வெற்றித் திருநகர் முதற் பதிப்பு – 1964 இந்நூல் 2003இல் தேன் புத்தக நிலையம் சென்னை - 302 வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன. முன்னுரை “வெற்றித்திருநகர்” என்ற இந்நூலினை ஆக்கித் தமிழகத்திற்குப் படைத்துள்ள திரு. கா. அப்பாத்துரையாரைப் போற்றுகின்றேன். விசயநகர ஆட்சியின் சமூக, அரசியல், பொருளாதாரச் செய்திகளைத் தொடர்புபடுத்தி இனிய வகையில் கட்டுரை போன்றும், புதினம் போன்றும் அமைந்துள்ள இவ்வரலாற்று நூல் தமிழக மக்கள் யாவராலும் படித்துப் பயன் பெறத்தக்கது என்பது தெளிவு. இது ஒரு வரலாற்று நூல் ஆயினும், வற்றலாய் அமையாமல் இனிக்குஞ் சாறுபோல் அமைந்துள்ளது. இந்நூலின் ஆசிரியரும் சென்னை எழுத்தாளர் சங்கத் தலைவருமாகிய என் நண்பர் திரு. கா. அப்பாத்துரை அவர்களுடைய பாவன்மை நூலகத்தே ஆங்காங்கே வெளிப்பட்டுள்ளது. அத்தியாயந்தோறும் ஒரு நல்ல கவிதையோடு இந்நூல் தொடங்குகிறது. அன்றியும், இடை யிடையே அமைக்கப்பட்டுள்ள பாக்கள் பலவற்றால் இந்நூல் அணிபெற்றுள்ளது. பொதுவாக, வரலாற்று நூல்களை இலக்கியம் என மதிப்ப தில்லை என்றாலும், இந்நூல் அக்கருத்துக்குப் புறம்பாய் நடை பெற்றுள்ளதென்பதைப் படித்துப் பார்ப்போர் கட்டாயம் அறிவர். நல்ல இனிய நடையில் அமைந்துள்ள இவ்வரலாற்று நூல் தமிழ் இலக்கியமாகவும் மதித்துப் பாராட்டும் தகைமைத்து. இதன்கண் விசயநகரத்து நாயக்கர்களோடு தொடர்பு பூண்ட ஏனைய மன்னர்களைப் பற்றியும், சிற்றரசர்களைப் பற்றியும் ஆன செய்திகள் பலவற்றை அறிந்து கொள்வதற்கு இந்நூல் தக்க கருவியாக உள்ளது. பதினான்காம் நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண்டு வரை அமைந்த தமிழ் நாட்டு வரலாற்றினைக் கோவைப்படுத்தி எடுத்துக்காட்டும் இனியபனுவலாய் அமைந்த இதனை நான் வரவேற்கிறேன். சென்னை - 5 24-6-60 (ஒம்.) அ. சிதம்பரநாதன் 1. தென்னகத் தேசீயத்தின் உயிர்மையம் விந்தம் தவிசிட மாக, இமயம் அடிமெல்அர விந்தம் படிதட மாக, விரிதெண் திரைக்கடலே கந்தம் படுகுழ லாக, இலங்கை கதிர்முடியாச் சந்தம் படுவரை நீல மதாணி எம் தாயினுக்கே! நீலத் திரைக்கடல் முத்திசையும் அலை புரள்கின்றது; அதுவே அன்னையின் கருங்கூந்தல். அதனிடையே செருகிய முத்து மணிமுடிச் சலாகையாக இலங்கை எழில் திகழ்கின்றது. திருமருவு மார்பில் நீலமலை மதாணியாக அசைந்தாடுகின்றது. கண்கவரும் இந்த அழகுத் தோற்றத்துடன் தென்னக அணங்கு, முத்தமிழன்னை விந்தமென்னும் சந்தப் பொற்றவிசின் மீது வீற்றிருக்கின்றாள். அவள் மெல்லடிகளாகிய அரவிந்தங்கள் இமயமென்னும் வெண்பொற் பீடத்தின் மீது ஒய்யாரமாகப் படிந்துள்ளன. மேரு அவளுக்குரிய புகழ்க் கொடிக்கம்பம். கயல், புலி வில்லெழுதப்பட்ட முத்தமிழ்க் கொடி அதன்மீது வானளாவப் பறக்கிறது. முகில்மண்டலத்திடையே மின்னற் கொடியென அது உலகெலாம் முத்தமிழ்ப் பண்பொளி பயிலவிடுகின்றது. யவனம், மிசிரம், சோனகம்! சீனம், காசுமீரம், வங்கம்! காம்போசம், அருமணம், கடாரம்! அகில உலகின் பண்பளாவிய இசை நங்கையர்கள் பெயர்களே இவை - அவர்கள் முத்தமிழ ணங்கின் முன்னிலையில் வட்டமாக வளைந்து நெளிந்து குழைந்து சுழன்றாடி அழகு நடமிடுகின்றனர். முத்தமிழ் நங்கையின் முத்த முறுவலொளி அவர்கள் கலைநெளிவுகளி லெல்லாம் நிலவொளி வீசிச் சுடரிடுகின்றது. இயற்கையின் இறைவி, மனித இனவாழ்வின் அரசி, பண்பின் அழகிளங் குழவி அவள்! அவள்தன் ஆணையால் கொண்டலும் கோடையும் குணகடல், குடகடல்களின் நீர்முகந்து பருவ மழைகள் பொழிவிக்கின்றன. தென் பொதியத் தென்றல் அவளது ஆணை வழியே நின்று உலகெலாம் தவழ்ந்து வாழ்வும் கலையும் பரப்புகின்றது. அவள் உயிர் மூச்சாகிய முத்தமிழே ஐந்து மொழிகளாகக் கால் வாங்கி, ஐம்பது மொழிகளாகக் கிளைத்து, ஐந்நூறு ஐயாயிர மொழிகள் தோறும் சென்று சென்று பரவிக் கலையியல் வடிவில் அலை பாய்ந்து பொங்கி மனித இன நாகரிகம் வளர்க்கின்றது. தென் கடலணங்கு! வடமலை யரசி! இடமகன்ற உலகின் எழிலார் இறைவி! இவ்வாறு தென்னகத்தைப் போற்றுகின்றனர் தென்னகக் கலைஞர். கவிஞர்! கவிஞர் கனவுருவாய், அறிஞர் அறிவுதாவி, அருள்மாந்தர் உள்ளந்துழாவும் ஆற்றலுடையது தென்னகத்தின் ஈடிணையற்ற தேசியம். அதன் சிறப்பிற் சிறக்கும் செந்நலமுடையது நம் அகல் பேருலகு. தென்னகத்தின் தேசீயம் தென்னகத்துக்கு ஒரு குடும்ப வாழ்வு. ஆனால் அதுவே கீழ்திசையின் குலவாழ்வாகவும், அகல் உலகுக்கு இனமரபு வளர்க்கும் குவலய வாழ்வாகவும் விரிவுறுகின்றது. குடும்ப வாழ்வு குடும்ப எல்லையில் நின்றே கிளை பரப்பிச் சமுதாய வாழ்வாகவும், நாட்டு வாழ்வாகவும், மனித இன நாகரிக வாழ்வாகவும் பொங்கி மலர்வது காண்கிறோம். இது போலவே தென்னகத் தேசிய வாழ்வு தென்னகக் குடும்பப் பண்பாய் அரும்பி, தென்னவர் வாழ்வில் தழைத்து, தென்கலை மரபில் மலர்ந்து, தென்மொழிப் பண்பில் கனிவான உயிர்விதை அளிக்கின்றது. தென்னக வாழ்வைத் தேசீயங்கடந்த சாவா மூவாப் பொங்கல் புத்திள வாழ்வாக்குவது இதுவே. ஆனால் அதன் பொங்குமாவளம் பொங்கலின் மலர்ச்சியாதலால், அது தென்மொழி, தென்னகம், தென்னவர் வாழ்வு ஆகிய குடும்ப எல்லைகளுடன் அமைவதில்லை. அவ்வெல்லைகள் கடந்து பொங்கித் ததும்பிப் பூரணமாய், பூரணங் கடந்து புவியெலாம் பரவுகின்றது - பூரணங்கடந்த பூரணத்தின் பொலிவு நோக்கித் தென்னகத்தையும், அதன் பண்பில் விரவியிழைந்த பண்புடை உலகையும் ஈர்த்துச் சென்று கொண்டேயிருக்கின்றது. மாறுபடும் அவற்றிடையே மாறிடாமல், ஈறுபடும் அவற்றிடையே ஈறுறாமல், கூறுபடும் அவற்றிடையே குறையகற்றி வீறுபட நின்ற தமிழ் மெய்ம்மை வாழி! தேசீய அலர் வட்டம் தென்னகப் பெருவாழ்வில் பங்கு கொண்டுள்ள அரசுகள், பேரரசுகள் மிகப் பல. அவை ஒவ்வொன்றும் ஒன்றுடனொன்று ஒவ்வொரு வகையில் விஞ்சிய புகழுடையனவே. ஆயினும் அவற்றுள் வேறு எவற்றுக்கும் இல்லாத தனிப் பெருஞ் சிறப்பு, தேசியச் சிறப்பு விசயநகரப் பேரரசுக்கு உண்டு. பேரரசின் தலைநகரான விசயநகர் அல்லது வெற்றித் திருநகர் அப்புகழில் முழுப் பங்கு கொண்டுள்ளது. பேரரசு தென்னகத்தின் தேசிய உயிராய் இயங்கிற்றென்று கூறலாமானால், பெருநகர் அவ்வுயிரின் உயிர் மூச்சாய் நிலவிற்று என்று துணிந்துரைத்தல் தகும். உலக வாழ்வு ஒரு தாமரைப் பொய்கை. அதில் பூந்துகள் மணமும் வண்ணமும் எழிலும் பரப்பும் விரியிதழ்த் தாமரையாகத் தென்னகத் தேசியம் விளங்குகிறது. ஆனால் அத்தேசியம் இரு பிறப்பு, இருவாழ்வுடையது! முதற்பிறப்பு தமிழகத் தேசீயம்; தென்னகத் தேசீயம் அதன் மறு வாழ்வாக இயல்கின்றது. இந்த இரு துணைத் தேசீயங்களும் அளாவி, தமிழகத் தேசீயத்தைப் பின்னோக்கி, தென்னகத் தேசீயத்தை முன்னோக்கும் சிங்க நோக்கு வாய்ந்தது விசயநகரப் பேரரசின் வரலாறு! அகவட்டம், புறவட்டமாக மூன்று அல்லது நான்கு தள வட்டங்களையுடைய ஓர் ஆயிர இதழ்த்தாமரை மலராக நாம் தமிழக, தென்னகத் தேசீய மலர்ச்சியை உருவகம் செய்து காணலாம். அதன் படிவளர்ச்சி முறைமைகளை இது நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டும். முதல் அக வட்டம் சேர சோழ பாண்டியர் பெயரால் உலக வரலாற்றின் வானவிளிம்பில் முத்தளத் தேசீயமாய் மிளிர்ந்துள்ளது. முடியுடை மூவேந்தர்களான இவர்களருகே குடியுரிமைத் தலைவர்களான வேளிர் பலர் தென்னகமெங்கும் பரந்து குடியாட்சி நடத்தினர். முடியரசரை மூவரென வகுத்த தமிழ் மரபு இக்குடி மரபினரையும் எழுவரென வரையறுத்தது. முத்திறத் தேசீயத்தை அடுத்த எழுதிறத் தேசீயமாய் அவர்கள் மரபு நிலவிற்று. தமிழர் கடல் கடந்த வாழ்வு, தமிழக வாணிகக் குடியாட்சி மரபுகள் (ஊhயசவநசநன பரடைனள யனே ஊடிசயீடிசயவiடிளே), தமிழரசர், பேரரசரின் கடல்கடந்த ஆட்சி மரபுகள் ஆகியவை இந்த இரண்டு அகவட்டங்களும் சூழ்ந்த மூன்றாவது அகவட்டமாக இயன்றன. முத்திற, எழுதிறத் தேசீயங் கடந்த எழுமை எழுநிலைத் தேசீயமாக இது திகழ்ந்தது. தமிழினத்தின் இந்த அகத்தேசீயம் என்று பிறந்ததென்று நம்மால் கூற இயலாது. ஏனெனில் வரலாற்றின் ஒளி வாயிலிலேயே இந்த மூன்று அகவட்டங்களும் ஒருங்கே மூவண்ண நிலவொளி வீசக் காண்கிறோம். தொல்காப்பிய காலத் தமிழகப் பெரும் பேரரசன் நிலந்தரு திருவிற் பாண்டியன் மாசீர்த்தி என்ற நெடியோன் ஆவான். வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்பதுவும் அவன் புகழ்ப் பெயரே, அவன் மும்மை எழுமைத் தேசீய எல்லையாகிய தென்னக முழுதாண்டதன்றி, வட இமயமும் கடல் கடந்த கடாரமும் வென்று புகழ் பரப்பினான். நாலாயிர, ஐயாயிர ஆண்டுகட்கு முற்பட்ட இம்முதலலை அளாவி, கி. பி. 12-ஆம் நூற்றாண்டில் அப்புகழ் புதுப்பித்த சோழப் பெரும் பேரரசன் இராசேந்திரனும் வட இமயம், தென்னிலங்கை, கடலகம் கடந்த கடாரப் பரப்புக்கள் ஆகிய எல்லைகளி லெல்லாம் தமிழ்க்கொடி பரப்பி ஆண்டான். தமிழகத் தேசீயத்தின் புது மலர்ச்சியாகிய தென்னகத் தேசீயம் தமிழர் அகத் தேசிய வட்டத்தின் மையத்தளத்திலிருந்தே புது வளர்ச்சி தொடங்கிற்று. கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் சங்க காலத்தின் இறுதியி லிருந்தே தேசீய அலர்வட்டத்தின் வாழ்வில் நாம் இரு மாறுதல் களைக் காண்கிறோம். ஒருபுறம் தென்னக முழுதும் பரவியிருந்த பண்டைத் தமிழகம் சிதறுண்டு, இன்றைத் தமிழக முட்பட்ட ஐந்து மொழியகங்களாகப் படிப்படியாகப் பிரிவுற்றது. ஆனால் அதே சமயம் பிளவுபடாத பண்டைத் தமிழகத்தின் பரந்தகன்ற தேசீயம் இப்போது பிளவுபட்ட தமிழகத்தில் பிளவு கடந்து பாய்ந்து பரவித் தோய்ந்து ஊறிப் புதிய செறிவுடன் புது வளர்ச்சியடையத் தொடங்கிற்று. பல்லவர் கால முதலே புதுக் குருத்து விட்டு அதுவே அலர்தாமரையின் அக இதழ் வட்டங்கள் தாண்டிய புற இதழ் வட்டமாய், தென்னகத் தேசீயமென்ற புத்துருவுடன் மிளிரலாயிற்று. தென்னகத் தேசீயத்தின் முதல் முழு நிறை மலர்ச்சியே, விசயநகரப் பேரரசு. அம்முழு நிறைமலர்ச்சியின் அழகு வண்ணச் சின்னம் வெற்றித் திருநகர். பேரரசும் பெரு நகரமும் தென்னகத்தின் ஒரு சிறிய பகுதியையோ, பெரும் பகுதியையோ ஆண்ட அரசுகள், பேரரசுகள் உண்டு. தென்னகம் கடந்து பரவிய பெரும் பேரரசுகளும் பல. ஆயின் இவற்றுள் விசய நகரத்துக்கு முற்பட்ட எதுவும் தென்னகத் தேசீயப் பேரரசு என்று கூறத்தக்கது அன்று. ஏனெனில் தேசீய எல்லை சென்றெட் டாதவை முழு நின்ற தேசீயம் அடையாதவை. தேசீய எல்லை கடந்து பரவுபவையோ என்றும் தேசீயம் பேண முடியாதவை. விசய நகரப் பேரரசு இவ்வகையில் பேரரசுகளிடையே தனிப்பட்ட சிறப்பு உடையது - அதுவே முதல் தென்னகத் தேசீயப் பேரரசு! அது தென்னக எல்லையையே தன் எல்லையாகக் கொண்டு நிலையான ஆட்சி நடத்திற்று. அத்துடன் தென்னக மொழிகள் யாவும் அளாவி நின்று, தென்னகத்தை மொழி மண்டலங்களாகப் பிரித்துத் தேசியக் கூட்டாட்சி நடத்திய பேரரசு அது ஒன்றே. பேரரசின் இச் சிறப்புக்களில் ஒரு சிறிதும் குறையாத பண்புகளுடையது வெற்றித் திருநகர்! அதனை ஒத்த புகழும் வாழ்வும் உடைய தென்னகப் பெருநகர்கள் பலவற்றை வரலாறு கண்டதுண்டு. ஆனால் அரசியல் முறையிலும், புகழ் வாழ்விலும் தென்னகத்தே ஒரு தனித் தலைநகராய் இயங்கிய பேறு வேறு எந்தப் பெரு நகரும் காணாத ஒன்று. உலகின் திருவிடமாய், அப்புகழ்ப் பெயர் தாங்கிய தென்னகத்துக்குத் திருமருவிய ஒரு மையத் திருவிடமாய் அத்திருவுடைய நகரம் இயங்கியிருந்தது. பேரரசும் பெரு நகரும் விசயநகரம் அல்லது வெற்றித் திருநகரம் என்ற ஒரே பெயராலேயே இயங்கின. அவற்றின் இன்றியமையாத நெருங்கிய தொடர்பை இது சுட்டிக் காட்டுகிறது. மற்றப் பெரு நகர்களைப் போல அது பல அரசுகள், பேரரசுகள் கண்டதில்லை. ஒரே பேரரச வாழ்வை ஒட்டிப் பிறப்புற்று, அது அப்பேரரச வாழ்வுக்காகவே வாழ்ந்து, அதன் புகழுடன் தன் வாழ்வை முற்றிலும் இணைத்துவிட்டது. தென்னகமளாவிய புகழ்ப் பேரரசாக நிலவிய கால முழுவதும், பேரரசும் வெற்றித் திருநகரையே தலைநகராகக் கொண்டிலங் கிற்று. திருநகரின் பெயரையே பேரரசு என்றும் தன் பெயராக ஏற்றமைந்ததென்பதும் திருநகரின் ஏற்றத்துக்கு ஒரு சான்று ஆகும். வெள்ளத்தின் வாழ்வுடன் வாழ்ந்து, வளமெய்தி, அது வற்ற வற்றத் தானும் வாடி வதங்கி மடியும் இயல்புடையது செந்தாமரை மலர். பெருநகர் வாழ்வு இச் செந்தாமரை மலரின் வாழ்வை ஒத்தது என்னல் பொருந்தும். ஏனெனில் அது பேரரச வாழ்வுடன் வாழ்ந்து, அதன் புகழ் வளர்ச்சியுடன் தானும் வளர்ந்தது. ஆனால் பேரரசு பொன்று முன்னே, அதன் புகழ் சரியத் தொடங்கிய வுடனே அதுவும் சரிவுற்றது. கொண்டானை யல்லால் அறியாக் குலக்கொடி போல, அது பேரரச வாழ்வு ஒன்றனுக்காகவே பிறந்து, அது ஒன்றனுக்காகவே வாழ்ந்து வளர்ந்து, அது தளர்வுறுமுன் தானே மங்கி மடிவுற்றது. உலக வாழ்வில் உரோம் நகர் ஒன்றன்றி வேறெந்த நகரமும் காணாத அரும்புகழை வெற்றித் திருநகர் தன் இரண்டு நூற்றாண்டுக் கால வாழ்வுக்கும் கண்டது. அத்துடன் வேறு எந்த நகரமும் - அந்த உரோம் நகர்கூட முற்றிலும் பெறாத நிலையில் - அது தேசீயப் பேரரசின் வாழ்வையும் வரலாற்றையும் தன் வாழ்வாகவும் வரலாறாகவும் கொண்டியங்கிற்று. வணிகம் தமிழகத்தில் நாலாயிர ஆண்டுகட்கு முன் உவரியும், இரண்டாயிர ஆண்டுகட்கு முன் கொற்கையும் காவிரிப் பூம்பட்டினமும் உலக வாணிகக் களங்களாய் நிலவின. வெற்றித் திருநகர் இவற்றைப் போலக் கடற்கரை நகரம் அன்று. ஆயினும் அது தமிழகத்தின் உவரிபோல, கொற்கைபோல, பூம்புகார்ப் பட்டினம் போலத் தென்னக வாழ்வுக்கும் உலக வாழ்வுக்கும் இடைப்பட்ட ஒரு பாலமாய் இயன்றது. அத்துடன் அது தென்னகத்தின் தலைநகராக மட்டுமின்றி, கீழையுலகின் மையத் திருநகராகவும், உலகப் பெருநகர்களிடையே ஈடிணையற்ற மாபெருநகராகவும் விளங்கி யிருந்தது. கி. பி. 14 முதல் 16-ஆம் நூற்றாண்டு வரையும் உலகில் நிலவிய பெருநகரங்கள் எவையும் - கீழையுலகில் மட்டுமின்றி மேலையுலகிலும் - அந்நகருக்கு இணையாய் இருந்ததில்லை. பரப்பிலோ மக்கட் பெருக்கத்திலோ, செல்வ வளத்திலோ உலக வாணிகச் செழிப்பிலோ, கலை நேர்த்தியிலோ தொழிற் பெருக்கத்திலோ, வீறுசால் ஆற்றலிலோ விழுமிய தோற்றத்திலோ அந் நகருக்கிணை அந்நகரேதான் என்ற நிலை ஏற்பட்டிருந்தது. இதனை இந்நாட்டவர், பின்னாட்களுக் குரியவரல்லர்-அந்நாட்களிலேயே பன்னாடுகளிலுமிருந்து இந்நாடு போந்தவர்களே கண்ணாரக் கண்டு வாயார, ஏடாரப் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். உலகின் எல்லாத் திசைகளிலிருந்தும், எல்லா நாடுகளிலிருந்தும் அந்நாளில் நாடுசூழ் வாணரும் வணிகரும் வந்து அந்நகரின் தெருக்களில் நடமாடினர். உலகின் எல்லா நாடுகளின் சரக்குகளும் அதன் கடை வீதிகளில் வந்து கொட்டிக் கிடந்தன. உலகின் செல்வக் குவைகளில் பெரும் பகுதியும் பேரரசில் பரவலாகவும், பெருநகரில் செறிவாகவும் மண்டிக் கிடந்தன. உலகத்துக்கு அப்பெருநகர் தென்னகத்தின் ஒரு சிறு பதிப்பாகவும், தென்னகத்துக்கு அகல் பேருலகின் ஒரு கண்காட்சிக் கூடமாகவும் மிளிர்ந்தது. உலகம் தென்னகத்தை ஒருமுகப்படுத்திக் காண, தென்னகம் உலகைத் தொலைவிலிருந்து பன்முகம் படக் காண அப்பெருநகர் இடையே ஒரு வண்ணப் பலகணியாய் அமைந்திருந்தது. தேசீய மலர்ச்சி, மறுமலர்ச்சி : புது மலர்ச்சியின் சின்னம் பேரரசு, பெருநகர் ஆகியவற்றின் வாழ்வு தென்னகத் தேசீயத்தின் சின்னம் மட்டுமன்று. வாழ்வுக் காலத்தில் அது தென்னகத் தேசீயத்தின் முழு நிறை மலர்ச்சியின் உருவாக இயன்றது. தாழ்வுக் காலத்திலும் அது இந்நிலையில் மாறவில்லை. ஏனெனில் அதன் தாழ்வுக்காலமே தென்னக வாழ்வின் தாழ்வுக் காலமும் ஆகும். தென்னகத்தின் தாழ்வகற்றும் மலர்ச்சி தொடங்கிய போதும், பேரரசு பெருநகர் வாழ்வே அம் மலர்ச்சியில் மிதந்து முதலிடம் பெற்றது. ஏனெனில், பேரரசு, பெருநகர் ஆகியவற்றின் புகழ் மலர்ச்சியே தேசீயப் புதுமலர்ச்சிக்கும் வழி வகுத்தது. பேரரசு பெருநகர் ஆகியவற்றின் தேசீயப் பண்பை இத்தொடர்பு வலியுறுத்திக் காட்டுகிறது. வரலாற்றில் 14-ம் நூற்றாண்டின் முற்பாதியிலே ஒரே ஆண்டிலே, ஒரே நாளிலே - கிட்டத்தட்ட ஒரே கணத்திலேயே - பேரரசும் பெருநகரும் ஒருங்கே பிறப்புற்றன. பெயரளவில் பேரரசு 17-ம் நூற்றாண்டு வரை நிலவினாலும் 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வீசியடித்த ஒரு தென்னகப் பெரும்புயலில் அதன் பீடும் பெருமையும் சரிவுற்றன. பேரரசு சரியத் தொடங்கிய பின் நகர வாழ்வு ஒரு நாள் கூட அமைந்து நிலை கொள்ளவில்லை. அழிவுப்புயல் தென்னக வாழ்விலும் பேரரசு வாழ்விலும் ஒருநாள் வீசியடித்ததென்றால், நகர வாழ்வில் அது இடைவிடாது நாட்கணக்காக, வார, மாதக் கணக்காகச் சுழன்றடித்தது. நகரம் அதினின்றும் என்றும் மீளவில்லை. வரலாற்றில் அது மீண்டும் என்றும் தலைதூக்காமல் மடிந்து மறைந்தது. ஆனால் மாண்டது நகரமோ, நகர வாழ்வோ மட்டுமல்ல. அது பற்றிய நினைவே மக்கள் உள்ளத்திலிருந்து நீண்ட, கிட்டத்தட்ட நிலையான விடை கொண்டு சென்று விட்டது. மண்ணில் மட்டுமன்றி, மக்கள் உள்ளத்திலும் அது மறதியின் ஆழத்தில் புதையுண்டு போய் விட்டது. பேரரசையும் பெருநகரையும் தென்னகம் கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளாக, 16 முதல் 20-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை முற்றிலும் மறைந்திருந்தது. அந்நாட்களில் தென்னக மெங்குமுள்ள பாரிய கோயில்கள், வானளாவிய கூடகோபுரங்கள் ஆகியவற்றைக் கண்டு மக்கள் வியந்து போற்றாமலில்லை. ஆனால் அவற்றைக் கட்டியெழுப்பிய சிற்பிகள் யார் என்பது பற்றி அவர்கள் சிந்தித்ததே கிடையாது. விசயநகரப் பேரரசர் கீழிருந்தாண்ட மண்டலத் தலைவர் மரபினரே பல நூற்றாண்டுகளாக அரசர், வல்லரசராக விளங்கினர். ஆனால் அவர்கள் தங்கள் மூலமரபின் பெருஞ்சூழலை முற்றிலும் மறந்தனர். அப்பேரரசர் வகுத்தமைத்த பாளையங்களே இன்று வரை பெருங்குடி மரபுகளாக, பெரு நிலக்கிழமை மரபுகளாக நீடித்துள்ளன. ஆயினும் அவற்றை அமைத்த மூல முதல்வர்களின் பெயர்கள் காற்றில் கலந்து விட்டன. பேரரசுக்கால ஆட்சி மரபுகள், முறைகள் பெரும்பாலும் தொடர்ந்து நிலவிவந்துள்ளன. ஆனால் அவற்றின் படைப்புக் குரிய பண்பாளர்களைப் பற்றி எவரும் கனவு கண்டதில்லை. தென்னகம் இவ்வாறு பேரரசு, பெருநகர் ஆகியவற்றின் பீடும் புகழும் மறந்திருந்த காலமே, அது தன்னையும் முற்றிலும் மறந்திருந்த காலம் ஆகும். தன்னிலையையும் தென்னகம் இவ்வூழியில் முற்றிலும் இழந்திருந்தது. புற உடலைத் தாக்கும் நோயை எளிதாக உணரும் மனிதன், தன் உடலையும் வாழ்வையும் இயக்கும் உள்ளுயிராற்றலின் செயல்களை ஒரு சிறிதும் உணர முடிவதில்லை. அது போலவே தென்னகம் இவ்வூழியில் புறச் சூழல்களால் ஏற்பட்ட தன் தற்காலிக நலிவு மெலிவுகளை எளிதில் கண்டது. அவற்றையே நிலையான தன் பண்புகளாகவும் கருத்திற் கொண்டது. ஆனால் நிலையான தன் பழம் பெருமையை மறந்தது போலவே, தன் தேசீயத்தை உள்ளூர நின்றியக்கி வந்திருந்த பேரரச வாழ்வையும் தென்னகம் உணரவில்லை, எண்ணவில்லை. பேரரசை இவ்வாறு தென்னக மக்களின் புறமனம் மறந்தாலும், அதன் தேசீய உணர்வு அவர்கள் அக உள்ளத்தில் தன் தடம் பதிக்கத் தவறவில்லை. ஏனெனில் பேரரசின் அழிபாட்டிலிருந்தே மதுரை, தஞ்சை, செஞ்சி, இக்கேரி ஆகிய இடங்களிலுள்ள நாயக மரபுகள் தோன்றி வல்லரசுகளாக இயங்கின. தவிர அது தூண்டிய உள்ளுணர்விலிருந்தே அடுத்த தென்னகத் தேசீய மலர்ச்சியாக மைசூரில் ஹைதர் - திப்பு எழுச்சி தொடங்கிற்று. மேலும் தென்னகம் முழுதும் உணராத பேரரசின் பண்பாற்றலை அண்டைத் தேசீய இன எழுச்சியின் முதல்வனான சிவாஜி நன்குணர்ந் திருந்தான். புதிய மராத்திய தேசீயத்துக்கு வலுக்கொடுக்கும் பழைய தென்னகத் தேசீயமாக அவன் அதை மதித்தான். பேரரசின் சரிவுக்காலக் கடைசித் தலைநகரான வேலூரிலேயே அவன் பேரரச மரபின் பெயரால் தன்னைக் கருநாடகப் பேரரசன் என்று முடி சூட்டிக் கொண்டான். அவன் முடிவு தவறல்ல என்பதை வரலாறு காட்டுகிறது. ஏனெனில் சிவாஜி கண்ட மராத்திய தேசீய அரசு சரிந்து மறைந்த பின்னும் அவன் நிறுவிய கருநாடக மராத்திய மரபு தஞ்சையில் நீடித்தது. அவன் பண்புகளைக் காற்றில் பறக்க விட்ட அவனது மராத்திய நாட்டு மரபினரைவிட, தஞ்சை மரபினர் தம் வாழ்வாலும் பண்பாலும் அவன் புகழ் மரபைக் கடைசி வரை பெரிதும் காத்தனர். மறதியூழிக்கு 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு விடிவு ஏற்பட்டது. அடுத்த நூற்றாண்டின் தொடக்கத்துக்குள் மேலையறிஞர் பழம் பொருளாய்வாளர், கலையார்வலர், வரலாற்றா சிரியர்கள் ஆகியோரின் கருத்தை வெற்றித் திருநகரின் அழிபாடுகள், விசயநகர மரபின் அகல் பெருந்தடங்கள் ஆகியவை ஈர்த்தன. ஏற்கெனவே முழுதும் மறக்கப்பட்டுப் போன பேரரசின் பெருவாழ்வும் பெருநகரின் பீடும் அவர்கள் முயற்சியால் புதிதாகக் கண்டுணரப்பட்டுப் புத்தம் புதிய ஆர்வத்துடனே மக்களிடையே பரப்பப்பட்டன. அந்நாளைய புத்தெழுச்சியின் தன்மையை அக்கால ஏடுகளின் ஆர்வ மகுடங்களே நமக்குக் காட்டவல்லன. மறக்கப்பட்டுப் போன மாபேரரசு (ஹ குடிசபடிவவநn நுஅயீசைந), தென்னகத்தின் வியத்தகு மாநகர் (றுடினேநச ஊவைல டிக வாந ளுடிரவா), அழிபாட்டிடையே மிளிரும் வரலாறு (ழளைவடிசல in சுரiளே) என்பன போன்ற தலைப்புக்களுடன் அந்நாளைய ஏடுகள் மக்களிடையே பரபரப்புடன் உலவின. இதே எழுச்சியுடன் புத்தேடுகள் மட்டுமன்றிப் புத்தாராய்ச்சிக் கட்டுரைகள், புதிய பத்திரிகைப் பத்திகள் அந்நாட்களில் தீட்டப்பட்ட வண்ணமிருந்தன தவிர, கல்லூரிகளிலே, கல்வியாராய்ச்சிக் கூடங்களிலே, கலை மேடைகளிலே, மக்கள் மன்றங்களிலே இவை பற்றிய வாத எதிர் வாதங்கள் எழுந்து முழங்கின. புதுமைச் சூட்டுடன் சூடாகக் கருத்துக்கள், எதிர் கருத்துக்கள் பரிமாறப் பட்டவண்ண மிருந்தன. பேரரசு, பெருநகர் வாழ்வு மறைந்து நெடுநாளான பின்பும், நீண்ட மறதியூழிக்குப் பின்னும், அதன் புகழ் மரபு மலர்ச்சி யடைந்தது. அம்மலர்ச்சி தென்னகத்தின் புத்தெழுச்சிக்கு, புதிய தேசீய மலர்ச்சிக்கு வழிவகுத்தது; வழி வகுத்து வருகின்றது! சமகால அயல் நாட்டவர் மதிப்புரைகள் விசயநகர வாழ்வுக்காலம் தென்னகத்துக்கு மட்டும் புது மலர்ச்சிக்காலமாய் அமைந்து நின்றுவிடவில்லை. உலகெங்குமே அது மலர்ச்சியலைகள் குமுறியெழும் காலமாய் விளங்கிற்று. இவ்வுலக மலர்ச்சிக்கும் விசயநகர வாழ்வே கவர்ச்சி மையமாய் இருந்தது. இதன் பயனாகத் தென்னக வரலாற்றில் முற்றிலும் மறைந்து கிடந்த இந்த ஊழியே இன்று நமக்கு அதில் மிகப் பேரொளி காட்டும் ஊழியாகவும் நிலவுகின்றது. பெரிஷ்டா, இபின் பத்தூதா போன்ற இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள்; பாரஸ், கூட்டோ, கோரியா முதலிய மேலை வரலாற்று எழுத்தாளர்கள்; பாரசிக தூதர் அப்துர் ரசாக் போன்ற அரசியல் வாணர்கள்; இத்தாலிய நாடு சூழ்வாணர் நிக்கோலோ - டி காண்டி, போர்ச்சுகீசிய எழுத்தாளர்களான நூனிஸ், பேய்ஸ், துவார்த்து பர்போசா; சீசர்பிரடெரிக், காஸ்டன் ஹீடா முதலியோர் வாழ்ந்து பேரரசு பெருநகர் பற்றிக் கண்டும் கேட்டும் எழுதிய ஊழி அது. தவிர, இக்காலத்திலேயே சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய பன்மொழி களிலும் தத்துவ உரைநூல்கள், கலைஇயல் ஏடுகள், வரலாறுகள், காவியங்கள், நாடகங்கள் எண்ணற்றன அரசியல் சார்புடையவர் களாலும் அவர்கள் துணைவியராலும், அவர்களைச் சார்ந்து வாழ்ந்த புலவர்களாலும் எழுதிக் குவிக்கப் பட்டன. கோயில் ஒழுகுகள், ஊர்க்காலக் கணிப்புகள், கல்வெட்டுக்கள் ஆகியவை பேரளவில் வரலாற்றாதாரமாக வளர்ந்ததும் இக்காலத்திலேயே ஆகும். பேரரச வாழ்வு இங்ஙனம் தென்னகத் தேசீயத்துக்குத் தந்த அதே ஊக்கத்தைத் தென்னக வரலாற்றுக்கும் அளித்துள்ளது, அளித்து வருகிறது! பேரரசு, பெருநகர்பற்றிய வெளிநாட்டார் விரிவுரைகள், அதன் செல்வம் பற்றிய அவர்கள் மதிப்பீடுகள் புனை கதையிலும் புதுமை வாய்ந்த புனைந்துரையாக, அராபிக் கதைகளின் கற்பனை களும் சென்றெட்டாதவை கலை ஓவியங்களாக உள்ளன. ஆயினும் அவை புனைந்துரைகளுமல்ல. ஆர்வமிகை யுரைகள் கூட அல்ல-வரலாற்று மெய்மை சான்ற மதிப்பீடுகளே யாகும். ஏனெனில் வேறு வேறு நாட்டவர், காலத்தவர், சமயத்தவர், கோட்பாட்டினர் ஆகியவர் உரைகளின் ஒப்பீடுகள் அவற்றுக்குச் சான்று தருகின்றன. மறக்கப்பட்டுவிட்ட மாபேரரசு (ஹ குடிசபடிவவநn நுஅயீசைந) என்ற வரலாற்றோடு தீட்டிய அறிஞர் சீவெல் (ளுநறநடட) என்பவர் ஆவர். அவர் புத்தார்வக் காலத்தின் முதற்குரல் எழுப்பியுள்ளார். ‘பெருநகரின் பெயர்கூட இப்போது மக்கள் மனத்திலிருந்து மறைந்து விட்டது. அது இருந்த இடத்தின் அழிபாடுகளைச் சுட்டி உரைப்பவர்கள் அந்நகரின் பெயர் கூறாமல் அருகிலுள்ள ஹம்பி என்ற சிற்றூரின் பெயராலேயே அதனை வழங்குகின்றனர். ஆயினும் அதனை ஆண்டவர்கள் மேலை உலகில் ஆஸ்திரியாவை விடப் பெரிதான ஒரு பேரரசின் அதிபர்கள் ஆவர். 15, 16-ஆம் நூற்றாண்டுகளில் அதனை வந்து கண்டு வியந்து பாராட்டிய ஐரோப்பிய யாத்திரிகர்கள் எத்தனையோ பேர் உண்டு. அதன் பெரும்பரப்பையும் பேரளவான வளத்தையும் குறித்து அவர்கள் வியப்பார்வத்துடன் எழுதிப் போயிருக்கின்றனர். செல்வச் செழிப்பிலும் வனப்பிலும் மேலையுலகின் எந்த நகரும் அதற்குச் சிறிதும் ஈடாக மாட்டாது என்று அவர்கள் அனைவரும் ஒருமுகமாகத் தயங்காமல் கூறியுள்ளனர்!’ கண்கூடான சான்றுகள் நகரம் தென்வடலாக, 14 கல் நீளம், கீழ்மேலாக 10 கல் அகலம் உடையதாயிருந்தது. அதன் சுற்றளவு 60 கல். வடக்கிலும் மேற்கிலும் செங்குத்தான மலைகளாலும் தெற்கிலும் கிழக்கிலும் கொடும்பாறைகளடர்ந்த துங்கபத்திரைக் கரைகளாலும் அது சூழப்பட்டிருந்தது. இயற்கையரணாகவே அமைந்த இந்நகருக்கு ஒன்றன்பின் ஒன்றாக 7 கோட்டை மதில்கள் மேலும் அரண் காப்புத் தந்தன. நகருக்குள் செல்லும் பெருவாயில் ஒன்றே யானாலும், மதில் வாயில்கள் 64 அமைந்திருந்தன. நகரில் எந்நேரமும் போருக்குப் புறப்படச் சித்தமாயிருந்த வீரர்கள் தொகையே 90,000. அரசன் துணைவியர் அதாவது அரண்மனை மாதர் மட்டும் 12,000 பேர் இருந்தனர் - கி. பி. 1420-ஆம் ஆண்டில் நகரில் வந்து தங்கியிருந்த இத்தாலிய நாடு சூழ்வாணர் நிக்கோலோ - டி - காண்டி தரும் விவரங்கள் இவை. “வெற்றித் திருநகர் போன்ற ஒரு நகரின் காட்சியை மனிதரின் விழிகள் இதுகாறும் கண்டதில்லை. காணக் கூடுமென்று மனிதர் கேள்வியறிவுக்கு இதுவரைத் தெரிய வந்ததும் இல்லை’-இது கி.பி.1433-ல் நகரில் வந்து பேரரசர் விருந்தினராகத் தங்கியிருந்த பாரசிக நாட்டின் தூதர் அப்துர் ரசாக்கின் சமகால ஆர்வ உரை ஆகும். ‘இந்தியத் துணைக்கண்டம் முழுமையிலும் விசயநகரப் பேரரசரை ஒத்த பெரும்படையுடைய வல்லரசர் எவருமில்லை’ - இதுவும் அரசியல் தூதர் ரசாக் மதிப்புரையே. இதற்கு விளக்கவு ரையாய் அமைகின்றன - நூனிஸ், பேய்ஸ் போன்ற போர்ச்சுகீசிய எழுத்தாளர் தரும் விவரங்கள்! ‘பேரரசின் மொத்தப் படை வீரர் தொகை 11 இலட்சம்’ என்கிறார் பேய்ஸ். 7 இலட்சத்துக்கு மேற்பட்ட காலாட்கள், 32 ஆயிரத்துக்கு மேற்பட்ட குதிரை வீரர், 551 யானைகளடங்கிய படையைத் தாமே நேரில் பார்த்ததாக நூனிஸும், அரண்மனையில் காத்திருந்த சிற்றரசர்களுக்குரி யவையாக, எப்போதும் அரண்மனை வாயிலருகே நின்றிருந்த யானைகளே ஆயிரத்துக்கு மேற்பட்டன என்று ரசாக்கும் தெரி விக்கின்றனர். திருநகரின் மொத்த மக்கள் தொகை 30 இலட்சத்துக்குக் குறையாதது என்று வரலாற்றாசிரியர் சூரிய நாராயணராவ் கணித்துக் காண்கிறார். இன்றைய இந்தியா பாகிஸ்தான் பரப்புக்களிலுள்ள தலைநகரங்களில் மூன்று, நான்கு சேர்த்தலான்றி இந்தத் தொகையை எட்டமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. அந்நாளைய தென்னகத் தலைநகரத்தின் பெருமித வளத்தையும், அந்நாளைய தென்னகத்தின் விழுமிய சிறப்பையும் இது அளந்து காட்டவல்லது ஆகும். கோட்டை கொத்தளங்கள், அரண்மனை மாடங்கள், கூட கோபுரங்கள், நீரோடும் ஓடைகள், கால்வாய்கள், கோயில்கள், கல்லூரிகள், மண்டபங்கள், சித்திர வேலைப்பாடமைந்த அழகிய கூடங்கள், கேளிக்கைப் பயிற்சிக் களரிகள், பொழுதுபோக்கு வெளிகள், பூங்காக்கள் ஆகியவை நகரெங்கும் இடையற நெருங்கி மிடைந்திருந்தன. கடைத்தெருக் கம்பளங்கள், களஞ்சியங்கள், யானை குதிரைப் பந்திகள், பூஞ்சோலைகள், பழத்தோட்டங்கள், பணிமனை மாடங்கள், பொதுமன்ற மாளிகைகள், கொலு மண்டபங்கள் திசை திசைதோறும் காண்பவர் கண்களுக்கு விருந்தளித்தன. அரண்மனையடுத்து ஆரவாரக்கலை ஆய்வுக் கூடங்களும், ஆரவாரக் கடைத் தெருக்களருகே இசையரங்குகளும், நெல் கோதுமைக் குவியல்களை யடுத்து முத்துமணிக் குவைகளும் நகரில் வேற்றுமையின்றி ஒருங்கு குலவின. அப்துர் ரசாக்குக் கண்கூடாகக் கண்டு எழுதிய நகரின் வருணனைகள் நகரை நம் கண்முன் உயிரோவியமாக இயங்க வைக்கின்றன. நகருக்கு நடுநாயகமாக அரண்மனையடுத்து எதிரெதிராக நான்கு கடைவீதிகள் சென்றன. அவற்றில் ஒவ்வொரு பொருளுக்குரிய வாணிகக் களங்களும் ஒவ்வொரு வரிசையாக அணியணியாக இணைந்திருந்தன. மணிவீதியெங்கும் மணிவாணிகர் முத்துக்களையும் மாணிக்கங்களையும், மரகதங் களையும், வைரங்களையும், பவளங்களையும், கோமேதகங்களையும் குவியல் குவியலாகக் குவித்து வைத்து விலை கூறினர். தெருக்கள் யாவும் கல்பாவி அழுத்தம் செய்யப்பட்டு அரண்மனை முற்றங்கள் போலக் காட்சியளித்தன. அவற்றின் இரு மருங்கிலும் தெண்ணீரோடைகள் சலசலத்தவண்ணம் இயங்கின. சமகால அறிஞர் எழுதியவற்றுட் பெரும்பாலானவற்றின் வாய்மையை நகரின் இன்றைய பாழடைந்த பரப்பே மெய்ப்பிக்க வல்லதாகின்றது. தென்னகங் காணவரும் அகல் உலகக் கலையார்வலர் எவரும் வாழ்நகர்களின் கலைக்காட்சிகளிடையே இந்தப் பாழ்நகரின் காட்சியையும் காணாதமைவதில்லை. நகரின் பாழ் நிலையிலும் கலை மாளா வாழ்நிலையே எய்தியுள்ளது. பேரரசு காலத் தென்னகத்தின் செல்வ வளம் விசய நகர காலத்துக்கு முன்னும், விசய நகர காலத்திலும், விசய நகர வாழ்வு கழித்து இரண்டு நூற்றாண்டுகள் வரையிலும் கூடத் தென்னகம் உலகின் செல்வக் களஞ்சியமாகவும், கருவூலமாகவும் விளங்கியிருந்தது. இதனை ஐயத்துக்கிடமின்றிக் காட்டும் செய்திகள் பல உள்ளன. விசய நகர பேரரசு நிறுவப்பட்டதற்கு ஒரு சில ஆண்டுகட்கு முன் தில்லியில் ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவனான மாலிக் காபூர் இராமேசுரம் வரை சென்று பல கோயில்களின் செல்வங்களைக் கொள்ளை கொண்டு மீண்டான். அவற்றில் தங்கச் சிலைகள் முதல் மணிக் கம்பளங்கள் வரை எல்லா வகைப்பட்ட மதிப்புக்குரிய பொருள்களும் இருந்தன. அவற்றிலிருந்து அவன் அலாவுதீன் முன்னிலையில் கொண்டு வந்து காணிக்கையாக அளித்த பொருள்களின் அளவினை மட்டும் இஸ்லாமிய வரலற்றாசிரியர்கள் நமக்குக் குறித்துச் சென்றுள்ளனர். 312 யானைகள், 26,000 குதிரைகள், அவற்றின்மீது ஏற்றப்பட்டுக் கொண்டு செல்லப்பட்ட முத்து மணியணிகள் நிறைந்த பன்னூறு பேழைகள் ஆகியவற்றுடன், தங்கமாக 96,000 மணங்கும் பேரரசனிடம் ஒப்படைக்கப் பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இக்காணிக்கையில் தங்கத்தின் அளவை மட்டும் மதிப் பிட்டுக் காண முயன்ற வரலாற்றறிஞர் உண்டு. தற்கால வழக்கின்படி ஒரு மணங்கு அல்லது மனு என்பது அகமது நகரில் 163 1/4 பிரிட்டிஸ் கல்லெடையும், சென்னை நகரில் 25 கல்லெடையும், திருவாங்கூரில் 19 கல்லெடையும் உடையது. மிகக் குறைந்த திருவாங்கூர் மதிப்பின்படியே பார்த்தால் கூடத் தங்கத்தின் அளவு 18 இலட்சம் கல்லெடையும் நடு அளவான சென்னை மதிப்பின்படி 24 லட்சம் கல்லெடையும் ஆகின்றது. இவையே அராபிக் கதைக்குரிய கற்பனை அளவுகளாகத் தோன்றுகின்றன. ஆனால் இம்மதிப்பைத் தந்துள்ள வரலாற்றாசிரியரான பெரிஷ்டா அகமது நகருக்கே உரியவராதலால், அவர் தரும் எண்ணின் மதிப்பு அகமது நகருக்கே உரியதாக வேண்டுமென்று அறிஞர் சீவெல் கருதுகிறார். அதன்படி தங்கமதிப்பு ஒன்றரைக் கோடிக்கு மேற்பட்ட கல்லெடை ஆகிறது. விசய நகர காலத் தொடக்கத்துக்குரிய தென்னக வளத்தை முழுவதும் இந்தத் தங்கம் குறித்துக் காட்டுவதாக எவரும் கொள்ள முடியாது. இது பெரிதும் தென்னகத்தின் ஒரு பகுதியாகிய பாண்டிய நாட்டில் கோயில்களில் கொட்டிக்கிடந்த செல்வத்தின் ஒரு கூறு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கக் காலத்துக்குரிய இந்தச் செல்வ நிலை விசய நகர கால முழுவதும் குறையாது வளர்ந்தே வந்தது என்பதில் ஐயமில்லை. ஏனெனில் இதற்கு இருநூறு ஆண்டுகள் கழித்துத் தென்னகப் பெரும்புயலில் விசயநகரப் பேரரசு சரிந்தபோது பேரரசின் தலைமையேற்ற திருமலை பேரரசருக்குரிய தனிச் செல்வக் குவைகளை மட்டும் 1550 யானைகளின் மேலேற்றிச் சென்றான் என்று அறிகிறோம். அந்நாளைய தென்னகத்தின் பெருஞ்செல்வ வளத்துக்குரிய காரணத்தை உலகப் பொதுவுடைமை இயக்கத்தின் மூல முதல்வரான உலகப் பேரறிஞர் கார்ல் மார்க்ஸ் விளக்கிக் காட்டுகிறார். தென்னகம் கி. பி. 14-ஆம் நூற்றாண்டுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்னிருந்தே வாணிக முதலாளித்துவப் படியில் ஓங்கி உலகின் வாணிக மையமாய் இலங்கிற்று. உலகக் கைத்தொழில்களும், உலக வாணிகமும் தென்னகத்தை நடு அச்சாகக் கொண்டே சுழன்றியங்கின. உலக வாணிகத்தில் இடையீட்டு வாணிகமாகவும் இருந்ததால் உலகின் செல்வக் குவைகள் பெரிதும் தென்னகத்திலேயே வந்து செறிந்து குவிந்து கிடந்தன. இப்பெருஞ்செல்வத்தின் ஒரு சிறு சேமப் பகுதியே தென்னகத்தின் கோயில்களில் சென்று இன்றுவரை தேங்கிக் கிடக்கின்றது. ஆனால் தென்னக மன்னர் செல்வக் குவைக்கு இது மட்டும் காரணமன்று. அரசருக்கு இறையூதிய மளித்த பெருந்தொழில்கள் பல தென்னகத்தின் தனிப்பெருஞ் சிறப்பாக அந்நாளில் இயங்கின. இலங்கையில் மாணிக்க வயல்கள், பாண்டி நாட்டில் முத்து வயல்கள், விசயநகர ஆட்சிக்கு உட்பட்டிருந்த கோல்கொண்டாவடுத்த பகுதிகளில் வைர வயல்கள் ஆகியவை இவற்றுட் குறிப்பிடத்தக்கவை. இவை அரசர், பேரரசரால் குத்தகைக்கு விடப்பட்டு, குத்தகை ஒப்பந்தத்தின்படி தங்கத்தின் பெருங்கூறும், முத்து மாணிக்க வைரங்களில் குறிப்பிட்ட பருமன், எடைகட்கு மேற்பட்டவை களும் அரசினுக்கே உரியவையாயிருந்தன. உலகின் முத்துச் செல்வ வளத்தில் ஒரு பாதி பாண்டிய அரசன் உடல் மீதே கிடந்தது என்றும், உலகின் வைரச் செல்வத்தில் ஒரு பாதிக்கு மேற்பட்ட அளவு விசய நகரப் பேரரசர் உடல் மீது பட்டக்குதிரை அணி மணி மீதுமே கிடந்தது என்றும் அந்நாளைய வரலாற்றாசிரியர் பலர் நமக்குச் சான்று தெரிவிக்கின்றனர். 14 முதல் 16-ஆம் நூற்றாண்டுவரையும், அது கிடந்து இரண்டு நூற்றாண்டளவும் கூட, உலகத்தின் மிகப் பெரிய வைரச்சுரங்கங்கள் விசயநகர ஆட்சிக்கு உட்பட்ட கோல்கொண்டாப் பகுதியிலேயே இருந்தன. இன்றளவும் ஆங்கில முதலிய மேலையுலக மொழிகளிலெல்லாம் கோல்கொண்டா என்ற சொல்லே சிறந்த வைரத்தின் பெயராக நிலவுகிறது என்பது இதற்கு ஒரு பட்டாங்கமான சான்று ஆகும். பேரரசருக்கும், பேரரசு, பெருநகரிலுள்ள மக்களுக்கும் உரிய செல்வ நிலை வைர முதலிய ஒண்மணியணிகளின் வளம் ஆகியவைபற்றி நாடு சூழ் வாணர், வரலாற்றாசிரியர், அரசியல் தூதுவர் ஆகிய பன்னாட்டினரும் பல திறப்பட்ட நுணுக்க விரிவான விவரம் குறித்துள்ளனர். விழாநாட்களில் நகரின் பெருங்குடிப் பெண்டிர் தங்களிடமுள்ள வைர முதலிய ஒண்மணிகளை யாவரும் காண வீட்டு வாயிலின்முன் கொணர்ந்து கண்காட்சியாக வைத்திருப்பது வழக்கம் என்று பேய்ஸ் கூறுகிறார். வைரச் சுரங்கங்கள் கூறுகூறாகக் குத்தகைக்கு விடப்பட்டனவென்றும் 20 மங்கலிகள் அதாவது 25 பிரிட்டிஷ் காரட்டுக்களுக்கு மேற்பட்டவை பேரரசருக்கு ஒப்பந்தப்படி உரியன ஆயின என்றும் அவரே தெரிவிக்கிறார். பேரரசு வீழ்ச்சியுற்றபின் சிற்றரசளவாக ஒதுங்கியிருந்த சந்திரகிரி மரபினரிடம் மட்டுமே மூன்று பெரிய பேழை நிறைய வைரங்கள் இருந்தன என்று 1614-ல் வாழ்ந்த பாரடாஸ் என்ற எழுத்தாளர் குறித்துள்ளார். பழமலை என்ற பொருளுடைய ‘வெள்ளர்’ என்ற இடத்திலுள்ள வைரச் சுரங்கத்திலிருந்து 100 அல்லது 200 மங்கலிகள் வரை எடையுடைய வைரங்கள் கிடைத்தன என்று லின்ஷாட்டன் என்பவர் தெரிவிக்கிறார். விசயநகர அழிவின் பின் விசயநகர வைரங்கள் வட திசையிலும் மேல் திசையிலும் உலவித் தத்தமக்கெனத் தனி வரலாறுகளை உண்டு பண்ணியுள்ளன. பேரரசரின் பட்டத்துக் குதிரையின் தலைச்சூட்டின் அடியில் கோழி முட்டையளவான ஒரு வைரம் இருந்ததென்று கூட்டோ என்ற வரலாற்றாசிரியர் வரைகிறார். கார்ஸியா டாஓர்ட்டா என்பவர் 1534-இல் விசயநகரம் வந்திருந்தவர். அவர் மேற்குறிப்பிட்ட கோழிமுட்டை வைரத்தைத் தாம் கண்டதாகக் குறிப்பிடுகிறார். அத்துடன் 120 மங்கலி, 148 மங்கலி, 250 மங்கலி எடையுள்ள வேறு மூன்று வைரங்களையும் அதனுடனே பார்த்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதே வைரம் 1565-இல் தென்னகப் புயலின்பின் பீசப்பூர் மன்னன் அலியின் கைக்குச் சென்றது. 1608-ல் மாண்ட்போர்ட் என்பவர் அதைத் தாம் முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரிடம் கண்டதாகவும், அவர் கையிலணிந்து கொள்வதற்காக அது துளைக்கப்பட்டதாகவும் கூறுகின்றார். உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரம் விசயநகர எல்லையிலேயே விசயநகரப் பேரரசின் சரிவுக்குப் பின் 1656-இல் கொல்லூர் என்னும் இடத்திலிருந்து எடுக்கப்பட்டது. முகலாயப் படைத்தலைவன் மீர்ஜம்லாவால் அது முகலாயப் பேரரசனுக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்டு, முகலாய மன்னரிடமிருந்து பாரசிக மன்னரிடமும், பாரசிக மன்னரிடமிருந்து ஆப்கானிய, பாஞ்சால மன்னரிடமும் பாஞ்சால மன்னனை வென்ற மாகாண ஆட்சியாளரால் பிரிட்டிஷ் பேரரசரிடமும் மாறிற்று. வரலாற்றிலே தென்னகத்தின் செல்வம் குறைபோன வழிகளை இந்தப் புகழ் வைரம் சென்ற வழி நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறது. இந்துமதக் கோட்டையன்று; தென்னகத் தேசீயக் கோட்டை பேரரச வரலாற்றில் ஆர்வம் பரப்பியவர்களில் சிலர் தம் ஆர்வ மகுடங்களிடையே ‘இந்து’ என்ற பெயரை மிகுதியாகப் பயன்படுத்தி யுள்ளனர். ‘தென்னகத்தின் இந்துப் பேரரசு’, ‘இந்து மதத்தின் காவற் கோட்டை’ ‘இந்து மதத்தின் புதுமலர்’ என்பன போன்ற தொடர்கள் அவர்களின் ஏட்டுத் தலைப்பிலும், விரிவுரைகளிலும் முனைப்பாக இடம் பெற்றுள்ளன. வரலாற்றுப் போக்கிலும், ஆராய்ச்சிப் போக்கிலும் இதனை வலியுறுத்தி அவர்கள் பேரரசுக்கு மிக முனைப்பான இந்துவண்ணமே தீட்டியுள்ளார்கள். மேலீடாகக் காண்பவர்களுக்கு இவை புகழுரைகள் போலவும், மெய் விளக்கங்கள் போலவும் தோற்றம் அளிக்க இடம் உண்டு. ஆயினும் உண்மையில் அவை புகழுரைகளோ, மெய்யுரைகளோ கூட ஆகமாட்டா; நேர்மாறாக, மெய்யான சிறப்பைக் குறைத்து மட்டமாக்கிக் காட்டவும், மெய்ந்நிலைகளைத் திரித்துக்காட்டவுமே இவை பெரிதும் பயன்படுவன ஆகும். விசயநகரம் ஒரு குறுகிய சமயச்சார்பான பேரரசு அன்று, முழுநிறை தேசீயப் பேரரசேயாகும். சமயம் தேசீய வாழ்வின் பல கூறுகளுள் ஒன்று. இந்து மதமோ சமய வாழ்விலும் ஒரு கூறு. எனவே விசயநகரத்தை இந்துமதப் பேரரசு என்று கூறுவது அதன் தேசீயப் பெருமையை மிகவும் குறுக்கிக் காட்டுவது ஆகும். தவிர, விசயநகரப் பேரரசின் தேசீயத்துக்குரிய பல திறப் பெருமைகளில் ஒரு கூறாகச் சமய வாழ்வையும் அதன் ஒரு பகுதியான இந்து மதத்தையும் மட்டுமே எடுத்துக் கொண்டால் கூட, ‘இந்துமதப்’ பேரரசு என்ற தொடர் பேரரசுக்கும் இந்து மதத்துக்கும் உள்ள மெய்த்தொடர்பைப் பொய்ப்பித்துக் காட்டுவதாகும். ஏனெனில் இந்து மதம் என்ற பெயரும் அப்பெயரால் குறிக்கப்படும் சமயப் பேரரசினால்தான் படைத் துருவாக்கப்பட்டன. எனவே பேரரசை ‘இந்து மதப் பேரரசு’ என்பதை விடப் ‘புதிதாக இந்து மதத்தைப் படைத்து உருவாக்கிய பேரரசு’ என்றோ, ‘இந்து மதத்தின் தாய்’ என்றோ கூறுவதுதான் பொருத்தமாகும். தென்னகத்திலும் அதன் இன நாகரிகத் தடங்கள் பரவிய சூழ்புலங்களிலும் மிகப் பழங்காலத்திலிருந்தே சைவம், வைணவம், புத்தம், சமணம் போன்ற மக்கட் சமயங்களும், உலோகாயதம், சாங்கியம், நியாயம், வைசேடிகம், யோகம், ஒரு கடவுட் கோட்பாடு முதலிய அறிஞர் அறிவுக் கோட்பாடுகளும், வேதநெறி, வேள்வி நெறி, சுமார்த்த வருணாசிரம நெறி முதலிய அயலினப் புரோகித நெறிகளும் தனித்தனி இயங்கி வந்துள்ளன. இவற்றுள் முன் இருவகையும் நெடுநீள் காலமாக ஒரே இனப்பரப்பில், ஒரே தேசப் பரப்பில் தோன்றி, ஒரே இன நாகரிகத்துடன் வளர்ந்தவை. ஆதலால் தம்மையறியாமலே அவை தம்முள் விரவி ஒரே அடிப்படை ஒற்றுமை பெற்றன. அத்துடன் தம்முள் போட்டியிட்ட வண்ணமே அவை தம்மையுணராமல் ஒரே திசையில் வளர்ந்து வந்தன. எனினும் மூவேறு தளங்களில் இயங்கிவந்த இந்த மூவேறு தொகுதிகளையும் ஒரே முப்புரியிழையாக்கி, அதற்கு ‘இந்துமதம்’ என்ற பெயர் கொடுத்த செயல் விசயநகரத்துக்கும், அதன் காலச் சூழலுக்குமே உரியது. 14-ஆம் நூற்றாண்டில் வடதிசை இஸ்லாமியப் படை யெடுப்பு தென்னக வடஎல்லையைத் தாக்கிய நாட்களில், அப்பகுதியில் அரசியல், சமுதாய, இனவாழ்வுகளுக்கே சீர்குலைவு ஏற்பட்டது. குடியுரிமை, தனிமனித உரிமை, குடும்ப வாழ்வின் அமைதி ஆகியவை யாவுமே காற்றில் பறக்கத் தொடங்கிவிட்டன. இந்நிலையில் வழக்கப்படி ஒவ்வொரு சமயமும் இயல்பாகத் தன் போக்கில் செல்வதானால், சமயப் போர்வையில் வந்த அயலினத் தேசீயம் மக்கள் வாழ்வுக்கே உலை வைத்துவிடும் என்ற நிலை ஏற்பட்டது. இந்த வாழ்வு மாள்வு நெருக்கடியிடையே சமயங் கடந்த ஓர் இனத்தேசீய ஒற்றுமை இன்றியமையாததாகத் தோற் றிற்று. வடதிசை இசுலாமியர் தம் வேட்டைக்குரிய தளமாய்விட்ட பரப்பை ‘இந்து’ (சிங்க ஆற்றுக்கு அப்பால்பட்ட நிலம்) என்று அழைத்ததனால், விசயநகர முதல்வரும் தம் புதிய தேசீயத்துக்கு அப்பெயரே ஏற்றனர். புறமிருந்துவந்த அயலினத் தேசீயப் பண்பு ‘இஸ்லாம்’ என்ற மதப்பெயர் தாங்கிய காரணத்தினாலேயே, தாக்குதலை எதிர்ப்பதற்காக உருவாகிய தேசீய அமைப்பும் ‘இந்துமதம்’ என்ற மதப்பெயர் தாங்க நேர்ந்தது. இந்துமதத்தின் இத்தென்னகத் தேசீய அடிப்படையை வரலாற்றாசிரியர் பலர் காணவில்லை. அப்பெயரும் அமைப்பும் விசயநகரத்திலேயே எழுந்தன என்ற உண்மையையும் அவர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்ள வில்லை. தேசீயக் கோட்டையாகிய விசயநகரப் பேரரசை அவர்கள் ஒரு மதக் கோட்டை என்று மயங்கியதன் காரணம் இதுவே. தென்னக தேசீயமும் இஸ்லாமும் விசயநகரப் பேரரசு ஒரு தேசீயப் பேரரசு என்று கண்ட வரலாற் றாசிரியர் உண்டு. ஆனால் அவர்களில் கூடப் பலர் அது இந்துமதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசீயம், இந்து மதத்தைக் காக்கவந்த தேசீயம் என்று கொண்டு தவறிழைந் துள்ளனர். அத்துடன் இந்து மதம் என்ற பெயரால் இஸ்லாம் என்ற மதத்தையே எதிர்க்கக் கிளம்பிய தேசீயம் அது என்றும் அவர்களில் பலர் கருதி விடுகின்றனர். இவ்விரு கருத்துக்களுமே தேசீயநோக்கு, வரலாற்று நோக்கு ஆகியவற்றுக்கு முரண்பட்டவை. அகல் உலகில் இஸ்லாம் பல இனங்களை ஒன்றுபடுத்தி ஒருங்கிணைத்த ஒரு பெரு நெறி ஆகும். ஆனால் வரலாற்றில் அதை நாம் மூன்றலைகளாக, மூன்று இனங்களின் எழுச்சியுருவாகக் காணலாம். முதல் இரண்டலைகள் அராபிய, பாரசீக இனமலர்ச்சிகளுக்குரியவை. அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னிருந்தே தமிழினத்துடன் தொடர்பு கொண்டிருந்தவை. எனவே இவ்வலைகள் தமிழினப் பண்புடன் இசைவான பண்புடையவையாய், தமிழினத்தோடொத்த நாகரிக இனங்களின் எழுச்சியலைகளாய் இயன்றன. தமிழினத்தைப் போலவே அவை உலகில் கலையும் பண்பாடும் நல்லாட்சியும் பரப்பின. ஆனால் மூன்றாவது அலை துருக்கிய இன எழுச்சி சார்ந்தது. அதுவும் நாளடைவில் மற்ற இனங்களுடன் அளாவி நாகரிகச் சாயல் பெற்றதாயினும், நெடுநீள் காலம் உள்ளூர ஒரு பண்பற்ற முரட்டு வடதிசை இனத்தின் எழுச்சியாகவே இயங்கிற்று. இஸ்லாம் என்ற பெயரின் திரையும், மற்ற இஸ்லாமிய அலைகளின் நாகரிக மேற்பூச்சு வண்ணமும் அதன் உள்ளார்ந்த நாடோடிச் சூறையாட்டுப் பண்பை மறைக்க உதவினவேயன்றி, மாற்ற உதவவில்லை. தென்னகம் இஸ்லாத்துடன் நேரடியாகக் கொண்ட தொடர்பு பெரிதும் முதலலை அல்லது முதலிரண்டலை களுக்குரியது. உண்மையில் முதல் அலையின் தொடர்பு, அவ்வலை கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இஸ்லாமின் பிறப்பால் இஸ்லாமிய அலையாவதற்கே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முற்பட்டது. இத்தொடர்பு பெரும்பாலும் வாணிக உறவாகவும், கலை, பண்பாட்டு உறவாகவுமே இருந்தது. சமயத் தொடர்பும் சமயமாற்றமும் தொடங்கிய போது கூட, இந்தத் தென்திசை இஸ்லாம் தென்னக வாழ்வுடன் எவ்வகையிலும் மோதவில்லை. தமிழ் வள்ளல் சீதக்காதியின் மரபு இதற்கு ஒரு பொன் வண்ணச் சான்று ஆகும். ஆனால் வடதிசையிலிருந்து வந்த இஸ்லாமியத் தொடர்பு இப்பழந் தொடர்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஏனெனில் அது வாணிக, கலை பண்பாட்டலையும் அல்ல. அரசியல் படையெடுப்பு அலையாகக்கூட, அது அமைந்து நின்று விடவில்லை. அது இனம், தேசீயம், பண்பு ஆகிய மூவகைகளிலும் தென்னகத்துக்கு முரண்பட்ட பண்படா அயலின, அயல் தேசீய, அயற்பண்பலையாய்ப் புகுந்தது. ஏனெனில் அது பிறப்பிடத் திலேயே இஸ்லாத்தின் மூன்றாவது பண்படா அலை. அத்துடன் அது முதலில் வட திசையில் மோதி, அவ்வடதிசை அயற் பண்புகளுடன் விரவிய உருவிலேயே தெற்கு நோக்கிற்று. விசயநகரம் எழுப்பிய தென்னகத் தேசீயம் இவ்வாறு ‘இந்து மதம்’ என்ற பெயரும் வண்ணமும் பெற்றதாயினும், அது இஸ்லாம் நெறியையோ, இஸ்லாம் ஆட்சியையோ எதிர்த்த தேசீயம் அன்று. அது வடதிசை இஸ்லாமியரின் பண்படா இருமடி அயல்கலையை எதிர்த்த தேசீயமேயாகும். விசயநகர கால வரலாறே இதைத் தெளிவுபடக் காட்டுகிறது. ஏனெனில், 1336-இல் வடதிசை இஸ்லாமிய ஆட்சியை எதிர்த்துத் தென்திசையில் இந்து மதத்தின் பெயரால் ஒரு தேசீயப் பேரரசு அமைந்த தென்றால், அதுபோலவே ஒரு சில ஆண்டுகளுக்குள் 1347-ல் அதே நிலையில் ஒரு தென்னக இஸ்லாமியப் பேரரசும் எழுந்தது. விசயநகர காலத் தென்னகத்தின் உள்ளார்ந்த தேசீயப் பண்பையும் அதில் வடதிசைத் தொடர்பால் ஏற்பட்ட வழுவையும் இது ஒருங்கே காட்டுகிறது. வடதிசை இஸ்லாம் தென்திசை வந்து விரைவில் தென்திசை இஸ்லாமாகி, வடதிசை இஸ்லாத்தை விசய நகரம் போலவே எதிர்க்க முனைந்தது காண்கிறோம். தென்திசை இந்துத் தேசீயக் கிளர்ச்சிக்கு நாட்டு முஸ்லிம்கள் அதாவது மதம் மாறிய தென்னக மக்கள் பேராதரவளித்தனர் என்றும் வரலாற்றாசிரியர்களே நமக்குச் சான்று பகர்கின்றனர். இது தென்னகத் தேசீயத்தின் உள்ளார்ந்த வலிமையைக் காட்டுகிறது. அதே சமயம் ஒரு தென்திசை இஸ்லாமியத் தேசீயம். ஒரு தென்திசை இந்துமதத் தேசீயம் என இரண்டாய்ப் பிளவு பட்டுப் பூசலிட்டதன் மூலமே, தென்திசைத் தேசீயம் வடதிசை அயலலையை முற்றிலும் வென்று மேலோங்க முடியாது போய் விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தென்திசைத் தேசீயம் இருபிளவாகி ஒன்றையொன்று தாக்கி அழித்தாலும், வடதிசை இஸ்லாமியப் பேரரசாகிய முகலாய ஆட்சி அவற்றையோ, மராத்திய தேசீயத்தையோ விழுங்கி வாழவில்லை. இது மட்டுமன்று, தென்னகத்தில் பேரரசுகள் வீழ்ச்சியடைந்த பின்னும் அது தேசீயப் பேரரசுகள், வல்லரசுகள் தோற்றுவித்து வெள்ளையராட்சியை நீடித்து எதிர்த்து நிற்க முடிந்தது. ஆனால் வடதிசையில் முகலாயப் பேரரசின் பின் அயலாட்சிக்குப் பாய்விரித்த நிலையைத்தான் நாம் காண்கிறோம். மற்றும் தென்னகம் இரு தேசீயங்களைத் தோற்றுவித்ததாயினும், அதில் நீடிக்கவில்லை. வடதிசை இன்றளவும் இரு தேசீயத்தை நீடித்துப் பேணியே வந்துள்ளது. தென்னகத் தேசீயம் சங்ககாலத் தமிழகத் தேசியத்தையே பேணி அதில் மலர்ச்சி கண்டு வருகிறது. தென்னகத் தேசீயம் தமிழகத் தேசீயமென்னும் நிலையான வேரிலிருந்து பல்லவப் பேரரசாகக் குருத்துவிட்டு, சோழப் பெரும்பேரரசு, பாண்டியப் பெரும்பேரரசு என்னும் வெள்ள மளாவி விசயநகரப் பேரரசாக முதல் மலர்ச்சியடைந்தது. பல்லவப் பேரரசு தென்னக முழுதாளவில்லை. சோழப்பெரும் பேரரசு அதன் தேசீய எல்லை கடந்து தேசீயப் பண்பில் தளர்வுற்றது. பாண்டியப் பெரும் பேரரசு தென்னகமளாவி வளர்ந்தாலும், ஹொய்சளப் பேரரசினுடன் அத்தேசீயச் செல்வத்துக்குப் போட்டியிட்டு மாண்டது. ஹொய்சளப் பேரரசு அவ்வெற்றியை அனுபவிக்க முடியாமல் வடதிசை இஸ்லாமியப் படையெடுப்புக்கும் அதன் குறுநில ஆட்சிக்கும் இரையாயிற்று. இந்நிலையிலேயே பருவத்தில் எழுந்த முதல் தென்னகத் தேசிய மலர்ச்சியாக விசயநகரம் கால் கோள் கொண்டது. விசயநகரத்துக்குப் பின்னும் வடக்கிலும் தெற்கிலும் வீரசிவாஜி இரு துணைத் தேசீயங்கள் வளர்க்கப் பாடுபட்டான். ஹைதர், திப்பு ஆகியோர் கிட்டத்தட்டத் தென்னகத் தேசீயத்துக்கே மறுமலர்ச்சி தந்தனர். மதுரை நாயக மன்னர் பழந்தமிழகத் - தேசியத்தைத் தளர்ந்த அளவில் பேணினர். ஆயினும் விசயநகரத்தின் முதன் மலர்ச்சியே இருபதாம் நூற்றாண்டு வரை தென்னகத்தின் ஒரே மலர்ச்சியாக நிலவிற்று என்னலாம். தென்னகத்தின் வருங்காலப் புதுமலர்ச்சியையே அதன் புகழ் மலர்ச்சி இன்று அளாவி நிற்கின்றது. விசயநகரப் பேரரசின் தேசீய நோக்கில் பேரரசை விஞ்சி நிற்பது பேரரசின் கோநகராயமைந்த வெற்றித் திருநகரம். பேரரசு பேரரசாக நிலவிய காலமுழுதும் அதன் தலைநகராய், உலகளாவிய அதன் வாணிகத்துக்கு மைய இடமாய், அதன் கலைப்புகழுக்கு நிலைக்களமாய் அமைந்தது அதுவே. ஆயினும் பேரரசு, பெருநகர் ஆகிய இரண்டினும் விஞ்சிய தேசிய நோக்குடன் விளங்கியவர்கள் அதன் வீறார்ந்த பேரரசர்களே, தென்னகத்தின் தேசீயச் சிற்பிகள் அவர்கள். தென்னகத்தின், புகழ் வீரர், சான்றோர் ஆகியோர் சிலைகளுக்கு ஒரு தேசீய மாடம் அமைக்கப்படுமாயின், அதில் அவர்கள் நடுநாயக இடமும், பேரிடமும் வகிக்கத்தக்கவர்கள் ஆவர். தென்னகத்தின் வருங்காலத்தை வகுத்தமைக்கும் சிற்பிகளுக்கு இன்றியமையாத கருவி, கருவூலம் விசயநகர வரலாறு. வாழ்ந்த தென்னகத்தின் வாழ்வு காட்டி, அது வீழ்ந்த தென்னகமாகியதற்குரிய காரணங்கள், சூழ்நிலைகள், தேசீய வழுக்கள் ஆகியவற்றை எடுத்து விளக்க, அது மீண்டும் உயர்ந்தோங்கி உலகோம்புவதற்குரிய வழி துறைகளில், வகை முறைகளில் கருத்துச் செலுத்த இவ்வரலாற்றினும் சிறந்த துணைக்கலம் பிறிதில்லை. ஏனெனில் அது தேசீய வரலாறு மட்டுமன்று, தேசீய மலர்ச்சிக்குரிய வரலாறு ஆகும். அது மலர்ச்சியில் பிறந்து, மலர்ச்சியால் வளர்ந்து, மலர்ச்சியை ஊக்கியுள்ளது. அதுவே மலர்ச்சியின் மலர்ச்சியாக இன்றும் பொங்கல் வளம் வழங்க வல்லது ஆகும். 2. புயலில் மலர்ந்த மலர் பாருலகம் அறிவினால் பலவாகாமல், நேருலகம் இன்பத்தால் நெகிழ் வுறாமல், சீருலகம் செல்வத்தால் சிதறுறாமல் ஓருலகப் பண்புயர்ந்த ஓங்கல் வாழி! அப்பாலும் இப்பாலும் வேறாகாமல், முப்பாலும் முத்திறமாய் முரணுறாமல், எப்பாலும் ஒப்பாம்முப் பால்வளர்த்த மெய்ப்பால் முத் தமிழகத்தின் பண்புவாழி! வேறுபட்டு முரணியும், வலிந்து ஒற்றுமை நாட்ட முனைந்தும் அலமரலுற்றுக் குமுறும் உலகிடையே முப்பால் நெறிகளின் உள்ளீடாக அன்பு, பண்பு, இன்பம் ஆகியவற்றை நிறுவி முழுப்பாலின் அமைதி காட்டிற்று வள்ளுவம். அதை அடிப்படையாகக் கொண்டே வண்டமிழ்ப் பண்பு மாளாப் பண்பாகத் திகழ்ந்து வந்துள்ளது. அரசியல் களத்தில் இதுபோலவே தென்னகமும் சூழ்புலங்களும் ஒருங்கே புயலில் நிலைகாணாது தெருமரலுற்ற ஞான்று, அவற்றிடையே புயலில் மலர்ந்த மலராய் எழுந்தது விசயநகரப் பேரரசு. அது தென்னகத்தை மையமாகக் கொண்டு கீழ்திசை யுலகமெங்கும் நீடித்த அமைதியலைகளைப் பரப்பிற்று. பேரரசு தந்த அமைதியில் தென்னகம் தன் முதல் சூறாவளியின் அழிவாற்றலும் தளர்வும் அகற்றித் தேசீயத் தெம்பு கொண்டது. புயல்கள் மீண்டும் தாக்கியபோது அதுவே அவற்றை எதிர்த்து நின்று வெல்லும் ஆற்றலையும் தென்னகத்துக்கு அளித்தது. அத்துடன் புயல்கள் கடந்து நீடித்த நிலையான அமைதி நோக்கி, பொங்கல் வாழ்வின் மலர்ச்சி நோக்கிப் பீடுநடை போடும் உரத்தையும் அது தென்னகத்துக்குப் பரிசாக வழங்கிற்று. தனி மனிதன் வாழ்வில் புயலார்ந்த உணர்ச்சிகளைக் குடும்பப் பண்பு காதல் மணமென்னும் தென்றற் பண்பாக்கித் தெண்ணிய வொளிவீசக் காண்கிறோம். திருமணம் அவ்வாழ்வின் மைய நிகழ்ச்சி - அதற்காகவே தனி மனிதன் வாழ்கிறான் என்று கூறுதல் தவறாகாது. ஆனால் அவன் வாழ்வின் மைய மட்டுமன்று, அவன் பிறப்பும் ஒரு திருமண வாழ்விலிருந்து தான் எழுகிறது - அதுவே அவனை ஈன்றெடுத்தவரின் திருமண வாழ்வு. அவன் வாழ்வு சென்றொடுங்குவதும் திருமண வாழ்விலேயே - இம்முறை அது அவன் ஈன்றெடுத்த மதலையர் திருமண வாழ்வாகின்றது. இங்ஙனம் மணவாழ்விலிருந்து மணவாழ்வு நோக்கி, இடையே ஒரு மணவாழ்வினூடாகவே செல்லும் இத்தனி மனித வாழ்வின் இயல்பினை நாம் பேரரச வரலாற்றிலும் காண்கிறோம். கி. பி. 16-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீசியடித்த ஒரு சூறாவளியை அது தன் அமைதிப் பண்பால் தென்றலாக்கி அதில் பிறந்து வளங்கொழித்தது. 17-ஆம் நூற்றாண்டில் எழுந்த மற்றொரு சூறாவளியில் அது மறைவுற்றது. ஆனால் அச்சூறாவளிகளிடையே தன் மரபுக்கொழுந்துகளைத் தென்றற் பண்பு மரபுகளாகப் படைத்து விட்ட பின்னரே அது மறைந்தது. இவ்விரண்டு சூறாவளிகளுக்குமிடையே 1565-இல் பேரரச வாழ்வின் மையக் கூறாக, புகழுச்சியின் மகுடமாக மற்றொரு புயல் எழுந்தது. பேரரசு தன் வெற்றிகளிடையே கண்ட ஒரு மாபெருந் தோல்வி அது - பேரரசின் பெருமையில் பெரும்பகுதி அதில் வடிவுற்றது. ஆயினும் உலகின் எந்தப் பேரரசின் எந்த வெற்றியும் காணாத புகழை அது கண்டது. தோல்விக்குக் காரணமான பேரரசின் வழுக்களைத் தேடிக் காண்டல் அரிதன்று - வரலாற்றா சிரியர்கள் பொதுவாக அதில் குறை வைக்கவில்லை. ஆனால் அம் மாபெருந்தோல்வியே பேரரச வாழ்வின் தேசீயச் சிறப்பையும் தனிப்பெரு வீறமைதியையும் உலகுக்கு எடுத்துக் காட்டுவ தாயுள்ளது. பிறப்புக் காலப் புயலும் மறைவுக்காலப் புயலும் தென்னகத்தின் அகப்புயல்கள் அல்ல. தென்னகத்துக்கு வெளியேயிருந்து தென்னக வாழ்வில் புகுந்து அலைக்கழிவு கொண்டுவந்த புறப்புயல்களே அவை. ஆனால் பேரரசின் வாழ்விடையே வந்து தாக்கிய புயல் புறப்புயல் அன்று, அகப்புயல், அதில் பேரரசு தன்னளவில் பேரழிவு கண்டும், அது கடந்து ஒரு நூற்றாண்டு தென்னகத் தேசீயத்தை வலுப்படுத்தக் கடும்போராட்டங்கள் நடத்திற்று. அதன் பயனாகவே மறைவின் முன்னும், பின்னும் நெடுநாள் கழித்தும் தென்திசை நாயக அரசுகள், தென்னகத்தின் வடதிசையிலெழுந்த தேசிய இஸ்லாமிய அரசுகள், சிவாஜியின் மரபுகள், மைசூர்ப் பேரரசு ஆகிய பல தென்னக வல்லரசு மரபுகளை அது படைத்து உருவாக்க முடிந்தது. இவை மட்டுமல்ல, அகப் புயலில் அப்பேரரசு நாட்டிய புகழும், வீரமும், செல்வ மரபுமே தென்னக வாழ்வில் நிலையாக மலர இருக்கும் பெரும்புகழ், பெருவீரம், பெருந்திரு ஆகியவற்றுக்கு முன்னோடி முனிமுகங்களாய் அமைந்துள்ளன. தென்னகத்தின் தேசியப் புது மலர்ச்சிக்குரிய உயிர்விதைகள் இவையே. புயலார்ந்த வாழ்வில் புகுந்து பிறந்து மயலார்ந்த இன்பமுகங் காட்டி வாழ்ந்த இயலார்ந்த ஆட்சி, எழிலார்ந்த செல்வம், செயலார்ந்த வெற்றித் திருவார்க ஆர்க! புயலின் கருவிடம் மிகப் பழங்காலத்திலிருந்து சோழ, பாண்டியப் பெரும் பேரரசுக் காலம் வரை அரசியல், தேசீய வாழ்வுகளில் கீழை யுலகின் நடுநாயகமாகத் தென்னகமும், தென்னகத்தின் மைய நாயகமாகத் தமிழகமும் இயங்கி வந்தன. ஆயினும் இந்நிலை படிப்படியாக மாறுபட்டு வந்து கி. பி.14-ஆம் நூற்றாண்டுக்குள் தென்னகத்தின் மையப்பகுதியில் ஆண்ட ஓய்சள மரபின் பேரரசே தென்னகத்தின் ஆற்றல் சான்றமைய அரசாயிற்று. தெற்கே தமிழகத்தில் அதனுடன் கடும் போட்டியிட்ட பாண்டியப் பேரரசு உள்வீட்டு அரசுரிமைப் போராட்டங்களால் நலிவுற்று வந்தது. அவற்றில் தலையிட்டு ஒய்சளப் பேரரசு வளர்ந்து வந்தது. அப்பேரரசுக்கு வடக்கே தென்னகத்தின் வடகோடியிலிருந்த தேவகிரியில் யாதவ மரபினர் ஆற்றலும் செல்வ வளமும் மிக்க வல்லரசாக விளங்கினர். அவர்களை யடுத்துத் தென்னகத்தில் வடகிழக்குப் பகுதியில் வாரங்கலில் காகதீயமரபினர் புதுமலர்ச்சி பெற்று வல்லரசராகவே ஆட்சி நடத்தினர். தவிர ஆணை கொண்டா, காம்பிலி, ஹொசதுர்க்கம், கும்மடதுர்க்கம் ஆகிய பகுதிகளை யாண்ட தலைவன் யாதவர், ஒய்சளர் ஆகிய இருவல்லரசுகளிடையே தனியாட்சி நிறுவி வலிமை பெற முனைந்து வந்தான். பேரரசு, சிற்றரசுகளின் இந்தச் சதுரங்க ஆட்டத்திடையே தான் திடுமென வடதிசைச் சூறாவளியின் அலைகள் தென்னக வாழ்வில் புகத் தொடங்கின. சிந்துகங்கைப் பெருவெளி தென்னகத்தை அடுத்து அதனுடன் நீடித்த தொடர்பு கொண்டிருந்த ஒரு பரப்பேயாகும். தென்னக நாகரிக அலைகளும் தேசிய அலைகளும் கூட அடிக்கடி விந்தம் கடந்து அதன் வாழ்வை உருவாக்கியதுண்டு. ஆயினும் பண்படா இன அலைகளின் தாக்குதலுக்கு ஓயாது ஆட்பட்ட காரணத்தால், அதன் நாகரிகம் சீர்குலைவுற்றுப் பிற்பட்டதாகவே இலங்கி வந்துள்ளது. அதன் தேசிய வாழ்வும் முதிரா வாழ்வாகவும் பிற்பட்ட வாழ்வாகவுமே இயங்கி வந்தது. இஸ்லாத்துடன் அது கொண்ட தொடர்பு இவ்வேறுபாட்டைப் பின்னும் பெருக்கிற்று. ஏனெனில் அத்தொடர்பு தென்னகம் இஸ்லாத்துடன் தென்றுதொட்டுக் கொண்டிருந்த தொடர்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மேலையினங்கள் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் இஸ்லாத்தை ஏற்ற பின்னரும் அவை என்றும் போலத் தென்னகத்துடன் நேச உறவும் அரசியல் தோழமைத் தொடர்பும் கொண்டே இயங்கின. ஆனால் சிந்து கங்கை வெளியில் புகுந்த இஸ்லாமிய அலை கி. பி. 12-ஆம் நூற்றாண்டுக்குள் இஸ்லாமிய உலகையே அலைக்கழித்துவந்த அலை - இஸ்லாமிய உலகின் பண்படாத மூன்றாவது அலை அது. சோழப் பெரும் பேரரசரது ஆற்றல் அதைச் சிந்து ஆறு கடக்காமல் தடுத்து நிறுத்தியிருந்தது. ஆனால் அப்பெரும் பேரரசர் வீழ்ச்சியின் பின் இஸ்லாமிய உலகைப் போலவே சிந்து கங்கை வெளியும் அதன் கொள்ளை சூறையாட்சிக்கு உட்பட்டது. அதனைத் தடுக்கவோ, ஏற்றுச் செரிமானம் செய்யவோ ஆற்றலற்ற வடதிசையின் முதிராத் தேசியம் அதன் பண்படா இயல்பை மேலும் பண்படாததாக்கிப் பாழ்படுத்திற்று. கி.பி. 12-ம் நூற்றாண்டிலிருந்து 16-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை அடிமை (1193-1287), கில்ஜி (1210-1320), துக்ளக் (1320-1412), சயீத் (1412-1443), லோடி (1443-1526) ஆகிய ஐந்து ஆப்கானிய மரபினரும் அதன்பின் மூன்று நூற்றாண்டுகட்கு மேற்படப் பாபர் (1483-1530), ஹுமாயூன் (1526-1556), அக்பர் (1556-1605), ஜெஹாங்கீர் (1605-1627), ஷாஜஹான் (1627-1658), ஒளரங்கசீப் (1658-1707) முதலிய முகலாயப் பேரரசரும் தில்லி நகரிலிருந்து ஆட்சி செய்தனர். இவர்களில் கில்ஜி, துக்ளக் மரபினரும், அக்பர் கால முதல் முகலாயப் பேரரசரும் வடதிசைச் சூறாவளியைத் தென்னக வாழ்வில் பரப்ப அரும்பாடுபட்ட பேரரசர் ஆவர். கில்ஜி அரசன் அலாவுதீன் காலத்துக்குள்ளாகவே தில்லியின் ஆட்சி சிந்து கங்கைவெளி முழுவதும் பரவி விட்டது. அலாவுதீன் தவிசேறு முன்பே அவன் தென்னகத்தின் அளப்பருஞ் செல்வம் பற்றியும் சிறப்பாகத் தேவகிரியாண்ட யாதவ மன்னன் இராம தேவன் பெருஞ் செல்வாக்கைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தான். முடி இளவரசனாகவும், மாகாணத் தலைவனாகவும் இருந்த நாளிலேயே தேவகிரிமீது பாய அவன் நேரம் பார்த்திருந்தான். தென்னகப் போட்டிகள் அவனுக்கு 1293-ஆம் ஆண்டிலேயே இதற்கோர் அரிய வாய்ப்பு வழங்கிற்று. சூறாவளியின் சூழ்வரவு தமிழகத்திலே இச்சமயம் சுந்தரபாண்டியன் ஆண்டு வந்தான். அவனுக்கெதிராக வீர பாண்டியன் அரசுரிமைக் கொடியுயர்த்திப் போருக்குக் கிளம்பியிருந்தான். இப்பிளவைப் பயன்படுத்தி ஒய்சளப் பேரரசனான மூன்றாம் பல்லாளன் வீரபாண்டியனை ஆதரிக்கும் முறையில் பாண்டியன் மீது படையெடுத்துச் சென்றிருந்தான். ஒய்சளப் பேரரசைத் தாக்கக் கண்கொட்டாது வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்த தேவகிரி மன்னன் இராமதேவன் இச்சமயம் பார்த்துத் தன் வீரப் புதல்வன் சங்கரதேவனை ஒரு பெரும் படையுடன் ஒய்சளர் தலைநகர் மீது ஏவினான். படைகளும் வீரப்படைத் தலைவனும் வெளியேறி யிருந்த இச்சமயம் தளரவிடாமல் அலாவுதீன் தேவகிரியைத் தாக்கி முற்றுகையிட்டான். இந்நிலையில் இராமதேவன் தோல்வியேற்க நேர்ந்தது. தோல்வியின் கடைசிக் கட்டத்தில் சங்கரதேவன் விரைந்து வந்து மீண்டும் போரிட்டான். அவனும் தோற்றுவிடவே, தேவகிரி அரசனை முழுதும் பணிய வைத்துப் பெருந்திறைப் பொருளுடன் அலாவுதீன் தில்லி மீண்டான். தேவகிரி அரசின் ஒரு பகுதி நேரே தில்லி ஆட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. அலாவுதீன் தவிசேறியபின் தென்னகத்தைச் சூறையாடி வரும்படி தன் படைத்தலைவன் மாலிக்காபூரை அனுப்பினான். அவன் திறைதர மறுத்த தேவகிரியை மீண்டும் கீழடக்கியதுடன் நில்லாமல் தென்னகத்தின் தென்கோடியிலுள்ள இராமnசுவரம் வரை விடாது மேற்சென்று தென்னகக் கோயில்களில் குவிந்து கிடந்த செல்வங்களையெல்லாம் கொள்ளை கொண்டான். ஓய்சளப் பேரரசன் இச்சமயம் வலிமை குன்றியிருந்தான். எதிர்ப்பதைவிடப் பணிந்து திறை கொடுத்தனுப்பி விடுவதே சிறந்ததென அவன் கொண்டான். பாண்டிய அரசிலும் அரசுரிமைப் பிளவு எதிரிக்கு எளிதில் வழிவிட்டது. 1310-இல் மாலிக்காபூர் சூறையாடி வந்த பெரும்பொருள் அலாவுதீன் பேராவலைக் கூடத் திணறடிக்க வைப்பதாய் அமைந்தது. மாலிக்காபூரின் வெற்றி அரசியல் படையெடுப்போ, அரசியல் வெற்றியோ அல்ல, சூறையாட்டு உலா மட்டுமே. ஆயினும் தென்னகத்தின் தென்கோடி வரை அவன் புயல் வேகத்தில் சென்று கொள்ளையுடன் மீள முடிந்தது. தென்னக வாழ்வில் பேரரசு, சிற்றரசுப் போட்டிகளால் ஏற்பட்டிருந்த தளர்ச்சியை இதுவே காட்டுகிறது. வட கோடியிலிருந்து மாலிக்காபூர் அடைந்த வெற்றிகளை அடுத்து இச்சமயம் தென்கோடியிலாண்ட திருவாங்கூர் அரசன் இரவிவர்மன் குலசேகரன் 1312-இல் திடுமெனக் கிளர்ந்து தமிழக முழுவதும் வென்று மேற்சென்று முன்னைப் பாண்டியப் பேரரசனைப் போலவே கொல்லத்திலும், சீர்காழியிலும், காஞ்சியிலும் அடுத்தடுத்து வீரமா முடிசூட்டிக் கொண்டான். ஆனால் வாரங்கலாண்ட காகதீய வல்லரசன் இரண்டாம் பிரதாப ருத்திரன் பாண்டியனை ஆதரிக்கும் சாக்கில் திருவாங்கூர்ப் பேரரசனைத் தாக்கினான். 