இந்திய மக்கள் விடுதலை வரலாறு இந்நூல் 2002 இல் எம்.ஆர். அப்பாதுரை, சென்னை வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. முகவுரை நாம் வாழும் இந்தியா பழங்காலந் தொட்டுப் பண்பாட்டில் சிறந்தது. நலஞ்சார்ந்த சீரிய பண்புகள், அதன் உயிர்ப் பண்பாக - மாயாத கன்னிப் பண்பாக- இளமை மாறாத இன்பப் பண்பாக விளங்கி வருகின்றன. இந்த நலங்கள் வெளிநாட்டாட்சியால் நலிந்து வலி குன்றிக் காணப்பட்டன. நல்லவை நசுக்க முடியாதவை; ஒடுக்கமுடியாதவை. அயர்ந்திருக்கலாம் சிறிது காலம்; ஆனால், ஆக்கமுற வீறு கொண்டெழ வேண்டியவையே அவை. அவ்வாbறுழும்போது அடக்குமுறையும் தடியடியும் கண்ணீர்ப் புகையும் சிறைச்சாலையும் பெருந்துணை புரியமாட்டா; தருந்துணையும் தற்காலிகமே. தற்காலிகத் தன்மை தானாக மடிவது; எனவே விடுதலை வீறுபெறும்; விளக்கம் உறும். திரு. கா. அப்பாத்துரையவர்கள் எழுதியுள்ள “இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு” கூறிவந்த இவைகள் பேருண்மைகளாக அமைந்தவை எனக்காட்டுகின்றது. இந்நூலாசிரியர் பதினொரு பிரிவுகளில் இந்தியாவின் விடுதலை இயக்கத்தைத் தெளிவு படுத்தியிருக்கின்றார். விடுதலைப் பேரியக்கத்தில் தமிழகம் கொண்ட பங்கு இவ்வளவு என்பதை விளக்க முயன்றிருக்கிறார். தமிழகம் அப்போதைக்கப் போது எழுப்பிய விடுதலைத் துனிக்குரல் மாநில இயக்கத்திற்குத் தூண்டுகோலாய் அமைந்தது; ஊக்கம் தந்தது; 1798ல் நடைபெற்ற பாஞ்சாலங்குறிச்சிப் போராட்டமே 1942ல் நடைபெற்ற ஆண்டுப் புரட்சிக்கு வித்து. 1857ல் நடைபெற்ற வட இந்திய முதல் விடுதலைப் போராட்டம் முதல் குரல் எனின் அத்தகைய குரல் 1806லேயே தமிழகத்து வேலூர் கிளர்ச்சியில் கேட்கிறது. காங்கிரஸ் பேரவையின் பிறப்புக்கு ஏற்ற சூழ்நிலை 1885ல் தமிழகத்திலும் தழைத்தது. ‘பிரமஞான சபை’ அதற்குத் துணையாய் அமைந்தது. தாயுமானவர், இராமலிங்க வள்ளலார். மறைமலையடிகளார் போன்றார் தொண்டும் இடம் பெறுகின்றது. வ.உ. சிதம்பரனார், திரு.வி. கலியாண சுந்தரனார் ஆகியோர் தொடர்பு வலியுறுத்தப்படுகின்றது. ‘காந்தி ஊழி’ சிறந்து விளங்குகின்றது. ‘வானவில்’ இன்றைய, செய்திகளைச் செப்பமாகக் காட்டுகின்றது. விடுதலை இயக்கத்தை அறிதல் மீளவும் அடிமைத்தளையில் அகப்படா திருக்கத் துணை புரியமல்லவா? நூல் நடை சிறந்து நிற்கின்றது. எனினும் ,ஓரோர் இடத்தில் மிக இறுகிய பாலாகச் சுவையூட்டுகின்றது. வாழ்க பாரதம்! முத்து. இராசாக்கண்ணனார், ஆ.ஹ.,க்ஷ.டீ.டு தமிழ்ப் பகுதித் தலைவர் அரசினர் கலைக் கல்லூரி, 26-1-1954 சென்னை. பொருளடக்கம் 1. நம் குறிக்கோள்: காலை வண்ணம் அழகும் பயனும் விடுதலை விழா குடியரசு விழா இந்திய மக்கள் தொலை இலக்கு முடியரசுகளும் குடியரசுகளும் கூட்டரக அமைப்பு உலகின் ஒரு சிறிய பதிப்பு ஒற்றுமையும் வலிமையும் அகவொற்றுமை அடிப்படை மனித உரிமைகள் சிறுபான்மைப் பாதுகாப்புரிமைகள் குடியாட்சியின் உயிர் மூச்சுக்கள் தாய்மொழிக் கல்வி பசி வந்திடப் பத்தும் பறந்து போம் வாழ்க்கைத் தரமும் வாய்ப்பு நலங்களும் புதிய பொறுப்பு தமிழர் குடியாட்சி மரபு விடுதலை இயக்கக் கவிஞர் பாரதியாரின் கனவு சமதர்மக் குடியரசு புதிய இந்தியாவும் புதிய உலகும் பொருள் 2. புகழ் மரபு: காலங் கடந்த புகழ் இயற்கையன்னையின் மறு படிவம் உலகளாவிய பண்பாட்டியக்கங்கள் வரலாற்றாசிரியர் குறை நோக்கு இரு பேரியக்க அலைகள் தாயகத்தின் முதற் சித்திரம் ஆரிய நாகரிகம்- நான்கு படிகள் உபநிடத இயக்கம் பண்பும் பயனும் புத்த சமண சமயங்கள் உலக இலக்கிய மரபு இந்து மதம் திரும்பு கட்டம்: கி.பி. 3-ஆம் நூற்றாண்டு பத்தி இயக்கம் தாய்மொழிப் புரட்சி: 12-ஆம் நூற்றாண்டு பண்பு மயக்கம் கடல் வாணிகம் ஆட்சி மரபும் குடியாட்சிப் பண்பும் பேரரசு மரபுகள் விடுதலை இழந்த வகை 3. அயலாட்சியும் அடிமைத் தளைகளும்: பாரதம் அன்றும் இன்றும் வடிவம் ஒன்று; வண்ணம் வேறு ஒற்றுமைக்கேடு சாதி முறைமை சமுதாய வாழ்வு அரசியல் வாழ்வு பொருளியல்; போர்த்துறை அரசியலில் சமய குருமார் ஆதிக்கம் அயலாட்சி கண்ட நாட்டு நிலை: சமய வாழ்வு கடலாதிக்க மாற்றம் அயலார் கண்ட தென்னிந்தியா அயலாட்சியின் இருதிறப் பண்பு 4. முன்னணி முரசம்: மாநிலத்தின் சேமப் பண்ணை ஆதிக்கவாதிகளின் இருட்டடிப்பு 1857க்கு முன்னுள்ள சூழ்நிலை மைசூர்ப் போர்கள் 1798- தமிழகத்தில் புரட்சி 1857ம் 1798ம் ஒரே மாநிலம் வீரபாண்டியர் மரபு தமிழக உரிமை மரபு உரிமைப் போராட்டம் சிங்கம் வெகுண்டது வஞ்சக வலை; வீழ்ச்சி புதிய புரட்சி இரண்டாவது வீர காவியம் முன்னணிப் போரும் முழுநிறைப் போரும் 5. விடுதலைப் புயல்: புயல்- சூறாவளி- புரட்சி படைவீரர் கிளர்ச்சி மட்டுமன்று, தேசியப் புரட்சி புரட்சியின் குறைபாடுகளும் விளக்கங்களும் இந்த நாட்டரசுகள் எவ்வாறு ஏற்பட்டன? உலக எல்லையில் அலை எதிர் அலைகள் அணை உடைந்தது புரட்சி வெள்ளமும் குருதிப் பெருக்கும் அயோத்தியும் பீகாரும் தில்லியின் விடுதலை முரசம் பேரரசர் அழைப்பு விளம்பரம் புயலுக்குப்பின் சோனா மாரி 6. பேரவையின் பிறப்பு: பேரவையும் மாநில வாழ்வும் இரு மரபுகள் பிரமசமாஜ இயக்கமும் ராஜாராம் மோகன் ராயும் ஆரிய சமாஜம் இராமகிருஷ்ண மடமும் விவேகானந்த அடிகளும் பிரமஞான சங்கமும் திருமதி அன்னி பெஸண்டு அம்மையாரின் தொண்டும் தென்னிந்தியாவின் குரல் ஆட்சி மரபு அரசியல் நிலைய மரபு: பேரவையின் தோற்றம் முதற் பேரவை 7. இளமைக் குரல்: எதிர்பாராத மாறுபாடும் வளர்ச்சியும் தேசப் பிரதிநிதித்துவ சபை: காந்தியடிகளின் சான்றுரை பேரவையின் தலைமை மரபு புதிய குரல் ஆட்சியாளர் எதிர்ப்பு முதற் பேரவை; தீர்மானங்கள் புதிய பிரச்சினைகள் மக்கட் குரல் கர்ஸான் பெருமகனாரின் புதுத் தாக்குதல் 8. புயல் எதிர்ப் புயல்: மாநிலமும் வங்கமும் வங்கப் புரட்சி; சுதேசி இயக்கம் தமிழக ‘வங்கப்’ புரட்சி வங்கத் தேசியமும் தமிழகத் தேசியமும் தேசியக் கவிஞர் பாரதியார் புயல் - எதிர்ப்புயல் - பருவம் சூரத்துப் பேரவைக் கூட்டம் மிதவாத அலை மின்டோ- மார்லி சீர்திருத்தங்கள் புதிய பிளவுகள்: முஸ்லிம் சங்கம், இந்துப் பேரவை தலைநகர் மாற்றம் இந்து முஸ்லிம் ஒற்றமை வளர்ச்சி புதிய தன்னாட்சி இயக்கங்கள்; புதிய தலைமை; மாண்டேகு- செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்கள் மிதவாதிகளின் வெளியேற்றம்: தனிக் கட்சி அமைப்பு தென்னிந்திய நேர்மைக் கட்சி: தொழிற்சங்க இயக்கம் 9. காந்தி ஊழி: தலைவர்கள் போற்றுந் தலைவர் வாழ்வும் போர்முறையும் அறப்போர் முறை ரௌலத்துச் சட்டம் எதிர்ப்பு பஞ்சாபுப் படுகொலை படுகொலையின் எதிரொலிகள் புதிய குறிக்கோள்: விடுதலை அரசு ஒத்துழையாமை இயக்கம் காந்தியப் பேரவை சௌரி சௌரா நிகழ்ச்சி: காந்தியடிகள் சிறைத் தண்டனை தன்னாட்சிக் கட்சி காந்தியடிகளின் விடுதலை தேசபந்து ஸி. ஆர். தாஸ் மறைவு குடியேற்ற நாட்டுரிமையா? முழுநிறை விடுதலையா? புதிய போராட்டம்: சட்ட மறுப்பு இயக்கம் வட்டமேஜை மாநாடுகள் வில்விங்டன் பெருமகனார்: அடக்கு முறையின் திருவுருவம் தனிப்பட்டவர் சட்ட மறுப்பு இயக்கம் 10. விடுதலைக் கோபுரவாயில்: பேரவையின் பொன் விழா காந்தியடிகளின் ஆக்கப் பண்பு மீண்டும் சட்டசபைப் பிரச்சினை தேர்தல் வெற்றிகள்: பேரவைக் கட்சியின் ஆட்சி ராஜேந்திரப் பிரசாது- ஜின்னா பேச்சுகள் போஸ் தலைமை ஹரிபுராப் பேரவை திரிபுராத் தலைவரின் அம்புப் படுக்கை பேரவை ஆட்சி: உலகப் போர் பாகிஸ்தான் கோரிக்கை காந்தியடிகளின் போர்க் கொள்கையும் பேரவையின் போர்க் கொள்கையும் தனிப்பட்டவர் சட்ட மறுப்பு மாநில ஆட்சி முதல்வரின் செயலவை விரிவு தலைவர் பெருந்தகையின் மாய மறைவு கிரிப்ஸ் திட்டம் கிரிப்ஸ் திட்டத்தின் சிறப்புக் கூறுகள் இந்தியாவின்மீது படையெடுப்புப் பற்றிக் காந்தியடிகள் “இந்தியாவை விட்டு வெளியேறு”; காந்தியடிகள் விளக்கம் ஆகஸ்டு 8 தீர்மானம் பசுப்போன்ற பாரத மக்களின் சீற்றம் ஆகஸ்டு பற்றிய இரு கருத்துகள் தமிழகத்தின் எச்சரிக்கைக் குரல்: ராஜகோபாலாசாரியார் அரசியல் முட்டுக்கட்டை நிலை காந்தி- ஜின்னா பேச்சுக்கள் வேவல் பேச்சுகள் இந்திய விடுதலைப் படை இ.தே. ரா. இயக்கம் பிரிட்டிஷ் அமைச்சவைத் தூதுக்குழு இடைக்கால அரசு முஸ்லீம் சங்கத்தின் போர்க் குரல் ஆட்லியின் பிப். 20-ஆம் தேதி அறிக்கை மவுண்ட்பாட்டன் திட்டம்: விடுதலை ஆனால்... பிரிவினை விடுதலை- மின்னொளி 11. வானவில்: புதிய சூழலும் பொறுப்பும் அரசியலமைப்பும் சட்டமும் அமைப்பின் குறிக்கோள் நடுவரசு தனியரசுகள் வெளிநாட்டுத் தொடர்பு பிரிவினையின் விளைவுகள்: அகதிகள் துயர் மன்னர் அரசுகள் - ஹைதராபாது - காஷ்மீர் மன்னர் அரசுகளின் ஒருங்கிணைப்புத்தடங்கல்கள்: படிப்பினைகள் காலக் கண்ணாடி பயிர்ப்பண்பு எது? களைப்பண்பு எது? சாதி முறைமைக் கேடு தமிழகம் தரும் ஒளி மதம் அரசியல் ஆகியவற்றின் சாதி அடிப்படை முன்னணிகளின் முரண்பாடு குழு நலன்கள் மொழித் துறை காந்தியடிகள் காட்டிய வழி 1952 தேர்தல் படிப்பினைகள் அடிப்படைப் பிரச்சினை: நேருவின் விளக்கம் பட்டியல்கள் 1. காங்கிரசின் முதல் 22 ஆண்டு வளர்ச்சி 2. புயல் - எதிர்புயல் - பருவ வளர்ச்சி 3. காந்தி ஊழி வளர்ச்சி 4. விடுதலைப் கோபுரவாயில் வளர்ச்சி 1. நம் குறிக்கோள் காலை வண்ணம் இந்திய மாநிலத்தின் புகழ்வானில் விடுதலை ஒளி வீசுகின்றது. அதனிடையே புதிய குடியரசு விடிவெள்ளியாகச் சுடரிடுகின்றது. நிழற் படலங்கள் இன்னம் அலையாடிக்கொண்டு தான் இருக்கின்றன. ஆயினும், எழுஞாயிற்றின் செவ்வொளி விரைந்து செவ்வொளியாய், பாலொளியாய், பகலொளியாய்ப் பரவும் என்பதில் ஐயமில்லை. விழுஞாயிற்றின் செந்நிற வண்ணங் கண்டு கவிஞர் கனவு காண்பதுண்டு பாரத தேசம் எனப் பேர் பெற்றோங்கும் நம் மாநிலத்தின் பண்டைப் புகழ் இது போன்றது. அக்கவர்ச்சியில் நாம் ஈடுபடுவது இயல்பு. அது நம் வருங்கால வளர்ச்சியில் நமக்கு ஊக்கம் தரும் என்பதிலும் தடையில்லை. ஆனாலும், மாலை வண்ணத்தின் அழகு; ஒளியை இருள் விழுங்கும் அழகு; அதில் பின்னோக்கித்தான் நாம் ஒளியைக் காண முடியும்; முன்னோக்கி காண முடியாது. விடுதலை எழுச்சியின் அழகு இது போன்றதன்று. அது காலை வண்ணம் போன்றது. அதில் நாம் பின்னோக்கி இருள் கண்டு, முன்னோக்கி ஒளியை வரவேற்கின்றோம். இருள் படிப்படியாக ஒளியாக வளர்கிறது. ஒளி படிப்படியாகப் பேரொளியாக வளம் பெறுகிறது. காலை வண்ணம் தருவது இன்பம் மட்டுமன்று; அது இன்பத்துடன் ஆர்வத்தையும், ஊக்கத்தையும் கலக்கின்றது. அதன் மூலம் நமக்குக் களிப்பு ஏற்படுகின்றது. காலை வண்ணம், அழகுக் காட்சி மட்டுமன்று; ஊன்றிக் கவனித்தால், அஃது உயிரினங்களின் வாழ்விலும் மக்கள் வாழ்விலும் மலர்ச்சியும் வளர்ச்சியும் உண்டு பண்ணுகிறது என்பதை உணரலாம். கதிரவனொளி கண்டதும் போதுகள் இதழ் அவிழ்கின்றன; மலர்கள் மணம் கமழ்கின்றன. அது மட்டுமன்றி, மலரிலுள்ள பொன்துகளையும் தேனையும் உண்டு வண்டுகள் இசை பாடுகின்றன. இதனால், வண்டுகளின் வாழ்வும் வளம் பெறுகிறது. அதே சமயம், மலர்களும் வளமெய்துகின்றன. வானொளி கண்டு பறவைகள் சிறகலைத்துக் கலகலக்கின்றன. அவை தம் குஞ்சு களுக்கு இரையளித்துத் தாமும் இரைதேடப் புறப்படுகின்றன. சோர்ந்து துயிலும் தொழிலாளியை இளஞாயிற்றின் ஒளிக்கரங்களும் அவன் இன்பக் குழவியின் மென்கரங்களும் ஒருங்கே தட்டியெழுப்புகின்றன. இயற்கையன்னையின் ஒரு மதிமுக மென்சாயல், இதைப் பலகனி வழியாகக் கண்டு புன்னகை பூக்கின்றது. இக்காட்சி தொழிலாளியின் துயிலுடன் துயரையும் அகற்றி, அவனை அவன் நாள்வேலையில் ஊக்கும் என்பது உறுதி. நாள்தோறும் நாம் புலர்காலையின் அழகைக் காண்கிறோம்; கண்டு பழகிவிடுகிறோம். ஆண்டுதோறும் நாம் தமிழ்ப் பொங்கல் விழாக் கொண்டாடுகிறோம்; கொண்டாடிப் பழகிவிடுகிறோம். அவற்றின் முழு அழகை, முழு அருமையை, தமிழ்க் கவிஞர் நமக்குத் தீட்டிக் காட்டிய பின்பே நாம் நேர் முகமாக உணர்கிறோம். விடுதலை நாளையும் குடியரசு நாளையும் நாம் ஆண்டுதோறும் கொண்டாடத் தொடங்கி யிருக்கின்றோம். இவையும் விழாக்களுடன் விழாவாகப் பழகிவிடக்கூடும். இவற்றின் குறிக்கோளை- அருமை பெருமை களை- மறவாது பேணும் பொறுப்பு, பொதுவாக மாநில மக்களையும், சிறப்பாக இளைஞரையும் இள நங்கையரையுமே சாரும். அழகும் பயனும் அழகு எப்போதும் இனிது. ஆனால், பயன் அதனினும் பல மடங்கு இனிது. அழகிருந்தும் பயன்படா மலர்கள் உண்டு. அவை காட்டு மலர்கள். நீரோட்டமிருந்தும் பயன்படா ஆறுகள் உண்டு. அவை காட்டாறுகள். நம் மாநில விடுதலையும் குடியரசும் நமக்கு இத்தகைய காட்டு மலராக, காட்டாறாக இருந்துவிடக்கூடாது. அழகுடன் பயனும் தரும் நாட்டு மலராக- நானிலத்தை வளப்படுத்தும் நாட்டாறாக- அவை திகழ வேண்டும். விடுதலை நம் குறிக்கோள். அதற்காக நாம் நீண்ட நாள் போராடியிருக்கிறோம். குடியரசு நம் தொலை இலக்கு. அதனை நாட்டின் நல்லறிஞர்கள்- நாட்டுத் தலைவர்கள்- கனவிற் கண்டுள்ளார்கள். அக்குறிக்கோளையும் அக்கனவையும் நாம் நம் வருங்கால வாழ்க்கையின் ஒரு பகுதி ஆக்க வேண்டும். குறிக்கோள் நமக்கு நெறி காட்டும் ஒளி விளக்காக இருக்க வேண்டும்; கனவு நனவாகி, நம் வாழ்வை வளப்படுத்த உதவ வேண்டும். இது நம் முயற்சியைப் பொறுத்தது; நம் அறிவாற்றலையும், நற்பணியையும் பொறுத்தது. விடுதலை விழா 1947-ஆம் ஆண்டு, ஆகஸ்டுத் திங்கள், 15-ஆம் நாளைக்கு முந்திய நள்ளிரவுடன் இந்திய மாநிலம் விடுதலை பெற்று விட்டது. அயலாட்சியாகிய பிரிட்டிஷ் ஆட்சிக்கு நாம் அன்று விடை கொடுத்தனுப்பி விட்டோம். மாநிலத்தின் ஆட்சி நம் மாநிலத்தின் கைக்கு வந்துவிட்டது. ஆண்டுதோறும் இந்நாளையே நாம் விடுதலை விழாவாகக் கொண்டாடுகிறோம். விடுதலைப் போராட்டத்தின்போது விடுதலையே நம் குறிக்கோளாய் இருந்தது. நம் தலைவர்களின் குறிக்கோளும் அதுவே. நம் முயற்சிகளாலும் நம் தலைவர்களின் முயற்சிகளாலும் நாம் வெற்றி பெற்றுவிட்டோம்! இனி நம் குறிக்கோள் யாது? விடுதலை வீரராகிய நாம், இனி எதை நோக்கிச் செல்வது? எதற்குப் பாடுபடுவது? விடுதலைக் குறிக்கோள் நாட்டு விடுதலையுடன் நின்று விடாது. உலக வரலாறு இதை நமக்கு நன்கு எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில், விடுதலை நாடுகளிலும் விடுதலை இயக்கங்கள் நடைபெற்றிருக்கின்றன; நடைபெறுகின்றன. விடுதலையற்ற அடிமை நாடுகளில், ஆளும் நாடு வேறு; ஆளப்படும் நாடு வேறு. ஆளும் நாட்டுக்கு உரிமை உண்டு; ஆளப்படும் நாட்டுக்கு உரிமை இல்லை; கடமை மட்டுமே உண்டு. உரிமை யில்லாத இக்கடமையையே நாம் அடிமை என்கிறோம். அயலாட்சியாகிய பிரிட்டிஷ் ஆட்சியால் இந்தியாவுக்கு இருந்த நிலை இதுவே. ஆனால், விடுதலை நாடுகளில் இந்த நிலை இருக்க முடியாது. விடுதலை நாடுகளில் ஆளும் நாடும் ஆளப்படும் நாடும் ஒன்றே. ஆயினும், இங்கேயும் ஆள்பவர், ஆளப்படுபவர் என்ற வேற்றுமை இருக்கக் கூடும். ஆளப்படும் மக்களனைவருக்கும் ஆட்சியுரிமையில் சரிசமப் பங்குள்ள ஆட்சியையே நாம் குடியரசு என்று கூறுகிறோம். விடுதலை நாடுகளின் விடுதலை இயக்கம் இக்குடியரசையே குறியாகக் கொண்டு நடை பெறுகிறது. விடுதலை நாட்டின் விடுதலைக் குறிக்கோள் குடியாட்சி நிறுவுவது; அதாவது, குடியரசு அமைப்பதே. குடியரசு விழா விடுதலை பெற்ற சில ஆண்டுகளுக்குள் நம் விடுதலை இயக்கத் தலைவர்கள் மாநில அரசைக் குடியரசு ஆக்கியுள்ளார்கள். அதன் பின்னர் அந்நாளையே நாம் குடியரசு விழாவாகக் கொண்டாடுகிறோம். நீண்டநாள் விடுதலைப் போராட்டத்தின் பயனாகவே நமக்கு விடுதலை கிட்டியுள்ளது என்பதை நாம் மறக்கக் கூடாது. அதே சமயம் போராட்டம் எதுவும் இல்லாமலே, தலைவர்களின் கனவார்வம் காரணமாக, அது ஒரு குடியரசும் ஆகிவிட்டது ஆயினும் நாடு குடியரசாக ஒரு சட்டம் போதியது. அதை நிறை குடியரசாக்க எந்தச் சட்டமும் போதாது. அதற்கு மக்களுள் ஒவ்வொருவரும் தத்தம் அரசியல் உரிமை கோரியாக வேண்டும். இந்தியத் தலைவர்கள் குடியரசு நிலை கடந்து இதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள். இந்திய மக்கள் “இந்திய மக்களாகிய நாங்கள்” என்ற சீரிய தொடருடன் தொடங்குகிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், தலைவர்களின் உயர்ந்த குறிக்கோளையும் பண்பையும் இந்த முதல் வாசகமே காட்டுகிறது. அக்குறிக்கோள் நாட்டு விடுதலையுடன் அமையவில்லை; நாட்டு மக்கள் விடுதலையை, அதாவது நிறை குடியரசுரிமையைப் பற்றி அது கனவு காண முன்வந்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவின் உரிமைப் பத்திரம். அதன் முதல் வாசகம் மற்றோர் உரிமைப் பத்திரத்தை நமக்கு நினைவூட்டுவ தாயுள்ளது. அதுவே, உலக நாடுகள் அமைப்பு வகுத்துள்ள உலக உரிமைப் பத்திரம். அது பல நாட்டு நல்லறிஞர்கள் சேர்ந்து உலகத்துக்காக அமைத்தது. அதுவும் “உலக மக்களாகிய நாங்கள்” என்றே குரலெழுப்பி யுள்ளது. ‘உலக நாடுகளின் அரசுகள் ஒன்றுபட்டு விட்டன. இனி உலக மக்கள் ஒன்றுபட வேண்டும்.’ இவ்விருப்பத்தையும் கனவார்வத்தையும், உலக மக்கள் என்ற தொடரால் உலக அறிஞர் சுட்டிக் காட்டினர். ‘எல்லா நாட்டு அரசுகளும் மக்கள் அரசுகள், அதாவது, குடியரசுகள் ஆக வேண்டும்’ என்ற குறிக்கோளையும் அது வலியுறுத்துகிறது. மாநிலம் விடுதலை பெற்றவுடனே நம் தலைவர்கள் இதே குறிக்கோளையும், கனவார்வத்தையும் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். இந்திய மக்கள் என்ற தொடர் இதைக் குறித்துக் காட்டுகிறது. உலக மேடையிலிருந்து எழுந்த குரலுக்கு இந்தியா எதிர்க் குரலளித்துள்ளது. உலக அறிஞர் நீட்டிய அன்புக் கரத்துக்கு இந்திய அறிஞர் தம் அறிவுக்கரம் கொடுத்து அவர்களுடன் அளவளாவியுள்ளனர். இந்தியா விடுதலை பெற்றுவிட்டது; உரிமை பெற்று விட்டது; இந்திய மாநிலத்தின் பெயரால் அதைத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால், தலைவர்கள்- விடுதலை இயக்கத் தலைவர்கள்- மக்கள் தலைவர்கள், விடுதலையையும் அதன் பயனான ஆட்சியுரிமையையும் அவர்கள் மக்கள் உடைமை ஆக்கத் துணிந்துள்ளார்கள். “இந்நாட்டின் விடுதலை இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் உரியது. அதை அம் மக்களுக்கே உரிமைப்படுத்த விரும்புகிறோம். மக்கள் இனி அதைத் தமதாக்க வேண்டும். தமதாக்கத் தம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே எங்கள் விருப்பம்! இதுவே எங்கள் குறிக்கோள்!” இந்திய மக்கள்’ என்ற தொடர் வாயிலாக இந்தியத் தலைவர்கள் கூறாமற் கூறும் குறிப்புரை வாசகம் இதுவே. தொலை இலக்கு நம் குறிக்கோள் இங்ஙனம் வானளாவ உயர்ந்த ஒன்று. அது முகில் திரைகளுக்குள்ளாக மறைந்து திகழும் இமயமலையின் உயர்ந்த முக டொத்தது. நம் தலைவர்கள் கனவு, தொலைக்காட்சி யாளர் கனவு. அது நீர்த்திவலைகளினூடாகப் பல்வண்ணக் கவர்ச்சியுடன் தோன்றும் வான வில்லைப் போன்றது. ஆயினும், குறிக்கோள் தொலைவிலிருந்தாலும், அதில் நம் கண்கள் பதிந்தால், கனவியல் சித்திரத்தை நோக்கி நம் அடிச் சுவடுகள் நம்மை இழுத்துச் சென்றுவிடுவது உறுதி. வழியில் மேடு பள்ளங்கள், காடு கரைகள் இருக்கலாம். ஆனால், களையகற்றும் இனிய நீரோடைகளும் இடையிடையே உண்டு. நம்மிடம் நம்பிக்கையும், விடாமுயற்சியும், தளரா மனவுறுதியும் இருந்தால், தொலைநோக்குடன் வழிகாட்டும் திறமுடைய தலைவர்களின் உதவி இருந்தால், நம் கனவு விரைவில் நனவாவது திண்ணம். முடியரசுகளும் குடியரசுகளும் விடுதலை அரசுகளெல்லாம் குடியரசுகளல்ல. அவற்றுள் முடியரசுகளும் உண்டு. குடியரசுகளும் யாவுமே நிறை குடியரசு அல்லது மக்களரசு என்று கூற முடியாது. அவற்றுட் குறைந்த அரசுகளும் உண்டு. அவற்றை நாம் கூர்ந்துணர்ந்தால், நம் குறிக்கோள் எவ்வளவு தொலைநோக்குடையது என்பது விளங்கும். முடியரசுகளிடையே மக்கள் நலனறிந்து ஆளும் முடியரசை முற்காலத்தவர், ‘செங்கோலரசு’ அல்லது ‘செங்கோன்மை’ என்றனர்; மக்கள் நலனுக்கு மாறாக ஆளும் அரசைக் ‘கொடுங் கோலரசு’ அல்லது ‘கொடுங்கோன்மை’ என்று வழங்கினர். ஆனால் இவ்விரண்டு வகை அரசுகளுமே மக்கள் விருப்ப மறிந்தும், மக்கள் ஆட்பேர்கள்1 மூலம் அவர்கள் கட்டளைகள் பெற்றும் ஆள வேண்டுமென்பதில்லை. இங்ஙனம் ஆளாத இருசார் அரசுகளையுமே மேனாட்டார் ஒருங்கே ‘கடுங்கோன்மை’2 என்றனர். மக்கள் விருப்பமறிந்தும் அவர்கள் ஆட்பேர்கள் மூலம் அவர்கள் கட்டளைகளை ஏற்றும் ஆளும் அரசரின் ஆட்சியையே அவர்கள் நல்ல முடியரசு அல்லது பொறுப்புடைய முடியரசு3 என்று வழங்கினார்கள். குடியரசுகளிலும் பெயரளவுக்கே குடியரசாய், ஒரு தனி மனிதன் ஆதிக்கம் செலுத்தும் குடியரசும் உண்டு. இதுவே ‘வல்லாண்மையரசு’4 எனப்படுகிறது. இது தவிர, ஒரு சிலர் அல்லது ஒரு வகுப்பாளரே உரிமை பெற்றவராய் முழு ஆதிக்கம் செலுத்துவதுண்டு. இத்தகைய அரசுகள் சில் குழுவாட்சி,5 குருமார் ஆட்சி,6 உயர்குடி ஆட்சி,7 பணித்துறை வல்லார் ஆட்சி,8 செல்வர் ஆட்சி9 எனப் பல தரப்படும் இத்தகைய படிகளெல்லாம் கடந்த நிறை குடியரச ‘மக்களாட்சி’ அல்லது குடியாட்சி10 ஆகும். அரசியலமைப்புச் சட்டத்தில் ‘இந்திய மக்கள் என்ற தொடர் நம்மைக் குடியரசின் எல்லை கடந்து இம்மக்களாட்சியைக் கனவு காண வைத்துள்ளது. கூட்டரசு அமைப்பு மாநில வருங்கால வாழ்வுக்குரிய மற்றொரு பகுதியையும் அரசியலமைப்புச் சட்டம் சுட்டிக் காட்டுகிறது. அந்தச் சட்டம் மாநில ஆட்சியைக் குடியரசாக்கியுள்ளது. ஆனால், மாநிலத்தை அது ஒரு ‘கூட்டுறவு’11 என்றே குறிக்கிறது. மாநில ஆட்சியும் இதற்கேற்ப ஒரு கூட்டுக் குடியரசு ஆகியுள்ளது. கூட்டுறவு என்ற புதுப்பெயருக்கேற்ப முன்பு ‘மாகாணங்கள்’12 என்று வழங்கியிருந்த அதன் பெரும்பகுதிகள், இன்று ‘தனியரசுகள்’13 என்று வழங்கப் பெறுகின்றன. முன்பு மாகாணங்களுடன் சேராமல் தனிப்பிரிவுகளாய்ச் சிதறிக் கிடந்த ‘சிற்றரசுகள்’14 இப்போது பெரிய திணைத் தொகுதிகளாக15 இணைக்கப் பட்டுள்ளன. தனி அரசுகளுக்கும்,திணையரசுத் தொகுதிகளுக்கும் தனித் தனி மன்றங்களும்16 மேல் அவைகளும்17 நடைமுறையாட்சித் தலைவராக அரசு முனைவரும்1 அரசு முகவரும்2 உண்டு. கூட்டு நடுவரசுக்கும்3 இதுபோல ஒரு மாமன்றம் அல்லது மக்கள் பேரவையும், 4 மேல் அவையும், அரசுத் தலைவராக ஒரு மாமுனைவரும்5 உண்டு. குடியரசு கடந்த மக்களாட்சியை நாட்டுத் தலைவர்கள் கனவு கண்டுள்ளது போலவே, தனிக் குடியரசுகளுடன் திணையரசுகளும் இணைந்த இணைக்கூட்டரசையும் அவர்கள் கனவு கண்டுள்ளார்கள். உலகின் ஒரு சிறிய பதிப்பு நம் மாநிலம், ஒரு மொழி, ஓர் இனம், ஒரு சிறு பண்புடைய சிறு தனி நாடு அன்று; பல பெருமொழிக்குழுக்கள், பல பேரினங்கள், பண்பாடுகள் ஆகியவற்றின் கூட்டமைதி தழுவிய ஒரு பரந்த உலகப்பகுதி, மக்கள் பெருக்கத்திலும் தொகுதியிலும் பல்வகை வளப் பெருக்கத்திலும் அது ஒரு துணைக் கண்டம் என்று கூறத்தக்கது. எல்லா உலக இனங்களும், கிட்டத்தட்ட எல்லா உலக சமயங்களும் இதன் வாழ்வுடன் தொடர்புடையன; பல சமயங்கள் இதில் தோன்றி இதிலேயே வாழ்வன. சில, இதில் பிறந்து உலகெங்கும் பரந்து வளர்ந்தவை. இதற்கேற்ப, நம் மாநிலத்தின் வரலாறு உலகினுள் ஒரு தனி உலக வரலாறு அல்லது ஒரு குட்டி உலக வரலாறு என்று கூறத்தக்கது. இம் மாநிலமும் நாடுகளுள் ஒரு நாடாய் இராமல், உலகின் ஒரு சிறிய பதிப்பாகவே அமைந்துள்ளது. ஆகவேதான், வரலாற்று மரபு, பண்பாட்டு வளர்ச்சி, மொழி வசதி, அரசியல் ஆட்சி வசதி ஆகியவற்றை முன்னிட்டு, இந்தியா பல தனியரசுகளாகவும், திணையரசுகளாகவும் பிரிக்கப்பட்டு, இயல்கின்றன. இது ஒரு மாபெருந்தனியரசாக வகுக்கப்படாமல், கூட்டரசாக வகுக்கப்பட்டதன் காரணம் இதுவே. ஒற்றுமையும் வலிமையும் நீண்ட நாள் அயலாட்சியின்கீழ் இருந்துவிட்ட இம் மாநிலத்துக்கு, ஒற்றுமையும் வலுவும் இன்றியமையாதவை. புதிய குடியரசு போராடிப் பெற்றுள்ள விடுதலையைக் காப்பாற்றிக் கொள்ள இப்பண்புகள் இன்றியமையாதவைகளாகின்றன. மேலும், உலக அரசியல் வாழ்வு ஒரு சூறாவளி போன்றது. அதனிடையே புதிய தேசீய வாழ்வாகிய மரக்கலம் இடையூறில் லாமல் செல்ல வேண்டுமானால், அம்மரக்கலம் உரமுடைய தாயிருக்க வேண்டும். அதன் பகுதிகள் ஒன்றுபட்டு உறுதியுடன் இணைக் கப்பட்டவையாய், சரிசமப் பளுவுடையவையாய் இருக்க வேண்டும். ¬இவ்வுண்மைகளை நம் தலைவர்கள் நன்குணர்ந் துள்ளார்கள். எனவேதான் அவர்கள் இம்மாநில ஆட்சியை ஒரு கூட்டாட்சியாக்கியதுடன் நின்று விடவில்லை; இதனை வலிமை வாய்ந்த ஒருமுகப்படுத்தப்பட்ட கூட்டரசாக்க முனைந் துள்ளார்கள். இதை வலுவுடையதாகவும் தற்காப்புடைய தாகவும் வகுத்திருக்கிறார்கள். இதற்கேற்பத் தனியரசுகளும் திணை யரசுகளும் இதனைச் சார்ந்து இயங்குபவைகளாய், இதனால் உரிமை வரையறுக்கப் பெறுவனவாய் அமைக்கப்பெற்றுள்ளன. பிரிட்டிஷ் ஆட்சி அயலாட்சியாய் இருந்தாலும் அதன் நடுவாட்சியின் வலிமையே இம்மாநிலத்தை ஒன்றுபடுத்தி ஆள உதவிற்று என்பதில் ஐயமில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் மாநிலத்தின் பெரும்பகுதியை ஆண்ட பேரரசுகள் பல. அவையும் ஆட்சி வலுவின் மூலமே பேரரசை ஒன்றுபடுத்தியிருந்தன. அவற்றின் வலுக்குறைந்ததே. அவற்றாலேற்பட்ட ஒற்றுமையும் தடங்கெட மறைந்தது. நடுவாட்சியை வலுப்படுத்தும் வகையில் இவ்வரலாற்றுப் படிப்பினைகளே தலைவர்களுக்கு வழிகாட்டியாயிருந்திருக்க வேண்டும். ஆனால், வரலாறு தரும் படிப்பினைகள் இவை மட்டுமல்ல. ஆட்சி வலிமையால் ஏற்படும் ஒற்றுமையைவிட, ஒற்றுமையால் ஏற்படும் ஆட்சி வலிமையே உறுதியானது. இதனை இம் மாநில வரலாறு மட்டுமன்றி, உலக வரலாறு முழுவதுமே காட்டும். ஏனெனில், ஆட்சி வலிமையால் ஏற்படும் ஒற்றுமை, புறவொற்றுமை. அது தற்காலிக ஒற்றுமை யாக மட்டுமேயிருக்க முடியும். ஆதிக்கத்தின் அடிப்படையில், உயர்வு தாழ்வு அடிப்படையில் ஏற்படும் இவ்வொற்றுமை, ஆதிக்கவலு அகன்றவுடன் மறைந்துவிடும். நேர்மாறாக, ஒற்றுமையால் ஏற்படும் ஆட்சி வலிமை நீடித்து நிலைக்கும். ஏனென்றால், இங்கே ஒற்றுமை அகவொற்றுமையாக, அன்பொற்றுமையாகவே இருக்க முடியும். ஆதிக்கம், உயர்வு தாழ்வு வேறுபாடு ஆகியவற்றிற்கு மாறாக இங்கே சரிசமத்துவமும், உறுப்பினர்களின் தங்குதடையற்ற தன் முடிபுரிமையும்1 நிலவும். இவற்றின் அடிப்படையில் ஆதிக்கமில்லாமலே கூட்டுழைப்புக்கு வழி ஏற்படும். இத்தகைய கூட்டுழைப்பு அல்லது அகவொற் றுமையே தேசீய ஒற்றுமை யாகும். பிரிட்டிஷ் ஆட்சியும் மற்றப் பேரரசாட்சிகளும் நாட்டிய ஒற்றுமை இத்தேசீய ஒற்றுமை யன்று; தேச ஒற்றுமை மட்டுமே. அவற்றால் மாநிலம் ஒன்றுபட்டது; ஆயினும், மாநில மக்கள் வாழ்வு போதுமான அளவு ஒன்றுபடவில்லை.¬¬ அகவொற்றுமை ஆனால், பிரிட்டிஷ் ஆட்சி நாடிய வலுவுக்கும் விடுதலை இந்தியக் குடியரசு நாடும் வலுவுக்கும் ஓர் அடிப்படை வேற்றுமை உண்டு. பிரிட்டிஷ் ஆட்சி, ஆதிக்கம் நாடிய ஆட்சி. அது நாட்டை ஒன்று படுத்த விரும்பிற்று. ஆனால், அது நாட்டு மக்களிடையே திட்டமிட்டு ஒற்றுமையை வளர்க்கவில்லை. அயலாட்சியாத லால், அது அதை விரும்பும் என்று நாம் எதிர்பார்த்திருக்கவும் முடியாது. ஏனென்றால், மக்கள் ஒற்றுமைக்கேடு அயலாட்சியின் பயன் மட்டுமன்று, அயலாட்சியை வரவழைக்கும் பண்பும், அதை நீட்டிக்கும் பண்பும் அதுவே ஆகும். விடுதலைக் குடியரசு இன்று நாடும் வலு, வெளிப்பார்வைக்கு இதே போன்ற புறவொற்றுமை யாய்த் தோன்றினாலும், பயனில் இதனின் வேறுபட்டது. அது தன் தற்காலிக வலுவையும் அதனால் ஏற்படும் புற ஒற்றுமையையும் நிலையான அகவொற்றுமையை வளர்க்கும் கருவிகளாக மட்டுமே பயன்படுத்தும் என்று நாம் நம்பலாம். மக்கள் தலைவர்களாகிய விடுதலை இந்திய அரசியலாரின் ஆதிக்கம், தாயின் ஆதிக்கம் போல, தேசீய வாழ்வைப் பேணி வளர்க்கும் திறமுடையது. மாநிலத் தலைவர்கள் அவாவுவது இந்த அன்பொற்றுமை தான். மாநிலவுரிமையை அவர்கள் மக்கள் உரிமையாக்கியது இதனாலேயே. அது மட்டுமன்றி, அவர்கள் தனி மனிதவுரிமை அல்லது அடிப்படை மனிதவுரிமைகளையும், சிறுபான்மைப் பாதுகாப்புரிமைகளையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உறுப்புக்களாக்கியுள்ளார்கள். மாநிலத்தைக் கடந்து மக்கள் வாழ்விலும், புற ஒற்றுமையைக் கடந்து அக ஒற்றுமையிலும் அவர்கள் கருத்துச் செலுத்தியுள்ளார்கள் என்பதை இது காட்டுகிறது. அடிப்படை மனித உரிமைகள் அயலாட்சியாகிய பிரிட்டிஷ் ஆட்சியில் உரிமைகள் யாவும் ஆளும் நாடாகிய பிரிட்டனிடமே இருந்தன. விடுதலையின் போது அவ்வுரிமைகள் மாநிலத்தின் பெயரால் ஆட்சியாளரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், குடியாட்சியில் உரிமைகள் ஆட்சியாளரிடமிருந்து மக்களுக்கு இறங்கி வருவதில்லை; மக்களிடமிருந்துதான் ஆட்சியாளருக்கு மேல் நோக்கிச் செல்லும். இது காரணமாகத்தான் அரசியலமைப் பாளர் மக்களுரிமை அல்லது அடிப்படை மனித உரிமைபற்றிக் கனவு கண்டுள்ளனர். இப்போது அடிப்படை மனித உரிமைப் பகுதி அரசியலமைப்பில் ஓர் உறுப்பாய் மட்டுமே இருக்கிறது. அத்துடன் அது அச்சட்டத்துக்கு அழகு தரும் ஒரு குறிக்கோளையும் மிளிர்கிறது. ஆயினும், நாட்டின் புற ஒற்றுமையும் புறப் பாதுகாப்பும் உறுதியாக நிலைபெற்ற பின்பு, அவையே அடிப்படைச் சட்டமாய்விடத்தக்கவை. அரசியலும், அரசியல் சட்டங்களும், அரசியலமைப்பும் அவற்றின்மீதே புதியனவாகக் கட்டமைக்கப் பெற வேண்டுபவை. அதற்குள் மாநில உரிமைகள் கூட்டரசிலிருந்து படிப்படியாக இறங்கித் தனி மனிதர் வரை வந்து நிலைபெற்று விடும். அதாவது, மாநிலம் பெற்ற உரிமைகள், மாநிலத்தின் பகுதிகளாகிய தனி அரசுகளுக்கும்; தனியரசுகள், பெற்ற உரிமைகள், அவற்றின் உட்பிரிவுகள், மொழியினங்கள், பண்பாட்டினங்கள் ஆகியவற்றுக்கும்; இறுதியில் இவற்றைத் தாண்டி அரசியலின் அடிப்படை உறுப்பான தனி மனிதனுக்கும் சென்று சேரும். தனி மனித உரிமைகள் அடிப்படை மனித உரிமைகள் என்றும்; மாகாணங்கள் தனியரசுகள் என்றும்; மாநில அரசு கூட்டரசு என்றும் இப்போதே குறிக்கப்படுவது இதனை எதிர் நோக்கியேயாகும். சிறுபான்மைப் பாதுகாப்புரிமைகள் தனி மனிதன் உரிமைகளைக் கட்டுப்படுத்துவது அவன் கடமை ஒன்றே. அதுவும் பிறர் உரிமைகளை பாதுகாப்பதற் காகவே அமைந்தது. இவ்வுரிமைகளையும் இவற்றின் பாதுகாப்பான கடமைகளையும் சரிசம நிலையில் வைத்துப் பேணவே ‘சமூகம்’ என்னும் அமைப்பும் ‘அரசு’ என்னும் அமைப்பும் மனித நாகரிகத்தில் இடம் பெற்றுள்ளன. உரிமைகள் வரம்பு மீறாதிருக்கக் கடமையையும், கடமைகள் அடிமைப் பண்பாகித் தேயாமல் இருக்க உரிமையையும் குடியாட்சிப் பண்பு சரிசம அளவில் எல்லாருக்கும் பரப்பக் கடமைப்பட்டிருக்கிறது. ஆனால், பல சமயம் குடியாட்சியில் கூடத் தனி மனிதன் உரிமைகளை மற்றத் தனி மனிதர் உரிமைகளே பாதிக்க வழி ஏற்படுவதுண்டு. ஏனென்றால், குடியாட்சி என்பது நடைமுறையில் தற்காலிகப் பெரும்பான்மையின் ஆட்சியாகவே இருக்க முடியும். சமூகத்திலும் சரி, அரசியலிலும் சரி, பெரும்பாலாரே கட்டுப்பாடும் சட்டமும் வகுக்கின்றனர். ஆயினும், பொதுவாகச் சிறுபான்மை அடிக்கடி பெரும்பான்மை யாகவும், பெரும்பான்மை அடிக்கடி சிறுபான்மையாகவும் மாறும் இயல்புடையன. இது ஒன்றே இவ்விடங்களில் சிறுபான்மைக்குப் பாதுகாப்பளிக்கும். ஆனால், மொழி, பண்பாடு ஆகியவை சார்ந்த தனியினங் களோ, பொருளியல், கல்வி, வாழ்க்கை வசதிகள், ஆகியவற்றில் பிற்பட்ட வகுப்பினரோ உள்ள இடங்களில், சிறுபான்மைகள் ஏறத்தாழ நிலையான சிறுபான்மைகளாகி விடுவதுண்டு. இன்னும் சில சமயம், பெரும்பான்மை கூட, அரசியல் விழிப்பு இன்மையால், சிறுபான்மைபோல இயங்க இடமேற்பட்டு விடுகிறது. இத்தகைய சிறுபான்மைகளின் தனி உரிமைகளுக்கு அப்போது இடையூறுகள் ஏற்படக்கூடும். இதனால், எல்லாரும் எல்லாரையும் ஆளும் அரசாகிய குடியாட்சியின் பண்புக்கு ஊறு ஏற்பட்டு விடும். இதைத் தடுக்கும் நோக்கத்துடனேயே தனி மனித உரிமைகள் மட்டுமன்றிச் சிறுபான்மைப் பாதுகாப்புரிமைகளும் தனியாக வகுக்கப் பட்டுள்ளன. குடியாட்சியின் உயிர் மூச்சுக்கள் குடியாட்சியின் இயக்கம் ஓர் இயந்திரக் கருவியின் இயக்கம் போன்றது. உரிமைகள், கருவியின் சுழல் சக்கரங்கள். கடமைகள், சக்கரங்களைத் தேய்வும் உராய்வுமின்றி எளிதில் சுழல வைக்க உதவும் மசக்கெண்ணெய் போன்றவை. ஆனால், கருவி இயங்க இவை மட்டும் போதா. கருவியை இயக்கும் திறமுடைய இயந்திர ஆற்றலும் வேண்டும். இயந்திரப் பொறித்துறையில் நீராவி, நிலக்கரி ஆகியவற்றிலிருந்து நாம் இவ்வாற்றலைப் பெறுகிறோம். குடியாட்சியும் இதேபோன்ற ஓர் ஆற்றலின்றி இயக்கப்பட முடியாது. இவ்வாற்றல் ஆளப்படும் மக்களின் உரிமையார்வமும், வாழ்க்கையார்வமும், ஆள்பவரின் கடமையார்வமுமேயாகும். இவற்றையே குடியாட்சியின் உயிர் மூச்சுக்கள் என்னலாம். “குதிரையை வற்புறுத்தித் தண்ணீர்த் துறைக்குக் கொண்டு செல்ல முடியும். ஆனால், அதை வற்புறுத்தித் தண்ணீர் குடிக்கச் செய்ய முடியாது” என்னும் ஓர் ஆங்கிலப் பழமொழி உண்டு. குடியாட்சியின் ஒரு பண்பை இது நினைப்பூட்டுகின்றது. முடியாட்சியையோ, மற்ற ஆதிக்க ஆட்சிகளையோ, ஆட்சியாளர் மக்கள் மீது சுமத்திவிடலாம். குடியாட்சி அத்தகையதன்று. அது மக்கள் உள்ளத்திலிருந்தே; மலர வேண்டும். ஆதிக்கப் பனிக்காற்று அதன் மலர்ச்சியைத் தடை செய்யும். விடுதலைத் தென்றலே அதைத் தளிர்க்கச் செய்யவல்லது. வாழ்க்கையார்வம் என்னும் வண்டிசையே அதை இதழ் அவிழச் செய்யும். ஆதிக்க ஆரவாரம் அதை வாட்டி வதக்கி உதிர்த்துவிடும். மக்கள் ஓர் ஆட்சியை விரும்புவதோ, விரும்பி வரவேற்பதோ, ஆர்வத்தோடு அதனுடன் ஒத்துழைப்பதோ, ஆட்சியாளர் கட்டுப்பாட்டில் அடங்கியன்று. மக்கள் அவா, ஆர்வம், கனவார்வம், நல்லெண்ணம் ஆகியவற்றை அரசியலார் தூண்டுவதால் மட்டுமே அது நிறைவேறக்கூடும். தாய்மொழிக் கல்வி விடுதலை இந்தியாவில் இப்போது ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான மொழியுரிமை வயது வந்த ஆடவர் பெண்டிர் அனைவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க ஏற்பாடே. இதனால், ஓரளவு அரசியல் விழிப்பும் அரசியலார்வமும் ஏற்பட இடமுண்டு. ஆனால், இதனைப் பயன்படுத்துவதற்குத் தக்க பொது அறிவும் தாய்மொழிக் கல்வியும் பொதுமக்களிடையே இன்னும் வளரவில்லை. மீனுக்கு நீரும், பறவைக்குக் காற்றும் எவ்வளவு இன்றியமை யாதனவோ, அவ்வளவு பொது மக்களுக்குத் தாய்மொழிக் கல்வி இன்றியமையாதது. அது அகல் வெளிக் காற்றும் கதிரவனொளியும் போல, மக்களுக்கு எங்கும் தங்குதடையின்றிக் கிடைக்க வகைசெய்ய வேண்டும். அக்கல்வி ஒன்றினாலேதான் மக்கள் விலங்கு நிலையைக் கடந்து மனித நிலையையடைவார்கள். அதனாலே தான் மனித அவாக்களும் ஆர்வங்களும் அவர்கள் உள்ளத்திலே முளைவிட முடியும். கதிரவனொளி இல்லாத போது தற்காலிகமாக உதவும் விளக்கொளிபோல, அயல் மொழித் தொடர்பு தற்காலிகமாகவே உதவியளிக்க முடியும். ‘பசி வந்திடப் பத்தும் பறந்து போம்’ பொது மக்களுக்கு அரசியலில் ஆர்வம் ஏற்பட வேண்டுமானால், அவர்களுக்கு முதலில் தங்கள் வாழ்வில் ஆர்வம் உண்டாக வேண்டும். அடிமையாட்சிக் காலங்களிலே மக்களுக்கு அரசியலார்வம் குன்றிவிட்டது. ‘இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன? கூட வந்த குரங்காண்டா லென்ன?’ என்று கூறும் அரசியல் அக்கறையற்ற நிலையில் இன்று மக்கள் இருக்கிறார்கள். இதற்குக் காரணம், அவர்களுக்கு வாழ்க்கையில் ஆர்வம் குன்றிவிட்டதேயாகும். மக்கள் வாழ்க்கை இன்று கரை காணாத் துன்பக்கடலாய்- மாளாப் போராட்டமாய்விட்டது. வறுமை, அறியாமை, பிணி ஆகியவை அவர்கள் வாழ்க்கைத் திரையில் கோர தாண்டவம் ஆடுகின்றன. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு வறுமை இம்மாநிலத்தில் மக்களை வாட்டி வதைக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு வேளைகூட வயிறார உண்ண உணவில்லாதவர் தொகை இங்கே பெரிது. மானத்தைக் காக்கும் முறையில் அரையில் சுற்றிக் கொள்ள ஒரு நல்லாடையற்றவர், வெயிலுக்கும் மழைக்கும் குளிருக்கும் ஒதுங்கிக் குந்தியிருக்க ஒரு குடிசையில்லா நிலையிலுள்ளவர் எண்ணற்றவர். தலைமுறை தலைமுறையாய் இரந்துண்பதையே தொழிலாகக் கொண்டவரும், மீளாத நோயில் கிடந்து மாளாத நரக வாழ்க்கையைச் சுமந்து திரிபவரும் பலர். இவர்கள் வாழ்க்கைக்கே வகையற்று அலைபவர்கள்; துன்பம் என்றேனும் நீங்க வழி உண்டு என்ற நம்பிக்கையை இழந்துவிட்டவர்கள். இத்தகையவர்கள், ‘பசி வந்திடப் பத்தும் பறந்து போம்’ என்ற மூதுரைக்கு இலக்கானவர்களாய்த் தங்கள் துன்பத்திடையே தங்கள் மனைவிமார்கள், உற்றார், பெற்றோர்களைக்கூடச் சிந்திக்க முடியாமலிருக்கும்போது, அரசியலில் எப்படி ஆர்வம் கொள்ள முடியும்? வாழ்க்கைத் தரமும் வாய்ப்பு நலங்களும் வறுமை, முயற்சிக்குத் தூண்டுதல் ஆகலாம். ஆனால், வறுமையே அம்முயற்சிகள் பயனுறுவதைத் தடுக்கவும் செய்கிறது. முயற்சியை ஊக்கும் வறுமை, நீடித்த அல்லது நிலையான வறுமையன்று. வாழ்விடையே வரும் இடைக்கால வறுமை, இடையிடையே சற்று நம்பிக்கையூட்டி, முயற்சியை ஊக்கும் வறுமையாகவே இருக்க முடியும். ஆனால் இத்தகைய சிறு வறுமையிலுங்கூட உள்ளத்தில் அவா ஆர்வங்கள் எழமாட்டா. சற்று வளமான வாழ்க்கை, வளர்ச்சியடைய உதவும் சூழ்நிலைகள் ஆகியவற்றிடையேதான் அவை தழைக்கும். ஆகவே, மக்கள் ஆர்வங்கள் பெருகி, நல்லறிஞர்களின் கனவார்வங்கள் அவர்கள் உள்ளத்தில் முளையூன்ற வேண்டுமானால், மக்கள் வாழ்க்கைத் தரம் இன்றியமையாத் தேவையளவில் நின்றுவிடுதல் போதாது; வாழ்க்கையின்பமும், ஓய்வும், வாய்ப்பு நலங்களும் அவ்வெல்லை கடந்து, அவர்கள் விருப்பங்களைத் தூண்டி வளர்க்கு மளவிலும், சிறிது சிறிதாகவேனும் அவற்றை நிறைவேற்றுமளவிலும் அவர்களுக்குக் கிட்ட வேண்டும். ஏனெனில், அறிவும் அறிவார்வமும், கலையும் கலையார்வமும், மொழியும் மொழியார்வமும், சமூகப்பற்று இனப்பற்றுக்களும் வாழ்க்கை இன்பத்திலேயே வளர முடியும். மேலும், ஓய்வில்லாத உழைப்பு உழைப்பாகாது; இளைப்பே யாரும். உழைப்பில்லாத ஓய்வும் ஓய்வாகாது; மாய்வோயாகும். அத்துடன் இன்ப மில்லாத வாழ்வும் சுவைத்திற மாறுபாடில்லாத வாழ்வும் மனிதப் பண்புகளை வளர்க்கமாட்டா. உயர்தர விலங்குகளின் பண்புகளைக்கூட அவை உருவாக்கமாட்டா. இதனாலேயே அவ்வாய்ப்புகள் சென்றெட்டாத மக்களின் நிலை, பல நல்விலங்குகளின் நிலையைவிடப் பிற்பட்டுவிடுகிறது. விலங்கு நிலையுடன் மனித சமூகத்துக்குள்ள இப்பிணிப்பை அகற்றி நாடு வளர வேண்டுமானால், இவ்வாய்ப்புகள் யாவும் நாட்டின் கடைப்பட்ட வகுப்புகள் வரை சென்றெட்ட வழி வகுக்கப்பட வேண்டும். ஏழைகள், தாழ்த்தப்பட்ட, அமுக்கப்பட்ட, வாழும் உரிமை மறுக்கப்பட்ட வகுப்பினர் ஆகிய யாவரும் அதில் பங்கு பெறும் நிலை ஏற்பட வேண்டும். மாநிலத்தின் எல்லாப் பகுதிக்கும், எல்லா மொழியினருக்கும், எல்லா வகுப்பினருக்கும், பிரிவினருக்கும் அது சரிசம அளவில் பரவவும், சரிசம வாய்ப்புக்களுக்குரிய சூழ்நிலைகள், அவ்வெல்லா வகுப்பினருக்கும் கிடைக்கவும் நாம் வகை துறை காண வேண்டும். அப்போதுதான் நாகரிக உலகிலுள்ள ஏனைய நாடுகளின் வாழ்க்கைத் தரங்களுக்கு ஒப்பாக, அவற்றுடன் போட்டியிடு மளவுக்கு மாநில வாழ்வு பொங்கிப் பொதுள முடியும். புதிய பொறுப்பு முடியாட்சி நிலவும் நாடுகளிலும், பொறுப்பற்ற ஆட்சி நிலவும் நாடுகளிலும் ஆட்சியைப் பொறுத்தது மக்கள் நிலை, ‘அரசனெவ்வழி, அவ்வழிக் குடிகள்1.’ என்னும் பழமொழி இந்நிலையைக் குறிக்கிறது. குடியாட்சி நிலை இதற்கு நேர்மாறானது. ‘குடியுயரக் கோனுயரும்,2’ என்ற அருந்தமிழ்ப் பெருமாட்டியாரின் பொன்மொழி இதனைச் சுட்டிக்காட்டு கிறது. ஆட்சி நிலை இங்கே மக்கள் நிலையை, அவர்கள் பண்பை, அவர்கள் அறிவை, அவர்கள் ஆற்றலைப் பொறுத்தது. மக்கள் இங்கே அரசியலின் ஊழியராயிருக்கமாட்டார்கள். மாறாக, அரசினரே மக்கள் ஊழியராயிருப்பர். ஆயினும், முந்திய பொறுப்பற்ற ஆட்சியாளருக்கு இல்லாத ஒரு புதுப் பொறுப்பு. குடியரசின் ஆட்சியாளருக்கு உண்டு. மக்கள் ஏவுவதைச் செய்வதுடன் அவர்கள் முழுக்கடமை தீர்ந்துவிடாது. மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதுடனும் அவர்கள் பொறுப்பு நீங்கிவிடாது. ஏனெனில், மக்கள் நல்வாழ்வு, கல்வி, அறிவு நிலை, பண்பு ஆகியவற்றுக்கு இறுதியாகப் பொறுப்பு வகிப்பவர்கள் மக்களல்ல; ஆட்சியாளர்களே, இங்ஙனம் குடியாட்சியில் மக்கள் ஏவுவதையும் விரும்புவதையும் நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையிலுள்ள அரசியலாரே, அவர்கள் விருப்ப நலங்களுக்கும் தவறுகளுக்கும் பொறுப்புடையவராகின்றனர்; இரண்டுபட்ட இப்பொறுப்பைச் சமாளிப்பதற்காகவே ஆட்சியாளர் களிடையே கட்சியமைப்புகள் ஏற்பட்டுள்ளன; இவற்றின் மூலமும், பத்திரிகைகள், அரசியல் அறிஞர்கள், மக்கள் பற்றாளர்கள் ஆகியவர்கள் மூலமும் அவர்கள் மக்கள் விருப்பங்களை நல்வழியில் தூண்ட வேண்டும்; அவற்றிற் கேற்ற சூழ்நிலைகளையும் வகுக்க வேண்டும். முடியாட்சியில் அரசர் ஆள்கின்றனர்; அமைச்சர் அரசருக்கு அறிவுரை தந்து அரசரை இயக்குகின்றனர். புதிய குடியாட்சியில் மக்களே அரசர் நிலையிலுள்ளார்கள். ஆகவே ஆட்சியாளர் அவர்களுக்கு அறிவு கொளுத்தும் நல்லமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டியவராயுள்ளனர். இவ்வாட்சிப் பொறுப்பிலும் அறிவுரைப் பொறுப்பிலும் ஆளும் கட்சியினரை விட எதிர்க்கட்சியினரே பேரளவில் பங்கு கொள்கின்றனர். அவர்கள் எப்போதும் மக்கள் மனச்சான்றாக நிலவி ஆட்சியாளருக்கு எச்சரிக்கைகள் தருகின்றனர். இவ்வெதிர்க் கட்சிகள் ஒரு புறமும், மக்கள் தொண்டர், அறிஞர், பத்திரிகைகள், இலக்கியவாணர், கலைவாணர் ஆகியவர்கள் மற்றொரு புறமும் இருந்து மக்கள் கருத்தை அரசியலுக்கும், அரசியலார் கருத்தை மக்களுக்கும் விளக்குகின்றனர். அரசியலுக்கும் மக்களுக்கும், அவர்கள் அவ்வப்போது ஆதரவுதந்தும், அறிவுரை தந்தும், வேண்டும்போது எச்சரித்தும், இடித்துத் திருத்தியும் அருந்தொண்டாற்றுகின்றனர். மக்களுக்கும் ஆட்சியாளருக்கும் இங்ஙனம் வளர்ச்சிக்குரிய தென்றலாய் விளங்கும் குடியாட்சி மரபுகளையும், அவற்றின் உரிமைகளையும், தூசு படாமல், தளர்வு பெறாமல் காக்கும் பொறுப்பும் ஆட்சியாளர்க்குரியது. தமிழர் குடியாட்சி மரபு ஆட்சியாளரின் இப்புதுப் பொறுப்பை நோக்க, நாம் மக்களை உடலாகவும், அரசியலை அவ்வுடலை இயக்கி வளர்க்கும் உயிராகவும் உருவகிக்கலாம். ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்த தமிழ்ச்சங்க இலக்கியச் சான்றோர். “மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்”, என்ற வாய்மையுரை யால் இதனை நமக்கு அறிவுறுத்தியுள்ளனர். தவிர, “மன்னன்’ என்ற தமிழ்ச்சொல் மரபும், பண்டைத் தமிழர் குடியாட்சி மரபை நமக்கு நினைவூட்டுகின்றது. தமிழில் உலகின் உயிரினத் தொகுதி மன்பதை என்றும், பொதுமக்கள் மன்மக்கள் என்றும்,அவர்கள் தரும் கருத்துரை மொழி மன் மொழி என்றும் குறிக்கப்படும். மன்மக்களின் பேராட்களான மன்பேராட்கள் வீற்றிருக்கும். மன்றம் என்ற அரசியலமைப்பில் மன்மொழி கேட்டு நடப்பவரே மன்னர் அல்ல ஆட்சித் தலைவர் ஆவர். இவ்வெல்லாச் சொற்களும் ‘இடையறாது தொடர்ந்தும் பரந்தும் நிலவுதல்’ என்னும் பொருளுடைய மன்னு என்ற முதல் நிலைச்சொல்லின் திரிபுகளாகும். ஒரு சங்கிலியின் வலிமை அதன் கண்ணிகளின் மொத்த வலுவையோ, வலுமிக்க பகுதியையோ, சராசரி வலுவையோ கூடப் பொறுத்ததன்று; அதன் நைந்த அல்லது வலுக்குன்றிய பகுதியையே பொறுத்தது. ஏனெனில், அந்த நைந்த பகுதியில் தாங்க முடியாத பளு ஏற்பட்டவுடன், சங்கிலி அறுபடுவது உறுதி. சரிசம வலுவில் சிறிது குறைந்த அல்லது கூடிய பகுதியிலேயே முறுக்கேறும் நூல் அறுபடும் என்பதை நூல் நூற்பவர் கவனித்திருக்கலாம். ஒரு நாட்டிலும் இதுபோலவே நாட்டின் உயிர் நிலை வலிமை அதன் வலிவு மிக்க- அறிவு மிக்க- வளமிக்க பகுதியைப் பொறுத்ததன்று; இவற்றுள் பிற்பட்ட- கடைப்பட்ட - பகுதியையே பொறுத்தது. உடலின் எந்த உறுப்பு அல்லது பகுதியில் குறைபாடு ஏற்பட்டாலும், நோய் அதனைப் பற்றிக் கொள்வதுடன், அதனை மட்டுமன்றி, உடல் முழுவதையும் அலைக்கழிப்பது காண்கிறோம். இதனை உணர்ந்த நாட்டுப் பற்றாளர், நாட்டின் சரிசம வளர்ச்சி வாய்ப்பில் எந்தப் பகுதியும் நிலையாகப் பின் தங்கிவிட இடந்தர மாட்டார். எனவே, முற்படுபவர் முற்படுவதுடன் நின்றுவிடக் கூடாது. சராசரி நிலையை எட்ட முடியாமல் பிற்பட்டு நலிபவர்களை உயர்த்துவதிலேயே அவர்கள் முனைய வேண்டும். அவர்கள் மேம்பாட்டின் பயனும் புகழும் இதுவே. இச்செயல் சரிசம நிலையுடன் கூடிய மொத்த வளர்ச்சியை விரைவுபடுத்தும். இம்முறையிலேதான் நம் மாநிலத்தில் குடியாட்சி உரம் பெறும்; மக்கள் அவா ஆர்வங்கள் வளரும். அப்போதுதான் தனி மனிதர் வறுமை நாட்டு வாழ்வின் வளத்தை உள் நின்றழிக்கும் மறலியாக அமையாது. விடுதலை இயக்கக் கவிஞர் பாரதியாரின் கனவு: விடுதலைப் போராட்டக் காலத்தின் புத்தூழிக் கவிஞர் பாரதியாரின் கருத்துக்களையும் கனவையும் நாம் இவ்விடத்தில் கவனிக்க வேண்டும். மாநில மக்களின் எந்தச் சிறுபகுதி அல்லது சிறு குழுவுக்கு இடர் ஏற்பட்டாலும், அது புயற்காலச் சிறு முகிற்கீற்றைப் போல விரைவில் மாநிலவாழ்வின்மீது கறுத்துப் படர்ந்து, அதன் அமைதியைக் கெடுக்கும். ஒரு தனி மனிதன் வாழ்வின் குறைகூட இவ்வகையில் நம் கவனத்துக்குரிய தன்றென விடத்தக்கதன்று. எல்லா மக்களும் சரிசம வளர்ச்சி நாடும் சமுதாயம் நம்மிடையே ஏற்பட வேண்டும். அதில் எல்லாரும் இந்நாட்டு மக்களாகவும், இந்நாட்டு வாழ்வு எல்லாருடைய பொதுவுடைமையாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் எல்லாருடைய பொது வளத்துக்கும் பாடுபட வேண்டும். அதே சமயம் எல்லாரும் ஒவ்வொரு தனி மனிதன் வாழ்வும் வளமடையும் வகையில் பாடுபட வேண்டும். மனிதன் சமூகத்துக்காகவும், சமூகம் மனிதனுக்காகவும் நிலவுதல் வேண்டும். இதுவே பாரதியார் கனவு. அவர் பாடல் இவ்வகையில் நம்மை ஊக்கு விக்கின்றது. பாரதசமு தாயம் வாழ்கவே- வாழ்க வாழ்க பாரதசமு தாயம் வாழ்கவே ஜய ஜய ஜய (பாரத) முப்பது கோடி ஜனங்களின் சங்க முழுமைக் கும்பொது உடைமை! ஒப்பில் லாத சமுதாயம் உலகத் துக்கொரு புதுமை- வாழ்க (பாரத) இனிஒ ருவிதி செய்வோம்- அதை எந்த நாளும் காப்போம் தனிஒ ருவனுக் குணவி லையெனில் ஜகத்தி னைஅழித் திடுவோம்- வாழ்க (பாரத) எல்லோரும் ஓர்குலம், எல்லோரும் ஓர்இனம், எல்லோரும் இந்திய மக்கள் எல்லாரும் ஓர்நிறை, எல்லாரும் ஓர்விலை, எல்லாரும் இந்நாட்டு மன்னர் நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்- ஆம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்- வாழ்க: (பாரத) கவிஞர் கண்ட இக்கனவின் வீறு நம் நனவுலக வாழ்க்கையின் பீடு ஆகத்தக்கது. சமதர்மக் குடியரசு ‘நாம் அனைவரும் ஒரு நாட்டு மக்கள்; நம் வேறுபாடுகள் ஒரு குடும்பத்தின் பல்வேறு உறவு வேறுபாடுகளே; என்ற எண்ணம் நம்மிடையே பரவுவதுதான் நம் அகவொற்றுமைக்கான மறைதிறவு ஆகும். வேறுபாட்டிடையே ஒற்றுமை காண்பதும், உயர்வு தாழ்விடையே சமநிலை உண்டுபண்ணுவதும் அன்பு ஒன்றே. அதன் அடிப்படையில் ஏற்படும் விட்டுக்கொடுப்பும், தன் மறுப்பும், ஒத்துழைப்பும், ஒரு நாட்டை மட்டுமன்றி, ஒரு மாநிலத்தை மட்டுமன்றி, ஓர் உலகத்தையே ஒன்றுபடுத்தத் தக்கவை. இத்தகைய அன்பு ஒற்றுமைக்கு மலையும் ஆறும் கடலுங்கூடத் தடையாயிருக்க வேண்டுவதில்லை. அவை இவற்றின் பல படி வளர்ச்சிகளுக்குரிய படி எல்லையாக மட்டுமே இருக்கத்தக்கவை. மொழி ஒரு பிளவாயிருக்க வேண்டுவதில்லை. மொழிபெயர்ப்புக்கலையும், ஒருவரை யொருவர் ஒத்துணரும் ஆர்வமும் அப்பிளவுகளிடையே பாலம் அமைக்கும். இனவேறுபாடு, பண்பு வேறுபாடு, கொள்கை வேறுபாடு ஆகியவைகூட நிலையாகப் பிரிக்க வேண்டுவதில்லை. ஒரே பூணாரத்தில் கோக்கப்பட்ட பல வடிவம் பல நிறமுடைய மணிகள்போல, அவை யாவும் ஒரே வாழ்க்கைக் குறிக்கோள், ஒரே அரசுரிமை இலக்கு ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்பட வேண்டுபவையாகும். உயர்வு தாழ்வற்ற சரிசம சந்தர்ப்பமுடைய ஒருமுகப்பட்ட வாழ்வையே நம் தலைவர்கள் நாடியுள்ளார்கள்; ஆகவேதான் இந்தியக் குடியரசு ஒரு சமதர்மக் குடியரசாக அமைய வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். அரசு என்பது மக்கள் பொருளியல் வாழ்வாகிய சுவர்கள் மீது எழுப்பப்படும் மாடகூடம் மட்டுமே. மக்கள் பொருளியல் வாழ்வில் சரிசம வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால், குடியரசு சமதர்ம நெறி பேணவேண்டுவது இன்றியமையாதது.அரசியல் மாடகூடங்களுக்கும் பொருளியல் மதில்களுக்கும் அடிப்படை ஆதாரமாய் அமைவது சமூகமே. அச்சமூக அடித்தளம் சமநிரப் புடையதாகவும், கூட்டு வலுவும் உறுதியும் உடையதாகவும் இருந்தாலல்லாமல், பொருளியல் வாழ்வும் அரசியலும் நின்று நிலவி வளம் பெறமாட்டா. அதுபோலவே, சமதர்மக் குடியரசுக்கு ஆதாரமான சமூகத்திலும் சாதி சமய இன வேறுபாடுகள் ஒத்துழைப்பையும் சரிசம நிலையையும் கெடுத்துவிடும். ஆகவே, சாதி சமய இனங்கள் சமூக உரிமைகளுக்குட்பட்டனவாக நிலவ வேண்டும். சமூக வாழ்வு அவற்றின் அடிப்படையாய் அமையவேண்டும். அவையே சமூக வாழ்வுக்கு அடிப் படையாய் விடக் கூடாது. எனவேதான் இந்தியத் தலைவர்கள், சாதி, சமய, பால், இன வேறுபாடற்ற ஒரு சமுதாயத்தையும், அரசியலையும் குறிக் கொண்டுள்ளார்கள். மாநிலக் குடியரசு கூட்டரசாக மட்டுமன்றி, சாதி சமய இன வேறுபாடற்ற சமதர்மக் குடியரசாகக் கருத்தமைக்கப்பட்டதன் நோக்கம் இதுவே. புதிய இந்தியாவும் புதிய உலகும் நம் மாநிலம் உலகின் ஒரு சிறிய பதிப்பு என்றோம். அதற்கேற்ப, மாநிலத் தலைவர்களும் தொலைநோக்குடைய மக்களுலகத் தலைவர்களாகவே காட்சியளிக்கின்றார்கள். மாநிலத்தின் மாபெரும் பரப்புக்கும் மாண்புடைப் பண்புகளுக்கும் ஏற்ப, அவர்கள் தேசிய நோக்கம் சர்வ தேசியக் கண்ணோட்டமுடையதாகவே அமைந்துள்ளது. மாநிலம் ஒரு சிறிய உலகமாயிருப்பது, இவ்வகையில் ஒரு குறைபாடாய் இல்லை. உலகத்துக்குப் பெறற்கரிய அருமருந்தாக, ஒரு நிறை பண்பாகவே அது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்,” என்ற அருட் பண்புடையவர் பண்டைத் தமிழகச் சான்றோர். பண்டைத் தமிழக மரபு பயின்ற மாநிலப் பண்பும் இதே பரந்த மனப்பான்மையை வளர்க்க முனைந்துள்ளது. “யாம் பெற்ற விடுதலை பெறுக இவ்வையகம்”, என்று புதிய இந்தியா விடுதலைப்பண்பாடத் தொடங்கிவிட்டது. வீழ்ந்துபட்ட ஆசியாவின் விழுப்புண் துடைக்க, கீழ்த் திசையின் எழுஞாயிற்றுக் கொடியை வீறுடன் பறக்கவிட, அது ‘மடி தற்று’ முன் வந்துள்ளது. சோர்ந்து தளர்ந்த பல நாடுகள், இனங்கள், மக்கள் நாடி நரம்புகளில் அதன் விடுதலைப் பண் முறுக்கேற்றி வருகிறது. புதிய இந்தியா, புதியதோர் உலகைப் படைக்க உறுதுணையாய் உதவும் என்பதை நாம் உறுதியாக நம்பலாம். புதிய உலகைப் படைக்கும் புதிய இந்தியாவை ஆக்குகிற பொறுப்பிலும் புகழிலும் இந்திய மாநில மக்களாகிய நம் அனைவருக்கும்- ஆடவருக்கும் பெண்டிருக்கும்- முதியவருக்கும் இளைஞருக்கும்- சிறப்பாக மாணவருக்கும் மாணவியர்க்கும்- தனித்தனி பங்கும் தனித்தனி உரிமையும் உண்டு. அதற்கான திட்டங்கள் வகுப்பதிலும், அவ்வகையில் தங்கள் அவா ஆர்வங்கள், கனவார்வங்கள் மூலம் மக்கள் அவா ஆர்வங்களையும், கனவார்வங்களையும் தூண்டுவதிலும், வருங்கால மக்களாகவும், ஆட்சி யாளராகவும், மதி நலம் படைத்த அறிஞர்களாகவும் விளங்க இருக்கும் மாணவ மாணவியர்களே முன்னணியில் நின்று பணியாற்ற வேண்டும்; அவர்களே மக்களை முன்னோக்கி நடத்திச் செல்ல வேண்டும். விடுதலைப் போராட்டத்தின் வரலாறு இத்தகைய முன்னேற்றப் படையணிக்குரிய போர்ப்பண்ணாய் உதவும். விடுதலை இயக்கக் குறிக்கோள் அதன் வெற்றிக்கொடி ஆகும். இவற்றுடன் பழங்காலப் புகழும், புகழ்ப் பண்புகளும், படைக்கலங்களாக, நிகழ்காலம் போர்க்களமாக; வருங்காலம் என்னும் வெற்றிக் குறிக்கோள் நோக்கி நாம் முன்னேறுவோமாக! 2. புகழ் மரபு காலங்கடந்த புகழ் பரப்பிலும் பண்பிலும் பாரத தேசம் நாடு கடந்த நிலையுடையது என்பதைக் கண்டோம். காலப் பரப்பிலும் அது போலவே அது பல நாடுகளின் வரலாற்றெல்லையையும், வாழ்வெல்லையையும் கடந்தது. அதன் அகல் பரப்பில் பல நாடுகளின் முழுப்பரப்பும் ஒரு சிறு கூறாய் அடங்கிவிடும். அதுபோலவே, பல நாடுகளின் முழு வரலாறும் வாழ்வும் அதன் வரலாற்றில் ஒரு சிறு கூற்றினுள் அடங்கத்தக்கவை. எனவேதான் தேசங்களிடையே தேசங்கடந்த உலகின் ஒரு சிறிய பதிப்பாய் அது விளங்குவதுபோல, தேச வரலாறு கடந்த எல்லையற்ற காலத்தின் ஒரு சிறிய பதிப்பாய் அது நின்று நிலவுகிறது. இக்கால மேலை உலக நாடுகள் நாகரிக முழு ஒளி கண்டது. 15-ஆம் நூற்றாண்டிலேதான். எனவே, அதற்குப் பிற்பட்ட சென்ற ஓரைந்து நூற்றாண்டுகளையே மேலை வரலாற்றாசிரியர் ‘இக்காலம்’ அல்லது ‘புது நாகரிக காலம்’1 என்பர். இதற்கு முற்பட்ட ஆயிர ஆண்டுகளில் நாகரிகத்தின் அரை ஒளியே ஐரோப்பாவில் எட்டியிருந்தது. கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்கும் 15-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட இக்காலத்தை அவர்கள் ‘இடை யிருட்காலம்’2 என்கிறார்கள். கி.பி. 5-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு ஐரோப்பாவின் மிகப் பெரும் பகுதியும் நாகரிகமற்ற முழு இருள் நிலையிலிருந்தது. ஆனால், அப்போதும் ஐரோப்பாவின் மூலத் தாயக நாகரிகங் களான கிரேக்க உரோம நாகரிகங்கள் தென் ஐரோப்பாவில் நிலவியிருந்தன. கி.மு. 700-க்கும் கி.பி. 500க்கும் இடைப்பட்ட அவற்றின் வாழ்வுக் காலத்தை மேலை வரலாற்றாசிரியர். ‘பண்டைக்காலம்’3 என்றனர். இதுவே, வரலாற்றின் தொடக்கக் காலம் என்றும் மேனாட்டார் நெடுங்காலம் எண்ணியிருந்தனர். ஆனால், இவற்றுக்கு முற்பட்டு, இவற்றின் நாகரிகங்களுக்கு மூலத் தாயகமான ஒரு பழம்பெருநாகரிகம் இருந்ததென்பதை நாம் இப்போது அறிகிறோம். இது ஸ்பெயின் முதல் சீனம்வரை பரந்து கிடந்தது. எகிப்து, சால்டியா, கிரீட்டு, சிந்துவெளி ஆகிய இடங்களில் அகழ்ந்து காணப்பட்ட புதை பொருளாராய்ச்சி களால், இதன் தொல்பழம்பண்புகளை நாம் உணர்கிறோம். கி.மு. 700க்கு முற்பட்ட இந்நாகரிகங்களின் காலத்தை வரலாற்றாசிரியர், ‘வரலாற்றுக்கு முற்பட்ட காலம்’ அல்லது ‘தொல் பழங்காலம்’1 என்கின்றனர், இயற்கையன்னையின் மறு படிவம் இந்தியக் குடியரசு இன்று மேலையுலக நாகரிக நாடுகளுடன் ஒரு தற்கால நாகரிக நாடாய், ஒரு புது வரலாற்று ஊழியில் கால் வைத்துள்ளது. ஆனால், ஐரோப்பா அரையிருளில் மறுகியபோது, அது நாகரிக ஒளி குன்றாது. உலகில் நாகரிக ஒளி பரப்பும் ஒரு கதிரவனாகவே நிலவிற்று. அத்துடன் வட ஐரோப்பிய உலகு, பழைய கற்காலத்துக்கும் புதிய கற்காலத் துக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்த காலத்தில், அது கிரேக்க உரோம வாழ்வுகளுடன் ஊடாடியிருந்தது. அப்போதும் அது பழம் பெருமையுடையதாய், வேளாண்மையும் தொழிலும், கல்வி கேள்வி இலக்கியங்களும், நாடு நகர் பேரரசும், கடல் கடந்த உலக வாணிக வளமும் உடையதாயிருந்தது. இது மட்டுமன்றி, உரோம கிரேக்க வாழ்வுகளைக் கண்டு கால அன்னை மகிழ்ந்திருந்தபோது, பாரதச் செல்வி அன்னை மகிழ்ச்சியில் தானும் கலந்து, அவர்களுடன் அலைகடலில் ஓடியாடி விளையாடியிருந்தாள். எகிப்திய, பாபிலோனிய, பாரசீக நாகரிகங்களை இயற்கை அன்னை மடிமீது வைத்தும், தொட்டிலிட்டும் தாலாட்டியபோது, பாரதச் செல்வி உடனிருந்து பார்த்தும், இடையிடையே தாலாட்டியும் மகிழ்ந்தாள். ஆயினும், பிள்ளைப் பருவத்திலேயே தாய்மை உணர்ச்சி கொண்டு அத் தங்கையர் வாழ்வு தாழ்விலும், இன்ப துன்பத்திலும் அவள் ஈடுபட்டதால், அவள் குழந்தைப் பருவ வளர்ச்சியும், இளமைப் பருவ வளர்ச்சியும் தடைப்பட்டன என்னலாம். தான் தாலாட்டிய குழந்தையாகிய தங்கையரும், தான் கூடி விளையாடிய சிறுமியராகிய தங்கையரும் காலத்தில் வளர்ந்து தளர்ந்து, காலவெள்ளத்தில் மிதந்தது கண்டு, அவள் கண் பனிகூர்ந்து கலங்கியும், கலங்கித் தேறியும், உரம் பெற்று வாழ்ந்து வந்துள்ளாள். இதனால், அவள் குழந்தைப் பருவம் பலர் இளமை கடந்தும், இளமைப் பருவம் பலர் முழு வாழ்வு கடந்தும் இன்னும் நீடிக்கின்றது. அவள் இளமை முதுபேரிளமையாகி யுள்ளது. அவள் தாய்மை, கன்னித் தாய்மை ஆகியுள்ளது. அவள் இயற்கையன்னையின் ஒரு மறு படிவம் ஆகியுள்ளாள். பாரத நாட்டின் இப்பண்பு, தமிழின் கன்னித் தாய்மை யுடன் ஒப்புடையது. இதனைத் தமிழ்ப் புலவர் பலபடப் பாராட்டியுள்ளனர். “பல உயிர்களையும் பரம்பொருள் படைக்கிறது; படைத்துக் காக்கிறது; அழிக்கிறது. ஆனால், உயிர்கள் பிறந்திறந்தும், பரம்பொருள் என்றும் ஒரு நிலையில் நின்று நிலவுகிறது. தமிழ் மொழியும் இது போன்றது. அது பல மொழிகளையும் ஈன்றெடுத்த தாயாகியுள்ளது. ஆயினும், அது கன்னி இளமை மாறவில்லை. பிற பல மொழிகள் அழிவதை அது கண்டுள்ளது. ஆனால், அது அழியா மொழியாய் உள்ளது.” மனோன்மணீயம் இயற்றிய பேராசிரியர் சுந்தரனார் இப்பொருள்படத் தமிழன்னையை வணங்கிப் பாராட்டி யுள்ளார். பாரத தேசத்தையும் இதே வாசகங்களால் பாராட்டுதல் பொருந்தும். உலகளாவிய பண்பாட்டியக்கங்கள் வரலாற்றாசிரியர் பலர் ஒரு நாட்டின் வரலாற்றை அரசியல் நிகழ்ச்சிகளின் ஒரு கோவையாக எண்ணுவதுண்டு. நாட்டின் காலக்கோப்பு வரலாற்றின் அடிப்படைச் சட்டமாதலால், இந்நிகழ்ச்சிக் கோவை இன்றியமையாததே என்பதில் தடை யில்லை. ஆனால், நாட்டு வரலாற்றின் உயிர் நிலை இந்நிகழ்ச்சிக் கோவையிலில்லை. நாட்டின் அரசியல் நிலையங்கள், பொருளியல் வாழ்வு. பண்பாட்டு இயக்கங்கள் ஆகியவற்றிலும், அவற்றை நிலையாக மாற்றியமைக்கும் புரட்சி இயக்கங்களிலுமே அவ்வுயிர்நிலைப் பண்பைக் காணலாம். மேனாடுகளின் வரலாற்றில் அடிப்படைச் சட்டமாகிய காலக்கோப்பும் நிகழ்ச்சிக் கோவையும் பேரளவில் கட்டமைக்கப்பட்டுள்ளன. கீழ் நாடுகளிலும் இந்தியாவிலும் இவை அணிமையிலேதான் சிறிது சிறுதாகக் கட்டமைந்து வருகின்றன. ஆயினும், பண்பாடு, மொழி, கலை, சமயம், இலக்கியம், அறிவுத்துறை மரபுகள் ஆகியவற்றின் வகையில் இந்திய வரலாறு வளமிக்கது. வரலாற்றாசிரியர் இன்னும் இவை பற்றிப் போதிய கவனம் செலுத்தவில்லை என்று கூறுவது தவறாகாது. வடநாட்டில் தாய்மொழியின் நிலைகளைப் பற்றியோ, வடமொழி இலக்கிய வளர்ச்சி பற்றியோ, வரலாற்றாசிரியர் பெரிதும் கவலைப்படுவதில்லை. அந்த அளவு கூடத் தென்னாட்டின் மொழிவளம் பற்றியோ, பண்டைத் தமிழ்ச் சங்க இலக்கியம் போன்ற வளமான கலைத் துறைகள் பற்றியோ, கருத்துச் செலுத்துவதில்லை. பண்பாடு, கலை ஆகியவற்றின் வளர்ச்சிபற்றி வரலாற்றறிஞர் கருதும்போதுதான், அவை சார்ந்த இயக்கங்கள் அரசியல் நிகழ்ச்சிகளைவிட விரிந்த செயல் வீச்சுடையவை என்பதைக் காண முடியும். ஏனெனில், இவை காலம் கடந்து நாட்டு வாழ்வில் நிலையாகச் செயலாற்றத் தக்கவை. இவற்றுட்பல, நாட்டைக் கடந்து உலகிலேயே செயலாற்றவும் கூடும். அமெரிக்க விடுதலைப் போராட்டம், அமெரிக்க நாட்டு வாழ்வு முழுவதையுமே நிலையாக வளர்க்கும் ஓர் இயக்கமாயமைந்தது. அது ஒரு வரலாற்று நிகழ்ச்சி மட்டுமன்று; அதுவே ஒரு வரலாறும் ஆகும். மற்றும் பிரெஞ்சுப் புரட்சி இயக்கம் நிலையாகப் பிரெஞ்சு நாட்டை இயக்கியதுடன், உலகையே இயக்கிய உலகப் புரட்சி இயக்கங்களுள்ளும் ஒன்றாயிற்று. இந்தியாவின் வரலாற்றைப் பண்பாட்டுக் கண்ணுடன் பார்ப்பவர்களுக்கு அது முற்றிலும் பண்பாட்டியக்கங்களின் வரலாறாகவும், புரட்சி இயக்கங்களின் வரலாறாகவுமே இருப்பது தெரியவரும். அத்துடன் அப்பண்பாட்டு இயக்கங்களும் புரட்சி இயக்கங்களும் மற்ற நாடுகளின் இயக்கங்களுக்கும் புரட்சி களுக்கும் மூலகாரணமாயிருந்து, உலகை இயக்கி வந்துள்ளன என்பதையும் காணலாம். வரலாற்றாசிரியர் குறை நோக்கு இந்திய மாநிலத்தின் புரட்சிகரமான பண்பாட்டுப் பேரலைகள், பெரும்பாலும் வரலாற்றாசிரியர்கள் கண்களுக்குத் தப்பியுள்ளன. இதற்கு மூன்று காரணங்கள் கூறலாம்: ஒன்று, அவர்கள் அரசியல் நோக்குடன் அரசியல் நிகழ்ச்சிகளையே நாடினார்கள்: மக்கள் வாழ்வையோ, அதன் பண்பையோ நாடவில்லை. அத்துடன் மக்கள் பண்பை நாடுபவர், கண் கண்ட இக்காலச் சூழல்களினுதவியால் இறந்த காலத்தை ஆராய்வர்: அவ்விறந்த காலத்தினுதவியால், இக்காலத்தின் மறை பண்பு களையும் மறை மெய்ம்மைகளையும் உணர்வர். இவ்விரண்டின் உதவியாலேயே அவர்கள் வருங்காலத்துக்குரிய வரலாற்றுப் படிப்பினைகளையும் திட்டங்களையும் வகுப்பார்கள். இரண்டாவதாக, ஒரு பொருளைக் காணும் வகையில் அதன் மிக்க நுண்ணளவு தடையாயிருப்பதுபோல, மிக்க பேரளவும் தடையாயிருக்கக் கூடும். பண்டைக்காலக் கப்பலோட்டிகளைப் பற்றிக் கூறப்படும் ஒரு மரபுரை இதைச் சுட்டிக் காட்டுகிறது. நடுக்கடலிடத்தே அவர்கள் ஒரு திடலைக் கண்டு இறங்கிச் சமைத்துண்ணத் தொடங்கினார்கள். அடுப்பில் தீ எரியும் சமயத்தில் திடல் குதித்து எழுந்து கடலுள் மூழ்கத் தொடங்கிற்று! அப்போதுதான் திடல், திடலன்று; ஒரு பெரிய கடல் வாழும் உயிரினத்தின் முதுகு; என்பதைக் கப்பலோட்டிகள் கண்டார்களாம்! இதுபோலவே, இந்தியாவின் பண்பாட்டியக் கங்கள் இயக்க அளவு கடந்தவையாய் இருந்ததால், மேற்போக்காக வரலாற்றை வகுத்தவர் கண்களுக்கு அவற்றின் முழு உருவம் தென்படவில்லை. அவை ஆண்டு மாதக் கணக்கில் எழுந்து வளர்ந்து அமிழும் சிறு வரலாற்றலைகளாயிராமல், நூற்றாண்டு ஆயிர ஆண்டுக் கணக்கில் வளர்ந்து தளர்ந்த பேரலை எழுச்சிகளாயிருந்தன. வரலாற்றாசிரியர் கண்களுக்கு அவை அலையாகப்படவில்லை; கடலின் நீர்ப்பரப்பாகவே தோன்றின. இது முழுதும் வியப்புக்குரிய செய்தி அன்று. ஏனெனில், இந்தியாவில் வரலாற்றுக் கால வளர்ச்சி முழுவதும் பல சிற்றலைகளடங்கிய இரண்டு பேரியக்க அலைகளாகவே அமைந்துள்ளது. இரு பேரியக்க அலைகள் அவற்றுள் முதலாவது அலை, கி.மு. 800க்கு முன்பே தொடங்கி, கி.பி. 500 வரை நிலவிற்று. அது மக்கள் சமய, சமூக, அறிவுப்பண்புகள் பற்றிய முழு நிறை ஆராய்ச்சியாக உருவெடுத்தது. இந்தியாவின் அடிப்படைப் பண்புகள், கருத்துகள் ஆகியவற்றை இவ்வியக்கமே வரையறுத்தது என்னலாம். இரண்டாவது அலை, கி.பி. 500லிருந்து தொடங்கி, கி.பி. 1800லேயே முடிவுற்றது. இதுவே பத்தி இயக்க அலை. இது தென்னிந்தியாவில் எழுந்து, வடவிந்தியாவில் பரந்து, இந்திய மக்கள் சமய வாழ்விலும்,மொழி இலக்கிய வாழ்விலும் மிக்க பெரும்புரட்சிகளை உண்டுபண்ணிற்று. இந்தியாவின் சென்றகாலப் புகழும் வரலாறும் இவ்விரண்டு அலைகளிலேயே அடங்கியுள்ளன. இவ்விரண்டு அலைகளையும் அடுத்து எழுந்த மூன்றாவது அலை, இப்போதுதான் தொடங்கியுள்ளது. அதுவே, விடுதலை இயக்கப் பேரலை. அது கி.பி. 1800க்கு முன்பே தொடங்கி, இப்போது தன் முதல் வீச்சிலேயே மாநிலத்துக்கு விடுதலை தந்துள்ளது. அதன் முழு ஆற்றலும் பயனும் வருங்கால பாரதத்தின் வரலாற்று வடிவிலும் புகழ் வடிவிலும் உருவாக வேண்டுபவை. முந்திய இரண்டு அலைகளின் தொடர்ச்சியான இவ் வலையை அவற்றின் அறிவு கொண்டே நாம் நன்கறிய வேண்டும். மேற்கூறிய இயக்க அலைகளை அறியும் வகையில் அவ்வலைகளுக்கு அடிப்படை மூலாதாரமான தேசீய வாழ்வாகிய கடற்பரப்பில் வரலாற்றாசிரியர் கருத்துச் செல்லவில்லை. வரலாற்றின் வாயிலில் அவர்கள் கண்ட சில நிகழ்ச்சிகளி லிருந்து அவர்கள் தொடங்கி, அதன் பின்னும் நிகழ்ச்சிகளையே வரலாறாக அவர்கள் தொடுக்க முடிந்தது. அந்நிகழ்ச்சிகளி லிருந்து அவர்கள் இன்றைய வாழ்க்கைச் சித்திரத்தை வருவிக்கவும் முடியவில்லை. ஏனெனில், அச்சித்திரத்தின் மூல முதற்படிவம் நமக்கு அணிமையிலேயே கிட்டியுள்ளது. இன்றைய இந்திய நாகரிகத்தின் கருமூலம், இன்று நேற்றுப் புதிதாக வந்ததன்று. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அதுமிக்க பழமை அடைந்துவிட்ட ஒன்றாயிருந்தது என்பதை நாம் இப்போது அறிகிறோம். இதனை மொகஞ்சதரோவிலும், ஹரப்பாவிலும் அகழ்ந்து காணப்பட்ட சிந்துவெளி நாகரிகம் நமக்கு உணர்த்தியுள்ளது. இந்தியாவின் உண்மை வரலாறு இங்ஙனம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே தொடங்குகிறது. தாயகத்தின் முதற் சித்திரம் ‘இந்தியாவின் மறு காட்சி’1 என்ற நூலில் விடுதலை இந்தியாவின் தொடக்க முதல்வர் பண்டித ஜவஹர்லால் நேரு இந்நாகரிகம் பற்றிக் கூறுவதாவது: “உள்ளத்தில் இறும்பூது ஊட்டும் சிந்துவெளி நாகரிகச் சின்னங் களின் மூலம் நாம் இந்தியாவின் தொல்பழங்கால வாழ்வு பற்றிய முதற் சித்திரத்தைக் காண்கின்றோம். இது பண்டையுலகு பற்றிய பழங் கருத்துக்களனைத்திலும் பெரும்புரட்சி உண்டு பண்ணியிருக்கிறது. நாம் அறிந்த அளவில், கி.மு. 300க்கு முன்பே இந்தியா மிக உயர்ந்த நாகரிகப்படியை அடைந்திருந்தது. அத்துடன் அந்நிலையை அடையுமுன் அது பல்லாயிர ஆண்டு வளர்ச்சியடைந் திருக்க வேண்டும் என்பதிலும் ஐயமில்லை. வியத்தகு முறையில் அது ஒரு சமயச்சார்பற்ற நாகரிகமாகவும்2 காட்சியளிக்கிறது. சமயத்தின் கூறு அதில் காணப்பட்டபோதிலும், அது மேலோங்கி யிருக்கவில்லை. அத்துடன் பிற்கால இந்திய நாகரிகங்களின் முன்னோடி மரபுப் பண்புகள் யாவும் அதில் உள்ளன.” மறைந்த உலக நாகரிகங்களில் ஒன்றான இந்தச் சிந்துவெளி நாகரிகம். இந்தியாவில் வளர்ந்த நாகரிகம் மட்டுமன்று. இது இந்திய நாகரிகமேயாகும். இந்திய மக்களுக்குச் சிறப்பான கருத்துக்கள், பழக்கவழக்க மரபுகள், எழுத்து முறை, கலைகள், தொழில்கள் ஆகிய யாவும் இம்மறைந்த நாகரிகத்தில் காணப்படுகின்றன. அவற்றுடன் நகர வாழ்வும், வாழ்க்கைத் தரமும் அன்று மிக உயர்ந்தவையாயிருந்தன. அந்நகர்களின் வடிகால் வசதிகளும், குளிப்பறைகளும், பாவிய தெருக்களும் இன்றைய நாகரிக நகரங்கள் பலவற்றைத் தோற்கடிப்பவை. வெளி உலகத் தொடர்பு வகையிலும் இத்தொல்பழங்காலத்திலேயே பாரசீகம், மெசபொட் டோமியா, எகிப்து ஆகிய நாடுகளுடன் இந்தியா வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது என்பதை அறிகிறோம். பேரளவில் சிந்துவெளி நாகரிகத்தின் மரபுகளும் பண்புகளுமே இன்று காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரையிலும், குஜராத்து முதல் வங்கம் வரையிலும் இந்தியாவின் பரந்த அடிப்படை நாகரிகமாய் வளர்ந்துள்ளது என்பதில் ஐயமில்லை. தென்னிந்தியராகிய நமக்கு இதில் இன்னும் சிறந்த தனிப்பங்கு உண்டு. வரலாற்றுக் காலத்தில் பல வெளியினங்களின் படையெடுப்பாலும், பண்பாட்சியாலும், வடவிந்தியாவின் பண்பில் ஓரளவு மாறுபாடுகளும் சீர்குலைவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்தியாவின் கிழக்குப் பகுதியும் தெற்குப் பகுதியும் இவற்றிலிருந்து ஒதுங்கியுள்ளன. ஆகவே, இவற்றின் பண்பாடு பெரிதும் பழைய சிந்துவெளி நாகரிகத்தின் வழி நின்று, தூய இந்திய நாகரிகமாய் நிலவியுள்ளது. தெற்கே தமிழகத்தில் கி.பி. முதல் நூற்றாண்டில் தழைத்த சங்க இலக்கிய மூலம், சிந்துவெளி நாகரிகத்தின் பல கூறுகளும் அமைந்த ஒரு நாகரிகம் இங்கே நிலவியதென்பதைக் காணலாம். புதைகுழி மாடங்களும், நடுவு நிலை யுணர்வும், ஒப்புரவுப் பண்பும் வாய்ந்த சமயச் சார்பற்ற சமூக இலக்கியமும் இவற்றுள் குறிப்பிடத்தக்க கூறுகள் ஆகும். இன்றைய தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் ஆகியவையும், சிறுபான்மையாக வடவிந்தியாவில் நிலவும் சில மொழிகளும் திராவிட மொழிகள் எனக் குறிக்கப்பட்டுள்ளன. இம்மொழிகளைப் போலவே சிந்துவெளி நாகரிகமும் திராவிடச் சார்பானதென்று ஆராய்ச்சி யாளர் ஒருமுகமாகக் கருதுகின்றனர். இந்தியாவில் ஆரியர் வந்தபின் எழுந்த முதல் எழுதா இலக்கியமான இருக்கு வேதமும் இதற்குச் சான்று பகர்கின்றது. பாம்பையும் இலிங்கங்களையும் இம்மக்கள் வணங்கினார்கள் என்றும், இவர்கள் பெருஞ்செல்வ முடையவர்களாய்க் கோட்டைகளையும் நகரங்களையும் கொண்டிருந்தார்கள் என்றும், இவற்றைத் தகர்க்கவே ஆரிய முனிவர் இந்திரன் முதலிய தேவர்களின் உதவி நாடி வழிபட்டனர் என்றும் நாம் அறிகிறோம். ஆரிய நாகரிகம்- நான்கு படிகள் ஆரியர்களின் மூலத்தாயகம் எது என்பதை வரையறுத்துக் கூற முடியவில்லை: சிலர் நடு ஆசியா என்றும், சிலர் ரஷ்யாவிலுள்ள வால்கா ஆற்று நிலம் என்றும் கூறுகின்றனர். இந்திய விடுதலை இயக்கத்தின் மாபெருந்தலைவரும், சிறந்த வரலாற்று ஆராய்ச்சியாளருமான பாலகங்காதரதிலகர். ஆரியர் வடதுருவப் பகுதியிலிருந்து வந்தவர் எனக் கருதுகிறார். எப்படியாயினும், அவர்கள் நடு ஆசியாப் பகுதி வரும் வரை நாடோடிகளாகவே இயங்கினார்கள் என்றும், நடு ஆசியாப் பகுதியில் ஆரியம் என்று பிற்காலத்தில் வழங்கிய நாட்டில் வந்தபின்னரே, ஓரளவு ஏரும் உழவும் பயின்று ஆரியர் என்ற பெயரை மேற்கொண்டனர் என்றும் கூறலாம்.இந்தியாவுக்கு வருமுன்னரே பாரசீகத்தில் அவர்களிடையே பூசலேற்பட்டு, ஒரு பிளவும் உண்டாயிற்று. ஒரு சாரார் அசுரரை வணங்கித் தேவரைப் பழித்தனர். அவர்கள் பாரசீகத்திலேயே தங்கினார்கள். மற்றொரு சாரார் தேவர்களை வணங்கி அசுரர்களைப் பழித்தனர். அவர்களே இந்தியாவுக்கு வந்து, பாஞ்சாலத்தில் தங்கி, இருக்கு வேதத்தை உருவாக்கினார்கள். ஆரியர் இந்தியாவுக்கு வந்த காலம் கி.மு. 3000 என்றும், கி.மு. 1500 என்றும் பலவாறாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் ஆரியர் முன்னேற்றத்திலும் நாகரிக வளர்ச்சியிலும் நாம் நான்கு படிகளைக் காணலாம். முதற்படியில் ஆரியர் பாஞ்சாலத்தில் தங்கிப் பழங்குடியினருடன் மும்முரமாகப் போராடி, அவர்கள் நகரங்களை அழித்தனர். பழங்குடியினர் மொழியும் நாகரிகமும் அவர்களுக்குப் புரியாதவையாயிருந்தன. இரண்டாவது படியில் கங்கை யமுனைத் தலைநிலத்தில் அவர்கள் தம்மவருடனும் பழங்குடியினருடனும் பல வகையாகப் பிரிந்தும் கூடியும் போராடியும் கலந்தும் வாழ்ந்தார்கள். இருக்கு வேதம் நீங்கிய யசுர், சாமம், அதர்வணம் என்னும் மூன்று வேதங்களும், இதிகாசம் இரண்டுள் ஒன்றான மாகாபாரதமும் இவ்விடத்திலேயே, புதிய நாகரிக நிலத்தில் எழுந்தன. மூன்றாவது படியிலேதான் ஆரியரும் பழங்குடியினரும், பேரளவில் கங்கை வெளியில் கலந்து, புதிதாக ஓர் இந்திய ஆரிய நாகரிகத்தை வளர்த்தனர். இந்நாகரிகமே வரலாற்றுக் காலத்தில் இந்தியாவில் ஆரிய நாகரிகமெனச் சிறப்பிக்கப்பட்டது. இதன் தாயகம், கங்கைப்பகுதி; தலைமையிடம், காசி: இவ்விரண்டும் இன்றளவும் ஆரியர் உள்ளத்தில் முதல் இடம் பெற்றுள்ளன. கங்கை வெளியில் பழங்குடி மக்கள் மொழியுடனும் பண்புடனும் ஆரியர் மொழி கலந்து மாற்றமடைந்து, பேச்சு வடிவில் இன்றைய இந்தி, வங்காளி முதலிய தாய்மொழிகளின் பண்டை வடிவங் களான பிராகிருத; பாலி மொழிகளாயின. அவற்றுடன் வேதமொழியும் பலபடியாக மாறி, வடவிந்தியாவின் பண்பட்ட இலக்கிய மொழியாகிய சமஸ்கிருதமாயிற்று. ஆரியர் வரவுக்குப் பின் வடஇந்தியாவில் எழுந்த முதற்பேரரசு, கங்கை வெளியின் கீழ்ப்பகுதியில் எழுந்த மகதமே. கி.மு.7-ஆம் நூற்றாண்டில் இதைச் சிசுநாகர் என்ற மரபினர் ஆண்டு வந்தனர். ஆரியரின் நான்காவது படி முன்னேற்றம், கங்கை வெளியிலிருந்து அவர்கள் இந்தியா முழுவதும் சிறிது சிறிதாகப் பரவியது ஆகும். மேற்கிந்தியாவில் அவர்கள் முன்னேறியது போல, இப்போது அவர்கள் பேரளவிலோ, போர் செய்தோ முன்னேறவில்லை; தங்கள் புதிய நாகரிகத்துடன் தனி மனிதராய்ப் பரவித் தங்கள் நாகரிகத்தைப் பரப்பினார்கள். இக்காலத்துக்குரிய அவர்கள் நூல் இராமாயணம். இதுவே சம்ஸ்கிருதத்தின் முதல் பண்பட்ட இலக்கிய நூல் அல்லது காவியம் ஆகும். உபநிடத இயக்கம் கங்கை வெளி நாகரிகக்காலத்தில், அதாவது கி.மு. 800ல் வடநாட்டு மன்னரவையிலிருந்து எழுந்த இயக்கமே. உபநிடத இயக்கம் ஆகும். தொடக்கத்தில் சனகர், சனற்குமாரர் முதலிய மன்னர்களிடையேயும் மன்னவை அறிஞர்களிடையேயும் அஃது ஆராய்ச்சி வடிவில் எழுந்தது. ஆரிய முனிவர் அதனை மன்னர்களிடமிருந்து கற்று, மாநிலமெங்கும் கொண்டு சென்றனர். இதன் பயனாக வேதங்களைப் பற்றிய ஆராய்ச்சியும் எழுந்தது. ஒரு புறம் வேதங்களின் மொழி, யாப்பு, இசை, காலக்கணிப்பு முதலிய கூறுகள் ஆராயப்பட்டு, வேதாங்கங் களாயின. மற்றொரு புறம், வேதத்திற்கான விளக்கவுரைகள், ஆராய்ச்சிகள் எழுந்து, பிராமணங்களாகவும், ஆரணியகங் களாகவும், உபநிடதங்களாகவும் விரிவுற்றுப் பரவின. ஆராய்ச்சிக்காக காடுகளில் வாழ்ந்த முனிவர்களே ஆரணியகங் களை ஆக்கினர் கற்றவர் குழுக்களால் (உபநிஷத்துக்கள் வாயிலாக) ஏற்பட்ட உபநிடதங்களுள், முப்பத்திரண்டே இக்காலத்திலிருந்து நமக்கு எட்டியவை என்று குறிக்கப்படு கின்றன. இவ்வுபநிடதங்கள் வேதம், வேள்வி, வேதத் தெய்வங்கள் ஆகிய வற்றிலிருந்து தொடங்கி, கடவுள், உலகம், ஒழுக்கம், உயிர், சாதி வேறுபாடு, சுவர்க்க நரகம் ஆகிய எல்லாவற்றையும் பற்றித் தங்கு தடையற்ற ஆராய்ச்சிகள் நிகழ்த்தித் தம் தற்காலிக முடிவுகளையும் தெரிவித்தன. ஜாபால உபநிடதம், ‘சாதி உயர்வு தாழ்வு ஒழுக்கத்தால் ஏற்படுவது; பிறப்பினாலன்று.’ என்பதை நிலை நாட்டியுள்ளது. “எழுமின், விழிமின், வேண்டும் நலங்களை முயன்று பெறுமின்!’ என்ற எழுச்சியுரை, கடோபநிடதம் தரும் வாசகம். இதுவே, இந்தியாவின் அருட்செல்வத்தை அமெரிக்கா வரை கொண்டு பரப்பிய விவேகானந்த அடிகளின் குறிக்கோளாய் அமைந்தது. பண்பும் பயனும் இந்திய நாகரிகத்துக்கும் உலக நாகரிகத்துக்கும் உபநிடத இயக்கங்களாலும், உபநிடதங்களாலும் கிட்டிய நன்மைகள் எண்ணற்றவை. உலகின் முதல் முதல் உரைநடை நூல்களும், முதல் ஆராய்ச்சி நூல்களும் இவையே என்னலாம். இவை கடந்த ஆராய்ச்சிகளையும் இவற்றினும் பரந்த ஆராய்ச்சிகளையும் இன்றும் எந்நாட்டிலும் காண்பதரிது. இவை நம்பிக்கை அடிப்படையான சமயத்துறையில் பகுத்தறிவு ஒளிவிளக்கத்தைப் பாய்ச்சியுள்ளன; சமூகச் சீர்திருத்தத்தில் கருத்தூன்றி உள்ளன. முடிந்த மெய்ம்மை, வாழ்வின் முடிந்த முழு இலக்கு ஆகியவற்றில் இவை உணர்வு கொளுத்தியுள்ளன. உபநிடதங்களால் இந்தியாவின் சமயவாழ்வில் ஆயிர ஆண்டுக்காலம் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. ஒவ்வோர் ஆசாரியரும் ஒவ்வொரு கொள்கையையும் கட்சியையும் சமயத்தையும் வளர்த்தனர். இந்தியா ஒரு சமயப் பொருட்காட்சி மேடையாயிற்று. இந்தச் சமய, கட்சி, கொள்கை வேறுபாடுகளுள் ஒரு சிலவே நம்மை வந்தடைந்துள்ளன. அச்சிலவற்றுள்ளும் ஆசீவக சமயம் போல நமக்குப் பெயர் மட்டும்வந்து எட்டியுள்ளவை உண்டு. இந்து மதத்தின் உட்கூறுகளாக இன்றும் கருதப்படும் அகச்சமயம் ஆறு, புறச்சமயம் ஆறு என்பன போன்றவை உண்டு. கட்டற்ற அறிவுக் கோட்பாடுகளான நாத்திகம், உலோகாயதம், மாயா வாதம், அளவை வாதம் முதலிய பலவற்றைப் பற்றிய செய்திகள், பிற்காலத்தவர் கண்டன மூலம் நமக்குத் தெரிய வருகின்றன. இக்கோட்பாடுகளுள் ஆறு தனிப்படத் ‘தரிசனங்கள்’ என்று வகுக்கப்பட்டு,இன்று இந்துமத அறிவாராய்ச்சியுள் இடம் பெற்றுள்ளன. அவையே பூர்வமீமாஞ்சை, உத்தரமீமாஞ்சை, சாங்கியம், யோகம்,நியாயம், வைசேடிகம் என்பவை. புத்த சமண சமயங்கள் இவை தவிர, இவற்றுள் ஒரு கோட்பாடே இன்று இந்தியாவுக்குத் தனிச்சிறப்புத் தரும் சமயங்களுள் ஒன்றான சமண சமயமாய் நிலவுகிறது. இதனைத் தோற்றுவித்தவர் மகாவீரர் என்பவர். இவர் கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்ற கோட்பாட்டை முதன்முதல் வற்புறுத்திய சமயமும், முதன்மையாக வற்புறுத்தும் சமயமும் இதுவே. உலகிலேயே விலங்குகளுக்கு மருத்துவ நிலையங்களை முதன்முதல் அமைத்த சமயமும் இதுவே. கி.மு. 6-ஆம் நூற்றாண்டிலேயே எழுந்த மற்றொரு சமயம் புத்த சமயம் ஆகும். இதுவும் சமண சமயத்துடன் இந்தியாவில் கி.பி.5-ஆம் நூற்றாண்டு வரை ஓரளவு நிலவிப் பின் இந்திய வாழ்விலிருந்து பெரிதும் மறைவுற்றது. ஆயினும், கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பேரரசனான அசோகன், கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த பேரரசனான கனிஷ்கன் ஆகியவர்களின் முயற்சியால் இது உலகில் மேற்கும் தெற்கும் கிழக்கும் பேரளவில் பரவியது. இன்று திபெத்து, சீனா, ஜப்பான், தென்கிழக்கு ஆசியா, பர்மா, இலங்கை ஆகிய நாடுகளெங்கும் இதுவே முக்கிய சமயமாய் இயங்குகிறது. இந்தியாவில் பிறந்து உலகில் வளர்ந்த உலகப் பெருஞ்சமயமாய் இது விளங்குகிறது. உலக இலக்கிய மரபு புத்த சமண சமயங்கள் இந்தியாவுக்கு அக்காலத் தாய் மொழிகளாகிய பாலி, பிராகிருதம் ஆகியவற்றிலும், சம்ஸ்கிருதத்திலும் பேரளவான இலக்கியம் அளித்துள்ளன. இவை இன்று ஆசியாவின் மூலத்தாயக இலக்கியங்களாகி யுள்ளன. இவை தவிர, இந்தியாவில் தொன்றுதொட்டு வழங்கிவந்த கதை மரபுகளைத் தொகுத்து இப்புத்த சமண இலக்கியங்களே உலகுக்கு உதவின. கி.மு. 2-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் பண்டைப் பெருங்கவிஞனான குணாட்டியன் இயற்றிய பிருகத் கதையும், மறுபுறம் பஞ்சதந்திரமும், இவற்றைச் சார்ந்து பிற்காலத்திலெழுந்த கிளிக்கதை, பதுமைக் கதை, விக்கிரமாதித்தன் கதை ஆகியவையும் இக்கதை இலக்கியத்தின் மரபில் வந்தவைகள். மேனாடுகளில் ஈஸாப்பு, பொக்காச்சியோ, சாஸர் முதலிய பெருங்கலைஞர்களின் கதை இலக்கியத்துக்கும், கீழ்நாடுகளின் அராபிய இராக்காலக் கதைகளுக்கும் மூல இலக்கிய மரபுகள் இவைகளே என்று உலகக்கதை மரபு ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இக்கதைகளை இந்தியாவிலிருந்து கொண்டு சென்றவர்கள், இன்றளவும் உலகெங்கும் நாடோடிகளாகவே அலைந்து திரிகின்ற ஜிப்ஸிகள் என்ற கூட்டத்தவர்களே என்று கருத இடமுண்டு. ஏனெனில், ஜிப்ஸிகள் பல நாட்டு மொழிகளும் பயின்று கலந்து பேசினாலும், அவர்கள் மொழியின் அடிப்படை இந்தியாவிலுள்ள இந்தி மொழியையே ஒத்துள்ளது என்பதை அறிகிறோம். இந்து மதம் உபநிடத ஆராய்ச்சியின் பயனாகவே, கி.பி. 8-ஆம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவில் இந்துமத சமயாசாரியர் மதச் சார்பான அறிவுக் கருத்துக்களை ஒருமுகப்படுத்தி, சித்தாந்தங்களாக்க முடிந்தது. அத்துடன் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் புத்த சமயம் நலியத் தொடங்கியபின், அதன் கலைகளையும் கருத்துக்களையும் காலத்துக்கேற்ற புத்துருவில் அமைத்து, கலைஞர்கள் புதிய இந்து சமயக் கலைகளை வளர்த்தார்கள். மக்கள் பழக்கவழக்க மரபுகளைக் கௌடில்லியர், மனு, ஆபஸ்தம்பர், கௌதமர் என்பவர்கள் தங்கள் புதிய சமுதாயக் கருத்துக்களுக்கேற்ப வகுத்து, அரசியல் நூல்களும் சுமிருதிகள் என்ற சட்ட நூல்களும் இயற்றினார்கள். பண்டை உரோம நாட்டுச் சட்ட நூல்களைப் போல, இவை மனித நாகரிகத்தின் பழங்கால மரபுகளைக் காட்ட மிகுதியும் உதவுகின்றன. திரும்பு கட்டம்; கி.பி. 3- ஆம் நூற்றாண்டு கி.பி. 3-ஆம் நூற்றாண்டு முதல் 5-ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலம், இந்தியாவின் வரலாற்றிலுள்ள திரும்பு கட்டங்களுள் ஒன்றாகும். இத்திரும்பு கட்டத்துக்குத் தென்னாடே பேரளவில் காரணமாயிருந்தது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வரை சங்க இலக்கியங்களும் தென்னாட்டு மரபுகளும் வடநாட்டின் புதிய ஆரிய நாகரிகத்துடன் பெரிதும் கலவாமலே இருந்து வந்தன. அத்துடன் சேர சோழ பாண்டியர் என்ற முடியுடை மன்னர் தோன்றித் தமிழகத்திலும், அது கடந்து கடல் கடந்த நாடுகளிலும், சில சமயம் வடவிந்தியாவிலும் தம் ஆட்சியைப் பரப்ப முயன்றனர். பாண்டி நாட்டில் வடிம்பலம்ப நின்ற பாண்டியன், கிட்டத்தட்டக் கி.மு. 5-ஆம் நூற்றாண்டில், கடற்படையுடன் சாவக நாட்டின்மீது படையெடுத்து, அதை அடக்கியாண்டான். கி.மு. முதல் நூற்றாண்டில் சேர அரசனொருவன் மேல்கடற்கரையில் கடல் வாணிகரைச் சூறையாடிய கடம்பர் என்ற கொள்ளைக் கூட்டத்தாரையடக்கி, அவர்கள் மூலதனமாயிருந்த வெள்ளைத் தீவைக் கைக்கொண்டான். சோழன் கரிகாலன், இலங்கையையும் இந்தியாவின் பெரும்பகுதியையும் அடக்கி, மன்னர் பலரைத் தனக்குத் திறை செலுத்தும் சிற்றரசராக்கினான். இமயத்தில் சோழர் புலிக்கொடி நாட்டியதை அடுத்து, பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாண்டியரின் மீனக் கொடியையும், சேரன் நெடுஞ்சேரலாதன் சேரரின் வில் கொடியையும் அதில் பொறித்தனர். இவர்களனைவரின் புகழையும் தாண்டிச் சேரன் செங்குட்டுவன் வடநாட்டின்மீது படையெடுத்துப் பெரும்போராற்றிக் கண்ணகி சிலையை மன்னர் தலைமீது வைத்துக் கொணர்ந்தான். வடநாட்டில் சிசுநாகரையடுத்து நந்தரும், நந்தரையடுத்து மௌரியரும் ஆண்டனர். அதன்பின் வடநாட்டுப் பேரரசுகள் நலிய, தெற்கே ஆந்திரப் பேரரசு தலை தூக்கிற்று. கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் வடபெரும்பகுதியை ஆண்டவர்கள் ஆந்திரர்களே. சேரன் செங்குட்டுவனது வடநாட்டுப் போரில் ஆந்திரர் அவனுடன் சேர்ந்து சண்டை செய்தனர் என்றும், வடநாட்டில் தோற்ற மன்னன் கனகன், பேரரசனான கனிஷ்கனே என்றும் வரலாற்றாசிரியர் சிலர் கருதுகின்றனர். மூன்றாம் நூற்றாண்டில் இவ்வெல்லாப் பேரரசுகளும் வீழ்ச்சியடைந்தன. வடக்கே குப்தரும், இடை நாடுகளில் சாளுக்கியரும், தெற்கே சேர சோழ பாண்டியருக்குப் போட்டியாகக் காஞ்சீபுரத்தில் பல்லவரும் எழுந்தனர். இவ்வெல்லா அரசரும் வடமொழியும் பாலி பிராகிருத மொழிகளும் பேணினர். பத்தி இயக்கம் தென்னிந்தியாவில் இந்தச் சூழலிடையேதான் கி.பி. 3-5ஆம் நூற்றாண்டுகளில் பத்தி இயக்கம் தொடங்கிற்று. சைவ சமயச் சார்பான முதல் நாயன்மார்களும், வைணவ சமயச் சார்பான முதல் ஆழ்வார்களும் தோன்றிய காலம் இதுவே. 7-ஆம் நூற்றாண்டில் தலைமையான நாயன்மார்களும் தலைமையான ஆழ்வார்களும் தோன்றிய பின் பத்தி இயக்கம் பெருவெள்ள மாயிற்று. 8-ஆம் நூற்றாண்டில் நீலகண்டர், சங்கரர் முதலிய முதல் ஆசாரியர்கள் உதவியால் இவ்வியக்கங்கள் முழு நிறைவும் சமயத்துறை ஆதிக்கமும் பெற்றன. ஆனால், இந்த இரு சமயப் பத்தி இயக்கங்களுள் சைவச் சார்பான இயக்கம் தென்னாட்டுடன் பெரிதும் நின்றுவிட்டது. கன்னட நாட்டில் 12-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டு வரை சைவ இயக்கம் புத்துருவில் வீரசைவ இயக்கமாய்த் தழைத்தது. ஆனால் வைணவ பத்தி இயக்கம், 12-ஆம் நூற்றாண்டில் தமிழகப் பெருந்தலைவரான இராமானுசர் ஆதரவால் இந்தியாவெங்கும் பரவிற்று. கன்னட நாட்டில் மாத்துவாசாரியாரும் வங்க நாட்டில் சைதன்னியரும் இராமானுசர் தந்த வைணவப் பத்தி இயக்கத்தைப் பாரிய அளவில் பெருக்கினர். ஆந்திர நாட்டில் இராமானுசர், கன்னட நாட்டில் புரந்தரதாசர், வட நாட்டில் கபீர்தாசர், இராமதாசர் ஆகியவர்கள் முயற்சிகளால் இவ்வியக்கம் கன்னட நாடு, மகாராஷ்டிரம், கூர்ச்சரம், மாளவம், பாஞ்சாலம் ஆகிய இடங்களில் பரவியது. 18-ஆம் நூற்றாண்டில் துளசிதாசரின் இராமாயணம் இதை வடவிந்தியாவெங்கும் நிலைக்கச் செய்தது. தாய்மொழிப் புரட்சி: 12-ஆம் நூற்றாண்டு தமிழ், கன்னடம் ஆகிய இரண்டு நீங்கலாக மற்ற எல்லா இந்தியத் தாய் மொழிகளின் வாழ்வுக்கும் இந்தப் பத்தி இயக்கமே முதல் தூண்டுதல் தந்துள்ளது. தமிழ், கன்னடம் உட்பட எல்லா மொழிகளின் ஆயிர ஆண்டு வளர்ச்சி, இப்பத்தி இயக்கம் தந்த வளர்ச்சியேயாகும். இவ்வியக்கம் தமிழகம் கடந்து பரவிய காலமாகிய 12-ஆம் நூற்றாண்டே இந்தியாவின் தாய்மொழிப் புரட்சிக் காலம் என்னலாம். இந்தியத் தாய்மொழிகளில் சமஸ்கிருதம் பேரளவில் கலக்கத் தொடங்கிய காலம், இந்தப் பன்னிரண்டாம் நூற்றாண்டே. தொடக்க ஆர்வத்தில் கலப்பு எல்லையற்றுப் பொங்கியிருந்தது. இரு மொழிகளின் கலப்பைப் புலவர் ஆர்வத்துடன் வரவேற்றனர். அக்கலப்பு, முத்துடன் பவழம் கலந்தது போன்ற அருமையுடையது என்று கருதி, அந்நடையை அவர்கள் மணிப்பிரவாளம் அல்லது மணிமிடை பவளம் என்று வழங்கினார்கள். தொடக்கக் கால வைணவ சமயப் பேருரைகள் தமிழகத்தில் இந்நடையிலேயே எழுதப்பட்டுள்ளன. பண்பு மயக்கம் உபநிடத இயக்கம், பத்தி இயக்கம் ஆகிய இரு பேரலைகளையும் அவற்றின் கிளை அலைகளையும் வரலாற்றாசிரியர் கவனியாது, அரசியல் நிகழ்ச்சிகளிலேயே முழுக்கருத்தும் செலுத்தினர். ஆனால், இவ்வியக்கங்கள் இந்தியாவின் வாழ்வுக்கும் உலக நாகரிகத்திற்கும் பயன்பட்ட அளவு தொடர்ச்சியான வளர்ச்சிப் பண்பு எதனையும் இந்திய அரசியல் வாழ்வில் காண முடியாது. இதனை வரலாற்றாசிரியரே ஓரளவு ஒத்துக் கொள்கின்றனர். ஆனால், அவர்கள் இதற்குக் கூறும் காரணங்கள் பொருத்தமற்றவை. இந்திய நாகரிகம் சமயச் சார்பானது என்றும், கிராம வாழ்வு எளிய வாழ்வு ஆகிய வற்றிலேயே மனநிறைவுற்று, அஃது உயர் உலகியல் வாழ்வை நாடாதிருந்ததென்றும், அரசியலிலோ இவ்வுலக வாழ்விலோ அக்கறை இல்லாமல், மேலுலக வாழ்விலேயே கண்ணாயிருந்த தென்றும் அவர்கள் கூறுகின்றார்கள். இவை எவ்வளவு பொருந்தாக் கூற்றுகள் என்பதைச் சிந்துவெளி நாகரிகம் பற்றிப் பண்டித ஜவஹர்லால் சுட்டிக் காட்டிய முடிபுகளும், உபநிடத இயக்கம், பத்தி இயக்கம் ஆகியவற்றின் போக்குக்களும் நன்கு காட்டும். இந்திய வரலாற்றாசிரியருள் பலர் மேனாட்டினர். அவர்களுட் பெரும்பாலார் மேற்கூறிய கொள்கைகளை வாளா ஏற்றதுடன் நில்லாது, பல வகையில் வலியுறுத்தி வளர்க்கவும் செய்தார்கள். இந்தியாவின் கடற்கரையோரம் வளைவு நெளிவின்றிச் செவ்விதாயிருப்பதால், இந்தியர் கடல் மனப்பான்மை உடையவராயில்லையென்றும்; தொழில், அறிவியல், அரசியல் வளர்ச்சிகளுக்கு இடமேற்படவில்லை யென்றும்; பிரிட்டிஷார் வந்த பின்னரே இவற்றுக்கு இடமேற்பட்டதென்றும் அவர்கள் வரைந்துள்ளார்கள். இது வரலாற்றில் கண்ட செய்திகளை இருட்டடிப்பதாகும். கடல் வாணிகளம் மொகஞ்சதரோக் காலத்திலிருந்தே இந்திய நாடு பருத்தித் தொழிலில் தலை சிறந்திருந்தது; பாபிலோனியா, எகிப்து என்னும் நாடுகளுடன் அது வாணிகம் செய்திருந்தது. அந்நாடுகளில் அன்றே இந்தியர் குடியேற்றங்களும் இருந்தன என்பதை அறிகிறோம். கி.மு. பத்தாம் நூற்றாண்டிலேயே தமிழகத்திலிருந்து குரங்குகளும், யானைத் தந்தங்களும், அகிலும், மயிலிறகும், முத்தும் பாலஸ்தீனத்துக்குக் கொண்டு செல்லப் பட்டிருந்தன. கிறிஸ்து பிறப்புக்கு முன்னும் பின்னும் கிரேக்க வாணிகமும் உரோம் வாணிகமும் தமிழகத்துடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்தன. உரோம உயர்குடி மாதரும் இளைஞரும் இந்திய ஆடையணி மணிகளையே பெருவிலைக்கு வாங்கியதால், உரோமப் பேரரசின் செல்வம் சீரழிவதாக அந்நாட்டு அரசியல் மன்றில் ‘கேட்டோ’ என்பவர் கழறியுள்ளார். அதற்கேற்ப, மலையாள நாட்டிலும், தமிழகத்திலும், பிற பகுதிகளிலும் பேரளவான அக்கால உரோமப் பொன் நாணயங்கள் இன்றுவரை அகப்படுகின்றன. பல்லவர், சோழர் ஆட்சிக் காலங்களில் தமிழர், ஆந்திரர், கன்னடியர், கலிங்கர் ஆகிய பல திறத்தவரும் கடல் கடந்து வாணிகம் செய்து, பர்மா, சயாம்,இந்து சீனா, மலேயா, கிழக்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றில் குடியேறி, இந்திய மொழிகள், எழுத்துகள், இலக்கியங்கள், சமயக் கருத்துகள் ஆகியவற்றைப் பரப்பியிருந்தனர். பல்லவ சோழ மன்னர் பலரும் இக்குடியேற்றங் களைப் பின்பற்றி அந்நாடுகளின்மீது படையெடுத்து, அவ்வக் காலத்தில் கடல் கடந்த பேரரசுகளை அமைத்திருந்தனர். ஆட்சி மரபும் குடியாட்சிப் பண்பும் தென்னாட்டு அரசரும் பேரரசரும் நிலப்படை மட்டுமன்றிப் பெருங்கடற்படையும் வைத்திருந்தனர். தம் நாட்டுப் பாதுகாப்புக்கு மட்டுமன்றித் தொலையிலுள்ள பிற நாட்டுப் படையெடுப்புக்கும் போதுமான நிலப்படையும் கடற்படையும் அவர்களிடம் இருந்தன. இதனாலேதான் அவர்கள் தங்கள் தாயகத்தினின்றும் நெடுந்தொலை ஆதிக்கம் செலுத்த முடிந்தது. விஜயநகரப் பேரரசரும் முற்காலப் பிற்கால வடநாட்டுப் பேரரசுகளும் (சிவாஜியின் பேரரசு நீங்கலாக) கடற்படை வகையில் கருத்துச் செலுத்தவில்லை. கடலகவாழ்வில் கருத்தோய்ந்த இவ்விடையிருட்கால வாழ்வே மேனாட்டவர்க்குக் கடல் வாணிகத்தையும், கடலாட்சியையும் திறந்து விட்டது. பாண்டியரும் சோழரும் பல்லவரும் நாட்டைப் பல கோட்டங்கள், கூற்றங்கள், வளநாடுகளாகப்1 பிரித்து, ஒழுங்கான ஆட்சி முறையும் சட்டங்களும் வகுத்து ஆண்டார்கள். திணை நில ஆட்சிகளும்2, நகராட்சிகளும், 3பஞ்சாயத்து முறையில் நடைபெற்றன. வாணிகத் தொழிற்குழுக்கள்4 நிலவின நாகப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம், மல்லை (மாமல்லபுரம்), பொதுசா (புதுச்சேரி), மரக்காணம் ஆகிய துறை முகப்பட்டினங்களில் வெளிநாட்டு வாணிகர் குடியிருப்புக்களும் பட்டயம் பெற்ற பெருநர் ஆட்சிகளும் இருந்தன. இவை தவிர, தென்னாட்டிலும் வடநாட்டிலும் கி.மு. 7-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு வரை பல குடியரசுகளும் பல கூட்டுக் குடியரசுகளும் நிலவின. சேர அரசு பேரரசாயினும், 6-ஆம் நூற்றாண்டு வரை ஒரு பெரிய கூட்டுக் குடியரசாகவே நிலவியிருந்தது. தொடக்கத்தில் சேரர் ஏழரசுகளின் கூட்டுறவுத் தலைவராயும், சோழர் பாண்டியர் பல அரசுகளின் தலையரசராகவுமே இருந்தனர். ஆனால், எக்காலத்தும் இவர்களுக்கு உட்படாத வேளிர் அல்லது சிறு குடியரசரும் இருந்தனர். ஆந்திரரும் கலிங்கரும் பேரரசால் அடக்கப்படாத காலத்தில் கூட்டுக் குடியரசாகவே நிலவியதாகத் தெரிகிறது. வடமொழியில் சதகர்ணி என்றும் தமிழில் நூற்றுவர் கன்னர் என்றும் வழங்கப்பட்ட ஆந்திரர் பெயரே, ‘நூறு குடிகளின் கூட்டு’ என்னும் பொருள் உடையதாயுள்ளது. கௌதம புத்தர் பிறந்த சாக்கியர் குடியும், குப்த மன்னர்களுக்குப் பெண் கொடுத்து அவர்கள் வலிமையைப் பெருக்கிய லிச்சாவிக் குடியும், வைசாலி நகர் ஆட்சியும் வரலாற்றில் பேரரசரும் அஞ்சத்தக்க வலிமையுடைய குடியாட்சிகளாய் இருந்தன. ‘இந்தியாவில் பழங்காலத்தில் முடியாட்சியன்றிக் குடியாட்சி மரபு இல்லை’, என்னும் கூற்று முற்றிலும் தவறு என்பதை இதனால் காணலாம். ஆனால், குடியாட்சி, நகராட்சி, தொழில்வளம், கடல் வாணிகம், சமயச்சார்பற்ற சமூக நாகரிகம் ஆகிய யாவும், வரலாற்றுக் காலத்தில் படிப்படியாய் வளங்குறைந்து வந்தன என்பதில் ஐயமில்லை. இது பெரிதும் வெளியார் படையெடுப்புக் களின் பயன் என்று கூறுவது தவறன்று. ஏனெனில், வடமேற்கு மூலையிலிருந்தே இவற்றின் சீரழிவு மிகுதியாகின்றது. மேற்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய நான்கு புறங்களிலும் ஒதுங்கிய பகுதிகளில் இவற்றின் மரபு நீடித்திருந்தது. கடல் கடந்த வாணிகம் இன்றும் குஜராத்தியர், தமிழர் கையிலேயே உள்ளது. பல பழங்கால மரபுகள் மார்வார், காசுமீரம், நேப்பாளம், அஸ்ஸாம், வங்கம், தென்னாடு ஆகிய புறப்பகுதிகளிலேயே தங்கு தடையற்று வளர்ந்துள்ளன. விடுதலை இந்தியாவில் இந்திய வாழ்வு மீண்டும் ஒன்றுபட்டு இவை தங்கு தடையின்றி வளர்ந்தோங்கும் என்பதை நாம் உறுதியாக நம்பலாம். பேரரசு மரபுகள் அசோகர், கனிஷ்கர் பேரரசாட்சி, இந்தியாவின் புகழை ஆசியா முழுவதுமே ஒளி பெறச் செய்திருந்தது. ஆனால், அசோகர் இந்திய மண்ணில் தோன்றிய மன்னர். அவர் முன்னோர்கள் காலத்தில் பாரசீக அரசனான கைரஸும், கிரேக்கப் பேரரசனான அலெக்ஸாண்டரும் படையெடுத்து வடமேற்கு இந்தியாவை மட்டுமே ஆண்டனர். கி.மு. 2-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. முதல் மூன்று நூற்றாண்டு வரையிலும் பாக்டிரியரும், பார்த்தியரும், குஷானரும் படையெடுத்தனர். மேற்குப் பகுதியில் பார்த்தியர் மரபு நீண்ட நாள் ஆண்டு வந்தது. கனிஷ்கன் குஷான மரபைச் சேர்ந்தவன். இந்தியாவின் வடமேற்கு எல்லையிலுள்ள புருஷபுரி என்னும் பெஷாவரைத் தலை நகராகக் கொண்டு சிந்து சமவெளி முழுவதையும் பார்த்தியா பாக்டிரியா நாடுகளுடன் சேர்த்து அவன் ஆண்டான். அவன் ஆட்சிக்குப்பின் ஊணர் படையெடுப்பால் இந்தியா மீண்டும் சீரழிந்தது. கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்குப் பின் கிழக்கிந்தியாவிலிருந்து மீண்டும் குப்த மரபு என்ற பேரரசு மரபு தோன்றிற்று. சமுத்திர குப்தர் இந்தியா முழுவதும் திக்கு விஜயம் செய்தார் என்றும், கங்கை வெளியையும் கூர்ச்சரத்தையும் ஆண்டார் என்றும் அறிகிறோம். இரண்டாம் சந்திரகுப்தர் காலம் முதல் நான்கு நூற்றாண்டுகளாக வடநாட்டில் வடமொழி தழைத்தது; கலைகளும் அறிவியல்களும் ஓங்கின. காளிதாசன் என்ற இந்தியாவின் தலைசிறந்த முதல் வரிசை வடமொழிக் கவிஞன் வாழ்ந்ததும், வராஹமிஹிரர், ஆரியபட்டர் முதலிய கணித நூலாரும், சுசுருதர் முதலிய மருத்துவ நூல் அறிஞரும் வாழ்ந்ததும் இக்காலத்திலேயே, சீனநாட்டுப் புத்த யாத்திரிகரான பாஹியான், ஹியூன் சுவான்ங் ஆகியவர்கள் இந்தியா வந்து இக்கால நிலைபற்றி நமக்கு எழுதித் தெரிவித்துள்ளார்கள். கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் வடவிந்தியாவில் தானேசுரத்தி லிருந்து ஆண்ட ஹர்ஷனும், தென்னாட்டில் வடபால் வாதாபியிலிருந்து ஆண்ட புலிகேசியும், தமிழகத்தில் காஞ்சியி லிருந்து ஆண்ட பல்லவனும், மதுரையிலிருந்து ஆண்ட பாண்டியனும் பேரரசராயிருந்தனர். இதன்பின் வடவிந்தியா மீண்டும் ஊணர் படையெடுப்பால் சீரழிந்தது. இச்சமயம் மார்வார்ப் பகுதியிலிருந்து இந்தியாவின் பண்டை வீரப்பண்பைப் பாதுகாத்த ரஜபுத்திரர் இந்திய அரசியல் வாழ்வின் சீரழிவை வடவிந்தியா முழுவதிலும் சிலகாலம் தடுத்து நிறுத்தினர். அவர்கள் அரசுகளும் பேரரசுகளும் நிறுவி ஆண்டார்கள். விடுதலை இழந்த வகை ராஜபுத்திர அரசருள் தில்லியிலிருந்து ஆண்ட பிருதிவியும், அவர் அண்டை நாட்டு மன்னரான ஜயசந்திரரும் தம்முட் கொண்ட பகைமை காரணமாகவே ஆப்கானிய அரசனான முகம்மது கோரி இந்தியாவுக்குள் வரவழைக்கப்பட்டான். இந்தியா விடுதலை இழந்ததற்குரிய காரணங்களுள், ஒற்றுமை யின்மையும், போட்டி பொறாமையுமே முக்கியமானவை என்பதை ஜயசந்திரர் செயல் எடுத்துக் காட்டுகிறது. முகம்மது கோரி வழியில் வந்த ஆப்கானிய மரபுகளில் கடைசி மரபில் வந்த இபுரஹிம் லோடி என்பவனும் இதுபோலவே தன் உள்நாட்டு எதிரி ஒருவனை அழிக்கக் காபூலில் ஆண்ட முகலாய மன்னனான பாபரை வரவழைத்தான். இவ்விரண்டாவது பொறாமைச் செயல் இரண்டாவது தடவையும் மற்றோர் அயலாட்சியை இந்தியாவுக்குள் கொண்டு வந்தது. முகலாயப் பேரரசு வடநாட்டில் இரண்டு நூற்றாண்டு களுக்கு நல்லாட்சியும் நாட்டில் ஒற்றுமையும் விளைவித்தது. அக்பர், அசோகரின் பழம்புகழைப் புதுப்பித்தார். இடையே சிறிது காலம் ஆண்ட ஆப்கானிய மன்னனான ஷெர்ஷா, அக்பருக்கும் பிற்கால பிரிட்டிஷ் ஆட்சிக்கும் வழிகாட்டியான பல நல்ல திட்டங்களை வகுத்தான். இந்த முஸ்லிம் ஒற்றுமை, இக்கால வெள்ளி நாணய முறை, வரி வசூல் முறை ஆகியவை இன்றும் ஷெர்ஷாவின் முறைகளேயாகும். அசோகர் கால ஆட்சி மரபே ஆந்திர, பல்லவ, சோழ பாண்டிய அரசு முறைகளின் வாயிலாகத் தொடர்ந்து, ஷெர்ஷா ஆட்சி மூலமாக இன்னும் செயலாற்றி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. முகலாய ஆட்சி 18-ஆம் நூற்றாண்டில் சரியத் தொடங்கிற்று. இதே சமயம் மேற்கே தக்காணத்தில் மகாராஷ்டிரத்தில் இந்தியாவின் வீரப்புலியேறான சிவாஜி பேரரசாட்சி அமைத்ததுடன் தக்காணத்திலுள்ள முஸ்லிம் அரசுகளின் எல்லையைக் கடந்து, தமிழகத்தில் தஞ்சையிலும் ஒரு கிளைப் பேரரசு அமைத்தார். அவர் காலத்துக்குப் பின் வடக்கேயுள்ள அரசுகள் நிஜாம் அரசாய் ஒன்றுபட்டன. தெற்கே மைசூரில் ஹைதரும், திப்புவும் பேரரசு நாட்டினர். வணிகராய் வந்த பிரிட்டிஷார், தெற்கிலிருந்தே தமது ஆதிக்கத்தைப் பரப்பினர், மகாராஷ்டிரரும் திப்பபும் அதனை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தனர். நிஜாம் வலிமையற்ற அரசாய் இருந்ததால், இந்திய எதிர்ப்புக் கோட்டையைப் பிரிட்டிஷ் தாக்குதல் அவ்விடத்தில் துளைத்துத் தகர்த்தது. இதற்கிடையில் வடக்கே நாதர்ஷா படையெடுப்பு, தளர்ந்து வந்த முகலாயப் பேரரசைத் தகர்த்தது. 1763ல் மராட்டிரர், முகலாயர், ரஜபுத்திரர் ஆகிய பல திறத்தினரும் இந்திய வரலாற்றிலேயே முதல் தடவையாக ஒன்றுபட்டுத் திரண்டனர். ஆப்கானிஸ்தானத்திலிருந்து படையெடுத்த அகமதுஷா அப்துரானியை அவர்கள் எதிர்த்தார்கள். ஆனால், ஒற்றுமையின் வலிமைக்குரிய காலம் மலையேறிவிட்டது. அனைவரும் ஒருங்கே மூன்றாம் பானிப்பட்டுப் போரில் அழிவுற்றனர். பிரிட்டிஷ் அயலாட்சியின் பிடியை எதிர்த்து இந்தியா தெற்கே போராடுகையில், வடவிந்தியாவுக்கு மூன்றாவது பானிப்பட்டு கொடுத்த அடி, அதையும் எளிதில் அயலாட்சிக்கு இரையாக்கத் தொடங்கிற்று. ஆனால், இதுவரை அயலார் படையெடுப்பில் போர்முனை முன்னணியில் இருந்த பாஞ்சாலம். இப்போது அதன் பின்னணியிலிருந்தது, இது வரையில் அதன் பின்னணியில் இருந்த தமிழகம், இப்போது முன்னணியிலிருந்தது, இவ்விரண்டு கோடிகளும் பிரிட்டிஷ் ஆட்சியிலும் விடுதலை இயக்கத்திலும் தனி முக்கியத்துவம் உடையன. பிரிட்டிஷ் ஆட்சியின் கடைசி ஆதிக்கப்போர் பாஞ்சாலத்திலும் வடமேற்கு இந்தியாவிலுமே நடைபெற்றது. ஆனால், அதற்கு முன்பே பிரிட்டிஷ் ஆட்சிக் கோட்டையை எதிர்த்த முதல் விடுதலைப் போர், தென்னாட்டில் எழுந்து விட்டது. பாஞ்சாலத்தில் கட்டி முடித்த அவ்வாட்சியின் ஒழிப்பு, தமிழகத்தில் பாஞ்சாலங்குறிச்சியில் தொடங்கிற்று. பாஞ்சாலம் பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயர் ஒற்றுமை, இவ்வகையில் வியப்புக்குரியதேயாகும்! 3. அயலாட்சியும் அடிமைத்தளைகளும் பாரதம் அன்றும் இன்றும் “தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு சூழ்கலை வாணர்களும்- இவள் என்று பிறந்தவள் என்றுண ராத இயல்பின ளாம்எங்கள்தாய்.” பாரத தேசத்தின் பழமை அரியது; பழம்புகழ் பெரியது. வரலாறு, மொழியாராய்ச்சி, இனவாராய்ச்சி, புதை- பொருளாராய்ச்சி ஆகிய பல துறைகளுக்குரிய கலைவாணர்கள் இவற்றை விளக்கியுள்ளார்கள். பாரதத்தின் பழம்புகழுக்கு அவர்கள் சான்று தருகின்றார்கள். கவிஞர் பாரதியார் இப்பழம்புகழ் கண்டு பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறார். இதில் வியப்பில்லை. நாமும் இப்புகழை எண்ணி மகிழலாம்; பெருமை கொள்ளலாம். ஏனெனில், இது நம் வழிவழி மரபுச் செல்வம், ஆனால் பாரதியாரே, “.............. இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசம்..................” என்று அதன் அணிமைக்கால அடிமை நிலையை நினைந்து, மனமுடைந்து, கண்ணீர் சிந்தியுள்ளார். ஆம்! பனி மலையின் உச்சி போன்ற ஈடும் எடுப்பும் அற்ற உயர்வுடையது நம் பண்டைப் புகழ். ஆனால், ஆழ்கடலின் ஆழ்கசம் போன்ற அவல நிலையுடையது நம் அணிமைக்கால நிலை. இத்தனை ஏற்றம் உடையவராயிருந்த நாம், இத்தனை வீழ்ச்சி அடைந்தது எவ்வாறு? பனி மலையின் உச்சியிலிருந்து நாம் எப்படி ஆழ்கடலின் ஆழத்திற்கு உருண்டு வந்து விட்டோம்? உருண்டு வந்த வகை யாது? இனி உருண்டு வந்த வழி மீளும் வகை என்ன? பாரதத்தில் பற்றுடைய எவரும் பாரதியார் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்தக் கேள்விகளைக் கேட்காமலிருக்க முடியாது. யாழின் இசையால் மக்கள் மகிழ்வது இயல்பு. ஆனால், யாழில் மகிழும் அளவுக்கு யாழ் நரம்பின் கோளாற்றில் அவர்கள் கருத்துச் செலுத்தாமலும் இருக்க முடியாது. ஏனெனில், யாழிசை எந்த அளவு மகிழ்ச்சி தருகிறதோ, அந்த அளவில் நரம்பின் பிழை கேட்பவருக்குத் துன்பம் தருவது உறுதி. வடிவம் ஒன்று; வண்ணம் வேறு பாரதத்தின் வரலாறு கடந்த வரலாற்றின் வாயிலிலேயே நாம் அதன் முழு வடிவத்தையும் காண்கிறோம். அவ்வடிவத்தின் முழு அளவையும் நாம் காண முடியாவிட்டாலும், அதன் தனிப்பண்புகளும் சிறப்புப் பண்புகளும் அதில் தெள்ளத் தெளியப் புலனாகின்றன. எனவே, ‘பண்டைப் பாரதம் வேறு; இன்றைப் பாரதம் வேறு’ என்று கூறி நம் அணிமை இழிநிலைக் கான பொறுப்பை நாம் தட்டிக் கழித்துவிட முடியாது. வடிவு இரண்டும் ஒன்றாகவே இருக்கின்றன. ஆயினும், பண்டை வடிவம், புகழ் ஒளி வீசப் பொலிவுறுகிறது; அணிமை வடிவம், அடிமை அரையிருளில் மங்கி மறுகுகிறது; அதன் நிழலில் வளர முடியாமல் நலிவுறுகிறது. ஒரே வடிவம் இவ்விரு வேறு நிலைகளை அடைவதற்குரிய சூழ்வண்ணக்கூறுகள் யாவை? முன்பு தழைத்த அதே பயிர், பிற்பட இடைக்காலத்தில் வாடுவானேன்? வரலாற்றுக்கு முற்பட்ட பாரதம், எகிப்தையும், சால்டியாவையும் தொட்டிலிலிட்டுத் தாலாட்டிற்று. அதன் பின் அது கிரேக்க உரோம வாழ்வுகளுடன் கூடிக்குலாவிற்று. உலக வரலாற்றில் இடையிருட்காலத்திலுங்கூட அது நாகரிக ஒளி வீசிற்று. எனவே, அது பண்டைப் புகழின் உயர்வு உடையது மட்டுமன்று; மூவா இளமையும் சாவா உயிர்ப்பண்பும் உடைய கன்னிப்புகழ் வாய்ந்தது. பிற நாகரிகங்கள் கடந்து வாழும் இக்கன்னிப்புகழுக்குரிய அதன் சிறப்புப் பண்புகளை நாம் உணர வேண்டும். அதே சமயம், ‘இத்தனைச் சிறப்புடைய அப்பண்பு களையும் மங்கி மறுக வைக்கும் சார்பு பண்புகள் யாவை?’ என்றும் நாம் ஆராய்ந்தறிதல் வேண்டும். முந்தியவற்றை அறிந்து வளர்க்குந்தோறும் நாம் உயர்வோம். அதுபோலப் பின் கூறப்பட்டவற்றை அறிந்து விலக்குந்தோறும் நாம் இன்னும் உயர்வு பெறுவோம் என்பதில் ஐயமில்லை. பாரதத்தை நலிய வைத்த இக்குறைகள் உள்ளார்ந்தவையா, எளிதில் அகற்ற முடியாதவையா? இவை சார்பு வழுக்களா? எளிதில் அகலக் கூடியவைகளா? அதனை உயர்வுபடுத்திய பண்புகள் உள்ளார்ந்தவையா? சார்புக் கூறுகளா? பண்புகள் உண்மையில் பேரளவில உள்ளார்ந்தவை என்றே கூற வேண்டும். ஏனெனில், அவை தொன்றுதொட்டு இந்தியாவின் தனிச் சிறப்பைப் பேணியுள்ளன. வழுக்களும் ஓரளவு உள்ளார்ந்தவையாயிருக்கக் கூடும். உள்ளார்ந்தவை யாயினும், நாம் அரும்பாடுபட்டு அவற்றைக் களைய வேண்டுமென்பதில் எவருக்கும் கருத்து வேற்றுமை இருக்க முடியாது. ஆனால் இவ்வழுக்கள் உள்ளார்ந்தவையாயினும், அல்லவாயினும், வரலாற்று வாயிலில் நாம் இவற்றை மிகுதி காண முடியவில்லை என்பது மட்டும் உண்மை. புதை பொருளாராய்ச்சியாளர் முடிபுகளும், பண்டித ஜவஹர்லால் நேரு போன்ற நாட்டுப் பற்றும் மனித இனப்பற்றும் நிறைந்த நல்லறிஞர் கூற்றுகளும் இதனை நமக்கு உணர்த்துகின்றன. ஒற்றுமைக் கேடு சிந்துவெளி நாகரிகம், சிந்துவெளிக்கு மட்டும் உரியதன்று. கிட்டத்தட்ட சிந்துவெளியிற் கண்ட புதைபொருள்களைப் போன்ற பிறவற்றைக் காசுமீரம் துல் கன்னியாகுமரி வரை, பலுச்சிஸ்தானம் முதல் அஸ்ஸாம் வரை காண்கிறோம். எங்கும் அதே நகர வாழ்வு, அதே கடல் வாணிகச் சின்னம். அதே வகைக் கலை மரபுகள், பழக்க வழக்கச் சின்னங்கள் ஆகியவற்றைப் புதைபொருள் ஆராய்ச்சியாளர் கண்டெடுத்துள்ளனர். இது மட்டுமன்றி, இன்று இந்தியா முழுவதும் வழங்கும் சமயவாழ்வின் அடிப்படை, மொழிகளின் எழுத்து வடிவங்களுக்குரிய அடிப்படை ஆகியவற்றைச் சிந்துவெளி நாகரிகச் சின்னங்கள் காட்டுகின்றன. ஆகவே, சிந்துவெளி நாகரிகம் பண்டைய இந்தியாவின் புகழுச்சியை மட்டும் காட்டவில்லை; இந்திய மாநிலமளாவிய அதன் பரப்பையும் காட்டுகிறது. பல கூறுகளில் இந்தியாவைக் கடந்து அக்கால நாகரிகம் உலக முழுவதும் அளாவியிருந்தது என்று கூறவும் இடமுண்டு. விடுதலை இந்தியா அல்லது பாரதத்தைக் கடந்து அது பாகிஸ்தானிலும் பரவியிருந்தது என்பதை மோகஞ்சதரோ, ஹரப்பா ஆகியவற்றின் இருப்பிடமே காட்டும். பிந்தியது, பாரதத்திலேயே உள்ளது. ஆனால் முந்தியது இன்றைய மேலைப் பாகிஸ்தானத்திலேயே இருக்கிறது. சிந்துவெளி நாகரிகத்தில் நாம் காணும் இந்த அடிப்படை ஒருமைப்பாட்டை இந்திய மாநிலத்தில் நாம் இன்று காண முடியவில்லை. இம்மாறுதலின் ஒரு கூற்றைப் பண்டித ஜவஹர்லால் நேருவே திறம்படச் சுட்டிக் காட்டுகிறார். இன்றைய சமய வாழ்வின் சின்னங்களைச் சிந்து வெளியில் காண்கிறோம்; ஆனால், அக்கால வாழ்வு சமயச் சார்பற்ற வாழ்வென்பதையும் அறிகிறோம். சமயம் அன்று வாழ்வின் ஒரு கூறாய் இருந்தது. இன்று வாழ்வு, சமயத்தின் ஒரு கூறாய்ச் சிறுத்து விட்டது. உலகளாவப் பரந்து செல்லத்தக்க பண்புகளையுடைய அதன் அகன்ற வாழ்வு, குறுகிய எல்லையுடைய ஒரு சமய வாழ்வில் கட்டுப்பட்டு விட்டது. மக்கள் சமயமாயிருந்த அது, இன்று சமய வாணிகராகிய குருமார் சமயமாகிவிட்டது. இன்று இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளின் எழுத்து முறைகளும்- வடக்கு, தெற்கு, மேற்கு என்ற வேற்றுமையின்றிச் சிந்துவெளி ஓவிய வடிவெழுத்துகளின் வழி வந்தவைகளே என அறிஞர் கருதுகின்றனர். ஆனால், இன்று மொழிகள் மிகப் பலவாகியுள்ளன. அது மட்டுமன்றி, மொழிக் குழுக்களும் பல. மேலை மொழிக்குழு, கீழை மொழிக்குழு, தென்மொழிக்குழு, பண்படாப் பழங்குடி மொழிக்குழு என அவை பல வகையாகப் பிரிவுற்றுள்ளன. இவை தொன்றுதொட்டு நிலவிய வேறுபாடுகள் என்று கூறுவதற்கு இடமில்லை. ஏனெனில், பண்டைப் பண்பாடும் பண்டை இலக்கிய மரபும் உடைய இந்திய வாழ்வில், இலக்கிய முடைய மொழிகளாகத் தொன்றுதொட்டு இன்றுவரை நமக்கு வந்தெட்டியுள்ள மொழிகள் இரண்டே. வடபால் வழங்கிய இலக்கிய மொழி, சமஸ்கிருதம் அல்லது வடமொழி; தென்பால் வழங்கிய மொழி, தமிழ் அல்லது தென்மொழி. மொழிகள் பிரிவுற்று வேறுபடுந்தோறும் அவற்றிற்குப் புதிய பெயர்களும் புதிய இலக்கிய வடிவங்களும் ஏற்பட்டன என்பது தெளிவு. வடவிந்தியாவின் பெரும்பாலான மொழிகள் பிரிட்டிஷ் ஆட்சியிலேயே இலக்கிய வடிவம் பெற்றன. மேற்குப் பாகிஸ்தான் மொழிகள் பல இன்னும் இலக்கிய வடிவம் பெறவில்லை. சாதி முறைமை சாதி முறைமையும் தொன்றுதொட்டு நிலவிய ஒன்று என்று கூறுவதற்கில்லை. ஏனெனில், நம் காலத்திலேயே சாதிகள் புதியனவாக ஏற்படுவதைக் காணலாம். சாதிகள் என்பன பிறப்பு மரபாக இறுகிவிடும் குலங்களும் வகுப்புகளுமேயாகும். குலங்கள் அல்லது திணை வகுப்புகள் தொன்றுதொட்டு எல்லா நாடுகளிலும் உள்ளவைகளே. ஆனால், வகுப்பு வேறுபாடு- அதாவது தொழில் வேறுபாடு- ஏற்பட்ட காலத்திலேயே அவை எங்கும் அழிவுற்றன. வகுப்புக்களும் எந்த நாட்டிலும் பிறப்பு மரபாகிச் சாதிகளாய்விடவில்லை. இந்தியாவில் குலங்களும் வகுப்புகளும் சாதி முறையாக வளர்ந்ததற்கு இந்தியாவின் எந்த அடிப்படைப் பண்பு வேறுபாடும் காரணம் என்று கூற முடியாது. அத்தகைய அடிப்படைப் பண்பு இருப்பதாகக் கொள்வதும் தவறு. ஏனெனில், வரலாற்றில் பின்னோக்கிச் செல்லுந்தோறும் சாதி வேறுபாடுகளையோ, சாதி உயர்வு தாழ்வு முறையாகிய வருணாச்சிரம நெறியையோ, மிகுதியாகக் காண முடியாது. தவிர, இந்திய மண்ணிலேயே தோன்றிய பௌத்தர், சமணர் முதலிய பல சமய அறிஞர்களும் இம்முறையைக் கண்டித்தும், எதிர்த்தும், ஒழிக்கப் பாடுபட்டும் உள்ளார்கள். எனவே, இது காலக்கேட்டால் வளர்ந்த ஒரு முறையேயன்றி, இந்தியாவின் பண்டைப் பண்பை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த வளர்ச்சியன்று என்பதில் ஐயமில்லை. அதே சமயம் சாதி முறைமை எளிதில் ஒழிக்கப்படக் கூடியதாயிருந்தும், ஒழிக்கப்படாமல் வளர்ந்தே வருகிறது என்று கூற வேண்டும். இதற்குக் காரணம் என்ன என்பதை நாம் நீடித்து ஆராய வேண்டுவதில்லை. மேலே காட்டிய பண்டித ஜவஹர்லால் நேருவின் கூற்றிலேயே அதன் விடை அடங்கியுள்ளது. சமயம் சமய வணிகர் கையில் படுந்தோறும், அச்சமய குருமார் வகுப்பே சாதி முறையை அழியவிடாமல், சமயத்துடன் பிணைத்து வளர்த்துள்ளது. தொழில் வகுப்புகளில் தம் குருமார் வகுப்புக்கு உச்ச உயர்வு தேட அஃது உயர்வு தாழ்வுப் படி முறையையும் வகுத்துக் கொண்டது. சமுதாய வாழ்வு ஒரு நாட்டின் வாழ்வைச் சமய வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு, பண்பாட்டு வாழ்வு என நான்கு வாழ்வுக் கூறுகளாகவும், வாழ்வுப் படிகளாகவும் வகுக்கலாம். இவற்றுள் சமய வாழ்வே, மனித நாகரிக வாழ்வின் முதற்படியாகும். சமய வாழ்வுப் படி கடந்த பின் சமுதாய வாழ்வில் சமயம் ஒரு கூறாய் அடங்கிவிடும். சிந்துவெளியில் நாம் ஏற்கெனவே இப்படியைக் காண்கிறோம். மேலை நாடுகள் யாவும் இதே போல மக்கள் சமய வாழ்வுப் படி கடந்து, சமுதாய வாழ்வுப் படி, அரசியல் வாழ்வுப் படி, பண்பாட்டு வாழ்வுப் படி ஆகியவற்றை எட்டிப்பிடித்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் சிறப்பாகவும், கீழ் நாடுகளில் பொதுவாகவும், வரலாற்றுக் காலத்தில் எல்லா வாழ்வுப் படிகளிலும் சமய வாழ்வே மேலோங்கி விஞ்சியிருப்பது காண்கிறோம். இது சிந்துவெளி நாகரிகத்துக்குப் பின் இந்தியாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் ஏற்பட்ட ஒரு மாறுபாடு என்று கூறலாம். சமய வாழ்வுடன் பிணைக்கப்பட்டே சாதி முறை ஒரு நீண்ட காலப் பண்பாகியுள்ளது. அத்துடன் அது இயற்கையாக நலிவதற்கு மாறாக, மேன்மேலும் வளர்ச்சியடைந்து வருகிறது. சாதி வேறுபாடுகளும் அவை கடந்த சமய வேறுபாடுகளும் இன்றும், சமுதாய வாழ்வையும், அரசியல் வாழ்வையும் அடிமைப்படுத்தியே வருகின்றன. இந்தியா விடுதலை பெற்ற அன்றே இவ்வுண்மை நமக்கு வெளிப்படையாய்த் தெரிந்துள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல், சமுதாயம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்படவில்லை; இவை கடந்த சமய அடிப்படையிலேயே பிரிந்தன. மேலும், இந்தியாவிலுள்ள எல்லாப் பிரிவினைகளும் இன்று சமய அடிப்படையான பிரிவினைகளாகவே காட்சியளிக்கின்றன. குறுகிய சமய வாழ்வாலும், சாதி முறை வேறுபாட்டாலும், அதனால் ஏற்படும் வகுப்பு உயர்வு தாழ்வு முறையாலும் சமுதாயம் இன்று ஒற்றுமை கெட்டுச் சீரழிகிறது. அரசியல் வாழ்வு சமய ஆதிக்கத்தால் சமுதாய வாழ்வு சீரழிவு பெற்றது போலவே, அரசியல் வாழ்வும் சமய வாழ்வு காரணமாகவும், பிற காரணங்களாலும் சீர் குலைந்துள்ளது. சாதி, சமயம், மொழி, பண்பாட்டு வேற்றுமை ஆகியவை இந்தியாவின் ஒரு சிறு பகுதியையும் ஒற்றுமைப்படுத்த முடியாதபோது, பரந்த மாநிலத்தை எவ்வாறு ஒற்றுமைப்படுத்த முடியும்? இந்தியாவில் அரசுகளும் பேரரசுகளும் எப்போதும் சீரழிவுற்று, அரசியல் வாழ்வு நீடித்த அமைதி பெற முடியாதிருந்து வந்திருக்கிறது. அங்ஙனம் முடிந்தபோதும், மக்கள் அவற்றின் கீழ் ஒன்றுபட முடியவில்லை. இந்தியாவில் நீடித்த அரச மரபுகள் இல்லாததன் காரணமும், மேற்கிலும் நடுவிலும் பேரரசுகள் எழ முடியாத காரணமும் இதுவே. பேரளவில் நீடித்த பேரரசு மரபுகள் கிழக்கிலும் தெற்கிலும் தொடங்கின என்பதும் கவனிக்கத்தக்கது. தவிர, குடியாட்சிப் பண்புகள் சிந்துவெளியில் பேரளவில் இருந்தன என்பதைக் காண்கிறோம். தென்னிந்தியாவிலும் வடவிந்தியாவிலும் பல குடியரசுகள் நிலவியிருந்தன. ஆனால், சமய குருமார் ஆதிக்கம் எப்போதும் குடியாட்சிப் பண்புக்கும் மக்கள் சரிசம உரிமைக்கும் மாறாகவே செயலாற்ற முடியும். சிற்றூர்ப் பஞ்சாயத்து நீங்கலாக, அணிமைக்காலங்களில் பண்டைக் குடியாட்சி மரபுகள் பெரும்பாலும் அழிந்து போனதற்கு இதுவே காரணம் என்னலாம். பேரரசுகளின் வாழ்வைத் தடுத்துக் குடியாட்சிப் பண்புகளையும் நலிவித்த இவ்விடைக்கால நாகரிகம், ஒரு நாடு, ஓருலகம் என்ற திசை நோக்கிச் செல்லவில்லை என்பது தெளிவு. தனி மனிதர் கூட்டுழைப்பு, அரசர் பேரரசர் கூட்டுறவு ஆகியவற்றைக்கூட அது தடுத்து நிறுத்திற்று. அத்துடன் மக்கள் ஒழுக்க முறை அரசியலொழுக்க முறையுடனோ, அரசியல் ஒழுக்க முறை மக்கள் ஒழுக்க முறையுடனோ தொடர்பற்றுப் போயின. நந்தர், மௌரியர், குப்தர் கால அழிவுப் போட்டிகளும், அரசியற் புரளிகளும் பாண்டியர், சோழர், சேரர் பழி வாங்கும் அழிவுப் போட்டிகளும், இப்போக்கைக் காட்டுகின்றன. ஜயசந்திரரின் இனப்பழியும், இபுராஹிம் லோடியின் இனப்பழியும் அரசியல் வாழ்வில் எல்லா நாட்டிலும் காணத்தக்கவையேயானாலும், அவை வேறு எந்நாட்டிலும் அரசியல் வாழ்வின் தொடர்ந்த அடிப்படை மரபாய்விடவில்லை. குடியாட்சித் தொடர்பு இம்மியுமில்லாத மன்னர் வாழ்விலேதான் இந்நிலை ஏற்பட முடியும். பொருளியல்: போர்த்துறை இறுதியாக ஆராய வேண்டிய பண்புகள், பொருளியல் வாழ்வும், போர் வாழ்வும் ஆகும். சிந்துவெளி நாகரிகத்தின் தனியுயர் சிறப்பு, அதன் வாணிக வளமும் நகர வாழ்வும் உயர்தர வாழ்க்கைத் தரமுமே. வரலாற்றுக் காலத்தில் வங்கம், தென்னாடு, மராட்டிரம் ஆகியவற்றின் வாழ்வில் இதே கடல் வாணிக வளத்தைக் காண்கிறோம். பண்டை வடமொழி நூல்களும் தமிழ் நூல்களும் அக்கால நகர் வாழ்வுச் சிறப்புக்குப் பல சான்றுகள் தருகின்றன. வடநாட்டின் பண்டை வாழ்வைப் பெருங்கதையும், தென்னாட்டின் பண்டை வாழ்வைப் பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி முதலிய நூல்களும் தெள்ளத்தெளிய உணர்த்துகின்றன. போர்த்துறையின் சிறப்பைச் சிந்துவெளி நகரங்களின் கோட்டை கொத்தளங்கள் விளக்குகின்றன; இருக்கு வேதமும் இவற்றின் சிறப்பைக் கூறுகின்றது. வரலாற்றுக் காலத்தில் மக்கள் போர் வெறியும் போர் வீரமும் உடையவர்களாகவேயிருந்தார்கள் என்பதைச் சங்க இலக்கியத்தால் அறியலாம். ஆனால், இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் போர்கள் பெருகின. அதே சமயம் போர் வீரர் வாழ்வு வளம் பெறவில்லை. சமுதாயத்தில் அவர்கள் மதிப்பு, பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னரே குறைந்து விட்டது. பிரிட்டிஷ் ஆட்சியில் அவர்கள் குற்றப் பரம்பரை யினராகக் கருதப்பட்டார்கள். சமுதாயத்தில் அவர்களுக்கு அரசியல் மதிப்பு இல்லாததாலேயே இந்நிலை ஏற்பட்டது. அரசியலில் சமய குருமார் ஆதிக்கம் இங்ஙனம் இந்தியாவின் ஒற்றுமை தவறிக் கெட்டதற்கான பண்புக் கோளாறுகள் பலவும் இந்தியாவின் அடிப்படைப் பண்புகளுமல்ல; தொன்றுதொட்டு நிலவிய பண்புகளுமல்ல என்று காண்கிறோம். அதே சமயம் அவை இன்று கிட்டத்தட்ட அடிப்படைப் பண்புகள், அதாவது நீடித்த பண்புகளாய் விட்டன. என்பதில் ஐயமில்லை. சமய வகுப்பான பிறப்பு வகுப்பு மோகஞ்சதரோவிலேயே தொடங்கியிருக்கலாமென்று எண்ண இடமுண்டு. ஆயினும், அவ்வகுப்பு அன்று சமயத்துறை ஒன்றிலேயே ஆதிக்கம் செலுத்தியிருக்க வேண்டும். அயலினத்தார் படையெடுத்த பின் பழைய வீர வகுப்பினர், ஆட்சி வகுப்பினர் ஆகியவர்களிடையே பிளவுகள் ஏற்பட்டும், அவர்கள் செல்வாக்குக் குறைந்தும் போன போது, சமய வகுப்பு அயலாட்சிகளுடனும், அவர்கள் சமயப்பண்புகளுடனும், மொழிகளுடனும் இணக்கமுற்றுத் தழுவி, அவ்வயல் அரசியலில் ஆதிக்கம் பெற்றது. அரசியல் ஆதிக்கத்தை ஒட்டிச் சமுதாய ஆதிக்கமும் நாளடைவில் தொடர்வது இயல்வு. நிலைமை இதுவே என்பதை நாம் இன்றும் காணலாம். சமய வகுப்பினர் வகுத்த வருணாச்சிரம முறை இன்னும் ஏட்டளவிலே இருந்தாலும் சட்டத்திலும் இடம்பெற்றுவிட்டது. ஆனால், அது இன்னும் மக்கள் வாழ்வில் முழுதும் செயலாற்ற முடியவில்லை. இது பிற்கால சமய வகுப்பாளர் அரசியல் தொடர்பை நன்கு புலப்படுத்துகிறது. இந்தியாவின் அரசுகள், பேரரசுகள், வீழ்ச்சியில் நாம் அடிக்கடி சமய குருமாரின் கைத்திறங்களைக் காண்கிறோம். அத்துடன் அரசுரிமை மாறுதலுடன் அடிக்கடி சமயம் மாறுவதையும், சமய வகுப்பின் உரிமைப்படி மாறுவதையும் காண்கிறோம். சிசுநாதர் காலத்தில் மன்னர் புத்த சமயத்தைத் தழுவினர். அதன் பின் நந்தரும் அவ்வழி நின்றனர். நந்தர் வீழ்ச்சிக்குச் சாணக்கியன் என்ற சமயத்துறை அறிஞனே காரணம் என்று மரபுரை கூறுகிறது. மௌரியரும் அசோகர் காலத்தில் புத்த சமயத்தைத் தழுவினர். அதற்குப் பின்னும் சமய குரவர் பேரரசு மரபை மாற்றி, சுங்கரையும் கண்ணுவரையும் தவிசேற்றினர். இவர்கள் காலத்தில் சமய வகுப்புக்கு உயர்வு தாராத புத்த சமயம் நலியத் தொடங்கிற்று; சமய வகுப்பினர்களின் சமூகப்படி உயர்ந்தது. புத்த சமயத்தவரான கனிஷ்கர் மரபின் ஆட்சி நலிவுற்றபின், அவர் மரபினர் படிப்படியாகச் சைவ வைண வங்களைத் தழுவினர். இது சரியும் கோட்டைக்குப் புதிய வலுத்தேடும் முயற்சியாகவே அமைந்தது. புத்த சமயத்தையும் பிற சமயங்களையும் சரிநிகராக நடத்தின ஹர்ஷர் மரபு அவருடன் ஒழிந்தது. தென்னாட்டில் முற்காலப் பாண்டிய பல்லவப் பேரரசர் வீழ்ச்சியுடன் சமண சமயமும் செல்வாக்கிழந்தது. பிற்காலப் பல்லவர், சோழர் ஆட்சியில் சமண புத்த சமயங்கள் அழிவுற்றன; சைவ வைணவங்கள் வளர்ந்தன. சமண புத்த சமயங்களை எதிர்த்தும், சமஸ்கிருதக் கலைகளை வளர்த்தும் வந்ததனாலேயே அவர்கள் பேரரசு வடஇந்தியாவரை எளிதில் வளர்ந்தது. அயலாட்சி கண்ட நாட்டு நிலை: சமய வாழ்வு அராபியர் படையெடுப்பின் போது இந்தியாவில் புத்த சமயத்தை எதிர்த்து அழித்துச் சமண சமயமும், சமண சமயத்தை எதிர்த்து அழித்துச் சைவமும், சைவத்தை எதிர்த்து மேலோங்கி வைணவமும் வாழ்வு பெற்றிருந்தன. சமயஞ் சார்ந்த இவ்வரசுப் போட்டிகள் காரணமாகவே, இஸ்லாம் சமயமும் இஸ்லாமிய ஆட்சியும் இந்தியாவில் எளிதில் பரவ முடிந்தது. உள் வேற்றுமை வளர்ச்சி எங்கும் தன்னினப் பகைமையையும், அயலினப் பற்றையும் வளர்த்தது. வடமேற்கிலும் வட கிழக்கிலும் 14-ஆம் நூற்றாண்டு வரை வேதச்சார்பான சமயத்தை எதிர்த்த புத்த சமண சமயத்தவரே எளிதிற் புதிய இஸ்லாமிய சமயத்தை ஏற்க முன் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ‘தாழ்த்தப்பட்ட வகுப்பினர்’ என்ற ஒரு பிரிவினர் ஏற்பட்டதற்கு இன வேறுபாடு மட்டுமே காரணம் என்று கூற முடியாது. ஏனெனில், அவர்களிடம் தனி இனப்பண்பு எதையும் காண்பதற்கில்லை. உயர்குடிச் செல்வர் நீங்கலாக புத்த சமண சமயம் சார்ந்து எளிதில் சமயம் மாறாத ஏழை மக்கள் அக்காரணத்தால் தம் தோழரைவிடக் குறைந்த உரிமைப்படிக்கு ஆளாயினர் என்று கூறலாம். புத்த சமண சமயங்கள் ஆதரவிழந்த போது இவ்விழிதகவே அவர்களைப் புதிய வெளி நாட்டுச் சமயங்களுக்கு எளிதில் ஆட்படச் செய்திருக்க வேண்டும். தெற்கே 16-ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே தாழ்த்தப்பட்டவர், உரிமை மறுக்கப்பட்டவர் ஆகிய வரிடையேதான் கிறிஸ்தவ சமயம் மிகுதியாகப் பரவியுள்ளது. கடலாதிக்க மாற்றம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய வாணிகக் கழகம் கி.பி. 1600லேயே சென்னைக் கடற்கரையில் வந்து இடம் பெற்றது. அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே போர்ச்சுகீசியரும் டச்சுக்காரரும் வந்து வாணிகம் செய்திருந்தனர். பிரிட்டிஷ் வணிகருடன் பிரெஞ்சுக் காரரும் வந்து போட்டியிட்டனர். இந்தியாவில் இந்த எல்லா வெளி நாட்டாருக்கும் எளிதாக வாணிக வாய்ப்பும், அரசியல் சூதாட்ட வாய்ப்பும் ஒருங்கே கிடைத்தன. அச்சமயம் இந்தியா அயலாருக்குத் தன் வாயிலை எவ்வளவு எளிதாகத் திறந்து வைத்திருந்தது என்பதை இது காட்டுகிறது. பிரிட்டிஷ் வணிகரும் பிரெஞ்சு வணிகரும் போட்டி யிட்டனர். சற்று முன்பு டச்சுக்காரரும் போர்ச்சுகீசியரும் இதே போலப் போட்டியிட்டனர். இந்தியாவில் பிரிட்டிஷாரே வெற்றி பெற்று, நாளடைவில் இந்தியா முழுவதையும் ஆண்டனர். அதே சமயம், மற்றவர்களும் சும்மா இருக்கவில்லை. இன்றும் இந்தியாவில் அவர்களுக்குரிய பல சிறு இடங்கள் இருக்கின்றன. தவிர, தென்கிழக்காசியா எங்கும் பிரெஞ்சுக்காரரும் டச்சுக்காரரும் பரந்துள்ளனர். இதனால், இந்தியாவின் அரசியற் குழப்ப நிலை, இந்தியாவுடன் நிற்கவில்லை; தென்கிழக்காசியா முழுவதும் பரந்திருந்தது என்பதை நாம் காணலாம். தென்கிழக்காசியாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்கா விலும் மேலை நாட்டு வல்லரசுகள் எவ்வளவு எளிதாக அரசாண்டும், தொழில் வாணிகக் களங்கள் கண்டும், குடியேறியும் வளர்ச்சி பெற்றனவோ, அவ்வளவு எளிதாக நடுகிழக்கு (எகிப்து, மேலை ஆசியா), கிழக்காசியா (சீனா, ஜப்பான்) ஆகிய இடங்களில் வளர்ச்சி பெறவில்லை என்பது கூர்ந்து கவனிக்கத் தக்கது. இந்தியாவுக்கும், தென்கிழக்காசியாவுக்கும் இப்பொதுச் சூழல் எவ்வாறு ஏற்பட்டது? பண்டை உலகக் கடல் வாணிகத்தில் பங்கு கொண்ட நாடுகள் மேற்கே பினிஷியாவும், தெற்கே அரேபியாவும், தமிழகமும், கிழக்கே சீனமும் ஆகிய நாடுகளே. தெற்கே அராபியருக்கும் தமிழருக்கும் கடும்போட்டியிருந்தது. இருவருக்கும் இடையே நின்ற கூர்ச்சரநாட்டுக் கடற்கொள்ளைக் காரர் இடை மறித்ததால், அராபியர் மேற்கிலும் தமிழர் கிழக்கிலும் கருத்தைச் செலுத்தினர். பாண்டியரும் பல்லவரும் சோழரும் தொன்றுதொட்டுக் கிழக்கிலும், சேரர் மேற்கிலும் பரவியதற்குக் காரணம் இதுவே. இலங்கை, மலேயா, சுமத்திரா, ஜாவா, கிழக்கிந்தியத் தீவுகள், இந்து சீனா ஆகியவற்றில் தமிழகப் பேரரசுகளும், தென்னாட்டு வாணிகமும், குடியேற்றமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வந்தன. அவற்றின் சின்னங்கள் இன்னும் நின்று நிலவுகின்றன. தமிழகப் பேரரசுகள் கடலரசுகளாயிருந்ததால், இந்தியாவின் கடற்கோட்டையையும் தென் கிழக்காசியாவின் கடற் கோட்டையையும் காத்து வந்தன. இப்பேரரசுகளுக்குப் பின் வந்த வடவிந்தியப் பேரரசுகள் இக்கடல் மரபை முற்றிலும் புறக்கணித்தன. இதே சமயம், அராபியப் பேரரசும் 1458ல் வீழ்ச்சியடைந்தது. இந்நிலையிலேதான் கீழ்த்திசை வாணிகம் முற்றிலும் மேனாட்டவர் வேட்டைக்காடாய் மாறியது. அயலார் கண்ட தென்னிந்தியா போர்ச்சுகீசியர் வரும் சமயம் (1498) தென்னாட்டில் பாண்டிய அரசு, விஜயநகரப் பேரரசு, பாமினிப் பேரரசு ஆகியவை நிலவின. பாண்டிய அரசு வீழ்ந்தபின், விஜயநகரம் ஒன்றே தெற்கில் நிலவிற்று. விஜயநகர அரசு வல்லமை வாய்ந்த தாயினும், வடவிந்திய அரசுகளைப் போலவே கடற்படையற்றது. அதன் வீழ்ச்சிக்கும் மேனாட்டவர் வளர்ச்சிக்கும் அதுவே காரணம். விஜயநகர அரசை வெறுத்துச் சேரனாண்ட மலையாளக்கரை முழுவதையும் தன் வசப்படுத்த நினைத்த சாமூதிரி அரசன், அராபியரையும் போர்ச்சுகீசியரையும் இரு கையேந்தி வரவேற்றான். 17-ஆம் நூற்றாண்டில் திப்புவும், நிஜாமும், சிவாஜியுமே வளரும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்தனர். ஆனால், சிவாஜியிடம் மட்டுமே கடற்படையிருந்தது. பிரிட்டிஷாரைத் திப்பு, நிலத்திலும், சிவாஜி, கடலிலும் தோற்கடிக்க முடிந்தது. ஆனால், இருவரும் ஒன்றுபட முடியவில்லை. நிஜாமோ, வலுவற்றவராயிருந்தார். அடுத்த நூற்றாண்டிற்குள் திப்பு, பிரிட்டிஷாரிடம் தம் அமைச்சனான பூர்ணய்யாவால் காட்டிக் கொடுக்கப்பட்டு அழிந்தார். சிவாஜியின் மரபினர் ஆட்சியையும் அமைச்சராகிய பேஷ்வாக்கள் கைப்பற்றினார்கள். பேஷ்வாக்கள் அரசியலில் வல்லவர்கள். ஆயினும் அவ்வரசியல் வல்லமை கடற்படை, நிலப்படை முன் நிற்க முடியாதிருந்தது. தவிர, மராட்டியப் பேரரசின் ஐந்து உறுப்பினரும் தனித்தனி நின்று பூசலிட்டு, பிரிட்டிஷ் ஆட்சிக்கு இரையாயினர். பிரிட்டிஷ் ஆட்சியின் அடிப்படைத் தூண் என்று கருதப்பட்டவன் கிளைவ். அவனும் பிரெஞ்சு அரசியல் தலைவனான டியூப்ளேயும் பயிற்சிபெற்ற இந்திய வீரரை வைத்துக்கொண்டே இந்தியாவைக் கைப்பற்ற முடிந்தது. உணவுத் தட்டு ஏற்பட்டபோது இந்தியவீரர், கஞ்சி நீருண்டு, வெள்ளையருக்குச் சோற்றையளித்தனர் என்ற கதை, கிளைவ் வரலாற்றில் கூறப்படுகிறது. அந்நாளைய இந்தியாவின் ஒற்றுமைக் குறைவு, அடிமைத்தனம், அயலினப்பற்று ஆகியவற்றை இக்கதை நன்கு எடுத்துக்காட்டுகிறது. இந்தியா விடுதலை இழந்த வகை இது. அடிமைப் பண்பாகிய மாலை அரைஒளி இந்தியாமீது படர்ந்து, அயலாட்சியாகிய அரையிருளைக் கொண்டு வந்தது. ஆனால், அவ்வயலாட்சி, முழு இருளாய் அமையவில்லை. முழு நிலாக்கால இரவாகவே அது அமைந்தது. ஏனெனில், அடிமைப் பண்புகளை, உறங்கிக்கொண்டே ஏற்ற இந்தியா, உண்மை அடிமைத்தளை கையிலேறிய உடனே விழிப்புற்றது; அயலாட்சிக் காலமே அதன் அரைவிழிப்புக் காலமாகவும் விடுதலைக் கனவுக் காலமாகவும் அமைந்தது. அயலாட்சியின் இருதிறப் பண்பு ஒற்றுமையின்மை, ஒற்றுமைக்குக் கருவிகளான பொது அரசியல் தொடர்பு மொழித் தொடர்பு பண்பாட்டுத் தொடர்பு ஆகியவை இல்லாமை, குறிக்கோளில்லாமை, சமுதாயச் சீரழிவு, சமய வகுப்பின் ஆதிக்கம் ஆகிய இவை, அயலாட்சிக்கு முன்பே இருந்த நம் அடிப்படை அடிமைப் பண்புகள். அயலாட்சியின் போது இவை ஓரளவு வளர்ந்திருக்கலாம். ஆனால், இவை குறையத் தொடங்கிவிட்டன. எனினும், ஒரு புது அடிமைப் பண்பு அயலாட்சியில் ஏற்பட்டுள்ளது. அவ்வயலாட்சிக் காலத்திலேயே உலகில் இயந்திரப்புரட்சி ஏற்பட்டது. இந்தியாவை ஆண்ட பிரிட்டன், இந்தியாவின் செல்வம், தொழில் திறன், வாணிகக்களம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, உலக வாணிகப் பேரரசு ஆயிற்று. பிரிட்டனால் ஆளப்பட்ட இந்தியா,தன் தொழில் மரபும் வாணிக மரபும் இழந்து, அயலார் தொழிற்களம், அயலார் வாணிகக் களம் ஆயிற்று. அத்துடன் கடல் வாணிக உரிமை, கடற்படை நிலப்படை உரிமை, ஆயுத உரிமை ஆகியவற்றையும் இந்தியா இழந்தது. மக்களிடையே வீரம் குறைந்தது. வீரமரபினரின் வாழ்க்கைப்படி தாழ்ந்தது. அடிமை மனப்பான்மையுடையவர், அயலார் பண்பாட்டை ஆதரிப்பவர், அயல் மொழி பயின்றவர்படி உயர்ந்தது. இப்புதிய அடிமைப் பண்புகள் அயலாட்சி தந்த புது விளைவுகள். அதே சமயம், அயலாட்சி, நாகரிக உலகுடன் இந்தியாவை மீண்டும் இணைத்தது. அழிந்துவிட்ட பண்டைய சால்டிய, எகிப்திய, கிரேக்க, உரோம மரபுகளின் கால்வழி மரபான மேனாட்டு நாகரிகத் தொடர்பு, அதன் பழம்பண்புகளை அதற்கு நினைவூட்டிற்று. அதன் துயில் ஒழிந்தது. அயலாட்சியிலேயே, அயலாட்சியின் தூண்டுதலாலேயே ஏற்பட்ட இந்தியாவின் விடுதலைப் பேரியக்கமாகிய பேராற்றின் தோற்ற வளர்ச்சி விளைவுகளை இனி ஆராய்வோம். 4. முன்னணி முரசம் மாநிலத்தின் சேமப் பண்ணை காவிரியாறு சோழ நாட்டை வளப்படுத்தும் செல்வம் ஆனால், காவிரியாற்றுக்கு வளந்தருவது குடமலை. காவிரியில் வெள்ளம் பெருக, சோழ நாட்டில் மழை பெய்ய வேண்டுமென்ப தில்லை; குடமலையில் மழை தூவினால் போதும். அம்மழை வளம் காவிரியின் நீர் வளமாய்ச் சோழ நாட்டின் நில வளமாகிறது. காவிரியாற்றின் வளத்தைவிடப் புதுமையானது கங்கையாற்றின் வளம். அது பனி மலையில் பிறக்கிறது. பனி மலையில் மழைக்காலத்தில் மழை பெய்கிறது. இது வடவிந்தியத் தாழ் நிலங்களுக்கு நீர்வளம் தருகிறது. ஆனால், கங்கையாற்றின் வளம் அது மட்டுமன்று. பனிக்காலத்தில் மலையில் பனி பெய்கிறது. பனியும் நீரும் குளிரால் உறைந்து பனிக்கட்டி யாகின்றன. வெயிற்காலத்தில் இப்பனிக்கட்டிகள் உருகுகின்றன. பனிவெள்ளம் மழை வெள்ளத்தைவிடத் தாழ் நிலங்களுக்கு மிகுந்த நீர் வளம் தருகிறது. இந்தியாவின் தேசிய வாழ்வுக்குத் தமிழகம் இத்தகைய குடமலை வளமாகவும் பனி மலை வளமாகவும் விளங்குகிறது. மொகஞ்சதரோக் கால நாகரிகப் பண்புகளும் உபநிடதக் கால நாகரிகப் பண்புகளும் இந்திய மாநிலம் முழுவதும் இன்றும் அடிப்படைப் பண்புகளாகவே உள்ளன. மேலீடான வேற்றுமைகளைக் கடந்து உள்ளீடான உயிர்நிலை ஒற்றுமைப் பண்புகளாகவும் அவை நிலவுகின்றன. ஆனால், அயலார் படையெடுப்புக்களாலும் அயல் பண்பாட்சிகளாலும் அவை மாநிலத்தின் பல பகுதிகளில் வலுவிழந்துள்ளன. அவற்றின் இயல்பான வளர்ச்சி தடைபட்டுள்ளது. எனினும், தமிழகம் அப்படையெடுப்புகளுக்கும் அயல்பண்பாட்சிகளின் தாக்குதல் களுக்கும் பெரிதும் ஒதுங்கியிருந்தது. எனவே, அஃது இந்தியாவின் அடிப்படைப் பண்புகளுக்கு ஒரு சேமக் கலமாகவும் சேமப் பண்ணையாகவும் இயங்குகின்றது. இச்சேம வளத்தை அது அவ்வப்போது மாநிலத்துக்குப் புது வளமாக வழங்கி யுள்ளது. பத்தி இயக்கங்களும் தாய்மொழி இயக்கங்களும், இத்தகைய வளங்களிற் சில. இந்தியாவின் விடுதலைப் போரியக்கத்திலும் தமிழகம் பெரும்பங்கு கொண்டுள்ளது. விடுதலைக் கொடியை முதன் முதலில் உயர்த்தி விடுதலை முரசமார்த்த பெருமையும் அதனுடையதே. விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு படியிலும் அது இப்பெருமையைப் பேணிக் காத்திருக்கிறது. தன் தனிக்குரலை அவ்வப்போது எழுப்பி, அது மாநில இயக்கத்துக்குத் தூண்டுதலும் ஊக்கமும் அளித்துள்ளது. ஆதிக்கவாதிகளின் இருட்டடிப்பு மாநில விடுதலை வரலாற்றைச் சிலர் காங்கிரஸ் வரலாற்றுடன் தொடங்குவதுண்டு. இஃது அயலாட்சியாளர் சார்பாக எழுதப்பட்ட வரலாற்றின் ஒரு விளைவு. காங்கிரஸ் பேரவை தோற்றுவிக்கப்பட்டது 1885லேதான். அது அப்போது ஒரு மிதவாத இயக்கமாகவே இருந்தது. ஆட்சியாளரும் பல வெள்ளையரும் அதை ஆதரித்திருந்தனர். இதற்குக் காரணம் உண்டு: நாட்டில் அன்று மக்களிடையே மனக்குமுறலும் கொந்தளிப்பும் மிகுதியாய் இருந்தன. புரட்சிக்கனல்கள் ஆங்காங்கே வீசிக் கொண்டிருந்தன. மக்களின் இப்புரட்சியார் வத்தைப் படித்த வகுப்பினர், பெருமக்களின் மிதவாத அரசியல் இயக்கமாக மாற்றும் எண்ணத்துடனேயே, ஆட்சியாளர் மிதவாதிகளைத் தூண்டிக் காங்கிரஸ் பேரவை அமைக்கச் செய்தனர். பேரவையின் பிறப்புக்கு உடனடிக் காரணமாயிருந்த இந்தப்புரட்சி மனப்பான்மைக்கு மூல காரணம் 1857ல் நடைபெற்ற வடவிந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டமே. அது படைப்பலத்தாலும் ஆயுதப்பலத்தாலும் பெருமுயற்சியின் பயனாக ஒடுக்கப்பட்டது. ஆயினும், மக்கள் ஆர்வம் ஆயுதப் பலத்தால் ஒடுக்கப்படத் தக்கதன்று. அது புரட்சிக் கனலாய்க் கனன்றெரிந்தது. ஆட்சியாளர் வடவிந்திய முதற்போராட்டத்தைப் படைவீரர் கிளர்ச்சியே என்று கூறி இருட்டடிக்கப் பார்த்தனர். தேசீயவாதிகள் மாநில வரலாற்றின் படிப்பினைகளை எடுத்துரைத்து விளக்கிய பின்பே அதன் தனிச் சிறப்பு வெளிப்பட்டது. இந்தியாவின் இறுதி விடுதலைப் போரின் தளபதியான தலைவர் பெருந்தகை சுபாஷ் சந்திர போஸ் அப்போராட்டத்தை இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் என்று கூறிச் சிறப்பித்தார். ஆனால், இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம், 1857ல் நடைபெற்ற வடவிந்தியாவின் முதல் போராட்டமன்று; 1798ல் நடைபெற்ற பாஞ்சாலக்குறிச்சிப் போராட்டமே. அஃது உண்மையில் வடவிந்தியப் பெரும்புயலுக்கே மூல காரணம் என்று கூறத்தக்கது. 1857க்கு முன்னுள்ள சூழ்நிலை வடவிந்தியப் போராட்டத்தின் வரலாற்றை ‘எரிமலை’ என்ற பெயருடன் வீரசவர்க்கார் எழுதியுள்ளார். அதில் அவர் அதன் காரணங்களான சூழ்நிலைகளையும் மூல காரணங் களையும் விளக்கியுள்ளார். பிரிட்டிஷ் ஆட்சியாளர் அப்போது நாட்டுப் படை வீரர்மீதும் நாட்டு மன்னர்மீதும் அவநம்பிக்கை கொண்டு அவர்களைச் சூழ்ச்சியால் பிரித்து வைத்தும், அடக்கு முறைகளால் ஒடுக்கியும் வந்தனர். இந்நிலைக்கு அவ்விருசாரா ரிடையேயும் நிலவிய குமுறல்களும் எதிர்ப்புக்களுமே காரணமாகும். 1857 புரட்சியை ஆட்சியாளர் படை வீரர் கிளர்ச்சி என்றனர். ஆனால், அது படை வீரர் கிளர்ச்சியானால், முதற் படைவீரர் கிளர்ச்சியன்று. அதற்கு முன்பே பல படைவீரர் கிளர்ச்சிகள் நடைபெற்றிருந்தன. அதுபோல, நாட்டு மன்னரிடையேயும் பல நாட்டு மன்னர் அடக்குமுறைக்கு அஞ்சாமல் எதிர்த்துத் தாக்குவதில் ஈடுபட்டிருந்தனர். படைவீரர் கிளர்ச்சிகளில் முந்தியதும் முதன்மை வாய்ந்ததும் 1806இல் வேலூரில் நடைபெற்ற படைவீரர் கிளர்ச்சியே. அது கிட்டத்தட்ட ஒரு பெரும்புரட்சியளவில் பரந்திருந்தது. அதை ஒடுக்க ஆட்சியாளர் அரும்பாடுபட்டனர். வீரசவர்க்கார் அக்கிளர்ச்சியையே ‘1857- ஆம் ஆண்டுப் புரட்சிக்கான ஒரு மூல ஒத்திகை’ என்று குறிப்பிடுகிறார். ஆட்சியாளருக்கும் அது 1857-ஆம் ஆண்டுப் புரட்சிக்கான ஒரு முன்னெச்சரிக்கையாகவே அமைந்தது. அது முதல் அவர்கள் படை வீரர்கள் மீது அவநம்பிக்கை கொள்ளவும் அவர்கள் கிளர்ச்சி வகையில் முன்னேற்பாடுடையவர்களாயிருக்கவும் தலைப்பட்டார்கள். படை வீரர் கிளர்ச்சிகள், வெறும்படை வீரர் கிளர்ச்சிகளல்ல; அரசியல் கிளர்ச்சிகளின் ஒரு பகுதியே. இதனை ஆட்சியாளர் நன்கு உணர்ந்து கொண்டிருந்தனர். ஏனெனில், பல மன்னர்களும் அவர்களைப் போலவே விடுதலைப் பேரார்வம் கொண்டு குமுறினார்கள். ஒரு சிலர், பதுங்கிப் பாயக் காத்திருந்தனர். சிலர் வெளிப்படையாய் எதிர்த்தனர். ஒற்றுமை மட்டும் இருந்திருக்குமானால், பல மன்னர்களையும் பெருமக்களையும் கோழைத்தனமும், உட்பகையும், எதிரிகளின் கையாட்களாக்காதிருந்திருந்தால், இந்தியா அடிமைத் தளையை வீசி எறிய இத்தனை நீண்ட காலம் காத்திருக்க வேண்டுவ தில்லை; அத்தளை ஏறும்போதே அதனை உதறித்தள்ளி யிருக்கலாம். தம் அரசு கடந்து மாநில விடுதலைக் குறிக்கோளை மனக்கண் முன்வைத்துப் போராடிய அரசர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள், மைசூர் அரசர் ஹைதர் அலியும், திப்புவும், பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனு மேயாவார்கள். மைசூர்ப் போர்கள் மைசூர் அரசர் மைசூருக்காகப் போராடவில்லை என்பதை மைசூர்ப் போர்கள் நன்கு விளக்குகின்றன. ஹைதர் அலி பிரிட்டிஷார் ஆண்ட இடங்களையும் அவர்களை ஆதரித்த அடிமை அரசர்கள் நாடுகளையும் புயல் வேகத்தில் சூறையாடினான்; சென்னைக் கோட்டையையே தகர்த்து, பிரிட்டிஷார் இறுமாப்பைக் குலைத்தான். இவ்வெற்றிகளின் மூலம் அவன் ஒரு சுதந்தர அரசனாய் இருந்து பிரிட்டிஷாரிடம் சுதந்தர ஒப்பந்தம் செய்து கொண்டான். திப்பு, ஹைதரின் செயலெல்லையைத் தாண்டிப் போரை நடத்தினான். பிரிட்டிஷார் அப்போதுதான் ஓர் உலக வல்லரசாகிக் கொண்டிருந்தனர். அவர்கள் தாயகத்திலேயே அவ்வல்லரசை எதிர்த்த வீர வல்லரசன் பிரெஞ்சு வெற்றி வீரனான நெப்போலியன். திப்பு அவனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தன் போரை மாநில எல்லை கடந்து உலக எல்லைக்குக் கொண்டு சென்றான். இறுதியில் அவனுக்கு ஏற்பட்ட தோல்வியும் மைசூர் எல்லையிலுள்ள ஒரு தோல்வியன்று. அது மாநில எல்லையில் நின்று, உலக வல்லரசுப் போட்டி யெல்லையில் ஏற்பட்ட ஒரு தோல்வியே. மைசூர் மன்னனின் போர், நாட்டு மன்னர்களின் ஆதிக்கப் போர்களுள் ஒன்றன்று என்பதை அதன் முடிவு காட்டுகின்றது. பிரிட்டிஷார் திப்புவின் மரபு மீது வஞ்சம் தீர்த்தனர். அதை வழக்கம்போல மீண்டும் ஆளவிடவில்லை. அதே சமயம் மைசூரை அவர்கள் நேரடியாக ஆள விரும்பவுமில்லை; அதன் பேரரசெல்லையைக் குறுக்கி, பழய மன்னர் மரபுகளில் ஒன்றையே புதிய அடிமை மரபாக்கினர். 1798- தமிழகத்தில் புரட்சி 1857- ஆம் ஆண்டு புரட்சியைப் போல, 1798-ஆம் ஆண்டுப் புரட்சி இந்தியாவின் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் வகிப்பதாகும். பிரிட்டிஷ் ஆட்சிக்கு இராபர்ட்டுக் கிளைவ் கால்கோள் செய்ததாகக் கூறப்படும் ஆண்டுகள், 1748-ஆம் ஆண்டும் 1757-ஆம் ஆண்டுமே. முன்னது வந்தவாசிப் போரையும், பின்னது பிளாசிப் போரையும் குறிக்கின்றன. அதன் பின் அதன் அடித்தளத்தை ஆட்டிக் குலுக்கிய நிகழ்ச்சிகள் 1798-ஆம் ஆண்டுப் புரட்சியும் 1857-ஆம் ஆண்டுப் புரட்சியுமேயாகும். தென்னிந்திய வரலாற்றில் 1798 மைசூர்ப் போர்களில் நடு ஆண்டாய் விளங்குகிறது. அதே சமயம், பாஞ்சாலங்குறிச்சிப் போரிலும் அதுவே தலைமை ஆண்டாய் நிலவிற்று. இக்கால இந்தியாவின் முதற் புரட்சியான பாஞ்சாலங் குறிச்சி எழுச்சி நடைபெற்ற இவ்வாண்டே உலகின் முதற்பெரும் புரட்சியாகிய பிரெஞ்சுப் புரட்சியின் உச்ச நிகழ்ச்சி ஆண்டாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னது, மேலை உலகில் இடைக்கால நிலப்பண்ணையாட்சியின் அரையிருளில் ஆழ்ந்திருந்த ஐரோப்பாவைத் தட்டி எழுப்பிற்று. பின்னது, கீழ் நாடுகளில் சிறப்பாகத் தென் கிழக்காசியாவில், நிலவியிருந்த அடிமைத் தூக்கத்தை அகற்றும் முதல் குரலாயமைந்தது. இந்திய மாநிலத்தில் அஃது ஒருபுறம் புரட்சிக்கனலை எழுப்பிற்று; மற்றொருபுறம், ஆட்சியாளர் அவநம்பிக்கையையும் அடக்கு முறையையும் தொடங்கக் காரணமாயிருந்தது. விடுதலைப் பேரியக்கத்தின் முன்னணிக் கொடியேற்றமாயும், முன்னணி முரசொலியாயும் அது அமைந்தது. விடுதலை இயக்கம் 1798ல் தொடங்கி இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அதன் போராட்டப் பெரும்படி 1947- ஆம் ஆண்டுடன் முடிவு பெற்றுவிட்டது. இந்தப் படியில் நிகழ்ந்த போராட்டங்கள் மிகப்பல. ஆனால் மற்ற எந்தப் போராட்டத்தையும் விட மக்கள் உள்ளத்தில் தழும்பேறிய போராட்டம் பாஞ்சாலங்குறிச்சிப் போராட்டமே. அதன் வீரம், மக்கள் கற்பனை எல்லையைத் தாண்டிற்று. ‘அது தெய்விக ஆற்றல் உடையது’ என்று இன்றும் தமிழக மக்கள் நம்புகின்றார்கள். மக்கள் வீரத்தை அவர்கள் மண்ணின் ஆற்றல் என்று கருதுகிறார்கள். வேட்டையில் மருண்டோடும் முயல் பாஞ்சாலங்குறிச்சி எல்லையில் கால் வைத்தால், புதுவீரம் பெற்று எதிர்த்து நின்று, மாளும் வரைப் போராடும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, வேட்டை நாய் வளர்ப்போர், பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரப் போர் செய்துமாண்ட திடலிலிருந்து சிறிது மண்ணெடுத்து வந்து அதன்மீது புதிய வேட்டை நாய்களைப் பிறக்கச் செய்வராம்- பாஞ்சாலங்குறிச்சி மண்ணின் வீரம் அவற்றின் பிறப்பிலேயே படிவதற்காக! பாஞ்சாலங்குறிச்சிப் போராட்டம் மற்றப் போராட்டங்களைப்போல அயலாட்சிக் காலத்திற்கூட மக்கள் உள்ளத்திலிருந்து மறைக்கப்பட முடியவில்லை. மக்கள் அப்போர் வரலாற்றை ஒரு வீர காவியமாக்கினார்கள். பாரத இராமாயணங் களைப்போல, அது ஏட்டில் அடைபட்ட காவியமாய் விளங்கவில்லை; தெருப்பாடகர் வாய்ப்பாடலாகவும், வழிவழி மரபாக வந்த நாட்டுப் பாடலாகவும், தெருக்கூத்து நாடகமாகவும் இன்றும் தமிழ் நாடெங்கும் அது பாடப்படுகிறது. மக்கள் வீர உணர்ச்சிக்கும் கலை உணர்ச்சிக்கும் சான்றாய் இன்றும் அது மக்களால் நுகரப்படுகிறது. புகைவண்டி நிலையங்களிலும், பொறி வண்டிகள் நிற்குமிடங்களிலும், கூனரும், கிழவரும், நொண்டிகளும் கந்தலாடைச் சிறுமிகளும் அதைப் பாடுவதை நாம் இன்றும் கேட்கலாம். 1857ம் 1798ம் வடநாட்டுக்கு, வடநாட்டு முதல் விடுதலைப் போராட்டம் எப்படியோ, அப்படித் தென்னாட்டுக்குப் பாஞ்சாலங்குறிச்சிப் போராட்டம் அமைந்திருந்தது. நாட்டு மன்னர் வரலாறு இதனைத் தெளிவாகக் காட்டும். வடநாட்டுப் பெரும்போரில் பிரிட்டிஷாரை எதிர்த்த மரபுகள் அழிவுற்றன. புரட்சியில் ஒதுங்கியிருந்த சிலரும், புரட்சிக்காரருக்கெதிராய் இருந்த சிலருமே மன்னர் மரபின் சின்னங்களாய் அணிமை வரை விளங்கியுள்ளனர். அதுபோலத் தென்னாட்டிலும் பாஞ்சாலங் குறிச்சிப் போராட்டத்தில் பங்கு கொண்ட மன்னர், பெருங்குடி மக்கள் மரபுகள் யாவும் அழிவுற்றன. அப்பெருவீரனைக் காட்டிக் கொடுத்தவரும், அவனை எதிர்த்து அயலாட்சியின் செல்லப் பிள்ளைகளாய் இருந்தவருமே அணிமைக் காலம் வரை நாட்டு மன்னரின் எஞ்சிய மரபினராயிருந்து வந்துள்ளனர். வடநாட்டுப் பெருமன்னர்களுக்கும் காட்டாத சலுகைகளைப் பிரிட்டிஷ் அரசியலார் பாஞ்சாலங்குறிச்சி வீரரைக் காட்டிக் கொடுத்த மரபுகளுக்குக் காட்டியுள்ளனர். புதுக்கோட்டை அரசுக்குக் கப்பமில்லா உரிமையும், தனி நாணய உரிமையும் தரப்பட்டிருந்தன. திருவாங்கூர், கொச்சி அரசுகள் பாஞ்சாலங்குறிச்சிக்கெதிராகவும் திப்புவுக்கெதிராகவும் உழைத்தன. இவற்றுக்குத் தனித்தனி நாணய உரிமையும், தனித்தனி அஞ்சல் நிலைய உரிமையும் வழங்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அளவில் தென்னாட்டுப் புரட்சி சிறியதாயினும், காரத்தில் பெரியது என்றே ஆட்சியாளர் கருதியிருந்தனர் என்பதை இது காட்டுகிறது. திப்புவின் போராட்டம் மன்னன் நடத்திய தேசப் போராட்டம். ஆனால், பாஞ்சாலங்குறிச்சிப் போராட்டம் மன்னன் தலைமையில் நடைபெற்ற மக்கள் போராட்டம் அவர்கள் பாஞ்சாலங்குறிச்சி மண்ணுக்காகப் போராடவில்லை; அதை மீட்டும் மீட்டும் இழந்த பின்னும் போராடினார்கள்; வெற்றி கிட்டாது என்று தெரிந்த பின்னும் அதைத் தமிழகத்தின் போராட்டமாக்க முயன்றார்கள். அவர்கள் தங்கள் உயிருக்காகப் போராடவில்லை; இறுதி மனிதன் மூச்சு இருக்கும்வரை போராடி னார்கள். எவரும் தூக்குமேடையினருகிற்கூட உயிருக்காக எதிரியிடம் மன்றாடவில்லை. அவர்கள் போராடியது நாட்டின் உரிமைக்காக, தன்னாட்சியுரிமையுடைய நிலத்தில் வரி கொடுப்பது நிலத்தின் உரிமையை விற்பதாகும் என்று அவர்கள் கருதினார்கள். “வானம் பொழியுது, பூமி விளையுது! மன்னவன் காணிக்கு ஏது திறை?” என்ற வீரபாண்டியக் கட்டபொம்மனின் கேள்வியே பாஞ்சாலங்குறிச்சிப் போர் வீரர் போர்க்குரலாயிற்று. அது இந்தியாவின் முதல் வரி கொடாப் போராட்டம்; ஆனால், அஃது உயிரை மறுத்த வரி கொடாப் போராட்டமாயமைந்தது. ஒரே மாநிலம் 1857-ஆம் ஆண்டு வடவிந்தியப் புரட்சிக்கு 1806-ஆம் ஆண்டு வேலூர்க் கிளர்ச்சி அடிகோலியாயிருந்தது. அது போலவே, 1806-ஆம் ஆண்ட வேலூர் கிளர்ச்சிக்கு, அதற்கு ஒரு சில ஆண்டு களுக்கு முன்பு அருகே நடைபெற்ற பாஞ்சாலங்குறிச்சிப் போராட்டம் காரணமாயிருந்தது. இதுபற்றித் தமிழரசுக் கழகத்தின் தலைவர் திரு.ம.பொ. சிவஞானம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “இந்திய சுதந்தரப் புரட்சியை விரிவாக எழுதிய வீரசவர்க்காரும் வடக்கே சிப்பாய்கள் செய்த புரட்சியைத்தான் சுதந்தரப்போரின் தொடக்கமாகக் குறிப்பிடுகிறார்: அந்தச் சுதந்தர யுத்தத்திற்கு 1806-ஆம் ஆண்டில் தெற்கே வேலூரில் நடந்த சிப்பாய்களின் புரட்சியே ஒத்திகையாய் இருந்ததென்றும் கூறுகிறார். உண்மை என்னவென்றால், பாஞ்சாலங்குறிச்சியில் தொடங்கிய விடுதலைப் போரின் அடுத்த கட்டந்தான் வேலூர்ச் சிப்பாய் புரட்சி. இந்த இரண்டும் நடந்து ஓய்ந்த அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1857லேதான் வடக்கே சிப்பாய் புரட்சி நடைபெற்றது.” திரு.சிவஞானம் விடுதலை இயக்கம் பற்றிக் கண்ட முடிவு இது: “இந்திய விடுதலைப் போரின் வரலாறு, பாஞ்சாலங் குறிச்சியில் கட்டபொம்மன் நடத்திய வீரப் போரிலிருந்துதான் தொடங்குகின்றது என்பதில் ஐயமில்லை. ஆனால், பாஞ்சாலங் குறிச்சிப் போரைப் பற்றிய செய்திகளை வேங்கடத்துக்கு வெளியேயுள்ள இந்தியருள் எவரும் அறிந்திலர்.” இந்தியாவை ஒரு இந்தியாவாகக் கொள்ளும் மனப்பான்மை குன்றிவிட்ட காரணத்தாலேதான் இந்திய வரலாற்றாசிரியர் பலர் கண்கள் விந்திய மலைக்கு இப்பால் செல்வதில்லை. வேலூர் வரையிற் பார்வையை எட்டவிட்ட முதல் தேசீயவாதி வீரசவர்க்காரே என்னல் வேண்டும். வீரபாண்டியர் மரபு தமிழ் நாட்டில் மட்டுமன்றி, தென்னாடு முழுவதுமே பெருநிலக்கிழமைகள் ‘பாளையங்கள்’ என்று வழங்கப்படு கின்றன. ‘பாளையங்கள்’ என்ற சொல்லுக்குப் ‘படைவீடுகள்’ என்பது பொருள். இவற்றில் கோட்டைகளும் கொத்தளங்களும் இருந்தன. இவற்றின் குடிகள் அமைதிக் காலத்தில் வேளாளராயும் பிறவகைத் தாளாளர் (தொழிலாளர்) ஆயும் இருந்தனர். ஆனால் போர்க்காலத்தில் இவர்களே வீரர்களாய்ப் படைக்கலந் தாங்கித் தங்கள் பாளையக்காரர் அல்லது பாளையத்தலைவர் தலைமையில் அரசருக்குப் போரில் உதவியாகச் செல்வார்கள். இம்முறை உண்மையில் இடைக்காலத்தில் உலகில் ஏற்பட்ட நிலப்பண்ணை முறையின் சின்னமே. ஆனால், இஃது ஓர் அரசியல் முறையாக வகுக்கப்பட்டது விஜயநகர ஆட்சியிலே தான். விஜயநகரப் பேரரசின் பாளையங்களே இன்று வரை பாளையங்கள், பெருநிலக் கிழமைகளாய் நிலவி வருகின்றன. ஆனால், அவற்றுள் பாஞ்சாலங்குறிச்சி முனைப்பாகக் காணப்படவில்லை. விஜயநகரப் பேரரசு அழிவுற்ற பின்னரே அது பாளையங்களுள் ஒன்றாய் வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆயினும், பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தார் தமது மரபைப் பண்டைப் பாண்டிய மரபுடனும் 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிக் கட்டபொம்மனுடனும் தொடர்புபடுத்திக் கொள்கின்றனர். உண்மையில் பாஞ்சாலங்குறிச்சி மரபு, எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு பெல்லாரி மாவட்டத்திலிருந்து வந்து குடியேறிய ஓர் ஆந்திர மரபே என்று கொள்ளத்தகும், நீண்ட நாள் தமிழகத்தில் தங்கி, தமிழ் மறவருடன் கலந்து உறவாடி அவர்கள் முற்றிலும் தமிழராயிருக்க வேண்டும். ஆதிக் கட்டபொம்மன், பண்டைப் பாண்டியர் மரபில் வந்த ஒரு சிற்றரசனிடம் தளபதியாய் இருந்தான். அச்சிற்றரசன், ‘வீரபாண்டியன்’ என்ற பெயருடன், ‘அழகிய வீரபாண்டிய புரம்’ என்ற நகரிலிருந்து ஆட்சி செலுத்தினான். அவன் கட்ட பொம்மனிடம் பற்றுக்கொண்டு, அவனையே உரிமை மகனாக்கினான். இந்நேய உறவுக்குச் சான்றாகவே பாஞ்சாலங் குறிச்சி வீரர் மாறிமாறிக் கட்டபொம்மன், வீரபாண்டியன் என்ற பெயரைச் சிறப்புப் பெயராகவும், இரண்டு பெயரையும் பொதுப் பெயராகவும் கொண்டிருந்தனர். அதாவது, வீரபாண்டியக் கட்டபொம்மன் எனவும், அவன் மகன் கட்டபொம்ம வீரபாண்டியன் எனவும் அவர்கள் வழங்கப்பட்டார்கள். ஆதிக் கட்டபொம்மன், தன் முன்னோன் ஒருவன் பெயரால் பாஞ்சாலங்குறிச்சி என்ற கோட்டையைக் கட்டி அதில் ஆண்டான் என்பது கூறப்படுகிறது. பாஞ்சாலங்குறிச்சி என்பது ‘பஞ்சவன் குறிச்சி’ என்ற பெயரின் மரூஉவாய் இருக்கவும் கூடும். ஏனெனில், ‘பஞ்சவன்’ என்பது பாண்டிய மரபினர் பெயர்களுள் ஒன்று. வீரபாண்டியக் கட்டபொம்மன் 1790-ஆம் ஆண்டில் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் உரிமையைப் பெற்றான். அப்போது அவனுக்கு வயது முப்பது. சிவத்தையா, ஊமைத்துரை என்ற இரு மைந்தரும், சுந்தரவடிவு, ஞானமுத்து என்ற இரு மகளிரும் அவன் உடன்பிறந்தவர். கட்டபொம்மன் மட்டுமன்றி, அவன் உடன் உடன்பிறந்தவர்களும் பாஞ்சாலங் குறிச்சிப் போரில் பெரும்பங்கு கொண்டிருந்தார்கள். தமிழக உரிமை மரபு பிரிட்டிஷ் ஆட்சி அன்று முடியாட்சியாய் இருக்கவில்லை. பிரிட்டிஷ் முடியரசு, 1857-க்குப் பின்னரே இந்திய ஆட்சியை நேரடியாக ஏற்க முனைந்தது. அதற்குமுன் வாணிகம் செய்ய வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கழகமே,1 வாணிக வாய்ப்புக்காக ஆட்சியைச் சிறிது சிறிதாக இந்திய மன்னரிடமிருந்து கைப்பற்றியிருந்தது. தமிழகம் அதுவரை எந்த வேற்று நாட்டாருக்கும் அடிமைப்பட்டிருந்ததில்லை. அரியநாத முதலியார் என்ற தமிழமைச்சர் உதவியால் பாண்டியர் சோழர் பூசலைச் சாக்கிட்டு விஜய நகரப் பேரரசர் தமிழகத்தைக் காப்பாற்றியதுண்டு. ஆனால், அப்பேரரசர் தெலுங்கு கன்னட மரபினரே. அதன் பின் தமிழ்நாட்டிலேயே பல மரபினர் ஆங்காங்கே ஆண்டதன்றி, அயல்நாட்டவர் ஆட்சி நிலவவில்லை. இத்தகைய ஆட்சி யாளருள் ஒருவர் கர்நாடக நவாபு. பெயரளவில் தமிழகத்தில் இருந்தது, மேலுரிமைப் பாதுகாப்புக்கான உரிமையே. அவ்வப்போது மன்னர் சிலர் போரில் உதவுவர். ஆனால், அவர்கள் மேலுரிமை ஏற்ற- ஆயுதம்- தாங்கிய உரிமை மன்னர்களே. பிரிட்டிஷ் வாணிகக் கழகம் அடிக்கடி மன்னர்களைப் பிரித்தாண்டும், உள்நாட்டுப் போர்களில் ஈடுபட்டுத் தன் கையாட்களை மன்னராக்கியும் அரச மரபுகளை வசப்படுத்தி வந்தது; சில சமயம் வட்டித் தொழிலாளர் முறைப்படி கடன் கொடுத்து, மன்னர்களின் வீண் செலவுகளை ஊக்கிக் கடனைப் பெருக்கி, அதன் மூலம் அவர்கள் உரிமைகளைக் கைப்பற்றியது. இங்ஙனம் கடன் கொடுத்துக் கைப்பற்றிய அரசுகளில் கருநாடக அரசும் ஒன்று. 1790ல் இவ்வகையில் பெயரளவான அதன் மேலுரிமையைக் கைப்பற்றி, அதைச் சாக்கிட்டுத் தமிழக ஆட்சி முழுவதும் தனதாக்க அக்கழகம் முனைந்தது. பெயரளவான உரிமையை உண்மையான உரிமையாக்க நாட்டு மன்னர்களாலேயே முடிவதில்லை. அஃது, உண்மையில் ஆதிக்கப் போட்டிப் போருக்கான ஒர் அறைகூவலாய் மட்டுமேயிருந்தது. அயல்நாட்டு வாணிகக் குழு ஒன்று அதைச் செயற்படுத்தி வரிவிதிப்பது என்பது எப்போதுமே முடியாத காரியம். ஆனால், இதைப் பிரிட்டிஷார் நேரடியாகப் பிரிக்க எண்ணவில்லை; நாட்டு மன்னர், பெருமக்கள் மரபினரின் இயற்கைப் பூசலைப் பயன்படுத்தி, ஒருவர்மீது ஒருவரை ஏவ இதை ஒரு கருவியாகவே கொண்டனர். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துடன் அடிக்கடி போட்டிப்பூசலிட்ட மரபுகளுள் எட்டயபுரமும் ஒன்று. தவிர, அரியநாதமுதலியார் மரபில் வந்த தளவாய் முதலியார் போன்ற பெருமக்கள் இவ்வுரிமையைப் பெற்று வரியும் திறையும் பிரிக்கும் குத்தகையை ஏற்க முன்வந்தனர். இவ்விரு வகைத் தாக்குதலுக்கும் பாளையக்காரர்களும் குடிமக்களும் உட்பட்டார்கள். உரிமைப் போராட்டம் பாளையக்காரர் எவரும் எளிதில் திறை கொடுத்து விடுவதில்லை. பல சமயம் அரசியல் பேச்சு அச்சுறுத்தல் ஆகியவற்றாலும், சில சமயம் படைப்பலத்தாலுமே திறை பிரிக்க வேண்டியிருக்கும். நாட்டின் குழப்பமான நிலையில் பலர் அதைக் கடத்துவதும் கொடுக்க மறுப்பதும் இயல்பு. ஆனால், பாஞ்சாலங்குறிச்சி மன்னனான வீரபாண்டியன் திறை கொடுக்க முடியாது என்று இறுமாந்து கூறினான். “வானம் பொழியுது, பூமி விளையுது! மன்னவன் காணிக்கு ஏது திறை?” என்ற கேள்வியை எழுப்பியவன் அவனே. இது பாளையத்தார் பலருக்கு ஊக்கம் தந்தது. வரியும் திறையும் திரட்டும் வேலை அயலின ஆதிக்கக் காரர்களுக்குத் தலையிடியாயிற்று. சூழ்ச்சிகளில் வல்ல வெள்ளை வணிக ஆட்சிக் குழு, பாஞ்சாலங்குறிச்சிமீது எட்டயபுரத்தை ஏவிவிட ஒரு சூழ்ச்சி செய்தது; பாஞ்சாலங்குறிச்சிக்குரிய சில நகரங்களை எட்டய புரத்தாருக்கு உரிமையாக வழங்கிற்று. ஆனால், எட்டயபுரத்தார் அதைக் கைப்பற்ற முடியவில்லை. அது புலிப்பல் தானமாயிற்று. எட்டயபுரத்தாரின் ஏலமாட்டாக் கோபம் பிரிட்டிஷாரின் முதல் துரோகப்பயிரின் விதைப்பண்ணை யாயிற்று. 