் கீழே தீட்டுகிறேன். ஆங்கில இளைஞன்: அன்பரே, “நாளை காலை நீங்கள் என்னுடன் காலை விருந்தயர வருவீர்களா. நம் நாட்டார் நாலைந்துபேர் உடனிருப்பர். நாங்கள் பெட்டி வண்டிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். உணவயர்ந்ததன் பின் சிறிது உலாவச் செல்லலாம்.” ஸ்டான் ஹோப் (இளைய செஸ்டர்ஃபீல்ட்): “நான் தங்கள் அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். காலை நேரம் முழுவதும் எனக்கு வேறு வேலைத்திட்ட மிருக்கிறது.” ஆங்.இளை: “அப்படியா, சரி அப்போது நாங்களே இங்கு வந்து உங்களுடன் உணவு கொள்கிறோம்.” ஸ்டா: “அதுவும் என்னால் முடியாது. என் நேரம் வேறு வேலையிலீடுபட்டிருக்கிறது.” ஆ.இ: “நன்று, அப்படியானால் நாளை அல்லது மறுநாள் காலை வைத்துக்கொள்வோம்.” ஸ்டா: “தங்களிடம் உண்மையைக் கூறுவதற்கென்ன? எந்த நாளிலும் காலை நேரம் முடியாது. காலை நேர மெல்லாம் எனக்கு வேலையிருக்கிறது. 12-மணி வரை நான் எங்கும் வெளியே செல்வதுமில்லை. யாரையும் பார்ப்பதுமில்லை.” ஆ. இ: “அடேயப்பா, 12 மணிவரை அப்படித் தனியே இருந்து எப்படித்தான் நேரத்தைக் கழிப்பீர்களோ?” ஸ்டா: “நான் தனியே இருப்பதில்லை. திரு. ஹார்ட் என்னு டனிருப்பார்.” ஆ.இ: “அவருடன் என்னதான் செய்வீர்கள்?” ஸ்டா: “பல வகையில் ஈடுபட்டிருப்பேன். கல்வி கற்றல், உரையாடல் இவ்வகையில் ஈடுபட்டிருப்போம்.” ஆ.இ: “நல்ல பொழுதுபோக்கையா இது? இது யார் உத்தரவுக்குப் பணிந்தோ?” ஸ்டா: “தந்தையார் உத்தரவு அது. அதற்கு நான் கீழ்ப் படிந்தாக வேண்டும்.” ஆ.இ: “ஆயிர மைலுக்கு அப்பாலிருக்கும் ஒரு கிழவன் உத்தரவுக்கா இவ்வளவு அச்சமும் அடக்கமும் ஒடுக்கமும்!” ஸ்டா: “அவர் உத்தரவை மதிக்காவிட்டால் அவர் என் கணக்கில் கையெழுத்திட்டுப் பணம் அனுமதிக்க மாட்டார்.” ஆ.இ: “என்ன, கிழட்டுப்பயல் பணமனுப்ப மாட்டேன் என்று அச்சுறுத்துகிறானோ! கிழடுகள் அப்படித்தான். அதைப் பொருட் படுத்தாதிருந்தால் மனம் வெம்பிச் சீக்கிரம் சாகும்.” ஸ்டா: “தாங்கள் நினைக்கிறபடியன்று. அவர் என்னை அச்சுறுத்தியதேயில்லை. அவ்வளவுக்கு நான் இடம் வைப்ப தில்லை.” ஆ.இ: “நீங்கள் என்ன இப்படி. அஞ்சி அஞ்சிச் சாகிறீர்கள். கிழட்டுத் தந்தைக்கு அஞ்சுவதுடன் அதன் செவிலிக் குட்டிக்கும் வேறு அஞ்சுகிறீர்களே!” ஸ்டா: “ஆம்.” ஆ.இ: “காலையெல்லாம் கிரீக்கும், இலத்தீனும் இழவும் பயறும்! இதென்னடா இது. எனக்கும்தான் ஒரு செவிலி ஏற்படுத்தியிருக்கிறது. அவன் என்னைப் புத்தகம் எடுக்கச் சொல்லுவதற்கு முன்னால் நான் அவனை ஹோட்டலுக்கு ஏவிவிடுவேன். அவன் ஓடிஓடி அலுத்துத் தப்பினால் போதும் என்று போய்விடுவான்.” ஸ்டா: “என் ஆசிரியர் தனக்கென ஒன்றும் விரும்பார். என் நன்மைக்காவே உழைக்கிறார். நான் உடனுழைக்க வேண்டாமா?” ஆ.இ: “என்னப்பா, இந்த வயதில் இவ்வளவு வேதாந்தமா? நல்ல வயதில் எப்படியிருப்பீர்களோ?” ஸ்டா: “எனக்கு இது தீமை தராது என்று எண்ணுகிறேன்.” ஆ.இ: “சரி காலை நேரம் போனால் போகிறது. காலை யுழைத்தபின் அவசியம் மாலையில் களியாட்டயரலாம். இரவு 10 மணிக்குச் சந்திப்போமா? நல்ல பானவகைகள் வைத்திருக் கிறோம். விருந்துண்டு மகிழ்வோம்.” ஸ்டா: “நிரம்ப வந்தனம். ஆனால், மன்னிக்க வேண்டும். பிற்பகலும் இரவு முழுவதும் நாளை வேலையிருக்கிறது. கார்டினல் அல்பானி மாளிகைக்கும் வெனிஸ் தூதர் மாளிகைக்கும் செல்ல வேண்டியிருக்கிறது.” ஆ.இ: “இத்தகைய அன்னிய நாட்டுப் பதர்களுடன் நீங்கள் எப்படி காலங்கழிக்கிறீர்கள்? அதுகளெல்லாம் பட்டு உடுத்த தலையாட்டிப் பொம்மைகளாயிற்றே! அப்பப்பா, அதுகள் சட்ட திட்டங்கள், மாய்மாலங்கள்! நான் அந்தத் திசையை நாடுவ தேயில்லை.” ஸ்டா: “நன்மக்கள் கூட்டுறவு எந் நாட்டிலிருந்தாலும் நான் வெறுப்பதுமில்லை, அஞ்சுவதுமில்லை. அவர்கள் மொழிகளை நான் படித்திருக்கிறேன். அவர்கள் பழக்க வழக்கங்களைப் பழகி அறிந்துகொள்கிறேன். நாம் வெளிநாடுகளுக்கு அனுப்பப் படுவதே அந் நோக்கத்துடன்தானே?” ஆ.இ: “ஆண்மையற்ற இக் கூட்டங்களை நான் வெறுக்கிறேன்.” ஸ்டா: “ஏன் அவர்கள் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தார்கள்? உங்கள் பொருளைப் பறித்துக்கொண்டார்களா? தீயவழிகளில் புகுத்தினார்களா? உங்கள் நாட்டை அவமதித்தார்களா?” ஆ.இ: “அதொன்றுமில்லை. ஆனால், அவர்கள் போக்கு எனக்குப் பிடிப்பதில்லை. உலகம் பலவிதமல்லவா?” ஸ்டா: “ஆம். உங்களுக்கு அவர்களைப் பிடிக்கவில்லை. எனக்குப் பிடிக்கிறது; அவர்களுடன் நான் எளிதாய்ப் பழகுகிறேன்.” ஆ.இ: “நீங்கள் ஒரு விசித்திரப் பேர்வழிதான். அப்போது எங்களுடன் நீங்கள் எதற்கும் வருவதற்கில்லை போலிருக்கிறது.” ஸ்டா: “வர வழியில்லை என்றே எண்ணுகிறேன்; மன்னிக்கவும்.” ஆ.இ: “அப்படியானால் உங்களிடம் ஒரு நீண்ட விடை வாங்கிக் கொள்கிறேன். உங்களுடன் உரையாடியதை மறக்க இன்னும் கொஞ்சம் குடிக்க வேண்டும்.” ஸ்டா: “குடிப்பதால் என்னை மறப்பதுடன் உடல் நலத்தையும் மறக்க வேண்டி வரலாம். ஆனால், உலகம் பலவிதம். அதில் நாங்கள் ஒருவிதம். போய் வாருங்கள்.” (மனதுக்குள்) நீங்கள் என்னை மறந்தாலும் நான் உங்களை மறவேன். நீங்கள் தந்த படிப்பினை அவ்வளவு! இக் கற்பனை உரையாடலில் நீ கூறுவதாகக் கூறப்படுவது சற்று மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம். என்னைப்பற்றிய உரைகள் உன்னைப் புண்படுத்தலாம். ஆனால், அத்தகைய இளைஞர்கள் மனப்பான்மையை இவ்வுரையாடல் நன்கு விளக்கும். உன்னிடத்தில் நான் இருந்தால் எப்படிப் பேசியிருப்பேன் என்பதையும் அது காட்டும். ரோமில் உன் நல்வாழ்க்கை நாடும், உன் தந்தை, ................. ஈலியாவின் கட்டுரைகள் இந்நூல் 2002இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது.. 1. தென்கடற் குமிழி வாசக அன்பரீர்! பொருளகமனையிலிருந்து நகரூர்தி நிலை யம் செல்லும் வழியில், பி... கெவுனி, தி... தெருவில் சென்று சேருமிடத்தில், பாழடைந்த-ஆனால், - கல்லாலும் செங்கலாலும் அமைந்த பாரிய கட்டட மொன்றை நீங்கள் பார்த்திருக்கலாம். தூசும் தூறும் அடைந்த நிலையிலுங்கூட அதன் அகன்ற வாயில்களையும், இடம்பட விரிந்த முற்றங்களையும், திண்ணிய மதிற்சுவர்களையும், வாட்டசாட்டமான கதவுகளையும், பலகணி களையும் பார்ப்பவர். அது பழம் பெருமையுடையதாயிருந்திருக்க வேண்டும் என்று எண்ணாமலிருக்க முடியாது. ஆம்! அது பழம் பெருமையுடையதே. தென்கடற் குமிழி (இல்லை. இல்லை; தென்கடற் கழகம்) இருந்து வாழ்வு பெற்ற இடம் இதுவே. பொலிவுடனும் பகட்டுடனும் வாழ்வு பெற்றுத் திடுமென அது முறிவுற்றது. அதன் பின்னரே மக்கள் அதன் பெயரிலுள்ள கழகம் என்ற சொல்லை மாற்றி அதற்குக் குமிழி என்று பெயரிட்டனர். குமிழி போல் பொங்கி, மிதந்து, குமிழி போல் பொட்டென மடிவுற்ற தென்பதை இப்பெயர் எவ்வளவு நன்றாக விளக்குகிறது! இன்று, இக்கட்டடத்தை எவரும் எட்டிப் பார்ப்பதுகூடக் கிடையாது. ஆனாலும், அது நகர் நடுவில் அமைந்துள்ள தென்பதனை நீங்களே கவனித்திருக்கலாம். ஒரு காலத்தில் (நாற்பது ஆண்டுகட்கு முன்) அது உண்மையிலேயே நகர் வாழ்விலே நடுவிடம் பெற்றிருந்தது. அன்றைய உலகின் ஒரு பெரும் பகுதிக்கே அது நடுவிடமாய் அமைந்திருந்தது. முள்ளெலிகள் சோம்பிக் கிடக்கும் அதன் முற்றங்களில் எத்தனை நாடுகளின் மக்கள் முன்னும் பின்னுமாக விரைந்து சென்று கொண்டிருந்தனர்! அணில்கள் ஓடியாடித் திரியும் அதன் புறவாரங்களில் எத்தனை நாடுகளின் சரக்குகள் ஏற்றவும், இறக்கவும், தணிக்கையிடவும் பெற்றன! மாடிகளிலும் உட்கூடங் களிலும் எத்தனை கழகக் கூட்டங்கள், குழு, உட்குழுப் பேச்சுக்கள்! இன்னும் முற்றிலும் உருக்கெடாது காணப்படும் பாரிய மேடைப் பலகைகளும், இருக்கைகளும் அன்று நெய்பூசிப் பளப்பளப்பாக வைக்கப் பெற்றிருந்தன. அவற்றுள் பலவற்றில் வில்வெட்டு மெத்தைகளும் பஞ்சணைகளும் பதிக்கப் பெற்றிருந்தன. அவற்றின்மீதும், அருகாமையிலும், நின்றும் சாய்ந்தும், கொட்டாவியிட்டு விரைந் தும், கழகத்தின் வருங்காலத்தைப் பற்றியோ, தம் வருங்காலத்தைப் பற்றியோ சிந்தனையற்றவராயிருந்த கணக்கர், தணிக்கையாளர், மேற்பார்வையாளர் எத்தனை பேர்? அவர்கள் எல்லாரும் இப்போது எங்கே எங்கே? இக் கேள்விகளுக்குக் கட்டத்தின் பல பகுதிகளுந்தான் “எங்கே, எங்கே?” என்று எதிரொலித்து விடையளிக்கின்றன. கழகம் குமிழியாக வெடித்ததாயினும், அதன் வாழ்வுக் காலம் குமிழியின் வாழ்வுக் காலமென்று எண்ணிவிட முடியாது. குமிழிபோல் அது வாழ்வின் நிலையாமையை மட்டும் காட்ட வில்லை. அழிவிலும் அது அக்கால வாழ்வின் பெருமித அகலத்தையும், வீறையும், இக்கால வாழ்வின் சிறுமையையும் விளக்கப் போதியது. கட்டடத்தின் பாரிய அளவும், சாதனங்களின் பெருக்கமும் விரிவும், ஆன் அரசி கால வாழ்க்கை அகலத்தைக் காட்டுபவையிருந்தன. சுவரில் அன்று தூக்கப் பெற்றிருந்த ஆன் அரசி படமும், அவர் பின் வந்த பிற பல அரசர் படங்களும் அதன் நீண்டகால வாழ்வைப் படம் பிடித்துக் காட்டின. அவ்வக்கால, உலகின் நில இயல் அறிவு வளர்ச்சியைக் குறித்துக் காட்டு பவைபோல, பற்பல காலத்திய நாட்டுப் படங்களும், கடலகப் படங்களும், சுருள் சுருளாக வைக்கப் பட்டிருந்தன. காலங்கடந்த கடலகப் படங்களும், கருவிகளும் மூலையி லெறியப்பட்டுப் புது மாதிரிப் படங்களும், கருவிகளும் மேடைப் பலகையில் இடம் பெற்றன. நீண்ட இடை வழிப் பாதைகளின் சுவர்களில் மாட்டப் பட்டிருந்த தீயணைப்புத் தொட்டிகள் பலவற்றை இன்றும் பல நிலைகளில் காணலாம். அந்தோ! தீ அணைந்துவிடும் என்று எச்சரிப்பாயிருந்த இடத்தை இன்று காலம் அணைத்துக் கொண்டது! காலத்தின் காலடிப் பொடியும், அதன் அழிவுத் தூதர்களான நூலாம்படையும், பாசி காளான்களும் யாவற்றையும் அணைத்துக்கொண்டன. தீயின் அணைப்புக்கூட இன்று அவற்றை விலக்க முடியாது. இன்றைய பொருளாக மனைகளில் இருப்பது போலவே இங்கும் பணம் வைக்கும் ஒழுக்கறைப் பெட்டிகளும், காப்பறை களும், நிலவறைகளும் ஏராளம். இவற்றில் மெக்சிக்கோ, தென் அமெரிக்க நாட்டு நாணய முதல், ஸ்பெயின் பிரான்சு இந்திய நாணயம் வரை கட்டிக் குவிக்கப் பெற்றிருந்தன. இக்கால அலுவலகங்களைப் போலவே இதுவும் பொருள் தெய்வத்தின் நடனசாலையாகவே இருந்தது. ஆனால், இன்றைய மக்கள் போல அத் தெய்வத்தின் அடிமைகளாய், அதன் காலடி மண்களாய் அக் காலத்தவர் இல்லை. செல்வ வளத்திடையே மிடிமைக்கு அன்று இடம் கிடையாது. பேரேடுகளுக்கிட்ட புறமுதுகின் வண்ண நயத்தைப் பார்க்க வேண்டுமே! இன்று மேடைப் பலகைகளில் பதிந்துள்ள குழிகள் பல அன்று வெள்ளி மைப்புட்டிகள் இருந்தவை. அவற்றில் செருகப்பட்ட எழுது கோல்களும் தந்தத்தாலானவை. கட்டடத்துக்கு அன்று வாழ்வு கொடுத்த பணிகர்களும் இன்றைய பணி மக்கள்போல் கூலிக்குழைத்த வர்கள் அல்லர். விரைந்து வேலை முடித்துவிட்டு வீடு செல்லத் துடிக்கும் இளைஞருமல்லர். நல்ல குடும்பத்தில் பிறந்து கவலையற்று வாழ்வு பெற்றும், அவ்வாறு முழுதும் நேரம் போக்காமல், இவ்விடத்தை விரும்பி உரிமையோடு வந்த நடுத்தர வயதினரும், முதியவருமே இங்கு அமர்வு பெற்றிருந்தனர். அவர்களில் பலருக்கு வீடும் அலுவலகமும் ஒன்றுதான். ஆகவே அவர்கள் கால வரையறையும் கணக்குமின்றி, மாளிகை வீட்டுக்கு வருவதுபோல் வந்து ஆரஅமர இருந்தனர். அத்துடன் இவ்விடத்தில் பணியாற்றுவதை ஒரு பெரிய மதிப்புக்குரிய செயலாகக் கொண்டு, பகலொளி மறைந்து விளக்கொளி பரவும்வரை அவர்கள் இங்கே இருந்து நடமாடிச் சென்றனர். இவையெல்லாம் என் கண்முன் இன்று நடப்பவைபோல் தான் தோன்றுகின்றன. ஏனெனில், இத் தென்கடற் குமிழி என்னளவில் குமிழியல்ல, என்றும் கழகமே. இதன் வாழ்வுக் காலத்தில் இதன் வாழ்வுடன் வாழ்ந்தவன் நான்- இதன் ஒரு உறுப்பாக, இதன் பணியாட்களுள் ஒரு பணியாளாக, இதன் உடலின் ஒரு பகுதியாக நான் இருந்தேன். இன்று என் உடல் சோர்ந்துள்ளது. உறுப்பும் சோர்வுற்றுத்தான் வாழ்கிறது. ஆனால், இக்கட்டத்தைக் கண்டதுமே என் பழைய நினைவுகள் காலப் படிக்கட்டுகளில் இறங்கிவந்து, அதற்கு உயிர் கொடுத்து விடுகின்றன. அதோ, அந்த ஏணிப்படியின் வழியே காதில் இறகு எழுதுகோலைச் சொருகிக் கொண்டு முதியோர் ஒருவர் வருகிறார். ஒரு சல்லிக்காசையும் ஒரு பதினாயிரம் பொன்னையும் ஒரே நிலையில் கருதி ஆராய்ந்து கணக்கிடும் கணக்கர்கள் யாவரும், அதோ சுவடிகளைப் புரட்டியும், ஒருவரை ஒருவர் நோக்கிப் புன்முறுவல் செய்தும், பரக்கப் பார்த்தும் காட்சி தருகின்றனர். அவர்கள் ஒவ்வொருவர் முகஓவியங்களும், பண்போவியங்களும் ஒரு சிறிதும் வாட்டமின்றி என் கண்முண் இதோ இயங்குகின்றன! இக்காலச் சிறு வாழ்விற்படாத பெரு வாழ்வுக்கால ஆவிகளே! உங்கள் உயிர் நிலைகள் அமைதியடைவதாக! மறதி எனும் காலத்தின் பாழ்நிலையில் படாமல், இடிந்து விழுந்த இக் கட்ட டமும் அதன் நினைவுகளும் என் உள்ளத்தடத்தில் உங்கட்கு அழியா நினைவுச் சிலைகள். உயிருடன் இயங்கவல்ல உருவச் சிலைகள் செய்து வைத்துவிட்டன! பணிமக்களின் பண்போவியங்களும் உருவோவியங்களுத் தான் எத்தனை பல்வகைப் பெருக்கமுடையன? இன்றைய நிலையங்களிலெல்லாம் பணிமக்கள் நிலையத்திற்கெனத் தேர்ந் தெடுக்கப்பட்டு, நிலையத்தின் குறுகிய பிரதிநிதிகளாகி விடுகின்றனர். ஆனால், அக்காலத்தில் நிலையம் எவரையும் தேர்ந்தெடுக்கவில்லை. உலகம் தேர்ந்தெடுத்து, ‘இவர்கள் நிலையத்துக்கு உரியவர்கள்’ என்று அனுப்பிற்று. ஆகவே, அவர்கள் நிலைய வாழ்வுடன் ஒன்றுபட்டனராயினும், உலகத்தின் பிரதிநிதிகளாகவே இருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒரு தனி வகை, ஒரு தனிப்பண்பு, ஆனால், எவரும் நிலைய வாழ்வின் அமைதியைக் கெடுக்கத்தக்க தனிப் பண்புடையவராக இல்லை! தென்கடற் குமிழியின் பாழ்நிலையைக் கண்டு அதனைச் சூழ்ந்து இன்று எழுந்துள்ள பொருளகமனை, பங்குமாற்று மனை, இந்தியா மாளிகை ஆகியவை எக்களிப்புக் கொள்கின்றன. ஆம், வீழ்ந்துவிட்ட பழைய உறவினரைப் புறக்கணிப்பாகப் பார்க்கும் புதுச்செல்வர் போன்று அவை தோன்றுகின்றன. ஆனால், உன் ஆவி, உன்னிடத்தில் நின்று இன்றும் வீறுடன் தவழும் ஆவி உருவங்கள் அவற்றின் புதுவாழ்வையும் அதில் பங்குகொள்ளும் இக்காலக் கள்ள மனப்பான்மையுள்ள சிறு மாந்தரையும் கண்டு எள்ளி நகைப்பது என் காதில் கேட்கிறது. இந்த ஏளனத்தின் முன் நம் இக்காலப் புறக்கணிப்பு எம்மட்டு! அதோ வடபுலத்து முதுமகன் ஒருவன் நம்மைப் பார்த்தும் பாராமலும் இறுமாப்புடன் நகைக்கிறான். அவன்தான் காசகத் துறைஞன் எவன்ஸ். கேம்பிரிய நாட்டின் சிடுசிடுப்பு அவன் தோற்றத்தில் தாண்டவமிடுகிறது. ஆனால், அவன் உள்ளம் இத் தோற்றத்திற்கு மாறானது. எத்தனை வயதான பின்னும் அவன் தன் தலைமுடியை வாரிக் கோதியணிவதிலும், நறுந்துகளிட்டுப் பகட்டுவதிலும் குறைவைக்கவில்லை. பதினெட்டாம் நூற்றாண் டின் உயர்குடி ஆரவாரக் கோட்டையின் எஞ்சிய எச்சம் அவன். முற்பகல் முழுவதும் அவன் தன் காசகமேடையண்டை குட்டி யிட்ட பூனை போல் சுருண்டு கிடப்பான். ஆனால், பிற்பகலிலோ அவன் பணத்தை எண்ணி அடுக்குவதிலும் கொடுப்பதிலும் வாங்குவதிலும் ஈடுபடுவான். மனிதராய்ப் பிறந்த எவரும் திருடக்கூடும் என்ற எண்ணம் சுழன்று சுழன்று பார்க்கும் அவன் கண்களில் நிழலாடும். அதே சமயம் அவன் கைகள் தன் கண்களுக்குக்கூட அஞ்சியவை போல வெடவெடப்புடன் நாணயங்களையும் கைச் சீட்டுக்களையும் பற்றித் தடவும். ஆனால், அவன் பெருஞ் சிறப்பு யாதெனில் குறித்தகாலந் தவறாது அவன் எல்லாச் செயலும் ஆற்றிய விந்தையே. அவன் பணிமனைக்குள் நுழைவதும், அலுவலகத்தின் முதல் மணி அடிப்பதும் சரியாயிருக்கும். இரண்டாவது மணியுடன் அவன் ஏடுகளை எடுத்து விரிப்பான். மூன்றாவது மணியுடன் அவன் வேலை தொடங்கிவிடும். யாரை நம்பினாலும் நம்பாவிட்டாலும், அலுவலகத்திற்கு எதிரிலிருந்த விடுதி, அவனை நம்பி வாழ வழியிருந்தது. மாலை மணி ஆறு அடிப்பதும் அவன் காலடி அவ்விடுதியில் படுவதும் சரியாயிருக்கும். அவ் விடுதிக்காரரே விரும்பி எடுத்த அவன் உருவோவியம் அவ் விடுதியில் இன்றும் தொங்குகிறது. மணமே ஆகாத அவன் வரவை மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கும் குடும்பங்கள் பல. அதற்கேற்றபடி பணிமனையில் எண்ணும் இலக்கமும் தவிர எதுவும் அறியாதவன் போல இருக்கும் அவன், நண்பர் இல்லங்களில் போனால் ஊர்ச் செய்திகள் எல்லாவற்றின் பட்டியல்களையும் விரிந்து அளப்பான். எல்லாக் குடும்பத்தின் வரலாறுகளும், இலண்டன் நகரத்தின் பழைய, புதிய செய்திகள் யாவும் அவனுக்குத் தலைகீழ்ப் பாடம். ஆனால், அதேசமயம் நட்பு முறையில் செய்யும் கேலி தவிர, வேறு எதைப்பற்றியும் எவரைப் பற்றியும் அவன் அவதூறாக எதுவும் சொல்வதில்லை. எவன்ஸூக்கு அடுத்த படியிலுள்ளவன் தாமஸ் டேம். அவன் உருவம் இன்னும் குனிந்துகொண்டிருப்பது போலவே காட்சியளிக்கிறது. அவன் தோற்றம், உலகின் எவரும் தன்னால் பார்க்கத்தக்க உயர்வுத் தகுதியுடையவரல்லர் என்ற குறிப்புடைய தாயிருந்தது. நடையும் அதுபோலவே. அவன் எவருக்கும் ‘ஆம்’ ‘இல்லை’ என்ற ஒற்றைச் சொற்களுக்குமேல், மிகுதி பேச்சுக்கு இடம் வைப்பதில்லை. சைகைகள் மூலம் கருத்தறிவிப்பதில்கூட, அவன் வழி ஒரு தனி வழி. பிறரைப் போல முகத்தைப் பயன்படுத்தி அவன் சைகை செய்வதில்லை. தோளசைப்பும், குலுக்கும், உடலைத் திருப்புவதுமே அவனுக்குப் போதிய சைகைகளாயிருந்தன. இவ்வளவு இறுமாப்புக்குக் காரணமாக அவனிடம் எதையும் குறிப்பாகக் காண்பதற்கில்லை. அவன் ஆடைகள் வருந்தித் தூய்மையாகவும் நாகரிகமாகவும் அணியப்பட்டிருந்தாலும் அவை. அவன் செல்வ வளமின்மையை எடுத்துக்காட்டாமலில்லை. அவன் குடும்ப மரபிலும் என்றும் செல்வ நிலையோ, வேறு கல்வி உயர்வோ, குடிப்பிறப்பு உயர்வோ இருந்ததாகத் தெரியவில்லை. அவன் இறுமாப்பின் காரணத்தை இவை எதிலும் காண முடியாது. அவன் மனைவியிடம்தான் காண முடியும். அவன் ஆடையைவிட அவளது கல்வி உயர்வுடைய தாகவே இருக்கும். அவனிடம் அவள் நடந்து கொள்வதைப் பார்த்தால், அவள் அவன் குடிசைக்கு இறங்கி வந்த வேறுலகப் பெண்ணோ என்று தோன்றும், அவனும் அங்ஙனமே அவளை நடத்தி வந்தான். அவளுக்குச் செல்வம் எதுவும் இல்லையாயினும், வறுமையிடையிலும் குடியுயர் வுடையவள் என்ற தொனிப்பு இருந்தது. கணவனும் இம் மதிப்பில் பெருமை கொண்டு அவ்வுயர்வைப் பேணுவதற்காகத் தன் வாழ்க்கையைச் சுருக்கிக் கொண்டான். அவன் இறுமாந்து நடந்ததெல்லாம், அவளால் தனக்குக் கிடைத்ததாக அவன் எண்ணிய உயர்குடிப் பெருமை யைக் காக்கவே, அன்பு கனிந்த வாழ்க்கை இன்பத்தால் மணமான இளைஞருக்கு ஏற்படும் அமைதியைவிட மிகுதியான மன நிறைவை நடுத்தர வயது கடந்தும் அவன் மனைவியின் உயர்குடிப் பெருமை அவனுக்கு அளித்திருந்தது. யாருக்கும் எந்தக் கெடுதிக்கும் இடமில்லாமலே, இந்தச் சிறு இறுமாப்பு இம் மணவாழ்க்கைத் துணைவர் களின் குறைந்த வாழ்வினுக்கு நிறைவு தந்தது. பணமும் கல்வியும் பணி உயர்வும் எதுவும் பலருக்கு இச் சிறு பயனைத் தரவில்லை என்பதைப் பார்க்க, இவ் விறுமாப்பு ஒரு நற்பண்பு என்றே கூறலாம். மூன்றாவது, கழக உயிரோவியம் கணக்கன் ‘ஜான் டிப்’ பின்னுடையதே. இவனிடம் குடிப்பெருமையோ, செல்வப் பெருமையோ எள்ளளவும் கிடையாது. ஆயினும், இவ் வெல்லா இறுமாப்பையும் விஞ்சிய ஓர் இறுமாப்பு அவன் உள்ளத்தை நிறைத்தது. உலகிலேயே கணக்கையும் கணக்கரையும்விட உயர்ந் தவை எவையுமில்லை எனபது அவன் துணிந்த முடிவு. அக் கணக்கருள்ளும் ‘ஜான்’ டிப்’புக்கு ஈடும் இணையும் யாரும் இல்லை என்பதையும் அவன் அறிந்து வைத்திருந்தான். தன் பணித்துறையில் அவன் இவ்வளவு தற்பெருமை கொண்டிருந் தாலும், அதற்குப் போட்டியான இனப் பொழுதுபோக்குத் துறையும் அவனுக்கு இல்லாமலில்லை. இசை நுட்பங்கள்கூட அவன் குரல் எழுப்ப முடியாமலும் இருக்கலாம். ஆனால், அவன் ஒரு தனிப் பாதையமைத்துத் தன் பொதுப் பயிற்சியினால் அதையே தன் இன்பத் தொழிலாகக் கொண்ருந்தான். அவனுக்குக் குடும்பமென்று ஒன்று இருந்திருந்தால், இப்பயிற்சியால் தொல்லைப்படுபவரும் இருந்திருப்பர். ஆனால், யாழே அவனுக்குக் குடும்பமாயிருந்தது. உயிரில்லாத அக்கருவி அவனது திறமையின்மையை ஒரு சிறிதும் எடுத்துக்கூற முடியாததன்றோ? ஆகவே, அது அவனுக்கு ஒப்பற்ற குடும்பத் துணையாயிற்று. அவன் வாழ்க்கை முறையில் மற்றோர் அருமை இக்குடும்ப வாழ்வையும் அலுவலக வாழ்வையும் அறவே ஒட்டின்றி அவன் பிரித்து வகுத்துக் கொண்ட வகுப்பேயாகும். அலுவலகத்துச் சுவர் தாண்டி உள்ளே வந்துவிட்டால் அவன் அலுவலக இருக்கைகளில் ஓர் இருக்கை ஆய்விடுவான். கணக்குகளில் அவன் ஒரு கணக்கு; இலக்கங்களிடையே அவன் ஓர் இலக்கம். அயர்ந்து மறந்துகூட ஒரு பாட்டோ, ஒரு இன்பப் பொழுது போக்கோ, ஒரு சிறிது ஓய்வோ அவனை அணுகாது. இன்பம், சிரிப்பு, ஓய்வு ஆகியவை அவன் அலுவலக உலகத்தில் எட்டிப் பார்க்காது. ஆனால், அலுவலகம் விட்டால் அவன் இடையே வேறு எந்த உலகிலும் தொடர்பு கொள்வதில்லை. நேரே தன் இசையுலகாகிய இல்லம் சென்று விடுவான். அதன்பின் பணம், காசு, கணக்கு ஆகியவற்றின் நினைவே அவனுக்குக் கிடையாது. எல்லாம் ஒரே இசைப்பயிற்சிதான். பாடுவதையன்றிப் பாடலைக் கேட்கக்கூட அவன் விரும்புவதில்லை. இந்நிலையில் இசை அவனுக்கு ஒரு கலையன்று, ஒரு விடுதலை என்றுதான் கூற வேண்டும். அலுவலகத்தில் ஒரு கருவியாய் வாழ்ந்த அவன், இங்கே தன் கட்டுப்பாட்டைக் கழற்றி வைக்க மட்டுமே இவ்விந்தைக் ‘கலை’ அவனுக்கு உதவிற்று என்னலாம். ‘ஜான் டிப்’பின் இக்குறுகிய வாழ்வின் மர்மம் யாது? இவ்விரு சிறு உலகங்களுக்கு வெளியே அவன் ஏன் காலடியெடுத்து வைப்பதில்லை? இதன் விளக்கம் கடுமையன்று. அது அவன் கொண்ட ஒரு தற்காப்பு முறை. வாழ்வு அவனுக்கு ஒரு சுமை. அவன் அதில் இன்பத்தை நாடவில்லை; துன்பத்திற்கு இடங் கொடாமலிருக்க மட்டும் விரும்பினான். இக் காரணத்தால் அவன் யாருக்கும் துன்பந்தர விரும்பவில்லை. எந்தத் துறையிலும் துன்பம் வராமலிராது என்பதை அவன் அறிந்திருந்தான். தான் எது பேசினாலும், அதனால் யாராவது புண்பட்டு எதிர்க்கக்கூடும். எங்கே சென்றாலும், ஏதேனும் ஓர் இடையூறு நேரக்கூடும். வந்தபின் காக்க முயல்வது பேதைமை. ஆகவே வருமுன் காப்பில் அவன் முனைந்து, தீமைகட்கே இடமற்ற ஒரு வாழ்க்கையை வகுத்துக்கொண்டான். அவன் நாடகமேடையையே கண்டதில்லையென்பது மட்டுமன்று. அதை நினைத்தது கூடக் கிடையாது. மலை ஏறியது கிடையாது. ஆற்றங்கரையோரம் சென்றது கிடையாது. கையில் துப்பாக்கியைத் தொட்டதே கிடையாது. துப்பாக்கியுடன் நிற்கும் ஆளைக் கண்டால், காணாதது போலவே போய்விடுவான். பெரும்பாலும், அவசியம் நேர்ந்தாலன்றி, அவன் மாடிப்படிகளில்கூட ஏற மாட்டான். ஆனால், இத்தனை எதிர்மறைப் பண்புகளினாலும், அவனுக்கு எந்தக் குறையும் நேர்ந்துவிடவில்லை. நன்மையும் தீமையும் அவனை நாடாமலேயே இருந்ததால், அவன் மொத்தத்தில் நற்பெயருடனேயே வாழ்க்கைச் சடங்கை நடத்திக் கழித்து விட்டான். தீமைக்கு அஞ்சி நடப்பவர்களுக்கு வானுலகில் இடமுண்டென்றால், அதில் முதலிடம் அவனுக்குத்தான்! கடைசியாக, மறக்கமுடியாத தோற்றம் நகைச்சுவை விகடன், கவிஞன், நூலாசிரியன் ஆகிய எல்லாத் துறைகளுக்கும் தென்கடற் கழகத்தின் ஒரே பிரதிநிதியாயிருந்த ஹென்றி மான் ஆவன். ஆம்! யாரை மறந்தாலும் ஹென்றி மான், நான் இன்று உன்னை மறக்க முடியாது. ஏன்? குமிழியாய்விட்ட கழகத் திடையேகூட, நீ இன்று ஒரு பெருங் குமிழியாகத்தான் சுழன்று சுழன்று பொலிவுடன் தோன்றுகிறாய். நீ அலுவலகம் வரும் போதும் ஒரு வெடிப்பு, போகும்போதும் ஒரு வெடிப்பு. தனிப்பண்பும் தனி உணர்ச்சியும் எதுவும் அற்ற எங்கள் கழகக்குழுவில், நீ ஒருவன் இல்லாவிட்டால் எங்கள் வாழ்வும் ஒரே கசப்பாகத்தான் போயிருக்கும். நீ பேசிக் களித்த நகைத் துணுக்குகளன்றி, உலகில் பிற்காலத்தார் துய்க்கட்டும் என்று உனக்கு ஓய்வில்லாமலேயே உழைத்து எத்தனை எத்தனையோ எழுதிவைத்தாய். உன் நகைமுகமும் நகைத்துணுக்குகளும் இன்று மறைந்தன. நீ தொகுத்த நகைத்துணுக்கு ஏடுகள்கூடப் பிற்காலத்தவர்க்குப் பயன்படா என்று எண்ணுகிறேன். அண்மை யில்தான் நான் இரண்டு ஏடுகளைக் கண்டெடுத்தேன். எனக்கு அவை முன்போல் காரமும் மணமும் சுவையும் உடையனவாகவே இருந்தன. ஆனால், காலமாறுதலிடையே உன் பெயர் மறக்கப் பட்டுவிட்டது. புதிய எழுத்தாளர்களைத் தேடியலையும் புத்தக உலகம், உன்னை எங்கே கண்டெடுக்கப் போகிறது? ஆனால், என் உலகத்திலும், குமிழியின் ஆவி உலகத்திலும், உனக்குப் போட்டி யிருக்க முடியாது. இன்னும் என் ஓவியக் கலைக்காக வந்து இரண்டு உருவங்கள் தான் காத்து நிற்கின்றன. ஒன்று புளூமர். புளூமரின் பெருமையில் முக்கால் பகுதியும் அவன் பேர் பெற்ற ஹெர்ட்போர்டு ஷயர் புளூமர் குடியைச் சார்ந்தவன் என்பதைப் பொறுத்ததே. அவன் அதன் நேருரிமை மரபினனுமல்லன்; அணிமை உறவினனுமல்லன். ஆனால், புளூமர் எப்படியோ உறவுக் கணக்குகளிட்டு, இன்றைய புளூமர் பெருங்குடியிலிருந்து நூலாசிரியர் வால்டர் புளூமர்வரை, தன் குடிமரபைக் கொண்டுபோய் இணைத்து விடுகிறான். ஆனால், மரபு இவ்வளவு பெரிதாய் இருந்தாலும், அதனால் புளூமரின் நடையுடைகளில் எத்தகைய தருக்கும் செருக்கும் கிடையாது. அவன் எல்லாருடனும் நன்முகமுடையவனாகவே நடந்து வந்தான். அவன் நல்லிசையுடன் பாடி எல்லாரையும் மகிழ்விப்பதும் உண்டு. பாட்டு என்றவுடன் கழகத்தவர் எவராலும் புளூமரிலும் பன்மடங்கு மதிக்கத்தக்கவன் குணத்தில் எளியவனும், பண்பில் இனியவனும், எல்லார் அன்பிற்கும் உரியவனுமான ம-என்பவனே. அவன் ஒரு குயில்; கழகமெல்லாம் அவனுக்கு ஒரு தேமாஞ் சோலை. ஆனால், மற்ற எல்லாருக்கும் பெருமை தந்த குடிமரபு அவன் வாழ்க்கையைக் குடிப்பதாயிருந்தது. வேனில் வேள் போன்ற இவ்வினிய கவிஞனைப் பெற்றெடுத்த தந்தை ஒரு இரக்கமற்ற கோயில் பொறுப்பாளர். புயலின் வயிற்றில் பிறந்த தென்றலாகவே அவன் காட்சியளித்தான். ஆனால், புயலில் பிறந்த தென்றல் புயலிலேயே மடிந்தது. குடும்பத் தொல்லைகளையும் தந்தையின் கடுமையையும் தாங்கமாட்டாமல் அவன் தன் இன்னுயிரை இளமையிலேயே இழந்தான். என்னுடன் நேரடியாகப் பழகிய கழகப் பணிக்குழுவின் தோழர்கள் இவர்கள். இன்னும் எத்தனையோ உருவங்கள் தெளிவற்ற நிலையில் என் கண்முன் நிழலாடிச் செல்கின்றன. ஆனால், அவற்றை எழுத்தோவியமாகத் தீட்டத்தக்க அளவு அவை தெளிவாயில்லை. எப்படியும் நான் தீட்டியவற்றிலிருந்தே கழக வாழ்வு தீமையற்ற பழங்கால வாழ்வின் ஒரு நல்ல முனிமுகம் என்பதைக் காணலாம். வாசக அன்பரே! எனது ஓவியங்களைப் பார்த்து அவற்றின் தொடர்புகளை ஆராய்ந்துகாண முயல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். பெரும்பாலும் நான் கூறிய பெயர்களை இன்றோ, என்றோ எவரும் காணமுடியாமல் போகலாம். ஏன்? அவர்கள் கற்பனைப் பெயர்களாயிருக்கலாம் அல்லவா? ஆனால், நான் கூறியவை யாவுமே முழுக் கற்பனையல்ல. அவை கழக வாழ்வில் எனக்குக் கிட்டிய உள் அனுபவத்தைப் பிறருக்கு எடுத்துக்காட்ட ஓரளவு உதவும் சின்னங்களேயாகும். 