1317-இல் காகதீயப் படைத்தலைவனான முப்பிடி நாயகன் குலசேகரனைப் பல களங்களில் முறியடித்தான். திருவாங்கூர் எல்லைக்கே அவனைத் துரத்திச் சென்று அவன் ஆற்றல் பின் என்றும் மீளாதவாறு அடக்கினான். விசயநகரத்தின் பிறப்புக்குரிய காலத்தில் தென்னகத்தின் நிலையற்ற அரசியல் தன்மையைத் திடீர் எழுச்சி வீழ்ச்சிகள், மின்னல் வெற்றி தோல்விகள் நிறைந்த இப்போக்குகள் தெளிவாகக் காட்டுகின்றன. தென்னகத்தின் வடபாலைய வல்லரசுகள் தமிழகம் நோக்கிய சமயமெல்லாம் அயல்புலப் புயல்களுக்கு அவர்கள் தாயகத்தின் பின்னணிவாயில் எளிதில் திறக்கப்படுவது காண்கிறோம். முப்பிடி நாயகன் தொலைத் தென்கோடி வந்து திருவாங்கூர் எல்லையில் போரிட்ட இந்தச் சமயமும் தில்லிக்கு அவ்வாய்ப்பே அளித்தது. தேவகிரி அரசன் அரபாலதேவன் இச்சமயம் தில்லிக்குத் திறை மறுத்திருந்தான். கில்ஜி அரசன் முபாரக்கின் படைத்தலைவன் குஸ்ரூ அவனை முறியடித்து அழித்துத் தேவகிரியைத் தில்லியின் நேரடி மாகாணமாக்கி விட்டான். அத்துடன் அதையே மூலதன மாக்கிக் கொண்டு 1318-ல் வாரங்கலையும் கீழடக்கினான். தமிழக அரசியலில் கூடத் தலையிட அவனுக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் இச்சமயம் தில்லியிலேயே ஏற்பட்ட அரசுரிமைக் குழப்பம் அவன் கையைத் தடுத்து நிறுத்திற்று. முதல் துக்ளக் பேரரசன் கியாசுடீன் நாட்களில் வாரங்கல் தில்லிப் பிடியை மீறி எழத்தொடங்கிற்று. துக்ளக் படைத் தலைவனின் முதல் தாக்குதலை முப்பிடிநாயகன் சின்னா பின்னப்படுத்தினான். ஆயினும் அடுத்தடுத்து நடைபெற்ற இடைவிடாத் தாக்குதல்களால் 1323-இல் வாரங்கல் அரசன் நிலையாகத் திறை கொடுக்க ஒப்புக் கொண்டு பணிய நேர்ந்தது. அத்துடன் தில்லியின் கொடியும் படைத்தளங்களும் வாரங்கலில் நிறுவப்பட்டன. அடுத்த தில்லி அரசன் அகமது துக்ளக் (1325-1351) என்பவன். அவன் நாட்களிலே வாரங்கலைக் கீழடக்கிய துக்ளக் படைத்தலைவன் மஜீர் அபுரிஜா ஒய்சளப் பேரரசைத் தாக்காமலே அதைச் சுற்றி வளைத்து விட எண்ணினான். தென்னகத்தின் கிழக்குக் கரையோரமாக அவன் தன் படைகளைச் செலுத்தித் தமிழகத்துக்குள்ளேயே புகுந்தான். அவன் படை யெடுப்பு முன்னைத் தாக்குதல்களைப் போலச் சூறையாட்டுடன் நிற்கவில்லை. இராமேசுவரம் வரை சென்று அவனும் கொள்ளை யடித்தாலும் தமிழகத்தில் வல்லரசனாக இன்னும் விளங்கிய பராக்கிரம பாண்டியனை அவன் வென்று சிறைப்பிடித்துத் தில்லிக்கே அனுப்பி வதை செய்வித்தான் தமிழக வெற்றியை முற்றவித்து ஒழுங்குமுறைகள் வகுக்குமுன் முகமது துக்ளக்குக்கு வடக்கிலே தொல்லைகள் ஏற்பட்டன. அவன் கவனம் அத்திசை திரும்பிற்று. புறநானூற்றுப் பண்பார்ந்த காம்பிலி வீரக் காப்பியம் தென்னக வரலாற்றினுள் வரலாறாக விளங்கும் விசயநகர வாழ்வுக்கு முன்னோடியாய் அமைந்தது. காம்பிலி தேவன் வீர வாழ்வு! புயலின் முதற்சுழலில் அகப்பட்டு அவன் வீழ்ச்சி யடைந்தான். ஆனால் அவன் வீழ்ச்சியே தென்னகத்தின் எழுச்சிக்கு வித்தாயிற்று. அவன் வாழ்வு புறநானூற்றுக் கால வீரப்பண்பையும் இராசபுத்திர வீரர் எழுதிய வீறமைதியையும் நினைவூட்டவல்ல ஒரு பொன்வண்ண வீரக் காப்பியமாகத் திகழ்ந்துள்ளது. காம்பிலி ஒரு தனியரசாக மதிப்புப் பெற்றது காம்பிலி தேவன் தந்தையாகிய சிங்கையன் காலத்திலேயேயாகும். அவன் முதலில் தேவகிரி அரசன் கீழ் அப்பகுதியாண்ட மாகாணத் தலைவனாக மட்டுமே இருந்தான். ஆனால் தேவகிரியிலாண்ட யாதவ வல்லரசருக்கும் ஒய்சளப் பேரரசருக்கு மிடையே நிலவிய போட்டி பூசல் போராட்டங்கள் அவன் ஆற்றலை வளர்த்தன. பக்கத்திலிருந்த சிற்றரசர்களை அவன் தன்னாண்மையுடன் வென்று தன் வலிமையைப் பெருக்கிக் கொண்டு வந்தான். தேவகிரி வீழ்ச்சியின் பின் புதிய வடதிசை மேலாட்சியை ஏற்காமல் காம்பிலி தனியாட்சி நிறுவ முனைந்தது. தேவகிரி யாண்ட வடபேரரசின் மாகாணத் தலைவன் அவனை அடக்க எழுந்து கும்மட துர்க்கத்தைத் தாக்க முயன்றும் தோல்வியே கண்டான். இது காம்பிலியின் மதிப்பை உயர்த்திற்று. அதே சமயம் வடகிழக்கில் வாரங்கலாண்ட காகதீய வல்லரசும் தெற்கில் ஒய்சளப் பேரரசும் காம்பிலியை விழுங்கி விடப் பெருமுயற்சிகள் செய்தன. ஆனால் இங்கும் வல்லரசுகளின் போட்டியே இடைநின்ற சிற்றரசைக் காத்தது. அத்துடன் வாரங்கல் வீழ்ச்சியடைந்தபோது, வாரங்கலுடன் இணைத்திருந்த இரேய்ச்சூர் மாவட்டத்தைக் கைக்கொண்டு காம்பிலியே ஆதாயமடைந்தது. இவ்வாறாகக் காம்பிலிதேவன் ஆட்சியில் 1326-க்குள் தற்காலப் பெல்லாரி, சித்தலதுருக்கம், இரேய்ச்சூர், தார்வார் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுவிட்டன. தலைநகர்களை அடிக்கடி மாற்றிக் கொண்டு, ஹொசதுர்க்கம், கும்மடதுர்க்கம் முதலிய வலிமை வாய்ந்த கோட்டைகளை அமைத்துக் கொண்டும் அவன் முன்னேறினான். முகமது துக்ளக்கின் கவனத்தைத் தமிழகத்திலிருந்து திருப்பிய செய்தி அவன் அரசுரிமையை எதிர்த்த உறவினனான சாகர் மாகாணத் தலைவன் பகாவுதீன் கர்ஷாஸின் கிளர்ச்சியே யாகும். முதன் முதலில் முகமது அவனுக்கு எதிராக அனுப்பிய படைத் தலைவன் காஜா ஜெஹான் 1326-ல் கோதாவரிப் போரில் பகாவுதீன் கர்ஷாஸை முறியடித்துத் துரத்தியிருந்தான். பகாவுதீன் தன் சாகர்க் கோட்டைக்குள் ஓடித் தஞ்சம் அடைந்தான். ஆனால் கோட்டையினுள்ளும் அவன் நிலைமை கவலைக் கிடமாயிற்று. கோட்டையை எதிரியிடமே விட்டு விட்டு அவன் காம்பிலி தேவனிடம் ஓடி அடைக்கலம் கோரினான். காம்பிலிதேவன் இப்போதுகூட ஒரு சிற்றரசனே. பகாவு தீனோ வடதிசைப் பேரரசின் மாளாப் பகைமைக்கு ஆளானவன். அவனுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பேரரசின் பகைமையையும் தன் அழிவையுமே எந்தச் சிற்றரசும் வலியச் சென்று விலைக்கு வாங்க நேரும். காம்பிலிதேவன் இதையெல்லாம் ஒரு சிறிதும் பாராமல், அடைக்கலமென்று வந்தவரை உயிர் கொடுத்தும் காக்கும் கடமையிலேயே நின்றான். துரத்திவந்த புயலில் துடிதுடித்துவந்த பகாவுதீன் இவ்வீரச் சிற்றரசன் பாதுகாப்பில் ஒரு சிறிதே ஓய்வு பெற்றான். பேரரசன் முகமது காம்பிலியை மிக எளிதில் நசுக்கி விடவே எண்ணினான். ஆனால் முதல் தாக்குதலில் வீரமே வென்றது. பேரரசின் தாக்குதற் படை நிலைகுலைந்தது. படைத்தலைவன் ருக்னுதீன் உயிர் தப்பினால் போதும் என்றோடினான். மறுதடவை குதுப் மாலிக் ஜஹான் என்ற படைத்தலைவனுடன் இன்னும் பெரிதான படை அனுப்பப் பட்டது. இதுவும் முந்திய நிலையே கண்டது. பேரரசுப் படைகள் சின்னஞ்சிறு சிற்றரசன் கையில் அடைந்த அவமதிப்புக் கண்டு பேரரசன் வெகுண்டு, தானே போர் முகம் நோக்கி விரைந்தான். பேரரசின் முழுப்படை பலத்துடன் புகழ்மிக்க படைத் தலைவனான அகமது அயாஸ்மாலிக் சாதாவே கும்மடதுர்க்கம் நோக்கிப் பாய்ந்தான். வீர காம்பிலிதேவனும் பகாவுதீனும் கோட்டைக்கு வெளியே வந்தெதிர்த்துக் கடும்போர் நடத்தினர். ஆனால் பேரரசின் முழுப் படை பலத்தின் முன் வீரம் பயன்படவில்லை. அது அழிவு செய்யத் தான் முடிந்தது. வெற்றி நாட்ட இயலவில்லை. அவர்கள் கோட்டைக்குள் சென்ற பின்னும் கோட்டை நீடித்த முற்றுகைக் காளாயிற்று. இறுதியில் கோட்டை கைவிடப்பட வேண்டுமென்ற நிலை ஏற்பட்டது. இச்சமயம் காம்பிலிதேவனின் வீரப்படைத் தலைவன் கோட்டை வாயிலில் சென்று நின்று தாக்குதலை ஏற்றுத் தன் உயிரையே பலி கொடுத்து வீழ்ச்சியைத் தன்னாலியன்ற மட்டும் தடுத்து நிறுத்த முயன்றான். இதனால் கிடைத்த சிறிது ஓய்வைப் பயன்படுத்திக் காம்பிலி தேவனும் பகாவுதீனும் கோட்டையைவிட்டு வெளியேறி ஹொசதுர்க்கத்துக்குத் தப்பியோடினர். ஆனால் ஒரு மாத முற்றுகைக்குப் பின் ஹொசதுர்க்கமும் அவர்களுக்குப் பாதுகாப்பளிக்க முடியவில்லை. வீரமாக மாண்டு மடிவதன்றி இனி வேறு செயல் வகை கிடையாது என்று காம்பிலிதேவன் இப்போது கண்டான். அதற்கு அவன் சித்தமானான். எதிரி கையிலிருந்து தப்புவிக்கும் ஒரே வழியாக அவன் தன் மனைவி மக்களைத் தீயில் மூழ்குவித்தான். தான்மட்டும் தனியாக வீரக் கடனாற்றக் கோட்டைக்கு வெளியே சென்று போர் செய்து மாள எழுந்தான். ஆனால் இச்சமயத்தில் கூடத் தன்னிடம் தஞ்சமென்று வந்த பகாவுதீனைத் தன்னுடன் தன் பலிபீடத்தில் மாளவிட அவன் மனம் ஒருப்படவில்லை. தன் சாவு கடந்தும் அவனுக்குப் பாதுகாப்பு அளித்துவிட அவன் துடித்தான். ஒய்சளப் பேரரசன் மூன்றாம் பல்லாளன் காம்பிலிதேவன் வாழ்நாள் முழுதும் அவனுக்குப் பகைவனாயிருந்தவன். ஆயினும் வடதிசைப் பேரரசனின் எதிரிக்கு நிலையான பாதுகாப்பு அளிக்க வல்லவன் அவன் ஒருவனே. இதை உணர்ந்து பகைமை பாராட்டாமல் அவனிடமே காம்பிலிதேவன் பகாவுதீனை அனுப்பத் துணிந்தான். தன் கடமையில் தானும் தன் குடும்பமுமே அழிவுறும் இச்சமயத்தில், தன் பகைமை பாராட்டாமல், தான் ஏற்ற கடமை காத்துப் பகாவுதீனுக்கு அடைக்கல மளிக்குமாறு இறுதி வேண்டுகோள் விடுத்து மன்றாடினான். பல்லாளனும் தன்னை ஒத்த தென்னவனே என்ற முறையில், பொதுப் பகைவனை எதிர்ப்பதிலும் வீரக் கடனாற்றுவதிலும் அவன் தன் வழி பின்பற்றுவானென்ற நம்பிக்கையில் காம்பிலிதேவன் தன்னைக் களப்பலிக்கு ஒப் படைத்தான். ஆயினும் அந்தோ! தன் அழிவிலும் சிங்கக் குருளை மேற் கொண்ட வீரக்கடனை ஆற்றலும் அனுபவமுமிக்க கிழச்சிங்கம் ஏற்கத் தயங்கிற்று. பேரரசை நேரடியாக எதிர்க்க விரும்பாமல் பல்லாளன் பகாவுதீனை எதிரியிடமே ஒப்படைத்தான். ஆனால் இச்செயல்கூட வடதிசைப் புகழ் அவன்மீது வீசுவதைத் தடுக்கவில்லை. புயற்படைகள் தலைநகரான துவார சமுத்திரத்தைச் சூறையாடிப் பேரரசனிடம் திறைபெற்றே பகாவுதீனுடன் மீண்டன. மாண்டவீரன் காம்பிலிதேவனின் தலையில் உள்ளே புல் திணித்து அதைப் படைத்தலைவன் மாலிக் சாதா தில்லிக்கு அனுப்பினானாம்! அவன் தன் உயிரும் மரபும் பலியிட்டுக் காக்க எண்ணிய பகாவுதீன் உடலோ உயிருடன் தோலுரிக்கப்பட்டதாம்! தசை தனியாகச் சோறுடன் புலவாகச் சமைக்கப்பட்டு அவன் உறவினர் முன்னும், யானை முன்னும் படைக்கப் பட்டனவாம்! இந்த அவமதிப்பின் பின் அத்தசைச் சோறு கழுகுகளுக்கு இரையாக்கப்பட்டது. மனைவி மக்கள், உறவினரும் இதனுடன் கொன்றழிக் கப்பட்டனர். இவையன்றிப் பகாவுதீன் உடலிலிருந்து உரிக்கப்பட்ட தோலினுக்குள் வைக்கோல் திணித்து அது காட்சிப் பொருளாக வைக்கப்பட்டதாம்! சாவின்பின் சிறிது மனித உணர்ச்சி காட்டி அதனை அடக்கம் செய்ததற்காக, குஜராத் மாகாணத் தலைவனும் அம்மாகாண நீதிபதியும்கூட உயிருடன் தோலுரிக்கப் பெறும் கோர தண்டனைக்கே ஆளாயினராம்! அரசியல் பகைமைப் போட்டியும் கேளிக்கைப் போட்டிகளுமன்றி வேறெந்த மனித இனப்பகைமையும் அறியாதது தென்னகம். அது இப்போது கண்ட புயலின் முதற்காட்சிகள் இத்தகையவை! காம்பிலி வீழ்ச்சி தென்னக முழுதும் ஒரு புறம் புயல் நினைவு பற்றிய நடுக்குறுத்தும் சீற்றத்தையும் வெறுப்பையும், மறுபுறம் காம்பிலிதேவன் புறநானூற்று வீரம் பற்றிய ஆர்வப் பாராட்டும் பரப்பிற்று. ஆனால் இதனை உணராத பேரரசன் முகமது ஒய்சளப் பேரரசு முற்றிலும் சூறையாடி அதைக் கீழடக்கி விட்டு, முன்பே அரசு வீழ்த்தியிருந்த தமிழகத்தில் மதுரையிலும் சுற்றுப் புறங்களிலும் படைத்தளங்களை நிறுவினான். தமிழகம் இந்நாளில் பேரரசின் ஒரு மாகாணமாகக் கருதப் பட்டு, அதன் தலைமையிடமான மதுரையில் ஒரு மாகாணத் தலைவன் அமர்த்தப் பட்டான். தென்னகத்தை ஐந்து மாகாணங்களாகப் பிரித்து வடதிசை மாகாணங்களுடன் சேர்த்து ஆளவேண்டு மென்னும் எண்ணமும் முகமதுவுக்கு இச்சமயம் ஏற்பட்டிருத்தல் கூடும். அவை தேவகிரி, வாரங்கல் அல்லது தெலுங்காணம், காம்பிலி, துவார சமுத்திரம் அல்லது ஒய்சளப் பேரரசின் எல்லை, மாபார் அல்லது மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட தமிழகம் என்பவையே. இவ்வளவு பரப்பிலும் வடதிசை ஆட்சி அமைவுற்றிருந்தது என்று கூற முடியாது. ஆனால் 1326-ல் இவ்வளவு பரப்பிலும் சூறையாட்சிக் குரிய தளங்களும், சூறையிடும் வாய்ப்பும் இருந்தன என்பதில் ஐயமில்லை. முகமது துக்ளக்கின் நாட்களிலேயே தில்லி ஆட்சி முன்னோ பின்னோ என்றும் அடையாத உச்ச அளவு பெரும் பரப்பை அடைந்தது. இதற்கு அவன் தென்னக வெற்றிகளே பெரிதும் காரணம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதே சமயம் அவன் வெற்றிப் போக்குக்கும் ஆட்சி விரிவுக்கும் மட்டுமன்றி அவன் மரபுக்கே முற்றுப்புள்ளி வைத்தது, தென்னகத்தில் அவன் எழுப்பிய புயல்! புயல் கொணர்ந்த பூமான் முகமது துக்ளக்கை வெறியன், பித்துக்கொள்ளி, கற்றறிந்த மூடன் என்று பல வரலாற்றாசிரியர் புனைந்து காட்டப் புகுந்துள்ளனர். இது முற்றிலும் சரியன்று. அவன் வெறியனல்லன், பித்துக் கொள்ளியுமல்லன். தவிர, அவன் கற்றறிந்த புலவன், கலை அறிவு வளர்த்த வள்ளலேயன்றிக் கற்றறிந்த மூடனும் ஆகமாட்டான். ஆனால் அதே சமயம் அவனை உண்மையிலேயே வெறியனாக்கிய ஒரு செய்தியை மட்டும் வரலாற்றாசிரியர் சுட்டிக்காட்டாது விட்டனர். அதுவே தென்னகத்தின் தேசீய எழுச்சி! விசய நகரப் பேரரசுக்கு மட்டுமன்றிப் பகமனிப் பேரரசுக்கும் பிறதென்னகத் தேசீய அரசு பேரரசுகளுக்கும் மூலமுதலான எழுச்சி அது. துக்ளக்கின் வீழ்ச்சிக்குரிய இந்த உண்மைக் காரணத்தைக் காணாததாலேயே வரலாற் றாசிரியர்கள் முகமது துக்ளக்கினிடம் வெறியையும் பித்துக் கொள்ளித்தனத்தையும் புடைத்து உருவாக்கி அவற்றையே தோல்விக்குரிய காரணங்களாகச் சுட்டிக் காட்டினர் என்னலாம். வரலாற்றில் வடதிசையிலிருந்து ஆண்ட பேரரசுகளுள் பிரிட்டிஷ் ஆட்சி ஒன்று நீங்கலாக வேறெந்த ஆட்சியும் துணைக் கண்டத்தின் எல்லையில் முகமது துக்ளக் ஆண்ட அத்தனை பெரும்பரப்பைக் கண்டதில்லை. அத்துடன் அப்பெரும் பரப்பின் பெரும் பகுதியும் அவன் வெற்றிகளாகவே அமைந்தன. ஆயினும் கிட்டத்தட்டத் துணைக்கண்ட முழுதும் அளாவிய இந்தப் பரப்பில் கூட அவன் மனநிறைவு பெறவில்லை. அவன் உயர் பேரவா நேபாளத்தையும், சீனத்தையும், பாரசீகத்தையும் வென்று ஆசியப் பேரரசனாகத் துடித்தது. ஆசியாவிலிருந்து சிந்து கங்கை வெளியில் தாவளமிட்ட புயலை அது மீண்டும் ஓர் ஆசியப் பெரும் புயலாக்கத் திட்டமிட்டது. இதன் முதற்படியாக, துணைக்கண்டத்தை ஓர் உறுதியான புயல் மூல தளமாக்கும் எண்ணத்துடனேயே, அவன் தலைநகரைத் தில்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்ற இருதடவை பெரும் முயற்சிகள் செய்தான். முகமது துக்ளக்கின் பித்துக்கொள்ளித் தனத்துக்குச் சான்றுகளாகச் சீனப்படையெடுப்புத் திட்டம், தலைநகர் மாற்ற முயற்சி, அவ்வகையில் அவன் செய்த அழிவுகள், மக்கள் வேட்டை ஆகியவற்றையே வரலாற்றாசிரியர்கள் பெரிதுபடுத்துகின்றனர். ஆனால் இவை அட்டிலா, அலாரிக், செஞ்சிஸ்கான், தைமூர், நாதிர்ஷா ஆகிய ஆசியப் புயல் மரபினருக்கும் அலாவுதீன் போன்ற வட திசைப் புயல் வழியினருக்கும் பொதுவான பேரவா அழிவுகளேயன்றி முகமது துக்ளக்குக்கு மட்டும் தனியுரிமை உடையவையல்ல. தைமூர் கண்ட வெற்றிகளை முகமதுவும் கண்டிருந்தால், இவை அவன் தோல்விக்குக் காரணமாகக் கூறப்பட்டிரா; வெற்றிக்கே அவை உரியனவாகக் கருதப் பட்டிருக்கும். அவன் பித்துக் கொள்ளித் தனத்துக்குத் தரப்படும் இன்னொரு சான்று அவன் தாள் பணம் வெளியிட்டதேயாகும். ஆனால் தாள் பணம் உலகெங்கும் பரவிவிட்ட இன்றைய நிலையில், அதை உலகிலேயே முதல் முதல் தொடங்கி வைத்த பெருமைதான் முகமதுவுக்கு உரியதாகும். தலைநகர் மாற்றங்கள் இஸ்லாமிய மூன்றாம் அலை மரபுக்குப் புதிதன்று. தென்னகத்தில் காம்பிலி மன்னரும் ஒய்சளரும் நெருக்கடி காலங்களில் தலைநகர் மாற்றத்தையே ஒரு போர் முறையாகக் கொண்டிருந்ததையும் முகமது கண்டிருந்தான். தில்லியைவிடத் தேவகிரி துணைக்கண்டத்தின் மைய இடமென்பதை வரலாற்றாசிரியர்களே ஒத்துக்கொள்கின்றனர். மேலும் தில்லி எப்போதும் வடமேற்கிலிருந்து வரும் புயலுக்கு மூல தளமாயிருந்த இடம் மட்டுமே. சிந்து கங்கை வெளிக்குரிய பேரரசுகள் அவ்வெளியின் கீழ்திசையிலேயே மூல தளம் கொண்டிருந்தன. தில்லியிலிருந்து தேவகிரிக்கு மாறுவது அயல்புலப் புயலின் மூலதளத்திலிருந்து தென்னகத் தேசீயத் தென்றலை நோக்கித் தளமாற்றுவதாகக் கூட அவன் எண்ணியிருக்கக் கூடும். ஆனால் அவன் புயல் ஆதரவில் வந்தவன், தென்றல் அவனை வரவேற்கவில்லை! செஞ்சிஸ்கானும் தைமூரும், பின்னாளில் நாதர்ஷாவும், ஆசியப் புயலின் கோரவீச்சுக்கு உரியவர்கள். அவர்கள் வெற்றியன்றித் தோல்வி கண்டதில்லை. தென்னகத்தை அடுத்தது மில்லை. அலாவுதீன் அந்த வரிசையில் வந்தவனே. ஆனால் அவனும் அவன் பரம்பரையினரும் தென்னகத்தில் கால்வைத்த அன்றே தோல்வி கண்டனர். அது மட்டுமன்று. கோரப்புயலை நயமிக்க சூழ்ச்சிப் புயலாக்கித் தென்னகத்தில் அழிவு தேடியவன் அக்பர். அவன் வடதிசையில் கண்ட வெற்றியைத் தெற்கே பெறவில்லை. முகமதுவும் ஒளரங்கசீபும் வெறிப்புயல் மரபிலே ஓரளவு அறிவு அல்லது நேர்மை புகுத்தி மற்ற வடதிசை மன்னரைத் தாண்டி வெற்றி கண்டவர்கள். துணைக்கண்டத்தின் செஞ்சிஸ்கான்களாக, தைமூர்களாக அவர்கள் வளர்ந்திருக்கக் கூடும் - அதைக் கொடுத்தது அவர்கள் வெறியோ, பித்துக் கொள்ளித்தனமோ அல்ல. தென்னகத் தேசீயமேயாகும்! துக்ளக்கின் பேரரசு அதற்கு முன்னோ பின்னோ நிலவிய எந்த வடதிசைப் பேரரசையும் விடத் திடீர் வளர்ச்சியைக் கண்டது. ஆனால் அதன் வீழ்ச்சியும் மற்றவற்றையெல்லாம் விடத் திடீர் வீழ்ச்சியே. தென்னகத் தேசீயத்தின் உள்ளார்ந்த வலிமை வட திசைப் பேரரசுகள் எல்லாவற்றின் மீதும் செயலாற்றிற் றாயினும், துக்ளக் பேரரசுக் காலத்திலேயே அதன் முழுமலர்ச்சி வீறு கொண்டு எழுந்து ஓங்கியிருந்தது. புயற்காலத் தென்னக நிலை கடலையே பார்த்திராத ஒருவன் முன் திடுமெனக் கடல் காட்சி யளிக்குமானால், அவன் அது இன்னதென்றறியாமல் திகைப்படைவான். புயற்காலத் தென்னக மக்கள் நிலை இதுவாயிருந்தது. புயல்களை அவர்கள் கண்டதுண்டு. ஆனால் இந்தப் புயல் போன்ற எதுவும் அவர்களின் கண்முன் காட்சி யளித்ததில்லை. அந்நாளைய மக்கள் அடைந்த மனச்சோர்வையும் பதைபதைப்பையும் அக்கால ஆதாரங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. வடதிசை இஸ்லாமிய அலை இஸ்லாமிய உலகின் மூன்றாவது அலை, பண்படாத் துருக்கிய அலை. அதன் சின்னமாக இன்றளவும் இஸ்லாமிய மக்கள் யாவரும் தென்னக நாட்டுப்புற மக்களால் துருக்கர் அல்லது துலுக்கர் என்றே குறிக்கப்படுகின்றனர். இந்த வழக்கை நாம் அந்நாளிலிருந்தே காண்கிறோம். திருக்களாக்குடிக் கல்வெட்டு அந்தக் கால அனுபவங் களைத் தொகுத்துரைக்கிறது. ‘காலம் துலுக்கர் காலம். கோயில் நிலங்களுக்குக் கூடக் குடிவரி விதிக்கப்படுகிறது. உழுவதற்கு ஆட்கள் கிடையாது. ஆயினும் இறைபூசனை எவ்வாறாயினும் நடந்தாக வேண்டுமே! இதை உளங்கொண்டு ஊரார்தான் தாமே முறைவைத்துக் கொண்டு ஒவ்வொருவர் ஒவ்வொரு நாளாகக் கோயில் நிலங்களை உழுகின்றனர். மதுரைக் கோயில் நிலவரம் பற்றித் தல வரலாறு சோகக் குரலெழுப்புகிறது. ‘சகம் 1246 முதல் 1293 வரை (கி. பி. 1323-1370) நாற்பத் தெட்டு ஆண்டுகளாக இவ்வாட்சி நடைபெற்றுள்ளது. இந்நாட்களில் மதுரை கோயில் கொண்ட தெய்வமே மதுரையிலில்லை. அத்தெய்வம் நாஞ்சில் நாட்டுக்குச் சென்று பதுங்க வேண்டியதாயிற்று. ஐந்தெழுத்து வடிவான மதிலகமும் அதன் பதினான்கு கோபுர வாயில்களும் தவிடு பொடியாகி விட்டன. அழியாது எஞ்சியிருப்பது கருப்பமனையும் அரைமண்டபமும் மட்டுமே’. இக்கால இறுதிக்கு முன்னே விசயநகரப் பேரரசு வாழ்வு தொடங்கி விட்டது. அதன் வீரப் படைத்தலைவன் கம்பணனே இக்கால இறுதியில் தமிழகத்திலிருந்த வட திசையலையின் கடைசித் தூவானங்களை அகற்றினான். மதுரை வெற்றி (மதுராவிசயம்) என்ற பெயரால் அவன் வாழ்க்கை வரலாற்றை அவன் மனைவி, கங்கம்மா ஒரு சமஸ்கிருத காவியமாகப் பாடியுள்ளார். கவிதை மொழியில் இதே பாணியில் அவரும் அந்நாளைய சூழல்களை விவரித்துள்ளார். ‘கோயில் குளங்களெல்லாம் கவனிப்பாரற்றுப் போயின. அவற்றின் மதிலகங்களில் முரசு முழங்கவில்லை. நரிகள் ஊளையிடுகின்றன. நடை வரம்பறியாத துருக்கரைப் போலவே, காவேரிகூடக் கரைமீறிக் கொடுங் கோலாட்சியழிவுடன் சேர்ந்து அழிவு செய்கிறாள். மதுரை மாநகரடுத்த சோலை வனங்களெல்லாம் பெரும்பாலும் பாழ்வனங்களாய்விட்டன. ஆனால் கழு மரங்களிலே தொங்கவிடப்பட்ட மாண்ட மக்களின் தலையோடுகள் எங்கும் காய்கள் முற்றித் தொங்கும் தென்னை மரங்களாகவே காட்சியளிக்கின்றன. தாமிரபரணியாற்றில் தண்ணீர் ஓடவில்லை; பசுக்களின் குருதியே கொதித்தோடுகிறது. வேதங்கள் மறக்கப்பட்டு விட்டன; நீதி ஒளிந்து கொண்டது. திராவிட மக்களின் பண்பையும் பெருமையையும் இப்போது எங்கும் காண முடியாது. அவர்களின் முகங்களிலெல்லாம் மாறாத சோகமே நிலையாகப் படிந்துவிட்டது போலிருக்கிறது’. 1327-இல் சீரங்கம் கோயில் சூறையாடப்பட்டது. மதுரைத் தெய்வம் நாஞ்சில் நாட்டில் அடைக்கலம் புகுந்தது போல, சீரங்கம் கோயில் கொண்ட தெய்வம் பல சுற்று வழிகளிலும் பதுக்கி எடுத்துச் செல்லப்பட்டுத் திருப்பதியில் தஞ்சமடைந்தது. புகழ்சான்ற வைணவ உரைகாரராகிய பிள்ளை லோகாசாரியர் அதனை எடுத்துச் சென்றவருள் ஒருவர். அக்காலத்திலேயே வாழ்ந்த மற்றொரு வைணவப் பெரியார் வேதாந்த தேசிகர். அவரும் ஒளிந்தோடிச் சத்திய மங்கலத்தில் பாதுகாப்புத் தேடினார். தில்லி ஆட்சிப் பீடத்திலிருந்து நெடுந்தொலைவிலுள்ள தமிழகத்தின் நிலைதான் இது. இன்னும் அருகிலிருந்த பிற தென்னகப் பகுதிகளிலுள்ள மக்கள் நிலையைக் கூற வேண்டியதில்லை! நமக்குக் கிட்டியுள்ள அந்நாளைய மக்கள் குரல்கள் பெரும்பாலும் கோயில் குளங்கள், வேதங்கள், பசுக்கள் பற்றியே பேசுகின்றன. வரலாற்றாசிரியர்கள் பலர் விசயநகரப் பேரரசை இந்துப் பேரரசு என்று குறிப்பிட இக்கூற்றுக்கள் பெரிதும் உதவியிருக்கக் கூடுமென்பதில் ஐயமில்லை. ஆனால் எழுதுமிடமும் எழுதுபவர் நிலையும் சார்புமே இதற்கு முக்கியமான காரணங்கள் ஆகும். தவிர, இவை கோயில்களில் தீட்டப்பட்ட கல்வெட்டுக்கள்; அல்லது கோயில் குளங்களை, வேத பசுக்களைக் காட்டி மக்களுக்கும் புரோகிதருக்கும் உணர்ச்சியூட்டும் உரைகளே ஆகும். மக்கள் வாழ்வின் நிலையை மனதில் பதிய வைக்க, மக்கள் உள்ளம் தடவ இக்கூற்றுக்களை விடச் சிறந்த கருவி கிடையாது. மேலும் மக்களைக் கொன்றொழிக்கும் கொடுங்கோலர்கள் கோயிலுக்கு அவமதிப்புத் தந்து தம்மைத்தாமே விரைவில் அழித்துக் கொள்ள மாட்டார்கள் - தம் கொடுங்கோன்மைக்குப் பாதுகாப்பாக அத்தகையோர் அவற்றுக்குத் தனிமதிப்புத் தந்து அவற்றின் ஆதரவைப் பெறத் தவறுவதில்லை. இந்நிலையில்தான் கொடுங்கோன்மை யிடையே கூடத் தென்னக மக்கள் அறியாத ஒரு கொடுமை கடந்த நிலை வடதிசைப் புயலாட்சி அவர்கட்குக் காட்டிற்று. விடியல் வானம் புயலிடையே தென்றலாக, இளவள ஞாயிறாக, விசய நகரப் பேரரசு 1336-லேயே பிறந்தது. ஆனால் அதற்கு முன்பே புயலுக்கு முற்பட்ட பழைய தென்னகத்தின் மாலை விண்மீன் ஒளியாகவும், புதிய பகலின் விடியற் போதுக்குக் கட்டியங்கூறும் காலை விண்மீன் ஒளியாகவும் ஒய்சளப் பேரரசு விளங்கிற்று. 1326-இல் தமிழகத்தில் மதுரையிலும் சூழ்புறங்களிலும் படைத்தளமும் மாகாணத் தலைமையிடமும் அமைத்துவிட்டுப் பேரரசு பின் வாங்கியதும், ஓய்சளப் பேரரசன் மூன்றாம் பல்லாளன் புதிய செயல்களில் விரைந்தான். அவன் பெயரளவிலேயே தில்லிக்குப் பணிந்து கொடுத்திருந்தான். தலைநகர் சூறையாடப் பட்டுப் பெரும் பொருள் கொள்ளை போயிருந்தது. ஆனால் தலைநகரை அடிக்கடி திருவண்ணாமலைக்கும் ஹொச பட்டணத்துக்கும் மாற்றிக் கொண்டு தலை நகரில் எஞ்சியிருந்த வடதிசைப் புயலின் சிறு பிடியையும் வலுவிழக்கச் செய்தான். கீழ் கரையோரப் பகுதிகளைக் கைவசப்படுத்தி வடதிசை மைய ஆட்சியிலிருந்து மதுரையைத் துண்டுபடுத்துவதில் அவன் வெற்றி கண்டான். கொஞ்ச காலத்துக்கு ஒய்சள வெற்றியை மதுரை இஸ்லாமிய ஆட்சித் தலைவர்கள் தம் வெற்றியாகக் கொண்டு இறுமாந்தனர். வடதிசை மேலாட்சியை அவர்களே உதறித்தள்ளித் தனியாட்சி நிறுவினர். மதுரை சுல்தான்கள் என்ற பெயரும் சூட்டிக் கொண்டனர். இச்செயல்மூலம் தம் ஆட்சியின் வலுவைத் தாமே குறைத்துக் கொண்டதை அவர்கள் அறியவில்லை. மதுரை இஸ்லாமிய ஆட்சியில் சுல்தான்கள் மக்களைச் சூறையாடுவதுடன் நிற்கவில்லை. நாட்டைக் குருதிக் காடாக ஆக்கியது போலவே, தம் அரசிருக்கையையும் குருதிப் பலிக்கள மாக்கினர். சதிகள், கொலைகள் மூலமே அரசிருக்கைக்கு ஒவ்வொருவரும் நீந்திவந்து ஆண்டு அல்லது மாதம், சிலசமயம் நாள் முடிவதற்குள் அதே சதி கொலைகளுக்கு ஆளாகி அதினின்றும் அகற்றி ஒதுக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் பல்லாளன் நடவடிக்கைகளில் மிகுதி கருத்துச் செலுத்த முடியவில்லை. ஆனால் இறுதியில் ஓய்சளருடன் அவர்கள் போராட்டம் முறுகிற்று. 1341-இல் மதுரையை ஆண்ட அலாவுதீன் உதௌஜி திருவண்ணாமலை மீது படையெடுத்தான். இப்போரில் தற்செயலாக ஒரு கண்ணில் அம்பு பாய்ந்து அவன் மாண்டான். அடுத்த ஆண்டு பல்லாளன் ஒய்சளர் பழந்தலைநகரான கண்ணனூர்க் குப்பத்தை நெருக்கி முற்றுகையிட்டான். இதற்குள் மதுரையாட்சி இரு கைகள் மாறியிருந்தது. கொலைகாரச் சுல்தான்களிடையே கூடப் படுகொலை காரனென்று பெயரெடுத்த கியாசுதீன் தம் கானி பதவிக்கு வந்தபின் சதியால் பல்லாளனைக் கைப்பற்றி வதை செய்தான். அவன் உடலைத் துண்டுபடுத்தி மதுரை வாயிலிலேயே நிலையாகத் தொங்கவிட்டு, வட திசைப் புயலும் அஞ்சும் ஒரு கடும்புயற் சின்னமானான். ஒய்சளரின் இந்தத் தோல்வி உண்மையில் அடுத்தூர்ந்து வந்த தேசீய வெற்றிக்கு ஒரு படியாகவே அமைந்தது. ஏனெனில் ஒய்சளரின் தமிழக வெற்றிச் சுவடுகளைப் பின்பற்றி முழு விடுதலை காணவிருந்த விசயநகரப் பேரரசு இத்தோல்விக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நிறுவப்பட்டிருந்தது! தேசிய இயக்கத்தின் தாய்க்கொடி தென்னகத் தேசியம் தமிழகத்தை மையமாகக் கொண்டு மறுமலர்ச்சி யுற்றது போல, 14-ஆம் நூற்றாண்டில் மலர்ந்த தென்னகத் தேசிய இயக்கமும் அதற்குமுன் ஆயிரம் ஆண்டு தமிழகத்தில் வளர்ந்து முதிர்ச்சியுற்ற பக்தி இயக்கத்தின் மறுமலர்ச்சியாகவே முகிழ்த்தது. மேலையுலகில் பண்டைக் கிரேக்க உரோம வாழ்வின் புத்துயிர்ப்பாக எழுந்த ஐரோப்பியக் கலைமலர்ச்சியியக்கம் (சுநயேளைளயnஉந ஆடிஎநஅநவே) இதே 14-ஆம் நூற்றாண்டுக்குரியது என்பதுவும் இங்கே நினைவுகூரத்தக்கது. தமிழகப் பக்தி இயக்கம் எப்போது தொடங்கிற்று என்று இன்றும் வரலாற்றாசிரியர்களால் முடிவுபடுத்திக் கூறப்பட வில்லை. ஆனால் சைவக் கிளைப்பேரியக்கத் தலைவர்களான நாயன்மார்களில் முதல் நாயன்மார்களும், வைணவக்கிளைப் பேரியக்கத் தலைவர்களான ஆழ்வார்களில் முதலாழ்வார்களும் வாழ்ந்த காலம் சங்க காலத்துக்கு நெடுந்தொலைவில் இருக்க முடியாது என்று திண்ணமாகக் கூறலாம். நடுநாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகியோர்களின் காலமாகிய 7-ஆம் நூற்றாண்டில் இயக்கம் உச்சநிலை அடைந்து, கி. பி. 8-ஆம் நூற்றாண்டின் பின் அவ்வியக்கம் தமிழர் தேசிய வாழ்வின் ஒரு பகுதியாய்விட்டது. ஆனால் மணிமேகலை காலத்துக்கு முன்னிருந்தே தமிழக இயக்கத்தின் ஒரு கூறான அறிவாராய்ச்சி எழுச்சிக்குக் காஞ்சி தலைமையிடமாய் இருந்து வந்துள்ளது. தமிழகத்தின் அறிவொளியை அது தமிழகங் கடந்து தென்னக மெங்கணும், கீழ் திசை முழுதும் பரப்பி வந்தது. அத்துடன் தமிழகப் பக்தி இயக்கம் தளர்வுற்றுத் தமிழ் மக்கள் வாழ்வுடன் வாழ்வாக, தமிழ்மொழியுடன் மொழியாகக் கலந்துவிட்ட சமயத்தில், அது சமஸ்கிருத மொழியைக் கருவியாகக் கொண்டு உலகெங்கும் புத்தாராய்ச்சிக் கோட்பாடுகளை உருவாக்கி வளர்த்துப் பரப்பத் தொடங்கிற்று. கலைவாழ் காஞ்சி துவக்கிய இப்புதிய அறிவாராய்ச்சி இயக்கத் தலைவர்கள் தமிழகத் தலைமை அல்லது தென்னக, கீழ்த்திசைத் தலைமையுடன் தம் அறிவு பரப்பும் ஆர்வத்தை நிறுத்தியவர்கள் அல்லர். அவர்களைக் குறிக்க வழங்கப்பட்ட பட்டம் ‘உலகு குரு’ என்பது. காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் அவர்களேறியமர்ந்திருந்த அறிவுத் தவசு பல்கலை முழு அறிவுப் பீடம் (சர்வஜ்ஞ பீடம்) எனப்பட்டது. அவர்கள் செயலார்வத் துடிப்பையும் ஆற்றலையும் இவை காட்டுகின்றன. காஞ்சியிலிருந்து அறிவுலகில் ஆணை பரப்பிய சமய அறிவு முதல்வர்கள் நீலகண்டசிவனார், சங்கரர், இராமானுஜர் ஆகியவர்கள். முதலாமவர் வகுத்துத் தொடுத்த சிவநெறியின் கிளையாகவே கன்னட நாட்டில் வீர சைவ நெறி ஆற்றல் சான்ற நெறியாய் 13-14-ஆம் நூற்றாண்டுகளில் வளர்ந்தது. 12 முதல் 16-ஆம் நூற்றாண்டுகள் வரை கன்னட இலக்கியத்தை முழுதாண்ட நெறியும், விசயநகரத் தொடக்கக்காலத் தேசீய இயக்கத்தின் பின்னணியும் இந்த வீரசைவ இயக்கமேயாகும். காஞ்சி முதல்வர்களில் இரண்டாமவரான சங்கரர் துணைக்கண்ட மெங்கும் நான்கு பெரிய அறிவு மடங்களை நாட்டியிருந்தார். “இந்நான்கில் கன்னட நாட்டுக் கிளைமடமாகிய சிருங்கேரியின் தலைவர்களில் ஒருவரான கலைக்காட்டடிகள் அதாவது சுவாமி வித்தியாரணியரே விசயநகரத்தின் தோற்றுதல் முதல்வராகவும், தேசீய இயக்கத்தின் தனிப்பெரும் தலைவராகவும், இயக்குநராகவும் அமைந்தார். காஞ்சி முதல்வருள் காலத்தால் பிந்தியவர் இராமானுசர், ஆனால் தேசீய இயக்கத்திலும் தென்னக, கீழ்த்திசைத் தேசீய வாழ்விலும் அவருக்குரிய பங்கு குறைவன்று, தமிழகம் கடந்த துணைக்கண்டப் பரப்பில் காஞ்சி முதல்வருக்குப் பின் நாலாமவராகப் புகழ் பெற்றவர் கன்னட நாட்டில் 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாதவர். ஐந்தாமவராக ஒளி திகழ்ந்தவர் வங்கத்தில் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சைதன்னியர், இருவரும் இராமானுஜர் கோட்பாட்டைப் பெரிதும் தழுவியவர்களே. இவர்களில் மாதவர் அறிவுநெறியும் வைணவக் கோட்பாடும் இராமானுசர் வைணவக் கோட்பாட்டுடன் இணைந்து தேசீய இயக்கத்தின் வளர்ச்சியுடன் தாமும் வளர்ந்தன. இதனை விசயநகரப் பேரரசகால நாணயங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. தொடக்க கால நாணயங்களில் நாம் சிவநெறிச் சார்பான சின்னங்களையே பெரிதும் காண்கிறோம். ஆனால் காலம் செல்லச் செல்ல, வைணவச் சின்னங்கள் மலிகின்றன. தேசீய இயக்கத்திலும், கீழ்திசைத் தேசீய வாழ்விலும், மனித உலகிலும் இராமானுசருக்குரிய மற்றொரு பெருஞ்சிறப்புக் கூறு ஒன்று உண்டு. காஞ்சி முதல்வர்கள் பொதுவாகத் தமிழிலிருந்த சமய, கலை, அறிவு வளத்தைப் பெற்று அதை உலகெங்கும் சமஸ்கிருதம் மூலம் பரப்பினார்கள். இதனால் 9-ஆம் நூற்றாண்டு வரை துணைக் கண்டத்தின் ஈடிணையற்ற முதன் மொழியாய்த் திகழ்ந்திருந்த தமிழ் சிறிது சிறிதாகத் தாழ்வடைந்தது. சமஸ்கிருதம் அந்நிலைக்கு உயரத் தொடங்கிற்று. அத்துடன் தமிழகத்துக்கு வெளியே சமஸ்கிருதம் இலக்கிய மன்றித் தாய்மொழி இலக்கியம் இல்லாத நிலையை அவர்கள் உண்டு பண்ணினர் அல்லது வலியுறுத்தினர். ஆனால் இராமானுசரின் வைணவநெறி தமிழ் கன்னட மொழிகளின் வளம் பெருக்கிற்று. அத்துடன் தமிழ் கன்னடம் நீங்கலான தென்னக மொழிகளுக்கும், அவற்றையடுத்துச் சிந்து கங்கைத் தாய் மொழிகளுக்கும் அதுவே முதன்முதலாக இலக்கிய வாழ்வு அளித்தது. இடையே காஞ்சி பின்பற்றிய வழிவிடுத்து, புத்த சமணரும், தமிழகப் பக்தி இயக்கமும் மொழிவகையில் பின்பற்றிய முறையையே இராமானுசரும் அவர் வழிவந்தோரும் மேற்கொண்டனர். தமிழகப் பக்தி இயக்கத்துக்கும் அதன் வழிமலர்ந்த தேசீய இயக்கத்துக்கும் ஒரு வேறுபாடு உண்டு. முன்னது தேசீய வாழ்வின் ஓர் அலை. அது தேசீய வாழ்விலிருந்து எழுந்து தேசீய வாழ்வில் ஒடுங்கிற்று. அதில் ஈடுபட்டவர்களில் அரசரும் இருந்தனர். ஆண்டியும் இடம் பெற்றனர். ஆனால் அது அரசியல் சாரா இயக்கம், புரோகிதரும் சாரா இயக்கம்! அந்த அளவில் அது தேசீயம் வளர்க்கும் இயக்கமாயிருந்ததே தவிர, தேசீயத்தை உருவாக்கும் தேசீய இயக்கமாய் அமையவில்லை. நேர்மாறாக, 14-ஆம் நூற்றாண்டுத் தேசீய இயக்கம் தென்னகத் தேசீயத்தை உருவாக்கியது மட்டுமன்று-சிந்து கங்கை வெளித் தேசீயத்துக்கும் அதுவே தேசீயக் கருமுதல் ஆகும். அரசியல் புரட்சி முகமது துக்ளக் பட்டத்துக்கு வந்த ஓராண்டுக்குள் துணைக் கண்ட முழுவதிலும் அவன் படைகள் பரவியிருந்தன. ஆனால் இந்தப் பரப்பு சூறையாட்டுப் பரப்பாகச் சின்னாட்கள் நிலவினவே தவிர, ஆட்சியாக நிலைக்கவில்லை. மக்கள் உள்ளத்தில் எங்கும் சிலகாலம் அச்சமும் கிலியும் திகிலும் பரவியிருந்தன. மக்கள் தலைமை வகிக்கத்தக்க பேரரசராக ஒய்சளர் தவிர வேறு யாரும் மீந்திராததே இதற்குரிய காரணமாகும். ஆனால் விரைவில் இந்நிலைமை மாறி மக்கள் உள்ளத்தில் புதிய தெம்பு ஏற்படத் தொடங்கிற்று. இதற்கு முதன்முதலில் மூலகாரணமாயிருந்தவன் பேரரசன் மூன்றாம் பல்லாளனே என்பதில் ஐயமில்லை. தென்னகத்தின் கிழச்சிங்கம் தன் சிங்க மரபு பொய்ப்பிக்காமல் 1342-ஆம் ஆண்டுவரை ஓயாது போராடி விடுதலை மலரின் இதழ்களை ஒவ்வொன்றாகத் தென்கோடியில் முகிழ்வித்தே வந்தது. தெற்கே தமிழகம் அடைந்த மாறுதல் தென்னகத்தின் வட திசையிலும் புதிய சூழல் வளர்த்தது. அங்கே பேரரசர் இல்லாத நிலையிலும், பேரரசின் மரபில் வந்த அரசர், சிற்றரசர், படைத் தலைவர் ஆகியோர் மக்கள் ஆதரவுடன் ஒருங்கிணைந்து வந்தனர். ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!’ என்ற எண்ணம் மக்களையும் ஆட்சியாளர்களையும் இந்நெருக்கடி நாட்களில் உள்நின்று ஊக்கிற்று. அரசியல் முறையில் இத்தேசீய எழுச்சியின் பிறப்பிடம் வாரங்கல் அல்லது தெலுங்கானாப் பகுதியேயாகும். தேவகிரியைப் போல அது முற்றிலும் கீழடக்கப்பட்டுவிடவில்லை. வட திசை ஆட்சியை உதறித் தள்ளிவிட அப்பகுதி மக்கள் என்றும் துடித்துக் கொண்டேயிருந்தனர். வீர காம்பிலி தேவனின் தியாகப் போராட்டம் அவர்கள் உள்ளத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. முகமது காம்பிலி தேவன் உடலுக்கும், பகாவுதீன் உடலுக்கும் இறந்த பின்னும் இழைத்த பழிகேடுகள் வடதிசைப் புயலின் இயல்புபற்றி அவர்களிடையே வெறுப்பும், சீற்றமும் பெருக்கியிருந்தன. இந்நிலையில் காபயநாயகன் என்ற தலைவன் அவர்களிடையே ஆட்சிக் கெதிராகக் கிளர்ந்தெழுந்த பொழுது, வழக்கத்துக்கு மாறான தேசீய ஆதரவு அவனுக்குக் கிட்டிற்று. அவன் படைவீரர் மட்டுமின்றிப் பொதுமக்களே பேரார்வத்துடன் போர் முயற்சியின் பின்னணியிலிருந்து வீரரை ஊக்கினர். இந்நிலையில் படைவீரர் படைவீரராக மட்டும் செயலாற்றவில்லை, மக்கட் போர் வீரராகக் கிளர்ந்தெழுந்தனர். நோய்களில் தொற்று நோய்களும், கொள்ளை நோய்களும் உண்டு. ஆனால் நற்பண்புகளிலும் இது போன்ற தொற்றுப் பண்புகளும் காட்டுத்தீ, கானாறு போன்ற உக்கிரப் பண்புகளும் உண்டு. தேசீய எழுச்சி இத்தகையது. அது நாட்டையும், நாட்டு மக்களையும் மட்டுமின்றி, சூழ்புல மக்களையும் சூழ்புலச் சிற்றரசர், தலைவர்களையும், வல்லரசர்களையும் எளிதில் ஆட்கொண்டது. பக்கத்திலுள்ள கொண்ட வீட்டில் புதிய ரெட்டி அரசு நிறுவிய முதல்வன் புரோலயவேமன் காபநாயகனின் நெருங்கிய உறவினன். அவன் காபயநாயகனுடன் இணைந்து தோளொடு தோள்நின்று பொருதான். கோருகொண்டா ஆண்ட ரெட்டிமன்னன் மும்முடி நாயகன் காபநாயகனின் தங்கை மகளை மணஞ்செய்திருந்தான். அவனுக்கும் அருகிலிருந்த இராசகொண் டாவின் வேளம மரபினரும், பித்தாபுரம் நாயக மரபினரும் எளிதில் ஒருங்கு திரண்டனர். இத்தகைய மக்கட் பேரெழுச்சி வாரங்கலை விடுவித்ததுடன் நின்றுவிட முடியாது. மக்கள் தம் முதல் வெற்றி கடந்து எதிரிமீது சீறிக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் காபயநாயகனும் கிளர்ச்சியின் மற்றத் தலைவர்களும் இந்த மக்கள் எழுச்சியை வெற்றரசியற் போராட்டம் ஆக்கிவிட விரும்பவில்லை. அரசியல் கடந்த தேசீய நோக்கம் அவர்கள் உள்ளத்தின் போக்கை அகலப்படுத்திற்று. தென்னகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வட திசையலையின் தடத்தைத் துடைத்தழிக்காவிட்டால், தென்னகத்தின் எந்தப்பகுதியும் - எந்தத் தனி மனிதனும் - இனி தனியே ஒதுங்கி வாழ முடியாது என்று அவர்கள் கண்டனர். எனவே சிறுசிறு போர்களில் தங்களிடம் உள்ள மக்கள் ஆற்றலைச் சிதறடித்து விடாமல், ஆழ்ந்தகன்ற திட்டமிட வேண்டுமென்று அவர்கள் கருதினர். தலைவர்கள் தேசீயத் திட்டம், விசயநகரப் பேரரசின் நிறுவனம் ஆகியவை பற்றி இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் ஒருபுறமும் சமய வாணர், இலக்கிய வாணர் குறிப்பீடுகள் மற்றொரு புறமும் கல்வெட்டுக்கள், ஆராய்ச்சிச் சான்றுகள் வேறொரு புறமும் நமக்குப் பல விவரங்கள் கூறுகின்றன. ஆனால் அவற்றிடையே நாம் மொத்த நிகழ்ச்சிகளையும் நிகழ்ச்சிப் போக்குகளையும் காண முடிகிறதே தவிர, நுணுக்க விவரங்களை அறியக்கூடவில்லை. ஆதாரங்கள் தலைவர்கள் பெயர்களையும் தொடர்பு களையும் கூடப் பலவாறாகக் கூறுகின்றன. இந்நிலையில் இன்றைய ஆராய்ச்சி யாளர்கள் இவ்வகைகளில் ஒருமித்த முடிவு கூறமுடியாதவர்களாய் பலவகை வேறுபட்ட கோட்பாடுகள் உடையவர்களாய் இருக்கின்றனர். காலத்தால் நிகழ்ச்சிகளுக்கு அணிமையுடையது இஸ்லாமிய வரலாற்றாசிரியர் பெரிஷ்டா கூற்று. காபய நாயகனை அவர் கிஷன்நாயக் என்றும் பல்லாளனைப் பல்லாள்தேவ் என்றும் குறிக்கிறார். அவர் குறிக்கும் ஆண்டும் மற்ற ஆதாரங்களுடன் ஒத்துவரவில்லை. ஆயினும் திட்டத்தின் பொதுப்போக்கை அவர் விரிவுரை எடுத்துக் காட்டுகிறது. ‘கிஷன்நாயக் (அதாவது காபய நாயகன்) கர்நாடகப் பேரரசனான பல்லாள்தேவிடம் சென்றான். “இஸ்லாமியர் தெலுங்கநாட்டிலும், கன்னட நாட்டிலும் புகுந்து ஆளமட்டும் விரும்பவில்லை. நம்மையெல்லாம் பூண்டோடு ஒழித்துவிடக் கங்கணம் கட்டியிருக்கிறார்கள். இதுபற்றி நாம் கூடிக் கலந்து மிக ஆழ்ந்த திட்டங்கள் இடுவது மிக இன்றியமையாதது” என்று கூறினான். ‘பல்லாள்தேவ் தன் பெருமக்கள், தலைமக்களைக் கூட்டி ஆலோசனை செய்தான். அதன் பயனாக, பல்லாள்தேவ் தன் பேரரசின் மற்றப் பகுதிகளைத் தற்காலிகமாகப் பின்னணியில் விட்டுவிட்டு இஸ்லாமியப் படைகள் தெற்கு நோக்கி வரும் வழியிலேயே தன் தலைநகரை அமைக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் காபநாயகன் வாரங்கலை விடுதலை செய்யப் போராடும் நேரத்திலேயே மாபார் (தமிழகம்), துவாரசமுத்திரம் (பல்லாளர் பேரரசு எல்லை), காம்பிலி ஆகிய எல்லாப் பரப்புகளிலிருந்தும் இஸ்லாமியர் துரத்தப்பட வேண்டியது இன்றியமையாதது என்பதும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ‘பல்லாள்தேவ் தன் மகன் பிஜன்ராய் பெயரால் இச்சமயம் நிறுவிய தலைநகரே விசயநகரம். ‘கிஷன்நாயக் (காபய நாயகன்) வாரங்கலை முழுதும் வென்று அதன் ஆட்சித் தலைவனான இமத் உல்முல்கைத் தௌலதாபாத் (தேவகிரி) நோக்கித் துரத்தியடித்தான். அதே சமயம் பல்லாள்தேவ் மாபார் அரசன் துணையுடன் மற்றெல்லாப் பகுதிகளிலிருந்தும் இஸ்லாமியப் படைகளின் தடங்களையே துடைத்தழித்தான். “இவ்வாறாக தூங்கிய தென்னகத்தின் வீறுணர்ச்சி எங்கும் தட்டியெழுப்பப்பட்டதனால், தேவகிரியும் குஜராத்தும் நீங்கலாகத் தெக்காணம் (தென்னகம்) முழுவதும் தில்லிப் பேரரசர் பிடியிலிருந்து விலகிப்போயிற்று’. தில்லிப் பேரரசால் அழிவுக் காளாக்கப்பட்ட பராக்கிரம பாண்டியனுடன் பாண்டிய ஆட்சி மரபு அழிந்துவிடவில்லை. தமிழகத்தின் வடபகுதியில் வீரபாண்டியன் 1340 வரை ஆண்டு வந்தானென்று பிற குறிப்புக்களால் அறிகிறோம். மாபார் அரசன் என்று பெரிஷ்டா கூறுவது இந்த வீரபாண்டியனையேயாகும். பல்லாளனின் தேசீயப் போராட்டத்தின் பயனாகவே அவன் 1327-க்குப்பின் அப்பேரரசன்கீழ் தமிழக ஆட்சி பெற்றிருக்க வேண்டும். மேலே நாம் குறிப்பிட்ட பல்லாளனின் தமிழக விடுதலைப் போரின் முதற்கட்டமாகவே இது அமைந்தது. இஸ்லாமிய வரலாற்றாசிரியர் பர்னி இவ்வரசியல் புரட்சி பற்றிச் சுருக்கக் குறிப்பே தருகிறார். மாகாணத் தலைவர் பெயர் இங்கே மாறுபடுகிறது. ஆனால் பெரிஷ்டா தரும் பெயரும் பட்டப் பெயராகத் தரப்படுகிறது. முடிபு எப்படியும் பெரிஷ்டாவின் வாசகமாகவே அமைந்துள்ளது. ‘வாரங்கலாண்ட மாலிக் மக்பூல் அல்லது இமத் உல்முல்க் என்பவன் தில்லிக்கே ஓடவேண்டியவனானான். காம்பிலி தில்லியின் கையிலிருந்து நழுவிற்று, அது ‘இந்து’க்கள் வசமாய் விட்டது. தேவகிரியும் குஜராத்தும் மட்டுமே தில்லியின் பிடியில் மீந்தன’. பேரரசு நிறுவனம் தென்னகத்தின் விடுதலை புதிய தேசீய இயக்கத்தின் முன்னீடான முதற்பகுதி, விசயநகரப் பேரரசு நிறுவனம் அதனைத் தொடர்ந்த நடுப்பகுதி இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு வித்தியாரண்ணியர் தலைமையில் ஒழுங்குபடுத்தப்பட்ட வைதிய இயக்கம் அதன் இறுதிப்பகுதி. இம் மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைபிரியாது ஒன்றியவை என்பதில் வரலாற்றாசிரியர் களிடையே கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால் அந்தத் தொடர்பின் தன்மைகள் பற்றிய ஆதாரங்கள் பலதிறப்பட்ட வேறுபாடுகளை உடையன. அவற்றின் மீது வரலாற்றாசிரியர் எழுப்பியுள்ள விளக்கக் கோட்பாடுகளும் பன்முகப்படுபவை யாகவே அமைகின்றன. விசயநகரப் பேரரசையும் விசயநகரத்தையும் ஒருங்கே நிறுவியவர்கள் சங்கமன் என்பவன் புதல்வர்களான ஐவர் - அரிகரன், புக்கன், கம்பணன், மாரப்பன், முத்தப்பன் என்ற உடன்பிறந்தார்களே. வித்தியாரணியர் உதவியுடனும் உதவியுரைகளுடனும் ஒத்துழைப்புடனும் நகரம் நிறுவப் பட்டது. கல்வெட்டு ஆதாரங்கள் சிறப்பாகச் சில சமயம் அரிகரனையும், சில சமயம் புக்கனையும், சில சமயம் வித்தியாரணியரையும் அதன் நிறுவுதல் முதல்வர்களாகக் குறிக்கின்றன. மூவருமே நிறுவுதலில் நேரடி முறையில் பங்குடையவர்கள் என்று கொள்ள இடமுண்டு. கோயிலும், சமயவாழ்வும், மக்கள் ஆதரவும் புதிய நகர நிறுவனத்திலும், பேரரசமைப்பிலும் முக்கிய இடம் பெறுவது இயல்பு. அந்நாளைய சமய உலகில் வித்தியாரணியர் படிநிலை பெரிது. அவரும் அவர் உடன் பிறந்தாரும் சமஸ்கிருத ஏடுகள், சமய உரை விளக்க நூல்கள் எழுதிப் புகழ் பெற்றவர்கள்; சிருங்கேரி மடத்துடனும் மடத்தின் தலைமை மரபுக்களுடனும் நெருங்கிய தொடர்புடையவர்கள். விசயநகர நிறுவன காலத்திலோ, அல்லது அதன் பின்னோ வித்தியாதரணியரும் அவர் நெருங்கிய உறவினரும் மரபினரும் மடத்து முதல்வர்களாகவே இருந்து புகழ் பெற்றவர்கள். இவ்வகையில் புதிய பேரரசு அமைப்பவர்கட்கு அவர் தாமே குருவாகவும், அமைச்சராகவும் அறிவுரையாளராகவும், மக்கள் ஆதரவும் தெய்வ ஆதரவும் ஒருங்கே தேடித் தருபவராகவும் அமைந்திருத்தல் வேண்டும். நிறுவனத்தில் அவர் முதன்மை கூறும் ஆதாரங்கள் இவற்றையே உளங்கொண்டிருந்தன. ஆனால் அவர் தம் ஞானத்தாலோ, பிறதொடர்பாலோ விசயநகரத்துக் கருகில் உள்ள ஒரு பெரும் புதையலை எடுத்து நிறுவுதல் முதல்வருக்குத் தந்துதவினார் என்றும் பல வரலாற்றாசிரியர், சிறப்பாக அறிஞர் சூரியநாராயணராவ், நம்புகின்றனர். அரிகரன் விசயநகரத்தின் முதல் பேரரசனென்ற முறையில் நகரைக் கட்டும் ஏற்பாட்டுக்குரிய முதல்வன் ஆவான். புக்கன் அவன் இளவலென்ற முறையில் பேரரசின் ஒரு பெரும் பகுதியில் மண்டலத் தலைவனாகவும், இளவரசன் என்ற முறையில் அரசன் பேராளாகவும், நகரமைப்பு வகையில் செயலாளனாகவும் இருந்து நகரமைப்பை நிறைவேற்றியவன். இம்முறையிலேயே மற்ற இரு வரையும் போல அவனும் நிறுவுதல் முதல்வனாகத் தனிச் சிறப்புப் படக் குறிக்கப்பட்டுள்ளான். விசயநகரத்தின் நிறுவனம் பற்றிய செய்திகள் இவை. ஆனால் விசயநகர நிறுவனத்துக்கும் அதற்குமுன் நிகழ்ந்த அரசியல் புரட் சிக்கும் உள்ள தொடர்பு இந்த அளவு தெளிவாக விளக்கம் பெறவில்லை. உடன்பிறந்தார் ஐவரும் எப்படித் திடுமென அரசியல் புரட்சியின் இறுதியில் போட்டியற்ற முதன்மையும் தலைமையும் பெற்றனர் என்பதை வரலாற்றாசிரியர் பலரும் பலவாறாகக் காரணகாரியத் தொடர்புபடுத்தி இணைக்கின்றனர். சமயச் சார்பான கதைகளை ஆதாரமாகக் கொண்டு அறிஞர் சீவெல் உடன்பிறந்தாரின் மூலமரபை வாரங்கலுக்குரிய தாக்குகின்றார். அவர்கள் வாரங்கல் அரசரின் கருவூலக் காவலராக வேலை பார்த்தவர்கள். வாரங்கல் வீழ்ச்சியின்பின் அவர்கள் காம்பிலி அல்லது ஆனகொண்டி அரசரிடம் அமைச்சராகவும் கருவூலக் காவலராகவும் அமர்ந்தனர். பகாவுதீனை ஆதரித்து மன்னன் வீழ்ச்சியுற்றபோது, அவர்கள் சிறைப்பட்டுத் தில்லிக்கே கொண்டு செல்லப்பட்டனர். இஸ்லாமியராக மாற ஒருப்பட்டதால் அவர்கள் உயிருக்கு ஊறு விளையவில்லை. காம்பிலி அல்லது ஆனகொண்டியை ஆளுவதற்காக அமர்த்தப்பட்ட தலைவன் மாலிக்காபூர் அதை நீடித்து அடக்கியாள முடியவில்லை. பேரரசன் படைகள் போதிய அளவில் இல்லை. பெரும் படையையும் அவனால் அனுப்ப இயல வில்லை. இந்நிலையில் அவன் சிறைப்பட்டிருந்த அமைச்சனையும் கருவூலக் காவலனையும் விடுதலை செய்து, பேரரசனுக்கு உண்மையாயிருப்பதாக உறுதி பெற்றபின், அவர்களையே புதிய மாகாணத் தலைவனாகவும், அமைச்சனாகவும் அமர்வித்து அனுப்பினான். நிறுவனம் பற்றிய மற்றொரு சாரார் கருத்து நிறுவுதல் முதல்வர்களை ஒய்சளப் பேரரசருடன் இணைக்கிறது. அரசனாக்கப்பட்ட அமைச்சன் பெயரை இஸ்லாமிய வரலாற்றாசிரியர் அரிகரன் என்று குறிக்கவில்லை. தேவராவ் என்றே குறித்தனர். இது ஒய்சளர் பட்டமென்பதையும், பல்லாளனே தன் மகன் விசயன் பெயரால் விசய நகரம் நிறுவினான் என்ற கூற்றையும் அவர்கள் இணைக்கின்றனர். உடன்பிறந்தார் ஒய்சளப் பேரரசின் மண்டலத் தலைவர் களாகவே வாழ்க்கை தொடங்கினர் என்றும், பேரரசருடன் அவர்கள் நெருங்கிய உறவினர் என்றும், பேரரசு சரியும்வரை வடதிசை மண்டலத் தலைவராகவே அவர்கள் வளர்ந்து சரிவின் பின் அதன் உரிமை மரபினராயினர் என்றும் கூறப்படுகிறது. வரலாற்றாசிரியர் சீகண்டையா இக்கருத்துக்கே பேராதர வளிக்கிறார். மேற்கூறியவற்றினின்றும் வேறுபட்ட இரு கூற்றுக்களும் எழுந்துள்ளன. வாரங்கல் அரசரிடம் உடன்பிறந்தார் ஐவர்களும் அலுவலர்களாயிருந்து அவ்வரசின் வீழ்ச்சியின்பின் ஆனை கொண்டி மலை களில் சிறு படையுடன் திரிந்தனர். பின் அவர்கள் அப்பகுதியில் தனியாட்சி கண்டு, வித்தியாரணியர் உதவியால் பேரரசு நிறுவினரெனறு சில வரலாற்றாசிரியர் கூறுகின்றனர். வேறு சிலர் கூற்றுப்படி, வாரங்கல் காம்பிலி ஆகியவற்றின் வீழ்ச்சிகளின் பின் ஐவரும் இஸ்லாமியராகி, வடதிசைப் பேரரசின் புதிய காம்பிலி ஆட்சியாளன்கீழ் ஊழியம் ஏற்றனர். அம்முறையில் அவர்கள் பல்லாளனை எதிர்க்கும்படி அனுப்பப்பட்டுப் போரில் தோல்வியுற்றதால், சிறு படையுடன் ஆனைகொண்டி மலைப் பகுதிகளில் திரிந்தனர். வித்தியாரணிய அடிகளை அவர்கள் கண்டது இச்சமயத்திலேயே. இந்துமதப் பேரரசு நிறுவும் உறுதியை அவர்களிடமிருந்து பெற்றபின், அவர் அவர்களை மதமாற்றுவித்து உதவி செய்வதாக வாக்களித்தார். விசயநகர நிறுவனம் பற்றி இக்கருத்து வேறுபாடுகள் யாவும் ஐவரது முன்னைய குடும்ப, அரசியல் தொடர்புகள் பற்றியவை மட்டுமே என்று காணலாம். அது நிறுவப்பட்ட ஆண்டு 1336 என்பதிலோ, நிறுவனத்துக்குப் பொறுப்பு ஏற்றவர்கள் வித்தியாரணிய அடிகளார், ஐவரில் மூத்தவர்களான முதலாம் அரிகரன், முதலாம் புக்கன் ஆகியோர் என்பதிலோ பெரும்பாலும் கருத்து வேற்றுமை கிடையாது. தவிர, நிகழ்ச்சிகளையும் சூழலையும் நோக்க, வேறுபாடுகள்கூட அவ்வளவு முனைப்பானவை அல்ல, ஒன்றுபடுத்திக் காண முடியாதவையுமல்ல. விசயநகர நிறுவன காலம் வரைக்கும் அது கழிந்தும்கூட, ஒய்சளப் பேரரசின் வாழ்வில் எத்தகைய திடீர் வீழ்ச்சியையோ, குறிப்பிடத்தக்க பெருஞ்சரிவையோ, தளர்வையோ நாம் காணவில்லை. பழய பேரரசுக்கும் புதிய பேரரசுக்கும் எத்தகைய எதிர்ப்பும் இல்லாமலே ஒன்று மற்றொன்றனுள் மெல்ல இழைவது காண்கிறோம். ஐவரும் தொடங்கினர் என்பதை மட்டுமன்றி, அவர்கள் அப்பேரரசரின் நெருங்கிய உறவினராகவே இருந்தனர் என்பதை இது வலியுறுத்திக் காட்டுகிறது. கடைசி ஒய்சளப் பேரரசன் மூன்றாம் பல்லாளன் 1342 வரை ஆண்டதுடன் தன் புதல்வனை நான்காம் பல்லாளனாக இளவரசுப் பட்டமும் கட்டியிருந்தான். ஆனால் ஆட்சியின் பெரும்பகுதியை அவன் பல்லப்பட தண்டநாயகன், அரிகரன் ஆகியவரிடமே விட்டுச் சென்றான். பல்லப்ப தண்டநாயகனுடன் அரிகரன் மணத் தொடர்பு கொண்டிருந்தான். மூன்றாம் பல்லாளன் இத்தகைய உறவையோ, அரிகரன் இயல்பாக வளர்வதையோ தடுத்து நிறுத்த விரும்பவில்லை. காலநிலை உணர்ந்து தென்னகத் தலைமை அதனைப் பாதுகாக்கும் வல்லமை படைத்தவரிடம் செல்வதே நலமென அவன் அமைந்திருந்தான் என்றே கருத வேண்டும். வித்தியாரணியரும் தேசீய இயக்கமும் பேரரசு பெருநகர் நிறுவனத்தில் வித்தியாரணிய அடிகளுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் உள்ள பங்கு மிகப் பெரியது. பேரரசுக் காலத்தில் மடம் அடைந்த வளர்ச்சியே இதைக் குறித்துணர்த்துகிறது. பேரரசர் பின் பேரரசராக மடத்துக்கு வாரி வழங்கிய காணிக்கைகள், நன்கொடைகள் மூலமே அது பேரரச எல்லைக்குள் ஒரு பேரரசு என்னும் அளவு வலிமையும் செல்வாக்கும் உடையதாய் விளங்கிற்று. தேசீய இயக்கத்தின் அரசியல் புரட்சித் தொடங்கிய நாளிலிருந்து பேரரசு வளர்ச்சிக் காலம்வரை மடத்தின் தலைவர்களாய் இருந்தவர்கள் வித்தியாதீர்த்தர், பாரதி கிருஷ்ணர், வித்தியாரணியர் ஆகியவர்கள். இவர்களில் இறுதியானவரே விசயநகர நிறுவனத்தில் பெரும் பங்கு கொண்டவர் ஆவர். ஆனால் தலைவராகுமுன்பும் துறவு ஏற்கு முன்பும் அவர் இயற்பெயர் யாது என்பது தெரிய வரவில்லை. இக்காரணத்தால் அவர் யார் என்பதுபற்றியும் வரலாற் றாசிரியர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. ஆனால் அவர் இயற்பெயர் யாதாயிருந்தாலும் அவர் சமஸ்கிருதம் மொழியில் எண்ணற்ற பெருநூல்கள் எழுதும் திறமும் அறிவும், அரசியல் செல்வாக்கும் மக்கட் புகழும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர் என்று அறிகிறோம். அவர் உடன்பிறந்தார்களாகிய மாதவரும் சாயணரும் இது போலவே பெரும் புலவரும் நூலாசிரியருமாயிருந்தனர். தவிர முதலாம் புக்கன், கம்பணன், இரண்டாம் சங்கமன், இரண்டாம் அரிகரன் ஆகிய பேரரசரின் அமைச்சராயிருந்த மாதவ மந்திரியும், இரண்டாம் சங்கமரின் அவைத் தோழராகவும், அமைச்சராகவும் இருந்த போகநாதரும் சிருங்கேரி மடத்தொடர்புடையவர்களே. இவர்களுள் மாதவ மந்திரியே புகழ்மிக்க நூலாசிரியரான வித்தியாரணியரின் உடன்பிறந்தாரான மாதவர் என்றுகூடச் சிலர் கருதுகின்றனர். வித்தியாரணியர் விசயநகரத்தை நிறுவியவர் மட்டுமல்ல. அதன் புகழ் அவர் புகழுடன் வளர்ந்தது. அவர் வித்தியாரணியர் என்ற புகழ்ப் பெயர் பெற்ற நாள் முதலே நகரும் பல கல்வெட்டுக்களில் அவர் பெயரால் வித்தியா நகரம் என்று ‘மாற்றுருவில் குறிக்கப்படுகிறது. அவர் பெயராலேயே நகரமும் அப்பெயரும் நிறுவப்பட்டதாகக் கூட அவர் நாட்களில் பலர் கருதியிருந்தனர் என்று தோற்றுகிறது. 1150லேயே நிறுவப்பட்டு, வித்யாரணியர் பெயரால் அது புதுப்பிக்கப்பட்டதென்பார் வரலாற்றாசிரியர் சூரியநாராயணராவ். வித்தியாரணியரின் மடத்துத் தலைமையாட்சியும் அவர் இயற்றிய பெருநூல்களுமே அவர் திறமைக்கும் பெருமைக்கும் சான்று பகர்வன. ஆனால் தேசீய இயக்கத்துக்கு அவர் தந்த உருவமே அதற்கு இவற்றைப் பார்க்கிலும் மிக மேம்பட்ட சான்று ஆகும். அந்நாளில் தெற்கே தமிழகத்தில் சைவ சமயம் ஒரு முழு வளர்ச்சி முற்றுப்பெற்று அடுத்த புது வளர்ச்சியில் அடியெடுத்து வைத்திருந்தது. சமயாசாரியர்கள் வழி சந்தானாசாரியர்கள் தோன்றிய காலமும் இன்றைய சைவ மடங்களில் பெரும் பாலானவை எழுந்த காலமும் அதுவே. வைணவமோ தமிழகத்தில் முழு வளர்ச்சி முற்றுப்பெற்றுத் தென்னகத்திலும் துணைக்கண்டத்திலும் தாவி வளரத்தொடங்கி யிருந்தது. தமிழக வைணவத்தின் ஒரு பெருங்கிளையாக மாத்துவரின் துவைத வைணவநெறியும், தமிழகச் சைவத்தின் ஒரு பெருங்கிளையாக வீரசைவமும் கன்னட நாட்டில் பெரும்புகழ் வளர்ச்சி பெற்று வந்தன. தனித் தனி வளர்ந்து ஒன்றுடனொன்று போட்டியிட்டு வந்த இந்த அமைப்புகளனைத்தையும் ஒரே கூட்டமைப்பில் கொண்டு வருவதென்பது எவருக்கும் என்றும் எளிதன்று. வித்தியாரணியரைப் போலக் கல்வியும் புகழும் மக்கட் செல்வாக்கும் அரசியல் திறமும் ஒருங்கே கொண்டிருந்த ஒருவராலன்றி வேறு எவராலும் இச்செயலைச் செய்து முடித்திருக்க முடியாது. தென்னக வரலாற்றில் அரசியல் தலைவர்களிடம் கூடக் காணுதற்கரிய அமைப்பாண்மைத் திறத்தையும் பண்பிணக்க நயத்தையும் நாம் வித்தியாரணியரிடம் காண்கிறோம். வடதிசை சூறையாட்சிக்கெதிராக அவர் மக்களுக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் சமயங்களுக்கும் பாதுகாப்பு வலுத்தேடினாரேயன்றி, இஸ்லாத்தையோ இஸ்லாமிய ஆட்சியையோகூட எதிர்க்க நாடவில்லை. இஸ்லாம் சமயத்தவருடன் மற்றச் சமயங்களைச் சார்ந்தவர்களும் போட்டி பூசல்களுக்கோ, அரசியல் தலையீடு, அரசியல் அட்டூழியங்களுக்கோ ஆளாகாமல், தத்தம் போக்கில் தங்கு தடையற்ற வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பையே அவர் நாடினார். தற்காலப் பாணியில் கூறுவதானால், அவர் நாடி நிறைவேற்றிய சமய சமுதாய அரசியலமைப்பே உலகின் முதல் முதல் சமய சமரசக் கூட்டமைப்பு என்று கூறலாம். இத்தகைய அமைப்புக்கு ஒரு பேரரசு உதவும் என்று அவர் கருதினாலும், இதை நிலையானதாக்க அவர் போர்களை வழி முறைகளாக நம்பி எதிர் பார்த்திருக்கவில்லை. போர்கள் உதவும் என்று கருதவுமில்லை. மக்களியக்கத்தையே இவ்வகையில் அவர் நம்பியிருந்தார். மக்களியக்கத்துக்கான திட்டமிட்டு அதன் மூலமே தேசீய வலுவை வளர்க்க அவர் எண்ணினார். தென்னகத்தின் மக்கள் சமுதாயத்தைச் சிறப்பாகவும், தென்னகத்தை அடுத்த அண்டை யயல் நிலச்சமுதாயத்தைப் பொதுவாகவும் இயற்கையே அமைத்த கோட்டையோ என்னும்படி அவ்வளவு உறுதி வாய்ந்ததாக ஆக்கியவர் இயற்கையின் திருமகனாராகிய இப்பெரியாரே! பின்னாட்களிலும் நம் நாட்களிலும் இச்சமுதாயத்தின் பண்புகளை, குறைகளைக் கூட அகற்றவோ, சீர்திருத்தவோ முயன்ற, முயன்று வரும் எல்லாத் தலைவர்களும், அறிஞர்களும், இயக்கங்களும் பாறையில் மோதும் அலைகளாக நொறுங்குவதன் காரணம் இதுவே. தேசீயத் திட்டமாக ஒரு பேரரசின் துணையுடன் அப்பேரறிஞர் அமைத்த அமைப்பை அதுபோல ஒரு தேசீய அரசின் துணைகொண்ட தேசீயப் பேரறிஞரே மாற்றியமைக்க முடியும் என்று கூறலாம். வித்தியாரணியர் அமைப்பாண்மைத் திறம் வித்தியாரணியர் வகுத்தமைத்த தேசீய அமைப்பில் அவர் அமைப்பாண்மைத் திறம், அவர் பண்பிணக்க நய ஆற்றல் ஆகியவற்றின் சுவடுகளை இன்றளவும் காணலாம். மக்கட் சமயங்கள், அறிவுத்துறைக் கோட்பாடுகள், புரோகித மரபு ஆகிய மூன்று தளங்களையும் அவர் ஒட்ட வைக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு தளத்திலும் பல்வேறு குழுக்களை ஒன்றுபடுத்த வேண்டியிருந்தது. இப்பெருஞ் செயலுக்கு மூலதனமாக அவருக்கு அமைந்தது அவர் மடத்தின் மரபே. அதை அமைத்த மூல முதல்வராகிய சங்கரர் வைதிக சமயம் என்ற சுமார்த்த சமயத்துடன், அறிவுத்துறைக் கோட்பாடுகளில் ஒன்றான தனி நிலை இரண்டன்மை (கேவல அத்துவைதம்) என்பதை இணைத்து மடத்தின் மரபாக்கியிருந்தார். ஆனால் இவற்றுள் அறிவுக் கோட்பாடுகளில் தம் தனி நிலை இரண்டன்மையுடன் நீலகண்ட சிவனாரின் தூய இரண்டன்மை (சுத்த அத்துவைதம்), இராமானுசரின் திரிபுற்ற இரண்டன்மை (விசிஷ்ட அத்துவைதம்), மாத்துவரின் இருமை (துவைதம்) ஆகியவற்றை இணைக்க வித்தியாரணியரின் வகைகாண வேண்டியவரானார். அதுபோலவே சமயங்களிடையே சுமார்த்தத்துடன் சைவம், வைணவம், வீர சைவம் ஆகிய ஆற்றல் வாய்ந்த மாபெரு மக்கட் சமயங்களை ஒன்றுபடுத்துவது அவருக்கு இன்றியமையாத பொறுப்பாயிற்று. இப்பெருஞ்செயலில் அவர் கண்ட வெற்றி இன்றளவும் அசைக்க முடியாத வெற்றியாக இயல்கின்றது. அவர் வெற்றியின் மறைதிறவு வைதிக இயக்கம், இந்து மதம் என்ற பெயர்களிலேயே உள்ளன. போட்டியிடும் மக்கட் சமயங்களில் ஒன்றல்ல வைதிக சமயம் அல்லது சுமார்த்தம். இஸ்லாம், கிறித்துவம் போல அது அச்சமயங்களுக்கெதிரான புறச்சமயமும் அல்ல. அது ஒரு மரபு. தேசீய இயக்கத்துக்கும் தேசீய சமயத் தொகுதிக்கும் அந்தப் பெயரையே கொடுத்து அதனை மையமும் தலைமையும் ஏற்க வைத்ததன் மூலம் அவர் அப்பெருஞ் சமயங்களுக்குரிய போட்டிகளின் கடுமை தவிர்த்து அவற்றுக்குத் தலைமை தாங்க முடிந்தது. அத்துடன் ஒவ்வோர் அறிவுத்துறைக் கோட்பாடும் இன்று போலவே அன்றும் ஒவ்வொரு சமயத்துடன் இணைவுற்றிருந்ததினால், சமயங்களின் கூட்டுத் தலைமையே அவருக்கு அறிவுலகின் கூட்டுத் தலைமையையும் அளித்தது. அவ்வச் சமயங்களின் தனிக் கொள்கைகளில் அவர் தலையிடாமலே தேசீயப் பொதுப்பண்பு வளர்த்தார். அறிவுத்துறைக் கோட்பாடுகளிலும் அதுபோலவே அவர் தம் கோட்பாட்டையோ, தம் மடத்தின் கோட்பாட்டையோ வற்புறுத்தாமல் ஒரு தேசீய நிலை வகுத்துக் கொண்டார். தம் சமயக் கோட்பாட்டையோ, தம் அறிவுத்துறைக் கோட்பாட்டையோ, ஒரு சிறிதும் விட்டுக் கொடுக்காமலே, மற்றச் சமயத் தலைவர்கள், அறிவுத்துறைக் கோட்பாட்டுத் தலைவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பைப் பெற்ற அவர் பண்பிணக்கத்திறம் அரசியல் தலைவர்களுக்கும் அரிய ஒன்றேயாகும் என்பதில் ஐயமில்லை. வித்தியாரணியரின் இயக்கத்தால் தென்னக சமுதாயத்திலும், தென்னகம் கடந்து துணைக்கண்டத்திலும் ஏற்பட்டுள்ள விசித்திர (தேசீய, இன) ஒற்றுமையைப் பல கீழ்திசை, மேல் திசை அறிஞர்கள் கண்டு வியப்புத் தெரிவித்துள்ளனர். ‘கிழக்கு, மேற்குத் திசைகளின் வருங்காலம்’ என்ற ஏட்டில் சர் பிரடரிக் ஒயிட் என்பவர் இதை இந்தியாவுக்கே பொதுவான ஒரு பண்பாகக் காண்கிறார். இந்தியாவின் புதிர்களுக்குள்ளே பெரும்புதிர் ஒன்று உண்டு. இந்தியாவின் மலைமடுவான பல்வகை வேறுபாடுகளுக்கு மேற்பட ஒரு மாபெரிய ஒற்றுமை பரவியுள்ளது. அது தெளிவாகக் கண்ணுக்குப் புலனாவதில்லை. இந்தியாவை ஒரே அரசியலுக்குள் கொண்டு வரவும் அது தவறியுள்ளது. ஆனால் அது மெய்யானது, வல்லமை வாய்ந்தது. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கூட அதன் சூழல் விளைவுகளுக்கு ஆளாய்விட்டதை ஒப்புக் கொள்ள வேண்டியதாயுள்ளது. இந்தியாவிற் பரவியுள்ள இப்பண்புகளுக்குப் பிறப்பிடம் தென்னகமே என்பதைக் காண்கிறார் வின்சென்ட் ஏ. ஸ்மித் என்ற புகழ் சான்ற கீழை வரலாற்றாசிரியர். ‘இந்து இந்தியாவின் உள்ளார்ந்த ஒற்றுமைக்குச் சான்று இராமானுசர் போன்ற தென்னக ஆசாரியர்கள் பணி இமய முதல் குமரிமுனை வரை தம் வயப்படுத்த முடிந்தது என்பதே. இன்றுகூடக் குருதி வேறுபாடு. பழக்க வழக்க வேறுபாடு, அரசியல் வேறுபாடு ஆகியவற்றின் சிதறடிக்கும் திறங்களிடையே அது செயலாற்றி வருகிறது’. இம்மாய ஒற்றுமையின் முழுமறை திறவு தென்னக, விசய நகர வரலாறுகளிலேயே உள்ளது. நிலம் தமிழின நிலம். அதில் வித்திட்டுச் சென்றவர் முப்பால் முதல்வர் வள்ளுவர். ஆனால் அரை குறையாகப் பண்பட்ட நிலத்தில் உழுதவர்கள் இராமானுசருள்ளிட்ட தென்னகப் பேரறிஞர். தேசீய அறிஞராகிய வித்தியாரணியரே அதில் மரமடித்து நீர்பாய்ச்சி விளைபுலங் காணப் பாடுபட்டவர். அவருக்குப்பின் முன்போல அது வயலிலும் வயல் கடந்தும் பசுமை பரப்பியுள்ளதானாலும், தேசிய அறிஞர் இன்னும் தோற்றா நிலையிலேயே, வயல் கடந்த புலத்தின் களையோடப் பெற்று முழுதும் மேனி காணாதிருக்கின்றது. வைதிக இயக்கம் தேசீய இயக்கத்தில் அரசியல் கிளர்ச்சி அவ்வியக்கத்துக்கு உருக்கொடுத்த எலும்பமைப்பு. வித்தியாரணியர் அதற்குத் துணையாக அமைத்த சமயங்கடந்த தேசீய அமைப்பு அவ் வெலும்புகளைப் பிணைத்து நிறுத்தும் தசை நார் மண்டலமாய் இயன்றது. ஆனால் வித்தியாரணியர் இதனுடன் அமைய வில்லை. எலும்புகளுக்கும் தசை மண்டலத்துக்கும் ஆதாரமான குருதியோட்டமாக, அவற்றைப் பிணைத்தியக்கும் நாடி நரம்பு மண்டலமாக அவர் தேசீய இயக்கத்தின் சமுதாய அமைப்புக்குத் திட்டமிட்டார். அவரது வைதிக இயக்கத்தின் ஒரு பெருங்கூறாக இது அமைந்தது. தென்னகத்தில் அவர் காலத்துக்குள்ளாகவே தென் மொழி மூன்று பெரிய மொழிகளாக, தமிழ், தெலுங்கு, கன்னடமென்ற மூன்றாக வளர்ந்திருந்தது. அவர் காலத்திலிருந்து மலையாளம், துளு, குடகு முதலியனவும் கிளைத்துள்ளன. வடதிசைச் சிந்து கங்கை வெளியிலோ இன்றுள்ள தாய்மொழிகளே தெளிவாக உருவாகவில்லை. உருவாகா எண்ணற்ற பன்மொழி மண்டலங் களாக மராத்தி, வங்கம், இந்தி, பஞ்சாபி ஆகிய நால்வேறு குழு மொழிகளின் நான்கு பரப்புக்களடங்கிய அகல் பரப்பாக அது இயங்கி வந்தது. மொழியிலுள்ள இந்த வேறுபாடு நாகரிகப்படி, பழக்க வழக்கங்கள், சமய சமுதாய மரபுகள், கல்வி ஆகிய எல்லாத் துறைகளிலும் இருந்து வந்தன. விசயநகரப் பேரரசை மையமாகக் கொண்டு இப்பரப்பில் மக்கள் வாழ்வில் ஒற்றுமை உண்டு பண்ணுவதே வைதிக இயக்கத்தின் பெரு வேலையாயிற்று. ‘ஒன்றதுபேரூர் வழி ஆறு அதற்குள என்றதுபோல இருமுச்சமயமும்’ என்று தமிழகத்தின் பண்டை மாமுனியாகிய திருமூலர் 5-ம் நூற்றாண்டிலேயே ஒரு தேசிய அரசியல் திட்டத்தையும், அதன்வழி ஒரு சமயக் கூட்டமைப்புத் திட்டத்தையும் வகுத்துக் காட்டியுள்ளார். வித்தியாரணியர் விசயநகரம் அல்லது சிருங்கேரியை அத்தகைய மையப் பேரூராக்கி அதனின்றும் வைதிக இயக்கத்தைப் பேரரசத் தலைவர்களின் ஒத்துழைப்புடன் நானிலமெங்கும் கால்வாங்கிப் பரப்புவித்தார். அவ்வியக்கத்தின் அடிப்படைக் கருத்துக்களுள் சில வாய்வழி மரபாகப் பழமொழிகள் போல இன்றும் தென்னகத்திலும் சூழ்புலங் களிலும் உலவுகின்றன. ‘பல சமயங்களும் ஒரு கடவுட் பெயரைப் பலவாகக் கூறலாம். ஆனால் கடவுள் ஒருவரே. எப்பெயரில் அழைத்தாலும் வரவேண்டியவர் அவரே’ என்பது வைதிக இயக்கத்தின் அடிப்படைக் குறிக்கோள். முக்கிய போட்டிச் சமயங்களான சைவ, வைணவங்கள் மீது வைத்து, நாட்டுப்புறப் பாணியில் அரியுஞ் சிவனும் ஒண்ணு - இதை அறியாதவன் வாயில் மண்ணு. என்ற பேச்சுப் பிரசாரம் எழுந்தது. இதன் வழிநின்று வட திசையில் கபீரும் நானக்கும் அணிமையில் காந்தியடிகளும் ‘ராம் -ரஹீம்’ ஒற்றுமை பாடினர். அரிகரன் புதல்வனான ஐயனார் வழிபாடு இக்கருத்துடன் புதுப்பிக்கப்பட்டிருத்தல் வேண்டுமென்னலாம். பேரரசின் முதல் அரசன் பெயரும், பிற அரசர் பெயரும் அரிகரன் என்றே அமைந்துள்ளது என்பது இதனைச் சுட்டிக் காட்டுகிறது. தென்னகத்திலும் சூழ்புலங்களிலும் பண்டிருந்தே பல மக்கள் தெய்வங்கள் சிறு தெய்வங்களாக வணங்கப்பட்டன. இவற்றுக்கு மக்களே- மக்களிடையே மக்களாக விளங்கிய மக்கட் புரோகிதரே - வழிபாடாற்றினர். வழிபாடு அவரவர் தாய் மொழிகளிலேயே இருந்தது. இன்று கூட இதன் தொடர் மரபைத் தென்னகமெங்கும் காணலாம். புத்தர் சமணர் காலங்களில் இத்தெய்வங்கள் பெருகின. தவிர, புத்த சமண சமய நாட்களில் புத்த பீடிகையும் அருகனும், பின்னாட்களில் புத்தரும், தீர்த்தங்கரரும்கூட வணங்கப்பட்டனர். மணிமேகலையிலும் சிந்தாமணியிலும் பிற தமிழ்ப் புத்த சமண ஏடுகளிலும் மந்திரம் போன்ற புத்த சமணப் புகழ்ப் பாடல்களைக் காணலாம். சைவ வைணவ பக்தி இயக்கங்கள் சிவன் திருமால் ஆகிய இருமுதல் தெய்வங்கட்கும் இருபெரும் பாசுர இலக்கியங்களே படைத்துருவாக்கியுள்ளன. தென்னகத்திலும் கீழ் திசையெங்கும் பரவிய முதல் பக்தியலை இச்சமயங்களுடன் தமிழ்ப் பாசுரங்களையும் தமிழ் மந்திரங்களையும் உலகெங்கும் பரப்பிற்று. அதன் தடங்கள் இன்றளவும் சிந்து கங்கை வெளியிலும், தென்கிழக்காசி யாவிலும் காணப்படுகின்றன. ஆனால் வித்தியாரணியர் நாடிய ஒற்றுமை தாய் மொழிகளின் இடத்தை மட்டுமன்றிக் கிட்டத்தட்ட உலக மொழியாய் விரைந்து வளர்ந்து வந்த தமிழின் இடத்தையும் புதிதாக சமஸ்கிருதத்துக்கு அளித்தது. முதலில் கோயில் மந்திரங்களை மட்டுமே பாதித்த இப்புது மாறுதல் நாளடைவில் திருமணம், மறைவு வினைமுறைகள், பிறந்தநாள் விழா முதலிய குடும்ப சமுதாய விழாக்களையும் உட்படுத்திற்று. திருமணங்களில் மொழிக்கு மொழி, இடத்துக்கு இடம், வகுப்புக்கு வகுப்பு இருந்த வேறுபாடுகளை வித்தியாரணியர் முற்றிலும் ஒழிக்கவில்லை; ஒழிக்க விரும்பவுமில்லை. பழமையின் ஆழ்தடத்திலேயே புதுமைப் பயிர் தழைக்கும் என்பதை அறிந்தவர் அவர். ஆகவே சமஸ்கிருதம் மந்திரங்களையும், வைதிகச் சடங்குகளையும் எல்லா வினைமுறைகளுடன் விரவி எங்கும் தனித் தன்மை, தனிபுரிமைகளிடையே, பொதுத்தன்மை பொது ஒற்றுமை நாட்டினார். பழமையான பழக்க வழக்கங்களுடன் இணைந்த புதிய சமஸ்கிருதமும் புதிய பொதுமைகளும் நாளடைவில் பழமைகளாகவே கருதப்பட்டு, பழமையின் மதிப்புப் பெற்றுவிட நேர்ந்துள்ளது. இன்று பொதுவாகக் கீழ்திசையில், சிறப்பாகத் தென்னகத்தில் மலிந்து பரவியுள்ள சாதி வேறுபாடுகளை நாம் விசயநகர காலத்துக்கு முந்திய இலக்கியங்களிலோ, கல்வெட்டுக் களிலோ, அயலார் குறிப்புக்களிலோ கூட காண முடியாது. சுமார்த்தர் அல்லது வைதிகர் மட்டும் மூன்று வருணம், நான்கு வருணம், நான்குக்கு மேற்பட்ட வருணங்களைக் கற்பனை செய்ததுண்டாயினும் இவைகூடப் பிற்கால வளர்ச்சியே. மக்கள் வாழ்க்கையில் இன்றளவும் அவற்றைப் பதிய வைத்துவிட முடியவில்லை. ஆனால் அவர்களால் வேறு ஒரு வகையான வருணத்தையும், சாதி வேறுபாட்டு மரபையும் வைதீக இயக்கத்தின் மூலமே பரப்ப முடிந்தது. இதில் வித்தியாரணியரின் நேரடித் தொடர்பு மிகுதியில்லையானாலும், அவரது வைதீக இயக்கத்தின் ஒரு பண்பே இதை வளர்த்ததென்பதில் ஐயமில்லை. புரோகித இனம் தனியாகவும் மக்கள் பரப்பு வேறாகவும் என்றுமே இயங்கியுள்ளன. ஆனால் மக்களிடையே அறிஞர் மரபு, பொது மக்கள் மரபு கல்வியளவில், நாகரிக அளவில் வேறுபட்டிருந்தனவானாலும், சமுதாயத்தில் இரு வேறு இனங்கள் ஆகவில்லை. ஆனால் வைதீக இயக்கம் மக்களை மூவேறு தளங்களாக, சமுதாய இனங்களாகப் பிரித்தது. புரோகித இனம் உச்ச உயர்தள இனமாக நீடித்தது. மக்களிடையே அரசியல் தொடர்புடையவர்கள், செல்வர்கள், பெருநிலக் கிழார்க ள் ஆகியோர் ஒருபுறமும், வைதிக இயக்கத்தை ஆதரித்து அதன் ஆதரவால் உயர்வு பெற்றவர்கள் மற்றொரு புறமும் பொதுமக்களிடையே செல்வாக்குமிக்க நடுத்தர வகுப்பினர் ஆயினர். இன்றளவும் தென்னகமெங்கும் நாட்டார்கள், ஊரவர் என்ற சிறப்புக்களுக்கு உரியவர்கள் இந்நடு இனத்தவர்களே. வைதீக இயக்கத்தை ஆதரிக்க முனையாதவர்கள் அல்லது முன்வராத வர்கள், அதன் ஆதரவு பெறுவதற்குரிய வாய்ப்பற்றவர்கள், அதன் எதிர்ப்புக்கு ஆளானவர்கள் ஆகியவர்கள் ஒருபுறமும், தொழிலாளிகள், பணி மக்கள், அடிமைகள், ஏழை எளியவர்கள் மற்றொரு புறமும், தாழ்த்தப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள் என்ற பெயர்களால் இன்றளவும் குறிக்கப்படும் பிற்பட்ட சமுதாய மக்கள் இனத்தவர் ஆயினர். தென்னகமெங்கும் சிறப்பாகவும் கீழ்திசையில் பொது வாகவும் ஆரியர், திராவிடர், ஆதிதிராவிடர் அல்லது ஆதி ஆந்திரர், ஆதிகேரளர், ஆதிகருநாடகர் என்ற மூவகைப் பெயர்களால் நிலவும் மூவின வேறுபாடு தோன்றிப் பரந்தவகை இதுவே. பல எழுத்தாளர்கள், வரலாற்றாசிரியர்கள் இவை விசயநகர காலத்திலிருந்து பிறந்தவை என்று அறியமாட்டாமல், இவற்றை மிக முற்பட்ட கால மரபுகளாகக் கருதி விடுகின்றனர். மேலை நாட்டினரைக் கூட இந்த மயக்கம் விட்டபாடில்லை. பெரும் பிரிவுகளாகிய இந்த இனப் பிரிவுகளுடன் வைதிக இயக்கம் சமுதாயத்தை விட்டு விடவில்லை. நடுத்தர வகுப்பிலும் இயல்பாகவே செல்வ உயர்குடியினர் வைதிக இயக்கத்தின் ஆதரவால் மேலும் உயர்வு பெற்றனர். இயக்கத்தைப் பயன்படுத்திப் புத்துயர்வு பெற்று வந்தவர்களுடன் அவர்கள் இவ்வுயர்வைப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. நடுத்தர வகுப்புக்குள்ளாகவே அசைக்க முடியாத உரிமைகளையுடைய ஒரு நடு இடை வகுப்பும், அவர்களுக்குப் போராடும் வலங்கை வகுப்பு, இடக்கை வகுப்பு ஆகிய இருபக்கக் கை வகுப்புகளும் எழுந்தன. இருகைகளின் கைகலப்புக்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலம்வரை கலகங்களும் குழப்பங்களும் உயர்முறை மன்ற வழக்குகளும் உண்டுபண்ணியிருந்தன. நடுத்தர வகுப்புப் பற்பல அறை கண்ணறைகள் போலச் சாதி கிளைச்சாதி உட்சாதிகளாக வகுத்தமைக்கப்பட்டதும் இக்காலத்திலேதான். ஒவ்வொரு தொழில் செய்தவர்களும் முதலில் தொழிற் கட்டுப்பாட்டுக்காகவும் சமய வினைகளுக் காகவும், நாளடைவில் மகமை அதாவது சமயத்துறை நிலைவரி களுக்காகவும் தனித்தனி கூட்டுற வமைப்புக்களாக வகுத்தமைக்கப் பெற்றனர். இப்புதிய ஒற்றுமை சமுதாய அடிப்படையில் தற்கட்டுப்பாட்டுடன் செய்யப்பட்டதனால், சமயத்துடன் சமயமாகச் சேர்ந்தது. ஒவ்வொரு சமய இயக்கத்தின் போதும், மாறுபாட்டின் போதும், அரசியல் மாறுபாட்டின் போதும் இச்சாதி உட்சாதி கிளைச்சாதி வகுப்புக்கள் எல்லையற்றுப் பல்கிப் பெருகி வந்தன - இன்னும் வருகின்றன. வடதிசை இஸ்லாமிய அலை போன்ற பண்படா அலைகளினின்று தேசீய வாழ்வைப் பாதுகாக்கவே வைதிக இயக்க நாட்களில் சாதி ஒற்றுமை பேணி வளர்க்கப்பட்டது. ஆனால் இதுவே சமுதாயத்தில் நிலையான வேற்றுமைகளையும் உண்டு பண்ணிவிட்டது. புயலில் கப்பல் உடைந்தாலும் அமிழாமலிருப்பதற்காகக் கப்பல்கள் கண்ணறை கண்ணறை களாகக் கட்டப்படுவதுண்டு. தேசீய இயக்கத்தின் சமுதாயக் கிளையாகிய வைதீக இயக்கம் தென்னகத் தேசீயச் சமுதாயத்தை இம்முறையிலேயே சாதிகளென்னும் கண்ணறைகளாக, சிறுசிறு தேசீயச் சமுதாய உயிரணுக்களாக வகுத்துத் தொகுத்தமைத்தது. மற்றும் இத்தேசியம் சாதிமுறைப் பாகுபாட்டில் புதிதாக வந்த எந்த இனத்தவர்களும் சமயத்தவர்களும் மொழியினரும் நாட்டவர்களும்கூடச் சாதிப் பெயர்பெற்ற சாதிகளருகே சாதிப் பெயர் பெறாமல் வேறு பெயர்கள் கொண்ட சாதிகளாக இடம் பெறவும், கூட்டுத் தேசீயத்தினுட்பட்ட சிறு தனித் தேசீயங்களாக வாழவும் வழி ஏற்பட்டது. இவ்வாறாக, அயற் பண்புகளைத் தடுப்பதற்கும், அவை புகுந்து வளர்ந்தபின் அவ்வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி நிறுத்து வதற்கும் அமைக்கப்பட்ட இந்தக் கண்ணறைக் கூட்டு ஒற்றுமையே வைதிக இயக்கம் உண்டுபண்ணிய பெருந்தேசீய ஒற்றுமைக்கு உடனடிப் பாதுகாப்பாகவும், நாளடைவில் முட்டுக்கட்டையாகவும் அமைந்துள்ளது. வைதிக இயக்கத் தலைவர்கள் திட்டமிட்டு வளர்த்துப் பரப்பிய இந்தச் சாதி வேறுபாட்டுடன் பேரரசு முதல்வர்கள் தம்மையறியாமல் தென்னக வாழ்வில் புகுத்த நேர்ந்த வடதிசைப் பண்ணை நிலமுறை (குநரனயடளைஅ) போன்ற வேறு சில பண்புகளும் சேர்ந்து அவ்வேறுபாடுகளுக்குக் கிட்டத்தட்ட நிலையான தேசீய உருவம் தந்து விட்டன. இவற்றுட் சில பல தேசீயப் பேரரசு நிறுவியவர்கள் கனவு காணாதவை, எதிர்பாராதவை. சில பேரரசின் வலுக்குறைவுக்கும் சரிவுக்கும், வேறு சில தென்னக, கீழ்திசை வாழ்வுகளின் அணிமைக் காலத்தளர்வுக்கும் வழியமைத்தன. ஆயினும் பேரரசின் தொடக்கக் காலங்களில் வைதிக இயக்கமும் அதன் வழி பரவி வளர்ந்த சாதி முறைமையும் அயற்புலப் புயற் பண்புகளின் சீர்குலைவிலிருந்து மக்களை மீட்டு, அரசியல் புயல்களால் எளிதில் பாதிக்கப்படாத அமைதியையும், பாதுகாப்பையும் அவர்களுக்கு அளித்தன என்பதில் ஐயமில்லை. வீரசைவம் சீவைணவம், இஸ்லாம் தேசீய இயக்கத்தின் சமுதாய, சமயக் கிளையாகவே வைதிக இயக்கம் வளம் பெற்றாலும், அரசியல் சார்பு அதில் முற்றிலும் இல்லாமலில்லை. அவ்வியக்கத்தின் தலைவரான வித்தியாரணிய அடிகளின் அகல் விரிவான பண்பிணக்க நயமும் சமய சமரசமுமே இதற்குச் சான்றுகள் ஆகும். அவர் இஸ்லாம் சமயத்தை எதிர்க்கக் கனவு கண்டது கிடையாது. இஸ்லாத்தின் பெயரால் வந்த வட திசைப் புயலாட்சியை எதிர்த்து, அதிலிருந்து இஸ்லாம் உட்பட்ட எல்லாச் சமயத்தினருக்கும் முழு நிறை சமய வாழ்வுரிமைக்குரிய விடுதலை பெறவே அவர் முனைந்தார். ஆனால் வித்தியாரணிய அடிகளின் பண்பிணக்க நயத்துக்குரிய மிகச் சீரிய சான்று அவர் இஸ்லாத்திடமோ, புத்த சமண சமயங்களிடமோ காட்டிய ஒப்புரவன்று. ஏனெனில் சுமார்த்த நெறியினர் அல்லது புரோகித இனத்தவர் இஸ்லாத்தின் வளர்ச்சியைவிடச் சைவம், வீரசைவம், சீவைணவம் ஆகியவற்றின் முனைத்த வளர்ச்சி கண்டே கலங்கி வந்தனர். ஒரே ‘இந்து’ சமயத்தினுள் இவ்வெல்லா இயக்கங்களுக்கும் இடங் கண்டதே வித்தியாரணியரின் பண்பிணக்கத் திறமைக்கும் அமைப்பாற் றலுக்கும் சிறந்த ஒரு சான்று ஆகும். முதன் முதலில் தென்னகத்திலும் கீழ்திசையிலும் புத்த சமண சமயங்களை அழித்து ஒழிப்பதற்காகவே புரோகித இனத்தவர் மக்கட் சமயங்களுக்குத் தம் ஆதரவும் அரசியல் ஆதரவும் நல்கி ஊக்கியிருந்தனர். ஆனால் புத்த சமண சமயங்கள் ஒடுக்கப்பட் டாலும் அவற்றின் அடிப்படை மனிதப் பண்புகள் இம்மக்கட் சமயங்களில் விடாது வளர்ந்தே வந்தன. ஏனெனில் இவையே அடிப்படைத் தமிழ்ப் பண்பு, திராவிடப் பண்புக் கூறுகள், தமிழில் சித்தர் பாடல்களும், மலையாளத்தில் குஞ்சன் நம்பியார் மக்கட் பாட்டுக்களும், தெலுங்கில் வேமனர், கன்னடத்தில் சருவஞ்ஞர், மராத்தியில் ஞானேசுவரர் ஆகியோரது பாடல்களும் இம்மரபின் வலிமையையும், இனப் பரப்பு முழுமையும் அளாவிய அகல் விரிவையும் சுட்டிக் காட்டுகின்றன. தென்னக வாழ்வின் இத்தேசீயச் சமயச் சூழல்களிடையே இஸ்லாம் பங்கு கொள்ளாமலில்லை. ஆனால் அதை ஒரே நிலைப் பட மதிப்பிட்டுக் கூறுவது எளிதன்று. ஏனெனில் தேசீய இயக்கத்தை அதுவும் தேசீய நிலையில் நின்றே, தேசீய சமயங்களில் ஒரு தேசீய சமயமாக அமைந்து நின்றே பாதித்தது. தவிர இத்தேசீய உறவு கொடுத்தல் உறவாகவோ, வாங்குதல் உறவாகவோ மட்டும் அமையாமல், கொடுக்கல் வாங்கல் உறவாகவும், கூடி உருவாகிக் கூட்டு உருவாக்கும் உறவாகவுமே அமைந்திருந்தன. இவ்வாறு நான்மடியான இவ்வுறவை நாம் மூன்று கூறுகளாகப் பகுத்துக் காணலாம். முதலாவதாக, சமயப் பண்பு என்ற முறையில் இஸ்லாம் அயல்புல வரவாக விளங்கினும், அயல் பண்பாக இயங்கவில்லை. அது தென்னகத் தேசீயச் சமயங்களிடையே மற்றொரு தேசீயச் சமய மரபாகவே இயங்கிற்று என்று கூறவேண்டும். ஏனெனில் அது மக்கள் அறியாமலே மக்கள் உள்ளத்தை உள்நின்று இயக்கிற்று. உலகின் ஆத்திக சமயங்களிடையே நிமிர்ந்து நின்ற ஆத்திக சமயமென்ற முறையிலும், மக்களிடையே சமத்துவத்தையும் உடன்பிறப்புரிமையையும் பாசத்தையும் வேறெச்சமயத்தையும் விட முனைப்பாக வலியுறுத்திய தலைசிறந்த நெறி என்ற வகையிலும், பெண்ணுரிமையைப் பெண்ணுலகம் கனவு காணாத அளவில் வலியுறுத்திய அமைப்பு என்ற நிலையிலும் அது தென்னகத் தேசீயத்துக்கு, அதன் கீழ்திசை விரிவுக்கு அயற்பண்பாய் அமையவில்லை. தென்னகத் தேசீயத்திலே அயற்பண்புகளுடன் விரவித் தன்னிலையழிந்து உறங்கிக் கிடந்த இந்த உள்ளார்ந்த மூன்று பண்புகளையும் இஸ்லாம் உள்ளூர நின்று தூண்டித் தட்டி எழுப்பிற்று. இஸ்லாத்தின் இத்துணைத் தூண்டுதலுடன் முதன் முதலில் (7-ஆம் நூற்றாண்டில்) தமிழகத்தின் சைவ இயக்கமும்; அதனையடுத்து விசயநகர காலத்தில், (14, 16-ஆம் நூற்றாண்டுகளில்) கன்னட நாட்டில் வீர சைவ இயக்கமும்; பின்னாட்களில் சிவாஜீ காலத்துக்குள் (16,18-ஆம் நூற்றாண்டுகளில்) மராத்தி, குஜராத்தி, வங்க நாடுகளடங்கிய சிந்து கங்கைப் பரப்புகளில் சீவைணவ இயக்கமும் சுமார்த்த வைதீக நெறியாளரின் மாயப்பசப்பு மீறிக் கிளர்ந்தெழுந்தன. புத்த சமண சமயங்களின் உச்ச வளர்ச்சிக் காலங்களில் கூட சுமார்த்த நெறி அடையாத அவல நிலையை விசய நகரத் தொடக்கக் காலத்தில் அது அடைந்திருந்தது. இஸ்லாம் இவ்வாறு சமயமென்ற முறையில் தென்னக, கீழ்திசை மக்கட் சமயங்களுக்கு வலுவூட்டிற்றென்றாலும், வட திசை இஸ்லாமிய அலையின் உருவில் அது எதிர்பாரா வகையில் வைதிக நெறியாளருக்கே ஆதரவாய் அமைந்தது. அரசியல் வாழ்வு மட்டுமன்றிச் சமய, சமுதாய, குடும்ப வாழ்வுகளையும் குலைத்த அந்தப் புயலால் மக்கள் அடைந்த அவல நிலையில் தற்காலிக ஆதரவு தந்த எந்தத் துரும்பையும் புணையாகக் கைப்பற்றச் சித்தமாயிருந்தனர். கி.