1792-இல் தொடங்கிய இந்த வரிச்சச்சரவே பாஞ்சாலங் குறிச்சிப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தது. இந்தியாவை ஆளவந்த பேரரசுக்கும் இந்தியாவில் தமிழகத்தின் மூலையில் மக்களாட்சி நடத்திய ஒரு பெருநிலக் கிழமைக்கும் போர் மூண்டது! பண்டு தமிழகத்தில் சினங்கொண்டெழுந்த ஒரு கோழி, ஒரு யானையை எதிர்த்துப் போர் செய்ததாக ஒரு கதை உண்டு. அப்போர் நடந்த இடமே கோழியூர். அதாவது உறையூர் (இக்காலத் திருச்சிராப்பள்ளி) என்பது கூறப்படுகிறது. பாஞ்சாலங்குறிச்சிப் போராட்டம் இப்பழங்கதையை நினைவூட்டத்தக்கது. இதில் யானைதான் வென்றது; கோழி அழிந்துபட்டது. இது இயல்பே, ஆனால், யானை ஆறாண்டு தன் முழுத்திறமும் பயன்படுத்தி, கோழியின் குருதியுடன் தன் குருதியும் ஓடவிட்டுத் தான் வெற்றி காண முடிந்தது. அப்படியும் கோழியையும் கோழியின் மரபையும் ஒடுக்க முடிந்ததே தவிர, அதை அடக்கவோ அதன் மரபை ஒடுக்கவோ முடிந்ததில்லை. உடல் மரபு அழிந்த பின்னும் உயிர்மரபு நிலவுகின்றது. சிறுநிலமரபு அடக்கப்பட்ட பின்னும், பெருநிலமரபு, மாநிலமரபு போரைக் கைக்கொண்டது. அம்மாநிலமரபு இன்று வெற்றி கொண்டுள்ளது. 1798-ஆம் ஆண்டு வரித்தலைவனான ஜாக்ஸன் தன்னை வந்து காணும்படி வீரபாண்டியனுக்குத் திருமுகம் விடுத்தான். பல தவணைகளுக்குப் பின் போவதென்று துணிந்தான் பாண்டியன். ஆனால், பாண்டியன் தன் வீர மரபின் பெருமை காக்கவே வரத் தயங்குகிறான் என்பதையறிந்த வெள்ளையன் ஜாக்ஸன், தன் ஆதிக்க மரபின் பெருமைகாக்க எண்ணி, நேரில் பார்க்கவிடாமல், அடிக்கடி இடமாறினான். வீரபாண்டியன் பல இடங்களில் சுற்றி வேட்டையாடி இறுதியில் அவனை இராமநாத புரத்திற் கண்டான். வீரபாண்டியன் சரிசம உரிமையுடன் பேசுவதும் வரி கொடுக்க மறுத்து நேச உறவு மட்டுமே நாடுவதும் ஜாக்ஸனின் சீற்றத்தைக் கிளறின. அவன் மன்னன் வீரபாண்டியக் கட்டபொம்மனைச் சிறைபிடிக்க உத்தரவிட்டான். வீரபாண்டியன் வெளியேற முயன்றான். எனினும், மறைவிலிருந்த வெள்ளையர் ஆட்கள் அவனைப் பிடிக்க முயன்று, அவனைச் சூழ்ந்தார்கள். ஆனால், சிங்கத்தைச் சூழ்ந்து பிடிக்கும் ஆட்டு மந்தைபோல, அவர்கள் சிதறினார்கள்! வீரபாண்டியன் வாள் அவர்களைத் துண்டு துண்டாக்கிற்று! துணைத்தளபதியான கிளார்க்கு என்பவன் இப்போரில் மாண்டான் பாண்டியன் பக்கம் புரட்சி வீரனான வெள்ளையத் தேவன் நின்று போரிட்டான். இவனே நாட்டுப் பாடல்களில் ‘பாதர் வெள்ளை’ என்று வழங்கப்படுகிறான். இராமநாதபுரத்திலிருந்து பாண்டியனும் அவன் வீரரும் தப்பி வந்தனர். ஆனால், பாண்டியன் அமைச்சர் மட்டும் சிறைப்பட்டனர். வீரபாண்டியனுக்கு டேவிட்சன் என்ற ஒரு வெள்ளையன் நண்பனாயிருந்தான். அவன் பரிந்துரைமீது சமரசம் ஏற்பட்டது. சிங்களும் வெகுண்டது ஆனால், ஜாக்ஸனுக்குப்பின் வந்த வெள்ளையர் தலைவர் லூஷிங்டன் என்பவனும் ஆதிக்கத் தோரணையை விடவில்லை. மீண்டும் 1799-இல் சச்சரவு மூண்டது. இத்தடவை தென்தமிழக மெங்கும் பாளையங்கள் கிளர்ந்தெழுந்தன. வீரபாண்டியனே கிளர்ச்சித் தலைவன் என்றறிந்து சென்னை ஆட்சித் தலைவரான எட்வர்டு கிளைவ் பெருமகனார் மேஜர் பானர்மென் தலைமையில் ஒரு படையை அனுப்பினார். இவரே பிரிட்டிஷ் பேரரசுக்கு அடிகோலிய இராபர்ட்டுக் கிளைவின் மகனார். பாளையக்காரருட் பலர் தம் குலதெய்வமாகிய சக்கம்மாள் விழாவை ஒட்டித் திருச்செந்தூருக்குச் சென்றிருந்தனர். அச்சமயம் பார்த்து மேஜர் பானர்மென் லெப்டினண்டு டல்ஹாஸ் என்பவனைப் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தாக்க அனுப்பினான். கோட்டை சிறிது; படை பெரிது. ஆதலால், வீரபாண்டியன் சரண் புகுவான் என்று வெள்ளையர் நினைத்தனர். ஆனால், அவன் வணங்காமுடி மன்னனாய் நின்று எதிர்த்தான். பீரங்கிகள் முழங்கின. கோட்டை வாயில்கள் தகர்க்கப்பட்டன. வெள்ளையர் உள்ளே புக முயன்றனர். இச்சமயம் மயிர்க்கூச்சிட வைக்கும் வீர நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது; படையின் துணைத் தலைவன் லெப்டினண்டு காலின்ஸ் உள்ளே நுழைந்தான். அவனைத் தமிழ்ப் பாடல்கள் ‘காலன் துரை’ என்று வழங்கின. நுழையும்போது ஓர் ஈட்டி அவன் மார்பிற்புகுந்து முதுகு வழியாய்ப் பாய்ந்து சென்றது. அவ்வீட்டியைச் செலுத்தியவன், வீரன் பாதர் வெள்ளையே. ப்hதர் வெள்ளையின் குடும்பம் அவன் வீரத்தால் புகழ் பெற்றது; அனால், அவனைக் காட்டிக் கொடுத்த கறையும் அதற்கே உரியது. பணத்திற்காக அவன் மாமனே அவனைக் காட்டிக் கொடுத்தான். வெள்ளையர் கையால் வீரன் பாதர் வெள்ளை தூக்கிலிடப்பட்டான். காலன் துரையின் கதியே உள்ளே நுழையும் ஒவ்வொருவர் கதியும் ஆயிற்று. உள்ளே வெள்ளையர் பிணக்குவியல்கள்! அதையறியாமல் ‘காலன்’ வழியில் வெள்ளைப்படை வீரர் வெள்ளாடுகள் போல வரிசையாய்ச் சென்று மாண்டார். ‘கோட்டையைத் தகர்ப்பது எளிது; அதில் நுழைவது அரிது’ என்பதை வெள்ளையர் உணர்ந்தனர். போரை நிறுத்திப் பிணங்களை அகற்ற இணக்கங்கோரினர் வெள்ளையர். தூய தோலா வீரராகிய தமிழர், அதற்கு இணங்கியதுடன், தாமே உதவி செய்தும் பிணங்களை அகற்றினர். ‘இவ்வீர நாட்டை அடிமைப்படுத்துகிறோமே!’ என்று பல வெள்ளையர் உள்ளங்கள் அன்று துடித்தன. கோட்டை விழுந்தது. ஆனால், கோட்டையின் சிங்கம் இரவே தப்பி அப்பாற் சென்றிருந்தது. வஞ்சக வலை: வீழ்ச்சி பாஞ்சாலங்குறிச்சிக்கான போர் முடிந்தது. தமிழகத்துக் கான போர்- மாநிலத்தின் உரிமைக்கான போர்- தொடங்கிற்று. வீரபாண்டியனைத் தேடிப்பிடிக்கும் முயற்சியில் எட்டயபுர மன்னன் எட்டப்பன் உதவினான். காட்டானையை வசப்படுத்திப் பிடிக்கும் நாட்டானையாய் அவன் விளங்கினான். அவன் புலம் விசாரித்து வேட்டையாடினான். பாண்டியன் தன் நண்பர் இடங்களில் ஒவ்வொன்றிலும் தங்கித் தப்பிச் சென்று கொண்டிருந்தான். அந்நண்பர்கள் பிடிபட்டுத் தூக்கிலிடப் பட்டனர். பாண்டியன் அமைச்சரும் தூக்கிலிடப்பட்டனர். பாண்டியன் புதுக்கோட்டை மன்னனை நண்பனென நம்பி அவன் விருந்தினனாய் இருந்தான் விருந்திருக்க உண்ணாத தமிழ் மரபில் வந்த தொண்டைமான், விருந்தினரைத் தன் மாளிகையிலேயே காட்டிக் கொடுத்தான். வீரபாண்டியக் கட்டபொம்மன் தன் நாட்டிலேயே தூக்கிலிடப்பட்டான். தூக்கிலிடப்பட்ட மேடு இன்றும் வீரத் தமிழர் வணங்கும் புகழ் மேடாகியுள்ளது. வீரபாண்டியன் பிறர் தூக்கிலிடக் காத்திராது, தானே சுருக்குக் கயிற்றைத் தன் கழுத்தில் மாட்டிக் கொண்டு, வீர உரையுடனும் புன்முறுவலுடனும் தசையுடல் நீத்து இசையுடல் பெற்றான். அவனைத் தூக்கிலிடுமுன் பாளையக்காரர்களெல்லாம் ஆட்டுக் கூட்டங்களாக்கப்பட்டார்கள். பாஞ்சாலங்குறிச்சி உட்பட எல்லாக் கோட்டைகளும் தரைமட்டமாக்கப்பட்டன. பாளையத்தலைவர்கள் பாளையக்குடிகள் எல்லாருடைய ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் சுதந்தர உரிமை நசுக்கப்பட்டது. ஆதிக்கப்படைகள் எங்கும் நிறுத்தப்பட்டன. வெள்ளையர் படை உரிமைப்படையாய் இருந்தது. இந்தியப்படை வீரர்கள் வெள்ளையர்கள் கையாட்களாய், கூலிப்படைகளாய், அடிமைப்படைகளாய்த் தலை குனிந்து நின்றார்கள். எட்டயபுரத்தாருக்கும் புதுக்கோட்டையரசருக்கும் அடிமைப் பரிசுகள் வழங்கப்பட்டன. வீரபாண்டியன் தூக்கிலிடப்பட்டது 1799ல். அன்று பதினெட்டாம் நூற்றாண்டின் வீரம் தலைசாய்ந்தது. அன்றுடன் பாஞ்சாலங்குறிச்சிப்போர் புரட்சிப் போராய் மாறிற்று. புதிய புரட்சி பிரஞ்சுப் புரட்சியில் பாஸ்டில் சிறை தகர்ந்ததே புரட்சியின் சின்னமாயிற்று. பாஞ்சாலங்குறிச்சிப் புரட்சியில் பாளையங்கோட்டைச் சிறை அதே இடம் பெற்றது. மாறு வேடம் பூண்டு புல் விற்பவராகவும், சரக்கு விற்பவராயும் புரட்சிக் காரர்கள் சிறையண்டை வந்து தங்கினார்கள். சிறையிலிருந்த பாஞ்சாலங்குறிச்சிக் கைதிகளும் அவர்களும் திடுமெனப் புரட்சிக்குரல் கிளப்பினார்கள். ‘வீரபாண்டியன் புகழ் வாழ்க! வெள்ளையர் ஆதிக்கம் வீழ்க!’ என்ற முழக்கம் எங்கும் எழுந்தது. சிறை வீழ்ந்தது. வீரபாண்டியனின் வீரத்தம்பி ஊமைத்துரை உட்படப் பாஞ்சாலங்குறிச்சி வீரர் புரட்சிப் படையுடன் பாஞ்சாலங்குறிச்சி நோக்கி விரைந்தனர். வெள்ளையர் அப்போது வீறாப்புடன் உண்டு குடித்து அயர்ந்திருந்தனர். வெள்ளையர் பிடியை அன்று யாராவது வீழ்த்த நினைத்திருந்தால், பல ஆண்டுகளாவது மீளாமல், அன்று வீழ்த்தியிருக்கலாம். ஆனால், புரட்சி வீரர் குறிக்கோள் தற்காலிக வெற்றியன்று. அதே சமயம், இறுதி வெற்றி உடனடியாகத் தங்கள் கையிலில்லை என்று அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால், இறுதி வெற்றியாகிய குறிக்கோளை நாட்டு மக்களுக்கு அறிவித்து, அதன் சின்னத்தைக் காப்பதிலும் அதன் முதற்படிப் போராட்டத்தை நடத்தி அதில் தம் உயிர்களைப் பலியிடுவதிலும் அவர்கள் கருத்துச் சென்றது. அவர்கள் நாடிய குறிக்கோள் மாநில உரிமை. அதன் சின்னம் கோட்டை கட்டி ஆளும் உரிமை. அவர்கள் தரை மட்டமாக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை இராப்பகலாய் நின்று கட்டி, அதை இந்தியாவின் முதல் சுதந்தரச் சின்னமான கோட்டையாக்கினார்கள். புதிய கோட்டை கட்டப்பட்ட முறை, வரலாற்றில் பொறிக்கத்தக்க சிறப்பு வாய்ந்தது. ஆண்டு மாதக்கணக்கில் கட்டப்பட்ட பழைய கோட்டை, இரண்டு மாதத்தில் கட்டப்பட்டது. இரண்டாயிரம் வீரர் அதில் ஈடுபட்டனர். சின்னப் பேந்திரன் என்ற வீரவள்ளல், அதற்குப் பணம் உதவியதாக அறிகிறோம். கோட்டை முன்னிருந்தது போன்ற மண்கோட்டை தான்; அவசரமாகக் கட்டிய கோட்டைதான். ஆனால், பழைய கோட்டையைவிட அது வெள்ளையரின் பீரங்கித் தாக்குதலுக்கு நீடித்துத் தாக்குப் பிடித்தது. அது முற்றிலும் நீரில்லாமல் பனஞ்சாற்றினால் பிசைந்து கட்டப்பட்டதே அதன் உறுதிக்குக் காரணம் என்பது தெரிகிறது. சிறையிலிருந்து தப்பியவர்களைத் தேடிய வீரர் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைக் கண்டு மூக்கில் கை வைத்தனர். தென் தமிழகமெங்கும் மீண்டும் விடுதலை பெற்றது. பாஞ்சாலங்குறிச்சி இப்போது முன்னிலும் போட்டியற்ற வீரத் தலைமை பெற்றது. ஆங்கில அதிகாரிகள் சிறைப்பட்டார்கள். ஆனால், ஆங்கிலப் பெண்மணிகளின் கண்ணீருக்கிரங்கி ஊமைத்துரை பலரை விடுதலை செய்தான். வீரபாண்டியனை விடச் சிறந்த வீரனென்று பெயரெடுத்த ஊமைத்துரை, அவனை விடப் பெருந்தன்மையும் இரக்க உள்ளமும் உடையவனாகவே இருந்தது வியத்தற்குரியது. இரண்டாவது வீர காவியம் முதல் தாக்குதலில் கோட்டை கொலைக்களமாயிற்று. புதுப்படை வரும்வரை அவர்கள் காத்திருந்தார்கள். வீரம், படைத்தலைமைத் திறம், அரசியல் சூழ்ச்சி ஆகியவற்றில் ஊமைத்துரை வீரபாண்டியனை விஞ்சியிருப்பது கண்டு, வெள்ளையர் வீரபாண்டியனைக் கொடுமைப்படுத்திய தம் அறியாமைக்கு வருந்தினர். கோட்டை தகர்க்கும் பீரங்கியும் படையும் சென்னையி லிருந்து வர நாளாயிற்று. அருகில் இலங்கையிலிருந்தும் படை வரவழைக்கப்பட்டது. எட்டயபுரம், புதுக்கோட்டைக் கூலிப்படைகளும் சேர்ந்து கோட்டையைத் தாக்கின. நாட்கணக்கில் பீரங்கிகள் முழங்கிக் கோட்டையைத் தகர்த்தன; குண்டு மாரிகள் பெருஞ்சேதம் விளைத்தன. காயம்பட்டவர்களிடையே பெண்களும் குழந்தைகளும் இருந்தார்கள். ஊமைத்துரையின் சூல் கொண்ட மனைவியும் அவன் சிறுவனும் இருந்தனர். அவர்களுடன் வீரர் போரிட்டே வெளியேற வேண்டும் என்று ஊமைத்துரை ஆணையிட்டான். வீரர் அனைவரும் போரிட்டு மாண்டனர். பெண்டிர் உடல்களும் பிள்ளைகள் உடல்களும் அவர்களிடையே கிடந்தன. வெள்ளைப் பெண்கள், பாதுகாப்புடன் வெளியே விடப்படாமல், வீரருடன் வீரராய் மாண்டனர். ஊமைத்துரை காயம் பட்டவர்களுள் ஒருவனாகக் குற்றுயிருடன் கிடந்தான். ஆனால், குற்றுயிருடன் கிடக்கும் தன் பிள்ளையை மீட்க வந்த ஒரு வீரத்தாய், மகன் வேண்டுகோளுக் கிணங்கி, மகனுயிரைவிட்டு ஊமைத்துரை உயிரைக் காத்தாள்; ஊமைத்துரைக்காக அரும்பாடுபட்டாள். அவன் மீண்டும் புரட்சித் தலைவனானான். ஆனால், அவ்வீரத்தாய் அதற்காகத் தண்டனை பெற்றாள். ஊமைத்துரை சிவகங்கை சென்று, அதன் தலைவர்களான சின்ன மருது, பெரிய மருது என்பவருடன் சேர்ந்து போரிட்டான். ஆனால், இத்தடவை அவர்கள் சிறைப்பட்டார்கள். ஊமைத்துரையுடன் அவர்கள் பாஞ்சாலங்குறிச்சியிலேயே 1801ல் தூக்கிலிடப்பட்டார்கள். பாஞ்சாலங்குறிச்சிப் புரட்சி இங்ஙனம் முடிவுற்றது. பாஞ்சாலங்குறிச்சிப் பாளையம், எட்டயபுரம், மணியாச்சிப் பாளையங்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது. 1792இல் தொடங்கிய சச்சரவு, 1798ல் பெரும் போராட்ட மாயும் நாட்டுப் புரட்சியாயும் மாறி, 1801-ஆம் ஆண்டுடன் முடிவுற்றது. முன்னணிப் போரும் முழுநிறைப் போரும் பாஞ்சாலங்குறிச்சிப் போரில் ஈடுபடாவிட்டாலும் வீரபாண்டியனுடன் நட்பாயிருந்தனர் என்ற காரணத்துக்காகவே சிவாஜியின் மராட்டிய மரபில் வந்த தஞ்சை அரசர் மீது அவநம்பிக்கை ஏற்பட்டது. அவர் உரிமைகள் படிப்படியாகக் குறுக்கப்பட்டன. அவர் அரசுரிமை முற்றிலும் போக்கப்பட்டது. ஆட்சி முதல்வர் டல்ஹெளஸி காலத்திலேயே தொடங்கிய இச்செயல்கள் மன்னர் மரபுரிமை அட்டூழியங்களே இந்தியாவின் பெரும்புயலான 1857-ஆம் ஆண்டுப் புரட்சிப் போராட்டத்துக்கு உடனடிக் காரணமாயின என்பது நினைவு கூரத்தக்கது. பாஞ்சாலங்குறிச்சிப் புரட்சிப்போர் தமிழகம் எழுப்பிய சுதந்தரத்தின் முதல் குரல். அதுவே பாரத விடுதலைப் போரின் முன்னணி முரசம். வீர பாண்டியன், ஊமைத்துரை, வெள்ளையத் தேவர், அவர்கள் உடன்பிறந்த நங்கையர், மனைவியர்களின் வீரப்புகழ், அச்சுதந்தரப் போராட்டத்தின் முன்னணிக் கொடி அம்முன்னணிப் போரையடுத்து வடதிசை முழுப்போர் கிளர்ந்தெழுந்தது. தூங்குகின்ற சிங்கமாகிய இந்தியாவின் கழுத்தில் ஆதிக்க நுகத்தடி விழுந்தபின் அது பின்னும் தூங்கியிருக்கவில்லை. ஆதிக்கம் தொடங்கிய அதே சமயத்தில் அதன் விடுதலை உறுமல் தொடங்கிவிட்டது. பாஞ்சாலங்குறிச்சியிலெழுந்த அவ்வுறு மலை அடுத்து, அதன் பெருமுழக்கம் தில்லியில் கேட்கத் தொடங்கிற்று. தெற்கே பாஞ்சாலங்குறிச்சி வாயில் வழியாக விடுதலைத் தெய்வம் தில்லிக் கோபுர வாயிலில் காலடி எடுத்து வைத்தான். 5. விடுதலைப் புயல் புயல், சூறாவளி, புரட்சி புயல், சூறாவளி, மின்னல், இடி, காட்டுத்தீ- இவை இயற்கையின் அழிவுச் சத்திகள்! ஆனால், இவ்வழிவுச் சத்திகளிலிருந்துதான் புது வாழ்வு பிறக்க முடியும். புயலையும் மின்னலையும் காண்பவர். அவற்றின் அழிவுச் சத்திகளைத் தான் நேரடியாக உணர்வர்; அவற்றின் ஆக்க ஆற்றலை எண்ணிக்கூடப் பார்க்க முடியாது. ஆனால், அவற்றின் அழிவுச் சத்திகளுக்கும் ஆக்கத்துக்கும் நேரடியான- இன்றியமையாத- தொடர்பு உண்டு. ஒரு தோட்டத்தின் முக்கியத் தேவை நீரும் உரமுமல்ல. அவை மட்டுமிருந்தால், அது தோட்டமாகாது; ஒரு சிறு காடே ஆகும். ஏனெனில், மனிதன் தரும் நீரும் உரமும், இயற்கை தரும் நீருக்கும் உரத்துக்கும் ஈடாகமாட்டா. இயற்கை அவற்றால் பெருங்காடுகளை உண்டுபண்ண முடியும்; மனிதன் சிறு காட்டையே உண்டுபண்ணக் கூடும். ஆனால், இயற்கையால் முடியாத ஒரு சிறு செயலால் அச்சிறு காட்டை அவன் தோட்டமாக்கி விடுகிறான். அச்சிறு செயல்தான் களை நீக்குதல். ஒழுங்கமைத்தல் ஆகிய அவன் செயற்கை முயற்சி, இவை இரண்டும் வளர்ச்சியில் திட்டம் அமைக்கின்றன. மனிதன் சிறு சீர்திருத்தத் திட்டத்தைத் தோட்டத்தில் காண்கிறோம். தனி மனிதன் சிறிய வாழ்வில் ஆக்கம் உண்டு பண்ண இச்சிறு திட்டங்கள் போதும். அதில் அழிவுறும் களைகளும் சிலவே. ஆனால், இவை சிறு அளவிலேயே பயிர் நாற்றுகளை அழிக்க முடியும். இயற்கையின் வாழ்வில் பயிருடன் களையும் வளர்ந்த காட்டைத் திருத்த, இயற்கை மேற்கொள்ளும் திட்டமே காட்டுத்தீ, புயல், சூறாவளி, மின்னல், இடி ஆகிய உருவங்களை மேற்கொள்கின்றது. அவை இயற்கையின் களைக்கொட்டுக் கருவிகள், கோடரிகள், சுத்தியல்கள்; இயற்கையின் இந்தக் களையழிக்கும் வேலையில் பயிர்களும் பேரளவில் உடனழிகின்றன. எனினும், பயிரின் உள்ளீடான ஆக்கச் சத்தி அழிவதில்லை. அது களை அழிந்த பின் மீண்டும் தளிர்க்கின்றது. முன்னைவிடப் பன்மடங்காய்ப் புதிய சூழலில் புதுப்பயிர்கள் தழைக்கின்றன. பொது மனித வாழ்வு தனி மனித வாழ்வானது. ஆனால், அஃது இயற்கையைபோல ஏறத்தாழ எல்லையற்ற இடப்பரப்பும் காலப்பரப்பும் உடையது. அதன் வாழ்விலும் இயற்கையின் இயற் சீர்திருத்தம் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்படுகின்றன. அவை மனித சமூகத்தின் புயல்கள், சூறாவளிகள், மின்னல்கள், காட்டுத் தீக்கள், இடிகளாய்த் திகழ்கின்றன. அவற்றை நாம் வரலாற்றில் புரட்சிகள் என்கிறோம். பாஞ்சாலங்குறிச்சிப் புரட்சி ஒரு புயல். ஆனால், அது மற்றொரு சூறாவளிக்குரிய கொடிக் கம்பம் மட்டுமே. சுழன்றடிக்கும் சூறாவளிப் புயலுக்கு அது குறிக்கோளாகிய திசைகாட்டும் கருவியாய் அமைந்தது. 1857-ஆம் ஆண்டுப் புரட்சியின் தலைவர்கள் குறிக்கோள்வழி நின்று அதற்குத் திட்டமிட்டார்கள். ஆனால், புரட்சி ஒரு தோட்டமன்று, திட்டத்துக்குட்பட; அது ஒரு புயல்! திட்டமிட்ட தேதிக்கு முன்பே அது சூறாவளியாகப் பீறிட்டுக் கொண்டு வந்தது. அத்தேதிக்கு முன்பே அது சுழன்றடித்தது. மின்னல்கள் மக்கள் அடிமை அமைதியாகிய வானைப் பிளந்து சீறிக் கொண்டு பாய்ந்தன. கார்முகில்கள் எங்கும் படர்ந்தன. சோனாமாரி வாரி அடித்தது. புயலுக்கு எதிர்புயலாக, அடக்குமுறைகளை இடியேறுகளாய்ப் பல இடங்களில் வீழ்த்தின. காட்டிலே கட்டையிடையே கட்டையாய்க் கிடந்த பிழம்புகள் ஒளிப்பிழம்புகளாய் எரிந்து ஒளி வீசின. புயல் முடிவுற்றது. எங்கும் மண் மேடும் கரியும் புகையும் சூழ்ந்தன. இவற்றின் உரத்தின்மீதுதான் வாழ்வு- திட்டமிட்ட விடுதலைப் பேரியக்கமான காங்கிரஸ் பேரவை வாழ்வு- தொடங்கிற்று. அது ஒரு விடுதலைப் பூந்தோட்டம். அது தளிர்த்துத் தழைத்துள்ளது; மலர்ந்துள்ளது. இனி அது காய்த்துக் கனிவளம் தரவேண்டும். பூந்தோட்டத்தின் புது வரலாறு காணுமுன் புயலின் இயற்கையாற்றலில் கருத்துச் செலுத்துவோம். இயற்கையின் இப்பெரும் போராட்டத்தைத் தலைவர் பெருந்தகை போஸ், இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்றார். அதன் வரலாறு எழுதப்புகுந்த திரு. அசோக மேத்தா, அதை இந்தியாவின் முதற்புரட்சி என்று குறிக்கின்றார். ஆனால், வீர சவர்க்கார் அதை இயற்கையின் சத்திகளுள் ஒன்றாக்கி எரிமலை என்று வருணிக்கிறார். எரிமலையின் வெந்தழலில் எல்லா வகைப் பாறைகளும் பொருள்களும் ஒரே அழற்பிழம்பாய் உருகி வார்க்கப்பட்டுவிடும். அதுபோல 1857-ஆம் ஆண்டின் புரட்சி, இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா வகுப்பினரிடையேயும் ஒரே ஆர்வமும், ஒரே உணர்ச்சியும் எழுப்பி, அவர்களை ஒரு தேச மக்களாகக் கிளர்ந்தெழச் செய்தது. படைவீரர் கிளர்ச்சி மட்டுமன்று, தேசியப் புரட்சி! பிரிட்டிஷ் ஆதிக்கக்குழு இவ்வெரிமலையைப் படைவீரர் கிளர்ச்சி என்று கூறிற்று. படைவீரர் கிளர்ச்சி அதன் ஒரு பகுதி என்பதும், ஓர் உயிர் நிலைப்பகுதி என்பதும் உண்மையே. அது வேலூரில் நடைபெற்றதுபோன்ற படைவீரர் கிளர்ச்சிகளின் மரபில் வந்தது என்பதும் ஒத்துக்கொள்ளக் கூடியதே. ஆனால், தில்லிப் பேரரசுகளின் மரபில் வந்த கடைசிப் பேரரசி அயோத்தி அரசி, பிரமதேசத்தின் அரசுரிமையாளர் நானா சாகிபு, ஜான்ஸி வீர அரசி லக்ஷிமிபாய், ஜகதீசபுரி மன்னன் குமாரசிங்கு ஆகியவர்களும், தாந்தியாத்தோப்பி போன்ற படைத் தலைவரும், மௌல்வி அகம்மதுஷா, அஸிம் உல்லாகான் போன்ற அரசியல்வாதிகளும் அதில் பங்கு கொண்டிருந்தார்கள். தவிர, படைவீரர் கிளர்ச்சிகளைப் போலவோ அல்லது பாஞ்சாலங் குறிச்சி மைசூர்ப் போர்களைப் போலவோ, அது ஒரு குறுகிய இடத்தில் நடைபெறவில்லை. வடவிந்தியாவின் மிகப் பெரும்பகுதியிலும் அது கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் பேரளவில் நடைபெற்றது. தில்லி, மீரத்து, ரோஹில்கண்டு, ஆக்கிரா, காசி, அலகாபாது, பாட்டினா, ஆஜ்மீர் என்னும் பல நகரங்கள் அதன் முக்கியப் போர்க்களங்களாய் நிலவின. போரிட்ட தலைவர்களும், படைகளும் மிகுதி. படைக்கலங்களும் பலவகைப் பட்டவை. ஆனால், குறிக்கோள் ஒன்றாதலால், அது எங்கும் திட்டமிடப்பட்ட ஒரே மக்கள் போராக நடைபெற்றது. மேலும், போருக்காளான நாட்டின் இப்பெரும் பகுதியிலும் பிரிட்டிஷ் ஆட்சியும் ஆதிக்கமும் இரண்டோர் ஆண்டுகள் சாய்ந்து ஓய்ந்து விட்டன. அவ்விடங்களில் ஆண்டுக் கணக்கில் விடுதலை ஆட்சி நடைபெற்றது. புரட்சிக்கால விடுதலை ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சியின் ஆட்சித் தொடர்பு, படைத் தொடர்பு, செய்திப் போக்குவரவுத் தொடர்பு ஆகிய யாவற்றையும் துண்டித்துவிட்டது. மேல் திசையில் இலாகூரிலிருந்து, கிழக்கே கல்கத்தா வரை புரட்சிக்காரர் கைப்பட்டது. மேற்கிந்தியாவிலிருந்து செய்தியோ படையோ கல்கத்தா செல்ல வேண்டுமானால், கடல் வழியாகத் தென்னிந்தியாவைச் சுற்றிக்கொண்டுதான் செல்ல வேண்டும். அல்லது தென்னிந்தியா வழியாகச் செல்ல வேண்டும். மைய வடவிந்தியாவின் நிலை பற்றி வெளி உலகத்தில் செய்தி பரவ ஆண்டுக்கணக்கான தாமதம் ஏற்பட்டது. புரட்சியின் குறைபாடுகளும் விளக்கங்களும் ஆனால், பிரிட்டிஷாருக்கு நல்ல காலமாக 1857-ல் பிரிட்டிஷார் கையில் கடலாதிக்கம் இருந்தது. மேற்கு, தெற்கு, கிழக்குக் கோடிகளும் அவர்கள் பிடியில் இருந்தன. இந்நிலையைச் சுட்டிக்காட்டி 1857-ல் எழுந்த விடுதலை இயக்க வரலாறு எழுதிய திரு அசோக மேத்தா, அதற்குச் சில விளக்க உரைகள் தருகிறார். புரட்சியில் கிளர்ந்தெழுந்த பகுதி இந்துஸ்தானி பேசும் வடநாட்டுப் பெரும்பகுதியே என்றும், பிற பகுதிகள் பொதுவாகவும், தென்னாடு சிறப்பாகவும் அதில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இதற்கு அவர் தரும் விளக்கம் விசித்திரமானது! வடவிந்தியாவில் படை வீரராயிருந்தவர் பெரும்பாலும் உயர் வகுப்பினராயும், பிராமணராயும் இருந்தனர்; தென்னிந்தியாவில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவராய் இருந்தனர். தாழ்த்தப்பட்டவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை ஓட்டிச் சலுகைகளை எதிர்பார்த்ததால், அவர்களிடையே அயல்நாட்டு வெறுப்பும் தேசீய ஆர்வமும் கனன்றெழவில்லை. இதுவே அசோக மேத்தா தென்னிந்தியாவின் தனிச்சிறப்புக்குத் தரும் காரணம். ஆனால், புரட்சியின் சூழ்நிலைகளை விளக்கும் முறையில் திரு. அசோக மேத்தாவைவிடத் திரு. சவர்க்கார் தொலை நோக்குடையராயும் தேசீய மனப்பான்மையுடையராயும் விளங்குகிறார். உண்மையில் 1857-ல் தேசீய ஆர்வத்தில் மொழி எல்லை, நாட்டெல்லை எதுவும் இல்லை. இந்திய மாநில முழுவதும் ஒரே உணர்ச்சியுடையதாகவே இருந்தது. இயக்கத்தைத் தொடங்கி நடத்திய தலைவர்கள் கங்கைக் கரையிலிருந்தார்கள். ஆனால், இந்தியா முழுமையிலுமே அதைப்பரப்ப அவர்கள் முயற்சி எடுத்துக் கொண்டார்கள். இந்தியா முழுவதுமே அதன் எதிரொலிகள் எட்டவும் செய்தன. ஆனால், தொலைமிகுந் தோறும் தொடர்பு குறைந்தது; தடைகள் பெருகின. பிரிட்டிஷ் இந்தியாவின் அக்காலத் தலைநகரான கல்கத்தாவிலும், பாதுகாப்பெல்லையான வடமேற்கிலுமே பெரும்பகுதி ஆங்கிலப் படைகள் இருந்தன. அத்துடன் மேற்கிந்திய எல்லையிலும் தென்னிந்தியாவிலும் இயக்கம் பரவாமல் இரு திசைகளிலும் இரண்டு வரிசை அடிமை இந்திய அரசுகள் உண்டுபண்ணப்பட்டிருந்தன. இதனால், மேற்கிந்தியாவில் புரட்சியின் அதிர்ச்சி இருந்தாலும், எழுச்சி ஏற்பட முடியவில்லை. தெற்கே அதிர்ச்சி கூட ஏற்பட முடியாமல், இந்த அடிமை நாட்டரசுகள் தடுத்தன. அதிர்ச்சி தோற்றியதும் மிகப் பிற்பட்டேயாதலால், அது எளிதில் நசுக்கப்பட்டது. இந்த நாட்டரசுகள் எவ்வாறு ஏற்பட்டன? மேற்கே இரஞ்சித சிம்மன் பிரிட்டிஷ் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்திய வீரன். அவனுக்குப் பின் சூழ்ச்சியால் பாஞ்சாலம் வீழ்ந்தது. பழைய அரசுகள் வீழ்த்தப்பட்டு,அவற்றில் முழுதும் அடிமை மனப்பான்மையுடையவர்களும், பிரிட்டிஷாரைச் சார்ந்தே அரசுரிமை பெற்றவர்களுமே அமர்த்தப்பட்டார்கள். இவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் உதவியாலேயே தோன்றிப் பிழைத்து வாழ்ந்து வந்தவர்களாதலால், தேசீய ஆர்வத்தை அவர்கள் நசுக்கப் புறப்பட்டது வியப்புக்குரியதன்று. தெற்கிலும் மராட்டிய அரசுகள், நிஜாம் ஆகியவை இதுபோன்ற நிலையிலிருந்து புரட்சிச் செய்திகள் தெற்கே பரவாமல் தடுத்தன. தென்கோடியில் தமிழகத்தில் பாஞ்சாலங்குறிச்சி வீர மரபும், அதற்குத் துணைபுரிந்த வீர மரபுகளும், வடக்கே மைசூரில் திப்புவின் வீர மரபும் ஒழிக்கப்பட்டிருந்தன. அவர்களை எதிர்க்க உதவிய அடிமை மரபுகள் மட்டுமே இங்கே எஞ்சியிருந்தன. புரட்சியின் குரல் கூடிய மட்டும் இந்தியாவின் கோடிகளில் எட்டாமலும், எட்டியபோதும் எதிரலை எழாமலும் காத்த அடிமைக் கோட்டைகள் இவைகளே. அது மட்டுமன்று, வடவிந்தியாவிலேயே புரட்சி தோற்றதற்கு மிகப்பெரும் பொறுப்பு வகிக்க வேண்டியவர்களும் இவர்களே. உரிமை வேட்கையின் எல்லையை மொழி எல்லை தடுத்து நிறுத்தவில்லை. மேற்கிலுள்ள மராட்டியர் புரட்சியில் கிளர்ந் தெழாமல் அடிமை மன்னர் மரபுகள் காத்தன. ஆனால், குவாலியர் போன்ற அரசுகளில் மன்னரை மீறி வீரர் கிளர்ச்சியை வெற்றிகரமாக நடத்தினர். மேலும், வடக்கே இதே மராட்டிய மரபினரான நானாசாகிபும், ஜான்ஸி லட்சுமிபாயுந்தான் இயக்கத்தின் முதற் சிறப்பு வாய்ந்த தலைவராயிருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. சீக்கியர் படைகளும் கூர்க்கர் படைகளும் புரட்சியில் கலவாதிருந்ததுடன் அதை அடக்கும் வகையிலும் பயன்படுத்தப் பட்டன என்பது உண்மையே. இவை, தென் இந்தியாவைச் சேர்ந்தவையல்ல. வடவிந்தியாவுக்கு உரியவையே எனினும், இது பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியின் வெற்றிமட்டுமே. வடவிந்தியாவில் முதன் முதல் பிரிட்டிஷாரின் சூழ்ச்சிக் கருவிகளாய் இருந்து பாஞ்சாலத்தின் வீர சுதந்தரத்தைச் சூறையாடவும். கூர்க்கரின் வீர சுதந்தரத்தைத் தாக்கவும் பயன்பட்டவர் உத்தரப் பிரதேசம் அல்லது கோசலத்திலுள்ள உரோஹில்ல வீரரே ஆனால், பிரிட்டிஷாரை எதிர்ப்பதில் அவர்கள் முனைந்தபோது பிரிட்டிஷார் அவர்கள்மீது பாஞ்சால சீக்கியருக்கும், கூர்க்கருக்கும் இருந்த பகைமையைக் கிளறி அவர்களைக் கருவியாக்கிக் கொண்டனர். இன்றளவும் உரோஹில்ல வீரமரபினர், ஒன்று குற்றப்பரம்பரையினராகவோ அல்லது போர்த்திறமற்றவர்களாகவோ ஆங்கிலச் சூழ்ச்சிக்காரப் படைத்தலைவரால் ஒதுக்கப்பட்டுள்ளனர். தென்னிந்தியாவின் மறவர் வகுப்புகளின் நிலையும் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் போர்த்திற வகுப்புகள் என வகுக்கப்பட்ட வற்றில் வீர மராட்டியரும் உரோகில்லரும் இடம் பெறாதது போலவே, தமிழரும் பிற தென்னிந்தியரும் பொதுவாக இடம் பெறவில்லை. ‘தமிழரின் வீரம் அடிமை வீரமன்று; தேசீய வீரமே’ என்பதற்கு இதைவிட நல்ல சான்று வேறு வேண்டுவதில்லை. அவர்கள் ஒரு சுதந்தரப் போரில் வீழ்ந்து, மறு சுதந்தரப் போரில் எழுமுன் பிரிட்டிஷார் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு உள்ளானார்கள்: அவ்வளவே! சீக்கியரையும் மராட்டியரையும் போலவே தென்னிந்திய வீரரும் அடிமை மன்னர் ஆட்சியாலும் புரட்சி தொடங்கிய இடத்தின் தொலையாலும் செயலற்றிருந்தவர் ஆவர். அவர்களின் செயலின்மை இயற்கைச் செயலின்மையன்று; பாஞ்சாலங்குறிச்சிப் புரட்சி மைசூர்ப் போர்கள் ஆகியவற்றின் பின் விளைவேயாகும். பிராமணரிடமும் உயர் வகுப்பினரிடமும் வடநாட்டில் தேசியக்கனல் கிளர்ந்தெழுந்ததும், தாழ்த்தப்பட்டவரிடம் அது தூங்கிக் கிடந்ததும் உண்மையே. இதுவும் ஓரளவு பிரிட்டிஷார் பிரித்தாளும் சூழ்ச்சியின் பயனே. முதலில் பிரிட்டிஷாரின் கருவியாயிருந்த உயர் வகுப்பினர் கிளர்ந்தெழுந்தபோது அவர்களால் அடக்கி வைக்கப்பட்டிருந்த பிற வகுப்பினர் கிளர்ந்தெழாதது எதிர்பார்க்கத்தக்கதே. ஆனால், தென்னாட்டின் நிலைமை இதற்கு நேர் மாறானது. இங்கே படைத்துறை தவிர, மற்ற இடங்களில் உயர் வகுப்பினரே அன்றும், பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவுக் காலம் வரையும், அயலாட்சியின் கருவிகளாய் இருந்து வந்தனர். பொதுமக்கள் கிளர்ச்சிகளான பாஞ்சாலங்குறிச்சி மைசூர்ப் புரட்சிகளின் போது இவர்கள் தட்டிக் கொடுக்கப்பட்டார்கள்: சலுகைகள் பெற்று அடிமை மரபினர்களானார்கள். இவர்கள் வடநாட்டில் கிளர்ந்தெழுந்தது போலக் கிளர்ந்தெழாதற்கு இது காரணம். இவர்கள் எழாத போது தாழ்த்தப்பட்டவர்க்குத் தரப்பட்ட சலுகையால், இரு வகுப்பினரிடையே வேற்றுமை எதுவும் ஏற்பட இடமில்லாது போயிற்று. ஆட்சிக் குழுவினரான உயர் வகுப்பினர் எழாதபோது மற்றையவர் எழ வழி ஏற்படவில்லை. இங்ஙனம் 1857 புரட்சி இந்திய மாநிலப் புரட்சியாய் எழுந்ததாயினும், வரலாற்று மரபு, சூழ்நிலைகள் காரணமாக, இந்தியாவின் முழுநிறை புரட்சி ஆக முடியவில்லை. இதற்கு உலகச் சூழ்நிலைகளும் உதவின. அது 1857க்கு முன்பு எழுந்திருந்தால், சீக்கியர் எழுச்சி, கூர்க்கர் எழுச்சி, பாஞ்சாலங் குறிச்சிப் புரட்சி, ஆப்கனிஸ்தான் போர் ஆகியவற்றுடன் சமகாலத்ததாகி, முழு இந்திய மாநில இயக்கமாய் வளர்ந்திருக்கும். 1857ஐ அடுத்துப் பாரஸீகப் பூசல், சீனப் போர், கிரீமியாப் போர் ஆகியவை முடிந்துவிடாமலிருந்தாலும், இந்நிலை ஏற்பட்டிருக்கும். புரட்சி விரைவில் அடக்கப்பட, இத்தகைய உலகச் சூழல்கள் உதவின. உலக எல்லையில் அலை எதிர் அலைகள் குறைபாடுகளுக்கிடையிலும், 1857 புரட்சி இந்தியாவின் முதல் மாநிலப் பெரும்புரட்சி மட்டுமன்றி, இந்திய மாநிலத்தின் வீறுமிக்க ஒரே பாரத காவியமுமாகும். பாஞ்சாலங்குறிச்சி வீர காவியத்தை அதன் முகப்பு வாயிற்கோபுரம் என்று கூறலாம். விடுதலை இயக்கம் 1857க்குப்பின் அரசியல் இயக்கமாய் நடந்தாலும், போராய் மீண்டும் இந்திய மண்ணில் அஃது என்றும் நடைபெறவில்லை. தலைவர் பெருந்தகை சுபாஷ் போஸின் போர், இம்மரபில் வந்த போரேயானாலும், அது மலேயா, பர்மா என்னும் இடங்களில் உருவாகி, அஸ்ஸாம் எல்லைப் புறங்களில் மட்டுமே நடைபெற்றது. இரண்டாம் உலகப் போரின் போக்கால் அப்போரும், மாநிலப் போராக வளருமுன், இடையிலேயே முறிவுற்றது. உலக வல்லரசாயிருந்த பிரிட்டனை உலக அடிப்படை யிலேயே எதிர்த்தழிக்க முடியும் என்று தலைவர் பெருந்தகை போஸ் கருதியது போலவே திப்பும் கருதியிருந்தான் என்பதை அறிகிறோம். பாஜிரா பேஷ்வாவின் உரிமையாளரான நானா சாகிபு, அத்தலைவர்களுள் ஒருவர். அவர் மரபுரிமை கோரி அவருடைய பிரதிநிதியாய் இங்கிலாந்தில் வழக்காடச் சென்றிருந்த அரசியலறிஞர் அஸிமுல்லாகான் என்பவர். இந்தியாவிலிருந்தே வந்திருந்த மற்றோர் அறிஞர் ரங்கபாபு என்பவர். இவ்விருவரும் பிரிட்டனிலிருந்து கொண்டே இந்தியாவின் நிலைபற்றி ஆராய்ச்சிகள் செய்து மூலத்திட்டம் வகுத்தனர். இவ்விரு அரசியல் தலைவர்களுள் ரங்கபாபு நேராக இந்தியா வந்துவிட்டார். ஆனால், அஸிமுல்லாகான் இந்தியாவில் பிரிட்டிஷ் பிடியைத் தடுக்கும் அதே சமயத்தில், பிரிட்டிஷ் பேரரசை உலகெங்கும் தாக்க வகை தேடவேண்டும் என்று எண்ணினார். இந்நோக்கத்துடன் அவர் ஐரோப்பா எங்கும் பயணம் செய்தார். பின்பு அவர் முஸ்லிம் உலகின் நடுநாயக அரசான துருக்கியையும், அடுத்து, அவ்விரு நாடுகளின் ஒத்துணர்வையும், முடியுமானால் ஒத்துழைப்பையும் நாடினர். இவை எவ்வளவு தொலை பயன்பட்டிருக்கத்தக்கவை என்பது இப்போது கூற முடியவில்லை. வரலாற்றின் போக்கு அவ்வொத்துழைப்பை வரவழைக்கு முன், புரட்சி விரைந்து முடிவுற்றுவிட்டது என்றே கூற வேண்டும். அஸிமுல்லாகானும், ரங்கபாபுவும் இந்தியா வருமுன்பே 1856லிருந்தே நானாசாகிபு புரட்சிப் போரை இந்திய மாநில அடிப்படையில் தொடங்க எண்ணி, இந்தியா முழுவதுமுள்ள மன்னர், படைவீரர், மக்களுக்குத் தூதுவர்களையும் பிரசாரர் களையும் தம் கையொப்பமிட்ட கடிதங்களுடன் அனுப்பி யிருந்தார். அயோத்தியை ஆங்கிலேயர் கைப்பற்றின அட்டூழியம் கேட்டபின், இந்தியாவெங்குமிருந்து இவ்வழைப்புகளை ஏற்று மறுமொழிகள் வந்தன. இதன் பின்பு மாநிலத்தின் பல்வேறு கோடிகளிலும் புரட்சிகரமான சுவரொட்டி விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருந்தன. 1857-ஆம் ஆண்டுத் தொடக்கத்திலேயே சென்னையில் விடுதலைப் போர் அறிவிப்புகள் சுவர்களில் தீட்டப்பட்டிருந்தன என்று அறிகிறோம். அயோத்தியில் மற்றொரு புரட்சிப் பெருந்தலைவரான மௌல்வி அகம்மதுஷா இருந்தார். இவர் 1852லிருந்தே புரட்சிச் சங்கங்களை அமைத்து வளர்த்து வந்ததாக அறிகிறோம். பேனா வீரர், வாள் வீரர் என்னும் இரு தகுதியும் ஒருங்கேயுடைய இப்பெரியாரையே நாம் புரட்சியின் தந்தையார் என்னலாம். இந்தியாவெங்கும் இரகசியப் புரட்சிச் சங்கங்களை ஒழுங்கமைத்த தலைவர் இவரே. புரட்சி இயக்கத்தின் மற்றப் பெருந்தலைவர்களான நானா சாகிபு, அஸ்முல்லாகான் என்பவர்கள் கான்பூர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஆக்கிரா, தில்லி, மீரத்து, பாட்டினா, கல்கத்தா என்னும் இடங்களில் தீவிரப் புரட்சிச் சங்கங்கள் இருந்தன. தெற்கிலும் சங்கங்கள் அமைக்க முயற்சிகள் நடைபெற்று வந்தன என்பதை அறிகிறோம். இவற்றிடையே மிக விரைவான எழுத்துப் போக்கு வரவுகள் இருந்தன. இந்தியா முழுவதும் ஒன்றுபட்டு ஒரே நாளில் மே 31-ஆம் தேதி புரட்சி தொடங்குவதென்று திட்டம் செய்யப்பட்டிருந்தது. தொடக்க நாள் மறைவாகவே வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தலைவர்களுக்குள் அது தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்நாளில் புரட்சித் தொடக்கத்தின் அறிகுறியாக எங்கும் செவ்வல்லி மலரை அனுப்புவது அல்லது அடையாள வேட்டுகள் போடுவது என்று தீர்மானித்திருந்தனர். அணை உடைந்தது திட்டப்படி புரட்சி தொடங்கும் நாளுக்காகத் தலைவர்கள் காத்திருந்தார்கள். படைவீரரும் அதற்குச் சித்தமாயிருந்தனர். ஆனால், மக்களால் அவ்வளவு பொறுமையாக இருக்க முடியவில்லை. மடை திறக்குமுன் வெள்ளம் எந்தவிடத்தில் எந்தச் சமயத்தில் அணையுடைத்துப் பீரிட்டுவிடுமோ என்ற நிலை இருந்தது. புரட்சித் திட்டம் பற்றியும், அதன் வலிமை பற்றியும் ஆட்சியாளருக்கு எதுவும் தெரியாமலிருந்தது. ஆகவே, அவர்கள் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் இச்சூழலிடையே நெருக்கடியை உண்டுபண்ணின. அவர்கள் இந்தியப் படைவீரரை அடக்கி ஒடுக்க முயன்றார்கள். அது முடியாத இடத்தில் அவர்கள் படை வீரர்கள் படைக்கலங்களைக் கீழே போடச் செய்து அமைதியாக இந்தியப் படைகளைக் கலைக்க முயற்சி யெடுத்துக் கொண்டார்கள். இவ்வவமதிப்பை வீரரால் பொறுக்க முடியவில்லை. தலைவர்கள் கட்டளையை எதிர்பார்த்து வீரர்கள் பலவிடங்களில் பொறுமையாயிருக்க முயன்றார்களானாலும், புரட்சித்திட்ட விவரமறியாத நிலைமையில் மக்கள் படை வீரர்களின் உணர்ச்சியைக் கிளறித் தூண்டினார்கள். பல இடங்களில் அவர்கள் தாங்களே கிளர்ந்தெழுந்தார்கள். மார்ச்சு 29-ஆந் தேதியன்று வங்காளத்திலிருந்த 19-ம் பிரிவுப்படை ஆயுங்களைக் கீழே போடும்படி கட்டளையிடப் பட்டது. பலரும் ஆயுதங்களைக் கீழே வைத்தனர். ஆனால், மங்கள பாண்டே என்ற பெருவீரன் ஆயுதத்தைக் கீழே வைக்க மறுத்ததுடன், வெள்ளைத் தலைவர் சிலரைச் சுட்டும் வீழ்த்தினான். இதற்காக அவன் ஏப்ரல் 8-ஆந் தேதி தூக்கிலிடப்பட்டான். இச்சிறு செய்தி இந்தியா முழுவதும் படை வீரரிடையே பெருங் கொதிப்பை உண்டுபண்ணிற்று. கீழ்க் கோடியில் நடைபெற்ற இதன் எதிரொலி, மேற்கோடியிலுள்ள அம்பாலாவில் கேட்டது. இங்கே படைகள் கிளர்ந்தெழுந்து வெள்ளையர் வீடுகளைத் தாக்கித் தீ எழுப்பின. இதனையடுத்து மீரத்தில் புரட்சியின் முதல் பெருந்தீயே கிளம்பி விட்டது. ஆறு மணி நேரத்தில் மீரத்தில் வெள்ளையராட்சி தடைபட்டு விட்டது. படைவீரர் எங்கும் வெள்ளையர் தடத்தை அழித்துக் கொண்டு தில்லி நோக்கிப் புறப்பட்டனர். தில்லியும் புரட்சியுணர்ச்சியுடன் துடிதுடித்துக் கொண்டிருந்தது. முகலாயப் பேரரசரான பகதூர் ஷா, தம் குடும்பத்துடன் புரட்சியில் கலந்து, அதற்குத் தலைமை தாங்கினார், மே 11-ஆந் தேதிக்குள் மீரத்தைப் போலவே தில்லியும் விடுதலை பெற்றுவிட்டது. புரட்சியில் மக்கள் துடிப்புக்கும் ஆர்வத்துக்கும் ,மீரத்துப் படைவீரர் எழுச்சி ஒரு முதல் தரச் சான்று. ஆனால், இதுவே புரட்சியின் வலுவைக் குறைக்கவும் வழி செய்தது. புரட்சியின் வலிமை பற்றியும், திட்டம் பற்றியும் பிரிட்டிஷார் அதுவரை பெரிதும் அசட்டையாயிருந்தனர். மீரத்து எழுச்சி அவர்களுக்கு ஒரு நல்லெச்சரிக்கையாயிற்று. முழுப் புரட்சிக்குக் குறிக்கப்பட்ட நாளுக்கு அப்போது மூன்று வாரங்கள் இருந்தன. அதற்குள் வெள்ளையர் புரட்சியைச் சமாளிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யவும், படைவீரர்களை நம்பாமல் முன் கருத்துடன் நடவடிக்கைகள் எடுக்கவும் வகை ஏற்பட்டது. அவர்கள் சீக்கியப் படைவீரரிடையே மற்ற வகுப்பினர் பற்றிய வெறுப்பைத் தூண்டிப் பிரசாரம் செய்தார்கள்; அடிமைத் தனமும் கோழைத்தனமும் உடைய மன்னர் மரபுகளைத் தங்கள் பக்கம் திரட்டினார்கள். மேற்கில் பாஞ்சாலத்தில் புரட்சி பரவாமல் தடுக்க ஸர்ஹென்றி லாரன்ஸ், ஸார் ஜேம்ஸ் லாரன்ஸ் என்னும் படைத்தலைவர்கள் அரும்பாடுபட்டார்கள். அவர்கள் முயற்சியால் பாட்டியாலா, நாபா, ஜிந்து முதலிய பல நாட்டு மன்னர். பிரிட்டிஷார் கைப்பாவைகளாயினர். அவர்களும் இந்தியப் படைஞர்களும் புரட்சியை ஒடுக்குவதில் பிரிட்டிஷ் வீரரும் மலைக்கும்படி உழைத்தார்கள். அவர்கள் உதவியாலே தான் பாஞ்சாலத்தின் வீரம் இந்தியப் பெரும்புரட்சிக்குப் பயன்படாமல் போயிற்று. ஏனெனில், டில்லி வீழ்ச்சியின் பின் மேற்செல்லவிருந்த புரட்சிக்காரரை அவர்கள் மீண்டும் தில்லிக் கோட்டைக்குள் செல்லும்படி செய்தார்கள். மேற்கேயுள்ள புரட்சிக்காரர் தில்லியின் உதவி பெறாமலும், தில்லி செல்லாமலும் அவர்கள் தடுத்தார்கள். புரட்சி வெள்ளமும் குருதிப் பெருக்கும் ரோஹில்கண்டு, காசிப்பகுதி, அலகாபாது, கான்பூர், ஜான்ஸி, அயோத்தி என்னும் இடங்களில் மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களுக்குள் புரட்சி வெள்ளம் பெருக்கெடுத் தோடிற்று. ரோஹில்கண்டின் தலைநகரான பாரில்லியில் எதிர்பாரா வகையில் மே 31-ஆந் தேதி வெள்ளையர் வீடுகளில் தீப்பற்றியது. பீரங்கிப் படைத் தலைவரான பகத்சிங்கு என்பவரின் தலைமையில் படைப் பிரிவுகள் யாவும் ஒற்றுமையுடன் கிளர்ந்தெழுந்தன. ஆறு மணி நேரத்தில் நகரம் விடுதலை வீரர் கைப்பட்டது. அதன் பின்பு பேரரசர் சுற்றறிக்கைக்கு இணங்க, அவர்கள் தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். காசியில் மே 23-ஆந் தேதியே புரட்சி கொழுந்து விட்டெரியலாயிற்று. அதன் பேரொளி சுற்றுப்புறங்களையும் தட்டி எழுப்பிற்று. அஸிம்கார், கோரக்பூர் என்னும் இடங்களி லுள்ள அரசியல் கருவூலங்களிலிருந்து காசிக்கு வந்து கொண்டிருந்த பணத்தை வீரர் சூறையாடினர். பிரிட்டிஷ் படை வீரர்களும், தளபதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள், அச்சமயம் காசியில் வெள்ளையர் தலைவனாகச் சென்னையி லிருந்து வந்திருந்தவன் நீல் என்பவன். அவன் விரைவில் வெள்ளைப் படைகளைத் திரட்டி வந்து எழுச்சியைத் தற்காலிகமாக அடக்கினான். ஆனால், அவன் புரட்சி செய்த வீரர்கள் மீதும், நாட்டு மக்கள் மீதும் பழிக்குப் பழியாக அடக்குமுறைத்தீயை அள்ளி வீசினான். ஆண்களும் பெண்களும், முதியவர்களும், இளம்பாலகர்களும் இரக்கமின்றிப் படுகொலைக்காளானார்கள். இப்படுகொலை மக்களை அச்சுறுத்தும் எண்ணத்துடனும் அடக்கும் எண்ணத்துடனும் திட்டமிட்டு நடத்தப்பட்டது. ஆனால், இதன் பயனாக வெள்ளை ஆட்சி மீது மாநில மக்களுக்கு இருந்த வெறுப்பும் கொதிப்பும் பன்மடங்கு பெருகின. அலகாபாதில் ஜூன் 5-ஆந் தேதி கலவரம் தொடங்கிற்று. பீரங்கிகளைக் காசிக்குச் செல்லும் பாதைப் பக்கம் இழுத்துச் செல்லும்படி காலாட்கள் உத்தரவிடப்பட்டார்கள். காலாட்கள் மறுத்தார்கள். அவர்களைச் சுட்டுத்தள்ளும்படி குதிரைப் படைகளுக்கு உத்தரவு இடப்பட்டது. அவர்கள் தங்கள் நாட்டு உடன் பிறந்தாரைச் சுடுவதற்கு மாறாக, அவர்களுடன் சேர்ந்து கொண்டு, வெள்ளையதிகாரிகளை எதிர்த்தழித்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சி கணத்தில் மறைந்தது. எங்கும் தேசியக் கொடிகளாகிய பச்சைக் கொடிகள் பறந்தன. மௌல்வி லியாகத் அலிகான் தலைமையில் ஒழுங்கான விடுதலையாட்சி வகுக்கப்பட்டது. சீக்கியப் படைகள் துரோகம் செய்ததுடன் நில்லாது, மீந்த பிரிட்டிஷாருக்குப் பாதுகாப்பாயுமிருந்தன. அலகாபாது கோட்டையினுள் அவர்கள் விடுதலையாட்சியினுள்ளும் நீடித்துத் தங்கியிருந்தார்கள். ஜூன் 11-ஆந் தேதி காசியிலிருந்து நீல் படையெடுத்து வந்தான். அலகாபாது பெற்ற விடுதலையை அந்நகர் மீண்டும் இழந்தது. நீலின் புதிய அலகாபாது படுகொலை பழைய காசிப் படுகொலைகளைப் பொய்யாக்கிற்று. காசி, அலகாபாது ஆகியவற்றின் கோரக் கொலைகளுக்குக் கான்பூர் பழி வாங்கிற்று. புரட்சியின் ஒப்பற்ற பெருந்தலைவர்களான நானா சாகிபு, அஸிமுல்லாகான், தாந்தியாத் தோப்பே என்பவர்கள் கான்பூர் பகுதியிலேயே இருந்தார்கள். மற்ற இடங்களைப் போலக் கான்பூர் குறித்த காலத்துக்கு முன் எழாதபடி அவர்கள் பரவி நின்று காத்துக்கொண்டிருந்தார்கள். பிரிட்டிஷார் புரட்சிக்கனல் மூளுவதை அறிந்திருந்தனர். அச்சம் அவர்களைப் பிடித்தாட்டிற்று. ஆனால், நானா சாகிபுவின் வாய் பேசாத் திட்டங்களை அவர்கள் அறியவில்லை. ஆதலால், அவரையே தம் கருவூலத்துக்கும், தம் மக்களுக்கும் கோட்டைக்குள் காவலாக்கினார்கள். ஜூன் 1-ஆந் தேதி வரை பல திட்டங்கள் வகுத்தபின் அன்றிரவில் தலைவர்கள் கங்கை நீரைக் கையிலேந்திக் கொண்டு, விடுதலைக்குத் தம் உயிரையும் தத்தம் செய்வதாகக் சூளுறவு கூறினார்கள். ஜூன் 4-ந்தேதி போர் முறைப்படி நானா சாகிபு பிரிட்டிஷாரிடம் போரறிவிப்புச் செய்து, போர் தொடங்கிவிட்டதைக் காட்டப் பீரங்கிகள் முழங்கச் செய்தார். விரைவில் கான்பூர் முழுவதும், சுற்று வட்டாரங்களும் தேசியத் தலைவர்கள் ஆட்சிக்குள் வந்தன. திறமையான தலைவர்களற்ற மற்றப் பகுதியிலுள்ள வீரர்களைப் போல அவர்கள் தில்லிக்குச் செல்லவில்லை. விடுவித்த இடங்களில் விடுதலை ஆட்சியையே ஒழுங்கமைத்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்ததைவிட நல்ல அமைதியும் சட்ட திட்டங்களும் இவ்விடங்களில் நானாசாகிபுவால் வகுக்கப்பட்டன. கோட்டைக்குள்ளிருந்த வெள்ளையர்கள் நீண்ட முற்றுகைக்காளானார்கள். இறுதியில் அவர்கள் சரணடைந் தார்கள். நானா சாகிபு அவர்களுக்குப் பாதுகாப்புடன் அலகாபாது செல்லும் உரிமை தந்திருந்தார். படகுகள் பல அவர்களை ஏற்றிச் செல்லக் காத்துநின்றன. ஆனால், அவர்கள் படகேற எண்ணிய நாள் ஜூன் 23-ஆந் தேதி. அதுவே பிளாஸிப் போரின் நூற்றாண்டு நிறைவு நாள். அன்று தேசிய எழுச்சி மாநிலமெங்கும் கொதித்தெழுந்து பொங்கிற்று. இது தலைவர்களின் திட்டத்தை மீற மக்களைத் தூண்டிற்று. கான்பூர் நிகழ்ச்சி தில்லி விடுதலையைப் போலத் தொலைதூர மக்களைக் கவர்ந்திருந்தது. பல இடங்களில் விடுதலைப் போரை வெற்றிகரமாக நடத்திய படை வீரர்கள் கான்பூருக்கு வந்திருந்தார்கள். காசி,அலகாபாது படுகொலை களிலிருந்து தப்பி ஓடியவரும் அங்கே வந்து குழுமினர். ‘பிளாஸி வீழ்ச்சிக்குப் பழி!’ என்ற உணர்ச்சி எங்கும் அலை அலையாகப் படர்ந்தது. இதன் பயனாக நானா சாகிபுவின் பெருமித நடத்தையை மீறி மக்கள் படகுகளுக்குத் தீ வைத்தார்கள். வெள்ளையர் ஆடவர் பெண்டிர் அனைவரும் தீக்கும், ஆற்று வெள்ளத்துக்கும் இரையாயினர். ஒரு சில வீரரே தப்ப முடிந்தது. நானா சாகிபுவின் இளமைக்கால விளையாட்டுத் தோழியே இப்போது ஜான்ஸியின் இராணி லக்ஷ்மிபாயாய் இருந்தாள். கணவனிறந்த பின் அவள் தன் வளர்ப்புப் பிள்ளை தாமோதரராவை அரசனாக்க விரும்பனாள். பிரிட்டீஷார் இதனை ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் வீரராணி 4-ஆந் தேதியன்று தானே தலைமை ஏற்றுப் புரட்சித் தீயில் குதித்தாள். மக்களும் உளம் கொதித்தெழுந்தார்கள். வெள்ளையராட்சி விரைவில் சரிந்தது. வெள்ளை அதிகாரிகளும் பிறருமாக நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தலைகள் வாளுக்கிரையாயின. தாமோதர ராவின் பார்வையாளராக, வீரராணியின் விடுதலையாட்சி நிறுவப்பட்டது. அயோத்தியும் பீகாரும் அயோத்தியில் ஸர் ஹென்றி லாரன்ஸ் புரட்சியைத் தடுக்க அனுப்பப்பட்டிருந்தான். ‘புரட்சி இன்று எழும்! நாளை எழும்!’ என்ற பேச்சுக்கள் கேட்டு அவன் ஓயாது நடவடிக்கை எடுத்து எடுத்து ஏமாற்றம் அடைந்திருந்தான். எனவே, மே 31-ஆம் தேதியன்று, அவன் புரட்சி பற்றி அசட்டையாயிருந்துவிட்டான். அன்றிரவு அவன் அமைதியுடன் உணவு உண்ணும் சமயத்தில் அவன் மாளிகையே தீப்பற்றிக் கொண்டது. லக்னோ நகரெங்கும் ஒரே நாளில் புரட்சிக்காரர் கைப்பட்டது. ஒரு சில வெள்ளையர் மட்டும் நகரின் கோட்டையில் சென்று பதுங்கியிருந்தனர். இந்தியாவின் மற்றெந்தப் பகுதிகளையும்விட அயோத்தியிலே தான் புரட்சி மிகவும் உக்கிரமாகத் தாண்டவமாடிற்று. லக்னோவில் மட்டுமன்றி, சீதாபுரி, பஃகாபாது, பார்ஹெயிசு, ரூக்ஸஃபைஃஜா பாது என்னும் பல இடங்களிலும் ஆதிக்கத் தூண்கள் முறிந்து வீழ்ந்தன. வெள்ளையர் பல வகை அவதிக்கு ஆளாயினர். ஃபைஃஜாபாதில் புரட்சிப் பெருந்தலைவர்களுள் ஒருவரான மௌல்வி அகம்மதுஷா சிறைபட்டுத் தூக்குத் தண்டனைக்குக் காத்துக் கிடந்தார். ஆனால், அவரைத் தூக்கிலிடுமுன் புரட்சி மூண்டது. மௌல்வி சிறந்த வீரர் மட்டுமன்றி, சிறந்த எழுத்தாளரும் நயத்தக்க நாகரிக முடையவருமாவர். அவர் வெள்ளையர்களுக்குப் புரட்சி முற்ற மூளுமுன், ஓடிச் செல்லும்படி கட்டளையிட்டார். அயோத்தியிலுள்ள மன்னர் பலர் மேற்கிந்திய அடிமை மன்னரைப் போலத் தேசியத்துக்கு மாறாகவும் இல்லை. அதே சமயம் தோற்ற எதிரிக்குக் காட்டும் கருணையையும் வெள்ளையருக்குக் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. லக்னோ கோட்டையிலிருந்த பிரிட்டிஷ் தளபதியான ஹென்றி என்பவன், கான்பூரில் தன் இனத்தவருக்குக் கிடைத்த தோல்வியைப் போக்க முயன்று,வெளியேறித் தாக்குதல் தொடங்கினான். ஆனால், சின்ஹெட்டுப் போரில் பிரிட்டிஷ் படைகள் முழுதும் தோல்வியடைந்து, பீரங்கிகளை விட்டு விட்டு ஓடின. புரட்சிக்காரரின் தலைசிறந்த வெற்றிப் போர்களுள் இது ஒன்று. பீகாரில் புரட்சி இயக்கம் காலத்தால் பிந்தினாலும், தன்மையால் முந்திக்கொண்டது. அங்குக் கமிஷனராயிருந்த டெயிலர் முக்கியத் தலைவர்களுள் சிலரைத் தூக்கிலிட்டும், பலரைக் கைது செய்தும் புரட்சியை முளையிலேயே கிள்ளிவிட எண்ணினான். ஆயினும், பீர் அலி என்பவர் தலைமையில் ஜூலை 3-ஆம் தேதி புரட்சி தொடங்கிவிட்டது. பீர் அலி, புரட்சிக் காரரைத் தாக்கிய பிரிட்டிஷ் படைப் பிரிவின் தலைவனைச் சுட்டு வீழ்த்தினான். ஆனால், அவனும் கைதியாகித் தூக்கிலிடப் பட்டான். இது மீண்டும் பல இடங்களில் புரட்சியைப் பரவச் செய்தது. தனபுரியிலிருந்த படை கிளர்ச்சியிலிறங்கி வீர வெறியுடன் வெளியேறிற்று. தனபுரிக்கு அருகிலுள்ள ஜகதீசபுரி மன்னன், குமாரசிங்கு என்பவன். அவன் எண்பது வயதுக் கிழவனானாலும், இளைஞருக்குமில்லாத வீரமும் போர்முறை அறிவும் உடையவன். தனபுரிப் படை வீரர்களுக்கு அவன் ஆதரவளித்து, அருகிலுள்ள அர்ராக் கோட்டையை முற்றுகையிட்டான். அவர்களுக்கு உதவியாகத் தனபுரியிலிருந்து வந்த படைகளைக் குமாரசிங்கு தன் ஒப்பற்ற குரங்குப் போர் முறையால் சிதறடித்தான். ஆனால் விரைவில் புதிய பெரிய பிரிட்டிஷ் படை வந்தது. ஆகஷ்டு 2-ஆந் தேதி பீபி கஞ்சு என்னுமிடத்தில் நீண்ட நேரம் தோல்வியை எதிர்பார்த்துப் போராடிய பின் பிரிட்டிஷார் வேகமாக எதிர்த்தனர். குமாரசிங்கு பின்வாங்க வேண்டி வந்தது. பிரிட்டிஷார் அவன் அரசாகிய ஜகதீசபுரியைக் கைக்கொண்டனர். அரசிழந்ததுபற்றி வீர மன்னன் வருந்தவில்லை. அதனினும் பாரிய தாய் நாட்டைக் காக்கவே அவன் போரிலிறங்கினான். தில்லியின் விடுதலை முரசம் 1857-ஆம் ஆண்டில் புரட்சிக்காரருக்குக் கிடைத்த பெரு வெற்றிகளின் சிகரமாக தில்லிப் போராட்டம் விளங்கிற்று. மே 11-ஆம் தேதி விடுதலை பெற்ற அந்நகர், மூன்று மாத காலத்துக்கு மேல் விடுதலை ஆட்சியில் இருந்தது. இந்தியாவின் பல இடங்களிலிருந்தும் விடுதுலை பெற்ற படைப் பிரிவுகளும் அவற்றின் தலைவர்களும் அங்கே நாள்தோறும் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். பலர் அரசியல் பொருட்குவைகளைக் கைப்பற்றி வந்து, பேரரசர் பகதூர் ஷாவின் காலடியில் வைத்தனர். பலர் எதிரியின் படைக்கலங்களை ஏராளமாகக் கைப்பற்றிக் கொண்டு வந்து சேர்த்தனர். படைக்கலங்களையும் உணவையும் சட்டை செய்யாமல் போராடிய தில்லி வீரர்களுக்கு இவற்றால் இன்னும் ஊக்கம் மிகுந்தது. நாள் தவறாமல் அவர்கள் ‘நீ முந்தி! நான் முந்தி!’ என்று கோட்டைக்கு வெளியில் முற்றுகை யிட்டிருந்த எதிரிகளைத் தாக்குவதில் முனைந்தார்கள். கோட்டைக்கு வெளியேயுள்ள போராட்டங்களில் புரட்சிக்காரர் உயிரை வெறுத்து மும்முரமாகப் போரிட்டனர். ஆனாலும் சீக்கியரும் கூர்க்கரும் வெள்ளையருடன் நின்று, தமது வீரத்தை இந்திய விடுதலைக் கெதிராகப் பயன்படுத்தியதால், நிலைமை படிப்படியாக மாறுபட்டது. ஹிந்தன் ஆற்றங்கரையில் மே 30-ஆந் தேதி ஏற்பட்ட போராட்டத்தாலும், அதன் பின் ஜூன் 1-ஆந் தேதி பந்தல் கீ சராய்ப் போராட்டத்தாலும் பிரிட்டிஷார் தில்லிச் சுற்றுப்புறத்தை மட்டுமன்றி, நகரின் ஒரு சிறு பகுதியையும் கைப்பற்ற முடிந்தது. ஆனால், தில்லிக் கோட்டையை ஒரு நாளைக்குள் பிடித்துவிடலாம் என்று வெள்ளையர் கண்ட கனவு பலிக்கவில்லை. ஜூன் 16-ஆம் தேதி போர் பற்றிய ஆய்வுரைகளில் காலம் சென்றது. 18-ஆந் தேதிப் போரில் புரட்சிக்காரரே வெற்றி பெற்றனர். வெள்ளையர் கவலைக்கு இடமேற்பட்டது. ஜூன் 23-ஆம் தேதி பிளாஸி நினைவு நாளாதலால், தில்லியில் அதற்கு முன் வந்து குவிந்த வீரர் அத்தனை பேரும், திரண்டு பெரும்போர் செய்தனர். பிரிட்டிஷார் பக்கமும் அடிமை அரசுகள் புதுப் படைகளை அனுப்பி உதவி வந்தன. அவ்வொரு நாள் போராட்டம் ஒரு பெரும் பாரதப் போராய் அமைந்தது. பகத்கான் இப்போது தில்லிப் புரட்சியின் தலைவரானார். ஜூலையில் ஆங்கிலேயர் தாக்குதலுக்கு மாறாக, தில்லி வீரர் எதிர்த்துத் தாக்கத் தொடங்கினர். 9-ஆந் தேதி முதல் 15-ஆந் தேதி வரை வெள்ளையர் படுதோல்விகளுக்கும், பேரழிவுகளுக்கும் ஆளாயினர். பேரரசர் அழைப்பு விளம்பரம் தில்லிப் பேரரசர் இச்சமயம் புரட்சிப் போராட்டத்தைத் தேசப் போராட்டமாக்க அரும்பாடுபட்டார். இந்திய மன்னர் அனைவரையும் தேசீயப் போரில் சேரும்படி அவர் அழைப்பு விடுத்தார். “ஆங்கிலேயர்களை இந்நாட்டிலிருந்து துரத்தியபின் ஏன் தனி நலனுக்காக நான் ஆட்சி புரிய வேண்டுமென்ற அவா எனக்கு எள்ளளவும் இல்லை. பகைவர்களை எதிர்த்து இந்திய மன்னர் தங்கள் வாள்களை உருவுவார்களானால், வெற்றி பெற்றபின் என் உரிமை முழுவதையும் மன்னர்களடங்கிய ஒரு பேரவையிடம் நான் ஒப்புவிக்கத் தயங்கமாட்டேன்” என்று அவர் அறிவித்தார். பேரரசர் குரல் அன்று அடிமை மன்னர் தன்னலக் கோட்டையைத் தகர்த்து, அவர்கள் உள்ளத்தில் சென்று சேர்ந்திருந்தால், இந்திய வரலாற்றின் போக்கு வேறு வகையாய் இருந்திருக்கும். ஆனால், தில்லிக்கு இந்தப் புது வலு ஏற்படவில்லை. தவிர, பேரரசர் நல்லெண்ணம் காலங்கடந்த ஒரு பண்பாகவே அன்றைய நிலையில் இருந்தது. அதை நிறைவேற்றத் தக்க பெருந்தலைவர்கள், நானாசாகிபு, அஸிமுல்லாகான் போன்றவர்கள் மட்டுமே. அவர்கள் தில்லி வரவில்லை. மற்றத் தலைவர்களால் வீரர்களை ஊக்க முடிந்தது. ஆனால், தம்முள் அடிக்கடி ஏற்படும் சச்சரவுகளை அவர்களால் தடுக்க முடிய வில்லை. பிரிட்டிஷார் இதைப் பயன்படுத்திக் கொண்டனர்; நகரினுள் உட்பகைவரை அனுப்பிச் சூழ்ச்சிகளையும் கையாண்டனர். இவற்றால் போரின் வீரத்தில் மாறுதல் ஏற்படா விட்டாலும், பயனில் மாறுதல் ஏற்பட்டது. ஆகஸ்டு 25-ஆந் தேதி புரட்சி வீரர் படுதோல்வி அடைந்தனர். இது பிரிட்டிஷார் இழந்து வந்த ஊக்கத்தை மீட்டும் உயிர்ப்பித்தது. புதிய முற்றுகைப் படைகள் புகை வண்டிகளில் வந்து சேர்ந்த வண்ணம் இருந்தன. செப்டெம்பர் 14-ஆந் தேதி கோட்டையின் நான்கு வாயில்களும் தாக்கப்பட்டன. படிப்படியாக உட்புறம் முக்காற்பகுதி எதிரி வசமாயிற்று; ஆயினும், தில்லி வீரர் அங்குலம் அங்குலமாக நின்று வீரப் போராடினர். அது வெற்றிக்கான போரன்று: தேசத்தின் புகழுக்கான போராய் மாறிற்று. 134 நாள் முற்றுகைக்குப்பின் தில்லி வீரர் பின்வாங்கத் திட்டமிட்டனர். ஆனால், பேரரசர், தம் மூதாதையர் தலைமையிடத்தை விட்டுப்போக இசையவில்லை. அவர் ஹுமாயூன் கல்லறை மாடத்தில் ஒளிந்திருந்து, பின்னால் பிடிபட்டார். இளவரசர் இருவரும் வீரமாகப் போரிட்டு மாண்டனர். மனைவியுடனும் ஒரு செல்வப் புதல்வியுடனும் பேரரசர் குடும்பம் நீண்டநாள் பர்மாவில் மாந்தலே சிறையில் கிடந்து, விடுதலைக் கனவுகளில் தன்னைப் புதைத்தது. புயலுக்குப்பின் சோனா மாரி தில்லி வீழ்ச்சியுடன் விடுதலைப் போர் நின்றதென்றே பிரிட்டிஷார் கனவு கண்டனர். ஆனால், கிழக்கிந்தியாவின் போராட்டம் அதன் பின்னர்தான் உக்கிரமாயிற்று. அது தில்லிப் போருடன் இணைந்திருந்தால், விடுதலைக் காவியத்தின் நடுப்பகுதியாயிருந்திருக்கும். ஆனால், அது வருங்கால விடுதலைக் கனவாளர்களின் வீரத்தை ஊக்கும் வீரகாவியமாயிற்று. குமார சிங்கனின் ஒப்பற்ற குரங்குப்போர் முறைகள், ஜான்ஸி அரசி இலட்சுமிபாயின் மயிர் சிலிர்க்க வைக்கும் வீர நிகழ்ச்சிகள், மாய மனிதனாகிய தாந்தியாத் தோப்பேயின் மனித சத்தி கடந்த போர்த்திறங்கள் ஆகியவை விடுதலைப் போரின் முற்பகுதியைத் தாண்டி இந்திய மக்களின் உள்ளத்தைத் தூண்டின. இவற்றைப் பாட இந்தியாவில் போதிய கவிஞர்கள் இருந்திருந்தால் இந்திய இலக்கியத்தில் பழங்கால இராமாயண பாரதங்களின் புகழ் தாண்டிப் பெருங்காவியங்கள் எழுந்திருந்திருக்கும் என்பது உறுதி. விடுதலை இந்தியாவின் காவியக் கவிஞர், ஓவியக் கவிஞர், வரலாற்றாசிரியர்களுக்கு இந்நிகழ்ச்சிகள் வற்றாத ஊற்றுக்களாய் இருக்கும் என்பது திண்ணம். விடுதலைப் போரை அடக்குவதைவிட, கோட்டைகளைப் பிடிப்பதைவிட, பிரிட்டிஷாருக்கு ஜான்ஸி ராணி, குமாரசிங்கு, மௌல்வி அகம்மது ஷா, தாந்தியாத் தோப்பே ஆகிய தனி மனிதர்களைக் கைப்பற்றுவது பெரும்பாடாய்ப் போயிற்று. ஏனென்றால் அவர்கள் இப்போது தனி மனிதர்களாயில்லை; படைவீரர் தலைவர்களாயும் இல்லை. அவர்கள் மக்கள் தேசிய உணர்ச்சிகளாகிய அலைகளில் மிதந்த புகழ்ப்படகுகளா- யிருந்தார்கள். அவர்கள் வீழ்ச்சி உறுதி. ஆனால், விழுமுன் பிரிட்டிஷார் ஆட்சி சந்தி சிரிக்கும்படியாயிற்று. அவ்வீரர் புகழ் ஓசை இந்திய மக்கள் உள்ளங்களில் மட்டுமன்றி, உலகமக்கள் உள்ளங்களிலும் வியப்பும் மலைப்பும் ஊட்டிற்று. போரைப் படைவீரர் கிளர்ச்சி என்று கூற முனைந்த பிரிட்டிஷ் படைவீரரும் ஆதிக்கவாதிகளும், பிரிட்டிஷ் அரசியல் மன்றத்தில் தங்கள் நிலைமையை விளக்க முடியாது திண்டாடித் திணறினார்கள். அரும்பெருஞ்செயல்களுக்குப் பின் 1858-ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம் 26-ஆந் தேதி குமாரசிங்கு, பிரிட்டிஷார் கையில் பிடிபடாமல், படுகாயங்களுடன் தம் அரண்மனையில் அரியாசனத்தில் வீற்றிருந்து உயிர் நீத்தார். அதன் பின்னும் நான்கு மாதம் கழித்தே பிரிட்டிஷார் நாட்டையும் அரண்மனையையும் கைப்பற்ற முடிந்தது. அக்டோபர் 19-ஆந் தேதியன்றே தேசியக் கொடி வீழ்த்தப்பட்டு, பிரிட்டிஷ் அடிமைக்கொடி அரண்மனையில் ஏற்றப்பட்டது. மௌல்வி அகம்மது ஷா அயோத்தியில் மற்றொரு பகுதியில் தனிமனிதராய் நின்று, புரட்சியில் முனைந்த பொது மக்களுதவியுடன் போரிட்டனர். மே 11-ஆந் தேதி முதல் மூன்று நாள் இடைவிடாது போர் செய்து, அவர் துரோகிகள் சூழ்ச்சியால் காட்டிக்கொடுக்கப்பட்டுப் போரிலேயே வீழ்ந்தார். இந்தியாவின் வீரத்தாய் ஜான்ஸி ராணி லக்ஷ்மிபாய், தன் அரசுக்காக மட்டுமன்றி, பல அரசுகளைத் தூண்டி அவற்றின் சார்பிலும் நின்று போரிட்டு, 1858-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆந் தேதி குவாலியரை மீட்கும் பெரும்போரில் காயம்பட்டிறந்தாள். ‘மாய மகாராஷ்டிரப் புலி’ என்று வீர சவர்க்காரால் புகழப்பட்டவர் தாந்தியாத் தோப்பே. அவர் ஜான்ஸி அரசி மாண்ட பின்னும் கங்கைக்கும் நருமதைக்கும் நடுவேயுள்ள பகுதி எங்கும் விடுதலைக் கொடியை ஏற்றியும் இறங்கவிட்டும் பகைவர்களின் பேரெதிர்ப்புக்களைச் சமாளித்து மயிரிழை நெருக்கடிகளுக்கு ஆளாய் நீண்ட போராட்டமாடினார். அடிக்கடி பகைவர் கையில் சிக்கியும் அவர்கள் எக்களிப்புக் கூக்குரலிடையே அவர் தப்பிப் பின்னும் சிறுபுயல்களை எழுப்பி வந்தார். இறுதியில் 1859 ஏப்பிரல் 7-ஆந் தேதி ஒரு நண்பரின் நம்பிக்கைத் துரோகத்துக்காளாகி அவர் சிறைப்பட்டார். பிரிட்டிஷாரும் அவர் வீரப்போராட்டத்தின் புகழால் கவரப்பட்டனர். அவர்கள் விருப்பப்படியே புரட்சியின் நிகழ்ச்சிகளை அவர்தம் கைப்பட எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்தார். இங்ஙனம் புரட்சியின் பெரும்புகழ் வீரராகிய அவரே, அதற்கு அழியா வரலாற்றுப் புகழையும் உண்டு பண்ணினார். ஏப்பிரல் 18-ஆந் தேதி அவர் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டார். புயலாக எழுந்த வடவிந்தியாவின் இப்பெரும் புரட்சி, இந்தியா முழுவதும் இரண்டாண்டுகளில் ஒரே நில அதிர்ச்சியை எழுப்பி, சூறாவளியாக அயலாட்சியை அலைக்கழித்து, மக்கள் அடிமை இருளிடையே மின்னி இடித்தார்த்து, இறுதியில் இருபுறச் சத்திகளையும் சோர்வுறச் செய்து அமைந்தது. இந்தியர் மீண்டும் புரட்சிப் போர் தொடங்கப் பல ஆண்டுகளாயின. ஆனால், அவர்கள் உள்ளத்தின் அடிமை மாசு நீங்கிற்று. பிரிட்டிஷாரோ, அடக்குமுறையிலும் கொடுமையிலும் மாநிலத்தை அடக்கி ஒடுக்கிவிட முடியுமென்ற பழைய நம்பிக்கையைக் கைவிட்டனர்: இனி ஓரளவு ஒழுங்கமைந்த ஆட்சியும் சீர்திருத்தமுந்தான் ஆட்சித் தளையைக் காக்கும் என்பதை உணர்ந்தனர். பிரிட்டிஷ் ஆட்சி முறையின் சீர்திருத்தத்துக்கும் விடுதலை இயக்கத்தின் அரசியல் முறை மறு சீரமைப்புக்கும் 1857 புரட்சி வழி வகுத்தது. அதனுடன் இந்தியாவில் ஒரு பழைய ஊழி முடிவடைகிறது. நில உடைமை, சமயத்தலைமை, அரசியல் அடிமை ஆகிய முத்திறப் பழைமைகளின் ஆதிக்கம் பேரளவில் வலுவிழந்தன. தேசப்பற்று என்ற ஒரே உணர்ச்சியில் அவை பொதுமக்கள் வாழ்வுடன் ஒன்றுபட்டன. அடிமை மன்னர் மரபுகள் புரட்சி தாண்டி வாழ்ந்தன. தென்னாட்டில் பாஞ்சாலங்குறிச்சி தாண்டி அவை வலுப்பெற்றது போல, 1857 தாண்டியும் அவை வலுவடைந்தன. ஆனால், 1857க்குப்பின் அவர்கள் வலு, பிரிட்டிஷ் ஆட்சி வலுவுடன் இணைக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் வீழ்ச்சியும் அவர்கள் வீழ்ச்சியும் 1947 ஆகஸ்டுடன் ஒருநிலைப்பட்டன. 6. பேரவையின் பிறப்பு பேரவையும் மாநில வாழ்வும் அரசியல் முறையில் திட்டமான விடுதலை இயக்க வரலாறு, ‘காங்கிரஸ்’ என்ற ஆங்கில மொழிப்பெயரால் வழங்கும் இந்திய மாநிலப் பேரவையின் வரலாறே என்று கூறலாகும். பேரவைக்கு முற்பட்ட விடுதலைப் போராட்டங்கள் அணையும் கரையுமற்ற புயல் வெள்ளங்கள் அல்லது கானாறுகள். அவற்றை ஒழுங்கமைத்து ஒரே அரசியல் இயக்கமாக்கியது பேரவையே. புயல் வெள்ளமும் கானாறும் வீறமைதியுடைய அகன்ற காவிரியாய், மக்கள் வாழ்வை வளப்படுத்தின. பரந்துபட்ட ஆற்றல் பயனுடைய ஆற்றலாகவும், தற்காலிக ஆற்றல் நிலையான ஆற்றலாகவும் அமைந்தன. உயிரினங்களின் எலும்புச் சட்டமே, உடலின் உறுப்புக்களை இணைத்து, உடலுக்கு ஓர் உருவம் தந்து, உறுதியும் வலிமையும் அளிக்கிறது. அரசியல் விழிப்பில்லாத காலத்தில் நாட்டு வாழ்வு எலும்பில்லா உயிரினங்களின் உடலியக்கம் போன்றது. சமூக, சமய, அரசியல் நிலையங்களே அவற்றுக்கு எலும்புச் சட்டமாய் அமைகின்றன. தேசிய நிலையங்கள் உடலையும் எலும்புச் சட்டத்தையும் தாங்கும் தண்டெலும்பாய் இலங்குகின்றன. மாநிலப் பேரவை இத்தகைய தண்டெலும்பாய் அமைந்து, விடுதலைப் போராட்டங்களை ஒரே விடுதலை இயக்கமாக்கியுள்ளது. அத்துடன் அது மக்கள் வாழ்வையும் இயக்கங்களையும் நிலையங்களையும் விடுதலை இயக்கத்துடன் பிணைத்து, அனைத்தையும் ஒரே தேசிய இயக்கமாக்கியுள்ளது. பேரவை தோன்றிய காலமுதல் பேரவையின் வரலாறே மாநிலத்தின் வரலாறாகவும், மாநிலத்தின் வரலாறே பேரவையின் வரலாறாகவும் காட்சியளிக்கின்றன. ஒன்றை விட்டு மற்றொன்றை வேறாக நாம் காண்பது அரிது. மூன்று தலைமுறைகளாக நாம் இந்தியாவை ஓர் உடலாகவும், பேரவையை அதன் உயிராகவும் எண்ணிப் பழகிவிட்டோம். இந்தியாவின் புதுப்புகழில் நாம் பேரவையின் புத்துருவைக் காண்கிறோம். பேரவையின் பத்தொளியில் இந்தியாவின் புதுப்புகழ் நிழலாடுகிறது. ஒன்றன் ஒளி, மற்றொன்றன் எழிலொளியாய், இரண்டும் ஒரே புகழொளியில் இணைந்து மிளிர்கின்றன. பேரவையின் பிறப்பு, காலப்போக்கில் மேற்பரப்பில் தோன்றிய ஒரு தற்காலிக வளர்ச்சி அன்று, அது மாநில வரலாற்றின் கரு முதலிலிருந்தே முளையூன்றி மாநில வாழ்வு முழுவதும் வேரோடிய ஒரு தனிப்பெரு மரபின் வளர்ச்சி ஆகும். எனவே, நாம் அதன் முழு இயல்பையும் அறிய வேண்டுமானால், அதன் உடனடிச் சூழல் மரபுகளைக் கவனித்தல் மட்டும் போதாது. அம்மரபுகளைக் கடந்து அதன் தொலைக் காரணமான வரலாற்று மரபுகளையும் நாம் உணர வேண்டும். பேரவையின் சூழல் மரபுகள், 1857ல் வீறிட்டெழுந்த புரட்சியின் விளைவுகளே. இம்மாபெரும் புரட்சித் தீ, தானாக அடங்கவும் இல்லை; எளிதில் அடக்கப்படுவும் இல்லை. இஃது இரண்டாண்டுப் போராட்டத்தின் பயனாக, உலகின் புத்தம்புதிய ஆயுதங்களின் உதவியுடன், ஓர் உலக வல்லரசாலேயே அடக்கப்பட்டது. அது மட்டுமன்றி, இதை ஒடுக்கப் பல ஆண்டு நீடித்த அடக்குமுறைகள், நாகரிக உலகு கண்டிராத படுகொலைகள், கொடும்பழிகள் தேவைப்பட்டன. ஆனால், இந்தப் புறத்தோல்வி, மக்கள் அகத்துடிப்பை அகற்றவில்லை. அஃது உள்ளூறக் குமுறிக் கொண்டேயிருந்தது. புறத்தீ அணைந்து, கரியும் புகையும் எங்கும் கவிந்திருந்தன. ஆனால், உள் வெப்பும் புழுக்கமும் எளிதில் ஓயவில்லை. ஆங்காங்கே மறைவில் புரட்சிக் கனல்கள் மூண்டு கொண்டிருந்தன. கொழுந்துவிட்டெரியும் புறத்தீயைவிட மிகுதியாக இந்த அக நெருப்புக்கு ஆட்சியாளர் அஞ்சினர். 1857க்கு முன்னிருந்த நிலையைவிட இது ஆபத்தானது என்று அவர்கள் கருதினார்கள். மக்கள் எதிர்ப்பை அவர்கள் சமாளிக்க முடியும். மக்கள் மனக்கசப்பையும் அகக்குமுறலையும் அவர்கள் சமாளிக்க முடியாது. எனவே, மக்கள் மனக் கசப்பைப் படித்த மக்களின் ஒழுங்கமைதி வாய்ந்த அரசியலியக்கமாக மாற்றுவதல்லாமல், வேறு பாதுகாப்பான வழியெதுவும் ஆட்சியாளருக்குத் தென்படவில்லை. பேரவையின் பிறப்புக்கு வழி வகுத்த உடனடிச் சூழ்நிலை இதுவே. இரு மரபுகள் பேரவை இயக்கத்துக்கு மூலகாரணமான தொலை மரபுகள் இரண்டு: ஒன்று, விடுதலைப் போராட்ட மரபு; மற்றது, மக்கள் வாழ்வில் இயக்க அலைகளை எழுப்பிய புதிய நிலையங்களின் மரபு. இம்மரபுகளுள் விடுதலைப் போராட்டமே உடனடிச் சூழல்களை உண்டு பண்ணிய மரபு ஆகும். அப்போராட்டம் அயலாட்சியை எதிர்த்த போராட்டம். அது வளர்த்த பண்புகள் அடிமை மரபை எதிர்த்த பண்புகள். ஆனால், அஃது அயலாட்சியும் அடிமை மரபும் வளருமுன் இருந்த தொன்முதல் விடுதலையின் புது மறுமலர்ச்சியேயாகும். ஆயினும், புதிய விடுதலை அப்பழைய விடுதலையின் மறு பதிப்பு மட்டுமன்று. அது பழைய விடுதலைக்குப் புத்துயிரையும் புதுப் பண்பையும் அளித்திருந்தது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மாநிலத்தில் விடுதலை ஒளி வீசியிருந்தது. ஓரளவு மாநிலப் பண்பாட்டில் ஒற்றுமையும் நிலவியிருந்தது. ஆனால் ஒற்றுமை, வளமையற்ற ஒற்றுமை. விடுதலை, உயிர்ப்பும் வளர்ச்சிப் பண்பும் குன்றிய விடுதலை. இவ்விரு குறைகளுமே வடவிந்தியாவின் வாழ்வில் பல அயலார் படையெடுப்புக்களுக்கும் அயற்பண்புகளின் தலையீடுகளுக்கும் வழி வகுத்தன. இவற்றாலேயே வலிமை கெட்டது; ஒற்றுமை தவறிற்று; விடுதலை வீழ்ந்தது. ஆயினும், நாளடைவில் பழைய பேரரசுகள் மீண்டும் ஒற்றுமை நாடிப் போராடின. அவை ஓரளவு வெற்றிகளும் கண்டன. எனினும், அயலாட்சியிலேயே முழு வெற்றி கிட்டிற்று. ஏனெனில், அப்போதுதான் மாநில முழுவதிலும் புறவொற்றுமையேனும் நிலவிற்று. விடுதலை இயக்கம் அயலாட்சியின் கருவிலேயே முதிர்ந்தது. அஃது அகவொற்றுமையையும் வலிமையையும் வளர்த்தது. அது புறவொற்றுமைக்கு உயிர் அளித்து நிலையான ஒற்றுமைப் பண்புக்கு வழிவகுத்தது. இங்ஙனம் அடிமை மரபும் அயலாட்சியும் பழைய விடுதலையைப் புடமிட்டுப் புதியதொரு விடுதலைப்பண்பை வளர்க்கும் புடவோடுகளாயின. மேலீடாகப் பார்ப்பவருக்கு அவை விடுதலை மரபின் எதிர் மரபாகத் தோன்றலாம். ஆனால், பகலின் எதிர்ப் பண்பான இரவே, பகலுடன் சேர்ந்து ஒரு நாளாகிறது. பகலின் நிறைபண்பாக அஃது இயல்கின்றது. பகலில் உண்டு உழைத்த உயிரினர் இரவில் ஓய்வும் வளர்ச்சியும் பெறுகின்றது என்று உயிர்நூல் வல்லார் உணர்த்துகின்றனர். அடிமை மரபாகிய அரை ஒளியும் அயலாட்சியாகிய அரை இருளும் இங்ஙனம் புதிய விடுதலைப் பகலொளிக்கு வழி வகுத்தன. விடுதலை மரபு இங்ஙனம் அயலாட்சியும் அடிமை மரபும் கடந்து பண்டை விடுதலை வாழ்வில் வேரூன்றி வளர்ந்த ஒரு நீண்ட தொலை மரபு என்பதைக் காணலாகும். விடுதலைப் போராட்ட மரபை விடுதலை இயக்க மரபாக்க உதவிய பண்பு, மக்கள் இயக்கங்கள் நிலையங்கள் ஆகியவற்றின் மரபே. இதுவும் விடுதலை மரபைப்போல மிக்க பழைமை வாய்ந்ததே. இதன் எழுச்சி தளர்ச்சிகளை உபநிடத இயக்கத்திலும், பத்தி இயக்கங்களிலும், தாய்மொழி இயக்கங்களிலும் காண்கிறோம். தட்சயசீலம், நாளந்தா, காஞ்சீபுரம் ஆகிய இடங்களிலிருந்த பல்கலைக்கழகங்களும், மதுரையிலும் பிற நகரங்களிலும் இருந்து வந்த முத்தமிழ்ச் சங்கங்களும் இவ்வியக்கங்களுடன் வளர்ந்து தளர்ந்த நிலையங்கள் ஆகும். ஆனால், இத்தகைய இயக்கங்களும் நிலையங்களும் புது மலர்ச்சியடைந்து, புத்தூழிக்கு வழி வகுத்த காலம் 19-ஆம் நூற்றாண்டேயாகும். இந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பிரமசமாஜமும் பிரமசமாஜ இயக்கமும் கிளர்ந்தெழுந்தன. இந்நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரிய சமாஜ இயக்கமும் இராம கிருஷ்ண மடமும் பிரமஞான சங்கமும் தோன்றி, மாநிலத்தின் சமய சமுதாய அரசியல் வாழ்வுக்குப் புத்துயிரளித்தன. இவற்றுள் ஒவ்வொன்றும் பல வகையில் நேரிடையாகவும், மறை தூண்டு தலாகவும் பேரவையின் பிறப்புக்கும் வளர்ச்சிக்கும் உதவின. பிரம சமாஜ இயக்கமும், ராஜா ராம்மோகன்ராயும் பிரமசமாஜ இயக்கம் காலத்தால் பேரவையின் பிறப்புக்கு மட்டுமன்றி, 1857 புரட்சிக்கும் முற்பட்டது. அதனைத் தோற்றுவித்த பெரியார் ‘ராஜா ராம்மோகன ராயர் ஆவர். ‘புதிய இந்தியாவின் தந்தையார்’ என்ற அருஞ்சிறப்புப் பெயருக்குப் பேரளவில் உரியவர் அவரே. அவருடன் அப்பெயருக்குப் போட்டியிடத்தக்க இக்காலத்துத் தலைவர் ஒருவரே. அவரே மகாத்துமா காந்தி அடிகள். இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியை நாம் ‘காந்தி ஊழி’ என்று கூறலாமானால், அது போலவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பாதியை நாம் ‘இராம மோகனர் ஊழி’ என்று கூறலாம், இராம மோகனர் பிரம சமாஜத்தைத் தோற்றுவித்தவர் மட்டும் அல்லர்; இந்தியாவிற்கு மேனாட்டுக் கல்வி முறையே சிறந்ததென்று மதித்து, அதற்காகப் போராடியவரும், உடன்கட்டை ஏறுவதைச் சட்ட மூலம் ஒழிக்க அந்நாளைய ஆட்சியாளர் தயங்கியபோது, அது வகையில் அவர்களை ஊக்கிய வரும் அவரே. மேலும், அவர் இளமை மணத்தை எதிர்த்து, மறு மணத்துக்கு ஆதரவு தந்தார். பல தெய்வ வணக்கம், மூடப்பழக்க வழக்கங்கள், குருட்டு நம்பிக்கைகள் ஆகியவற்றையும், சாதி வேறுபாட்டையும் அவர் தாக்கினார். இந்நோக்கங்களே பிரமசமாஜத்தின் நோக்கங்களாய் அமைந்தன; உருவ வணக்கத்தையும் புரோகிதர் ஆதிக்கத்தையும் எதிர்த்து, தூய கலப்பற்ற ஒரு தெய்வ வணக்கத்தையும் மனித இனச் சரிசமமான சகோதரத்துவத்தையும் அவ்வியக்கம் வற்புறுத்திற்று. மாநிலப் பெரும்புரட்சிக்கு முன் அதன் தலைவர்களுக்குள் ஒருவரான நானாசாகிபு மராட்டிய அரசனின் பேராளாகப் பிரிட்டன் சென்றிருந்தாரென்று முன்பே கூறியிருக்கிறோம். அது போலவே, இராம மோகனர் தில்லிச் சக்கரவர்த்தியின் பேராளாகப் பிரிட்டன் சென்றிருந்தார். அச்சக்கரவர்த்தியின் உரிமைகளுக்குப் பேராடிய அதே சமயம், இந்தியர் உரிமைகளுக்கும், புதிய இந்தியாவின் உரிமைகளுக்கும் அவர் போராடினார். இதற்காக அவர் பிரிட்டிஷ் அரசியல் மன்றின் தேர்தலுக்கு நின்று வெற்றி பெற்று, தாம் இறக்கும் வரை அதில் உறுப்பினராயிருந்து தொண்டாற்றினார். தேர்தலில் அவரை ஆதரித்த பிரிஸ்தல் நகரிலேயே அவர் இறுதி நாள் கழிந்தது. பிரமசமாஜம் தீவிர சமய சமூகச் சீர்திருத்த இயக்கம். அது மேனாட்டின் பகுத்தறிவியக்கத்தையும், மேனாட்டு நாகரிக ஒளியையும் இரு கையேந்தி வரவேற்றது. இதன் பயனாக அதனை மேனாட்டு நாகரிகம் சார்ந்த இயக்கம் எனப் போலிப் பழைமையில் தோய்ந்த மக்கள் நினைக்க நேர்ந்தது. அதற்கேற்ப, அதில் படித்த மக்களே பேரளவில் சேர்ந்தார்கள். அது 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வளர்ச்சி குன்றிவிட்டது. இருபதாம் நூற்றாண்டில் அஃது ஆந்திர நாடு, தமிழ் நாடு, கன்னட நாடு ஆகிய தென்னாட்டுப் பகுதிகளிலும் பரவிற்றாயினும் இங்கும் விரைவில் தளர்ச்சியடையவே நேர்ந்தது. பிரம சமாஜ இயக்கம் மேனாட்டு நாகரிகத்தின் நிழல் என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதில் ஐயமில்லை. கீழ் நாட்டில் பல போலிப் பழைமைகளை அது எதிர்த்தது போலவே, மேல் நாட்டிலும் கத்தோலிக்க கிறிஸ்தவ சமயத்தின் உருவ வணக்கம், புரோகிதர் ஆட்சி ஆகியவற்றையும், கிறிஸ்தவரின் மும்மைத் தெய்வ வடிவக் கற்பனையையும், இஸ்லாமியரின் முகமூடி வழக்கத்தையும் அது கண்டிக்கத் தயங்கவில்லை. அதனை மேனாட்டுப் பகுத்தறிவொளியின் நிழல் என்பதைவிட, உபநிடத இயக்கத்தின் புதுமலர்ச்சி என்று கூறுவதே சால்புடையது ஆகும். சமயத் துறையில் அது வேதங்களையும், புராண சுமிருதிகளையும் மேற்கோளாக ஏற்காமல், உபநிடதங்களையே ஏற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரமசமாஜ இயக்கம் போதிய அளவு பொது மக்களிடையே பரவவில்லையானாலும், மாநில வாழ்வில் அது மறைமுகமாக ஆற்றிய விளைவுகள் மிகப் பல. அவை புரட்சி கரமானவை. சமய சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் அனைத்திற்கும் அது முன்னோடி மரபாகவும் தூண்டுதலாகவும் அமைந்தது. சமாஜத்தின் முப்பெருந்தலைவர்களுள் இராமமோகனருக்குப் பின் வந்தவர் கேசப்சந்திர சேனர். அவர் இந்தியாவின் முதல் சமூகச் சீர்திருத்தச் சட்டமான பதிவுத் திருமணச் சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்ற அரும்பாடுபட்டார்; அதில் வெற்றியும் கண்டார். மூன்றாம் பெருந்தலைவர் மகரிஷி தேவேந்திரநாத தாகூர் ஆவார். ‘மகரிஷி’ என்ற அப்பெயரே அவர் சிறந்த பத்திமான் என்பதைக் காட்டும். அத்துடன் அவர் வங்கத்தின் தலைசிறந்த மறுமலர்ச்சிக் கவிஞருள் ஒருவர். கல்வித் துறையில் அவர் ஆற்றிய அரும்பணி பெரிது. அவர் பண்புகள் யாவற்றுக்கும் உரிமையாளரான அவர் புதல்வர் இரவீந்திர நாததாகூர், வங்கத்தின் கவிச் சக்கரவர்த்தி ஆவர். அவர் புகழ் உலக முழுவதும் பரந்துள்ளது. உலகக் கவிஞர்களுக்குத் தரப்படும் ‘நோபெல் பரிசு’ அவருக்குத் தரப்பட்டிருந்தது. தந்தையாரும் மைந்தரும் கண்ட கல்வித்துறைக் கனவுகளுக்குச் சான்றாக, சாந்தி நிகேதனமும் விசுவபாரதி பல்கலைக் கழகமும் இன்றும் நின்று நிலவுகின்றன. பேரவை வாழ்வுக்குப் பிரமசமாஜம் நேரடியாகத் தந்த பரிசும் ஒன்று உண்டு: சமாஜத்தின் தலைவருள் ஒருவரான ஆனந்த மோகன் போஸ், பேரவையின் தொடக்கப் பணி முதல்வருள் ஒருவர். 