2. எங்கள் பள்ளி வாழ்வு முப்பது ஆண்டுகட்கு முற்பட்ட எங்கள் இளமைக் காலப் பள்ளி வாழ்வு பற்றி ஒன்றிரண்டு ஆண்டுகட்கு முன் என் நண்பர் திரு. லாம்1 ஒரு கட்டுரை வரைந்திருந்தார். அப்பள்ளியில் அவர் நிலை என் நிலையிலிருந்து வேறுபட்டதன்று. பள்ளி பற்றி அவர் காட்டும் ஆர்வத்தில் எனக்கும் பங்கு உண்டு. ஆகவே, அதனை நன்கு சித்திரித்துக் காட்டிய அவருக்கு என் நன்றி. ஆனால், அதே சமயம் ஓர் உண்மையை என்னால் முற்றிலும் வெளியிடாதிருக்க முடியவில்லை. கி. ஆ. பள்ளி பற்றி நன்மையாக எதையெல்லாம் கூறமுடியுமா அதை ஒன்று விடாமல்- சற்று மிகைப்படுத்திக்கூட- அவர் கூறிவிட்டார். ஆனால், சிறு குற்றங்குறைகளை- வெளியிடு வதனால் கேடில்லாத சிறு குற்றங்குறைகளைக்கூட- அவர் வெளிப்படுத்தாமல் சித்திரத்தின் வாய்மையைக் கெடுத்திருக் கிறார். அவ்வாய்மையின் இருபுறத்தில் ஒருபுறம் மறைத்து வைக்கப்பட்டு விட்டது. அதில் சில கூறுகளைத் தீட்டுவதற்கு அவர் என்னை மன்னிப்பார் என்று எண்ணுகிறேன். முதலில், திரு. லாமுக்கே முற்றிலும் கூறமுடியாத ஒரு செய்தி. இது உணவு முதலிய சிறு வகைகளைப் பற்றியது. இவ் வகையில் மற்ற மாணவர் எவருக்கும்2 (என் போன்றவர்க்கு ஒரு சிறிதுகூட) இல்லாத கி. ஆ. மாணவர்கள் பிறரோ, என்போன்ற பஞ்சை ஏழைகளோ என்னென்ன உணவு வகைகளை உண்டோம், என்னென்ன படுக்கை இருக்கை சார்ந்த தொல்லைகளை நாங்கள் நுகர்ந்தோம் என்பதை அவர் அறிய முடியாது. உண்மை யாதெனில், அவருக்கு நகரத்துக்குள்ளேயே நல்ல நிலையிலுள்ள ஒரு உறவினர் வீடு இருந்தது. வேறு உற்றார் உறவினரும் அவருக்கு நகருக்குள்ளேயே உண்டு. ஆகவே அவர் எப்போது வேண்டு மானாலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், பள்ளிவிட்டு வெளியே போகவும் வரவும் வழியிருந்தது. இது மட்டுமோ? எங்களுக்கெல்லாம் பச்சை நீரில் நனைத்த ஒரு கால் துண்டு உலர்ந்த அப்பம்தான் காலையில் தரப்படும். அவருக்கோ உயர்ந்த- சூடாறாத- தாள் சுருள் அப்பம்- அதுவும் ஒரு முழுச்சுருள் கிடைக்கும். அது போதாதென்று ஒரு கோப்பைப் பால் வேறு. திங்கட்கிழமைப் பால் கஞ்சியில் பாலும் தண்ணீர்தான்- கஞ்சியி லுள்ள தண்ணீருடன் கலந்து அது வெறும் தண்ணீராகத்தான் இருக்கும். சனிக்கிழமைச் சூப்பியின் நிறமும் இந்தப் பாலின் நிறமாகத்தான் இருக்கும். இந்த இரண்டு நாட்களிலும் இவற்றை அவர் உட்கொண்டாலும் உட்கொள்ளலாம், உட்கொள்ளாது வேறு யாருக்கேனும் ‘தானம்’ வழங்கினாலும் வழங்கலாம். ஏனெனில், அவருக்கு மட்டும் அந்நாட்களில் தனிச்சிறப்புமிக்க உயர்தரச் சூட்டப்பமும் வெண்ணெயும் அருளப்படும். மற்ற நாள் உணவுகளையும் மணப்படுத்த இஞ்சி, ஏலம், இலவங்கம் ஆகியவையும், சுவைப்படுத்த மிளகுப் பொடி, ஊறுகாய், வற்றல் ஆகியவையும் அவருக்கு வரும். இத்தகைய சலுகைகள் அவருக்கு எப்படிக் கிடைத்தன என்பது எனக்குத் தெரியாது-அக்காலத்தில் இளைஞராயிருந்து உயர்வு பெற்று, இன்று முதுமையில் உதவிப் பொருளாளராயிருக்கும் பெரியாரைக் கேட்டால், ஒரு வேளை சொல்லக்கூடும். ஆனால், என்னால் ஊகிக்க முடியா தென்றில்லை. அவர் உறவினர் செல்வாக்கின் மூலம் இச்சலுகைகள் கிடைத்தன. அத்துடன் இப்பொருள்களையும் அவ்வுறவினருள் ஒருவரோ மற்றொருவரோ அடிக்கடி அவருக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்! அவருக்கு அடிக்கும் யோகத்தைக் கண்டு அக்காலத்தில் யாவருமே பொறாமைப்பட்டனர். தொலையூரிலிருந்து வந்து உறவினர் எவருமில்லாமல் அங்கே படித்த ஏழைச் சிறுவனான என் பொறாமையைக் கேட்பானேன்! எனக்குப் பள்ளியிலும் நண்பர் குறைவு; வெளியிலும் நண்பர் குறைவு. என்னைப்பற்றிக் கவலையெடுத்துக் கொள்ளக் கூடியவர்கள் உலகிலேயே என் பெற்றோரும், ஒரு சில உறவினருமே ஆவர். ஆனால், அவர்கள் இருந்தது தொலை நாட்டில். அவர்கள் செல்வராயில்லாததால், அவர்கள் செல்வாக்கு இந்நகர் வரை எட்டுவதில்லை. தொடக்கத்தில் அவர்கள் கொடுத்த நகரத்து நண்பர்களின் அறிமுகக் கடிதங்களைப் பயன்படுத்திச் சிலரைப் போய்ப் பார்த்ததுண்டு. அவர்கள் முதலில் சிறிது தலையசைத் தார்கள். அதன் பின் நான் எப்பொழுது போனாலும் ‘என்னடா, ஓயாமல் பள்ளியை விட்டு வெளியே வருகிறாய்’ என்பார்கள். நான் போக இடம் பெறுவது ஒன்றிரண்டு வாரங்கள் விட்டுத் தான். பார்த்தவரையே திரும்பப் பார்ப்பது பல மாதங்கள் விட்டுத் தான். ஆனால், அதையே அவர்கள் ஓயாது வருதல் என்று கூறி விட்டார்கள். எனக்குக் கிடைத்த அச்சிறு விடுதலையை அவர்கள் தமக்கு வந்த ஒரு பெருந்தொல்லையாக எண்ணினார்கள். அந்தோ! சின்னஞ் சிறு பிள்ளைகள் தாய் தந்தையரை விட்டுத் தொலைவிலிருக்க நேருவது எத்தனை கொடுமை, கொடுமையினும் கொடுமை! பகலில் உள்ளூரப் புழுங்கும் என் ஏக்கம் இரவு வேளைகளில் சிறகு விரித்துக் கனவுக் காட்சிகளாய்ப் பறக்கும். என் இளமைக் காலத் தோற்றங்கள்- என் சிற்றூரும் அதன் சிறு கோயிற் கோபுரமும் குடிசைகளும், என் ஊர்ப் பெரியார் சிறியார் இன் முகங்களும் வந்து என் கனவுள்ளந் தழுவும். அவர்களிடம் என் ஆற்றா நெடுந்துயரைக் கூறு முறையிலோ என்னவோ, நான் அலறி எழுவேன்! அந்தோ, மீட்டும் பகலிலுள்ள அதே காட்சியும் கோலமும் என் கண்கள் முன் வந்துநிற்கும்! கனவின் விளைவு, இவ் ஏக்கம் அழுகையாக மாறுவதே. பள்ளியை நினைத்து அச்சம்; என் ஊர் ஆகிய ‘காலனி’யை நினைத்து வெப்பம்; இவற்றிடையே என் பள்ளி வாழ்வுக்காலம் சென்றது. அந்தோ கொடிது, கொடிது ஏழ்மை; அதனினும் கொடிது ஏழைச் சிறுவனின் பள்ளி வாழ்வு; யாவற்றினும் கொடிது அப்பள்ளி வாழ்வின் தொலைவு! பள்ளி நாட்களெல்லாம்தான் எனக்குத் துன்பமய மென்றால் விடுமுறை நாட்களைப் பார்க்க அத்துன்பம் தானும் கேடில்லை என்று கூறத்தக்கதாயிருந்தது. ‘அரை’ ‘கால்’ விடுமுறை நாட்களை எப்படியோ கழித்துவிடுவேன். முழு விடுமுறை நாட்களில்தான் புதுத்தொல்லை. அன்றுதான் நாங்கள் பள்ளிக் கட்டுப்பாடு விட்டு நகரில் நண்பர்களுடன் கூடிப் பொழுது போக்க வேண்டும். உண்பது, உடுப்பதுமுதல் அன்று அவரவர் காரியம்தான். இதில் என் நிலைமையை யார் கண்டார்கள்? எனக்கு நேரம் போக்குவதற்கு எந்த நண்பர்கள் இருந்தார்கள்? விளையாட்டுச் செய்தியே இப்படியிருக்க, உணவும் தங்கிட வசதியும் யார் அளிப்பார்கள்? வேறு வழியின்றி நான் பள்ளியைச் சுற்றிச் சுற்றித்தான் திரிவேன்; பணியாட் களுக்கு இச்சகம் பேசியே, நான் எதையும் பெற்றாக வேண்டும். இதெல்லாம் தனிப்பட்ட இன்னல்கள் என்று கூறலாம். இவற்றைத் திரு. லாம் முற்றிலும் உணரக்கூடாதது இயல்பே. ஆனால், இவற்றினும் புரளியான ஒரு செய்தியை அவர் வண்ண எழுதுகோல் தீட்டியுள்ளது. ஆற்றில் சிறப்பு முழுக்கு நிகழ்த்தும் நோக்குடன் நாங்கள் பள்ளியிலிருந்து சென்ற உலாக்குழு பற்றி அவர் தம் காவிய ஆற்றல் முழுதும் காட்டி வரைந்துள்ளார். மிக நன்று. ஆனால், நானறிய திரு. லாம் நீந்துவதும், ஓடத்தில் மகிழ் வதும், கூடியாடி நகையாடுவதும் எல்லாம் காவியத்தில்தான்: காரிய உலகில் அவர் ஒரு வீட்டுப் பூனை! ஆனால், இரண்டு பொய் ஒரு மெய் ஆகக் கூடுமானால், அவர் தாம் அனுபவி யாததைக் கூறும் இக்கற்பனை வர்ணனை எங்கள் உண்மை அனுபவத்தை முற்றிலும் வாய்மையுடன் வெளிப்படுத்தாம லில்லை. அதை வாசிக்கும்போதே எனக்கு அன்றிருந்த மகிழ்ச்சி அனுபவம் மீண்டும் வந்து விடுகிறது. ஆம், அத்தருணங்களில் நானும் எவ்வளவு என்னை மறந்து பிறருடன் களித்திருந்தேன்! வழியில் வயல் வரப்புக்களில் நாங்கள் எவ்வாறு ஊடாடுவோம்! பள்ளி வாழ்வின் உறை உள்ளுறைகளை யெல்லாம் வேனிற்காலக் கதிரவன் எங்களைக் கண்டுகளிக்க, எப்படி ஒன்றொன்றாகக் கழற்றி எறிவோம்! ஆற்று நீரில் நாங்கள் நெளிந்த நெளிவைக் கண்டு அதிலுள்ள வாளை மீன்களும் விலாங்கு மீன்களும் எவ்வளவு வியப்படையும்! பசியின் சுவையும் அன்று ஒரு தனிதான். உணவு அன்று வழக்கத்துக்கு மேற்பட்டதாயிருந்திரா விட்டாலும், அது அமுதமாகவே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. எங்களைச் சுற்றி அச்சமயங்களில் ஆடு மாடுகளும் கன்று களும், பறவைகளும் பூச்சிகளும் சுற்றியோடி இரையயிர்ந்த வண்ணமாயிருக்கும், அன்று நான் என் பள்ளி வாழ்வின் கடுமை களை மறந்து, அவற்றின் கவலையற்ற வாழ்வுடன் ஒன்றுபட்டு விடுவேன். ஆனால், மாலையானதும், வழக்கமான வாழ்விலுள்ள இம் மின்னல் மறைத்துவிடும். வேனிற்காலத்தில் பள்ளிக்கு வெளியில் ஓர் உலகம் உண்டு. பனிக்காலத்தில்- அதிலும் கடும் பனிக்காலத்தில்- எனக்கு அந்த உலகம் கிட்டுவதில்லை. நான் மட்டுமன்று, என் தோழர்களில் சிலரும்கூட அச்சமயம் வெள்ளி படர்ந்த நகர்த் தெருக்களி னூடாகக் கை கால் நடுக்கத்துடன், பற்கள் கடகடவென ஆட்டங் கொள்ள அலைந்து திரிவர். புத்தகக் கடைகளின் காட்சிப் பல கணிகளின், பகட்டான கண்ணாடிக் கதவுகளூடாக முன்பார்த்த காட்சிகளையே மீண்டும் மீண்டும் பார்த்துச் செல்வதில்கூட, அச்சமயம் எவ்வளவு ஆர்வம்! பள்ளி வாழ்வின் ஒரு முறை பற்றி- சாட்டையடி பற்றி திரு. லாம் எதுவும் கூறவேயில்லை. அவர் ஏன் கூறப்போகிறார்! அவர் செல்வர் வீட்டுப்பிள்ளை. அவர் கேட்டது கேட்டதெல்லாம் வீட்டில் மட்டுமல்ல. பள்ளியிலும் அவருக்குக் கிடைக்கும். அவரோ என்றும் சாட்டையடி வேண்டும் என்று கேட்டதில்லை. அதன் சுவையை அவர் பார்த்ததும் கிடையாது. ஆனால், நானோ?- என் செய்தி வேறு! என் உடலில் ஒவ்வோருறுப்பையும் தனித்தனி கேட்டால், அவை தனித்தனி கட்டுரைகள்கூட எழுதும். ஒன்றை மட்டும் நான் இங்கே கூறுகிறேன். ஒரு தடவை நள்ளிரவில் நான் படுக்கையிலிருந்து எழுப்பப்பட்டேன். மிக அவசர அவசரமாக, எதற்கு? அன்று படவேண்டிய அடிகளைப் பெறுவதற்கு! அதைப் பெற நள்ளிரவில் ஏன் எழுப்பவேண்டும்? வேறு நேரமில்லையா? அதற்கு முந்திய நாள் விழா நாளானதால் சாட்டையடி கொடுக்கும் சட்டாம் பிள்ளைக்கு நிறைய வேலை இருந்ததாம். மறு நாளைக்கோ சாட்டையடிப் பேரேட்டில் புதுப்பக்கம் திறக்க வேண்டும். நாள் முடியுமுன் நாட் கணக்குத் தீரவேண்டுமே! நள்ளிரவில் நாள் முடிவுற்று மறுநாள் தொடங்கி விடுகிறது. அதனால்தான், நள்ளிரவில் எழுப்பி அடிக்கணக்கைத் தீர்த்துக்கொண்டார்கள்! பல சமயம் நாங்கள் இத்தகைய அடிக்கு அஞ்சிப் பனி யென்றும் பாராமல், மழையென்றும் பாராமல் அலைந்து திரிந்த துண்டு. ஆனால், அதனால் அடிக்கணக்குத் தப்பவில்லை. அது வட்டியுடன் சேர்த்து இறுதியில் தரப்படவே நேர்ந்தது. இதேசமயம் பள்ளிக்கூடத்தின் இரும்புக் கட்டுப்பாடு களுக்கும் பல தடவை நாங்கள் ஆளாக நேர்ந்தது. பகலெல்லாம் சுற்றியலைந்து நொந்து புண்ணான காலுடனும், வேகும் உடலு டனும் படுத்த எங்கள் உதடுகள், ஒரு துளி குளிர்ந்த நீருக்குத் துடியாய்த் துடிக்கும்! ஆனாலும் நாங்கள் அதைப் பொறுத்து உருளுவோம்- எழுந்து நீர் குடிக்க மாட்டோம். பள்ளிக் கட்டுப் பாட்டின்படி அது நீர் குடிக்கும் நேரமன்று; குடித்தால் அதற்கான அடிபட வேண்டும் என்ற அச்சம் நீர் வறட்சியையும் அடக்குவதாயிருந்தது. எங்கள் சட்டாம்பிள்ளை திரு அ... அவர் ஒரு சிறு நீரோ3 தான். (இவர் பின்னாட்களில் வெளியுலகில் கப்பலோட்டியா யிருந்தது, அங்கும் ஏதோ கொடுஞ்செயல் செய்து தண்டனை பெற்றதாகக் கேள்வி. அணிமையில் கொடுஞ் செயல்களாற்றிய அதே பெயருடைய ஒரு பெரும் பண்ணை முதலாளி குற்றவாளி யாய்த் தூக்கிலிடப்பட்டதாக அறிகிறேன். அது பெரும்பாலும் இதே பேர்வழியாகக்கூட இருக்கலாம் என்று எண்ணுகிறேன்). பள்ளியில் அவர் ஒரு சிறுவனைப் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சுட்டுவிட்டார். அவர் பிரிவில் சேர்ந்த எங்கள் நாற்பது பேர்களின் பங்குக்கு வரும் உணவுப் பொருளைப் பல நாளாக இவர் பாதி யாக்கியது கொடுமையிலும் கொடுமை. இது வேலையாட்களில் அவருடன் நட்பாயிருந்த ஒருவர் அவர் சலுகையுடன் செய்த செயலென்பது நெடுநாள் பிந்தித்தான் தெரியவந்தது. அது தானாகக் கண்டுபிடிக்கப்படும்வரை நாங்கள் யாரும் எதுவும் வெளியிடத் துணியவில்லை- அதே சாட்டையின் அச்சம்தான்! திரு. லாம் மறைத்த சின்னஞ் சிறு செய்திகளையெல்லாம் நான் கூறிக்கொண்டிருக்கப் போவதில்லை. ஒரே ஒரு சிறு செய்தியை- அவர் மறைத்த சிறு காவியமொன்றை மட்டும் கூறிவிடுகிறேன். பள்ளி மாணவர் எவருக்குமே மணற்பிட்டு என்றால் பிடிக்காது என்பதை அவர் குறித்துள்ளார். (மணற் பிட்டு என்றால் மணலால் செய்த பிட்டு என்று நினைத்து விடாதீர்கள்! அது மணல்போலிருக்கும். ஆனால், பிள்ளைகள் அதை மணலைத் தின்பது போலத்தான் வெறுத்தார்கள்). ஆயினும், அந்தப் பிட்டையும் ஒருவன் தொடர்ச்சியாகப் பல நாள் திருடியதும், அதற்காக அவன் தண்டனை பெறுவதற்கு மாறாகப் பரிசு வழங்கப்பட்டதும், எங்கள் பள்ளியின் மறக்கமுடியாத சுவைமிக்க கதை. சுவை மிக்க காவியம் எழுதப் புறப்பட்ட நம் லாம், இதை மட்டும் ஏனோ விட்டுவிட்டார்! எல்லாரும் மணற் பிட்டைத் தின்னமுடியாமல் முக்கி முக்கி உள்ளே தள்ளிக்கொண்டிருக்கையில், ஒரே ஒரு சிறுவன் மட்டும் ஒரு சிறிது கூட உட்கொள்ளாமல் தின்பதுபோல் பாவனை செய்துகொண்டிருந்து, கூடிய மட்டும் பிறர் கண்ணை மறைத்து, அதனை எடுத்துச் சுருட்டிக்கொள்வான். அதை அவ்வப்போது கண்டுகொண்ட சில தோழர்கள், அவன் அதைப் படுக்கையில் ஒளித்து வைத்துக்கொண்டு தின்றான் என்றார்கள். ஆனால், அவன் இராதபோது எங்கும் தேடியும் அதைக் காணமுடிய வில்லை. அந்த உலர்ந்த பிட்டைப் பின்னும் உலர்த்தித் தின்ன அது என்ன தின்பண்டமா? ஆகவே அவன் அதை எங்கோ கொண்டு கொடுக்கிறான் என்று சிறுவன் கூறினர். இன்னும் சிலர் அவன் அதைக் கொண்டுபோய் விற்று விடுகிறான் என்றார்கள். (அந்தோ பரிதாபம்! அந்தப் பிட்டை யாராவது விலை கொடுத்துக்கூடவா பெறுவார்கள்!) பொறாமை மிக்க தோழர்கள்- இத்தகைய செய்திகளில் கூடப் பொறாமை இடம்பெற்று விடுகிறது! - அவன் எங்கே போகிறான், யாரிடம் எதை மறைவாகக் கொண்டு கொடுக்கிறான் என்பதை உளவு காண அரும்பாடுபட்டார்கள். நெடுநாளாக ஒன்றும் அறிய முடியவில்லை. உளவாளிகள் உளவுத் திறத்தை விடச் சிறுவன் காரியத்திறம் பெரிதாகவே இருந்தது. ஏனெனில், அவன் பிட்டைத் தின்னாமல் சுருட்டிச் சென்றது மட்டும் தொடர்ந்து கவனிக்கப்பட்டே வந்தது. இறுதியில் உளவாளிகள் மிக வெற்றிகரமாக அவன் திருட் டையும், அதில் பங்கு கொண்டவர்களையும் கண்டுபிடித்து விட்டார்கள். நகரில் ஏழைகள் தங்கும் சேரியில் பல சந்து பொந்துகள் கடந்து, ஒரு பாதாள மூலையில் உள்ள ஒரு வீட்டில் நோயாளிகளாய்ப் படுத்திருந்த ஒரு தந்தைக் கிழவனும், தாய்க் கிழவியுமே, சிறுவனின் திருட்டுப் பிட்டை நாள்தோறும் வாங்கித் தின்று பிழைத்து வந்தனர். இந்தச் செய்தி யாவருக்கம் தெரிந்து போயிற்று. ஆனால், குற்றத்தின் கடுமை இதற்கு மேல் செல்ல முடியவில்லை. இப் பஞ்சைக் கிழவர்கட்கு அச் சிறுவன் இரக்கத் தால் கொடுத்திருக்க வேண்டுமே தவிர, விலை பெற்றிருக்க முடியாதென்பதை யாவரும் ஒத்துக் கொண்டனர். ஆயினும், பள்ளியின் இரும்புச் சட்டத்தில் குற்றம் குற்ற மாகவே தண்டிக்கப்படும் என்று யாவரும் எதிர்பார்த்தனர். ஆனால், பள்ளியின் இரும்புச் சட்டம் இந்த ஒரு தடவை எல்லாரையும் ஏமாற்றிவிட்டது. பள்ளி ஆசிரியர்கள் நேரே சென்று விசாரித்ததில், அப்பஞ்சை ஏழைக் கிழவர்கள் வேறு யாருமல்ல, அச் சிறுவனின் தாய் தந்தையர்கள்தான் என்றும், சிறுவன் இம் மணற் பிட்டைத் திருடிக் கொடுக்காவிட்டால், அவர்கள் முழுப் பட்டினிதான் என்றும் தெரியவந்தது. பள்ளியின் இரும்புச் சட்டம்கூட, நெஞ்சுருக்கும் இக்கதை கேட்டுக் கனிவுற்றது. சிறுவன் பெற்றோருக்காக எடுத்துக் கொண்ட பெரு முயற்சியையும், உறுதியையும் அவர்கள் போற்றிப் பள்ளியிலிருந்தே அவனுக்கு வேண்டிய ஆதரவுகள் செய்து கொடுத்தனர். பள்ளியின் கடுமைகள் பற்றி நான் கூறிய செய்திகள் பழங் காலச் செய்திகள். இக்காலப் பள்ளிகளில் அந்நிலைமை கிடை யாது. ஆனால், இக் கடுமைகளைப் கூறுவதால் எங்கள் பள்ளியின் பழங்கால நினைவுகள் கூட மதிப்புக் கெடமாட்டா- இவ்வொரு காரியமே அப்பள்ளியின் மதிப்பை முற்றிலும் உயர்த்தப் போது மானது. பள்ளி வாழ்வின் குறைபாடு ஒன்றே ஒன்றுதான்- பிள்ளைகளின் வறுமை, அறியாமை ஆகியவற்றில் பள்ளி அக் காலத்தில் போதிய கருத்துச் செலுத்தாதிருந்தது. இரண்டையும் அன்புடன் அனுதாபத்துடன் நீக்க முயற்சி எடுக்கப்படும் காலம் இது. இக்கதை அதற்கு ஒரு நல்ல தூண்டுதலாகவும் இருக்கும் என்று எண்ணுகிறேன். திரு. லாமின் காவியத்துடன் இவ்வியற்கைக் காவியத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்! அடிக்குறிப்புகள் 1. (தமிழாக்கக் குறிப்பு.) திரு. சார்லஸ் லாம், அவர் உடன்பிறந்தார் செல்வி மேரி லாம் ஆகியவர்கள் எழுதிய கட்டுரைகளின் தழுவல்கள்தான் இவை. ஆனால், திரு. லாம் இங்கே `ஈலியா’ என்ற புனைபெயரில் எழுதுவதால், அவ் வாய்ப்பைப் பயன்படுத்தித் தன்னையும், தன் கட்டுரையையும் நகைச்சுவை பொருந்த ஏளனம் செய்து இவ்வினிய கட்டுரை வரைய முடிகிறது. கூடிய மட்டும் அவ்வினிமை கெடாமல் காக்கவே அவர் குறிப்புப் பின்பற்றப்படுகிறது. குறிப்பிட்ட திரு. லாமின் கட்டுரை “சுநஉடிடடநஉவiடிளே டிக ஊhசளைவள’ ழடிளயீவையட” `கி.ஆ. பற்றிய நினைவுகள்’ என்பது. கி.ஆ. என்பது கிரைஸ்ட்! ஆஸ்பிட்டல் பள்ளி ஆகும் என்றும் காணலாம். 2. இது முதலியவற்றின் நகைத்திறம் காண்க. உண்மையில் இருவரும் ஒருவரே. 3 உரோமப் பேரரசருள் கொடுங்கோலன் என்று குடிகளால் வெறுக்கப்பட்டவன் நீரோ. குடிகள் வீடுகளைத் தீக்கிரையாக்கி, தீ கொழுந்துவிட்டெறியும் அழகை அவன் மாடியிலிருந்து சொகுசாகப் பார்த்து மகிழ்வானாம்! 3. இருவேறு இனங்கள்! நான் அறிந்த இன வேறுபாட்டுக் கொள்கையின்படி, மனித வகுப்பை இரு பேரினங்களாக- மற்றெல்லா இன, தேச, சமய, கட்சி வேறுபாடுகளையும் உள்ளடக்கிய இரு பெரும் பேரினங்களாகப் பகுத்தல் கூடும்- ஒன்று இரவல் வாங்கும் இனம். மற்றொன்று இரவல் கொடுக்கும் இனம்! ஆராய்ச்சிக்காரர்கள் கூறும் மற் றெல்லா மனிதவகை வேறுபாடுகளும்- காத்தியர், கெல்ட்டியர் ஆகிய வகை திரிபுகளும், பார்த்தியர், மீடியர், ஈளமியர் முதலிய மக்கட் பிரிவுகளும்- எல்லாம் இந்த ஒரே மூல வேறுபாட்டினுள் அடங்கும். உண்மையில் இதுவே மனித வர்க்கத்தின் மிகப் பழமையான, அடிப்படையான வேறுபாடாதலால், இது மற் றெல்லா வேறுபாடுகளுக்கும் உள்ளீடாகச் சென்று, அவ் வேறு பாடுகளை யெல்லாம் இரு கூறாகக் கூறுபடுத்தி, அவற்றின் மேற்புல்லீடான தன்மையைக் காட்டுவதாயுள்ளது. இரவல் வாங்குபவர், இரவல் கொடுப்பவர் என்ற வேறுபாடில்லாத இனம், தேசம், சமயம், கட்சி, கோட்பாடு- ஏன், குடும்பம்கூட- உலகத்தில் எங்கே இருக்கக்கூடும்? எந்த இனத்தவராயிருந்தாலும், தேசத்தவராயிருந்தாலும் பிற வேற்றுமைகளையெல்லாம் கடந்து, இரவல் வாங்குவோர் உயர்வும், அது கொடுப்போர் தாழ்வும் மிளிரவே செய்கின்றன. முன்னவர் நிமிர்ந்த உருவம், வீறு நடை, எளிய ஆதிக்க இறுமாப்பு ஆகியவை அவர்கட்கு மிகத் தெளிவாக இவ்வுலக ஆட்சியையும், பின்னவரின் பரந்து இளித்த முகமும், குன்றிய நடையும், எதற்கெடுத்தாலும் ஐயமுற்று அஞ்சும் அடிமை மனப்பான்மையும், எல்லாம் சேர்ந்து அதனிலும் தெளிவாக அவர்கட்கு ‘வேறொரு’ உலக ஆட்சியையும் தந்துள்ளன என்று கூறலாம். இரவல் வாங்குவோர் என்ற பெரிய இனத்தில்’தான் உலகின் புகழேணியின் உச்சியில் ஏறி நின்ற மனிதர் யாவரும் இருந்து ஆண்டுள்ளனர். ஆல்கிபியாடிஸ்- ஃவல்ஸ்டாஃவ்- ஸர் ரிச்சர்டு ஸ்டீல்- நம் காலஞ் சென்ற ஒப்புயர்வற்ற பிரின்ஸ்லி- ஆகியவர் காலத்தாலும், இடத்தாலும், தொடர்பாலும் எவ்வளவு வேறு வேறானவர்களானாலும், இப்பேரினத்துட் பட்டவரான தால் எவ்வளவு குடும்ப ஒற்றுமை போன்ற நெருங்கிய ஒப்புமை யுடையவர்களா யிருக்கிறார்கள்! இரவல் பெறும் இனத்தவர் கடவுளின் திருக் குழந்தை களாகத்தான் இருக்க வேண்டும்! அவர்கள் முகம் அன்றலர்ந்த செந்தாமரையை வெல்கிறது. செந்தாமரையைப் போலவே அதற்கும் கவலை சிறிதளவும் கிடையாது. தெய்வம் விட்ட வழி அவர்கள் வழி என்பதில் அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை! பணம் என்றால் (அதிலும் என் கைப்பணம், உங்கள் கைப்பணம் போன்ற பணம் என்றால்) அவர்களுக்குத் துரும்பிலும் கேடு- ஆனாலும் பணம் நம் போன்றவர்களை விட்டு அவர்களிடம் விரைந்து செல்லத் தவறுவதில்லை. ‘நீ’, ‘நான்’: ‘உனது’ ‘எனது’- ஆகிய பதங்களெல்லாம் முழு முட்டாள்தனமான வேறுபாடுகள் என்ற பாவனை அவர்கள் பணம் பற்றிய புறக்கணிப்பில் தொனிக்கிறது. அவர்கள் வகையில் அது சரிதான். இந்த ‘முன்னிலை’ ‘தன்மை’ இரண்டும் அவர்களிடம் போய் ஒன்றுபட்டுத் தஞ்சம் அடைகின்ற வைதாமே? ஆனால், அவர்கள் பெருமிதமான பொது உடைமை- அவர்களுக்குத்தான் பொது உடைமை, நமக்குக் கிடையாது- இதனை ஒரு வகை அரைப் பொதுவுடைமை என்ற கூறலாம். ஏனெனில், இப் பொதுவுடைமை தாழ்நிலமாகிய நம் போன்றவரிடத்திலிருந்து உயர் நிலமாகிய இப் பேரின நோக்கி மட்டும் பாயும். உயர் நிலத்திலிருந்து தாழ் நிலத்துக்கு வராது. நீரின் இயல்புக்கு இது நேர் மாறானது- ஆயினும், இதனைச் சமதர்மம் என்பது முற்றிலும் பொருந்தாது! ஆட்சியின் முழு இலக்கணமும் அமைந்த ஆட்சியாளர் நம் மேலினத்தவர்தாம். ‘இறை பிரிப்பவருள் மிகச் சிறந்த இறைவர் மக்களனைவரிடமிருந்தும் இறை பெறுபவர்களே!’ இது பொருள் நூலார் கூறும் இறை பிரிப்போர் இலக்கணம். இறைவர் இந்த இலக்கணத்தில் தவறினாலும் தவறலாம், இரவல் வாங்கும் இறைவர் இம்மியும் தவறமாட்டார்கள். அவர்கள் தம்மை நீங்கலாக மற்ற எல்லாரிடமும் இறை பிரித்து விடுவார்கள். அத்துடன் நம்மிடம் இறை பெற்றாலும், அதனால் அவர்கள் நம்முடன் சரிசமமாய் விடுவதுமில்லை. ஜெரூசலத்திலிருக்கும் ஏழை யூதன் உரோம் நகரிலுள்ள அகஸ்டஸூக்கு அவர் கேட்டதைவிடச் சற்று மிகுதியாகவே கொடுத்துவிட்டு, அவர் தயவு காத்து எவ்வளவு தொலைவிலிருப்பானோ, அதே அளவு தொலைவில்தான் நாமும் நம் பணத்தை அவர்கள் கேட்குமுன் கொடுத்துவிட்டு, மீண்டும் அவர்கள் எப்போது கேட்கத் திருவுளம் கொள்வார்களோ என்று காத்திருக்க வேண்டும்! இது மட்டுமன்று. அகஸ்டஸ் ஸீஸர்க்குரிய இறை பிரிக்க எத்தனை ஆட்கள், எத்தனை கெடுபிடி; வெளியில் ஆட்சிப் பகட்டுப் பகட்டினாலும் உள்ளுக்கு அவருக்கு எத்தனை தொல்லைகள், கவலைகள் இருந்திருக்கக்கூடும்! ஆனால், நம் மேலின ஆட்சியாளர் பொருள் கொடுப்பது போன்ற இன் முகத்துடன் பொருள் வாங்கும் கலை நயத்தை அப் பேரரசரிடம் எங்கே காணமுடியும்? அரசர் இறை பெறுபவர் கைப்பெறு சீட்டுக் கொடுக்க வேண்டும். கையொப்பம் இடவேண்டும். இவர் களுக்கோ எதுவும் தேவையில்லை. மேலும் அவர்கள் இறை பிரிப்புக்குக் காலமொன் றில்லை: இடமொன்றில்லை. அவருக்குத் தோன்றியதுபோது; அவர் நம்மைக் காணும் வாய்ப்புக் கிடைத்த போது, அவர் விரும்பும் முறையிலேயே கேட்டு, நம் விருப் பத்துடன் பெற்றுக்கொள்வார்! பூட்டும் திறவுகோலும் அடுத்த வீட்டு நன் மகனைத் தடைப் படுத்தும். திருடனைத் தடைப்படுத்த மாட்டா. பகற் கொள்ளைக் காரனுக்கு அவை ஒரு சிறிதும் தடையாக மாட்டா. வேண்டு மானால் வேறு எந்தச் ‘சிறியோரும்’ செல்வத்தை முன்கூட்டிக் குறைப்படுத்திவிடாமல் அப் ‘பெரியார்களுக்’ கென அதனைப் பாதுகாத்து வைக்க அவை உதவுகின்றன என்னலாம். நம்முடைய பணப்பைகளும் நம் பணத்தை இவ் வகையில்தான் காக்கின்றன என்று கூறல் தகும். ஏழைகளாகிய நாம் நம் பணத்தை ஏதேனும் இன்பப் பொழுதுபோக்கில் எண்ணாமல் செலவு செய்து விடுவதை இந்தப் பை தடுக்கிறது. நல்ல இளநீர்களைக் காண்கிறோம். வெளியில் வெப்பத்தால் விடாய் வரட்சியும் மிகுதியாயிருக்கிறது. ஒரு இளநீர் வாங்கி உட்கொள்ள எண்ணி விலை கேட்கிறோம். ஆனால், பையைத் திறக்கத் தொடங்கியதும் செலவு செய்ய மனமில்லாமல், காயின் விலையை மிகவும் குறைத்துக் கேட்டு, வாங்காமல் தப்பித்துக் கொள்கிறோம். இப்படி நமக்கெனச் செலவு செய்யாமல் (பெரும்பாலும் இதற்கென்றேதானோ என்னவோ!) சேமித்து வைத்த பணத்தை, இந்தப் பணப் பைகள் தமக்கு உண்மையில் உரியவரான இம் மேலினத்தாரைக் கண்டவுடன், பேசாமல் தாமே திறந்து, நம் கையாலேயே பணத்தை எடுத்து அவர்கட்குக் கொடுத்து விடுகின்றன. நாம் பணத்தையும், பணப் பையையும் நம்முடையது, நம்முடையது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பணம் அவர்களுடையதாக்கிவிடுகிறது. அதை நாம் செலவு செய்ய வொட்டாமல் அவர்களுக்காகவே சேமித்து வைக்கும் பணப்பையும், உண்மையில் அவர்கள் பையாகவே முடிகிறது. நம் பணப்பைகள் நம் தேவைகள் எதனையும் கண்டு கனி வுற்றுத் திறக்காமல், அம் மேலினத்தார் தேவையை மட்டும் அவர்கள் வாய் திறக்கு முன் அறிந்து திறப்பதைக் காண, எனக்கு “மழையும் புயலும் வழிப்போக்கன் மேற்பார்வையை யாரால் அகற்ற முடியும் என்று போட்டியிட்ட கதை” நினைவுக்கு வருகிறது. மழையும் புயலும் தம் முழு வன்மையையும் வெறி யையும் காட்டின. ஆனால், இதனால் கிடைத்த பலன் என்ன? வழிப்போக்கன் போர்வையை இன்னும் இறுக்கிப் போர்த்துக் கொண்டான். அவ்வளவுதான்! ஆனால், கதிரவன் தன் இனிய நகைமுகம் காட்டியவுடன், வேறு ஆற்றல் எதனையும் பயன்படுத்துவதற்குத் தேவையில்லாமலே, வழிப்போக்கன் போர்வையை அகற்றினான்! நம் தேவைகள் இப் புயலையும் மழையையும் போல ஆற்றலுடையவைதாம். ஆனால், இவ் வாற்றல்களில்லாமலே மேலினத்தார் கதிரவனைப் போல் ஒரு புன்முறுவலால் தம் காரியத்தை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்! இந்த ஆராய்ச்சி எண்ணங்களுள் நான் மூழ்குவதற்குக் காரணமாயிருந்த செய்தி இரவல் வாங்குவோருள் சிறந்த ஒரு கலைஞனான என் பழைய நண்பர் திரு. ரால்ஃவ் பிகாட் சென்ற புதனன்று மாலை தாம் பெற்ற வெற்றி வாழ்க்கைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து, இவ்வுலகை விட்டு அகன்றதே. தம் குடிப் பெயருக்குப் பெருமை கொடுத்த தம் முன்னோர் உயர்வுகளைப் பற்றி அவர் பேசாத நாளில்லை. நாமானால் நம் பெருமைகளைப் பற்றிப் பேசிப் பிறர் வெறுப்பைப் பெற்றிருப்போம். அல்லது பெருமை எதுவும் பேசாமல், பிறரால் பொது மக்களுடன் பொது மக்களாக, இரவல் கொடுப்போருள் ஒருவராக மட்டும் நடத்தப் பட்டிருப்போம். இரண்டு சார்பிலும் தீங்கற்ற, நல நிறைவு பயக்கும் நடுநிலைப் பொன்னெறியை அவர் அறிந்திருந்தார். அக் குடிப் பெருமையின் புறச் சின்னமாக மட்டும் அவருக்கு ஒரு தொடக்க வசதி இருந்தது. அவர் போதிய செல்வ நிலையுடன் வாழ்க்கை தொடங்கினார். அதே பணம் நம் இனத்தவரிடமிருந்தால் நம் பணத்தை நம் பணமாக வைத்துச் செலவு செய்தபின் திண்டாடு வோம். ஆனால், நம் ரால்ஃவ் தம் நயமிக்க பொது உடைமைக் கொள்கையை முதலிலிருந்தே கையாண்டார். தம் பணத்தை நன்கு பயன்படுத்த அவர் கண்ட வழி, அதைக் கூடிய மட்டும் விரைவில் வள்ளன்மையுடனும் பெருந்தன்மையுடனும் செலவு செய்வதே. தாராள மனப்பான்மையுடன் தம் பணத்தைக் கொடுத்தும் எறிந்தும் தீர்த்த பின், அவர் அதே தாராள மனப்பான்மையுடன் இரவல் வாங்கினார். ஆனால், இப்போதும் வாங்கியதை வைத்துப் பார்க்கும் சிறுமைக் குணம் அவரிடமில்லை. இறைத்த கிணறு ஊறும் என்ற உண்மை யறிந்து, வந்தவுடன் பணத்தைச் செலவு செய்தார். காற்றற்ற இடத்தில் காற்று விரைந்து புகுவது போல, அவர் கை வறுமையாக ஆகப் பல திசையிலிருந்தும் பணம் வந்து கொண்டேயிருந்தது. கடைசி நாள் வரை அவர் வாங்காது இருந்ததுமில்லை. வாங்கியதை வண்மையுடன் வீசி எறிந்து வழங்காது இருந்ததுமில்லை. கடல் சூழ்ந்த இந் நாட்டினிடையே அவர் எங்கும் சுற்றித் திரிந்து எல்லாருடனும் ஊடாடியுள்ளார். இத்தகைய வாழ்வினிடையே இந் நாட்டாருள் பத்திலொரு வருக்குக் குறையாமல் அவருக்கு இறை கொடுத்திருப்பர் என்று என் நண்பர்கள் கூறுகிறார்கள். என்னளவில் இது சற்று மிகையுரை என்றே எண்ணுகிறேன். அவருடன்கூட நான் பல இடங்களுக்குச் சென்று அவருக்குக் கடன் கொடுக்கும் பெரும் பாலாரைப் பார்த்திருக்கிறேன். பிரிட்டனில் நூற்றுக்கு நாலைந்து பேராவது அத் தொகையிலிருப்பார்கள் என்பதில் எனக்கு ஐய மில்லை. இப் பெருந்தொகை கண்டு அவர் சிறிதும் மலைக்க வில்லை. அது தன் குடிப்படைகள், தனக்கு இறை கொடுத்துதவும் தன் கட்சிக்காரர்கள் என்று அவர் பெருமையுடன் கூறுவார். இவ்வளவு பேர் கடன் கொடுக்க ஒருக்கமாயிருந்தும், அவர் எப்படி அவர்களிடம் வாங்குவதில் குறை வைக்காமல், பையை எப்போதும் வெறும் பையாக வைத்திருந்தார் என்பதுதான் எனக்கு வியப்பு! பணத்தை இரவல் பெறுபவரைக் குறிப்பிடும் இந்த இடத்தில், அதே இனம் சார்ந்த புத்தக இரவலாளரையும் குறிப்பிடாமலிருக்க முடியாது. ஏனென்றால் பையில் பணம் மிகுதி இல்லாத காரணத்தால், முன்னவர்க்கு நான் அவ்வளவாக இறையிறுக்கவில்லை. ஆனால், புத்தகங்கள் வகையில் இத்துறை அனுபவம் எனக்கு நிரம்ப உண்டு. நாம் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினென்கணக்கு என்று புத்தங்கள் அரும்பாடுபட்டுத் தொகுத்து வைத்திருப்போம். அந்தோ, விரைவில் பத்துப் பாட்டில் இரண்டு எடுபட்டுப் போகும். எட்டுத் தொகையில் ஒன்று ஒன்றாக ஏழு போய்விடும். பகுதி பகுதியாயுள்ள நூல்களில் முற்பகுதி பிற்பகுதியைப் பறிகொடுத்து ஏங்கி நிற்கும், (அ) பிற்பகுதி முற்பகுதியைப் பறிகொடுத்து அங்கலாய்த்து நிற்கும். சில சமயங்களில் முற்பகுதியும் பிற்பகுதியும் இருக்கும். அவற்றை இணைக்கும் இடைப்பகுதி ஊடறுக்கப் பட்டிருக்கும். அதோ என் சிறு புத்தக நிலை அடுக்கில் அடித்தட்டில் இரண்டு பெரிய சமய நூல்களுக் கிடையே அவற்றுக்கிணையாக வடிவும், அவற்றிலும் பன்மடங்கு திட்பமுமுடைய ஒரு ஏடு இருந்தது. அது இன்றில்லை. அதை என் நண்பர் கம்பர் ஹாச் வந்து கண்டு வெற்றியுடன் கொண்டு போனார். அவர் என்னிடம் அதைப் பெற்ற முறை என் போன்றவரால் மறுக்க முடியாத ஒரு முறை என்றுதான் கூறவேண்டும். ‘அன்பரே! இந்த நூலிலடங்கிய பொருள்கள் உமக்கு தெரியுமென்று நினைக்கிறேன்’ என்றார். எங்கே ஏதேனும் கேள்வி கேட்டுவிடப் போகிறாரோ என்று எண்ணித் ‘தெரியாது’ என்றேன். உடனே அவர் “அப்படியானால் அதை ஏன் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். புத்தகங்கள் அவற்றைப் படித்துப் பயன்படுத்துபவர்களுக்குத்தான் உரியவை” என்றார். நான் மறு பேச்சுப் பேசாமல் புத்தகத்தை எடுத்து என் வீட்டுச் சிறுவனிடம் கொடுத்து, அவருடன் சென்று அவர் வீட்டில் கொண்டு சேர்த்து விடும்படி கூறினேன்! என் நிலையடுக்கின் மேல் தட்டின் இடப்புறம் பார்வைக்குப் புத்தகங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. ஆனால், அதில் ஏற்பட்ட ஒரு குறையை- நான் என்றும் மறக்க முடியாத ஒரு குறையை- என் கண்ணுக்கே உறுத்தாதபடி அவ்வளவு திறம்படப் புத்தகங்களைத் தளர அடுக்கி வைத்திருக்கிறேன். இதில் விடுபட்ட புத்தகம் ஸர் தாமஸ் பிரௌனின் உள்ளமுருக்கும் “புதை தாழி” என்பதுதான். அதனை என் நண்பர் காலரிட்ஜ், நான் எவ்வளவோ கூறியும் கேட்காமல், எவ்வளவோ அழுதும் இரங்காமல்- தட்டிக் கொண்டு போய்விட்டார். இவரும் என்னிடம் ‘நண்பரே, இந்தப் புத்தகத்தை நீங்கள் நன்கு வாசித்திருப்பீர்களே’ என்றுதான் கேட்டார். இரவல் வாங்குவோரின் தனிச் சிறப்பு வாய்ந்த திருவருட்களை அவர் முகத்தில் பொலிந்தது. அத்துடன் என் முன்னைய அனுபவத்தையும் நினைத்துப்பார்த்துக்கொண்டு “ஆம். பல தடவை படித்து இன்புற்றிருக்கிறேன்”- என்றேன். உடனே நண்பர் (அவர்தான், காலரிட்ஜ்) “அப்படியானால் இனி அதை நான் வைத்துக் கொள்ளலாமல்லவா?” என்றார். கொடு என்று கேட்டால் மறுக்கலாம். எடுக்கலாம் என்ற சொல்லை எதிர்பார்த்து ‘எடுக்கலாமல்லவா’ என்று கேட்கும் உயிரன்பருக்கு மறுப்பதெப்படி? கண்களைக் கசக்கிக் கசக்கிப் பார்த்து விட்டுக் கொடுத்து விட்டேன். நான் படிக்காத புத்தகம் எனக்கு உரியதன்று; நான் படித்த புத்தகமும் எனக்கு உரியதன்று. இரண்டும் நம் பேரினத்துக்கு மட்டுமே உரிமை. எப்படியிருக்கிறது நேர்மை! அதிலும் டாம் பிரௌனைப் பற்றிய மட்டில், காலரிட்ஜ்கூட அவர் உள்ளத்தை, அவர் இனிய நூலில், வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல், எழுத்துக் கெழுத்து தவழும் கருத்து இணைப்பை, என்னளவு அறிந்தவர் அல்லது அறியத்தக்கவர் என்று கூறமுடியாது. அப்படியிருக்க, என் உள்ளத்தையும், என் வாழ்நாளின் ஒரே இன்பத்தையும் அவர் எப்படி அவ்வளவு எளிதாக, நயமாகத் தட்டிப்பறித்துச் செல்ல லாகும்? நம் இரவல் கொடுக்கும் இனத்துக்கு ஏனென்று எவராவது கேட்டால்தானே! ஆனால், கடன் பெறுவோர் கூட்டத்தில் என் நண்பர் காலரிட் ஜூக்கு மட்டும் நான் ஒரு தனியிடம் கொடுத்துத்தானாக வேண்டும். அவர் வாங்குவதில் எல்லாரையும்விடத் திறமுடையவர். அதிலும் புத்தகம் வாங்குவதே அவர் தொழில். பிறரெல்லாம் இவ் வகையில் சிற்றோடைகள், கால்வாய்கள் என்றால், அவரை ஒரு கரையற்ற கடல் என்றுதான் கூற வேண்டும். ஆனால், கடல் போலவே அவர் ஒரு சமயம் ஒரு நாட்டையே அடித்துக்கொண்டு போவார். மறு சமயம் மணலைக் கொண்டு வாரியிறைத்து ஒரு புதிய நாட்டையோ, தீவையோ உண்டு பண்ணவும் செய்வார். அவர் பல புத்தகங்களைக் கொண்டு செல்வார். சில சமயம் ஒன்றிரண்டு புத்தகத்தை யாரிடமிருந்தாவது எடுத்துக்கொண்டு வரும் வழியில், இங்கேயே போட்டு விட்டும் போய்விடுவார். சில வற்றில் அவர் ஏட்டின் நாலு அருகிலும் நிறையக் குறிப்புரைகள் எழுதிவைத்துச் செல்வார். ஏட்டில் அச்சடித்த எழுத்துக்களிலும் கைப்பட எழுதியது மிகுதியாயிருக்கும். ஆனால், அத்தகைய ஏடுகள் கிடைத்தால், நான் அச்சடித்த எழுத்துக்களைப் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. அவற்றைவிட அவர் எழுதியவை எத்தனையோ மடங்கு உயரியவையாயிருக்கும். எனவே, என் புத்தகங்களில் அவர் எத்தனை எடுத்துச் சென்றாலும் எனக்கு உள்ளூர மகிழ்ச்சிதான்- இங்ஙனம் எடுத்துச் செல்லும் பழக்கத்தால், இன்னும் அடிக்கடி வந்து, இன்னும் பல குறிப்புகள் எழுதிய நூல்களை மறந்து போட்டு விட்டுச் செல்லமாட்டாரா என்று நான் எதிர்பார்த்திருப்பேன். காலரிட்ஜுக்கு நூல் கொடுப்பதிலாவது இத்தகைய மன நிறைவுக்கு இடமுண்டு. என் மற்ற நண்பர்- அவர் கொண்டு சென்றது ஒன்றே ஒன்றானாலும் நான் என்றும் அதை மறக்க முடியாது. “பொறாமை பிடித்த க-! உன் நண்பரிடம் உனக்கு ஏன் இத்தனை பொல்லாக் குறும்பு! நீர் அப்புத்தகத்தை என்றும் வாசிக்கப் போகிறவர் அல்ல என்பது எனக்குத் தெரியும்- எனக்குத் தெரியும் என்பதை நீரும் அறிவீர்! அதை நீர் வேண்டும் என்று கேட்டதெல்லாம்- அதனிடம் எனக்கு அவ்வளவு ஆர்வம் என்பதை நீர் அறிந்திருப்பதனால்தான். நண்பர் பற்றுவைத்த பொருளை நாம் பெற்றுவிட வேண்டும் என்ற போட்டி உணர்ச்சி ஒன்றே உம்மை அதைக் கைக்கொள்ளத் தூண்டிற்று என்று கூறவேண்டும். எடுத்துச் சென்றதுடன் அதை என் நாட்டிலேயே வைக்கக்கூடாதென்று உம் மாமனார் வீட்டுக்கு- பிரான்சுக்குக் கொண்டு சென்று அங்கே தொலைக்கவேண்டுமா?- ஆம். இப்போது நினைவுக்கு வருகிறது. நீர் அந்தப் புத்தகத்தை வாங்கித்தர வேண்டுமென்பதில் சற்றுத் தயங்கியபோது, அதையே உம் மணிப்பரிசாக வற்புறுத்தியது உம் மனைவி என்பது எனக்கு நினைவுக்கு வருகிறது. அவள் பிறப்பில் பாதி பிரஞ்சுக்காரி, பாதி ஆங்கிலேய மாது. ஆங்கிலப் பண்புதான் அவளிடம் மிகுதி என்பதையும் நான் அறிவேன். இல்லாவிட்டால் மார்கரட் நியூகாசிலின் கடிதங்களை அவள் ஏன் கோரியிருக்க வேண்டும்? வாசக அன்பரே. உம்மிடமும் நல்ல புத்தகங்களைச் சேமித்துத் தொகுத்துவைத்து அனுபவிக்கும் பழக்கம் இருந்தால் உம் நண்பர்களிடம் அவற்றைப் பெருமையுடன் காட்டுவதில் மிகவும் எச்சரிக்கையாயிருக்கும்படி அறிவுரை கூறுவேன். ஆனால், சாமுவெல் டேயிலர் காலரிட்ஜ் போன்ற நண்பர் உமக்கு இருப்பார்களானால், அவர்களிடம் முடியுமானால் எத்தனை புத்தகங்களையும் கொடுக்கத் தயங்க வேண்டாம். என்னிடம் அவர் கையெழுத்து நிறைந்த எத்தனையோ ஏடுகள் உள்ளன. அக் கையெழுத்துக்கள் அந் நூல்களிலுள்ள அச்செழுத்தினும் மதிப்பில் எத்தனையோ உயரியவை என்பதை நான் அறிவேன். அவற்றில் பலவற்றில் அச்செழுத்தினும் கையெழுத்து மிகுதியாகப்பெறும் பேறும் எனக்குக் கிட்டியுள்ளது. இத்தகைய பலருக்கு இரவல் கொடுத்து அவர்கள் மறந்து விட்டவற்றைத் திரும்பப் பெறு வதைத்தான். அக் கால அறிஞர்கள் இரும்பைக் கொடுத்துப் பொன்பெறும் இரசவாத வித்தை என்றார்களோ என்னவோ? காலரிட்ஜ் கையெழுத்தை வாசித்துணர்வதுதான் கடினம். ஆனால், வாசிக்க முடிந்தால், நூலாசிரியர் ஒரு பர்ட்டனாயிருந்தால், ஒரு ப்ரௌனாயிருந்தால்கூட, நீர் அவர்களை மறந்து, காலரிட்ஜையே நூலாசிரியராகக் கொள்வது உறுதி. மொத்தத்தில் அன்பரே, நண்பர் என்ற முறையில் உம் நெஞ்சத்தையும் சரி, இலக்கிய நண்பர் என்ற முறையில் உம் புத்தகத்தையும் சரி, காலரிட்ஜ் போன்றோர் வருகைக்காக எப்போதும் திறந்து வைத்திருப்பீராக! அடிக்குறிப்பு * ஆல்கிபியாடிஸ் கிரேக்க நாட்டில் அரசியல் புரட்சி செய்த வீரன். ஃவால்ஸ்டாஃவ் ஷேக்ஸ்பியர் நாடகத்தில் வரும் ஒப்புயர்வற்ற நகையரசு; அரசருடனும் சரிசமமாக இருந்து நகையாட்சி செய்தவன். ஸர் ரிச்சர்டு ஸ்டீல், பிரின்ஸ்லி (க்ஷசiளேடநல) பிரிட்டனின் அறிஞரும் கட்டுரையாசிரியரும் ஆவர். 4. என் காதுகள் எனக்குக் காதே கிடைக்காது. வாசக அன்பரே, நான் கூறுவதைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். காதுகள் என்றவுடனே இந்த 1பாஹ்யக ப்ரகாண்ட த்வயங்களை, சில்ப சாஸ்திர பரிபாஷாவியாக ரீதிப்படி இந்த மானுஷ சிரஸ்தானானு பந்தங்களை, அந்தர்வர்த்தி தோத்காத சௌந்தர்ய யுகளங்களைப் குறிப்பிட வில்லை. நல்ல காலம், இவைகளில்லாமல் நான் பிறந்துவிட வில்லை. இவைகளில்லாமல் ஒருவர் பிறப்பதைவிடப் பிறவா திருப்பதே மேல். உண்மையில் மட்டான அளவிலும், மட்டான கேள்வித் திறமுடையதாகவும், எனக்கு அப்புறமடைகள் அமைந்தே யுள்ளன. அவை மிகப் பெரியதாயிராததற்காகக் 2கர்த்தபராஜனிடமோ, அவை மிகக் கருணையுடையவையா யிராததற்காகச் 3சுந்தரிராணியிடமோ எனக்கு எவ்வகைப் பொறாமையுமில்லை. எனக்கிருக்கும் இந்த 4அத்யாவச்யக ஜீவமூல்யாதாரங்களான பார்ச்வ வார்த்தாக்ரஹிகளே எனக்குப் போதியவை. மேலும் பிறப்பின்போது உடன்பிறந்த காதுகளை வாழ்க்கையிலேயே திரு டீஃ வோவைப்போல்4 பறிகொடுத்து, மாந்தரிடையே அருவருப்புத் தரும் உருவுடன் திரியத்தக்க எந்தச் செயலையும் நான் செய்துவிடவும் இல்லை. மனிதரை உயிருடன் வதைத்து அவர்களைக் கொல்லாமல் இவ்வழகிய புறஉறுப்பை மட்டும் கௌவி எடுத்துவிடும் அப்பொல்லாத ‘காதரி கட்டை’க்கும் நான் இரையாகவில்லை. இத் தண்டனையைப் பற்றிக் கேட்டவுடன் ‘இனி எவர் வசவுக்கும் நான் அஞ்ச வேண்டியதில்லை’. என்று டீஃவோ மகிழ்ந்ததுபோல் நான் மகிழப் போவதுமில்லை- என் சாதக பலனை நான் அறிந்தவரை, அத்தகைய நிலை என்றும் ஏற்படும் என்றோ, ஏற்பட நான் வழிசெய்து கொள்வேனென்றோ எனக்குத் தோற்றவுமில்லை. ஏனெனில், நான் பிறர் வசவுகளுக்குச் செவிடாயிருக்க விரும்ப வில்லை- வசவு செய்கிறார்களா என்று கேட்டு, வசவு செய்யவில்லை என்ற உறுதியைப் பெறவே விரும்புகிறேன். ஆகவே, எனக்குக் காது கிடைக்காது என்று நான் கூறும்போது, நான் மனதிற் கொண்டதெல்லாம், என் காது இசைக்காது- இசையில் அது இலயிக்காது என்பது மட்டுமே. இன்னோசை என்பதையே அது அறியாது என்று கூறவும் இயலாது. நம் தாய்மொழியில் இனிய பாட்டுக்களைக் கேட்கும்போது, ‘குழந்தைப் பருவத்திலே’, கடலக மகன்றெழு நீரதுவே’ முதலிய நம் நாட்டுப் பாடல்களைக் கேட்கும் போது என் உள்ளம் அவற்றின் எல்லைகளின் மிதந்து, அவற்றின் பொருள் நயங்களில் ஒன்றுபட்டுக் கனவுலகுகளில் மிதந்து செல்லா திருப்பதில்லை. பாட்டைப் படிப்பவர் நண்பரா யிருந்தால், அவர் நட்பிலும், அது இன்குரலுடைய பெண்மணியா யிருந்தால், அக் குரலினிடையிலும், அது சிறுவர் சிறுமியர் குதலை இன்குரலாயிருந்தால், அதன் கவர்ச்சியிலும், நான் ஈடுபடாமலிருப்பதில்லை. இவ்வளவு வளைத்துக் கூறுவானேன்: மனந்திறந்து கூறிவிடுகிறேன். ஃவானிவெதால் என்ற ஓர் இள நங்கை அக் காலத்தில் இளைஞனாயிருந்த ஈலியாவை ஒரு யாழைப்போல் மீட்டித் தன் குரலிசையுடன் அவன் உள்ளமும் ஓரளவு இசையும்படி செய்ததுண்டு. அவ் விசைப் பண்பு உணர்ச்சி ஈலியாவின் உள்ளத்தை மற்றொரு சிறந்த யாழ்க் கலைஞர்- ஆலிஸ்... கையில் நின்று இளமைக் காலக் கனவுகளில் இன்னும் அதிரும்படி செய்ததும் உண்டு. ஆனால், இவை யெல்லாம் என் தனிப்பட்ட கதைகள். உணர்ச்சியைப் பற்றிய மட்டில் இசை என் காதுகளை அதிர வைக்காமலில்லை. ஆனால், இசையின் ஆக்கம், பண் சார்ந்த கலைத்திற இசை எனக்கு வருவதேயில்லை. ஆகவேதான் எனக்குக் காது கிடையாது என்றும், காது இல்லை என்றும் கூறினேன். அதே சமயம் எனக்குப் புற உறுப்பு வகையில் காது இல்லாமலு மில்லை. உள்ளுணர்ச்சி வகையில் இசையுணர்ச்சி இல்லாமலு மில்லை. நாட்டுப் பண்ணை எவ்வளவு பயின்றும் ஈலியாவால் பாட முடியவில்லையானாலும், அதற்காக அவன் நாட்டுப் பற்றுப்பற்றி எவரும் குறைகூற இடமேற்பட்டதில்லை. முழுதும் உருவாகாத நிலையில் உள்ளார்ந்த இசைப் பண்பு என்னிடம் இருக்கக்கூடும் என்று எனக்கு அடிக்கடி ஐயம் எழுவ துண்டு. அன்றொருநாள் என் நண்பர் ஏ... யின் இசைப் பெட்டியில் நான் என் பயிலா விரல்களால் மனம்போனபடியே அழுத்திக் கொண்டிருந்தேன். நண்பர் அப்போது தொலைமறைவில் ஏதோ செய்துகொண்டிருந்தார். அவர் வந்ததும் ‘ஏதோ புதுக்கை இசைப் பெட்டியைத் தொட்டிருக்க வேண்டும். ஓசையின் போக்கில் அது வேலைக்காரப் பெண்ணாயிருக்க முடியாது என்று தோன்றி விட்டது’ என்றார். ஆகா, பயிலாக் கைகளிலும் பண்புடைய கை என்று அவர் கண்டுகொண்டிருக்க வேண்டும். கையின் பயிற்சியை நாம் பயிற்சி என்கிறோம்; மனத்தின் பயிற்சியைப் பண்பு என்கிறோம். இசைக் கலைக்குரிய கைப் பயிற்சி என்னிடம் குன்றியிருந்த போதிலும், இசைக் கலையினும் உயரிய இலக்கியக் கலையில் பயின்ற காரணத்தால் ஒரு உள்ளார்ந்த உள்ளப் பண்பு ஏற்பட்டு, என் பயிலாக் கைகளையும் இயக்கியிருக்க வேண்டும். நண்பர் ஏ...