பி. 1328-ன் பின் வாரங்கலிலிருந்து கிளர்ந்தெழுந்த அரசியல் எழுச்சியின் விளைவாக மக்கள் தேசீய எதிர்ப்பார்வத்தை வித்தியாரணியர் சரிவர உணர்ந்து அவ்வுணர்ச்சி மீதே தம் முழு அறிவாற்றலும் அமைப்பாற்றலும் பயன்படுத்தி உலகம் இதற்கு முன்னோ, பின்னோ வேறெங்கும் என்றும் கண்டிராத பெருந்தேசீய சமுதாய அமைப்பை எழுப்ப முனைந்தார். அதன் உணர்ச்சிப் பேராற்றலின் முன் வைணவர் சைவர் பேரளவிலும், வீரசைவர் ஓரளவிலும் தேசீயத்தின் உள்ளார்ந்த சுமார்த்த எதிர்ப்பை முனை மழுங்கவிட்டனர். தென்னகத்திலும் துணைக் கண்டத்திலும் நாம் இன்று வரை இஸ்லாமிய சமுதாயத்துக்குள்ளேயே இந்த இரு இஸ்லாமிய மரபுகளைக் காணலாம். மனித இனத்திலேயே எத்தகைய வேறுபாடும் காட்டாது மண்ணுலகை ஒரு குடும்பமாகக் கருதும் இஸ்லாத்தின் எல்லைக்குள்ளிருந்து கொண்டே வடதிசை இஸ்லாமிய அலையின் சமுதாய நிழல் மக்களிடையே மொழி வேறுபாடும், இன வேறுபாடும் காட்டி வருகிறது. வடதிசையில் ஏனை மக்களில் பெரும்பாலானவர் போலவே இஸ்லாமியரும் இதற்கு இரையாகி வருகின்றனர். ஆனால் தென்னகத்தில் இஸ்லாமியரும் சரி, ஏனைமக்களும் சரி - பண்பு வேறுபாடன்றி வேறுபிறப்பு வேறுபாடோ இன வேறுபாடோ கொண்டு முரணவில்லை. வடதிசை இஸ்லாமிய அலையும் ஏனை வடதிசையலையும் இப்பண்பில் அடிக்கடி உலைவு உண்டு பண்ணிவரினும், தென்னகத் தேசீயம் இவற்றை வென்று போலெழுந்தே வளர்ந்து வருகிறது என்னல் தகும். இஸ்லாத்தின் தாக்குதலில் மூன்றாவது கூறுமற்ற இரு கூறு களையும்விட முனைப்பாகத் தென்னகத் தேசீயத்தின் பண்பாற்றலைக் காட்டுவதாகும். வடதிசை இஸ்லாமிய அலை தென்திசை வந்த பின் அதுகூடத் தென்திசைத் தென்றலின் இன்னலத்துக்கு அரை குறையாகவேனும் ஆளாயிற்று. தென்கோடித் தமிழகத்தில் அது வடதிசை அலையை எதிர்த்ததாயிலும் வடதிசையும் நாணுறுமளவு வடதிசைக் கொள்ளைச் சூறையாட்டுக் கொடுங்கோன்மைப் பண்பை வளர்த்திருந்தது. ஆனால் வடகோடியில் தேசீய இயக்கத்தின் சாயல் படிப்படியாக, சிறிது சிறிதாக அதன் புயற்பண்பைத் தணிவித்தது. அப்பகுதிக்குரிய தென்னகத்தின் இஸ்லாமியத் தேசீயம் வடதிசைப் புயலாட்சியை எடுத்தெறிந்தது. 1336-இல் விசய நகரப் பேரரசு அமைந்திருந்தது போலவே, 11 ஆண்டுகள் செல்லு முன் அது குல்பர்கா நகரில் பகமளி என்ற பேரரசு நிறுவிற்று. மதுரை இஸ்லாமிய அரசினும் ஒரு சிறிதே குறைந்த கொலை கொள்ளை சரியாட்சியுடன் அது சில நாள் நிலவிப் பின் பீஜப்பூர், கோல் கொண்டா, அகமது நகர், பீகார், பீரார் என்ற ஐந்து அரசுகளாகப் பிரிவுற்றது. தம்முள்ளும் விசய நகரப் பேரரசுடன் போரிட்டு, அவை விசயநகரப் பேரரசை அழித்துத் தாமும் அழிந்தன. ஆயினும் அவற்றின் அழிபாட்டிலிருந்தே வடதிசைப் பேரரசை அழித்து நிஜாம் அரசு, மைசூர்ப் பேரரசு முதலியன பின் நாட்களில் எழ முடிந்தது. அத்துடன் அவற்றுள் ஒன்றாகிய மைசூர்ப் பேரரசு விசய நகரத்தின் தென்னகத் தேசீய மரபுக்கே பின்னுரிமை வகித்துப் புகழ் பிறங்கிற்று. பொங்கு தாமரை விசயநகரப் பேரரசு புயலில் மலர்ந்த மலர், செந்தாமரை மலர் மட்டுமன்று. அது புயலைத் தென்றலாக மாற்றி வந்துள்ள பொங்கு தாமரை மலர் என்று கூறவேண்டும். தென்னகம் அது வளர்வதற்குரிய வண்ணப் பொய்கையின் மணிப்படிக நீர்ப்பரப்பு. தேசீய இயக்கம் நீராழத்தினின்று கீண்டெழுந்து அதன் மீது படர்ந்துள்ள பைங்கொடி. இயக்கத் தனிப்பெரு முதல்வர் வித்தியாரணியர் மலரேந்தி நிற்கும் காம்பு. முதற் பேரரசர் அதற்கு உருவும் வனப்பும் தரும் புற இதழ்கள் போன்றவர்கள். தாமரை மற்ற மலர்களைப் போல ஒரு மலர்ச்சியுடன் நின்று விடுவதில்லை. புற இதழ் மலர்ச்சியின் பின் அகவிதழ்கள் வாயவிழ்கின்றன. அகவிதழின் பின் நடுவக இதழ்கள் நகைமுகம் காட்டுகின்றன. மையப்பொகுட்டு அதன் பின்னரே தன் பூந்துகள் மணம் பரப்பி, தேனவிழ்த்து, வண்டுகளை விருந்துக்கழைக்கிறது. மலர்ச்சியுள்ள மலர்ச்சியாக மலர்ச்சிகளை அடுக்கிக் கொண்டே செல்லும் இந்தப் பொங்கு தாமரை மலர்போல விசயநகரமும் பல மலர்ச்சிகள் கண்டது. புறவிதழ் மலர்ச்சியாகிய முதற்பேரரசரின் பின் வந்த பெருவீரத்தலைவர் அகவிதழ் மலர்ச்சியாகப் பேரரசு வளர்த்த மாபெருஞ் சிற்பிகளாய் விளங்கினர். பேரரசின் உச்ச உயர்வுக்குரிய காலத்துப் பேரரசர்களும் பெருந் தலைவர் களும் மலரின் மையப்பொகுட்டாக, அதில் பூந்துகளாக விளங்கினர். சரிவுக்காலப் பேரரசர், பெருவீரர் கூடப் பொகுட்டினடியிலுள்ள தேனறைகளையே நினைவூட்டுகின்றனர். பேரரசின் புகழே, தேசீயவளமே அதன் பொலிவு, பூந்துகள் மணம், தேன்சுவை ஆகும். அந்தப் பொலிவும், மணமும், சுவையும் நாடும் வண்டினமாகவே தென்னகத்தின் புதுமலர்ச்சித் தேசீயம் திகழ்கிறது. எந்த நாட்டிலும் இனத்திலும் தேசீயத்தின் ஆற்றல் அவ்வக் காலத்தில் வீரப்பேரரசர், பெருவீரர், பேரறிஞர், கலைஞர்களைத் தோற்றுவித்து மாவளம் காண்டல் இயல்பு, நாகரிகத்தில் மிகமிகப் பிற்பட்டவை என்று கருதப்படும் இனங்களும், நாகரிகமற்றவை என்று கருதப்படும் இனங்களிலேயே மிகமிகப் பிற்பட்ட இனங்களும் கூட இப்போது விதிக்கு விலக்கல்ல. ஆயினும் தனிப்பட்ட தேசீய மலர்ச்சிக்குரிய காலத்திலன்றி இவர்களை ஒருங்கே ஒரு காலத்திலோ, அடுத்தடுத்துத் தொடர் பாகவோ காண இயலாது. எடுத்துக்காட்டாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்னரே உச்ச உயர்படி நாகரிக நிலையை எட்டியிருந்த உலகின் முதன் முதல் தேசீயமான தமிழினத்தில் கூட, சங்ககாலத்தில் நாம் புலவர்களி டையேதான் பல ஒண்மணிகளை ஒருங்கே திரளாகவும் தொடர்பாகவும் காண்கிறோம். அரசியலில் பதிற்றுப்பத்தில் பாடப்பட்ட சேரப் பேரரசர்களைத் தவிர வேறு எங்கும் தொடர்ந்து பல வீரப் பேரரசரைக் காண்டல் அரிது. இது மட்டுமன்று. இச்சேரப் பேரரசரிடையிலும் சரி, இடைக்காலப் பாண்டிய, சோழப் பெரும் பேரரசர் காலத்திலும் சரி தொடர்பான வீரப்பேரரசர் களை நாம் காணும் அளவில்கூட விசயநகரத்துக்குரிய மலர்ச்சிமேல் மலர்ச்சியான தொடர்ந்த மலர்ச்சியை, அதன் பயனாக ஏற்பட்ட பொங்கு மாவளத்தை யாரும் காண முடியாது. விசயநகரம் தேசீயப் பேரரசு மட்டுமன்று, அது தேசீயப் பொங்குமாவளப் பேரரசு என்பதனை இது நமக்கு நினைவூட்டு கிறது. தென்னகப் புகழ் வாழ்வு ஒரு புகழ் சான்ற மலைக் கோட்டை. அதன் மணிக்கோபுர வாயிலில் விசயநகர வரலாறு கோட்டை வாயிற் கோபுரத்துக்குச் செல்லும் வண்ணப் படிக்கட்டுக்களாகவும், விசயநகரத்தின் முதற் பேரரசர் அக்கோபுர உச்சிக்குச் செல்லும் புகழேணியாகவும் விளங்கு கின்றனர். 3. புகழ் ஏணி நீறுமுகம் கண்டநில வேந்தர்க் கெல்லாம் மாறு முகமாய்த் தென்றல் வளங்கொண்டேகிப் பாறு முகமான வடபால் மலைத்தே ஏறு முகங் கொண்ட இள மன்னர் வாழி! புத்தார்வக் காலத்து வரலாற்றாசிரியர்கள் பலரும் ‘மறக்கப் பட்டுப் போன மாபேரரசைப்பற்றிப் பேச்செழுப்பிய நாட்களிலே வரலாற்றாசிரியர் சூரிய நாராயணராவ் தம் ஏட்டுக்கு முரண்சுவைத் திறம்பட ‘என்றும் மறக்கப்பட முடியாத பேரரசு’ (சூநஎநச-வடி-நெ கடிசபடிவவநn நுஅயீசைந) என்ற மகுடம் சூட்டியிருந்தார். இதற்கு அவர் காட்டிய காரணமும் புதுமைச்சுவையுடையது; குறிப்பிடத்தக்க மெய்ம்மை உட்கொண்டது. “வரலாறு திரும்பித் திரும்பி வருவது” என்று கூறப்படுகிறது. ஆனால் அது திரும்பித் திரும்பி வருகிறதா இல்லையா என்பது முக்கியமன்று. திரும்பி வர வேண்டுமென்று விரும்பத்தக்கதா, அவ்வாறு விரும்பத்தகாததா என்பதே கவனத்துக்குரியது. விசயநகர வரலாற்றின் தனிச் சிறப்பு இதுதான். அரசியல், சமயம், சமுதாயம், வாழ்க்கை ஒழுங்கு, கலை, இலக்கியம் ஆகிய எந்தக் கோணத்தில் பார்த்தாலும், விசயநகர வாழ்வு திரும்பி வர வேண்டுமென்று விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள். ஆசிரியரே இதற்கு மேலும் விளக்கம் தருகிறார். ‘கிரேக்க ரோமப் பேரரசுகள் திரும்பி வராதவை. காலத்தால் தொலைப்பட்டுவிட்ட நிலையில், விசயநகரத்தைப் போல அவற்றின் கோட்டை கொத்தளங்கள், அரண்மனைகள் கூட அவ்வளவாக நமக்கு ஓயாது அவற்றை நினைவூட்டுவனவாய் அமையவில்லை. ஆனால் திரும்பி வராவிட்டாலும் அவை மறக்கக் கூடியவை அல்ல. ஏனெனில் அவை திரும்பி வரவேண்டுமென்று நாம் விரும்புகிறோம். அவ்விருப்பத்தில் அவற்றின் நினைவைப் பேணுகிறோம். நம் அறிவை அந்நினைவு தூண்டுகிறது. கிரேக்க உரோம வாழ்வுக் கால அலைகள், இயல்கள், நம் கலைகள் இயல்களைத் தூண்டுகின்றன. மாண்ட பெரு வாழ்வு இவ்வாறு நம் வாழ்வை ஆண்டு வரும் வாழ்வாகிறது. விசய நகர வாழ்வுக்கும் இதே பெருமை உண்டு. அது என்றும் - எந்நாட்டவராலும் கூட - மறக்கப்பட முடியாதது. விசய நகரப் பேரரசர்க்குரிய பெருஞ்சிறப்பையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். இஸ்லாமியர், சமணர் போன்ற அயற்சமயத்தினரிடம் பேரரசர் நடந்து கொண்ட வகை, கொண்ட தொடர்பு, அவ்வகைகளில் அவர்கள் கொண்ட கோட்பாடு ஆகியவற்றை வட திசை அலையருகே மட்டுமன்று, தென் திசை இஸ்லாமியப் பேரரசின் அருகே வைத்துப் பார்த்தால் கூட, அவை புயலருகே தென்றலாக, முட்காட்டருகே கனிமலர்க் காவளமாகத்தான் தோற்றமளிக்க முடியும். வடதிசை முஸல்மான்களின் ஆட்சிக்கொள்கையே கொள்ளை யன்றி வேறன்று; ஆனால் தென்திசைத் தென்றற் பேரரசு வெற்றியைவிட வலிமையையும் அரசியல் வருமானத்தைவிடக் குடி நலனையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. புதிய பேரரசின் புகழில் பழந்தமிழகத் தேசியத்தின் மறு மலர்ச்சியை அறிஞர் சூரிய நாராயணராவ் கனவு கண்டதில்லை. மற்ற வரலாற்றாசிரியர்களைப் போல அதில் ஒய்சளப் பழமையின் மலர்ச்சியையோ, வாரங்கல் அரசியல் கிளர்ச்சியின் மரபையோ கூட அவர் உய்த்துணர்ந்ததில்லை. அதன் மலர்ச்சிக்குரிய வேர் முதலை அவர் ஆனைகொண்டி அரசின் பழமையூடாக இட்டுச் சென்று, பழங்கதை மரபுக்குரிய இராமாயணத்தில் கூறப்படும் கிட்கிந்தைவரை சென்றுள்ளார். ஆனை கொண்டி என்ற பெயர் மூலத்தையும் ஆனகொண்டி, அங்காடி, அங்கதன் நாடு என எளிதாக வருவித்து அத்தகை நாடே கிட்கிந்தையென்றும், இராமாயண காலக் கிட்கிந்தை மன்னர் நிதியையே வித்தியாரணியர் விசயநகர நிறுவனத்துக்கு உதவியாக அதன் முதல்வருக்கு வழங்கினாரென்றும் கனவார்வக் கற்பனை கண்டுள்ளனர். ஆனால் அவ்வார்வத்திலும் ஓர் உண்மை தெளிவாக வெளிப்படுகிறது. விசய நகரப் புகழ் இராமாயணப் பழங்கதைக்குக்கூட புத்துயிர் அளிப்பதென்பதில் ஐயமில்லை. கதைப் புகழுக்கு வரலாற்றுப் புகழ் உயிருருவம் கொடுப்பதே யாகும். பேரரசின் வேறு இருபண்புச் சிறப்புக்களை அறிஞர் சீகண்டையா சுட்டிக்காட்டியமைகிறார். ‘இந்துமதம் இன்றைய வடிவம் அடைந்தது அச்சமயத்தில்தான்... இக்காலத்தில் சமஸ்கிருத இலக்கியத்தோடு மக்கள் மொழி இலக்கியங் களுக்கும் தக்க ஆதரவு அளிக்கப்பட்டது. இந்த இரண்டு பண்புகளும் தமிழகத் தேசீய வாழ்வின் தொடர்ச்சியே ஆகும். அது மட்டுமன்று. தமிழகப் பண்புகள் இங்கே புது வடிவில் இட விரிவு பெற்றனவேயன்றிப் பண்புகள் என்ற முறையில் சிறிது தற்காலிகத் தளர்ச்சியே அடைந்துள்ளன. தமிழக மக்கள் சமயம் ‘இந்து மதம்’ ஆன போது அது அரசியலமைப்பாயிற்றே தவிர, மக்கட் பண்பில் வளர்ச்சி பெற்று விடவில்லை. முற்றிலும் மக்கள் இலக்கியமேயாக வளர்ந்த தமிழிலக்கியம் தென்னகப் பரப்பில் சமஸ்கிருதத்துடனிணையாத மக்கள் மொழி யிலக்கியமாகக் குறுகிற்று. ஆயினும் தென்னகத் தேசீயத்தின் புதுமலர்ச்சி நோக்கிய படிகளே இவையென்பதில் ஐயமில்லை. தமிழகத் தேசீயத்தின் வேறு சில பண்புகளிலும் விசயநகர காலத் தென்னகத் தேசீயத்தில் தளர்வு காண்கிறோம். ஆனால் அத்தளர்விலும் தொடர்ச்சியையும் புதுமலர்ச்சி நோக்கிய வளர்ச்சிப் படியையும் காண்டலரிதன்று. கடல் வாழ்வு, கடலாட்சி மரபு, ஆட்சி வளமரபு ஆகியவற்றில் இத்தளர்ச்சி தொடர்ச்சிகள் விசய நகர வரலாற்றுத் தொடக்கக் காலத்திலும், பின்னரும் தென்படுகின்றன. இவை புது மலர்ச்சிக்குப் படிப்பினைகளாக, வழிகாட்டிகளாக அமைவன. மாறு நெறிப்பட்டுழன்ற தென்னர் வாழ்வு தேறு நெறி காணும் வகை சீர்ப்படுத்தி வேறு நெறி விரவி நிலை மீறுறாமல் வீறுநெறி கண்ட வெற்றி நகரம் வாழ்க! இரு பேரரசின் போட்டிகள் விசயநகரப் பேரரசின் ஆட்சிமரபு 1336-இல் தொடங்கி 1642க் குச் சில ஆண்டுகள் பின்னர் வரை ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகள் நீடித்தது. பேரரசரின் குடி மரபை ஒட்டி ஆட்சி மரபை வரலாற்றாசிரியர் நான்கு கால் வழிகளாகப் பிரித்துக் காண்கின்றனர். அவை சங்கம மரபு, சாளுவ மரபு, துளுவ மரபு, அரவீட்டு மரபு என்பன. மரபுகளின் பெயர்களிலே நாம் விசய நகரத்தில் தென்னக மளாவிய தேசீயப் பரப்பைக் காண்டல் கூடும். முதல் மரபின் பெயர் கன்னட நாட்டையும், அடுத்த இரண்டும் தெலுங்கு மரபையும், மலையாளக்கரைக் கோடியிலுள்ள துளு நாட்டையும், கடைசி மரபு தமிழ் நாட்டையும் நினைவூட்டுகின்றன. ஏனெனில் சங்கமர் என்பது கன்னடநாட்டு வீரசைவக் குருமார் பெயர். அரவம் அல்லது அருவம் தமிழரைக் குறிக்கத் தெலுங்கரும், தொண்டை நாட்டைக் குறிக்கத் தமிழரும் வழங்கும் பெயர் ஆகும். சங்கம மரபு (1336-1485) கிட்டத்தட்ட 150 ஆண்டுகளும், சாளுவ மரபு (1485-1505) 20 ஆண்டுகளும், துளுவ மரபு (1509-1565) 56 ஆண்டுகளும், அரவீடு மரபு (1565-1642) முக்கால் நூற்றாண்டும் ஆண்டன. சங்கம மரபை நாம் பேரரசின் புகழுக்கு வழி வகுத்த புகழேணி என்று கூறலாமானால், குறுகிய காலமே ஆண்ட சாளுவ மரபினரைச் சோழப் பெரும் பேரரசையே நினைவூட்ட வல்ல ஆற்றல் சான்ற பெரு வல்லரசை ஆக்கிய சிற்பிகளென்றும், துளுவ மரபினரை அதன் புகழ்ச்சி கண்ட பெரும் பேரரசர் என்றும் கூறலாம். அரவீட்டு மரபினர் காலம் பேரரசின் பெருமை சரிவுற்று விட்ட காலம் ஆகும். வல்லரசு நிலை அந்நாளில் தமிழகத்துக்கே மீண்டும் கிட்டிற்று எனலாம் - தமிழகத்தில் ஆற்றல் சான்ற மதுரை நாயக அரசும், தஞ்சை, செஞ்சி நாயக அரசுகளும், கன்னட நாட்டில் இக்கேரி நாயக அரசும் வளம் பெற்ற ஊழி அது. ஆயினும் இம்மரபில்கூடப் பேரரசு மரபின் பெரு வீரம் பேரரசரி டமோ பெரு மக்களிடமோ சிறிதும் குறைந்துவிடவில்லை. வாளற்ற நிலையில் வாட்போரிட்டு மடியும் வாள் வீரராகவே அவர்களில் பலர் வரலாற்றில் காட்சி யளிக்கின்றனர். பேரரசின் முதற் பேரரசரும் பேரரசு நிறுவியவர்களுமான அரிகரன், புக்கன், கம்பணன், மாரப்பன், முத்தப்பன் ஆகியோர் தந்தை பெயர் சங்கமன் என்று தெரியவருகிறது. அவர்கள் நேர்குடி மரபும் ஆட்சியும் இதனாலேயே சங்கம் மரபு என்று வரலாற்றில் குறிக்கப்படுகிறது. சங்கம மரபுக் காலத்தில் பதின் மூவருக்கு மேற்பட்டவர்கள் பேரரசராகத் தவிசேறியாண்டதாகக் கல்வெட்டு ஏடு ஆதாரங்கள் குறிக்கின்றன. இவர்களில் பெயரளவிலேயே தவிசேறி ஆண்டு மாதக் கணக்கில் அல்லது நாட்கணக்கில் ஆண்டவர்களும் சிலர் உண்டு. ஆயினும் முதலாம் அரிகரன், முதலாம் புக்கன் ஆகிய உடன் பிறந்தார்களிலிருந்து எட்டுப் பெயர்களுக்கு மேற்பட்டவர்கள் உண்மையிலேயே பேரரசராக, பேரரசின் உச்சக்காலப் பெருமைக்கு அடிகோலிய புகழேணிப்படிகளாக விளங்கினர் என்று கூறுதல் தவறன்று. முதற் பேரரசன் முதலாம் அரிகரன் ஆட்சிக் காலத்திலேயே மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி வடதிசைப் புயலை எதிர்த்த தென்னக மையப் பேரரசான விசய நகருக்கருகே அதே புயலை எதிர்த்த தென்னக இஸ்லாமியப் பேரரசாக பகமனியும் புதிதாகக் கிளர்ந்தது. இரண்டும் தென்னகப் பேரரசுகளேயானாலும், வட திசைப் புயல் மரபில் வந்த பகமனிப் பேரரசு விசயநகர வாழ்வுக்கு ஒரு குட்டி வடதிசைப் புயலாக, அதன் தென்றல் நலத்தின் மீது அடிக்கடி உறுத்தும் முள்ளாகவே நூறாண்டு காலம் இயங்கிற்று. வடதிசைப் புயல் தென்னக எல்லையில் தற்காலிகமாக வேனும் வெற்றி கண்ட பகுதி தேவகிரியேயாகும். முகமது துக்ளக் ஆட்சியின் இறுதி நாட்களில் 1347-இல் எழுந்த ஒரு படைவீரர் கிளர்ச்சியின் பயனாக ஹசன்கங்கு பகமனி என்பவன் தனியாட்சி நிறுவி அலாவுதீன் என்ற பெயருடன் அரசனானான். பகமனிப் பேரரசு (1347-1527) கிட்டத்தட்ட நூறாண்டுகள் வலிமையுடன் தென்னகத்தின் வடதிசை வல்லரசாக விளங்கிற்று. முதல் ஆட்சியிலேயே அது தென்னகத்தின் வடமேற்குப் பகுதி முழுவதையும் மேல் கடல் வரைக் கைக்கொண்டு விட்டது. அடுத்த சில ஆட்களில் கீழ்திசையில் வாரங்கலையும் ஒரிசாவையும் கீழடக்கி அது கீழ்க்கடல் எல்லையையும் எட்டியிருந்தது. ஆனால் 1490-ஆம் ஆண்டுக்குள் விசய நகரமே பகமனியைத் தாண்டி மேம்படத் தொடங்கிற்று. விசய நகரத்தின் மூன்றாம் மரபின் ஆட்சி தொடங்கும் சமயத்தில் அப்பேரரசின் ஐம்பெரு மாகாணங்கள் தனித் தனி ஐந்து இஸ்லாமிய வடதிசை அரசுகள் ஆயின. மைய அரசுப் பகுதியாகிய பேராரை இமத்ஷாஹீ மரபினரும், பீடாரைப் பாரித்ஷாஹீ மரபினரும், அகமது நகரை நிஜாம் ஷாஹீ மரபினரும், தென்கோடியில் மேல்திசையில் பீஜம்பூரை ஆதில்ஷாஹீ மரபினரும், மேல்திசை கோல் கொண்டாவை குத்ப்ஷாஹீ மரபினரும் ஆளத்தொடங்கினர். ஐந்தாகப் பிரிவுற்ற பின்னரும் தென்னக இஸ்லாமிய அரசுகள் முற்றிலும் வலி குன்றிப்போய் விடவில்லை. தென்னகப் புயலின் பின் நான்காம் விசயநகர மரபின் ஆட்சிக்காலத்தில் வடக்கே அகமது நகரும் தெற்கே பீசப்பூரும் கோல்கொண்டாவும் விசயநகர் வீழ்ச்சியைப் பயன்படுத்தி வளர்ந்தன. ஆனால் தவளையை விழுங்கும் முன் பாம்பு கருடனுக்கு இரையானால் போல், புதிய வடதிசை முகலாயப் பேரரசனான ஒளரங்க சீப்பினால் அவர்களும், தென்னகத் தேசீய ஆற்றலால் அவ் வடதிசைப் பேரரசும் வீழ்ச்சியுற்றழிந்தன. வஞ்சிக்கும் வஞ்சனைக்கும் வன்செயற்கும் அஞ்சாத நெஞ்சுரமும் நேய அறிவு நிறை அன்பாற்றல், நஞ்சுக்கு நஞ்சாகும் நல்லமுதப் பொங்கல் வளம் எஞ்சாத தென்னகத்தின் ஈடில் அறம் வாழியவே! முதலாம் அரிகரன் முதலாம் அரிகரன் ஆட்சியும் (1336-1357), அவன் இளவல் முதலாம் புக்கன் ஆட்சியும் (1344-1379) கிட்டத்தட்ட ஒரே இணையாட்சியாகவே தொடர்ந்தன. வெற்றித் திருநகரின் நிறுவனத்திலும் பேரரசு நிறுவனத்திலும் அவன் சரிசமப் பங்கு கொண்டதுடன் ஆட்சித் தொடக்கத்திலிருந்தே தன் தமையன் கீழிருந்து கடப்பை, நெல்லூர் உள்ளடக்கிய கீழை மாகாணத்தின் மண்டல ஆட்சித் தலைவனாகவும் இருந்தான். அத்துடன் தன் ஆட்சிக் காலத்துக்குள்ளேயே அரிகரன் அவனுக்கு 1344இல் இளவரசு உரிமை அளித்திருந்தான். அவன் ஆட்சி குறிக்கும் ஆதாரங்கள் இதனால் அவ்வாண்டிலிருந்தே தொடங்கின. பேரரசின் போர்களை முன்னின்று நடத்திப் பேரரசின் எல்லையை விரிவுபடுத்துவதில் பெரும் பங்கு கொண்டவன் அவனே. அரிகரன் ஆட்சி தொடக்கத்தில் பேரரசு காம்பிலி அரசன் ஆண்ட பகுதியையும், ஒய்சளப் பேரரசின் வட எல்லையையுமே உட்கொண்டிருந்தது. இவற்றை அவன் ஒய்சளப் பேரரசின் ஆட்சியின் ஒரு மாகாணமாகவே ஆளத்தொடங்கியிருந்தான் என்று எண்ண இடமுண்டு. ஏனெனில் தனியரசனுக்குரிய சிறப்பு அவனுக்குத் தொடக்கத்திலிருந்தே கல்வெட்டாதாரங்களில் அளிக்கப்பட்டிருந்த போதிலும், அரசன் என்ற பெயர் உடனடியாக வழங்கப் பெறாமல் மகாமண்டலேசுவரன் என்ற பட்டமே கையாளப்பட்டிருந்தது. ஆயினும் அவன் ஆட்சிக் காலத்துக்குள்ளேயே அவன் தனியரசனாக மட்டுமல்ல, தனிப் பேரரசனாகவும் வளர்ந்து விட்டான். 1336-க்கும் 1343-க்கும் இடைப்பட்ட ஏழாண்டுகளுக்குள் ஒய்சளப் பேரரசின் வட எல்லையில் மட்டுமன்றி அப்பேரரசெல்லை முழுவதிலுமே படிப்படியாக அவன் ஆட்சி பரவுவது காண்கிறோம். ஏனெனில் இவ்வாண்டுகளுக்கிடையே இரு ஆட்சிகளுக்குமுரிய கல்வெட்டுக்கள் விரவியும், வர வர ஒய்சளக் கல்வெட்டுக்கள் அருகியும், விசயநகரக் கலவெட்டுக்கள் பெருகியும் வந்தன. போரில்லாமலே ஒரு பேரரசு சரிவுற்றது. அதன் மக்கள் அதனுடன் தொடர்பு கொண்ட வேறொரு தலைமை நோக்கி மெல்ல தொடர்பு கொண்ட வேறொரு தலைமை நோக்கி மெல்ல இழைந்து பேரரசுத் தலைமை மாற்றும் நிலையையே இது காட்டுகின்றது. 1340-இல் பழைய சாளுக்கியரின் தலைநகரான வாதாபி விசயநகரின் கைப்பட்டது. ஹோனாவரில் ஆண்ட சுல்தான் ஜலாலுதீன், கடற்படை வலிமையுடைய வனாயிருந்தால் மலையாளக்கரை முழுவதிலும் திறையும் மேலுரிமையும் கொண்டிருந்தான். 1242-லேயே அவன் விசயநகர மேலுரிமைக்கு ஆட்பட்டு விட்டதாக அந்நாளைய இஸ்லாமிய வரலாற்றாசிரியர் இபின் பதூதா குறித்துள்ளார். துளுவநாட்டு வெற்றி உடன்பிறந்தார் ஐவரும் மாரப்பனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 1345-க்கு முன்பு ஒய்சளப் பேரரசன் மேலாட்சியின் கீழிருந்த அப்பகுதி விசய நகர மேலுரிமை ஏற்றது. வென்ற அப்பகுதி மீது மாரப்பனே மண்டல ஆட்சி செலுத்தி வந்தான். அரிகரன் ஆட்சியிறுதிக்குள் காம்பிலி அரசன் ஆண்ட பரப்புடன் ஒய்சளப் பேரரசின் பரப்பு, கொண்கானம் ஆகியவையும் தேவகிரி, வாரங்கல் ஆகிய வல்லரசுகளின் பரப்பில் ஒரு பகுதியும் விசயநகர ஆட்சி யெல்லைக்குட்பட்டு விட்டன. ‘துவார சமுத்திரத்தையும் அது போன்ற வேறு நூறு நகரங்களையும் பகைவரிடமிருந்து விடுவித்து (படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என வள்ளுவன் வகுத்துக் கூறிய ஆறுடன் அரசனையும் சேர்த்து) ஏழு அங்கங்களும் நிரம்பிய அரசாட்சியினை ஆண்டான்’ என்றும், ‘ஒய்சளர் ஆண்ட நிலவலய மேகலையைக் கைக்கொண்டு அதைத் தன் ஆட்சிக்குரிய மேகலை ஆக்கிக்கொண்டான்’ என்றும் அரிகரன் வெற்றிகளை அந்நாளைய ஆதாரங்கள் பரவுகின்றன. ‘தம்பியுடையான் படைக்கஞ்சான்’ என்பது பழமொழி. அரிகரன் வகையில் இது குறைவற்ற நிறை மெய்ம்மையாயிற்று. வேறெந்த அரசர் பேரரசரையும் விட அவன் பேரளவில் உடன் பிறந்த செல்வம் மிக்குடையவனாகத் திகழ்ந்தான். கடப்பை கர்நூல் பகுதிகளைப் புக்கனும், அவன் இளவரசனானபின் கம்பணனும் ஆண்டு, அப்பகுதிகளின் வெற்றிகட்கும் ஆட்சி வலிமைக்குள் தாமே பொறுப்பேற்றனர். கடம்பரை வெல்லும் பொறுப்பும் வென்ற பகுதிகளை ஆளும் பொறுப்பும் மாரப்பனிடம் விடப்பட்டி ருந்தது. அவன் சந்திர குத்தியிலிருந்து அப்பகுதிகளை வெற்றிகரமாக ஆண்டான். தமிழகத் தேசீயத்தின் தூவானங்கள் 1346-க்குள் அரிகரன் ஆட்சிக்குட்பட்ட விசயநகரப் பேரரசு கடலிலிருந்து கடல்வரை தென்னகத்தின் அகலத்தைத் தாவி அளக்கும் ஒரு முழக்கோல்போல விரிவடைந்து விட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன் இதே போன்ற வளர்ச்சிப்படியைச் சேரப் பேரரசு அடைந்திருந்தது. அந்நாளைய சேரப் பேரரசன் பல்யானை செல்கெழுகுட்டுவன் தன் ஆட்சிமூலம் தென்னகத்துக்கு ஓர் அரைப்பட்டியிட்ட இந்த நிகழ்ச்சியைக் குறித்துக் காட்ட இரு கடல் நீர் முழுக்கு விழா ஒன்றை அவன் மலையாகிய அயிரை மலையில் நடந்தினா னென்று அறிகிறோம். விசயநகரப் பேரரசன் தன் இருகடல் அளாவிய வெற்றியையும் கிட்டத்தட்ட அதே அயிரை மலையடுத்த சிருங்கேரியிலேயே, அதே மரபின் வழி நின்று இருகடல் முழுக்கு விழாவாக நடத்தினானென்று அம்மடத் திலுள்ள செப்புப் பட்டயம் நமக்குக் கூறுகிறது. சேரப் பேரரசன் விழாவின் வினைமுறையைப் பதிற்றுப்பத்து நமக்கு அருஞ்சுவைபட எடுத்துக் காட்டுகிறது. அவ்வினை முறையே சேர அரசன் பேராற்றலையும் அளந்து காட்டுவதாக இருந்தது. அயிரை மலையிலிருந்து இருதிசையிலும் இரு கடல்கள் வரை யானைத் துதிக்கையெட்டும் தூரத்துக்குள் அதாவது பத்தடிக் கொன்றாக இருபுறமும் இரண்டிரண்டு வரிசை யானைகள் கையில் குடங்களுடன் நிறுத்தப்பட்டிருந்தன. இரு கடற்கோடிகளிலும் நின்ற யானைகள் ஒவ்வொரு குடமாக நிறைத்து அயிரைமலை நோக்கி நின்ற குடங்களை அஞ்சல் செய்தன. மறு வரிசையில் அதே சமயம் வெறுங்குடங்கள் கடலை நோக்கி விரைந்தன. இவ்வருஞ் செயல் சேரனின் ஆட்சிப் பரப்புக்குரிய பெருமையுடன் அவன் யானை வளத்தையும் அந்நாளைய மக்கட்கும் நமக்கும் குறித்துக் காட்டுவன. இதே விழாவை விசயநகரப் பேரரசன் எவ்வினை முறைகளுடன் ஆற்றினானென்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் அவ்விழாவில் அவன் உடன் பிறந்தார்களான புக்கன், கம்பணன், மாரப்பன், முத்தப்பன் ஆகியவர்களும், அவன் மருமகனான பல்லப்ப தண்ட நாயகனும், அவன் புதல்வனான சோமண்ண உடையாரும் வந்து கலந்து கொண்டிருந்தனர் என்று அறிகிறோம். அத்துடன் மடத்தின் தலைவரான பாரதி தீர்த்தருக்கும் அவர் சீட கோடிகளுக்கும் நாற்பது பிராமணர் களுக்கும் விலையேறிய காணிக்கை, கையுறைகளுடன் முற்றூட்டாக எண்பது ஊர்களும் வழங்கப்பட்டன. வாரங்கலில் இரண்டாம் பிரதாபருத்திரனுக்குப் பின் ஆண்ட அரசன் அவன் புதல்வனான கிருஷ்ணா நாயகன் ஆவன். இருகடல் வாழ்வுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதாவது 1344-இல் வடதிசைப் புயலலையின் புதுவீச்சுக்கு ஆட்பட்டு அவன் அரசிழந்து அரிகரனிடம் வந்து சரண் புகுந்தான். பேரரசு நிறுவன காலத்தில் திரட்டியது போல, தென்னகத் தலைவர்களனை வரையும் அரிகரன் இப்போதும் ஒரு தேசீயக் குழுவாகத் திரட்டினான். அதன் தலைமையேற்று அவன் வாரங்கலைக் கிருஷ்ணா நாயகனுக்கு மீட்டளித்ததுடனல்லாமல், வடதிசைப் புயலை விந்திய மலைக்கப்பால் வெருண்டோடும்படி துரத்தி யடித்தான். ஆனால் இந்த வெற்றி கழித்து மூன்று ஆண்டு களுக்குள், இருகடல் விழா நிகழ்ந்த மறு ஆண்டுகளுக்குள்ளேயே, தென்னகத்தின் வடகோடியில் மீண்டும் புயல் சுழன்றடித்தது. இத்தடவை வடதிசை இஸ்லாமியப்புயலை ஒரு தென்னக இஸ்லாமியப் புரட்சியே தடுத்து நிறுத்திப் பகமனிப் பேரரசை நிறுவிற்று. நிறுவிய முதல்வன் ஹசன்கங்கு என்பவன். அலாவுதீன் ஷா என்ற பெயருடன் முதற்பகமனி அரசனானான். அரிகரனைப் போலவே அலாவுதீனும் தன் ஆட்சிக் காலத் துக்குள்ளேயே புதிய தனியரசைப் பேரரசாக வளர்த்தான். தவி சேறிய ஆண்டிலேயே அவன் சாகர் மாகாணத்தில் எழுந்த ஒரு கிளர்ச்சியை அடக்கி வாரங்கல், விசயநகரம் ஆகியவற்றின் மீது பாய்ந்தான். வாரங்கலைப் பணியவைத்து அவன் கௌலாக் கோட்டையைத் தனதாக்கினான். அவன் படைத்தலைவன் முபாரக்கான் விசயநகர எல்லைப்புறத்தைச் சூறையாடிய துடன் இரேய்ச் சூர்க்கோட்டையின் தலைவனைப் பணியவைத்து 1349-இல் அதைக் கைப்பற்றினான். இப்போரில் இருதரப்புகளும் தம் பக்கமே இறுதி வெற்றி கண்டதென்று கூறுகின்றன. ஆனால் பகமனிப் படைத்தலைவன் விசயநகர அகநாட்டுப் பகுதிக்கு முன்னேற முடியாமல் திரும்பவேண்டிய நிலையேற்பட்டதும், விசயநகரம் இரேய்ச்சூர் இழந்ததும் போரின் மொத்தப் போக்கைச் சரியாகச் சுட்டிக் காட்டுகின்றன. பகமனியின் முதல் வெற்றியை விசயநகரம் முற்றிலும் அழித்து விட முடியவில்லை. ஆனால் அதன் முழுப் பயனையும் படைத் தலைவன் அடைய முடியாமல் இரண்டாம் விசயநகர வெற்றி நின்று தடுத்தது. சோழப்பெரும் பேரரசருக்கும் மேலைச் சாளுக்கியருக்கு மிடையே அடிக்கடி எல்லைப் பூசல்களுக்குக் காரணமாய் அவர்களிடையே அடிக்கடி கைமாறி வந்த பகுதி இடைதுறை நாடு என்று பண்டு அழைக்கப்பட்ட இரேய்ச்சூர்ப் பகுதியே. விசயநகர பகமனிப் பேரரசுகளுக்குக்கிடையிலும் இதுவே எல்லைப் பூசல்களை விளைவித்து அடிக்கடி கைமாறி வந்ததென்பது குறிப்பிடத் தக்கது. மைசூர்ப் பேரரசர்கூட வடதிசை அரசு பேரரசுகளுடன் இந்தப் பகுதியிலேயே அடிக்கடி போராட வேண்டியிருந்தது. தென்னகத்தின் இயல்பான தேசீய மரபின் வலிமைமிக்க எல்லைக் கோட்டு வரையறைகளை இது நன்கு விளக்குகிறது. புயலலையின் திவலைகள் இன்று இரேய்ச்சூர் என்று வழங்கும் சொல்கூட, இடைதுறை என்ற பழய தமிழ்ச்சொல்லின் தெலுங்கு மொழித் திரிபேயாகும். இச்சொல்லும் வாரங்கல் என்று திரிந்துள்ள ஓரங்கல் என்ற பழந் தமிழ்ச் சொல்லும் மூன்றாக, ஐந்தாகப் படிப்படியாகப் பிரிவுற்றுத் திரிந்த முன்னை முத்தமிழ்ப் பரப்புக்கும் மரபுத் தொடர்புக்கும் சான்றுகள் ஆகும். இரேய்ச்சூர் வெற்றியையடுத்து அலாவுதீன் மேல்திசை நோக்கிப் பரவி, 1354-இல் கோவா, தபோல் முதலிய மேல் கரைத் துறைமுகங்களையும் பின் கீழ்திசை திரும்பிப் போங்கிர்த் துறை முகத்தையும் வென்று கைக்கொண்டான். இவ்வாறு அவன் ஆட்சியிறுதிக்குள் மேல்கடற்கரையில் போவா முதல் தபோல் வரையுள்ள பகுதி முழுதும் அளாவிக் கிழக்கே போங்கிர் வரையும் வடக்கிலும் கிழக்கிலும் பெரு கங்கா, கிருஷ்ணா ஆறுகள் வரையுள்ள பகுதியும் பகமனிப் பேரரசின் பரப்பாயின. தொடக்கக்கால விசயநகரப் பேரரசர் மேல் கடற்கரைத் துறைமுகங்களின் முக்கியத்துவத்தைப் படிப்படியாகவே உணரத் தொடங்கினர். தென்னகத்தில் வல்லரசராக விளங்குவதற்கு எப்போதும் அராபியாவிலிருந்து இறக்குமதியாகும் புதுப் புதுக் குதிரைகள் மூலம் குதிரைப்படைகளை வலுப்படுத்திக் கொண்டி ருத்தல் அந்நாளில் இன்றியமையாததாயிருந்தது. இது மிக மிகப் பழமை வாய்ந்த மரபு என்பதைப் புரவிகளின் சங்க இலக்கிய வருணனைகளும், மாணிக்கவாசகர் வரலாறும், பிற்காலப் பாண்டியர் சூழல்களும் நமக்கு நினைவூட்டுகின்றன. இது தவிர வெற்றித் திருநகர் உலக வாணிக நகரமாகவே வளர்ச்சி யடைந்ததால், மேல் கடற்கரைத் துறைமுகங்களின் தொடர்பு அதன் உயிர் மூச்சா யிருந்தது. பின்னாளைய விசயநகரப் பேரரசர் இவற்றை உணர்ந்து செயலாற்றியது காண்கிறோம். ஆனான் முன்னாளிலும் சரி, பின்னாளிலும் சரி - விசயநகரப் பேரரசு என்றுமே கடல் வாழ்வு, கடற்படைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாகத் தெரிய வில்லை. விசயநகர காலத்திலேயே தமிழகத்தில் பழய கடல் மரபு விடாமல் சிற்றரசராகிய பாண்டியக் கடற்படை வலிமை குன்றாதவராகவே இருந்தனர். மேல் கரையிலும் மேலே கூறப்பட்ட சுல்தான் ஜலாலுதீன், சாமூதிரி போன்ற சிற்றரசர்களிடமும் பிற தலைவர்களிடமும் 18, 19-ஆம் நூற்றாண்டுகள்வரை மிகச் சிறந்த கடற்படைகள் இருந்தே வந்தன. ஆனால் உள் நாட்டுப் பேரரசுகளுக்கு அவை அடங்கிவிட நேர்ந்த ஒரு காரணம் பற்றியே கடல் மரபின் முக்கியத்துவத்தை விசயநகரப் பேரரசு பொதுவாகப் புறக்கணித்தது என்னலாம். சிந்து கங்கை வெளியில் அசோகர் காலம் முதல் அவுரங்க சீப் காலம்வரை அரசு பேரரசுகள் யாவும் உள்நாட்டு நில அரசு, பேரரசுகளாக நிலவினவேயன்றிக் கடல்வாணிபமோ கடல் மரபோ பேணவில்லை. விசயநகரம் தென்னகத்தின் தலை சிறந்த தேசீயப் பேரரசாக அமைந்த போதிலும், இவ்வொரு வகையில் வடதிசைப் பேரரசுகளுடன் வைத்தெண்ணத்தக்க நிலப் பேரரசாகவே நில விற்று. பேரரசும் பேரரசுத் தேசீயமும் உடனடியாக நீடித்துப் புதிய முழுநிறை தேசீய மலர்ச்சி உண்டுபண்ணாமல், இடையே வடவர் சூறையாட்டு ஆட்சியும் வெள்ளையர் சுரண்டல் ஆட்சியும் வந்து விளையாட இடம் தந்ததன் காரணம் இதுவே. ஆயினும் தென் கோடித் தமிழக மரபுகளும், மேல்கரை மரபுகளும் வடதிசைப் பண்பு மேவிச் சிறிதே புகழ்மங்கிய இப்பேரரசைப் பழய தமிழகத் தேசீயத்துக்கும் வருங்கால முழு நிறை தென்னகத் தேசீயத்துக்கும் இடையே இடையொடுங்கிய ஒரு பாலமாக்கியமைந்தன. பாலத் தின் நம் காலக்கோடியில் வ. உ. சிதம்பரனாரின் கப்பல் இயக்கம் பாலத்தின் கடைசி வில்வளைவாக நம்மை வருங்காலத்தின் வாயிலுக்கு இட்டுச் செல்கிறது என்னலாம். விசயநகரப் பேரரசரைவிட மைசூர்ப் பேரரசர் கடற் படையின் முக்கியவத்துவத்தை நன்குணர்ந்திருந்தனர். ஆனால் ஆங்கிலப்புயலை எதிர்க்கத் திப்பு உதவியை நாடிய போது, எதிர்ப்புயலாக அருகிலிருந்த பிரஞ்சு ஆட்சி தன் கடற்படை வலுவைத் தளரவிட்டிருந்தது. அதுபோலவே வ. உ. சிதம்பரனார் கப்பற் கொடி உயர்த்திய போதும் வட திசைத் தேசிய எதிர்ப்புயல் அவரது தமிழ்த் தேசீயக் கனவை சரிவர உணராது அதை அவரே தனி மனிதராக நின்று நடத்தும்படி விட்டு, அம்மரபு பேணத் தவறிற்று. தென்னகத் தேசீயம் இத்தவறுகளை உணர்ந்து தன் தேசீயக் கரு நிலைத் திட்டங்களில் இம்மரபுக்கு இடங்கொடுத்து வருகிறது. நூனிஸ் என்ற அந்நாளைய போர்ச்சுகீசிய எழுத்தாளர் அரிகரன் வீரத்தைவிட அவன் கால அரசியலமைதியையும் அவன் ஆட்சியமைப்புத் திறத்தையுமே சிறப்பாகப் பாராட்டுகிறார். வட தொண்டை நாடு என்ற தன் தெலுங்க நாட்டில் பண்டைச் சேர, பல்லவ, சோழப் பேரரசர் மரபு பின்பற்றி அரிகரன் காடு கொன்று நாடாக்கி வளங்கண்டான். காடு வெட்டிப் புது நிலங் காண்பவர்களுக்கு நிலமும், பொருளுதவியும், பிற சிறப்புரிமைகளும் தந்து குடியமைத்தான். இக் காட்டுக் குடியமைப்பாளர் ஆயக்காரர் எனப்பட்டனர். மிகப் பழங்காலத் தமிழ் மரபு பின்பற்றி அந்நாளிலும் ஆட்சியின் பிரிவுகளில் மாகாணம், மாவட்டம் ஆகிய பெரும் பிரிவுகள் முறையே மண்டலம், கோட்டம், கூற்றம் அல்லது நாடு (சிறு பிரிவாகிய பழங்கால நகர் நாட்டு எல்லை) என்று அழைக்கப் பட்டிருந்தன. ஆட்சி ஒழுங்கு கருதி அரிகரன் நாடு என்ற சிற்றெல் லையினுள்ளும் ‘இருபது அல்லது முப்பது ஊர் வட்டங்கள் அடங்கிய தலம் ஆகிய வட்டாரமும், தலங்களின் எல்லைக்குள் நான்கு அல்லது ஐந்து ஊர்கள் கொண்ட ஊர் வட்டமும் வகுத்தான். ஊர்வட்டத்துக்கு ஊர்வட்டக் கர்ணங்களையும், தலத்துக்குத் தலக் கர்ணங்களையும், நாட்டுக்கு நாட்டுக் கௌடர்களையும் தலையாரிகளையும் அமர்வித்து அவன் திணையாட்சியைச் சீரமைத்தான். இந்து தேசீயம், வைதிக இயக்கம் என்ற பெயர்களுடன் தேசீய இயக்கத்தில் கலந்த வடபுல வருண வேறுபாட்டுப் பண்புகள் இதற்குள் இயக்க மையமான தென் தெலுங்க நாட்டிலிருந்து வட ஆந்திரம், கலிங்கம் வரை பரவியிருந்தது. அதன் பயனாக ஒரிசா ஆண்ட கஜபதி அரசர்கள் ஆட்சித் துறைகளில் பொதுவாகவும், திணையாட்சியில் சிறப்பாகவும் மற்ற வகுப்பினரை நீக்கிப் பிராமணரையே நியமிக்கத் தொடங்கியிருந்தனர். இப்புது வழக்கம் அரிகரன் ஆட்சி நாட்களில் விசயநகரத்திலும் புகுந்தது. தன் அமைச்சன் சிக்க உடையாரின் அறிவுரையைப் பின்பற்றி அரிகரன் கர்ணங்கள் அமர்வு வகையில் ஒரு பெரு மாறுதல் செய்தான். இதுவரையில் அவர்கள் பொதுவாகப் பல்வேறு வகுப்பினரிடமிருந்தும், சிறப்பாகக் கம்மியர், வேளமர் ஆகியவரிடமிருந்தும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். ஆனால் அரிகரன் மற்ற எல்லா வகுப்பினரையும் நீக்கி அப்பதவிகளை முழுவதும் பிராமணர் களுக்கே அளித்தான். பிராமணரிடையே கூட அமைச்சனின் பிராமணக் கிளைவகுப்பான நந்த வைதிகருக்கு மட்டுமே சலுகை தரப்பட்டதனால், மற்ற வகுப்பினரிடையே மட்டுமன்றிப் பிரா மணரிடையேனும் இதற்குப் பேரெதிர்ப்பு இருந்ததாக அறிகி றோம். இச்செயல் தேசீய இயக்கத்தின் புயலலைக்குரிய ஊசி முனை மட்டுமேயாகும். பிற்கால நாயக அரசர், மராத்திய சிவாஜி மரபினர், தென்னக இஸ்லாமிய மரபினர் வழியாகச் சிந்து கங்கை வெளியாண்ட முகலாயப் பேரரசர், பிரிட்டிஷ் ஆட்சியாளர் காலங்கடந்து இம்மரபு வளர்ந்தே வந்துள்ளது. சமுதாயத்தில் இயல்பாக மறைந்து வந்த புரோகித ஆட்சி முறையை வலியுறுத்திப் பேணி வளர்க்கவும், அதே மூச்சில் சமயத்துறையில் பல்வகை வகுப்பினருமடங்கிய மக்கட் சமயப் புரோகிதர், துறவிகளை அடக்கி ஒடுக்கி அவர்கள் உரிமை களையும் மதிப்புகளையும் முற்றிலும் புதிய இனம் சமயத் துறையை மட்டுமன்றி கல்வி, கலை, சமுதாயம், அரசியல் ஆகிய எல்லாத் துறைகளின் ஆட்சியையும் கைப்பற்றவும் இந்நிலை வைதிக இயக்க கால முதல் இன்றியமையாத சஞ்சீவியாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. முதலாம் புக்கன் ‘அரிகரமாராயன் தவிசுக்கு உறுதிதரும் மணித்தூணாக விளங்கியவர் வளமிக்க மாமண்டலேசுவரர் புக்கராயரே!’ என்று அந்நாளைய ஆதாரங்கள் அரிகரன் ஆட்சிக்காலத்திலேயே முதலாம் புக்கராயன் (1344-1379) புகழ்பாடின. அவன் ஒப்புயர்வற்ற வீரப்படைத் தலைவனாகவும், சிறந்த ஆட்சியாளனாகவும் விளங்கினான். அவன் ஆட்சியின் முதற் பகுதி உண்மையில் அரிகரன் ஆட்சிக் காலத்துக்குரிய அவனது இளவரசாட்சியே யாகும். அவன் ஆட்சிக்குள் விசயநகரப் பேரரசின் புகழ் உலகின் தூரத்தொலை நாடுகளிலெல்லாம் பரவத் தொடங்கியிருந்தது. சீனப்பேரரசை அந்நாட்களில் ஆண்ட மிங் மரபினர் காலத்தில் அவனிடமிருந்து ஒரு தூதுக்குழு சீனநாட்டுக்கு வந்து சேர்ந்ததாக அந்நாட்டு வரலாறு குறித்துள்ளது. சங்ககால, பல்லவ பாண்டிய சோழப் பேரரச காலத்திய உலகளாவிய அரசியல் உறவுகளை இது நினைவூட்டுவதாயுள்ளது. புக்கன் ஆட்சிக்காலத்துக்குள் பகமனிப் பேரரசில் முதலாம் முகமது (1358-1377), முஜாஹிது (1377-1378) ஆகிய இரு அரசர் ஆண்டனர்; முகமது பெருவீரன். அத்துடன் அவன் அரிகரனைப் போலவே நாட்டின் ஆட்சியைச் சீரமைத்து வளங்காணப் பாடுபட்டான். தேசீய நோக்குடன் அவன் மைய ஆட்சி வலுக்குறைத்து, மாகாண மாவட்ட ஆட்சிகளுக்கு உரிமையும் வலிமையும் அளித்தான். அவனை ஒத்த வலிமை வாய்ந்த அரசர் ஆட்சிகளில் அது நலமே தந்தது. ஆனால் அரசர் திறமை குன்றிய பின்னாட்களில் அதுவே பேரரசின் துண்டாட்டத்துக்கும் சரிவுக்கும் வழி வகுத்தது. புக்கன் ஆட்சி முழுவதும் போரில் கழிந்தது. வட திசையில் அவன் வாரங்கல் அரசுடன் நேச உறவுகொண்டு பகமனிப் பேரரசுடன் ஓயாது போராடி வந்தான். இது சரிசமப் போராட்ட மாதலால் தெளிவான வெற்றியோ தோல்வியோ தரவில்லை. ஆனால் அவன் காலத்தில் அவன் புதல்வன் இரண்டாம் கம்பணன் அல்லது வீரகம்பராயன் தென் தமிழக மாண்டு, மதுரை இஸ்லாமியர் கொடுங்கோலாட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி கண்டு, தமிழக முழுவதையும் விசயநகரத்தின் கொடிக்கீழ்க் கொண்டு வந்தான். பகமனி, விசயநகரம் ஆகிய இரு பேரரசுகளுக்கு மிடையே யுள்ள போராட்டம் முந்திய ஆட்சியிலேயே தொடங்கியிருந்தது. புக்கன் ஆட்சிக்காலப் போர்கள் அதன் தொடர்ச்சியேயாகும். வளர்ந்து வந்த இரு பேரரசுகளுக்கிடையே போட்டி இருப்பது இயல்பு. அதுவே போராட்டத்துக்கும் போதிய காரணமாகும். ஆயினும் போருக்காகக் கூறப்படும் சாக்கு போக்குகள் அல்லது உடனடித் தூண்டுதல்கள் இருந்தன. முற்கால வரலாற் றாசிரியர்கள் அவற்றையே காரணமாக எடுத்துக் கூறுகின்றனர். முதலாம் முகம்மது புதிதாகத் தங்கம், வெள்ளி ஆகியவற்றால் நாணயங்களடித்து வெளியிட்டான். வாரங்கல் அரசனும் விசய நகரப் பேரரசரும் இது தம்மை மதியாத செயலென்று கருதினர். பகமனிப் பேரரசின் தலை நகரமான குல்பர்காவிலும் முஸ்லீமல்லாதவர்களே வணிகராகவும் சிறப்பாகக் காசுக்கடை வணிகராகவும் இருந்தனர். வாரங்கல் விசயநகர ஆட்சியாளர் தூண்டுதலின் பேரில் இவ்வணிகர் பகமனி நாணயங்களையெல்லாம் உருக்கத் தொடங்கினர். முகம்மது வெகுண்டு வணிகர் பலரைத் தண்டித்தழித்ததுடன் வடதிசையிலிருந்து முஸ்லீம் வணிகர்களான ‘கத்ரி’ வகுப்பினரைக் கொணர்ந்து குடியேற்றினான். வாரங்கல் அரசனும் விசயநகரப் பேரரசரும் இச்சமயம் போர்முழக்கம் தொடங்கினர். முந்திய ஆட்சியில் இழந்த கௌலாக் கோட்டையை உடனே திருப்பித் தரும்படி வாரங்கலும், அதுபோலவே இரேய்ச்சூர் கோட்டையை ஒப்படைத்து விடும்படி விசய நகரமும் உடனடிக் கோரிக்கைகள் விடுத்தன. அச்சமயம் முகம்மது போருக்கு வருமளவு வலிமையுடையவனா யில்லை. ஆகவே அரசியல் சூழ்ச்சி நயத்தைக் கையாண்டான். தூதுர்களுக்கு மறு மொழி கொடுக்காமல் தன்னிடமே வைத்துக் கொண்டு தன் தூதர்களை அனுப்பி நட்புப் பேச்சுக்களின் நடிப்பிலேயே பதினெட்டு மாதம்வரை கடத்தினான். இதற்கிடையே போருக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இறுதியில் இறுமாப்பான மறுப்பும் அவமதிப்பான எதிர் கோரிக்கைகளும் அனுப்பினான். 1360-ஆம் ஆண்டில் வாரங்கலாண்ட காபநாயகன் தன் புதல்வன் வினாயகதேவை ஒரு பெரும் படையுடன் கௌலாக் கோட்டையை எதிர்க்கும்படி அனுப்பினான். விசயநகரப் பேரரசனும் அவனுக்குதவியாகப் படைத்தலைவன் மல்லி நாதனுடன் 20,000 குதிரை வீரரை அனுப்பினான். பகமனிப் போர்வீரன் பகதூர்கான் இப்போரில் வினாயக தேவை முறியடித்ததுடன் வாரங்கல் நகர் வாயில் வரையிலும் முன்னேறி நாடெங்கும் சூறையாடினான். வாரங்கல் அரசன் பணிந்து நூறாயிரம் பொன்னும் இருபத்தாறு யானைகளும் திறையாகக் கொடுத்துப் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொண்டான். போர் முடிந்தும் இருதிசையிலும் மனத்தாங்கல் மேலும் இருந்து கொண்டே வந்தது. 1362-ல் பகமனி அரசனிடம் செல்ல விருந்த குதிரைகளை வழியில் மடக்கி வினாயகதேவ் அவற்றை வாரங்கலுக்கே வலிந்து வாங்கிக் கொண்டான். இரண்டாவது தடவையும் பகமனிப் படைகள் வாரங்கலைத் தாக்கின. இத்தடவை வினாயகதேவ் எதிரி கைப்பட்டு உயிரிழந்தான். வாரங்கல் மீண்டும் சூறையாடப்பட்டது. ஆனால் இத்தடவை பகமனி வெற்றி பெற்றாலும் தானும் பெருத்த சீரழிவுக் காளாயிற்று. பகமனி ஆட்சியில் எழுந்த ஓர் அரசியல் கிளர்ச்சி போர்ப் புயல் மீண்டும் கொதித்தெழக் காரணமாயிற்று. முகம்மதுவின் மைத்துனன் பெய்ராம்கான் தௌலதாபாத்தின் ஆட்சியாளனா யிருந்தான். அவன் முகம்மதுவுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தான். வாரங்கலும் விசயநகரமும் இப்போதும் தலையிட்டுக் கிளர்ச்சிக்கு ஆதரவு தந்தன. அத்துடன் தென்திசைப் புயலடக்க மீண்டும் வடதிசைப் புயலை வரவழைக்கவும் அவர்கள் திட்டமிட்டனர். தில்லியில் அப்போது முகம்மது துக்ளக்கின் பின்னுரிமையாளனாக பிரூஸ் துக்ளக் ஆட்சி செய்து வந்தான். தென்னகத்தின் மீது படையெடுத்து வந்தால், மீண்டும் இழந்த தேவகிரியைப் பெறலாம் என்று அவாத்தூண்டினர். அவனுக்குப் பரிசாக அளிக்க முத்து மணி வைரங்கள் இழைத்த ஒரு பொன் மயில் இருக்கையையும் அவர்கள் சித்தம் செய்து வைத்திருந்தனர். ஆனால் வடதிசைப் புயல் இப்போது பழைய புயலாக இல்லை. வடதிசையில் வாழ்வுக்கும் மாள்வுக்கும் இடையே அது ஊசலாடிக் கொண்டிருந்தது. பிரூஸ் தென்னகத்தின் குரல் கேளாச் செவியனாயிருந்து விட்டான். முகமது இப்போது ஒரு படையை தௌலதாபாத் கிளர்ச்சி யை அடக்க அனுப்பிவிட்டுத் தானே தெற்கே கிளம்பினான். வாரங்கல், கோல்கொண்டா ஆகிய இரு கோட்டைகளையும் தாக்கி நெருக்கினான். இந்த மூன்றாவது தடவையும் வாரங்கல் தோற்றது. முன்போலப் பெருந்திறையை இழந்ததுடன் நில்லாது. வாரங்கல் அரசு பெருந்திறையை இழந்ததுடன் நில்லாது. வாரங்கல் அரசு கோல்கொண்டாவையும் எதிரிக்கு விட்டுக் கொடுக்க நேர்ந்தது. முகமது கொண்டு சென்ற கொள்ளைப் பொருள்களிடையே, தில்லிப் பேரரசனுக்கு அளிப்பதற்காகச் செய்யப் பட்ட பொன்மணித் தவிசும் இடம் பெற்றது. 1365-ஆம் ஆண்டில் தனக்குக் கிட்டிய தவிசின் மீதிருந்து பேரரசன் முகமது தன் வெற்றியை ஆரவாரமாகக் கொண்டாடி னான். மூன்று தடவை வாரங்கலையே தூண்டிவிட்டுக் கொண்டி ருந்த விசயநகரத்தின் மீது போர் தொடுக்க, இந்த விருந்திலேயே அவன் ஒரு சாக்கும் உண்டு பண்ணினான். விருந்தில் அவன் முன் பாடிய ஆடிய ஆடலழகியர்களுக்குப் பரிசாக அவன் விசய நகரத்தின் பெயராலேயே பணமுறி எழுதிக் கொடுத்து, விசய நகரப் பேரரசனிடமே சென்று பணம் பெற்றுக் கொள்ளும்படி அனுப்பினான். பேரரசன் புக்கன் அந்த அழகியர்களுக்கு பழய சோழ அரசர்கள் வழி பின்பற்றி அலங்கோல வேடமிட்டுக் கழுதைமீது பின்னோக்கி வைத்துக் கட்டி அனுப்பினான். இந்த அவமதிப்புத் தாங்காமல் முகமது தனது நாலாவது படையெடுப்பை 1366-ல் நேரடியாக விசய நகரத்தின் மீதே தொடங்கினான். முதல் தாக்குதலிலேயே இரேய்ச்சூர் இடை நிலத்திலுள்ள முத்கல் கோட்டை விழுந்தது. அதோனிக் கோட்டை மீது கடுந்தாக்குதல் தொடங்கிற்று. அதைத் தடுக்க முற்படச் சென்ற புக்கன் துங்கபத்திரைக்குத் தென்கரையிலிருந்த ‘கௌதல்’ என்ற இடத்தில் முகமதுவின் படைகளுடன் மோதினான். 1367-ம் ஆண்டில் நடைபெற்ற இந்தக் கௌதல் போரில் இருதரப்புகளும் ஒரு நாள் முழுவதும் கடும் போரிட்டன. ஆனால் எதிரி குதிரைப் படையின் மேம்பாட்டினாலும் துபபாக்கி பீரங்கிகளின் செயலாலும் விசய நகரம் தோல்வி ஏற்க நேர்ந்தது. தென்னகத் தில் துப்பாக்கிகள் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்ட முதல் போர் இதுவே. இருதரப்புகளிலுமே பீரங்கிகள் இருந்தன என்றும் இரு தரப்புக்களிலும் ஐரோப்பியர்களும் துருக்கியர்களுமே அவற்றை இயக்கினர் என்றும் வரலாற்றாசிரியர் பெரிஷ்டா கூறுகிறார். போரில் 400,000 மக்களும் 10,000 பணியாளர்களும் கொன்று குவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார். தௌலதாபாத் கிளர்ச்சியையும் இவ்வெற்றியின் பின் முகமது எளிதில் அடக்கினான். புக்கன் காலத்திலிருந்து விசயநகரத்தின் வடதிசைத் தொடர்பில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. விசயநகரம், பகமனி ஆகிய பேரரசுகள் இதுமுதல் தம்முள் நேரடியாக மோதுவதை விட்டு அடிக்கடி வடகிழக்குத் தெலுங்காண அரசியலைத் தூண்டி அந்தச் சுழலில் தாமும் சுழலத் தொடங்கின. ஆனால் தென்னகத் தேசீய இயக்கத்தின் அரசியல் பிரிவுக்குரிய அந்தக் கருநிலத்தின் தேசீயச் சுழல் ஒரு நூற்றாண்டுக்குள் பகமனிப் பேரரசைக் கவிழ்த்தது. அடுத்த நூற்றாண்டில் பாரிய தேசீயப் பேரரசராக வளர்ந்துவிட்ட விசயநகரப் பேரரசின் பெருமையையே சிதறடிக்கவல்ல தென்னகப் பெரும்புயலை எழுப்பிற்று. அத்துடன் தென்னக முஸ்லீம் வல்லரசுகளையும் அவற்றை விழுங்கக் கருதிய வடதிசை முகலாயப் பேரரசையும் அதுவே விழுங்கித் தேசீய ஏப்பம் விட்டது. கௌதல் போருக்கு இரண்டாண்டுகளுக்குப் பின் விசய நகரின் தூண்டுதலால் இராசகொண்டாவை ஆண்ட வேளம மரபுத் தலைவரான அனபோதன் பீமவரத்தில் நடந்த ஒரு கடும் போராட்டத்தில் வாரங்கல் அரசன் காபய நாயகனை முறியடித்துக் கொன்று வாரங்கலையே கைப்பற்றிக் கொண்டான். இத்துடன் நிற்காமல் வாரங்கல் முன் இழந்திருந்த கௌதல் கோட்டையையும் கைப்பற்ற எண்ணி, அதன்மீது தாக்குதல் தொடங்கினான். ஆனால் விசய நகரத்தின் உதவி இச்சமயம் அவனுக்குப் பயன்படவில்லை. அவன் வலக்கையாயிருந்த அவன் மைத்துனன் காபய நாயகன் மாண்டான். இந்நிலையில் அவன் பகமனி அரசுக்கு முற்றிலும் பணிந்து அவனுக்கு உட்பட்ட தேச அரசு ஆயினான். இப்புதிய திருப்பம் விசயநகரத்துக்கு மட்டுமன்றி அண்மை அயல் சிற்றரசுகட்கும் மனக்குமுறல் உண்டு பண்ணிற்று. முகமதுவுக்குப் பின்வந்த பகமனி அரசன் முஜாஹித் (சி. 1377-1378) இரண்டு ஆண்டுகளே ஆட்சி செய்தாலும் தந்தையை விடத் துணிகரமாக விசயநகரத்துடன் போராடினான். புக்கன் பின் வாங்கிக்கொண்டே தலைநகர் வரை அவனை உள்ளிழுத்துப் பின் அவனை எதிர்த்துத் தாக்கி வெற்றி கண்டான். ஆயினும் இரு பேரரசுகளும் இப்போது முற்றிலும் களைப்புற்றுத் துவண்டு போயிருந்தன. போர் இதனால் எளிதாக நிறுத்தப்பட்டு அமைதி ஏற்பட்டது. தமிழக விடுதலைப் போராட்டம் வடதிசைப் புயலை எதிர்த்த முதல் தென்றல் அலை, தமிழக விடுதலை இயக்கத்தின் முதற் பாதியில் கடைசி ஒய்சளப் பேரரசன் மூன்றாம் பல்லாளன் எழுப்பிய கிளர்ச்சியாகும். அது புயலைத் தடுத்துத் துடைத் தழிக்கவில்லை. ஆயினும் புயல் தடுத்தாளும் தென்றற் கோட்டையாகிய விசயநகரப் பேரரசைத் தென்னகத்தின் மையத்தில் படைத்துருவாக்க அது பெரிதும் உதவிற்று. புக்கன் ஆட்சிக்காலத்திலேயே இப்புதுத் தென்றல் தெற்கே தமிழகம் நோக்கி வீச வாய்ப்பு ஏற்பட்டது. புக்கன் கீழ் தமிழகத் திசையிலுள்ள தென் மாகாண மாண்டவன் அவன் புதல்வன் வீர கம்பணன். அவனிடம் கோபாலராயன், சாளுவமங்கு, சோமப்பன், கோவிந்தராசன், சோமப்பன் புதல்வனான மாரையன் ஆகிய ஒப்பற்ற சிறந்த படைத்தலைவர்கள் இருந்தார்கள். முன்பு ஒய்சளப் பேரரசன் வென்றடக்கிய தமிழகத்தின் வடகோடிப் பகுதி மட்டுமே இச்சமயம் விசயநகரத்தின் ஆட்சியில் இருந்தது. மீந்த பரப்பின் பெரும் பகுதியிலும் வேளிர் குடி மரபினனான சம்புவராயனே மிகவும் வலிமை வாய்ந்த ஆட்சியுடையவனாயிருந்தான். மதுரையும் சுற்றுப்புறங்களும் மட்டும் இஸ்லாமியரிடம் தங்கியிருந்தது. சம்புவராயன் தற்போது படை வீடு என்று அழைக்கப்படும் இடத்தில் இராச கம்பீரம் என்ற கோட்டையையே தலைமையிடமாகக் கொண்டிருந்தான். வீர கம்பணன் தமிழக ஆட்சிப் பொறுப்பாளனாக (1365-1370) ஐந்தாண்டுகளே இருந்தான். தன் படைத் தலைவர்களின் ஒன்றுபட்ட துணையுடன் அவன் பல ஆண்டுகள் சம்புவராயனை எதிர்த்துப் போரிட்டான். பல களங்களில் அவனை முறியடித் தான். சோமப்பன் மகனான மாரையன் அவனைக் கைப்பற்றிக் கொண்டு வந்து கம்பணனிடம் ஒப்படைத்தான். வீரத்துடன் அரசியல் சூழ்ச்சித்திறமும் வாய்ந்த கம்பணன் தோற்ற எதிரியின் மதிப்புணர்ந்து அவனை நண்பனாகக் கொண்டு பெரும் பயனடைந்தான். அவன் பேருதவி பெற்றே கம்பணன் மதுரையை முழுதும் இஸ்லாமியர் பிடியிலிருந்து விடுவித்தான். கம்பணன் 1374-லேயே மறைவுற்றான். மதுரையின் சூழ்புறங் களில் இஸ்லாமிய ஆட்சியின் கடைசித் தூவானங்கள் கூட அதற் குள் மறைந்தன. அந்நாளையத் தமிழக மக்க, பெருமக்கள், புலவர், சமயவாளர் யாவருமே புயலோய்ந்ததனால் பெருமகிழ்வடைந்து கம்பணனையும் அவன் துணைவரையும் தேசீய வீரராக வாழ்த் தினர். வீரச் செயல்களால் தமிழக விடுதலைக் காப்பியம் ஆற்றிய கம்பணனின் தலைவி கங்காதேவி அதையே சமஸ்கிருதக் கவிதை மொழியில் ஒரு பார வீர காப்பியமாக்கினான். அதில் கம்பணன் கனவில் தமிழன்னையாகிய மதுரை மாதேவியே தோன்றி மதுரையை விடுவிக்கும்படி பணித்ததாக அவள் கற்பனையில் உருவகம் செய்துள்ளாள். ‘சாம்புவராயனை வென்றபின் கம்பணன் காஞ்சிபுரத்தில் ஓய்வு கொண்டிருந்தான். ஒரு நாள் ஓரெழில் வடிவம் அவன் துயிலினிடையே வந்து தோன்றிற்று. அரசியரிடையே ஒரு வானணங்கியையும், வாளணங்கியரிடையே ஓர் அரசியையும் நினைவூட்டியது. அத்தெய்வீக எழிலுரு. ஆனால் அதன் மடி மாசு படிந்திருந்தது. முகமும் பொலிவு குன்றி வாடியிருந்தது. ‘தேவி மதுரையின் அலங்கோல நிலையை அவன் காட்சி முன் கொணர்ந்து சுட்டிக் காட்டினாள். பின் மனித உலகம் கண்டிராத ஓர் ஒளிமணி வயிர வாளைக் கம்பணன் கையில் தந்து மறைந்தான். ‘பாண்டியருக்கு இந்திரனளித்த வீரவாள் அது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறம் காத்த வாள் இது. பாண்டியர் கையை விட்டு இது இப்போது நழுவியுள்ளது. அவர் கடமையையும் பொறுப்பையும் இனி நீயே ஏற்றுப் பணி செய்க’ என்று தேவியின் பரிசு குறித்தது. தெலுங்கரைத் ‘தென்னகத்தின் காவல் வீரர்’ என்று அறிஞர் சி. ஆர். ரெட்டி குறித்துள்ளார். கி. பி. 14-16-ஆம் நூற்றாண்டுகளுக்கு இது தனிப்பட்ட முறையிலும், வீர கம்பணனையும் அவன் துணைவரையும் பொறுத்த அளவில் நூற்றுக்கு நூறான அளவிலும் பொருந்துவதாகும். தென்னகத்தின் வட கோடி தவிர மற்றப் பகுதிகள் யாவும் புக்கன் ஆட்சிக்குள் விசய நகர ஆட்சியின் பரப்பாய்விட்டன. அப்பரப்பு இச்சமயம் ஏழு மாகாணங்களாக வகுக்கப்பட்டிருந்த தென்று அறிகிறோம். அவை முறையே உதயகிரி (நெல்லூர், கடப்பை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி), பெனு கொண்டா (பெல்லாரி, அனந்தப்பூர் மாவட்டங்கள், மைசூர்க் கணவாய்ப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதி), மூலபாகல் (மைசூர்ப் பகுதி, சேலம், தென்னார்க்காடு உட்கொண்ட பகுதி), பாகூர் அல்லது துளுநாடு அல்லது மங்களூர் மாகாணம், இராச கம்பீரம் ஆகியவை. புக்கன் காலத்தில் வீரகம்பணனுடன் இருந்த படைத் தலைவன் சாளுவ மங்குவே அடுத்த விசய நகர மரபுகளான சாளுவ, துளுவ ஆட்சிகளுக்கு வழி வகுத்தவன் ஆவன். ஏனெனில் அவனே சாளுவ மரபின் முன்னோன். அம் மரபின் முதல்வன் சாளுவ நரசிம்மன் அவன் மரபுத் தோன்றலே. துளுவமரபின் முன்னோ னான நரசநாயகன் சாளுவ நரசிம்மனின் நண்பனாகவும் துணைப் படைத் தலைவனாகவுமே அரசியல் முதன்மையிடத்துக்கு வந்தவன். தென்னகத் தேசீயப் பேரரசாக வளர்ந்து வந்த விசய நகரத்தை ஒரு தென்னகத் தேசீயக் கோட்டையாக்கி சிற்பிகள் அவ் விருவருமேயா. இரண்டாம் அரிகரன் முதலாம் புக்கனின் இளைய புதல்வன் மாண்ட வீர கம்ப ணனின் இளைய புதல்வனான இரண்டாம் அரிகரன் (1377-1404) தவிசேறியபோது தென்னகத்தின் பெரும் பகுதியிலும் விசய நகர ஆட்சி பரவியிருந்தது. அதன் ஆற்றலும் வானுற வளர்ந்தோங்கி யிருந்தது. ஆயினும் ஐவர் உடன்பிறந்தார்களின் ஆட்சியாகத் தொடங்கிய பேரரசின் மாகாண ஆட்சி ஒரு தலைமுறை கடந்து விட்டபின் சிற்றப்பன் பிள்ளை பெரியப்பன் பிள்ளைகளின் ஆட்சியாக மாறி வந்தது. இரண்டாம் அரிகரன் இந் நிலையை மாற்றியமைக்க விரும்பினான். கூடியமட்டும் ஆட்சி முழுவதையும் படிப்படியாகத் தன் நேரடியாட்சியாக்கும் ஏற்பாடுகளில் முனைந்தான். இதன்படி மூத்த புதல்வனாகிய விரூபாட்சனே வீர கம்பணன் புதல்வனின் இடத்தில் தமிழகத் தலைவனாகவும், நிறுவுதல் முதல்வரான உடன் பிறந்தாருள் ஒருவனான முதற்கம்பனின் புதல்வர்களுக்குப் பதிலாக மூன்றாம் புதல்வன் தேவராசன் உதயகிரி மாகாணத் தலைவனாகவும் அமர்த்தப் பட்டனர். தந்தை ஆட்சிக் காலத்திலும் தமயன் ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்து இளவரச னாகவும் ஆட்சியில் பங்கு கொள்பவனாகவும் விளங்கிய இரண்டாம் புக்கன் மூலபாகல் மாகாணத்தின் மண்டல ஆட்சி கைக் கொண்டிருந்தான். அரிகரன் நம்பிக்கைக்கும் பாச நன்மதிப்புக்கும் உரிய அமைச்சர்களில் ஒருவனான உத்தகிரி விரூபண்ணன் மேல்திசையில் துளுநாடு அல்லது ஏற்க வனவாசி மாகாணத் தலைவனாக அமர்வுற்றிருந்தான். சமயத்துறையில் விசயநகரத்தின் முதல் பேரரசர்களைப் போலவே அவனும் சிவநெறியாளனாயிருந்தான். ஆயினும் மற்ற விசய நகரப் பேரரசர்கள் எல்லாரையும் போலவே அவன் வைணவநெறி, சமண நெறி, இஸ்லாம் ஆகிய மற்றச் சமயங்களுடன் நேர சமரச மனப்பான்மை யுடனிருந்தான் என்பதை அவன் கல்வெட்டுக்கள் தெளிவுபடுத்துகின்றன. அவன் சமரசத்தை மட்டுமன்றி சிவாஜி, ஒளரங்கசீப் ஆகிய வீரச் சான்றோர்களை நினைவூட்டும் அவன் பெருந்தன்மையையும், அவன் மீது அவன் குடிகள்கொண்ட பாசத்தையும் கி. பி. 1382-ஆம் ஆண்டுக்குரிய அவன் காலத்திய பேலூர்ச் செப்பேடு பதிவு செய்து காட்டுகிறது. “சோழ சேர பாண்டியர்களை வென்ற அவன் வெற்றிக் களையைத் தென்னக அணங்கின் முகம் எடுத்துக் காட்டிற்று. அதே சமயம் ஆட்சி வெற்றியால் சாரற்காலத் தொடக்கத்திலுள்ள வானம் போலத் தெளிவாயிருக்கும் அவன் முகம், அவ்வெற்றி களால் இஸ்லாமிய வனிதையர் முகங்களில் கண்ணீர் வடிவதைக் கண்ட போது, அக்கால இறுதியிலுள்ள வானம்போல முகிலிட்டு மங்குதலுற்றது”. விசயநகரப் பேரரசர்கள் முதலாம் அரிகரன் காலத்திலிருந்தே மகாராயர்கள் என்ற பட்டமேற்றிருந்தனர். ஆனால் பேரரசுரிமையின் முழுச்சின்னமாக மகாராஜாதி ராஜன் என்ற பட்டம் சூட்டிக் கொண்ட முதல் பேரரசன் இரண்டாம் அரிகரனே. அவனிடம் மாதவ மந்திரி, உத்தகிரி விரூபண்ணன், முத்த தண்டாதிபதி, கம்பமந்திரி முதலிய பலதிறமை வாய்ந்த அமைச்சர்கள் இருந்தனர். அவர்களும் மக்கள் உள்ளங்களி லிருந்து புகழ் நாட்டியிருந்தனர். அமைச்சன் முத்த தண்டாதி பதியின் நல்லாட்சியைப் பாராட்டும் முறையில் உழவர், தொழிலாளர், வணிகர் முதலிய பொதுமக்களே திரண்டு 25-க்கு மேற்பட்ட நகரங்களின் சில வரிகளை அவனுக்கு வழங்க முன் வந்தனர் என்று அறிகிறோம். அந்த நகரங்களின் பெயர்களே அந்நாளைய பேரரசின் பரப்பையும், நகர்வளத்தையும் சிறப்பித்துக் காட்டுவன ஆகும். அஸ்தினாவதி - விசயசகரி (ஆனை கொண்டியும் விசயநகரமும் சேர்ந்த பகுதி), தூவார சமுத்திரம், பெனுகொண்டா, ஆடவனி, உதயகிரி, சந்திரகிரி, மநுவாயு, காஞ்சி படைவீடு, சதுரங்கப்பட்டினம், மங்களூர், பராகூர், ஹொன்னவரம், சந்தவாரு, ஆறகம், அனவீடு, சரிசல்லியம், தெலகலம்பி சிங்கபட்டினம் முதலிய நகர்ப்பெயர்கள் இப்பட்டியலில் இடம் பெறுகின்றன. வடதிசைப் பேராட்டம் இரண்டாம் அரிகரன் ஆட்சித் தொடக்கத்தில் முஜாகித்துக்குப் பின் பகமனியிலாண்ட அரசர்கள் பொதுவாக வலிமையற்றவர்களாயும், பலரும் ஒன்றிரண்டு ஆண்டுகளே வாழ்ந்தவர்களாயும் இருந்தனர். இந்நிலையைப் பயன்படுத்தி இரண்டாம் அரிகரன் கிழக்கிலும் மேற்கிலும் தன் பேரரசை மேலும் வலுப்படுத்தி வடதிசையில் நேரே பேரரசு மீது பாயத்திட்ட மிட்டான். கீழ்திசையில் இருந்த குழப்பங்களையும் வேற்றுமை களையும் துணைக்கொண்டு அரிகரன் திடுமெனக் கொண்ட வீட்டைத் தாக்கி அவ்வரசுக்குரிய கர்நூல், நெல்லூர் மாவட்டங்கள் முழுவதையும், குண்டூர் மாவட்டத்தில் பாபட்லா, நரசராவ் பேட்டை ஆகிய வட்டங்களையும் கைக்கொண்டு பேரரசில் இணைத்துக் கொண்டான். அதே சமயம் அவன் தன் புதல்வன் இரண்டாம் புக்கனான இளவரசனை அனுப்பி இருதடவைகள் வாரங்கல்மீது தாக்குதல் நடத்தினான். இது பயன் தரவில்லை. அத்துடன் 1397-ல் பாங்கல் கோட்டையை அவன் பிடித்தும் அது அவன் கையில் நிலைக்காமல் விரைந்து நழுவிற்று. கிழக்கில் அமைந்த வெற்றி வடக்கில் தடைபடவே அரிகரன் சட்டென மேல் திசையில் தன் கவனம் திருப்பினான். முந்திய ஆட்சிகளில் பகமனிப் பேரரசு கோவா, தபோல் முதலிய துறைமுகங்களை விசயநகரத்திடமிருந்து கைப்பற்றியிருந்தது. இப்போது அரிகரன் அவற்றை மட்டுமன்றி சௌல், காரைப் பட்டினம் ஆகிய துறைமுகங்களையும் வரிசையாகக் கைப்பற்றிப் பேரரசில் சேர்த்துக் கொண்டான். இப்போர்களால் முன்பு துங்கபத்திரையையே எல்லையாகக் கொண்டிருந்த பேரரசு பல இடங்களிலும் கிருட்டினை ஆறுவரை தன் எல்லையைப் பரப்பிற்று. இரண்டாம் அரிகரன் ஆட்சியின் பிற்பகுதியில் திறமை மிக்க பேரரசனான பிரூசு (1398-1422), பகமனியின் தவிசேறினான். இதற்குள் ஏற்கெனவே கிருட்டினை ஆறுவரை பேரரசைப் பரப்பிவிட்ட அரிகரன், இரெய்ச்சூர் இடை நிலமும் வென்று அந்த எல்லையை நிறைவுபடுத்த எண்ணினான். கீழ்திசை வல்லரசுகளிடையே அன்று இருந்த சூழ்நிலைகளும் அவனுக்கு மிகவும் உகந்ததாகவே தொடக்கத்தில் தோன்றின. ஆயினும் பிரூசுஷாவின் ஒப்புயர்வற்ற வீரமும் திறமும் இரண்டாம் அரிகரன் பேராற்றலைக்கூட ஒரு சிறிது தடுத்து நிறுத்துவ தாயிருந்தது. 