1898-ஆம் ஆண்டுப் பேரவைக்கு அவர் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆரிய சமாஜம் பிரமசமாஜ இயக்கம் அடிமை இருளை அகற்ற முடிந்தது. ஆனால், அஃது அவ்விருளை முழுதும் கலைக்க முடியவில்லை இவ்வகையில் பிரமசமாஜத்தைவிட ஓரளவு பரந்த வெற்றிகண்ட இயக்கம், ஆரிய சமாஜம் ஆகும். பிரமசமாஜ இயக்கம் வங்கத்தில் 1828ல் மலர்ந்தது. ஆரிய சமாஜம் பாஞ்சாலத்தின் செல்வர் தயானந்த சரசுவதி தந்த பரிசு. அது 1857ல் பம்பாய் நகரில் நிறுவப்பெற்றது. சமயச் சீர்திருத்தம், சமூகச் சீர்திருத்தம் ஆகிய துறைகளில் அது பிரமசமாஜக் கொள்கைகளிலிருந்து பெரிதும் வேறுபட்டதன்று. ஆனால், அது வேதங்களையே ஆதாரமாகக் கொண்டு, சைவ வைணவ ஆத்திக மரபில் நின்று அதற்கு விளக்கங்கண்டது. போலிப் பழைமையை நீக்க அது நல்ல பழைமைப் பற்றையே கருவியாகக் கொண்டதனால், மேனாட்டு நாகரிகத்தை இருகையேந்தி வரவேற்கவில்லை. பிற சமயம் சார்ந்தவர்களை மீண்டும் ஆரிய சமாஜ மூலம் வேத சமயத்துக்கு அது வரவேற்றதனால், தன் சமயப் பற்றையும் தன்னாட்டுப் பற்றையும் அது வளர்த்தது. பெண்கள் கல்வி வகையிலும் கைம்பெண் மறுமண வகையிலும் ஆரிய சமாஜம் செய்துள்ள, செய்து வரும் சேவை பெரிது. பேரவையின் வாழ்வுக்கு ஆரிய சமாஜம் தந்த பரிசுகள் இரண்டு; ஒன்று, ஆரிய சமாஜத்தின் தலைவர்களுள் ஒருவரான லாலா லஜபதி ராயின் தலைமை. அவர் பேரவை இயக்கத்திலும் முதல்தரத் தலைவர்களுள் ஒருவராய் விளங்கினார். மற்றொரு பரிசு; இந்தி இயக்கம். வடநாடெங்கும் ஆட்சியாளரால் உருது எழுத்தும், உருது இலக்கியமுமே பிரிட்டிஷ் ஆட்சியில் நாட்டு மக்களின் பெரும்பான்மைத் தாய்மொழியாகவும் நாட்டு மொழியாகவும் கருதப்பட்டு வந்திருந்தன. அரசியல் துறையில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியான இடம் அதற்கு அளிக்கப் பட்டிருந்தது. சமயத் துறையிலோ, வடமொழியே முழு இடம் வகித்திருந்தது. இந்திப் பற்றாளர் ஒருவர், வடமொழி எழுத்து முறையாகிய நாகரி எழுத்து முறையையும், இந்தியையும் பரப்ப ‘நாகரி பிரசாரிணி சபை’ ஒன்று அமைத்திருந்தார். ஆரிய சமாஜம் சமயத்துறையில் இந்தி மொழியை மக்கள் தாய் மொழியாகப் பேரளவில் வழங்கி, இந்தியை வளர்த்தது. பேரவை இந்தியை மாநிலப் பொது மொழியாக ஏற்பதற்கு ஆரிய சமாஜமே பெரிதும் காரணமாயிருந்தது என்பதில் ஐயமில்லை. இராமகிருஷ்ண மடமும், விவேகானந்த அடிகளும் இராமகிருஷ்ண மடம் இராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்ற பெரியார் பெயரால் அவர் தலைமாணவரான விவேகானந்த அடிகளால் நிறுவப்பட்டது. இந்திய மாநிலச் சமய வாழ்விலும் கருத்திலும் இராமகிருஷ்ணரின் வாழ்வும் செயலும் தந்த தூண்டுதல் பெரிது. ஆனால், அவர் மாணவர் செய்த சேவை, அதை இந்திய அரங்கிலிருந்து உலக அரங்கக்கு ஏற்றிப் புகழ் தந்தது. காந்தியடிகள், தாகூர் ஆகிய இருவருக்கும் முற்பட்டு இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்த சிறப்பும், இந்திய மக்களின் தன்னம்பிக்கையையும் தன்மதிப்பையும் தட்டி எழுப்பிய சிறப்பும் விவேகானந்த அடிகளுக்கே உரியவை. அவர் பெருந்தொண்டு சமயத்தின் அறிவுத் துறையிலேயேயானாலும், சமூகத் தொண்டிலும் அவர் மிகவும் ஆர்வம் காட்டியிருந்தார். தென்னாட்டு ஆசாரியர்களாகிய சங்கரர், இராமானுசர், மாத்துவர் என்பவர்களின் அடிச்சுவடுகளையும், வங்க சமயாசாரியரான சைதன்னியர் அடிச்சுவட்டையும் பின்பற்றி, அவர் இந்தியா முழுவதும் திக்கு விஜயம் செய்ததுடன் இந்தியாவின் அறிவுச் செல்வத்தை உலகெங்கும் கொண்டு பரப்பினார். அமெரிக்க நகராகிய சிகாகோவில் 1898ல் நடைபெற்ற இரண்டாவது உலக சமயப் பேரவையில் அவர் ஆற்றிய சொற்பெருக்கு அப்பேரவையின் சிறப்பு நிகழ்ச்சியாய், அவரது உலகப் புகழ்க் கொடியையும், இந்தியாவின் புகழ்க் கொடியையும் வானளாவப் பறக்கச் செய்தது. விவேகானந்த அடிகள் இந்தியாவின் அரசியலின் தன் மதிப்பைப் பேணிய முதற்பெரியாருள் ஒருவர். இந்தியர் நுழைவுரிமையைத் தடை செய்திருந்த கானடா நாட்டிற்கு அவர்அழைக்கப்பட்டபோது, அவர் அதனை மறுத்துத் தம் நாட்டின் மதிப்பைக் காத்தார். அத்துடன் மேனாட்டினர் இந்தியாவைப்பற்றிக் கொண்ட ஏளனம், புறக்கணிப்பு ஆகியவற்றை அவர்தம் சொல் திறமையால் தாக்கி, அதன் உரிமையைக் காத்தார். பிரமஞான சங்கமும் திருமதி அன்னிபெஸண்டு அம்மையாரின் தொண்டும் அறிவுத் துறையில் உலக அரங்கேறிய இந்தியாவை நாடி வந்த உலக இயக்கங்களில் ஒன்று பிரமஞான இயக்கம். விரைவில் இந்தியா அதில் முதன்மை இடம் பெற்றது. அவ்வியக்கம், உலகின் பண்டைச் சமய மரபுகளை ஒருங்கிணைத்து, மேனாட்டு உலகியலறிவியக்கம் தாண்டிச் சமயப்பற்றை வளர்க்க முனைந்தது. அதை நிறுவியவர், மாதுபிளாவாட்ஸ்கி என்ற ரஷ்ய நாட்டுப் பெண்மணி. திபெத்திலேயே அது நிறுவப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அதன் செயலரங்கத் தலைமையிடம் 1875ல் அமெரிக்காவில், நியூயார்க்கிலேயே அமைக்கப்பட்டது, முதல் உலகத் தலைவர் காலத்திலேயே அவ்வியக்க முன்னணித் தலைவருள் ஒருவரான அயர்லாந்து நாட்டுப் பெண்மணி திருமதி அன்னிபெஸண்டு அம்மையார் அதனை இந்தியாவுக்குக் கொண்டுவந்து சென்னை அடையாற்றில் அதன் இந்தியத் தலைமை நிலையம் அமைத்திருந்தார். 1907ல் மாது பிளாவாட்ஸ்கி காலமானபின் திருமதி அன்னிபெஸண்டே உலக இயக்கத் தலைவரானார். உலகத் தலைமை நிலையத்தைச் சென்னையிலிருந்தே அவர் இயக்கி வந்தார். பேரவை இயக்கத்துக்குப் பிரமஞான சங்கம் தந்த தூண்டுதல் மிகமிகப் பெரிது! பேரவை தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கே பிரமஞான சங்கந்தான் பேரளவில் காரணம் என்பது தெரிகிறது. சென்னையில் நடைபெற்ற பிரமஞான சங்கத்தின் மன்றத்திலேயே அதுபற்றிய முதல் தீர்மானம் நிறைவேறியதாக அறிகிறோம். அவ்வாண்டிலேயே அதற்கான முயற்சிகள் வங்கத்தில் செய்யப்பட்டன. ஆனாலும், பிரமஞான சங்கம் தொடக்கத்திலிருந்தே அதன் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாயிருந்தது. பிரம சமாஜத்தையும், ஆரிய சமாஜத்தையும் போலவே இராமகிருஷ்ண மடமும் பிரமஞான சங்கமும் கல்வித் துறையிலும் சமூகச் சீர்திருத்தத்திலும் மிகவும் முனைப்பாக வேலை செய்து வந்துள்ளன. இரண்டின் சார்பிலும் பல கல்வி நிலையங்கள் நிறுவப்பட்டு வளர்ச்சியடைந்துள்ள. அவற்றுள் மதனப்பள்ளியில் உள்ள பிரமஞான சங்கக் கல்லூரியும், காசிப் பல்கலைக்கழகமும் குறிப்பிடத்தக்கவை. காசிப் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவிப்பதிலும், பேரவை இயக்கத்தைத் தோற்றுவிப்பதிலும், பேரவை இயக்கத்தை வளர்ப்பதிலும் திருமதி அன்னிபெஸண்டு மிகச் சிறந்த பங்கு கொண்டிருந்தார். 1917-ஆம் ஆண்டு காங்கிரஸுக்கு அவர் தலைமை வகித்தார். அவர் திலகருடன் ஒப்பான முதல்தரப் பேரவை இயக்க முதல் தலைவராயிருந்து தொண்டாற்றி வந்தார். பிறப்பால் இந்தியரல்லராயினும், பண்பால் அவர் முழுதும் இந்தியாவின் ஒப்பற்ற புதல்வியராய் அருந்தொண்டாற்றினார். தென்னாப்பிரிக்காவில் உழைத்த காந்தியடிகள் புகழை இந்தியாவில் வளர்த்து, அவரை இந்தியாவுக்கு வரவழைத்த பெருமையும் அவருடையதே. தென்னிந்தியாவின் குரல் மேற்குறிப்பிட்ட இயக்கங்களில் உலகளாவிய இயக்கமாகிய பிரமஞான இயக்கம் ஒன்று நீங்கலாக, மற்றவை வடநாட்டிலேயே பிறந்தவை. அவற்றின் வளர்ச்சியும் பெரிதும் வடதிசையிலேயே இருந்தது. இருபதாம் நூற்றாண்டில் பிரமஞான சங்கம் தெற்கில் தலைதூக்கிய பின்புதான் மற்ற இயக்கங்களும் தெற்கே சிறிது சிறிதாகவாவது பரவத் தொடங்கின. ஆயினும், வடதிசை சார்ந்த இயக்கங்களுக்கு மூல முதலான பத்தி இயக்கம் தெற்கே தொடர்ந்து தனி வளர்ச்சி பெற்றது. 7-ஆம் நூற்றாண்டு முதல் தமிழ் இலக்கிய வளர்ச்சியும், 12-ஆம் நுற்றாண்டு முதல் பிற தாய் மொழிகளின் வளர்ச்சியும் பெரிதும் இப்பத்தி இயக்கத்தைச் சார்ந்தவையாகவே இருந்தன. ஆனால், தமிழகத்தின் பத்தி இயக்கத்தில் உள்ளீடாகப் பண்டைத் தமிழகத்தின் சமூக சமயச் சீர்திருத்தக் கோட்பாடும் உலகக் குறிக்கோளும் கலந்தே வளர்ந்தன. திருவள்ளுவரின் சாதி சமய இன நாட்டு வேறுபாடற்ற பண்பும், சங்க இலக்கியத்தின் ‘ஒன்றே குலமும்; ஒருவனே தேவனும்’, என்ற குறிக்கோளும் தமிழகப் பத்தி இயக்கத்தைத் தனிப்படப் பண்படுத்தியிருந்தன. 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தாயுமானவர் கால முதல் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இராமலிங்க வள்ளலார் காலம் வரை இவ்வுலகக் குறிக்கோளும் சீர்திருத்த ஆர்வமும் இடையறாது வளர்ந்தன. 20-ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் பிரம சமாஜம் போன்ற பகுத்தறிவியக்க அலைகள் வளர்ச்சியுற்றன. ஆனால், வடவிந்தியாவில் இவ்வியக்கங்கள் பொது மக்கள் இயக்கமாக வளர முடியவில்லை. ஒரு சில அறிஞர் தலைமையில் இது மக்களுக்கு விழிப்பூட்டுவதாக மட்டுமே அமைந்தது. அத்துடன் வடவிந்தியாவில் மாநிலம் பற்றிய கனவுகள் சீர்திருத்தப் பாதையில் நீடித்துச் செல்ல முடியவில்லை. தென்னிந்தியாவிலோ, அறிவியக்கங்களும் அவற்றைப் பின்பற்றி அரசியல் இயக்கங்களும் வடவிந்தியாவைப் போல மாநில அரசியற்கனவு காணவில்லை. அவை ஓருலகக்கனவும், சாதி சமய வேறுபாடு கடந்த சமுதாயக் கனவுமே கண்டன. பாரதியார் தேசீயப் பாடலில் மாநிலக் கனவுடன் இச்சீர்திருத்த ஆர்வமும் உலகக் கனவும் இணைவது காணலாம். சமயத்துறையில் தாயுமானவர், வள்ளலார் ஆகியவர்களைப் பின்பற்றி இருபதாம் நூற்றாண்டில் நாகை மறைதிரு மறைமலையடிகளார் பத்தி இயக்கம், தாய்மொழி இயக்கம், அறிவியக்கம் ஆகிய மூன்றையும் ஓரியக்கமாக்கினார். தூய சைவசமயத் திருப்பணியுடன் தனித் தமிழரியக்கமும் ஒன்றுபட்டது. இவற்றின் பயனாக, இந்திய அரசியலில் ஒரு காந்தி ஊழி தொடங்கு முன்பே, தமிழகத்தில் ஒரு மறைமலை ஊழி நிலவிற்று. மறைமலையடிகளாரின் சமுதாயச் சீர்திருத்தக் கனவுகள் சமய மொழி எல்லை கடந்து, அரசியலையும் ஆட்கொண்டன. தென்னிந்திய அரசியல் இயக்கங்களில் அது பரவி, சாதி எதிர்ப்பு, மூடப் பழக்கவழக்க எதிர்ப்பு, தாழ்த்தப்பட்டவர் முன்னேற்றம், பெண்கள் உரிமை ஆகியவற்றில் கருத்துத் தூண்டிற்று. காந்தியடிகளின் தாழ்த்தப்பட்டவர் பணிக்கும், இந்து முஸ்லிம் சமரச நோக்குக்கும் பேரளவில் தூண்டுதல் தந்தது இத்தென்னிந்தியாவின் குரலேயாகும். பேரவை இயக்கத்திலேயே தென்னிந்தியத் தலைவர்களுள் ஒருவரான திரு.வி. கலியாண சுந்தரனார், மறைமலையடி களாரின் ஒரு மாணவர். இச் சமரசப் பண்பை அவர் அரசியலிலும் சிறப்பாகப் பரப்பி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, முதன்முதலாகப் பேரவைக் கனவு கண்டது தென்னிந்திய பிரமஞான சங்கமே என்பதும்; காந்தியடிகளின் தென்னாப்பிரிக்கா இயக்கத்துக்கும், தலைவர் பெருந்தகை போஸ் தென்கிழக்காசியாவில் தொடங்கிய இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கடல் கடந்த தமிழகமே பெரிதும் ஆதரவு தந்திருந்தது என்பதும்; காந்தியடிகளின் ஆக்கத்துறைப் பணிகளில் தமிழகமே முன்னணியில் நின்றதென்பதும் மனத்தில் வைக்கத்தக்கவை. திருமதி அன்னி பெஸண்டின் ‘தன்னாட்சி இயக்க’மும், கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் ‘கப்பற்கழக இயக்க’மும், தொழிலாளரின் இயக்கமும், மறைமலையடி களாரின் தாய்மொழி இயக்கமும் தழிகத்துக்கே உரிய தனிச்சிறப்பான இயக்கங்கள் ஆகும். பேரவை இயக்கம் தொடங்குவதற்கும் வளர்வதற்கும் உதவிய சூழ்வளி மண்டலங்கள் இவை. ஆட்சி மரபு சமயசமூகத் துறைகளில் எழுந்த இவ்வியக்க அலைகள், அரசியல் மரபில் புக நீண்ட நாளாகவில்லை. 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பல அரசியல் நிலையங்கள் ஏற்படத் தொடங்கின. அரசியல் விழிப்புக் காரணமாகப் பத்திரிகைகள் பெருகின. ஆங்கிலப் பத்திரிகைகள் பெரிதும் ஆட்சியினர் சார்பில் இருந்தன. ஆனால், தாய் மொழிப் பத்திரிகைகள் நாட்டு மக்கள் உள்ளக்குமுறலை எதிரொலிக்கத் தொடங்கின. இவற்றை ஆராயுமுன் ஆட்சி மரபை நாம் கவனிக்க வேண்டும். வாணிகக் கழகத்தின் தலைமையில் பிரிட்டிஷ் ஆதிக்கம் இந்தியா முழுவதும் பரவும் முன்பே, அவ்வாட்சி மாநில அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. தொடக்கத்தில் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய முத்திசைகளில் மூன்று ஆட்சித் தலைவர்கள் தனித்தனி நின்று வாணிகக் கழகத்தின் ஆட்சியை நடத்தி வந்தார்கள். ஆனால், 1773-ல் பிரிட்டிஷ் அரசியல் மன்றில் நிறைவேற்றப்பட்ட ஒழுங்கு முறைச் சட்டம்,1 ஒரே ஆட்சி முதல்வரின் கீழே மூன்று மாகாணங்களையும் இணைத்தது. கல்கத்தா இந்தியாவின் தலைநகரம் ஆயிற்று. அத்துடன் பிரிட்டனிலேயே வாணிகக் கழகத்தின் பொறுப்பி லிருந்த ஆட்சி, ஓர் ஆட்சிக் குழு2 வசம் ஒப்படைக்கப்பட்டது. இது முதல் பிரிட்டிஷ் மன்றம் பத்தாண்டுக்கொரு முறை இந்திய ஆட்சி முறையைத் தேர்ந்தாய்ந்து சீர்திருத்த முற்பட்டது. இராம மோகனர் முயற்சியால் இந்தியாவில் ஆங்கிலக் கல்வி பரவி வந்தது. கிறிஸ்தவ சமயப்பணியாளர், கல்வி நிலையங்களில் அக்கறை காட்டி, மக்கள் கல்வியை வளர்த்து வந்தனர். 1833-இல் இந்திய ஆட்சி முறையைச் சீர்திருத்தி ஒரு புதிய சட்டம் ஏற்படுத்தப்பட்டது. வாணிகக் கழகத்தின் ஆட்சி உரிமைகள் பெரிதும் குறுக்கப்பட்டன. பணித்துறைகளில் சாதி, சமய, இனவேறுபாடும், பால் வேறுபாடும், நிறவேறுபாடும் இல்லாமல், வெள்ளையரைப் போலவே இந்தியருக்கும் இடம் இருக்கவேண்டுமென்று இச்சட்டம் கொள்கை வகுத்தது. நடைமுறையில் இக்கொள்கை வெற்றியடையவில்லை யானாலும், காலநிலை கடந்த இக்கொள்கையின் வெற்றி ராஜா ராம மோகனரின் அருந்தொண்டுகளின் மதிப்பை நமக்குக் காட்டுகிறது. 1853ல் இந்திய உள் நாட்டு உயர்பணிகளுக்கான போட்டித் தேர்வு1 இங்கிலாந்தில் ஏற்படுத்தப்பட்டது. அதில் கலக்கும் உரிமை இந்தியருக்கும் கொள்கையளவில் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், 1833 சட்டமும் 1853 சட்டமும் இந்தியருக்கு நடைமுறையில் மிகவும் குந்தகமான சூழ்நிலையை உண்டாக்கியிருந்தன. இந்நிலையிலும் தேர்வுகளில் இந்தியர் சிறப்புடன் வெற்றி பெறுவது கண்டு ஆட்சிக் குழுவின் பின்னணியிலிருந்த பிற்போக்காளர்கள் போட்டியிடுபவர்களின் வயதெல்லையைக் குறைக்க முற்பட்டனர், தொடக்கக் காலப் பேரவைகள் இந்த ‘ஒரு குலத்துக்கு ஒரு நீதியை’ வன்மையாகக் கண்டித்தன. 1857 புரட்சி கழிந்த அடுத்த ஆண்டிலேதான் ஆட்சியாளர் மனப்பான்மையிலும், போக்கிலும் ஆட்சி முறையிலும் பெருத்த மனமாற்றம் ஏற்பட்டது. வாணிகக் கழக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பிரிட்டரினின் முடியரசே இந்தியாவின் ஆட்சியை நேரடியாக ஏற்று இந்தியா பேரரசாயிற்று. 1773-ஆம் ஆண்டுச் சட்டப்படி வங்க ஆட்சியாளர் இந்திய ஆட்சி முதல்வராயிருந்தார். இப்போது அவர் ஆட்சி முதல்வராக மட்டும் அன்றி, அரசர் ஆட்பெயர்2 என்ற பொறுப்பும் ஏற்று, இந்திய மன்னர் மீதும் மேலுரிமை3 பெற்றார். வாரன் ஹேஸ்டிங்ஸ் முதல் ஆட்சி முதல்வரானது போல, 1858ல் கானிங்கு பெருமகனார் முதல் முன்னர் ஆட்பெயரானார். 1877ல் பிரிட்டன் அரசியாரான விக்டோரியா அரசியார் இந்தியாவின் பேரரசியார் என்னும் பட்டம் ஏற்றார். பிரிட்டனின் முடியரசு இந்தியாவின் பேரரசு ஆயிற்று. 1858ல் பல்கலைக்கழகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சென்னை, பம்பாய், கல்கத்தா நகரங்களில் இந்தியாவின் முதற் பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட்டன. 1861லும் 1863லும் நிறைவேற்றப்பட்ட சீர்திருத்தச் சட்டங்களால் இந்திய மாகாணங்களிலும் சட்ட மன்றங்களும் நீதி மன்றங்களும் நிறுவப்பட்டன. ஆனால், இவற்றின் உறுப்பினர்கள் ஆட்சித் தலைவர்களால் அமர்த்தப்பட்டவர்களாகவும், பணித் தொடர்புடையவர்களாகவுமே இருந்தார்கள். குடியாட்சி அமைப்பின் புறச் சின்னங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பொறுப்பாட்சி ஏற்படவில்லை. பொறுப்பாட்சித் தத்துவமும் உணரப்படவில்லை. 1875க்குள் தாய்மொழிப் பத்திரிகைகள் பெரிதளவு வளர்ச்சியடைந்துவிட்டன. சென்னையில் சுதேசமித்திரனும் அதை அடுத்து ஆங்கிலத்தில் இந்துவும் இந்தியாவில் நடத்தப்பட்ட சிறந்த தாய் மொழி ஆங்கிலமொழிப் பத்திரிகைகள் ஆயின. அயல் மொழிப் பத்திரிகைகள் பல வெள்ளையரால் நடத்தப்பட்டும், பிற்போக்காளர் ஆட்சியாளரைத் தூண்டி அவற்றுக்குப் பெருந்தொல்லை தந்து வந்தனர். இது தளர்த்தப்பட்ட பின்னும் தாய்மொழிப் பத்திரிகைகள் மீது கடுந்தடைகள் ஏற்பட்டிருந்தன. லிட்டன் பெருமகனார் போன்ற மாநில ஆட்சித்தலைவர் காலங்களில் இத்தடைகள், மக்களிடையே பெரு மனக்கொதிப்பை உண்டு பண்ணின. ஆனால், ரிப்பன் பெருமகனார் ஆட்சியில் பத்திரிகைகளுக்குத் தடைகள் அகற்றப்பட்டிருந்தன. அத்துடன் திணைநில ஆட்சி நிலையங்கள் நிறுவப்பட்டன. இடைத்தர, தொடக்கக் கல்வி நிலையங்கள் பெருக்கப்பட்டன. ஆட்சியின் பின்னணியிலிருந்த பல பிற்போக்காளர்களின் எதிர்ப்பைச் சமாளித்து, ரிப்பன் பெருமகனார் செய்த இச்சீர்திருத்தங்கள் இந்தியர் பேராதரவைப் பெற்றன. ‘பெருமகன் ரிப்பன் எங்கள் அப்பன்.’ என்ற பழஞ்சொல் இக்கால மக்கள் உளநிலையை நமக்கு நன்கு எடுத்துக்காட்டுகிறது. அரசியல் நிலைய மரபு: பேரவையின் தோற்றம் ஆட்சி முறைச் சீர்திருத்தங்களும், கல்வி முன்னேற்றமும், 1857 புரட்சியின் விளைவுகளும், நாட்டில் பொதுவாக ஏற்பட்டிருந்த பஞ்சம், வறுமை ஆகியவற்றின் சூழல்களும் அரசியல் நிலையங்களுக்குப் பேராதரவாயிருந்தன. 1851லேயே வங்கத்தில் பிரிட்டிஷ் இந்திய சங்கம் நிறுவப்பட்டிருந்தது. பம்பாயில் பம்பாய் மாகாணசங்கமும் கிழக்கிந்திய சங்கமும் தொடங்கி நடத்தப்பட்டன. 1881ல் சென்னையில் சென்னை மகாஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இவை அவ்வம் மாகாணத்தின் அரசியல் பிரச்சினைகளில் கருத்துச் செலுத்தி வந்தன. இந்திய மாகாண சங்கங்களை இணைத்தோ, இந்தியா முழுமைக்கும் புதிதாகவோ, ஓர் இந்திய மாநில அரசியல் சங்கம் இருத்தல் வேண்டும் என்ற புதிய கருத்து, சென்னையில் 1884ல் கூடிய பிரமஞானப் பேரவையில் வெளியிடப்பட்டிருந்தது. கால நிலைக்கேற்ற இக்கருத்துரை, மிக விரைவில் பரவியிருக்கக்கூடும் என்பதில் ஐயமில்லை. ஆனால் பொதுமக்கள், பெருமக்கள் கனவார்வத்தைவிட, ஆட்சியாளர்களிடையேயும் இந்தியாவின் வெள்ளை நண்பர்களிடையேயும் முன்னேற்றக் கருத்துடையவர் களின் கனவார்வத்தை இது மிகுதியாகக் கிளறிற்று என்பதை அறிகிறோம். சிறப்பாக ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்1 என்ற பெரியார் உள்ளத்தில் இது மிகுதியான கனவலைகளை எழுப்பிற்று. அவரே, பிற்காலங்களில் இதுபற்றிய பல விவரங்களை நமக்குத் தந்திருக்கிறார். பேரவையின் பிறப்புப் பற்றிய பல சுவையான செய்திகளை நாம் இதனால் அறிகிறோம். ஏ.ஓ.ஹியூம் 1857 புரட்சிக் காலத்தில் அதை அடக்க உதவிய வெள்ளையருள் ஒருவராகவேயிருந்தார். ஆயினும், ஒரு நாட்டின் உரிமைக் கிளர்ச்சியைப் படைக்கலங்களால் அழித்துவிட முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார், பிரிட்டனின் ஆட்சியை நல்லாட்சியாக்குவது மட்டும் அதற்கு வலுத் தராது என்று அவர் கருதினார். இந்தியரிடையே அரசியல் விழிப்பையூட்டி அவர்கள் கருத்துரைகளையும் துணை உரைகளையும் ஆதரவாகக் கொண்டு, படிப்படியாகப் பொறுப்பாட்சிக்கு வழி வகுக்க வேண்டுமென்பதே அவர் அவாவாயிருந்தது. ஆயினும், தொடக்கத்தில் அவர் கூட அரசியற்செய்திகளுக்கு மாகாண சங்கங்களே போதுமென்றும்; முழு இந்தியாவுக்குச் சமுதாய கல்விச் சீர்திருத்தக் காரியங்களில் கருத்துச் செலுத்தி மாகாண சங்கங்களை இணைக்கும் ஒரு பொது அவை இருத்தல் போதுமென்றும் எண்ணியிருந்தார். 1885ல் ஆட்சி முதல்வராயிருந்த டவ்வரின்2 பெருமகனாரே, ஏ.ஓ.ஹியூமின் தொடக்கக் கருத்தை மாற்றினார் என்பது கூறப்படுகிறது. ஹியூம் இச்செய்தியைப் பிற்காலத்திலேதான் வெளியிட்டார். ஏனெனில் டவ்வரின் பெருமகனாரின் முன்னேற்றப் போக்கை ஆட்சித் துறையின் பின்னணியிலிருந்த பிற்போக்காளார் பலர் எதிர்த்துத் தாக்கக் காத்திருந்தனர். நமக்கு இன்று இந்நிலை மிகவும் புதுமை வாய்ந்ததாகவே தோற்றக்கூடும். இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தை நடத்திய பேரவைக்கு வெள்ளையரான ஹியூமே தந்தையாராகக் கருதப்பட்டார் என்பது வியப்புக்குரியது. ஆட்சி முதல்வராகிய டவ்வரின் பெருமகனாரே அதை முதல் தர அரசியல் நிலையமாக்கக் காரணராயிருந்தார் என்பது இன்னும் பெரிய புதிராகவே தோற்றத்தக்கது. ஆனால், ஆட்சி முதல்வர் இதற்குக் கூறிய காரணங்கள், அவரது தொலைநோக்கையும் காலங்கடந்த முன்னேற்ற ஆர்வத்தையும் நமக்குக் காட்டுகின்றன: “இந்தியாவின் முழுப்பேரவை ஒரு சமூகச்சீர்திருத்தப் பேரவையாக மட்டும் இருந்தால், அதனால் ஒரு சிறிதும் பயன் ஏற்படாது. இங்கிலாந்தில் அரசியலாருக்கு மக்கள் அரசியல் கருத்தின் போக்கை எடுத்துக் காட்டுவது மன்னரின் எதிர்க்கட்சி. இந்தியாவில் அத்தகைய எந்தக் கட்சியும் இருக்க இடமில்லை. ‘ஆட்சி முறையையும் ஆட்சி நடைமுறைகளையும் பற்றி இந்திய அரசியல்வாதிகள் என்ன நினைக்கிறார்கள்? எந்த அளவுக்கு அவை அவர்கள் ஆதரவையோ போற்றுதலையோ பெற்றிருக்கின்றன? எந்த அளவுக்கு அஃது அவர்கள் வெறுப்புக்குரியது?’ என்பன போன்ற செய்திகளைப்பற்றி நாம் எதுவும் அறிய வழியில்லை. இந்திய அரசியல்வாதிகளைத் தன்னகங்கொண்ட ஒரு பேரவையே இந்நிலைகளை அறிவித்து ஓரளவு எதிர்க்கட்சியினர் கடமையை ஆற்றும்.” ஆட்சி முதல்வரின் இந்தக் குறிக்கோள், விடுதலை பெற்றுவிட்ட இன்றைய புதிய இந்தியாவுக்குக்கூட ஒரு நல்ல அறிவுரை ஆகும் என்பதில் ஐயமில்லை. பொதுவாக ஆட்சியாளர் மக்கட்குமுறலை மிதவாத அரசியற்போக்கில் திருப்புவதற்கே பேரவையைத் தோற்றுவிக்க விரும்பினர் என்பது உண்மை யானாலும், அச்சூழலிடையேகூடத் தொலைநோக் குடைய தனிமனிதர் வெள்ளையரிடையேயும் ஆட்சித் துறையினரிடையேயும் இருந்தனர் என்பதை இச்செய்தி காட்டுகிறது. முதற் பேரவை 1885 மார்ச்சு மாதத்தில் ஹியூம், இந்தியாவிலுள்ள பல அரசியல்வாதிகளையும் கல்கத்தாவில் கூட்டி, டவ்வரின் பெருமகனாருடன் தாம் தனிப்படக் கலந்து செய்து தம் முடிவைத் தெரிவித்து, அவர்கள் கருத்துரைகளை வரவழைத்தார். அனைவரும் அவர் முடிவை ஆர்வத்துடன் வரவேற்றனர். அவ்வாண்டு டிஸம்பர் மாதத்திலேயே இந்தியாவின் எல்லா மாகாணங்களிலுமிருந்து பிரதிநிதிகளை அழைத்து, ஒரு பெரிய மாநாடு கூட்டுவதென்று முடிவு செய்யப்பட்டது. ஆண்டுதோறும் ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள முக்கிய நகரமொன்றில் கூடுவதென்பது தீர்மானிக்கப்பட்டது. முதலாண்டு பூனாவில் கூடுவதாகவே ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இறுதி நேரத்தில் பூனாவில் தொத்து நோய் நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிந்ததனால், பரபரப்புடன் பம்பாயில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்திய மாநிலத்தில் விடுதலை இயக்கத் தலைமை நிலையமாகிய மாநிலப் பேரவை இங்ஙனம் 1885-ஆம் ஆண்டு, டிஸம்பர் மாதம், 28-ஆம் நாள் பம்பாயில் கூடிற்று. உமேஷ் சந்திர பானர்ஜி அதன் தலைவராயிருந்து, தலைமைப் பேருரையாற் றினார். பல மாகாணங்களிலிருந்தும் 72 பிரதிநிதிகள் வந்திருந் தார்கள். மூன்று நாட்கள் பேரவை மாநாடு நடைபெற்றுப் பல தீர்மானங்கள் நிறைவேறின. அது முதல் கிட்டத்தட்ட ஆண்டுதோறும் பேரவை இந்தியாவின் விடுதலை இயக்கப் பொறுப்பையும் இந்தியர்கள் வருங்கால வாழ்க்கைப் பொறுப்பையும் ஏற்றுப் பணியாற்றி வந்துள்ளது. பேரவை 1885இல் பிறந்து, 1947 வரை ஆற்றிய அருந்தொண்டுகள் இப்போது இந்தியாவின் வரலாற்றில் ஒரு முக்கியப் பகுதியாகிவிட்டது. பொறுப்பாட்சிகூட இல்லாத மாநிலத்தில் இது 62 ஆண்டு உழைப்பின் பயனாக முழு நாட்டு விடுதலையையே கொண்டு வந்துவிட்டது. 62 ஆண்டு நீடித்த இப்பேரவையின் வரலாற்றை நாம் நான்கு ஊழிகளாகப் பிரிக்கலாம். முதல் ஊழி, பேரவையின் மன்றாடும் பருவமாகவே இருந்தது. படிப்படியாக அதில் மக்கள் குரல் வளர்ந்து வந்தது. இப்பருவம் 1885லிருந்து 1907வரை நீடித்தது. அடுத்த ஊழியை நாம் ‘வங்கப் புரட்சி ஊழி’ என்னலாம். இது 1907 லிருந்து 1919 வரை உள்ள காலம். இப்பருவத்தில் வங்கம் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தது. மராட்டிய சிங்கமான திலகர் புரட்சிக் கொடி தூக்கினார். தமிழகத்தின் தனிப் பெருங்குரல் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் உருவில் மாநில முழுவதையும் கவர்ந்தது. 7. இளமைக் குரல் எதிர்பாராத மாறுபாடும் வளர்ச்சியும் கடலின் அலைகள் கரையை அணுகுமிடத்திலேதான் அலையின் ஆற்றல் மிகுதி. கரை பாறை நிறைந்ததாயிருந்தால், அலையின் ஆற்றல் இன்னும் பெரிது. அது பாறையை மோதி அதனை நாளடைவில் தகர்க்க முனைகின்றது. அலையும் பாறையும் இங்ஙனம் போராடும் இடங்களில் பெரிய கப்பல்களின் நிலைகூட ஆபத்தாகிறது. ஆனால், பாறைகளின் எதிர்ப்பால் குமுறி எழும் இவ்வலையின் வேகத்தை மரச்சட்டங்கள் இணைத்த வேலி அழிவுகள் குறைத்துவிட முடியும். செயற்கைத் துறைமுகங்களையும் பாறையடர்ந்த கரையோரங்களையும் பாதுகாக்க இத்தகைய அலைதாங்கிகள் அமைக்கப்படுவதுண்டு. பாஞ்சாலங்குறிச்சியில் எழுந்து தில்லியில் குமுறிய மக்கள் புயல், அலைகளின் ஆற்றலைத் தடுக்கும் ஓர் அலை தாங்கியாகவே பேரவை தொடக்கத்தில் நிறுவப்பட்டது. ஆயினும், அலைதாங்கி அலைகளின் தாக்குதலில் முறிவுற்றால், அவ்வலை தாங்கியே அலையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கிவிடும். அது ஒரு புதுவகைப் பாறை தகர்க்கும் பொறியாய்விடும். அலை தாங்கியாய் நிறுவப்பட்ட பேரவை விரைவில் இத்தகைய பாறை தகர்க்கும் பொறியாக மாறத் தொடங்கிற்று. அலைதாங்கி பிரிட்டிஷ் ஆட்சிப் பாறையைத் தாக்கித் தகர்க்கும் பொறியாக மாறிய பருவமே பேரவையின் பயிற்சிப் பருவம் ஆகும். 1885இல் நடைபெற்ற முதற்பேரவைக் கூட்டத்தில் பிரதிநிதிகள் தொகை 72. ஆனால், 1906ல் நடைபெற்ற இருபதாவது பேரவைக் கூட்டத்தில் இத்தொகை 1663 ஆகிப் பெருக்க முற்றிருந்தது. மூன்றாவது ஆண்டில் பார்வையாளர் 3000 பேர் என்பதை அறிகிறோம். ஆனால், 1906ல் பார்வையாளர் இருபதினாயிவருக்கு மேற்பட்டிருந்தனர். அரங்கிலாடிய பேரவைச் செல்வி, இருபதாவது ஆண்டு நிறையுமுன் அம்பலத்திலாட வந்துவிட்டாள். பேரவைக் கூட்டம், சிறு சங்கக் கூட்டமாய் இருந்த நிலைமாறி, பேரவை நகரங்களாகவும் பெருநகரங்களாகவும் காட்சி தந்தது. பேரவைப் பந்தல்கள் பேரவை நகரங்கள் என்றே வழங்கப்பட்டன. மக்கள் நெஞ்சத்தில் இடம் பெற்ற அவ்வக்கால வீரர் அல்லது ஊழியரின் பெயரால் அவை அன்பார்வத்துடன் வழங்கப்பட்டன. பேரவையில் தொடக்கத்திலிருந்தே இந்துக்களைப் போல முஸ்லிம்களும், பிற வகுப்பினரும் பங்கு கொண்டிருந்தனர். 1885ல் பேரவை பிறந்த ஆண்டிலேயே முஸ்லிம் நடுத்தர வகுப்பினரடங்கிய ஓர் அரசியல் நிலையம் ஏற்பட்டிருந்தது. இரண்டாவது பேரவைக் கூட்ட ஏற்பாடுகளை அந்த முஸ்லிம் நிலையமே முன்னின்று நடத்தியதென்பதை அறிகிறோம். விரைவில் அந்நிலையம் பேரவையுடன் இரண்டறக் கலந்துவிட்டது. இதன் பயனைப் பேரவைக் கூட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளின் விரைந்த முன்னேற்றம் எடுத்துக்காட்டுகிறது. முதல் பேரவையில் முஸ்லிம் பிரதிநிதிகள் இரண்டு பேர். இரண்டாவது ஆண்டில் இத்தொகை 33 ஆயிற்று. ஆறாவது ஆண்டில் மொத்தம் 702 பிரதிநிதிகளில் முஸ்லிம் பிரதிநிதிகள் 156 பேர். அதாவது, 100க்கு 22 விழுக்காட்டினர் இருந்தனர். தேசப் பிரதிநிதித்துவ சபை: காந்தியடிகளின் சான்றுரை: பேரவை ஒரு வகுப்புவாத நிலையமாகவோ, குறுகிய பிரதிநிதித்துவ முடையதாகவோ வளரவில்லை; முழுத் தேசிய நிலையமாகவே வளர்ந்தது. ஐம்பதாண்டு பேரவை வாழ்வுக்குப் பின்னும் அதன் பிரதிநிதித்துவத்தைப் பற்றிக் குறை கூறிய ஆட்சியாளர் முன்னிலையில் காந்தியடிகள் வீறுடன் சாற்றிய வாய்மொழியுரைகள் இதனை வலியுறுத்துகின்றன. “மாநிலத் தேசியப் பேரவை அதன் பெயருக்கேற்றபடி ஒரு முழுத் தேசிய அவை ஆகும். அது எந்தத் தனிப்பட்ட சமூகப் பிரிவின் பிரதிநிதித்துவ சபையோ, தனிக்குழு நலன்களின் சபையோ அன்று. அது முதன் முதல் ஓர் ஆங்கிலேயர் மூளையில் முளைத்ததென்பதில் நாம் தனி மகிழ்வெய்துகிறோம்! ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பவரே பேரவையின் தந்தையார் என்று போற்றப்படுகிறார். பிரோஸ்ஷா மேத்தா, தாதாபாய் நௌரோஜி என்னும் இரு பார்ஸிப் பெருமக்களால் அது பாலூட்டி வளர்க்கப்பெற்றது. தாதாபாய் நௌரோஜியையே இந்தியா தன் முதுபேரறிஞராக மகிழ்வுடன் ஏற்றுப் பெருமை கொண்டது. தொடக்கத்தி லிருந்தே முஸல்மான்கள், கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் ஆகிய எல்லா வகுப்பினரும் மதத்தினரும் கோட்பாட்டினரும் அதில் கலந்து கொண்டிருந்தனர். காலஞ் சென்ற பத்திருதீன் தயாப்ஜி பேரவையுடனே தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்த பெரியாருள் ஒருவர். முஸல்மான்களும் பார்ஸிகளும் அதில் தலைமைத் தவிசேறி அமர்ந்துள்ளனர்.” பேரவையின் முதல் 22 ஆண்டு வளர்ச்சியை அடுத்த பக்கத்திலுள்ள ஆண்டுவாரிப் பட்டியலில் காணலாம். எண் ஆண்டு பேரவை தலைவர் பிரதிநிதிகள் பார்வை வ.க.த. தேதி நடந்த இடம் தொகை யாளர் செயலாளர்கள் 1. 1885 பம்பாய்1 உமேஷ் சந்திரபானர்ஜி 1 72 ? டிஸ28-30 2. 1886 கல்கத்தா1 தாதாபாய் நௌரோஜி1 434 ? னுச. ராஜேந்திர பிரஸாது டிஸ.28 3. 1887 சென்னை1 பத்திருதீன் தயாப்ஜி 607 3000 ராஜா சர் டிஸ.27 டி.மாதவராவ் 4. 1888 அலகாபாது1 ஜார்ஜ் யூல் 1248 5000 பண்டித அயோத்திநாதர் டிஸ.26 5. 1889 பம்பாய்11 ஸர் வில்லியம்வெட்டர்பர்ன்1 1889 6000 தலைவர்: ஸர் பிரோஸ்ஷா டிஸ.26 மேத்தா செயலாளர்: ஏ.ஓ.ஹியூம் 6. 1890 கல்கத்தா11 ஸர் பிரோஸ்ஷா மேத்தா 702 8000 தலைவர்: மதன் மோகன் டிஸ.26 கோஷ் செயலாளர்கள் ஏ.ஓ.ஹியும் பண்டித அயோத்திநாதர் 7. 1891 நாகபுரி1 ராவ்சாகிபு 812 3200 தலைவர் டிஸ.28 ஸி@.நாராயணசாமி சாமி நாயுடு, செயலாளர்கள்: ஏ.ஓ.ஹியூம், பண்டித அயேத்திநாதர் 8. 1892 அலகாபாது11 உமேஷ் சந்திரபானர்ஜி11 625 2800 தலைவர்: பண்டித டிஸ.28 பிஷப நாத், செயலாளர்கள்: ஏ.ஓ. ஹியூம் அனந்தாசார்லு. 9. 1893 இலாகூர்1 தாதாபாய் நௌரோஜி11 867 3200 தலைவர்:ஸர்தார் டிஸ.27 தயாசிங் மஜித்தியா,செயலாளர்: ஏ.ஓ.ஹியூம் 10. 1894 சென்னை11 ஆல்பிரட்வெட் 1163 4000 பி.ரங்கையா நாயுடு, டிஸ.28 ஏ.ஓ.ஹியூம். 11. 1895 பூனா சுரேந்திரநாத் பானர்ஜி1 1584 வி.எம்.பிடே, ஏ.ஓ.ஹியூம், டி.இ. டிஸ.27 வாச்சா. 12 1896 கல்கத்தா111 முகம்மத் ரஹிமத்துல்லா 784 ரெரமேஷ் சந்திரமித்திரா, ஏ.ஓ.ஹியூம், டிஸ.28 ஸஹானி டி.இ.வாச்சா. 13. 1897 அமரோட்டி ஸி.சங்கரன் நாயர் 692 ஜி.எஸ்.கபார்டி, டி.இ. டிஸ. 27 வாச்சா 14 1898 சென்னை111 ஆனந்தமோகன் போஸ் 614 எஸ்.சுப்பாராவ் பந்துலு, டிஸ.29 டி.இ. வாச்சா. 15. 1899 லக்னோ1 ரமேச சந்திர தத்தர் 740 3500 பாபுபான்ஸிலால்சிங்கு,டி.இ. வாச்சா. 16. 1900 இலாகூர்11 என்.ஜே.சந்தவர்க்கார் 567 ராவ் பகதூர் பிரசன்னாராய் பகதூர், டி.இ.வாச்சா. 17. 1901 கல்கத்தா1 தின்ஷா ஒபுல்ஜி வாச்சா 896 மகராஜ் பகதூர் ஜோதி சந்திர சிங்கு, டி.இ. வாச்சா. 18. 1902 அலகாபாது11 சுரேந்திரநாத பானர்ஜி11 471 திவான்பகதூர் அம்பாலால், சகர்லால் தேசாய், டி.இ.வாச்சா. 19. 1903 சென்னை1 லால் மோகன் கோஷ் 538 5500 மகமது சாயபு பகதூர், டி.இ. வாச்சா 20. 1904 பம்பாய்111 ஸர் ஹென்ஸி காட்டன் 1010 கனம்முன்ஷி மாதவலால், டி.வாச்சா. 21. 1905 காசி கோபாலகிருஷ்ண கோகலே 758 கனம்முன்ஷி மாதவலால், டி.இ. வாச்சா. 22 . 1906 கல்கத்தா தாதாபாய் நெனரோஜி111 1663 20,000 டாக்டர் அஷ்காரி கோஷ், ஏ.ஓ. ஹியூம் டி.இ. வாச்சா,ஜி.கே. கோகலே. பேரவையின் தலைமை மரபு சென்னையில் (1887, 1894, 1898, 1903 ஆக) நான்கு முறையும், கல்கத்தாவில் (1886, 1890, 1901, 1906 ஆக) ஐந்து முறையும், பம்பாயில்( 1885, 1889,190 ஆக) மூன்று முறையும் பேரவை கூடிற்று. தவிர, அலகாபாதில் மூன்று முறையும், இலாகூரில் இரண்டு முறையும். நாகபுரி, இலட்சுமணபுரி, பூனா, அமரோட்டி, காசி என்னும் இடங்களில் முதல் தடவையாக ஒவ்வொரு முறையும் பேரவை நடைபெற்றது. தலைவர்களுள் தாதாபாய் நௌரோஜி மும்முறை (1886, 1903, 1906) பேரவையின் தலைவராயிருநதார். அவர் பேரவையின் மன்றாடும் குரலுக்கு ஊக்கம் தந்து, அதைப் படிப்படியாக உரிமைக்குரல் பெறும் வரை வளர்த்தவர். காந்தியடிகளின் ஆர்வமும் பெருமிதமும் கலந்த வீரப் பாராட்டுக்குரிய முதற் பெருந்தலைவர் அவரே. அவர் 1906 பேரவையில் காங்கிரஸின் புதிய குரலை எழுப்பி, அந்நிலையத்துக்குப் புத்துயிரூட்டினர். வெளிநாட்டுப் பொருள்களை விலக்கி நாட்டுத் தொழிலும் வாணிகமும் வளர்க்கும் சுதேசி முறை பற்றி முதல் முதல் குரலெழுப்பியவர் அவரே. புதிய புரட்சியூழியின் முதல் சிங்க ஏறாகப் பின்னாளில் தொண்டாற்றிய சுரேந்திரநாத் பானர்ஜி ( 1895, 1902 ஆக) இரண்டாண்டுகளில் தலைமைப் பீடத்திலிருந்து முழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தாதாபாயைப் போலவே பார்ஸி சமூகத்தின் பிரதிநிதியான பிரோஸ்ஷா மேத்தா (1890). உமேஷ் சந்திரபானர்ஜி (1885, 1892), இந்தியாவின் ஆங்கில நண்பர்களான ஸர்வில்லியம் வெட்டர்பர்ன் (1889, மீண்டும் 1910), ஜார்ஜ் யூல் (1888), ஆல்ஃவிரெட் வெப் (1894), ஸர் ஹென்றி காட்டன் (1904), முஸ்லிம் பெரியார்களான பத்ருதீன் தயாப்ஜி (1887), முகம்மது ரஹிமத்துல்லா ஸஹானி (1896), தென்னிந்தியப் பெரியார்களான ராவ் சாகிபு ஓ.அனந்தாசார்லு (1891), ஸி. சங்கரன் நாயர் (1897) மற்றும் பிரம சமாஜத் தலைவர் ஆனந்த மோகன் போஸ் (1898), ரமேச சந்திர தத்தர் (1899), மராட்டியப் பெரியாரான என். ஜே. சந்தவர்க்கார் (1900), வணிகக் கோமானாகிய தீன்ஷா எதுல்ஜி வாச்சா (1901), லால் மோகன் கோஷ் (1903) ஆகிய பல திறத்துப் பெருமக்களும் பேரவையில் முதல் பருவத்திலேயே தலைமை தாங்கியுள்ளனர். 1905-ஆம் ஆண்டில் காசியில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தின் தலைவரே காந்தியடிகளால் தம் ஞான குருவெனப் போற்றப்பட்ட கோபாலகிருஷ்ண கோகலே ஆவர். அரசியல் கொந்தளிப்புக்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்ட பிற்காலப் பேரவையால் போதுமான அளவு கவனிக்கப்பட முடியாமற் போன கல்வித் துறை, சமூகப் பணி முதலிய ஆக்கத் துறைத் திட்டங்களை நிறைவேற்ற ‘இந்திய ஊழியர் சங்கம்’ என்ற நிலையத்தை நிறுவியவர் இவர். பேரவையினரால் மதிக்கப்பட்டது மட்டுமன்றி, அதிலிருந்து விலகிப் பின்னாளில் மிதவாத சங்கமமைத்தவர்களாலும் இவர் தலைசிறந்த வழிகாட்டியாய்க் கொள்ளப் பட்டார். அத்துடன் இந்திய மக்கள் மதிப்போடு ஆட்சியாளர் மதிப்பையும் இவர் ஒருங்கே பெற்றிருந்தார். புதிய குரல் பேரவை அளவிலும் தலைவர்களின் செல்வாக்கிலும் பெருகுந்தோறும் அதன் தொனியும் குரலும் மாறி வந்தன. தொடக்கத்தில் பிரிட்டிஷாரின் நல்லெண்ணத்தில் தலைவர்கள் மிகுந்த நம்பிக்கை காட்டி வந்தார்கள். “ஆங்கில மக்களுக்கு இந்தியாவின் நிலைமையை உள்ளவாறு விளக்கி, இந்திய மக்களின் கனவார்வங்களையும் அவா ஆர்வங்களையும் தெரியப்படுத்திவிடுவது போதும். இந்தியாவிற்கு அவர்கள் பொறுப்பாட்சி வழங்கிவிடுவது உறுதி,” என்று அவர்கள் கருதியிருந்தார்கள். 1906 வரை பத்திமனப்பான்மையிலுள்ள இந்த வேண்டுகோள்களே விடுக்கப்பட்டு வந்தன. ஆயினும், முதற்பத்தாண்டுகளுக்குப் பின் சொல்லின் பின்னணியிலுள்ள தொனி மாறுபடுவது காண்கிறோம். பெருமக்கள் சபையாயிருந்த பேரவை, இப்போது படிப்படியாக நாட்டின் மிகப் பெரும்பாலாரான பொதுமக்களின் சபையாகி வந்தது. குரல் வரவர உரிமைக்குரலாயிற்று. தன்னம்பிக்கை வளர்ந்தது. ‘நாம் மன்றாட வேண்டுவதில்லை; முறைப்படி கேட்க வேண்டும்; பின் வாதாட வேண்டும்; தேவைப்பட்டால் இறுதியில் போராடவும் தயங்கக் கூடாது’ என்ற எண்ணம் பெருகிற்று. பேரவையின் பிறப்புக் காலத்தில் அதற்கு வெளியே தனித்தனி குமுறிய புரட்சிக் கனல்கள் அவியவில்லை. அவை பொதுமக்களின் புதிய பிரதிநிதிகளுடன் மெல்ல உள்ளே வந்து விட்டன. பல பிரதிநிதிகளின் பேச்சிலும், சுரேந்திர நாதர், தாதாபாய் நௌரோஜி ஆகிய பெருந்தலைவர்களின் தலைமையுரையிலும் அதன் எதிரொலியைக் கேட்கிறோம். 1906-ஆம் ஆண்டை அடுத்து வருடந்தோறும் அம்முழக்கம் படிப்படியாக உயர்கின்றது. 1906இல் தாதாபாயின் தலைமையுரை பழைய பேரவைக்கு விடை கொடுத்துப் புதிய பேரவைக்கு அழைப்பு விடுப்பது போல அமைந்துள்ளது. ‘தன்னரசு’ (சுயராஜ்ய) என்ற சொல்லைப் பேரவையுரையிலேயே முதன்முதலாக இவ்வாண்டிலேதான் கேட்கிறோம். ஆட்சியாளர் எதிர்ப்பு தொடக்கத்தில் ஆட்சித் தலைவர்களும் ஆட்சியாளர்களும் பேரவையில் மிகவும் ஆர்வம் காட்டியிருந்தார்கள். இரண்டாவது பேரவைக் கூட்டத்தில் சென்னை ஆட்சித் தலைவர் பெண்ட்லண்டு பெருமகனார் கலந்து கொண்டிருந்தார். அடுத்த ஆண்டுப் பேரவையில் ஐக்கிய மாகாண ஆட்சித் தலைவர் ஜேம்ஸ் மெஸ்தன் நேரடியாக வந்து கலந்ததுடன், மேடை மீதேறிச் சொற்பெருக்கே ஆற்றினார்! ஆனால், ஆட்சியாளர்- ஆளப்படுவோர் தொடர்பு இதுபோல நீடித்து நிலவ முடியவில்லை. ஏனெனில், ஆட்சிக் குழுவினர் முதன்முதல் எதிர் பார்த்தபடி பேரவை வெளியே பொதுமக்களிடையேயுள்ள மனக் கசப்பை மாற்ற உதவுவதாயில்லை. அது அம்மனக்கசப்புக்கு முதலில் செவி கொடுத்து, பின்பு அவர்கள் உள்ளக் குமுறலுக்குக் குரல் கொடுப்பதாயிருந்தது. ஆட்சியாளர் இதை விரைவில் உணர்ந்து கொண்டனர். பேரவையை அரசியலவையாக்கும் திட்டத்துக்குத் தூண்டுதல் தந்த ஆட்சி முதல்வர் டஃவ்வரின் பெருமகனாரே. ஆனால், அவர் ஆட்சிக் காலத்துக்குள் அவரே பேரவையை எதிர்க்கத் தொடங்கினார் என்பது மாறுதலின் தன்மையை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. ஆட்சியாளர், அவர்கள் ஆதரவாளர், பிற்போக்குக் குழுவினர் ஆகிய அனைவரும் ஒன்றுபட்டுப் பேரவை இயக்கத்தில் குறை காணவும், அதன் போக்கில் முட்டுக்கட்டை போடவும் தொடங்கினர். பேரவைப் பிரதிநிதித்துவமுடைய தன்று என்றும், மக்களின் மிகச் சிறுபான்மையோரின் ஆதரவையே அது பெற்றிருந்ததென்றும் அவர்கள் குறை காண முனைந்தார்கள். ஆங்காங்கே பலர் அது அரசத் துரோகம் உடையது என்றும் குற்றம் சாட்டினர். 1887 லேயே பேரவையிற் கலந்து கொண்டதற்காக ஓர் அரசியற்பணியாளருக்கு ரூபாய் 20,000 நன்னடக்கைக் காப்பீடு கோரப்பட்டது. 1890ல் அரசியற் பணியாளர் பார்வையாளராகக் கூடப் பேரவைக்குச் செல்லக்கூடாதென்று சுற்றறிக்கை விடப்பட்டது. அது மட்டுமோ! 1900இல் ஆட்சி முதல்வராயிருந்த கர்ஸான் பெருமகனார், இங்கிலாந்திலுள்ள இந்தியா அமைச்சருக்கு எழுதிய கடிதமொன்றில், “பேரவை ஆதரவற்றுத் தள்ளாடி விழவிருக்கிறது. நான் இந்தியாவில் இருக்கும் நாளிலேயே அதை அமைதிகரமாக அடக்கம் செய்துவிட்டு வரவேண்டுமென்பது என் பேரவா” என்று எழுதினாராம்! அந்தோ! கர்ஸான் பெருமகனாரின் பேரவா, சிறிதளவும் நிறைவேறவில்லை. பேரவை தள்ளாடி வீழ்வதற்கு மாறாகப் பன்மடங்கு அவர் ஆட்சிக்குள்ளேயே வளர்ந்தது! அதை அடக்கம் செய்வதாக அவர் கூறினார். ஆனால், அவர் அடக்கம் செய்ய முடிந்தது பிரிட்டிஷார்மீதுள்ள பழைய பேரவைத் தலைவர்களின் நன்னம்பிக்கை ஒன்றையே. அவர் ஆட்சிக் காலம் பிரிட்டிஷ் பேரரரசின் வீழ்ச்சிக்கு முதல் எச்சரிக்கை மணியாக மட்டுமே உதவிற்று! ஆண்டுதோறும் பேரவையில் தலைவர்கள் ஆற்றிய தலைமையுரைகள், பேரவையின் குறிக்கோளைப் படிப்படியாய் உயர்த்தின. அதன் பின்பு ஒவ்வொரு பேரவையிலும் ஆட்சி யாளருக்கும் மக்களுக்கும் பேரவை தன் விருப்பங்களைத் தெரிவித்துப் பல தீர்மானங்களை நிறைவேற்றிற்று. பல தீர்மானங்கள் முதல் பேரவையிலிருந்து தொடங்கிப் பல ஆண்டுகள் மீண்டும் மீண்டும் நிறைவேற்றப்பட்டன. ஆண்டு தோறும் அவை கவனிக்கப்படாமலிருந்தும், பேரவை உறுப்பினர் அதே தீர்மானங்களை நிறைவேற்றினார்கள் என்பது, அயல் ஆட்சியாளரின் பொறுப்பும் உணர்ச்சியும் அற்ற மரத் தன்மைக்கும், பேரவையின் தொடக்கக் காலப் பொறுமைக்கும் நல்லதொரு சான்று ஆகும். முதற் பேரவை: தீர்மானங்கள் தொடக்கப் பருவத்தில் ஒவ்வோர் ஆண்டிலும் நிகழ்த்தப்பட்ட தலைமையுரைகளுக்கும், தீர்மானங்களுக்கும் முதல் பேரவையையே ஓரளவு முனைமுகமாகக் கொள்ளலாம். தலைமைப் பேருரையில் முதல் பேரவையின் தலைவர் உமேஷ் சந்திர பானர்ஜி வற்புறுத்திய நான்கு குறிக்கோள்களே அக்காலப் பேரவையின் குறிக்கோள்கள் என்னலாம். அவை பின்வருவன: 1. மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் வரும் மக்கட் பணியாளர்கள் மாநிலப் பேரவையில் ஒருங்கு கூடுவதனால், அவர்களிடையே நேச உணர்ச்சியும் ஒத்துணர்வும் பெருகும். 2. இதன் மூலமே மாகாண வேறுபாடும் சமய சாதி வகுப்பு வேறுபாடும் நீங்கி ஒற்றுமை ஏற்படும். 3. சமுதாயக் குறைபாடுகளில் அறிஞர் கவனம் செலுத்தி, அது பற்றிக் கலந்தாராய்ந்து, வேண்டிய சீர்திருத்தங்களுக்குத் தீர்மானம் செய்யலாம். 4. முந்தின ஆண்டுப் பணியை ஆராயவும் அடுத்த ஆண்டுக்கான திட்டம் வகுக்கவும் பேரவை உதவும். முதற்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஒன்பது. ஆண்டுதோறும் இறுதித் தீர்மானம் அடுத்த ஆண்டுக் கூட்டத்தின் தேதி, இடம் ஆகியவை பற்றியது. மற்றத் தீர்மானங்களுள் முதல் மூன்று தீர்மானங்களும் இந்தியாவின் ஆட்சிமுறையைப் பற்றிப் பரிசீலனை செய்ய ஆட்சியாளர் ஒரு குழு அமைக்க வேண்டுமென்றும், பிரிட்டனிலுள்ள இந்திய அமைச்சரின் அவை கலைக்கப்பட வேண்டுமென்றும், தேர்வுரிமையுள்ள சட்டமன்றங்கள் மூலம் பொறுப்பாட்சி வழங்கப்பட வேண்டுமென்றும் கோரின. மூன்று தீர்மானங்களும், சிறப்பாக மூன்றாவது தீர்மானமும், ஆண்டுதோறும் திரும்பத் திரும்ப வற்புறுத்தப்பட்டன. ஆயினும், 1-ஆம், 3-ஆம் தீர்மானங்கள் (ஆட்சி முறையைப் பரிசீலனை செய்யக் குழு அமைக்க வேண்டுமென்பதும், தேர்வுரிமையுள்ள சட்ட மன்றங்கள் வேண்டுமென்பதும்) 1907 வரை கவனிக்கப் படவே இல்லை. அவ்வாண்டு முதல் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை பரிசீலனைக் குழு அமைக்கப்பட்டு, மிகச் சிறு சிறு அளவில் சீர்திருத்தங்கள் வழங்கப்பட்டன. இரண்டாவது தீர்மானம் இந்தியா அமைச்சர் ஆலோசனைக் குழுவை ஒழிக்க வேண்டுமென்று கோரிற்று. 1913 வரை பேரவை இதனை எத்தனையோ முறை வற்புறுத்தியும், ஆட்சியாளர் அசையவில்லை. அதன் பின்பு அக்குழுவை ஒழிப்பதற்குப் பதிலாக, அதில் சில மாறுதல்களேனும் செய்ய வேண்டுமென்பது தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அவ்வகையில் வட்ட மேஜை மகாநாடு (1930) வரை ஒரு சிறு மாற்றமும் செய்ய ஆட்சியாளர் இணங்கவில்லை. அதன் பின்னும் மாநில விடுதலை ஒன்றினாலேயே இந்திய அமைச்சர் நிலையத்துக்கும் அவர் அவைக்கும் ஒரு முற்றுப்புள்ளி ஏற்பட்டது. நான்காவது தீர்மானம், இந்தியாவிலும் இங்கிலாந்திலும் உச்சப்பணிகளுக்கான போட்டித் தேர்தலை ஒரே சமயத்தில் நடத்த வேண்டுமென்றும், உயர்தர நடுத்தரப் பள்ளிக் கல்வியைப் பரப்ப வேண்டுமென்றும் கோரிற்று. இரண்டாவது பேரவை, இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஒரு துணைக்குழுவை அமைத்தது. ஆனால், பேரவை தோற்று முன்னும் பின்னும் படித்த இந்தியர் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி வந்த இந்தக் கோரிக்கை நீண்ட நாள் நிறைவேறாமலே இருந்தது. 1861லேயே இப்பணிகளுக்கு ஆறிலொரு பங்கு இந்தியர் அமர்த்தப்படுவரென்று ஆட்சியாளர் உறுதி கூறியிருந்தனர். பேரவையின் வேண்டுகோளுக்கிணங்கி, உச்ச வயது 19லிருந்து 23 ஆக உயர்த்தப்பட்டது. ஆயினும், அவ்வாறு அவர்கள் செயலில் செய்யவில்லை. போதாக்குறைக்கு ‘ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்’, என்ற முறையில், 1894 ல் உசப் பணிகளில் முழுதும் வெள்ளையரே இருந்து தீர வேண்டுமென்று ஆட்சியாளர் விதி அமைக்க முற்பட்டனர். பேரவைக்கும் இந்திய மக்களுக்கும் இறுதிவரை மனத்தில் உறுத்திய செய்திகளில் ஒன்றாக இந்த நிற வேறுபாடு அமைந்தது. இதன் ‘ஒரு குலத்துக்கு ஒரு நீதி’ இந்தியர் தன் மதிப்பைப் புண்படுத்திற்று. “சொந்த நாட்டிற் பிறர்க்கடி மைசெய்து வாழ்வதோ - உயிர்- மாள்வதோ!” என்று மக்கள் முழக்கமிட்டார்கள். ஐந்தாவது தீர்மானம், மாநில விடுதலைக்காலம்வரை என்றும் ஒரு சிறிதும் கவனிக்கப்படாத் தீர்மானம். அதுவே மாநிலப் பாதுகாப்புச் செலவை அதாவது படைத்துறைச் செலவைக் குறைக்க வேண்டுமென்பது. செல்வம் கொழிக்கும் நாடுகளில் அத்துறையில் செலவாவதைவிட, வறுமையும் பஞ்சமும் தாண்டவமாடும் இந்தியாவில் மிகுதி விழுக்காடு செலவாவது இந்திய மக்களின் ஒரு பெருங்குறைபாடேயாகும். ஆண்டுதோறும் படைத்துறைச் செலவு பற்றிய பேச்சுக்கள் உரத்த குரலில் பேரவை மேடையை அதிர வைத்தன. ஆனால், இச்செலவு மிகுதிக்கு ஆட்சியாளரிடையேயுள்ள 1857 புரட்சியின் நினைவும் அச்சமுமே காரணம். படைத்துறை இந்திய மயமாக்கப் படவேண்டும் என்ற கூக்குரல் கவனிக்கப்படாததும், இது காரணமாகவே கிளர்ச்சி ஏற்பட்டால் இந்தியப் படைகளும் இந்தியப் பணித்தலைவரும் இந்தியர் பக்கம் சாயக் கூடும் என்று அயலாட்சி ஏகாதிபத்தியம் அஞ்சிற்று. ஆறாவது தீர்மானம் நாட்டுத் தொழில்களைப் பற்றியது. காப்பு வரி அல்லது தீர்வைகளை ஏற்படுத்தி உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க வேண்டுமென்று பேரவை கோரிற்று. ஏழாம் தீர்மானம், புதிதாக வெல்லப்பட்ட வடபர்மாவை இந்தியாவுடன் சேர்த்தலாகாது என்றும், முடியுமானால் பர்மாவையே தனி நாடாகப் பிரிக்க வேண்டுமென்றும் வேண்டிற்று. எட்டாம் தீர்மானம், தீர்மானங்களை மக்களிடையே பிரசாரம் செய்ய வேண்டுமென்று கூறிற்று. புதிய பிரச்சினைகள் முதற் பேரவையின் மேற்காட்டிய தீர்மானங்களைப் போல ஆண்டுதோறும் பல தீர்மானங்கள் செய்யப்பட்டன. பல தீர்மானங்கள் பழைய தீர்மானங்களை மீட்டும் வற்புறுத்தின. ஆனால், அவ்வப்போது புதிய பிரச்சினைகளும் எழுந்தன. வரவரப் பொதுமக்களின் குரல் பேரவையில் புகுந்தது. வரவர மிகுதியான ஆர்வத்துடன் உறுப்பினர் வாதத்தில் கலந்து கொண்டனர். பேரவையின் அரசியல் நோக்க எல்லையின் விரிவை இவை காட்டுகின்றன. இரண்டாவது பேரவையில் செய்யப்பட்ட தீர்மான மொன்று, நீதி நிருவாகத் துறைகளைப் பிரிக்க வேண்டுமென்றும், சான்றாளர் குழுவின் (துரடல) முடிபுகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்றும் கோரிற்று. அத்துடன் விசாரணை இல்லாமல் எவரையும் காவலில் வைத்திருப்பதைக் கண்டித்து, அவர்களுக்கு விசாரணை கோரும் உரிமையைப் பேரவை வேண்டிற்று. நீதி நிருவாகப் பிரிவினைத் தத்துவம் குடியாட்சி இயக்க வரலாற்றில் அமெரிக்கப் புரட்சிக் காலத்தில் தலைவர் ஜெஃவ்வர்ஸனால்1 முதல் முதல் 18-ஆம் நூற்றாண்டில் வற்புறுத்தப்பட்டு, 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ராஜா ராம்மோகனராயரால் உரத்த குரலில் இந்தியாவின் கோரிக்கையாக்கப்பட்டிருந்தது. பேரவையில் எழுந்த முதல் உரிமைக் குரல் இதுவே. இந்தியாவின் இறுதி விடுதலை நாள்வரை இந்தக் குரலுக்கு அயலாட்சி சிறிதும் செவி கொடுத்ததாகத் தெரியவில்லை. அது மட்டுமன்றி, இது வகையில் விடுதலை இயக்கம் வளருந்தோறும் ஒவ்வொரு படியிலும் ஆட்சியாளர் போக்கு, மக்கள் தன் மதிப்பையும் விடுதலைப் பற்றையும் புண்படுத்துவதாகவே இருந்தது. 1857க்குப் பின் புரட்சியை அடக்க அவர்கள் மேற்கொண்ட புதிய சட்டங்கள் போதாவென்று இந்திய மன்னர்கள், படை வீரர்கள் கிளர்ச்சிகளையடக்க வாணிகக் கழக ஆட்சியாளர் 1818லிருந்து 1827 வரை நிறைவேற்றிய பழைய பஞ்சடைந்த சட்டங்கள்கூட 1897க்குப் பின் உயிர் கொடுக்கப் பட்டன. இவற்றால் குற்றஞ் சாட்டப்படாமலே எவரும் ஆட்சியாளரால் காவலில் வைக்கப்பட அதிகாரம் ஏற்பட்டது. குடி உரிமைக்கும் குடியாட்சிக்கும் மாறான இச்சட்டங்கள் மக்கள் கோபத்தைத் தூண்டின. படைத்துறை இந்திய மயமாக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம், இரண்டாவது ஆண்டு முதல் வலியுறுத்தப்பட்டது. ஆயிர ரூபாய்க்குக் குறைந்த வருமானங்களுக்கு வருமானவரி விதிக்கக்கூடாதென்றும்; படைத்துறை உயர்பணிகள் இந்தியருக்குத் தரப்பட வேண்டுமென்றும்; அதற்கான படைத்துறைப் பயிற்சிக் கல்லூரிகள் இந்தியாவிலேயே நிறுவப் படவேண்டுமென்றும் மூன்றாவது ஆண்டுப் பேரவை கோரிற்று. இவையும் நெடுநாள் கவனிக்கப்படாதவை. இந்தியாவில் படைத்துறைப் பயிற்சிக் கல்லூரி ஏற்பட்டது நெடுநாளுக்குப் பிற்பட்டே ஆகும். மக்கட் குரல் மூன்றாவது பேரவையில் தீர்மானங்களுக்கிடையே நாம் முதல் தடவையாக ஒரு மூலையிலிருந்து மக்கட்குரலை வியப்புடன் கேட்கிறோம். அதன் தொனியும் தோரணையும் அன்று எதிர்பாராதவையாயிருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. “நாள் ஒன்றுக்கு ஒரு வேளை உணவுகூட வயிறார உண்ண வகையற்றவர் இந்நாட்டில் நாலரைக் கோடி பேர் இருக்கின்றனர். இது ஆட்சியாளரே காட்டுகிற புள்ளி விவரம். இத்தகையவர்களுக்கு ஒரு வேளை உணவாவது தரத்தக்க தொழில் திட்டம் ஏதாவது அரசியலார் வகுக்கக்கூடாதா? அதற்காகப் பயிற்சி தரும் கல்வித் திட்டம் ஏதாவது வேண்டாவா?”- புத்தார்வம் ஊட்டும் இக்குரலை எழுப்பியவர் உண்மையிலேயே ஒரு தொழிலாளர் என்பதை அறியும்போது, நம் மகிழ்ச்சி பெரிதாகிறது. இப்பிரச்சினையைத் தோற்றுவித்தவர் தஞ்சையிலுள்ள மூக்கன் ஆசாரியார் ஆவர். நான்காம் ஆண்டுப் பேரவை, முதன்முதலாக உப்பு வரியைக் கண்டித்தது. மீண்டும் மீண்டும் அரசியலார் நினைவுக்குக் கொண்டுவரப்பட்டும் கவனிக்கப்படாத இக்குறைபாடே. 1930-ஆம் ஆண்டு காந்தியடிகளின் உப்புப் போராட்டத்துக்குத் தூண்டு கோலாயிற்று. இந்துப் பிரதிநிதிகள் அல்லது முஸ்லிம் பிரதிநிதிகள் ஒருமுகப்பட்டு எதிர்க்கும் எந்தத் தீர்மானமும் பேரவையால் மேற்கொள்ளப்படக் கூடாதென்பது நான்காம் பேரவையின் தீர்மானங்களுள் ஒன்று. இந்து முஸ்லீம் ஒற்றுமை மனப்பான்மை விடுதலை இயக்கத்தின் போக்குக்கு எவ்வளவு உயிர்நிலையானது என்பதைப் பேரவை அன்றே உணர்ந்திருந்தது என்பதை இது நன்கு எடுத்துக் காட்டுகிறது. கோகலே, திலகர் முதலிய ஒப்பற்ற தேசத் தலைவர்கள் பெயர்களை நாம் ஐந்தாம் பேரவையிலேயே கேட்கிறோம். பழைய பேரவையின் கருவிலேயே புதிய தலைமையின் முளை தளிர்க்கத் தொடங்குகிறது! பிரிட்டிஷ் பொதுமக்களிடமும் உலக மக்களிடமும் இந்தியா பற்றியும் பேரவை இயக்கம் பற்றியும் ஆட்சியாளரும் எதிரிகளும் செய்யும் தவறான பிரசாரங்களுக்கெதிராக உண்மைத் தகவல்கள் தந்து சரியான பிரசாரம் செய்வதன் அவசியத்தை ஆறாவது பேரவை உணர்ந்து, அதற்காக ஒரு பிரசாரக் குழுவை அமைத்தது. உமேஷ் சந்திர பானர்ஜியும் சுரேந்திரநாத பானர்ஜியும் அதில் உறுப்பினராயிருந்தனர். ஸர் வில்லியம் வெட்டர்பர்ன் இங்கிலாந்து சென்ற பின் அவரும் இதனுடன் இருந்து அருந் தொண்டாற்றினார். ஏழாவது பேரவை, இக்குழுவின் செலவுக்காக ஆண்டுதோறும் ரூ. 40,000 உதவித் தொகை அளிக்க இணங்கிற்று. இந்தியா முழுவதும் ஒரேவகை நிலவரி முறை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஆறாவது பேரவையும், வெளிநாட்டுப் பொருள்களை விலக்கி நாட்டுப் பொருள்களை (சுதேசியை)யே யாவரும் வாங்க வேண்டுமென்று ஏழாவது பேரவையும் தீர்மானித்தன. பத்தாவது பேரவை, குழந்தைப் பருவத்திலுள்ள இந்திய ஆலைத் தொழில்கள் மீது, பிரிட்டனின் ஆலை முதலாளிகளின் தூண்டுதலின் மேல் அரசியலார் வரி விதிப்பதைக் கண்டித்தது. அடுத்த ஆண்டு, தொடர் ஊர்திகளில் மூன்றாவது வகுப்புப் பிரயாணிகளின் துயர்களை ஆற்ற நடவடிக்கை எடுக்கும்படியும், தென்னாப்பிரிக்க இந்தியர் துயர் களைய நடவடிக்கை எடுக்கும் படியும் பேரவை அரசியலாரை வேண்டிற்று. பன்னிரண்டாவது பேரவை, பம்பாய், சென்னை ஆட்சித் தலைவர் செயலவைகளில் இந்தியருக்கும் இடம் தர வேண்டும் என்று வாதாடிற்று. 1897க்குள் அதாவது, 13-ஆம் பேரவை கூடுமுன், 1857லிருந்து பொதுமக்களிடையே குமுறிக் கொண்டிருந்த புரட்சிக்கனல், பேரவைக்குள்ளும் ஒளிவீசத் தொடங்கிற்று. பிற்காலத்தீவிரக் கட்சியின் தலைவரும் லோகமானியர் என்று பொது மக்களால் போற்றப்பட்டவருமான பாலகங்காதர திலகர் மீது இவ்வாண்டு அரசத்துரோகக் குற்றஞ் சாட்டப்பட்டு, அவர் தண்டனை யடைந்தார். மற்றும் உடன் பிறந்தாராகிய ‘நாட்’ துணைவர்கள் அவருடன் நாடு கடத்தப்பட்டார்கள். பேரவை இவற்றை யெல்லாம் உரத்த குரலிலாற் கண்டித்தது. கர்ஸான் பெருமகனாரின் புதுத் தாக்குதல்: 1898இல் கர்ஸான் பெருமகனார் இந்திய ஆட்சித் தலைவரானார். ஆதிக்க வெறியரான அவர் ஆட்சிக்குள் பேரவை முழுதும் போராட்டத்துக்குக் கச்சை வரிந்து கட்டும் அவையாயிற்று, அவ்வாண்டுப் பேரவை அவரை வரவேற்றதுடன், காட்டிலாக்காச் சட்டங்களின் கடுமையையும் கண்டித்தது. அடுத்த ஆண்டிலேயே கர்ஸான் பெருமகனாரின் அடக்குமுறைச் சட்டங்கள் எழுந்தன. பேரவை வீறிட்டெழுந்தது. அவ்வாண்டு மேற்கு, நடு இந்தியாவில் எழுந்த பஞ்ச நிலைகளைப் பேரவை வாதித்து, அடக்குமுறைச் சட்டங்களைக் கண்டித்தது. 1900, 1901 ஆகிய இரண்டு ஆண்டுகளில் ஆப்பிரிக்காவிலும், அஸ்ஸாமிலும் உள்ள இந்தியத் தொழிலாளர்களின் துயரங்கள் எடுத்துக் கூறப்பட்டன. உயர்தரக் கல்வி பரவுவதைக் கர்ஸான் பெருமகனாரின் பல்கலைக் கழகச் சட்டம் தடுப்பதாக அதனை 1903 பேரவை கண்டித்தது. அடுத்த ஆண்டு 20- ஆம் பேரவை கர்ஸானின் பெருஞ் செலவுகளையும் திபெத்துப் படையெடுப்பையும் வன்மையாக மொழிகளால் கண்டித்தது. 1904லேயே பேரவை வங்காளப் பிரிவினைக்குக் கர்ஸான் செய்து வரும் முயற்சியைக் கண்டித்தது. ஆனால், 1905ல் பிரிவினை நடந்தேறிவிட்டது. அதன் பயனாகப் பேரவை கொண்ட சீற்றம் அளவிடற்பாலதன்று. தீவிரக் கட்சித் தலைவர்களான லாலா லஜபதிராய், திலகர் ஆகிய இருவரும் இதற்கான எதிர் நடவடிக்கை எடுக்க முனைந்தனர். பின்பு ஐந்தாம் ஜார்ஜ் அரசரான இளவரசர் வரும்போது அவருக்கு வரவேற்பளிக்காது முகமறுப்பளிக்க வேண்டுமென்று அவர்கள் வற்புறுத்தினார்கள். ஆயினும், பேரவை முற்றிலும் பிரிட்டிஷாரின் நல்லெண்ணத்தில் இன்னும் நம்பிக்கை அற்றுவிடவில்லை. ஆகவே, தீர்மானம் தோல்வியுற்றது. ஆங்கிலப் பொருள்களை மறுப்பதென்ற தீர்மானம் மட்டும் எப்படியும் நிறைவேற்றப் பட்டது. 1906இல் பேரவையில் தீவிரக்கட்சி முற்போக்கு அடைவது தெரிந்து, மிதவாதிகளால் பிரிட்டனிலிருந்து தாதாபாய் நௌரோஜி வரவழைக்கப்பட்டுத் தலைவராக்கப்பட்டார். இப்போது முற்றிலும் வெண்தாடி வேந்தராய் விளங்கிய அப்பெரியாரின் கனிவுமிக்க தலைமையுரை, மிதவாதிகளின் எல்லையில் நின்றே தீவிரவாதிகளுக்கு வாழ்த்துரை வழங்குவதா யிருந்தது. அவர் இந்தியாவின் குறிக்கோள் உண்மையான பொறுப்பாட்சி அல்லது தன்னரசே என்றும், அதற்கான எத்தகைய நடவடிக்கைகளையும் அது எடுக்குமென்றும் வீறிட்டு முழங்கினார். கிழச் சிங்கத்தின் குரல் இளஞ்சிங்கங்களையும் இன்னும் தயங்கி மயங்கிய மிதவாதிகளையும் ஒருங்கே தற்காலிகமாக இணைத்தது. இங்ஙனம் படித்த மக்களிடையே தோன்றிய பேரவைக் காலப் புதிய இந்தியா, கட்டபொம்மன், திப்பு, சிவாஜி, ஜான்ஸி ராணி ஆகியவர்கள் வீரக் குருதியின் புகழொளியைச் சில காலம் மறந்து, பிரிட்டனிடம் நல்லெண்ணம் கொண்டு மன்றாடி வாதாடி வந்ததைக் காண்கிறோம். ஆனால், இருபதாண்டுக்குள் இறந்தவர் குருதியின் ஆற்றல், பேரவை மதில்களைச் சுற்றிலும் வந்து மோதுவதைக் காண்கிறோம். பாஞ்சாலத்திலிருந்து லாலா லஜபதியும், மராட்டிரத்திலிருந்து திலகரும் அதன் உயிர்ச்சின்னங்களாய் மதில் கடந்து வந்து முழங்கினர். மிதவாதத் தலைமைப் பீடத்திலமர்ந்த கிழச் சிங்கத்தின் பிடரி மயிர்கள் அடங்கிய அவ்வீர நினைவுகளால் துடிப்பதைக் காண்கிறோம். இந்தச் சூழ்நிலையில் வங்கப்பிரிவினை ஒரு பொறியாயிற்று. அது வங்கப் புரட்சியை வங்கத்தில் மட்டுமன்றி மாநிலமெங்கும் பரப்பிற்று. புரட்சி வேறு, பேரவை வேறு என்ற நிலை மாறிற்று. புரட்சி பேரவைக்குள் புகுந்தது. வங்கப் புரட்சியுடன் பேரவை சார்ந்த இந்திய தேசிய விடுதலை இயக்கம் உண்மையில் தொடங்குகிற தென்னலாம். 8. புயல் எதிர் புயல் மாநிலமும் வங்கமும் பாரத தேசம் ஒரு பெரிய முக்கோணம்- ஆனால், அதை மையமில்லாத முக்கோணம் என்னலாம். ஏனென்றால், பாரதத்தின் உயிர்நிலை இயக்கங்களும் பேரரசியக்கங்களும் பெரும்பாலும் முத்திசைக் கோணங்களிலிருந்து தொடங்கி, மையத்தைச் சுற்றிச் சக்கராகாரமாகவே சென்றுள்ளன. பேரவை இயக்கம் தொடக்கத்தில் விடுதலைப் போராட்ட மரபில் வந்த புரட்சி மனப்பான்மையுடன் கலவாமலே இயங்கிற்று. திடுமென அதனைப் புரட்சிகரமாக மாற்றிய சத்திகள் கிழக்கே வங்காளத்திலேயே முதல்முதல் எழுந்தன. பின்பு அவை தெற்கே தமிழகத்தில் எதிரொலித்து, பாஞ்சாலம், மராட்டிரம், கூர்ச்சரம் ஆகிய இடங்களில் கவர் விட்டுப் பரந்தன. மகாத்துமா காந்தியடிகள் வங்கத்தைப் பற்றிய ஓர் அழகிய பொன்னுரையை நமக்கு வழங்கியுள்ளார்: “வங்கத்தை இந்தியாவின் ஒரு மாகாணம் என்று கொள்வதுதான் இயல்பு. ஆனால், ‘இந்தியாதான் வங்கத்தின் ஒரு மாகாணமோ!’ என்று எனக்கு அடிக்கடி தோன்றுவதுண்டு. ஏனென்றால், வங்கத்தின் தேசிய இயக்கத்தை நான் இந்தியாவெங்கும் காண்கிறேன்: ஆனால், வங்கத்திலேயே அதன் முழுநிறை உயிராற்றலைச் செறிவுறக் காண முடிகிறது. அது மட்டுமன்றி, வங்கத்தின் இசை, கலை, இலக்கியம், கவிதை ஆகியவற்றை நாம் இந்தியா முழுவதும் கேட்கிறோம்; ஆனால், முழு நிறை உறவில் அவற்றை வங்கத்திலேயே காண்கிறோம். எனவே, நிலவியல் முறைப்படி வங்கமே இந்தியாவின் ஒரு மாகாணமாயினும், பண்பாட்டு முறைப்படி இந்தியாவே வங்கத்தின் ஒரு மாகாணம் என்னலாம்.” வங்கத்தைப் பற்றிய அடிகளின் பொருள் பொதிந்த பொன்னுரை இதுவே. மாநிலமெங்கும் பேரவை இயக்கம் அரசியல் இயக்கமாகவே பரந்து வந்துள்ளது. ஆனால், வங்கத்தில் அது 19-ஆம் நூற்றாண்டிலிருந்தே அரசியல் இயக்கமாக மட்டுமன்றி, மொழி, இலக்கியம், கலை, சமயம், பண்பாடு ஆகிய எல்லாத்துறைகளும் அளாவிய முழுநிறை தேசிய மறுமலர்ச்சி இயக்கமாய் அமைந்து விட்டது. மாநில எல்லை கடந்து உலக இலக்கிய வானிலே வங்க நங்கையாரான தோருதத்தா, வங்கக்குயில் திருமதி சரோஜினி தேவியார், உலகக் கவிஞர் இரவீந்திரர் ஆகியவர் திகழ்கின்றனர். வங்க இலக்கியமும் கவிச்சக்கரவர்த்தி இரவீந்திரர், புனைகதைப் பேரரசர் பங்கிம் சந்திரர், நாடக மன்னர் துவிஜேந்திரலால்ராய் ஆகியவர்கள் தொண்டுகளின் மூலம் உலக இலக்கிய எல்லையில் நின்று மிளிர்கின்றது. வங்கப் புரட்சி: சுதேசி இயக்கம் பேரவையின் புரட்சிகரமான மாறுதலுக்கு உடனடிக் காரணம் வங்கப் புரட்சியேயாகும். கிளைவ், ஹேஸ்டிங்ஸ் ஆகியவர்களின் அடாச் செயல்கள் பாஞ்சாலங்குறிச்சிக்கும், டல்ஹெளலிப் பெருமகனாரின் அட்டூழியங்கள் மாநிலப் பெரும்புயலுக்கும் வழி வகுத்தது போல, வங்கப் புரட்சிக்குக் கர்ஸான் பெருமகனாரின் நிறவெறி பிடித்த ஆணவப் போக்கே காரணமாயிற்று. தேசிய இயக்கத்தின் முன்னணியில் நின்ற வங்கத்தின் வாழ்வை எப்படியாவது குறைக்க எண்ணி, அவர் 1904ல் அதனை இரு மாகாணங்களாக்கத் திட்டமிட்டார். இது 1905 அக்டோபர், 16-ஆந் தேதி நிறைவேற்றப்பட்டது. இதனைப் பேரவை எதிர்த்தது. வங்கமெங்கும் மாநிலத்தின் அங்கம்போல விதிர்விதிர்த்தெழுந்தது. வங்கத்தின் குரல் இந்தியாவெங்கும் எதிரொலித்தது. வங்கத்தின் தேசியத் தூதுவராக இச்சமயம் விபினசந்திரபாலரும், சுரேந்திரநாத பானர்ஜியும் விளங்கினர். சுரேந்திரநாதர் பேரவைப்பணிக்காகவே உயர் பதவி பட்டங்களைத் துறந்து நின்ற தியாகி, அவர் இந்தியாவின் அந்நாளைய தலைசிறந்த சொல்லின் செல்வர். சங்கரர், இராமானுசர், மாத்துவர், சைதன்னியர் ஆகிய பழங்காலச் சமயாசாரியர்களைப் போலவே, அவர் மாநில முழுவதும் திக்கு விஜயம் செய்து, ஒரே இயக்க மூலம் அதற்குப் புதிய சத்தியும் ஒற்றுமையும் ஊட்டினார். வங்கத்தில் எழுந்த பொறி, மாநிலமெங்கும் கொழுந்து விட்டெரிந்தது கண்டு, கர்ஸான் பெருமகனார் கலக்கமுற்றார். பேரவை இயக்க வரலாற்றில் வங்கப் புரட்சி ‘சுதேசி இயக்கம்’ என்று குறிப்பிடப்படுகிறது. அதுவே இந்தியாவின் பெரிய முதல் அரசியல் இயக்கமாகும். வங்கப் புனைகதையாசிரியர் பங்கிம் சந்திரரின் ‘ஆனந்த மடத்தில்’ வங்க அன்னையின் புகழ் பாடப்படுகிறது. ‘வந்தே மாதரம்’ என்று தொடங்கும் அந்தப் பாடலே, பாரத தேசத்தின் தேசியப் பாடலாயிற்று. அதன் முதலடியே சுதேசி இயக்கத்தின் போர்க் குரலாயமைந்தது. வங்கத்திலும் மாநிலமெங்கும் அக்காலம் முதல் ‘வந்தே மாதரம்’ என்ற பாடலைப் பாடுவதற்கு அரசியலாரின் தடை ஏற்பட்டிருந்தது. ஆனால், எங்கும் மக்கள் அதைப் பாடினார்கள். ‘வந்தே மாதரம்’ என்ற சொற்களை மாநிலமெங்கும் சுவர்களில் அந்நாள் முதல் கண்டு வருகிறோம். தேசீயத்தின் உள்ளத்தில் தீட்டப்பட்ட சொற்களைத் தேசச் சுவர்களில் தீட்டி நிறைக்க இளவுள்ளங்கள் துடித்தன. வங்கத்திலும் மாநிலத்தின் பல பாகங்களிலும் ‘வந்தே மாதரத்தையே’ முழக்கமாகக் கொண்ட பத்திரிகைகள் எண்ணற்றவை தோன்றின. கர்ஸானின் அடக்குமுறைப் புயலில் அவை பற்பல தொல்லைகளுக்காளாக்கப்பட்டும், மேன்மேலும் தியாகத் தீயில் குதித்து ஒன்று பத்தாகப் பெருகின. பிரமபாந்த உபாத்தியாயர், பூபேந்திர நாதர், அட்சய குமாரர், அரவிந்தர் ஆகிய வங்கச் செல்வரும், லோகமானியர், பராஞ்சிபே ஆகிய மராட்டிய வீரரும், ஜஸ்வந்தராய், அதவாலி, லாலா லஜபதி ராய் ஆகிய பாஞ்சாலக் காளையரும் இப்புது வேள்வியில் கலந்து புனிதமடைந்தனர். விபினசந்திர பாலர் மீதும் அரவிந்தர் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன. பாலர் கடுஞ்சிறைக்காளானார். அரவிந்தர் நாடு கடத்தப்பட்டு, நீண்ட நாள் உலகில் பல நாடுகளிலும் திரிந்து, இறுதியில் தமிழகத்தில் புதுச்சேரியிலேயே தங்கி, யோகவாழ்வாற்றி வந்தார். தமிழகத்தில் சுதேசி இயக்கம் ஒரு தனிப் பேரியக்கமாய் வளர்ந்தது. வங்க நாட்டுப் புரட்சி தெற்கே மற்றொரு வகை ‘வங்க’ப் புரட்சி ஆயிற்று. (‘வங்கம்’ என்பதற்குத் தமிழில் ‘கப்பல்’ என்பது பொருள்). தமிழகத்தின் ‘வங்க’ப் புரட்சி வங்க நாட்டுப் புரட்சியைக் கடந்து, ஏகாதிபத்தியப் பேரெதிர்ப்புப் போராட்டமாயிற்று. தமிழக ‘வங்க’ப் புரட்சி வங்கம் மாநிலப் பேரியக்கத்துக்குத் தந்த தூண்டுதல் மிகப் பெரிது. ஆனால், இயக்கம் மாநில எல்லைக்குச் சென்ற பின், வங்கம் தற்காலிகமாக அதன் தலைமை நிலையிலிருந்து நழுவிற்று. 1905- ஆம் ஆண்டுப் பேரவையில் வங்கப் பிரிவினைக்கு எதிர்த் தாக்குதலாக, இளவரசர் வருகையை ஏற்க மறுக்க வேண்டுமென்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, வங்கப் புரட்சித் தலைவர் சுரேந்திரநாதரே அதை எதிர்த்து நிறைவேற வொட்டாமற் செய்தார். வங்கப் புரட்சிக்கிடையே அவர் படிப்படியாக மிதவாதிகளின் பக்கமாகச் சாய்ந்தார். வங்கம் தற்காலிகமாக மிதவாதிகளின் கோட்டையாகி வந்தது. ஆனால், இதற்குள் தீவிர இயக்கத் தலைமையைத் தமிழகமும், மராட்டியமும், பாஞ்சாலமும் ஏற்றன. வங்கத்துக்கு அடுத்தபடியாகத் தமிழகம் நின்று வீறுடன் வழிகாட்டிற்று. தமிழகத்தின் தனிப்பெருந் தலைவரான கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் தலைமையில் அது ‘வெள்ளையனே வெளியே போ!’ என்ற குரலை முதன் முதலாக எழுப்பிற்று. 1907ல் வீரத் தமிழர் எழுப்பிய இந்தக் குரலே, 1942ல் மீண்டும் பேரவைத் தலைவரால் உயிர்ப்பிக்கப்பட்டு, 1947ல் வெள்ளையரை வெளியேற்றிற்று என்பதைக் காணலாம். ‘வெள்ளையனே, வெளியே போ!’ என்ற வீரத்தமிழர் குரல், வீரமட்டும் உடையதன்று. அது தமிழ் மரபில் வழுவாமல் ‘வெள்ளையனே, உன் கப்பல்களுடன் நீ வெளியே போ! யாமே எம் கடல் ஆண்டு வாழ்வோம்’ என்று கூறுவதாயுமடைந்தது. வாணிகப் பண்பிலும் தொழில் பண்பிலும் வளர்ந்த பண்டைத் தமிழக மரபு, தேசிய இயக்கத்தையும் வாணிகத் தொழில் மரபில் வளர்க்கத் தலைப்பட்டது. சுதேசிக் கப்பற்கழகமும், சுதேசித் தரும சங்க நெசவுசாலையும், சுதேசிப் பண்டக சாலையும் அமைத்துத் தூத்துக்குடியிலிருந்து வ.உ.சிதம்பரனார் போர் தொடக்கினார். போரின் ஒரு கூறாக இந்தியாவிலேயே முதன் முதல் அவர் தொழிலாளர் சங்கங்கள் பல அமைத்து, தொழிலாளர் பெரும் போராட்டங்களும் நடத்தினார். வங்கத் தேசியமும் தமிழகத் தேசியமும் வங்கத் தேசிய இயக்கத்தின் பல பண்புகளை நாம் தமிழகத்திலும் சிறப்பாகக் காண்கிறோம். வங்கத்தில் தேசிய இயக்கம் வருமுன்னரே மொழி, கலை, சமய இயக்கம் சிறந்திருந்தது. தமிழகத்திலும் நாம் அதே நிலையைக் காண்கிறோம். அத்துடன் தமிழக மரபுகள் வங்க மரபு கடந்து பழங்கால வீர அரச மரபு, பத்தி இயக்கம், தாய்மொழி இயக்கம் ஆகியவற்றின் தொடர்ச்சியாய் இயங்குவதையும் நாம் கவனிக்கலாம். பண்டை வீர வாழ்வின் புது மலர்ச்சியை நாம் பாஞ்சாலங்குறிச்சியில் கண்டது போலவே, பண்டைய சமய, கலை, இலக்கிய வாழ்வை மறைமலையூழியின் பல பண்புகள் காட்டுகின்றன. கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. பாஞ்சாலங்குறிச்சி மண்ணில் கட்டபொம்மன் திடலுக்கு அருகிலேயே பிறந்தவர். அவர் தூத்துக்குடிச் சைவ சித்தாந்த சபை, பிரமஞான சங்கம் ஆகியவற்றிலும், மதுரைத் தமிழ்ச் சங்கம், வாலிபர் சங்கம் ஆகியவற்றிலும் தொடர்புடையவராய்ச் சமயப் பணி, தமிழ் மொழிப்பணி, அரசியற்பணி, தொழிலாளர் பணி ஆகிய யாவற்றிலும் முழுப்பங்கு கொண்டிருந்தார். தமிழில் திருக்குறள் உரைகளும் தொல்காப்பிய உரைகளும் பதிப்பித்தும், நூல்கள் எழுதியும், புலவர்களுக்கு அவர் வழிகாட்டியாய் இருந்தார். வ.உ. சிதம்பரனார் கப்பற்கழகத்தைப் பெருத்த எதிர்ப்புகளுக்கிடையிலும் இடர்களுக்கிடையிலும் அயராது நடத்தி, வெள்ளையர் தலைமையிலிருந்த பி.ஐ.எஸ்.என். கழகத்தை1 எதிர்த்துப் போட்டியிட்டார். அத்துடன் வங்கத்தில் விபின சந்திரர் சிறைப்பட்ட நாளை ஒட்டிப் பேரவை இயக்க எதிர்ப்புக் கொண்டாட்டங்களையும் தமிழகமெங்கும் சிறப்பாக நடத்தினார். அவர் இச்சமயம் தலைமை மேற்கொண்டு இயக்கிய தொழிலாளர் வேலை நிறுத்தமும் வெற்றி கண்டது. இச்சமயம் பழைய புரட்சி மரபில் வந்த ஒரு கொடுஞ்செயல் நிகழ்ந்தது. மாவட்டத் தலைவரான ஆஷ் என்ற வெள்ளையரை எவனோ ஆத்திரக்காரன் சுட்டு வீழ்த்திவிட்டான். அக்கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பல நண்பர்களுக்காக வ.உ.சி. போராடினார். ஆனால், அதனை அரசியற் கொலையாகக் கொண்டு, அவரே அதற்கும் அது போன்ற அரசியலைக் கவிழ்க்கும் செயல்களுக்கும் மூலகாரணர் என்று குற்றஞ்சாட்டி, அரசியலார் அவரை மூன்று நாடு கடத்தல் தண்டனைகளுக்கு ஆளாக்கினர். 1908 முதல் கப்பலோட்டிய வ.உ.சிதம்பரனார் கடுஞ்சிறையில் செக்கிழுத்தல், கசையடி முதலிய உயிர்வதை முறைகளால் சொல்லொணாத் துயர்களுக்காளானார். சிறை விடுதலை பெற்று நெடுங்காலம் கழித்து வந்த பின்னும் அவர் அரசியலாராலும் அடிமைப் புத்தியுள்ள பிற்காலப் பேரவை மிதவாதியர் பலராலும் ஒதுக்கடிக்கப்பட்டு, வறுமைக்கும் உட்பகைகளுக்கும் ஆளானார். ஆனால், அவர் இறுதி வரை நிமிர்ந்து நின்று இந்தியாவின் முழு நிறை விடுதலைக் கனவு கண்டு, அதற்கு அயராது உழைத்து வந்தார். கப்பலோட்டிய தமிழரான வ.உ. சிதம்பரனார் தமிழகத்தின் முடி சூடா மன்னராயும் தொழிலாளரியக்கத்தின் முதன் முதல் அனைத்திந்தியத் தலைவராயும் விளங்கினார். அத்துடன் இந்தியத் தலைவர்களிடையே காலங்கடந்த தொலை நோக்குடைய தலைவராயும் அவர் வீறுடன் நின்று நிலவுகிறார். அவருக்குப்பின் வந்த தீவிரவாதத் தலைவர்களுள் செயல் துறையில் அவருக்கு ஒப்பான செயற்கரிய பெருஞ்செயல்கள் செய்த பெரியாராகத் தலைவர் பெருந்தகை போஸ் நீங்கலாக எவரையும் கூற முடியாது. இவ்விருவருக்குமிடையே காந்தி யடிகள் தலைமை இவர்களைத் தாண்டி ஒளி வீசிற்றாயினும், அது நாடு கடந்த உலக எல்லையும், அரசியல் கடந்த ஆன்மிக எல்லையும் அளாவியதாதலால், இவர்களுடன் ஒப்பிடத் தக்க தலைமை என்று கூற முடியாது. வ.உ.சி. கண்ட கப்பற்கனவு காந்தியடிகள் கனவுகளையும், ஓரளவு தலைவர் பெருந்தகை கனவுகளையும் தாண்டித் தமிழரின் பண்டை வாணிக மரபைச் சுட்டிக் காட்டுவதாய் உள்ளது. தேசியக் கவிஞர் பாரதியார் வ.உ.சிதம்பரனார் இயக்கத்துக்கும் வங்கப் புரட்சிக்கும் மற்றொரு தொடர்பும் உண்டு. இரண்டும் இலக்கியத் தொடர்பு கொண்டுள்ளன. இந்தியாவின் தேசியப் பாடல் ஒரு கலைஞர் புனைகதையில் தந்த பாடல் என்பதை மேலே குறித்தோம். அத்துடன் வங்க தேசிய இயக்கத்தில் மலர்ந்த இரு தேசிய மலர்களாகக் கவிஞர் தாகூர், கவிக்குயில் ஸரோஜினியார் ஆகியவர்களைக் கூறலாம். ஆயினும், வ.உ.சி.யின் இயக்க மலராகத் தமிழகத்தில் விளங்கிய கவிஞர் பாரதியார் வங்கத் கவிஞரைக் காட்டிலும் தேசியத்தில் ஊன்றித் தோய்ந்த தனித் தேசிய மலர் ஆவர். மற்றவர்கள் பாடலில் தேசியம் படர்ந்துள்ளது. ஆனால் பாரதியார் பாடல் தேசியத்திலேயே கருவுயிர்த்து முளைத்து மலர்ந்தது. இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத் தேசிய வாழ்வின் எந்தக் கூறும் பாரதியார் பாடல் யாழை அதிர வைக்காமலில்லை. தமிழர் கண்ட சுதந்தரம் எத்தகையது? “வீர சுதந்தரம் வேண்டிநின் றார்பின்னை வேறொன்று கொள்வாரோ?- தினம் ஆரமு துண்ணுதற் காசைகொண் டார்கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ?” என்று கேட்கிறார் பாரதியார். வீர சிதம்பரனார் செக்கிழுத்தது, திலகருடன் திமிர் பிடித்த வெள்ளையன் வாதாடியது ஆகிய இந்திய தேசியக் காட்சி களுடன், பெல்ஜியத்தின் வீறு மிக்க வீழ்ச்சி, சார் அரசன் சரிந்த காட்சி ஆகிய உலக நிகழ்ச்சிகளையும் நாம் பாரதியாரின் கவிதைகளில் மட்டுமே ஒருங்கே காணக்கூடும். ஏனெனில், அவர் தேசியம் அரசியல் கடந்த மக்கள் தேசியமாய், தேசம் கடந்த உலகத் தேசியமாய் இலங்கிற்று! விடுதலைப் பெருநாள் தொலைவிலிருக்கையிலேயே அதன் முழு நிறை பண்பை முழுதுற அவர் கனவு கண்டார், ‘விடுதலை! விடுதலை! விடுதலை! பறைய ருக்கும் இங்குத் தீய புலைய ருக்கும் விடுதலை!’ என்ற அவர் கனவு அரசியல் விடுதலையை மட்டுமன்றிச் சமுதாய விடுதலையையும் கோரி நிற்கின்றது. தனி ஒருவனுக்கு உணவிலா நிலை தவிர்க்கும் பொருளாதார விடுதலையையும் அது உள்ளடக்கிப் பெருமிதமுடையதாய் இலங்குகின்றது. ¬இவை தவிர, “காதல், காதல், காதல்- காதல் போயின் சாதல், சாதல், சாதல்” என்ற தமிழன் காதற்கனவும்; ‘வீடு தோறும் கலையின் விளக்கம், வீதிதோறும் இரண்டொரு பள்ளி” என்ற தமிழன் கல்விக் கனவும் கண்டவர், தமிழகத்தின் ஒப்புயர்வற்ற தேசியக்கவிஞர் பாரதியார். இந்திய மாநில முழுவதிலும் விடுதலைப் பேரியக்கக் காலத்தில் தேசியத்தில் தோய்ந்த கவி மலர்களை நாம் காணக்கூடுமாயினும், தேசியத்தில் மலர்ந்து கனிந்த இனிய தேசியக் கனியான மற்றொரு கவிஞரை நாம் காண முடியாது. புயல் எதிர் புயல் பருவம் பாரதியார் போன்ற கவிஞர், அரவிந்தர் போன்ற கவிதையறவோர், திலகர் போன்ற நாட்டுத் தலைவர், பரலி சு.நெல்லையப்பர், கிருஷ்ணசாமி சர்மா, ஹரிசர்வோத்தமராவ் முதலிய ஒப்பற்ற நாட்டுத் தொண்டர் ஆகியவர்கள் நட்பால் தமிழகப் பெருந்தலைவர் வ.உ.சிதம்பரனாரின் ஒப்புயர்வற்ற புகழ் மணம் பெறுகிறது. வங்கப் புரட்சியினால் மாநிலத்தைத் தட்டி எழுப்ப முடிந்தது. ஆனால், வங்கம் அதனைத் தலைமை வகித்து நடத்தத் தவறிற்று. தமிழகக் கப்பற் புரட்சி மாநிலத்துக்கு வீறு தந்து, ஒற்றுமையையும் ஒரு தொலைக்குறிக்கோளையும் தந்து. ஆனால், தமிழகம் தந்த தொலைக்குறிக்கோள், அன்று மாநிலத்தின் காட்சியாற்றலுக்கு எட்டா கடுந்தொலைக் குறிக்கோளாகவும், அஃது அளித்த ஒற்றுமை காலங்கடந்ததாகவுமே அமைந்தன. மாநிலம் விரைவில் வங்கத்தில் தலைமையை இழந்தது போலவே தமிழகத்தின் தலைமையையும் இழந்து, சில காலம் ஒற்றுமை தவறத் தொடங்கிற்று. 1907லிருந்து 1916 வரை பேரவை பல புறப்பகை அகப்பகைகளால் அச்சுறுத்தப்பட்டு, வலிமை கெட்டு இயங்கிற்று. அதன் பின்னர்த் தற்காலிகமாக ஏற்பட்ட ஒற்றுமையும் நீடித்து நிற்க முடியவில்லை. ஆனால், 1918க்குள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்து தேசிய இயக்கத்தின் தலைமை ஏற்ற மகாத்துமா காந்தி, ஒற்றுமை கெட்டு நின்ற மாநிலத்துக்குப் புத்துயிரும் புது மலர்ச்சியும் அளித்தார். வங்கப் புரட்சி, தமிழகக் கப்பற் புரட்சி ஆகியவற்றுக்கும் காந்தி ஊழிக்கும் இடைப்பட்ட பருவத்தையே நாம் ‘புயல் எதிர் புயல் பருவம்’ என்கிறோம். இது சூரத்துப் பேரவையுடன் தொடங்கிற்று. சூரத்துப் பேரவைக் கூட்டம் 1904லிருந்து 1906 வரை பேரவைத் தீவிரக் கட்சி, திலகர், லாலா லஜபதிராய், வ.உ.சிதம்பரனார் ஆகிய மூவர் தலைமையில் வளர்ந்து கொண்டே வந்தது. 1906இல் கல்கத்தாவில் நடந்த பேரவையிலேயே அவர்கள் ஆதிக்கம் பெற்றுவிடக் கூடும் என்ற அச்சம் பரவியிருந்தது. மிதவாதிகள் அதற்காகவே தங்கள் நம்பிக்கையையும், தீவிரவாதிகளின் மதிப்பையும் ஒருங்கே பெற்ற முதுபெரும்பெரியாரான தாதாபாய் நௌரோஜியைப் பிரிட்டனிலிருந்து வரவழைத்துத் தலைமை தாங்க வைத்திருந்தனர். 1907 டிஸம்பர் 26இல் சூரத்தில் கூடிய பேரவையில் தீவிரவாதிகளைத் தடுப்பதற்கென்றே பெருத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வரவேற்புக் கழகத் தலைவராகத் திரிபுவனதாஸ் என். மால்வியும், தலைவராக டாக்டர் ராஷ்பிகாரி கோஷும் மிதவாதிகளாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அதேச சமயம், தீவிரவாதிகளிடையேயும் திலகர் துணிகரமாகப் புரட்சி நடவடிக்கைகளில் இறங்கத் துடிதுடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் சூரத்துப் பேரவையில் பெரு நெருக்கடி எதிர்பார்க்கப்பட்டது. பிரதிநிதிகளாய் வந்த 1600 பேர்களும், பார்வையாளராய்ச் சூழ்ந்திருந்த 5400 பேர்களும், பிற பொதுமக்களும், ‘எந்த நேரம் என்ன நேருமோ!’ என்ற திகிலுடன், பரபரப்புடனும், பேரவை நடவடிக்கைகளைக் கண் கொட்டாது கவனித்தவண்ணமிருந்தார்கள். தலைவர் பீடத்துக்கு ராஷ்பிகாரி கோஷைத் திவான் பகதூர் அம்பாலால் முன் மொழிந்ததே, “கூடாது! கூடாது!” என்ற குரல்கள் எழுந்தன. சுரேந்திரநாத பானர்ஜி பின் மொழிய எழுந்தபோது, ஆரவாரம் மிகுந்து, கூட்டம் அடுத்த நாள் ஒத்திவைக்கும்படி நேர்ந்தது. அடுத்த நாள் தலைவர் தம் பீடத்தில் அமர்ந்த பின் திலகர் முதல் திருத்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து மேடை ஏறியபோது, எதிர்பார்த்த நெருக்கடி தொடங்கிவிட்டது. மேடைமீது எறியப்பட்ட ஒரு பாதுகை, போரின் முதல் சமிக்கையாயிற்று. இருபுறமிருந்தும் மேடையை நோக்கி மக்கள் அலைகள் உருண்டோடின. கம்பும், தடியும், தொப்பிகளும், நாற்காலிகளும் யாவும் உயிர் பெற்று மோதுபவையாய் நடனமாடின. கூட்டம் மீட்டும் கலைந்தது. திலகருக்கு இச்சமயம் சில மராட்டிய இளைஞர் மட்டுமே துணையாயிருந்தனர். ஆயினும், கூட்டம் தொடங்குமுன்னரே அவர் தம் நண்பரும் தீவிரவாதிகளில் செல்வாக்கில் முதன்மை வாய்ந்தவருமான வ.உ. சிதம்பரனாரிடம் நிலைமைகளை விளக்கிக் கூறியிருந்தார். வ.