சங்க இலக்கிய மாண்பு முதற் பதிப்பு - 1949 இந்நூல் 2002இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. சங்க இலக்கிய மாண்பு தமிழ்ப் புலமைக்கும் தமிழார்வத்துக்கும் தமிழர் எழுச்சிக்கும் உரிய ஒரு கோட்டையாய், தமிழ்ப்பல்கலைக் கழகம் எனவும் போற்றப்படும். இவ்வண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களிடையும் புலவரிடையேயும் சங்க இலக்கியத்தைப்பற்றிய நுணுகிய ஆராய்ச்சியை விரிவுறக் கூற இன்று நேரம் இடம் தராது. பிறமொழிகளிலேயே பெரிதும் நாட்கழித்த என்போன்றோர்க்கு இது உரியதும் அன்று. அதற்குத் தேவையும் இல்லை. ஏனெனில் புலவர் குழுவும் பல்கலைக் கழகத்தாரும் அதனையே இடைவிடாது செய்துவருகின்றனர். அவ்வகையில் மாணவர்களை ஊக்கவும், புலவர்களைத் தூண்டவும் உதவும் முறையில் இத்துறையின் பெரும் பயன் களையும் சிறப்பு முதன்மையையும் விளக்கி எதிர்கால ஆராய்ச்சி பற்றிய என் அவாக்களையும் வெளியிடத் துணிகின்றேன். பழமைக்கும் முந்திய பழமை: பெருமைக்கும் மேற்பட்ட பெருமை அண்மைக் காலம் வரை தமிழிலக்கியம் என்ற தொடர் பெரும்பாலும் தேவாரகாலத்துக்குப் பிற்பட்ட இலக்கியத் துக்கே கொடுக்கப்பட்டு வந்துள்ளது. அறிஞர் கார்டுவெல், பேராசிரியர் போப்பையர் போன்ற மேனாட்டறிஞர்கள் தமிழிலக் கியத்தின் பெருமை, தொன்மை ஆகியவற்றை வானளாவப் புகழ்ந்தபோது அவர்கள் மனத்திற்கொண்ட பெருமையும் பழமையும் சங்க இலக்கியத்தைக் குறித்த பெருமையோ அல்ல. ஏனெனில் திருக்குறள், நாலடியார் நீங்கலாக ஏனைய சங்க நூல்கள் அக்காலத்தில் வெளிவர வில்லை. சங்க காலத்தைப் பற்றிய அறிவு பரவாத காரணத்தால் திருக்குறளையும் நாலடியையும் அவர்கள் பிற்காலத்துடன் அதாவது தேவாரகாலமாகிய கி.பி.6-7ஆம் நூற்றாண்டுகளுடன் ஒன்று படுத்தியே கூறினர். இவ்வளவு பிற்பட்ட கால இலக்கியத்தையே அறிந்த அவர்கள் தமிழிலக்கியத்தின் பழமையைப் பற்றியும் பெருமையைப் பற்றியும் இவ்வளவு வானளாவப் புகழ்ந்தது இன்று வியப்புக்குரிய செய்தியாகத் தோன்றக்கூடும். ஆயினும் வரலாற்றடிப்படையில் பார்த்தால், இதில் வியப்புக்க இடமில்லை. ஏனெனில் இப்பிற்பட்ட காலத்தில் கூட இந்தியாவில் வேறு எந்தத் தாய் மொழியிலும் இலக்கிய வாடை இருந்ததில்லை. அது மட்டுமோ? பண்டை இலக்கிய மொழி எனப் புகழ்பெற்றுள்ள வட மொழியில் கூட இலக்கியம் தோன்றியதும் வளர்ந்ததும் இக்காலத்திலும் இதற்குப் பிற்பட்ட காலத்திலுமேதான். ஆகவே வடமொழி யிலக்கியத் துடன் தோன்றி அதனுடன் வளர்ச்சி யடைந்த சமகால இலக்கியம் என்ற சிறப்பு இக்காலத் தமிழிலக் கியத்திற்கு உண்டு என்னலாம். சங்க இலக்கிய அறிவு பரவாத நம் தந்தையர் காலத்துப் பழம் புலவர்களிடையே தலைசிறந்தவர்களுள் ஒருவர் அறிஞர் உ. வே. சாமிநாதனார். அக்காலத் தமிழ்ப் புலவர் புலமை யெல்லையை அவர்தம் அழகிய கட்டுரை ஒன்றில் தீட்டியுள்ளார். கல்லூரித் தலைமையாசிரியர் ஒருவர் அவர்தம் புலமையைப் பாராட்டியபின், அவரிடம் தாங்கள் சிலப்பதிகாரம் பயின்றிருக் கிறீர்களா?” என்று கேட்டாராம். “நான் அதன் பெயர் தானும் இது வரை கேட்டதில்லை” என்றாராம் புலவர். இதன்பின் அவரக்குத் தொன்னூல்களில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாகவே ஆறுமுக நாவலர், எல்லப்ப நாவலர், பவானந்தம் பிள்ளை, சி. வை. தாமோதரம் பிள்ளை அகியவர்கள் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவரும் தொன்னூலேடுகளில் புதைந்துள்ள நாட்டுச் செல்வங்களை வெளியிடும் பணியில் ஈடுபடலாயினர். அதன் பிற்படத் தோன்றி இப்போது தழைத்தோங்கிவரும் தற்காலத் தமிழ் மறுமலர்ச்சி யூழியில் தான் சங்க இலக்கிய அறிவு புலவர்களிடையேயும் பொது மக்களிடையேயும் தோய்ந்து ஊறி ஆர்வமூட்டத் தொடங்கி யுள்ளது. சங்க இலக்கியம் பற்றிய கால ஆராய்ச்சி இப்போது கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட தென்னலாம் . இப்போது நமக்குக் கிட்டியுள்ள சங்க் இலக்கியத்தின் மிகப்பெரும் பகுதி கி. பி. 2. 3 ஆம் நூற்றாண்டுகளுக்குரியது. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என வகுக்கப்பட்டுள்ள சங்க இலக்கியத்தில் அடங்காத சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காப்பியங்களும் மற்றவற்றுடனொப்பச் சங்க காலத்தில் எழுதப்பட்டவையேயாகும். திருக்குறள் கி. பி. 2 ஆம் நூற்றாண்டுக்குக் குறைந்தது ஒன்றிரண்டு நூற்றாண்டுகட்கு முற்பட்டது. தொல்காப்பியம் திருக்குறளுக்கும் சில பல நூற்றாண்டுகள் முற்பட்டதாதல் வேண்டும். தவிரச் சங்கத் தொகைநூல்களில் நூல்கள் சிலவும் நூற்பகுதிகள் சிலவும்; சிறப்பாகப் புறநானூற்றுப் பகுதிகள் சிலவும் பரிபாடல் பகுதிகளும் முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் 2 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவையாகவே இருத்தல் வேண்டும். சங்க காலத்திலும் பழமையுடைய இத்தொல் பழமை இலக்கியம் சங்க காலத்துக்கு முற்பட்ட இலக்கியப் பண்பாடுகளை விளக்க உதவுகின்றன. கால ஆராய்ச்சியை யடுத்து இலக்கிய ஆராய்ச்சி, இலக்கியத்தின் பின்னணியாக இலங்கும் நாகரிக ஆராய்ச்சி ஆகியவற்றில் இன்று புலவரும் ஆராய்ச்சியாளரும் முயன்று வருகின்றனர். சிந்துவெளிப் புதை பொருளாராய்ச்சி இவற்றுக்குப் பேரூக்கம் தருவதாயுள்ளது. பண்டைச் சிந்து வெளி நாகரிகத் துக்கும் தற்கால இந்திய நாகரிகத்துக்கும் இடையே காணப்படும் வகையில் இவ்விரண்டுடனும் தொடர்பற்ற வேத இதிகாச புராணங்கள் சிறிதும் உதவக் கூடாதவையா யிருக்கின்றன. சங்க இலக்கிய ஆராய்ச்சி இது வகையில் பேருதவி தந்துள்ளது. தருகிறது. இன்னும் பேருதவி தரக்கூடும். தேசிய இலக்கியம் வரலாற்றாசிரியர்கள் காலப்பாகுபாட்டைப் பின்பற்றித் தமிழ் இலக்கிய வளர்ச்சிக் காலத்தை முப்பெரும் பிரிவு களாகப் பகுக்கலாம். அவை பண்டைக்காலம், இடைக்காலம், பிற்காலம் என்பவை. கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையுள்ள சங்க இலக்கியம் பண்டைக் காலத்தது. அதற்குப் பிற்பட்டுக் கம்பர் காலம் வரை அதாவது 12 ஆம் நூற்றாண்டு வரையுள்ள இலக்கியம் இடைக் காலத்தது. கம்பருக்குப் பிற்பட்ட இலக்கியம் பிற்கால இலக்கியம் ஆகும். இவற்றுள் பண்டைக்கால இலக்கியமாகிய சங்க இலக்கியம் தமிழுக்குத் தனிப் பெருஞ் சிறப்பளிப்பதாகும். ஏனெனில், வேத உபநிடதங்கள் நீங்கலாக இந்தியாவில் எம்மொழியிலும் இக்காலத்தில் இலக்கிய வாழ்வு இருந்த தில்லை. இரண்டாங்காலமாகிய இடைக்காலத்திலும் வடமொழி இலக்கியம் தவிர வேறு இந்தியாவில் தமிழோ டொத்த இலக்கியம் இல்லை. வடமொழி, தென்மொழி என்ற பெயர்களுடன் வடமொழியும், தமிழ் மொழியும் போட்டி யிட்ட காலம் இதுவே. மூன்றாவது காலத்தில் வடமொழி இலக்கிய வாழ்வு வடநாட்டில் அழிந்துபட்டது. இந்தியா வெங்கும், சிறப்பாகத் தென்னிந்தியாவில், தாய்மொழி இலக்கியங்கள் தலையோங்கின. இக்காலத்தில் தான் பிற மொழிகள் தமிழுடன் இலக்கியப் போட்டிக்கு வந்தன. பண்டைக்காலம், இடைக்காலம், பிற்காலம் ஆகிய இம்மூன்று காலங்களிலும் தொடர்ந்து வளர்ச்சி பெற்ற இலக்கிய மொழி தமிழ் மட்டுமே என்பதையும், வடமொழியும் பிற மொழிகள் யாவும் மூன்று காலங்களுள் ஒரு கால அளவே வளர்ச்சியடைந்தன என்பதையும் இதன் மூலம் தெளிவுபடக் காணலாம், தேசவரலாற்றுடன் வளர்ச்சியடைந்த இத் தேசிய இலக்கியத்தின் தாயிலக்கியம் சங்க இலக்கியமே ஆகும். சங்க இலக்கியமும் பிற்காலத் தமிழிலக்கியமும் பழங்கால ஆராய்ச்சிக்கும் தேச வளர்ச்சி வரலாற்றுக்கும் உதவுவதுடன் நில்லாது சங்க இலக்கியம் தமிழர்தம் இலக்கிய வளர்ச்சிக்கும் பெரும்பயன் விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை. இன்று தமிழிலக்கியத்தின் எல்லையற்ற முழுப்பரப்பை யும் தமிழகம் உணர்ந்து போற்றவில்லை. அதன் எல்லையற்ற அளவே இதற்குத் தடையாகவும் உதவியுள்ளது. தமிழில் சைவ இலக்கியம், வைணவ இலக்கியம், சமண இலக்கியம் என்று பிரித்தால் கூட, ஒவ்வொரு சமய, இலக்கியமும் மற்ற மொழிகளின் முழு இலக்கியத்திற்கு அளவிலும் பெருமை யிலும் ஈடு கொடுக்கக்கூடியது. சைவரும் வைணவரும் பிறரும் கவனிக்காத வைதிகச் சார்பிலும் கூடப் பாடுதுறை போன்ற சிறந்த நூல்கள் உள்ளன. இவை தவிரக் கால, தேச, கொள்கை வேறுபாடுகளுக் கேற்பக் கம்பர் கட்சி என்றும் பெரிய புராணக் கட்சியென்றும் ஒட்டக் கூத்தர் கட்சியென்றும் தனி நூல்கள் சிறப்பிலீடுபட்ட கட்சிகள் எழுந்து பூசலிடவும் செய்கின்றன. ஆனால் பல சமயங்களின் பூசல்களிடையே ஒரு திருக்குறள் மிளிர்வதுபோல் இப் பலகட்சிகளிடையேயும் ஒற்றுமை விளைவிப்பதாயுள்ளது சங்க இலக்கியம். கம்பர் அடியார் கம்பரையும், சேக்கிழார் அடியார் சேக்கிழாரையும் எவ்வளவு பெருமையுடையவராகக் கருது கின்றனரோ, அவ்வளவு கம்பரும் சேக்கிழாரும் சங்க இலக் கியத்தைப் பெருமையுடையதாகக் கொண்டனர் என்பதும், அக்கம்பரும் சேக்கிழாரும் மட்டுமன்றி அச்சங்கப் புலவரும் திருவள்ளுவரை உச்சிமேற் கொண்டனர் என்பதும் கருதத் தக்கது. கவிதைச் சிறப்பிலும் பிற்காலக் கவிராயர்கள் கம்பரையும் சேக்கிழாரும் ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் சங்கப் புலவரையும் திருவள்ளுவரையும் பின்பற்றினராயினும் அவர்கட்கு ஒப்பாக வில்லை யென்பது மிகையாகாது. இந்நிலையில் சங்க இலக்கியம் கட்சிகளின் எல்லை கடந்த முழு ஒற்றுமையை நாட்டம் தமிழின் நாட்டுரிமை இலக்கியமாக நிலவுகிறது. தமிழின் இடைக்கால பிற்கால நூல்களைச் சிறப் பிப்பவர் அந்நூல்களைப் பிறமொழி நூல்களுடன் ஒப்பிட்டுச் சிறப்புக் கூறுகின்றனரேயன்றித் தனித்தமிழ்ச் சங்க இலக்கியத் துடனோ திருக்குறளுடனோ அல்ல என்பதைத் தமிழர் கவனித்தல் வேண்டும். தமிழின் இடைக்கால பிற்காலங் கட்குரிய முதனூல்கள் கூட உலகின் பிற முதன்மைவாய்ந்த இலக்கிய முதனூல்களுக்கு ஈடு செலுத்தக் கூடியவை என்பதில் ஐயமில்லை. இஃது உணரப் பட்டால் இப்பூசல்கள் பொருளற்றன வாய் விடுவதுடன் பெருமைக்கும் பெருமை தரும் சங்க இலக்கிய மாண்பும் உள்ளவாறு உணரப்பட்டுவிடும். அந்நாள் விரைவில் வருமாக. இடைக்கால பிற்கால நூல்களைப் போற்றுபவர் போற்றுக. ஆனால் முன்னூல்களே தமிழர் புகழின் கொடு முடி யென்பதை மறவாதிருப்பார்களாக. இருண்ட இடைக்காலம் அல்லது புராணகாலம் சங்க இலக்கிய வாழ்வுக் காலம் முடிவற்ற பின்பே பிற்காலத் தமிழிலக்கிய வாழ்வு தொடங்கிற்று என்பதை யாவரும் அறிவர். இவ்விரண்டு காலங்களுக்குமிடையே ஓர் இருண்ட இடைக் காலம் கி. பி. 3 ம் 4ஆம் நூற்றாண்டுகளில் நிலவி யிருந்த தென்று வரலாற்றாராய்ச்சியாளர் எடுத்துக் காட்டுகின்றனர். தென்னாட்டி லுள்ள இவ்விருண்ட இடைக்காலத்தைப் போலவே வட நாட்டிலும் கிட்டத்தட்ட இதே 3 ஆம் நூற்றாண்டில் ஓர் இருண்ட இடைக்காலம் இருந்தது என்பதை வரலாற்று மாணவர் கவனித்தல் வேண்டும். இவ்விருண்ட இடைக்காலமே வடநாட்டில் புராணகாலமாகும். காலப்போக்கில் வளர்ந்துவந்த இதிகாச புராண சுமிருதி முதலிய பல ‘காலங்கடந்த’ நூல்கள் இன்றைய நிலையில் உருவாக்கப்பட்ட காலம் இதுவே. தென்னாட்டில் இருண்ட இடைக்காலத்தில் ஏற்பட்ட அழிவுக்குப் பின் பழைய சங்ககால வாழ்வின் பின்னணியான நாகரிகம் சிதைந்தொழிந்து ஒரு புதிய வாழ்வு தொடங்கி யதன்றோ? அதுபோலவே வட நாட்டிலும் இவ்விருண்ட காலத்தின் முன்னிருந்த நாகரிகமும் நிலையும் மாறின. பெரும்பாலும் புத்த சமணச் சார்பானபாளி, அர்த்தமாக முதலிய பண்டைத் தாய்மொழி வாழ்வுகள் அழிந்து புதிய வடமொழி இலக்கிய வாழ்வு இதன்பின் தொடங்கிற்று. இருண்ட காலத்துக்கு முன் வடவர் மொழி வடமொழியாகவில்லை. இலக்கியமும் தோன்றவில்லை. தாயும் சேயும் சங்க காலத் தமிழிலக்கியமும் பிற்காலத் தமிழிலக்கிய மும் ஒரே மொழியில் தான் எழுதப்பட்டுள்ளன. ஒன்று தாய், மற்றொன்று பிள்ளை என்ற உறவும் அவற்றிடையே உண்டு. தாயின் சாயல் பிள்ளையிடத்தில் ஆங்காங்கே காணப்படுவதும், தாயின் பாசம் பிள்ளையிடத்தில் ஓரளவு நிலவுவதும் இயல்பே. ஆனால் பிற்காலத் தமிழிலக்கியம் தாயின் அறிவுவளமும் செல்வளமும் இழந்து தாயின் தன்னாண்மை நிலையும் விடுதலை யார்வமும் இல்லாத பிள்ளை போலவே காட்சியளிக்கிறது. எனவே மொழியாலும் வரன்முறையாலும் இவ்விரண் டிலக்கியங்களும் ஒன்றானாலும், தன்மையில், தரத்தில், பண்பாட்டில் இவையிரண்டும் இரு வேறுபட்ட இலக்கியங்களே யாகும். தாய் செல்வச் சீமாட்டி; மகள் பஞ்சைப் பன்னாடை. தாய் குப்பையில் வீசியெறிந்த மணிகள் மகளின் ஒப்பற்ற பெருஞ்செல்வம். தாய் வணங்காமுடியரசி; மகளிடம் அப்பெருமையில்லையென்பதுமட்டுமன்று; இருக்குமளவு பெருமையும் சிறிது சிறிதாகக் குறைந்து, வணங்கவேண்டுமா, வேண்டாமா என்ற சிந்தனைக்கு இடமேயில்லாமல், வணங்க வேண்டுவது யாரை என்ற சிந்தனை ஏற்பட்டு விட்டது. தாயின் உடல் நிமிர்ந்து நிலை பெற்றது. ஏனெனில் அதற்கு உறுதியான முதுகெலும்பு உண்டு. ஆனால் மகளுடலில் முதுகெலும்பு தவிர மற்றெல்லாம் உண்டு. தாய் இயற்கையழகும் பொலிவும் வாய்ந்தவள். மகளின் செயற்கை அழகு முறைகளும் போலி அணிகலன்களும் அவளது பொலிவின்மையைத் தான் எடுத்துக் காட்டுகின்றன. தாயிலக்கியத்தின் தன்மையைப் பேணமுடியாத நிலையில் பின்னிலக்கியம் அதன் புகழை அவாவிப்பேணியதில் வியப்பில்லை. சங்க இலக்கியங்களினும் முற்பட்டதாகிய திருக்குறளைச் சங்க இலக்கியங்கள் தாமும் பெயர் குறிப்பிட்டும் குறிப்பிடாமலும் எடுத்தாண்டு சிறப்பிக்கத் தயங்கியதில்லை. அதுபோலவே தொல்காப்பியம், திருக்குறள் போன்ற தொல்பழமை வாய்ந்த நூல்களின் உரைகளும் சங்க நூல்களின் உரைகளும் இடைக்கால, பிற்கால இலக்கியங்களில் எடுத்தாண்டு போற்றப்படுகின்றன. இங்ஙனம் எடுத்தாளப் படும் இடங்களையெல்லாம் புலவரும் மாணவரும் தேர்ந்து ஒப்பிட்டுப் பார்த்தால், பிற்காலத்தவர் விரித்தும் பதுக்கியும் பல படப்புனைந்தும் கூறினும், இலக்கியத் தலையூற்று தலையூற்றாகவே இருப்பதைக் காண்பர். இயற்கையுடனும் வாழ்வுடனும் ஒன்று பட்ட நின்ற சங்ககாலப் புலவர்கள் அவற்றுடன் தொடர்புடைய படைப்புக் கலையிலேயே ஈடுபட்டனர். பிற்காலப் புலவரோ இயற்கையையும் வாழ்வையும் ஊன்றிக் கவனியாது சங்க காலக்கவிதையின் கருத்துக்களையும் புறப்போர்வைகளை யும் புதுக்கிப் பெருக்கி அவற்றினூடாகவே இயற்கையையும் வாழ்வையும் தீட்டினர். சங்க கால இலக்கியக் காட்சிகள் உயிரோவியங்களாகவும் அறிவு, உணர்ச்சி கலந்த ஓவியங் களாகவும் விளங்குகின்றன. பிற்காலத்தவை பெரிதும் சொல்லோவியங்கள் மட்டுமே. கனிமலர்ச் சோலைகளினிட மாக இலை நிறை காட்டையே பிற்காலத்திற் காண்கிறோம். நாளடைவில் அவ்விலைகள் தாமும் தாளிலைகளாகத் திரிபுற்றன. இந்தியாவின் இலக்கியத் தலையூற்று சங்க இலக்கிய நூல்களை ஒரு புறமும் இடைக்கால, பிற் காலத் தமிழிலக்கியத்தையும் வடமொழி இலக்கியத்தையும் மற்றொரு புறமும் வைத்துஆராய்ந்தால், வடமொழி இலக்கியம் பெரும்பாலும் இடைக்காலத் தமிழிலக்கியத்தை ஒத்தும் முற்காலச் சங்க இலக்கியத்திலிருந்து மாறுபட்டும் இருப்பது காணலாம். தமிழிலக்கியம் ஆங்காங்குச் சங்க இலக்கியத்தை நேரிடையாக மேற்கோள் காட்டுவது போல வடமொழியிலக்கியம் காட்டுவதில்லை. ஆனால் தமிழிலக்கிய நூல்கள் சங்க நூல் உரைகளையும் கருத்துக்களையும் மேற்கொண்டு புதுக்குவது போலவே வடமொழி நூல்களும் புதுக்குவது காணலாம். புராணகாலக் கதம்ப நூல்களான இதிகாச புராண சுமிருதிகளிலும் வடமொழி இலக்கிய நூல்களிலும் சங்க இலக்கிய நூல்களின் சொற்கள், சொற் றொடர்கள், கருத்துக்கள், முழுப்பாடல்கள், பாடற் பகுதிகள் ஆகியவை ஒத்துவிளங்குகின்றன என்பதைப் பல வடமொழி அறிஞரே எடுத்துக் காட்டியுள்ளனர். சங்ககால நாகரிகத்திற் குறைபட்ட பிற்காலத் தமிழிலக்கிய ஆசிரியரைப்போலவே, வடமொழி இலக்கியத்தாரும் சங்கத் தமிழால் திறம்படக் கூறியதை விரித்தும் புதுக்கியும் குழைத்தும்; சிலவிடங்களில் வழுக்கியும், பலவிடங்களில் தெளிவு காணாது முரண் பட்டும் பகர்ந்துள்ளனர் என்பது காணலாம். இவற்றால் சங்க இலக்கியம் தமிழிலக்கியத்துக்குமட்டும் தலையூற்றன்று. இடைக்காலத்தது ஆன வடமொழி இலக்கியத்துக்கும் பிற பிற்காலத் தாய்மொழி இலக்கியங்களுக்கும் கூட அதுவே தலையூற்றாகும் என்பது தெரிய வரும். தமிழிலக்கியம் சங்க இலக்கியத்தைப் பின்பற்றுவது இயல்பு. வடமொழி இலக்கியம் அங்ஙனம் பின்பற்றியது என்று கூறுதல் பொருந்துமா என்று பலர் மலைவுறலாம். ஆனால் மூன்று இலக்கியங்களையும் ஒப்பிட்டால் தமிழிலக்கியத்தை விட வடமொழி இலக்கியத்தின் சங்க இலக்கியச் சார்பு நன்கு தெளியக் கூடியதாகவே இருக்கிறதென்று காணலாம். தமிழில் சங்க இலக்கியத்துக்கு முற்பட்டே முத்தமிழிலக்கண இலக்கிய மரபுஉண்டு. வடமொழியில் புராணகாலத்துக்கு முற்பட்ட இலக்கிய மரபு இல்லை. வால்மீகியே வடமொழியின் ஆதிகவி என்று கூறப்படுவது இதனாலேயேயாகும். மேலும் தமிழிலக்கியத் தார் சங்க இலக்கியத்தைப் பின்பற்றிய இடங்களிலுள்ள, முரண்பாடுகளை விட வடமொழியாளர்கள் பின்பற்றிய இடங்களிலுள்ள முரண்பாடுகள் மிகுதி. புராணகால நூல்கள் பலர் பல காலத்தில பலபட எழுதிய கதம்ப நூல்களாதலால் தமிழில் பல நூல்களின் கருத்துக்களையும் தம் கருத்துக்களையும் ஒருங்கே ஒரே நூலில் கூறி முரண்பாடுகளை வளர்த்தனர். காலத் தொடர்பும் இம் முரண்பாடும் கண்டும் தெய்வ மொழியாகிய வடமொழி தமிழைப் பின்பற்றுமோ என்று ஐயுறுபவர்க்குப் பைசாசமொழியிலிருந்து பெருங்கதையை யும் புத்த சாதகக் கதைகளிலிருந்து பஞ்ச தந்திரத்தையும் அவர்கள் உருவாக்கியதை எடுத்துக் காட்டலாம். யவன (கிரேக்க)ரிடமிருந்து வான நூல்களை மேற்கொண்டதும் கவனிக்கத்தக்கது. மற்றும் தமிழகம் பற்றிய அவர்கள் ஆர்வத்தை நேரிடையாகவும் காட்டலாம். தொடக்கக்காலக் கவிஞனாகிய காளிதாசன் காலத்திலிருந்தே வடமொழி யாளர் கவிதையில் தென்றல் மலயவாதம் என்றும் சந்தனம் மலயஜம் என்றும் வழங்கலாயின. தொடக்கக் காலத்தி லிருந்தே வடமொழி இலக்கியத் தலைமை நிலையால் காஞ்சி இந்தியாவின் தலைசிறந்த சமய, கலைத்தலைநகராக விளங்கியதும் குறிப்பிடத் தக்கது. சங்க இலக்கியம் மட்டுமன்றிப் பிற்கால இலக்கியத்தைக் கூட வடமொழியாளர் பின்பற்றத் தயங்கவில்லை. 9 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட வடமொழிப் புலவர் தமிழின் எதுகை மோனைகளை வடமொழியில் மேற்கொண்டனர். இதே காலத்தில் தான் பழைய பொருளிலக்கணத்தின பகுதியான செய்யுளணிப் பகுதிகளும் அகப் பொருளிலக்கணங்களும் தமிழில் தனிப்பட்ட முழு இலக்கணங்களாக விரிக்கப்பட்டன. இவற்றையும் பக்திப் பாடல்களாகிய தாண்டகங்களையும் பாசுரங்களையும் சந்தப் பாடல்களையும் வடமொழியாளர் பின்பற்றினர். காலமும் பின் தொடர்பு கவனியாது தமிழர் இவற்றை வடமொழியிலிருந்து மேற்கொண்டதாக இதுகாறும் புலவர் கருதி வருகின்றனர். இது தவறு. வடமொழியிலும் தாய்மொழிகளிலும் ஏற்பட்ட இலக்கிய அலைகளும் இயக்கங்களும் பெரும்பாலும் தமிழிலிருந்து தோற்றினும் உடனடியாக இந்தியா முழுவதும் விரைந்து பரந்ததே இம்மயக்க உணர்வுக்குக் காரணம். சமயத்துறையில் பக்தியியக்கம், மொழித்துறையில் மணிபவள நடை (தாய்மொழி வடமொழிக் கலப்பு) ஆகியவை இத்தகைய அனைத்திந்திய இயக்கங்களுட் சில. ஐந்திணை மரபு தமிழிலக்கியமும் வடமொழி இலக்கியமும் சங்க இலக்கியத்தைப் பேரளவு பின்பற்றினவாயினும் சங்க இலக்கியத்தின் பல சிறப்புக்களை அவை பின்பற்றவோ மேற் கொள்ளவோ முடியவில்லை. இது காலதேச மாறுபாடுகளின் பயன் என்பதில் ஐயமில்லை. வடமொழி இலக்கியத்தின் புகழ் இந்தியாவெங்கும் பரவியிருந்த காலமாகிய தாய் மொழி இலக்கிய காலத்தில்கூட வடமொழியிலக்கியத்தின் தலைசிறந்த துறையாகிய நாடகம் எம்மொழியிலும் பின்பற்றப்படவில்லை. இதன் காரணம் வடமொழி இலக்கிய கால நாகரிகம் அதன்பின் மேலும் கெட்டதேயாகும். இதுபோலவே தமிழகத்தில் சங்ககாலத்தில் வாங்கிய ஐந்திணைமரவும் அகப்புறப்பொருள் துறைமரபுகளும் தமிழ் நாட்டிலேயே நாகரிகச் சீர்கேட்டினால் நன்கு உணரப்படாமல் வரவர நலிவுற்றன. வடமொழியாளரும் அணியிலக்கணத்தையும் பக்தி யிலக்கியத்தையும் மேற்கொண்டது போல் அவற்றை மேற் கொள்ளவில்லை. ஐந்தினை மரபின் நுணுக்க விவரங்களை அதற்குரிய துறைச் சொற்களுடன் புலவர் விளக்குவதுண்டு. ஆனால் மாணவரும் பொது மக்களும் அச்சொற் காட்டிடையே எத்தகைய சிறப்பையும் காணமாட்டாமல் இது தமிழ்ப் புலவர்களின் திறமையைக் காட்டும் ஒரு பொறியெனக் கருதியிருக்கின்றனர். இதில் வியப்பில்லை. இன்றைய மேனாட்டு விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெறாது போகுமானால் விஞ்ஞான நூல்களைப் பயின்ற ஒருவன் அவற்றிற் கண்ட செய்திகளை ஒப்பிக்கத் தொடங்கினால் விஞ்ஞான மாணவரல்லாத பிறர் இது போன்றே மயக்கங்கொள்வர். கிரேக்க இலக்கியத்தின் அறிவு மக்களிடையே மறைந்து போன பிறகு ஐரோப்பாவில் இடையிரு காலமாகிய கி. பி. 500 முதல் 1600 வரை ஆயிர ஆண்டுகளாக அது பெயரளவில் மதிக்கப்பட்டே வந்தாலும் அதன் சிறப்புக்கள் உணரப்படாமலிருந்தது என்பது காணலாம். இவற்றைப்போலவே தான் சங்க இலக்கியச் சிறப்பும் ஐந்திணை மரபுச் சிறப்பும் பெயரளவில் புலவரால் மதிக்கப் படுகிறதாயினும் இன் றளவும் தமிழ்ப் புலவராலோ பிற நாட்டாராய்ச்சி யாளராலோ அவற்றின் இயல்புகள் உணரப்படவில்லை என்று கூறுவது மிகையாகாது. ஐந்திணை மரபின் அடிப்படையாவது, கலைஞன் இயற்கையையும் வாழ்வையும் ஆய்ந்துணர்ந்து அவற்றுக்குப் பிழைபடாமல் கலை தீட்டவேண்டும் என்பதாம். ஒருவன் கலைஞன் என்ற காரணத்துக்காகக் காலையில் பூக்கும் மலரை மாலையில் பூப்பதாக, இரவில் பூக்கும் மலரை பகலில் பூப்பதாகக் கூறலாமா? உழவன் வாழ்வைச் சித்தரிக்கும்போது பொன்னும் மணியும் உவமையிலும் வர்ணனையிலும் கலந்து மன்னன் வாழ்வில் கந்தைகூளங்களை உவமை கூறலாமா? கூறின் அதை அருவருப்பு (ரசாபாசம்) என்று கொள்ளத்தானே செய்வோம்! கலை காட்டுப்பூ அல்ல; பண்பட்ட அறிவிற் பூத்த தோட்டமலரேயாகும். தோட்டக்காரன் தோட்டத்தொழில் திறத்துக்கும் அறிவுக்கும் ஏற்ப. அவன் இடும் நல் உரத்துக்கேற்ப மலர்கள் மணமும் அழகும் புதுமையும் பெறும். அது போலவே இலக்கியங்களினிடையே சங்க இலக்கியக் கவிதை மலர் பண்பட்ட சங்கப் புலவர் அறிவுக்கு இலக்காய்த் திகழ்கின்றது. கிரேக்க இலக்கியத்தின் தனிச் சிறப்புக்களுள் ஒன்றாகிய முல்லைப் பாடல் முல்லைநில வாழ்க்கையின் முதற்பொருள் (இயற்கைச் சூழ்நிலை) கருப்பொருள் (இயற்கைவளம்) உரிப்பொருள் (வாழ்க்கைநிலை) ஆகியவை வழுவாது கூறும் புது இயல்புடையது. மேனாட்டிலக்கிய முழுதும் இது உயர்வாகப்பேணப் பட்டும் பின்பற்றப்பட்டு முள்ளது. இதன் தூய கலையுணர்வு கிரேக்க நாகரிகத்தின் தனிப் பெருஞ்சிறப்பைக் குறிப்பதாகவே கொள்ளப்படுகிறது. வெறும் புலமைப் பொறியாகக் கொள்ளப்படுவதில்லை. கிரேக்கரிடையே முல்லை நிலக் கவிஞர்கள் காட்டிய இதே உயர்நெறியைத் தமிழர் எல்லா நிலங்களின் வாழ்விலும் காட்டினர். முல்லை நிலக்கவிஞன் முல்லை நில உவமைகளையும் வாழ்க்கைப் பண்புகளையும் குறித்தது போலவே, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலிநிலக் கவிஞர்களும் அவ்வந் நிலங்களின் வாழ்க்கையைச் சித்தரித்தனர். இத் திணைமரபாகிய இயற்கைப் படப் பிடிப்புக்குத் தனித் தமிழ்ச் சங்க இலக்கியமே உலகின் தலையாய முன்மாதிரியாகும். கிரேக்க முல்லைத்திணை யிலக்கியத்தை 1000 ஆண்டுகட்குப் பின் கண்டு அதனால் மறுமலர்ச்சியுற்ற மேலையுலகு, தமிழரின் முழுத் திணை இலக்கியத்தின் உயர்வு காணில், இன்னும் பாரிய மறுமலர்ச்சிப் புரட்சிக்கு ஆளாகும் என்று நான் எண்ணுகிறேன். வரலாற்று வாய்மையும் விஞ்ஞான வாய்மையும் திணை மரபுச் சிறப்பு வருங்கால இலக்கியச் சுவை ஞர்கள் கண்டு கூறவேண்டிய ஒன்று. ஆனால் இன்றே காணக் கூடிய இருபண்புகள் வரலாற்று வாய்மையும் விஞ்ஞான வாய்மையும் ஆகும். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தமிழகம் இருந்த நிலைமையை அதுபடம் பிடித்துக் காட்டுகிறது. அத்துடனாக, இரண்டாயிர ஆண்டுகட்கு முற்பட்ட இந்தியாவின் படத்தைத் தேடுபவர்க்கு அதுவே வரலாற்றுக்குரிய இலக்கியமாயிருக்கிறது. ஏனெனில் வடமொழி இலக்கியத்தைப் போலவும் பிறமொழி இலக்கியங்களைப் போலவும், பிற்காலத்துத் தமிழிலக்கியத்தைப் போலவும் அது ஏதோ ஒரு நாட்டில் ஏதோ ஒரு மனிதனைப்பற்றி ஏதோ ஒரு புலவர் தன் கற்பனைத் திறனால் கண்ட காட்சியைக் கூறவில்லை. இதே தமிழ் நாட்டில் இதே இந்திய உபகண்டப்பகுதியில் ஆண்ட அரசர், சிற்றரசர், புரவலர், மக்கள், மக்கள் வாழ்க்கை ஆகியவைபற்றி, அதே தமிழ் நாட்டுப்புலவர் சிலர் கண்டதும் கேட்டதும் எண்ணியதுமே இவ்விலக்கியத்தில் குறிக்கப்படுகின்றன. நம்பிக்கையூட்டத்தக்க வரலாற்று வாய்மையுடைய இவ்விலக்கியம் இதிகாசம் புராணங்கள் அல்லது கற்பனைக் காவியங்கள் போலன்றித் தேசவரலாற்றுக்குப்பேருதவி புரியவல்லது.. அது மட்டுமா! பிறநாடுகளின் இலக்கியங்கள் பெரிதும் அரசனையும் பெருமக்களையும் சார்ந்தன. தமிழ்ச் சங்க இலக்கியமோ அரசரையும் பெருமக்களையும் மட்டுமன்றிப் பல திணை நிலமக்கள், பல வகுப்பினர் வாழ்க்கைகளையும் கருத்துக் களையும் சித்தரிப்பது. தற்கால இந்திய வாழ்க்கை வரலாற்றுக்கும் மொகஞ்சதரோ வாழ்க்கைக்கும் இடையே யுள்ள தேசிய இலக்கியப் பாலம் இச்சங்க இலக்கிமொன்றே. இந்திய மக்கள் வாழ்க்கை, மொழி வளர்ச்சி ஆகியவற்றினை ஆராய்பவர்க்கு இது இன்றியமையா இலக்கியம் மட்டமன்று. ஒரே இலக்கியமாக மிளிர்வதாகும். வரலாற்றைப்போலவே தற்கால விஞ்ஞான அறிவுக்குக் கூடச் சங்க இலக்கியம் மிகவும் பயன்படுவதென்பதை இன்றைய புலவருலகும் மாணவருலகும் கவனியாதிருக்கின்றது. நாட்டின் அக்கால வாழ்க்கை நிலையை அறிய விரும்புபவனுக்கு மட்டுமன்றி அக்காலத்தவர் அறிந்திருந்த நாட்டச் செடி கொடிகள், விலங்குகள், பறவைகள், பொருள்கள், ஆகிய வற்றையும் அவற்றின் பண்பு களையும் சங்க இலக்கிய மூலம் அறியலாம். இயற்கையிலில்லாத உயிர்கள் செடிவகைகளையும், பொருந்தாப் பழங்கதைப் பண்புகளையும் நாம்சங்க இலக்கியத்தில் பெரும்பாலும் காண்பதில்லை. யாரும் காணாத பாலும் நீரும் பிரிக்கும் அன்னம், யானைகளை அச்சுறுத்திக் கொல்லும் சிங்கம், வெயிலும் காற்றும் உண்ணும் உயிரினங்கள், யானை முகமுடைய சிங்கங்கள், சிங்கமுக மனிதர்கள், சிறகுடைய சிங்கங்கள் ஆகியவற்றை இங்கே காணமாட்டோம்.அத்துடன் காணும் செடிகளிலும் சங்கப் புலவர் பாடுங்கிளி, பச்சையிலை எனப்பொதுப் பண்புகள் கூறிஇடம் அடைப்பதில்லை.அவ்வவ் உயிர்கள் பொருள்களின் தனிச் சிறப்புப் பண்புகளையே குறித்தனர். பாலை நிலச் செடிகளின் இலையற்ற பால்செறிந்த தன்மை, நீர்வாழ் கொடி களின் இலைகளின் அடிப்புறக் கருமை, இலைகளின் வடிவங்கள், காயா மரம், பூவாச்செடி, பறவைகளின் சிறப்புப் பண்புகள் ஆகியவற்றையே அடைமொழியாகக் கூறிச் சங்கப் புலவர் அழகுக்கலையியலும் அறிவுத் திறத்தையும் பயனையும் தருவர். அவர்கள் கவிதை அறிவியல் திறம் குன்றாத காலத்தில் அறிவியலின் பயனாய் விளைந்தது. இங்கிலாந்தில் டெனிஸன் கவிதையில் காணும் அறிவியல் வாய்மையையும் ய்ரௌனிங் கவிதையில் காணும் வரலாற்று நோக்கையும் மெய்விளக்க (ஞாடைடிளடியீhல) வாய்மையையும் °காந்தினேவிய ரஷிய இலக்கியங் களில் காணும் வாழ்க்கை வாய்மையையும் ஃபிரஞ்சு, கிரேக்க இலக்கியங்களின் கட்டமைப்புக் கலையாண்மையையும் சங்க இலக்கியத்தில் ஒருங்கே காணலாம். தமிழர் நாடகப்பண்பும் உலகின் நாடக இலக்கியமும் சங்க இலக்கியத்தால் இந்திய நாகரிகத்துக்கும் சிறப்பாக வடமொழியிலக்கியத்துக்கும் பயன்படக் கூடிய மற்றொரு துறையுண்டு. வடமொழியிலக்கியத்தின் தலைசிறந்த துறைகள் இரண்டு. ஒன்று அணியியல், செய்யுளியல் நூல்கள். மற்றொன்று நாடக இலக்கியம். முன்னது சங்க காலத்துக்கு முற்பட்ட தொல்காப்பியத்தின் பொருளதிகாரப் பகுதியிலிருந்து தமிழகத்தில் வளர்ந்த 7ஆம்நூற்றாண்டில் தமிழில் விரிவடைத்து. அது போலவே வடமொழியிலும் இது விரிவு பெற்றது. தமிழில் 12ஆம் நூற்றாண்டுக்குப்பின் இது சிறப்புறவில்லை. ஆனால் வடமொழியில் 7 ஆம் நூற்றாண்டிலிருந்து 18 ஆம் நூற்றாண்டு வரை இது தொடர்ந்து வளர்ச்சி யடைந்தது. ஆயினும் இதற்குத் தோற்ற முதல்நிலமாய் விளங்கியதும் தமிழகமே; இதன் வளர்ச்சியில் தொடர்ந்து முதல் இடம் வகித்ததும் தமிழகமே யாகும். நாடகத் துறையோவெனில் தமிழில் இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் வளர்ச்சியடையாமல் வடமொழியில் பெருக வளர்ச்சி யடைந்தது. இன்று உலகில் ஆங்கில நாடு, °காந்தினேவியா, ஃபிரான்சு, கிரேக்கம் ஆகிய நாடுகளின் நாடகங்களுடன் இணையான சிறப்புடையதாக வடமொழி நாடக இலக்கியம் விளங்குகிறது இவற்றுள் பழமை மிக்க நாடகப் பண்புடையவை கிரேக்க நாடகமும் வடமொழி நாடகமுமே. தமிழில் நாடகங்களில்லாமலிருப்பதால் வடமொழி நாடகத்தின் சிறப்புக்கும் தமிழுக்கும் தொடர்பு இருக்க முடியாதென்றே எவரும் கருதக்கூடும். ஆனால் இன்று உலக மக்கள் இலக்கியம் என்று கூறுவதனை ‘இயல்’ என்றஒரு துறையாக்கி, உலகத்தார் இலக்கியம் என்று கருதாது தனித் துறைக் கலையாகக் கொண்ட இசையை மற்றொரு துறை யாக்கி, நாடகத்தை இவற்றுடனொத்த மூன்றாம் துறையாகக் கொண்டு முத்தமிழ்த் துறை வகுத்த மக்கள் உலகில் தமிழரன்றி வேறுயாரும் இல்லை. இம்முத்தமிழிலக்கிய இலக்கணப்பகுப்பின் பெயரை மட்டுமே இடைக்கால பிற் காலங்களில் கேட்கிறோம். சங்க காலத்தில் இசை நாடகம் ஆகியவற்றின் சில சின்னங்களையும் சிலப்பதிகாரம் எனும் நாடக நூற் பகுதி ஒன்றனையுமே காண்கிறோம். எனவே இசை போலவே நாடகம் தழைத்திருந்த காலம் சங்க காலத்துக்கு முற்பட்டிருந்த காலம் என்பதில் ஐயமில்லை. இவ்வளவு தொல்பழங்காலத்திய உலக நாடக வழக்கை அறிய இன்று நமக்கு உதவியாயிருப்பது சங்க காலச் சிலப்பதிகாரமம் கிரேக்க நாடகமும் மட்டுமே, தமிழ் நாடக முறையையும் கிரேக்க நாடக முறையையும் ஒப்பிடுவோருக்கு அவற்றில் மிக நெருங்கிய ஒற்றுமைகள் பல இருப்பது தெரியவரும். தமிழின் முத்தமிழ்க்கால அதாவது சங்கத்துக்கு முந்தியகால நாடக இலக்கியத்தின் எஞ்சிய மிச்சம் சிலப்பதிகாரத்திலேயே கூறப்படும் சாக்கியார் கூத்து என்ற நாடகம். சிலப்பதிகாரத்தில் சேரமன்னன் முன் நடித்ததாகக் கூறப்படும் அஃதே பறவூர்க் சாக்கையர் குடியினரால் இன் றளவும் மலையாளத்தில் ஆடப்பட்டு வருகிறது. மலையாள நாட்டின் புகழ்மிக்க கண்ணனாட்டம், இராமனாட்டம், ஒட்டந்துள்ளல் முதலிய நாடகத் துறைகள் இதன் கிளைகளும் பிற்கால வளர்ச்சிகளுமேயாகும். இவற்றுள் கண்ணனாட்டம் வடமொழியில் எழுதப்பட்டு நம்பூதிரிகளால் வளர்க்கப்பட்டது. வடமொழி நாடகங்கள் வடநாட்டிலும் மிகுதியாகத் தென்னாட்டில் புதிது புதிதாக வளர்ச்சி பெற்றதை நோக்க இரண்டும் தொடர்புடையவை என்று கூறவேண்டியுள்ளது. வடமொழி நாடகத்துக்குக் கிரேக்க நாடகப்பண்பே முன் மாதிரி என்று இன்று பலர் கருதுகின்றனர். ஆயினும் “உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்” என்ற நாடக வழக்கம், கிட்டத்தட்ட கிரேக்க நாடக மரபுக் கொத்த நாடக மரபும் தமிழ் நாடகத்தின் பண்பில் காணப்படுவதை நோக்க, வடமொழி நாடகம் தமிழ் நாடகமாகிய நிலத்தில் முளைத்து மலையாள நாட்டு நாடக மரபாகியகொடியில் மலர்ந்த பூங்கொத்தே என்று நினைக்க இடமுண்டு. ஐங்குறுநூறு, குறுந்தொகை முதலிய சிறு தொகைப் பாடல்களிலும் பத்துப்பாட்டு, அகநானூறு முதலிய நெடுந் தொகைகளிலும் உள்ள பல பாடல்களும் அகப்புறத்துறைப் பாடல்களும், பிற்காலத் துறைப்பாடல்களாகிய தூது, உலா முதலிய பிரபந்தங்களும் உண்மையில் சிலப்பதிகார மரபில் எழுந்த ஓரங்க, ஒரு நடிகர் நாடகங்களே என்னலாம். இவை டெனிஸனின் யுலிஸி°போன்ற தனியுரை நாடகங்கள் (ஆடிnடிடடிபரநள) என்பதை ஒப்புமையால் காணலாம். இத்தகைய தனியுரைநாடகங்களிலிருந்தே பிற்கால நாடகம் தோன்றியது என்பதனாலேயே வடமொழி நாடகத்தில் இறுதிவரை சூத்திரதாரர், பிர°தாவனா முதலிய ‘கதைகூறும்’பகுதிகள்- தொடர்ந்திருந்தன. இவை தமிழின் உரைப்பாட்டு மடையை நினைவூட்டுவன. சங்ககால இலக்கிய நாகரிகம் சங்க இலக்கியங்கண்ட தமிழகம் இன்றைய தமிழகத் தினும் மிக உயர்ந்த நாகரிகமுடையது என்பதை அதில் சிறிது பயின்ற மாணவர் கூடக் காணக்கூடும். தமிழர் அன்று வெறும் உழவர்களும் நாட்டுப் புறத்தாரும் அல்லர். வாணிகமும் பல் தொழில் வளமும் வாய்ந்த நாடு நகர வாழ்வு உடையவர்கள். அவர்கள் நாகரிகம் நாட்டுப்புறச் சார்பானதன்று. சிறப்பாக நகரச் சார்பானது என்பதை நாகரிகம் என்ற சொல்லே காட்டும். அவர்கள் இசைக் கருவிகள் இன்றைய தமிழர் இசைக் கருவிகளையும் பிறநாட்டினர் இசைக் கருவிகளையும் விடப் பல. அவர்கள் உடுத்த உடைவகைகள், அவர்கள் பெண்டிர் ஒப்பனைக்குப் பயன் படுத்திய வகைவகை நறுஞ்சுண்ணங்கள், நலம்புனை வண்ணங்கள் ஆகியவையும் இக்கால மேனாட்டு நகர மக்களையும் நாண வைக்கு மளவு பலப்பல. பொருளியல் வாழ்விலும் அரசியலிலும் கலை வாழ்விலும் தமிழன் இன்றிருப்பதுபோல, இடைக் காலத்தி லிருந்தது போலக் கூட, அடிமைத்தனத்தில் தோய்ந்திருக்க வில்லை. இன்று தமிழகம் இந்திய உபகண்டத்திலேயே பிற்பட்டு இருக்கிறது. இடைக்காலத்தில், கம்பர் காலத்தில், அப்பர் காலத்தில் தமிழன் அரசியலில் முற்பட்டிருந்தான். ஆனால் கலையில், சமயத்துறையில் சமூகத்தில் அடிமைப் பண்புக்கு இடங்கொடுத்திருந்தான். சங்ககாலத்தில் எல்லாத் துறைகளிலும் தமிழன் முற்பட்டேயிருந்தான். தமிழக வேளிர்கள் பிறநாட்டினருக்கு மட்டுமின்றித் தம் நாட்டரசர்க்குக் கூட வணங்க மறுத்தார்கள். பாரி, அதியமான், ஓரி முதலியோர் சேர சோழ பாண்டியருடன் போட்டியிட்டனர். புலவர்கள் அரசுக் கரசு நட்பாடித் தனி உயர் வாழ்வு வாழ்ந்தனர். இலக்கியம் வாழ்விடையே மலர்ந்தது நாட்டு வாழ்வில் வளர்ந்தது. அதுவேறு எந்த இலக்கியத்துக்கும் நாகரிகத்துக்கும் தலைவணங்கவில்லை. பொருளியல் துறையிலோ தமிழன் செல்வம் எங்கும் போகவில்லை. அவன் தொழில், வாணிகவளங்களால் உலகின் செல்வமுழுவதும், உரோமாபுரிப் பொற்காசுகளாக, கிரேக்கர் வெள்ளி பொன் கோப்பைகளாக, மதுபுட்டிகளாக, சோனகர் (அராபிய) குதிரைகளாக, துருக்கிய யவனர் மணப் பொருள் களாக, இமயவர் வெண்கவரிகளாக, ஈழத்தார் மாணிக்கங்களாக அவனிடம் வந்து குவிந்தன. கல்வி கல்வியில், இலக்கியத்தில் சங்ககாலத் தமிழன் நிலை இன்றைய இந்தியாவையும் இடைக்கால இந்தியாவையும் மட்டுமின்றி இன்றைய மேனாடுகளையும் தலைகுனிய வைப்பதாகும். அறிவியல் நூல்களை மேனாடுகளிலிருந்து மொழி பெயர்க்க முற்படும் இன்றைய இந்தியாவின் நிலையில் ஒரு நூற்றாண்டில் ஏற்படும் நல்லிலக்கியத்தையும் புலவர் தொகையையும் பெண் புலவர் தொகையையும் அளவுகோலாக வைத்துப் பாருங்கள். கம்பர், அப்பர் காலத்துடன் இதனை ஒப்பிட்டால் இலக்கிய அளவு, புலவர் தொகை, பெண் புலவர் தொகை அந்நாள் மிகுதி என்பது காணலாம். கம்பராமாயணம் போன்ற, தேவாரம் போன்ற கவிதை நூல்கள் அன்று புலவர் நூல்களாய் இயங்கவில்லை. சமயப் பிரசார வெளியீடுகளாகவே இயங்கின. அதுவும் அச்சில்லாத காலத்தில் 1000 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் கல்வி நிலை இது. இன்னும் 1000 ஆண்டுகட்கு முற்பட்ட சங்க காலத்தை இவ்விரண்டு காலத்துடனும் ஒப்பிடுங்கள். இரண்டு நூற்றாண்டுகளுக்குள் ஏற்பட்ட இலக்கியத்தில் சங்கம் இருந்தாய்ந்து பொறுக்கியெடுத்த சில புலவர்களின் சில நூல்களின் சில பகுதிகளே தொகுத்து வைக்கப்பட்டன. அவற்றின் ஒரு பகுதியே இன்று மீந்துள்ளது. அதில் நமக்கு 500 க்கு மேற்பட்ட புலவர்களின் பாடல்கள் உள்ளன. அவையும் எத்தகைய உயரிய பாடல்கள்! எது மேல் எது கீழ் என்று கூறமுடியாதபடி எல்லாம் ஒத்த மணிகளாகப் பொறுக்கியெடுக்கப்பட்ட திறன்தான் என்னே! இரண்டு நூற்றாண்டு அதாவது நாலைந்து தலைமறைக்குள் பொறுக்கி யெடுத்த புலவர்களில் எஞ்சியவர் தொகை ஐந்நூறு, அதில் எல்லா மரபினர்களும், எல்லாத் தொழிலினரும், எல்லாத் தமிழக மாவட்டத்தினரும் உள்ளனர்! பெண்கள் முப்பதுக்கு மேற்பட்டவர். தலைசிறந்த தமிழ்ப் பெரும் புலவர் ஒளவையார் முதலாக அவர் பாடலுக்கு ஒப்பாகப் பாடியவரே அத்தனை பேரும். அதிலும் எத்தனை மரபினர் - எயினர், பேய்மகள் முதலியோர் உள்ளனர். இத்தனை பெண் புலவர் இத்தனை சிறந்த புலமையுடையவர் உலகின் வேறு எந்த மொழி யிலக்கியத்திலும் காணமுடியாது. தமிழகத்திலோ இத்தனை யும் இரண்டுநூற்றாண்டுக்குள்! தமிழகத்தின் கல்விநிலை அன்றிருந்தவாறு என்னே! புலவர்களின் உயர்வு தாழ்வு காட்ட அக்காலத்தில் வேறுவழியில்லை போலும்! பெரும் புலவர் என்று காட்ட அவர்கள் பாடல் தொகைதான் பத்து, நூற்றுக் கணக்காகத் தரப்பட்டன. ஷேக்°பியர் கால இங்கிலாந்தில் “பறக்கும் பறவை எதனிடையேயும் ஒரு பாட்டுப் பாடாப் பறவை கிடையாது” என்று கூறப்படுவதுண்டு, தமிழரிடை அன்று புலமை பெற்றவரெல்லாம் நக்கீரர் கபிலர் பரணருடனொப்ப ஒரு பாட்டுப் பாடினர் போலும்! சங்கமும் சங்க வாழ்வும் சங்க இலக்கியம் என்று கூறும்போது நாம் தனித் தமிழ் இலக்கியத்தின் பெருமையில் இறும்பூதெய்துகிறோம். ஆனால் ‘சங்கம்’ என்ற சொல்லே வடசொல் எனச்சிலர் நையாண்டி செய்வதுமுண்டு. அத எம் மொழியாயினும் ஆகுக. இந்தியா என்றபெயர் வெளியாரால் கொடுக்கப்பட்ட காரணத்தினால் இந்தியா வெளியார் நாடாய் விடாது. சங்கம் தமிழ்ச்சொல் அன்று என்பதற்கும் சரியான சான்று எதுவும் இல்லை. வடமொழியில் அச்சொல் உண்டாயினும் வேறு எந்த ஆரியமொழியிலும் அது இல்லை. அகவே அது ஆரியத் தொடர்பற்ற இந்தியச் சொல், அதாவது தமிழ்ச் சொல் என்பதில் ஐயமில்லை. மற்றும் கூடல், மன்றம், பட்டி, கழகம் முதலிய பிறசொற்களும் உள்ளன. வடமொழியாளர் சங்கம் என்ற சொல்லை ஆண்டு கொண்டதுடன் கழகம் என்பதனைப் பிற்காலத்தில் கடிகா என்று வழங்கினர். இவை வடவர் சொற்களென மயங்கலாமாயினும் வடமொழி வழக்குகள் பிற்பட்டவை என்பது விளக்கம் தரும். இன்னும் தெளிவு வேண்டுமானால் பட்டி என்ற சொல்லிலிருந்தே தமிழில் பட்டோலை, பட்டாங்கு, பட்டகசாலை என்ற சொற்கள் மட்டமன்றி இன்று வடமொழியிலும் பிறமொழியிலும் படித்த புலவர் என்ற பொருளில் வழங்கும் பட்டர் என்ற சொல்லும் தோன்றியுள்ளமை காணலாம். சொல்லாராய்ச்சியை விடுத்துச் சொற் பொருளாராய்ச் சிக்குச் சென்றால் சங்கமும் சங்கவாழ்வும் தமிழர் பண்பாட்டின் அடிப்படை என்பதை இன்றும் காணத்தக்க வகைகள் மிகப்பல. திட்டமிட்ட வாழ்க்கையையும் நகர் நாடுகளையும் அமைப்பது மொகஞ்சதரோ கால முதல் இன்று வரை இந்தியாவின் பொதுப் பண்பாடும் தமிழர் சிறப்புப் பண்பாடும் ஆகும். கப்பலுக்கும் படகுக்கும் மட்டு மன்றி ஆறுகளிலும் குளங்களிலும் குளிப்பதற்குத் துறை களும் நடுவே கோவில் (கோவின் இல்லம் அதாவது அரண் மனை) சுற்றிலும் மாடத் தெருக்கள் என்ற முறையில் நகர் அமைப்பது ஆகியபண்புகளை மதுரை போன்ற பழந்தமிழர் நகர்களில் காணலாம். இதுபோலவே மொழியையும் கலையையும திட்டமிட்டு வளர்க்கத் தமிழர்கண்ட சாதனமே சங்கம். மொழியின் சொல் தொகுதியில் அவர்கள் ஏற்படுத்திய சீர்திருத்தமே பிற்கால உரையாசிரியர்களால் ‘கடிசொற்கள்’ என வரையறையிடப்பட்டன. இலக்கியத்தில் அவர்கள் ஏற்கத்தக்க உயர் இலக்கியங்களுக்குத் தம் பொறிப்பிட்டனர். அங்ஙனம் பொறிப்பிட்ட நூல் அல்லது நூற்பகுதித் தொகுதியே சங்கத் தொகை நூல்கள் ஆகும். தமிழர் சங்க வாழ்வு பற்றிச் சிலர் ஐயுறுகின்றனர். சங்கத் தொகை நூல்கள் அதற்குப் போதிய சான்றாயினும் சங்கத்தைப் பற்றிய குறிப்புப் பிற்கால நூல்களில் மட்டுமே வருகின்ற தென்று குறைகாண்கின்றனர். புதிதாக வரும புதுமையையும் பழங்கதையாகப் போன செய்தியையுமே மக்கள் குறிப்பது இயல்பு. வாழ்க்கையின் இன்றியமையாச் செய்திகளை, குறிப்பிடவேண்டிய தேவையிருந்தாலன்றி யாரும் குறிப்பிடார். ஆனால் சங்க நூல்களிலும் சங்கமரபு பொதுவாழ்வில் கூட இருந்திருப்பது குறிப்பிடப்படாமலில்லை. ‘தந்தை மகற் காற்று நன்றி அவையத்து முந்தியிருப்பச்செயல்’ என்ற குறலில் கூறிய அவை கல்வியுடையார் மதிப்பை அளந்து ஏற்கும் அவை. பொதுவாக அவையினையுடைய வாழ்வில் தலையான அவை பின்னும் சிறப்புற்றிருத்தல் வேண்டும். மேலும் இன்று காறும் சங்க மரபின் பின்னெச்சமாக நூல் அரங்கேற்றும் பண்பு தமிழரிடையே மட்டும் சிறப்புறுகிறது. நூல் மட்டுமன்றி, இசையும் நடனமும் அறிமகப்படுத்தி விளம்பரப்படுத்தப் படும் போதும் அரங்கேற்றம் என்றே கூறுகிறோம். சங்கமும் அரங்கமும் அருகியபின் சாத்துக் கவிகள் வழங்கலாயின. செந்தமிழ் மரபு சங்கத் தமிழ் மரபின் இன்னொரு பயன் ‘செந்தமிழ்’ தோற்றுவிக்கப்பட்டதாகும். சங்க காலத்தில் செந்தமிழே சிறப்பாகத்தமிழ் என்றும் பிற தமிழ் திசைசெம்மொழி(சுநபiடியேட டுயபேரயபநள) என்றும் வழங்கப்பட்டன. செந்தமிழல்லாத மொழி பிற்காலத்தில் கொடுந்தமிழ் என்று என்று வழங்கப்பட்டது. சங்க வாழ்வால் திருத்தம் பெற்ற செந்தமிழைப் பின்பற்றியே வடநாட்டார் சம்°க்ருதம் (திருத்தப்பட்ட மொழி) அமைத்தனர். செந்தமிழின் சொற்களே கடிசொற்கள் என ஏற்கப்பட்டன. தொல்காப்பியர் நீக்கிய ‘கடிசொற்களல்லாத வற்றை’ சங்க இலக்கியமும் வழங்கவில்லை. செந்தமிழ் தமிழ்த் தலைநகரான மதுரையில் மதிக்கப்படும் மதுரைத் தமிழ், அதன் மதிப்பு மூலம் தமிழ் நாடெங்கும் அதுவே இலக்கிய வழக்கு மொழியாயிற்று. சஙகப் புலவரிடை தமிழ் நாடெங்கணுமிருந்து புலவர் வந்து பாடினராயினும் பாடிய வழக்குமொழி இதே செந்தமிழ் தான். இச்செந்தமிழிலேயே திசைமொழியும் திசை வழங்கும் சிறிது கலந்த காரணத்தால் தான் சிலப்பதிகாரம், மணிமேகலை சங்க இலக்கியத்தில் சேர்க்கப்படாதிருக்க வேண்டும் என்னலாம். ஏனெனில் சிலப்பதிகாரம் வழங்கிய மலையாள நாட்டிலேயே எழுந்த பதிற்றுப் பத்து ஏற்கப்பட்டுள்ளது. சங்க இலக்கித்தின் தூய தமிழ் நடை இன்றைய தமிழ் வளக்குறைவால் கடமையாய் விட்டிருத்தல் இயல் பாயினும். சிலப்பதிகாரம், மணிமேகலை பிற சங்ககால நூல்கள் அவற்றினும் எளிமையுடையவையா யிருப்பதும்; தொல்காப்பியம் இலக்கண நூலேயாயினும், சங்கநூல்களினும் பழமையுடைய தாயினும், அவற்றினும் எளிய நடையுடையதாயிருப்பதும் அவை செந்தமிழ் நடைமுழுவதும் கட்டுப்படுத்தப்படாத நிலையைக் குறிப்பதாகும் என்னலாம். தமிழ்ப் புலவர் தமிழ் நாடெங்கணும் எல்லா வகுப் பிலும் இருந்தாலும் பாண்டியரன்றிச் சேரரும் சோழரும் வேளிரும் செந்தமிழ்ப் புலவரை ஆதரித்தாலும் சங்கம் அமைத்துத் தமிழராட்சி புரிந்தது மதுரையில் மட்டும் தான். இக்காரணத்தாலேயே பாண்டியநாடு தமிழ்நாடு என்றும் செந்தமிழ் நாடு என்றும் தனிப்படச் சிறப்பிக்கப்பட்டது. சேர நாட்டவரும் சோழநாட்டவரும் தம் நாட்டினும் பாண்டிய நாட்டைச் சிறப்பித்துக் கூறியது சங்க வாழ்வின் பெருமையையும் செந்தமிழ்த் தலைமை நிலையையும் எண்ணியே யாகும். சங்க காலத் தமிழகப் பரப்பு சங்க காலத்தில் செந்தமிழ் இலக்கிய வழக்குள்ள தமிழகம் இன்றைய தமிழகத்தைவிட நாகரிகத்தில் மட்டுமின்றி எல்லை யிலும் விரிவுடையது. இன்று வடக்கே தமிழக எல்லையாயுள்ள வேங்கடம் அன்று செந்தமிழ் எல்லையாகவே இருந்தது. அதற்கு வடக்கிலுள்ள மன்னர் சிலரும் தமிழகப் புலவரால் பாடப் பட்டனர். மேற்கே சேரநாடு சிறப்பாகச் செந்தமிழ் நூல்கள் தோற்றுவித்துப் புலவர்களைப் பாராட்டிய நாடாயிருந்தது. மலையாள நாட்டில் சேரநாட்டின தென் எல்லையாகிய கொல்லத்திலிருந்து வடக்கே இன்றைய மலையாள எல்லையைத் தாண்டித் தென்கன்னடக் கோட்டத்திலும் செந்தமிழ் வழக்கு நிலவியிருந்தது. தமிழ் வேளிருள் ஒருவனான நன்னன் ஆண்ட பகுதி இதுவே. தொல்காப்பிய காலத்தமிழக எல்லை இன்னும் விரிந் திருந்த தென்பதில் ஐயமில்லை. இன்று கடலிருக்கும் பகுதி களிலிருந்த தமிழகம் பற்றிச் சங்க நூற்பாடல்களிலேயே செய்திகள் காணப்படுகின்றன. அம்மறைந்த தமிழகத்திலுள்ள குமரியாறு தொல்காப்பியத் தென் எல்லையாகக் குறிக்கப்படுகிறது. தொல்காப்பியர் காலத்திலே குமரியாற்றிற்குத் தெற்கிலுள்ள பகுதிகள் செந்தமிழ் நிலமல்ல எனக் கடியப்பட்டிருத்தல் வேண்டும். ஏனெனில் அதற்கும் தெற்கிலுள்ள பஃறுளியாற்றைப் பாண்டியன் ஆண்டிருந்ததையும் அதன் கரையிலேயே பாண்டியன் தலைநகர் அமைந்திருந்ததையும் புறநானூற்றுக் குறிப்புகளும் உரைக் குறிப்புகளும் காட்டும். தெற்கில் எல்லை தமிழக எல்லையாகக் கூறப்படாமல் செந்தமிழக எல்லையாகக் கூறப்பட்டதை நோக்க. வடக்கே திருப்பதி எல்லையும் தமிழக எல்லையன்று. செந்தமிழக எல்லையென்றே கூறல் தகும். சங்ககாலத்துக்கு முன்னிருந்த தமிழர் முத்தமிழ் நானிலத்தைச் செந்தமிழ் நிலமாகக் குறுக்கிக் கொண்டே வந்தனரென்றும், சங்ககாலச் செந்தமிழ் நிலமாகிய பகுதியும் பிற்படக் குறைந்து, தென் கன்னடக்கோட்டம் கன்னட நாட்டிற்கும், மலையாளக் கரையின் நடுப்பகுதியும் வட பகுதியும் மலையாள நாட்டிற்கும் உரிமையாயின என்றும் காணலாம். நன்னூலார் தமிழகத்தின் மேற்கெல்லை கடலெல்லை என்னாது குடகுமலை என்றது இதனாலேயே. இடைக்கால பிற்காலங்களில் செந்தமிழ் எல்லை பின்னும் குறுக்கப்பட்டுச் செந்தமிழ்ப் பாண்டியின் தென் பகுதியும் சோழவள நாட்டின் பெரும் பகுதியும் கொடுந்தமிழ் நாடுகள் எனக்கருதப்படத் தொடங்கின. பிற்காலப் பாண்டியர், திருவாங்கூர் அரசர் தமிழ வெற்றிகளே தமிழகத்தை ஒன்று படுத்தித் தமிழக எல்லையைத் திருவேங்கடத் துடனாவது நிறுத்தி வைத்தன. முடிவுரை இங்ஙனம் உலகநாடக இலக்கியத்தின் வேர் முதலைக் காட்டத் தக்கவையாயும், இன்றும் உலக இலக்கியத்துக்கு வழிகாட்டும் உயர்தனிப் பண்பாட்டையுடையவையாயும் இந்திய மாநிலத்தின் முதற் பேரிலக்கியமாகவும், தனித்தியங்கவல்ல தனித் தமிழ்ச் சோலையாகவும், அளவில் பலமொழிகளின் முழு இலக்கியத்துடனும் ஒப்பிடக்கூடியவையாகவும் தன்மையில் பிந்திய தமிழிலக்கியத்தையும் பிறமொழி இலக்கியங்கள் யாவற்றையும் விஞ்சியவையாகவும் உள்ளசங்க நூல்கள் தமிழகத்தின் அறியாமை என்னும் மண்ணுட் கிடக்கும் ஒரு புதையலே என்பதில் ஐயமில்லை. அதன் மாண்பைத் தமிழரே அறியாது விட்டுவைத்துள்ளனர். அவர்கள் புறக்கணிப்பின் பயனாக உலகினர்கண்களுக்கும் அது இன்னும் எட்டாமலே இருந்து வருகிறது. ஏழை வீட்டு வைரம் எங்ஙனம் மதிப்பிடப்பட முடியும்? சங்க இலக்கியமும் அதன் தாய் மொழியாகிய தமிழும் உண்மையில் உலகின் உயர் தனிச்செம்மொழிகளிலும் அவற்றின் இலக்கியங்களுள்ளும் இடம் பெறத் தக்கவை. இடம்பெற வேண்டும். இந்திய நாகரிகம் சமயச் சார்பற்றது. வகுப்புச் சார்பற்றது. அறிவை அடிப்படையாகக் கொண்டது. தொழில் வளமும் வாணிக வளமும் நிரம்பிய நகர வாழ்க்கை யடிப்படையாகக் கொண்டது. கடல் கடந்த பேரரசும் குடியேற்றமும் வாணிகமும் உடையது. இக்கருத்துக்கள் இன்று உணரப்படாமல் இந்தியா கிராம வாழ்வுக்கும் எளிய வாழ்க்கைக்கும் பேர் போனது; ஆன்மிகப் பெருமையே யுடையது; பழமை பேணி வருவது என்ற தவறான கருத்துக்கள் பரவியுள்ளதற்கு இருண்ட இடைக்கால இலக்கியமாகிய வடமொழி இலக்கியமே இந்தியாவின் உயர் தனி இலக்கிய மென்று கொண்டதே காரணமாகும். தமிழர் வாழ, இந்தியா பயன் பெற, உலகம் புது ஒளி பெறச் சங்க இலக்கிய அறிவு ஓங்குமாக. சிலம்பு வழங்கும் செல்வம் முதற் பதிப்பு - 1958 இந்நூல் 2001இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. சிலம்பு வழங்கும் செல்வம் தமிழர் வாழ்வு, ஒரு பரந்தகன்ற விளைநிலம்; அதற்கு வளந்தரும் வானவெளி தமிழ்ப் பண்பு. அம் மழைச்செல்வத்தைத் தேங்கிக் கொண்டிருக்கும் வானம் பார்த்த ஏரி தமிழிலக்கியம். அதன் பரப்பு கடல் போன்றது. ஆயினும், அதன் கரையோரப் பகுதிகள் ஆழம் குறைந்தவை. வறட்சிக் காலத்தில் அவை காடுமேடாகவும், முட்புதர்களாகவும், மணல் வெளியாகவும் காட்சியளிக்கின்றன. சற்று ஆழமிக்க பகுதிகள்கூடச் சேறும் சகதியுமாகச் சில வேளைகளில் இயல்கின்றன. ஆனால், எக்காலத்திலும் வற்றாத தண்ணறுஞ் சுனையாய் இலங்கும் ஆழ்தடம் ஒன்று ஏரியின் ஒருகோடியி லிருக்கின்றது. அதுவே, தமிழ்ப் பண்பின் வளம் குன்றாச் சேமநிதியாகிய சங்க இலக்கியம். சங்க இலக்கியச் சுனையருகே, அச்சுனைக்கே உயிர் தருபவை போன்ற மூன்று கேணிகள் உள்ளன. அவை, நிலத்தின் அகடு நீண்டு ஆழ்ந்து செல்பவை. அத்துடன் அவை பண்பின் சேமவைப்புகள் மட்டுமல்ல; பண்பின் ஊற்றுகள். அவை வற்றாத ஊற்றுகள் மட்டுமல்ல; இறைக்க இறைக்க ஊறும் ஊற்றுகள்கூட அல்ல: இறைக்காமலே நீரை ஓயாது கொப்புளிக்கும் உயிர்த் துடிப்புடைய பொங்கல் ஊற்றுகள் அவை. தமிழர் பொங்கல் வாழ்வின் வாடாத பழம், புதுச் செல்வங்களான தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகிய பொன்னேடுகளின் உருவில் அப்பொங்கல் ஊற்றுகள் வருங்கால வாழ்வுக்கான வளமூட்டிவருகின்றன. வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்று பழைய ஏடுகள்தாம் இவை மூன்றும்! ஆனால், மூன்றும் புதுமைக்குப் புதுமை அளித்துவருகின்றன, வருவன. தமிழர் மறுமலர்ச்சியின் இதழ்கள் அவிழுந்தோறும், உலகில், புதுமலர்ச்சி முளைத்தெழுந்தோறும் - இம் மூன்று ஏடுகளும், என்றும் உலகின் புதுச்செல்வங்களாய் நின்று வளரும் தன்மையவை. தொல்காப்பியர் குறித்த ‘வடு நீங்கு சிறப்பு’ உடைய ‘கொடி நிலை, கந்தழி, வள்ளி’ என்ற முப்பொருள்கள் போல, ஞாயிறு, திங்கள், அனல் ஆகிய மூன்று ஒளி விளக்கங்கள் போல, அவை புத்துலகில் ஒளி வீசத்தக்கவை. தமிழ நாகரிகத்தின் ஆழ, அகல, உயரங்களை நமக்குக் காட்டவல்ல ஏடு தொல்காப்பியம். அவர்கள் பண்பின் நுட்ப திட்பங்களையும், அதன் அடிப்படை உயிர்த்துடிப்பையும் காட்டவல்லது திருக்குறள். இவற்றுடன் ஒப்பாக, தமிழனின் மாண்ட மாபெரும் பண்புடைய இலக்கிய வளத்தையும் கலைப் பொலிவையும் சுட்டிக் காட்டவல்ல அருங்கலை விளக்கம் சிலப்பதிகாரம். இச் சிலப்பதிகாரம் நமக்குக் கிட்டாது போயிருந்தால், மற்றத் தமிழ் இலக்கியப் பரப்பின் உதவியாலோ, தொல்காப்பியம், திருக்குறள் ஆகிய நூல்களாலேகூட, நாம் பண்டைத் தமிழர் இலக்கியத்தின் அரும்பெரு மாண்பையும் அகல்விரிவையும் அவ்வளவாக மதிப்பிட்டு அறிய முடியாதவர்களாவோம். உரைகள் அல்ல உறைகள் சங்க காலத்துக்குப் பிற்பட்டு, தமிழர் அடிமை நாள்களிலே, இந்த மூன்று தமிழ்க் கருவூலங்களையும் தமிழர் எவ்வாறு பேணினர் என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்த்தல் வேண்டும். அவ் வொப்பீடு சிலப்பதிகாரத்தின் அருமையை ஓரளவு எடுத்துக்காட்டுவதாக அமையும். தொல்காப்பியத்தைத் தமிழர் முற்றிலும் மறந்த நாள் கிடையாது எனலாம். ஆனால், அது மிகத் தொல்பழங்காலத் திலேயே புலவர்களின் உள்ளத்தில் சிறைப்பட்டுவிட்டது. தேவாரக் காலத்திலேயே (கி.பி.7ஆம் நூற்றாண்டில்) அது புது எழுத்தாளர்களைப் பயமுறுத்துவதற்குரிய ஒரு பூச்சாண்டியாகி விட்டது. அதன் பின்னர்ப் புலவர் படிப்பதற்குரிய புதிய வழி நூல்கள் ஏற்பட்டன. தொல்காப்பியம் புலவர்களால்கூட மிகுதி தீண்டப்படாத பூசைப் பெட்டகம் ஆயிற்று. அதற்கு உரைகள் எழுந்தன. பூசைப் பெட்டகத்துக்கு அவை பூமாலைகள் இட்டன. புரிந்த அளவில் அவை புகழ் பாடின. புரியாத இடத்தில் பூசை செய்தன. திருக்குறளின் இடைக்காலப் புகழ் வாழ்வு, தொல்காப்பியத்தைவிடச் சிறிது ‘தேவலை’ எனலாம். ஏனென்றால், அஃது இலக்கியத்தின் உயிர்நாடியாய்ப் ‘பாடும் புலவர்’ நாவிலெல்லாம் ஊடாடிற்று. ஆனால், பொது மக்கள் வாழ்விலிருந்து அது தொலைவிலேயே நின்றது. அத்துடன் காலத்துக்கேற்ற புதுப் புது உரைகள், அதற்குப் புதுப் புது ‘உறைகளாகவே’ பயன்பட்டன. அவை, அதன் ஒளி உருவை மறைத்தது மட்டுமல்ல; காலத்துக்கேற்றபடி உருவும் பண்பும் திரித்து, அதற்கு வேறு ஒரு ‘புகை உரு’வையே உண்டு பண்ணின. இவ்வகையில் தொல்காப்பியத்தைக் காட்டிலும் திருக்குறள் நூலும் புகழும் நன்னிலையில் நம்மை வந்து அடைந்தாலும், அதன் பண்பு அவ்வாறு நம்மை வந்து அடையவில்லை. உரைகளால் முழுதும் விளக்கப்படாத தொல்காப்பியத்தைவிட, ‘உறை’களாகிய ‘உரை’ பெரிதும் மறைக்கப்பட்ட திருக்குறளின் இடைக்காலப் புகழ் வாழ்வு அவலமுடையதே ஆகும். மறைவுற்ற முழுமதி. சிலப்பதிகாரத்தின் இடைக்கால வாழ்வு மற்ற ஈர் ஏடுகளின் வாழ்வையும் போன்றதல்ல. அந்த ஏடு எங்கேயோ கிடந்தது-டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரவர்களின் திருக்கரங்களுக்காக அது ஏங்கித் தவம் கிடந்தது. அங்ஙனம் கிடக்கும் நாளிலும், பொது மக்கள், அதன் கதையை நாடக மாடியதுண்டு. தமிழ் நாட்டாரும் வெளிநாட்டாரும்கூட ஆங்காங்கே கண்ணகி கோவிலைச் சுற்றி வந்து அதன் விவரம் அறியாமலே வணங்கியதுண்டு. ஆயினும், சிலப்பதிகாரம் பொதுமக்களுக்குத் தெரியாத புதை பொருளாகவே டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் வெளிப்படுத்தும் வரை இருந்து வந்தது! அது மட்டுமோ? தொல்காப்பியத்தைப் போற்றிய புலவர் இருந்தனர். திருக்குறளைத் தம் கவிதைக்கு ஊற்றாக்கிப் புதுப் பாடல் பாடிய, ‘பாடும் புலவ’ரும் இருந்தனர். ஆனால், சிலப்பதிகாரம் ஒன்றுதான் இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பொது மக்களாலும் புலவராலும் முற்றிலும் மறக்கப்பட்ட செல்வமாக இயங்கிற்று. சிலப்பதிகார ஆசிரியரையோ, நூலையோ, நூலின் சொற்றொடர்களையோ, கருத்தையோ எடுத்தாண்ட புலவர் யாரும் கிடையாது. அது பாரதி ஒருவரே கண்ட - ஆனால், கம்பர் காணாத, சேக்கிழார் கேளாத, அதிவீரராம பாண்டியர் அறியாத - கலைச் செல்வமாக இயங்கி வந்துள்ளது. மங்கி ஒளி வீசினும் வாடாத வட மீனாக இயங்கிற்று, தொல்காப்பியம். மங்காது ஒளி வீசினும் பனி மூடிய கதிரவனாக விளங்கிற்று, திருக்குறள். ஆனால், சிலப்பதிகாரமோ மறையுவாவின்போது முற்றிலும் மறைவுற்ற முழுமதியாய் இயங்கிற்று. காணாத, கேளாத உரைப் பண்பு தொல்காப்பியத்தின் புகழுக்கும் திருக்குறளின் புகழுக்கும் மாறான மற்றுமொரு செய்தி சிலப்பதிகாரத்தின் புகழுக்கு உண்டு. முதலிரண்டையும் தமிழர் பேணினர் - மொழிப்பற்றுடைய தமிழர் ஒன்றை அதன் முழு உருவும் திருவும் அறியாது உரை செய்து உரை செய்து உண்மைப் பெருமை விளங்காமலே பேணினர். மற்றொன்றை மொழிப்பற்றுக் குன்றிய ‘தமிழர்’ உறையிட்டு உறையிட்டு மூடி மறைத்தும் உருமாற்றியும் கைவிடாது பேணினர். ஆனால், சிலப்பதிகாரத்தை இரு சாராரும் முற்றிலும் மறந்தே விட்டனர். ஆயினும், மூன்றாவது ஒரு சாரார் - தமிழகத்திலே புறக்கணிக்கப்பட்ட ஏதோ ஒரு வகுப்பினர் - சமணர் உட்பட்ட சில பழைமைப் பூச்சிகள் - அதை வைத்துப் பேணினர். பேணியது மட்டுமோ? அதற்குத் தமிழகம் இதுவரை - இன்று வரை - அறியாப் பண்புடைய அருமை பெருமை கொண்ட உரைகள் செய்தனர். திருக்குறளின் ‘உறை’யான உரைகளைப் போல அவை மறைக்கவில்லை. தொல் காப்பியத்தின் உரைகளைப் போல அவை மயங்கவில்லை, மருளவில்லை-அவை துணிந்து சிலப்பதிகாரத்துடனேயே போட்டியிட முனைந்தன! சிலப்பதி காரத்தின் புகழுக்கு அவை புகழ் ஊட்டின. இன்று சிலப்பதிகாரம் நமக்கு எவ்வளவு அரிய கருவூலமோ அதனினும் ஒரு சிறிதும் குறைந்த கருவூலங்களல்ல, சிலப்பதிகாரத்தின் உரைகளாகிய அரும் பதவுரையும். அதனை அடுத்து வந்த அடியார்க்கு நல்லார் உரையும், முதனூலை விளக்கிற்று முதலுரை - இரண்டுக்கும் விளக்கம் தந்து புத்தொளி பரப்பிற்று பிந்திய உரை. தமிழ் இலக்கிய வரலாற்றிலே - கீழ்நாட்டு இலக்கிய வரலாற்றிலே எளிதில் காணப்படாத உயிர்த்துடிப்புடைய உண்மை நிகழ்ச்சி இது! உலக இலக்கியத்திலே ஷேக்°பியருக்குக்கூடக் கிடைக்காத நற்பேறு, இங்கே இளங்கோவுக்குக் கிடைத்துள்ளது! ஆரிய மாயைக்கு அப்பாற்பட்ட மாயை தொல்காப்பியத்தை மறைத்தது யார் அல்லது எது? காலன் அல்லது காலம்! திருக்குறளை மறைத்தது யார் அல்லது எது? காலத்தின் கோலம், ஆரிய மாயை! சிலப்பதிகாரத்தை மறைத்தது யார், அல்லது எது? அவ்விரண்டினும் வலிமை வாய்ந்த ஒரு மாயமான, மாயை அது! தொல்காப்பியத்தை யாரும் வேண்டு மென்று மறைக்கவில்லை. அது மறைந்து வந்தது. திருக்குறளை மறைக்க முயன்றவர் உண்டு. ஆனால், மறைக்க முடியவில்லை. உறைபோட, திரையிடத் தான் முடிந்தது. ஆனால், சிலப்பதிகாரம் மறைக்கப்பட்டது - திரையிட்டல்ல-முழு இருட்டடிப்பு, மறக்கடிப்பு மாயையிலேயே அது புதையுண்டது. அஃது இன்று வெளிப்பட்டுள்ளதாயினும் இருட்டடிப்பில் உள்ள ஒரு புழை வழியாகவே, அத்துடன் வெளிப்பட்டு, நூற்புகழுடன் உரைப்புகழும் சேர்ந்து ஒளி வீசத் தொடங்கிய இந்தக் காலத்திலும், அதற்கு மீண்டும் திரையிடப் புதிய மாய ஆற்றல்கள் எழுகின்றன, எழுந்து வருகின்றன. ஓர் ஆரியப் பெரியாரே வெளியிட்ட இந்த அரிய நூலினை ஆரியர் பாசறையின் அருகில் இருந்து குளிர்காயும் ஒரு தமிழ்ப் பெரியாரும், திராவிடர் பாசறைக்கு அருகிலேயே துணிந்து வந்து குளிர்காய முயன்று வரும் மற்றொரு தமிழ்ப் பெரியாரும் இரு வேறு திசையிலிருந்து இரு வேறு பாணம் தொடுக்க முனைந்துள்ளனர். பகைவன் எதிர்ப்பைவிட வலிமையானது ‘நண்பன்’ எதிர்ப்பு. ஏனென்றால், நண்பன் உருவில் பகைமை அருஞ்செயல் செய்யமுடியும். ஆரிய மாயை அடிக்கடி இந்த உருவெடுத்து வேலை செய்ததுண்டு. அஃது ஆரிய எதிர்ப்புக்குரல் எழுப்பிக்கூட வேலை செய்யவல்லது-வேலை செய்ததுண்டு! திராவிட இயக்கத்தின் காதில் அண்மைக் காலத்திலே கேட்ட-கேட்கும் இரு குரல்களை இதற்குச் சான்றாகக் கூறலாம். இனத்தை எதிர்க்கும் இனக் குரல்கள் ஒன்று, திராவிடம் தனித்தமிழ்ச் சொல்லா? சங்க நூல்கள் அதை யறியுமா? திருக்குறள், தொல்காப்பியம் அதை வழங்கியதுண்டா? இவ்வாறு தனித்தமிழ்க்குப் பரிந்து பேசுவதுபோல, சங்க இலக்கியப் பண்புக்கு இரங்குவது போலக் கேள்வி கேட்கும் கம்பரடியார், வால்மீகி அடியார் உண்டு. இந்தக் கேள்வியைக் கேட்பவர் தனித் தமிழ்த் தலைவர், தனித்தமிழின் முடிசூடா மன்னர் மறைமலையடிகள் அல்லர், அல்லது அவர் அடியார், அவர் அன்பர்கள் அல்லர். இக்கேள்வியை அத்தகையவர்கள் எழுப்பியிருந்தால் கேள்வி தவறு என்று நாம் கருதினாலும், கேட்பவர் உளப்பண்பை, உண்மைப் பற்றை மதித்திருப்போம். ஏனென்றால், அவர்கள் தனித் தமிழ்க்குப் பரிந்தே, ஆரியத் தமிழை வெறுத்தே இக் கேள்வியைக் கேட்டிருப்பர். ஆனால், இங்கே கேட்பவர் ஆரியத் தமிழ், கலப்புத் தமிழ்க் கூட்டத்தினர் என்பதே கேள்வியின் குறும்புத் தன்மையை நன்கு குறித்துக் காட்டுகிறது. இது போன்ற மற்றொரு கேள்வி, இராவணன் திராவிடனா, தமிழனா? அவன் முதல்தர ஆரியனாயிற்றே! காசிபர் குலத் தோன்றலாயிற்றே! என்பது. இது கேள்வியல்ல, கேள்வி உருவில் வந்த ஒரு புதுப்பிரச்சாரம். இங்கும் கேட்பவர் ஆரியரானால், அல்லது ஆரிய திராவிட வேற்றுமை பாராட்டாத உலகப் பற்றாளர், மனித இனப் பற்றாளரானால், கேள்வியில் பொருளுண்டு, பயனுண்டு. ஏனென்றால், அத்தகையவரின் கேள்வி அவர் மனமார்ந்த எண்ணத்தையே குறிக்க இடமுண்டு. ஆனால், ஆரியர்க்கு ஒரு நீதி, அல்லாத நாட்டு மக்களுக்கு மற்றொரு நீதி என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்த சுமிருதிகள், புராண இதிகாசங்களை ஏற்றுக்கொண்ட இந்துமத ஆதரவாளர்-இந்தியாவின் சட்டத்தை ஆதரிப்பவர் - சமுதாய, சாதி அநீதிகளை எதிர்க்க விரும்பாது நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிப்பவர்களிடமிருந்து இந்தக் கேள்வி வரும் போது, அது வழக்கறிஞரின் மாட்டி வைக்கும் பொறிக்கேள்வி ஆகிறது. எதிரிகளிடையே பிளவு உண்டுபண்ண எண்ணும் சூழ்ச்சிக் கேள்வி இஃது என்பது தெளிவு. ஏனென்றால், கேள்வியின் நோக்கம் விடையையோ விளக்கத்தையோ எதிர்பார்த்ததன்று. கேள்வி கேட்பதன் மூலமே ஒரு பிரச்சாரம் செய்து, தன் அறிவில் உள்ள குழப்பத்தை எதிர்த்தரப்பாரின் உள்ளத்திலும் மெள்ள உணர்ச்சி வழியாகப் புகுத்துவதே இத்தகைய கேள்விகளின் நோக்கமாக அமைகிறது. குட்டையைக் குழப்பும் முறை குட்டையைக் குழப்பும் இதே முறையை இருவேறு அறிஞர்-இருவேறு கூடாரத்திலிருந்துகொண்டு-இருவேறு கொள்கை களுடன் சிலப்பதிகாரத்தின் மீது செலுத்தி இருமுகப்பட்ட தாக்குதல்களால் - சிலப்பதிகாரத்துக்கன்று - தமிழ்க்கே ஊறு விளைவிக்க முனைகின்றனர். இரண்டு பாணங்களும் அறிஞர் உலகை அசைக்க வில்லை-இதை அவர்கள் அறிவர். புலவர் உலகம் அவற்றைப் புறக்கணிக்கிறது - இது கண்டு அவர்கள் ஒரு சிறிதே புழுங்கு கின்றனர். ஏனென்றால், எதிர்ப்பு அவர்களுக்கு ஓர்அளவு விளம்பரம் கொடுத்திருக்கும். ஆயினும், அவர்களது தலையான நோக்கம் அறிஞர்களையோ புலவர்களையோ எதிர்ப்பதன்று. அவர்கள் ஆராய்ச்சி விளக்கத்தை எதிர்பார்ப்பதுமன்று. அவர்கள் குறிக்கோள் பொதுமக்கள் உள்ளத்தில் சிலப்பதி காரத்துக்கு ஏற்பட்டுவரும் சிறப்பை ஒரு சிறிதேனும் குறைப்பதே! இதற்கு என்ன காரணம் என்பதைப் பொதுமக்கள் இன்று அறியமாட்டார்கள் - அறிஞர்கள், புலவர்கள்கூட முழுவதும் கண்டுகொள்ள முடியாது. சிலப்பதிகாரம் மூலம் அனைத்திந்திய அரங்கிலும் உலக அரங்கிலும் தமிழ்க்கு ஓரளவு ஏற்பட்டுள்ள - அல்லது விரைவில் ஏற்பட இருக்கின்ற பெருமையைக் குறைப்பதே அவர்களது நோக்கமாகும். இதனினும் ஆழ்ந்த ஒரு நோக்கம் இந்த மாய எதிர்ப்புக்கு உண்டு. தமிழ்மொழி ஆரியத்தால் அமிழ்த்தப்பட்டு, உலக அரங்கில் இடம் பெறாமல், அனைத்திந்திய அரங்கில் புறக்கணிக்கப்பட்டு, இருட்டடிக்கப்பட்டு வருகிறது. தொல்காப்பியம், திருக்குறள் ஆகியவற்றோடு சிலப்பதிகாரமும் சேர்ந்து இந்நிலையை மாற்றிவருகிறது. இதை வெளிநாட்டுத் தொடர்புடைய அறிஞரே உணர்வர். அத்துடன் சிலப்பதிகாரம் தமிழின் பழைமையையும் வடமொழி தாண்டி உலக அரங்குக்குக் கொண்டு செல்லத் தக்கதாய் இருக்கிறது. தமிழ்க்கு அந்நிலை ஏற்பட்டுவிட்டால் என்ன நேரும்? தமிழை மட்டுமன்றி, மற்றக் கீழ்நாட்டுத் தாய்மொழிகளையும் வளரவிடாமல் அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்யும் ஆரிய மொழியின் ஆதிக்கம் இதனால் தளர்ந்துவிட வழியுண்டு. இதைத் தடுக்கவே மாய எதிர்ப்புகள் முனைந்துள்ளன. எதிர்ப்பு மூலம் தமிழ் எதிர்ப்பாளருக்கு நாம் விளம்பரம் கொடுக்க விரும்பவில்லை. ஆனாலும் அவர்களுக்குத் தரும் விளக்கமே பொது மக்களுக்குச் சிலப்பதிகாரத்தின் அருமை பெருமைகளை எடுத்துக் காட்ட ஒரு நல்ல வாய்ப்பு என்று கருதுகிறோம். சிலப்பதிகாரத்தின் இலக்கியச் சிறப்புமட்டுமன்று, தமிழ்ப்பண்பாடு-கலைப்பண்பு ஆகியவற்றின் வரலாற்றுக்கு அது தரும் சிறப்பையும் அனைத்திந்திய, உலக அரங்குகளில் தமிழ்க்கு அஃது அளிக்க இருக்கும் சிறப்பையும் விளக்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். தமிழில் அழிந்துபட்ட நூல்கள் பல. அவை இத்தனை என்றோ, இன்னின்னவை என்றோ, இத்தகையவை என்றோ எவராலும் மதிப்பிட்டுக் கூற இயலாது. பிறநூல் குறிப்புகளால் அழிந்துபட்டவை என்று திட்டமாக அறியப்படும் நூல்கள் மட்டுமே ஆயிரத்துக்குமேல் உள்ளன என்று ஆசிரியர் மயிலை சீனிவேங்கடசாமி அவர்கள் கணித்துள்ளார்கள். அழிந்துபட்ட நூல்களில் பெரும்பாலானவை கடல் கோளினாலோ, வேறு இயற்கை மாறுதல்களாலோ அழிந்தவை அல்ல. ஏனெனில், அவை படிப்படி யாகவே அழிந்துவந்தன. 14ஆம் நூற்றாண்டுவரையும் அதற்கு இப்பாலும் இருந்து அதன் பின்னரே பல அழிவுற்றன என்று அறிகிறோம். பல, தொல் காப்பியர் காலத்துக்கு முன்னிருந்து அந்நாள்வரை தொகுதி தொகுதியாக அழிந்துகொண்டே வந்தன. பல இப்போதும் அழிந்துகொண்டே இருக்கக்கூடும் என்பதில் ஐயமில்லை. இவ்வழிவுக்குக் காரணம் தமிழ்நாட்டின் அரசியல் மாறுபாடுகளும் பண்பாட்டு மாறுபாடுகளும், இவற்றுக்குக் காரணமான ஆரியரின் சமய சமுதாய அரசியல், பத்திரிகை ஆதிக்கமுமேயாகும் என்பது கூறாமலே அமையும். தமிழ்க்குரிய தகுதியும் உரிமையும் மேம்பாடும் இன்னும் இந்நிலைகளால் மிகுதியும் பாதிக்கப்பட்டே வருகின்றன. கிளர்ந்து எழுந்து வரும் மக்கள் சத்தியும் மறுமலர்ச்சி ஆற்றலுமே இச்சூழலைத் திருத்தியமைக்க வேண்டும். இழந்த செல்வங்கள் நாம் இழந்த இலக்கியச் செல்வங்களின் பட்டியலில் எத்தனை சீரிய பண்பாட்டுக் கருவூலங்கள் இருக்கக்கூடு மென்பதையும்; தமிழ், தமிழர். தமிழின நாகரிக, வரலாற்றுப் புதையல்கள் எத்தனை இருந்திருக்கக் கூடுமென்பதையும் சிலப்பதிகாரம் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. ஏனெனில், அஃது அந்தப் பட்டியலிலிருந்து மயிரிழை அளவில் தப்பிப் பிழைத்த ஒரு கலைக் களஞ்சியமே ஆகும். உண்மையில் சங்க காலத்திலும் அதற்கு முற்பட்டும், பிற்பட்டும் பெயர் அறியப்பட்ட எத்தனையோ நூல்கள் அப்பட்டியலில் இடம் பெற்றுவிட்டன. பெயர் அறியப்படாதன இன்னும் எத்தனையோ? சங்க இலக்கியத்தில் முழு நூல்கள் மட்டுமன்றி, கிடைத்த நூல்களில் பல பகுதிகள் கூட அப்பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவை ஆகிவிட்டன. சிலப்பதிகார வகையில்கூட அரும்பதவுரை ஆசிரியர்க்கு முன் இருந்ததாக அவ்வுரையால் அறியப்படும் முதல் உரை நமக்குக் கிட்டவில்லை. தவிர அடியார்க்கு நல்லார் உரையில் 7ஆவது காதை கானல் வரிக்கும் 20ஆவது வழக்குரை காதைமுதல் உள்ள பதினொரு காதைகளுக்கும் உரை அகப்படவில்லை. தமிழ்ப் பண்பாட்டுக்கு உதவும் அரும்பெரு மாண்புடைய ஈடும் எடுப்பு மற்ற பொன்னுரையாகிய அடியார்க்கு நல்லார் உரையில் நமக்குக் கிட்டியுள்ளது சிலப்பதிகாரத்தின் 30 காதைகளில் 18 காதை யொழிய மீந்த 12 காதைகளுக்கு மட்டுமே என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. இழந்த செல்வங்களிலிருந்து சிலப்பதிகாரமும் அதன் உரைப் பகுதிகளும் மீட்கப்பட்டதற்குத் தமிழர் எவ்வளவோ மகிழ்வுறுதல் வேண்டும். ஏனென்றால், அதன் மூலம் நமக்குக் கிடைத்துள்ளது சிலப்பதிகார நூல் மட்டுமன்று. தமிழரின் இழந்த பேரிலக்கியத்தின் பரப்பு, உயர்வு, தகுதி ஆகியவற்றையும் அதன் பண்பையும் ஆராய்ந்தறிய இந்த நூலின் வெளியீடே நமக்கு உறுதுணையாய் உதவியுள்ளது. தமிழில் வேறு எந்தத் தனி நூலைப் பார்க்கிலும் இவ்வகையில் சிலப்பதிகாரமே தமிழ்ப் பண்பாட்டின் வரலாற்றுக்கு ஒப்புயர்வற்ற மிகப் பெருங்கருவூலமாகும். தமிழ் ஆராய்ச்சிப் போக்கு தமிழ் மொழி ஆராய்ச்சி, தமிழிலக்கிய ஆராய்ச்சி ஆகியவை தொடக்கத்தில் பெரிதும் தமிழ் நூலின் பரப்பையும் மொழிவளத்தையும் மட்டுமே கவனிப்பவையாக இருந்தன. ஏனெனில், அவ்வாராய்ச்சியின் தொடக்கக் காலத்துக்குள் நாகரிக உலக மொழிகளிடையேயும் கீழ்நாட்டு மொழிகளிடையேயும் தமிழ் வகித்து வந்த உயரிடத்தை அம்மொழி முற்றிலும் இழந்து விட்டிருந்தது. இந்தியாவின் நூற்றுக்கணக்கான பண்படா மொழிகளுள் ஒன்று என்ற அடிப்படையிலேயே ஆராய்ச்சி யாளர் அதில் கருத்துச் செலுத்தினர். இந்தியாவின் மொழி களுள் ஆரிய மொழிகள் பண்படாதவை, தென்னாட்டுத் திராவிட மொழிகள் மட்டுமே பண்பட்டவை என்பது அன்று அறியப்படாம லிருந்தது-அறியப்பட்ட பின்பும் ஆரிய அரசியல், சமய, பத்திரிகை, சமுதாய ஆதிக்கங் காரணமாக இன்றும் பொதுமக்களுக்கு இது தெளிவாக உணர்த்தப்படவில்லை - அறிஞர் உலகுகூட இதை வாய்விட்டுப் பேசுவதில்லை - எழுத்துருவில் குறிக்க எண்ணுவ தில்லை - உயர் குலத்தாராக வாழும் ஆரியர் நலங்களை அது பாதிக்கும் என்ற காரணத்தினால்! இவ்வுண்மை அறிஞர் உள்ளத்துக்குள்ளேயே திரையிடப்பட்டது - திரையிடப்பட்டுவருகின்றது. இந்தியாவில் திராவிட மொழிகளுக்குரிய தகுதி அடிப்படையான உயர்வு அவற்றுக்குத் தரப்படாதது போலவே, திராவிட மொழிகளிடையே தமிழுக்குரிய தனிப்பெருந் தகுதியும் சிறப்பும் பொதுமக்களிடையே இருட்டடிக்கப்பட்டது-அறிஞர் உள்ளங்களுக்குள்ளேயே திரையிடப்பட்டது - இன்றும் இருட்டடிக்கப்பட்டு, திரை யிடப்பட்டே வருகிறது! போதாக் குறைக்கு எல்லாத் தாய் மொழிகளின் மீதும் திராவிட மொழிகள், ஆரிய மொழிகள் ஆகிய அனைத்தின் மீதும் உலக அரங்கின் நோக்கு என்ற கதிரொளி அவற்றின் மீது படாமல் சமற்கிருதம் என்ற வழக்கிறந்த - உண்மையில் என்றுமே வழக்கில் இடம் பெறாத - மொழியின் நிழல், அன்று தடுத்தது - இன்றும் தடுத்தே வருகிறது! இந்த நிலைக்குப் பெரிதும் உதவிய சூழ்நிலை வேறு ஒன்று உண்டு. அரை நூற்றாண்டுக்குமுன் திருக்குறளும், நாலடியாரும், தொல்காப்பியமும் நீங்கலாகப் புலவர் உலகில் அறியப்பட்ட ஏடுகள் கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகியவையும் அவற்றுக்குப் பிற்பட்ட ஏடுகளுமே. அறிஞர் கால்டுவெலும், போப்பும் தமிழ்க்கு இந்திய மொழிகளிடையே தனிப்பெரும் உயர்வு தந்தவர்கள் தாம். ஆனால், அவர்கள் அறிந்த தமிழ் சங்க இலக்கியமும், சிலப்பதிகாரமும் நீங்கலான பிற்காலத் தமிழே ஆகும். இவற்றை வைத்துக்கொண்டே அவர்கள் தமிழ்க்கு அம்முதன்மை அளித்தனர். சங்க இலக்கியமும், சிலப்பதி காரமும் வந்தபின் இந்த நிலை பெரிதும் மாறுபட்டுப் புரட்சிகரமாக வளர்ந்திருத்தல் வேண்டும். ஏனென்றால், சங்க இலக்கியங்கள் சமற்கிருத இலக்கியத்தைவிட மிகவும் பழைமையானவை. பல நூற்றாண்டுக் கணக்கில் பழைமை யானவை. அத்துடன் சமற்கிருத இலக்கியத்தைவிட அவை பன்மடங்கு பண்பில் உயர்ந்தவை. தவிர சங்க இலக்கியம் காட்டும் தமிழ்த் திராவிட நாகரிகம் சமற்கிருத இலக்கியம் காட்டும் இடைக்கால வட இந்திய நாகரிகத்தைவிட ஆயிரமடங்கு உயர்வுடையது. இச்சிறப்புத் தகுதிகள் தமிழ்க்கு உலகில் சமற்கிருத மொழி தாண்டி, கிரேக்க இலத்தீன மொழிகள் தாண்டி, உலகின் முதல் மொழி என்ற சிறப்பைத் தந்திருத்தல் வேண்டும். அது கீழை உலகில் தலைசிறந்த பழைய மொழி மட்டுமன்று, அனைத்துலகின் தலைசிறந்த பழஞ்சிறப்புடைய செம்மொழி - அத்துடன் அனைத்துலகின் புதுச் சிறப்பும் குன்றாத புது மொழி என்ற ஒப்புயர்வற்ற நிலை அதற்கு இயல்பாகவே ஏற்பட்டிருத்தல் வேண்டும். இந்நிலையைத் தமிழ் பெறுதல் வேண்டும் என்ற ஆர்வத்துடனே துடித்தது - மக்கள் மறவாத, ஆனால், அரசியலார் கண்களிலும் ஆட்சி ஆதிக்கவாதிகள் கண்களிலும் படாத - மறைமலையடிகளார் உள்ளம்! அதே ஆர்வத்துடன் வான ளாவிய புனைவாராய்ச்சிகளிலும் கடலடி துழாவிய நுணுக்க ஆராய்ச்சி களிலும் பயின்றது, சேலம் பா.