1398-இல் அரிகரன் வீரப்படைகள் இரெய்ச்சூரை நோக்கி மிக விரைவாக முன்னேறி வந்தன. அதே சமயம் பகமனிப் பேரரசின் வடமேற்கில் கோலி மரபினர் இனக்கிளர்ச்சி தொடங்கிக் குமுறி எழுந்தனர். மூன்றாவதாக மற்றொரு திசையில் ‘கோண்டுப்’ பழங்குடியினத் தலைவனான கேர்ளா அரசன் பகமனிப் பேரரசுமீது படையெடுத்தான். பிரூசு கோலிக் கிளர்ச்சியை முதலில் எளிதாக அடக்கினான். ஆனால் கேர்ளா அரசன் படையெடுப்பைச் சமாளிக்க அவனுக்குப் பேரரசின் வலிமை முழுவதுமே தேவைப்பட்டது. இந்நிலையில் அவனால் விசயநகரப் பேரரசன் முன்னேற்றத்தைக் கவனிக்க முடியாத நிலை எழுந்தது. ஆயினும் அவன் படைத் தலைவன் சிராஜுதீனை ஒரு சிறு படையுடன் தெற்கே விசயநகரப் படைகளை நோக்கி அனுப்பிவிட்டு, பேரரசின் முழுப்படையுடன் தானே கேர்ளா அரசனைத் தாக்கப் புறப்பட்டான். கேர்ளா அரசன் நரசிங்கனைப் பிரூஸ் கடும் போராட்டங் களின் பின் முறியடித்தான். நரசிங்கன் பணிந்து பெரும் பொருட் குவையும் 40 யானைகளும் திறையாக அளித்ததுடன் தன் புதல்வியையும் வெற்றி வீரனான பிரூசுக்கு மணஞ்செய்து கொடுத்து அவனை நேசம் செய்து கொண்டான். இதன்பின் பிரூஸ் தெற்கே விசயநகரப் பக்கம் மீள முடிந்தது. பகமனிப் படைத்தலைவன் சிராஜுதீன் தன் சிறுபடையுடன் விசயநகரப் பேரரசின் கடற்பெரும் படைகளை எதிர்க்கத் துணியவில்லை. ஆனால் அவன் எல்லாக்கலைகளையும் கலைத் திறங்களில் வல்லரசனா யிருந்தான். எனவே பாடல்கள் உருவில் விசயநகரப் பாசறையில் புகுந்து படைத்தலைவனாயிருந்த இளவரசன் தேவராசன் புதல்வனைக் கொன்று குழப்பம் விளைவித்தான். இந்தக் குழப்பத்திடையே திடுமென அவன் தாக்கி விசயநகரப் படைகளை வெருண்டோடச் செய்தான். பிரூஸ் திரும்பிய பின் விசயநகரப் பேரரசின் தலைநகர்வரையும் பகமனிப் படைகள் முன்னேறத் தொடங்கின. போர்த் தொடக்கத்தில் விசயநகரத்திற்கு சார்பாயிருந்த அதே அகல் உலகச்சுழல் இப்போதும் ஏற்பட்டது. தென்னகத் தேசீயத்தின் தென்றல் ஆற்றலால் வடதிசை இஸ்லாமியப் புயலில் ஏற்பட்ட ஓய்வு அகல் உலக நடு ஆசியப் புயலை ஒரு சிறிதும் தாக்கவில்லை. இரண்டாம் அரிகரன், பிரூஸ் ஆட்சிக் காலத்துக்குள் அந்த அலை ஓர் உச்ச எழுச்சி எல்லை அடைந்திருந்தது. நடு ஆசிய வீரன் தைமூர் தன் வாள் வலியால் ஆசியாவின் பெரும்பகுதியிலும், ஐரோப்பாவின் பெரும் பகுதி யிலும் ஒரு புயற் பேரரசு நிறுவி வாளாட்சி செய்துவந்தான். அவன் பெயர் அந்நாளைய மேலையுலகிலும் கீழையுலகிலும் ஒருங்கே கிலியூட்டுவதாக இருந்தது. பிரூஸ் 1401-இல் இந்த உலகப் புயற் பேரரசனுக்கு ஒரு தூதுக்குழு அனுப்பிப் பரிசுகளும் வழங்கி யிருந்தான். இதனால் மகிழ்ச்சியடைந்த தைமூர் பிரூசைத் தெக் காணம், மாளவம், குஜராத் ஆகிய முப்பெரும் பரப்புகளுக்கும் அரசனாக்கியதாகக் கட்டளை பிறப்பித்தான். இது கேட்ட குஜராத் சுல்தானும், மாளவ சுல்தானும் கிலிகொண்டு, தம்மை வலுப்படுத்திக் கொள்ள விசயநகரப் பேரரசனுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விரைந்தனர். பிரூஸ் விசயநகரப் பேரரசுப் போரை உடனடியாக நிறுத்தி நேச ஒப்பந்தம் செய்து கொண்டான். போர் முடிவில் அரிகரன் 33 இலட்சம் பொன் தந்து ஆண்டுதோறும் திறைதருவதாக உறுதி கூறியதாக இஸ்லாமிய வரலாற்றாசிரியர் பெரிஷ்டா குறிக்கிறார். ஆனால் புறச் சூழ்நிலைகள் மட்டுமல்ல. பேரரசின் உள்ளா தாரங்களே இக்கூற்றை முழுதும் பொய்ப்பிக்கின்றன. விசயநகரம் அடைந்தது தோல்வியல்ல; முன்னேற்றத்தில் ஒரு தடை மட்டுமேயாகும். பிரூஸ் இரெய்ச்சூர் மண்டலத்தின் பாதுகாப்புக்கு எடுத்துக் கொண்ட நடவடிக்கைகளும் பெரிஷ்டா கூற்றைப் பொய்ப்பிக் கின்றன. அடிக்கடி போர்க்களமாகி வந்த அந்த மண்டலத்தை அவன் ஒரு படையாட்சி மாகாணமாக்கி, பௌலாத்கான் என்பவனை அதன் படையாட்சித் தலைவனாக அமர்த்தினான். தென்னிலங்கை வெற்றி தென்னகமும் தென்னிலங்கையும் இன்று கடலால் பிரிக்கப் பட்டு இருவேறு நிலங்களாகக் கிடக்கின்றன. ஆனால் தென்ன கத்திற்குள்ளும் மலையும் காடுகளும் செய்த அளவு பிரிவினையை நோக்க இரு நிலங்களுக்கும் இடையே உள்ள கடல் அவ்வளவு பிரிவினை செய்துள்ளதாகக் கருத முடியாது. ஏனெனில் தமிழ் பேசும் தமிழ் நிலம் கடலின் இருபாலும் இரு நிலங்களிலும் தொடர்பாகவே கிடக்கிறது. அதே சமயம் இலங்கையின் மலை, காடுகள் இலங்கை மக்களின் மொழியைத் தமிழ், சிங்களம் என்ற இரண்டாகப் பிரிந்துள்ளன. தென்னகத்திலும் அவை மக்கள் மொழியைத் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு முதலியனவாக வேறுபடுத்தியுள்ளன. இதுமட்டுமன்று. கடல் புகுந்து பிரிவினை செய்யாத காலம் ஒன்று இருந்தது. அது அவ்வளவு நிலையான பிரிவினையுமல்ல, மிகப் பழம் பிரிவினையுமல்ல. இராமாயண காலத்திற்குப் பின்னரே அது ஏற்பட்டது. ஆனால் மலைத் தொடர்களோ தென்னகத்திலும் இலங்கையிலும் கடலூடாகவே புகுந்து இரு நிலங்களிலுமே நிலையான பிளவு செய்துள்ளன. இதன் தடங்களை நாம் இன்றளவும் காணலாம். தென்னகத்தில் மலைத் தொடருக்குக் கிழக்கேயுள்ள சோழபாண்டிய நாடுகள், இலங்கையில் முறையே கீழ்பகுதி, வடபகுதியுடனும் மலைத் தொடருக்கு மேற்கேயுள்ள மலையாளக்கரை இலங்கையில் தென்மேற்கு, தெற்குக் கரைகளுடனும் நிலம், செடியின உயிரினவளம், தட்பவெட்ப நிலை, பண்பாடு, மொழி, கலை ஆகிய எல்லாவற்றிலும் முறையே நெருங்கிய தொடர்பும் ஒற்றுமையும் உடையவையாயிருப்பது காணலாம். இவ்வேறுபாடுகளும் ஒற்றுமையும் இரண்டுமே தென்னிலங்கையும் தென்னகமும் இரு வேறு நிலங்களாவதற்கு முற்பட்ட வேறுபாடுகளும் ஒற்றுமைகளும் ஆகும். காவிரியின் பழய பெயர்களாகிய கங்கை அல்லது கொங்கை (கொங்கு - பொன்; பொன்விளையும் கொங்கு நாடு; கொங்கை - கொங்கு நாட்டிலிருந்து பிறந்த பொன்னாறு), பொன்னி ஆகியவையும்; தென்னகத் தொண்டை நாட்டின் பழம் பெயராகிய அருவாநாடு என்பதும் ஈழத்தின் ஆறுகளின் பெயர்களில் பொதுவாகவும் பழந்தலை நகர்களில் ஒன்றான பொலன்னருவாவின் பெயரில் சிறப்பாகவும் இடம் பெறுகின்றன. வரலாற்றுக் காலத்தில் தென்னகத்தின் வடதிசையில் மைசூருக்கு வடபால் ஆண்ட கடம்பர் சங்ககாலத்தில் மலையாளக்கரையில் ஆண்டனர். தமிழகத்திலும் ஈழத்திலும் இவர்கள் தொடர்பும் இது போலப் பின்னாளில் வடதிசை யிலாண்ட வாணதிரையர், வாணாதிராயர் அல்லது வாணர், மாவலி ஆகியவர் மரபுத் தொடர்பும் காணப்படுகின்றன. தமிழினமும் சரி, தமிழ் சார்ந்த பிற இனங்களும் சரி பொதுவாக ஈழத்தின் திசையிலிருந்தே தென்னகத்திற்கும் பிற வடதிசை மாநிலங்களும் பரவியுள்ளன என்பது இன்று மறக்கப் பட்ட, ஆனால் ஆராய்ச்சிகள் சுட்டிக் காட்டிவருகிற, காட்ட இருக்கிற செய்தி ஆகும். தமிழ் மரபுப்படி முத்தமிழ் முச்சங்க வாழ்வுகளில் தலைச் சங்ககால முழுவதும், ஓரளவு இடைச்சங்க காலத்திலும் இலங்கை தமிழகத்தின் ஒரு பகுதியாக, இன்றைய தென்னகத்தை விட அன்றைய பாண்டிநாட்டின் தலைநகரான தென் மதுரைக்கு அருகாமையிலேயே இருந்திருந்தது என்பதில் யாருக்கும் ஐயமிருக்க முடியாது. அந்நாளைய தமிழகப் பெரும் பேரரசன் நெடியோன் இமயம் வரையும் கடல்கடந்த கடாரம்வரையும் வென்றவனாயினும், இலங்கையை அவன் வெல்ல நேர்ந்ததில்லை. ஏனெனில் அது பாண்டி நாட்டின் ஒரு பகுதியாகவே இருந்தது. கடைச்சங்க காலம் இராமாயணத்திற்குப் பிற்பட்ட காலமே. அதன் பழம் பேரரசன் கரிகாலன் இலங்கையை வென்றே வட இமயத்தில் புலிக்கொடி பொறித்து, மேருவைச் செண்டாலடித்து அதிலும் தன் கொடி பொறித்தான். இடைக் காலப் பாண்டியப் பேரரசர், சோழப் பேரரசர், பாண்டியப் பெரும் பேரரசர் நாட்களில் ஈழம் கிட்டத்தட்ட தமிழகத்தின் மூவரசுகளுடன் நான்காம் அரசாகவோ, இரண்டரசர்கள் ஆண்ட காலத்தில் நான்காம், ஐந்தாம் அரசாகவோதான் மூவரசுகளுடனும் அவற்றின் நட்புப் பகைச் சூழல்களுடனும் ஒரே தேசீய அரசியற் சுழலில் சுழன்று வந்தது. விசயநகரப் பிறப்புக்குச் சற்று முன்னாகத் தமிழகத் தேசீயத்தில் ஒரு தளர்ச்சி ஏற்பட்டது. தென்னகத் தமிழகம், தென்னிலங்கை ஆகியவற்றின் தொடர்பு வகையின் இது ஒரு திருப்பத்தை உண்டு பண்ணிற்று. ஈழ மன்னன் பெரும் பெயர்ப் பராக்கிரமபாகு இலங்கை முழுவதையும் முதன் முதலாக ஒரே குடைக் கீழ்க் கொண்டு வந்தான். ஆனால் அவனுக்குப் பின் தீவு பழையபடி இரு அரசுகளாகப் பிளவுற்றது. இரண்டு அரசுகளின் போராட்டங்களிலும் தென்னகத் தமிழ் வீரர் பலர் சென்று இருபுறமும் படைத் தலைவர்களாகவும், அமைச்சராகவும் ஒரேவொரு சமயம் அரசராகவும் பணியாற்றினர். சிங்கள அரசர்களின் முன்னோர்களில் ஒருவனே சிங்களவனாய்விட்ட இத்தகைய ஒரு தமிழ் வீரப் படைத் தலைவனாய் இருந்தான். விசய நகர காலத்தில் இலங்கையில் தென்கோடியில் சிங்கள அரசு ஒன்றும், வடக்கே யாழ்ப்பாண அரசு ஒன்றும் இருந்தது. யாழ்ப்பாண அரசே மேலுரிமை கொண்டதாய் இருந்தது. 16, 17-ஆம் நூற்றாண்டுகளில் விசய நகரப் பேரரசர் அல்லது மதுரை நாயக அரசர்களுடனும், அவர்கள் சார்பில் படை நடத்திய சிற்றசராகிய பாண்டியருடனும் இந்த இலங்கையரசர் மோதிக் கொண்டனர். பண்டைத் தமிழகத் தேசீயத்தில் நிலவிய இலங்கை மரபின் தூவானத்தை இங்ஙனம் விசய நகர காலத்திலும் காண்கிறோம். இரண்டாம் அரிகரனின் மூத்த புதல்வனாகிய விரூபாக்கன் தந்தை தமிழ் மண்டலத் தலைவனாக இருந்த நாட்களிலேயே 1385-இல் தென்னகத்தின் தென்கோடி கடந்து தென்னிலங்கை மீதும் படையெடுத்துச் சென்றானென்றும், அந்நாட்டரசனைப் பணிய வைத்துத் திறைக்கொண்டு மீண்டதாகவும் அந்நாளைய விசய நகர ஆதாரங்கள் கூறுகின்றன. பிந்திய இலங்கைப் படையெடுப்புகளிலெல்லாம் பாண்டியர் பங்கு தெளிவாக அறியப்படுகிறது. பாண்டியர் நீடித்த நிலையில் இதிலும் பாண்டியர் அரசராக இல்லாது படைத் தலைவர்களாகப் பணியாற்றி யிருக்கலாம். சிலர் 1435-இல் அடுத்த நூற்றாண்டிலுள்ள ஆதாரங்கள் குறிக்கும் இலங்கை வெற்றிகளின் தொடக்க நிகழ்ச்சிகளே இவைகள் என்றும் கூறுகின்றனர். முதல் தேவராசன் இரண்டாம் அரிகரனுக்குப்பின் அவன் மூத்த புதல்வன் விரூபாட்கன் ஓர் ஆண்டும் புதல்வன் இரண்டாம் புக்கன் ஓராண்டும் மட்டுமே ஆண்டதாகத் தெரிகிறது. தந்தை நாளிலேயே இரண்டாம் புக்கன் இளவரசனாயிருந்ததை நோக்க, இந்த இரண்டு ஆண்டுகளிலும் ஓரளவு அரசுரிமை போராட்ட நிலையிலே இருந்திருக்க வேண்டும் என்னலாம். அயல்நாட்டுத் தொடர்புகள் இதனை ஓரளவு மெய்ப்பிக்கின்றன. எனவே இரண்டாம் அரிகரனின் மூன்றாம் புதல்வனான முதலாம் தேவராசன் ஆட்சி (1406-1422) 1404லேயே தொடங்கிற்று. என்னலாமானாலும், 1406லேயே போட்டியற்ற ஆட்சியாயிற்று. தேவராசன் ஆட்சியின் முதல் ஆறு ஆண்டுகளுக் குள்ளாகப் பகமனிப் பேரரசன் பிரூசுக்கும் அவனுக்குமிடையே ஒரு சிறு போராட்டம் நடந்தது. இச்சமயம் பகமனி ஆட்சிக்கு உட்பட்டிருந்த இரெய்ச்சூர் மண்டலத்திலுள்ள முட்கல் கோட்டை நகரில் வாழ்ந்த ஒரு பொற்கொல்லன் புதல்வியான அழகியே பேரரசர்களின் இத்திடீர் போராட்டத்திற்கு வழி வகுத்ததாகக் கூறப்படுகிறது. (அந்நங்கை மீது காதல் கொண்டு அவளைக் கைப்பற்றும் எண்ணத்துடனேயே தேவராசன் இரெய்ச்சூர்மீது படையெடுத்தான். ஆனால் போரில் பிரூசிடம் அவன் கடுந்தோல்வியுற்றதால், பங்கப்பூர்க் கோட்டையை விட்டுக் கொடுத்துத் தன் புதல்வியையும் பிரூசுக்கு மணம் செய்து கொடுத்து அவன் சமரசம் செய்து கொள்ள வேண்டி வந்தது. அது மட்டுமன்று, எந்த அழகிக்காக அவன் போராட்டம் தொடங்கியதாகக் கூறப்படுகிறதோ, அந்த அழகியை பிரூசின் மகனுக்கு மணம் செய்விக்கவும் அவன் உடன்பட நேர்ந்ததாம். ஒரு பொற்கொல்லன் பெண்ணின் கற்பைக் காக்க பிரூசு ஒரு பேரரசையே தாக்கி எதிர்த்த போராட்டமென்று வரலாற் றாசிரியர் பெரிஷ்டா இதை ஒரு சிறு வீர காப்பியமாக்கியுள்ளார். ஆனால் சயித் என்ற மற்றோர் இஸ்லாமிய வரலாற்றாசிரியர் இதனை இஸ்லாத்தின் புகழ் பரப்புவதற்கான தெய்வீகப் போராட்டமாக்குகிறார். இப்போராட்டத்தில் பிரூசு பானூர், மூசல்கல் மாவட்டங்களைக் கைக்கொண்டதாகவும் 33 இலட்சம் பொன் திறை பெற்றதாகவும் அவர் குறித்துள்ளார். வரலாற்றுக் கண் கொண்டு பார்த்தால் இப்போராட்டம் பிரூசு தூண்டிவிட்ட கொண்ட வீட்டெழுச்சியின் ஒரு பகுதியே என்பது விளங்கும். கொண்ட வீடாண்ட குமாரகிரி தன் பரந்த நாட்டை இரு பகுதியாக்கி, கொண்ட வீட்டில் தன் ஒன்றுவிட்ட உடன் பிறந்தானான பெத்தகோமட்டிவே மனையும், இராச மகேந்திரவரத்தில் தன் மைத்துனனான காடய வேமனையும் ஆட்சியாளராக விட்டுச் சென்றான். ஆயினும் 1403-இல் அவன் இறந்த பின் இருவரும் தத்தமக்குரிய பகுதியைக் கைப்பற்றிய துடன் நில்லாது தம் ஆட்சியைப் பரப்பி முழு அரசும் ஆளும் எண்ணத்துடன் அரசுரிமைப் போராட்டத்தில் முனைந்தனர்; பேரரசர் இருவருமே இருபுறங்களையும் தூண்டிவிட்டுத் தம் வல்லமைச் சூதாட்டமாடி வேடிக்கை பார்க்கலாயினர். பிரூசு கொண்டவீட்டை யாண்ட கோமட்டி வேமனை விசய நகரத்தின் மீதே ஏவினான். விசய நகரம் இச்சமயம் அரசுரிமைப் போராட்டத்தால் நலிவுற்றிருந்தது. இதன் பயனாக விசய நகரம் உதயகிரி மாகாணத்தின் பெரும் பகுதியை இழக்க நேர்ந்தது. 1413 வரை தேவராசன் அதை அவர்களிடமிருந்து மீட்க முடியவில்லை. அழகிக்காக நடந்த போர் உண்மையில் தேவராசன் இத்திசையில் திரும்பவொட்டாமல் தடுத்த சூழ்ச்சிப் போரே யாகும். ஏனெனில் அப்போரில் தோற்றதாகக் கூறப்படும் விசய நகரம் அதிலிருந்து விடுபட்ட அடுத்த ஆண்டிலேயே இழந்த உதயகிரி மாகாணப் பகுதியை மீட்டதுடன், பிரூசின் அரசியல் சூதாட்டத்திற்கு எதிர் சூதாட்டமும் ஆடத் துவங்கி விட்டது. கோமட்டி வேமனுக்கெதிராகத் தேவராசன் இராச மகேந்திர வரமாண்ட காடய வேமனுடன் உடன்படிக்கை செய்து கொண் டான். ஆனால் பிரூசின் நண்பனான தெலுங்குச் சோட மரபின் எறுவாக்கிளையின் தலைவன் அனதேவன் இராச கொண்டா. தேவாகொண்டா ஆகிய இடங்களிலுள்ள வேளமரின் துணையுடன் காடய வேமனை எதிர்த்துக் கோதாவரி, கிருட்டிணை யாறுகளுக்கிடையிலுள்ள நாட்டைக் கைக்கொண்டான். போரில் காடயவேமன் இறந்துவிடவே, தலைவனில்லாத அவ்வரசும் பிரூசிடம் பணிந்து அவன் மேலாட்சி ஏற்றது. காடய வேமனைக் கொன்ற கொப்புநூளார்த் தலைவன் காடயன் தலைகொண்ட கண்டன் (காடய வேமுனி தல கொண்ட கண்ட) என்ற விருதுப் பெயருடன் பிரூசால் நன்கு மதிக்கப் பெற்றான். கீழ்த்திசைச் சதுரங்கத்தின் முதல் ஆட்டம் இவ்வாறு 1417-இல் பிரூசுக்கே பெரு வெற்றியாக முடிவுற்றது. ஆனால் ஆட்டம் தேவராசன் பக்கமாகத் திரும்புவதற்குரிய மாறுதல் கட்டமாகவும் இந்தப் பெருவெற்றியே அமைந்தது. காடயவேமனின் புதல்வன் குமாரகிரி இப்போது சிறுவனாய் இருந்தான். ஆயினும் காடயவேமனின் படைத் தலைவனான அல்லாதன் அந்தச் சிறுவனையே தவிசேற்றினான். அவனுக்காக நாட்டைப் பிரூசிடமிருந்து மீட்கவும் துணிந்தான். அடுத்த போராட்டத்தில் அவன் பிரூசின் பக்கத்திலிருந்து திடுமெனத் தேவராசன் பக்கமாகத் திரும்பியதே தேவராசன் கைக்கு முன்னிலும் பெருவலுத் தருவதாயமைந்தது. விசயநகரப் படைகளும், இராசமகேந்திரவரம் படைகளும் ஒருங்குசேர்ந்து கொண்ட வீட்டரசனை முறியடித்து அந்நாட்டையே அவனிட மிருந்து கைக்கொண்டன. அது ஒரு தனியரசு என்ற நிலையே ஒழிக்கப்பட்டு அப்பரப்பு முழுவதும் விசயநகரப் பேரரசுக்கும், இராச மகேந்திரவர அரசுக்கும் இடையே பங்கிடப்பட்டது. இதே போரில் பிரூசின் நண்பராயிருந்த இராச கொண்டா வேளமரும் தெலுங்குச் சோடரும் முறியடிக்கப்பட்டனர். தெலுங்குச் சோடன் அனவேமனும் அவன் மைந்தன் வீரசோழனும் களத்தி லேயே மாண்டனர். அத்துடன் இராச கொண்டாவின் தலைசிறந்த கோட்டைகளான நல்கொண்டா, பாங்கல் ஆகிய இரண்டுமே 1420-இல் விசயநகரத்தின் கைவசப்பட்டன. பாங்கலை மீட்டும் பெறும் எண்ணத்துடன் பிரூஸ் அதை இரண்டாண்டுகள் கடுமுற்று கைக்கு உட்படுத்தியும் இறுதியில் வெற்றி காணாமலே மீள வேண்டியதாயிற்று. வீர வெற்றிகளுடனே தொடங்கிய பிரூசின் ஆட்சி தோல்வி மேகங்களினூடாக இறுதியில் மறுகிச் செல்ல வேண்டிய தாயிற்று. உள்நாட்டு நிகழ்ச்சியொன்று இம்மேகங்களை மேலும் இருளார்ந்தன ஆக்கிற்று. அந்நிகழ்ச்சி சில கூறுகளில் சிலப்பதிகார கால அரசியல் நிகழ்ச்சி ஒன்றை நினைவூட்டு கின்றது. சேரன் செங்குட்டுவனையும் இளங்கோவையும் இருவரின் தந்தையார் பேரவையில் கண்ட ஒரு குறிகாரன் இளையவனுக்கே அரசயோகம் என்று கூறியிருந்தான். அண்ணன் தம்பியரிடையே பிணக்கை எழுப்பிய இந்தப் போலி அறவோன் செயலை முறியடிக்கும் எண்ணத்துடன் இளங்கோ அன்றே புகழுலகாளும் கலை யார் துறவு மேற்கொண்டதாக இளங்கோவே சிலப்பதிகாரத்தில் தெரிவிக்கிறார். பிரூசும் அவன் இளவலும் வீற்றிருந்த பேரவையிலும் இதுபோல ஜமாலுதீன் என்ற இஸ்லாமிய ஞானி தோன்றி இளவல் அகமதுக்கு அரசயோகம் அணுகுவதாகக் கூறினான். தமையன் உளங்கெடாமலிருக்க அகமது என்ன கூறியும், தம்பியை வெறுப்பதன் மூலம் பிரூஸ் ஞானியின் உரைக்கு மெய்ம்மை யூட்டினான். மனச் சலிப்புற்ற அகமது தக்க துணையாதரவுடன் அண்ணனை முடிதுறக்க வைத்துத் தானே அரசனானான். தேவராசன் ஆட்சியின் பெரும்பகுதியும் பகமனிப் போரிலேயே கழிந்தது. அவன் இறுதி வெற்றியாகக் குறிக்கத் தக்கது பேரரசு எல்லையிலேயே நிகழ்ந்த ஓர் உள்நாட்டு வெற்றியேயாகும். உதயகிரி மாகாணத்தின் எல்லைப்புறத்தில் புட்பகிரி நாட்டைப் பேரரசின் பேராட்சியின் கீழே தெலுங்குச் சோடரின் அப்ரதிமாபாக்கினை மரபான அகோபல சோழன் ஆண்டு வந்தான். அவன் தலைநகரான அகோபலம் விசயநகருக்கடுத்த படியாக அந்நாளில் அகல் உலகவாணிகத் தொழில்களமாய் இலங்கி வந்தது. தேவராசன் ஆட்சியிறுதியில் அவன் கிளர்ச்சி தொடங்கினான். தேவராசன் தன் புதல்வனான இளவரசன் விசயராயனுடன் படையெடுத்துச் சென்று அகோபல சோழனை முறியடித்ததுடன், அவன் தலைநகரத்தையும் தரைமட்ட மாக்கினான். அந்நகரின் உள்நாட்டு அயல்நாட்டு வாணிகரும், தொழிலாளரும் வெவ்வேறு அயல் நகரங்களுக்குச் சென்று குடியேறிப் புதுவாழ்வு தொடங்க வேண்டியதாயிற்று. ஆனால் அதன் வாணிக, தொழிற்களங்கள் பெரிதும் வெற்றித்திருநகருக்கே புடைபெயர்ந்ததால், திருநகர் முன்னிலும் சிறப்புற ஓங்கி வளர்ந்தது. வெற்றித் திருநகரின் மூலவளமும் வலிமையும் முதலாம் அரிகரன், முதலாம் புக்கன் ஆட்சிகட்குரியன. முதலாம் அரிகரன் காலத்திலேயே புக்கனால் அதன் மூல அமைப்பு வேலைகள் முற்றுவிக்கப்பட்டன. விசயநகரப் பேரரசர் யாவருமே அந்நகரின் வளத்திலும் வளர்ச்சியிலும் அக்கரை கொண்டு அதன் புகழில் பங்கு கொண்டனர். ஆனால் இப்புகழில் முதலாம் தேவராசன் பங்கு பெரிது. துங்கபத்திரை ஆற்றுக்குக் குறுக்கே பெரிய கல்லணை கட்டி நகருக்கு நன்னீர்க் காலெடுத்துக் குடிநீர், பாசனநீர் வசதிகள் செய்தவன் அவனே. இதற்குமுன் நன்னீர் இல்லாததனால் மக்கள் குடிநீருக்குப் பலவகை அவதிகளுக்கும் ஆளாகியிருந்தனர். அத்துடன் நகர் கோட்டை கொத்தள நகராக இருந்ததேயன்றி அழகுச் சோலைவன நகராகக் காட்சி தரவில்லை. தேவராசன் மாடமாளி கைகளைப் பெருக்கியதுடன் எங்கும் பூங்காக்கள், பழமரத்தோட் டங்கள், நிழலுக்குரிய தோப்புக்கள் எடுப்பித்தான். இவற்றால் நகரிலிருந்து பேரரசர்க்குக் கிட்டிய வருவாய் மிகுதி மட்டுமே ஆண்டுக்கு 14 இலட்சம் பொன் ஆயிற்று என்று அறிகிறோம். முதலாம் விசயராயன், இரண்டாம் தேவராயன் வடதிசைப் போர்கள் முதலாம் தேவராயன் ஆட்சிக்குப்பின் அரசுரிமைத் தொடர்பில் சிறிது குழப்பம் காணப்படுகிறது. தேவராயனின் மூத்த புதல்வன் இராமச்சந்திரராயன் இரண்டு மாதங்களே தவசிலிருந்தான். இளைய புதல்வனான முதலாம் விசயராயனும் நான்கு ஆண்டுகளே (1422-1426) ஆண்டான். விசயராயன் புதல்வன் பிரௌட தேவராயன் என்ற இரண்டாம் தேவராயன் ஆட்சி (1426-1446) பின்னரே தொடங்குகிறது. விசயநகர வரலாற்றுத் தொடக்கத்தில் ஐவர் உடன் பிறந்தார் ஒருங்கிருந்து ஆட்சி செய்தது போலவே இச்சமயத் திலும் தம்பியுடன் அண்ணனும், தந்தையுடன் மகனுமாக மூவர் ஒருங்கே ஆட்சி தொடங்கினர் என்று வரலாற்றாசிரியர் சாதிக்கின்றனர். ஏனெனில் மூவர் அரசுரிமை ஆதாரங்களும் ஒரே காலத்தில் காணப்படுகின்றன. விசயராயன் குறுகிய ஆட்சியில் பகமனிப் படை யெடுப்பைத் தவிர வேறு நிகழ்ச்சிகள் எவையும் கிடையா. பகமனிப் பேரரசன் அகமதுஷா (1422-1435) தன் தமையன் ஆட்சியில் பகமனிக்குக் கிடைத்த தோல்வியையும், அவமதிப்பையும் துடைக்கும் எண்ணத்துடன் விசயராசன் மீது படையெடுத்தான். இரு பேரரசுகளின் படைகளும் துங்கபத்திரை ஆற்றின் கரையில் மோதின. விசயராயன் படைவீட்டின் மீது அகமது எதிர்பாராமல் தாக்கியதால் இப்போரில் விசயநகரம் தோல்வியுற நேர்ந்தது. அத்துடன் அமையாமல் அவன் பேரரசின் பரப்பெங்கும் சூறையாடி மக்களைக் கொன்று குவித்து வந்தான். கொலையுண்டவர் தொகை 20,000 என்ற எண்ணை எட்டிய போதெல்லாம் கொலைத் தொழிலிலிருந்து சிறிது இடை ஓய்வு எடுத்துக் கொண்டு ஓர் ‘இருபதினாயிர’ விழாக் கொண்டாடிய பின் அடுத்த இருபதினாயிரத்தை முடிக்கும் முயற்சி தொடர்ந்தான். இவ்வாறு குற்றமேதுமறியாப் பொதுமக்களை நூறாயிரக் கணக்காகக் கொன்று பிணங்குவித்ததாக இஸ்லாமிய வரலாற்றாசிரியர் பெரிஷ்டா தெரிவிக்கிறார். விசயராயன் ஆட்சி கடந்து இரண்டாம் தேவராயன் ஆட்சி யில் அகமதின் கை விசயநகர் மீது நேரடியாகச் செல்லவில்லை. அவன் பேராவலே அவன் கைகளைச் சில காலம் கட்டி வைத்தது. நடு ஆசியப் புயலான தைமூர் பெயரளவில் பகமனிக்குக் குஜராத்தையும், மாளவத்தையும், உரிமைப்படுத்தியதாகக் கூறியிருந்தாலும், பிரூஸ் காலத்தில் பகமனி இதைச் செயற்படுத்த எண்ணவில்லை. ஆனால் அகமது அதுவகையில் துணிந்து இரண்டு அரசுகளுக்கும் இடைப்பட்ட காண்டேஷ் நாட்டின் அரசன் நாசிர்கானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டான். காண்டேஷ் அரசன் புதல்வி இதனறிகுறியாக அகமதின் புதல்வன் இளவரசன் அலாவுதீனுக்கு மணமுடித்து வைக்கப் பெற்றாள். பகமனியின் வலிமையைக் குறைக்கும் எண்ணத்துடன் மாளவ அரசன் பகமனியின் நேச அரசனான கேர்ளா நாட்டு நரசிங்கனைத் தாக்கினான். நரசிங்கம் பகமனியின் உதவி கோரினான். 1428-ல் தபதியாற்றுப் போரில் அகமது வெற்றி பெற்றான். ஆனால் இரண்டாண்டுகளுக்கும் அவன் குஜராத்து மீது படை யெடுத்து அதன் எதிர்தாக்குதலுக்காளானான். மாளவ அரசனும் இச்சமயம் கேர்ளா அரசன் மீது பாய்ந்து அவனை வென்று நாட்டைக் கைப்பற்றிக் கொண்டு இன்னொரு புறம் பகமனியைத் தாக்கினான். இந்நிலையிலும் அகமது ஒரு வழியாகத் தன்னைக் காத்துக் கொள்ள முடிந்ததானாலும், குஜராத்தின் மீதும், மாள வத்தின் மீதும் தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுத்துக் கேர்ளா நாட்டில் தன் பங்காகப் பேராரைப் பெற்று அமைய வேண்டியவன் ஆனான். பகமனி வடக்கிலும் மேற்கிலும் ஈடுபட்டிருந்த சமய முழு வதும், தேவராயன் கவனம் கீழ்திசை நோக்கி ஓடியிருந்தது. கொண்ட வீடு அவனை கைவிட்டு விட்டபடியால் அது கடந்து சோழப்பேரரசுக் காலத்தில் வடகலிங்கம் என்றழைக்கப்பட்ட ஒரிசாமீது அவன் படையெடுக்க முனைந்தான். ஆனால் தென் கலிங்கம் அல்லது இராசமகேந்திர வரமாண்ட அல்லாதன் இடை நின்று இணக்கம் உண்டுபண்ணினான். ஆனால் அல்லாதனுக்குப் பின் இராசமகேந்திர வரமாண்ட அவன் புதல்வர் அல்லயவேமன், வீரபத்திரன் ஆகியவர்கள் தாமே ஒரிசா மீது படையெடுத்தார்கள். எனினும் 1435-இல் ஒரிசாவின் தவிசேறியிருந்த கபிலேசுவரன் ஒரிசாவின் கசபதி மரபுக்கே இளவள ஞாயிறு போன்றவன். அவன் தாக்கியவர்களைத் துரத்தியடித்ததுடன் நில்லாது, தாக்கியவர்களை அவர்கள் தாயகத்திற்குள்ளேயே சென்றும் தாக்குதல் தொடர்ந்தான். அல்லயத் துணைவர்கள் கோரிக்கை மீது தேவராயன் படையுடன் சென்று கபிலேசுவரனை வெளியேற்றி உதவினான். ஆனால் பேரரசின் தொலையுதவி இராசமகேந்திரவரத்துக்கு நிலையுதவியா யமையவில்லை. வளர்ந்து வந்த கசபதி அரசு இராசமகேந்திரவரத்தை எளிதில் விழுங்கி ஏப்பமிட்டது. வேழநாடும் ஈழநாடும் வென்ற விறல் வேந்தன் விசயநகரப் பேரரசர்களுக்குள் மூன்றாம் மரபுக்குரிய கிருட்டிண தேவராயனுக்கு அடுத்தபடியாகப் புகழ்மிக்க பேரரசன் இரண்டாம் தேவராயனே. அவன் காலத்துக்குள் பேரரசின் எல்லையும், ஆற்றலும் மூன்று கடலளாவிப் பரந்திருந்தன. ஆனால் புகழுக்குக் காரணம் இது மட்டுமல்ல. மற்ற அரச பேரரசர்கள் ஆட்சிகளில் அரிதாக ஒரு பண்பு விசயநகரப் பேரரசின் ஆட்சியில் இதற்குள் நீடித்து வளர்ந்து வளந்தந் திருந்தது. பேரரசர் ஆட்சிப் பரப்பிலும், ஆட்சி வலுவிலும் மட்டும் கருத்துச் செலுத்தவில்லை. குடிகள் நல்வாழ்விலும் வளத்திலும், குடிகளின் நல்லெண்ணத்திலும் பேரரசர் முழுக்கவனம் செலுத்தி வந்தனர். தேசீய இயக்கத்தோடிணைந்த, அதில் மலர்ந்த பேரரசு அது என்பதே இதற்குரிய வரலாற்று விளக்கம் ஆகும். இரண்டாம் தேவராயன் காலத்திய புகழுக்கு மூன்றாவது ஒரு காரணமும் உண்டு. பேரரசின் இன்றைய புகழ் மலர்ச்சியில் கூட அதன் பங்கு பெரிது. பேரரசின் புகழ் உலகின் நாற்றிசையிலும் பரவி, தொலைநாடு சூழ்வரவாளர், அரசியல் வாணர், அரசதூதர் ஆகியோர் வந்து கண்டு பேரரசை வாயாரப் புகழ்ந்தெழுதத் தொடங்கியது இரண்டாம் தேவராயன் காலமே. முந்திய ஆட்சியிறுதியிலேயே 1420-இல் இத்தாலிய நாடு சூழ்வரணர் நிக்கோலோடி காண்டி விசயநகரத்துக்கு வந்து அதுபற்றிய தம் தகவல்களை வரைந்து சென்றிருந்தார். இரண்டாம் தேவராயன் ஆட்சியிறுதியில் பாரசீக நாட்டின் அரசியல் தூதராகவே அப்துல்ரசாக் என்பவர் நகரில் வந்து பேரரசன் விருந்தினராகத் தங்கியிருந்து, தாம் கண்டதையும் கேட்டதையும் ஆய்ந் துணர்ந்ததையும் உணர்ச்சியும் வாய்மையும் மிக்க இயல் நடையில் விரித்துரைத்துச் சென்றுள்ளார். முந்திய விசய நகரப் பேரரசர் வரலாறுகள் வகையில் நமக்கு உண்மையை அறிய வாய்ப்பின்றிப் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் நாம் பெரும்பாலும் வட திசைப் புயலின் சார்பான இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களின் புனைந்துரை, மிகையுரைகளையே ஆதாரங்களாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. கல்வெட்டாதாரங்கள், பிற்கால உரைகள் இங்கும் நமக்கு உதவுகின்றன. ஆனாலும் இது அவை மிகைபட்ட புனைந்துரைகளாயிருத்தல் வேண்டுமென்று மதிக்க உதவுகிறதே யன்றி எது மெய்ம்மை, எது புனைந்துரை என்றறிய உதவவில்லை. சிறப்பாகப் பகமனி, விசய நகர்ப் பேரரசுகளின் தொடர்புகளில் கல்வெட்டாதாரங்களோ, பிற்கால நிலைகளோ பொய்ப்பிக்கும் அளவில் பகமனியின் வீரமும் பெருமையும் பெருக்கப்பட்டு விசய நகரப் பேரரசரும் மக்களும் கோழைகள் என்றும் காட்டப் பட்டுள்ளது. வெளிநாட்டார் மதிப்புரைகள் இல்லாதவிடத்துப் பேரரசின் மெய் வரலாறு நமக்கு முற்றிலும் மறைக்கப்பட்டே யிருக்கும் என்பதில் ஐயமில்லை. முற்கால விசய நகர வரலாறுகளை வடதிசை இஸ்லாமியப் புயலலை நமக்கு மறைக்கிறதென்றால், பிற்கால விசயநகர வரலாறுகளை அதே வடதிசை இந்துப் புயலை நமக்குத் திரித்துக் காட்டுகிறது. விசய நகரத் தொடக்கக் காலத் தென்னகத் தேசீய இயக்கத்தை “இந்து தேசீயமாகவே” கொள்வதுடன் அமையாமல் அவ்வலை இந்துக் கற்பனைத் தேசீயத்தை அளவை கோலாகக் கொண்டு பேரரசரின் சீரிய தேசீய நோக்கையெல்லாம் சீரற்ற இந்து தேசீயத்துக்கு மாறான குறைகளாகக் கணித்துக் காட்டுகின்றது. நல்ல காலமாக, மறைக்கும் திரையைவிட இந்தத் திரித்துக் காட்டும் திரை மாயத்தன்மை மிக்கதென்றாலும், அந்த அளவு மயக்கம் நீக்கித் தெளிவு பெற முடியாததன்று. வடதிசையில் அமைதி ஏற்பட்டபின் இரண்டாம் தேவ ராயன் தென்திசை மாகாணங்களைச் சீரமைப்பதிலும், நேராட்சி யின் வலுவுக்குக் கொண்டுவருவதிலும் கவனம் செலுத்தினான். தமிழக ஆதாரங்களும், கேரள நாட்டின் “மலையாளப்பழம்” என்ற ஏடும் அவன் தமிழக வீர உலா பற்றிய பல செய்திகளை நமக்குத் தருகின்றன. விசய நகரத் தொடக்க காலத்தில் பாண்டியர் ஆட்சி தளர்ந்திருந்ததால் வட தமிழகத்தில் சம்புவராயர் வலிமையுற்று, விசயநகரத் தலைவர்களால் வெல்லப்பட்டபின் அவர்கள் நட்புப் பெற்று மீட்டும் ஆட்சித் தலைவர்களாக விளங்கி வந்தனர். அது போல மதுரைச் சுற்றுப்புறத்திலும், தென் தமிழகத்திலும் மிகத் தொல் பழங்காலப் புராணக் கதை களுக்குரிய மாவலியின் மரபினர்களாக வாணாதி ராயர்கள் வலிமையுடையவர்களாயிருந்தனர். சில சமயம் தென்னகத்தின் வடதிசையிலும், தமிழகத்தின் வடதிசையிலும் இவர்கள் ஆண்டதுண்டு. இரண்டாம் தேவராயன் வீர உலாவில் இவர்களைக் கீழடக்கப் பாண்டியன் பெரிதும் உதவி யிருந்தான். தளர்ந்துவந்த பாண்டிய மரபுக்கும், வளர்ந்துவந்த விசயநகர மரபுக்கும் இந்த நட்பு விரூபாக்கன் காலத்திலும் அதற்கு முன்னும் பின்னும் புகழ் வளர்த்தே வந்துள்ளது காண்கிறோம். தமிழக உலாமுடிவில் பேரரசன் மலையாளக் கரை வழியாகச் சென்று கொல்லம் அரசனையும் மற்றக் கேரளத்தின் சிற்றரசர்களையும் வென்றடக்கினான். “வேழநாடு வென்ற வேழவேட்டைக்காரன்” என்று தென்னக ஆதாரங்கள் அவனைச் சிறப்பிக்கின்றன. மேல்கரை முழுதும் குமரி முதல் கோவா வரை விசயநகரப் பேரரசின் மேலாட்சிக்குரியதாயிற்று. பேரரசு கீழ்கடல் தென் கடல்களைப் போலவே மேல்கடலும் அளாவிற்று. கள்ளிக்கோட்டை ஆண்ட சாமூதிரி ஒருவனே மேல் கரை யில் தேவராயனுக்கு முற்றிலும் உட்படாத தனியரசன். பாண்டி யரைப் போலவே அவனும் கடற்படையுடையவனா யிருந்ததுடன் விசயநகரத்தின் ஆற்றலை மதித்து நேச உறவு கொண்டிருந்தான். பாரசீகத் தூதன் அப்துர் ரசாக் முதலில் அவனிடமே விருந்தின னாக வந்து தங்கியிருந்தான். தேவராயன் அவ்வருகையறிந்து அவனைத் தன்பால் அனுப்பும்படி பணித்த பின், சாமூதிரி அவனை வெற்றித் திருநகருக்கு அரசமதிப்புடன் அனுப்பி வைத்தான். தமிழக உலாவின் பின் விசயநகரத்தின் தமிழக மண்டலத் தலைவனாகவும், படைத்தலைவனாகவும் இலக்கண்ணராயன் அமர்த்தப் பட்டிருந்தான். அவன் பாண்டியன் தொடர்புடன் தமிழக ஆட்சி சீரமைத்ததன்றிப் பண்டைத் தமிழ் மரபும் விரூபாக்கன்கால விசயநகர மரபும் பின்பற்றி இலங்கை மீது படையெடுத்தான் என்று தமிழக ஆதாரங்கள் கூறுகின்றன. மதுரை இஸ்லாமிய ஆட்சி ஒழிக்கப்பட்ட பின் பாண்டியர் ஆண்ட பரப்புக் குறைந்ததேயன்றி அவர்கள் வலிமையோ புகழோ குன்றவில்லை. மேல்கரைச் சிற்றரசர்களைப் போல அவர்களும் நில அரசைப் பெருக்கிக் கடலரசாக வாழ்ந்து வந்திருந்தனர் என்னலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி, கொற்கை, கரிவலம் வந்த நல்லூர் முதலிய பல நகரங்களைத் தலைமையிடமாகக் கொண்டு அவர்கள் 17-ஆம் நூற்றாண்டுவரை நீடித்து வாழ்ந்தனர். முதலாம் தேவராயன் காலத்தில் ஜாதவர்மன் விக்கிரம பாண்டியனும் (1401-1422) இரண்டாம் தேவராயன் காலத்தில் அவன் புதல்வன் அரிகேசரி பராக்கிரம பாண்டியனும் (1422-1463) கொற்கையைத் தலைநகராகக் கொண்டு கிட்டத்தட்ட இன்றைய திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டங்கள் முழுவதிலும் ஆட்சி செய்து வந்தனர். அரிகேசரி பாண்டியன் குடிநலமும், குடிவளமும் அவாவி விசுவநாதப் பேரேரி போன்ற பாசன நீர்நிலைத் தேக்கங்களை “நவமாக” இயற்றினானென்று கல்வெட்டுக்கள் அவனைப் பாராட்டுகின்றன. தென்காசியிலும், திருக் குற்றாலம், திருப்புடைமருதூர் (அம்பாசமுத்திரம்) ஆகிய திருத்தலங்களிலும் அவன் தெய்வத் திருப்பணிகள் பல செய்தான். அவன் பெயரால் தென்காசிக் கோயிலில் நிலவும் கவிதைக் கல்வெட்டு திருவாசகத்தின் மனமுருக்கும் பண்புடையதாய், அவன் பக்திக்கும், தமிழ்ப் பற்றுக்கும், மக்கள் பாசத்துக்கும் இன்றும் சான்றாகத் தமிழர் காதுகளில் ஒலிக்கின்றது: சேலேறியவயல் தென்காசி ஆலயம் தெய்வச்செய- லாலே சடைந்தது, இங்குஎன் செயலல்ல! அதனைஇன்னும் மேலேவிரிவு செய்தேபுரப்பார் அடிவீழ்ந்து அவர்தம் பால் ஏலம் செய்து பணிவன் - பராக்கிரம பாண்டியனே! அவன் மறைந்தபோது கோயில் கல்வெட்டு நன்றியறிதலுடன் அவன் பக்தியையும் தமிழ்ப்பற்றையும் மற்றொரு திருவாசகப் பண்பார்ந்த பாடலால் விளக்குகின்றது: கோதற்றபக்தி அறுபத்து மூவர்தம் கூட்டத்திலோ, தீதற்ற வெள்ளிச் சிலம்பகத்தோ, செம்பொன் அம்பலத்தோ, வேதத்திலோ, சிவலோகத்திலோ, விசுவநாதன் இரு பாதத்திலோ வென்று புக்கான் பராக்கிரம பாண்டியனே! 1438-க்கு முன்பே இப்பாண்டிய அரசன் அரிகேசரி பராக்கிரமன் விசயநகரப் படைத்தலைவர் இலக்கண்ண தண்ட நாயகர் துணையுடன் இலங்கையில் பல போர்களாற்றி அத்தீவிலிருந்து பேரரசுக்குத் திறை கைக்கொண்டான் என்று பாண்டியர் கல் வெட்டுக்களும், விசயநகர ஆதாரங்களும் ஒருங்கே தெரிவிக் கின்றன. “சிங்கையில், அனூரையில், இராசையில், செண்பையில், விந்தையில், அறந்தையில், முதலையில், வீரையில், வைப்பாற்... மன்னரை வெந்கண்டு...” எனப் பாண்டியர் கல்வெட்டு ஒன்று சிதைந்த நிலையிலும் எட்டுப் போர்கள் வரை பெயர் குறிக்கின்றன. இவ்வெற்றிகளின் பயனாகவே 1438-லிருந்து விசய நகர மண்டலத் தலைவன் இலக்கண்ண தண்டநாயகன் “தட்சிண சமுத்திராதிபதி” என்ற பட்டத்தையும், பேரரசன் இரண்டாம் தேவராயன் “ஈழம் திறை கொண்ட” என்ற அடைமொழி விருதையும் மேற்கொண்டனர். இதே அரிகேசரி பராக்கிரம பாண்டியனின் பிற கல்வெட்டுக்கள் சங்கரநயினார் கோயில், திருக்குற்றாலம், முதலைக் குளம், வீரகேரளம் புதூர் ஆகிய இடங்களில் நடந்த போர்களில் தன் பகைவர்களை வென்று புகழெய்தினான் என்று கூறுகின்றன. இவற்றில் சிலவேனும் சேர அரசர்களை எதிர்த்த போர்கள் என்று கருத இடமுண்டு. கடைசி இரு போர்க் களங்களும் இலங்கைப் போர்க்களங்களாகக் குறிக்கப்பட்ட வற்றுடன் தொடர்புடையனவாகத் தோற்றுகின்றன. இவற்றை நோக்க இரு சார்பான கல்வெட்டுக்களிலும் இலங்கை, சேரநாட்டுப் போர்கள் விரவிக் கூறப்பட்டுள்ளனவோ என்று கருத இட முண்டு. பழய தமிழ் வரலாற்று மரபு இதற்கு மற்றொரு விளக்கம் தருகிறது - விரூபாக்கள் காலத்திலும் சரி, அதன் பின்னும் சரி உள்நாட்டுப் பேரரசராகிய விசய நகரம் கடல் கடந்து படைக்கரம் நீட்ட வேண்டிய அவசியம் இயல்பாக ஏற்பட்ட தென்று. பண்டைத் தமிழக வரலாற்றில் முத்தமிழ் அரசுகளுடன் ஒத்த நாலாம் அரசாக ஈழம் பின்னிச் சுழன்றது போல, விசயநகர, மதுரைநாயக அரசர்கள் காலத்திலும் சேரப் படையெடுப்பே இலங்கைப் படையெடுப்பையும் இன்றியமையாததாக்கியிருக்க வேண்டும். சேரனுக்கு ஈழ அரசர் உதவி செய்து தென்னக அரசியலில் தலையிட்டதனாலேயே, சாமூதிரி வகையில் இறுதிவரை தலையிடாத விசயநகரப் பேரரசர் கடல் கடந்து இலங்கை வகையில் தலையிட நேர்ந்திருக்க வேண்டும் என்னலாம். தேசீயப் பேரரசுக்கு அடித்தளமிட்ட சிற்பி இரண்டாம் தேவராயன் பேரரசின் வலிமைக்குள் புகழுக்கும் அடித்தள மிட்டவன் ஆவான். இதை அவன் படைத் துறைச் சீர்த்திருத்தங்களும் இலக்கிய ஆதரவும் காட்டும். மற்ற அரசர் பேரரசர்களைப் போலப் போர் வெற்றிகளையும், அவற்றுக்கான உடனடி வகை துறைகளையும் மட்டும் கவனித்தவனல்லன், தேவராயன், தொலை வெற்றிகட் குரிய நிலைக் காரணங்களையும் வெற்றி பெருக்கும் முறைமை களையும் அவன் ஆய்ந்தாராய்ந்து வந்தான். ஆட்சித் திறமையோ வளமோ அற்ற வடதிசைப் புயலிலும், பகமனிப் படையிலும் குதிரை வீரரும் வில்லாளரும் மேம்பட்ட சிறப்புடையவர்களாய் இருந்ததை அவன் குறித்து நோக்கியிருந்தான். இக்குறைகளை நிறைவுபடுத்த அவன் முன்னிலும் மிகுதி விழுக்காட்டில் இஸ்லாமியப் படைத்தலைவர்களையும் படைவீரர்களையும் சேர்க்கவும், நகரில் இஸ்லாமியருக்கென்று அரசியல் செலவிலேயே பள்ளி கட்டிக் கொடுக்கவும் திட்டம் செய்தான். இஸ்லாமியர் சமய உணர்ச்சியை மதித்து, இஸ்லாமியத் திருமறையான திருக்குரானையே அவன் அவர்கள் ஆணை வணக்கங்களின் முன்னிலைச் சின்னமாக்கினான். பாலறியாத குருடன் பலருடன் உசாவி பால்வெள்ளை, வெள்ளை கொக்கின் நிறம், கொக்கு முடக்கிய கைபோல் வளைந்திருக்குமென்றறிந்து பால் வளைந்து இருக்குமென்று முடிவு செய்து கொண்டதாகக் கதை கூறுவதுண்டு. அதுபோல தென்னகத் தேசீயத்தை இந்துமதத் தேசீயமாகவும், இந்து மதமாகவும், அதை மீண்டும் வடதிசை அயலின, அயற் பண்பாட் டலைக்குரிய திறமாகவும் கொண்டுவிட்ட வரலாற்றாசிரியர்கள், விசயநகரப் பேரரசின் இத்தகு தென்னகத் தேசீய பண்பைக் கண்டு அங்கலாய்த்துக் கொள்கின்றனர். சிலர் சீற்றங்கூடக் கொள்கின்றனர். “அகந்தை பிடித்த இந்த இஸ்லாமிய வீரர்கள் தவிசிலிருக்கும் மன்னன்கூட இஸ்லாமியனாய் இல்லாவிட்டால் வணங்காதவர்கள். அதனால் அவன் முன் வைத்த குரானையே வணங்கினார்கள். இத்தகையவர்கள் அரசருக்கு உண்மையாய் இருப்பார்கள் என்பது ஐயுறவுக்குரியதாகும்” என்று அறிஞர் சூரிய நாராயணராவ் வரைகிறார். விசய நகர அழிவுக்கே இச்செயலும் இது போன்ற மதவேறுபாடற்ற செயல்களும் காரணமென்று “இந்து மத தேசீயம்” சார்ந்த வரலாற் றாசிரியர்கள் விளக்குகிறார்கள். “அங்க, வங்க, கலிங்க மன்னர்கள் பேரரசன் முன்னிலையில் காத்துக் கிடந்தனர். அவர் குதிரைப்படையில் 10,000 இஸ்லாமியர் இருந்தனர்” என்று அந்நாளைய ஆதாரம் கூறுகிறது. இஸ்லாமியரை மற்றத் தென்னக மக்களுடன் மக்களாக, வீரருடன் வீரராக நடத்திய இந்தப் பண்பு இரண்டாம் தேவராயன் காலத்துப் பண்பன்று, அவனோடு நின்றுவிட்ட பண்புமன்று. முந்தய பேரரசர்களிடமும் பிந்தய பேரரசர் களிடமும் தொடர்ந்து இருந்து வந்த கோட்பாடே, இரண்டாம் தேவராயன் அதனை அரசியல் துறையிலும் படைத் துறையிலும் பேரளவில் நிறைவேற்றிய முதற்பேரரசன் மட்டுமே. இது தென்னகத் தேசீயத்தின் தோல்வியென்றால், அது தென்னகத்தில் புகுந்த ஏதோ ஒரு கோளாற்றின் காரணமே தவிர, தேசீயத்தின் தவறல்ல என்று காண்டல் எளிது. உண்மை யாதெனில் வடதிசைப் புயற்பண்பு இஸ்லாமியர், இஸ்லாமியர் அல்லாதார் ஆகிய மக்களையும் அரசு பேரரசுகளையும்கூடச் சில நாள் அலைக்கழித்துத் தென்னகத் தேசீயத்துக்கும் அகல் உலகப் பண்பாட்டுக்கும் குந்தகமாயிருந்து வந்தது என்பதே. பேரரசு மக்கள் இலக்கியம் வளர்க்கும் பேரரசாகவும் இரண்டாம் தேவராயன் காலத்திலிருந்தே வளர்ந்திருந்தது. பேரரசனே பெரும்புலவன், சமஸ்கிருதத்தில் அவன் பெயராலேயே காவியமொன்றும், பிரமசூத்திரப் பேருரை ஒன்றும் இயங்குகின்றன. அவன் காலத்திலும் அவன் அவையில் இருந்த புலவர்கள் எண்ணற்றவர்கள். மக்கள் மொழிகளாகிய தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மூன்றுடன் சமஸ்கிருதமும் அவன் காலத்திலும் அதன் பின்னும் பேரரசர் ஆதரவு பெற்றன. தவிர அரசவைப் புலவர் மரபும் (ஞடிநவ டுயரசநயவந) அவன் காலத்திலிருந்தோ அதற்கு முன்னிருந்தோ தொடங்கியிருந்தன. அவன் காலத்தில் அப்பதவி வகித்த பெரும் புலவன் திண்டிமனை முறியடித்து மக்கட் புலவர் சீநாதர் அடைந்த சிறப்புப் பற்றிய கதையைத் தெலுங்கு மரபு பேணியுள்ளது. தங்கம் என்றழைக்கப்பட்ட அந்நாளைய பொன் நாணயங்களாலேயே பேரரசன் சீநாதரைத் திருமுழுக்காட்டுவித்தானென்று அம்மரபு குறிக்கிறது. சங்ககால சேர சோழ பாண்டியர் வண்மையையே இது நினைவூட்டுகிறது. பேரரசர் இரண்டாம் தேவராயன் அவையில் பாரசீகத்தூதன் அப்துர் ரசாக் சில ஆண்டுகள் தங்கியிருந்து 1443-லேயே தன் தாயகமான பாரசீக நாடு சென்றான். அவன் இருந்த நாட்களிலேயே தேவராயனை அவன் இளவல்களில் ஒருவன் கொலை செய்ய முயற்சி செய்ததாக அறிகிறோம். இச்சமயம் பகமனியின் அகமது ஷாவின் புதல்வன் அலாவுதீன் அரசனா யிருந்தான். அவன் இந்த நிலையைப் பயன்படுத்தி விசய நகரத்தின் மீது படையெடுத்தான். இரேய்ச்சூரில் நடைபெற்ற போரில் தொடக்கத்தில் விசய நகரப் படைகள் வெற்றி பெற்றாலும், இறுதியில் பகமனியின் கையே மேலிட்டதாகக் கூறப்படுகிறது. அலாவுதீன் தன் தந்தை காலத்திலேயே காண்டேஷ் அரசனின் புதல்வியை மணம் செய்திருந்தான். 1437-இல் அவன் கொங்கண நாட்டை வென்று அதன் அரசனான சங்கமேசுரன் புதல்வியையும் விரும்பி மணந்திருந்தான். முதல் மனைவியைப் புறக்கணித்து இரண்டாம் மனைவியிடமே அவன் உயிராயிருந்த தனால், அரண்மனையிலும் ஆட்சியிலும் அவன் நாளில் நாட்டு முஸ்லீம்கள் (தென்காணியர்), அயல்புல முஸ்லீம்கள் என்ற கட்சி வேறுபாடு தோன்றி பகமனி அரசியலே தொடர்ந்து இரண்டு பட நேர்ந்தது. தேவராயன் ஆட்சியில் அவன் ஆட்சிக்கால நகரையும் பேரரசுப் புகழையும் நேரில் கண்டெழுதிய அப்துல் ரசாக்கின் விரிவுரைகளில் நமக்கு அவை இன்றும் உயிரோவிய மாக நின்றாடுகின்றன. மல்லிகார்ச்சுனன் ஆட்சிக்காலச் சரிவு இரண்டாம் தேவராயனுக்குப்பின் அவன் மூத்த புதல்வன் இரண்டாம் விசயராயன் ஒரே ஓர் ஆண்டும், இளைய புதல்வன் மல்லிகார்ச்சுனன் (1447-1465) பத்தொன்பது ஆண்டுகளும் ஆட்சி செலுத்தினர். மல்லிகார்ச்சுனன் திறமையோ தகுதியோ சிறிது மற்றவன். அவன் இரண்டாம் தேவராயன் காலப் புகழைப் படிப்படியாகச் சிதறவிட்டான். அடுத்த ஆட்சிகளும் இதனைச் சரி செய்ய இயலவில்லை. ஆயினும் பேரரசின் பெருங்குடி மக்களில் பலர் வீரத் தலைவராகிப் பேரரசு முற்றிலும் சரியாமல் காத்ததுடன் நில்லாது. அடுத்த மரபுக் காலங்களுக்குள் அதனை மீண்டும் புகழ்க் கோட்டையாகக் கட்டியெழுப்பத் தொடங்கினர். தெலுங்காணத்தில் பகமனி ஆட்சி பரவுந்தோறும் வீர வேளமர் குடிகள் பல அங்கிருந்து வெளியேறி விசய நகரப் பேரரசில் உதயகிரி மாகாணத்திலும் கீழ்கரைப் பகுதிகளிலும் வந்து குடியேறிப் புதிய வலுத் தேடினர். அவர்கள் பொதுவாக விசயநரகப் பேரரசிடம் பாசம் உடையவர்களாகவே இருந்தார்கள். ஆனால் விசய நகரத் தலைவர்களுடன் அவர்கள் அடிக்கடி மோத நேர்ந்தது. வேளமர் குடிகளில் ஒன்று கர்நூல் மாவட்டத்திலுள்ள வேலுகோடி என்ற இடத்தில் குடியேறி மிகவும் வல்லமை வாய்ந்த மரபாக வளம் பெற்றது. அதன் பெரும் பகைவனாக விளங்கியவன் கண்டிக்கோட்டை யாண்ட போலேப் பள்ளி புக்கராஜா என்பவன். அவர்களது போட்டி பூசல்களால் விசயநகரப் பேரரசனின் ஆற்றலும், பேரரசின் கட்டுப்பாடும், ஒற்றுமையும் தளர்வுற்றன. விசயநகரப் பேரரசின் தாக்குதல்களுக்கு ஆளாகி அவதியுற்ற நாடுகளெல்லாம் பேரரசின் தளர்ச்சி கண்டு அதன் மீது தாக்குதல்கள் தொடங்கின. ஒரிசா ஆண்ட கபிலேசுவர கஜபதி 1448-இல் இராச மகேந்திர வரத்தைக் கைகொண்டு அடுத்த ஆண்டுக்குள் கொண்ட வீட்டையும் கைப்பற்றிக் கொண்டு முன்னேறினான். அத்துடன் அவன் பகமனிப் பேரரசன் அலாவுதீனுடன் சேர்ந்து கொண்டு விசயநகரத்தின் மீதும் படையெடுத்தான். இரு வல்லரசுகளும் சேர்ந்து வெற்றித் திருநகரையே முற்றுகையிட்டன. இப்போரில் வெற்றி தமதென்றே இருதரப்பினரும் கூறுகின்றன ராயினும், மல்லிகார்ச்சுனனே தன் பெருமக்கள் துணையுடன் முற்றுகை தவிர்த்து எதிரிகளை ஓட்டியிருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் கூட்டு 1450-இல் முடிவுறுகிறது. கபிலேசுவரன் மட்டுமே சில நாட்கழித்து வேறு திசைகளில் தன் படைகளைச் செலுத்திப் புது வெற்றி நாடினான். தெலுங்காணத்தில் எழுந்த கிளர்ச்சியை அடக்க அலாவுதீன் முனைய வேண்டியதாயிற்று. பகமனிப் பேரரசில் அலாவுதீனுக்குப் பின் கொலைகார ஹுமாயூன் என்றழைக்கப்பட்ட ஹுமாயூன் சாலிம் (1458-1461) மூன்றாண்டுகளும், அவன் புதல்வன் நிஜாம்ஷா (1461-1463) இரண்டாண்டுகளும் ஆட்சி செய்தனர். ஹுமாயூன் ஆட்சியில் அயலார் கட்சியே வலிமையுடையதா யிருந்தது. ஹுமாயூன் குருதிக் கொலைகளில் புரண்டான். ஆனால் ஆட்சி முழுவதையும் அவன் தன் தாயிடமே விட்டிருந்தான். அயலார் கட்சித் தலைவனும் நூறாண்டு வாழ்ந்த சிறந்த அரசியல் வல்லுநனுமான முகமது கவானும் மாலிக்ஷா துர்க் என்பவனுமே அவன் தாய்க்கு ஆட்சியில் இருகைகளாயிருந்தனர். நாட்டுக் கட்சி (தெக்காணி யர்கள்) இருதடவை கிளர்ந்தெழுந்து மிகக் கொடுமையான அழிவுகளுடன் அடக்கப்பட்டது. ஆயினும் கபிலேசுவரன் எதிரிகளின் சார்பில் உட்புகுந்து வாரங்கலைக் கைப்பற்றியதுடன் 1460-க்குள் தெலுங்காணம் முற்றும் வென்று கைக்கொண்டான். இப்போது மாளவ அரசனும் பகமனிமீது படை யெடுத்தான். கந்தார்ப் போரில் பகமனி தோல்வியுற்றது. இச்சமயம் பார்த்துக் கஜபதியரசனும் தலைநகரான குல்பர்கா வரை முன்னேறி, சில காலம் தலைநகரையும் தன் கைவசப்படுத்தி யிருந்தான். அந்நாளில் அவன் குல்பர்கா அரசன் (கலுபரு கேசுவரன்) என்றும் விருது சூடிக்கொண்டான். ஆனால் இந்த நெருக்கடியிலிருந்து தப்பப் பகமனியரசன் குஜராத் அரசனை அழைத்தான். குஜராத் படைகள் வருவது கேட்டவுடனே மாளவப்படைகளும், கஜபதிப் படைகளும் வெளியேறின. ஆனால் தெலுங்காணம் மட்டும் நிலையாகக் கஜபதிப் பேரரசுக்கு உட்பட்டு விட்டது. கஜபதி மரபின் உச்ச மலர்ச்சிக் காலம் இது. கபிலேசுவரன் 1463-இல் விசயநகரப் பேரரசின் கீழ்கரை வழியாகத் தமிழகத் தென்கோடி வரை படை நடத்திச் சென்று எங்கும் தன் வெற்றி வாகை நாட்டினான். அவன் பிடித்த கோட்டைகளின் பட்டியல் இவ்வீர உலாவின் பரப்பும் விரைவும் காட்டுகின்றன. சந்திரகிரி, படைவீடு, வழுதுளம்பட்டி, உசாவடி, திருவாரூர், திருச்சிராப் பள்ளி, காஞ்சிபுரம் ஆகியவை அவன் படைகளின் அழிவுகளுக்கு ஆளாயின. ஒட்டன் படையெடுப்பு என்ற பெயருடன் இது அந்நாளைய கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது. இவ் வுலாவின் பயனாக விசயநகரம் தமிழகத்தில் நிலையாக எதுவும் இழக்கவில்லை. கஜபதிப் படைகள் திரும்பியவுடனே பேரரசின் ஆட்சி முன்போலத் தொடர்ந்தது. ஆனால் உதயகிரி மாகாணமும், கரையோரந் தெலுங்கு மாவட்டங்களும் கஜபதிப் பேரரசின் எல்லையாகி விட்டன. ஒரிசாவின் ஒரு வல்லரசு பேரரசாகி இவ்வளவு விரிந்த பரப்பின் ஆட்சி பெற்றது இதற்கு முன்னும் பின்னும் கிடையாது. பகமனியில் நிஜாம் ஷாவுக்குப்பின் வந்த மூன்றாம் முகமது (1463-1482) மிகவலிமை வாய்ந்த அரசனாகவே இருந்தான். துண்டு துண்டாகச் சிதறவிருந்த பேரரசை அவன் தன் வாழ்நாள் முழுதும் ஒன்றுபடுத்தி வைத்ததுடன் பழம்பெருமைகளையும் மீட்க முனைந்தான். ஆனால் வாளால் அவன் நாளில் அவன் சாதித்த யாவும் அவனுடனே முடிந்தன. மரபின் கடைசிப் பேரரசனாகவே அவன் அமைந்தான். இஸ்லாமியர் மெக்காவுக்குச் செல்வதற்குரிய முக்கியத் துறைமுகமாக அந்நாள் கோவா திகழ்ந்தது. இஸ்லாமியப் புண்ணிய யாத்திரிகர்களை மேல்கரைக் கடற்கொள்ளைக்காரர்கள் மிகுதியும் அல்லல்படுத்தி வந்தார்கள். இதனால் விசயநகரப் பேரரசின் கீழ் இருந்த இந்தத் துறைமுகத்தை முகமது தாக்கிப் பகமனிக்குரிய தாக்கினான். இரண்டாம் விரூபாக்கன்: முதல் மரபின் வீழ்ச்சி மல்லிகார்ச்சுனனுக்குப்பின் அவன் புதல்வன் இராச சேகரன் ஒரு சில நாட்களே தவிசில் இருக்க நேர்ந்தது. மல்லிகார்ச்சுனன் சிற்றப்பன் மகனான இரண்டாம் விரூபாக்கனே (1465-1485) அரசுரிமையைப் பற்றி ஆளத் தொடங்கினான். மல்லிகார்ச்சுனனைவிட அவன் திறமையில் குறைந்தவன். மல்லிகார்சுனன் காலத்திலே பேரரசுக்கு ஏற்பட்ட சரிவு அவன் காலத்தில் இன்னும் பெரிதாயிருக்கவே வழியுண்டு. ஆனால் அவன் காலத்திலேயே சாளுவ நரசிம்மன், துளுவாசுவரன், நரசநாயகன் முதலிய பெருமக்கள் ஒப்பற்ற படைத்தலைவர்களாக விளங்கினர். அவர்கள் பேரரசின் சரிவை முற்றிலும் தடுத்து நிறுத்தினர். அத்துடன் வடக்கில் இதுவரை விசயநகரப் பேரரசுக்கு எதிரிகளாயிருந்த பகமனிப் பேரரசும், முந்திய ஆட்சியில் பேரரசாய் வளர்ந்திருந்த ஒரிசா கஜபதி மரபும் இரண்டுமே இவ்வாட்சியில் தள்ளாடிச் சரியத் தொடங்கின. இந்நிலையைப் பயன்படுத்தி இப்பெருந் தலைவர்கள் தேசீயப் பேரரசின் பரப்பை ஒரு புதிய பேரரசுக் கோட்டையாகவே மீட்டும் நிறுவத் தொடங்கினர். பேரரசைப் பொறுத்த அளவில் இரண்டாம் விரூபாக்கன் பெயரளவிலேயே ஆட்சியாளனாயிருந்தான். வீரகம்பணனிடம் படைத்தலைவனாயிருந்த சாளுவ மங்குவின் மரபில் வந்த சாளுவ நரசிம்மனே உண்மையில் பேரரசின் மீகாமனாக விளங்கினான். அவனுக்குத் துணையாகப் பின்னாளைய துளுவ மரபின் முன்னோனான துளுவ ஈசுவரனும் அவன் புதல்வன் நரசநாயகனும் அவன் படைத்தலைவர்களாகப் பணியாற்றி வந்தனர். சாளுவ நரசிம்மனிடம் சந்திரகிரி மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பு விடப்பட்டிருந்தது. கபிலேசுவரன் தென்றிசை வெற்றிகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாகாணம் அதுவே. கஜபதிப் படைகள் பின்வாங்கியபின் அவர்கள் விட்டுச்சென்ற படைத்தளங்களையும், கோட்டைகளையும் ஒவ்வொன்றாகக் கைப்பற்றி இழந்த நாட்டைப் பெற அவன் முற்பட்டான். 1470-இல் கபிலேசு வரன் இறந்து கஜபதி அரசில் அரசுரிமைப் போராட்டம் ஏற்பட்டு ஆட்சி சீர்குலைவுற்றது. இதைப் பயன்படுத்தி அவ்வாண்டிலேயே நரசிம்மன் உதயகிரி மாகாணத்தைக் கைப்பற்றிக் கொண்டான். ஆனால் மேலும் வடதிசையில் முன்னேறும்முன் தெற்கே தமிழ் மாகாணத்தில் தொல்லை தொடங்கிற்று. கம்பன் என்ற ஒரு தலைவன்தான் சோழ மரபின் உரிமையாளன் என்று கூறிக்கொண்டு கிளர்ந்தெழுந்தான். அவனுடன் வடபாண்டி நாட்டில் ஆண்ட பாண்டியக் கிளைக்குடியினன் ஒருவன் சேர்ந்து கொண்டு முன்னேறினான். விசயநகர ஆதாரங்கள் அவனைச் “செவுள போதலு” அல்லது “லம்பகர்ணன்” என்று கூறுகின்றன. அவன் காஞ்சி நகரைக் கைப்பற்றி அங்கே சிலகாலம் “புவனைகவீரன் சமர கோலாகலன்” என்ற ஆரவார விருதுடன் வீற்றிருந்தான். இத்தமிழகக் கிளர்ச்சியை நரசிம்மன் ஓர் ஆண்டுக்குள் ஒடுக்கிவிட்டு மீண்டும் வடக்கே திரும்பினான். 1471-இல் கொண்ட வீடும் மசூலிப்பட்டணமும் அவன் ஆட்சிக்கு உட்பட்டன. கஜபதி அரசுரிமைப் போரில் கபிலேசுவரனின் உரிமைப் புதல்வன் அம்பீரன் அல்லது அம்பரும், அன்புப் புதல்வனான புருஷோத்தமனும் போட்டியிட்டனர். இராச மகேந்திர வரத்தையும் கொண்ட வீட்டையும் வெல்ல உதவுவதாக வாக்களித்து அம்பீரன் பகமனிப் பேரரசின் உதவிபெற்றான். ஆனால் பகமனிப் படைகள் அவனைத் தவிசேற்றுவித்து மீண்டதும் புருஷோத்தமன் திரும்பி வந்து நாடு முழுவதும் கைக்கொண்டான். ஆயினும் அம்பீரன் அவனுடன் சமரசம் செய்து கொண்டு அவனுக்குக் கீழ்பட்டுக் கும்மிடியிலிருந்து ஆள ஒப்புக் கொண்டான். அத்துடன் இராசமகேந்திர புரத்தையும் கொண்ட வீட்டையும் பெறப் பகமனிக்கு அவன் உதவியும் வழங்குவித்தான். பகமனிப் பேரரசு இப்போது சிதறும் தறுவாயில்தான் இருந் தது. ஆனாலும் நூறாண்டு வாழ்ந்த அதன் பெரும் பெயரமைச்சன் கவான் திறமையில் அதன் புகழும் பரப்பும் இன்று உச்ச நிலையே யடைந்தது. பேரரசு. இது கடல்களும் அளாவியிருந்த காலம் இதுவே. ஆனால் பேரரசின் உள்ளார்ந்த வலிமைக் கேட்டையும், உட்கட்சிப் பிளவுகளையும், உணர்ந்த அவ்வமைச்சன் தான் நடுநிலை வகித்து, பேரரசை நான்கு மாகாணமாய்ப் பிரித்து, கட்சிகளுக்குச் சரிசமப் பிரதிநிதித்துவம் வழங்கினான். குல்பர் காவும் பீஜப்பூரும் அயல் கட்சித்தலைவன் யூசுப் அலி ஆதில்கானிடமும், தௌலதாபாத் கவானிடமும் இருந்தன. இவ்விருவரும் அயல் கட்சியினர். தெலிங்காணம் மாலிக் ஹாசனிடமும் பேரார் பத்துல்லா இமதுல் முல்க்கிடமும் விடப்பட்டன. மாலிக் ஹாசனுக்கும் கவானுக்கும் வேற்றுமை ஏற்பட்டபோது, தெலுங்காண நாடு வாரங்கல் இராசமகேந்திர வரம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மூன்றாம் முகமது தன் ஆட்சியிறுதியில் தன் முழு வலுவையும் திரட்டிக் கொண்டு கபிலேசுவரனைப் போலத் தென்திசையில் வீர உலா ஆற்ற விரும்பினான். தெலுங்காணத்தில் மாலிக்ஹாசனிடமாகத் தன் புதல்வன் அகமதை அமர்வித்து விட்டு முகமது கவானையும் மாலிக் ஹாசனையும் படை யெடுப்பின் மூலதளமாகிய கொண்டபள்ளியில் நிறுவினான். சாளுவ நரசிம்மனின் மாகாண முழுவதிலும் அவன் சுழன்று, சூறையாடிக் காஞ்சியை நோக்கி முன்னேறி அங்கும் பெரும்பொருள் கொள்ளையடித்தான். திரும்பும் வழியில் அவனால் மசூலிப்பட்டணத்தையும் பிடிக்க முடிந்தது. ஆனால் எதிரியை உள்ளேறவிட்டு வேண்டுமென்றே பின்னேறி வந்த நரசிம்மன் அவன் வீரஉலா முடிந்து மீளும் சமயம் அவனை வளைத்தான். அவன் படைகளைச் சின்னாபின்னப்படுத்தி அவன் கொள்ளையடித்துக் கொண்டுவந்த செல்வம் முழுவதையும் கைக் கொண்டான். மூன்றாம் முகமதுவின் ஆட்சியிறுதியில் பகமனிப் பேரரசு சரிவுற்றுத் துண்டு துண்டாகப் போகத் தொடங்கிற்று. முகமது கவானுக்கும் மாலிக்ஹசனுக்கும் விளைந்த பூசலில், ஹசன்கவானைக் கொல்லச் சதிசெய்து தோல்வியடைந்தான். 1481-இல் அவன் இது காரணமாகத் தூக்கிடப்பட்டான். அடுத்த ஆண்டே மூன்றாம் முகமது மறைவுற்று அவன் புதல்வன் மாமூது (1482-1518) அரசனானான். அவன் தவிசேறி நான்காண்டுகளுக்குள் தெலுங்காணம் கிளர்ச்சி செய்து விடுதலை பெற்றுவிட்டது. மேல்திசைத் துறைமுகப் பகுதிகளிலுள்ள கிளர்ச்சிக்கு யூசுப் ஆதில்கான் ஆதரவு தந்து ஆதில்ஷா என்ற தனிப்பட்டத்துடன் பீஜப்பூர் அரசை நிறுவினான். விரைவில் அகமதுநகர், பீரார், கோல்கொண்டா, பீடார் ஆகிய மாகாணங்களும் தனியரசுகளாகப் பிரிவுறத் தொடங்கின. பகமனி வீழும் சமயமே விசயநகரப் பேரரசின் முதல் கால் வழியான சங்கம மரபும் வீழ்ச்சியடைந்தது. இரண்டாம் விரூபாட்சனை அவன் மூத்த மகன் கொன்றான். ஆனால் அவனும் ஆட்சி யேற்காமல் பிரௌட தேவராயன் அரசிருக்கை கைப்பற்றினான். ஆனால் சாளுவ நரசிம்மன் காலத்தின் போக்கையும் பேரரசின் நிலைமையையும் அறிந்து, பேரரசை மீட்டும் தன் முயற்சியாலேயே வல்லாட்சியாக்க முனைந்தான். அவன் சாளுவ ஈசுவரனின் புதல்வனான நரசநாயகனை ஒரு படையுடன் தலைநகருக்கு அனுப்பினான். தலைநகரைக் கைப்பற்றித் தன் ஆற்றல் சான்ற படைத்தலை வர்களின் உதவியால் அவன் தானே அரசிருக்கையைக் கைக்கொண்டு ஆளத்தொடங்கினான். இரண்டாம் விரூபாட்சன், பிரௌட தேவராயன் ஆகியவருடன் பேரரசின் முதல் மரபான சங்கம மரபும் பேரரசின் தேசீய இயக்க ஊழியும் முடிவடைகிறது. பேரரசைத் தென்னகத்தின் வெல்ல முடியாத கோட்டையாக்கி பெருஞ் சிற்பிகளான சாளுவ நரசிம்மன், நரசநாயகன் ஆகியவர்கள் ஆட்சியும் அவர்கள் முறையே நிறுவின சாளுவ, துளுவ மரபுகளின் புகழாட்சியும் தொடங்குகின்றன. 4. தேசீயச் சிற்பிகள் கற்பெனப் பெயரிய கருமனையிடமும் வெற்பென உயரிய வீறுசால் மாடமும் இற்பெறு பண்புடை இறப்பிலா வாழ்வும் முற்பெறு முத்தமிழ்த் தென்னகம் வாழ்க! தற்பண் பென்னும் தளமுறக் கோட்டி அற்புத் தலையினை அழகுறப் பூட்டி மற்படும் வீர ஒற்றுமை நாட்டிய சிற்பிகள் வளர்தரு தென்னகம் வாழ்க! தனி மனித வாழ்வை நாம் பொதுவாகப் பிறப்பிலிருந்து இறப்பு வரையென்று கணிப்பது வழக்கம். இம்முறையிலேயே தேசீய இயக்கத்தின் மலர்ச்சியாக நிகழ்ந்த விசயநகர நிறுவன முதல் அதன் பெயர் மறைவுறும் 17-ஆம் நூற்hண்டுவரை அப்பேரரசின் வாழ்வாக வரலாறு கணிக்கிறது; இது தவறன்று. ஆனால் பல பொது மெய்ம்மைகளைப் போல இதுவும் அரைகுறை உண்மை மட்டுமேயாகும்; முழு உண்மையாக மாட்டாது. ஏனெனில் தனி மனிதன் தன் பிறப்பையோ, இளமையையோகூட அறிவதில்லை. பிறப்பு, இளமை, முதுமைகளை அவன் எதிர்பார்ப்பதோ, எதிர்பார்த்து அவாவுவதோ கிடையாது. இளமையில் அவன் நோக்கம், ஆர்வம் யாவும் திருமண வாழ்வே நாடுகிறது. தளர்வில், முதுமையில் அது பின்னோக்கி அவனது மண வாழ்விலோ, எதிர்நோக்கி அவன் குழந்தைகள் வாழ்விலோதான் செல்லுகிறது. தனி மனிதன் வாழ்வின் இம்முழுப் பண்பும் அமைந்த பேரரசு வாழ்விலும் இதே உண்மையைக் காண்கிறோம். முதல் மரபுக்காலம் பேரரசின் பிறப்பும் முதிரா இளமையும் சார்ந்த பருவம் ஆகும். நான்காம் மரபு அதன் தளர்ச்சி, முதுமைப் பருவம். பேரரசு பெயரளவில் பேரரசாயிருந்து கொண்டு வளர்ந்து வந்த தன் தென் தமிழக வல்லரசுகளை எதிர்நோக்கி வாழ்ந்த காலம் அது. இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட இரண்டாவது, மூன்றாவது மரபுக்காலமே பேரரசின் வாழ்விலேயே வாழ்வான கட்டிளமைப் பருவம் ஆகும். தேசீயத்தில் மிதந்த இளம் பேரரசைத் தேசீயத்தின் ஆழ்பண்புகள் கீண்டெழுப்பிய தேசீயக் கோட்டையாக்கிய பருவம் இதுவே. வாழ்க்கை வாழ்வதற்கே என்று மனிதன் உணர்ந்து, வாழ்வன்றி வேறெதிலும் கருத்துச் சிதறவிடாமல் வாழ்விலூன்றி முன்னேறும் காலம் மணவாழ்வின் புறஅமைதி பெற்ற கட்டிளமைக் காலமே. விசயநகர வாழ்விலும் பேரரசர் தம்மைப் பேரரசர் என்று உணர்ந்து, பேரரசு கடந்து எதுவும் நோக்காமல், அதிலேயே வீறி நின்ற வேளை பேரரசின் இந்தக் கட்டிளமைக் காலமேயாகும். சங்கம மரபின் வாழ்வு விரைந்து கட்டிளமை நோக்கி முன்னேறிற்று என்பதில் ஐயமில்லை. அவ்விளமைப் போதிலேயே தென்னக அழகாரணங்கு தன் இரு கடல் அலைக்கரங்களையும் அகலவிரித்து முதிரா இளம்பருவச் செம்மலான பேரரசை ஆவிய ணைத்து, இருகடல் விழாவென்னும் அன்பு மாலை சூட்டியிருந்தாள். அச்செம்மல் தென்கடல் முத்து உதிரும்படி அக்கடலலைக் கூந்தலில் விளையாடி, அதில் செருகிய மணிமுடிச் சலாகையான இலங்கையிலேயே தன் புகழ்மலர் சூட்டும்படியும் அவள் கடைக் கணித்திருந்தாள். ஆயினும் தன் இளம் பருவ ஊடலிடையே அவன் பகமனிப் பேரரசை நோக்கியும், வடகலிங்க ஒரிசாக் கசபதிகளை நோக்கியும் குறும்பாடியதுண்டு. இந்நிலை கடந்து தம் கலங்காத வீரத்தால் பேரரசை அத்தென்னக நங்கையின் கற்புக்கேற்ற வெற்பாக்கி, பேரரச வாழ்வில் வளமூட்டிய பெருமை பேரரசின் ஒளி பிறங்கிய மீகாமன்களான நடுப்பருவப் பேரரசச் செம்மல்களுக்கும், அவர்கள் முன்னோரும் முதல்வருமான பேரரசப் பெரும் சிற்பிகளுக்குமே உரியது. பேரரச வாழ்விலும் தென்னக வாழ்விலும் உலக வாழ்விலும் இப்பேரரசச் சிற்பிகளுக்குரிய தனியிடம் உலகளாவிய ஒப்பீட்டினாலேயே காணத்தக்கது. பேரரசிலேயே அவர்கட்கு முன்னும் பின்னும் பேரரசர், பெருவீரர் இருந்ததுண்டு. ஆனால் தேசீயச் சிற்பிகளான சாளுவ நரசிம்மன், நரசநாயகன் ஆகியவர்களருகே வைக்கத்தக்கப் பெருந்தகைகள் அம்மரபில் அடுத்து முகிழ்த்த கிருட்டிண தேவராயரும், அதனுடன் இணைந்த நான்காம் மரபின் முதல்வனான அளிய ராமராயனுமன்றி முன்னோ பின்னோ வேறு எவருமிலர். தென்னக வாழ்வில் பெருஞ் சிறப்புக்குரிய மற்ற விசயநகரப் பேரரசர்களிடையே கூட அவர்கள் புகழுருவங்கள் பன்றியேற்றை களிடையே பாரிய மதயானைகளாகவே திகழ்கின்றன. சங்க கால நெடியோனும், கரிகாலனும், செங்குட்டுவனும், தலையானங்கானத்து நெடுஞ்செழியனும், இடைக்காலப் பாண்டியரும், இராசேந்திரனொத்த பெருஞ்சோழரும், பெரும்பாண்டியரும் அவர்களுக் கிணையான, அவர்களைக் கடந்த உலகப்புகழ் உடையவர்கள் என்பது உண்மையே. புற உலகிலும் வடதிசைப் புயலாட்சி கண்ட செங்கிஸ்கான், தைமூர், நாதர்ஷா, மேலையுலகின் உலகளாவிய வெற்றிவீரர் அலெக்ஸாண்டர், சீசர், நெப்போலியன் ஆகியோர் வெற்றிகள் இத்தேசீயச் சிற்பிகளைவிடப் பார அளவுடையனவே என்பதில் ஐயமில்லை. ஆயினும் இவர்கள் எவருமே விசயநகரங் கண்ட நடுப்பருவ வீரரொத்த தேசீயச் சிற்பிகளாக மாட்டார்கள். தேசீயம் தங்கையர் போல அவர்களைப் பின்பற்றிச் சென்றிருக்கலாம்; காதலிபோல அவர்களுடன் செல்லவில்லை. அவர்கள் தம் வெற்றி, தம் வீரம், தம் புகழ்தான் பரப்பினர். தேசீயக் குறிக்கோள் அவர்களுக்கு இருந்ததில்லை. அவர்கள் தேசீயத்திலூன்றி ஒரு தேசீயக் கோட்டை அமைக்க முயன்ற வர்களும் அல்லர். நடுப்பருவ வீரச் சிற்பிகளுக்கு மட்டுமே உரிய பெருமை இது. காலத்தின் சூழல் ஒன்றே அவர்கள் புகழை உலகளாவாமல் தேசீய மளாவியதாக நிறுத்திற்று. பண்பில் அவர்கள் உலகப்புகழ் கண்டவர்களையும் விஞ்சிய புகழ் கொண்டவர்களேயாவர். குடும்பக் கோட்டையில் கற்புக்கொடி உயர்த்திய தமிழினம். வீட்டுக் கோட்டை மீது நாட்டுக்கோட்டை; நாட்டுக்கோட்டை மீது உலகக்கோட்டை எழுப்பக் கனவு கண்ட தமிழகத்தின் கனவெல்லைக் கோடுகளாக விளங்குபவர்கள் வீறார்ந்த இவ்விழுமிய செயல்வீரப் பெருந்தகைகள். உலகில் அவர்கட்கு ஈடானத் தேசீயப் பெருந்தகைகளைத் தேடுவோர் அவர்களது பேரரசு மரபுக்கு வெளியே மராத்திய தேசீய வீர முதல்வன் சிவாஜியையும், தென்னகத் தேசீய மரபின் முதல்வன் ஹைதர் - திப்புவையும்தான் காண முடியும். அவர்களுக்கு ஈடான தேசீய ஒப்பீடு அவர்கள் தேசீய மரபிலேயே காணத்தக்கது! பொருளது, பொருளிலார்க் குதவுதல் பொருளே; அருளதுஅவ் அருளிலார்க் களித்திடும் அருளே; மருளது அம்மருளினை உணர்தரா மருளே இருள்ஒளி யின்மை யென்றாய், தமிழ் வாழ்க! பட்டும் பவழமும் பன்மணி முத்தும் எட்டுத் திசையும் வழங்கிய ஏந்திழை, மட்டில் கலைகள் மலர்தர மொழிகளைத் தொட்டிலிட் டாட்டிய தொன்மொழி வாழ்க! உலகெலாம் வண்டமிழ் ஒருவள மாக இலகுறு தமிழே தனிப் பண்பாக அலகிலாத் தேசீய அமுத வாழ்வின் நிலவொளி நிலவுதென் திராவிடம் வாழ்க! நச்சரவப் படுக்கை வரலாறு பற்றிய இரண்டு கருத்துக்கள் உலகில் நிலவி யுள்ளன. பெரியார்கள் வாழ்வே வரலாற்றை ஆக்குகின்றது என்று கொள்பவர் உண்டு. வல்லவர்கள் வகுத்ததே வரலாறு என்று இதை அழுத்தந் திருத்தமாக வலியுறுத்திக் கூறுவர். ஆங்கில அறிஞர் கார்லைல் போன்றார். சிதறியோடும் காலத்தின் சிண்டைப் பிடித்திழுத்துத் தம் வயப்படுத்தும் காலச் செல்வரான வீரப்பெரியார் வழிநின்று, அவர்கள் ஆற்றலைத்தான் தெய்வமாக, தெய்வீக வீரராக, நபிகளாக, ஞானியராக, அறிஞர், கலைஞர், கவிஞராக ஆட்சியாளராக உலகம் கால காலவழி போற்றுகிறது என்பது அவர் கோட்பாடு. இதற்கு நேர்மாறாக, வரலாறு காலத்தின் ஆற்றல், அது வாழ்க்கை ஆற்றலாக, மக்கள் தேசீய ஆற்றலாக எழுந்து தானும் இலங்கி, பெரியோர் வாழ்க்கையையும் இயக்கிப் பெருமைப்படுத்துகிறது என்று தற்கால வரலாற் றாசிரியர்கள் பலரும் கருதுகின்றனர். முந்திய கருத்தை எப்படி ஒருதலையாக் கார்லைல் வலியுறுத்தினரோ, அது போலவே இக்கருத்தை அழுத்தந் திருத்தமாக வலியுறுத்தியவர் காரல் மார்க்ஸ். நடுநிலை மெய்ம்மை இவ்விரு கூற்றின் இணைவிலுமே பொதுவாக நிலவுகிறதென்றும், ஒரோவொரு காலங்களில் காலமும், ஒரோவொரு காலங்களில் பெரியார் ஆற்றலும் விஞ்சி நிற்கிறதென்றும் நாம் இவ்விருதிறங்கட்கும் விளக்கம் தரலாம். பெரியாரை ஆக்கும் காலமும் உண்டு. காலத்தை ஆக்கும் பெரியாரும் உண்டு. காலத்துடன் இவ்வாறு போட்டியிடும் அளவிலேயே பெரியார் பெரியார் ஆவர்; வல்லார் ஆவர். விசயநகர காலத்து முதல் பேரரசர்கள் பெரிதும் காலத்தால் ஆக்கப்பட்டவர்களே யாவர். ஆனால் அவர்கள் ஊழிக்கு முன்னும் அவ்வூழியிலும்கூட, கடைசி ஒய்சளப் பேரரசன் மூன்றாம் பல்லாளனும், விசயநகர முதல்வருள் ஒருவரான வித்தியாரணிய அடிகளும் இரு வேறு துறைகளில் காலத்தை எதிர்த்து வெல்லப் பாடுபட்டு இருவேறளவில் தோல்வியோ, வெற்றியோ கண்டவர்களே. முதற் பேரரசர்கள் தோல்வி காணவில்லை; எளிய வெற்றியே கண்டனர். இது ஓரளவு கால வெள்ளத்தின் செயல். ஓரளவு மற்றைய இருவர் வெற்றி தோல்விகள் அவர்களை அவற்றில் எளிதில் மிதக்கவிட்டது என்று கூறல் தகும். காலத்தில் மிதந்த இந்தப் பேரரசு, காலத்திலேயே மிதந்த பகமனிப் பேரரசு, கசபதிப் பேரரசு ஆகிய பிற தென்னகப் பேரரசுகளுடன் மோதிற்று. மூன்று பேரரசுகளுமே மிதவைப் போராட்டத்தில் ஆற்றலிழந்து வந்த தேசீயச் சிற்பிகள் மீண்டும் களங்கண்டனர். மிதக்கும் கட்டைகளைக் கப்பலாக்கி, தம் வீரர் கைகளையே தண்டுகளாக்கி, அதைக் காற்றுப் புயல்களுக்கிடையே அணைத்தும், இணைத்தும், எதிர்த்தும் இயக்கிய மீகாமன்களாக அவர்கள் விளங்கினர். காலம் அவர்களை ஆக்கிற்று. ஆனால் அவர்களும் காலத்தை ஆக்க முயன்றனர். காலத்தின் முன்னே அவர்கள் தோல்வி கண்டனர். ஆனால் அவர்களது பெருமை அத்தோல்வி யிலேயே மறைந்துள்ளது. அவை வெறுந் தோல்விகளல்ல. அத்தோல்விகள் காலத்தை மாற்றியமைக்க உதவின. சாளுவ நரசிம்மன் தோல்வி நரசநாயகன் தோல்விக்கும், நரசநாயகன் தோல்வி இம்மடி நரசிம்மன் தோல்விக்கும் வழிவகுத்தன. ஆனால் மூன்று தோல்விகளையும் முக்காலியாகக் கொண்டு முழுநிறை பேரரசன் கிருட்டின தேவராயன் விசயநகரப் பேரரசின் உச்சிமேல் நின்று தென்னக வானம் அளாவ முடிந்தது. சாளுவ நரசிம்மன் கிடந்து புரண்ட நச்சரவப்படுக்கையே நரசநாயகன் முட்படுக்கையாகி, அம்மடியின் நார்ப்படுக்கை யாகவும் மாறிக் கிருட்டினதேவராயர் வண்ண மலர்ப்படுக்கைக்கு வழிவகுத்தது என்னலாம். சங்கம மரபினரிடமிருந்து ஆட்சியுரிமையைச் சாளுவ நரசிம்மன் கைக்கொண்டபோது, புயல்களிடையே சிதற இருந்த பேரரசை அவன் காத்தான் என்பதில் ஐயமில்லை. பேரரசின் பெருமக்களே இதனை உணர்ந்து அவனுக்கு ஆதரவு தந்திருந்தனர். பேரரசு அவனை விரும்பி வரவேற்றது. ஆனால் அவன் பேரரசின் கடமையை ஏற்று, பேரரசை ஒரு கோட்டையாக வலிமைப்படுத்த முனைந்த போது, அணைத்த கரங்கள் பிணங்கின; இனிப்புக் கசப்பாயிற்று. பெருமக்கள் பலரும் தத்தம் மனம்போல ஆள விரும்பிக் கிளர்ச்சி செய்யலாயினர். புறத்தாக்குதலை எதிர்த்துச் சமாளிக்கும் பேரரசின் ஆற்றலையே இதனால் அவர்கள் குறைத்தனர். தென் பேரரசின் இந்த நிலையைவிடப் பகமனிப் பேரரசின் நிலை அன்று சீர்குலைவுற்றிருந்தது. இதனைப் பயன்படுத்திப் புதிய கசபதி அரசனான புருடோத்தமன் இரு பேரரசுகளிட மிருந்தும் நிலம் கைப்பற்றும் எண்ணத்துடன் கீழ்திசையில் படையெடுத்தான். விசயநகரப் பெருமக்களில் கிளர்ச்சி செய்தவர்கள் சிலரை அவன் தூண்டிவிட்டு அவர்களுடன் ஒத்துழைத்தான். உள்ளும் புறமும் இவ்வாறு பகைகளைச் சமாளிக்க வேண்டி வந்த பேரரசுக்கு இச்சமயம் முந்திய மரபின் எச்ச மிச்சமாக இன்னொரு பெருங்குறையும் ஏற்பட்டிருந்தது. மேல்திசைத் துறைமுகங்களான கோவா, தபோல் ஆகியவற்றின் இழப்பால் வெற்றித் திருநகரின் பொது வாணிகம் மட்டுமன்றிப் படைத் துறைக்குரிய குதிரை வாணிகமும் குன்றியிருந்தது. காலா காலத்தில் புதிய அரபிக் குதிரைகள் வருகை பாண்டியர் காலமுதலே தென்னகப் படைகளின் வளத்துக்கு இன்றியமையாத உயிர்ப்பாற்றலாய் இருந்து வந்தது. சாளுவ நரசிம்மன் ஆட்சித் தொடக்கத்தில் இதனால் நகரின் செல்வநிலையும், படைத் துறையின் ஆற்றலும் மிகவும் சீர்குலைவுற்றிருந்தன. உட்பகை, புறப்பகை, உயிர்ப்பகை ஆகிய இந்த முப்பகைச் சூழலிடையே பேரரசுப் பதவி சாளுவ நரசிம்மனுக்கு ஒரு நச்சரவப் படுக்கையாயிற்று. அந்நச்சரவங்களுடன் ஓயாது போராடிப் போராடி அவன் பேரரச வாழ்க்கை உருக்குலை வுற்றது. ஆயினும் பேரரசை அவன் இவற்றிடையே கூடச் சிறிது எழுந்து தவழும்படி செய்து விட முடிந்தது. பேரரசு மீண்டும் எழுந்து வீறுநடை போட அவன் பின்னோர் செய்த முயற்சிகளுக்கு அவன் பணி ஓர் உறுதியான அடிப்படையாய் உதவிற்று. சாளுவ நரசிம்மன் போராட்டங்கள் சாளுவ நரசிம்மன் (1486-1491) சாளுவ மரபின் முதற் பேரரசனாய், புதிய ஆட்சி நிறுவினான். போர்களே நிரம்பிய அவன் ஆட்சியின் முதற்பணி போர்களுக்கு அடிப்படையான படைத்துறையைச் சீரமைத்ததும், போர்த்துறைக்கும் பேரரசு வளத்துக்கும் மூல முதலான வாணிகத் துறையைச் சீரமைத்ததுமே யாகும். முன்னைய ஆட்சிகளில் பேரரசு இழந்த கோவா, தபோல் காரைப்பட்டினம் ஆகிய மேல் கரையின் வடதிசைத் துறைமுகங்களுக்கு ஈடு செய்யும் வகையில், அவன் தெற்கே துளுநாட்டை முழுவதும் கீழடக்கி, அங்கே ஹோனாவர், பட்டகுலம் (பட்கல்), பாகனூர், மங்களூர் முதலிய புதிய துறைமுகங்களைப் புதிதாகச் சீரமைத்தான். இத்துறைமுகங்கள் மூலம் வெற்றித் திருநகருக்கு இன்றியமையாத உயிர் மூச்சான உலக வாணிக வாய்ப்பு ஏற்பட்டது. அத்துடன் அத்துறை முகங்களின் மூலமாகவே ஏடன், ஆர்மஸ் முதலிய அராபியத் துறைமுகங்களிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்யவும் திட்டமிட்டான். படைத்துறை இதனால் வலிமைபெற்றது. இரண்டாம் தேவராயர் காலத்துக்கு முன்னிருந்து தொடங்கப் பட்ட படைத்துறைச் சீர்த்திருத்தங்களைத் திட்டமிட்டு முற்றுவித்துப் பின்வந்த பேரரசர்களுக்கெல்லாம் மேல்வரிச் சட்டமாய் அமைந்தவன் சாளுவ நரசிம்மனே. அவனும் அவனுக்குப் பின்வந்தவர்களும் மேன்மேலும் முஸ்லீம்களைப் படைகளில் வீரராகவும், தலைவராகவும் சேர்த்துக் கொண்டனர். அத்துடன் வட திசைப் புயல் மரபில் வந்த முஸ்லீம் வீரர்களின் பண்புகளை ஆய்ந்துணர்ந்து அதைச் சமாளிக்கவும் நிலையான வகைகள் மேற்கொள்ளப்பட்டன. பண்டைத் தமிழரசரைப் போல, அவன் தன் படைகளை நிலவரத்துறைகளாக்கி, அவற்றின் பயிற்சியில் எப்போதும் கவனம் செலுத்தி வந்தான். அவனும் முன்பின் பேரரசர்களும் திறமை வாய்ந்த அயல் நாட்டாரை இப்பயிற்சித் துறையில் அமர்த்தத் தயங்கவில்லை. இவை காரணமாக விசயநகரப் படைகளின் பயிற்சித் திறமையும் விசயநகரப் பேரரசர், படைத்தலைவரின் போர்த்திறமை, படைத்தலைமைத் திறமைகளும் வெளிநாட்டார் கண்டு வியக்கத்தக்கவை ஆயின. கொள்ளைப் படைகளைக் கண்டால் கிலிகொண்டோடும் இடைக்காலக் கீழ்திசைப் படைமரபுக்கும், பொது மக்கள் மரபுக்கும் சாளுவ நரசிம்மனும் அவன் பின்னோரும் ஒரு முடிவு கண்டனர். படைத்துறையிலும் சரி, பொது வாழ்விலும் சரி சாளுவ நரசிம்மன் காலமுதல் போர்வீரம் ஓர் இயல்பான பண்பாகப் பேணி வளர்க்கப்பட்டது. பெருமக்களிடையே மற்போர்கள், பொது மக்களிடையே குத்துச்சண்டைப் போட்டி, சிலம்பம் ஆகியவற்றுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டன. சாளுவ நரசிம்மனின் ஐந்தாண்டுக் கால ஆட்சி முழுவதும் ஒருபுறம் உள்நாட்டுக் குழப்பங்களை அடக்குவதிலும், மறுபுறம் ஒரிசா, பகமனித் தலைவர்களுக்கு ஈடு கொடுப்பதிலுமே கழிந்தது. கிளர்ச்சிகளுள் தலைமையானவை பேரணிப்பட்டுத் தலைவரான சம்பேட மரபினர். வடகொங்கு அல்லது மைசூர்த் தொகுதியைச் சார்ந்த உம்மாத்தூர்ப் பாளையக்காரர் ஆகியவர்கள் எழுச்சிகளே. பழய பேரரச மரபை ஒழித்துப் பெரு மக்களில் ஒருவரையே பேரரசுப் பீடத்தில் ஏற்றியதன்மூலம் இனி ஆட்சி முற்றிலும் தம் கைப்பட்டே இருக்கும் என்று இத்தகையப் பெருமக்கள் மனப்பால் குடித்திருந்தனர். ஆனால் முன்னைய பேரரச மரபினரைவிட அவன் பேரரசில் ஒற்றுமையும் வல்லாட்சியும் நாடியது கண்டதே, அவர்கள் ஆர்வ ஆதரவு மூர்க்க எதிர்ப்பாக மாறிற்று. பேரணிப்பட்டுச் சம்பேடர்கள் கடப்பை மாவட்டத்தில் புலிவெண்டல வட்டத்தில் கண்டிக்கோட்டைக்குரிய நாயங்கரைப் பண்ணையின் தலைவர்கள். இரண்டாம் தேவராயன் நாட்களில் அம்மரபைச் சார்ந்த சோமதேவன் என்ற தலைவனே கொண்ட வீட்டின் மண்டலத் தலைவனாயிருந்து, வேளமர் பகைமைப் போட்டிக்கும் எதிர்ப்புக்கும் பெரிதும் ஆளாயிருந்தான். அவன் இரண்டாம் அனபோதனையும், அவன் மகன், பின்னைய்யா முதலாம் இலிங்கனையும் கொன்று தம் மரபை வலிமைப்படுத்திக் கொண்டிருந்தனர். பின்னையாவுக்குப் பின் பேரணிப்பட்டுக் குடும்பப் பண்ணையை அவன் இரு புதல்வர்களுள் முதலில் மூத்த மகனான கோபராயனும், அவனுக்குப் பின் 1460-லிருந்து இளைய வனான சிவராயனும் ஆண்டு வந்தனர். அவன் உறவினனான சம்பேட வீரநரசிம்மன் தலைமைக் கோட்டையான காமலா புரத்திலிருந்து ஆட்சி நடத்தி வந்தான். சாளுவ நரசிம்மன் சம்பேட வீரநரசிம்மனுக்கு எதிராகத் தன் படைத்தலைவனான வங்கார குமாரதூடி பசிவி நாயுடுவை அனுப்பிவிட்டுத் தானே முன்னின்று பேரணிப்பட்டில் சிவராயனை எதிர்த்துத் தாக்குதல் நடத்தினான். தூடி பசிவ நாயுடு காமலாபுரத்தையும், மட்டிகுண்டலாக் கோட்டையையும் தாக்கிக் கைப்பற்றினான். சம்பேட வீரநரசிம்மன் ஓடி உதயகிரியில் சரண்புகுந்தான். சிவராயன் பேரணிப்பட்டில் சாளுவ நரசிம்மன் கையால் தோல்வி கண்டு மாண்டான். பேரணிப்பட்டு பிடிபட்டுப் பேரரசின் ஆட்சி அத்திசையில் வலுப்படுத்தப்பட்டது. உதயகிரிக்கு ஓடிய சம்பேட வீரநரசிம்மன் அங்கே பொம்ம வரத்தின் தலைவன் சாளுவ மட்டிதேவனிடம் அடைக்கலம் புகுந்தான். விசய நகரத்தின் மீது கசபதியரசன் புருடோத்தமன் அச்சமயம் படையெடுப்பு ஆயத்தம் செய்து வந்தான். மட்டிதேவன் அப்படையெடுப்புக்கு ஆதரவாகப் புருடோத்தமன் தூண்டுதலுடனும் ஆதரவுடனும் கிளர்ச்சி தொடங்கினான். ஆயினும் சாளுவ நரசிம்மன் அவனையும் விரைந்தடக்கிய பின் தென்திசையில் உம்மாத்தூர்ப் பக்கம் திரும்பினான். பேரணிப்பட்டு, பொம்மவரம் கிளர்ச்சிகள் தெலுங்கு நாட்டு அமைதியைக் கெடுத்தனவென்றால், உம்மாத்தூர் எழுச்சி கன்னட நாடு அல்லது வடகொங்கு, துளுநாடு அல்லது மேல்கொங்கு நாடு ஆகியவற்றைக் கலக்கிற்று. ஏனெனில் உம்மாத்தூர் கன்னட நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பாளையம். அதன் கிளர்ச்சிக்குத் துளு நாட்டிலுள்ள சங்கீதபுரத் தலைவன் ஊக்கமளித்துக் கிளம்பியிருந்தான். இக்கிளர்ச்சிகளை அடக்கச் சாளுவ நரசிம்மன் நீண்டநாள் அரும்பாடுபட வேண்டியதாயிற்று. அத்துடன் கிளர்ச்சிகள் அடக்கப்பட்டுத் தலைநகரங்கள் பிடிக்கப்பட்ட பின் கூட, அவற்றின் ஆட்சித் தலைவர்கள் ஓடிச் சென்று பாகனூர்ப் பகுதியில் அரண் செய்து கொண்டு சாளுவ நரசிம்மன் ஆட்சிக்கு எதிர்ப்புக் காட்டிக் கொண்டே இருந்தனர். தன் ஆட்சியின் கடைசி ஆண்டு களிலேயே அவன் அவர்களை அழித்து அவ்விடத்திலும் தன் ஆட்சிக்கொடி நிறுவமுடிந்தது. உள் நாட்டிலுள்ள இப்போர்கள் சாளுவ நரசிம்மன் முழு ஆற்றலையும் கவர்ந்து கொண்டிருந்தன. எனவே வெளியார் படையெடுப்பை எதிர்த்து நிற்கும் பேரரசின் ஆற்றல் மிகவும் குறைவுற்றிருந்தது. இதையறிந்த கசபதியரசன் புருடோத்தமன் கிளர்ச்சிகளை ஒருபுறம் தூண்டிவிட்ட படியே வடக்கிலும் கிழக்கிலும் தாக்குதல் தொடங்கினான். 