உ. சிதம்பரனார் தேசியத்துக்கும் நட்புக்கும் உறுதி வாய்ந்த ஒரு கொழுகொம்பு போன்ற வராதலால், முன் கூட்டியே தமிழகத்திலிருந்து தக்க ஆதரவு திரட்டிச் சென்றிருந்தார். அத்தமிழ்க்காளையர் மராட்டிய இளைஞருடன் நின்று, திலகரை அன்று மிதவாதிகளின் மும்முரத் தாக்குதலிலிருந்து காத்தனர். கலை வளர் வங்கத்துடன் கைகோக்கத் தவறாத தமிழகம், அன்று வீர மராட்டியத்துடனும் கைகுலுக்கிப் புன்முறுவல் பூத்து நின்றது! மிதவாத அலை இரண்டு நாள் கூட்டமும் கலைவுற்ற பின் பல மிதவாதிகள் கையெழுத்துடன் 28-ஆந் தேதியே ஒரு தனிக் கூட்டம் கூட்டப் பட்டது. ராஷ்பிகாரியே அதில் தலைவராயிருந்து, பேரவைக்கான புதிய சட்டதிட்டங்களை வகுத்தார். கலைக்கப்பட்டுவிட்ட இருபத்து மூன்றாவது பேரவையை அடுத்த ஆண்டு தொடர்ந்து சென்னையில் கூட்டுவதாகத் தீர்மானம் நிறைவேறிற்று. தமிழகத் தலைவர் வீர சிதம்பரனார் செக்கிழுக்கச் சென்ற ஆண்டிலேதான் இது நிகழ்ந்தது. வ.உ.சிதம்பரனாரின் உதவி இல்லாததால், திலகர் கையிழந்தவராய்விட்டார். எனவே, பேரவை மீண்டும் மிதவாதிகள் பேரவையாகவே விளங்கிற்று. அத்துடன் வ.உ.சியைப் பின்பற்றித் திலகர் இவ்வாண்டு அரசியலாரால் ஆறு ஆண்டுக் காவல் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார். மராட்டியச் சிங்கமும் தமிழகச் சிங்க ஏறும் இல்லாத சென்னைப் பேரவை, முற்றிலும் மிதவாதிகள் கும்பலாய் அமைந்ததில் வியப்பில்லை. பேரவைப் பிரதிநிதிகளுக்குக் கொல்லங்கோடு மகாராஜா தேநீர் விருந்தளித்தார். இப்பேரவை செய்த முக்கியத் தீர்மானம் வங்கப் பிரிவினையை ஒழிக்க வேண்டுமென்று கோரியதேயாகும். அதனுடன் அடுத்த ஆண்டு வெளியிடப்பட இருந்த மிண்டோ- மார்லி சீர்திருத்தத்தின் தன்மை இன்னது என்று அறியாமலே இம்மிதவாதப் பேரவை அதை ஆர்வத்துடன் வரவேற்று மகிழ்ந்தது என்பதையும் அறிகிறோம். மிண்டோ- மார்லி சீர்திருத்தங்கள் 1907ல் வகுக்கப்பட்டு அடுத்த ஆண்டுகளில் வெளியிடப் பட்ட மிண்டோ- மார்லி சீர்திருத்தங்கள் இந்திய அரசியலமைப்பு முறை வளர்ச்சியிலும் தேசிய இயக்க வளர்ச்சியிலும் ஒரு முக்கியமான படிக்கட்டாய் அமைந்துள்ளது. அது முதன் முதலாகச் சட்ட மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை உறுப்பினர்களாக்கிற்று. இம்முறையில் அதைப் பொறுப்பாட்சியின் முதற்படி என்று கூறலாம். ஆனால், அதே சமயம் இந்தியத் தேசிய இயக்கத்தின் வளர்ச்சியில் அது ஒரு முட்டுக்கட்டையையும் புதிதாக வளர்க்கத் தொடங்கிற்று. இதுவே, ‘வகுப்புவாதிகள், தேசியவாதிகள்’ என்ற வேறுபாடு ஆகும். இந்திய தேசியம் உருவாகி வரும்போது இங்ஙனம் தேசிய இயக்கங்களுக்குக் குந்தகமான ஒரு விசித்திர நிலையும் ஏற்பட்டது. மிண்டோ- மார்லி சீர்திருத்தம் முஸ்லிம்களுக்கும் வேறு சில பிற்பட்ட வகுப்பினருக்கும் இனங்களுக்கும் தனிப் பிரதிநிதித்துவமும் தனித்தேர்தல் தொகுதிகளும் வழங்கிற்று. புதிய பிளவுகள்: முஸ்லிம் சங்கம், இந்துப் பேரவை பாஞ்சாலங்குறிச்சிப் புரட்சியிலும் 1857 பெரும்புயலிலும் இந்து முஸ்லிம் என்ற மத வேறுபாடோ; தமிழர், தெலுங்கர், வங்காளி, பீகாரி என்ற மொழி வேறுபாடோ; செல்வர், ஏழை என்ற வேறு எத்தகைய வேறுபாடோ இருந்ததாக நாம் அறியவில்லை. மக்கள் சார்பு, அயலார் சார்பு என்ற தெளிவான இரு கூடாரங்களே இருந்தன. வங்கப் புரட்சிக்குப் பின் இந்நிலை மாறிவிட்டது. தீவிரவாதி, மிதவாதி என்ற புதுப் பிரிவினை எழுந்தாலும், இது கிட்டத்தட்ட முந்திய அயலார் சார்பு, மக்கள் சார்பு போன்ற பிரிவினையே தவிர, பேரவையின் போக்கிலும், தேசியத்தின் போக்கிலும் தீவிரவாதமே வலுத்து வளர முடியும். ஏனென்றால், மிதவாதம் என்பது தீவிரவாதத்துக்கான வளர்ச்சிப்படியே. இதனை அறிந்த அயலாட்சி ஏகாதிபத்தியம் பிரிவினைக் கோடுகளைக் காண நாட்டம் கொண்டிருந்தது. அப்பிரிவினைகளும் கர்ஸான் ஆட்சிக் காலத்திலேயே எழலாயின. பேரவையில் தொடக்கத்திலிருந்தே முஸ்லிம்கள் மற்றச் சமயத்தவரோடு ஒன்றுபட்டு முன்னேறி வந்தார்கள். ஆயினும், தேசியத்திலிருந்த இவ்வொற்றுமை, தேச வாழ்விலிருந்த உயர்வு தாழ்வு வேறுபாட்டைச் சரி செய்யத் தயங்கிற்று. தொடக்கத்தில் அரசியலைவிடச் சமூகச் சீர்திருத்தத்தில் முனைந்திருந்த பேரவை முதல்வர்கள், பின்பு முற்றிலும் சமூகவகையில் கருத்திழந்து போயிருந்தார்கள். ஆண்டுதோறும் பேரவை அரசியல் மாநாட்டுடனே சமூகமாநாடுகள் நடந்து வந்தனவாயினும், அவை நல்லெண்ணத் தீர்மானங்களையே நிறைவேற்றின. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோகலே போன்ற தலைவர்கள் சமூகப்பணி, கல்வி ஆகியவற்றில் கருத்துச் செலுத்தி வந்தார்கள். ஆனால் ,இவை முற்பட்ட சமூகங்களுக்கே முழுப்பயன் தந்தன; பிற்பட்ட சமூகங்களைத் தனிப்படக் கவனிக்கவில்லை. இந்நிலையில் முஸ்லிம்கள் பேரவையுடன் முழுதும் ஒத்துழைத்தாலும், தங்கள் தனி நலன்களைப் பேண 1906லேயே ஒரு தனி நிலையம் அமைத்துக் கொண்டார்கள். அரசியல் நிலையமாக நிறுவப்பட்ட இந்த முஸ்லிம் சங்கம்1 போலவே, வேறு தனித்தனி முஸ்லிம் குழுவினரும் கொள்கை யாளரும் தனித்தனி நிலையங்களை அமைத்துக் கொண்டிருந்தனர். முஸ்லிம்களின் இச்சங்கங்கள் சில இந்துக்களையும் தனி அவை அமைக்கத் தூண்டின. 1906லேயே இந்துக்கள் பேரவை (இந்து மகாசபை) ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. பேரவைக்கு வெளியே எழுந்த இச்சமூக வேறுபாடு அலைகளையும் சமூக உயர்வு தாழ்வுகளையும் தனக்குச் சாதகமாக்க அயலாட்சிக் குழுவினர் விரைந்ததில் வியப்பில்லை. அஃது அவர்களுக்குத் தனிப்பிரதிநிதித்துவமும் பல வகைத் தனிச் சலுகைகளும் தந்தது. ஆனால் பேரவை இயக்கத் தலைவர்கள் சில காலம் இப்பொறியில் விழாமல் விழிப்புடனிருந்தாலும், இறுதியில் எப்படியோ இம்மாய வலையிற் சிக்கினர். இது வருந்துவதற்கும், வியப்பிற்கும் உரியது என்பதில் ஐயமில்லை. 1908க்கும் 1916க்கும் இடைப்பட்ட காலப் பேரவைக்கு இச்சமூக அலைகள் சிக்கலான நிலைமை ஏற்படுத்தின. ஆயினும், பேரவைத் தலைவர்கள் இந்த இருதலைப் பொறியில் எப்பக்கமும் சாயாமல், நடுவுநிலை பேணி வந்தார்கள். சலுகைகளை எதிர்த்திருந்தால், முஸ்லிம் வகுப்புவாதம் வளர்ந்திருக்கும். அதை ஆதரித்தால், இந்து வகுப்புவாதம் வளர்ந்திருக்கும். ஆயினும், இந்த நடுவுநிலை நெடுநாள் நீடிக்க முடியாது. இத்தனையும் பேரவை உணர்ந்து கொண்டிருந்தது. 1909ல் லாகூரில் கூடிய 24-ஆம் பேரவையில் மீண்டும் தீவிரவாதிகள் கை மேலோங்கிற்று. தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்த ஸர் பிரோஸ்ஷா மேத்தா, இக்காரணத்தால் கடைசி நேரத்தில் தலைமை வகிக்க மறுத்துவிட்டார். மிதவாதியாயினும், தொலைநோக்குடைய பழுத்த தேசியவாதியான பண்டித மதன் மோகன மாளவியா தலைவரானார். அவர் பழைய பேரவைத் தலைவரான ரமேஷ் சந்திரதத்தரைப் போலவும் திலகரைப் போலவும் சிறந்த வரலாற்றுப் பேரறிஞராயிருந்தார். அவர் தலைமையில் பேரவை மிண்டோ- மார்லி சீர்திருத்தங்களைக் கண்டித்தது. சிறப்பாக வகுப்புப் பிரதிநிதித்துவத்தை அது எதிர்த்தது. அத்துடன் தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் தலைமையில் வெற்றி நோக்கி நடத்தப்பட்டு வந்த அறப்போராட்டத்தையும் அது பாராட்டி, அதற்கு ஆதரவாக ரூபாய் 18,000 உதவி நிதி திரட்டி அனுப்பிற்று. அடுத்த ஆண்டு அலகாபாதுப் பேரவையில் முஸ்லிம் பெருந்தலைவர் ஜனாப் ஜின்னாவே வகுப்புத் தீர்மானத்தைக் கண்டித்துப் பேசினார். மிண்டோ- மார்லி சீர்திருத்தங்கள் முஸ்லிம் வகுப்புவாதிகளை ஆதரித்த போதிலும், பேரவைப் பிரதிநிதிகளிடையே அது இந்து முஸ்லிம் வேற்றுமையை விளைவிக்கவில்லை என்பதை இது காட்டுகிறது. மேலும் பல பேரவைப் பிரதிநிதிகள் முஸ்லிம் சங்கப் பிரதிநிதிகளாயும் இருந்தார்கள். தவிர, ஆண்டுதோறும் பேரவை மாநாடும், முஸ்லிம் சங்க மாநாடும் ஒரே நகரிலேயே, அடிக்கடி ஒரே பந்தலிலேயே நடைபெற்று வந்ததால், இரு சமூக இயக்கங்களும் தோழமை பெற்ற இயக்கங்களாகவே நீண்ட காலம் இருந்து வந்தன. பல முக்கியச் செய்திகளிலும் அரசியல் குறிக்கோள்களிலும் பேரவையின் தீர்மானங்களை ஒட்டியே முஸ்லிம் சங்கத்தின் தீர்மானங்களும் இந்து பேரவையின் தீர்மானங்களும் இருந்தன. தலைநகர் மாற்றம் 1910ல் ஏழாம் எட்வர்டு அரசர் காலமானார். அதன் பின்பு வங்க மக்கள் கிளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாயிருந்த வங்கப் பிரிவினை ஒழிக்கப்பட்டது. ஆயினும், வங்கத் தலைநகரில் இருந்த இந்திய ஆட்சித் தலைமை இப்போது பிரிட்டிஷ் ஆட்சியில் முதன்முதலாகத் தில்லிக்கு மாற்றப்பட்டது. தில்லி, இந்துக்களால் மகாபாரத காலத்தில் பாண்டவர் புதுத் தலைநகராயிருந்த தென்று கொள்ளப்பட்டிருந்தது. அத்துடன் ராஜபுத்திரர் ஆட்சிக் காலத்தில் அதைத் தலைநகராகக் கொண்டு பல பேரரசுகள் ஆண்டிருந்தன. எனினும், அது பேரரசுத் தலைமை யிடமாகப் பெயர் பெற்றது பெரிதும் முஸ்லிம் ஆட்சியிலேயே. எனவே, தில்லியை இந்தியாவின் தலைநகரமாக்கியது முஸ்லிம்களின் மனப்பான்மைக்கு விட்டுக் கொடுக்கும் ஒரு சலுகைதான் என்று சிலர் கருதினர். வடமேற்கு எல்லைப்புறமே இந்தியப் பாதுகாப்புக்கு முக்கியமானதால், தில்லி தலைநகராயமைந்தது இயல்பே என்றும் ஆட்சியாளர் சார்பில் கூறப்பட்டது. ஆயினும், தில்லி தலைநகரானது ஆங்கிலப் பேரரசின் வரலாற்றில் ஒரு முக்கிய மாறுதல் என்பது கவனிக்கத்தக்கது. சென்னை பிரிட்டிஷ் தலைமையிடமாய் இருக்கும்போதுதான் வங்கமும் வடநாடும் நோக்கி, பிரிட்டிஷார் கை பரவ முடிந்தது. கல்கத்தா தலைநகரான பின் அது பர்மாவிலும், கிழக்காசி யாவிலும், நேபாளத்திலும், திபெத்திலும், ஆப்கானிஸ்தானத் திலும், மேற்காசியிவிலும் கை நீட்டியிருந்தது. கல்கத்தாவி லிருந்து தில்லிக்குத் தலைமை இடம் மாறிய அன்றே பிரிட்டிஷ் கிழக்கு ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சிப்படிக்கும் வெற்றிக்கும் ஒரு முற்றுப்புள்ளி ஏற்பட்டது. அதன் தோல்வி களுக்கும், பேரரசுத் தளர்ச்சிக்கும், இறுதி வீழ்ச்சிக்கும் அது முதற்படியாயிற்று. அதன்பின் அது பர்மாவில் முன்னேற முடியவில்லை; நேபாளத்துடன் சமரசம்செய்துகொண்டது. ஆப்கானிஸ்தானத்தில் அதன்பின் அது தன் பழைய பேராசையை விட்டு விட்டு, நேசத் தொடர்பை விரும்பி, அதை ஆர்வத்துடன் வரவேற்கத் தொடங்கிற்று. பேரரசு மரபுகளின் எரிசாம்பல் பிரிட்டிஷ் பேரரசைப் பார்த்துப் பேய்ச் சிரிப்புச் சிரித்திருக்க வேண்டும்! கடைசி முகலாயப் பேரரசின் ஆவி அங்கே அவர்களின் புதிய ஆர்ப்பாட்டங்களைக் கண்டு எச்சரிக்கை மணி அடித்திருக்க வேண்டும். ஷ்! ‘பிரித்தாண்டு வெற்றி கண்ட பேரரசே. நீ இனிப் பிரித்தாண்டு தோல்வி காண்பாய்’ என்று அவை கொக்கரித்திருக்கக் கூடும்! 1911ல் பேரவைக்கு வெளியே இருந்த பயங்கரவாதிகளின் செயலால் இந்திய ஆட்சி முதல்வர் ஹார்டிஞ்சு மீது வெடிகுண்டு எறியப்பட்டிருந்தது. அவ்வாண்டுப் பேரவை இம்முறையையும் இச்செயலையும் கண்டித்தது. அத்துடன் மாகாணத் தன்னாட்சி வழங்க வேண்டும் என்ற ஆட்சியாளரின் நன்முயற்சியையும் அது வரவேற்றது. இந்து முஸ்லிம் ஒற்றுமை வளர்ச்சி பேரவையின் இந்து முஸ்லிம் சமரஸ முயற்சிகளால் ஏற்பட்ட பலன்கள் பல. முஸ்லிம் சங்கமும் பேரவையைப் பின்பற்றிப் பொறுப்பாட்சியே கோரி நின்றது இதனுள் ஒன்று. விரைவில் இந்துப் பேரவையும் அரசியல் துறையில் இதே குறிக்கோளை ஏற்றது. இந்திய முஸ்லிம்கள் தங்கள் சலுகைகளுக்காக இந்தியாவின் அரசியல் முற்போக்குக்கு முட்டுக் கட்டையாயிருக்கும் குற்றத்துக்கு ஆளாகக் கூடாது என்று பேரவையின் முஸ்லிம் பிரதிநிதிகள் எச்சரித்து வந்தார்கள். 1913ல் பேரவைத் தலைவராய் அமர்ந்திருந்த முஸ்லிம் பெரியார் நாவபு சையது முகம்மது பகதூர், “உண்மையான முஸ்லிம் மற்ற மதத்தினரை எதிர்க்கமாட்டார்”, என்றும், “மற்ற எல்லாச் சமயத்தினருடனும் ஒத்துழைத்துத் தேசப் பணியாற்றுவதில் முஸ்லிம்கள் மற்ற எச்சமயத்தினருக்கும் பின்னடைய மாட்டார்கள்.” என்றும், “அதுவே இஸ்லாம் அவர்களுக்குப் போதிக்கும் அறிவுரை” என்றும் வற்புறுத்திப் பேசினார். 1914- ஆம் ஆண்டு இறுதியில் முதல் உலகப் போர் தொடங்கிற்று. ஆடசியாளர்மீது பற்றுதல் உறுதி தெரிவிக்கும் உணர்ச்சி அலை பொங்கியிருந்தது. இது மிதவாதத்துக்குப் பேராதரவாயிருந்தது. தென்னாப்பிரிக்காவில் நிறவாதத்தை எதிர்த்துப் போராடிய காந்தியடிகளும் கோகலேயும் இக்காலத்தில் பிரிட்டிஷ் இந்திய அரசியலைப்பற்றிய மட்டில் மிதவாதிகளாகவே இருந்தார்கள் என்பதும், திலகரும், வ.உ. சிதம்பரனாரும் ஆட்சியாளர் தீவிர அடக்குமுறைக்கு ஆளாகிப் பொது மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்தனர் என்பதும் கவனிக்கத்தக்கவை. இந்நிலைமைகளிள் விளைவை நாம் 1915ல் பம்பாயில் கூடிய பேரவையில் காண்கிறோம். அதன் தலைவர் சர் சத்தியேந்திர பிரஸன்ன சின்ஹா ஆவர். இவர் மிதவாதிகளில் தலைசிறந்த மிதவாதி. பிற்காலங்களில் இந்தியரிடையே முதல் முதலாகப் பிரிட்டனின் பெருமகனார் என்ற நன்மதிப்புப் பட்டம் பெற்றவரும், முதல் முதலாக மாகாண ஆட்சி முதல்வர் பதவிக்கு வந்தவரும் இவரே ஆவர். சூரத்துப் பேரவைக்குப் பின் இவர் தலைமையில் நடந்த இந்தப் பேரவை ஒன்றிலேயே அரசியலாரிடம் பற்றுறுதித் தீர்மானம் செய்யப்பட்டது. ஆயினும், இவர் தீவிரவாதிகளையும் பேரவையின் தலைமைக் குழுவில் சேர்க்க மனமுவந்து முன் வந்ததால், மீண்டும் சூரத்துக்குப் பின் பேரவையில் ஒற்றுமை ஏற்பட்டது. விடுதலை பெற்ற திலகர், இவ்வன்பழைப்பை ஏற்றுத் தீர்மானக் குழுவில் உறுப்பினராய் இடம் பெற்றார். புதிய தன்னாட்சி இயக்கங்கள்: புதிய தலைமை 1915ல் கோகலே, மேத்தா ஆகிய பழந்தலைவர் காலஞ்சென்றனர். 1916ல் இலட்சுமணபுரியில் பேரவை கூடிற்று. சூரத்துப் பேரவைக்குப் பின் திலகர் கலந்து கொண்ட முதற் பேரவை இதுவே. இவ்வாண்டில் திலகருக்குப் பக்க ஆதரவாகச் சென்னையில் பிரமஞான சங்கத் தலைவர் அன்னி பெஸண்டு அம்மையார் தொண்டாற்ற முன் வந்தார். ஏப்பிரல் 23-ஆந் தேதி திலகர் பூனாவில் ‘தன்னரசுக்குழாம்’1 ஒன்றை நிறுவினார். திலகரைவிடத் திருமதி அன்னி பெஸண்டுக்கு அனைத்திந் தியாவில் அன்று செல்வாக்கு மிகுதியாயிருந்தது. தவிர, இன்னும் சிறையிலிருந்து வெளிவாராதிருந்த வ.உ.சி.யின் அனைத்திந்தியச் செல்வாக்கும் அவருக்குத் துணை தந்தது. ஆகவே, அவர் செப்டெம்பர் 12-ஆந் தேதி சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு ஓர் அனைத்திந்தியத் தன்னாட்சிக் குழாத்தை2 நிறுவினார். இதற்கான அவர் முயற்சியும் கிளர்ச்சியும் 1913லிருந்தே ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. 1916 பேரவையின் தலைசிறந்த வெற்றி, பேரவைக்கும் முஸ்லிம் சங்கத்துக்கும் அன்னி பெஸண்டு அம்மையாரின் ஒப்பற்ற செயல் தலைமை மூலம் ஏற்பட்ட புதிய ஒற்றுமைதான். இரு பேரவைகளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு பொதுத் திட்டத்தை அவர் உருவாக்கி, அதைப் பேரவையிலும் முஸ்லிம் சங்கத்திலும் ஒருங்கே நிறைவேற்றுவித்தார். இது ‘பேரவை- முஸ்லிம் சங்க ஒப்பந்தத் திட்டம்’3 என்று வரலாற்றில் புகழ் பெற்றுள்ளது. இதன்படி தன்னாட்சி கோரிப் பேரவை வலியுறுத்திய கொள்கைகளை முஸ்லிம் சங்கம் ஏற்றுக் கொண்டது. முஸ்லிம் சங்கமும் முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் வகுப்புத் தீர்மானத்தை விட்டுவிட இணங்கினாலன்றி, அதை எதிர்ப்பதில்லை என்று பேரவை முஸ்லிம் சங்கத்துக்கு உறுதியளித்தது. பேரவை- சங்க ஒப்பந்தம் இந்து முஸ்லிம் ஒற்றுமை வளர்ச்சியில் ஓர் உயர்ந்த கொடிக்கம்பம். அதன் வழியில் இந்தியா இறுதி வரை நின்றிருந்தால், இந்தியர் பெற்ற விடுதலையுடன் பிரிவினையும் நேர்ந்திருக்க வேண்டுவ தில்லை. ஆனால், வரலாற்றின் கடிகாரமுள்ளைச் சரியான சமயத்தில் சரியானபடி திருப்பி வைக்காவிட்டால், அதன் போக்கை யாரால் மீண்டும் தொடக்கத்திலிருந்து திருப்ப முடியும்? 1917இல் கல்கத்தாப் பேரவைக்குத் திருமதி அன்னி பெஸண்டே தலைவராயிருந்தார். அவர் ‘காமன்வெல்து’ என்ற வார இதழுக்கும் ‘நியூ இந்தியா’ என்ற நாளிதழுக்கும் ஆசிரியராயிருந்தார். 1916லிருந்தே அவர் இந்தியாவின் மாபெரும் பேரவை இயக்கத் தலைவரானார். அவரது நியூ இந்தியாப் பத்திரிகைக்கு 1916இல் அரசியலாரால் ரூ.2000 பிணையம் கோரப்பட்டிருந்தது. அவர் இயக்கம் அனைத்திந்திய இயக்கமாக வலுத்துவிடக் கூடாதென்பதற்காக, ஆட்சியாளர் அவரைப் பம்பாய் மாகாணம் நடுமாகாணங்களுக்குச் செல்லக் கூடாதென்று தடை விதித்திருந்தனர். 1917ல் உதகமண்டலத்திலிருந்து வெளியே போகக் கூடாதென்று அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பேரவை- சங்க ஒப்பந்தத்தின்பின் பேரவையில் தீவிரவாதிகள் கை வலுத்தது. முஸ்லிம் சங்கம் தீவிரவாதிகளின் பக்கமே நின்று தன்னாட்சி இயக்கங்களிற் கலந்து கொண்டது. தீவிர முஸ்லிம் தலைவர்களான அலி துணைவர் (ஹடi க்ஷசடிவாநசள) சிறைப்பட்டனர். 1917 பேரவை அவர்கள் விடுதலை கோரித் தீர்மானம் செய்தது. 1906லிருந்து நடைமுறையிலிருந்து வந்த பேரவையின் தேசியக் கொடி இப்போது புதிய தன்னரசுக் கொடியாக 1916ல் மாற்றப்பட்டது. மீண்டும் கொடிகள் 1921லும் 1931லும் மாற்றப்பட்டன. தன்னரசுக் கொடி பிரிட்டிஷ் பேரரசுக் கொடியினுள்ளேயே அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அன்றுகூடப் பேரவை நாடிய தன்னாட்சி. பேரரசுக்குட்பட்ட தன்னாட்சியே என்பதை இது நினைவூட்டுகிறது. புயல் எதிர்புயல் பருவத்தில் பேரவை அடைந்த வளர்ச்சியைப் பின் தரப்படும் பட்டியல் காட்டுகிறது:- எண் ஆண்டு பேரவை தலைவர் பிரதிநிதிகள் பார்வை வ.வே.க. செயலாளர்கள் தேதி நடத்தஇடம் தொகை யாளர் தலைவர் 23ஹ 1907 சூரத்து டாக்டர்ராஷ் 1600 5400 திரிபுவனதாஸ் டிஸ26 பிகாரிகோஷ்1 என்.மால்வி 23க்ஷ 1908 சென்னை டாக்டர் ராஷ் 626 திவான்பகதூர் டி.எ.வாச்சா, டிஸ.28 பிகாரி கோஷ்11 கிருஷ்ண சாமாராவ் டி.ஏ.கரே. 24. 1909 இலாகூர் மதன்மோகன் 248 லாலாஹரி கிருஷ்ணலால் னடி. டிஸ.27 மாளவியா1 கிருஷ்ணலால் 25. 1910 அலகாபாது ஸர் வில்லியம் 636 4000 கனம்பண்டித சந்தர்லால் னடி டிஸ.26 வெட்டர்பர்ன் 26. 1911 கல்கத்தா பண்டித பிஷன் 446 கனம் பூபேந்திரநாத் னடி. டிஸ.26 நாராயணதார் பாசு 27. 1912 பங்கிப்பூர் ஆர்.என்.மு. 207 4500 கனம் திருஹேகு னடி. டிஸ.26 டோல்கார் 28. 1913 கராச்சி நவாபு சையது 550 ஹரிச்சந்திர னடி. டிஸ.26 மகம்மது பகதூர் விஷான்தாஸ் 29. 1914 சென்னை பூரிமந்திரநாத 866 ஸர்.எஸ். சுப்பிர வி.சுப்பாராவ் நவாபு டிஸ.28 பாலா மணிய அய்யர் சையது மகமது எண் ஆண்டு பேரவை தலைவர் பிரதிநிதிகள் பார்வை வ.வே.க. செயலாளர்கள் தேதி நடத்தஇடம் தொகை யாளர் தலைவர் 30. 1915 பம்பாய் ஸர்சத்தியேந்திர2259 தீன்ஷா எதுல்ஜி வி. சுப்பாராவ், டிஸ.27 பிரசன்ன சின்ஹா வாச்சா நவாபு சையது மகமது பகதூர். 31. 1916 லக்னோ சுனம்அம்பிகா 2301 கனம்பண்டித னடி. டிஸ.26 சரண் மஜீம்தார் ஜகந்நாராயண் 32. 1917 கல்கத்தா திருமதி அன்னி 4967 ந.ந.வைகுந்த இராமாமி அய்யர், பெஸண்டு நாத்து சேன் பி.கேசவபிள்ளை பக்கிரி 33. 1918 பம்பாய் ஹாஷன்இமாய் 3500 விந்தல்பாய் வி.ஜே. னடி. ஆக.29 பட்டேல் 34. 1919 தில்லி பண்டிதமதன் 4861 ஹகீம் அஜ்மல் வி.ஜே.பட்டேல் டிஸ.26 மோகன் மாளவியா கான் பஜ்ஜுல் ஹச் பண்டித கோசர நாத் மிஸ்ரா 35. 1919 அமிர்தசரஸ் பண்டித மோதி 7031 சுவாமி சிரத்தா வி.ஜே.பட்டேல் டி.ஸ.27 லால் நேரு னந்தர் ஈ.ஈ.அன்ஸாரி பண்டித கோசரண் நாத் மிஸ்ரா. மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்கள் மிண்டோ- மார்லி சீர்திருத்தங்களுக்குப்பின் 1918 ஜூன் 18ல் வெளியிடப்பட்ட மாண்டேகு- செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்களே இந்திய அரசியலமைப்பின் அடுத்தபடி முன்னேற்றமாகும். இதில் மாகாணத் தன்னாட்சிக்கு ஒரு தனியிடம் தரப்பட்டிருந்தது. தேர்தல் உரிமை, மாகாணங்களில் சட்ட சபைக்கு மட்டுமன்றி, ஓரளவு மேலவைக்கும் தரப்பட்டிருந்தது. ஆனால், இச்சீர்திருத்தங்களில் இந்தியர் பொதுவாகவும், பேரவைத் தீவிரவாதிகள் சிறப்பாகவும் கண்டித்த பல கூறுகள் இருந்தன. முதலாவது, மாகாண ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் பொறுப்பில் ஒரு சில சில்லறைச் செய்திகளே விடப்பட்டிருந்தன. மீந்தவற்றை ஆட்சி முதல்வரே தம் ஆட்சித் துணைவர்கள் (ஊடிரnஉடைடடிசள) உதவியுடன் கவனித்து வந்தார். தவிர, நடு அரசியலின் பொறுப்புக்குப் போக்குவரவு, செய்தி இணைப்பு நிலையங்கள், வருமானவரி, கணக்குத்துறை ஆகிய அரங்கங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த இரட்டையாட்சி முறையைப் பல அரசியல் அறிஞர்கள் வன்மையாய்க் கண்டித்தார்கள். பழைய வகுப்புப் பிரதிநிதித்துவமும் சலுகைகளும் முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, தாழ்த்தப்பட்டவருக்கும் விரிவுபடுத்தப்பட்டிருந்தன. இதனை அவ்வகுப்பின் தலைவர் சிலரே ஆதரித்தனர். பேரவை இதனைப் பெரிதும் எதிர்த்தது. ஆனால், பேரவையில் தனி எதிர்ப்புக்கு உரிய பகுதி இந்தியாவின் அரசியல் வளர்ச்சிக்குரிய இலக்குப் பற்றியதே. முதல் உலகப் போரில் இந்தியா பிரிட்டிஷ் பேரரசுக்குச் செய்த தொண்டுகளைப் பிரிட்டிஷார் சிறிதும் மழுப்பலின்றி வாயார ஒத்துக் கொண்டிருந்தனர். ஒரு கோடி வெள்ளி செலவும் பன்னூறாயிரக்கணக்கான படை வீரர் உதவியும் தந்து இந்தியா போர் வெற்றியுற உதவிற்று. போர் முடிவில் நடைபெற்ற ஒப்பந்தத்தில் இதனைப் பிரிட்டிஷார் பாராட்டினர்; அத்துடன் போர்க்களத்தில் நாட்டு மக்களை ஊக்கும் முறையில் இந்தியாவுக்குத் தன்னாட்சியுரிமையுடைய குடியேற்ற நாட்டுரிமை நிலை1 வழங்குவதாக உறுதி கூறியிருந்தனர். இதனையும் போர்முடிவில் பிரிட்டன் நன்றியுடன் ஏற்றுக் கொண்டிருந்தது. மாண்டேகு- செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தம் இவ்வவா ஆர்வங்களை நிறைவேற்றுமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அச்சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுமுன் பிரிட்டனில் பிற்போக்காளர் கை எப்படியோ வலுத்துவிட்டது. கூறிய உறுதியை மறுக்காமல், அதை அப்படியே மழுப்பிவிட அவர்கள் முயன்றார்கள். ஆகவே, குடியேற்ற நாட்டுரிமை என்ற சொல்லை அவர்கள் சீர்திருத்தங்களில் வழங்கவில்லை. அத்துடன் பொறுப்பாட்சிக்கும் யாதொரு காலவரையறையுமின்றி ஆட்சியாளர் பொறுப்பின்படியும் விருப்பத்தின்படியும் பல படிகளாகச் சீர்திருத்தப் பிச்சை வழங்கும் முறை வகுக்கப்பட்டிருந்தது. மிதவாதிகளின் வெளியேற்றம்: தனிக் கட்சி அமைப்பு இந்தியரின் நம்பிக்கையை இது பேரளவு புண்படுத்திற்று. தீவிரவாதிகளின் உரிமைக் குரலை இது அவமதித்தது. அவர்கள் பேரவையில் தீர்மானங்கள் செய்துவிட்டுக் கலையும் பழைய வழக்கத்தை விட்டுவிட்டு, நாட்டு மக்களிடையே நிலைமையை விளக்கி, அவர்கள் அரசியல் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பத் தொடங்கினார்கள். பேரவை இயக்கம் இது முதல் பொதுமக்கள் நலன் பேண வழிகாட்டும் பெருமக்கள் இயக்கமாய் இல்லை. அது பொதுமக்கள் இயக்கத்தின் மையக்கோப்பாக மாறத் தொடங்கிற்று. எனவே, மிதவாதிகள் மட்டுமன்றி, திருமதி அன்னி பெஸண்டும் மாண்டேகு- செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்களை ஏற்கும்படி அறிவுரை கூறியபோது,பொதுமக்கள் தீவிரவாதிகள் பக்கமாகக் கிளர்ந்தெழத் தொடங்கினார்கள். மிதவாதிகள், பேரவை தங்களது கையைவிட்டு நழுவிச் செல்வது கண்டு மனம் புழுங்கினார்கள். மிதவாதிகளுக்கு மேன்மேலும் ஆதரவு குறையத்தக்க முறையிலேயே அரசியலாரும் நடந்து கொண்டனர். அவர்கள் மிதவாதிகளின் அறிவுரைகளைக் கூட ஏற்காமல், பேரவையின் புதிய போக்கையும் மக்களியக்கத்தின் போக்கையும் 1857 புரட்சியை அடக்கியதுபோல அடக்க முற்பட்டார்கள். இதற்காக இந்தியரே இல்லாத ஒரு குழுவை அமைத்து ஒரு கொடிய அடக்குமுறைச் சட்டம் வகுத்தனர். அதன் தலைவர் நீதிபதி ரௌலத்து என்பவர். ஆதலால், அது ‘ரௌலத்துச் சட்டம்’ என்று வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட இந்தியாவின் எல்லாக் கட்சிகளும் அதைக் கண்டித்தும், அது நிறைவேற்றப்பட்டது. இதனால், அவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளும் கொடுமைகளும் தீவிரவாதிகளின் பக்கம் தேசத்தைத் திரள வைத்தன. மிதவாதிகளில் ஒருவராகத் தோற்றக்கூடிய வகையில் அருளாளராயும் ஆன்மவாதியாயும் அமைந்த தலைவர் காந்தியடிகள்; தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் அவர் தீவிரவாதிகளும் கனவில் காணாத அறப்போர் முறைகளை வெற்றியுடன் கையாண்டவர். ஆயினும், இந்திய அரசியலில் அவர் இன்னும் திலகருடன் கைகோக்கத் தயங்கித்தானிருந்தார். பிரிட்டிஷாரின் நல்லெண்ணத்தில் அவருக்கு இருந்த நம்பிக்கை அவ்வளவு! ஆனால், ரௌலத்துச் சட்டம் அப்பெரியார் நம்பிக்கையைக் கலைத்தது. அவர் அறப்போர் தொடங்கப் போவதாக ஆட்சியாளருக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆன்ம ஞானிகளைப் பொருட்படுத்தியறியாத அரசாங்கம், அவரைப் புறக்கணித்து, அடக்குமுறைப் புயல் எழுப்பிற்று. குருதியாறுகள் ஓடின. காந்தியடிகள் முற்றிலும் தீவிரவாதியாய்த் திலகரைப் பின்பற்ற இது உதவிற்று. காந்தியடிகளின் புதுத் தலைமையில் தீவிரவாதிகள் இன்னும் வலிமை பெற்றார்கள். 1919- ஆம் ஆண்டில் மிதவாதிகள் பேரவையை விட்டு வெளியேறித் தனி அவையும் கட்சியும் அமைத்துக் கொண்டார்கள். அது’ அனைத்திந்திய பொதுநலக் கழகம்1 என்ற பெயரால் அவ்வாண்டு முதல் நிலவிற்று. தென்னிந்திய நேர்மைக் கட்சி: தொழிற்சங்க இயக்கம் தென்னிந்தியாவில் இதற்கு முன்னிருந்தே 1916ல் அரசியலில் மிதவாதிகளாயிருந்து சமூகச் சீர்திருத்தத் தொண்டில் முன்னேறிச் செல்லும் ஆர்வமுடைய சில மக்கள் தலைவர்கள் பேரவைக்கு வெளியே ஒரு சங்கம் நிறுவியிருந்தார்கள். அதுவே தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் ஆகும். இது தாழ்த்தப்பட்டவர் களுக்கும் பிற்பட்டவர்களுக்கும் தனி உரிமையும் தனிச்சலுகையும் கோரியதுடன், அவர்கள் சார்பில் தனித் தொகுதி, பணியமர்வு விழுக்காடும், கல்வியுரிமை விழுக்காடும் கோரிற்று. இஃது, எல்லா வகுப்பினருக்கும் சரிசம நேர்மை கோரியதால், ‘நேர்மைக்கட்சி’2 என்றும், உரிமையில் பிற்பட்ட மிகப் பெரும்பாலான பிராமண ரல்லாத எல்லா வகுப்புகளின் பெயராலும் குரலெழுப்பிய தனால், ‘பிராமணரல்லாதார் கட்சி’ என்றும்பெயர் பெற்றது. பழைய இராமலிங்க வள்ளலாரின் சமூகச் சீர்திருத்த நோக்குடனும் மறைமலையடிகளாரின் மொழி உரிமைச் சீர்திருத்த நோக்குடனும் தென்னிந்தியாவில் இவ்வியக்கம் ஒன்றுபட்டு உழைத்தது. காந்தியடிகள் தொடக்கத்திலிருந்தே நெசவுத் தொழிலாளர்- களுக்காகவும் சம்பரான் நீலித் தோட்டத் தொழிலாளர்களுக் காகவும் தம் அறப்போர் முறையை கையாண்டிருந்தார். தென்னாட்டில் திரு. சர்க்கரைச் செட்டியார், தோழர் சிங்கார வேலுச் செட்டியார், திரு.வி. கல்யாண சுந்தரனார் ஆகியவர்கள் முயற்சிகள் பழந்தலைவர் வ.உ.சி.யின் தொழிற் புரட்சியைத் தொடர்ந்து நடத்தத் தொழிற்சங்க இயக்கத்தைத் தொடங்கி யிருந்தன. இவை பேரவையுடன் இருபதாம் நூற்றாண்டின் முதற்காலில் வளர்ந்து வந்தன. இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் காலில் நீதிக்கட்சி பல பேரியக்கங்களாகப் பெருகி, மொழி, தொழிலாளர் போராட்டம், சமூக உரிமை, சமய சமூகச் சீர்திருத்தம் ஆகிய வற்றை மேற்கொண்டிருந்தது. இது ஒரு புறம் தென்னாட்டுத் தலைவர்களின் பெருமுயற்சியால் இந்தியப் பொது உடைமைக் கட்சி தோற்றுவதற்கு உதவிற்று. மறுபுறம் இது பேரவை இயக்கம். இதுவரை கவனிக்காதிருந்த இந்து முஸ்லீம் ஒற்றுமை, தாழ்த்தப்பட்டவர் முன்னேற்றம் ஆகிய இரண்டு சமூகப் பிரச்சினைகளிலும் காந்தியடிகள் கருத்துச் செலுத்தும்படி தூண்டிற்று. 1919ல் ஏற்பட்ட இச்சூழ்நிலைகளினிடையே லோகமானிய பாலகங்காதர திலகர் காலமானார். அவர் தீவிரவாத உரிமை மரபுக்கும் காந்தியடிகள் தலைவரானார். காந்தி ஊழி இது முதல் தொடங்குகிறது. அது முதலில் இந்தியாவின் அரசியல் வாழ்வையும் பின்பு அதன் முழுத் தேசியவாழ்வையும் முழுதும் மாற்றியமைத்துப் புதியதோர் இந்தியாவைத் தோற்றுவிக்கக் காரணமாயிருந்தது. 9. காந்தி ஊழி தலைவர்கள் போற்றும் தலைவர் இந்தியாவின் அரசியல் வாழ்விலும் பேரவை வாழ்விலும் காந்தியடிகள் 1918லிருந்து 1948 வரை புகழ் ஒளி வீசியுள்ளார். அக்கால முழுவதையுமே நாம் ‘காந்தி ஊழி’ என்று கூறலாம். ஆயினும், 1935க்குப் பின் அவர் புகழ் ஒளி பண்டித ஜவஹர்லால் நேரு, தலைவர் பெருந்தகை சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வேறு பேரொளிகளைத் தோற்றுவித்து, அவற்றின் ஊடாகவே நின்று ஒளி வீசிற்று. எனவே, காந்தியடிகளே நேரடியாகப் பேரவையை நடத்திய காலத்தை மட்டுமே நாம் சிறப்பாகக் ‘காந்தி ஊழி’ என்று கூறுகிறோம். இது 1918லிருந்து 1935வரை நிலவிற்று. பேரவையின் தலைவர்களுள்ளும் இந்தியாவின் பெரியார்களுள்ளும் காந்தியடிகளின் நிலை தனிச் சிறப்புடையது. இந்தியப் பொது மக்களிடையே அவரைவிடச் செல்வாக்குள்ள தலைவர்கள் முன்னும் இருந்ததில்லை; பின்னும் இருப்பது அரிது என்னலாம். அத்துடன் மக்களால் அவர் எந்த அளவு போற்றப் பட்டாரோ, அந்த அளவு மக்கள் போற்றும் தலைவர்களாலும் அவர் போற்றுதல் பெற்றிருந்தார். ராஜாராம் மோகன்ராயருக்குப் பின் ‘இந்தியாவின் தந்தையார்’ என்ற தனிப்பெரும் பெயருக்கு உரியவர் அவர் ஒருவரே. ஆனால், ராம் மோகனருக்கு அப்பெயர் அறிஞரால் மட்டும் வழங்கப்பட்டது; காந்தியடிகளுக்கோ, பொதுமக்களாலும் பொதுமக்கள் தலைவராலுமே அப்பெயர் தனிச் சிறப்புடன் அளிக்கப்பட்டது. பொதுவாக எந்தத் தலைவரையும்விடத் தேசிய அவையாகிய பேரவை பெரிது என்றே கூறவேண்டும். அதுபோல, பேரவையைவிடத் தேசமாகிய இந்தியா பெரிது என்றுதான் எவரும் கூறுவர். இது பொது அமைதி. ஆனால், இந்தியாவின் வரலாற்றில் காந்தியடிகளின் ஒளி புகுந்தபொழுது இந்நிலை மாறிற்று. இந்தியாவைவிடப் பேரவை பெரிதாயிற்று. ஏனெனில், அது புதிய இந்தியாவைத் தோற்றுவித்தது! அதுபோலவே, பேரவையைவிடக் காந்தியடிகள் புகழ் பெரிதாயிற்று. ஏனெனில், அவர் புதியதொரு பேரவையைத் தோற்றுவித்தார்! காந்தியடிகளின் புகழும், அப்புகழொளியிற் பட்டுப் புதிதாய் மலர்ந்த புதிய பேரவையும், புதிய இந்தியாவும் இந்திய எல்லை கடந்து, ஆசியாவின் மறுமலர்ச்கிக்குத் தூண்டுதல் தந்தன. இங்ஙனம் காந்தியடிகள் புகழ் புது உலக ஒற்றுமைக்கும் உலக அமைதிக்கும் வழி காட்டிற்று. கீழ்த்திசை வானில் தோன்றி இந்தியாவையும் உலகையும் ஒளிதிகழச் செய்த இப்பேரொளியை இந்திய மக்கள் இக்காலக் கடவுட்பிறப்பு எனப் போற்றிப் பாராட்டியதில் வியப்பில்லை. ஏனெனில், அவர் பொது மக்களின் முதல்தரத் தலைவராயிருந்ததுடன், அத்தகைய பொதுமக்கள் தலைவருக்கும் ஒரு பெருந்தலைவராயிருந்தார். இந்தியாவின் முதற்பெருந்தலைவர்களாகிய பண்டித ஜவஹர்லால் நேருவும் தலைவர் பெருந்தகை சுபாஷ் போஸும் அவரையே தம் அரசியல் தந்தையார் என்று பாவித்திருந்தனர். காந்தியடிகளைச் சிலர் ஆன்மிகத் துறை சார்ந்த ஒரு முனிவர் என்றே கருதுவதுண்டு. வேறு சிலர், அவரை அரசியல்வாதிகளில் தலைசிறந்த முதல்வர் என்று கூறுவர். இரண்டு துறைகளிலும் அவர் பண்புகள் செயலாற்றின என்பதில் ஐயமில்லை. ஆயினும், இந்தியாவுக்கும் பேரவைக்கும் அவர் ஆற்றிய தொண்டு மிகமிகப் பெரிது. அவற்றின் புகழொளியில், அதுவே மிகப்பெரும் பகுதியாகியுள்ளது. இதனை நோக்க, அவர் ஆன்மிகப் பெருமை சிறப்புடையதேயானாலும், அவர் அரசியற் புகழ் அதனினும் பெரிது என்னலாம். ஆயினும், அவர் வாழ்வில் அரசியல் கூறு எது? ஆன்மிகக் கூறு எது? என்றோ; பொதுவாழ்வுக் கூறு எது? தனி வாழ்வுக் கூறு எது? என்றோ பிரித்துணர முடியாது. அவருக்குச் சமயமே தேசியமாகவும், தேசியமே சமயமாகவும் அமைந்திருந்தது. தேசியப் பொதுவாழ்வே அவருக்குத் தனி வாழ்வாகவும், அவர் தனி வாழ்வு அதன் ஒரு பெருங்கூறாகவும் அமைந்துவிட்டன. இந்தியாவின் தலைவர்களிடையே மாநிலத்தின் அறிவுத் திறத்துக்குரிய புகழை உலகறிய எடுத்துக்காட்டியவர் விவேகானந்த அடிகள். இந்தியாவின் பண்டைப் புகழ்க் கனவுகளையும், தமிழகத்தின் முழுநிறைத் தேசியக் கனவுகளையும் இந்தியர் கண் முன் ஒரு வானவில்லாய் நின்று திகழச் செய்தவர் கப்பலோட்டிய தமிழராகிய வ.உ. சிதம்பரனார். இந்தியா ஒரு வல்லரசாக முடியும் என்பதை மேனாட்டினரும் கண்டு மலைக்க மெய்ப்பித்துக் காட்டியவர் தலைவர் பெருந்தகை போஸ். சீர்திருத்தக் கொடி ஏற்றி இந்தியாவின் பழைய மாசு மறுக்களை அகற்றிப் புதிய இந்தியாவுக்கு முதன்முதல் வழிகாட்டியவர் ராஜாராம் மோகனர். ஆனால், இத்தனை பேரின் புகழையும் ஒரே புகழாக்கி, இந்தியாவின் ஆன்மிகப் பெருமையை உலகறியச் செய்தவர் காந்தியடிகள். ‘பெருஞ்செயற் பெரியார்’ (மகாத்துமா) என்ற பெயரால் பொதுமக்களும் ‘அடிகள்’ என்ற சிறப்பு அடைமொழியால் திரு. வி. கலியாண சுந்தரனாரும் அவரைச் சிறப்பித்துள்ளனர். வாழ்வும் போர் முறையும் இந்தியாவின் தேசிய வாழ்விலும் புகழிலும் நீண்டகாலம் பின்தங்கியிருந்த நாடு கூர்ச்சரமே. ஆனால், அது விரைந்து இந்திய வாழ்வைத் தன் வாழ்வு ஆக்கிக் கொண்டது. அதுவே, இந்தியத் தேசியத்தின் முழுநிறை மாணிக்கமாகிய காந்தியடி களையும் ஈன்றளித்தது. அவர் மேற்படிப்புக்குப் பிரிட்டன் சென்று திரும்பி வந்த பின் சில காலம் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராய்த் தொண்டாற்றச் சென்றிருந்தார். தென்னாப் பிரிக்க இந்தியரின் உரிமைகளுக்காக அவர் அங்கே தொண் டாற்றிப் பெருவெற்றி கண்டார். அரசியலில் அவர் அறப்போர் முறையை முதல்முதல் கையாண்டது கடல் கடந்த அந்நாட்டிலேயே. அங்குள்ள இந்தியரில் தமிழரே மிகப் பெரும்பாலோர். காந்தியடிகள் அங்கே தமிழருடன் பழகியும் தமிழ்ப் பிள்ளை களுக்குக் கற்றுக் கொடுத்தும் ஓரளவு தமிழில் பயிற்சி பெற்றிருந்தார். தமிழர் தலைசிறந்த நூலாகிய திருக்குறளிலும், விவிலிய நூலிலும் அவருக்கு ஈடுபாடு மிகுதி. இந்நூல்களும் இவற்றின் வழி ரஷ்யப் பெரியார் டால்ஸ்டாய் என்பார் ஒழுகிக் காட்டிய அறநெறியுமே காந்தியடிகளின் அறப்போர் நெறிக்குத் தூண்டுதல் தந்தன. பல தமிழ்ப் பெரியார்கள் அவர் முறைகளில் ஒத்துழைத்து அவர் புகழ் ஒளியில் பங்கு கொண்டனர். தாழ்த்தப்பட்டவர் தொண்டில் அவர் இங்கேயே ஈடுபடத் தொடங்கியிருந்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பினராகிய வள்ளியம்மை என்ற வீரத் தமிழ்ப்பெண்மணி அவர் தலைமையில் அறப்போரை வெற்றியுடன் நடத்தியவருள் ஒருவர். தாழ்த்தப்பட்ட வகுப்புப்பெண் ஒருத்தியையே அவர் தம் மூன்று புதல்வர்களுடன் தம் புதல்வியாக ஏற்று வளர்த்து வந்தார். காந்தியடிகள் இந்தியாவுக்கு வருமுன்பே அவர் தென்னாப்பிரிக்காப் பணியின் புகழ் இந்தியர் உள்ளங்களைச் சென்றடைந்திருந்தது. தொடக்கக் காலப் பேரவைகளில் அதனைப் பாராட்டித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. அவர் புகழை இந்தியாவில் பரப்புவதிலும் அவர் இந்தியாவுக்குத் திரும்பி வந்தபோது அவரை வரவேற்பதிலும், அந்நாளைய பேரவைத் தலைவர் திருமதி அன்னிபெஸண்டு அம்மையார் பெரும்பங்கு கொண்டிருந்தார். விடுதலை இயக்கத் தலைவர்களிடையே காந்தியடிகள் தனிப்பெருமைக்கு அவர் போர் முறையின் பண்பே காரணம். அவர் போர் முறையை ‘அறப்போர் முறை’ அல்லது ‘அன்புப் போர் முறை’ என்று கூறலாம். பகைவரை எதிர்த்துப் போராடுபவர்கள் உள்ளத்திலே வெறுப்புடனோ சீற்றத்துடனோ போராடலாம். இவையே நாட்டுக்கு நாடு, அரசுக்கு அரசு உலகில் நடைபெற்று வரும் ஆயுதப் போர்களின் நிலைமை. ஆனால், ஆதிக்கத்தை எதிர்த்து உரிமைகளுக்காகப் போராடுபவர் முறை, எப்போதுமே வேறாகத்தான் இருந்து வந்துள்ளது. அது கட்டுப்பாடான எதிர்ப்பாகவும், உரிமைக் கோரிக்கையே நோக்கமாகவும், வரம்பாகவும் கொண்டு நடைபெறுகிறது. அரசியல் இயக்கங்களும், தொழிலாளர் போராட்டங்களும் இத்தகையவை. ஆனால், காந்தியடிகளின் போர் முறை இத்தனையிலிருந்தும் வேறுபட்டது. காந்தியடிகள் அரசியலில் ஆன்மிக ஒழுக்கத்தை ஈடுபடுத்தியவர். அரசியல் போரை அவர் ஓர் ஆன்மிகப் போராக உயர்த்தினார். எதிரியிடம் பகைமையும் சீற்றமுமின்றிப் பொறுமை யுடனும் அன்புடனும் எதிர்ப்பதாலும் ஒத்துழையாமை நடத்துவதாலும் அவர் அவன் உள்ளத்தில் மாற்றத்தை உண்டு பண்ண முயன்றார். ‘அரசியல் வாழ்வின் அடிப்படை ஆதிக்கம் அன்று, அன்பிணக்கமே.’ இந்த உண்மையைக் காந்தி அடிகளின் போர்முறை எடுத்துக் காட்டிற்று; தென்னாப்பிரிக்காவில் நிறவேறுபாட்டு அநீதியை எதிர்த்து உலகம் வியக்கும் பெருவெற்றி கண்டது. அப்போதுங்கூட அரசியலாதிக்கத்தை அதனால் எதிர்க்க முடியும் என்று எவரும் எண்ணவில்லை. இந்தியத் தேசியப் போராட்டத்தில் காந்தியடிகள் அதை ஈடுபடுத்திப் பெருவெற்றி கண்டார். இவ் வெற்றியை இன்று ஒருவரும் மறுக்க முடியாது. ஆனால்,அரசியலில் மட்டுமன்றி, உலகப் போர்களிற்கூட இதைப் பயன்படுத்தி அழிவு தவிர்க்க முடியும் என்பது அடிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. பேரவைகூட இப்புத்தம்புதிய முறையை மேற்கொள்ளத் தயங்கிற்று. இதில் வியப்பில்லை. ஏனெனில், மனிதவுலகுக்கே இது புதிது! இந்தியப் பேரவை அரசியலில் இம்முறையைப் பின்பற்றியது போல, உலகப் பேரவையாகிய உலக நாடுகள் சங்கம் இதனைப் பின்பற்றக் கூடுமானால் உலகத்துக்கே ஒரு புதுப்பேரூழி ஏற்படும் என்னலாம். அறப்போர் முறை அரசியல் தலைமை ஏற்குமுன்பே இந்தியாவில் காந்தியடிகள் தம் அறப்போர் முறையைப் பல இடங்களில் கையாண்டார். தமிழகத்தில் வீரத் தலைவர் வ.உ.சிதம்பரனார் முதன் முதல் கையாண்ட வேலை நிறுத்த முடிகளிலும் குடியானவர் போராட்டங்களிலும் அதை ஈடுபடுத்தினார். 1914ல் கத்தியவார் சுங்கச்சாவடிப் போராட்டத்திலும்; 1917ல் சம்பரான் நீலித் தோட்டத் தொழிலாளர் சார்பிலும்; பம்பாயில் கூலித் தொழிலாளரைக் குடியேற்ற நாடுகளுக்கு அரசியலார் திரட்டி அனுப்ப முயன்றதைத் தடுக்க, அத்தொழிலாளர் மனைவியர் ஆற்றிய போராட்டத்திலும் அவர் ஈடுபட்டு பெருவெற்றி கண்டார். 1918-ஆம் ஆண்டில் அகமதாபாது நெசவாலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்தபோது, அவர் முதல் முதலாக உண்ணா நோன்பை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வெற்றி கண்டார். அதே ஆண்டிலேயே, குஜராத்து வரி மறுப்பு இயக்கத்தில் குடியானவர் உரிமைகளை வலியுறுத்த இம்முறைகள் பேரளவில் பயன்பட்டன. பரந்த அளவில் மாநில அரசியலில் காந்தியடிகள் அறப்போராட்டத்தைத் தொடங்கியது 1919ல் நடைபெற்ற ரௌலத்துச் சட்ட எதிர்ப்பிலேயேயாகும். காந்தியடிகள் பேரவையின் அரசியலில் நுழைந்தபோது இந்தியாவின் முதல் தீவிரப் பேரவை இயக்க அலைகளாகிய வங்கப் புரட்சியும் வ.உ. சிதம்பரனாரின் தமிழகப் புரட்சியும் ஓய்ந்து விட்டன. கோபாலகிருஷ்ண கோகலே தலைமையில் ஆக்கத்துறை இயக்கமும் வலுப்பெற்றிருந்தது. ஆனால் 1915லிருந்து திலகர் அணி பெஸண்டு ஆகியவர்கள் தலைமையில் புதிய தீவிரக் கட்சி எழுந்து வளர்ந்து வந்தது. தொடக்கத்தில் பிரிட்டிஷார் நல்லெண்ணத்தில் காந்தியடிகளுக்கு நம்பிக்கை இருந்தது. அத்துடன் அவர் கோகலேயைத் தம் அரசியல் குருவாகக் கொண்டிருந்தார். ஆகவே, அவர் மிதவாதப் படை வீட்டிலேதான் இடம் பெறலாம் என்ற நிலை இருந்தது. ஆயினும், தென்னாப்பிரிக்காவில் அவர் மேற்கொண்ட அறப்போர் முறையை இந்திய அரசியலிலும் அவர் மேற்கொள்ள முனைந்தபோது மிதவாதிகளும் தீவிரவாதிகளுங்கூட முதலில் திகில் கொண்டார்கள். திருமிகு அன்னிபெஸண்டு அம்முறை கண்டு வெகுண்டார். ஆயினும், விரைவிலேயே தீவிரக் கட்சியில் அவர் ஆதரவு மிகுந்தது. 1918க்குள் திலகருடன் அவர் சரிசமமான நிலை அடைந்து அதனை இயக்கத் தொடங்கினார். பேரவையினுள்ளே காந்தியடிகளின் புதிய தலைமைக்குப் படிப்படியான ஆதரவு பெருகி வந்தது. ஆனால், அவரது உண்மையான ஆற்றல் பேரவை மாநாட்டுக்கு வெளியே இருந்தது. எந்தப் பேரவைத் தலைவரும் இதுவரை பெறாத செல்வாக்கை அவர் விரைவில் மக்களிடையே பெற்று வந்தார். பேரவைக்கு வெளியே வளர்ந்து விட்ட அவர் மக்கள் தலைமையை 1919இல் பண்டித மோத்திலால் நேருவைத் தலைவராகக் கொண்ட பேரவை ஆர்வத்துடன் ஏற்றது. பாஞ்சாலத் தீவிரக்கட்சித் தலைவர் லாலா லஜபதிராய் முதலில் கருத்து வேற்றுமை தெரிவித்திருந்தார். ஆனால், பேராட்டம் திட்டமிடப்பட்ட பின் அவரே முன்னணியில் குதித்துத் தொண்டாற்றினார். 1920இல் போராட்டத் திட்டம் அமைத்த பேரவையின் தலைவர் அவரே. ரௌலத்துச் சட்ட எதிர்ப்பு ரௌலத்துச் சட்டப் பகர்ப்பு 1919 பிப்பிரவரியிலேயே மாநிலச் சட்ட சபைக்குக் கொண்டுவரப்பட்டது. அதை அரசியலார் பின் வாங்கிக் கொள்ள வேண்டுமென்று கோரியும், பின் வாங்காவிட்டால் அதை எதிர்த்து அறப்போர் தொடங்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தும் காந்தியடிகள் மாநில ஆட்சி முதல்வருக்குக் கடிதம் எழுதியிருந்தார். ஆட்சியாளர் அசையவில்லை. அதன்மீது ஏப்பிரல் 6 முதல் 13 வரை ரௌலத்துச் சட்ட எதிர்ப்பு வாரமாகக் கொண்டாட வேண்டுமென்று காந்தியடிகள் கட்டளை பிறப்பித்தார். கடைகளை ஏப்பிரல் 6ல் அடைத்துவிட்டு இந்துக்களும் முஸ்லிம்களும் தொடர்ந்து ஊர்வலங்கள் நடத்தினார்கள். தேசிய இயக்கத்திலிருந்து இது வரை பெரிதும் ஒதுங்கியிருந்த பாஞ்சாலம், இப்போது அதை முன்னணியில் நின்று நடத்தத் தொடங்கிற்று. ஆட்சியாளர் இது கண்டு புழுக்கமுற்றனர். 1857லிருந்தே லாரன்ஸ் துணைவரின் நிறத்திமிர் மரபும், கொடுங்கோன்மை மரபும் பாஞ்சாலத்தில் இருந்து வந்தன. அதற்குப் பக்கமேளமடிக்கும் அடிமை மன்னர் மரபையும் அவர்களுடைய சீக்கியப் படைகளையும் மட்டும அவர்கள் தட்டிக் கொடுத்துப் பிறர்மீது ஆணவம் காட்டி வந்தார்கள். இப்போது சீக்கியர் தாயகமான பாஞ்சாலமே தேசிய இயக்கத்தில் தலைமை வகிக்கத் துணிந்தது கண்டு அவர்கள் குருதி கொதித்தது. டாக்டர் கிச்சுலு, டாக்டர் சத்தியபால் ஆகிய பாஞ்சாலத் தலைவர் இருவர் எதிர்ப்பியக்கத்தை அமைதியாக நடத்த அரும்பாடுபட்டு வந்தனர். ஆனால், ஏப்பிரல் 9-ல் அவர்கள் திடுமெனக் கைது செய்யப்பட்டு, யாரும் இன்ன இடத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர் என்பதை அறியாதபடி கடத்திச் செல்லப்பட்டனர். இது மக்கள் கிளர்ச்சித் தீயில் எண்ணெய் ஊற்றியது மாதிரி ஆயிற்று. தடையுத்தரவுகளும் தடியடிகளும் எங்கும் குமுறின. தில்லிப் பகுதியில் மக்கள் கட்டு மீறிக் காவலரை எதிர்த்ததாகக் காந்தியடிகளுக்குத் தெரிய வந்தது. மக்கள் கொதிப்பை அமைதிப்படுத்தி நிலைமையைச் சமாளிக்க உதவும் எண்ணத்துடன், அவர் தில்லிக்கு விரைந்தார். ஆனால், அவர் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். காட்டின் ஒரு புறத்திலெழுந்து மெல்லப் பரவி வரும் காட்டுத் தீக்குக் சூறாவளி கிடைத்தால் கேட்பானேன்? பாஞ்சாலத்தின் நிலை இச்சூறாவளியில் பட்ட தீயாயிற்று. இலாகூர், அமிருதசரசு, கன்சூர், அர்விசாபாது, ஷேக்பாரா, வஜீராபாது, அகல்காரா சங்களா முதலிய எத்தனையோ நகரங்களில் கிளர்ச்சிகளும் பொதுக் கூட்டங்களும் கண்டனத் தீர்மானங்களும் ஏற்பட்டன. லயால்பூர், குஜராத்து மாவட்டங்களில் மக்கள் உணர்ச்சி அணைகடந்த வெள்ளம் போலப் பெருக்கெடுத்து ஓடிற்று. சீக்கியர்களின் தாயகமான பாஞ்சாலம், மற்றொரு பாஞ்சாலங்குறிச்சியாயிற்று; மற்றொரு வங்கமாயிற்று. பஞ்சாபுப் படுகொலை பாஞ்சால ஆட்சி முதல்வர் மைக்கேல் ஓட்வியரும், படைத் தலைவர் டயர் என்பவரும் இந்தியர் குருதியாறு பெருக்கி அவர்கள் உணர்ச்சிகளைக் காலிலிட்டுத் தேய்த்தழிப்பதென்று திட்டமிட்டனர். ஏப்பிரல் 13இல் ஜாலியன்வாலாபாகு என்ற இடத்தில் ஒரு பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அரசியலாரும் அதற்குத் தடையுத்தரவு இட்டிருந்தனர். ஆனால், தடையுத்தரவு பற்றி வேண்டுமென்றே போதிய அறிவிப்புப் பரப்படவில்லை. கூட்டம் நடக்குமிடம், இரண்டொரு புறத்தில் மட்டும் வழியுடையதாயிருந்தது. அரசியலாருக்கு உள்ளாட்களாயிருந்த சிலர், விடுதலையார்வமுள்ள மக்களனைவரையும் கூடிய மட்டும அந்தப் பெரும்பொறியுள் அடைத்தனர். அதன்பின் யாதொரு சந்தடியுமின்றி வழியடைக்கப்பட்டது. கூட்டம் வளைக்கப் பட்டது. உள்ளே தடியடியும் துப்பாக்கி வேட்டும் கூட்டத்தைச் சின்ன பின்னமாக்கிக் கலைத்தன. ஆனால், மருண்டோடிய ஆடவரும் பெண்டிரும், குழந்தைகளும் முதியவரும் வெளியே செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுப் படுகொலை செய்யப் பட்டார்கள். இயந்திர பீரங்கிகள் ஓயாது முழங்கின. மக்கள் வெள்ளம், குருதியில் மிதக்கும் பிண வெள்ளம் ஆயிற்று. இந்தியாவின் வரலாற்றில், ஜாலியன்வாலாவில் நிகழ்ந்த இப்பஞ்சாபுப் படுகொலை, 1857ஐக் கூட மறக்கடிக்கத்தக்க கோர நிகழ்ச்சியாகும். நிறத்திமிர் கொண்ட கொடுங்கோலனான டயர் என்பவன் தேசத்தின் மீதுள்ள தன் பகைமையையும் வஞ்சத்தையும் தீயும் புகையும் கக்கும் குண்டுகளாகப் பொழிந்து தீர்த்தான். அவன் செய்த அழிவுகளும் அடாச் செயல்களும் மனிதச் செயல் எல்லையைக் கடந்தவை. மனித மொழிகள் எவையும் அவற்றை வருணிக்கும் திறமுடையவை அல்ல. அச்செயலை இந்தியாவிலுள்ள அயல் மாகாணங்கள்கூட அறிய வொட்டாமல் ஆட்சியாளரின் பத்திரிகைத் தடையும் போக்குவரவுத் தடையும் வாரக் கணக்கில் தடுத்துவைத்திருந்தன; உலகமறியாதபடி மாதக்கணக்கில் தடுத்திருந்தன. மேலும் அவை என்றும் அதன் முழு உண்மையை இருட்டடிக்க முயன்றனவே யன்றி, உண்மையை வெளியிட்டுக் கூற விரும்பவில்லை. ஆனால், அப்படியிருந்தும், அவர்களின் அறிக்கையின்படியே, அன்று ஒரு நாள் மாலைக்குள் 1650 துப்பாக்கிக் குண்டுகள் பொழியப் பட்டிருந்தன. 379க்கு மேற்பட்டவர் அடிமை இந்திய வாழ்வு நீத்து விடுதலை உலகம் நாடினர். 1200க்கு மேற்பட்டவர் கையிழந்தும், காலிழந்தும், கண்ணூறுபட்டும், நெஞ்சு பிளவுபட்டும் அழிவு பெற்றனர். போர்க்களத்தின் நிலை, களப்போர் வேளையின் கணக்கு இது. ஆனால், அடக்குமுறை வெறி இப்போர்க்கள எல்லை கடந்து, நகர மக்கள் எல்லார் மீதும் அவிழ்த்து விடப்பட்டிருந்தது. களப்போர் வேளையின் எல்லை கடந்து நாள் கணக்கில், வாரக் கணக்கில், நகரும் நகர்ப்புறங்களும், சுற்று வட்டாரங்களும் முற்றுகையிடப்பட்டிருந்தன. வெறிகொண்ட வெள்ளை வீரர்கள் ஆதரவற்ற மக்களை வேட்டையாடினார்கள். பெண்டிரும், குழந்தைகளும், தெருவில் ஊர்ந்து செல்லும்படியும், ஊளையிடும்படியும், தம் நாட்டைப் பழித்துப் பேசும்படியும் வற்புறுத்தப்பட்டு வதைக்கப்பட்டார்கள். மனித உணர்ச்சியற்ற முறையில் ஒரு நாடும் இனமும் அவமதிக்கப்பட்டன. ஜாலியன்வாலாப் படுகளத்திற்கு உலகப் படைத்துறை வரலாற்றிலேயே ஒப்புமை காண்டல் அரிது. ஒரு நாட்டை ஆளும் அரசியல், அதுவும் நாகரிக உலகில் நாகரிக நாட்டின் பெயர் கூறும் அரசியல், அந்த அளவுக்குச் சீறி எழுவது என்பது ஒரு விளங்காப் புதிரேயாகும். 1798 புரட்சி நினைவும், 1857 புரட்சி நினைவும் நிறத்திமிருடைய சில வெள்ளையர், பிற்போக்காளர் உள்ளத்தில் புகைந்து கொண்டிருந்தன என்பது ஒன்றே இந்நிகழ்ச்சிகளுக்கு வரலாறு தரக்கூடும் விளக்கம் ஆகும். 1857 புரட்சியை அடக்க உதவிய வீர சீக்கிய குலமே, 1920ல் இங்ஙனம் கிளர்ந்தெழுந்து நிற வெறியர் சீற்றத்துக்கு ஆளாயிற்று. இது வரலாறு தரும் விளக்கம் மட்டும் அன்றி, வரலாறு தரும் படிப்பினை என்றும் கூறலாம். ஆதிக்கவாதிகள் சீற்றம் விடுதலை உணர்ச்சியின்மீது கனன்றெழுவதைவிட, அடிமை உணர்ச்சி கொண்டவர்கள் புத்தெழுச்சிமீது மிக்குப் பாய்வது இயல்பு என்பதை இது காட்டுகிறது. படுகொலையின் எதிரொலிகள் பாஞ்சாலத்தின் பதைபதைப்பை மாநிலத்தின் பிறபகுதிகள் படிப்படியாக, சிறிது சிறிதாக, நாள், வார, மாதக் கணக்கிலேயே உணர்ந்தன. ஆனால், தாமதம் இவ்வகையில் மக்கள் மனக் கொதிப்பை மிகுதிப் படுத்திற்றேயன்றிக் குறைக்கவில்லை. காந்தியடிகளின் தலைமை மட்டும் இல்லாதிருந்தால், இப்படுகொலையின் விளைவாக மீட்டும் 1857ஐப் பொய்ப்பிக்க வல்ல பெரும்புயல் கிளர்ந்திருக்குமென்பதில் ஐயமில்லை. அத்தகைய புயலால் பிரிட்டனின் ஆட்சிமீது பின்னும் பெருங்கறை ஏற்பட்டிருக்கலாம்; அதனால் பிற நாடுகளில் ஏற்பட்டது போன்ற விடுதலையும் ஒருவேளை கிட்டியிருக்கலாம். அதன் அழிவு பெரிதாயிருந்திருக்கும்; ஆனால், இந்தியாவின் ஆன்மிக வலுவும் குறைந்திருக்கும். இந்நிலை ஏற்படவில்லை. ஏனெனில், மக்கள் மனக் கொதிப்பாகிய புயல் வெள்ளத்துக்குக் காந்தியடிகள், கட்டுப்பாடு என்ற தடைகள், அணைகள் இட்டுத் தேக்கி பொறுமை, தியாகம் ஆகிய கரைகளிடையே அவற்றை ஓடவிட்டு விடுதலை இயக்கப் பெரும்பொறியை இயக்கும் சத்தியாக்க முனைந்தார். அவ்வியக்கமே ‘ஒத்துழையாமை இயக்கம்’ என்ற பெயரால் இந்திய வரலாற்றில் இடம் பெற்றது. மகாத்துமா காந்தி இயக்கம் தொடங்குமுன்பே, மக்கள் மனக்கொதிப்பு, சட்ட மன்றங்கள் வரை நிரம்பிப் பொங்கி வழிந்தது. இச்சமயத்தில் பண்டித மதன்மோகன் மாளவியா மன்ற உறுப்பினராயிருந்தார். அவர் ஜாலியன்வாலா பற்றி மன்றத்தில் 90க்கு மேற்பட்ட கேள்விகளைக் கேட்டு,அரசியலாரைத் திணற அடித்தார். பிரிட்டிஷ் அரசியல் மன்றத்திலும் இந்தியாவின் பிரிட்டிஷ் நண்பர்களின் முயற்சியால் சரமாரியான கேள்விகள் எழுந்தன. பிரிட்டிஷ் ஆட்சியின் நிழலில் இந்தியா அடிமையை அணைத்துக் கொண்டிருக்கிறது என்ற பிரிட்டிஷ் பிரசாரத்தால் இந்தியா மீது அசட்டையாயிருந்த உலக மக்களின் அமைதிகூடக் கலையத் தொடங்கிற்று. ஆனால், இந்திய மக்கட்கடல் இவற்றாலெல்லாம் அமையவில்லை. “கொடுங்கோலன் டயர் செயல் விசாரிக்கப்பட்டு, அவன் தக்க தண்டனை பெற வேண்டும். அவனுக்குப் பக்க பலமாயிருந்த பாஞ்சால ஆட்சி முதல்வர் ஓட்வியரும், உடந்தையாயிருந்த இந்திய முதல்வரும் திருப்பி அழைக்கப்பட வேண்டும்” என்ற குரல்கள் எங்கும் எழுந்தன. பிரிட்டிஷ் ஆட்சியாளர் இத்தனை கொந்தளிப்புகளுக் கிடையேயும் தம் வீம்பை முற்றிலும் விட்டு விடாமல் தயக்கமுற்று நின்றனர். பிற்போக்காளர்கள் பிடிக்கும் நிற வெறியர்கள் வீறாப்புக்கும் அவர்கள் தம்மாலியன்ற மட்டும் விட்டுக் கொடுக்க முனைந்தார்கள். படைத்தலைவன் டயர் திருப்பியழைக்கப் பட்டான். ஆனால், அவனுக்கு உடந்தையாயிருந்த பாஞ்சால ஆட்சி முதல்வரும், மறைமுக ஆதரவு தந்து நடுநிலை தவறிய மாநில ஆட்சி முதல்வரும் திருப்பியழைக்கப்படவில்லை. இது இந்தியர் தன் மதிப்பை உறுத்திற்று. அத்துடன் பிரிட்டிஷ் மன்றத்தில் டயர் முதலிய கொடியோர் நீண்ட கேலி விசாரணைக்குபின் மன்னித்து விடுவிக்கப் பட்டனர். இது உண்மையில் மன்னிப்பன்று; கண்கழிப்பு நடவடிக்கையே என்பதைப் பிற்போக்காளர் செயல் எடுத்துக்காட்டிற்று. அவர்கள் அவருக்குத் தனிப்பட்ட முறையில் பாராட்டிதழ்கள் வழங்கி வானளாவப் புகழ்ந்தார்கள்; வீரப் பதக்கமும் வைர வாள் பரிசும் அளித்தார்கள். இச்செயல்கள் இந்தியரையும், இந்தியாவையும் அவமதிப்பவையாய் இருந்தன. பிரிட்டனின் நேர்மைமீது மிதவாதப் போக்குடையவர்களுக்கு இருந்த நம்பிக்கையும், காந்தியடிகள் போன்ற ஞானியர்க்கு இருந்த நம்பிக்கையுங்கூட அகன்றன. அடங்கிய சீற்றமும் வெறுப்பும் அடக்க முடியா மனக் கசப்பும் எங்கும் பரவின. படுகொலை பற்றிய விசாரணை நடத்த ஒரு குழுவை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு அரசியலார் இணங்கினர். அது ஹண்டர் பெருமகனார் தலைமையில் அமைக்கப்பட்டதனால், ‘ஹண்டர் குழு’ என்று வழங்கப் பட்டது. அதில் ஹண்டர் பெருமகனார், கனம்ரைஸ், ஸர் ஜார்ஜ்பாரோ, நீதிபதி ராங்கின், தாமஸ் ஸ்மித்து என்னும் ஐந்து வெள்ளையரும், பண்டித ஜந்நாராயணா, ஸர் சிமன்லால் ஹரிலால் சேதல்வாட், கல்தான் ஹமீத்கான் என்னும் மூன்று இந்தியரும் இருந்தனர். வெள்ளையர் நேர்மையில் ஐயுற்ற மக்கள், அவர்களின் பெரும்பான்மை கண்டு அதனைக் கண்டித்தார்கள். வெள்ளையுறுப்பினர் கூடிய மட்டும் அட்டூழியங்களை மறைக்கவும், அவற்றுக்குத் தேசியத் தலைவர்களையும் பொது மக்களையும் குறை கூறவும் அரும்பாடு பட்டிருந்தார்கள். குழுவிலேயே வெள்ளையரிடமிருந்து இந்தியர் பிரிந்து தனிக் கருத்துத் தெரிவித்தனர். அது நெடுநாள் வெளியிடப்படா திருந்தது. மாநில ஆட்சி முதல்வர் அறிவுரைக் குழுவிலேயே இந்திய உறுப்பினராயிருந்த ஸர் முகம்மது ஹாஷஃவி தாமே நேரில் ஆராய்ந்து ஒரு தனி அறிக்கை வெளியிட்டார். பேரவையும் இவ்வகையில் வாளா இருக்கவில்லை. மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துரைப்பது தங்கள் கடமை எனப் பேரவைத் தலைவர்கள் கருதினார்கள். மகாத்துமா காந்தியடிகளின் தலைமையிலேயே ஸி.ஆர்.தாஸ், தயாப்ஜி, ஜயகர், நேரு ஆகியவர்களடங்கிய ஒரு பேரவை விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. மே 3இல் ஹண்டர் குழுவின் அறிக்கை வெளிவந்தது. அதற்குள்ளாகவே மற்ற அறிக்கைகளும் வெளிவந்தன. அரசியலார் சார்பான குழுவின் ஒருதலை விளக்கம் இதனால் வெளியுலகில் பொய்ப் பிரசாரம் செய்ய முடியாது போயிற்று. பஞ்சாபு நிகழ்ச்சி பிரிட்டிஷ் ஆட்சிக்கு நீக்க முடியாத ஒரு பெருங்கறை. ஆனால் இந்தியாவின் மனமாற்றத்திலும், அரசியல் வளர்ச்சியிலும், பேரவையின் வரலாற்றிலும் அது ஒரு புத்தூழியின் சின்னம்! நடுவு நிலையாளரும் ஆன்மிக ஞானியுமான காந்தியடிகளை ஒரு முதல்தரப் போர்த்தளபதியாக்கிய நிகழ்ச்சி இதுவே. இப்படுகொலை நேர்ந்திரா விட்டால், காந்தியடிகளின் சத்தி முழுவதும் தீவிரக் கட்சியின் பக்கமாய்ச் சாய்ந்திராது. சீர்திருத்தங்களை ஏற்கும் மிதவாத மனப்பான்மை அவ்வளவு விரைவில் மக்கள் ஆதரவை முற்றிலும் இழந்தும் இராது. பேரவையில் மிதவாதிகள் ஆதரவற்று 1919ல் வெளியேறும்படி செய்த ஆட்சியாளரின் செயல் இதுவே என்னலாம். நாட்டு மக்கள் விழிப்படைவதற்குக் காரணமாயிருந்த ஏப்ரல் 6 தொடங்கி ஒரு வாரத்தை ஆண்டுதோறும் தேசிய வாரமாகக் கொண்டாடும்படி காந்தியடிகளும் பேரவையின் கட்டளை பிறப்பித்தனர். அத்துடன் அதன் இறுதி நாளாகிய ஏப்பிரல் 13-ந் தேதி இந்தியர் கடுந்துயருக்கு ஆட்பட்ட நாளாதலால், அந்நாள் தேசியத் துக்க நாளாகவும் நோன்பு நாளாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட ஏற்பாடு செய்யப்பட்டது. புதிய குறிக்கோள்: விடுதலை அரசு 1915- ஆம் ஆண்டிலேயே பாதுகாப்புச் சட்டத்தின்படி முகம்மது அலி, ஷவுகத்து அலி என்ற அலித்துணைவர்களும், வங்கத் தலைவர் சியாம் சுந்தர் சக்கரவர்த்தியும், பாஞ்சாலத் தலைவர்களும் காவலில் வைக்கப்பட்டிருந்தார்கள். 1919ல் அவர்கள் விடுதலையடைந்து தேசிய இயக்கத்தில் வந்து கலந்து கொண்டார்கள். முந்திய ஆண்டிலேயே மிதவாதிகள், தனியாகப் பிரிந்து, ‘இந்திய மாநிலப் பொதுநலக் கழகம்’1 என்ற ஒரு கட்சியை அமைத்திருந்தார்கள். ‘இதனால், பேரவையில் தீவிரக்கட்சி முழு ஆதிக்கம் வகித்தது. டிஸம்பரில் பண்டித மோத்திலால் தலைமையில் கூடிய பேரவை, பஞ்சாபுப் படுகொலை அநீதியை வன்மையாகக் கண்டித்தது, அச் செயலால் பிரிட்டிஷ் அரசியலார் இந்திய மக்களின் நம்பிக்கையை முழுதும் இழந்துவிட்டனர் என்றும்; இந்தியர் தன்னம்பிக்கையைக் காக்கும் எதிர் நடவடிக்கைகளாகக் காந்தியடிகளின் ஒத்துழையாமைத் திட்டத்தை ஏற்பது என்றும் பேரவை முடிவு செய்தது. காந்தியடிகளின் ஒத்துழையாமைத் திட்டம் மாநில அடிப்படையில் இந்தியாவுக்குக் காந்தியடிகள் வகுத்துக் கொடுத்த முதற்போராட்டத் திட்டம் ஆகும். இம் முதற் போராட்டத்தை விடப் பெரிய அளவில் இந்தியா இதன் பின் பெரும் போராட்டங்களை நடத்தியுள்ளது. ஆனால், இம் முதற் போராட்டத் திட்டம் இன்றும் நம்மை மயிர்க்கூச்செறிய வைப்பதேயாகும். இதில் காந்தியடிகள் கோரிய தியாகம் பெரிது. ‘மனித சமுதாயத்தில் இடம்பெறும் நாடு இத்தகைய தியாகங்களைச் செய்ய முடியுமா?’ என்று எவரும் மலைக்க இடமுண்டு. ஆனால், இத்தகைய தியாகங்களைக் கோரினார் காந்தியடிகள்! இவற்றை ஏற்றுப் பெயரளவில் நிறைவேற்றி னார்கள். இந்திய மக்கள்! இது காந்தியடிகளின் ஒப்பற்ற தலைமைக்கு ஒரு சான்று; அது போலவே, இந்தியப் பெருமக்களின் ஆழ்ந்த வீரத்துக்கும் தியாக ஆற்றலுக்கும் இத்திட்டம் இன்றும் சான்று பகரத்தக்கது. மக்கள் நலனில் அக்கறையற்ற அரசியலார் அளித்த பட்டங்களை இந்தியர் யாவரும் துறந்துவிட வேண்டும். அரசியலார் பணிநிலையங்களிலிருந்தும், அவர்கள் நடத்தும் பள்ளி கல்லூரி முதலிய கல்வி நிலையங்களிலிருந்தும் நாட்டுப் பற்றுடைய எல்லாரும் விலகிவிட வேண்டும். நேர்மையறியாத அரசியலாரின் நீதிமன்றங்களை அணுகாமல் விலகிவிட வேண்டும், அவற்றின் எல்லை வரையறையற்ற வழக்குகளால் ஏழை மக்கள் வாழ்வைக் கசக்கிப் பிழிவதற்கு உடந்தையாயிருக்கும் வழக்கறிஞரனைவரும் அத்தொழிலையும் அதற்கான தம் பட்ட வுரிமைகளையும் துறந்து, நாட்டுப் பணியில் ஈடுபட வேண்டும். சட்ட மன்றங்களில் தேர்வுக்கு நின்றோ, தேர்தலில் மொழிச் சீட்டாளராகக் கலந்தோ அரசியலாரின் ஆட்சியுடன் ஒத்துழைப்பது தவறாதலால், அம்மன்றங்களையும் தேர்தல் களையும் நாடாதொழிய வேண்டும்.’ ஒத்துழையாமைத் திட்டம் கோரிய மாபெருந் தேசியத் தியாகங்கள் இவையே. ஒத்துழையாமை இயக்கப் பேராற்றில் மற்றொரு வளமான கிளையாறு 1920-ஆம் ஆண்டு வந்து கலந்துகொண்டது. அவ்வாண்டு மே திங்கள், இந்திய முஸ்லிம்களால் நடத்தப்பட்ட கிலாபத்து மாநாட்டிலும் ஒத்துழையாமைத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ‘கிலாபத்து’ என்பது அரபு மொழிச் சொல் முஸ்லிம் உலகின் தலைவர்க்குக் கலிபா என்றும்,அவர் பதவிக்குக் கிலாபத்து என்றும் பெயர்கள் வழங்கும். துருக்கிப் பேரரசரே நீண்ட காலமாக உலக முஸ்லிம்களால் கலிபாவாகக் கருதப் பட்டிருந்தார். முதல் உலகப் போரில் துருக்கி, எதிரி நாடுகளான ஜெர்மனி, ஆஸ்திரியா ஆகியவற்றுடன் சேர்ந்து போரிட்டுத் தோற்றது. போரில் இந்திய முஸ்லிம்கள் உதவியையும் மற்ற இந்தியர் உதவியையும் பிரிட்டன் கோரியபோது, கலிபாவைப் பாதுகாப்பதாக முஸ்லிம்களுக்கும், தன்னரசு வழங்குவதாக எல்லா இந்தியருக்கும் உறுதியளித்திருந்தது. இந்தியாவுக்குத் தன்னரசு வழங்கவில்லை என்பதே பேரவையின் குற்றச்சாட்டு. அதே சமயம் கிலாபத்தைக் காக்கவும் பிரிட்டிஷ் அரசியல் தவறிவிட்டது. துருக்கிப் பேரரசின் பகுதிகளும் மற்ற எதிரி வல்லரசுகளின் பகுதிகளைப் போல நேச நாட்டினர்களால் கைப்பற்றப் பட்டன. இந்திய முஸ்லிம்களின் உள்ளத்தை இது புண்படுத்திற்று. காந்தியடிகள் பிரிட்டனுடன் அறப்போர் தொடங்குவதற்கான காரணங்களுள் இதனையும் ஒன்றாகக் கூறியிருந்தார். கிலாபத்து மாநாடு இந்து முஸ்லிம் நட்புக்கான இப்புதிய அறிகுறியை ஆர்வத்துடன் வரவேற்று ஒத்துழை யாமைத் தீர்மானத்தை நிறைவேற்றிற்று. 1916இல் பேரவை முஸ்லிம் சங்க ஒப்பந்தத்தின் பயனாக நிறுவப்பட்ட இந்து முஸ்லிம் ஒற்றுமையாகிய கற்கோட்டை இப்போது புதிய இருப்புக் கோட்டையாய் வலுப்பெற்றது. காந்தியடிகள் நிறுவிய இப்புதிய இந்து முஸ்லிம் கடைகால் பிரிட்டிஷ் ஆதிக்கக் குழுவின் உள்ளத்தை உறுத்தியிருக்க வேண்டுமென்பதில் ஐயமில்லை. 1906லிருந்து அவர்கள் விதைத்து வந்த இந்து முஸ்லிம் வேற்றுமைப் பயிரின் வளர்ச்சி, இப்புதிய ஒற்றுமையால் தடைபட்டது கண்டு, அவர்கள் முன்னிலும் பன்மடங்கு அப்பிளவை வலியுறுத்த முற்பட்டார்கள் என்பதையும்; அதில் இந்தியாவின் செய்பிழை செய்யாப் பிழைகள் இரண்டினாலும் பிரிட்டிஷ் சூழ்ச்சி நாளடைவில் வெற்றி பெற்றது என்பதையும் பிற்கால வரலாறு காட்டியுள்ளது. 1920-ஆம் ஆண்டில் பேரவை சேலம் விஜயராக வாசாரியார் தலைமையில் நாகபுரியில் கூடிற்று. இது ஒத்துழையாமைத் தீர்மானத்தை மீண்டும் வற்புறுத்தியதுடன், அதற்கு முன்னிலும் பேரளவான ஆதரவு தந்தது. அதன் திட்டமும் மாநில அடிப்படையில் பெருக்கமாக விரிவுபடுத்தப் பட்டது. மந்றும் இப்பேரவைக் கூட்டத்திலேயே பேரவையின் அரசியல் குறிக்கோள் 1906க்குப்பின் மீண்டும் புரட்சிகரமாக மாற்றியமைக்கப் பட்டது. ‘நீதியும் அமைதியும் வாய்ந்த எல்லா வழிகளாலும் விடுதலை அரசுக்குப் பாடுபடுவதே பேரவையின் குறிக்கோள்,’ என்று முடிவு செய்யப்பட்டது. புதிய குறிக்கோளுக்கேற்பப் பேரவை அமைப்பிலும், பெருங்குழு, செயற்குழு அமைப்பிலும் மாறுதல்கள் செய்யப்பட்டன. பெருங்குழுவின் உறுப்பினர் தொகை 3500 என்பதும்,செயற்குழு உறுப்பினர் தொகை 15 என்பதும் அறுதி செய்யப்பட்டன. ஒத்துழையாமை இயக்கம் ஒத்துழையாமை இயக்கம், 1921இல் தொடங்கப்பட்டு, 1922 வரை மும்முரமாக நடைபெற்றது. இந்திய தேசிய இயக்கத்தின் முதல் வேள்விக்களம் இதுவே என்னலாம். விடுதலை இந்தியாவுக்காகப் பாடுபட்ட பெருந்தலைவர்களுட் பெரும் பாலார் இத்தாயக் வேள்விக்களத்திலிருந்து தோன்றியவரேயாவர். லாலா லஜபதிராய், ஸி.ஆர். தாஸ், பண்டித மோத்திலால் நேரு போன்ற பழந்தலைவர் பலர் அத்தீயில் குதித்தெழுந்து, புடமிட்ட பழந்தங்கம் போல மாற்றுயர்வுற்றுப் பொலிந்தனர். பண்டித ஜவஹர்லால் நேரு, தலைவர் பெருந்தகை சுபாஷ் போஸ் முதலிய இளைஞரும் அத்தீயில் குதித்து இளைஞர் தலைவராய் அதிலிருந்து புகழ் ஒளியுடன் வெளிவந்தனர். இந்தியாவின் மாநிலமளாவிய முதற்பொது மக்கள் இயக்கம், ஒத்துழையாமை இயக்கமே. அத்துடன் வீரத்தையும், தியாகத்தையும், துணிகரதீரத்தையும், வெறியார்ந்த நாட்டுப் பற்றையும் அளவுகோலாகக் கொண்டு நோக்கினால், அதுவே இந்தியாவின் முதன்மை வாய்ந்த போராட்டமும் ஆகும் என்னலாம். பிற்காலப் போராட்டங்களில் பொதுமக்கள் பின்னும் பேரளவில் திரண்டதுண்டு. ஆனால், ஒத்துழையாமைக் காலத்தில் மக்களிடம் கோரப்பட்ட தியாகங்கள் பின் என்றும் அவர்களிடம் கோரப்பட்டதில்லை. உயிரை வெறுத்து இளைஞர்கள் பேரவை இயக்கத்துக்கு உள்ளேயும் புறம்பேயும் போராடியதுண்டு. ஆனால், உயிரைத் துறப்பதைவிட வாழ்வைத் துறப்பது, நல்வாழ்வையும் உயர்பதவியையும் துறப்பது மனித இயல்புக்கு அருமையானது. இந்தியாவில் உயர்ந்த பட்டங் களுக்குப் பயின்று வந்த எத்தனையோ இளைஞர், மாணவ மாணவியர். வழக்கு மன்றத்தில் முழங்கிய எத்தனையோ சிங்கக் குருளைகள், சட்ட மன்றங்களிலிருந்து ஆணை செலுத்திய எத்தனையோ ஒய்யார நம்பியர் நங்கையர், அன்று தம் கல்வியும் புகழும் இன்பமும் விடுத்துக் கடுந்தவமாற்ற முன்வந்தனர்! இத்தியாகிகளின் பட்டியலில் தலைசிறந்த இருவர் பண்டித ஜவஹரும், சுபாஷ் போஸுமேயாவர். முந்தியவர் மாளிகை வாழ்வையும், உயர்தர ஆங்கிலப் பட்டங்களையும் விடுத்து, மனைவி புதல்வியருடன் மக்களிடையே நின்று போராட முன் வந்தார். பிந்தியவர் இந்திய இளைஞர்களின் உச்சக் குறிக்கோளாகிய இந்தியா மாவட்ட ஆட்சித் தலைவர் பட்டம்1 துறந்து மக்கட் போரில் ஈடுபட்டார். ஒத்துழையாமை இயக்கம் எழுப்பிய மக்கள் ஆர்வம் பெரிது. அதுவரை இந்தியாவின் இயக்கங்கள் எவையும் எல்லா மாகாணங்களிலும், எல்லா வகை மக்களையும், ஒரே சமயத்தில் ஒரே கிளர்ச்சியில் ஈடுபடுத்தியதில்லை. தண்பொருநை மணற்பரப்பின்மீதும் திருவல்லிக்கேணி கடற்கரை மீதும் அது மக்கள் அலைகளை மோதவிட்டது. பம்பாய், கல்கத்தா, அலகாபாது நகரங்களை அது போர்க்களங்களாக்கிற்று. திடல்களும் வெளிகளும் எங்கும் திலகர் சதுக்கங்கள், காந்தி மைதானங்கள், ஸி.ஆர்.தாஸ் கட்டங்கள், வ.உ.சி. மேடைகள் ஆயின. கடைத்தெரு கம்பளங்களும், பள்ளி கல்லூரிகளும், ஆலைகளும் போர்த்தளங்களாயின. வழக்கமாக அமைதியும் ஒய்யாரப் பேச்சும் நிலவிய சட்ட மன்றங்களிற்கூட, அது கலகலப்பும் புத்துயிர்ப்பும் ஊட்டிற்று. மாணவ மாணவியர் பேரளவில் பள்ளி கல்லூரிகளை விட்டகன்றனர். பல பல்கலைக் கழங்களில் தேர்வுக்கு அமரும் மாணவர் தொகை மிகமிகச் சிறிதாயிருந்தால், சில சமயம் தேர்வில்லாமலே எல்லா மாணவரையும் எளிதாகத் தேற வைத்தனர். பெயரளவில் தேர்வுகள் நடைபெற்றபோதும், அது கண்கழிப்பு முறையாக மட்டுமே இருந்தது. ஒத்துழையாமை இயக்கத்தின் பிற்பகுதியில் கல்வி இழந்த மாணவர் நலன்களில் பல ஆக்கத்துறைப் பணியாளர் கருத்துச் செலுத்தினர். வங்கத் தலைவர் சித்தரஞ்சனதாஸ், இளைஞராயிருந்த சுபாஷ் போஸ் ஆகியவர்கள் முயற்சியால் கல்கத்தா தேசியக் கல்லூரியும் தாகூரின் முயற்சியால் சாந்திநிகேதனமும் இக்காலத்தில் தொடங்கப்பட்டன. குஜராத்து வித்தியா பீடமும், சேரமாதேவி குருகுலமும் இதே வகையில் மேற்கிந்தியாவிலும், தென்னிந்தியா விலும் தொடங்கப்பட்டன. இவற்றுள் பல, இந்தியாவின் பண்டைக் குருகுலக் கல்வி முறையைப் பின்பற்றின. அரசியல் பட்டங்களையும், சட்டமன்றப் பதவிகளையும், உயர் அரசியல் பணிகளையும் துறந்து, பலர் தியாக வாழ்வு ஏற்ற புனித ஆண்டு 1921. வழக்கறிஞர் பலர் தம் பட்டமும் தொழிலும் வீசி எறிந்து, தம் பிற்கால வாழ்நாள் முழுதும் வறுமையில் வாடி வதங்கினர். இவர்களுள் ஒரு சிலரே ஒத்துழையாமைக் காலத்துக்குப்பின் ஏற்பட்ட அரசியல் மாறுதல்களிடையே தம் தியாகத் தழும்புகளைப் போக்கிக்கொள்ள முடிந்தது. தலைவர்கள் சிறைப்பட்ட நாட்களிலும், அடக்குமுறை யாட்சி வரம்புமீறி ஆர்ப்பரித்த நாட்களிலும் மாணவர்கள் பள்ளியடைப்புக்கோரி ஆரவாரம் செய்தார்கள். கடைத் தெருக்கள் யாவும் கடையடைப்பின் மூலம் தேசிய இயக்கத்துக்குத் தம் ஆதரவைத் தெரிவித்தன. தொழிலாளர்கள் முதலாளிகளை மீறித் தேசிய உணர்ச்சி அலைகளில் கலந்து கொண்டார்கள். ஒத்துழையாமைத் தத்துவங்களை எங்கும் கொண்டு பரப்பக் காந்தியடிகள், ஸி.ஆர். தாஸ், கவிஞர் சரோஜினி நாயுடு, பண்டித ஜவஹர்லால் நேரு முதலிய தலைவர்கள் இந்தியா முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்து, பதினாயிரக்கணக்கான மக்களின் கூட்டங்களில் பேசினர். அச்சமயங்களில் வெளிநாட்டுத் துணிகளும், ஆலைத்துணிகளும் தலைவர்கள் முன்னிலையில் மலைபோலக் குவித்து எரிக்கப்பட்டன. ‘இனித் தூய தேசிய ஆடையான கதரே உடுத்துவோம்!’ என்ற உறுதிமொழி எங்கும் ஆர்வத்துடன் கூறப்பட்டது. காந்தியடிகள் ஒத்துழையாமைக் காலத்திலிருந்தே வற்புறுத்தி வந்த பொருளியற்கோட்பாடுகளில் முதன்மையானது கதர்க்கொள்கை. கைராட்டினத்தை அவர் தம் இயக்கத்தின் சின்னமாகக் கொண்டு பேரவைக்கு 1921ல் வகுத்த புதிய கொடியிலேயே அதைப் பொறித்தார். கதர் இயக்கத்தில் தமிழகம் முன்நின்று காந்தியடிகளின் ஆக்கத் தொண்டுகளுக்கு முனைந்த ஆதரவு தந்துள்ளது. கர்நாடகமும் கூர்ஜரமும் அதனை அடுத்து இடம்பெற்றுள்ளன. காந்தியடிகள் கைராட்டை இயக்கத்தால் உழவரின் குடிசைத் தொழில் வளம் பெற வழி ஏற்பட்டது. அது பிரிட்டனின் ஆலைத் தொழிலுக்குப் பெருத்த அடி தந்ததுடன், இந்திய ஆலைத் தொழிலையும் வளர்த்துள்ளது. காந்தியடிகள் தொடக்கத்திலிருந்து ஆலைத்தொழிலை ஆதரிக்க மறுத்து வந்தாராயினும், பேரவை நாளடைவில் அதற்குத் தன் ஆதரவைத் தந்துள்ளது. கதர் இயக்கத்துடன் மது விலக்குப் பிரசாரமும் காந்தியடிகளின் ஒத்துழையாமைத் திட்டத்தின் ஆக்கத்துறை வேலையாயிருந்தது. காந்தீயப் பேரவை ஒத்துழையாமை இயக்கம் தொடங்கிய முதல் ஆண்டிலேயே ஸி.ஆர். தாஸ், லாலா லஜபதிராய், இராசேந்திர பிரசாது ஆகிய பல தலைவர்களுக்குத் தடை உத்தரவுகளும் சிறைத் தண்டனைகளும் விதிக்கப்பட்டன. பின்னாளில் எட்டாம் எட்வர்டு மன்னராகி முடிதுறந்த வேல்ஸ் இளவரசராகிய எட்வர்டு அவ்வாண்டு ஜூலைத் திங்களில் இந்தியாவுக்கு வருகை தந்தார். அவர் பம்பாய் வந்திறங்கிய போதும் பிற நகரங்களுக்கு வந்த போதும் அவருக்கு வரவேற்பளிக்கக் கூடாதென்றும், எங்கும் கறுப்புக்கொடி காட்டியும் கடைகளடைத்தும் அவருக்கு இந்தியர் அதிருப்தியைக் காட்ட வேண்டுமென்றும் காந்தியடிகள் கட்டளையிட்டார். இது எங்கும் வெற்றிகரமாக நடந்தேறியது. இளவரசரை எங்கும் அடைத்த கடைகளும், கறுப்புக் கொடிகளும், காவலர் கூட்டமுமே வரவேற்றன; மக்களை அவர் எங்கும் காணவில்லை. மக்கள் களிப்பு வாய்ந்த முகங்களை அவர் எங்கும் பார்க்க முடியவுமில்லை. இதே ஆண்டில் சமூகக் கோளாறுகள் காரணமாக மலையாளத்தில் மாப்பிள்ளைகள் என்ற மலையாள முஸ்லீம்கள் கிளர்ச்சி செய்திருந்தார்கள். ஆட்சியாளர் அவர்கள்மீது மிகக் கொடிய அடக்குமுறைகளை ஏவினர். படைத்துறைச்சட்ட ஆட்சி அம்மாவட்டத்தின் பெரும்பகுதியில் நடைபெற்று வந்தது. 1921இல் அகமதாபாதில் நடைபெற்ற பேரவைக்குத் ‘தேசபந்து’ என்ற புகழ்ப் பெயருடன் விளங்கிய சித்தரஞ்சன தாஸர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால், பேரவை கூடுவதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன் அவர் அரசியலாரால் கைது செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக ஹகீம் அஜ்மல்கான் தலைமை தாங்கிப் பேரவையை நடந்தினார். இப்பேரவையை ‘ஒத்துழையாமைப் பேரவை’ அல்லது ‘காந்தீயப் பேரவை’ என்று கூறலாம். இது முழுக்க முழுக்கக் காந்தீயப் பேரவையாகவே காட்சியளித்தது. நாற்காலிகளும் விசிப்பலகை களும் இல்லாமல், யாவரும் நிலத்தின் மீதே சப்பளமிட்டு உட்கார்ந்திருந்தனர். கூடாரமுழுதும் கதர்மயமாயிருந்தது. நாட்டின் கடுந்துறவுக்கு இவை தக்க சின்னங்களாய் அமைந்தன. தீர்மானங்கள் வகையிலும் இப்பேரவை புதுமை வாய்ந்தது. இதிலே தீர்மானங்கள் இல்லை; தீர்மானம் மட்டுமே இருந்தது! அதாவது, ஒத்துழையாமைத் தீர்மானம் மட்டுமே இதில் இடம் பெற்றது. ஆனால், அவ்வொரு தீர்மானம் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சிப்பட்டத்துக்கான ஒரு சிறு நூல்போல அமைந்திருந்தது. அந்நாளைய ஆர்வ இளைஞர்களின் மேதை முழுமைக்கும் அது ஒரு சின்னம் என்னலாம். பேரவை இயக்கத் தொண்டர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி வாசகங்கள் தீர்மானத்தின் ஒரு பகுதியாயிருந்தன. மலையாள மாப்பிள்ளைக் கிளர்ச்சியை அடக்கிய வகைகளைத் தீர்மானத்தின் ஒரு பகுதி கண்டித்தது. தவிர இப்பேரவை மற்றொரு வகையிலும் சிறப்பாகக் காந்தியப் பேரவையாய் விளங்கிற்று. பேரவைப் பெருங்குழுவுக்குரிய எல்லா உரிமைகளையும் இது காந்தியடிகளிடமே தந்து, அவரைப் பேரவையின் முடிசூடா மன்னராகவும், பேரவை இயக்கத்தின் தனிப்பெருந்தளபதியாகவும் ஏற்றது. மக்கள் முன்பே தந்திருந்த அவர் தேசத் தலைமை இப்போது பேரவை எவருக்கும் இது வரை தாராத தேசியத் தலைமையாயிற்று. இப்பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப் படாமற் போன ஒரு திருத்தத் தீர்மானம் பிற்காலப் பேரவையின் மாறுபாடு ஒன்றைச் சுட்டிக்காட்டுவதாயுள்ளது. ‘தன்னரசு என்பது தங்குதடையற்ற முழு நிறை விடுதலையே’ என்ற விளக்கம் சேர்க்கப்பட வேண்டுமென்பதே இத்திருத்தம். இதனைக் கொண்டு வந்தவர் மௌலானா ஹஜரத் மோகனி என்பவர். பத்ததாண்டுகளுக்குள் ‘குடியேற்ற அரசு நிலையா அல்லது முழு நிறை விடுதலையா?’ என்ற வினாவை எழுப்பிப் பேரவையையே இரண்டு கூடாரங்களாகத் தற்காலிகமாகப் பிரித்த போராட்டத்தை இது நினைவூட்டுவதாயுள்ளது. காலநிலை தாண்டிய இத்தீர்மானத்தைக் காந்தியடிகள் எழுந்தவுடன் எதிர்த்ததால், இது ஆதரவற்றுக் கைவிடப்பட்டது என்பதை அறிகிறோம். இத்தீர்மானத்தின் முக்கியத்துவத்தை அயலாட்சி அரசாங்கம் உணர்ந்திருந்தது. இதைக் கொண்டு வந்தவர் மீது அது நடவடிக்கை எடுத்து மூன்று ஆண்டுகளுக்குச் சிறைத்தண்டனை தந்தது. 1921-ஆம் ஆண்டுப் பேரவையின் மற்றொரு சுவையான நிகழ்ச்சி பாபா குருதத்தசிங்கு என்பவரைப் பற்றியது. அவர் கப்பல் சட்டத்தை மீறி 1914ல் ‘குருநானக்கு’ என்ற பெயருடைய ஒரு கப்பலைக் கடலில் செலுத்தியிருந்தார், இதற்காக அவர் பிரிட்டிஷாரால் சிறைப்படுத்தப்பட்டு அவதியுற்றார். பேரவை அவர் வீரச் செயலுக்குப் பாராட்டு அளித்தது. ஆனால், பேரவை இதனையே இந்தியாவின் முதற் கப்பற் கழகம் என்று கூறுவது தமிழருக்கு வியப்புத் தருகிறது! காந்தியடிகளின் புதிய புகழொளி வ.