வே.மாணிக்க நாயகரின் மூளை! அந்நாளைய (20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திய) புலவர் உலகைப் பேரளவில் தட்டி எழுப்பிய துடிப்பு - தமிழகத்தில் ஏற்பட்ட முதல் மறுமலர்ச்சி- இதுவே. ஆனால், அந்நாளைய ஆட்சித் தலைவர்கள், அரசியல் ஆட்சி நிலையங்களில் இழைந்த ஆளும் வகுப்பினர், தமிழ் நாட்டுச் செல்வப் ‘பிரபுக்கள்’ ஆகியோரின் பண்பும் உணர்ச்சியுமற்ற மர மண்டைகளையும், களிமண் இதயங்களையும் இஃது அசைக்கவில்லை. இருவகைப் பண்பாட்டு எதிர்ப்புகள்: கம்பராமாயணம், பெரிய புராணம் சங்க இலக்கியம் தெரியப்பட்ட பின்பும், அதனால் திருக்குறளின் பெருமை துலங்கத் தொடங்கிய பின்பும், சிலப்பதிகாரம் நமக்குக் கிடைத்த பின்பும் பழைய சூழ்நிலையே நீடித்து, இருந்து வருவது எதனால்? பல காரணங்களை முன்னிட்டு, அந்தச் சூழ்நிலை மாறக் கூடாது என்பதற்காகப் பலர் திரை மறைவில் இருந்து முயன்று வருவதனாலேயே ஆகும். இன்று கம்பராமாயணத்துக்குப் பெருமை தருவதாகப் பறையடிப்பவர்களின் செயல்கள் உண்மையில் கம்பர்க்குப் பெருமைதரும் நோக்கத்துடன் செய்யப்படும் செயல்கள் அல்ல. கம்பராமாயணத்துக்கு முற்பட்ட தனித் தமிழ் இலக்கியத்தின் பெருமை பொது மக்களின் கவனத்துக்கும், உலக அரங்கின் பார்வைக்கும் பரவி விடாமல் தடுக்கும் உள்ளெண்ணம் உடைய செயல்களே அவை. ஏனெனில், அந்நூல்கள் வெளிவருவதற்கு முன் தமிழின் தலைசிறந்த ஏடாகக் கம்பராமாயணம் புகழ் பெற்றது இயல்பே. இதை அடிப்படையாகக் கொண்டு, அதன் பின்னும் கம்பராமாயணமே தலைசிறந்தது என்று விளம்பரப் படுத்துவதில் அவர்கள் பரபரப்பு உடையவராகின்றனர். “சங்க இலக்கியத்தின் பக்கம், திருக்குறள், சிலப்பதிகாரம், தொல்காப்பியத்தின் பக்கம் நாடிவிடாதீர்கள்” என்று பொது மக்களிடம் கூறாமல் கூறும் செயலே இது. கம்பராமாயணப் போலி ஆர்வலரின் இத்தமிழ்ப் பகைமை நோக்கத்தை வலியுறுத்திக் காட்டும் இன்னொரு செய்தி உண்டு. தனித்தமிழ் ஆர்வமும் சங்க இலக்கிய ஆர்வமும் உடைய தமிழ் ஆர்வலர் கம்பராமாயணத்தைப் போலவே பெரிய புராணத்தையும் தமிழ்ப் பண்பாடு குன்றிய இடைக்கால நூலாகக் கருதுகின்றனர். இது தவறன்று. கம்பராமாயணமும் பெரிய புராணமும் இரு வேறு வகையில் தமிழ்ப் பண்பாட்டுக்கு ஊறு செய்பவையே ஆகும். ஆயினும், கம்பராமாயணத்தைப் போலப் பெரிய புராணம் சமற்கிருத மொழிக்கும் ஆரிய புராண இதிகாச சுமிருதிகளுக்கும் ஆக்கம் தரவோ தமிழுக்குச் சிறுமை அளிக்கவோ உதவமாட்டாது. கம்பராமாயண ஆர்வலர் இக்காரணத்தினாலேயே கம்பர் கால நூலாகிய பெரிய புராணத்தினையும் உள்ளத்தில் தீண்டாமல் விடுகின்றனர் என்பது குறிக்கத்தக்கது. இடுக்கித் தாக்குதல் சங்க நூல்களின் வெளியீடும் அறிவும் தமிழ்க்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் உலக அரங்கில் பெரும் புரட்சி செய்யத்தக்கவை - ஆனால், செய்யவில்லை. இது கம்பராமாயண ஆர்வலர் தமிழ்க்குச் செய்த, செய்கிற கேடு. சிலப்பதிகார வெளியீடும் சங்க நூல்களுக்குக் குறைந்த புரட்சித் தகுதி உடையதன்று. ஆனால், எந்தப் புரட்சியும் இன்னும் நிகழவில்லை. இதற்குக் காரணம் வேறு. சங்க இலக்கியத்துக்காகப் பாடுபட்ட-பாடுபடும் அறிஞர்குழாம் அதிலேயே இன்னும் மிகுதி வெற்றி பெறவில்லை. சிலப்பதிகாரத்துக்கோ, தொல்காப்பியத்துக்கோ ஆர்வம் எழுப்பும் ஆற்றல் அவர்களிடையே ஏற்பட முடியவில்லை - சங்க இலக்கியப் போராட்ட முயற்சியிலேயே அவர்கள் களைப்புற்றுத் தளர்ந்துவிட்டனர். ஆனால், இந்நிலையிலும் சங்க இலக்கியத்தில் காணப்படாத - சிலப்பதி காரத்தின் சொல்லழகு, நாடகப் பண்பு, எளிமை நயம், கற்பனைத் திறன் ஆகியவற்றில் ஈடுபட்ட இளைஞர்-மாணவர்-இளம் புலவர் எழுந்துள்ளனர், எழுந்து வளர்ந்து வருகின்றனர். அதன் முழுப் பெருமையும் இன்று விளங்கா விட்டாலும் விரைவில் விளங்க வழியுண்டு. அதன் மூலமாகத் தளர்ந்துவிட்ட சங்க இலக்கிய இயக்க ஆர்வமும் உரம் பெற வழியுண்டு. இந்த நிலையைக் கூர்ந்து கவனித்து உணர்ந்துகொண்டவர்கள் கம்பராமாயண ஆர்வலர் குழுவில் உள்ள ஒரு சில தமிழ்ப் பகைவர்களே. ஆனால், நாட்டின் செல்வாக்கற்ற அந்தப் பகைவர்களால் சிலப்பதிகார எதிர்ப்பையோ, சங்க இலக்கிய எதிர்ப்பையோ கூட நேரடியாகச் செய்ய முடியவில்லை - தமிழ் மறுமலர்ச்சி அலைபாயும் இந்நாளிலே அவர்கள் தம் எதிர்ப்பைக்கூட நெகிழவிட்டே வருகின்றனர். இந்நிலையில்தான் அவர்களுக்கு ஓர் எதிர்பாரா ஆதரவு கிடைக்குமென்ற நைப்பாசை கிளறப்பட்டு வருகிறது - சிலப்பதிகாரத்தை எதிர்க்கும் கம்பராமாயண ஆர்வலருக்கு உதவியாக, கம்பராமாயண எதிர்ப்பு அணியிலேயே ஒருவர் அல்லது கம்ப ராமாயண எதிர்ப்பாளர் மேலாடையைத் தற்காலிகமாக இரவலாக வாங்கிப் போட்டுக் கொண்ட ஒருவர் முன்வரத் தொடங்கி உள்ளார்! சிலப்பதிகார எதிர்ப்பை ஊக்கி அதன் மூலம் தளர்ந்து விட்ட முறிந்து வருகிற சங்க இலக்கிய எதிர்ப்பைப் புதுப்பித்து - ஆரியப் பாதுகாப்புக் கோட்டையை உறுதிப்படுத்தி அவ்வழியாக தமிழ்வளர்ச்சியை ஏன், திராவிட மொழிகளின் வளர்ச்சியை-அனைத்திந்தியத் தாய் மொழிகளின் வளர்ச்சியை - நாட்டு மக்கள் முற்போக்கை - நாட்டின் வருங்கால வாழ்வைத் தடைப்படுத்த இந்த இருமுனை இடுக்கித் தாக்குதல் பயன்படும் என்று சில ஆரிய நிழலில் அமர்ந்து ஆராய்ச்சி இழை நூற்கும் ஒரு சிலர் சரியாகவோ, தப்பாகவோ கணக்குப் போடுகின்றனர்! இதைத் தெரிந்தோ, தெரியாமலோ - தங்கள் தனி நலம் கருதியோ, தனி ஆதிக்கம் கருதியோ ஆரிய எதிர்ப்பு அணியின் நிழலில் ஒதுங்கி, பகுத்தறிவியக்கத்தில் குளிர்காய வந்த ஒருவர் ஆதரிக்க முனைகின்றார்! சிலப்பதிகாரமும் ஆராய்ச்சியுலகும் சிலப்பதிகாரத்தின் பெருமைகள், சிறப்புகள் மிகப் பல. அவை பொது மக்கள் உள்ளத்தையும் இளைஞர், அறிஞர் உள்ளங்களையும் ஒருங்கே கவர்ந்து விட்டன. எதிர்ப்பு அணிவகுக்கக் கனவு கண்டு ஆதரவில்லாமல் உளையும் அறிஞர் கூட இவற்றை மனமார ஒப்புக்கொண்டு, புகழ் பாடத் தயங்க வில்லை. ஆனால், சிலப்பதிகாரத்தின் எல்லாப் பெருமைகளிலும் எவரும் - எதிர்ப்பாளர் மட்டுமல்லர், ஆதரவாளர்கூட - கவனம் செலுத்தவில்லை. இக்கட்டுரைத் தொகுதியின் நோக்கம் ஆதரவாளர் ஆதரவைப் பெருக்குவதோ, எதிர்ப்பாளரை எதிர்ப்பதோ அன்று. இரு சாராரிடையேயும் புத்துணர்வையும் - புத்தார்வத்தையும் எழுப்புவதேயாகும். சிலப்பதிகாரத்தின் முழுச் சிறப்பையும் - ஆதரவாளர், எதிர்ப்பாளர் கருத்தைக் கவர்ந்த பகுதிகளையும், அவர்கள் கவனிக்காது விட்ட பகுதிகளையும் - நாம் ஒருங்கே கவனித்தல் வேண்டும். சிலப்பதிகார ஆராய்ச்சியாளர் - ஆதரவாளர், எதிர்ப் பாளர் உட்பட - கருத்துச் செலுத்திய ஆராய்ச்சிகள் இரண்டுதாம். (1) சிலப்பதிகாரத்தின் காலம் எது? அது சங்க இலக்கியக் காலத்ததா, அதற்குப் பிற்பட்டதா? (2) சிலப்பதிகாரம் தமிழ்ப் பண்புடைய நூலா, ஆரியப் பண்புடைய நூலா? இரண்டும் கலந்ததானால், தமிழ்ப்பண்பு மிகுதியா? ஆரியப் பண்பு மிகுதியா? இந்த இரண்டிலும் தலையிடாமலே சிலப்பதிகாரத்தின் கலைநயத்தில் ஈடுபட்டு நுகர்ந்தவர்கள், அதை எடுத்துக் கலை உலகிலே கையாள்பவர்கள் உண்டு. அவர்கள் சிலப்பதிகாரத்தில் கீழ்வரும் பகுதிகளில் கருத்துச் செலுத்தி ஆராய்ச்சித் துறையில் இரண்டாவதாகக் குறிப்பிட்ட தமிழ்ப் பண்புப் பகுதியை விளக்கியுள்ளனர். 1. கற்புக் கடவுள் வணக்கம், தமிழர் கற்பு நெறி ஆகியவற்றைச் சிலப்பதிகாரம் எவ்வாறு விளக்குகிறது? கண்ணகியின் மறக் கற்புச் சிறந்ததா, பாண்டியன் கோப்பெருந்தேவியின் அறக் கற்புச் சிறந்ததா? 2. சிலப்பதிகாரம் காட்டும் தமிழகத்தின் அந்நாளைய சமயநிலை, திருமணம் முதலிய வாழ்க்கைப் பழக்க வழக்க நிலைகள், வாணிகத் தொழில் நிலைகள் ஆகியவை எந்த அளவில் சங்க இலக்கியங்கள் தரும் காட்சியோடு ஒப்புவமை உடையவை? எந்த அளவு வேறுபட்டவை, மிகைப்பட்டவை அல்லது மாறுபட்டவை? இவையன்றி மூன்றாவதாகப் பெரும்பாலான ஆராய்ச்சியாளர் கவனிக்காத ஒரு துறை உண்டு. அதுவே முன்னைய இரு சாராரையும் தாண்டிய ஆக்கத் துறை. சிலப்பதிகாரத்தின் நாடகப் பண்பு, இசைப் பண்பு ஆகியவையே அது. இத்துறையில் உழைத்தவர் அறிஞருள் அறிஞரும், கலைஞருள் கலைஞருமான ஈழம் தந்த செல்வர் அருள்திரு. விபுலானந்த அடிகளே ஆவார். அவர்தம் ‘மதங்க சூளாமணி’ என்ற நூலால் நாடகப் பண்பையும், ‘யாழ் நூலால்’ இசைப் பண்பையும் தனிப்பட ஆராய முற்பட்டுள்ளார். சிலப்பதிகாரத்தின் முழுச் சிறப்பென்று நாம் கூறுவது முன்னைய இரண்டு சார்புகளுடன் மூன்றாவது சார்பான நாடக இசைப் பண்புகளையும் இணைக்கும் முத்தமிழ்ப் பண்பே ஆகும். சிலப்பதிகாரத்தை எல்லாரும் ‘முத்தமிழ்க் காப்பியம்,’ ‘நாடகக் காப்பியம்,’ ‘உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்’ என முன்னாள் மரபின் வழி வந்த தொடர்களால் வழங்குகின்றனர். ஆனால், அவற்றை அழகுத் தொடர்களாகக் கொள்கின்றனரே யன்றி, மறைந்த அறிவுப் பண்பின் சின்னங்கள் என்றோ, நேரிடையான பொருளுடையவை என்றோ அத்தொடர் களைக் கருதி அவற்றில் மிகுதி கவனம் செலுத்தினார்கள் என்று கூற முடியாது. அருள்திரு விபுலானந்த அடிகள் மறைந்த தமிழிசை, தமிழ் நாடகங்களைச் சிலப்பதிகாரத்தின் உதவியாலும், அடியார்க்குநல்லார் உரையின் உதவியாலும் மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பும் அரும்பெரும் பணியைச் செய்துள்ளார். ஆனால், சிலப்பதிகாரமே உண்மையில் முத்தமிழ்க் காப்பியம், நாடகம் என்னும் உண்மை இன்னும் விளக்கப்படவில்லை. அம்முறையில் சிலப்பதிகாரத்தை ஆராய முற்பட்டால், சிலப்பதிகார ஆராய்ச்சியையும், எதிர்ப்பாராய்ச்சியையும் ஒரே புத்தாராய்ச்சியில் இணைத்துவிட வழி ஏற்படும். அதில் நாம் கருத்துச் செலுத்துதல் வேண்டும். தமிழக மறுமலர்ச்சிக்கு உதவிய ஏடுகளுள் தலை சிறந்தது சிலப்பதிகாரமே. மறுமலர்ச்சியைப் புது மலர்ச்சி நோக்கிச் செலுத்தும் ஆற்றல் அதற்கு உண்டு. புது மலர்ச்சிக்கு உரிய பல விதைகள், தூண்டுதல்கள் அதில் உள்ளன. ‘நைடதம் புலவர்க்கு ஒளடதம்’ என்ற வழக்குச் சொல் உலவிய காலம் ஒன்று இருந்தது. அது மலையேறி விட்டது. நைடதம் கொண்ட இடத்தைக் கம்பராமாயணம், பெரிய புராணம் ஆகிய ஏடுகள் கொண்டுள்ளன. அவை அமிழ்தமல்ல, மருந்தல்ல, ஒளடதம்! அதுவும் பொது மக்களுக்கன்று, மாணவ இளைஞர் நங்கையர்க்கன்று, புலவர்களுக்கு! இந்நிலையை மாற்றியமைத்த, இன்னும் மாற்றியமைக்க இருக்கின்ற ஏடு சிலப்பதிகாரமே! புது வகையான தமிழ் மற்ற ஏடுகளில் நாம் தமிழைக் காண்கிறோம். சிலப்பதிகாரத்தில் முத்தமிழைக் காண்கிறோம். இது புது வகையான தமிழ்-தமிழர் முன் அறியாத தமிழ், வேறு எங்கும் காணாத தமிழ்! அதன் இசை தமிழர் காதில் புதுவகை மாயப் பண்ணுடன் இழைகின்றது. மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே! கரும்பே, தேனே! அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே! பெருங்குடி வணிகன் பெருமட மகளே! கோவலன் கண்ணகியை மலரணை அருகே கண்டவுடன் அவ்வணங்கின் பெயர் குறியாது அன்பு குறித்தழைக்கும் சொற்கள் இவை. ஒவ்வோர் அடியும் இங்கே உணர்ச்சியின் வளர்ச்சியை மட்டும் குறிப்பன அல்ல; கோவலன் கண்ணகியை நோக்கி அணுகிவரும் ஒவ்வொரு படியாக ஒவ்வொன்றும் இயங்குகின்றது. நான்காம் அடி கண்ணகியின் இடையிலே இழைவதற்காக வளையும் கோவலன் கைகளின் வளைவு குழைவையே இசைப்படம் பிடிக்கிறது என்பது கூர்ந்து கவனிக்கத் தக்கது. அணுகி வந்த கோவலனின் பாராட்டுகள் அடுத்து வருகின்றன. மலையிடைப் பிறவா மணியே என்கோ! அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ! யாழிடைப் பிறவா இசையே என்கோ! தாழிருங் கூந்தல் தையால்! இந்த அடிகளுக்கு உரை வேண்டுமா? உரை நடையின் தெளிவு, நாடகத்தில் வரும் நடிகனின் உணர்ச்சி, காவியச் சொற்களில் காணப்படும் பொருள் நயம், அணி நயம், இன்னிசையில் எழும் இனிமை நயம், அலை எழுந்து எழுந்து தாழ்ந்து உயரும் ஓசை நயம் ஆகிய இத்தனையும் முயற்சி இல்லாமலே இவ்வடிகளில் இழைந்து அதிர்வதை உணரலாம். இன்னும் சிறிது உற்று நோக்கினால், நடிகன் சொற்களிலே இல்லாத, நடிப்பிலே மட்டும் ‘காணக்’ கூடிய ‘காட்சி’ப் பண்புகள்கூட அடிக்கு அடி, சொல்லுக்குச் சொல் மிளிர்வதைக் காணலாம். இக்காட்சிப் பண்புகள் நாடகத்துக்குரியவை. சிலப்பதிகாரம் நடிப்பதற்கும் கேட்பதற்கும் உரியதேயன்றி வாசிப்பதற்கு உரியதன்று என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. தமிழகப் புதிர்களுள் ஒன்று பரத நாட்டியம் பயில்பவர் இந்த அடிகளை நடித்துக் காட்ட முன் வாராதது தமிழகப் புதிர்களுள் ஒன்றே என்று கூறுதல் வேண்டும். பரத நாட்டியம் தமிழர் கையிலிருந்தாலும் அதன் தலைமையும் உரிமையும், அதனை இயக்கும் ஆற்றலும் இன்னும் தமிழர் கைக்கு வரவில்லை என்பதை இது சுட்டிக் காட்டுகின்றது. இத்தகைய அடிகளைப் பரதநாட்டியமாக்கிக் காட்டினால் அவை, அடிக்கு அடி, சொல்லுக்குச் சொல் பரத நாட்டிய முத்திரைகளுக்கு இசைய அமைந்தவை என்பது விளங்கும். அவை கண்ணகியின் உருவையும், அதைக் கண்ட கோவலன் உள்ளக் கிளர்ச்சியையும் சொல், சொல் குறிப்பு, ஓசை, சந்தம் ஆகிய எல்லாத் திறங்களிலும் வாசிப்போர், கேட்போர் கண்களின் முன்னும், கருத்தின் முன்னும் கொண்டுவருபவை ஆகும். மற்றும், அவற்றின் ஓசை கண்ணகியின் அங்க அசைவையும் கோவலன் உள்ளத்தின் அசைவுகளையும்கூட நம் காதுகளில் அலைபாயச் செய்கின்றன. இயல், இசை, நாடகம் ஆகிய மூவகை மொழி சார்ந்த கலைப் பண்புகளும் இந்த அடிகளில் கலந்து துடிக்கின்றன. இந்த அடிகளில் மட்டுமல்ல; மங்கல வாழ்த்து முதல் வரந்தரு காதைவரை காதைதோறும், அடிதோறும் இம் முத்திரைப் பண்புகளைக் காணலாம். இவ்வகையில் முத்திறப் பண்புகளும் வாய்ந்த அடிகளைத் தமிழில் வேறு எந்த நூலிலோ - உலகில் வேறு எந்த மொழியின் ஏட்டிலோகூட எளிதில் காண முடியாது. இந்த மூவகைப் பண்புகளுந்தாம் சிலப்பதிகாரத்துக்கு வாசகர் உள்ளத்தில் இன்னதென்று தெளிவாக விளக்கப்பட முடியாத-வேறு எந்த நூலாலும் உண்டுபண்ண முடியாத மாய உணர்ச்சியை, கிளர்ச்சியை, உணர்வு அலை இயக்கத்தை உண்டுபண்ணுகின்றன. இடைக்காலமும் இக்காலமும் இத்தகைய நூலைத்தான் தமிழர் - இடைக்காலத் தமிழர் -தேவார கால முதல் திருவருட்பாக் காலம்வரை வாழ்ந்த தமிழர் மறந்திருந்தனர். இத்தகைய நூலைத்தான் கம்பர் காலத் தமிழன் காணவில்லை, பெரிய புராண காலத் தமிழன் பேணவில்லை-கவிராயர் காலங்கள் கருத முடியவில்லை! அக்காலத் தமிழர் தமிழ்ச்சுவை இருந்தவாறு என்னே! நூல் வெளி வந்த பின்னும் ஒரு தலைமுறைவரை இந்தத் தமிழ் வகையில் தமிழர் பெரும்பாலும் காணாக் கண்ணினர், கேளாக் காதினராகவே இருந்தனர். ஆனால், இன்று நாம் காண்கிறோம், கேட்கிறோம். கண்டுவருகிறோம், கேட்டுவருகிறோம். ஏனெனில், நாம் மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்கிறோம். மறுமலர்ச்சியின் முதல் அலைமுகட்டில் நாம் மிதக்கிறோம். அந்த மறுமலர்ச்சியை ஊக்கியது, ஊக்கி வளர்த்தது, வளர்த்து வருவது சிலப்பதி காரமே - அதற்கு இன்னும் உயிர் கொடுத்து வளந்தருவது அந்நூலே. அந்நூல் தந்த உணர்வே அந்நூலைக் காண, கண்டு நுகர நமக்கு வழி வகுக்கின்றது. அந்நூலை உணர உணரத் தமிழர் நுகர்வுத் திறமும் அறிவுத் திறமும் இன்னும் விரிவு பெறும். அப்போதுதான் மறுமலர்ச்சி புதுமலர்ச்சியுற்றுப் புதுப் பொருள், புதுப் பண்புகளை நமக்கு எடுத்துக் காட்டும். மறுமலர்ச்சியும் சிலப்பதிகாரமும் மறுமலர்ச்சிக்குரிய தலைசிறந்த நூல் என்று சிலப்பதிகாரத்தைக் குறிக்கும்போது, சிலரல்லர், பலர் முகங்களில் வினா-வியப்புக் குறிகள் எழும்! திருக்குறள், தொல்காப்பியம் ஆகியவற்றைத் தாண்டியா சிலம்பு மறுமலர்ச்சிக்கு உயிர் நிலையானது என்று எதிர்க் குரல் எழுப்பத் தோன்றும்! ஆனால், அவர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய செய்தி ஒன்று உண்டு. திருக்குறளும், தொல்காப்பியமும் என்றும் நிலவியவை - ஏட்டிலும், அச்சிலும் ஒருங்கே பயின்றவை. மறுமலர்ச்சி அவற்றுக்கு ஒளி தந்தது - அவற்றால் புத்தொளி பெறுகின்றது. ஆனால், மறுமலர்ச்சியை அவை தூண்டியிருக்க முடியாது. நேர்மாறாக, முன் பெரு வழக்காய் இல்லாது 19ஆம் நூற்றாண்டுக்குப் பின் வெளி வந்த சங்க இலக்கியமும், முன் அருவழக்காகக்கூட இல்லாமல் புதையுண்டு கிடந்து அதே காலத்தில் வெளிவந்த சிலப்பதிகாரமும் மறுமலர்ச்சியைத் தூண்டிய பின்னரே, திருக்குறளும், தொல்காப்பியமும் புதுப்பொருள் தந்து புத்தொளி பிறக்குவிக்கலாயின. ஆகவே, சிலப்பதிகாரம், சங்க நூல்கள் ஆகிய இருதிற நூல்கள் மட்டுமே மறுமலர்ச்சியைத் தூண்டியவை ஆகும். இவற்றுள்ளும், சங்க இலக்கியம் புத்தறிவு தந்தது - புலவர்களிடையே! புத்தவா ஊட்டிற்று - தமிழ் ஆர்வலரிடையே! ஆனால், புலவரிடையே தவழ்ந்து, மாணவரிடம் கொஞ்சி, மக்களிடம் அது நடமாடவில்லை. அந்நிலை ஏற்படும் நாள் இனி வரலாம். சிலப்பதிகாரம் அதற்கு வழி செய்யலாம். ஆனால், இன்றே சிலப்பதிகாரம் அந்நிலையை அடைந்துவிட்டது, அடைந்துவருகிறது. புலவர்கள் சிலப்பதிகாரத்தை அறியாத காலத்தில்கூட, புலவருலகம் இராமாயண பாரதச் சேற்றில் புரண்ட காலத்தில்கூட, பொது மக்கள் எப்படியோ இரண்டாயிர ஆண்டு கடந்தும் மறவாமல் கண்ணகியின் கதையைத் தெருக் கூத்தாகத் தொடர்ந்து நடத்திவந்தனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது. சிலம்புடன் மறுமலர்ச்சிக்குரிய தொடர்பு சிலப்பதிகாரத்தின் முதல் பதிப்பு வெளிவந்தது 1892-ல்தான். அதை அருமுயற்சியால் வெளிக்கொணர்ந்தவர் முனைவர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள். அப்பதிப்பு மீண்டும் 1920, 1927, 1944, 1950 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து மறு பதிப்புகளாக வெளிவந்தன. நான்காம் பதிப்புக் காலத்துக் குள்ளே வேறு வேறு உரைகள் தாங்கிய பதிப்புகள் - நாவலர் வேங்கடசாமி நாட்டார் (ஆக°டு 1942, மார்ச்சு 1947, மார்ச்சு 1950), தமிழகப் பெரியார் ஆர்.கே.சண்முகம் (புகார்க் காண்டம் செப்டம்பர் 1946) ஆகியவர்கள் உரைப் பதிப்புகளும் வெளிவந்தன. சிலப்பதி காரத்தின் செல்வாக்கு வளர்ந்த வளர்ச்சியின் விசையினை இப்புள்ளி விவரங்கள் காட்டும். இவற்றுடன் சங்க இலக்கியப் பகுதிகளிலே முற்பட வெளியிடப்பட்ட புறநானூறு, பத்துப் பாட்டு ஆகியவற்றின் பதிப்பு விவரங்களை ஒப்பிட்டுக் காணுதல் பயன்தரக்கூடும். புறநானூற்றின் பதிப்புகள் 1884, 1923, 1935, 1936 ஆகிய ஆண்டுகளிலும் பத்துப்பாட்டு 1889, 1918, 1931 ஆகிய ஆண்டுகளிலும் புதுப்பிக்கப்பட்டன. சிலப்பதிகாரத்துக்கும் மறுமலர்ச்சிக்கும் உள்ள தொடர்பை இப்புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டும். ஆனால், இவைகூட அதை முழுவதும் விளக்க மாட்டா. ஏனென்றால், சிலப்பதிகாரம் வெளிவந்த பின்பும் தமிழக அரசியல் நிலை, கல்வி நிலை ஆகியவற்றைப் பொறுத்தே சிலப்பதிகாரம் படிப்படியாக மக்கள் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இந்நிலைகளின் விளக்கமே மறுமலர்ச்சியின் விளக்கமும் வரலாறும் ஆகும். மேலை நாட்டு அறிஞர் ஊழி திராவிட ஒப்பியல் மொழிநூல் இயற்றி மாளாப் புகழ் எய்திய மேலை நாட்டுத் திராவிட மொழி அறிஞரான டாக்டர் கால்டுவெல் சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் வெளி வருமுன் வாழ்ந்தவர். ஆனால், அவற்றின் முதல் பதிப்புகள் வெளி வந்த பின் தமிழ்ப் பணி, தமிழ் இலக்கியப் பணிகளில் முனைந்தவர் டாக்டர்.ஜி.யூ.போப். அவர்கூடத் திருக்குறள், நாலடியார், திருக்கோவையார் ஆகிய நூல்களைத்தான் முழுதும் ஆராய்ந்து போற்ற முடிந்தது. சிலப்பதிகாரம் அவர் கண்களைக் கவரவில்லை. பழைமை ஆராய்ச்சி அறிஞராகிய இவர்கள் சிலப்பதி காரக் காலத்தை அறியாது இருந்ததே அதில் அவர்கள் கவனம் செல்லாததற்கு ஒரு காரணமாய் இருந்திருக்கக்கூடும்; அது திருக்குறள், நாலடியார், திருக்கோவையார் ஆகிய வற்றுக்குப் பிற்பட்ட ஓர் அணிமைக்கால நூல் என்று அவர்கள் எண்ணி இருக்கக்கூடும். ஒரு நூலின் பெருமையைக் காலம் அளந்துவிடாது. பழைமை மட்டுமே அழகு தாராது. சிலப்பதிகாரத்தின் அருமை பெருமைகள் அது பாரதி காலத்ததாக, பாரதிதாசன் காலத்ததாக இருந்தால்கூடக் கெட்டுவிடமாட்டா. எனவே, பழைமைப்பற்று அற்ற இலக்கிய நுகர்வாளர்களாவது அதைப் போற்றிப் பாராட்ட முன் வந்திருத்தல் வேண்டும். ஆனால், இந்நிலையும் ஏற்படவில்லை. இரண்டாம் பதிப்பின் ஆண்டு (1920) இதைக் காட்டுகிறது. முதற்பதிப்பு கழித்து 28 ஆண்டுகள் வரை சிலப்பதிகாரத்துக்கு மறு பதிப்புத் தேவைப்படவில்லை. அறிதுயில் காலம் முதற்பதிப்பு வெளிவந்த பின்னும் சிலப்பதிகாரம் செல்வாக்கு அடையாததன் காரணம், அல்லது காரணங்கள் என்ன? முதலாவதாக, எடுத்த இடமெல்லாம் காமச்சுவையே மலிந்த நைடதம் போன்ற நூல்கள் - பத்திப் பாசுரங்கள் - இராமாயண பாரதங்கள் - கம்ப ராமாயண - பெரிய புராணங்கள் ஆகியவற்றுக்குள் புலவர்களும் மக்களும் சிறைப்பட்டு அமுங்கிக் கிடந்த காலம் அது! இரண்டாவது காரணம், அனைத்திந்திய இயக்கமாக, காங்கிரசு தேசிய இயக்கமும் அனைத்துலக இயக்கமாகிய பிரமஞான இயக்கமும் தலையோங்கி நின்ற காலம் 20ஆம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளே. இரண்டு இயக்கத் தலைவர்களுக்கும் இயக்கங்களுக்கும் தமிழ் புறம்பானது. தமிழ் இலக்கியமோ அவர்களுக்கு எட்டாக் கனி. எட்டினாலும் வேண்டா வெறுப்புக்குரியது. அவர்கள் கருத்தார்வங்களையும், கனவார்வங்களையும், அவா ஆர்வங்களையும் தூண்டிய நாடு, மொழி, பண்புகள் வேறு. மக்களைத் தமிழகம், தமிழ், தமிழ்ப் பண்பு ஆகியவற்றின் திசையில் நாடாமல் வேறு திசைக்கு இழுத்தடித்துச் சென்றன அவ்வியக்கங்கள்! மூன்றாவது காரணம் கல்வித் துறையின் சூழ்நிலை பற்றியது. ஆங்கிலக் கல்வியில் வங்கத்தைத் தாண்டித் தமிழகம் குதித்தோட முயன்ற காலம் அது. சென்னைப் பல்கலைக் கழகம் அப்போட்டியில் முனைந்து முன்னேறிற்று. ஆங்கிலக் கல்வி பெருகிற்று, அதுவும் ஆட்சிப் பிடியில் இருந்த அதிகார மக்க ளிடையேதான் பெரிதும் வளர்ந்தது. ஆங்கிலக் கல்வி முறையில் இன்றிருக்கும் அளவில் பத்தில் ஒரு பங்குகூட அன்று கல்லூரியிலோ, உயர்நிலைப் பள்ளிகளிலோ தமிழ் கிடையாது. இருந்த சிறிய அளவில்கூட அதைப் பயன்படுத்த இன்று தமிழகத்தில் எழுந்துள்ள புதிய பல்கலைக்கழகப் புலவர் கூட்டம் அன்று தோன்றவில்லை. பல்கலைக்கழகத்தில் புலவர் தேர்வுத் திட்டம் வாராத காலம் அது. அத்திட்டம் வந்த பின்னும் தமிழரிடையே ஒரு பெருங்கிளர்ச்சியினாலேயே அது தனித் தமிழ்த் திட்டமாக (7-டி பிரிவாக) அமைந்து தமிழ் வளர்ந்தது. இத் திட்டம் இன்னும் தமிழகத்தில் தமிழ்க்கு மட்டும்தான் உண்டு-பிற திராவிட மொழிகளுக்கோ, ஏனைய தாயக மொழிகளுக்கோ இன்றும் இல்லை - அது பற்றி மற்ற எந்த மொழி மக்களும் கவலைப்படவில்லை; கனவுகூடக் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இம் மூன்று இடையூறுகளால் சிலப்பதிகாரம் வெளி வந்தும் உயிர் பெறாது இருந்தது. பொது மக்கள் பாசுரங்கள், வடமொழிப் புராணங்களின் கதைக் கச்சேரிகளில் ஈடுபட்டனர். அந்நாளைய பட்டம் இல்லாப் புலவர்களுள் சிலர் - செல்வக் குடியில் பிறந்து சீரான வாழ்வுக்கு வழியுடைய சிலர் - கம்ப ராமாயணமோ, பெரிய புராணமோ பாடி மகிழ்ந்திருந்தனர். தமிழகம் அன்று தூங்கவில்லை - தூக்கத்தில் கனவுகள் எழக்கூடும். அவர்கள் அறிதுயிலில் அயர்ந்தனர் - அயல் பண்பாட்டில் மகிழ்ந்து தமிழ்ப் பண்பை மறந்திருந்தனர். இந்நிலையில்கூட அறிஞர் பேராசிரியர் மனோன் மணீயம் சுந்தரனார், செயற்கரிய செம்மல் டாக்டர் நடேசனார் ஆகியவர்கள் காலங்கடந்து தமிழ் பற்றிய கனவுக்காட்சிகள் கண்டனர். கவிஞர் பாரதியார் கனவில் இளங்கோவே தோன்றியதுண்டு. ஆனால், அவர்கள் கண்டதை அவர்கள் காலத் தமிழர்கள் காணவில்லை. தமிழ் அறிவுத் துறைத் தலைவர் மறைமலை அடிகளும், தமிழ் மறுமலர்ச்சியின் தந்தை, கலைத் துறைத் தலைவர், சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை அவர்களும் தமிழ் வாழ்வில் இடம் பெறும்வரை, புதிய தமிழக இயக்கங்கள் எழும்வரை, அத்தலைவர்களுக்காகவும் அவ் இயக்கங்களுக்காகவும் காத்துக்கொண்டு, தமிழினத்தின் கருவிலே சிலப்பதிகாரமும் மறுமலர்ச்சியும் தூங்கிக் கொண்டிருந்தன. தமிழ் வாழ்க தமிழ் இலக்கியமாகிய மேட்டு நிலத்திலே சங்க கால இலக்கியம் ஒரு பாரிய மலைத்தொடர். அதன் உயர மிக்க கொடு முடிகள் திருக்குறளும், தொல்காப்பிய மும், சிலப்பதிகாரமுமே ஆகும். திருக்குறளையும் தொல்காப்பியத்தையும்விடச் சிலப்பதிகாரக் கொடுமுடி உயரம் குறைந்ததே யானாலும், அவற்றில் தவழாத முத்தமிழ் “மாமுகில்”கள் அதில் தவழ்கின்றன. தவிர அதன் பாறைகள் திருக்குறள் தொல்காப்பியக் கொடு முடிகளைத் தாண்டி உயர்ந்து நின்ற பல பெருங் கொடு முடிகளின் சின்னங்களைத் தம்மகத்தே கொண்டுள்ளன. மின்புயல்களால் சிதறுண்ட அக்கொடுமுடிகள் தலை சாய்ந்து, உயரத்தில் சற்றுக் குறைந்தாலும், பண்பில் மற்றைய எல்லாக் கொடு முடிகளையும்விட உயர்வு உடையதாகவே காணப் படுகிறது. சிலம்புச் செல்வத்தின் இச்சீரிய வளப்பத்தை இருபதாம் நூற்றாண்டின் மூன்றாவது பத்தாண்டிலிருந்து ஓங்கி வளர்ந்த தமிழிசை இயக்கக் காலத்திலிருந்து தமிழகம் உணரத் தலைப்பட்டுள்ளது. ஆயினும், முழுச்சிறப்பையும் தமிழகம் இன்னும் உணரவில்லை. வருங்காலம் அதை உணர்விக்கவல்லது எனலாம். தனித்தமிழ் இயக்கம் மறைமலை அடிகளார் சங்க இலக்கியத்தில் கருத்துச் செலுத்தி, மாணவரிடையேயும் மக்களிடையேயும் அவற்றின் இயற்கை வழுவாத கலைப் பண்பினை ஒளி பரப்பினார். அவரது முல்லைப் பாட்டு ஆராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி ஆகிய தெள்ளிய தீந்தமிழ் ஆராய்ச்சி நூல்களும், அவற்றுடன் தொடர்புடைய சாகுந்தல ஆராய்ச்சியும் மாணவர் உலகில் கவிதை பற்றிய எண்ணங்களில் புரட்சி தூண்டின. அத்துடன் சமயத் துறையில் அவர் ஆரிய மத மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் பகுத்தறிவு ஒளி பரப்பினார். சாதிக் கருத்துகளைப் பரப்பும் பிற்கால ஏடுகள் அனைத்தையும் - அவை சைவ ஏடு களாக இருந்தால்கூட - அவர் சாடினார். ஆனால், இவற்றா லெல்லாம் மொழி உணர்ச்சி, அறிவு மலர்ச்சி ஏற்பட்டதே யொழிய கலைமலர்ச்சி ஏற்படவில்லை. அடிகள் சமயவாணராகவும் கலைஞராகவும் அறிஞராகவும் விளங்கினார். ஆனால், அறிவே மூன்றிலும் முனைப்பாய் இருந்தது. கலை அவர் உள்ளத்தில் இரண்டாம் இடமே பெற்றது. எனவேதான் தனித்தமிழ் இயக்கத் தந்தையாகிய அவர் மறுமலர்ச்சிக்குத் தூண்டுதலாக இருந்தாரே தவிர, மறுமலர்ச்சியின் நேரடித் தந்தையாக இயங்கவில்லை. தனித்தமிழ் ஊழி தாண்டி மறுமலர்ச்சி ஊழியிலும் அவர் வாழ்ந்தார். வாழ்ந்து மறுமலர்ச்சிக்குத் தூண்டுதல் தந்தார். மறுமலர்ச்சிக்கு வாழ்த்துரைத்து, அதன் வளர்ச்சி கண்டு தம் “நைந்த” உள்ளத்திலும் உள்ளூர மகிழும் அறிவார்ந்த தலைவராக மட்டுமே அவர் இயங்கினார். ஆர்வக் கவிஞர் தனித்தமிழ் ஊழிக்கு முற்பட்டே மறுமலர்ச்சி ஆர்வம் கொண்ட கவிஞர் பாரதி, மற்ற ஏடுகளின் பெருமையைப் போலவே, சிலம்பின் பெருமையை அவர் அறிந்து சுவைத்திருந்தார் என்பதை அவர் பாடல்கள் காட்டுகின்றன. ‘யாம் அறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவன்போல், இளங்கோவைப்போல் பூமி தனில் யாங்கணுமே கண்டதில்லை.’ ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு’ என்ற தொடர்கள் இதை மெய்ப்பிக்கின்றன. சிலப்பதிகாரம் வெளிவந்தும் அதன் தேனினும் இனிய தீஞ்சுவைப் பண்ணைத் தமிழகம் கேளாத அந்த நாளிலேயே, அவர் அதைக் கேட்டார், அதில் ஈடுபட்டார் என்பதை நாம் காண்கிறோம். அதன் ஆற்றலை அவர், கம்பர், வள்ளுவர் ஆகிய இருவர் செவ்விகளுடன் இணைத்துக் கண்டார். இது காலங்கடந்த உணர்வு, கவிஞனின் வருங்காலக் கனவுணர்வு என்பதில் ஐயமில்லை. ஆயினும் பாரதியார் பாடலில் இப்பண்பைத் தமிழர் கண்டு நுகர்வது இன்றுதான் - நம் மறுமலர்ச்சிக் காலத்தில்தான் - பாரதியார் காலத்தில் அது வெறும் உபசாரப் புகழ்ச்சியாக மட்டுமே அமைந்திருந்தது. அத்துடன் சிலப்பதிகாரத்தைப் புகழ்ந்த கவிஞர் அதன் கதையை -சொற்களை - பண்புகளை எடுத்தாளவில்லை. புகழ்ச்சி வெறும் புகழ்ச்சியாகவே நின்றது. அவர் ஈடுபட்ட கதை, அவர் கவிதைக்குத் தூண்டுதல் தந்த காவியப் பின்னணி சிலம்புக் கதையோ, தமிழகப் பின்னணியோ அன்று. இராமன் கதை, கண்ணன் கதை முதலிய பிறநாட்டு, பிறமொழிக் கதைகள், பிறநாட்டு பிறமொழிப் பின்னணிகளிலேயே அவர் முழு ஈடுபாடு கண்டார். இராமாயண, பாரத ஆராய்ச்சி மறைமலை அடிகளின் தனித்தமிழ்க் கண்ணோட்டத்தையும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தையும் இராமாயண பாரதங்களின் மீது பரவி ஓடவிட்ட பெருந்தலைவர்கள் நாவலர் பெருந்தகை சோமசுந்தர பாரதியாரும், சொற்செல்வர் இரா.பி.சேதுப் பிள்ளையுமே ஆவர். கம்பரும் வில்லிப்புத்தூராரும் வடவர் கதைகளின் பின்னணியாகத் தரும் தமிழ்ப் பலகணிகளைத் திறந்து வைத்து, அவற்றின் மூலமாக அவர்கள் அந்நூல்களின் சிறைக் கூடத்துக்குள்ளேயே தமிழ்த் தென்றலைப் பாயவிட்டு, தமிழ் வாழ்வையும் அறிவையும் வளர்த்தார்கள். நாவலரின் நுண்ணறிவுடன் சொற்செல்வரின் கலைநயம் இழைந்து சிலப்பதிகாரத் தமிழ்க்கு ஏணி வைத்தது. சிலப்பதிகாரத்தின் இரண்டாம் பதிப்பு முதன் முதலாக நாட்டில் எழுந்து வந்த புத்துணர்ச்சியைப் பயன்படுத்திற்று. இரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் ‘சிலம்புச் செல்வம்’ என்ற கலையாராய்ச்சி நூல் சிலப்பதிகாரத்தின் காலம், சிறப்பு, பண்புகள் ஆகியவற்றில் தமிழ்ப்புலவர் உள்ளங்களையும், தமிழ் இளைஞர் நங்கையர்களின் கவனத்தையும் திருப்பிற்று. அத்துடன் சிலப்பதிகார வகுப்புகள், இளங்கோ மன்றங்கள் அன்றிலிருந்து இன்றுவரை பெருக்கமடைந்து வருகின்றன. கம்பராமாயணமும் சிந்தாமணியும் கம்பராமாயணத்தில் ஈடுபட்டவர்களுக்குச் சீவகசிந்தா மணியின் சுவை எவ்வளவு புதிதோ, அவ்வளவு சுவை இரண்டிலும் ஈடுபட்டவர்களுக்குப் பெருங்கதையிலும் சிலம்பிலும் புத்தம் புதிதாகத் தோற்றமளிக்க வல்லது. கம்பரிடம் சொற்சுவை காணலாம். பொருட்சுவை காணலாம். ஆனால் இரண்டும் பாமர மக்களிடமிருந்து தொலைவானவை. புலவர் விளக்க விளங்குபவை அவை-அதுவும், புலவர்களுக்கே விளங்கிய பின்பும், அவை கவிஞர் திறம், விளங்கும் ஆசிரியப் புலவர் திறம் ஆகியவற்றைக் காட்டுபவை யாக அமையுமே அல்லாமல், இயற்கையோடு இசைந்த கலைஇன்பம் பயப்பவை ஆகமாட்டா. கலைத் துறையில் ஒரு சிறந்த வழக்குரைஞராகவும் சுவையுணர்வாளராக வும் விளங்கிய ஒரு டி.கே.சிதம்பரனார் தம் வாழ்நாள் முழுவதையும் மக்கள் உள்ளத்தைக் கம்பநாடகத்தில் ஈடுபடுத்துவிப்பதில் செலவிட்டபின்னும்கூட அது பொது மக்கள் உள்ளத்தில் உலவ மறுத்தே வருகிறது என்பது கண்கூடு. கம்பர் விழாக்கள், கம்பர் கழகங்களால் இந்நிலையை மாற்றி அமைக்கக் கூடவில்லை. கலைப்பண்பு மேதை டி.கே.சி., இரா.பி.சே. ஆகியவர்கள் நீங்கலாகக் கம்பநாடகப் பண்பு கண்ட தமிழர் கம்பர் கழகங்களில் இல்லாதிருப்பது இந்நிலைக்குரிய காரணங்களுள் ஒன்று எனலாம். அத்துடன் தனிப்பாடற் சுவையன்றி, கோப்பாக நூற்சுவை கம்ப ராமாயணத்தில் அமையாதிருப்பது மற்றுமொரு தனிக்காரணமாகும். கம்பராமாயணத்தைவிட எளிதாகக் கேட்பவர்களைக் கேட்கும்போதே இயக்கவல்லது சிந்தாமணி. அதன் சொற்சுவை கம்பரை மட்டுமன்றி எம்மொழிப் புலவரையும் தாண்டிச் செவிவழி சென்று சித்தத்தை மயக்கி இயக்கும் ஆற்றல் வாய்ந்தது. ஆனால், அந்நூலின் சொற்சுவை எளிது; பொருட்சுவை ஆழமானது. தித்திப்புப் பூச்சினுள் செறிந்த வைரத்துண்டங்கள் சிந்தாமணிப் பாடல்கள். பத்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் அதற்கிருந்த செல்வாக்கைக் கண்டு தனித் தனி புழுக்கமுற்ற பல குழுவினர் அப் புழுக்கத்தின் பயனாகவே கம்பராமாயணமும் பெரியபுராணமும் தோற்றுவித்தனர் என்பதையும், அவற்றாலும் முழு வெற்றி காணாமல் பின்னும் கந்தபுராணம், திருவிளை யாடற் புராணம் முதலியவற்றில் ஈடுபட்டுப் போட்டியை வளர்த்தனர் என்பதையும் இன்று நாம் எளிதில் உணர முடிகிறது. இறுதியில் அவர்கள் போட்டியில் வென்றுள்ளனர் - ஆனால், இது கலைப் போட்டியில் அல்ல, சமயப் போட்டியிலேயே, சிந்தாமணி மக்களிடையே வழங்காமல், புலவர்களிடையே கூட அருங்கலச் சிந்தாமணியாய் இருப்பதனாலேயே, கம்பராமாயணமும் பெரிய புராணமும் ‘கேள்வி’ அளவிலாது தனிப்பெரு நூல்களாக இயங்குகின்றன. பெருங்கதை - பேய்மொழி மூலநூல் - ‘ஆதி கவி’கள் கம்பராமாயணத்துடனோ, சிந்தாமணியுடனோ நேரடியாகப் போட்டியிட வல்ல நூலன்று, பெருங்கதை! ஆயினும், அவ்வேடுகளில் காண முடியாத பல அரும் பண்புகளின் சேமக்கலமாய் அஃது அமைகின்றது. அன்றியும் அந் நூல்களிலிருந்து சிலம்புச் செல்வத்துக்கு ஏறிச் செல்வதற்கான ஒரு படியாகவும் அஃது அமைந்துள்ளது. தமிழகத்திலும் சரி, தமிழகத்துக்கப்பால் பரந்த கீழை நாடுகளிலும் உலக முழுவதிலும் சரி, இராமாயண பாரதங்கள் செல்வாக்குப் பெறுவதற்கு முன்பே, முதற்பெரும் செல்வாக்கும் மக்கட் பெரும்புகழும் உடைய நூல் பெருங்கதையே ஆகும். இது தமிழிலும் சமற்கிருதத்திலும் உலக மொழிகள் பலவற்றிலும் அக்காலத்திலேயே மொழிபெயர்த்தும் தழுவப்பட்டும் பரவிய ஒரு மாபெரிய ‘தாய்மொழிக் காவியமா’கும். தொடக்கத்தில் பெருங்கதை எந்த மொழியில் எழுதப்பட்டதென்பதே நமக்குத் தெரிய வரவில்லை - முதனூல் மட்டுமன்றி அதன் மொழியும் இன்று தடமற்று அழிந்து போய்விட்டது. ஆனால், முதனூலாசிரியர் ‘குணாட்டியர்’ என்ற பண்டைப் பெரும் புலவர். அவர் எழுதிய மொழி ஆரிய அறிஞர் மரபில் ‘பேய் மொழி’ அல்லது ‘பிசாசு மொழி’ எனப்படுகிறது. இன்று சமற்கிருதவாணர் வால்மீகியை ‘ஆதிகவி’ என்று கூறுவதுபோல, வால்மீகி காலத்திலும் அதற்கு முன்னும் இந்தக் ‘குணாட்டியரே’ ‘ஆதிகவி’ என்ற அரும்புகழ் உடையவராய் இருந்தார். பகவத் கீதையில் ‘கவிஞரிடையே நான் உஷனாகவி ‘ (கவீநாம் உஷநாகவி:) என்ற முறையில் புகழப்பட்ட உலக முதற் கவிஞர் இவரேயாவார். குணாட்டியர் நூலின் ஒரு பகுதி தழுவிய தமிழாக்கமே கொங்குவேளிர் இயற்றிய ‘தமிழ்ப் பெருங்கதை’. சமற் கிருதத்திலும் இதுபோல ‘பிருகத் கதா’, ‘பிருகத்கதா மஞ்சரி’, ‘கதா சரித் சாகரம்’ முதலிய பெயர்களால் பல அரைகுறை மொழிபெயர்ப்புத் தழுவல்களும் திரிதல்களும் எழுந்துள்ளன. சேக்கிழார் நூல் ‘பெரியபுராணம்’ என்று பெயர் பெற்றுள்ளது. கம்பர் தம் காவியத்தை ‘மாக்கதை’ என்றே குறிப்பிடுகிறார். பாரதம் ‘மகாபாரத’மென வழங்கப்படுகிறது. இப்பெயர்கள் ‘பெருங்கதை’யின் மரபில் வந்த பெயர்கள். பெருங்கதையின் புகழுடன் போட்டியிட்டு அதைத் தனதாக்கும் முயற்சியில் எழுந்த பெயர்களே இவை. பெருங்கதையும் முத்தொள்ளாயிரமும் சிலப்பதிகாரத்தின் தனிப் பண்புகளைப் பிரித்தெடுத்து உணர்த்துவதனால், அதனுடன் நெருங்கிய உறவுடைய இரு நூல்களின் பண்புகளை ஒருங்கு இணைத்துக் காணுதல் வேண்டும். ஒன்று தமிழ்க் கொங்குவேள்மாக் கதை. மற்றொன்று முத்தொள்ளாயிரம். இரண்டும் நமக்கு முழு நூல்களாகக் கிட்டவில்லை - இரண்டும் அரைகுறைகளே. ஆனால், கம்பர் காவியம், சிந்தாமணி ஆகிய முழுநூல்களில் காணப்பெறும் ‘முழுமை’யைவிட இத்துண்டு நூல்களில் காணப்படும் ‘முழுமை’ முனைப்புடையதே. பெருங்கதையில் சொல்வளம், வருணனைச் சிறப்பு, பாரகாவியப் பண்பாகிய வீறுடைமை ஆகிய கூறுகளைக் காணலாம். இவை திருமலை நாயக்கன் மஹாலைக் காண்பவர்கள் உள்ளத்தில் ஏற்படும் வீறியல் உணர்ச்சியை நமக்குத் தருவன. ஆனால், முத்தொள்ளாயிரத்தில் இயற்கை எளிமை, ஷெல்லி, கீட்° போன்ற ஆங்கிலக் கவிஞரின் மேன்மை, தேனினிமை ஆகியவற்றைக் காண்கிறோம். அதன் விழுமிய ஓசை நயத்தில் நாம் பண்டைத் தமிழகத்தின் மறைந்த மாயக் கவிதைக் கலையின் மர்மத்தை ஓரளவு நுகர்கிறோம். ‘வெண்பாவில் புகழேந்தி’ என்ற இடைக்காலப் பழமொழியைப் பொய்யாக்கும் மாய வெண்பா இசை இங்கே நம் கருத்தைக் கவர்கிறது. பெருங்கதை, முத்தொள்ளாயிரம் ஆகிய இரண்டு நூல்களின் சிறப்புகளையும் ஒருங்கே கொண்ட - பாரகாவியப் பண்புடன் யாழிசையையும் இழைய விட்ட கலைச்செல்வம் சிலப்பதிகாரம். சிலம்பு நாடகமும் கம்ப நாடகமும் ஆனால், சிலப்பதிகாரம் காவியமன்று, நாடகம். அதன் உயர் சிறப்பு இதுதான். அது நாடகக் காப்பியம்கூட அன்று. காவியத்தில் நாடகச் சுவை எழப் பாடப்படுவதே நாடகக் காப்பியம். இத்தகைய சுவை தமிழகத்தில் சிலப்பதிகாரக் காலத்திலிருந்து கம்பர் காலம் வரை நீடித்திருந்தது. கூர்ந்து கவனிப்பவர் அச்சுவையைக் கம்பராமாயணத்தில்கூடக் காணலாம். நாடகச் சுவை அழிந்துபட்ட தமிழகத்திலே நாம் கம்பராமாயணத்தைக் காவியமாக மட்டுமே நுகர்ந்து வந்திருக்கிறோம். ஆனால், மலையாள நாட்டார் 12ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டு வரை ‘கம்பராமாயண நாடகம்’ என்ற பெயரால் அதை நாடகமாகவே நடித்து வந்தனர் என்று மலையாள நாட்டு அறிஞர் கூறுகின்றனர். உண்மையில் 12ஆம் நூற்றாண்டுவரை சிலப்பதிகாரத்தை நாடகமாக நடத்தி வந்த மலையாள நாட்டு நடிகர் குழாம் புதிய கம்ப ராமாயணத்தையும் அதே முறையில் அமைத்து நாடகமாக நடிக்கத் தொடங்கினர் என்று தோன்றுகிறது. பண்டைத் தமிழகச் சிலம்பின் பண்பு அதே தமிழகத்தில் தோன்றிய கம்பர் காவியத்திலும் பின்னணியில் - மறைந்திருந்ததை மலையாள மக்கள் கண்டுணர்ந்தனர் - தமிழகம் இரண்டையும் இனித்தான் கண்டுணருதல் வேண்டும். சிலம்பின் நாடகப் பண்பு - பெறும் புகழுரை புனைந்துரை அல்ல-அஃது உண்மையில் நாடகமே. கீழை நாட்டு நாடகக் கலையின் தலையூற்றே என்பதை நாடக இலக்கிய வரலாறு - கீழை உலக மேலையுலக நாடக இலக்கிய வரலாறு தெள்ளத் தெளியக் காட்ட வல்லது. அவ் வரலாறுகளைத் துருவிச் சிலம்பின் நாடகப் பண்பு காண முனைவோம். தமிழ் போன்ற தனி மொழிகளின் இலக்கியமே கடல் போன்றது. உலக இலக்கியமோ கடல்கள் அடங்கிய மாக்கடல் - வெளி மாகடலாகிய வானவெளி, அண்டவெளி போன்று எல்லையற்றது. இந்த உலக இலக்கியத்திலே காவியம், உணர்ச்சிக் கவிதை, வசை இலக்கியம், புனைகதை, நாடகம், சிறுகதை, கட்டுரை முதலிய எத்தனை எத்தனையோ இலக்கியத் துறைகள் செழித்தோங்குகின்றன. ஒவ்வொரு மொழியும் இவற்றுள் ஒன்றும் பலவும் வளர்த்துப் பீடு பெறுகின்றன. கலைகளில் சிறந்தது இலக்கியம். இலக்கியத் துறைகளில் சிறந்தது நாடகம் என்று பண்டைத்தமிழர் கருதினர். முத்தமிழில் அதைத் தனித் துறையாக, மற்ற இரண்டும் உள்ளடக்கிய உயர் துறையாக அவர்கள் வகுத்திருந்தனர். சமற்கிருதவாணரும் அதே கொள்கையுடையவராகவே இருந்தனர் என்று அறிகிறோம். ‘காவியங்களுள் சிறப்புடையது நாடகக் காப்பியம்’ (காவ்யேஷீ நாடகம் ரம்யம்) என்பது சமற்கிருதக்கலைவாணரிடையே வழங்கும் ஒரு பழம் பாடல் தொடர் ஆகும். இக் கருத்தை அவர்கள் செயலிலும் காட்டத் தவறவில்லை. சமற்கிருத இலக்கியத்தில் ஒரு மாபெரும் பகுதி நாடகமேயாகும். சமற்கிருதக் கலைஞர், கலையாராய்ச்சியாளர் காவியங்களில் காட்டிய அக்கறையைவிட நாடகங்களில் காட்டிய அக்கறையே மிகப்பெரிது. நாடகங்களும் சமற்கிருத இலக்கியத்தில் மிகப்பல. மிக உயர்ந்த பண்புகளும் உடையவை. உலக நாடக இலக்கியம் : மூன்று மொழி மரபுகள் உலக இலக்கியத்தில் நாடக இலக்கியத்தின் இடம் பெரிது. ஆனால், அதன் அளவு பெரிதன்று. உலக நாடக இலக்கியத்தில் இடம் பெறத் தக்க அளவு உயர்ந்த, பேரளவான நாடகக் கலைகள் வளர்த்த மொழிகள் ஒரு சிலவே. பல நாடுகளில் மக்களிடையே நாடகக் கலைக்கு மிகுந்த செல்வாக்கு இருந்து வந்துள்ளதானாலும், அது பெரும்பாலும் இலக்கியத் தொடர்பும் மக்கள் தொடர்பும் அற்ற பணம் திரட்டும் தொழிலாகவேதான் இன்று வரை நடைபெற்று வருகின்றது. இலக்கிய முறையிலே கலை நாடகம் வளர்த்த பெருமையுடைய மொழிகளுள் சிறந்தவை ஆங்கிலம், பிரெஞ்சு, °காண்டினேவியா, கிரேக்க இலத்தீன் மொழிகள், சமற்கிருதம், சீனம், ஜப்பான் மொழி ஆகியவையே. இவற்றுள்ளும் தலைமை நிலையும் முதன்மை நிலையும் உடைய மொழிகள் மூன்றே மூன்றுதாம் - ஆங்கிலம், கிரேக்கமொழி, சமற்கிருதம் ஆகியவையே. ஆங்கில நாடக இலக்கியம் வளர்த்த நாடகாசிரியர்கள் பலர்-ஆனால், உலக நாடகத்தில் இடம் பெறத்தக்க நாடகங்கள் ஷேக்°பியரின் நாடகங்களே. அவர் இயற்றிய முப்பதுக்கு மேற்பட்ட நாடகங்களில் உலக அரங்கிலே பத்துக்கு மேற் பட்டவை இடம் பெறத்தக்கன. கிரேக்க நாடகங்கள் வீறியல் அல்லது துன்பியல் நாடகங்கள் (கூசயபநனநைள) என்றும், இன்பியல் அல்லது களிநாடகங்கள் (ஊடிஅநனநைள) என்றும் இரு பிரிவுகளாக இயன்றன. ஒவ்வொரு பிரிவிலும் மூன்றுக்குக் குறையாத தலைசிறந்த நாடகக் கலைஞர்கள் தலைசிறந்த பல நாடகப் படைப்புகள் ஆக்கித் தந்துள்ளனர். அவற்றுள் பெரும்பாலானவை உலக நாடக இலக்கியத்திலே நிலையான இடம் பெறத்தக்கன. நாடக இலக்கியத்திலே சமற்கிருத மொழியின் சிறப்பு மற்ற இரு மொழிகளையும் தாண்டியது என்பதற்கு ஐயமில்லை. ஏனென்றால், உலகின் தலைசிறந்த நாடகக் கவிஞர் வரிசையில் சமற்கிருதத்துக் கவிஞர் தொகையும் பெரிது. அதுபோல் உலகின் தலைசிறந்த நாடக வரிசையிலும் அதற்குரிய நாடகங்கள் பல. இன்றைய அமெரிக்க, மேலை நாட்டு நாடக அரங்குகளிலும் ஷேக்°பியர் நாடகங்களுடனும், பிரெஞ்சு கிரேக்க நாடகங் களுடனும் போட்டியிடும் பெருமை ‘சாகுந்தலம்’ ‘மண்ணியல் சிறுதேர்’ (மிருச்சகடிகம்) முதலிய சமற்கிருத நாடகங்களுக்குக் கிட்டியுள்ளன. நான்காம் மரபு : தமிழ் - மலையாள நாடகக் கலை இம்மூன்று நாடக மரபுகளையும் ஒப்பிட்டு ஆராய்ந் தவர்கள் ஒரு விசித்திர உண்மையை நமக்குத் தெரிவிக்கின்றனர். மேனாட்டு நாடக மரபில் கிரேக்க மரபே ஐரோப்பா வெங்கும் பெரிதும் பின்பற்றப்பட்டு வந்தது. பிரெஞ்சு நாடக ஆசிரியர்கள் உலக நாடக அரங்கில் முதலிடம் பெற்றவர்களே யானாலும் அவர்கள் கிரேக்க மரபைப் பின்பற்றியே கலை வளர்த்தனர். ஆகவேதான், அவர்கள் தரத்துக்கேற்ற அளவில் அவர்களது நாட்டு மொழி நாடக இலக்கிய உலகில் சிறப்புப் பெற முடியவில்லை. ஆனால், ஆங்கில நாட்டு நாடக மரபு, சிறப்பாக ஷேக்°பியர் மரபு, கிரேக்க மரபைப் பின்பற்ற வில்லை. ஆங்கில மண்ணிலேயே பிறந்து வளர்ந்த தனி மரபாக, இயற்கை மரபாக அது தனிப்பெரும் புகழ் நாட்டிற்று. சமற்கிருத நாடக மரபு மேலை நாட்டில் உணரப் பட்டபோது, அதனை அறிஞர் ஆங்கில கிரேக்க மரபுகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தனர். அது கால எல்லையிலும் இன எல்லையிலும் அருகில் உள்ள கிரேக்க நாட்டு மரபுடன் ஒரு சிறிதும் ஒவ்வாமல் இரண்டிலும் தொலைவாக உள்ள ஷேக்°பியர் கால ஆங்கில மரபுடன் ஒத்திருக்கக் கண்டனர். கிரேக்க மரபின் தனிச்சிறப்பு துன்பியல் இன்பியல் என்ற பிரிவினையே. இவை இரண்டும் கிரேக்கர் கண்களில் நாடகக் கலையின் இரு பிரிவுகளாகக் கூடத் தோற்றவில்லை. இருவேறு தனிக்கலைகளாகவே இயங்கின. ஆனால், ஆங்கில மரபில் இப்பிரிவினை இல்லை. அது போலவே சமற்கிருத மரபிலும் இப்பிரிவினை இல்லை. அருகில் இன்றி, காலத்தாலும் இடத்தாலும் தொலைப்பட்டு வேறு வேறான இந்த இரு மொழிகளும் காட்டிய ஒற்றுமை கண்டு கலையாராய்ச்சியாளர் வியப்பும் மலைப்பும் அடைந்தனர். ஆயினும், கிரேக்க மரபு இடையே கிரேக்க வாழ்வில் எழுந்த ஓர் செயற்கை மரபே என்றும், ஆங்கில சமற்கிருத மரபுகள் அச் செயற்கை மரபுக்கு முன்னும் பின்னும் வளர்ந்து பரவிய ஓர் உலகளாவிய இயற்கைப் பொது மரபே என்றும் விளக்கம் கூறி அவர்கள் ஓரளவு அமைதி கண்டனர்! தென்னாட்டின் பக்கம் உலகக் கலை ஆராய்ச்சி அறிஞர்களின் கண்கள் திரும்பக் கூடுமானால், அவர்கள் விளக்கஅமைதி சின்னபின்னம் அடைந்திருப்பது உறுதி. ஏனெனில் இங்கே, வெளியுலகம் இன்னும் விளக்கமாக அறியாத ஆனால் ‘கதைகளி’ மூலம் ஒரு தும்பு வடிவில் உலக அரங்குக்கு எட்டியுள்ள நான்காவது நாடக மரபு ஒன்று தொன்று தொட்டு இன்று வரை இயங்கி வருகிறது என்பதைக் காண்பர். இதுவே தமிழ் - மலையாள நாடக மரபு. மறைந்த பண்டைத் தமிழ் நாடக மரபின் தமிழகக் கிளை பட்டுவிட்டதாயினும், பட்டழியாத கிளையாக மலையாள நாடகமரபு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அணையா விளக்காய் நிலவுகின்றது. அடிக்கடி அணையும் நிலையில் புயலில் சிக்கி வலிகுன்றி வாடினும் பட்டுவிடாமல் அது நம் காலம்வரை தொடர்ந்து வந்து நமக்கு எட்டியுள்ளது. மீட்டும் பதிய புதிர் இந்த மலையாள மரபில் ஒரு தனித் தன்மையுண்டு. அதில் சாக்கியர் கூத்து (தமிழ், சாக்கையர் கூத்து) ஓட்டந்துள்ளல் என்ற இருவேறு வகைப்பட்ட நாடகக்கலை வகைகள் தனித்தனி வேறு வேறாக நின்று நிலவி வருகின்றன. கூர்ந்து நோக்கினால் எல்லா வகைகளிலும் சாக்கியர் கூத்து கிரேக்கத் துன்பியல் நாடகத்தை யும், ஓட்டந்துள்ளல் கிரேக்க இன்பியல் நாடகத்தையும் ஒத்திருப்பவை ஆகும். ஆங்கிலமரபும் - சமற்கிருதமரபும் இயற்கைமரபுகள் என்றனர் உலக அறிஞர். இடையே கிரேக்கமரபு செயற்கைமரபாக எழுந்தது என்று அவர்கள் கூறியமைந்தனர். இப்போலி விளக்க அமைதியைக் கேலி செய்கிறது, புதிதாக நாம் காணும் இப் பழைய தென்னாட்டு மரபு! ஏனென்றால் கால இடம் கடந்த காரணத்தால் ஆங்கில சமற்கிருத மரபுகள் இயற்கை உலக மரபுகளானால், அதுபோல, கால இடம் கடந்த காரணத்தால் கிரேக்க, தென்னாட்டு மரபுகளும் இயற்கை உலக மரபுகளே என்று ஏற்படுகிறது. இது மட்டுமன்று, உலகின் மற்றொரு கோடியில் சீன, ஜப்பானிய நாடக மரபுகள் உள்ளன. இன்னும் வேறொரு கோடியில் ஜாவா, மலாயா, இலங்கை முதலிய தென்கிழக்காசிய நாடகமரபுகள் உள்ளன. இவை கிரேக்க - தென்னாட்டு மரபுடனும் தொடர்புடையவையாய், இரண்டையும் முற்றிலும் ஒவ்வாது ஒரு சார் ஒத்து இயங்குகின்றன. ஆகவே, உலக முழுவதும் நாடக மரபு அடிப்படையில் ஒன்றே என்றும், அவற்றின் வேறுபாடுகள் வளர்ச்சி வேறுபாடுகள், சூழல் வேறுபாடுகளால் ஏற்பட்டவையே என்றும் விளங்குகிறது. அப்படியானால் காலமும் இடமும் கடந்து கி.பி.5ஆம் நூற்றாண்டுக் காலச் சமற்கிருத மரபும் 16ஆம் நூற்றாண்டுக் கால இங்கிலாந்து மரபும் ஒன்று படுவானேன்? மற்றொருபுறம் கி.மு.6ஆம் நூற்றாண்டுக்குரிய கிரேக்க மரபும் கிட்டத்தட்ட அதே காலத்திலிருந்து கி.