அப்பாத்துரையம் - 5 (110 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு) வரலாறு சங்க காலப் புலவர்கள் தளவாய் அரியநாத முதலியார் கிருட்டிண தேவராயர் ஓவியக் கலைஞன் இரவிவர்மா ஆசிரியர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு அப்பாத்துரையம் - 5 ஆசிரியர் முதுமுனைவர். இரா இளங்குமரனார் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 16+304 = 320 விலை : 400/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 430  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  நுழைவுரை தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம். தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும். தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன. இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும். தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள் கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலையிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர் திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன், திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர். இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய `கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும் `சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி. நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். “ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை யெல்லாம் தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன்.” - பாவேந்தர் கோ. இளவழகன் தொகுப்புரை மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்! இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின. “அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார். சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன. - தனித்தமிழ் இயக்கத் தோற்றம் - நீதிக் கட்சி தொடக்கம் - நாட்டு விடுதலை உணர்ச்சி - தமிழின உரிமை எழுச்சி - பகுத்தறிவு விழிப்புணர்ச்சி - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் - புதிய கல்வி முறைப் பயிற்சி - புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம் இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன. “தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது! அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்! பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, - உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல். - தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல். - தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல். - தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல். - திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல். - நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல். இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது. பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது. உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன. 1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு 2. வரலாறு 3. ஆய்வுகள் 4. மொழிபெயர்ப்பு 5. இளையோர் கதைகள் 6. பொது நிலை பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும். இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின் உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன. கல்பனா சேக்கிழார் நூலாசிரியர் விவரம் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இயற்பெயர் : நல்ல சிவம் பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989 பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி) உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர் மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி பள்ளிக் கல்வி : நாகர்கோவில் கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம் : இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி `விசாரத்’, எல்.டி. கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி) நூல்கள் : 120 (ஆங்கிலம், 5) இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை. பணி : - 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர். - 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர். - பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு. - 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி - 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர். - 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் அறிஞர் தொடர்பு: - தொடக்கத்தில் காந்திய சிந்தனை. - 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு விருதுகள்: - மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது, - 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் `சான்றோர் பட்டம்’, `தமிழன்பர்’ பட்டம். - 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் `கலைமாமணி’. - 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய `திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம். - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய `பேரவைச் செம்மல்’ விருது. - 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர். - 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார். - இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது `தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது. பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்: - அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005. - பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007. பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். தொகுப்பாசிரியர் விவரம் முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். நூலாக்கத்திற்கு உதவியோர் தொகுப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திரு ஆனந்தன் திருமதி செல்வி திருமதி வ. மலர் திருமதி சு. கீதா திருமிகு ஜா. செயசீலி நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: பெரும்புலவர் பனசை அருணா, திரு. க. கருப்பையா, புலவர் மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் செல்வி பு. கலைச்செல்வி முனைவர் அரு. அபிராமி முனைவர் அ. கோகிலா முனைவர் மா. வசந்தகுமாரி முனைவர் ஜா. கிரிசா திருமதி சுபா இராணி திரு. இளங்கோவன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் சங்க காலப் புலவர்கள் 1. சங்க காலத் தமிழகம் ... 3 2. பிசிர் ஆந்தையார் ... 4 3. கோவூர் கிழார் ... 27 4. ஒளவையார் ... 39 5. பெருந்தலைச் சாத்தனார் ... 55 தளவாய் அரியதாந முதலியார் 1. பிறப்பும் இளமையும் ... 70 2. விஜயநகரப் பேரரசு ... 80 3. விஜயநகரத்தில் அரியநாயகர் ... 86 4. அரண்மனைச் சேவகம் ... 92 5. தகுதிக்கு ஏற்ற பதவிகள் ... 97 6. தமிழ் நாட்டில் இராயர் ஆட்சி ... 104 7. மதுரையில் நாயக்கர் ஆட்சி ... 115 8. பாளைய வகுப்பு ... 123 9. அன்று கொடுத்த ஓலை ... 129 10. பேரரசின் தளவாய் ... 134 11. இறுதி நாட்கள் ... 143 12. மதுரை ஆயிரங்கால் மண்டபம் ... 150 கிருட்டிண தேவராயர் ... 156 1. விஜயநகர அரசு ... 158 2. தமிழகத்தில் விஜயநகர அரசு ... 167 3. விஜயநகரம் ... 172 4. விஜயநகர அரசர்கள் ... 179 5 கிருஷ்ணதேவராயர் போர்ச் செயல்கள் ... 186 6. கிருஷ்ணதேவ ராயர் ... 196 7. புவி அரசரும் கவி அரசரும் ... 205 8. கலை வளர்ச்சி ... 218 9. அரசியல் ... 227 ஓவியக் கலைஞர் இரவிவர்மா 1. காவியக்கலைஞன் போற்றிய ஓவியக்கலைஞன் ... 243 2. நாடும் மரபும் ... 252 3. பயிற்சிப் பருவம் ... 264 4. புகழ் ஏணி ... 272 5. மக்கட் கலைஞர் ... 281 6. கலைஞனும் கலைப்பண்பும் ... 288 7. கலைஞன் படைப்புக்கள் ... 299 சங்க காலப் புலவர்கள் முதற் பதிப்பு - 1945 இந்நூல் 2003 இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17 வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது 1. சங்க காலத் தமிழகம் தமிழகம் தென்இந்தியாவில் வேங்கட மலைக்குத் தென்பாற்பட்ட நிலப்பகுதி முழுவதும், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தமிழ் மொழி பேசப்பெற்றதாதலின், ‘தமிழகம்’ எனப் பெயர் பெற்றது. இத்தமிழகம் அக்காலத்தில் இந்தியாவின் பிற பகுதிகளைவிடச் சிறந்த நாகரிக நிலையில் இருந்தது என்பது, இந்நாட்டுடன் வாணிகம் செய்து அயல்நாட்டார் எழுதி வைத்துள்ள குறிப்பு களாலும் இந்திய வரலாற்றாலும் தமிழ் நூல்களாலும் அறியக் கிடக்கிறது. இதற்குச் சிறந்த காரணம், இத்தமிழகம் இந்தியாவின் தென் கோடியில் இருப்பதேயாகும். வட இந்தியாவில் அலெக்ஸாண்டர் காலமுதல் ஓயாத படையெடுப்புகள் நடந்த வண்ணம் இருந்தன. அவற்றால் அங்குப் பற்பல புதிய மக்கள் வந்து குடியேறி நாடாண்டனர்; அவர்களிடையே பல திறப்பட்ட நாகரிகங்கள் பரவின; ஆதலால், ஓர் ஒழுங்குக்கு உட்பட்ட நாகரிக நிலை வட இந்தியா முழுவதிலும் பரவி இருக்கக் கூடவில்லை. இப்படையெடுப்புகளால் வட இந்திய மொழிகளும் பற்பல மாறுதல்களை அடைந்தன. இத்தகைய படையெடுப்புகளும், புதிய பற்பல நாட்டவர் கூட்டுறவும், கலந்துரை வாழ்க்கையும் தமிழகத்தில் ஏற்படவில்லை. அதனால் தமிழகம் ஒரு தனிப்பட்ட நாகரிகப் போக்கிலேயே பல நூற்றாண்டுகளைக் கழித்தது. தமிழகப் பிரிவுகள் தமிழகம் தொண்டை நாடு, நடு நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, சேரநாடு, கொங்குநாடு என ஆறு பிரிவுகளாக இருந்தது. எனினும், சேர, சோழ பாண்டிய நாடுகளே சிறப்புப் பெற்று வந்தன. ஏனைய மூன்றையும் ஆண்டவர் பலராவர். அவர் சேரர், சோழர், பாண்டியர் என்பவருள் ஒருவர்க்குக் கட்டுப்பட்டும் கட்டுப்படாமலும் வாழ்ந்து வந்தனர். தொண்டை நாடு இஃது இக்காலத்துச் செங்கற்பட்டு, வட ஆர்க்காடு ஜில்லாக்களையும், தென்ஆர்க்காடு - சித்தூர் ஜில்லாக்களின் சில பகுதிகளையும் கொண்டதாகும். இந்நாடு மலைகளும் காடுகளும் நிறைந்த நிலப்பரப்புடையது; பாலாறு முதலிய சில யாறுகளே பாயப் பெற்றது. இதன் வடபகுதியைத் திரையன் என்பவன் ஆண்டு வந்தான். காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு இளந்திரையன் என்பவன் அரசாண்டான். தொண்டை நாடு காடுகள் செறிந்திருந்ததால், அங்குக் குறும்பர் கால்நடைகளை மேய்த்துக்கொண்டு வாழ்ந்து வந்தனர். இங்குக் காஞ்சியைப் போன்ற பெரிய நகரங்கள் பல இல்லை. இந்நாட்டிற்குக் கடன்மல்லை, சோபட்டினம் (மரக்காணம்), பொதுசா1 என்பன துறைமுகப் பட்டினங்களாக இருந்தன. மல்லை சிறந்த துறைமுக நகரமாக இருந்தது.