1487-லிருந்து 1489-க்குள்ளாக அவன் இராசமகேந்திரவரத்தை முழுவதும் கைப்பற்றி அங்கே தன் ஆட்சியை நிலவரப்படுத்தினான். அதன் பின் தன் இறுதி ஆண்டுக்குள்ளாகவே அவன் முன்னேறி உதயகிரியையும் கொண்ட வீட்டையும் முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். ஒரிசா ஆட்சி இப்போதும் கபிலேசுவரன் காலத்து எல்லையை அடையவில்லையாயினும், அது ஒரிசாவிலிருந்து நெல்லூர் அருகே குண்டலகம்மா ஆற்றின் கரை வரை பரந்துவிட்டது. இப்போரில் சாளுவநரசிம்மன் துயர்கள் தோல்வியுடன் அமையவில்லை. அவனே எதிரியின் கையில் சிறைப்பட்டு, உதயகிரியையும் கீழ்திசை வெற்றிகளையும் முழுதுமே விட்டுக்கொடுத்துத் தான் விடுதலை பெற வேண்டி வந்தது. தோல்வியின் கறையுற்ற அவன் உள்ளம் துடிதுடித்தாலும் உடலும் உயிரும் மேலும் போரிட இடந்தரவில்லை. தோல்வி யாலும், அவமானத்தாலும் ஏற்பட்ட மனமுறிவே நோயாகி அவன் இறுதிப்படுக்கை யடைந்தான். கோட்டைகட்ட முற்பட்ட முதற்சிற்பியின் வாழ்வு மட்டுமன்றி அவன் புகழும் மானமும் யாவும் அக்கோட்டைக்கே பலியாய்விட நேர்ந்தது. ஆனால் இத்தோல்விகளால் அவ்வணங்காமுடி வீரனின் உள்ளத்தில் புயலும், சூறாவளியும், கனலும், வெம்பாறை உருகிய குழம்பும் குமுறிக் கொந்தளித்தன. இரேய்ச்சூரையும், உதயகிரியையும் வென்று பேரரசில் சேர்க்காமல் அவன் உயிர் உடலைவிட்டுப் பிரிய மனமின்றித் தத்தளித்தது. தன் உயிரினும் உயிரான வீரப்படைத் தலைவ நண்பன் நரசநாயகனிடம் அவன் பன்னிப் பன்னிக் கோரிய உயிர்க் கோரிக்கைகள் இரண்டில் இதுவே புயற்கோரிக்கையாய் அமைந்தது. முதன்மைக் கோரிக்கையும், இறுதிக் கோரிக்கையும் இதுவே: விண்ணுறங்கினும் வேலையுறங்கினும் மண்ணுறங்கினும் மலைகள் உறங்கினும் கண்ணுறங்காதே, நரசா! மண்ணிலுன்மேனி நண்ணிடுமுன்னே எண்ணிடுவாய்உன் அண்ணனின் கடைசி எண்ணம்இதைக் கண்டிடுவாய்நீ (விண்ணு) இரேய்ச்சூர்உதய கிரிவென்றிடாமல் எனதாரிதயம் எரிகொண்டிடாது பேய்ச்சூராய் ஆடிடும் பார், நரசா (விண்ணு) இம்முதற் கோரிக்கையை அடுத்து அடி மூச்சில்தான் அடுத்த கோரிக்கை வந்தது. “என் பிள்ளையைத் தவிசேற்றி வைத்து ஆள்” என்று தந்தையின் பாசக்குரலில் கூறிவிட்டு, மீண்டும் இறுதி மூச்சுடன் முதற் குரலே தொடர்ந்தது. அது முதற் கோரிக்கையையே வற்புறுத்திற்று. இரேய்ச்சூர் உதயகிரி மறவாதே இதயமுற, பேய்ச்சூராய் ஆடிடும்உன் பேரண்ணன் ஆணையிது! (விண்ணு) என்ற அனுபல்லவியுடன் அது அடங்கிற்று. வீரநண்பன், தலைவன், அண்ணல் மறைவின் சோகத்துக்குக் கூட இடமின்றி அந்நண்பன் ஆணை நரசனை வாழ்க்கைப் பணிக்கு உடனே உந்தி அனுப்பிற்று. ‘இரேய்ச்சூர் உதயகிரி, இரேய்ச்சூர் உதயகிரி’ என்ற பல்லவி வடிவில் அது அவன் புறக்காதுகளில் ஒலித்து, அக்காதுகளையும் நிறைத்து, அவனை அவ்வாழ்க்கைப் பணியில் சுழற்றித் தள்ளிற்று. நரச நாயகனின் அரச நாயகம் அண்ணல் சாளுவ நரசிம்மனின் ஆணைகள் இரண்டில் நரசநாயகனால் உடனடியாக எளிதாகவும் முழு அளவிலும் செய்து முடிக்கக் கூடியது அவன் அடங்கிய குரலில் கூறிய இரண்டாம் கோரிக்கையே. அதைப் பின்பற்றி நரசநாயகன் சாளுவ நரசிம்மனின் மூத்த புதல்வன் திம்ம பூபாலனைத் தவிசேற்றினான். ஆனால் நரச நாயகனின் எதிரியான திம்மரசன் என்பவன் தூண்டுதலால் அவன் கொலை செய்யப்படவே, சிறுவனாயிருந்த அடுத்த இளவலான இம்மடி நரசிம்மனையே அடுத்த பேரரசனாக்கினான். இம்மடி நரசிம்மனின் ஆட்சி (1491-1505) ஈரேழாண்டுகள் நடைபெற்றது. ஆனால் அதன் முதல் ஈராறாண்டுகள் அவன் பெயரால் நரசநாயகன் நடத்திய அரசநாயகமாகவே (1491-1503) அமைந்தது. ‘இரேய்ச்சூர் - உதயகிரி, உதயகிரி - இரேய்ச்சூர்’ என்ற அண்ணல் ஆணை மொழிகளே நரசநாயகன் உள்ளத்தில் ஓயாது சுழன்றாடின. அவன் உள்ளத்தின் ஒவ்வோர் அணுவும் ‘அந்தோ! அண்ணல் சொற்கள் பொய்த்துவிடக் கூடாதே!’ என்று துடித்தன. ‘ஆனால் எப்போது, எப்படி, எம்முறையில் இறக்குமுன் அப் பணியை முடிவுறக் காண வழிதேடுவேன்!’ என்று அவன் ஓயாது அதற்கான திட்டங்களைத் தன் மனக்கோட்டையாக எழுப்பிக் கொண்டேயிருந்தான். அச் சமயம் பேய்ச்சூராக ஆடிய அண்ணல் குரல் தானோ என்னும்படி “இரேய்ச்சூர் - உதயகிரிக்கு வழி இதோ!” என்ற ஒரு புறக்குரல் அவன் கேட்க எழுந்தது. பகமனிப் பேரரசின் மைய ஆட்சியில் முதலமைச்சனா யிருந்த காசீம் பரீதின் குரலே அது! “இரேய்ச்சூர் வட்டத்தை இதோ நீ எடுத்துக்கொள். அதற்கு வழி கூறுகிறேன்” என்று அது அவனை நோக்கி முழங்கிற்று. பகமனிப் பேரரசில் மூன்றாம் முகமதுக்குப் பின் ஆண்ட மாமூது (1482-1518) பெயரளவிலேயே பேரரசனாக ஆட்சி செய்து வந்தான். பீஜப்பூரில் மாகாணத் தலைவனாய் இருந்த யூசுப் ஆதில்கான் 1489-லேயே பீஜப்பூரைத் தனியரசாக்கி யூசுப் ஆதில்ஷா என்ற அரசுரிமைப் பெயருடன் தன்னாட்சி தொடங்கியிருந்தான். கிட்டத்தட்ட அதே ஆண்டுக்குள்ளேயே தெக்கானி கட்சித் தலைவன் நிஜாம் உல்முல்க் பஃரி அகமது நகரில் அதுபோலத் தன்னாண்மை பெற்றான். பேரரசிலோ இமத்ஷா 1485-1488லேயே தன் உரிமை நாட்டியிருந்தான். கோலகோண்டா மாகாணத் தலைவன் குதுப்ஷாவும் பீஜப்பூருடன் போட்டியிட்டு வளர்ந்து வந்தான். 1512-க்குப் பின் அவ்வரசும் தன்னாட்சி நிறுவிவிட்டது. இப்பிரிவினைகளைத் தடுக்க முடியாத பேரரசின் மைய அரசாகிய பீடாரில் கூட, உண்மை வலிமையை முற்றிலும் முதலமைச்சனான காசிம்பரீதே கையாண்டு வந்தான். அவனே வளரும் பீஜப்பூருக்கு எதிராக நரசநாயகனை ஈடுபடுத்தும் எண்ணத்துடன் அவனிடம் இந்த ஆசைக்குரல் எழுப்பினான். பரீதின் அழைப்புப் பெற்று நரசநாயகன் 1492-1493-இல் இரேய்ச்சூர் மண்டலத்தின் மீது படையெடுத்துப் பெருங்குருதிப் போராட்டமாடினான். பரீத் இதே சமயம் பீஜப்பூரை இன்னொரு புறமிருந்து தாக்கி வந்ததனால், பீஜப்பூர் அரசன் நரசநாயகனுக்கெதிராக எத்தகைய நடவடிக்கையும் எடுக்க முடியாமல் மிகவும் திண்டாடினான். இரெய்ச்சூர் மண்டல முழுவதும் சூறை கொள்ளை பரப்பி நரசநாயகன் வெற்றிமேல் வெற்றி பெற்றுவந்தான். ஆதில்கான் இப்போது இரேய்ச்சூர் மண்டலத்தை விட்டுக் கொடுத்து நேச ஒப்பந்தம் செய்து கொண்டான். வடதிசையில் இவ்வாறு மும்முரமான போரிலீடுபட்டிருந்த இந்தச் சமயத்திலும் நரசநாயகனுக்குத் தெற்கே தமிழகம் திரும்பும் அவசியமும் வாய்ப்பும் ஏற்பட்டன. திருச்சிராப்பள்ளி - தஞ்சை மாவட்டங்களை ஆண்டுவந்த விசயநகர மண்டலத் தலைவன் கோனேடிராசன் நரசநாயகனின் ஆட்சியை மதியாமல் தன்னாண்மையுடன் ஆளத் தொடங்கியிருந்தான். சேர சோழ மரபினரும் பாண்டியனுமான பூடணனும் அவனுக்கு உடந்தையாகவே இருந்ததனால், தமிழக முழுவதும் அவன் கையே மேலோங்கி வந்தது. அவன் கொடுங்கோல் ஆட்சியால் பலவகைத் தொல்லைகளுக்கும் அவதிகளுக்கும் ஆளான சீரங்கத்து வைணவர்கள் நரச நாயகனிடம் இதுபற்றி முறையிட்டனர். நரச நாயகன் 1496-இல் தமிழக முழுவதும் வீரஉலா ஆற்றிக் கன்னியாகுமரி வரை வீரமுழக்கம் செய்தான். கோனேடிராசனும் அவன் ஆதரவாளர்களும் நிலைகலங்கி அடங்கினர். சேர சோழரும் பாண்டியன் மானபூடணனும் பணிந்து பேரரசுரிமையை ஏற்றனர். நரச நாயகன் இதன்பின் மேல்திசை வழியாக உலாவந்து கோகரணத்தில் தங்கி 1497-க்குள் தலைநகருக்கு மீண்டான். நரசநாயகன் வலுப்பெற்று வருவதறிந்து புருடோத்தம கசபதி மீண்டும் தெற்கே படையெடுக்க ஆயத்தம் செய்தான். ஆனால் 1496-லேயே அவன் மாள நேர்ந்தது. அவனுக்குப் பின் அரசுரிமை ஏற்ற பிரதாபருத்திரன் 1499-இல் முன்னோன் முயற்சி தொடர முனைந்தான். ஆனால் நரசநாயகனின் இரும்புப் பிடியிலிருந்து அவன் ஓரங்குலமும் கைப்பற்ற முடியவில்லை. இரேய்ச்சூர்ப் போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வராமல் நரசநாயகனும் தன் எல்லை கடந்து உதயகிரியை மீட்கப் புறப்பட முடியவில்லை. யூசுப் ஆதில்ஷா மீண்டும் ஒரு தடவை 1501-இல் இரேய்ச்சூரைக் கைப்பற்றப் போர் தொடுத்தான். இத்தடவையும் அவன் தோற்று மாண்ட்விக் கோட்டையில் தஞ்சமடைந்தான். போர்க்களத்தில் இனி வெற்றி காண முடியாது என்ற நிலையில் அவன் நரசநாயகனைச் சூழ்ச்சியில் சிக்க வைக்க முயன்றான். நரசநாயகன் வென்ற நாடுகளையெல்லாம் தந்து அவனுடன் நேச சமரசம் செய்து கொள்வதாகப் பாவித்து, அவன் நரசநாயகனை மாண்ட்விக் கோட்டைக்குள் அழைத்தான். சமரசப் பேச்சுக் கெனக் கோட்டை வாயில் திறந்து விடப்பட்டது. நரசநாயகன் எழுபது துணைவரை மட்டுமே உடன்கொண்டு உட்சென்றான். ஆனால் இத்தகைய தறுவாய்க்கே காத்திருந்த யூசுப் போர்த்துறை அறங்களைக் காற்றில் பறக்கவிட்டு, அவன்மீது மூர்க்கமாகத் தாக்கினான். எழுபது துணைவரும் வீரமாகப் போராடி மாண்டனர். நரசநாயகன் உயிர்தப்பி ஓடி வந்தான். போரில் தோற்கடிக்க முடியாத எதிரியை யூசுப் இவ்வாறு சதிக்கொலை யால் முறியடித்துக் கொக்கரித்தான். ஆனால் நரசநாயகன் இதனால் மாண்ட்விக் கோட்டையை இழந்தானே தவிர, இரெய்ச்சூரின் பிடியைக் கைவிடவில்லை. அடுத்த ஆண்டே யூசுப் ஆதில்கானுக்குத் தன் விருப்பம் ஈடேற்ற மறுபடியும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. “பகமனிப் பேரரசன் மாமூது ஆட்சி வலுவற்றவனாய் இருந்தாலும், மத வெறியிலும் வடதிசைப் புயல் பண்பார்வத் திலும் பின்னிடாதவன். கீழ்ப்படிதலற்ற தன் மாகாணத் தலைவர்களை ஒன்றுபடுத்திச் செயலாற்ற வைக்க அவன் ஒரு திட்டமிட்டான். ஆண்டுதோறும் ஒரு நாள் பீடாரில் அனைவரும் கூடி முஸ்லீம் அல்லாத நாடான விசயநகர மீது ஒரு புனிதத் தாக்குதல் நடத்திக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே அத்திட்டம். 1501-இல் தீட்டப்பட்ட திட்டப்படி 1502-லேயே இஸ்லாமியத் தலைவர்கள் கூடி இரேய்ச்சூர் மண்டலத்தின் மீது தாக்குதல் தொடங்கினர். இத்தடவை ஆதில்ஷா எளிதாக இரேய்ச்சூர், முட்கல் கோட்டை களையும், இரேய்ச்சூர் மண்டலத்தையும் மற்றத் தலை வர்களின் உதவியுடன் கைக்கொண்டான். முதல் தேசீயச் சிற்பியாகிய சாளுவ நரசிம்மன் வெற்றிகர மாகப் போர் செய்துகொண்டே இறுதியில் தோல்வியிடையே மாள நேர்ந்தது. அவனோடொத்த தேசியச் சிற்பியாகிய நரசனோ, வெற்றிமேல் வெற்றியாக வெற்றிப் பாதையிலேயே சென்றும் வெற்றிப் புகழ் உச்சியிலிருந்த சதியால் விழுந்து மாள நேர்ந்தது. போர்க்களத்துக்கு அஞ்சாத சிங்கங்கள் இரண்டில் ஒன்று சுழல் புயலில் சிக்கி அழிந்தது; மற்றது சதிக்களத்தில் பங்கமுற்றது. கைக் கெட்டியதும் வாய்க்கெட்டவில்லை என்பது போல, இரெய்ச்சூர் வெற்றி தொடங்கியும், இரெய்ச்சூர், உதயகிரிக் குரல் நிறைவேறாமலே போயிற்று. ‘பேய்ச்சூர்க் குரல்கள் ஒன்றுக்கு இரண்டாக அவன் பின்னோர்கள் அகக் காதுகளில் ஒலித்தன. நரச நாயகனுக்குப் பின் அவன் மகன் இம்மடி நரச நாயகன் என்ற வீர நரசிம்மன் பேரளவில் அரசனாய் இருந்த இம்மடி நரசிம்மனைக் கொன்று தானே பேரரசனானான். இம்மடி நரசிம்மனுடன் சாளுவ நரசிம்மனின் சாளுவ மரபு முடிவுற்று, நரசநாயகன் வழி மரபான துளுவ மரபு தொடங்கிற்று. அம்மரபின் முதற் பேரரசனாக வீரநரசிம்மன் ‘பேய்ச்சூர்’க் குரல்களின் மரபுக் கடனாற்ற எழுந்தான். தேசீயத் திட்ட மரபு இரண்டாம் விரூபாக்கன் காலத்தில் பேரரசு எல்லையில் மட்டுமின்றி வலிமையிலும் சரியத் தொடங்கியிருந்தது. ஏனெனில் பேரரசை இதுவரை ஊக்கிவந்த தேசீய இயக்கம் இதற்குள் தளர்ச்சியடைந்து திசை திரும்பியிருந்தது. தேசீய இயக்கத்தின் அரசியல் அலை தொடங்கிய இடம் தெலுங்காணம். ஆனால் ஒரு தலைமுறைக்குள்ளாக அதில் ஒற்றுமை கலைந்து விட்டது. வேளம மரபினர் பகமனியுடன் சேர்ந்து வாரங்கலை அழிக்கவும், விசயநகரத்தை எதிர்க்கவும் தயங்கவில்லை. விசய நகரமோ தெலுங்காணத்துடன் சேர்ந்து பகமனியை எதிர்க்கத் தில்லிப் புயலாட்சியையே வரவழைக்கவும் முனைந்திருந்தது. தேசீய இயக்கத்தில் அரசியல் துறையின் அலை முந்திப் பிறந்து முந்தியே அழிவுற்று வந்தது என்பதை இது காட்டுகிறது. தவிர, தேசீய இயக்கத்தின் பிறப்பிடத்தில் ஏற்பட்ட சுழலில் பட்டே பகமனிப் பேரரசு, விசயநகரப் பேரரசு ஆகிய இரண்டும் தளர்ந்து வந்தன. மலர்ச்சியுற்று வந்திருந்த தெலுங்காணமும் புது மலர்ச்சியடைந்திருந்த ஒரிசாவும் கூட அச்சுழலுக்கு இரையாகி வந்தன. தேசீயச் சிற்பிகள் சரிவு தடுத்து மீண்டும் பேரரசுக் கோட்டையெழுப்ப முன்வந்திராவிட்டால், விசய நகரமும் மற்ற அரசு பேரரசுகள் நிலையையே அடைந்திருக்கும் என்பதை இது காட்டுகிறது. தேசீய இயக்கத்தின் இன்னொரு தளர்ச்சிக் காரணம் உண்டு. வடதிசைப் புயல் வீச்சு தென்னகத்தின் தேசீயத்தை இரு தேசீயப் பேரரசுகளாக்கியதுடன் அமையவில்லை. இரண்டிலும் இரு வேறுபட்ட தன் புயற்கூறுகளை அது படிய விட்டிருந்தது. தென் இஸ்லாமியப் பேரரசாகிய பகமனியிலும் அதன் வழிவந்த அரசுகளிலும் சமயப் பேரால் கொள்ளை சூறையாட்சி செய்யும் பண்பை அது பரப்பியிருந்தது. தென்னக அகத்தேசீயப் பண்பை அது பரப்பியிருந்தது. தென்னக அகத்தேசீயப் பேரரசனான விசய நகரத்தில் இது இஸ்லாமிய எதிர்ப்பின் பேரால் மக்கள் சமயத்தின் மீது வைதிக ஆதிக்க ஆட்சியும், சமுதாய சமய அறிவு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையும், பொருளில் வாழ்வுக்குக் குந்தகமும் விளைவித்திருந்தது. விசயநகரப் பேரரசு இவ்விரு திசைப்பட்ட நான்கு பண்புகளையும் முற்றிலும் எதிர்த் தழித்திருக்கக் கூடுமானால், அது 1565ஆம் ஆண்டைய அகப் புயலுக்கோ, அதற்குப் பிற்பட்ட புறப் புயல்களுக்கோ ஒருபோதும் ஆளாகியிருக்க முடியாது. அது மட்டுமன்று. தென்னகமோ, கீழ்த்திசையோ என்றும் அயலாட்சிக்கோ, அயலினப் பொருளியல் சுரண்டலுக்கோ அடிமைப்பட்டிருக் காது. ஆனால் விசயநகரப் பேரரசர் பொதுவாக, தேசீயச் சிற்பிகள் சிறப்பாக இந்த இருதிசை நாற்பண்புகளையுமே எதிர்த்தழிக்கப் பாடுபட்டனர். விசய நகரப் பேரரசு வரலாற்றை இதன் மூலமே அவர்கள் தென்னகத் தேசீயத்தின் நிலையான கலங்கரை விளக்கமாக்கியுள்ளனர். இரண்டாம் தேவராயன் காலத்துக்கு முன்னிருந்தே பேரரசர்கள் முஸ்லிம்களைப் படைத்துறை வீரராகவும் தலைவர்களாகவும், ஆட்சிப் பணியாளராகவும் சேர்த்துக் கொண்டிருந்தனர். தேசீயச் சிற்பிகள் இதனை இன்னும் விரிவுபடுத்தினர். இந்து தேசீயம் போற்றும் வரலாற்றாசிரியர் இச்செயலை இந்து தேசீயத்துக்கு மாறான போக்கு என்றும், இஸ்லாமியரைச் சேர்ப்பது மூலம் படைத்துறைக்கு வீரப் பண்பூட்டும் நிலை மட்டுமே நாடினர் என்றும் கருதியுள்ளனர். இதில் முந்திய குற்றச்சாட்டில் அரைகுறை உண்மை உண்டு, பிந்திய கருத்து அரைகுறை மெய்ம்மை மட்டுமே, ஏனெனில் ‘இந்து’ என்ற பெயரின் வரம்பு கடந்து பேரரசர் தென்னகத் தேசீயமே கண்டனர் என்பதை குற்றச்சாட்டே வலியுறுத்துகிறது. இஸ்லாமிய வடதிசைப் புயல் சார்ந்த சூறை வீரத்தை அச்சூறை காக்கும் வீரமாக்க விரும்பியதும் இத்திசை படைத்துறையை வீரமாக்க இதனை மட்டுமே நம்பி இருக்கவில்லை. படைத் துறையையும் அதற்கு மூலாதாரமான தேச மக்களையும் வீரப்பண்புடையவர்களாக்க இச்சிற்பிகளும் அவர்கள் வழி வந்த பேரரசர்களும் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்கள். இதனை வரலாற்றாசிரியர்கள் கண்டு போற்றிப் பாராட்டியும் உள்ளனர். தமிழகம் நீங்கலான கீழ்திசையின் படைகள் விசய நகரத்துக்கு முன்னும் பின்னும் கூட, வெறும் மக்கட் கும்பல்களாகவே இருந்தன. விசயநகரப் பேரரசர் பொதுவாக, தேசீயச் சிற்பிகளும் பின்னோரும் சிறப்பாக, மேலைநாட்டாரும் கண்டு வியக்கும் படைப்பயிற்சி அதற்கு அளித்திருந்தனர். சிற்பிகளும் பிற பேரரசுக்கும் உலகின் ஒப்புயர்வற்ற படைத் தலைமைத்திறம் உடையவர்களாகவும் இருந்தனர். ஆனால் இவற்றாலும் சிற்பிகள் மனமமையவில்லை. நாட்டு மக்களிடையிலேயே வீர உணர்வு வருவித்து, கொள்ளையிலும் போரிலும் கிலி கொள்ளாத மக்கட் பண்பையும் வீரத்தையும் வளர்க்கத் திட்டமிட்டனர். சிலம்பம், வீர விளையாட்டுக்கள், வீரக் கேளிக்கைகள் ஆகியவையும் வேட்டையாட்டங்களும் பெருமக்களிடையிலும் பொது மக்களிடையிலும் ஊக்கப்பட்டன. வீரஞ் சிறந்தவர்களை அத்துறையில் மேலும் ஆர்வமூட்ட அவர்கட்கு ஆடலழகியர்களையும் அரண்மனை மாளிகைகளையும் வழங்கினர். தமிழக, தென்னகப் பேரரசர்களில் கூட மிகப் பெரும் பாலானவர்கள் - விசயநகரத் தொடக்க காலப் பேரரசர்கள் உட்பட - தேசீயத்தில் மிதந்தவர்களேயன்றித் தேசீயக் கனவு கண்டவர்களோ தேசீயக் கோட்டை கட்ட திட்டமிட்டவர்களோ அல்லர். பெரும்புகழ்க் கரிகாலன், பெரும் பாண்டியர், இராசேந்திர சோழன் போன்றவர்கள் கூட இதற்கு விலக்கு அல்ல. இத்தேசீயக் கனவை நாம் சேரன் செங்குட்டுவனிடமும், சிலம்பு பாடிய இளங்கோ விடமும் காண்கிறோம். பெருஞ் சோழரிடையே அக்கனவு கண்டதுடன் அதற்குத் திட்டமிட்ட வர்களாக முதலாம் இராச இராசன், முதலாம் குலோத்துங்கள் ஆகிய இருவரைக் காண்கிறோம். அவர்கள் கண்ட தென்னகத் தேசீய எல்லைதான் விசயநகரம் கண்டதும் - விசய நகரத்துக்குப் பின் மைசூர்ப் பேரரசர் கண்டதும் ஆகும். பிரிட்டிஷ் ஆட்சியில் சென்னை மாகாணமும் அதனைச் சார்ந்த தனி அரசுகளும் சேர்ந்த பரப்பு கிட்டத்தட்ட இதுவே. இதன் எல்லையில் சோழர் காலம் முதல் இறுதி வரைப் போராட்டக் களங்களாய் அமைந்த பகுதி இரேய்ச்சூர் - உதயகிரிப் பகுதியே. இரேய்ச்சூர் - உதயகிரி என்ற சிற்பிகளின் பெய்ச்சூர்க் குரல்களில் புதையுண்ட மறை தேசீய உண்மையும் இதுவே. தேசீயத்துடன் இணையாத அரசு பேரரசுகளே உலகில் பெரும்பாலன. தொடக்கக்கால விசயநகரப் பேரரசர் போலத் தேசீயத்தில் மிதந்து செல்லும் பேரரசர்கள்கூட வரலாற்றில் அருகலானவர்கள், அருமைப்பாடு உடையவர்கள். இந்த ஒரு வகைக்கும் அப்பாற்பட்ட தேசீயத் திட்டம் அமைக்கும் பேரரசர், பெருந்தலைவர்களிலும் முதல் வரிசையில் இடம் பெறத்தக்கவர்கள் தேசீயச் சிற்பிகள். சேரன் செங்குட்டுவன், இராசஇராசன், குலோத்துங்கன் ஆகியோர் மரபு இவ்வகையில் அவர்கள் வாழ்வில் கிட்டத்தட்ட முழு நிறைவும் உச்ச நிலையுமே அடைகிறது எனலாம். அவர்கள் காலத்துக்குப் பின் அதே மரபு பேணித் தேசீயக் கனவார்வமும், தேசீயத் திட்டமும் வகுத்த பேரரசர்கள் தென்னகத்தில் மைசூர்ப் பேரரசரும், தென்னக எல்லையடுத்து மராத்திய தேசீய வீரன் சிவாஜியுமேயாவர். வருங்காலத் தென்னகத் தேசீய இயக்கத்திற்கும் உலக அமைப்புக்கும் சாளுவ நரசிம்மனும் நரசநாயகனும் இருபெருங் கலங்கரை விளக்கங்கள் ஆவர். 5. பீடார்ந்த பெருங்கல நாயகர் நாடார்ந்த செல்வங் குவித்திழந்தார் நவைநீங்கிவினைப் பாடார்ந்த செல்வம் பெருக்கிப் பகையறத் தென்னகத்தே ஏடார்ந்த செல்வம் இனிதோங்க வெற்றித்திருநகரின் பீடார்ந்த செல்வப் பெருங்கல நாயகர் வாழியரோ! அங்கங் குலுங்கக் கலிங்கங் கலங்கக் கடகநகர் வங்கங் கறங்கப் பிறங்கும் துரங்கப் படைநடத்திக் கங்கன் தரங்கத் தழுங்கக் களங்கொண் டடல்யவனர் சங்கந் தயங்கக் கடந்தடுஞ் சிங்கங்கள் வாழியரோ! தென்கடல் முத்தும் சங்கும் அகழ்ந்தெடுத்துத் தென்னிலங்கை மாணிக்கமும் வடகொங்கின் மாசறு பொன்னும் வயிரமும், அருமணத்தின் நறுமணங்களும், கடாரத்தின் ஆரமும், சீனத்தின் பட்டும் விரவி அகல் உலகுக்கு அளித்த மாநிலம் தென்னகம். ஆனால் அலையிடைப் பிறவா அரும்புகழ் முத்தும், மலையிடை விளையா மாணிசை மணியும், மண்ணிடைப் பொலியா வண்மை சால் பொன்னும், நுண்ணூயிர்க் குலம்படா நோன்புடைப் பவழமும் கொண்டு கோத்திழைத்து அத்தென்னகத்துக்கு வரலாறளித்த பொன்மணி முத்து மாலையாக விசயநகரப் பேரரசு விளங்குகிறது. பொன்மணி முத்து மாலையின் புகழரங்க மையமான பூவிழைத்த பொலங்காழ்ப் பதக்கமாய் விளங்கும் திருவுடையது அவ்விசயநகர மரபின் புகழ் மகுடமான கிருட்டிண தேவராயன் ஆட்சி. சீருடன் விளங்கிய தென்னகத்தின் வாழ்வுக்கும் ஒரு சீர்நிறைவாக அவ்வாட்சியும் அதனை ஏந்திய விசயநகரத்தின் மூன்றாம் மரபாகிய துளுவ மரபின் அரசும் விளங்குகின்றன. புயலும் காற்றும் மழையும் இயற்கையின் ஆற்றல்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் மனித உலகுடனும் வாழ்வுடனும் அவற்றுக்குள்ள தொடர்பை நோக்க, அவை முற்றிலும் இயற்கை மட்டுமே சார்ந்த ஆற்றல்கள் என்று கூறுவதற்கில்லை. மனிதன் இயற்கையில் தலையிட்டுக் கண் மூடித்தனமாகக் காடுகளை அழிக்குமிடத்தில் மழைவளம் குறைய நேர்கிறது. காற்றின் வேகம் மிகுந்து பாறையும் மண்ணும் மணற் காடாகின்றன. வளி மண்டலத்தின் வெப்பும் நிலத்தின் மணற் பாங்கும் சேர்ந்து புயலின் ஆற்றலை வளர்க்கின்றன. இயற்கையின் பழைய பொங்கற் காட்டின் வடிவான ஆற்றல் மனிதன் அறியாமையின் செயற்கைத் தலையீட்டால், அதே இயற்கையின் புதிய அழிவுப் புயலாற்றலாய் வளர்கிறது. அறியாமைக்குப் பதிலாக மனிதன் அறிவு செயலாற்றி யிருந்தால் இயற்கையின் பொங்கற் காட்டு வளம் புதிய இயற்கையின் பொங்கல் ஆக்க வளமாக, சோலை வளமாக ஆகியிருத்தல் கூடாததன்று என்பதை இது காட்டுகிறது. இயற்கையின் புயலாற்றலை ஒத்ததே இஸ்லாமிய உலகின் மூன்றாவது அலையாற்றல். தக்க சூழல் கிடைத்தாலன்றி அது செயலாற்ற மாட்டாது. தென்னக நீங்கலாக இடையிருட் கால மேல்திசை, கீழ்திசை முழுவதும் இத்தகைய சாதகமான சூழ்நிலையுடையதாய் அமைந்தது. அதனாலேயே செங்கிஸ்கானும் தைமூரும், பின்னாட்களில் நாதர்ஷாவும், ஆசியா ஐரோப்பா வெங்கும் சூறையாட்டு வேட்டைக் களமாக்க முடிந்தது. ஆனால் 12-ஆம் நூற்றாண்டிலிருந்து மேலை ஐரோப்பாவில் வளர்ந்து வந்த திட்டமிட்ட தேசீய வாழ்வே புயலை ஐரோப்பாவுக்குப் பரவாமல் தடுத்துக் காத்தது ஆசியாவிலோ, தென்னக நீங்கலாக வேறு எங்கும் அதற்கு எதிர்ப்பில்லாமல், மேலைக் கடல்வழி வாணிகச் சூறையாட்டாளர் வரும்வரை இந்தக் கீழை நிலவழிச் சூறையாட்டுத் தடைபடாமலே இருந்தது. தமிழ்மரபு வழி நின்று இந்த உண்மைகளை முற்றிலும் உணர்ந்து கொண்டவர்கள் விசயநகரத்தின் நடுப்பேரரசர்கள் என்பதை அவர்கள் ஆட்சித் திட்டமும் போர்முறையும் காட்டுகின்றன. நடு ஆசியப் புயல் மற்ற இடங்களைவிட வடதிசையில் தனக்கேற்ற சூழல் அமைந்தது கண்டு அங்கு நிலையான சூறை யாட்சி நடத்தி வளர்ந்தது. தென்னகத்தில் அது தேசீய இயக்கம் தூண்டி வலிவிழந்தாலும், தென்னக அகத் தேசீயத்தில் சில திவலைகளும், தென்னக இஸ்லாமியத் தேசீயத்தில் சில துளிகளும் விட்டுச் சென்றது. கடுகு சிறுத்தால் காரம் பெருகும் என்ற முறை யில், பகமனிப் பேரரசு சிதறியபின் அதன் துண்டுகள் வடதிசைப் புயலாட்சிக் கனவே காணத் தொடங்கின. சிற்பிகளின் மரபில் மூன்றாவது சிற்பியென விளங்கிய முதல் துளுவப் பேரரசன் ஆட்சி முடிவுற்ற சமயம் அப்புயற் கனவு வேதாளமாகச் சீறிப் புறப்பட்டது. ஆனால் சிற்பிகள் மரபில் வந்த செம்மலான பேரரசன் கிருட்டிண தேவராயன் கையில் வேதாளம் சிறகிழந்து, நகமிழந்து, உயிர் தப்பினால் போதுமென்று ஓட நேர்ந்தது. சதியைத் துணைக்கழைத்தே தென்னகப் புயலெழுப்பி வேதாளம் நெடுநாளைக்குப் பின் தற்காலிக வெற்றி கண்டது. ஆனால் இதனால் புயலின் துளியான குட்டி வேதாளம் பின்னால் வரும் பெரும்புயல் வேதாளத்திற்குத்தான் இரையாக நேர்ந்தது. அதையும் அப்பெரும்புயல் வேதாளத்தையும் புயலையும் விழுங்கித் தென்னகத் தேசீயம் அவ்வாற்றல்களைத் தென்றற் புதுப் பொங்கல் ஆற்றலாக மாற்றும்நாள் தொலைவில் இல்லை. வண்டூது மாமலரின் மென்னயமும் வண்தரளம் கண்டூது வெவ்வேலை தடிந்தெழும்வல் ஆற்றலும்மேற் கொண்டூது தேசீயத்தின் உயிரார்வக் கொழுந்தெழுப்பும் பண்டூது விட்டவெற்றிப் பண்பரசர் வாழியவே! திட்டமிட்ட சட்டதிட்டம் கட்டமைத்துத் தெவ்வேந்தர் கட்டுதிட்டம் வட்டமிட்டுக் கட்டழித்துக் காடுபுயல் வட்டணைத்துத் தொட்டுவளம் தேக்கியவண் மாமன்னர் கட்டளைகட் டங்கிவளர் கன்னிநிலம் வாழியே! கண்ணப் பெரியெழ மண்மாரிதூவும் கடும்புயல்முன் எண்ணப் புயல்நீர் எழில்மாரிபெய்தவ் எரியடக்கும் பண்ணப் பணைத்த பெரும்பேரரசர் பரிசின்வந்த வண்ணப் பணைத்தோட் கிருட்டிணராயமால் வாழியவே! சிற்பிகள் மரபின் முதற் செல்வக் கொழுந்து தேசீயச் சிற்பிகள் இருவரின் ஆட்சிகளைப் போலவே அவர்கள் மரபின் முதற் செல்வக் கொழுந்தாகிய வீர நரசிம்மன் (1505-1509) ஆட்சியும் மிகக் குறுகியதாகவே அமைந்தது. ஆனால் அது அவர்கள் ஆட்சியைப் போலவே போர் நிறைந்ததாகவும் தேசீயப் பண்பின் செறிவு மிக்கதாகவும் விளங்கிற்று. விசயநகரத்தின் மூன்றாம் கால் வழியாகிய துளுவ மரபின் முதல் ஆட்சியாக அமைந்த அதுவே தேசீயச் சிற்பிகள் ஆட்சிகளின் ஒரு பண்புப் பிழிவாகவும், மகுடமாகவும் திகழ்ந்தது. பேரரசின் புகழ் முகடாக விளங்கிய கிருட்டிண தேவராயன் ஆட்சிக்கு அது ஒரு முனிமுகம் என்னலாம். வீரநரசிம்மன் ஆட்சியைக் கையேற்றபோது, பெருமக்களில் பெரும்பாலோர் அவனுக்கு எதிராகவே இருந்தனர். முன் ஆட்சியிலேயே எளிதாக இரெய்ச்சூர் மண்டலத்தையும் இரெய்ச்சூர் முட்கல் கோட்டைகளையும் கைப்பற்றிக்கொண்ட யூசுப் ஆதில்கான் இத்தறுவாயைப் பயன்படுத்தி, விசயநகர எல்லை கடந்து மேலும் ஆற்றல் பரப்ப அவாக் கொண்டான். அதோனிக் கோட்டையாண்ட காசப்பன் அவனுக்கு உடந்தையாகக் கிளர்ந்தெழ ஒருப்பட்டிருந்தான். ஆயினும் இவ்வேளையிலும் வீர நரசிம்மனுக்கு ஆதரவாகப் பெருமக்களில் முக்கியமான ஒரு சிலர் இருந்தனர். இவர்களில் பின்னாளைய அரவீட்டு மரபின் முன்னோனான இராமராயனும் அவன் மைந்தன் திம்மனும் முக்கியமானவர்கள். வீர நரசிம்மன் ஆட்சிக்காலப் புயலில் அவர்கள் ஆதரவு அவனுக்குக் கைகண்ட உதவியாய் அமைந்தது. அலி ஆதில்கான் திடுமென விசயநகர எல்லையில் பாய்ந்து கந்தனவோலுக் கோட்டையை முற்றுகையிட்டான். இச்சமயம் தற்செயலாக இராமராயனும் அவன் மகன் திம்மனும் இக்கோட்டையினுள் இருந்தனர். கோட்டைக்குள்ளேறிய அலி ஆதில்கானை அவர்கள் மும்முரமாக எதிர்த்து வெளியேற்றி முற்றுகையை முறியடித்தனர். அத்துடன் ஆதில்கான் படைகளோடு காசப்பன் சேர்ந்து கொள்வதைத் தடுக்க எண்ணி அவர்கள் ஆதில்கானைத் தொடர்ந்து சென்று வளைத்துக் கடும்போர் செய்து மீண்டும் முறியடித்துத் துரத்தினர். எதிரிகளுடன் தொடர்பு கொள்ள முடியாமல் காசப்பனும் தோல்வியேற்று அதோனிக் கோட்டையை விட்டோடினான். அவர்களுடைய வீர அருஞ்செயல் துணைக்கு வீர நரசிம்மன் மிகவும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கந்தனவோலு, அதோணி ஆகிய கோட்டைகளை அவர்கட்கே அளித்தான். அத்துடன் தீர இளைஞனான திம்மனுக்கு அவன் படைத்துறை மதிப்புடன் ‘வீரக்கழல்’ (கண்ட பெண்டேரம்) அளித்துப் பெருமைப்படுத்தினான். ‘வடதிசையைவிடப் பேரரசின் தென்திசையே வீர நரசிம்மனுக்கு மிகக் கடுமையான தலையுடை தந்தது. நரசநாயகன் ஆட்சியிலேயே உம்மாத்தூர்த் தலைவர் கீழடக்கப்பட்டிருந்தனர். ஆயினும் அவர்கள் முற்றிலும் அடங்கி விடவில்லை. நரசநாயகன் ஆட்சியிறுதியிலிருந்து அவர்கள் மீண்டும் தம் ஆற்றலைப் பரப் பினர். அவர்கள் மரபின் ஒரு கிளை உம்மாத்தூரிலும், மற்றொரு கிளை சீரங்கப்பட்டணத்திலும் இருந்து கொண்டு தெற்கே கொங்கு நாடு முழுவதிலும், வடமேற்கில் துளுநாடு மீதும் தம் செல்வாக்கைப் பரப்பியிருந்தன. தேபண்ணா அல்லது தேவராயன் உம்மாத்தூரிலும், நரசராயன் சீரங்கப்பட்டணத் திலும் ஆட்சி செய்தனர். வீரநரசிம்மன் ஆட்சித் தொடக்கத்திலிருந்தே அவர்கள் திறை மறுத்ததுடன் பேரரசின் தலைநகரான பெனுகொண்டா மீதும் உரிமை கொண்டாடத் தொடங்கினர். வீரநரசிம்மன் தன் இளவலான கிருஷ்ணதேவராயனைத் தலைநகரில் இருந்து பேரரசுப் பாதுகாப்பைக் கவனிக்கும்படி விட்டு, இளவரசர் அச்சுதராயன், சீரங்கன் ஆகியவர்களுடன் படைதிரட்டி உம்மாத்தூர் மீது தாக்குதல் தொடங்கினான். ஆனால் மூன்று மாத முற்றுகைக்குப் பின் கூட உம்மாத்தூர்க் கோட்டையின் பாதுகாப்புச் சிறிதும் தளரவில்லை. அம் முற்றுகையை மேலும் நீடிப்பதில் பயனில்லை என்று கண்டு வீரநரசிம்மன் அதைக் கைவிட்டு, கிளை மரபினர் ஆட்சி செய்த சீரங்கப்பட்டணத்தைத் தாக்கினான். முன்பு நரசநாயகன் காலத்தில் அவன் கையில் உயிருடன் சிறைப்பட்டிருந்த தலைவனின் புதல்வனே இப்போது அங்கே ஆட்சி செய்து வந்தான். அவன் உம்மாத்தூர்ப் பாளையக்காரர் உதவியையும், தலைக்காட்டுப் பண்ணை முதல்வர் உதவியையும் கோரினான். இவை கிடைத்ததும் அவன் துணிகரமாகக் கோட்டைக்கு வெளியே வந்து பேரரசன் பெரும் படையைக் கடும் போரிட்டு முறியடித்தான். உம்மாத்தூர்க் கிளர்ச்சியை அடக்க முடியாமல் தோல்வியுடனேயே பேரரசன் தலைநகர் மீளவேண்டி வந்தது. ஆயினும் இப்படையெடுப்பு முற்றிலும் பயனற்றதாய் விடவில்லை. தலை நகருக்கு மீளும் முன் பேரரசன் மேற்கு மலைத்தொடர் கடந்து துளுநாடு முழுவதையும் அடக்கிப் பேரரசின் நேரடி ஆட்சிக்குக் கொண்டு வந்தான். மேல்கரைத் துறைமுகங்களையும் கைப்பற்றிப் பேரரசுத் தலைநகருடன் அவற்றின் வாணிகத் தொடர்பை மீண்டும் வலுப்படுத்தினான். அப்பகுதியில் மேலாட்சி செய்துவந்த கலச கரிகால அரசு முழுவதிலும் பேரரசின் படைகள் பரந்து அதன் தலைவனான பரராச உடையாரைப் பல களங்களில் முறியடித்துத் துரத்தின. உம்மாத்தூர்த் தோல்வி பேரரசன் வீரநரசிம்மன் உள்ளத்தை அரித்துக் கொண்டுதான் இருந்தது. அந்தக் கறையை நீக்க அவன் முன்னிலும் ஏராளமான படைகளைத் திரட்டிக் கொண்டு படையெடுக்க ஏற்பாடு செய்தான். ஆனால் இது நிறைவேறு முன் பேரரசன் இறுதிப் படுக்கையடைந்தான். சீர்திருத்தச் செம்மல் உம்மாத்தூர் தோல்வி பேரரசுக்கு ஒரு கறை என்று வீர நரசிம்மன் நினைத்தாலும், அதுவே உண்மையில் தேசீயச் சிற்பிகளின் தோல்வி வரிசையில் நின்று, அச்சிற்பிகளின் வேலைக்கு ஒரு மகுடமாய் அமைந்தது. பேரரசின் வலுக்கேட்டுக்குப் புறப்புயலோ, புறப்படையெடுப்போ காரணமல்ல. கட்டுப்பாடற்ற அகவலிமைக் கோளாறே காரணமென்பதை அத்தோல்வி பேரரசனுக்குக் காட்டிற்று. வடதிசைப் போர்கள், தென்திசைக் கிளர்ச்சிகள் ஆகியவற்றால் முற்றிலும் நிரப்பப்பட்ட தன் குறுகிய ஆட்சிக் காலத்திலும் படைச் சீர்திருத்தம், நாட்டாட்சிச் சீர்திருத்தம் ஆகியவற்றில் கருத்துச் செலுத்த இத்தோல்விகளே பேரரசனைப் பெரிதும் ஊக்கின. போரின் வெற்றி தோல்விகள் வேறு, நிலையான பேரரசு நலம் வேறு என்பதை வீரநரசிம்மன் நன்குணர்த்திருந்தான். நிலையான வலிமையில் படைத்துறை ஒரு கூறு, மக்கள் வாழ்க்கை வளம், வாழ்க்கை நலம் மற்றொரு பகுதி, இரண்டிலுமே அவன் கருத்துச் சென்றது. உம்மாத்தூர்த் தோல்வியின்பின் அவன் நேரே தலைநகர் திரும்பி வராமல் துளுநாடு வென்று மேல்கரைத் துறை முகங்களைச் சீரமைத்தது அவன் படைத்துறைச் சீர்திருத்தத்துக்கு ஒரு தொடக்கமாகும். அது தலைநகருக்கு உலக வாணிகம் திறந்துவிட்டதுடன், படைத்துறைக்குக் குதிரைகளும் தந்தன. அத்துடன் வீர நரசிம்மன் குதிரைகளைத் தேர்ந்தெடுத்து வாங்குவதற்கும் குதிரைகளைத் தக்கமுறையில் பயிற்றுவித்துப் பேணுவதற்கும் ஆட்களை அமர்த்தினான். குதிரைகளைப் பயிற்றுவர், குதிரை வீரர்களுக்குப் படைப் பயிற்சியளிப்பர். படைத்தலைவர் ஆகியவர்களைச் சாதி சமய, மொழி, இன வேறுபாடின்றித் திறமை ஒன்றையே குறியாகக் கொண்டு தேர்வு செய்து திரட்டினான். வீரநரசிம்மன் காலத்திலேயே போர்ச்சுகீசியர் கண்ணனூர்ப் பக்கமிருந்து கடற்கரையோரமாகத் தம் வாணிக, சமய, அரசியல் ஆட்சியைப் பரப்பி வந்தனர். வீரநரசிம்மன் அவர்களுடன் நட்பாய் இருந்ததுடன் தன் படைகளை மேலை முறையில் பயிற்றுவிப்பதற்குரிய உதவிநாடி அவர்களிடம் தூதும் அனுப்பினான். ஆயினும் போர்ச்சுக்கீசிய ஆட்சித் தலைவனான அல்மேடா பட்கலில் ஒரு கோட்டை கட்ட இணக்கம் கோரியபோது, பேரரசன் இணக்கம் அளிக்கவுமில்லை மறுக்கவுமில்லை! துளுவ மரபுப் பேரரசர் எல்லோரிடமுமே நாம் இந்தத் தேசீய எச்சரிக்கை நிலையைக் காண்கிறோம். தமிழகக் கடல் மரபுத் தொடர்பையும் மேல்கரைக் கடல் வாணிகத் தொடர்புடன் அவர்கள் பேணியிருந்தால், அவர்கள் வட திசையரசுகளையும் வென்று, மேல்திசைக் கடல் ஆட்சி ஆதிக்கத்தையேகூடத் தடுத்திருக்கக் கூடும் அவ்வழி கீழ்திசை வாழ்வின் போக்கையே அவர்கள் மாற்றியமைத்திருக்கக்கூடும் என்பதில் ஐயமில்லை. படைகளை மட்டும் இவ்வாறு பயிற்றுவித்ததுடன் நிற்காமல், நாட்டுமக்களிடையேயும் வீரம் பரப்பப் பேரரசன் பல புத்தம் புது முறைகளைக் கையாண்டான். வீரர், தொழிலாளர், குடியானவர், பெருமக்கள் ஆகிய எல்லா வகுப்புக்களிலுமே உரிமைபற்றிய சச்சரவுகளை அதற்குரியவர்கள் தாமே பேரரசர் முன்னிலையில் மற்போர் செய்து தீர்த்துக் கொள்வதே கண்ணியமான முறையாக்கப்பட்டது. வாள்போர், சிலம்பம் ஆகிய வீரர் கேளிக்கைகளுக்குப் பேரரசன் நாடெங்கும் ஊக்கமளித்தான். அவற்றில் சிறப்புப் பெற்றவர்க்குத் தக்க பரிசில்களுடன் பேரழகிகளை மணம் செய்வித்து வீரத்துக்கும், அழகுக்கும் ஒருங்கே மதிப்பளித்தான். தென்னகத்தின் வீர மரபைக் கதையாக்கிவிடாமல் செயலாக்கி வளர்த்த பெருமை வீரநரசிம்மனுக்கு உரியது. மக்கள் ஒழுக்க முறையிலேயே பேரரசன் ஒரு புரட்சி உண்டு பண்ணினான். கோழைத்தனமே பெருங்குற்றமாகவும், மிகவும் கீழான அவமதிப்புக்குரிய பண்பாகவும், அவன் தென்னக மக்கள் சமுதாயம் எண்ணும்படி செய்தான்! இம்முறைகளினால் நிலைப்படைகளல்லாது எந்நேரத்திலும் பேரரசில் மூன்று அல்லது நான்கு இலட்சம் வீரர் படை திரட்டப்படத் தக்க நிலை ஏற்பட்டது. ஆட்சியின் அரங்கங்களின் சிறுசிறு நுணுக்கங்களில்கூடப் பேரரசன் கண்ணோட்டம் செலுத்தினான். குடிகள் எவர் குறையையும் கேட்டுத் தன்னாலியன்றவரை உடனடியாக அல்லது விரைந்த தீர்ப்புக்கள் காணலும், மக்கள் துன்பங்குறைக்கவும் அவன் தன் முழுச்சிந்தனையும் செலுத்தினான். இதற்கு முன்பு எந்தப் பழங்காலப் பேரரசர் காலத்திலும் நாம் கேள்விப்படாத முறையில் அரசியல் குறைகளை நீக்க மக்கள் கிளர்ச்சி இயக்கம் நடத்திய செயலை வீரநரசிம்மன் ஆட்சியிலேயே நாம் கேள்விப்படுகிறோம். திருமண மக்களுக்கான வரியை எதிர்த்து நடைபெற்ற இயக்கம் அவன் நாட்களிலேயே தொடங்கிய தென்று அறிகிறோம். கோட்பாட்டு முறையில் குடியாட்சி நிலவுவதாகக் கூறப்படும் இந்நாட்களில் கிளர்ச்சிகள் நடத்துவது எளிது. ஆனால் தற்காலம் குடியாட்சியால் மக்கள் குரல் கட்சிக் குரல்களாகப் பிரிவுறுவதாலும், ஆட்சிப் பொறுப்பு மக்களுக்கு எட்டாத மையத் துறைக்குக் கொண்டு செல்லப்படுவதாலும், அது ‘துறை துறையாகப் பிரிக்கப்பட்டுச் சிதறிப் போவதால் தீர்வுகள் யாவும் கடவுள் தீர்வுகள்’ என்று கூறும்படியாகவே எல்லா நாடுகளிலும் ஆய்விட்டன. விசயநகரப் பேரரசின் நடுமரபுக்காலம் இடைக்கால மக்களின் குரலற்ற நிலைக்கும் இக்கால மக்களின் ஆற்றலற்ற நிலைக்கும் இடைப்பட்ட பொன்நிலை என்பது குறிப்பிடத் தக்கதாகும். அத்துடன் இடைக்காலங்களில் மக்கள் குரல் பெரும்பாலும் புரோகிதர் குரல் அல்லது உயர்குடிக் குரலாகவும், இன்று அது ஆட்சி வகுப்பினர், செல்வர் குரலாகவுமே உள்ளது. விசயநகர நடுமரபுக் காலநிலை இவ்வகையிலும் நடு நிலைப்பட்ட பொன்னெறி என்னலாம். கிருட்டிண தேவராயன் கன்னிப்போர் சாளுவ நரசிம்மன், நரசநாயகன் ஆகியோர் ஆட்சித் தொடக்கத்திலும் வீரநரசிம்மன் ஆட்சித் தொடக்கத்திலும் பேரரசு இருந்த நிலையிலேயே கிருட்டிண தேவராயன் ஆட்சித் தொடக்கத்திலும் இருந்ததென்று கூறலாம். உண்மையில் நிலைமை அப்போதைய நிலைமைகளை விட மோசமென்றே கூற வேண்டும். ஏனெனில் தெற்கே உம்மாத்தூர் தலைவன் பெனு கொண்டாவின் உரிமை கோரியது போய், பெனுகொண்டாவையே கைப்பற்றி பேரரசுக் கெதிராகக் கச்சைக் கட்டிக் கொடியுயர்த்திக் கொக்கரித்துக் கொண்டிருந்தான். சாளுவ நரசிம்மனின் “இரேய்ச்சூர் உதயகிரி”க் குரல் இன்னும் ஓய்ந்த பாடில்லை; இரெய்ச்சூர் பீசப்பூர் வசமும் உதயகிரி கசபதி அரசர் வசமுமே இருந்தன. பீசப்பூர் ஆதில்ஷாஹி மரபினர் (1490-1690) ஆட்சியிலும், கோல்கொண்டா குதப் ஷாஹி மரபினர் (1512-1672) ஆட்சியிலும், அகமது நகர் நிஜாம் ஷாஹி மரபினர் (1490-1595) ஆட்சியிலும், பேரரசர் இமத் ஷாஹி மரபினர் (1485-1568) ஆட்சியிலும், மைய அரசனான பிடார் பரீத் ஷாஹி மரபினர் (1490-1609) ஆட்சியிலும் அவ்வப்போது போட்டி பூசலிட்டும், விசயநகருக் கெதிராகத் தனித்தும் சேர்ந்தும் போரிட்டும் இருநூற்றாண்டுகள் வாழ்ந்து வந்தன. கிருட்டிண தேவராயன் ஆட்சித் தொடக்கத்திற்கு முன்பு நரசநாயகன் கால முதலே அவை தம்மை வடதிசைப் புயலின் தென்திசைச் சின்னமாக்கிக் கொண்டு, ஆண்டுதோறும் விசயநகரத்தைக் கொள்ளை யடிக்கும் கடனை ஒரு நோன்பாக மேற்கொண்டிருந்தன. சாளுவ நரசிம்மன் காலத்திலிருந்து இவ்வாறு அவர்கள் தோல்விகளின் சின்னமாகத் தீங்குகளே எதிர்புறம் பெருகி வந்ததாகத் தோன்றுகிறதானாலும், உள்ளூர அத்தீங்குகளை எதிர்க்கும் பேரரசின் ஆற்றலும் வளர்ந்து கொண்டுதான் வந்தது. வயது முதிர்ந்த முரட்டு ஆட்டுக் கடாக்களின் மூர்க்க எதிர்ப்புக்கு ஆளான புலிக்குட்டி, அவற்றின் தாக்குதலால் அலைப்புண்ட நிலையில் வளர்வது போலவே தேசீயப் பேரரசு வளர்ந்து வந்தது. அது முதல் மரபுக்காலப் பேரரசன்று, ஒரு புதிய பேரரசுக் கோட்டை என்பதை அவ்வெதிரிகள் உணர வெகு நாளாகவில்லை. கிருட்டிண தேவராயன் (1509-1529) ஆட்சி முந்தய மூன்று ஆட்சிகளைவிட நீண்டது. அத்துடன் மூவர் ஆட்சியின் முதிர் பயனுங் கண்டு அது விசயநகரத்தின் புகழை உலகளாவிய தாக்கிற்று. ஆட்சித் தொடக்கத்தில் தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் புயல்கள் புதிய ஆட்சிமீது உறுமின. ஆனால் தேசீயச் சிற்பிகள் மரபில் வந்த ஒப்பற்ற படைத்தலைமைத் திறம்வாய்ந்த கிருட்டிண தேவராயன் தெற்கே பாதுகாப்பு ஏற்பாடுகளை மட்டும் செய்து கொண்டு வடதிசை மீது பாய்ந்தான். வடதிசை வெற்றிகள் பேரரசின் புகழை வானளாவ உயர்த்தி தென்திசை வெற்றிகளை எளிதாக்கின. வடதிசைப் புயலின் கனவு கண்டு அதன் புதுமரபாக 1502 முதல் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் நடத்தி வந்த தென்னக வடதிசை இஸ்லாமிய அரசர்கள் வழக்கம் போல் 1509-ஆம் ஆண்டிலும் ஆட்டுக் கூட்டங்களை மேயவரும் நரிகள் போல இறுமாந்து பீடாரில் திரண்டு இரெய்ச்சூர் நோக்கி ஊர்வலம் வந்தனர். ஊர்வலத்தின் புயலிசை முழக்கம் நரிகளுக்கு அழிவு வெறியூட்டி வந்தது. ஆனால் அவ்வாண்டு அவர்கள் கொண்டாட எண்ணிய பிறரது அழிவுத் திருநாள் அவர்களுக்கே அழுகைத் திருநாளாக, பல அழுகைத் திருநாட்களின் முன்னோடியாக அமைந்தது. இஸ்லாமிய அரசர்கள் இரெய்ச்சூர் வருவதற்குள் பேரரசன் கிருட்டிண தேவராயன் படைகள் அவர்களைத் தீவானி என்னுமிடத்தில் சென்று சந்தித்தன. இவ்விடத்திலேயே கிருட்டிண தேவராயனின் கன்னிப் போராட்டம் தொடங்கிற்று. பீடாரிலிருந்து வந்த ஊர்வலப் படைகளுக்குப் பெயரளவில் பகமனிப் பேரரசனாயிருந்த இரண்டாம் முகமதுஷா தலைவனா யிருந்தான். அவனுடன் மாலிக் அகமது பஃரி படைத் தலைவனாகப் பணியாற்றினான். தவிர பீசப்பூர் அரசன் ஆதில்கான், பேரர் அரசன் இமத் உல் முல்க், கோல் கொண்டாத் தலைவன் குதுப் உல்முல்க், மீர்சாலுதுப் உல்லா, நூரிகான், குவாஜா ஸீஜஹான் ஆகிய அரசர்களும், படைத் தலைவர்களும் உடனிருந்தனர். மாமூது இஸ்லாமியப் படைகளின் நடுஅணித் தலைமையையும், குதுப் உல் முல்க் அதன் வலப்புற அணியின் தலைமையையும் ஏற்றிருந்தனர். இடப்புற அணியின் இரண்டு பிரிவுகள் மாலிக் அகமது பஃரி தலைமையிலும் மற்றொரு பக்கப்பிரிவு ஆதில்கான் தலைமையிலும் வீறிட்டு நின்றன. விசயநகரப் படைகளும் இதற்கேற்ப மூவணிகளாக வகுக்கப்பட்டிருந்தன. போர்த் தொடக்கத்தில் குதுப் உல்முல்கின் இஸ்லாமிய வலப்புற அணிகள் விசயநகர இடப்புற அணிகளைத் தகர்த்தன. ஆயினும் விசயநகரப் பேரரசரின் நடு அணித்தாக்குதலால் முகமது ஷாவின் ஒரு படையணி சிதைந்து பின்வாங்கிற்று. இதனுடன் முஸ்லீம் அணிகள் முழுவதுமே விசயநகர அணிகளின் ஒன்றுபட்ட மோதுதலால் உடை பெற்றன. அத்துடன் முன்னேறி வந்த பீசப்பூர் அரசன் ஆதில்கான் தன் படைகளின் சீர்குலைவால் தனிப்படத் துண்டிக்கப்பட்டான். இச்சிக்கலிலிருந்து விடுபடும் முயற்சி யிடையே அவன் குதிரையே அவனைக் கீழே தள்ளி மிதித்துத் துவட்டிவிட இருந்தது. விசயநகரத் தலைவர்களுள் ஒருவனான சாளுவதிம்மன் குதிரைக் காலில் ஒண்டியிருந்த காலனிடமிருந்து அவனைக் காத்து அவனுக்கு விசயநகரத்தின் பெருந்தன்மையைக் காட்டி உயிர்ப்பிச்சை அளித்தான் என்று கூறப்படுகிறது. தம் அரசன் நெருக்கடி நிலை கண்ட சில பீசப்பூர் பெருமக்கள் அவனை மீர்ஜா லுத்புதீனிவர்களின் கூடாரத்துக்குக் கொண்டு சென்று மருத்துவம் செய்தனர். அவன் காயங்கள் ஆற நாட்கள் பிடித்தன. ஆனால் அதற்குள் படைகளும் கூடாரமும் ஓட்டம் எடுக்க வேண்டியதாயிற்று. விசயநகரப் படைகள் எதிரிகள் மூச்சுவிட முடியாதபடி அவற்றின் ஓட்டத்தைத் தொடர்ந்து சென்று போரிட்டன. பீசப்பூர் எல்லை சென்றபின் ஆதில்கான் எதிர்த்து நின்று கோவில்கொண்டா போரில் மீண்டும் தோல்வியுற்று மாண்டான். கோவில்கொண்டாக் கோட்டையும் கிருட்டிண தேவராயன் கைவசப்பட்டது. இப்போரினால் பேரரசன் கிருட்டிண தேவராயன் இஸ்லாமிய அரசுகளின் புயல் மரபில் வந்த கோழைத்தனமான திட்டத்துக்கு ஒரு சவுக்கடி கொடுத்தான். அவர்கள் அழிவு வெறி குழப்ப வெறியாயிற்று. கிலியூட்டி ஓடுபவர்களைத் துரத்திச் செல்வது. ஆயுதமேந்தாத பொதுமக்களையும் பெண்டிரையும் குழந்தைகளையும் கொன்று குவிப்பது என்பதையே வீரமாகக் கொண்டிருந்த புயல் மரபு இப்போரில் பெற்ற அதிர்ச்சியை அது நெடுநாள் மறக்க முடியவில்லை. “வெற்றியும் கொள்ளையும் நாடி வந்த பெருமக்கள் இப்போது தங்கள் போர்க் கம்பளங்களை மடித் தெடுத்துக் கொண்டு பீடாரிலேயே சென்று படுக்க விரைந்தோடினர்” என்று விசயநகரக் கல்வெட்டுக்கள் அவர்கள் நிலையைப் பெருமித நகைச்சுவைபட விரித்துரைக்கின்றன. சேரன் செங்குட்டுவனும் பாண்டியரும் சோழரும் பின் பற்றிய வீரப் பரணியின் முதல் எதிரொலியை நாம் இவ்விசயநகரப் பேரரசனின் பெரும் போரிலே காண்கிறோம். ஆனால் தமிழ் மரபின் வீறினை நாம் போர் வெற்றியில் மட்டுமல்ல, அதன் பின்னணி அரசியல் நிகழ்ச்சிகளிலும் காண்கிறோம். தீவானிப் போர், கோவில் கொண்டாப் போர் ஆகியவை தொடங்குமுன்பே, போர்ச்சுக்கீசியத் தலைவர்கள் பேரரசனுக்கு ஓர் அவசரத் தூதனுப்பியிருந்தனர். முன் ஆட்சியில் கோரியபடி பட்கல் துறைமுகத்தில் கோட்டை கட்டிக் கொள்ள இணக்கம் தெரிவிப்பதானால், போரில் உதவுவதுடன் குதிரை வாணிகத் தொடர்பை முற்றிலும் விசய நகரப் பேரரசனுக்கே உரிமைப்படுத்துவதாகவும் வாக்களித்திருந்தனர். பேரரசன் அவர்கள் உதவியின் அருமையையும் குதிரை வாணிகத்தின் அருமையையும் அறிந்தவன். ஆயினும் அவன் அவர்கள் தூதை ஏற்கவோ மறுக்கவோ செய்யவில்லை. அவர்கள் உதவி யில்லாமலே போரில் வெற்றிபெற்றுத் தன் பேரரசின் மதிப்பையும் வீறினையும் உயர்வுபடுத்திக் காட்டினான். போர்ச்சுக்கீசியரும் பேரரசன் பெருங் குறிப்பறிந்து இஸ்லாமிய அரசனிட மிருந்து கோவாவைக் கைப்பற்றினர். இதன்பின் பேரரசன் கைமாற்று எதிர்பாராமல் பட்கலில் கோட்டை கட்ட இணக்கமளித்தான். அவர்களும் குதிரை வாணிக மட்டுமின்றித் தங்கள் முழு வாணிக உரிமையையும் படைத்துறைப் பயிற்சி உதவியையும் பேரரசுக்கு மனமுவந்து அளித்தனர். கங்கம் குலுங்கிற்று! கலிங்கம் கலங்கிற்று! தீவானி, கோவில்கொண்டாப் போர்கள் கிருட்டிண தேவராயன் வடதிசைப் போர்களில் ஒரு கட்டம் மட்டுந்தான். ஆனால் ஆட்சித் தொடக்கத்திலே தெற்கே உம்மாத்தூர் தலைவன் கங்கராயன் பெனுகொண்டாவைத் தாக்கிக் கைப்பற்றிக் கொண்டு பேரரசையே எதிர்த்துக் கொக்கரித்துக் கொண்டிருந்தான். அவனுக்கெதிரான பாதுகாப்புக்களை மட்டும் செய்துவிட்டுப் பேரரசன் வடக்கே படை திருப்பியிருந்தான். வடதிசை வெற்றியில் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி அவன் இப்போது தென்திசை திருப்பினான். விசயநகரத்தில் பேரரசனிடமிருந்தே நேரில் ஊதியம் பெற்றுப் பேரரசின் படைத்துறையரங்கமாக நிலவிய நிலைப் படைகள் “கைஜீதம்” என்றும், வடதிசைப் பண்ணை நில ஆட்சிமுறையில் விசயநகர காலத்தில் பெருமக்கள் மூலம் திரட்டப்பட்ட படைகள் “அமரம்” என்றும் அழைக்கப் பட்டன. உம்மாத்தூர் படையெடுப்பில் அமரம் படைகள் மட்டுமே இரண்டு இலட்சம் காலாட்கள், 24 ஆயிரம் குதிரைகள், 1200 யானைகள் கொண்டிருந்தன என்று போர்ச்சுக்கீசிய எழுத்தாளர் நூனிஸ் குறிப்பிடுகிறார். படையெடுப்பின் முதல் ஆண்டாகிய 1510-லேயே பெனு கொண்டா எதிரியிடமிருந்து பிடிபட்டது. கொண்டமராசனிடம் அதன் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் உம்மாத்தூரும் தலைநகரான சிவசமுத்திரமும் பிடிபட்டன. இப்போரில் கங்கராயன் கீழிருந்த சிக்கராயன் பேரரசனின் பக்கமாக இருந்து போர் செய்தான். சிவசமுத்திரத்தி லிருந்து ஓடிய கங்கராயன் காவிரியில் மூழ்கி இறந்தான். கிருட்டிணராயன் சிவசமுத்திரம் கோட்டையைத் தவிடுபொடி செய்து அதனை நரிகள் நடமாடும் புதர்க் கோட்டையாக்கினான். சிவசமுத்திரத்துக்குப் பதிலாகச் சீரங்கப்பட்டினம் தலைமை யிடமாக்கப்பட்டு, ஒரு புது மாகாணம் வகுக்கப்பெற்றது. சிக்கராயனுடன் செம்ப கௌடன், வீரப்ப கௌடன் ஆகியோர் அதன் ஆட்சியாளராக்கப்பட்டனர். உம்மாத்தூர் போர் இரண்டு ஆண்டுகளிலேயே முடிந்தாலும் அது ஒரு நாளைக்குள் முற்றுவிக்கப்பட்டு விட்டதாகக் கவிஞர் மரபு விதந்துரைக்கின்றது. சாளுவ நரசிம்மனின் இரெய்ச்சூர்-உதயகிரி குரலின் ஒரு பாதியான உதயகிரி இன்னும் மீட்கப்படாமலே இருந்தது. சிற்பிகள் காலத்து உம்மாத்தூர்த் தோல்வி துடைத்தபின், சிற்பிகளின் மரபுக்குரிய கதிரிளங்கொழுந்தாகிய கிருட்டிண தேவராயன் மீண்டும் வடகிழக்குத் திசை நோக்கினான். கசபதி பிரதாபருத்திரன் ஆட்சி இன்னும் ஒரிசா முதல் நெல்லூர் வரை இராசமகேந்திரவரம், கொண்டவீடு, வாரங்கல் முதலிய பரப்புகள் முழுவதும் அடக்கியதாகவே இருந்தது. கிருட்டிண தேவராயன் உதயகிரிக் கோட்டை மீது தாக்குதல் தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் அதன் முற்றுகையை இடைவிடாது தொடர்ந்தான். முற்றுகை மிகவும் கடுமுயற்சியாகவே இருந்தது. வெல்ல முடியாததாக, நுழைய முடியாததாகக் கருதப்பட்ட அக்கோட்டைக்குள் செல்லப் பேரரசப் படைகள் மலைகளும் பள்ளத்தாக்குகளும் வெட்டிக் குடைந்து புதுப் பாதைகளிடம் வேண்டியதாயிருந்தது. இது முடிந்தபின் கோட்டை பிடிபட்டது. முன்னாட்களில் தமிழகப் பல்லவப் பேரரசன் வாதாபி வென்றபோது வெற்றிச் சின்னமாகத் தமிழகத்துக்கு வாதாபி கணபதிச்சிலை கொண்டுவந்து அப்புதிய தெய்வத்தின் வணக்கத்தையும் தமிழகத்தின் தேசீய வணக்க முறையாக்கினான் என்று அறிகிறோம். சோழப் பெரும் பேரரசன் இராசராசன் சேரனை வென்றபோது இதுபோலவே அந்நாட்டின் மரகதவினாயகரைத் திருப்பூவனத்தில் கொண்டு வந்து நிறுவியதாக அறிகிறோம். இதே தமிழ் மரபுகளை நினைவூட்டும் வகையில் கிருட்டிண தேவராயன் உதயகிரிக்கோட்டை வெற்றியின் சின்னமாக அங்குள்ள ஒரு கண்ணன் சிலையைக் கொண்டுவந்து வெற்றித் திருநகரில் நிறுவி, அதற்குப் பெருங்கோயிலெழுப்பி, அத்தெய்வத்தையே பேரரசின் புதிய தேசீயத் தெய்வமாக்கினான் என்று அறிகிறோம். உதயகிரி வெற்றிக்குப்பின் கசபதியாட்சி அத்தமனகிரியில் சரிவது போலச் சரியத் தொடங்கிற்று. விசயநகரப்படைகள் கோட்டை கோட்டையாக, நகரம் நகரமாக, கசபதியின் படைகளைத் துரத்திக் கொண்டே வெற்றி ஊர்வலமாகத் தலைநகர் வாயில்வரை சென்று கசபதிப் பேரரசனைப் பணிய வைத்தே மீண்டன. முதலில் விசயநகரப் படைத்தலைவன் சாளுவதிம்மனும் பின் நேரே கிருட்டிண தேவராயனும் கொண்ட வீட்டுக் கோட்டை முற்றுகையில் ஈடுபட்டனர். பலமாத முற்றுகையின் பின் விசயநகரப் படைகள் மதிலேறி உட்புகுந்து கோட்டையைக் கைப்பற்றின. கசபதிப் பேரரசன் பட்டத்தரசியும் இளவரசனும், கசபதி ஆட்சியின் பெருந்தலைவர், பெருமக்கள் பலரும் இப்போர் முடிவில் சிறைப்பட்டு வெற்றித் திருநகருக்குக் கொண்டுவரப் பட்டனர். ஆனால் வெற்றித்திருநகர் நடத்திய வெற்றி ஊர்வல விழா கசபதிப் பேரரசு முழுவதும் கடக்கும் பேரரசப் படைகளின் ஊர்வல விழாவைத் தடைசெய்யவில்லை. கொண்ட வீட்டில் - சாளுவ திம்மனையே மண்டலத் தலைவனாக அமர்த்திவிட்டு, அவை மேற்சென்றன. கோலபள்ளி, நலகொண்டா, வாரங்கல் ஆகிய கோட்டைகள் ஒன்றன்பின் ஒன்றாக விரைந்து வீழ்ச்சியடைந்தன. முதல் முற்றுகையைத் தடுக்கப் படைகளுடன் வந்த கசபதிப் பேரரசன் பிரதாபருத்திரன் பெனுகங்கா ஆற்றங்கரையில் நடைபெற்ற போரில் கைய முறியடிக்கப்பட்டான். இப்போரில் கசபதிப் பேரரசன் முழுப்படை பலமும் ஈடுபடுத்தப் பட்டிருந்தது. 5 இலட்சம் படை வீரரும் 20 ஆயிரம் குதிரை வீரரும் 1300 யானைகளும் அடங்கிய இம்மாபெரும் படையின் தோல்வி விசயநகரத்தின் புகழை உச்சநிலைக்கு உயர்த்திற்று என்பதில் ஐயமில்லை. தவிர, கோலப் பள்ளிக் கோட்டையின் காவலில் கசபதிப் பேரரசின் பெரும் படைத்தலைவனான பிரகரேசுவர பாத்திரன் தலைமை வகித்தான். போட ஜண்ண மகாபாத்திரன், பிஜிலிகான் முதலிய புகழ்பெற்ற தலைவர்கள் உடனுதவியா யிருந்தனர். பேரரசின் அக நாட்டெல்லையின் முதல் எல்லைத் தலை நகரான இராச மகேந்திரவரம் வீழ்ச்சியடைந்தபின் வெற்றிவிழா விழாவெற்றியாகவே மாறிற்று. ஆனால் இராசமகேந்திரவரத்தை அடுத்த போத்தனூர்க் கணவாயில் விசயநகரப் படைகள் நுழைய விடாமல் சிம்மாத்திரி அரசனான சித்தாபாகான் குதிரை வீரரான 60 ஆயிரம் வில்லாளிகளுடன் கடும்போரிட்டான். போத்த னூரடுத்த சிம்மாத்திரியில் ஒரு வெற்றிக் கம்பம் நாட்டிய பின் விசய நகரப்படைகள் கசபதிப் பேரரசின் பெருந் தலைநகரான கட்டாக் அல்லது கடகத்தின் வாயில்களுக் குள்ளேயே புகுந்தன. கலிங்கப் பேரரசரான கசபதி மரபினர் பெருமை முற்றும் இப்போரில் குலைவது கண்டு, பேரரசன் பிரதாபருத்திரன் கிருட்டிணராயனிடம் பணிந்து தன் மகளை அவனுக்கு மணம் செய்துகொடுத்து நேச ஒப்பந்தம் செய்து கொண்டான். கலிங்கம் கசபதிப் பேரரசன் நாட்டின் பெயர்; கடகம் அதன் தலைநகர் பெயர். நாட்டின் தேசீய இனப்பெயர் ஒட்டியன் என்பது. இப்பெயர்கள் தமிழில் வாய்ப்பான வேறு பொருளும் தருவன. கலிங்கம் என்பது ஆடை; கடகம் என்பது கைவளை; ஒட்டியன் முன்பு ஒட்டலன் அல்லது பகைவனாயிருந்து பின் ஒட்டியவன் அல்லது நண்பன் என்று பொருள்படும். மூன்று பெயர்களுக்கு இந்த இரு பொருளும் இயையும்படியாக, கிருட்டிணராயன் கலிங்க நாட்டு வெற்றியையே அதன் பேரரசன் பெண்ணை மணந்த காதல் வெற்றியாகவும் இணைத்து, அந்நாளையத் தமிழ்ப் புலவர் புனைந்து கவிபாடினர். கிருட்டிண தேவராயரால் நன்மதிப்புப் பெற்று அவர் அவையிலிருந்த தமிழ்க் கவிஞர் குமார சரசுவதியின் கலிங்க வெற்றி பற்றிய இத்தகைய ஒரு பாடல் நாவலர் சரிமை மேற்கோள் மூலம் நமக்கு வந்து எட்டியுள்ளது. கலிங்கம் இழந்துநுதிக் கைச்சங்கம் தோற்று மெலிந்துகட கம்நழுவ விட்டாள் - மலர்ந்தமலர்ப் பொன்னிட்ட மானகிருட்ண பூபால உன்றனுக்குப் பின்னிட்ட ஒட்டியன் பொற்பெண். இதே நயமுடைய மற்றோர் அழகிய பாடலும் “பெருந் தொகை” என்ற பாடல்திரட்டு மூலம் நம் கை வந்துள்ளது. படைமயக் குற்றபோதும் படைமடம் ஒன்றிலாதான் மடைசெறி கடகத்தோளான் மதிக்குடை மன்னர்மன்னன் கெடிமன்னர் வணங்கும் தாளாண் கிருட்டிண ராயன் கைபோல் கொடைமடம் என்பதம்ம, வரையாது கொடுத்தலாமே! என்று “கடகம்” இதிலும் சிலேடையாக வழங்கப் பெற்றுள்ளது. தவிர கொடை மடத்துக்கே இங்கே கிருட்டிண ராயன் கைக்கொண்ட இலக்கியமாகக் குறிக்கப்பட்டுள்ளது. சிம்மாத்திரி அல்லது சிம்மாசலத்தில் கிருட்டிணராயன் வெற்றித்தூண் நாட்டியது வட கூவத்துக் கோயில் கொண்ட பெருமாள் செயல் என்று ஒரு பக்தி மிக்க புலவர் பாடியுள்ளார். கிரிபோல் விளங்கிக் கிளரும் புயக் கிருட்டிணராயர் தரைமீது சிம்மாத்திரியில் சயத்தம்ப நாட்ட வரமாதர வாலளித்தே வடகூவ மேவும் கருமாமணி வண்ணனைநீடு கருத்துள் வைப்பாம்! இஸ்லாமிய மரபின் காவலன் தேசீயச் சிற்பிகளின் உம்மாத்தூர்த் தோல்வியின் கறையைத் துடைத்து அச்சிற்பிகளது இரெய்ச்சூர் உதயகிரிக் குரலைக் கிருட்டிண தேவராயர் கன்னிப்போரும் கங்க கலிங்க வெற்றிகளும் நிறை வேற்றியிருந்தன. ஆனால் கங்க கலிங்கப் போர்களில் ஈடுபட்டிருந்த சமயம் பார்த்து பீசப்பூர் அரசன் இஸ்மாயில் ஆதில்கான் (1510-1534) இரெய்ச்சூரை மீண்டும் கைப்பற்றி யிருந்தான். கலிங்கப் போர் முடிவுற்ற பின் 1520-இல் கிருட்டிண தேவராயன் அதை மீட்க ஒரு பெரும்போர் நடத்தினான். இது கிருட்டிணை ஆற்றுப்போர் அல்லது இரெய்ச்சூர் போர் என்ற பெயரால் வரலாற்றில் புகழ் பெற்றுள்ளது. இப்போர்க்களத்தைக் கண்கூடாகக் கண்டு போர்ச்சுக்கீசிய வரலாற்றாசிரியர் நூனிஸ் அதுபற்றிய விவரங்கள் குறித்துள்ளார். இதில் விசயநகரப் படைகளில் காலாள் வீரர் துணைவர் உட்படப் பத்து இலட்சமும் யானைகள் 550-ம் இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். பீசப்பூர் அரசனை எதிர்த்த இப்போரில் தன் பக்கமாக உதவும்படி கிருட்டிணதேவராயன் மற்ற இஸ்லாமிய அரசர்களனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தான். இஸ்லாம் சமயத்தின் ஷியாக் கிளையைச் சார்ந்த வனான அகமது நகர் அரசன் புர்கான் நிஜாம் உல்முல்க் தவிர மற்ற மூவரும் விசயநகரத்துக்கு துணையாயிருந்தனர். அத்துடன் போர்ச்சுக்கீசியரிடையே வணிக மன்னனாயிருந்த செல்வன் கிரிஸ் தோவாவ் - டி - பிகரிடோ (ஊhசளைவயஎயடி -னந- குபைரநசநைனடி) என்பவன் தனிப்பட்ட முறையில் ஒரு சிறிய போர்ச்சுக்கீசிய படை திரட்டிக் கொண்டு வந்து பேரரசனுக்கு உதவி செய்ததாக அறிகிறோம். இப்போர் வெற்றி விசயநகரத்தின் புகழைத் தென்னகங்கடந்து கீழ்திசையெங்கும் பரப்பிற்று. தென்னகத்தை ஆக்கவும் அழிக்கவும் வல்ல பேரரசு விசயநகரே என்று கண்டு போர்ச்சுக்கீசியர் இது முதல் பேரரசுக்குப் பெருமதிப்பும் ஆதரவும் கொடுத்தனர். தென்னகத்தின் மலர்ச்சிக்குரிய தேசீயப் பேரரசாகிய விசயநகரத்துக்கும் மேலையுலகின் மலர்ச்சிக் கொழுந்தாக வளர்ந்து வந்த போர்ச்சுக்கீசிய வல்லரசுக்கும் உள்ள இத்தொடர்பு இருதிசையிலும் வளந்தருவதாகவே இருந்தது. பேரரசு பெருநகர்த் தொடர்பால் கீழ்த்திசைப் போர்ச்சுக்கீசியத் தலைநகரான கோவாவும் கோவா - போர்ச்சுக்கீசிய வணிகத் தொடர்பால் பெருநகரும் பேரரசும் வளர்ச்சியடைந்தன. “கோவா எழ, வெற்றித் திருநகரம் விசயநகரின் மூன்றாம் மரபு எழும், விசயநகர மூன்றாம் மரபும் வெற்றித் திருநகரும் எழ, கோவா எழும்” என்ற வாசகம் போர்ச்சுக்கீசிய மொழியில் ஒரு பழமொழியாகுமளவுக்கு இத்தொடர்பு இரு தேசீயங்களின் பொங்கல் தொடர்பாயிருந்தது. பீசப்பூரிலும் பீடாரிலும் இச்சமயம் உள் வீட்டுக் கலகங் களும் பூசல்களும் பெருக்கமுற்றிருந்தன. பீசப்பூரில் இஸ்மாயில் இளைஞனா யிருந்ததனால் அவனை ஒழித்துத் தானே அரசனாக அரசப் பேராளாயிருந்த கமால்கானும், பீடாரில் அரச மரபை ஒழித்து அரசனாக அங்கே அமைச்சனாயிருந்த பரீத் ஈ - மமாலிக்கும் முனைந்து வந்தனர். கமால்கான் முதலில் பரிதீ மமாலிக் குக்கு உதவியாகப் பீடாரில் பேரரசன் மாமூதைச் சிறையிலிட்டு விட்டு, தான் கைப்பற்றியிருந்த பீடாரின் தலைநகர் குல்பர்காவையும் பரீதுக்குக் கொடுத்திருந்தான். பரீது குல்பர்காவைக் கைக் கொண்டு பேரரசின் சிறுவர் மூவரையும் சிறையிட்டு அரசனானான். ஆனால் இந்த இரட்டைச் சதியில் ஒருபாதி முறிவுற்றது. கமால்கான் பீசப்பூர் அரசன் இஸ்மாயிலின் அன்னையின் தூண்டுதலால் கொலையுண்டான். பீசப்பூரில் அயல்நாட்டுக் கட்சியினர் ஒருபுறமும் முஸ்லீமல்லாதார் மற்றொரு புறமும் கிளர்ந்தெழுந்தனர். அவர்கள் வேண்டுகோளை முன்னிட்டே கிருட்டிணதேவராயன் மீண்டும் இஸ்லாமிய அரசுகளிடையே தலையிட நேர்ந்தது. பீசப்பூர் அரசனையும் விசயநகரப் பேரரசனையும் சமரசம் செய்வதாகக் கூறி அசாத்கான் என்ற இடையீட்டாளன் கிருட்டிண தேவராயனை வரவழைத்து ஏமாற்றியிருந்தான். இதனால் வெகுண்ட பேரரசன் கிருட்டிண தேவராயன் குல்பர்காமீதே படையெடுத்து “சாகர்” என்ற இடத்தில் நடைபெற்ற கடும்போரினால் அதைக் கைப்பற்றினான். பெயரளவில் கடைசிப் பேரரசனாயிருந்த மாமூ தின் சிறைப்பட்ட புதல்வர்கள் மூவரையும் அவன் விடுவித்து, மூத்தவனையே பேரரசுத் தவிசிலேற்றி முடிசூட்டுவித்தான். மற்ற இரண்டு இளவரசர்களுக்கும் ஆண்டுதோறும் ஐம்பதினாயிரம் படிச்செலவு கொடுக்கவும் அவன் ஏற்பாடு செய்தான். பண்டைத் தமிழகத்தின் அரசியல் போராட்டங்களிடையே ஒய்சளப் பேரரசன் சில சமயம் பாண்டிய அரசையும் சில சமயம் சோழ அரசையும் நிறுவிப் “பாண்டிய ஸ்தாபனாசாரியன்”, “சோழவம்ச ஸ்தாபனாசாரியன்” என்ற பட்டங்களை மேற் கொண்டதுண்டு. வழிவழி வந்த இத்தமிழ் மரபு பின்பற்றிக் கிருட்டிண தேவராயனும் குல்பர்க்கா நிகழ்ச்சிக்குப்பின் “இஸ்லாமிய மரபின் காவலன்” என்ற விருதுப்பெயர் சூட்டிக் கொண்டான். தேசீய மரபின் தமிழகத் தாய்நிலக் கொழுந்து தமிழகத் தேசீயத்தின் தளர்ச்சிக் காலத்தில் 16-ஆம் நூற்றாண்டில் அதன் இளங்கொழுந்தாக விசயநகரப் பேரரசு மலர்ந்தது. ஆனால் விசயநகரப் பேரரசு தளர்வதற்கு முன்பே, அதன் நடுக் கட்டிளமைப் பருவமாகிய கிருட்டிண தேவராயன் ஆட்சியிலேயே அத்தென்னகப் பேரரசின் தமிழ் தேசீயக் கொழுந்தாக, பழயத் தமிழ்த் தேசீயத்தின் பிள்ளையின் பிள்ளையாக, மதுரையிலும் பிற இடங்களிலும் புதிய தமிழக, தென்னகத் தேசீயங்கள் எழத் தொடங்கின. மதுரை, தஞ்சை, செஞ்சி முதலிய பல இடங்களிலும் நிறுவப்பட்ட இத்தேசீயக் கொழுந்துகளில், மதுரையே மூத்த கொழுந்தாகவும் முதன்மையான கொழுந்தாகவும், அடுத்த தென்னகப் பேரரசரான ஹைதர் - திப்பு ஆட்சி காலம்வரை நீடித்த கொழுந்தாகவும் நிலவிற்று. கிருட்டிண தேவராயன் ஆட்சியில் பேரரசு தமிழக அரசியலில் தலையிடுவதற்குரிய உடனடிக் காரணம் இது என்று வரையறுத்துக் கூற முடியவில்லை. ஆனால் கலிங்க இளவரசியின் திருமணத்திற்கும் ஆதில்ஷா நாட்டுப் படையெடுப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் பேரரசன் கிருட்டிண தேவராயன் கீழ்க்கரையிலுள்ள கத்துவிர் (ஊயவரஎசை) என்ற அரசனை ஒரு தீவில் நடந்த போரில் வென்று அவன் நாடு கைக்கொண்டதாகவும், ஐம்பதாண்டுகள் திறைதர மறுத்த அந்த அரசனைப் பணிய வைத்ததாகவும் குறிக்கிறார். அத்தீவு உண்மையில் தண்பொருநை யாற்றின் கழிமுகத்திலுள்ள காயல்பட்டினமேயென்றும், இரண்டாம் தேவராயன் காலத்தில் இத்தீவு வரை ஆட்சிசெய்த கொல்லம் அரசனிடம் விசயநகரம் திறைபெற்றதன் பின் அப்பரப்பின் கீழ்த்திசைப் பகுதியைத் திருவாங்கூர் அரசனும், காயல் உள்ளடக்கிய மேல் திசைப் பகுதியைக் கயத்தாற்றில் ஆண்ட பாண்டிய மரபினரும் கைப்பற்றினரென்றும், ‘கத்துவிர்’ என்று நூனிஸ் கூறுவது இக் கயத்தாற்றரசனையே என்றும் வரலாற்றுப் பேராசிரியர் வெங்கடரமணய்யா கருதுகிறார். ஏறத்தாழ கி. பி. 