யின் செவித்திறம் அதனைக் கண்டுபிடித்து அதற்குச் சான்று கொடுத்து விட்டது. இயல்துறையில் பண் என்பது என்ன என்று கண்டுகொள்ள நான் முயற்சிகள் பல எடுத்தும் என்னால் அதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒரு பண்ணுக்கும் மற்றொரு பண்ணுக்கும் என்ன வேறுபாடு என்பதைக்கூட என்னால் அறிந்துகொள்ள முடிய வில்லை. பண்ணில் நிலை இதுவானால், குரலெடுப்பு (ஓசைக் கட்டை) பற்றிக் கூற வேண்டுவதில்லை. எடுத்தற் குரல் எது, படுத்தற் குரல் எது, நலிதல்குரல் எது என்று காண்பது எனக்கு ஒரு பெரும் புதிராக இருக்கிறது. முரட்டுக் குரல், இனிய குரல் என்ற பெரு வேறுபாடு மட்டுமே தெரிகிறது. எனக்கு விளங்காத இத்துறையில் மிகச் சிறு சொற்களைக்கூட எங்கே தவறாகக் கொண்டு வழங்கி விடுவேனோ என்ற அச்சத்தால், நான் உள்ளூர நடுக்கமில்லாமல், இசை பற்றிப் பேசத் துணிவதே யில்லை. என் அறியாமையை நான் ஒத்துக்கொள்கிறேனாயினும், எதை அறியாத அறியாமை என்று என்னால் கூறமுடியா திருக்கிறது. என் விருப்பு வெறுப்புக்கள்கூடத் தவறான பெயர்களினடிப் படையில் அமைந்தவையாயிருக்கலாம். குரல், துத்தம், கைக்கிளை முதலான இசைக் குறிகள் யாவுமே எனக்கு ஒன்றுக்கொன்று மாறுபாடு காணமுடியாத மந்திரங்களாயிருக்கின்றன. இசைக்கலை மன்னன் ஜூபல் ஏழிசைத் தொகுதியைக் கண்டு கொண்ட நாள் முதல், உலகில் இசையறிவு எல்லா மக்களி டையிலும் பெருகியுள்ளது. அதன் மிக நுண்ணிய நயங்களையும், வேறுபாடுகளையும் பெரியோர் சிறியோர் யாவரும் உணர்ந்து களிக்கும் இசை யூழி இது. இத்தகைய ஊழியில் தன்னந்தனி யனாய், இம் மாயக்கலையின் கவர்ச்சியுட் படாது இருப்பது என்பது எளிதல்ல. அதிலும் மனிதர் பண்பாட்டை உயர்த்தி, உணர்ச்சிகளைத் தூய்மைப்படுத்தித் துன்பங்களைப் போக்குவ தாகக் கருதப்படும் இக்கலையின் துணையில்லாமல் வாழ்தல் சால்புடையதன்று. ஆனால், மனம் திறந்து நான் கூறும் என் குறைகளுள் ஒரு குறையாக, இவ்வகையில் எனக்கேற்பட்டுள்ள புது அனுபவத்தைக் கூற வேண்டியிருக்கிறது. எல்லாரும் வானளாவப் புகழும் இவ்வருங் கலையை நான் அண்டி அறிந்து துய்த்த சிறு அளவிலும், எனக்குக் கிடைத்த இன்பத்திலும் துன்பம்தான் மிகுதியாயுள்ளது. ஓசைகளைக் கேட்பதில் என் செவிப்புலன் மிகக் கூர்மை யானது. அவற்றைத் தாங்குவதில் அது மிகவும் நோய்மை வாய்ந்தது. கோடைகால நண்பகலில் பக்கத்து மனையில் ஒரு தச்சன் கொட் டாப்புள்ளி ஓசை கேட்டால், என் மூளையிலும் கோடை காலக் கோளாறு ஏற்பட்டுவிடக் கூடும். தனியாக ஒவ்வோரடியாக அடித்தால் அவ்வளவு பொறுக்காத காது, இசை போல் அடுக்கடுக்காகத் தச்சன் அடிக்கும் கொட்டாப்புளி ஓசையின் இசையைக் கேட்கத் தாங்குவதில்லை. இசை, தொடர்ந்த ஓசையை நம் காதுகள் கேட்காது புறக்கணித்துவிட முடிவதில்லை. கேட்டால் அவற்றின் குழப்பத்திடையே தெளிவு காணமுடியாமல் திகைத்து வருந்தாமல் இருக்க முடிவதில்லை. இத்தாலிய இசை நாடகங்களுக்குச் சென்றால், நான் அவற்றின் தொடர்ச்சியான இசை முழக்கத்தைக் கேட்கத் தாளாமல், மக்கள் மிகுதி ஆரவாரம் செய்யும் இடம் நோக்கிச் சென்று தஞ்சம் புகுவேன். காதைக் கவர்ந்து தொளைத்துத் துன்பப்படுத்தும் இசையைவிட, காதுக்குக் கவர்ச்சியூட்டாமல் இருந்து விடும் மக்கள் ஆரவாரம் எவ்வளவோ மேம்பட்ட தாயிருக்கும். பகட்டற்ற பொது வாழ்க்கையின் கம்பலையை நான் வெறுப்ப தில்லை. ஆனால், இறுமாப்புமிக்க நம் நாட்டுப் பாட்டுக் கச்சேரிக்காரன் இசை என்ற பெயருடன் நம் காதுக்குள் ஊற்றும் நாராசத்தைத் தான் என்னால் தாங்க முடியவில்லை. இசையறிவில்லாத எனக்குத்தான் இவ்விசை யரங்குகள் பிடிக்கவில்லை என்று நான் எண்ணியதுண்டு. ஆனால், இசை அரங்கேற்றுபவர் முகத்தைவிட்டுக் கூட்டத்தவரைப் பார்த்த போது, இவ் எண்ணம் மாறுதலடைந்தது. முன்னணியில் வீறாப் புடன் வீற்றிருந்த ஒரு சிலர்தான் ஏதோ இசை நுகர்பவர்போல் காணப்பட்டனர். மற்றவர்கள் எல்லாரும் உணர்ச்சியற்ற கற் சிலைகள்போல் உட்கார்ந்திருந்தனர். எனக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு ஒன்றுதான். நான் அவ்விசை எனக்குத் துன்ப மயமானது என்று வெளியிட்டுக் கூறுகிறேன். அவர்கள் அங்ஙனம் கூறுவதனால், தம்மை இசையறிவற்றவர், நாகரிக மற்றவர் என்று மற்றர்வர்கள் கூறுவார்கள் என்று எண்ணி, வாளா தம்மையடக்கிக் கொண்டு இருந்து விடுகிறார்கள். அவ்வளவு தான், அவர்கள் சிலை போன்ற முகம், இத் தன்னடக்கத்தை மட்டுந்தான் காட்டுகிறது. முன்னணியிலிருந்து தலையசைத்துக் கைகொட்டும் தம்பிரான்களும், இசையுணர்ச்சியாலோ, இனிமை யாலோ மகிழ்பவராகக் காணவில்லை. தம் இசையறிவைக் காட்டிப் பிறரிடம் தம் உயர்வை நிலைநாட்டிக் கொள்ள எண்ணும் இறுமாப்பு ஒன்றே அவர்கள் செயலிலும், தோற்றத் திலும் தொனித்தது. இக்காலக் கலையரங்குகள், கலையுணர் வுடையோர் உயர்ந்தவர், அல்லாதவர், தாழ்ந்தவர் என்று கூறி நாகரிகச் சீட்டுக் கொடுத்து, உயர்வுடைமையை விற்று நல்ல வாணிகம் செய்யும் வாணிகக் களங்களாக இருக்கின்றனவே யன்றி, மக்களுக்கு இன்பமும் நல் ஓய்வும் உயர்பண்பும் தருபவை யாக இல்லை. அதிலும் இனிமையாகவோ, கடுமையாகவோ ஏதேனும் மனித மொழியில் சொற்கள் இவ் விசையரங்குகளில் ஒலித்தால் கூடக் கேடில்லை. மொழிக்கும் சொல்லுக்கும் இடமில்லாத வாய்பாடுகளை- எம் மொழியிலும் பொருளில்லாத ‘சரி சச கரிகக’ என்ற ஒலி யடுக்குக்களை மாறி மாறிப் போட்டு வதை வாங்கும் வழக்கம் இசையரங்குகளை மறைமுகமான வதைக் களங்களாக்குகின்றன. இவற்றை நான் கூறுவதுதான் யாரும் கூறத் துணிய மாட்டார்கள். அவர்கள் இசையறிவற்ற கீழ்மக்கள் என்று தூற்றப்படுவார்கள். இயற்கை இசையறிவு ஓரளவு இருந்தாலும், இந்தக் கலையியல் அறிவு ஏற்படாத காரணத்தால், அந்த வசவுக்கஞ்சாது நான் இதனைக் கூறமுடிகிறது. இவ் விசையை உணரும் கலையறிவு பெற்றிருந்தால்கூட என்னால் இவ் விசை அரங்குகளைத் தாங்கிக்கொள்ள முடியு மென்று தோன்றவில்லை. சாதி முல்லை இதழ் விரித்த மலர்ப் படுக்கையில்கூட, எத்தனை நேரம் ஒருவன் பிறழாது படுத்திருக்க முடியும்? தேனோடு சருக்கரையையும், சருக்கரையொடு தேனையும் மட்டும் கலந்து உண்டு ஒருவன் எவ்வளவு காலம் கழிக்கமுடியும்? வெறும் ஓசையையும் ஒலியையும் கேட்டு, எத்தனை நேரம் அவற்றுக்கு நம் புனைவாற்றலால் உணர்ச்சி யுருவும், பொருளுருவும் கொடுத்து நுகரமுடியும்? வெறும் சட்டங்களையே பார்த்து ‘மானசிகமாக’ப் படங்களை எவ்வளவு நேரம் அவற்றில் பொருத்திக் கொண்டு இருக்க முடியும்? கோடுகளும் நிறுத்தற் புள்ளிகளுமே நிறைந்த ஒரு ஓட்டில் சொற்களை நாமாக நிறைத்து எவ்வளவுதான் படிப்பதாகப் போலிப் பகட்டுப் பகட்ட முடியும்? கைகாலை அசைத்துக் கண்டபடி உளறும் ஒரு கோட்டிக்காரனை ஓரருங் கலைஞன் என்று பலர் கூறுவதற்காக எவ்வளவு நேரம் பொறுமையுடன் பார்த்திருந்து, அவன் சாடைகளுக்கு ஏற்ற நாடகக் காட்சி களையும், அவன் உளறலுக்கேற்ற பேச்சுக்களையும் பாட்டுக் களையும், கற்பனை செய்துகொண்டிருக்க முடியும்? இவ்வளவும் செய்வது எவ்வளவு கடினமோ, அவ்வளவு கடினம் இசையரங்கு களைக் கேட்டுக் களிப்பது. இவற்றைப் பணத்தையும் கொடுத்துக் கேட்டுத் தொலைக்கப் பண்ணுகிறது நம் அரிய இசைக்கலை யறிவு என்னும் அருந்திறம்! ஒவ்வொரு இசையரங்கிலும் தொடக்கத்தில் நல்ல பொழுது போக்குக் கிட்டும் என்று நானும் நம்பினேன். ஒவ்வொரு அரங்கிலும் தொடர்ந்து ஏமாற்றமடைந்த பின், இசையரங்கு என்ற பெயரைக் கேட்டாலே நான் நடுங்கி ஓடத் தொடங்கிவிடுவேன். இன்பத்தை எதிர்பார்க்க வைத்து இறுதியில் ஏமாற்றத்தை ஊட்டும் இவ்வரங்குகளை நினைக்கும்போது, அவலச் சுவை பற்றி பர்ட்டன் கூறும் இனங்களும், அது தரும் ஏமாற்றமும் நினைவுக்கு வருகிறது. “அவலச் சுவையினில் ஈடுபடுவோர் இனம் மிகமிகப் பெரிது. அத்தகையோர் தனிமையை நாடி ஒதுக்குப்புறமான சோலை, நடைபாதைகளைத் தேடி அதில் உலவுவர்; அல்லது அதன் கோடியில் உள்ள பொய்கைக் கரையிலமர்ந்து அதன் நீராழத்தில் கருத்திருத்திக் கனவு காண்பர். அவர்கள் கட்டும் மனக்கோட்டைகளில் அவர்களே நாடகமுமே வகுத்தது. அந் நாடகத்தின் பல கூறுகளையும் தாமே நடிப்பர். அவலச்சுவை மட்டுமன்றி அதன் பிள்ளைகளாகிய வீரச்சுவை, நகைச்சுவை, காதற்சுவை முதலிய எண் சுவைகளும் அவர்களிடம் மாறி மாறி இடங்கொள்ளும். இங்ஙனம் மணிக்கூறுகளோ, நாட்களோ, இரவுகளோ, மாதங்களோகூட அவர்களுக்கு எளிதாகக் கழிந்து விடலாம். ஆனால், அகக்கோட்டை விட்டுப் புறக்கோட்டைக்கு வந்தால், உள்நோக்கிய கண் புற நோக்கித் திறந்தால், இக் கனவுகள் எல்லாம் தவிடுபொடியாவதுடன், இக் கனவிலா உலகம் முன்னிலும் பன்மடங்கு அவர்கட்குக் கசப்புடையதாகிறது”. பர்ட்டன் விரிவுரையில் கடைசி வாசகத்தில் காணப்படும் நாடகத் திரும்புமுகம், கலையுலகிலும், கண்ணை மூடிக்கொண்டு அகக் கற்பனை பண்ணிய பின் புற அரங்கைப் பார்க்கக் கண் திறப்பவர்கட்கும் உண்டு. என் கத்தோலிக்க நண்பர் ஒருவர் தம் வழிபாட்டிடையே மிக அழகான பாடல்களைப் பாடுவார். அவற்றில் கத்தோலிக்கர், புரோட்டஸ்டன்ட் என்ற மத வேறுபாடுகளைக்கூடக் கடந்து நாங்கள் ஈடுபட்டு, இரு மதங்களுக்கும் பொதுவான விவிலிய நூலின் கடவுள்பற்றில் ஆழ்வோம். ஆனால், நண்பர் தம் கத்தோலிக்க சமயப் பற்றுக் கடந்த, ஜெர்மானிய இசையறிஞர் வகுத்த இசையியல் திறத்தில் புகுந்துவிட்டால், புராட்டஸ் டன்டுகள் மட்டு மன்றிப் பல கத்தோலிக்கர்கள்கூட, இந்த இசை எப்போது முடியும் என்று அப்புறமும் இப்புறமும் திரும்பிப் பார்ப்பார்கள். இவற்றாலெல்லாம் நான் அறிந்துகொண்ட தென்னவென்றால், மனித இசை ஒன்று. இசைக்கலைத்திறம் மற்றொன்று; ஒன்றின் உணர்வு டையோர்க்கு மற்றொன்றின் திறம் வராது என்பதே. இப்படிப்பினை கிடைத்தபின் எனக்கு இசைக்கலைத்திறன் இல்லையே என்று நான் வருந்துவதும் கிடையாது; அதில் பயிற்சி பெற ஆர்வம் கொண்டதும் கிடையாது. அடிக்குறிப்புகள் 1. கடின ஓசையுடைய இலத்தீனக் கடுஞ் சொற்களால் இக்கட்டுரையில் ஆசிரியர் நகைச்சுவை விளைவிக்கிறார். தமிழாக்கத் தழுவலில் அதேயிடத்தில் தமிழின் வடசொற்கள் அதே பகட்டோசையுடன் தரப்படுகின்றன. இவற்றின் பொருள்: பாஹ்யகப் ப்ரகாண்ட த்வயங்கள் - இருபுற உறுப்புகள்: சில்வ சாஸ்த்ர பரிபாஷா ரீதிப்படி - சிற்ப நூல் துறைக்குரிய சொல் வழக்கின்படி: மானுஷ சிரஸ்தானானு பந்தங்களை - மனிதர் தலைப் பகுதியின் பக்க இணைப்புக்களை; அந்தர் வர்த்தி தோத்காத சௌந்தர்ய யுகளங்களை - உட்குடைவான புழை உடைய அழகிய இணைகளை. 2. கர்த்தபராஜன் - கழுதை: சுந்தரி ராணி - முள்ளெலி. 3. அத்யாவச்யக ஜீவ மூல்யாதாரங்களான பார்ச்வவார்த்தாக்ரகிகள் - இன்றியமை யாத உயர்நிலைத் துணைகளாய் செய்திகளைக் கேட்டுணரும் இப்பக்க உறுப்புகள். 4. டானியல் டிஃவோ பிரிட்னின் முதல்பத்திரிகை ஆசிரியர். அவர் அரசாங்கத்துக்கு மாறானவற்றையும் பிரிட்டிஷ் சமுதாயத்துக்கு மாறானவற்றையும் எழுதியதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் காதறுபட்டார். 5. அம்மாஞ்சி விழா அம்மாஞ்சிமார்களே, அம்மாஞ்சிமீர்- ஆம். இன்று நீங்கள் எல்லாரும் எனக்கு ஒரே அம்மாஞ்சிமார்கள்தான்! வேறு ஏதேனும் உறவு வந்து அதைத் தடுக்காவிட்டால்- உங்கள் அனைவருக்கும் என் ஏப்பிரல் முதல் நாள் வணக்கம்! நீங்கள் இதுபோல் பல ஏப்பிரல் நாள்கள் கண்டு பலருக்கு அம்மாஞ்சிமார்களாக இருந்து வாழ்வீர்களாக! இதோ, இதோ அம்மாஞ்சியாரே, உம்மைத்தான் அழைக்கிறேன். உமக்கு ஒரு அம்மாஞ்சி வணக்கம்! உம்மையும்தான் சின்ன அம்மாஞ்சி: உம்மையும்தான் நடுவுள்ள அம்மாஞ்சி! இன்று நீங்கள் எல்லாரும் எனக்கு ஒரே அம்மாஞ்சிகள்தான்! ஏனையா முறைக்கிறீர்? இன்று முறைக்காமல் செல்பவர் தான் அம்மாஞ்சி, முறைப்பர் சிடுமூஞ்சி என்பது நினைவிருக்கட்டும். ஆள் தராதரமா? நமக்கிடையில் என்ன தராதரம் இருக்க முடியும். இன்றைக்கு? இன்று நாம் எல்லாரும் ஒரே அம்மாஞ்சிகள். நமக்கிடையில் இன்று ஆசார உபசாரங்கள், வக்கணை வரிசைகள், எவையும் தேவையில்லை. நாம் என்ன, முன்பின் தெரியாத ஏதிலர்களா? அம்மாஞ்சிக்கும், அம்மாஞ்சிக் கும் அதுவெல்லாம் அடுக்காதே! மனித வகுப்பை முழுவதுமே உள்ளடக்கி ஓரினமாக்கிய இப் பெருநாளில் முறைத்துக்கொள்வது ஒழுங்கல்ல. ஒதுங்கிச் செல்வது அதைவிடத் தவறு. நான் இவ்வாறு ஒதுங்கிச் செல்லும் கோழையல்ல. மனித வகுப்பினர் பெரும்பாலோரை உள்ளிட்ட கூட்டுறவில் நானும் ஒரு நிறை உறுப்பாளன். இதை நான் ஒளிக்கப் போவதில்லை. யாரும் அறியச் சாற்றுவேன். இன்று நகர்ப் புறத்தில் என்னைக் காண்பவர் எவருக்கும் நான் சொல்லக்கூட மாட்டேன்- இன்று நீர் காண்பது உம் போன்ற ஒரு முட்டாளைத் தான், அறிவாளியையல்ல! ‘நான் ஒரு முட்டாள்’. இதை நான் என் முதுகிலேயே எழுதி வாசிக்கத் தயங்கவில்லை. ஆம், என் முதுகில் நீங்கள் எழுதுங்கள். நான் அதற்குள்ளே உங்கள் முதுகில் எழுதி விடுகிறேன். ஆனால், நான் எழுதுவதைப் பொது முறையான முட்டாள் எவனும் வாசிக்கவும் முடியாது. வாசித்தறியவும் முடியாது. நீ தான் இப்போது மொழி பெயர்த்துச் சொல்லேன். ‘மூர்க்கோஸ்மி’1 -இதன் பொருள் என்ன? பொருள் தெரிந்தால் அப்பொருளை உனக்கே எடுத்துக்கொள். அது உன்னைப் புகழ்ந்து எழுதப்பட்டதுதான். உன் வடமொழி யறிவுக்கு அது ஏற்ற பரிசு ஆகும். ஏனப்பா, ஏற இறங்கப் பார்க்கிறாய்? இந்த உலகத்தில் நாற்றிசைகள் இருக்கின்றன. நாற்றிசையிலும் எங்களினம்தான்- இப்பெயர் கேட்டுக் களிப்பவர்கள்தான். பெரியதோர் உலகத்தைப் பகைத்துக்கொள்ளாதே! சின்ன அம்மாஞ்சி, அதோ அந்தக் கிண்ணம் நிறைய நல்ல இனிப்பான சூடான பால் கொண்டு வந்து தா. என்னடா, இன்று மோரா தயிரா என்றெல்லாம் கேட்காதே. இன்று புளிப்புக்கும் கசப்புக்கும், பழமைக்கும் முதுமைக்கும் ஏற்காத நாள். இனிப்புக்கும் களிப்புக்கும் இளமைக்கும் ஏற்ற நாள், இனிய பால், இனிய தின்பண்டம், இனிய நகைச்சுவை- இவற்றினுக்கிடை யிடையே காரம், மிளகாய் எரிப்பு- ஏளன வகைகள் இவையே நம் மட்டி உலகுக்கேற்ற பட்டியல், மீதி எல்லாம் எட்டிக்காய். இன்று தன்னை மட்டி என்று கூற எவரும் தயங்க வேண்டிய தில்லை. ஏனென்றால், பின் எங்குத் திரும்பிப் பார்த்தாலும், இன்று உலகமெல்லாம் ஒரே மட்டி மயம்தான். யாராவது அப்படி இல்லை என்று நினைத்தால், தன்முகத்தை வளைத்துத் திரும்பி முதுகுப் பக்கம் பார்க்க வேண்டியதுதான்! இன்று எவனாவது தன் முதுகில் எழுதியிருப்பதைத் தானே பார்க்க முடியுமானால், அவன்தான் உண்மையான அறிவாளி! அடுத்தவர் முதுகை எல்லாரும்தான் பார்க்க முடியுமே! எல்லாரும் மட்டி என்பது கண்டு தானும் ஒரு மட்டி என்பதறிக. இன்றைக்குரிய போட்டி ஒன்றே ஒன்றுதான்- இன்றைக் குரிய ஆராய்ச்சியும் ஒன்றே ஒன்றுதான்! அது நம் வரலாற்றில் மிகச்சிறந்த ஒப்புயர்வற்ற மட்டி யார் என்பதே! இக் காலத்தில் சிறந்தவர் யார் என்பதை ஆராய வேண்டுவதில்லை! அதை நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். உலகின் முதல் அறிஞரே ஒரு மட்டிதான்? அவர்தான் எம்பிடாக்ளிஸ். அவர் அறிவுப் புல் நாடி எட்னா எரிமலையின் எரிவாய்க்குள் சென்று துழாவினாராம். அறிஞருள் சிறந்த மட்டியும் அவர்தான். உலகை முழுதும் வெல்ல முயன்ற முதல் வெற்றி வீரன் அலெக்ஸாண்டரும் ஒரு மட்டிதான். குழந்தை அலெக்ஸாண்டர் ஒரு கிச்சிலிப்பழம் வேண்டும் என்று அழுதாராம். ஆனால், வீர அலெக்ஸாண்டர் ஓர் உலகம் வேண்டும் என்று அழுதார். பாவம், ஒரு கிச்சிலிப்பழத்தை வாயில் கௌவி, அவரால் மறு கிச்சிலிப் பழம் கேட்டுப் பெறமுடியும். ஆனால், ஓர் உலகைப் பாதி வெல்வதற்குள் அவர் இறந்துபோய்விட்டார்! அறிஞரும் வீரரும் நல்ல மட்டிக்கணக்குப் போட்டியிடும் போது, மட்டிகள் எவரும் அறிஞராக, ஆராய்ச்சித் திறம் உடை யவராக நடிக்க வேண்டாம். இந்த நாளில் மட்டுமாவது உலகத்தின் அறிவின் தொல்லையும், ஆராய்ச்சியின் குறும்பும் இல்லாதிருக்கட்டும்! இலக்கியத்தில் சால மட்டிகள் நிறைந்த இலக்கியம் நம் ஆங்கில இலக்கியமே! மட்டிகளின் முடிசூடா மன்னன் ஸர் ஆன்ட்ரூ ஏச்சீக் முதல் மாஸ்டர் ஷாலோ, மாஸ்டர் ஸ்லெண்டர், மாஸ்டர் ஸைலர்ஸ், மாஸ்டர் ஆடம்ஸ், எவ்வளவு ஏட்டறிவு மட்டிகளின் கொலு மண்டபத்தை அதில் காண்கிறோம். நம் ஆராய்ச்சியால் நேரம் கடந்து விட்டது. மட்டி நாளின் இரவு சென்று அதோ, அறிவுக்கால ஒளி தோன்ற இருக்கிறது. நாம் இனி நெடுநேரம் மட்டியாயிருக்க முடியாது. இனி யாரையும் ‘அம்மாஞ்சி’ ஆக்கவும் முடியாது. ஆயினும், இவ்வினிய இராப் போது போகுமுன் உங்கள் அனைவரிடமும் ஒரு மறை செய்தியைக் கூறிவிடுகிறேன். எனக்கு உள்ளுக்குள்ளே- உலகக் கட்டுப்பாடுகளில் ஈடுபடாத வேளைகளிலே- மட்டிகள் மீது ஒரு மாறாத ஆழ்ந்த பற்று உண்டு. அது ஏன் தெரியுமா? மனிதர் எல்லாரும் முதலில் மட்டிகளாயிருந்தே பின் அறிவுடைய மனிதர்கள் ஆகிறார்கள். இன்று இலக்கியம் படிப்பவர்கள், ஆராய்ச்சி செய்பவர்கள் எவரும் முன்னால் குழந்தைக் காலத்தில் மட்டிக் கதைகளும் புளுகுக் கதைகளும் தித்திக்கத் தித்திக்க வாசித்தவர்கள் தானே! இப்போதும் அவ்வப்போது இலக்கியத்தில் அல்லது நாடகத்தில் மட்டிகளையும் கோமளிகளையும் கண்டு அவ்வார்வத்தைத் தணித்துக் கொள்ள வில்லையா? மொத்தத்தில் மட்டியைக் கண்டால் எவரும் வெறுப்ப தில்லை. அவன் தோழமையை, துணையை எவ்வளவோபேர் நாடுவார்கள். மட்டித் தனத்தைவிட மனிதருக்குத் தீங்கு செய்யும் பண்புகள் எத்தனையோ உள்ளன. மட்டியிடம் அத்தகைய தீங்குகள் அவ்வளவு இருக்க முடியாதன்றோ? மட்டித்தனத்தில் ஒரு சின்னஞ்சிறு கூறு ஒருவரிடமில்லாதிருந்தால், அந்த மனிதன் மனித வகுப்பில் இருக்கத் தக்கவனேயல்ல. அது மட்டுமன்று. இன்னொரு செய்தியையும் நான் மக்களுக்கு கூறுகிறேன்- பொழுது விடிந்தபின் வேண்டுமானால் இதையும் ஒரு மட்டி சொன்னான் என்று கூறிக் கொள்ளுங்கள். எவனொருவன் பண்புகளின் ஒரு மஞ்சாடி அளவு மட்டிப் பண்பு இல்லையோ, அவன் அமைப்பில் கல்லெடைக் கணக்கில் அதனினும் பொல்லாத பண்புகள் கட்டாயம் இருக்கும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். இந்த அறிவுரையை அடுத்த மட்டி நாள்- ஏப்பிரல் முதல் நாளாகிய ‘அம்மாஞ்சி’ நாள் வரும்வரை மறவாதீர்கள். அடிக்குறிப்பு 1. முதனூலில் இலத்தீனம் வழங்கப்படும் இடங்களிலெல்லாம் இங்கே வடமொழி வழங்கப்படுகிறது. இலத்தீன் என்று குறிப்பிடும் இடங்களிலும் அப்படியே வடமொழி என்று தமிழில் குறிப்பிடப்படுகிறது. `மூர்க்கோஸ்மி’ என்பதன் பொருள் `நான் முட்டாள்’ என்பது. 6. மௌன வழிபாடு பிறப்பினில் மூச்சின்றிப் பிறந்திடும் மோனமே! சிறப்பநெஞ் சகஆழம் திறந்திடும் நீள்மதகே! சொல்கடந்த ஒன்றதனின் சொல்லாடாத் தோன்றலே! சொல்கெழு வாய்அடைத்து நெஞ்சம் திறப்பாய்நீ! மறைசெய்தி காக்கின்ற மனக்குகந்த தோழன்நீ! மறைசமய வாய்மைநிலை காட்டுகின்ற உரைகல்நீ! கண்டுணர்ந்தார் கருத்தாழம் காட்டவல்ல வான்முழக்கே! தண்டுகின்ற பாலைநிலக் கானலிடை வாடாமே, நாட்டார வாரமது பற்றாது மெய்ப்பற்றால், நாட்டகம் வாழ்வோரின் கடுவாழ்வு காணாமே வல்லார் வகுத்தநீள் நல்லார்வம் கொண்டுநீ பொல்லாரும் நாவடக்கப் போதுக மாநிலத்தே!* வாசக அன்பரீர், உண்மையான அமைதி என்பது எவ்வாறு இருக்கும் என்பதை நீர் நேரிடையாகக் காண விரும்புகிறீரா? மக்களின் சந்தடியிலிருந்து ஒதுங்கி, ஆனால், மக்களிடை யிலேயே, மக்கள் உள்ளத்தின் ஆழ்ந்த உள்ளுணர்ச்சியின் மெய்ப்படிவத்தை நீர் காண அவாவுகின்றீரா? காற்றின் ஆரவாரம் முதன் முதல் எழுவதற்கு முன்பு எங்கும் நிறைந்திருந்த அமைதியின் ஒரு கூறினைக் காணும் விழைவு உமக்கு உண்டா? உண்டானால், அதற்காக நீர் தொலைவகம் சென்று பாலைநிலம் தேடி அலைய வேண்டுவதில்லை; மண்ணுலகின் ஆழ்தடங்களைத் தொளைத்துச் செல்ல வேண்டுவதில்லை. கண்மூடிக் காதடைத்து, தன்னுள்ளே தானடங்கித் தொல்லைப்பட வேண்டியதுமில்லை. இவை யனைத்தையும் விட எளிய வழி ஒன்று உண்டு. அதுவே குவேக்கர்களின் வழிபாட்டுக் கூட்டம் ஒன்றைச் சென்று காண்பது! தீயசொற்களைச் சொல்லாமல் வாயடங்கியிருப்பதே தனி மனிதனுக்குச் செயற்கரிய செயல். பிறரைப் பழிக்காமல், சினந்து பேசாமல் பிறர் குற்றம் கூறாமல் இருப்பதுவே எவ்வளவோ கடுமையானது. அப்படியிருக்கத் தீய சொல், நல்ல சொல் எதுவும் சொல்லாமல் வாயடக்குவது கடுமையினும் கடுமையன்றோ? குவேக்கர் குழுவிலோ, ஒருவரல்ல, சிலர் பலரல்ல, அனைவருமே வழிபாட்டில்கூட வாய்விடாது. உள்ளத்தினின்று உள்ளத்துக்கு- மனித உள்ளத்திலிருந்து நேரே கடவுள் திருவுள்ளத்துக்கு- எண்ண அலைகளை அனுப்பி வழிபடுகின்றனர். வழிபாட்டுக்குப் போகும் போது, வழிபாட்டின்போதும், வழிபாட்டினின்று மீளும்போதும் அவர்கள் ஒவ்வொருவரும் தாமும் வாய் திறவாமல், பிறரும் வாய் திறக்க இடம் கொடாமல், ஒரே பெரிய இயந்திரத்தின் ஓசைபடா உறுப்புக்கள்போல், தத்தமக்குரிய செயலைக் குறிப்பறிந்து செய்து விடுகின்றனர். உண்மையில் மனிதருக்கு மாறாக மனித உருவங்கள், மனிதர் படங்கள் ஒன்றுகூடி ஊமைக் கூத்தாடிப் பிரிந்தா லெப்படித் தோற்றுமோ, அப்படியே அவர்கள் வழிபாட்டுக் கூட்டம் தோன்றுகிறது. பாலைவனத்தின் மோனம் இதற்கு எம்மட்டு? வாய் அரவம் செய்யாதவை எனப்படும் மீன்கள்கூட இதற்குத் தோற்கவேண்டி யவையே! மோனமாது இங்கே தன் முழு நிறை ஆட்சி செலுத்து கிறாள்! பலர் சேர்ந்த இடத்தில் ஒவ்வொருவர் தனி அரவமும் பிறர் அரவங்களுடன் சேர்ந்து ஒரே ஆரவாரமாவதை யாவரும் கேட்டிருப்பர். ஒரு கொதுகின் இரைச்சலை யாரும் கேட்டிருக்க முடியாது. ஆனால், கொதுகுக் கூட்டத்தின் இரைச்சல் காதினை எவ்வளவு தொளைக்கின்றது! இது போலவே, தனி மனிதன் மோனமும் பிறர் மோனத்துடன் சேர்ந்து, காதடைத்துப் புலனடைத்து, எங்கும் நிறையும் ஒரே பெருமோனமாக அமைவுறுகின்றது. மோனம் ஓர் எதிர்மறைப் பண்பு மட்டுமே என்று நாம் கருதுவது உண்மையானால், அது இப்படித் திரண்டு பேருருவம் கொள்ள முடியாது. ஆனால், உண்மையில், மோனம், இருள், குளிர் ஆகியவை முற்றிலும் எதிர்மறைகள் அல்ல. இன்மையைக் குறிக்கும் சுன்னம்போல் அவை கூடவும் குறையவும் செய்யாத அளவைகள் அல்ல. கூடவும் குறையவும் செய்யும் அன்மை எதிர்மறைகளே இவைகள். கண்ணைத் திறந்து கொண்டு பார்க்கும் ஒளியைக் கண்ணை மூடிக்கொண்டு பார்த்தால் ஒளி பெரிதும் குறைந்து ‘இருள்’ ஆய்விடும். அது ஷபோலவே கண்ணைத் திறந்துகொண்டு பார்க்கும் இருளைக் கண்ணை அடைத்துக்கொண்டு பார்த்தால் அது இன்னும் இருண்டு, இருட்டு, ஆய்விடும். ஒலி ஆழத்தினின்று ஆழம் எதிரொலிக் கின்றதன்றோ? அதுபோல மோனமும் ஆழத்தினின்று ஆழம் எதிரொலிப்பது அல்லது எதிர்மோனிப்பது உண்டு. மனித உள்ளத்தின் ஆழத்திலிருந்து மோனம் பிற மனிதர் உள்ளத்தின் ஆழங்களிலும், பேருள்ளமாகிய இறைவன் திருவுள்ளத்தின் ஆழத் திலும் சென்று ‘எதிரளி’க்கின்றது. இம்மோன எதிர் மோனம் எல்லாம் ஒருங்கே திரண்டு, மனித உள்ளங் களனைத்தையும் இயக்கும் ஒரே மோனக் கடலாய், மோனப் பேரியக்கமாய் நிறைகின்றது. ஒலிக்கு ஒரு உச்ச அளவு உயர்வு இருப்பது போல, மோனத்துக்கும் ஒரு நிறை மோன ஆழம் இருக்கிறது என்பது உண்மையேயன்றோ? தனி மனிதன் மோனம் எவ்வளவு செயலற்றதா யிருந்தாலும், அது குறை மோனமேயாகும். அதன் ஆற்றல் மிகச் சிறிது. மனித உள்ளத்தின் ஆழ்ந்த புண்களை இத்தனி மோனம் ஆற்றவல்லதன்று. ஆனால், பெருந்திரளான கூட்டத்திலுள்ள நிறை மோனம் இத்தகைய ஆற்றலுடையது. உலகின் முற்கால எகிப்தியத் துறவினர் இதனை உணர்ந்திருக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் மோனத்தை நாடித் தனியிடம் ஏகிய போதும், தனித்து ஏகவில்லை; குழாம் குழாமாகச் சேர்ந்தே சென்றனர். உரையாடுவதற்காக நாம் கும்பு சேர்வது போல், அவர்கள் ‘மோனமாடு’ வதற்காகக் கும்பு நாடினர். அவர்கள் உரையாடா ஒப்பந்தம் நம் உரையாடலை விட அவர்கள் அனைவரையும் நன்கு பிணைத்தது. உரையாடலில் உயர்வு தாழ்வு, கருத்து வேறுபாடு, பூசல் ஆகியவற்றுக்கு வழி உண்டு. மோனத்தில் வெற்றியும் உயர்வும் முழு மோனத்தில்தான்- தவிர, மோனத்திலே பூசல் இருக்க முடியாது; அது அமைதியின் திருவடிவம்! இவ்வுண்மையினைச் சமயத் துறையில்தான் காணவேண்டு மென்றில்லை. உலகியல் வாழ்விலேயே திறம்படக் காணலாம். கொடும்பனிக் காலத்து மாலை நேரத்தில், வீட்டின் மூலையில் சாய்விருக்கையிலமர்ந்து வாய்விடாது ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு, அருகே உயிருக்குயிரான ஒரு நண்பன் அல்லது மனத்துக்குகந்த வாழ்க்கைத் துணைவி மற்றொரு புத்தகத்தை வைத்துக்கொண்டு வாசிப்பதைவிட, உயர்ந்த வாசிப்பு இன்பம் என்ன இருக்கமுடியும்? அந்நேரத்தில் ஒருவருக்கொருவர் பேசாமலே, இருவரும் ஒரே நூலை வாசிக்க வேண்டிய அவசியம்கூட இல்லாமலே, இருவருக்கும் தனி அமைதி உண்டாவதில்லையா? உரையாடலால்தான் உள்ளங்கள் பரிமாறிக்கொள்ள முடியும் என்ற தப்பெண்ணத்தையும், தனியே இருப்பதில்தான் அமைதி காண முடியும் என்ற தப்பெண் ணத்தையும், இரண்டையும் இத்தகைய நிகழ்ச்சிகள் போக்க வல்லன. திரு ஃஜிம்மர்மென் கூறுகிறபடி ஒத்துணர்வுடன் கூடிய தனிமையினும் மேலான இன்பம் எதுவும் இல்லை. காதில் கேட்கும் ஒலியும் உண்டு. காதில் கேளா ஒலியும் உண்டு. அதுபோலவே, காதில் கேளாத மோனமும் உண்டு. காதறியக் கேட்கும் மோனமும் உண்டு என்னலாம். ஆளற்ற பாரிய கோயில் சிகரங்களில் உலாவுகையில் ஏற்படும் மோனம், கேளா மோனம்; பலர் ஒருங்கு கூடுமிடத்தில் ஏற்படும் மோனம் செவிப் படும் மோனம்! இம்மோனம் நம் புலணுணர்வுக்கு எட்டுகிறது. நம் உள்ளத்திற்கு அமைதி தருகிறது. இக்காரணத்தினாலேயே பாரித்தகன்ற வெஸ்ட்மின்ஸ்டர் மாடத்திலும் அடையப் பெறாத மோன இன்பத்தை, நாம் குறுகிய இடத்தில், எளிய இருக்கைகளில் அமர்ந்து வழிபடும் குவேக்கர் வழிபாட்டுக் கூட்டத்தில் பெற முடிகிறது. கல்லறையிலும், சாவிடத்திலும், பழங்காலப் பாழ்ங் கட்டிடத்திலும், குகைகளிலும், எங்கும் இத்தகைய மனிதப்பண்பு நிறைந்த மோனத்தை- துயரும் சோர்வும் கலவாத மோனத்தை நாம் அடைய முடியாது. பழமையில் கருத்துச் செலுத்துவோர், மனித வாழ்க்கையை வெறுத்தோர் ஆகியவர் மோனம் நம்மிடத்திலிருந்து தொலைதூரத்திலுள்ள ஒரு மோனம். நம் கழுத்தை நீட்டிக் கண்ணைத் துருத்தி நாம் அதைக் காண முயலவேண்டும். குவேக்கர் கூட்டத்தின் மோனத்தைப் போல அது அணுகத்தக்க, கலந்து ஒன்றுபடத்தக்க