அங்கு மாட மாளிகைகள் இருந்தன; கப்பல்கள் வந்து தங்குவதற்கேற்ற துறைமுகம் செவ்வையாக அமைந்திருந்தது. மேற்கு நாடுகளிலிருந்து குதிரைகள் வந்து இறங்கின. இத்தொண்டை நாடு சங்க கால முதலே இருபத்து நான்கு கோட்டங்களாகப் பகுக்கப்பட்டிருந்தது. இருபத்து நான்கு கோட்டங்கள் 1. புழல் கோட்டம் 2. ஈக்காட்டுக் கோட்டம் 3. மணவிற் கோட்டம் 4. செங்காட்டுக் கோட்டம் 5. பையூர்க் கோட்டம் 6. எயில் கோட்டம் 7. தாமல் கோட்டம் 8. ஊற்றுக்காட்டுக் கோட்டம் 9. களத்தூர்க் கோட்டம் 10. செம்பூர்க் கோட்டம் 11. ஆம்பூர்க் கோட்டம் 12. வெண்குன்றக் கோட்டம் 13. பல்குன்றக் கோட்டம் 14. இலங்காட்டுக் கோட்டம் 15. கலியூர்க் கோட்டம் 16. செங்கரைக் கோட்டம் 17. படுவூர்க் கோட்டம் 18. கடிகூர்க் கோட்டம் 19. செந்திருக்கைக் கோட்டம் 20. குன்றவட்டானக் கோட்டம் 21. வேங்கடக் கோட்டம் 22. வேலூர்க் கோட்டம் 23. சேத்தூர்க் கோட்டம் 24. புலியூர்க் கோட்டம். சோழர் ஆட்சி கி.பி. முதல் நூற்றாண்டில் தொண்டை நாட்டைக் கரிகாற் சோழன் கைப்பற்றினான் என்று நூல்கள் கூறுகின்றன. மேலும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொண்டை நாடு சோழர் ஆட்சியில் இருந்தது என்பதை மணிமேகலை என்னும் நூலால் அறிகிறோம். அப்பொழுது அரசனாக இருந்தவன் சோழன் நெடுமுடிக்கிள்ளி என்பவன். அவன் தம்பியான இளங்கிள்ளி என்பவன் தொண்டை நாட்டைச் சோழர் பிரதிநிதியாக இருந்து அரசாண்டான். தொண்டை நாடு முதலில் தனித்திருந்தது; பின்னர்ச் சோழர் ஆட்சிக்கு உட் பட்டது என்பது தெரிகிறது. நடுநாடு இது பாலாற்றுக்கும் சிதம்பரத்திற்கும் வடக்கே பாயும் வெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட நாடாகும். இதனில் கெடிலம், தென்பெண்ணையாறுகள் பாய்கின்றன. இதனைச் சிறப்புற ஆண்டவர் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்ட மலையமான்கள் ஆவர். சோழ நாடு சோழ நாடு என்பது சிதம்பரத்திற்கு வடக்கே உள்ள வெள்ளாறு முதல் பாண்டிய நாட்டிற்கு வடக்கேயுள்ள வெள்ளாறு வரை உள்ள நிலப்பரப்பாகும். இந்நாடு ஏறத்தாழச் சமவெளியாக அமைந் திருப்பதாகும். இரண்டொரு குன்றுகளைத் தவிர இந்நாட்டில் மலைகள் இல்லை; காடுகள் இல்லை. இதன்கண் “பொய்யாதளிக்கும் பொன்னி” என்று புலவரால் ஏத்தெடுக்கப் பெற்ற காவிரியாறு தன் துணையாறுகளுடனும் கிளையாறுகளுடனும் வற்றாது பாய்ந்து வருகின்றது. இந்தப் பல ஆறுகளால் சோழ நாடு மிக்க வளம் பெற்று, ‘சோழ வளநாடு சோறுடைத்து’ என்று புகழ் பெறுவதாயிற்று. நகரங்கள் சோணாட்டின் தலைநகரங்களுள் பழமையானது உறையூர். இது திருச்சிராப்பள்ளி நகரத்தைச் சேர்ந்த சிறுபகுதியாக இன்று இருக்கின்றது.இத்துடன் காவிரிப்பூம்பட்டினம் என்பதும் தலைநகரமாக இருந்தது. பின்னது சோணாட்டின் சிறந்த துறைமுக நகரமாகவும் விளங்கியதாகும். கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் இத் துறைமுக நகரம் மிக்க சிறப்புற்று விளங்கியது என்பதைச் சிலப்பதிகாரம், பட்டினப்பாலை என்னும் பழைய நூல்களால் அறியலாம். இதற்கு அடுத்துத் துறைமுகப் பட்டினமாக இருந்தது நாகப்பட்டினம் ஆகும். சோழ மன்னர் இந்த வளநாட்டைத் தொன்று தொட்டு ஆண்டு வந்தவர் சோழர் எனப்பட்டனர். அவர்கள் வளமிக்க நாட்டை ஆண்டதால் ‘வளவர்’ எனப் பெயர் பெற்றனர்; நிலத்தைக் கிள்ளி (உழுது) பயிரிட்டமையால், ‘கிள்ளி’ எனப்பட்டனர் போலும்! இவர்களுட் பலருடைய பெயர் பழைய தமிழ் நூல்களிற் காண்கின்றன. அவருள் பலர் கவிபாடும் ஆற்றல் பெற்ற பெரும்புலவராக இருந்தனர்; வீரம் செறிந்த வேந்தர் பலராவர். அவருட் சிறந்தவன் கரிகால் வளவன். இவன், சேர - பாண்டி யரையும் சிற்றரசர் பலரையும் வென்று சிறந்தவன்; முன் சொன்னவாறு தொண்டை நாட்டை வென்று சோழப் பெருநாட்டை விரிவாக்கியவன்; இவனது காலத்திற் சோழப் பேரரசு வடபெண்ணையாறுவரை பரவி இருந்தது என்னலாம். இச்சோழ வேந்தர்க்குப் ‘புலிக்கொடி’ உரியதாக இருந்தது. இவர்கள் ஆத்தி மாலையை அடையாள மாலையாகக் கொண்டிருந்தனர். இவர்களிடம் சிறந்த யானைப்படை, குதிரைப் படை, காலாட்படை, கப்பற்படை என்பன இருந்தன. சோழ வேந்தர் வளவர் ஆதலின், கொடையிற் சிறந்து விளங்கினர்; புலவர்களைப் புரந்து வாழ்ந்தனர். பாண்டிய நாடு இது சோணாட்டின் தென் எல்லையான வெள்ளாற்றுக்கும் கன்னியாகுமரி முனைக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியாகும். இதன்கண் இன்றைய மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்கள் அடங்கும். இந்நாடு குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐவகை நிலப்பண்புகளையும் தன் அகத்தே பெற்றது. இதனில், ‘வையை என்னும் பொய்யாக் குலக்கொடி’ என்று புலவர் பாராட்டுதற்கு உரிய வையை யாறும், தாமிரபரணி என்னும் தண்புனல் கொண்டுள்ள பெரியாறும் பாய்ந்து நாட்டை வளப்படுத்துகின்றன. இந்நாட்டில் மலை நாட்டுப் பண்டங்களும் காட்டு நிலப் பண்டங்களும் மருதநிலப் பண்டங்களும் கிடைக்கின்றன. நகரங்கள் இந்நாட்டின் தலைநகரம் மதுரை. இதன் பழைய பெயர் ஆலவாய் என்பது. மதுரையிற்றான் அக்காலத்தில் புகழ்பெற்ற தமிழ்ச் சங்கம் இருந்தது. கொற்கை, காயல், தொண்டி என்பன அக்காலத்துத் துறைமுக நகரங்கள் ஆகும். கொற்கை பெரிய துறைமுகத்தை உடைய நகரமாகும். அது முத்துக்குப் பெயர் பெற்றது. முத்துகள் ரோம ராஜ்யத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பாண்டிய மன்னர் பாண்டிய நாட்டைப் பண்டு தொட்டே அரசாண்டு வந்தவர் பாண்டியர் எனப்பட்டனர். அவர் செந்தமிழில் ஈடும் எடுப்பும் இல்லாத பற்றுடையவராக இருந்தனர்; பெரும் புலவராகவும் விளங்கினர். பாண்டி மாதேவியர் சிலரும் கவிபாடும் ஆற்றல் பெற்று வாழ்ந்தனர். பாண்டியர் தங்கள் கோநகரத்தில் தமிழ்ச்சங்கம் ஒன்றை வைத்து ஆதரித்து வந்தனர்; நாட்டில் இருந்த புலவர்கள் செய்த பாக்களையும் நூல்களையும் பாராட்டிப் பரிசில் ஈந்து களித்தனர். பாண்டியருள் மிகச் சிறந்தார் இருவர். ஒருவன் இளைஞனாக இருந்தபொழுதே தன்னை எதிர்த்த சோழனையும் சேரரையும் சிற்றரசர் ஐவரையும் ‘தலையாலங்கானம்’ என்ற இடத்தில் வென்று, ‘தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்’ என்று பெயர் பெற்றவன்; கவிபாடும் ஆற்றல் பெற்றவன். மற்றவன் ஆரியப் படையை வென்று, ‘ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்’ எனப்பட்டவன். இவனும் கவிபாடுதலில் வல்லவன். கோவலனைக் கொல்வித்தவன் இவனே ஆவான். சங்க காலம் பாண்டிய மன்னரால் பாதுகாத்து வளர்க்கப்பெற்ற தமிழ்ச் சங்கத்தின் இறுதிக் காலம் ஏறத்தாழக் கி.பி. 400 என்னலாம் என்பது ஆராய்ச்சியாளர் கொள்கை.இதுவே சங்கத்தின் இறுதிக் காலமாகும். அதன் தோற்றம் நாம் கூறக்கூடும் நிலையில் இல்லை. அச்சங்கத்தில் செய்யப்பட்ட நூல்கள் ‘சங்க நூல்கள்’ எனப் பெயர் பெறும். சங்க நூல்கள் இவை - தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் முதலியன. இவற்றுள் தொல்காப்பியம் சிறந்த பண்டைய இலக்கண நூல். ஏனைய ஒன்பதும் புலவர் பலர் - பல்வேறு காலங்களில் - பல்வேறு அரசரையும் சிற்றரசரையும் வள்ளல்களையும் பற்றிப் பாடிய பாக்களின் தொகுதிகளாகும். சிலப்பதிகாரம் என்பது கோவலன் வரலாறு கூறும் காவியம். அதனைச் செய்தவர் சேர இளவரசரான இளங்கோவடிகள் என்பவர். மணிமேகலை என்பது கோவலன் மகளான மணிமேகலையைப் பற்றிய காவியம். அதனைப் பாடியவர் சீத்தலைச் சாத்தனார். திருக்குறள் ஒப்புயர்வற்ற நீதிநூல். அதனைச் செய்த பெரும்புலவர் திருவள்ளுவர் என்பவர். சேர நாடு இன்றைய திருவாங்கூர்2 கொச்சி நாடுகளும் மலையாளம் ஜில்லாவும் சேர்ந்த நிலப்பகுதியே பழைய சேர நாடு என்பது. இது முழுவதும் மலைநாடு; அதனால் ‘மலையாளம்’ எனப் பெயர் பெறும். இங்கு வானளாவிய மலைகளும் அம்மலைகளில் உள்ள பெருங்காடுகளும் காணத்தக்க காட்சிப் பொருள்கள் ஆகும். இங்குச் சந்தனம், அகில்,தேக்கு முதலிய உயரிய மரவகைகள் ஏராளமாகப் பயிராகின்றன. இவையும் யானைத் தந்தம், மிளகு முதலியனவும் மிகுதியாக அயல்நாடுகட்கு ஏற்றுமதியாயின. நகரங்கள் சேரநாட்டுத் தலைநகரம் வஞ்சி மாநகரம் என்பது. அஃது இப்பொழுது கொச்சிக்கு வடக்கே எட்டுக்கல் தொலைவில் பாழ்பட்ட சிற்றூராகக் காண்கிறது. அது சங்க காலத்தில் பெருஞ் சிறப்புற்ற நகரமாக விளங்கியது. முசிறி, தொண்டி என்பன சேரநாட்டுத்துறைமுக நகரங்கள் ஆகும். சேரநாடு கி.மு. 1000 முதலே கடல் வாணிகத்திற் சிறந்திருந்தது. சேர வேந்தர் மலைநாட்டைப் பன்னெடுங் காலமாக ஆண்டு வந்தவர் சேரர் எனப்பட்டனர். அவர் உயர்ந்த வானளாவிய மலைகளைப் பெற்றிருந்த காரணத்தால் ‘வானவர்’ எனப் பெயர் பெற்றனர். அவருள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், செங்குட்டுவன் என்போர் புகழ்மிக்க பேரரசர் ஆவர். செங்குட்டுவன் தம்பியாரே, சிலப்பதிகாரம் செய்த இளங்கோவடிகள் என்பவர். செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலைநாட்டுக் கோவில் எடுக்க வடநாடு சென்ற இமயமலையிலிருந்து கல் கொணர்ந்தவன்; கோசல நாட்டில் தன்னை எதிர்த்தாரை வென்று மீண்ட வீரன். இவன் வரலாற்றைச் சிலப்பதிகாரத்திற் காணலாம். சேர மன்னர் புலவர் பலரைப் போற்றி ஆதரித்து வந்தனர். ‘பதிற்றுப்பத்து’ என்பது சேர அரசர் பதின்மரைப் பற்றிப் புலவர் பதின்மரால் பாடப்பட்டதாகும். அந்நூலிலிருந்து அவர்தம் தமிழ்ப் பற்று, வீரம், கொடைத்திறம், அரசியல் நேர்மை முதலியவற்றை நன்கறியலாம். கொங்கு நாடு இது சேலம், கோயமுத்தூர், நீலகிரி ஜில்லாக்களைக் கொண்ட பகுதியாகும். இது பெரும்பாலும் மலை நாடாகும். “இந்நாட்டின் மலைகளில் கொங்கு (தேன்) அடைகள் மிக்கிருந்தது பற்றி இந்நாடு ‘கொங்குநாடு’ (தேன் நாடு) எனப் பெயர் பெற்றது” என்று அறிஞர் கூறுவர். சங்க நூல்களில் புகழ்ந்து பாராட்டப்பெற்ற தகடூர் நாடு, கொல்லிமலை நாடு முதலியன இந்நாட்டிற்றான் இருக்கின்றன. பழைய ‘தகடூர்’ என்பது இக்காலத்தில் ‘தர்மபுரி’ எனப்படுகிறது. அதற்கு ஏறத்தாழ ஐந்து கல் தொலைவில் அதியமான் கோட்டை இருந்து அழிந்தமைக்கு உரிய அடையாளங்கள் இன்றும் காணலாம். வல்வில் ஒரி கொல்லிமலைப் பகுதியை ஆண்டு வந்தவன். அவனது உருவச்சிலை கொல்லிமலைக்கு எட்டுக்கல் தொலைவில் உள்ள இராசிபுரம் விஸ்வநாதர் கோவிலில் காணலாம். கொங்கு நாடு சேர, சோழ, பாண்டிய, தொண்டை நாடுகட்கு அண்மையில் இருப்பதால், இதனைக் கைப்பற்ற ஒவ்வொருவரும் முனைந்து வந்தனர்.