உ. சிதம்பரனார் 1906லேயே நடத்திய கழகப் போராட்டப் புகழை மறைத்திருந்தது என்பதை இது காட்டுகிறது. திரும்ப அவர் புகழைப் பேரவையில் நாம் கேட்பது அவர் மறைந்த ஆண்டை அடுத்த 1937- ஆம் ஆண்டுப் பேரவையிலேயேயாகும். சௌரிசௌரா நிகழ்ச்சி: காந்தியடிகள் சிறைத்தண்டனை ஒத்துழையாமை இயக்கத்தின் பிற்கூறாகச் சட்ட மறுப்பு, வரிகொடா இயக்கம் ஆகியவற்றை நடத்தக் காந்தியடிகள் திட்டமிட்டிருந்தார். பிப்பிரவரியிலேயே பர்தோலியில் சட்டமறுப்பைத் தொடங்கிவிடுவதாகவும், அடுத்து ஆந்திர மாகாணத்தில் குண்டூர் முதலிய பகுதிகளிலும் வரி கொடா இயக்கம் நடத்துவதாகவும் ஏற்பாடாகி இருந்தது. தீவிர சீக்கியக் கட்சியான அகாலி சங்கத்தினர் தம் உரிமைகளுக்காக இச்சமயம் புரட்சிகரமான போராட்டத்திலிறங்க முன்வந்திருந்தனர். ஆனால், காந்தியடிகள் அவாவிய கடுந்தியாக முறைகளுக்கும் தற்கட்டுப்பாடுகளுக்கும் ஒத்துழையாமைக் கால ஆர்வம் கூட மக்களைப் பயிற்றுவித்து விடவில்லை. அரசியலாரின் அடக்குமுறைகள், 1921 இறுதிக்குள் மனித எல்லை மீறிவிட்டன. மக்களின் பொறுமையும் தியாக வெம்மையும் அது போலச் சில இடங்களில் மனித எல்லையை மீறின. 1922 பிப்ரவரி 5இல் சௌரி சௌரா என்னும் இடத்தில் காவல் துறையினர் உக்கிரத் தாக்குதலுக்கு ஆற்றாது மக்கள் எதிர் தாக்குதலில் முனைந்தனர். மக்களின் இவ்வெதிர்பாரா நடவடிக்கைகள் காவல் துறையினர் ஏற்பாடுகளைக் கவிழ்த்தன. மக்கள் சீற்றத்தின்முன் அவர்கள் படைக்கலங்கள் பயனற்றன. காவற் சாவடியையும் காவலரையும் அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினார்கள். ‘பழிக்குப் பழி’ என்ற வெறியில் மக்கள் காந்தியடிகளின் போதனைகளைத் தற்காலிகமாக மறந்து விட்டார்கள்! சௌரி சௌரா நிகழ்ச்சி அரசியலாருக்கு அதிர்ச்சி தந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அரசியலார் பெற்ற அதிர்ச்சியைவிடக் காந்தியடிகள் பெற்ற அதிர்ச்சி பெரிதாயிருந்தது. ஆன்மிக ஞானியராகிய அவர், மக்கள்மீது சீற்றம் கொள்ளவில்லை. பேரவை போராட்டத்தின் முழுப் பொறுப்பையும் தம்மிடமே விட்டிருப்பதால், அத் தவறு முழுவதும் தமதே எனக் கொண்டார். அதை அவர் மழுப்பவும் இல்லை. அதைத் தம் ‘இமாலயத்தவறு’ என்று கூறிப் பேரளவில் தொடங்க இருந்த அரசியற்போராட்ட இயக்கத்தை நிறுத்தி விட்டதாக அறிவித்தார்; அதற்குக் கழுவாயாக உண்ணா நோன்பிருக்கவும் துணிந்தார். காந்தியடிகளை ஆன்மிக ஞானியார் என்று கருதியவர்கள்கூட அவர் கடுந்தூய்மை நிலை கண்டு மலைத்தார்கள். அவரை அரசியல்வாதி என்று கருதியவர்களோ, அவர் செயலின் தன்மையறியமாட்டாது கலங்கினார்கள். ஏனெனில், அரசியல் முறையில் இன்னலுக் காளான மக்களிடமிருந்து இத்தகைய தறுவாய்களில் ஆன்மிக ஒழுக்க முறையை எந்த அரசியல் தலைவரும் எதிர்பார்க்க முடியாது. அதை அரசியலார் பொறுப்பாக்குவரேயன்றி, மக்கள் சார்பான குற்றமாகக் கருதவும் மாட்டார்கள். காந்தியடிகளின் இவ்வான்மிகத் தூய்மை நிலை வெள்ளையருள்ளும் நடுவு நிலையாளர் நெஞ்சை உருக்கியிருக்க வேண்டும் என்பது தேற்றம். ஒரு ரோமேன் ரோலந்து, ஒரு தால்ஸ்தாய், ஒரு ரஸ்கின் இதேயளவு பேரியக்கத்தை நடத்தியருக்கவும் முடியாது; மக்கள்மீதும் தம்மீதும் எல்லா இன்னல்களின் பொறுப்பையும் இப்படி ஏற்றுக் கொண்டிருக்கவும் முடியாது ஆயினும், ஆட்சியிலுள்ள ஆதிக்கக் குழுவின் பிற்போக்கு மனப்பான்மையை இவ்வான்மிக நெறி அசைக்கவில்லை. அதன் உயர்வையும் அருமையையும் அவர்கள் உணர்ந்து கொள்ளவுமில்லை. அவர்களுடைய அடக்குமுறைத் தேர், முன்னிலும் கடுவேகத்துடன் மக்கள் வாழ்வை அரைத்துக் கொண்டே சென்றது. அது மட்டுமன்றி, சௌரி சௌராவுக்காக அரசியலாரைக் குறை கூறாமல், தாமே குற்றத்தை ஏற்ற அப்பெரியாரையே அது குறை கூறி, அவருக்குச் சிறைத் தண்டனையும் விதித்தது. பல ஆண்டுகளுக்கு முன் திலகர் குற்றஞ்சாட்டப்பட்ட அதே இடத்தில், திலகருக்குத் தரப்பட்ட அதே ஆறாண்டுத் தண்டனை காந்தியடிகளுக்குந் தரப்பட்டது. ஆனால், வழக்கு மன்றங்களுள் எதிலும் இத்தகைய விசித்திர நிலையில் குற்றவாளியும் நீதிபதியும் இருந்ததில்லை. குழுமியிருந்த மக்கள், குற்றவாளியைத் தெய்வத்துக்கடுத்த தெய்விக வடிவம் என்றே கருதினார்கள். நீதிபதியும் அவர் முன் எழுந்து நின்று வணக்கம் செய்தார். நீதிபதி மனமார அவர் உயர்வைப் பாராட்டினார்; எண்ணற்ற இந்திய மக்களுள் தாமும் ஒருவராயிருந்து அவரைப் போற்றுவதாகத் தம்மைக் குறிப்பிட்டார். “உம்மைத் தண்டிப்பவன் நானல்ல; அதற்குத் தகுதியும் எனக்கில்லை. ஓர் இயேசுவைத் தண்டிக்கும் பிலாத்துவே நான். இறைவன் முன்னிலையில் என் தண்டனைகளுக்கு மன்னிப்பு வாங்கித் தரத்தக்கவர் நீர்! ஆனால், உம்மைத் தண்டிப்பது நீதிபதியல்ல; உம்மையும் நீதிபதியையும் ஒருங்கே சிக்க வைத்திருக்கும் சட்டந்தான்! உம்மைத் தண்டிக்காமல் தப்ப எனக்கு ஒரே வழிதானுண்டு; அது பதவி துறப்பு ஒன்றே. ஆனால், நான் செய்வதையே வேறொருவர் செய்வார். இதயசுத்தியுடன் என் கடமையாற்றுவதே மேல்,” என்ற சொல்லும் குறிப்பும் நீதிபதியின் பேச்சில் தொனித்தன. தன்னாட்சிக் கட்சி காந்தியடிகளுக்கு முன்பே ஸி.ஆர்.தாஸ், ஆறுமாத காலம் சிறைத் தண்டனை பெற்றிருந்தார். காந்தியடிகள் சிறையிலிருக்கும் போது அவர் விடுதலை பெற்றார். 1921ல் பேரவைக்குத் தேர்வு பெற்ற பின்பே ஸி.ஆர். தாஸ் சிறைப் பட்டிருந்தார். இப்போது விடுதலையான பின், அவர் அடுத்த ஆண்டு கயாவில் கூடிய பேரவைக்குத் தலைவரென ஒரு மனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1922-ஆம் ஆண்டு இந்திய மக்களின் தியாகங்கள் உச்ச நிலையை அடைந்தன. காந்தியடிகள் நீதிமன்றத்தில் கூறியபடி பிரிட்டிஷ் அரசியலார், தாம் பசப்பி வந்த உயர்குறிக்கோள் களையும் இந்தியர் நன்மதிப்பையும் புறக்கணித்துப் பட்டாங்கமாகப் பேய்த்தன்மையுடன் நடந்து கொண்டனர். பல இடங்களில் மக்கள் போராடும் சத்தியும் வாழும் ஆற்றலும் இழந்து தவித்தார்கள். இந்நிலையிலும் தொடர்ந்து போராடப் பலர் தயங்கவில்லை. ஆயினும், மக்களின் தியாகங்களுக்கு ஓய்வு தந்து, போராட்ட முறையை மாற்றியமைக்க வேண்டுமென்ற கருத்துப் பல பேரவைத் தலைவர்களிடையே எழுந்தது. இன்னும் பலர் அரசியல் போராட்டத்தில் ஆன்மிகத் தூய்மை இடம் பெறுவதை விரும்பவில்லை. இத்தகையார் ஒத்துழையாமையை நாட்டு வாழ்வில் புறத்தே மட்டும் நடத்தாமல், சட்டமன்றங் களுக்குள்ளேயும் நடத்த வேண்டுமென்று விரும்பினர்; “பேரவை சட்டமன்றங்களைப் புறக்கணிப்பதாலேதான் அரசியலார் சட்டசபையிற் புகுந்த பிற்போக்காளர்களையும் மிதவாதி களையும் துணைக்கொண்டு அடக்குமுறையாட்சியை வலுப்படுத்திக் கொள்ள முடிகிறது” என்று அவர்கள் வாதிட்டார்கள். கயாப் பேரவையில் முதன்முதலாகச் சட்டசபை நுழைவுத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பேரவைத் தலைவரான ஸி.ஆர்.தாஸ் வெறும் பேரவைத் தலைவராய் மட்டுமில்லை. அவர் இப்புதிய கோட்பாட்டுக்குத் தலைமை வகித்தவரா யிருந்தார். அத்தீர்மானத்தை அவர் ஆதரித்தார். ஆனால், சென்னைத் தலைவர் சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார் அதை எதிர்த்தார். எனினும், பேரவை இவ்வாண்டு எவ்வகை முடிவும் செய்யவில்லை. காந்தியடிகள் சிறையிலிருக்கும் போது அவர் தொடங்கி வைத்த போராட்டத்தை நிறுத்திக் கொள்கையை மாற்றுவது கூடாதென்று பலர் கருதினர். எனவே, கருத்து வேறுபாடு எழுந்தாலும், நடவடிக்கை மாறுபாடு இல்hமல், பேரவை இயக்கம் முன்போலவே நடந்து வந்தது. சென்னைத் தலைவர் ராஜகோபாலாசாரியார், ஸி.ஆர். தாஸ் கொள்கையை எதிர்த்தாலும், சென்னையிலேயே மற்றொரு பெருந் தலைவரான பண்டித மோத்திலால் நேருவும், சத்தியமூர்த்தி அய்யரும் அவரை ஆதரித்தனர். வங்க இளைஞர் தலைவரான சுபாஷ் போஸும், விடுதலையடைந்த பின் பாஞ்சாலத் தலைவர் லாலா லஜபதிராயும் அவர் பக்கம் நின்றனர். தாஸுக்கு வரவர ஆதரவு திரண்டது. அவர் பேரவைக் குள்ளேயே தம் கொள்கைக்கு ஆதரவாயிருந்தவர்களைக் கொண்டு 1922ல் ‘தன்னாட்சிக் கட்சி’ (சுயராஜ்யக் கட்சி) என்னும் ஒரு கட்சியை அமைத்தார். அதன் சார்பில் பிரசாரம் செய்வதற்காக அவர் பேரவைத் தலைமைப் பதவியையும், பேரவைக் குழுவில் தம் சார்பில் உள்ளவர்கள் பதவிகளையும் துறந்தனர். 1923-ஆம் ஆண்டில் லாலா லஜபதி ராய், மௌலானா மகம்மது அலி ஆகிய இருவரும் விடுதலை அடைந்தனர். நாகபுரியிலும் தமிழகத்திலும் தேசியக் கொடிப் போராட்டம் நடந்த ஆண்டு இதுவே. திருப்பூர்க்குமரன் இப்போராட்டத்தில் காட்டிய வீரம் கட்டபொம்மன் வீரப்புகழை மீட்டும் தமிழக மண்ணில் நிலைநாட்டிற்று. இவ்வாண்டு பேரவை இரண்டு தடவை கூடிற்று. முதற்பேரவை, செப்டெம்பர் 15ல் தில்லி நகரில் மௌலானா அபுல்கலாம் ஆஃஜாது தலைமையில் நடைபெற்றது. சட்டசபை நுழைவுக் கட்சிக்கும் அதன் எதிர்ப்புக் கட்சிக்கும் இடையே பிளவு நேர்வதை அப்பேரவை விரும்பவில்லை. ஆகவே, அது இரு கட்சியாரிடையேயும் ஒரு சமரஸத்தை உண்டு பண்ணிற்று. சட்டசபை நுழைவில் நம்பிக்கையுள் எவருக்கும் அதற்கான பிரசாரம் செய்யும் உரிமையையும் நடவடிக்கை எடுக்கும் உரிமையையும் அது அளித்தது. அதே சமயம், அதில் நம்பிக்கையில்லாதவர்கள் அதை எதிர்த்துப் பிரசாரம் செய்யாமல் விலகி நிற்கும்படியும் அது கோரிற்று. அதே ஆண்டு டிஸம்பர் 28-ஆந் தேதி விடுதலை பெற்ற தலைவர் மௌலானா முகம்மது அலி தலைமையில் பேரவை மீண்டும் கூட்டப்பெற்றது. அது தில்லியில் கூடிய பேரவையில் ஏற்பட்ட புதிய நிலைமைகளையும் கோட்பாடுகளையும் ஆராயும் நோக்கத்துடன் சிறப்புப் பேரவையாகவே கூட்டப்பட்டது. தன்னாட்சிக் கட்சியின் சட்டசபை வேலைக்கு அது இணக்கமளித்ததுடன், சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடர்ந்து நடத்துவதென்றும் தீர்மானித்தது. பேரவைக்கான தொண்டர் படையை விரிவான அளவில் அமைத்ததும் தொண்டர்களுக்கு ஊதியம் வகுத்ததும் இக்கூட்டத்திலேயே ஆகும். கதர்த்தொழிலை நடத்த இந்தியா மாநிலக் கதர்க்குழு அமைத்ததும் இவ்வாண்டின் முக்கியச் செயல்களில் ஒன்று. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற கெனியா இந்தியப் பேரவைக்கு இந்தியாவின் சார்பில் திருமதி சரோஜினி நாயுடுவும் திரு. ஜார்ஜ் ஜோசஃப்பும் பிரதிநிதிகளாக அனுப்பப்பட்டார்கள். 1923-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நடுச் சட்டசபையில் பேரவைத் தன்னாட்சிக் கட்சிக்கு 48 இடங்கள் கிடைத்தன. இதன் பயனாக மாநில ஆட்சி முதல்வர் மனம்போல எளிதில் ஆட்சி நடைபெற முடியவில்லை. உப்பு வரியைச் சட்டசபை மறுத்தது. ஆட்சி முதல்வர் அதைத் தம் தனிப்பட்ட சிறப்புரிமையைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் நீட்டித்தா ரானாலும், அதனை முன் போலச் சட்டப்படியான நடவடிக்கை ஆக்க முடியவில்லை. ஆண்டுதோறும் சட்டசபையில் அரசாங்கத்துக்கு இத்தகைய தோல்விகள் கிடைத்து வந்தன. சிறப்பாக வரவு செலவுத் திட்டங்கள் வரும்போது ஆட்சியாளர் திணறடிக்கப்பட்டனர். மாகாண அரசியல்களிலும் தன்னாட்சிக் கட்சி வங்கத்தில் பேரளவு வெற்றி பெற்றது. மாநில அரசியலில் வெற்றி கண்டது போலவே இங்கும் அவர்கள் இரட்டை ஆட்சி முறையைத் தாக்கி முறியடிப்பதில் வெற்றி கண்டார்கள். சென்னையில் 1920லிருந்தே பார்ப்பனரல்லாதார் கட்சி என்று வழங்கப்படும் நேர்மைக் கட்சி, பெரும்பான்மை பெற்று ஆண்டு வந்ததால், தன்னாட்சிக் கட்சிக்குத் தொடக்கத்தில் மிகுதியான வெற்றி கிட்டவில்லை. 1927ல் அவர்கள் ஓரளவு வலிமை பெற்றாலும், தனி அமைச்சவை அமைக்க முடியாமல், தனியாட்களுடன் ஒன்றுபட்டுச் சில காலம் கூட்டு அமைச்சவை ஏற்படுத்த முடிந்தது. காந்தியடிகளின் விடுதலை காந்தியடிகள் ஆறு ஆண்டுக்காலம் தண்டனை பெற்றாலும் உடல் நலிவு காரணமாக 1924 பிப்பிரவரி 5ல் விடுதலை செய்யப்பட்டார். வெளியே வந்ததும் தாம் சிறை செல்லும்போது நாடு இருந்த நிலைமையில் அது இப்போது இல்லை என்பதை அவர் கண்டுகொண்டார். போராட்டத்தின் கடுமையாலும் தியாகங்களின் அளவாலும் மக்கள் மனம் உடைந்து போயிருந் தார்கள். அத்துடன் அரசியலுக்கு அவர் தந்த ஆன்மிகப் போக்கில் இளைஞர்களுக்கும் புதிய தலைவர்களுக்கும் உள்ளூறப் பற்றுறுதி இல்லை என்பதையும் அவர் உணர்ந்தார். இந்நிலையில் அவர் சட்டசபை நுழைவுக் கட்சித் தலைவர்களான ஸி.ஆர். தாஸ், பண்டித மோத்திலால் நேரு ஆகியவர்களுடன் அரசியல் நிலைகளைப் பற்றிப் பேசி ஒரு சமரஸ ஏற்பாட்டுக்கு வந்தார். சட்டசபை நுழைவுக்குத் தாம் ஆசி வழங்குவதாக அவர் ஏற்றுக் கொணடார். சிறையிலிருந்து விடுதலை பெற்ற காந்தியடிகள் தலைமையிலேயே 1924ல் பேரவை பெல்காமில் கூடிற்று. அது காந்தி- தாஸ் - நேரு- சமரஸ ஏற்பாட்டை வரவேற்றது. மாநில அடிப்படையில் இப்பேரவை தொண்டர் படை அமைத்ததுடன் தொண்டர்களுக்கு ஊதியம் தரும் திட்டத்தையும் ஏற்படுத்திற்று. கௌஹத்தித் தனியரசிலுள்ள வகுப்புக் கலவர நிலைமையில் அங்குள்ள இந்துக் குடிகள் அஞ்சி வெளியேற நேர்ந்தது. பெல்காம் பேரவை இது வகையில் வருத்தம் தெரிவித்தது. இவ்வாண்டில் நாடெங்கும் பேரளவில் வகுப்புக் கலவரங்கள் நடைபெற்றன. அவை காந்தியடிகளின் உள்ளத்தைப் பெரிதும் புண்படுத்தின. மக்களின் இத்தவறுகளுக்கு அவர் வழக்கம்போலத் தாமே கழுவாய் தேடி, 22 நாள் உண்ணா நோன்பாற்றினார். இதனால், வகுப்புத் தலைவர்கள் தில்லியில் கூடி மாநாடு நடத்தினார்கள். வகுப்புக்களிடையே தேச உணர்ச்சி பரப்பப் பாடுபடுவதாக இந்து முஸ்லிம் தலைவர்கள் காந்தியடிகளுக்கு வாக்குறுதியளித்தார்கள். அரசியல் இயக்கங்களிலிருந்து தற்காலிகமாகச் சிறிது ஓய்வு பெற்றிருந்த காந்தியடிகள், இப்போது தீண்டாமை, கதர்த் தொழில் முதலிய ஆக்கத்துறை அலுவல்களில் பெரிதும் கருத்துச் செலுத்தியிருந்தார். தென்னாட்டில் ‘காந்தியடிகளின் வலக்கை’ என்றும் ‘பெரியார்’ என்றும் புனைந்துரைக்கப்படும் தமிழகப் பேரவைத் தலைவர் ஈ.வே. இராமசாமியார் தம் வாழ்க்கைத் துணைவியாராகிய நாகம்மையாருடன் திருவாங்கூரிலுள்ள வைக்கம் நகரில் கோயில் நுழைவுப் போராட்ட இயக்கம் நடத்திப் பெருவெற்றி பெற்றார். கள் விலக்கு, கதர் ஆகிய மற்றக் காந்தீய ஆக்க வேலைகளிலும் இவர் அரும்பாடுபட்டுத் தமிழகத்தை இத்துறைகளில் முன்னணிக்குக் கொண்டு வந்தார். தென்னாட்டுத் தலைவர்களிடையே திரு.வி. கல்யாண சுந்தரனார், டாக்டர் வரதராஜுலு நாயுடு ஆகிய இருவரும், பெரியார் ஈ.வே. ராமசாமியின் சமுதாய, சமயச் சீர்திருத்தப் பணிகட்கு ஆதரவு தந்தனர். திரு. வில. கல்யாணசுந்தரனார், வ.உ.சிதம்பரனார் தொடங்கி வைத்த தொழிலாளர் போராட்ட அலையையும், மறைமலையடிகளாரின் தமிழியக்க அலையையும் பேரவை இயக்கப் பரப்பில் கொண்டு வந்து இணைக்கப் பாடுபட்டார். தேசபந்து ஸி.ஆர். தாஸ் மறைவு சட்டசபைக்கு வெளியே தீவிர அரசியல் கிளர்ச்சி இப்போது நிறுத்தப்பட்டிருந்தாலும், வங்காளத்தில் ஆட்சிக் கயிற்றைப் பற்றியிருந்த தன்னாட்சிக் கட்சியை ஒழிக்க எண்ணி, பிரிட்டிஷ் ஆட்சிக்குழு மும்முரமான அடக்குமுறையில் இறங்கிற்று. அதில் சுபாஷ் போஸ் நான்காண்டு தண்டனை பெற்றார். தன்னாட்சிக் கட்சிக்கும் சட்டசபை நுழைவை விரும்பாத மற்றப் பேரவையாளர்களுக்கும் இடையே இப்போது வர வர ஒற்றுமை வளர்ந்து வந்தது. ஆனால், வெண்ணெய் திரளும் சமயம் தாழி உடைந்தது போன்ற நிலை இப்போது ஏற்பட்டது. ஜூன் 16-ஆம் தேதி ஸி.ஆர். தாஸ் உயிர் நீத்தார். இந்தியா முழுவதும் இதனால் துயருள் மூழ்கிற்று. காந்தியடிகள் சிறைப்பட்டிருக்கும் போது தம் பொறுப்பிலேயே நின்று வருங்கால பேரவைக்குப் புது வழி காட்டியவர் அப்பெரியார். அவர் மறைவுக்கு 1925ல் கான்பூரில் திருமதி சரோஜினி நாயுடு தலைமையில் கூடிய பேரவை பரிந்துரை தெரிவித்ததுடன், அவர் நினைவு நிதியாகப் பத்து லட்ச ரூபாய் திரட்ட ஏற்பாடும் செய்தது. இதன் உதவியால் ஸி.ஆர். தாஸ் வாழ்ந்த வீடு, மாதர் குழந்தைகள் உதவிக்கான மருந்துவ நிலையம் ஆக்கப்பட்டது. பேரவை இப்போது சட்டசபை நடவடிக்கை களை ஏற்றுத் தன்னாட்சிக் கட்சியையே தன் சட்டசபைக் கிளையாக அமைத்துக் கொண்டது. பேரவைக் குழுவின் வெளிநாட்டுப் பிரசார அரங்கம் ஒன்றும் இவ்வாண்டு அமைக்கப் பட்டது. தென்னாட்டின் தனிப்பெருந் தலைவர்களுள் ஒருவரான திரு.சீனிவாசஅய்யங்காரின் தலைமையிலேயே 1926ல் கௌஹத்தியில் பேரவை நடைபெற்றது. அய்யங்கார் இந்தியாவின் தலைசிறந்த அறிஞருள் ஒருவர், ஒத்துழையாமை இயக்கக் காலத்தில் அரசியல் உச்சநிலைப் பகுதிகளில் ஒன்றான வழக்குரை முதல்வர் (ஹனஎடிஉயவந ழுநநேசயட) நிலையையும், ஸி.ஐ.ஈ. பட்டத்தையும் துறந்து, அவர் அரசியல் வாழ்வில் குதித்தார். நேர்மைக் கட்சியுடன் நேசத் தொடர்பு கொள்ளத் தயங்காது, அதன் சமூகச் சீர்திருததத் தொண்டுகளில் அவர் ஈடுபாடு காட்டி வந்தார். சென்னைச் சமூகச் சீர்திருத்தச் சங்கத்தை அவரே நடத்தி வந்தார். தன்னாட்சிக் கட்சிக்கு அவர் செய்த சேவை பெரிது. 1926ல் சென்னைத் தேர்தலில் அது பெருவெற்றி காண அவரே பெரிதும் காரணராயிருந்தார். மாநிலச் சட்டசபையில் அவர் துணைத்தலைவராயிருந்து பணியாற்றினார். இவ்வாண்டு வகுப்புக் கலவர நிலைமை மீண்டும் மோசமாகி வந்தது. கல்கத்தா ஆறு வாரம் கலவரங்களால் அலைக் கழிவுற்றது. பேரவை முஸ்லிம்களின் பக்கமாகப் பெரிதும் சாய்கிறதென்று பேரவைத் தலைவர்களிலேயே சிலர் கருத லாயினர். பாஞ்சாலத் தலைவர்களான லாலா லஜபதிராயும், சுவாமி சிரத்தானந்தரும் இக்கருத்துக் கொண்டிருந்தனர். தன்னாட்சிக் கட்சியின் தேர்தலில் இது பிளவை உண்டு பண்ணிற்று. சென்னையைத் தவிர மற்ற மாகாணத் தேர்தல்களை இது பெரிதும் பாதித்தது. இதே சமயம் முஸ்லிம் வகுப்புவாதிகளிடையேயும் பேரவையின் தேசியம் இந்துக்கள் பக்கமாகச் சாய்ந்து வருகிறது என்ற ஐயம் எப்படியோ ஏற்பட்டு வந்தது. வந்தே மாதரப் பாடலும் பாரதமாதா கோயில்களும் இந்துக்களின் பண்பாட்டை வலியுறுத்தின என்று சிலரால் கருதப்பட்டது. இந்தி- உருதுப் போராட்டமும் இவ்வேறுபாட்டை வளர்த்தது. காந்தியடிகள் இரு மொழிகளின் எழுத்து முறைகளையும் ஏற்றதன் மூலமும், இரு மொழியாளர்களுக்கும் பொது அடிப்படையான மக்கள் தாய் மொழியாகிய இந்துஸ்தானியையே தேசிய மொழியாக ஏற்றதன் மூலமும் சமரஸ முயற்சிகளைச் செய்து வந்தார். சுவாமி சிரத்தானந்தர் இதே ஆண்டில் ஒரு மதவெறியனால் சுடப்பட்டு இறந்தார். கௌஹத்திப் பேரவை அவருக்குப் பரிவுத் தீர்மானம் நிறைவேற்றிற்று. இவ்வாண்டு கருத்து மாறுபாடுடைய தீவிரத் தலைவர் சிலர் பிரிந்து சென்று, பம்பாயில் ‘தேசியக் கட்சி’ என்னும் தனிக் கட்சியை அமைத்தனர். ஆயினும், நடுச்சட்ட சபையில் அவர்கள் தன்னாட்சிக் கட்சியுடன் ஒத்துழைத்து வந்தார்களாதலால், மாநிலச் சட்ட சபையில் மாறுபாடு எதுவும் ஏற்படவில்லை. இந்தியாவுக்குப் பின்னாளில் விடுதலையளித்த அரசியலில் உறுப்பினராயிருந்த பெதிக் லாரன்ஸும் அவர் துணைவியாரும் கௌஹத்திப் பேரவைக்கு வந்திருந்தனர். ‘இந்தியாவின் அடிமைத் தனம், அரசியல் துறையில் மட்டும் அடிமைத்தனமா யில்லை; பொருளியல், சமுதாயத்துறையிலும் அடிமைத்தனத்தை அது வளர்க்கிறது’ என்பது கேட்க அவர் வியப்படைந்தாரென்று அறிகிறோம். 1818-ஆம் ஆண்டு ஒழுங்கு முறைச் சட்டத்தின் கீழும், 1925-ஆம் ஆண்டு வங்கக் குற்றத் திருத்தச் சட்டத்தின் கீழும் பலரை விசாரணையின்றி அரசியலார் காவலில் வைத்திருப்பதைப் பேரவை கண்டித்தது. பேரவைத் தேர்தலில் கலந்துகொள்பவர் யாவரும் கட்டாய மாகக் கதர் அணிதல் வேண்டும் என்னும் விதி வகுக்கப்பட்டது. குடியேற்ற நாட்டுரிமையா?, முழுநிறை விடுதலையா? 1924-ஆம் ஆண்டு போராட்டத் துறையில் இந்திய அரசியல் சோர்வுற்றது போல, 1927க்குள் சட்டசபை நுழைவு வேலையிலும் இளைஞர்களுக்குச் சோர்வு தட்டிற்று. இதன் எதிரொலிகளை நாம் பேரவைக்குள்ளும் வெளியிலும் காண்கிறோம். உள்ளே இது, “குடியேற்ற நாட்டுரிமையா? முழுநிறை விடுதலையா?’ என்ற குறிக்கோள் நோக்கிய போராட்டமாயமைந்தது; வெளியே 1857 புரட்சி மரபில் வந்த இளைஞரின் வெறித்த புரட்சிச் செயல் மரபாய் வளர்ந்தது. இரண்டும் நாட்டை மீண்டும் சட்ட மறுப்புப் போன்ற புதிய இயக்கங்களுக்கு இழுத்துச் சென்றன. இந்திய அரசியல் நெருக்கடி மரபைத் தீர்ப்பதற்கு மாநிலச் சட்டசபையில் 1924லேயே பண்டித மோத்திலால் நேரு ஒரு திட்டம் வகுத்திருந்தார். அதில் அவர் எல்லாக்கட்சித் தலைவர்களும் அடங்கிய ஒரு வட்டமேசை மாநாடு கூட்டும்படியும், அதன் அறிவுரைகளுடன் கூடிய ஒரு முழு நிறை பொறுப்பாட்சித் திட்டம் வகுக்கும்படியும் அரசியலாரைக் கோரி இருந்தார். 1926இல் பேரவைத் தலைவர் இதுபற்றிக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அரசியலார் 1919 சட்டத்தில் குறிப்பிட்டபடி பத்தாண்டுகளுக்கொரு முறை சீர்திருத்தப் பங்கீடு செய்யும் எண்ணத்துடன், 1927ல் ஒரு குழுவை நிறுவினர். இதில் தலைவராயிருந்தவர் சைமன். எனவே, இது சைமன் குழு என்று வழங்கப்பட்டது. இதில் இந்தியர் எவரும் இடம் பெறவில்லை. பேரவை இதைக் கண்டித்ததுடன், இக்குழுவினருடன் ஒத்துழைக்கவும் மறுத்தது. சென்னை நேர்மைக் கட்சியும் ஒரு சில முஸ்லிம் தலைவர்களும் தவிர, மற்ற எல்லாக் கட்சிகளும் இவ்வெதிர்ப்பில் கலந்து கொண்டன. 1928ல் சைமன் குழுவினரின் சுற்றுப்பயணத்தின் போது இந்தியா எங்கும் கடைகள் அடைக்கப்பட்டன; கண்டனக் கூட்டங்கள் பெருகின. சென்னையில் இந்நடவடிக்கையின் போது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. லாகூரில் எதிர்ப்பு ஊர்வலத்தில் நடைபெற்ற அடிதடிகளுக்கு ஆளாகிப் பெருந்தலைவர் லாலா லஜபதிராய் உயிர் நீத்தார். தலைவரை இழந்து சீற்றங் கொண்ட இளைஞர்கள் காவல் துறைத்தலைவர் சாண்டர்ஸ் என்பவரைச் சுட்டுக் கொன்றார்கள். அடக்கு முறைகளுக்கு இது மீண்டும் அழைப்பாயிற்று. கிளர்ச்சிக்கு ஒத்துணர்வு தெரிவித்துத் தென்னிந்தியத் தொடர் ஊர்தித் தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்தனர். 1928இல் டெல்லியில் நாட்டின் எல்லாக் கட்சியினரும் சேர்ந்து ஒரு மாநாடு கூட்டினர். சைமன் குழுவை எல்லாரும் கண்டித்து, அதன் அறிக்கையை ஏற்க மறுப்பதென்று முடிவு செய்தனர். அத்துடன் இந்தியாவில் ஒப்புக்கொள்ளப்படத்தக்க வேறோர் அரசியல் திட்டத்தையும் அமைக்க ஏற்பாடு செய்தனர். பண்டித மோத்திலால் நேருவைத் தலைவராகக் கொண்ட ஒரு குழு இதற்காக அமைக்கப்பட்டது. அதன் அறிக்கையே ‘நேரு குழு அறிக்கை’ எனப் பெயர் பெற்றது. அது இந்தியாவுக்கு உடனடியாகக் குடியேற்ற நாட்டுரிமை வழங்கவேண்டுமென்று கோரிற்று. பேரவை இவ்வறிக்கையையும் இம்முடிபையும் ஏற்றது. குடியேற்ற நாட்டுரிமை பிரிட்டிஷ் பேரரசுக்குட்பட்ட ஓர் உறுப்பின் நிலையேயாகும். 1918ல் பேரவை இதையே தன் அரசியல் குறிக்கோளாகக் கொண்டு, பிரிட்டிஷார் அவ்வுறுதி அளிப்பார்கள் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தது. பத்தாண்டுகள் சென்ற பின்னும் பிரிட்டிஷார் அதே நிலையில் நின்று நகராதது பேரவையில் எல்லாருக்குமே மனக்கசப்புத் தந்தது. இந்நிiயில் அக்குடியேற்ற நாட்டுரிமையையே இன்னும் பேரவையின் இலக்காகக் கொள்வது இளைஞர் தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை. 1927லிருந்தே இக்குறிக்கோளை எதிர்த்து முழு நிறை விடுதலைக் குறிக்கோளுக்காகப் பண்டித ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், எஸ். சீனிவாச அய்யங்கார், ஜயப்பிரகாச நாராயணா ஆகியவர்கள் கிளர்ச்சி செய்தனர். இக்கிளர்ச்சி பேரவையில் ஒரு புதுவகையான பிளவைக் கொண்டு வந்தது. தீவிரவாதி, மிதவாதி என்ற பழைய பெயர்களுக்குப் பதில் இக்கட்சிகள் மேனாட்டு அரசியல் மன்றத்தின் மொழியில் ‘வலசாரி, இடசாரி’ எனப் பெயர் பெற்றன. மாறுதல் வேண்டாத கட்சி வலசாரி என்றும், மாறுதல் வேண்டிய கட்சி இடசாரி என்றும் கூறப்பட்டன. சட்டசபையை ஆதரித்தவர்களைக் கொண்டு ஸி.ஆர்.தாஸ் முன்பு தன்னாட்சிக் கட்சி அமைத்தது போல, முழு நிறை விடுதலைக் குறிக்கோளைக் கொண்டு எஸ். சீனிவாச அய்யங்கார் 1927லேயே ‘முழு நிறை விடுதலைக் கழகம்’ (ஐனேநயீநனேநnஉந டுநயபரந) ஒன்றை நிறுவியிருந்தார். இது முழு நிறை விடுதலைக்காகப் பிரசாரம் செய்தது. நேரு அறிக்கையையும் குடியேற்ற நாட்டுரிமையையும் இது எதிர்த்தது. அடுத்த ஆண்டு பண்டித மோத்திலால் நேருவின் தலைமையில் நடைபெற்ற கல்கத்தா பேரவை புதிய குறிக்கோளுக்கும் பழைய குறிக்கோளுக்கும் இடையேயுள்ள போராட்டக் களமாயிற்று. பண்டித ஜவஹர்லால் நேரு இளைஞர் கட்சிக்குத் தலைமை வகித்து, முதியவர் கட்சித் தலைவரான தம் தந்தையாரையே தாக்கினார். காந்தியடிகள் பிளவைத் தீர்க்கும் நோக்கத்துடன் ஒரு சமரஸத் தீர்மானம் கொண்டு வந்தார். 1929-ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 31-ஆம் தேதிக்குள் அரசியலார் நேரு திட்டத்தை ஒப்புக்கொள்ளா விட்டால் முழு நிறை விடுதலையே இந்தியாவின் குறிக்கோள் என்பதைப் பேரவை ஏற்றுக் கொள்ளும் என்றும், அதற்காக வரி கொடா இயக்கமும் ஒத்துழையாமை இயக்கமும் மீண்டும் தொடங்கப்படும் என்றும் காந்தியடிகளின் சமரஸத் தீர்மானம் குறிப்பிட்டது. இதை யாவரும் ஏற்றுக்கொண்டனர். 1929ல் பண்டித ஜவஹர்லால் தலைமையிலேயே லாகூரில் கூடிய பேரவை, முழுநிறை விடுதலைத் தீர்மானத்தை நிறைவேற்றியது. பேரவைக்குள் இடசாரி இயக்கம் வலுத்து வந்த அதே சமயம், வெளியே தீவிர இளைஞர்களின் உள்ளத் துடிப்பு, பயங்கர வாதத்தை வளர்த்து வந்தது. பாஞ்சாலத்திலும் வங்கத்திலும் அது பல இளைஞர்களையும் இளநங்கையர்களையும் பலி கொடுத்து வந்தது. பாஞ்சாலத்தில் சட்டசபையில் வெடிகுண்டு வீசச் சதி செய்த இளைஞர் லாகூர் சதி வழக்கில் குற்றவாளிக் கூண்டில் ஏறினர். சர்தார் பகவத்சிங்கு, சுகதேவ், ராஜகுரு என்ற மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டது. நாட்டு மக்கள் அவ்விளைஞர் முறையை ஆதரிக்கா விட்டாலும், அவர்கள் வீரங்கண்டு வியந்தார்கள். அவர்கள் உயிரைக் காக்கக் காந்தியடிகளே ஆட்சி முதல்வருடன் பேசி அரும்பாடுபட்டார். ஆனால், அவர்கள் தூக்குக்கயிற்றை முத்தமிடவே நேர்ந்தது. புதிய போராட்டம்: சட்ட மறுப்பு இயக்கம் 1929 பேரவையின் தீர்மானப்படி முழு விடுதலைத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதன் சின்னமாக ஆண்டுதோறும் 1930 முதல் ஜனவரி 26-ஆந் தேதி விடுதலை நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய ஆட்சி முதல்வரான இர்வின் என்பவருடன் அரசியல் முட்டுக்கட்டை பற்றிப் பல தடவை பேசிய பின் காந்தியடிகள் போராட்டத்தைத் தொடங்க ஆயத்தமானார் பிப்பிரவரி 16-ஆம் தேதி சபர்மதியில் கூடிய பேரவைக் கூட்டம் அவருக்கு உரிமையவிறித்தது. நாடெங்கும் இவ்வறப் போராட்டம் பற்றிய பரபரப்பு ஏற்பட்டது. மார்ச்சு 12-ஆந் தேதி காந்தியடிகள் உப்புச் சட்டத்தை மீறுவதற்காகக்த தண்டிக் கடற்கரைக்குத் தம் தோழர்களுடன் கால்நடையாகப் பயணம் தொடங்கினார். இரண்டாவது சட்ட மறுப்புப் பேரியக்கம் தொடங்கிற்று. உப்புச்சட்டம், காட்டுச்சட்டம் ஆகிய இரண்டும் இத்தடவை மீறப்பட்டன. ஒத்துழையாமை இயக்கத்தை ஒரு மின்மினியாகச் சிறுக வைக்கும் அளவில் பொதுமக்கள் காந்தியடிகளின் இப்புதிய இயக்கத்தில் பேரளவாகக் கலந்து கொண்டார்கள். பேரவையின் இளைய தலைமுறையினர் தம் தந்தையர் இளமைக் கனவுகளைத் தாண்டி, ஆர்வக் கனல் வளர்த்து, அதில் குளித்தனர். பெண்டிர், முன் என்றுமில்லாத அளவு இவ்வியக்கத்தில் கலந்து கொண்டது எங்கும் கண்கொள்ளாக் காட்சியாய் இருந்தது. காந்தியடிகள் தண்டிக்குப் புறப்படும்போது, திருமமி சரோஜினி தலைமையில் பெண்டிர் திரண்டு, அவருக்குக் குருதி நிறக் குங்குமமிட்டு, நல்வாழ்த்துக் கூறினர். தண்டியில் ஏற்றிய தீபம் மாநிலமெங்கும் அண்ணாமலைத் தீபமாய் விளங்கிற்று. பிரிட்டிஷ் ஆதிக்கக் குழு ஒத்துழையாமையை மதித்த அளவுகூட இப்போராட்டத்தைத் தொடக்கத்தில் பொருட் படுத்தாமலிருந்தது. தண்டி அவர்கள் அசட்டை மனப்பான்மையைத் தட்டி எழுப்பிற்று. அவர்கள் காந்தியடிகளைத் தடைசெய்யவோ, சிறைப்படுத்தவோ துணியவில்லை. ஆனால், மற்ற இடங்களில் அனுதாபத்துடன் சட்டமறுப்பு நடத்தியவர்களை ஒருவர் பின் ஒருவராகச் சிறைப்பிடித்துத் தண்டித்தார்கள். ஏப்பிரல் 6-ந் தேதி காந்தியடிகள் தண்டிக் கடற்கரை சேர்ந்து, உப்புச் சட்டம் மீறினார். அதற்குள் எங்கும் நிலைமை கட்டுக்கடங்காததாகி வந்தது. அவசரப் பாதுகாப்புச் சட்டங்களும், அவசரச் சட்டங்களும் புதுப்பிக்கப்பட்டன; அல்லது புதியனவாக உண்டு பண்ணப்பட்டன. சென்னையிலும் பெஷாவரிலும் துப்பாக்கிப் பிரயோகங்கள் நடைபெற்றன. மே மாதத்துக்குள் அறுநூற்றுவருக்கு மேற்பட்ட தொண்டர் சிறைப்பட்டனர். துப்பாக்கிப் பிரயோகத்தால் 115 பேர் உயிரிழந்தனர். 420 பேருக்கு மேற்பட்டவர் காயமடைந்தனர். மே 5-ஆந் தேதியன்று அரசாங்கம் வேறு வழியின்றிக் காந்தியடிகளைச் சிறைப்படுத்திற்று. இதனாலாவது இயக்கம் தகரலாம் என்று அரசாங்கத்தார் எண்ணியிருக்கக்கூடும். ஆனால், பேரவையின் செயற்குழுகூடிப் போராட்டத்தை இன்னும் விரிவுபடுத்திற்று. தார்சனா, வேதாரணியம் என்னும் இடங்களிலும் உப்புப் போர் தொடங்கப்பட்டது. வேதாரணியம் சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியாரின் அறப்போர்க்கள- மாயிற்று. வயது சென்ற முதுபெருங்கிழவர் தயாப்ஜி, கவிஞர் சரோஜினி நாயுடு முதலிய எண்ணற்ற தலைவர்கள் காந்தியடிகளினிடமாகப் போராட்டத் தலைமை வகித்துச் சிறை சென்றனர். ஷோலாப்பூரில் படைத்துறைச் சட்ட நடைமுறை எடுக்கப்பட்டது. அத்துடன் அவ்வூர்ப் பொதுக்கூட்டத்தின்மீது ஆறு தடவை துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. போராட்டம் மிகவும் மும்முரமாயிற்று. பிரிட்டிஷ் ஆட்சிக் குழு வெறி கொண்டெழுந்தது. தன் அரசியல் போராட்டத்தின் கடைசித் துருப்புகள் வரை எடுத்து அது பேரவை மீது எறியத் தொடங்கிற்று. ஜூன் 6-ஆந் தேதி பேரவைக் குழுக்களே சட்ட விரோதமாக்கப்பட்டன. அம்மாத இறுதியில் பேரவையின் முதுபேரறிஞரான பண்டித மோத்திலால் நேரு சிறைப்பட்டார். அச்சு அவசரச் சட்டங்கள் மூலம் பத்திரிகைகளுக்குப் பிணையம் கோரப்பட்டது. கோரிய பிணையமும் பழைய பிணையமுமாகப் பத்திரிகைகளிடமிருந்து அவ்வாண்டில், 2,40,000 ரூபாய் பறிக்கப்பட்டது. பிணையம் கொடுக்க மறுத்த 9 பத்திரிகைகளை நிறுத்த வேண்டி வந்தது. பம்பாயும் சென்னையும் சட்ட மறுப்பு இயக்கத்தில் முன்னணியில் நின்றன. கண் மூடித்தனமான தடியடி, துப்பாக்கிப் பிரயோகம் ஆகியவைகளுக்குப் பொதுமக்கள் ஆளானார்கள். இயக்கத்தில் தொண்டாற்றிய பெண்களும் பேரவதிக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஜூலை 31ல் மிகப் பெருந் தலைவர் பலரும் பெண் தொண்டர் பலரும் கைதிகளாயினர். சென்னையில் அடிபட்டவர்களுள் கனம் பேடன் என்ற ஒரு வெள்ளைக் கிறிஸ்தவ சமய குருவும் இருந்தார். டிஸம்பர் 31-ஆந் தேதி வீர சுபாஷ் சந்திர போஸ் ஒரு கூட்டத்துக்குத் தலைமை வகித்துத் தடியடித் தாக்குதலுக்கு ஆளாயினார். தொண்டர்களைச் சுட மறுத்ததற்காக ஒரு கார்வாலிப் பட்டாளத்தார் அனைவரும் 10 முதல் 14ஆண்டு வரை கடுஞ்சிறைத் தண்டனை வழங்கப்பட்டனர். 1931 ஜனவரி 21ல் தடியடிகளால் சாய்ந்த பெண்களைக் காவலர் பழியுணர்ச்சியுடன் மிதித்துத் துவைத்துக் கொன்றனர் என்பது தெரிகிறது. வட்டமேஜை மாநாடுகள் ‘கொடுமைகள் வெற்றி தரமாட்டா; மக்கள் வெறுப்பைத்தான் பெருக்கும்’, என்பதனைப் பிரிட்டிஷார் கூட அறிய நீண்ட நாளாகவில்லை. பிரிட்டிஷாரிடம் நம்பிக்கை கொண்டிருந்த மிதவாதிகளைக்கூட இவ்வடக்கு முறையின் கொடுமையும் அழிவும் கிலி கொள்ளச் செய்தன. அவர்களில் தலைசிறந்த தலைவர்களான சாப்புரூ, ஜெயக்கர் ஆகிய இருவரும் ஆட்சி முதல்வருக்கும் பேரவை இயக்கத் தலைவருக்குமிடையே தூதுவராய் நடந்து சமரஸப் பேச்சைத் தொடங்கினர். இதன் பயனாக 1931 ஜனவரி 26-ஆந் தேதி காந்தியடிகளும் தலைவர் பலரும் விடுவிக்கப்பட்டனர். மார்ச்சு 5-ஆந் தேதி காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி பலாத்காரச் செயல்களுக்காகக் கைது செய்யப்பட்டவர் தவிர, மற்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும், அவரசச் சட்டங்களைப் பின்வாங்கிக் கொள்ளவும், உப்பளங்களை அடுத்த கடலோர மாவட்டங்களில் உப்பெடுக்கும் உரிமையை மக்களுக்கு அளிக்கவும் ஆட்சியாளர் ஒப்புக்கொண்டனர். இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் பங்கு கொள்ளப் பேரவையும் ஒத்துக் கொண்டது. வட்டமேசை மாநாடு கூட்ட வேண்டுமென்ற கோரிக்கையை எல்லாச் சட்டப் பேரவை 1928-ஆம் ஆண்டிலேயே தெரிவித் திருந்தது. 1929இல் ஆட்சி முதல்வர் செய்த அறிவிப்பில் அவர் இதனை ஏற்றுக்கொண்டிருந்தார். இதன்படி முதல் வட்டமேசை மாநாடு 1930 நவம்பர் 30-ஆந் தேதி கூட்டப் பெற்றது. பேரவை அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால், அதன் பிரதிநிதிகள் அதில் கலக்கவில்லை. ஆயினும், இந்திய மன்னர் நாடுகளிலிருந்து 16 பேரும், பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து சென்னை நேர்மைக் கட்சியும், மிதவாதக் கட்சியும், தனிப்பட்ட வரும் அடங்கிய 57 பேரும், பிரிட்டனின் முக்கிய அரசியற் கட்சிகளின் சார்பில் 13 பேரும் ஆக 86 பிரதிநிதிகள் வட்ட மேசையைச் சுற்றி உட்கார்ந்திருந்தார்கள். விவாதங்களில் பொதுவாகக் கூட்டுறவு முறை ஆட்சி ஒத்துக்கொள்ளப் பட்டது. பாதுகாப்பும் வெளி நாட்டுறவும் மாநில நடு அரசியலுக்குரியன என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆயினும், பேரவைப் பிரதிநிதிகள் இல்லாத முடிவுகள் வலிமையுடையவை அல்ல என்று பிரிட்டிஷ் பிரதிநிதிகள் கருதினார்கள். இதன் பயனாகவே முதல் வட்டமேசை மாநாடு 1931 ஜனவரி 19-ஆந் தேதியன்று ஒத்திப் போடப்பட்டு, இரண்டாவது வட்டமேசை மாநாட்டுக்குள் பேரவைப் பிரதிநிதிகளை அனுப்ப உதவும்படி காந்தி- இர்வின் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இரண்டாவது வட்டமேசை மாநாடு 1931, செப்டெம்பர், 7ல் கூடிற்று, பேரவையின் தனிப் பிரதிநிதியாகக் காந்தியடிகளும் அவருக்கு உதவியாகத் திருமதி சரோஜினி நாயுடு முதலிய தோழரும் சென்றிருந்தனர். பேரவை கலக்குமா கலவாதா என்பது உறுதியாவதற்கு முன்பே இந்துப் பத்திரிகையின் சார்பில் சென்றிருந்த அதன் ஆசிரியர் திரு. ஏ. அரங்கசாமி ஐயங்கார், காந்தியடிகள் வந்தபின் அவருடைய செயலாளராகப் பணியாற்றினார். ‘பேரவை ஒரு சமூகத்தின் பிரதிநிதியன்று; முழுநாட்டின் பிரதிநிதி,’ என்பது பற்றியே காந்தியடிகள் நீடித்துப் போராட வேண்டியதாயிருந்தது. அதற்கேற்ப, மாநாட்டின் ஆய்வுரைகளிலும், சமூகப் பிரதிநிதித்துவத் துறையிலேதான் நெருக்கடி ஏற்பட்டது. அது தீராமலே 1931, டிஸம்பர் 1-ஆந் தேதி மாநாட்டின் இரண்டாம் இருக்கை முடிவுற்றது. காந்தியடிகள் திரும்பிவர வேண்டியதாயிற்று. மூன்றாவது வட்டமேசை மாநாட்டின் கூட்டத்திலும் முதல் கூட்டத்தைப் போலவே பேரவை கலக்க முடியவில்லை. காந்தி- இர்வின் ஒப்பந்தத்தை ஆட்சிக் குழு மதித்து நடக்கவில்லை என்பதைக் கண்டு, காந்தியடிகள் வட்டமேசைக்குச் செல்ல மறுத்துவிட்டார். இந்தியாவில் மீண்டும் பேரவையின் போராட்டம் தொடங்கிற்று. மூன்றாவது வட்டமேசை மாநாட்டில் எதுவும் முடிக்க முடியாது போனதால், 1932, டிஸம்பர், 24இல் அது கலைவுற்றது. இந்தியாவுக்காக வட்டமேசை மாநாடு வகுக்க வேண்டிய அரசியல் திட்டத்தை, பிரிட்டிஷ் அரசாங்கமே வகுத்து, 1933 மார்ச்சில் வெளியிட்டது. இது பிரிட்டிஷ் மன்றத்தின் இரு சபைகளடங்கிய ஒரு நிறை குழுவின் ஆராய்வுக்கு விடப்பட்டு, அதன் அறிக்கையின்மேல் 1935-ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சீர்திருத்தச் சட்டமாக நிறைவேற்றப் பட்டது. வட்டமேசை மாநாட்டுக்குத் தலைவர்கள் புறப்படும் முன்பே சிறையில் நீண்ட நாளிருந்து உடல் நலிவுற்ற மோத்திலால் நேரு இயற்கை எய்தினார். பகவத் சிங்கும் அவர் தோழரும் காந்தி- இர்வின் ஒப்பந்தத்தின் போதே தூக்கிலிடப்பட்டனர். போராட்டம் காரணமாக 1930 முழுவதும் பேரவை கூடாதிருந்தது. 1931, டிஸம்பரில் 48- ஆம் பேரவை சர்தார் வல்லபபாய் தலைமையில் கராச்சியில் கூடிற்று. இது காந்தி- இர்வின் ஒப்பந்தத்தை ஏற்றது; சர்தார் பகவத் சிங்கு, ராஜகுரு, சுகதேவ் என்பவர்கள் வீரத்தைப் பாராட்டி அவர்கள் உயிர் இழக்க நேர்ந்தமைக்கு வருத்தம் தெரிவித்தது; பர்மா பிரிவினை முயற்சிகளைக் கண்டித்தது; எல்லைப்புற மலைநாட்டு மக்களை ஆட்சியாளர் தொல்லைப்படுத்தி அடக்குவதை எதிர்த்தது. ஆனால், இப்பேரவையின் மிக முக்கியமான தீர்மானம், குடிகளின் மூலாதார உரிமைகளைப் பற்றியதே. இவையே பின்னாட்களில் தனிமனிதன் அடிப்படை உரிமைகளாக வகுக்கப்பட்டுத் தனி முக்கியத்துவம் பெற்றன. வில்லிங்டன் பெருமகனார்: அடக்குமுறையின் திருவுருவம் இரண்டாவது வட்டமேசை மாநாடு முடியுமுன் இர்வின் பெருமகனார் ஆடசிக்காலம் முடிந்து, 1931, ஏப்பிரல், 17ல் வில்லிங்டன் பெருமகனார் ஆட்சிக்கு வந்திருந்தார். அவர் கர்ஸான் பெருமகனார் மரபில் வந்தவர். ‘அடக்குமுறையின் திருவுருவம்’ என்று அவரைக் கூறலாம். அவர் ஆட்சியில் பேரவை இயக்கமும் மக்கள் உரிமைகளும் உயிர்ப் போராட்டம் நடத்த வேண்டியதாயிற்று. காந்தியடிகள் இலண்டனிலிருந்து திரும்பு முன்னரே ஐக்கிய மாகாணத்தில் குடியானவர் பெருந்துயருக்காளாயிருந்தனர். அவர்கள் நடத்திவந்த வரி கொடா இயக்கத்தில் கலக்கச் சென்ற பண்டித ஜவஹர்லால் நேருவுக்கும் ஜனாப் ஷேர்வானிக்கும் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டன. அவர்கள் தடையை மீறிச் சிறைப்பட்டார்கள். எல்லைப்புற மாகாணத்தில் எல்லைப்புறக் காந்தி என்று வழங்கப்படும் கான் அப்துல் கபார்கானும் அவர் இளவல் டாக்டர் கான் சாகிபுவும் இதுபோலவே அடக்கு முறைக்காளாய்ச் சிறைப்பட்டிருந்தனர். காந்தியடிகள் ஆட்சி முதல்வருடன் தந்தியும் கடிதப் போக்குவரத்தும் தொடங்கிச் சமரஸம் பண்ண முயன்றும், வில்லிங்டன் தமது அடக்குமுறையி லிருந்து விலக இணங்கவில்லை. பேரவைக்குழு மீண்டும் சட்டமறுப்பைத் தொடங்க முடிவு செய்தது. ஆனால் 1932, ஜனவரி, 4ல் பேரவைக் குழுக்களும், பேரவையும் அது சார்ந்த நிலையங்களும் சட்ட விரோதமானவையாக்கப்பட்டன. காந்தியடிகள் உட்படத் தலைவர்களும் தொண்டர்களும் மீண்டும் சிறைக் கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டார்கள். இதன் பயனாக 1932, 1933 ஆகிய இரண்டாண்டுகளில் கடும்போராட்டம் நீடித்தது. பேரவை இவ்வாண்டுகளில் ஒழுங்காகக் கூடவில்லை. வட்ட மேசை மாநாட்டில் வகுப்புப் பிரச்சினை பற்றிப் பேரவையும் வகுப்புத் தலைவர்களும் யாதொரு முடிவுக்கும் வர முடியவில்லை. ஆகவே, பிரிட்டிஷ் முதல்வர் ராம்சே மாக்டனால்டு தாமே நடுத்தீர்ப்பு வழங்கினார். சிறையிலிருந்து கொண்டே இவ்வெட்கக்கேடான நிலைமைக்கு வருத்தம் தெரிவித்துக் காந்தியடிகள் 1932, ஆகஸ்டு, 17ல் சாகும்வரை உண்ணா நோன்பிருக்கத் தொடங்கினார். நாடெங்கும் அரசியல் போராட்டங்களால் ஏற்படும் புயலைவிட, இவ்வுண்ணா நோன்பால் பெருத்த புயல் எழுந்தது. ஆனால், இதன் பயன் கண் கண்டதாய் இருந்தது. மாநிலத்தின் எல்லாப் பகுதியிலும் காந்தியடிகளின் உயிர்காக்கும் ஆர்வத்தால் கோயில்கள் திறக்கப்பட்டன. டாக்டர் அம்பேத்கார் போன்றவர்களே தியாக உணர்ச்சியுடன் வகுப்புத் தீர்மானத்தைத் துறக்க முன் வந்தார்கள். இதன் பயனாக வகுப்புப் பிரதிநிதித்துவம் பற்றிய எரவாடா ஒப்பந்தம் சிறையிலேயே தலைவர்களால் உறுதி செய்யப்பட்டது. மே 8-ஆந் தேதி காந்தியடிகள் மீண்டும் ஆட்சியாளர் போக்கைக் கண்டித்து உண்ணாநோன்பிருக்கத் தொடங்கியபோது விடுதலை செய்யப்பட்டார். அவர் வெளி வந்ததும் 6 வாரம் சட்டமறுப்பை நிறுத்தி வைத்து, நாட்டு நிலைமையை ஆராய்ந்தார். விட்டல்பாய் பட்டேலும், சுபாஷ் சந்திர போஸும் சட்டமறுப்பை நிறுத்தியது தவறு என்று கண்டித்தனர். ஆனால், காந்தியடிகள் சட்ட மறுப்புக்கு மக்கள் முற்றிலும் தகுதி பெறவில்லை என்று கருதினார், எனினும், அவர் தனிப்பட்டவர். சட்ட மறுப்புக்கு இணங்கினால் தமது சபர்மதி இல்லம் தமது உயர்குறிக்கோளையும் கட்டுப்பாட்டையும் காப்பாற்ற முடியாதது கண்டு, அவர் அதைத் கலைத்து அதன் உடைமை முழுவதையும் தாழ்த்தப்பட்டவர் (ஹரிஜனம்) இயக்கத்துக்கு அளித்தார். தனிப்பட்டவர் சட்டமறுப்பு தனிப்பட்டவர் சட்ட மறுப்பு ஒழுங்காக நடந்து கொண்டிருந்தது. 1933, ஆகஸ்டு, முதல் தேதி காந்தியடிகள் சிறைப்பட்டார். ஆனால், உடல் நலம் கருதி ஆகஸ்டு 23-ஆந் தேதி பூனா மருத்துவமனையிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். எனினும், காந்தியடிகள் முறைப்படி தம் சிறைக்காலம் முடியும் ஆண்டு, அதாவது, 1934 வரை ஹரிஜன இயக்கம் தவிர வேறு எதிலும் தலையிடாமல் தம்மைத் தாமே கட்டுப்படுத்திக்கொண்டார். அத்தொண்டுக்காகவே அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். இவ்வாண்டு பழைய பேரவை இயக்கத் தலைவரான டாக்டர் அன்னி பெஸண்டு அம்மையார் செப்டெம்பர் 20- ஆம் தேதியிலும், சட்டசபையின் முன்னாள் வீரத் தலைவரான விட்டல்பாய் பட்டேல் செப்டெம்பர் 22-ஆந் தேதியிலும் காலமாயினர். 1934 பேரவை இயக்கத்தில் இருபெரு மாறுதல்கள் ஏற்பட்டன; தன்னரசுக் கட்சி இதுவரை சட்டசபை வேலைகளைக் கவனித்து வந்தது. இவ்வாண்டு முழு நிறை பேரவையில் பெருங்குழு சட்டசபை நுழைவை ஆதரித்ததனால், தன்னரசுக்கட்சி தனிக்கட்சியாயிராமல், பேரவையில் முழுதும் ஒன்றுபட்டுவிட்டது. ஆனால், இவ்வாண்டில் இடசாரியினர் எழுச்சியடைந்தனர். அவர்கள் பேரவை, சமதருமக் கட்சி என்ற பெயருடன் மே 17-ஆம் தேதி பாட்னாவில் தனி மாநாடு கூட்டினார்கள். இதுவரை ஜவஹர்லாவின் வலக்கையாயிருந்த இளைஞர் ஜெயப்பிரகாச நாராயணரே அதன் கட்சித் தலைவரானார். காந்தியடிகளின் தாழ்த்தப்பட்டவர் தொண்டுக்கு வைதிக இந்துக்கள் எதிர்ப்பு இவ்வாண்டில் சற்று வலுத்தது. பேரவை சில ஆண்டுகளாகக் கூட முடியாவிட்டாலும், 1932, 1933 ஆகிய ஆண்டுகளில் தில்லியிலும் கல்கத்தாவிலும் பல பிரதிநிதிகள் தனிப்படக் கூடிக் காலத்திற்கேற்ற தீர்மானங்கள் செய்திருந்தார்கள். 1933, மார்ச்சு, 31-ஆந் தேதி கல்கத்தாவில் பேரவை கூட எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தாலும், அரசியலார் தடுப்பு நடைமுறைகளும் அடக்குமுறைகளும் செய்து அதை நடவாதபடி முட்டுக்கட்டையிட்டனர். 1934, செப்டெம்பர், 25ல் கூடிய பேரவைக்குழு அடுத்துவரும் தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்தது. அவ்வாண்டு ராஜேன்திர பிரசாது தலைமையில் நடந்த நிறைபேரவை அதற்கான அரசியல் அரங்கக் குழு1 அமைத்தது. காந்தி ஊழியில் பேரவையின் வளர்ச்சி தளர்ச்சிகளைப் பின்வரும் பட்டியலிற் காணலாம்: எண் ஆண்டு பேரவை தலைவர் பிரதிநிதிகள் பார்வை வ.வே.க. செயலாளர்கள் தேதி நடத்தஇடம் தொகை யாளர் தலைவர் 36. 1920 கல்கத்தாஏஐஐஐ லாலா 6000 சக்கரவர்த்தி வி.ஜே. பட்டேல் செப் லஜபதிராய் ஆ.ஹஅன்ஸாரி பண்டித கோச ரண்நாத மிஸ்ரா, 37. 1920 டிஸ. நாகபுரி ஐஐ ஊ. விஜயராக 14,582 22,400 செத் ஜம்னா மோத்திலால் நேரு வாசாரியார் லால் பஜாஜ் ஊ.ராஜகோபாலா சாரியார் ஆ.ஹ.அன்ஸாரி, 38. 1921டிஸ. அகமதாபாது ஹக்கீம் அஜ்மல் 4726 வல்லபாய் மோத்திலால்நேரு பட்டேல் ராஜகோபாலாசாரியார் வி.ஜே.பட்டேல் ஏ.அரங்கசாமி 39. 1922 கயா தேசபந்துதாஸ் 3248 பிரிஞ்சிஷோர் மூஸம் அலி, டிஸ.26 பிரசாது வல்லபபாய் பட்டேல், ராஜேந்திர பிரஸாது. 40. 1923 தில்லி ஐஐ மௌலானா அபுல் 2000 டாக்டர் ஆ.ஹ. னடி செ.15 கலாம் ஆஸாது அன்ஸாரி எண் ஆண்டு பேரவை தலைவர் பிரதிநிதிகள் பார்வை வ.வே.க. செயலாளர்கள் தேதி நடத்தஇடம் தொகை யாளர் தலைவர் 41. 1923 காக்கிநாடா மௌலானா 6188 தேசபத்த ஜவஹர்லால்நேரு டிஸ 28 மகம்மது கொண்டா டாக்டர் எஸ்.டி.கிச்சலு வெங்கடப்பய்யா கங்காதரராவ், தேஷ்பாண்டே. டி.கோபால கிருஷ்ணன் 42. 1924 பெல்காம் மகாத்மாகாந்தி 1844 கங்காதரராவ் சாகிப் குரூஷி பரூஷா தேஷ்பாண்டே க்ஷ.கு. பரூஷா 43. 1926 கான்பூர் திருமதி 2688 டாக்டர் ஜவஹர்லால் நேரு டிஸ 26 நாயுடு முஸரிலால் ஆ.ஹ.அன்ஸாரி ஏ. அரங்கசாரிஅய்யங்கார் 44. 1927 கௌஹத்தி எஸ், சீனிவாச 3000 திரு.தருண ஆ.ஹ. அன்ஸாரி டிஸ.26 அய்யங்கார் தாமபூக்கள் ஏ.அரங்கசாமி அய்யங்கார் பண்டித சந்தானம் வி. ஜே. பட்டேல் எண் ஆண்டு பேரவை தலைவர் பிரதிநிதிகள் பார்வை வ.வே.க. செயலாளர்கள் தேதி நடத்தஇடம் தொகை யாளர் தலைவர் 45. 1925 சென்னைஏஐஐ ஆ.ஹ. அன்ஸாரி 2694 ஸி. முத்துரங்க ஜனாப் சாகிபு குரைஜி, டிஸ.26 முதலியார் பண்டித ஜவஹர்லால் நேரு 46. 1928 கல்கத்தா பண்டிதமோத்தி 5221 ஜே.எம்.சென் சுபாஷ் போஸ் டிஸ 29 லால் நேரு குப்தா ஆ.ஹ.அன்ஸாரி ஜவஹர்லால் நேரு 47. 1929 இலாகூர்ஏஐ பண்டித ஜவஹர் டாக்டர் சையு சையத் மகமது ஸ்ரீ பிரகாசா டிஸ 29 லால் நேரு தீன் கிச்சலு ஜெயராம்தாஸ் தௌலத்ராம். 48. 1931 கராச்சி ஐஐ சர்தார் வல்லப 3200 டாக்டர் சையதுமகம்மது மார்ச்29 பாய் பட்டேல் ஸோயித்ராம் ஜவஹர்லால் நேரு. 49. 1934 பம்பாய் ஏ பாபு ராஜேந்திர 80,000 மு.கு. நரிமன் கிருபளானி சையது மகமது அக் 26 பிராஸாது தாஸ், ஜெயராம் தௌலத்ராம். 10. விடுதலைக் கோபுரவாயில் பேரவையின் பொன் விழா ஒரு தனி மனிதன் அல்லது ஒரு நிலையத்தின் வாழ்வில் 25-ஆம் ஆண்டு நிறைவை வெள்ளி விழா என்றும், 50- ஆம் ஆண்டு நிறைவைப் பொன் விழா என்றும், 60-ஆம் ஆண்டு நிறைவை மணி விழா என்றும் வழங்குவது மரபு. அணிமைக் காலங்களில் இந்திய மரபை ஒட்டி 80-ஆம் ஆண்டு நிறைவை முத்து விழா என்றும் கொண்டாடத் தொடங்கி யிருக்கிறோம். மூன்று தலைமுறைகளாக இந்தியாவின் வாழ்நாளையே தன் வாழ்நாளாக்கிக் கொண்டிருப்பது இந்தியப் பேரவை. அதன் வெள்ளி விழா, கிட்டத்தட்டச் சூரத்துப் பேரவையை அடுத்து வந்துள்ளது. அப்போதே அது விடுதலை மாநகர் எல்லையை அணுகிவிட்டது என்னலாம்; அப்போதே அது விடுதலைவாயிற் கோபுரத்தின் வீறுமிக்க தோற்றத்தைக் கண்ணாரக் காணத் தொடங்கிவிட்டது. ஆனால், 1936ல் அது பொன்விழாக் கொண்டாடியபோது, விடுதலைக் கோயிலின் வெளிக்கோபுர வாயிலையே அஃது அணுகிவிட்டது என்னலாம். 1935லும் 1937லும் நடைபெற்ற தேர்தல்களின் பயனாக, அது அரசியலின் பொறுப்பேற்று ஆட்சி நடத்திய காலத்தைக் கோபுரத்தின் புறக்கூடமாகவும், 1942 முதல் 1947 வரை இரண்டாம் உலகப் போர்க்காலத்திலும் அதன் பின்னும் நடைபெற்ற விடுதலைப் பேச்சு வாதங்களை அதன் அகக் கூடமாகவும் நாம் கருதலாம். 1945-ஆம் ஆண்டுப் பேரவை மணி விழா நடத்தியபோது, விடுதலையின் வெள்ளொளி அதன்மீது ஏற்கெனவே சுடர் வீசியிருந்தது. விழாக் கண்டவர்களின் விழா மணம் மாறுமுன் அவர்கள் திடுமென விடுதலை விழாவையே கொண்டாடும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாயினார்கள். பேரவையின் முத்து விழா நாளுக்குள்ளாக இந்திய மாநில மக்களின் வாழ்வில் முழு நிறைவான இன்ப மலர்ச்சியும் சரிசம உரிமை மலர்ச்சியும் ஏற்பட்டுவிடும் என்று நாம் நம்பலாம். காந்தியடிகளின் ஆக்கப் பண்பு காந்தி ஊழி கடந்து காந்தியடிகளின் புகழொளி சுடரிட்டது. ஆனால், அது இந்திய அரசியல் எல்லை கடந்து, மக்கள் வாழ்வெல்லையிலும், உலக எல்லையிலும் ஒளி வீசத் தொடங்கிற்று. இந்திய எல்லையுள்ளும் அவர் காட்சி, பேரவையின் அரசியலியக்கம் கடந்து தேசீய வாழ்வில் கருத்துச் செலுத்தி, பல துணை இயக்கங்களை வளர்க்கத் தொடங்கிற்று. 1918லிருந்தே காந்தியடிகள் இந்தி இயக்கத்தில் கருத்துச் செலுத்தியிருந்தார். தென்னிந்தியாவில் இந்தியைப் பரப்பு வதற்காக அவர் தலைமையிலேயே தென்னிந்திய இந்திப் பிரசார சங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. 1920லிருந்து கதர்த் திட்டமும் ஒழுங்கமைக்கப் பட்டது. அதை நடத்துவதற்காக 1925 செப்டெம்பரில் காந்தியடிகள் தலைமையிலேயே இந்திய மாநில நூற்போர் சங்கம் நிறுவப்பட்டிருந்தது. 1934 முதல் காந்தியடிகளுக்கு அரசியல் வேலைகளிலிருந்து ஓய்வு கிட்டிற்று. அவர் மீண்டும் ஆக்கப் பணிகளைப் பெருக்கத் திட்டமிட்டார். பேரவையின் அரசியல் இயக்கத் தொடர்பு இவ்வாக்க வேலைகளுக்குக் குந்தகமாயிருக்கக் கூடும் என்று அவர் கருதினார். எனவே, அவர் பேரவையில் நான்கணா உறுப்பினர் நிலையைக்கூடத் துறந்து, ஆக்கத் துறையில் முழுதும் ஈடுபட்டார். இவ்வாண்டு காந்தியடிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கென ஒரு முழு ஆண்டுப் பணி செய்வதென உறுதி கொண்டார். அது வகையில் சிந்தனையாளரை ஊக்குவதற்காக அவர் ‘ஹரிஜன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கியதுடன் பிர்லா, தக்கர் முதலிய பேரவைச் சார்பற்றவர்கள் ஒத்துழைப்புடன் ஹரிஜன சேவா சங்கம் ஒன்றை நிறுவினார். அத்துடன் இந்திய மாநில சிற்றூர்ச் சீரமைப்புச் சங்கம்1* ஒன்றும் நிறுவப்பட்டது. இது இந்தியாவின் கைத்தொழில் வளத்தைப் பெருக்குவதுடன் நாட்டின் பெரும்பான்மை மக்களான குடியானவர்களுக்கு வளமூட்டும் வகையில் குடிசைத் தொழிலில் கவனம் செலுத்தியது. பொருளியல் அறிஞரும் காந்தியடிகளின் அணுக்க மாணவருமான ஜே.ஸி.குமரப்பாவின் தலைமையில் அது 1934, டிசம்பர், 14-ஆந் தேதி திட்டம் தீட்டப்பட்டு, 1935 அக்டோபரில் நிறுவப்பட்டது. பிற்காலங்களில் காந்தியடிகள் கல்வி, ஒழுக்க முறை ஆகியவற்றிலும் கருத்துச் செலுத்தி வார்தா கல்வித் திட்டம், காந்திய சேவா சங்கம் முதலியவற்றை இயக்கி வந்துள்ளார். 1919-ஆம் ஆண்டுச் சீர்திருத்தங்களுக்குப் பின் இந்திய அரசியலமைப்பில் ஏற்பட்ட அடுத்த பெரு மாறுதல் 1935-ஆம் ஆண்டின் இந்திய அரசியற் சட்டமேயாகும். அதில் இரு பகுதிகள் அமைந்திருந்தன: ஒன்று, நடு அமைப்பாகிய கூட்டுறவரசு. இதில் இந்திய மன்னர் அரசுகளும் பிரிட்டிஷ் இந்திய மாகாண அரசுகளும் ஒருங்கே கலந்து கொள்ளும்படி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இத்துடன் வெளி நாட்டுறவு, பாதுகாப்பு, மலைவாணர் பகுதிகளின் ஆட்சி ஆகிய மூன்றும் இந்திய ஆட்சித் தலைவர் தனி உரிமையாக்கப்பட்டிருந்தன. ஆகவே, கூட்டுறவாட்சி பொறுப்பாட்சியாக அமையவில்லை; இரட்டை யாட்சியாகவே இருந்தது. சட்டத்தின் மற்றப்பகுதி மாகாணத் தன்னாட்சியைச் சார்ந்தது. இதிலும் நடுவரசுக்குச் செய்தி இணைப்பு, போக்குவரத்து, வருமான வரித்துறை ஆகியவை ஒதுக்கப் பட்டிருந்தன. கூட்டுறவரசின் அமைப்புக்குப் பேரவையும் பிற கட்சிகளும் இணங்கி வரும்வரை, முதற் பகுதி செயல் துறைப்படுத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. மாகாணத் தன்னாட்சி மட்டுமே தொடங்கி வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் மாகாண ஆட்சியிலும், அமைச்சர்கள் ஆட்சி அமைவு பெறாத போது மாகாண ஆட்சி முதல்வரே நேரடியாக ஆட்சி நடத்தும் உரிமை இச்சட்டத்தின் 93-ஆம் பிரிவினால் தரப்பட்டிருந்தது. தொகுதிகள் வகையில் 1919 சட்டத்தைப் போலவே பொதுத் தொகுதிகளும் தாழ்த்தப்பட்டவருக்கான ஒதுக்கப்பட்ட பொதுத் தொகுதிகளும், முஸ்லிம்கள், ஆங்கிலோ இந்தியர் ஆகியவர்களுக் கான தனித்தொகுதிகளும் இருந்தன. மீண்டும் சட்ட சபைப் பிரச்சினை ஐம்பதாவது பேரவை 1936ல் இலட்சுமணபுரியில் பண்டித ஜவஹர்லால் நேருவின் தலைமையில் கூடிற்று. ஜவஹர்லால் இப்போது இரண்டாவது தடவையாகத் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். விடுதலை இயக்கப் போராட்ட மரபுப்படி மாநில அளவில் கூட்டப்பட்ட கடைசிப் பேரவை இதுவாகவே அமைந்தது. ஏனென்றால், அடுத்த பேரவைக் காலத்திற்குள் காந்தியடிகளின் புதிய சிற்றூர்ப் பேரவைத் திட்டம் வகுக்கப்பட்டுவிட்டது. இச்சமயம் சுபாஷ் போஸ் சிறையி லிருந்தார். அவர் கைது செய்யப்பட்டதைப் பேரவை கண்டித்த துடன், முழு விடுதலை பெறும்வரை போராட்டம் நடத்துவ தென்றும், ஏகாதிபத்தியப் போர் எதிலும் கலந்து கொள்வ தில்லை என்றும் தீர்மானித்தது. இச்சமயம் அபஸீனியா மீது இத்தாலி நேர்மையற்ற முறையில் தாக்குதல் தொடங்கிப் போர் நடந்து கொண்டிருந்தது. பேரவை அபிஸீனியாவுக்கு அனுதாபம் தெரிவித்தது. நடுச்சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் பேரவைக்குப் பெருவெற்றி கிடைத்திருந்தது. பேரவை மாகாணச் சட்ட சபைத் தேர்தல்களுக்கும் தன் பிரதிநிதிகளை நிற்க வைக்க முடிவு செய்தது. வெற்றி பெற்ற பின் பதவி ஏற்பதா வேண்டாவா என்பதில் இன்னும் கருத்து வேறுபாடு இருந்ததால், அது வகையில் எத்தகைய முடிவும் செய்யப்படவில்லை. பொது மக்களோடு நேரடித் தொடர்பு வைத்துக்கொள்ள ஒரு குழு அமர்த்தப் பட்டது. காந்தி சேவா சங்கம் தொடங்கியது. இவ்வாண்டிலேயே. இந்த ஆண்டு முதல் காந்தியடிகள் சிற்றூர்த் தொண்டில் இறங்கினார். அதற்கேற்ப அவரும், சேவா கிராமம் என்ற ஊரில் வாழத் தொடங்கினார். இது முதல் பேரவையும் சிற்றூர் களிலேயே நடக்கத் தொடங்கிற்று. முதல் சிற்றூர்ப் பேரவை, 1937ல் ஃவெய்ஸ்பூரில் கூடிற்று. தமிழகத்தில் வ.உ.சிதம்பரனார் அரசியல் தொண்டிலிருந்து ஒருமிகத் தீவிரத் தமிழ்த் தொண்டிலும் சமூக சீர்திருத்தத் தொண்டிலுமே நாட்களைக் கழித்து வந்தார். ஆனால், பேரவையிலிருந்து விலகியும் அடிக்கடி அதற்குத் தேவைப்பட்ட போது காந்தியடிகள் வழிகாட்டி வந்தது போல அவர் அவ்வப்போது தமிழகப் பேரவைக் கூட்டங்களுக்கும் வந்து இளந்தலைவர்களை ஊக்கி வந்தார். 1936ல் அவர் நீண்ட தேசத் தொண்டினிடையே விடுதலை இந்தியாவைப் பற்றிக் கனவு கண்ட வண்ணமே உயிர் நீத்தார். ஃவெய்ஸ்பூர் பேரவை அவர் மறைவுக்கும், அதே ஆண்டில் இயற்கை எய்திய டாக்டர் எம்.ஏ. அன்ஸாரி, அப்பாஸ் தயாப்ஜி ஆகியவர்கள் மறைவுக்கும் வருத்தம் தெரிவித்தது. பர்மாப் பிரிவினையைத் தொடக்கக் காலப் பேரவை கோரியிருந்தது. பிற்காலத்தில் இது அதை எதிர்த்தது. அதன் காரணம் இப்பேரவையில் பர்மா பிரிவினையடைந்தது பற்றிய கண்டனத்தில் விளக்கப்பட்டது. ‘பர்மா பிரிவினை’ இந்தியர் நலங்களை நாடியோ, பர்மியர் நலங்களை நாடியோ செய்யப்படவில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நலன் நாடியே செய்யப்பட்டது’ என்பது எடுத்துக் காட்டப்பட்டது. தேர்தல் வெற்றிகள்: பேரவைக் கட்சியின் ஆட்சி 1937 தேர்தலில் எடுத்த எடுப்பிலேயே பேரவைக்குப் பெருவெற்றிகள் கிடைத்தன. 11 மாகாணங்களுள் 8ல் அது பெரும்பான்மைக் கட்சி ஆயிற்று. வழக்கம்போலச் சென்னை அத்தேர்தல் வகையிலும் இந்தியாவுக்கு முன்னணியில் நின்று வழி காட்டிற்று. ஃவெய்ஸ்பூர் பேரவை இவ்வெற்றியைப் பாராட்டியதுடன், பதவி ஏற்பதா, வேண்டாவா என்ற முந்திய ஆண்டுப் பிரச்சினையிலும் ஒரு முடிவு தெரிவித்தது. ‘பதவி ஏற்கலாம்’, என்பதற்கே பேரளவு ஆதரவு ஏற்பட்டது. அதன்படி இவ்வாண்டிலேயே பல தயக்கங்களுக்கும் தவக்கங்களுக்கு மிடையே, பேரவை பதவி ஏற்று, அமைச்சவைகளை நிறுவிற்று. காந்தியடிகள் பதவி ஏற்பதற்கு முன் மாகாண ஆட்சித் தலைவர்களிடமிருந்து நடைமுறையாட்சியில் அவர்கள் தலையிடுவதில்லை என்ற உறுதிமொழி கோரியிருந்தார். இதுவே சில மாதத் தயக்க நிலைக்குக் காரணமாயிருந்தது. இறுதியில் சென்னை ஆட்சி முதல்வர், சென்னைச் சட்டசபைப் பேரவைக் கட்சித் தலைவரான சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியாரிடம் இவ்வுறுதி மொழி தந்தார். சென்னையில் ராஜகோபாலசாரி யாரின் அமைச்சவை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மற்ற மாகாணங்களிலும் பேரவைக் கட்சி ஆட்சிகள் ஏற்பட்டன. தொடக்கத்தில் 6 மாகாணங்களிலும் நாளடைவில் பின்னும் இரண்டு மாகாணங்களிலும் பேரவை ஆட்சியைக் கைக்கொண்டது. ராஜேந்திரப் பிரசாது- ஜின்னா பேச்சுக்கள் முழுநிறை விடுதலையே பேரவையின் குறிக்கோள் என்பது 1929-ஆம் ஆண்டு பேரவையிலேயே அறிவிக்கப்பட்டிருந்தது. முன் பொறுப்பாட்சிக் குறிக்கோள் வகையில் முஸ்லிம் சங்கம் பேரவையைப் பின்பற்றியது போலவே, 1938-ஆம் ஆண்டிலும் இலட்சுமணபுரியிற் கூடிய முஸ்லிம் சங்கக் கூட்டம் முழுநிறை விடுதலையைத் தன் அரசியல் குறிக்கோளாக ஏற்றது. இதையடுத்து இந்துப் பேரவையும் இக்குறிக்கோளை ஏற்றது. பேரவைக்கும் முஸ்லிம் சங்கத்துக்கும் இதுவரை அரசியல் காரணமாக வேற்றுமை மிகுதி இல்லை என்பதை இது நன்கு எடுத்துக் காட்டுகிறது. அது மட்டுமன்றி, வகுப்புத் தீர்மான வகையிலும் முஸ்லீம் சங்கம் இன்னும் பேரவையைத் தெளிவாக எதிர்க்கவில்லை. ஆயினும், 1922 முதலே வகுப்புவாதம் நாட்டில் பெருகி வந்ததற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அவ்வாண்டு முதல், வகுப்புக் கலவரங்கள் தோன்றிப் படிப்படியாய் வளர்ந்தன. முதலில் சமயவெறியர்களிடம் தோன்றிய வேறுபாடு சமூகத்திலும், சமூகங்கடந்து அரசியலிலும் புகுந்து வந்தது. பேரவை இதில் நடுவு நிலையே வகித்தாலும், இவ்வகுப்பு வாதம் மக்களிடையே வளர்ந்து இந்து முஸ்லிம் ஆகிய இருவகுப்புச் சபைகளையும் மெள்ள மெள்ள வளர்த்து வந்தது. இங்ஙனம் வகுப்புவாதத்தை வளர்க்கவிடப் பேரவைத் தலைவர்கள் விரும்பவில்லை. 1935ல் பேரவைத் தலைவராயிருந்த ராஜேந்திரப் பிரசாது அவ்வாண்டில் இதுவகையில் முஸ்லிம் சங்க இயக்கத் தலைவரான ஜின்னாவுடன் கலந்து பேசினார். ஆனால், எத்தகைய சமரச முடிவும் ஏற்பட முடியாது போயிற்று. 1937ல் தலைவர் ஜவஹர்லாலின் தலைமையுரையில் இதன் எதிரொலியைக் காண்கிறோம்: “நாம் வகுப்புவாதத் தலைவர்களோடு சமரசம் பேசுவதிலும் ஒப்பந்தம் செய்வதிலும் காலத்தைக் கழித்தோமே அல்லாது இத்தலைவர்களுக்குப் பின்னாலிருக்கும் மக்களைக் கவனித்தோமில்லை. வகுப்புத் தலைவர்களுடன் பேசி ஒப்பந்தம் காண எண்ணுவது பயனற்ற கொள்கை.” என்று அவர் முடிவு கட்டினார். ஆயினும், இதுவே முடிந்த முடிபாய்விடவில்லை. மீண்டும் ஜின்னாவுடன் அடிக்கடி சமரஸப் பேச்சுக்கள் ஏற்பட்டதுண்டு. ஆனால், 1935-ஆம் ஆண்டு முடிவுக்கப்பால், எத்தகைய புது முடிபும் ஏற்பட முடியவில்லை. போஸ் தலைமை காந்தியடிகளுக்கு அடுத்தபடியாகப் பேரவை இயக்கத்தில் பொது மக்களிடையே செல்வாக்கும் புகழும் பெற்ற தலைவர் பண்டித ஜவஹர்லால் நேருவேயாவர். காந்தியூழியிலேயே அவர் காந்தியடிகளால் தம் மரபுரிமையாளர் என்று குறிக்கப்பட்டிருந் தார். ஆயினும், 1938க்கும் 1942க்கும் இடைப்பட்ட காலத்தில் பண்டித ஜவஹர்லால் புகழைத் தாண்டி அரும்பெருங்காரியங் களாற்றி, இந்தியாவுக்குப் பெரும்புகழ் தந்தவர், தலைவர் பெருந்தகை (நேதாஜி) என்ற சிறப்புப் பெயர் பெற்ற சுபாஷ் சந்திர போஸ். இந்த நான்காண்டுகளையும் நாம் பேரவை இயக்க வரலாற்றில் தனிப்படத் ‘தலைவர் பெருந்தகை போஸ் ஊழி’ என்னலாம். அவ்வரலாறு பேரவையின் வீர காவியத்துக்குள் ஒரு தனி வீர காவியமாய் இலங்கவல்லது. இந்த நான்காண்டுகளுக்கிடையில் அவர் வாழ்ந்த வாழ்க்கை தென்கிழக்கு ஆசியாவின் அலெக்ஸாண்டர் அல்லது ஸீஸர் அல்லது நெப்போலியன் வாழ்க்கை என்னலாம். பாரதக் கதையிலிருந்து உவமை எடுத்துக் கூறுவதானால், காந்தியடிகள் இந்திய வரலாற்றில் ஒரு கண்ணனாகவும், ஜவஹர் ஓர் அருச்சுனனாகவும் காட்சியளிக்கிறார்கள் என்று கூறத்தகும். அக்காவியத்தில் பதினான்காம் நாளைய பாரதப் போரை ஒரு முதல்தர நாடகமாக்கி, ‘மறைந்த போர்வாள் அபிமன்னன்’ என்று தலைவர் பெருந்தகையான போஸைக் குறிப்பிடலாம். இந்தியாவின் வீரத்தியாகிகளிடையே முதன்மை வாய்ந்தவருள்ளும் முன் வரிசையில் இடம்பெறத்தக்கவர் போஸ். அவர் இளமாணவருலகின் உச்சக் கனவுகளுக்கு இலக்கான ஐ.ஸி.எஸ். தேர்வில் தேறிப் பட்டம்பெறும் தறுவாயில், தேசிய ஆர்வத்தால் அதைத் துறந்து இந்தியா வந்து, ஒத்துழையாமை இயக்கத்தில் குதித்தவர். அவர் கல்லூரி ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர், சட்டசபை அங்கத்தினர், கல்கத்தா நகர்ப் பேரவை ஆட்சிக் குழுவினர், நகரவைத் தலைவர், தொண்டர் படைத் தலைவர் எனப் பல துறைகளிலும் தொண்டாற்றியவர். பல தடவை ஓயா உடல் நலிவிடையேயும் அவர் பொதுக்கூட்டங் களிலும் போராட்டங்களிலும் கலந்து இன்னல்களுக்கும் நீடித்த சிறைத் தண்டனைகளுக்கும் ஆளாகியவர். வங்கப் பெருந்தலைவர் ஸி.ஆர். தாஸுக்குப் பின் அவருடைய உரிமை மரபினராய் வங்கத்தின் உயிர் நாடியாய் அவர் விளங்கினார். 1929-30ல் பண்டித ஜவஹர்லாலுடன் நின்று குடியேற்ற நிலைவாதிகளனைவரையும் எதிர்த்து முழுநிறை விடுதலை உரிமைக்குப் போராடி போஸ் பேரளவு வெற்றி பெற்றார். 1932லிருந்து அவர் இடையறாச் சிறை வாழ்வு வாழ்ந்து, உடல் நலிவு காரணமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்தார். வெளிநாட்டில் வீரப் பெரியார் வி.ஜே. பட்டேலுடன் இந்திய விடுதலைக்கான வெளி நாட்டியக்கங்களை ஒருங்கமைத்து, அவர் இறந்தபின் அவர் பின்னுரிமையாளரும் ஆயினார். 1938ல் அவர் வெளி- நாட்டிலிருக்கும் போதே பேரவை ஒரு மனமாக அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. ஹரிபுராப் பேரவை பேரவை சிற்றூர்ப் பேரவையாக்கப்பட்டபின் போஸ் தலைமையில் நடந்த 1938-ஆம் ஆண்டின் ஹரிபுராப் பேரவை, 1939-ஆம் ஆண்டில் திரிபுரிப் பேரவை ஆகியவற்றைப் போல மக்கள் உணர்ச்சியலைகளைப் பொங்கியெழச் செய்த மாநாடுகள் வேறு இல்லை என்னலாம். மிக்க இளமையிலேயே முதல் தரத் தலைவர்களும் போற்றும் போஸின் தீவிரத் தியாக வாழ்வும், தூய ஆன்மிக வாழ்வும், திறமையும் அனைவர் கருத்தையு கவர்ந்தன. அவர் தலைமையுரை, பேரவையின் எழுச்சிக்காலத் தலைமையுரைகளிடையே குறிப்பிடத்தக்கதாய் அமைந்தது. அது எடுத்த எடுப்பிலேயே ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரலாய், பேரவை இது வரை கேட்டுப் பழகிய முழக்கங்களை எல்லாம் தாண்டிய சிங்க முழக்கமாய் இருந்தது. “பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றியே உலகப் பேரரசுகள் யாவும் இது வரை வாழ்ந்து வந்துள்ளன. இது யாவரும் அறிந்த உண்மை. ஆனால், பிரிட்டனைப் போல அதை அவ்வளவு சூழ்ச்சியுடனும், அவ்வளவு உணர்ச்சியற்ற முறையிலும், கண்டிப்பான முறையிலும் கையாண்ட மற்றொரு பேரரசை உலகவரலாற்றில் காண முடியாது” என்பது அவர் தலைமையுரையின் முதல் வாசகம். அதன் இறுதிவாசகம், “இந்திய விடுதலைக்குக் காந்தியடிகள் இன்றியமையாதவர். மனித சமூகத்திற்கே காந்தியடிகள் இன்றியமையாதவர். இந்தியா விடுதலை பெற்றது என்றால், ‘மனித சமூகமே காப்பாற்றப் பட்டது.’ என்பதுதான் பொருள். ஆகவே, காந்தியடிகள் நெடுநாள் வாழ வேண்டும் என்று நாம் வாழ்த்தக் கடமைப் பட்டுள்ளோம்!” என்று இந்தியாவின் தந்தையாரைச் சுட்டிக் காட்டிற்று. ஹரிபுராப் பேரவை 1935-ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டத்தின் கூட்டுறவரசுப் பகுதியை நடைமுறைக்கு வாராதபடி தடுத்தழிக்க விரும்பிற்று, மாகாணங்களிலும் தடுத்தழிக்க விரும்பிற்று, மாகாணங்களிலும் நடுவரசிலும் இடம் பெற்ற பேரவை அமைச்சர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் அந்நடவடிக்கையில் முனையும்படி அது கேட்டுக் கொண்டது. மேலும் அப்பேரவையிலேயே காந்தியடிகளின் அடிப்படைக் கல்வித் திட்டத்தை ஒழுங்கமைத்து உருவாக்க இந்திய மாநிலக் கல்விக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. மன்னர் நாட்டு அரசியலில் பேரவை கலக்கக் கூடாதானாலும், அப்பகுதியிலுள்ள மக்களின் போராட்டங்களுக்குப் பேரவை எப்போதும் தன் ஆதரவை அளிக்கும் என்று உறுதி கூறப்பட்டது. குடியானவர் இயக்கம், கடல் கடந்த இந்தியர் நிலை, போர் நிலவரம் ஆகியவற்றைப் பற்றி அப்பேரவை அலசி ஆராய்ந்தது. ஏகாதிபத்தியம் ஈடுபடும் போர்களில் இந்தியா கலக்காமல் விடுதலை பெறும்வரை எதிர்க்கும் என்ற ஒரு துணிகரத் தீர்மானத்தைத் தலைவர் போஸ் கொண்டு வர விரும்பினார். ஆனால், அது நிறைவேறவில்லை. திரிபுரித் தலைவரின் அம்புப் படுக்கை திரிபுரிப் பேரவையின் தலைமைத் தேர்வு பேரவையின் வரலாற்றில் முன் என்றும் ஏற்பட்டிராத ஒரு நிலைமையை உண்டு பண்ணிற்று. 1929ல் முழு நிறை விடுதலைத் தீர்மான வகையில் ஏற்பட்ட பிளவு முற்கால மிதவாதிகள் தீவிரவாதிகள் பிளவு போன்றதே. ஆனால், 1929ல் அது மிதவாதிகள் தீவிரவாதிகள் என்ற பெயர்களை விடுத்து, அரசியல் மொழியில் வலசாரி இடசாரி என்று வழங்கப்பட்டது. வலசாரியினர் காந்தியடிகளின் புகழ் பெற்ற தலைமையாற்றலைப் பயன்படுத்தினர். இடசாரி களின் சார்பில் போஸ் அதனை எதிர்த்தார். பேரவையின் வரலாற்றில் முதல் தடவையாகத் தலைவர் தேர்தல் பிரசாரம். சட்டசபைத் தேர்தல் பிரசாரம் போன்று நடைபெற்றது. பேரவையின் மொழிச் சீட்டு அடிப்படையுறுப்பினர் எண்ணிக்கையைப் பொறுத்ததாயிருந்தது. வங்கமும் தமிழகமுமே மிகப் பெரும்பான்மையான பேரவையுறுப்பினர்களையுடைய- வையாயிருந்தன. வங்கத்தின் முடிசூடா மன்னராயும் இந்திய இளைஞர்களின் வீர தீரத் தலைவராயும் விளங்கிய போஸ், வங்கத்துடன் தமிழகத்தின் மொழிச் சீட்டுக்களைப் பெரும்பான்மையாகப் பெற்றதால் தேர்தலில் வெற்றி பெற்றுப் பேரவைத் தலைவரானார். தலைவர் தேர்தல் ஒரு போராட்டமாயிருந்ததென்றால், போஸின் தலைமைப் பதவி போர்க்களத்தின் அம்புப் படுக்கையாகவே அமைந்தது என்னலாம். காந்தியடிகளுடன் அடிப்படைப் போராட்டத்தில் போஸும் இடசாரியும் மாறுபடவில்லையாயினும், முறைகளில் இடசாரியினர் பொதுவாகவும் போஸ் சிறப்பாகவும் மாறுபட்டிருந்தனர். காந்தியடிகளால் இம்மாறுபாட்டை வலியுறுத்தாமல் இருக்க முடியவில்லை. காந்தியடிகளின் தனிப்பட்ட செல்வாக்கு இங்ஙனம் வலசாரியுடன் சேர்ந்து தலைவர் நிலையை இக்கட்டுக்கு உள்ளாக்கிற்று. தலைவர் போஸ் இச்சமயம் நோய்வாய்ப்பட்டு நலிவுற்றிருந்தார். அவரை எடுப்புக் கட்டிலில் வைத்தே மாநாட்டுப் பந்தலுக்கு எடுத்து வரவேண்டியிருந்தது. அத்தறுவாயிலும் அவர் வீர உரையாற்றினார். எதிர்ப்புகளைச் சமாளித்துப் பிறர் உதவியின்றிப் பேரவைத் தொண்டுகளைத் தாமே செய்தார். அச்சமயம் போஸ் காட்டிய பொறுமையும் உழைப்பும் மனித ஆற்றலின் எல்லைக்கு முற்றிலும் மேற்பட்டவையாகவே இருந்தன. அவர் நிலை, கல்லையும் கனிய வைக்கத் தக்கதாயிருந்தது. ஆயினும், அரசியலில் ஏற்பட்ட பிளவு பெரிதாகவே வளர்ந்தது. அது உணர்ச்சி நிலைகடந்த அடிப்படை முறை வேறுபாடா யிருந்தது. இந்நிலையில் தலைமைப் பணியை ஆண்டு முழுவதும் போஸ் நீடித்து ஆற்ற முடியாமல், அதனைத் துறக்க வேண்டிய தாயிற்று. அவரது இடத்தில் தற்காலிகத் தலைவராய்க் காந்தியடிகளின் நம்பிக்கைக்குப் பெரிதும் பாத்திரமான ராஜேந்திரப் பிரசாது அமர்வு பெற்றார். தலைவர் போஸ் அம்புப் படுக்கையிலிருந்து போராடி வரும் சமயத்தில் காந்தியடிகள் ராஜ்கோட்டில் மன்னர் அடக்கு முறைகளை எதிர்த்துச் சாகும் வரை உண்ணா நோன்பு தொடங்கியிருந்தார். நாட்டு மன்னர் வகையில் பேரவை இயக்கத்தின் சார்பில் அவர் எடுத்த முதல் தீவிர நடவடிக்கை இதுவே. ராஜ்கோட்டு ஒரு சின்னஞ்சிறிய பகுதியானாலும், காந்தியடிகள் உண்ணா நோன்பால் அதன் செய்தி மாநில ஆட்சியாளர் கவனத்துக்குரியதாயிற்று. மாநில ஆட்சித் தலைவர், கூட்டுறவு நடு அரசின் நீதிபதியான ‘ஸர் மாரிஸ்குவைய’ரை இது வகையில் தீர்ப்புக்காணும்படி நடுவராக அமர்த்தினார். தீர்ப்பு, காந்தியடிகளுக்குச் சாதகமாகவே இருந்தது. ஆயினும், காந்தியடிகள் தமக்கு இயல்பான அன்பு முறையில் தீர்ப்பை அப்படியே ஏற்கவில்லை. அவர் மன்னரின் நல்லெண்ணக் குழுவுக்கும் சமரஸத்துக்குமே அதை ஒப்படைத்து இரட்டிப்பு வெற்றி கண்டார். பேரவையில் இரண்டாண்டு தலைவராயிருந்து, இரண்டாவது ஆண்டு நடுவில் அப்பதவியைத் துறந்த போஸ், 1939 மே 21-ந் தேதி தம் ஏகாதிபத்தியத் தீவிர எதிர்ப்பு வேலையைத் தொடங்கித் தேசிய முன்னணி என்ற (குடிசறயசன க்ஷடடிஉம) ஒரு புதிய கட்சியை நிறுவினார்: மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து அதற்குக் கிளைகளும் அமைத்தார். பேரவையும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, மூன்றாண்டுகள் அவர் மீண்டும் பேரவையில் பதவி வகிக்கக்கூடாதெனத் தடை விதித்தது. பேரவை ஆட்சி: உலகப்போர் இவ்வாண்டு செப்டெம்பர் 3-ஆந் தேதி இரண்டாம் உலகப் போர் மூண்டது. ‘போர் நோக்கங்கள் என்ன?’ என்று பேரவைத் தலைவர்கள் ஆட்சியாளரைக் கேட்டார்கள். அடிமைத் தளையிற் சிக்கிய இந்தியாவைப் போன்ற எல்லா நாடுகளின் மக்கள் விடுதலைக்காகவே போர் நடப்பதனால்தான் இந்தியா போரில் கலப்பதற்குப் பேரவை ஆதரவு தர முடியும். ஆட்சியாளர் இந்நோக்கத்தைத் தெளிவுபடுத்தாமலே, எவர் விருப்பத்தையும் சட்டை செய்யாமல், செயலாற்றினர். அவர்கள் எதேச்சாதிகாரத் தால் இந்தியாவைப் போரில் ஈடுபடுத்தினார்கள். எனவே, அக்டோபர் 22-ஆம் தேதி பேரவைச் செயற்குழு கூடிப் பேரவைக் கட்சிச் சார்பில் ஆட்சி செய்த அமைச்சவைகள் அனைத்தையும் பதவி துறக்கும்படி கோரிற்று. அதன்படி நவம்பர் 8-ஆந் தேதிக்குள் எல்லாப் பேரவைக் கட்சி அமைச்சவைகளும் பதவியிலிருந்து விலகின. 1935 இந்திய அரசியல் சட்டத்தின் மாகாணத் தன்னாட்சிப் பகுதியின் கீழ்ப் பேரவை இரண்டாண்டுகள் ஆட்சி நடத்தியிருந்தது. அதற்குள் அது காட்டிய அரசியல் நேர்மையும் திறமையும் பிரிட்டிஷ் ஆட்சியாளராலேயே போற்றப்படத் தக்கனவாயிருந்தன. சென்னையில் சக்கரவர்த்தி ராஜகோபாலா சாரியார் தலைமையில் நடைபெற்ற ஆட்சியே திறமைக்கும், நேர்மைக்கும், கட்டுப்பாட்டுக்கும், நாட்டு நலங்களுக்கான திட்டங்களும் முன்னணிப்புகழ் நிறுவிற்று. பதவி ஏற்ற முதல் ஆண்டிலேயே சேலம் மாவட்டத்தில் குடிவிலக்குத் தொடங்கி வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு அது பின்னும் இரண்டு மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. சென்னைக்கு அடுத்தபடி பம்பாய், பேரவைக் கொள்கைகளை நிறைவேற்றுவதில் முனைந்து வழி காட்டிற்று. பதவியேற்ற முதலாண்டிலேயே அங்கே கோயில் உரிமைச் சட்டம் நிறைவேறிற்று. திருவாங்கூரில் இதற்கு முன்னமே மன்னர் விளம்பர மூலம் கோயில்கள் திறந்து விடப்பட்டிருந்தாலும், பிரிட்டிஷ் இந்தியாவில் பம்பாயே இத்துறையில் மற்ற மாகாணங்களைத் தூண்டிற்று. சென்னையில் வைதிகர்பிடி பலமாயிருந்ததனால், இவ்வகையில் பேரவைத் தலைவர்கள் படிப்படியான மிதவாத நடவடிக்கைகளையே மேற்கொண்டார்கள். சட்டத்தின் மூலம் கோயிலுரிமை நிறுவுவது வைதிகர்களாகிய எதிரிகளைப் புண்படுத்துவதும் அன்பறத்துக்கு (அஹிம்ஸைக்கு) மாறானதும் ஆகும் என்பது காந்தியடிகளின் கொள்கை. சென்னைத் தலைவர் இதனையே பின்பற்றினர். ஆயினும், குருவாயூரில் பொது மக்கள் வாக்காலும் மதுரையில் கோயில் பொறுப்பாளர் வாக்காலும் கோயில் நுழைவுரிமைக்கு ஆதரவு தேடப்பட்டு, அக்கோயில்கள் முதலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறக்கப்பட்டன. பம்பாய் அரசியல் சென்னையைப் பின்பற்றி 1939 ஆகஷ்டு 12 முதல் குடிவிலக்கைப் பம்பாய் நகரத்தில் நடைமுறைக்குக் கொண்டு வந்தது. சென்னை முன்னணியில் நின்ற இன்னொரு திட்டம் இந்தி மொழித் திட்டம் ஆகும். இது 1938ல் நூறு பள்ளிகளிலும், 1939ல் இன்னும் 100 பள்ளிகளிலும் முதல் மூன்று படிவங்களில் கட்டாயப்பாடமாக்கப்பட்டது. இதை எதிர்த்துப் பேரவைக்கு வெளியேயிருந்த பல மொழியியக்கத் தலைவர்கள் இந்தி எதிர்ப்பியக்கம் நடத்தினார்கள். அதில் நேர்மைக் கட்சி, தன்மான இயக்கத்தவர், தமிழ்ப் புலவர் ஆகியவருடன் ஒரு சில பேரவை இயக்க அன்பர்களும் பங்கு கொண்டிருந்தனர். 1,000க்கு மேற்பட்ட ஆடவரும், பெண்டிரும் சிறைத் தண்டனைக்கு ஆளாயினர். தாலமுத்து, நடராசன் என்ற இரு இளைஞர் சிறையிலிருந்து அல்லற்பட்டு மாண்டனர். வங்கத்திலும் நடு மாகாணத்திலும், பொதுவாக முஸ்லிம்களிடமும் இந்திக்கு ஓரளவு எதிர்ப்புணர்ச்சி இருந்த போதிலும், இந்திக்கு எதிராகப் பேரளவான இயக்கம் நடைபெற்றது தென்னிந்தியாவில், அதிலும் சிறப்பாகத் தமிழகத்தில் மட்டுமேயாகும். நடுமாகாணத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஒருவருக்கு அமைச்சவையில் இடம் அளிக்க வேண்டும் என்ற கிளர்ச்சி ஏற்பட்டது. இது காரணமாக முதல்வர் டாக்டர் கரே பதவி துறந்தார். மற்ற அமைச்சர்களும் அதன்பின் நீக்கப்பட இது தூண்டுதலாயிற்று. பேரவை, டாக்டர் கரேயின் இச்செயலைக் கண்டித்தது. எனினும், நெருக்கடி மீண்டும்தளர்ந்தது. பண்டித சுக்கிலா திரும்பவும் பேரவைக் கட்சிச் சார்பில் முதல்வரானார். 1939 அக்டோபரில் பண்டித ஜவஹர்லால் நேருவின் தலைமையில் மாநிலப் பேரவைக் கட்சியால் ஒரு தேசியத் தொழில் திட்டக் குழு1 நிறுவப்பட்டது. காந்தியடிகள் இயந்திரத் தொழிலையே எதிர்த்தாலும், பேரவையில் பெரும்பாலார் தேசியத் தொழில் வளர்ச்சிக்கு அது இன்றியமையாதது எனக் கருதினர். காந்தியடிகள் மரபுரிமையாளரானாலும், இளைஞர் தலைவரான ஜவஹர்லால் இதனை ஆதரித்து இக்குழுவில் தலைமை வகித்தார். பாகிஸ்தான் கோரிக்கை: பேரவை ஆட்சிக்காலத்தில் பேரவைக்கும் முஸ்லிம் சங்கத்துக்கும் இடையேயிருந்த கருத்து வேறுபாடு முதல் முதலாகப் பெரும்பிளவாக வளரத் தலைப்பட்டது. பேரவை பெரும்பான்மையாய் இருந்த அமைச்சவைகளில் ஒரு முஸ்லிமுக்குக் கூட- தேசிய- முஸ்லிமுக்குக் கூட- இடமில்லை என்பது பொதுவாக முஸ்லிம் மக்கள் கவனத்தைக் கவர்ந்திருந்தது. முஸ்லிம் சங்கமோ, முஸ்லிம் நலங்களைப் பாதுகாக்கச் சங்க முஸ்லிம்களுடன் கூட்டு அமைச்சவை அமைக்க வேண்டுமென்று கோரியிருந்தது. இது அமையாததால், அது பேரவை அமைச்சர் குழு அமைத்த நாளை முஸ்லிம்களின் துயர் நாளாகக் குறிப்பிட்டு எதிர்ப்பிரசாரம் செய்தது. போர் காரணமாகப் பேரவைக்கட்சித் தலைவர்களே பதவி துறந்தபோது, முஸ்லிம் சங்கத் தலைவர் அதனை முஸ்லிம்கள் விடுதலை நாளாகக் கொண்டாடும்படி கூறினார். 1910லிருந்து வகுப்புத் தீர்மானத்தை எதிர்த்துத் தேசிய முஸ்லிம்களில் தலைசிறந்தவராய் விளங்கிய ஜின்னா, இங்ஙனம் படிப்படியாக முஸ்லிம் வகுப்புவாதிகள் பக்கம் சாய நேர்ந்தது. 