1519-இல் கயத்தாறு கிருட்டிண தேவராயன் கைப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் முடிவு செய்துள்ளார். கிட்டத்தட்ட இதே சமயத்திலேயே தமிழகமெங்கும் பல தலைவர்கள் கிளர்ச்சி செய்ததாக வேறு ஆதாரங்கள் கூறுகின்றன. கயத்தாறு நிகழ்ச்சி இவற்றின் இறுதிக் கட்டமாகவே இருத்தல் கூடும். ஏனெனில் பேரரசன் அவற்றில் நேரடியாக ஈடுபடவில்லை. கிளர்ச்சிகளும் பெரிதும் தென்கோடியிலன்றித் தமிழகத்தின் வடபகுதியில் செஞ்சியை மையமாகக் கொண்டிருந்தன. இக்கிளர்ச்சிகளை அடக்க விசயநகரப் படைத் தலைவர்கள் வையப்ப நாயகன், துப்பாக்கி கிருட்டிணப்ப நாயகன், வெங்கடப்ப நாயகன் ஆகிய மூவர் அனுப்பப்பட்டிருந்தார்கள். அவர்களுடன் நூறாயிரம் போர்வீரரடங்கிய பெரும்படையும் ஈடுபட்டிருந்தது. கிளர்ச்சிகள் முற்றிலும் அடக்கப்பட்ட பின் தமிழகம் மூன்று மண்டலங்களாக வகுக்கப் பட்டது. வடக்கே வேலூர் முதல் தெற்கே கொள்ளிடம் வரையுள்ள பகுதி வடமண்டல மாக்கப்பட்டு, அதில் செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு துப்பாக்கி கிருட்டிணப்ப நாயகன் மண்டலத் தலைவனானான். காவேரிக் கரைப்பகுதி முழுவதும் ஒரு மண்டலமாகக் கொண்டு தஞ்சையிலிருந்து விஜயராகவ நாயகன் ஆண்டான். தென் கோடிப் பகுதியில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு வெங்கடப்ப நாயகன் மண்டலத் தலைவனானான். இப்பிரிவுகளே மதுரை, தஞ்சை, செஞ்சி நாயக மரபுகளுக்கு அடிகோலின. விசயநகர மரபின் வடகோடித் தேசீயக் கொழுந்தான சிவாஜி நாட்களில் வேலூரும், செஞ்சியும் அவன் தென் திசைத் தலைநகர்களாகவும் தஞ்சை அவன் தந்தைவழிவந்த உடன் பிறந்தாரின் மராத்திய அரச மரபாகவும் வளர்ந்தன. மதுரை ஒன்றே முழுத் தேசீய மரபாக ஒளிவீசி நின்றது. மதுரை நாயக மரபு கிருட்டிண தேவராயன் ஆட்சியின் இறுதிப் பகுதியில் 1525-ல் தமிழகத்தின் அரசியல் வாழ்வில் மீண்டும் கலங்கல் ஏற்பட்டது. இதுபற்றிய வரலாற்றாதாரங்கள் தெளிவு படவில்லையானாலும், தெலுங்கில் எழுதப்பட்டு, அந்நாளிலிருந்து மக்களிடையே வழங்கி வந்த வரலாற்றுச் சார்பான இலக்கிய ஏடுகள் நிகழ்ச்சிகளைச் சிறு வீரகாப்பியமாக்கியுள்ளன. தமிழகத்தில் விசயநகர ஆட்சிக்கால முழுவதும் நாம் பெரும்பாலும் பாண்டிய மரபினரைப் பற்றியே கேள்விப்படு கிறோம். சோழ மரபினரைப்பற்றி மிகுதி செய்தி தெரிய வரவில்லை. ஆனால் அம்மரபினர் நீடித்துத் தொடர்ந்ததுடன் அவ்வப்போது தம் ஆற்றல் பெருக்கியும் வந்தனர் என்று தோற்றுகிறது. கிருட்டிண தேவராயன் ஆட்சியின் இறுதி நாட்களில் வீரசோழன் என்ற சோழ மன்னன் தன்னாட்டில் வலிமை பெற்றிருந்ததுடன் பாண்டியன் மீது படை யெடுத்து அவனைத் துரத்திவிட்டு நாடு கைக்கொண்டான். நாடிழந்த சந்திரசேகரன் என்ற பாண்டியன் முறையீட்டின் மீது பேரரசன் கிருட்டிண தேவராயன் நாகம நாயகன் என்ற தலைவனைப் பாண்டியனுக்குதவுமாறு அனுப்பினான். நாகம நாயகன் முதல் தேசீயச் சிற்பியான சாளுவ நரசிம்மனிடம் நரசநாயகனைப் போலவே அவனுக்கு உற்ற துணைவனாயிருந்தவன். வீரநரசிம்மன் ஆட்சி கடந்து கிருட்டிண தேவராயன் ஆட்சியிலும் அவன் ‘கோடியன்’ அல்லது சேமப்பொருள் காவலனாகவும், ‘தோசேகானா’ அல்லது வரிதண்டலாளனாகவும் மைய அரசிலேயே பணியாற்றி வந்தான். தமிழக முறையீட்டின் பயனாக அவன் மதுரை மண்டலத் தலைவனாக அனுப்பப்பட்டான். அவன் சோழனை அடக்கிப் பாண்டிய நாட்டை மீட்டுவிட்டான். ஆனால் எக்காரணத்தாலோ மீட்ட நாட்டை அதன் உரிமையாளனிடம் ஒப்படைக்காமல் அவன் காலந்தாழ்த்தி வந்தான். பாண்டியன் சந்திரசேகரன் தீனக்குரல் மீண்டும் பேரரசனிடம் சென்றெட்டிற்று. இப்போது உடலும் தளர்வுற்று வயதும் முதிர்ந்த பேரரசன், நாகமன் செயல் நம்பிக்கைத் துரோகமென்று எண்ணி வெகுண்டு “இவனை அடக்கிக் கொண்டு வருபவர் யாருமில்லையா?” என்று அங்கலாய்த்தான். வீரமும் வீறுமுடைய நாகம நாயகனை அடக்குவதற்கு எவரும் முன்வராது தயங்கிய நிலையில், பேரரசனிடம் அடைப்பக் காரனாக வாழ்வு தொடங்கியிருந்த நாகம நாயகனின் மைந்தன் விசுவநாத நாயகன் அதனைத் தானே ஏற்றான். பாண்டியனுக்கு முறைப்படி அரசளித்ததுடன் தந்தையையே போரில் முறியடித்து வென்று பேரரசன் முன் கொணர்ந்தபோது கிருட்டிண தேவராயன் உள்ளம் குளிர்ந்து, விசுவநாத நாயகனையே பேரரசின் மதுரை மண்டல அரசனாக்கினான். தெலுங்கு வரலாற்றுக் கதைகள் தரும் வீரகாப்பியம் இது. ஆனால் இதில் கற்பனை சிறிது கலந்திருக்கக் கூடுமானாலும் வரலாற்றுண்மையே பெரிது என்பதில் ஐயமில்லை. ஏனெனில் விசுவநாதன் அரசனாக ஆளாவிட்டாலும், அவன் மகன் அரசனாகவே ஆண்டதன்றிப் பேரரசின் மேலுரிமையைக்கூட நாளடைவில் நழுவவிட்டு மதுரை நாயக அரசைத் தென்னகத்தில் வலிமை வாய்ந்த ஒரு வல்லரசாக்கினான். பீடு புகழ் தென்னக வாழ்வில் சீரமைதியும் பெரும்புகழும் கொண்டு வந்தவன் கிருட்டிணதேவராயன். தேசீயச் சிற்பிகளும் வீரநரசிம் மனும் இட்ட பேரரசுக் கோட்டையின் அடிப்படைமீது அவன்தன் ஆட்சிக்காலத்திற்குள்ளாகவே வானளாவிய மதிலகங்கள், மாட கூட கோபுரங்கள் அமைத்து விசயநகரின் புகழ் வெற்றிக்கொடியை உலகளாவப் பரப்பினான். முன்னோர்கள் காலத்திய அமரப் படைகளுடன் நிலைப்படைகளை இணைத்து ஒரே அடிப்படை யில் சீரமைத்து, அதைத் தென்னகத்தின் ஒப்பற்ற படையாக்கியவன் அவனே. போரில் பேரரசின் வெற்றி வீரப் பேரரசர்களிலும் தலைமை சான்ற வெற்றிவீரப் பேரரசன் அவன். ஏனெனில் அவன் தலைமை வகித்த போர் எதிலும் தோல்வியின் நிழல் பட்டதில்லை. உலகின் தோலா வீரர்கள்கூடக் காணாத முழுப்பெருமை இது. அத்துடன் அவன் வீரமும், ஆற்றலும், வீறமைதியும், எதிரிகளிடம் காட்டிய பெருந்தன்மையும், தாராள குணங்களும், சமயப்பற்றும், சமய சமரசமும், குடிகளிடம் அவன் கொண்ட பற்றும் கலை இலக்கியங்களில் அவன் தானே அடைந்திருந்த விற்பத்தியும் பிற கலைஞர் புலவர்களுக்குக் காட்டிய ஆதரவும் சேர்ந்து வேறெந்தப் பேரரசருக்கும் இல்லாத ஒரு பெருமையை, “மக்கள் வணங்கும் தெய்வம்” என்ற நிலையை அவனுக்குத் தந்திருந்தது. ஆட்சி நீதிபற்றியும் அறிவுத் துறைகள் பற்றியும் தாமே எழுதிய அரசர் பேரரசர் தமிழகத்திலும், தென்னகத்திலும் பலர். ஆனால் தாமே முழு நூல்மூலமும் தன் ஆட்சிநெறியை ஓர் இலக்கிய எடுத்துக்காட்டாகத் தீட்டிய கிருட்டிண தேவராயனைப் போன்ற வீரப் பேரரசன் தென்னகத்திலோ, பிற மண்ணகத்திலோ எவருமிலர் என்னலாம். தமிழுக்குத் திருக்குறள் தரும் சிறப்புக்கு அருகில் வைக்கத்தக்க சிறப்புடையது தெலுங்கில் அவன் இயற்றியுள்ள ‘ஆமுக்த மால்யத’ என்ற அறமுறை அரசாட்சி பற்றிய ஏடு. ஒரு துறையில் வேறெந்த அரசியல் நீதி நூலுக்கும் இல்லாத சிறப்பு அதற்கு உண்டு என்னலாம். ஏனெனில் அது அவனே பேரரசனாயிருந்து ஆண்ட அனுபவ உரைகளின் தொகுதி ஆகும். விசய நகர காலத்தில் கலையும் இலக்கியமும் பொதுவாகவே சிறப்புப் பெற்றதனாலும் கிருட்டிணதேவராயன் ஒருவன் ஆட்சியில் அது அடைந்த மலர்ச்சி வேறெந்த அரசன், பேரரசன் ஆட்சியும் காணாததாகும். தமிழுக்குச் சோழப் பேரரசன் முதற் குலோத்துங்கன், சமஸ்கிருதத்திற்கு சந்திரகுப்த விக்கிர மாதித்தன், கிரேக்க மொழிக்கு பெரிக்ளிஸ், இலத்தீனுக்குப் பேரரசன் அகஸ்டஸ், ஆங்கிலத்துக்கு எலிசபெத், விக்டோரியா, அரசியர் காலங்களைக் கூட இவ்வளர்ச்சிக்கு ஓரளவே ஒப்பாகக் கூறலாம். ஏனெனில் இவ்வாட்சிகள் ஒருமொழி இலக்கியம்தான் வளர்த்தன. விசயநகரப் பேரரசர் பொதுவாகவும், கிருட்டிண தேவராயன் சிறப்பாகவும் நான்கு மொழிகளிலே இலக்கியம் வளர்த்தனர். சமஸ்கிருதம், தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கில் பேரரசன் தெலுங்கில் புலமை பெற்றிருந்தான். அது மட்டுமன்றி அவன் கால மலர்ச்சியும் மிகப் பேரளவில் தெலுங்கு மொழியைச் சார்ந்ததாகவே இருந்தது. ஆனால் இது முற்றிலும் மற்ற மொழிகளின் ஆதரவின்மை காரணமானதன்று. தமிழும், சமஸ்கிருதமும், கன்னடமும் ஏற்கெனவே முழுவளர்ச்சி அல்லது மலர்ச்சிகள் கடந்து தளர்ச்சிப் பருவத்திலிருந்தன. தெலுங்கு விசயநகர காலத்தில் - சிறப்பாகக் கிருட்டிண பேரரசின் தலைமை இடத்திலிருந்து தொலைப்பட்ட அளவில் இம்மலர்ச்சிகளும் முழு அளவு பங்கு கொள்ள முடிந்தது. தமிழும் அதைவிடக் குறைவாகவே மலையாளமும் இக்காலத்தில் வளம் பெற்றது. ஆனால் இடவேறுபாட்டினால் பாதிக்கப்படாத சமஸ்கிருதம் கூடப் பேரரசின் மலர்ச்சியில் தெலுங்கின் மலர்ச்சிக்குப் பிற்பட்டதாகவே அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பேரரசில் ஒற்றுமையும் அமைதி நலமும் நாட்டிய கிருட்டிண தேவராயனுக்கு அவன் ஆட்சியின் பிற்பகுதியில் குடும்பத்தில் ஒற்றுமையோ, தன் உடலின் முதுமைத் தளர்ச்சி யிடையே நல்லமைதியே கிடையாமல் போய்விட்டது. ஆறு வயதுடைய தன் மூத்த புதல்வனுக்கு அவன் தன் நாளிலேயே இனவாரிசுரிமையளித்து அரசுரிமை உறுதி செய்ய எண்ணி யிருந்தான். ஆனால் அரசியலைத் தானே கைப்பற்றும் அவாவுடன் சாளுவதிம்மன் அவனை நஞ்சிட்டுக் கொன்றான். அவனும் அவன் குடும்பத்தினரும் பிள்ளைகளும் சிறைவைக்கப் பட்டனர். சிறையில் அவன் புதல்வர்களில் ஒருவன் தப்பியோட முயன்றபோது, அவன் மட்டுமன்றி எல்லோருமே குருடாக்கப் பட்டனர். இதற்குப்பின் பேரரசன் தன் இளவல் அச்சுத ராயனுக்கே அரசுரிமை அளிப்பதாக எண்ணியிருந்தான் என்று தெரிகிறது. ஆனால் இதிலும் அவன் உறுதிகொள்ள முடிய வில்லை. நாட்டின் அமைதி கோரி அச்சுதராயன் உட்பட உறவினர் யாவருமே சிறைவைக்கப்பட்டனர். அரவீட்டு மரபின் செல்வாக்குமிக்க பெருவீரனான இராமராயன் கிருட்டிண தேவராயனின் புதல்வியை மணந்திருந்தான். அச்சுதராயன் பேரரசனாவதை அவன் விரும்பவில்லை. 18 மாதமே ஆகியிருந்த கிருட்டிண தேவராயனின் சிறுவனை அரசனாக்கி, அவன் பெயரால் தான் ஆதிக்கம்பெற அவன் முயன்றான். ஆனால் சாளுவநரசிம்மன் என்ற மற்றோர் ஆற்றல்சால் தலைவன் அச்சுதராயனையே ஆதரித்தான். தன் இறுதிப் படுக்கையிலேயே இப்பூசல்களின் நிழல்கண்டு பேரரசன் கிருட்டிண தேவராயன் மனக்கவலை யுடனேயே மாண்டான். அச்சுத தேவராயன் எழுச்சி தேசீயச் சிற்பிகளின் சலியா உழைப்பாலும், வீரநரசிம்மன் திறமையாலும் உச்சநிலையடைந்து கிருட்டிண தேவராயன் வெற்றிகளால் விசயநகரப் பேரரசு தன் புகழ் முகடு எட்டிற்று. கிருட்டிண தேவராயனுக்குப் பின் வந்த அச்சுததேவராயன் (1529-1542) ஆட்சியில் இப்புகழ் நீடித்தது. ஆனால் அதே சமயம் தொடக்கநாட்களில் அரசுரிமைப் பூசல்களாலும், இறுதியில் பெருமக்கள் பூசல்களாலும் அதன் கட்டமைதி பெரிதும் சீர் குலைவுற்றது. கிருட்டிண தேவராயன் மாண்டவுடனே அச்சுதராயன் பெனு கொண்டாவில் சிறையிலிருந்து வெளியேறி வேக வேகமாகத் தலைநகரை நோக்கிப் புறப்பட்டான். அவன் ஆதரவாளனான செவ்வப்பன் என்ற சாளுவுநரசிம்மன் அவன் வரும்வரை அவனுக்காக அரசிருக்கையைக் காத்து நின்றான். ஆயினும் யாராவது முடிசூட்டு வினையில் முந்திக் கொள்ளக் கூடாதென்று அஞ்சி அச்சுதன் வரும் வழியிலேயே திருப்பதியில் ஒரு தடவையும், காளத்தியிலொருதடவையுமாக முடிசூட்டு வினைமுறை நடத்திக் கொண்டு முன்னேறினான். அத்துடன் தலைநகர் வந்தபின் தன்னை எதிர்த்துக் கிருட்டிண தேவராயனின் 18 வயதுச் சிறுவன் பெயரால் உரிமை கோரிய இராமராயனையும் சமரசப்படுத்தி அவனுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பதன் மூலம் தன்னைப் பலப்படுத்திக் கொள்ள முற்பட்டான். ஆனால் எதிரியுடன் கொண்ட நேசம் அவன் முன்னைய நண்பனாகிய சாளுவ நரசிம்மனைப் பகைவனாக்கிற்று. அவன் தமிழகம் வந்து தஞ்சையைக் கைப்பற்றி அங்கே தன்னுரிமைக் கொடியேற்றிக் கிளர்ச்சிக்கு முற்பட்டான். சாளுவ நரசிம்மன் கிளர்ச்சிக்கு உம்மாத்தூர்த் தலைவனும், திருவாங்கூர் அரசன் திருவடி ராஜா உதயமார்த்தாண்டனும் ஆதரவாயிருந்தார்கள். திருவாங்கூர் அரசன் இதே தறுவாயில் சடையவர்மன் சீவல்லபன் என்ற பாண்டியனை அவன் நாட்டை விட்டுத் துரத்தித் தானே பாண்டி நாட்டையும் கைப்பற்றிக் கொண்டான். முன் தலைமுறையில் பாண்டியன் கிருட்டிண தேவராயனிடம் முறையிட்டது போல இத்தலைமுறைப் பாண்டியன் அச்சுததேவராயனிடம் முறையிட்டான். கிளர்ச்சியை அடக்கிப் பாண்டியனுக்கும் உதவும் முறையில் அச்சுத தேவராயன் படைகளுடன் தமிழகம் புறப்பட்டான். அச்சுதராயன் 1533-இல் காஞ்சியில் தங்கித்துலாபார விழா ஆற்றினான். அவன் எடைக்கு எடைப் பொன் பிராமணர் களுக்குத் தானம் வழங்கப்பட்டு அவர்கள் ஆதரவு அவன் பக்கம் திரட்டப்பட்டது. அவன் படைகள் அங்கிருந்து திருவாரூர் வந்து தாவள மிட்டது. சாளுவ நரசிம்மன் பேரரசர் படைகளுக்குப் பிடி கொடாது திருவாங்கூருக்கு ஓடித் தஞ்சம் புகுந்தான். பேரரசர் திருவாரூரிலிருந்து கொண்டே தன் மைத்துனன் சாலகராஜு திருமலையையும் அவன் புதல்வன் சாலக திம்மனையும் எதிரிகள் மீது தாக்குதலுக்கு அனுப்பினான். மதுரையில் நரசநாயகன் மண்டலத் தலைவனாய் இல்லாவிட்டாலும் அவருடன் கிருட்டிண தேவராயன் ஆட்சியிறுதியில் (1529-1530) ஒரு தடவையும், அச்சுத தேவராயன் ஆட்சியில் (1537-1544) ஒரு தடவையும் அதன் பின் 1545-1546-இல் ஒரு தடவையும் ஆட்சியாளராக இருந்ததாகத் தெரிகிறது. திருவாங்கூர்ப் படையெடுப்பில் அவனும் சாலகராஜுவுடன் சென்று உதவியிருந்தான். 1573-இல் திருவாங்கூரில் மலையடிவாரப் போர் என்று குறிக்கப்படும் போராட்டத்தில் திருவாங்கூர் அரசன் திருவடிராசனும் சாளுவ நரசிம்மனும் தோல்வியுற்றதுடன் சிறைப்பிடிக்கப்பட்டுத் தண்ட னையுற்றனர். பாண்டியன் சடையவர்மன் சீவல்லபன் (1534-1543) தன் நாடு பெற்றுப் பேரரசனுக்குத் தன் நன்றி தெரிவிக்கும் முறையில் தன் புதல்வியை மணம் செய்து கொடுத்து நேச உடன் படிக்கை செய்து கொண்டான். நாடு மீட்கப்பெற்ற மகிழ்ச்சியிலும், பேரரசன் உறவின் பெருமையிலும் அவன் கொண்ட வீறு “இறந்த காலம் எடுத்த பாண்டியன்” என்ற அவன் விருதுப் பெயரில் துவங்குகிறது. பண்டைப் பாண்டியர் பெருமை எப்படியோ மீண்டும் வந்ததாக அவன் இச்சிறு வெற்றியினூடாகக் கனவு கண்டிருந்தான் என்பதில் ஐயமில்லை. பாண்டி, திருவாங்கூர்ப் பரப்புகளில் பேரரசன் உறவினனான இராமராய விட்டலராயன் மண்டலத் தலைவனாகவும், விசுவநாதன் அவன் கீழ் மதுரைத் தலைவனாகவும் அமர்த்தப் பட்டனர். அச்சுதராயன் மனைவியின் தங்கையான திருமலாம் பாளுக்குச் சாளுவ நரசிம்மனாண்ட தஞ்சைப் பகுதியைப் பேரரசன் சீதனமாகக் கொடுத்திருந்தான். திருமலாம்பாள் கணவனாகிய செவ்வப்ப நாயகன் அதன்படி இப்போது தஞ்சை மண்டலத் தலைவனாக்கப் பெற்றான். ஆனால் இச்சமயம் ஏற்பட்ட பேரரசின் மாகாண எல்லைச் சீரமைப்பின் ஒரு பகுதியாக, முன் மதுரையைச் சார்ந்திருந்த வல்லம் கோட்டை தஞ்சைக்கும், முன் தஞ்சையைச் சார்ந்திருந்த திருச்சிராப்பள்ளிக் கோட்டை மதுரைக்கும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. கிருட்டிண தேவராயன் காலப்புகழின் ஒரு மறு மலர்ச்சியாக இந்த அச்சுத தேவராயன் ஆட்சித் தொடக்கம் அமைந்திருந்தது. விசயநகரப் பேரரசின் அவைப் புலவனான இராசநாத டிண்டிமன் இப்புகழ் உலா வரலாற்றை ‘அச்சு தராயாப்யுதயம்’ என்ற வீறுகாப்பியமாகச் சமஸ்கிருதத்தில் இயற்றினான். தொலைப் புயலின் முகிற் கீற்றுக்கள் ஒரிசாவாண்ட கசபதி அரசனும், கோலகொண்டாவில் தன்னாட்சி நிறுவியாளத் தொடங்கிய குலி குதுப்ஷாவும் 1534-க்கு முற்பட்டே விசயநகர் மீது படையெடுத்துத் தோல்வி யுற்றிருந்தார்கள். எனினும் வடமேற்கில் பீசப்பூர் ஆண்ட இஸ்மாயில் ஆதில்கான் இச்சமயம் பார்த்து இரேய்ச்சூர் முட்கலைக் கைப்பற்றினான். இவனை அடுத்து ஆட்சிக்கு வந்த மல்லூ ஆதில்கான் (1534-1535) ஓர் ஆண்டே தவிசிலிருந்தான். அசத் கான்லாரி என்பவனது கிளர்ச்சி ஆட்சி வலுவைக் குறைத் திருந்தது. விசயநகரப் பேரரசன் அச்சுதராயன் இச்சமயத்தில் இழந்த இரேய்ச்சூர்ப் பகுதியைக் கைக்கொண்டான். 1536-இல் குத்தியில் எழுந்த ஓர் உள்நாட்டுக் கிளர்ச்சி அடக்கப் பட்டது. வெற்றியும் தோல்வியும் இல்லாத இந்நிலை இன்னொரு திசையிலும் நீடித்தது. போர்ச்சுக்கீசியர் கோவாவிலிருந்து தென்னகக் கரையோரமாக முத்திசையிலும் மெல்லப்பரவித் தங்கள் ஆற்றலை வளர்த்து வந்தனர். கரையோரப் பகுதி களிலுள்ள கோயில்களை அவர்கள் அவ்வப்போது கொள்ளை யிட்டும் வந்தனர். ஒரு தடவை துணிச்சலாகத் திருப்பதிவரை உள்நாட்டில் கைநீட்டி அக்கோயிலைக் கொள்ளை கொண்டனர். மேலைக் கடற்கரையில் சாமூதிரி போன்ற சிற்றரசத் தலைவர்களை அடிக்கடி தாக்கி வென்று அவர்கள் நிலம் கைக்கொண்டு பரவினர். ஆனால் இத்தனைக் கிடையிலும் அவர்கள் விசயநகரப் பேரரசன் அச்சுதராயனுடன் மேலூடாக நட்பாடிக் கொண்டே இருந்தனர். அச்சுத தேவராயன் ஆட்சியில் பேரரசுக்கு வெளியே தொடக்கத்தில் கண்ட வெற்றி குறைந்து வந்ததற்கான உண்மைக் காரணம் ஆட்சியின் உட்பூசல்களே. பெருமக்களிடையே அச்சுததேவராயன் மைத்துனன் சாலகராஜு திருமலையும் மற்றொருபுறம் இராமராயனும் வலிமை பெற்று, மேன்மேலும் ஆட்சியைத் தம் கைக்குள்ளாக்கப் போராடி வந்தனர். இராமராயன் பேரரசன் கிருட்டினதேவராயன் மகளை மணம் செய்திருந்ததுடன், தம்பிகள் இருவருக்குமே மீண்டும் அரசகுலத்தில் திருமணம் செய்ததன் மூலம் அச்சுதராயன் அவன் இளவல் அரங்கன் ஆகிய இருவரையுமே மைத்துனராக்கி யிருந்தான். இதனால் அரண்மனையில் அவன் செல்வாக்கு மிகுதியாயிற்று. கிருட்டினராயனின் கடைசிப் புதல்வனின் பெயராலேயே இராமராயன் தன் ஆதிக்கத்தை வலிமைப்படுத்திக் கொண்டு வந்தான். சிறுவன் திடுமென இறந்தவுடன் அவன் இந்த ஒளிவு மறைவு நடிப்பை விட்டுவிட்டு, பேரரசனான அச்சுத தேவராயனை மதிப்புடன் காவலில் வைத்துத்தான் நேரடியாகத் தன் பெயராலேயே ஆட்சியைத் தொடங்கினான். தன்னைச் சூழக் கட்சி சேர்த்துக் கொண்டு தன் வலிமையைப் பெருக்கும் முயற்சிகளில் முனைந்தான். வீரநரசிம்மன், கிருட்டிண தேவராயன் ஆகியோர் அமர்த்தியிருந்த தேர்ந்த பயிற்சிபெற்ற தலைவர்களை ஒவ்வொருவராக நீக்கி அவ்விடங்களிலெல்லாம் தன் உறவினர், தன் ஆட்களையே அமர்வித்தான். படைத் துறையிலும் முன்னையப் பேரரசர் அமர்த்தியதைவிட மிகப் பேரளவில் முஸ்லிம் வீரர்களையும் தலைவர்களையும் அமர்த்திக் கொள்ள முனைந்தான். பிந்திய செயல் முன்னைய பேரரசின் தேசீய மரபுக்கு உகந்ததேயானாலும் அச்செயல்களுக்கேற்ற அளவு தென்னகத்தின் ‘இந்து’ப் பூச்சுப்பெற்ற தேசீயம் முதிர்ச்சி பெறாததனாலும், தன்னல நோக்குடன் இம்மாறுபாடு திடுமெனச் செய்யப்பட்டதனாலும் இராமராயனே ஆட்சித் தலைமைக்கு வந்தபின் இது பேரரசுக்கு ஓரளவு தளர்வூட்டுவ தாகவே அமைந்தது. வளர்ந்துவந்த இராமராயன் ஆதிக்கத்துக்குத் திடுமென ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டது. தமிழகத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்க அவன் தெற்கே போயிருந்த சமயம், அச்சுதராயனைச் சிறையிட்டுக் காத்த காவலனே அவனை விடுவித்தான். அத்துடன் அவன் பேரரசனை ஆட்சியாளனாக்கி, அவன் பெயரால் தானே அமைச்சனாகி ஆட்சியைக் கைக்கொண்டான். ஆனால் பேரரசு களின் மைத்துனனான சாலகராஜு திருமலை காவலனை ஒழித்துத் தானே பேரரசன் பெயரால் ஆட்சியை மேற்கொண்டான். இச்செய்திகளறிந்த இராமராயன் விரைந்து அவசர அவசரமாக எதிரிகளுடன் சமரசம் செய்து கொண்டு தலைநகரத்துக்குத் திரும்பினான். ஆயினும் எதிரிகளில் ஒருவன் அல்லது அவனது நிலையின் நெருக்கடியறிந்து அவனுக்கு இடக்குச் செய்ததால், அவன் வருவதற்குள் சாலகராஜு திருமலை மைய ஆட்சியில் வேரூன்றிவிட்டான். இராமராயனுக்கும் சாலகராஜு திருமலைக்கும் இப்போது மும்முரமான வல்லமைப் போட்டி எழுந்தது. இருதிறத்தவர்களும் கிட்டத்தட்டச் சரிசம அளவிலேயே வலிமைபெற்றிருந்ததனால், தென்னக அரசியல் வாழ்வில் ஒரு முட்டுக்கட்டை நிலை ஏற்பட்டது. மக்கள் இந்நிலையில் திரண்டு இச்சமயம் பீசப்பூரில் ஆட்சியாளனாய் அமர்ந்திருந்த இரண்டாம் இப்ராகிம் ஆதில் கானை (1535-1537) நடுத்தீர்ப்பு வழங்க அழைத்தனர். ஆனால் விசயநகர மக்கள் எதிர்பார்த்ததைவிடத் தென்னகத்தின் முட்டுக்கட்டை நிலை மிகுதியாக அகல்விரிவுடன் பரவியிருந்தது. அது விசயநகர எல்லையுடன் அமையாமல் பீசப்பூரையும் பாதித் திருந்தது. ஏனெனில் அகமதுநகர் ஆட்சியில் அகமதுக்குப் பின்வந்த முதலாம் புர்ஹான் (1508-1554) பீசப்பூரில் கிளர்ச்சி செய்து கொண்டிருந்த அசத்கானை ஆதரித்துப் பீசப்பூர் ஆட்சியையும் கைவசப்படுத்தச் சமயம் பார்த்திருந்தான். இதனால் இப்ராகிம் விசயநகர உட்பூசலில் தலையிட்டு ஆதாயமடைய எவ்வளவு ஆர்வமுடையவனாயிருந்தாலும், தன் வீடே பறிபோய்விட இருந்த நிலையில் அவ்வெண்ணத்தைக் கைவிட வேண்டிய தாயிற்று. அவசர அவசரமாக இருதிறத்தினரிடை யிலும் சமரசமே செய்து வைத்துவிட்டு அவன் மீளவேண்டிய வனானான். இப்ராகிமின் சமரசத் திட்டப்படி ஆட்சி சாலகராஜு திருமலையிடமே விடப்பட்டது. அதே சமயம் இராமராயனுக்குத் தன் குடிப்பண்ணையிலும் மாகாணத்திலும் தங்கு தடையற்ற தன்னாண்மை வாய்ந்த ஆட்சியுரிமை அளிக்கப்பட்டிருந்தது. இந்த அரைகுறைத் திட்டம் 1542 வரை தட்டின்றி நீடித்தது. தன் நாடுசென்ற இப்ராகிம் கிளர்ச்சியிலீடுபட்டிருந்த அயல்நாட்டு முஸ்லிம் கட்சித் தலைவர்களையும் 3000-க்கு மேற்பட்ட எதிர்கட்சி முஸ்லிம் வீரர்களையும் நீக்கித் தன்னை வலுப்படுத்த முயன்றான். இராமராயன் இத் தலைவர்களையும் முஸ்லிம் வீரரையும் தன்னிடம் பணிக்கமர்த்திக் கொண்டு தன் வலிமையை மேலும் பெருக்கிக் கொண்டான். அச்சுததேவராயன் 1542-இல் மறைவுற்றான். அச்சமயம் அவன் புதல்வன் முதலாம் வேங்கடன் தவிசேறினான். ஆனால் அவன் அன்னையான பேரரசி தன் இளம் புதல்வனைப் பற்றி மிகவும் கவலைப்பட்டாள். சாலகராஜு திருமலை அவளது உடன்பிறந்தானானாலும், அவன் அதிகாரம் பற்றி அவளுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது. ஆகவே அவனைத் துரத்தித் தன் பிள்ளைக்கு உதவும்படி அவள் மீண்டும் பீசப்பூர் அரசன் இரண்டாம் இப்ராகீமை வரவழைத்தாள். சாலகராஜு திருமலை இதனால் ஒரு சிறிதும் கவலைப்படாமல், எதிரியைப் பணம் கொடுத்தனுப்பி விட்டு முன்னிலும் முனைப்பாக ஆட்சி ஆதிக்கம் நாடினான். ஆனால் அயலார் உதவியைவிட அவன் ஆதிக்கமே அவனுக்குப் பகையாய் அமைந்தது. முதலாம் வேங்கடனை ஒழித்துக் கொடுங்கோலாட்சி செய்து, முதலாம் வேங்கடன் ஆட்சிக்கு மட்டுமன்றித் தன் ஆதிக்கத்துக்கும் ஓர் ஆண்டுக்குள் அவன் ஒரு முடிவு தேடிக்கொண்டான். சாலகராஜு திருமலையை வெறுத்த மக்கள் இப்ராகீமையே அழைத்து அரசனாக்கிவிடத் துணிந்தனர். ஆனால் இப்ராகிமும் சில நாட்களுக்குள்ளாகவே மக்கள் வெறுப்புக்காளாகி அவர்களால் துரத்தப்பட்டான். ஏற்கெனவே வலிமைபெற்று வந்திருந்த இராமராயன் இப்போது அச்சுததேவராயன் தம்பி புதல்வனான சதாசிவனைத் தவிசேற்றி அவன் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றினான். அத்துடன் அவன் பெனு கொண்டாவை வென்று கைக்கொண்டு, கோமலி, பேதம்செர்லா, ஜூடூர், பெடகல்லு, ஆடவனி முதலிய பல போர்க்களங்களில் சாலகராஜு திருமலையை எதிர்த்து முறியடித்தான். இறுதியாகத் துங்கபத்திரையருகே நடைபெற்ற போரில் சாலகராஜு உயிர் நீத்தான். பெயரளவில் சதாசிவனைப் பேரரசனாகக் கொண்டு இராமராயன் ஆட்சி தொடங்கினான். வரலாற்றில் இராமராயன் ஆட்சிக்காலம் (1542-1565) முழுவதும் பெயரளவில் துளுவமரபின் கடைசி அரசன் சதாசிவன் ஆட்சியாகக் கொள்ளப்பட்டு, இராமராயனுக்குப் பின் அவன் மரபினரின் ஆட்சியே அரவீட்டு மரபின் ஆட்சியாகக் கருதப்படுகிறது. அதற்கேற்ப இராமராயன் காலம் துளுவமரபுப் பேரரசரான பெருங்கல நாயகர் ஊழியின் அந்திவான் மலர்ச்சியாகவே அமைந்துள்ளது. ஆயினும் உண்மையில் அது அரவீட்டுமரபின் முன்னோனான இராமராயன் ஆட்சியாகவே கருதப்படத் தக்கது. அந்நாளைய மக்களும் அதை அவ்வாறே கருதியிருந்தனர். 6. வண்ண மா மயில் மீனாடுவேலைச் சுறவென்னவீரச் செருவுடற்றிக் கோனாடுவெங்களங் கோலாகலங்கண்ட கோமன்னர்கோ வானாடுவில்லின் வளர்மாமுகில்கண் டுளங்களிப்பத் தானாடுவண்ணத் தகைமாமயில்நடம் வாழியரோ? எண்ணப் புயலிடையே எழில்தேசீயச் சீரொளியால் வண்ணத் தனிமுகில் வில்லினைநாடிய போழ்தினிலே கண்ணிற் கருமணி தாவிஒண்மின்னற் கொடியணைய மண்ணிற் படுமயில் மால்நடங்காண்புலம் வாழியரோ! நெய்யும் திரியும் பற்றுக்கோடாகக் கொண்டு எரியும் சுடர் அப்பற்றுக்கோடு அகன்று இயற்கையளாவும் சமயம் அழகுற நின்றாடி அடங்குவது இயல்பு. அன்னப்புள் தன் வாழ்வின் இறுதி அணுகும் சமயம் இயற்கையில் எங்கும் கேட்க முடியாத இனிய ஏங்கிசைமிழற்றி இயற்கையோடு ஒன்றுபடும் என்று கிரேக்கப் பழங்கதைகள் விதந்துரைக் கின்றன. விசயநகர வாழ்வு தென்னக வாழ்வினுள் எழுந்து குமுறிய பெரும்புயலை அணைத்துத் தன் புகழ்ப் பெருமைகளில் பெரும் பகுதியை அதன் மின்னொளியில் கலக்கவிட்ட சமயம், அதன் இறுதி எழிலொளியாக, அந்திவான் வண்ணமாக, அழகு நடனமாக அமைகிறது. இராமராயன் வீறு சான்ற வாழ்க்கைப் போராட்டம். கிருட்டிண தேவராயனைப் போலவே அவன் தோலா வெற்றி வீரனாக விளங்கினான். அது மட்டுமன்று, கிருட்டிண தேவராயன் வாழ்வில் முதுமை தலையிட்டிருந்தது. ஆனால் இராமராயன் வாழ்விலோ முதுமை தட்டவில்லை. உடன் முதுமையுடனே அவன் வெற்றிப் புகழ் இளமை வீறுடன் இளமை முறுக்கறாமல் இறுதிவரை மேன்மேலும் வளர்ந்து கொண்டே இருந்தது. பேரரசின் அந்தி வானொளியாகப் பிறங்கிய அவன் வாழ்வில் அந்தி வானொளி எதுவும் இல்லை. அது இறுதிவரை நண்பகலொளி யாகவே தளராது நின்று, கற்றூண் பிளந்திறுவது போலத் திடுமென முறிந்தேபட்டது. ஆயினும் இரண்டாம் இரேய்ச்சூர்ப் போருக்குப் பின் கிருட்டிண தேவராயன் முகத்திலும் உள்ளத்திலும் படர்ந்து வந்த வெற்றிப் பெருமிதச் செருக்கு இராமராயன் வாழ்வில் நிலையாகவே இடம் பெற்றிருந்தது. இதனால் கிருட்டிணதேவராயன் வெற்றிப் புகழை இராமராயன் வாழ்வு உருப்பெருக்கிக் காட்டியது போலவே, அது தேசீயச் சிற்பிகளது வாழ்வின் இறுதித் தோல்விகளுக்குரிய வண்ணத் தேசீய அழகையும் உருப்பெருக்கி, ஒளி பெருக்கியே காட்டுகிறது. இராமராயன் இறுதித் தோல்வி - வெற்றிச் செருக்கினிடையே மின்வெட்டொன்றினால் பிளவுற்று வீழ்ந்த மலையெனச் சரிந்த அவன் பெருமுடிவு - பேரரச வாழ்வின் புகழ்முகட்டின் வளரொளி வண்ணமாக நமக்குக் காட்சி தருகிறது. சிற்பிகளின் தோல்விகள் நடுஊழியின் உறுதி வாய்ந்த தேசீயப் பேரரசுக்கோட்டையைக் கட்டியெழுப்ப முயன்றவர் களின் வெற்றிக்குரிய சின்னங்களென்றால், இராமராயனின் வீழ்ச்சி எதிர்காலத்துக்குரிய தென்னகத் தேசியப் புகழ்க் கோட்டையைக் கட்டியெழுப்புவதற்குரிய முதல் வெற்றிச் சின்னம், முதற்கொடிப் போர்ப் படியென்னலாம். தென்னகத்தில் பிறந்தும் வடதிசைப்புயல் மரபை அணைக்கக் கருதியவர்கள் தென்னக இஸ்லாமிய அரசர். அப்புயல் வெள்ளத்துக்கு விசயநகரத்தின் தொடக்கக் காலப் பேரரசர் தடைவேலியிட்டுத் தடுக்கவே முயன்றனர். தேசீயச் சிற்பிகள் அதற்கு நிலையான கல்லணை போல முயன்று, பேரவதியிடையே அணைக்கட்டுக்கான கடைகாலும் அடித்தளமும் மட்டுமே இட்டுச் சென்றனர். ஆனால் மையப்பேரரசர், சிறப்பாகக் கிருட்டிண தேவராயன் மலையென அணையெழுப்பி அது தடுத்து நிறுத்தியதனுடன் நில்லாது, மடையடைத்தும் திறந்தும் வெள்ளத்தை முற்றிலும் தன் வயப்படுத்தினான். ஆனால் இருவர் மரபுடனும் பயின்று தென்றல் மரபுடனும் புயல் மரபுடனும் ஒருங்கே ஊடாடிய இராமராயனோ, அவ்வெள்ளத்தைக் கால்வாய்கள், கிளைக்கால்வாய்கள், வாய்க்கால்கள் வழி தான் விரும்பியவாறெல்லாம் செலுத்தி வளைந்தோடச் செய்து தொழிற்படுத்தத் துணிந்தான். கிருட்டிண தேவராயன் ஆற்றல்கண்டே, ‘விண்பட்ட கொக்கு வல்லூறு கண்டென்ன வெலவெலத்து’ நின்ற புயல் மரபினர் கண்களுக்கு வல்லூறுகளையே வட்டமிட்டு வேட்டையாடிய ஒரு புதுவகை மாயப் பறவையாக இராமராயன் காட்சியளித்தான். தென்றல் மரபில் வந்த அவன் புயல் மரபுகளைத் தன் இரு கைகளாலும் பற்றிப் பந்தாட்டமும் அம்மானையாட்டமும் ஆடினான். முதற்பேரரசர்களின் வெற்றிகள் எதிரிகளின் கடு முயற்சி யையே தூண்டின. மையப்பேரரசர் அவர்களிடையே அச்ச மூட்டினர். இராமராயனோ, அவர்களிடையே கிலி பரப்பினான். இராமராயன் பெருமை அவன் வீரத்துடனோ, எதிரிகள் மீது அவன் பரப்பிய கிலியுடனோ அமையவில்லை. உண்மையில் அவன் யார் மீதும் கிலியூட்ட எண்ணியதே கிடையாது. தன் வீரத்தின் எல்லையற்ற ஆற்றலை அவன் யார் மீதும் வலிந்து சுமத்த விரும்பியவனும் அல்லன். எதிர்க்க நேர்ந்தவரையன்றி வேறு யாரையும் அவன் இயல்பான எதிரிகளாக அதாவது பகைவர்களாகக் கருதவில்லை. பேரரசின் நலங்கள் பாதிக்கப் படாத நேரங்களிலெல்லாம், அவன் அயலரசுகளை நேசமாகவே நடத்தினான். அவன் பெருமையின் மிகச் சீரிய பகுதி இலக்கியலான, குறிக்கோள் படிவான அவன் உயரிய தேசீய நோக்கமே. ஆனால் மக்களிடையிலும் மன்னர்களிடையிலும் இந்நோக்குப் பொதுவாக முதிர்வுறா நிலையில், அதுவே அவன் பெருங்குறை யாகவும் அமைந்தது - அவ்வாறு கருதப்பட்டும் வந்துள்ளது. முதற்பேரரசர் இஸ்லாமியருக்கு விட்டுக் கொடுத்தும் நடுப்பேரரசர் அவர்களை அரவணைத்தும் வந்தனரென்றால், இராமராயன் வாழ்வு, இஸ்லாமியர், இஸ்லாமியரல்லாதார் என்ற வேறுபாட்டையே காணாத, உணராத நிலையாய் அமைந்தது. அவன் ஒரே தோல்விக்கு, இறுதித் தோல்விக்குக் காரணமான - அதிலும் அவன் ஏமாற்றத்துக்கே வழி வகுத்த பண்பு இதுவே. இஸ்லாமியர் இஸ்லாமியரல்லாதாரை எதிர்க்கலாம். ஆனால் இஸ்லாமியர் அல்லாதவருள் கூடி இஸ்லாமியர் இஸ்லாமியரை எதிர்த்தல் கூடாது’ என்பது இஸ்லாமியப் புயல் மரபினர் கோட்பாடு. தேசீயத்துக் கெதிரான இதே நச்சுக் கோட்பாட்டை ‘இந்து தேசீயவாதி’ களான வரலாற்றாசிரியர் இன்றும் கொண்டுள்ளனர். ஆனால் இதைத் தென்னக இஸ்லாமிய மன்னர் கையாளுவார்க ளென்றோ, தன் படைத்தலைவர்களும் படைவீரரும் இந்த நச்சுச்சிறு மதியின் பக்கம் சாய்வார்களென்றோ இராமராயன் வீரப்பண்பும், அரசியலறிவும் கடைசிவரை கனவிலும் கருதியதில்லை - அதை அறியாமலே அவன் மாண்டான். விசயநகரப் பேரரசின் வீரச் சிற்பிகள் சாளுவ நரசிம்மன், நரசநாயகன், வீரநரசிம்மன் ஆகியோரென்றால் அதன் வெற்றிக் கொடியுயர்த்திப் புகழுச்சி கண்டவர்கள் பெருங்கலமீகாமன் கிருட்டிண தேவராயனென்றால் - அப்பெருந்தலைவர் புகழ்க் கொடிமீது கனவின் நிழலான நனவுலகத் திருவுருவே இராமராயன் என்னல் வேண்டும். மராத்திய தேசீய விடி வெள்ளியான ஷாஜியும், மராத்திய தேசீயப் பேரொளிக் கதிரவனான அவன் புதல்வன் சிவாஜியும் தம் முன்மாதிரி ஒளியாகக் கண்ட தேசீயப் பாலொளி கிருட்டிண தேவராயர்கால விசயநகரப் புகழ்மட்டுமன்று, அப்புகழுடன் சூழொளி வண்ணமாக விளங்கிய இராமராயன் திருவுருவமே யாகும். வீரச் செயலிலும் வீரச்சான்றாண்மையிலும் சிவாஜியையும் வீர மராத்தியமரபையும் நின்றூக்கிய பண்பு இராமராயன் புகழ்ப் பண்பே என்னல் தவறாகாது. மன்னுலகம் ஒன்றாக மனிதஇனம் ஓரினமாய்த் தென்னுலகம் மன்னுலகின் மணியுருவாய்த் திகழ்தருமோர் பொன்னுலகமாக்கிவிடப் பொன்றாமெய்க் கனவுகண்ட மின்னுலக மன்னவன்இ ராமராயன் வாழ்க! வெந்நிடான், வெந்காணின் கணைதொடான், வெங்களத்தில் பின்னிடான், பிறங்கிடுசெந் நேர்மையலால் எவ்வழியும் முன்னிடான், மோதுகளம் அன்றிவெஞ் சூதுகளம் துன்னிடான் தென்னவரின் தோளாநன் மணிவாழ்க! இராமராயன் கண்ட தேசீயக் கனவு தென்னகத் தேசீயத்தின் உள்ளார்ந்த பண்பு ‘இந்து மதப் பேரரசு’ என்ற விசயநகரத்தின் பெயர் கடந்து சாதி சமய இன வேறுபாடற்ற ஒரு முழு மனித இனத் தேசீயமேயாகும். இதனை விசயநகரப் பேரரசர் தொடக்கத்திலிருந்தே உணர்ந்திருந்தனர் - பண்பார்ந்த ஒய்சளப் பேரரசர் மூலமாகத் தென்னக வாழ்வுக்கு வந்தெட்டியுள்ள சேர சோழ பாண்டியரின் பண்டைத் தமிழின மரபுரிமைச் செல்வம் இது. வித்தியாரணியர் வகுத்த இந்து மதத் தேசீயத்தின் ‘இந்து’ என்ற பெயர் இப்பண்பைச் சிறிது கறைப் படுத்திற்றேயன்றி அதன் மரபைத் தடுத்து விடவில்லை. அதுமட்டு மன்று. இப்பண்பு அப்பெயர் தாண்டி வளர்ந்தும் வந்தது. தொடக்கப் பேரரசரை விடப் பின்னாளைய பேரரசர்காலங்களில் இப்பண்பு மேலும் வளர்ச்சியுற்றே வந்தது - இராமராயன் காலத்தில் அது உச்ச வளர்ச்சி யெல்லையையே எட்டியிருந்தது. ஆயினும் பேரரசர் போற்றிய அளவில் தென்னக மக்கள் இதை உணராமலும், தென்னக மக்கள் உணர்ந்து போற்றிய அளவில் தென்னக இஸ்லாமிய அரசுகள் உணராமலும் ‘இந்து’, இஸ்லாம்’ என்ற சொற்கள் தடுத்திருந்தன என்பதில் ஐயமில்லை. ஆயினும் இப்புகைத் திரையினிடையே உள்ளார்ந்த மெய்ந்நிலையை எடுத்துணர்த்தும் நிகழ்ச்சிகள் இல்லாமலில்லை. அச்சுத தேவராயன் ஆட்சிக் காலத்தில் விசயநகரப் பேரரசியும் பெருமக்களும் இஸ்லாமிய அரசன் இப்ராகிமை ‘இந்துப் பேரரசின்’ நடுத்தீர்ப்பாளனாக, ‘இந்துப் பேரரசனாகக்’கூட ஏற்கத் துணிந்திருந்தனர். இராமராயன் ஆட்சியில் இது போன்ற தேசீய வண்ணச் செயல்கள் பலவற்றை இன்னும் முனைப்பாகக் காண்கிறோம். தென்னக இஸ்லாமிய அரசுகளில் கூடப் புயல் முற்றலும் தென்னகக் கூறன்று என்பதை அவற்றில் ஏற்பட்ட கட்சிப் பிரி வினையே காட்டும். பல இடங்களில் அயற்கட்சியினரே ஆட்சியைக் கைப்பற்றியிருந்தனர். அவர்களுக்கெதிரான நாட்டு முஸ்லிம் (தெக்காணி) இயக்கம் தென்னகத் தேசீய எழுச்சியின் ஒரு கூறு என்பதை வரலாற்றாசிரியர் காணவில்லை. உண்மையில் மராத்திய தேசீய எழுச்சிக்கு முதல் தூண்டுதல் தந்த தென்னகத் தேசீயக் கூறு இதுவே. அயல்முஸ்லீம் ஆட்சியினர் தேசீய முஸ்லிம்களை அடக்குவதற்காகவே முஸ்லிமல்லாதவர்களை அதாவது இந்துக்களை - சிறப்பாகத் தென்னகத் தேசீயத்தில் என்றும் ஒட்டாது மிதந்து வந்துள்ள பிராமணர்களை - ஆட்சித் துறைகளிலும் படைத்துறையிலும் மிகுதியாகப் பயன்படுத்த முன் வந்தனர். தென்னக இஸ்லாமிய ஆட்சியாளருடன் ஒத்துழைத்த மராத்தி வீரர், மராத்திய பிராமணர் தலைமையும் துணையும் கொண்டே மராத்திய பிராமணர் தலைமையும் துணையும் கொண்டே ஷாஜியும் சிவாஜியும் மராத்திய தேசீயத்தைக் கரு மையமாகவும் தென்னகத் தேசீயத்தை மையமாகவும் கொண்ட ஒரு புதிய உயிர்த் தேசீய எழுச்சியாய், விந்த எல்லை கடந்து வடதிசைப் புயற்பேரரசாக வளர்ந்த முகலாயர் ஆட்சியையும் புகுந்து மாற்றிப் பண்பேற்றத் தொடங்கிற்று. முஸ்லீம் தேசீயம், முஸ்லிமல்லாத தேசீயம் ஆகிய இரண்டையும் அடக்கப் பயன்படும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இரு தேசீயத்துடனும் அளாவாத உயர்குடி ‘இந்து’ தேசீயவாதிகளை அக்பரும் அவர் பின்னோர்களும் பயன்படுத்தத் தொடங்கினர். ஆட்சித் துறையிலும் படைத்துறையிலும் இராமராயன் செய்த மாறுதல்களில் சில பேரரசின் ஆற்றலுக்குத் தளர்ச்சி உண்டு பண்ணின என்பது உண்மையே. ஆனால் ‘இந்து’ தேசீயம் என்ற மாயக் கற்பனை நடுநிலையாளரான தலைசிறந்த வரலாற்றுப் பேராசிரியர்களைக் கூட மெய்ந்நிலை திரித்துக் காணச் செய்துள்ளது. அவர்கள் இராமராயனது அரசியற் குறைபாட்டைத் தேசீயக்குறைபாடாகக் காட்ட முயல்கின்றனர். ‘இந்து’ தேசீயத்தில் நச்சுப்பயிர்களாக வளர்ந்த கூறுகளில் சில பண்டைத் தமிழகத் தேசீயத்திலேயே மெல்ல மெல்ல உருவாவதைக் காணலாம். சமய சமரசத்தின் பெயரால் சங்ககால அரசர் பேரரசர் சிந்து கங்கை வெளியிலோ, தென்னகத்தின் பிறபகுதிகளிலோ கிட்டாத உரிமைகளையும் சலுகைகளையும் மேலாண்மைகளையும் வைதிக நெறிக்கும் வேள்வி நெறிக்கும் அளிப்பது காண்கிறோம். அதே சமயம் சங்க காலத்தில் வாழ்ந்த ஏழை பங்காளர்களான புலவர்கட்கு, பாமணக்கும் புகழ்ப் பாணர்க்கு, கலை விறலியர்க்கு, வீரப் பொருநர்க்குச் சங்க காலத்தில் தமிழரசர் தந்த மதிப்புப் படிப்படியாகச் சமயத்தின் பெயரால் முதலில் கோயில்களுக்கும் தமிழ்த்தெய்வப் பாடல் களுக்கும், பின்னாட்களில் சமஸ்கிருதத்துக்கும் மாறிவிடுகின்றன. தேசீய வாழ்வுக்கும் மக்கள் நலனுக்கும் நாடு வளம் பெறுவதற்கும் பயன்படவேண்டிய மக்கள் உழைப்பின் விளைவான செல்வம் பெரும்பாலும் மன்னர் காட்டிய தவறான, தேசீய வாழ்வுக்கு மாறான வழியில் சென்று, தேசீயப் பண்புக்கு அயலாக வளர்ந்து வந்த கோயில்களில் குவிந்தது. சோழப் பெரும் பேரரசர் (10-12 நூற்றாண்டு). பாண்டியப் பெரும் பேரரசர் (13-14 நூற்றாண்டு) காலம் வரை உலகளாவிய வாணிக மூலமும் தொழில் வள மூலமும் தமிழகத்தில் வந்து குவிந்த பொன்மணி முத்து வளங்களில் மிகப் பெரும்பகுதி நாட்டு மக்கள் வாழ்வுடன் தொடர்பற்ற பண்புகள், பண்பாளர்களை வளர்த்து நாட்டை நலியச் செய்ததுடன் நில்லாது, எளிதாக அயலார் கொள்ளை யிடும்படி ஓரிடம் குவிந்திருந்த நிலையில் அயலின, அயல்மொழி, அயல் நாட்டுக் கொள்ளை வேட்டைக்காரரைத் தமிழக நோக்கி, தென்னக நோக்கி அழைக்கத் தொடங்கியிருந்தது. தமிழக, தென்னகத் தேசீய வாழ்வு உலகளாவிய வாழ்வா தலால், தமிழகவளம் தென்னகவளமாகவும், சூழ்நிலங்களான கீழ்திசை வளமாகவும் பொங்கி வழிந்து வந்தது. ‘போலிச் சமயத்தின்’ பெயரால் தென்னகத்திலிருந்து பரவிய பண்பு அச்செல்வமுழுவதையும் வடதிசை, மேல்திசை நிலக்கொள்ளைக் காரர், கடற் கொள்ளைக்காரர் வேட்டைக் காடாக்கி, கீழ் திசையையே இன்று வரை அடிமை, வறுமை, படுகுழிகளுக்கு ஆளாக்கியுள்ளது - உலகிலேயே பண்பு கெடுத்து வருகிறது. வடதிசைப் புயலை மட்டுமன்று, கடல்வழி மேலை வாணிகக் கொள்ளையாட்சிகளையும் கீழ்திசையில் பரப்பிய பண்பு இதுவே. மக்கட் சமய ஆதிக்கத்துடனும், செல்வ ஆதிக்கத்துடனும், மொழிகலையாதிக்கத்துடனும் அமையாமல், அரசியலையும் கைப்பற்றிக் கொள்ளத் தமிழகப் பேரரசர் ஆட்சிக்காலத்தி லிருந்தே வைதிகப் புரோகிதர் முனைந்து வந்துள்ளனர். விசயநகரப் பேரரசு அமைந்த போது அது வித்தியாரணியர் தலைமையில் ‘இந்து’ தேசீயமாகப் பரிமளித்ததனாலே இந்த வாய்ப்புப் பெரிதாயிற்று. மக்களில் பல்வேறு வகுப்பினர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்த பணிகள் பலவும், ஏற்கெனவே மற்றெல்லாச் சலுகைகளையும் மக்களிடையே ஒருங்கே பெற்றிருந்த ஒரு வகுப்பின் மீதே குவிக்கப்பட்டன. தகுதி திறமையுடைய நாடு அது காரணமாக மற்ற நாடுகளை அடக்கி யாள்வது எப்படி தேசீயமாகாதோ, அப்படியே தகுதி திறமை குவிந்து கிடப்பதாகத் தோற்றமளிக்கும் ஒரு வகுப்பு தேசீயமாகாது. இந்த உண்மையைத் தமிழக அரசர், பேரரசர் மெல்ல மெல்ல மறந்து வந்தனர். அவர்களைப் பின்பற்றி நாளடைவில் பிற தென்னக, கீழ்திசை அரசர், பேரரசர் தேசீய பண்பும் வளமும் கெடவிட்டே வந்துள்ளனர். ஆனால் இந்த முன்பின் குளறுபடிகளிடையே இராமராயன் ஆட்சி மரபு ஒரு மின்னொளித் தேசீயக்கனவாக அமைந்துள்ளது. இராமராயன் தேசீயத்துக்கு வரலாற்றாசிரியர் பலர் மதிப்புத் தரத் தவறிவிட்டாலும் தென்னக வாழ்வு வரலாறுகள் தம் பண்பு மூலமே அதற்குச் சீரிய சான்றளித்துள்ளது. வித்தியாரணியர் வழிவந்த ‘இந்து’ தேசீயம் விந்தமலைக்கு வடக்கே தங்குதடையற்ற வளர்ச்சியடைந்து, இந்து தேசீயம், முஸ்லீம் தேசீயம் என்ற தேசீய வேறுபாடுகளை உருவாக்கி இருவேறு தேசீய அரசுகளாகவே பிரிந்துள்ளது. ஒரே அரசியலிணைப்பின் காரணமாக, தென்னகத்திலும் இதன் தொலை எதிரொலிகள் இருந்தாலும் இத்தகைய சமயச் சார்பான தேசீயமோ, தேசீயப் பிளவோ தென்னகத்தில் கனவின் நிழலாகக் கூடத் தலைகாட்ட முடியவில்லை. இஸ்லாம் மட்டுமன்றி, கிறித்துவ முதலிய திருநெறிகளும் தென்னகத்தின் திருநெறிகளுள் திருநெறிகளாக இயங்கி ஒரே தேசீயம் வளர்த்து வருகின்றன. போலித் தேசீயப் பண்புகளை அகற்றி, தேசீயத்துக்கு எதிரான வருண, சாதி, சமய, இனவேறுபாடுகளைத் தூள் தூளாக்கி, தென்னகத் தேசீயம் உலகின் மணித்தேசீயமாய் உலகை ஓருலகமாக்க உதவும் தாய்த் தேசீயமாய் விளங்குவது உறுதி. அந்நிலைக்கு விசயநகர வரலாறு மணிவிளக்காய், இராமராயன் புகழ் அதன் மணிச்சுடராய் இலங்குவது காணலாம். இராமராயன் ஆட்சித் தொடக்கம் : தமிழக நிலை விசயநகரப் பேரரசில் பெயரளவில் சதாசிவன் (1542-1576) ஆட்சியாளனாக வாழ்ந்தான். ஆனால் பெயரளவான அவன் ஆட்சித் தொடர்பு கூடப் படிப்படியாக மாறித்தேய்வுற்றே வந்தது. இராமராயன் ஆட்சி (1542-1565) இவ்வகையில் இரண்டு பிரிவுகளாக வகைப்படுகிறது. முதல் எட்டாண்டுகளில் (1542-1550) எல்லா ஆட்சிக் காரியங்களையும் இராமராயனே நேரில் பார்த்தாலும் அவன் பேரரசனின் படைப்பெருந்தலைவன் என்ற பதவியுரிமையுடனே, பேரரசன் பெயராலேயே, யாவும் செய்தான். ஆனால் இந்த அளவு மேலாட்சியின் நிழல்கூட அவனுக்கு மிகவும் மன உளைச்சல் தந்திருக்க வேண்டும்; ஏனெனில் 1550லிருந்து அடுத்த பதினாறு ஆண்டுகளிலும் அவன் பேரரசனின் எல்லா அதிகாரங்களையும் தானே நேரடியாகக் கைக்கொண்டு ஆட்சி செய்தான். பேரரசனின் முழுமதிப்பும் அவனிடமே இருந்தது. நாட்டு மக்களும் அயல் நாட்டவரும் யாவரும் அவனையே பேரரசனாக மதித்துப் பாராட்டினர். இராமராயன் ஆட்சியின் முதல் நடவடிக்கை தெற்கே தமிழகம் பற்றியதாகவே அமைந்தது. மீண்டும் தென்னகத் தேசீயத் தின் மையமாகிக் கொண்டு வந்த தமிழகமே அன்று இராமராயன் ஆட்சிக்கெதிராகக் கொந்தளித்துக் கொண்டிருந்தது. விசயநகரப் பேரரசின் வலு தேசீயச் சிற்பிகள் காலத்தையும் கிருட்டிண தேவராயன் காலத்தையும் கடந்து வளர்ந்திருந்தது. ஆனால் அது பேரளவில் இப்போது ஒரு மனிதன்வலுவாக, இராமராயன் வலுவாக, அமைந்திருந்தது. தெற்கே வெற்றி நிறுவி அவன் வடக்கே தன் கைவரிசை காட்ட எழ முடிந்தது. மேல் கடற்கரையில் கொல்லம் முதல் தென்கடற் கரையில் காயல்பட்டினம் வரை இப்போது ஐந்துக்கு மேற்பட்ட வலிமை வாய்ந்த அரசுகளாகப் பிரிவுற்றிருந்தது. ஐவரும் ஐந்து திருவடிகள் என்று பொதுவாக வழங்கப்பட்டனர். இவற்றுள் கொல்லம் அரசு கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம் அருகிலுள்ள விழிஞம் வரை பரவி இருந்தது. குமரி ஒரு தனி அரசாகக் குமரியிலிருந்து தண் பொருநையாற்றின் கழிமுகம் வரை அகன்று கிடந்தது. இவற்றுக் கிடையே இருந்த திருவாங்கூரே ஐந்து அரசுகளிலும் வலிமைமிக்கதாயிருந்தது. சிறைவாய், ஆற்றங்கல் அல்லது திருப்பாப்பூர், கல்லிக்கு அல்லது செய்துங்கநாடு, பொகத்தளி, குன்றின்மேல் இலயிதம் ஆகிய வேறு சிறிய அரசுகளும் இருந்தன. பக்கத்திலுள்ள இச்சிறு தலைவர்கள், சிற்றரசுகள் ஆகியவற்றின் மீது பாய்ந்து திருவாங்கூர் அரசு தன் ஆட்சியை வேகமாக விரிவுபடுத்திக் கொண்டு வந்தது. தென் தமிழக அரசியல் வாழ்வு இதனால் பெருங் கொந்தளிப்புக் குள்ளாகியிருந்தது. அதனிடையே எவரும் விசய நகரத்துக்குக் குள்ளாகியிருந்தது. அதனிடையே எவரும் விசயநகரத்துக்குத் திறை அனுப்ப எண்ணவில்லை. இராமராயன் புதிய ஆட்சியை மதிக்காமல் பலரும் தன்னாண்மை பெறத் துடித்தனர். பாண்டிநாட்டின் ஒரு பகுதியில் தென்காசியைத் தலை நகரமாகக் கொண்டு பூதலவீரராம வர்மன் ஆண்டு வந்தான். ஆனால் அவனைத் துரத்திவிட்டு வேறு கிளைமரபினர்களான ஐந்து பாண்டியர்கள் ஆட்சி கைக்கொண்டனர். அவர்களில் தலைமை தாங்கியவன் பட்டம் பெருமாள் என்ற ஆற்றல் என்ற வீரன் ஆவான். அவன் காயல் பட்டினத்திலும் தூத்துக்குடியிலுமிருந்து ஆண்டு வந்தான். புதுக்கோட்டையுடன் தஞ்சை, இராமநாதபுரம் சேர்ந்த பகுதிகள் அன்று ‘தனியரசு நாடு’ என்று பெயர் பெற்றிருந்தன. அதில் பல தலைவர்கள் இருந்தாலும் அது பெரிதும் ஒரே குடியரசுக் கூட்டுறவாக நிலவி வலிமையும் வளமும் உடையதாயிருந்தது. பேரரசுக்குத் திறை மறுத்து அவர்களும் ஆற்றல் பரப்ப முனைந்திருந்தனர். நிலவிலங்குகளைச் சூழ்ந்து வளைத்துவரும் மலைப்பாம்பு போல நாட்டரசுகளின் எல்லையிலே வேற்றரசாகப் போர்ச்சு கீசியர் கடற்கரை யெங்கும் கைபரப்பி வந்தனர். அவர்கள் இடது கையாகக் கத்தோலிக்க கிறித்தவ மதத்துறவிகள் கோவாலி லிருந்து மயிலை சாந்தோம் வரை மக்களை மதமாற்றியும், மதமாறிய மக்களை மெல்லப் போர்ச்சுகீசியக் குடிகளாக்கியும் வந்தனர். போர்ச்சுகீசிய வணிகரும் ஆட்சியாளரும் அவர்கள் வலது கைகளாக நின்று கோயில்களைக் கொள்ளையிட்டுப் போர்ச்சுக்கீசிய ஆட்சியையும் செல்வாக்கையும் வளர்த்து வந்தனர். போர்ச்சுகீசிய ஆட்சித் தலைவர்கள் மார்ட்டின் அல்ஃவான் சோ டி சூசா காலத்தில் இந்தக் கொடுமைகள் உச்சநிலை அடைந்தன. பேரரசிலே இராமராயன் இரும்புக் கரங்களுக்கஞ்சி விலகி நின்ற அவனது எதிரிகள் யாவரும் தமிழகச் சூழ்நிலையைப் பயன்படுத்தி அதனையே தமக்கு அரணாக்கிக் கொண்டிருந்தனர். பின்னாளில் தமிழ் மண்டலத்தின் தலை நகராயிருந்த சந்திரகிரிக் கோட்டையும் அதன் சூழ்புலங்களும் அவர்கள் கைப்பட்டிருந்தன. சோழ நாட்டிலும் அவர்கள் வலிமை பெரியதாயிருந்தது. போர்சுச்கீசிய ஆட்சியாளன் அல்ஃவான்சோ டி சூசா 1542இல் விசயநகரின் மேல்திசைத் துறைமுகமான பட்கலைத் தாக்கி வடதிசைப் புயல் மரபுகூடக் கண்டு வெட்கமுறும்படி அதனைக் கொள்ளை சூறைகளால் அலைக்கழித்தான். கீழ்திசையில் காஞ்சி நகரத்தையும் கோயில்களையும் கொள்ளை யிடவும் அடுத்த ஆண்டே அவன் திட்டமிட்டிருந்தான். குமரி நாட்டரசன் 1543-ல் ஒரு சிறுவனைப் பின்னுரி மையாளனாக விட்டு இறந்தான். திருவாங்கூர் அரசன் சிறுவனையும் அவன் அன்னையையும் சிறையிலிட்டு நாட்டைத் தன்னிடமே ஒப்படைக்கும்படி வற்புறுத்தினான். சிறுவன் பெயர் வெற்றிப் பெருமாள் என்பது. அவன் அச்சமயம் தமிழகம் வந்திருந்த கத்தோலிக்க சமயமா முதல்வர் தூய திரு. சவேரியரின் உதவி நாடினான். திருவாங்கூர் அரசனும் தன் பக்கமாக இருந்துதவும்படி அவனை வேண்டினான். போர்ச்சுகீசியர் நடுவராக அமைந்து அந்நல்வாய்ப்பை முழுதும் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டு வந்தனர். தென்தமிழகக் கிளர்ச்சி, கத்தோலிக்க போர்ச்சுகீசிய அட்டூழியங்கள், பேரரசுப் பெருமக்கள் எதிர்ப்பு ஆகிய இந்த மூன்றும் இராமராயனைத் தவிர வேறு எந்தத் தனி மனிதனையும் நிலைகலங்க வைத்து முற்றிலும் கவிழ்த்து விடத் தக்கவை. மூன்றும் ஒருமுகமாக அவன் ஆட்சி ஏற்ற சமயத்திலேயே தம் வரிசைகளைத் தொடங்கின. ஆனால் அவன் மூன்றும் வென்று வெற்றிமுரசும் முழக்கினான். தமிழக வெற்றி உலா இராமராயன் தமிழகத்தில் தன் ஆற்றலை நிறுவ எண்ணிப் பெரும்படையை அனுப்பினான். அதற்கு அவன் மைத்துனன் சின்ன திம்மராயனும் அவன் உடன் பிறந்தான் விட்டலராயனும் படைத் தலைவராக அனுப்பப்பட்டனர். விட்டல ராயன் சந்திரகிரிக் கோட்டையை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். பேரரசின் எதிரிகளை அவன் காட்டு விலங்குகள் போல வளைத்துத் துரத்தி வேட்டையாடித் தமிழகத்தின் வடஎல்லை முழுவதையும் கீழடக்கினான். சோழ நாட்டில் புவனகிரிக் கோட்டையும் நாகூர் கோட்டையும் வீழ்ச்சியடைந்தன. நாகூர், நாகபட்டினத்தருகேயுள்ள கத்தோலிக்கர் சீரங்கத்தைப் பல நாள் கொள்ளையடித்துத் தம் செல்வக் குகையாக்கியிருந்தனர். சின்னத் திம்மராயன் அவர்கள் கொள்ளைச் செல்வத்தைக் கொள்ளை யிட்டு மீண்டும் சீரங்கத்தின் வளம் செப்பம் செய்தான். மேலும் முத்துமணிகளை வாரி வழங்கி அதனைப் பொன்னரங்க மாகவும் முத்துமணியரங்கமாகவும் ஆக்கினான். வட தமிழகத்தினின்று காவிரி கடந்து அவன் தனி அரசு நாட்டில் தாவளமிட்டான். அந்நாடெங்கும் சுற்றித் தலைவர்களை வளைத்தடக்கி அவர்கள் திறைப் பாக்கி முழுவதும் பிரித்து மேலும் திறை அனுப்ப ஏற்பாடு செய்தான். பட்டம் பெருமாளின் கையில் நாடிழந்து இராமராயனை நாடியிருந்த பாண்டியன் பூதலவீர ராமனின் சார்பில் சின்னதிம்மனும் விட்டலராயனும் போராடி கயத்தாற்றில் நடைபெற்ற பெரும்போரில் பட்டம் பெருமாளின் தருக்கடக்கிப் பாண்டியனுக்கு அவன் நாடளித்தனர். திருவாங்கூர் அரசன் உள்ளிட்ட ஐந்து திருவடிகளும் பட்டம் பெருமாளுக்கு ஆதரவளித்திருந்தனர். அவர்களைச் சின்னத் திம்மராயன் படைகள் தோவாளைக் கணவாயில் நடைபெற்ற கடும்போரில் முறியடித்தன. இதன்பின் திருவாங்கூர் அரசன் பணிந்து திறை கொடுக்க ஒப்புக் கொண்டான். ஆனால் கயத்தாற்றுத் தலைவன் பட்டம் பெருமாள் பணியமறுத்துக் கடல் வழியாகக் குமரி அரசனையடுத்து மீண்டும் போரிட்டான். அவன் சிறைப் பிடிக்கப்பட்டு, அவன் நாடும் திருவாங்கூர் அரசனுக்கே அளிக்கப்பட்டது. வென்ற நாடுகள் அனைத்துக்கும் மேலாளாகவும் மதுரை மண்டலத் தலைவனாகவும் விட்டலராயன் அமர்த்தப்பட்டான். இராமராயன் கொடியைக் குமரி வரை நிலை நாட்டி விட்டுச் சின்ன திம்மராயன் வெற்றிகரமாகத் தலைநகருக்கு மீண்டான். போகுமுன் அவன் திருவனந்தபுரத்தில் பதுமநாபர் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டுக் குமரி முனையில் வெற்றித் தூண் நாட்டினான். அந்நாட்களில் இயற்றப்பட்ட தமிழ்ப் பாடலொன்று விட்டலராயன் தென் குமரி வரை வென்றாண்டதனைத் தமிழ்ப் புலவர்க்கு வழக்கமான சிலேடை அணி நயங்களுடன் பாடியுள்ளது: தொட்டிலிருக்கத் தொடங்கிய நாள் முதலாய் அட்டதிக்கும் நின்குடைக்கீழ் ஆயிற்றே - விட்டலையா தன்குமரி அன்றி தனிக்குமரி கொள்ளாநீ தென் குமரிக் கேகுவதென் செப்பு! தமிழகத் தொல்லைகளோடு தொல்லையாக வளர்ந்து வந்த போர்ச்சுகீசியத் தலைவன் தேசூசாவின் ஆட்சிக்குச் சின்ன திம்மராயனின் நாகூர் எதிர் சூறையாட்டு ஒரு நல்ல சூடாய் அமைந்தது. தேசூசா ஆட்சி முடிந்த பின் புதிய தலைவனாக வந்த ஜோவாந்தே காஸ்ட்ரோ இராமராயனின் நேசம் நாடி 1545-இல் ஒப்பந்தம் செய்து கொண்டான். ஆனால் நேசக் கரத்தின் மறைவில் சிறுசிறு பூசல்கள் நடந்த வண்ணமிருந்தன. இராமராயன் பொறுமையுடனிருப்பது போலப் பாவித்து 1558-இல் திடுமெனச் சீறியெழுந்தான். விட்டலராயனையும் இக்கேரித் தலைவன் சதாசிவ நாயகனையும் படையுடன் கோவா மீது தாக்கி முற்றுகையிடும்படி அனுப்பினான். ஆனால் அதே சமயம் இராமராயன் சான்தோமைத் தாக்கிக் காஞ்சியிலும் சுற்றுப்புறங்களிலும் அவர்கள் கோயில்களில் கொள்ளையடித்துத் திரட்டிய செல்வ முழுவதும் மறு கொள்ளையடித்துப் பறித்தான். அத்துடன் அவர்களிடமிருந்து ஒரு இலட்சம் பொன்னும் திறையாக வலியுறுத்திப் பெற்றான். திறையின் ஒரு பகுதி உடனடியாகக் கொடுக்கப்பட்டது. மறுபகுதி அடுத்த ஆண்டு தருவதாகப் போர்ச்சுகீசியர் ஏற்றுக் கொண்டனர். ஆனால் அதற்குப் பிணையாகப் போர்ச்சுக்கீசியர் செல்வர் ஐவர் வெற்றித் திருநகருக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தமிழரசர், பேரரசர் ஆட்சிக் கரங்களைப் போல விசய நகரப் பேரரசர் கரங்கள் கடல்கடந்து செல்லவில்லை. ஆனால் இராமராயன் ஆட்சியில் அயலார் ஆட்சி அலைகடல் கடந்து நிலம் பரவாமல் தடுக்கப்பட்டிருந்தது. இராமராயன் ஆட்சியின் வீழ்ச்சியும் விசயநகரத்தின் வீழ்ச்சியும் கடல்கடந்த மேலையாட்சிகளுக்கு வழி வகுத்ததனால், அவை தென்னக வீழ்ச்சியாக மட்டுமின்றி ஆசியாவின் வீழ்ச்சியாகவே அமைந்தன. கீழையுலகு இருபதாம் நூற்றாண்டில்கூட அந்த வீழ்ச்சியிலிருந்து இன்னும் தெளிவாக எழுச்சி பெறவில்லை. தென்னகத் தேசீயமே கீழ்திசைக்கு அதன் பழம் புகழை அளிக்கத் தக்க வருங்கால அரசு என்னலாம். பீசப்பூர், அகமதுநகர், பீடார்த் தொடர்புகள் பீசப்பூருக்கும் அகமது நகருக்குமிடையே நடைபெற்றுவந்த போர் 1542-ஆம் ஆண்டு முடிவுற்றது. இரு முஸ்லிம் அரசர் களுக்கும் இடையே ஒரு விசித்திரமான ஒப்பந்தம் ஏற்பட்டது. பீசப்பூர் உரிமைகளில் தலையிடாமல் அது விசய நகரத்தை வெல்ல அகமதுநகர் இடமளிக்க வேண்டும் என்றும், அதுபோல அகமது நகரின் உரிமையில் தலையிடாமல் அது பீடாரை வெல்லப் பீசப்பூர் இடமளிக்க வேண்டும் என்றும் இரு அரசுகளும் உடம்படிக்கை செய்து கொண்டன. பூனைக்கு மணி கட்டுவதென்று எலி உறுதிசெய்து கொள்வது எளிது; கட்டுவதுதான் இயலாத காரியம். பீசப்பூரின் ஒப்பந்தம் இராமராயன் நாட்களில் இக்கதிதான் அடைந்தது பீசப்பூர் அரசன் இப்ராகிம் ஆதில்ஷா தன் படைத் தலைவன் சாடேயக் கானிடமாக ஒரு பெரும் படையை விசய நகரத்தைத் தாக்க அனுப்பினான். இராமராயன் வீரப்படைத் தலைவர்களுள் ஒருவனான கேளதித் தலைவன் சதாசிவ நாயகன் பீசப்பூர்ப் படைகளை முறியடித்துத் துரத்தினான். அகமது நகருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, வந்த உரிமையைப் பீஜப்பூரால் கைப்பற்ற முடியவில்லை. ஆனால் புயல்மரபு துணைக்கொண்ட தென்னக அரசுகள் ஒப்பந்தங் களுக்கு அவ்வளவு மதிப்புக் கொடுப்பதும் அரிதாயிற்று. அகமது நகர் அரசன் புர்கான் நிஜாம்ஷா பீடாரிடமிருந்து கலியாணிக் கோட்டையைக் கைப்பற்ற முனைந்திருந்தான். அகமது நகருக்கெதிராகத் தன் பக்கம் இருந்து உதவி செய்தால், பீஜப்பூருக்கே கலியாணி கோட்டையைத் தந்து விடுவதாகப் பீடார் மன்னன் அலி பரீத் ஆசை காட்டினான். அகமது நகருடன் தான் செய்து கொண்ட ஒப்பந்தத்தை உடனே மறந்து காற்றில் பறக்க விட்டு இஸ்மாயில் ஆதில் ஷா பெரும் படைகளுடன் கலியாணிக் கோட்டையை அணுகினான். தன் ஒப்பந்தங்களின் மூலமே தன் விருப்பம் நிறைவேறாமல் போனது கண்ட புர்ஹான் நிஜாம்ஷா தானும் ஒப்பந்தம் மீறி இராமராயன் உதவி நாடினான். கலியாணிக் கோட்டை 1548-இல் அகமது நகர் வசமாயிற்று. புர்ஹான் நிஜாம்ஷா 1553-இல் மறைவுற்ற பின் அவன் மகன் ஹுசேன் நிஜாம்ஷா தவிசேறினான். நான்காண்டுகளுக்குள் அவன் கோல்கொண்டா அரசன் இப்ராகிம் குதிப்ஷாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பீஜப்பூர் மீது தன் போராட்டத்தை முன்னிலும் மும்முரமாக்கினான். இரு எதிரிகளையும் தனியே சமாளிக்க முடியாத பீஜப்பூர் மன்னன் இப்ராகிம் ஆதில்ஷா, இப்போது தானே இராமராயன் ஆதரவு கோரினான். இராமராயன் பெரும்படையின் தலைமையில் தானே உதவிக்குப் புறப்பட்டான். ஆயினும் உள்ளாரத் தென்னக அரசுகள் இவ்வாறு ஒருவர் மீது ஒருவர் ஓயாது பூசலிடுவதை அவன் விரும்பவில்லை. கூடிய மட்டும் அவர்களிடையே நிலையான அமைதியையும் ஒற்றுமையையும் நிலைநாட்டி விடவே அவன் விரும்பினான். இதனால் அவன் போரில் வெற்றி நாடுவதற்கு மாறாக, போரிலீடுபடவிருந்த வல்லரசுகளையெல்லாம் அழைத்து ஒரு முகப்படுத்தி, ஒரு நாலரசு ஒப்பந்தம் உண்டு பண்ணினான். அதில் கலந்து கொண்ட அகமது நகர், கோல கொண்டா, பீஜப்பூர், விசய நகரம் ஆகிய நான்கு வல்லரசுகளும் எப்போதும் ஒருவருடன் ஒருவர் நேசமாயிருக்க வேண்டு மென்றும், எந்த அரசின் மீதாவது யாராவது வலியத் தாக்குதலுக்கு எழுந்தால், மற்ற ஒப்பந்த உறுப்பினர் அனைவரும் அவர்களுக்கு ஆதரவு தந்து உதவிக் கூட்டுறவை வலுப்படுத்த வேண்டுமென்றும் அந்த ஒப்பந்தம் வலியுறுத்திற்று. ஒப்பந்தம் எழுதி மையுலவர்வதற்கு முன்பே அதன் உறுப்பினருள் ஒருவனான அகமது நகர் மன்னன் ஹுசேன் நிஜாம்ஷா அதை மீறத் துணிந்தான். பீஜப்பூரில் இப்ராகிமுக்குப் பின்வந்த அலி ஆதில்ஷா சிறுவனாயிருந்தான். இதைப் பயன்படுத்தி அவன் பீஜப்பூரைத் தாக்கி அலி ஆதில்ஷாவைத் துரத்தினான். நாடிழந்த அலி ஆதில்ஷா விசயநகரத்துக்கு ஓடி இராமராயனிடம் அடைக்கலம் கோரினான். ஒப்பந்தங்களின் மதிப்பறிந்த மரபில் முதல்வனான இராமராயன் அவனைக் காத்து நாட்டையும் மீட்டுக் கொடுக்க உறுதி கூறி அவனை இட்டுக் கொண்டு பெரும் படையுடன் தானே அகமது நகர் மீது படை யெடுத்து, கலியாணிக் கோட்டை முற்றுகை தொடங்கினான். நாலரசு ஒப்பந்தத்தில் பங்கு கொண்டிருந்த கோல் கொண்டா அரசன் இப்ராகிம் குதுப்ஷாவையும் இக்கடமையில் ஒத்துழைத்து உதவும்படி அவன் அழைப்பு விடுத்தான். கோலகொண்டா மன்னன் உள்ளார நிஜாம்ஷா பக்கமே அனுதாப முடையவனாயிருந்தான். இராமராயனது வளர்ந்து வரும் ஆற்றலும் புகழும் அவன் உள்ளத்தில் புழுக்கமும் பொறாமையும் உண்டுபண்ணின. ஆயினும் இராமராயன் விருப்பத்துக்கெதிராக நடக்க அஞ்சி அவன் வேண்டா வெறுப்புடன் அரைகுறை முறையில் உதவி செய்ய முற்பட்டான். ஹுசேன் நிஜாம்ஷா கலியாணிக்கோட்டையின் காப்பைத் தன் திறமை வாய்ந்த தலைவன் போபால்ராயிடம் ஒப்படைத்து விட்டுத் தலைநகரின் பக்கமாகப் பின்வாங்கினான். இராமராயனும் கலியாணி முற்றுகையை ஒரு படைப் பிரிவினிடம் ஒப்படைத்து விட்டு, அலி ஆதில்ஷா வுடன் நிஜாம் ஷாவைத் தொடர்ந்து அகமது நகர் முற்றுகையி லிறங்கினான். இம்முற்றுகையும் இரண்டு மாதம் நீடித்தது. நயவஞ்சகனான இப்ராகிம் குதுப்ஷா மறைமுகமாகக் கோட்டைக்குள்ளிருக்கும் எதிரிகளுக்கு உதவிகள் செய்ததும், கோட்டை நெருக்கடி நிலைக்கு உள்ளாயிற்று. இந்நிலையில் நிஜாம்ஷா இங்கும் நின்று போராடத் துணியாமல் இன்னொரு படைத்தலைவனிடம் தலை நகர்ப் பாதுகாப்பை அளித்து விட்டுக் கோதாவரி ஆற்றின் கரையிலுள்ள பைத்தான் நகரில் சென்று தஞ்சமடைந்தான். போரை விரைந்து முடிக்கும் எண்ணத்துடன் இராமராயன் கோதாவரியாற்றெல்லை வரை படையெடுத்துக் கொள்ளை யிடும்படி படைத்தலைவன் கேளதி நாயகனான சதாசிவ நாயகனுக்குக் கட்டளை யிட்டான். அகமது நகரின் தலைசிறந்த படைத் தலைவர்களான மௌலிகான், சஞ்சாகான், தௌலத்கான், தஸ்தூர்கான், வசீர்கான், சாத்யா ஆகியவர்கள் தலைமையில் கைதேர்ந்த ஈராக்கிய இராசானிய குதிரைவீரர் படையொன்று. இச்சமயம் சதாசிவ நாயகன் படைகளைத் தடுக்க முயன்றான். ஜம்காம் அல்லது ஜம்புகண்டி என்னுமிடத்தில் நடைபெற்ற இப்பெரும் போரில் விசயநகரப் படைத்தலைவன் கையே மேலோங்கியிருந்தது. இராமராயன் உடன் பிறந்தானான வெங்கடாத்ரியின் கீழ் ஒரு விசயநகரப் படைப் பிரிவு இச்சமயம் கோதாவரியாற்றைக் கடந்து பைத்தானிலிருந்த ஹுசேன் நிசாம் அலியைத் தௌலதாபாத் வரை துரத்தியடித்ததுடன் அவ்வெல்லை வரை நாடெங்கும் குருதிக்காடாகவும் அனற் காடாகவும் மாற்றிற்று. கலியாணிக்கோட்டை இதற்குள் வீழ்ச்சியடைந்தது. அதன் தலைவன் போபால்ராவ் அதை இராமராயனிடமே ஒப்படைத்துச் சரணடைந்தான். போரை இன்னும் நீட்டிப்பதில் பயனில்லை என்று கண்ட ஹுசேன் நிஜாம் ஷா கலியாணிக் கோட்டையைப் பீஜப்பூர் அரசன் அலி ஆதில்ஷாவூக்கு விட்டுக் கொடுத்துப் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டான். அகமதுநகர் வெற்றியை அடுத்து இராமராயன் பீடார் மீதும் படையெடுத்தான். இதுகேட்ட பீடார் அரன் பரீத்ஷா தானே படையுடன் எல்லைப்புறத்துக்கு வந்து விசயநகரப் படைகளைத் தாக்கினான். இப்போரில் விசயநகரத்துப் படைத் தலைவனாக இராமராயன் உடன் பிறந்தானான வெங்கடாத்திரியே பெரும்பங்கு கொண்டான். தோர்கல் நடராசனும் அவனுக்கு உதவியாயிருந்தான். பீடார் மன்னன் ஒரு யானை மீதேறித் தானே படைகளை நடத்தினான். ஆனால் இப்போரில் விசயநகரத் தலைவர்கள் பீடார்ப்படைகளை முறியடித்ததுடன் பரீத்ஷாவையும் அவன் அரசுரிமைச் சின்னங்களையும் கைப்பற்றி இராமராயனிடம் ஒப்படைத்தனர். ஆனால் இராமராயன் தோற்ற எதிரியிடம் தன் போர்களில் தன்னுடன் வந்து உதவி செய்யும் உறுதி மட்டுமே கோரி நாட்டை அவனிடம் ஒப்படைத்தான். கோலகொண்டா மன்னன் கண்ட அலங்கோலம் இராமராயன் இளமை வாழ்க்கையே கோலகொண்டா வில்தான் தொடங்கியிருந்தது. அவன் கோலகொண்டா அரசன் குலீகுதுப் உல்முல்க் ஆட்சியின் போது அவ்வரசனிடமே சேவை செய்து வந்தான். ஆனால் குலீயினிடம் அவன் பல இன்னல்களுக்கு ஆளாகி அங்கிருந்து விசய நகரம் வந்து கிருட்டிண தேவராயனிடம் பணியமர்வு பெற்றான். கிருட்டிண தேவராயன் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமானதன்றி, அவன் கிருட்டிணதேவராயன் புதல்வியையும் மனைவியாகப் பெற்றான். விசயநகர வாழ்வுடனும் ஆட்சியுடனும் அவன் தொடர்பு பெருகப் பெருக, கோலகொண் டாவிலுள்ள அவன் பழந் தொடர்புகளும் பழக்கமும் அவனுக்கு விசயநகர ஆட்சியில் பயன்பட்டன. கோலகொண்டாவில் அரண்மனையிலும் ஆட்சியிலும் பதவியிலும் இருந்த முஸ்லிம், முஸ்லிமல்லாத பெருமக்கள் பலருடனும் இராமராயன் நன்கு பழகியிருந்தான். நெருங்கிய நண்பர்களும் பலர். கோல்கொண்டா அரசியலிலிருந்து விலக்கப்பட்ட படை வீரர்களுக்கும் தலைவர்களுக்கும் அவன் விசய நகரத்தில் பணியும் ஆதரவும் அளிக்க முன் வந்தபின் இந்த நட்புச் சூழல் இன்னும் பெருகிற்று. உண்மையில் புதிய மன்னன் இப்ராகிம் குதுப்ஷா ஆட்சிக்கு வருமுன் தமையனால் துரத்தப் பட்டு விசய நகரத்தில் அடைக்கலம் புகுந்த சமயம், இராமராயனே அவனுக்கு இருகை விரித்து அன்பாதரவும் உதவியும் அளித்திருந்தான். அண்ணன் மறைவின் பின் அவன் ஆட்சி கைக்கொள்ளப் புறப்பட்டபோதும், இராமராயன் ஒரு படையுடன் தன் இளவல் வெங்கடாத்திரியை அவனுக்கு உதவியாக அனுப்பியிருந்தான். கோலகொண்டாவில் உச்ச உயர்பணியில் இராமராயன் தோழர்களா யிருந்தவர்களில் ஒருவன் ராஜா இம்மடி ஜகதேவராவ் என்பவன் கோலகொண்டாவில் ஜம்ஷெட் நாட்களில் பேரும் புகழும் பெற்ற இப்பணியாளன் அரசியல் புயல்களில் சிக்கி, அவ்வரசைவிட்டுப் போரில் இமத்ஷாவின் பணி நாட வேண்டி வந்தது. அங்கும் அவன் வாழ்வு நிலை கொள்ளவில்லை. ஆனால் இராமராயன் அவனை விசய நகரத்துக்கு அழைத்து, அவனையும் தன் நம்பிக்கைக்குரிய பெரும் படைத்தலை வனாக்கியிருந்தான். கோலகொண்டாப் போரில் அவன் தந்த உதவி சிறிதன்று. இராமராயன் உற்ற நண்பனாக ஆட்சி தொடங்கிய இப்ராகிம் குதப்ஷானி. இராமராயரின் பேரரசு கடந்த தென்னகப் புகழ் வளருந்தோறும் மெல்ல மெல்ல நட்பை மறந்து பொறாமையும் புழுக்கமும் கொண்டான். அகமது நகர்ப் போராட்டத்தில் அவன் இரண்டக நிலை இராமராயனுக்குக் கூடப் புரியாப் புதிராயிருந்தது. அகமது நகர முற்றுகையைக் கைவிடுவதற்கு மாறாகக் கொண்ட பள்ளியை விசயநகருக்களிப்ப தாக நிஜாம்ஷாவின் சார்பில் அவனே உறுதி கூறியிருந்ததாக இஸ்லாமிய வரலாற்றாசிரியர் குறிக்கின்றனர். ஆனால் அவன் இதனை நிறைவேற்றவில்லை. இதுபற்றி அவனிடம் விளக்கம் கோரப்பட்ட போது அவன் இரவோடிரவாகக் கோலகொண்டா வுக்குச் சென்று நேரடியாகவே பகைச்செயலில் முனைந்தான். அது மட்டுமன்றி இராமராயன் எதிரியாகிய நிஜாம்ஷாவின் புதல்வியை மணஞ்செய்து அவன் தன் எதிர்ப்பை வலியுறுத்தத் துணிந்தான். மணவினைக்காகக் குறித்த இடமோ கலியாணிக் கோட்டை - அது இராமராயன் நண்பனான அலி ஆதில் ஷாவிடம் இருந்தது. இராமராயன் உள்ளம் இப்ராகிம் மீதும் குதுப்ஷா மீதும் குமுறிக் கொண்டிருந்தது. அச்சமயம் கலியாணிக் கோட்டை பற்றிய அச்சத்தில் அலி ஆதில்ஷா அவனை உதவிக்கழைத்தான். இதை வாய்ப்பாகக் கொண்டு அவன் ஆதில்ஷாவை வரவேற்று, அவனை இட்டுக் கொண்டு பெரும்படையுடன் அகமது நகர், கோல கொண்டா ஆகிய இரண்டு அரசுகளையும் தாக்கப் புறப்பட்டான். அவன் உடன் பிறந்தான் வெங்கடாத்திரி படைத் தலைவன் ஜகதேவராவுடனும் அயினுல் முலக்குடனும் ஒரு பெரும் படையைக் கோல்கொண்டா அரசின் தென்பகுதியில் தாக்கும்படி அனுப்பினான். அலி ஆதிர்ஷாவுடனும் அலி பரீத்ஷாவுடனும் இராமராயனே மற்றொரு படை நடத்திக் கொண்டு எதிரிகள் கைப்பற்றியிருந்த கலியாணிக் கோட்டை நோக்கி முன்னேறினான். இராமராயன் படைகள் வருவது கேட்டதே நிஜாம்ஷாவும் குதுப்ஷாவும் தம் கூடாரங்களை அவசர அவசரமாகப் பெயர்த் தெடுத்துக் கொண்டு தம்தம் தலைநகர்கள் நோக்கி ஓட்டமெடுத்தனர். இராமராயன் நிஜாம் ஷாவையும், ஆதில்ஷா கோல கொண்டா அரசன் குதுப்ஷாவையும் பின்பற்றித் தாக்கிச் சென்றனர். விசயநகரப் படைகள் நிஜாம்ஷாவின் தலைநகரான அகமது நகர் வரை வெற்றிகரமாக முன்னேறினாலும் சேனா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத் தோடியதனால் அகமது நகர் முற்றுகையில் வெற்றி பெறாமலே மீள வேண்டி வந்தது. இதே சமயம் ஆதில்ஷாவின் தாக்குதலால் பல தொல்லைகளுக்காளாய் இப்ராகீம் குதுப்ஷா குற்றுயிரும் குலையுயிருமாகவே தலைநகர் அணுக நேர்ந்தது. ஆனால் தலைநகரமும் அதைச் சூழ்ந்த பகுதிகளும் அவனுக்குத் தஞ்சமளிக்கும் இடங்களாய் அமையவில்லை. வெங்கடாத்திரியின் படைகளால் அவை அல்லோல கல்லோலப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்தன. இப்ராகிமினால் தன் படைகளை ஒரு சிறிதும் சீரமைக்கவோ, தலைநகரில் அமைதி உண்டு பண்ணவோ முடியவில்லை. இராமராயனும் ஆதில்ஷாவும் இதற்குள் புதுப்படைகளுடன் வந்ததால் குழப்பம் கட்டுக் கடங்காததாயிற்று. இப்ராகீம் அவர்களை ஒரு சிறிதும் தடுக்க முடியவில்லை. இராமராயன் தன் படைத்தலைவர்களான ஜகதேவ ராவையும் அயினுல் முல்க்கையும் கோலகொண்டாவெங்கும் சுழன்று சூறையாடும்படி கட்டளையிட்டான். கொண்ட வீட்டை ஆண்டு வந்த தன் மருமகன் சித்திராஜு திம்ம ராஜுவை ஐம்பதினாயிரம் வீரருடன் கொண்டபள்ளியையும் மசூலிப் பட்டினத்தையும் தாக்கும்படி தூண்டினான். படைத் தலைவர் சித்தபா கான் என்ற சீதாபதியையும் வேங்கடாத்திரியையும் இராசமகேந்திர வரத்திலிருந்து வந்து எல்லூரைத் தாக்கும்படி ஏவினான். பாம்புகள் பலவற்றின் பாய்ச்சலுக்கிடையே அகப்பட்ட தேரையின் நிலையில் இப்போது இப்ராகீம் இருந்தான். ஆனால் இத்தகைய இக்கட்டில் கூட அவன் போர்த்திறம் காட்டினான். இராமராயன் தீவிரத்தாக்குதல் திட்டம் அவன் பேரரசின் ஓர் எல்லையைப் பாதுகாப்பற்றதாக்கியிருப்பது உணர்ந்தான். அதுவே கொண்ட வீடு. தன் தலை சிறந்த படைத்தலைவர் களான முஸ்தா பாகான், அசிம்கான், யாகூப்கான், சிந்தகுண்டா தர்மாராவ் ஆகியவர்களை அப்பகுதிமீது விரைந்து தாக்கும்படி அனுப்பினான். படைகளின் ஒரு பகுதி முன்னதாக விரைந்து சென்று முற்றுகை தொடங்கிற்று. இராமராயன் இத்தகைய ஒரு திருப்பத்தை எதிர்பாராமலில்லை. அவன் உடனே தன் மற்றோர் உடன் பிறந்தானான யாரா திம்மராஜூவுடன் வீரப்படைத் தலைவன் வேலுகோடி சின்ன திம்மா நாயுடுவைக் கொண்ட வீட்டுக்கு அனுப்பினான். சின்னதிம்மா நாயுடு கொண்ட வீட்டு முற்றுகையை எளிதாக முறியடித்து எதிரிப் படைகளைச் சிதறடித்து வெற்றி கண்டான். ஆனால் முஸ்தாபாகான் வசமிருந்த படைகள் கர்நூல் மாவட்டத்தின் மலைப் பகுதிகளை வளைத்துக் கொண்டு அங்குள்ள போயா மலங்குடி மரபினரிடையே பெருங்கிலியும் குழப்பமும் பரப்பின. யாராதிம்மராஜூ உடனே சின்னதிம்மா நாயுடுவை அத்திசைக்கு அனுப்பி, முஸ்தபாகானை முறியடித்துப் போயா மரபினரிடையே அமைதி வருவித்தான். முஸ்தாபா விடமிருந்த பல யானைகளும் விசயநகரப் படைகளின் கைவசமாயின. எதிரிப் படைகளைக் கிருட்டிணை யாறுவரைத் துரத்திய பின், அவர்களைப் பின்னும் அவர்கள் நாட்டினுக்குட் சென்று வேட்டையாடத் திட்டமிட்ட னர். ஆற்றிடையே ஒரு தீவில் உள்ள கோட்டையில் அரண் செய்து கொண்டு ஓய்வு கொள்ள எண்ணிய கோலகொண்டாப் படைகள் பேரிழப்புக்கும் படுகொலைக்கும் ஆளாயின. பட்டாணியர் பாதுகாப்பில் இருந்த தேவரக் கொண்டாக் கோட்டை தவிர மற்றக் கோட்டைகள் விரைவில் ஒவ்வொன்றாக விசயநகரப் படைகளின் கைவசப்பட்டன. சிட்டேலா, பேரர், தேவுலபள்ளி, நாகுலபாடி, ஓடப்பள்ளி, நல்லகொண்டா, அருவப் பள்ளி, இந்திரகொண்டா முதலிய முக்கிய கோட்டைகள் ஒவ்வொன்றாக வீழ்ச்சியடைந்தன. ஜகதேவராவ் கோலகொண் டாவிலேயே செல்வாக்குப் பெற்றிருந்ததால் கோவில் கொண்டா, பாங்கல், கணபுரா ஆகிய கோட்டைகளை அதன் தலைவர்கள் போரிடாமலே இராமராயனிடம் ஒப்படைத்தனர். கோலகொண் டா அன்று கண்ட அலங்கோலம் அது முன் என்றுமே காணாத தாயிற்று. அது காணத்தாளாத இப்ராகீம் தன் செருக்கெல்லாம் விட்டுப் போரை நிறுத்தும்படி இராமராயனைக் கெஞ்சி மன்றாட வேண்டியதாயிற்று. வெற்றிச் சின்னங்களாகப் பாங்கல், கணபுராக் கோட்டைகளை விட்டுக் கொடுக்கச் செய்து இராமராயன் போரை முடிவுக்குக் கொண்டு வந்தான். பூங்காவிலாடிய புள்ளிமாமயில் பேரரசுகளிடையேயும் வல்லரசுகளிடையேயும் இருந்த வேற்றுமைகளால் தென்னகம் வடதிசைப் புயல் கண்டு கிலி கொண்ட காலம் மலையேறிவிட்டது. வடதிசைப் புயல் வடதிசை யிலேயே தங்க, அதனை எதிர்த்தடக்கிய அதன் தென்னக நிழல் அம்மரபைப் புதுப்பிக்கக் கருதி மண் கௌவிற்று. தென்னகம் தன்னைக் காத்துக் கொண்டது மட்டுமல்ல. தேசீயச் சிற்பிகள் கால முதல் பேரரசு கோட்டை கட்டி எதிர்த்தாக்குதல் தளமிட்டது. கிருட்டிண தேவராயன் எதிர்த்தாக்குதலை வெற்றிகரமாக நடத்திப் பேரரசின் உச்ச நிலை வாழ்வு தந்தான். ஆனால் இராமராயன் உச்ச நிலைக்கும் அப்பால் சென்றான். புயலின் நிழல்கள் நிலைகுலைந்து ஆடியடங்கின. புயல் கண்டாடும் புள்ளி மாமயிலாக தென்னகப் பூங்கா வெங்கும் சுற்றி வெற்றித் திருநட மாடினான். இராமராயன் பெருமை இத்துடன் அமைவதன்று. அது புள்ளிமாமயிலின் வெற்றித் திருநட மட்டுமன்று, பொன் மாமயிலின் புகழ்த்திரு நடமாகவும் அமைந்திருந்தது. தென்னக இஸ்லாமிய அரசுகளின் புயல் மரபில் வந்த செருக்கை அவன் அடக்கவிரும்பினான், அடக்கினான். ஆனால் அவன் நோக்கம் அவ்வரசுகளை அழித்துத் தன் பேரரச எல்லை பெருக்குவதன்று. இதனை ஒவ்வொரு போர் முடிவும் நன்கு காட்டுகிறது. தென்னக இஸ்லாமியப் பேரரசு மரபில் வந்த பீடாரை அவன் வென்ற போது, போர் நிறுத்தத்துக்கு அவன் கோரிய கட்டுப்பாடு தன் நேசநாடாய், அவ்வரசு தன் போர்களில் துணைதர வேண்டுமென்பதே. ஆணவமிக்க இப்ராகீம் அலைக்கழிவுற்ற சமயத்தில்கூட, பேரரசு நெடுநாள் தனதாகக் கொண்டிருந்த பாங்கல் கோட்டையுடன் மற்றும் ஒரு கோட்டையை அவன் தன் வெற்றிச் சின்னமாக மட்டுமே கோரினான். மற்றப் பிடிப்பட்ட கோட்டைகளையெல்லாம் அவன் மீண்டும் கோல கொண்டாவுக்கே தந்தான். இஸ்லாமியரை மட்டுமன்றி இஸ்லாமிய அரசுகளையும் அவன் நேசநாடுகளாகக் கொண்டு தென்னக அமைதியும் ஒழுங்குக் காகவே கனவு கண்டான் என்பதை இவை காட்டுகின்றன. தென்னக இஸ்லாமிய அரசுகள் அவன்மீது பொறாமையும் புழுக்கமும் கொண்டன என்றும், இது இராமராயன் அரசியல் குறையாடு என்றும் வரலாற்றாசிரியர் கூறுகின்றனர். அவன் இஸ்லாமிய அரசுகள் மீது மேலாட்சி நிலைநாட்ட முனைந்த தாகவும் அவர்கள் கருதுகின்றனர். ஆனால் தென்னகப் புயலிலே கூட இஸ்லாமிய அரசுகள் யாவும் எளிதில் ஒற்றுமைப் படவில்லை என்று காண்கிறோம். எதிர்ப்பு முழுவதற்கும் மூடாக நின்றவன் நட்பும் நன்றியும், பண்பும் அற்ற இப்ராகீமே என்றும், அவன் சூழ்ச்சிக்கே மற்ற இஸ்லாமிய மரபினர் உட்பட்டு நின்றனர் என்றும் காண்டல் அரிதன்று. புயலில் மயில் வீழ்ச்சியுற்றது கூட ஒரு தற்செயலான நிகழ்ச்சியேயன்றி வேறன்று. அப்புயலின் பின் இஸ்லாமிய அரசுகளின் ஒற்றுமை என்ற குறிக்கோளின் நிழலை எவ்வரலாற்றாசிரியரும் எங்குமே காணமுடியாது. உண்மையில் விசயநகரப் பேரரசரிடம் இருந்த முஸ்லீம் படைத்தலைவர், படைவீரர், பணியாளர்களைவிட, இந்த முஸ்லீம் அரசரிடமும் அவர்களைப் பின்னின்றெதிர்த்தழித்துத் தாமும் அழிந்த வடதிசை முஸ்லீம் அரசரிடமும் இருந்த இஸ்லாமியரல்லா வீரர், படைத்தலைவர், அமைச்சர்கள் ஒரு சிறிதும் குறைந்த தொகையினரோ, அளவினரோ அல்லர்! இராமராயன் தென்னக இஸ்லாமிய அரசுகளை ஒற்றுமைப்படுத்த முயன்றதை நாலரசு ஒப்பந்தம் காட்டுகிறது. அவன் வழியில் தென்னகம் நின்றிருந்தால் விசயநகர அரசு, மட்டுமல்ல, அதை அழித்ததாகக் கொக்கரித்த தென்னக இஸ்லாமிய அரசுகளும் அழிவினின்று தப்பியிருக்கக் கூடும். வடதிசை இஸ்லாமிய அரசு, மராத்திய அரசு முதலிய எல்லாக் கீழ்திசை அரசுகளின் மரபுகளுமே நீடித்திருக்கும். ஆசியாவும் அகல் உலகும் ஐரோப்பியர் வெள்ளைப் புயலின் புது நாகரிகக் கொள்ளைக்கு ஆட்பட்டிருக்காது. இராம ராயன் முறைகள் குறையானால், அவை விசயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணமான குறைகள் மட்டுமல்ல, கீழ்திசை வீழ்ச்சிக்கே உரிய குறைகளாய் இருக்க வேண்டும். ஆனால் உண்மையில் குறைகள் இராமராயனுடையவை அல்ல - தென்னகத் தேசீயத்தின் முதிரா அயல் மரபுப் பிழையும் முதுமரபுப் பிழைபாடுமேயாகும். தென்னகம் முன்னோ பின்னோ காணாத இராமராயன் புகழ்ப் பண்பின் ஒருசிறு வண்ணப் புள்ளியாக இராமராயன் - அலி ஆதில்ஷா நட்பு அமைந்துள்ளது. இராமராயனின் புதல்வன் மாண்ட துயரால் அவன் உள்ளமும் இல்லமும் சில நாட்கள் இருண்டிருந்தன. இராமராயனைவிட அவனது மனைவி அதற்கு முற்றிலும் ஆட்பட்டு உயிர்த் துடிப்பிழந்து கிடந்தாள். திடுமென இயற்கை ஓர் உயிரொளியை உள்ளே அனுப்பிற்று. நாடிழந்த சமயம் தன்னை ஆதரித்த இராமராயன் துயர் கேட்டு ஆறுதலளிக்க வந்த பீசப்பூர் அரசன் அலி ஆதில்ஷாவின் உரு ஒளியே அது. இறந்த மகனின் வயதில், ஓரளவு அவன் சாயலில் தோன்றிய அவ்வுருவை அந்த ஆராத்துயர்க் கடலில் கரை காணாது தத்தளித்த இராமராயனின் மனைவி எதிர் கொண்டழைத்து ‘மகனே, மகனே’ என்று கண்ணீருகுத்தாள். அவளிடம் அந்நாள் முதல் புத்துயிர் தளிர்த்தது. இராமராயனும் அலி ஆதில்ஷாவை மனமாரத் தன் புதல்வனாக ஏற்றான். புயலில் மதப்பெயர் கூறி இராமராயனை எதிர்த்த கோழையர் கும்பலில் இதுபோல இராமராயனுக்கு நன்றிக் கடம்பூண்ட மற்றொருவனும் இருந்தான். அதுதான் அக்கும்பலின் சதிகாரத் தலைவன் இப்ராகீம் குதுப்ஷா! நன்றி காக்க அறியாத கோழை நன்மகனைத் தீவழியில் வீரமாகப் பிடித்திழுக்க முயன்ற புன்மகன் அவனே!! சீரியர் கெட்டாலும் சீரியரே, சீரியர்மற்று அல்லாதார் கெட்டாலங் கென்னாகும் - சீரிய பொன்னின் குடமுடைந்தால் பொன்னாகும், என்னாகும் மண்ணின் குடமுடைந்தக் கால். அணிமைக் கால அருந்தமிழ் அவ்வையாரின் இப்பாடல் இராமராயன் வீழ்ச்சியை அவனை வீழ்த்தியவர் வீழ்ச்சியுடன் ஒப்பிட்டுக்காட்ட உதவும். இராமராயன் வெற்றிகள் பல கண்டவன்; தென்னகத்தின் பொன்முகடு அவன் வாழ்வு; அவன் வீழ்ச்சி தென்னகத்தின் பொன் முகட்டிகள் வீழ்ச்சி. அது தென்னகத்தைப் பொன்னாக்க உதவும் பொலம்புகழ். ஆனால் அவனை ஒன்றுபட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுபவர்கள் பின் என்றும் ஒன்று படாமல் வடக்கிருந்து விழுந்த கொலைக் கத்திக்குப் பள்ளாடுகள் போல ஒவ்வொருவராக வீழ்ந்தவர்கள். அவ்வடதிசைக் கத்தியும் மேலை உலைக் களத்தில் புதிது துவைக்கப்பட்டுத் தென்னகத்தையும் கீழ்திசை யையும் உடல் பொருளாவி முத்துறையிலும் அடிமைப்படுத்தி வைக்கும் புதியமாயக் கருவியாயிற்று. வானிடையாடும் வண்ணமாமுகில் வில்லாகத் தென்னகத் தேசியக் கனவுகண்டு அதனிடையே மின்னொளி கண்டு மாள நேர்ந்த மயிலின் இறுதி நடமாகவே தென்னப் புயற்போர் அமைகின்றது. 