இந்த முனைப்பினால் அதியமானுக்கும் அயல்நாட்டு வேந்தர்க்கும் ஓயாத போர்கள் நடந்த வண்ணம் இருந்தன. இப்போராட்டம் சங்க கால முதல் இராஜராஜ சோழன் போன்ற பிற்காலச் சோழர் - பாண்டியர் காலம்வரை நடைபெற்று வந்தது. குறுநில மன்னர் இங்குக் கூறப்பெற்ற சேர, சோழ, பாண்டியர் என்பவர் முடியுடை மூவேந்தர் என்றும், ‘நெடுநில மன்னர்’ என்றும் கூறப் பெறுவர். மற்றையோர், ‘குறுநில மன்னர்’ (சிற்றரசர்) எனப்படுவர். ஒவ்வொரு பேரரசன் நாட்டிலும் சுயாட்சி பெற்ற குறுநில மன்னர் இருந்து வந்தனர். ஒரு சிலர் தம் பேரரசன் வேறொரு பேரரசனைத் தாக்குகையில்,தம் பேரரசன் சார்பில் நின்று போர்புரிவர். தனிப்பட்ட சிற்றரசர் இருவர், ஒருவருக் கொருவர் போரிடலும் உண்டு. இக்குறுநில மன்னர் கொடையிற் சிறந்த வள்ளல்களாக விளங்கினமை கவனிக்கத்தக்கது. இவர்கள் கொடுத்தலில் வெறி கொண்டவர்; அளவறிந்து கொடுத்திலர். இவ்வாறு இவர், தம்மை நாடிவந்த பாணர், விறலியர், பொருநர், புலவர் முதலியோர்க்கு அவரவர் தகுதிக்கேற்ப அளித்து இயல் - இசை - நாடகம் என்ற முத்தமிழையும் முழுமனத்துடன் வளர்த்து வந்தனர். சங்க கால வள்ளல்கள் நெடுநில மன்னரும் குறுநில மன்னரும் தம் தாய்மொழியைப் பேணும் முயற்சியில் தளர்ந்தவர் இல்லை. எனினும், வரையாது அளித்தலில் முடிமன்னரைவிடச் சிற்றரசரே சிறந்து விளங்கினர். அச்சிற்றரசர் மேற்கூறப்பெற்ற சங்க காலத்தில் பலராக விளங்கினர். அவருள் பாரி, காரி, ஓரி, அதிகன், பேகன், ஆய், நள்ளி, குமணன் என்பவர் சிறந்தோர் ஆவர். பாரி என்பவன் பாண்டிய நாட்டில் பறம்புமலை3யைத் தலைநகராகக் கொண்ட பறம்பு நாட்டை ஆண்டவன். அவன் நாடு முந்நூறு ஊர்களைக் கொண்டது. அவனது அவைப் புலவர் கபிலர் என்பவர் காரி என்பவன் தென் ஆர்க்காடு ஜில்லாவில் உள்ள திருக்கோவிலூரைத் தலைநகராகக் கொண்ட மலை நாட்டை ஆண்டு வந்தவன். அதனால் அவன் ‘மலையமான்’ எனப்பட்டான் அவன் சிறந்த போர் வீரன்; கொடை வள்ளல். ஓரி என்பவன் சேலம் ஜில்லாவில் கொல்லிமலைப் பகுதியை ஆண்டவன். அவன் சிறந்த வள்ளல் சிறந்த வில்லாளி; அதனால் ‘வல்-வில்-ஓரி’ எனப் பெயர் பெற்றான். அதிகன் என்பவன் முற் சொன்ன சேலம் ஜில்லாவில் தகடூர் நாட்டை ஆண்டு வந்தவன்; அஞ்சாத பெருவீரன்; வரையாது வழங்குவதிலும் சிறந்தவன். அவன் ‘அதியமான்’ என்றும் கூறப்பட்டான். அவன் வரலாற்றை ஒளவையார் பாடல்களால் அறியலாம். பேகன் என்பவன் மதுரை ஜில்லாவில் பழநிமலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். பழநியில் இன்றும் ஆய்க்குடி (ஆவிக்குடி) என்னும் சிற்றூர் இருக்கின்றது. அவனைப் பற்றிய பல பாடல்கள் சங்க நுல்களிற் காணலாம். அவனது சிறந்த நண்பராகவும் அவைப் புலவராகவும் இருந்து அவனை மகிழ்வித்தவர் பரணர் என்னலாம். ஆய் என்பவன் திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள பொதிகை மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். அவன் மிகச் சிறந்த கொடைவள்ளல். அவனைப் பலபடியாகப் புகழ்ந்து பாடியவர் உறையூர் - ஏணிச்சேரி முடமோசியார் என்பவர். நள்ளி என்பவன் தோட்டிமலை நாட்டை ஆண்ட சிற்றரசன். அந்நாடு பாண்டிய நாட்டை சேர்ந்தது. அவன் தன் பெயர் வெளிப்படுவதை விரும்பாது அறம் செய்யும் உளப் பான்மை உடையவன். அப்பெருமகனைப் பற்றி வன்பரணர் முதலிய புலவர் பலர் பாராட்டிப் பாடியுள்ளனர். குமணன் என்பவன் கோயமுத்தூர் ஜில்லா, உடுமலைப் பேட்டைத் தாலுகாவில் உள்ள ‘முதிரமலை’ நாட்டை ஆண்டு வந்தவன். அவன் தன் கொடைத் தன்மைக்காகத் தம்பியால் வெறுக்கப்பட்டுக் காடு சென்றவன் எனின், அவனது கொடைச் சிறப்பை என்னென்பது! இங்ஙனம் தன்மை அண்டி ‘இல்லை’ என்றோர்க்கு ‘இல்லை’ என்று உரையா இதயம்படைத்த இப்பெரு மக்கள் பலராற்றான் சங்க காலத் தமிழ் செழிப்புற்று வளர்ந்தது. இவர் புலவரது வறுமைப் பிணியைப் போக்கினர், அதனால் செழுமையுற்ற புலவர் செந்தமிழ்ப் பாக்களைப் பாடி இவர்களை மகிழ்வித்தனர். ஆதலால் நமது தாய்மொழி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ச்சிபெற்று வந்தது. புலவர்கள் இப்பொழுது கிடைத்துள்ள சங்க நூற்களைக் கொண்டு ஆராயின், சங்ககாலப் புலவர் ஏறத்தாழ நானூற்றுவர் என்னலாம். இப்பெரு மக்கள் பாடிய எல்லாப் பாக்களும் கிடைத்தில. அவை கிடைத்திருப்பின், நமது நாட்டு வரலாறும் தமிழ் மொழியின் மேம்பாடும் மிக நன்றாக உணர வழியுண்டாகி இருக்கும். இப்புலவர் பெருமக்கள் தமிழகம் முழுவதிலும் பரந்துபட்டுள்ள பல ஊர்களைச் சேர்ந்தவர்கள்; பல மரபினர்; பல தொழிலினர்; பல சமயத்தைச் சேர்ந்தவர்; பல்வேறு காலத்தவர். இவருள் பேரரசரைப் பாடினோர் சிலர்; சிற்றரசரைப் பாடினோர் பலர்; இருவகை அரசரையும் பிறரையும் பாடினவர் பலர். இப்புலவருள் ஆண்பாற் புலவரும் உளர்; பெண்பாற் புலவரும் உளர். தமிழ்நாட்டு எல்லா வகை மரபுகளையும் சேர்ந்தவர் புலவராக இருந்திருக்கின்றனர். வெண்ணிக் குயத்தியார், ஒளவையார் (பாணர் மரபு), பேய் மகள் இளஎயினி5, காவற்பெண்டு6 என்பவரும் கவிபாடும் ஆற்றல் பெற்று விளங்கினர் எனின், சங்க காலத் தமிழகக் கல்வி நிலையைத் தெளிவாக உணரலாம். அஃதாவது, அக்காலத்தில் எல்லா வகுப்பினரும் நன்றாகத் தமிழ்க் கல்வி பயின்றிருந்தனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகும். இங்ஙனம் சிறந்து விளங்கிய புலவர் பெருமக்கள் சிலருடைய வரலாறுகளை அடுத்து வரும் பகுதிகளிற் காணலாம். அடிக்குறிப்புகள் 1. இன்றைய புதுச்சேரிக்கு அண்மையில் அரிக்கமேட்டில் புதையுண்டிருக்கும் நகரம் பழைய ‘பொதுசா’வாக இருத்தல் கூடும். அங்கு ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. 2. இதன் பழைய பெயர் `திருவாழும் கோடு’ என்பது. அது திருவாங்கூர் என மருவி வழங்குகிறது. 3. இஃது இப்பொழுது பிரான்மலை எனப் பெயர் பெறும். 2. பிசிர் ஆந்தையார் 1. கல்வியும் மண வாழ்க்கையும் ‘பிசிர்’ என்னும் ஊர் பாண்டிய நாட்டுக் கடற்கரையை அடுத்த ஊர்களில் ஒன்று பிசிரூர் என்பது. ‘பிசிர்’ என்பது அலைத் துளிக்குப் பெயராகும். ‘பிசிரூர்’ என்பது ‘அலைத்துளிகள் தாக்கப்பெற்ற ஊர்’, அஃதாவது, ‘கடற்கரைக்கண் உள்ள ஊர்’ எனப் பொருள்படும். இப் ‘பிசிர் ஊர்’ என்ற பெயர், ‘பிசிர்’1 எனப் பிற்காலத்தில் குறைந்து வழங்கலாயிற்று. இம்மூதூர், இன்றுள்ள இராமநாதபுரம் ஜமீனில் கடற்கரைக்கு அண்மையில் உள்ள பிசுக்குடி என்னும் ஊராக இருத்தல் கூடும் என்று அறிஞர் கருதுகின்றனர். ஆந்தையார் இது புலவர் பெயராகும். பழைய நாட்களில் இத்தகைய பெயர்களே வழக்கில் இருந்தன. ‘ஆந்தை’ என்பது இயற்பெயர். ‘ஆர்’ என்பது உயர்வைக் குறிக்கும் விகுதியாகும். சங்க காலத்தில் இப்பெயருடைய புலவர் பலர் இருந்தனர் என்பதை - சிறைக்குடி ஆந்தையார், ஓதல் ஆந்தையார், அஞ்சில் ஆந்தையார் முதலிய பெயர்களைக் கொண்டு அறியலாம். ஆந்தையார் பலராகவே, அவர்களுக்குள் வேறுபாடு காட்ட, அவர்தம் ஊர்ப் பெயரை முன்னர்ச் சேர்த்து இங்ஙனம் வழங்கலாயினர். இம்முறைப்படி அமைந்ததே ‘பிசிர் ஆந்தையார்’ என்னும் பெயரும் ஆகும். அஃதாவது, “பிசிர் என்னும் ஊரைச் சேர்ந்த ஆந்தையார்” என்பது பொருளாகும். இளமையும் கல்வியும் பிசிராந்தையார் இன்ன மரபினர் என்பது தெரியவில்லை. சங்கத்துச் சான்றோருள் பலர் மரபு அறியக்கூடாத நிலையில் இருந்திருக்கின்றனர். அவர் இளமையில், அக்காலத்திற்கு ஏற்ற முறையில், தமிழ் இலக்கண இலக்கியங்களைத் தக்க ஆசிரியரிடம் கற்றார். அவர், “கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.” என்ற திருக்குறளின்படி, கல்வியறிவுடன் சிறந்த தெய்வ பக்தியும் உடையவராக விளங்கினார். ஆந்தையார் சிறந்த ஒழுக்கம் உடையவராகவும் திகழ்ந்தனர். ஆதலின், அறிவு - ஒழுக்கங்களிற் சிறந்த சான்றோர் அவரை மதித்து நடந்து வந்தனர். இல்லற வாழ்க்கை பிசிராந்தையாருடைய நல்ல இயல்புகட்கு ஏற்றவாறு அவரது இல்லத்து உறுப்பினர் காணப்பட்டனர். அவரது மனைவியார் நிறைந்த கல்வியும் சிறந்த ஒழுக்கமும் உடையவர்; ஆந்தையாரது நற்பேறே பிறப்பெடுத்து வந்தாற் போன்றவர்; கணவர் சொற்படி நடப்பவர்; தாம் ஈன்ற மக்கட்குக் கல்வியறிவு தாமே புகட்டி வந்தவர்; அவர்களை இளமைதொட்டே நல்வழியில் நடக்குமாறு செய்து வந்தவர். பிள்ளைகளும், “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்ற மறை மொழியை எண்ணிப் பெற்றோரைக் கண்கண்ட கடவுளராகக் கருதி வழிபட்டு வந்தனர். இங்ஙனம் இல்லத்து அரசியாகிய மனைவியும் மக்களும் சிறந்த ஒழுக்க முடையவராய்ப் புலவர் பெருமான் விருப்பம் போல் நடந்துவந்த காரணத்தால், புலவரது இல்லறம் நல்லறமாக நடந்து வந்தது. 2. பழகா நட்பு கோப்பெருஞ் சோழன் ஆந்தையார் பாண்டிய நாட்டில் பண்புடன் வாழ்ந்த காலத்தில், சோழ நன்னாட்டைக் கோப்பெருஞ் சோழன் என்ற அரசர் பெருமகன் ஆண்டு வந்தான். அவனது தலைநகரம் உறையூர். சோழவேந்தன் சிறந்த கல்விமான்; நல்ல ஒழுக்கம் உடையவன்; பல நற்பண்புகட்கு இருப்பிடமானவன். அவன், “நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்; அதனால், ‘யான்உயிர்’ என்ப தறிகை வேல்மிகு தானை வேந்தர்க்குக் கடனே.” என்ற அறவுரையை நன்கறிந்தவன்; ஆதலின், மன்னுயிரைத் தன் உயிர்போல மதித்து நடந்து வந்தான். சோணாட்டுக் குடிகள் தம் அரசனுடைய நற்பண்புகளைப் பாராட்டி, அவனது செங்கோன்மையைப் புகழ்ந்து அமைதியான வாழ்க்கையை நடத்தி வந்தனர். அரசன் நல்ல தமிழ்ப் புலவன் ஆதலின், பொத்தியார், புல்லாற்றூர் எயிற்றியனார் முதலிய புலவர் பலரை ஆதரித்து வந்தான். புலவர்கள் அவன்பால் பரிசில் பெறுதலை விட அவனது நட்பைப் பெறவே பெரிதும் விழைந்தனர். பழகாத நட்பு இத்தகைய செங்கோற் சோழனைப்பற்றி நமது புலவர் பெருமானான பிசிராந்தையார் கேள்வியுற்றார். நல்லாரை நல்லாரே நாடுவர். அல்லவா? பிசிராந்தையார் சோழர் பெருமானைப் பற்றிக் கேள்விப்பட்ட நாள் முதல் அவனை நேரிற் காண வேண்டும் என்று விரும்பினார்; அஃது உடனே கைகூடவில்லை. எனினும், அவர் நாள்தோறும் அவனை நினைந்து நினைந்து மகிழ்வார்; ‘அப்பெருமானை என்று காண்போம்!’ என்று ஏங்குவார். புலவர், சோழனைப் பற்றிக் கேள்விப்பட்டவாறே, சோழ மன்னவனும் புலவர் பலர் வாயிலாகப் பிசிராந்தையாரைப் பற்றிக் கேள்வியுற்றான்; அவரைக் காண வேண்டும், கண்டு அளவளாவ வேண்டும் என்று அவாவினான். அதன் காரணமாக அரசனும் அரும்புலவரை நாள்தோறும் எண்ணி வருவானாயினன். ‘இஃது என்ன வியப்பு! ஒருவரை ஒருவர் பாராமல், ஒருவரோடு ஒருவர் பழகாமல் உள்ளத்து உணர்ச்சியால் நட்புக் கொண்டுவிட்டனரே!’ எனின், இதற்கு விடையாகப் “புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்.” என்று திருவள்ளுவர் திருவாய் மலர்ந்தருளியதைக் காண்க. அன்னத்தைத் தூது போக்குதல் ஒருநாள் மாலை, பிசிராந்தையார் கடற்கரை அருகில் உலவிக் கொண்டிருந்தார்; அப்பொழுது, தெற்கே சென்று மீண்டு வடக்கு நோக்கிப் பறந்து செல்லும் அன்னச்சேவல் ஒன்றைக் கண்டார். அதனைக் காணும்வரை அவர் கோப்பெருஞ் சோழனையே நினைந்து கொண்டிருந்தார். ஆதலால், அதனைக் கண்டதும், அதனை அவன்பால் தூதுவிட விழைந்தார். விழைந்து, அதனை நோக்கி, “அன்னச் சேவலே, அன்னச் சேவலே, இம்மாலைக் காலத்தில் முழு நிலாத் தோன்றியுள்ளது. அது தன்னாட்டைச் செங்கோல் வழுவாது காத்து வரும் சீரிய மன்னவன், மலர் முகத்தைப் போலக் காண்கின்றது. இம்மாலைப் பொழுது தனித்து நிற்பவரை வருத்துவ தாகும். நீ இத்தகைய மாலை நேரத்தில் குமரித் துறையில் அயிரை மீன்களைத் தின்று, வட திசையில் உள்ள மலைக்குப் போகின்றனை; ஆதலின், ஒன்று சொல்வேன்; அன்புகூர்ந்து அதனைச் செய்வாயாக. குமரித்துறைக்கும் நீ செல்லும் வடமலைக்கும் இடையில் சோழ நாடு இருக்கின்றது. அங்கு நீ தங்க நேருமாயின், அதன் தலைநகராக வுள்ள உறையூரில் தங்குக; தங்கி, சோழர் பெருமானது அரண்மனை மேல் மாடத்தில் பறந்து இறங்குக. நீ உனது வருகையை அரண்மனைக் காவலர்க்கு அறிவிக்க வேண்டும் என்பது இல்லை. யாதொரு தடையும் இன்றி அரண்மனையுள் புகலாம்; புகுந்து எனது உள்ளத்தைத் தன் நற்குணங்களால் கொள்ளை கொண்ட கிள்ளி (கோப் பெருஞ் சோழன்) யைக் காண்க; அவன் கேட்கும்படியாக, ‘யான் பெரிய பிசிர் என்னும் ஊரில் உள்ள ஆந்தையுடைய அடியின்கீழ் வாழ்வேன்’ என்று சொல்லுக. அப்பேரரசன் அது கேட்டவுடன் அகமகிழ்ந்து உனது பெடை அன்னம் அணிந்து கொள்ளத்தக்க சிறந்த நகை ஒன்றைத் தருவன்; பெற்று மகிழ்வாயாக” என்னும் கருத்தமைந்த பாடல் ஒன்றைப் பாடினார். அப்பாடல் புறநானூறு என்னும் சங்க நூலில் உள்ளது. நீங்கள்அதனைப் படித்து மகிழலாம். இங்ஙனம் புலவர் எப்பொழுதும் கோப்பெருஞ் சோழனைப் பற்றிய நினைவு உடையவராகவே விளங்கினார். புலவருக்கு அறிவித்தல் ஒருநாள் பிசிராந்தையார் பிறிதொரு புலவருடன் அளவளாவிக் கொண்டிருந்தார். வந்த புலவர் ஆந்தையாரிடம் வள்ளல்கள் பலரைப் பற்றிக் கூறிவிட்டு, “உங்களுடைய உள்ளத்தைக் கவர்ந்த தலைவன் யாவன்?” என்று கேட்டார். உடனே ஆந்தையார், அவரை நோக்கி, “என்னுடைய இறைவன் யார் என்றா கேட்கின்றீர்? எனது கருத்தைக் கவர்ந்த காவலன் கோப்பெருஞ் சோழன். அவன் பாணரது பசிப்பிணியைப் போக்குபவன்; புலவரது வறுமை நோயை நீக்குபவன்.அப்பெருமகன் வளமிக்க சோழ நாட்டில் உறையூர் என்னும் பாடி வீட்டில் தங்கி இருக்கின்றான்; எப்பொழுதும் குற்றமற்ற பொத்தியார் என்னும் பைந்தமிழ்ப் புலவருடன் பழகி வருபவன்,” என்று கூறிச் சோழ வேந்தனுடைய தமிழ்ப் பற்றையும் இசைத் தமிழைப் புரக்கும் உள்ள நிலையையும் உள்ளவாறு உரைத்து மகிழ்ந்தார். அச்சோழனிடமிருந்து ஒரு நன்மையையும் பெறாது, அவனுடன் ஒரு சிறிதும் பழகாது, அவனை நேரிற் காணாது பாண்டிய நாட்டில் வாழ்ந்துவந்த ஆந்தையார், இங்ஙனம் அவனைப் பற்றிப் பாராட்டினர் எனின், அவரது உள்ளப் புணர்ச்சியை என்னெனப் பாராட்டுவது! 3. புலவரும் பாண்டியனும் பாண்டியன் அறிவுடைநம்பி பிசிராந்தையார் காலத்தில் பாண்டிய நாட்டைக் காத்துவந்த பாண்டியன் சிறந்த ஒழுக்கம் உடையவன்; கல்வி, கேள்விகளில் வல்லவன்; அறிவு ஆற்றல்களில் மிக்கவன். அதனால் குடிமக்கள் அவனை ‘அறிவுடை நம்பி’ என்று அழைக்கலாயினர். அப்பெயரே வழக்குப் பெறலாயிற்று. பரந்த சிந்தையும் விரிந்த நோக்கமும் கொண்ட அப்பேரரசனிடம் ஆந்தையார் போன்ற சான்றோர் நெருங்கிப் பழகுதல் இயல்புதானே! பாண்டியன் அறிவுடை நம்பியும் செந்தமிழ்ப் புலமை மிக்காரை உபசரித்து அளவளாவலில் தம் பெரும் பொழுதைப் போக்கி வந்தான். புலவர் அறிவுறுத்தல் ஒரு நாள் பிசிராந்தையார் பாண்டியன் அரண்மனைக்குச் சென்றார்.அரசன் எதிர்சென்று ஏற்றுப் புலவர்க்கு உண்டி வழங்கி உரையாடிக் கொண்டிருந்தான். பல பொருள்களைப் பற்றிப்பேசி வருங்கால்,’ அரசன் குடிகளிடம் எவ்வாறு இறை கொள்ள வேண்டும்?’ என்பது பற்றிய கேள்வி எழுந்தது. அப்பொழுது ஆந்தையார் அரசர் பெருமானை நோக்கி, “அரசர் பெருமானே, ஒரு ‘மா’ என்னும் அளவினும் குறைந்த நிலமாயினும், அதனில் விளைந்த நெல்லைக் கொணர்ந்து கவளமாக்கி யானைக்குக் கொடுத்து வந்தால், பல நாட்களுக்குக் கொடுக்கலாம். நூறு ‘செய்’ அளவுடைய பெரிய நிலமாயினும், அதன்கண் விளைந்துள்ள நெல்லை உண்ணும்படி யானையை ஏவி விடின், அஃது உண்ணும் நெல்லைவிடக் காலால் மிதித்துப் பாழாக்கும் நெல்லே அதிகமாகும். அதுபோலவே, அறிவுடைய அரசன் திறை வாங்கும் முறையை அறிந்து வாங்குவானாயின், அவனுடைய குடிகள் அவனுக்கு நிரம்பப் பொருளை ஈட்டிக் கொடுத்துத் தாங்களும் தழைத்து வாழ்வார்கள். உணராதவரும் அரசற்கு உறுதி கூறாதவரும் அரசன் மனம்கோண ஒன்று உரைத்தல் ஆகாது என்று எண்ணுபவரு மாகிய அமைச்சரோ, பிறரோ கூறும் யோசனை கேட்டுக் குடிகள் தன்னிடம் கொண்டுள்ள அன்பு கெடும்படி வரி வாங்குதலை விரும்புவானாயின், முன் சொன்ன யானை புகுந்த களம்போலத் தானும் உண்ணப் பெறான்; குடிகளும் கெடுவர்,” என்று உவமை வாயிலாக விளங்க உரைத்தார். பாண்டியன், ‘அறிவுடை நம்பி’ ஆதலால், புலவரது பொன்னுரையைக் கேட்டு மகிழ்ந்தான்; அவருக்கு வேண்டியவாறு பரிசில் ஈந்து அவரை மகிழ்வித்தான். புலவர் அவனிடம் விடை பெற்றுத் தம்மூர் சேர்ந்து வாழ்ந்து வந்தார். 4. சோழன் வடக்கிருத்தல் பாற்கடலில் தோன்றிய விஷம் ‘கடலோ பாற்கடல்; ஆனால், அதைக் கடைந்த பொழுது விஷம் வெளிப்பட்டது’ என்ற கதையை நீங்கள் படித்திருக்கிறீர்கள் அல்லவா? அதுபோல, ‘நற்குண நற்செயல்கட்கு இருப்பிடமானவன்’ என்று யாவரும் ஒருங்கே பாராட்டுதற்கு உரியவனாகி, அறவழியில் ஆட்சி புரிந்துவந்த கோப்பெருஞ் சோழனுக்கு, மறவழி மதி செல்லும் மைந்தர் இருவர் தோன்றி வளர்ந்து வந்தனர். அவர்கள் தந்தைக்கு நேர்மாறான மனநிலை உடையவர்கள். அரசன், புலவர் பெருமக்களுடன் பெரும் பொழுது போக்கிக்கொண்டு சிறந்த கொடை வள்ளலாய் விளங்குதலைக் கண்ட அவர்கள் மனம் புழுங்கினார்கள். புலவர்க்கும் பாணர்க்கும் அளிப்பது தாய் மொழியை வளர்ப்பதாகும் என்பது அம்மூட மக்கள் மூளையிற் படவில்லை; அதனை வீண் செலவெனக் கருதினர்; மேலும், வயது முதிர்ந்த தம் தந்தை, வயது வந்த தங்கட்குப் பட்டம் கட்டாமல் தான் அரசனாக இருந்து வருதலை வெறுத்தனர். இத்தகைய பல காரணங்களால் அவர்கள் தந்தையிடம் மாறுபட்டனர்; அவசியம் நேரின் தந்தையை எதிர்க்கப் படை ஒன்றையும் தயாரித்து வந்தனர். தந்தை - தனயர் பூசல் எல்லாப் போக பாக்கியங்களையும் குறைவற அனுபவித்து வந்த கோப்பெருஞ் சோழன் வெளியில் மகிழ்ச்சியுடையவன் போலக் காணப்படினும், உள்ளத்தில் மகிழ்ச்சி அற்றவனாகக் காணப்பட்டான். பிள்ளைகள் ஒழுக்கக்கேடே அவனது உள்ளத்தை உறுத்தி வந்தது. அவன் இறுதியில் பிள்ளைகளது தீய எண்ணத்தை அறிந்து கொண்டான். ‘இத்தகைய ஒழுக்கம் கெட்ட மக்களிடம் நாட்டை ஒப்புவித்தலை விட அவர்களைப் போரில் ஒழித்து விடலே தக்கது’ என்று எண்ணினான்; எண்ணிப் போர்க்கோலம் கொண்டான். படையும் தயாராகி விட்டது. மக்களும் போரிடத் தயாராயினர். என்ன கொடுமை! எயிற்றியனார் இடையீடு தந்தையும் தனயரும் போரிட நின்றதைச் சோழனைக் காண வந்த புல்லாற்றூர் எயிற்றியனார் என்ற புலவர் கண்டார்; வியப்பும் திகைப்புமை கொண்டார். அவர்தம் நாடிவந்த கோப்பெருஞ் சோழனைக் குறுகி, “வெற்றி வேந்தே, இப்பொழுது நின்னுடன் போர் செய்ய வந்திருப்பவர் வேற்று நாட்டரசராகவுள்ள சேர, பாண்டியர் அல்லர். நீ அவர்கட்குப் பகை அரசனும் அல்லை. நீ இந்நிலவுலகில் புகழை நிறுத்தி இறப்பாயாயின், இவ்வரசாட்சி அவர்கட்கே உரியதாகும். நீயே இதனை நன்கு அறிவாய். நின்னுடன் போர் செய்ய வந்த நின் அறிவிலாத மக்கள் தோற்பதாக வைத்துக் கொள்வோம்; பிறகு இவ்வரசாட்சியை நீ யாருக்குக் கொடுப்பாய்? ‘தந்தை - தனயருடன் போரிட்டு வென்றான்’ என்னும் வசை நிற்குமே தவிர வேறில்லை. நீ அவர்க்குத் தோற்பாயாயின், நின் பகைவர்க்கு மகிழ்ச்சி உண்டாகும்; நினக்கு வசையே உண்டாகும். இங்ஙனம், எம்முறையிற் பார்ப்பினும், இப்போர் நிறுத்தப்படல் வேண்டும்; நினது பகைமைக்குணம் மாற வேண்டும். நீ தேவர் நன்னாட்டு விருந்தாகச் செல்லற்குரிய நல்வினையைச் செய்வாயாக.” என்று அரசன் உளங்கனிய இனிய முறையில் எடுத்தியம்பினர். அரசன் துறவு கோப்பெருஞ் சோழன் இயல்பாகவே பற்றற்றவன். அவனுக்குப் புலவர் பொன்னுரையும் சீற்றம் மிகுந்த சமயத்தில் வேண்டியதாக இருந்தது. அவன் உள்ளம், புலவர் போதனைக்குப் பிறகு தெளிந்தது. அவன் அரசாட்சியைத் தன்மக்களிடம் ஒப்புவித்தான்; துறவுக் கோலம் பூண்டான்; உண்ணா நோன்பு பூண்டு வடக்கிருந்து உயிர்விடத் துணிந்தான். ஆற்று இடைக் குறையில் உள்ள ஒரு மரநிழலில் சென்று தங்கி, உண்ணா நோன்பைத் தொடங்கினான். 5. அரசனும் ஆந்தையாரும் வடக்கிருத்தல் இங்ஙனம் அரசன் வடக்கிருத்தலை அறிந்த சான்றோரும் பிறரும் அரசன்பால் வந்து குழுமி, அவனைப் பிரிய மனம்இல்லாது அவனை சூழ அமர்ந்திருந்தனர். அப்பொழுது அரசன் அவர்களை நோக்கி, “என் ஆருயிர் நண்பரான பிசிராந்தையார் இப்பொழுது வருவர்; அவர்க்காக இடம் விட்ட ஒதுங்கி இருங்கள்” என்றான். அது கேட்ட சான்றோர், “அரசே, பிசிராந்தையார் உனது பெயரைக் கேட்டவரே அன்றி நேரில் பார்த்தவர் அல்லர்; பழகியவர் அல்லர். நீயும் அவரை நேரில் அறியாய் மேலும் அவர் மிக்க தூரத்தில் உள்ள பாண்டிய நாட்டினர்; நீ வடக்கிருக்கும் செய்தியை அவர் எங்ஙனம் அறிவர்; அறிந்து, எவ்வாறு இங்கு வருதல் கூடும்?” என்றனர்.