1940 மார்ச்சு 22 முதல் 24 வரை நடைபெற்ற முஸ்லிம் சங்கப் பேரவையில், ‘முஸ்லிம்கள் ஒரு தனிச் சமூகத்தவர்களல்ல; ஒரு தனித் தேசிய இனத்தவர், என்ற போக்குக்குப் பேராதரவு ஏற்பட்டது. முஸ்லிம்களுக்கு முஸ்லிம் பெரும்பான்மைப் பகுதிகளை ஒதுக்கி ஒரு தனி நாடாக்க வேண்டுமென்ற தீவிரக் கருத்து இதுவைர முஸ்லிம்களில் ஒரு சாராரிடையே இருந்து வந்தது. இப்புதிய கற்பனை நாட்டுக்கு அவர்கள் பாகிஸ்தான் என்று பெயர் தந்திருந்தனர். இந்த முஸ்லிம் சங்கக் கூட்டத்தில் அது வளர்ந்து, ‘பாகிஸ்தான்’ தீர்மானமாக உருவாயிற்று. இங்ஙனம் வகுப்புவாதப் பிரச்சினை தீர்க்கப்படாமல் சார்பு எதிர்ப்புப் போர்களாக நடைபெற்றது காரணமாக, வகுப்புவாதக் கிளர்ச்சி நாட்டுப் பிரிவினைக் கிளர்ச்சியாய் மாறிற்று. முஸ்லிம் சங்கத்தின் இத்தீர்மானம், பேரவையில் ஓரளவும், பேரவைக்கு வெளியே மிகுதியாகவும் இந்துக்களிடையில் நாட்டுப் பிரிவினை எதிர்ப்பைக் கிளறிற்று. இந்நிலை முஸ்லிம் சங்கம், பேரவை என்ற அரசியல் வேறுபாட்டைப் பேரவை அறியாமலே முஸ்லிம், இந்து என்ற வேறுபாடாக மாற்றி வந்தது. பேரவை அதை இன்னும் அரசியல்வாதிகளின் வேற்றுமையாக மட்டுமே நினைத்தது. அத்துடன் முஸ்லிம் வகுப்புவாத அவையாய் மாறிவிட்ட முஸ்லிம் சங்கத்துடன் தேசிய அவையாகிய பேரவை சமரசப் பேச்சுப் பேச முயன்றது. முஸ்லிம் வகுப்புவாதிகளையும் இந்து வகுப்புவாதிகளையும் சந்திக்க விட்டுப் பேரவை நடுவு நிலைமை வகித்து நின்று, சமரஸ முயற்சியில் முனைந்திருந்தால், நிலைமை மாறியிருக்கும் என்று கூறலாம். இம்முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் பேரவையின் பின்னணியில் இந்து வகுப்புவாதம் வளர்ந்து இந்துப் பேரவை வலுப்படவும், ‘மாநிலப் பேரவை இந்துக்களின் பிரதிநிதித்துவ சபை, என்ற முஸ்லிம் சங்கத்தாரின் குற்றச்சாட்டுக்கு வெளித்தோற்றத்தில் ஆதரவு பெருகவும் வழி ஏற்பட்டது. காந்தியடிகளின் போர்க் கொள்கையும் பேரவையின் போர்க் கொள்கையும்: 1940 ஜூலை 2-ஆம் தேதி காந்தியடிகள் மாநில ஆட்சி முதல்வரைச் சந்தித்துப் போர் பற்றிப் பேசினார். அதில் காந்தியடிகள் மனப்பான்மைக்கும் பேரவையில் ஜவஹர்லால் நேரு, ராஜகோபாலாசாரியார் ஆகியவர்கள் மனப்பான்மைக்கும் இடையேயுள்ள வேறுபாடு தெளிவாக்கப்பட்டது. காந்தியடிகள் இதனை விளக்கித் தம் அன்பறக் கோட்பாட்டை அரசாங்கம் ஏற்க முடியவில்லையானாலும், பேரவையின் நோக்கத்துக் காயினும் விட்டுக் கொடுக்கும்படி கேட்டார். இது வகையில் அரசாங்கத்தின் நிலையைத் தெளிவுபடுத்தப் பேரவைச் செயற்குழு காந்தியடிகள் தலைமை நிலையையே பாதிக்கக் கூடிய ஒரு செயலைக் கூடச் செய்ய முனைந்தது. “அயலார் படையெடுப்பு ஏற்பட்டால், காந்தியடிகளின் அன்பு நெறியைக்கூட விட்டு விடுவோம்,” என்றும்,“போர் முயற்சியின் நோக்கத்தை அரசாங்கம் தெளிவுபடுத்தினால், அதனுடன் போர் ஒத்துழைப்புச் செய்யக் கூடத் தயங்க மாட்டோம்”, என்றும் அவர்கள் தீர்மானித்தார்கள். இதனால், எதிர்பார்க்கப்பட்ட அரசாங்க மனமாற்றம் ஏற்படவில்லை. காந்தியடிகளின் அரசியல் தலைமைதான் பாதிக்கப்பட்டது. தம் குறிக்கோளும் பேரவைக் குறிக்கோளும் மாறுபட்டவை என்று தெளிவாக்கப்பட்ட பின்பு, பேரவைக்குத் தாம் செயல் முறைப்படி பொறுப்பாளரயிருக்கக் காந்தியடிகள் விரும்ப வில்லை. பேரவையும் அவர் நிலையை நன்குணர்ந்தது. ஆகவே, காந்தியடிகளின் வேண்டுகோளின் பேரில் பேரவை இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்தும் முழுப் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப் பெற்றார். இதன் பின்னும் பேரவையும் அவரும் ஒன்றுபட்டு ஒத்துழைக்காமலில்லை. இருசார்பிலும் ஒத்துழைப்பு என்றும் இருந்தது. ஆனால், தனித்தனி பொறுப்புகள் மதிக்கப்பட்டன. காந்தியடிகளின் அரசியல் தலைமை அறத்தலைமையாயிற்று. பேரவையின் போர் பற்றிய புதிய தீர்மானங்களை அவ்வப்போது ராஜகோபாலாசாரியாரே விளக்கி அரசியலாருடன் வாதாடினார். பேரவைப் பெருங்குழுவில் அதற்கான தீர்மானங் களைப் பேரெதிர்ப்புக்கிடையில் நிறைவேற்ற அவரே காரணமா யிருந்தார். காந்தியடிகள் கொள்கையின் தனிப்பட்ட ஆன்மிக உயர்வை எதிர்க்கவும் விரும்பாமல், அரசியல் நோக்கப் படி ராஜகோபாலாசாரியாரின் நேர்மையான கோட்பாட்டையும் எதிர்க்க மனமின்றிக் காந்தியடிகளின் சிறந்த சீடரான பண்டித ஜவஹர்லால் நேரு, ராஜேந்திரப் பிரசாது போன்றவர்கள் ‘இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓர் ஆவென’ நடுவு நிலைமையில் நின்றார்கள். இத்தனை அக்கப்போர்களுக்கிடையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டும், நிலைய சாத்தியமான எல்லாத் தியாகங் களையும் பேரவை செய்தும், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆதிக்கக் குழுச் சிறிதும் அசைந்து கொடுக்கவுமில்லை; மனமாறவும் இல்லை. பேரவையின் கடமை நிலையும், காந்தியடிகளின் நிலையும் ஒருங்கே பெருத்த இடர்ப்பாட்டுக்கு உள்ளாயின. மக்களுக்கும் இயக்கக் குறிக்கோளுக்கும் அவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை அவர்கள் பின்னும் நீடித்துப் புறக்கணித்திருக்க முடியவில்லை. இந்நிலையில் நாட்டுக்கு வழி காட்ட மீண்டும் காந்தியடிகளே கோரப்பட்டார். தனிப்பட்டவர் சட்ட மறுப்பு மீண்டும் போர் எதிர்ப்புக்கு அறிகுறியாகக் காந்தியடிகள் அறப்போராட்டம் தொடங்கினார். ஆனால், இத்தடவை அது பொதுப் போராட்டமாகவும் தொடங்கப்படவில்லை; பேரவைப் போராட்டமாகவும் தொடங்கப்படவில்லை; அரசாங்கப் போர்க்கொள்கையை மட்டும் கண்டித்து அப்போர் முயற்சிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாதென்ற நோக்கத்துடன், அது காந்தியடிகளின் தலைமையில் தனிப்பட்டவர்கள் அறப் போராகவே தொடங்கப் பட்டது. இந்நோக்கத்துடனேயே முதல் அறப்போர்த் தலைவராகப் பேரவையினரல்லாத காந்திய டிகளின் ஆன்மிக மாணவரான வினோபா பவே தேர்ந்தெடுக்கப் பட்டார். அவரும், அவர் பின் பல தனிப்பட்டவர் களும், தலைவர்களும் சிறைப்பட்டார்கள். பத்திரிகைகளுக்கு அறப்போர்ச் செய்தி வெளியிடப்படாதென்ற தடை விதிக்கப் பட்டது. காந்தியடிகளின் ‘ஹரிஜன்’ பத்திரிகை முற்றிலும் நிறுத்தப்பட்டது. அக்டோபர் 31-ஆம் தேதி ஜவஹர்லால் நேரு கைது செய்யப்பட்டு, 4 ஆண்டு தண்டனை பெற்றார். மௌலானா அபுல்கலாம் ஆஸாதுக்கு 18 மாதத் தண்டனை விதிக்கப்பட்டது. ராஜகோபாலாசாரியாரும் சத்தியமூர்த்தியும் சென்னையில் பேரெதிர்ப்புப் பிரசாரம் காரணமாகக் கைது செய்யப்பட்டனர். ஆன்மிக ஞானியான காந்தியடிகள் ஆட்சியாளர் மதவுணர்ச்சியை மதித்துக் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது போராட்டத்தை நிறுத்தி வைத்திருந்தார். இந்தப் பெருந்தன்மை கூடப் பிரிட்டிஷார் உள்ளத்தில் விழலுக்கிறைத்த நீராயிற்று. 1940-ஆம் ஆண்டு முடிவுக்குள் இத்தனிப்பட்டவர் அறப் போராட்டத்தில் பேரவைச் செயற்குழு உறுப்பினர் 11 பேர், பெருங்குழு உறுப்பினர் 176 பேர், முன் பேரவைக் கட்சி அமைச்சர்களாயிருந்தவர் 29 பேர், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களாயிருந்தவர் 22 பேர், மாகாணச் சட்டமன்ற உறுப்பினராயிருந்தவர் 400 பேர் சிறைக்கம்பிகளுக்குப் பின் தள்ளப்பட்டனர். நடுச்சட்ட மன்றத்தில் போரெதிர்ப்பு, போர்ச் செலவுகளுக்காகக் கொண்டு வரப்பட்ட சட்டப் பகர்ப்பின் தோல்வியாகச் செயலாற்றிற்று. 1941-ஆம் ஆண்டிலும் தனிப்பட்டவர் அறப்போர் தொடர்ந்து வந்தது. மொத்தம் 25,000 பேர் தண்டனைக்காளா யினர். தண்டத் தொகை மட்டும் ஆறு இலட்ச ரூபாய்க்கு மேலாயிற்று. பேரவைக்கு வெளியேயுள்ள கட்சிகள் கூட நாட்டு நிலைபற்றி மிகவும் கவலை கொண்டன. மார்ச்சு 14-ஆந் தேதியிலும், ஜூலை 27-ஆந் தேதியிலும் கட்சிச் சார்பற்ற அரசியல் தலைவர்கள் பம்பாயிலும் பூனாவிலும் கூடி அரசியலாருக்கு எச்சரிக்கை விடுத்தார்கள். மாநில ஆட்சி முதல்வரின் செயலவை விரிவு பேரவையின் கோரிக்கைக்குப் பிரிட்டிஷ் அரசியல் எந்த வழியிலும் இணங்க விரும்பவில்லை. ஆனால், பேரவை உதவியில்லாமல் இந்தியாவை நோக்கி விரைந்து அணுகி வரும் போர்ப்புயலைச் சமாளிக்க முடியாது என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள். 1940 ஆகஸ்டிலேயே இந்தியத் தலைவர்களின் ஒத்துழைப்பைக் கோரி அவர் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் போருக்குப் பின் இந்தியாவுக்குக் குடியேற்ற நாட்டுரிமை வழங்க ஏற்பாடு செய்வதே பிரிட்டிஷ் ஆட்சிக் குழுவின் நோக்கம் என்றும், அதுவரை ஆட்சிப் பொறுப்பிலும் போர் முயற்சியிலும் தம்முடன் இந்தியர் ஒத்துழைக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார். இந்நோக்கத்துடனேயே தம் செயலாட்சிச் சபையை1 விரிவுபடுத்த விரும்புவதாக அவர் அறிவித்தார். பேரவை இவ்வழைப்பை மறுத்துவிட்டது. 1941ல் மாநில ஆட்சித் தலைவர் மாநில ஆட்சிச் செயலவையின் கீழிருந்த ஆட்சித் துறைகளைப் பிரித்து மூன்று இந்தியர்களைச் சேர்த்துக் கொண்டு அவர்களுக்குப் புதிய துறைகளை வழங்கினார். தற்காப்பு, பிரசாரம் ஆகியவற்றுக்கு அவர்கள் தலைமையில் இரண்டு புதிய துறைகள் வகுக்கப்பட்டன. ஆனால், தற்காப்பிலிருந்து படைத்துறையாட்சி முன் கூட்டிப் பிரிக்கப்பட்டிருந்தது. அது தற்காப்பு அவை2 என்ற தனி நிலையத்தினிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முஸ்லிம் சங்கத் தலைவர் ஜின்னா, பேரவையைப் போலவே இவ்விரண்டு நடவடிக்கைகளையும் கண்டித்திருந்தார். ஆயினும், மற்ற முஸ்லிம் சங்கத் தலைவர் பலர் தற்காப்பு அவையிலும் இந்தச் செயலாட்சி அவையிலும் பங்கு கொண்டு ஒத்துழைக்க முன் வந்தனர். செயலாட்சி அவையில் இடம் பெற்றவர் ஸர் சுல்தான் அகமது என்பவர். முஸ்லிம் சங்கம் இவர்களைக் கண்டித்ததன் மீது மூவர் பெற்ற பதவிகளைத் துறந்தனர். ஆனால், இச்சிலர் தவிர, ஏனையோர் பெற்ற பதவிகளை அணைத்துக் கொண்டு முஸ்லிம் சங்கத்திலிருந்தே விலகத் துணிந்தனர்! தலைவர் பெருந்தகையின் மாய மறைவு தலைவர் பெருந்தகை போஸ் மீது பேரவை மேலிடம் எடுத்துக் கொண்ட நடவடிக்கையின் பின்னும், வங்க மாகாணப் பேரவையில் அவர் செல்வாக்குக் குறையவில்லை. ஆனால், மேலிடம் வங்கப் பேரவைக்குழு முழுவதையுமே விலக்கி வேறு குழு அமைத்தது. வங்கத்தில் ஸி.ஆர்.தாஸுக்குப் பின் எப்போதுமே போஸ் கட்சி, ஸென்குப்தா கட்சி என்ற வேறுபாடு இருந்ததால், இது எளிதில் முடிந்தது ஆயினும் இச்சமயம் போஸ், நாலணா உறுப்பினராகக்கூட இல்லா விட்டாலும், ஒரு பெரிய இயக்கத்தை நடத்தினார். தம் தனிப்பட்ட செல்வாக்கினாலேயே கல்கத்தாவில் 1857-ஆம் ஆண்டில் நடைபெற்ற அடக்குமுறையின் சின்னமாயிருந்த ஒரு வெள்ளை யரின் சிலையை அப்புறப்படுத்த அவர் அவ்வியக்கத்தைத் தொடங்கி நடத்தினார். இது காரணமாக, அரசியலார் அவரை மீண்டும் சிறைப்படுத்தி, விசாரணை இல்லாமலே, எல்லை யில்லாத காலம் காவற்கைதியாக்கி வைத்தனர். இந்நிலைமையிலும் மக்கள் ஒரு துணைத் தேர்தலில் அவரை நடுச்சட்ட மன்றத்துக்குப் போட்டியில்லாமல் தேர்ந்தெடுத்துப் பெருமைப் படுத்தினார்கள். ஆயினும், அரசியலார் அவரைச் சிறையிலிருந்து விடுவிக்கவில்லை. தம் குடியுரிமை கோரிச் சுபாஷ் சாகும்வரை உண்ணா நோன்பிருக்கத் துணிந்தார். அவர் துணிச்சலை நன்கறிந்திருந்த அரசியலார், அவரை விடுதலை செய்து, அவர் வீட்டிலேயே காவற் கண்காணிப்பில் வைத்தனர். சூழ்ச்சிப் புலிகளான வெள்ளையர்கள் சூழ்ச்சி வலைகளை வெல்ல, போஸ் தம் துணிகரத் திட்டங்களை வகுத்தார். நோன்பிருப்பதாகக் கூறி உள்ளூற அவர் வேறு ஏற்பாடுகளைச் செய்துவந்தார். அவற்றின் பயனாக 1941, ஜனவரி 26-ஆந் தேதி அவர் திடீரென்று காணாமற்போய்விட்டதாகத் தெரிய வந்தது. பிரிட்டிஷாரன் துப்பறியும் திறன் முழுவதும் அவர் தப்பிய வகை காணவோ, தப்பிச் சென்ற இடங்காணவோகூடப் பயன்படவில்லை. அவர் ஆப்கானிஸ்தானம் வழியாக ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்பது இரண்டோர் ஆண்டுகளின் பின்பே பிரிட்டிஷாருக்குப் புலப்பட்டது! கிரிப்ஸ் திட்டம் 1942-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்தியாவின் அரசியல் முட்டுக்கட்டை நிலையை மாற்றியமைக்க ஏதாவது புது முறையைக் கையாண்டாக வேண்டுமென்ற கருத்து, பிரிட்டிஷ் அரசியல் மன்றில் வளர்ந்தது. இந்தியா- பிரிட்டன் அரசியல் தொடர்பில் இது ஒரு புது மாறுதலை உண்டு பண்ணிற்று என்பதில் ஐயமில்லை. ஆனால், பிரிட்டன் இதுவரை மேற்கொண்டு வந்த பிடி முரண்டுப் போக்கும், பிரிட்டனின் பிற்போக்குக் கும்பல் செய்து வந்த இந்திய தேசீய இயக்க எதிர்ப்பும் கலந்து, இந்தியாவில் மனக்கசப்பையும் பிரிட்டிஷார் மீது நம்பிக்கையின்மையையும் வளர்த்திருந்தன. இம்மனக்கசப்புக் கோட்டையைத் துளைத்துப் புதிய பிரிட்டன்- இந்தியா உறவை ஏற்படுத்தப் பிரிட்டிஷார் மேற்கொண்ட முதல் முயற்சியாக, கிரிப்ஸ் திட்டத்தைக் கருதலாம். பிரிட்டனின் எல்லாக் கட்சியினரும் கலந்து ஆராய்ந்த முடிபுகளுடளே, பிரிட்டனின் முன்னணிக் கட்சியாகிய தொழிற்கட்சியின் முன்னேற்றக் கருத்துடைய உறுப்பினரும், இந்தியாவின் நண்பர்களுள் ஒருவராய் இதுவரை செயலாற்றி வந்திருந்தவருமான ஸர் ஸ்டிராஃவோர்ட் கிரிப்ஸ், மார்ச்சு 23-ஆந் தேதி இந்தியாவுக்கு வந்தார். அவர் இந்தியாவில் ஒரு மாத காலத்துக்கு மேல் தங்கி, இந்திய அரசியலாருடனும், பேரவைத் தலைவர் உட்பட்ட இந்தியாவின் எல்லா அரசியல் தலைவர்களுடனும் கலந்து, இந்தியாவில் புதிய தேசிய அரசாங்க அமைப்பு முறை பற்றிப் பேசினார். இந்தியர் பலரும் இப்புதிய மாறுதலை ஆவலுடன் எதிர் பார்த்திருந்தனர். இதனால் பெருநன்மை ஏற்படும் என்று யாவரும் நம்பியிருந்தனர். பேரவைத் தலைவர்களும் மனம்விட்டு, கிரிப்ஸுடன் பேசினர். ஆனால், எப்படியோ பழைய முட்டுக்கட்டை நிலை மாறவில்லை. கிரிப்ஸ் திட்டம் முடிவடைந்தது. வந்தபடியே ஸர் ஸ்டிராஃவோர்ட் கிரிப்ஸ் 1942, ஏப்ரல் 12-ஆம் தேதி வெறுங்கையுடன் திரும்பிச் சென்றார். கிரிப்ஸ் திட்டத்தின் சிறப்புக் கூறுகள் 1. போர் முடிந்தவுடன் இந்தியாவின் புதிய அரசியலை அமைப்பதற்கான மக்கள் பிரதிநிதித்துவம் உடைய ஒரு மன்றம் அமைக்கப்படும். 2. அவ்வமைப்பில் பிரிட்டிஷ் இந்தியாவின் எந்த மாகாணமும் சேரலாம். சேராதவை பழைய அமைப்புடனே நீடிக்கவோ அல்லது சேர வேண்டுமென்று தீர்மானித்தால் சேரவோ இடம் இருக்கும். 3. புதிய அரசியலமைப்புடன் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு கூட்டுறவு ஒப்பந்தம் செய்து கொள்ளும். பேரவையில் இத்திட்டம் நன்கு ஆராய்ந்து விவாதிக்கப் பட்டது. பல வகைக் கருத்துக்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. குணங்களும் குறைகளும் அலசி ஆராயப்பட்டன. இறுதியில் பேரவைக் குறிக்கோளாகிய முழு நிறை விடுதலையுடன் அது எவ்வகையிலும் ஒத்துவரவில்லை என்ற விளக்கத்துடன், அது மறுக்கப்பட்டது. இந்தியாவின்மீது படையெடுப்புப் பற்றிக் காந்தியடிகள் உலகப் போர் இந்தச் சமயத்தில் கீழ்த்திசையில் உச்ச நிலையை எட்டியிருந்தது. ஜப்பானின் மின்னல் தாக்குதல்களுக்கு காளாய், மலேயாவும், பர்மாவும் ஜப்பானின் காலடியில் கிடந்தன. இந்தியக் கடல்களில் பிரிட்டிஷ் ஆதிக்கம் மறைந்துவிட்டது. அவை ஜப்பானின் தனிப்பட்ட வேட்டைக் குளங்கள் ஆயின. எந்தக் கணத்திலும் இந்தியாவின் நீண்ட கடற்கரையோரத்தில் அவர்கள் தாக்குதல் தொடங்கலாம் என்ற நிலை இருந்தது. ‘கிரிப்ஸ்’ திட்டம் இந்தியர் உள்ளங்களை நம்பிக்கை ஒளி காட்டிச் சிறிதுகாலம் மயக்கி வைக்கும் ஒரு சூழ்ச்சிதானோ?’ என்று அச்சமயம் இந்தியர்களுக்குத் தோற்றிற்று. 1941 தொடக்கத்தில் மாயமாய் மறைந்த சுபாஷ் போஸ் உண்மையில் ஜெர்மனிக்கே சென்றிருந்தார் என்ற செய்தி ஓராண்டுக்குள் எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. அத்துடன் ஜப்பானின் உதவியுடன் அவரே இந்தியாமீது தாக்கும் படையின் தலைமை தாங்கியுள்ளார் என்ற செய்தியும் பரப்பப்பட்டு வந்தது. இது பற்றி (இப்போது மீண்டும் வெளியிடப்பட்டு வந்த) ஹரிஜன் பத்திரிகையில் காந்தியடிகள், “வெளியார் ஆட்சியிலிருந்து விடுபடும் நம் முயற்சியில் வேறு எந்த அயல் நாட்டையும் அணுகித் தொல்லைப்படுத்தும் எண்ணம் எனக்கில்லை. அத்துடன் பிரிட்டிஷ் அடிமைத் தனத்துக்குப் பதில் வேறு அடிமைத் தனத்தைப் பண்டமாற்றுச் செய்வதிலும் எனக்கு விருப்பம் இல்லை. தெரியாத எதிரியைவிடத் தெரிந்த எதிரியே மேல் என்று நான் எண்ணுவதால், சுபாஷின் கொள்கையை நான் ஆதரிப்பதென்பது கருதிப் பார்க்கக்கூட முடியாத செய்தி. அவர் வழி தவறிவிட்டார். அவர் வழி ஒரு நாளும் இந்தியாவை விடுதலை நோக்கி அழைத்துச் செல்லமாட்டாது” என்று எழுதினார். “ஜப்பானை இந்தியாவுக்கு வரவழைக்கிறேன் என்ற குற்றச்சாட்டை என் முழு வலிமையுடன் மறுக்க விரும்புகிறேன்! இந்தியாவின் ஒவ்வொரு மனிதனும் ஜப்பானை எதிர்த்து நிற்க வேண்டுமென்றுதான் நான் விரும்புகிறேன். “ஜப்பானைத் தடுப்பதில் பிரிட்டிஷாருக்கு இருக்கும் அக்கறையை விட எனக்கு மிகுதியான அக்கறை இருக்க வேண்டும். ஏனெனில், இந்தியக் கடலில் பிரிட்டன் தோற்கு மானால், பிரிட்டனின் நட்டம் இந்தியாவை இழப்பதுடன் நிற்கும். ஆனால் இந்தியா அதனால் தன்னையே முழுதும் இழந்துவிட நேரும்.” “இந்தியாவை விட்டு வெளியேறு”- காந்தியடிகள் விளக்கம் ஜப்பான் வகையில் காந்தியடிகள் கருத்து இங்கே தெளிவாக்கப் பட்டுள்ளது. ஆனால், பின்னாளில் ஏற்பட்ட படையெடுப்பு, காந்தியடிகள் எண்ணியதுபோல ஜப்பானின் படையெடுப்பன்று. அது ஜப்பானின் நேர்முக உதவி யில்லாமல் விடுதலை இந்திய அரசாங்கப் படையின் தலைமை யிலும், போஸின் தலைமையிலும் நடைபெற்ற தாயக விடுதலைப் போரேயாகும். இந்தச் செய்தியைக் காந்தியடிகள் அன்று அறிந்திருக்கவும் முடியாது. அறிந்திருந்தாலும், அறிந்து வெளியிட்டிருக்க முடியாது என்று கூறத் தேவையில்லை. அத்துடன் காந்தியடிகள், நாட்டு விடுதலைக்காகப் போரை ஆதரிக்கவில்லை. ஆன்மிகப் போராட்டத்தாலேயே இந்தியா விடுதலை பெற முடியும் என்பதே அவர் நம்பிக்கை என்பதை நாம் மறக்க முடியாது. ஆனால், பிரிட்டிஷ் ஆதிக்கம் பற்றிக் காந்தியடிகள் என்ன நினைத்தார் என்பதை ஹரிஜன் பத்திரிகையிலேயே அவர் சுட்டிக் காட்டினார். “பிரிட்டிஷார் இந்தியாவில் இருப்பதுதான் இந்தியா மீது படையெடுக்கும்படி ஜப்பானை அழைக்கிறது. பிரிட்டன் விலகினால், இந்த அழைப்பு இராது” என்பது காந்தியடிகள் கூற்று. ஆகஸ்டில் வெளியிடப்பட்ட ‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற பேரவையினர் தீர்மானத்தின் மூல விதையும் முதிர்ந்த விளக்கமும் காந்தியடிகளின் இவ்வாசகத்தில் அடங்கியிருக்கின்றன. பிரிட்டிஷ் வெளியேற்றம், இந்தியாவின் விடுதலை ஆகிய இரண்டின் விளக்கமும் அவராலேயே திறம்படத் தரப்பட்டிருக் கின்றன: “பிரிட்டன் வெளியேறி, இரு நாடுகளுக்குமிடையே, இரு நாடுகளுக்கும் பெருமதிப்பு வாய்ந்த ஓர் ஒப்பந்தம் ஏற்படுமானால், அதன் பயனாக, (1) “இந்தியாவின் பொருளியல் சுமைகளிலிருந்து உடனே விடுதலை கிடைக்கும். (2) “ஆண்டுதோறும் உயர்பணியாளர் ஓய்வு ஊதிய மாகப் பிரிட்டனுக்கு இறைக்கப்படும் பொருள் அழிவு, உடனடியாக நிற்கும். (3) “புதிய அரசியல் புதிதாகச் சுமத்த விரும்பினாலல் லாமல், அல்லது நீக்காது வைத்துக்கொள்ள விரும்பினாலல் லாமல், மக்களுக்கு வரிப்பளுவின் சுமை இராது. (4) “மாநிலத்தின் மிகச்சிறந்த தலைவர்களைக்கூட அழுத்தி அமிழ்த்தி வைத்துக் கொண்டிருக்கும் அடிமை மனப்பான்மையாகிய பளு அகலும். (5) “அன்பற முறையிலேயே நான் போர்களை நடத்த எண்ணுவதால், இந்தியாவின் வரலாற்றில் நான் ஒரு புத்தூழி ஏற்படுத்துவேன்.” காந்தியடிகளுடன் கலந்து பேரவைச் செயற்குழு ஜூலை, 24-ஆம் தேதி ஓர் அறிக்கை வெளியிட்டது. அது காந்தியடிகள் கருத்தையே வலியுறுத்திற்று. அத்துடன், விடுதுலை உறுதி தரப்பட்டால், ஜப்பானை எதிர்த்து நடத்தப்படும் போரில் முழு மனத்துடன் ஒத்துழைக்க உறுதி கூறுவதாகவும், பிரிட்டன் மறுத்தாற்கூட அறப்போர் மூலம் இந்தியா தன் பாதுகாப்புக்கும் விடுதலைக்கும் ஒருங்கே போராட முனைந்திருப்பதாகவும் செயற்குழு தெரிவித்தது. விடுதலை தரப்பட்டால், நேசநாடுகள் படைகள் தங்குவதற்கு இணக்கமளிக்கப்படும் என்ற விளக்கமும் தரப்பட்டிருந்தது. ஜூலை 18ல் காந்தியடிகள் ஜப்பானுக்கு ஓர் எச்சரிக்கையும், அமெரிக்க நண்பர்களுக்கு ஒரு நிலைமை விளக்கமும் அனுப்பினார். ‘மரத்தால் பூட்டமைக்கப்பட்டு இரும்புப் பாளங்களால் உறுதி செய்யப்பட்ட கோட்டை’ என்று பிரிட்டிஷ் ஆட்சிக் குழுவைக் குறிப்பதுண்டு. இப்போது அதன் வாய் திறவா நிலை இது போன்றிருந்தது. ஆகஸ்டு 7-ஆந் தேதி பேரவைப் பெருங்குழு பம்பாயில் கூடிற்று. மௌலானா ஆஸாது, மகாத்துமா காந்தி, ஸர்தார் பட்டேல் ஆகிய அனைவரும் தத்தம் கருத்துக்களை மனம் திறந்து வெளியிட்டனர். எல்லார் உள்ளங்களிலும் ஒரே வேதனையும் வெம்புயலும் வீசின. பேரவையின் வரலாற்றில் எல்லாத் தலைவர் உள்ளங்களும் இங்ஙனம் ஒரே மின்சாரத்தால் பிணைக்கப்பட்டது போல இயங்கிய மற்றொரு தறுவாயைக் காண முடியாது. ஆகஸ்டு 8 தீர்மானம் ‘ஆகஸ்டு எட்டுத் தீர்மானம்’ என்று இந்தியாவின் வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் பொறிக்கப்பட்ட தீர்மானத்தைப் பண்டித நேரு கொண்டு வந்தார். ஸர்தார் பட்டேல் அதைப் பின்மொழிந்தார். பலர் ஆய்வாராய்வுகளுக்கு மறுமொழியாகப் பண்டித ஜவஹர்லால் மிக நீண்ட விளக்க உரை ஒன்று அளித்தார். அவர் அழகிய இலக்கிய நயம் வாய்ந்த மொழி நடைக்கு அதனினும் வீறுமிக்க முழு நிறை முழக்கச் சான்று வேறு காண முடியாது. அது பாதி ஆங்கிலமாகவும் மறுபாதி இந்துஸ் தானியாகவும் அமைந்தது. அதன் முக்கிய வாக்கியமாவது: “இக்குழு இந்தியாவின் இன்றியமையாத தற்சார்பு நிலைமையையும் விடுதலையுரிமையையும் வலியுறுத்தவும்; அதுவகையில் அறமுறையிலேயே மிகப் பாரிய அளவில் ஒரு மாபெரு மக்கள் போராட்டத்தைத் தொடங்கி நடத்தி, அதன் மூலம் அமைதி வாய்ந்த, சென்ற 22 ஆண்டுக்கால அறப் போராட்டங்களால் மாநிலம் பெற்றுள்ள வலிமையைப் பயன்படுத்திக் காட்டவும் உறுதி கொண்டுள்ளது. அத்தகைய போராட்டத்தின் பொறுப்பு முழுவதும் காந்தியடிகளின் தலைமையின் கீழ்த்தான் அமையத் தக்கது. அத்தலைமைப் பதவியை ஏற்று வழிகாட்டி நாட்டை நாம் அவாவும் வெற்றிக் குறிக்கோள் நோக்கி நடத்திச் செல்லுமாறு செயற்குழு அவரைக் கேட்டுக் கொள்கிறது.” காந்தியடிகள் மறுமொழி தண்கதிரின் தண்மையில் புதையுண்ட வெங்கதிரின் வெம்மையை ஒத்தது என்னலாம். அது நாட்டு மக்களுக்கு முன்னெச்சரிக்கையும் ஊக்கமும் உறுதியும் ஒருங்கே தந்தது. அதே சமயம் வீறும் பெருமிதமும் பொறுப் புணர்ச்சி பற்றிய கவலையும் அதில் கலந்திருந்தன. “அமைதி நாடி உழைக்கும் உழைப்பில் நான் என் நாடி நரம்புகளுள் ஒவ்வொன்றையும் ஈடுபடுத்துவேன்! இவ்வகையில் உலகையே எதிர்க்கவும் நான் தயங்கமாட்டேன்! ஏனெனில், கடவுள் நம் பக்கம் இருக்கிறார். இந்தியா முழுதும் என்னைக் கைவிட்டாற்கூடநான் தனித்துநின்று உலகையே எதிர்க்கத் தயங்க மாட்டேன்! ஏனெனில், பேரவை எத்தகைய குற்றமும் செய்துவிடவில்லை. பேரவைக்கு நான் என் உறுதியைக் கூறிவிட்டேன். இனிப் பேரவை கடமையாற்றும்; அல்லது கடமைக்காக மாளும். “உங்களை இந்தப் போராட்டத்தில் நடத்திச் செல்லும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ஆனால், அது உங்கள் படைத் தலைவன் என்ற முறையிலன்று; உங்கள் ஊழியன் என்ற முறையில்! உங்களிடையே யார் முதன்மையான சேவை செய்பவரோ, அவரே தலைமைக்குரியவர். நான் உங்கள் ஊழியர்களிடையேதான் முதல்வன். என் மனப்பாங்கு இது இம்மனப்பாங்குடன் நான் உங்களை எதிர்நோக்கி வரும் இன்னல்களிலெல்லாம் உங்களுடன் பங்கு கொள்வேன்”. தீர்மானத்தின் படிகளை அமெரிக்கத் தலைவருக்கும், சீனாவுக்கும் அனுப்பியதாக மௌலானா அபுல்கலாம் ஆஸாது கூறினார். பசுப்போன்ற பாரத மக்களின் சீற்றம் ஆகஸ்டு 8 தீர்மானம் புரட்சிகரமானது என்பதற்கு விளக்கம் தேவையில்லை. பிரிட்டிஷ் அரசியலின் செயலே அதை விளக்கி விட்டது. தீர்மானத்தில் கையெழுத்திட்ட மைக்கோல்களில் மை உலருமுன்பே பேரவைக் குழுவினர் அத்தனை பேரும் அரசியலின் மறை விருந்தினர் ஆயினர். பேரவையின் தீர்மானம் பேரவைக்கு வெளியே முறைப்படி வெளியிடப்படாமலே தடுக்க அவர்கள் முனைந்தார்கள். ஆனால், இது நெருப்புக்குஞ்சைப் பஞ்சுப் பொதியில் சுற்றிவிரிந்து பொதிந்த கதையாகத் தான் முடிந்தது! கொலைகாரன் பரபரப்பே கொலைகாரனைக் காட்டிக் கொடுப்பதுபோல், அரசாங்கத்தின் பரபரப்பே பேரவையின் ‘வாய் பேசாக் கட்டளை’களின் தூதுவனாயிற்று! வெல்லிங்டன் ஆட்சியின் மறுபதிப்பாக லின்லித்கோவின் ஆட்சியும் உருமாறிற்று. உண்மையில் அந்த ஆட்சியைக் கூட அது தாண்டிற்று. பேரவைக் குழுக்கள் சட்டவிரோதமாக்கப்பட்டன. எங்கும் கூட்டங்கள், ஊர்வலங்கள் மீது தடைகள் பிறந்தன. முன்பே திட்டமிட்டு நடக்க இருந்த பேரவைத் தொண்டர் அணிவகுப்பு மீது பம்பாயில் திடுமெனக் கண்ணீர்ப்புகை வீசப்பட்டது. தடியடிகளும் துப்பாக்கிக் குண்டுகளும் தாண்டவமாடின. தேசியக் கொடிகள் முன்னெச்சரிக்கையின்றிக் கிழித்துத் துவைத்தெறியப் பட்டன. கொடியைக் காக்க முனையுமுன்பே, காக்க எண்ணியவர்கள் உலகினின்றே கடத்தப்பட்டார்கள். நாஜியர் பிரிட்டன்மீது தொடுத்த முறைகளை ஆட்சியாளர் நாஜியர்மீது தொடுக்க முடியாமல், ஆயுதமற்ற இந்தியர்மீதே தொடுக்க முனைந்து விட்டனரோ என்று தோன்றிற்று. பாரத நாட்டின் வடிவம் பசுவின் வடிவம் போன்றது என்று கூறப் படுகிறது. பொதுவாக அதன் பண்பும் பெரும்பாலும் பசுவின் பண்பாகவே என்றும் இருந்து வந்துள்ளது. எளிய வாழ்வு வாழ்ந்து அது உலகுக்கு உயரிய குறிக்கோள்களைத் தந்துள்ளது. ஆனால், கன்றைப் புலியிடமிருந்து காக்க முனையும் பசுவிடமும் புலியின் பண்பு வந்துவிடுவதுண்டு. மாநிலத்தின் மானங்காத்த தந்தையைச் செயலற்ற நிலையில் தம்மிடமிருந்து அரசாங்கம் மறைக்க முனைந்தபோது மாந்தருலகில் ஒரு மாணிக்கமாய் நின்று இந்தியர் உள்ளங்களில் மணிமுடி தரிக்காத மன்னராய் நிலவிய அவர் ஒப்பற்ற மைந்தனைத் தாயகத்தின் மடியிலிருந்து அப்புறப் படுத்தியபோது, பேரவையின் எல்லா உறுப்புகளையும் அரசியலார் ஒருங்கே கட்டுப்படுத்தி, மக்களிடமும் வீம்பு காட்டி அவர்களை அவமதித்த போது, இந்திய வரலாற்றிலேயே முதல் தடவையாக, பாரத மக்கள் தங்களையும் தங்கள் நிலைமையையும் எதிரியின் நிலைமையையும் மறந்து சீறி எழுந்தார்கள்! ஆகஸ்டு 9க்கும் ஆகஸ்டு 14க்கும் இடையே அரசியலார், கண்மூடி அடக்குமுறைகளை வீசினர். தலைவர்களுடன் 8-ஆந் தேதி சிறை செய்யப்படாத பியாரிலால் போன்ற அரசியல் சார்பற்ற நண்பர்களும், காந்தியடிகளின் வாழ்ககைத் துணைவியாரான அன்னை கஸ்தூரிபாய் காந்தியும், டாக்டர் சுசீலா நய்யாரும் கைது செய்யப்பட்டனர். ஆகாய விமானத்திலிருந்து பல கூட்டங்களில் குண்டுகள் வீசப்பட்டன. ஆனால், இத்தனையும் வாளாது பொறுத்திருந்த இந்தியா, நேரடியாகத் தலைவர்களிருக்கும்போதுகூடத் திட்டமான போராட்டம் நடத்துவதில் பெருந்தொல்லைகள் தந்த இந்தியா, இப்போது தானே தனக்குத் தலைமையாய் ஒரே நாளில் கண்ணை மூடிக் கொண்டு செயலாற்றிவிட்டது! தேசப் பட்டிகையில் ஆகஸ்டு 14-ஆந் தேதி கிழிக்கப்பட்டதோ இல்லையோ, எங்கும் மக்கள் செயலாற்றினார்கள். ஒரே நாளில் அரசாங்கம், மாநில அரசாங்கம் என்ற முறையில் செயலிழந்தது. சீமூர், அஷ்டி, குலசேகர பட்டணம், தேவகோட்டை, கோர்சாத்து, நாடியாட், தென்னாலி, மன்னார்குடி- எங்கும் புரட்சித்தீ கிளம்பிற்று. தண்டவாளங்கள் பெயர்ந்தன சில இடம்! தந்திக் கம்பிகள் அறுந்தன வேறு சில இடம்! சிறைக்கம்பிகள் முரிந்தன ஒரு திசை! பணிமனைகள் தகர்ந்தன. மற்றொரு திசை! அநீதியும் நீதியும் கலந்து வழங்கிய நீதிமன்றங்கள் பல அன்று மக்கள் நீதி என்னும் நெருப்புக்கு ஆளாயின! மக்களை அச்சுறுத்திய பலர், அன்று அஞ்சி நடுங்கி உயிர் காக்க ஓடி ஒளிந்தனர்! ஆகஸ்டு 15! ஆகஸ்டுப் புரட்சி! அஹிம்ஸைக்குப் பேர் போன நாட்டில் இப்புரட்சி முன்னெச்சரிக்கையின்றி வந்து, ‘பின் விளக்கம்’ எதுவும் கூறாமல் சென்றுவிட்டது. ஆகஸ்டு பற்றிய இரு கருத்துகள்: ஆகஸ்டுப் புரட்சி பற்றி இந்தியரிடையே இரண்டு வகைக் கருத்துடையார் இருக்கலாம். இருப்பதில் தவறில்லை. பேரவைத் தலைவர்களிலையே அதனை ஆதரித்தவரும் உண்டு; ஆதரிக்காது ஒதுங்கி நின்றவரும் உண்டு. ஆனால், இந்தியாவின் சார்பில் பேசுபவர்கள் அதன் நேர்மை, நேர்மைக் கேடுகளைவிட, அதன் உடனடி தொலைப் பயன்களிலேயே கருத்துச் செலுத்துவார்கள். உடனடிப் பயன் யாதெனில், அது இந்தியாவின் தன்மானம் காத்தது என்பதே, இதில் கருத்து வேற்றுமைக்கு இடமில்லை. கருத்து வேறுபாடு தொலைப்பயன் வகையிலேயே ஏற்பட முடியும். ஆகஸ்டுப் புரட்சியின் தொலை அரசியல் விளைவு, பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளி ஏறப் பெருந்துணை செய்தது. பிரிட்டிஷார் வெளியேற்றத்துக்கு வேறு பல துணைக்காரணங்கள் இருந்திருக்கலாம்; இருந்தன. ஆனால், இது அவற்றுள் ஒன்று என்பதிலும், போஸின் வீரப்படை வீரர் துணிகர வெற்றி அதில் இரண்டாவது என்பதிலும், இந்தியர் இவற்றின்பின் காட்டிய ஒற்றுமை அதில் மூன்றாவது என்பதிலும், ஐயமில்லை. பிரிட்டனின் தணிந்து வரும் மதிப்பையும், தன் மதிப்பையும் அது ஊறுபடுத்திற்று என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், அதே சமயம் அயலாட்சியை ஒழிக்கும் முயற்சியை இச்செயல்கள் மூலம் சாதித்ததன் பயனாக ஏற்பட்ட மற்றொரு தொலை விளைவும் உண்டு. விடுதலை ஆட்சியில் ஆளுபவர்களுக்கு ஆளும் திறனையோ, மக்களுக்குச் சட்டத்தின் மீது மதிப்பையோ உண்டு பண்ண இப்புரட்சி உதவவில்லை என்பது தெளிவு. ஆனால், ஆகஸ்டு 15 ஒரு தனி மனிதன் செயலன்று, ஒழுக்க முறைகளுக்குக் கட்டுப்பட! காந்தியடிகளின் ஆன்மிக முறைப்படி அரசியலை அலசுவதானால், ஆகஸ்டுப் புரட்சி மட்டுமன்றி ரஷ்யாவின் செப்டெம்பர்ப் புரட்சியும், சீனப்புரட்சியும், விடுதலை நாடுகள் நடத்தும் போராட்டங்களும், போஸின் வீரப் போராட்டங்களுங்கூடத் தவறானவையாகத்தான் கருதப்பட நேரும் என்பதைநாம் மறந்துவிடக் கூடாது. ‘காந்தீயம் முற்றிலும் பொருந்துவது வருங்கால உலகுக்கு; இன்றைய உலகுக்கல்ல,’ என்று நம்மால் கூறாமலிருக்க முடியாது. தமிழகத்தின் எச்சரிக்கைக் குரல்: ராஜகோபாலாசாரியார்: ஆகஸ்டுப் புரட்சியை எதிர்த்தவருள் முக்கியமானவர் சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார் ஆவர். அவர் தமிழகம் தந்த மாநிலப் பெரியார்களுள்ளும் உலகப் பெரியார்களுள்ளும் ஒருவராக எண்ணத்தக்கவர். ஆன்மிக வழியில் காந்தியடிகள் எவ்வளவு பெரியவரோ, வீரப் போராட்ட வழியில் தலைவர் பெருந்தகை போஸ் எவ்வளவு ஒப்பற்றவரோ, வணங்காமுடி எதிர்ப்பாளருள் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் எவ்வளவு ஈடும் எடுப்பும் அற்றவரோ, அந்த அளவு பிரிட்டனின் சூழ்ச்சித்திறத்தையும் எதிர்த்துத் தகர்க்கும் அரசியல் திறத்தில் ராஜகோபாலாசாரியாரும் ஒப்புமை யற்றவர் என்பதில் ஐயமில்லை. பெரியாருடன் பெரியார் முரண்படும் முரண்பாட்டிலிருந்தே, நேர் மின்சாரம், எதிர் மின்சாரங்களின் முரண்பாடுகளிலிருந்து வரும் ஒளி போன்று உலக அறிவு மலர வேண்டும் என்பதை நாம் மறப்பதற்கில்லை. ராஜகோபாலாசாரியார் காந்தியடிகளின் சீடர். ஆனால் அவர் நடுவுநிலை கோடாச் சமநிலை அமைதியுடையவர். ஒரு குறிப்பிட்ட எல்லைக்கப்பால் காந்தியடிளின் அறநெறியிட மிருந்து அவர் நேரடியாக விடை பெற்றுக் கொண்டவர். ‘அறநெறி பற்றியே ஆராய்ந்து ஆராய்ந்து காந்தியடிகள் மூளை கோளாறு கண்டு விட்டது!’ என்று கேலி செய்ய அவர் தயங்கவில்லை. ஆகஸ்டுப் புரட்சித் தீர்மானத்தைப் பேரவைக் குழுவின் கூட்டத்திலேயே அவர் எதிர்த்தார். அதன்படி அவர் அதில் பங்கு கொள்ளவும் மறுத்தார். போர் மூலம் விடுதலை பெறத் துணிந்தவர் போஸ்; புரட்சி மூலம் அதைப் பெற எண்ணியவர் காந்தியடிகள்: ஆனால், ஒற்றுமை மூலம் பெறவே ராஜகோபாலாசாரியார் திட்டமிட்டார். பிரிவினை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேரவையின் இயக்கத்தேருக்கு முட்டுக்கட்டையிட அவர் முன்வந்த ஒன்றிலிருந்தே நாம் இதை அறியலாம். ஜின்னாவிடம் சமரஸப் பேச்சுத் தொடங்க வேண்டும் என்றும்; முஸ்லிம்கள் தன் முடிபுரிமையை ஏற்று அவருடன் வாதாடவேண்டுமென்றும் கிரிப்ஸ் திட்டத்தின் போதே ராஜகோபாலாசாரியார் எண்ணினார். கிரிப்ஸ் திட்டம் இந்த அடிப்படையில் அமைந்திருப்பதால், பிரிவினைவாதிகளை அன்பு முறையில் இணைக்க அது உதவும் என்று நினைத்ததாலேயே, எவரும் தீண்டாத அந்தத் திட்டத்தை அவர் ஆதரிக்க முனைந்தார். காந்தியடிகள் அவர் போக்கை ஓரளவு உணர்ந்து கொண்டார் என்னலாம். ஏனெனில், ராஜகோபாலாசாரியார் ஜின்னாவுடன் பேசுவதற்குக் காந்தியடிகள் சிறையிலிருந்து ஆதரவு தந்ததுடன் பின்பு தாமே அதே வழியில் செல்லவும் முனைந்தார், ஆயினும், நன்றோ, தீதோ, இருவர் முயற்சிகளும் தோற்றன. பேரவையும் முஸ்லிம் சங்கமும் சென்ற போக்கு விடுதலையைக் கொணர்ந்தது; ஆனால், பிரிவினையையும் தந்தது என்பதை விடுதலை இந்தியாவில் வாழும் நாம் இப்போது காணலாம். ராஜகோபாலாசாரியார் மற்றத் தலைவர்களைப் போலவே எல்லா வகைத் தியாகமும் செய்தவர். ஆனால், தமது கருத்துக்காகச் சரியாகவோ, தப்பாகவோ அவர் செய்த தியாகம் மிகமிகப் பெரிது! அது சரியென்பதைக் காலப்போக்குத்தான் காட்டுகிறது. ஆனால், தியாகம் பெரிது என்பதைக் காலப்போக்கு மறந்துவிடச் செய்யவே உதவுகின்றது. காந்தியடிகள் ஆதரவை எவரும் அறியாதநிலையில் அவர் ஜின்னாவின் பக்கத் திரும்பியதற்காக, மாநிலப் பேரவையின் பெரும்பாலான ஆதரவாளர் சீறினர். அதே சமயம் தமிழகம் அவர் இந்திக் கொள்கைக்காக ஒருபுறம், அவர் ஆகஸ்டு எதிர்ப்புக்காக மறுபுறம் என இருபுறமிருந்து அவரைப் பழிவாங்கிற்று. அவர் தமிழகத்திலிருந்து வடக்கேயும், வடக்கிலிருந்து காந்தியடிகள் மடி மீதும் பந்து போலத் தூக்கி எறியப்பட்டார். இத்தனையும் கடந்து அவர் மீண்டும் அரசியலில் இடம் பெற்றது காலத்தின் செயலன்றி வேறன்று என்னலாம். விடுதலை இந்தியாவின் தொண்டில் அவர் என்றும் சளைக்கவில்லை. அரசியல்முட்டுக்கட்டை நிலை ஆகஸ்டுப் புரட்சிக்குப் பேரவைத் தலைவர்களே காரணம் என்று அரசியலார் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் குற்றஞ் சாட்டினர். பேரவைத் தலைவர்கள் இக்குற்றச்சாட்டை மறுத்தார்கள். பேரவைத் தலைமை இல்லாதபோது மக்கள் நிலை தடுமாறிச் செய்த செயலே அது என்று அவர்கள் விளக்கங்காட்டினார்கள். அரசியல் நிலை சீர் கெட்டுவிடாக் கூடாதென்று எண்ணிய நேர்மைவாதிகள் அனைவரும் தலைவர்களை விடுதலை செய்து நிலைமையைச் சீர்படுத்தும்படி அரசியலாரை வேண்டினர். ஆனால், அரசியலாரோ, இப்போது ஆன்மிகவாதிகளாக மாறினர். செய்தவர்கள் நாங்களே; அது தவறு; மன்னிப்புக் கோருகிறோம்’ என்ற அறிக்கையை எதிர்பார்த்துத் தம் செயலின்மையை வலியுறுத்தினர். இத்தகைய வீம்புப் பேச்சுகளில் ஆண்டுகள் சென்றன; அடக்கு முறைகள் நீண்டன; மக்கள் மனக்கசப்பு வளர்ந்தது. 1943, ஜனவரி, 6இல் பத்திரிகைக் கட்டுப்பாடுகளை எதிர்த்து மாநிலமுழுதும் பத்திரிகைகள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தன. பிப்பிரவரி 16லிருந்து ‘கலவரத்துக்குப் பேரவையின் பொறுப்பு’ என்ற அரசியல் சார்பான வெளியீட்டுக்குக் கண்டனமாகக் காந்தியடிகள் 21 நாள் உண்ணா நோன்பு ஆற்றினார். 1943, மார்ச்சு, 15-ஆந் தேதி வரை தண்டிக்கப்பட்டவர் 34,895 பேர் என்றும், காவலிலிருப்பவர் 16,623 பேர் என்றும் பிரிட்டிஷ் மன்றத்தில் இந்தியா அமைச்சரான அமெரி, மே 20-ஆம் தேதி கூறினார். வீம்புப் போராட்டமே நிலைமையை என்றும் சரிப்படுத்த முடியாதென்பதைப் பிரிட்டிஷார் கண்டனர்; நிலைமையில் மாற்றம் ஏற்படுத்த மீண்டும் முயலத் தொடங்கினர். ஜூன் 18ல் கீழ்த்திசை நாடுகளில் போரில் ஈடுபட்டுப் பழக்கமுடைய தலைவர் வேவல் ஆட்சி முதல்வராக அனுப்பப்பட்டார். படைத் துறையாளர் அனுப்பப்பட்டது பலருக்கு முதலில் மனத்தாங்கல் தந்தது. ஆயினும், வேவல் முற்றிலும் படைத்துறைப் போக்கில் நடந்து கொள்ளவில்லை. இந்தியாவின் அரசியல் சிக்கலைத் தீர்க்க முடியா விட்டாலும், தீர்ப்பதற்கான சூழ்நிலையை அவரால் ஓரளவு உண்டு பண்ண முடிந்தது. இவ்வாண்டில் சென்னை சத்தியமூர்த்தியை இழந்தது. இச்சமயம் வங்கத்தில் எழுந்த பஞ்சநிலை அரசியல் இருளை இன்னும் இருள் மயமாக்கிற்று. மக்கள் நினைவுக்குள் இது போன்ற பஞ்சம் இதற்கு முன் நேர்ந்ததில்லை. பெரும் போர்களில் ஆண்டுக்கணக்கில் ஏற்படும் அழிவை இது மக்களிடையே மாதக் கணக்கில் உண்டு பண்ணிற்று. உணவின்றி மக்கள் புழுவாய்த் துடித்தார்கள். ஓராண்டுக்குள் உணவின்றி இறந்தவர் 1 1/2லட்சம் பேர் என்பது கூறப்படுகிறது. 1944 பிப்ரவரி 22ல் அன்னையார் கஸ்தூரிபாய் சிறைத்துன்பம் தாளாது மாண்டார்! நாடெங்கும் துயர் கொண்டாடிற்று. அன்னையாரின் பெயரால் கோடிக்கணக்கில் நாடு நிதியளித்து அன்னையரினத்தின் துயர் களைய முன் வந்தது. காந்தி - ஜின்னா பேச்சுக்கள் மே மாதம் 6-ஆந் தேதி காந்தியடிகன் விடுதலை செய்யப்பட்டார். ராஜகோபாலாசாரியார் ஜின்னாவுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன் நடத்திய பேச்சுக்கள் முழு வெற்றியைத் தாராததால், இவ்வாண்டு காந்தியடிகள் அதனைத் தொடர்ந்து ஜின்னாவுடன் பல நாட்கள் பேசினார். ஆனால், காந்தியடிகளாலும் எத்தகைய முடிவுக்கும் வர முடியவில்லை. இதுமுற்றிலும் வருந்தத்தக்கது என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இதனாலேற்பட்ட பிரிவினை ஒரே இந்தியா கனவாளர்களின் கனவைக் குலைத்து விட்டது; அது மட்டுமன்றிப் பிரிந்துவிட்ட நாடுகளிலும் இப்பிரிவினை முழு நட்பை உண்டுபண்ண முடியவில்லை. ஜின்னா முஸ்லிம் வெறியர்களுள் ஒருவர் என்று எவரும் கூற முடியாது. அதுபோலவே, காந்தியடிகளை இந்து மத வெறியர் என்றும் எவரும் கூறமாட்டார். உண்மையில் இருவருமே பின்னாட்களில் தத்தம் மதத்தின் வெறிக்கு ஆளாய் உயிர் நீத்தனர் என்பதையும் நாம் உணர வேண்டும். அத்தகைய இரு சமூகங்களின் அறிவுடைத் தலைவர்கள் ஒத்துவர முடியவில்லையென்றால், அந்நிலை தொலைநோக்குடைய எவரையும் சிந்தனையிலாழ்த்தாமலிருக்க முடியாது. ஜூலை 26ல் “இப்போதாவது விடுதலை உறுதி தந்தால், இப்போதே அறப்போராட்ட முறையைக் கைவிடும்படி பேரவைக்கு நான் பரிந்துரைக்க இணங்குகிறேன்”, என்று காந்தியடிகள் ஆட்சி முதல்வருக்கு எழுதினார். இதற்கு எதிரொலியாக வழக்கமான மறுப்புரையே கிட்டிற்று. ஆகஸ்டுப் புரட்சியில் கலந்து பின் தலைமறைவாய் இருக்கும் பலரைக் கூடக் காந்தியடிகளின் தூய அன்பழைப்பு ஆட்சியாளர் வாளுக்கு முன் வந்து கழுத்தைக் குனிந்து கொடுக்கும்படி தூண்டியது. ஆனால், அரசியல் முறைகளிலே வல்லுநரான ஆங்கில ஆட்சியாளரை ஒழுக்கமும் ஆன்மிக சத்தியும் தீண்டவில்லை. ஏகாதிபத்தியத்தை அணைப்பவரைத் தவிர, மற்ற அனைவரையும் அவர்கள் ஒரே படியில் வைத்து எதிரிகளாகக் கருதினார்கள். 1945-ஆம் ஆண்டில் காந்தியடிகள் கைவிட்ட இந்து- முஸ்லிம் சமரஸப் பேச்சுக்களைப் பேரவையின் சிறந்த வழக்கறிஞரான புலாபாய் தேசாயும் முஸ்லிம் சங்கத்தின் தலைவரான நவாபு ஜாதா லியாகத் அலிகானும் மீண்டும் தொடங்கினர். இதில் ஏற்படுவதாகத் தோற்றிய சிறிதளவு மின்னல் வெற்றி, பின்பு கானல் நீராக மாறிற்று. அவ்வாண்டு ஏப்ரல் 3-ஆந் தேதி ஆகஸ்டுக் கலவர வழக்கில் எதிரிகளுக்குத் தூக்குத் தண்டனையை மாற்றித் தரும்படி கோரி நாடெங்கும் கிளர்ச்சிகள் நடத்தப்பட்டன. ஏப்ரல் 7-ஆம் தேதி சான்பிரான்ஸிஸ்கோவில் நடைபெற்ற உலக நாடுகள் சபையின் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழக மாநாட்டுக்கு1 இந்தியா ஸர். ஏ. இராமசாமி முதலியார், ஸர்.பி.டி.வி. ஆசாரியார், ஸர். பிரோஸ்கான் தூன் ஆகியவர்களைப் பிரதிநிதிகளாக அனுப்பிற்று. வேவல் பேச்சுக்கள் 1945, ஜூன் மாதத்தில் செயற்குழு உறுப்பினர்கள் விடுதலையானார்கள். அம்மாத நடுவில் வேவல் பேச்சுகள் தொடங்கின. செயலவையை விரிவுபடுத்தும் 1940-ஆம் ஆண்டு முயற்சியில் அவர் மீண்டும் ஈடுபட்டுத் தலைவர்களுடன் பேசினார். ஆனால், இத்தடவை “செயலவை இடைக்கால அமைச்சவையாகவே இயங்கும்”, என்பதும், “அதுவே முழு விடுதலைக்குரிய அரசியல் அமைப்பு மன்றத்தைக் கூட்டும்.” என்பதும் ஒத்துக்கொள்ளப்பட்டன. வேவல் பெருமகனார் கூட்டாகவும் தனித்தனியாகவும் பேரவைத் தலைவர்களுடனும் முஸ்லிம் சங்கத் தலைவர்களுடனும் சிம்லாவில் சந்தித்துப் பேசினார். இப்பேச்சுக்களே வேவல் பேச்சுகள் என்றும் சிம்லாப் பேச்சுகள் என்றும் வழங்கின. கிரிப்ஸ் திட்டத்தின் பின் இழந்த நம்பிக்கையை நாடு மீண்டும் பெற்றது போலத் தோன்றிற்று. ஆனால் நீடித்த பேச்சுகளினிடையே பல தடவை நம்பிக்கை ஒளியும், அவநம்பிக்கை முகில் திரையும் மாறிமாறித் தென்பட்ட பின், மீண்டும் பிரிட்டிஷாரின் பழைய நிலையிலேயே யாவும் வந்து விடிந்தன. ஜூன் 24-ஆந் தேதி வரை பேச்சுக்கள் நடைபெற்றன. பேச்சுகளின் முரிவுக்கு ஜின்னாவின் பிடிவாதமே காரணம் என்று மௌலானா ஆஸாது கருதினார். ஆனால், ஜின்னாவோ, ‘முஸ்லிம்களின் பிரதிநிதியாக முஸ்லிம் சங்கத்தின் உரிமையைப் பேரவை மதியாததுதான் காரணம்.’ என்று கூறினார். உண்மைக் காரணத்தை அறிவது கடினமன்று, இந்தியர் ஒன்றுபட்டுக் கோருவதைக் கொடுப்பதாகவே பிரிட்டிஷார் இன்றும் கூறினர். ஒன்றுபடுத்தும் பொறுப்பை மூன்றாவது கட்சியினர், அதுவும் ஆளும் கட்சியினர், சரிவரக் கவனிப்பர் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? 1945ல் மேற்கு அரங்கப் போர் முடிவுற்றது. பிரிட்டிஷ் மன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் தொழிற்கட்சி வெற்றிபெற்றது. விரைவில் அமெரிக்கர் அணுகுண்டு வீசியது காரணமாக நீடித்துக்கொண்டு வந்த கீழ்த்திசைப் போரும் முடிவுற்றது. ஜப்பான் சரணாகதியடைந்தது. அதற்கு முன்பே ஜப்பானியர் ஒத்துழைப்பு இல்லாமையால், சுபாஷ் போஸ் தலைமையில் போராடிய இந்திய தேசியப்படையும் சரணடைந்தது. அவ்வீரர் தாம் விடுதலைப் போரின் இறுதியில் பிடிக்க எண்ணிய தில்லிச் செங்கோட்டையிலேயே இப்போது சிறைப்பட்டனர். ஆனால், அவர்கள் உடல் கட்டுண்டாலும், அவர்கள் உள்ளத்தில் துடித்த விடுதலை ஆர்வத் தீ, நாடெங்கும் புதிய விடுதலை வெறியை ஊட்டிற்று. தோல்வியில் வெற்றி கண்ட அவ்வீரர்களின் போர்க்குரலான ‘வாழ்க இந்தியா!’ (ஜெய்ஹிந்த்) என்ற முழக்கம் இந்திய மக்களின் உயிர்க் குரலாயிற்று. இந்திய விடுதலைப் படை 1941இல் இந்தியாவை விட்டு ஜெர்மனி சென்ற விடுதலைச்சிங்க ஏறாகிய சுபாஷ் போஸ், மேல் திசை நாடுகளெங்கம் சிறைப்பட்ட இந்திய வீரரைத் திரட்டி விடுதலைப்படையை அமைத்தார். கிழக்கே பாங்காக்கில் இத்தகைய படை ஒன்றை ராஷ்பிகாரி போஸ் 1942, ஜூன், 15-ஆந் தேதி அமைத்திருந்தார். ஆனால், ஜப்பானியர் அவரையோ, அவர் ஜப்பானியரையோ, மதிக்க முடியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் விடுதலைப் படை வீரர் இந்தியாவின் வீரத் திருவுருவாகிய தலைவர் பெருந்தகை போஸை அழைத்தனர். அச்சு நாடுகளின் கருவியாகச் செயலாற்றாமல், அவர்களின் மதிப்பையும் அன்பையும் ஒருங்கே பெற்ற போஸ், நேச அரசுகளின் கடல் முற்றுகையிடையே துணிந்து சிங்கப்பூர் வந்து தலைமை ஏற்றார். அவர் தேசிய ஆர்வம், விடுதலை ஆர்வப் பொறிபறக்கும் அவர் பேச்சுகள், வீறார்ந்த அவர் செயல் திறம் ஆகியவை படைவீரருக்கு மட்டுமன்றித் தென்கிழக்காசியாவி லுள்ள பொது மக்களுக்கும் போரார்வம் ஊட்டிற்று. அவர் இந்திய விடுதலை அரசும் படையும் பொருளகமும் அரசியலரங்கங்களும் நிறைவுற அமைத்துப் பிரிட்டன் மீது போர் தொடுத்தார். விடுதலை இந்தியப் படையின் இ.தே. ரா.1 அதாவது இந்திய தேசிய ராணுவத் தலைமையை போஸ் 1943, ஆகஸ்டு, 25ல் ஏற்றார். அத்துடன் ‘ஜான்ஸி அரசி படை’ என்று மாநிலப் பெரும் புயலின் வீரமங்கை ஜான்ஸி அரசி இலட்சுமிபாய் பெயரால் பெண்கள் படை ஒன்று திரட்டி, அதற்கு டாக்டராயிருந்த இலட்சுமியையே தலைவராக்கினார். சிறுவரிடையே ஆர்வமூட்டச் சிறுவர் படை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இவற்றுடன் 1943, அக்டோபர் 21ல் விடுதலை இந்திய அரசு அமைக்கப் பட்டது. அதை மதித்து ஜப்பான் அவ்வாண்டு இறுதியில் அதற்கு நில ஆட்சிக் கூறாக அந்தமான், நிக்கோபார்த் தீவுகளை அளித்தது. காப்டன் காந்திமதி நாதன் தலைமையில் அவற்றின் ஆட்சி ஒழுங்கு படுத்தப்பட்டது. 1944, ஜனவரி, 4ல் விடுதலை இந்தியப் படைகள் இந்திய எல்லையில் அரக்கான் பகுதியில் போர் தொடங்கிப் பெருவெற்றிகள் கண்டன. பிப்ரவரி, 4ல் இந்திய மண்ணில் முதல் முதலாகப் பேரவைக் கொடி விடுதலைக் கொடியாக விடுதலை பெற்ற மண்ணில் பறக்க விடப்பட்டது. அவ்வாண்டிலேயே போர் இம்பால் முனைக்கு மாறி, தாமு, உக்ருல், விஷ்ணுபூர் என்னும் இடங்கள் பிடிக்கப்பட்டன. இம்பாலும் எளிதில் விழ இருந்தது. அதற்குள் உலகப் போரின் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. பிரிட்டனின் முழுப் பலமும் படிப்படியாகக் கிழக்குப் போர் முனைக்குக் கொண்டு வரப்பட்டது. அப்போதும் விடுதலை இந்தியப்படை வீரமாகப் போர் செய்து அங்குலம் அங்குலமாகப் பின்வாங்கிற்று. இறுதியில் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாய் அது சரணடைய வேண்டியதாயிற்று. வெற்றி நாட்களில் 15,000 சதுரக் கல் பரப்புடைய நிலப்பகுதி, விடுதலை இந்தியப் படையின் கையில் இருந்தது. இ.தே.ரா. இயக்கம் 1945, ஏப்ரலில் செங்கோட்டையில் சிறைப்பட்ட இந்திய தேசியப் படை வீரரின் வழக்கில், தேசத்தின் ஒப்பற்ற பெருந்தலைவர்களே முன்வந்து நின்று வாதாடினார்கள். அவர்கள் விடுதலையை நாடெங்கும் நாட்டு விடுதலைக் கிளர்ச்சியின் போர்க்குரலாயிற்று. தேசத்தின் குரல் பிரிட்டிஷ் ஆட்சியின் பிடியிலுள்ள நீதி மன்றங்களில் நீதியை நிலை நாட்டிற்று. படை வீரர்களும் அவர்களின் ஒப்பற்ற தலைவர்களான ஷா நவாஸ்கான், ஷேகல், தில்லான் என்பவர்களும் விடுதலை பெற்றார்கள். நாடு முழுவதும் இவ்வெற்றியைக் கொண்டாடிற்று. 1908 முதல் 1945 வரை தேசத்தின் போர்க்குரல், ‘அன்னைக்கு வணக்கம்’ (வந்தே மாதரம்) என்ற பங்கிம் சந்திரரின் பழம்பாடலாயிருந்தது. இப்போது அதனூடே ஓடும் உயிராக ‘வெல்க இந்தியா!’ (ஜெய் ஹிந்த்) என்ற பண் உலவிற்று. அது முன் என்றுமில்லாத அளவில் புதிய ஒற்றுமைப் பண்ணையே எங்கும் வளர்த்தது. பம்பாய் விமானப்படை வேலை நிறுத்தங்கள் இப்போது நிறவேறுபாட்டை எதிர்த்த தேசிய எதிர்ப்புக்காளாகி, படைத்துறை கடந்து, பொதுமக்கள் ஆதரவு பெற்ற இயக்கங்களாயின. அது மட்டுமன்றிப் பொதுமக்களிடையே வளர்ந்த ஒற்றுமை இப்போது ஒரு புதிய சூழ்நிலையை உண்டு பண்ணிற்று. இ.தே. ரா. இயக்கம் கட்சி வேற்றுமை கடந்த முழுத் தேசிய உருவில் காட்சியளித்தது. கிளர்ச்சியில் கலந்து கொண்டவர்களிடையே இப்போது அதன் புதிய சின்னங்களைக் காண முடிந்தது. அவர்கள் பேரவையின் விடுதலைக் கொடி, முஸ்லிம் சங்கக்கொடி, தென்னாட்டின் இந்தி எதிர்ப்பாளர் கொடி ஆகிய எல்லா இந்தியக் கொடிகளையும் ஏந்தி, இந்தியா முன் என்றும் கண்டிராத புதியதொரு கண்கொள்ளா இந்திய ஒற்றுமைக் காட்சியை மக்களுக்குத் தந்தனர். பிரிட்டிஷ் அமைச்சவைத் தூதுக்குழு 1945, செப்டெம்பரில் இந்தியாவின் சட்டசபைகளுக்குத் தேர்தல்கள் நடந்தன. காந்தியடிகளின் புகழ்ப் பெயருடன் தலைவர் பெருந்தகை போஸின் பெயரும் இந்திய விடுதலைப் படையின் பெயரும் தேர்தல் குரல்களாயிருந்து பேரவைக்கு முன்னிலும் பெருவெற்றி தந்தன. பழைய மாநிலச் சட்டசபையில் பேரவைக்கு இருந்த 36 இடங்கள் இப்போது 55 ஆயின. 1946 ஜனவரியில் மாகாணங்களின் சட்டசபைகளுக்கு ஏற்பட்ட தேர்தலிலும் இதே முன்னேற்றத்தைக் காண்கிறோம். முந்திய தேர்தலில் பேரவைக்கு மொத்தம் 701 இடங்கள் கிடைத்தன. இப்போது அத்தொகை 980 ஆயிற்று. ஒடுக்கப்பட்டவர்களுக்கு முன் தனித்தொகுதியில் கிடைத்ததைவிட மிகுதியான இடங்கள் உரிமையாயின. அவை பேரவைக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் தந்த பேராதரவையும் காட்டின. மேலும், இத்தடவை தேர்தலின் பின் தொடக்கத்திலேயே 8 மாகாணங்களில் பேரவை ஆட்சி ஏற்பட்டது. முந்திய தேர்தலில் முதன்முதல் பேரவை ஆட்சி 6 மாகாணங்களிலும் பிற்பட்டே இன்னும் 2 மாகாணங்களிலும் பரவிற்று. இதிலிருந்து பேரவைக்கு முன்னிலும் மக்களாதரவு வளர்ந்திருந்தது என்பது தெரிய வருகிறது. தவிர, முஸ்லிம் பெரும்பான்மை முஸ்லிம் மாகாணங்களில் கூடப் பேரவைக்கே பேராதரவு ஏற்பட்டிருந்தது. மிகப் பெரும்பான்மை முஸ்லிம் மாகாணமான எல்லைப்புறத்தில் இப்போது தொடக்கத்திலேயே பேரவை ஆட்சி ஏற்பட்டது. முஸ்லிம் பெரும்பான்மையுடைய பஞ்சாபில் பேரவையுடன் சேர்ந்த கூட்டு அமைச்சவையே ஏற்பட்டது. பேரவைக்குட்படாத மாகாணங்கள் இரண்டே, அவை சிந்து, அஸ்ஸாம் ஆகியவைகளே. இங்கே கூட முஸ்லிம் சங்கம் ஐரோப்பியர் உதவியுடன்தான் கூட்டு அமைச்சவைகள் மட்டும் நிறுவ முடிந்தது. 1946, பிப்ரவரியில் பிரிட்டனின் புதிய அரசியல் முற்றிலும் புதிய அடிப்படையில் இந்தியாவுடன் சமரஸ நட்புகொள்ளத் துணிந்தது. இந்நோக்கத்துடன் பிரிட்டிஷ் அரசியலார் பிரிட்டிஷ் மன்றத்தின் எல்லாக் கட்சியினரும் அடங்கிய ஒரு மன்றத் தூதுக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பினர். இதனையடுத்து, பிரிட்டிஷ் அமைச்சர் குழுவிலிருந்து மூவரையே இந்தியருடனும் இந்தியத் தலைவருடனும் பேசி ஒரு முடிவுகாண முனையும்படி பிரிட்டிஷ் அரசியலார் அனுப்பினர். அதுபற்றி, பிப்ரவரி 17ல் பிரிட்டனிலிருந்து இந்தியா அமைச்சர் பெதிக் லாரென்ஸ் அறிவித்தார். அதே தேதியில் இந்திய ஆட்சி முதல்வரும் அது பற்றிய விளக்க அறிவுப்புத் தந்தார். மார்ச்சு 15ல் பிரிட்டிஷ் முதலமைச்சர் கிளெமெண்ட் ஆட்லி பிரிட்டிஷ் அரசியலின் நோக்கம் பற்றி பிரிட்டிஷ் அரசியல் மன்றத்தில் விளக்க உரை பகர்ந்தார். மார்ச்சு 23ல் அமைச்சவைத் தூதுக்குழு இந்தியா வந்து சேர்ந்தது. அதில் இந்தியா அமைச்சர் பெதிக் லாரென்ஸ் பிரிட்டிஷ் வாணிகச் சங்கத் தலைவர் ஸர் ஸ்டிராஃவோர்ட் கிரிப்ஸ், கடற்படை முதல்வர் ஏ.வி. அலெக்ஸாண்டர் என்னும் மூவர் உறுப்பினராயிருந்தனர். அமைச்சவைக்குழு கொண்டு வந்த திட்டத்தின் கூறுகளாவன:- (1) இந்தியா விரைவில் விடுதலை பெற வேண்டுமென்பதே பிரிட்டிஷ் அரசியலாரின் நோக்கம். ஆனால், இந்தியாவின் விடுதலை அரசியலை இந்தியர்தான் வகுத்துக்கொள்ள வேண்டும். பிரிட்டிஷ் அரசியலார் அதற்கான ஏற்பாடுகளை மட்டுமே செய்வார். (2) விடுதலை பெற்ற பின் பிரிட்டன் சேர்ந்திருப்பதும் பிரிந்திருப்பதும் இந்தியாவின் விருப்பத்தையே பொறுத்தது. (3) பேரவை, முஸ்லிம்- சங்கம் ஆகியவற்றிடையே ஒற்றுமைகாண, பிரிட்டிஷார் செய்த முயற்சிகள் எவையும் பயன் தரவில்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள வடமேற்கு எல்லையிலும் வடகிழக்கு எல்லையிலும் முஸ்லிம் தனி உரிமை அரசு நிறுவ முஸ்லிம் சங்கம் உறுதிகொண்டுள்ளது. ஆனால், பாகிஸ்தான் வேண்டுமென்பதற்காகக் கூறும் வாதங்களெல்லாம் முஸ்லிம் அல்லாத பகுதிகளை அம்முஸ்லிம் பகுதிகளில் சேர்க்கக்கூடாது என்பதற்கும் பொருந்தும். முஸ்லிம் அல்லாதாரே பெரும்பான்மையாயுள்ள அஸ்ஸாமையும் பஞ்சாபின் சில பகுதிகளையும் வங்காளத்தின் சில பகுதிகளையும் பாகிஸ்தானில் சேர்ப்பது இவ்வகையில் நியாயமாகாது. அத்துடன் பஞ்சாபு பகுதிப்பிரிவினை சீக்கியர்களைப் பாதிப்பதாகவும் உள்ளது. (4) பிரிவினையாலும் மாகாணங்களைத் துண்டாடு வதாலுங்கூட வகுப்புப் பிரச்சினை தீர்ந்துவிடாது. அத்துடன் பிரிவினையால் போக்குவரத்து, தந்தி அஞ்சல் வாய்ப்பு, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஊறு ஏற்படும்; நாட்டு மன்னர் பகுதி வகையில் சிக்கல்கள் ஏற்படும்; வடகிழக்கு, வடமேற்குப் பகுதிகளிடையே போக்குவரவு இணைப்புக்கு வழி இல்லாதிருக்கும்; இரண்டு பகுதிகளும் எல்லைப்புறத்திலிருப்பதால், பாதுகாப்பு வகையில் மொத்த இந்தியாவைபிடப் பிரிவினைக்கு உட்பட்ட இந்தியா வலிமை குறைந்ததாயிருக்கும். (5) அரசியலமைப்பு மன்றம் கூடும்வரை, எல்லாக் கட்சிப் பிரதிநிதிகளும் அடங்கிய இடைக்கால அரசு ஒன்று அமைக்கப்படும். இத்திட்டம் கட்சி எதிர்க்கட்சி அடிப்படையில் நாட்டின் நிலைமைகளை நன்கு விளக்கிற்று. இடைக்கால அரசு பேரவைச் செயற்குழு, மே, 26ல் கூடி, இத்திட்டம் பற்றி ஆராய்ந்து, பல செய்திகளில் தெளிவுகள் கோரிற்று. முஸ்லிம் சங்கத் தலைவர் ஜின்னாவும் இதுபோலப் பல தடங்கல்களை எடுத்துக்காட்டி விளக்கம் கோரினார். அமைச்சவைத் தூதுக்குழுவின் நீண்டகாலத் திட்டத்தை ஏற்பதென்றும், குறுகிய காலத் திட்டமான இடைக்கால அரசுத் திட்டத்தை மறுப்பதென்றும் பேரவை தீர்மானம் செய்தது. முஸ்லிம் சங்கம் நீண்டகாலத் திட்டத்தையும் இடைக்காலத் திட்டத்தையும் ஒருங்கே ஏற்றது. நீண்டகாலத் திட்டத்தை இங்ஙனம் எல்லாக் கட்சிகளும் ஏற்றன. ஆகவே, அது செயல்முறைப்படுத்தப்பட்டது. எல்லா மாகாணங்களிலும் அரசியல் அமைப்பு மன்றத்துக்கான தேர்தல்கள் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஜூலை6,7இல் கூடிய பேரவைப் பெருங்குழு, இடைக்காலத் திட்டத்தையும் ஏற்பதென்று முடிவு செய்தது. மௌலானா ஆஸாது, ஸர்தார் வல்லபபாய் பட்டேல் முதலிய பெருந்தலைவர் அனைவரும் இதை வலியுறுத்தினர். திரு. ஜெயப்பிரகாஷ் நாராயணனும் வேறு இடசாரியினர் ஒரு சிலரும் மட்டுமே எதிர்த்தனர். வேவல் பெருமகனார், பண்டித ஜவஹர்லால் நேருவை அழைத்து, இடைக்கால அரசை அமைக்கும்படி கூறினார். முன் சென்னை ஆட்சி முதல்வரிடம் சென்னை முதல்வர் ராஜகோபாலாசாரியார் கோரியதுபோல, நேருவும் ஓர் உறுதி கூறினார். இடைக்கால அரசின் உறுப்பினர் ஒரு கூட்டுப் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் குழுவாய் இயங்க வேண்டு மென்பதே அவ்வுறுதி, ஆட்சி முதல்வர் இதை அளித்தபின், நேரு இடைக்கால அரசுக்கு இணக்கம் தெரிவித்து, அதற்கான அமைச்சர் பட்டியலைத் தந்தார். 1946, ஆகஸ்டில், அது ஏற்கப்பட்டது. இடைக்கால அரசு ஸெப்டெம்பர் 2ல் பதவி ஏற்றது. இடைக்கால அரசில் பண்டித ஜவஹர்லால் நேரு, ஸர்தார் வல்லபபாய் பட்டடேல், டாக்டர் ராஜேந்திரப் பிரஸாது, திரு. ஆஸஃவ் அலி, திரு. ஸி. ராஜகோபாலாசாரியார், திரு. ஸரத் சந்திர போஸ், டாக்டர் ஜான் மத்தாய், சர்தார் பலதேவ் சிங்கு, ஸர் ஷஃவாத் அகம்மத் கான், திரு. ஜகஜீவன்ராம், திரு. சையத் அலி ஜஹீர், திரு. கூவர்ஜி ஹார்முஸ்ஜி பாபா ஆகியோர் இடம் பெற்றிருந்தார். பண்டித நேரு பதவி ஏற்றவுடன் வானொலியில் பேசுகையில் இவ்விடைக்கால அரசை முழுநிறை விடுதலைக்கான ஒரு படிக்கல் என்று குறிப்பிட்டார். இப்போது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் வரலாற்றிலேயே முதன்முதலாக நடுவரசிலும் மாகாண அரசுகளிலும் பொறுப்பாட்சி ஏற்பட்டது. அத்துடன் மாகாணங்களில் பெரும்பாலானவற்றிலும் நடுவரசிலும் இப்போது பேரவையே பெரும்பான்மை இடம் பெற்று ஆட்சியை மேற்கொண்டிருந்தது. அமைச்சவைத் தூதுக்குழுவின் நீண்ட காலத்திட்டப்படி 1946 ஜூலையில் அரசியல் அமைப்பு மன்றத்திற்கான தேர்தல்கள் நடைபெற்றன. பேரவை இத்தடவை பேரவைக் கட்சியாக மட்டும் செயலாற்றாமல், தன் உண்மை இயல்புக்கேற்பத் தேசிய அவையாகவே செயலாற்றத் துணிந்தது. அது எல்லா வகுப்பினரிடமிருந்தும் திறமையுள்ள பிரதிநிதிகளைத் தேர்தலுக்கு நிறுத்திற்று. பேரவைக்கட்சிக்குட்படாத பிற கட்சியினர், கோட்பாட்டினர்களிடையே கூடத் தலைசிறந்த பலரை அது சேர்த்துக் கொண்டிருந்தது. பேரவைக்குப் பெரு வெற்றி கிடைத்தது. மொத்தம் 296பேர் அடங்கிய மன்றத்தில் 212 பேரின் ஆதரவு அதற்கு இருந்தது. இத்தேர்தலில் பொதுத் தொகுதிகளில் பல முஸ்லிம்கள் பேரவையால் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றிருந்தார்கள். ஆயினும், முஸ்லிம் தொகுதிகள் 78ல் 73இடங்கள் முஸ்லிம் சங்கத்துக்கே கிடைத்தன. முஸ்லிம் சங்கத்தின் போர்க் குரல் முஸ்லிம் சங்கத் தலைவர் ஜின்னா, பேரவையின் பெருமித வெற்றியைக் கண்டும் பண்டித ஜவஹரின் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது கண்டும் சீற்றமுற்றார். ஜூலை 2-ஆந் தேதியே முஸ்லிம் சங்கம் பிரிட்டிஷார்மீது நேரடி நடவடிக்கை தொடங்குவதாகத் தீர்மானம் செய்தது. ஆகஸ்டு 16-ஆந் தேதியை நேரடி நடவடிக்கை நாளாகக் கொண்டாடும்படி ஜின்னா கட்டளையிட்டார். பிரிவினைக்கு முன்னும் பின்னும் இந்தியாவில் இந்துக்கள் முஸ்லிம்கள் இரு சாராரிடையிலும் பேரளவான குருதியாறு களை ஓடவிட்ட தீர்மானம் இதுவே. நாளடைவில் பேரவையின் தனிப் பெருந்தலைவரான காந்தியடிகளும், முஸ்லிம் சங்கத்தின் தனிப்பெருந்தலைவரான ஜின்னாவும் ஆகிய இருவருமே அக்குருதியாற்றில் அம்மதவெறியினாலேயே அடித்துச் செல்லப்பட்டனர் என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. சிந்துவிலும் வங்கத்திலும் முஸ்லிம் சங்கச்சார்பான அமைச்சவைகள் இருந்தன. ஆயினும், வங்கத்திலேயே மாகாண ஆட்சி முதல்வர் ஆகஸ்டு 16-ஆந் தேதியை விடுமுறை நாளாகக் கொண்டாட முஸ்லிம் சங்க ஆட்சியாளருக்கு இணக்கம் அளித்தார். அங்கே முஸ்லிம் ஊர்வலங்களும், கொண்டாட்டங் களும் நடத்தப்பட்டன. முஸ்லிம் மதவெறி அவிழ்த்துவிடப் பட்டது. அது கல்கத்தாவை அமர்க்களமாக்கிற்று. அன்று ஒரு நாள் கலவரத்தில் இறந்தவர் 6000 பேர் என்றும், காயமடைந்தவர் 15,000 பேர் என்றும், பொருள் இழப்பு 5 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. இடைக்கால அரசு ஏற்பட்ட அன்று காந்தியடிகள் அகமகிழ்வுற்றார் அன்று நள்ளிரவு எல்லாரும் உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்திற்கூட அவர் எழுந்து உட்கார்ந்து, பண்டித ஜவஹருக்குத் தம் மகிழ்ச்சியையும் பாராட்டையும் அறிவுரையுடன் கலந்து கடித உருவில் எழுதினார். ஆனால், கல்கத்தா நிகழ்ச்சி அவர் மனத்தைப் புண்படுத்திற்று. முஸ்லிம் சங்கத்தின் நேரடி நடவடிக்கைத் தீர்மானமும், அதன் பின்விளைவாக எழுந்த கல்கத்தா களரியும் பேரவைத் தலைவர்களைக் கலங்க வைத்தன. ஆனால், ஜின்னாவும் முஸ்லிம் சங்கமும் நேரடி நடவடிக்கையின் மூலமே முஸ்லிம் உலகு தன் முடிபுரிமை பெற முடியும் என்று குறிப்பிட்டனர். எனினும், மாநில ஆட்சி முதல்வர் இரு கட்சித் தலைவர்களையும் ஒருவாறு இணங்க வைத்து, முஸ்லிம் சங்கத்தையும் அக்டோபர் 15-ஆந் தேதி இடைக்கால அரசில் சேரும்படி செய்தார். இது சமயம் இந்திய முஸ்லிம்கள் வகையில் முஸ்லிம் சங்கமே பிரதிநிதித்துவம் உடையதென்பதை ஒத்துக்கொள்ளும்படி பேரவை வற்புறுத்தப் பட்டது. பேரவை இதற்கு இணக்கமளித்தது. ஆனால், பேரவை கோரியபடி இடைக்கால அரசின் கூட்டுப் பொறுப்பையும் பண்டித நேருவின் தலைமைப் பொறுப்பையும் முஸ்லிம் சங்கம் ஏற்க மறுத்துவிட்டது. முஸ்லிம் சங்கத்தின் சார்பில் இடைக்கால அரசில் இடம் பெற்றவர்கள் திரு.லியாகத் அலிகான், திரு. ஐ.ஐ. சந்திரிகர், திரு. அப்துர் ரப் நிஸ்தார், திரு. கஃஜ்னஃவர் அலிகான், திரு. ஜோகேந்திர நாத் மண்டல ஆகியவர்கள். இவர்களுள் திரு. ஜோகேந்திரநாத் மண்டல், டாக்டர் அம்பேத்காரின் ஒதுக்கப் பட்டவர் கழகத்தைச் சேர்ந்தவர். புதிய உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் முறையில் பழைய இடைக்கால அரசியலின் உறுப்பினரான திரு. சரத் சந்திர போஸ், ஸர் ஷஃவர்த் அகமதுகான், திரு. சையத் அலிஜஹீர் ஆகியவர்கள் விலகிக் கொண்டார்கள். இடைக்கால அரசில் முஸ்லிம் சங்கமும் பேரவையும் பிரிட்டிஷ் தூண்டுதலால் ஒருங்கே ஆட்சி செய்தாலும், இரு கட்சிகளுக்குமிடையே நல்லெண்ணம் வளரவில்லை. “இடைக் கால அரசுக்கு உள்ளேயும் புறம்பேயும் பாகிஸ்தானுக்காகவும் முஸ்லிம்களின் தன் முடிபுரிமைக்காகவும் நாங்கள் போராடுவோம்!” என்று இச்சமயம் முஸ்லிம் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் அமெரிக்காவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கேற்ப, இடைக்கால அமைச்சர்களிடையே பூசலும் போட்டிகளும் நிலவி வந்தன. வெளியேயும் கல்கத்தாவில் தொடங்கிய நேரடி நடிவடிக்கை நிகழ்ச்சிகள், கிழக்கு வங்கமுழுவதும் பரவின. சிறப்பாக நவகாளி வட்டத்தில் ஒரு நவகாளியே தன் கோர உருவம் காட்டிப் பயங்கர நடனமாடினளாள். பஞ்சாபுப் படுகொலைகளைவிட அவை நாட்டில் பேரதிர்ச்சியை உண்டு பண்ணின. முஸ்லிம் மதவெறி இதற்குள்ளாக இந்து எதிர் வெறியையும் கிளப்பிவிட்டது. பீகாரில் நவகாளிக்குப் பழிக்குப் பழி வாங்கும்படலம் தொடங்கிற்று. இந்நெருக்கடி நிலைகளுக்கிடையே 1946, நவம்பர், 23ல் மீரட்டில் பேரவை கூடிற்று. விடுதலை இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திய பேரவைக் கூட்டங்களின் பட்டியல் பின் வருமாறு:- எண்: ஆண்டு தேதி பேரவை நடந்த இடம் தலைவர் வ.வே.க.த. செயலாளர்கள் 50. 1936 லக்னோ பண்டித ஜவஹர்லால் நேரு ஆச்சார்யா கிருபளானி ஜெயராம்தாஸ் தௌலத் ராம் 51. 1937 பெய்ஸ்பூர் சங்கரராவ் தேவ் 52. 1938 7ஹரிபுரா சுபாஷ் சந்திர போஸ் தர்பார் கோல்கர் தாஸ் தேசாய் கிருபளானி 53. 1939 திரிபுரி சேத் கோவிந்த தாஸ் 54. 1940 மார்ச் ராம்கார் மௌலானா அபுல்கலாம் ஆஸாது 55. 1946 நவ. மீரட்டு கிருபளானி(ஜவஹர்லாலுக்குப் பதில்) பேரவைத் தலைவர் நேரு இடைக்கால அரசின் தலைவராயிருந்ததால், 1946ல் ஆசார்யா கிருபளானி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்லியின் பிப்ரவரி 20-ஆந் தேதி அறிக்கை கல்கத்தா நிகழ்ச்சியும், நவகாளி நிகழ்ச்சியும், பீகார் நிகழ்ச்சியும் இந்தியாவினால் எளிதில் மறக்க முடியாத இன்னல்கள். விடுதலை வரலாற்றில் எளிதில் கழுவி அகற்றிவிட முடியாத கறைகள் அவை. ஆனால், அப்பெருந்தீமைகளினாலும் ஒரு நன்மை ஏற்பட்டது: இந்திய அரசியல் நெருக்கடியை இப்படியே வளரவிடுவது பேராபத்து என்பதை பிரிட்டன் நன்கு அறிந்துகொண்டது. இதன் பயனாக, பிரிட்டிஷ் முதல்வர் அட்லி, 1947 பிப்ரவரி மாதம் 20-ஆந் தேதி இந்திய விடுதலை பற்றிய திட்டமான ஓர் அறிவிப்பு விடுத்தார். இந்தியக் கட்சிகள் தம்முள் ஒத்து வந்தாலும், ஒத்து வாராவிட்டாலும் பிரிட்டிஷார் எந்த ஒரு குழுவினிடமோ அல்லது சிலபல குழுக்களிடமோ தம் அதிகாரத்தை விட்டுக்கொடுத்துவிட்டு வெளியேறிவிடுவதாக அவர் உறுதி தெரிவித்தார். இந்தியக் கட்சிகளிடையே இவ்வறிவிப்புப் பெரும் பரபரப்பை உண்டு பண்ணிற்று. பிரிட்டிஷார் உள்ளக்கிடக்கையின் மீது இருந்த ஐய மனப்பான்மை பெரிதளவு குறைந்தது. நடுவரிடம் முறையிடும்போக்கு மாறித் தத்தம் நிலையில் தத்தம் போக்குப்படி கூடியமட்டும் மிகுதி அதிகாரத்தை ஏற்பதற்கு எல்லாரும் முன் ஏற்பாடுகள் செய்தனர். ஆனால், முஸ்லிம் சங்கம் இதனைப் பயன்படுத்திய வகை இப்போது புதிதாகவே இருந்தது. அது முஸ்லிம் பெரும்பான்மை மாகாணங்களில் உள்ள முஸ்லிம் சங்கச் சார்பற்ற அரசியல்களைத் தகர்க்க முற்பட்டது. முஸ்லிம் வெறி உணர்ச்சி பஞ்சாபிலும் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திலும் கிளறப்பட்டது. இதனால், பஞ்சாபில் ஐக்கியக் கட்சி அரசியல் கவிழ்ந்து, ஆட்சி முதல்வரின் நேரடி அரசு அமைந்தது. லாகூர்,அமிர்தஸரஸ், முல்தான், ராவல்பிண்டி ஆகிய இடங்களில் வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டன. 4,000 பேருக்கு மேற்பட்டவர்கள் இவற்றில் கொலையுண்டார்கள். இடைக்கால அரசுக்குள்ளேயே இச்சமயம் திரு.லியாகத் அலிகான் கொண்டு வந்த பொருளியல் சட்டப்பகர்ப்பு இரு சமூகத்தாரிடையே மேலும் பிளவு உண்டுபண்ணிற்று. அது தொழில் முதலாளி வகுப்பினருக்குப் பேரளவில் பாதகமாய் அமைந்திருந்தது. இந்தியாவில் முதலாளி வகுப்பினர் பேரளவில் இந்துக்களாகவே இருந்து வந்துள்ளனர். ஆகவே, அது இந்துக்களை எதிர்த்தழிக்கும் முயற்சி என்று இந்து வகுப்பு வாதிகளால் எங்கும் பிரசாரம் செய்யப்பட்டது. பேரவை இதை நேரடியாக எதிர்க்கவும் முடியாமல், திறந்து ஆதரிக்கவும் முடியாமல் திணறடிக்கப்பட்டது. ஆதரித்தால், பேரவையின் பின்னனியிலிருந்த இந்து முதலாளிகள் எதிர்ப்பு ஏற்படும்; எதிர்த்தால், பேரவை முதலாளிகள் ஆதரவை நம்பியிருக்கிறது’ என்ற எண்ணம் எழும். இந்த இரண்டகநிலை கண்டு பேரவைத் தலைவர்கள் புழுக்கமுற்றார்கள். இப்பரபரப்புக்கிடையே மார்ச்சு 22ல் வேவல் பெருமகனார் திருப்பியழைக்கப்பட்டார். மவுண்ட் பாட்டன் கோமகனார் புதிய ஆட்சி முதல்வராய் அமர்த்தப்பட்டார். அவரே விடுதலை வழங்கிய ஆட்சி முதல்வராதலால், பிரிட்டிஷ் ஆட்சி முதல்வருள் கடைசியானவராய் அமைந்தார். ஆட்சி முதல்வரின் தூண்டுதலால் காந்தியடிகளும் ஜின்னாவும் ஒருங்கே இணைந்து, முஸ்லிம் ஒற்றுமையையும் அமைதியையும் கோரி ஏப்ரல் 15ல் கூட்டு வேண்டுகோள் விடுத்தனர். இதனாலும் வகுப்புக் கலவரங்கள் சிறிதும் தணியவில்லை. அதன்மீது புதிய அடிப்படையில் மீண்டும் பேச்சு வாதங்கள் தொடங்கும்படி மவுண்ட்பாட்டன் பெருமகனார் மே, 2-ஆந் தேதி தம் சார்பில் படைத்தலைவர் ‘இஸ்மே’யைத் தாய் நாட்டுக்கு அனுப்பினார். விரைவில் அவரும் 17-ஆந் தேதி பிரிட்டன் சென்றார். பிரிட்டிஷ் தலைவர்களிடம் அவர் நிலைமையை எடுத்துரைத்ததன் பேரில் அதிகாரமற்ற நாள் வரையில், 1948 ஜூன் என்ற முன்னைய திட்டத்தை மாற்றி, 1947 ஆகஸ்டு 15க்குள்ளேயே அதை விரைவுபடுத்திவிடுவதென்பது அறிவிக்கப்பட்டது. அத்துடன் இந்தியாவைப் பாகிஸ்தான், ஏனை இந்தியப் பகுதி என்று எப்படியும் பிரித்தே தரவும் பிரிட்டிஷார் துணிவுகொண்டனர். காந்தியடிகள் இறுதி வரை எப்படியும் பிரிவினையை ஏற்க மனம் ஒப்பவில்லை. பிரிவினை செய்வது என்ற முடிவை எதிர்த்துத் தாய் மொழியையே உயிராகக் கொண்டு வங்க நாட்டையாவது ஒன்றுபடுத்தி நிறுத்த அதன் முதல்வர் ஃவஃலுல் ஹக்குடன் அவர் ஒத்துழைக்க முயன்றார். ஆனால், எதுவும் பயன்படவில்லை. அரசியல் நோக்கில் நின்று பார்த்த பேரவைத் தலைவர்களுக்குப் பிரிவினை வெள்ளம் அணைபோட முடியாத அளவு பெருகிவிட்டது என்பது புலனாயிற்று. ஆகவே, அவர்கள் வேண்டா வெறுப்பாகப் பிரிவினையை ஒத்துக் கொண்டார்கள். ஆனால், மத அடிப்படையில் பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழும் பகுதிகளை பிரிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை யிலேயே நின்று, அவர்கள் வங்கத்திலும் பஞ்சாபிலும் இந்துக்கள் பெரும்பான்மையாய் உள்ள பகுதியின் உரிமையையும், இந்துக்களே பெரும்பான்மையாயுள்ள அஸ்ஸாம் மாகாணத்தின் உரிமையையும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாய் இருந்தும் தன் முடிபுரிமையையும் வற்புறுத்தினர். பிரிட்டிஷார்கூட இந்த நேர்மையை ஒத்துக்கொண்டனர். மவுண்ட்பாட்டன் திட்டம்: விடுதலை, ஆனால் பிரிவினை இங்ஙனம் பேரவை கோரிய அகண்ட இந்தியக் கொள்கை நிறைவேறாமல் போயிற்று. அதே சமயம் முஸ்லிம் சங்கம் கோரிய முழுப் பஞ்சாபு, அஸ்ஸாம் ஆகியவைகள் அடங்கிய பாகிஸ்தானும் நிறைவேறவில்லை. இரு சார்பினரிடையேயும் மவுண்ட்பாட்டன் விரைவுபடுத்தி வலியுறுத்திய முடிவுகள் வருமாறு:- 1. பஞ்சாபு, வங்காளம் ஆகிய இரண்டின் சட்டசபை களிலும் இந்துக்கள் பெரும்பான்மையாயுள்ள மாவட்டப் பிரதிநிதிகள் ஒரு தனி இருக்கையாகவும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டப் பிரதிநிதிகள் மற்றொரு தனி இருக்கையாகவும் கூட வேண்டும். இரண்டில் எது பிரிவினை கோரினாலும், மாகாணம் பிரிக்கப்படும். 2. அஸ்ஸாம் மாகாணத்தில் ஸில்ஹட்டுப் பகுதி பெரும்பான்மை முஸ்லிம்கள் உள்ளது. அதில், ‘பாகிஸ்தானுடன் சேர்வதா, இந்தியாவுடன் சேர்வதா?’ என்பது பற்றிப் பொதுமக்கள் மொழியுரிமைச் சீட்டு எடுக்கப்படும். 3. வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திலும் பொதுமக்கள் மொழியுரிமைச் சீட்டு இதே வகையில் எடுக்கப்படும். பேரவையும் முஸ்லிம் சங்கமும் இப்போது அதிகார மாற்றத்தை எதிர்நோக்கி இத்திட்டங்களை ஏற்றன. பஞ்சாபும் வங்கமும் பிரிவினை கோரித் தீர்மானித்தன. ஸில்ஹட்டும் வடமேற்கெல்லைப் புறமும் பாகிஸ்தானில் சேரவேண்டும் என்றே தீர்மானித்தன. வங்காளத்திலும் பஞ்சாபிலும் எல்லைகளை வரையறுக்க ஸர் ஸிரில் ராபர்ட்க்ளிஃவ் தலைமையிலேயே தனித்தனியாக இரண்டு எல்லை உறுதிக் குழுக்கள் நிறுவப்பட்டன. ஆட்சி நிலையங்கள், படைத்துறை, படைத்துறைப் போர்க்களங்கள், பொருளகம், கடன் நிலுவைகள் ஆகியவற்றை இரு புதிய நாடுகளுக்குமிடையில் பிரிவினை செய்ய ஒரு பிரிவினை மன்றமும், அதில் பத்துப் பிரிவினைக் குழுக்களும் நிறுவப்பட்டன. படைத்துறையில் சிறிது கூடுதல் குறைவாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 82 1/2க்கு 17 1/2என்ற விகிதப்படி பிரிவினை நிகழ்த்தப்பட்டது. இந்துக்கள் பெரும்பான்மை, முஸ்லிம்கள் பெரும்பான்மை என்ற அடிப்படையிலேயே பஞ்சாபு பிரிக்கப்பட்டது. ஆனால், இந்துக்களையும் முஸ்லிம்களையும்விடப் பஞ்சாபுக்கு உயிர் நிலையான வகுப்பியர் சீக்கியரே. பிரிவினையால் அவர்களே மிகவும் பாதிக்கப்பட்டார்கள். அவர்களில் 20 லட்சத்துக்கு மேற்பட்டவர் இந்தியப் பகுதியிலும், 17 லட்சத்துக்கு மேற்பட்டவர் பாகிஸ்தான் பகுதியிலுமாகப் பிரிவுற்றனர். அதே சமயம் அமிர்தசரசு போன்ற அவர்கள் சமயத் திருவிடங்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் பகுதியிலேயே இருந்தன. சீக்கியர்களில் பலர் இந்துக்களைப் போலப் பிரிவினையை எதிர்த்தவர்கள் ஆகவே, பிரிவினைப் பேச்சு எழுந்ததே. சீக்கியருக்கும் முஸ்லிம்களுக்குமிடையே புதிதாக மனக்கசப்பு ஏற்பட்டுக் கலவரம் தொடங்கிற்று. இதுவும் இந்து முஸ்லிம் கலவரமாகப் பெருகிற்று. பீதியடைந்த மக்கள், இருபுறமிருந்தும் மறுபுறம் நோக்கிக் குடிபெயரத் தொடங்கினார்கள். அவர்களிடையே தோன்றிய பூசல்கள் மீண்டும் பிரிவினைச் சமயத்திலேயே விடுதலையின் வெள்ளொளியைக் குருதிக் களரிகளால் கறைப்படுத்தின. பிரிவினைக்கு முன்னும் பின்னும் பஞ்சாபில் பாகிஸ்தான் பகுதியிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் இரு நாடுகளின் எல்லை கடந்து குடிபெயர்ந்தவர்கள் தொகை கிட்டத்தட்ட ஒவ்வொரு பக்கத்திலும் 60 லட்சமாக மொத்தம் 1 கோடி 20 லட்சம் இருக்குமென்று மதிப்பிடப்படுகிறது. அவர்களுள் வழியிலே நடைபெற்ற இன்னல்களாலும் கைகலப்புகளாலும் இறந்தவர் தொகையும் 20 லட்சத்துக்கு மேற்பட்டதென்று கருதப்படுகிறது. விடுதலை- மின்னொளி 1947 ஆகஸ்டு, 15-ஆந் தேதி இப்புயல்களிடையே இந்தியப் பேரவை நீண்டநாள் போராடிப் பெற்ற விடுதலை. மின்னொளி போல இந்திய வானில் ஒளி வீசிற்று. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பொதுவான ஒரே ஆட்சி முதல்வரமர்த்துவது என்ற முடிவை முஸ்லிம் சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. மவுண்ட் பாட்டன் பெருமகனாரை விடுதலை இந்தியா தன் முதல் ஆட்சி முதல்வராக ஏற்றுக் கொண்டது. ஆனால், பாகிஸ்தான் தன் புதிய ஆட்சி முதல்வராக முஸ்லிம் சங்கத் தலைவர் ஜின்னாவையே அமர்த்திற்று. இந்தியாவில் இடைக்கால அரசியல் தலைவராயிருந்த பண்டித ஜவஹர்லால் நேருவே அதன் தொடக்க முதலமைச்சர் ஆனார். பாகிஸ்தானத்துக்கு ஜின்னாவே ஆட்சி முதல்வராக ஏற்படுத்தப் பட்டதனால், நவாபு ஜாதா லியாகத் அலிகான் முதல்வரானார். 1947 ஆகஸ்டு நள்ளிரவுப் போதில் விடுதலை இந்தியாவின் பணிக்கான உறுதியை ஏற்றுப் பண்டித ஜவஹர்லால் நேரு மவுண்ட்பாட்டனிடமிருந்து அதிகார மாற்றத்தை ஏற்றார். இடைக்கால அரசில் பங்கு கொண்டிருந்த அமைச்சர்களுள் பாகிஸ்தான் சார்பாகப் பிரிந்தவர் போக, மற்றவர்களும் முறைப்படி உறுதி கூறிப் பதவி ஏற்றார்கள். அன்று வானொலி மூலம் பண்டித ஜவஹர்லாலும் மற்றத் தலைவர்களும் நாட்டுக்குப் புதிய இந்தியாவின் நற்செய்தியைத் தெரிவித்து, விடுதலை இந்தியாவுக்குப் பணியாற்றும் தங்கள் ஆர்வத்தைப் புலப்படுத்தினார்கள். தில்லியிலும் மாகாணத் தலைநகர்களிலும் தலைவர்களால் மக்கள் ஊர்வலங்கள் நடத்தப்பட்டு, விழாக்கள் கொண்டாடப்பட்டன. பேரூர்கள், சிற்றூர்கள் யாவும் தனித்தனி விழாக்கள் நடத்தித் தேசியப் பெருவிழாவில் பங்கு கொண்டன. புதிய இந்தியா, பேரவை இதுகாறும் கொண்ட தேசியக் கொடியில் விடுதலைக்கு அறிகுறியாக ஒரு சிறிய மாற்றம் செய்தது. சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய முந்நிறப் பட்டைகளில் நடுப்பட்டையாகிய வெள்ளைப் பட்டையில் முன்பு பொறிக்கப்பட்டிருந்த இராட்டினம் இப்போது வரலாற்றுச் சிறப்புடைய அசோக சக்கரமாக மாற்றப்பட்டது. நாட்டின் பழங்கலைச் சின்னங்களுள் ஒன்றான கோபுரமும் அசோகர் காலச் சின்னமான மூன்று சிங்க உருவங்களும் புதிய அரசின் சின்னங்களாக ஏற்கப்பட்டன. விடுதலை இந்திய விழாவன்று இந்தியாவில் மட்டுமன்றி உலகின் எண்ணற்ற பல நாடுகளிலும் இந்திய விடுதலைக் கொடி ஏற்றப்பட்டுப் புதிய இந்தியாவுக்கு வாழ்த்துகள் வழங்கப்பட்டன. உலகின் விடுதலை அரசுகளிடையே இந்தியாவும் பாகிஸ்தானும் தமக்குரிய தனி இடம் பெற்றுள்ளன. உலக நாகரிகம் காலத் தெய்வத்தின் கனவில் உலவிய காலத்திலிருந்து இயற்கையன்னையின் மடியிலிருந்துகொண்டு அக்கனவுகளுடன் ஊடாடிய பாரதச் செல்வி, பிரிவினையென்னும் பேரிடம் ஏற்று, விடுதலைச் செல்வனுடன் தன் வாழ்வை உரிமையுடன் இணைத்துக் கொண்டாள்! 11. வானவில் புதிய சூழலும், பொறுப்பும் புயலாக எழுந்த விடுதலைப் போராட்டம், மழையாக வாரியடித்துப் பெய்துவிட்டது. வானம் வெளி விட்டிருக்கிறது. மாநிலத்தின்மீது விடுதலைக் கதிரவன் தன் பொன் கதிர்களைப் பரப்பத் தொடங்கிவிட்டான். வானவெளியில் தூவானமாகப் பரந்துலவும் நீரணுக்கள் அவ்வொளிக்கதிர்களைக் கூறிட்டுப் பல வண்ணப் பட்டையாக்கியுள்ளன. அவற்றின் ஒளி வண்ணம் கட்புலனுக்கு இன்பம் தரும் வானவில்லாகக் காட்சி தருகிறது. பெய்த மழையின் சின்னமாகவும், அம்ழை வளத்தைப் பெருக்க உதவும் ஒளி வண்ணத்தின் விளக்கமாகவும் அவ்வானவில் நம் கண் முன் நடமிடுகிறது. ஆசியா ஐந்து கண்டங்களுள் ஒரு கண்டமாகவே கொள்ளப் படுகிறது. ஆனால், நில இயல், பண்பாடு, வரலாறு ஆகிய மூன்று வகையிலும் ஐந்து கண்டத்தின் கூறுகளும் அதில் அடங்கி யிருக்கின்றன. உலக நாகரிகம் அதன் புற வளர்ச்சியே என்று கூறத்தகும். ஆசியாவினுள்ளும் இதுபோல எல்லாக் கூறுகளும் பாரத மாநிலத்தில் செறிவுறுகின்றன. இங்ஙனம் உலகத்தின் பல வண்ணக் கூறுகளைச் சிறு அளவில் தன்னகங்கொண்ட இந்தியா, உலகில் ஒரு வானவில்லாய்த் திகழ்வதில் வியப்பில்லை. உலகின் பண்பாட்டு வளங்கள், சமயங்கள் யாவும் ஆசியா உலகுக்களித்த பரிசுகள், மேலை ஆசியா, வட ஆப்பிரிக்கா, தென்ஐரோப்பா ஆகியவை அடங்கிய நடுநிலக் கடலுலகம் நீண்ட காலமாக இவற்றின் வளர்ப்புப் பண்ணையாய் இருந்து. மேலை ஐரோப்பிய நாகரிகம் இவற்றின் முழுநிறை பயனை அடைந்து, வளம் பெற்றோங்கியுள்ளது. அது இன்று உலக நாகரிகத்தின் புதுப்பண்ணையாகியுள்ளது. தனக்குப் பண்பாட்டியக்கங்கள் தந்த ஆசியப் பழந்தாயகத்திற்கு அது இன்று தன் கடமையாற்ற முன் வந்துள்ளது. பண்பாட்டியக்கங்கள் ஆசியாவிலிருந்து மேற்கு நோக்கிச் சென்றது போலவே, விடுதலை இயக்கங்களும் அறிவியல் வளர்ச்சிகளும் இப்போது ஐரோப்பாவிலிருந்து புதியனவாய் எழுந்து ஆசியாவுக்கும் உலகுக்கும் கிழக்கு நோக்கிப் பரவத் தொடங்கியுள்ளன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து புதிய ஜப்பான், கமால்பாஷாவின் புதிய துருக்கி, புதிய சீனா, புதிய இந்தியா, புதிய தென்கிழக்காசியா ஆகியவற்றின் மறுமலர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. மேலை நாகரிகத் தாக்குதலால் புத்துயிர் பெற்றுள்ள இந்நாடுகள், மீண்டும் உலக நாகரிகத்தின் வளர்ச்சியில் ஒரு புத்தலையெழுப்பிப் புத்தூழி உண்டு பண்ண உதவும் என்று நாம் நம்பலாம். இந்தியா அப்புத்தலையின் பொன்முகடாய் இயங்கும் என்பதில் ஐயமில்லை. அரசியலமைப்பும் சட்டமும் உலகவாழ்வில் தனக்கிருக்கும் பெரும் பொறுப்பை இந்தியா உணர்ந்துள்ளது. இந்தியாவின் வருங்கால வளர்ச்சியில் தனக்கிருக்கும் பெரும் பொறுப்பைப் பேரவையும் உணர்ந்து கொண்டுள்ளது. இந்தியாவின் அரசியலமைப்புக்காகக் கூட்டப்பட்ட அரசியலமைப்பு மன்றத்தின் ஆக்கமும் திட்டமுமே இதற்குச் சான்று பகரும். மன்றத்தின் தேர்தலுக்கு விடுதலைப் பெருநிலையமாகிய பேரவை ஆட்களை நிறுத்தியபோது, அது எல்லாச் சமூகத்தினரையும் வகுப்பினரையும் தன் பேராட்களாக நிறுத்திப் பெருமை கொண்டது. விடுதலைப் போராட்டம் பேரளவில் தனதாயினும், விடுதலை வெற்றியில் எல்லாக் கட்சியினருக்கும் உரிமை உண்டு என்பதை அது உணர முன் வந்தது. அதனால் திறமுடைய எல்லாக் கட்சியினரும் அதன் சார்பிலேயே நிறுத்தப்பட்டு வெற்றிகரமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அமர்த்தப்பட்ட அறிஞர் குழுவுக்கு டாக்டர் அம்பேத்காரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உரு சங்கிலியின் வலு அதன் வலிமை குறைந்த கண்ணியின் வலுவே என்பதைப் பேரவை மறந்துவிடவில்லை. இந்திய வாழ்வின் பெருங்கறையும் பெருத்த வலுக்குறைவும் தாழ்த்தப்பட்டவர் பிற்போக்கிலேயே அடங்கி யுள்ளன. அவ்வகுப்பின் தலைவரும் ஒப்பற்ற அறிஞரேறுமான டாக்டர் அம்பேத்காரே அதன் தேசிய நோக்கத்தை வலியுறுத்தத் தக்கவர் என்று பேரவை கருதியிருப்பதில் வியப்பில்லை. அரசியலமைப்புச் சட்டத்தை மேற்போக்காகப் பார்ப்பவருக்குக் கூட இந்நோக்கம் அச்சட்டத்தின் குறிக்கோளாய் விளங்குகிறது என்பது புலனாகாமலிராது. தீண்டாமையும் கொடிய சாதி அநீதிகளும் இந்தியர் வாழ்வில் இன்னும் இடம்பெற்றே வருகின்றனவாயினும், அரசியல் அமைப்புச்சட்டம் அவற்றை இரண்டகமற்ற மொழிகளால் கண்டிக்கிறது என்பதும், அவற்றை அடியோடு எதிர்க்கக் கங்கணம் கட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கன. இந்திய அரசியலமைப்பு மன்றம் 1946ல் பிரிட்டிஷ் ஆட்சியின்போது கூட்டப்பட்டது. விடுதலை நாளுடன் அதுவே நாட்டின் அரசியல் மன்றமாகி விட்டது. 