மோனமல்ல. நினைக்கப்போனால், மனித உலகத்தினகமாக ஒரு தெய்விகத் தன்மையை எங்காவது காணமுடியுமானால், அதைக் கட்டாயம் குவேக்கர் திருக்கூட்டத்தில் காணலாம். இங்கே சதியில்லை. மறைவில்லை. குறுகுறுப்பும் பொச்சரிப்பும் இல்லை. சூழ்ச்சி எதிர்சூழ்ச்சி, வாத எதிர்வாதம், கட்சி எதிர் கட்சி எதுவும் கிடையாது. சொல்லொன்று செயலொன்று, உள்ளொன்று வெளியொன்று இவற்றுக்கு இடம் ஏற்படவே முடியாது. மோனத்தின் தன்மை என்னிடம் இல்லாமையினால் இந்தக் கட்டுரையைக் கூட யாராவது (நகைச்சுவைக் கட்டுரைகளும் இதனுடன் இருப்பதை ஒருவேளை எண்ணி) இதை ஒரு நகையாடல் கட்டுரை என்று கூறிவிடக்கூடும். ஆனால், குவேக்கர்கள் மோனத்தில் எவரும் (தங்கள் இயல்பைப் பற்றி) நகைத்திறத்துக்குப் பொருள் காணக்கூடுமேயன்றி நகைத் திறத்தைக் காணமுடியாது. நகைத்திறம், ஏளனம் முதலிய வெறுப்புப் பண்புகளில் பழகிய நம் மனித மொழியில் எழுதும் இவ்வரிகள் என் உள்ளக்கருத்தை முற்றிலும் வெளிப்படுத்த முடியாவிட்டாலும், குவேக்கர்கள் கையாளும் மோனப் பழக்கத்தின் உயர்வை ஓரளவு விளக்கிவிட்டேன். குவேக்கர் களிடையே அமர்ந்து அவர்கள் நீடிய அமைதியில் பங்கு கொள்ளும்போது என் மனம் அந்தச் சமயத்தின் தோற்றம், தொடக்கக்கால வரலாறு ஆகியவற்றில் ஈடுபடுகின்றது. “குவேக்கர்களே! உங்கள் சமயத்திற்கு வித்திட்டவர்கள் ஃவாக்ஸும் டௌன்ஸ்பரியும் ஆவர். அவர்களைப் பின்பற்றி நீங்கள் பொறுமையுடன் தாங்கிய இன்னல்களை யாரால் எண்ணிப் பார்க்கமுடியும்? வீம்பும் வீறாப்பும் மிக்க எத்தனை படைவீரர், இளைஞர் நகையாடினர்! அவர்கள் இகழ்ச்சியாவது மனத்தை மட்டுமே புண்படுத்தவல்லது. மனத்தையும் உடலையும் எரிக்கும் இரு நெருப்புகள் இருபுறமிருந்து உங்களை நெருக்கின. சமய ஆட்சி செய்த திருக்கோவிலகம் உங்களை அழிக்க முயன்றது. அச்சமய ஆட்சியை ஒழிக்க முயன்ற குழு முறை ஆட்சிச் சமயம் (ஞசநளலெவநசயைnளைஅ) மற்றொரு புறம் உங்களைத் தாக்கிற்று. ஏனெனில், இருவருக்கு மிடைப்பட்ட நிலை உங்கள் நிலை. உங்கள் அமைதியைக் குலைப்பதற்கென்றே கங்கணம் கட்டிக்கொண்டு வந்தவர் எத்தனையோ பேர், உங்கள் அமைதி யின் கவர்ச்சியிற்பட்டு ஆட்டுக் குட்டிபோல் அடக்கமுற்று உங்களுடன் குந்திவிட்டதை நான் கேள்வி யுற்றிருக்கிறேன். குற்றஞ்சாட்டியவர்கள் முன்னிலையில் ‘பென்’னும் ஃவாக்ஸும் வந்து வாயாடாது அமைதியே உருவாக நின்றபோது, அவர் கூறுகிறபடி, ‘முறை மன்றத் தலைவரும் நடுவர்களும் இறந்த மனிதர்போல் வந்து காலடியில் கிடந்தனர்’ என்றும் கேள்வியுறுகிறேன்’ இவற்றையெல்லாம், வாசக அன்பரே, நீர் இதுவரை கேள்வியுற்ற தில்லையானால், இதுவகையில் கோவிலகத்தார் நூல்களை வாசிக்காது ‘ஸ்மெல்’லின் “குவேக்கர் வரலாறு” களைப் படிக்கும்படி பரிந்துரைக்கிறேன். ஃவாக்ஸ், முற்கால ‘நண்பர்கள்’ ஆகியவர்கள் நாட்குறிப்பு ஏடுகளிலிருந்து எடுத்தெழுதப்பட்ட இவ்வரலாற்றுச் செய்திகள் திருக்கோவிலகத் தாரின் மிக உயரிய சமய அன்பர்கள் வரலாறுகளைவிட உருக்கமாயிருக்கும் என்பதில் ஐயமில்லை. இதில் நீங்கள் அவநம்பிக்கையுறவும் எதுவுமில்லை. நம்பும்படி வற்புறுத்தப்படத் தக்கதும் எதுவுமில்லை. உயர் பதவி, தன்னலம் ஆகிய கறைகளுக்கு இடமே இருக்க முடியாது. ஏனெனில், அது முழுவதும் அவர்கள் அடைந்த இன்னல்களின் வரலாறுகள் தான். அதுவும் புகழ் பெற்றவர்கள் அடைந்த இன்னல்கள் அல்லது இகழ்வுக் கிடையிலே தாங்கிய இன்னல்களின் வரலாறுகளே. புகழுக்காக இன்னலடைவதில் பொருள் காணமுடியும். இகழ்வினிடையே அவர்கள் அடைந்த இன்னல். ஏளனத் திடையே அவர்கள் நைந்த நைவு உள்ளத்தைப் பிளக்கத் தக்கதாகும். ஜேம்ஸ் நேய்லரின் நாக்குப் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பிகளால் துளைக்கப்பட்டது. அவர் ஒரு சிறு மூச்சொலிகூட இன்றி, முகச்சுளிப்பின்றி, அதனைப் பொறுமையுடன் தாங்கினார். சோர்விடையே ஏற்பட்ட மயக்க வெறியில் அவர் பிதற்றியதைக் கூட எதிரிகள் கடவுட் பழிப்பு என்றனர். ஆனால், அவர் மனம் தெளிவுற்று அவ்வுரைகளைக் கேள்விப்பட்டபோது, தெய்வத் தன்மை வாய்ந்த முழு பணிவுடன், தாம் உணர்வற்ற நிலையில் இருந்தாலும் அவ்வாறு கூறியது தவறு என்று மன்னிப்புக் கோரி னார்! ஆனால், இப்போது தம் சமயவாழ்வுப் பணிமீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஏற்க மறுத்துப் பேசவும் மறுத்து விட்டார். தமது தவறு என்று கண்டதனைக் கூறுதவற்கு மட்டுமே, அவர் நா மோன ஆணையைச் சிறிது மீறிற்று. தவறென்று ஒன்றை ஏற்றவுடன், இனிப் பழைய நெறிக்கே செல்வோம் என்று எண்ணும் புத்தார்வப் போலிச் சமய மாற்றக்காரர் போன்றதல்ல, அவர் கொண்ட சமயக் கோட்பாடு! குவேக்கரைப் பற்றிய நூல்களைப் படித்து முற்காலக் குவேக்கர்களிடம் அன்பு செலுத்துக. அவர்கள் இடைக்காலத் தளர்ச்சி, அவ்வக்காலத் தவறுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தத் தேவையில்லை. என் கோட்பாட்டைச் சார்ந்த வரிடையேயும் எல்லாரும் முழுநிறைவுடையவராயிருக்க முடியாது. ஆனால், உண்மையான சமய ஆர்வத்தையும் அமைதியையும் நான் குவேக்கர் பலரிடைக் கண்டிருக்கிறேன். நான் கண்ட ஒரு காட்சி எனக்குப் பழையகாலக் குவேக்கர் பண்புகளை நினைப்பூட்டுவதாயிருந்தது. ஒருவர் அரக்கர் இனத்தவர் போன்ற பாரிய உருவமும் திட்பமான தோள்களும் உடையவர். அவர் உடம்புக்கட்டு இரும்பாலானது. ஆனால், அவ்விரும்பு வெண்ணெய்போல் வளைந்து நெகிழ்ந்து அடங்கிக் கிடந்ததைக் கண்டேன். சொற் பொழிவாற்றும் தூய திரு. பால் உருவத்தின் பக்கத்தில் அவர் உருவை வைத்துப் பார்க்கவேண்டும். அதன் பண்புகளின் மாறு பாட்டு வன்மையைக்காண! ஒரு சிற்றுருவின் வீரத்தை முன்னதில் காணலாமானால், ஒரு பேருருவின் அடக்கத்தைப் பின்னதில் காணலாம். பாலின் முழக்கத்தைவிட அவர் மோனம் வலிவுடைய தாகத் தோற்றிற்று. ஆனால், அப்போது அவர் புதிதாகவே வந்து சேர்ந்திருந்தார். அவர்தம் உடலின் கொந்தளிப்பையும் உள்ளத் தின் புயலையும் அப்போதுதான் போராடி அடக்கிக் கொண்டு வந்தார். சமய குருவிடம் அன்று அவர் தம் பழியேற்றமைந்தபோது கூறிய சொற்கள் யாவர் உள்ளத்தையும் ஈர்க்கத்தக்கவை. மிகுந்த துக்கத்துடனும், வெட்கத்துடனும், கழிவிரக்கத்துடனும் அவர் “ஐயனே! என் பழி மிகமிகப் பெரிது. ஆனால், அதை மன்னிக்கவே கோருகிறேன். என் அறியா இளமைக் காலத்தில் நான் ஒரு பேச்சாளனாக இருந்து விட்டேன்” என்றார். ஒரு பேச்சாளனாக மிளிர எத்தனை பேர் விரும்புவார்கள். ஆனால், அவர் அதற்காக மெய் துடிதுடிக்க அச்சத்துடன் மன்னிப்புக் கோரினார்! ஒரு வேளை பேச்சாளர் பண்பு ஒரு குறை என்று அவர் மதித்தது குவேக்கர்கள் அளவுகோலைக் கொண்டே ஆயிருக்கலாம். சிறிது இளமைக் குறுகுறுப்பில் பேசுவதையே பெரும் பேச்சு என்று கொண்டிருக்கலாம். ஆனால், அவர் மன்னிப்புக் கோரிக்கையின் உள்ளார்ந்த வாய்மை, பணிவு, தெய்வப்பற்று ஆகியவை எளிதில் எங்கும் காணப்படாதவை. நாம் குவேக்கராக இருக்க விரும்பாதபோதும்கூட, வாழ்க் iயின் பல அல்லல்களிடையே, நெஞ்சுக் குழப்பங்களிடையே அவர்கள் வழிபாட்டிடத்தில் ஒரு அரைமணி நேரம் போயிருந் தால் பெறும் அமைதி பெரிது. ஒரு ஆடு நின்று மேய்வது போல நாற்பது நின்று மேயும் அமைதி நம்மையும் கௌவத்தக்கதே! குவேக்கர்களின் ஆடையும் தூயவை- அழுக்கற்றவை மட்டுமல்ல, அழுக்கற்ற நிறமாகிய வெண்ணிறத்தவை. இங்கும் தூய்மையின் எதிர்மறைப் பண்பு மட்டுமன்றி, அதன் உடன்பாட்டுப் பண்பும் முனைத்துத் தோன்றுகிறது. பிரிட்டனி லுள்ள குவேக்கர்களெல்லாம் நகரில் வந்து கூடும் விழா நாட்களில், அவர்கள் நகரையே வெள்ளொளிமயமாக்கி, அதை வானுலகத்தின் ஒரு பகுதியாகக் காட்சியளிக்கச் செய்கின்றனர். அடிக்குறிப்பு 1. ரிச்சர்டு ஃவ்ளெக்னொலின் `பல்வகைப் பாட்டுகள்’ (ஞடிநஅள டிக ஹடட ளுடிசவள) 7. ஆசிரியரும் மாணவரும்1 நான் எதையும் முறையாகப் படித்ததில்லை. அங்கு மிங்கு மாகக் கொய்தெடுத்த துண்டுத் துணுக்குகளின் ஒட்டுப் பூச்சே என் அறிவு மண்டலமாயிருந்து வருகிறது. அத்துண்டுத் துணுக்குகளும் வழக்காற்றில் இல்லாத பழங்கால நாடகங்கள் சிலவற்றிலிருந்தும், சில தொல் பழங்கால ஏடுகளிலிருந்தும் துருவி எடுக்கப்பட்ட வையே. ஆகவே, இக்கால மக்கள் எவரின் அறிவு நிலைக்கும் என் அறிவு நிலைக்கும் உள்ள வேறுபாடு ஒரு பல்கலைக் களஞ்சியத்தை நிறைக்கப் போதியது. எனது நிகழ்காலமும் மற்ற மக்கள் நிகழ்காலத்துக்கு ஆயிரம் ஆண்டு பிற்பட்டது உண்மையில் ஆயிரம் ஆண்டு பின்சென்று ஜான் அரசர் கால இங்கிலாந்துக்கு நான் போனால் கூட, அக்கால மக்களும் என்னைப் பழய பஞ்சடைந்த கருநாடகப் பேர்வழி என்று கூறாமலிருக்க முடியாது. உலக வரலாறு, நில இயல் செய்திகள், தற்கால அரசியல் சூழ்நிலை ஆகிய எத்துறை பற்றியும் எதுவும் எனக்குத் தெரியாது. தற்கால அறிவு நூல்களைப் பற்றியோ கடுகு வறுக்கும் அளவு அறிவு கூட என்னிடம் காண முடியாது. வானூலில் உள்ள என் அறிவைக் கொண்டு வானத்தில் ஞாயிற்றையும் திங்களையும் தவிர வேறு எந்த ஒளிப்பிழம்பையும் நான் அடையாளந்தெரிந்து கூறமுடியாது. பண்டைக் காலப் புலமைச் சிறப்புடைய இலத்தீன், கிரீக்கு மொழிகளோ, இக் கால ஃவிரஞ்சு, ஜெர்மன் இத்தாலியன் முதலிய மொழிகளோ எதையும் நான் அறியமாட்டேன். சுருங்கச் சொன்னால் ஒரு முதல் வகுப்புப் பள்ளிப் பையனுக்குத் தெரிவதுகூட எனக்குத் தெரியாது. நாகரிகத்தின் அறிகுறி பொது அறிவு என்றும், அதனை ஒருவர் உரையாடல் திறத்தில் காணலாம் என்றும் கருதப்படும் இந் நாளில், என் போன்றவர் நிலை சிக்கலானது. நூலில்லாமல் ஊசியை மட்டும் வைத்துக் கொண்டு தைக்கச் செல்லுபவர், தைக்கக் கொடுக்கும் ஆடையிலிருந்து தைப்பதற்கான நூல் எடுக்க எண்ணுவதுபோல், பேசுபவரிடமிருந்தே என் போன்றவர் பேசுவதற்கான கருத்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியதா யிருக்கிறது. இவ்வளவு குறைந்த சரக்கை வைத்துக்கொண்டு அல்லது சரக்கே இல்லாமல் நான் எப்படி உலக வாணிகம் நடத்துகிறேன் என்று அடிக்கடி எனக்கே வியப்பாயிருக்கும். ஆனால், பலர் கூடுமிடங்களில் தனி அறிவில்லாமலே குறை யறிவுடையவர் தம் குறை யறிந்துகொண்டு தம் திறமையின்மையை மறைத்துக் கொள்ளக்கூடும். இருவராக அகப்பட்டுக் கொண்டால்தான் இவ்வகையில் இக்கட்டு மிகுதி. உடனிருப்பவர் நல்ல அனுபவ அறிவுடையவராயிருந்துவிட்டால், கால்மணி நேரம் போக்குவதற்குக்கூட எனக்கு நடுக்க மாயிருக்கும். இத்தகைய தறுவாய்களில் அடிக்கடி ஈலியாவின் சாயம் வெளுத்துப் போகும் நிலைமை ஏற்படுவதுண்டு. அணி மையில் ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சி இத்தகையது. பி..... கெவுனியிலிருந்து சா..... கேணிக்குச் செல்லுகையில் ஒரு நாள் இடை நிறுத்தங்களுள் ஒன்றில் ஒரு இளைஞனுடன் ஒரு நாணயமிக்க மனிதர் வண்டியிலேறினர். இளைஞன் கடைந்த தெடுத்த சிலை போலக் கட்டழகும் வனப்பும் உடையவனா யிருந்தான். அவன் அம் மனிதரிடம் நடந்து கொள்வதைப் பார்த்தால், அவன் வேலையாள் போலவுமில்லை. கணக்கரைப் போலவும் இல்லை. மகனைப் போலவும் இல்லை. அதே சமயம் இவ்வெல்லாத் தன்மைகளும் ஒரு சிறிது கலந்தே காணப்பட்டன. இச் சுவைமிக்க உறவு யாதாயிருக்கக்கூடும் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் சமயம், இளைஞன் அவரிடமிருந்து ஏதோ ஆணை பெற்று வணக்கம் செய்து அகன்றான். வண்டியும் புறப் பட்டு விட்டது. அப்போதுதான், நான் அம் மனிதருடன் தனியாக அகப் பட்டுக் கொண்டிருப்பதும், பேசித் தீர வேண்டும் நிலை ஏற்பட்டி ருப்பதும் எனக்குத் தெரிய வந்தது. எவ்வளவு நேரம் இப்படிக் கழிக்க வேண்டுமோ, எப்படிக் கழிக்கப் போகிறோமோ என்ற சிந்தனையில், சிறிது, நேரம் வாளா இருந்தேன். ஆனால், அம்மனிதர் சிறிதும் தயங்காமல் தாமே பேச்சைத் தொடங்கி, மளமளவென்று தம் கருத்துக்களை பலவற்றை என் மறுமொழியை எதிர்பாராமலே அளந்ததுடன், அடிக்கடி என் கருத்துகளையும் உசாவியறிய முற்படலானார். வண்டிக் கட்டணத்திலிருந்து தொடங்கி வண்டி ஓட்டிகளின் நடை உடை குணங்கள், போட்டி வண்டிகள் ஏற்பட்டதால் வந்துள்ள விளைவுகள் ஆகியவற்றைப் பற்றி முதலில் தாமாகப் பல கருத்துக்களை வெளியிட்ட பின், அவர் திடுமென ஒரு கேள்வி கேட்டு விட்டார். க..... பண்ணையிலுள்ள கால்நடைப் பரிசுக் காட்சியைப் பார்த்தீர்களா என்று! நான் பார்த்ததில்லை என்றவுடன் அவர் வியப்படைந்து, பின் அதைத் தாம் அப்போதுதான் பார்த்து வருவதாகக் கூறினார். அத்துடன் அவர் அதனை வருணித்து அத்தகைய ஒரு திட்டம் ஏற்பட்டிருப்பது சமூகத்துக்கு எவ்வளவு நலம் விளைவிப்பதாகும், என்பதுபற்றி ஒரு சொற்பொழிவு ஆற்றித் தீர்த்தார். அதற்குள் நா... கெவுனியண்டை சில துகிற் கடைகள் இருப்பது கண்ணிற்படவே. சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக வந்து பருத்தியாடைகள் பற்றியும், அவற்றின் நேர்மை மலிவு ஆகியவைகள் பற்றியும் வெப்பமான நாடுகளில் இவற்றையே மனிதர் பொதுப்படையாக அணிவது பற்றியும், இச்சார்பில் வருங்காலத்தில் பிரிட்டனுக்கு ஏற்படவிருக்கும் ஏற்றுமதி வாணிக வாய்ப்புகள் இப் புதிய மூலப் பொருளால் உலகில் ஏற்பட்டுள்ள புரட்சி பற்றியும், விரித்துரைத்தார். இறுதியில் அவர் ஒரு ‘இந்திய’ வாணிக முதலாளியோ என்று நான் ஐயப்படும் அளவுக்கு அவர் இந்தியாவின் தொழில் நிலைமை, வர்த்தக நிலைமை ஆகியவை பற்றிய ஆராய்ச்சிகளில் இறங்கினார். இவர் யார்? இவருக்கு இவை எல்லாம் எப்படித் தெரியும்? இவ்வளவு உலக அறிவுடைய இவர் இந் நாட்டில் ஒரு மந்திரியா யிருக்கக் கூடுமே? அப்படிப்பட்டவர் இங்ஙனம் பொது மக்கள் பயணஞ் செய்யும் வண்டியில் வருவானேன்? இவ்வாறெல்லாம் நினைத்துக்கொண்டே நான் பேசாது கேட்டுக்கொண்டிருந்தேன். இப் பேச்சு முழுவதும் முடிவதற்குள் அவர் இன்னும் திடுக்கிட வைக்கத்தக்க மற்றொரு கேள்வி கேட்டார். “லண்டனில் சில்லறை வர்த்தகர்களின் கடைச் சாவடிகளிலிருந்து வரும் மொத்த வாடகை எவ்வளவு இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்பதே அக் கேள்வி! இதையெல்லாம் அறிய என்னை அவர் லண்டன் நகர முதல்வரென்று நினைத்தாரோ, என்னவோ? “அச்சிலிஸ்2 பெண்களிடையே ஒளிந்து வாழ்ந்தபோது, அவன் பெயரென்ன? ஹெர்க்குலிஸின்3 பயணங்களிடையே அவன் கண்ட அன்னப் பறவைகள் என்ன மொழியில், என்ன பாட்டுக்கள் பாடின?” இவைபோன்ற பழங்கால ஆராய்ச்சிக் கேள்விகள் கேட்டிருந்தால் கூட, எதையாவது கதை கட்டிக் கூறியிருக்கலாம். ஆனால், திட்டவட்டமான இன்றைய செய்தி விவரங்களை எப்படிக் கூறுவது! ஆனால், என் மறுமொழியில்லாத் தயக்கத்தைக் கண்டு அவரே விடையளித்துப் பின்னும் பல இக் கால, அக்கால நிலைகளைப் பற்றி ஆராய்ச்சியும், ஒப்பீடும் நடத்தினார். வழியில் கண்ட இயற்கைக் காட்சிகளில் அவர் கவனத்தைச் செலுத்தி, அவருடைய ஆராய்ச்சிகளிலிருந்தும், கேள்விகளி லிருந்தும் நான் தப்ப முயன்றுகொண்டிருந்தேன். அப்போது இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டதால் அவர், என்னை ஒரு மட்டில் விட்டுவிட்டு இறங்கி வணக்கம் செய்து சென்றார். ஆனால், இறங்கிப்போகும்போது ஒரு வழிப் போக்கரிடம் “இப் பக்கத்தில் நோய் நிலை எப்படி? எங்கள் பள்ளியும், பக்கத்திலுள்ள பல பள்ளிகளும் இதற்காக மூடப்பட்டிருக் கின்றன” என்று கூறினார். இச் சொற்கள் என் உள்ளத்திலுள்ள பல கேள்விகளுக்கு விடை கூறிவிட்டன. அவர் இக்கால ஆசிரியர்களுள் ஒருவர். ஆம்! அவருடன் கூடவந்து வழிவிட்ட இளைஞன் வேலையாளு மல்லாமல், கணக்கனுமல்லாமல், மகனுமல்லாமல் இவர்கள் எல்லாரையும் ஒத்திருந்ததன் இரகசியமும் இப்போது விளங்கி விட்டது. அவன் அவர் மாணவன், மாணவருள் சற்று மேல் வகுப்பிலுள்ள வயதுவந்த மாணவன் என்பதும் தெரியலாயிற்று. ஆசிரியர் என்று தெரியவந்தபின், அவர் கேள்விகளும் புரிந்தன. மற்ற சீமான்கள் போலத் தம் அறிவைச் சுட்டிக் காட்டுவதற்காக அவர் கேள்விகள் கேட்கவில்லை; அறிவைப் பெறுவதற்கும், அதனைத் தீட்டி வளர்ப்பதற்கும் அவர் ஓயாது கையாண்டுவரும் ஒரு பொது நடைமுறை அது என்பது விளங்கிற்று. இந் நிகழ்ச்சி ஆசிரியர்களைப்பற்றியும் அதிலிருந்து இக்கால, அக்கால ஆசிரியர்களின் வேறுபாடுகளைப் பற்றியும் எண்ணமிடத் தூண்டிற்று. பண்டைக்கால ஆசிரியர்கள் காலம்செல்லாகிவிட்டது- அவர்கள் இனத்தின் தடமழிந்து அவர்கள் நிலையகன்று நாளாகி விட்டது- அவர்கள் ஆவிகள் நன்கு ஓய்வு பெறமட்டும்! ஆனால், இவ்வுலகில் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் தங்கள் உயர் புலமை மொழிகளான கிரேக்கத்தையும் இலத்தீனையும் கற்பதிலும் கற்பிப்பதிலுமே காலமுற்றும் போக்கினர். உலகின் அறிவு முழுவதும் அம் மொழிகளில்தான் அடங்கிக் கிடக்கின்றன என்பது அவர்கள் அசைக்க முடியாத கோட்பாடு. அவற்றுக்குப் புறம்பாக உள்ள எல்லா அறிவும்- ஐரோப்பியரின் நாட்டு மொழிகளான ஆங்கிலம், ஃவிரஞ்சு முதலிய மொழிகளும், அவற்றிலுள்ள ‘அற்ப சொற்ப’ நூல்களும்- அவர்களுக்கு என்றும் சிறுபிள்ளை விளை யாட்டுக்களாகவே தோன்றின. அவ் உயர் மொழிகளிலும் அவர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதியை அவற்றின் இலக்கணத்தைப் படிப்பதிலும், அதை மாணவர் தலையிலிடித் தேற்றுவதிலுமே முழுக்க முழுக்கச் செலவு செய்தனர். வேற்றுமைகள் வினைத் திரிபுகள், சொற்றொடரிலக்கணம், செய்யுளிலக்கணம் ஆகியவற்றின் வாய்ப்பாடுகள்தான் அவர்கள் வாழ்க்கையின் தொடக்கத் திலிருந்து கடைசி வரையுள்ள ஒரே பண். இளமையில் தாம் உருவேற்றியவற்றை வாழ்வு முழுதும் பிறருக்காகத் திருப்பித் திருப்பிச் சொல்லி மாணவர் தலையில் உருவேற்றினர். இந்த வாய்பாடுகளில்லாமல், அவர்கள் வாழ்க்கையில் எதுவுமே யில்லை. அக்கால ஆசிரிய உலகத்தின் வாழ்க்கைத் தத்துவத்தையும், அதுபற்றி அதுகொண்ட இறுமாப்பையும் காலெட் இயற்றிய இலக்கண வாய்ப்பாட்டு நூலின் முன்னுரையால் அறியலாம். “உலக அறிவனைத்தின் களஞ்சியங்களை உள்ளடக்கிய செம்மொழிகளின் இலக்கணத்தைக் கற்பது எவ்வளவு இன்றியமையாத் தேவை என்பதை எவருக்கும் கூறவேண்டுவ தில்லை. ஆனால், கடை காலுறுதி இல்லாத கட்டடம் நீடித்துப் பயன்படாதது போல, இத் தொடக்கத்துறையில் நல்லுறுதி ஏற்படாதவரை உயர் கல்வி எதுவும் பயன்படாது.” சட்டத்துறை வாசகங்களைப் போலவும், சமய நூல்களின் தெய்விக வாசகங் களைப் போலவும் இவை எத்தனை வீறும், தன்னம்பிக்கையும், ஆணவ இறுமாப்பும் உடையவை யாயிருக்கின்றன! மேலும் உலகனைத்துக்கும் ஒரே சட்டம் வகுத்த பண்டைக் கால முனிவர் பாணியில், அவர்கள் இவ்வுறுதியை உலக முழு மைக்கும் பரப்பும் வகையைக் காணுங்கள்! “இலக்கணங்கள் எத்தனை எத்தனையோ வகையில் இருந்தாலும், ஆசிரியர் மாறுபாட்டாலும், பள்ளி மாறுபாட்டாலும் மாணவர் இலக்கணப் பயிற்சியின் ஒழுங்கு பாதிக்கப்படாமலிருக்கும்படி, மன்னபிரான் அரசாங்கத்தார் இவ் ஒரே இலக்கண நூலை எல்லாப் பள்ளிகளிலும் இலக்கணப் புத்தகமாக வைத்துள்ளது பொருத்தமானது. எந்த ஆசிரியர் வந்தாலும் போனாலும், பள்ளிக்குப் பள்ளியாக, எத்தனை பள்ளி மாறினாலும், மாணவர்கட்கு இதனால் எத்தகைய இடைஞ்சலு மில்லாதிருக்க வகை செய்யப்பட்டுள்ளது. மாணவன் வேறு எதிலும் கருத்தைச் சிதறடிக்காமல் தன பெயர்கள், வினைகள் ஆகியவற்றைக் கையாளும் திறத்தில் கருத்தைச் செலுத்த முடியும்”. தன் பெயர்கள், வினைகள்! மாணவன் வாழ்க்கையே இந்தப் பெயரிலும் வினையிலும்தான் அடங்கிக் கிடக்கின்றது என்பதை இவ் வாசகங்களை விடத் தெளிவாகக் குறிப்பிடத்தக்கது ஏதேனும் இருக்க முடியுமா? முற்கால ஆசிரியர் தத்துவம் இது. இக்கால ஆசிரியர் தத்துவமோ இதற்கு நேர்மாறானது. அவர் எல்லாவற்றிலும் சிறிது சிறிது அறிவுடையவராய், எல்லாம் அறியவல்ல கடவுளின் ஒரு மேற்போக்கான படிவமாயிருக்க வேண்டும். இயங்கியல், இயைபியல் முதலிய இயல்நூல்கள், கணக்குத் துறைகள், வரலாறு, நிலநூல், நாட்டின் அரசியல், சமயத்துறைகள் எல்லாவற்றிலும் உருப்படியாகக் கொஞ்சம் அவர் தொட்டிருக்க வேண்டும். திரு. ‘ஹார்ட்லிப்’ பெயருக்குப் படையல் செய்யப் பட்டுள்ள கல்வி பற்றிய கட்டுரை மூலம், இப் பரப்பின் எல்லையை ஓரளவு காணலாம். “அறிவுத் துறைகளையெல்லாம் ஆசிரியர் முயன்றறிய வேண்டுவது வேறு எதற்குமல்ல; மாணவர்க்கு அவற்றின் அறிவை ஓரளவு ஊட்டி, அவை பற்றிய அறிவார்வமும் உண்டுபண்ணுவ தாகும்” என்று அவர் குறிக்கிறார். ஆனால், வியப்புக்கிடமான செய்தி யாதெனில், இத்தனையையும் அவர் கற்பிக்க வேண்டியது வகுப்பிலல். வகுப்புக் காலங்களிலோ, பாடத்தின் பகுதியாக வோகூட அவ்வ வகுப்பிடை நேரத்திலும், வெளியில் விளையாட்டு நேரத்திலும் உலாவச் செல்லும் நேரத்திலும், விடுமுறைகளிலுமே. இவை அவரது சம்பளத்திட்டத்துக்கு உட்படாத செயல்களே. அதே சமயம் சம்பளத் திட்டத்துக்கு உட்பட்ட பாடத்திட்டத்தை வகுப்பு நேரங்களுக்குள்ளாகவே அவர் நிறைவேற்றவும் வேண்டும். மாணவர் முன்னேற்ற வகையில் இத் திட்டங்கள் முக்கியத்துவம் குறைந்தவையாக, அல்லது முக்கியத்துவம் அற்றவையாகக் கருதப்பட்டாலும் ஆசிரியர் சம்பளத் திட்டத்திலும், வேலைத் திட்டத்திலும் இவை இன்றியமையா முக்கியத்துவம் உடையவை. திட்டத்துக்கான வாழ்வு, திட்டத்துக்குப் புறம்பாகத் தன்னுடைய தன் மதிப்புக்கான வாழ்வு ஆகிய இவ்விரு வாழ்வுகளுக்கும் வெளியே ஆசிரியருக்குத் தமக்கென ஒரு வாழ்வே கிடையாது”. ஆசிரியராகத் தம்மை ஒப்படைத்த ஒருவர் இதனால் தம் வாழ்வையே அதில் பலி கொடுத்தவர் ஆகிறார். அது முதல் அவர் எது படித்தாலும், இன்னொருவர் மூளையில் அதைச் செலுத்துவது எவ்வாறு என்ற சிந்தனையுடன்தான் படிக்க வேண்டும். மழை, வெயில், காற்று, பனி, இயற்கைக் காட்சிகள் எல்லாவற்றையும் அவர் கவனிக்க வேண்டும். ஆனால், அவற்றின் இன்ப நாடியோ, பயனுக்காகவோ அல்ல; அவற்றை ஒரு கருவியாக்கி, மாணவருக்கு அறிவூட்டும் வகைகளைக் காண்பதற் காக! மக்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு செய்தியையும் இந்த ஒரே நோக்கோடு அவர் பார்க்க வேண்டும். இது மட்டுமோ? எதைப் பார்த்தாலும் அதை அவர் அனுபவிக்க நேரமில்லை. அது பற்றி என்ன படிப்பினை கற்பிக்கலாம். அதில் என்ன முன்னேற்றங்கள் செய்வதுபற்றி மாணவர் சிந்தனையைத் தூண்டலாம் என்ற எண்ணத்துடனேயே அவர் அவற்றைப் பார்க்கமுடியும். அவர் இவ்வாறு வருந்தி, தன் வாழ்க்கையை மறந்து, உண்ணாது உறங்காது கற்பதும் கற்பிப்பதும் மாணவர்க்கு இன்பந் தருமோ என்றால், அதுவுமில்லை, நாடகம், உலகக் காட்சி, விளையாட்டு ஆகியவற்றில் அவன் இன்பம் பெறக்கூடும். ஆயினும், வேண்டா வெறுப்பாகவோ, நலந்தருவதாக கூறப்படினும் கசப்பு மிக்கதாகவோ, அல்லது இனிப்புடன் கலந்த கசப்பான செய்தி களாகவோ மட்டுமே அவர்கள் இப் படிப்பினைகளைக் கருத முடியும். விடுமுறை இல்லாமல், ஓய்வு ஒழிவு இல்லாமல், இன்ப மில்லாமல் வாழும் மனித வகுப்பு ஒன்று உண்டானால், அது இந்த ஆசிரியர் வகுப்புத்தான். ஆசிரியர் சற்று உயர்தர ஆசிரியரா யிருந்தால் அவருக்கு உயர்குடிப் பையன் எவனாவது விடுமுறை களிலும், ஓய்வு நேரங்களிலும் கூடக் கால்கட்டாக விடப்படு கிறான். அவர் அவனுக்காக உலாவ வேண்டும். காட்சிகள், கூட்டங்கள் ஆகியவற்றில் கலக்கவேண்டும். எங்கும் எல்லாரும் அச்சிறுவனை ஒட்டி, அவன் ஆளாக வருபவராகவே அவரை எண்ணி நடத்துவர். அவரும் அச்சிறுவனின் ஆளாகவே நடந்துகொள்வார். இப்பெருமையில், தமக்கென ஒரு தனித்தன்மை உண்டு என்பதையே அவர் மறந்துபோவதும் அரிதன்று. ஆசிரியரை மாணவர் வெளித் தோற்றத்தில் முற்றிலும் மதிப்பவரேயானாலும், அவர்கள் அன்புக்கோ விருப்புக்கோ அவர் என்றும் உரியவராக முடியாது. ஒருவர் தொண்டின் பெருமையை நினைத்தும், மற்றவர் கடமையை நினைத்துமே தம்மிடையே உள்ள கூட்டுறவைப் பொறுத்துக் கொள்கின்றனர். ஆசிரியருடன் மிகுதி பழகும் சிறுவர் சிறைப்பட்டவர் நிலையில் இயற்கை வாழ் விழந்தவர்கள் ஆகின்றனர். ஏனெனில், தம்மை ஒத்த பிற இளைஞருடன் கூடியாடும் சுதந்திரத்தையும், மகிழ்ச்சியையும், அதனால் ஏற்படும் உள் உணர்ச்சியையும் அவர்கள் இழக்கின்றனர். தம்மினும் உயர்ந்தவருடன் பழகுவதை யாரும் விரும்புவது இயல்பாயினும், தொடர்ந்து அவர்களுடன் வாழ்வதால், அவர்கள் இயற்கைத் தன்மை மாறிச் செயற்கையான உள்ள நிலை ஏற்பட்டு விடுகிறது. தம்மினும் மிக்கவருடன் பழகுவது இங்ஙனம் கேடு தருவத னால், தம்மினும் குறைந்த நிலையுடையவர் தோழமை எவ்வளவு உள்ளத்தைக் குறுக்கவல்லது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆசிரியர்கள் எப்போதும் பள்ளிப் பாடமும், சிறுவர் கூட்டுறவும் உடையவராயிருப்பதால், அவர்கள் ஒரு வகையில் மற்றெந்த வகுப்பினரையும்விட உலக வாழ்க்கைக்கு ஒவ்வாதவர்களாய் விடுகின்றனர். அவர்கள் குடும்ப, சமூக வாழ்வு கூட இவ் வாசிரியத் தொழிலில்பட்டு அலைக்கழிக்கப்படுகிறது. இதனாலேயே நற்குடி மக்கள் கூட்டத்திலும் சரி, பெண்டிர் கலந்துறவாடும் கூட்டத்திலும் சரி, ஓர் ஆசிரியர் இயல்பாக யாருடனும் ஊடாட முடிவதில்லை. எதற்கெடுத்தாலும் அவர் தன் படிப்பைக் கொண்டு வராமலிருக் கமாட்டார். ஏனென்றால் படிப்பு, படிப்பித்தல் ஆகிய இருகண் கொண்டன்றி, அவர் எதையும் பார்த்தது கிடையாது. இந்த இரண்டும் தவிர, அவருக்கு உலகில் எதுவும் தெரியவும் தெரியாது. யாருடன் பேசினாலும் அவர் ஆசிரியர் தோரணையுடன் மாணவருக்கு விளக்கும் முறையிலன்றிப் பேசமுடியாது. எதையெடுத்தாலும், ஆராய்ந்து போதிக்கும் ஒரு இயந்திரத்துடன் யாரே நண்பராகப் பழக முடியும்! ஆசிரியருக்குப் பெரும்பாலும் நகைச்சுவையே இருப்ப தில்லை. இருந்தாலும் அது பாடத்திற்குரிய அளவில்தான் இருக்கும். உண்மை நகைச்சுவை சமத்துவ அடிப்படையில் மட்டுமே தோன்றும். எப்போதும் கடமை, கட்டுப்பாடு ஆகியவற்றிலடங்கிய ஆசிரியர் வாழ்வு, தன்னிச்சையாக இயங்கும் மனித வாழ்வாகிய உடலில், மரக் கட்டையாலான ஒரு உறுப்புப்போல இடம் விட்டு இடம் இயங்குமேயல்லாது. இயல்பாக இயங்கமாட்டாது. ஆசிரியர் மாணவர் தொடர்பின் தன்மையை ஓர் ஆசிரியர் தம் நண்பனுக்கு எழுதிய கீழ்க்காணும் கடிதம் நன்கு விளக்குகிறது. அந் நண்பரின் சிறுவன் ஆசிரியரிடன் பயின்று பயிற்சி முற்றுப் பெற்றுச் சென்று விட்டான். இதுபற்றி அவர் எழுதுவதாவது: “தம் சிறுவனுடன் நான் முற்றிலும் நெருங்கிப் பழகவில்லை என்பது அவன் குற்றமன்று. இவ்வகையில் ஆசிரியர் எல்லாருடைய நிலையும் ஒன்றுதான். அது ஒரே வகையில் இரங்கத்தக்க நிலைதான். நாங்கள் எப்போதும் உணர்ச்சி யார்வம் மிக்க இளைஞர்களால் சூழப்பட்டு வாழ்கிறோம். ஆனால், அவர்கள் உணர்ச்சியார் வத்துக்கு நாங்கள் உரியவர்களாகவோ, அதில் பங்கு கொள் பவர்களாகவோ என்றும் இருக்க முடியாது. ஆசிரியர் மாணவர் தொடர்பே இதனைத் தடைப்படுத்தும் நிலைமை கண்டு நாங்கள் பொறாமை அடையத்தான் வேண்டும். “இளைஞன் அன்பில் தந்தைக்குப் பங்கு உண்டு. ஆசிரி யருக்கு, ஆசிரியராயிருக்கும்வரை, கட்டாயமாகக் கிடையாது. ஒருவேளை நீங்கள் கூறக்கூடும். ‘உங்களிடம் கற்றவர்கள் பிற்கால வாழ்க்கையில் நன்றியுடையவர்களா யிருப்பதில்லையா?’ என்று. ஏராளம் உண்டு. ஆனால், நன்றி, அன்பல்ல. மேலும் இது ஆசிரியர், ஆசிரியராயிருந்த நிலை மாறிய பின்தான் கிடைக்கிறது. பள்ளி விட்டபின் ஆசிரியர் செய்த உதவிக்கு நன்றி செலுத்தும் ஆர்வமிக்க இளைஞர், பயிற்சிக்கால முழுதும் தன்னைத் தந்தை போல் பேணிக் கவனித்த ஆசிரியரிடம் ஒரு சிறிதளவு பற்றுதலும் காட்டியிருக்க முடியாது. அச்சமும் மதிப்பும் தன் காரிய சாதனை நயமும் தான் கொண்டிருக்க முடியும். ஆசிரியர் தயவை நாடி அவனோ, பெற்றோரோ, ஒரு நாள் ஓய்வு கொள்வர். ஓய்வுப்பெற்றால், வீடு சென்று அனைவரும் மகிழ்வடைவர். ஆனால், திரும்பும் நாள் அனைவருக்கும் துயரமே தரும். இந் நிலையில் மாணவனுக்கும் ஆசிரியரிடம் பற்று எப்படி இருக்கக் கூடும்? பள்ளியிடம் வேண்டுமானால் ஓரளவு பற்று இருக்க வழி உண்டு. அவ்வப்போது வெளியே வந்த பின், தோழராய் உள்ளே தங்கள் சிறை வாழ்வில் பங்காளராய் இருந்த மாணவரை எண்ணி அவர்கள் பாசங் கொள்ளக்கூடும். பள்ளி விட்டபின் ஆசிரியரைக் காணும்போதும், நன்றி தெரிவிக்கும்போதும் அவனுக்கு ஏற்படும் மகிழ்ச்சிகூட, சிறு பருவக் காட்சிகளைக் காண்பதனாலும், ஆசிரியருடன் சமமாகப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததனாலும் ஏற்பட்டதேயன்றி, அன்பி னாலன்று. “இவ்வளவு கூறுவானேன்! மாணவர்கள் அன்பைப் பொ றாமை மட்டுமல்ல, ஆசிரியர் வாழ்விலே உள்ள வறுமை! எல்லாருக்கும் உரிய குடும்ப வாழ்வின்பத்தைக் கூட ஒரு ஆசிரியர் இழக்கவே நேரிடுகிறது. என் மனைவியை நான் மணப்பதன் முன் அவள் வெறும் ‘ஆனா’ வாயிருந்தாள். அப்போது நான் அவளிடம் அவள் வருங்கால வாழ்வின் வெறுமையை மறைக்காமல் தெளிவாகச் சித்திரித்துக் காட்டியிருந்தேன். எங்கள் ஏழ்மை மிக்க வீட்டில் என் தாய் சம்பளமில்லா வேலையாளாய். நாள் முழுதும் பரபரப்புடன் ஓடியாடி வேலைசெய்து, அப்போதுதான் கால மாயிருந்தாள். அவள் பொறுப்பை ஒரு சின்னஞ் சிறு பெண் தன்னந் தனியாக ஏற்ப தென்பதே கடினமான காரியம். இது ஒரு மனைவியின் பொறுப்பு. ஆனால், இது போதாமல் ஆசிரியர் மனைவியின்பொறுப்புக்கள் வேறு என் மனைவிக்கு உண்டு. இவ்வளவையும் நான் சித்திரித்த பின்னும், இத்தனையையும் காதலுக்காக ஏற்றுத் தான் ‘ஆனா’ என் மனைவியானாள். இன்று வரை அவள் தம் இரு பொறுப்புக்களிலும் நான் விரும்பிய குறிக்கோள் வாழ்க்கையையும் பொய்யாக்குமளவு திறம்பட்ட வளாக நடந்து வந்துள்ளாள். “என் மாணவருக்கு ஆசிரியனென்ற முறையில் நான் செய்த தொண்டைவிட, ஆசிரியர் மனைவி என்ற வகையில் அவள் நிறைவேற்றிய தொண்டு பெரிது. ஆனால், இதனால் நான் இழந்தது மனைவியின் அன்பின்பம். அவள் இழந்தது கணவனின் அன்பின்பம். ஏனெனில், , அவளுக்கு நான் அவள் சிறுவரின் ஆசிரியர்; எனக்கு அவள் என் மாணவரின் பராமரிப்புத்தாய். வேறு வகையான சிந்தனைக்கோ, பேச்சுக்கோ வாழ்வுக்கோ நேரமும் ஆற்றலும் கிடையாது. அவள் இழந்ததை அவள் என்றும் எனக்குச் சொல்ல முடியாது. ஏனெனில், அதை இழப்பதற்கு ஒப்புக்கொண்ட அவள் என் மனைவி என்ற பட்டத்தை ஏற்றாள். நானும் நான் இழந்ததைக் கூறமுடியாது. ஏனெனில், என் காதலுக்காகவே அவள் என்னைக் கட்டி கொண்டு, அதைத் தானும் இழந்து நானும் இழக்கும்படி செய்தாள்”. இக் கடிதம் எனது மாற்றாந் தங்கை பிரிட்ஜட் ஈலியா மூலம் என் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டது. அடிக்குறிப்புகள் 1. முதனூல் தலைப்பு அக்கால இக்கால ஆசிரியர் (கூhந டீடன & கூhந சூநற ளுஉhடிடிட ஆயளவநச) என்பது. ஆறுபோல் வளைந்து நெளிந்து செல்லும் இக் கட்டுரையின் கடைசித் திருப்பத்திற் கண்ட பொருள் இங்கே தலைப்பாகத் தரப்பட்டுள்ளது. 1. பருத்தி மேனாட்டினருக்கு 18 ஆம் நூற்றாண்டிறுதியில் புதிது. அதன் வாணிகத்தாலும் புதிய இயந்திர நெசவு முறையாலுமே தொழிற் புரட்சி ஏற்பட்டது. சிறிது காலத்துக்குப் பின் இதன் பயனாக பிரிட்டன் உலகின் முதல் வாணிக வல்லரசாக எழுச்சியுறத் தொடங்கிற்று. 2. அச்சிலிஸ் கிரேக்கர் பெருங் காவியக் கதைகளில் வருணிக்கப்படும் அர்ச்சுன்னை ஒத்த வீரன். 3. ஹெர்குலீஸ் கிரேக்கர் பெருங் காவியக் கதைகளில் வருணிக்கப்படும் ஓர் அறிவார்ந்த அருஞ்செயல் வீரன். அவன் வீரத்தில் வீமனையும், அரசியலறிவில் கண்ணனையும், காதல் வீரவாழ்வில் நளனையும் நினைவூட்டத்தக்கவன். 8. மாயக் குழந்தைகள் கதை கேட்பதில் குழந்தைகளுக்கு எவ்வளவோ விருப்பம்; அதிலும் தங்கள் பெற்றோர்கள் அல்லது முன்னோர்கள், தங்களைப் போல் சிறுவர் சிறுமியர்களாயிருந்த காலத்துக் கதைகளென்றால், அவர்கள் ஆர்வத்துக்கு எல்லையே கிடையாது! அவர்கள் சின்னஞ் சிறு கற்பனையுள்ளங்கள் தங்கள் கால உலகையும், தங்கள் தாய் தந்தையர் கால உலகையும் தாண்டித் தங்கள் தாய் தந்தையர்களின் தாய் தந்தையர்களுடைய கற்பனை உருவங்களுக்கு உயிரும் உணர்வும் கொடுத்து, அக் கற்பனை உலகில் ஊடாடி மகிழும். இத்தகையதோர் ஆர்வத்துடன்தான் என் வாழ்க்கையின் சிறிய ஒளிகளான என் கொஞ்சும் குருவிகள் என்னைச் சூழ்ந்து வந்தமர்ந்து கொண்டு “அப்பா, அப்பா நம் பெரிய வீட்டு ஃவீல்டுப் பாட்டியை உங்களுக்கு நேரடியாகத் தெரியுமல்லவா? அவளைப் பற்றிய கதையை இன்று எங்களுக்குச் சொல்லமாட்டீர்களா?” என்று கேட்டனர். ஃவீல்டுப் பாட்டி வாழ்ந்த நார்ஃவோக் வட்டத்துப் பெரிய வீடும், அதைச் சுற்றியிருந்த தோட்டந்துறவுகளும், மனையிடமும் அவர்களுக்கு ஏற்கனவே பல தடவை கேட்டுப் பழக்கப்பட்டவை. இன்று அக் குழந்தைகளும் அவர்கள் பெற்றோரும் வாழ்ந்து வரும் வீட்டைப் பார்க்கிலும் அது எத்தனையோ மடங்கு பெரிது. நாட்டுப்புறமெங்கும் பெரியவர்களும் சிறியவர்களும் பாடிப்பாடி உருகும் ‘கானகத்துச் சிறு குழந்தைகள்’ என்ற கதைப் பாடலில் குறிக்கப்படும் மாளிகை இதுவே என்று அக்கம் பக்கத்தவர்கள் கூறுவதுண்டு. அதற்கேற்ப அவ் இல்லத்தின் நடுக்கூடத்துச் சுவர்களில் அக்கதைப் பாடல் பாடலாகவும், படமாகவும் தீட்டப்பட்டிருந்தது. ஆயினும், அந்தக் கதை முடிவுக்கு வருமுன் அது அச்சுவர்களில் ஓரிடத்தில் திடுமென நின்றுவிட்டது. ஏனென்றால் பழங்காலக் கட்டடங்களின் அருமை பெருமை அறியாத எவரோ ஒருவர், இடைக்காலத்தில் அப்பழஞ்சுவரை இடித்துப் பாட்டுமில்லாமல், கதையும் படமும் இல்லாமல், ஒரு அந்த சந்தமற்ற புதுச்சுவரை எழுப்பியிருந்தனர். பாட்டின் அருமை தெரிந்தவர்களுக்குத்தானே வீட்டின் அருமையும், நாட்டின் அருமையும் தெரியும்? (இவ்விடத்தில் என் செல்வக் குழந்தை ஆலிஸின் கண் களிலிருந்து மெல்லிய கண்டனமும், இறுமாப்பும் கலந்த ஓர் ஒளி வீசிற்று. அது ஒரு நொடிப் பொழுதுக்குள் மறைந்து விட்ட தானாலும், அதில் அவள் அன்னையின் பார்வையிலுள்ள பெருமித நகையின் ஒரு சாயல் நிழலாடியதாக எனக்குத் தோன்றிற்று). வாழ்விலும் தாழ்விலும் ஃவீல்டுப் பாட்டி மக்கள் உள்ளத் திலும் தன் வீட்டிலும் தங்குதடங்கலற்ற அரசாட்சியே செய்து வந்தாள். அவ்வீடு உண்மையில் அவளுக்கே உரியதாக இல்லாமல். அவள் பொறுப்பிலுள்ளதாக மட்டுமே இருந்ததனாலும், அவள் இருக்கும் வரையில் அவள் வாக்கே அவ்வீட்டு வகையில் கடைசி வாக்கா இருந்தது. அவ் வீட்டுக்கு உரிமையுடையவர்களுக்கு அப்பழங்கால வீடு பிடிக்காமல், புதிதாக ஒரு வீடு கட்டிக்கொண்டு போய்விட்டார்கள். ஃவீல்டுப் பாட்டி அவர்களிடம் “இந்த வீடு யாருக்குச் சொந்தமானாலும், அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. இது மக்கள் அன்புக்கும் ஆர்வத்துக்கும் உரியது. இதில் யாரும் கை வைப்பதை நான் விரும்பவில்லை” என்றாள். அவள் இறக்கும் வரை எவரும் அந்த வீட்டை எட்டிப் பார்க்கவேயில்லை. இடமகன்று பழமைச் சுவையுணர்வின் கோயில் போன்றிருந்த அந்த வீட்டை அவள் தன் ஆட்சியிடமாகக் கொண்டு ஆண்டு வந்தாள். ஆனால், அவளுக்குப்பின் அவ்வீட்டின் பெருமையெல்லாம் குன்றிப் போய்விட்டது. அதன் பழங்காலச் சித்திரங்களும், நுண்கலை வேலைப்படாமைந்த தூண்களும், விட்டங்களும் பிரித்தெடுக்கப் பட்டன. வீட்டுக்குரியவரின் புதிய வீட்டினை அழகுபடுத்த அனுப்பப்பட்டன. பாலும் பழமும் தின்னும் பலவகைப் பசுங்கிளி களைக் காடை கவுதாரிக் கூண்டுகளில் வைத்தது மாதிரி, அவற்றின் அழகு இப்போது கண்களை உறுத்துகின்றன. (இவ்விடத்தில் ஜான் முகத்தில் ஒரு சிறு புன்முறுவல் பூத்தது. ‘என்ன மடமை இது’ என்று அவன் எள்ளி நகையாடுவதுபோல் இருந்தது. அந்தப் புன்சிரிப்பு). ஃவீல்டுப் பாட்டி இறந்தபோது அவள் உடலைப் பின்பற்றிப் பல கல் தொலைவுவரைக்கும் ஏழை எளியவர்கள் எல்லாரும், செல்வர்களில் கூடப் பலரும், நீர் கனிந்த கண்களுடன் மௌனமாகச் சென்றனர். அவள் கடவுளிடத்தில் எவ்வளவு பற்று வைத்திருந்தாளோ, அவ்வளவு பற்று அக்கம்பக்கத்து மக்கள் அவளிடம் வைத்திருந்தார்கள் என்று சொன்னால் மிகையாகாது. அவளும் அவர்களுள் தன்னை வந்தடுத்த எவரிடமும் ஆதரவாகப் பேசி அவர்கள் குறைகளைத் தீர்க்காமலிருந்ததில்லை. அவள் நல்ல சமயப்பற்று உடையவள். ஆனால், அது இக் காலத்திலுள்ள சில சிடு மூஞ்சிக்காரர்களின் பகட்டான சமயப்பற்று அல்ல. அவள் சமயப்பற்றின் வாய்மையை அவள் வழிபாட்டமைதியில் மட்டுமன்றி, மக்களிடமும் பிள்ளை களிடமும் அவள் காட்டிய அன்பிலும் காணலாம். இத்துடன் வழிபாட்டுப் பாடல்களும் பழைய ஏற்பாடு முழுவதும் புதிய ஏற்பாட்டின் பல பகுதிகளும் அவளுக்குப் படிக்காமலே மனத்தில் படிந்திருந்தன. (ஆலிஸின் மெல்விரல்கள் இச்சமயத்தில் புத்தகம் புரட்டுவது போலக் கூடிக் கூடி நெகிழ்வுற்றன). ஃவீல்டுப் பாட்டி பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்கை களையும் பெற்று வளர்த்தவளானாலும், அவள் சிறுவயதில் அந்தப் பக்கத்திலேயே எல்லாப் பெண்களிலும் நல்ல உயரமும், நிமிர்ந்த நடையும், நய நாகரிகமும் உடைய வளாயிருந்தாள். குடும்ப நடன விருந்துகளில் எந்தப் பெண்ணும் அவளுக்கொப்பாக ஒசிந்து நுடங்கி ஆடமுடியாது. அவள் கால்கள் நிலத்தில் பதியுமோ, பதியாதோ என்றிருக்கும்! (ஆலிஸின் கால் பெருவிரல்கள் இச்சமயம் நிலத்தில் ஊன்றி வட்டமிடத் தொடங்கியிருந்தன. நான் அதைச் சற்றுக் கூர்ந்து பார்த்ததும், அது நின்றுவிட்டது). பிற்காலத்தில் ஒரு கொடிய நோய் வந்து அவள் உடல் வனப்பைக் கெடுத்துக் குறுக்கி விட்டது. ஆனால், எந்த நோயும் அவள் உள்ளத்தின் அழகைக் கெடுக்கவில்லை. அவள் என்றும் யாரையும் கண்டு சினந்து பேசவோ, அல்லது எந்த வேலையை யும் அடுத்தவரிடம் விட்டு விட்டுச் சோம்பியிருக்கவோ செய்ய வில்லை. நூறு மனிதர் நூறு இடங்களில் பார்க்கும் வேலையை அவள் ஒருத்தியே எங்கும் சுழன்று சுழன்று சென்று பார்ப்பாள். அவள் தன் வகையில் செலவு செய்தது மிகவும் குறைவு. அவள் கைப்பணத்தின் பெரும்பகுதி மற்றவர்கள் வகையில்தான் செல வாகும். அவள் உள்ளம் தூய்மையுடையதாயிருந்தது போலவே, ஒரு போர் வீரனின் அஞ்சா உறுதியும் உடையதாக இருந்தது. இவ்வளவு பெரிய வீட்டில் முழுக்க முழுக்க வெற்றிடமாகக் கிடக்கும் பல பாரிய கூடங்களிடையே, ஒரு அகன்ற அறையில், அவள் சிறிதும் அச்சமின்றித் தனியே படுத்து உறங்கி வந்தாள். இதில் அதிசயம் என்னவென்றால், எல்லாப் பழங்கால மனிதர்களையும் போலவே, அவளுக்கும் ஆவிகள் வகையில் நம்பிக்கையுண்டு. பல இரவுகளில் நடுச் சாமத்தில் இரு குழந்தை களின் உருவங்கள் மாடிப் படிகளில் தவழ்ந்து தவழ்ந்து ஏறி, அவள் படுக்கையண்டைவரை வந்து, அவளைப் பார்த்துக் கொண்டே நிற்குமாம்! ‘இந்த ஆவிகள் அறியாச் சிறு குழந்தை களின் ஆவிகள். அவை எவ்விதத் தீங்கும் செய்யமாட்டா’ என்று எண்ணிக்கொண்டு, அவள் அப்பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டே அமைதியாகப் படுத்திருப்பாளாம்! ஆனால், இவற்றைக் கேட்ட நான், என் செவிலித் தாயுடன் கூடவே படுத்திருந்தால்கூட, அடிக்கடி அரை இருட்டில் ஆவி உருவங்கள் எண்ணி நடுங்காமலிருக்க முடியவில்லை. எனினும் இதுவரை நான் அந்தக் குழந்தைகளைப் பார்த்ததே கிடையாது. (ஜான் தன் கண்களை அகலத் திறந்து, தானும் ஃவீல்டுப் பாட்டியைப் போல் உறுதியாயிருக்க வேண்டும் என்று கருதியதை நான் இச்சமயம் கவனித்தேன்.) ஃவீல்டுப் பாட்டிக்குத் தன் பேரப்பிள்ளை அனைவரி டத்திலும் மிகுந்த அன்பு உண்டு. அந்தப் பெரிய வீட்டில் நாங்கள் எங்கள் மனம் போல எவ்வளவு அமர்க்களம் பண்ணினாலும், அவள் புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டுதான் இருப்பாள். என்னைப் பற்றியவரையில் எப்போது கோடை விடுமுறை வரும், எப்போது பள்ளியில்லம் விட்டுப் பெரிய வீட்டில் போய்க் களிப்புடனிருக் கலாம் என்றுதான் நினைத்துக்கொண்டிருப்பேன். அந்த வீட்டின் வெளிப்புறச் சுவர்களில் உரோமப் பேரரசை ஆண்ட பன்னிரண்டு ஸீஸர்களின் படங்களும் வரிசை வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அவைகளைப் பார்த்துக் கொண்டேகூட நான் ஒரு நாள் முழுவதும் போக்கிவிடுவேன். அவ்வீட்டின் அரங்கில் அங்கங்கே சிதலரித்துப்போன பழைய பட்டு மேற் கட்டிகளும் பொற்பூவேலை செய்த, ஆனால், பல இடங்களில் கிழிந்து நைந்து தொங்கிய, அழகிய தூக்குப் படாங்களும் திரைச் சீலைகளும் இருந்தன. அவற்றைப் பார்த்து அவ்வீட்டின் பொங்கற்கால வாழ்க்கையை நான் மனத்தில் உருவகப்படுத்திக் கொள்வேன். அவ்வப்போது தோட்டங்களில் சுற்றித் திரிந்தே நான் பொழுது போக்குவேன். ஒன்றிரண்டு தோட்டக்காரரைத் தவிர அங்கே வருபவர் யாருமில்லை. தோட்டக்காரரும் எங்களை எதுவும் சொல்லமாட்டார்கள். தோட்டம் காடாய் வளர்ந்திருந்த தனாலும், ஆங்காங்குச் சிறிதுசிறிது செப்பம் செய்யப் பட்டிருந்தது. சுவர்களில் கொவ்வைக் கொடியும் பிற கொடிகளும் படர்ந்திருக்கும். அவற்றிடையே பழங்கள் பறிப்பாரற்றுப் பழுத்துக் கனிந்து கிடந்தாலும், நான் அவற்றை என்றும் தொட நினைத்ததில்லை. அப்பழங்களைத் தின்பதினும், அவற்றைச் சுற்றிப் பார்வையிடுவதிலேயே எனக்கு இன்பம் மிகுதி. (தந்தையின் பண்பு தன்னிடத்திலும் உண்டு என்று காட்டு பவன் போல, ஜான், எனக்குத் தெரியாமல் ஆலீஸுடன் பங்கிட்டுத் தின்ன எடுத்த பழங்களை எல்லாம், மீண்டும் தட்டத்திலேயே வைத்துவிட்டான். கதை கேட்கும் இன்பத்தினும் அப்பழம் தின்னும் இன்பம் பெரிதல்ல என்று அவன் எண்ணியிருக்க வேண்டும்.) ஃவீல்டுப் பாட்டிக்குப் பேரப்பிள்ளைகள் அனைவரிடமும் பொதுவாகப் பற்று மிகுதியானாலும், அவள் உள்ளத்தில் மிகப் பெரும் பகுதியிடத்தையும் பெற்றது சிற்றப்பா ஜான் இலா-தான், ஜான் நல்ல அந்தசந்தமான தோற்றமுடையவர் மட்டுமல்ல, நல்ல சூட்டிப்பும் சுறுசுறுப்பும் மிக்கவர். எங்களிடையே அவர்தான் முடி மன்னர். (ஜான் பெயர் கூறியவுடனே பிள்ளைகளைவிட எனக்குக் கதையில் ஆர்வம் மிகுதியாயிற்று என்பதை நான் உணர்ந்தேன். என் குரல் முன்னிலும் சற்று உணர்ச்சியுடன் எழுந்து முழங்கத் தொடங்கியதையும் நான் கவனித்தேன். குழந்தைகளோ, என் கதையுணர்ச்சியில் முற்றிலும் ஒன்றுபட்டுப் பதுமைகள் போலாய்விட்டனர். என்னைப் போலவே ஜானுக்கும் பெரிய வீட்டில் ஆர்வம் உண்டு. ஆனால், என்னைப்போல அவர் அதில் அடைபட்டுக் கிடப்பதில்லை. அவர் இளமைத் துடிப்பும் வீரமும் அவரை எங்கும் ஓடியாடிச் செயலாற்றவும் பல துணிகரச் செயல்களில் ஈடுபடவும் தூண்டிற்று. இவ் வட்டாரத்திலுள்ள அடக்க முடியாக் குதிரைகள் எல்லாம் அவர் கைக்கு அடங்கி, அவர் துடிப்பின் எதிரொலியாய் இயங்கும். வேட்டையாடுவோர் குழுவில் முந்திச் செல்பவரும், எல்லாருக்கும் பிந்தி வருபவரும் அவரே. சிறுமைப் பருவம் முற்றி இளைஞரானபோது, அவர் தம் வனப்பாலும், வீரத்தாலும் எல்லாருடைய உள்ளங்களையும் அடிமை கொண்டார். ஆனால், எல்லா உள்ளங்களையும்விட ஃவீல்டுப் பாட்டியின் உள்ளத்தில் அவர் அன்பாட்சி செலுத்தினார். இங்ஙனம் எல்லார் நேசமும் அவருக்கு இருந்தும், அவர் அதனால் தலை திரிந்துவிடவும் இல்லை. அக்காலத்தில் நான் கால் நொண்டியாய், பிறர் புறக்கணிப் புக்கு ஆளாக்கத்தக்க நிலையில் ஒதுங்கி வாழும் போக்குடை யவனாக இருந்தேன். ஆனால், ஜான் மட்டும் என்னைப் புறக்கணிக்கவில்லை. என் ஆட்பழக்க மற்ற நிலையும், நோவின் தொல்லையும் சேர்ந்து, என்னை அடிக்கடி அவரிடம் முரட்டுத்தனமாக நடக்கத் தூண்டியதுண்டு. ஆனால், அவர் அதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. அவர் என்னைவிட ஓரிரண்டு வயதே மூத்தவராயிருந்தாலும், என் கால் நோவை நினைத்துத் தன் வேடிக்கை விளையாட்டுக்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, என்னைத் தூக்கிச் சுமந்து திரிவார். அந்தோ! இங்ஙனம் எனக்கு உண்மைத் தொண்டாற்றிய அந் நல்லண்ணல் பிற்காலத்தில் என்னைப் போலக் கால்நொண்ட லுற்றுத் துன்புற்றபோது, நான் அவரைப் போதிய அளவு கவனிக்காதவனாகவும், நன்றி கெட்டத்தனமாய் அவர் மனம் நோகவைத்துப் புறக்கணிப்பவனாகவும் இருந்துவிட்டேன். உண்மையில் அவர் இறந்த போதுகூட நான் அவரது பிரிவை எளிதில் தாங்கிக் கொள்ள முடியும் என்றே நினைத்திருந்தேன். ஆனால், நாட்செல்லச் செல்லத்தான், என்னையும் மீறி என் உள்ளம் அவரிடம் எவ்வளவு ஈடுபட்டிருந்தது என்பது எனக்கு விளங்கலாயிற்று. இப்போது என்னிடம் அவரைப்போல் அன்பு செலுத்து பவருமில்லை, அவரைப்போல வாது செய்து மல்லாடுபவரும் இல்லை. அவரது நேசம் இன்று எனக்கு இனிப்பாகவே தோற்று கிறது. உள்ளார்ந்த அன்பு காரணமாக அவ்வப்போது அவர் இட்ட போட்டி பூசலும்கூட, இன்று எனக்கு மிகவும் இனிப்பாகவே யிருக்கிறது. இன்று இப்படிப்பட்ட நல்லின்பத் தோழனை எண்ணி எண்ணி, நான் ஓயாது ஏங்குகிறேன். அவர் மட்டும் இன்று உயிருடனிருந்து ஓயாமல் சண்டையிட்டால்கூட, என் வாழ்வு இன்றிருப்பதைவிட இன்பமாயிருக்குமே என்று நான் எண்ணுவதுண்டு. உண்மையில் எல்லாருக்கும் இன்பம் நாடிய சிற்றப்பா ஜானின் ஒரு காலை மருத்துவன் அறுத்தெடுத்தபோது, அக்காலின் அருமை அவருக்கு எவ்வளவு தென்பட்டிருக்குமோ அதைவிட இன்று அவர் அருமை எனக்கு நன்கு தென்படுகிறது. (இங்கு என் செல்வங்களின் கண்கள் கனிந்தன. அவர்கள் தங்கள் சட்டையில் மாட்டியிருந்த நாடாக்களைச் சுட்டிக்காட்டி ‘நம் ஜான் சிற்றப்பாவின் நினைவுக்காகத்தானே அப்பா, இன்று நாம் கறுப்பு நாடாக்கட்டி யிருக்கிறோம்’ என்று கேட்டார்கள். ஆனால், அதே சமயம் அவர்கள் எண்ணம் இன்னும் சற்று அப்பாற் சென்று, என்னை அண்ணாந்து பார்த்து, ‘சிற்றப்பா பற்றிக் கூறியது போதுமப்பா, இறந்து போய்விட்ட எங்கள் அன்னையைப் பற்றி ஏதாவது கூறுங்கள்’ என்றார்கள். சற்று எழுச்சி குன்றிய, ஆனால், ஆழ்ந்த உணர்ச்சியுடன் நான் தொடர்ந்தேன். குழந்தைகள் அறியுமளவுக்கு நான் என் காதற் கதையையும் கட்டுரைத்தேன்.) உங்கள் அன்னை ஆலிஸ் உடலழகைப் போலவே உள்ளத்தின் அழகும் உடையவள். அவள் மிகுதியாகப் பேசுவதில்லை. அவள் அடக்கமான குணமும் கூச்சமும், அவள் கருத்தை நான் நன்கு அறிய நெடுநாள் தடங்கலாயிருந்தன. ஆனால், அவள் கண்களில் வீசும் ஒளி... (என்னால் இதற்கு மேல் பேசமுடியவில்லை. என் முன்னிருந்த குழந்தை ஆலிஸின் கண்ணில் அவர் அன்னை ஆலிஸின் கண்ணிற் கண்ட அதே ஒளியைக் கண்டேன். என் கண்முன் இருப்பது குழந்தை ஆலிஸ்தானா, அல்லது அந்த...) என் தலை சுழன்றது. குழந்தை ஆலிஸின் கண்ணொளி பரந்து ஒளி வீச வீசக் குழந்தை ஆலிஸ் மறைந்து, ஆலிஸின் உருவம் நிழலாடத் தொடங்கிற்று. அதனூடாகக் குழந்தைகளின் வடிவம் மெல்ல மெல்ல மங்கித் தொலைவில் பின்னாடியே செல்வது போலிருந்தது. இறுதியில் அவர்களின் இரு சிறு முகங்கள் மட்டுமே தொலைவெளியில் சென்று, வானவிளிம்பில் நின்று, சற்று உற்று நோக்கித் தயங்கி மறைந்தன. அவ் வுருவங்கள் எதுவும் என்னிடம் வாய்திறந்து போசாவிட்டாலும், அவை என் உள்ளத்தின் காதில் தம் உளந்திறந்து இச் சொற்களை முழங்கினதுபோல எனக்குத் தோற்றிற்று. “நாங்கள் ஆலிஸின் சிறுவரும் இல்ல; உன் சிறுவரும் அல்ல. மற்றும் ஆலிஸின் சிறுவர் ‘அப்பா’ என்றழைப்பது ‘பெர்ட்ர’த் தையே. நாங்கள் போலி வடிவங்கள் - போலியினும் குறைந்த இயல்பே யுடையவர்கள்- வெறும் கற்பனைத் தோற்றங்கள்! நாங்கள் என்றும் இருந்தவர்களுமல்ல, இருப்பவர்களோ, இருக்கப் போகிறவர்களோகூட அல்ல, இருந்திருக்கக் கூடியவர்கள்- இருக்க வேண்டும் என்ற அவா- இருந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம்- இருந்திருந்தால் என்ற நைப்பெண்ணம் ஆகியவற்றின் விளைவான கற்பனைகளே நாங்கள்”. மாயக் குழந்தைகள் அளித்த விளக்கம் என் மாயக் கனாத் தோற்றத்திற்கு ஒரு முடிவு கட்டியது. மெய்யெல்லாம் சுட் டெரிக்கும் கோடைகால உச்சிப்போதின் வெப்பத்திடையே, கொட்டாவியிட்டுக் கொண்டு நான் விழித்துக்கொண்டேன். என் கனவு வாழ்வுக்கு நேர்மாறுபட்ட என் மெய் வாழ்வு பட்டப் பகலென நாற்புறமும் கண்ணை எறித்தது. காதலைக் கட்டிவைத்து விட்டுக் கட்டற்ற செல்வனாக நானும், அதேபோலக் கட்டற்ற முது கன்னியாக என் இல்லத்தில் வாழ்ந்த என் ஒன்றுவிட்ட உடன் பிறந்தாள் பிரிட்ஜட் ஈலியாவும் எங்கள் புத்தக அன்பர்களிடையே உட்கார்ந்திருப்பதைக் கண்டேன். ஜானின் நினைவுக்கும், பண்டை நாள் இளமைத் தோழமை கொண்டிருந்த ஆலிஸின் நினைவுக்கும் ஒரு நீண்ட வணக்கம் செலுத்தினேன். 