பி.18ஆம் நூற்றாண்டு கடந்து இன்று வரை நிலவும் தமிழ் - மலையாள மரபும் ஒன்றுபடுவானேன்? இது நாடகக் கலையுலகின் ஒரு பெரும் புதிர் ஆகும். ஓர் உலகம் : ஒரே உலக மரபு உலக நாடக இலக்கிய மரபை ஒரே மரபாகக் கொண்டு அதன் வளர்ச்சியை ஆராய்ந்தால், இந்தப் புதிர்க்கு விளக்கம் காணலாம். இம்முயற்சி உலகப் புதிர் ஒன்றை விளக்குவது மட்டுமன்று, சிலப்பதிகார காலத் தமிழ் நாடகப் பண்பையும் நன்கு படம் பிடித்துக் காட்டுவதாகும். வேறு வேறு திசையில் உலகில் வளர்ந்த நாடகப் பண்புகளெல்லாம் சிலப்பதிகாரத் தமிழ் நாடக மரபிலிருந்து கிளைத்த பல்வேறு கிளை மரபுகளேயாகும் என்பது அப்போது விளங்கும். அத் தமிழ்மரபு இருவேறு வகைப்பட்ட ஆங்கில - சமற்கிருத மரபையும் கிரேக்க மலையாள மரபையும் விளக்குவதுடன், சீன - ஜப்பான், இலங்கை, மலாயா, ஜாவா மரபுகளுக்கும் நல்ல விளக்கத் தெளிவு தரக்கூடும். நாடகக்கலை எங்கெங்கே எவ்வாறு தோன்றிற்று? எப்படி வளர்ந்தது? பல நாடுகளிலும் அதன் தோற்ற வளர்ச்சி வரலாறு களை அறிஞர் ஆராய்ந்து வருகின்றனர். உலக அடிப்படையில் நாடக வரலாற்றை அறிய அவர்கள் முடிவுகள் மிகவும் பயன்படுவன. பல நாடுகளில் நாடகப் பண்புகளின் தோற்ற வளர்ச்சிகளைச் சமயவினை முறைகள், விழாக்கள் சுட்டிக் காட்டு கின்றன. இக்காரணத்தால் நாடகம் சமயத் துறையிலிருந்தே தோன்றி வளர்ந்தது என்று சிலர் கூறத் துணிகின்றனர். ஆனால், இது முற்றிலும் சரியன்று. ஏனென்றால், நாடகம் ஒரு கலை. மக்கள் வாழ்க்கையோடு ஒட்டிய கலை. இன்றுகூட அதன் வளர்ச்சியை வாழ்க்கைத் துறையிலேயே நாம் காண முடியும். சமயத்துறையில் மட்டுமன்று, இலக்கியத் துறையில்கூட நாம் அதன் உயிர் வளர்ச்சியை முற்றிலும் காண முடியாது. அதன் நிழலைமட்டுமே காண்கிறோம். இக்காரணத்தினாலேயே நாடக மேடை ஏறாதவர், மேடை அனுபவம் இல்லாதவர் எழுதும் நாடகம் நாடகக் காப்பியமாக மட்டுமே இருக்கும். மேடையில் இயங்கும் உயிருள்ள வளர்ச்சிப் பண்புள்ள நாடகமாயிராது. மிகப் பல நாடுகளில் பழைமையான நாடக இயல்பை ஆராய்ந்தவர்கள் அது நாட்டியத்துடன் மிக நெருங்கிய தொடர்புடையதென்றும், நாட்டியத்திலிருந்தே தோன்றி, அதனுடன் நெடுநாள் இயைந்தே இயங்கிற்றென்றும் கூறுகின்றனர். தமிழிலும் சமற்கிருதத்திலும் நாடகம், நாட்டியம் என்ற சொற்கள் நெருங்கிய சொல் தொடர்பும் பொருள் தொடர்பும் உடையன. புலவர் பலர் இன்றளவும் நாடகம் என்ற சொல்லை நாட்டியம் என்ற பொருளிலே வழங்கியும் வருகின்றனர். உலக நாடகப் பண்பின் பழைமை சமயத்துறையில் பல மொழி மூலங்கள், எழுத்து மூலங்கள், புதைவடிவச் சின்னங்கள் ஆகியவை உலக நாடகப் பண்பின் பழைமையைச் சுட்டிக் காட்டுகின்றன. புராணங்களில் கூற்றுவன்(இயமன்) உயிர் கொண்டேகும் தெய்வம் மட்டுமல்லன். ஆரியரின் அறக்கடவுள் அல்லது தரும தேவதை அவனே. இருக்கு வேதத்தில் அவன் காதல் கதை ஓர் உரையாடல் வடிவில் காட்சியளிக்கின்றது. இயமன்-இயமி இரட்டைப்பிள்ளைகள். அண்ணன் தங்கையர். ஆனால், இயமன் இயமியையே காதலிக்கிறான். இயமி இத்தொடர்பு தகாது என்று கூறி ஊடுகிறாள். கதை முடிவை இருக்கு வேதம் தெளிவாக்க வில்லை. ஆனால், உரையாடலின் போக்கும் பிற்காலப் புராணமும் இயமன் காதல் வெற்றியையே தெரிவிக்கின்றன. ஆரியர் நீதிக் கடவுள் தங்கையையே மணந்துகொண்டு வாழ்கிறார். சமற்கிருதவாணர் பலர் சமற்கிருத நாடகத்தின் கருமூலத்தை இந்த இருக்குவேத உரையாடலில் காண்கின்றனர். கிறித்தவர்களுக்கும் யூதர்களுக்கும் விவிலிய நூலின் பழைய ஏற்பாடு பொதுவான திருநூல் ஆகும். அதில் யோபுவின் ஏடு நாடகப் பண்பு கனிந்த கதை கூறுகின்றது. நன்மகனாகிய யோபுவின் உயர்வைக் காட்ட இறைவன் அவனுக்குத் துன்பத்தின்மேல் துன்பம் அனுப்புகிறார். துன்பத்தின் காரணம் அவன் பழம் பழிகளே என்றும், கடவுளிடம் மன்னிப்புக் கோரும்படியும் அறிஞர் சிலர் யோபுவுடன் வாதிடுகின்றனர். இறுதியில் இறைவனே அவன் துன்பங்களை அகற்றுகிறார். இருக்கு வேத உரையாடலும் விவிலியக் கதையும் மூவாயிர ஆண்டு பழைமையுடையன. இவற்றினும் ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட ஒரு நாடகப் பண்பை மொகஞ்சதாரோ முத்திரை ஒன்று காட்டுகிறது. இதில் பல விலங்குகளின் நடுவே, கொம்புகளுடன் சிவபெருமான் போன்ற தெய்வ உருவம் காட்சியளிக்கிறது. சிவபெருமான் பசுபதி, எல்லா உயிர்கட்கும் இறைவன் என்ற சைவக் கருத்தை இக்காலச் சைவர் கண்டு வியக்கும் வகையில் இது புதுவகை விளக்கம் தருகிறது. இம் மூன்றும் மனித நாகரிகத்தில் நாடகப் பண்பின் பழைமையைச் சுட்டிக் காட்டுகின்றனவேயல்லாமல், அதன் தோற்ற வளர்ச்சிகளை விளக்கவில்லை. அவற்றை விளக்க உதவும் துறை, விழாக்களே. ஆனால், விழாக்கள் சமயத்துறை சார்ந்தவை மட்டுமல்ல. சமுதாயத்துறையையும் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. விழாக்கள் காட்டும் நாடகக் கலை வளர்ச்சி இசுலாமியரின் ஒரு கிளையினரான ஷியாக்களின் பண்டிகை ஒன்று ‘ஆடு-புலி’ப் போராட்டமாக இயங்குகிறது. பாரசீகத்திலும் சிந்து கங்கை வெளியிலும் தென்னாட்டிலும் இப் பண்டிகை விழா ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதில் ‘ஆடு’ அமைந்த இனிய பண்புகளை உடைய நபிகள் நாயகத்தின் மருமகனான ‘அலி’யையும் அவர் பெயரன் ஹுசேனையும், ‘புலிகள்’ அவரை மாய்த்த அவர் எதிரிகளையும் குறிப்பவை. இம்முறையில் முன்னாள்களில் நடிக்கப்பட்ட சமய நாடக ஊர்வலம் இன்று நாடகப் பண்பு தேய்ந்து, வெறும் வேடிக்கை விழா ஆகியுள்ளது. தமிழக விழாக்களும் புராணக் கதைகளின் நாடக விளக்கமாகத் தொடங்கியவையே. சுந்தரமூர்த்தி நாயனார்க்குச் சிவபிரான் தூது சென்றது, மாணிக்க வாசகர்க்காக அவர் மண் சுமந்து அடிபட்டது ஆகிய காட்சிகள் விழாக்களில் நாடகப் பண்பு மிகுதியுங் கெடாமல் இன்றும் நடிக்கப்பட்டுவருவது காணலாம். உயிருள்ள நடிகர்க்குப் பதிலாக, சில சமயம் புரோகிதரும், சில சமயம் உருவங்களும் இங்கே பயன்படுத்தப் படுகின்றன. கத்தோலிக்க விழாக்களில் நாடகப் பண்பு இன்னும் முனைப்பாகத் தெரிகின்றது. ஊர்வலமாக வரும் ஒவ்வோர் உருவமும் இன்னும் இயேசுவின் வாழ்வில் ஒரு காட்சியை நினைவூட்டவல்லது. ஆனால், முன்னாள்களில் உருவங்களை இழுத்துச் சென்ற சகடங்கள் உருண்டோடும் மேடைகளாய் இருந்தன என்று அறிகிறோம். உருவங்கள் இன்று உயிரற்ற பொம்மைகளாய் விட்டன. பல நூற்றாண்டுகளுக்கு முன் அவற்றிடமாக உயிருடைய நடிக நடிகையர் நடித்திருந்தனர் என்று அறிகிறோம். ஆங்கில நாடக மரபு விழாக்காட்சி நாடகங்களை ஆங்கிலத்தில் இயேசு வாழ்க்கை நாடகங்களாகிய மறை நாடகங்கள், சமயத் திருத்தொண்டர் கதைகளாகிய திருவிளையாடல் நாடகங்கள், நொடிக்கதை நாடகங்கள் என்ற படிகளாக வகுத்துக் காட்டுவர். மறை நாடகங்கள் முதலில் கோவில்களிலும் பின் ஊர்வலக் காட்சிகளிலும் காட்டப்பட்டன. கோவில் குருக்கள் நாளடைவில் இவற்றின் பொறுப்பை வணிகக் குழுக்கள் அல்லது சாத்துகளிடம் விட்டனர். மக்கள் ஆர்வமறிந்து அவர்கள் அதைப் படிப்படியாகத் திருவிளையாடல் நாடகங்கள், ஒழுக்கப் பண்பு நாடகங்கள், நொடிக்கதை நாடகங்கள் என்ற முறையில் வளர்த்தார்கள். இவையே மக்கட் கலையாக வளர்ந்து இலக்கிய வடிவடைந்து ஷேக்°பியர் கால நாடகமாக 1580-க்குள் வளர்ச்சியடைந்தன என்று அறிகிறோம். ஷேக்°பியர் கால ஆங்கில நாடகம் இங்கிலாந்தில் இயற்கையாக வளர்ந்த கலையானாலும், அதற்குக் கடைசிக் கட்டத்தில் முன் மாதிரியாக உதவியவை இலத்தீன் கிரேக்க நாடகங்களே. இவை ஷேக்°பியர் காலத்துக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முற்பட்டவை. கிரேக்க மரபு கிரேக்க நாட்டில் நாடகம் ஒரு தனி முழுக் கலையாய் இயங்கவில்லை. இரண்டு கலைகளாய் இயங்கின என்று அறிகிறோம். இரண்டும் இரண்டு தெய்வங்களின் திருவிழாக்களை ஒட்டி நடைபெற்றன என்றும் தெரிய வருகிறது. துன்பியல் நாடகம் டயோனிஷ° என்ற மலைத் தெய்வத்தின் விழாவில் நடைபெற்றது. இத்தெய்வம் நம் நாட்டுச் சிவபிரானை நினைவூட்டுவது. சிவனையும் காளியையும் போல அஃது உக்கிரமான தெய்வம். அதன் தலை ஒரு ஆட்டுத்தலை. ஆட்டுத்தலை முகமூடியணிந்து புரோகிதராகிய கிரேக்க அரங்கத் தலைவர் டயோனிஷஸாக நடித்து அவர் திருவிளையாடல்களைப் பாட்டாலும் ஆட்டத்தாலும் நடிப்பாலும் விளக்கினர். புரோகிதர் ஆட்டுத் தலையணிந்து நடித்ததாலேயே அது கிரேக்க மொழியில் ஆட்டு நாடகம் (ட்ராஜிடிக்° - ஆடு) என்ற பெயரை அடைந்தது. இதில் வீரம், கோபம், சோகம் ஆகிய உணர்ச்சிகள் இடம் பெற்றன. தேவரும் வீரரும் மட்டுமே காட்சி தந்தனர். இன்பம், நகைச்சுவை, சமுதாய வாழ்க்கைப் பின்னணி ஆகியவை இடம்பெறவில்லை. இன்பியல் நாடகம் பாக்க° அல்லது அப்போலோ என்ற தெய்வத்தின் விழாவில் நடைபெற்றது. இத்தெய்வம் நம் நாட்டின் திருமால் அல்லது காமனை நினைவூட்டுவது. இது குடிதேறலையும், களியாட்டத்தையும் விரும்பும் தெய்வம். மராத்தி நாட்டுக் கணபதி போன்றும் ஆங்கில நாட்டுப் ‘பக்’ என்ற நாட்டுப்புறத் தெய்வம் போன்றும் குறும்புக் கோமாளித் தெய்வங்களும் இதில் இடம் பெற்றன. நாடகப் பண்பு இங்கே விரைவில் கோமாளித்தனமும் வசையும் நகைச்சுவையும் கலந்ததாயிற்று. துன்பியல் நாடகத்தை உயர்குடியினர், செல்வர்களே கண்டு நுகர்ந்தனர். இன்பியல் நாடகத்தையோ பொது மக்கள் தெருக் கூத்தைக் கண்டு களிப்பது போலக் கண்டு ஆரவாரித்துக் களித்தனர். சமற்கிருத மரபு ஆங்கில நாடகத்துக்கும் கிரேக்க நாடகத்துக்கும் இடைப்பட்ட காலத்தது சமற்கிருத நாடகம். கிரேக்க நாடகத்துக்கும் இதற்கும் ஒரு தொடர்பு உண்டு. சமற்கிருதத்தில் திரையைக் குறித்த சொல் ‘யவனிகா’ என்பது. சமற்கிருத நாடக காலத் தொடக்கத்தில் கிரேக்கரிடமிருந்தே ‘திரை’யிடும் வழக்கம் கீழ்நாட்டில் பரவிற்று என்பர் மேனாட்டு அறிஞர் சிலர். ஆனால், கிரேக்க நாடகத்தில் திரையே கிடையாது என்பதை அவர்கள் கவனிக்கவில்லை. அதைக் கண்ட வேறு அறிஞர் சிலர், திரைத் துணி கிரேக்க நாட்டிலிருந்து வந்ததாயிருத்தல் வேண்டும் என்று திருத்த விளக்கம் தந்தனர். உண்மையில் யவனரின் அழகிய சித்திர வேலைப்பாடுகள் அமைந்த திரையே யவனிகா என்று பெயர் பெற்றிருக்க இடமுண்டு. ஏனெனில், தமிழில் அஃது எழினி, அதாவது எழில் உடையது என்று பெயர் பெற்றிருந்தது. எழில் என்ற கருத்துடைய ஆகு பெயராக ‘யவனம்’ சமற் கிருதத்தில் வழங்கிப் பின் ‘யௌவன’மாக மாறியிருக்கலாம். சமற்கிருத நாடகங்களில் நாம் எத்தனை சமயத்துறைத் தொடர்பையும் காணமுடியவில்லை. அதன் கதைகள் பெரும்பாலும் புராண இதிகாசக் கதைகளாக இருந்தன. ஆனால், அது கோவில் புரோகிதரால் ஆடப் பெறவில்லை. அரசர் அவைகளிலும் செல்வர், பண்டிதர் மன்றங்களிலுமே ஆடப்பட்டது. புரோகித வகுப்பு அதில் உயர் இடம் பெற்றது. புரோகிதராக அன்று, அரசனுடன் தொடர்புடைய உயர்குடியினராக நாடக அரங்கில் அவர்கள் உயர் இடம் பெற்றனர். ஆனால், அத்துடன் அவர்கள் பெற்ற இடமும் தலைமையிடமன்று, கோமாளியின் இடமும் அரசவைப் பாங்கனின் இடமும் மட்டுமேயாகும். இன்பியல், துன்பியல் என்ற இரு வேறு கலைகளாகச் சமற்கிருத நாடகம் இயங்கவில்லை. ஆனால், நாடக இலக்கணம் கூறிய ஏடுகள், பத்துக்கு மேற்பட்ட நாடக வகைகளைக் குறிக்கின்றன. இவற்றுள் இன்பியல் வகையான களியாட்ட நாடகம் (ப்ரஹஸனம்), நாடகக் காப்பியம் (ச்ராவ்ய நாடகம்), காட்சி நாடகம் (ரூபகம்) ஆகியவை இடம் பெற்றன. ஆயினும், இலக்கியத்தில் பெரிதும் வழங்கிய வகை காட்சி நாடகம் ஒன்றே. அஃது இன்பியல், துன்பியல் வேறுபாடின்றி, ஷேக்°பியர் நாடகங்கள் போல் இரண்டும் கலந்தவையே. ஆங்கில நாடகம் பாட்டாகவோ உரைநடையாகவோ, இரண்டும் கலந்ததாகவோ நாடகாசிரியன் மனம்போல இயங்கிற்று. கிரேக்க நாட்டில் துன்பியல் கவிதையாகவும், இன்பியல் உரைநடையாகவும் இயங்கின. ஆனால், சம°கிருத நாடகங்கள் எங்கும் இடையிடையே பாட்டுக் கலந்த உரைநடையாக இயங்கின. தனிப் பாட்டோ தனி உரைநடையோ கிடையாது. சம°கிருத நாடகத்தில் காட்சிகள் மட்டுமல்ல, காட்சிகளுக்கு இடையே இடைக்காட்சிகள் (உபாங்கம்), காட்சிகளுக்கு முன்னுரை (ப்ர°தாவனா), பின்னுரை (அவதாரிகா) நாடகத்துக்கே ஒரு முன்னுரை, கடவுள் வாழ்த்து (நாந்தீ) ஆகியவை உண்டு. இவற்றுள் சில, கிரேக்க நாடகங்களில் இடம் பெற்றவையே. முன்னுரை அங்கே முன்மொழி (ஞசடிடடிபரந) என்றும், பின்னுரை பின்மொழி (நுயீடைடிபரந) என்றும், இடைக்காட்சி இணைக்காட்சி (ஐவேநசடரனந) என்றும் வழங்கின. சமற்கிருத நாடகத்தில் குறிப்பிடத்தக்க தனிச்சிறப்புகள் இரண்டு உண்டு. அதில் நடிக நடிகையரல்லாமல், இன்றைய நாடக நடிப்பாசிரியரை நினைவூட்ட வல்ல சூத்திரதாரர் என்ற நாடகத் தலைவர் உண்டு. வாழ்த்தையும் முன்னுரை, பின்னுரை, இடைக்காட்சிகளையும் தனித்தோ ஒரு நாடக நடிகருடனோ நடிப்பவர் அவரே. சமற்கிருத நாடகத்துக்கே உரிய இன்னொரு தனிப்பண்பு அது பல மொழிகளில் அமைந்துள்ளதேயாகும். ஆடவரில் உயர்ந்தவர் அரசர், புரோகிதர், தேவர்கள் சமற்கிருத மொழி பேசினார்கள். ஆடவரில் கீழ் வகுப்பினரும் பெண்கள் அனைவரும் பிராகிருதம் என்ற வட நாட்டு மக்களின் அக்காலத் தாய் மொழிகளில் பேசினார்கள். ஆங்கிலம், கிரேக்கம், சமற்கிருதம் ஆகிய இந்த மூன்று மரபுகளின் பண்புகளையும் மனத்தில் கொண்டால், உலக நாடக மரபின் தொடக்க நிலையை நாம் உய்த்துணரலாம். அம் மூன்று மரபுகளின் தொடக்க நிலையாக மலையாள மரபும் தமிழ் மரபும் விளங்குவது காண்போம். அது மட்டுமன்று, சிலப்பதி காரத்தின் நாடகப் பண்பு, முத்தமிழ்ப் பண்பு ஆகியவை அப்பொழுதுதான் முற்றிலும் விளக்கமடையும். அம் மூன்று மரபுகளின் ஒப்பீட்டினால் அம் மூலக் கூறுகளைக் காண முயல்வோம். விழாக் காட்சி நாடகங்கள், ஆங்கில, கிரேக்க, சமற்கிருத நாடக மரபுகள் ஆகிய யாவும் உலக நாடக மரபின் தொடக்கக் கால நிலைகளைக் காண நமக்கு உதவுகின்றன. நாடகக் கலை 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமை உடையது. ஆனால், இன்று நாம் காணும் உருவுடனேயே அது 4000 ஆண்டுகளுக்கு முன்னோ, 2000 ஆண்டுகளுக்கு முன்னோ, 400 ஆண்டுகளுக்கு முன்னோ கூட இருந்ததில்லை. நம் காலத்திலிருந்து முன்னோக்கிச் செல்லச் செல்ல, இன்று காணப்படும் பல கூறுகள் மறைந்து, அக்கால நாடகம் நமக்கு விசித்திரமான வடிவங்களை உடையதாக விளங்குவது காண்போம். நம் தமிழகத்திலேயே 40 ஆண்டுகளுக்கு முன் கண்ணையா நாடகக் கழகத்தினர்தாம் திரைக்காட்சிகளையும், ஒளிமாற்றம், திரைமாற்ற வசதிகள் ஆகியவற்றையும் பெருக்கி, இன்றைய நவநாகரிக நாடக மேடையைப் படைத்தனர் என்று முதியவர்கள் கூறக் கேட்டிருக்கிறோம். அதற்குமுன் தமிழ் நாட்டு நாடக மேடை இன்றைய தெருக்கூத்திலிருந்து மிகுதி வேறுபட்டதன்று. ஆயினும், தெருக்கூத்துகள் பண்படாததை அக்கால நாடகங்கள் பண்பட்ட தெருக் கூத்துகளாக இயன்றன என்னலாம். அவை பண்டை நாடகங்களின் எச்ச மிச்சமான சின்னங்களமைந்த பண்டை நாடகங்களின் உயிர் மரபில் வந்த உயிர் வளமுடைய உயிர்க் கலைகளல்ல. ஷேக்°பியரும் சிலப்பதிகாரமும் ஷேக்°பியர் கால ஆங்கில நாடகம் தமிழகத் தெருக் கூத்தைவிட ஒரு சிறிதே முன்னேற்றம் உடையது. தெருக் கூத்தில் சில சமயம் நாடக மேடை முன்புறம் மட்டும் திறந்திருக்கும். சில சமயம் நாற்புறமும் திறந்த மேனியாக இருக்கும். மக்கள் நாற்புறமிருந்தும் நாடகம் பார்ப்பார்கள். ஷேக்°பியர் கால நாடகங்களில் முன்புறம் மட்டும் திறந்திருந்தது. ஒரு காட்சி முடிந்தவுடன், இன்று ஒரு திரை மேடையை மறைப்பது போல அன்று மறைப்பதில்லை. நடிகர் சில சமயம் இறங்கிப் போய் வேடம் மாற்றி வருவர். சில சமயம், தொடுத்து அடுத்த காட்சி நடைபெறும். காட்சி முடிவையும், அடுத்த காட்சித் தொடக்கத்தையும் காட்ட ஷேக்°பியரும் அவர் கால நாடக ஆசிரியர்களும் ஒரு முறையைக் கையாண்டனர். நாடகம் உரை நடையிலிருந்தால், காட்சியிறுதியில் பேசும் நடிகர் பேச்சிலேயே, ‘போய் வருகிறேன்,’ ‘நாழிகையாயிற்று’ என்பன போன்ற சொற்கள் ஆசிரியரால் திறமையாகக் கதையுடன் கதையாகப் பெய்யப்படும். இன்றைய திரைக் காட்சிப் படங்களில் ‘இடைவேளை’ அறிவிப்பில் பல திரைக் கலைஞர் இதே முறையைக் கையாளுவது குறிப்பிடத் தக்கது. நாடகம் பாட்டாய் இயற்றப்பட்டால், கடைசி வரி சற்று நீண்டதாகவோ, எதுகை மோனை வகைகளில் ஏதேனும் தனிச் சிறப்புடையதாகவோ அமைக்கப்படும். நாடகம் பார்ப்பவர்கள் காட்சி முடிகிறது என்று அறிய, இஃது ஒரு குறிப்புச் சின்னமாய் உதவிற்று. சிலப்பதிகாரத்தில் ஒவ்வொரு காதையும் ‘என்’ அல்லது ‘என’ என்ற அசைக் குறிப்பு பெற்று முடிகிறது. இது ஷேக்°பியர் கால வழக்கத்தை நினைவூட்டுகிறது. ஷேக்°பியர் கால நாடகத்தில் பின்னணித் திரைக்காட்சி கிடையாது. ஆகவே காலை, மாலை, காடு, ஆறு ஆகியவற்றை இன்றுபோல் அன்று கண்கூடாகக் காட்ட முடியாது. ஆகவே, கலைஞர் காட்சித் தொடக்கத்தில் உரையாடல் மூலமே இச் செய்திகளைத் தெரிவித்தனர். காணும் காட்சிகள், இங்கே கேட்கும் கேள்விச் சொற்களாகத்தான் தீட்டப்பட்டன. சிலப்பதிகாரம் முழுவதிலும் இப் பண்பை ஆங்கில நாடகங்களில் காண்பதைவிட மிகுதியாகக் காணலாம். அந் நாடகத்தைப் பலர் நாடகக் காப்பியம் அல்லது காப்பியம் என்று கருத இப் பண்பு பெரிதும் காரணமாகிறது. ஷேக்°பியர் கால நாடகத்தின் உதவி இல்லையென்றால், இஃது அக்கால நாடகப் பண்பின் சூழ்நிலை என்பதை நாம் உணர்ந்துகொள்ளவே முடியாது. விழாக் காட்சிப் பண்பு ஷேக்°பியருக்கு முற்பட்ட விழாக்காட்சி நாடகம் உலகத் தொடக்க நாடகப் பண்புகளில் பலவற்றை இன்னும் தெளிவாகக் காட்டுகின்றது. இன்று மேடை ஓரிடத்தில் இருக்கிறது. காட்சிகள் மேடையில் மாறி மாறி வருகின்றன. மக்கள், முன் இருந்து பார்க்கின்றனர். விழாக் காட்சியில் மேடை சகடம் போல் உருண்டோடி ஊர்வலமாகச் சென்றது. இன்று ஒரே மேடையில் எல்லாக் காட்சிகளும் இயங்குகின்றன. அன்று ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு மேடையாகப் பல மேடைகள் பார்ப்பவர் முன், காட்சி காட்சியாக ஓடின. நடிப்பில் அன்று காதுக்குக் கேட்கும் பேச்சு நடிப்புக் குறைவு. கண்ணுக்குத் தெரியும் காட்சி நடிப்பே மிகுதி. சிலப்பதிகார முழுவதிலும் தமிழ் இடம் பெற்றாலும் அது கேட்கும் தமிழ் அன்று, காணும் தமிழ் என்பதை அது நினைவூட்டுகிறது. கிரேக்க மரபும் - சிலம்பு மரபும் ஆங்கில நாடகத்துக்கு முற்பட்டது சமற்கிருத நாடகம். அதற்கும் முற்பட்டது கிரேக்க நாடகம். இரண்டும் நம்மை இன்னும் பழம் பண்புகள் நோக்கி இருவேறு திசைகளில் இழுத்துச் செல்கின்றன. இன்றைய நாடகத்தில் பெரும்பாலும் உறுப்பினர் எத்தனை பேரோ, கிட்டத்தட்ட அத்தனை நடிகர் நடிகையர் இருப்பதே இயல்பு. சில சமயம் ஒரே நடிகர் இரண்டு அல்லது பல உறுப்பினர் பகுதிகளை நடிப்பதுண்டு. ஆனால், நாடகாசிரியர் ஒரே சமயத்தில் மேடைக்குக் கொண்டு வாராத உறுப்பினர் பகுதிகளாக அவை இருத்தல் வேண்டும். கிரேக்க நாடகத்தில் தொடக்கத்தில் ஒரே ஓர் உறுப்பினர்தான் இருந்தார். இடையிடையே அவர்க்கு ஓய்வு தந்து, தறுவாய்க்கேற்றபடி பாடும் ஒரு பாடற்குழுவும் (ஊhடிசரள) இருந்தது. கதையுறுப்பினர் எல்லாரின் பகுதிகளையும் ஒரு நடிகரே நடித்தார். இந் நிலை பெரிதும் நம் நாட்டில் கதைக் கச்சேரி நடத்துபவர் நிலையேயாகும். பாடற் குழுவுக்காகக் கிரேக்க நாடகங்களில் அமைந்த பகுதிகள் சிலப்பதி காரத்திலுள்ள கானல் வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை முதலிய இசைப் பாடல்களை நினைவூட்டுகின்றன. கிரேக்க நாடக மேடையில், நாளடைவில் முக்கிய நடிகர்க்குத் துணை நடிகர் ஏற்பட்டனர். உரையாடல்கள் நாடகங்களில் திறம்பட இடம் பெற முடிந்தது இதன் பின்னரே என்பது தெளிவு. கிரேக்க நாடக வரலாற்றில் பிற்காலத்தில் - சிறப்பாக இன்பியலில் - நடிகர் தொகை பெருகிற்று. சிலப்பதிகார நாடகப் பண்பு கிரேக்கர் நாடகத்திலும் பழைமையுடைய பண்பு. ஏனென்றால், இங்கே தனி நடிகர் ஒருவரே பெரும்பாலும் நடித்தார். ஒரு சில கட்டங்களில் மட்டும் துணை நடிகர் பங்கு கொண்டார். தனிநடிகரே கிட்டத்தட்ட எல்லா உறுப்பினர் பகுதிகளையும் நடித்தார். சமற்கிருத மரபு தரும் ஒளி விளக்கம் கிரேக்க நாடகத்தின் தலை நடிகரே சமற்கிருத நாடகத்தில் சூத்திரதாரராக வருகிறார். தமிழ், மலையாள நாடக மேடைகளில் வரும் தலைமை நடிகரே இந்தச் சூத்திரதாரர். ஆனால், படிப்படியாக ஒவ்வொரு பகுதிக்கும் கிரேக்க நாடக காலத் திலேயே ஒவ்வொரு நடிகராக நடிகர் தொகை பெருகி விட்டதனால், தலைமை நடிகர் நடிப்பாசிரியராகவும் மேடைத் தலைவராகவும் மாறினார். சமற்கிருத நாடகத்தின் சூத்திரதாரர் பண்பு தமிழ்-மலையாள நாடகங்களை உள்ளவாறு உணர ஒரு சிறந்த வழிகாட்டியாகும். சூத்திரதாரர் என்ற பெயரே இவ்வகையில் மிகவும் முக்கியத்துவம் உடையது. அவர் வேலை, மணிகளை ஒரே சூத்திரத்தில் கோப்பது போல, காட்சிகள் இடைக் காட்சிகள், முன்னுரை ஆகியவற்றை எல்லாம் ஒரே தொடர்புடையவையாகக் கோப்பதேயாகும். கிரேக்க நாடகத்தின் தலைமை நடிகர் அவரே என்பதை இது சுட்டிக் காட்டுவதுடன், அத்தலைமை நடிகருக்குக் கிரேக்க நாடகத்தினும் முற்பட்ட காலத்தில் இருந்த மற்றொரு பண்பையும் இது விளக்குகிறது. தொடக்கத்தில் நாடகக்கலை கதை கூறும் கலையிலிருந்தே பிறந்தது என்பதைச் சூத்திரதாரப் பண்பு காட்டுகிறது. தலைமை நடிகர் கதை கூறுபவராகவும் இருந்ததனால்தான் அவர் சில சமயம் நாடகத் தலைவர் அல்லது சூத்திர தாரராகவும், சில சமயம் நடிகராகவும் விளங்கினார். மலையாளச் சாக்கியர் கூத்திலும் தமிழ்ச் சிலப்பதிகாரத்திலும் அவர் கதை கூறுபவர், எல்லாப் பகுதிகளையும் நடிக்கும் ஒரே நடிகர், அரங்கத்தின் நடுநாயக உறுப்பினர் என்ற மூன்று தன்மைகளையும் ஒருங்கே கொண்டவர் ஆகிறார். இம் மூன்று பண்புகளையும் இன்றும் கதைக் கச்சேரிகளில் மட்டுமன்றி, வில்லுப்பாட்டு, குறவஞ்சி, பள்ளு, மலையாள நாட்டு ஓட்டந்துள்ளல் (மலையாளக் களியாட்ட நாடகம்), பரத நாட்டியம், கதைகளி, வடநாட்டு நடன நாடகங்கள் ஆகிய வற்றிலெல்லாம் காணலாம். சிலப்பதிகாரம் இன்றைய தமிழர் கண்களில் நாடகமாகத் தென்படாததற்குக் காரணம் இதுவே. நாடகம் கதைக்கச்சேரி போன்ற நிலையில் இருந்த காலத்திய நாடகம் அஃது என்பதை நாம் உணர்தல் வேண்டும். சமற்கிருத நாடகங்களில் உரையும் பாட்டும் விரவியே வந்தன. நடிகர் உணர்ச்சிமிக்க இடங்களில் பாடியும், பிற இடங்களில் பேசியும் வந்தனர். இதன் கலைப் பொருத்தத்தைக் காளிதாசன் போன்ற சிறந்த நாடகாசிரியர் நாடகங்களில் நாம் தெளிவாகக் காண்கிறோம். ஆனால், இதன் தோற்றம் கதை கூறும் மரபிலிருந்து வந்ததே. கிரேக்கர் துன்பியல் நாடகத்தில் கவிதையை மட்டுமே பயன்படுத்தினர். இதற்கு இரண்டு காரணங்கள் கூறலாம். கிரேக்கர் சிறந்த கலைப் பண்புடையவர். துன்பியல் நாடகத்தில் உணர்ச்சியற்ற பகுதிகளை விலக்கி, அதன் உணர்ச்சி வேகத்தை அவர்கள் வளர்த்தனர். அத்துடன் முதல் உரைநடை பெரிதும் கதை கூறுவதற்கே அமைந்தது. நடிகர் கூற்றின் மூலமே பெரிதும் கதைப் பகுதி விளங்கச் செய்யும் நாடகக் கலைத்திறமை கிரேக்கக் கலைஞர்க்கு இருந்தது தவிர, இன்றியமையா இடங்களில் கதைப் பகுதியை முன்னுரை, முடிவுரை, இடைக்காட்சி ஆகியவையாலோ, பின்னணிப் பாட்டாலோ அவர்கள் நிரப்பினர். சிலப்பதிகார நாடகப் பண்பு சமற்கிருத, கிரேக்கப் பண்புகளுக்கு மூலமானது. இங்கே உரைநடை கதை நிரப்பும் பகுதிக்கும், உரைச் செய்யுள் அதாவது அகவல் போன்ற இயற்பாக்கள் கதைக்கும் நடிகர் உணர்ச்சிக்கும், உணர்ச்சி மிக்க பகுதிகள் இசைக் குழுவின் இசைப் பாடல்களாகிய வரிப்பாடல் களுக்கும் பயன்படுத்தப்பட்டன. சிலப்பதிகாரம் ஆங்கில சமற்கிருத நாடகங்களின் தற்காலப் பண்புக்கும், கிரேக்கப் பழங்காலப் பண்புக்கும் முற்பட்ட பழைமையுடையதாதலால், அது கிரேக்கரின் கலைநயம் உடைய பழங்காலக் கதைக் கச்சேரிப் பாடலாக, வில்லுப்பாட்டுப் பாடலாக இயங்கிற்று. உண்மையில் குறவர்கள் ஆடுவதற்கேற்ற அடிப்படையிலமைந்த ஒரு விழாக் காட்சிக் கூத்தாகவே அஃது இளங்கோவடிகளால் இனிது சமைத்து உருவாக்கப்பட்டது என்று காணலாம். சமற்கிருத நாடகங்களில் ‘பெண்களும்’ மற்ற ‘இழிசனர்’களும் தாய் மொழிகள் அல்லது நாட்டு மொழிகள் பேசினர். இதுவும் ஒரு நல்ல தமிழ்ப் பண்பின் ஆரிய வைதிகத்திரிபே என்பதை சமற்கிருத புத்தர் கால நாடகங்கள் காட்டுகின்றன. இவற்றில் உயர்வு தாழ்வு ஆரிய வருணாச்சிரம, ஆண், பெண் உரு வேறுபாட்டடிப்படையில் அமையவில்லை. ஆண் பெண் பாலார் அனைவரும் அவரவர் நாகரிகப்படிக் கேற்றபடி உயர்நடையான சமற்கிருதமோ நாட்டுப் பேச்சு மொழியோ பேசினர். சிலப்பதிகாரத்திலும், சாக்கையர் கூத்திலும் பல படியான யாப்பு முறைகளாலேயே நடிகர் பண்பும் கதைப் பண்பும் விளக்கப்பட்டன. ஆனால், வடதிசைச் சமற்கிருத நாடகங்களில் சமற்கிருதம் பின்னாளில் வழங்கப்பட்ட இடத்தில் செந்தமிழும், நாட்டு மொழி வழங்கப்பட்ட இடத்தில் பேச்சுமொழி அதாவது கொடுந்தமிழ் விரவிய செந்தமிழும் வழங்கப்பட்டன. சிலப்பதிகார நாடக மரபைப் பின்பற்றியே, மாணிக்க வாசகரும் சித்தரும் திசைவழக்கு விரவிப் பாடினர். திசைவழக்கு அல்லது பேச்சுவழக்கையே சமற்கிருதவாணர் தாய்மொழியாக்கி, அதை நாளடைவில் தம் வருண பேதப் பால் வேறுபாட்டுக் கோட்பாட்டுக் கிணங்க இழிசன வழக்காக்கினர். இதுகாறும் கூறியவற்றால் ஆங்கில சமற்கிருதப் பண்புகளுக்கும், கிரேக்க மரபுக்கும் மூலமான மரபே தமிழ் மலையாள நாடக மரபு என்றும், அதன் பண்பறிந்த பின்னரே சிலப்பதிகார நாடகப் பண்பை உணர முடிகிறது என்றும் கண்டோம். மலையாள மரபின் வரலாறு காண்பதன் மூலம் சிலப்பதிகாரத் தமிழ் மரபுடன் கிரேக்க மரபும் சமற்கிருத மரபும் கொண்ட தொடர்புகளையும் வளர்ச்சி முறைகளையும் நாம் இன்னும் மிகத் தெளிவாக உணரலாம். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ்த் துறைகளிலே நாடகம்தான் மனித இனத்தின் முதல்கலை என்று கூறத்தகும். நாடகப் பண்பு குன்றிக் கவிதையும், கவிதைப் பண்பு குன்றி உரைநடையும் வளர்வதையே நாம் நாகரிகச் சமுதாயத் தின் கலை வளர்ச்சியில் காண்கிறோம். இவ்வளர்ச்சிப் போக்கில் கலைப்பண்பு குறைந்து வரலாமானாலும், கலையின் இயற்பண்பு அதாவது சமுதாய அறிவுப்பண்பு மேம்படுவது காணலாம். நாகரிகம் குறைந்த இனங்களில் நாம் உரைநடையையோ இலக்கியத்தையோ வளமாகக் காண்டல் மிக அரிது. ஆனால், அத்தகைய இனங்களில் கூட இசையையும் நாடகத்தையும் காணமுடியும். இஃது இயல்பே என்னலாம். ஆனால், நாடகக் கலை, இசைக்கலை வேறு. நாடக இலக்கியம், இசை இலக்கியம் வேறு. நாடகக்கலையும், இசைக்கலையும் மொழியில் இயங்கக் கூடும். ஆனால், இங்கே கலை மொழியில் இயங்கினாலும், மொழி கலை சார்ந்து இயங்குவதில்லை. கலைப்பண்பு வாய்ந்த மொழியின் உருவமாகிய இலக்கியம் ஆவதில்லை. உலகின் பல நாகரிக இனங்களில் நாடகக் கலையோ, இசைக் கலையோ இருந்தாலும், நாடக இலக்கியமோ இசை இலக்கியமோ காணப் பெறாததன் காரணமும், உலக மொழிகளிடையே தமிழ்மொழி ஒன்றில் மட்டுமே நாடகக் கலையுடன் நாடக இலக்கியம் அல்லது நாடகத் தமிழும், இசை இலக்கியம் அல்லது இசைத் தமிழும் காணப்படுவதன் காரணமும் இதுவே. ஆயினும், நாகரிக முன்னேற்றத்தின் தொடக்கக் காலத்திலேயே நாகரிகம் தாண்டிக் கலை வளர்ந்த இனங்களில், நாகரிக முன்னேற்றத்துடன், முன்னேற்றமாக நாடகம் முதலிய கலைகளும் மேம்பட்டு அப்பண்பாட்டால் நாகரிகம் இன்னும் வளம் பெறுவதுண்டு. தற்காலத் தமிழும், நாடகக் கலையன்றி, நாடக இலக்கியமற்ற மொழிகளும் முன்கூறப்பட்ட வளர்ச்சி முறைக்குரிய சான்றுகள். பண்டைத் தமிழ் இலக்கியமும் இன்றைய மலையாள இலக்கியமும், நாடகப் பண்பமைந்த பிறமொழி இலக்கியங்களும் கலைப்பண்பு தழுவி மொழியில் இலக்கியம் வளர்த்த நாகரிகங்களுக்குரிய சான்றுகளாகும். தமிழகம் சூழ்ந்த நாகரிக இனங்களிலே இன்றும் நாம் நான்கு வகையான பண்புகளைச் சிறப்பாகக் காணலாம். ஒன்று மலையாளம், வங்கம், பர்மா ஆகிய நாடுகளின் முனைப்பான கலைப்பண்பு. மற்றொன்று குஜராத்தி போன்ற இனங்களின் வாணிக முயற்சிப் பண்பு. மூன்றாவது இராசபுதனம், மராட்டியம் முதலியவற்றின் வீரப்பண்பு. நான்காவது தென்னாடு, கோசல நாட்டின் அறிவுப் பண்பு. இந்நான்கு குழுவின் பண்புகளும் நிறைவு பெற்ற இனம் தமிழகம் என்பதை இன்றும் காணலாம். தளர்ந்த நிலையிலும் தமிழகம் தன் முழு நிறைவில் குறைவுபடவில்லை. முத்தமிழின் சிதறிய செல்வங்கள் பண்டைத் தமிழகத்தின் முத்தமிழ் வளம் இடைக்காலத் தளர்ச்சிப் பருவங்களில் சில கூறுகளில் தமிழகத்தில் முனைப்படைந்து எஞ்சியுள்ளது. வேறு சில கூறுகளில் தமிழகம் சூழ்ந்த இனங்களில் முனைப்பாக எஞ்சியுள்ளது. முத்தமிழின் செல்வம் இவ்வாறு இன்று சிதறிய செல்வங்களாகியுள்ளன. இதை நாம் சிலப்பதிகாரத்தின் வகையிலே காண்கிறோம். முத்தமிழ்க் காப்பியம் என்று கூறப்படும் இந்நூல் இன்று தமிழின் இயல் நூல்களுள் ஒன்றாக நம்மிடையே நிலவுகிறது. அத்துடன் சேர நாட்டின் மொழி மலையாளமாக மாறிவிட்டதனால் அந்நூல் இன்று தமிழ்க்கும், தமிழகத்துக்கும், தமிழர்க்குமே உரியதாகியுள்ளது. இவ்வாறு முத்தமிழ்க் காப்பியத்தின் மொழியும் இயற்பகுதியும் தமிழ்க்கு உரிமைப்பட்டுவிட்டன. ஆனால், அதன் இசை நாடகக் கூறுகள் இன்றைய தமிழகத்துடனோ, இன்றைய தமிழுடனோ தொடர்பற்ற பகுதிகள். தமிழகத்தை விட ஆந்திர கன்னட நாடுகளுக்கு அதனுடனுள்ள தொடர்பு மிகுதி என்னலாம். ஏனெனில், பண்டை நாடகப் பண்பு இன்னும் இயக்க கானம் (யக்ஷகானம்) என்ற பெயருடன் உயிர்ப்பு அழியாமல் அவ்விரு மொழியகங் களிலும் நிலவுகிறது. மலையாள நாட்டிலோ முத்தமிழின் நாடகப் பகுதி கலையுருவில் அழியாமல் நிலவுவது மட்டுமல்ல, தொடர்ந்து வளர்ச்சியுமடைந்து வந்துள்ளது. இன்று உலகுக்கு அது முத்தமிழ் மரபில் வந்த அருங்கலைக் கூறாகக் கதைகளியைத் தந்துள்ளது. மலையாள நாடகத்தின் மாண்பு மாண்ட பண்டைத் தமிழ் நாடகத்துக்கும், அகில உலக நாடகத்துக்கும் உள்ள தொடர்பை சமற்கிருத நாடக இலக்கியம் விளக்கிக் காட்ட உதவுகிறது. ஆனால், தமிழ் நாடகத்துடன் சமற்கிருத நாடகத்துக்கும், உலக நாடகத்துக்கும் உள்ள தொடர்பை மலையாள நாடக வளர்ச்சியே நமக்கு விளக்குகிறது. இந்திய சமற்கிருத நாடக இலக்கியத்துக்கும், உலக நாடக இலக்கியத்துக்கும் மலையாள மொழி எந்த அளவு உயிர்க் கருவூலம் என்பதை இன்னும் மலையாள நாடே உணர்ந்து கொள்ளவில்லை. இன வரலாறுகள் அறியாத மடமை, இன அடிமை மனப்பான்மை ஆகியவற்றின் இணைவாக இடையிருட் காலங்களில் தோன்றியுள்ள போலிச் சமற்கிருதப் பத்தி மயக்கம் இங்கே தாய் மொழிக்கும், சமற்கிருதத்துக்கும் சிறப்பாகத் தமிழ் மலையாள மொழிகளுக்கும், சமற்கிருதத்துக்கும் இடையேயுள்ள உண்மைத் தொடர்பைக் காணத் தடையாகியுள்ளது. பாசன் நாடகங்கள் சமற்கிருத இலக்கிய வளர்ச்சியில், சிறப்பாகச் சமற்கிருத நாடக இலக்கிய வளர்ச்சியில், மலையாள நாடு கொண்ட பங்கு சிறிதன்று. இதனை இருபதாம் நூற்றாண்டின் தொடக்க நிகழ்ச்சியொன்று சுட்டிக் காட்டுகிறது. திருவனந்தபுரத்தில் பழைமைவாய்ந்த ஒரு குடும்பத்தினரின் பூசை யறையில் வைத்துப் பூசிக்கப்பட்ட பழைய ஏடுகள் சிலவற்றை, டாக்டர் கணபதி சா°திரி என்னும் பெரியார் எடுத்து வெளியிட்டார். அவை பதின்மூன்று சமற்கிருத நாடகங்களை உட்கொண்டிருந்தன. சமற்கிருத நாடகக் கவிஞன் காளிதாசனால் குறிக்கப்பட்ட பழைய நாடகக் கவிஞனான பாசன் நாடகங்கள் என்று அவை கருதப்பட்டு, சமற்கிருத உலகெங்கும் பெருத்த ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டன. ஆனால், நாடகங்களின் மொழி, நடை, பண்பு, கருத்துகள் ஆகியவற்றால் அவை முற்கால நூல்களின் பிற்காலத் திரிபுகள் என்றும், அத்திரிபில் தென்னிந்திய சமற்கிருத நாடகப் பண்புகள் பெரிதும் ஏறிவிட்டன என்றும் மேலை உலக அறிஞர் கருதினர். அவை பாசன் காலத்தவையாக (கி.மு. நான்காம் நூற்றாண்டுக் குரியவையாக) இருக்கக்கூடு மானாலும், மலையாளத்து நம்பூதிரிப் புலவர்களால் அவ்வக் காலத்துக்கிசைய மாற்றப்பட்ட வடிவிலேயே நம்மிடம் வந்துள்ளன என்றும் அவர்கள் கொண்டார்கள். சமற்கிருத நாடகத்தின் இலக்கியப் பண்பு இந்தியா வெங்கும் ஐந்தாம் நூற்றாண்டில் உச்சநிலை அடைந்தது. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் அது தளர்ச்சி அடைந்து, பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குள் முற்றிலும் நலிந்து விட்டது. ஆனால், மலையாள நாட்டில் நம்பூதிரிகள் தந்த புத்துயிர் ஊக்கத்தால் அது தொடர்ந்து ஒரு தென்னிந்திய சமற்கிருத நாடக மரபை வளர்த்தது. இதன் பயனாக எழுந்த புதிய சமற்கிருத நாடகங்கள் மிகப் பல. பாசன் நாடகங்கள் போன்ற பழைய நாடகங்களின் புதுப் பதிப்புகளும் அவற்றிடையே உண்டு. பல்லவரும் நம்பூதிரிகளும் சமற்கிருதத்தை வளர்ப்பதற்கென்றே வாழ்ந்த ஓர் அரச மரபு இந்தியாவில் உண்டென்றால், அது காஞ்சியில் மூன்று முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஆண்ட பல்லவர்களே. அதுபோல சமற்கிருதத்தின் வளர்ச்சி ஒன்றையே தம் வாழ்க்கைத் தொழிலாகவும் வாழ்வின் இன்பமாகவும் கொண்ட ஓர் இனம் இந்தியாவில் உண்டென்றால் அது மலையாளத்து நம்பூதிரி இனமே. மணிப்பிரவாளம் : உரையிடையிட்ட பாட்டு அல்லது ‘சம்பூ’ நடை இந்தியா முழுவதும் பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து இசுலாமிய சமயத்தின் மொழி, இலக்கிய, கலைத் தாக்குதலால் சமற்கிருதத்தின் செல்வாக்குத் தளர்ந்தது. அதே சமயம் இராமாநுசரின் வைணவ இயக்கத்தால் தாய்மொழிகள் புதுவாழ்வு பெற்று வளர்ச்சியடைந்தன. இத்தறுவாயில் மலையாள நாட்டு நம்பூதிரிகள் சமற்கிருத நாடக அரங்கங்கள் ஏற்படுத்தி அதற்குப் புத்துயிர் ஊட்ட முயன்றனர். பொதுமக்களை அதில் ஈடுபடுத்துவதற்காக நாடகத்தின் நகைச்சுவைக் காட்சிகளில் தாய்மொழி கலந்த சமற்கிருத நடையை உண்டு பண்ணினர். நகைச்சுவைக்காகச் சமற்கிருதத்தில் தாய்மொழி கலந்த இந்த நடையே, விரைவில் சமற்கிருதம் கலந்த தாய்மொழி நடையாகிய மணிப்பிரவாளம் ஆயிற்று. நம்பூதிரிப் பார்ப்பனரின் இம்முயற்சியும், அதே காலத்திய பிற பார்ப்பனர் முயற்சிகளுமே, மலையாள நாட்டிலும் தெலுங்கு கன்னட நாடுகளிலும் வழங்கிய மூலத் தாய் மொழிகளான திசைவழக்குகள் அல்லது கொடுந்தமிழ் வகைகள் தமிழிலிருந்து பிரிந்து மலையாளம் முதலிய மொழிகளாகக் காரணமாயின. மணிப்பிரவாள நடை, தாய்மொழி வாழ்வைக் கெடுத்ததைவிட மிகுதியாகவே சமற்கிருத இலக்கிய வாழ்வைக் கெடுக்கக் காரணமாயிருந்தது. ஏனென்றால் தாய்மொழி கலந்த சமற்கிருதத்துக்கும், சமற்கிருதம் கலந்த தாய்மொழிக்கும், வேற்றுமை இல்லாமல் இரண்டும் ஒரே மணிப்பிரவாள மாயிற்று. இது தாய் மொழியின் பழைய பண்புகளையும் சமற்கிருதத்தின் பழைய பண்புகளையும் ஒருங்கே அழித்து, புதியதொரு பண்பை-கலப்புத் தாய்மொழிப் பண்பையே வளர்த்தது. சமற்கிருத மொழியை வளர்க்க நம்பூதிரிகள் செய்த முயற்சி முழு வெற்றி பெறாவிட்டாலும், சமற்கிருத நாடகத்தின் இரு பண்புகளை அவர்கள் தம் தனிப் பண்பாக்கிக் கொண்டனர். ஒன்று மணிப்பிரவாள நடை, மற்றொன்று நாடகங்களின் மரபில் வந்த உரையிடையிட்ட பாட்டு நடை பின்னது மலையாளத்திலும் சமற்கிருதத்திலும் ‘சம்பூ’ நடை எனப்பட்டது. இது நம்பூதிரிகளால் நாடகத்துக்கு மட்டுமன்றிப் புதிய காவியங்களுக்கும் பயன்படுத்தப் பட்டது. பாரத சம்பூ, இராமாயண சம்பூ என்பவை போன்ற சம்பூ காவியங்கள் இரு மொழிகளிலும் பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டுவரை நூற்றுக் கணக்கில் எழுதிக் குவிக்கப்பட்டன. சிலப்பதிகாரமும் மலையாள நாடகமும் மலையாள நாட்டில் சமற்கிருத நாடகம் வடஇந்தியா விலுள்ள சமற்கிருத நாடகங்களைவிட நீடித்த பழைமை யுடையது. அதனைவிட நீடித்தும் வளம் பெற்றும் இருந்தது. பாசன் காலத்திலிருந்து இன்றுவரை அஃது இடையறாது நிலவி வந்துள்ளது. உண்மையில் மலையாள நாட்டு நாடகம் வடஇந்திய சமற்கிருத நாடகங்களைவிடப் பழைமையானது மட்டுமல்ல; அது சமற்கிருத மொழியைவிடப் பழைமை வாய்ந்தது. சிலப்பதிகாரக் காலத்துக்கு முன்னிருந்தே அது நீடித்த வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. உலக நாடகக் கலை வளர்ச்சியின் வரலாற்றிலே, மலையாள நாட்டுக்கு ஒப்பாக மூவாயிரம் ஆண்டுக்குமேல் நீடித்த வளர்ச்சியுடைய நாடக மரபை, நாம் வேறு எந்த மொழியிலோ நாட்டிலோ காண முடியாது. மலையாள நாட்டு நாடக மரபின் பழைமையைச் சிலப்பதிகாரத்தின் (வஞ்சிக் காண்டம் 28ஆவது நடுகற் காதை 75-77) அடிகள் குறித்துக் காட்டுகின்றன. “இமையவன் ஆடிய கொட்டிச் சேதம் பாத்தரும் நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தச் சாக்கையன் ஆடலில் மகிழ்ந்து” என வரும் அடிகளால் சேரன் செங்குட்டுவன் வடநாட்டு யாத்திரை முடிந்து வந்தபின் பலவகைக் களியாட்டுகளைப் பார்த்தபோது, அவற்றிடையே சாக்கைக் கூத்தையும் கண்டு மகிழ்ந்தான் என்று அறிகிறோம். இக்கூத்தை அரசன் முன் ஆடியவன், “பறையூர்க் கூத்தச் சாக்கையன்” என்று குறிப்பிடப்படுகிறான். டாக்டர் சாமிநாத ஐயர், தம் சிலப்பதிகாரப் பதிப்பில் இவ்வடிகளின் கீழ், “சாக்கையர் என்னும் ஒருவகைச் சாதியார் இப்பொழுதும் கூத்து நிகழ்த்தும் தொழிலுடையவராக மலையாள நாட்டிலுள்ளனர் என்று தெரிகிறது” என்று குறிப்பிடுகிறார். பறையூர் என்பது வட திருவிதாங்கூரில் இன்றும் உள்ளது. அது திருவிதாங்கூரில் மிளகு பெருக்கமாக விளையும் பகுதியாகிய குட்ட நாட்டிலிருப்பதால் குட்டம்பறவூர் என்று இன்று வழங்குகிறது. இவ்வூரில் இன்னும் தமிழர் மிகுதியாக உள்ளனர். இவ்வூரில் சாக்கையர் குடியினர் இன்னும் இருக்கின்றனர். இன்றும் சாக்கைக் கூத்தைக் கோவில்களில் பொதுவாகவும் திருவாங்கூர் அரசின் தலைமைக் கோவிலாகிய திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயிலில் சிறப்பாகவும் ஆடுகின்றனர். இதற்காக அரசியலாரிடமிருந்து அவர்கள் மாதச்சம்பளமும் பயணப்படியும் மானியங்களும் பெற்றுள்ளனர். இன்று அவர்கள் ஆடும் சாக்கைக் கூத்து இராமாயணக் கதையையே நடித்துக் காட்டுவதால் அஃது, “இராமனாட்டம்” என்று வழங்கப்படுகிறது. மூவாயிரம் ஆண்டு வளர்ச்சி திருவாங்கூர் அரசர் பண்டைய சேரர்குடியின் ஒரு கிளை மரபினர் என்று கருதத்தக்கவர். சேரன் செங்குட்டுவன் காலத்திலிருந்து இன்றுவரை சேரர் கலை மரபு குலையாமல், செங்குட்டுவன் முன் சாக்கைக் கூத்தாடிய அதே ஊரின் அதே குடும்பத்தினர் இன்றும் அக்கிளை மரபினர் பணியில் நின்று நாட்டுத் தலைமைக் கோவிலில் ஆடிவருகின்றனர் என்பது வியப்புக்குரிய செய்தியேயாகும்! தமிழ் நாட்டிலும் இதே சாக்கைக் கூத்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழரசர்களால் ஆதரிக்கப்பட்டு வந்தது என்பதற்குச் சோழப் பேரரசர் காலச் சான்றுகள் உள்ளன. முதலாம் இராசேந்திர சோழன் அல்லது கங்கை கொண்ட சோழனுடைய கல்வெட்டு ஒன்று உடையார்பாளையம் வட்டத்தில் காமரசவல்லி என்னும் ஊரிலுள்ள சிறந்த சாக்கை நடிகன் ஒருவனுக்குச் சோழ மன்னன், ‘சாக்கை மாராயன்’ என்னும் சிறப்புப் பட்டம் வழங்கியதாகக் குறிப்பிடுகின்றது. சிலப்பதிகாரம் ஒரு சாக்கையர் கூத்து நாடகமே சிலப்பதிகாரத்துக்கு முன்னிருந்தே சாக்கைக் கூத்தும் பிற கூத்து வகைகளும் மலையாள நாடு உட்பட்ட பண்டைத் தமிழகமெங்கும் வழக்கிலிருந்து வந்தது. செங்குட்டுவன்முன் சாக்கையன் ஆடிய கூத்து சிவபெருமான் உமையவள் காண நின்று ஆடிய “கொட்டிச் சேதம்” என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. ஆனால், சிலப்பதிகாரமும் கண்ணகி விழாவிலோ அல்லது அதன்பின் கண்ணகி கோவில்களிலோ ஆடப்படுவ தற்காக இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட ஒரு சாக்கைக் கூத்து இலக்கியம் என்று எண்ண இடமுண்டு. கீழ்வரும் செய்திகள் இதை வலியுறுத்தும். 1. மூவரசர்க்கும் நாடுகளுக்கும் சிலப்பதிகாரத்தில் இடந்தரப்பட்டுள்ளது. மூன்று நாடுகளிலும் அப்பாலும் ஆடப்படுவதற்குரிய தமிழ்த் தேசிய நாடகமாக அஃது இயற்றப்பட்டிருக்கிறது. அயல் நாட்டரசர் பெயர்கள் அதற்கு அரச அவையிலும் மக்கள் மன்றங்களிலும் நாடகம் என்ற முறையில் அரசியல் மதிப்பும் ஆதரவும் தருவதற்குரியன. 2. கண்ணகியின் கதையில் அவள் தெய்வமாகக் காட்சியளித்த நிகழ்ச்சியும் அதன் பின்னுள்ள விழா முதலிய நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. அஃது ஒரு விழா நாடகம் என்பதை இஃது எடுத்துக் காட்டுகிறது. 3. சிலப்பதிகாரக் கவிதை தொடர்பாக உவமையிலிருந்து உவமைக்கு அடிதோறும் தாவிச் செல்கிறது. கம்ப ராமாயணம், சிந்தாமணி முதலிய தமிழ்க் காவியங் களுடனும் பிறமொழிக் காவியங்களுடனும் ஒப்பிட்டுப் பார்த்தால், சிலப்பதிகாரக் கவிதை வாசிப்பதற்குரிய தன்று, கேட்பதற்கும் நடித்துக் காண்பதற்கும் உரியது என்பது விளங்கும். பரதநாட்டிய முத்திரைகளுக்கும் பாவங்களுக்கும் இடந்தராத ஓர் அடியைக்கூட சிலப்பதிகாரத்தின் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட அடிகளில் காண முடியாது. 4. கதை உறுப்புகளும் கதையும் மெய் வரலாற்றுக்கு உரியவையானாலும், சிலப்பதிகாரம் நாடகமாதலால் சமூக நாடகப் பண்பை, கற்பனைத் திறம்பட விரவிக் காட்டியுள்ளது. இதற்கு இணங்கவே கதையின் இறுதி நிகழ்ச்சியாகிய கண்ணகியின் தெய்வீக அருட்செயல் களும் குறவர் காட்சியும் செங்குட்டுவன் படை யெழுச்சி விழா ஆகிய செய்திகளும் மட்டுமன்றி ஆசிரியர் நூல் செய்த வரலாறும் இணைக்கப்பட்டுள்ளன. காவியம் என்ற வகையில் இஃது ஒரு குளறுபடியாகும். ஆனால், நாடகம் என்ற வகையில் இதைவிடச் சிறந்து மக்கள் உள்ளம் தடவும் முறையை யாரும் எண்ணிப் பார்க்க முடியாது. சிலப்பதிகாரம் குறவர்கள் மனக் கண்முன் ஆர்வக் கற்பனையால் கண்டு கூறிய நிகழ்ச்சியை மய்யமாகக் கொண்டு, சமயவாதியாகிய கூலவாணிகன் சாத்தனார் அவதாரக் கதைகளை இணைத்து, இவற்றுக்கு இணங்கவே கதைப் பின்னணியை உருவாக்கிக் காட்டுகிறது. 5. தமிழகத்தில் சாக்கைக் கூத்தும், நாடகமும் தடமற அழிந்த பின்பும் கோவலன் கண்ணகி தெருக் கூத்தாகவும், மக்கள் நாடகமாகவும் நம் காலம்வரை நீடித்து நிலவி யுள்ளது. இதை நோக்க, அது தொடக்கத்தில் சாக்கைக் கூத்தாக நடிக்கப்பட்டு, அக் கூத்து வழக்கிறந்தபின், வெறும் கதை நாடகமாகப் பயின்றிருத்தல் வேண்டும் என்று எண்ண இடமுண்டு. 6. கடைசியாகத் தமிழகம் சிலப்பதிகாரக் கதையையும், இலக்கிய மரபையும் நமக்குப் பேணித் தந்தாலும் சாக்கைக் கூத்தைத் தரவில்லை. ஆனால், மலையாள நாடு சிலம்புக் கதையையும், காவியத்தையும் மறந்து விட்டது. சாக்கைக் கூத்தை மட்டும் அழியவிடாமல் காத்து வளர்த்துத் தந்துள்ளது. மேற்கூறியவற்றால் பண்டை முத்தமிழ்க் கலையாகிய சிலப்பதிகாரம் சேரன் செங்குட்டுவன் காலத்தில் அரசவையிலும் கண்ணகி கோவில்களிலும் மக்கள் மன்றங்களிலும் நடிக்கப்பட்டு வந்த ஒரு சாக்கைக் கூத்து நாடகமே என்றும், தமிழகம் கலை தேயக் கதையை நமக்குத் தந்ததுபோல, மலையாள நாடு கதை தேயக் கலையை நமக்குத் தந்துள்ளது என்று காணலாம். சாக்கையர் கூத்து, தமிழகத்தின் மிகப் பழைமையான துன்பியல் நாடகம் அல்லது வீறியல் நாடகம். அது சாந்திக்கூத்து அல்லது அகக் கூத்தின் ஒருவகை. இதற்கெதிரான மற்றொரு வகை வினோதக் கூத்து. இது புறக்கூத்தின் ஒரு வகை. இதுவே மலையாள நாட்டின் ஓட்டந் துள்ளலாய் வளர்ந்திருத்தல் வேண்டும். இவ்விரண்டின் பல வகைத் திரிபுகளாகவே தென்னாட்டு இயக்க கானம், குறவஞ்சி, பள்ளு முதலியவையும் இடைக்கால, இக்காலத் தெருக்கூத்துகளும் வளர்ச்சி அல்லது தளர்ச்சியடைந்தன. இதன் பிற கிளை வகைகளாகவே மலையாள நாட்டு ஊமைக் கூத்து, தெலுங்கு நாட்டுப் பொம்மலாட்டம் ஆகியவை எழுந்தன. இவற்றின் மிகப் பழைமையான ஒரு கிளை கிழக்கே இலங்கை, பர்மா, மலாயா, தென்கிழக்காசியத் தீவுகள், சீனம் ஆகியவற்றில் பரவிற்று. மற்றொரு கிளை மிகப் பழைமையான காலத்திலேயே, வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்டே ஆசியா, ஐரோப்பா எங்கும் பரவி, ஆங்கில நாடகத் தோற்றத்துக்கும் மூல விதையாய் இருந்தது. உலகின் மூல நாடக மரபு சாக்கையர் கூத்து, வினோதக் கூத்து என இரண்டுபடாத கால மரபே இது. கிரேக்க நாடகம் ஒரு புறமும், சமற்கிருத நாடகம் மற்றொரு புறமும் பழந்தமிழ் - மலையாள நாட்டின் மூல நாடக மரபிலிருந்து முறையே தனிக் கலைகளாகவும் இணைக் கலைகளாகவும் வெவ்வேறு படிகளில் பிரிந்து, மலையாள நாட்டிலும் கிரேக்க நாட்டிலும் சாக்கையர் கூத்து மரபும் ஓட்டந்துள்ளல் மரபும் தனித்தனி வேறு வேறான மரபுகளாயின. ஏனெனில், சமயச் சார்பாகக் கோவிலினுள் ஆடப்படும் அகக்கூத்து, ஊர் வெளியில் ஆடப்படும் புறக்கூத்து என்ற இரு வடிவங்களும் இங்கே பேணப்பட்டன. ஆனால், நம்பூதிரிகள் மணிப் பிரவாள வாய்ப்புக்காகச் சாக்கையர் கூத்துக்குள்ளேயே வினோதக் கூத்தையும் விகடன் அல்லது விதூஷகன் அல்லது கோமாளி மூலமாகப் புகுத்தினர். சமற்கிருத நாடகம் இந்தக் கலவை வகையின் வளர்ச்சியாகும். உலகெலாம் நாடக மரபைப் பலவாறு இயக்கிய தமிழகக் கூத்து, சங்க காலத்துக்குப் பின் தமிழகத்தில் இலக்கியப் புலவர் ஆதரவற்று, தெருக்கூத்து, குறவஞ்சி முதலியனவாக இழிந்தன. மலையாள நாட்டிலோ அது தொடுத்து 12ஆம் நூற்றாண்டு வரை கண்ணகி நாடகமாகவே ஆடப்பட்டது. ஆயினும், அந் நூற்றாண்டு முதல் நாடகத்தின் கதை காலத்துக்கேற்ப மாறுபடத் தொடங்கிற்று. இம்மாறுபாட்டுக்கு இராமாயணக்கதை பொதுவாகவும், கம்பராமாயணம் சிறப்பாகவும் அடைந்துவந்த செல்வாக்கே காரணம் என்னலாம். சில காலம் கம்பராமாயண நாடகம் மலையாள நாடெங்கும் சாக்கையர் கூத்துடன் போட்டியிட்டது. சிலப்பதிகாரக் காலத்திலும், சங்க காலத்திலும் தமிழில் இயல் இலக்கியம் நால்வகைப் பாக்களால் இயன்றன. இசை இலக்கியமே விருத்தம் முதலிய பாவினங்களில் இயன்றன. சிலப்பதிகாரத்தில் இரண்டும் இடம் பெறுகின்றன. ஆனால், நாளடைவில் இசைப் பாட்டுகளிலேயே மக்கள் ஈடுபாடு மிகுதியாயிற்று. இசைப் பாட்டுகள் விரவிய சிலப்பதிகாரத்தை விட இசைப்பாட்டாகப் பாடப்பட்ட கம்பராமாயணம் மிகுதியும் செல்வாக்கடைந்தது. ஆனால், கம்பராமாயணத்திலும் நாடக அரங்குக்கு இடையிடையே உரைநடை சேர்க்கப்பட்டன. பாக்களைவிட உரைநடை மக்களுக்கு எளிதாக இருந்ததால், இதுவும் கம்பராமாயண நாடகத்தின் செல்வாக்கை வளர்த்தது. கம்பராமாயண நாடகம் சாக்கையர் கூத்துப் போல நடிக்கப்பட்டதே தவிர, முழுதும் சாக்கையர் கூத்தாய் இல்லை. சாக்கையர் கூத்து இன்றும் பயில்வதற்குக் கடுமையானது. கம்பராமாயண நாடகமோ புது வளர்ச்சியானதால் கடுமை குறைந்ததாயிருந்தது. கம்பராமாயண நாடகத்துடன் போட்டியிடுவதற்காகச் சாக்கையர் கூத்தும் கதை மாற்றி கண்ணன் கதை ஆக்கப்பட்டது. கண்ணகி கூத்து என்ற பழம் பெயர் மாறி, இது கண்ணனாட்டமாயிற்று. 16-17ஆம் நூற்றாண்டுகளில் மலையாள நாட்டின் சிற்றரசர்களுள் தலைமை தாங்கியவன் கோழிக்கோட்டு சாமூதிரியே. கண்ணனாட்டத்தை மலையாள நாட்டின் தேசிய நாடகமாக அவன் வளர்த்து வந்தான். அவன் வகுத்துப் பயிற்றுவித்த நாடகக் குழுவே மலையாள நாடெங்கும் விழாக் காலங்களிலும் மற்றச் சமயங்களிலும் நாடகமாடிற்று. 18ஆம் நூற்றாண்டில் சாமூதிரிப்பாட்டுக்குப் போட்டியாக அரசியலில் வளர்ந்த சிற்றரசன் கோட்டயத்தரசன். ஒரு விழாவின்போது அவன் கண்ணனாட்டம் நடத்த விரும்பினான். அரசியல் எதிரியாயினும் கலைத் துறைத் தலைவனான சாமூதிரியிடம் இதுபற்றி வேண்டுகோள் விடுத்தான். கலைத் தலைமையின் பொறுப்பைவிட அரசியல் போட்டியுணர்ச்சியையே சாமூதிரி மிகுதியாய்க் காட்டினான். அவன் தன் அரசியல் எதிரிக்கு முறைப்படி குழுவை அனுப்பியுதவ மறுத்துவிட்டான். அதனால் மனத்தாங்கலுற்ற கோட்டயத்து அரசன் கண்ணனாட்டக் குழுவுக்குப் போட்டியாகப் புதிதாக இராமனாட்ட மொன்றும், இராமனாட்டக் குழுவொன்றும் அமைத்தான். இதன் புகழ் நாளடைவில் கண்ணனாட்டத்தின் புகழை மங்கவைத்தது. சமற்கிருத நாடகத்தில் அமைந்த விகடங்களுக்கு இராமனாட்டம் இடம் தந்தது. இராவணன், கும்பகர்ணன் ஆகியவர்களுக்குத் துணை நடிகர் அமைந்து, தனி ஆடையணி மணியுடன் அவர்கள் நகைச்சுவைக்கு இடமளித்தனர். மக்களிடையே இதன் வளர்ச்சி இராம நாடகம் போல இராவண நாடகம் என்ற முறையில் வளர்ந்தது. ஆயினும் கோவில், அரசியல் ஆதரவு பெற்ற இராமனாட்டம் இன்றுவரை தொடர்ந்து வளர்ச்சியடைந்துள்ளது. சாக்கையர் கூத்தின் மரபில் வந்த இராமனாட்டத்தில் ஒரு பகுதியாகவே “கதைகளி” வளர்ந்துள்ளது. அதன் தனி வளர்ச்சி அணிமைக் காலத்தது. சென்னை அரசியலில், மலையாள மொழி சார்ந்த அரசியல் உரிமை பெற்றுள்ள புலவரான வள்ளத்தோள் என்ற கவிஞர் இதைத் தற்காலத்துக்கேற்றதாக வளர்ப்பதில் ஈடுபட்டு அதன் புகழை நாடெங்கும், உலகெங்கும் பரப்பியுள்ளார். “கதைகளி” வளர்ச்சியின் வரலாற்றைப் பற்றித் திருவாங்கூர் அரசியலார் வெளியிட்டுள்ள ஒரு சிற்றேடு, சிலப்பதிகாரக் காலம் முதல் இன்று வரை உள்ள அதன் வளர்ச்சியையும் அதன் கலை, கைத்தொழில் ஆகியவற்றையும் விவரிக்கிறது. அதில் பயன்படுத்தப்படும் இசைக் கருவிகளை அது வகுத்து நூற்றுக்கு மேற்பட்டவை இன்றும் வழக்கிலிருப்பதாகக் குறிக்கிறது. தமிழில் சங்ககால வழக்கிலிருந்த பல கருவிகளின் பெயர்கள் அதில் காணப்படுகின்றன. பண்டைக் கேரளத்தில் இருநூற்றுக்கு மேற்பட்ட கருவிகள் இருந்ததாக அச்சிற்றேடு குறிக்கிறது. அவற்றின் பட்டியல் ஒன்றும் தருகிறது. இப்பெயர்கள் பண்டைக் கேரளத்தின் மலையாள இலக்கியமாகிய சிலப்பதிகாரத்திலுள்ளது என்று அந்நூல் குறிக்கிறது. தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ. போன்ற உயர்ந்த பட்டங்கள் பெறுபவர்கள் சிலப்பதிகாரத்தைப் பழந்தமிழ் இலக்கியமாகப் பயில்வதுபோலவே, மலையாள இலக்கியத்தில் உயர் பட்டங்கள் பெறுபவர்களும் அதனைப் பழைய மலையாள இலக்கியமாக இன்றும் பயில்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சிலப்பதிகாரம் ஒரு சாக்கையர் கூத்து என்பது மறக்கப்பட்டதற்கும் அஃது இராமாயண நாடகமாக மாறியது ஒரு காரணம். ஆனால், தெருக்கூத்தின் வளர்ச்சியே அருமுயற்சி வேண்டிவந்த இப்பழங்கலை அழிவதற்குக் காரணம் என்னலாம். ஆயினும், ஒரு சின்னஞ்சிறு குழுவினுள்ளாவது சிலப்பதிகாரம் பேணப்பட்டே வந்திருந்தது என்பதில் ஐயமில்லை. சமண சமயச் சார்புள்ள சிந்தாமணி போன்ற காவியங்களுடன் சேர்த்து அது பண்டைய ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகச் சமணரால் பேணப்பட்டு வந்தது. 12 முதல் 16ஆம் நூற்றாண்டுவரை இருந்துவந்த உரையாசிரியர்கள் அனைவரும் அதை மேற்கோளாகவோ, இலக்கண மரபுகளுக்கு எடுத்துக்காட் டாகவோ சுட்டி யுள்ளனர். கண்ணகி வணக்கமும், சிலப்பதிகாரக் கதையும், தமிழகத்திலும், தமிழகத்துக்கு வெளியேயும் பாரத இராமாயணம் பரவியபின்கூட முற்றிலும் அழியாமல் இன்றளவும் தொடர்ந்து செல்வாக்குப் பெற்றே வந்துள்ளது. வில்லுப்பாட்டாகவும், அம்மானையாகவும், தெருக்கூத்தாகவும் தமிழகத்தில் அது வழங்காத காலம் இல்லை என்னலாம். அம்மானை நூல்கள் அச்சிலேகூட வெளி வந்து சிலநாள் உலவியதாக அறிகிறோம். கன்னட நாட்டுக்கப்பால் கோவாவில் உலவிய மக்கட் கதைகளில் ‘சந்திராவின் பதி’ என்ற பெயருடன் மிகத் திரிபுற்ற உருவில் 1868-ல் இது வெளியிடப்பட்டுள்ளதாக உயர்திரு எ°.வையாபுரிப் பிள்ளையவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். கண்ணகி கோவில் மலையாள நாட்டிலுள்ள கொடுங்கோளூரில் பகவதி கோவிலாக இன்று நிலை பெறுகிறது. பகவதியம்மன் இன்னும் ஒற்றை முலைச்சி என்று குறிப்பிடப் படுவதாகவும், வாழ்விழந்ததற் கறிகுறியாக இன்றும் அங்கே மஞ்சள், குங்குமம் வழங்கப்படுவதில்லை என்றும் சிலப்பதி காரத்தை மலையாளத்தில் மொழிபெயர்த்த பெண்பாற் புலவர் அம்மாளு அம்மா அவர்கள் குறித்துள்ளார்கள். இலங்கையில் 11ஆம் நூற்றாண்டுக்குரிய கண்ணகியின் மரச்சிலையும், வெண்கலச் சிலையும் பழம் பொருள் ஆராய்ச்சியாளரால் கண்டெடுக்கப் பட்டுள்ளன. பத்தினிக் கடவுள் வணக்கம் தென்னாடு கடந்து கீழை உலகெங்கும் காணப்படுகிறது. எங்கும் பத்தினித் தெய்வம் கண்ணகியாகவே இருக்க வேண்டும் என்றில்லை. தமிழகத் திலேயே ஏழு நங்கையர் பத்தினிகளாக வழங்கப் பட்டதைச் சிலப்பதிகாரமே குறித்துள்ளது. ஆனால், கண்ணகி முன்னைய பத்தினித் தெய்வங்களுக்கில்லாத தனிச் சிறப்புகளுடன் உலகில் புதுத் தெய்வம் அல்லது வம்பப் பெருந் தெய்வமாக உலவினாள் என்பதற்கு ஐயமில்லை. புத்தர் அறநெறியை உலகில் பரப்பிய அசோகன் போலவும், கிறித்தவ நெறியைப் பரப்பிய பேரரசன் கான்°டன்டைன் போலவும், தமிழகப் பேரரசன் சேரன் செங்குட்டுவன் கண்ணகி வழிபாட்டை அவன் கால நாகரிக உலகெங்கும் பரப்பினான். தமிழகத்தில் பழைய வில்லுப்பாட்டைப் புதுப்பிக்க நாம் ஓர் கலைவா™ர் என்.எ°.கே-யைப் பெற்றிருந்தோம். கேரளத்தில் கதைகளியைப் புதுப்பிக்க ஒரு வள்ளத்தோள் நாராயண மேனனைப் பெற்றிருக்கிறோம். பரதநாட்டியத்தை உலகில் பரப்ப உதயசங்கர் போன்று வட நாட்டவராவது முயன்று வந்துள்ளனர். இவற்றையெல்லாம் தாண்டிய உலகின் பழம் பெருங்கலையும் கலை சார்ந்த உலகப் பேரிலக்கியமுமான சிலப்பதிகாரம் சாக்கையர் கூத்தைப் புதுப்பித்தது. அதை மக்கள் மேடை ஏற்றத் தமிழகமோ, மலையாள நாடோ அல்லது தமிழ் மலையாள மொழிகளின் பழங்கலைச் சிறப்பிலும் வருங்கால வளத்திலும் அக்கறையுடைய வெளிநாட்டாரோ இனித்தான் முன்வருதல் வேண்டும். சிலப்பதிகாரம் ஒரு பல்வண்ணக் களஞ்சியம். காண்பவர் காட்சிக் கோணத்துக்கேற்ப அது பலவகையாகக் காட்சி யளிக்கிறது. அதை இலக்கியக் கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்க்கு அதனிலும் சிறந்த இலக்கியம் வேறு கிடையாது. மொழி நடையில் கருத்தூன்றுபவர்களுக்கு அது தமிழில் தமிழ் கலந்தாற் போன்ற விழுமிய இழுமெனும் இன்னோசை யுடையதாய் இலங்குகின்றது. வரலாற்றுக் கண்ணுடன் பார்ப்பவர் அதில் தமிழகத்தின் வரலாறு மட்டுமன்றித் தமிழகஞ் சூழ்ந்த நாடுகளின் பண்டை வரலாற்றுக் குறிப்புகளையும் காண்டல் கூடும். தமிழகப் பண்பாட்டை உணர விரும்பு கிறவர்களுக்கு அது சங்க இலக்கியங்களைவிட முனைப்பாகப் பண்டைத் தமிழகத்தின் பண்பாட்டுச் சித்திரமாய் அமைகிறது. காதல், வீரம் ஆகியவற்றின் ஓவியங்கள், பண்டைச் சமய வகைகள், பத்தினித் தெய்வ வழிபாடு ஆகியவை பலர் கவனங்களை ஈர்த்துள்ளன. அரசியல் தலைவர்களுள் பலர் அதில் அரசியல் விளக்கமும் அரசியல் உணர்ச்சியும் பெறு கின்றனர். பெற்று, நாட்டு மக்களுக்கு ஊட்ட முனைகின்றனர். இசை, நாடகம் ஆகியவற்றில் ஈடுபட்டவர்கட்கு அது இசை நாடக நூலாகவே காட்சியளிக்கிறது. முத்தமிழ் நூல் என்ற வகையில் அஃது தமிழரின் அழிவுற்றுப் போன பண்டை இசைக்கலையின் பரப்புக்கும், நாடகக்கலையின் பரப்புக்கும் அழியாச் சான்றாய் அமைகிறது. தமிழகத்துக்கு மட்டுமின்றித் தென்னாட்டடிப்படையிலும் உலக அடிப்படையிலும் அது நாடகக் கலையின் வளர்ச்சிகளை இணைத்துக் காட்டுகிறது என்பதையும் காண்கிறோம். இவ்வளவு சிறந்த நூல் தமிழகத்தில் நூற்றாண்டுக் கணக்காக இருட்டடிக்கப்பட்டிருப்பானேன் என்று வியப் படையாதிருக்க முடியவில்லை! முரண்பாடுகளும் - குறைபாடுகளும் அது மட்டுமன்று, அது தரும் பல்வண்ணங்களிடையே பல்வேறு வண்ணங்களை மட்டும் நாம் காணவில்லை. ஒருவர் காணும் வண்ணங்களுக்கு முரண்பட்ட வண்ணங்களை இன்னொருவர் காண்கின்றார். ஒருவர்க்குக் கவர்ச்சி வண்ணமாகத் தோன்றுவது மற்றொருவர்க்கு வெறுப்பு வண்ணமாகத் தோன்று கிறது. மூன்றாவது ஒருவர்க்கு இரு வகைகளும் ஒரே புறக்கணிப்பு வண்ணமாய் விடுகின்றன. ஒருவர் அதில் வரலாற்றைக் காணும்போது மற்றொருவர் அதில் கட்டுக்கதையையே காணமுடிகிறது. ஒருவர் அதில் ஆரியத்தைக் காணும்போது வேறொருவர் அதில் தமிழ்ப் பண்பைக் காண்கிறார். இன்னும் வியப்புக்குரிய செய்தி யாதெனில், ஒரே வண்ணம் காண்பவர்களிடையே, ஒருவர்க்கு அது கவர்ச்சி வண்ணமா யிருக்கிறது. மற்றொருவர்க்கு அது வெறுப்பு வண்ணமாய் விடுகிறது. இதுபோலவே, இரு வண்ணங்களையும் காண்பவர் களிடையே கவர்ச்சி, வெறுப்பு ஆகியவற்றில் ஒற்றுமையும், ஒத்துழைப்பும் ஏற்பட்டுவிடுகின்றன. இத்தனைக்கும் காரணம் சிலப்பதிகாரத்தின் பல்வகைப் பெருக்க வண்ணம்தானா? அல்ல, அல்லவே அல்ல! கோளாறு முற்றிலும் நூலில் இல்லை. அதனைக் காணும் கோணத்திலும் இல்லை என்பதை இறுதிச் செய்தி காட்டுகிறது. காண்பவர் உள்ளம் திறந்த உள்ளமாயிருந்தால், கருத்து வேற்றுமை ஏற்பட வழி இருக்கலாம். விருப்பு வெறுப்பு ஏற்படக்கூட வழி இருக்கலாம். ஆனால், விருப்பு வெறுப்புக் கடந்த ஒற்றுமையும் விருப்பு வெறுப்புகளுக்குள்ளேயே வேற்றுமையும் ஏற்படுவது திறந்த உள்ளத்தின் இயல்பன்று. அடிக்கடி ஒரே ஆசிரியர் முன்னுக்குப்பின் முரணாக, ஆனால், விருப்பு வெறுப்பில் ஒரே திசையில் செல்வது காண்கிறோம். இது கருத்து வேறுபாடன்று. ஒரே உணர்ச்சியின் இருவகைப்பட்ட சூழ்நிலை விளைவென்பது தெற்றென விளங்குகிறது. சிலப்பதிகார ஆராய்ச்சியாளர்களிடையே, சிலப்பதி காரத்துக்குரிய தமிழ் மக்கள் சமுதாயத்துக்குள்ளேயே ஏற்பட்டுள்ள இக்கோளாறு சிலப்பதிகாரத்தைப் பற்றியது மட்டுமன்று. தமிழின் பல துறைகளிலும் அது பல வடிவில் நின்று செயலாற்றுகிறது. ஆகவே, சிலப்பதிகாரத்தின் பயனை மட்டுமன்றி வருங்காலத் தமிழகத்தையும் மனத்திற் கொண்டு இதில் கருத்துச் செலுத்துவோம். போற்றும் சிலர் “இப்பொழுது நம் காலத்தவர் சிலரால் சிலப்பதிகாரம் மிகுதியாகப் போற்றப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் தமிழிசை யியக்கமே.” இந்த வாசகம், திரு.எ°.வையாபுரிப்பிள்ளை அவர்களால் 1946-ல் எழுதப்பட்டது. காலஞ் சென்ற திரு.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் பதிப்பித்த புகார்க் காண்ட உரையின் முன்னுரையின் முதல் வாசகமே அது! திரு.எ°.வையாபுரிப்பிள்ளை தமிழிசை இயக்கத்தில் ஆர்வமுடையவரல்லர். ஆனால், அதை எதிர்ப்பவருமல்லர். சிலப்பதிகாரத்தைப் போற்றுவது தவறு என்று அவர் கூற முன்வந்தால், இந்த வாசகம் பொருளுள்ள வாசகம் ஆகும். ஏனெனில், தம் ‘காலத்தவர் சிலரிடமிருந்து’ இந்த ஒருவகையில் அவர் வேறுபட்டவராதலால் அச்சிலரை அசட்டையாக ஒதுக்க இடமேற்பட்டிருக்கும். ஆனால், சிலப்பதிகாரத்தை அவர் புகழத் தவறவில்லை. அதனை வெளியிட்ட திரு.ஆர்.கே.சண்முகம் செட்டியார் மீதோ அவர் பதிப்பு மீதோ அவர்க்குச் சிறிதும் வெறுப்புக் கிடையாது. அடுத்து வரும் வாசகங்கள் இதைக் காட்டுகின்றன. சிலரால் போற்றப்படுவதற்குக் காரணமான தமிழிசை இயக்கத்தில், “முன்னணியில் நின்று அதற்கு ஊக்கம் அளித்தவர்களுள் ஒருவர் சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார். இவர்கள்.... முதற் காண்டத்தை.... எளிய உரையாக இப்போது பதிப்பித்து வெளியிட்டிருப்பது மிகப் பொருத்தம் என்றே கருதுகிறேன்.” திரு.வையாபுரிப் பிள்ளையவர்கள் சிலம்பின் அழகில் ஈடுபடாதவரும் இல்லை. இதனை அவர் வாசகங்களே காட்டும். “இசைப் பொருள் பற்றியும் சரித்திரப் பொருள்கள் பற்றியும் இக்காவியம் தமிழ் மக்களிடம் பரவி வந்ததேயன்றி, இதன் கதைச் சிறப்பும், கவிதைச் சிறப்பும், பிற இலக்கியச் சுவைகளும் பெரும்பாலும் பொதுப்பட அறியப்படாமலே கழிந்தன” அவர் சிலப்பதிகார இலக்கிய ஆர்வத்தையும் அதற்கு அவர் தரும் உயர்மதிப்பீட்டையும் நாம் இதில் காண்கிறோம். திரு.ஆர்.கே.சண்முகமும் சிலம்பும் போற்றும் சிலர்க்கும், திரு.வையாபுரிக்கும் உள்ள வேறுபாடு, அவர் போற்றாததால் வந்ததன்று, போற்றும் வகையாலேயே வந்தது என்பதை இது காட்டுகிறது. இனி, ஆர்வமற்ற, ஆனால், வெறுப்பற்ற பாராட்டுக்குரிய ஆர்.கே. சண்முகத்தின் போற்றுதல் எத்தகையதெனக் காண்போம். “உலகில் பல மொழிகளில் தோன்றிய சிறந்த பெருங் காப்பியங்களுள் சிலப்பதிகாரமும் ஒன்றல்லவா என்று அறிந்து மகிழ்ந்தேன். நம் தமிழ் முன்னோர் நமக்குத் தந்த இப்பெருஞ் செல்வத்தை இத்தனை காலம் அறியாமலும் அனுபவிக்காமலும் இருந்துவிட்டோமே என்று துக்கப்பட்டேன்” என்று அவர் தம் முன்னுரையில் குறிக்கிறார். திரு.ஆர்.கே.எ°ஸும் திரு.வையாபுரியைப் போலவே சிலம்பைப் போற்றுபவர்தாம். ஆயினும், போற்றும் சிலர் என்ற ஏளனத்துக்கு உரியவர் அல்லர் அவர் என்பது தெளிவு. அவர் முகவுரையே இந்தப் பின்னணிக் கருத்தை விளக்குகிறது. உங்களுக்குக் கூடத் தாய்மொழியின் மீது இவ்வளவு ஊக்கம் பிறந்துவிட்டதா? என்று நண்பர் பலர் என்னைப் பாராட்டினார்கள் என்கிறார் அவர். திரு ஆர்.கே.எ°.பிறமொழி கற்று உயர்வு பெற்றவர். வெள்ளையர் ஆட்சியில் கிட்டத்தட்ட இந்தியாவிலுள்ள ஒரு வெள்ளையராக இருந்தவர். “தமிழிலும் உண்டு” என்ற உணர்ச்சியுடனேயே அவர் சிலம்பில் ஈடுபட்டார். சிலம்புக்கும், சிலம்பில் ஈடுபட்டவர்க்கும் இது பெருமை தந்திருந்தது என்பதில் ஐயமில்லை. திரு.ஆர்.கே.எ°. சிலம்பில் காட்டிய பற்று தமிழில் கொண்ட பற்றினால், மதிப்பினால் விளைந்தது அன்று. நேர்மாறாக, சிலம்பில் கொண்ட பற்றே அவரைத் தமிழின் பக்கம் திருப்பிற்று என்று கூறலாம். ஆனால், சிலம்பில் அவர் ஈடுபட்ட பின்னும் அவர் தமிழ்ப்பற்று எத்தகையது என்பதைச் சுட்டிக் காட்டுகிற ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். மேனாட்டு நகராகிய இலண்டனிலே ஒரு தமிழ்க் கழகம் திரு.ஆர்.கே. சண்முகத்தை வரவழைத்துப் பெருமைப்படுத்திற்று. சிலம்பின் ஆர்வலர் அங்கே சிலம்பின் பெருமை பற்றிப் பேசியிருப்பார் என்று எதிர்பார்ப்பது இயல்பு. அந்தச் சூழலில் சிலம்பின் பெருமையினைப் பேச வேண்டிய இடம் அது. சிலம்பைப் பற்றிப் பேசாமல் வேறு எது பற்றி அவர் பேச முடியும். ஆனால், உண்மையில் வியத்தகு முறையில் அவர் சிலம்பு பற்றிப் பேசவில்லை. வேறு ஏதேதோ தான் பேசினார். அவ்வாறு அவர் பேசியதென்ன? ‘ஆங்கிலங் கலந்து தமிழர் பேசக் கூடாது’ என்று அறிவுரை கூறினார். ஆங்கிலமே கிட்டத்தட்ட தாய் மொழியாகக் கொண்ட ஒருவரிடம் இது பெருந்தன்மையான கூற்றே. ஆனால், அடுத்து அவர் கூறிய அறிவுரை, ‘பிறமொழி வெறுப்பு ஆகாது, பிறமொழிச் சொற்கள் கலக்காமல் எழுதும், பழக்கம், பேசும் பழக்கம் தீது’ என்பது. நாகரிகத்தில் மேலோங்கிய ஆங்கிலம் கலத்தல் தவறு, பிற்போக்காளர் கோட்டையாகிய சமற்கிருத மொழியும் அது சார்ந்த இன ஆதிக்க மொழிகளும் கலத்தல் இனிது என்பது அவர் இலண்டனில் பரப்ப விரும்பிய கோட்பாடு. இருவேறு அங்கங்கள் இணைப்பு திரு.வையாபுரிக்கும் திரு.ஆர்.கே.எ°.ஸுக்கும் ஆங்கிலக் கல்வி, உலக மதிப்பு, வெளிநாட்டுத் தொடர்பு, அறிவாற்றல், கலையாராய்ச்சி ஆகிய துறைகளில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேற்றுமை உண்டு. ஒருவர் தமிழகச் சூழலில் உள்ளவர். மற்றவர் உலக அரங்கம் ஏறியவர். ஒருவர் கம்பராமாயண ஆர்வலர், மற்றவர் ஆங்கில மொழி ஆர்வத்திலிருந்து சிலப்பதிகாரத்துக்கு ஓய்வு காலத்தில் இறங்கி வந்தவர். இருவர்க்கும் உள்ள இணைப்பு வியப்பான ஒரு பொதுப் பண்பு - இருவரும் தாய்மொழி ஆர்வத் துடிப்பு உள்ளவர்கள் அல்லர். ஆர்வத்துடிப்பு உள்ள அச் சிலரை இருவரும் வேறினத்தார் என ஒதுக்கியவர்கள். அவர்களுடன் எண்ணெயும் தண்ணீரும்போல விலகிப் பழக்கப்பட்டவர்கள். போற்றும் சிலரை இங்ஙனம் ஒதுக்கியதன் காரணம் பெருங் கருத்து வேறுபாடாக இருக்கலாமா? கருத்து வேறுபாடுகளின் இரு கோடி கருத்து வேறுபாடு என்றால் ஆர்.கே.எ°. பதிப்புக்கு முன்னுரை தந்த திரு.வையாபுரிக்கும், மதிப்புரை அளித்த பேராசிரியர் வி.ஆர்.ஆர்.தீட்சிதர்க்கும் ஏற்பட்ட எதிரெதிர் வேறுபாடு வேறு யார்க்கும் இருக்க முடியாது. இதைத் திரு.ஆர்.கே.எ°. முகவுரையே குறித்துள்ளது. “இளங்கோ அடிகளைப் பற்றிச் சரித்திர சம்பந்தமான ஆதாரங்கள் இல்லை. அவர் இன்ன காலத்தில் இருந்தார் என்பதைப் பற்றிக்கூட ஆராய்ச்சியாளர்களுக்குள் அபிப்பிராய பேதம் உண்டு. திரு.வையாபுரிப்பிள்ளை அவர்க ளின் முன்னுரையிலும் திரு.இராமச்சந்திர தீட்சிதர் அவர்கள் மதிப்புரையிலும், இவ்விவரங்களைப் பற்றி மாறுபட்ட அபிப்பிராயங்களைக் காணலாம்.” திரு.வையாபுரி அவர்கள் குறிப்பிட்ட ‘போற்றும் சிலரில்’ திரு.இராமச் சந்திர தீட்சிதரும் ஒருவர்தானே என்று எவரும் ஐயுறத் தோற்றும். ஏனென்றால், கருத்து வேறுபாட்டில் அவர்க்கு நேர் எதிர் கோடுவரை சென்றுள்ளவர் திரு.தீட்சிதர். அவர்களது கருத்து வேறுபாடுகளைப் பார்ப்பவர்க்கு இது விளங்கும். சிலப்பதிகாரம் சங்ககால நூலன்று என்பது திரு.வையாபுரி கருத்து. அது சங்ககால நூலே என்பது திரு.தீட்சிதர் உறுதி. சிலப்பதிகாரம் சேரன் செங்குட்டுவன் இளவலான இளங்கோ எழுதியதே என்பது திரு.தீட்சிதர் கருத்து. இளங்கோ என்று ஒரு தம்பியே இருந்ததற்குச் சான்று கிடையாது என்று கருதுபவர் திரு.வையாபுரி. சிலப்பதிகாரம் கற்பனை கலந்த ஒரு வரலாறு என்பது திரு.தீட்சிதர் கோட்பாடு; அது வரலாற்றுப் பூச்சுக்குப் பூசிய அழகிய கட்டுக் கதை என்பது திரு.வையாபுரி அவர்கள் முடிவு. இந்த இரு கருத்து வேறுபாட்டுக் கோடிகளுக்குமிடையே இலக்கிய நயம் போற்றிய சிலம்பார்வலர்தாம் திரு.ஆர்.கே.சண்முகம். கண்கொள்ளாக் காட்சி சிலம்பைப் பற்றியவரை தமிழ்நாட்டில் எல்லாக் கருத்து வேறுபாடுகளுக்கும் உரிய முக்கூறான பிரதிநிதிகள் தாம் திரு.எ°.வையாபுரி, திரு.ஆர்.கே. சண்முகம், திரு.ஆர்.தீட்சிதர் ஆகியோர். ஆனால், மூவரும் ஒரே நூலின் பாராட்டில் பதிப்பில் கலந்துகொள்ள முடிகிறது. ஒரே பதிப்பில் நட்புக் கெடாமல் அறிவுச் சிலம்பப் போட்டி நடத்த முடிகிறது. புலி ஒரு புறம், ஆடு ஒரு புறம், ஒன்றைக் கொன்று ஒன்றைத் தின்னும் மனிதன் நடுவே. மூவரும் ஒருங்கே இருந்து புல் மேயும் அதிசயக் காட்சியை இங்கே காண்கிறோம்! போற்றும் சிலர் இந்த மூவருமில்லையென்றால் வேறு யார்? மூவர் கருத்துக்கும் அப்பாற்பட்ட வேறுபாடுடையவரா? மூவர் கருத்துகளுக்குள்ளும் தான் வேறுபாடுகள் அனைத்துக்கும் பிரதிநிதித்துவம் ஏற்பட்டாய்விட்டதே! தமிழக ஆராய்ச்சிப் போக்கின் புதிர் இத்தகைய புரியாச் சூழலில்தான் உள்ளது. அஃது எவ்வாறு சிலம்பின் புகழை, பயனைப் பாதிக்கிறது என்று காண்போம். சிலப்பதிகாரத்தைப் போற்றும் திரு.ஆர்.கே.சண்முகம், இராவ்பகதூர் எ°.வையா புரிப் பிள்ளை, திரு.வி.ஆர். ராமச்சந்திர தீட்சிதர் ஆகியோர் எவ்வளவு வேறுபாடுடையவராயிருந்தாலும் அவர்களை ஒருமுகப்படுத்திப் ‘போற்றும் சிலர்’ என்று குறிக்கப் பட்டவரிடமிருந்து அவர்களைப் பிரிக்கத்தக்க ஓர் அடிப்படை இனப் பாகுபாடு இருத்தல் வேண்டும் என்பது இதனால் தெரியவருகிறது. அது யாது? இது சிலப்பதிகார இலக்கிய நயம் பற்றியதன்று. மூவருமே அதை உச்சி மேற்கொண்டு போற்றுபவர் ஆவர். அது கால ஆராய்ச்சி பற்றியது, சிலப்பதிகாரத்தின் வரலாற்றுண்மை பற்றியது என்று கூறத் தோற்றும். ஏனெனில், பேராசிரியர் திரு.வே.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார் ஆராய்ச்சிக்கு இராவ்பகதூர் எ°.வையாபுரிப்பிள்ளை முன்னுரை தந்ததும், இராவ் பகதூர் கருத்துகளைப் பேராசிரியர் மேற்கோள் காட்டியதும் இவ்வகையிலேயே. திரு.ஆர்.கே.எ°. கால ஆராய்ச்சி, வரலாற்றுண்மை ஆகியவற்றில் கருத்தே செலுத்தவில்லை. இலக்கியநய ஆய்வுடனேயே நின்றார். ஆனால், திரு.வி.ஆர்.