7. தென்னகப் பெரும்புயல் புயலாயிரங்கண்டு பொன்றாது நின்ற பொருப்பென்னவே மயலாயிரங்கொண்டு வாட்டினும் வாடாக் கதிரவனாய்ச் செயலாயிரங்கண்ட செம்மல் இசைத்த செயிரறுசீர் இயலாயிரங்கண்ட ஏழிசைத் தென்னகம் வாழியரோ! மங்காதனவண் புகழ்க்கால் மகுடமிசை நிறுவிப் பொங்காதனமிட் டொருகோலு ருட்டிய போழ்தினிலே சிங்காதனங்கள் வெருவச் செருவெங் களங்களிலே தங்காதனகால் சறுக்கிவீழ் சக்கரன் வாழியரோ! மரத்தின் கோட்டம் நமக்கு யாழிசை தருகிறது. வில்லின் கோட்டம் அம்புக்கு விசையளிக்கிறது. கண்ணின் கோட்டம் காதல் வாழ்வுக்கு உயிரளிக்கிறது. இவை போலவே புறநின்று வாராது தென்னகம் அகநின்றெழுப்பிய சூறாவளிப் பெரும்புயல் தென்னவர் வாழ்வில் கரந்துறையும் இயல் வீறுகாட்டி மயல் வாழ்விலும் நமக்கு மனவூக்கம் அளிக்கவல்லதாகிறது. தசையாடித் தளரும் பருவம் மனிதரின் அறுபதாம் ஆண்டு. புயற்காலத்தில் இராமராயன் வயது அப்பருவத்தை எட்டியிருந்தது. அறுபது வயதுவரை அவன் வெற்றிச் சங்கிலி அறுபட்டதில்லை. அறுபதிலும் அது ஆடி அசைந்ததில்லை. அறுபதிலும் இளைஞரிடையே வீர இளமை பொங்கியெழும் இளவீர ஏறாக, படைத் தலைவர்களிடையே படைத் தலைவனாக, வல்லரசர் கர நடுங்கக் கணைதொடுக்கும் வில்லாள கண்டனாக, தன் படைப் பெருங்கடலின் தனிப்பெருங் கோமகனாக, கொடிப்படையின் கோமரமாகப் புயற்போர்க் களத்தில் அவன்வந்து நின்றான். எங்கு இராமராயன் அங்கு வெற்றி என்று எக்காளமிட்டு எக்களித்தன விசயநகரப் படைகள். எத்திசை இராமராயன் அத்திசை படுகளம் என்று வெருவிப் பொருமி உருமெழ ஆர்த்தன, எதிரிகளின் படைத்தளங்கள்! மாற்றார் அரசுகளை வஞ்சனையால் கவிழ்த்து அவர்தம் மங்கையரைத் தம் அரண்மனை மாதராக்கிக் கொண்டு அரியாசனத் திருந்த வடதிசைப் புயலின் மயற் பேரரசன் அக்பரை வீரனென்றும் சமரச வேதாந்தியென்றும் மனமார ஏற்கின்றன வரலாற்றேடுகள் சில. அதே புயல் மரபில் வந்து அந்த மயற் பேரரசுக்கு இறுதிப் புயலாட்சி எழுப்பி எழிலார்ந்த கல்லறை வகுத்தவர் ஒளரங்கசீப். அவன் கரங்கள் வெற்றிவீரர் கொண்டு வந்தளித்த அழகாரணங்குகளைப் புதல்வியராக்கி உரிய இடம் அனுப்பின. அவன் இஸ்லாமியத் திருமறை எழுத்தும் அதன் உழைப்புக் கூலியுமன்றி வேறெந்த இன்பமோ, செல்வமோ நாடியதில்லை என்று அவ்வரலாற்றாசிரியரே கூறுகின்றனர். ஆயினும் மயற் பேரரசர்களுக்கு அவர்கள் அளிக்கும் புகழ் மாலை அவனுக்கு அரிதாகியுள்ளது. புயல் மரபில் வந்து புயலெழுப்பி அப்புயலுக்குத் தானே ஆளான புங்கவன் அவன். ஆனால் ‘இந்துமதப் பேரரசு’ என்ற பெயரால் புயல் கலந்துறவான தென்றல் மரபில் வந்து புயல் நச்சு முழுதும் அகற்றி அதில் புதிய தென்றலமுதம் பாய்ச்சியவன் இராமராயன். வளைவு நெளிவற்ற அவன் வாழ்வில் போராடையையே அவன் தன் சீராடையாக உடுக்க நேர்ந்தது. தென்றலின் உட்புயல் கீண்டெழுந்த புதுப் புயலாக அவன் ஆட்சி தொடங்கிற்று. தென்னகத்தின் உட்புயல் கீண்டெழுந்து அது மிதந்தாடிற்று. ஆனால் ஒப்பற்ற படைத்தலைவர் அதற்குச் சிரந்தாழ்த்து, அதன் சேவையே தம் வாழ்வாகக் கொண்டு அதைச் சூழ்ந்து நின்றிருந்தனர். புயல் மரபிலேயே அவன் புயலணையாமல் ஒரு புயற்குருளையை ஈன்றெடுத்திருந்தான். பெற்றோனை எதிர்ப்பதா இடையே வந்துற்றோரை அணைவதா என்று அலி ஆதில்ஷாவாகிய அக்குருளை கொண்ட தயக்கம் புயல் மரபுக்குப் பெருமை தராவிடினும் அதன் அயல்மரபாய் வாழ்ந்த தென்றல் சீர்மைக்குச் சான்றேயாகும் என்பதில் ஐயமில்லை. புயல் மரபிலேயே இராமராயனுக்கு உடன் பிறவா உடன் பிறப்பாக வாழ்க்கை தொடங்கிய மற்றொரு புயலிளவல் ஆக இப்ராகிம் குதுப்ஷா விளங்கினான். அவன் தென்றல் இளந்தளிர் வந்து அணைத்த முள் மரமானான். புயலில் தென்றற் பேரரசு பொசுங்கவில்லை; சீர் குலைந்தது. தென்னகம் அனல் வெப்பிடையே தளிர்க் கொடியென வாடி வதங்கிற்று. ஆனால் அதன் உள்ளுயிர், புகழ்மணம் அற்று விட வில்லை. சுடச்சுடரும் பொன் போல அது புதுமேனிமினுக்குடன் வளரத் தொடங்கிற்று; வளரத் தொடங்கியுள்ளது! அப்பொன்னினுள் புதைந்து புத்தொளிவிடும் பொங்கொளி மாணிக்கமாக விளங்குகிறது இராமராயன் புகழ். குக்கலாயிர மாயிரங் கூடியே முக்கலோடு முனகலில் வாடியே சுக்கலானபின் சூழ்ச்சியிற் பொன்றிய எக்கர்மாமத யானைசீர் வாழியே! கடல்நெடும் படைதன்னைக் கலக்கிய அடல்கொளும் திமிங்கிலம் கடந்தென மிடல்கொண் டோச்சிடுவீர வாள்ஏந்திய நெடுங்கை ஏந்தல்நீள் நினைவுவாழ்கவே! உலகளாவிய புயல் மரபு தென்னகத்தின் எல்லையைத் தாக்கிய புறப்புயல்கள் உண்டு. எல்லைக்குள் அகநின்றெழுந்த புயல்களும் உண்டு. அவற்றுட் பல அரசுகள், பேரரசுகள் வீழ்ச்சி அல்லது பிறிதோர் அரசன் வளர்ச்சிக்கு வழிசெய்திருக்கக் கூடும். ஆனால் தென்னக எல்லை முழுதும் அளாவி, அதன் மையத்திலிருந்து எல்லைவரை முழுப்பரப்பையும் ஒரே அதிர்ச்சிக்குட்படுத்தி மின்னல் இடி வீழ்ச்சியுடன் கூடிய 1565-ஆம் ஆண்டைய அகப்புயல் போன்ற நிகழ்ச்சி வேறு எதுவும் கிடையாது என்னலாம். இதனாலேயே அதனை மேலை வரலாற்று மரபினர் தென்னகத்தின் திரபால்கர் என்றும், வடதிசை வரலாற்று மரபினர் தென்னகத்தின் (மூன்றவாது) பானிப்பட்டு என்றும் குறிக்கின்றனர். ஆனால் அது உண்மையில் மேலையுலகின் திரபால்கர் போருக்கும், வடதிசைப் பானிப்பட்டுப் போருக்கும் முற்பட்டதாகும். மேலைத் திரபால்கர் உலகளாவிய பேரரசு காண விரும்பிய பிரஞ்சு வீரன் நெப்போலியன் வீழ்ச்சிக்கு வழிவகுத்த ஒன்று. வடதிசைப் பானிப்பட்டு வடஇந்தியாவின் முதிராத் தேசீயத்திற்கு ஒரு பேரிடி. தென்னகப் புயற்போரோ உருவாகி வந்த தென்னகத் தேசீயத்தை மீண்டும் முதிராத் தேசீய நிலையில் சிதற வைத்துத் தேச வாழ்வுக்கே உடனடி அதிர்ச்சியும், நூற்றாண்டு கணக்காக கலக்கமும் விளைத்திருந்த நிகழ்ச்சி ஆகும். வடதிசைப் பானிப்பட்டுக்குக் கூட அதுவே வழிவகுத்த மூல முதற்புயல் என்னலாம். இது மட்டுமன்று. மேலைப் புயலுடன் கூட அதற்குத் தொடர்பு உண்டு. ஏனெனில் தென்னகப் புயற்போரில் வீழ்ச்சியுற்ற தேசீய மரபில் வந்தவனே திப்பு. நெப்போலியனுடன் அவன் தொடர்பு கொள்ள முயன்றவன். திப்பு வீழ்ச்சியின் பின்னரே நெப்போலியன் வீழ்ச்சியுற்றான். தென்னகப் புயல் இவ்வாறு உலகின் மற்ற இருபெரும் புயல்களுக்கு மூல மரபாய், மூன்றிலும் இருதிசைத் தோல்விக்கே வித்தாய் அமைந்தது - மூன்றிலும் பெயரளவாக வென்றவர்கள் தென்னகத் தேசியத்தின் எதிர் தரப்பினரேயாவர். ‘புயற்போருக்குரிய பெயர் வகையிலே ஒரு வரலாறு ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய வரலாற்றுக் கணிப்பாளரைப் பின்பற்றி அது சிலகாலம் தலைக்கோட்டைப் போர் என்றே வழங்கி வந்தது. அந்தப் பெயருடனேயே விசய நகர ஆர்வலர் அதன் புகழ் பரப்பியிருந்தனர். ஆனால் இஸ்லாமியரல்லாத காலக் கணிப்பாளர் விரிவுரைகளைக் கண்டபின் அது இராட்சசித் தங்கிடிப் போர் என்றழைக்கப்படுகிறது. போர் கிருட்டிணை யாற்றருகே நடைபெற்றது. அதனருகேயுள்ள ஊர்களில் இராட்சசி, தங்கிடி என்ற இரு சிற்றூர்களே போர்க்களத்துக்கு அருகாமையிலிருந்தன. ஆனால் இஸ்லாமியர் வந்து ஒருங்கு கூடியிருந்த இடமே தலைக்கோட்டை ஊரைச் சார்ந்ததாயிருந்தது. எல்லாத் தற்கால வரலாற்றாசிரியர்களும் இராட்சசித் தங்கிடிப்போர் என்ற பெயரையே இந்நிலையில் ஏற்புடைய தென்று கருதுகின்றனர். போர்க் காரணங்கள் போருக்குரியனவாக நமக்குக் கிட்டும் சான்றுகளில் மிக முற்பட்டவை இஸ்லாமிய வரலாற்றுக் கணிப்புக்களே. போர் நடவடிக்கைகளைப் பற்றிய வகையில் மட்டுமன்றி போர்க் காரணங்களைப் பற்றியும் அவை ஒன்றுடன் ஒன்று முரண் படுகின்றன. ஆனால் வேறு வேறு வகையில் அவையாவும் வடதிசைப் புயல் மரபே வளர்த்துக் கற்பனைக் கோட்டைகள் கட்டியுள்ளன. இராமராயன் இஸ்லாத்தையும் இஸ்லாம் மக்களையும் அவமதித்தானென்றும், இஸ்லாமிய அரசர்களையும் தூதர்களையும் அடிக்கடி இழிவுபடுத்தினான் என்றும், ஒருபுறம் நண்பனாக நடித்த வண்ணமே அவர்கள் நாட்டுப் பகுதிகளை அச்சுறுத்திப் பற்றினானென்றும், இஸ்லாமிய அரசுகள் எள்ளளவும் வாழமுடியாத அளவு அவன் வலிமை வளர்ந்து வந்ததால் அவை என்றும் அஞ்சி அஞ்சி ஒழுக வேண்டி வந்ததென்றும் அவர்கள் விரித்தெழுதுகின்றனர். இந்நான்கு குற்றச்சாட்டுக்களிலும் இஸ்லாமிய ஆசிரியர்களே தரும் இராமராயன் ஆட்சி வரலாற்று நிகழ்ச்சிகள் முதல் மூன்று குற்றச்சாட்டுகளையும் முற்றிலும் பொய்ப்பிக் கின்றன. ஏனெனில் சமகால இஸ்லாமியர் ஆதாரங்களிலிருந்தே இராமராயன் இஸ்லாமியர்களுக்குப் பெரும் பதவிகளும் படைத்துறையில் மிகுதி இடமும் கொடுத்திருந்தானென்றும், தலைநகரிலேயே பள்ளி, தனித்தொழு கையுரிமை, தனி வாழ்வு, தனியாட்சி யுரிமையுடன் துருக்க வாடா என்ற ஒரு பகுதியே அவர்கட்கு ஒதுக்கப்பட்டிருந்ததென்றும் அறிகிறோம். வைதிகர் முதலிய பிற சமயத்தினர் கண்டனங்களைக் கூடப் பொருட்படுத்தாமல் இராமராயன் காலத்தில் அவர்கள் நகரெல்லையிலேயே மாடுகளை இறைச்சிக்குப் பயன்படுத்தும்படி இணக்கமளிக்கப் பட்டிருந்தனர். முன்னைய பேரரசர்களைப் போலவே அவனும் தன் இஸ்லாமியப் பணியாளர் அரசு வணக்கவினை முறைக்காகத் தன்னருகே திருக்குரானை வைத்திருந்தான். இராமராயன் நட்புப் போர்வையில் பிற இஸ்லாமிய அரசர் நாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றினான் என்பதும் அவர்களே தரும் வரலாற்று நிகழ்ச்சிகளை நோக்க உண்மைக்கு முரண்பட்டதாகும். நான்காவது காரணத்தில்கூட ஒரு சிறிதும் மெய்ம்மை கிடையாது. ஏனெனில் வடதிசைப் புயல் மரபில் வந்த இஸ்லாமியக் கூற்றில் மூன்று பகுதியை மறுத்து ‘இந்து தேசிய’ வாதிகள் இதை ஆவலுடன் அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். புயல் மரபுகூடத் தென்திசையில் சமயங் கடந்தது என்று கருத இது இடந்தருகிறது. ஆனால் இந்த ஒன்றுபட்ட புயல்மரபுக் கூறுகூட முற்றிலும் இராமராயன் வீரவாழ்க்கைப் போக்குடன் இசையவில்லை. இஸ்லாமிய வல்லரசுகளை ஒன்றுபடுத்தி விசயநகரப் பேரரசுடன் அவற்றை இணைத்துத் தென்னகத்தையே அவன் ஒரு தேசீயக் கோட்டையாக்க முனைந்தான். இன்றைய வரலாற்றாசிரியர் வரலாற்று இத்தென்னக முழுநிறை தேசீயத்தை உணராதது போலவே, அந்நாளைய இஸ்லாமிய அரசுகளும் உணராது பொறாமை கொண்டன என்று கூற இடம் ஏற்படலாம். ஆனால் போர் வரலாறு இதைக்கூடப் பொய்ப்பிக்கிறது. உண்மையில் இது போருக்குப் பின் இஸ்லாமியரிடையே பரப்பப்பட்ட விளக்கமே தவிர, போர்க்கால நிலைமையின் சரியான விவரம் அன்று, போர்க் காலத்தில் பொறாமையும் ஒருவேளை பேரவாவும் காரணமாக இக்கருத்துக்களைப் பரவவிட்டவன் கோலகொண்டா அரசன் இப்ராகீம் குதுப்ஷாவே என்னல் வேண்டும். தென்னக முஸ்லிம் அரசுகள் தம்முன் போர்க்காலத்தின் முன்னோ பின்னோ என்றுமே ஒன்றுபட்டிருந்ததில்லை. அத்துடன் வடதிசைப் புயல்மரபு இஸ்லாமியரிடையே நாட்டு முஸ்லிம், அயல் முஸ்லிம் என்ற வேறுபாட்டையும் உண்டு பண்ணி வளர்த்து வந்தது. இதன் தடங்களைத் தென்னகத்திலும் வடதிசையிலும் இன்னும் காண்டல் அரிதன்று. இஸ்லாத்துக்குப் புறம்பான எல்லையில் வடதிசைமரபு மக்களுலகிலே வழங்காத ஒரு மொழியைத் தம் தாய்மொழிகளுக்கு மேற்பட்ட ‘இனச் சின்ன’மாகக் கொள்கிற தென்றால், அதனோடிணையான வடதிசை இஸ்லாமிய மரபு நாட்டு மக்கள் மொழியல்லாத ஏதேனும் ஒரு அயல் மொழியைத் தம் இனத் தாய்மொழியாகவே என்றும் கொண்டு வேற்றுமை பேணி வருகிறது. போருக்குரிய காரணம் இராமராயனின் பெருமிதத் தன்னம்பிக்கையும் அதன் விளைவான கண்மூடித்தனமுமே என்பதைப் பொதுவாக அவன் வரலாறு மட்டுமின்றி போரின் போக்குமே காட்டுகிறது. தன் அருகே உடன் பிறந்தாற்போல, பிள்ளைகள் போல தன்னால் நடத்தப்பட்ட இஸ்லாமியரின் அரசியல் மனப் பாங்குகளை இராமராயன் சரிவர உணரவில்லை. தேசீய வாழ்வின் எல்லாப் பொறுப்புக்களையும் அவனே ஏற்றுக் கொண்டு பிறரை அவ்வழி பயிற்றுவிக்கத் தவறிய நிலையில், அவன் ஏமாற்றமே அவன் தோல்வியாகவும், பேரரசின் ஏமாற்றமுமாகவும் தோல்வி யாகவும், நாளடைவில் தென்னகம், கீழ்த்திசை உலகு ஆகியவற்றின் ஏமாற்றமாகவும் தோல்வியாகவும் அமைந்தன. புயல்மரபின் கூட்டுறவு விசயநகரப் பேரரசை, அதுவும் இராமராயன் ஆட்சிக் காலப் பேரரசை மற்ற இஸ்லாமிய வல்லரசர் ஒருவரோ, இருவர் மூவரோ சேர்ந்துகூட வெல்வது எளிதன்று. அதனை மீட்டெழாமல் அடக்குவதென்பது இன்னும் அரிதான முயற்சி. இவற்றை இராமராயன் போர்கள் நன்கு காட்டிவிட்டன. விசயநகரப் பேரரசை ஒழிக்க முற்பட்ட எதிரிகள் இதனால் பெருமுயற்சிகள் செய்து கூட்டுறவைப் பெருக்க முயன்றிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் கூட்டுறவில் யார் யார் சேர்ந்திருந்தனர் என்பது மட்டுமன்று அதனை இயக்கி மூல முதல்வர் யார் என்பதிலேயே இஸ்லாமிய வரலாற்றுக் கணிப்பாளர் வேறுபடுகின்றனர். பெயரறியப்படாத கோல கொண்டாவுக்குரிய வரலாற்றாசிரியர் தம் நாட்டரசர் இப்ராகீம் குதுப்ஷாவே மூல இயக்குநன் என்றும், சயீர் அலீ என்பவர் தம் நாட்டரசன் ஹுசேன் நிஜாம் ஷாவே முதல்வன் என்றும், பெரிஷ்டா பீசப்பூர் அரசன் அலி ஆதில்ஷாவே மூலமுதல்வன் என்றும் கூறுகின்றனர். ஆனால் கூட்டுறவில் இணைந்தவர்கள் இந்த மூவர் மட்டுமே என்று இம்மூவருமே குறித்துள்ளனர். பெரிஷ்டாவும் நிஜாமூதின் அகமதும் இம் மூவருடன் நான்காம் உறுப்பினனாகப் பீடார் அரசன் அலி பரீத்ஷாவையும் சேர்த்துக் கொள்கின்றனர். இஸ்லாமியச் சார்பற்ற ஆதாரங்களோ இந்நால் வருடன் பீடாரையும் சேர்த்து இஸ்லாமிய மன்னர் ஐவருமே ஒருங்குகூடி இராட்சசித் தங்கிடிப் போரில் ஈடுபட்டனர் என்று கூறுகின்றன. வடதிசை முகலாயப் பேரரசன் அக்பர் படைகளே இப்போரில் ஈடுபட்டதாகவும், அக்பரே நேரில் வந்து போரிட்டதாகவும் இரண்டு ஆதாரங்கள் எழுதியுள்ளன. இறுதிச் செய்தி காலச் சூழ்நிலைக்கு முற்றிலும் ஒவ்வாத பிற்கால இணைப்பு என்பதில் ஐயமில்லை. பேரார் ஆண்ட புர்ஹான் இமர்த் உல்முல்க் நிஜாம் ஷாவுடன் கொண்டிருந்த வேற்றுமை காரணமாகப் போரில் தொடர் பில்லாமல் ஒதுக்கியிருந்தான் என்று இஸ்லாமிய வரலாற்றாசிரியர் ஜபீரி தெளிவு படுத்தியுள்ளார். போர் பற்றிய முஸ்லிம் ஆதாரங்கள், முஸ்லீம் அல்லாத ஆதாரங்கள் இவ்வாறாக ஒன்றுக்கொன்று முரண்பட்டாலும், அவற்றின் ஒப்பீடு ஓரளவு உண்மை நிலைகளை உய்த்துணர உதவுகிறது. பெரும்பாலும் முஸ்லீம் ஆதாரங்கள் முற்பட்டவை. அவை மெய்ம்மை நிலை உணர்ந்தே எழுதப்பட்டவை. ஆயினும் மதச் சார்பு, தத்தம் அரசுச் சார்புகளால் அவை செய்திகளைத் திரித்துரைக்கின்றன. எல்லா முஸ்லீம் ஆதாரங்களையும் ஒப்பிட்டுக் காண்பதனால் இத்திரிப்புக்களில் சில விளக்கம் பெறுகின்றன. மற்றும் சில முஸ்லீம் சார்பற்ற ஆதாரங்களால் தெளிவு பெறுகின்றன. அதே சமயம் முஸ்லீம் சார்பற்ற ஆதாரங்கள் காலத்தால் பிந்தியவை. முஸ்லீம் ஆதாரங்களைப் போல அவை மனமார எதையும் மிகுதி திரித்துரைக்க வில்லையானாலும் மிகையுரைகள், காலப் போக்கில் எழுந்த அரைகுறைக் கேள்விகள் விரவியிருப்பதனால் அவற்றில் எப்போதும் மெய்ம்மை பிரித்துணர முடிவது அரிதாயிருக்கிறது. ஆனால் இத்தகைய இடங்களில் முஸ்லீம் ஆதாரங்களும், அந்நாளைய மேலைநாட்டினர் எழுத்து மூலங்களும் பெரிதும் உதவுபவை ஆகும். இஸ்லாமிய அரசுகளின் கூட்டுறவில் தென்னக அரசுகள் ஐந்துமோ, வடதிசை இஸ்லாமிய பேரரசோ கலந்து கொண்டதாக இஸ்லாமியச் சார்பற்ற ஆதாரங்கள் கூறுவது காலப்போக்கில் ஏற்பட்ட மிகையுரைக் குளறுபடிகளேயாகும். இஸ்லாமியக் கணிப்புக்களின் ஒப்பீடு இதை நன்கு காட்டுகிறது. கூட்டுறவில் உண்மையில் மூலமுதல்வனாகக் கோலகொண்டா அரசன் இப்ராகீம் குத்ப்ஷாவும், அவன் நெருங்கிய தோழன் அகமது நகர் அரசன் நிஜாம்ஷாவும், இருவர் வற்புறுத்தலுக்கு இணங்கிய பீசப்பூர் அரசன் அலி ஆதில்ஷாவும் மட்டுமே என்பதையும் ஆதார ஒப்பீடுகள் தெளிவுபடுத்துகின்றன. போரில் ஈடுபட்ட முஸ்லீம் அரசுகள் மூன்றில் கூட பீசப்பூர் அரசன் அலி ஆதில்ஷாவின் நிலை போரில் அவன் கொண்ட பங்கு ஆகியவற்றைப் பற்றி முஸ்லீம் ஆதாரங்கள் சரியான விவரங்கள் தராமல் முரண்பட்ட பல செய்திகள் கூறுகின்றன. ஆனால் அவற்றின் ஒப்பீடும் முஸ்லீம் சார்பற்ற ஆதாரங்கள், வெளிநாட்டார் சான்றுகள் ஆகியவற்றின் துணையும் அவற்றிடையே மெய்ம்மை காணப் பெரிதும் உதவுகின்றன. இராமராயன் பொது முறைப்படை பலத்தைப் பற்றியே பெரிஷ்டா பெருமதிப்புடன் பேசுகிறார். இராமராயன் பேரரசில் உள்ள 60 துறைமுகங்களும் எண்ணற்ற நகரங்களும் மாகாண மாவட்டங்களும் சேர்ந்து அவனுக்கு வழங்கும் திறைவளம் சிறிதன்று, மிகப் பெரிது. அதன் துணை கொண்டு அவன் பேணும் படைபலமோ எந்த ஓரிரு இஸ்லாமிய அரசரும் எளிதில் எதிர்த்து ஒரு சிறிதுகூடச் சமாளிக்க எண்ணக்கூடாத தாயிருந்தது. இராட்ச சித்தங்கிடிப் போரில் இந்தப் பொதுமுறை வலிமை ஒரு சிறிதும் குறைந்திருக்கக் கூடும் என்று எண்ண இடமில்லை. அது உண்மையில் மிகப் பெரிதாகவே இருந்திருக்க வழி உண்டு. ஏனெனில், பெரிஷ்டா கூறுகிறபடியே, முஸ்லிம் அரசுகளின் ஒன்றுபட்ட படைகளை எதிர்க்கும்படி அவன் கிருட்டிணையாற் றெல்லையிலிருந்து இலங்கை வரையுள்ள எல்லா அரசர், சிற்றரசர், பெருமக்களையும் படை திரட்டி வரும்படி அழைத்திருந்தான் என்று அறிகிறோம். அதே சமயம் விசயநகரப் படைகளை விட முஸ்லிம் அரசுகளின் படைகள் பெரியன என்றோ, அதை எளிதில் வென்று மருண்டோட வைக்கக் கூடியவையென்றோ, இராட்சசித் தங்கிடிப் போருக்கு முற்பட்ட நிலை நோக்கி யாரும் கூறிவிடவும் முடியாது. ஆயினும் இந்த மெய்ம்மைகளுக்கெல்லாம் முரண்பட்ட நிலையில் இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் இப்போர் ஒருநாளில் முடிந்துவிட்ட தென்றும், ஒரு நாளில் நான்கு மணிநேரப் போருக்குள் இஸ்லாமிய அரசர் அத்தனை பெரும்படையையும் முறியடித்த துடன், அழித்தவர் போகத் துரத்தியும், துரத்தியவர் போக அழித்தும் எளிய வெற்றி கண்டதாகக் குறிப்பிடுகின்றனர். முஸ்லிமல்லாத ஆதாரங்கள், சிறப்பாக, கன்னட மராத்தி மொழிகளிலுள்ள இராமராயன் வரலாறும், இக்கேரி மன்னன் வரலாற்றுக் காப்பியமான கேளதிநிருப விசயமும் போர் மூன்று மாதம் நடைபெற்றதாக உரைக்கின்றன. இஸ்லாமிய ஆதாரங்களின் திரிபுரைகளுக்கும் மற்றவற்றின் மிகையுரைகளுக்கும் இடைப்பட்ட மெய்ம்மையை வரலாறுகள் தரும் நாள் விவரங்களே காட்டுகின்றன. முஸ்லிம் அரசர்கள் படைகள் திரண்டு தாக்க வருவது குறித்து இராமராயன் 1564-ஆம் ஆண்டு விசயதசமி நாளன்று அதாவது செப்டம்பர் 15-இல் அவையில் வந்து கூடியிருந்த சிற்றரசர், படைத்தலைவர் பெருமக்களுக்குக் கூறிப் பெரும்படைத் திரட்டுக்கு ஆணையிட்ட தாகக் கன்னட, மராத்தி வரலாற்றேடு கூறுகிறது. போரில் இராமராயன் உயிரிழந்ததாக அது குறிக்கும் நாள் விவரங்கள் 1565 ஜனவரி 23-ஆம் நாளுடன் ஒத்துவருகின்றன. போர் மொத்தம் 3 மாதம் நடைபெற்றதாக அது கூறினாலும் போர் நிகழ்ச்சிகள் பற்றிய அதன் நாட்குறிப்பு ஒரு மாத அளவாகவே அமைகிறது. முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் முஸ்லிம் அரசின் கூட்டுப்படை திரண்ட நாளாக 1564 டிசம்பர் 26-ஐயே கூறுவதால், இந் நாளுக்கும் அடுத்த ஆண்டு (1565) ஜனவரி 23-க்கும் இடைப்பட்ட ஒரு மாத காலமே போர்க் காலமாய் இருத்தல் வேண்டும் என்பது தெளிவாகின்றது. ஏறத்தாழ முப்பது நாள் நடைபெற்ற இப்போரில் முதல் 27 நாள் போரிலும் அலி ஆதில்ஷாவின் படைகள் கலந்து கொள்ள வில்லையென்றும், இப்ராகிம் குதுப்ஷாவும் ஹுசேன் நிஜாம் ஷாவும் மட்டுமே நின்று போராடித் தோல்வி அடைந்தனர் என்றும் கன்னட மராத்தி வரலாறு கூறுகிறது. அதன் பின் மூன்று நாட்களினிடையே முஸ்லிம் அரசுகள் சமரசப் பேச்சுப் பேசுவதாகப் பாவித்துக் கொண்டே ஒரு புறம் அலி ஆதில்ஷா வற்புறுத்தி நெருக்கியும், மறுபுறம் அவனுடனும் விசயநகரத்தின் இஸ்லாமிய வீரர், படைவீரருடனும் சதிசெய்தும், இறுதி நாளில் திடீர்ச் சூழ்ச்சிகளாலேயே இராமராயனை வீழ்த்தினர் என்றும் அவ்வாதாரம் கூறுகிறது. மேற்கூறிய ஆதாரங்களின் கூற்று மெய்ம்மையானது என்பதை இஸ்லாமிய ஆதாரங்களின் துண்டுத் துணுக்கான முரணுரைகள் ஒத்துக் கொள்ளாமல் மெய்ப்பிக்கின்றன. நான்கு மணிநேரப் போர் வரலாற்றிடையே முப்பது நாள் போர் நிகழ்ச்சிகளை அடக்க முயன்று முடியாததால், அவர்கள் போர்த் தொடக்கத்திலேயே சமரசப் பேச்சுக்கள் தொடங்கியதாக கூறுகின்றனர். இராமராயனை அகமது நகர் அரசன் ஹுசேன் நிஜாம்ஷா கைப்பற்றியபின், அவனிடம் ஆணவப் பேச்சுக்கள் பேசிக்கொண்டிருந்தது கண்ட அவன் அமைச்சன், அலி ஆதில்ஷா வருமுன் இராமராயனைக் கொன்றுவிட வேண்டு மென்று வற்புறுத்தியதாகவும் சபீத் லி, ஜபீரி ஆகிய ஆசிரியர்கள் கூறுகின்றனர். ‘அலி ஆதில்ஷா தன்னை இராமராயன் புதல்வன் என்றே கருதுவதால், அவன் உயிர் காக்கப் பேரமளி செய்யா மலிருக்கமாட்டான். ‘அவனை உயிரோடு நாம் இழக்க நேரிட்டால் இஸ்லாமிய அரசுகள் பின் என்றும் தத்தளிக்கவே நேரும்’ என்று அமைச்சன் கூறியதாகவும் ஜபீரி விளக்குகிறார். முழுப் போராட்டமும் இருதிசையிலும் பெருந்திட்டத்துக் குரியதேயானாலும், இறுதிப் போரில் விசயநகரம் எதிர்பாராத் திடீர்த் தாக்குதலாலேயே தோல்வியுற நேர்ந்தது என்பதில் ஐயமில்லை. போர்க்காலத்திலே தென்னகத்தில் தங்கியிருந்த ‘கூடோ’வின் கூற்று இதை மெய்ப்பிக்கிறது. போரில் இஸ்லாமிய அரசுகளின் வெற்றி எத்தகையது என்பதை மட்டுமன்றி, அதில் அலி ஆதில் ஷாவின் பங்கு எவ்வளவு என்பதையும் இக்குறிப்புகள் இலைமறை காயாகக் காட்டி மெய்ம்மை யுணர்த்துகின்றன. கிட்டத்தட்டக் கடைசிவரை அவன் இரு தரப்பும் சாராமல் இருதிசையிலும் நட்பாயிருந்தான் என்பதையும், இறுதியில் கூட முஸ்லிம் அரசுகளின் சதிக்கு உடந்தையாக இருந்தானேயன்றி அவர்களின் உள்ளார்ந்த நம்பிக்கை பெற்ற நண்பனாயில்லை என்பதையும் நாம் காண்கிறோம். புயல் மரபுக் கூட்டுறவு இவ்வாறு உண்மையில் மூவர் கூட்டுறவு கூட அல்ல - இராமராயன் வெற்றிகரமான கடைசிப் போரில் ஈடுபட்டிருந்த இரு எதிரி அரசுகளின் கூட்டுறவு மட்டுமேயாகும். அக்கடைசி வெற்றிப் போருக்கும் இராட்சசித் தங்கிடிப் போருக்கும் இடையேயுள்ள வேறுபாடு ஒன்றே ஒன்றுதான் - எதிரி அரசர்கள் இருவரும் அலி ஆதில்ஷா விசய நகரத்துடன் சேராமல் தடுக்கவும், தம் சதியில் அவனை உள்ளிழுக்கவும் புயல்மரபுக்குரிய மதப் பெயர்ப் போர்வையைப் பயன்படுத்தி, அச்சதி மூலம் வெற்றி கண்டனர் என்பதே. படைபலம் இராட்சசித் தங்கிடிப் போரில் இருதரப்புப் படைகளின் எண்ணிக்கை பற்றிய முழுமையான மெய் விவரங்கள் நம்மை வந்தெட்டவில்லையாயினும் இருதரப்பிலுமே படைவீரர் எண்ணிக்கையும் வலிமையும் தென்னகம் முன் என்றும், பின் என்றும் காணாத தேசீய அளவாயிருந்ததென்று எண்ணிக்கை பற்றிய தாறுமாறான தகவல்களும் விரிவுரைகளும் போர் விளைவும் காட்டுகின்றன. பெரிஷ்டா விசய நகரப் படைகளில் குதிரை வீரர் மட்டும் 70,000 என்றும் காலாட் படையினர் 90,000 என்றும் மதிப்பிடுகிறார். கோலகொண்டா வரலாற்றாசிரியர் இராமராயன் படையில்மட்டும் ஒரு இலட்சம் குதிரை வீரரும் மூன்று இலட்சம் காலாட் படைகளும் இருந்தன என்று கூறுகிறார். சலீத் அலி என்ற வரலாற்றாசிரியர் குறிப்பின்படி, இராமராயன் உடன் பிறந்தார்களான வெங்கடாத்திரி, திருமலை ஆகியவர்களிடத்தில் மட்டும் முறையே 20 ஆயிரம், 12 ஆயிரம் குதிரை வீரரும், தலைக்கு ஆயிரம் யானைகளும், ஒரு இலட்ச அளவும் பன்னீராயிர அளவுமான காலாட்படை வீரரும் இருந்ததாகத் தெரிகிறது. கூட்டோ, பெரியா சூசா ஆகிய போர்ச்சுக்கீசியர் காலாள் வீரர் 6 இலட்சம் என்பர். கன்னட - மராத்தி வரலாறோ காலாள் வீரர் 12 இலட்சம், குதிரை வீரர் 68 லட்சம், யானைகள் 18 ஆயிரம், ஒட்டகை 18 இலட்சம் என்ற பாரக் கணக்குத் தருகின்றன. விசயநகரத் திசையில் முஸ்லிம் படைவீரர் மட்டுமே ஒன்றரை இலட்சம் பேருக்கு மேற்பட்டவர் என்று நாம் அறிவதால், கோலகொண்டா வரலாற்றாசிரியர் சயீர் அலி தரும் எண்ணிக்கை தவறானதன்று, மிகைபட்டது மன்று என்று கூறலாம். முஸ்லிம் ஆசிரியர்கள் எதிரி படைகளின் மதிப்பீடு தருகிறார்களேயன்றி முஸ்லிம் அரசர் படைகள்பற்றி எதுவும் கூறவில்லை. கன்னட - மராத்தி வரலாறு விசய நகரத் தரப்புக்குத் தரும் பாரிய இலக்கங்களையே எதிர் தரப்புக்கும் தருகிறது. காலாட்கள் 250 இலட்சம் என்றும், குதிரைகள் 12,000 என்றும், யானைகள் ஒரு இலட்சம் என்றும், ஒட்டகைகள் 2 இலட்சம் என்றும், இவை தவிரப் பீரங்கிப் படை இருந்ததென்றும் அது குறிக்கிறது. எதிர் தரப்பின் எண்ணிக்கை வகையில் இம்மதிப்பீடு பயன்படவில்லை யானாலும், அது விசயநகரத்துக்குக் குறைந்த அளவாய் இருக்கவில்லை என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. விசயநகரப் படைகளில் முஸ்லிம் வீரரும் தலைவரும் இருந்ததையே ‘இந்து’ வரலாற்றாசிரியர் பெரிதும் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் முஸ்லிம் அரசுகளும் தம்படையின் முக்கியப் பிரிவுகளுக்கு இஸ்லாமி யரல்லாத வீரர்களையும் தலைவர்களையும் கொண்டிருந்தனர் என்று அறிகிறோம். இராட்சசித் தங்கிடிப் போரிலேயே பிண்டாரிகள் என்ற இனத்தவர் காலாட்படை வீரராகவும் வில்லாளிகளாகவும், கள்ளர் மரபினர் படைவீரர்களாகவும் இருந்து விசயநகரத் தரப்புக்குப் பெருந்தொல்லையும் அழிவும் தந்தனர் என்று தெரிய வருகிறது. இராமராயன் இச்சமயம் அறுபதுக்கு மேற்பட்ட வயதுடன் தளர்ந்த உடலுடையவனாயிருந்ததனால், போர்க் களத்துக்கு வரவேண்டாமென்று விசயநகரப் படைத் தலைவர்கள் எவ்வளவோ வற்புறுத்தி வேண்டினர். ஆனால், உடல் முதுமையானாலும் அகவீரமோ ஆற்றலோ சிறிதும் குன்றாத வீர இராமராயன் படைகள் முழுவதையும் தானே தலைமை வகித்து நடத்த வேண்டுமென்பதில் ஊன்றி நின்று விட்டான். தென்னகப் புயலில் விசய நகரம் தோல்வியுற்றதற்குக் காரணம் தேடுபவர்கள் அதன் உண்மையான காரணத்தை இதிலேயே காணல் வேண்டும். ஏனெனில் மலை குலைந்தாலும் குலையாத அவ்வீரன் மாள்வன்றி வேறெதுவும் விசயநகரப் பேரரசுக்குத் தோல்வி உண்டுபண்ணியிருக்க முடியாது என்று உறுதியாகக் கூறலாம். இராமராயன் உடன் பிறந்தானான வெங்கட்டாத்திரி, சதாசிவநாயகன், ஜகதேவராயன் முதலிய படைத்தலைவர்கள் பல களங்களில் பல அரசரை ஒருங்கு எதிர்த்து வெற்றி முழங்கியிருந்தவர்கள். இராமராயன் போரில் மாண்டபின் அவர்களில் சிலர் இருந்தனர். அவர்கள் போர் வெற்றிக்கு மட்டுமன்று, தலைநகர் பாதுகாப்புக்குக் கூடப் பயன்படாது போயினர். ஏனெனில் இராமராயனையன்றி அவர்களை வேறு எவரும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அவன் மரபினனாகிய இளவல் திருமலை அவன் குடிக்கும் செல்வத்துக்கும் உரிமையாளனாய் இருந்தானே தவிர, அவன் வீர ஆட்சிக்கு உரிமை கொண்டாட முடியவில்லை. தவிர, அவனிடம் மக்களும் படையினரும் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையே அவன் மாண்பை ஒரே கிலியாகப் பரப்பிவிட்டிருந்தது. மலை பறக்கத் தொடங்கினாலும், கடல்கரை உடையத் தொடங்கினாலும், ஊழிப்புயல் வீசத் தொடங்கி யிருந்தாலும் கூட மக்கள் அவ்வளவு கிலி கொண்டிருக்க மாட்டார்கள். போர்க்களம் விசயநகரத்தின் படைகள் போர் தொடங்குமுன் கிருட்டிணையாற்றுக்குத் தென்புறம் துங்கபத்திரைக் கரையிலிருந்து தயாகிரி, கண்ணகிரி என்ற சிற்றூர்களுக்கிடையே ஏறத்தாழ 80 கல் தொலைவுவரை பரவி முகாமிட்டிருந்தது. இஸ்லாமிய அரசர் படைகளின் பின்னணி கிருட்டிணை யாற்றுக்கு அப்பால் தோன் ஆற்றின்கரையில் தலைக்கோட்டை என்னும் இடம் வரை பரவி இருந்தன. ஆனால் நிஜாம் ஷாவின் படைகள் பிரோஸ்ஷா அல்லது சுல்தான்பூர் என்னும் இடத்தருகே அவ்வாற்றைக் கடந்து இக்கரையில் அணிவகுத்து நின்றன. ஆனால் குதுப்ஷாவின் படைகளோ கிருட்டிணையாறு கடந்து நெடுந்தொலைவந்து இரேய்ச்சூர், முட்கல் கோட்டை களினிடையே வந்து தங்கியிருந்தன. அலி ஆதில்ஷாவும் இமத் உல்முல்க்கும் படைகளுடன் வந்தனராயினும் கிருட்டிணையாறு கடக்காமல் மறுகரையிலேயே தங்கியிருந்தனர். இவர்களில் இமத் உல்முல்க் போரில் கலக்காமல், போர் தொடங்கு முன்பே ஹுசேன் ஷாவுடன் வேறுபாடு கொண்டு போர்க்களத்தை விட்டே அகன்று சென்றுவிட்டதாக அறிகிறோம். அலி ஆதில்ஷா இருபுறமும் சாராமல், இருபுறமும் நட்புப் பேச்சும் பேரமும் செய்து கொண்டே கிட்டத்தட்டப் போரின் இறுதிக் கட்டம் வரை போரின் போக்கைக் கவனித்துக் கொண்டிருந்தான். இராமராயன் வீழ்ச்சியையும் விரும்பாமல், மற்ற இரு முஸ்லிம் அரசர்களின் பகைமைக்கு ஆளாகவும் அஞ்சி அவன் எத்தகைய முடிவு மின்றித் தனக்கு வாய்ப்பான ஒரு தறுவாயை எதிர்நோக்கிக் காத்திருந்த தாகவே தோன்றுகிறது. விசயநகரப் படையில் நடு அணிக்கு இராமராயனே தலைவனாயிருந்தான். இடதுபுறம் அவன் உடன் பிறந்தான் திருமலையும், வலப்புறம் மற்ற உடன் பிறந்தான் வெங்கடாத் திரியும் தலைவர்களாயிருந்தனர். முஸ்லிம் அரசுகளின் பக்கத்தில் இராமராயனுக்கு எதிராக கோலகொண்டா அணிகளும் நின்றன. கடைசிப் போரையே முழுப் போராகக் குறிக்கும் வரலாறுகள் பீடார்படைகள் கோலகொண்டாவுடனும், பீசப்பூர் படைகள் திருமலையின் பக்க அணிக்கெதிராகவும் நின்று போரிட்டதாகக் குறிக்கின்றன. ஆனால் போர்த் தொடக்கத்தில் பீடார்ப்படைகள் வெளியேறிவிட்டதாகவும் பீசப்பூர் படைகள் விலகி நின்றதாகவும் தெரிவதால், முதல் இருபத்தொரு நாட்களும் அகமதுநகர், கோல கொண்டாப் படைகளின் போராகவே அமைந்திருந்தன. போர்த் தொடக்கத்தில் முஸ்லிம் அரசர் பக்கத்திலிருந்து பிண்டாரி வில் வீரரும், கள்ளர் படைகளும் கிருட்டிணையாறு கடந்து விசயநகர எல்லைப்புறங்களைச் சூறையாடி அழிவு பரப்பின. இராமராயன் தலை நகரையும் கடை வீதிகளையும் காக்க 10,000 குதிரை வீரரையும் 20,000 காலாட்களையும் உடனே அனுப்பினான். அமைச்சர்களை அழைத்துத் தங்கள் உதவிப் படைகளுடன் இராட்சசித் தங்கிடி வரிசை முழுவதிலும் நின்று விசய நகரப் படைத் தளங்களைக் காக்கும்படி கட்டளையிட்டான். இராமாயணம், குமாரபாணம், சண்டிபாணம் என்று அந்நாளில் பெயரிடப் பட்டிருந்த வெடிகுண்டுகள், வாணவெடிகளைப் படைவீரர்களுக்கு வழங்கியும், ஆடை அணி மணிகள் அளித்தும் அவன் படை வீரர்களையும் தலைவர்களையும் ஊக்கிப் போர்க்களத்துக்கு அனுப்பினான். முதல் மூன்று நாட்களில் அகமது நகர், கோலகொண்டாப் படைகள் சிறிது முன்னேறின. ஆனால் அலி ஆதீல்ஷா நிலையை முழுதும் உறுதி செய்து கொள்ளாமல் இராமராயன் முழுத் தாக்குதலில் முனைய விரும்பவில்லை. போரில் எதிரிகளுடன் அவர்கள் சேர்த்துக் கொள்வதைக் கண்டித்தும் நட்புக்கோரியும் அவனிடம் பரிசுகள் அனுப்பினான். அலி ஆதில்ஷாவும் நட்புரிமையுடனே பரிசுகளனுப்பி நடுநிலை உறுதி கூறினான். இராமராயன் இதனால் மன அமைதி பெற்றப் படைவீரர் களுக்குப் புதிய ஆணைகளும் புதிய பரிசுகளும் ஊக்குரைகளும் அளித்து முன்னேறப் பணித்தான். ஆனால் வாக்குறுதியை மட்டும் நம்பிப் பின்னணியையும் பக்க அணிகளையும் பாதுகாப்பில்லாமல் விட்டுவைத்துக் கொண்டு முன்னேற அவர்கள் தயங்கினர். இது அறிந்த இராமராயன் அவர்களுக்கு அமைதி தருவதற்காகப் பீசப்பூர் படைகள் இருந்த பக்கத்தில் இராட்சசி, தங்கிடி என்ற இரு ஊர்களிடையிலுள்ள தொலை முழுவதையும் காக்கும்படி 12ஆயிரம் குதிரை வீரர்களையும், 20 ஆயிரம் காலாள் வீரரையும் நிறுத்தினான். விசயநகரப் படைகள் இப்போது முழு மனத்துடன் முன்னேறித் தாக்கின. இருபத்தேழு நாட்கள் வரை அகமது நகர், கோலகொண்டாப் படைகள் படிப்படியாகப் பின்வாங்க நேர்ந்தது. கடைசி 9 மணி நேரத்தில் எதிரிப் படைகள் சிதறுண்டு சீர்குலைந்து ஓடின. விசய நகரப் படைகள் போர்க்களத்திலிருந்து 20கல் தொலை வரை அவர்களை விடாது துரத்திக் கொண்டு சென்று அழிவு செய்து மீண்டனர். வெற்றியில் மகிழ்ந்து விசயநகரப் படைகள் விழா வாட்டார்ந்தன. சூழ்ச்சிக் களம் முஸ்லிம் அரசுகளையெல்லாம் ஒருங்குதிரட்டி ஒன்று படுத்தி அதன் மூலம் விசய நகரத்தைத் தாக்கி ஒழித்து விடவே கோலகொண்டா அரசனும், அவன் தோழனான அகமது நகர் அரசனும் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தனர். இம்முயற்சியில் அவர்கள் ஒரு சிறிதும் வெற்றி பெறவில்லை. இராட்சசித் தங்கிடிப் போரின் முதற் பெரும்படியின் போக்கும் முடிவும் அவர்கள் ஏமாற்ற உணர்ச்சியையும், மனக்கசப்பையும், ஏக்கத்தையும் மனக் கலக்கத்தையும் பன்மடங்காக்கின. போர்க்களத்தில் புயலினும் பெரிதான அகப்புயல்கள் அவ்விரு முஸ்லிம் அரசர், உள்ளங் களிலும் குமுறிச் சுழன்றெழுந்தார்த்தன. இருவரல்ல மூவர் அல்லது ஐவரே திரண்டெழுந்தாலும் இராமராயன் உயிருடன் இருக்கும் வரை விசய நகரத்தைப் போர்க்களத்தில் எதிர்த்து முறியடிப்பதென்பது முயற்கொம்பே என்று அவர்கள் கண்டனர். வலிமையைப் பெருக்குவதினும் சூழ்ச்சியைப் பெருக்குவது ஒன்றே அவர்களுக்கு அச்சமயம் நம்பிக்கைக்குரிய வழியாகத் தோன்றிற்று. ஐவர் ஒன்றுபட முடியாத நிலையில் கூட ஐங்கவர்ச் சூழ்ச்சி செய்து தம் மனக்கோள் நிறைவேற்றிவிட அவர்கள் ஆர்வத் திட்டமிட்டனர். தாம் பெற்ற தோல்வியையே சதித் திட்டத்தின் முதற்சுவராக்கிச் சமரசப் பேச்சுப்பேசி, சூழ்ச்சி ஏற்பாடுகளுக்கான காலவாய்ப்பும் மறைதிரையும் பெறுவது; அதன் மறைவில் ஒரு புறம் கூட்டில் இன்னும் சேராத அலி ஆதில்ஷாவை நயம், பயம் கெஞ்சுதல், அச்சுறுத்தல், ஆசை காட்டுதல், பாசம் வளர்த்தல் முதலிய பல்வேறு முறைகளால் கூட்டில் சேர்த்துக் கொண்டு, மற்றொருபுறம் அதே சமரச நட்புப் போர்வையில் விசயநகரப் பேரரசின் இஸ்லாமியப் படைத் தலைவர், படைவீரர்களைத் தம் வயப்படுத்துவது; போர் நிலை மறந்திருக்கும் எதிரிமீது திடீரெனப் பாய்ந்து தாக்குவதுடன் போரின் நடுக்கட்டத்தில் சதிக்குள் சேர்ந்து விட்ட அலி ஆதில்ஷாவின் படைகளையும் விசயநகர இஸ்லாமியப் படைப் பிரிவுகளையும் திடுமெனத் துரோகச் செயலில் இறங்க வைப்பது; இத்தனை குழப்பங் களிடையே இராமராயனைத் தனிப்படுத்திக் கைப்பற்றவோ, கொல்லவோ வகை காண்பது - இவையே புயல் மரபினர் வகுத்த ஐங்கவர்த் திட்டத்தின் கூறுகள் ஆகும். போர்த் திட்டத்தால் கனவுகாண முடியாத வெற்றியை இந்தச் சதித் திட்டத்தில் அவர்கள் எதிர்பாரா வகையில் கண்டனர். இராமராயன் தன்னம்பிக்கையும் களங்கமில்லாத பெருமித உள்ளமும் இச்சதிகளை எதிர்பார்க்கவுமில்லை. இவைபற்றிக் கனவு கண்டதுமில்லை. தம் தலைவன் நேசப் பேச்சுக்களிடையே கருத்துச் செலுத்தியிருந்த நேரத்தில் வெற்றி விழாவில் அயர்ந்திருந்த படைத்தலைவர்கள் களக்காவலை மறந்தனர். பீசப்பூர்ப் படைகள் ஆறு கடக்கவிடாமல் கண் பார்த்திருந்த காப்புப் படைகள் மெல்ல நழுவி வெற்றி விருந்துகளில் கலந்து கொண்டிருந்தன. போர்த் தொடக்கத்திலேயே அலி ஆதில்ஷா நேச ஏற்பாடுகள் மூலம் மற்ற இரு முஸ்லிம் அரசர்களின் உறவினனாய் இருந்தான். இந்த நேச உறவையும் பாச உறவையும் இப்போது அவ்விரண்டு அரசர்களும் தம் புதிய சதிர் சூதாட்டத்தின் பகடை ஆக்கினர். அலி ஆதில்ஷாவின் இரண்டக நடத்தைதான் தம் இஸ்லாமிய இனத்தோல்விக்கும் அழிவுக்கும் மூலக்காரணங்கள் என்று அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். இது இஸ்லாமிய இனப் பகைமையாகும் என்பதைச் சுட்டிக்காட்டி, தம்முடன் இனியும் சேராமலிருந்தால் முதலில் ஒன்றுபட்டு அவன்மீதே பழி வாங்குவதாக அச்சுறுத்தினர். நேசபாச வேச நாசங்கள் கலந்த இந்தத் தாக்குதல்களிடையே அலி ஆதில்ஷா அவர்கள் திட்டத்துக்கு ஒத்துழைப்புத் தருவதாக வாக்களித்தான். தங்கள் முடிவு எதிரிகளுக்குத் தெரிய வேண்டாமென்றும், தாங்கள் விரும்பும் கட்டத்தில் தம் பக்கம் வந்து தாக்க வேண்டு மென்றும் அலி ஆதில்ஷாவிடம் அவர்கள் உறுதி வாங்கிக் கொண்டனர். விசயநகர இஸ்லாமியப் படைத் தலைவர்களுடனும் இதே போன்ற நேசபாச, இச்சக அச்சுறுத்துத் தாக்குதல்கள் திரைமறைவிலே மற்றொரு பக்கம் நடைபெற்றன. இருபெருந் தலைவர்கள் இதற்கு இணங்கினர். அவர்களும் விசயநகரப் படைத் தலைமைக்கு எதுவும் தெரியாதவகையில் நடந்து, திட்டமிட்ட ஒரு கட்டத்திலேயே எதிர்பக்கம் திரும்புவதாக வாக்களித்தனர். ஐங்கவர்த் திட்டத்தின் மூன்று கவர்கள் வெற்றிகரமாய் விட்டது கண்டதே. இரண்டு அரசர்களும் துணிந்து மற்ற இரண்டு கவர்களுக்குரிய திட்டத்தில் இறங்கினர். நேசப் பேச்சுக்களுக் கிடையிலே வெற்றிவிழாக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த படைவீரர் மீது எதிர்பாரா வகையில் தாக்குதல் தொடங்கப் பட்டது. எதிரிகளின் சூழ்ச்சி கண்டு இராமராயன் ஓரளவு வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தானாயினும், தன் அரும் படைத்திறமை காட்டிக் கணத்தினுள் படையணி ஒழுங்குசெய்து திடீர்த் தாக்குதலால் நேர்ந்த குழப்பத்தைத் தடுத்து நிறுத்தினான். மீண்டும் தானே மைய அணியின் மையத்தில் வீறி நின்று சதிப்புயலுக் கெதிராகத் தன் போர்வீர மதிப்புயலை ஏவி எதிர்ப்பு முழக்கினான். போர்க்களத்தில் நம்பிக்கையற்ற சதிக்கள வீரர்கள் இப்போது மீண்டும் தம் சதி மூட்டையின் அடுத்த கட்டத்தை அவிழ்த்து விட்டனர். அலி ஆதில்ஷாவின் படைகள் ஒருபுறமிருந்து திடுமென வந்து போரில் கலந்து கொண்டன. இந்த அதிர்ச்சியடங்கு முன், விசயநகர முஸ்லிம் படைத்தலைவர் இருவரும் தம்மிடமிருந்து 80 ஆயிரம், 70 ஆயிரம் படை வீரருடன் தம் தலைவனைத் தாமே எதிர்த்து எதிரிகளுடன் சேர்ந்தனர். போர்த்தாக்குதலும் சூழ்ச்சித் தாக்குதலும் இப்போது இராமராயன் இதயத் தாக்குதலாக மாறின. அடுக்கடுக்கான இந்த அதிர்ச்சிகளிடையே குழப்பத்தைத் தவிர்க்க வேண்டிய தவைவன் உள்ளத்திலேயே இப்போது குழப்பம் சிறிது தலைகாட்டிற்று. அது ஆறி அமைந்துவிட்டால் தம்கூட்டுச் சதிச்செயல்கள்கூடத் தமக்கு ஆதரவளிக்காது என்று கண்ட எதிரிகள் படைகளை எதிர்ப்பதைக் கைவிட்டு அவனையே தாக்க முனைந்தனர். அவர்கள் எதிர்பார்த்த அளவைவிடச் சந்தர்ப்பம் இப்போது அவர்களுக்கு உதவிற்று. ஹுசேன் நிஜாம்ஷாவின் துப்பாக்கிக் குண்டொன்று இராமராயன் மீது பாய்ந்தது. குண்டுபட்டே இராமராயன் வீழ்ந்தானென்று சில வரலாற்றேடுகள் கூறுகின்றன. ஆனால் மேலே குறிப்பி ட்டபடி காயமுற்ற நிலையில் அவன் ஹுசேன் நிஜாம் ஷாவிடம் சிறைப்பட்டானென்றும், அலி ஆதில்ஷா வந்து அவன் உயிருக்கு மன்றாடக் கூடுமென்ற அச்சத்தாலேயே ஹுசேனால் கொல்லப் பட்டானென்றும் வேறு சில ஆதாரங்கள் குறிக்கின்றன. அகமது நகர் அரசன் இராமராயன் தலையைத் துண்டித்து அதை ஓர் ஈட்டியில் குத்தி விசயநகரப் படை வீரர்களெல்லாருங் காண உயரத்தூக்கித் தன் வெற்றிக் கொடியாக நிறுத்தினான். இதற்கு முன் களம் பல கண்ட வீரர்கள், எத்தனையோ தோல்விகளை வெற்றிகளாக மாற்றி எக்காளமிட்ட படைத் தலைவர்கள் தோலா வீரனான தம் தலைவனின் துண்டாடப் பட்ட தலையைக் கண்டவுடனே தம்மை மறந்தனர்; தம் பேரரசின் பீடும் தம் மக்கள் வாழ்வின் வளமும் யாவும் அவர்கள் அகக்கண்களினின்று மறைந்தன. படைகள் மீகாமனில்லாத மரக்கலம் போல, மடையுடைந்த வெள்ளம் போல நாலா பக்கமும் சிதறியோடின. 1509-ஆம் ஆண்டு கிருட்டிண தேவராயனின் தீவானிப் போரில் புயல்மரபின் வீறாட்சியை மறந்திருந்த தென்னக இஸ்லாமிய மன்னர் குலைந்தோடும் விசயநகர்ப் படைகளைக் கண்டதே அம்மரபுக்குப் புத்துயிர் தந்தனர். களத்திலேயே ஓர் இலட்சம் வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்று வரலாற்றாசிரியர் பலரும் கூறுகின்றனர். பேரரசின் பெருங்கொடி மண்ணில் வீழ்ந்து புரண்டது. படுகளம் போர்க்களமாகத் தொடங்கிச் சூதாட்டக்களமாக மாறிய இராட்சசித் தங்கிடிப் புயல் இறுதியில் படுகளமாய், குருதிக் கடலின் வெள்ளப் பெருக்காய், தலைநகர் நோக்கிப் பல நெறிகளிலும் புகுந்து பாய்ந்தோடும் கானாறாயிற்று. உலகிலேயே வேறெந்த நகரமும் பெறாத செல்வ வளத்திலும் வெற்றிப் பெருமித வாழ்விலும் மிதந்திருந்த வெற்றித் திருநகரத்துக்குப் புயலின் செய்தியை அதன் பேரதிர்ச்சி தரும் விளைவின் தகவலை எடுத்துச் சென்றவர்கள் படுகளத்திலிருந்து தப்பியோடியவர்களில் முதல் தொகுதியினரே. களம் அடைந்த நிலையையே நாடும் நகரும் அடைந்தன. முன்பு களங்களில் கலங்கியோடிய இஸ்லாமிய வீரர் வாரக்கணக்காக, மாதக்கணக்காக எதிர்ப்பாரின்றி எங்கும் எல்லாம் சூறையாடினர். கொள்ளையடிக்க முன்வந்த படை வீரருக்கு மட்டுமன்றி அந்தச் சாக்கில் கொள்ளையடிக்க விரும்பியவர் கட்கெல்லாம் தென்னகத்தின் செல்வக் களஞ்சியம் திறந்த வீடாய் விட்டது. நகர மக்கள் தம் வாழ்வில் காணாத, கனவிலும் கேட்டறியாத சாத்துயருக்கு ஆளாயினர். கொள்ளையடிக்கத் துணிந்தவர்கள் தம் வாழ்வில் என்றும் கண்டறியாத, கேட்டறியாத செல்வக்குவை பெற்று, அதைச் சுமக்கமுடியாமல் சுமந்து மறுகினர். நாட்டையோ, நகரையோ எவரும் பாதுகாக்க முயன்றதாகத் தெரியவில்லை. நகரம் வார, மாதக்கணக்காகக் கொள்ளை யாட்சிக் கிரையாயிற்று. இராமராயன் இடத்திலிருந்து பேரரசு காக்க வேண்டிய பொறுப்புடையவன் அவன் இளவல் திருமலை. ஆனால் அவனோ பெயரளவில் இன்னும் பேரரசனாக இருந்த சதாசிவனையும் அரண்மனை மாதரையும் செல்வங்களையும் காத்தெடுத்துச் செல்லவே முற்பட்டான். கொள்ளையாட்சி பரவு முன்பே அவன் 1550 யானைகள்மீது பேரரசின் அணிமணிகள், வெள்ளி பொன் செல்வக் குவைகள் ஆகியவற்றை வாரி ஏற்றிக் கொண்டு இரவோடிரவாகப் பெனு கொண்டா நகரத்துக்குச் சென்றான். பேரரசின் புகழ் வீழ்ச்சி காணப்பெறாது நாணியது போல நகரம் தன் செல்வ அணிமணிகளையெல்லாம் கொள்ளைக்காரர் வசம் வீசியெறிந்துவிட்டு, ஒளியிழந்த அழகியாகக் கைமைக் கோலம் பூண்டது. மாடமாளிகைகள் கூட கோபுரங்கள் எங்கும் நொறுங்கி அக் கைமைத் துயரின் கடுமை காட்டின. நகரம் உடனடியாக அழியவில்லை. மாதக் கணக்கான சூறையாட்டினால் படிப்படியாகத் துடித்துத் துடித்து மடிந்தது. வாழ்வு திடுமென மாய்வாய் விடவில்லை. ஆனால் கணம் கணமாக, அங்குலம் அங்குலமாக மாள்வின் கோரப்பிடியில் அது நெக்குண்டு பொலிவிழந்தது. அதன் தெருக்களினூடாக இடைவிடாது பவனி வந்து கொண்டிருந்த உலக வாணிக வளம் அதனிடமிருந்து பின் என்றும் மீளாவிடைகொண்டு விட்டது. திருமலை சில ஆண்டுகளின் பின் அதை மீண்டும் தலை நகராக்கவும் வாணிக நகராக்கவும் முயன்றான் என்று அறிகிறோம். ஆனாலும் தென்னகத்தின் புகழ் நினைவூட்டும் சின்னமாகவே வெற்றித் திருநகர் நிலைத்து, படிப்படியாக இன்றைய பாழ்நிலையை அணைக்க உளங்கொண்டு விட்டது. 1565-இல் பேரரசு சரிந்து பேரரசினை ஆண்ட பெருங்கரங்கள் இராட்சசித் தங்கிடியின் பெருநிலம் தோய்ந்ததாயினும் 1570வரை அக்கரங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்க அவற்றின் மரபினர் யாரும் முன்வரவில்லை. ஏனெனில் திருமலை 1570-லேயே அப்பொறுப்பேற்கத் தொடங்கி அரசுரிமை மேற்கொண்டான். அந்த ஐந்தாண்டுகளும் பெருநகரின் முழுத் தவக்கோலத்திலும் பங்கு கொண்டு பேரரச மரபும் நோன்பு நோற்றது. இஸ்லாமிய அரசுகள் சதியாட்சியால் கூட இராம ராயனையும் பேரரசின் வீறுசான்ற பெரும்புகழையும்தான் அழித்தன; பேரரசை அழிக்கவில்லை. ஆட்சியுற்ற ஐந்தாண்டுகளும் இதற்குச் சான்று பகர்வன ஆகும். ஏனெனில் அந்த ஐந்தாண்டு ஆட்சியிலா நிலையின் பின்னும் எல்லையில் ஒரு சிறிதே குறுகியதன்றி வேறெந்த வகையிலும் சிதறிவிடாத நிலையில் திருமலை பேரரசைக் கைக்கொள்ள முடிந்தது. இது மட்டுமன்று. பேரரசின் பிள்ளைகளாக அச்சுததேவராயன் காலத்துக்குள் பிறந்த செஞ்சி, தஞ்சை, மதுரை அரசுகள் இதற்குள் புதிய வல்லரசுடன் ஆகிவிட்டன. தன் மரபில் வந்த அந்தப் புதிய வல்லரசுகளுடன் இணங்கியும் பிணங்கியும் பேரரசு மேலும் ஒரு நூற்றாண்டுக் காலம் வாழமுடிந்தது. பேரரசின் மரபு மறையுமுன், பேரரசை எதிர்த்தழிக்க முனைந்த தென்னகப் புயல்மரபுகளாக இஸ்லாமிய அரசுகள் ஐந்தினுள் மூன்று மறைந்துவிட்டன. பேரரசின் மரபு மறக்கப்படு முன்னரே, புயல்மரபில் மீந்த மற்ற இரண்டையும் தாய்ப் புயல் மரமாகிய முகலாயப் பேரரசு என்னும் பெரும்பாம்பு நெளிந்து வளைந்துவந்து விழுங்கத் தலைப்பட்டது. சேய்ப்புயல் கடந்து தாய்ப்புயலோ, தாய்ப்புயல் கடந்து சேய்மைப் புயல்களோ கூட நீடு வாழ்வுறவில்லை. தென்னகத் தளர்ச்சிக் காலத்து நோய்க்கு மருந்தாகவே அமைந்த நச்சுச் சரக்காக அவை யாவும் அமைந்தன. 8. தூவானம் மீவானெழுந்து கடல்கீண்டகன்று விரிநிலத்தில் பேழ்வாயகழ்ந்த பெருமாபுயல்தளர்ந் தேகியபின் பூவாணமிட்டுப் பொறிதாரகையெனப் புன்திவலைத் தூவானமூடு துளங்கும்சுடரொளி வாழியவே! கலங்கும் தமிழர் தேசீயவானில் கதிர்விரித்து வலங்கொண் டெழுந்ததண் மாநிலத்தேசீயம் பால்பரப்பி நலங்கொண் டொளிர்கன் னடம்பயின் றோங்கும் நளிர்தலத்தே தெலுங்கின் புகழ்க்கொடி தூக்கியதென்னகம் வாழியவே! ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஈழ முதலிய கடல் கடந்த நாடுகளை உள்ளடக்கிய கடலுளாழ்ந்த பண்டைத் தமிழ் மாநிலத்தில் கருவுயிர்த்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழகத் தென்றலில் தவழ்ந்து, அதன் எல்லைகளில் சேர கொங்கு நாடுகளிடையே பொலந்திகழ் வண்ணத் தொட்டிலில் ஊசலாடி, கன்னட நாட்டிலே கருநாடக இசை முகிலார்ந்து கடும் புயலிடையே களங்களதிரப் பரதநாட்டியமாடிய தமிழகத் தென்னகத் தேசீயம், வண்ணத் தெலுங்கின்வீறு நாடகக் காப்பியங்களாடி மீண்டும் தாய்நிலம் வந்து புதுத் தேசீய மலர்ச்சி எழுப்பிய காலமே விசயநகரப் பேரரசின் நான்காம் மரபான அர வீட்டுமரபின் ஆட்சிக் காலமாகும். தென்னவர் இனப்பண்பின் தாயகம் இன்று குமரிமுனை என்று அழைக்கப்படும் குமரிக்கோடேயாகும். நாட்டின் பெயர், மொழிப்பெயர், தெய்வப்பெயர், தெய்வம் தலங்கொண்ட மலைப் பெயர், ஆற்றுப்பெயர், நகரப் பெயர், கடற்பெயர் ஆகிய யாவும் ஒரே பெயரால் இயங்குவது பண்டைத் தென்னக மரபு. இதன் தடங்களை நாம் சங்கத் தமிழில் ஆங்காங்கே காணலாம். ஆனால் பண்டைத் தமிழகத்தின் மையமாய் அமைந்திருந்த குமரியில் இப்பண்புகள் எல்லாவற்றையும் ஒருங்கே காண்கிறோம். முத்தமிழ்த் தெய்வமாகிய கன்னித்தாய் அல்லது குமரி இங்கே குமரிக் கோட்டின் மீது கோயில் கொண்டுள்ளது. கன்னிக்கோடு அல்லது குமரிக்கோடு என்ற தமிழ் மாமலையினின்று எழுந்து கன்னியாறாகிய குமரியாறு கன்னிமாநிலம் அல்லது குமரி மாநிலமாகிய பண்டைத் தமிழகத்தின் வழியே ஓடி, இளமைமாறாக் கன்னித்தமிழ் மொழிவளமும் அதன் கன்னி இளம் பொங்கல் வளமும் பரப்பி, கன்னித் தென்றலிலாடி, கன்னிமாகடலாகிய குமரிப் பௌவத்தில் இன்றைய ஈழங்கடந்து நெடுந்தொலை தென் திசைக்கண் சென்று கன்னிக்கூடலாகக் கலந்தது. தென்னகப் பண்பின் மையத் தளமான இக்குமரிக் கோட்டினின்று நெடுந்தொலை வடக்கு வடகிழக்காக விலகிப் பரந்து கிடக்கும் நிலம்தான் பண்டு கலிங்கமாநிலமென்று வழங்கிய தெலுங்க நாடு. ஆனால் மொழித் துறையிலும் சரி, பண்பாட்டுத் துறையிலும் சரி - தென்னகப் பண்பிலிருந்து தொலை காரணமாக அது விலகி விட்டதென்று கூற இடமில்லை. வட எல்லையில் மேல் திசையில் கன்னடம் போலவே அதுவும் வாடையையும் வடதிசை வழிவந்த மேல் திசைப் புயலையும் எதிர்த்துக் கடும் போராட்டம் நடத்தி யிருந்தது. வாடையையும் புயலையும் ஒருங்கே எதிர்த்துக் கன்னடம் வடக்கில் நெடுந்தொலை கோட்டை விட்டிருந்த காலத்திலும், புயலுக்கு மட்டும் ஒதுங்கிய தெலுங்கம் கலிங்கத் திலும் அது கடந்து தமிழர் பண்டு வங்கமோட்டிய கடல் நிலமாகிய வங்கத்திலும் தென்னகப் பண்பு பரப்பியிருந்தது. மிகப் மிகப் பிந்திய காலத்தே வங்கத்தையும் அதற்குப் பிற்படக் கலிங்கத்தையும் அது கோட்டைவிட நேர்ந்த தாயினும், வடமேற்கு எல்லையில் தென்னகப் பண்பு பரவிய எல்லைதாண்டி நெடுந்தொலை வடக்கிலும் வடகிழக்கிலும் அது பரப்பியே உள்ளது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதென்ற பழமொழிப் படி அது புறநானூற்று வீரம் செறிந்து தேசீய இயக்கத்தின் அரசியல் மலர்ச்சிக்குரிய தாயகமாய்த் தென்னகத்தின் புத்துயிர்க் கருநிலமாயிற்று. பேரரசின் உச்சப்புகழ்க் காலத்தில் அதன் கால்வழியிலேயே சாளுவ மரபின் தேசீயச் சிற்பிகளும் பெருங்கல மீகாமர்களும் தோன்றினர். மேலும் தளர்ச்சிக் காலத்திலும் அதுவே அவ்விரு மரபளாவிய இராமராயனின் அரவீட்டு மரபாயிற்று. புயலின் வண்ணமாமயிலாக ஆடி அதுவே புயல் கடந்த தூவான மண்டலத்திலும் வானவில்லாக எழிலொளி கான்று நிலவிற்று. விசயநகர காலத்திய பாண்டிய அரசர்களைப் பற்றி வரலாற்றாசிரியர்கள் ஓர் அழகுரை வழங்கியுள்ளனர். தம் புலிப் பேரரசும் பொருட்பேரரசும் மறைந்த பின்னால்கூட அவர்கள் கவிப்பேரரசராகவும் அருட்பேரரசராகவும் விளங்கியிருந்தனர். புலமைசான்ற பாண்டியர் பலர் பாடல்களும் காவியங்களும் வாழ்க்கைச் செய்திகளும் இதனை மெய்ப்பிக்கின்றன. ஒரு பாண்டியன் விசயநகரப் பேரரசர்மீது கலம்பகமே பாடியதாக அறிகிறோம். அவனை நோக்கி ஒருபுலவர் “அரசராகிய நீர் அயலரசர்மீது கலம்பகம் பாடலாமா?” என்று கேட்டதற்கு அவன் மிடுக்குடன் “யாமும் மதிக்குலம், விசயநகர அரசருக்கு மதிக்குலம். யாம் அயலரசரைப் பாடவில்லையே” என்று பாடலிலேயே பதிலிறுத்தானாம்! பாண்டியரின் இந்தப் பண்போடொத்த மற்றொரு பண்புக் கூற்றினை அரவீட்டு மரபுக்குரிய விசயநகரப் பேரரசரிடம் காண்கிறோம். அவர்கள் பெயரளவிலேயே பேரரசராக நிலவினராயினும், அவர்களில் பலர் சிற்பிகளையும் மீகாமன்களையும் நினைவூட்டத்தக்க தனிப்பெரு வீரராகத் திகழ்ந்தனர். அத்துடன் ஆண்ட அரசர் மட்டுமன்றிப் பெருங்குடிகளில் கூட இராமராயனொத்த பெருவீரர் தோன்றியிருந்தனர். இத்தகையவர்களுள் யாசம நாயுடு என்ற பெருவீரனுக்குரிய வேலுகோடி மரபு தெலுங்கில் மக்கள் பாணியில் எழுதப் பட்ட வேலுகோட்டிவாரி வம்சாவளி’ என்ற ஒரு வீரக்குடிக்குரிய பெருவீர காவியம் தோற்று வித்துள்ளது. அரவீட்டு மரபுக்கு முற்பட்டப் பேரரசு பல தனி மண்டலங்களாக மட்டுமே பிரிவுற்றிருந்தது. ஆனால் புயலுக்குப் பிற்பட்ட நாட்களிலேயே ‘பேரரசு’ மும்மொழி மாகாணங்களாக, மூன்று மொழி மண்டலத் தலைவர்களின் கீழ் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டது. அத்துடன், மதுரை, தஞ்சை, செஞ்சி முதலிய தமிழக நாயக மரபுகள் புதுத்தேசீயங்களாக வளரத் தொடங்கியதும் இந்நாட்களிலேயேயாகும். முழுக் கதிரவனொளியிலோ, முழுநிலவிலோ, புயலிலோ, மழையிலோ காணமுடியாத வானவில்லை நாம் புயலோய்ந்த பின் தோன்றும் இளவெயிலிலே மட்டும் காண்கிறோம். பேரரசும் இதற்கொப்பவே புயல் கடந்த தூவான நாட்களிலேயே புகழ் வானில் வானவில் வளையங்களை நமக்குத் தோற்றுவித்துள்ளது. தேசம் அளாவித் திகழ்பேரரசு சிதைவுறினும் பாசமகன்றில் தாகப்பசுந்தமிழ் நாயகரும் நேசப்பிணக்கு நிகழ்த்திடநீடு குடிமரபில் யாசமாகாவியம் ஏந்துறும்தென்னகம் வாழியவே! புயலின்பின் புதுவளம் தென்னகத்தின் மைய வாழ்விலே புயல்வாரியடித்த சமயத்திலேயே தமிழகம் மதுரை மண்டலத் தலைவனான விசுவநாத நாயகனின்கீழும், தஞ்சைமண்டலத் தலைவனான செவ்வப்ப நாயகன்கீழ், செஞ்சிமண்டலத் தலைவனான துப்பாக்கி கிருஷ்ணப்ப நாயகன் கீழும் புதுத்தேசீயம் படைத்து வந்துள்ளது. விசுவநாத நாயகன் 1529-லிருந்து விட்டுவிட்டுப் பல தடவையாக 1564வரை மதுரை மண்டல ஆட்சி புரிந்து வந்தான். அவன் ஆட்சியின் கடைசிப் பருவத்தில் அவனுடன் தமிழகச் செல்வரான அரியநாத முதலியாரும் பங்கு கொண்டிருந்தார். அவர் மைய ஆட்சியிலேயே அமைச்சராகவும் படைத் தலைவராகவும் கிருட்டிண தேவராயன் காலமுதல் இருந்து அனுபவம் பெற்றிருந்தார். அவரே தமிழகத்தை 72 பாளையங் களாக வகுத்தவர் என்று கூறப்படுகிறது. தவிர மதுரை, திருச்சிராப்பள்ளி, சீரங்கம் ஆகிய நகரங்களில் கோட்டை கொத்தளங்களும் தெருவீதி அமைப்புக்களும் கோயில் திருப்பணிகளும் முற்றுவித்து, வேளாண்மைக்குரிய ஏரி குளங்கள், அணைக்கட்டு வாய்க்கால்கள் கட்டுவித்தவராக அவர் புகழ் நிறுவியுள்ளார். அந்நாளில் சோழன் மதுரை மாவட்டக் கம்பம் பள்ளத்தாக்கில் வலிமையுடன் ஆண்டுவந்ததாக அறிகிறோம். இது இராமராயன் ஆட்சிக்கால நிலையின் விளைவு என்பதில் ஐயமில்லை. விசுவநாத நாயகரும் அரியநாத முதலியாரும் இணைந்து வீரபத்திர நாயகன் என்ற படைத்தலைவன் உதவியுடன் சோழனை வென்றடக்கினர். சோழன் ஆண்ட பகுதியில் ஒரு பெருங்கூறான வடகரைப் பாளையம் வீரபத்திர நாயகனுக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. விசுவநாத நாயகனுக்குப்பின் அவன் மகன் கிருட்டிணப்ப நாயகனும் அவன் மரபினரும் படிப்படியாக மதுரையில் அரச மரபினராகவே தன்னாண்மையுடன் ஆண்டனர். அரியநாத முதலியார் விசுவநாதன் ஆட்சி கடந்து அடுத்த இரண்டு தலைமுறை ஆட்சிகண்டு, மதுரை நாயகர் ஆட்சிக்கு உறுதுணை தந்தார். புயல் எழுவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பே 1564-இல் விசுவநாதன் ஆட்சி முடிவுற்று அவன் புதல்வன் கிருட்டிணப்ப நாயகன் மதுரைத் தவிசேறினான். புயலில் உதவும்படி மற்ற எல்லா மண்டலத் தலைவர்களையும் போலவே மதுரை நாயகனும் இராமராயனால் பணிக்கப்பட்டிருந்தான். மதுரையிலிருந்து அரியநாத முதலியாரே படை நடத்திச் சென்றதாகவும் அறிகிறோம். ஆயினும் அவர் போர்க்களம் சென்று சேருவதற்கு முன்பே புயல் களங்கடந்து கலவரம் பரப்பத் தொடங்கியிருந்தது. எனவே இராமராயனுக்குப் பின் பேரரசுப் பொறுப்பேற்றிருந்த திருமலை தலைமையிடத்தை விசய நகரத்திலிருந்து பெனுகொண்டாவுக்கு மாற்றுவதற்கும், புயல் தெற்கும் கிழக்கும் பரவாமல் தடுப்பதற்கும் மட்டுமே அரியநாத முதலியார் படைகள் உதவியமையவேண்டி வந்தது. திருமலை நாயகனின் ஆட்சியில் அவன் காட்டிய அரசியல் திட்பநயத்துக்கும் ஓரளவு அரியநாத முதலியாரின் அரசியல் நுண்ணறிவும் அறிவுரையுமே காரணமாயிருந்திருக்கக் கூடும் என்று நம்ப இடமுண்டு. ஏனெனில் திருமலையின் போக்கு ஒரு புறம் பேரரசு சரியாமல் தடுத்து நிறுத்தித் தமிழக நாயக அரசுகளுக்கும் வலிமை தருவதாய மைந்தது. கிருட்டிணப்ப நாயகன் (1564-1572) தன்னாண்மையுடனேயே மதுரை ஆண்டுவந்தான். மதுரைநாயக அரசின் நிறுவுதல் முதல்வனாக வரலாறு அவனையே சிறப்பிக்கிறது. அத்துடன் மதுரை அரசின் முதல்வனாக மட்டும் அவன் அமைந்துவிடாமல், விசயநகரப் பேரரசர் மரபிலும் பண்டைத் தமிழர் அரசர் பேரரசர் மரபிலும் நின்று அவ்வரசே பேரரசின் புதுமலர்ச்சியான தென் தமிழகப் புதுத்துளிர்த் தேசீயம் என்பதை எண்பித்துக் காட்டினான். அவ்விரு மரபுகளையும் போலவே அவன் ஆட்சிக்கரம் இலங்கை வரை சென்றெட்டிற்று. மதுரை அரசின் கீழிருந்த தலைவர்களுள் பரமக்குடியி லிருந்தாண்ட பழங்குடிவாணன் தொட்டியர் தலைவனானதும் பிச்சிநாயகன் என்பவன், புதியநாயக ஆட்சிமுறையின் கீழும் அவன் ஒரு வலிமை வாய்ந்த பாளையக்காரனாகவே மதிக்கப் பட்டாலும், பழயமுத்தமிழ் அரசர்புகழ் மரபுபற்றிய கனவுகள் அவன் அமைதி கெடுத்தது. தன் சிறு பதவியுடன் மன நிறைவு படாமல் அவன் பழய முத்தமிழ் அரச மரபுடனே நாலாம் அரசமரபாக விளங்கியிருந்த இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டான். கண்டியிலாண்ட அரசுகளின் ஒப்பந்தத்தால் தன்னை வலுப்படுத்திக் கொண்டு அவன் பெருங்கிளர்ச்சி தொடங்கினான். கடும் போராட்டங்களின் பின் தும்பிச்சி நாயகன் பிடிபட்டுத் தூக்கிலிடப்பட்டான். ஆனால் அவன் புதல்வர்களை மதுரைநாயகன் அரச மதிப்புடன் நடத்தினான். தும்பிச்சி நாயகன் ஆண்ட பெரும்பரப்பு மற்றப் பாளையங்களிடையே பிரித்துக் கொடுக்கப்பட்டாலும், அவன் புதல்வரே பரமக்குடிப் பாளையக்காரராக்கப் பெற்றனர். தும்பிச்சி நாயகன் தூக்கிலிடப்பட்டது கேட்ட அவன் அண்டை நேச அரசனான கண்டிவேந்தன் மதுரை அரசை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்தான். அதன் சின்னமாக, அவன் விசயநகரப் பேரரசுக்கு அதுவரை அனுப்பி வந்த திறையை நிறுத்திக் கடல் கடந்து நோக்கும் எண்ணமே கொண்டு போர்க்கோலம் கொள்ளலானான். ஆனால் அது முற்றுப் பெறும்வரை காத்திராமல் கிருட்டிணப்ப நாயகன் வீரவசந்தராயன் என்ற படைத் தலைவனை இலங்கைக்கு அனுப்பினான். மதுரை அரசின் பாளையக்காரர் 52 பேரும் தத்தம் துணைப்படைகளை உதவிக்கு அனுப்பியிருந்தனர். நவபாஷாணம், மன்னார் ஆகிய துறை முகங்களுக்கிடையில் உள்ள கடல் மீது பாலமிட்டது போலத் தமிழகக் கப்பல்கள் அவ்விடைவெளியை நிரப்பின. மறுபுறம் தேசநாதர்கள் அதாவது அமைச்சரவை மதிப்புடைய நான்கு பெரும் படைத்தலைவர்களுடன், 40,000 படை வீரருடனும், எட்டு மாகாணத் தலைவர்களுடனும் இலங்கை வேந்தன் தமிழ்நாயகப் படையை வந்தெதிர்த்தான். புத்தளம் என்ற இடத்தில் நடைபெற்ற பெரும்போரில் தேசநாதர்கள் இருவரும், மாகாணத் தலைவர்கள் ஐவரும் மதுரைவீரரிடம் சிறைப்பட்டனர். இத்தோல்வியின் பின்னும் கண்டி அரசன் மதுரை படை முதல்வனான சின்னகேசவ நாயகனின் தூதர்களுக்குப் பணிய மறுத்து, போர்ச்சுகீசியர் உதவியுடன் மீண்டும் மும்முரமாகப் போராற்றி மாண்டான். நாயகத்தலைவர் அரசன் உடலை அதற்குரிய மதிப்புடன் அடக்கம் செய்து குடும்பத்தினருக்கும் ஆவன செய்து பெருந்திறையுடன் மதுரைக்கு மீண்டனர். மறுமலர்ச்சியூட்டிய மாவளவன் புயல் பேரரசை அழித்துவிடவில்லை. ஆனால் அதன் அதிர்ச்சியிலிருந்து பேரரசு மீள ஐந்து ஆண்டுகள் ஆயின. அத்துடன் பேரரசு தன் பெரும் புகழையும் பெருமித வீறினையும் இழந்து விட்டது. அதை மீண்டும் அமைதி நிலைக்குக் கொண்டு வந்து திருமலைராயன் 1570-லேயே பேரரச பீடமேற முடிந்தது. அதன் பின்னும் திருமலை (1570-1571) அமைதியுடன் நீடித்து ஆள முடியவில்லை. இரண்டு ஆண்டுகளே நிலவிய அந்த ஆட்சியில் கூடத் தொடக்க நாட்களில் அவன் அரசுரிமைக்கு எதிராக இராமராயனின் புதல்வன் பெத்த திருமலை போட்டியிட்டுக் கிளர்ந் தெழுந்தான். பெத்த திருமலை தன் பக்கம் வந்து ஆதரவு தரும்படி பீஜப்பூர் அரசன் அலி ஆதில்ஷாவை அழைத்தான். பீஜப்பூர் அரசன் இதைச் சாக்கிட்டுப் படையெடுத்துப் பெனுகொண்டாவைத் தாக்கினான். திருமலை இதற்கெதிராகக் கோல கொண்டா அரசன் இப்ராகிம் குதுப் ஷாவையும், அகமது நகர் அரசன் நிஜாம்ஷா ஸுசேனையும் வரவழைத்தான். எனினும் பீஜப்பூர் அரசன் மற்ற இஸ்லாமிய அரசருடன் சமரசம் செய்து கொண்டு முன்னேறினான். பெனு கொண்டாவில் கோட்டையின் வீரப்படைத் தலைவன் சவரன் செல்லப்ப நாயகனின் பாதுகாப்புப் போர் எதிரிகளைக் கோட்டைப் பக்கம் அணுகவிடாமல் சிதறடித்தது. ஆயினும் அருகேயிருந்த அதோனிக் கோட்டையும் அதன் சூழ்நிலங்களும் வீழ்ச்சியடைந்து பீஜப்பூர் வசமாயின. திருமலை தன் தமயன் இராமராயனிடமிருந்து படைத் துறையில் மட்டுமன்றி ஆட்சிமுறைகளிலும் பயிற்சி பெற்றவன். பேரரசு சரிந்துவரும் நிலையையும் காலத்தின் போக்கையும் கவனித்து அவன் திறம்பட நய இணக்க முறைகளைக் கையாண்டதனாலேயே, பேரரசு புயலுக்குப் பின்னும் மற்றும் ஒரு நூற்றாண்டு சரிவுறாது நின்றது. இதற்கு உதவிய அவன் செயல்கள் இரண்டு. முதலாவதாக, அவன் பெனுகொண்டாவிலும் அதனை அடுத்த பகுதிகளிலும் உள்ள தன் நேரடி மைய ஆட்சியை வலுப்படுத்துவதில் முழு ஊக்கமும் செலுத்தினான். அத்துடன் தமிழகத்திலும் மற்றத் தொலை மாகாணங்களிலும் புதிதாக வலிமை பெற்று வளர்ந்து வந்த நாயக மரபுகளை எதிர்க்காமலும், அவற்றுடன் எவ்வகையிலும் மோதிக் கொள்ளாமலும் பெயரளவிலேயே மேலுரிமையை நிறுத்தி நேசபாசத்துடன் நடந்து கொண்டான். இதன் பயனாக மேலுரிமையும் எளிதில் நீடித்தது. அவர்கள் ஆதரவும் பேரரசுக்கு வலிமை தந்தது. இரண்டாவதாக, தனி நாயக அரசுகளுடன் மோதிக் கொள் ளாமலிருப்பதற்காகத் திருமலை மைய அரசுக்கும் அவர்களுக்கும் இடையே புதிய பெரும் பிரிவுகளாக மாமண்டல அரசுகள் வகுத்தான். இவ்வகுப்பு முறை முன் என்றும், அணிமைத் தற்காலம் வரை, பின் என்றும் ஏற்படாத தேசீய முறையில், மும்மொழி மண்டலங்களாக அமைந்திருந்தது. அதன்படி பேரரசின் மையமாயிருந்த பெனுகொண்டாவையே தலைமையிடமாகக் கொண்டு ஆந்திர மாமண்டலத்தைத் திருமலையின் மூத்த புதல்வனான சீரங்கனும், சீரங்கப்பட்டிணத்தைக் தலைநகராகக் கொண்ட கன்னட மாமண்டலத்தை இரண்டாம் புதல்வனான இராமனும், சந்திரகிரியைத் தலைமையிடமாகக் கொண்ட தமிழ் மாமண்டலத்தைக் கடைசிப் புதல்வனான வேங்கடபதியும் ஆளும்படி அமர்விக்கப் பெற்றனர். நாயகத்தனியரசுகளின் வளர்ச்சி போலவே இவ்வகுப்பு முறையும் நாளடைவில் பேரரசின் தளர்ச்சிக்கு வழி வகுத்தாலும், இத்தேசீய நோக்கு தற்காலிகமாகப் பேரரசின் அமைப்பை நீடிக்கவும், நிலையாக அதன் புகழ் பரப்பவும் பெரிதும் உதவிற்று. புயற் காலத்தில் பேரரசு இழந்த பழம்பெரும் புகழாகிய கதிரொளி இச்செயல் வகைகளால் புது நிலவொளியாக மறுமலர்ச்சியுற்றது. பேரரசு புதுவலிமையும் புகழும் பெற்றது. இதன் அறிகுறியாகத் திருமலைராயன் தனக்குத் ‘தளர்ந்த கருநாடகத்துக்கு மறுமலர்ச்சியூட்டியவன்’ என்ற விருதுப் பட்டத்தை வீறுடன் சூட்டிக் கொண்டான். முதலாம் சீரங்கன் காலத் தளர்ச்சி திருமலையின் மூத்த புதல்வன் முதலாம் சீரங்கன் (1572-1585) ஆட்சியில் பேரரசின் வலு மீண்டும் தளர்வுற்றது. முஸ்லிம் அரசர்கள் பேரரசின் பகுதிகளை மேலும் கைக் கொள்ள நேர்ந்தது. பீஜப்பூர் அரசன் அலி ஆதில் ஷா 1576-இல் அதோணியிலிருந்து முன்னேறி மீண்டும் பெனுகொண்டாவை மும்முரமாகத் தாக்கினான். சீரங்கன் கோட்டைப் பாதுகாப்பைப் படைத்தலைவன் சென்னப்பனிடமே விட்டுவிட்டுச் சந்திரகிரிக்குப் பின்வாங்கினான். கோட்டையைச் சென்னப்பன் மூன்று மாதகாலம் காத்து நின்றபின் சீரங்கன் புதுப்படைகள் திரட்டி உதவிக்கனுப்பினான். அத்துடன் பீஜப்பூர்ப் படைத்தலைவன் முஸ்லீமல்லாத வனாயிருந்ததைப் பயன்படுத்தி அவனைப் பொருள் கொடுத்துத் தன் வயமாக்கினான். இம் முறைகளால் சீரங்கன் பீஜப்பூர் அரசனைப் போரில் முறியடித்துத் துரத்தினான். மூன்றாண்டுகளுக்குள் இவ்வெற்றியின் பயன் முழுதும் வீணாயிற்று. சீரங்கனுக்கும் பெருமக்களில் பலருக்கும் இடையே நடைபெற்ற பூசலைப் பயன்படுத்தி, அப்பெருமக்களுக்கு உதவும் சாக்குடன் கோலகொண்டா அரசன் இப்ராகிம் குதுப்ஷா தன் படைத்தலைவனான முரஹரிராவை அனுப்பி அகோபிலத்தி லிருந்த செல்வங்கொழிக்கும் நரசிம்மமூர்த்தியின் கோயிலைக் கொள்ளையிட்டான். படைத்தலைவன் இஸ்லாமியனல்லதவனா யிருந்து கூட இத்தகைய கொள்ளைகளுக்கு அந்நாட்களில் தடையாயிருந்த தில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் கொள்ளை யடிக்கும் வடதிசைப் புயல் மரபு இஸ்லாமியரல்லாத மராத்திய மன்னரையும் அவர்களின் பிராமணப் படைத்தலைவர் களையும் கோயில் கொள்ளையில் ஈடுபடுத்தத் தயங்கவில்லை. அகோபிலத் தாக்குதலைத் தொடர்ந்து விசயநகர் பேரிழப்புக்கு ஆளாயிற்று. கொண்ட வீடு, வினுகொண்டா, உதயகிரி ஆகிய கோட்டைகளைச் சுற்றிலும் கடும் போராட் டங்கள் நடைபெற்றன. அப்பகுதிகள் யாவும் கோலகொண்டா வசமாயின. பெனுகொண்டாப் பகுதி அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாவதைக் கண்ட சீரங்கன் தலைநகரை நிலையாகவே பெனுகொண்டாவிலிருந்து சந்திரகிரிக்கு மாற்றிக்கொண்டான். மதுரையில் இதே சமயம் கிருட்டிணப்ப நாயகனுக்குப்பின் அவன் மகன் வீரப்ப நாயகன் (1572-1595) ஆளத்தொடங்கி யிருந்தான். தஞ்சையில் பேரரசன் அச்சுததேவராயன் மைத்துனி கணவனான செவ்வப்ப நாயகனுக்குப்பின் அவன் புதல்வன் அச்சுநாயகன் தவிசேறியிருந்தான். புராணகால மாவலியின் மரபினர் என்று தம்மைப் பெருமையுடன் குறித்துக் கொண்ட மாவலிவாணாதிராயர் என்ற குடித்தலைவன் இச்சமயம் மதுரை தஞ்சை அரசுப் பகுதிகளில் வலிமை பெற்றிருந்தான். தன் பழங்குடியின் புகழ் புதுப்பிக்கும் பேரவாவுடன் அவன் காளையார் கோயில், மானாமதுரை ஆகிய இடங்களில் கோட்டைகட்டிக் கொண்டு தன்னை வலுப்படுத்தி வந்தான். தஞ்சை நாயகன் அவனுக்குத் தூண்டுதலும் ஆதரவும் தந்ததனால் அவன் வேகமாக அக்கோட்டைகளைச் சுற்றிலும் தன் ஆட்சியைப் பரப்பத் தொடங்கினான். ஆனால் வீரப்ப நாயகன் தன் முழு ஆற்றலையும் தொடக்கத்திலேயே திரட்டி அவனது வளரும் ஆற்றலைப் பிஞ்சிலேயே முறியடித்தான். மாவலிவாணாதிராயர் குடியினர் மதுரை மண்டலத்தில் மட்டுமன்றித் தஞ்சை மண்டலத்திலும் குடிமன்னராக இருந்தனர். தஞ்சை நாயகன் மதுரை மண்டலத்திலுள்ள வாணாதிராயனுக்கு ஆதரவளித்தது போலவே, மதுரை நாயகர் தஞ்சை மண்டலத்தில் வல்லத்திலிருந்தாண்ட வாணனை ஆதரித்து வந்தனர். தஞ்சை நாயகன் அவனை முறியடித்துத் துரத்தியபின்னும், அவன் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தஞ்சாக்கூர் என்ற தஞ்சையைப் பெற்று அதிலிருந்து ஆட்சி நடத்தினான். மதுரை நாயகன் அவனை மீண்டும் வல்லத்தில் கொண்டு சென்று நிலைபெறுவிக்க விரும்பினாலும், இதில் தானே நேரடியாக முனையாமல் தன் கீழிருந்த சிற்றரசர்களை இவ்வகையில் ஊக்கிப் பின்னிருந்து ஆதரவு செய்து வந்தான். பாண்டியர் இந்நாளில் சிற்றரசராயினும் வலிமையுடன் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டு வந்தனர். அபிராம பாண்டியன் என்பவன் (1552-1584) திருநெல்வேயிலிருந்து ஆண்டதனால் திருநெல்வேலிப் பாண்டியன் என்றழைக்கப் பட்டிருந்தான். அவனுக்குப் பின் அவன் இரு புதல்வர்களுள் அதிவீரராம பாண்டியன் என்ற ஒரு புதல்வன் (1564-1604) கொற்கை யிலிருந்தும், வரதுங்கராம பாண்டியன் என்ற மற்றொரு புதல்வன் (1588) கரிவலம்வந்த நல்லூரிலிருந்தும் சிறந்த கவியரசர்களாகவும், அருளரசர் அல்லது பக்தர்களாகவும் வீரர்களாகவும் விளங்கினர். ‘வெற்றிவேற்கை வீரராமன் சொற்கையாளி குலசேகரன் புகல் நறுந்தொகை: என்று தொடங்கும் ‘வெற்றி வேற்கை’ அல்லது ‘நறுந்தொகை’ அதிவீரராம பாண்டியன் பள்ளிப் பிள்ளைகளுக்காக இயற்றிய சிறுகவிதை ஏடேயாகும். நைடதம் போன்ற பெருங்காவியமும் கூர்மபுராணம், வாயுசங்கிதை, காசி காண்டம் முதலிய பிற ஏடுகளும் அவன் இயற்றியிருந்தான். வரதுங்கராம பாண்டியனோ குட்டித் திருவாசகம் எனும் புகழ்ப் பெயர் பெற்றுள்ள திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, திருக்கருவை வெண்பா வந்தாதி, திருக்கருவைக் கலித்துறை அந்தாதி, பிரமோத்திர காண்டம் ஆகிய பாடலேடுகளை இயற்றியவன் ஆவான். கலைப்புகழ் பெற்ற இப்பாண்டியர் போர்க்களப்புகழிலும் குறைவுபடவில்லை. அவர்கள் விசயநகரப் பேரரசர்க்கும் இன்னும் பெயரளவில் அவர்கள் சார்பிலேயே ஆண்ட மதுரை நாயகர்க்கும் உண்மையானவர்கள். மதுரை நாயகன் பின்னணி ஆதரவுடன் தஞ்சை வாணனுக்கு உதவியாகச் சென்று தஞ்சை நாயகனை எதிர்த்தவர்கள் அவர்களே. 