9. ஒட்டடைச் செல்வரின் உயர்தனிச் சிறப்பு ஒட்டடையடிப்பவரைக் காண்பதில் எனக்கு ஆர்வம் மிகுதி. அப் பணியாளருள் வயது வந்தவரையோ, முதியோவரையோ நான் இங்கே குறிப்பிடவில்லை. ஏனெனில், மற்றப் பணித் துறையாளருக்கும், அவர்களுக்கும் உள்ள வேறுபாடுகள் அவ்வளவு சிறப்பித்துக் கூறத்தக்கவை என்று கொள்ள முடியாது. நான் குறிப்பிடுவது குழந்தைப் பருவ அழகு முற்றிலும் மாறுமுன் இவ் ஒட்டடைப் பணியின் புது அழகு வகையை மேற்கொள்ளும் இளம் பணியாளரையே! குழந்தைப் பருவத்தில் அவர்கள் அளையும் தூசியை அவர்கள் தாய்மார்கள் கழுவித் துடைத்து, அதன் தடம் முற்றிலும் அகலுமுன், இப்புதுப் பணியின் சற்று மாறுபட்ட தும்பு தூசிவகை அவர்களை அணி செய்துவிடுகிறது. புலர் காலையில் கதிரவன் வரவை முன்கூட்டி வரவேற்கக் கூடுகளிலிருந்து வெளிப்படும் புட்குலங்கள் போலவே, அப் புட்குலங்களுடன் போட்டியிட்டு அவர்கள் வெளி வருகின்றனர். அவர்கள் தம் கையில் தம்மிலும் பல மடங்கு நீண்டு, தம் தலைமுடியைப் போலவே சிங்காரமான தூரிகையை உடைய நீண்ட கழிக்கோலுடன் காட்சியளிக்கின்றனர். இச் சின்னஞ்சிறு கரி மொட்டுக்களிடம்- மாசு மறுவற்ற உள்ளங்களையுடைய இக் கருமாணிக்கத் துணுக்குகளிடம்- கருவேலங்குச்சிகளிடம் என்னால் என்றும் அன்பும் கனிவும் ஆர்வமும் கட்டாமலிருக்க முடிவதில்லை. இவர்கள் ஆப்பிரிக்காவில் பிறவாது நம் நாட்டில் நம்மி டையே பிறந்த கறுப்பர்கள்- வெள்ளையராகப் பிறந்தும் கறுப்பராக வாழும் நீகிரோவர், கருங்குறனித் தெய்வங்களுக்கு நாம் எடுத்துள்ள கருங்கோயிற் கோபுரத்திலேறிப் பூசை செய்யும் கரும்பூசாரிக் குஞ்சுகள் இவர்கள். ஆயினும், இவர்கள் தம் தெய்வப் பிறவியின் உயர்வையும் தம் தெய்விகப் பணியின் அருமையையும் சிறிதும் மதியாதவர்போல, நம்மினும் தாழ்ந்த ஓரினம்போல் நடந்து கொள்ளும் அழகு ஓரழகுதான்! காலைப் பனியின் கடிப்பிடையே தலையணியும், மூடர்க்கும், காலுறையுமின்றி அவர்கள் புறப்படும் காட்சி, அவர்களைவிட வயதிலும் ஆடையணியிலும் சிறப்புடையவர்களுக்கு வீரம், பொறுமை, எளிமை, காலையெழுதல் ஆகிய உயர் குணங்களில் ஒரு படிப்பினை தரத்தக்கதே என்று கூற வேண்டும். குழந்தைகளாகிய இவர்கள் பணியருமையையும் பெருமை யையும் குழந்தைகள் பார்த்தால்தான்- அல்லது குழந்தைகளை எண்ணிக்கொண்டு பார்த்தால்தான்- நன்கு விளங்கும். அவர்கள் வயதில் நமக்கெல்லாம் தாய் மடியில் ஏறவும் இறங்கவும் பிறர் உதவி வேண்டும். ஆனால், அவர்களோ சுவரையும் தூணையும் பற்றி, வீட்டு முகடுகளில் ஏறிப் பல்லியும் ஏற அஞ்சும் இருட்டுப் பாழுங் குகைகள் போன்ற புகைக் கூண்டுக்குள் சென்று, அதன் மூலம் வானத்தையே எட்டிப்பிரிக்க முயல்கிறார்கள்! தாய் மடியிலிருந்து பிள்ளைகள் விழுந்தால், தாய் பிடித்துக் கொள்ளக்கூடும். இப் பாழுங்குகைகளில் அவர்கள் சறுக்கி விழுந்தால், அவர்களைப் பிடிக்க யார் இருக்கிறார்கள்? அச்சமில்லாது இக் குழந்தை வீரர்கள் செல்லும் போக்குக் கண்டு குழந்தைகள் யாரும் துணுக்குறாமலிருக்க முடியாது. கீழ்க் குகை கடந்து மேற்குகை, வெளிக் குகை கடந்து உட் குகை என்று அடுக்கடுக்காக எத்தனை குகைகளை அவர்கள் கடக்கிறார்கள்! பாழும் இருட்டுத் தவிர வேறு எதுவுமில்லாத இடத்தில், அவர்கள் கண் தெரிந்து செல்வதுதான் எங்ஙனம்? ஒவ்வொரு படியிலும் அவர்கள் போக்கைக் கவனிக்கும் குழந்தைகள், அவர்கள் மறைந்து விட்டார்கள் என்றுதான் நினைப்பர். ஆனால், தூரிகையின் சலசலப்பு, அவர்கள் இன்னும் உயிருடன் உள்ளே இருப்பது பற்றிய ஆறுதல் அறிவிப்புத் தருகிறது. சிறிது கூர்ந்து கவனித்தபின், இருட்டுடன் இருட்டாக அவர்கள் கந்தலாடைகள் சற்றுத் தெரிகின்றன. ஆனால், இந்த உயரத்திலும் அவர்கள் நெடுநேரம் நிலையாயிருப்பதில்லை. பேரவாயுடை யோர் உயர்விலிருந்து உயர்வுக்குத் தாவுவதுபோல, நூறாயிரம் குவித்தோர் பத்து நூறாயிரம் அல்லது கோடி குவிக்க விரைவது போல, அவர்கள் மேன்மேலும் பாழுங் குகையிலிருந்து அதனினும் இருண்ட பாழுங்குகை, உயரத்தினின்றும் அதற்கும் மேற்பட்ட உயரம் என மேலேறிச் செல்கின்றனர். வீடு கட்டும் கொத்தர் புகையேறிச் செல்வதற்குத்தான் புகைப்போக்கி கட்டினர். மனிதர் ஏறுவார் என்றா- அதிலும் குழந்தைகள் ஏறும் என்றா- படிகட்டி வைத்துள்ளனர்! மனிதர் வசதிக்காகவே வீடு கட்டுவதாக இக் கொத்தர்கள் பெருமைகொள்கின்றனர். இப் புகைப் போக்கிகளை அமைக்கும் போது மட்டும், இதனைத் தூய்மைப்படுத்த மனிதர்கள் ஏறிச் செல்வர், குழந்தைகள் ஏறிச் செல்லும் என்று அவர்கள் எண்ணவில்லையோ என்னவோ? நாம் மேலே குறிப்பிட்டதுபோல், அவர்கள் தெய்வப் பிறவிகள் என்று அவர்களுக்கும் தெரியும் போலும்! இல்லாவிட்டால் அவர்கள் மாடிகளுக்கு வகுத்த ஏணிப்படிகள் போல, இங்கும் வகுத் திருப்பார்கள் அல்லவா? ஆண்டவன் திருக்கோபத்தால் உலகமெல்லாம் ஊழி வெள்ளத்தில் அழிந்தபோது, அதில் தனி ஒருவனாகத் தப்பிய நோவா, ‘இத் திருக் கோபத்துக்கு நம் சந்ததியார் எப்படித் தப்பி வாழப் போகிறார்களோ?’ என்று கவலை கொண்டானாம்! அதை அறிந்த ஆண்டவன் “இனி நாம் இது போல் கோபமும் தண்டனையும் தரமாட்டோம். இனி திருக்கருணை தனி உருவுடன் நடமாடும்” என்று காட்டும் அறிகுறியாக, நோவாவுக்கு தன் வானவில்லாகிய கொடியை வானில் உயர்த்திக் காட்டினாரென்று விவிலிய நூலால் அறிகிறோம். அதுபோலவே, ‘இப்பாழுங் குகையுட் சென்று இவன் மறைந்தே போய்விட்டான். இனி இவன் வெளியே வரப்போவது ஏது’ என்று நாம் முற்றிலும் மனம் முறிவுறும்போது, ‘இதோ’ என்று புகைப்போக்கியின் மறுபுறத்தில், வானத்தின் வாயில் போன்ற ஒளி வட்டத்தில், நம் கறுப்புத் தெய்வத்தின் தூரிகைக் கொடி மே லோங்கி வீசி நமக்கு நம்பிக்கையளிக்கிறது! ‘மற்ற வெள்ளைக் குழந்தைகள் அஞ்சும் என் குகைக் கோபுரத்தில் என் கறுப்புச் சின்னங்களை பரிபூரணமாக கொண்ட என் கரும் பூசுரக் குழந்தை களுக்கு எந்தத் தீங்கும் வராமல் நான் காப்பேன்’ என்று புகையிருள் தெய்வம் காட்டும் வானவில் போன்றிருக்கிறது, இத் தூரிகை! “கையில் ஒரு மரத்தை ஏந்திக்கொண்டு வரும் ஒரு குழந்தை வடிவம் தோற்றமளிக்கிறது” என்ற ஒரு நாடகக் குறிப்பு ஷேக்ஸ் பியரின் மாக்பெத் நாடகத்தில் காணப்படுகிறது. அது கேட்டு நாம் மயிர்க்கூச்செறிகிறோம். ஆனால், இங்கு நாம் அதே உருவத்தை நேரடியாகக் காண்கிறோம். எனினும் இங்கு நம் உணர்ச்சி அதிர்ச்சியன்று, அதிர்ச்சி நீக்கமும், ஆறுதலுமே. வாசக அன்பரே, இக் கரங்குலத் திருச்செல்வரை நீர் என்றாவது புலர் காலையில் எழுந்து செல்லும்போது கண்டால், அவருக்குக் கூடிய மட்டும் ஒரு கால் துட்டுக் கொடுக்கத் தவறா தீர்கள். ஆயிரம் கோயில்களுக்குக் கொடுக்கும் புண்ணியத்தைவிட இது உயர் புண்ணியமாயிருக்கும்- உலகத்தார் கண்களிலல்லா விட்டாலும் கடவுள் கண்களில் நற்புண்ணியமே என்பதில் ஐயம் வேண்டாம். குழந்தையுடன் குழந்தையான, உம் சின்னஞ்சிறு தம்பி தங்கையர் போன்ற அவர்கள், கடும்பனியில் பரல் கற்கள் குதிங்காலில் குத்திக் கொப்புளங்கள் எழுந்து வேதனைதரக் கதறிக்கொண்டு வருவதாயிருந்தால்- இக்காட்சி காணற்கரிய தல்ல- உம் இரக்க உணர்ச்சிக்கும், உம் சட்டைப் பையின் துட்டுக்கும் அது இன்னும் சற்று மிகுதியான சோதனையாகக்கூட அமையலாம்! “இங்கே கொடுப்பவன் அங்கே பதிற்றிரட்டி பெறுவான்” என்பதில் உமக்கு நம்பிக்கையில்லாதிருந்தால் கூட, “இங்கே கொடுப்பதால் இக் காட்சியைச் சிறிது மறக்கலாம்” என்பதற்காகவாவது, பையி லுள்ளதை யெல்லாம் கொட்டிக் கொடுங்கள். ஆனால், உங்கள் கையில் ஒன்றுமில்லாமல் போய் விட்டாலோ, உங்கள் மனத்துன்பம் அவர்கள் துன்பத்துக்குத் துணையாகவாவது செல்லட்டும்- அவ்வளவுதான்! துன்பத்தைத் தணிக்கப் பணம் ஒரு சிறிதே உதவும்; துன்பத்துக்கு ஆறுதல் தருவதில் துன்பத்தைவிடச் சிறந்தது வேறு எதுவும் கிடையாது. மனிதர் இன்பத்தில் மகிழ்வார்கள்; துன்பத்தில் துயருறு வார்கள். துன்பத்தைக் காண்பதுகூட மனிதருக்கு துயரந்தான். ஆகவே, இக்கருங் குழந்தைகளைக் கண்டு மனத் துன்பமடைவது நமக்கு இயல்பே. ஆனால், ‘காணும் நமக்கு இருக்கும் இதே துன்பம் அவர்களுக்கும் இருக்கும்- நம் துன்பத்தைவிட அவர்கள் துன்பம் மிகுதியாயிருக்கும்’ என்றெல்லாம் நினைத்துவிட வேண்டாம்! நாம் இரங்குவது, அவர்களைப் பார்க்கும் நமது துன்பத்தைக் குறைக்கவேயன்றி வேறல்ல! நாம் கொடுக்கும் கால் துட்டு அல்லது அரைத் துட்டு, அன்றைப் பொழுதைக்கு அவர்கட்குச் சிறிது பயன்படுவது உண்மைதான். ஆனால், அதன் பெரும்பயனை அடைபவர்கள் அவர்களல்ல, நாம்தான்! அவர்கள் பல நாளையக் கடுந்துன்பத்தை இது ஒரு சிறிதும் குறைத்துவிடாது. ஆனால், ஒரு நாள் கொடுத்தோம் என்ற எண்ணமே நமக்குப் பல நாள் இக்காட்சியை நினைப்பதால் ஏற்படும் நம் மனச்சாற்றின் குத்தல்களைக் குறைத்துவிடும். ஒரு நாள் காட்சியில் நாம் அடையும் துன்பத்தை அவர்கள் ஒரு துன்பமாகக் கொள்பவர்களேயல்ல. துன்பமே இல்லாத உலகமொன்றிருந்தால், அவ்வுலகத்தில் இன்பமே துன்பமாக இருக்கும். அது போலவே இன்பம் இன்னதென்பதையே அறியாதவர்களாய், துன்பத்திலேயே பிறந்து வளர்ந்து, அதிலேயே வாழ்நாள் கழிக்கும் நம் புகைக் குலத்தவர்களுக்குத் துன்பமே வாழ்க்கை யாகவும், வாழ்க்கையின் இன்பமாகவும் பழகிப்போய்விட்டது. பசியும் உழைப்பும் அவர்களது வாழ்க்கை கிடைத்தபோது உண்ணும் உணவும், குடிக்கும் பச்சைத் தண்ணீரும் அவ்வாழ் வினிடையே ஒருசிறு மாறுதலும், ஒரு சிறு ஆறுதலும் மட்டுமே தருவன. எனவேதான் நாம் நினைப்பது போல, துன்பத்தில் துயரமடையவும் அவர்கட்குத் தெரியாது; யாரேனும் உதவி செய்ய முன்வந்தால் அவர்கள் அதை ஒரு சிறு ஆறுதலாகக் கொள்வதன்றி, நன்றியுணர்ச்சியும் காட்ட அறியமாட்டார்கள். துயரார்ந்த அவர்கள் நீண்ட வாழ்க்கைக் கனவிடையே, அது அவர்களுக்கு ஒரு சிறு கனவு- அவ்வளவு தான்! மனிதர் உணவையும் குடிநீரையும் பசி தீர்ப்பதற்கு மட்டும் உட்கொள்ளவில்லை. சுவை இன்பத்தையும், மன எழுச்சியையும் அவற்றிலிருந்து எதிர்பார்க்கின்றனர். ஆனால், ஒட்டடைக்குலம் உணவையும் குடியையும் பசி, விடாய் என்ற வாழ்க்கைப் பிணி களை அவ்வப்போது சிறிது தணித்துவைக்க உதவும் மருந்து களாகவே கொள்கின்றனர். உணவும் குடியும் தருபவர்களிடம் அவர்கள் காட்டும் உணர்ச்சியும், மருந்துதரும் தாய்மாரிடம் பிள்ளைகளுக்கு இருக்கும் உணர்ச்சியிலிருந்து வேறுபடாத தாயிருப்பது இதனால்தான். அவர்கள் உணவு என்று உட் கொள்வது உண்மையில் நமக்கு மருந்தைவிடக் கசப்பும் வெறுப்பும் ஊட்டக் கூடியதாகவே இருக்கும். குடிவகையோ நினைத்தால்கூட நமக்கு ஓங்கரிப்பாகவே இருக்கக்கூடும். ஆனால், அவர்கள் பார்வையில் குடி ஒரு மாய மருந்து. பகலின் கடு உழைப்பையும் துன்பத்தையும அது இரவில் மறையச் செய்கிறது. காலைக் கடும்பனியில் வேலை தொடங்குவதற்கு, அது அவர்கட்குத் தெம்பளிக்கிறது. ஆனால், இந்த மாய மருந்தைப் பெறுவதற்கு அவர்களுக்கு இன்னொரு மாய மந்திரம் தேவையாயிருக்கிறது. நீங்கள் காலையில் அவர்களுக்குக் கொடுக்கும் கால் துட்டு அல்லது அரைத் துட்டுக்கள்தான் இரண்டாவதாகக் கூறப்பட்ட இம்மாய மந்திரங்கள்! இவை அவர்கள் வாழ்க்கையை மாற்றிவிடமாட்டா. ஆனால், அன்றையப் பொழுதை மாற்றிவிடும். அம்மந்திரத்தின் மாய ஆற்றல் முதல் மாய மருந்தை விற்கும் முச்சந்தி மருத்துவர் மனத்தை இளகச் செய்து, அவர்கட்கு ஒரு அரைக்கோப்பை சூடான, கடு வீச்சமுடைய தேநீரை அளிக்கும்படி தூண்டும். தேநீர் என்று அவர்கள் கூறுவது நம் உலகிலுள்ள, தேவை யிலிருந்து நாம் வடிக்கும் நீர் அல்ல. தென் அமெரிக்க நாடுகளி லிருந்து அதனினும் அருமையாகக் கண்டெடுத்து அவர்களுக் கென்று அனுப்பப்படும் ஒரு புதுமையான மரப்பட்டையே அது. தேயிலை நாவுக்குச் சுவையும் மனதுக்குக் கிளர்ச்சியும் தரும். இதுவோ நாவுக்குக் கசப்பும் மனத்துக்கு வீறாப்பும் தரும். உணவுக்கு அடுத்தபடி ஒட்டடைக் குடியினர் வாழ்வுக்கு இன்றியமையாத் தேவையாவதும், உணவைவிட அவர்களுக்கு மிகுதி ஊட்டந் தருவதும் இது ஒன்றே என்னலாம். மக்கள் உயர் பண்பாட்டையும் உயர்குடிப் பிறப்பையும் நல்லாடையணியிலும், இன்னுரையிலும் செயற்கைப் பகட்டு களிலுந்தான் பார்க்க வேண்டுமென்றால், ஒட்டடைக்காரர் குடியை உயர்குடி என்று கூறமுடியாதுதான்! ஆனால், துன்பங்கண்டு தளராத உறுதி பசி நோயும் உடல் துன்பமும் அன்றி வேறு நோய் அறியா உடல் உறுதி, அழுக்கான சூழ்நிலைகளிடையே வாழ்ந்தாலும் உள்ளத்தில் அழுக்கும் அழுக்காறும் இல்லாமை ஆகிய இவை உயர்குடிப் பண்பானால், ஒட்டடைக் குலத்துக்கு ஈடான உயர்குடி எதுவும் இல்லை என்னலாம். ஆனால், உயர் குடியாளர் எவருக்கும் கிட்டாத உயர்குடிப் பண்பு ஒன்று இத் திருக்குலத் தவருக்கு இயற்கையாய் அமைந்திருக்கிறது- அவர்கள் பற்கள் அவர்கள் உடலிருளையும், பனியிருளையும் கிழித்துக்கொண்டு ஒளிவீசுகின்றன. அவர்கள் புறவாழ்வு எத்தனை தளர்ச்சியுற்றி ருந்தாலும் அவர்கள் உண்மையில் ஒரு பழங்கால உயர்குடிப் பிறப்பின் மரபுடையவர் என்பதை இவ்வரிய பண்பு நன்கு எடுத்துக் காட்டுகிறது. வகைவகையான நறுந்தூளும் மென் குழம்பும் இட்டுத் துலக்கியும், வெள்ளி தங்கப் பூணிட்டும் நம் உயர் குடியாளரின் பற்கள் இத் திருந்திய உருவம் பெறுவதில்லை! திருக்குலத்தவர் பண்டைய உயர் பிறப்பைக் காட்டும் இன்னொரு செய்தியையும் என்னால் குறிப்பிடாதிருக்க முடிய வில்லை. அவ்வப்போது, அண்மையில் ஏற்பட்டதுபோல, உயர் குடியாளர் வீட்டில் புகையும் ஒட்டடையும் அடிக்கும் சிறுவர்கள் எப்படியோ அவ்வீடுகளின் அகன்ற மேல் முகட்டுப் பரப்பிடையே காணாமற்போய், இறுதியில் தற்செயலாய் அவர்கள் மெல்லிய பஞ்சணைகளிடையே காணப்படுவ துண்டாம்! சிறு வீடுகளில் உழைப்பதைவிட இப்பெரிய வீடுகளில் அவர்களுக்கு உழைப்புக் கூடுதல்- ஆனால், வருவாயும் கூடுதலாகத்தானே இருக்கும்! இச் சின்னஞ் சிறு குழந்தைகள் இச் செல்வச் சீமான்கள் வீடு பார்த்துக் களைப்படைவானேன்? களைப்படைந்தாலும், விழுந்தாலும் இப் பஞ்சணைகளில் வந்து காணப்படுவானேன்? இவற்றை அவர்கள் கனவில் கண்டதும் கிடையாது. எண்ணுவதும் கிடையாதே! குலமரபு காரணமான இயற்கை உணர்ச்சி ஒன்றன்றி வேறு எதுவும் அவர்களை இந் நிலை கொள்ள உள்ளார்ந்த தூண்டுதல் கொடுத் திராது. தன்னுணர்வுடைய காலத்தில் அவர்கள் செய்யத்துணியாத செயலை, களைத்து உணர்விழந்த சமயத்தில் செய்வது இப் பழமரபின் வாசனையாகத்தானிருக்க வேண்டும் என்று கூறலாம். இயற்கைப் பழம் பண்பாட்டிலும் பழங்கலையிலும் கருத்துச் செலுத்தும் என் போன்ற பழமைப் பற்றாளர்கள் பழங்கலையிலும் கருத்துச் செலுத்தும் என் போன்ற பழமைப் பற்றாளர்கள் உள்ளத்தை இச் சின்னஞ்சிறு சிறுவர்கள் கனியவைப்பதற்கும் இப்பழங் குடிமரபே காரணமாயிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். 10. தலைநகர்ப் பிச்சைக்காரர் ஒழிப்புப்பற்றி ஓர் முறையீடு மக்கள் வாழ்க்கையின் குறைகள் யாவற்றையும் சீர்திருத்தப் புறப்பட்டுள்ள தற்கால அல்ஸைடிஸ்கள் கண்ணுக்குத் தலைநகரின் வாழ்க்கையிலுள்ள குறைகளில் பிச்சைக்காரர் தொல்லையே ஒரு பெருங்குறையாகத் தோற்றியிருக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் சீர்திருத்த விளக்குமாறு இவ்வொன்றையே தடமில்லாதபடி பெருக்கித் தள்ளிவிட முற்பட்டிருக்கிறது. அவர்களின் கந்தை கூளங்கள், பெட்டிபடுக்கைகள், கம்பு கால்கள், கட்டையால் செய்த கால் கைகள், ஊன்றுக்கோல்கள், சுரைக் குடுக்கைகள், நாய்கள் யாவும் ஒன்று விடாமல் நகர் எல்லைக்கு வெளியே தள்ளப் படுகின்றன- ஒளிந்து தொழில் செய்ய முற்படுவோர் ஏழைத் தொழிலகம் என்னும் இடைஞ்சல் மிக்க வாழ்வுக்கும், சிறைப் பயிற்சிக் கூடம், திருத்தகம் என்னும் இள நரகம் இது நகரங்களுக்கும் இரையாக்கப்படுகின்றனர்! பிச்சையெனும் தெய்வத்தின் திருச்சின்னம் எதுவுமே இனி லண்டன் நகர மூலை முடுக்கு களில்கூட இடம் பெறக் கூடாதாம்! எந்தச் சீர்திருத்தத்தையும் இவ் வகையான அடித்து வீசிப் பெருக்க முற்படுவது நன்றாக இல்லை. இது பழங்காலச் சமய வெறியர்களின் சமயப் போர்களையே நினைவூட்டுவதா யிருக்கிறது. இவ்வளவு வெறுப்பும் இப் பிச்சைக்காரக் குழு ஒன்றன்மீது செலுத்தப் படவேண்டியதன் அவசியம் என்ன? நகரின் தோற்றத்தை இது கெடுக்கிறதாம்! கெடுக்காதது வேறு என்ன இருக்கிறது? கவனிப்பார் அற்ற உயிரற்ற குப்பை கூளங்கள் எத்தனையோ இருக்க, உயிருடைய அதிலும் மனித உருவுடைய, பிறரை எதிர்பார்த்து, பிறர் நல்லெண்ணத்தை எதிர்பார்த்து வாழக்கூடிய இவர்கள் மட்டுந்தானா திருத்த முடியாத குப்பை கூளங்கள்! நகருக்கு அவர்கள் தொல்லையாம்! நகர் என்பது யாரைக் குறித்ததோ தெரியவில்லை. உண்மையில் எந்தத் தனி அவர்கள் தொழிலே தொல்லைப்படுத்தி நடத்த முடியாத தொழில்- பிறருக்கு நல்லவராக நடந்து, அதிலும் யாவருக்கும் நல்லவராக நடந்து, அவர்கள் நல்லிரக்கத்துடன் இடும் பிச்சைக்காசைக் கொண்டுதான் அவர்கள் பிழைக்கவேண்டும்! நகரின் செல்வ நிலைக்கு அவர்கள் ஓர் இடையூறு என்றும் கூற முடியாது. அவர்கள் நல் வாழ்வுடையவராகப் பார்த்துதான் கேட்கின்றனர். அதிலும் நல்லெண்ண முடையவர்தான் கொடுக் கின்றனர். கொடுப்பவர் மலர்ந்த முகத்துடனும், சில சமயம் சற்றுப் பெருமித உணர்ச்சியுடனுந்தான் கொடுக்கின்றனர். தனி மனிதரிடம் கேட்டால், பணம் கேட்கும் இனத்தவருள், பிச்சைக்காரரை ஒத்த தொல்லை தரா வகுப்பு எதுவுமே இருக்க முடியாது. கொடுத்த கடனைக் கேட்பவரைக் கண்டால் எவருக்கும் எரிச்சல்தான். கொடுக்க வேண்டியது என்பதை அவர்கள் ஒத்துக் கொள்வர். ஆனால், அதனால் கொடுப்பது இனித்துவிடவா செய்கிறது? “உங்கள் நல் வாழ்க்கைக்காகத்தான் சொல்லுகிறேன். ஒரு வாழ்க்கைக் காப்புச் செய்து கொள்ளுங்கள்! ஒரு காப்புக் கூறு மட்டும் எடுத்துக்கொள்ளுங்களேன்!” என்று பாலின் பழம் நழுவியவாறு தேன் சொட்டப் பேசுகிறார், காப்பக ஆட்பிடிப்புப் பேராள், அவர்கள் தொல்லையிலிருந்து எப்படி விலகுவோம் என்று விழிப்பவர்கள் எத்தனை பேர்! அச்சமயம் வேறு யாராவது வந்து தங்களை இழுத்துச் சென்று தமக்கு விடுதலை கொடுக்க மாட்டார்களா என்றுதான் அவர்கள் விரும்புவார்கள்! வரி வாங்கும் அரசியல் பணியாள் நகரத்தார் கடமையைக் கோரித்தான் வருகிறார். அவர் வரவு அதனால் இனித்துவிட வில்லை. இக்காலப் புதிய அறச்செல்வர்கள் கோயில் கட்ட, திருப்பணி செய்ய, ஏழைப் பள்ளி கட்ட என ஆயிரம் சாக்கிட்டு வருகிறார்கள். அவர்கள் ஏழைகளல்லர். உயர்ந்த ஆடையணிப் பகட்டுடன் வருகிறார்கள். அவர்கள் நாவில் உலக நலம், மக்கள் முன்னேற்றம், அறச்சிந்தை ஆகிய சொற்கள் தாண்டவமாடு கின்றன. அவர்கள் முகத்துக்கு நேரே யாரும் அவர்களைப் பொதுப் பணம் தெண்டுபவர்கள் என்று கூறமுடியாது. அவர்கள் பெரிய செல்வாக்கு உடையவர்கள் ஆனால், உள்ளத்தில் அவர்களைக் கண்டு அஞ்சாதவர்கள் யார்? பிச்சைக்கார இனம் இவற்றையெல்லாம் பார்க்க, எவருக்கும் எந்தத் தொல்லையும் செய்யாத ஒரே இனம் என்று கூறலாம். அவர்கள் போ என்றால் போகவேண்டியவர்கள். அவர்களிடம் உள்ள ஒரே கருவி பார்ப்போர் ‘ஐயோ போகட்டும்’ என்று கூறவைக்கும் ஒரு இரக்கத் தூண்டுதல் மட்டுமே! நகரின் பொது உடல் நலம், தூய்மை ஆகியவற்றை அவர்கள் கெடுக்கிறார்களென்று கூறப்படுகிறது. இது ஓரளவு உண்மை யாயிருக்கக் கூடும். ஆனால், ஊன்றிப் பார்த்தால் அவர்கள் பிறரைவிட அழுக்குடையவர்கள்தான், ஆனாலும் பிறரைவிட அழுக்குப் பண்ணுகிறவர்கள் என்று கூறமுடியாது. அவர்கள் அழுக்காக்குவதைவிட, அழுக்குப் போக்குவது மிகுதி என்றுகூடக் கூறலாம். குப்பையைக் கிண்டி அவர்கள் தமக்கு வேண்டியவற்றை எடுப்பர். அவர்கள் குப்பை உண்டு பண்ணுவதில்லை. காக்கை களைப் போல எங்குமிருக்கும் கந்தலைச் சுருட்டிக்கட்டி, எறிந்த பொருள்களை வாரி எடுத்து வாழ்வு நடத்துபவர்கள் அவர்கள் பொது இடத்திலும் பிறர் இடத்திலும் வாழும் இவர்கள் தாம் அழுக்காயிருப்பார்களே தவிர, இடத்தை அழுக்குப் பண்ணத் துணிய மாட்டார்கள். பண்ணினாலும் பிறர்போல, தம் உரிமை அது. எல்லாம் தமக்குத் தெரியும் என்று கூறமாட்டார்கள். பிறர் கண்டிப்புக்குப் பணியும் அவர்கள் இவ்வழுக்கை யாரேனும் கடிய முன்வந்தால், முதன்மையாகத் திருந்தக் கூடியவர்களே, பிச்சைக் காரரல்லாத மற்றவர்களிடையே- ஏழைகளிலும் பணக்காரரிலும் இதனை எத்தனை பேர் செய்வர்? செய்யாமல் ஒருவருக்கொருவர் பூசலிடுபவர், வழக்காடுபவர்தான் மிகுதி! நகருக்குள் ஒரு தொழிற் சாலை, ஒரு பொதுச் சிறுநீர்க் கிடங்கு, பொதுக் கழிவுநீர்த் தொட்டி ஆகியவை பற்றி எத்தனை முறையீடுகள் வருகின்றன. இவற்றுள் செல்வர், செல்வாக்குடையவர் செய்யும் அநீதிகள் திருத்த முடியாதவை, திருத்த எண்ணப்படாதவையாகவும் உள்ளன. இவற்றையெல்லாம் விட்டு, இப் பஞ்சை ஏழைகள் மீது மட்டுந் தானா பாய வேண்டும்? மனித வகுப்பின் ஒழுக்க நிலைக்கும், மன மகிழ்ச்சிக்கும், இரவலர் குழு ஊறு செய்கிறது என்று கூறப்படலாம். பிச்சைக்காரன் தோற்றத்தைக் காண்பதே, அவன் துன்பத்தைக் கண்டு உதவுவதோ மகிழ்ச்சிக்குரிய செயல் அல்ல. ஆனால், மனித வாழ்க்கையில் மகிழ்ச்சிக்குரிய செய்திகள் மிகக் குறைவாகவே இருக்கமுடியும். மகிழ்ச்சிக்குரிய செயல்களைப் பெருக்கத்தான் யாவரும் முயலுவர். ஆனால், ஒழுக்கக்கேடு, மனக்கசப்புத் தரும் செய்திகளில் பிச்சைக்காரர் வாழ்வு முதலிடம் பெறத் தக்கதுமன்று, முன் இடம் பெறத் தக்கதும் அன்று. இவர்கள் மனிதர் பொது வாழ்வை ஒட்டாது தனி வாழ்வு வாழ்பவர்கள். மனித வாழ்வில் இயல்பாயுள்ள ஒழுக்கக் கேடன்றி அவர்கள் எதையும் புகுத்திவிடும் நிலையிலோ தம் செல்வாக்கால் பரப்பும் நிலையிலோ எங்கும் இல்லை. அவர்களுடன் சேர்ந்து எவரும் குடி முதலிய எப் பழக்கமும் கொண்டுவிட முடியாது. ஏனெனில், அவர்களுடன் எவரும் பழக மாட்டார்கள். மனக்கசப்பை எடுத்துக்கொண்டாலும் அவர்களைக் கண்டு எவரும் மனக்கசப்பு அடையதாகக் கொள்ளமுடியாது. உண்மை யில் பலர் அவர்கள் துன்பம் கண்டு, தம் துன்பத்தை மறக்கின்றனர். அவர்களுக்குக் காசு கொடுப்பவர்கள் கூடத் தாமாக விரும்பக் கொடுத்து, கொடுப்பதில் ஓரளவு ஆறுதலும் அடைக்கின்றனர். பிச்சைக்காரர் இனம் ஒன்றைத்தான் எவரும் கண்டு பொறாமைப் படவோ, பழிக்கவோ முற்படுவதில்லை- பழித்தாலும் எதிர் பழி கூறவோ புண்படவோகூடச் செய்யாத வகுப்பும் இவ் வகுப்பு ஒன்றுதான்! பிச்சைக்காரரைப் பார்ப்பது, அவர்களைப் பற்றி எண்ணுவது, மனிதர் மகிழ்ச்சி நிலைக்கு ஊறு தருவது என்று கொள்ளுபவர் கள், நாடகங்களிலும், கதைகளிலும், பாட்டுக்களிலும், அரசருக்கு அடுத்தபடியாக, ஆண்டிக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தைப் பார்க்க வேண்டும்! ஒரு மன்னர் அல்லது செல்வர் வீழ்ச்சியடைந் ததைக் காட்டும் கலைஞர், அவர் மீது மக்கள் வெறுப்பற்ற இரக்கத்தையும், அவமதிப்பற்ற ஒத்துணர்வையும் தூண்ட அரசனை இரவலனாகத்தான் ஆக்கிக் காட்டுகின்றனர். சில சமயம் பைத்தியக்காரப் பிச்சைக்காரனாகக்கூட, அழுக்கடைந்த ஆடையுடன், நொண்டி குருடாகக்கூடக் காட்டத் தயங்குவ தில்லை. ‘அரசன் ஆண்டியானான்’ என்ற தலைப்பு நாடக மேடையிலும், கதையிலும் பாட்டிலும், பத்திரிகையிலும் நம் மக்களைக் கவரவே செய்கிறது. அது மட்டுமா? அரசன் ஒரு இளவரசியை மணப்பதைவிட, ஒரு ஏழைப் பிச்சைக்காரியை