தீட்சிதர் கால ஆராய்ச்சியிலும் வரலாற்றுண்மையிலும் இராவ்பகதூர்க்கும் பேராசிரியர்க்கும் முற்றிலும் மாறுபட்டவர். ஆகவே, கால ஆராய்ச்சி, வரலாற்றுண்மை ஆகியவை நீங்கலாக மேற்கூறிய மூவரையும் போற்றும் சிலரிடமிருந்து விலகி நிற்க வைக்கும் பண்பு வேறு இருத்தல் வேண்டும். சிலப்பதிகாரத்தைத் தமிழர் பண்பாட்டுக்குரிய நூல், தமிழர்க்குப் பெருமை தரும் நூல் என்று போற்றும் சிலர் கொண்டாடியதே அப் பண்பு, என்பதில் ஐயமில்லை. மேற்கூறிய மூவரும் தமிழை ஆரியத்தோடு இணைத்துப் போற்றுவதிலே கருத்துக் கொண்டவர்கள். தமிழின் பெருமை எதுவும் ஆளும் இனத்தின் மொழியாகிய ஆரிய சமற்கிருதத்துக்குப் போட்டியாய் விடக்கூடாது என்று ‘திரிகரண சுத்தியாக’ எண்ணி, அதற்காகப் பாடுபடுவர்கள். போற்றும் சிலர் கருத்தையே வலியுறுத்தும் வி.ஆர்.ஆர்.தீட்சிதர் சிலப்பதிகாரப் பண்பாட்டை விரிக்கும் பகுதியில் அதை ஆரியப் பண்பாடே என்று விளக்கும் பகுதியில் இதைக் காணலாம். மூவரோடு நால்வராகப் பேராசிரியரும், நால்வரோடு அணிமையில் ஐவராக வந்து நிறைவுற்ற பெரியார் ஈ.வே.ரா. அவர்களும் சிலப்பதிகாரத்தின் ஆராய்ச்சியில் ஒருங்கே கூட்டுச் சேர்ந்த மாயக் கூட்டின் மறைதிறவு இதுவே. உவப்பு உவர்ப்பற்ற நடுநிலை ஆராய்ச்சிகளல்ல ஆனால், நால்வரும் தமக்கு விருப்பமான ஒரு முடிவுக்காகக் கூட்டுச் சேர்ந்தாலும், தனித்தனி ‘அவா முடிவுகள்’ அல்லது ‘முடிபவாக்கள்’ உடையவர் என்பதைக் கூர்ந்து கவனித்தால், அவர்கள் ஆராய்ச்சிகள் ஆராய்ச்சிகளல்ல என்பது விளங்கும். பேராசிரியர் வே.சு.சு. அவர்கள் வெளியிட்ட ‘சிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும்’ என்ற சிற்றேட்டுக்குப் பெரியார் ஈ.வே.ரா. அளித்த முன்னுரையின் பின் குறிப்பில் அவர் கூறுவதாவது: “வித்வான் வே.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார் அவர்கள் ஆரியக் கொள்கைப்படி ஏற்பட்ட சாதிகளில் கம்மியர் வகுப்பைச் சேர்ந்தவராய் இருப்பதாலும், சிலப்பதிகாரத்தில் பொற்கொல்லர் வகுப்பை இழித்துக் கூறியிருப்பதாலும், அதன் காரணமாய்ச் சிலப்பதிகாரத்தில் குற்றங்காண முன் வந்தார் என்று ஒரு சிலரும்; மற்றும் அதுபோலவே சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் ஆரியக் கொள்கையின்படி ஏற்பட்ட சாதிகளுள் ஒன்றாகிய வைசிய சாதியைச் சேர்ந்தவராய் இருப்பதாலும் அதன் காரணமாய்ச் செட்டியார் அவர்கள் சிலப்பதிகார ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதைப் பெருமைப்படுத்தி வருகிறார் என்றும் இரு காரியங்களுக்கும் உள் எண்ணம் கற்பிப்பவரைக் காண்கிறேன்.” இந்தச் சாதிச் சந்தேகம் இராவ்பகதூர் வையாபுரி போன்றார் தலையிட்டால் அகன்று விடுவதாகப் பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் கருதியுள்ளார்கள். தொடர்ந்து அவர் கூறுவது இதைக் காட்டுகிறது. “ஆனால் இந்த இரு வகுப்பார் தவிர, மற்றும் பல வகுப்பார் களிலும் குற்றம் காண்பவரும் பெருமைப் படுத்துகிறவர்களும் காணப்படுகிறார்கள். ஆதலால் இக் கூற்றுக் குறுகிய நோக்கம் கொண்ட கூற்று என்றே கருதுகிறேன்!” ஈர் ஆராய்ச்சி முடிவுகள் வித்துவான் வே.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார் 1947இல் வெளியிட்ட தம் முதல் ஆராய்ச்சி நூலுக்குச் சிலப்பதிகார ஆராய்ச்சி என்ற பெயரே இட்டிருக்கிறார். அதற்கு ஆதாரங்கள் தந்த ஆராய்ச்சியாளரும் ஆதரித்து முன்னுரை தந்தவரும் இராவ்பகதூர் எ°.வையாபுரிப்பிள்ளை. இரண்டாவது சிறு வெளியீடு பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் ஆதரவு முன்னுரை யுடன் சிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும் என்ற பெயருடனே 1951-ல் வெளி வந்தது. இரண்டு நூல்களின் வாத முடிவுகள் கீழே தரப்படுகின்றன. ‘சிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும்’ என்ற நூலின் முடிவு வருமாறு. ‘இதுகாறும் கூறியவற்றால் சிலப்பதிகாரம் திறக்குறளுக்கு இலக்கியமாகாது என்றும், அதில் தமிழ்ப் பண்பாடு இல்லை என்றும், சரித்திரப் பண்பாடு இல்லை என்றும், காவியப் பண்பாடு இல்லை என்றும் தடை விடைகளால் நிரூபித்துள்ளேன்.’ ‘சிலப்பதிகார ஆராய்ச்சி’ தந்த முடிவு வருமாறு : “எனவே சிலப்பதிகாரம் சங்க காலத்திய நூலன்று. சரித்திர சம்பந்தமுடையதன்று. கற்பனைக் கதையாகும் என்பது தோற்றாமல் போகாது.” முன் எழுதப்பட்ட ஆராய்ச்சி நூலில், காலம், வரலாற்றுப் பண்பு இரண்டுமே எதிர்க்கப்பட்டன. காவியப் பண்பு இழித்துரைக்கப்படவில்லை. பிந்திய நூலிலோ இதன் காவியப் பண்பு, தமிழ்ப் பண்பு மறுக்கப்படுகிறது. அஃது ஆரியப் பண்புடையது என்று இழித்துரைக்கப்படுகிறது. பழிப்பவர் புகழ்ச்சி முந்திய நூல் சிலம்பின் காவியப் பண்பைப் பழிக்கவில்லை. குறைகூறவில்லை. அது மட்டுமோ? போற்றும் உலகையும், போற்றும் இராவ்பகதூரையும் தாண்டி நூலின் காவியப் பண்புக்குச் சிறப்பளிக்கிறது. “இந்நூல் மிக மிக அழகாக யாக்கப் பெற்றிருக்கிறது. எனவே, இதனாசிரியர் மிகச் சிறந்தவராதல் வேண்டும். இவர்க்குத் தெரியாத கலைகள் இல்லை. எல்லாம் வல்லுநர், சர்வகலா வல்லவர், அல்லது 96 வகை சாத்திரங்களிலும் வல்லவர் எனில் மிகப் பொருந்தும். மனோபாவத்தில் தோன்றிய கதையை மிகத் திறம்பட உரைத்து மெய்யாக்கியது ஆசிரியரின் வன்மையைத் தோற்று விக்கின்றதன்றோ?” (பக். 21) “ஒவ்வொரு பகுதியிலும் இலக்கியச் சுவை ததும்ப நின் றதென்பது எவரும் மறுக்க முடியாத உண்மையாகும்.” (பக். 32) “இந் நூலில் ஆசிரியர் காவிரி, வைகையாகிய ஆறுகளையும், புகார், மதுரை ஆகிய நகரங்களையும், சூரிய சந்திரர் உதயமும் அ°தமனமும், கொண்டற் காற்று, குடகாற்று, வாடைக் காற்று, தென்றல் என்ற நால்வகைக் காற்றுகளையும், இந்நகரங்களைச் சூழ்ந்துள்ள காடுகளையும் வருணிப்பது படிப்போருடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டு நேரில் தோன்றும் தோற்றம் போலக் காணப்படும். எந்த நூலாசிரியனும் ஒருங்கே கூறாத பல செய்திகளையும் இவர் கூறுகின்றார். இவரால் கூத்து வகைகள், இசை வகைகள், யாழ் வகைகள், பொழில் விளையாட்டு, புனல் விளையாட்டு, பறவைகளின் ஒலி, கோள்மீன், நாண்மீன் இவற்றின் நிலைகளாலும் திரிதலாலும் உலகுக்கு ஏற்படும் நன்மை தீமைகள், மருந்து முறைகள், பல சமயங்களின் செய்திகள், பல புராணக் கதைகள், அரசர் பலர் செய்தி, மலைகள், தெய்வங்கள் இன்னோரன்ன பல கூறப்பட்டிருக்கின்றன.” (பக். 31-32) “கண்ணகியினுடைய அவயவங்களும், நுதல், புருவம், இடை, கண், நடை, சொல் ஆகிய இவற்றை மனையறம் படுத்த காதையில் (வரி 37-39) கூறுவது மிகவும் வியத்தற்குரிய வருணனை ஆகும்.” (பக். 32) “நாடு நகரங்கள் மிகத் திறம்பட வருணிக்கப் பட்டிருக்கின்றன.”(பக். 36) “இவர் ஓரிடத்துச் சுருக்கிக் கூறும் செய்தியை மற்று மோரிடத்தில் கூறும் போது படிப்போர்க்கு வெறுப்புத் தோன்றாதவாறு சுருக்கிக் கூறியுள்ளதைப் பெருக்கிக் கூறியும், விரித்துக் கூறிய ஒன்றைச் சுருக்கிக் கூறியும் சென்றுள் ளார்.” (பக். 36-37) “இசையளவில் வரிப்பாட்டுகள் படிப்போரையும் பக்கம் நின்று கேட்போரையும் வரித்துக்கொள்ளும் வனப்பு வாய்ந்தனவாக உள்ளன. இன்னும் இவர் கூறும் பல உருவங்களும் உவமைகளும் கற்போர் மனத்தைக் கவரக் கூடியவை யாகும்.” (பக். 37-38) கட்சி, இனம், கொள்கை கடந்து போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் இலக்காகியுள்ள ஏடு சிலப்பதிகாரம். ஆனால், இன்னொருபுறம் அதுவே கட்சி, இனம், கொள்கை கடந்து பாராட்டுதலுக்கும், புறக்கணிப்புக்கும் இலக்காகியுள்ளது. மேலீடாகப் பார்ப்பவர்களுக்குப் போற்றுவதும், பாராட்டுவதும் ஒன்று என்று தோற்றும். அதுபோலத் தூற்றுவதும், புறக் கணிப்பதும் ஒன்று என்று புலப்படும். ஆனால், சிலப்பதிகாரத்தைப் புறக்கணிப்பவரிடையே அதைப் போற்றுபவர் உண்டு. போற்றுபவர் நோக்கம் வேறு, பாராட்டுபவர் நோக்கம் வேறு என்பதையும், தூற்றுபவர் நோக்கம் வேறு, புறக்கணிப்பவர் நோக்கம் வேறு என்பதையும் இது காட்டும். புறக்கணிப்புக் குழுவும் - தூற்றுதல் குழுவும் புறக்கணிக்கும் குழுவில் தலை சிறந்தவர் அண்மையில் காலம் சென்ற பெரியார் இராவ்பகதூர் வையாபுரிப்பிள்ளை அவர்களேயாவர். ‘போற்றும் சிலர்’ என்று அவர் ஒரு சாராரை ஒதுக்கிப் பேசினாலும், போற்றுவதிலேயே அவர் கிட்டத்தட்ட முதலிடம் வகிப்பவராவர். சிலப்பதிகாரம் சங்ககாலத்து நூலன்று என்பதை நிலை நாட்டுவதிலும், அது வரலாற்று நூலன்று, கற்பனைக் காவியமே என்பதை உறுதி செய்வதிலுமே முழுக் கருத்துச் செலுத்தியவர் அவர். ஆனால், கலை என்ற வகையில் அது தமிழின் தலைசிறந்த நூல்களுள் ஒன்று என்றும், தமிழர் பண்பாட்டை விளக்குவதிலும் அஃது ஒப்புயர்வற்றது என்றுமே அவர் கொண்டார். இதற்கு நேர்மாறாகத் தூற்றும் குழுவில் தலைமை வகிப்பவர் பெரியார் ஈ.வே.ராமசாமி ஆவார். குழுவின் வலுவும், ஆற்றலும் அவரே. ஆனால், அவர் கலைஞர் அல்லர். கலைக்கும் அவர்க்கும் தொலைதூரம். கலைப்பக்கம் சாயாத, என்றும் சாய விரும்பாத பகுத்தறிவுவாதி அவர். அவர் தோற்றுவித்த இயக்கத்தி லேயே அறிஞர் உண்டு, கலைஞர் உண்டு, தமிழாராய்ச்சியாளர் உண்டு. ஆனால், இந்தத் தூற்றல் குழுவில் அவர்கள் இணைய வில்லை. அதிலிருந்து ஒதுங்கியே நின்றனர், நிற்கின்றனர், நிற்பர். ஏனெனில், தூற்றல் குழுவின் நோக்கம் வரலாற்று ஆராய்ச்சி அன்று, கலை ஆராய்ச்சி அன்று, ஒரு கோட்பாட்டுக் கிணங்க நூல்களை மக்களிடையே தணிக்கை செய்வது மட்டுமே ஆகும். சிலம்புச் செல்வம் சங்க காலத்ததா, பிற்காலத்ததா என்பதிலோ; அது வரலாற்று நூலா, கற்பனைக் காவியமா என்பதிலோ தூற்றுதல் குழுவினர்க்குத் துளிகூடக் கவலை கிடையாது. அவர்கள் நோக்கம் இராவ்பகதூர் வையாபுரியின் நோக்கத்துக்கு நேர் மாறானது. ‘சிலப்பதிகாரம் கலையல்ல; அழகிய கற்பனை யல்ல; அது தமிழர் பண்பாட்டுக்குச் சிறந்த இலக்கியமன்று; அயல் பண்பாட்டுக்கு, அதுவும் தமிழ்க்கு நேர்மாறான ஆரியப் பண்பாட்டுக்கு உரியது அஃது’ என்பதே அவர்களது கோட்பாடு. இதை நிலை நாட்டுவதே அவர்களது நோக்கம். பொருந்தாத் தலைப் பெரியார்களைப் பொருத்த முயலும் பேராசிரியர் புறக்கணிப்போர் குழு, தூற்றுவோர் குழு ஆகிய இரண்டிலும் இடம் பெறும் விசித்திரப் பெருமை கொண்டவர் பேராசிரியர் வே.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார். இரு குழுவிலும் அவருடன் தொடர்புகொண்ட இரு பெரியார்களும் - பெரியார் ஈ.வே.ரா. ஒருபுறமும், இராவ்சாகிப் வையாபுரிப் பிள்ளை மறுபுறமும் வெறும் கருத்து வேறுபாடு மட்டும் உடையவர்கள் அல்லர்; தமிழகத்தில் பிறந்த இரண்டு உயிர்கள் என்ற பொது ஒற்றுமை தவிர வேறு எல்லா வகையிலும் அவர்கள் வேறுபட்டவர்கள், மாறுபட்டவர்கள். இருவரும் ஒற்றுமைப்படுவதற்குரிய பொதுப் பண்பும் எதுவும் கிடையாது; வேற்றுமைப்படுவதற்குரிய பொது நோக்கமும் எதுவும் கிடையாது. ஆயினும், இப்பொருந்தாத் தலைகள் இரண்டுக்கும் இடையே நின்று பொருத்தம் காண முயலுகிறார் பேராசிரியர். இது மட்டுமன்று, இரு குழுவிலும் இடம்பெற்ற பேராசிரியர் இரு குழுவிற்கும் பிரதிநிதியாக நின்று இருவேறு வகைப்பட்ட சிலப்பதிகார எதிர்ப்பு நூல்களை இயற்றித் தந்துள்ளார். 1947-ல் இராவ்சாகிப் அவர்கள் முன்னுரை, மேற்கோள்களுடன் ஆனந்தபோதினி பத்திராதிபர் திரு.நா.முனுசாமி முதலியார் அவர்களைப் பிரசுரகர்த்தராகக் கொண்டு வெளிவந்த ‘சிலப்பதிகார ஆராய்ச்சி’ என்ற நூல் புறக்கணிப்புக் குழுவின் கருத்தையே மேற்கொண்டது. சிலப்பதிகாரம் சங்க காலத்து நூலன்று, பிற்பட்டது; அது வரலாற்று நூலன்று, கற்பனைக் காவியம் என்று மட்டுமே அது வாதாடிற்று. அதன் அழகை, பெருமையை, பண்பை, இராவ்சாகிப் அவர்கள் வலிவுறுத்தியதுபோலவே அதுவும் வலியுறுத்திற்று. ஆனால், 1951-ல் பெரியார் ஈ.வே.ரா.அவர்களின் முன்னுரையோடு ‘சிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும்’ என்ற தலைப்புடன் திராவிட இயக்கப் போர்வையில், அவ்வியக்கத்தாரின் அறிவு நூல், கலை நூல் கொத்து களிடையே ஓர் அறிவுக் கலை ஆராய்ச்சி நூல் போல மாறுவேடத்துடன் வெளி வந்த நூல் தூற்றல் குழுவின் சார்பானது. பெரியார் ஈ.வே.ராவின் முன்னுரை எடுத்துக் காட்டுகிறபடி சிலப்பதிகாரத்தில் இலக்கியப் பண்பு, சரித்திரப் பண்பு, தமிழ்ப் பண்பு ஆகிய நால்வகைப் பண்புகளுள் எதுவும் இல்லை என்றே அது வாதாட முயல்கின்றது. இவ்வாதமும், இம்முடிவும் பேராசிரியரே எழுதிய முந்திய நூலின் முடிவுகளிலிருந்து வேறுபட்டவை மட்டுமன்று, அவற்றுக்கு முற்றிலும் மாறுபட்டவையுமாகும். நெளிந்து வளையும் ஆராய்ச்சிப் போக்கு இராவ்பகதூருக்கு இசைந்தபடி முந்திய நூலிலும், பெரியார் ஈ.வே.ரா. வுக்கு இசைந்தபடி பிந்திய நூலிலும் பேராசிரியர் போதிய அளவு வளைந்து, நெளிந்து கொடுத்திரு க்கிறார். ஏனெனில், ஆராய்ச்சித் துறையில் ஊடாடியவர் என்ற முறையில் இரண்டிலும் ஒரு சில பொதுக் கூறுகளை அவர் விட்டு வைத்திருந்தாலும், முடிவுகளும் நோக்கங்களும் பொறுத்த வகையில் இரண்டும் வேறுபட்டவை. தம் ஆராய்ச்சிகளின் போக்கை இரு வேறு இனச் சார்புகளுக்கு இசைய, இரு வேறு இனச்சார்பில் இருவேறு பண்புகளுடன் உழைத்த இருவேறு பெரியார்களின் ஒப்புதலும் ஆதரவும் பெறுவதற்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ளும் வகையில் பேராசிரியர் திறம் பெரிதே ஆகும். இரண்டையும் எழுதியவர் ஒருவரேயானாலும், இருவேறு சட்டைகள் இரவல் தரப்பட்டு, இரு வேறு கட்சியாளர்களின் வழக்கறிஞராக அவர் செயலாற்றி யுள்ளார். புறக்கணிப்புக் குழுவின் உட்கருத்து புறக்கணிப்புக் குழுவில் இராவ்பகதூரும் சரி, பேராசிரியரும் சரி சிலப்பதிகாரத்தைப் புறக்கணிக்கவே விரும்பினர்; தூற்ற விரும்பவில்லை. அது வரலாற்று நூலல்ல, கற்பனைநூல் என்று அவர்கள் நிலைநாட்ட விரும்பினர். ஏனெனில், பிற்காலத் தமிழ்க் காப்பியங்களான கம்பராமாயணமும், வில்லிப்புத்தூரார் பாரதமும், அவற்றுக்கு மூலமான சமற்கிருத பாரத இராமாயணங்களும் கற்பனை நூல்களே! அவற்றுக்கு இல்லாத சிறப்பு தமிழ்க்கும், தனித்தமிழ் நூல்களுக்கும் இருப்பது அவர்களுக்கு அல்லது அவர்கள் சார்பினர்க்கு உறுத்தியிருத்தல் வேண்டும். இரண்டாவது, சிலப்பதிகாரம் சங்ககாலத்து நூலன்று, அதாவது தனித் தமிழ்ப்பண்பு உலவிய காலத்து நூலன்று என்று அவர்கள் நிலைநாட்ட அரும்பாடுபட்டனர். ஆரியத் தமிழ்க் கலப்பு ஊடாடத் தொடங்கிய தேவாரத்துக்குப் பிற்பட்ட காலநூலே அஃது என்றும் விளக்க அவாவினர். இதுவும் இயல்பே. ஏனெனில், அவர்களால்கூட அது கம்பராமாயணத் துக்குப் பிற்பட்டது என்று கூறமுடியாமற் போய்விட்டது. ஆங்கில ஆட்சியின் மேலை வரலாற்று முறையும் அறிவாராய்ச்சி முறையும் இல்லாத காலங்களில் நம் வையாபுரி போன்ற அறிஞர்கள் ‘வையாபுரி சா°திரிகள்’ ஆகி அவ்வாறு கூறியிருக்கக்கூடும். ஆனால், அது கம்பராமாயணக் காலத்துக்கு முற்பட்ட தாயினும் ஒரு சிறிதே முற்பட்ட ஆரியத் தமிழ்க் கலப்புக் காலத்துக்கே உரியது என்று கூறுவதன்மூலம் அவர்கள் அதன் அருமை பெருமைகளை ஆரியத் தமிழ்க் கலப்புக்கு, அதாவது ஆரிய நாகரிகத்துக்கு உரியதாக்க விரும்பினர். இராவ்சாகிப் ஒதுக்கித் தள்ள விரும்பிய கூறுகள் ஆர்.கே.சண்முகம் பதிப்பின் முன்னுரையில் இராவ்சாகிப் அவர்கள் தமக்கே உரிய கலைப்பாணியில் இக்கருத்தை நயமாகக் குறித்துள்ளார். “இசை பற்றிய கருத்துகள், சரித்திரக் கூறுகள், முதலியன எல்லாம் (சிலப்பதிகாரத்தின்) இலக்கிய நயத்தை நாம் அறிவதற்குத் தடையாய் அமைந்துவிடுகின்றன. இவற்றை எல்லாம் புறம்பே ஒதுக்கினாலன்றி, சிலப்பதிகாரத்தின் இலக்கிய நயத்தையும், கலை நயத்தையும், கவித்துவ நயத்தையும் நாம் உணர்ந்துகொள்ள முடியாது. இந்நெறியில் இக் காவியத்தைக் கற்றால்தான் ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று சுப்பிரமணிய பாரதியார் கூறியதன் உண்மை விளங்கும்.’ இராவ்சாகிப் அவர்கள் ஒதுக்கித் தள்ள விரும்பிய செய்திகள் இரண்டு. ஒன்று இசைத்துறை, மற்றொன்று சரித்திரக் கூறுகள் - அதாவது சிலப்பதிகாரக் கால ஆராய்ச்சியும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் வரலாற்றுச் செய்திகளின் ஆராய்ச்சியும் ஆகும். சிலப்பதிகாரம் ஒரு நாடகம் என்பது அவர்க்குத் தெரிந்திருந்தால், அல்லது அவர் காலத்தில் அஃது அறியப்பட்டிருந்தால் அவர் ஒதுக்க விரும்பிய செய்திகளுள் அதனையும் சேர்த்து அவர் அவற்றை மூன்றாக்கியிருப்பார் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இந்த மூன்றுமே சிலப்பதிகாரத் துக்குப் பெருமை தருவதுடன் நிற்காமல் தமிழ்க்குப் பெருமை தந்துவிடுகின்றன. தமிழகத்துக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் பெருமை தந்துவிடுகின்றன. இவை மட்டுமோ? இவையே ஆரியத்துக்கில்லாத பெருமைகளைத் தமிழ்க்குத் தந்து விடுகின்றன. இங்ஙனம் தருவதன்மூலம் ஆரியத்துக்குத் தாய்மொழிகளை அடக்கி ஆளும் ஆதிக்க வாய்ப்பை அது கெடுக்கத் தொடங்கிவிடுகிறது. இராவ்சாகிப் அவர்கள் ஒதுக்கித் தள்ள விரும்பிய கூறுகளுள் ஒன்று தமிழிசைச் செய்திகள். அதில், இருவேறு இன அறிஞர் தலையிட்டு, தத்தம் ஆராய்ச்சிகளில் அவற்றைக் கலந்துள்ளனர். ஒருவர் ஈழம் தந்த கலைப்பெரும் செல்வம் விபுலானந்த அடிகள். மற்றவர் புதுவைக் கவிஞர் சுத்தானந்த பாரதியார். இருவருமே வடநாட்டவரான இரண்டு உலகப் பெரியார்கள் பெயரால் நடைபெறும் திருமடத்துத் துறவிகள்தாம். இருவருமே இராவ்சாகிப் கட்டளையை மீறியவர்கள்தாம். ஆயினும், ஒருவரே இராவ்சாகிபினால் ‘போற்றும் சிலர்’ என்று ஒதுக்கியவருள் இடம்பெறத் தக்கவர். ஏனெனில் சுத்தானந்த பாரதியார் சிலப்பதிகார இசையை நுணுகி ஆய்ந்து விளக்க முற்பட்டாலும், அஃது ஆரிய இசையின் வழிப்பட்டதே என்று ஆறுதலடையத் தவறவில்லை. ஈழத்துச் செல்வர் விபுலானந்த அடிகளோ தனித்தமிழ் இசையின் தனிச் சிறப்புகளையும், தனி முதன்மைகளையும், தொன்மைகளையும் விளக்க முற்பட்டுள்ளார். கடல், கடற்கழி, குட்டை தமிழ்ப் புலவர், கலைஞர், அறிஞர்களின் பரப்பில் புறக்கணிப்புக் குழுவினரும், தூற்றுதல் குழுவினரும் சேர்ந்து ஒருங்கே வசிக்கும் இடம் மிகமிகச் சிறிதே ஆகும். தமிழ் ஆராய்ச்சித் துறை ஒரு கடலானால், புறக்கணிப்புக் குழு கடல் அலைகளிலிருந்து ஒதுங்கிக் கிடக்கும் ஒரு கடற்கழி போன்றது. தூற்றுதல் குழுவோ கடல், கடற்கழி ஆகிய இரண்டிலிருந்தும் துண்டுபட்டுக் கிடக்கும் ஒரு வடிநீர்க் குட்டை. மறுமலர்ச்சியின் எழுச்சியால் கடல் ஆரவாரிக்கும் இந்த நாள்களில் அந்த ஆரவாரம் சென்று எட்டாத திட்டுகளே இவை. ஆயினும், இந்த நிலையிலும் சிலப்பதிகாரத்தின் வரலாற்றுப் பெருமை, கலைப்பெருமை, இலக்கியச் சிறப்பு, தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பெருமை, இந்திய மாநில மளாவிய, கீழ்த்திசையளாவிய உலகளாவிய அதன் கலை வரலாற்றுப் பெருமை, இசை நாடக முத்தமிழ்ப் பெருமை ஆகியவை உலகிலோ, தமிழகத்திலோ பொது மக்களிடையே ஒரு சிறிதும் பரவிவிடவில்லை. அறிஞர் உலகில்கூட அது போதிய அளவு உணரப்படவில்லை. அத்துடன் புறக்கணிப்புக் குழுவும் தூற்றுதல் குழுவும் அறிஞர் உலகிலோ, பொது மக்களிடையிலோ செல்வாக்கற்றவையே. ஆனாலும், இருவேறு வகையில் வருங்காலத் தமிழகத்துக்கும் வருங்கால உலகத்துக்கும் தெரிந்தும், தெரியாமலும், குந்தகம் விளைவிக்கும் போக்குகளே உடையவையாயிருக்கின்றன. மறுப்புக்குரிய மூன்று காரணங்கள் புறக்கணிப்புக் குழு பல்கலைக் கழகங்கள், கல்வி நிலையங்கள், அரசியல் அரங்கங்கள், பத்திரிகைகள் ஆகியவற்றின் ஆட்சிக் குழுவினரை மறைத்து நின்று இயக்கும் ஆற்றல் படைத்ததாகவே இருந்துவருகிறது. ஏற்கெனவே அது தமிழகத்தின் மெய்ம்மைகளும், மெய்ப்புகழும் உலகுக்குத் தெரிய வாராமல் மறைக்கும் சீரிய பணியைத் திறம்படச் செய்துவருகிறது. தமிழர் வரிப்பணத்தைப் பயன்படுத்தித் தமிழர் கல்வியின்மை, அறியாமை, மடமைகளை முதலீடாக வைத்து, அயல் பண்பாடுகளை வளர்த்துவருகிறது. சிலப்பதிகாரத்தின் மெய்ப் பெருமையை மறைத்தாலன்றி இந்த அயல் பண்பாட்சியை நீடித்துப் பேண முடியாது என்பதை அது கண்டு கொண்டுள்ளது, கண்டு கொண்டு வருகிறது. நோக்கத்தில் தூற்றுதல் குழு புறக்கணிப்புக் குழுவுக்கும் நேர்மாறானதே. ஆனால், அது கலைப் பண்பற்றது. பொதுமக்கள் உள்ளத்திலே அயல் பண்புகளையும் கலைப் பண்புகளையும் பிரித்தறியமாட்டாமல் ஒன்றுபடுத்திக் குழப்பி, தெரிந்தும் தெரியாமலும் அயல் பண்புகளை வளர்த்துத் தமிழ்ப் பண்பின் எதிரிகளிடமே மக்கள் உள்ளத்தை ஒப்படைத்துவிடக் காரணமாகியுள்ளது. மேற்கூறிய மூன்று காரணங்களும் இல்லை என்றால் சிலப்பதிகாரத்தின் எதிர்ப்புக்கு மறுப்புக் கூறவேண்டிய தேவையே ஏற்பட்டிராது. இஃதை அவர்களும் அறிவர். ஏனெனில், இதுவரை இந்த இரு சாரார்க்கும் ஆட்சிக் குழுவிலும், மக்கள் மன்றத்திலும் பதவிகள் கிடைத்தனவேயொழிய, தமிழ்பற்றிப் பேசும் உரிமையும் கிடைத்ததில்லை; அவர்கள் பேசியதை எவரும் கேட்கவோ, மறுப்புக் கூறவோ எண்ணியது மில்லை. ஆனால், பொருந்தாத் தலைகளைப் பொருத்த முயன்ற பேராசிரியர் அத்தகைய எதிர்ப்பைக் கிளற ஒரு சிறு சூழ்ச்சியைக் கையாண்டுள்ளார். தமிழகத்தின் கலைஞரிடையே முன்னணி வரிசையில் இடம் பெற்றுள்ள கவிஞர் கண்ணதாசன் மீது பின்னிருந்து கல்லெறிவதன் மூலம் கலைஞர் உலகின் கவனத்தை அவர் தம் திசையிலும் தமிழ்த் துறையாளரால் கவனிக்கப் படாதிருந்த பெரியார்கள் பக்கமும் திருப்பும் வாய்ப்பு அவர்க்குக் கிட்டியுள்ளது. சிலப்பதிகாரம் பற்றிப் பொதுமக்களிடையே - சிறப்பாகத் தமிழ்ப் பணியுடன், தமிழினப் பணியும், தமிழ்ப் பண்பாடு வளர்க்கும் பணியும் மேற் கொண்ட மறுமலர்ச்சி இயக்கத் தோழர்களிடையே - புதிய எண்ண அலைகளைப் பரப்ப இச் சந்தர்ப்பம் பயன்பட்டுள்ளதாதலால் அவர் தூண்டிய மறுப்பே சிலம்பு தூண்டும் தமிழகச் சிறப்பை வளர்க்கவும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது எனலாம். புறக்கணிப்புக் குழுவைப் பேராசிரியர் ஆதரித்த காலத்திலும், அவர் ஆதரவை அது பெற்றதேயன்றி, அதன் ஆதரவை அவர் பெறவில்லை. அவர் ஆராய்ச்சி பல்கலைக்கழக மேடை ஏறவில்லை. இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அவர் ஆராய்ச்சிகள் இராவ்சாகிப் வையாபுரிப் பிள்ளை அவர்கள் கருத்துகளின் நிழல்களாயிருந்தனவேயன்றி, தனித் தன்மை யுடையவையாகவோ, இராவ்சாகிப் அவர்களின் கருத்துகளுக்கு வலிமை தருபவையாகவோ அமையவில்லை. முன்னுரை தர இசைந்த இராவ்சாகிப் அவர்களே பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை ஆட்சியிலிருந்தாலும் பல்கலைக்கழக முத்திரையைத் தம் நிழலுக்குத் தர அவர் துணியவில்லை. இரண்டாவதாகப், பேராசிரியர் ஆராய்ச்சியாளர் என்ற முறையில் ஆயிரம் பொற்கொல்லரைப் பலியிட்ட செய்தியை ஆராய்ச்சி நோக்கமாக முன் வைக்கவில்லையென்றாலும், சரியாகவோ, தப்பாகவோ மனிதரென்ற முறையில் அதுவே அவரை இயக்கிற்று என்று பலரும் எண்ணினர் என்பதில் ஐயமில்லை. இஃது ஆளும் இனத்தவரான ஆரியரைப் பற்றிய செய்தியாக இருந்திருந்தால், இத்தகைய ஓர் உள்நோக்கமே அவர் நூலுக்கு மேலோர் ஆதரவையும், மேலிடத்தார் ஆதரவையும் கட்டாயம் தேடித் தந்திருக்கும். துரதிருஷ்டவசமாக அது பொற்கொல்லரைப் பற்றிய செய்தியாதலால், அது மேலோரை உறுத்தி இயக்கிப் புயல் எழுப்ப முடியவில்லை என்பது தெளிவு. பெரியார் ஈ.வே.ரா., அறிஞர் அண்ணா சூழல்கள் புறக்கணிப்புக் குழுவுக்கு நேர்மாறான நோக்கமுடைய வர்களின் கோட்டை திராவிட இயக்கம். அதன் தோற்றுதல் தலைவராய் விளங்கிய பெருமையுடைய பெரியார் ஈ.வே.ரா. தமிழினத்தைத் தட்டி எழுப்பியவர். தமிழ்ப் பேரறிஞர். தமிழ்ப் பெருங்கவிஞர், தமிழகப் பேரறிஞர் ஆகியவர்களின் மரபுகளை மக்கள் மன்றத்துக்கு அறிமுகப்படுத்தி, அதன் மூலம் அடிமை ஆட்சிக் காலத்திலே ஆளுவோர்க்கும் ஆளப்படுவோர்க்கும் இடையே விடப்பட்டிருந்த மாயைஇருள், மருள்திரைகளை நீக்க உதவியவர் அவர். ஆயினும், அவ்வத் துறைகளில் அறிஞர்களை, கலைஞர்களைக் கலந்தன்றி அவர் எந்த முடிவுக்கும் என்றும் திடுமென வந்தவரல்லர். எந்த முடிவின்மீதும் திடுமெனக் குதித்தவருமல்லர். திருக்குறள் வகையில் அத் திருநூலை ஏற்பதா, மறுப்பதா - ஏற்று மறுப்பதா, மறுத்து ஏற்பதா என்று பல்லாண்டுக் காலம் அவர் தயக்கமுற்றிருந்ததையும், 1949ஆம் ஆண்டிலேயே திருக்குறள் தமிழர் பெருநூல்தான் என்ற முடிவைத் துணிந்து ஏற்று அதைப் பரப்ப முன் வந்ததையும் திராவிட இயக்கத்தவர் மட்டுமின்றி மறுமலர்ச்சி இயக்கத் தோழர் அனைவரும் அறிவர். அத்தகைய பெரியார் சிலப்பதிகார வகையிலும் அதே போன்ற தயக்க மயக்க நிலையிலேயே இருந்து வந்திருப்பது இயல்பு; இது புரியக் கூடியதே. ஆனால், உலகின் போதாக் காலமாக தமிழகத்திலேயே பிறந்துவிட்ட உலகப் பெரியார்கள் பலருடன் - சிந்தனைச் சிற்பி சிங்காரவேலு செட்டியார், தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார், மறைமலை அடிகளார், பா.வே.மாணிக்கநாயகர், கைவல்யத்தடிகள், பண்டித அயோத்தியாதாசர் முதலியோருடன் தோழமை, அன்புப் பிணக்கு, அறிவுப்போட்டி ஆகிய மூவகைத் தொடர்புகளும் கொண்டவர் அவர். இவர்களைப் போன்ற அறிஞர், கலைஞர், ஆராய்ச்சியாளர் மரபு அற்று விடவில்லை - மறுமலர்ச்சிக் காலம் அவர்களும் கனவு காணாத அளவிலும், வகையிலும் அதைச் சீரிய முறையில் வளர்த்தே வருகிறது. ஆனால், பழம் பேரறிஞர்களுள் பலர் நம் உலகை விட்டு அகன்றுள்ளனர். மீந்தவர் ஒளிகள்கூடப் பெரியார் ஈ.வே.ரா.வை இப்போது தீண்டுவதில்லை. அத்துடன் தமிழகத்தின் அறிவு, கலை, தொண்டு ஆகிய மூன்றின் இணைக் கூட்டாக எழுந்துள்ள புத்திள ஞாயிறாகிய கலை அறிஞர் சி.என்.அண்ணா துரையைச் சுற்றி அவை சுழல்கின்றன. இந்நிலையில்தான் பெரியார் ஈ.வே.ரா. அறிவுத் தோழமையும், கலைத் தோழமையும் அற்ற வெற்று அரசியல் தலைவராய், புலமைப் பிரதிநிதித்துவம், மக்கள் பிரதிநிதித்துவம், மக்கள் தொடர்பு ஆகியவை அற்ற தலைவராய், சிலம்பின் ஒளி நிழல் கூறுகளை விரித்தறிய முடியாத மயக்க நிலைக்கு ஆளாக நேர்ந்தது. கதிரவனின் ஒளியன்று என்ற காரணத்தால் நிலவு இருளாய் விடாது. அது போல, வறண்ட பகுத்தறிவு நூலன்று என்ற காரணத்தால் கலைப்பெரு நூலான சிலப்பதிகாரம் அதற்கு மாறான மருள் நூலாய்விடமுடியாது. அஃது அறிவோடு கூடிய கலை நூல், அதாவது அருள் நூலேயாகும். இங்ஙனம் அறிஞர், கலைஞர் ஆதரவற்ற பெரியார் ஈ.வே.ரா. அறிஞர் உலகிலோ, கலை உலகிலோ, இருசாரார் உளத் துடிப்பினாலும் அதிர்வுறும் மறுமலர்ச்சிக் காலத் தமிழ்ப் பொதுமக்களிடையிலோ முற்கொண்டிருந்த செல்வாக்கை இழந்தவராகியுள்ளார். அவர் ஆதரவு இன்னும் ஒரு பேராசிரியரைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திவைக்கப் போதியதே யானாலும், அத்தகையவர் அறிவுக்கு வலுத்தருவதிலோ, அதற்கு விளக்கம் அளிப்பதிலோ அஃது இன்று செயலற்றதாகியுள்ளது. இராவ்பகதூர்கள் அருளிரக்கத்தாலோ, பெரியார்கள் ஆதரவாலோ பேராசிரியர் பெறாதுபோன மக்கள் அறிமுகத்தைத்தான் இள எழுத்தாளர்களிடையே ஒரு முழுநிலாப்போன்று நிலவும் கவிஞர் கண்ணதாசன் அவர்களை எதிர்ப்பதன் மூலம் அவர் அடைய முற்பட்டுள்ளார் எனலாம். செட்டிநாடும், தமிழும் காங்கிரசு போன்ற அகில இந்திய அரசியலியக்கங்களும், பிரமஞான சங்கம் போன்ற உலக ஆன்மிக இயக்கங்களும் தமிழகத்தில் வீசிய காலம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம். அது தமிழகத்தில் மறுமலர்ச்சிக்கு முற்பட்ட ஓர் இருட்கால மாகும். தமிழகம் தமிழை மறந்து ஆரியத்தையும், இந்தியத் தேசியத்தையும், மேலை உலக மோகத்தையும் அணைத்து மகிழ்ந்த காலம் அது. ஆனால், அக்காலத்திலும் தமிழ்மணம் மாறாத தமிழகப் பகுதிகளில் ஒன்றாக, தமிழ்ப் பண்பு தளராது தழைக்கும் தலைப்பகுதியாக இயங்கிற்று, தென்பாண்டி நாடு - அத்துடன் இணைந்த இராமனாதபுர மாவட்டம் சார்ந்த செட்டி நாடு. தமிழ் வளர்த்த பாண்டியரின் கிளை மரபுகளாக இராமனாதபுரம் சேதுபதியும் எட்டயபுரம் மன்னரும் இருபுறம் - தமிழகச் செல்வர், சமயவாணரிடையே, ‘நாங்கள் தமிழர்’ என்று அன்றும் சொல்லக் கூசாத தனவணிகர், திருநெல்வேலிச் சைவர் ஆகிய இரு வகுப்பினரும் இருபாலாக நின்று புறக்கணிக்கப் பட்டிருந்த தமிழ்க்கு அன்று ஆதரவளித்தனர். எதிர்ப்பு களிடையேயும், இருட்டடிப்புகளிடையேயும் அதைத் தொடர்ந்து வளர்க்க முன்வந்தனர். தென்பாண்டி நாட்டின் தமிழ் வேர்களாக மேல்புறம் திருவாங்கூர்த் தமிழகமும் தென்புறம் ஈழத்து யாழ்ப்பாணமும் இயங்கின. ‘நான் தமிழன்’ என்று சொல்லக் கூசாத சமூக ஆட்சி வகுப்பினர் வாழ்ந்த பகுதிகள் அன்று இவையே. இப் பகுதிகளில் தமிழ்ப் பசும்பயிர் தழைத்தது - தமிழக மறுமலர்ச்சிக்கு வித்தும், உரமும் தந்து, மறைமலை ஊழியைத் தோற்றுவிக்க இப் பகுதிகளே காரணமாயிருந்தன. மறுமலர்ச்சியின் இனக் குயில் மறுமலர்ச்சி இப் பகுதிகள் கடந்து ஈரோட்டில் தாவி, காஞ்சியில் கொழுந்துவிட்டு, தஞ்சையில் கோட்டை கட்டி, சேலம் கோயமுத்தூரில் கொடி பறக்க விடும் இக்காலத்தில், மறுமலர்ச்சித் தாயகத்திலிருந்து புதுப்பயிருடன் பழம் பண்பு, குருத்தோடு விட்டுப் புது மலர்ச்சியைத் தூண்டிவரும் புத்திளங் கலைக் கதிரே கவிஞர் கண்ணதாசன் - திராவிட இனப் பூஞ்சோலையில் இன்னிளங் குரலெழுப்பும் இசைக்குயில். திராவிட இயக்கத்தின் புதரிலே மறைந்து நின்று திராவிடப் பூஞ்சோலைக் குயில்மீது இலக்குவைத்து வீசப்பட்ட நச்சுக் கணை, குயிலின் பாட்டை எதுவும் செய்யமுடியாது, செய்ய வில்லை. குயில் ‘தன் பாட்டுக்கு’ப் பாடிக்கொண்டிருந்தது. அது பறந்து பாடிற்று, பாடிப் பறந்தது. ஆனால், குயிலின் இசை, இசை ஆர்வலர் களைத் தட்டி எழுப்பியுள்ளது. குயிலின் குயிலிசை சிலம்பின் சிலம்பிசையுடன் கலந்து புது விளக்கம் தரத் தொடங்கியுள்ளது. அவ் விரண்டு இசைகளின் அறிவு விளக்கமாக, சிலம்பிசை எதிர்த்த மாற்று இசைகளுக்கு விடை கண்டு, சிலம்புச் செல்வத்தை மீட்டும் மதிப்பிட்டுக் காண்போம். சிலப்பதிகாரத்தின் காலமென்ன? அது கற்பனைக் கதையா, வரலாற்றுக் காவியமா? அஃது ஆரியப் பண்பாட்டு நூலா, தமிழ்ப் பண்பின் கருவூலமா? அவற்றின் கலவையா? கலவையாயின் அக் கலவையில் மேற்பட்ட பண்பு யாது? சிலம்பைத் திருக்குறளுக்கு ஓர் இலக்கியமாகக் கூறலாமா? கூறுவது தவறா? தமிழ் இலக்கியத்தில், கலை உலகில் அதன் இடம் யாது? இவை பற்றி ஆராய்வோம். எக்காலத்தது? சிலப்பதிகாரம் சங்க காலத்து ஏடா, பிற்காலத்திய ஏடா? மேலீடாகக் காண்போர்க்கு இது கால ஆராய்ச்சிக்கு மட்டுமே உரிய கேள்வி என்று தோற்றக்கூடும். இக் கேள்வி கால ஆராய்ச்சிக்கு மட்டுமே உரியதானால், சிலம்பின் இலக்கியச் சுவை நுகர விரும்புவோர் இக்கேள்வியையும் அதற்குரிய விடையையும் ஒதுக்கி வைத்துவிடலாம் என்று கூறுவதில் தவறில்லை. திரு.ஆர்.கே.சண் முகத்தின் நிலை இதுவே. ‘பழத்தின் பிறப்பு வளர்ப்புப் பற்றி ஆராய்வோர் ஆராயட்டும் நாம் தின்று களிப்போம்!’ என்று அவர்போல நாமும் இன்முடிவு காணலாம். ஆனால், இலக்கிய நயத்தில் மட்டுமே அக்கறை கொண்ட அவர், தாமே ஆசிரியர் கால இடப்பண்புகளை அறிவதில் அவ்வளவு ஆர்வம் காட்டி யுள்ளார். “எங்களுக்கு அழியாத சிலம்புச் செல்வத்தைக் கொடுத்த அடிகளே! நீர் யார், நீர் யார்?’ என்று நாம் கேட்டுக்கொண்டே யிருக்கிறோம்! அவரோ, பதில் சொல்லாமல் புன்னகையுடன் ‘குணவாயில் கோட்டத்தில்’, எல்லையில்லாத அமைதியுடன் வீற்றிருக்கிறார்!” என்று அடிகள் பற்றி நாம் எதுவும் அறியமுடியா திருப்பது குறித்துத் தாம் அடைந்துள்ள ஆற்றாமையை அவர் எவ்வளவோ இலக்கிய நயம்பட சித்திரித்துக் காட்டியுள்ளார். இலக்கிய நயமும் கவிதை நயமும்தாம் காண வேண்டும், கால ஆராய்ச்சி அவ்வளவு தேவைப்படுவதன்று என்று மட்டுமே திரு.ஆர்.கே.எ°. கொண்டார். ஆனால், இராவ்பகதூர் வையாபுரி இன்னும் ஒருபடி மேற்சென்றுள்ளார். இலக்கிய நயமும், கவிநயமும் உணரக் கால ஆராய்ச்சி ஒரு தடையாய் இருக்கிறது என்று அவர் கருதியுள்ளார். தெய்வீகக் கவிநயங்களைக் காண வொட்டாமல் வழி மறைத்து மலைபோல் கிடக்கும் ஒரு மாடாகக் கருதிக் கால ஆராய்ச்சியை அவர் காய்கிறார். ஆயினும், தம் கோட்பாட்டுக்கு மாறாக அவர், தாமே தம் சிலப்பதிகார ஆராய்ச்சியின் ஒரு பெரும் பகுதியைக் கால ஆராய்ச்சிக்குத் தரத் தயங்கவில்லை. கால ஆராய்ச்சி என்று இராவ்பகதூர் காய்வது கால ஆராய்ச்சியின் ஒரு புடைச் சார்பை மட்டுமே என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. சிலம்பின் இலக்கிய நயத்தையும், கவிதை நயத்தையும் காணத் தடையாயிருக்கும் ஆராய்ச்சிச் ‘சனியன்’ சிலப்பதிகாரம் பிற்காலத்தது என்று வாதாடும் ஆராய்ச்சியன்று; அது சங்க காலத்தது, அது தனித் தமிழ்க் காலத்தது என்று வாதாடும் ஆராய்ச்சியே என்று அவர் கருதியிருத்தல் வேண்டும். ஆராய்ச்சி பற்றிய ஆராய்ச்சி சிலப்பதிகாரக் கால ஆராய்ச்சி வெறும் கால ஆராய்ச்சி யன்று என்பதை இராவ்பகதூர் நன்கு அறிந்திருந்தார் என்றே கூறலாம். ஏனெனில், அது சங்க காலத்தது அன்று என்பதை ஏற்றுக்கொண்டால், அது வரலாற்று ஏடன்று என்று வாதிடத் தேவையேயில்லை, அது மட்டுமன்று. அதன் வரலாற்றுச் செய்திகள் யாவும் கற்பனையைவிட மோசமான போலி வரலாற்றுக் கட்டுமானம் ஆகிவிடுதல் கண்கூடு. ஏனெனில், சிலப்பதிகார வரலாற்றுச் செய்திகள், வரலாற்றுச் செய்தி களல்லவானால் அவை, திறமை வாய்ந்த கற்பனைகள் மட்டுமல்ல, வரலாற்றுக்கு மாறான பொய் வரலாறு ஆகிவிடும். வேண்டு மென்றே வரலாற்றை மறைப்பதற்காகப் புனைந்துருவாக்கப் பெற்ற வஞ்சகத் திரை ஆகிவிடும். மேலும், அஃது ஆரியப் பண்பாட்டைக் குறிக்கொண்ட கம்பராமா யணத்துக்கு எதிராகத் தமிழ்ப் பண்பாட்டைக் குறிக்கொண்ட ஏடாக அமையாது. கம்ப ராமாயணத்தைப் போலவே கற்பனைப் புளுகை மொழிபெயர்த்த போலிக் கற்பனைப் புளுகாகி விடும். இராவ்பகதூரின் சிந்தனைத் திறன் அவர் எதிரிகள் பலராலும் எளிதில் அறியப்படாதது. ஏனெனில், அவர் ஆராய்ச்சிகளையோ புலமையையோ ஏற்காத, திரும்பிப் பாராத தமிழ்ப்புலவர் உலகிலேகூட அது பல பிளவுகளையும் குழப்பங் களையும் உண்டுபண்ண முடிந்திருக்கிறது. சங்க இலக்கிய ஆர்வப் புலவரிடையே தத்தம் உள்ளார்ந்த ஆர்வங்களுக்கேற்ப அது பல ஆராயா நம்பிக்கைகளை வளர்க்கவும் உதவியுள்ளது. சிலப்பதி காரம் சங்க காலத்துக்குப் பிற்பட்ட நூலாயிருக்கக் கூடும் என்று சிலரும், அது சங்க காலத்திய ஏடாயிருந்தாலும்கூட, சங்க காலத்திறுதிக்குரியதாகவேனும் இருத்தல்வேண்டும் என்று சிலரும் கொள்கின்றனர். இக்கருத்துகள் ஆராய்ச்சிகளல்ல, ஆராய்ச்சிகளைத் தூண்டுபவையுமல்ல! ஆராயா முடிவு களாகவே நின்று, மேல் ஆராய்ச்சிகளைத் தடை செய்பவையே ஆகும். மற்றொருபுறம் ஆரிய எதிர்ப்பாளர், திராவிட இயக்கத்த வரிடையே, தாம் விரும்பாத ஆரியக் கருத்துகளையும், ஆரியம் என்று தாம் நினைக்கும் கருத்துகளையும் பிற்காலத்திய ஆரியத் தொடர்புக் குரியன என்று ஒதுக்குவதற்கு அது தூண்டுதல் தருவதாயிற்று. இத்தகைய பல திசை ஆர்வ முடிவுகளின் குளறுபடி களுக்கிடையே, சிலப்பதிகாரம் பழந்தமிழகப் பண்பாடுகளின் ஒரு பலகணி என்பதும், அது சங்க இலக்கியம், திருக்குறள், தொல்காப்பியம் பெருங்கதை ஆகியவற்றுடன் ஒப்பாக மறைந்த உலக நாகரிக மரபுகளை உயிர்ப்பித்துக் காண உதவும் ஓர் அருங்கருவி என்பதும் மறக்கப்பட்டுவிட்டன, மறக்கப்பட்டு வருகின்றன. அதன் ‘முத்தமிழ் மரபு’ புலவர்களின் மாயச் சொல்லணி மரபுகளுள் ஒரு மரபாகிவிட்டது. சிலம்பு உண்மை யிலேயே மாண்ட தமிழர் இசையின் ஓர் உயிர்ச் சுவடு என்பதையும், அஃது உலகளாவிய வளர்ச்சியுடையதாய், சமற்கிருத நாடகம், கிரேக்க ஆங்கில நாடகங்கள், சீன ஜப்பானிய நாடகங்கள் ஆகிய உலக நாடக மரபுகளின் கருவூலமாய் இயங்குவது என்பதையும், இன்று ஆராய்ச்சியாளர் கூடக் காணத் தவறி யுள்ளனர். இவைபற்றி எண்ணவே அவர்கள் தயங்குகின்றனர். சங்க காலம்? ஆராய்ச்சி பற்றிய ஆராய்ச்சியை இத்துடன் நிறுத்தி, சிலப்பதிகார காலம் பற்றிய வாதங்களைக் காண்போம். சிலப்பதிகாரம் சங்ககாலத்ததன்று என்று இன்று கருதுபவர் பலர் இருக்கலாம். ஆனால், அங்ஙனம் கூறுபவர், வாதிடுபவர் மிக மிகச் சிலரே. அவர்களுள் தலைசிறந்தவர், குறிப்பிடத்தகுந்த மூல ஆராய்ச்சியாளர் இராவ்பகதூர் வையாபுரி அவர்களே. அவர் ஏடுகளையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் தொடர்ந்து வாசிப்பவர்கள், அவர் எழுத்தும் உரையும் செல்லும் திசை வேறு, அவர் மூளையும் இதயமும் செல்லும் திசைகள் வேறு என்பதை எளிதில் காண்பர். அவர் உரைகளும் இதற்கேற்ப முன்னுக்குப்பின் முரண் படுவன. பல சமயம் அவை வளைய வளைய வருபவை. நெய்க்குத் தொன்னை ஆதாரம், தொன்னைக்கு நெய் ஆதாரம் என்று கூறும் ஆதாரமற்ற வாதங்களாய் அவை இயங்குகின்றன. இன்று சிலப்பதிகாரம் சங்க காலத்தது அன்று என்று கூறும் இவரும், இவர் சகபாடிகளும் முன்பு சங்ககால வரையறையையே மறுத்தவராவர் என்பதைப் பலரும் மறந்திருக்கக்கூடும். கம்பராமாயணம், தேவாரம் ஆகியவற்றின் காலமும் ஒன்று என்று வாதிட முயன்றவர்தாம் இவர்கள். இராவ்பகதூரின் மிக அணிமைக்கால ஆராய்ச்சிகளிலும், சைவ சித்தாந்த சமாஜத்தார் வெளியிட்ட சங்க இலக்கியத் தொகுப்பின் முன்னுரையிலும் இக் கருத்தின் நிழற் கூறுகளையும், வீழ்ந்துபட்ட இக் கருத்தை வேறு வடிவில் புதுப்பிக்கும் முயற்சிகளையும் காணலாம். உழக்கில் கிழக்கு மேற்கு சமாஜப் பதிப்புக்காரர் திருக்குறள் உட்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சங்ககாலத்துக்குப் பிற்பட்டவையா யிருக்கக்கூடும் என்ற ஐயம் தெரிவித்து, அவற்றைத் தம் சங்க இலக்கியத் தொகுதியில் நோக்காததற்கு இதையும் ஒரு காரணமாகக் குறிக்கின்றனர். அந்நாளைய ஆராய்ச்சியாளர் பலர் கருத்து இஃது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஐயத்துக்கிடமில்லாத சங்கத் தொகை நூல்களென்று சமாஜப் பதிப்பாளர் ஏற்றுக்கொண்டவை பத்துப்பாட்டும், எட்டுத் தொகையுமேயாகும். ஆனால், இவற்றிலும் இராவ்பகதூர் முற்காலத்தன, பிற்காலத்தன எனப் பகுத்தாய்ந்து காண்கிறார். உழக்கையே ஒழித்துவிட முடியாத நிலையில், உழக்கில் கிழக்கு மேற்காவது காண விரும்பும் முயற்சிகளே இவை. பிற்காலத்தவை என்று சங்கப் பாடல்களில் சிலவற்றை அவர் குறிக்கக் காரணம் என்ன? திருமுருகாற்றுப்படை போன்ற பத்துப்பாட்டிலடங்கிய பாடல்கள் சமயச் சார்பானவை: ஆகவே, அவை பிற்பட்டவை யாயிருத்தல் வேண்டும் என்று அவர் வாதிடுகிறார். ஆனால், இக் கருத்துகள் பிற்பட்டவை என்று அவர் கருதுவதற்கு ஆதாரம் என்னவெனில், அவை ‘பிற்பட்ட’ பாடல்களில் காணப்படுகின்றன என்று அவர் பதில் கூறுகிறார். நச்சுச் சுழல் வாதம் இராவ்பகதூரின் வாதம் இங்கே நச்சுச் சுழல் வாதமாகிறது. ஏனெனில், முதல் வாத முடிவு இரண்டாம் வாத ஆதாரமாகிறது. அதே சமயம் இரண்டாம் வாத முடிவே முதல் வாதத்துக்கு ஆதாரமாகக் காட்டப்படுகிறது. இவ்வாறு ஆதார முடிவுகள் சுற்றிச் சுற்றி வருகின்றன. ஆயினும், வாதம் இங்கே பிழைபட்டதானாலும் அஃது திறமையற்ற வாதம் என்று கூறுவதற்கில்லை. ஏனெனில், அஃது ஆரியப் பண்பின் ஆர்வலர் களுக்கும் மனநிறைவு அளிக்கிறது. ஆரியப் பண்பை வெறுப்பவர் களுக்கும் மனநிறைவு அளிக்கிறது. ஆராய்ச்சி எவ்வளவு தவறானதாயினும் பிரச்சாரம் திறமை வாய்ந்ததாகியுள்ளது. இங்கே தம் குழியில் தாமே விழுபவர்கள் திராவிடப் பற்று அல்லது தனித்தமிழ்ப் பற்றுக்கொண்டவர்களே. அவர்கள் முதலில் விரும்பாததை எல்லாம் ஆரியம் என்று தூற்றி, பின் ஆரியம் என்பதற்காகவே வெறுத்தொதுக்கி அவற்றை ஆரியர்க்கே உரிமையாக்கிவிடுகின்றனர். இதன் மூலம் அவர்கள் மறைமுகமான, ஆனால், முதல்தரமான ஆரியப் பிரச்சாரம் செய்துவிடுகின்றனர். அவர்கள் சான்று எதிரியின் சான்றாதலால், அது பிழைபட்ட வாதமானாலும் வலிமை வாய்ந்த தருக்கம் ஆகிவிடுகிறது! இரு சாரார் முடிவுகளும் தவறு என்பதைத் திறந்த உள்ளமுடையவர் காண்பது எளிது. ஏனெனில், இங்கே இரு திசைகளிலும் வாத முறையே தவறு. எப்படியெனில், சமயச்சார்பு காணப்படுவதனால் திருமுருகாற்றுப்படை சிறிது பிற்பட்டது என்று கொள்ளலாமானால், பிற்காலப் புராணங்களில் கூட மிகவும் பிற்பட்ட கந்தபுராணம், பாகவத புராணம் ஆகியவற்றின் கருத்துகள் பரிபாடலில் காணப்படுவதனால் அவை மிக மிகப் பிற்பட்டவை, கம்பராமாயணக் காலத்தவை என்று கூற வேண்டிவரும். பிற்பட்ட புராணக் கருத்துகளுக்குத் தமிழ்ச் சங்க மரபுரைகளும், மக்கள் வாய் மரபுகளுமே மூல முதலாகும் என்பதைப் பல வரலாற்று ஆராயச்சியாளர் சுட்டிக் காட்டியுள்ளனர். திருத்தந்தை ஹீரா° புராணங்களுக்கும், இதிகாசங்களுக்கும் உரிய மூல மரபுகள் ஆரியர்க்கு முற்பட்ட தமிழினம் சார்ந்தவை என்று விளக்கியுள்ளார். எஎஎ இன்பத்துள் இன்பம் இந்நூல் 2001இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. முப்பால் இன்பம் அழகு! அறிவு! நன்மை! மனித நாகரிகத்தின் முப்பெருங் குறிக்கோள்கள் இவையே. அழகு இன்பம் தருகிறது. அறிவு ஆற்றல் அளிக்கிறது. நன்மை சமுதாயம் வளர்க்கிறது. இம் மூன்றுள் எது பெரியது, எதுசிறியது? எது உயர்ந்தது, எது தாழ்ந்தது? எது தலைமையுடையது, எது துணைமை வாய்ந்தது? இக் கேள்விகளுக்கு விடைகாண்பது எளிதன்று. விடைகளும் அவரவர் மனப்போக்கையே காட்டக் கூடும். எல்லாரும் ஒப்புக்கொள்ளத்தக்க பொது விளக்கமாக அமையாது. தவிர, இவற்றுக்கு விடை காண்பதே மனித நாகரிகத்தின் உயிர்நிலை வரலாற்றையும், வளத்தையும், வளர்ச்சியையும் மதிப்பிட்டு உணர்வதாக அமையும். அழகுணர்வில் ஈடுபட்டுப் பிறரையும் அதில் ஈடுபடுத்துவதே கலைப்பண்பு1. அறிவுணர்வில் ஈடுபட்டுப் பிறரையும் அதில் ஈடுபடுத்துவதே இயற்பண்பு அல்லது அறிவு நூற்பண்பு2. நன்மையுணர்வில் ஈடுபட்டுப் பிறரையும் அதில் ஈடுபடுத்துவதே அறம் அல்லது ஒழுக்கப்பண்பு.3 இம் மூன்று பண்புகளுமே நாகரிகப் பண்புகள் என்பதில் ஐயமில்லை. இம் மூன்றின் வளர்ச்சியே நாகரிகம் என்பதையும் எவரும் ஒத்துக் கொள்வார்கள். ஆனால், தனிமனிதரிடத்திலும் சரி, நாடுகள், இனங்கள், சமுதாயங்கள் ஆகியவற்றிலும் சரி, இம் மூன்றும் ஒத்து ஒன்றுபட்டிருத்தல் அரிது. அழகுணர்வில் ஈடுபடுபவனை மக்கள் இன்பவாணன் என்று கருதுவர். அறிவுணர்வில் ஈடுபடுபவனை அறிஞன் என்று மதிப்பர். நன்மையுணர்வில் ஈடுபடுபவனை அறவோன் என்று போற்றுவர். இம் மூவரும் சமுதாயத்தில் வேறு வேறான போக்குடையவர்கள். மக்களிடையே வேறு வேறான மதிப்பும் படியும் உடையவர்கள். மேலீடாகக் காண்பவர்களுக்கு இம் மூன்றும் வேறு வேறு பண்புகளாக, முரண்பட்ட அல்லது தொடர்பற்ற பண்புகளாகக் கூடத் தோற்றக்கூடும்; தோற்றுவது இயல்பு. வேறு வேறாகவே உலகின் மிகப்பெரும்பாலான மக்கள், பெரும்பாலான உலக அறிஞர்கள், உலகப் பெரியார்கள்வரை கருதிவந்தனர், கருதி வருகின்றனர். அவற்றிடையே தொடர்பு இருக்கக்கூடும் என்று கருதியவர்கள் உலகிலேயே மிகமிகச் சிலர். அவர்களும் அத் தொடர்பை மதித்துணர்ந்தது கிடையாது. ஆனால், இம் மூன்றும் ஒன்று என்பதே வள்ளுவர் பெருமான் கண்ட பேருண்மை. அத்துடன் இம் மூன்றன் தொடர்பையும் விளக்கி, மூன்றையும் ஒரே ‘பண்பின் மூன்று படிகளாக, மூன்று கோணங்களாக அவர் காட்டியுள்ளார். இம்மூன்றன் சரிஒத்த இணைவையே அவர் மனிதப்பண்பு என்றும், மூன்றன் நிறைவையே கடவுள்பண்பு என்றும் காட்டியுள்ளார். அவர் முப்பாற் பாகுபாட்டின் முழு நிறை சிறப்பும், அவர் முப்பால் நூலான உலகப் பொதுமறையின் முழுநிறை புகழும் இதுவே. இன்பத்துப் பாலில் அழகுணர்வையும், பொருட்பாலில் அறிவுணர்வையும், அறத்துப்பாலில் நன்மையுணர்வு அல்லது அன்பையும் அவர் சிறப்பித்து முனைப்பாக விதந்தோதியது காணலாம். அறநூல்கள் உலகில் மிகச் சில. ஆனாலும், அறநூல்களும், அற நூலோரும் பல நாடுகளில், பல மொழிகளில் உண்டு. பொருள் நூல்கள், இன்ப நூல்கள் உலகில் இன்னும் மிகச்சில. ஆனால், ஆங்காங்கே உலகின் வேறு வேறுபட்ட பகுதிகளில் அக்கருத்துகள் விரவிய ஏடுகளைக் காண்டல்கூடும். எனினும் முப்பால் வகுப்பும், முப்பால் நூல்களும் தமிழ், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே உண்டு. இந்திய மாநிலத்தின் தனிப் பண்பாட்டுக் கூறுகளில் மிகப்பழைமையான ஒன்றாக இப் பாகுபாடு திகழ்கின்றது. அறம், பொருள், இன்பம் என்ற முப்பாற்பாகுபாடும் அதன் விரிவாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பாற் பாகுபாடும் தமிழரின் முழுமுதல் இலக்கண ஏடாகிய தொல்காப்பியத்திலேயே காணப்படுகின்றன. பெருநூல்கள் இம் மூன்றையுமோ, நான்கையுமோ நூற்பயனாகக் கொள்ளுதல் வேண்டு மென்றும், சிறுநூல்கள் ஒன்றோ இரண்டோ தனிப் பயனாகக் கொள்ளுதல் சாலுமென்றும் தொல்காப்பியர் காலமுதல் இலக்கண நூல்கள் வலியுறுத்தி யுள்ளன. இக் கருத்து இடைக்காலத்துக்குரிய மொழியாகிய சமற்கிருதத்துக்கும் பொதுவேயாகும். முப்பாற் பாகுபாட்டில் அமைந்த பெயர்களின்படி, அறம் வகுத்துரைப்பவர் மட்டுமே அறவோர் அல்லது அறநூலோர் என்று கருதப்படுதல் வேண்டும். ஏனையோர் பொருள்நூலோர் என்றும், இன்பநூலோர் என்றுமே அழைக்கப் பெறுதல் தகுதி. ஆயினும், முப்பால் வகுத்துணர்த்தியவர்கள் தமிழிலும் சரி, சமற்கிருதத்திலும் சரி, பொதுவாக அறவோர், அறநூலோர் என்றே குறிக்கப்பட்டிருக்கிறார்கள். முப்பாலையும் ஒரே பாலின் முப்பிரிவாகக் கொண்ட திருவள்ளுவர் திறத்துக்கு - தமிழகங் கடந்த செல்வாக்குக்கு - இஃது ஓர் அறிகுறி. ஏனெனில் தமிழில்கூடத் திருவள்ளுவர் தவிர ஏனைய அறநூலார் அல்லது முப்பால் நூலாரிடம் இப் பண்பை முழுதுறக் காணமுடியாது. தமிழர் முப்பாற்பண்பை நுனிப்பாகவும், குறிப்பாகவும் தொல்காப்பியத்திலும் பிற தமிழ் ஏடுகளிலும் காண்டலாகும். திருவள்ளுவரிடம் மட்டுமே அதை முழுதுற முனைப்பாகவும், விளக்கமாகவும் காணமுடியும். சமற்கிருதவாணர் முப்பாலின் ஒருமையை ஒருசிறிதும் கண்டுணர்ந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் அறம்,பொருள், இன்பம் ஆகியவற்றை வாழ்க்கையின் மூவேறு குறிக்கோள்களாக மட்டுமே கொண்டனர். அவற்றை ஒரே வாழ்க்கைப் பண்பாகத் தொடர்புபடுத்தத் தவறினர். அது மட்டுமன்று, ஒவ்வொரு பாலின் உட் பிரிவுகளையும் அவர்கள் தொடர்பற்ற மாறுபட்ட பண்புகளாகவே கண்டனர். எடுத்துக் காட்டாக, அறத்துப்பாலில் அவர்கள் இல்லறம் வேறு, துறவறம் வேறு என்றும்; இல்லறத்துக்கு மாறுபட்ட பண்பே துறவறம் என்றும் கருதினார்கள். துறவறம் என்றால் வெறுப்புஅறம் என்று கொண்டு, அவ் வெறுப்பு அறமாகிய துறவறத்தையே அறம் எனக் கொண்ட நூலும் (வைராக்கிய சதகம்) சமற்கிருதத்தில் உண்டு. இதுபோலவே, பொருட்பாலில் அரசியல் ஒழுங்கு, சமுதாய ஒழுங்கு, அறமுறை ஒழுக்கம் ஆகியவற்றை வடபுலவாணர் வேறு வேறாகக் கொண்டனர். சில சமயம் அவற்றைப் பொருந்தாப் பண்புகளின் கூட்டுக் குளறுபடி யாக்கினர். சில சமயம் அரசியல் ஒழுங்கு முறைகள், சமுதாய ஒழுங்கு முறைகள், சமய ஒழுங்கு முறைகள் ஆகிய மூன்றில் ஒன்றை முனைப்பாக்கி, அதை மூவேறு பெயர்கள் கொண்டே பால்களாகக் கருதினர். இவையே மனு முதலிய வர்களால் தண்டம் (சட்டம்), வழக்கு (சமுதாய ஒழுங்கு), தருமம்(சமய ஒழுங்கு)என்றும், வேறு சிலரால் குருட்டுப் பழக்கம் (ஆசாரம்) என்றும், நீதி(அரசியல் சூழ்ச்சி முறை) என்றும், அருத்தம் (செல்வ இயல்) என்றும் பலவாறாகத் திரித்துக் கூறப்பட்டன. இன்பத்துப் பாலிலும் தமிழரின் களவியல், கற்பியல் என்ற பாகுபாட்டின் திறமறியாது, சமற்கிருதவாணர் குடும்பம் சாரா உடல் கவர்ச்சியின் ஈடுபாடே களவியல் என்று தவறாகக் கொண்டனர். சமற்கிருத மொழி, முப்பால் நூல்களின் இன்பப்பாலும் சரி, சமற்கிருதத்துக்கே சிறப்பான இன்ப நூல்களும் (காம சாத்திரங்களும்) சரி- இந்தக் குடும்பப் பண்பற்ற சமுதாயக் கேடான இன்பத்தையே பல்வகைப்படப் பாகுபடுத்தி விரித்து விளக்கின. வள்ளுவர் காலத்தில் அழகுக் கவர்ச்சி, சமுதாய அன்பு, அறிவுணர்வு ஆகிய மூன்றின் இணைவான நிறையின்பமே காமம் என்ற சொல்லால் குறிக்கப்பட்டது. வடபுலத் தொடர்பாலும் பிறபுல வழக்காலும் ‘காமம்’ என்ற இந்தச் சொல் மட்டுமன்றி, அதனிடமாக இடைக்காலத்தில் வழங்கிய சொல்லாகிய ‘காதல்’ என்பதும் பண்டு தமிழர் கொண்ட தெய்வப் பண்பை அதாவது உயர்ந்தோர் பண்பைக் குறிக்காமல், இழிந்தோர் பண்பு குறித்த சொற்களாகி விட்டன. இரண்டு சொற்களுமே குடும்பப் பண்புக்கும், சமுதாயப் பண்புக்கும், மாறான ஒரு கீழ்த்தர விலங்குணர்ச்சியை இன்று குறிக்கத் தொடங்கியுள்ளன. சமற்கிருதவாணரின் முப்பாற்பாகுபாட்டில், முப்பாலுக்கும் சமயம் அல்லது கடவுளுக்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது. அறத்துக்கு ஒரு கடவுளையும் (சிவபெருமானையும்), பொருளுக்கு ஒரு கடவுளையும் (திருமாலையும்) இன்பத்துக்கு ஒரு கடவுளையும்(மன்மதனையும்) உரிமையாக்கி, அவ்வப்பால் களுக்கு அவ்வவர்கள் பெயரால் கடவுள் வணக்கம் பாடியதுடன், கடவுளுக்கும் முப்பாலுக்கும் உரிய தொடர்பை அவர்கள் முடித்துக்கொண்டனர். ஆகவேதான் முப்பாலின் முழு நிறைவே ‘வீடு’ என்பதை உணராமல் வீடு ஒன்றையே கடவுளுக்குரிய பாலாக்கினர். அது மட்டுமோ? சமற்கிருதவாணர்களுக்கிசைய, இடைக்காலத் தமிழ்ப் புலவர்கள் தந்த தமிழ் இலக்கணத்தையும், தமிழ்ச் சொற்பொருளையும் மேற்கொண்டு, ‘விடுபட்டதே வீடு’ என்று அச் சொல்லைத் தொழிற் பெயராகக் கொண்டனர். அத்துடன் துன்பம் விடுபட்டதே வீடு என்று கூடக்கொள்ளாமல் இன்பத்தினின்று, உலக வாழ்வினின்று விடுபட்டதே வீடு என்றும் வலிந்து பொருள்கொண்டனர். வாழும் இடத்துக்கே, இன்ப வாழ்வின் நிலைக்களத்துக்கே வீடு என்று தமிழர் பெயரிட்டழைத்தனர் என்பதையும் அவர்கள் மறந்துவிட்டனர். இதனால் வீட்டுப்பாலை வெறுப்புத் துறவறம் என்றே அவர்கள் கருத நேர்ந்தது. மற்றும் இதே குறிப்பால் துறவறத்தை அறத்துப்பாலில் சிலரும், சிலபோதும்; வீட்டுப்பாலில் சிலரும், சிலபோதும் உட்பட்டதாகக் கருதிப் பெரிதும் மயக்கமுற்றனர். சமற்கிருதவாணரின் இக்குளறுபடி காணாதவர் திருவள்ளுவர் திருக்குறளின் அருமையை முற்றிலும் உள்ளவாறு உணரமுடியாது. சமற்கிருதக் குளறுபடியின் திரைமூலமே திருக்குறளைக் கண்டுவந்துள்ள, கண்டுவரும் இடைக்கால, இக்காலத் தமிழர் பலர் திருவள்ளுவர்கண்ட இன்பத்தையோ, அதற்கு இணை துணையான பொருளையோ, அறத்தையோ, அவற்றின் பாகுபாட்டு ஒழுங்கினையோ ஒருசிறிதும் உணர மாட்டாது உழல்வதில் வியப்பில்லை. மனிதப் பண்பு சான்ற மேலையுலகம்கூட இன்னும் சென்றெட்டாத சிறப்பினையுடைய தெய்வப் பண்பு சான்ற திருக்குறளை, அம்மனிதப் பண்பிலும் கூடக் குறைபட்ட சமற்கிருத சுமிருதிகளுடனோ, சாணக்கியர் பொருள் நூலுடனோ (அர்த்த சாத்திரத்துடனோ), புராண இதிகாசங்களுடனோ ஒப்பிடவும், பொருத்திக் காணவும் அவர்கள் துணிந்ததன் காரணம் இதுவே. இத்துடன் அமையாமல் வேறு சிலர் அந்நூல்களுள் ஒன்றேனும் திருவள்ளுவர்க்கு முற்பட்டனவோ, பிற்பட்டனவோ என்று தெளியாமலே, அவற்றைத் திருக்குறளுக்கு முன்னூல்கள் ஆக்கவும் அரும் பாடுபட்டுள்ளனர்! சமற்கிருத ஆராய்ச்சியில் வல்ல பேரறிஞர் பலர் அந்நூல்கள் திருக்குறளுக்குப் பிற்பட்டன என்று தெரிந்தும் பொது மக்களைக் குழப்புவதில் முனைந்துள்ளனர். வள்ளுவர் முப்பாலின் அமைப்பழகு தனிச் சிறப்புடையது. அஃது இன்பத்துடன் முடிவது. ஆனால், இல்லறத்துடன் தொடங்குவது. அது மட்டுமன்று. இன்பத்துப்பாலும் இல்லறத்துக்குரிய கற்பியலுடனேயே நிறைவுறுகிறது. இவ்வாறு முடிந்த இடத்தில் தொடங்கி, தொடங்கிய இடத்தில் சென்றிணையும் இம் முப்பாலேட்டுக்கு உண்மையில் ஒரு தொடக்கமும் கிடையாது, முடிவும் கிடையாது எனலாம். அஃது ஒரு வளையமாலை, ஒரு சக்கரம், ஓர் ஆழி! முப்பாலின் அற ஆழியாக அது சுழன்று சுழன்று வருவது. ஒரு தலைமுறை மண வாழ்விலிருந்து மறு தலைமுறை மண வாழ்வுக்குத் தாவி அலைபாய்ந்து செல்லும் மக்கள் வாழ்க்கையை அது படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. இந்த அறஆழி இயக்கும் அந்தணனே இறைவன் அல்லது கடவுள். இந்நாளைய தமிழகம் - ஏன், இந்நாளைய உலகம் - இந்த அற ஆழியை இயக்கி அற ஆழி அந்தணன் பண்பறிய முடியாத காரணத்தாலேயே, பிற ஆழி நீந்த முடியாமல் தத்தளிக்கிறது என்னலாம். அறம் பெரிது. அறவழி நின்ற பொருள் அறத்தினும் அரிது. அறவழி பொருளும், பொருள் வழி இன்பமும் அமையின், அவ்வின்பம் பெரிதினும் பெரிது, அரிதினும் அரிது! அதுவே இன்பத்துள் இன்பம், இன்பங் கடந்த இன்பம், பேரின்பம்! ஏனெனில், அந்த இன்பம் மீட்டும் அறம், பொருள் வழி இன்பம் பெருக்கி, அற ஆழியாகிய இன்ப ஆழி உருட்டி, இன்பப் பயிர் வளர்க்கும். அதுவே கரையிலா இன்ப வெள்ளமாக, உலப்பிலா இன்பமாகப் பொங்கிப் புது வளம் தரும். வள்ளுவர் வழி நின்று இந்த இன்பத்துள் இன்பம் காண்போமாக! 2. இலக்கிய இன்பம் அழகுணர்ச்சியில் ஈடுபட்டு இன்பங் காண்பவன் கலையார்வலன், அழகு வடிவங்களைப் படைத்து, அவற்றின் மூலம் அவ்வின்பத்தில் பிறரையும் ஈடுபடுத்துபவன் கலைஞன். அக் கலைஞன் படைப்பே கலை. வண்ணத்திலும் வடிவிலும் அழகுகாணும் ஓவியம், செதுக்குக்கலை, சித்திரம்; உருவில் அழகு வகுத்தமைக்கும் படிமக்கலை, சிற்பம்; இயக்கத்தில் அழகு நயங்கள் காட்டும் ஆடற்கலை; ஒலியியக்கத்தில் இனிமை கண்டு மருட்சியூட்டும் இசை; மொழியில் ஓசையினிமையும் கருத்தழகும் ஒருங்கே உருவாக்கிக் காட்டும் இலக்கியம்-இவை மனித இனம் கண்ட தலைசிறந்த கலைகள். இவற்றைச் சிறப்பாகக் கவின்கலைகள் என்கிறோம். வாழ்க்கையில் பயனுடைய ஒவ்வொரு செயலும் ஒரு கலைதான். இசை எப்படி ஒருகலையோ, அப்படியே இசைக் கருவிகள் செய்வதும் ஒரு கலையேயாகும். பின்னது இல்லா விட்டால், முன்னது வளர்ந்தோங்க முடியாது. அதுபோலவே உழவு, நெசவு ஆகிய தொழில்களுக்குரிய கருவிகள் செய்வதும் கலையே. வாணிகக் கருவியான நிறைகோல், இயல் நூல்களுக்குரிய நுண்கருவிகள் செய்வதும் கலையே. மேனி ஒப்பனைக்குரிய மணத் துகளும் வண்ணச் சாந்தும் நறு நெய்யும் செய்வது கலையன்று என்று எவரும் கூறமாட்டார்கள். இங்ஙனம் கலை, தொழில், அறிவுநூல், நாகரிகம் ஆகிய அனைத்துக்கும் இன்றியமையா அடிப்படையான கலைகள் எத்தனையோ உள்ளன. பயனில் சிறந்த இந்தக் கலைகளைக் காட்டிலும் மேலே கூறப்பட்ட கவின்கலைகள் மனித சமுதாயமெங்கும் உயர்வுபட மதித்துப் பேணப்படு வானேன்? தெய்வத் தன்மை பொருந்தியன வாகப் பாராட்டப்படுவானேன்? இதன் மறைதிறவு யாது? பயனுணர்வு வேறு, அழகுணர்வு வேறு என்றும், பயன் நோக்காத கலையே தூய உயர்கலையாகிய கவின் கலை என்றும் கலைத்திறனாய்வாளர் பலர் கருதியுள்ளனர். கலை கலைக்காகவே என்ற வாசகம் இக்கருத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இக் கருத்து முற்றிலும் சரியன்று. ஆனால், முற்றிலும் தவறுமன்று. சொல்லளவில் இது மெய்ம்மை; ஆனால் சொல்பவர், கேட்பவர் கருதும் கருத்தளவில், அது முழுதுறழ் மெய்ம்மை காணார் கூறும் அரைகுறை மெய்ம்மையேயாகும். பயனோக்கிய கலைகளை நாம் தொழிற் கலைகள் -அல்லது ஆக்கக் கலைகள் எனலாம். அவை எதிர்பார்த்த பயனை அடைந்தவுடன் முற்றுப்பெற்று விடுகின்றன. அதற்குமேல் அவற்றுக்கு வளர்ச்சியில்லை. கவின் கலைகளோ பயன் நோக்கிய, அல்லது பயனை எதிர்பார்த்த கலைகளல்ல. ஆகவே, அவை என்றும் வளர்ந்துகொண்டே இருப்பன. மனித வாழ்க்கையும் பண்பாடும் நாகரிகமும் வளருந்தோறும், அவற்றுடன் இணைந்து இக் கலைகளும் வளர்கின்றன. இவற்றை உலகம் கவின்கலைகள் என்று அழைப்பதன் காரணம் இதுவே. ஆனால், இதுகொண்டு அவை பயன் தொடர்பற்ற கலைகள் என்று முடிவு கட்டிவிடுதல் தவறு. பயனை எதிர்நோக்காது இன்பம் மட்டுமே எதிர் நோக்கியவை அவை. அத்துடன் பயன் என்ற சொல்லால் நாம் குறிக்கும் ‘புறப்பயன்’ அவற்றினிடம் கிடையாது. அவை அகநாடிய கலைகள், அகமுகக் கலைகள்! பயனோக்கிய கலைகள் ஒரு குறிப்பிட்ட பயனைக் கலைஞன் கருவி போன்ற ஒரு புறப்பயனை நாடுவன. ஆனால், கருவியைப் பயன்படுத்தும் கலைகள் நாடுவதோ இத்தகைய குறுகிய சிறு பயன்களை, கருவிகளை அன்று. அவை கலை நுகர்பவன், கலைஞன் ஆகிய இருவரையுமே-இருவரையும் உள்ளடக்கிய மனித இனவாழ்வின் வளத்தையே - பண்பாட்டையே நாடுவன. வாழ்வின் ஒரு சிறு கூறு அவற்றின் பயனன்று - வாழ்க்கை முழுவதும் - வாழ்பவனும் - அவன் இனவாழ்வும் - இனவளமும் அவற்றின் எல்லையற்ற பயன்கள் ஆகும். பயனோக்கிய கலைக்கும் கவின்கலைக்கும் உள்ள உயிர்வேறுபாடு இது மட்டுமன்று. பயன் நோக்காக் கலையே கவின்கலை என்று அரைகுறையாக உணரப்படும் வாசகத் திலேயே அவ் வேறுபாடு அடங்கியுள்ளது. தனி மனிதனும் தனி உயிரும் இயல்பாக விரும்புபவை அழகும் இன்பமுமே. மனித இனமும் உயிரினமும் பொதுவாக விரும்பி ஈடுபடுபவை அவை. ஆனால், பயன் விருப்பம் அனுபவ முதிர்வினால், அறிவு உணர்வினால், நன்மை உணர் வினால் உண்டாவது. அது தனி மனிதன் நோக்கமும் அன்று. பொதுநிலை இன நோக்கமுமன்று. அறிஞர், அறவோர்-அதாவது இனத் தலைவர், சமுதாயத் தலைவர் - காணும் குறிக்கோளாக அஃது இயல்கின்றது. தனி மனிதன், தனியுயிரின் நோக்கம் இன்பம்; குடும்ப, இன சமுதாயத் தலைவர்களின் குறிக்கோள் பயன் என நாம் இவ்விரு வேறுபட்ட ஆனால் மறை தொடர்புடைய சொற்களின் பொருள் தொடர்பை வகுத்துக் கூறலாம். இன்பம் இனிய தின்பண்டம் போன்றது. விளையாட்டுப் போன்றது. பயனோ, மருந்து போன்றது. இன்றியமையாத தொழில்போன்றது. மருத்துவன் வழிநின்று நாம் மருந்தை உண்பதுண்டு. ஆனால், மருந்தே உணவானால், அதை உண்டு வாழ்வதைவிட, மாள்வதே மேலானது என்றுதான் மனித இனமும், உயிரினமும் பொதுவாகக் கருதக் கூடும். மருந்துண்டு வாழும் வாழ்வு வாழ்வின் இன்பம் தாராது. பஞ்சணை மெத்தையில் ஒருசிறு நுண்மயிர் இருந்தால் உறுத்தும் என்று கருதும் இன்பவாணர்கூட இன்றியமையாத் தேவை ஏற்பட்டால், அவ்வின்பத்தைத் தற்காலிகமாகத் தடுத்து, மருத்துவ விடுதியின் முரட்டுப் படுக்கையையும் அறுவையையும் ஏற்கக்கூடும். ஆனால், வாழ்நாள் முழுவதும் மருத்துவ மனையிலும் அறுவையிலும் கழிப்பதானால், அத்தகைய வாழ்வைவிடச் சாவே மேலான தென்று எவரும் கருதாமலிரார். பயன்தரும் தொழிலை, பயன் நாடிய கலையை மனிதன் செய்ய இணங்கினாலும், தின்பண்டத் திலும் விளையாட்டிலும் சிறுவர் காட்டும் ஆர்வத்தை, விருவிருப்பை, எவரும் அவற்றில் கொள்ள முடியாது. பயனோக்கிய கலைகள் போலல்லாது, ஆனால் பயனோக்காமலே முழுநிறை பயனை அளிக்கும் கலைகளே கவின்கலைகள். தின்பண்ட உருவில் அமையும் அல்லது அமைக்கப்படும் உணவு போன்றவை, மருந்தினும் நலம் தரும் இன்னுணவு போன்றவை. அவை இன உணர்வில் இயல்பாகவோ -இனத்தலைவர், சமுதாயத்தலைவர் புனைவுத்திறனாலோ அமைபவை. கலை பயன் நாடாதது - துய்ப்பவர் பற்றியமட்டிலேயே இது முழு உண்மை. படைப்பவர்கூடக் கலைஞர் என்ற அடிப்படையில் அதை நாடுவதில்லை. ஆனால், அவர்கள் இன உள்ளம் ஒரு பயனை நாடியே கலையில் ஆர்வம் கொள்கின்றது. அது மற்ற எப்பயனுமல்ல - இன்பமே - வாழ்க்கையின் நோக்கமேயாகும். ஆனால், இந்தப் பயனை அது சமுதாயத்தை நோக்கி, இன்பத்தை, இனப்பயனை நோக்கிச் செலுத்துகின்றது. கலை பயன் நாடுவதன்று. ஆனால், இன்பமே பயனாகக் கொண்டது. அது மட்டுமன்று. இனநோக்கமாகிய இன்பத்தை இனத்தலைவர் நோக்கமாகிய பயனுடன் அது இணைக்கிறது. பயனோக்காதவை மட்டுமல்ல, பயனளிக்காதவைதாம் கலைகள் என்றால், தீய பயன்தரும் கொலையும் புலையும் கலைகள் ஆதல் வேண்டும் - அவை கலைகள் ஆகா என்பதில் ஐயமில்லை. ஆகவே சிறுபயன், தற்காலிகப் பயன் நாடாது, முழுநிறை பயனை இன்ப வடிவில் இயல்பாக நாடுபவையே கலைகள், கவின் கலைகள் ஆகும் என்பது தெளிவு. மேலீடாகக் காண்பவர்களுக்குப் பயன் என்பது அழகுணர்வுடனும் இன்ப உணர்வுடனும் கலையார்வத்துடனும் தொடர்பற்ற - அவற்றுடன் ஒவ்வாத - சொல்லாகத் தோன்றுகிறது. இதற்கு ஒரு தனிக்காரணம் உண்டு. பெரும்பாலும் ‘புறப்பயன்’, தனிமனிதன் ‘பயன் நோக்கமாகிய தன்னலம்’, ‘தனிமனிதன் குறுகிய தனிப்பயன் நோக்கமாகிய சூழ்ச்சித்திறம்’ ஆகிய இழி பொருள்களுடன் கலந்தே ‘பயன்’ என்ற சொல் வழங்கப் பெறுகிறது. அத்துடன் அது நேராக இன்பநோக்கைக் குறிக்காமல் இன்பத்துக்குரிய கருவியையே குறிக்கிறது. இது போலவே ‘கலை கலைக்காகவே’ என்ற வாசகத்திலும், கலை என்றசொல் அதன் முழு மெய்ப்பொருளில் பெரும்பாலும் உணரப்படுவதில்லை. ஏனெனில் ‘கலை கலைக்காகவே’, என்பதன் முழுப்பொருள் கலை கலைஞனுக்காகவே ‘கலை கலைஞன் இனத்துக்காகவே’ ‘கலை கலைஞன் சமுதாயத்துக்காகவே’ என்ற கருத்துகளை உட்கொண்டதேயாகும். ‘கலை’ என்றவுடன் பலரும் ‘வாழ்க்கைத் தொடர்பற்ற’ என்று எண்ணுவதால்தான் ‘கலை கலைக்காகவே’ என்று நிறை மெய்ம்மை வாசகம் எதிர் வாதத்துக்குரிய ஒன்றாய்விடுகிறது. கலைகளுள் தலைசிறந்தவை கவின்கலைகள். கவின் கலைகள் எல்லாவற்றிலும் தலைசிறந்த கவின்கலை இலக்கியமே. இலக்கியம் கவின்கலைகளுள்ளும் சிறந்ததாகக் கருதுப் படுவதற்குரிய காரணங்கள் பல. ஆனால் தலைசிறந்த, நடுநாயகமான காரணம் அது மொழி சார்ந்த கலை என்பதே. மொழி மனித இனத்தின் அறிவுச் சேமக்கலம். அதன் ஒவ்வொரு சொல்லும் ஒரு கருத்தின் கருவூலம், இனவரலாற்றின் ஒரு புதைபெட்டகம்; அனுபவம் என்னும் ஆழ்சுரங்கத்தில் அல்லது ஆழ்கடலிலிருந்து மனித இனம் அருமுயற்சியால் கண்டெடுத்துப் பட்டை தீட்டிப் பேணிய பொன் வெள்ளிப் பாளம், முத்துமணி பவழம்! மொழி வளர்த்துள்ள உணர்ச்சி களோ இனசமுதாய வாழ்வின் நீடித்த பயனான பண்புப் பழங்கள், பண்பாட்டு உயிர்விதைகள்! இத்தகைய அறிவு நிலத்தின் மீது வித்தூன்றி, பண்புத்தளத்தின்மீது நின்று, அழகுவான் நோக்கி எழும் இன்பமலர்க் கனிமரமே அறத்தின் ஆழ்தடமளாவி, பொருளின் பரப்பகம் கொண்டு, இன்பமுகடுற எழுப்பப்படும் அறிவின்ப மாளிகையே இலக்கியம். அதன் தனியுயர் சிறப்புக் குரிய தலையாய காரணம் இதுவே. மற்றக் கலைகளைவிட, கவின்கலைகளைவிட முனைப்பாக, இலக்கியம் இனவளர்ச்சியோடொத்து, சமுதாய வாழ்வோ டிணைந்து வளர்வது. அது வாழ்வின் எல்லாக் கூறுகளையும் வளர்ப்பது. மனித இன வாழ்வின் எல்லையற்ற பரப்பையும் அதன் நாட்டு, இன வேறுபாடுகளையும், கால வேறுபாடு களையும் பளிங்குபோல் எதிர்நிழலிட்டுக்காட்டி, அவ் வேறுபாடு களிடையே வாழ்க்கைப் பண்பால் வளர்ந்து வாழ்க்கைப் பண்பையும் வளர்க்கும் இன்னொரு கலையை-இலக்கியமன்றி வேறு ஒரு கலையை - நாம் காணமுடியாது. ‘கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள’ (காண்பது, கேட்பது, சுவைப்பது, முகர்வது, தொட்டுணர்வது ஆகிய ஐம்புல உணர்வுகளும் பெண்ணிடமே அதாவது ஆண் பெண் தொடர்பு ஒன்றிலேயே உண்டு.) இவ்வாறு வேறு எவரும் அறிந்து கூறாத முறையில் ஆண் - பெண் தொடர்பான குடும்ப இன்பத்தின் தனிச்சிறப்பை வள்ளுவர் ஒருவரே எடுத்துக்காட்டியுள்ளார். ‘மற்ற எல்லா இன்பங்களும் ஒருபுலன், இருபுலன் களுக்கு நுகர்வு அளிக்கும். இது ஐம்புலன்களையும் அளாவிய இன்பம்’ என்று அவர் கூறிய பின்னரே நாம் அறிகிறோம். அதுபோலவே கவின்கலைகளில் மற்றவை ஒன்றிரண்டு புலன்களுக்கே இன்பம் ஊட்டுவன. இலக்கியக் கலையின் தனிச்சிறப்புகளுள் ஒன்று - அதுவே ஐந்து புலன்களுக்கும், அது கடந்த ஆறாம் புலனாகிய உள்ளத்துக்கும் நுகர்வு அளிப்பது என்பதே! அந்த உள்ளத்திலும் அழகுணர்வு, அறிவுணர்வு, நன்மையுணர்வு ஆகிய எல்லா வகைப்பட்ட உணர்வு நிலைகளுக்கும் இலக்கியக் கலை ஒருங்கே இன்ப மூட்டுவது ஆகும். இலக்கியக் கலைஞனைத் திருவள்ளுவர் ‘சொல்லேருழவன்’ என்று சிறப்பித்துள்ளார். அவன் ‘சொல்’ என்ற கலப்பையால் மக்கள் உள்ளமென்னும் நிலத்தை உழுது, அதில் அழகு, அறிவு, நன்மை, பண்பு ஆகிய விதைகளை விதைத்து, வாழ்வையே வளர்த்து வளப்படுத்துகிறான் என்ற கருத்தை இத்தொடர் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது. கம்பநாடரும் இக் கலைஞனைச் செஞ்சொல் அறிவாளன் என்று குறிப்பிட்டார். செம்மை என்பது தமிழில் இனிமை, நடுவு நிலைமை, நேர்மை, திருத்தம் ஆகியவற்றைக் குறிக்கும் பண்புச்சொல். இத் திறங்களை யுடைய சொற்களால் அறிவு வளர்ப்பவன் இலக்கியக் கலைஞன் என்று தமிழின் பரந்தகன்ற காவியக் கவிஞர் குறித்தார். மொழிசார்ந்த கலை இலக்கியமாவதுபோல, மொழிசார்ந்த அறிவுத்துறை இயல்நூலாகவும், மொழிசார்ந்த சமுதாய உணர்வுத்துறை அறநூலாகவும் அமைகிறது. ஆனால், மொழி சார்ந்த இம்மூன்று துறைகளிலும் முதல்துறையும், முந்திய துறையும் இலக்கியமே. அதுவே அவ்விரண்டின் மூத்த செல்வியாய், அவற்றின் செவிலித் தாயாய், அவற்றைத் தன்மடிமீது வைத்து வளர்த்து வந்துள்ளது. தொடக்கத்தில் அவை மூன்றும் இலக்கிய ஆடையுடுத்தே உலவின. இன்றும் இயல்நூல்களில் தலைசிறந்தனவும், அறநூல்களில் தலைசிறந்தனவும் நல் இலக்கியமாகவும் இயல்வதுண்டு. தமிழில் தலை சிறந்த அறநூலான திருக்குறள், தலைசிறந்த ஓர் இலக்கிய ஏடாகவும் மிளர்கின்றது. அழகுமட்டுமன்றி, அறிவும் நன்மையும் செறிந்த இலக்கியக் கலையின் இன்பமே இன்பத்துள் இன்பம். அதை ஆக்கித் துய்க்கும் சமுதாயம் அழியாப் புகழ்ச் சமுதாயமாக நின்றிலங்குவது உறுதி. அத்தகைய இலக்கியம் மூலம் இன்பத்துள் இன்பம் கண்டு அழியாச் சமுதாயப் பண்பை, இனப்பண்பை வளர்ப்போமாக! 3. இன்பத்தின் இயல்பு இன்பம் எங்கே இருக்கிறது? இன்பத்தை நாடாதவர் இல்லை. ‘இன்பம் எங்கே இருக்கிறது?’ என்று தேடாதவரும் கிடையாது. ஆனால், நாடிய இன்பம் கைவரப்பெற்றால், எவரும் அதில் மகிழ்ந்து நிறைவெய்தி விடுதலும் அரிது. அவர்கள் மேன்மேலும் இன்பமே, புதிய புதிய இன்பமே நாடுவர். ‘இன்பம் எங்கே இருக்கிறது!’ என்ற கேள்வி முடிவுறாத கேள்வி மட்டுமன்று. முடிவுறக்கூடாத, முடிவுறத்தகாத கேள்வி என்றுகூடக் கூறலாம். ஏனெனில், இன்ப நாட்டமே உயிர். இன்ப நாட்டத்தின் ஆர்வமே உயிரின் இளமை, அதன் வளர்ச்சிப் பருவம். இன்ப நாட்டம் தளர்வுற நேர்ந்தால், உயிர் வளர்ச்சியும் தளர்வுறவே நேரும். இத்தளர்ச்சியே முதுமை. ஆனால், இந்த முதுமை உயிர்க்கு இயல்பானதல்ல. அது நீடிப்பதில்லை. உயிரின் உயிர்ப்பண்பு முதுமையை எட்டுமுன் உயிர் ஒரு புதிய உயிரை, வளர்ச்சிக்குரிய புதிய தலைமுறையின் உயிரைப் படைத்து விடுகிறது. வளர்ச்சி குன்றித் தளர்ந்த முதல் உயிரலையிலிருந்து தாவி, அது வளரவிருக்கும் புத்துயிரலைமேல் தவழ்கிறது. நாடிய இன்பம் கைவரப்பெற்றவர் சிலர் ஒருசில நேரம் அதில் மகிழ்ந்திருக்கக்கூடும். ஆனால், அவர்கள் மகிழ்ச்சியின் அளவு அவர்கள் இன்ப நாட்டத்தின் அளவையே பொறுத்தது. எளிதில் பெற்ற இன்பம், எதிர்பாராது பெற்ற இன்பம் நீடித்த மகிழ்ச்சி அளிப்பதில்லை. அரிதிற் பெற்ற இன்பம், கடுமுயற்சியின் பின் பெற்ற இன்பம், அம்முயற்சி அருமையின் அளவில் மிகுதியான, நீடித்த இன்பம் தரத்தக்கதாகும். இன்பம், இன்ப நாட்டத்தில், இன்ப நாட்டமுடையவர் ஆர்வத்தில், முயற்சியிலேயே அடங்கியிருக்கிறது என்பதை இது காட்டுகிறது. இந்த இன்ப நாட்டமே உயிர், இந்த முயற்சியே வாழ்வு என்பது கருத்தில் பதிக்கப்படவேண்டிய ஒரு பேருண்மை ஆகும். நாடிய இன்பம் கைவரப்பெறாதவர், கைவரப்பெற்ற இன்பத்தால் மகிழ்ச்சியடையாதவர் ஆகியோர் பெறும் உணர்ச்சியே உண்மைத் துன்பம் ஆகும். உளநலம் வாய்ந்த உயிர்களில் இத்துன்பமும் நீடிப்பதில்லை. இயற்கையின் அகத்தூண்டுதல் இத்துன்பத்தின் படிப்பினையை அவர்களுக்குச் சரிவரக் கற்பித்துவிடுகிறது. ‘துன்பத்தில் தோயாதே, தூங்காதே! மேலும் இன்பம் நாடு! அதுவே உயிர்ப்பண்பு. ஆர்வமாக இன்பம் நாடு, நாடி அருமுயற்சியில் முனை! ஏனெனில் அந்த ஆர்வமும் அந்த முயற்சியுமே மகிழ்ச்சி, இன்பத்தின் உயிரலை! என்று இயற்கை அவர்கள் அகச்செவியில் ஓதுகிறது. அழுத குழந்தை ஆர்வமாக அடுத்த கணம் பால் குடிப்பதுபோல, அழுத முகம் அடுத்த நொடி சிரிப்பது போல, அவர்கள் மீண்டும் இன்ப நாட்டத்தில் ஆர்வம் கொண்டு முன்னேறுகின்றனர். ஆனால், முதுமை எய்திய சிலர் - உடல் முதுமை மட்டும் எய்தியவர் அல்லர், உடல் முதுமையினும் கேடான உயிர் முதுமை எய்தியவர்கள் - தாம் பெற்ற துன்பத்தில் தோய்ந்து அதை நிலையானதாக்கி விடுகின்றனர். அத்தகையவர்களுள் சிலர் அத்துன்பத்தில் தாம் தூங்குவதுடன் நில்லாமல், துன்ப ‘கீதம்’பாடித் தம்மைச் சுற்றிலும் துன்ப அலைகளைப் பரப்பி விடுகின்றனர். ‘உலகம் துன்பமயம்!’ ‘எல்லாம் துன்பமயம்!’ ‘வாழ்வாவது மாயம், அது மண்ணாவது திண்ணம்.!’ இவை அழகிய பாடல்கள், அழகிய கருத்துகள்தாம். ஆயினும், இவை துன்ப கீதத்தில் தோய்ந்தெழுந்த அடிகளே. இவ்வடிகளை மட்டும் தனியாக எடுத்துப் பாடிச் சிலர் துன்ப அலைகளைத் தம்மையும் அறியாமல் பரப்பி விடுகின்றனர். ஆனால், இப் பாடல்களைப் பாடிய பெரியோர்களின் நோக்கம் துன்ப அலைகள் பரப்புவது அல்லவே அல்ல. துன்பஅலை எழுப்பும் கருத்துகளை ஓர் அடி, இரண்டடியில் செறிவுபடச் சுருக்கிக் கூறிவிட்டு, அவர்கள் தம் நூல் முழுவதும் இன்ப அலைகள் எழுப்பவே நாடினர். ஆனால், அப்பேரருளாளர்கள் வாழ்ந்த காலம் துன்ப அலைக்காலம். அவர்கள் சமுதாயம், இனம் முதுமையின் தளர்ச்சி தட்டிய காலம். ஆகவே, துன்ப அலைகளை எவ்வளவு அழகுபட அவர்களால் பாட முடிந்ததோ, அவ்வளவு அழகுபட, அவ்வளவு கிளர்ச்சியார் வத்துடன், இன்ப அலைகளை அவர்களால் எழுப்ப முடிய வில்லை. அதனாலேயே இன்ப கீதம் பாட வந்த அவர்கள் பாடல்கள் துடைக்க முடியாத துன்ப கீதங்களாகிவிட்டன. ஆயினும், அவர்கள் உள்ளார்ந்த இன்ப நோக்கே, இன்ப வலியுறுத்தே, அந்தத் துன்ப கீதத்துக்கும் ஓர் ஒப்பற்ற அழகு தந்து, அதைத் துன்பத்தில் ஆறுதல் அளிக்கவல்ல இனிய புலம்பல் பாக்கள் ஆக்கியுள்ளன. துன்பத்தின் தளர்ச்சி தட்டிய தனி மனிதனுக்கு, சமுதாயத்துக்கு, இனத்துக்கு, அத்தளர்ச்சிக்குரிய அருமருந் தாவன இத்தகைய துன்ப கீதங்களல்ல, ஆறுதல் கீதங்கள் கூட அல்ல, இன்ப கீதங்களே. ‘உலகம் இன்பமயம்!’ ‘வாழ்வு நிலையானது!’ ‘வாழ்க்கை வாழ்வதற்கே!’ ‘முயற்சியும் சமூகத் தொண்டுமே வாழ்வின் நிலையான இன்பம்!’ இவையே அத்தகைய அருமருந்தான இன்ப கீதங்கள்.! தமிழகத்திலும் சரி, வடபுலத்திலும் சரி-இடைக்காலத் திலும், அணிமைக் காலத்திலும் நாம் துன்பகீதங்களையே தலைசிறந்த அறிஞர்களிடமும் பேரருளாளரிடமும் கூடக் கேட்கிறோம். ஆனால், நம்காலத்தில் நாம் இன்ப கீதத்தை எழுப்பி வருவதுபோலவே, தமிழ் சமற்கிருத இலக்கியத்தின் தொடக்க காலத்திலும் அறிஞர்கள், கவிஞர்கள், அறவோர்கள், அருளாளர்கள் இன்ப கீதங்கள், கிளர்ச்சிக் கீதங்கள் பாடினர். தமிழகம் மீண்டும் இளமை பெற்றுள்ள காலம் நம் காலம். நம் காலக் கவிஞர்களான பாரதி, பாரதிதாசன் ஆகியோர் பாடல்களில் நாம் மீண்டும் எழுச்சிக்கீதம் கேட்கத் தொடங்கி விட்டோம். ‘வலிமையற்ற தோளினாய்! - போ, போ, போ!’ ... ‘ஒளிபடைத்த கண்ணினாய் - வா, வா, வா! ‘உறுதிகொண்ட நெஞ்சினாய் - வா, வா, வா!’ என்று பாரதியாரும், ‘இன்பம் எல்லார்க்கும் என்றே சொல்லிப் பேரிகை எங்கும் முழக்கிடுவாய்!’ என்று பாரதிதாசனும் இன்பப்பேரிகை கொட்டியுள்ளனர். நம் காலத்தைப்போலவே இரண்டாயிர மூவாயிர ஆண்டு களுக்கு -பல்லாயிர ஆண்டுகளுக்கு - முற்பட்ட தமிழகமும், தமிழகத்தின் வழி அன்று நின்ற பண்டை வடதிசையும் இளமை நலம் வாய்ந்திருந்தன. ‘அன்புற் றமர்ந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போ டியைந்த தொடர்பு’ என்று முப்பாலமிழ்தமும், ‘உண்டா லம்ம, இவ்வுலகம்.... தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே!’ என்று சங்கப் பாடலும் சங்ககாலத்தோடொத்த வடதிசை அறிவூழியில் ‘உத்திஷ்டத, ஜாக்ரத வராந் நிபோதத!’ ‘எழுமின், விழிமின்! எழுந்து வேண்டிய வரங்கள் கோருமின்! என்ற கடோபநிடத வாசகங்களும் முற்காலத்தில் எழுச்சிக் கீதங்கள் பாடின. ‘தட்டு, கதவு திறக்கப்படும் கேள், விரும்பியது கொடுக்கப்படும்’ என்ற விவிலிய நூலின் ஊக்குரையும் ‘முயற்சி திருவினை ஆக்கும்’ ......................................மடியிலான் தான்உளாள் தாமரையி னாள்’ `ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்’ என்ற பொதுமறை வாய்மொழிகளும் இவ்வகைத் தேற்ற உரைகளே ஆகும். துன்பம் வந்த காலத்தில் ஒருவன் அந்தத் துன்பத்தில் தோய்தலும் துவள்தலும் கூடாது. அதுபோலவே இன்பம் வந்த காலத்தில் அதில் மகிழ்ந்து திளைத்துத் தன்னை மறந்துவிடுதலும் கூடாது. இவ்விரண்டுமே உயிர் வளர்ச்சிக்குத் தடையாகும். இன்பத்தைப் போலவே துன்பமும் இயல்பு என்பதை அவன் அறிதல் வேண்டும். ‘இன்பம் விழையான் இடும்பை இயல் பென்பான் துன்பம் உறுதல் இலன்’ என்று திருவள்ளுவர் இவ்வுண்மையையே சுட்டிக்காட்டி, இடுக்கணழியாமை என்று ஓர் அதிகார முழுவதும் அதனை விளக்கினார். இன்பமும் துன்பமும் இருவேறு பொருள்களல்ல, ஒரே பொருளின் இருபுறங்களே. இரண்டின் பொதுத் தன்மையே இன்பதுன்ப அலைகளின் ஏற்றத்தாழ்விலிருந்து விடுபட்ட நிலை யான நீடின்ப அமைதி. அதுவே தகுதி. அதை அறிவதே நடுவு நிலைமை என்று திருவள்ளுவர் பெருமானால் சிறப்பிக்கப் பட்டது. நடுவுநிலைமையற்றவன் தகுதியை அறியமாட்டான். இன்ப துன்பங்களின் இயல்பும் அவனுக்கு விளங்காது. அவன் இன்ப துன்பங்களை ஆட்கொள் வதற்கு மாறாக, இன்ப துன்பங்கள் அவனை ஆட்கொள்ள முற்பட்டுவிடும். இதனால் துன்பம் மட்டுமன்றி, இன்பமும் அவனுக்குத் துன்பமாகவே முடியும். ‘தகுதி எனஒன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்’ இக்குறட்பா தகுதியையும் அதை அடைவதற்குரிய நடுநிலைத் திறத்தையும் நன்கு விளக்குகிறது. நீரில் மூழ்கியவன் நீரைக் காணமுடியாது. அதுபோலத் துன்பத்தில் மூழ்கியவன் துன்பத்தின் இயல்பையோ, இன்பத்தில் மூழ்கியவன் இன்பத்தின் இயல்பையோ காணமுடியாது. இன்ப நாட்டம் இன்ப துன்பத்தில் மூழ்காத நாட்டமாய் இருந்தால் தான், இன்ப துன்பங்களின் காரணங்களைப் பிரித்தறிந்து, துன்பம் தடுத்து இன்பம் பெருக்க முடியும். இன்ப துன்பங்களின் உள்ளார்ந்த இயல்பை அறிந்தபின், துன்பத்தையும் ஒருவன் இன்பம் பெருக்கும் கருவியாக்கி விட முடியும். இன்பத்திலும் துன்பமே சிறந்த நண்பன் என்று அறநூலார் கூறுவதுண்டு. இதற்கு இரண்டு காரணங்கள் கூறலாம். ஒன்று துன்பமே மனிதனைச் சிந்திக்கவைத்து அறிவைத் தூண்டுகிறது என்பது. அதுவே இன்பத்தை நிலையாக்கு வதற்குரிய படிப்பினைகளையும் தருகிறது. போலி நண்பர்கள், மெய் நண்பர்களை ஒருவன் இன்ப காலத்தில் பிரித்தறிய முடியாது. துன்பகாலத்திலேயே வகுத்து உணரமுடியும். அதுபோல, போலிப் பண்புகளையும் மெய்ப் பண்புகளையும் வேறுபடுத்தி அறியத் துன்பமே மனிதனுக்கு உதவுகிறது. துன்பத்தின் இன்னலத்துக்குரிய இரண்டாவது காரணம், அதுவே இன்ப நுகர்வை உண்டுபண்ணுகிறது என்பதே. நிழலில் தங்குபவன் நிழலில் எவ்வளவு நேரம் இருந்தாலும் நிழலருமை அறியமுடியாது. நிழல் அவனுக்கு இயல்பான பொருளாகத் தோன்றக்கூடு மேயன்றி, இன்பப் பொருளாகத் தோன்ற மாட்டாது. ஆனால், வெயிலில் உழன்றபின் அதன் அருமையும் அதன் இன்பமும் அவனுக்கு முதன் முதலாகத் தெரியவருகின்றன. இன்பத்துக்குரிய இந்த மெய்ம்மை துன்பத்துக்கும் பொருந்தும். மலை யில் வாழ்பவருக்கு மலை உயரமாகத் தோன்றாது. வெப்ப மண்டலத்தில் வாழ்பவர்க்கு வெப்பம் தாங்கற்கரிய துன்பமாகத் தென்படாது. அதுபோலவே இன்ப இடையீடின்றித் துன்பத்தில் வாழ்பவனுக்குத் துன்பம் துன்ப உணர்வே தாராது. துன்ப இடை யீடின்றி இன்பத்தில் வாழ்பவனுக்கும் இன்பம் இன்பஉணர்வு தரமாட்டாது. இன்ப துன்பம் என்பன வேறுவேறு பொருள்களல்ல என்று மேலே கூறி னோம். அவை ஒரே பொருளே. ஏனெனில் ஒருவர் இன்பம் இன்னொருவர்க்குத் துன்பமாகலாம். ஒருவர்க்கே ஒருவேளை இன்பம் இன்னொரு வேளை துன்ப மாகக்கூடும். ஆகவே ‘இன்ப துன்ப வேறுபாட்டுணர்ச்சி’ புறப்பொருள்களில் இல்லை; அக உணர்வு மட்டுமேயாகும். ஒளியில்தான் மனிதன் கண்கள் எதையும் விளக்கமாகக் காண்கின்றன. ஆனால், பூனையின் கண்கள் இருளிலேதான் அம்முழுவிளக்கம் பெறுகின்றன. இங்கே ஒளியும் இருளும் பூனை, மனிதன் ஆகிய இருவேறுயிர்களுக்கு இருவேறு பண்புகள் ஆகின்றன. மனிதனுக்குத் தீ, வெள்ளம், மின்வலி ஆகியன ஒருசமயம் தீங்கு விளைக்கின்றன. மற்றொரு சமயம் அவற்றையே அவன் ஆட்கொண்டு நலம் பெறுகிறான். இன்பமும் துன்பமும் - நன்மையும் தீமையும் - புறப் பொருள்களின் தன்மையில் இல்லை. அவற்றை அகப்பண்பு பயன்படுத்தும் வகையிலேயே உள்ளன என்பதை இவை புலப்படுத்துகின்றன. உடல் நலத்துக்கு ஏற்படும் ஊறினைப் பிணி எடுத்துக் காட்டுவதுபோல, உயிர்நலம், உளநலம், வாழ்வுநலம் ஆகிய வற்றுக்கு ஏற்படும் குறைபாட்டினைத் துன்ப உணர்வு எடுத்துக் காட்டுகிறது. உயிர்நலம், வாழ்வுநலம் அறிந்து, அவற்றுக்கிசைய இன்பச் சூழலைப் பெருக்குபவனுக்குத் துன்பங்கள் இன்பமாளிகை கட்டுவதற்குரிய முதற் கருவிகளாய் அமைந்துவிடும். அப்போது அவன் இன்பதுன்ப அலைகளிலிருந்து விடுபட்டு, நீடின்ப அமைதி அடைகிறான். இன்பங்களின்மீது இன்பமாளிகை எழுப்புபவனை விடத் துன்பங்களின் மீது அதனை எழுப்புபவனே சாலச் சிறந்தவன் ஆவான். இதனை ஓர் எடுத்துக்காட்டால் விளக்கலாம். வானவெளி எங்கும் உள்ளது. அதனடியில் மண் முதலிய பொருள்கள் பரந்துள்ளன. இரண்டும் பார்வைக்குத் தொடர்பற்ற பொருள்களே. ஆனால், மண்ணும் கல்லும் மரமும் இணைத்து மனிதன் வெட்ட வெளியிலே சுவர், கூரை, தளங்கள் அமைக்க முடிகிறது. அவை வானவெளியில் ஒரு கூடமைத்து அதை ஒரு வீடாக்கி விடுகின்றன. ஆனால், அதே வீட்டை இன்னொரு வகையாலும் அமைக்க முடியும். அஃது இன்னும் சிறந்த, உறுதியான வீடாகக்கூட அமையும். மண், கல் ஆகியவற்றால் வான வெளியை அடைத்து வீடாக்குவதுபோல, நிலத்தையோ, மலையையோ குடைந்து, அவற்றினிடையே வேண்டிய இடங்களி லெல்லாம் வெளியிடம் உண்டுபண்ணி வீடமைக்கவும் முடியும். பண்டைத் தமிழர் கட்டிய குகைக் கோவில்களும், இன்றும் உலகின் வடகோடியிலுள்ள மக்கள் பனிக்கட்டி குடைந்து அமைக்கும் இல்லங்களும், எலி, முயல் வளைகளும் இவ்வாறு அமைக்கப்படுபவையே. நம் வீடுகளில் நாம் சுவரும் கூரையும் தளமும், தூண்களும் கதவு பலகணிகளும் முயன்று கட்டுகிறோம். வெளியிடம் இயற்கையின் கூறாய் அமைகிறது. ஆனால், பிந்திய உறையுள்களில் சுவரும், கூரையும் தளமும் இயற்கையாய் அமைந்து விடுகின்றன. உள்வெளி யிடத்தையே முயன்று அமைக்கிறோம். இன்ப அடிப்படையில் இன்ப மாளிகை அமைப்பவர் நம்மைப்போல் சுவர் கூரை எழுப்பி வீடமைப்பவர். துன்ப அடிப்படையில் மாளிகை கட்டுபவர் குகைக்கோவில், பனிவீடு கட்டுபவர் போன்றவர்கள். பின்னது கடுமுயற்சியால் அமைவது. ஆனால், உறுதியில் மிக்கது என்று கூறத் தேவையில்லை. இன்பதுன்ப நடுநிலையுணர்வால் ஏற்படும் இந்த நீடின்ப அமைதியையே புத்த, சமண சமயங்களும் மேலே நடுநிலை வாணரும் (ளுவடிiஉள) பேரின்ப நிலை (நிருவாணம்) என்று கருதினர். பகவத்கீதை ‘இன்பதுன்ப ஒப்புரவறிந்து’ ஸசுகதுஃக்கே சமே க்ருத்வா] என்று குறிப்பது இதனையே. ஆனால், உட்பொருள் உணர்வின்றிக் காரணகாரிய விளக்கமில்லாமல் உலக அறிஞர் கிளிப்பிள்ளைகள் போல் கூறுவதைத் திருவள்ளுவர் பெருமான் அன்பு, வாழ்வின் இன்பம் என்ற அடிப்படையில் மனிதப் பண்பு நிறைந்த தெய்வீகப் பண்புடன் நமக்கு விளக்கித் தந்துள்ளார். திருக்குறள் அறநூல் மட்டுமல்ல, பொருள்நூல் மட்டுமல்ல. அதுவே இன்பநூல், பேரின்பநூல். அந்நூலைத் துருவி யாராயாமல், வேறெந்நூலை ஆராய்ந்தாலும், உண்மை இன்பத்தின் தன்மை காணமுடியாது. திருக்குறளுக்கு மற்ற நூல்களில் விளக்கம் தேடுவதைவிட, உட்பொருள் தொடர்பு மறைந்துவிட்ட அந்நூல்களின் நல்லுரை மரபைத் திருக்குறட் சிந்தனையால் விளக்கம் பெறுவிப்பதே அறிவியல்புடைய செயல் ஆகும். இன்பவழி கண்டுரைத்த வள்ளுவர் வழி நின்று உண்மை இன்பம், இன்பத்துள் இன்பம் காண்போமாக! 4. புதுமை இன்பம் இன்பம், இனிமை! அகச்சுவையும் நாச்சுவையும் குறித்த இந்த இரண்டு சொற்களும் தமிழில் தொடர்புடையவையாகக் காணப்படுகின்றன. மனித வாழ்வின் அடிப்படைப் பாகுபாடுகளாகிய ‘குடி’, ‘இனம்’ என்பவைகூட இவற்றுடன் சொற்பொருள் தொடர்பு உடையனவோ என்று எண்ண இடமுண்டு. ஆனால், ‘இன்பம்’, ‘இனிமை’ ஆகியவற்றின் சொல்தொடர்பு தமிழ்க்கே சிறப்பானாலும், அவற்றின் சொற்பொருள் தொடர்பு கிட்டத்தட்ட எல்லா மனித இன மொழிகளுக்கும் பொதுவேயாகும். இன்பத்தை எல்லாரும் விரும்புவது போலவே, இனிமையையும் எல்லாரும் விரும்புவர். அதுபோலத் துன்பத்தை எல்லாரும் பலவேறு படியில்வைத்து வெறுப்பதுபோலவே, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு, கார்ப்பு ஆகிய மற்றச் சுவைகளைப் பல வகையாக, பல படியாகப் பெரும்பாலார் வெறுப்பர். ஆயினும், துன்பத்தில் இன்பச் சுவை காண்பவர் இல்லாமலில்லை. அதுபோலவே புளிப்பு முதலிய மற்றச் சுவைகளில் ஈடுபட்டு அவற்றை விரும்புபவரையும் நாம் காணலாம். விஞ்சிய சுவை இனிமையே என்றுதான் தமிழரும் ஏனையோரும் கொண்டிருத்தல் வேண்டும். இது இயல்பே. ஆனால், இன்பத்துக்கு இன்பமும் இன்ப உறுதியும் தருபவை மற்றச் சுவைகள் என்பதையும் அவர்கள் அறிந்தே அறுசுவை உண்டி வகுத்துச் சென்றனராதல் வேண்டும். இனிய பொருள்கள் மேலீடான இன்பத்தைப் போலவே எளிதில் கெடுவன. ஏனைய சுவைகளோ கெடாநலம் மிக்கன. இதனை நகை நயத்துடனும் அறிவு நயத்துடனும் ‘திருவளர்த் தான்’ கதை ஒன்று நமக்குக் காட்டுகின்றது. ‘அரும்பொருள் ஒன்றை ஒவ்வொருவரும் தேர்ந்து கொணர்க!’ என்று பணித்திருந்தான், திருநாட்டு மன்னன்! யார் சிறப்பு மிக்க அரும்பொருள் தேர்கின்றனர் என்று காண அவன் விரும்பியிருந்தான். பொன்மணிப் பேழைகளை அருமுயற்சியுடன் தேடிப் பெற்று அவற்றை ஏந்தி வந்தனர் சிலர். மயிலும் குயிலும், அன்னமும் மானும், குதிரையும் வருந்தித் தேடி இட்டுக்கொண்டு வந்தனர் சிலர். வண்ண மலர்கள், வகை வகையான சுவை தரும் கனிகள், வாய் ஊறவைக்கும் சிற்றுண்டிகள் ஆகியன கொணர்ந்தனர் வேறு சிலர். ஆனால் திருவளர்த்தான் எதுவும் கொண்டுவந்ததாகத் தெரியவில்லை. அது கண்டு அவையோரும் பொது மக்களும் வியப்புற்றனர். அரும்பொருள்கள் ஒவ்வொன்றையும் கண்டு கண்டு அவற்றைத் தேர்ந்தெடுத்தோர் அருந்திறம் எண்ணி எண்ணி இறும்பூ தெய்தினான் மன்னன். எல்லாப் பொருள்களையும் பார்வையிட்டபின், வெறுங் கையுடன் நின்ற திருவளர்த்தானை ஏறிட்டு நோக்கினான். ‘உன் திருகுவிழி தவிர உனக்கு வேறு அரும்பொருள் ஒன்றும் கிடைக்கவில்லையா, திரு!’ என்று குறும்பு நகையுடன் கேட்டான். குறும்பே உருவாக என்றும் விளங்கிய திருவளர்த்தான் முகத்தில் அச்சமயம் குறும்பின் சாயல் எதுவுமே காணவில்லை. அவன் எல்லாரையும் போலவே பணிவன்புடன் மன்னனை வணங்கி, தன் இடுப்பிலிருந்து ஒரு சின்னஞ் சிறு கந்தல் மூட்டையை எடுத்தான். மன்னன் திருவடிப்பக்கமே ஆர அமரக் குந்தியிருந்த வண்ணம் அவன் அம் மூட்டையை அவிழ்க்கத் தொடங்கினான். ஏளனத்துடன் அவனை நோக்கிய சிலர் அவன் செயல் கண்டு வியப்புற்றனர். பலர் அதன் பொருள் தெரியாமல் மலைப்புற்றனர். மூட்டையின் முடிச்சு ஒரே முடிச்சாய் இல்லை. முடிச்சுக்குள் முடிச்சு , அதற்குள் முடிச்சு என நீண்டுகொண்டே சென்றது. அவன் ஒன்றன்பின் ஒன்றாக முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே இருந்தான். அவ்வளவு சிறிய மூட்டைக்குள் எப்படி அத்தனை முடிச்சுகள் இருக்க முடியும் என்றனர் சிலர். அத்தனை முடிச்சுகள் கடந்த பின் அதில் வேறென்ன இருக்க முடியும்? வெறும் காற்றுத்தான் இருக்கப்போகிறது என்று ஆத்திர முடிவு கட்டினர் வேறு சிலர். முடிச்சுகள் எல்லையில்லாமல் நீண்டுகொண்டே செல்வது கண்டு பொறுமையிழந்தனர் பலர். சிலர் அவன் செயல் கண்டு சிரித்தனர். சிலர் சீறினர். “இது என்னடா வெங்காயம்!” என்று பாதி சிரிப்பும் பாதி சீற்றமுமாக மன்னன் கேட்டான். ‘இதை வெளியிலிருந்தே அவிழ்த்துக்கொண்டு வந்தால் என்ன, என் முன்தானா அவிழ்க்க வேண்டும்! எனக்கு வேறு வேலையில்லையா?’ என்று அருகி லுள்ளோர் கேட்க முணுமுணுத்துக்கொண்டான். “அரசே! நீங்கள் மன்னர் என்றால் மன்னர்தான். மன்னர் மன்னர் தான். இந்த முடிச்சின் அருமையை நீங்கள் ஒருவர்தான் உணர்ந்துகொண்டிருக்கிறீர்கள். இது ஒரு வெங்காயம் என்பதை நீங்கள் மட்டுமே கண்டு சொன்னீர்கள்” என்றான் திருவளர்த்தான். மன்னனுக்குச் சீற்றம் பொத்துக்கொண்டு வந்தது. “ஒரு வெங்காயத்துக்காகவாடா, என்னையும் இத்தனை பேரையும் இப்படி காக்கவைக்கிறாய்! இதோ....” “இல்லை அரசே மன்னிக்கக் கோருகிறேன். இது வெங்காய மன்று. வெங்காயம் போன்றதென்று நீங்கள் வெங்காயத்தின் பண் பறிந்து சொன்னதாகத்தான் நான் எண்ணினேன். உரிக்க உரிக்க வெங்காயம் சிறுத்துக்கொண்டே போகும். ஆனால் காரம் சிறுக் காது. அது அருகில் உள்ளோர் மூக்குவழிச் சென்று கண்களைச் சீறவைக்கும். அதுபோல இதுவும் அவிழ்க்க, அவிழ்க்கச் சிறிதாகிக்கொண்டே சென்று எல்லார் கண்களையும் சீறவைக்கிறது!” என்றான். அரசன் தன் சீற்றத்தை மறந்து சிரித்தான். திருவளர்த்தான் முடிச்சு இப்போது உண்மையிலேயே மிக மிகச் சிறிதாயிற்று. ஆனால், இன்னும் அவன் முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டு தான் இருந்தான். அப்படி என்னதான் இருக்கப்போகிறதோ என்று பலரும் ஊகிப்பதில் ஈடுபடத் தொடங்கினர். ஊகத்தில் சீற்றம் போய்விட்டது. எரிச்சல் போய்விட்டது. மற்றெல்லா உணர்ச்சிகளும் வெளிப்பட்டன. ‘வேறு என்ன இருக்கப்போகிறது, ஒரு தவளைக் குஞ்சு அல்லது தலைப்பிரட்டை வைத்திருக்கப்போகிறான்.’ ‘அடே, ஓர் உயிருள்ள தேளை வைத்து நம்மைத் திடுக்கிட வைக்கப் போகிறான்!’ ‘அதில் ஒன்றும் இராதுடா! அவன் குழந்தை தலை மயிரில் ஒன்றைத்தான் வைத்து நம்மை நையாண்டி செய்யப் பார்க்கிறான்!’ இத்தகைய ஊக ஆராய்ச்சிகளிடையே அவர்கள் எவரும் ஊகிக்காத, எதிர்பாராத முறையில், திருவளர்த்தான் முடிச்சினுள்ளிருந்து ஒரு புளியம் பழத்தை எடுத்து, அதைப் போதிய மதிப்பார்வத்துடனும், வணக்க உணர்ச்சியுடனும் அரசனிடம் சென்று காணிக்கையாக நீட்டினான். ‘பிறரெல்லாம் தேடித் தேடிப் பார்த்தார்கள், அரசே! ஆனால், நான் நினைத்து நினைத்துப் பார்த்தேன். எவராலும் தேர்ந்து கண்டுபிடிக்க முடியாததாக நான் தேர்ந்தெடுத்த அரும்பொருள் காணிக்கை இதுதான். மன்னர் மன்னராகிய தங்களுக்கு ஏற்ற காணிக்கை இது!’ என்றான். ‘இருந்திருந்து ஒரு புளியம்பழந்தானாடா எனக்கு ஏற்றதாக உன் திருகுமூளை கண்டுபிடித்தது?’ என்று கேட்டு மன்னன் விழுந்து விழுந்து சிரித்தான். எல்லோரும் சிரித்தனர். ஆனால், திருவளர்த்தான் சிரிக்கவில்லை. ‘அரசே! மன்னிக்கவேண்டும். நான் வெறும் சிரிப்புக்காக மன்னர் அவைக்கு இதைக் கொண்டுவரவில்லை. இதை நான் மூட்டைகட்டி வைத்திருந்த அருமையையும், அதை எடுத்துத் தருவதில் நான் மேற்கொண்ட முயற்சியின் அருமையையும் நீங்களே பார்த்தீர்கள்! அறிவில் சிறந்த இந்த அவையோர் எல்லாரும் ஆவலுடன் கண்கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தார்கள்....!’ அது அரசவை என்பதைக்கூட மறந்து ‘ஆகா, ஆகா!’ என்று ஆர்ப்பரித்தனர், அமைச்சர் உட்பட அவையோர் எல்லாரும்! ‘மன்னர் மன்னனே! முழுதும் கேட்காமலே எல்லாரும் இவ்வளவு பாராட்டுகிறார்கள். முழுதும் கேட்டால்....!’ இவ்வாய்த்திறம் ஆரவாரத்தை இன்னும் பெருக்கிற்று. ஆனால், மன்னன் கையமர்த்தினான். ‘முழுதும் கேட்ட பிற்பாடு சிரிப்போம். இப்போது சிரிக்கவேண்டாம்! திரு, நீ இனி உன் முழுப் பேருரையையும் ஆற்றலாம்!’ என்றான். ‘ஆண்டவனே, எளியேன் சிற்றுரைக்கும் சிறு மூளைக்கும் இவ்வளவு மதிப்புத் தந்துவிடக்கூடாது!’ ஏதோ நான் தங்களிடம் கொண்ட ஆர்வ மதிப்புத்தான் என்னை இவ்வளவு சிந்திக்க வைத்துள்ளது. “பொன்னும் மணியும் விலையுயர்ந்தவை. ஆனால், அவற்றை மன்னர் தம் பின்னோர்களுக்கு விட்டுச் செல்லலாம். தாமே துய்க்க முடியாது. மானும் மயிலும் குயிலும் அப்படியே! அவை நீடித்து இன்பம் தரமாட்டா. மலர்கள் கனிகள் துய்ப்பதற் குரியவை. ஆனால், மலர்கள் வாடிவிடும். கனிகள், இனிய உண்டிகள் முதலில் இனிக்கும், பின் புளித்துப்போகும். விரைவில் கெட்டுவிடவும் செய்யும். ஆனால், நான் கொண்டு வந்த பழம்....” ‘ஆம், புளியம்பழம்கூட ஒரு பழம்தான்!’ என்று பின்னிருந்து கீச்சிட்டது ஒரு குரல். திருவளர்த்தான் தொடர்ந்தான். ‘ஆம், இதுதான் பழங்களில் சிறந்த பழம். மற்றப் பழங்கள், இன்பங்கள் முன் இனிக்கும், பின் புளிக்கும். இது முன் புளிக்கும், பின் இனிக்கும். இது வாடாது, வதங்காது அழுகாது, கெடாது. நாட் செல்லச்செல்ல மேலும் மேலும் இனிக்கும். வாயிலிட்டவர் முதலில் இனிப்புத் தாங்காமல் முகத்தைச் சுளிப்பர். ஆனால் விரைவில் அவர்கள் நாக்கைத் துழாவுவதைப் பார்க்கலாம்.’ ‘இந்தப் புளிப்பு ஒரு சிறிதும் இல்லாத இனிப்புச் சுவை தேன்போல் இனிதாவதில்லை. தேன்போல் நீடித்துக் கெடாம லிருந்து, பிற பொருள்களையும் கெடாது காப்பதில்லை.’ இனிப்புக்கு இனிப்புத் தருவது புளிச்சுவை. கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய எச்சுவையையும் இன்சுவையாக்கும் பண்பு இதற்கு உண்டு. ஆகவே, இனிமையின் இனிமை இதுவே. இதுபோன்ற இன்பத்தின் இன்பம் மன்னர் மன்னர் வாழ்வில் மிளிரட்டும் என்ற கருத்துடனேயே நான் இதை அரிது முயன்று கண்டுபிடித்து மன்னர் மன்னரின் காணிக்கையாக்கினேன். ‘இது தவறானால், என் சிறு மூளையின் குறை இது என்று மன்னிக்கக் கோருகிறேன். ஆனால், சரி என்று நீங்கள் கருதினால், அதற்காக என்னைப் பாராட்ட வேண்டா. என்னை நினைத்து என்னைப் போலச் சிறிய மூளையுடைய உங்கள் சிறுவர் சிறுமியர்களைப் பாராட்டுங்கள்’ என்றான். மன்னனும் மன்னவையோரும் இப்போது சிரிக்கவில்லை. ஆனால், நகைச்சுவையிடையே திருவளர்த்தான் காட்டிய அறிவுப் படிப்பினையை அவர்கள் பாராட்டினர், போற்றி மகிழ்ந்தனர். தமிழர் இனிமையிலும் தேனினிமைக்குரிய தனிச்சிறப்பை உணர்ந்திருந்தனர். பழங்களில் தலைசிறந்த முப்பழங்களுக்கு மட்டுமே அவர்கள் தேன் என்ற சொல் அடை சேர்த்து, தேமா, தேம்பலா, தேங்கதலி என்று அழைத்தனர். இவை வெறும் அடைமொழி சார்ந்த சொற்களல்ல, முப்பழங்களில் தேன் தன்மையுடைய உயர்தனி வகைகளுக்குரிய பெயர்களேயாகும். இப்பெயர் கொண்ட முப்பழ வகைகளில் நீர்ச்சத்து முற்றிலும் சுவறித் தேம்பாகாகச் சுண்டிவிடுவதனால், அவை தேனிலிட்ட பழம்போல இனிமையும் கெடாநலனும் உடையனவாகத் திகழ்கின்றன. அரும் பெறலாகிய இம்மூவகைக் கனிகளையும் தமிழர் இனிது பேணாததாலேயே, இப்பெயர்களை அடை சார்ந்த பொதுச் சொற்கள் என்று கருதிவர நேரிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புளிப்பைவிட இத்தகைய நீடித்த இனிமைச் செறிவுடைய சுவைகள் துவர்ப்பு, உவர்ப்பு, கசப்பு முதலியன. துவர்ப்பின் நலத்தை நெல்லிக் கனியிலும், உவர்ப்பின் நலத்தை உப்பிலும், கசப்பின் நலத்தைப் பாகற்காய், சுண்டைக்காய் முதலிய அருமருந்துணவுகளிலும் காணலாம். இனிப்பின் செறிவே புளிப்பு, கசப்பு முதலிய சுவைகள். இவ்வுண்மையைத் தமிழகத்தின் தொழிற்கலைப் பேரறிஞரான ஜி. டி. நாயுடு அவர்கள் தம் செயல் தேர்வுமூலம் தமிழர் பொதுவரங்குகளிலே காட்டியுள்ளனர். உறு கசப்புடைய கனிச்சாற்றை அவர் முதலில் காட்டி, அதனுடன் பத்துப் பதினைந்து மடங்கான நீர் சேர்த்து வளாவி, அந்த இளம் பாகத்தில் அது பேரினிமையுடையதாய் இருப்பதை விளக்கியுள்ளார். இன்ப உணர்வின் மிகுதியும் துன்ப உணர்வின் மிகுதியும் இயற்கையில் ஒரே உணர்வற்ற நிலை அடைகின்றன. மிகு துன்பத்தால் உணர்விழப்பவரும் உயிரிழப்பவரும் உண்டு. அதுபோலவே மிக்க இன்பத்தாலும் உணர்வு, உயிர் இழப்பவர் களை பற்றிக் கேள்விப்படுகிறோம். முன்னாள்களில், சிறப்பாகப் படைத்துறையில், கசையடிகளை நூறு ஆயிரக் கணக்கில் தண்டனையாக அளிப்பதுண்டு. ஆனால், அடிபடுபவன் ஒருசில அடிகளுக்குப்பின் உணர் விழப்பதனால் அடி உறைப்பதில்லை. இதனாலேயே அக்காலக் கொடிய சட்டம், சில அடிகளுக்கு ஒருமுறை அடியை நிறுத்தி மருந்திட்டுப் புண்ணாறவைத்து அடிக்கவேண்டுமென்று திருத்தப்பட வேண்டியதாயிற்று! ஆனால், தண்டனையே குற்றத்தைக் குறைக்க, குற்றவாளியைத் திருத்தப் பயன்படுவதில்லை என்ற உண்மையை உலகம் இப்போதுதான் உணர்ந்து வருகிறது. உண்மைத் திருத்தம் தண்டனையல்ல. துன்பம் அளிப்பது கூட அல்ல. ஏனெனில், அகஅறிவு செயலாற்றும் இடத்தில் மட்டுமே துன்பம் திருத்தமாகப் பயன்படக்கூடும். ஆனால், உண்மைத் திருத்தத்துக்கு வேறு நல்ல, சிறந்த வழி இல்லாம லில்லை. அது இன்பம் பெருக்கும் வழிகளை - உணர்வற்ற நிலையை அடையாமலே இன்பத்தின்மேல் இன்பம், இன்பத்துள் இன்பம் என்று உயர்ந்துசெல்லும் வழிகளை-குற்றவாளிகளுக்கு மட்டுமின்றிப் பொது மக்களுக்கும் அறிவிப்பதேயாகும். அன்புவழி நின்று அவ்வின்பத்துள் இன்பம், இன்பத்தில் உணர்விழந்த நிலை அதாவது தெவிட்டாத இன்பம், இன்பத்தின் மேல் இன்பமாகிய பேரின்பம் விளக்கும் ஒப்பற்ற இன்பநூல் வள்ளுவர் பொய்யா மொழியேயாகும். அதன் உட்கோள்கண்டு, இன்பத்துள் இன்பம் நுனித்துணர்வோமாக. 5. இன்பத்தின் மறை திறவு “இன்பம் என்றால் என்ன? அதை எங்கே காணலாம்?” “துன்பத்தின் இன்மையே இன்பம். துன்பம் அணுக முடியாத இடத்திலேயே அது நிலவுகிறது.” “அப்படியானால் துன்பம் என்பது என்ன? அது ஏன் உண்டாகிறது?” இன்பத்தை உணர்ந்தவன் அது பெறாது ஏங்குவதே துன்பம்! துன்பத்தை வெறுப்பதனாலேயே-இன்பத்தை அடைய முயலாது அதை எதிர்பார்த்து ஏங்குவதனாலேயே - அத் துன்பம் உண்டாகிறது, நீடிக்கிறது.!” இது ஜெர்மன் கவிஞர் பெருமான் கெதேயின் ‘ஃவா°ட்’ என்ற நாடகத்தின் ஓர் உரையாடல் பகுதி. கதைத்தலைவன் முனைவன் ஃவா°ட° உலகியல் அறிவு முழுவதும் உணர்ந்தும் உளநிறைவு பெறாதவன். ‘எரிவாய்’ (நரக) உலகின் துணைநாடி, அதன் தூதனான மெஃவி°டாஃவிலிஸி னிடம் இக்கேள்விகளைக் கேட்கிறான். ஃவா°ட° கேள்விகள் அறிவார்ந்தவை. விடைகளும் முழுதுற அறிவு விளக்கம் தருபவையே. ஆனால், முனைவன் ஃவா°ட° ஏட்டறிவில் முதிர்ந்தவனாயினும், உணர்ச்சி நிலையில் உலகின் பெரும்பான்மை மக்களிடமிருந்து வேறுபட்டவனல்லன். எனவே, விடை விளக்கங்கள் மெஃவி°டாஃவிலி° எதிர் பார்த்தபடியே அவன் உள்ளத்துக்கு ஒளி தரவில்லை. அவன் கதை முடிவின்படி, நிலையற்ற இன்பம் நாடி இறுதியில் துன்ப உலகுக்கே இரையாகிறான். இன்பத்தை அடைவதற்கு இன்பநாட்டம் வேண்டும். ஆனால், அது இருந்தால் மட்டும் போதாது. இன்பத்தின் இயல்பறிதல் வேண்டும். துன்பத்தின் தன்மையுணர்தல் வேண்டும். துன்பத்தை இன்பமாக்கும் வகை கண்டுணர்தல் வேண்டும். இவைகூட நிலையான இன்பம் காணப் போத மாட்டா. இன்பத்துள் இன்பம் எது, இன்பங்களுக்கெல்லாம் அடிப்படை, எல்லையில்லாத இன்பம் எது என்ற அறிவு வேண்டும். அவை உலகில் பெரிதும் உணரப்படாததனாலேயே ‘இன்பம் எங்கே இருக்கிறது?’ என்ற கேள்வி என்றும் ஓய்வுறாத கேள்வியாக அமைகின்றது. உண்மையில் இன்பம் எங்கும் இருக்கிறது. உலகம் இன்பமயம். இன்பம் இல்லாத இடமே கிடையாது. ஏனெனில் துன்பம் என்பது இன்பத்தின் மறுபுறம், இன்பத்தை நிறையின்பம் நோக்கிப் பெருக்குவதற்கான ஒருகருவி - அவ்வளவே! ‘உலகம் இன்பமயம்’ என்று கருதுபவர், அவ்வாறு இன்பகீதம் பாடுபவரே கலைஞர், கவிஞர்! கலைஞரையும் கவிஞரையும் உலகம் பெரிதும் போற்றுவது இதனாலேயே. அவர்களிடம் மிக எளிதில் ஈடுபட்டு அவர்கள் வசமாவதும் இதுகாரணமாகவே. ஆனால், கலைஞரை உலகம் விரும்பினாலும் மதிப்பதில்லை. அறிவில் சிறந்த அறிஞர் சொற்களுக்குத் தரும் உயர்சிறப்பு அவர்கட்குக் கிடைப்பதில்லை. கலைஞர்களில் பலர் அந்த உயர்படிக்கு உகந்த தகுதி பெறுவதுமில்லை. இந்நிலை வருந்துவதற்குரியது. ஏனெனில், உலகுக்கு வழிகாட்டும் அறிஞர் பலரும் ‘உலகம் இன்பமயம்’ என்பதைக் காணாதவர், பிறர்க்கு அவ் வுண்மையைக் காட்ட முடியாதவராகவே உள்ளனர். சமயத் துறையிலும் உலகப் பெரியாராகிய சமய முதல்வர் சிலர் நீங்கலான சமயவாணர் பலரும் உலகம் ‘துன்பமயம்’ என்று கருதுபவர், காட்டுபவராக உள்ளனரேயன்றி, இன்பத்துள் இன்பம் உணர்ந்தவராகத் திகழவில்லை. சமய முதல்வர் கண்ட ஒளிக்கதிர்களைக்கூடச் சமயவாணரும் சமய அறிஞரும் சமயஞ்சாரா அறிஞரும் பல்வேறு வகையில் திரையிட்டு மூடிவிடுகின்றனர். திருவள்ளுவர் கலைஞருள் ஒரு கலைஞர்; கவிஞருள் ஒரு கவிஞர்! தலைசிறந்த கலைஞர்; கவிஞர்; முன்னணியிலும் முதன்மை வாய்ந்த கலைஞர்; கவிஞர்! அத்துடன் அவர் உலக அறிஞருள் ஒப்புயர்வற்ற வான் பேரறிஞராகவும் விளங்குகிறார்! சமயவாணர் சென்று எட்டாத் தொலைவில், சமய முதல்வர் கண்டுணர்ந்த சமயங்களுக்கே அடிப்படையான அறத்துறைக்கும் அவரே முதல்வர்! ஆகவே இந்த முத்துறைகளில் இன்பகீதம் பாடி, என்றும் அழியாத பேரின்ப நாதம் எழுப்பி, அதை உலகுக்குத் தமிழ்மொழி வாயிலாகத் தந்துசென்றுள்ளார். இது தமிழினம் என்னும் பேழைக்குள் அடைபட்டுத் தமிழினத்தின் அறியாமை, அடிமையிருள் என்னும் ஆழ்நிலத்தில் புதையுண்டு கிடக்கிறது. தமிழர் அதைத்தமிழறிவு என்னும் திறவுகொண்டு, தமிழ்ப்பற்று என்னும் கை நீட்டித் திறந்து உலகுக்கு வழங்கல் வேண்டும். இடைக்கால இருளறிவுகள், இருளார்ந்த உரைகள் என்னும் தூசி துடைத்து உலகம் அதைக் காணவிடுதல் வேண்டும். ‘உலகம் துன்பமயம்’ என்றே பெரும்பாலான சமயவாணர் கருதுகின்றனர். இன்ப ‘உலகம் இங்கே இருக்கிறது, அது உன்னுள்ளே இருக்கிறது!’ என்று இடித்து இடித்துக் கூறினார் இயேசுபிரான். ஆனால் இன்ப உலகத்தை அங்கே, மேல்வானிலே, கற்பனை வெளியிலே காண்பதில்தான் கதித்து நிற்கின்றனர். அவரையே போற்றிய கிறித்தவ சமயவாணர். முதல்வர்கள் இவ்வளவு தெளிவாக இடித்துக் கூறாத ஏனைய சமயங்கள் வகையிலோ, சமயவாணர் நிலையைப்பற்றிக் கேட்க வேண்டிய தில்லை! அவர்கள் அவ்வுலகை மக்கட்குக் காட்டி, இவ்வுலகில் தாங்கள் புகழும் பெருமையும் அடையத்தான் விரைகின்றனர். இவ்வாறு துன்ப கீதத்திலே தோய்ந்த சமயவாணர்களுக்குச் சமய முதல்வர்களே இன்பகீதம் எழுப்பினாலும், அவர்கள் செவியில் அது ஏறுவதில்லை. அவர்கள் மன்பதை உலகுக்கு அந்த இன்ப கீதத்தைத் துன்பகீதமாக மொழிபெயர்த்து விளக்குவதில், ‘இன்ப உலகம் அங்கே!’ என்பதை வலியுறுத்தி ‘இங்கே எல்லாம் துன்பமயம்’ என்று காட்டுவதில்தான் தங்கள் அறிவாற்றல் முழுவதையும் ஈடுபடுத்தியுள்ளனர். இன்பத்தை நாடி அலமரும் உலகம் இன்பம் காணாததற் குரிய காரணம் யாது? இன்பமூட்ட விரும்பும் கலைஞர், கவிஞர் இன்ப நம்பிக்கையூட்ட முடியாதது எதனால்? இன்ப உலகின் புதைமெய்ம்மையைக் காட்டுவதாகக் கூறும் சமயவாணர் இன்ப உலகைத் தாமும் காணாமல், பிறரையும் காணவொட்டாமல், வாயிலுக்குத் திரையிட்டு அதைத் தடுத்துக் காவல் காத்து நிற்பானேன்? இன்ப உருவினனான கடவுளைக் காணத் துடிக்கும் மக்கள், அதைக் காட்டவோ காணவோ ஆற்றலற்ற, காணும் விருப்பங்கூட இல்லாத, இந்தக் கண் மறைக்கும் குருடர்களை நம்பி ஏமாறுவானேன்? இன்பத்தை நாடும் மக்கள், அறிஞர், சமயவாணர் - ஏன், கலைஞர்கூட - பெரும்பாலும் இன்பத்துக்குரிய கருவிகளை அல்லது கருவிகளில் ஒன்றை அல்லது கருவிகள் சில பலவற்றைத் தேடிப் பெறுவதிலேயே தம் வாழ்நாள் முழுவதும் வீணாக்கி விடுகின்றனர். அது மட்டுமோ? அந்தக் கருவிகளைப் பெற்றபின் கூட அவர்கள் இன்பத்தைப் பெற அவற்றைப் பயன்படுத்துவ தில்லை. மேலும் மேலும் கருவிகளைப் பெருக்குவதிலேயே மீந்த நாள்களையும் கழித்து உழல்வர். ஏனெனில், இன்பக் கருவிகளையே அவர்கள் இன்பமாகக் கருதி அமைகின்றனர். நகருக்குச் செல்லக் குறுக்குவழி தேடிப் புறப்பட்ட ஒருவன் அக் குறுக்கு வழியில் நடுவே ஒரு திடலில் முன்னும் பின்னும் ஓடி நடை பழகினால் பயணம் என்ன ஆகும்? அந்த நிலையையே இன்பவேடர் பலர் இன்பத் தோட்டம் அடைகின்றது. பண்பு நாடிக் கருவி பெருக்கி அவற்றை மினுக்குபவன் செயலைத் தாயினத் தமிழ்ப் புலவர் திலகமாகிய ஒளவையார் பாடலொன்று அழகு நயம்பட நமக்குச் சித்திரித்துக் காட்டுகிறது. மூவரசருக்கும் அச்சம் உண்டுபண்ணத்தக்க வீரனாக இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் தகடூர் ஆண்ட அதியமான் நெடுமான்அஞ்சி என்னும் முடிசூடா மன்னன் விளங்கினான். அவன் தலைநகரான தகடூர் தற்காலச் சேலம் மாவட்டத்திலுள்ள தருமபுரியே எனக் கருதப்படுகிறது. ஒளவையார் அவன் அவைக்களப் புலவராய் விளங்கினார். காஞ்சியிலிருந்து தொண்டை நாடாண்ட தலைவன் தொண்டைமான் தகடூரை எதிர்த்து எளிதில் வெல்லலாம் என்று மனப்பால் குடித்துவந்தான். அவன் எதிர்ப்பை அதியமான் பொருட்படுத்த வில்லை. ஆனால், அவன் நட்பு விரும்பத்தக்கது என்று கருதினான். ஆகவே இவ் வெண்ணத்தை மாற்றி அவன் நன்மதிப்பைப் பெற்று வருமாறு அதியமான் ஒளவையாரைத் தன் தூதுவராக அனுப்பினான். கவிதையஞ் செல்வியாகிய ஒளவையாரைத் தொண்டைமான் தக்க மதிப்புடனேயே வரவேற்றுப் பாராட்டினான். ஆனால், அதியமானைவிடத் தன் ஆற்றல் எவ்வளவு பெரிது என்று காட்டும் எண்ணத்துடன் அவன் அவரைத் தன் படைக்கலக் கொட்டிலுக்கு இட்டுச் சென்றான். பாரித்தகன்ற அக் கொட்டிலின் வீறமைந்த தோற்றமும் தொழிலாரவாரமும் உண்மையிலேயே எவரையும் மலைக்கச் செய்வதாயிருந்தது. வினைமுற்றி நெய் பூசப் பெற்றுப் பளபளப்பான வேல்கள் ஒரு வரிசையிலும், ஈட்டிகள் மற்றொரு வரிசையிலும், கேடயங்கள் பரிசைகளின் அடுக்குகள் மற்றொரு புறமும் பரந்துகிடந்தன. குவியல் குவியலாய் வில், வாள் ஆகியவை ஆயிரக்கணக்கிலும், அம்புத் திரள்கள் நூறாயிரக்கணக்கிலும், வாளுறைகள், அம்புக்கூடுகள், நாண்கள் ஆயிரக்கணக்கிலும், கொத்துக் கொத்தாக எங்கும் காணப்பட்டன. கவசங்கள், தலையணி, காலணிகள் வீரர்களையே கண்முன் கொண்டு வந்து உறுப்பு உறுப்பாகக் காட்டுபவைபோல அச்சந் தந்தன. ஒளவையார் அமைந்த புன்முறுவலுடன் இத்தனையும் வாய் பேசாது சுற்றிச் சுற்றிப் பார்த்தார். ‘எம் வீர ஆற்றலைப்பற்றி இப்போது உம் எண்ணமென்ன, புலவர் திலகமே!’ என்று இறுமாந்து கேட்டான் தொண்டைமான். அறிவினுச்சியில் கலை நடமாடிய நங்கையின் மறுமொழியே புறப்பாடல் ஒன்றின் (95) வடிவமாக நமக்கு வந்தெட்டியுள்ளது. இவ்வே, பீலி அணிந்து, மாலைசூட்டி, கண் திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து கடியுடை வியல் நகரவ்வே! அவ்வே, பகைவர்க் குத்தி, கோடு நுதி சிதைந்து கொல்துறைக் குற்றில, மாதோ! என்றும்.... இல்லோர் ஒக்கல் தலைவன் அண்ணல் எம் கோமான் வைந்நுதி வேலே! “அரசே! உங்கள் வேலுக்கு எதுவும் ஈடு வருமா? அது கொல்லன் செய்து தந்தபடியே நெய்பூசி இங்கே அழகாக இருக்கிறது. அதற்கு நீங்கள் மயிலின் இறகு சூட்டி, காவலை யுடைய நகரின் கோட்டையில் கோயில் கட்டிவைத்து, நன்றாகத்தான் பூசை செய்கிறீர்கள். ஆனால், எங்கள் அரசன் அதியமான் வேல்களோ போர்க்களத்தில் பகைவர்களின் படையணிகளைத் தாக்கிக் குத்துண்டு முனை முறிந்தும், காம்பு ஒடிந்தும், குருதிக்கறை பற்றித் துருவேறியும் போயின. இத்தகைய அழகான கொட்டிற் கூடம்கூட அவன் கட்டவில்லை. கொல்லர்களின் சிறு பட்டறைகளிலேயே சிந்திச் சிதறி அவை பழுது பார்ப்பதற்காகக் கிடக்கின்றன. மேலும் அவன் அரச மதிப்புப் பெறாதவன். எளியோராகிய எங்களை உறவினர்களாகக் கொண்டு, உள்ளபோது சிறந்தவை எல்லாவற்றையும் எங்களுக்குக் கொடுத்து, இல்லாதபோது அவ்வில்லாக் குறையையும் எங்களுடன் சரிசமமாக இருந்து பங்கிட்டு உண்பவன்!’’ என்றார் செந்நாப் புலமையார். தொண்டைமான் புலவர் திலகத்தின் இந்த நயமிக்க நாவீற்றின்முன் தலைகுனிந்து வெட்கினான். அதியமான் வீரத்தை மட்டுமின்றி, இத்தகைய நற்புலவராதரவையும் மதித்து அவருடன் நட்பாடினான். ‘வீரம் வேலில் இல்லை, அதைக் கையாளும் வீரன் கையிலும் உள்ளத்திலும்தான் உள்ளது’-கலையார் அணங்கின் பாடல் காட்டுவது இதைமட்டுமன்று! புலவர், எளியோர் திறத்தில் பயன்படும் வீரமே சிறப்புடைய வீரம் என்பதையும் அவர் நமக்கு நன்கு எடுத்து விளக்குகிறார். வீரப் பண்பின் செய்தியே இன்பப் பண்புக்கும் பொருந்துவது ஆகும். இன்பப் பொருள்களாகக் கவிஞர் கூறுபவை இன்பம் தரத்தக்க இன்பக் கருவிகள் மட்டுமே. அவை எப்போதும் எல்லோர்க்கும் எல்லாச் சூழல்களிலும் இன்பம் தருபவை அல்ல. தென்றல் இன்பம் தருவது. ஆனால் தென்றலே இன்பம் அன்று. நோயாளிக்கு அது இன்பம் தரமாட்டாது. துன்பத்தால் வேகும் உள்ளங்களுக்கு அது ஆறுதல்கூட அளிக்க முடியாது. நிலவொளி இன்பத்துக்கு உவமையாகப் பாடப்படுவது. ஆனால், அதைப் பாடும் கவிஞரே அதைப் பிரியாத் துணைவர்க்கு இன்பமாகவும், பிரிவுற்றவர்க்குத் துன்பமாகவும் வருணிக்கின்றனர். இன்பம் பெருக்கும் கருவியாய் அது இயங்குவது போலவே, துன்பம் பெருக்கும் கருவியாகவும் அது இயங்குகின்றது. மேலும் பிரிவுற்றவராவது பிரிவு அகன்றபின் அதனால் இன்பமடைதல் கூடும். வாழ வகையற்று வறுமையில் உழைப்பவர்களுக்கு நிலவோ, நிலவின் கவிதையோ எத்தகைய இன்பமும் ஆறுதலும் தரமாட்டா. அவை அவர்கள் வாழ்வைக் கேலி செய்பவையாக மட்டுமே அமையவல்லன. கிளர்ச்சிதரும் எழுவானின் எழில், விழுவானின் பண்ணிசைக்கும் வண்ண அழகு மலர்களின் மாயக்கவர்ச்சி-இவை யாவும் காண்பவன் கண்ணொளிக்கும் உள்ளப் பண்புக்கும் வாழ்க்கைச் சூழலுக்கும் ஏற்ற அளவில்தான் இன்பம் தரமுடியும். அத்துடன் இன்பந் தரும் இப்பண்புகளைச் சூழலிலோ, புறஉலகிலோ தேடிக் காண்பதும் முடியாத காரியம். அவற்றை நுகரும் பண்பு செல்வத்தில் இல்லை-அவற்றை மறைத்தே செல்வர் மாடமாளிகை கட்டி வளைக்கப்பட்ட கோட்டை நகர்களுக்குள்ளே வாழ்கிறார்கள். அவற்றைக் காண, எண்ண நேரமில்லாமல் அவர்கள் வாழ்வில் பகலும் இரவும் வேறு முயற்சிகளால், கவலைகளால், அவாக்களால் நிரப்பப்பட்டு வருகின்றன. அதேசமயம் அப்பண்பு செல்வத்துக்கு அலந்த ஏழைகளிடமும் இல்லை. இரு நிலைக்கும் இடைப்பட்ட கவிதை யுணர்வுடைய ஒருசிலர் தம் இன்ப நாட்டத்தின் ஏமாற்றங்களால் வரும் கவலைகளிடையே ஒரு சிறு ஆறுதலாகத்தான் அவற்றை அவ்வப்போது வரவேற்கின்றனர். அவர்களிலும் சிலராக, சில சமயம் தாம் நுகராது நுகர்பவர்க்கு உழைக்கும் தொழிலாளராக, மிகமிகச் சிலரே அவற்றைப் படைத்தளிக்கின்றனர். புறப்பொருள்கள் இன்பங்களோ, இன்பப் பொருள் களோகூட அல்ல; இன்பக் கருவிகளே. இவ்வுண்மையை மேற்காட்டிய சான்றுகள் தெளிவுபடுத்து கின்றன. இக்கருவிகளும் அவற்றைக் கைக்கொள்பவர்களுக்கு எப்போதும் இன்பம் தருவதில்லை. ஏனெனில், அவை இன்பத்துக்கு மட்டுமன்றித் துன்பத்துக்கும் கருவிகளாய் உள்ளன. இன்பம் நோக்கி அவற்றைப் பயன்படுத்த வேண்டுமானால், பயன்படுத்துபவர் இன்ப உணர்வும், இன்ப நாட்டமும் உடையவராயிருத்தல் வேண்டும். இன்பக் கருவியே துன்பமும், துன்பக் கருவியே இன்பமும் தருவதறிந்து, அக்கருவிகள் மூலமே துன்பத்தை இன்பமாக மாற்றும் இரசவாதம் அறிந்தவராயிருத்தல் வேண்டும். இன்பம் துன்பமாகாமல் தடுக்கும் சஞ்சீவியையும் அவர்கள் கண்டுணர்தல் வேண்டும். இந்தஇன்பத்தை இன்பத்தின் மேல் இன்பமாக, எல்லையற்று வளரும் நீடின்பமாக வளர்க்கும் சிந்தாமணியையும், அவர்கள் முனைந்து கைப்பற்றுதல் வேண்டும். இந்த இரசவாதம், இந்தச் சஞ்சீவி, இந்தச் சிந்தாமணி ஆகிய மூன்றையுமே திருவள்ளுவர் திருக்குறள் என்ற முப்பாலமிழ்தமாக நமக்குத் தருகிறார். அறம், பொருள், இன்பம் என்ற மூன்று சொற்களும் இரசவாதமாக சஞ்சீவியாக, சிந்தாமணியாக அவர் நமக்குத் தரும் மூன்று இன்பக் குளிகைகளின் பெயர்களே யாகும். வள்ளுவர் வழி நின்று அவர் தந்தமாய இன்பத்தின் மறைதிறவை, மெய்யின்பத்தை, இன்பத்தின் இன்பத்தைத் தேடுவோமாக. 6. உயிரின் மறை திறவு உயிரின் பண்பு யாது? ஒல்காப் பெருமைத் தொல்காப்பியனார் உயிரின் பண்பைப் புலனறிவிலேயே கண்டார். உயிரின் வளர்ச்சியையும் அவர் புலனறிவின் வளர்ச்சியாகவே கொண்டார். ஓரறிவுயிரிலிருந்து ஐயறிவுயிர் கடந்து அவ்வளர்ச்சியைப் படிப்படியாகக் காட்டினார். அக அறிவாகிய பகுத்தறிவை அவர் ஆறாம் அறிவு என்று அழைத்தார். ஐயறிவுடன் இந்த ஆறாம் அறிவும் உடைய மனிதனோடு உயிரின் வளர்ச்சி முதிர்ச்சியுற்று முழுநிறைவு எய்துகிறதென்று அவர் கருதினார். உயிர்நூலார் உயிரின வகைகளின் தனிப்பண்பு வேறுபாடு களை. ஆராய்ந்து ஒப்பிட்டுப் பொது உயிர்க்கூறுகள் காண முயன்றுள்ளனர். ஆனால், தொடக்க உயிரினத்திலிருந்து வளர்ந்துவரும் அக வளர்ச்சியைத் தொல்காப்பியனார் கண்டவாறு அவர்கள் கருத்துச் செலுத்தினர். உயிர்ப்பு-மூச்சு உட்கொள்ளல், வெளியிடல்; உணவு-உண்பொருள் உட்கொள்ளல், செரிமானம் செய்தல், கழிவு நீக்கல்; குருதியோட்டம், குருதியின் வெப்பதட்ப நிலை; வளர்ச்சி, தளர்ச்சி; இனப்பெருக்கம் ஆகியவற்றை அவர்கள் உயிர்ப் பண்பின் கூறுகளாக விளக்கினர். தொல்காப்பியனார் கருத்துச் சென்ற வழியிலோ, உயிர் நூலார் கருத்துச்சென்ற வழியிலோ, சமயவாணர் கருத்து, பொதுவாகச் செல்லவில்லை. ஆனால், இரு சாராரும் கவனிக்காத ஒன்றை அவர்கள் முனைப்பாகச் சுட்டிக் காட்டினர். அதுவே பிறப்பு, இறப்பு என்ற உயிரின் தொடக்க இறுதி நிலைகளின் கூறு. முத்திறத்தவரும் காணாத, உயிர் முக்கியத்துவத்தில் அவற்றிலும் குறையாத ஓர் உயிர்ப்பண்பைத் திருவள்ளுவர் சுட்டிக் காட்டியுள்ளார். அதுவே பிறப்பு, இறப்பு என்பவற்றுடன் நெருங்கிய உயிர்த் தொடர்புடைய விழிப்பு-உறக்கம் ஆகிய இருதிசைப் பண்பு ஆகும். ‘உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு’ பொய்யாமொழியின் இவ்வாய்மொழியைப் பலர் அழகிய உவமையணியாக மட்டும் கொள்கின்றனர். ஆனால், ‘போலும்’ என்ற சொல் இங்கே உவமை நவிற்சியணியாகப் பயன்படுத்தப் படவில்லை. வள்ளுவர் குறளில் மட்டுமன்றி, பண்டைத் தமிழர் கவிதை மரபெங்கணும் காணப்படும் முறைப்படி, அது தன்மை நவிற்சியணியாகவே வழங்கப்பட்டுள்ளது. உறக்கம், சாக்காடு ஆகியவற்றின் தன்மைகளையும் தொடர்புகளையும் நாம் உணருந்தோறும், உயிர் வளர்ச்சி பற்றிய பல மெய்ம்மைகள் நமக்குப் புதிது புதிதாக விளங்கும். ஏனெனில் உறக்க நிலைகளில் மிகப் பல வகைகள் உண்டு. நாள்தோறும் கிட்டத்தட்ட ஒருபாதி நேரம் உறங்காத உயிர்கள் இல்லை. இதுவே உயிர்களின் பொதுத் துயில் நிலை. ஆனால், சில உயிர்கள் இயற்கைப் பருவங்களுக்கேற்ப நீள் துயில் கொள்ளும். பருவ மாறுபாடுகளின் மாறுபாடு கடந்து நீடித்து வாழ இது அவற்றுக்கு உதவுகிறது. வேறு சில உயிர்கள் தத்தம் வாழ்க்கைப் பருவங்களுக் கிடையே செறிதுயில் கொள்வது உண்டு. இத்தகைய உயிர்களை நாம் இருபிறப்புயிர்கள் என்று கூறுகிறோம். ஏனெனில், இச் செறிதுயில் உண்மையில் ஓருயிரின் வாழ்வில் மட்டும் நிகழும் ஒன்றல்ல. அவ்வுயிரினத்தின் மாள்வு கடந்து அது போராடிய ஒரு நெடுநீள் போராட்ட ஊழியின் சின்னமாகவே இச்செறிதுயில் இனவாழ்வில் நிலைத்துள்ளது. இயற்கையின் எல்லையற்ற காலப் பெருவெளியில் இவ்வினங்களுடன் வாழ்ந்த மற்ற உயிரினங் களெல்லாம் அழிந்தொழிவதற்குக் காரணமான ஒரு பெரும் பருவமாறுதலை, சூழ்நிலை மாறுதலை, இத்தகைய உயிரினங்கள் மட்டுமே இச்செறிதுயில் மூலம் எதிர்த்துச்சமாளித்து, மாண்டொழிந்த ஒரு பழைய உயிரின ஊழி கடந்து புத்தம் புதிய உயிரின ஊழியிலும் நீடித்து வாழ்ந்துள்ளன. அந்த ஈரூழி, ஈருலக வாழ்வின் சின்னமாகவே அவை இருபிறப் புயிர்களாய் நம் உயிரூழியில் இயங்குகின்றன. பெரும்பாலான நடுப்படி உயர்படி உயிரினங்களில் நான்காவதாகவும் ஒரு துயில்நிலை உண்டு. அது தலைமுறைகளுக் கிடையே நிகழ்வது. இதையே நடுப்படி உயிரினங்களில் முட்டைநிலை என்றும். உயர்படி உயிரினங்களில் கருநிலை என்றும் கூறுகிறோம். இதுவும் மெய்ம்மையில் செறிதுயில் நிலையோடு ஒப்பானதே. ஆனால், செறிதுயில் ஒரு தனி வகை உயிரினத்தின் ஓர் ஊழியின் செறிவு மட்டுமே. முட்டைநிலை, கருநிலை ஆகிய இவையோ அவ்வவ் இனவகை அடைந்த பொது உயிரின வளர்ச்சி முழுவதையும் தன்னகம் செறியக்கொண்ட நிலை ஆகும். மனித இனம் அன்னையின் கருவில் கழிக்கும் பத்து மாதங்கள் இங்ஙனம் ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிரீறாக மனித இனம் அடைந்துள்ள உயிரின வளர்ச்சிப் பேரூழியான பன்னூறாயிரங்கோடி ஆண்டு வளர்ச்சியின் மணிச்செறிவே யாகும். இக்காரணங்களால் நாம் இதனை மணித்துயில் நிலை என்று கூறலாம். திருவள்ளுவர் இவ்வெல்லாக் கூறுகளையும் உய்த்துணர்ந் திருந்தார் என்று கருத இடமுண்டு. அவரது மற்றொரு குறட்பா இத்திசையில் நம்மைச் சிந்திக்க வைப்பதாய் அமைந்துள்ளது. ‘குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே உடம்போடு உயிரிடை நட்பு’ இதுவே அத்தெய்வத் திருவாசகம். குடம்பை என்பதற்குப் பரிமேலழகர் முட்டை என்று பொருளுரைத்தார். ஆனால், மணக்குடவர் அதற்குக் கூடு என்றே பொருள் கொண்டார். திருவள்ளுவர் இத்தமிழ்ச் சொல்லின் இரு பொருள்களை யுமே மனத்துட் கொண்டு. உடலுக்கு முட்டையை உவமையாகவும், முட்டையைக் கூட்டுக்கு உவமையாகவும் உவமை மேல் உவமையான இரண்டு உவமையாகவே குறித்தனரோ என்று நாம் ஐயுற வேண்டியிருக்கிறது. அவ்வாறு கொண்டால், அக்கருத்துத் திருவளர்த்தான் கதை தரும் ‘வெங்காய உருவத்தையே’ நமக்கு நினைவூட்டவல்லது. உயிரும் உடம்பும் வேறுவேறா? ஒன்றா? உலக அறிஞர் என்ன கருதினர், கருதுகின்றனர்? திருவள்ளுவர் என்ன கருதினார், என்ன கருதியிருக்கக்கூடும்? உடல் உயிரல்ல-உடல் வேறு, உயிர் வேறு என்பதையே சமயவாணர், சிறப்பாகச் சமயம் சார்ந்த அறிஞர் பெரிதும் வலியுறுத்தினர். ஆனால், வேறு என்று கூறிய அறிஞர் அவற்றின் தொடர்பு, உயிரின் இயல்பு ஆகியவற்றைப்பற்றி இதற்கு மேல் விளக்கம் தர முடியவில்லை. உயிரியல்பை உணர முடியாதவர்கள் கடவுள் இயல்பை ஒருபோதும் உணர முடியாது. ஏனெனில் உடல் காணப்படு பொருள்; உயிர் காணப்படாப் பொருளாயினும், உடலிலே அதன் உயிர்ச்செயலை முனைப்பாகக் காண்கிறோம். கடவுளோ காணப்படாதவர் மட்டுமல்லர். உயிரின் செயலுருவான உடல் போன்ற ஒரு முனைப்பான செயற்களம் அற்றவர். உயிர் இயல்பைக் காணாத சமயவாணர், உயிர், கடவுள் ஆகிய இரண்டின் இயல்பு வகையிலும் பெரும்பாலும் கற்பனை யுலகிலேயே உலவுவதன் காரணம் இதுவே. சமயவாணர் மட்டுமன்றி, உயிர் நூலாரும் இயல் நூலாரும் பொதுவாக, அகப்பண்பாகிய உயிரில் கருத்துச் செலுத்தியதே இல்லை. ஆனால், உயிர்நூலார் உடலின் உயிர்ப்பண்பை நன்கு அலசி ஆராய்ந்துள்ளனர். அதனடிப்படையாக உயிரின் இயல்புபற்றிச் சிந்தித்த மெய்விளக்க அறிஞர் பலர் உண்டு. இயற்கையின் உள்ளீடாக இயங்கும் வெப்பம், காந்த ஆற்றல், மின் ஆற்றல் முதலிய ஆற்றல்கள் போல, உடலைக் களமாகக்கொண்டு இவற்றினும் நுண்ணியதாக, இன்றளவும், இயல் நூலறிவால் அறியப்படாத முறையில் இயங்கும் ஒரு நுண்ணாற்றலே உயிர் என்று அவர்கள் கருதுகின்றனர். உடல், இயற்கை ஆகிய இரண்டிலும் பொருள், ஆற்றல் என்ற இருதிசைக் கூறுகள் உண்டு. இயல் நூலார் இவற்றைக் காண்பதுடன் நில்லாது, ஒன்று மற்றொன்றாக மாறக்கூடும் என்றும் செயல் தேர்வுகள் மூலம் கண்டறிந் துள்ளனர். இவற்றின் பயனாக உலகிலும் சரி. இயல் ஆராய்ச்சித் துறையிலும் சரி, தொடக்கத்திலிருந்து நிலவிவரும் உயிர் உலகுபற்றிய கோட்பாட்டிலே ஒரு புரட்சி இன்று ஏற்பட்டுவருகிறது. இயற்கை, உயிர்களின் உடல்கள் ஆகியவற்றின் அடிப்படை பருப்பொருளே என்ற பழங் கோட்பாடு சரிந்துள்ளது. ஆற்றல், பொருள் இரண்டும் ஒரே பொருண்மையின் பொருள் நிலை, இயக்க நிலை ஆகிய இரு கூறுகளே என்ற கொள்கையும், இயக்க ஆற்றலின் ஒரு தோற்றமே பொருள் என்ற கொள்கையும் இதனால் வலிவுற்று வருகின்றன. எனவே உயிரும் ஒரு தனி இயக்க ஆற்றலே என்ற கொள்கை உயர்படி அறிவுலகிலே இன்று நிலவுகின்றது. உடலுக்கும் உயிர்க்கும், அதுபோல இயற்கையில் பொருளுக்கும் ஆற்றலுக்கும் உள்ள தொடர்பு ஒருதன்மை யானதே. ஆனால், உடலுயிர்க்கும் - இயற்கைக்கும் உள்ள தொடர்பை நுனித்தறிந்து விளக்குதல் எளிதன்று. அவ்வாறு ஓரளவு விளக்கிய தற்கால அறிஞர் அறிவுலகின் இக்கால ‘ஊழிப்பேரறிஞ’ரான ஐன்°டீனே ஆவர். அவர் விளக்கம் சமயவாணர் பலர் சுட்டிக் காட்டியுள்ள ‘பிண்டம்’ ‘அண்டம்’ என்ற பாகுபாட்டின் புத்தறிவு விளக்கமேயாகும். ‘எல்லையற்ற இயற்கையின் எல்லையுற்ற ஒரு சிறு படிவமே உயிர்’ என்பதே அது. இரண்டின் சரி சம ஆற்றல் நிலையே உயிரியக்கம்; அதுவே உயிர்க்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு ஆகும். அனைத்துலகை இயக்கும் அனைத்துயிராகவே கடவுள் கருதப் படுகிறார். ஐன்°டீன் உயிர் இயல்பின் கோட்பாடு சமய அறிஞரின் இம்முடிவுக்குப் புது விளக்கம் தந்துள்ளது என்பதில் ஐயமில்லை. உடலின் ஆற்றலே உயிரானால், உடலுக்குள் உயிராக அந்த உயிராற்றல் உள்நோக்கிச் செறிவுற்றுச் செல்வது என்பது தெளிவு. வளர்ச்சிக்கு உதவும் அகமும் விளக்குகின்றன.