அரசர் பெருமான அச்சான்றோரை அகமலர நோக்கி, “அறிஞர்களே, நீங்கள் அங்ஙனம் ஐயுற வேண்டா.அவர் என்னைப் பாராவிடினும் என் உயிர் நண்பர் ஆயினார்; நானும் அங்ஙனமே அவரது உயிர்த்துணைவன் ஆயினேன். நான் நன்னிலையில் இருந்த காலத்தில் அவர் வராவிடினும் வடக்கிருந்து உயிர்விடத் துணிந்துள்ள இந்தக் காலத்தில் தவறாது இங்கு வருவார்.அவர் தமது பெயரைப் பிறர்க்குச் சொல்லும்பொழுது ‘என் பெயர் சோழன்’ என்று அறிவிலியாகிய என் பெயரையே தமது பெயராகச் சொல்லும் வேறுபாடு அற்ற அன்புரிமை உடையவர், அவர் நெடுந்தூரத்தில் உள்ள பாண்டி நாட்டுப் ‘பிசிர்’ என்னும் ஊரினர்; ஆயினும், யான் வடக்கிருத்தலைக் கேள்வியுற்று வந்துகொண்டிருக்கிறார்; சிறிது நேரத்தில் இங்கு வருவார். அவர்க்கும் என்னோடு வடக்கிருக்க இடம் ஒழித்து வையுங்கள்’ என்றான். காவலனது கனிந்த வுரையைக் கேட்ட சான்றோர், “ஈதென்ன புதுமை!” என வியந்து, அரசன் அறிவித்தவாறே இடம் ஒழித்து வைத்தனர். ஒத்த உணர்ச்சி சோழர் பெருமான் சொன்னது உண்மையே ஆகும். அவன் அரசு துறந்ததையும் துறவுபூண்டு வடக்கிருக்கத் துணிந்ததையும் அங்ஙனம் துணிந்து ஆற்றிடைக் குறையில் தங்கி இருத்தலையும் ஒத்த மன வுணர்ச்சியால் பிசிர்ஆந்தையார் உணர்ந்தார்; உடனே தம் பதியை விட்டுப் புறப்பட்டு வந்தார்; வழியில் பல காடு களையும் மலைகளையும் கடந்து நடந்து வந்தார். அவர் நெடுந் தூரத்தைச் சில நாட்களில் கடந்தார்; கோப்பெருஞ் சோழன் குறித்த நேரத்தில், அருகில் இருந்த சான்றோர் வியக்க அரசன்முன் தோன்றினார். கனிந்த அன்பினால் புரவலனும் புலவரும் ஒருவரை ஒருவர் அன்புக் கண்ணீர் வரத் தழுவிக் கொண்டனர். பொத்தியார் பாராட்டு எதிர்பாராத இந்நிகழ்ச்சியைக் கண்ட பொத்தியார் என்ற புலவர் வியந்தார்.அவர் கோப்பெருஞ் சோழற்கு நெருங்கிய நண்பர்; எப்பொழுதும் உடன் உறைந்து வந்தவர். அவர் அரசனுடனே சான்றோர் குழுவில் இருந்தவர். அரசன் சொன்னதும், ஆந்தையார் அவன் சொற்படி வந்ததும் அவருக்கு வியப்பை ஊட்டின. அதனால் அவர், “எங்கள் கோப்பெருஞ் சோழன் அரசைத் துறந்து வடக்கிருக்கத் துணிந்தது, நினைக்க நினைக்க வியப்பைத் தருவதாகும்! ஆனால், வேற்று வேந்தன் (பாண்டியன்) நாட்டில் உள்ள ஊரைச் சேர்ந்த புலவர் பெருமான், நட்பையே சிறந்த பற்றுக் கோடாகக் கொண்டு, இத்தகைய துன்பக் காலத்தில் இங்கு வந்தது, முன் சொன்னதினும் வியப்பைத் தருவதாகும்! ‘பிசிராந்தையார் இப்பொழுது இங்கு வருவார்’ என்று துணிந்து சொல்லிய வேந்தர் பெருமானது ஒப்பற்ற மனவுணர்ச்சியும், இவனது சொல் பழுதுபடாமல் வந்த சான்றோரது மனவுணர்ச்சியும் நினைக்க நினைக்க உண்டாகும் வியப்பு எல்லையின்றிச் செல்கின்றது. ஆதலால், தன் நாட்டில் வாழும் இந்தச் சான்றோர் உள்ளத்தையே அன்றி வேற்றரசன் நாட்டில் வாழும் புலவர் பெருமானது உள்ளத்தையும் தன்பால் ஈர்த்த இப்பேரரசனை இழந்த நாடு, இனி என்ன துன்பத்தை அடையுமோ! அதுதான் இரங்கத்தக்கதாகும்!” என்று தம் மனவுணர்ச்சியை ஒரு செய்யுள் மூலமாக வெளிப்படுத்தினார். அரசனும் ஆந்தையாரும் ஆந்தையாரைத் தழுவிய அரசன் விரிநீர் வர அவரைக் குழைந்த அன்போடு நோக்கி, “புலவர் பெருமானே, உம்மை நேரிற் காணப்பேறு பெற்றிலேன்; எனினும், உமது நற்குண நற்செயல் களைப் புலவர் பலர் வாயிலாகக் கேட்டு உம்மைக் கண்டு அளவளாவ அவாக் கொண்டதுண்டு. நான் நன்னிலையில் அரியாசனத்தில் அமர்ந்திருந்தபொழுது நீவிர் வந்திலீர்; வடக்கிருக்கும் இவ்வரிய காலத்தில் வந்தீர். இஃதொன்றே உமது நட்பின் சிறப்பைக் குன்றின் மீதிட்ட விளக்கென ஒளிரச் செய்கின்றது,” என்று தன் உள்ளத்து உணர்ச்சியை அழகாக வெளிப்படுத்தினான். ஆந்தையார் பல நாட்களாகத் தம் உள்ளத்தே குடி கொண் டிருந்த அரசனது உருவத்தைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தார்; அவனது மூதறிவின் நுட்பத்தை நுகர்ந்தார்; அப்பெருமகன் பேசிய அன்புரைகளை கேட்டு உள்ளம் பூரித்தார்; அச்சோழ வேந்தனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட தமது பேற்றை எண்ணிப் பெருமிதம் கொண்டார். 6. உயரிய வாழ்க்கையும் நட்பும் மாறா இளமைக்குக் காரணம் என்ன? சோழனைச் சூழ இருந்த சான்றோருட் சிலர் ஆந்தையாரை அன்புடன் நோக்கி, “பெரியீர், நாங்கள் சிறுவராக இருந்தபொழுதே உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்பொழுது இளைஞராக இருந்த நாங்கள் இப்பொழுது முதியவராக ஆகிவிட்டோமே! நீங்கள் நியாயமாக மிக்க முதுமை அடைந்திருத்தல் வேண்டும் அல்லவா? நீங்களோ மாறா இளமையுடன் காண்கிறீர்கள். இங்ஙனம் இருத்தல் எங்ஙனம் இயலும்? இஃது எங்கட்கு வியப்பாக இருக்கின்றது. அன்பு கூர்ந்து உங்களது மாறா இளமைக்குரிய காரணங்களைத் தெளிய வைப்பீர்களாக,’ என்று வேண்டினர். புலவர் கூறிய காரணங்கள் பிசிராந்தையார் புன்னகை பூத்த முகத்தினராய்த் தம்மைக் கேள்வி கேட்ட சான்றோரை அன்புடன் நோக்கி, “உமக்கு ஆண்டுகள் பலவாகியும் நரை இல்லாமல் இருத்தற்குக் காரணம் என்ன?’ என்று கேட்கின்றீர்கள். காரணம் கூறுவேன். கேளுங்கள்: 1. என்னுடைய மனைவி சிறந்த குணங்களையுடையவள்; என் சொற்படி நடப்பவள்; என்னைப் போல அறிவு நிரம்பியவள். என் பிள்ளைகளும் அங்ஙனமே. 2. என் ஏவலர்யான் கருதுவதையே செய்பவர். 3. எனது அரசனான பாண்டியன் செங்கோல் வழி நிற்பவன்; அறத்திற்கு மாறான எதனையும் செய்யான். 4. யான் இருக்கின்ற ஊரில் நற்குணங்களால் நிரம்பிப் பணிய வேண்டும் பெரியோரிடத்துப் பணிந்து, ஐம்புலன்களும் அடங்கிய கொள்கையையுடைய சான்றோர் பலர் இருக்கின்றனர். நான் அப்பெரியோருடன் இடைவிடாது பழகுகின்றேன். இக்காரணங்களால் எனக்கு இல்லறத்திலும் துன்பம் இல்லை; வெளிஉலகிலும் துன்பம் இல்லை. துன்பம் இல்லாததால் மனக்கவலை இல்லை; என்றும் மகிழ்ச்சி யோடு இருக்கின்றேன். அதனால், நரைப்பிணி என்னை நாட வில்லை” என்ற பொருள்கொண்ட பைந்தமிழ்ப் பாவினைப் பாடினர். சான்றோர் அதுகேட்டு வியப்புற்றனர். வடக்கிருந்து உயிர் நீத்தல் கோப்பெருஞ் சோழன் தருப்பைப் புல்லை ஆசனமாகப் பரப்பி,வடக்கு முகமாக இருந்து உண்ணா நோன்பு பூண்டு, இந்திரியங்களை ஒடுக்கினான். ஆந்தையாரும் அரசனைப் பின்பற்றி வடக்கிருந்து உண்ணாநோன்பு பூண்டனர். என்ன வியப்பு! சான்றோர் அனைவரும் பிசிராந்தையாரது தியாகத்தைப் பார்த்து பெரு வியப்புக் கொண்டனர். சில நாட்களில் அரசர் பெருமானும் புலவர் பெருமானும் மண்ணுலக வாழ்வை நீத்தனர். கண்ணகனார் பாராட்டு இவ்வற்புதச் செயலைக் கண்ணகனார் என்ற செந்தமிழ்ப் புலவர் கவனித்துக்கொண்டிருந்தார். அவர் உள்ளம் பிசிராந்தை யார் செயலில் பெரிதும் ஈடுபட்டது. அவர் விழிநீர்வார,” பொன், பவளம், முத்து, மணி என்பன ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத இடங்களில் தோன்றுவன வாகும். அவ்வாறு இருந்தும் ஒரு நகையைச் செய்யுங்காலத்தில் இவை அனைத்தும் கோவையாய் ஓர் இடத்தில் தோன்றும். அவை போலத் தொடர்பற்ற தூரமான இடங்களில் இருந்தபோதிலும் தேவை ஏற்படும் காலத்தில் சான்றோர் சான்றோருடன் வந்து கலந்துகொள்வர். இதற்குச் சிறந்த சான்று, பிசிராந்தையார் இங்கு வந்து கலந்துகொண்டதேயாகும்,” என்னும் கருத்தமைந்த செந்தமிழ்ச் செய்யுள் ஒன்றினைப் பாடினார். கல் நாட்டு விழா வடக்கிருந்து உயிர்நீத்த பெருமக்களாகிய அரசனுக்கும் ஆந்தையார்க்கும், அவர்கள் உயிர்விட்ட இடங்களில், அக்கால வழக்கப்படி கல் நட முயற்சி செய்யப்பட்டது. ஒவ்வொரு கல்லிலும் அவரவர் உருவம், பெயர், சிறப்பியல்புகள் இவை பொறிக்கப் பட்டன; பின்னர் அவை நன்னீரில் தூய்மை செய்யப்பட்டு நடப்பட்டன. இச் செயல் ‘கல் நாட்டு விழா’1 எனப் பெயர் பெறும். 7. பொத்தியார் நட்பு பொத்தியார் வடக்கிருத்தல் பொத்தியார் என்ற அருந்தமிழ்ப் புலவர் கோப்பெருஞ் சோழனுக்கு நெருங்கிய நண்பர் அல்லவா?’ அவர் ஏன் வடக்கிருக்கவில்லை?’ என்று நீங்கள் கேட்பீர்கள் அல்லவா? அவர் வடக்கிருக்க விழைந்தபொழுது கோப்பெருஞ் சோழன் அவரைத் தடுத்து, “பிள்ளைப் பேறு இல்லாதவர் துறக்கம் புகுதல் அருமை’ என்று நூல்கள் கூறுகின்றன. ஆதலால், பிள்ளைப்பேறு உண்டான பிறகு நீங்கள் வடக்கிருக்கலாம்; இப்பொழுது அவ்வாறு செய்யவேண்டா” என்றான். புலவர் அரசன் கூற்றுப்படி, தம் ஊரை அடைந்தார்; மனைவி கருவுயிர்த்து ஆண் மகவு ஒன்றினை ஈன்றாள். புலவர் மனம் மகிழ்ச்சியுற்று. அவர் ஓடோடியும் உறையூர் வந்தனர். அரசனும் ஆந்தையாரும் கல்லானதைக் கண்டனர்; அகம் கரைந்தனர்; கரைந்து, கண்ணீரை ஆறாக வடித்து, அரசனது நடு கல்லின் எதிரில் நின்று, “பிள்ளைப்பேறு, உண்டான பின் வருக’ என்று சொல்லி, யான் அங்ஙனம் வருவதற்குள் உயிர் விட்டுக் கல்லான உத்தமனே, எனக்கு இடங் கொடுப்பாயாக,” என்று கூறி, அங்கு வடக்கிருந்து, உண்ணா நோன்பு அநுசரித்து உயிர் விட்டனர். ஆ! உத்தம நட்பினர் தியாகத்தை என்னென்பது! அடிக்குறிப்பு 1. இந்தப் பழைய வழக்கம், இன்றும் தமிழர் வீடுகளில் கருமாதி சமயத்தில் `கல் நடப்பு’ அல்லது `கல் எடுப்பு’ என்று கூறப்படுகிறது. 3. கோவூர் கிழார் 1. இளமையும் கல்வியும் கோவூர் கிழார் கோவூர் சோழ நாட்டில் உள்ள ஊர். இதனில் வாழ்ந்த வேளாளர் மரபினர் ஒருவர்க்குப் பிறந்தவரே நமது செந்தமிழ்ப் புலவரான கோவூர் கிழார். இவரது இயற்பெயர் இன்னதென்பது தெரியவில்லை. ஊர்ப் பெயரும் மரபுப் பெயரும் சேர்ந்தே இவர் ‘கோவூர் கிழார்’ எனப்பட்டார். இவ்வாறும் பெயர்கள் அமைதல் பண்டை மரபாகும். இளமையும் கல்விப் பயிற்சியும் கோவூர் கிழார் இளமைப் பருவத்தில் ஒரு நல்லாசிரியரை அடுத்துச் செவ்வையாகச் கல்வி கற்று வந்தார்; குறித்த நேரத்தில் ஆசிரியர் இல்லத்தை அடைதல், ஆசிரியர் ‘இரு’ எனச் சொன்ன பிறகு இருத்தல் (உட்காருதல்), பாடம் சொல்லுங்கால் அறிவை நிலைப்படுத்திக் கேட்டல், ‘போ’ என்றவுடன் விடைபெற்று வீடு திரும்புதல், அவ்வப் போது தோன்றும் ஐயங்களைப் பணிவோடு கேட்டுத் தெளிதல் என்னும் (பண்டை) மாணவர்க்குரிய இலக்கணங்களில் வழுவின்றி நடந்தமையால், விரைவில் தமிழ்ப் புலமை எய்தினார் ஒழுக்க மேம்பாடு இன்றிப் புலமை மட்டும் இருந்து பயன் என்ன? ஒரு பயனும் உண்டாகாதன்றோ? நமது கோவூர் கிழார் கல்வியுடன் ஒழுக்கத்தில் சிறந்த விளங்கினார். இளமைதொட்டே அவரிடம் அன்பு, அருள், ஈகை முதலிய நற்பண்புகள் வேரூன்றி வளர்ந்து வந்தன. அவர், பிறர் துன்பப்படுதலைக் காணச் சகியார்; அதனைத் தமக்கு வந்ததாக எண்ணி விரைந்து களைவார் இத்தகைய நற்செயலால் அவரைப் பிற புலவரும் உச்சி மேற்கொண்டு போற்றலாயினர். அவரைச் சோணாட்டு அறிஞர், சான்றோருள் ஒருவராகக் கருதி மரியாதை செலுத்தி வந்தனர். 