1949 இறுதிக்குள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாகிவிட்டது. அவ்வாண்டு நவம்பர் 26-ஆந் தேதி அது சட்டமாய் நிறைவேறிற்று. அதன்படி நடைமுறையில் 1950 ஜனவரி, 26-ஆந் தேதி இந்தியா ஒரு குடியரசாயிற்று. மவுண்ட்பாட்டன் பெருமகனார் விடுதலை இந்தியாவின் தொடக்க ஆட்சி முதல்வர் ஆகவும், இந்தியரான முதல் ஆட்சி முதல்வர் ஸி.ஆர். ராஜகோபாலாசாரியார் ஆகவும் இருந்து பணியாற்றினர். குடியரசு நிறுவப்பட்டதும் குடியரசின்படி முதல் இந்தியத் தலைவராக பாபு ராஜேந்திர பிரசாது அமர்த்தப்பட்டார். அமைப்பின் குறிக்கோள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உலகத்தின் எல்லா நாகரிக நாடுகளின் அரசியலமைப்பு முறைகளையும் உலக நாடுகளின் அவைத் திட்டங்களையும் நன்கு ஆராய்ந்தவர்களால் உருவாக்கப்பட்டது. அது 22 பிரிவுகளும், 395 விதிகளும், 8 பட்டியல்களும் அடங்கியது. இந்தியாவை அது இருபத்தெட்டு அல்லது இருபத்தொன்பது தனியரசுகள் அடங்கிய ஒரு பெரிய கூட்டரசாகவும், குடியரசாகவும், சமயச்சார்பற்ற அரசாகவும் குறிக்கொண்டுள்ளது. அதன் குடியுரிமை, மாநில முழுமைக்கும் ஒரே படித்தரமுடைய பொதுக்குடியுரிமை, தில் ஜாதிஅமத நிறவேறுபாடோ, இன வேறுபாடோ, பால் வேறுபாடோ இல்லை. தவிர, சமூகங்கடந்த அடிப்படை மனித உரிமைகளுக்கு அதில் மிக முக்கியமான இடம் தரப்பட்டிருக்கிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை, ஒருங்கேகூடிக் கழகம் அமைக்கும் உரிமை, ஆயுதமின்றி அமைதியுடன் கூட்டம் கூடும் உரிமை. இந்தியா முழுவதும் தங்கு தடையின்றிச் செல்லும் உரிமை, அதன் எந்தப் பகுதியிலும் தங்கி வாழும் உரிமை, எந்தத் தொழிலும் செய்யும் உரிமை ஆகியவை அவ்வடிப்படை உரிமையின் கூறுகளாக வகுக்கப்பட்டு, அவற்றின் பாதுகாப்புக்கு உறுதி தரப்படுகின்றது. பொது அமைதி, பொது மதிப்பு, அரசியற்பாதுகாப்பு ஆகிய தனிக் காரணங்களுக்காக மட்டுமன்றி, வேறெவ்வகையிலும் இவை மறுக்கப்படுதலோ, கட்டுப்படுத்தப்படுதலோ, குறுக்கப்படுதலோ இல்லை. இவற்றுக்கு மாறுபாடான அல்லது இவற்றின் உரிமைகளைக் குறைக்கிற எந்தச் சட்டமும் செல்லுபடியாகாது. தீண்டாமை, சட்டப்படி தண்டிக்கக்கூடிய ஒரு குற்றமாக்கப் பட்டுள்ளது. சிறுபான்மையாளர் உரிமைகளுக்கும், சமயம், மொழி, கலை, பண்பாடுகளுக்கும் பாதுகாப்புறுதி அளிக்கப்பட்டுள்ளது. சுதந்தரம், சமத்துவம் ஆகியவை எவராலும் துணிந்து கேட்டுப் பெறத்தக்க உரிமைகளாக்கப் பட்டுள்ளன. இவ்வுரிமைகளைக் காக்கும் பொறுப்பு, கூட்டுறவு நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தனி மனிதர் சொத்துரிமைகள் மட்டுமன்றி, சமய நிலையங்களின் பேரால் சொத்து வாங்குவதற்கும் பேணுவதற்கும் உரிய உரிமைகளும் முழுதும் மதிக்கப் பட்டிருக்கின்றன. மாநிலத்தின் பெயர் இந்தியக் கூட்டுறவு அல்லது இந்தியா என்று குறிக்கப்பட்டாலும், அதன் பழம்பெயராகிய பாரதம் புதிய தேசியப் பெயராக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலம் பெற்ற விடுதலையை மாநில முழுவதும் கொண்டு பரப்ப அரசியலமைப்பாளர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் இவை. ஆனால், அமைப்பின் குறிக்கோள் மாநில எல்லை தாண்டி மக்கள் எல்லையிலும் தன் வருங்காலத் திட்டங்களைச் சுட்டியுள்ளது. எல்லா மக்களுக்கும் போதிய உணவு, உடை உறையுள் வசதிகளை ஏற்படுத்துதல், சரிசம வேலைக்குச் சரிசம அளவில் ஊதியம் வகுத்தல், எல்லாருக்கும் தொழில் கொடுத்தல், எல்லாருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி தருதல் ஆகிய இவை வருங்காலப் பாரதத்தில் சட்டங்களியற்றுபவர்களுக்குரிய கடமைப்பாடுகள் என்று அரசியலமைப்பு வழிகாட்டி உள்ளது. குடியரசை இவ்வார்வம் சமதரும எல்லைக்கு இட்டுக்கொண்டு செல்லுகிறது என்பதை நாம் காணலாம். குடியரசின் நடைமுறை ஆட்சியைக் கூட்டுறவின் நடுவரசு தலைமை வகித்துத் தனியரசுகளை நடத்துகின்றது. கூட்டுறவின் ஒற்றுமையையும் வலுவையும் நாடி மிகுதி உரிமைகளும், தனியரசுகளுக்கு வகுக்கப்பட்டன போக மீந்த உரிமைகளும்1 நடுவரசுக்கே விடப்பட்டுள்ளன. அதே சமயம் தேர்தல் முறைகள் மூலம் நடுவரசில் தனியரசிலுள்ள பொது மக்களின் நேரடிப் பிரதிநிதித்துவமும் பல வகைகளில் காக்கப்பட்டிருக்கிறது. நடுவரசு நடுவரசுக்குரிய ஆட்சித்துறைகளுள் பாதுகாப்பு, வெளி நாட்டுத் தொடர்பு, அஞ்சல் தந்தித் துறைகள், தொடர் ஊர்திகள்2, வருமானவரி, தீர்வை வரி3, காப்புவரி4 ஆகியவை முக்கியமானவை. இவை தவிர, தலை நிலங்கடந்த ஆட்சியுரிமை1, நில உரிமை எல்லை கடந்த கடலக உரிமை2, குடி நுழைவு உரிமை, துறைமுகப் பாதுகாப்பு, வானொலி, ஒலிபரப்பு முறைகள், வானெறிகள், தேசியத் தலைமைப் பாதைகள், மக்கட் கணிப்பு, மாநில அளவை ஆராய்ச்சி, தேசிய சேமப்பொருளகம்3, செலாவணி முறைகள், அறிவியல் இலக்கியப் புத்துரிமைப் பாதுகாப்புக்கள்4, சுரங்கங்கள், எண்ணெய்க் கிணறுகள், உப்பு ஆகியவையும் நடுவாட்சியின் நேரடியுரிமையுட் பட்டவை. இவை தவிர, பல துறைகளில் நடுவரசு, தனியரசுகளுடன் சேர்ந்து ஒத்துழைக்கிறது. தனியரசுகளுக்கென்று ஒதுக்கப்பட்ட துறைகள் வேறு சில. மாநில அரசியல் பேரவைக்கு இரண்டு மன்றங்கள் உண்டு. மேல் மன்றம், ‘அரசுகள் மன்றம்’ என்றும்; மற்றது, ‘மக்கள் மன்றம் ’ என்றும் வழங்கப்படும். இம்மன்றங்கள் 5 ஆண்டுக் கொரு முறை தேர்ந்தெடுக்கப்படும். நெருக்கடிக்காலங்களில், முதலில் ஓராண்டுத் தவணையிலும், அடுத்து ஆறுமாதத் தவணையிலும் அந்தக் காலம் நீடிக்கப் பெறலாம். மேல் மன்றத்தில் 250 உறுப்பினர் உண்டு. இவர்களுள் 15 பேர், குடியரசுத் தலைவரால் அமர்வு பெறுகின்றனர்; மற்றவர். தனியரசுகளின் சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் இவர்களுள் ஆண்டுதோறும் மூன்றிலொருபங்கு தொகையினர் விலக, அவ்விடங்களுக்கு மீண்டும் தேர்வு நடைபெறும். மக்கள் மன்றத்தின் உறுப்பினர் 500 பேர். இவர்கள் மாநில முழுதும் பரந்த தேர்தல் தொகுதிகளால் தேர்ந்தெடுக்கப்படு கின்றார்கள். மாநிலத்தின் வயது வந்த எல்லா மக்களும் இதன் தேர்வுரிமையில் பங்கு கொள்கின்றனர். அவர்களுள் ஒவ்வோர் உறுப்பினரும் 5 லட்சம் அல்லது 71/2 லட்சம் பேர்களுக்கு ஒருவர் வீதம் பிரதிநிதியாவர். மாநில நடைமுறை ஆட்சி முழுவதற்கும் பொறுப்பு வகிக்கும் தனி மனிதர் குடியரசுத் தலைவரே. இவர் ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப் படுகிறார். இவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்வுக்குழுவில் மாநில மன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் அனைவரும் பங்குகொள்வர். தலைவரே அமைச்சவையின் துணைகொண்டு நாட்டை ஆளும் பொறுப் புடையவர் ஆவர். மேலும், அவரே தனியரசுகளின் ஆட்சித் தலைவர்களையும், கூட்டுறவு நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளையும், வெளிநாட்டுத் தூதுவர்களையும், அமர்வுக்குரிய மாநில மேல்மன்ற உறுப்பினரையும் தெரிந்தெடுப்பவர். நெருக்கடிக் காலங்களில் தலைவர் தனியரசுகளில் நேரடியாட்சி நடத்தவோ, மாநில முழுதும் அடிப்படை மனித உரிமைகளை ஒத்தி வைக்கவோ, அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கவோ உரிமையுடையவர். மன்ற இடைக்காலங்களில் தற்காலகச் சட்டம் பிறப்பிக்கும் உரிமையும் அவருக்கு உண்டு. அத்துடன் அவரே பாதுகாப்புப் படைகளின் உயர்தனித் தலைவரும் ஆவார். தலைவர் இல்லாதபோது அவர் உரிமைகளைத் துணைத் தலைவர் மேற்கொண்டு செயலாற்றுவார். அவர் மாநில மன்றங்கள் இரண்டிலும் கூட்டாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். மேலும், அவரே நடுவரசின் மேல் மன்றத்துக்குத் தலைவரும் ஆவார். மாநில நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியும் அவருடன் இணை நீதிபதிகளாக1 எழுவரும் இருப்பர். நடுவாட்சி, தனியரசுகள் ஆகியவற்றுக் கிடையேயுள்ள வழக்குகள், அரசியலமைப்பு முறை, சட்டங்களின் உரை விளக்க மாறுபாடு ஆகியவை பற்றிய வழக்குகள், அடிப்படை மனித உரிமைகள் பற்றிய முறையீடுகள் ஆகியவற்றில் இக்கூட்டுறவு நீதிமன்றம் தனிப் பொறுப்புடையது. தவிர, உயர்நீதி மன்றங்களிலிருந்து மேல் முறையீடுகளுக்கு இணக்கமளிக்கும் உரிமையும் இதற்கு உண்டு. தனியரசுகள் இந்தியக் கூட்டுறவில் உட்பட்ட தனியரசுகள் ஏ,பி,சி என்ற மூன்று வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ வகுப்பு அரசுகள் பிரிட்டிஷ் ஆட்சியின்போது ஆட்சித் தலைவர்களால் ஆளப்பட்ட பெருமாகாணங்களே. இவற்றைக் குடியரசுத் தலைவரால் அமர்வுபெற்ற ஆட்சித் தலைவரே ஆள்கின்றனர். பி வகுப்பு அரசுகள், மன்னர் தனியரசுகளில் பெரியனவும் சிறியவற்றின் தொகுதிகளுமாக வகுக்கப்பட்டவை. இவற்றின் ஆட்சி பழைய மன்னர் மரபில் முக்கியமான ஒருவரிடமே விடப்பட்டுள்ளது. இவர் அரசு முகவர் (ராஜபிரமுகர்) எனப்படுவர். குடியரசமைப்பில் இவர் ஒருவரே குடிமரபாக உரிமை பெறுபவர். சி வகுப்பு அரசுகள் முன்பு துணையாட்சி யாளர்கள்2 ஆட்சியிலுள்ள சிறு மாகாணங்கள் அல்லது நடுவரசின் நேரடியான ஆட்சியிலுள்ள பகுதிகள் ஆகும். இன்னும் அவை கிட்டத்தட்ட முன்னைய நிலைமையிலேயே உள்ளன. ஏ வகுப்பு அரசுகளில் பெரும்பாலும் இரண்டு மன்றங்கள் உண்டு; முழுப் பொறுப்பாட்சியும் உண்டு. பி வகுப்பிலும் பொறுப்பாட்சி வகுக்கப் பட்டுள்ளது. சி வகுப்பிலும் அதை நோக்கிய வளர்ச்சி தொடங்கியுள்ளது. ஏ வகுப்பைச் சார்ந்த அரசுகள் ஒன்பது. அவையாவன: சென்னை, ஒரிஸா. பீஹார், மேற்கு வங்கம், அஸ்ஸாம், வட அரசு (உத்தரப் பிரதேசம் அல்லது பழைய ஐக்கிய மாகாணம்). கிழக்குப் பஞ்சாபு, பம்பாய், நடுவரசு (மத்தியப் பிரதேசம் அல்லது பழைய மத்திய மாகாணம்) ஆகியவை. பி வகுப்பில் ஹைதராபாது, ஜம்மு, காஷ்மீர், மத்திய பாரதம், மைசூர் பாட்டியாலா கிழக்குப் பஞ்சாபு அரசுகள், ராஜஸ்தான், சௌராஷ்டிரம், திருவாங்கூர் -கொச்சி, விந்திய அரசு (விந்திய பிரதேஷ்) ஆகிய ஒன்பது அரசுகளும் இடம் பெறுகின்றன. சி வகுப்பில் ஆஜ்மீர், போபால், பிலாஸ்பூர், கூச்பீஹார், குடகு, தில்லி, இமாசல அரசுகள் (ஸிம்லா மலை அரசுகள்), கச்சு, மணிபுரா, திரிபுரி ஆகிய பத்து அரசுகள் உண்டு. தலைநிலங் கடந்த அந்தமான்- நிக்கோபார் தீவுகளும், இந்தியாவின் பகுதியாக இவற்றுடனே சேர்க்கப்பட்டுள்ளன. இதைச் சேர்த்துத் தனியரசுகள் மொத்தம் 29 ஆகும். தனியரசுகளின் சட்டமன்ற உறுப்பினர் தொகையில் மேல் மன்றத்தின் உறுப்பினர், நாலில் ஒரு பங்கினராய் இருப்பர். இவர்களில் 6ல் ஒரு பங்கினர் ஆட்சித் தலைவரால் அமர்வு பெறுவர். மற்றும் மூன்றில் ஒரு பங்கினர், ஒற்றை மாற்று மொழியுரிமைப்படி சட்டமன்றத்தால் தெர்ந்தெடுக்கப்பெறுவர். மிச்சமுள்ளவருள் பாதிப் பேர் பல்கலைக்கழகத்தார், பள்ளி ஆசிரியர் முதலிய தனித்துறைத் தகுதியுடையவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். தனியரசுகளின் சட்டமன்ற உறுப்பினர் அறுபதின்மருக்கு மேற்பட்டும் முந்நூற்றுவருக்கு மேற்படாமலும் இருப்பர். இவர்கள் மக்கள் தொகையில் ஒரு லட்சத்துக்கு ஒருவர் வீதம் கணக்கிடப்படுவர். உறுப்பினர் 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடையவராயிருக்க வேண்டும். தேர்வு, ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடைபெறும். இதன் கூட்டம், குறைந்த அளவு, ஆண்டுக்கு இரு முறை நடைபெற வேண்டும். அவற்றின் இடைக்காலம், ஆறு மாதத்திற்கு மேற்படக்கூடாது. மன்ற நடைமுறைகள் பெரிதும் பிரிட்டிஷ் மன்றங்களையே முன் மாதிரியாகக் கொண்டவை. தனியரசுகள் அல்லது பழைய மாகாணங்களின் பகுதிகள் மாவட்டங்கள் ஆகும். முகலாய ஆட்சிக் காலத்திலிருந்தே இவைதாம் இந்திய ஆட்சிகள் மூல தளங்களாய் இருந்து வருகின்றன. தொடக்கத்தில் வாணிகக் கழக ஆட்சியில் வரி விதிக்கும் பணியாளராக மாவட்டத் தலைவர் கருதப்பட்டு, வரி முதல்வர்1 என்ற பெயர் வழங்கப்பட்டிருந்தார். பிரிட்டிஷ் வாணிகக் கழகம் ஆட்சியுரிமைகளை ஒவ்வொன்றாகப் பெறுந்தோறும் நீதியும் மற்றப் பல துறைகளும் அவரிடமே விடப்பட்டன. சில மாகாணங்களில் வரி முதல்வர் என்ற பெயரினிடமாகத் துணையாணையாளர் என்ற பெயர் நிலவுகிறது. இச்சிற்றரசுப் பதவி இன்னும் முற்றிலும் அகற்றப்படவில்லை. ஆயினும், காவல்துறைத் தலைவராக ஒரு காவல் மேலாளரும்2, கல்வித்துறையில் ஒரு மாவட்டப் பள்ளி மேலாளரும்3, மருத்துவத் துறைக்கு ஒரு மாவட்ட மருத்துவ மேலாளரும்4 அவருடன் மாவட்டப் பொறுப்பில் பங்கு கொண்டுள்ளனர். வரித்துறைக்குப் புறம்பாக நீதித்துறை ஒன்று மட்டுமே இன்னும் வரி முதல்வரிடம் உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் ரிப்பன் பெருமகனார் காலத்திலிருந்து மாவட்டங்களிலும் முக்கிய மாநகரங்களிலும் பல முக்கியச் சிற்றூர்களிலும் சிறுதிணைத் தன்னாட்சி5 நடைபெறுகின்றது. மாவட்டங்களில் அவை மாவட்டக் குழு6 என்ற பெயருடன் கல்வி, மருத்துவம், உடல் நலம் ஆகியவற்றில் கருத்துச் செலுத்துகின்றன. மாநகரங்களிலும் பல நகரங் களிலும் வயது வந்தவர் தேர்வுரிமையுடைய நகரமன்றங்கள் நடை பெறுகின்றன. முக்கியமான சிற்றூர்களில் இவை பஞ்சாயத்துக்களாகச் செயலாற்றுகின்றன. இத்துறை முற்றிலும் மாகாண அரசு அல்லது தனியரசுக்கு உட்பட்டவை. வெளிநாட்டுத் தொடர்பு மாநிலம் விடுதலை பெற்றுக் குடியரசானபின் ஏற்பட்ட முதல் அரசியல் கொள்கைச் சிக்கல் பிரிட்டிஷ் பேரரசின் போது உருவாகிய பொது அரசியல் இந்தியா உறுப்பாயிருக்க வேண்டுமா, வேண்டாவா என்பது பற்றியதே. இந்தியாவுக்கத் தரப்பட்டிருக்கும் விடுதலை, உண்மையில் முழு விடுதலை உரிமைதான் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், பிரிட்டிஷ் மன்றம் 1947 சட்டப்படி இந்தியா மீதுள்ள தன் உரிமைகள் எல்லா வற்றையும் விட்டுக் கொடுத்துவிட்டது. அத்துடன் பொது அரசில் இருப்பதா, வேண்டாவா என்பதை முடிவு செய்யும் உரிமையையும் அது இந்தியாவிடமே விட்டுவிட்டது. இந்தியா விரும்பினால், பொது அரசை விட்டு 1947-லேயே அது விலகியிருக்கலாம்; இன்னும் விலகத் தடை ஏதும் இல்லை. ஆயினும், பொது அரசின் உறுப்பான குடியேற்ற நாட்டுரிமை நிலையிலேயே இந்தப் பிரிவினை உரிமை உண்டு. அத்துடன் வெளிநாட்டுத் தொடர்புகளிலும் உலக அரசியலிலும் புதிய குடியரசான இந்தியா தனித்து இயங்குவதால் பெறும் வலுவைவிடப் பொது அரசு உறுப்பாகப் பெறும் வலு, பெரிதாயிருக்கும். இவ்விரண்டையும் கருத்திற் கொண்டே இந்தியாவின் முதல்வர் பண்டித ஜவஹர்லால் நேரு, பொது அரசில் இந்தியா உறுப்பாயிருக்க வேண்டுமென்று விரும்பினார். ஆனால், பழைய பேரரசு பொது அரசாக மாறிவிட்ட பின்னும் இன்னும் ஓர் அரசர் தலைமையிலேயே இருந்து வருகிறது. இந்தியா ஒரு குடியரசாதலால் ஓர் அரசர் தலைமையை ஏற்க முடியாது. இந்த இக்கட்டை அகற்றப் பண்டித நேரு புதிய அரசியல் வழியைப் பின்பற்றினார். இந்திய குடியரசாதலால், அரசைப் பொதுவாக இணைப்பின் சின்னமாக மட்டுமே கொள்ளப் பொது அரசு இணங்குவதானால், அதில் இணைந்து இருக்க இந்தியா விரும்பும் என்று பண்டித நேரு அறிவித்தார். அவர் காட்டிய வழியை 1949 ஏப்ரலில் இலண்டனில் கூடிய பொது அரசு மாநாடு ஏற்றுக் கொண்டது. எனவே, இந்தியா முன்போலவே பொது அரசின் உறுப்பாய்க் குடியேற்ற நாட்டு நிலையுடன் அமைந்து வாழ்கிறது. உலக அரசியலில் பொதுவாகவும், ஆசிய அரசியலில் சிறப்பாகவும், இந்தியா மிகுதியான பங்கு எடுத்துக் கொண்டு வருகிறது. 1947லேயே அது ஆசிய மாநாடு கூட்டி, இந்தோனேஷியாவின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தந்துள்ளது. புதிய பர்மிய அரசியலுக்கும் அந்நாட்டில் உள்ள பல அரசியல் கொந்தளிப்புகளிடையே இந்தியா ஆதரவளித்தது. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை நடுவு நிலைமையும் நேர்மையும் கலந்ததாய் இருந்து வருகின்றது. உலக அரசியலில் கொரியாப் போராட்டத்தின் முதல் முதல் தாக்குதலில் இறங்கிய கட்சியை அது வன்மையாகக் கண்டிக்கத் தயங்கவில்லை. ஆனால், அதே சமயம் இங்ஙனம் கண்டித்தவர்களை ஒருமுகப்படுத்தி ஒருதிற எதிர்ப்பை வலுப்படுத்தும் முயற்சியில் கலக்காமல், இந்தியா தன் நடுவு நிலைமையைக் காத்துக்கொண்டது. அத்துடன் போர்க்கள எல்லையை வரையறுக்கும்படியும், புதிய செஞ்சீனாவைப் பழைய சீனாவின் இடத்தில் உலக நாடுகள் அமைப்பில் சேர்த்துக் கொள்ளும்படியும் இந்தியா அறிவுரை தந்தது. இது நல்லறிவுரை என்பதைப் பின்னால் ஏற்பட்ட குருதிக்களம் உலகுக்கு நன்கு எடுத்துக் காட்டிற்று. நடுவுநிலை காரணமாக இந்தியாவின் கொள்கையைச் செயலற்ற கொள்கை என்று கூறிவிடவும் முடியாது. தாழ்த்தப்பட்ட- அமுக்கப்பட்ட- உரிமை மறுக்கப்பட்டமக்கள் குரல் எங்கிருந்தாலும், இந்தியா அதற்கு வலுத்தரத் தயங்கவில்லை. ஆசியாவில் இந்தோனேஷியர் விடுதலையிலும், ஆப்பிரிக்காவில் இத்தாலியர் குடியேற்றங்களின் விடுதலையிலும் அது பெரிதும் அக்கறை காட்டிற்று. செஞ்சீனாவை வரவேற்க முன் வந்த அரசுகளில் புதிய இந்தியாவே முதலிடம் வகித்தது. ஆனால், உலகெங்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பாடுபடும் இந்திய மக்களே ஆப்பிரிக்காவிலும், இலங்கை, மலேயா ஆகிய நாடுகளிலும் துன்பத்துக்கும் உரிமைக்கேட்டுக்கும் ஆளாகி யுள்ளனர். ஆப்பிரிக்கா வகையில் அது உலகநாடுகள் அமைப்பிலேயே இந்திய மக்களுரிமைகளுக்காகவும், ஆப்பிரிக்கப் பழங்குடியின் உரிமைக்காகவும் போராடி வருகிறது. இலங்கை, மலேயா வகையிலும் அது அவ்வப்போது, அவ்வந்நாட்டு அரசியல்களுடன் பேரம் நடத்தி வருகிறது. புதிய இந்தியக் குடியரசு, உலக அரசுகளிடையே நேசமும் நட்பும் கொண்டாடி வருகிறது. உலகின் மிகப் பெரும்பாலான நாடுகள் அதனுடன் தூதர் நிலையத் தொடர்புகளும், அரசியல், வாணிக, பண்பாட்டுத் தொடர்புகளும் கொள்ள விரைந்துள்ளன. உலக அரசியல் வானில் புதிய ஒளிக்கோளமாகத் தோன்றிய இந்தியக் குடியரசுக்கு எல்லா உலக நாடுகளும் ஆர்வத்துடன் வரவேற்பளித்துள்ளன. பிரிவினையின் விளைவுகள்: அகதிகள் துயர் புற உலகில் ஏற்பட்ட இப்புகழுக்கும் நேச அமைதிக்கும் மாறாக, விடுதலை இந்தியாவின் தாயக எல்லையிலேயே அதற்குத் தொல்லைகள் மிகுதியாயிருந்தன. மாநிலத் தலைவர்களும் பேரவையும் நீடித்து அவாவிக் கனவு கண்ட விடுதலை, ‘கத்தியின்றி, இரத்தமின்றி’ 1947ல் நனவாயிற்று. ஆனால், கனவு கண்ட விடுதலையுடன் கனவு காணாத பிரிவினையும் அதன் தொல்லைகளும் உடன்வந்தன. புதிய இந்தியாவின் இளந்தோன்றல்கள் மீதும் தலையின்மீதும் அவை சுமத்திய பளு மிகப்பெரிது. உலகின் எந்தப் புதிய அரசும் பிறந்தவுடனே இத்தகைய பெரிய இன்னல்களுக்கு ஆளானதில்லை. குடியரசின் பொறுப்பேற்ற தலைவர்களின் தனித்திறமைக்கு இவை நல்ல சோதனைகளாய் அமைந்தன. அவர்கள் இச்சூழ்நிலைகளுடன் போராடிப் பேரளவில் வெற்றி கண்டுள்ளார்கள். விடுதலையின்போது நேர்ந்த இடர்களில் மிகப் பயங்கர மானது விடுதலைக்குமுன் ஏற்பட்ட வகுப்புக் கலவரங்களும் பஞ்சாபு வங்காளப் பிரிவினைகளின்போது ஏற்பட்ட பேரளவான குடிபெயர்ச்சிகளுமேயாகும். விடுதலையின்போது நிலவிய வகுப்புக் கலவரப் படுகளம் விடுதலையின் தந்தையாகிய காந்தியடிகளின் உள்ளத்தில் பெருங்கவலையூட்டியது. விடுதலை விழாவைக் கொண்டாடக்கூட மனமின்றி அவர் வங்காளக் கலவரப் பகுதிகளிலேயே காலங்கழித்தார். பீகாரிலும் தில்லியிலும் பஞ்சாபிலும் கலவரங்கள் பரந்தபோது அவர் நிலைமையைச் சமாளிக்கத் தில்லியிலேயே வந்து தங்கினார். விடுதலை இந்தியாவின் புது வாழ்வில் ஓராண்டு கழியுமுன் வகுப்புக் கலவரம் என்னும் பேயுருவம் வளர்ந்தது. அது 1948, ஜனவரி, 30-ஆந் தேதி அவர் உயிர் குடித்து இந்தியா முழுவதையும் ஆறாத்துயரில் ஆழ்த்திற்று. வகுப்பு வெறியின் கோர தாண்டவத்தால் இந்திய மக்களுக்கு ஏற்பட்ட இன்னலை எவரும் கணக்கிட்டு அறுதி செய்தல் முடியாது. இந்தியாவின் வரலாற்றிலேயே முதல் தடவையாக இந்துக்கள் முஸ்லிம்கள் ஆகிய இரு வகுப்புகளும் சரிசம அளவில் கொலை, கொள்ளை ஆகிய தீய வழிகளில் ஒருவருடன் மற்றவர் போட்டியிட்டனர். பஞ்சாபுப் பிரிவினையின் போது சீக்கியிரின் உணர்ச்சிகளும் பெரிதும் புண்பட்டன. இப்பிரிவினையை எதிர்த்த சீக்கியர் இந்தியப் பகுதி யிலுள்ள முஸ்லிம்களைத் தாக்கி வெளியேற்றத் தொடங்கினர். பாகிஸ்தான் பகுதியில் முஸ்லிம்கள் இதற்கெதிரான பழிச்செயலில் ஈடுபட்டனர். இதே நிலை வங்கத்திலும் இந்து முஸ்லிம்களிடையே ஏற்பட்டது. மக்கள் வெள்ளம் இரு மாகாணங்களிலும் இருபுறமிருந்தும் எல்லை தாண்டி ஓடும் இடையறாத இரண்டு பேராறுகளாகப் பாய்ந்தது. இக்குடிப் பெயர்ச்சியில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குப் பல இன்னல்களுக்காளாகி ஓடி வந்த மக்கள் தொகை 85 லட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இவர்களுள் மேற்குப் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் தொகை 50 லட்சமும், கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் தொகை 35 லட்சமும் ஆகும். கிட்டத்தட்ட இதிற் சற்றுக் குறைந்த அளவுள்ள மக்கள் இந்தியாவிலிருந்து இரு பாகிஸ்தான்களுக்கும் சென்றனர். இரு புறங்களிலும் வழியில் கொலை, கொள்ளை ஆகிய தொல்லைகளுக்காளாய் இறந்தவரும், காயம்பட்டவரும், குற்றுயிராய் நாடுவிட்டு நாடுசென்றவரும் பெருந்தொகையினர் ஆவர். இறந்தவர் தொகை மட்டும் மொத்தம் 20 லட்சத்துக்கு மேற்பட்டது என்று அறிகிறோம். பிரிவினையால் ஏற்கெனவே இந்தியாவில் உணவுத் தட்டுப்பாடு, தொழில் மந்தம் ஆகிய தீங்குகள் ஏற்பட்டிருந்தன. பிரிவினைக்கு முன் இருந்த மக்கள் தொகையில் பிரிவினைக்குப் பின்னுள்ள இந்தியாவில் 100க்கு 82 பேர் இருந்தனர். ஆனால், பாசன நிலங்களில் இப்போது இந்தியாவில் இருந்தது 100க்கு 69 வீதமே. இவ்விழுக்காடு அரிசி வகையில் 100க்கு 68 ஆகவும், கோதுமை வகையில் 100க்கு 65ஆகவும் இருந்தது. தவிர, தொழிற் சாலைகளில் பெரும்பகுதி இந்தியாவின் பக்கமே இருந்தாலும், அதற்கு மூலப்பொருள்களான பருத்தியும் சணலும் பிற பொருள்களும் பெரிதும் பாகிஸ்தானிலேயே சேர்ந்து விட்டன. உணவு வகையிலும் தொழில் மூலப்பொருள் வகையிலும் விடுதலை இந்தியாவில் இதன் பயனாக நெருக்கடி ஏற்பட்டிருந்தது. குடிபெயர்ச்சி இத்தொல்லைகளைப் பன்மடங்கு பெருக்கிற்று. குடிப்பெயர்ச்சியால் ஏற்பட்ட இன்னல்கள் இரு அரசு களுக்கும் பொதுவாகத் தோற்றினாலும், உண்மையில் அது இந்தியாவையே பெரிதும் பாதித்தது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு ஓடிச் சென்ற முஸ்லிம்களில் பெரும்பான்மை யோர் வீடும் குடியும் நிலமும் அற்றவர். ஆகவே, குடிபெயர்ச்சியினால் அவர்கள் அடைந்த பொருள் நட்டமும் இடுக்கண்களுங் குறைவே. பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்தவர்களோ, பெரும்பாலும் உயர்நடுத்தர வகுப்பினரும், வீடு குடி ச்செல்வம் யாவும் மிகுதியாகவுடைய பெருவணிகரும், உயர் வகுப்பினரும் ஆவர். அவர்கள் இவ்வுடைமைகள் அனைத்தையும் விட்டு ஓடிவர வேண்டியவர்களானார்கள். ஆகவே, பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்திய அகதிகள் விட்டு வந்த வீடும் நிலமும் சொத்தும் எவ்வளவு எளிதாகப் பயன்பட்டனவோ, அவ்வளவு இந்திய அகதிகளுக்குப் பாகிஸ்தான் அகதிகள் விட்டுச் சென்ற எதுவும் பயன்பட முடியவில்லை. வீடிழந்து, குடியிழந்து, உண்ண உணவுமின்றி அடிக்கடி அலைந்தோடி வந்த நூறாயிரக்கணக்கான மக்களுக்குத் தற்காலிகமாக உணவும் தங்கிடமும் கொடுக்கும் வேலையே விடுதலை அரசுக்குப் பல மாதங்களாக மிகப்பெரு வேலையாயிருந்தது. இந்தியாவின் பல பகுதிகளிலும் அவர்களுக்கு உணவும் உடையும் வழங்கித் தற்காலிக இடமும் மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 56 இடங்களில் பெரிய தங்கிடங்கள் பெரும்பொருட் செலவில் அமைக்கப்பட்டன. ஆனால், இவற்றால் நிலைமை தற்காலிக மாகத்தான் சமாளிக்கப்பட்டது. அவர்கள் வாழ்வை நிலையாகச் சீரமைக்கும் வேலையில் நடு அரசுடன் தனியரசுகள் பலவும் ஒத்துழைக்க முன் வந்தன. இந்தியாவின் பல பகுதிகளிலும் அவர்களுக்காகப் புதிய குடியேற்றங்கள் நிறுவப்பட்டன. பேரளவில் தரிசு நிலங்கள் வழங்கப்பட்டு, அவற்றில் உழவுப் பண்ணைகளும் தொழிற் பண்ணைகளும் தொடங்கப்பட்டன. கிழக்குப் பஞ்சாபிலுள்ள சண்டீகர், பம்பாய் அரசிலுள்ள உல்லாச நகர், மேற்கு வங்கத்திலுள்ள ஹவ்ரா ஆகியவை இத்தகைய நகரங்களும் முக்கியமானவை. தற்காலிகத் தங்கல்கள் வகையில் 1950 முடிவு வரையில் 32 கோடி ரூபாய்க்குமேல் செலவு செய்யப்பட்டது. அத்துடன் பஞ்சாபு, பெப்சு என்னும் இடங்களிலுள்ள நிலப்பண்ணைகளின் மூலமும் குடியேற்ற நகரங்களின் மூலமும் வீடிழந்தவர்களில் 100 பேரில் 90 பேருக்கு வீடும், நிலமற்ற உழவர்களில் 100 பேரில் 96 பேருக்கு நிலமும் வழங்கப்பட்டு விட்டன. மன்னர் அரசுகள்: ஹைதராபாது, காஷ்மீர் குடிபெயர்ச்சிக்கு அடுத்தபடி குடியரசின் வாழ்வுக்கு இடையூறு விளைவித்த செய்தி மன்னரசுகள் பற்றியதேயாகும். பிரிவினைக்கு முன்பே ஒரு சில தனியரசுகள் பிரிட்டிஷ் இந்தியாவும் கண்டு பொறாமைப்படும் அளவு வாழ்க்கை முன்னேற்றமும் நல்லாட்சியும் பெற்றிருந்தன. திருவாங்கூர், மைசூர், பரோடா என்பவை இதற்குச் சான்றுகள். இவை முன்மாதிரி அரசுகள் என்று சிறப்பிக்கப்பட்டிருந்தன. ஆனால், பொதுவாக மன்னர் ஆட்சிகள் மிகவும் பிற்போக்கான எதேச்சாதி காரங்களாகவே இருந்தன. மன்னர் நாடுகளின் குடிமக்கள் வாழ்விலும், அரசியல் முன்னேற்றத்திலும் விடுதலைக்காகப் போராடிய பேரவை ஆர்வம் காட்டிற்றாயினும், அதில் மிகுதியும் ஈடுபட முடியவில்லை. எனினும், இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் மன்னர் அரசுகளின் குடிகள் ஒதுங்கியிருக்க வில்லை. பல இடங்களில் குடியாட்சிக் கிளர்ச்சிகள் ஏற்பட்டிருந்தன; பேரவையின் கிளர்ச்சியில் வந்து கலந்து கொண்டவரும் பலர். காந்தியடிகளும் பிற பல தலைவர்களும் உண்மையில் இத்தகைய மன்னரசுக் குடிகளிடையே இருந்து வந்தவர்களே. மன்னர் பலர், பிரிவினைக்கு முன்பே கால நிலை அறிந்து புதிய இந்திய அரசுடன் செயல் நிறுத்த ஒப்பந்தங்கள்1 ஏற்படுத்திக்கொண்டிருந்தனர். விடுதலையின் பின் மன்னர் அரசுகள் இந்திய அரசியல் சட்டத்தின் வாசகங்கள் தந்த உரிமைப்படி இந்தியா, பாகிஸ்தான் ஆகியவற்றில் எதனுடனாவது தம்மிச்சைப்படி சேரலாம். இவற்றுள் மிகப் பெரும்பாலான அரசுகள் எளிதாக இந்தியாவுடன் இணைவதற்கு ஒப்புதல் தெரிவித்தன. இவற்றைக் கவனிக்க விடுதலை அரசியலில் மன்னர் அரசுத் துறை ஒன்று 1947, ஜூலை 25இல் வகுக்கப் பட்டிருந்தது. உள் நாட்டமைச்சராகிய சர்தார் பட்டேலின் மேற்பார்வையில் திரு.கே.பி. மேனன் அத்துறையைக் கவனித்து வந்தார். மன்னர் அரசுகளில் இரு வகையான தொல்லைகள் ஏற்பட்டன; ஒன்று, ஜூனகாது, ஹைதராபாது, காஷ்மீர் என்னும் அரசுகள் இந்தியாவுடன் இணையும் வகையில் காட்டிய தயக்க நிலையின் விளைவு; மற்றொன்று, மக்கள் நலனையும் இந்தியாவின் ஆட்சி ஒற்றுமையையும் பேணும் வகையில் எல்லா வகைப்பட்ட மன்னரையும் ஒருங்கிணைத்து ஒரு திட்டத்தை ஏற்கும்படி செய்வதில் ஏற்பட்ட சிக்கல் நிலை. ஜூனகாதும், ஹைதராபாதும் இந்தியாவினுள் இருந்தும் முஸ்லிம் மன்னரால் ஆளப்பட்டன. ஜூனகாது மன்னர், தம் குடி மக்களின் விருப்பத்தைப் பொருட்படுத்தாமல், பாகிஸ்தானுடன் சேர்வதாக அறிவித்தார் ஹைதராபாது நிஜாமும் அதுபோல மக்கள் கருத்துக் கோராமல் தம்மிச்சைப் படி தனியுரிமை பெறவும் பாகிஸ்தானுடன் இணையவும் விரும்பினர். இந்திய அரசாங்கம் அவர்கள்மீது உள்நாட்டுப் போர் நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தது. ஜூனகாது சில மணிநேரத்துக்குள்ளும், ஹைதராபாது சில நாட்களுக்குள்ளும் வழிக்கு வந்தன. காஷ்மீர் பிரச்சினை விடுதலை இந்தியாவுக்கு நீண்டகாலம் ஒரு முள்ளாய் உறுத்திக்கொண்டிருந்தது. மன்னர் குடிமக்கள் வேற்றுமை, சில நாள் மன்னரைத் தயக்க நிலையில் வைத்திருந்தது. இறுதியில் மக்கள் தலைவரான ஷேக்கு அப்துல்லாவின் கோரிக்கைக்கு மன்னர் இணங்கித் தம் அரசு இந்தியாவுடன் சேர்வதாக அறிவித்தார். அதற்குள் பாகிஸ்தானிலிருந்து எல்லைப்புறப் படையெடுப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் அரசியல் இதற்கு மறைமுகத் தூண்டுதலாயிருந்ததுடன், விடுதலைக் காஷ்மீர் இயக்கம் ஒன்றைத் தொடங்கித் தானே படையெடுப்பில் கலந்து கொண்டது. அது விடுதலைக் காஷ்மீர் அரசும் நிறுவிற்று. நிலைமை முற்றுமுன் இந்தியா அவசர நடிவடிக்கை எடுத்துப் பெரும் பொருட் செலவுடன் வான்படையும் நிலப்படையும் அனுப்பி காஷ்மீருக்கு உதவியளித்தது. காஷ்மீரின் போரினால் இந்தியாவின் படைத்துறைச் செலவு ஆண்டுதோறும் பெருகிற்று. தென்னிந்தியாவிலிருந்து சென்ற படை வீரர் ஜெர்மன் போரிலும் ஆப்பிரிக்க இத்தாலியப் போர்களிலும் பெற்ற அதே வீரப் புகழை இங்கும் நிலை நாட்டி, மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றனர். ஆயினும், படை நடவடிக்கை ஒன்றினாலேயே காஷ்மீர் பிரச்சினை தீரவில்லை. உலக நாடுகள் அமைப்பினிடம் இந்தியா மனுச் செய்து கொண்டது. காஷ்மீர் வகையில் உலக நாடுகள் அமைப்பு ஆமையின் வேகமும், இருதலைக் கொள்ளி எறும்பின் எல்லையற்ற தயக்கமும் காட்டி நாட்கடத்திற்று. ஆயினும், பாகிஸ்தான் வசமிருக்கும் பகுதி நீங்கலாக, மற்றப் பகுதி இந்திய அரசியலுடன் 1952ல் இணைந்துள்ளது. மன்னர் அரசுகளின் ஒருங்கிணைப்பு மன்னர் அரசுகள், இந்தியா முழுவதும் மிகச் சிறிதும், மிகப் பெரிதுமாக வேறுபட்டும், இந்தியாவின் படத்தைப் பலவாறு இடை இடையே சிதைத்து உருக்குலைத்தும் வந்துள்ளன. இந்தியாவின் விடுதலைக்கு அவை பெரிதும் முட்டுக்கட்டை களாயிருந்தன. வருங்கால இந்தியாவின் அரசியல் வளர்ச்சிக்கும் அவை முட்டுக்கட்டையாயிருக்கும் நிலையிலேயே நீடித்திருக்கக் கூடும். ஆனால், இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ என்று புகழப்பட்ட ஸர்தார் வல்லபபாய் பட்டேல் அவற்றை ஒரு நிலைப்படுத்த அரும்பாடுபட்டார். மன்னர் அரசுகளின் நிலைபற்றிச் சர்தார் கூறிய விளக்கம் இதுவே. “நம் நாடு, தன் பெரு மரபு பற்றியும் பேருரிமைப் பண்பாட்டு நிலையங்கள் பற்றியும் பெருமையே கொண்டிருக்கிறது. ஆனால், நம் மக்களில் சிலர் மன்னர் அரசுகளிலும் வேறு சிலர் பிரிட்டிஷ் இந்தியாவிலுமாகப் பிரிவுற்றிருப்பது இயற்கைக்கு மாறான தற்காலிக நிலையேயாகும். பண்பாடும் குருதியும் ஒன்றாயிருக்கும் போது, நம்மைப் பிரித்து வைக்கவல்ல ஆற்றல்கள் யாவை?” என்று அவர் வினா எழுப்பினார். மன்னரசுகளின் குடிமக்களிடம் கொண்ட இப்பாச உரிமையுடன் சர்தார் பட்டேல் மன்னர்களிடமும் நேச வலக்கரம் நீட்டிக் கூட்டுறவு நாடினார்; அதே சமயம் கூட்டுறவை மறுப்ப தால் இயல்பாக விளையக்கூடும் தீமைகளையும் எடுத்துக்காட்டி, அக்கூட்டுறவின் பயனை வற்புறுத்தினார். “விடுதலை இந்தியா விற்குள்ளாகவே சின்னஞ்சிறு அடிமை இந்தியத் தீவுகளுக்குள் கட்டுண்டிருக்க மன்னர் அரசுகளிலுள்ள குடிமக்கள் ஆர்வ முடையவர்களாயில்லை”, என்பதை மன்னர்களும் விரைவில் உணர்ந்துகொண்டார்கள். தங்கள் மக்களின் நாட்டுப் பற்றில் அவர்களும் பங்கு கொள்ள முன் வந்தார்கள். மன்னரசுகள் ஒவ்வொன்றாக மாநில அரசின் மன்னரசுத் துறையின் கீழ் ஒன்றுபட்டன. தங்கள் மரபுப் பெருமைகளையும் மக்கள் உரிமைகளைப் பாதிக்காத தங்கள் உரிமைகளையும் அவர்கள் வைத்துக் கொள்ள மாநில அரசு இணக்கமளித்தது. ஆனால், ஆட்சி முற்றிலும் மாநில ஆட்சியின்கீழ்ப் படிப்படியாக ஒருங்கிணைக்கப் படலாயிற்று. மிகப் பெரிய அளவிலுள்ள அரசுகள் அப்படியே தனியரசுகளாகக் கொள்ளப்பட்டன. மற்றவை இரண்டும் பலவும் ஒருங்கிணைக்கப்பட்டுப் பெருந்தொகுதிகளாக்கப்பட்டன. பெரிய தனியரசுகளும் அரசுத் தொகுதிகளும் பி வகுப்புச் சார்ந்த தனியரசுகளாக வகுக்கப்பட்டன. அயலாட்சியின் சின்னங்களுள் மிக மோசமானவை, மன்னர் அரசுகளே. அதே சமயம் புதிய இந்தியாவின் சாதனைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க சிறந்த சாதனையும் அம்மன்னர் அரசுகளின் ஒருங்கிணைப்பேயாகும். மன்னர் அரசுகளில் தென்னிந்தியாவிலுள்ள பல அரசுகள் பாஞ்சாலங்குறிச்சிப் போர், மைசூர் போர் ஆகியவற்றின் அடிமை மரபுகள், வடவிந்தியாவில் அவை 1857புரட்சியைத் தடுத்து நிறுத்திய அடிமை மரபுகளாயின என்றும் கண்டோம். விடுதலை இந்தியா இவ்வடிமைச் சின்னங்களை வரலாற்றுச் சின்னங் களாக்கியுள்ளது. தடங்கல்கள்: படிப்பினைகள் விடுதலையாகிய நாள்மலருடன் நமக்குப் பிரிவினையாகிய முள்ளும் சேர்ந்தே கிட்டியுள்ளது. அயலாட்சியின் சின்னமாகிய மன்னரசுகள் அம்மலரினகத்திலிருந்து அணிவோருக்கு இன்னல் தரும் நச்சுயிர்கள் போன்றவை. நாம் மலரின் முள்ளைத் திறமையுடன் அகற்றிவிட்டோம். நச்சுயிர்களின்மீது அரசிய லிணைப்பாகிய நச்சுத் தடை மருந்தினைத் தூவி விட்டோம். மாநில விடுதலையாகிய மலரை, நாம், நம் அவாக்களாகிய நாரிழைகளில் தொடுத்து மாலையாகப் புனைந்தணியத் தொடங்கியுள்ளோம். மழை நிறை வளந்தருவது. ஆனால், அது அடை மழையாய், பெருமழையாய்த் தற்காலிகமாகச் செய்யும் அழிவுகளும் உண்டு. மழைக்கால முடிவில் சாய்ந்த மரங்கள் போக்குவரவுப் பாதைகளின் குறுக்கே விழுந்து வழியடைத்துக் கிடப்பதுண்டு. மழை வளத்தின் பயனை நுகர விரும்புபவர்கள், அங்ஙனம் நுகர முற்படுமுன் இத்தடங்கல்களை அகற்றிப் பாதைகளைச் செப்பனிடுவது இன்றிமையாதது. விடுதலைப் போராட்டத் திடையே எழுந்த வகுப்புப்பூசல்களும், அவற்றை அடுத்து வந்த பிரிவினையும் மக்கட் பெயர்ச்சியும் விடுதலை மாமழையின் பின் நம் பாதையில் விழுந்து கிடந்த சாய்ந்த மரங்கள் ஆகும். அவை நம் முற்போக்குக்குக் குந்தகமான தடங்கல்கள்! அத்தடங்கல்களை நாம் அகற்றிவிட்டோம். இது நமக்குப் பெருமை தருவது; ஊக்கமளிப்பது. இனி நாம் முனைந்து முன்னேறுவோம்; முன்னேற வேண்டும்! நம் முன்னேற்றப் பாதைக்கு இன்னும் நம் விடுதலைக் குறிக்கோளை ஒளி காட்டவல்லது. மாநில விடுதலை என்ற குறிக்கோளை நமக்குக் காட்டி நம்மைப் போரோட்டத்தில் ஊக்கிய பேரவைத் தலைவர்கள், தங்கள் குறிக்கோளை இன்னும் உயர்த்தி நமக்குத் தொலைவழி காட்டியுள்ளார்கள். அக்குறிக்கோள், மக்கள் விடுதலை, மக்கள் வாழ்வின் வளம் ஆகியவற்றின்மீதும் நம் கருத்தைத் தூண்டுகின்றது. விடுதலை பெறுவது அருமை. ஆனால் பெற்ற விடுதலையைப் பேணுவது அதனினும் அருமை. விடுதலையை ஒரு தடவை இழந்த நாம், அதை மீண்டும் இழந்துவிட நேராதபடி, விழிப்புடன் இருக்க வேண்டும். விடுதலை நம் குறிக்கோள். ஆனால், பழைய விடுதலை நமக்கு ஓர் எச்சரிக்கை! அதில் வலிமைக்கேடு, ஒற்றமைக்கேடு முதலிய உள்ளார்ந்த அடிமைப் பண்புகள் அடிமை மரபை வளர்த்தன. அவைகளே அயலாட்சியைக் கொண்டு வந்து மேலும் பல அடிமைப் பண்புகளை ஊக்கின. ஆனால், பழைய விடுதலையும் அடிமை மரபும் தரும் எச்சரிக்கை களால் நாம் நெஞ்சுடைய வேண்டுவதில்லை. ஏனெனில், விடுதலை நாளில் இழந்த பண்புகளை நாம் அயலாட்சியின் சூழலிலேயே முயன்று பேராடிப் பெற்றிருக்கிறோம். புதிய விடுதலையாட்சி அவ்வடிமைப் பண்புகளை வேரோடழித்து நம் விடுதலைக் கோட்டையை வலுப்படுத்த உதவ வேண்டும். இவ்வகையில் நமக்கு விடுதலை இயக்க வரலாறும், அதற்குத் தாயகமான மாநில வரலாறும் பல படிப்பினைகளும் எச்சரிக்கைகளும் தருவதுடன், நமக்கு வருங்கால வாழ்வில் ஊக்கமும் அளிக்க வல்லன. அவற்றில் நாம் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும். காலக் கண்ணாடி காலம் என்ற கண்ணாடியில் பொதுநோக்கு, நுண்ணோக்கு, தொலைநோக்கு என்ற மூன்று நோக்குகள் உண்டு. நிகழ்காலம், பொது நோக்கு. அது பொருள்களின் அளவையும் புறத்தோற்றத்தையும் மட்டுமே உணர்த்தும். இறந்தகால நோக்க நுண்ணோக்கு. நுண்ணோக்காடி1 போல, அது பொருள்களின் ஆக்கத்தையும் வளர்ச்சிக் கூறுகளையும் காட்டும். எதிர்கால நோக்கு, தொலை நோக்கு. மற்ற இரண்டு நோக்கையும் வரலாற்று முறையில் ஆராய்ந்து காரண காரிய விளக்க முறையில் இரண்டையும் இணைப்பதாலேயே அது காட்சியாற்றல் தரும். வருங்கால நோக்கமும் இத்தகைய காட்சி ஆற்றலும் தரும் நூலே வரலாறு. விடுதலை இயக்க வரலாற்றையும் நாம் இந்நோக்குடன் நோக்கினால், அது நிகழ்கால அறிவை வளப்படுத்துவதுடன் நில்லாமல், வருங்கால வளர்ச்சிக்கு ஊக்கமும் வளமும் தரும். விடுதலைப் போராட்டம் எங்கும் வேற்றுமை அகற்றும் ஆற்றல் வாய்ந்தது. முதிராத் தேசியங்கள் பல அதன் ஆற்றலால் கனிவுற்று முதிர்ந்த தேசிய இனங்கள் ஆகியுள்ளன. பிரிட்டனைப் போலப் பல தேசிய இனங்கள் கலந்த நாட்டிற்கூட, விடுதலைப் போராட்டம், அவ்வினங்களை ஒரே வார்ப்படத்திலிட்டுப் புடமிட்டு, ஒப்பற்ற ஒரே தேசிய இனமாக்கியுள்ளது. ஆனால், விடுதலைப் போர்க்காலத்தில் இந்திய மக்களிடையே இருந்து வந்த வகுப்பு வேறுபாடுகள், அப்போராட்டத்தின் பயனாக முற்றிலும் அகன்றுவிட்டன என்று எவரும் கூற முடியாது. ஏனெனில், அவை மாநில விடுதலையுடன் மாநிலப் பிரிவினையையும் கொண்டு வந்தன. பிரிவினையுடனும் அவை அமையவில்லை. எண்ணற்ற தேசமக்களின் உயிருக்கும் வாழ்வுக்கும் அவை இடர் விளைவித்தன. விடுதலைத் தலைவர்கள், போராட்டத்தில் காட்டிய தீரத்தை அவ்விடர்களை நீக்குவதிலும் காட்டினார்கள். இதனால், அவர்கள் மீது நமக்கு முன்பு இருந்த மதிப்பு. பன்மடங்காகப் பெருகியுள்ளது. ஆனால், அவர்கள் வேலை இத்துடன் நின்றுவிடவில்லை. தேசியத்தில் இருக்கக்கூடிய கறைகள் யாவற்றையும் அகற்றவல்ல விடுதலை இயக்கத்தையே கறைப்படுத்திய அத்தீமைகளின் வேர் நிலை கண்டு அவற்றை ஒழிக்க அவர்கள் நிலையான திட்டம் வகுக்க வேண்டும். பயிர்ப்பண்பு எது? களைப் பண்பு எது? உழவன் விதை விதைத்துப் பயிரிடுகிறான், அதன் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறான். ஆனால், விதை விதைக்காமலே, உரமிடாமலே, அவன் கண்ணையும் கருத்தையும் தப்பி எப்படியோ களைகள் பெருகிவிடுகின்றன. களைகளை அகற்றித்தான் அவன் பயிரைக் காக்க வேண்டும். அது மட்டுமன்றிப் பயிர் அறுவடையாகிப் புதுப் பயிரிட்ட பின்னும் முன் அவன் பறித்த களைகளின் வேர்களிலிருந்தே புதுக்களைகள் அழையா விருந்தாய் வந்து புகுகின்றன. அயலாட்சிக்கும் அடிமைத்தனத்துக்கும் காரணமான களைப்பண்புகள் விடுதலைப் போராட்டத்துக்கு முன்பே தேசிய மண்ணில் கரந்திருந்தன. அயலாட்சி இப்பண்புகளை ஊக்கி யிருக்கலாம். இது இயல்பாக எதிர்பார்க்கத்தக்கதே. ஆனால், அயலாட்சி இவற்றை உண்டு பண்ண முடியும் என்பதை எவரும் ஒப்புக்கொள்ளமாட்டார். எப்படியும் இப்பண்புகள் ஊக்கம் பெற்றோ, பெறாமலோ, தேசிய நிலத்தில் மறைந்திருந்து, நம் விடுதலை உழவராகிய தேசத் தலைவர்களின் உழவுச் சால்களுக்குத் தப்பி வளம் பெற்று வளர்ந்துவிட்டன என்பது மட்டும் நமக்குப் புலனாகிறது. விடுதலைப்போராட்டத்தின்போது களைகளாய் வந்து விடுதலைப் பயிரை அழிக்க முயன்ற இக்குறைபாடுகள், அறுவடையின் பின் விடுதலையூழியின் புதுப்பயிர் தொடங்கும் போதும் நம் களைக்கொட்டுக் கருவிகளின் கடமைக்குக் காத்தேயிருக்கின்றன. ‘விடுதலையின் பயன் ஓய்வு அன்று; ஓயா விழிப்பு’, என்பதனை இந்நிலை நமக்கு நினைவூட்டுகிறது. நம் விடுதலை இயக்கத்தின் போராட்டப்படி முடிந்து விட்டது. ஆனால், இயக்கம் முடிந்துவிடவில்லை. ஏனெனில், அதுவே நம் வாழ்வு. விதையாது வளரும் களைப்பயிர் இதையே நமக்கு எச்சரித்துக் காட்டுகிறது. ‘பயிர் எது? நற்பண்புகள் எவை?’ என்று நாம் அறிந்து, அவற்றை ஓயாது பேண வேண்டும். ‘களை எது? களைப்பண்புகள் எவை?’ என்று அறிந்து, நாம் ஓயாது அக்களைகளைக் களையப் பாடுபடவேண்டும். ஆனால், களை எது? பயிர் எது? இவற்றையறிய விடுதலை இயக்கமும் மாநில வரலாறும் நமக்கு உதவியாக வேண்டும். சாதி முறைமைக்கேடு நம் சமூக வாழ்வின் மிகக் கொடிய களைப் பண்பு சாதி வேறுபாடு. அது மனித உலகில் தொடக்கத்தில் ஒருவேளை எல்லா நாடுகளிலும் பரந்த களைப் பண்பாய் இருந்திருக்கக் கூடும். ஆயினும், இன்று இந்திய மாநிலம் ஒன்றில் மட்டுமே நாம் அதனை முழு உருவில் காண்கிறோம். மனித இனத்தின் மற்றெல்லாப் பகுதிகளும் அதன் தடத்தையே நாம் எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவில் அதைக் கடந்து சென்று விட்டன; அல்லது பேரளவில் அதன் பண்பை மாற்றிக் கொண்டு விட்டன என்னலாம். பொருளியல் துறையிலும் சமூகமதிப்புத் துறையிலும் உயர்வு வேறுபாடும், உயர்வு தாழ்வு வேறுபாடும், உயர்வு தாழ்வு மனப்பான்மையும் உலகெங்கும் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவை பிறப்பு வேறுபாடாகி, ஒரு நாட்டு மக்களின் ஒரு பகுதியையும் அதே நாட்டு மக்களின் மற்றொரு பகுதியையும் பிரிப்பதுடன் நில்லாமல், நாட்டு மக்களனை வரையுமே பல்வேறினங்களாகப் பிரிக்கும் பண்பாய் இந்நில உலகில் வேறெங்கும் நிலைபெறவில்லை. எந்த ஆங்கிலேயனும் மற்றெந்த ஆங்கிலேயனுடனும் இருந்து உண்பதையோ, பெண் கொள்ளல் கொடுக்கல் செய்வதையோ தடுக்கும் சமூக மரபு, சமய மரபு அல்லது அரசியல் கட்டுப்பாடு ஆங்கில நாட்டிலும் இல்லை; வேறெந்த நாட்டிலும் இல்லை. இந்தியா ஒன்றிலேயே இம்மரபுகள் இன்னும் நின்று நிலவுகின்றன; இன்னும் பெருகுகின்றன. இது மட்டுமன்றி, ஆங்கிலேயன் ஜெர்மானியனையோ, ஜெர்மானியன் ஃபிரெஞ்சுக் காரனையோ தீண்டாதிருக்க, உடனுண்ணாதிருக்க, உறவு கொண்டு கலக்காதிருக்கக் கூட எந்தச் சமூகத்தடையோ சமயத்தடையோ நிலையான வடிவில் மற்ற நாடுகளில் இல்லை. ஆனால், இந்தியாவில் ஒரு மாகாணங்கூட, ஒரு நகரம் அல்லது ஒரு வீடுகூட,வெளியுலகம் பல நூற்றாண்டு களுக்கு முன்பே அடைந்துள்ள இந்த ஒற்றுமையை எளிதில் அடைய முடியவில்லை. உலகத்தில் எத்தனை பிறப்பு வேறுபாடுகள், நிற வேறுபாடுகள் இருக்கக்கூடுமோ, அவற்றை விட மிகுதியான வேறுபாடுகள் பாரத நாட்டின் ஒரு சிற்றூரில், ஒரு தெருவில் உண்டு என்பதை நாம் மறக்கக் கூடாது. அதற்கு நாம் எத்தனை திறமையான விளக்கம் தந்தாலும், அது அருவருப்பை அழகாக வருணிக்கும் கவிதை வேதாந்தமாகக் கூடுமேயன்றி, நம் மதிப்பை உலகில் உயர்த்த ஒருபோதும் உதவாது. நம் தேசத்தை ஒரு தேசமாக்க முயலுபவர் எவரேனும் இதில் கருத்துச் செலுத்தாதிருந்தால், அது போன்ற மடமை அல்லது நாட்டுப் பகைமைப் பண்பு வேறு எதுவும் இருக்க முடியாது. பேரவை தோன்றும் காலத்துக்கு முன்பே பிரமசமாஜப் பெரியார்களும் ஆரியசமாஜப் பெரியார்களும் தத்தம் கருத்துக் கோணத்திலிருந்து இக்களைப் பண்புகளை நீக்க முயன்றதுண்டு. பேரவை தொடங்கும் காலத்தில் திரு.ஏ. ஓ.ஹியூம், அதை ஒரு சமூகச் சீர்திருத்தப் பேரவையாகவே கனவு கண்டிருந்தார். ஆட்சி முதல்வர் டஃவ்வரின் பெருமகனார் அதை ஒர் அரசியற் பேரவையாக்கும்படி கூறியது சால்புடையது என்பதில் ஐயமில்லை. ஆனால், சமூக சமயச் சீர்திருத்தத்தில் பொதுவாகப் பேரவை வரவரக்குறைந்த ஈடுபாடே காட்டியிருந்தது என்பது உண்மை. தென்னாட்டில் பேரவைக்கு வெளியே வளர்ந்த நேர்மைக் கட்சியும், பேரவையிலிருந்தே கிளைத்து வெளியே பெரியார் ஈ.வே. இராமசாமியாரின் தலைமையில் வளர்த்த தன்மான இயக்கமும், தூயதிரு மறைமலையடிகளார் தலைமையில் தோன்றிய தமிழ் இயக்கம் சமயச்சீர்திருத்த இயக்கம் ஆகியவையும் இவ்வகையில் நல்லெச்சரிக்கைகள் தந்தன. தென்னாப்பிரிக்காவில் தமிழரிடையே வாழ்ந்து பணியாற்றிய காந்தியடிகள் இதன் முனைப்பான சில கூறுகளைப் பேரவை இயக்கத்தின் ஆதரவில் தனி இயக்கங்களாக வளர்க்கப் பாடுபட்டார். ஆனால், தென்னாட்டின் முழுப்படிப்பினைகளைப் பேரவை இயக்கம் மேற்கொள்ள முடியாது போயிற்று. தமிழகம் தரும் ஒளி இந்தியாவில் சமூகச் சீர்திருத்தத்தில் முனைபவர் சமயத்துடனும், மொழி, கலை, இலக்கியத் துறைகளுடனும் மோதிக் கொள்ளாமல் இருக்க முடிவதில்லை. ஏனென்றால், சாதி முறை அவற்றின் வாழ்விலெல்லாம் புகுந்துள்ளது. சிறப்பாக, சமயம் மொழி ஆகிய இரு துறைகளிலுமே சாதி மரபு நலிய விடாமல் காத்துவரும் குழு நலன்கள் பேணப்படுகின்றன. சமூகத்திலுள்ள சாதி முறையை இந்தியாவின் சமயம் வருணாச்சிரம முறையாக்கி வலியுறுத்திக் காத்து வளர்க்கிறது. உயர் சாதிக்குழுவினர் சாதி முறைமைப் பாதுகாப்பையே சமயப் பாதுகாப்பு என்று கூறி, அதற்கு வலுத்தேடுகின்றனர். இந்தியாவின் இடைக்காலப் புராண இதிகாசங்கள் இதற்கான பிரசாரக் கருவிகளாய் மக்கள்மீது சுமத்தப்படுகின்றன. பண்டை உபநிடதப் பண்புகளைவிட இவற்றின் பண்புகளையே சாதிநலக் குழுவினர் சமயப் பண்பாக வளர்க்க நீண்ட காலமாக முனைந்துள்ளனர். இக்காரணத்தினால் சாதி நலக் குழுவின் கையில் பட்டுச் சமயத்துறையில், போலி இடைக்காலப் பண்புகளும், மொழித்துறையில், வடமொழி அல்லது சம்ஸ்கிருத ஆதிக்கமும் சாதி எதிர்ப்பை ஒழிக்கும் வகையில் ஒப்பற்ற கருவிகளாய் அமைகின்றன. தென்னாட்டில் பொதுவாகவும், தமிழகத்தில் சிறப்பாகவும், சாதி எதிர்ப்பு, சமயச் சீர்திருத்தம், வடமொழி ஆதிக்க எதிர்ப்பு ஆகிய மூன்றும் இணைந்து செயலாற்றி வருகின்றன. தமிழகத்துக்கு வெளியே இம்முறைகளின் ஒருமைப்பாடு உணணரப் படவில்லை. இது காரணமாகவே, பிற்போக்காளர் சமூக முற்போக்குக் கருத்துகளைச் சமூகம், சமயம், மொழி ஆகிய மூன்று துறைகளிலும் தனித்தனி பிரித்து வைத்து, ஒரு துறை முற்போக்காளரைக் கொண்டே மற்றொரு துறை முற்போக்கைத் தடைப்படுத்திவிட முடிகிறது. முஸ்லிம் சங்கத்தை முஸ்லிம் வகுப்புவாத சங்கம் என்றும், இந்துப் பேரவையை இந்து வகுப்புவாத சங்கம் என்றும் நாம் கருதுவது இயல்பு. ஆனால், தேசிய நோக்குடன் இவற்றின் வளர்ச்சியை உற்று நோக்கினால், வகுப்புவாதம் இவற்றிடையே எவ்வாறு வளர்ந்தது என்பதைக் காணலாம். இந்துப் பேரவை வளர்ச்சி மிகவும் அணிமைக்கால வளர்ச்சி. வகுப்புவாதம் இந்துப் பேரவை வளர்ச்சியினால் ஏற்படவில்லை; வகுப்புவாத வளர்ச்சியே இந்துப் பேரவையை வளர்த்துள்ளது என்பதை இது காட்டுகிறது. முஸ்லிம் சங்க வளர்ச்சியும் இது வகையில் முற்றிலும் வேறானதன்று. அத்துடன் இந்துப் பேரவையும் முஸ்லிம சங்கமும் வகுப்புவாத சங்கங்களாகவே வளர்ந்திருந்தால், அவற்றின் தலைமையில் முளைத்த வகுப்பு வெறியர்களே எப்போதும் இடம் பெற்றிருக்க வேண்டும். முஸ்லிம் வகுப்பு வெறியர்கள் பலர் உண்டு. ஆனால், அவர்களுடன் சேர்த்து முஸ்லிம் சங்கத் தலைவர் ஜின்னாவையும் ஒரு முதல் தர வெறியர் என்று எந்த தேசிய வாதியும் கூற முடியாது. அதுபோலவே, இந்துப் பேரவையைப் பேரளவில் வளர்த்த வீர சவர்க்காரை இந்து வெறியர்களில் முதல்வர் என்று எவரும் கூற முடியாது. அப்படியானால், முஸ்லிம் சங்கத்தையும் இந்துப் பேரவையையும் வகுப்புச் சங்கங்களாக்கி, அவற்றின் தலைவர்களை வகுப்புவாதத்தின் கையாட்களாக்கிய சத்திகள் அச்சங்கத்தினுள் பிறந்தவை அல்ல. அவை யாவை என்பதை நாம் ஆராய்ந்து காண்பது இன்றியமையாதது. சாதி முறையை வாழ்வின் அடிப்படையாகக் கொண்டு சமூக முறையில் சமயக் குழுவும், ஒரு பெரிய சாதிக் குழுவே என்பதை இந்திய அரசியலில் கருத்துச் செலுத்துபவர் கவனிக்காமலிருக்க முடியாது. சாதியை ஏற்றுக்கொண்ட மதம், இந்து மதம் ஒன்றே, ஆனால், இந்துக்களைப் பெரும்பாலாராகக் கொண்ட இந்தியாவில் இந்துக்கள் எத்தனை சாதியாகப் பிரிவுற்றிருந்தாலும், இந்து சமுதாயம் பல சாதிகளை உட்கொண்ட ஒரு பெருஞ்சாதியாகவே செயலாற்ற முடியும். பிறப்பினாலன்றி ஒருவன் இந்துவாக முடியாது என்ற நிலை இதைத் தெளிவுபடுத்தும். பிற மதத்துக்கு ஒருவன் மாறியவுடன் அவன் மதத்தைத் தற்காலிகமாகவே இழக்கிறான். கிறிஸ்து மதத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவிய ஒருவன், திரும்பவும் கிறிஸ்தவனாகும் உரிமை உலகெங்கும் உண்டு. ஆனால், இந்தியாவில் இந்துக்கள் மதமாறியவுடன் சாதியிலும் மாறிவிடுகின்றார்கள். மதமாற்றம் நிலையானதன்று, ஏனென்றால், கிறிஸ்தவனாக மாறிய இந்து மீண்டும் இந்துவாக முடியாதே தவிர, முஸ்லிமாகவோ புத்தனாகவோ மாற முடியும். ஆனால், இந்து மதம் ஒரு சாதியானதால் மட்டுமே, அவன் திரும்ப இந்துவாக முடியாது. மேலும், புதிய மதம் சாதியை ஏற்றுக் கொண்டால், அங்கும் சாதி பரவுகிறது. கத்தோலிக்கரிடையே பெரும்பான்மையாகவும், புரோட்டஸ்டண்டுக் கிறிஸ்தவர் களிடையேயும் இஸ்லாமியர்களிடையேயும் சற்றுக் குறைவாகவும் இந்துக்களின் சாதி முறைமை பரவியுள்ளதைக் காணலாம். தவிர, சாதியை ஏற்காத மதங்கள்கூட இந்தியாவில் பிறமத சமுதாயங்களிலிருந்து பிரிந்து வாழும் ஒரு பெருஞ்சாதியாகவே நிலவ முடியும். எனவேதான், இந்து மதம் இந்தியாவில் இந்துக்களைப் பல சாதிகளடங்கிய ஒரு பெருஞ்சாதியாகப் பிரித்ததுடன் நில்லாமல், இந்திய முஸ்லிம்கள், இந்தியக் கிறிஸ்தவர்கள், இந்தியப் பார்ஸிகள் போன்ற மதப்பெயர் கொண்ட பல சாதிகளையும் வளர்த்து வருகிறது. மதம், அரசியல் ஆகியவற்றின் சாதி அடிப்படை இந்தியாவில் சாதி இருக்கும்வரை மதவாழ்வு சாதிவாழ்வின் ஒரு திரையாக, ஒரு மறுபடிவமாக மட்டுமே இயங்க முடியும். சாதி அடிப்படையாய் மதவாழ்வு இருக்கும் வரை, தேச வாழ்வும் தேசியமும் அரசியல் வாழ்வும் உண்மையில் சாதிமத வாழ்வாகவே, அதாவது சாதியை அடிப்படையாகக் கொண்ட மதம், மதத்தை அடிப்படையாகக் கொண்ட சாதி ஆகியவற்றின் வாழ்வாகவே இருக்க முடியும். இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளில் பெரும்பாலனவற்றின் பெயர்களே இதற்குச் சான்று பகரும். முஸ்லிம் சங்கம், இந்துப் பேரவை, தாழ்த்தப் பட்டவர் பேரவை, பிராமணரல்லாதார் சங்கம் என்பவை மட்டுமன்றி, அவற்றுடன் போட்டியிடும் அல்லது அவற்றைவிட முனைத்த பிற முஸ்லிம் சங்கங்களும் இந்துச் சங்கங்களும் சீக்கிய சங்கங்களும் இருக்கின்றன.“இந்தியாவில் அரசியல் கட்சி எதுவுமே இல்லை. சாதி சமயக் குழுக்களே உண்டு.” என்று வெளி நாட்டறிஞர் ஒருவர் கூறிய கூற்று முழுதும் தவறானதென்று ஒதுக்கிவிடத் தக்கதன்று. சாதிசமயப் பெயரில்லாத கட்சிகளிலும் சாதி சமயப் பண்புகள் அதன் குழு நலங்களின் கருத்துத் திரைகளில் செயலாற்ற முடியும் என்பதைக் காண்டல் அரிதன்று. சாதி ஒழியும்வரை சமய வேறுபாடு இந்தியாவின் அடிப்படை வேறுபாடு ஆகாது. தமிழகத்துக்குப் புறம்பான இந்தியா, இந்தப் பாடத்தை நன்குணரவில்லை; உணர்ந்திருந்தால், சாதியையும் புராண மூட நம்பிக்கைகளையும் எதிர்த்த பிரமசமாஜம், ஆரிய சமாஜம், சீக்கிய சமயம், கபீர்பாந்த் ஆகிய குழுக்களும், முன்னேற்றக் கருத்துடைய இடசாரிகள் என்று தம்மைக் குறித்துக்கொள்ளும் சமதருமப் பொது உடைமைக் கட்சியினரும், சாதி அடிப்படையான இந்து மதப் பண்பாட்டையும், சமூக அமைப்பையும், மொழி இலக்கியங்களையும், அரசியல் மரபையும் ஒப்புக்கொண்டு, இவற்றை ஏற்க மறுத்த முஸ்லிம் சங்கத்தை எதிர்ப்பதன் மூலம் இவற்றை வலியுறுத்தி வளர விட்டிருக்க வேண்டியதில்லை. அரசியல் துறையில் மாநிலப் பேரவை இந்துப் பேரவையிலிருந்து வேறுபட்டதாகத் தொடக்கத்தில் தோற்றினாலும், பிரிவினையின்போது இரண்டின் குறிக்கோளும் போக்கும் கிட்டத்தட்ட ஒன்றுபட்டுவிட்டன என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. தென்னாட்டில் அரசியலிலும், வாழ்விலும் இதே வகைக் குழப்பம் ஏற்பட்டிருந்தாலும், மறைமலையடிகள் போன்ற மொழித் தலைவர்களும், சமயத் தலைவர்களும், பெரியார் ஈ.வே.ரா. போன்ற சமூக, அரசியல் தலைவர்களும் இக்குழப்பத்தில் சிக்காதிருந்து வந்துள்ளார்கள். சாதியையும் புராணத்தையும் அடிப்படையாகக் கொண்ட சமயப்பகுதி இந்தியாவின் பண்டைச் சமயங்களான சைவவைணவங்களுடன் செறிவுறக் கலந்து காணப்பட்டாலும், அவை சைவ வைண சமயங்களின் ஒரு கூறு அல்ல என்பதையும்; சாதி, புராண அடிப்படை அவற்றுக்குப் புறம்பான சுமார்த்த சமயமாதலால், அதை விலக்கியொழித்துச் சைவ வைணவ சமயங்கள் தூய்மை பெறக்கூடுமென்பதையும் மறைமலையடிகள் விளக்கினார். தென்னிந்தியாவில் சைவ வைணவ சமயப்பற்று, ஆஸ்திகப் புறச் சமயங்களாகிய இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியவற்றை எதிர்ப்பதைவிடப் போலிச் சமயப் பண்பாகிய சாதி புராண அடிப்படையை எதிர்ப்பதிலேயே மிகுதியாகக் கருத்துச் செலுத்துகின்றது. இந்து முஸ்லிம் வேறுபாடு வடநாட்டின் எதிரலையாகக்கூடத் தென்னாட்டில் ஏற்படாததன் காரணம் இதுவே. இஸ்லாம் சங்கமும் இந்துப் பேரவையும் பிற வடநாட்டுச் சமயச் சார்பான வகுப்பு வாதக் கட்சிகளும் தென்னாட்டில் நிலவினும், அவற்றாற்கூட இந்து முஸ்லிம் வேற்றுமையை வலியுறுத்தி வளர்க்க முடியவில்லை! சமூக அரசியல் துறைகளில் நேர்மைக்கட்சியும், தன்மான இயக்கமும் தரும் படிப்பினைகளை வட நாட்டுச் சமூக வகுப்பு வாதிகள் கவனித்தல் வேண்டும். சாதி வேறுபாடு எளிதில் சமூகச் சீர்திருத்தவாதிகளால் மட்டும் அகற்றத் தக்கது. ஆனால், அது சமயத் துறையில் வருணாசிரம ஒழுக்கமுறையோடு பிணைக்கப் பட்டுள்ளது. மறைமலையடிகளின் தூய சமய வாதத்தாற்கூட, வருணாசிரம ஒழுக்க முறையைக் கண்டிக்க முடிந்ததே தவிர, அழிக்க முடியவில்லை. வடநாட்டுப் பிரமசமாஜ, ஆரிய சமாஜங்களின் நிலையும் இதுவே. ஆகவே, இடைக்காலச் சாதிபுராண அடிப்படையிலமைந்த போலிச் சமயத்தையும், சாதியையும், அவற்றினடிப்படையிலமைந்த போலி ஒழுக்கக் கருத்துகளையும், மூட நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங் களையும் ஒருங்கே எதிர்த்தாலன்றிப் புதிய சமூகத்தையோ, சமய வலுவையோ அரசியல் மனப்பான்மையையோ உண்டு பண்ண முடியாது. தென்னாட்டு இயக்கங்கள் இந்திய மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தரும் படிப்பினையாகிய அறிவொளி இதுவே. முன்னணிகளின் முரண்பாடு தென்னாட்டுச் சமய சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் யாவும் அரசியல் துறையில் பிற்போக்காக நின்றதும், பேரவையின் விடுதலை இயக்கத்தில் முழுதும் கலக்காது ஒதுங்கியிருக்க நேர்ந்ததும் தென்னிந்திய வாழ்வுக்கும், இந்திய மாநில அரசியல் முன்னேற்றத்துக்கும் ஒரு பெரிய அவப்பேறேயாகும். இந்நிலை அரசியல் போட்டிகளால் ஏற்பட்டதே என்பதில் ஐயமில்லை. ஆனால், முழு விடுதலையின்போது தென்னாட்டுச் சமூக முற்போக்குக் கட்சிகளில் ஒன்றின் தலைவராகிய அறிஞர் சி.என். அண்ணாத்துரை, பேரவை இயக்கத்தினருக்கு இவ்வகையில் ஒரு நல்ல சமிக்கை தந்துள்ளார். ஆகஸ்டு 15-ஆந் தேதியை அரசியல் துறை விடுதலை நாளாக ஏற்க அவர் முன் வந்தார். இது உண்மையில் சமூகச் சீர்திருத்த வேலையில் தம்முடன் கைகோத்து உழைக்கும்படி அரசியலில் வேறுபட்ட கட்சியினரை அழைக்கும் அன்பழைப்பேயாகும். இவ்வன்புக் குரலுக்குத் தென்னாட்டுப் பேரவை எதிர் குரலளித்திருந்தால், இந்தியாவின் வாழ்வில் பெருநன்மை விளைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. தென்னாட்டில் அரசியல் முன்னணியும் சமூக முன்னணியும் ஒன்றுபட்டிருக்கக் கூடுமானால், வடநாடு காந்தியடிகள் ஆரூயிரையும் ஜின்னாவின் சீரிய நல்லுயிரையும் நெறி காணா மயக்க வெறியினர் பிழைகளுக்கு இரையாக்கியிருக்க வேண்டியதில்லை. வகுப்புக் கலவரங்களும் மதவேற்றுமை அடிப்படையான பிரிவினைகளும் ஏற்பட்டிருக்க வேண்டியதில்லை. அது மட்டுமன்றிப் பேரவை தன் பழைய குறிக்கோளாகிய முழு நிறை விடுதலைக் குறிக்கோள், மொழிவாரி மாகாணக் குறிக்கோள் ஆகியவற்றினின்று பிறழவோ, அவற்றை வலியுறுத்தத் தயங்கவோ, அவசியம் ஏற்பட்டிராது. இந்தியாவில் வகுப்பு ஒற்றுமையையும் சரிசம அடிப்படையான அக ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியுமானால், ‘இவை பிரிவினை மனப்பான்மையை உண்டுபண்ணி விடுமோ!” என்ற இக்காலத் தேசியவாதிகளின் அச்சத்துக்கு இடம் ஏற்பட்டிருக்க மாட்டாது. குடியேற்ற நாடு என்ற முறையில் இந்தியாவிற்குப் பிரிவினை உரிமை உண்டு. ஆனால், குடியேற்ற நாட்டுரிமை இன்று அதனைப் பிரிவினை விரும்பாத பொது அரசின் உறுப்பாக்கி யுள்ளது! பிரிவினை உரிமையுடைய மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டிருந்தால், இதே நிலைமைதான் ஏற்படும் என்பதில் தடை இல்லை. பிரிவினை பற்றிய அச்சத்தை விடப் பிரிவினைச் சூழலை உண்டு பண்ணும் பண்பு வேறு எதுவும் இல்லை. மேலும், மொழிவாரி மாகாணப் பிரிவினை முன்பே ஏற்பட்டிருந்தால், இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை கூடத் தடைப்பட்டிருக்கும். சாதி அடிப்படையான உணர்ச்சியைவிட மொழி, பண்பாடு, கொள்கையடிப்படையான உணர்ச்சி, ஒற்றுமைக்குச் சிறந்த வழியாகும். கிரிப்ஸ் திட்டம் இவ்வகையில் இன்று ஏற்பட்டுள்ள பிரிவினையைவிடச் சீரிய திட்டத்தை நமக்குத் தந்திருந்தது என்பதைத் தேசிய நோக்கம் கொண்டவர் கவனிக்காதிருக்க முடியாது. எந்த மாகாணமும் தன் முடியுரிமையின் அடிப்படையில் தனித்து நிற்கவோ, நேரடியாக மாநிலக் கூட்டுறவில் சேரவோ அல்லது தனிக் குழுக் கூட்டுறவுகளில் சேர்ந்து அவற்றின் மூலமாகப் பெருங்கூட்டுறவில் சேரவோ, அது உரிமையளித்திருந்தது. அரசியலமைப்பு மன்றம் சீரிய உயர்குறிக்கோள்களைக் கொண்டிருந்ததாயினும், நடைமுறையில் பிரிவினை அச்சம், பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட மனக்கசப்பு ஆகியவற்றின் பயனாகவே மாகாணத் தன் முடிபுரிமைக் குறிக்கோளைக் கைவிட்டு, புறவொற்றுமையையும் மைய வலுவையும் நாடிற்று என்பதில் ஐயமில்லை. வருங்கால இந்தியா, வேறுபாடுகளை மறுத்த வலிந்த ஒற்றுமைக் கோட்டையில் முனைவதைவிட, வேற்றுமைகளை மதித்து, அவற்றிடையே அடிப்படை ஒற்றுமைகளைக் கண்டு பேணும் சரிசம உரிமையுடன் கூடிய கூட்டுறவு அடிப்படை யிலேயே உயர் அக ஒற்றுமை காணப் பாடுபட வேண்டும். குழு நலன்கள் பொருளியல் அடிப்படையில் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு முதலாளிகள் முயற்சி பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. ஆனால், முதலாளித்துவம் எப்போதும் குறுகிய மனப்பான்மையுடையது. எந்த முதலாளியும் பிற முதலாளிகளின் உரிமையையோ, பிறர் முதலாளிகள் ஆவதையோ அரசியல் உரிமையால் தடுக்க முனைவது இயல்பே. இன்று ,தொழில், சில மாகாணங்களில் வளர்ந்தும் மற்றவற்றில் பிற்பட்டும் இருக்கிறது என்பதைப் பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட சிக்கல்களே வலியுறுத்திக் காட்டுகின்றன. எல்லா மாகாணங்களும், எல்லா மாகாணங்களின் எல்லா வகுப்புகளும் தொழிலிலும் வாழ்விலும் முன்னேற வேண்டுமானால், முதலாளிகளை அரசியல் ஆளவேண்டும். முதலாளிகளே அரசியலை ஆளவோ, இயக்கவோ, இடம் ஏற்பட்டிருக்கக் கூடாது. மாகாணத்தின் தன் முடிபுரிமை, மொழிவாரி மாகாணங்களமைப்பு, பண்பாட்டடிப்படையாகச் சோவியத்துக் கூட்டுறவு நாடுகளிலுள்ளதுபோல கூட்டுறவின் கீழ்க் கூட்டுறவுகள் அமைதல் ஆகியவற்றை மாநில அரசியல் இன்று விரும்பவில்லை என்பது தெளிவு. இதில் முதலாளிகள் நலன்கள், அதுவும் இன்று விடுதலை இயக்கச் சூழல்களிடையே சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி வளர்த்துவிட்ட ஒரு சில வகுப்பு அல்லது ஒரு வகுப்பு முதலாளிகள் சிலர் நலன்களே பேணப்படுகின்றன. விடுதலையை அணுகுந்தோறும், விடுதலை வந்த பின்னும், இச்சில முதலாளிகளே மக்கள் பேரவையை நேரடியாகவும் மறைமுகமாகவும் இயக்கி ஆட்கொண்டுவிட்டனர் என்பதைத் தேசியவாதிகள் நன்குணர்ந்திருந்தும், ஒப்புக்கொள்ள அஞ்சுகின்றார்கள். பிரிட்டிஷ் அயலாட்சியை எதிர்க்கத் தயங்காத தேசியம், அதில் தியாகங்களைச் செய்த தேசியம், இன்று பரந்த தேசிய முதலாளித்துவ நலனாகக்கூட இயங்க முடியாத ஒரு சில முதலாளிகளின் குழுநலனை எதிர்க்கும் ஆற்றலும் துணிவும் அற்று நிற்கின்றது என்பது வருத்தத்தக்க நிலையேயாகும்! ‘அடிமைத்தனமும் விடுதலையும், இருளும் ஒளியும் போல வளைய வளைய வருபவை தாமோ!’ என்று எண்ண இது இடம் தருகிறது. மொழித் துறை பொருளியல் துறையைவிட மொழித் துறை இந்தியாவின் தேசிய வாழ்வுக்கு முக்கியமானது. தேசிய வாழ்வின் மரபுப் பெருமைகள் யாவும் மொழியிலும் இலக்கியத்திலுமே அடங்கிக் கிடக்கின்றன. ஆனால், இவ்வகையில் இந்தியாவுக்கு, சிறப்பாக வட இந்தியாவுக்கு, ஒரு பெருங்குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. எவ்வாறாகவோ இந்தியாவில் தேசிய இலக்கியமாகத் தாய்மொழி இலக்கியங்கள் அணிமைக்காலம்வரை வளரவில்லை. சம்ஸ்கிருதம் என்ற வடமொழியிலேயே அவை பேணப்பட்டுள்ளன. தென்னிந்தியாவின் நிலை பொதுவாகவும், தமிழகத்தின் நிலை இன்னும் சிறப்பாகவும், இவ்வகையில் வேறுபட்டது. இங்கே தேசிய இலக்கியம் தேச மொழிகளாகிய தாய் மொழிகளிலேயே அமைந்துள்ளது. இன்றைய இந்தியத் தேசிய இலக்கியம் ஆங்கில முதலிய மேனாட்டு மொழிகளின் தொடர்பால் திருத்தமடைந்து வருகிறது. ஆயினும், மேனாட்டுத் தொடர்பு நீங்கியவுடன் தேசியம் தாய்மொழிப் பாதையை விட்டுப் பழைய இருட் பாதையிலேயே நடக்கத் தொடங்கியிருக்கிறது. ஆங்கிலத்துக்குப் பதிலாகவோ அதற்கு அடுத்தபடியிலோ இந்தி இடம் பெறுவது இவ்விருட் பாதையை மறைக்கும் அரையிருட்போர்வையாகுமே தவிர, வேறன்று. ஏனெனில், இந்தி பெறும் இடம் இங்கே தாய்மொழியின் இடமன்று; ஆங்கில மொழியின் இடமே. பல மொழிஇனங்களை உடைய மாநிலம் பல மொழித் தொடர்பாலேயே சரிசம சகோதரத்துவமுடைய குடும்பமாக முடியும். தாய்மொழி அடிப்படையிலான அரசுகளின் தேசியமும், மொழியினம் பொருளியல் தோழமை அடிப்படையான தனிக் கூட்டுறவுத் தொடர்புகளுமே, இந்தியாவைச் சோவியத்துக் கூட்டுறவு போன்ற பெரிய அடிப்படை ஒற்றுமையும் முழு முதற்குறிக்கோளும் உடைய வலிமை வாய்ந்த கூட்டுறவாக்க முடியும். காந்தியடிகள் காட்டிய வழி பேரவைக்குக் காந்தியடிகள் காட்டிய வழி இவ்விடத்தில் நினைக்கத்தக்கது. விடுதலைப் போhராட்டகாலப் பேரவையின் நோக்கம், அரசியல் விடுதலை. இந்த நோக்கங் கொண்டவர் களிடையேயும், அதை அடைவதற்கான வகைமுறைகளில் வேறுபாடு இருந்தது. எனவேதான் பல கட்சிகள் ஏற்பட்டன. பேரவை இக்கட்சிகளிடையே நடுநாயகக் கட்சியாகவும், மக்கள் ஆதரவுமிக்க கட்சியாகவும், பிற கட்சிகளை அடிக்கடி அன்பாதரவுடன் அணைத்த கட்சியாகவும் வளர்ந்து, வெற்றி கண்டுள்ளது. ஆனால், இன்றைய பேரவைக்கு அந்தப் பழைய குறிக்கோளும் பழைய முறைகளும் போதமாட்டா. அவை அதை ஒரு விடுதலைக் கட்சியாக்க முடியுமேயன்றி, விடுதலை ஆட்சிக்குரிய அரசியல் கட்சிகளுள் ஒன்றாக்க முடியாது. இன்று பேரவை ஓர் அரசியல் கட்சியன்று; அதை எதிர்க்கும் கட்சிகளும் பழைய பேரவை எதிர்ப்புக் கட்சிக்கேயன்றிப் புதிய அரசியற்கட்சிகள் ஆகமாட்டா. இந்நிலை மாறிப் புதிய அரசியற் கட்சிகள் ஏற்படப் பேரவையே வழிகாட்ட வேண்டும். காந்தியடிகளே கூறியபடி அது பழைய விடுதலைக் கட்சியைக் கலைத்துப் புதிய ஆட்சிக் கட்சி அல்லது கட்சிகளை நிறுவ வேண்டும். பேரவைக்கு வெளியிலுள்ள கட்சிகளும் அப்போதுதான் அரசியல் கட்சிகளாக மாறும். இன்றைய கட்சிகளுக்குக் கொள்கைகள் உண்டு. ஆனால், அவை அக்கொள்கையடிப்படையாக எழுந்த கட்சிகளல்ல. பழைய விடுதலைப் போராட்டக் காலக் கட்சித் தலைவர்களின் வல்லமைப் போட்டிகளாக மட்டுமே அவை செயலாற்றுகின்றன. 1952 தேர்தல் படிப்பினைகள் 1952ல் நடைபெற்ற தேர்தல் இந்தியாவில் வளரும் புதிய சக்திகளின் தன்மைகளையும், வருங்கால இந்தியாவின் தன்மைகளையும் அரசியல் எதிர் நோக்குடையவர்களுக்கு நன்கு விளக்கிக் காட்ட வல்லது. வடநாடெங்கும் பேரவை பெரு வெற்றிபெற்றது. ஆனால், பேரவைக்குள்ளே பேரவையின் வலசாரிகளும், வெளியே வலசாரிகளைவிட முனைப்பான வலசாரிகளான பேரவை எதிரிகளுமே வெற்றி கண்டார்கள். வடநாடு வலசாரி நாடுகளில் முனைத்த நாடாகி வருகிறது. என்பதை இது காட்டுகின்றது. அதே சமயம், தென்னாடு முழுவதும் பேரவையில் இடசாரிகளும் இடசாரிகளை எதிர்த்த முனைப்பான இடசாரிகளான பேரவை எதிரிகளுமே வெற்றி பெற்றுள்ளார்கள். இடசாரியின் இப்பெரு வெற்றி கண்டு அஞ்சிய வலசாரியினரின் அச்சம் காரணமாக, பேரவையில் வலசாரியே வலுத்து வருகிறது. பேரவை வலசாரிப் பக்கமே சாய்ந்து வருகிறது என்பதை இது தெள்ளத் தெளியக் காட்டுகின்றது. இவ்விடத்தில் இடசாரிக் கட்சிகளில் வடநாட்டிலும் தென்னாட்டிலும் ஏற்பட்டுள்ள ஒரு வேறுபாட்டை நாம் கவனிக்க வேண்டும்: வடநாட்டில் இடசாரிகள் பொருளியல் துறை ஒன்றிலேயே இடசாரிகள்! சமயம், சமூகம், பண்பாடு, மொழி, இலக்கியம் ஆகிய துறைகளை இடசாரிகள் கவனிக்கவில்லை. அதில் வலசாரிகளுடன் ஒன்றுபட்டதுடன் நில்லாது, அடிக்கடி அவர்களையும் கடந்த வலசாரிகளாகப் பலர் உள்ளனர். தென்னாட்டில் பொதுவாகவும், தமிழகம், கேரளம் ஆகியவற்றில் சிறப்பாகவும் பொருளியல் சார்ந்த இடசாரிகள் மட்டுமன்றி, மற்றத் துறைகளிலும் கருத்துச் செலுத்திய சமய, சமூக, மொழி, இடசாரிகள் உள்ளன. தமிழகத்தில் சமூக இடசாரி இயக்கம், தன்மான இயக்கமாகவும்; மொழி இடசாரி, சமய இடசாரி இயக்கம், மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கமாகவும், சைவ மறுமலர்ச்சி இயக்கமாகவும் விளங்குகின்றன. சமூகப் பண்பாட்டு இடசாரி இயக்கங்கள் இல்லாதபோது பொருளியல், அரசயிலில் துறையில் வலசாரியே வளரும் என்பதை வடநாட்டுத் தேர்தல் காட்டுகிறது. தென்னாடெங்கும் மொழி சமூக இடசாரிகளின் கருத்தொளி பரந்துள்ளதனாலேயே, பொருளியல் இடசாரி வெற்றி பெற முடிந்தது. ஆயினும், சமூக மொழி இடசாரிகளின் மூலதளமாகிய தமிழகத்தில், தென்னாட்டின் இடசாரிகள் வெற்றி மிகவும் மந்தமாகியுள்ளது. பொருளியல் இடசாரியினர், சமூக இடசாரியினர், மொழி இடசாரியினர் ஒற்றுமைக் குறைவே இதற்குக் காரணம், ஒருவருடன் ஒருவர் கருத்தும் நோக்கும் முரண்பட்டு வலசாரிக்கு அவர்கள் மறைமுக ஆதரவு தந்துள்ளார்கள். அரசியல் பொருளியல் வலசாரி இன்று உண்மையான தேசநலனை மறந்து அல்லது புறக்கணித்து, ஒரு சில மாகாணங்களின் அல்லது வகுப்புக்களின் குழு நலனையே மாநில ஆட்சி நலனாகக் கொண்டு, மற்ற மாகாணங்கள் குழுக்கள் ஆகியவற்றைக் குறுகிய நலங்கள் என எதிர்க்கின்றது. அதுபோலவே, மொழி சமூக வலசாரி என்பது, அவற்றின் ஆட்சியைக் கைக்கொண்டிருக்கும் ஒரு சிறு குழு நலனின் குறுகிய தன்னலமேயாகும். பேரவைத் தலைவர்களில் இக்குறுகிய தன்னலங்களை உணர்ந்து வழிகாட்டத்தக்கவர் பலர் உண்டு என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர்கள் கருத்துக்கள் கட்சிக் கட்டுப்பாட்டுக்குள் அடைபட்டு, வளரமுடியாதவையாகி விடுகின்றன. அவை கட்சிக் கருத்துக்களாகக் கருதப்படாமல், கட்சி கடந்து பரவ வேண்டுமானால், கொள்கையடிப்படையான கட்சி கடந்த புது ஒற்றுமை வளர வேண்டும். அடிப்படைப் பிரச்சினை: நேருவின் விளக்கம் சாதி வேறுபாடு பற்றிப் பண்டித நேருவின் விளக்கம் இவ்வகையில் மாநிலத் தேசிய வாழ்வுக்கு ஒரு வழிகாட்டியும் எச்சரிக்கையுமாகும்: “இந்தியா தன் கருத்திலும் சமூகப் பழக்க வழக்கங்களிலும் உள்ள குறுகிய வேற்றுமை மனப்பான்மைகளை அகற்ற வேண்டும். அவை இந்தியாவுக்கு ஒரு சிறையாகி, அதன் வளர்ச்சியைக் குறுக்கித் தடைப் படுத்துகின்றன. சாதியுயர்வு மனப்பான்மை இந்திய சமூகத்தில் எண்ணற்ற தடைச்சுவர்களை எழுப்பியுள்ளது. இது சமூக வாழ்வின் செயற்களத்தைக் குறுக்குகிறது. வைதிக இந்துக்களின் நாள் முறைச் சமய வாழ்வில் இது சமயத்தையும் போலியாக்கிவிட்டது. அதில் இன்று ஆன்மிகத் தன்மை எதற்கும் இடமில்லை. ஏனெனில், அதன் கவனமுழுவதும், ‘என்ன உண்பது? என்ன உண்ணக்கூடாது? யாருடன் இருந்து உண்ணலாகும்? யாருடன் நெருங்காமல் விலக வேண்டும்?” என்பதிலேயே சென்று விடுகிறது. அடுப்பங்கரையில் தொடங்கிய இவ்வேற்றுமை, அங்காடி வாழ்விலும் அரசியல் வாழ்விலும் தொடர்ந்து பரவிவிடுகிறது. “இந்துக்களின் ஒற்றுமைக் குறைவுக்குச் சாதி ஒரு சின்னம். சிலர் கூறுகின்றனர். ‘சாதியின் அடிப்படைப் பண்புகள் இருக்கட்டும். அதன் பிற்காலத் தீங்குகளையும் விளைவுகளையும் மட்டும் அகற்றிவிடலாம்’ என்று. சிலர் அதன் பிறப்படிப் படையை மாற்றிப் பண்புப்படையாக்கலாம் என்று பேசுகின்றனர். இவையனைத்தும் கவைக்குதவாத பேச்சுக்கள்; மக்கள் மனத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் மாறாட்ட முறைகள்! சென்ற காலத்திற் கூடச் சாதி செய்திருக்கும் அழிவு பெரிது! அது மக்களிடமிருந்து மக்களைப் பிரித்து வைத்ததுடன் நிற்கவில்லை. அது மக்கள் வாழ்விலிருந்து அறிவுடையவர் ஆராய்ச்சியறிவைப் பிரித்து வைத்தது; தொழிலாளர் நலங்களிலிருந்து அறிவுடையார் அறிவைப் பிரித்து வைத்திருக்கிறது. “இவ்வகையில் நம் அடிப்படைக் குறிக்கோளை மாற வேண்டும். ஏனெனில் சாதி முறைமையும் சாதிமனப்பான்மையும் இக்கால நாகரிகப் பண்புக்கு நேர் எதிரானவை; குடியாட்சிப் பண்புக்கும் மாறானவை.” விடுதலை பெறும்வரை போர்க்குரலும், கட்சிப் பிரிவுகளும், ‘விடுதலை வேண்டுமா, அயலாட்சி வேண்டுமா?’ என்ற அடிப்படையிலேயே இருந்திருக்க முடியும். இனி இந்திய வாழ்வின் வளர்ச்சிக்கும் இது போன்ற தெளிவான அடிப்படையுடைய புதிய போர்க்குரல்கள் வேண்டும். ‘சாதி வேண்டுமா, வேண்டாவா?’ என்பது இந்தியாவின் இன்றைய அடிப்படைப் பிரச்சினையாக வேண்டும். ‘வேண்டும்’, என்று உள்ளத்தில் நினைப்பவர் பலர் இருக்கக்கூடும். ஆனால், அவர்கள் வேண்டும் என்று கூறிப் போராடுவதே நேர்மையானது. வேண்டும் என்று தன்னலம் காரணமாகவோ, அறியாமை காரணமாகவோ அல்லது கொள்கையடிப்படையாகவோ எண்ணிக்கொண்டு மெய்ப்புக்கு ‘வேண்டா’ என்று கூறி, அது தானாகப் போய்விடும் என்று மழுப்பும் போலிப் பொய்ம்மைக்கு மாநிலம் இடந்தரக்கூடாது ‘இது இன்றைய இந்தியாவின் பிரச்சினை மட்டுமன்று; சென்ற இரண்டாயிர ஆண்டுகளாக இந்தியாவை அலைக்கழித்து வரும் பிரச்சினை’, என்பதை நாட்டுப் பற்றாளரும் வரலாற்று மாணவரும் மறந்து விடக்கூடாது! சாதி நாட்டம் கொண்டவர், நேரடி எதிர்ப்பைவிட மறைமுக எதிர்ப்பிலேயே நம்பிக்கை கொண்டவர்களாயிருந்து வந்திருக்கின்றனர். அவர்கள் பல நூற்றாண்டுகளாகச் சமயம், மொழி, ஒழுக்கமுறை ஆகியவற்றில் சாதி முறைக்கு ஆதரவான அடிப்படைக் குறிக்கோள்களைப் புகுத்தி வந்துள்ளார்கள். மொழித்துறையில் சம்ஸ்கிருதம் அல்லது வடமொழியின் நேரடி ஆதிக்கம் ஒரு புறமும், தாய்மொழியிலும் தாய்மொழி யிலக்கியத்திலும் வடமொழிச் சொற்கள், கருத்துக்கள் ஆகியவற்றைப் புகுத்துவதன் மூலம் ஏற்படும் மறைமுக ஆதிக்கம் மற்றொரு புறமும் இப்பிற்போக்கு மனப்பான்மையை ஒரு பிற்போக்குத் தேசியமாக வளர்க்க உதவுகின்றன. சுமிருதிகளின் சாதிக் கொள்கை, ‘ஒரு குலத்துக்கு ஒரு நீதி மனப்பான்மை’ ஆகியவைகள், புராணக்கதை காவியங்கள் வாயிலாக முதலில் வடமொழியில் பரப்பப்பட்டு, வடமொழிப் பண்ணையிலிருந்து தாய்மொழி இலக்கியப் பண்ணையில் எடுத்து நடப்படுகின்றன. இது ஒரே கல்லில் மக்கள் மீது மொழியடிமைத்தனம், சாதியடிமைத்தனம், மத அடிமைத்தனம் ஆகிய மூன்றையும் புகுத்திவிடுகிறது. பலர் இவற்றையே இந்தியாவின் மூலப்பழமை என்று தவறாக எண்ணுவதால், இந்திய நாகரிகத்தின் பெருமை, இந்திய தேசியத்தின் பெருமை ஆகியவை பற்றியே தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு விடுகின்றன. பழைய பேரவையும் அரசியலமைப்பு மன்றமும் அக்காலச் சூழ்நிலை கடந்து கனவு கண்டது போல, விடுதலை இந்தியாவின் பேரவையும், மற்ற இக்கால அரசியற்கட்சிகளும், பண்பாட்டு இயக்கத் தலைவர்களும், தம்முள் போட்டியிட்டும், அதே சமயம் ஒரே குறிக்கோள், ஒரே மக்கட்பற்று ஆகியவற்றில் இணைந்து ஒருமுகப்பட்டும், புதிய இந்தியாவுக்கு வழி காட்டுவார்களாக! அப்பாத்துரையம் - 12 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) வரலாறு  இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 12 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 20+300 = 320 விலை : 400/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 320  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் முகவுரை ... 3 1. நம் குறிக்கோள் ... 5 2. புகழ் மரபு ... 27 3. அயலாட்சியும் அடிமைத்தளைகளும் ... 50 4. முன்னணி முரசம் மாநிலத்தின் சேமப் பண்ணை ... 64 5. விடுதலைப் புயல் ... 84 6. பேரவையின் பிறப்பு ... 106 7. இளமைக் குரல் ... 125 8. புயல் எதிர் புயல் ... 140 9. காந்தி ஊழி ... 162 10. விடுதலைக் கோபுரவாயில் ... 203 11. வானவில் ... 253