ஆனால் புறம் எது, அகம் எது; புறம் எங்கு முடிகிறது. அகம் எங்குத் தொடங்குகிறது. என்று பிரித்து யாராலும் காட்டமுடியாது. உடம்புக்குள் உடம்பாக உயிர்ப்பண்பு உடற்கூறாகவே உள்நோக்கி நுணுகிப் பெருக்கிக்கொண்டு போகிறது. தோலைவிடத் தசை. தசையைவிடக் குருதி, குருதியைவிட நாடி நரம்புகள். நாடி நரம்புகளைவிட எலும்புக்கூடு. எலும்புக் கூட்டைவிட உள் எலும்பு அல்லது உள்நாடி என அது செறிவுப் பெருக்க முற்றுக்கொண்டே செல்லும். இப்போக்கை வெங்காய உருவகம் விளக்குவது காணலாம். உயிர் உடலுக்குப் புறம்பாக உயிரினம் வகுத்துக் கொள்ளும் புறத்தோடே கூடு. பறவை கட்டும் கூடு போன்றதே மனிதர் கட்டும் வீடும். நாடு நகர், ஊர், சமுதாயம். சமயம், மொழி, கலை. இலக்கியம் போன்றவையும்! இக்கூடுகள் அகப்பண்பு நோக்கி உயர்வதனாலேயே மனிதன் அமைத்த பண்புக் கூடுகளாகிய மொழியும் கலையும் இயல் நூல்களும் புறப்பண்புகளாக நமக்குத் தோன்றுவ தில்லை. அத்துடன் உடலின் அக உயிர்ப்பண்புகளைக் கூடத் தாண்டி உயிரின் இயல்பை அறியும் வகையில் இவை மனிதனை இட்டுச் சென்று வருகின்றன. வள்ளுவர் இவ்வறிவியல் நெடுந்தொலை - ஒருவேளை நம்மை-நம் காலத்தை-நம் சமயவாணர் மட்டுமின்றி நம் இயல்நூலார், மெய்விளக்க நூலார்களைத் தாண்டி-தற்கால உலகின் அறிவுதாண்டிச் சென்றிருத்தல் கூடும். அவர் உவமைகள் இதைச் சுட்டிக் காட்டுகின்றன. ‘உயிரின் நிலை புறஉடல் நீத்து அகஉடல், அது நீத்து இன்னும் அகச்செறிவுடைய உடல் என்று செல்லும் இயல்பே யாகும்’ என்பதே நாம் மேலே குறிப்பிட்ட குறட்பாவின் சிந்தனைப் பொருள் ஆகும். அது ஒரு கூடு, கூடு கடந்த உடல், உடல் கடந்த உள்ளுடல் போல அகநோக்கிச் செல்வது என்பதே ‘குடம்பை’ என்ற சொல்லின் குறிப்பு ஆகும். உயிரின் பண்பாகத் தொல்காப்பியர், இயல்நூலார், சமயவாணர், திருவள்ளுவர் ஆகிய அனைவரும் காட்டிய கூறுகளையும் சேர்த்தால், அவையனைத்தும் ஒரு பெரும் பட்டிய லாகவே அமைவன. இத்தனையும் உயிரின் பண்புகளே யானாலும், அனைத்தும் உயிரின் உயிர்ப்பண்புகள் ஆகமுடியாது. இவ்வெல்லாக் கூறுகளையும் உள்ளடக்கி, அவற்றை இயக்கும் பண்பே அதன் உயிர்ப்பண்பு ஆகமுடியும். அது தொல்காப்பியர் சுட்டிக்காட்டிய, இயல்நூலார் கண்டுவருகிற வளர்ச்சிப் பண்பேயாகும். உணவு, குருதியோட்டம், உயிர்ப்பு, குருதியின் தட்ப வெப்ப நிலை ஆகிய உயிர்இயக்கக் கூறுகள் வளர்ச்சிக்கு உதவும் கருவிகள் அல்லது தளர்ச்சியைத் தடுத்தாளும் பண்புகளன்றி வேறன்று. தளர்ச்சியோ வளர்ச்சியின் பண்பை ஏற்றே படிப் படியாக நிகழ்கிறது. அத்துடன் தளர்ச்சி என்பது உண்மையில் வளர்ச்சி தடைப்பட்டதன் அறிகுறியன்றி வேறன்று. வளர்ச்சி தடைப்பட்டால் உயிர்ப்பண்பும் தடைப்பட்டுவிடுகிறது. அது மாளவே வேண்டும். ஆனால், மாற்றம் படிப்படியாய் நிகழ்வதால், அது தளர்ச்சியாகிறது. உயிரின் பண்புகளில் சமயவாணர்களும் பொதுமக்களும் பிறப்புக்கும் இறப்புக்குமே முதன்மை நிலை தந்துள்ளனர். ஆனால், பிறப்பும் இறப்பும் உயிரின் உயிர்ப் பண்புகளல்ல. மேலே நாம் காட்டிய முதல் குறட்பாவில் வள்ளுவர் வலியுறுத்தியுள்ள உண்மை இதுவே. ‘இறப்பு என்பது உயிரின் முடிவு அன்று. பிறப்பு என்பதும் அதன் தொடக்கம் அன்று. இரண்டும் உயிரின் எல்லையற்ற பெருவாழ்வில் அடுத்தடுத்து நிகழும், அடிக்கடி நிகழும், இரு சிறு பொது இடைநிகழ்ச்சிகளே. அவை உண்மையில் நாள்தோறும் நாம் உறங்கும் உறக்கத்தையும், உறங்கி விழிக்கும் விழிப்பையும் போன்றவையே’ என்ற அக்குறட்பாவுக்கு நாம் மெய்யுரை கண்டால் தகும். சிலர் இவ்விளக்கத்தை ஓர் அழகு வருணனையாக ஏற்று, ஒரு சிறு மறுப்புத் திருத்தமும் சுட்டிக்காட்டக்கூடும். பிறப்பும் இறப்பும் இன உயிரிலேயே ஈரலை நிகழ்ச்சிகள் ஆகக்கூடும். எனினும், தனி உயிர் வாழ்வாகிய அந்த அலைக்குப் பிறப்பும் இறப்புமே தொடக்க இறுதிகளாகும் என்பர். ஆனால், இன வாழ்வின் அலை என்பது ஒரு தலைமுறையேயன்றி ஒரு தனி உயிரின் வாழ்வன்று. ஏனெனில், இனவாழ்வின் சிற்றெல்லை தனி உயிரல்ல, குடும்பமே. குடும்பத்தில் தாயும் தந்தையும் இருதனி உயிர்கள். பிறக்கும் உயிர்கள் தாயின் பிள்ளையாகவோ, தந்தையின் பிள்ளையாகவோ பிறப்பதில்லை. தாய் தந்தையர் அல்லது குடும்பத்துக்குரிய பிள்ளைகளாகவே பிறக்கின்றனர். பிள்ளைகளின் தொகையும் தாய் தந்தையராகிய இருவரின் தொகையாக வேண்டுமென்றில்லை. அதில் குறையலாம், கூடலாம். ஆகவே, தலைமுறை தலைமுறையாகத் தாய் தந்தையர் திருமணத்திலிருந்து ஒவ்வொரு பிள்ளையின் திருமணம் வரையிலும் வாழ்வுப்படி ஒவ்வோர் அலையாகச் செல்கிறது. ஒரு குடும்பத் தலைமுறை யிலேயே இவ்வலைகள் பலவாகி, பலகுடும்ப அலைகளுடன் அளாவிப் பல குடும்பங்களையும் குடும்ப அலைகளையும் உண்டுபண்ணுகின்றன. இவ்வாறு இனவாழ்வின் அலைகள் ஒரே தொடர் அலைத்தொகுதி அல்ல. கிளைத்துப் பல்கி இணைந்து செல்லும் அலைத் தொகுதிகள் அல்லது அலைப் பின்னல்களேயாகும். பின்னல்களின் கண்ணிகள் இறப்பும் பிறப்புமல்ல. பழையமுறை என்பது இங்ஙனம் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையேயுள்ள அலையன்று. ஒரு தலைமுறை மணவாழ்லிருந்து மறுதலைமுறை மணவாழ்வு வரைக்குமுள்ள அலை அல்லது அலைகளேயாகும். திருவள்ளுவர் உறக்க உவமையின் முழுநிறை பொருத்தம் இப்போது ஓரளவு விளக்கமடைகிறது. ஒருவன் வாழ்நாளில் உறக்கம் விழிப்பு நிகழ்வது எப்படியோ அப்படித்தான் இனவாழ்வில் மட்டுமன்றித் தனிமனிதன் வாழ்விலும்கூடப் பிறப்பு இறப்புகள் நிகழ்கின்றன. இறப்பும் பிறப்பும் ஒருவன் தலைமுறையின் தொடக்கத்திலும் இறுதியிலும் நிகழவில்லை. இரண்டும் அவன் கண் காண, அவன் தலைமுறையிலேயே நிகழ்கின்றன. தான் பிறப்பதைத் தான் அவன் காணவில்லை. தான் இறப்பதைத் தான் அவன் காணமுடியாது. ஆனால், அவன் வாழ்விலேயே அவன் தாய் தந்தையர் வாழ்விறுதிக்குரிய இறப்பு நிகழ்ச்சிகளையும், அவன் பிள்ளைகள் வாழ்வுத் தொடக்கத்துக் குரிய பிறப்பு நிகழ்ச்சிகளையும் அவன் காண்கிறான். அதாவது மனிதன் தன் தனி வாழ்விலேயே தன் தலைமுறைக்குரிய இறப்புகளையும் பிறப்புகளையும் ஒருங்கே காண்கிறான். தான் இறந்து உறவினர் அழுவதைக் கனவில் கண்டு வருந்தும் கனவாளன் நிலையே இங்கு மனிதன் நிலை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கனவில்கூட ஒருவன் இறப்பை மட்டுமே காணமுடியும். இங்கோ மனிதன் இறப்பையும், பிறப்பையும் காணமுடிகிறது! திருவள்ளுவர் குறட்பாவில் உறக்க விழிப்புவமை சுட்டிக் காட்டும் அருநயம் இதுவேயாகும். உயிரின வளர்ச்சியில் தனி உயிர் வாழ்வு ஒரு முமு அலையாயிருக்கும் நிலை ஒன்று உண்டு. அதுவே தொடக்க நிலை உயிரினங்களான அணு உயிர்களின் நிலை. இங்கே ஒரு தனி உயிரின் வாழ்வே ஒரு தலைமுறை. ஒரு தலைமுறை முடிவு அடுத்த தலைமுறைப் பிறப்பாய் அமைகிறது. ஏனெனில், இங்கே தனி உயிர் உணவுண்டு தன்னளவில் இருமடங்காகப் பெருத்த கணமே, அது வெடித்து இரண்டு உயிர்கள் ஆகிவிடுகிறது. இரண்டு நான்கு எட்டு என இந்தப் படியிலுள்ள உயிரினங்கள் விரைவில் இரட்டித்துப் பெருகுவதால், நடுப்படி, உயர்படி உயிரினங்களை விடப் பல்லாயிர மடங்கு விரைவில் அவை இனப்பெருக்கம் உறுகின்றன. சமயவாணர் கருத்தின்படி நாம் தனி உயிரலையைத் தொடக்கப்படியில் காண்கிறோம். ஆனால், வியக்கத்தக்க முறையில் இங்கே பிறப்பு, இறப்பு என்ற சொற்களின் பொருள்களே மறைவதையும் நாம் காண்கிறோம். ஏனெனில், இங்கே பழைய தலைமுறை சார்ந்த எந்த உயிரும் இறக்கவில்லை. எந்த உயிரும் பிறக்கவில்லை. உயிரின் உடலே வெடித்து இரண்டு புதிய தலைமுறையின் உயிராகிவிடுகிறது. இதில் ஒன்று இரண்டாகும் புதுமையையும் காண்கிறோம். புதிய உயிர் பழைய உயிரின் உடலே என்பது தெளிவு. சமயவாணர் பலர் கருதியபடி, உயிர் வேறல்ல, உடல் வேறல்ல. அதுபோலவே பொதுமக்கள் கருதுகிறபடி, உயிர் பிறப்புடன் தொடங்குவதல்ல, இறப்புடன் முடிவதுமல்ல. அதுமட்டுமன்று. உயிர் ஒன்று இரண்டாக, சிறிது பெரிதாக, தாழ்வு உயர்வாகப் பெருகிவளரும் இயல்புடையது என்றும் காண்கிறோம். தொடக்க உயிரினங்களில் உயிர் பிறப்பதில்லை, இறப்பதில்லை. ஆனால், இனப்பெருக்கம் (2, 4, 6, 8, 10 என்ற படி) அல்ல, விசைப்பெருக்கம் (2 ,4, 8,16) என்றபடி பெருகுகின்றன. ஆயினும் அவற்றில் தலைமுறையின் கால எல்லை மிகவும் சிறிது, ஒரு கணமேயாகும். உயிரினப்படி வளரும் தோறும் இனப் பெருக்கத்தின் விசை மிகவும் குறைகிறது. ஆனால், தலைமுறையின் கால எல்லை மிகப்பெரிதாகி விடுகிறது. தொடக்க உயிரினத்தின் ஒரு கணமாக இருந்த அது மனித இனத்தின் இருபத்தைந்து ஆண்டுகளாக உயர்வுற்று விடுகிறது. உயிரின வளர்ச்சித் தொகை நோக்கியதன்று, தனி உயிர் வாழ்வின் பெருக்கை நோக்கியதன்று. இனத் தலைமுறையின் அளவும் இனப் பண்பளவும் நோக்கியதே என்பதை இது விளக்குகிறது. வள்ளுவர் கண்ட உயிரின் மறைதிறவை நாமும் ஓரளவு உணர்தல் வேண்டுமானால், உயிர்ப் பண்பின் வேறு சில கூறுகளிலும் நாம் விளக்கம் காண வேண்டும். உயிர் வாழ்வில் வளர்ச்சி, தளர்ச்சி என்ற இரு பகுதிகளை நாம் நடுப்படி, உயர்படிகளிலேயே பார்க்கிறோம். தொடக்கப் படியில் வளர்ச்சி ஒன்றே இடம் பெறுகிறது. நடுப்படி உயர்படிகளில் உணவுத் தொழிலில் செரிமானம், கழிவு நீக்கம் இரண்டும் உண்டு. தொடக்கப் படிகளில் கழிவு நீக்கம் என்ற எதுவும் கிடையாது. நடுப்படி, உயர்படிகளிலேயே பலவகைத் துயில் நிலைகளும் பெருகக் காண்கிறோம். தொடக்கப் படியில் விழிப்பு ஒன்று மட்டுமே இடம்பெறுகிறது. பிறவாமை, இறவாமை, மலமின்மை, நிறைவுணர்வு ஆகிய பண்புகள் கடவுளுக்குரியனவாகக் குறிக்கப்படும் பண்புகளில் சில. இவற்றைத் தொடக்க உயிர்களிலே காண்கிறோம். ஆனால், எங்குமிருத்தல், முற்றறிவுடைமை, தானே தன்னை உணர்தல், எல்லாம் வல்ல தன்மை-இந்தக் கடவுட் பண்புகள் அவற்றில் இல்லை. தொடக்க உயிர்களின் இப்பண்புகளே உயிரின் அடிப்படைத் தன்மைகள் என்பதையும் கடவுட் பண்பை நோக்கியே உயிரினம் வளர்ந்து வருகிறது என்பதையும்; தளர்ச்சி, சாக்காடு, பிறப்பு, உறக்க நிலைகள் என்பவை அக்கடவுட் பண்பை நோக்கிய வளர்ச்சிக்கான கருவிகளாகவே நடுப்படி உயிரினங்களாலும் உயர்படி உயிரினங்களாலும் பயன்படுத்தப் பெறுகின்றன என்பதையும் இது சுட்டும். தளர்ச்சியும் சாக்காடும் வளர்ச்சிக்கு எதிரான பண்புகள் போலவும், வளர்ச்சியின் பின் நிகழ்பவை போலவும் பொதுவாகத் தோன்றுவது இயல்பு. ஆனால், தளர்ச்சி என்பது விரைந்த வளர்ச்சிக்காக நடுப்படி, உயர்படி உயிரினங்கள் வகுத்துக் கொண்ட ஒரு புது முறையேயன்றி வேறல்ல. இரண்டும் பக்கத்துக்குப் பக்கமாக ஓயாது இயங்குபவை. ஏனெனில், வளர்ச்சி தடைப்பட்டபின் நாம் காணும் தளர்ச்சி, வளர்ச்சிக் காலத்தில் வளர்ச்சியுடன் இணைந்து மறைந்து நின்ற ஒரு பண்பே ஆகும். உறக்க நிலைகளும் அவ்வளர்ச்சிப் பருவத்திலுள்ள செறிந்த தளர்ச்சிக் கூறுகளேயாகும். தளர்ச்சியும் உறக்க நிலையும் இரண்டுமே வளர்ச்சியை இடையிடையே ஊக்கி விரைவுப டுத்தும் இடை ஓய்வுச் செயல்களன்றி வேறல்ல. தளர்ச்சி என்பது வளர்ச்சிக்கு உதவும் பண்பு என்பதைத் தாமரை, அல்லி ஆகிய நீர்வாழ் நிலையுயிர்களின் வாழ்வு காட்டுகிறது. இவற்றின் அடித்தண்டு, சேற்றினுள் கிழங்கு வடிவில் கிடக்கின்றது. அதன் ஒருபுறம் எப்போதும் தளிர்த்துக்கொண்டே வளர்கிறது. மறுபுறம் சிதைந்தழிந்துகொண்டே இருக்கிறது. இவ்விருதிசை நிகழ்ச்சிகள் இந்த நிலையுயிர்களை (தாவரங்களை) மாளா உயிர்களாக்குவதுடன், உணவு குறைந்துவிட்ட இடத்தி லிருந்து புது இடத்துக்கு இடம்மாறி முன்னேறும் இயங்கும் (சங்கம) உயிர்கள் ஆகவும் செயலாற்றுவிக்கின்றன. தளர்ச்சி உண்மையில் உணவுத் தொழிலின் கழிவுநீக்கம் போன்றது. கழிவுநீக்கம் உயிர்வளர்ச்சிக்கு வேண்டாத பொருளை ஒழித்தகற்றிப் புது ஆக்கப் பொருளுக்கு வழி வகுக்கிறது. அதுபோல, உயர்படி உயிரினங்களில் தளர்ச்சிப் பருவமே இனவளர்ச்சியில் முன்னர்ப் பயன்பட்டு மேலே தேவைப்படாத பகுதிகளைக் கழிக்கும் பருவமாகும். அத்துடன் பழைய தலைமுறை தன் வளர்ச்சியில் ஓய்வுற்ற புதிய தலைமுறையின் வளர்ச்சிக்கு உதவும் பருவமும் அதுவே ஆகும். ஆனால், வளர்ச்சிப் பருவத்தின் தளர்ச்சிக் கூறு நேரடியாகவே வளர்ச்சிக்கு உதவுகிறது. ஏனெனில், தளர்ச்சிப் பருவத்திலேயே இனத்தின் புது வளர்ச்சிக்குரிய ஆக்கப்பண்புகள் பெருக்கம் அடைகின்றன. இதனை நாம் சிறுதுயில் நிலையிலேயே காணலாம். விழிப்பு நிலையில் உயிர்வளர்ச்சிக்குரிய கருவித் தொழில்களில் முழுதும் ஈடுபடுகிறது. ஆனால், தளர்ச்சியின் கூறாகிய உறக்க நிலையில் வளரவேண்டிய உறுப்புகளுக்கு உயிர் ஓய்வு தந்து அவற்றை வளர்க்கின்றன. செடி கொடிகளும் உயிரினங்களும் விழிப்பு நிலையில் உண்டு செரித்த உயிர்ப்பொருளைக் கொண்டு, உறக்க நிலையிலேயே வளர்ச்சியுறுகின்றன என்று உயிர்நூலார் தேர்ந்துரைத்துள்ளனர். அதுபோலத் தளர்ச்சியும் இறப்புமே உயிர்த் தொடர்புக்கும் வளர்ச்சிக்கும் வேண்டாதன, ஒவ்வாதன அகற்றி, வேண்டுவன, ஒத்தன, வளம் ஊக்குவன ஆகியவற்றைப் பெருக்குகின்றன. பொதுநிலைத் துயிலைப் போலவே நீள்துயில், செறிதுயில், மணித்துயில் நிலைகளும் உயிரின வகையின் வளர்ச்சிக்கும் உயிரின வளர்ச்சிக்கும் உதவுபவை என்பது தெளிவு. அவை இனவளர்ச்சியின் ஆக்கக் கூறுகளையும் பேரினவளர்ச்சியின் ஆக்கக்கூறுகளையும் உள்நின்று வளர்த்து ஒவ்வொரு தலைமுறைக்கும் செறிந்த வடிவில் கொண்டுவந்து சேர்க்கின்றன. இன அடிப்படையின் வேர்ப்பண்புகளை இனத்தின் புத்திளந் தளிர்களுக்குக் கொண்டுசென்று அவற்றின் வளர்ச்சிக்குப் புத்துரமும் புதுத் தூண்டுதலும் அளிக்கின்றன. வளர்ச்சிப் பருவத்தின் தளர்ச்சிப் பண்பு அல்லது ஓய்வுப் பண்பு உறக்க நிலையானால், தளர்ச்சிப் பருவத்தின் தளர்ச்சிப் பண்பு பிணி, மூப்பு, சாக்காடு, பிறப்பு ஆகியவையே. முந்தியவை இனத்தின் பின்னோக்கிய நிலைகள். பிந்தியவையோ அதன் முன்னோக்கிய நிலைகள். வரும் தலைமுறையையும் இனத்தின் வருங்காலத்தையும் பற்றி முதிர்ச்சியுற்ற தலைமுறையினர் சிந்திப்பதற்கு ஓய்வு அளிக்கும் பருவமே மூப்புப் பருவம் என்று மேலே காட்டினோம். ஆனால், பிணி வளர்ச்சிக்கு உதவுவது என்று யாரும் எளிதில் நம்ப மாட்டார்கள். உயிர்வளர்ச்சி நூலார் இதனை நமக்கு விளக்குகின்றனர். பிணி உயர்படி உயிரினங்களின் வாழ்விலேயே தோன்றி வளர்கின்றது. நாகரிகமற்ற இனங்களில் இருப்பதைவிட நாகரிக சமுதாயங்களிலேயே பிணி மிகுதி என்பதைக் கண்டு குறை கூறாதவர், ஏளனம் செய்யாதவர் இல்லை. ஆனால், உண்மையில் இது வளர்ச்சிப் பண்பு மட்டுமல்ல, இன வளர்ச்சியை விரைவுபடுத்தும் வளர்ச்சிப் பண்பேயாகும். வளர்ச்சியின் புதிய தேவைகளுக் கேற்ப, வேண்டா உறுப்பும் பகுதியும் பண்பும் நோய்க்கூறுகள் மூலமே படிப்படியாக மாறுபட்டு, வேண்டிய புதிய உறுப்பு வளர இடம் உண்டாகிறது. இவ்வாறாகவே தவளையும் குரங்கும் உயிரின நோக்கி வால் இழந்தன. கீழின விலங்குகளின் முன்கால்கள் மனிதனை நோக்கிக் கைகளாகவும், பறவைகளை நோக்கிச் சிறகுகளாகவும் பயனும் ஆற்றலும் உருவும் திரிபுற்று மாறின. பால்வேறுபாடற்ற கீழின உயிர்களில் பால் வேறுபாடு தோன்றி வளர்ந்தது. இவை யாவும் பிணியுருவில் தோன்றிய வேறுபாடுகளே என்பதன் முழுவிளக்கத்தை டார்வின் போன்ற உயிர் வளர்ச்சி நூலார் தந்துள்ளனர். துயில் நிலை, பிணி, மூப்பு ஆகியவற்றைப்போலவே சாக்காடும் பிறப்பும் உயிரின வளர்ச்சி நோக்கிய நற்கூறுகளேயாகும். வளர்ச்சி முடிவில் அதாவது கட்டிளமையில் உயர்தர உயிர்கள் தம் உயிரின் வளர்ச்சிக்குரிய நற் கூறுகளைப் புத்துயிர்களாகப் படைத்துவிடுகின்றன. அத்துடன் அவர்கள் தலைமுறை உண்மையில் முடிந்துவிடுகிறது. ஆனால், அடுத்த தலைமுறைக்கு உதவுவதற்காகவே அவர்கள் முதுமை வாழ்வு வாழ்கின்றனர். அவர்கள் இறப்பு உண்மையில் வளர்ச்சிப் பண்பு நீங்கிய பகுதியிலும்கூடச் சாறெடுத்து ஈந்து பின் ஏற்படும் கழிவு நீக்க நிகழ்ச்சியன்றி வேறன்று. மாள்வு மட்டுமன்றி, தளர்ச்சிப் பருவம் முழுவதுமே வருங்கால இனவாழ்வின் வளம் பற்றிக் கனவு காண்பதற்காகவும் அக்கனவுகளை இன உயிர்களுக்கு அளித்து உதவுவதற்காகவும் இன உயிர் மேற்கொண்ட ஒரு நீண்ட மாலைத் துயில் நிலையேயாகும். அறிவு நிலையில் நம் காலம்வரை இந்த மெய்ம்மைகள் உணரப்படவில்லை என்பது உண்மையே. ஆனால், திருவள்ளுவர் உணர்வு நிலையில் இதனைக் கண்டுணர்ந்தார் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், உணர்ச்சி நிலையில் மனித இனம் இதை மிகப் பழங்காலத்திலேயே அறிந்து பேணியுள்ளது. நாடு, மொழி, தெய்வம் ஆகிய ஆற்றல்களை மனித இனம் தொன்று தொட்டுத் தாயாக, தந்தையாகக் கருதின. அத்துடன் (மாண்டவரை) மாண்ட புகழ்த் தெய்வ உருக்களாகவே மனித உலகெங்கணும் பல இனத்தாரும் போற்றி வந்துள்ளனர். வாழ்வு நிலையானது; முடிவுற்றது. ஆகவேதான், தமிழர் தம்மொழியில் உயிர்முடிவு குறிக்க ஒருசொல்லே வகுக்கவில்லை. பிரிந்தார், இயற்கையெய்தினார், நிறை வெய்தினார், புகழுற்றார் என இன்று கூறப்படும் சொற்கள் அணிந்துரைகளாகக் கருதப்படுவதுண்டு. அவை அணிந்துரைகளல்ல. சாதல் (நிறைவு எய்தல்). மாள்தல் (மாண்பு அல்லது புகழ் அடைதல்), இறத்தல் (தலைமுறை கடத்தல்) என்ற சொற்களின் பொருளும் அதுவே. தமிழ்மொழி வழி நின்று நிறை அறிவு கண்ட திருவள்ளுவர் ‘நிலையாமை’ என்ற இயலில் வாழ்க்கைக் கருவிகளின் நிலையாமை கூறி, இறுதி மூன்று குறட்பாக்களில் நிலையாமை கடந்த வாழ்வின் நீணிலையையும் சுட்டினார். இவற்றுள் இரு குறட்பாக்களே மேலே விளக்கமாகத் தரப்பட்டவை. அவற்றின் முத்தாய்ப்பாக விளக்குவதே இறுதிக் குறட்பா. ‘புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு’ இக் குறட்பா நீடித்து நிலைத்த வாழ்வை அழகுபடச் சித்திரிக்கிறது. ``உடலை உறக்க நிலை கொள்ளும் ஓய்விடமாகக் கொண்டு உடம்பிலிருந்து உடம்புக்குத் தாவித் தாவிச் செல்லும் உயிர்க்குப் புகுந்துவாழும் இடம் என்ற ஒன்றே இல்லையா? இது என்ன அவலநிலை?” என்று அவர் கவிநயம்படக் கேட்டுள்ளார். உறங்குமிடம் வளர்ச்சிக்குரிய, வாழ்வுக்குரிய இடம் என்றும், ஓய்வுப் பருவம் தளர்ச்சிப் பருவமே என்றும் மேலே காட்டினோம். உயர்படி உயிர்களுக்கு இவ்வகை ஓய்விடமான உடம்பு முதுமை மூலம்கிட்டுகிறது. ஆனால் இனத்துக்கு அத்தகைய உடம்புகிடையாது. இனமே உடம்பாகக் கொண்டவர்களன்றி இந்த ஓய்வின்பம் பெற முடியாது. இதை இனிமை நயத்துடன் சுட்டியதே வள்ளுவர் கவிநயம் வாய்ந்த கேள்வி. உடல் உயிர் ஒன்றிய தனி உயிரின் வாழ்வில் அதாவது சிறு வாழ்வில் அல்லது சிற்றின்ப வாழ்வில் உயிர்க்கு ஓய்விடம் கிடையாது. இனவாழ்வு அல்லது பேரின்ப வாழ்விலேயே அத்தகைய ஓய்விடம் உண்டு என்று சுட்டி, அவர் பேரின்பத்துக்கு வழிவகுக்கும் ‘துறவு’ இயலுக்குப் புகுமுகம் செய்கின்றார். வள்ளுவர் வழி நின்று நாம், உயிரின் மறைதிறவும் இன்பத்தின் மறைதிறவாகிய பேரின்பம் அல்லது இன்பத்துள் இன்பமும் காண்போமாக. 7. இறவா இன்பம் இன்பம், அவா, ஆர்வம்! இன்பத்தை நாடாத உயிர் இல்லை. இன்ப நாட்டமே அவா, உயிர்த்துடிப்பு. அது எழுப்பும் ஆர்வமே உயிரை இயங்கச் செய்கிறது. அதுவே உயிரின் பண்பு, உயிரின் ஆற்றல். இம் மூன்றும் உணவு, பசி, உடல்நலம் போன்றவை. பசித்தவனுக்கன்றி உணவு நாட்டமும் அதுவகை முயற்சியும் இருக்கமுடியாது. பசித்தவனுக்கன்றி உணவு சுவையளிக்கவும் மாட்டாது, உடல் நலம் தரவும் மாட்டாது. ஏனெனில், பசியே சுவைநுகர்வுக்கு மட்டுமன்றிச் செரிமானத்துக்கும், உடல் வளத்துக்கும் உரிய அடிப்படைக் காரணம் ஆகிறது. உணவு, நல்வாழ்வு ஆகியவற்றின் வகையில் பசி எப்படியோ, அப்படியே இன்ப வாழ்வு, வாழ்வின் இன்பம் ஆகியவற்றின் வகையில் அவா! அது இன்பத்தை நாடி, இன்ப முயற்சியில் ஆர்வமூட்டி, இன்பப் பேற்றில் நுகர்வளித்து, இன்பத்தின் பயனும் நிரப்புகிறது. இங்ஙனம் இன்ப வாழ்வு என்னும் உயிர் இயந்திரத்தில் இன்பம், அவா, ஆர்வம் ஆகிய மூன்றுமே மூன்று கோணங்களை யுடைய ஒரு முத்திரை ஆழியாய் இயங்குகின்றன. இவ் உயிர்ச் சக்கரத்தின் உயிர்மையாக, அதன் தொடக்கமும் முடிவும், இயக்கமும், ஆற்றலும், மூலமுதலும் கருவியும் பயனுமாக இயங்குவது அவாவே. அவா இன்றி இன்பம் இல்லை. அவாவே இன்பம். ‘பழகப் பழகப் பாலும் புளிக்கும்’ என்ற பழமொழி இவ் வுண்மையை எடுத்துக் காட்டுகிறது. பால் இனிப்பானது. பாலே உண்டவர்க்கு, பாலே ஒவ்வொரு நாளும் உண்டு உண்டு பழகியவர்க்கு அஃது இனிக்காது, புளிக்கும். ஏனெனில் அவரிடம் பாலின் அவாத் தளர்ந்துவிட்டது. அதன் புத்தவா ஆர்வம் போய்விட்டது. அவாவின் புதுமை, உயிர்ச் சின்னம் ஆர்வம். புதுமை தரும் உயிர் இன்பம் இன்பப் பொருளாகப் பழகிவிட்டபின், அதுவே புளிப்பாக, கசப்பாக உவர்ப்பாக மாறிவிடுகிறது. இன்பம், அவா, ஆர்வம் ஆகியவற்றின் உயிர் உண்மை அறியாதவர்களல்லர் சமயவாணர்கள், அறநூலார்! அவர்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகிய வீட்டைப் பேரின்பம் என்றனர். இறைவன் தாள் நிழலில் வைகும் உலகை இன்ப உலகென்றனர். அதைநோக்கி மக்கள் அவாவை, புதுமை யார்வத்தை எழுப்பினர். அவா பழைமையாக ஆக, ஆர்வம் தளரத் தளர, புதுப்புது வகையாக, புதுப்புது முறைகள் புனைந்து, புதுப்புதுப் பூசனை வினைமுறைகளால், விழா வேடிக்கைகளால் அதை ஊக்கவும் அவர்கள் தவறவில்லை. ‘நல்ல பண்புகள் இன்பம் தருவன. நிலையான இன்பத்துக்கு இட்டுச் செல்வன; தீய பண்புகள் இன்னாமை, ஓவா இடர் தருவன’ என்று அறநூலார் மேன்மேலும் விளக்குகின்றனர். இன்ப நாட்டத்தை, அவாவை எழுப்பியே பண்பு வளர்க்க அவர்கள் சற்றும் தயங்கவில்லை. வள்ளுவர் பெருமானைப்போல இன்பத்தையே குறிக்கோளாகக் கொள்ளாவிடினும், அதைத் தூண்டிலாகவேனும் பயன்படுத்த அவர்கள் தவறவில்லை! இன்ப நாட்டமே அவா. சமயவாணர், சமய அறிவு நூலார், அற நூலார் இன்பக் குறிக்கோளை ஏற்றுள்ளனர். வளர்க்க ஒருப்பட்டுள்ளனர். ஆயினும், அதே சமயம், அதே மூச்சில் அவர்கள் அவாவைக் கண்டிக்கத் தவறவில்லை, கண்டித் துள்ளனர். அவா உயிர்ப் பண்பு. அதை விலக்குதல் அரிதினும் அரிது. இதனையும் நன்கு உணர்த்தியவர்களே, வற்புறுத்தி உணர்த்திய வர்களே அவர்கள். ஆயினும், இன்பக் குறிக்கோளை ஏற்று, அதை நாடும் அவாவை மட்டும் பழிக்க அவர்கள் தயங்கவில்லை. இன்பம் நாடாத உயிர் இல்லை. அதற்காக எத்தனை கடுமுயற்சிகளில் ஈடுபடவும், எவ்வளவு இன்னல்களை ஏற்கவும், துன்பங்களைக் கடந்து செல்லவும் மனிதர் தயங்குவதில்லை. வாழ்வில் இன்பம் காணாதவர்கள், காணும் வாய்ப்பற்றவர்கள், காணும் நம்பிக்கையற்றவர்கள்கூட, மாள்வின் பின் இன்பம் கைவரும் என்ற நம்பிக்கையால் ஆறுதல் பெறமுடிகிறது. சமயவாணரே இந்நம்பிக்கையை நீர்வார்த்து வளர்க்கின்றனர். ஆயினும், அதே மூச்சில் அவாவை அறவே நீக்குதல் வேண்டும் என்றும் அவர்கள் அறிவுரை பகர்கின்றனர். அவா இயங்காமல் அடக்குவதென்பது காற்றை இயங்காமல், நீரை ஓடாமல், தீயைச் சுடாமல் தடுப்பது போன்றது. இந்த உவமைகளைக்கூடச் சமய அறிவு நூல்களில் காண்பது அரிதன்று. மதயானையைப் பணியவைக்கலாம். கரடி வெம்புலி களை அடக்கலாம். அவா அடக்குதல் அரிது, அரிதினும் அரிது என்று அவர்கள் வருணிக்கத் தயங்கவில்லை. ஆயினும் ‘அவாவை அடக்கு’ என்று அவர்கள் போதிக்கின்றனர். ‘அற்றது பற்றெனில் உற்றது வீடே’ (திருவாய்மொழி) ‘ஆசையறுமின்கள், ஆசையறுமின்கள் ‘ஈசனோடாயினும், ஆசையறுமின்கள்’ (திருமந்திரம்) ‘பிறந்தார் பெறுவது பெருகிய துன்பம், பிறவார் பெறுவது பெரும் பேரின்பம்; பற்றின் வருவது முன்னது, பின்னது அற்றோர் உறுவது அறிக’ (மணிமேகலை) என்று தமிழ்ப் பக்தி நூல்களும் தமிழ்ச் சைவ ஆகமமாகிய திருமந்திரமும், தமிழ்ப் புத்த காவியமாகிய மணிமேகலையும் ஒருங்கே வலியுறுத்துகின்றன. திருக்குறளிலும் நாம் இதே கருத்தை, இக் கருத்துகளை யெல்லாம் ஒருங்கே காணலாம். ‘இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும் துன்பத்துள் துன்பம் கெடின்’ ‘அவாவில்லார்க்கு இல்லாகும் துன்பம்’ இக்குறட்பா வாசகங்களில், அவாவே இன்பத்துக்குத் தடை, துன்பத்துக் கெல்லாம் மூலக்காரணம் என்று வள்ளுவர் கட்டுரைத்துள்ளதாகத் தோற்றுகிறது. அது மட்டுமன்று. திருமந்திர ஆசிரியரான திருமூலரைப் போலவே, மற்றப் பற்றுகளை அகற்றவே இறைவனைப் பற்றற்ற கடவுளைப் பற்றுக என்றும் அவர் நயம் பட உரைத்துள்ளார். ‘பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ கீழ்த்திசைச் சமயநூலார் அனைவரிடத்திலும் கீழ்த்திசை அறநூலார் அனைவரிடத்திலும் மட்டுமன்றித் திருவள்ளுவர் திருக்குறளிலும் காணப்படும் இந்த முரண்பாட்டின் விளக்கம் யாது? சமயக் கருத்துகளை உய்த்துணர்வாகவும் ஒப்பீட்டு நெறியுடனும், திருக்குறளைத் திருக்குறளாசிரியரது வாழ்க்கைக் கோட்பாட்டின் பின்னணியுடனும் மொத்தமாகவும் காண்பவர் களுக்கு இம்முரண்பாட்டின் முழு விளக்கமும் மெல்லத் தென்படாமற் போகாது. சமய நூல்களை, சிறப்பாகக் கீழ்த்திசைச் சமயநூல்களை நாம் பக்தி நூல்கள், அறிவு நூல்கள் என்று இருவகையாகப் பிரிக்கலாம். சைவ, வைணவ அறிவு நூல்கள் (சித்தாந்தங்கள்) இவற்றின் இணைப்புப் பாலமாகும். புத்த, சமண சமயங்களுக்கு மறுபிறப்புக் கோட்பாடு அடிப்படைக் கோட்பாடு ஆகும். மற்றக் கீழ்த்திசைச் சமயங்களின் அறிவு நூல்களுக்கும் இது பொருந்தும் அவாவே. இவை யாவும் அவாவே பிறப்பிறப்புச் சூழலுக்கு விதை என்று கருதுகின்றன. அவா அற்றால் பிறவா வாழ்வு அல்லது பேரின்பம் பெறலாம் என்று அவை கொள்கின்றன. கீழ்த்திசைப் பக்தி நூல்கள் யாவும் மேற்சொன்ன மறுபிறப்புக் கோட்பாட்டை ஏற்பவையே. ஆனால், மற்ற அவாக்கள் அல்லது பற்றுகளை ஒழிக்கக் கடவுட் பற்றை அவை வழியாகக் கொண்டன. ‘தனக்கெனப் பற்றுக்கொள்ளாதே, கடவுளுக்காகப் பற்றுக்கொள்’ என்று கூறுகிறது பகவத்கீதை. திருவள்ளுவர் கருத்துகளில் பற்று இறைப்பற்று இரண்டும் கீழ்த்திசைச் சமயங்களிலும்; இறைப்பற்று மட்டும் மேல்திசைச் சமயங்களிலும் பரவியுள்ளது காணலாம். இந்தியாவுக்கு வெளியே எழுந்த சமயங்களில் மறுபிறப்புக் கோட்பாடு இடம் பெறவில்லை. அவாவறுத்தலும் இதனால் அதே அளவில் வலியுறுத்தப் பெறவில்லை. அவாவறுத்தலுக்காகவே கடவுட் பற்று என்ற கீழ்த்திசைப் பக்தி நூல் வாதமும் அங்கே கிடையாது. ஆனால், கடவுள் பற்றுக்காகப் பிற பற்றுகளை விடுதல் போற்றப்பட்டுள்ளது. இது கீழ்த்திசைக் கடவுள்பற்று வாதத்துக்கு நேர் எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது. திருவள்ளுவர் திருக்குறளில் எல்லாச் சமய வாணரின் எல்லாக் கருத்துகளையும் அவற்றின் மொத்தத் தொகையையும் காணலாம். அவற்றின் விளக்கமும் திருக்குறளை ஆராய்பவர் களுக்கு எளிதில் புலப்படும். ஏனெனில், திருவள்ளுவர் கருத்தே அவை எல்லாவற்றையும் ஒருங்கிணைப்பது. எல்லாவற்றுக்கும் நடுநாயக முதலும் அதுவே ஆகும். திருவள்ளுவர் அவாவைக் கண்டிக்கிறார். ஆனால், அன்பும் உலகப் பற்றும் அவர் நூல் முழுவதிலும் கமழ்கின்றன. பற்று விடுவதற்காகக் கடவுள் பற்றைக் கைக்கொள் என்ற கீழ்த்திசைப் பக்தி நூல் வாதமும் இடம்பெறுகிறது. கடவுள் பற்று எவ்வாறு பற்றுவிடுவதற்கு உதவும் என்பதும் விளக்கப்படுகிறது. கடவுள் பற்றற்றவர். ஆகவேதான் கடவுள் பற்றுப் பற்றறுதற்கு உதவுவது என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கடவுள் பற்றுக்காக மற்ற உலகப் பற்றுகளை விடுதல் வேண்டும் என்ற மேல்திசைப் பக்தி வாதத்துக்கும் இது விளக்கம் ஆதல் காணலாம். ஏனெனில், பற்றுகள் தற்பற்றுகள். கடவுள் பற்று இனமளாவிய பற்று ஆகும். கடவுள் அன்புருவினர். கல்வியின் பயனும் நோக்கமும் கடவுள் வழிபாடே. கடவுள் வழி நின்றவர் அந்தணர், கடவுளும் அந்தணனே. `அந்தணர் என்போர் அறவோர், எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர்’. ஆகவே கடவுள் பற்றற்றவர் என்பதன் பொருள் அவர் தனக்கெனப் பற்றற்றவர் என்பதே யாகும். வேறு எந்த வகையிலும் அவர் பற்றற்றவர் ஆகமாட்டார். அவர் தனிப் பற்றுக்கோடற்றவர். ஆனால் உலகெலாம், உயிரெலாம் அவரையே பற்றி நிற்கின்றன. தற்பற்றற்ற, உலகனைத்தின், உயிரனைத்தின் பற்று வளர்க்க, அவரைப் பற்றுக என்பதே வள்ளுவர் குறிக்கோள். திருவள்ளுவரும் சமயவாணர்போல அவா அறுத்தலை வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவா என்று கூறியது தன்னைப் பற்றிய, தனி உயிர் பற்றிய அவாவை மட்டுமே. அன்பு, அவா, அதாவது உலகப் பற்றையோ, பொது நலத்தையோ அல்ல. தன் பற்றொழித்து, அவ்வகைப் பற்றற்ற இறைவன் வழி நின்று, அவனைப் போலவே அந்தண்மை அல்லது பொதுநலப் பாசம் கொள்வதே இன்பத்துக்கு வழி என்பது வள்ளுவர் கருத்து. ஆசை ஒழிக்கும்படி கூறிய புத்தர்பிரான் அனைத்துயிர் களிடத்தும் நேசம் வளர்க்கப் பணித்தார் என்பதை நாம் இங்கே கவனித்தல் வேண்டும். வள்ளுவர் அவா அறுத்தலின் கருத்து மரபைப் புத்தபிரான் அவா அறுத்தல் மேற்கொள்ளவில்லை. ஆனால், அதன் நிழல் அவர் கோட்பாட்டில் இடம் பெறாமல் இல்லை என்பதை இது காட்டுகிறது. அவா பிறப்புக்கு வித்து என்ற கீழ்த்திசைச் சமயக் கோட்பாட்டையும் திருக்குறளில் காண்கிறோம். திருவள்ளுவர் மேல் உலகம், நரகம் ஆகியவற்றைப் பற்றிச் சுட்டியுள்ளார். அவற்றைத் தம் கருத்தாக ஏற்கவில்லை, வலியுறுத்தவில்லை. அவற்றை அவர் வாதப் புனைவுரையாக, கவிதைப் புனைவுரையாகவே குறித்துள்ளார். அவர் வாழ்க்கைக் கோட்பாட்டில் அவை இடம் பெறவில்லை என்பது தெளிவு. வேள்வி, தாமரைக் கண்ணான் உலகு, இந்திரன், உம்பர் உறைவார்பதி, தேவர் முதலிய சொற்களையும் அவர் வழங்கி யுள்ளார். அவர் வாழ்க்கைக் கோட்பாட்டுக்கு இவையும் புறம்பானவை என்பதை எவரும் ஒப்புக்கொள்வர். இதுபோலப் பிறப்பு இறப்புக் கோட்பாடு அல்லது மறு பிறப்புக் கோட்பாடு பற்றியும் அவர் சுட்டியிருப்பதாகக் கொண்டாலும், அவர் வாழ்க்கைக் கோட்பாட்டில் அஃது ஓர் உட்பகுதியாய் அமைகின்றது என்று கூற முடியாது. உண்மையில் மற்றச் சமயக் கருத்துகளைச் சுட்டியது போலக் கூட இதனை அவர் சுட்டினார் என்பதை நிலை நாட்டுதல் முடியாது. மறுபிறப்பை ஐயத்துக் கிடமின்றி நாட்டும் குறட்பாவையும் எவரும் காட்டல் அரிது. அவா என்பதைத் தனி உயிர் அவா என்ற பொருளில் திருவள்ளுவர் கொண்டதுபோலவே, பிறப்பு, இறப்பு என்பதையும் அவர் தனி உயிரின் பிறப்பு, இறப்பு என்று கொண்டதாகக் கருத இடமுண்டு. அவை தனி உயிரின் பண்புகள், இன்பம் நோக்காத தற்பற்றுப் பண்புகள். உயர்ந்தோர் இவற்றுக்கு மாறாக இறவாமை, பிறவாமை ஆகிய பண்புகளை உடைய இனவாழ்வையே இன்பம் நோக்கிய வாழ்வாகக் கொண்டனராதல் வேண்டும். ‘அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து.’ புத்த, சமண சமயங்களுக்கும் கீழ்த்திசைச் சமயங்களுக்கும் உரிய மறுபிறப்புக் கொள்கையின்படியே உரையாசிரியர்கள் இக் குறட்பாவுக்குப் பொருள் கண்டுள்ளனர். ‘தவாஅ’ என்பதற்குக் கெடுதலில்லாத என்ற சொற்பொருள் கூறி, ‘கெடுதலில்லாமல் வருகின்ற, அஃதாவது ஓய்வற்ற பிறப்பு இறப்புச் சூழல் தரும் விதைப் பண்பே அவா’ என்று பரிமேலழகர் கொள்கின்றார். ‘வருகின்ற’ என்ற சொல்லை வருவிக்காவிட்டால் அஃது அவர் குறித்த நேர்ப்பொருள் தர முடியாது என்பது இங்கே கவனிக்கத் தக்கது. தமிழில் பிறப்புக்கு எதிர்ச் சொல் இறப்பு, பின்னது மிகுதல், கடந்து செல்லுதல் என்னும் பொருள் உடையது. திருவள்ளுவர் பிறப்புக்கு எதிராகச் சிறப்பு என்பதையும் பயன்படுத்துகிறார். இறப்பு, சிறப்பு; தவம், தவல் என்ற சொற்கள் தமிழில் பொதுவாகவும், திருவள்ளுவர் வழக்கில் சிறப்பாகவும் தொடர்பு உடைய சொற்கள் ஆகும். இறப்பு தனி வாழ்விலிருந்து இன வாழ்வுக்குக் கடத்தலே. சிறப்பும் புகழும் எச்சமும் அதுவே. ‘தவல்’ தாண்டுதல் ‘தவம் அதற்குரிய செயல். ‘உற்றநோய் நோன்றல், உயிர்க்குஉறுகண் செய்யாமை அற்றே தவத்துக்கு உரு’ என்று திருவள்ளுவரே இதற்கு விளக்கம் அளித்துள்ளது காணலாம். புத்தர்பிரான் காலத்துக்குள் தவத்தின் இந்த வள்ளுவப் பொருள் மறக்கப்பட்டுவிட்டது என்னலாம். வள்ளுவக் கருத்துப்படி தவம் என்பது தான் கெடினும் அக்கேட்டின் மூலமே இனவாழ்வு பெருக்கும் செயல் ஆகும். ‘தவல்’ கெடுதல் என்னும் பொருளையும் தாண்டுதல் (தவ்வுதல்) என்ற பொருளையும் ஒருங்கே தருதல் இதனாலேயேயாகும். தன்னலம் கெடுத்து இனநலம் பெருக்கும் செயலே, அதாவது தியாகமே தவம் ஆகும். தபுதல் அல்லது தபுதார நிலை என்று பண்டைத் தமிழ்மரபு இதனை வழங்கிற்று. திருவள்ளுவர் எழுபிறப்பு, எழுமை, எழுமை எழுபிறப்பு என்று கூறிய இடத்திலெல்லாம், அவர் கொண்டிருக்கக் கூடிய பொருள் ஏழு தலைமுறை, ஏழுபடி கடந்த உறவு ஆகியவையே யாகும். தவத்தையும் நோன்பையும் அவர் தியாகம், தியாக உறுதி என்ற பொருளிலேயே பயன்படுத்தினார். பிறப்பென்னும் பேதைமைக்கு எதிராகச் சிறப்பென்னும் செம்பொருள் என்று அவர் கூறியது தனி வாழ்வு நலன் என்னும் அறியாச் சிறு மதிக்கெதிரான இனவாழ்வின் பொதுநல நிறைவு அதாவது கடவுள் பண்பு என்பதனையேயாகும். “அவா என்பது தவாஅப் பிறப்பீனும் வித்து” என்று வள்ளுவர் கூறியதன் பொருள் தனி அவாவை மட்டுமே சுட்டியது. `தனி உயிர் தான் கெட்டும் இனம் வளர்க்காத அதாவது தவத்துக் குரியதல்லாத சிறு பிறப்புக்குத் தனி அவா வித்தாகும்’ என்பதே அப்பொருள். தலைமுறை `தாண்டாத’ என்ற பொருளும் அமையும். சமய ஒப்பு நோக்கே வள்ளுவர் கருத்தை இன்னொரு திசையில் வலியுறுத்தும். இறவாமை, பிறவாமை தொடர்புடைய கருத்துகளாயினும் ஒரே கருத்தன்று. எடுத்துக்காட்டாக, மேலைச் சமயங்களான கிறித்தவ, யூத, இசுலாமிய நெறிகள் கடவுளும் மனிதரும் இறவாப் பண்புகள்1 என்று கருதுகின்றன. ஆனால், கடவுளை மட்டுமே இறவாப் பிறவாப் பண்பு2 என்று குறிக் கின்றன. அதே சமயம் கீழைச் சமயங்கள் கிட்டத்தட்ட யாவுமே கடவுளைப்போல உயிரும் உலகும் பிறவா இறவாப் பண்புகள் என்று கொண்டது குறிப்பிடத்தக்கது. திருவள்ளுவர் இன உணர்வுடைய அதாவது கடவுள் பண்பார்ந்த உயிர்க்கும், இனத்துக்கும், இனம் முதலாகிய கடவுளுக்கும் ஒருங்கே உரிமைப்படுத்திய பண்பு இதுவே. கீழ்த்திசையின் இருமை (துவைதம்), அக ஒருமை (சுத்த அத்துவைதம்), தனி ஒருமை (கேவல அத்துவைதம்), உறழ் ஒருமை (விசிட்ட அத்துவைதம்) ஆகிய கோட்பாடுகளை வள்ளுவர் கருத்தே ஒருமுகப்படுத்திப் பொருத்திக் காட்டுகிறது என்பதும் உற்று நோக்கத்தக்கது. பிறப்பின் பயன் பெற்றவர் இனத் தொண்டாற்றிப் புகழ் பெற்றவர்; இறவாதவர்; இனவாழ்வே வாழ்வாகக் கொண்டவர். ஆனால், அவர் பிறவாதவர் அல்லர். தம் தனிவாழ்வு முற்றிலும் கெட்டு, இனத்தின் வாழ்வே வாழ்வாகப் பெற்றவர் பிறவாதவர் ஆகிறார். ஏனெனில், அவர் வாழ்வு பிறவா இறவா இனவாழ்வு ஆகிறது இந் நிலையடைந்தவரே பகவர். சமய மரபில்கூட, தேவர்கள் அல்லது சிறு தெய்வங்கள் ‘இறவாதன’ என்று மட்டுமே குறிக்கப்படுகிறது. கடவுள் ஒருவரே பிறவா இறவாப் பண்பினராகப் போற்றப்படுகிறார். வள்ளுவர் பிறப்பைப் புறக்கணித்தவர் அல்லர். உடம்பைப் பழித்தவரும் அல்லர். ஆனால், இரண்டின் முழுப் பயனான பிறவாமை உடம்புடன் வாழும் நிலையிலே பெறப்படுவது என்றே அவர் கருதினார். பிறவாமை பெற்ற பின்னும் உடம்பின் பயனுடன் உடம்பும் இருப்பதாலேயே, அவ்வுடம்பு ‘மிகை’ ஆகிறது என்று குறித்துள்ளார். ‘மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்? பிறப்புஅறுக்கல் உற்றார்க்கு உடம்பு மிகை’ இறவாமை கடவுளின் பண்புருவாகிய அந்தண்மை உருவாதலால், அது கண்டவர் இறைவனை அணுகியவர், இறைவனைக் கண்டவர், இறைவன் கூறானவர் ஆகின்றார். கீழ்த்திசையின் பழம் பெருமைகளையும் பண்பு மரபையும் படிப்படியாக மறைத்தழித்து வருகிற போலிச் சமயத் தலைவராகிய சழக்கர் கொலை சூழ்வதனை மாதக் கணக்காகக் கண்டும், காந்தியடிகள் தம் உடலைக் காக்க ஒரு சிறிதும் முயலாதிருந்தனர். மேற்குறிப்பிட்ட வள்ளுவரின் குறட்பா இலக்கணத்துக்கு ஏற்ற நம் கால இலக்கியமாக இதனைக் குறிப்பிடலாம். சமயவாணரின் ‘அவா’, ‘பிறப்பிறப்பு’, ‘ஊழ்’ சார்ந்த கொள்கைகளின் மூல முதல் வடிவையும் விளக்கத்தையும் இங்ஙனம் திருக்குறளிலே காணலாம். அவாக்களுள் நல்லவாக்கள் இருக்கலாம். தீயவாக்கள் இருக்கலாம். இரண்டுமே விலக்கவேண்டுபவை. பிறப்புக்கு வித்தாகியவை என்று சமய நூல்கள் கூறுகின்றன. அதே சமயம் இறைப்பற்றும் நல்லவாவே. மற்றப் பற்றுகளின் தளையை அகற்ற அது உதவும் என்ற வாதம்கூட அதை அவாக்களில் ஒன்று என்ற நிலையிலிருந்து மாற்றாது. இப்புதிரையும் வள்ளுவர் கோட்பாடே விளக்கவல்லது. ஏனெனில், வள்ளுவர் இறைப்பற்று மற்றப் பற்றுகளுக்கு எதிரிடையான பண்புடையது. அது தற்பற்றற்றது. மற்றப் பற்றுகளை அது விளக்கும் வகையும் அதுவே. நல்லவாக்கள் என்பன வள்ளுவர் கருத்தின்படி நல்ல தன்னல அவாக்கள். தீயவாக்கள் தீய தன்னல அவாக்கள். தீயவாக்கள் தீமைபயப்பது ஒருதலை. ஆனால், நல்லவாக்கள் தனி உயிரின் நலம் ஒன்றே குறியாகக் கொண்டவை. எனவே, அவை பிறர்க்குத் தீங்கு விளைவிக்கக்கூடும். எவ்வளவு தொலை அறிவோடும், பண்போடும் கலந்தாலும் தீமை பயவாதிரா. அவை இனத் தீங்கு விளைவித்து, தனி உயிர்க்கும் தீங்காகவே அமையும். ஆகவேதான் தனி உயிர் அவாக்கள் தீமையாயினும் நன்மை யாயினும் ஒருங்கே தீமை தருபவை ஆகின்றன. பொதுநல அவாக்களே தூய உயர் அவாக்கள். அவை நீடித்த இனநலமும் நிலையான தனி நலனும் ஒருங்கே தருபவை. வள்ளுவர் கண்ட அவாவற்ற இன்பம், பொதுநல இன்பம். அது பிறவா இன்பம், இறவா இன்பம்; இன்பத்துள் இன்பம். அதுவே பிறப்பு, இறப்பு என்ற தனி உயிர்ப்பண்பின் தொடர்பற்ற இன வாழ்வின் இன்பம்; இன இன்பம். இன்பத்துள் இன்பமாகிய அதன் பண்பறிந்து அதில் முன்னேறுவோமாக. 8. பண்பும் பயனும் உணர்ச்சி, அறிவு, மெய்யுணர்வு, மனத்திட்பம்! உள்ளத்தின் நான்கு உணர்வுப்படிகள் என்று இவை கருதப்படுகின்றன. நான்கு படிகளின் தளமட்டத்தை அவை குறித்துக் காட்டுகின்றன என்பது உண்மையே. அவை முறையே கீழ் உயிரினப்படி, விலங்குப்படி, மனிதஇனப்படி, கடவுள்படி என்பன. உணர்ச்சியை விலங்குப் படிக்கும், அறிவை மனிதப் படிக்கும் உரியதாகச் சிலர் கருதுவதுண்டு. இது முற்றிலும் சரியன்று. ஏனெனில், உணர்ச்சிப் படியின் தொடக்க நிலையில் உணர்ச்சி இயங்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இயற்கையின் புற ஆற்றல்கள் அவ்வியற்கையின் அக ஆற்றலாகிய உயிரின் உடலாற்றலையே இயக்குகின்றது. உடல் இயற்கையால் இயக்கப்படும் இந்நிலையே உணர்ச்சியின் இயங்குநிலை ஆகும். ஆனால், கீழ் உயிரினப் படியிலேயே உணர்ச்சி இயக்கும் நிலையை அடைந்து உடலாற்றலை இயக்கத் தொடங்குகிறது. இயங்குதல், இயக்குதல் ஆகிய இந்த இரண்டு உணர்ச்சிப் படிகளின் பண்புகளே கொல்லப்படுதல், கொல்லுதல்; தின்னப்படுதல், தின்னுதல்; அஞ்சுதல், அச்சுறுத்தல் ஆகிய இரு திசைச் செயல்களாக விளங்குகின்றன. அறிவுப் படியின் தொடக்கத்திலும் இதுபோல அறிவு இயங்கும் நிலையிலேயே உள்ளது. உணர்ச்சியே அதை இயக்குகிறது. கோபதாபங்கள், வன்மம், காழ்ப்பு, பகைமை ஆகியவை இத்தகைய அறிவுநிலை உணர்ச்சிகளே. இவற்றில் அறிவின் செயலால் உணர்ச்சி ஆற்றல் பெறுகிறது. ஆனால், அறிவு அடிமைப்பட்டு உணர்ச்சியின் தன் முனைப்புக்கு இடம் அளிக்கிறது. அறிவின் உயர்படியில் அறிவே உணர்ச்சிகளை இயக்குகிறது. ஆனால், தன்முனைப்பு இங்கே தற்பற்றாகி விடுகிறது. இந்த அறிவுநிலையையே நாம் சூழ்ச்சி என்கிறோம். நரி முதலிய விலங்கினங்களிலும், கீழ்ப்படியிலுள்ள மனிதரிடத்திலும் நாம் இதைக் காண்கிறோம். ஐம்புல அறிவு கடவாத இந்தப் படியையே தொல்காப்பியர் விலங்குகளுக்கும் விலங்குப் படியிலுள்ள மனிதர்க்கும் உரியதாக வகுத்துரைத்தார். ‘மாவும் மாக்களும் ஐயறிவினவே!’ ‘மக்கள் தாமே ஆறறி வுயிரே!’ இங்கே ‘மா’ விலங்கினத்தையும், அதன் பன்மை போலத் தோற்றும் ‘மாக்கள்’ விலங்குப் படியிலுள்ள மனிதரையும் குறிக்கிறது. ‘மாக்கள்’ ஐயறிவு கடவாத மக்கள்; அவர்கள் உருவில் மட்டும் மக்களான விலங்குகள் என்று வள்ளுவர் வழி நின்று தொல்காப்பியர் கட்டுரைத்துள்ளார். உணர்ச்சியும் அறிவும் கடந்த படியே மெய்யுணர்வுப் படி. இதில் உணர்ச்சி அறிவையும், அறிவு உணர்ச்சியையும் இயக்கி, இன உணர்வு தோற்றுவிக் கின்றன. அதுவே மெய்யுணர்வு. இந்தப் படியும் உயிரினங்களிலேயே தோன்றி விடுகிறது. கவிஞர் புகழ்ந்து பாடும் பண்டைய தும்பிகள், பறவைகள் ஆகியவற்றின் குடும்ப வாழ்க்கைப் பண்பிலும்; எறும்பு, தேனீ, நாரை, அன்னம், ஆகிய வற்றின் சமுதாய வாழ்விலும்; இரண்டும் நிலவும் யானை, குரங்கு, மனிதன் முதலிய உச்ச உயர் உயிரினங்களிலும் இதன் முதற்கூறு தொடங்குகிறது. உணர்ச்சியும், அறிவும் இனஉணர்வை இயக்கு கின்றன. ஆனால், பண்பட்ட மனித இனத்தில் இனஉணர்வு உணர்ச்சியையும் அறிவையும் இயக்கி இன உணர்வை மெய்யுணர்வாக வளர்க்கின்றது. இதன் உணர்ச்சிக் கூறு மொழியாகவும் இலக்கியமாகவும் கலைகளாகவும் மலர்கின்றது. இதன் அறிவுக்கூறு மொழியை வளர்ப்பதுடன், இயல் நூல்களாக, ஆராய்ச்சியறிவாக வளர்கின்றது. முந்திய கூறு கலைஞர் இனமும், பிந்தியகூறு அறிஞர் இனமும் வளர்க்கின்றது. இரண்டும் இணைந்து இனத்தை நீடித்தியக்கும் இன முதல்குழு அல்லது பண்புக் குழுவை ஆக்குகிறது. இனமுதல் குழுவே இனத்தின் உயிர். இனம் அதன் உடல். இன முதற் குழுவின் உயிர்ப் பண்பு மெல்ல மெல்ல உடல் முழுதும் பரவுகிறது. ஆனால், தொடக்க நிலையில்-இதுவே தற்போதைய உலக நிலை... உடற் பண்புக்கு உயிர் அடங்கி நடைபெறுகிறது. இன முதற் குழு இந்தப் படியில் இன நலத்துடன் குழு நலமும் பேணுகிறது. இனம் இதனால் அக்குழுவையும் உடற் கூறாகக் கருதித் தனித்து இயங்கவிடுகிறது. இயேசுபிரான், காந்தியடிகள் ஆகியோரின் வாழ்வில் இனம் அவர்கள் அருமை யுணராதுபோனதன் காரணம் இதுவே. இன முதற் குழுவின் மனிதப்படி கடந்து அவர்கள் கடவுள்படிக்கு உயர்ந்த நிலைக்கு இது சான்று. இனமுதற் குழுவும் மனித உணர்வும் முற்றிலும் இந்தப் படியை அடைந்தபின், அதுவே மனிதப்படி கடந்த தெய்வப்படி, மெய்யுணர்வுப்படி கடந்த மனத்திடப்படி ஆகிறது. இந்தப் படியை அமைத்தவரே பகவர். அவர்கள் உலகை இயக்கும் திறம்படைத்தவர் ஆகிறார்கள். இங்ஙனம் உயிர்முதலாக மனித இனம் கடந்த இன வளர்ச்சியில் உணர்ச்சியிலிருந்து அறிவும், அறிவிலிருந்து உணர்வு அல்லது மெய்யுணர்வும் மெய்யுணர்விலிருந்து உரம் அல்லது மனத்திட்பமும் படிப்படியாக வளர்ந்து உருப்பெறு கின்றன. ஆயினும், அவை முற்றிலும் வளர்ச்சிப்படிகள் அல்ல. அவை வளர்ச்சியின் நான்கு தளமட்டங்களைக் குறித்துக் காட்டும் பண்புகள் மட்டுமே. ஏனெனில், அவை ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றியவை மட்டுமல்ல. ஒவ்வொரு பண்பும் அடுத்த பண்பைத் தோற்றுவித்தவுடன் ஓய்ந்து விடுவதில்லை. தொடர்ந்து ஒன்றருகே ஒன்றாக ஒருங்கிணைந்து அலைகளாக அவை இயங்குகின்றன. அத்துடன் அலையோடு அலை கலந்து பல்வேறு புதிய புதிய அலைகளைத் தோற்றுவிப்பதுபோல, அவை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து ஒன்றை ஒன்று தூண்டிப் புதுப்புது உணர்ச்சி, அறிவு அலைகளாக வளர்கின்றன. உணர்ச்சியின் செயலால் அறிவுஅலை உயர் அறிவலைகளாக வும், அறிவின் செயலால் உணர்ச்சியலை உயர் உணர்ச்சியலை களாகவும், வளர்ந்து கொண்டே செல்கின்றன. இதனால் உணர்ச்சி, அறிவு முதலிய பண்புகளைப் படிகள் என்று கூறுவதை விட, பல படிகளையும் பல தளங்களாகக் கொண்டு பின்னிப் பிணைந்து வளர்ந்து செல்லும் அலைப்பின்னல்கள் என்று கூறலாம். உணர்ச்சி, உணர்வு என்ற இரு தமிழ்ச் சொற்களும் ‘உணர்’ என்ற ஒரே பகுதியிலிருந்தே தோன்றுகின்றன. உணர்தல் என்ற ஒரே சொல் இதனால் முதற் புலனுணர்வு முதல் ஆறாம் புல உணர்வுவரை, உணர்ச்சித் தொடக்க முதல் மனத்திட்பப் படியின் கடைசித் தளம்வரை உள்ளத்தின் எல்லாவகைப்பட்ட செயல்களையும் குறிக்கும் சொல்லாக இயங்குகிறது. உணர்வு என்ற சொல் அதன் தொடக்க நிலையையும் முழு நிறைவான கடைசிப் படியையும் குறிக்கிறது. இவற்றை வேறு வேறாகப் பிரித்துணரவே நாம் பின்னதை மெய்யுணர்வு என்கிறோம். உணர்வே உயிர். ஏனெனில், உணர்வற்ற நிலையில் உயிர் இயற்கையின் ஒரு கூறுமட்டுமே. உணர்வே அதை இயற்கையினுள் ஒரு சிறு இயற்கையாகச் செயற்பட வைக்கிறது. ஆனால், உணர்வற்ற நிலை என்பதும் உண்மையில் உயிரின் இயற்கைநிலை அல்லது துயில் நிலையேயாகும். ஏனெனில், இத்துயில் நிலையில் உணர்வற்ற நிலைக்கும் இயற்கை நிலை அல்லது விழிப்பு நிலைக்கும் இடைப்பட்ட ஒரு கனவுநிலையைக் காண்கிறோம். இதுவே நினைவுநிலை, கனவின்போது செயலாற்றும் நிலை, அவாக்கள் பிறந்து வாழும் இடமும், நிறை வேறாத அவாக்கள், அறிவின் செயலால் அடக்கப்பட்ட ஆர்வங்கள் ஆகியவை அடங்காது தனி வாழ்வு வாழும் இடமும் இதுவே என்று உளநூலார் கூறு கின்றனர். மேலும் அவர்களே உணர்வற்ற நிலை (ரnஉடிளேஉiடிரள ளவயவந), உணர்வு நிலை (உடிளேஉiடிரள ளவயவந) ஆகிய இவ் விரண்டுக்கும் இடைப்பட்ட இந்நினைவு நிலையை உள்ளுணர்வு நிலை(ளரbஉடிளேஉiடிரள ளவயவந) என்பர். இன உயிர் குறிக்கொண்ட பொதுமையிலிருந்து தனி உயிரைப் பிரிப்பது இதுவேயாதலால், இந்தத் தனி நோக்கமாகிய அவா ‘பிறப்புக்கு’ அதாவது தனியுயிர்த் தன்மைக்கு வித்தாகிறது. இன வாழ்வில் இன்பம் அருமையாய் இருப்பதற்குக் காரணமான புதிர் ஒன்று உண்டு. அஃது இன வாழ்வின் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இரண்டு குறிக்கோள்கள் இருப்பதே. ஒன்று தனி மனிதன் உள்ளத்தின் உள்ளுணர்வுத் தளமாகிய அவாத்தளத்தில் ஆட்சி செய்யும் உள்ளவா நோக்கம். மற்றொன்று குடும்ப சமுதாய ஆட்சிகளில் பரவியுள்ள இன முதல்வர் குறிக்கோளாகிய இறைக் குறிக்கோள். நிறைவேறா அவாக்களையுடைய உயிர்களில் உள்ள ஆட்சியே இரண்டாக ஆட்சியாய் அமைவதனால், அவர்கள் குறிக்கோள்கள் இன்னும் பல. ஆங்கிலப் புனைகதைப் பேராசிரியரான ‘தாக்கரே’ (று.ஆ. கூhயஉhநசயநல) என்பவர் ‘முனைவர் ஜெக்கிலும் திருவாளர் ஹைடும்’ என்ற புனைகதை மூலம் இத்தகைய ஓர் இரண்டக உள்ளத்தின் வாழ்வு தாழ்வுகளைத் திறம்படத் தட்டியுள்ளார். இரண்டுபட்ட உள்ளம் இரு உள்ளங்களாக ஒரே மனிதனை இரு வேறுபட்ட ஆட்களாகச் செயலாற்ற வைக்கிறது. இப்படம் முனைப்பாகப் பெருக்கிக் காட்டப்பட்ட ஒன்றானாலும், இனவாழ்வில் சற்றேறக் குறைய எல்லா மனிதரின் அகப்புற வாழ்வுகளின் முரண்பாட்டை இது நன்கு சித்திரித்துள்ளது என்னலாம். தனி மனிதர் வாழ்வில் அவாவிய இன்பங்கள் துன்பங்களாவதற்கும், பல சமயம் இனவாழ்வு வளங்கெடுவதற்கும் உரிய அடிப்படைக் காரணம் இத்தகைய முரண்பாடே என்னலாம். குதிரைவண்டிக்காரன் வண்டியை ஒரு திசையில் ஓட்ட விரும்பும்போது, குதிரை வேறொரு திசையில் செல்ல விரும்பி அடம்பிடிப்பது நாம் காணாத காட்சியன்று. வண்டிக்காரன் அச்சமயம் ஆத்திரம் காட்டினாலோ அல்லது கோபம் கொண்டு அடித்தாலோ, குதிரையின் சண்டித்தனம் ஒன்றுக்கு இரண்டாகுமே யன்றிக் குறையாது. அறிவும் அனுபவமும் உடைய குதிரைக்காரன் குதிரையின் மனப்போக்கறிந்து, அப்போக்குக்குப் பாதி விட்டுக்கொடுத்து அதன் பின்னும் தட்டிக்கொடுத்தே தன்வழிக்குத் திருப்புவான். வாழ்வில் தனி மனிதனுக்கும் இனவாழ்வுக்கும் இடையேயுள்ள தொடர்பு குதிரைக்கும் குதிரைக்காரனுக்கும் உள்ள இந்தத் தொடர்பு போன்றதேயாகும். திறமையுடைய ஆட்சியாளர் வலிந்து மக்களைத் தம் வழிக்குத் திருப்ப முயலமாட்டார்கள். வலிமையால் மக்களை அடக்க முடிந்தால்கூட, அதனால் ஆட்சி பயனுடைய ஆட்சியாய் அமையாது. ஏனெனில் ஆட்சியின் வெற்றி மக்கள் செயலில் இல்லை; சொல்லில் இல்லை. அவர்கள் கருத்தில், அவாவில், ஆர்வத்திலேயே இருக்கிறது. தம் செயலை மக்கள் செயலாக ஆக்கவல்ல-இன்னும் சிறப்பாக, தம் ஆர்வத்தையே மக்கள் ஆர்வமாக மாற்றியமைக்கும் திறமுடைய-மக்கள் ஆர்வம் தூண்டி அதைத்தம் ஆற்றலாக்கிக் கொண்ட ஆட்சியே அத்தகு வெற்றிகாண முடியும். புறஆட்சியாளர் முறை இதுவானால், இனத்தின் அக ஆட்சியாளராகிய இனமுதல்வர் முறை இதனினும் அரியதாய் இருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை. அவர்கள் ஆட்சி உரிமையாட்சியாய் இராமல், வலிமை நாடிய ஆட்சியாய் இல்லாமல், அன்பாட்சியாகவே அமைவது, இவ்வகையில் பெரும் பயனுடையதாகும். ஏனெனில் அவர்கள் மக்கள் அவா வழி அவர்கள் ஆர்வம் பெருக்கி விடுகின்றனர். அவ்வவாக்கள், ஆர்வங்கள் ஆகியவற்றையே தம் இனக் குறிக்கோள்வழி திருப்பிவிடுகின்றனர். இந்த அவா ஆர்வங்களால் மக்கள் நாடிய வளமேயன்றி அவர்கள் நாடாத வளமும் அளித்து, அவர்கள் அக உள்ளத்தையே ஆட்கொண்டு இன வாழ்வில் அவர்களை இயக்குகின்றனர். திருவள்ளுவர் நாட்டின் புறஆட்சியை இனமுதற் குழுவினர் அகஆட்சி வழிநிற்பதாகவே கொண்டார். இதனாலேயே அது நாடும் வளம் மட்டுமன்றி, நாடாவளமும் தருவதென விதந்துரைத்தார். ‘நாடென்ப நாடா வளத்தன, நாடல்ல நாட வளந்தரும் நாடு’ இங்ஙனமாக இந்த நாட்டு ஆட்சி விளக்கம் ‘நாடு’ என்பதன் தமிழ்ச்சொற் பொருள் விளக்கமாகவும் அமைகிறது. தனிமனித அவாநோக்கம், இனக்குறிக்கோள் ஆகியவற்றின் இணைவே பண்பு, அதன் பரப்பே பண்பாடு. அதன் புறவாழ்க்கைப் படிவே நாகரிகம். வாழ்வில் அது பரப்பும் இன்னலைகளே பண்புநயம் அல்லது நயத்தக்க நாகரிகம். பண்பு உணர்ச்சியில் தளிர்க்கிறது. அறிவில் மலர்கிறது. உணர்வில் கனிவுறுகிறது. அது குடும்பத்தில் தழைக்கிறது. சமுதாயத்தில் படர்கிறது. இனமுதல் குழுவில் செறிந்த உயிருருப் பெற்ற இனவாழ்வு ஆகிறது. பண்பு குடும்பச் சூழலில் அன்பாகவும், பாசமாகவும் செயலாற்றுகிறது. சமுதாய வாழ்வில் நேசமாகவும், நேர்மை யாகவும் ஒப்புரவாகவும் படர்கிறது. குடும்பத்தையும், சமுதாயத்தையும், இனத்தையும் இயக்கம் இன முதல் வாழ்வில் அஃது அருளாகவும், அன்புத் தன்மறுப்பாகவும், மொழி, கலை, இயல்நூல்கள், சமுதாய சமய அரசியல் அமைதியின் மூலப் பண்பு மரபுகளாகவும் வேரூன்றிப் பெருக்கமுறுகிறது. தனி உயிரின் அவா இன்பமே நாடுகிறது. ஆனால், அஃது எப்போதும் இன்பம் அடைவதில்லை. இன்பம் எய்தினாலும் அஃது எப்போதும் நிலையான இன்பமாய் இருப்பதில்லை. பல சமயம் மாய இன்பத் தோற்றமுடைய துன்பமாகவும் அமைகிறது. இஃது ஏன்? இனங்களும் சமுதாயமும் எப்போதும் எங்கும் வளர்ச்சி யடைய வேண்டும். தழைக்கவேண்டும் என்பதில்லை. வளர்ச்சி குன்றி அலைக்கழியும் இனங்களும், தளர்ச்சியுற்று நலியும் இனங்களும் உண்டு. தம் பண்பின் அழிபாட்டைப் பிற இனங்களுக்கு உரிமையாக விட்டுவிட்டுத் தடமழிந்துபோன இனங்கள்கூட உண்டு. பண்பிலும் கலையிலும் நாகரிகத்திலும் சிறந்த சுமேரிய, எகிப்திய, கிரேக்க, உரோம நாகரிகங்கள்கூட இந் நிலைக்கு ஆளாயின. இதன் விளக்கம் யாது? பண்பு உணர்ச்சியினின்றும், அறிவினின்றும் தோன்றி இன உணர்வு நோக்கி வளர்வது. ஆனால், அது இன உணர்வுப் படிவரை எப்போதும் சென்றெட்டுவதில்லை; எட்டுமுன்போ, எட்டிய பின்னோகூட அது மேலும் வளராமல் நின்றுவிட்டால், அஃது அழிந்துபடவே நேரும். ஏனென்றால் ‘வளர்ச்சி நின்றால் தளர்ச்சி, அழிவின் தொடக்கம்’ என்பது உயிரியக்கத்தின் நியதி. வளர்ச்சியுற்ற நிலை என்பதோ, நிறைவு பெற்ற நிலை என்பதோ அதன் அமைதிக்குப் புறம்பானது. வளர்ச்சியின் நிறைநிலையில் புதுவளர்ச்சித் தொடக்கத்துக்குரிய ஓய்வு நிலை அல்லது இனத்துயில் நிலை கண்ட இனங்கள் மட்டுமே இதற்கு விலக்கு ஆகும். தமிழ் இனம் இத்தகைய துயில்நிலை கண்ட இனம் மட்டுமல்ல, கண்டுவரும் இனம், பிற இனங்கள் தாண்டி அது வாழ்வதன் மறைதிறவு இதுவே, மூவாயிர நாலாயிர ஆண்டு களாக நீடித்துவரும் அதன் துயில் நிலையில் இனத்தாயாகிய வள்ளுவரின் குரல்-திருக்குறளின் முப்பால் இசை-அதனைத் தாலாட்டி வந்துள்ளது. முப்பால் வழி எழும் மறுமலர்ச்சி அதை விரைந்து துயிலெழுப்பும் என்று நாம் நம்பலாம். தனிமனிதன் நாடும் தன்னலச் சார்பான அவா இன்பமும், இனமுதல்வர் நாடிய இன நலமான பயனும் இணைந்த இணைவே பண்பு. அதுவே இன உணர்வு. எல்லா இனங்களின் இனநலங்களும் ஒன்றேயானாலும், இனவளர்ச்சிப் படிக்கேற்பப் பண்புகள் இனத்துக்கும் இனம், கிளையினத்துக்குக் கிளையினம் பொதுவாக மாறுபடுகின்றன. எந்த இனப்பண்பு இடையறாது வளரும் திறமுடையதாய், மனித இனமும் அது கடந்த உயிரினமும் இயற்கையும் அளாவிச் செல்ல இயல்கின்றதோ, அந்த இனம் மற்ற எல்லா இனங்களின் உயிர்ப்பாற்றலையும் தனதாக்கி, மற்றெல்லா இனங்களையும் வாழ்வில் ஊக்கித் தானும் புதுப்புது வளம் காணும். இந்த எல்லையற்ற பண்பு வளர்ச்சியே இன்பம். அதன் நிழல்களாகவே இனங்களும் சமுதாயங்களும் தனி உயிர்களும் சிறிதளவான அல்லது தற்காலிகமான இன்பம் காண்கின்றன. அதன் பின்னணியான மூல முதல் இன்பம், இன்பத்துள் இன்பங் காண, அதை உலகுக்குக் காட்டத் தமிழர் கிளர்ந்தெழல் வேண்டும். அவ்வினிய, இன்றியமையாப் பேரினப் பேரின்பப் பொறுப்பை இயற்கை தமிழ் மீதும், தமிழன் மீதும் சுமத்தி யுள்ளது. ஏனெனில், முப்பாலமிழ்தம் தமிழமிழ்தமாகவும், தமிழர் கையமைந்த அமிழ்தமாகவுமே இயல்கின்றது. அதன் வாயிலாகத் தமிழர் இன்பத்துள் இன்ப உணர்வுபெற்று, இன்பத்துள் இன்பமாகிய பேரின்ப அலை இயக்கம் காண்பார்களாக! 9. மன நிறைவு அவா, மன நிறைவு, ஏக்கம்! அவாவால் எழுப்பப்படும் ஆர்வம் அவாவால் நிறை வேற்றத்துடன் முடிந்துவிடுகிறது. அந்த ஆர்வத்தின் அளவில், அவா நிறைவேற்றத்தின் கடு முயற்சி, அருமுயற்சியின் அளவில், இன்ப நுகர்வு ஏற்படுகிறது. ஆனால், நாடிய இன்பம் நீடிப்பதில்லை; நிலைப்பதில்லை. ஏனெனில் நீடித்த, நிலையான இன்பத்தின் உருவம் மனநிறைவே. அவா நிறைவேற்றம் புதிய அவா எழுப்பலாம். பெரும்பாலான உயிர்களின் சிற்றின்ப அதாவது சிறுதிற இன்ப வாழ்வில் ஏற்படும் நிறை இதுவே. புதுப்புது அவாவால், புதுப்புது இன்ப நாட்டத்திலேயே பொதுவாக உயிர் இயங்குகிறது. நாடிய இன்பம் கைகூடாத இடத்திலும் பொதுவாக நிலைமை இதற்கு மாறுபட்டதன்று. விடாமுயற்சியுடையவர் அல்லது ஒரே இன்பமே விடாது நாடுபவர் அதே இன்பம்நாடி மேலும் மேலும் முயல்வர். ஆனால், இதற்கும் ஓர் எல்லையுண்டு முயற்சியினளவு நீடுந்தோறும் இன்பம் நீளுமானாலும், அவா, முயற்சி, இன்பம் ஆகிய மூன்றுமே எல்லை வரையறைக்குட்பட்டவை. இங்ஙனம் பலவகையிலும் நிலையற்ற சிற்றின்ப நாட்டத்திலேயே சிறுவாழ்வுகள் கழிகின்றன. வள்ளுவர் பெருமான் அவாவை நல்லவா, தீயவா என்றும் வகுக்க வில்லை. தனி உயிர் அவா, பொதுநல அவா என்றும் பிரிக்கவில்லை. நன்மை, தீமை வேறுபாடின்றி, தன்னல அவாவை மட்டுமே அவா என்று குறித்தார். பொதுநல அவா தன்னல அவாவிலிருந்து அத்தன்னலந் துறந்த துறவு மூலமாக மெய்யுணர்தல், அன்பு, அருள், அந்தண்மை எனப் பல்வேறு பெயர்களுடன் விரிவுறுகிறது. தன்னல அவாவிலிருந்து அவற்றை அவர் வேறுபடுத்தியதற்கு ஒரு காரணம் உண்டு. அவாவுக்கு மனநிறைவு அல்லது நிலைத்த நீடின்பம் என்ற ஒன்று அதன் இயல்பிலேயே, என்றும் இருக்க முடியாது. ஏனெனில், மனநிறைவு என்று ஏற்பட்டதோ, அன்றே அவா முற்றுப்பெற்றுவிடும். வளர்ச்சியுறாது; அதன் உயிர்ப்பண்பு ஓய்வுற்றழியும். மனநிறைவு தரும் அவா இங்ஙனம் அவாவுக்கு மாறான அல்லது அதனின்றும் அடிப்படையிலேயே வேறுபட்ட ஒரு பண்பு ஆகிறது. பொதுநல அவா அவாவின் உயிர்த்தன்மை யுடையதாயினும், அதன் நிறைவேற்றம் இத்தகைய அடிப்படை வேறுபட்ட பண்பு உடையது அன்று. அவா நிறைவேற்றமும் ஏற்படாமல், அவாவிய உயிர் புத்தவாவிலும் ஈடுபடாமல் இருந்தால், உயிர் ஒரே அவாவால் நீடித்து இடையறாது முயல வேண்டும். இத்தகைய அவாவுக்கு உயிரவாவின் பண்புகளுள் ஒன்று வளர்ச்சி-இருக்கமுடியாது. அத்துடன் உயிரின் விடாமுயற்சிக்கு ஓர் எல்லையுண்டு. அதன் முயற்சியில் எப்படியும் தளர்ச்சி ஏற்படாமலிராது. முயற்சி தளராதவிடத்தும் ஆர்வம் தளராமலிராது. தளர்ச்சி ஓய்வுக்குக் கட்டாயம் வழி வகுக்கும். அவா நிறைவேறுமென்ற நம்பிக்கை கெடுமளவு ஆர்வக்கேடு ஏற்பட்டால், அதுவே, ஏக்கம், மனக்கசப்பு, மனமுறிவு, ஏமாற்றம்! அந்நிலையே அவாஅழிவு, உள்ளத்தின் அழிவு, உயிரழிவு ஆகும். தன்னல அவாவில் எதுவும் இங்ஙனம் நீடித்து உயிர் அவாவாக, நிலையான வளர்ச்சியுடைய அவாவாக உலவ முடியாது என்று காண்கிறோம். ஆனால், இன உணர்வு ஏற்பட்டபின் பொதுநல அவாவுக்கு இப்பண்புகள் யாவும் உண்டு. பொதுநல அவாவில் முயல்பவனது ஆர்வம் தோல்விகளால் சோர்வுறமாட்டாது; வெற்றி கிட்டும்வரை அது தளர்வுறாது; தோல்விகள் முயற்சியின் அருமையையே பெருக்கி ஆர்வம் வளர்ப்பது உறுதி. இது மட்டுமன்று. வெற்றியில் ஏற்படும் அதே மனநிறைவு தோல்வியிலும் ஏற்படும். பொதுநல அவா எல்லையற்ற பரப்புடையதாதலால், வெற்றியிலோ தோல்வியிலோ ஏற்படும் இம்மனநிறைவு அவாவின் உயிர்வளர்ச்சிக்கு ஊறு விளைவிப்பதில்லை. அஃது இன எல்லையளாவி, பேரின எல்லை நாடி, கால இடம் கடந்து விரிந்து கொண்டே செல்கிறது. பொதுநல அவா இங்ஙனம் அவாவின் உயிர்த் தன்மை மட்டும் உடையதாய், அதன் நச்சுச் சுழற் பண்பற்றதாய் இலங்குகின்றது. அதையே வள்ளுவர் பெருமான் அவாவடக்கம், அவாவற்ற நிலை, பிறப்பிறப்புக் கடந்த நிலை, கடவுள் நிலை என்று கருதினார். தன்னல அவா பொதுநல அமைதிகளுடன் பண்பாக இயன்ற இடத்திலன்றி. தனி உயிர் இன்பங்கூடத் தருதல் அரிது. அது தரும் தற்காலிக இன்பங்கூடப் பொதுநலப் பண்புடன் அது இணைந்ததனாலன்றி வேறன்று. இன்பத்தின் இம் மறைதிறவு அறியாதவர், இன்பத்தின் இவ்வுயிர்முதல் காணாதவர், தன்னல அவாக்களில் உழன்று, அவாவிய அவா நிறைவேறப் பெறாது உழல்வர். முயற்சியுடைவர்க்குக்கூட, தன்னல அவா அம் முயற்சியினளவே வெற்றி தரும். தனி மனிதன் முயற்சி சிறு முயற்சியாதலால், அது தரும் வெற்றியும் சிறிது நேர்மாறாகப் பொதுநல முயற்சி அளவில் சிறிதாயினும், பெரிதாயினும், அலைஎதிர் அலையாக இனமுழுதும் தனி உயிர்களின் எண் கடந்து, இடங் கடந்து, காலங் கடந்து செயலாற்றுவதால், அஃது எல்லையற்ற - நிறைந்த நீடுபயனுடையதாகின்றது. அஃது இனநலத்தை மட்டுமன்றித் தனிநலத்தையும் நிலையாக உண்டுபண்ணுவது. சில இடங்களில் தனிநலன் பயவாதது போலத் தோன்றுவது போலித் தோற்றமே. ஏனெனில், மனநிறைவு தனி உயிர்க்கு உடனடிப் பயனாகவே கிடைக்கிறது. இஃது அவாவால் பெறமுடியாத பயன். புகழும் உடனடியாகக் கிடைக்கிறது. ஏனெனில், உண்மையான புகழ், வள்ளுவர் கருதிய புகழ், இனப்பயனே. உலகின் புறப்புகழ்கூட அதன் புறப்பயனாக, இவற்றின் மிகையாக வந்தடைவதேயாகும். மனநிறைவு, அவாவின்மை, இன்பதுன்ப நடுநிலை ஆகிய பண்புகளை வள்ளுவரும் போற்றுகின்றார்; இடைக்கால, பிற்காலச் சமயவாணரும், மற்ற உலக அறநூலாரும் போற்றக் காண்கிறோம். ஆனால், வள்ளுவர் சொல்மரபை இவர்கள் அனைவரும் பேணுகின்றனரேயன்றி, அவர் பொருள்மரபை மறந்துவிடுகின்றனர். அதற்குத் தற்கால உலகின் உணர்ச்சி நிலையிலிருந்தே சான்றுகள் காணலாம். மற்றச் சமயவாணரும், அறநூலாரும் இக்கருத்துபற்றித் தரும் விளக்கங்கள் எல்லாரும் ஏற்கும் உரைகளாக இயங்கவில்லை. ஏற்றாலும், எல்லாரும் உண்மை எனப் பாராட்டிச் செயலில் போற்ற விரும்பும் கருத்துகளாகக் காட்சி தரவில்லை. ஓர் உயர் கருத்து, சமயக் கருத்து, பழங்கருத்து அதாவது ஒரு தெய்வப் பெரியார் உரை என்றே அவை மதிக்கப் பெறுகின்றன. வள்ளுவர் வாயுரைகளே கருத்து வேறுபாடின்றி அனைவரும் ஏற்கத் தக்கனவாய் உள்ளன. ஏனெனில் உலக அறிஞர், கலைஞர், அறவோரிடையே அவர் ஒருவரே உணர்ச்சிக்கு அறிவு விளக்கம், அறிவுக்கு உணர்ச்சி விளக்கம், இரண்டுக்கும் உணர்வு அல்லது செயல்துறை விளக்கம் தருபவர் ஆகின்றார். இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் கூறலாம். ‘போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து’ என்பது மனநிறைவின் மாண்பு போற்றும் ஒரு தமிழ்ப் பழமொழி. இதுபோன்ற பழமொழிகள் எல்லா மொழிகளிலும் உண்டு. இவற்றுக்கு விளக்கம் தரும் இடைக்காலக் கதைகளும் பல. ஆனால், இப் பழமொழியும் இக்கதைகளும் போற்றும் மனநிறைவு வேறு. வள்ளுவர் போற்றும் மனநிறைவு வேறு என்பதை வள்ளுவர் குறட்பாக்களை ஒரு சிறிது புரட்டிப் பார்த்தால் கூடத் தெரிய வரும். இப் பழமொழி மரபுகளும் கதை மரபுகளும் காந்தியடிகள், டால்°டாய் ஆகியோர் பின்பற்றி வாழ்ந்த, போற்றிய எளிய வாழ்வின் பண்பேயாகும். இன்னமுதம் கூட மனநிறை வற்றவனுக்கு இன்பம் தாராது. கூழ்கூட மனநிறைவுடையவனுக்கு இன்பம் தரும். மனநிறைவு ஓர் அகப்பண்பு என்றும், அது விரும்பத்தக்க பண்பு என்றும் இப்பெரியார்கள் போதித்தனர். நம்பினர், உறுதியாகக் கொண்டு வாழ்ந்தனர். இதற்காக அவர்களைப் பெரும்பான்மையான பொதுமக்கள், பெருமக்கள் அருளாளர், தெய்வப் பிறவிகள் என்று போற்றத் தயங்கவில்லை. ஆனால், போற்றுபவருள் ஒருசிலர்கூட இதைப் பின்பற்ற விரும்பியவரல்லர். அறிஞருள் பலர் இதன் உயர்வு தெரிந்தோ, தெரியாமலோ, மதித்தோ, மதியாமலோ, அது செயலுக் கொவ்வாத கருத்தென்று ஒதுக்கத் தயங்கவில்லை. அவர்கள் தரும் விளக்கமும் தவறென்று கூறமுடியாது. ‘காந்தியடிகள், டால்°டாய் தெய்வத்தன்மை பொருந்தியவர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர்கள் இந்த உலகுக்கு உரியவர்களல்லர். அந்த உலகுக்கே உரியவர்கள். அவர்கள் கூறும் ஒழுக்கமுறை சமயவாதிகள், வைதிகர்களுக்குரியது!’ இவ்வாறு சிலர் கூறுவர். ‘இல்லாமையையே ஒரு போற்றத்தக்க பண்பாக்கினால், அது ஏழைகள் முயற்சியைத் தடுத்து, ஆதிக்கவாதிகளுக்கு இன் துணையா கிறது!’ என்று காந்தியத்தைப் பழிப்பவர் கூட உண்டு. அவர்களே இன்றைய உலகில் முற்போக்குவாதிகள் என்று குறிக்கப்படுவர் என்பதும் கவனிக்கத்தக்கது. காந்தியடிகள், டால்°டாய் வள்ளுவர் பண்பில் நின்றவர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், காந்தியடிகளையும், டால்°டாயையும் கண்டிப்பவர்கள் கருத்துகளுக்கும் திருக்குறளில் மேற்கோள் காட்ட முடியும். ‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை, அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லாகி யாங்கு’ இக்குறட்பா முந்திய கண்டனத்தை நினைவூட்டுகிறது. ‘உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து’ இஃது உயிர் அவாவின் அருமை குறிக்கிறது. அதே சமயம் காந்தியடிகள், டால்°டாய் போன்ற அருளாளர் பணிகளைக் கண்டிக்கும் இக்கால முற்போக்காளர் உட்கருத்துக்கு இது வலிமை தருவது என்பதில் ஐயமில்லை. இப் புதிருக்கு விளக்கம் யாது? இவ் வருளாளர்கள் பின்பற்றிய பண்புகள் திருவள்ளுவர் விளக்கிய பண்புகளே-அதற்கு அவர்கள் தந்த விளக்கங்கள் மட்டுமன்றி நாம் தரும் விளக்கங்களும் கூடத் திருவள்ளுவர் பண்பு விளக்கத்தின் சறுக்கல்கள் ஆகும். ஏனெனில், திருவள்ளுவர் பாராட்டியது முற்றிலும் எளிய வாழ்க்கையை யோ, போதுமென்ற மனத்தையோ அன்று. தனக்குப்போதும் என்ற தன்னெளிமை வாழ்க்கையையே! அவாவையும், பேரவாவையும், உயர் அவாவையும் அவர் பொதுநலத் துறையிலேயே, அதற்குகந்த பண்புகளிலேயே, திறங்களிலேயே செலுத்தும்படி அறிவுறுத்தினார். ‘உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்’ என்ற அற ஆணை பொருட்பாலில், அரசியலில் தரப்பட்டது குறிப்பிடத்தக்கது. அது பொது வாழ்வும் இனவாழ்வும் இனமுதல் குழுவினர் பண்பும் குறித்த பால் ஆகும். இன்ப துன்பங்களில் அசைவிலாதிருத்தலே உயர் நெறி என்று போற்றாத கீழை உலகச் சமய நூல்கள், இதிகாச காவியங்கள், அறநூல்கள் இல்லை. “மெய்த்திருவந் துற்றாலும் வெந்துயர் வந்துற்றாலும் ஒத்திருக்கும் உள்ளத்து உரவோன்” என்று நளவெண்பா தருமனை விதந்து புகழ்கின்றது. இஃது அழகிய கருத்தை அழகு மொழிகளில் வருணிப்பதென்பதில் ஐயமில்லை. பகவத் கீதை இந்நிலையையே பொன்நடுநிலை அல்லது சமாதிநிலை என்று பாராட்டுகிறது. மேனாட்டிலும் இக்கருத்தை வலியுறுத்திய பண்டை உரோம அறிஞர் இருந்தனர். ஆனால், இன்றைய மேலையுலகம் பொதுவாக இக்கருத்தை ஏற்பதில்லை. இதையும் இதுபோன்ற கீழைச் சமய அறிவுநெறிக் கருத்துகள் பலவற்றையும் அவர்கள் அறிவார்ந்த, ஆனால், இதயமற்ற, கலைப்பண்பற்ற, உண்மை ஆத்திகக் கடவுள் பற்றற்ற கருத்துகளென்று கூறத் தயங்கமாட்டார்கள். ஏனெனில், அது பல உயர் அறிஞரைத் தீமையிலிருந்து மட்டுமன்றி, நன்மையிலிருந்தும், விலக்கி, அவர்களை வெறுப்பு வேதாந்திகளாகச் செய்துள்ளது. இக்கருத்துக் கடந்தும் இந்தியாவில் புத்தர்பிரான், மகாவீரர், காந்தியடிகள் போன்ற அருளாளர் நிலவியுள்ளனரென்றால், அஃது இக்கருத்தின் பெருமையன்று, இக்கருத்துக் கடந்த கீழ்த்திசையுலகின் பெருமையே என்னலாம். ஒரு சாராரே ஏற்கக்கூடிய இதே வறண்ட கருத்துரையை நாம் வள்ளுவரிடத்திலும் காண்கிறோம். ஆனால், அவர் பண்பு அதன் வறட்சியை அகற்றி மூல முதல் அறிவுக் கருத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. இறைவன் இருள்சேர் இருவினையும் சேராதவன். வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் என்று அவர் கூறுகிறார். அதுபோலவே அவர்வழி நின்றவரும் வேண்டுதல் வேண்டாமை அற்றவரே. ஆனால், அவர் பிறர்க்கென வேண்டுபவர் ஆதலாலே, அவர் வேண்டாமை மட்டும் உடையவர் என்று குறிக்கப்பட்டார். வேண்டாமை தமக்கென வேண்டாமை என்பது தெளிவு. ‘வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை; யாண்டும் அஃதுஒப்பது இல்’ ‘வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றுஅது வேண்டாமை வேண்ட வரும்’ தமக்கென வேண்டாதார் பிறர்க்கென வேண்டுவன யாவும் எளிதில் கிடைப்பன: இப்பண்புடையார் கிடைத்தல்தான் அரிதென்பது தோன்ற, ‘வேண்டாமை யன்ன விழுச்செல்வம்’ என்ற வாய்மொழி வகுக்கப்பட்டது. தமக்கென வேண்டாதார் பிறர்க்கென வேண்டுதல் உடையவர் என்பது தோன்ற ‘வேண்டாமை வேண்ட வரும்’ என்று குறிப்பிட்டார். சமயநூல்கள், அறநூல்களின் மெய்ம் மரபிழந்த வறட்டு வேதாந்த நீதி வள்ளுவர் மூலமெய்ந்நூலில் முழுதும் நல்லுணர்வார்ந்த பொன்னுரையாதல் காணலாம். அதன் உட்பண்பையறியாத இடைக்கால, பிற்கால அறிஞரின் கிளிப்பிள்ளைக் கூற்றுகளிலேயே நாம் முரண்பட்ட கருத்தலைகளைக் காண்கிறோம். இயற்கையின் இயற்கையமைதி ஊழ் ஆகின்றது. அஃது எதிர்த்து வெல்லுதற்கரியது. ஆனால், இயற்கையின் உயிராகிய இறைவனே கதிரவனை இயக்கி, அதன் விளைவாக, வான் (மழை) மூலம் இயற்கையின் ஊழில் ‘உயிர்’ என்ற ஒரு புதிய ஆகூழைப் படைத்துள்ளார். சமுதாயத்திலும் இனத்திலும் அரசியலினத் திலும் இதுபோல இறைவன் கூறான அந்தணரும் அரசரும் பண்பு என்ற மற்றோர் ஆகூழைப் படைத்து வளர்க்கின்றனர். இயந்திரங்கள் இயற்கை யின் ஊழைக் கடக்கத் தன் கருவி மூலம் இயற்கையாற்றலையே பயன்படுத்துவது போல, உயிர் உயிர்க் கருவியாகிய உடல் மூலம் அதே ஊழைப் பயன்படுத்தி அவ் வூழை ஓரளவு வெல்கிறது. அதுபோல, சமுதாயத்தில் தனி மனிதன் முயற்சிகள் இந்த ஈர் ஊழுடன் இனமுதல்வர் ஆக்கிய பண்பாகிய சமுதாய ஆகூழையும், அரசனாக்கிய சட்டதிட்டங் களாகிய அரசியல் ஆகூழையும் பயன்படுத்தி ஊழ் கடந்து வளரலாகும். இவற்றை எதிர்த்த வழி, இவையே முயற்சியின் போகூழ், இழவூழ் ஆகிவிடும். வள்ளுவர் அவாவறுத்தலின் பின் ஊழ் அதிகாரம் அமைத்ததும், அவ்வதிகாரங்கள் அறம், பொருள் ஆகிய இரண்டு பால்களின் சந்திப்பில் இடம் பெற்றதும் இதனாலேயே யாகும். வள்ளுவர் வகுத்த மனநிறைவு இங்ஙனம் தன்னல மறுத்த மனநிறைவு ஆகும். அது தனி மனிதனுக்கு இன்பமும் அமைதியும் தருவது. நடு நிலையளிப்பதால் அஃது அறிவு வளர்ப்பது. பொதுநல அவா வளர்ப்பதால் உயிர் நலம் உடையது. தனி மனிதனுக்கும் இனத்துக்கும் அது புகழும் வலுவும் தருவது ஆகும். வள்ளுவர் வகுத்த மனநிறைவுப் பண்பைத் தமிழர் இழந்து ஊழூழிக் காலம் ஆய்விட்டது. ஆனால் தமிழன் படிப்படியாகத் தட்டுக்கெட்டு வந்துள்ள ஊழிகளே இவை. தன்னலப் போட்டியும் பொறாமையும், ஆதிக்கப் பேரவாவும், இவற்றுக்கு நேர்மாறான அடிமைத் தனமும் தன்மதிப்பின்மையும் இன்றுவரை தமிழினத்தினிடம் செறிந்துள்ளன-பிற இனங்களைப் பார்க்கிலும் மிகுதியாகத் தோய்ந்துள்ளன என்பதில் ஐயமில்லை. விழிப்புற்றுவரும் தமிழகம் எல்லா வகைப்பட்ட நேரிடை ஆதிக்கவாதிகளின் ஆதிக்கத்திலிருந்தும்; மறைமுக ஆதிக்க வாதிகளின் பசப்பிலிருந்தும், மாயங்களி லிருந்தும்; இவற்றுக்கு உறுதுணை யாயிருந்து இவற்றை வளர்க்கும் அடிமைத் தனத்திலிருந்தும், குறுகிய தன்னலத்தி லிருந்தும் விடுபடுதல் வேண்டும். விடுபட்டு, பொதுநலப் பேரறிஞரான திருவள்ளுவரின் வள்ளுவப் பொற்சுரங்கம் கண்டெடுத்து அறிவுழைப்பால், ஆராய்ச்சியால் அதன் அறிவு மரபு துலக்கி, இன்பத்துள் இன்பத்தைத் தானும் உண்டு உலகுக்கும் வழங்குமாக. 10. இன வாழ்வு இன்பம், இனம்! இன்பத்துக்கும் இனத்துக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? உண்டாயின், அத் தொடர்பு யாது? தனி உயிர் அல்லது தனி மனிதன் இன்பக் குறிக்கோளுடன் இணைந்த சிறு குழுவே குடி அல்லது குடும்பம். தனி மனிதன், குடும்பம் ஆகிய இரண்டின் இன்பக் குறிக்கோளில் இணைந்த அகல் குழு, பெருங்குழுவே சமுதாயம், இனம்! ஊர், நகர், நாடு ஆகிய எல்லை கடந்து உலகளாவியும், தலைமுறை கடந்து கால எல்லையளாவியும் வளரும் சமுதாயத்தின் வளர்ச்சியையே நாம் இனம் என்கிறோம்! எனவே இன்பம்-என்பது தனி உயிரின் இன்பக் குறிக்கோளின் கால இடங்கடந்த உச்ச உயர் எல்லை விரிவேயாகும். இன்பம், இனம் ஆகியவற்றின் தொடர்பு இதுவே. இன்பம், இனம் ஆகிய தமிழ்ச் சொற்கள் ஒரே மூலத்திலிருந்து தோன்றிய தொடர்புடைய சொற்கள். தமிழ் மரபின் இத்தொடர்புக்குரிய விளக்கமும் இதுவே. தமிழ் மரபில் நின்று, அறிவு மரபில் முன்னேறி இவற்றின் தொடர்புகளை இன்னும் ஆழ்ந்து ஆராய்வோம். இன்பங்கள்யாவற்றையும்-இன்பம் நாடிய அவாக்கள் அனைத்தையும்-கீழ்த்திசைச் சமய அறிவுநூலார் மூன்று என வகுத்தனர். அவை மண், பெண், பொன் என்பன. இவற்றுள் மண்அவா என்பது நிலஅவா அன்று. ஏனெனில், நில உடைமை உடைமைகளுள் அதாவது செல்வங் களுள் ஒன்று. அது செல்வ அவாவாகிய பொன்னவாவினுள் அடங்கும். எனவே, மண்அவா என்பது நிலத்தில் வாழும் மக்களை ஆட்கொள்ளும் உரிமையை, ஆட்சி உரிமையை, ஆதிக்கச் செல்வத்தைக் குறிப்பது ஆகும். பெண்அவா பெண்பாலரை விரும்பும் அவா அன்று. ஏனெனில், உலகில் ஒரு நேர்பாதி உயிர்கள் பெண்பால் உயிர்களே. இந்த ஒருபாதியும் பெண்பாலாரை அவாவ முடியாது. எனவே, இங்கே பெண் அவா என்பது குடும்ப வாழ்வின் அவாவைச் சிறப்பாகவும், புலனெறி இன்ப அவாக்களைப் பொதுவாகவும் குறிப்பது ஆகும். இது ஆண், பெண், உயிர் அனைத்துக்கும் பொதுவே. இம் மூவகை அவாக்களிலும்-பிற உயிர்களை அடக்கி யாளும் அவா, புலநுகர்வு இன்ப அவா, பொருளவா ஆகிய இந்த மூன்றிலும்-முக்கியமான அவா எது? இதை அறிந்தால் நாம் இன்பத்தின் தன்மையையும், இனத்துடன் அதற்குள்ள தொடர்பையும் இன்னும் ஆழ்ந்து காணலாம். தமிழ்ப் பாகவத புராணமுடையார் இம்மூன்றினுள் ஒன்றை முற்றிலும் நழுவவிட்டுவிட்டு, புதிதாகக் குழந்தை அவா என்ற ஒன்றைச் சேர்த்து, அம் மூன்று அவாக்களும் வளரும் வகையைக் கவின் நய அழகுடன் புனைந் துரைத்துள்ளார். ‘விழைவு எனப்படுகின்றது மென்மெலத் தழல் விரிந்த கனகத்து அரும்பி, மென் மழலை மாதர் மருங்கிற் படர்ந்து பைங் குழவி மீது கொழுந்துவிட்டோங்குமால்;’ ‘அவா என்பது ஒரு பொற்பூங்கொடி. தழலில் அல்லது தீயில் பட்டு உருகி மாசகன்று ஒளி வீசும் தங்கத்தில் அது தளிர்க்கிறது. குழந்தைகள் பேச்சுப் போல இனிய மொழிபேசும் பெண்டிர் பக்கமாகக் கொடிபோல் படர்கின்றது. பின் தழைத்துக் கொழுந்துவிட்டுக் குழந்தைமீதே சென்று கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்குகின்றது! புராண இலக்கியத்தில்-தமிழ்ப் புராண இலக்கியத்தில்-தமிழ் இலக்கிய முழுவதிலுமேகூட எளிதில் காண முடியாத இனிய சொல்லழகுடைய இசை ஓவியம் இது-ஆழ்ந்த பொருள் பொதிந்த மெய்யோவியமும்கூட! வெறுப்புத் துறவும் கட்டுக் கதையும் பாடவந்த புராணமுடையார் தமிழ் மரபில் சறுக்கி அதன் இன்பச் சேற்றில் குளித்தெடுத்த ஒரு முத்து இது! இப்பாடல் காட்டும் மெய்ம்மைகளில் ஒன்று-வள்ளுவர் முறையிலேயே, ஆசிரியர் கூறிய மெய்ம்மைமட்டுமன்றி, கூறாதுவிட்ட மெய்ம்மைகளில் ஒன்று-அவர் மண் அவாவை மூன்றவாக்களிலிருந்து முற்றிலும் நழுவவிட்டதேயாகும். ஆட்சியவா எல்லா உயிர்களுக்கும் உரியதுதான்-குடும்ப எல்லையி லிருந்து உலக எல்லைவரை, சிறு குழந்தையிலிருந்து மாளும் தறுவாயிலுள்ள கிழவர்வரை, பண்படாப் பழங்குடிகளி லிருந்து பண்பட்ட உயர் வகுப்பினர்வரை, குகை மனிதர் காலத்திலிருந்து தற்காலப் பறவை மனிதன்வரை-பிறரை ஆள விரும்பாத உயிர் இல்லை. ஆயினும், இஃது உள்ளார்ந்த அக அவாவேயன்றி வெளிப்படக்கிளர்ந்த அவாவல்ல. வெளிப்படக் கிளர்ந்த உருவில் அஃது உச்ச உயர்படி அவா, உச்ச உயர்படி உயிர்களும் மனிதனுமே நாடும் அவா ஆகும். இவ்வவா மற்ற இரண்டு அவாக்களையும் தன்னகம் கொண்டதாக மக்கள் எல்லோராலும் கொள்ளப்படுகிறது. மண்ணாள்பவர்க்கு மற்ற இரண்டு எளிது என்று கருதாதவர், கூறாதவர், பாடாதவர் இல்லை. ஆயினும், ஆட்சியாளர் ஆதிக்க ஆட்சியாளராயிருந்தால் அவர்கள் இரண்டில் எதுவும் பெறுவ தில்லை. அன்பாட்சியாளராயிருந்தால் இரண்டும் பெறுவர். எனவே, இது சிறுபான்மையவா; சிறுபான்மையிலும் ஆதிக்கம் நீங்க வழியன்றி நிறைவேறாத அவா. நிறைவேறிய வழியோ, அது மற்ற இரண்டு அவாவின் இணைவேயன்றி வேறன்று. பாகவத புராணமுடையார் அதை விலக்கியதற்கு இவையே காரணங் களாய் இருத்தல் கூடும்! எப்படியும் ஆதிக்க வடிவிலேயே மண் அவா எண்ணப் படுவதாதலால், இது நாடுபவர்க்கும் இன்பம் தருவதில்லை, பிறர்க்கும் இன்பம் தரமாட்டாது. அதைப் பாடுவதும் பிழைப்புக்கு வழியன்றி இன்பமாக மாட்டாது. பாகவத புராணமுடையவர் அழகிய கவிதை வருணனை அதைத் தீட்டாது விட்டது இயல்பேயாகும். அவர் கவிதை மொழியிலே மற்ற அவாக்களின் அன்புப் பிணைப்புடன் இஃது இணையாதது என்பது தெளிவு. புலனுகர்வின்ப அவா, செல்வ அவா ஆகிய மீந்த இரண்டு அவாக்களுள் செல்வ அவாவே பெரும்பாலானவர் நாடுகிற அவா என்பதில் ஐயமில்லை. புலனுகர்வின்பம் நாடுபவர் அவ்வின்பத்துக்கு அடிமைப்படுகின்றனர். பிற இன்ப நாட்டத்துக்கும் எளிதில் அடிமைப்படுகின்றனர். ஆகவே, ஆதிக்கம் நாடிய உச்ச உயர் அவாவாளரைப்போலவே அவர்களும் தொகையில் சிலர். அச்சிலரும் உண்மை இன்பம் பெறுவதில்லை. ஆதிக்கவாதிகள் பெறும் மதிப்பைக் கூடப் பெறுவதில்லை. அவர்கள் எல்லோராலும் இழிக்கப்பெறுவர். இந்நிலையில், இன்பங்கள் அனைத்துக்கும் அடிப்படையான செல்வத்தையே, பொன் அவாவையே உலக மக்களுள் மிகப்பெரும்பாலார் நாடுவதில் வியப்பில்லை. மூன்று அவாக்களிலும் அடிப்படை அவா பொன் அவா. ஆனால், அதன் தன்மையறிந்தே தமிழர் அதற்கு அப்பெயரிட் டுள்ளனர் என்னலாம். அது பொன் போலப் பகட்டான அவா. ஆனால், பயன்தரும் அவா அன்று. பொன் செல்வத்துக்கு அறிகுறி. அது செல்வமன்று. அதுபோலவே செல்வம் இன்பத்துக்குக் கருவி, இன்பமன்று. பொன்னும் செல்வமும் மனித உலகிலன்றி உயிருலகில் இன்பந்தாராமை இதை வலியுறுத்தி விளக்கும். அறிவுடைய மனிதன் படைத்த செயற்கை அவா அது. அஃது அவன் செயற்கை அறிவுத் திறம். கருவியைப் பொருளாகவும், குறியீட்டை முதலாகவும் கொள்ளும் அவனுடைய இரட்டிப்புக் கண்கட்டுமாயம். அவன் இயற்றிய அம்மாயத்தில் அவனேகிடந்து உழன்று எல்லையிலாத் துன்பங் காண்கிறான். இன்பம் நாடிய மூன்று அவாக்களும் இன்பந்தரமாட்டாமை அறிந்தே வள்ளுவர் அவா அகற்றுக, பற்று நீக்குக என்று கட்டளைப் படுத்தார். தன்னல அவாக் குறிக்கொள்ளும் இன்பத்தைக்கூட நாடாதே என்று அவர் கூறினார். ‘இன்பம் விழையான், இடும்பை இயல்புஎன்பான் துன்பம் உறுதல் இலன்’ ‘இன்பத்தை நாடி ஏங்காதே. துன்பம் வந்தபோது, வருவது கண்டு பதைக்காதே, துன்பம் இயற்கையானதுதான் என்று எண்ணு. அப்போதுதான் நீ துன்பம் அடையமாட்டாய். (இன்பம் அடைவாய்)’ என்று வகுத்துணர்த்தினார். பிற்காலச் சமயவாணர், இதன் முழுமைக் குறிப்புணராமல், இன்பமும் துன்பம் போல வெறுக்கத்தக்கது என்று கொண்டனர். ‘இன்ப நாட்டமே தவறு, வெறுப்பே அல்லது விருப்பு வெறுப்பற்ற உணர்ச்சியற்ற கல் தன்மையே உயர்நிலை’ என்று நாட்ட முற்பட்டனர். இது தவறு என்பதைச் சமயவாணர்களின் உரைகளும் உயர் பண்பாளர் செயல்களும் ஒருங்கே காட்டும். உலகு நலம்பெற உழைப்பது உயர்ந்தோர் பண்பு. இதனைப் போற்றாத சமயவாணர் இல்லை. ஏனெனில், இதுவே உண்மைச் சமயம். ஆனால், இது விருப்பு வெறுப்பின்மை யாகாது. தற்பற்று தன்னலமின்மை மட்டுமேயாகும். புத்தர்பிரான் உயிர்களனைத்தையும் நேசி என்றார். இதுவும் அப்படியே. அது தற்பற்றின்மை ஆகலாம். பொதுநலப் பற்று ஆகலாம். விருப்பு வெறுப்பின்மை ஆகமாட்டாது. வள்ளுவர் பெருமான் தனி உயிர் அவாவும் தனி உயிர் இன்பமும் தவிர்த்து, தனி உயிர்த் துன்பத்தை இயல்பாக ஏற்றுப் பொதுநல இன்பமும் பொதுநல இன்ப நாட்டமும் பெருக்கவே ஆணையிட்டார். அதுவே வள்ளுவக் கருத்துப்படியான உண்மை இன்பம் ஆகும். மூன்று இன்ப நாட்டங்களுக்கும் தமிழர் கொடுத்த பெயர்-மண், பெண், பொன்-இந்த உண்மையைச் சுட்டிக் காட்டுபவை ஆகும். பொன் அவா வேறு. கவர்ச்சி வேறு, செல்வ விருப்பம் வேறு, அழகு விருப்பம் வேறு. செல்வ விருப்பம் கருவி கடந்த இன்பக் கவர்ச்சி நோக்கி மனிதனை இழுக்கிறது. சிற்றின்ப நுகர்வு படிப்படியாக மனிதனைக் குடும்ப வாழ்வை நோக்கி, அதனைப் பேணும் ‘பெண்மை’ நிலை நோக்கி முன்னேறச் செய்கிறது. மண்ணாசை மண்ணாளும் மன்னனாசையாய், மன்பதை யின் எல்லைநோக்கி மனித அவாவை விரிவுறச் செய்கிறது. மூன்றிலும் மனிதனின் இன்பம் படிப்படியாக அகம் நாடுகிறது, இனம் நாடுகிறது. பொன், செல்வம் ஆகியன இன்பக் கருவி, இன்பமன்று. பெண் அவா அதாவது குடும்ப அவா புலனுணர்வின்ப அவா, தனி உயிர் அவா, புறஅவா! அஃது தற்பற்றிலும் தன்னலத்திலும் தொடங்கிக் குடும்ப அளவுக்கே மனிதனைக் கொண்டுவிடுகிறது. குடும்பப் பண்புடன் இணையும் வரை அஃது அகஅவா ஆவதுமில்லை, தற்பற்றை முற்றிலும் அழிக்க உதவுவது மில்லை. ஆனால், அஃது மற்ற அவாக்களைப் போன்றதன்று. குடும்பப் பண்பில் ஈடுபட்ட கணமே, அஃது அகம் நாடுகிறது. எல்லை விரிவுறுகிறது. ‘பெண் அவா’ பொதுவாகக் குடும்பம் கடந்து செல்வதில்லை. ஆனால், பெண்ணின் அவா, ‘பெண்மை’ அவா குடும்பங் கடந்து செல்லும்! இந்த அவாவின் பெயராகப் ‘பெண்’ என்ற சொல் வழங்கப்பட்டதன் காரணம் இதுவே. அத்துடன் பெண் வழிநின்று பெண் அவா தலைமுறை கடந்து செல்லும். இதனையே பாகவத புராணமுடையார் வள்ளுவர் வழிநின்று மக்கள் இன்பமாக அழகுபடச் சித்திரித்தார். மண்ணாட்சி அவா, ஆதிக்க அவா, அக அவாவே. ஏனெனில் அதில் தன்முனைப்பு மிகுதி. அத்துடன் அஃது இனமளாவப் பரவும் அவா. ஆனால், அது விரும்பும் ஆட்சி ஆதிக்கத்தால் நிலைபெறுவதன்று. குடும்பத்தில் மெல்லப் பயின்ற அன்பாட்சியாலேயே அது நிறைவு பெறுவது; மண்ணில் வாழ் உயிர்கள் பற்றிய அவாவாக அது குறிக்கப்படுவதன் காரணம் இதுவே. மூன்றவாவும் விட்ட இடம் உண்மையில் மூன்றவாவும் நிறைவுற்ற இடமே-இனஆட்சி. ஆனால், இனமளாவிய அன்பாட்சி அவாவேயாகும். இனக்குறிக்கோளே கடவுளாத லால், அதுவே கடவுட் பற்றும் ஆகும். தற்பற்றொழித்தவன் கடவுள்பற்றை, இனப் பற்றைக் கைக்கொண்டு முழுநிறை இன்பம்-தனக்கும் யாவர்க்கும் இன்பம் நாடுகிறான். வள்ளுவர் கோட்பாட்டின் அடிப்படை இதுவே. மண், பெண், பொன் ஆகிய மூன்றிலும் பாகவத புராணமுடையார் மண்ணை நீக்கியதுடன், பெண்ணைக் கூடக் கவர்ச்சிக்குரிய நிலமாக மட்டுமே காட்டினார். அத்துடன் பெண் அவாவையே விரித்து மக்கள் அவா என்று அதன் வளர்ச்சி காட்டினார். இதன்மூலம் வள்ளுவர் வழிநின்று இன்ப வாழ்வின் முழுநிறைவைப் ‘பெண்மை’ அவாவாக அவர் உணர்ந்தார் என்னலாம். பெண்மை அவா மனிதரைத் தற்பற்றிலிருந்து தன் துணையுடன் வாழும் குடும்ப வாழ்வில் ஈடுபடுத்துகிறது. குடும்ப வாழ்விலேயே தற்பற்றும் தன் தலைமுறைப் பற்றும் கடந்து மகவின்பம் நாடவைக்கிறது. பின் அது சமுதாயம் நோக்கி விரிவுறுகிறது. இன்பக் கருவியாகிய பொன்னும், அன்பாட்சியற்ற மண்ணும் இங்ஙனம் விலக்கப்பட்டு, உண்மை அன்பாட்சியாகிய மன்பதை இன்பம் ‘பெண்மை’ உருவில் குருத்துத் தளிர்த்து மலர்ச்சியடைந்து வளர்கின்றது. பெண்மையின் இவ்வுயர்வு கருதியே வள்ளுவர் பெண்மைக்கு மட்டும் திண்மையை உரிமையாக்கினார். பெண்மை வழிநின்ற ஆணும் இத்திண்மை பெற்றுத் திண்ணியன் ஆகிறான். திண்மை வாய்ந்த கற்புடைய மாதர் பெய்யெனமழை பெய்யும். அது போலவே திண்ணிய எண்ணமுடையார் எண்ணிய எல்லாம் பெறுவர் என்று வள்ளுவர் குறித்தார். ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பு என்னும் ‘திண்மை உண்டாகப் பெறின்’ ‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’ ‘எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்’ இந்த மூன்று குறட்பாக்களும் இக்காலத்தில் பலர்க்குப் புதிராகத் தோற்றுவது இயல்பு. ஆனால், மூன்றையும் ஒரு சேர நோக்கினால், புதிரில் பாதி தெளிவாகிவிடும். பெண்மை, கற்பு, திண்மை என்பவை இனப் பண்பில் உறுதி, இன நலத்தில் உறுதி, இன ஆர்வத்தில் உறுதி என்ற பொருள்கள் உடையவை. இவையுடையோர் அவ்வச் சூழலில் செயற்கரிய செய்பவர் ஆவர். செல்வம் நிறையப் பெற்றவர் பலர் கல்வியுடையவரைப் பார்த்து அழுக்காறு கொள்ளல் காணலாம். கல்வி நிறையப் பெற்றவரும் அவ்வாறே செல்வரைக் கண்டு அழுங்குதல் அரிதன்று. இரண்டும் உடையவரோ இன்ப வாய்ப்புடை யாரையும், அவ்வாய்ப்புடையார் ஆதிக்க வாய்ப்புடையாரையும் கண்டு ஏங்குவர். இச்சுழலில் அனுபவ அறிவைச் சுழலவிடுவோர் உண்மை இன்பம் இவற்றின் நாட்டத்தில் இருக்கலாம். இவற்றைப் பெறுவதில் இல்லை என்று காண்பர். இன்பத்தில் மறைதிறவு தன்னலமன்று, தற்பற்றன்று; இரண்டும் கடந்தது. அது புறநோக்கி உலகளாவியதுகூட அன்று, அக நோக்கியது. ஆனால், அது செல்லும் தளம் அகத்தின் அகம்-அங்கே அகம், புறம் என்ற வேற்றுமை கிடையாது. உயிரின் தற்பற்றுத் தன்னொத்த இனம், தன்னைக் கடந்த தன் விரிவாகிய ஓர் அகப் பண்பை நாடுகிறது. இதுவே இனப்பற்று, இனநலம், இன்பம். ஆதிக்கவாதி பிறர் மதிப்பை விரும்புகிறான்; செல்வனும் அப்படியே. ஆனால், மனமார்ந்த மதிப்பு இல்லாவிடில், மறைவில் தூற்றுதலுக்கு ஆளாவதறிந்தால், அவன் சீறுகிறான், சினங்கொள்கிறான், புண்படுகிறான். உண்மையான மதிப்பு அன்பு என்று கண்ட மன்னர் பலர் புகழ் நாடினர். பிறர்-வல்லாட்சியால் அடக்கியாண்டு மக்கள் வெறுப்பை ஏற்ற பலர்-இயல்பாக ஒருசில நண்பரிடம் அல்லது இன்பத் துணைவரிடம் பாசம் பெருக்கி அவர்கள் வயப்பட்டு ஆண்டது காண்கிறோம். ஆதிக்கத்தாலும் செல்வத்தாலும் பெறமுடியாத அன்பு மதிப்பைப் பொதுநலப் பற்று ஒன்றாலேயே பெற முடியும். அதுவே உண்மை ஆட்சி. அதுவே உண்மைச் செல்வம். அதுவே உண்மை இன்பம். இன்பத்தைப் பெருக்குவதும் அது. துன்பத்தில் ஆறுதல் தருவதும், துன்பத்தை இன்பமாக்குவதும் அது. எல்லாவற்றையும் பொன்னாக்கும் வள்ளுவர் கண்ட சிந்தாமணி அதுவே. வள்ளுவர் குறிப்பிட்ட இன்பம், இன்பத்துள் இன்பம் பொதுநலத் தொண்டால் வரும் மனநிறைவமைதியே. உலகில் வள்ளுவ ஆட்சி, காந்திய ஆட்சி, டால்°டாயிச ஆட்சி பரப்பி அந்த இன்பத்தின் இன்பம் பெருக்குவோமாக. 11. மலர்ச்சி, மறு மலர்ச்சி, புது மலர்ச்சி கருநிலை, முதிரா இளமை, கட்டிளமைப் பருவம், முதுமை! தனி உயிர் வாழ்வில் காணும் வளர்ச்சிப் படிகள் இவை. இந்த வளர்ச்சிப் படிகள் எல்லாம் எல்லா உயிரினங்களிலும் இருப்பதில்லை. ஏனெனில், உயர் உயிரின வாழ்வில் மட்டுமே இந்தப் படிகள் உண்டு. இனவாழ்வின் கருநிலைக் காலத்தில் இந்தப் படிகள் எதனையும் நாம் காண்பதில்லை. ஏனெனில், தனி உயிர்க்கு இந்த இன வாழ்வுப்படியில் கருநிலைப்படி ஒன்று மட்டுமே உண்டு. தனி உயிர் வாழ்வின் கருநிலை, முதிரா இளமை, கட்டிளமை முதலிய பருவங்கள் இனவாழ்வின் அதேவகைப் பருவங்கள் கழிந்தபின் அவற்றின் கூறுகளாக அமைபவையே யன்றி வேறல்ல என்பதை இது நமக்கு விளக்குகிறது. இனவாழ்வின் கருநிலைக் காலத்தில் தனி உயிர் வாழ்வே இனவாழ்வின் ஒரு தலைமுறையாய் அமைகின்றது. அந்தப் படியிலுள்ள உயிரினங்களில் இன்னும் அவ்வாறே இருக்கிறது. ஏனெனில், கருநிலையிலேயே உயிர் ஒரு தலைமுறை கடந்து அடுத்துத் தலைமுறையின் கருநிலைக்குத் தாவுகிறது. இளமை, மூப்பு, சாக்காடு அதற்கு இருப்பதில்லை. ஏனெனில், இனம் அந்நிலைகளைச் சென்று எட்டவில்லை. தொடக்க அணு, உயிர்களின் நிலை இது. இன வாழ்வின் முதிரா இளமைப் பருவத்தில் கருநிலைப் பருவம் முட்டைப் பருவமாயிற்று. இனவாழ்வின் கட்டிளமைப் பருவத்திலோ கருநிலை கருப்பை நிலையாகவும், முதிரா இளமை வளர்ப்புப் பருவமாகவும், கட்டிளமை இன வாழ்வுப் பருவமாகவும் மாறின. முதுமையும் சாக்காடும் இன உயிரின் தனி வாழ்வு கடந்த இனப் பொது வாழ்வு நிலைகள்-இனத்தின் அடுத்த தலைமுறை அல்லது தலைமுறை களை நோக்கியும், எதிர்கால இனவளர்ச்சி நோக்கியும் திரும்பும் பருவங்கள் ஆகும். பழைய தலைமுறையில் தோன்றி, தனிஉயிர் வாழ்வுவேறு, தலைமுறை வேறு என்று ஆகிய உயிரின்படி இதுவே. நாம் கட்டிளமை, பருவ மலர்ச்சி என்று கூறுவதன் பொருள் இதுதான்-தனியுயிர் வாழ்வும் தலைமுறை வாழ்வும் இனவாழ்வின் முழு மலர்ச்சியுடன் ஒன்றுபடுகிற பருவம் அது என்பதே. இது கடந்த தனி உயிர் வாழ்வு அதன் தளர்ச்சி, ஓய்வுக் கூறு மட்டுமே-அடுத்த தலைமுறையின் கருநிலை, முதிரா இளமைப் பருவங்களைப் பேணி வளர்ப்பதற்காகவே அஃது இத் தளர்நிலையை மேற்கொண்டுள்ளது. இளமையைப் பாடிய புலவர், கவிஞர் பலர்-முதுமையைப் பாடியவர் சிலர், மிகச்சிலர், கிட்டத்தட்ட இலர் என்னலாம்! இளைஞர் நங்கையரின் காதலைப் பாடிய கவிஞர், அதைத் தீட்டிய கவிதை, காவிய எழுத்தாளர் மிகப்பலர்-முதுமையில் கருத்தைச் செலுத்தியவர் அறவோர், அவர்கள்கூட மிகமிகச் சிலரே, ஆயினும் முதுமையில்தான் உயிரினத்தின் முழுநிறை இலக்கு-தாய்மை அன்பு-தந்தைமை வீறு கருக்கொண்டுள்ளது. கடவுளை அறவோர், அருளாளர் இந்தத் தாய் வடிவிலும், தந்தை வடிவிலுமே காண்கின்றனர். காதலை இளமைக்கு மட்டுமே உரிய உணர்ச்சியாகக் கொள்வர் கலைஞர். உலகின் பிற இனங்களிலெல்லாம் கலைஞர், கவிஞர் மட்டுமின்றி அறிஞர் அறவோர் இந்நிலை கடந்து உயர்வடையவில்லை. அவர்களிடையே உள்ள வேற்றுமை யெல்லாம் கலைஞர், கவிஞர் அதில் ஈடுபடுகின்றனர் என்பதும்; அறிஞர் பக்கம் கருத்துச் செலுத்தவில்லை என்பதும்; அறவோர், அருளாளர் அதனை இழிபண்பாகக் கருதுகின்றனர் என்பதும் மட்டுமே. ஆனால், தமிழினம் ஒன்று மட்டும்-சிறப்பாகத் தமிழினத்தின் முழுநிறை இன அறிஞர், இனக் கலைஞர், இன அறவோர், அருளாளர் ஆன திருவள்ளுவர் ஒருவர் மட்டும்-காதலை இளமை கடந்த, உணர்ச்சி கடந்த, அறிவு கடந்த பண்பாகக் கண்டார். காதலைக் குடும்ப வாழ்வின் கூறாகக் கொண்டு, அதிலே தாய்மை அறிவையும் தந்தைமை அருளையும் ஒருங்கே கண்டார். அதிலேயே குடும்பத்தின் அன்பையும், சமுதாயத்தின் அறிவையும், இரண்டும் கடந்த மெய்யுணர்வையும் மலர்விக்கக் கனாக்கண்டார். உயிரின வளர்ச்சிப் படிகளில் கீழ்ப்படியிலிருந்து மேற்படியைப் பிரிப்பது இக்காதலுணர்ச்சி; இவ் இளமைப் பருவமே! அவ்வுணர்ச்சி மனித இனத்திலேயே-அதுவும் பண்பட்ட மனித இனத்திலேயே-முழுவதும் குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் உரிய அடிப்படை உணர்ச்சியாய் இயங்குகிறது. இதன் பயனாக, முதிரா இள உயிரையோ, முதிய உயிரையோ புறக்கணித்துவிடும் பல விலங்கினங்களின் போக்கு மனிதக் குடும்பத்திலும், மனிதச் சமுதாயத்திலும் முற்றிலும் தவிர்க்கப் படுகிறது. கருவுற்ற தாயைத் தந்தை காப்பதும், குழந்தைகளைத் தாய் தந்தை காப்பதும்; இளையர்க்கு முதியவர் வழிகாட்டுவதும், முதியரை இளைஞர் பேணுவதும் யானை முதலிய உயர் விலங்குகளிலேயே தொடங்கிவிட்டாலும், அவை குடும்ப சமுதாயத் திட்டமாகவும், அரசியல் சட்டமாகவும், சமய அடிப்படையாகவும் அமைவது மனித இனத்தில் மட்டுமே. முதுமையின் அனுபவ அறிவை இளமைக்கும், முதிரா இளமைக்கும்; முந்திய தலைமுறை அல்லது தலைமுறைகளின் அனுபவ அறிவை அடுத்த தலைமுறை அல்லது பிந்திய தலைமுறைகளுக்கும் விட்டுச்செல்ல மனித இனம் முதுமையின் அறிவு மலர்ச்சிச் செல்வமான இனமுதல்வர் அல்லது பகவர் மூலம் கண்டு விளக்கிய முறைகளே ஆகூழ் வகைகள்-மொழி, இலக்கியம், கலைகள், இயல்கள், கல்விமுறைகள், சமயங்கள், அரசியல் சட்ட திட்டங்கள் ஆகிய நாகரிக சாதனங்கள் என்பதை நாம் ஓர்ந்து காண்டல் வேண்டும். உயிரின வாழ்வின் கட்டிளமை மலர்ச்சியின் விளைவாகத் தோன்றிய இனம் மனித இனம். ஆனால், மனித இனம் இனவாழ்வின் கட்டிளமை, மலர்ச்சி கடந்த ஒரு மறுமலர்ச்சிப் பருவத்தைத் தன் முதுமையில் ஆக்கி, இளமையின் ஆர்வத்துடன் முதுமையின் ஆக்கத்தை இணைத்துப் புதுமலர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது. முதுமையிலே மனித இனம் கண்ட இப்புது மலர்ச்சியை உணர்ந்து பாடிய கவிஞர் மிகச் சிலர்-அவருள் ஆங்கிலக் கவிஞர் பிரௌனிங்கு குறிப்பிடத்தக்கவர். ‘இளமை மலர், முதுமை அதன் இன்கனி.’ என்று அவர் கவிஞர் பாணியில், ஆனால், கவிஞர்க்குத் தோன்றாத மெய்க்கவிதை உவமையுடன் கூறுகிறார். அக்கூற்றில் கவிதை அழகு மட்டுமன்று, அதுகடந்த ஆழ்ந்த அரும்பெரு மெய்ம்மைகள் அடங்கியுள்ளன. மலர் அழகியது-அழகு என்றால் என்ன? மலர் மணமுடையது-மணம் எதனால் ஏற்பட்டது? மலர் இளமையை நினைவூட்டுகிறது-இளமையின் பொருள் யாது? பிரௌனிங்கு தரும் கவிதையுவமை இவற்றுக்கு முழுவிளக்கம் தருகிறது. மலரின் அழகு கனியின் அழகுக்கு முன்னோடி. மலர் மணம் கனியின் மணத்துக்கு ஒரு முனைமுகம். முன்னது தூண்டும் சுவை, உயிர்ச்சுவை. பின்னது நுகர்ச்சுவை, இனச்சுவை அது தனி உயிர் நாடாத வளத்தை அதற்கு அளித்து இனவளம் ஆக்குகிறது. மலர் உயிரின் சின்னம்; கனி இனத்தின் சின்னம். மலர் தலைமுறையின் மலர்ச்சி, கனி இனவாழ்வின் மலர்ச்சி, உயிரின் மறுமலர்ச்சி; இனத்தின் புதுமலர்ச்சியின் விதையை அது தன்னகம் கொண்டுள்ளது. வள்ளுவர் பெருமான் இதே உண்மையைப் பலப் பல வகையில் சுட்டிக்காட்டி விளக்கியுள்ளார். காதலின் முழு அருமை பெருமைப் பண்பறியாத பிறஇனக் கவிஞர்போல அவர் இன்பத்துப் பாலை ‘அணங்கு கொல்? ஆய்மயில் கொல்லோ?’ என்றுதான் தொடங்குகிறார். அது வெறும் இனக்குரல் மட்டுமன்று, முதிரா இளமைக் குரல் மட்டுமன்று. ஆண் இனக் குரல், உணர்ச்சிக்குரல் என்பது குறிப்பிடத்தக்கது. காதலில் தன்வயமின்றி ஈடுபடுபவன் ஆண். அதன் அருமை பெருமை அறிபவன் அவனல்லன் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. வள்ளுவர் தம் அறிவுக் குரலை முதலில் பெண் குரலிலேயே எழுப்புகிறார். களவு கடந்த கற்பு, கூடல் கலந்த ஊடல் குரலே பெண் குரல்; சிறப்பாகத் தமிழ்ப் பெண் குரல்; இன்னும் உயர் சிறப்பாகத் தமிழ் வள்ளுவன் கண்ட பெண் குரல். உணர்ச்சி வசப்பட்ட ஆணை அஃது அறிவு நோக்கி, அன்பு நோக்கி; குடும்பமென்னும் நிலத்தில் நின்று, சமுதாயமென்னும் அரங்கிலாடும்படி தூண்டுகிறது. ஆண், பெண் குரல் கடந்து வள்ளுவர் தமிழினக் குரலையும் வள்ளுவக் குரலையும் இல்லறவியலிலிருந்து எழுப்புகிறார். தம் குரலில் பெண் அருமை கூறுகிறார். ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள’ என்று ஆணிடம் இடித்துக் கூறுகிறார். திண்மையின் உருவே பெண்மை, அதன் சமுதாயப் பண்பே கற்பு என்று எவரும் அளிக்காத, கருதாத, கனவு காணாத கருத்து விளக்கமும் தருகிறார். ‘பீடு’ என்பது முழுவதும் பெண்ணால் வருவதுதான் என்று அவர் நயமுறச் சுட்டுகிறார். பெண் இன்பம் கடந்து ஆணுக்கு, ஆணின்பம் கடந்து பெண்ணுக்கு ஒரு இன்பம்-தனி உயிர் காணும் ‘பேரின்பம்’ கடந்த ‘பெரும் பேரின்பம்’ ஒன்று உண்டு. இதைப் பெண்ணுக்கும் ஆணுக்கும் சுட்டிக் காட்டும் உலகின் ஒரே ஒரு கவிஞர், அறிஞர், அறவோர் திருவள்ளுவர்தாம்! இன்பம்தான் குழந்தை இன்பம். குழந்தை வாழ்வுக்காகத் தன்னையன்று, தன் காதலியை, மனைவியை-தன் காதலனை, கணவனை-துறக்கத் துணிந்த நம்பியரை, நங்கையரைக் காண்டல் அரிதன்று. ‘தாய் அன்பு, தந்தை பாசம்’ என்ற சொற்களின் பொருளே அதுதான். ஆனால், அந்தத் தாய் அன்பு, தந்தை பாசம் கண்டு பாடிய கவிஞர்-அதைக் கவிதையாக மட்டுமன்றி, அறிவுரையாகவும், அறிவுரை கடந்த அறவுரையாகவும், அது கடந்த மெய்யுணர்வுரைகளாகவும் கட்டுரைத்த இனமுதல்வர்-உலக முதல்வர்-பகவர்-ஆதிபகவர்-தெய்வ மனிதர்-திருவள்ளுவர் ஒருவரே! ‘குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்.’ இங்கே இனிமையூட்டுவது உவமை மட்டுமன்று; சொல் ஓசைமட்டுமன்று. இவை இணைந்த பொருள் மட்டிலும்கூட அல்ல. ‘இன்பம்’ என்பது இனம் சார்ந்தது, இனவளர்ச்சி சார்ந்தது என்ற ‘வள்ளுவ’ப் பெருமெய்ம்மை இங்கே தொனிக்கிறது! குறட்பா மட்டுமன்று, அதன் ஒவ்வோர் எழுத்தும் ஒலியும் இங்கே பேசுகிறது. ‘குழலினிது யாழினிது’ என்று கூறுவார்கள்-‘என்பர்’ என்று வள்ளுவர் குறிக்கவில்லை, ‘என்ப’ என்று இரு திணைப் பொதுப் பாலிலேயே குறித்தார்! கேளாதவர் என்பதிலும் இதே அருளார்ந்த வசையின் நகைச்சுவை ததும்புகிறது. உணர்வுச் சுவையுடன் கேளாதவர் அவர்கள், கேட்டாலும் கேளாதவரே என்ற குறிப்புத் தொனிக்கிறது. புறச்செவிடில்லாவிட்டாலும் அகச்செவிடே என்னும் ஏளனவசையும் ஒலிக்கிறது. ‘அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ்!’ வள்ளுவர் கால உயர்தமிழ்ச் சொற்களுள் ஒன்று ‘ஆற்ற’ என்பது. வள்ளுவப் பெருமான் கவிதையின் ஆர்வ ஆத்திரத்தை அது குறிக்கிறது. அமிழ்தின் தன்மை உணவின் புறச்சுவையி லில்லை. அதன் உயிர்ச் சுவையிலேயே இருக்கிறது என்றும் ‘சிறுகை,’ ‘அளாவிய’, ‘கூழ்’ என்ற சொற்கள் வலியுறுத்து கின்றன. ‘மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம், மற்றுஅவர் சொல்கேட்டல் இன்பம் செவிக்கு’ ஐம்புல நுகர்வைப் பெண்மையில் கண்ட இதே புரட்சிக் கவிஞரே, குழந்தையின்பத்தையும் அதே வடிவாகக் கண்டார். இனவாழ்வின் மறுமலர்ச்சியே பெண்ணுரு, அதன் புது மலர்ச்சியே குழந்தை என்பதைக் காண உணர்ச்சிக் கவிஞர் புனைவாற்றல் மட்டும் போதாது - அறிவு, அறம், அன்பு, அருள் கடந்த மெய்யுணர்வுக் கவிதை தேவைப்படுகிறது என்பதை இங்கே காணலாம். இதே இனிய தொடர்கள், கருத்துகளைச் சங்கப் புலவர் பலரிடம் காணலாம்-தொல்காப்பியரிடம் காணலாம். ஆனால், அவர்கள் அனைவரும் தமிழர்-தனித்தமிழ்க் காலத்தினர். அது மட்டுமன்று. அவர்கள் வள்ளுவர் வழிநின்று கூறியவர்களே. இதை வருங்காலத் தமிழகமும் வருங்கால உலகமும்தான் கண்டுதெளிதல் வேண்டும். ஆனால், அவர்கள் சென்றெட்டாத அடுத்த உயர் படியையும் வள்ளுவர் கண்டார் என்பதை நாம் சுட்டிக் காட்ட முடியும். ஏனெனில், அஃது அக்காலத் தமிழர் மட்டுமல்லர், இன்றுவரை தமிழரும் சரி, பிற இனத்தவரும் சரி, எவரும் என்றும் காணாத, கருதாத தளம் ஆகும். ஒருவர் வாழ்வின் மலர்ச்சி-மணம், அவர்களது பெருமைக்கு, உயர்வுக்குச் சான்று யாது? இந்தக் கேள்வியைக் கேட்டுத் திருவள்ளுவரே விடையும் தருகிறார். ‘தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும்’ ‘இவர் தகுதியுடைவர். இவர் தகுதியற்றவர்’ என்று அறுதியிட்டுரைப்பது எவ்வாறு? இது அவரவர் ‘எச்சத்’தால் உணரப்படும் என்று அவர் கூறினார். இங்கே வள்ளுவர் கருத்தை அறிய, ‘எச்சம்’ என்ற சொல்லின் பொருள் காண்டல் இன்றியமையாதது. அதன் சொற்பொருள் ‘மீந்து நிற்பது’ என்பது ‘புகழ்’ ‘பின் மரபினர்’ என்ற பொருள்களிலும் வள்ளுவர் அதை வழங்கியுள்ளார். பரிமேலழகர் பின்மரபினர் என்ற பொருளையே கொண்டுள்ளார். ‘அவரவர் எச்சத்தால் காணப்படும்’ என்பதற்கு ‘அவரவருடைய நன்மக்களது உண்மையாலும் இன்மையாலும்’ என்றே அவர் பொருள் கொண்டுள்ளார். மணக்குடவர் ‘அவரவர் ஆரவாரத் தொழிலினாலே காணப்படும்’ என்று பொருள் கொண்டார். ஆயினும், விளக்கவுரையில் ‘தம்மளவிலே நிற்பதல்லாது தம் மக்களையும் விடாதென்பது கூறிற்று’ என்று அவர் குறிப்பதால், அவர் முடிவு வேறன்று என்று அறிகிறோம். எச்சம் என்பதற்குப் புகழ் என்று இங்கே கொண் டாலும் முடிவு மாறவில்லை. ஏனெனில், புகழ் நிறுவுபவர் பின் மரபினர் அல்லது மக்களே. பரிமேலழகர் கூட இங்கே மக்கள் உண்மையாலும் இன்மையாலும் என்று கூறத் துணியவில்லை. உரை கூறுவது மனுநீதி போன்ற சிற்றறிவுடைய ஏடுகளுக்கல்ல, தெய்வப்புலவர் திருவள்ளுவர் குறளுக்கு என்ற உள்ளுணர்வு அவரை எளிதில் விட்டகலுவதில்லை என்பதைப் பலவிடங்களிலும் காணலாம். ‘நன்மக்களது உண்மையாலும் இன்மையாலும்’ என்ற உரைத்தொடர் இதற்குச் சான்று. வள்ளுவர் இங்கே கொண்ட உண்மைக் கருத்தை மற்றச் சில குறட் பாக்களே சுட்டிக்காட்டும். ‘ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.’ ‘தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.’ ‘மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்.’ ‘தம்மில்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.’ ‘தம் பிள்ளை கற்றறிந்தவர்களால் போற்றப்படுகிறான் என்று கேட்ட தாய் மகிழ்வாள். தந்தை அவ்வாறு மகிழும்படி செய்தல்வேண்டும்’. இது முதல் இரு குறட்பாக்களின் பொருள். இங்கே ‘தாய்’, ‘கேட்ட’ என்ற சொற்களை வைத்து மனுநூல் கருத்தின் வழிநின்று பந்தாடுகிறார் பரிமேலழகர். தாய் பெண்ணாதலால், கல்வியறிவும் மூளையும் அற்றவளென்றும், ஆகவே கேட்டுத் தான் அறியவேண்டுமென்றும், தம்கால அறியாமை வழி உரைகண்டார். ஆனால், தந்தை மகிழ்வு கூறாமல் தாய் மகிழ்வு மட்டும் வள்ளுவர் கூறிய நுட்பத்தை அவர் உணரவில்லை. இனஉணர்வு தாய்க்கே இயல்பு. ஆயினும், பாசமுடையவளாதலால் தன் மகன் மதிப்பீட்டை அவளே மதித்தறிதல் இயலாது. இனமும் இனமுதல்வரும் சமுதாயமும் மதிப்பதுணர்ந்து அவள் மகிழ்கிறாள். இதே சமயம் தந்தைக்கு இந்நிலையில் ஒருகடமையே கூறப்பட்டது. ஏனெனில், அவனே சமுதாய உணர்வுக் கடப்பாடுடையவன். சமுதாயத்தின் நன்மதிப்பைக் குடும்பத்தில் காத்துக் குடும்ப ஆட்சி செய்பவள் பெண். குடும்பத்தின் நன்மதிப்பைச் சமுதாயத் தில் காத்துச் சமுதாய ஆட்சியில் பங்கு கொள்பவள் அவள். இடைக்காலமும் இக் காலமும் வள்ளுவர் காலத்தைப் போல இதை மதித்துணர்வ தில்லை. அடுத்த இரு குறட்பாக்களும் தந்தை கடமையை வலியுறுத்துகின்றன. அத்துடன் தந்தையினும் மகன் அறிவு மிக்கவனாக, புகழ் மிக்கவனாக இருத்தலே தந்தைக்குப் புகழ் ஆகும். அதுவே தந்தையின் இனக்கடமை என்றும் விதந்துரைக்கிறது. இனம் தொடர்ந்து உயிருடன் வாழ்வது மட்டுமன்று, வளர்வது. தாயின் இயல்பு இந்த இனவளர்ச்சியில் நாட்டம் செலுத்துவது, மகிழ்வது. தந்தையின் கடமை இதைச் செய்து முடிப்பது. இருவருமாகச் சேர்ந்து தம் தலைமுறையைவிட அடுத்த தலைமுறையை ஒரு படி வளம்பட மேம்படுத்த வேண்டும். தலைமுறையின் இக்கடமையை வலியுறுத்திய அறிஞர், பழைய தலைமுறை சார்ந்த முதுமையின் கடமையையும், அதன்மூலம் முதுமைக்கு ஏற்படும் இன்பத்தையும் புதுவாழ்வையும் தலைமுறை கடந்த புதுமலர்ச்சி அல்லது வளர்ச்சியையும் சுட்டிக்காட்டிய ஒரே உலக அறிஞர் வள்ளுவர். இளமை மலர்ச்சி, முதுமை அதன் கனி அல்லது மறுமலர்ச்சி, அடுத்த தலைமுறை அதன் புதுமலர்ச்சி! இன வாழ்விலும் நாட்டு வாழ்விலும் நாம் இவ்வாறான அடுக்கு மலர்ச்சிகளை-ஒன்று, இரண்டு, மூன்று-சில சமயம் மூன்றுக்கும் மேற்பட்ட மலர்ச்சி, மறுமலர்ச்சி, புது மலர்ச்சி களைக் காணலாம். உயிரினங்களில் இன வாழ்வின் கருநிலையில் ஏற்பட்ட இத்தகைய பல மலர்ச்சிகளே நீள்துயில், செறிதுயில், மணித்துயில் நிலைகளாயின. உயிரினங்களில் இவ்வாறு ஏற்பட்ட மலர்ச்சிகள் மனித இனத்தின் இளமைப் போதினுள்ளேயே மூவகை விரைவு வளர்ச்சிப் பருவங்களை ஏற்படுத்தியுள்ளன. குழந்தைப் பருவம், பால்மாறு பருவம், விளையாட்டுக் குறும்புப் பருவம் என்பன இவை. இனவாழ்வின் இந்த முதிரா இளமைப் பருவ மலர்ச்சிகளே பத்து வயது, பதினான்கு வயது, பதினெட்டு வயது, முப்பத்திரண்டு வயது ஆகிய காலங்களில் ஆணுக்கும், அதற்குச் சற்றுமுன் பெண்ணுக்கும் ஏற்படும் முதிர்ச்சிப் பருவங்கள் ஆகும். இவை கடந்து மனித இனம் முதுமையில் காணும் மலர்ச்சிகள்கூட உண்டு. இன வாழ்வின் முழு உறுப்புகளாகிய தேசிய இனங்கள், அல்லது நாடுகளிலும் இதுபோன்ற மலர்ச்சிகளை நாம் காண்கிறோம். மனித நாகரிகத் தொடக்கக் கால நாடோடி இனங்களில் குடும்பமும் சமுதாயமும் இல்லாதிருந்தன. முதிராத் தேசியங்கள் புறத்தோற்றத்தில் குடும்பமும் சமுதாயமும் உடையவையானாலும், அவற்றின் சின்னமான ஒன்றுபட்ட வாழ்வும் வாழ்வின் சின்னமாகிய தேசிய மொழியும் அமையும் வரை இந்நிலையிலேயே இருப்பன. மலர்ச்சியுடன் அவற்றின் இனவாழ்வு தொடங்குகின்றன. பிரிட்டனில் ஷேக்°பியர் காலமும், கிரீசில் பெரிக்ளி° காலமும், கங்கை நாட்டில் காளிதாசன் காலமும் இத்தகைய மலர்ச்சிக் காலங்கள் ஆகும். மலர்ச்சியுறாத தேசிய இனங்கள் பல கருவிலேயே அழிந்துள்ளன. உயிராற்றலும், இனஆற்றலும் மிக்க இனங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மலர்ச்சி பெறுவதுண்டு. மலர்ச்சியின் தொகை மிகுந்த இனம் இறவா இனமாகவும் பிறவா இனமாகவும் வளர்ந் தோங்குகிறது. சில இனங்கள் பொதுவான மனித இனவாழ்வில் பெருந்தொலை சென்றும் தனி இனவாழ்வில் முதிர்வுறாமல் அழிவதனால், அவ்வினவாழ்வு கடந்தும் அத்தகைய இனங்கள் பேரினவாழ்வில் அதாவது பிற இன வாழ்வில் மறுமலர்ச்சியூட்ட முடிந்துள்ளன. இவ்வாறே கிரேக்க உரோம இன வாழ்வுகள் தம் இனவாழ்வுகளைக் கடந்து பொதுவாக 12ஆம் நூற்றாண்டில் தென் ஐரோப்பாவில் ஒரு மறுமலர்ச்சியும்; 15ஆம் நூற்றாண்டில் தெற்கு, தென் மேற்கு ஐரோப்பாவில் மற்றொரு மறுமலர்ச்சியும், 18, 19ஆம் நூற்றாண்டுகளில் வடமேற்கு ஐரோப்பாவில் மூன்றாவதொரு மறுமலர்ச்சியும் தூண்ட முடிந்தன. ஆனால், இவை அவ்வினங்கள் வாழ்ந்த தென் ஐரோப்பாவுக்கு ஒரு மறுமலர்ச்சியே தூண்டின. மனித இன முதல்வரான வள்ளுவரை ஈன்ற இனம் தமிழினம். அது கண்டுள்ள மலர்ச்சி, புது மலர்ச்சிகளுக்கு அளவே இல்லை என்னலாம். இவை ஐரோப்பிய மறுமலர்ச்சி, மலர்ச்சிகள் போல ஒன்றிரண்டல்ல, பிற இனங்களால் தூண்டப்பட்டனவல்ல. ஏனெனில் இவை உலகமலர்ச்சி, மறுமலர்ச்சி, புதுமலர்ச்சிகள்; இனமலர்ச்சி, மறுமலர்ச்சி, அவை உலகின் பிற இனங்கள் அனைத்தின் மலர்ச்சி மறுமலர்ச்சிகளை ஊக்கியுள்ளன-அவை கடந்து ஓயாது புதுமலர்ச்சிகளையும் தோற்றுவித்துள்ளன, தோற்றுவித்து வருகின்றன. வரலாற்றிலேயே சங்ககாலம்-பல்லவ பாண்டியர் காலம்-பேரரசர் காலம்-நம்காலம் ஆகிய நான்கு மலர்ச்சிகளை நாம் கண்டுள்ளோம். அவற்றுக்கு முற்பட்ட மலர்ச்சிகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில்புதையுண்டு மறைவுற்றுள்ளன. ஆனால், வரலாற்றிலே பழைய மலர்ச்சிகளின் ஓய்வு கடந்து நாம் காணும் மலர்ச்சிகள் மூன்றும் மறுமலர்ச்சிகளே. நம் காலத்திலும் ஒரு மறுமலர்ச்சி அலை எழுந்துள்ளது. ஆனால், இம் மறுமலர்ச்சி களினூடாகத் தமிழகம் ஒரு புதுமலர்ச்சியையும் அணிமை வருங்காலத்தில் காண இருக்கிறது. அதுவே வள்ளுவர் முழுநிறை மெய்ம்மை தமிழினத்தில் உணரப்படத் தொடங்கும் காலமாகும். தமிழினம் பல இனவாழ்வு கடந்து, பல இனங்களின் மலர்ச்சி, மறுமலர்ச்சி கடந்து, புதுப்புது மலர்ச்சிகள் கண்டு வரும் புத்திளங் கன்னி இனம், அஃது இறவா, பிறவா இனம் மட்டுமன்று-இறவா, பிறவாக் கன்னி இனம்-என்றும் இளமை மாறா இனம். சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாக அது பண்படாத ஓர் இடைக்காலப் புத்துலகில் அடிமைப்பட்டுக் கிடப்பதுகூடத் தமிழினத்தின் ஒரு நீள்துயில் நிலை அல்லது செறிதுயில் நிலை மட்டுமே. இது கடந்து தமிழினம் புது வாழ்வு காண, புதிய இன இன்பம், புதுமலர்ச்சி இன்பம், இன்பம் கடந்த இன்பம் காணத் தமிழர் வள்ளுவர் வழி நின்று முயல்வார்களாக. 12. இன்பம் என்பது இனவாழ்வே பீடபூமியில் வாழ்பவன் அதன் எல்லைக் கோடியில் சென்ற பின்னன்றித் தான் இருப்பது உயர் மேட்டு நிலத்திலே என்பதை உணரமாட்டான். ஆழ்சுரங்கத் தடத்திலிருப்பவன் ஏறும் போதோ, இறங்கும்போதோதான் ஆழத்தின் அளவை அறிவான். அதுபோல இன்ப துன்பச் சூழல்களின் நடுவே வாழ்பவன் அவற்றின் எல்லை கண்டாலன்றி துன்பத் தன்மைகளையோ, இயல்பையோ அறியமாட்டான். அவற்றின் உயிர் நுட்பமும் அவனுக்குத் துலங்கமாட்டாது. துன்ப நீக்கமே இன்பம் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், உண்மை இன்பம் துன்ப நீக்கத்தில் இருக்க முடியாது. ஏனெனில், நீங்கிய கணத்தில் மட்டுமே அது இன்பம் தரக்கூடும். இன்ப நுகர்வில் இன்பம் இருக்கிறதென்றும் கூறமுடியாது. ஏனெனில், புது நுகர்வின் போதுதான் அஃது இன்பமாகத் தோன்றும். இது போலவே, இன்பம் அகப்பண்பு என்று கூறப்பட்டாலும், அது முற்றிலும் நுகர்பவனைச் சார்ந்தது என்று கூறமுடியாது. ஏனெனில், தனிமையில் ஒருவனுக்கு இன்பம் இருக்க முடியாது. கவிஞர் தனிமை இன்பத்தைப் பாடுவதுண்டு. முனிவர் போன்ற தனிச் சிந்தனையாளர் தனிமை வாழ்வில் மகிழ்வதுண்டு. அவ்வப்போது மனிதர் தனிமைக்காக ஆர்வம் கொள்வதுண்டு. ஆனால், இத்தகைய இடங்களில் புறவாழ்க்கையின் சில துன்பங்களிலிருந்து விடுதலை நாடியோ, சமுதாய வாழ்வில் பெற்ற கருத்துலகின் தங்கு தடையற்ற தோழமை நாடியோதான் இத்தகையோர் தனிமை நாடுவர்; விரும்புவர். அத்தனிமை இன்பம் சமுதாயத்திலிருந்து ஒருவர், இருவர் வந்த காலையில் இரட்டிக்கும் என்பதைக் கவிஞரும் முனிவரும் காண்பர். இத் தனிமைகள் குறுகிய புறச் சமுதாயத்தி லிருந்து அகன்றுயர்ந்த ஓர் அகச் சமுதாயம் நாடியேயன்றி வேறன்று. இன்பம் என்பது உண்மையில் நுகர்பவனுக்கும் நுகர்பொருளுக்கும் உள்ள தொடர்பு அன்று. நுகர்பவனுக்கும் சமுதாயம் அல்லது இனத்துக்கும் உள்ள தொடர்பேயாகும். பெரும்பாலும் சமுதாயத்தில் புகழ் அல்லது மதிப்பு, குடும்பத்தில் அன்பு ஆகிய மூவகைப்பட்ட உணர்ச்சியே இன்பங்கள் எல்லாவற்றின் அடிப்படை ஆகும். துறவோரும் அருளாளரும் குடும்பத்தில் உள்ள அன்பையே சமுதாயத்திலும் நாடுவர்-அவர்களுக்குச் சமுதாயமே, இனமே குடும்பமாய் அமைவதன் காரணம் இதுவே. நுகர் பொருள்களும் இன்பக் கருவிகளும் எப்போதும் இன்பம் அளிக்காததற்கும் நிலையான, இடையறா வளர்ச்சியுடைய உயிர் இன்பம் அளிக்காததற்கும் கூட விளக்கம் இதுவே. இன்பத்தில் மெய்யுருவம் தனி மனிதனிடத்தில் முதலில் குடும்பப் பாச ஆர்வமாகவும், பின் சமுதாய மதிப்பார்வமாகவும், அன்பார்வமாகவும், அதன் பின் இனத்தின் மதிப்பார்வம், அன்பார்வம் ஆகிய புகழின் அவாவாகவும் செயலாற்றுகிறது. இவை படிப்படியாக உயர்ந்த பண்பளாவி, மக்கள், இன அன்புப் புகழார்வமாக மிளிர்கின்றன. ஆனால், வள்ளுவர் குறிக்கொண்ட புகழார்வம் இன்னும் உச்ச உயர்படிகள் காண்கின்றது. குடும்பம், சமுதாயம், இனம் ஆகியவற்றின் அன்பைக்கூட வள்ளுவர் பாராட்டிய அருளாளர் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் சமுதாயத்தினிடமும் இனத்தினிடமும் தாம் கொண்ட வரம்பிலா அன்பினாலேயே செயலாற்றுகின்றனர். சமுதாயமும் இனமும் அதையறிந்து அவரை மதிக்கலாம், போற்றலாம், அன்பு காட்டலாம்; அதை அறியாமல் இருக்கலாம், புறக்கணிக்கலாம்; அவர் அன்பறியாது அவமதிக்கவோ, தூற்றவோ, வெறுக்கவோ கூடச் செய்யலாம். தம் அன்பு காரணமாக, தாம் நலம் செய்த உணர்வு ஒன்றே அவர்களுக்குப் போதிய தூண்டுதலும் பரிசும் ஆகும். இத்தகைய தகுதியையே வள்ளுவர் புகழ் என்கிறார். வானம் வழங்குவதுபோல, கைம்மாறு கருதாத இத்தகைய அருட்பண்புடையாரையே வள்ளுவர் ஒழுக்கத்து நீத்தார், அந்தணர், பகவர் எனச் சிறப்பித்தார். அவர்கள் இன்பம் கலப்பற்ற இன்பம், அழிவில் இன்பம், என்றும் வளரும் இன்பம். ஏனெனில் அஃது அவர்கள் தோல்வியிலும் மாள்விலும், வெற்றியிலும் வாழ்விலும் ஒருங்கே இன்பம் பயப்பது. இனவாழ்வுடன் ஒன்று பட்ட இன்பமாக அது நிலவுவது ஆகும். உயிர்களும் மனிதனும் பொதுவாகத் தத்தமக்கென்றே இன்பக் கருவிகளையும் இன்பத்தையும் நாடுவது இயல்பு. ஆனால், இயற்கை இன்பத்தை இனவாழ்விலேயே புதைத்து வைத்திருக் கிறது. தமிழர் இன்பத்தின் இந்த நுட்பத்தை மிகப் பழங்காலத் திலேயே கண்டுணர்ந்திருத்தல் வேண்டும். இன்பம், இனம் என்ற சொற்களின் தொடர்பு இதைக் காட்டுகிறது. ஆனால், திருவள்ளுவர் அரியதோர் இயற்கை உயிருவமை கண்டு அதன் மூலம் இவ்வுண்மையை விளக்குகிறார், அடிக்கடி வலியுறுத்துகிறார். ‘அன்போ டியைந்த வழக்கென்ப, ஆருயிர்க்கு என்போ டியைந்த தொடர்பு’ ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர், அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு!’ இங்கே இரண்டு குறட்பாக்களிலும் ‘என்பு’ என்பதை ஆகுபெயராக ‘உடல்’ என்ற பொருளுடையதாக உரையாசிரியர்கள் கொண்டுள்ளனர். ஆனால், முதல் குறட்பாவில் உயிர்க்கு என்பது உடலோடுகூடிய உயிர்க்கு அல்லது உயிரினத்துக்கு என்றே நேர்மையாகப் பொருள்படுவது. என்போடியைந்த தொடர்பு உயிருக்கு அன்று, உடலில் எலும்புகள் இணைந்த தசைக்கே. உயிரினத் துக்கு அன்புடன் கூடிய இணைவு உயிரினத்தின் உடலில் எலும்பும் தசையும் கூடிய இடையறா இணைவு போன்றது என்பதே கருத்து. இரண்டாவது குறளில் ‘என்பு’ என்பதனுடன் வரும் ‘உம்’மை உயர்வு சிறப்பும்மை. அன்புடையவர் எல்லாமே—உடம்புகூட, —எலும்புகூடப் பிறர்க்கே உரியதாகக் கொண்டு வாழ்வர் என்று அது பொருள்படும். எலும்பு உள்ளுடற் பகுதி. தசையழிந்த பின்னும் நீடித்து நிற்பது. இடுகாட்டில் மண்ணுண்ட பின்னும், சுடுகாட்டில் எரியுண்ட பின்னும் மீந்து நிற்கும் பகுதியும் அதுவே. தோல், தசை, குருதி, மூளை மட்டுமல்ல, எலும்புகூடப் பிறர்க்குரித்தாக்கி வாழ்வர் மேலோர்! உயர்வு சிறப்பு உம்மையின் தனித்திறம் இதுவே. பிறர்க்காக வாழ்பவர், தம் உடம்பும் பிறர்க்கு உரிமைப்படுத்துபவர் நாடும் புகழ் புறப்புகழ் அன்று என்பது தெளிவு. அவர்கள் பெறும் இன்பம் மக்கள் நலன் அல்லது அகப்புகழேயாகும். அன்பு இயல்பாக உடையவரே ‘சிறப்பாக’ இன்பம் உடையவர் என்பதையும் வள்ளுவரே வலியுறுத்தியுள்ளார். ‘அன்புற் றமர்ந்த வழக்கென்ப, வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு’ இந்த இன்பம், இந்த அகப்புகழ் இன இன்பமே. அதுவே இறவாப் பிறவா இன்பம், பேரின்பம், அதுவே இறைப்பண்பு. சிறப்பென்னும் சொல் இக்குறட் பாவில் இன்பத்தைக் குறித்த அடைமொழியாகக் கூறப்பட்டுள்ளது. இதே சொல்லைப் பேரின்பத்தைக் குறிக்கும் சுட்டாகப் பிறிதொரு குறட்பா கையாண்டுள்ளது. ‘பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்ப தறிவு.’ தனிமனிதன் இன்பம் தனிமனிதனைச் சார்ந்ததன்று, அது தனிமனிதன் கடந்த அகப்பண்பு என்பதை அனுபவ வாயிலாகவே காணலாம். இன்பத்தை ஒருவன் மற்றொருவனுடன் பகிர்ந்து கொள்ளும்போது, அந்த இன்பம் பாதியாவதில்லை. இருமடங்கு பன்மடங்கு பெருக்கமுறுகிறது. அதே சமயம் துன்பம் அவ்வாறு பகிரப்படும் சமயம் அது தன் பாதியளவிலல்ல, பேரளவிலேயே குறைகிறது. உண்மையில் அன்புடையாருடன் பங்கு கொள்ளும் துன்பம், துன்பத்தில் ஆறுதல் தரும் அரையின்பம் ஆகிறது. பிறர்க்காக ஏற்கும் துன்பமோ, அன்பை எதிர்பாராமல், அன்பைப் பரப்பி வழங்கி ஏற்கப் படுவதாகலின், இன்னும் பெரிதான, எல்லையற்ற இன்பம் அளிக்கிறது. துயர் நாடகங்களில், உயர்வீறுடைய பண்பாளர்படும் துன்பம்-அழிவுகூட - காண்பவர்க்குச் சிறுதிற-இன்ப துன்பங் கடந்த ஓர் உயர் அமைதி தருதல் இதனாலேயேயாகும். பாரிய கலையமைதியுடைய கட்டடங்களைக் கண்டு களிப்பவர் அடையும் வீறமைதியுடன் இது ஒப்புடையது. பேரின்பத்தின் ஒரு சாயலே இஃது என்னலாம். குடும்ப இன்பமும், சமுதாய இன்பங்களும், அருளாளர் இன்பமும் இனச்சார்புடையவை என்பதைப் பலர் எளிதில் ஒப்புக்கொள்வார்கள். ஆனால், எல்லா இன்பமும் இனச்சார் புடையதே என்பது மேலீடாக எளிதில் தோற்று வதில்லை. சிறப்பாக, செல்வத்திலும் ஆதிக்கத்திலும் நாட்டம் உடையவர் வாழ்வில் இனப்பாசம் இடம்பெறுவது எவ்வாறு என்று எவரும் கேட்கத்துணிவர். ஆனால், மேல்திசை அருளாளரான கார்லைல், இர°கின், டால்°டாய் ஆகியோர் இலக்கியப் பண்புகள் முழுவதும் இதனை வலியுறுத்திப் பலவகை விளக்கங்கள் தர முயன்றுள்ளன. மனிதப் பண்புடன் தொடர்பற்ற நிலையில் செல்வ இயலும், அரசியலும் ஆய்ந்த மேலை ஆராய்ச்சியாளர் சூழலில், இதனை வலியுறுத்தும் தேவை அவர்கட்கு மிகுதி ஏற்பட்டது. அவர்கள் வலியுறுத்திய பின்கூட, மேலையுலகமும் அதைப் பின்பற்றித் தற்கால நாகரிக உலகமும் அவ்வுண்மையை இன்னும் காணாது உழன்றே வருகின்றது என்னலாம். ஏனெனில், அவ்வருளாளர் உரைகள் இலக்கிய அழகுரைகளாக, சமயப் புனைவான உயர்வு நவிற்சியுரை களாகக் கொள்ளப்பட்டு வருகின்றனவேயன்றி ஆய்வுரைகளாக மதிக்கப்படு வதில்லை. கீழ்த்திசையில் காந்தியடிகளின் கோட்பாடுகளும் இதுபோலவே உயர் சமய உரையாக ஒதுக்கப்படுகின்றதேயன்றி வாய்மை யுரையாக உணரப்பட வில்லை. செல்வத்தையும், வறுமையையும் மேலைச் செல்வநூலார் இயல் ஆராய்ச்சிகளோடொப்ப உயிரிலா இயற்கையாற்றல் களாகவே ஆய்ந்துள்ளனர். இது முற்றிலும் சரியன்று. அத் துறை உயிர்நூல், சமுதாய நூல்களுடன் தொடர்புபடுத்தியே ஆராயப்படுதல் வேண்டும். செல்வமும் வறுமையும் மனித இனத்துக்கு மட்டுமே உண்டு. விலங்கு பறவை உயிரினங்களுக்குக்கிடையா. இவை மனிதர் செயற்கையாக வளர்த்துக்கொண்ட சமுதாயப் பண்புகள் என்பதை இது தெள்ளத் தெளியக் காட்டுகிறது. விலங்கு, பறவை முதலிய உயிரினங்களுக்குச் செல்வம் என்பது இயற்கை வளமும் தம் சூழல் வாய்ப்பு மன்றி வேறன்று. வறுமை என்பதும் இவற்றின் குறையன்றி வேறாகாது. மனித சமுதாயத்திலே இயற்கை வளத்துக்கும் தனி மனிதனுக்கும் அதாவது நுகர்பவனுக்கும் இடையே சமுதாயம் ‘செல்வம்’ என்ற தடையாணை எழுப்பியுள்ளது. இயற்கை வளத்தைத் தனி மனிதன் பெறமுடியாமல் அது இரண்டு வகையில் தடுக்கிறது. முதலில் அஃது இயற்கை வளமிருந்தும் செல்வமில்லாமல் தனிமனிதன் அதனை நுகர முடியாமற் செய்கிறது. இரண்டாவது செல்வம் சமுதாயத்தில் ஒரு புறம் ஒரு சிலரிடத்தில்-சிறப்பாக உழையாதவரிடம் குவிவதால், பெரும்பாலோர், சிறப்பாக உழைப்பவர் அந்தச் செல்வத்தைப் பெறமுடியாமல் இயற்கை வளத்தையோ தம் உழைப்பின் பயனையோகூடப் பெற முடியாமல் தடுக்கிறது. இதனால் உலகுக்கு ஏற்படும்-ஏற்பட்டு வரும் அழிவு இவ்வளவு அவ்வளவு அன்று. ஒரு புறம் உழைத்துச் செல்வம் உண்டுபண்ணுபவர் உணவு உடை உறையுளின்றி அழிகின்றனர். மற்றொருபுறம் உழையாதவர் கழிமிகை நுகர்வால் அழிவுறுகின்றனர். இதுபற்றிச் சிந்தித்த மேலையுலகின் முதல் சமுதாய, பொருளியல் அறிஞர் கார்ல்மார்க்°தாம். ஆனால், கார்ல்மார்க்° கூடச் செல்வத்தைச் சமுதாயப் பண்பாக, மனிதப் பண்பாக, இனப் பண்பாகக் காணவில்லை. அஃது இயற்கைக்கு மாறான செயற்கைப் பண்பு என்ற புதிரையும் அவர் முற்றிலும் விடுவிக்கவில்லை. செல்வத்தால் இன்பம் நாடுபவர் அதனைப் பெறாமலே போவதில்லை, சிறிதளவான இன்பம், மகிழ்ச்சி அல்லது மனநிறைவு கொள்வதுண்டு-அதுவே உலகில் செல்வச் சகடத்தை ஒட்டி வருகிறது. இந்த இன்பத்தின் இயல்பை நாம் ஆராய்ந்தால். இன்பத்தின் அடிப்படை இயல்பை அதுவே காட்டும். செல்வத்தில் மகிழ்ச்சி காண்பவர் அதனால் வறுமை, பசி, விடாய், வாழ்விடப் பஞ்சம் நீங்கப் பெறுகின்றனர். அவர்கள் தற்காலிக மகிழ்ச்சி இத்துன்ப நீக்கமே. இதன் மூலம் அவர்கள் பெறும்பயன் சமுதாயத்திலும் இனத்திலும் அவர்கள் பெறும் இடமும் தொடர்புமே. ஏனெனில், இவை குறைந்தால்கூட, மக்கள் சாக விரும்புவதில்லை. நோய்களில் அலைக்கழிவுற்றால், முதுமை நலிவுகளால் தொல்லைப்பட்டால்கூட, எவரும்,—இனத்துக்காக மாள முற்படும் அறவோர், அருளாளர் நீங்கலாக, வேறு எவரும்-மாள ஒருப்படுவதில்லை. இந்த உயிரவா இன அவாவேயாகும். செல்வத்தில் மனநிறைவு கொள்பவர் வறுமை நீக்கம் கழிந்தும் செல்வம் ஈட்டுவர். போட்டி, இறுமாப்பு ஆகிய பண்புகள் உடையவர் மேன்மேலும் செல்வம் ஈட்டிக் குவிப்ப திலேயே வாழ்வு முழுவதும் போக்குவர். செல்வம் வாழ்வுக்கு ஒரு கருவிமட்டுமே என்பது தெரிந்தும், கருவி பெருக்குவதிலேயே அவர்கள் இன்பங்காண்பர். இந்த இன்பத்துக்கு-மனநிறைவுக்குக்—காரணமான போட்டி, இறுமாப்பு ஆகியவை சமுதாயப் பண்புகளே என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இஃது எளிதில் ஆதிக்கமாகவும் மாறிச் செயலாற்றவல்லது. இம்மூன்று குணங்களும் அன்பின் தன்மை உணராதவர்களின் இயற்கையான இன ஆர்வமேயன்றி வேறன்று. போட்டி நட்புக்கும், இறுமாப்பு ஒப்புரவுக்கும், ஆதிக்கம் அடிமைத் தனத்துக்கும் எதிர்ப்பண்புகள் மட்டுமல்ல—அவற்றுக்கு இனமான பண்புகளும் ஆகும். இன எதிர்ப்பண்பாக இவை மாறுவதை நாம் வாழ்வில் பல இடங்களிலும் காணலாம். உண்மை இன்பம் அன்பு ஒன்றினாலேயே பெறப்படும் பண்பு என்பதனை இவை விளக்கவல்லன. மனிதன் இன்ப நுகர்வுக்குரிய உண்மையான கருவி செல்வமன்று, அன்பே. அவ்வின்ப நுகர்வுக்குரிய பொருள் உயிரிலா இயற் பொருள்களும் அன்று; தன்னில் தாழ்ந்த உயிரினங்களும் அன்று. தன்னொத்த உயிரான மனிதனே. மனிதத் தொடர்பே இல்லாத இடத்தில் மனிதன் இதை உணர்கிறான். இனம், மொழி, நாடு, நாகரிகம் கடந்து தனி மனிதன் தன்னொத்த மனித இனத் தோழமைக்கு ஏங்குகிறான். மனித இனத் தோழமையே கிட்டமுடியாத இடத்தில், உயிரினத் தோழமைகூட அவனுக்கு அரும் பொருளாகின்றது. இதுவும் இல்லாத இடத்தில் இவற்றின் தொடர்பேனும் அவனுக்குத் தேவையாகிறது. இன்பப் பொருள்களிலும் இன்பத்துக்குரிய தோழமை யிலும் சில சமயம் சமுதாயப் பண்பே போட்டியையும் தற்பெருமையையும் ஆதிக்கத்தையும் வளர்க்கிறது. இவை தன்முனைப்போடுகூடிய இன ஆர்வமேயன்றி வேறன்று. ஏனெனில், இப்போட்டியே பொருள் மீது ஆர்வம் வளர்க்கிறது. கிட்டாத பொருளில் ஆர்வம் ஏற்படுவதன் காரணம் பிறர்க்குக் கிட்டாதது தனக்குக் கிட்டுதல்வேண்டும் என்பதற்காகவே. பல இடங்களில் போட்டி அகன்றபின் இந்த ஆர்வம் குறைவது காணலாம். ஆதிக்கமும் இதுபோன்றதேயாகும். ஆதிக்கத்துக்கு உதவும் அடிமை நிலை இல்லாதபோது ஆதிக்கவாதியின் நிலையும், ஆதிக்கத்தை வெறுத்தொழித்தபின் ஆதிக்கவாதியின் தொடர்பு அற்ற நிலையை எளிதில் ஏற்கமுடியாத அடிமையின் நிலையும் உண்மையில் தோழமையிழந்தவன் அடையும் நிலையில் வேறன்று. மனிதன் அடையும் உண்மை இன்பங்கள்யாவும் குடும்பம், சமுதாயம் பற்றியவையே. இரண்டிலும் இனம் நோக்கிய இன்பத்தின் இருபகுதிகள் நிலவுகின்றன. குடும்பத்தின் எல்லை சிறிது. ஆனால், இனத்தின் எல்லையற்ற அன்பு அச்சிற்றெல்லைக்குள் பேரளவு செறிவுற்று வளர்ந்துள்ளது. சமுதாய எல்லை பெரிது. ஆனால், இனத்தின் கீழ்நிலைப் பண்புகள்-விலங்குப் பண்புகள் போட்டி, ஆதிக்கம், கொடுமை, இறுமாப்பு, தன்முனைப்பு, வஞ்சகம் ஆகியவையே அதில் மிகுதியும் நிலவுகின்றன. முன்னதன் உயர் பண்பும் பின்னதன் எல்லையும் கலந்த இணைவே இனப்பண்பு, இன இன்பம் அதுவே ஆகூழின் அடிப்படை; அதை வகுத்தமைப்பவரே அந்தணர், பகவர். மனிதன் அடையும் துன்பங்கள்யாவும் குடும்பப் பண்பின் குறைபாடும், சமுதாயப் பண்பின் குறைபாடுமே யாகும். மேலைநாட்டில் இயல்பாக வளர்ந்த பண்பாடுகளும் நாம் மூன்று வகைகளைக் காணலாம். ஒன்று ஆங்கிலேயர் பண்பாடு. அதில் குடும்பப் பண்பு பேரளவில் நிறைவுடையது. ஆங்கிலேயர் ஒழுக்கமுறை, சமுதாயப் பழக்க வழக்கங்கள், அரசியல் வாழ்வு அல்லது தேசியக் குடியாட்சிப் பண்பு ஆகிய யாவும் குடும்பத் தளத்தை அடிப்படையாகக் கொண்டவை. இதை அவர்கள் வாழ்விலும் அரசியலிலும் இலக்கியத்திலும் சமயத்துறையிலும் கூடக் காணலாம். பிரஞ்சு மக்களிடம் குடும்பப் பண்பு குறைவு, சமுதாயப் பண்பு நிறைவுடையது. பிரஞ்சுப்புரட்சி இதனை நன்கு எடுத்துக்காட்டிற்று. பிரஞ்சு மக்கள் வாழ்வு, அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய யாவற்றிலும் இதனைக் காணலாம். இத்தாலியரிடம் குடும்பப் பண்பும் குறைவு; சமுதாயப் பண்பும் குறைவு. ஆனால், இனப்பண்பு, மனிதப்பண்பு மிகுதி. இத்தாலிய இலக்கியத்தில் மட்டுமன்றி, தென் ஐரோப்பிய இடைக்கால இக்கால, இலக்கியம் முழுவதிலும் இதனைக் காணலாம். கீழ்த்திசையில் குடும்பப் பண்பின் நிறைவு, சமுதாயப் பண்பின் நிறைவு, இனப்பண்பின் நிறைவு ஆகிய முத்தளங்களின் முழு வாழ்வைத் தமிழர் குறிக்கொண்டனர். காதல் (களவியல்), கற்பு, வீரம், அறிவு ஆகிய நான்கும் நிறைந்த அகப்புற இலக்கிய ஓவியங்கள் இதனைக் காட்டும். ஆனால், இந்நிறை பண்பை ஒரே வாழ்க்கை இலக்கணமாக வகுத்து, ஒரே இன்பக் குறிக்கோளின் படிகளாக்கி, அந்த இன்பக் குறிக்கோளையே இறைப் பண்பு களாகக் காட்டியவர் தமிழரின் ஆதி பகவனாகிய திருவள்ளுவரே. அவர் தாம் கூறும் ஆதிபகவன் வழி வந்த ஒரு புத்தூழியின் ஆதிபகவரே ஆவர். சிரிக்காதவன், தாய்நாட்டுப்பற்று இல்லாதவன். வீர விளையாட்டுப் பண்பற்றவன்-இவர்கள் கொலைகாரர்கள் என்று ஆங்கிலேயரும் ஆங்கிலக் கவிஞரும் கூறுவதுண்டு. இனம், சமுதாயம், குடும்பம் ஆகிய மூன்று துறைகளின் உள்ளார்ந்த பண்புகளை இவை குறிக்கும். பெருங் குற்றவாளிகள் வாழ்க்கைப் பின்னணிகளை ஆராய்ந்தால், அவர்கள் குற்றவாளிகளல்லர், குற்றத்துக்கு ஆட்பட்டவர்கள் என்பது காணப்படும். அவர்கள் குடும்ப வாழ்வின் குறை, சமுதாய வாழ்வின் குறை, இன வாழ்வின் குறை நீக்கப்பட்டால், அவர்கள் குற்றங்களும் குறைவது உறுதி. இவ்வகைச் சீர்திருத்தம் அண்மையில்தான் கனவு காணப் பட்டுள்ளது. ஆனால், கனவாளர் சிலர் தவிரப் பொதுவாக உலகம்—உலக ஆட்சியாளர்-அதை இன்னும் நன்கு உணரவில்லை. இன்பம் -—இன இன்பம் இன்னதென்ற அறிவு - வள்ளுவர் வாழ்க்கை ஒழுக்க அறிவு-உலகில் வளர்ந்தால், குற்றங்கள் மறையும். வறுமை தங்காது. மனித இனம் மனிதப் பண்பு கடந்து மனித அல்லது தெய்வப்படி அடையும். இடையறா இன்பமாகிய எல்லையற்ற வளர்ச்சி அப்போது உலகுக்குக் கைவந்த பொருளாய்விடும். வள்ளுவர் கண்ட இந்த இன இன்பம்—உயிர் இன்பம்—இன்பத்துள் இன்பம் கண்டு அதை உலகில் பரப்புவோமாக. 13. உடல்நலம், உளநலம், இனநலம் ஐம்பொறி புலன்கள்; தோல், தசை, குருதி, நரம்பு நாடிகள், நிணம், எலும்பு, உள்ளெலும்பு; தலை, கைகால், நடுவுடற் பகுதி; உணவு, செரிமானம், கழிவு ஆகியவற்றுக்குரிய உறுப்புகள், உயிர்ப்பு உறுப்புகள், இனப்பெருக்க உறுப்புகள்-இவை உயிருடற் கூறுகள், உறுப்பு உள்ளுறுப்புகள். ஐம்புல உணர்ச்சிகளுக்கு வாயில்களே மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் பொறிகள். இவை புறஉறுப்புகளாயினும் இவற்றின் உணர்வுகளாகிய புலன்கள்-ஊறு, சுவை, காட்சி, முகர்வு, கேள்வி என்ற ஐம்புலன்கள்-அக உறுப்புகள் ஆகும். ஆறாம் அறிவாகிய உள்ளம் புறமும் அகமும் கடந்த உள்ளுயிருறுப்பு ஆகும். தலை, கை, கால், நடுவுடற்பகுதி ஆகியன உடலின் புறப்புற உறுப்புகள், பெரும்புற உறுப்புகள். உயிரினத்துக்கு உருவம் தருபவை இவையே. தோல், தசை, குருதி, நரம்பு நாடிகள், நிணம், எலும்பு, உள்ளெலும்பு, மூளை ஆகியவை உறுப்புகளல்ல. உடற்கூறுகள். ஐம்பொறிகளுள் ஒன்றாய்- முதன் முதல் எழுந்த பொறியான மெய்-இவற்றால் ஆக்கப்பட்டதே. மற்றப் பொறிகளுக்கு இடமாவதும், கால் முதலிய புறப்புற உறுப்புகளால் ஆக்கப் படுவதும், உடலின் முழுப்பெரும் பகுதியாவது இதுவே. புறப்புற உறுப்புப் போலன்றி, உடற்கூறாக, உடலின் மொத்த உறுப்பாக இயங்கும் இந்த மெய் உண்மையில் உடல் மொத்தத்தின் நிறை உறுப்பேயாகும். இதில் தோல், தசை, குருதி, நிணம் ஆகியவை புறக்கூறு அல்லது புற உறுப்பாக இயங்குகின்றன. உணவு, செரிமான, கழிவுறுப்புகள் அக உறுப்புகள். உயிர்ப்பு உறுப்புகள், புறஉறுப்பின் உயிர்க்கூறாகிய குருதியோட்டத்தை இயக்குபவை. அவை அகவுறுப்பிலும் அகநிலை வாய்ந்த உள்ளுறுப்புகள். இவையனைத்தையும் தாங்கும் உள்ளுடல் போல்வது எலும்புக்கூடு. அஃது உடலுக்கு வலுவும் வடிவும் தருகிறது. உள்ளுறுப்புகளையே இயக்கும் உயிர்ப்பகுதி நாடி நரம்புகள். இவை உள்ளுடலின் உள்ளிருக்கும் உயிர்ப் பகுதியாகிய உள்ளெலும்பு, மூளை ஆகியவற்றால் இயக்கப்பட்டு, உள்ளுறுப்புகளை இயக்கிப் புற உறுப்புகளையும் புறப்புற உறுப்புகளையும் ஆட்சி செய்கின்றன. குருதியோட்டம், உயிர்ப்பு உடலின் புறஉயிரியக்கம். அவை உடலென்னும் சிற்றுலகுக்குரிய போக்குவரவுத் துறையாகவும், தேவை மிகைச் சரக்குகளின் புடைபெயர்ப்பரங்கமாகவும் செயலாற்றுகின்றன. நாடி நரம்புகள் அதன் அகவுயிரியக்கம்-உடலின் செய்தியனுப்பு அரங்கமாகவும் ஆணையாட்சி அரங்கமாகவும் இயங்குகின்றன. அவை மூளை உள்ளெலும்புகள் கிட்டத்தட்ட உயிர் மய்யங்களாய் இயங்குவன. உயிர் மய்யத்திலிருந்து நேரே அகவுறுப்பு, புற உறுப்புக் கடந்து இயற்கையுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் உயிருடலின் வெளிநாட்டரங்கமே ஐம்பொறிகள். புறப்புறம், புறம், அகம், உள்ளகம், உயிர்ப்புறம், உயிரகம், உயிர்மய்யம் என்னும் இந்த உடலுயிர்க் கூறுகளைப் பிரித்துணராமலே உடலியல் நூலார் நுணுக்க ஆராய்ச்சிகள் செய்வர். அவர்கள் உறுப்பாராய்ச்சி, கூறுநுண் கூறாராய்ச்சிகள் நடத்துவர். ஆனால், முதல்-சினைத் தொடர்பு, உயிர் உடல் தொடர்புகளின் ஆராய்வில் அவர்கள் இன்னும் முனையவில்லை. உயிருடலின் இந்தக் கூறுபாட்டமைதியும் உறுப்பமைதியும் எல்லா உயிரினங்களிலும் ஒரேபடியாக இல்லை. அது மட்டுமன்று. இவ்வமைதிகள் உயிரின வளர்ச்சிப்படி உயருந்தோறும் வெங்காயத்தின் அகப்புறத்தொடர்பு போலப் படிப்படியாகப் புறமிருந்து உள்நோக்கித் தொடக்கத்திலிருந்து முதிர்ச்சி நோக்கி விரிவுற்று மலர்ச்சியுறுவது காணலாம். ஐம்பொறிப் புலன்கள் உயிரினங்களில் ஓரறிவு முதல் ஐந்தறிவு, ஆறறிவுவரை வளரும் வளர்ச்சியைத் தொல்காப்பியர் குறிக்கண்டார். ஓரறிவாகிய முதல் பொறிப்புலன் முழுவடிவான மெய்யே என்றும் கண்டோம். புறப்புற உறுப்புகளும் உள்ளுறுப்புகளும் எலும்புக்கூடும் மூளையும் ஆகிய உறுப்பமைதி முழுதும் ஓரறிவு நிலைக்குப் புறம்பான உள் வளர்ச்சிகளே. தனி உயிரின் வளர்ச்சி பொதுவாக உள்நின்று புறம்நோக்கிய வளர்ச்சி. ஆனால் காலத்தில் வளரும் இந்தப் படிவளர்ச்சி புறநின்று அகநோக்கிய வளர்ச்சி என்பதை நாம் இங்கே குறித்துக் காணல் வேண்டும். உயிர் நூலாரும் உயிரியல் நூலாரும் உயிர் வளர்ச்சி நூலாரும்கூட இப்பண்பில் கருத்துச் செலுத்தவில்லை. ஐம்பொறிப் புலன்கள்-புறவுறுப்புகள்-அகவுறுப்புகள்-உள்ளுறுப்புகள்-உயிர் உறுப்புகள் இவை உறுப்பமைதி சார்ந்த உயிர்வளர்ச்சிப் படிகள். ஐம்பொறிகளின் வளர்ச்சி இவ்வளர்ச்சிகளில் முதல் வளர்ச்சி மட்டுமன்று-கடைசிவரை வளர்ந்துவரும் தனி வளர்ச்சியும், முழுநிறை வளர்ச்சியும் ஆகும். ஐம்பொறிப் புலன்களின் ஆக்கமே உள்ளம், உணர்ச்சி, அறிவு ஆகிய எல்லாவற்றுக்கும் அடிப்படை. தனி உயிர்க்கும் இயற்கைக்கும்; தனி உயிர்க்கும் இனத்துக்கும் தொடர்பு வகுக்கும் உயிரின் செயற்கூறு இதுவே; மீந்த உறுப்புகள் உயிர் வாழ்வுக்கும் இயற்கை வாழ்வுக்கும் தொடர்பு வகுத்து உயிர் இயங்கச் செய்பவை மட்டுமே. இவ்விரண்டு தொகுதிகளின் வேறு பாட்டையே சமயவாணர் உயிர்-உடல் வேறுபாடு என்று வகுத்தனர். மனிதன் இன்பவாழ்வுக்கு உயிர் வாழ்வு அடிப்படை. இனவாழ்வு அதன் கட்டமைப்பு. அவ்வடிப்படையைப் பேணாவிட்டால், கட்டமைப்புப் பேணமுடியாது. தன்னலம் இந்த அளவிலேயே பொதுநலத்தின் இன்றியமையா முதற்படி ஆகின்றது. பண்பார்ந்த இத் தன்னலத்தை உடல்நலம், உளநலம் என்று இரண்டாக வகுக்கலாம். உடல்நலம் உடல் வலுவையும், உடல்வலு உணவின் ஊட்டத்தையும் பொறுத்ததென இக்கால இயல்நூலார் கருதுகின்றனர். பழங்காலச் சமயவாணர் அனைவரும், திருவள்ளுவரும் இவ்வாறு கருதவில்லை. அளவான உணவு-நிறையளவான உணவன்று, உடல் வளர்ச்சியைப் பெருக்கும் உணவன்று-உடல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் உணவு-தேவைக்கு மட்டுமே உரிய உணவின் இன்றியமையாமையை அவர்கள் வற்புறுத்தினர். குறைந்த அளவில், ஆனால் இன்றியமையா அளவுக்குக் குறையாத இடத்தில், உணவு குறையுந் தோறும் நலம் மிகுதி. உடல்வலு குறையுந் தோறும் ஆன்மவலு மிகுதி என்றுகூடச் சமயவாணர் வலியுறுத்தினர்: இந்நாளில் இயல்நூல் இத் திசையில் கருத்துச் செலுத்தவுமில்லை. இதுவகையில் அவர்கள் வள்ளுவர் பொருளையோ, சமயவாணர் கருத்தையோகூடத் துருவிக் கண்டிலர். உடல் வலிமை வேறு, உடல் நலம் வேறு. உடலின் இனநலம் அல்லது இன்னலம் வேறு. உடல் வலிமையுடையார் உணவின் ஊட்டத்தாலேயே வலிமை பெறுகின்றனர் என்பதில் ஐயமில்லை-இவ்வலிமை நோய் நலிவுகளைத் தடுக்க உதவக்கூடும் என்பதும் உண்மையே. ஆனால், வலிமையுடையவர்கள் திடுமென நோய்க்காளாதலும் இடர்க்கு உள்ளாதலும் காணக்கூடாத செய்தியன்று. உடல்வலிமையற்ற பலர் நோயற்ற வாழ்வும், நலமும், நீடித்த வாழ்நாளும் இனப் பெருக்கமும் உடையவராயிருத்தலும் காணக்கிடையாத காட்சிகளல்ல. இவற்றின் விளக்கம் இயல்நூல் கருதாத ஒன்று. உடல் வலு பெரிதும் புறப்புற உடலின் தசை வலிமை சார்ந்தது. ஆனால், உடல் நலம் அதுமட்டும் சார்ந்ததன்று. புறவுறுப்புகளின் வளர்ச்சி சரிசம வளர்ச்சியாய் இருத்தல் வேண்டும். இதுவே உடல்நலம் பெறும் நிலை. பழங்காலக் கலைத்தொழில்கள் இதைப் பேணின. இயந்திரத் தொழில் தொழிலாளர்க்கு இந்நலம் அளிப்பதில்லை என்பதைக் காந்தியடிகளும் மேலை அருளாளரும் சுட்டிக் காட்டியுள்ளனர். தவிர, புற உடலின் தசை ஆற்றலைத் தாங்குவது உள்ளுறுப்புகள், உயிர் உறுப்புகள், நாடி நரம்புகள் ஆகியவற்றின் ஆற்றலே. உடல்வலு பெரியதாயினும் சிறியதாயினும், இவ்வுள்ளுறுப்பு களின் வலு அதைவிட உரமிக்கதானால், உடலின் சமநிலை அடிப்படைச் சமநிலையா யமையும். அதுவே நீடித்த வாழ்வுக்கு வழிவகுப்பது. இதுபோல, புறவுறுப்பு, உள்ளுறுப்புகள் ஆகிய இரண்டையும் தாங்கும் வலிமை அக உடலுக்கு இருந்தாலன்றி நீடித்த வாழ்வு, இனநலம் ஆகிய இன்னலங்கள் ஏற்பட மாட்டா. கீழ் உயிரினங்களில் இனப் பெருக்கம் மிகுதியாயிருப்பதும், மேல் உயிரினங்களில் அது குறைவுற்று உயிர்ப் பண்பு மேம்படுவதும் இதனாலேயே. இம்மூன்றன் வேறுபாட்டினையும் ஓர் உவமையால் விளக்கலாம். புறவுறுப்பின் வலிமையினால் உரம் பெற்ற உடலானது. மேல்மாடி உறுதியாகக் கட்டப்பட்ட கட்டடம் போல்வதாகும். அதன் வலுவே கட்டடத்தின் சமநிலை கெடுத்து அதற்கு நிலையாமையையும் விரை அழிவையும் தருவதாகும். புற உறுப்பின் சமநிலையாலும் அகச்சம நிலையாலும் நிலையான அமைதி யுடைய உடலானது சுவரும் தளமும் உறுதியாயமைந்த கட்டடத்தைப் போன்றது. ஆனால், உள்ளுடல் மற்ற இருபகுதிகளையும்விட உறுதி வாய்ந்ததாய், அதன் மூலம் இனநலம் இன்னலம் உடையதாய மைந்தால், அது மேலும் எத்தனை மாடி எழுப்பினாலும் தாங்கும் படி ஆழ்ந்தகன்ற அடித்தளம் உடைய கட்டடம் போன்றதாகும். மூவகை உடற் கூறுகளையும் பேணும் உணவுகளையும் பழக்க வழக்கப் பண்புகளையும் பண்டைத் தமிழர் முக்குணக் கூறுகளாக-ஆற்றல் (தமம்), ஆர்வம் (இராசதம்), உணர்வு (சாத்துவிகம்) என வகுத்தனர். இக்கூறுகளின் முழு மெய்ம்மை காணாமலே இம்முக்கூறுகளையும் பகவத்கீதை வகுத்துக் கூறுவது காணலாம். வள்ளுவர் உச்ச உயர் கூறான உணர்வையே விதந் தோதினாராதலால், உணவு, மருந்து ஆகிய செய்திகளில் இம்முறையையே ஓதினார். ‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு, அருந்தியது அற்றது போற்றி உணின்’ `அற்றால் அளவறிந் துண்க. அஃதுஉடம்பு பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு.’ உணவு அற்று அதாவது முற்றிலும் செரிமானமுற்றுப் பசிக்கேற்ற தேவையளவும் பண்புமுடைய குறையளவும் உணவு உண்ணுதலாலேயே உடல்நலமும் நீடுவாழ்வும் எய்தப்பெறும் என்று வள்ளுவர் கூறுகிறார். உணவின் அளவு மட்டுமன்றி வகையும் உயிர் முக்கியத்துவம் உடையது. ‘மாறல்ல துய்க்க, துவரப்பசித்து’ என இதனைக் குறள் வகுக்கின்றது. குறையளவு தேவை உணவு இது பேணுகிறது. வேண்டிய உணவு மட்டும் ஏற்கும் ஆற்றலை இது செரிமான உறுப்புகளுக்குத் தருகிறது. ‘இழிவறிந்து உண்பான்’ என்று வள்ளுவர் இதனை வலியுறுத்துகிறார். உடல்நலத்தை அடிப்படையாகக் கொண்டதே உளநலம். ஆனால், அஃது உடல் வலிமையை மட்டும் பொறுத்ததன்று. சமநிலையால் வரும் நலத்தையும், அச் சமநிலையால் வரும் இன்னமைதியையும் பொறுத்ததாகும். உளநலத்தின் மூன்று படிகள் உணர்ச்சி நலம், அறிவு நலம், இன நலம் என்பன. அகப்புறச் சம நிலையால் உணர்ச்சி நலமும்; அக உடலாற்றலாலும் உள்ளமைதியாலும் அறிவு நலமும், உள்ளுயிர், உள்ளுடல், அக உடல், புற உடல் ஆகியவற்றின் இன்னமைதி யால் இன நலமும் பேணப்படுகின்றன. சிறப்பாக இன உணர்வுடையவன் இனத்தின் மதிப்பையோ, அன்பையோ உதவியையோ தான் எதிர்பாராமல், தன் மதிப்பும் அன்பும் உதவியும் அதன்மீது பொழிகிறான். இன்னல்களையும் அதற்காக ஏற்கிறான். இவற்றாலன்றி எவரும் உளநலம் அடைதல் அரிது. ஏனெனில், உளநலம் என்பது இறுமாந்த வெறுப்புத் தன்னிறைவன்று. அவ்விறுமாப்புத் தன்னைச் சுற்றிலும் வெறுப்பு உண்டுபண்ணி, வீழ்ச்சிக்கே வழிவகுக்கும். மதிப்பும் அன்பும் அது கோருவதன்று. இவை தற்காலிக ஆறுதலே தரும். இனங் கடந்த இன்னலத்தாலேயே, இனத்துக்கே உதவும் இன நலத்தாலேயே அதைப் பெறமுடியும். ‘இனம்பேண உளம்பேணு, உளம்பேண உடல்பேணு, உடல்பேணச் சமநிலைபேணு’ என்பதே வள்ளுவர் கண்ட முழுநிறை இன்பத்தின் நுட்பம். இதனை ஒட்டியே திருமூலரும், ‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சாரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்று பாடினார். உடம்பை வளர்க்காதிருப்பது தவறு. ஆனால் உடம்பை வளர்ப்பது ஒரு முடிந்த முடிவன்று. மேலும் உடம்பின்றி உயிர் இயங்காது. அதேசமயம் உயிர்ப் பண்பு அல்லது உள்ளுடல் வளர்த்தாலன்றி உடல் மெய்வளர்ச்சி பெறாது. திருமூலர் கூறிய ‘உடம்பை வளர்க்கும் உபாயம்’, ‘மெய்ஞ்ஞானம்’ இதுவே. சமயவாணர் கூறும் ‘உடம்பினில் ஈசன்’ இன நிலையடைந்தோர் காணும் நிறை இன்பக் குறிக்கோளே. உடலுயிர் கடந்து வள்ளுவர் கண்ட உள்ளுயிர் இன்பம், இனநல இன்பமாம் நிறை இன்பம் பேணி மனித வாழ்விலே ஒளியூட்டுவோமாக. 14. குடும்ப வாழ்வு “உலகெலாம் ஒரே குடும்பம்!” இதற்கு மேல் உயர்ந்த உலகக் குறிக்கோள் கிடையாது. ‘நாட்டுக்கு ஒரு தந்தை!’ - இதைவிட அரசனுக்குச் சிறப்புக் கூற எவராலும் ஆகாது. ‘அனைத்துலகுக்கும் தாயான தயாபரன்!’ - இதைக் காட்டிலும் உயர்ந்த ஓர் உவம உருவகம் கடவுளுக்கு வேறு கூறமுடியாது. ‘உடன் பிறந்தார் போன்ற நேசபாசமும், ஒற்றுமையும் உடையவர்கள்!’ - இதனிலும் சிறந்த புகழுரை மனிதர் நட்புக்குக் கிடையாது. சமுதாயம், சமயம், நாடு, உலகம் - இனத்தின் மிகப்பெரும் பரப்புகள் இவையே. குடும்பம் இனத்தின் சிற்றுறுப்பு மட்டுமே. ஆயினும் இனத்தின் உச்ச அளவான பரப்புகளுக்கெல்லாம் குடும்பம், குடும்பத் தலைவரான தந்தை - தாய், குடும்ப உறுப்பினரான உடன் பிறந்தார் உவம உருவில் சிறப்புரையாக, புகழுரை புனைந்துரைகளாக அமைவானேன்? இந்த உச்ச எல்லைகளுக்கெல்லாம் உவமை கூறத்தக்க அதன் உயர் தனிச் சிறப்புகள் யாவை? இன வாழ்வின் அடிப்படைக் கூறு, குடும்பமே. ஏனெனில், இனத்தின் சிற்றுறுப்பு, மூல அடிப்படைக் கூறு தனி உயிரன்று, குடும்பமே. குடும்பத்தின் கூட்டே சமுதாயம். அதன் தொடர்ச்சி, தலைமுறை ஆகிய இரண்டும் கூடியதே இனம். குடும்பத்தில் கால் வைத்தவுடன்தான் உயிர் இனவாழ்வில் புகுகிறது. குடும்பம் என்பது பால்வேறுபாட்டால் மட்டும் ஏற்பட்ட தன்று. அதே சமயம் பால்வேறுபாடு தோன்று முன் அஃது ஏற்படமுடியாது. அது பால்வேறுபாட்டின் அடிப்படையில் அமைந்ததேயாகும். பால்வேறுபாடற்ற தொடக்க உயிரினங்களில், இனம் பெயரளவில்தான் நிலவுகிறது. உண்மை இனவாழ்வு என்பது கிடையாது. அஃது உயிர்களின் ஒரு கும்பல். அதன் இனப் பெருக்கம் என்பது தொகைப் பெருக்கமும் அழியாத் தொடர்ச்சியும் மட்டுமே. ஒவ்வொரு தனி உயிருமே ஒரு தலைமுறையாக வளர்ச்சியின்றி ஏற்றத் தாழ்வின்றி நீடிக்கிறது. வாழ்வோ, வளர்ச்சியோ, இனப்பண்போ, அவற்றில் இடம் பெறவில்லை. இந்நிலையில் தொகைப் பெருக்கம் ஒன்று தவிர, இத்தொடக்க உயிரினத்துக்கும் உயிரிலா இயற்கைப் பகுதிக்கும் வேறுபாடுகிடையாது. இப் பருவத்துக்குரிய உயிரின் இறவாமை இறப்புப் பிறப்புக் கடந்த நிலையன்று. அது பிறப்பு இறப்பு அற்ற நிலை மட்டுமே - இயற்கையின் வளர்ச்சிப் பண்பற்ற அழியாமைப் பண்பு மட்டுமே. பாலினம் தோன்றிய பின்னும் மனித இனத்தில் நாம் காணும் குடும்ப வாழ்வு உயிரினத்தில் உடனே தொடங்கவில்லை. பாலினம் இரண்டு என்ற உயிரின வாழ்வின் இன்றைய பொதுநிலையும் உடனடியாக ஏற்பட்டுவிடவில்லை. சில உயிர்களில் ஒரே உயிரில் ஆண் பெண் இருபாற் கூறுகளும் நிலவின. சில உயிர்களில் ஒரே உயிர் முதலில் ஒரு பாலாகவும் பின் மற்றொரு பாலாகவும் மாறின. சிலவற்றில் ஆண், பெண் என்ற இருபால்களேயன்றி அலி என்ற மூன்றாவது பால் வகையும் நிலவிற்று. தேனீ இனத்தில் அலி இனமே இனமுதல் பாலினமாய் அமைந்துள்ளது. இருபால் வேறுபாடு தெளிவாக உருவானபின் தொடக்கத்தில் பெண் பாலே இனமுதல் பாலாய் இயங்கிற்று. உயர் உயிரினங்களில் இன முதன்மை மெல்ல இருபாலுக்கும் பொதுவான பண்பாக வளர்ந்தது. இன முதல்வராகிய அறிஞர் இனத்தின் பெண்மைக் கூறு ஆவர் என்று திரு.வி.கலியாண சுந்தரனார் கருதியது இவ் ஆழ்ந்த உயிரியல் பண்பு நோக்கியேயாகும். கீழ் உயிரினங்களில் பால்வேறுபாடு தோற்றி, அதனை யடுத்துத் தெளிந்த ஆண், பெண் வேறுபாடு ஏற்பட்ட பின்னர், சில உயிர்களில் அவ்வேறுபாட்டின் அடிப்படையிலே சமுதாயமும், வேறு சிலவற்றில் குடும்பமும் தோற்றின. குடும்பமில்லாச் சமுதாயத்தில் இன்ன ஆணுக்கு, இன்ன பெண் என்ற தனி வகைமுறைத் தொடர்போ, கூறுபாடோ இல்லை. அதுபோலவே ஓர் ஆணுக்கு ஒரு பெண் என்ற வரையறையும் கிடையாது. கூட்டு வாழ்வும் நிலையான தொடர்பும் இல்லை. நாகரிகமற்ற பல மனித இனங்களில்கூட இன்றளவும் இந்நிலை நீடிப்பது காணலாம். இத்தகைய மனித இனங்களிலும் உயிரினங்கள் பலவற்றிலும் தங்கு தடையற்ற விலங்குக்கூடலும் பிரிதலும் நிலவுவதுண்டு. பொது மகளிர் அல்லது விலைமகளிர் போன்ற வாழ்வு அத்தகைய இனங்களில் இருபால்களிலும் நிலவுகின்றது. இன்னும் சிலவற்றில் பெண்டிர் பொதுவுடைமை, ஆடவர் பொதுவுடைமை நிலவுவது காணலாம். குடும்பமில்லாச் சமுதாயத்தைவிடச் சமுதாயமில்லாக் குடும்ப வாழ்வு உயர்வுடையதே. ஆயினும், அது மனித இனம் ‘குடும்பம்’ என்ற சொல்லால் அறியும் இனப்பண்புடைய குடும்பம் அன்று. ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கூடு கட்டி வாழும் அன்றில் போன்ற பறவையின் வாழ்வு இத்தகையதே. கவிஞர் குடும்ப வாழ்வின் உயர்வுக்கு இதனை உவமையாகக் கூறுவ துண்டு. ஏனெனில், குடும்பம் இங்கே சமுதாயத் தொடர்பற்ற தாதலால், குடும்ப உறவு மிகவும் வலிமையுடையதாகிறது. கவிஞர் மனிதக் குடும்பத்துக்கு அதனை உயர் குறிக்கோளுவமையாகக் கூறுவதன் காரணம் இதுவே. ஆயினும், உண்மையில் அஃது உச்சநிலைக் குடும்பம் அன்று. ஏனெனில், குடும்பப் பண்பு சமுதாயப் பண்பாகப் பரவவில்லையானால், அஃது இனமாகவும் வளரமுடியாது. பாலின அடிப்படையில் குடும்பமும் சமுதாயமும் ஒருங்கே அமைந்த யானை, குரங்கு, மனிதன், உயரினப் பறவை ஆகிய இனங்களின் வாழ்வில்தான் ‘குடும்பம்’ உண்மைக் குடும்பமாக, இனச் சமுதாய வாழ்வின் தொடக்கமாக அமைகிறது. உயர் விலங்கு, பறவைகளில் அது குடும்பம் கடந்து சமுதாய எல்லை யளவில் நிலைபெறுகின்றது. மனித இனத்திலேயே அது குடும்பம் சமுதாயம் இரண்டும் கடந்து இன எல்லை நோக்கி வளர்கிறது. சமுதாய அடிப்படையான குடும்பமே மொத்த உயிரின வாழ்வின் முதல் மலர்ச்சிப்படி. அஃது இனவாழ்வு நோக்கித் திரும்பிய நிலையே அதன் புது மலர்ச்சிப்படி. உயிரின வாழ்வில் மனித இனத்துக்குரிய தனி முக்கியத்துவம் தனிச் சிறப்பும் இதுவே - அஃது உயிரினத்தின் ஒரு பேரூழி - விலங்குப் பேரூழி - கடந்து, அடுத்த புதுமலர்ச்சி ஊழி - மனித ஊழி அல்லது தெய்வ ஊழியின் தொடக்கம் ஆகின்றது. குடும்பம் உயிரினத்தின், மனித இனத்தின் இன வாழ்வுத் தொடக்கம்; உயிரின் புதிய இன மலர்ச்சியின் முதற்படி. அதன் முதல் முக்கியத்துவம் இது. ஆனால், அது முதற்படி மட்டுமன்று; ஆலமரத்தின் பாரிய அளவையும் பல நூற்றாண்டுகளடங்கிய வளர்ச்சியையும் கருநிலையில் தன்னகத்தே முழுதுறக்கொண்ட ஆலம் விதை போல, குடும்பம் இனவாழ்வின் முழுப்பரப்பையும் முழு வளர்ச்சிப் பண்பையும் தன்னகம் கருநிலையில் கொண்டு, இனத்தின் முழுநிறை விதையாக இலங்குகின்றது. மனித இனத்தில் அறிஞர் இப்பண்பைக் குடும்பத்தில் இன்னும் கண்டறிய வில்லை. ஆனால், இன உணர்வு உள்நின்று தூண்ட மனித இனக்கவிஞர், கலைஞர் இதனை இயல்பாக உணர்ந்துள்ளனர். உலகின் எல்லா மொழிகளிலும் இலக்கியத்தின் பெரும்பகுதி குடும்பம் பற்றியதாகவே அமைந்துள்ளதன் காரணம் இதுவே. அகம் குடும்பம், புறம் சமுதாயம் - இவ்வகுப்பு முறை மனித இனத்திலே இனஉணர்வில் முந்தி நின்ற தமிழினத்துக்கு மட்டுமே யுரிய பாகுபாடு ஆகும். இதன் நிழலைக் கீழ்த்திசைச் சமய அறிவு நூல்களிலும் சமற்கிருதத்திலும் அறிவான் (ஞாதுரு), அறி பொருள் (ஞேயம்) என்ற பாகுபாட்டில் காணலாம். தற்கால மேலை ஆய்வியல்களில் இதனை அகநோக்கு(ளரதெநஉவiஎவைல), புறநோக்கு(டிதெநஉவiஎவைல) என்ற வகுப்பு முறையில் காண்கிறோம். ஆயினும் அகப் பண்பின் நுண்ணாய்வில் இன்னும் உலகின் எவ்வினமும் பண்டைத் தமிழினத்துக்கு ஈடன்று. ஆனால் இன்றைய தமிழினமே அச்சிறப்பை முற்றும் உணரத் தலைப்படவில்லை. விலங்கினம் கடந்து மனித இனம், மனித இனம் கடந்து தமிழினம், தமிழினம் கடந்து தெய்வப்பண்பு கண்ட திருவள்ளுவர் - இது வள்ளுவரை இனி உலகம் காணுதல் வேண்டும் படிமுறை. அவர் ஒருவரே இன வாழ்வின் வேராகக் குடும்பத்தையும், அதன் முகடாகக் கடவுளையும், இவற்றின் ஊடாக இனவாழ்வையும், அதன் கூறுகளான அறம் பொருள் இன்பங்களையும் கண்டவர் ஆவார். அவ்வழி நின்று நாம் அதனைக் காண முயலுதல்வேண்டும். மனித சமுதாயம் இன்னும் விலங்குப்படியிலிருந்து மிகுதி உயரவில்லை. விலங்குப்படியில் வலிமைவாய்ந்த உயிர் வலிமையற்ற உயிரைக் கொன்றும் வென்றும் அடக்கியும் குறுகிய தன்னல நோக்குடன் வாழ முற்படுகின்றது. இதுபோலவே சமுதாயத்திலும் அரசியல் துறையிலும் மனிதன் வாழ்கிறான். வலிமை ஆற்றல் திறமையாய், திறமை அறிவாய், அறிவுத் தகுதியாய் வளர்ச்சியுற்ற பின்னும், இந்நிலை மாறவில்லை. வலிமையுடையவர்கள் - ஆற்றல், திறமை, அறிவு, தகுதி உடையவர்கள் - அவையற்றவரை அழித்தும் வென்றும் அடக்கியும் தம் தனிநலத்துக்கே அவற்றைப் பயன்படுத்து கின்றனர். இதனால் போட்டி அழிவுப் போட்டியாக நடைபெறுகிறது. ஆயினும், அரசியலைவிடச் சமுதாயத்திலும், சமுதாயத்தைவிடக் குடும்பத்திலும் மனிதன் இவ் விலங்குப் பண்பு கடந்து வள்ளுவப் பண்புக்கு முன்னேறியுள்ளான். அவ் வெல்லையில் கூடத் தன்னலமும், தன்னலப் போட்டியும் முற்றிலும் இல்லையென்று கூற முடியாதானாலும், அவ் வெல்லைக்கு வெளியேயுள்ள நிலைகளை நோக்க அவை மிக மிகக் குறைவே என்னலாம். ஆயினும், நாகரிக சமுதாயத்தில் - அதனுள்ளும் சிறப்பாகப் பண்பார்ந்த குடிகளில் குடும்ப எல்லைக்குள் அன்புப் போட்டியும், அது கடந்த கூட்டுழைப்பும் இனவாழ்வின் ஆர்வமும் இடம்பெற்றுவிட்டன. குடும்பப் பண்பின் பயிர்ப்பில் மனித இனத்தில் உயர்முக டெய்தியவர்கள் பண்டைத் தமிழர். அத்தமிழர் பண்பின் உச்சஉயர் முகட்டெல்லையில் நின்றவர் திருவள்ளுவர். அவர் அக் குடும்பப் பண்பின் தெய்விக நிறைவு கண்டு, அதனை இயற்கையின் கூறாக உணர்ந்து, அதனடிப்படையில் சமுதாயம், அரசியல், இனம் ஆகிய முத்துறைகளும் அளாவிய ஒரு பாரிய தெய்விகக் கட்டடம் அமைத்துத் தந்துள்ளார். அக்கட்டடத்தின் அரை குறைச் சிதைவுகளே இன்றைய நாகரிக உலகின் பல்சமய வேறுபாடுகளாகத் திகழ்கின்றன. வலியார் குடும்பத்தில் தம் வலிமையைத் தமக்காகப் பயன்படுத்தவில்லை. குடும்பநலன் நோக்கி எளியவருக்காக, எளியவரைப் பேணப் பயன்படுத்துகின்றனர். வலிமை யுடைவரைப்போலவே ஆற்றலுடையவரும் திறமையுடையவரும் அறிவுடையவரும் தகுதியுடையவரும் ஆற்றல், திறமை, அறிவு, தகுதியற்றவரைப் பேணி அவர்களுக்கு அப்பண்புகளை மேவுவிக்கப் பாடுபடுகின்றனர். இப்பண்புகளைச் சமுதாயமும் பேணும் நாளில், இன்றைய அரைகுறைச் சமய வாழ்வுகள் உலகில் தேவைப்பட மாட்டா. ஏனெனில், அந் நிலையே உச்ச உயர்நிலைச் சமயம் ஆகும். இப்பண்பு இனத்தில் காணப்படும் போது, பூசனைக்குரிய கடவுளே உலகுக்குத் தேவைப்பட மாட்டார். ஏனெனில், அதுவே மெய்யான கடவுள் பண்பு - அதன் பல்வகைப்பட்ட நிழல்களே இன்றைய உலகில் பல்வகைப்பட்ட கடவுட் கருத்துகள், பல்வகைப்பட்ட சமய இலக்குகள். ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்’ இக் குறட்பா உணர்த்தும் பொருள் இதுவே. இதன் ஒரு மென்சாயலை நாலடியாரின் ஒரு வெண்பா விலும் காண் கிறோம். ‘பிறர்மறையின் கண் செவிடாய்த் திறன்அறிந்து ஏதிலார் இற்கண் குருடனாய்த் - தீய புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல், யாதும் அறம்கூற வேண்டா அவற்கு!’ குடும்பத்தில் உறுப்புக்கு உறுப்பு உள்ள தொடர்பு போராட்டத் தொடர்பன்று; போட்டித் தொடர்பன்று; சூதாட்டத் தொடர்பன்று: அன்புத் தொடர்பே. அத்துடன் ஒருவர் எல்லார்க்குமாக, எல்லாரும் ஒவ்வொருவர்க்காக என்ற குறிக்கோள் இயல்பாகவே நிலவுவது பெரிதும் குடும்பத்திலேயே. கூட்டுறவுச் சங்கங்களின் உயர் இலக்கு-பொதுவுடைமை அல்லது சமதருமச் சமுதாயத்தின் உச்சநிலைக் குறிக்கோள் இதுவே. இதுவே சமுதாயத்தின் அரசியலினம் அல்லது நாடு, உலகம் அல்லது மனித இனம் ஆகியவற்றின் உயர் இலக்கும் ஆகும் என்பதை எவரும் ஒத்துக்கொள்வர். கவிஞர், அறிஞர், கலைஞர், கலையறிஞர் ஆகியோர் கனவு காணும் சமுதாயம், அரசியல், உலகம் ஆகியவற்றின் முழு நிறைபண்பு குடும்பத்தில் இன்றுகூடப் பெரிதும் இயங்குகிறது. இயற்கையில் வான், மனித இனத்தில் குடும்பப் பாசம் அல்லது தாய்ப் பாசம்-இந்த இரண்டன் பண்பும் ஒன்றே. இரண்டும் பயன் நோக்காத, ஆனால், பயனுடைய பண்புகள். பற்றற்றவை அதாவது தற்பற்றற்றவை - பற்றுக் கடந்த பற்றாகிய இனநல அவாவுடையவை அவை. ஆனால், அறிவிலா இயற்பண்பான வானிலும் அறிவு கடந்த அன்புப் பண்பான குடும்பப் பாசம் ஒருபடி உயர்வுடையது என்பதை நாம் எளிதில் காணலாம். இதே பண்பு சமுதாயத்தில் நிலவுதல்வேண்டும் என்று கனவு கண்ட அருளாளர் பலர் உண்டு. ஆனால், அரசியலிலும், சமயவாழ்விலும், இனவாழ் விலும், இது நிலைபெறுதல் வேண்டுமென்று கனவு கண்டவர் மிக மிகச் சிலர்-நம் காலத்தில் காந்தியடிகளும், டால்°டாயும், முன்னாள்களில் புத்தர்பிரானும், சமண தீர்த்தங்கரர்களும் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் அனைவரினும் முதன்மை மிக்கவர்-அதையே ஒரு பாரிய வாழ்க்கைத் திட்டமாக்கித் தந்தவர் திருவள்ளுவர் ஒருவரே. குடும்பத்தில் இன உணர்வுடையவர்-சமுதாயத்தில் இனத்தில் குடும்ப உணர்வுடையவர்கள், தேசிய அறிஞர்கள்-காணவேண்டிய இன்னொரு பண்பு வளர்ச்சியின் உயிர்ப் பெருக்கம் ஆகும். இயற்கையில் ஆற்றலின் பெருக்கம் என்பது பெரிதும் கூட்டாற்றலே. பல அணுக்கள் திரண்டவழி அவற்றின் தனித்தனி ஆற்றல்கள் மொத்த ஆற்றலாகச் செயலாற்றுகின்றன. குடும்ப ஆற்றல் என்பது கூறுகளின் மொத்தமான கூட்டாற்றல் மட்டுமன்று, உறுப்புகளின் இணைவான உடல் போன்ற கூட்டு நிறைவாற்றல் மட்டும்கூட அன்று. ஏனெனில், குடும்பத்தின் ஒவ்வோர் உறுப்பினருடைய தனி ஆற்றலும் மற்றத் தனி ஆற்றல்களையும், அத்தனி ஆற்றல்கள் அவ் வுறுப்பினர் ஆற்றலையும் இயக்கி ஊக்குகின்றன. அத்துடன் தனி ஆற்றல் ஒவ்வொன்றும் மொத்தத்தையும், மொத்தம் தனித்தனி ஒவ்வொரு தனி ஆற்றலையும் தூண்டி இயக்குகின்றது. இத்தகைய கூட்டுப் பெருக்கத்தையும், கூட்டு வளர்ச்சியையும் நாம் உயிரின வாழ்வில் குடும்பத்திலேயே-பண்பட்ட மனித இனம் வளர்த்த சமுதாயக் கூறான குடும்பத்திலேயே-காண்கிறோம். இத்தகைய குடும்பப்படி புதுமலர்ச்சியின் முதற்படியாதலால் எல்லை குறுகினும் முழுப்படியாய் இயங்கி, சமுதாயத்திலும் இனத்திலும் சென்று பெருகவல்ல செறிவான முழுநிறை படியாகவும் இயங்குகின்றது. குடும்பவாழ்வு இங்ஙனம் இனவாழ்வின் கருமூலம் மட்டுமன்று, முதற்படி மட்டுமன்று; அதன் முழுநிறை பண்பும் ஒருங்கே செறிந்த விதை அதுவே. இதை அறிந்த பண்பட்ட இனம் தமிழினம். இதை வகுத்துணர்த்தி விளக்கிய முதல்வர் திருவள்ளுவர். அவர்தம் திருக்குறள் ஏட்டை இல்லறத்தில் தொடங்கி இன்பப்பாலின் கற்பியலில் கொண்டு முடிக்கும் அருந்திறத்தின் அடிப்படைப் பண்பு இதுவே. உணர்ச்சி யடிப்படையான ஆணின் அவாக்கூற்றாகத் தொடங்கிய இன்பத்துப்பால் இருபாலார்க்குமுரிய கூடலவாவி னூடாகப் பரவிப் பெண்ணின் ஊடற்கூற்றாகவே முடிவில் நின்றுவிடுவது கூர்ந்து நோக்கத் தக்கது. தலைமுறைக்குத் தலைமுறை நீடிக்கும் தொடர்பு பெண் மூலமாகவே நிகழ்தல்போல, உயிரினத்தின் ஒரு முழுமலர்ச்சி ஊழிக்கும், மற்றொரு முழு மலர்ச்சி ஊழிக்கும் இடைப்பட்ட தொடர்பும் அதே பெண்மையாகவே நிலவுகிறது. அச்சந்திப்பின் சின்னமே கூடலிடையேயும் நிகழும் பெண்மையின் ஊடல். திருவள்ளுவர் இது கண்டுணர்ந்து இறவா, பிறவா இன்ப அலைமுகட்டில் ஏடு தொடங்கி, மற்றோர் அலை முகட்டில்-கூடலின்பத்தை முடிவில் இன்பமாக்கும் ஊடலில் நம்மைக் கொண்டுவிட்டு அடுத்த ஊழியை நோக்கிச் செல்கிறார். பிறப்பிறப்புக் கடந்து, ஊழூழி கடந்து நம்மை இட்டுச் செல்லும் ஆற்றல் வாய்ந்த உலவா இன்பக்கொடி உயர்த்தி, குடும்பப் பண்பு என்னும் கோபுர வாயிற்படியிற் புகுந்து சென்று நாம் எல்லையற்ற இனவாழ்வு என்னும் எழில் மாடம் ஏறுவோமாக! அதில் மேன்மேலும் இன்பத்துள் இன்பம் நாடுவோமாக! ஒவ்வொரு நொடியிலும் பெற்ற இன்பம் அரும்பாக, போதாகப் பெறவிருக்கும் இன்பங்கள் அதனின்று மேன்மேலும் எல்லையற்று விரிந்துகொண்டே செல்லும் நாள்மலர்களாக, மலர்க்கொத்துகளாக நம்மீது பொழிய, நாம் உயர் இன்பத்தின் ஓய்விலா ஒழுக்குடைய மெல்லருவியில் குளித்துத் திளைப்போமாக. 15. வாழ்வின்பம் யானை கண்ட குருடர் கதை யாவரும் அறிந்ததே. அதை முழுமையாகக் காண எவர்க்கும் கண்பார்வை இல்லை. ஒருவன் உடலைத் தடவி அது கருங்கற் பாறை போன்றது என்றான். ஒருவன் கால் தடவி அஃது உரல் போன்றது என்றான். தும்பிக்கை தடவி ஒருவன் மலைப்பாம்பு போன்றதென்றும், காது தடவி மற்றொருவன் முறம் போன்றதென்றும் கூறினான். குருடராவது உறுப்பு உறுப்பாகப் பொருளை வேறு வேறு பிரித்து வேறு வேறாகக் கண்டனர். கூறு கூறாக , பண்பு பண்பாகப் பிரித்தறிபவரும் உண்டு. ஒரு நகரைப் பலர் துருவிக் காண்பதாக வைத்துக் கொள்வோம். ஒருவன் பாரிய கட்டடங்களை ஏறி இறங்கிக் காண்கிறான். ஒருவன் தெரு ஒழுங்கினையும், கட்டட ஒழுங்கினையும் கண்டு அதன் அமைப்பில் கருத்துச் செலுத்துகிறான். ஒருவன் அதில் வாழும் மக்களை, ஒருவன் அவர்கள் பண்புகளை, மற்றொருவன் அதன் மக்கள் வாழ்வுக்கேற்ற நீர், உணவு முதலிய வாய்ப்புக்கான திட்டங்களை நோக்குகிறான். ஒருவன் அதன் வரலாறு, ஆட்சிமுறை உசாவியுணர்கிறான். கல்வி நிலையங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் பற்றி ஆராய்கிறான் மற்றொருவன். ஒரே நகர்பற்றிய அவர்கள் அறிவு விளக்கம் ஒரே படியாக இருப்பதில்லை, ஆயினும் அவை முழுமையாக அந்நகர் பற்றிய விளக்கங்களே. அதே சமயம் விளக்கங்கள் முழுதும் நகரின் தன்மையைமட்டும் பொறுத்தவையன்று. காணும் ஆளின் தன்மையையும் பேரளவு பொறுத்தவை. வாழ்க்கையைப் பற்றிய மனிதர் அனுபவமும் அறிவும் இதுபோன்றதே. அவை அவர்கள் தனித்தனிப் பண்பையும் குறிக்கோளையும் பொறுத்தவை. குறிக்கோள்கள் எத்தனையோ அத்தனை பண்புகளும், அத்தனை உலகங்களும் மனித உலக வாழ்வின் அகக்கூறுகளாக இயங்குகின்றன. வாழ்க்கையின் எல்லா வகைப் புதிர்களுக்கும் மூலக் காரணம் இதுவே. உலகம் ஒன்று. ஆனால், ஒருவர் காணும் உலகை மற்றொருவர் காண்பதில்லை. இருவரும் ஒரே உலகின் இருவேறு பட்ட பண்புக் கூறுகளையே காண்கின்றனர்! ‘உலகம் ஒரு போர்க்களம். வாழ்க்கை ஒரு போராட்டம். அதில் ஒவ்வொரு தனி மனிதனும் பிற தனிமனிதனுடன் தனித்தனியாகவும் கூட்டாகவும் போராடுகிறான். இவ்விசித்திரப் போர்க்களத்தின் விசித்திரப் போராட்டத்தில், ஒவ்வொருவன் பார்வையிலும் அவன் ஒரு கட்சி, மற்ற எல்லாரும் எதிர்க்கட்சி. பலரை உடன் சேர்த்து ஓரினத்தவராகக் கூறுவதுகூட உண்மையில் எதிரிகளைப் பிரித்துப் பிளவுசெய்து வெற்றிகரமாக வென்று தன்னலம் பெருக்கும் பொருட்டே.’ தன்னலப் போட்டியைக் குறிக்கோளாகக் கொண்டவர்கள் காணும் உலகம், வாழும் உலகம் இதுவே. ‘உலகம் ஒரு சூதாட்டக் களம்; வாழ்க்கை ஒரே சூதாட்டம். இதில் ஒவ்வொருவரும் பிறரை வஞ்சித்துத் தாம் மேம்படப் பல வகைமுறைகள், வழிவகைகள் தேடுகின்றனர். அறிவுடையவன் இதில் பிறரை ஏய்த்து வாழ்வான்; அறிவற்றவன் ஏய்ப்புண்டு மாள்வான்’. தன்னல நயவஞ்சகர், திருடர், கொள்ளைக்காரர், ஆகியவர்கள் அகநோக்கு உலகம் இதுவே. பல கீழ்த்தர அரசியலறிஞர்கள், சமய அறிஞர்கள் நோக்கு இதன் உயர் தளச் சமுதாய நிழலேயாகும். ‘உலகம் ஒரு வேட்டைக்காடு. அதில் ஆற்றலுடையோர் தங்கு தடையின்றி ஆதிக்கம் செலுத்தி அல்லது இன்பம் நாடிப் பெருமையுறுவர். அதை நாடாத சிற்றுயிர்கள், நாடியும் ஆற்றலில் குன்றிய ஏலாதவர் அவ்வாதிக்க வேட்டை அல்லது இன்ப வேட்டைக்குரிய வேட்டை இரையும் வேட்டைக்களமும் ஆவர்.’ இவ்வாறு கூறுபவரை, எண்ணுவதாகத் தெரிவிப்பவரைக் காணமுடியாது. ஆனால், இவ்வாறு எண்ணுபவர், செயல் செய்பவர், செயல்செய்து வெற்றியோ, தோல்வியோ காண்பவர் அரியரல்லர். உலகின் கொடுங்கோலர், சமுதாயப் பகைவர், குடும்பப் பண்பற்றவர்கள் இத்தகையவர்களே. நாடகங்களில் அழிமதியாளர்கள் இத்தகையோரின் மாதிரிப் படிவங்களே. ‘உலகம் ஒரு குருட்டுப் பகடையாட்டம், ஒரு மாயம், ஒரு துன்பக்களம்’-இவை வேறுபலர் குறிக்கோள், உட்கோள்கள். இத்தனை தனிக் குறிக்கோள்களுக்கிடையே, ஒரு குறிக் கோள்தான் இன்று மனித நாகரிகத்தின் மொத்தக் குறிக் கோளாய், குடும்பச் சமுதாய வழிபட்ட இனக் குறிக்கோளாய், இன்றைய உலக நாகரிகத்தின் அடிப்படைக் குறிக்கோளாய் வளர்ந்துவருகிறது. அதுவே திருவள்ளுவர் முதன் முதல் வகுத்தமைத்த குறிக்கோள்; முழுஅளவில் அது உலகில் பரவவில்லையாயினும் அதன் சாயல் பரவாத இடம் இல்லை. அதை நோக்கியே உலகம் படிப்படியாக, சற்று முன் பின்னாக, எங்கும் முன்னேறிவருகிறது. உலகம் இன்பக்களம் மட்டுமன்று, அன்புக்களம். அதன் போட்டிகள், போராட்டங்கள் யாவும் ஒரே குறிக்கோளையுடைய அன்புப் போட்டிகள்; அன்புப் போராட்டங்கள். அன்பு வாய்ந்த ஒத்துழைப்பே வாழ்வு. அவ்வொத்துழைப்பின் சுழல் எதிர்ச் சுழல்களே, திட்டமிட்ட ஒத்துழைப்பின் கூறுகளே போட்டி; போராட்டங்கள்! வாழ்வில் எதிர்ப்புகள் உண்டு, தற்காலிகப் புறத்தோற்றமான பகைப் பண்புகள் உண்டு. ஆனால், பகைவர் யாரும் கிடையாது. இதுவே திருவள்ளுவர் கண்ட முழு வாழ்க்கைக் குறிக்கோள். ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் ‘ இக் குறிக்கோள் வழி நிற்பவன் தெய்வப் பண்பினன். இக் குறிக்கோள் உலகெங்கும் பரவினால், அதுவே இன்ப உலகு; பொன் உலகு. அது முற்றிலும் இன்றிருப்பதன்று. ஆனால், பேரளவில் வருங்காலச் சின்னமாக, கனவுருவாக, குறிக் கோளுருவாக, என்றும் உள்ளீடாக வளர்ந்துவரும் ஒன்றே. மேல் உலகு என்று தமிழ் மரபில் அது குறிக்கப்படுவதன் காரணம் இதுவே. இங்கே மேல் என்பது இனிமேல் என்ற குறிப்புடையது. இடைக்காலச் சமயவாணரும், புராணமுடையாரும் அதை மேலே உள்ள உலகம் என்று கொண்டு அதற்கு மாறாகக் கீழேயுள்ள உலகும், நடுவே உள்ள உலகும் கருத்தில் உருவாக்கிக் கொண்டனர். வள்ளுவர் குறிக்கொண்ட இனத்தின் இன்பம் நிறைவுடையது-அது தனிமனிதன் இன்பம் மட்டுமன்று, இன இன்பம் மட்டுமன்று-இரண்டும் ஒன்றான நிறை இன்பம். ஒழுக்கம், சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு, குடும்பம் எல்லாம் அதனை நோக்கிய பண்புகளே. வாழ்வு என்ற பண்பார்ந்த சொல்லின் முழுப்பொருள் இதுவே. வள்ளுவர் பெருமான் காட்டிய திசையில் இறைவழி நின்று, மன்னன் துணையுடன், பண்பாளர், அந்தணர் இயக்க இயங்கும் முப்பாலாழி இயக்கி இன்பத்துள் இன்பம், நீடின்பம், நிறை இன்பம் பெறுவோமாக! பெற்று உலகுக்கு அளிப்போமாக! எஎஎ பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் (24.7.1907-26-5-1989) `அறிவுச் சுரங்கம் அப்பாத்துரையார்’ என்று பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரை `முகம் மாமணி குறிப்பிடுவது எவ்வளவு பொருத்தமானது என்பது அவருடன் பழகியவர் களுக்கு, அவருடைய பேச்சுக்களைக் கேட்டவர்களுக்கு, அவருடைய புத்தகங்களைப் படித்தவர்களுக்கு நன்றாகத் தெறியும். அப்பாத்துரையார் பேசும்பொழுது, உலக வரலாறுகள் அணிவகுத்து நடைபோடும் அரிய செய்திகள், ஆய்வுச் சிந்தனைகள், ஒப்பீடுகள் நிரம்பிய அவருடைய பேச்சைக் கேட்டவர்கள் மூளை கனத்துவிடும். ஒரு சிறு மூளைக்குள் இவ்வளவு செய்திகளை எப்படி அடைத்து வைத்திருக்கிறார் என்று வியக்க வைக்கும். அவரைத் தமிழகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்னும் ஏக்கம் அறிஞர் களிடையே இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி என்னும் சிற்றூரில் திருவாளர் காசிநாதப்பிள்ளை - திருவாட்டி முத்து இலக்குமி அம்மையாருக்கு மூத்த மகனாக 1907 ஆம் ஆண்டு, ஆனி மாதம் ஏழாம் நாள் (சூன் 24) பிறந்தவர் அப்பாத்துரையார். குடும்ப மரபையொட்டிப் பாட்டனார் பெயரான நல்லசிவன் என்னும் பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது. ஆயினும் பெரியோர்களால் செல்லப் பெயராக அழைக்கப்பட்ட `அப்பாத்துரை’ என்னும் பெயரே இவருக்கு இயற்பெயர் போல் அமைந்துவிட்டது. இவருடன் பிறந்த இளையவர்கள் செல்லம்மாள், சுப்பிரமணி, குட்டியம்மாள், கணபதி ஆகியோர். இரு தம்பிகள். இரு தங்கைகள், நல்லசிவன், காசிநாதன் என மாறி மாறி வரும் குடும்ப மரபில் அப்பாத்துரையாரின் பாட்டனாரின் பாட்டனார், அவர் பாட்டனாரின் பாட்டனார் ஆகிய ஏழாம் தலைமுறையினரான நல்லசிவன் என்பவர், கல்வி கற்ற, வேலையற்ற இளைஞராய்ச் சாத்தான்குளம் என்னும் ஊரிலிருந்து ஆரல்வாய்மொழி என்னும் ஊருக்கு வந்து, அக்கால (மதுரை நாயக்கர் காலத்தில்) அரசியல் பெரும் பணியில் இருந்த ஊரின் பெருஞ்செல்வரான தம்பிரான் தோழப்பிள்ளையிடம் கணக்காயராக அமர்ந்தார். ஆண் மரபு இல்லாத தம்பிரானுக்கு நல்லசிவன் மருமகன் ஆனார். சதுப்பு நிலமாயிருந்த புறம்போக்குப் பகுதி ஒன்றைத் திருத்திப் புதிய உழவு முறையில் பெருஞ்செல்வம் ஈட்டிய அவரே அப்பாத்துரையார் குடும்ப மரபின் முதல்வர். அவருக்கு நாற்பது மொழிகள் தெரியுமாம். குடும்ப மரபினர் வழியில் தன் பிள்ளையும் எல்லா மொழிகளும் பயில வேண்டும் என்னும் வேட்கையில் காசிநாதப்பிள்ளை அப்பாத்துரையாரிடம், `குறைந்தது ஏழு மொழிகளில் நீ எம்.ஏ. பட்டம் பெற வேண்டும். ஆங்கிலம் முதலில் தொடங்கி, பதினைந்தாம் வயதில் எம்.ஏ., முற்றுப் பெற வேண்டும். இருபத்து மூன்று வயதிற்குள் இயலும் மட்டும் மற்றவை படிக்க வேண்டும்’ என்று கூறினார். அவருடைய எண்ணத்தைத் தம் வாழ்நாளில் நிறைவேற்றி முடித்தவர் அப்பாத்துரையார். பழைய - புதிய மொழிகள் என ஆப்பிரிக்க மொழிகள் உட்பட நாற்பது மொழிகள் (ஏழாம் தலைமுறை பாட்டனார் போல்) அப்பாத்துரையாருக்குத் தெரியும். எழுத, பேச, படிக்க என அய்ந்து மொழிகள் தெரியும். அவை: தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், மலையாளம் ஆகியன. இனி அப்பாத்துரை யாரின் வாய்மொழி யாகவே அவரது வரலாற்றுச் சுருக்கத்தைக் கேட்போம். `ஆரல்வாய்மொழி ஊரில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தபோது, புதிதாக அரசினர் பள்ளி தொடங்கப் பட்டது. அப்போது, கன்னியாகுமரி மாவட்டம் திருவாங்கூர் தனி அரசில் சேர்ந்திருந்த நிலையில் அப்புதிய பள்ளியில் தமிழுக்கு இடம் இல்லாதிருந்தது. தமிழ்க்கல்வி நாடி, குலசேகரப்பட்டினத்திலிருந்த என் பெரியன்னை வீட்டில் தங்கிப் படித்தேன். பின், குடும்பத்தினர் அனைவரும் எனக்காக நாகர்கோவிலில் குடியேறி, வாடகை வீட்டில் இருந்து வந்தனர். இந்நிலையில் என் பெற்றோர் என்னை நான்காம் வகுப்பிலிருந்து கல்லூரி முதலிரண்டு ஆண்டு படிப்பு வரை பயிற்றுவித்தனர். 1927இல் எனது பி.ஏ., ஆனர்ஸ் (ஆங்கில இலக்கியம்) படிப்புக்காகத் திருவனந்தபுரம் சென்றேன். நண்பர்கள் வீடுகளில் தங்கி, 1930இல் அத்தேர்வு முடித்து பணி நாடி சென்னைக்கு வந்தேன். சென்னையில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தேன். கூட்டுறவுத் துறையில் ஆறு மாதங்களும், `திராவிடன்’, ஜஸ்டிஸ்’ பத்திரிகைகளில் ஒவ்வொன்றிலும் ஆறு மாதங்களும், பச்சையப்பன் கல்லூரியில் இரண்டு மாதங்களும் பணியாற்றினேன். அதன்பின், `பாரத தேவி’, `சினிமா உலகம்’, `லோகோபகாரி’, `தாருல் இஸ்லாம்’ ஆகிய பத்திரிகைகளின் விற்பனைக்களம் அமைத்ததோடு, அவற்றில் பாடல், கட்டுரைகள் எழுதி வந்தேன். இச்சமயம், புகழ்வாய்ந்த சேரன்மாதேவி `காந்தி ஆசிரமம்’ என்ற குருகுலம் அரசியல் புயல்களால் அலைப்புற்று, கடைசியில் காரைக்குடி முத்துப் பட்டிணத்தில் சா.சு. சுப்பிரமணியம் செட்டியார் குருகுலம் என்ற பெயரால் நடைபெற்று வந்தது. இதில் நான் தோழர் ஜீவானந்தத்திற்கு அடுத்த தலைமை ஆசிரியராக ஓராண்டும், `குமரன்’ பத்திரிகைகளில் சில மாதங்களும் பணியாற்றினேன். நாகர்கோவில் திரும்பி மீண்டும் சில மாதங்கள் கழித்த பின், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாசரேத், சாத்தான்குளம் ஆகிய ஊர்களில் காந்தியடிகளின் ஆக்கத் திட்டங்களில் ஒன்றாகிய இந்தி மொழி பரப்புதலை நன்கு நடத்தி வந்தேன். அதன் முத்தாய்ப்பாக ராஜாஜி முதல் அமைச்சரவையின் ஆட்சியின் போது, திருநெல்வேலி, எம்.டி.டி. இந்துக் கல்லூரி பள்ளியில் 1937 முதல் 1939 வரை இந்தி ஆசிரியராகப் பணியாற்றினேன். இங்கிருக்கும்போதுதான் இந்தி விசாரத் தேர்வையும் முடித்துக் கொண்டேன். நாச்சியாரை நான் திருமணம் செய்து, இரண்டாண்டு வாழ்க்கைக்குப் பின் அவளையும், என் தந்தையும் ஒருங்கே இழந்தேன். அரசியல் சூழல்களால் இந்தி கட்டாயக் கல்வி நிறுத்தப்பட்டதனாலும், என் சொந்த வாழ்க்கையில் நேரில் துயரங்களாலும் நான் திருநெல்வேலியை விட்டு வெளியேறினேன். இதே ஆண்டில் ஆங்கில எம்.ஏ. பட்டம் பெற்றதுடன், தமிழ் எம்.ஏ.வையும் தனிமுறையில் திருவனந்தபுரத்தில் எழுதித் தேறினேன். அத்துடன் ஆசிரியப் பயிற்சிக்காக ஓராண்டு சென்னை சைதாப்பேட்டை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் படித்தேன். இதே ஆண்டில்தான் காந்தியடிகளை, இந்திப் பிரச்சார சபையில் கண்டு பழகவும், மறைமலையடிகளுடன் தொடர்பு கொள்ளவும், சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தில் என் தமிழ் நூலாசிரியப் பணி தொடங்கவும் வழி ஏற்பட்டது. 1941இல் பழைய காந்தி ஆசிரமத்தின் புது விரிவாக செட்டிநாடு அமராவதிப் புதூரில் அமைக்கப்பட்டிருந்த சா.சு. சுப்பிரமணியம் செட்டியார் குருகுலப் பள்ளியில் ஆறு மாதங்களுக்கு மேல் தலைமை யாசிரியராகப் பணியாற்றினேன். கவிஞர் கண்ணதாசன் இப்பள்ளியில் என் மாணவராய்ப் பயிலும்போது தான் தன் இலக்கிய வாழ்வைத் தொடங்கினேன். அப்பாத்துரையாரின் முதல் மனைவி நாச்சியார் அம்மையார் மறைவுக்குப் பின், செட்டிநாடு அமராவதிப்புதூரில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது அலர்மேலு அம்மையாரின் தொடர்பு கிடைத்தது. காதலாக மாறியது. திருச்சி திராவிடர் கழகத் தலைவராக இருந்த வழக்கறிஞர் தொ.பொ. வேதாசலம் தலைமையில், திருக்குறளார் வீ. முனுசாமி முன்னிலையில் அப்பாத்துரையாரின் திருமணம் திருச்சியில் நடைபெற்றது. இதனையடுத்து, செட்டிநாடு கோனாப்பட்டில் சரசுவதி உயர்நிலைப் பள்ளியில் இரண்டாண்டுக்காலம் பணியாற்றினார். இந்த ஊருக்கு அறிஞர் அண்ணாவும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் வந்திருந்தபோது அவர்களுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பின்னர், பாவேந்தர் உதவியோடு 1943 இல் துணைவியார் அலர்மேலுவுடன் சென்னைக்குக் குடிவந்தார். பாவேந்தரின் உதவியால் ஆங்கில நாளேடான `லிபரேட்டரில்’ உதவியாசிரியராகப் பத்து மாதங்கள் பணியாற்றினார். பின்னர், `விடுதலை’ நாளேட்டில் ஆறு மாதங்களும், முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியல் இரண்டு ஆண்டுகளும் பணியாற்றினார். இக்காலங்களில் தான் பெரியாரின் தொடர்பும், திராவிடர் கழகக் தொடர்பும் இவருக்கும் அலர்மேலு அம்மையாருக்கும் ஏற்பட்டது. பின்னர், 1947 முதல் 1949 முடிய நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றினார். இச்சமயம் சைதாப்பேட்டையில் ஓராண்டுக்காலம் தங்கியிருந்த போது, `இந்தியாவில் மொழிச் சிக்கல்’ என்னும் ஆங்கில நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலை அடிகள் நாற்பது பக்கத்தில் முன்னுரை வழங்கி யுள்ளார் என்பது தனிச்சிறப்பு. இந்த நூலே, அப்பாத்துரையாரின் அரசுப் பணிக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. 1949 முதல் 1959 வரை பதினோரு ஆண்டுகள் வேலையில்லாமல் இருந்தார். ஆயினும், இந்த ஓய்வே நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுத வாய்ப்பாக இருந்தது. வருவாய்க்கும் உதவியது. ஆங்கில மொழிக்கு ஜான்சன் தந்த ஆங்கில அகராதியைப் போல் தமிழுக்கு ஒரு அகராதி எழுத வேண்டும் என்ற விரைவு அப்பாத்துரையாரின் நெஞ்சில் ஊடாடியதால், முதலில் ஒரு சிறு அகராதியைத் தொகுத்தார். பிறகு அது விரிவு செய்யப்பட்டது. தற்கால வளர்ச்சிக்கேற்ப பெரியதொரு அகராதியைத் தொகுக்க வேண்டுமென்று எண்ணிச் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகக் காவலர் சுப்பையாபிள்ளை சென்னைப் பல்கலைக்கழகத்தின் அனுமதியையும், பண உதவியையும் நாடியபோது, பல்கலைக்கழகமே அம்முயற்சியில் ஈடுபடப் போவதாகக் கூறியது. அப்பணிக்கு அப்பாத்துரையாரை சென்னைப் பல்கலைக் கழகம் பயன்படுத்திக் கொண்டது. 1959லிருந்து 1965 வரை சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத் தமிழ் அகராதித் துறையில் டாக்டர் அ. சிதம்பரம் செட்டியாருடன் இணையாசிரியராகப் பணியாற்றி `ஆங்கிலத் தமிழ் அகராதியை’ உருவாக்கினார். 1971 ஆம் ஆண்டு, தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபட்டு அதன் தலைவராகவும் தொண்டாற்றி யுள்ளார். இயக்கத் தொடர்பு அப்பாத்துரையாரின் முன்னோர் `பிரம்மஞான சபை’ என்னும் தேசிய விடுதலை இயக்கத்துடன் தொடர்புடையவர்கள். அப்பாத்துரையாருக்கும் அவ்வியக்கத்தில் ஈடுபாடு இருந்தது. டாக்டர் அன்னிபெசன்ட், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. லாலா லஜபதிராய், லோகமானிய பாலகங்காதர திலகர் ஆகியோரின் தேசிய இயக்கத்தின் தீவிர செயல்பாடுகளில் பற்று வைத்தார். அக்காலம் காந்தியார் இந்தியாவிற்கு வராத காலம். தேசிய விடுதலை இயக்கத்தைப் பரப்பும் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டவர் அப்பாத்துரையார். தெருவில் தேசிய பஜனைக் குழுக்களுடன் பாடிச் சென்று இயக்கம் வளர்த்தவர். தன் சேமிப்புப் பணத்தில் மூடி போட்ட காலணா புட்டிகளை நிறைய வாங்கி, அதற்குள் துண்டுக் காகிதங்களில் தேசிய முழக்கங்களை எழுதிப் போட்டு, அப்புட்டிகளை குளம், அருவிகள், கடற்கரைகள் எங்கும் மிதக்கவிட்டவர். அதன் மூலம் தேசியச் சிந்தனைகள் பரப்பியவர். ஓர் ஆங்கிலப் புத்தகத்தில் வெளியான சிப்பாய்க் கலகம் பற்றிய ஆங்கிலப் பாடலை ஆங்கிலத்திலும், தமிழிலுமாக நிறைய படிகள் எழுதி, ஆசிரியர் சட்டைப் பைகளிலும் மாணவ நண்பர்களின் புத்தகங்களிலும் வைத்து நாட்டு விடுதலை எழுச்சியைப் பரப்பியவர். இத்தகைய தேசியவாதி, திராவிட இயக்கவாதியாக மாறியதற்கு எண்ணற்ற காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று, திருவனந்தபுரம் பிரம்மஞான சபையின் சமபந்தி போஜனம். ஆதி திராவிடர் பரிமாற, பார்ப்பனரும் வேளாளரும் உட்பட அனைத்து வகுப்பினரும் கலந்து உண்ண வேண்டுமென்று வேளாளராகிய பி.டி.சுப்பிரமணியப் பிள்ளையும், கல்யாணராம ஐயரும் ஏற்பாடு செய்திருந்தனர். பந்தி வேளையில் எல்லாப் பார்ப்பனரும், வேளாளரும் எழுந்து சென்றுவிட்டனர். அதனால் இவ்விருவருக்கும் பெருத்த அவமானமாயிற்று. அதுமட்டுமன்றி, இவ்விருவரையும் தத்தம் அமைப்புகள் மூலம் சாதி நீக்கம் செய்துவிட்டனர். இந்நிகழ்ச்சி அப்பாத்துரையாரை மிகவும் பாதித்தது. தேசிய இயக்கத்தில் அப்பாத்துரையார் இருந்தபோதும் இளம் வயதிலேயே முற்போக்குச் சிந்தனையாளராக இருந்தவர். தேசியத் தலைவர்களான காந்தியடிகள், திலகர், லாலா லஜபதிராய் போன்றோரின் படங்களை வைத்து பூசை செய்வது அப்பாத்துரையாரின் வழக்கம். இச்செயலை தந்தையாரைத் தவிர மற்ற அனைவரும் கண்டித்தனர். அதற்கு அவர், `பெண்கள் சேலையை ஒளித்து வைத்த காமுகன், யானையை ஏவிப் பெண்ணை ஏமாற்றி வசப்படுத்திய காம வேடன் ஆகியோரை நீங்கள் கடவுளாக வணங்குகிறீர்கள். அவர்களைவிட இந்தத் தலைவர்கள் எவ்வளவோ மேலானவர்கள்’ என்று எதிர்மொழி தொடுத்துள்ளார். மேலும், எட்டாம் வகுப்பில் சேரும்பொழுது, பார்ப்பனத் தலைமையாசிரியர் நடந்து கொண்ட முறை ஆகியவை இவருடைய உள்ளத்தில் ஆழப் பதிந்துவிட்டது. இவையெல்லாம் இவரை திராவிட இயக்கத்தின் பால் பற்றுகொள்ள வைத்துள்ளது. பெரியார் தொடங்கிய திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராகும்படி, சென்னைக்குப் பாவேந்தரால் அழைத்து வரப்பட்ட அப்பாத்துரையார், `விடுதலை’ இதழில் குத்தூசி குருசாமி அவர்களுடன் துணையாசிரியராகப் பணியாற்றினார். தென் சென்னையில் திராவிட இயக்கத்தை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கிளைக் கழகங்கள் அமைப்பதிலும், துணை மன்றங்கள் அமைப்பதிலும் முழு மூச்சாக ஈடுபட்டு திராவிட இயக்கத்தை வளர்த்தார். சென்னையில் பெரியார் வீடு வாங்கத் தயங்கியபோது, பெரியாரின் தயக்கத்தைப் போக்கி மீர்சாகிப் பேட்டையில் வீடு வாங்கத் துணை நின்றவர் அப்பாத்துரையார். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின்போது முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவராக விளங்கியவர். இந்தி ஆசிரியராக இருந்த இவரை இந்தி எதிர்ப்புக் களத்தில் முன் நிறுத்தப்பட்டதற்குக் காரணம். அவரைக் கொண்டே இந்தியின் தன்மையைச் சொல்ல வைப்பதற்கே. பெரியார் நடத்திய முதல் திருக்குறள் மாநாட்டில் இவருடைய பங்களிப்பும் உண்டு. தம் பேச்சாலும், எழுத்தாலும் திராவிட இயக்கத்திற்குத் தொண்டாற்றிய அப்பாத்துரையாரை இயக்க மேடைகள் நிறைவாகப் பயன்படுத்திக் கொண்டன. இலக்கிய மேடைகளும் அலங்கரித்துக் கொண்டன. தமிழ்மொழி, தமிழ் இன முன்னேற்றத்தின் போராளியாகத் திகழ்ந்த அப்பாத்துரையார் தம் இறுதிக் காலங்களில் `தலைநகர்த் தமிழ்ச் சங்கம்’ நடத்திய மொழிப் போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். அப்பாத்துரையார் கவிதை எழுதுவதிலும் ஆற்றல் பெற்றவர். 1935க்கு முன் அவருடைய படைப்புகள் அனைத்தும் கவிதைகளாகவே இருந்தன. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டக் காலங்களிலும் இவருடைய கவிதைகள் `திராவிட நாடு’ இதழில் வெளியாயின. இவருடைய பெயரில் வந்த முதல் புத்தகம், சிறை சீர்திருத்தம் செய்த திருமதி ஃபிரை ஆகியோரின் வரலாறுகளைத் தமிழாக்கம் செய்ததுதான். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக சுமார் 170க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் `தென்னாட்டுப் போர்க்களங்கள்’, `கொங்குத் தமிழக வரலாறு’, `ஆங்கிலத் தமிழ்முத்து அகராததி’, `திருக்குறள் மணிவிளக்கஉரை’ `காரல் மார்க்சின் தாஸ் காபிடல் (மூலதனம்)’ மொழிப் பெயர்ப்பு ஆகியவை அறிஞர்கள் மனத்தைவிட்டு அகலா நூல்கள். திருக்குறள் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களுக்கு 2132 பக்கங்களில் உரை எழுதியுள்ளார். கால்டுவெல்லின் ஒப்பிலக்கணத்தைத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்தவர். அப்பாத்துரையார் 82 ஆண்டுகள் வாழ்ந்து பல அறிஞர்களோடு பழகி கணக்கற்ற அறிவுச் செல்வங்களை வழங்கி, 26.9.89 இல் புகழுடம்பு எய்தினார். பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, எழுத்துத் துறையில் கவிஞராக ஆய்வறிஞராக, எழுத்தாளராக, மொழி பெயர்ப்பாளராக ஒப்பிலக்கியவாதியாக பத்திரிகையாளராக விழுதுகள் பரப்பி ஆலமரமாகத் திகழ்கிறார். இந்த ஆலமரத்தின் விழுதுகளைப் பிடித்து விளையாடியவர்களெல்லாம் பெரிய மனிதர்களாக உயர்ந்துள்ளார்கள். ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த அப்பாத்துரையார் தமிழர்கள் நெஞ்சில் என்றும் நிலைப்பார். -முனைவர் இளமாறன் யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037, சூன் 2006, பக். 18-22 ஊசியின் காதுக்குள் தாம்புக் கயிறு...? வினா: இக்கால படைப்பாளிகளுக்கு நீங்கள் கூறும் அறிவுரை? விடை: நிறைய படிக்க வேண்டும். `இலக்கியம்’ என்றால் என்ன? ஓர் இலக்கை உடையது. என்ன இலக்கு? மனிதனுக்குப் பொழுது போக ஏதாவது படிக்க வேண்டும். அதற்காக ஏற்பட்டதுதான் இலக்கியம். பிறகு தான் `இலக்கியம்’ வெறும் பொழுதுபோக்காக இருக்கக் கூடாது என்று ஆயிற்று. பன்னிரண்டாம் நூற்றாண்டில்தான் உலகமெங்கும் இலக்கிய உணர்வு ஏற்பட்டு, இலக்கியங்கள் தோன்றின. இலக்கியத்திற்கு முன்பே சயின்ஸ் - அறிவியல் தோன்றியது. அறிவியல்தான் மனிதனைப் படிப்படியாக உயர்த்தியது. பிறகுதான் இலக்கியம் தோன்றியது. இந்த இலக்கியங்கள் தோன்றிய பிறகுதான் அறிவியல் துறை குன்றிவிட்டது. இலக்கியத்தைவிட அறிவியல்தான் மனிதனுக்கு வேண்டும். `நீதி நூல்கள்’ இலக்கியங்கள் அல்ல என்று சொல்கிறார்கள். நான் சொல்வேன், திருக்குறள் ஓர் ஒப்பற்ற இலக்கியம்; அருமையான நீதி நூல்; இணையற்ற, தத்துவ நூல்! அதற்கு ஈடான நூல் உலகத்தில் கிடையாது! திருக்குறளுக்கு அடுத்து; திருக்குர்ரானைக் கூறலாம். அது ஒரு நீதி நூல்! அதில் கற்பனை குறைவு. முகம்மது நபியின் நேரடி அனுபவங்களே - உண்மைகளே, இவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்ட நீதி நூல்! பைபிளை அப்படிச் சொல்ல முடியாது. அதை யேசுநாதர் மட்டும் எழுதவில்லை! பலர் எழுதியிருக்கிறார்கள். பல கற்பனைகள் உள்ளன. ஆனால், யேசுவின் வாசகங்கள் உயர்ந்த நீதிகள்! `ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைய முடியாது!’ என்று ஒரு பொன்மொழி இருப்பது தவறு! யேசு அப்படிச் சொல்லியிருக்க முடியாது! அவர் பேசிய மொழியில் `ஒட்டகம்’ என்பதையும், `தாம்புக்கயிறு’ என்பதையும் குறிக்க ஒரே சொல் தான் உண்டு. ஆகவே, `ஊசியின் காதுக்குள் தாம்புக்கயிறு நுழைந்தாலும் நுழையலாம்; பரலோக ராஜ்யத்திற்குள் பணக்காரன் நுழைய முடியாது!’ என்றுதான் அவர் சொல்லி இருக்கவேண்டும்! காதல் திருமணம் செட்டி நாடு அமராவதிப் புதூரில் அப்பாத்துரையார் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும்போதுதான் அலமேலுவைச் சந்தித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருச்சிராப்பள்ளிக்குச் சென்றார்கள். திருச்சி திராவிடர் கழகத் தலைவராக இருந்த வழக்கறிஞர் தொ.பொ. வேதாசலம் அவர்கள் தலைமையில் திருக்குறளார் வீ. முனுசாமி அவர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணம் கலப்புத் திருமணம் மட்டுமன்று, இருவருக்குமே மறுமணமுமாகும்! தமிழுக்காக மயக்கம் ஆங்கிலத் தமிழ் அகராதியைத் தொகுக்கும் பணியில் அப்பாத்துரையார் முழு ஈடுபாட்டோடு பகல் நேரம் மட்டுமல்லாமல் பின்னிரவு வரை உழைத்து மயங்கி விழுந்த நாள்கள் பலவாம். அப்படி மயங்கி விழுந்த போது, மண்டையில் இரத்தக் காயம் ஏற்பட்டு, தலையின் முன் பகுதியில் ஒரு கறுப்பு வடு ஏற்பட்டுள்ளது. சைவ சித்தாந்தத்தில் ஈடுபாடு பத்தாம் வகுப்பில் படிக்கும்போது பிரமு அத்தையாருக்கு என்னை மருமகனாகக்கிக் கொள்ளும் ஆர்வம் இருந்தது. தந்தை விருப்பமின்மையால், இது தடைபட்டது. இச்சமயம் சைவ சித்தாந்தத்தில் வல்லுனரான ஒரு முதலியார் அவர்கள் குடும்பத்திலும் ஊரிலும் கோயிலிலும் சைவ போதகராக இருந்தார். அவரிடம் அத்தையார் என் ஆங்கிலக் கல்வி, தமிழ்க் கல்வி பற்றிப் புகழ்ந்துரைத்தார். முதலியார், “ஒரு தமிழ்ப் பாட்டுப் பாடு” என்றார். நான் அன்று படித்த தமிழ் புத்தகங்களில் மிகப் பெரும்பாலும் வேதாந்தப் புத்தகங்களே. `ஞான வாசிட்டம்’, `கைவல்ய நவநீதம்’, `நிட்டானுபூதி’ முதலிய புத்தகங்களின் பாடல்களை ஒப்புவித்தேன்; விளக்கமும் கூறினேன். முதலியாருக்கு என் தமிழ் அறிவில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், வேதாந்த அறிவில் கசப்பு ஏற்பட்டது. ஆயினும் அவர் உடல்நலமில்லாதபோது, அவருக்குப் பதிலாகக் கோவிலில் சொற்பொழிவாற்றும் வேலையை எனக்கு அளித்தார். அச்சிட்ட அவர் சொற்பொழிவுகளையே படித்து நான் பேசினேன். பிற்காலத்தில் சைவ சித்தாந்தத்தில் பேரளவில் ஈடுபட இது எனக்கு உதவிற்று. இந்தி ஆசிரியராக இந்தி எதிர்ப்பு `முகம்’ மாமணி: நீங்கள் இந்தி ஆசிரியராக இருந்து கொண்டே இந்தியை எதிர்த்திருக்கிறீர்களே, உங்கள் செயல் மக்களைக் குழப்பியிருக்குமே! விடை: `சிலருக்குக் குழப்பமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்தி எதிர்ப்பின் முன்னோடிகளான பெரியாரும் - அண்ணாவும் என் செயலைப் புரிந்து கொண்டு, இந்தி எதிர்ப்பு மாநாடுகளில், கூட்டங்களில் எனக்கு முதன்மை கொடுத்தனர். `இந்தி மொழியே தெரியாதவர்கள், இந்தியை எதிர்ப்பதை விட இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பன்மொழிகளில் புலமை பெற்ற அப்பாத்துஐரயார் எதிர்ப்பது தான் சரி. ஏனென்றால் அவருக்குத் தான் தெரியும். இந்தியில் ஒன்றும் இல்லை; அரசியல் ஆதிக்கத்துக்காக அதைப் புகுத்துகிறார்கள் - என்று நம்மைவிட அப்பாத்துரையார் சென்னால்தான் மக்களுக்கு உண்மை புரியும்” என்னும் பொருள்பட பெரியாரும் அண்ணாவும் எனக்கு ஆதரவு கொடுத்தனர். (குறிப்பு: அப்பாத்துரையார் 250 பக்கங்களில் ஐனேயை’ள டுயபேரயபந ஞசடிடெநஅ எனும் நூலை மறைமலையடிகளாரின் 40 பக்கங்கள் கொண்ட முன்னுரையோடு 1948இல் வெளியிட்டார். இந் நூல் வெளியிட்டதால் தமிழக அரசின் மொழி பெயர்ப்புத் துறையில் பணியாற்றி வந்த அப்பாத்துரையார் வேலை பறிக்கப்பட்டது. அண்ணா முதல் அமைச்சரானதும் முறையிடப்பட்டது. ஆனால், அப்பாத்துரையாரின் பத்தாண்டுகாலப் பணிக்குச் சேர வேண்டிய பணம் கொடுக்கப்படவில்லை.) - நேர்க்காணல் `முகம்’ மாமணி யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037, சூன் 2006, பக். 30-31 கா. அப்பாத்துரையார் தமிழ்ப்பணி பன்மொழிப் புலமை தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் முதுகலைப் புலமைப் பெற்றவர். தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி போன்ற இந்திய மொழிகளிலும் அரபு, சப்பான், ஹீப்ரு மற்றும் மலேயா முதலிய ஆசிய மொழிகளிலும் பிரஞ்சு, செர்மன், ரஷ்யா, இத்தாலி போன்ற ஐரோப்பிய மொழிகளிலும் சுவாசிலி என்ற ஆப்பிரிக்க மொழியிலும் மூல அறிவு பெற்றவர். இம்மொழிப் புலமை பல்வேறு மொழிகளில் நூல்களை எழுதவும், மொழி பெயர்ப்பு செய்யவும் பெரிதும் துணை செய்தது. திருக்குறள் உரை அப்பாத்துரையார் பெரிதும் மதித்த தலைவர்களுள் ஒருவரான பெரியார், சமய சார்பற்ற முறையில் ஓர் உரையினைத் திருக்குறளுக்கு எழுதுமாறு அவரைக் கேட்டுக் கொண்டார். அவர் தன் மாணவராகிய கவிஞர் கண்ணதாசன் நடத்திய `தென்றல்’ என்னும் இலக்கிய வார ஏட்டில் இருநூறு குறட்பாக்களுக்கு உரை எழுதினார். 1965ஆம் ஆண்டு `முப்பால் ஒளி’ என்னும் பெயரில் திங்கள் இதழ் ஒன்றைத் தொடங்கி அவ்விதழில் திருக்குறளுக்குத் தொடர்ந்து உரை எழுதலானார். 1965 முதல் 1971 வரை `முப்பால் ஒளி’ இதழில் வெளிவந்த திருக்குறள் உரையினை விரிவுபடுத்தி ஒவ்வொன்றும் ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆறு தொகுதிகளாகத் திருக்குறள் மணி விளக்கவுரையென்னும் பெயரிட்டு வெளியிட்டார். இந்த ஆறு தொகுதிகளிலும் இருபது அதிகாரங்களிலுள்ள இருநூறு திருக்குறட்பாக்களுக்கு விரிவான விளக்கவுரைஅமைந்துள்ளது. எஞ்சிய 1130 குறட்பாக்களுக்கு அவர் எழுதிய உரை இன்னும் அச்சேறாமல் உள்ளது. ஆங்கிலத்திலும் திருக்குறளுக்கு மணி விளக்கவுரை 1980இல் திருக்குறள் அறத்துப்பாலின் முதல் 19 அதிகாரங்கள் வரை ஆங்கிலத்தில் விரிவான உரை வரைந்து அதற்கு அவரது ஆதரவுடன் தட்டச்சு வடிவம் தந்தார். அறத்துப் பாலின் எஞ்சிய 19 அதிகாரங்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நிதியுதவியுடன் ஆங்கிலத்தில் விரிவான உரை வரைந்து அதற்கும் தட்டச்சு வடிவம் தந்துள்ளார். இவ்வாறு அறத்துப்பால் முழுமைக்கும் தட்டச்சில் 2132 பக்கங்கள் அளவிற்கு அவரது ஆங்கில உரை எழுதப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆங்கில உரையும் இன்னும் அச்சேறாமல் உள்ளது. தென்னாடு முழுவதும் ஒரே மொழி, தமிழ்! திராவிட மொழிகள் பற்பலவாயினும் அவற்றுள் பண்பட்டவை ஐந்து. அவை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் துளு. இவ்வைந்தனுள் இலக்கியம் கண்ட மொழிகள் நான்கு. அவை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம். பண்பட்ட ஐந்து மொழிகளும் ஒரே இலக்கியம் உடையதாய் ஒரே எழுத்து வடிவம் உடையதாயிருந்த காலம் உண்டு. ஆனால், இலக்கியம் ஒன்றானதால் ஐந்து மொழிகளும் ஒரே பெயருடன் `தமிழ்’ என்றே அழைக்கப்பட்டது. சங்க இலக்கியங்கள், தேவாரத் திருவாசகங்கள் ஆழ்வார்களின் நாலாயிரப் பிரபந்தங்கள் எழுதப்பட்ட காலத்தில் தொன்னாடு முழுவதும் ஒரு மொழிதான் இருந்தது. வள்ளுவர் “தமிழ் மொழியையே மொழியாகக் கண்டார். தமிழ் நாட்டையே உலகமாகக் கண்டார். தமிழ்ப் பண்பையே மனிதப் பண்பாகத் தீட்டினார். அவர் தனிச் சிறப்புக்குக் காரணம் இந்தப் பொதுமைதான்” என்றும் வள்ளுவர் நாளில் தமிழ்ப் பண்புடன் போட்டியிடும் பண்பு இல்லை. அதுவே உச்சநிலையில் இருந்தது என்றும் கூறுகிறார். அப்பாத்துரையார். “தமிழ்ப் பண்பு நிறைந்த பகுதியையே அக்காலத்தவர்கள் தமிழகம் அல்லது செந்தமிழ்நாடு என்றார்கள். `தமிழ் கூறும் நல் உலகு’ எனத் தொல்காப்பியம் கூறுவது இதையே” எனவும் சமற்கிருதம் அன்று பிறக்கவில்லை. ஆரிய மொழியில் எழுத்தில்லை. இலக்கணமில்லை. இலக்கியம் என்ற கருத்தின் நிழல்கூட அன்று கிடையாது. சமற்கிருதம் இலக்கிய மொழி ஆன காலம் திருவள்ளுவருக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின் சங்க இலக்கியத்துக்குப் பின்னரே” என்பதும் அப்பாத்துஐரயாரின் கருத்தாகும். தீண்டாமையை ஒழிக்கும் நோக்கில் தீண்டாதோருக்காக ஆலயங்கள் திறந்த போது தன் மகிழ்வை வெளிக்காட்டி அச்செயலைப் பாராட்டிக் கூறும்போது- பிறையெனத் தேய்ந்து நின்ற ........ ............ ........... பயிரது காக்கும் வேலி படர்ந்ததை அழித்ததே போல் செயிருறு சமய வாழ்வு சீருற அமைந்த பேதம் அயர்வுறு மனித வாழ்வை அழித்த தீங்கிதனை நீக்கி உயிருறச் செய்த கீர்த்தி ஓங்கு சித்திரைக் கோ மாற்கே! என்று கூறுகிறார். வேலியே பயிரை மேய்ந்தது போல், சீர்படுத்த வந்த சமயம் தீண்டாமை எனும் பேதத்தை ஏற்படுத்தியது. இத் தீங்கை நீக்கிக் கீர்த்தி பெறச் செய்த செயலைப் பாராட்டுகிறார். `தமிழ்ப் பண்பு’ என்னும் நாடகத்தில் தமிழர் விழா பற்றி இருவர் விவாதம் மூலம் விவரித்துள்ளார். கிறிஸ்துமஸ், ஈதுப் பண்டிகைகளைச் சிறப்பாக் கிருத்துவரும், முசுலீம்களும் கொண்டாடினாலும் அது தமிழர்களை எவ்வகையிலும் அவமதிக்கவோ, புண்படுத்தவோ செய்வதில்லை. தமிழ் விழாக்களுடன் தமிழ் விழாக்களாக அவற்றை ஏற்ற கிருத்தவ, இஸ்லாமிய நண்பர்களுடன் அவற்றை நாம் கொண்டாடுவதன் காரணம் எல்லாத் தமிழரும் சேர்ந்து முழு நிறை தமிழ்த் தேசியம் பேண அது உதவுகிறது. ஆனால், தீபாவளி போன்ற வடவர் பண்டிகைகள் தமிழரை அவமதிக்கும் புராணக் கதைகளைக் கொண்டாடுபவை. தமிழரைப் புண்படுத்துபவை. அத்துடன் அவை தமிழ்ப பண்புக்கு மாறுபட்டவை என்ற கருத்தை விதைப்பதோடு `மலையாளிகள் கொண்டாடும் ஓணம் விழா தமிழ்ப் பண்புடைய விழா மட்டுமல்ல, தமிழின விழா. மலையாளிகளும் இனத்தால் தமிழ்க் குழுவான திராவிடம் சார்ந்தவர்களே. பண்பில் அது பொங்கலைவிட குறைந்த விழாவல்ல. மேலும் பண்டு தமிழகத்திலும் அவ்விழா எங்கும் கொண்டாடப்பட்டதாகப் பத்துப்பட்டுப் பறைசாற்றுகிறது எனத் தமிழ்ப் பண்புடைய தமிழர் விழாக்கள் பற்றி இந்நாடகத்தின் மூலம் ஒரு சிறு ஆய்வே செய்துள்ளார், அப்பாத்துரையார். வங்க தேசத்திற்கு இணையான சிறப்புடையது தமிழகத் தேசியம். இச் சிறப்பிற்குக் காரணமாக விளங்கிய தலைவர் வ.உ.சி. அவர்களின் சிறப்பை எடுத்து உணர்த்துகிறார். “கப்பலோட்டிய தமிழரான வ.உ.சிதம்பரனார் தமிழகத்தின் முடிசூடா மன்னராகவும், தொழிலாளரியக்கத்தின் முதல் அனைத்திந்தியத் தலைவராயும் விளங்கினார். அத்துடன் இந்தியத் தலைவர்களிடையே காலங்கடந்த தொலை நோக்குடைய தலைவராகவும் விளங்குகிறார். அவருக்குப் பின் வந்த தீவிரவாதத் தலைவர்களுள் செயல்பாட்டில் அவருக்கு ஒப்பான செயற்கரியன செய்த பெரியாராகப் போஸ் நீங்கலாக எவரையும் கூற முடியாது. இவ்விருவருக்குமிடையே காந்தியடிகள் தலைமை இவர்களைத் தாண்டி ஒளி வீசிற்றாயினும், அது நாடு கடந்த உலக எல்லையும், அரசியல் கடந்த ஆன்மிக எல்லையையும் என்று கூற முடியாது”. 1906 ஆம் ஆண்டு சூரத்தில் கூடிய பேரவையில் தீவிரவாதியான திலகரை மிதவாதிகள் தாக்குதலிலிருந்து வ.உ.சி. தலைமையில் தமிழகத்திலிருந்து சென்றவர்கள் காத்தார்கள் என்ற சூழலை அப்பாத்துரையார் விரிவாக விளக்குகிறார். வான்புகழ் மணிமேகலை மணிமேகலையும் சிலப்பதிகாரமுமே பழமைமிக்க சிறப்பு வாய்ந்த காவியங்களாகத் திகழ்கின்றன. இளங்கோவடிகளால் சிலப்பதிகாரம் இயற்றப்படு முன்பே மதுரைக் கூலவாணிகரால் இயற்றப்பப்டட மணிமேகலையே புத்த உலகில் தலைசிறந்த காப்பியமாகக் காணப்படுகிறது. இலக்கியப் பண்பில் உயர்ந்த இம் மணிமேகலை பற்றி `மணிமேகலை’, `வான்புகழ் மேகலை’ என்ற கட்டுரையில் ஆய்ந்துள்ளார், அப்பாத்துரையார். இலக்கியத்தில் காப்பியங்களை இயற்கைக் காப்பியங்கள், செயற்கைக் காப்பியங்கள் என இரண்டாகப் பிரித்து இயற்கைக் காப்பியமாவது மக்களிடையே வழங்கி மக்கட் பாடங்களைக் காப்பிய உணர்வுடைய ஒரு கலைஞன் தொகுப்பால் ஏற்படுவது. செயற்கைக் காப்பியமாவது ஒரு கலைஞனையே கட்டமைக்கப்படுவது என விளக்கும் அப்பாத்துரையார் ஹோமரின் `இலியட்’ இயற்கைக் காப்பியம் என்றும் மில்டனின் `துறக்க நீக்கம்’ செயற்கைக் காப்பியம் என்றும் கூறி மணிமேகலையை இரண்டுக்கும் இடைப்பட்டதாகக் கூறியுள்ளார். உயர்காப்பியப் பண்புகள் முற்றிலும் அமைந்த மணிமேகலை புத்த சமய இலக்கியமாகக் காணப்படுவது பற்றி `புத்த சமயம் சார்ந்த ஏடுகள் உலகில் பல மொழிகளில் இருக்கின்றன. ஆனால், புத்த சமயச் சார்பான இத்தகைய நல் இலக்கியம் சமற்கிருதத்திலோ பாலியிலோ வேறு எந்த உலக மொழிகளிலோ கிட்டத்தட்ட 50 கோடி புத்த சமயத்தினர் பேசும் சீன மொழியிலோ 8 கோடி புத்த சமயத்தினர் பேசும் சப்பான் மொழியிலோ கூடக் கிடையாது” என இலக்கியப் பண்பாலும் காலத்தாலும்கூட புத்த சமய உலகில் மணிமேகலைக்கு ஈடு வேறு எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037, சூன் 2006, பக். 40-42 அப்பாத்துரையம் - 15 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) ஆய்வுகள்  சங்க இலக்கிய மாண்பு  சிலம்பு வழங்கும் செல்வம்  இன்பத்துள் இன்பம் ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 15 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 24+272 = 296 விலை : 370/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 296  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் சங்க இலக்கிய மாண்பு ... 3 சிலம்பு வழங்கும் செல்வம் ... 29 இன்பத்துள் இன்பம் 1. முப்பால் இன்பம் ... 119 2. இலக்கிய இன்பம் ... 125 3. இன்பத்தின் இயல்பு ... 132 4. புதுமை இன்பம் ... 141 5. இன்பத்தின் மறை திறவு ... 149 6. உயிரின் மறை திறவு ... 157 7. இறவா இன்பம் ... 171 8. பண்பும் பயனும் ... 181 9. மன நிறைவு ... 189 10. இன வாழ்வு ... 197 11. மலர்ச்சி, மறு மலர்ச்சி, புது மலர்ச்சி ... 205 12. இன்பம் என்பது இனவாழ்வே ... 216 13. உடல்நலம், உளநலம், இனநலம் ... 225 14. குடும்ப வாழ்வு ... 232 15. வாழ்வின்பம் ... 240