2. புலவரும் நலங்கிள்ளியும் நலங்கிள்ளி கோவூர் கிழார் காலத்தில் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டவன் நலங்கிள்ளி என்பவன். அவன் சிறந்த ஒழுக்கம் உடையவன்; கல்வி கேள்விகளிற் சிறந்தவன்; கவிபாடும் ஆற்றல் பெற்றவன்; செங்கோல் அரசன். அவன் புலமையும் ஒழுக்கமும் உடைய பெருமக்களைத் தன் அவையில் சேர்த்து மதிப்பித்து வந்தான்; அவர்களோடு அளவளாவி மகிழ்ந்து வந்தான். நலங்கிள்ளியும் கோவூர் கிழாரும் இங்ஙனம் பல்லாற்றானும் சிறந்து புலவர் புரவலனாய்த் திகழ்ந்த நலங்கிள்ளி, நமது கோவூர் கிழாரது நிறைந்த புலமையையும் சிறந்த ஒழுக்கத்தையும் தக்கார் வாயிலாகக் கேள்வியுற்றான்; அவரைத் தன் அவைக்களம் வருமாறு செய்து, அவருடன் அளவளாவி மகிழ்ந்தான்; அவருடைய பலவகைப் பட்ட உரையாடலைக் கவனித்து, அவருடைய நுண்ணறிவை வியந்தான். அவன் அன்று முதல் அவரிடம் பெருமதிப்புக் கொண்டு நடந்து வந்தான். நெடுங்கிள்ளி நெடுங்கிள்ளி என்பவன் சோழர் மரபைச் சேர்ந்தவன்; நலங்கிள்ளிக்கும் அவனுக்கும் தீராப் பகைமை வளர்ந்து வந்தது; அவன் நலங்கிள்ளியின் அரசைக் கவர விழைந்தான். விழைந்து தருணம் பார்த்திருந்தான். இதனை உணர்ந்த நலங்கிள்ளியும் தக்க படையுடன் தயாராகக் காத்திருந்தான். 3. ஆவூர் முற்றுகை ஆவூர் முற்றுகை சோழர் இருவருக்கும் போர் தொடங்கிற்று. பல இடங்களிற் போர்கள் நடைபெற்றன. நெடுங்கிள்ளி நலங்கிள்ளியின் படைகட்கு ஆற்றானாய் ஓடி, ஆவூர்க்கோட்டைக்குள் ஒளிந்து கொண்டான் நலங்கிள்ளி அவனை விடாது துரத்திச் சென்று, ஆவூரை முற்றுகையிட்டான். நெடுங்கிள்ளி போரிடத் துணியவில்லை, கோட்டைக் கதவை அடைத்துக்கொண்டு உள்ளேயே பதுங்கிக் கிடந்தான். முற்றுகை பலநாள் நீடித்தது. கோட்டைக்கு வெளியில் இருந்த நலங்கிள்ளி, தனக்கும் தன் படைகட்கும் வேண்டிய உணவுப் பொருட்களை எளிதாகப் பல இடங்களிலிருந்தும் பெற்றுக் கவலையின்றி முற்றுகையிட்டிருந் தான். ஆனால், கோட்டையின் கதவு திறக்கப்படாமையால், கோட்டைக்குள் அகப்பட்டுக் கொண்ட ஆவூர் மக்களும் நெடுங்கிள்ளியின் படைவீரரும் உணவுப் பொருட்கள் போதாமல் பெருந்துன்பம் உற்றனர். புலவர் இடையீடு கோவூர் கிழார் ஆவூர் முற்றுகையைக் கேள்வியுற்றார். அவர், அரசியல் அறிவு நிரம்பப் பெற்ற பேரறிஞர் ஆதலின், ஒரு முற்றுகையால் இருதிறத்தார்க்கும் பொதுமக்கட்கும் உண்டாகும் துன்பங் களை நன்கறிந்தவர். ஆதலால் அவர் ஆவூர்க்கு விரைந்து சென்றார். தமது வருகையை நெடுங்கிள்ளிக்கு எடுத்துக்கூறி கோட்டைக் கதவினைத் திறக்கச் செய்து உட்சென்றார். நெடுங்கிள்ளி மலர் முகத்தோடு புலவரை வரவேற்றான். புலவர் அவனை அன்புடன் நோக்கி, “அரசே, இந்த முற்றுகையினால் உண்டாகியுள்ள துன்ப நிலைகளை நீ அறிவாய் என்று நம்புகிறேன். யானைகள் குளத்திற் படிந்து குளிக்கவில்லை; போதிய நெற்கவளம் இல்லாமல் தவிக் கின்றன; கம்பங்களைச் சாய்த்து நிலத்தின் மேல் புரளும் துதிக்கை களை உடையனவாய்ப் பெருமூச்சு விட்டுச் சுழன்று இடிபோல முழங்குகின்றன. பால்இல்லாமல் குழந்தைகள் அழுகின்றன; பெண்மணிகள் மலர்களால் தங்கள் கூந்தலை அலங்கரியாமல் இருக்கின்றனர்; குடிமக்கள் வீடுகளில் தண்ணீர் கிடைப்பது அருமையாக இருக்கின்றது. அவர்கள் கோட்டைக்கு வெளியே செல்லவும் கூடவில்லை. உள்ளே இருக்கலாமெனில் குடிமக்கள் கூக்குரல் இடுகின்றனரே! இது நின் செவிகளிற் பட்டும், நீ நின் செயலுக்கு நாணாமலும் அவர் நிலையை எண்ணி இரக்காமலும் இனிதாக இருத்தல் மிகக் கொடியதாகும். வலிமை மிக்க குதிரைப் படைகளை உடையாய், நீ மெய்யாகவே அறவழியில் நிற்க விரும்புவாயாயின், உன் மரபைச் சேர்ந்தவனும் இப்பொழுது பகைவனாக இருப்பவனுமான நலங்கிள்ளியின் முன்னிலையில், ‘இக்கோட்டை நின்னது’ என்று சொல்லித் திறந்துவிடுதல் நல்லது. நீ வீரமுடையவனாயின், பகைவனுடன் போர் செய்தாவது கோட் டைக் கதவினைத் திறப்பாயாக. நீ இவை இரண்டில் ஒன்றைச் செய்யாமல் கோட்டைக்குள் பதுங்கிப் பிறரைப் பற்றிக் கவலை யின்றி உன்னளவில் இன்பமாக இருத்தல் நாணத் தகும் செயலாகும்,” என்று உள்ளதை உள்ளவாறு உளங்கனிய உரைத்தருளினார். இவ்வுருக்கமான பேச்சு நெடுங்கிள்ளி உள்ளத்திற் பதிந்தது. அவன் உடனே கோட்டைக் கதவைத் திறந்துவிட்டு உறையூருக்குச் சென்று விட்டான்; சென்று, அங்கிருந்த கோட்டைக்குள் புகுந்துகொண்டான். ஆவூர்க் கோட்டையை நலங்கிள்ளி கைப்பற்றிக் கொண்டான். ஆவூர் மக்கள் கோவூர் கிழாரை உளமார வாழ்த்தி மகிழ்ந்தனர். 4. இளந்தத்தரும் நெடுங்கிள்ளியும் புலவர் இளந்தத்தர் நலங்கிள்ளி ஆவூரில் தங்கி ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான். நெடுங்கிள்ளி உறையூர்க் கோட்டைக்குள் இருந்தான். இந்த நிலையில் இளந்தத்தர் என்ற பைந்தமிழ்ப் புலவர் ஒருவர் வறுமைக் கொடுமையால் நலங்கிள்ளியைச் சென்று கண்டார்; பைந்தமிழ்ப் பாக்களைப் பாடி அவன் உள்ளத்தை மகிழ்வித்தார். தமிழ்ப் பாடலுக்கு இரங்கும் பெரு வீரனான நலங்கிள்ளி, இளந்தத்தர்க்கு வேண்டிய பொருள்களை ஈந்து மகிழ்ந்தான். அவனிடம் விடை பெற்ற புலவர் நேரே உறையூரை அடைந்தார்; அடைந்து, கோட் டைக்குள் இருந்த நெடுங்கிள்ளியைக் கண்டு தம் வறுமையை விளக்கினார்; தாம் ஆவூரிலிருந்து வந்ததையும் அறிவித்தார். இவ்வாறு அறிவித்தது அவருக்குத் தீமையாக முடிந்தது. அச்சத்தையே அணிகலனாகக் கொண்ட நெடுங்கிள்ளி, அப்புலவர் நலங்கிள்ளியால் ஏவப்பட்டவர் என்றும், ஒற்றறிய வந்தவர் என்றும் தவறாக எண்ணிவிட்டான்; அதனால், அவரைக் கொலைசெய்யத் தீர்மானித்தான். கோவூர் கிழார் இடையீடு நெடுங்கிள்ளியின் தீர்மானத்தைக் கோவூர் கிழார் கேள்வி யுற்றார். பிறர் துன்பப்படுதலை அவர் சகித்துக்கொண்டு இரார் அல்லவா? அதனால் அவர் நெடுங்கிள்ளியினிடம் விரைந்து சென்றார்; சென்று, அவனை மலர்முகத்தோடு நோக்கி, “ஐயனே, இவரை ‘ஒற்றர்’ என்று கருதவேண்டா. இவர் புலவராவர்; மிக்க எளியவர்; தமது வறுமையைப் போக்க நலங் கிள்ளிபால் பரிசில் பெற்று மீள்கின்றார்; வழியில் உன்னைக் கண்டு ஏதேனும் பெற்றுப் போகலாம் என்ற எண்ணத்தால் இங்கு வந்தவராவர். உங்கள் இருவர்க்கும் உள்ள பகைமையை இவர் அறியாதவர்; கள்ளம் கபடு அற்ற தூய உள்ளத்தினர். பழுத்த மரங்கள் நெடுந் தூரத்தில் இருப்பினும் கிளி, வெளவால் முதலிய பறவைகள் அவற்றை நாடிச் செல்லுகின்றன அல்லவா? அவற்றைப் போலவே எம்போன்ற புலவர்கள் நின்போன்ற வள்ளல்கள் எங்கு இருப்பினும் தேடி அலைந்து பார்த்துப் பரிசில் பெறுதல் வழக்கமாகும். வறியவர், நெடுந்தூரத்தையும் வழியின் கஷ்டங்களையும் கருதார்; கொடையாளிகளைக் குறுகித் தம்மால் இயன்றவரை தம் புலமையை வெளிப்படுத்திப் பரிசில் பெற்று மீள்வர்; மீண்டு, தாமும் உண்டு தமது சுற்றத்தாரையும் உண்பிப்பர். அவர்கள்தாம் பரிசிலாகப் பெற்ற பொருளைத் தமக்கென்று பாதுகாவாமல், தம்மினும் எளியாரைக் கண்டவிடத்து ஈந்து மகிழும் இயல்பினராவர்; தம்மைப் பாதுகாக்கும் வள்ளல்களால் மதிக்கப்படுதல் ஒன்றையே பெரிதாகக் கருதுவார்கள். அவர்கள் பிறருக்குத் தீங்கு செய்ய ஒரு போதும் நினையார்; தம்மைக் கல்வியால் எதிர்ப்பவரை மட்டுமே வென்று வீறு கொண்டு விளங்குவர்; எனவே, இத்தகைய புலவரது கல்விப் பொருளும் நினது செல்வப் பொருளும் ஏறத்தாழச் சமமேயாகும். இவற்றையெல்லாம் ஆராயாமல் இவ்வெளிய புலவரைக் கொல்லக் கருதியது பெரும்பிழையாகும். ஆகவே, இவரை இன்னே விட்டுவிடுக,” என்று தெளிவாகவும் அழுத்தமாகவும் உருக்கமாகவும் எடுத்துரைத்தார். இத்தகைய விளக்கமான உருக்கமான பேச்சைக் கேட்டு எவர் மனந்தான் உருகாது! நெடுங்கிள்ளி மனம் இளகியது; தான் அறியாமற் செய்த தவற்றை எண்ணி வருந்தினான்; உடனே இளந்தத்தரை விடுதலை செய்து, அவருக்குப் பரிசில் தந்து மகிழ்வித்தான். இளந்தத்தர் அரசனுக்கும் தம்முயிரைக் காத்த புலவர் பெருமானுக்கும் மனமார நன்றிகூறி விடைபெற்றுச் சென்றார். கோவூர்கிழார் அரசனை உளமார வாழ்த்தித் தம் இருப்பிடம் ஏகினார். 5. உறையூர் முற்றுகை உறையூர் முற்றுகை மேற்கூறிய நிகழ்ச்சிக்குப் பிறகு நலங்கிள்ளி பெரும் படை யுடன் சென்று உறையூரை முற்றுகையிட்டான். நெடுங்கிள்ளி சினம் கொண்டான்; தன்னை விடாது பின்பற்றி வரும் நலங்கிள்ளியை ஒழிக்க விரும்பிக் கடும்போர் புரிந்தான். போரில் இருதிறத்துக் கரிகளும் பரிகளும் மாண்டன; வீரர் பலர் இறந்தனர்; பலர் கை, கால் முதலிய உறுப்புகள் இழந்து தவித்தனர். உறையூர்குடிகள், இக்கோரக் காட்சியைக் கண்டு உள்ளம் நடுங்கினர். புலவர் இடையீடு இச்சங்கடமான நிலையிலும் நமது கோவூர்கிழார் தோன்றினார். அன்பே உருக்கொண்ட அப்பெரியார் இக்கோரக் காட்சியைக் கண்டு நடுங்கினார். அவர் மனம் பதறியது; ஒரே மரபிற் பிறந்த கற்றுவல்ல அறிஞராகிய இருவர் தமது பகைமை காரணமாகப் பொது மக்களையும் உயிர்களையும் துன்பத்திற்கு உள்ளாக்குதல் அறியாமை என்று எண்ணினார். அப்பெருந்தகையார் நலங்கிள்ளியை நன்முகத்துடன் நோக்கி, “பகைவர்க்கு நமனைப் போன்ற அரசே, நான் கூறுவதைச் சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டுகிறேன். இப்பொழுது உன்னுடன் போர் செய்கிறவன் பனம்பூ மாலை அணிந்த சேர வேந்தன் அல்லன்; வேப்பம்பூ மாலையை அணிந்த பாண்டியனும் அல்லன். நீயோ ஆத்திமாலையை அணிந்திருக்கின்றாய். நின்னை எதிர்ப்பவனும் அதே மாலையை அணிந்தவன். அஃதாவது, நீங்கள் இருவரும் ஒரு குடியைச் சேர்ந்தவர். உங்களில் ஒருவர் தோற்பினும், தோற்பது நுமது குடியே அன்றோ? நீங்கள் இருவரும் வெற்றி பெறுதலோ இயலாது. ஆதலின், உங்கள் செயல் உங்களது புகழ் பெற்ற சோழர் குடிக்கு ஏற்றதன்று. ஒரு குடியிற் பிறந்த நீங்கள் இவ்வாறு மாறுபடுதல், உங்கள் பகை வேந்தரான சேர, பாண்டியர்க்கு உவப்பை ஊட்டுவதாகும். நீங்கள் அன்பும் அருளும் கொண்டு இப்போரை இவ்வளவோடு நிறுத்துதல் நல்லது,” என்று நயமாக நவின்றருளினார். நலங்கிள்ளி வீரவுரை புலவர் மொழிந்த பொன்னுரையை இருவரும் கேட்டனர். நலங்கிள்ளி கோவூர்கிழாரை நோக்கி, “புலவர் பெருமானே, அசரர் மிக்க பணிவுடன் என்னை வணங்கிக் கேட்பாராயின்; அவர்க்கு