1583-இல் தஞ்சை யரசனான அச்சுதப்ப நாயகனையும் அவன் படைத்தலைவனான வீரப்ப நாயகனையும் வல்லத்திலே கடும் போராற்றி முறியடித்து அவர்கள் வெற்றி வாகை சூடினர். வல்லம் கோட்டை தஞ்சை வாணனிடம் ஒப்படைக்கப்பட்டது. இத்தஞ்சை வாணனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பொய்யாமொழிப் புலவர் என்ற தமிழ்க் கவிஞர் ‘தஞ்சை வாணன் கோவை’ என்ற பாடலேடுயாத்துள்ளனர். அதிவீரராமன் கல்வெட்டுக்களும் இப்போர்ப்புகழ் சாற்றுகின்றன. கல்வெட்டுக்களில் ஒன்றில் தென்காசிக் கலியன் கவிராயன் பாடியதாக வெண்பா ஒன்றும் இடம் பெறுகிறது. ‘பற்றலர்மண கொள்ளு பணிந்தார்க் கரசளிக்கும் கொற்றம் உயர்க்கும் அறம் கூறுமே - வில்தடம்தோள் வில்லவனை வென்றுகொண்ட வீரமா வில்தடம்தோள் வல்லம்எறிந் தான்ஏந்து வாள்’. இரண்டாம் வேங்கடன் எழுச்சி பேரரசன் முதலாம் சீரங்கனுக்கடுத்த இளைய உடன் பிறந்தானான இராமன் தன் அண்ணன் ஆட்சிக் காலத்துக் குள்ளேயே மறைவுற்றிருந்தான். அவன் பிள்ளைகள் சிறுவரா யிருந்தனர். இந்நிலையில் இராமனுக் கடுத்த கடைசி இளவலான வேங்கடனே இரண்டாம் வேங்கடன் (1586-1614) என்ற பெயருடன் பேரரச ஆட்சி கைக்கொண்டான். சீரங்கன் ஆட்சிக் காலத்தளர்ச்சி நீக்கிப் பேரரசு அவன் நாட்களில் மீண்டும் தலைதூக்கிற்று. இராட்சசித் தங்கிடிப் போரின்பின் சரியத் தொடங்கியது. விசயநகரப் பேரரசு மட்டுமன்று. ஒன்றுபட்டு அதை அழிக்கக் கிளர்த்தெழுந்த தென்னக இஸ்லாமிய அரசுகள் ஐந்தனுள், அப் போரினையடுத்து மூன்றாண்டு களுக்குள்ளாகவே ஒன்று மண் கவ்விற்று. இமத்ஷாஹி மரபினர் ஆண்ட பேரரசை அகமதுநகர் அரசே விழுங்கிற்று. ஆனால் அகமதுநகரும் இதன்பின் நீண்டநாள் வாழவில்லை. தவளையை விழுங்கிய பாம்பு கருடனுக்கு எளிதில் இரையாதல் போல, அகமது நகர் 1595-இல் வடதிசைப் புதிய முகலாயப் பேரரசின் தலைவனான அக்பரால் விழுங்கப்பட்டது. தென்னகத்தின் வீர மூதரசியாகிய சாந்த்பீபி அதன் வீழ்ச்சியைப் பல ஆண்டுகள் தடுத்து நின்றும் இறுதியில் சூழ்ச்சிக்கு ஆளாகி அழிவுற்றாள். ஐந்தரசுகளுடன் மூன்றாவ தாகப் பாரீத் ஷாஹீகள் இருந்தாண்ட பீடாரும் இரண்டாம் வேங்கடன் ஆட்சிக் காலத்திலேயே 1609-இல் வடதிசைப் புயலுக்கு இரையாயிற்று. இவ்வாறாக, விசயநகரப் பேரரசில் வடபகுதி நலிவுற்ற பின்னும் தென்பகுதி புதுமலர்ச்சி பெற்றது போல, பகமனிப் பேரரசின் சிதைவுகளான ஐந்தரசுகளிலும் வட திசையிலுள்ள மூன்றும் அழிந்ததன் பின்னும் அரை நூற்றாண்டுக்கு மேலாக பீசப்பூர், கோலகொண்டா என்ற இரு தென்திசை அரசுகளும் வீறுடன் வல்லரசுகளாக வாழ்ந்து புது மலர்ச்சி பெற்றன. ஆயினும் தம் புது மலர்ச்சியை விசயநகரத்தின் புதுமலர்ச்சிக் கெதிராகப் பயன்படுத்தியதனால் அவை விசய நகரத்தையும் அழித்துத் தாமும் அழியத் தாமே காரணமாய மைந்தன. விசயநகரம் வரலாற்று வானில் புகழொளி கான்று அடிவானை எட்டிய ஆண்டு 1672. அந்த ஆண்டிலேயே கோலகொண்டா வீழ்ச்சியுற்றது. பீராரும் அதன்பின் பலநாள் வாழவில்லை; ஒரு சில ஆண்டுகளுக்குள் தட்டுத்தடுமாறி 1690-இல் அழிவு ஏற்றது. தென்னகப் புயலை விழுங்கிய புயலான முகலாயப் பேரரசு கூட விசயநகர வீழ்ச்சியினால் பாதிக்கப்படத் தவறவில்லை. 1707-லேயே அப்பேரரசு பொலிவிழந்து விட்டது. மறுமலர்ச்சியுற்ற விசயநகரம் இரண்டாம் வேங்கடன் ஆட்சியிலேயே மறுமலர்ச்சி தொடங்கிய புயலரசுகளுடன் மோதத் தொடங்கிற்று என்னலாம். கொண்ட வீட்டுப் பகுதியில் வேங்கடன் கோலகொண்டா அரசனுக் கெதிராகக் கிளர்ச்சி தூண்டி வந்தான். இதற்கு எதிர் செயலாகக் கோலகொண்டா அரசன் கடப்பை, அனந்தப்பூர்ப் பகுதிகளில் கிளர்ச்சிகளுக்குத் தூபமிட்டதுடன் பெனுகொண்டாக் கோட்டையையும் தாக்கினான். நேரடியாக உடனே இதனைச் சமாளிக்கும் ஆற்றல் இல்லாத நிலையில் வேங்கடன் பணிந்து சமரச ஒப்பந்தம் செய்து கொண்டான். ஆனால் இவ்வொப்பந்தத் தால் கிடைத்த ஓய்வை அவன் நன்கு பயன்படுத்தித் தன்னை முற்றிலும் வலுப்படுத்திக் கொண்டு மீண்டும் போர்க்கெழுந்தான். இத்தடவை வேங்கடன் கைகளே மேலோங்கின. குத்தி, கண்டிகோட்டை முதலிய இடங்கள் அவன் கைவசப்பட்டன. கண்டிக் கோட்டை முற்றுகையைத் தளர்த்துவதற்காகக் கோல கொண்டாப் படைத்தலைவன் ருஸ்தம்கானுடன் அனுப்பப் பட்ட எதிரிப்படைகளை வேங்கடன் 1589-இல் பெண்ணை யாற்றங்கரையில் பெரும் போரிட்டு வென்று புகழ்நாட்டினான். உதயகிரிக் கோட்டையும் வேங்கடன் கைப்பட்டது. விசயநகரப் பேரரசு மீண்டும் ஒரு தடவை கிருட்டிணையாறுவரை எட்டிற்று. பேரரசின் உச்சப்புகழ்க் காலத்துக்குரிய பரப்பில் இச்சமயம் கொண்டவீடு ஒன்று மட்டுமே எதிரியின் கையில் இருந்தது. யாசம காவியம் பேரரசின் புற எதிரிகளை வென்றபின்கூட வேங்கடன் அமைதி காணக் கூடவில்லை. பெருமக்கள் பலரும் பலவிடங்களில் அவனுக் கெதிராகக் கிளர்ந்தெழுந்தனர். ஆனால் இக்கிளர்ச்சிகளில் அவனுக்கு உண்மையாயிருந்து துணை தந்த பெருமக்களும் சிலர் இருந்தனர். இவர்களில் முக்கியமானவர்கள் வேலுகோடி மரபினரே. கிளர்ச்சித் தலைவர்களுள் அரசருக்கும் பேரரசருக்கும் அச்சமும் பொறாமையும் காட்டத்தக்க வலிமையும் செல்வவளமும் உடையவன் வேலூர்த் தலைவன் லிங்கமன். அவன் வளர்ச்சியைத் தடுக்கும் முறையில் வேங்கடன் வேலுகொடி மரபினனான கஸ்தூரி ரங்கப்பாவுக்கு அருகிலுள்ள பேரம் பேட்டுப் பண்ணையை அளித்து அவன் வலிமையைப் பெருக்கியிருந்தான். தென்னக வாழ்விலும் பேரரச வரலாற்றிலும் தன் புகழ் வெற்றிகளைப் பொன்னெழுத்துக்களில் வீர காவியமாகப் பொறித்த வீரயாசம நாயுடு இந்தக் கஸ்தூரி ரங்கப்பாவின் அருந்தவப் புதல்வனே யாவான். கோலாற்றுப் பகுதியிலிருந்த திம்மராயகௌடன் கிளர்ந்தெழுந்து வேங்கடனால் எளிதில் அடக்கப்பட்டான். இராயல சீமா என்று அழைக்கப் பட்ட கடப்பை அனந்தப்பூர்ப் பகுதியில் நந்தேலா கிருட்டிணமராயன் என்ற ஆற்றல் சான்ற தலைவன் பெருமக்கள் பலரைத் திரட்டிக் கொண்டு அவர்கள் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்தான். 1598-இல் வேங்கடன் ஜம்புலமதுகு என்ற புகழ்க்களத்தில் அவனை முறியடித்தான். வீரயாசம நாயுடுவின் கன்னிப் போராக இது அமைந்தது. போரில் தோற்ற கிருட்டிண மராயன் நந்தேலாக் கோட்டைக்குள் புகுந்து இறுதிப் போராற்றினான். மூன்றுமாத முற்றுகைக்குப்பின் அக்கோட்டை வீழ்ச்சியுற்றது. எஞ்சிய காலமுழுவதும் கிருட்டிண மராயன் சந்திரகிரிக்கோட்டைச் சிறையில் கழித்தான். ஜம்புலமதுகுப் போரில் 1598-இல் தலைக்காவிரியாகத் தொடங்கிய வீரயாசம நாயுடுவின் புகழாறு உத்தரமேரூர்ப் போர் (1601), மின்னல்போர், வேலூர்ப் போர் (1603), செங்கற் பட்டுப் போர் (1608), தோப்பூர்ப் போர், பாளையங்கோட்டைப் போர் (1617) ஆகிய எண்ணற்ற வெற்றிப் பேராறுகளுடன் கலந்து அகன்ற காவிரியாய்த் தென்னகப் புகழில் கலப்புற்றது. வேங்கடன் ஆட்சியில் அடுத்தபடியாகக் கிளர்ச்சிக் கெழுந் தவன் இராமராயன் வீரஇளவல் வேங்கடபதியின் பெயரனான கந்தனவோலு கோபாலராயன் என்பவன். தனக்கு உண்மையான பெருமக்கள் பலரின் உதவியுடன் வேங்கடன் அவனைக் கீழடக்கி, அவன் பெருஞ்செல்வங்களை அப்பெரு மக்களிடையே பகிர்ந்து கொடுத்துத் தன்னை வலுப்படுத்திக் கொண்டான். இங்ஙனம் புது வளர்ச்சியடைந்த குடிகளுள் பேரம்பேட்டில் முன்பே நிறுவப்பட்டிருந்த யாசமநாயுடுவின் வேலுகொடி மரபும் ஒன்று. அடுத்த மாபெரும் கிளர்ச்சிப் போராட்டத்தில் இது வேங்கடனுக்குப் பேருதவியாயிருந்தது. வேலூரிலாண்ட லிங்கமன் எழுச்சி கிளர்ச்சி என்ற பெயரின் எல்லைதாண்டிப் பேரரசின் எல்லையளாவிய ஒரு பெரும் போராட்டமாக வளர்ந்தது. அவன் பல தலைவர்களைத் திரட்டிக் கொண்டு பேரரசுக்கு எதிராகப் போர் தொடுக்கவே முனைந்தான். அவன் துணைவர்களுள் வலிமைமிக்கவன் உத்தரமேரூர்க் கோட்டையாண்ட நாகன் என்பவன். போராட்டத் தொடக்கத் திலேயே வீரயாசம நாயுடு அவனை முறியடித்து உத்திரமேரூர்க் கோட்டை யைக் கைப்பற்றினான். நாகன் கோட்டையை விட்டே ஓடி லிங்கமனிடம் அடைக்கலம் புகுந்தான். அதை மீட்கும் பணியில் லிங்கமன் தான்மட்டும் தனித்து நின்று உதவத் துணியவில்லை. தனக்குத் துணை நிற்கும்படி மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய தமிழக முழுவதுமே கடலாகப் பொங்கியெழுந்த இவ்வூழிப் பெரும் படைக்கு நாகநாயகனின் மைத்துனனான தாவுள பரப்பய்யாவே படைத் தலைவனானான். உத்தரமேரூரில் 1601-இல் நடந்த மாபெரும் போராட்டத்தில் யாசமநாயுடு முகிற்கூட்டங்களிடையே விளையாடும் மின்னற் கொடியெனச் சுழன்று சுழன்று வீரவெற்றி நடனமாடினான். யாசமன் புகழ் தென்னகமெங்கும் பரந்தது. வீழ்ச்சி யூழியில் விசயநகரம் எழுச்சியூழிப் புகழை ஒருகணம் எட்டிப் பிடித்தது போன்ற நிலை ஏற்பட்டிருந்தது. யாசமன் உடன்பிறந்தானான சிங்கனும் இப்போரில் குறிப்பிடத்தக்க பங்கு கொண்டிருந்தான். வேங்கடன் யாசமன் சேவையின் மதிப்புணர்ந்து அவனுக்குப் பேரரசுச் சிறப்புக்கள் செய்து பாராட்டினான். இப்போரின்பின் லிங்கமனின் தலைநகராகிய வேலூரைக் கைப்பற்றும்படி பேரரசன் வேங்கடன் தன் படைத்தலைவர்களுள் ஒருவனான தாமர்ல சென்னவேங்கடனுக்குக் கட்டளையிட்டான். காளத்திக் கோமானான அங்கபூகதியும், வந்தவாசித் தலைவனான தாமர்ல வேங்கடப்பனும், பூவிருந்தவல்லித் தலைவனான தாமர்ல ஐயப்பனும் அவன் உடன் பிறந்தவர்கள். அத்துடன் தன் தாய் தந்தையர் பெயராலேயே சென்னசாகரம் என்ற ஒரு பேரேரியையும் கட்டி அவன் புகழ்பெற்றிருந்தான். இப் பல்வேறுபட்ட புகழ்மாலைகளுடன் வீரப்புகழும் அவனை நாடி நின்றது. வேலூருக்கு வெளியே வந்து போரிட்ட லிங்கமனை அவன் 1603-இல் மின்னல் என்ற ஊரருகே நடந்த போரில் முறியடித்து வீறுகொண்டான். வேலூருக்கருகிலேயே மற்றும் ஒரு போரில் தாமர்ல சென்ன வேங்கடனும் யாசமநாயுடுவும் லிங்கமனை முறியடித்தனர். இரண்டுமாத முற்றுகைக்குப்பின் வேலூரும் கைப்பற்றப்பட்டது. பேரரசன் தலைநகரையும் அரண்மனையையும் விட வேலூரும் கைப்பற்றப்பட்டது. பேரரசன் தலைநகரையும் அரண்மனை யையும் விட வேலூரும் லிங்கமன் மாளிகையும் சீரும் சிறப்பும் செல்வச் செருக்கும் மிக்கதாயிருந்ததனால், பேரரசன் வேங்கடன் பேரரசின் தலைநகரை மூன்றாவது தடவையாக வேலூருக்கே மாற்றிக்கொண்டான். விசயநகரத்திலிருந்து பெனுகொண்டா வுக்கும், பெனுகொண்டாவிலிருந்து சந்திரகிரிக்கும் 1565-லிருந்து மாறி வந்த பேரரசுத் தலைமை 1603-இல் வேலூரில் நிலை பேறுற்றது. தாமர்ல சென்னவேங்கடநாயகன் வேலூர் முற்றுகையிலீடு பட்டிருந்த சமயத்தில் பேரரசனும் வேலுகோடி யாசம நாயுடுவும் தெற்கே தொண்டை மண்டலம், சோணாடு ஆகியவற்றி னூடாகத் தென்தமிழக மெங்கணும் சென்று தாக்குதல் நடத்தினார்கள். செங்கற்பட்டுப் போர், திருச்சிராப்பள்ளி போர், மதுரைப் போர், செஞ்சிப் போர் ஆகியவற்றில் லிங்கமனுக்கு அளித்த ஆதரவை முன்னிட்டு அவர்கள் தமிழக நாயகர்களைத் தண்டித் தொறுத்தனர். தஞ்சையில் இப்போது ஆண்டவன் முதல் தஞ்சை நாயகனான செவ்வப்பன் பெயரனும், இரண்டாம் நாயகனான அச்சுதனின் புதல்வனுமான இரகுநாத நாயகன் ஆவான். அவன் நாட்களில் தஞ்சை வெற்றிவீரப் புகழிலும், கலைசெல்வச் செழிப்பிலும் முதன்மையுற்றோங்கியிருந்தது. செங்கற்பட்டு, திருச்சிராப்பள்ளி, மதுரைப் போர்களில் மற்றத் தமிழ் நாயகர்களுடன் சேர்ந்து தோல்வி கண்டபின் அவன் பேரரசன் பக்கமே திரும்பி விட்டான். அத்துடன் இறுதிப் போரில் முறிவுற்றுச் சிறைப்பட்ட செஞ்சி நாயகன் கிருட்டிணப்பனையும் அவன் தன் செல்வாக்கின் மூலமே விடுவித்து உதவினான். மதுரைநாயகனாக வீரப்பநாயகனுக்குப்பின் வந்தவர்கள் இரண்டாம் கிருட்டிணப்ப நாயகன் (1595-1601), முத்துக் கிருட்டிணப்ப நாயகன் (1601-1609) ஆகியவர்கள், இவர்களில் முத்துக்கிருட்டிணப்பன் இராமேசுவரம் யாத்திரிககிர்களுக்குப் பாதுகாப்பாக முந்தய நாயகர்கள் காடுவெட்டித் திருத்திச் சீரமைத்த மறவர் குடித்தலைவர்களுக்கு அம்முன்னோர் வழியே நின்று ஆதரவு தந்தான். அத்துடன் அத்தலைவர்களில் முதன்மையாகச் சடைக்கத்தேவன் (1605-1623) என்பவனுக்கு மறவர் நாட்டுத் தலைமையையும் சேதுபதி என்ற பட்டத்தையும் அளித்து மேலும் நாட்டாட்சியை ஒழுங்கு படுத்தினான். உடையன் சேதுபதி அல்லது தளவாய் சேதுபதி என்ற பெயருடன் அவன் இராமநாதபுரம், போகலூர் ஆகிய இடங்களில் கோட்டைகட்டி ஆளத் தொடங்கினான். மதுரைநாயகனுடன் நட்பாயிருந்து கொண்டே போர்ச்சு கீசியர் கரையோரங்களில் வளர்ந்து வந்த காலம் இதுவே. அத்துடன் ராபர்ட்-டி-நோபிலி என்ற கிரித்தவ சமய ஊழியர் இச்சமயத்தில் தமிழகத்தில் கிறித்தவ சமயம் பரப்பியதுடன், அச்சுத் தொழிலுக்கும் புதிய உரைநடை இலக்கியத்துக்கும் அடிகோலினார். மதுரைநாயகன் கிருட்டிணப்பன் இச்சமயம் பேரரசனுக்குத் திறைகொடுக்கத் தவறியதனை முன்னிட்டுப் பேரரசன் தன் அண்ணன் மகனான திருமலையை மதுரைக்கு அனுப்பினான். அவன் மதுரை சென்று கிருட்டிணப்பநாயகனை வென்று அடக்கித் திறைகொண்டு மீண்டான். ஆனால் இதனால் செருக்குக் கொண்டு அவன் பேரரசை மதிக்காமல் வீறாப்புடன் நடக்கத் தொடங்கினான். அச்சமயம் பேரரசனுக்கும் அவனுக்கும் இடையேயிருந்த பிளவைப் பயன்படுத்தி மைசூரை ஆண்ட சிற்றரசனான இராச உடையார் (1578-1617) மண்டலத் தலைநகரான சீரங்கப்பட்ட ணத்தைத் தாக்கிக் கைப்பற்றினான். தன்னை மதியாத உறவைவிட எதிரி தொடர்பே சிறந்ததெனக் கருதிப் பேரரசன் வாளா இருந்து விட்டான். அத்துடன் புதுவெற்றியாளன் பேரரசன் நட்புக் கோரிய போது, அவன் புதுவெற்றியை ஏற்று அந்நட்பையும் அளித்தான். தமிழக நாயக அரசுகளுக்கருகே இவ்வாறு ஒரு புதிய வல்லரசு மரபு தளிர்த்தது. இரண்டாம் சீரங்கன் : பேரரசின் அரசுரிமைப் போராட்டம் இரண்டாம் வேங்கடனுக்குப் பின் அவன் அண்ணன் மகன் இரண்டாம் சீரங்கன் (1614-1618) தவிசேறினான். ஆனால் அவன் அரசுரிமைக்கு வலிமை வாய்ந்த போட்டி எழுந்தது. வேங்கடனின் மனைவியருள் அவன் பாசத்துக்கு மிகுதியும் ஆளானவள் கொப்பூரி ஜக்கராயன் என்பவனின் உடன்பிறந்த நங்கை. வேங்கடனுக்குப் பிள்ளையில்லாவிட்டாலும் அவள் தான் பிள்ளை பெற்றதாகப் பாவனை செய்து ஒரு பிள்ளையை வளர்த்தாள். அது தன் மகனல்ல என்று தெரிந்தும் அரசன் மனைவியிடம் கொண்ட பாசத்தால் மனமார நம்பியவன் போலப் பாவித்தான். அப்போலி இளவரசனின் பெயரால் அரசுரிமை கோரிக் கொப்பூரி ஜக்கராயன் கிளர்ந்தெழுந்தான். திம்மராஜன், மகராஜு முதலிய பெருமக்கள் ஆதரவுடன் அவன் சீரங்கனுக்கெதிராகக் கொடி தூக்கினான். சீரங்கனை வீர யாசம நாயுடு ஆதரித்து நின்றான். ஆயினும் கொப்பூரி ஜக்கராயன் கையே மேலோங்கிற்று. அவன் சீரங்க னையும் அவன் மகன் இராமதேவனையும் குடும்பத்தினரையும் சிறைப்படுத்திவிட்டுப் போலி இளவரசனையே முடிசூட்டினான். யாசமநாயுடு துணி வெளுப்பவன் ஒருவன் உதவியுடன் துணி மூட்டையினுள் இளவரசன் இராமதேவனை ஒளித்து வைத்துத் தப்பும்படி செய்தான். சுரங்க வழியமைத்தோ, சிறைக்கூடம் தகர்த்தோ சீரங்கனை விடுவிக்கவும் அவன் முயற்சிகள் செய்தான். ஆனால் இம்முயற்சிகள் தோல்வியுற்றதுடன் நிற்கவில்லை. அம் முயற்சிகளின் பயனாகச் சிறைக் கூடத்திலிருந்த சீரங்கனும் அவன் உறவினரும் ஒருவர் விடாமல் கொன்றொழிக்கப்பட்டனர். தப்பி விட்ட இளவரசன் இராமதேவனையும் கைப்பற்றி அழிக்க அவன் முற்பட்டான். குழந்தை இராமதேவனுடன் உயிரைக் கையில்பிடித்துக் கொண்டு யாசமநாயுடு தஞ்சை அரசன் இரகுநாத நாயகனிடம் தஞ்சம்புக எண்ணி ஓடினான். அவர்கள் இக்கட்டான நிலையறிந்து இரகுநாதநாயகன் அவர்களை எதிர் சென்று தேடிக்காத்தான். இவ்வாறாகச் சீரங்கன் இறந்த பின்னும் அவன் மகன் உரிமைக்காகவும், அதற்கெதிராகப் போலி இளவரசன் உரிமைக்காகவும், அரசுரிமைப் போராட்டம் மும்முரமாகத் தொடர்ந்தது. இராமதேவனைத் தஞ்சைநாயகன் இரகுநாதனும் யாசம நாயுடுவும் ஆதரித்து நின்றனர். எதிர்புறம் போலி இளவரசன் உரிமைக்காகக் கொப்பூரி ஜக்கராயனுடன் செஞ்சி மதுரை நாயகர்களும், மதுரைநாயகன் துணைவர்களாகத் திருநெல்வேலிப் பாண்டியரும் திருவாங்கூர் அரசனும் போர்ச்சுகீசியரும் ஒன்று பட்டு நின்று போராடினர். உத்தரமேரூர்ப் போரைப் போலவே தமிழகத்தின் போராகத் தோப்பூரில் 1616-ல் நடைபெற்ற போராட்டம் விளங்கிற்று. இப்போரிலும் காவிய வீரன் யாசம நாயுடு வெற்றி வாகை சூடிக் கொக்கரித்தான். ஜக்கராயனும் அவன் படைத் தலைவர்கள் இருவரும் போரில் மாண்டனர். முத்து கிருட்டிணப்பனுக்குப் பின் மதுரை ஆண்டநாயகன் முத்துவீரப்பன் (1609-1623) போரில் வீரமாகப் பொருதும் இறுதியில் தோல்வி கண்டு சிறைப் பட்டான். ஆனால் இரகுநாதன் அவனை விடுதலை செய்து அவனை நண்பனாக நடத்தினான். நட்பை ஏற்று அதன் அறிகுறியாக மதுரை முத்துவீரப்ப நாயகன் தஞ்சை இரகுநாத நாயக்கன் புதல்வியை மணஞ் செய்துகொண்டான். செஞ்சிநாயகன் கிருட்டிணப்பன் இப்போரில் தோற்றோடியது மட்டுமன்றி அடுத்தடுத்துப் போரிட்டுச் செஞ்சி நீங்கலான எல்லாக் கோட்டைகளையும் இழந்து சிறைப்பட்டான். ஆனால் இங்கும் பெருந்தன்மையும் நட்புப் பாசமும் வாய்ந்த இரகுநாதன். தலையிட்டு அவனை விடுவித்ததுடன் அவன் நாட்டையும் அவனுக்கே திருப்பி அளித்தான். மதுரை நாயகன் தஞ்சையில் போரிட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சமயம் பார்த்து மைசூரின் புதிய ஆட்சியாளனான இராச உடையார் மதுரையைத் தாக்க முற்பட்டான். அரசனும் அரசன் படைகளும் வெளியேறிச் சென்ற இச்சமயத்தில்கூட விரூபாட்ச பாளையக்காரனும் கன்னிவாடிப் பாளையக்காரனும் மக்கட் படை திரட்டி நாடுகாத்து மைசூர்ப் படைகளைத் துரத்தினர். இச்செயல்களைப் பாராட்டி மதுரைநாயகன் மீண்டதும் அவர்களுக்கு முறையே ‘பாதை காவல்’ என்னும் பட்டத்தையும், ‘சின்ன மைசூரான்’ என்னும் பட்டத்தையும் வழங்கிப் பெருமைப்படுத்தினான். தோப்பூர்ப் போரின் பின் கொப்பூரி ஜக்கராயனின் கட்சி பெரிதும் தளர்ந்தது. வீரயாசம நாயுடுவும் இரகுநாதநாயகனும் இளவரசன் இராமதேவனை 1618-இல் குடந்தைக்கு இட்டுச் சென்று அங்கேயே அவனை விசயநகரப் பேரரசனாக முடி சூட்டினர். 1602-இல் அவன் மீண்டும் வேலூரில் பேராரவாரத் துடன் முடிசூட்டப் பெற்றான். தென்னகத் தேசீய மையம் விசயநகர காலத்திறுதியில் மீட்டும் தமிழக நோக்கி நகர்ந்துவந்த போக்கைக் குடந்தை முடிசூட்டு விழா வலியுறுத்திக் காட்டும் ஒரு சின்னமாய் அமைந்ததென்னலாம். பேரரசை ஆக்கும் ஆற்றலும் அழிக்கும் ஆற்றலும் இதற்குள் தமிழகத்தின் எல்லைக்குள்ளேயே அமைந்து விட்டன. இராமதேவன் கால நிலைமைகள் இரண்டாம் சீரங்கன் சிறையில் 1624-லேயே கொல்லப் பட்டாலும் அவன் பெயராலேயே இளவரசன் இராமதேவன் சார்பில் அரசுரிமைப் போராட்டம் நடந்த கால முழுவதும் அவன் ஆட்சியாகவே கொள்ளப்படுகிறது. ஆனால் அந்தப் போராட்டம் இராமதேவன் (1618-1630) ஆட்சித் தொடக்கத்தில் வேகம் குறைந்ததேயன்றி முடிவுற்றுவிடவில்லை. ஜக்கராயன் இளவலான எதிராசன் போரை விடாது நீடித்தே வந்தான். ஆயினும் 1619-இல் போலி இளவரசன் இறந்துவிட்டதனால் அப்போராட்டத்தில் தயக்கமட்டுமன்றித் திடீர்த் திசை மாறுதலும் ஏற்பட்டது. இனி போரை நடத்துவதில் பொருளில்லையென்று கண்ட எதிராசன் பேரரசனுடன் சமரசம் செய்து கொண்டான். பேரரசனும் அவனிடம் நேசம் காட்டி அவன் புதல்வியை மணந்து கொண்டு அவனுடன் ஒன்றுபட்டான். ஆனால் இந்தச் சுமூக முடிவு யாசம நாயுடுவுக்கு மட்டும் மனக் கசப்பை அளித்தது. ஏனெனில் போரின்புகழ் வெற்றிகளுக்குப் பரிசாக அவன் கொப்பூரிகுடியின் செல்வத்தையே எதிர்பார்த்திருந்தான். அக்குடி புத்துயர்வு பெற்று நட்பானது கண்டு, தன் துணையாலேயே தவிசேறிய பேரரசனை அவன் எதிர்க்க முற்பட்டான். அரசுரிமைப் போராட்டம் எதிர்பாராத முறையில் திசைமாறி அரசியல் போராட்டமாயிற்று. ஆனால் புது வலிமை பெற்றிருந்த இராமதேவன் அவனை எளிதில் அடக்கினான். வீரயாசம நாயுடு பல்லாயிரங் களங்களில் போராடி மயிரிழை நெருக்கடிகளினின்றும் சாவினின்றும் இளமைக்கால முழுதும் காத்துத் தவிசேற்றிய இப்போது அவனுக்கு இறுதித் தோல்வியையும் அழிவையும் பரிசாகத்தந்தது. ஆனால் வாழ்வில் அந்தக் குழந்தையோ, அதன் ஆதரவு பெற்ற எவரோ என்றும் பெற முடியாத புகழ்ப்பரிசை மக்கள் உள்ளங்களிலும் கலைப் படைப்புக்களிலும் வீர யாசம நாயுடு பெற்றான். ஆடுகள் எத்தனை எத்தனை சேரினும் அடல்கொளும் புலியேற்றுக் கீடாகுமோ? கூடுஜக்கர்கள்கோடி, எழுபது கோடி - மக்கர்கள் ஏழொடேழ் கோடியா நாடும்நாயக ராயர்கள் சேரினும் நீடுவெங்கள நாயகன் யாசமன் பீடுசான்ற புகழின் ஞாயிற்றின் ஊடுலாவும் ஓர் தூசுக்கீடாவரோ? என்று ‘சதுபத்திய ரத்தினாகரம்’ என்ற அந்நாளைய சமஸ்கிருத காவியம் அவன் வீரத்தின் உயர்வை வாயாரப் பாராட்டுகிறது. அரசுரிமைப் போராட்டம் முடிவதற்குள்ளாகவே அதனால் ஏற்பட்ட பேரரசின் தளர்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டு கோல்கொண்டா அரசன் அப்துல்லா (1611-1672) தன் படைத் தலைவன் அப்துல்கானை அனுப்பி 1619-இல் கர்னூல் மீது தாக்குதல் தொடங்கினான். அக்கோட்டையின் வீரக் காவலனான கோபாலராயன் அவனை முறியடித்தான். அத்துடன் கோல் கொண்டாவுக்கும் விசயநகரப் பேரரசுக்குமிடையே துங்கபத் திரையையே எல்லையாக ஏற்கும்படி அவன் கோல்கொண்டாவை வற்புறுத்தி வெற்றி கண்டான். ஆயினும் இதனையடுத்து 1624-இல் நடைபெற்ற அடுத்த கடுந்தாக்குதலில் கோபாலராயன் கோட்டையை நிலையாகக் கைவிடும்படி நேர்ந்தது. பேரரசின் சரிவு இதன் பின் வேகமாயிற்று. மதுரையில் முத்துவீரப்பனுக்குப் பின் ஆண்டவன் திருமலை நாயகன் (1621-1659) மைசூரில் ஆண்ட முதலாம் சாமராசனின் படைத்தலைவனான ஹரசூரா என்ற கரசூரி நந்திராஜன் இவ் வாட்சியில் திண்டுக்கல்மீது படையெடுத்தான். இத்தடவையும் மதுரை தளவாய் இராமப்பையன், கன்னிவாடிப் பாளையக்காரன் இரங்கண்ண நாயகன் ஆகியவர்களால் மைசூர்ப்படை முறியடித்து, மைசூருக்கே செல்லும்வரை துரத்தியடிக்கப் பட்டது. பேரரசன் இராமராயன் காலத்திலிருந்து பேரரசின் மண்டலப் பிரதிநிதியான மதுரை நாயகனுக்குத் திறைகொடாதிருந்த திருவாங்கூர் அரசரையும் திருமலை நாயகன் 1547-இல் முறியடித்துப் பணியவைத்தான். அவன் தலையீட்டால் இராமநாதபுரத்திலும் ஓர் அரசுரிமைப்பூசல் வீசி அலைக்கழித்திருந்தது. மூன்றாம் வேங்கடன் இராமதேவனுக்குப் பின் அரசுரிமை மீண்டும் முதலாம் சீரங்கன் நேர் கால்வழியில் திரும்பிற்று. முதலாம் சீரங்கனின் பெயரனான பெத்த வேங்கடன் என்ற மூன்றாம் வேங்கடன் (1603-1642) ஆட்சியில் முந்தய அரசனின் பெரியப்பனான திம்மராயன் தனக்கே அரசுரிமை என்று போட்டியிட்டான். அவன் அரசுரிமையைத் தானே கைப்பற்றிக்கொண்டு வேங்கடனை அனகொண்டியில் அடைத்து வைத்தான். ஆனால் மூன்றாம் வேங்கடனின் தம்பி மகனான இளவரசன் சீரங்கன் வேங்கடனுக் காகக் கிளர்ந்தெழுந்து பழவேற்காட்டு டச்சுக்காரரின் உதவியுடன் வேங்கடனை ஆதரித்தாலும், செஞ்சி தஞ்சை மதுரை அரசர்கள் வேங்கடன் பக்கமாகவே இருந்ததாலும் திம்மராயன் வலிமை கரைந்தது. 1635-இல் அவன் இறந்த பின் மூன்றாம் வேங்கடன் ஆட்சி நிலைத்தது. ஆட்சித் தொடக்கத்தில் பீசப்பூர் அரசன் பெனுகொண்டாவைத் தாக்க முற்பட்டான். வேங்கடன் உடனே கொண்டி நாயகன் என்ற படைத்தலைவனைக் கோட்டைப் பொறுப்பில் விட்டுவிட்டு வேலூர் சென்று தங்கினான். பேரரசுக்கால முழுவதுமே இது முதல் கொண்டிநாயகன் அக்கோட்டையைக் கண்போலக் காத்துப் பேணினான். பேரரசன் செஞ்சிநாயகனிடமே தனி நம்பும் தனி ஆதரவும் கொண்டிருப்பதாகக் கருதிய மதுரை தஞ்சை நாயகர்கள் ஒருங்கு சேர்ந்து பேரரசருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். போரிடையே பேரரசனைக் கைப்பற்றச் சதிகள் செய்தனர். ஆனால் போரும் சதியும் ஒருங்கே தோல்வியடைந்து விட்டதால் 1637-இல் அவர்கள் அவசர அவசரமாகச் சமரசம் செய்து கொண்டனர். தவிசேறுவதில் பேரரசனுக்குப் பெருந்துணை தந்த இளவரசன் சீரங்கன் பீசப்பூர் அரசனுடன் சேர்ந்து கொண்டு பேரரசு மீது படை யெடுத்தான். இருவர் படைகளும் சேர்ந்து 1638-இல் பங்களூரை முற்றுகை யிட்டன. வேங்கடன் பெரும் பொருள் கொடுத்து எதிரிகளை அனுப்பிவிட்டுத் தமிழ் நாயகர்கள் நட்பால் தன்னைப் பலப்படுத்திக் கொண்டான். அதன் பயனாக 1641-இல் பீசப்பூர்ப் படைத்தலைவன் ரணதுல்லா கானும் சீரங்கனும் வேலூர் வரை படையெடுத்து வந்தபோது தமிழரசர் உதவினர். ஆனாலும் இத்தடவை பீசப்பூர் மேல்திசையிலும், கோலகொண்டா கீழ்திசையிலும் முன்னேறுவது என்று அவ்வரசரிடையே ஒப்பந்தமும் முழுமூச்சான முயற்சியும் ஏற்பட்டிருந்ததனால், விசயநகரப் பேரரசு தள்ளாடத் தொடங்கிற்று. நெல்லூர்ப் பகுதியில் அரும கோவாவில் வேலுகோடி திம்மராயனும், பூவிருந்தவல்லியில் தாமர்ல வேங்கடனும் கோல்கொண்டாவை எதிர்த்து நின்றும், கோல்கொண்டாவின் முன்னேற்றம் தடைபடவில்லை. வேலூரும் வீழ்ச்சி நோக்கியது கண்டு, அந்நகரை எதிரியின் கையில் விட்டுவிட்டுப் பேரரசன் சித்தூர்க் காடுகளில் திரிந்து அங்கேயே மனமுறிவால் உயிர் நீத்தான். கடைசிப் பேரரசன் மூன்றாம் சீரங்கன் பேரரசை எதிர்த்து எதிரியுடன் படையெடுத்து வந்த இளவரசன் சீரங்கனே முந்தய பேரரசன் மறைவு கேட்டவுடன் எதிரிகளின் கூட்டிலிருந்து விலகி விரைந்து வந்து மூன்றாம் சீரங்கன் (1642-1649) என்ற பெயருடன் பேரரச பீடத்தில் கடைசிப் பேரரசனாக அமர்ந்தான். அவன் பேரவாவும், வீரமும், சூழ்ச்சியும் உடையவன். ஆயினும் சூழ்நிலையறிந்து நடக்கும் பண்பும் நெளிவு குழைவுகளும் அவனிடம் இல்லாததால் இந்த நற்பண்புகள் பயன்படவில்லை. அத்துடன் அவன் காலத்துக்குள்ளேயே பேரரசின் சூழலில் பெருமாறுதலும் சீரழிவும் ஏற்பட்டிருந்தன. முந்தய பேரரசன் ஆட்சியில் பேரரசுக் கெதிரான அவன் செயல்களே அந்நிலையை வளர்க்கப் பெரிதும் உதவியிருந்தன. மைசூரில் ஆட்சி செய்த சாமராஜ உடையார் காலத்திற்குள் அப்புதிய வல்லரசு மதுரை நாயக அரசின் வட எல்லையையும் பேரரசின் சென்னப்பட்டண மண்டலத்தில் சேலம் நீங்கலான பகுதிகளையும் உட்கொள்ளுமளவுக்கு வளர்ந்திருந்தது. அதே சமயம் மைசூருக்குப் போட்டியாக இக்கேரி என்ற மற்றொரு வல்லரசு எழுந்து வீரப்ப நாயகன் (1629-1645), அவன் மகன் செவ்வப்ப நாயகன் (1645-1660) ஆகியவர்கள் ஆட்சிக் காலங்களில் புது மலர்ச்சி பெற்று வந்தது. சரிந்துவரும் பேரரசையும், வளர்ந்து வரும் இந்த வல்லரசுகளையும் பீசப்பூர் கோல் கொண்டா மரபுகள் நச்சுச் சிலந்திகளாக வலையிட்டுக் கௌவக் காத்து உலவின. நாயக ஈக்களையும் முஸ்லிம் சிலந்திகளையும் ஒருங்கே விழுங்கப் பதியம் போடும் பல்லியாக வடதிசைமுகலாயப் பேரரசும், அனைத்தையும் வானின்று தாக்கும் வல்லூறாக மராத்திய இனமும் தொலை நோட்டமிட்டு வந்தன. பீசப்பூர் படைத்தலைவருள் ஒருவனாயிருந்த ஷாஜி பான்ஸ்லேயும் அவன் பிள்ளைகளான ஏகோஜி, சிவாஜி ஆகியவர்களும் வானில் சூழ்ந்து வட்டமிட்ட மராத்திய இனத்தின் முக்கவர் முனைகளாய் அமைந்திருந்தனர். மூன்றாம் சீரங்கன் பட்டம்பெற்ற ஆண்டாகிய 1642-க்குள் பீஜப்பூர்ப் படைத்தலைவன் ஷாஜியின் வீரத்தாலும் இளவரசனாயிருந்த காலத்திய சீரங்கன் செயல்களாலும் பிற சூழல் வாய்ப்புக்களாலும் இக்கேரியின் ஒரு பகுதியும், மைசூர் புதிதாக பெற்றுவந்த தமிழகப் பகுதிகளும் பீசப்பூரின் பெயரால் ஷாஜியின் தனியாட்சிக்குரியவையாயின. பெல்லாரி மாவட்டம், மைசூரின் சித்தல துருக்க, தும்கூர், கோலாற்று மாவட்டங்கள் ஆகியவை அத்தனியாட்சியுட்பட்டிருந்தன. மூன்றாம் சீரங்கன் பேரரசுரிமையை எதிர்த்துத் தாமர்லாத் துணைவர்களும் செஞ்சிநாயகனும் வேறோர் உரிமையாளனை நிறுத்தினர். அவனுக்கே ஆதரவு தரும்படி அவர்கள் கோலகொண்டாவுக்கு அழைப்பு விடுத்தனர். சீரங்கன் இக்கூட்டுக்கெதிராகப் பீசப்பூர்ப் படைகளின் உதவியை நாடினான். பீசப்பூர்த் தலைவன் ஷாஜி பேரரசனுக்காதரவாக மற்றத் தமிழக நாயகர்களை மட்டுமன்றி இக்கேரி, ஹார்ப்பன ஹள்ளி நாயகர்களையும் ஒத்துழைக்கும்படி தூண்டினான். இவ்வுதவிகளுடன் சீரங்கன் 1644-இல் உதயகிரிப் போரில் கோல்கொண்டாப் படைகளை முறியடித்தான். தமிழக நாயகர்கள் இச்சமயம் அளித்த திறைப்பணத்தையே அவன் பீசப்பூர் உதவிக்குக் கைம்மாறாகக் கொடுத்தான். பேரரசனை எதிர்த்த தாமர்லாத் துணைவர்களிடமிருந்த கோட்டைகளும் உதயகிரிக் கோட்டையும் அவர்களை எதிர்த்துப் பேரரசுக்கு உதவிய மல்லய்யனிடமே விடப்பட்டன. பேரரசின் வீழ்ச்சி மூன்றாம் வேங்கடன் காலச்சீரழிவுகள் கடந்து மூன்றாம் சீரங்கன் காலத்தில் பேரரசு சற்றே தலையெடுப்பது போலத் தோன்றிற்று. ஆனால் அது முழுதும் பேரரசின் நேர்வலுவால் நிகழ்ந்ததன்று. பேரளவில் அது ஒருபுறம் பேரரசுத் தேசீயத்தின் தென் மரபுரிமையான தமிழக நயகர் வலுவாகவும், மறுபுறம் அதன் வடபுல மரபுரிமையாகக் காலூன்றத் தொடங்கிய மராத்திய மரபின் முதற்கொழுந்தாகிய ஷாஜியின் திட்ட வலுவாகவுமே கொள்ளத் தக்கது. ஆனால் அது முற்றிலும் தன் வீரம், தன் சூழ்ச்சித்திறம், தன் துணிச்சல் ஆகியவற்றின் பயன் என்று கருதிய பேரரசன் சீரங்கன் சங்கை ஊதிக் கெடுத்துக் கொண்டான். தமிழக நாயகர்கள் மீது பெயரளவில் மட்டும் இருந்துவந்த மேலுரிமையை மெய்யானதாக்க எண்ணி அவன் பெரும்படை யுடன் தெற்கே தமிழகத்தின் மீது படையெடுத்தான். மதுரைத் திருமலை நாயகன் தன்னாண்மையுடன் பேரரசனை எதிர்த்து நிற்கத் துணிந்ததன்றித் தமிழக நாயகர்களையே அவ்வழி திரட்டி எதிர்ப்பு முன்னணி அமைக்கவும் முனைந்தான். ஆனால் தஞ்சை நாயகன் விசயரகு நாதன் கூட்டில் சேரமறுத்துப் பேரரசனுடன் இணைந்தான். பேரரசனும் தஞ்சை நாயகனும் சேர்ந்தால் தன் கட்சி வலுக்குறைவுபடும் என்று கருதிய திருமலை சூழ்ச்சி வலுநாடிப் பேரரசினையே தாக்கும்படி கோலகொண்டாவைத் தூண்டினான். கோலகொண்டாவின் படைத்தலைவனான மீர்ஜம்லா விரைந்து ஓங்கோல், நெல்லூர், சித்தூர் ஆகிய இடங்களை வென்று 1645-இல் தலைநகரான வேலூர் நோக்கி முன்னேறினான். உதயகிரிக் கோட்டையை ஆண்ட மல்லய்யா எதிரியுடன் பேரம் செய்து கொண்டு கோட்டையை அவனிடம் ஒப்படைத்து விட்டதால், வேலூர் உடனடியாக ஆரிடருக்கு இலக்காயிற்று. ஆனால் சீரங்கன் இச்சமயம் வலிமைவாய்ந்த இக்கேரி நாயகன் வீரப்பன் உதவியை நாடினான். வீரப்பனின் இளஞ்சிங்கக் குருளை செவ்வப்பநாயகன் 40,000 படைவீரருடன் வேலூரையும் பேரரசின் அகநாட்டையும் பேரரசுக்கு மீட்டுத்தந்தான். இதனால் பெருமகிழ்வுற்ற பேரரசன் செவ்வப்ப நாயகனுக்கு ‘இராமபாணம்’, ‘பரவாரண வாரணம்’ (பகையானைகளுக்கு யானை) என்ற பட்டங்கள் தந்து பெருமைப் படுத்தினான். மதுரைநாயகன் துணிச்சல் இச்சமயம் சீரங்கன் துணிச்சலுடன் போட்டியிட்டது. அவன் பீசப்பூரின் உதவியையும் கோரினான். பீசப்பூர்ப் படைத்தலைவன் முஸ்தாபாகான் இக்கேரிமீது தாக்குதல் தொடங்கி இக்கேரி சாகர்க் கோட்டை களைக் கைப்பற்றினான். செஞ்சியை அடுத்த பாராமகால் மாகாணம்வரை முசபருதீன் என்ற மற்றொரு படைத்தலைவன் முன்னேறினான். வேலூர் முற்றுகையைப் பீசப்பூர், கோலகொண்டா இரண்டும் சேர்ந்து நடத்தத் தொடங்கின. முஸ்லிம் படையெடுப்பாளர்கள் இருவரும் ஒன்றுபட்டது கண்ட நாயக அரசுகள் தாமும் ஒன்றுபட்டுக் கட்சி மாறின. ஆனால் அப்படியும் விரிஞ்சிபுரத்தில் 1646-இல் நடைபெற்ற போரில் பேரரசனும் அவன் நாயகத் துணைவரும் ஒருங்கே தோல்வி கண்டனர். வேலூர் முற்றுகை பேரரச வாழ்வின் இறுதியில் எழுந்த ஒரு சிறிய தேசீய உணர்ச்சிக் காப்பியமாயிற்று. சங்க காலத்துக்கு நெடுநாள் முன்னிருந்தே தமிழகக்குடி வேளிர் மரபில் தளிர்த்துத் தழைத்தரும்பிய வேலூர் பேரரசவாழ்வின் முதிர்வில் முழுத் தேசீய மலர்ச்சியுற்றது. பேரரசின் தலைநகராய் அமைந்த தம் நகர்காக்க மன்னரும் பெருமக்களும், குடிமக்களும் இளங்கோக்களும் ஒரே உணர்ச்சியுடன் திரண்டெழுந்தனர். அரசிளங்குமரி முதல் ஏழைக்குடி மாதர் வரை தத்தம் குடும்பங்களுக்கே வந்த பேரிடர் போல நகரின் இடரைக் கருதித் தம் அணிமணிகளையெல்லாம் நகர்காவலுக்குத் தந்துதவினர். நின்ற திருக்கோலத்துடன் தமிழக வீழ்ச்சி தாழ்ச்சிகளை நெடுங்காலம் பார்த்துக் கொண்டிருந்த தமிழகத்தின் வட திசைக்காலம் தெய்வமான திருப்பதி வேங்கடாசலபதி கூட இத்தேசீய உணர்ச்சி வேகத்தில் மனமுருகி எழுச்சியுற்றுத் தம் கருவூலத்தையே திறந்து எடுத்துக் கொட்டி நிதியளித்ததாக அறிகிறோம். ஆனால் இவை எவையும் அன்று வேலூரைக்காக்க உதவவில்லை. அது வீழ்ச்சியுற்றது. நகர மக்களில் பல்லாயிரவர் போரிலே மாண்டனர். பேரரசன் செல்வக் குவைகளில் கொள்ளை போனதுபோக 150 யானைகளும் 50 இலட்சம் பொன்னும் திறையாகக் கைப்பற்றப்பட்டன. ‘கல்தூண் பிளந்திறுவது போல’ப் பேரரசின் பீடும் பெருவாழ்வும் பெருமையும் முறிந்து வீழ்ந்தன. ஆயினும் பீசப்பூர்ப் படைத் தலைவர்களுள் முதன்மை வாய்ந்த மராத்தியவீரன் ஷாஜி நகர் வீழ்ச்சியுறுமுன் பேரரசனைத் தப்பி வெளியேறவிட்டுப் பேரரசின் மதிப்புக்கு இழுக்குவராமல் காத்தான். 1647-இல் வேலூர் பீசப்பூர் வசமாயிற்று. விசயநகரப் பேரரசின் தலைமை வெற்றித் திருநகரில் தொடங்கி வெற்றிதரும் வேல் திருநகராகிய வேலூரில் முடிவுற்றது. பாழ்நிலை யடைந்துவிட்ட வெற்றித் திருநகர் பேரரச வாழ்வின் அறிவு, மறுமலர்ச்சிகளின் சின்னமாக நிலவுகிற தென்றால், அம்மரபின் இறுதி நகரான வேலூர் இன்னும் வாழும் பேரூர்களில் ஒன்றாய், அதன் வீழ்ச்சியிலும் மீட்சியிலும் ஒருங்கே தன் புகழ் விளக்கும் நகராய் இலங்குகின்றது. சங்ககால முதல் தொடர்ந்து ஊடுருவி வருங்கால நோக்கும் தென்னகத் தேசீயத்தின் காலங்கண்ட சின்னமாய் அது விளங்குகிறது என்னலாம். விசயநகரப் பேரரசர்க்கும் வேலூருக்கும் உள்ள தொடர்பை பேரரசழிந்த பின்னிருந்து இன்றுவரை ‘இராயவேலூர்’ என்ற அதன் சிறப்புப் பெயர் காட்டுகின்றது. இராயர்கள் அதாவது விசயநகரப் பேரரசர்கட்காக ஒரு தேசீயத்தையே இறுதி நாளில் எழுப்பிய பேரூர் என்ற எண்ணம் அப்பெயரூடாக நகரவாழ்வில் பசுமையுடன் நின்று நிலவியுள்ளது. அதைச் சூழ்ந்த மாவட்டங்களும் இராயர்களின் அகநாடு என்ற முறையில் வரலாற்றில் இன்றுவரை இராயலசீமா என்று வழங்குகின்றன. தமிழகத்தின் பல தலைநகர்கள் தடமழிந்து போனபின்னும் மதுரை, காஞ்சி, திருச்சிராப்பள்ளி ஆகிய வற்றுடன் போட்டியிட்டுப் புதுப்புது மலர்ச்சி கண்ட கன்னித் தலைநகராய் அது இன்னும் நிலவுகின்றது. வேலூர் வீழ்ச்சியின் பின் சீரங்கன் தமிழகத்து நாயகர்களை ஒன்றுபடுத்தவும் மீண்டும் பேரரச வாழ்வைப் புதுப்பிக்கவும் ஓராண்டு விடாமுயற்சிகள் செய்தான். ஆனால் பேரரசுக்குப் பல தடவை உண்மையாயிருந்து இறுதி நாளில் ஒத்துழைத்த மதுரை தஞ்சை செஞ்சி நாயகர்கள் இப்போது நம்பிக்கையிழந்து எதிரியிடம் பணிந்து கொடுக்க முனைந் திருந்தனர். அவர்களிடமே மேலும் தங்கியிருக்க விரும்பாமல் அவன் சிலகாலம் தஞ்சைக் காடுகளில் திரிந்தான். சிலகாலம் இராமநாத புரத்திலுள்ள மறவர் நாட்டில் மறவர் தலைவர்களின் ஆதரவில் தங்கி ஊடாடினான். இறுதியில் அவன் சிலகாலம் மைசூரில் சென்று பாதுகாப்புப் பெற்றான். தமிழக நாயக அரசுகளிடையே பணிந்து கொடுத்த செஞ்சி, தஞ்சை அரசுகளுக்கும்; பணிந்து கொடுக்காத மதுரை அரசுக்கும் இடையே தென்னகப்புயலின் தூவானமான முஸ்லீம் அரசுகள் எத்தகைய வேறுபாடும் செயலில் காட்டவில்லை. கொலை கொள்ளை குருதிப்பலி எங்கும் கொம்மாளம் அடித்தன. வேலூர் வீழ்ச்சிக்குள்ளாகவே பேரரசின் அக எல்லையில் கீழ்கரைப் பகுதி முழுவதும் கோலகொண்டா வசப்பட்டிருந்தது. பழவேற்காட்டில் உள்ள டச்சுக்காரர்கள் தவிர ஏனைய யாவரும் அதன் மேலுரிமையை ஏற்றிருந்தனர். அக எல்லையின் மேல் திசையோ பீசப்பூர் ஆட்சிக்கு உட்பட்டுவிட்டது. இதன் பின் முதலில் கோலகொண்டாவும், பின் கோலகொண்டாவுக்குப் பணம் கொடுத்தனுப்பி விட்டுப் பீசப்பூருச் செஞ்சியை இரண்டாண்டுகள் முற்றுகையிட்டு 1649-இல் அதைத் தம் கைவசப்படுத்தின. தஞ்சையும் பாண்டி நாட்டு வட எல்லையும் முஸ்லிம் படைவீரரின் நீடித்த கொள்ளைகளுக்கு ஆளாகி, பஞ்சத்துக்கும் கொள்ளை நோய்க்கும் இரையாயின. ஆயினும் பழய பாண்டியரின் எச்சமிச்சமாக மிஞ்சிய சேதுபதியின் மறவர்படைகள் மதுரை கடந்து புயல் தென்பாண்டி நாட்டுக்குள் வராமல் மதுரை எல்லையிலேயே முறியடித்துக் காத்தன. கடைசி நாட்கள் பேரரசு வீழ்ந்த பின் பேரரச வாழ்வின் புது மரபுக் கொழுந்துகளான நாயக அரசுகள் வலிமை குன்றவில்லை. உண்மையில் அவற்றிடையே தொடர்ந்த ஒற்றுமை இருந்திருந்தால் பேரரசே விழுந்திருக்காது. அவ்வொற்றுமைக் கேடுதான் மைசூர், இக்கேரி போராட்டத்திடையே பீசப்பூருக்கும்; மைசூர், தஞ்சை, செஞ்சி, மதுரை போராட்டத்திடையே பீசப்பூர், கோலகொண்டா ஆகிய இரு முஸ்லீம் அரசுகளுக்கும் புயல் பாதை வகுத்துக் கொடுத்தது. இதனால் தொடக்கத்தில் செஞ்சியும், தஞ்சையும், இறுதியாகத் தமிழகத்துக்கு வடக்கே இக்கேரியும் வீழ்ச்சியடைந்தன. மதுரையில் திருமலை நாயகனுக்குப் பின் இரண்டாம் முத்துவீரப்ப நாயகன் ஓராண்டும் சொக்கநாத நாயகன் (1659-1682) இருபத்துமூன்று ஆண்டுகளும் ஆட்சி செய்தனர். முத்துவீரப்பன் நாட்களில் பீசப்பூர்ப் படைகள் தஞ்சையையும் மதுரையரசின் வடபகுதியையும் சூறையாடின. அடுத்த ஆட்சியில் பீசப்பூர்ப் படைத்தலைவனான வானாமியான் திருச்சிராப்பள்ளிவரை படை நடத்தி இரு அரசுகளுக்கும் தொல்லை கொடுத்தாலும் திருச்சிராப்பள்ளியை அணுக முடியவில்லை. கொள்ளை யச்சுறுத்தலால் சொக்கநாதனிடமிருந்து பணம் மட்டும் பெற் று மீண்டான். சொக்கநாதன் தன் பேரவாவால் மைசூரில் புது நிலம் பெற எண்ணி அதன்மீது 1667-இல் படையெடுத்தான். ஆனால் இச்செயல் மூலம் அவன் தன் நிலம்தான் இழக்க நேரிட்டது. மதுரையரசின் பகுதிகளான சேலம், கோயம்புத்தூர் ஆகியவை மைசூர் வசமாயின. மைசூர் மதுரையரசையும் மற்றநாயக அரசர்களையும் தாண்டி வலிமையுடையதாக வளரத் தொடங்கிற்று. பீசப்பூரே அவ்வளர்ச்சி கண்டு பொறாமையுற்று மற்ற நாயக அரசுகளையெல்லாம் திரட்டி மைசூரை எதிர்க்க முற்பட்டது. அத்துடன், விசயநகரப் பேரரசுக்கு இன்னும் மக்களிடையே நிலவிவந்த தேசீய மதிப்பார்வத்தைப் பயன்படுத்திச் சமய வேறுபாடற்ற தேசீயப் பேரரசுப் போராட்ட மாக அதை ஆக்கவும் பீசப்பூர்த் தலைவர் முயன்றனர். ஏனெனில் இந்த முஸ்லிம் - நாயக அரசுக் கூட்டணி பேரரசன் சீரங்கனின் அரசுரிமைப் பெயரால், அவனையே பெயரளவில் தலைவனாகக் கொண்டு அமைக்கப் பட்டது. மதுரைநாயகன் சொக்கநாதன், இக்கேரிநாயகன், பீசப்பூர்ப் படைத்தலைவன் அனந்தோஜி ஆகிய அனைவரும் பேரரசன் கொடிக்கீழ் நின்று 1672-இல் மைசூர் அரசன் சிக்கதேவராயனை எதிர்த்துப் போரிட்டனர். ஆனால் இத்தனை கூட்டுறவும் பயனற்றுப் போயிற்று; போரில் சிக்கதேவராயனே வெற்றி பெற்றான். சொக்கநாதனை மைசூர் அரசன் வென்றதாகக் குறிக்கும் கன்னடக் கல்வெட்டுக்கள் சொக்கநாதனைப் பாண்டியன் என்றே சிறப்பிக்கின்றன. பண்டைத் தமிழகத் தேசீயமரபு விசயநகர கால இறுதி கடந்தும் எவ்வாறு விசயநகரத்துடனும் மதுரை நாயக அரசுடனும் விரவிற்று என்பதை இது காட்டுகிறது. மைசூர் அரசு இப்பெருவெற்றி மூலம் ஈரோடு, தாராபுரம் பகுதிகளைப் பெற்றது. மைசூர் அரசின் உச்சநிலைப் புகழை இதனால் சிக்க தேவராயன் (1673-1682) பெற்று விளங்கினான். பேரரசன் மூன்றாம் சீரங்கன் இப்போரின் பின் இக்கேரி நாயகன் ஆதரவிலேயே இருந்து அவனால் வெல்லப்பட்ட பெனுகொண்டாவில் ஒன்றிரண்டு ஆண்டுகள் பேரரசின் நிழலாட்சி செலுத்தினான். அத்துடன் பேரரசன் பெயராலேயே 1675-இல் இக்கேரி நாயகன் சக்கரப்பட்டணத்தில் ஒரு போர் நடத்தித் தோல்வியுற்றதாக அறிகிறோம். பேரரசன் வாழ்விலும் இதுவே கடைசி ஆண்டாய் அமைந்தது. மூன்றாம் சீரங்கன் 1653-லேயே தன் பேரரசைத் தனக்கு மீட்டுத் தரும்படி வடதிசை முகலாயப் பேரரசனை வேண்டிக் கொண்டிருந்தானென்றும் அறிகிறோம். ஆனால் வடதிசைப் புயற் பேரரசு இதற்குள் இவ்வளவு தொலை தென்திசையில் தன் கரங்களை நீட்டும் நிலை பெறவில்லை. சீரங்கன் மாள்வுக்குப்பின் கூட அவன் அண்ணன் மகனான கோதண்டராமன் பேரரசின் புகழைப் புதுப்பிக்கும் அவாவும் நம்பிக்கையும் கொண்டிருந்தானென்று தெரிய வருகிறது. ஏனெனில் ஆசனா என்ற இடத்தில் மைசூர்த்தளவாய் குமாரை யாவை எதிர்த்துத் தான் வெற்றி பெற்றதாக அவன் கல்வெட் டொன்று கூறுகிறது. ஆனால் இதன் பின் விளைவுகளோ பின்நிகழ்ச்சிகளோ எதுவும் நமக்குத் தெரிய வரவில்லை. வளரும் மைசூர் அரசின் கையில் அவன் இறுதித் தோல்வியும் அழிவும் பெற்றிருக்கலாம் என்று கருதவேண்டியிருக்கிறது. விசய நகரப் பெருமரபின் பெயரை நாம் இதன்பின் கேட்கவில்லை. மக்கள் உள்ளத்தில் அது பேரரசு, பெருமரபு ஆகியவற்றின் புகழ் நீடித்து நிலவியதென்பதில் ஐயமில்லையாயினும் நாளடைவில் மறதியூழியின் நிழல்கள் படிந்து வந்தன என்றே நாம் கொள்ளத்தகும். கடைசிப் பேரரசன் மாண்ட ஆண்டுக்கு முந்தய ஆண்டிலேயே, பேரரசன் சீரங்கன் வாழ்நாளிலேயே 1674-இல் பேரரசின் பெரும்புகழ் பசுமை மாறாது புதுமலர்ச்சி அரும்பு விடுவதை நாம் காண்கிறோம். பேரரசின் போர்களில் புயல் அரசுகளின் சார்பிலே கடமையாற்றினாலும், தென்னகத் தேசீயத்தில் இழைந்து புது மலர்ச்சிக் கனவுகண்ட மராத்திய தேசிய வீரன் ஷாஜியின் ஒளிதிகழ் வண்ணப்புதல்வன் சிவாஜி பேரரசனின் கடைசிப் பேரரசுப் பீடத்திலேயே அமர்ந்து, அப்பேரரசின் பெயராலேயே தன்னைக் கருநாடகப் பேரரசன் என்று முடிசூட்டிக் கொண்டான். இம்முறையில் தமிழகத் தேசீயத்தைத் தன் வாழ்வில் தென்னகமளாவப் பரப்பிய பேரரசின் புகழ் அதன் மாள்வுக் காலத்துக்குள் தென்னக எல்லை கடந்து வடதிசையிலேயே ஒரு புதிய தேசீயத்திலும் சென்று பரவியது. மராத்திய புத்திளந் தேசீய எழுச்சிக்குரிய கதிரவனான சிவாஜி வேலூர் முற்றுகையில் பங்குகொண்டு பேரரசன் வெளிச் செல்ல அனுதாபத்துடன் உதவிய ஷாஜியின் மைந்தனே என்பது குறிப்பிடத்தக்கது. தென்னகம் கடந்து பொங்கிப் பரவிய இத்தேசீயமே, நிலப்பரப்பில் சுவறிய வளத்தை உள்ளார ஊற்றாகச் செலுத்தி விடாயுடையோர் நாட மேலெழுப்பி வழங்கும் பாலாறு போல, இருபதாம் நூற்றாண்டில் தென்னகப் புத்திளங்குரல் கேட்டுப் புத்துயிர்ப் படைத்துக் கிளர்ந்துள்ளது என்னலாம். 9. வானவில் பாவீற்றிருந்த பரிசார்ந்தவீரப் பருங்கதைமதக் கோவீற்றிருந்த தேசீயப்பேரர சார்ந்த வெற்றித் தேவீற்றிருந்த திருமாநகரின் சிறப்பகன்றும் பூவீற்றிருந்த புகழ்த்தென் னகப்புலம் வாழியரோ! வீரமராத்தியர் கோமான்சிவாஜி விழிகளிப்பக் கூருந்திறங்கொள் வியல்வானொளியில் நிறங்கொழித்துச் சாருந்திறங்கன் தரணியெலாம்பரந் தோங்கவளர் சீருந்தியதென் னகப்பெரும்பேரர சோங்குகவே! தெற்கே குமரிமுனையை ஆதாரமாகக் கொண்டு வடபால் அகலிடம்பட அமைந்த ஒரு முக்கோணமாக இன்று தென்னகம் காட்சியளிக்கிறது. அதனுள் முக்குவடாகக் கவட்டுக்கோல் போல மேற்கு கிழக்குத் தொடருடன் அவற்றின் இணைமலைத் தொடர் நீண்டு கிடக்கின்றது. பண்டு கடலுளாழ்ந்த தமிழகத்துடன் இலங்கையை உளப்படுத்திய முழு நிறை தென்னக நிலையிலும் இதே முக்கோண வடிவ அமைதி நிலவியிருந்தது என்றே கருத இட முண்டு. ஆழ்கடல் ஆழ வேறுபட்டுப் பதிவுப் படத்தில் கடலடித் திட்டின் உருவமும் இலங்கையளாவிய அதன் மலைமேட்டுத் தொடர்ச்சியும் இதைச் சுட்டிக்காட்டுகின்றன. வடிவு உருவங்களைப் போலவே பண்பிலும் வளர்ச்சியிலும் கூட அது முக்கவராகவே காணப்படுகின்றது. திராவிட மொழிகள் இன்று ஐந்தாகவும் அதன்மேற் பலவாகவும் கிளைத்துள்ளன வாயினும், வரலாற்றின் நீடித்த பழமைக்குரிய கூறுகளாகச் சேர சோழ பாண்டிய அரசுகளும், விசயநகர காலத்தில் அவற்றின் விரிவகலங்களே போலத் தெற்கே தமிழகம், வடபால் கீழ்மேலாக இரு திசைகளில் தெலுங்கு கன்னட நாடுகள் ஆகிய மூன்றுமே இயன்றன. தேசீய வளர்ச்சியில் சரிசமமாகப் பின்னியுருவான இந்த மூன்றின் முக்கூற்று வளர்ச்சி கண்டிறும்பூ தெய்துதற் குரியது. தென்னகத் தேசீயத்தின் கருமூலமாக தமிழகத் தேசீயமும், திராவிட மொழியின் முற்பட்ட பொதுத் தேசீய இலக்கியமும் பக்தியியக்கத்தின் மூலக்கூறுகளான சைவ வைணவப் பேரிலக்கி யங்களும் தமிழகத்திலேயே தோன்றின. மூவரசுகளில் மும்மை முதலரசாகப் பண்டைப் பாண்டிய அரசுடன் தோன்றி மூலத் தமிழகத் தேசீயம் விசயநகர காலத்துக்குள் பழயபடி பாண்டி நாடாண்ட தமிழகமாகவே ஒடுங்கிப் புதிய தென்னக உறுப் பாயிற்று. தென்னகத் தேசீயத்துக்கும் தேசீயப் பேரரசுக்கும் விடி வெள்ளியாய் விளங்கிய ஒய்சளப் பேரரசின் பாலொளி பரப்பிய இடமாகவும் தமிழகம் இயங்கிற்று. பேரரசுக்கால முடிவில் அது மீண்டும் தென்னகத் தேசீய மையமாகிப் பிரிட்டிஷ் ஆட்சியில் ஒரே கருநாடக அரசாகத் திகழ்ந்தது. தென்னக எல்லையையே தாண்டி மராத்திய தேசீயத்துக்கும் அதன் அகல் விரிவாகிய மாநிலத் தேசீயத்துக்கும் தென்னக எல்லை கடந்து மாநிலத்தில் பரவிய பக்தி இயக்கத்துக்கும் மாநிலத் தாய்மொழி கலை, இலக்கியங்களுக்கும், உலகளாவிய மறுமலர்ச்சிக்கும் அதுவே வாழ்வளித்தது. பண்டை முத்தமிழின் புதுமலர்ச்சிகளான கருநாடக இசை பரதநாட்டியம் முதலிய கலைகளுக்கும் அதுவே பிறப்பிடமாகவும் விளங்கிற்று. புதிய வருங்காலத் தென்னகத் தேசீய மலர்ச்சிக்கு நிலைக்களமாய் இயங்குவதும் அதுவே. தமிழகத்துக்குக் குறையாத சரிசமப் பங்கு தந்து கன்னட தெலுங்கு மாநிலங்களும் மலையாள மாநிலமும் போட்டியிட்டு வந்துள்ளன வருகின்றன. தமிழகத்தைப் போல முற்பட்ட பழங்காலங்களிலேயே முடியரசும் பேரரசும் கூட்டரசும் அமைந்து இமயம்வரை நிலப் பேரரசாட்சியும் கடல் கடந்து உலகில் கடற்பேரரசும் படைத்த பெருமையுடையது தெலுங்கு நாடு. தென்னக நாகரிகத்தை அது வங்கமும் கங்கையும் அளாவி நெடுந்தொலை வடகிழக்கே கொண்டு சென்றதுடன் விசயநகர காலத் தொடக்கத்தில் அது தேசீய இயக்கத்தின் அரசியல் பிரிவின் பிறப்பிடமாகவும், வைதிக இயக்கத்தின் மைய இடமாகவும் விளங்கிற்று. அத்துடன் பேரரசின் வளர்ச்சியில் படிப்படியாக மிகுதியான பங்கு கொண்டு அது இறுதியில் அத்தேசீயத்தையே பெரிதும் தன் தேசீய வாழ்வாக்கி, அதன் இலக்கிய வண்மையையே தன் இலக்கிய வளமாக்கிக் கொண்டது. இது மட்டுமன்று, தென்னகத் தேசீய இலக்கியத்தைத் தன் இலக்கியமாக்கிக் கொண்டது போலவே, பேரரச வாழ்வைத் தன் அரசியல் வாழ்வாக்கி, தென்னகத்தின் இசை நாடகக் கலைகளைத் தன் இசை நாடகக் கலைகளாக வளர்த்துக் கொண்டது. திராவிடப் பேரிலக்கியத்தில் தமிழகத்துக்கு அடுத்தபடி பழமையும் விரிவகலமும் உடையது கன்னட மாநிலம். தென்னகத் தேசீயப் பேரரசுக்கு விடி வெள்ளியாயமைந்த ஒய்சளப் பேரரசைத் தோற்றுவித்துப் பேரரச வாழ்வின் மையக்களமாய் நிலவியதன்றி, முதல் பேரரச மரபையே தோற்றுவித்த பெருமை அம்மாநிலத்துக்கு உண்டு. தேசீய இயக்கத்தில் வைதிக இயக்கத்தின் பிறப்பிடம் அதுவே. அத்துடன் தென்னகத்திலும் தென்னகங்கடந்த சிந்து கங்கை மாநிலத்திலும் எங்கும் தமிழகப் பக்தி இயக்கத்தின் வைணவக் கிளை ஒன்றே பரவியிருந்த நிலைக்கு மாறாக, கன்னட நாட்டில் மட்டும் இரு கிளைகளும் சரிசம அளவில் போட்டியிட்டுப் பரவியிருந்தன. அத்துடன் வைணவக் கிளையில் தமிழகத்தின் தாய் வைணவக் கிளை மட்டுமன்றி, கன்னட நாடு தனக்கென ஒரு தனிச்சேய் வைணவக் கிளையாக மாத்துவ நெறியைப் படைத்துக் கொண்டிருந்தது. வைணவ இயக்கத்தை இந்திய மாநிலமெங்கும் பரப்பும் பணியில் அது தமிழகத்தோடொத்த பங்கு கொண்டி ருந்தது. தென்னகத்தின் புதிய கலைமலர்ச்சியாகிய கருநாடக இசைக்குப் புரந்தரதாசரை விடிவெள்ளியாகத் தந்தும் அதன் நாடக மறுமலர்ச்சியில் இயக்க கானத்தை அலைபாயவிட்டும் கன்னடம் சீரியபங்கு கொண்டுள்ளது. முக்கவராகத் தோன்றிக் கன்னட நாட்டில் விசய நகரப் பேரரசாக முறுகிய இத்தென்னகத் தேசீயம் வருங்கால மலர்ச்சி வளம் எதிர்நோக்கி மீண்டும் மைசூர்ப் பேரரசாகக் கன்னடத்தி லேயே திருப்பி முறுகிப் புத்தூக்கம் அளிக்க வேண்டியதா யிருந்தது. அதற்கு முன் அம்மூன்றுடனும் முகிலிடையூடி விளையாடி ஒளிரும் மின்னல் போலத் திகழ்ந்த அருஞ்சிறப் புடையது சிவாஜியின் மராத்திய தேசீயம். தென்னகத் தாயாக அமைந்த இப்பேரொளி தொலை தேசீயக் கதிரொளியாகிய தமிழகத்தின் புகழ்க்கொடியை உயர்த்திக் காட்டும் ஒரு வீரக் கொடிக்கம்பமாய் வரலாற்றில் சிங்க நோக்குடன் இலங்குகின்றது. கலையார் தமிழர் இனம் ஒருபால் கவினார் ஒளிச்செந் நிறம்குலவ, நிலையார் வீரத் தெலுங்கரினம் நேரங் கொருபால் நிவர்ந்திலங்க, உலையா மரபின் மலையாளத் தொருபால் சேரர் களிப்ப, ஒளி அலைபாய் விசய நகர மெனும் அருமா மணியின் இசை வெல்க! கடலிற் பிறந்து முத்தாடிக் கதிர்பாய் இலங்கை மணிவிரவி மடல்சேர் தமிழ்ப்புத் தமுதூறி மலையார் சேர வளநாட்டில் நடங்கொண்டாடி நற்றெலுங்கின் நளின இசையில் துயிலார்ந்து தடங்கன் னடமார் மலையாரம் தவழும் தென்மா தவள்வாழி! பொங்குமாவளம் : குடியாட்சியின் முழு மலர்ச்சி உலகின் குடியாட்சி மலர்ச்சியில் நாம் மூன்று படிகளைப் பகுத்துக் காண்டல் தகும். அவை நேர் குடியாட்சி, பேராண்மைக் குடியாட்சி, பொங்குமாவளக் குடியாட்சி என்பன. தொழில் பழங்காலத்தில் தமிழகத்திலும், சிந்து கங்கை வெளியிலும் கிரீசு முதலிய நடுநிலக் கடலகப் பரப்புக்களிலும் நிலவியிருந்த நகர் நாட்டுக் குடியாட்சியே நேர் குடியாட்சி. ஒவ்வொரு குடியாட்சிக்கும் குடியாட்சியில் நேரடியான பங்கு இருந்தது. குடிமக்கள் யாவரும் குடும்ப உறவுடைய பெருங்குடும்பமாக அதாவது இனமாக இருந்ததனால் அவர்களிடையே உரிமை உயர்வு தாழ்வுகள் இருந்ததில்லை. பேராண்மை அல்லது மொழி உரிமையின்படி அப்போதும் செயல்வாரியங்கள் (ஊடிஅஅவைவநநள) செப்பணிகள் (ளுநசஎiஉநள) ஆகியவற்றுக்கு ஆட்சியாளர் தேர்வுகள் நடத்தப்பட்ட துண்டு. ஆனால் இது செயல்வகைக்கன்றி உரிமைக்கன்று, தவிர, தகுதி திறமை தேவைப்பட்ட இத்துறையில் கூட, தேர்வுப் போட்டிக்கு இடம் தரப்படவில்லை. தகுதியுடைய அனைவருக்கும் தேர்வு முறையாகக் கிட்டத்தக்க வகையில், அவர்களிடையே மொழி யெண்ணிக்கைக்கு மாறாக, குலுக்கி யெடுப்பு அல்லது திருவுளச் சீட்டுமுறையே கையாளப்பட்டது. இப் பழங்குடியாட்சியிலும் சில குறைகள் இருந்தன. அது ஆட்சியுரிமை பெற்ற இனங்களுக்கு வெளியே செயலாற்ற வில்லை. அயலினங்கள் பலபடி அடிமை நிலைக்குரியதாக்கப் பட்டு, உரிமைகள் படிப்படியாகக் குறைந்து கூடி வந்தன. அத்துடன் இனங்களுக்கிடையே போரின் வெற்றி தோல்விகள், முடியாட்சிமுறை, பேரரசாட்சி முறை, பிற ஆண்டான் அடிமை முறைகள் ஆகியவை தோன்றி வளர்ந்தபின் ஆட்சி எல்லைகள் தான் விரிவடைந்தன. ஆட்சிப்பண்பு சீர்கெட்டது. இச்சீர் கேடுகளின் பயனாக ஏற்பட்ட முடியாட்சி, பேரரசாட்சி, இனவேற்றுமை, வகுப்பு வேற்றுமையடிப்படையில் அமைந்த புதுக்குடியாட்சி, வல்லாட்சி ஆகியவற்றிலும் பழைய குடியாட்சி முறைகள் நீடித்தன. ஆனால் திருவுளச் சீட்டு முறை மொழி எண்ணிக்கையாக மாறிற்று. தேர்வு செயற் பணிகளுக்கு மட்டுமன்றி ஆட்சியுரிமைக்கும் தொடரப்பட்டது. இரண்டாவது குடியாட்சி ஏற்பட்ட வகை இதுவே. நம்காலப் பேராண்மைக் குடியாட்சியில் மரபுகள் யாவும் பழய குடியாட்சி சார்ந்தவை. ஆனால் அவற்றின் பண்புகள் பழயகுடியாட்சி மரபுகளுக்குரிய இனப்பண்புகள் அல்ல. இடைக் காலத்தில் வளர்ந்த முடியாட்சி, வல்லாட்சி, பேரரசாட்சி ஆகியவற்றின் பண்புகளே. இதனால் இனத்தின் அன்புப் போட்டியை அது தன்னலப் போட்டியாகவும், இனத்தின் அன்புக் கூட்டுழைப்பை தன்னலக் குழுக்களின் கூட்டுச் சதியாகவும், வளர்ச்சித்திட்ட அமைப்பைச் சூதாடிகளுக்குரிய குருட்டு வாய்ப்பு வேட்டையாகவும் மாற்ற நேர்கிறது. நலங்களைப் பெருக்கும் திட்டமுறையாக அமைவதற்கு மாறாக, அது தீங்குகளைக் கூடியமட்டும் குறைக்கும் தடுப்பு முறையாக மட்டுமே இன்று இயல்கிறது. சங்ககாலத்துக்கு நெடுநாள் முற்பட்டே தமிழகத்தில் நேர் குடியாட்சி மறைந்து அவற்றின் சின்னமாகக் குடியரசர் ஆட்சிகள் நீடிப்பது காண்கிறோம். இம்மாறுதல் தமிழகத்தில் ஏற்பட்டபின் தென்னகத்திலும், தென்னகத்தில் ஏற்பட்டபின் சிந்துகங்கை சமவெளியிலும் சிந்து கங்கை சமவெளியில் ஏற்பட்டபின் அகல் உலகிலும் நீடிப்பது காண்கிறோம். தமிழக, தென்னகத் தேசியங்கள் இன அடிப்படை மீதே வளர்ந்த முடியரசுகளின் விரிவான பேரரசுகளின் செயல்களே என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஆனால் இது தமிழகத்தின் நிலைமட்டுமன்று - உலக முழுமையும் பழய நேர்குடி யாட்சியிலிருந்தோ சற்று முற்பட்டோ பிற்பட்டோ தமிழகத்தினைப் பின்பற்றி இதே நிலையை நாளடைவில் அடைந்துள்ளது. தமிழகத்திலும் உலகிலும் சென்ற மூவாயிரம் ஆண்டு களாகப் பரவிவரும் பேராண்மை ஆட்சி ஊழியில் குடியரசுகளை விட முடியரசுகள், பேரரசுகள், வல்லரசுகள் ஆகியவையே தேசீய வளர்ச்சிக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியுள்ளன என்பதில் ஐயமில்லை. இதன் சின்னமாகவே முதலில் தமிழகத்திலும் பின் படிப்படியாக மற்றப் பரப்புக்களிலும் பழய மக்கட்படைகள் அல்லது குடிப்படைகள் (ஞநடியீடந’ள ஹசஅல டிச ஆடைவைய) நிலைப் படைகளாக (ளுவயனேiபே ஹசஅல) எங்கும் மாறி வந்துள்ளன. சங்ககாலத்துக்குள்ளேயே தமிழகத் தேசீயம் தமிழகம் கடந்து உலகளாவி விட்டதானாலும், அது குடியரசர் ஆட்சிகளை அதாவது சிறுநில ஆட்சிகளைச் சூழ்ந்து பரந்து உள்ளடக்கிச் சென்றதேயொழிய, அவற்றைச் செரிமானம் செய்துவிடவில்லை. தமிழரசர், பேரரசர் நிலப்படைகள் இக்குடியாட்சிப் பண்புகளை உலகளாவப் பரப்ப மட்டுமே உதவின. ஆனால் இதுகூடச் சங்ககாலங்களுக்குப் பின் வந்த பாண்டிய பல்லவப் பேரரசர் சோழ பாண்டிய பெரும்பேரரசர் ஆகியோரின் அகல்விரிவான செல்வப் பேரரசாட்சிகளுக்கு நிலையாக வலிமையளிக்க முடியவில்லை. விசயநகரப் பேரரசு தமிழக மரபில் வந்த நிலப்படைகளை மட்டுமன்றி வடதிசைப் புதுவரவான பண்ணை நிலப்படை (அமரம் படை) முறையையும் மேற்கொண்டது. கடற்படையிலும் அவர்கள் கருத்துச் செலுத்தவில்லை. இந்த இரண்டும் மைய ஆட்சித் துறையில் விசயநகரப் பேரரசைத் தமிழகப் பேரரசுகளைப் பார்க்கிலும் வலிமை குறைந்ததாகவே ஆக்கியிருந்தன. ஆயினும் அதன் உண்மையான வலு முன்னைய அரசு பேரரசுகளை விட எவ்வகையிலும் குறையவில்லை, கூடியேயிருந்தது என்பதைப் பேரரசின் நீடித்த வரலாறும் வெற்றிகளும் காட்டும். இதற்குரிய காரணம் அது புதிதாகத் தேசீயம் அளாவிய பேரரசு என்பதே. சோழப்பெரும் பேரரசின் மைய நாட்களில் இராசராச சோழனும் குலோத்துங்க சோழனும் - சிறப்பாகக் குலோத்துங்க சோழன் - பேரரசின் எல்லையில் இந்தத் தேசீயப் பண்பின் வலுவை நன்குணர்ந்து அதற்கு அடித்தள மிட்டிருந்தனர். விசயநகரப் பேரரசரும் அவர்கள் கட்டுப்படுத்திய தேசீய எல்லையிலேயே தம் பேரரசின் விரிவை நிறுத்த, அத்தேசீய வலுவால் அதை நீடித்த வாழ்வுடைய ஒரு கோட்டையாக்கி யிருந்தனர். பேரரசுப் பண்புகளில் தமிழகம் தேசீய உச்சநிலையை எட்டி அதனை விசயநகர காலத்துக்கு மரபுரிமையாக விட்டுச் சென்றிருந்தது. ஆனால் குடியாட்சிப் பண்புகள் விசயநகரப் பேரரசே முழு அளவில் வளர்த்து வருங்காலப் புதுமலர்ச்சித் தேசீயத்துக்கு மரபுரிமையாக விட்டுச் சென்றுள்ளது என்னலாம். மனித உலகு குடும்பம், சமுதாயம், நாடு ஆகிய எல்லைகள் தாண்டி எவ்வளவோ தொலைவு வளர்ந்துள்ளது. ஆயினும் அது ஒரே பேரினம், பெருங்குடும்பம், குலம் என்ற கருத்தை முப்பால் முதல்வர் குறிக்கோள் வழி சங்க இலக்கியம் பண்பாகப் பேணிய அளவில் அது மனித இனத்தில் பரவி விடவில்லை. ஒரு வீடு, அதில் இன்ப வாழ்வு நாடும் ஒரு குடும்பம். அதனை இயக்கி நடத்தும் தலைவரான ஒரு தந்தை தாய் என்ற முறையிலேயே, உலகை ஒரு பெரிய வீடாகவும், அதில் பேரின்ப நாடும் மனித இனத்தை ஒருபெருங் குடும்பமாகவும், அதனை இயக்கி நடத்தும் ஒரு தலைவராகக் கடவுளையும் தமிழர் குறிக்கொண்டிருந்தனர். தற்கால மேலையுலகினர் அரசியல் துறையிலேயே மனித இனத்தை ஓர் உலகாக்க, ஒரு பெருநாடாக்கக் கனவு காண்கின்றனர். ஆனால் இதை நோக்கி முன்னேறுவதற்குக்கூட எங்கும் அரசியல் தடைகளும், கீழ்திசையிலும் தென்னகத்திலும் சமய, சமுதாய, பண்பாட்டுத் தடைகளும் மிகப் பலவாயுள்ளன. உலக இயக்கங்களிடையே தமிழக மரபிலும் விசயநகரப் பேரரசு மரபிலும் வந்த தென்னகத் தேசீய மறுமலர்ச்சி இயக்கம் ஒன்றே இத்தடைகளை நீக்கி உண்மையான ஓருலகக் கனவு காணத்திட்ட மிட்டு வருகிறது. வருங்காலத்தில் தென்னகம் உருவாக்க நாடும் குடியாட்சியே மூன்றாவது வகைக் குடியாட்சி - பொங்குமாவளக் குடியாட்சி ஆகும். நேர்குடியாட்சியில் தனி மனிதனுக்கு நிறைய உரிமை உண்டு. அதைக் கொண்டு செலுத்தும் ஆற்றல், வகை துறை துணைகள், தூண்டுதல் ஊக்குதல்கள் இருந்ததில்லை. பேராண்மைக் குடியாட்சியின் பெயரளவில் தனிமனிதனுக்கு வளர்ந்துள்ளன. ஆனால் அதனைப் பயன்படுத்துபவர் ஆட்சி வகுப்பினர். ஆட்சி வகுப்பினுள்கூட ஆட்சிநலங்களைக் கைப்பற்றிய சிறிதினும் சிறிய ஒரு குழுவின் பிடியினுள் - ஆதிக்கமும் இறுமாப்புமன்றி, இன நோக்கமோ, இனக் குறிக்கோளோ, இனப்பண்போ ஒரு சிறிதுமற்ற - இன அறிவோ பண்போ சிறிதுமின்றித் தன்னல அறிவும் சூழ்ச்சி நயங்களும் மட்டுமே உடைய ஒரு ஆதாய ஆதிக்கவேட்டைக் குழுவின் கையினுள் அது அடங்கிக்கிடக்கிறது. தேர்தல் என்ற ஏலவிற் பனைப் போட்டிக் களத்தில் ஆதிக்கவாதிகளில் மிக மோச மானவர்களே போட்டியில் வெற்றிபெற்று, மக்கள் ஆளும் உரிமையைத் தாம் குத்தகைக்கு வாங்கி, அவர்களை ஆளப்படுபவர்கள் ஆக்கிவிடுகின்றனர். பொங்குமாவளக் குடியாட்சி தனிமனிதருக்குத் தொல் பழங்காலத்திலிருந்த உயர்வு தாழ்வற்ற இன ஆட்சிக்குரிய நேர் உரிமை, சரிசமப் பங்கீட்டுரிமை தருவதுடன், அதைக் கையாளும் ஆற்றலும் ஆர்வமும் பெருக்கி, அதற்கான வகைதுறை களையும் வளர்ப்பதற்கென்றே ஓர் இனத் தொண்டர் வகுப்பைப் படைத்து உருவாக்க வேண்டும். அவர்களை வெறுங்கனவாளர்களாக, அருளாளர்களாக விட்டுவைக்கும் இன்றைய உலகநிலை மாறவேண்டும். புகழின் கீறல், வீழ்ச்சியின் மீட்சி! தமிழகத் தேசீயம், தென்னகத் தேசீயம் ஆகியவற்றின் மலர்ச்சி மறுமலர்ச்சித் தொடர்புகளைக் காணாத வரலாற் றாசிரியர்கள் கூட விசயநகர, மராத்திய தேசீய மலர்ச்சிகளின் தொடர்புகளைக் கண்டு விளக்கியுள்ளனர். ‘மராத்தியர் ஓர் இனமாக மலர்ச்சியுறுவதற்குரிய காரணங்களுள் விசயநகர (இந்து)ப் பேரரசின் வீழ்ச்சி முக்கியமான ஒன்று’ என்று வலியுறுத்துகிறார் டாக்டர் எஸ். கிருட்டிணசாமி ஐயங்கார் என்ற வரலாற்றுப் பேராசிரியர். விசயநகரத்தையும் மராத்திய இனமலர்ச்சியையும் இணைக்கும் ஒரு தனி இடை வரலாறாக ஏ. சங்கரராவ் என்பவர் தலைக் கோட்டை (அதாவது இராட்சசித் தங்கிடி)ப் போர் முதல் சிவாஜியின் முடிசூட்டு விழா வரையுள்ள “இந்து” “இந்தியா” என்று ஒரு முழு ஏடு தீட்டியுள்ளார். என். கே. காத்ரே என்பவர் விரிவானதோர் மராத்திய இன வரலாறு எழுத முற்பட்டார். முதல் ஏடு மிகப் பெரிதாய்விட்டது. அத்துடன் அது முழுக்க முழுக்க விசயநகர வரலாறாகவே அமைந்து விட்டது. மராத்திய இன வரலாற்றின் முன்னுரையாக அதனை அவர் வெளியிட்டார். விசயநகர வீழ்ச்சிக் காலத்தில் அவ்வீழ்ச்சியில் பங்கு கொண்டும் அதை ஓரளவு பயன்படுத்தியும், அதன் பண்புகளையும் படிப்பினைகளையும் மேற்கொண்டும் பீசப்பூர்ப் படைத் தலைவனாக அமர்வுபெற்ற ஷாஜியும் அவன் புதல்வர்களான சிவாஜியும் ஏகோஜியும் எவ்வாறு அதன் அடிப்படையில், அதன் மரபு பேணி, அதன் ஆட்சிப் பகுதியையே தம் புதிய இனப் பேரரசின் பின் தளமாக்கிக் கொண்டு முன்னேறினர் என்பதை பல தென்னக, மராத்திய வரலாற்றாசிரியர் விளக்கிக்காட்ட முற்பட்டுள்ளனர். ‘இந்து’ தேசீய அரையிருள் மயக்கத்திடையே முன்னைய பல வரலாற்றாசிரியர்கள் காணாது விட்ட பண்புகளைக் கூர்ந்துணர்ந்து விளக்க முற்பட்டவர்கள் கூட இல்லாமலில்லை. வடதிசைப் புயலில் அல்லோலகல்லோலப்பட்ட வடதிசை மக்களுள், அதை எதிர்த்து நின்று ‘புறநானூற்று’ வீரங்காட்டிய முதல் இனத்தவர் இரசபுத்திரரே. ஆனால் இரசபுத்திரர் பாபரின் வீரத்தைத்தான் எதிர்த்துப் போராட முடிந்தது. ஒன்றுபட்டு நின்று அதனை அழிக்கவோ, அதைத் தடுத்து நிறுத்தவோ கூட முடியவில்லை. அக்பரின் அலைமாயையிலோ அவர்கள் வீரத்தில் குறைந்த ஏனைமக்களைவிட எளிதில் மசிந்து கரைந்தனர். இரசபுத்திரர் போல முறிவுறாமல், மாயையில் மசிந்துவிழாமல் மராத்தியருக்குப் பண்புரமும் ஒற்றுமையும் வலுவும் ஆட்சித் திறமையும் தேசீயக் குறிக்கோளும் அளித்தது விசயநகர முன் மாதிரியே என்று டி. எஸ். ஷேஜ்வல்கார் என்ற மராத்திய அறிஞர் விசய நகரப் பேரரசின் மூன்றாவது நூற்றாண்டு நிறைவுவிழா மலரில் (1936) ‘சிவாஜிக்கும் மராத்திய இனத்துக்கும் விசயநகரம் தந்த படிப்பினைகள்’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் ஆய்ந்துரைத்துள்ளார். ‘மராத்திய இனத்தை மட்டுமன்று, தென்னகப்புயல் அலைக்குரிய பகமனி முதலிய இஸ்லாமிய அரசுகளைக்கூட தங்குதடையற்ற கொடுங்கோன்மைகளை ஓர் எல்லைக்குட்படுத்த உதவிற்று’ என்று அவர் கூறியுள்ளார். விசயநகரப் பேரரசின் உயிர்ப் பண்புகளையும் தென்னகத்தின் அருஞ்சிறப்புக்குரிய பண்புக் கூறுகளையும் தேசீயக் கண்ணோட்ட மிக்க மராத்திய அறிஞர் கூரொளி கொண்டு கண்டு சுட்டி யுள்ளனர். சிவாஜியும் மராத்தியரும் பிறபல அரசர்களும் தென்னகப் படையெடுப்பின் மூலம் தம் ஆட்சிக்குரிய செல்வ ஆதாரத்தைப் பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். வடபுலந்தாண்டிய தென்னகச் செல்வ வளங்கள் மேன்மேலும் தொடர்ந்த வட திசையாளர் சூறையாட்டுக்களுக்குப் பின்னும் வற்றாது குறையாது ஊற்றுவளம் போலப் பெருகிற்று என்று அவர்கள் சான்றுகளுடன் குறித்துள்ளார். தென்னகத்தின் பழமைசான்ற தொழில் வாணிக வளச் சிறப்புக்கும் விசயநகர ஆட்சி வளத்துக்கும் இவை சிறந்த அத்தாட்சிகள் என்பதில் ஐயமில்லை. நாட்டு மக்கள் செல்வ வளமே குறியாகக் கொண்ட வியத்தற்குரிய பண்புடைப் பேரரசு விசயநகரம் என்பதையும் இது தெளிவுபடுத்துகின்றது. பிரிட்டிஷ் ஆட்சிக்கால அமைதி, புதுக்கல்வி ஆகியவற்றின் நற்பயன்களுள் தலைசிறந்த ஒன்று நாட்டு வரலாறு உருவாகி உலக வரலாற்றுடன் இணைவதே. மேலையுலகம் இதன்மூலம் தென்னகத்துக்கும் கீழையுலகுக்கும் மட்டுமன்று, தமக்கும் உலக முழுமைக்குமே ஒரு வருங்கால வற்றாப்புதையலைத் திறந்து வைத்தும் போயுள்ளது. விசயநகர வரலாறு என்னும் திறவு கோலும், தென்னக வரலாறு என்னும் பெட்டகமும் தரும்வளம் நம் தமிழக, தென்னக வளர்ச்சிக்குமட்டுமன்றி, மனித இன வளத்துக்கும் உலக நாகரிக வளர்ச்சிக்கும் உதவவல்ல அரும்பெரும் பண்புகளைத் தமக்குள் அடக்கிக் கொண்டுள்ளன. நாட்டின் மறுமலர்ச்சிச் செல்வர்கள் இச்செல்வக் குவைகளின் திசையில் கருத்துச் செல்லுவார்களாக! காலங் கடந்து வேர்பாய்ச்சிக் கணுவார் கிளைகள் திசைபோக்கி ஞாலங் கடந்து பண்போச்சி, நலமார் திறங்கள் மலர்வித்துச் சீலங் கடந்து தேசீயச் செல்வங் கனிவித் தெழிலார்ந்த கோலம் படைத்த கோவாழ்வின் குன்றாம்விசய நகர்வாழி! அப்பாத்துரையம் - 13 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) வரலாறு  வெற்றித் திருநகர் ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 13 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 20+276 = 296 விலை : 370/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 296  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் முன்னுரை ... 3 1. தென்னகத் தேசீயத்தின் உயிர்மையம் ... 4 2. புயலில் மலர்ந்த மலர் ... 28 3. புகழ் ஏணி ... 74 4. தேசீயச் சிற்பிகள் ... 125 5. பீடார்ந்த பெருங்கல நாயகர் ... 144 6. வண்ண மா மயில் ... 176 7. தென்னகப் பெரும்புயல் ... 201 8. தூவானம் ... 223 9. வானவில் ... 255