மணந்தான் என்பதில்தான் மிகுதி கனிவு இருப்பதாகக் கலைஞர் எண்ணுகிறார்கள். ‘மன்னனும் பிச்சைக்கார அழகியும்’ என்ற பாட்டில் ஈடுபடாதவர் யாரும் இருக்க மாட் டார்கள். மன்னன் ஒரு அப்பக்காரன் மகளை ஒரு பலசரக்குக் கடைக்காரன் மகளை, மணந்தான் என்பதில் இத்தகைய கவர்ச்சி இருக்குமா? பிச்சைக்காரரிடம் மனித வகுப்புக்கு உள்ள இத் தனிப் பற்றுக்குக் காரணம் இல்லாமலில்லை. மற்ற எல்லா வகுப்புக் களும் தமக்கு மேலும் கீழும் உயர்வு தாழ்வுகள் உடையவை. ஆகவே, மேலிருப்பவர் இரக்கம் கீழிருப்பவர் பொறாமையுடனும், உடனிருப்பவர் போட்டியுடனும் முரண்படுகிறது. எனவே, மனித வகுப்பு முழுவதும் ஒரே உணர்ச்சியுடன் பார்க்கத்தக்க மக்கள் உச்ச நிலையிலிருக்கும் அரசரும், கீழ்க்கோடியிலிருக்கும் இரவலரு மேயாவர். ஆனால், மன்னரோ, யாவர் மதிப்புக்கும் உரியவரா யினும், உள்ளூர எல்லார் பொறாமைக்கும் உரியவராவர். அவரிடம் பொறாமையற்ற மதிப்பும், ஒத்துணர்வும் ஏற்படுவது, அவர் மன்னர் பதவியிலிருந்து வீழ்ச்சியடைந்து, எவரும் போட்டி உணர்ச்சி கொள்ள முடியாத பிச்சைக்காரர் நிலையை அடையும் போதுதான்! மன்னர்க்கு இங்ஙனம் அருமையாகக் கிட்டும் நல்லுணர்ச்சியைப் பிச்சைக்காரர் எப்போதும் பெற்றவர்கள் ஆவர். ஆகவேதான் வேறு எவர் மன்னராவதிலும், பிச்சைக்காரர் மன்னர் ஆவதில் மக்கள் களிப்படைகின்றனர். வேறு எதில் காட்டும் கனிவிலும், மன்னர் பிச்சைக்காரர் ஆவதிலேயே மிகுதி கனிவு காட்டுகின்றனர். பிச்சைக்காரர்கள் பொதுமக்கள் உள்ளத்தில் தூண்டும் உணர்ச்சி மனித வகுப்பின் மிக அடிப்படையுணர்ச்சியான இரக்க உணர்ச்சி, கவிஞர்களும் கலைஞர்களும் கையாளும் உணர்ச்சிச் சுவைகளுள், மக்கள் உள்ளத்தை ஆழ்ந்து கிளறக்கூடியது, எல்லா மக்களின் உள்ளத்தையும் ஒருங்கே இயக்கக்கூடியதும் ஆன உணர்ச்சிச் சுவை இதுவே. வெளிப்பார்வைக்கு இது மக்களுக்குத் துன்ப உணர்ச்சியே தருவதாகத் தோற்றினாலும், உண்மையில் துன்பத்தைக் காண்பதன் மூலம் அது அவர்கள் உள்ளத்தை முழுவதும் பதப்படுத்தி, இன்னதென்று கூறமுடியாத ஒரு நிறை யுணர்வு தருகிறது என்னலாம். பிச்சைக்காரர்களைக் காண்பதும் அவர்கள் துன்பங் கண்டு உதவுவதும் நகர மக்கள் வாழ்வில் உண்மையில் இதே வகை வளர்ச்சியை உண்டுபண்ணுகிறது. ஆகவே அவர்கள் மக்கள் ஒழுக்க நிவையிலோ, உணர்ச்சிகளை யோ, உளநலத்தையோ கெடுப்பவர்கள் என்று கூறப்படுவதற்கு நேர்மாறாக, அவற்றைப் பண்படுத்துபவர்கள் என்றே கூற வேண்டும். வெளித் தோற்றத்தைக் கண்டு பிச்சைக்காரர் நகரின் காட்சி யழகைக் கெடுப்பதாகவோ, சோம்பல் வாழ்வை வளர்ப்பதாகவோ கொள்ளுதல் தவறு. அழகான படம் வரைவோன் அப்பட அழகை எடுத்துக்காட்ட அதற்கு மாறான எண்ணங்களையும், காட்சிகளையும் தேடி வரைவதுண்டன்றோ! அதுபோல நகரின் பிற அழகுகள், அழகுக் குறைகள் ஆகியவற்றிடையே அவற்றுக் குரிய சரி சம அளவை தரும் நடு அளவையாகப் பிச்சைக்காரர் காட்சி அளிக்கின்றனர். உண்மையில் அவர்களின்றி நகரின் எப்பகுதியும் நகரின் முழுத் தோற்றம் அளிக்காது. அவர்கள் அழுக்கும் உண்மையில் நகரின் அழக்குக்கு ஒரு எல்லை கட்டும் அழுக்குத்தான்! எல்லா நோயையும் போக்கப் பாடுபடும் மருத்துவனுக்கு, அவ் உழைப்பின் பயனாகவும், தன் நோயை ஆராய நேரமில்லாத தாலும் ஏற்படுகிற நோய் போன்றதே அவர்கள் அழுக்கு. மருத்துவனை நல்ல நிலையில் வைப்பது மக்கள் கடமை. அதுபோலப் பிச்சைக்காரர் அழுக்குப் போக்கும் வேலை நகரமக்களுடையது. அழுக்கற்ற ஆடையுடன் பிசைச்ககாரனை ஊக்கி, அவனுக்கு ஒரு துட்டுக் கொடுத்து உதவி விட்டால், அடுத்த நாளே யாவரும் வெள்ளு டையைத் தேடுவர். உடல் நலமுடைய வனுக்கு ஒரு பாராட்டுரை கூறினால் யாவரும் பிறர் உடல் நலத்தைக் கோருவதுடன் தம் உடல் நலத்தையும் பேணுவர். உண்மையில் பிச்சைக்காரர் பலர் சோம்பேறிகளும் அல்லர்; உடல்நலமற்றவரும் அல்லர்; நன்றியற்றவரும் அல்லர். இன்று சீர்திருத்த வாதிகளிடையே பரவும் பல கதைகள்கூட இவற்றுக்கு மறுப்புக் கூறவல்லவை. ஒரு பொருளகக் கணக்கனுக்குத் திடீரென்று யாரோ இறுதி விருப்பம் எழுதி வைத்ததனால் ஐந்நூறு பொன் கிடைத்ததாம்! அதுபற்றி உசாவியதில், அது ஒரு பிச்சைக் காரனுடைய வாழ்க்கைச் சேமிப்பு என்று தெரிந்ததாம்! நாள் தோறும் பொருளகம் செல்லும்போது கணக்கர் குருடு கூன் தேடி ஒரு துட்டுப் போடுவாராம். குருடனாயிருந்த இப் பிச்சைக்காரன் அவர் குரலறிந்து அவர்மீது நன்றியும் நல்லெண்ணமும் கொண்டு, இறக்கும் தறுவாயில் இச்செயலால் நன்றி தெரிவித்துக் கைம்மாறும் செய்தான். இச்செயல் அவன் நன்றிக்கு மட்டுமன்றி அவன் உழைப்பு, அவன் சிக்கனம், அவன் விடாமுயற்சி ஆகியவற்றுக்கும் சான்று தருகின்றது. ஆனால், நம் சீர்திருத்த வாதிகளின் சிறுமை யுள்ளத்தில் அவன் செயலில் காணப்படும் குணம், அவன் பணம் திரட்டி விட்டான் என்பதே! பல பிச்சைக்காரர் குடிக்கின்றனர். பணத்தை வீணாக்குகின்றனர் என்று குறைகூறும் இவர்கள், குடிக்காது வீண் செலவு செய்யாது, நாற்பது ஆண்டுகளில் இப் பெருந் தொகையைச் சிறுகச் சிறுகச் சேர்த்து, அதையும் ‘நன்றி’ என்னும் உயர் கடமை உணர்ச்சிக்கு அர்ப்பணித்ததை அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை! இன்னொரு பிச்சைக்காரர் நாற்பது ஆண்டுகட்கு முன் நிகழ்ந்த ஒரு விபத்தில் இரு கால்களையும் இழந்துவிட்டார். இரண்டு கால்களும் அவருக்குக் கட்டைக்கால்கள்தான். ஆனால், இக் கட்டைக்கால்களுடன் அவர் உயிருள்ள கால்கள் உடையவர்களும் வியக்கும்படி எங்கும் பரபரப்பாகத் திரிவதுடன், எவரும் வியக்கும் கடும் பாரந் தூக்கியும், கட்டைகள் பிளந்தும் வந்தாராம். கீழ்ப் பகுதியற்ற அவர் உடலிலுள்ள பாதி சிறிதும் தளர்ச்சியின்றி ஒரு உடற்பயிற்சியாளன் உடலையும் தோற்கடிக்கும் வலுவும் கட்டமைப்பும் உடையதா யிருந்தது. பாதி உடல் மனிதனாகவும் பாதி குதிரையாகவும் இருந்ததாகப் பழம் கதையில் கூறப்படும் உருவந்தான், குதிரையுடலான பாதி நீத்து இயங்கு கிறதோ என்னும்படி யிருந்தது அவர் உடல் வளர்ச்சி. அவர் பிச்சைக்காரர் என்று கூறப்பட்டதுகூட அவர் சோம் பேறித்தனத்தின் காரண மாகவன்று: அவர் அரையுடல் குடும்ப வாழ்வுக்கும் சமூக வாழ் வுக்கும் பொருத்தமற்றது என்ப தற்காகவே. ஏனெனில், வீடற்ற அவர் பல வீடுகள் கட்ட உதவியதுண்டாம்! குடும்பமற்ற அவர் பல குடும்பங்களின் கடுவேலைகளை எளிதில் செய்வாராம்! குணத்திலும் அவர் ஒரு தங்கக் கட்டியாகவே இருந்தார். அவர் எவருடனும் இன் மொழியே பேசினார். அரை மனிதரான அவரைப் பார்க்கக் கூடிய முழு மனிதர்களின் கூட்டமே அவர் உயர்வைப் புகழ்ந்து அதற்குச் சான்று கூறுகின்றது! எனவே, மொத்தத்தில் பிச்சைக்காரர்களையும் நகர வாழ் வையும் சீர்திருத்த நல்ல வழி, நகர மக்களில் ஒரு பகுதியினரான பிச்சைக்காரர் வாழ்வையும் நகர மக்கள் வாழ்வுடன் சேர்த்துத் சீர்திருத்துவதேயன்றி, அவர்களைத் துரத்துவதோ, சிறைக்கூடங் களிலும் உழைப்புக் கூடங்களிலும் அடைப்பதோ அல்ல. மக்கள் யாவராலும் விரும்பப்படும் இவ் வகுப்பை- மற்ற வகுப்பினர் எவரிடமும் இல்லாத சமத்துவ உணர்ச்சி, பொறாமையின்மை ஆகிய நற்பண்புகளையுடைய இவ்வகுப்பு மக்கள் வாழ்வுக்கு உகந்த ஒரு நல் உறுப்பைப் பயன்படுத்தி, அவர்கள் வாழ்க்கையின் இன்னல்களைக் குறைத்து அவர்களை வளர்த்தால், நகரமும் நகர வாழ்வும் வளம் பெறும் என்பதில் ஐயமில்லை. அவர்களைச் சோம்பேறிகளாக வைத்திருக்க வேண்டாம். ஆனால், அவர்கள் சுதந்திரத்தையும், வாழும் உரிமையையும் குலைக்கவும் வேண்டாம். மனித சமூகத்துக்கு அவர்கள் செய்யும் கடமையை உணர்ந்து அதைப் பெருக்கும் வகையில் அவர்களைப் பண்படுத்தினால் போதும்! 11. மனித உலகில் அடிசிற்கலை: அது தோன்றிய வகை பற்றிய விந்தையான வரலாறு “மனித வகுப்புத் தோன்றி முதல் எழுபதினாயிரம் ஆண்டுகள் வரை மக்கள் காய் கிழங்கு இறைச்சி வகைகளைப் பச்சையாகவே தின்று வந்தனர். இறைச்சியைக்கூட அவர்கள் அபிஸினியாவிலுள்ள இக்கள் இன்றும் தின்பதுபோல் கடித்தும் பல்லால் உராய்ந்துமே தின்றுவந்தனர். உலக வரலாறு பற்றிய தம் நூலில் கன்ஃபூலியஸ் பெருமான் இக்காலத்தைப் பற்றிச் சற்று மறை குறிப்பாகவே கூறுகிறார். இதனை அவர் ‘சோஃபங்’ அதாவது சமையற்காரர் ஓய்வுக்காலம் என்று அழைக்கிறார்”. இக் கருத்துக்கள் என பார்வைக்கு என் நண்பர் ஒருவர் கொண்டுவந்து காட்டிய சீனக் கையெழுத்துப்படி ஒன்றில் காணப்படுகின்றன. இதே கையெழுத்துப்படி இரண்டாவது மனித உலகின் ஊழிபற்றிக் குறிப்பிடுகையில் மக்கள் முதலில் இறைச்சிகளைச் சுட்டும், பின் வதக்கியும் பொரித்தும் கலந்தும், நாளடைவில் சமையற்கலையின் எல்லாப் பகுதிகளிலும் முன்னேற்றமடைந்த வரலாற்றை விளக்குகிறது. இதில் முதன் முதல் மக்கள் இறைச்சி சுடக் கற்றுக்கொண்ட வகை ஒரு சுவைமிக்க விந்தைக் கதையாக விரித்துரைக்கப்படுகிறது. சீனர்களைப் போல் நாம் அக் கதையை அப்படியே நம்பிவிடத் தேவையில்லையானாலும், அதன் பரந்த கருத்தை அறிவாராய்ச்சி முறையில் ஒத்துக்கொள்ளவே வேண்டும். அத்துடன் அக்கதையின் சுவை, மொழியும் இனமும் தொலையும் கடந்து, நமக்கும் இன்பளிப்பதாகவே உள்ளது. பன்றி மேய்ப்பவனாகிய ஹோற்றி தன் பன்றிகளுக்கு வேண்டிய காய் கிழங்குகள் திரட்டிக் கொணரக் காட்டிற்குச் சென்றிருந்தான். சிறிது குறும்புத் தனமும் முரட்டுக் குணமும் உடைய அவன் புதல்வன் போ- போவிடம் தன் பன்றிகளை நன்கு பார்க்கும்படி கூறிவிட்டுச் சென்றிருந்தான். அவன் சென்று மீளுமுன் போ-போ மறதியாக ஒரு கொள்ளியை வைக்கோற் கட்டொன்றின் மீது போட்டதனால், அதுவும் வீடும் தீப்பற்றிக் கொண்டன. அவனும் அவன் அலறல் கேட்டு அண்டை அயாலரும் எவ்வளவு முயன்றும், தீயை அணைக்க முடியாமல் போயிற்று. மனித வகுப்பின் அக்கால நிலையில் வீடுகள் முழுவதும் கம்பும் குச்சும் தழைகளுமாகவே இருந்தபடியால், அதில் ஒரு துரும்புகூட மீதமின்றி எல்லாம் எரிந்து போயிற்று. கம்புகுச்சுகளே கொண்ட வீடு போனதுகூட எவருக்கும் பெரிதாகத் தோற்றவில்லை. குட்டியிட்ட அவர்கள் தலைசிறந்த பன்றியொன்று, அது புதிதாக இட்டிருந்த குட்டிகளும் தீயில் வெந்து போயின. தந்தை வந்து பார்த்தால் தன்னை மிகவும் கடிந்துகொள்வது உறுதி என்று போ- போ எண்ணினான். ஆகவே அவன் கவலை யுடன், எரிந்து சாம்பலாய்க் கிடக்கும் பகுதிகளில் அங்குமிங்கும் சென்று பார்த்துக் கொண்டிருந்தான். பன்றிகள் வெந்த பகுதியருகே வந்ததும், என்றுமில்லா ஒரு நறுமணம் அவன் மூக்கைத் தொளைத்தது. இதற்கு முன்னரும் அவன் சில சமயங்களில் வீடு பற்றிக் கொள்ளும்படி விட்டதுண்டு. பிற வீடுகள் எரிந்த போதும் சென்று பார்த்ததுண்டு. வீட்டுப் பகுதிகள் எரிந்ததால் ஏற்படும் மணம் அவன் அறியாததன்று. இப்போதைய மணம் அவ் வகைகளை எதிலும் ஏற்படும் மணம் அவள் அறியாததன்று. இப்போதைய மணம் அவ் வகைகள் எதிலும் சேர்ந்ததன்று என்பதை அவள் உணர்ந்தான். ஆயினும், முன்பின் அறியாத இம்மணம் எதிலிருந்து வந்ததென்பதை அவன் அறியக் கூடவில்லை. முழுதாக இறந்து கிடந்த பன்றிகளருகில் வந்ததும், மூக்கில் மணம் தொளைத்ததுமட்டுமன்றி, நாக்கிலும் நீருறத் தொடங் கிற்று! முழுதாக வெந்த பன்றிகளும் குட்டிகளும் முற்றிலும் உருக் கெடாது கிடந்தன. அவற்றில் எதற்கேனும் உயிர் இருக்கக் கூடுமோ என்று பார்க்க எண்ணி, ஒரு பன்றியின் மீது தொட்டுப் பார்த்தான். சூடாயிருந்த அதன் தசையில் ஒரு பகுதி அவன் விரலில் ஒட்டிக் கொண்டது. கையில் வெப்பம் தாங்கமுடிய வில்லை. அதை உடனடி தணிக்கும்படி அவன் கைவிரல்களை வாயில் வைத்தான். கைவிரல்களில் ஒட்டியிருந்த தசை அவனுக்கு இன்னதென்று கூறமுடியாத இன்சுவை உடையதாயிருந்தது. புதிய நறுமணம் எங்கிருந்து வந்தது, அதன் பொருள் என்ன என்பதை இப்போது அவன் அறிந்து கொண்டான்! இப் புதுச் சுவை உணவை மேன் மேலும் நுகரும் எண்ணங் கொண்ட வனாய், அவன் மீட்டும் மீட்டும் கொதிக்கும் தலையில் கையிட்டுச் சுவைப்பதில் ஈடுபட லானான். வெளியூர் சென்று திரும்பி வந்த ஹோற்றி வீட்டின் நிலை யைக் கண்டும், மகன் செயலைக் கேள்வியுற்றும், கடுஞ்சினங் கொண்டு அவனைத் தேடி வந்தான். வீடெல்லாம் எரியவிட்டுப் பொருள்களைச் சேதப்படுத்தியதுமன்றி, அவன் இன்னும் எரி பொருளில் கிண்டிக் கிளறிக் கொண்டிருப்பதைக் கண்டு கடுங் கோபங் கொண்டான். “இவ்வளவும் எரியவிட்டது போதா தென்றா, இன்னும் இங்கே கிளறிக் கொண்டிருக்கிறாய்?” என்று அவன் மகனை அதட்டினான். புத்துணவின் புதுச்சுவையார்வத்தில் ஈடுபட்டிருந்த போ-போ அவனைக் கவனிக்கக்கூட நேரமில் லாமல், தலையைத் தொட்டுத் தொட்டு நுகர்வதில் ஆழ்ந் திருந்தான். அவன் எரிந்த பன்றியைத் தொட்டு வாயில் வைக்கும் கொடுமை கண்டு, ஹோற்றி பதைபதைத்தான். “சீ, மனிதரில் கேடுகெட்ட பதரே! என்ன, செய்யத் தகாத, கேலிக்கிடமான காரியம் செய்கிறாய்?” என்று கூறி அவனைக் கழியால் புடைத்தான். போ-போ இப்போது அனுபவித்த இன்பத்திடையே இவ்வடிகள் அவனுக்கு ஒரு பொருட்டாயில்லை. ஹோற்றி தன் மனங் கொண்ட மட்டும் அடித்தும், அவன் புன்முறுவலுடன், “அப்பா தாங்கள் கோபத்தில் வீண்நேரம் போக்க வேண்டாம். இந்தத் தசை எவ்வளவோ சுவையிருக்கிறது. சிறிது சுவைத்துப் பாருங்கள்!” என்றான். சீனமக்கள் எவரும் எரிந்த பிணத்தைத் தின்பவனை இழிவாகக் கருதுவர் என்று எண்ணித் தன் மகன் தகா செயலுக்கு அவன் வெட்கமடைந்ததன்றித் தானும் அதில் ஈடுபட எண்ணவில்லை. ஆனால், மகன் கையை அதிலிருந்து வலிந்து தள்ளும்போது பன்றியின் இறைச்சியில் அவன் கைபட்டுப் பொள்ளிவிட, அவன் எரிவு தணிக்க அதனை வாயில் வைக்க வேண்டியதாயிற்று. அப்போதுதான் போ- போவின் அறிவை மாற்றிய இன்சுவையின் தன்மை அவனுக்குப் புலனாயிற்று. அவனும் தன் மகனால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மதத்தில் சேர இணங்கினான். எனினும், இச் செய்தியைப் பிறர் அறிந்தால் தமக்கு இழிவும் இடரும் நேருமாதலால், அதனை யாரும் அறியாமல் மறைவாக வைத்து, இருவரும் தம் பன்றிகளின் இறைச்சியை வேண்டுமட்டும் உண்டு தீர்த்தனர். ஹோற்றி இது முதல் அடிக்கடி வெளியூர் போய் வரலானான். அவன் போகும்போதெல்லாம் போ-போ வீட்டுக்கு நெருப்பு வைத்தான். அடிக்கடி நிகழும் இச் செய்தி கண்டு, ஊரார் பலவாறு வியப்புற்று பேசிக் கொள்வராயினர். போ-போ- முதலில் எரிந்த வீட்டில் நடந்துகொண்டதைக் கவனித்திருந்த சில குறும்பர்கள், பன்றிகள் குட்டியிடும் சமயமாகப் பார்த்துத் தீ வைக்கப்படுகிறதென்று குறிப்பாக அறிந்து கூறினார். அத்துடன் ஹோற்றி மகன் செயலை முன்போலக் கண்டிக்காது உடந்தையாயிருந்தது. ஒரு தொகுதி பன்றிகள் எரிந்தபின், சிறிதும் வருத்தம் காட்டாமல் மற்றொன்று வாங்குவதும் கண்டு அவர்கள் ஐயம் வலியுறவு பெற்றது. ஹோற்றி குடும்பத்தைப் பற்றிய ஊர்ப்பேச்சு பரந்து பெருந் தீம்பு மொழியாகி பீக்கிங் நகரிலுள்ள சீன உயர்மன்றத்திற்கும் எட்டிற்று. அரசியல் காவலர் அதன்மீது ஒரு நாள் ஹோற்றியையும் போ-போவையும் கைப்பற்றி, வழக்கு மன்றத்தில் நிறுத்திக் குற்றம் சாட்டினர். அவர்கள் குற்றச்சாட்டை மெய்ப்பிக்க அவர்கள் இருவர் கைத்தடங்களும் உடைய சுட்ட பன்றியிறைச்சியும் மன்றத்தில் வைக்கப்பட்டது. மன்றத்தின் உசாவலுக் கிடையில் சான்றாளர் அனைவரும் பன்றி யிறைச்சி வைத்த தொட்டியைச் சுற்றி நின்று “இதுவே இருவரும் உண்ட அவலப்பொருள், அவர்கள் கைத்தடம் இதில் உள்ளது” என்று சுட்டிக்காட்டினர். எல்லாரும் அதைத் தொட்டுப் பார்க்கவே அதன் சூடு அவர்களையும் தம்மையறியாமல் அதைச் சுவைக்கத் தூண்டிற்று. அச் செயலை யடுத்து அவர்கள் முகத்தில் வரும் மாற்றத்தைக் கவனித்த மன்றத் தலைவரும் அத் தொட்டியை வரைவழைத்துத் தொடவே, அவரும் அதன் சுவையிலீடுபட்டார். மக்கள் இச்செயலைக் கவனிக் கவில்லை யாயினும், எல்லாச் சான்றாளரும் ஒருமிக்கக் குற்றம் இல்லை என்று தீர்ப்புச் சொன்னதையும், தலைவர் அதனை அட்டியின்றி ஏற்றதையும் கேட்டுத் திகைப்புற்றனர். குற்றவாளிகள் விடுதலையடைந்த பின் மக்கள் மனத்தினுள் பல ஐயங்கள் பின்னும் வலியுறவு பெற்றன. மன்றத் தலைவர் புதிதுபுதிதாக வீடுகள் கட்டினார். ஒவ்வொரு வீடும் சில நாளில் எரிந்து சாம்பலாயிற்று. ஆனால், அவர் சிறிதும் தயங்காமல் புது வீடுகள் கட்டி வரலானார். சான்றாளர்கள் வீடுகளும் அடிக்கடித் தீப்பற்றின. நாளடைவில் இத் தீக்கொளுத்தி இரகசியம் எங்கும் பரவவே, வீடுகள் எங்கும் எரியத் தொடங்கின. வீடு கட்டும் கொத்தர்களும் காலப் போக்கறிந்து எளிதில் எரியத்தக்கதும், மிகுதி விலை பிடிக்காததுமான பொறியான வீடுகள் கட்டத் தொடங்கினர். இதனால் சீன நாகரிகத்திலேயே பெருமாறுதல் ஏற்பட்டது. கட்டத் தொழில் கெட்டு அக்கலை சீரழிந்தது. தீயணைப்புக் கருவிகள் யாரும் வாங்குவாரில்லை. திருடர் காப்பகங்களும் தம் தொழில் இனி யாரும் வாங்குவாரில்லை. திருடர் காப்பகங்களும் தம் தொழில் இனி நடைபெறாதென ஒன்றொன்றாக மூடின. பன்றி விலையும் எரிபொருள் விலையும் மலை மலையாக ஏறின. இங்ஙனமாகச் சமைப்புத் தொழில் வீட்டுக்குத் தீவைக்கும் தொழிலாக நெடுநாள் வளர்ச்சி யடைந்தது. ‘இறைச்சி பதம் பண்ண ஒரு முழு வீட்டையும் எரிக்கத் தேவையில்லை. ஒரு சிறு அடுப்பினுள் சில கட்டைகள் எரிந்தால் போதும்’ என்று காண மனித வகுப்புக்கு நீண்ட நாள் பிடித்தது. அப்படிப்பினை ஏற்படுமுன், அதற்காக மேற்கொள்ளப்பட்ட படிகளும் பல பல. முதலில் அக்கால அறிஞர்கள் இச் செயலுக்கு வாழ்குடி வீட்டை எரிக்க வேண்டாம்; அதற்கெனத் தனி வீடு கட்டலாம் என்று கூறி அழிவைக் குறைத்தனர். வரவர அவ் வீடுகள் சிறுகின. இறுதியில் வாழ்குடி வீடுகள் தீப்பற்றாத பொருள்களாலும் எரி வீடுகள் பாதுகாப்பான சிறு இடத்துக்குட் பட்டும் கட்டப்பட்டன. அன்றைய எரி வீடுகளே பலபடியான வளர்ச்சியின் பயனாக இன்றைய நம் அடிசிற்களங்களாக மாறியுள்ளன. பண்டைக்கால ஆராய்ச்சி அறிஞர்கள் பலர் செய்த முன்னேற்றத்தின் பயனாகவே இன்று நம் வாழ்வில் மிகப் பொதுப்படைச் செய்தியாய்விட்ட சமையற்கட்டும் சமையற் கலையும் உருவாயின. கன்ஃபூஸியஸின் மேற்கோள் காட்டப்பட்டு அவர் பின்வந்த யாரோ ஒரு சீன உரைகாரரால் விளக்கப்பட்டுள்ள இக் கதை, சமையற்கலை கூட மனித சமூகத்துக்கு முதலில் எவ்வளவு புதுமையாயிருந்திருக்க வேண்டும் என்பதைச் சுவைபட எடுத்துக் காட்டுவதாயுள்ளது. அதன் மிகையுரைகளை நீக்கிப் பார்த்தால் தீயின் இப் புதிய பயன் பல தவறுகள், தற்செயலான நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் பயனாக மனித வகுப்பில் வளர்ந்ததே என்பதை ஏற்றுக்கொள்ளத் தடையில்லை. புதிய சமையற்காரர் இன்று பிறர் உதவியிருக்கும்போது செய்யும் தவறுகள், போ-போவின் மரபு இன்னும் ஒழிந்து போய்விடவில்லை என்பதைக் காட்டுபவை என்பதில் ஐயமில்லை. அப்பாத்துரையம் - 27 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) மொழிபெயர்ப்பு  ஹோரேஸ் வால்போல் கடிதங்கள்  செஸ்டர் ஃபீல்டின் கடிதங்கள்  ஈலியாவின் கட்டுரைகள் ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 27 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 24+280= 304 விலை : 380/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 304 கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. கா. அப்பாத்துரை நேரிசை வெண்பா எப்பாத் துறைக்கும் இவனோர் பழம்புலவன் அப்பாத் துரையறிஞன் ஆழ்ந்தகன்ற - முப்பால்போல் நூலறிவு! நூறு புலவர்கள் சேரினிவன் காலறிவு காணார் கனிந்து. 1 ஆங்கிலத்தை அண்டை மொழிகளினைப், பண்டைநாள் பாங்குற வாழ்ந்த பலமொழியை - ஈங்கிவனே செந்தமிழ்க்குச் சேர்க்கும் குருதியெனச் சேர்க்கின்றான் சிந்தனையில் யாவும் செரித்து. 2 விருந்தெனும் நூலை வெளிநாட் டமிழ்தை அருந்தெனத் தந்தான் அருந்திச் - செருக்குற்றேன் எத்தனை எத்தனை எண்ணித் தொகுத்தீந்தான் அத்தனையும் முத்தமிழர்க்குச் சொத்து! 3 சின்னஞ் சிறுவர்முதல் சிந்தனையில் தோய்ந்தாயும் பென்னம் பெரியர்வர்க்கும் பித்தாக்கும் - வண்ணம் அருநூல்கள் ஈவான் கலைக்களஞ்சி யம்போல் வருநூலைப் பாத்துவப்பேன் நான்! 4 ஆங்கிலத்தில் என்பாட்டை ஆரும் வியக்குவணம் பாங்குறச் செய்தான் படித்தவர் பாராட்டி வைய இலக்கியத்தில் வாழும்என் பேரென்றார் ஐயமில்லை அப்பாத் துரை! 5 குறள்வெண்பா அப்பாத் துரைகொண்டே ஆயிரம்நூல் செய்க தப்பா துயரும் தமிழ்! -பாரதிதாசன், பாவேந்தம்-18 - பக். 200 தமிழ்மண் பொருளடக்கம் ஹோரேஸ் வால்போல் கடிதங்கள் 1. பள்ளிப் பழக்கம் ... 5 2. நட்பின் திறம் நண்பர் அறிவர்! ... 7 3. பண்பாளர் பண்பும் நண்பர் பண்பும் ... 9 4. பயண வர்ணனை ... 11 5. மண வாழ்த்துப்பாக்கள் ... 13 6. பெருமையும் சிறுமையும் தாம்தர வருமே ... 15 7. ஆக்ஸ்ஃபோர்டு ... 18 8. மதநம்பிக்கையும் பெண்டிரும் ... 20 9. கவிதையும் அறிவு நூல்களும் ... 23 10. ஆல்ப்ஸ் யாத்திரை ... 26 11. நாட்டுப் பண்பாடுகள் ... 30 12. ‘பண்டைப் புகழ்’ ரோம் ... 33 13. மண்ணுள் மறைந்த நகரம் ... 37 14. தாயின் பிரிவு ... 41 15. பிரிட்டிஷ் அரசியல் மன்றம் ... 43 16. பதவியும் பட்டமும் ... 48 17. முகமூடி நாடகம் ... 52 18. பகட்டும் பொய்ம்மையும் ... 55 19. சிறு செய்திகள் ஐ ... 57 20. சிறு செய்திகள் ஐஐ ... 60 21. ரிச்சர்டு வெஸ்ட்டு மீது இரங்கற்பா ... 63 22. நாட்டுப்போக்கும் மக்கள்போக்கும் ... 65 23. ஆட்சியாளரும் பொதுமக்களும் ... 68 24. வெற்றிக் கொண்டாட்டம் ... 71 25. அறிமுகம் ... 75 26. அரசியலும் அரசியல் தலைவரும் ... 76 27. இயற்கை நட்பு ... 80 28. நாட்டு வரலாறும் மனித வரலாறும் ... 85 29. வெளிநாட்டுச் செய்திகள் ... 90 30. மன்னரும் பெருமக்களும் ... 92 31. பெரிய இடத்துச் செய்திகள் ... 96 செஸ்டர் ஃபீல்டின் கடிதங்கள் 1957 1. மதிப்பும் தகுதியும் ... 00 2. செய்யுள் நடையின் பயன் ... 102 3. சொற்பொழிவு ... 104 4. பண்டைய உரோமநாட்டு வரலாறு ... 106 5. கல்வியின் அருமையும் கல்லாமையின் சிறுமையும் ... 108 6. பேச்சொழுங்கும் நடையொழுங்கும் ... 110 7. ஒப்புரவும் மக்கட் கூச்சமும் ... 113 8. பிறர்க்கென வாழ்தல் ... 116 9. கடமையும் இன்பமும் ... 119 10. வாழ்க்கையும் பயணமும் ... 123 11. தந்தையும் மகனும் (1) ... 126 12. தந்தையும் மகனும் (2) ... 127 13. மெய்யான இன்பமும் அதைப் பெறும் வழிகளும் ... 129 14. அகமும் புறமும் ... 133 15. ஒன்றே செய்யவும் வேண்டும், ஒன்றும் நன்றே செய்யவும் வேண்டும் ... 135 16. பயணமும் பயணக் குறிப்புகளும் ... 138 17. கடிதம் எழுதுதல் - ஒரு கலை ... 140 18. நட்பும் தோழமையும் ... 142 19. பிறர்க்கு இனியனாதல் எவ்வாறு? ... 147 20. காலமும் இளமையும் ... 150 21. ‘சிறு துரும்பும் பல்லுக்குத்த உதவும்’ ... 153 22. அரசியற் பணியும் தகுதியும் ... 156 23. பணியாட்கள் ... 158 24. இயற்கையும் செயற்கையும் ... 160 25. மன்னர் திருமுன் ... 163 26. சொல் நயமும் சொல்லாடல் நயமும் ... 165 27. முன்னேற்றத்தைத் தடுக்கும் இருவகைக் கேடுகள் ... 168 28. வாசிப்பும் கல்வியும் ... 171 29. செல்வமும் சிக்கனமும் ... 173 30. குருட்டு நம்பிக்கைகளும் பகுத்தறிவும் ... 176 31. போலி நண்பர்-ஓர் கற்பனை உரையாடல் ... 180 ஈலியாவின் கட்டுரைகள் 1. தென்கடற் குமிழி ... 189 2. எங்கள் பள்ளி வாழ்வு ... 199 3. இருவேறு இனங்கள்! ... 208 4. என் காதுகள் ... 217 5. அம்மாஞ்சி விழா ... 225 6. மௌன வழிபாடு ... 229 7. ஆசிரியரும் மாணவரும் ... 237 8. மாயக் குழந்தைகள் ... 248 9. ஒட்டடைச் செல்வரின் உயர்தனிச் சிறப்பு ... 256 10. தலைநகர்ப் பிச்சைக்காரர் ஒழிப்புப்பற்றி ஓர் முறையீடு ... 263 11. மனித உலகில் அடிசிற்கலை: அது தோன்றிய வகை பற்றிய விந்தையான வரலாறு ... 271