எனது அரசாட்சியைத் தருவேன்; அவசியம் ஏற்படின், என் இன்னுயிரையும் ஈயத் தவறேன். ஆனால், என் அமைச்சர், படைத்தலைவர் முதலியவரை மதியாமல் என்னையும் இழிவாகக் கருதி உரையாடும் ஒருவன், யாவர்க்கும் விளங்கும்படி வெற்றிடத்தில் தூங்குகின்ற புலியின் மீது இடறி விழும் குருடனைப் போல அழிவுறுதல் திண்ணம். மூங்கிலைத் தின்னும் யானை,தன் காலின் கீழ் அகப்பட்ட மூங்கில் முளையை மிதித்து அழிப்பது போல நான் என்னைப் பகைத்தாரை அவர்கள் குலத்தோடு அழிக்காதுவிடேன். நான் அவ்வாறு செய்யத் தவறுவேனாயின், பொய்யன்பு கொண்டு நடிக்கும் பொது மகளிர் நட்பைப் பெற்ற கயவருள் ஒருவன் ஆவேன்,” என்று வீர முழக்கம் செய்தான். மேலும், அப்பெரு வீரன் நம் புலவரை நோக்கி, “புலவர் ஏறே, இழிந்தவன் ஒருவனுக்கு, அவன் முன்னோர் பெற்ற வெற்றியால் அரசாட்சிச் செல்வம் கிடைப்பின், அவ் விழிந்தவன், ‘நமக்கு இத்தகைய சிறப்புக் கிடைத்ததே’ என்று பெருமிதம் கொள்வான்; தன் குடிகளை வருத்தி வரி வசூலிப்பான். மேலும், அரசாட்சி அவனுக்குச் சுமக்க முடியாத பாரமாக ஆகிவிடும். ஆனால், தன் பகைவரை எதிர்க்கும் வன்மை உடைய ஒருவன் அவ்வரசாட்சியைப் பெறின், அஃது அவனுக்குக் கோடை யில் உலர்ந்த நெட்டியைப் போல மிக்க எளிதாக இருக்கும்,” என்று கூறினான். பகைவர் நண்பராதல் கோவூர் கிழாருடைய அறிவுரையையும் நலங்கிள்ளியின் ஆண்மை உரையையும் நெடுங்கிள்ளி கேட்டான்;அவன் மனம் மாறியது; கோட்டைக் கதவினைத் திறந்து நலங்கிள்ளியைத் தழுவிக் கொண்டான்; தனது அறியாமையைப் பொறுத்தருள வேண்டினான். கோவூர் கிழார் உள்ளம் குளிர நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் நண்பராயினர். குடிமக்கள் கோவூர் கிழாரை மிக வியந்து பாராட்டினர். 6. புலவர் பாராட்டுரை அமைதிக்குப் பிறகு கோவூர் கிழார் சில நாட்கள் நலங்கிள்ளி யுடன் வாழ்ந்து வந்தார்; அப்பொழுது அவனுடைய தமிழ்மொழிப் பற்றையும் அவனுடைய உயரிய குணங்களையும் கண்டு புலவர் அகமகிழ்ந்தார்; தமது மகிழ்ச்சி தோன்ற அவனுடைய நல்லியல்பு களைப் பலபடப்பாராட்டினார். அவற்றுள் ஈண்டுச் சில காண்க: “சிறப்புடைய முறைமையால் பொருளும் இன்பமும் அறத்தின் பின்னே தோன்றும். அதுபோல உனது ஒப்பற்ற வெண் கொற்றக் குடைக்குப் பின்னே, நின்னால் வெல்லப்பட்ட சேர, பாண்டியருடைய குடைகள் வருகின்றன. உனது வளப்பம் பொருந்திய குடை முழுமதி போல உயர்ந்து தூரத்திலும் விளங்குகின்றது. நீ சிறந்த போர்வீரன். ஆதலால், நகரத்தில் தங்குவதில் உனக்கு விருப்பம் இல்லை. பெரும் பொழுது போர்க்களத்தில் உள்ள பாடி வீட்டிலேயே கழிக்கின்றாய். உன் யானைப் படைகள் கோட்டின் நுனி தேயும்படி பகைவர் மதிலைக் குத்தும் வன்மையுடையவை. உன் படைவீரர் ‘போர்’ என்ற சொல்லைக் கேட்டதும் நடனமாடத் தொடங்குகின்றனர்; அஃது எவ்வளவு தூரத்தில் நடப்பதாக இருப்பினும் உற்சாகம் குன்றாது விரைந்து செல்கின்றனர். இவை அனைத்தையும் வட நாட்டரசர் நன்கறிந்திருக்கின்றனர். அதனால் அவர்கள் தங்கள் நாடுகட்கு நீ வருதல் கூடும் என்று அஞ்சுகின்றனர்,”... “பரிசில் பெற விரும்பும் மக்களே, வாருங்கள், நாம் எல்லாரும் நலங்கிள்ளியின் சிறப்பினைப் பாடிக் களிப்போம். அப்பெருமகன் நமது சுற்றத்தாரது உணவிற்கு விலையாக வஞ்சி மாநகரத்தை அளிப்பினும் அளிப்பான்; அழகிய நம் விறலியர் சூடும் மலருக்கு விலையாகப் பாண்டியனது மாடமதுரையைத் தரினும் தருகுவன்; இவ்வுலகத்தின் உரிமையை ஆராய்ந்து பார்த்தால், இந்நாடு, வேட்கோவர் இளைஞர் கலம் வனைதற்குச் சக்கரத்தில் வைத்த பச்சை மண் திரள்போல - சோழர் பெருமானது கருத்தின் முடிபை உடையதாயிருக்கின்றது,” என இவ்வாறு கோவூர் கிழார், புலவனும் புரவலனுமான நலங்கிள்ளியின் வீரம், வள்ளன்மை முதலிய நற்பண்புகளைப் பாராட்டி மகிழ்ந்திருந்தார். 7. புலவரும் கிள்ளி வளவனும் கிள்ளிவளவன் இவன் நலங்கிள்ளியின் தமையன் என்று கருதப்படுகிறான். இவன் காவிரிப்பூம்பட்டினத்தை தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் வடபகுதியை ஆண்டு வந்தான் போலும்! இவன் காலத்தில் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு மலை நாட்டை மலையமான் திருமுடிக்காரி என்றவன் ஆண்டனன். அவன் கபிலர் முதலிய புலவர் பெருமக்களால் புகழ்ந்து பாடப் பெற்றவன். அவனுக்கும் கிள்ளிவளவனுக்கும் பகைமை ஏற்பட்டது. அதன் காரணமாகச் சோழன், எவ்வாறோ அம்மலையமான் மக்கள் இருவரைச் சிறைப்பிடித்துக் கொணரச் செய்தான்;காரிமீது தனக்கு உண்டான பகைமையை அவன் மக்களைக் கொன்று தீர்த்துக் கொள்ளலாம் என்று கருதினான்; கருதி, அம்மக்களை யானையால் இடறும்படி செய்து கொல்லத் தீர்மானித்தான். கோவூர் கிழார் இடையீடு கிள்ளி வளவனது கொடிய தீர்மானத்தைக் கேள்வியுற்ற கோவூர் கிழார்,விரைந்தோடிச் சென்று அவனைக் கண்டு, “அரசர் பெருமானே, நீ, ஒரு புறவினுக்காகத் துலாக்கோல் புகுந்து அதன் துன்பத்தைத் தீர்த்த சிபி என்னும் அரசர் பெருந் தகையின் மரபில் வந்த பெருமையுடையவன். இச் சிறுவர்கள், அறிவால் உழுது உண்ணும் புலவரது வறுமையைக் கண்டு வருந்தி, அதனைத் தீர்ப்பதற்குத் தமது செல்வத்தைப் பகுத்துண்டு மகிழும் தண்ணளி யுடைய வள்ளல்கள் மரபில் வந்தவர்கள். இவர்கள் இந்த யானையைக் கண்டு, இது தங்களைக் கொல்ல வந்திருக்கின்றது. என்பதை அறிந்து அழாமல், இதனைப் பார்த்தவண்ணம் இருக்கின்றனர்; மேலும் இங்குக் கூடியுள்ள புதியவரைக் கண்டு அஞ்சி ஒடுங்கி நிற்கின்றனர்.நான் இங்குக் கூறியவற்றை உள்ளவாறு உணர்ந்தனை ஆயின், நீ விரும்பியதைச் செய்வாயாக,” என்று அவன் உள்ளத்தில் நன்கு பதியுமாறு உரைத்தார். கிள்ளி வளவன் புலவர் பெருமானது பொன்னுரையைக் கேட்டுத்தான் கொல்ல நினைந்த இளம் பிள்ளைகளைப் பார்த்தான்; உள்ளம் உருகினான்; தான் செய்ய எண்ணிய செயலுக்கு நாணினான்; உடனே அப்பிள்ளைகளைக் கொல்லாது விட்டான்.கோவூர் கிழார் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைந்தார். ஆங்குக் குழுமியிருந்தோர் அனைவரும் புலவர் பெருந்தன்மையை உளமார வாழ்த்தினர். புலவர் பாராட்டுரை தமது நல்லுரையைச் செவிமடுத்துத் தாம்விரும்பியவாறே காரியின் மக்களைக் கொல்லாது விட்ட கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் வாயார வாழ்த்தினார்.அவர் அவனை அருளோடு நோக்கி, “யமன் ஓர் உயிரைக் கவர வேண்டுமாயின், அதற்குரிய காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பான்;அங்ஙனம் நீ காலம் பார்ப்பதில்லை; பகையரசர் மாளும்படி வேண்டிய இடத்தே கொல்ல வல்லவன்.எட்டுத் திசைகளிலும் எரிகொள்ளி எரிந்து விழுதல், மரக்கிளைகளின் இலைகள் உதிர்ந்து வாடுதல், கதிரவன் பல இடங்களில் தோன்றுதல், அஞ்சத்தக்க பறவைகள் குரல் இசைத்தல் ஆகிய அபசகுனங்களை நீ கண்டாலும், போருக்குப் போதலை விடாய்; பல் நிலத்தில் விழுதல், எண்ணெயைத் தலையில் வார்த்தல், ஆண்பன்றியின் மேல் ஏறுதல், ஆடையைக் களைதல், படைக்கலம் இருந்த கட்டில் கவிழ்தல் போன்ற நிகழ்ச்சிகளைக் கனவிற் கண்டாலும் அவற்றை அபசகுனங் களாகக் கருதாமல் அஞ்சாது போருக்குப் போகும் இயல்புடையவன்; சென்று, பகைவரைத் தவறாது வெல்லும் ஆண்மை உடையவன். உனது படையெடுப்பைக் கேட்டுப் பகைவர் நாடுஅஞ்சும்.பகை வீரர் உனது பேராற்றலை எண்ணி நடுங்குவர்; தாம் மீண்டும் இல்லம் வருதல் அரிதென்னும் எண்ணத்தால் தம் பிள்ளைகளுடைய பூப்போலும் கண்களை முத்தம் செய்வர்; தம்மனைவியர்க்குத் தமது வருத்தம் தோன்றாமல் மறைத்துக்கொண்டு போருக்குப் புறப்படுவர். இவ்வாறு வன்மைமிக்க பகைவீரரும் அஞ்சத்தக்க பேராண்மை யுடைய நின்னை, யான் என் சொல்லி வாழ்த்துவேன்!” என்று புகழ்ந்து கூறினர். 8. பாணனை ஆற்றுப்படுத்தல்1 இவ்வாறு நமது புலவர் பெருமான் கிள்ளிவளவனைப் பலபடப் பாராட்டி வந்தபொழுது ஒருநாள் பாணன் ஒருவனைச் சந்தித்தார். அவன் இசைத்தமிழ்த் தேனை வள்ளல்களது செவியாகிய பாத்திரத்திற் பெய்து மகிழ்வித்துப் பரிசில் பெறும் வாழ்க்கையுடையவன். புலவர் அவனைப் பார்த்துத் தம் வள்ளலாகிய கிள்ளிவளவனிடம் சென்று பரிசில் பெறச் செய்ய விரும்பினார்; அதனால் அவனை அன்புடன்நோக்கி, “தேன்போன்ற இனிய நரம்புத் தொடை பொருந்திய சிறிய யாழையுடைய பாணனே, ‘குளத்து ஆமையை இரும்புச் சலாகையிற் கோத்தாற் போன்றது, நுண்ணிய கோலால் பிணிக்கப்பட்ட தெளிந்த கண்ணையுடைய உடுக்கை.அதன் ஓசை இனிதாக இருக்கும். அதனைக் கேட்டு இங்குச்சிறிது தங்கி இளைப்பாறிச் செல்லுக,’ என்று சொல்லிப் பல செய்திகளைப் பற்றி என்னைக் கேட்கின்ற இரவலனே, யான் கூறுவதைக் கேட்பாயாக; தை மாதத்துக் குளிர்ந்த பொய்கையில் நீர்வற்றாது. அது போலக் கிள்ளிவளவன் அரண்மனையுள் சோறு கொள்ளக் கொள்ளக் குறையாது.அவனது வளநாடு சோறுடைத்தன்றோ? நீ அவனது புகழை நினைந்து செல்வாயாக; செல்லும் பொழுது நினது விறலியோடு பண்ணனது சிறுகுடி வழியாகச் செல்க. அப்பண்ணனும் சிறந்த கொடை வள்ளல். நீ கிள்ளிவளவனைக் காண்பாயாயின், பெருஞ்செல்வத்தைப் பெறுவாய். விறகு வெட்டிகள் விறகு வெட்டுதல் கடினம். ஆயின், நீ சோழனிடம் செல்வம் பெறுதல் அவ்வளவு கடினமன்று. ஆதலின், இப்பொழுதே எமது கோவேந்தனான கிள்ளிவளவனை நோக்கி நடப்பாயாக,” என்றார். பாணன் மனமகிழ்ச்சியடைந்து கோவூர் கிழார்க்கு நன்றி செலுத்தி, அவர் சொன்னவழியே சென்றான். முடிவுரை இங்ஙனம் கோவூர் கிழார் கிள்ளிவளவனிடம் இருந்து அவனைச் செந்தமிழ்ப் பாக்களால் மகிழ்வித்தார்; பிறகு அவனிடம் விடை பெற்று உறையூரை அடைந்து, நலங்கிள்ளியின் அவைப் புலவராக இருந்து வருவாராயினர். அடிக்குறிப்பு 1. பாடகன் ஒருவனை `இன்ன வள்ளல்பால் செல்க; பரிசளிப்பான்’ என்று செலுத்துதல். 4. ஒளவையார் 1. ஒளவையார் ஒளவையார் இவர் பெண்பாற் புலவர். இவரது இயற்பெயர் இன்னது என்பது தெரியவில்லை. ‘ஒளவை’ என்னும் சொல் ‘தாய்’ என்னும் பொருளில் வழங்கி வந்ததை நோக்க, இவரது முதுமையையும் பிறர்க்கு நல்லன அறிவுறுத்தும் ஆற்றலையும் நோக்கி அக்கால மக்கள் இவரைத் ‘தாயார்’ என்னும் பொருள்பட, ஒளவையார் என்று அழைப்பாராயினர் போலும்! ஊர் இவர் தமது காலத்தின் பெரும்பகுதியைக் கொங்கு நாட்டில் உள்ள தகடூரில் அதியமானிடம் கழித்தவர்; அவனுடைய உயிர் நண்பராக இருந்தவர்; அவன் இறக்குமளவும் அவனைவிட்டு நீங்காதவர்.ஆதலின், பாண்டிய நாட்டுப் பாரிவள்ளலுக்குப் பாண்டிய நாட்டுக் கிள்ளிவளவன், நலங்கிள்ளி இவர்கட்குச் சோணாட்டுக் கோவூர் கிழார் அவைப் புலவராக அமைந்தாற் போலவும், கொங்கு நாட்டு அதியமானுக்கு அவைப்புலவராகக் கொங்குநாட்டு ஒளவையார் அமைந்தனர் என்று கொள்ளுதல் பொருத்தமுடையது. இவர் தமது நாட்டை ‘அதியமான் நாடு’ என்றும், தமது அரசன் ‘அதியமான்’ என்றும் கூறியுள்ளதும் இதனை வலியுறுத்தும். மரபு இவர் பாணர் மரபினராவர்.பாணர் என்பவர் இசைத் தமிழை இன்பமுற வளர்த்த தமிழ்நாட்டுப் பழங்குடி மக்களாவர். இவர்கள் யாழ் வாசித்தலில் வல்லவர்; பாடலில் பண்பட்டவர்; பண் வகைகளை நன்கறிந்தவர். பண் - இசை, பாணர் - இசைவாணர்; ஆதலால், இப்பெயர் இவர்கட்குத் தொழில் பற்றி வந்ததாகும். இவருள் ‘பாணர்’ என்பவர் பாட்டில் வல்ல ஆடவராவர். பாட்டில் வல்ல பெண்டிர்க்குப் ‘பாடினியர்’ என்பது பெயர். இம் மரபினருட் சிலர் ஆடலிலும் வல்லவராக இருந்தனர். அவர்கள் ‘விறலியர்’ எனப் பெயர் பெற்றனர். விறலியர் ஆடலும் பாடலும் செய்ய வல்லவர். பொதுவாகப் பாணன் பாட, விறலி ஆடுதல் பண்டை மரபு. சுருங்கக் கூறின், பாணர் மரபினர் தமிழ் இசையையும் கூத்தையும் வளர்த்து வந்த தமிழ்ப் பழங்குடி மக்கள் என்னலாம். கல்விப் பயிற்சி சங்க காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த எல்லா மரபுகளைச் சேர்ந்த மக்களும் நன்றாகக் கல்வி கற்றிருந்தனர்; ஆடவரைப் போலவே பெண்மணிகளும் நிரம்பக் கல்வி கற்றிருந்தனர்.அவருள் பலர் கவி பாடும் ஆற்றல் பெற்று விளங்கினர். கல்வி கற்பதிலோ கற்பிப்பதிலோ அக்காலத்தில் மரபு வேறுபாடுகள் கவனிக்கப் பட்டில. இதுபற்றி முதல் அத்தியாயத்திலும் விளக்கமாகக் கூறப் பட்டதன்றோ? இச் சிறந்த கொள்கை இருந்தாற்றான் அக்காலப் பெண்மணிகள் பெரும் புலவர்களாக விளங்கினர். என்ன வியப்பு! பெருங்காக்கைப் பாடினியார், சிறுகாக்கைப் பாடினியார் என்ற பெண்பாற் புலவர் இருவரும் யாப்பிலக்கண நூல் செய்தனராம்! அவர் தம்பெரும்புலமையை என்னென்பது! இங்ஙனம் புலமையும் புகழும் பெற்ற பெண்மணிகளுள் நமது ஒளவையார் ஒருவர் ஆவர். ஒளவையார் இளமைப் பருவத்திலேயே தக்க ஆசிரியரிடம் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களை முறையாகக் கற்றுத் தேர்ந்தார்; நினைத்தவுடன் தடங்கல் சிறிதுமின்றிக் கவிபாடும் ஆற்றல் பெற்றார்; அத்துடன் தம் மரபுக்கேற்ப இசைக் கருவிகளைக் கொண்டு இனிமையாகப் பாடுவதிலும் வல்லவரானார். இயற்றமிழ், இசைத் தமிழ் ஆகிய இரண்டிலும் புலமை பெற்று விளங்கியதால், ஒளவையார் புகழ் விரைவில் தமிழ் நாட்டிற் பரவலாயிற்று. கொங்கு மண்டலத்தில் தகடூர் நாட்டை ஆண்டுவந்த அதியமான் நெடுமான் அஞ்சி என்பவன் இவரைத் தம் அவைப்புலவராக்கச் சமயம் பார்த்திருந்தான். 2. ஒளவையாரும் அதியமானும் ஒளவையாரது சீற்றவுரை ஒளவையார் தமது நாட்டு அரசனான தகடூர் அதியமானைக் காணச் சென்றார்; அவ்வள்ளலும் அவரை இனிய முகத்துடன் வரவேற்று உபசரித்தான்; உடனே பரிசில் தரின், புலவர் தன்னை விட்டுப் போவரென்று அஞ்சிப் பரிசில் தராது காலம் தாழ்த்தினன். அவனது உட்கருத்தை அறியாத ஒளவையார் சினம் கொண்டார்; தம்மை அவன் ஒரு பொருளாக மதியாது நடப்பதாக எண்ணி மனம் புழுங்கினார்; உடனே அவனது அரண்மனையை விட்டு வெளி யேறத் துணிந்தார். அதியமானை நேரிற் காண அவர் விரும்ப வில்லை எனினும், அவன் உணரும்படி சில அறிவுரைகளைக் கூற வேண்டும் என்பது அவரது அவா. அதனால் அவர் அரண்மனை வாயிற் காவலனை நோக்கி, “வாயில் காப்போய், வாயில் காப்போய், வள்ளல்கள் காதுகளில் பொருள் விளங்கும் சொற்கள் என்னும் விதையை விதைத்துத் தாம் நினைந்த பரிசிலாகிய தானியத்தை விளைவிக்கும் மனவலிமையுடையவரும், மேம்பாடு பெறுவதற்கே வருந்துகின்ற வருமான இப்பரிசில் வாழ்க்கையுடைய பரிசிலர்க்கு அடையாத வாயிலைக் காப்போய், நினது அரசனாகிய நெடுமான் அஞ்சி தன் தகுதி இன்னதுயேனும் அறியானோ? இவ்வுலகம்,அறிவையும் ஒழுக்கத்தையும் மதிக்கும் பெருநிலம் இல்லாத பாழ்நிலம் ஆக வில்லை. ஆதலால், அத்தகைய பெருமக்களை நோக்கி யாம் இன்னே புறப்படுகின்றோம். இவ்வதியமான் இல்லாவிடில் எங்கட்கு வேறு புகலிடம் இல்லையா? யாம் எத்திசைச் சென்றாலும் அத்திசையில் எம்மை வரவேற்று மரியாதையாக நடத்துபவர் பலர் உளர். இதனை உனது அரசனுக்கு அறிவிப்பாயாக.” என்று கூறிப் போதற்குப் புறப்பட்டார். அதியமான் ஆதரவு ஒளவையார் சீற்றத்தையும் அவரது ஆவேசப் பேச்சையும் வாயிற் காவலனால் கேள்வியுற்ற அதியமான் விரைந்தோடி வந்தான்; ஒளவையாரை அன்புடன்நோக்கி, “அம்மையே, உனக்குப் பரிசில்தரின், நீ என்னைவிட்டுப் போய்விடுவையே என்ற கவலையாற்றான் பரிசில் தராது காலம் தாழ்த்தினேன்; வேறில்லை,” என்று கூறினான்; பின்னர் அவரைத் தன்னுடன் அமரச் செய்து உண்பித்து, அவர் மனம் முற்றிலும் மகிழுமாறுவேண்டிய பரிசிலை நல்கினான். அவனது அருமைப்பாடு கண்ட ஒளவையார், “நாம் இவனது உள் எண்ணத்தை உணராது, மனம் வருந்திப் பல கூறிவிட்டோமே! இவன் மிகவும் உத்தமனாகக் காண்கிறான்,” என்று தமக்குள் கூறிக்கொண்டார். அன்று முதல் ஒளவையார் அதியமானது அவைப் புலவராகவும் அவனது ஆலோசனையாளராகவும் இருந்தார். ஒளவையார் பாராட்டுரை ஒளவையார் பல நாட்கள் அதியமான் அவையில் இருந்து வந்தார்; நாடோறும் அதியமானுடன் நெருங்கிப் பழகினார். ஒவ்வொரு நாளும் பழகப் பழக அவனது நட்பு, அரைக்க அரைக்க மணமிகு சந்தனக் கட்டை போல இனிதாக வளர்ந்து வந்தது. “பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையா நந்தும்” என்ற ஆன்றோர் அனுபவமொழி பொய்யாகாதன்றோ? ஒளவையார் இதனை எண்ணிஎண்ணி மகிழ்ந்தார். அவர் மகிழ்ச்சி மீதூர, “அதியமான் ஒருநாள் செல்லினும் சரி, பலநாள் செல்லினும் சரி; பலரோடு செல்லினும்சரி - எப்பொழுதும் ஒரே வகையான அன்பைச் செலுத்தும் நல்லியல்புடையவன். இவனது பரிசில், யானை கையில் எடுத்த கவளம் வாயினுள் செல்லுதல் தவறாது போல என்றும் புலவர் கையகத்ததே ஆகும். ஆதலின்,இவன் பரிசில் தரினும் ஒன்றே; நீட்டிப்பினும் ஒன்றேயாகும்,” என்று பாராட்டி மகிழ்ந்தார். கருநெல்லிக் கனி ஒருநாள் அதியமான் தன் நாட்டு மலைவளம் காணச் சென்றான்; சென்றவன், மலைப்பிளப்பில் இருந்த கருநெல்லி மரத்தைக் கண்டான். அதனில் பழுத்திருந்த கருநெல்லிக் கனி ஒன்று அவன் கவனத்தை ஈர்த்தது. அரசன் அதனை அரிதில் முயன்று பறித்தான். அவன் ஏன் அதனை அரும்பாடுபட்டுப் பறித்தான்?’ அதனை உண்பவர் உடல் வளம் பெறுவர்; நோயின்றி நீண்ட நாள் உயிரோடு இருப்பர்’ என்பது அவனுக்குத் தெரியும். ஆதலால், அதனைக் கஷ்டப்பட்டுப் பறித்தான்; பறித்தவன்,அதனைத் தானே உண்ண விரும்பவில்லை. அப்பெருமகன் தனக்குள், ‘இக்கனியை யான் உண்பேனாயின் நீண்டநாள் நல்லுடல் பெற்று இருப்பேன். ஆயின், நீண்டநாள் இருப்பின், பல நாட்டரசருடனும் ஓயாத போரிட வேண்டியவனாவேன். போர்களினால் என் குடிகட்கும் வேற்று நாட்டுக் குடிகட்கும் ஓயாத இன்னல்களே ஏற்படும். இதனை நமது ஒளவையார் உண்டு நீண்டநாள் இருப்பாராயின், என்போன்ற மன்னவர் பலருடைய அவைகளைச் சிறப்பிப்பர்; பல அரிய செந்தமிழ்ப் பாடல்களைச் செய்வர்; அவற்றால் நமது தாய் மொழி வளரும். ஆதலின், இதனை உண்ணத் தக்கவர் ஒளவைப் பிராட்டியாரே ஆவர். அவரிடம் சென்று கொடுப்பேன்,” என்று கூறிக்கொண்டு அரண்மனையை அடைந்தான்; அடைந்து, புலமை மிக்க மெல்லியலாரை முகமலர்ச்சியுடன் நோக்கி, “அம்மையே, இக்கருநெல்லிக் கனியை உண்ணுக’ என்று கூறித் தந்தான்.அதன் மகத்துவத்தை உணராத ஒளவையார், அஃது அன்பினால் தரப்பட்ட சாதாரணமான கனி என்று எண்ணி, வாங்கி உண்டார்; உண்ட பின்னர், அக்கனியின் சிறப்பினை உணர்ந்தார்; அத்தகைய சிறப்புடைய கனியைத் தான் உண்ணாது, அரசன் தம்மை உண்ணச் செய்த தியாகத்தை எண்ணி அன்புக் கண்ணீர் உகுத்தார்; உகுத்து, “வாள் ஏந்திப் பகைவரைப் போர்க்களத்தில் வெல்ல வல்ல அரசே, வீரக்கழலை அணிந்த கோமானே, பெரிய மலை உச்சியில் பெற்ற அமிழ்தம் போன்ற இக்கனியைப் பெறுதற்கு அரியது என்று எண்ணாது,அரிதின் முயன்று பறித்தனை; பறித்து அதன் பயனை நன்கு உணர்ந்த நீ அதனை உண்ணவில்லை; அதன் சிறப்பை எனக்கும் கூறவில்லை; கூறாது என்னிடம் தந்தனை; யான் அதனை உண்டு நீண்ட நாள் வாழ்தலை நீ விரும்பினாய். ஆதலின், நீலமணி மிடற்றுச் சிவபெருமான்போல நெடுங்காலம் இந்நிலவுலகில் வாழ்வாயாக” என்று மனமார வாழ்த்தி மகிழ்ந்தனர்; அவனுடைய அன்பு, அருள், வீரம், தன்னலமற்ற தன்மை, எளியவர்க்கு எளியனாம் தன்மை முதலிய நல்லியல்புகளைப் பாராட்டிப் பாக்களைப் பாடி அவனையும் அவையோரையும் அகமகிழச் செய்தனர். 3. ஒளவையார் - அரசியல் தூதர் ஒளவையார் தூது செல்லல் அதியமான் தகடூரை ஆண்டு வருகையில் தொண்டை நாட்டிற்குத் தலைநகரான காஞ்சியில் தொண்டைமான் என்பவன் அரசாண்டு வந்தான். அவன் அதியமானுடைய புகழ் யாண்டும் பரவுதலைக் கண்டான்;அவனது படைப்பலத்தை அறியாது, அவனைத் தன்னினும் எளியவன் எனத் தவறாகக் கருதினான்; அதனால் அவனுடன் போர் செய்து அவனது பரந்த புகழைக் கெடுக்க விழைந்தான். தொண்டைமான் மனநிலையை நன்குணர்ந்த அதியமான் இரங்கினான்; தன் வீரம், படை வன்மை முதலியவற்றைத் தொண்டைமானுக்குத் தூது மூலம் அறிவிக்க அவாக் கொண்டான்; கொண்டு, அதற்கு உரியவர் ஒளவையாரே எனத் துணிந்தான்; துணிந்து அவரையே காஞ்சிமா நகருக்குச் சென்று வருமாறு வேண்டினான். படைக்கலம் காட்டல் அரசன் வேண்டுகோளுக் கிணங்கிய ஒளவையார் காஞ்சி மாநகரம் சென்றார். புலவரும் அரசியல் தூதருமான அப்பெரு மாட்டியாரைத் தொண்டைமான் உள்ளக் களிப்புடன் வரவேற்றுப் பெரு விருந்தளித்தான்; அவருடன் பற்பல பொருள் பற்றித் தாராளமாகப் பேசிக் கொண்டிருந்தான்; தன் படைக்கலக் கொட்டிலைக் காட்ட விழைந்து, அவரை அங்கு அழைத்துச் சென்றான்; அக் கொட்டிலின் கதவுகளைத் திறந்து ஆயுதங்களைக் காட்டினான். அவை யாவும் புதியன; பளபளவென்று மின்னின. ‘இவற்றைக் காட்டினால் நமது படை வன்மையை ஒளவையார் நன்கறிதல் கூடும்; அறிந்து, தம் அரசனது உண்மை நிலையை உரைத்தலும் கூடும். அவ்வுரையிலிருந்து அதியமானது படைவன்மையை நாம் ஒருவாறு உணர்தல் கூடும். மேலும் இவர் நமது பேராற்றலை அவனிடம் அறிவித்தலும் கூடும்’ என்பது தொண்டைமான் எண்ணமாகும். அரசியல் தூதராக வந்த ஒளவையார் இந்த எண்ணத்தை அறிந்துகொண்டார். அப் பெண்மணியார் தொண்டைமான் படைக் கலங்களைக் காட்டக் கண்டு, தூதரது சமத்காரப் பேச்சு “இப்படைக் கருவிகள் எல்லாம் முற்றிலும் புதியன. அதனால், இவை நெய் பூசப்பட்டு, மயிற்பீலி அணியப்பட்டு, மாலை சூட்டப்பட்டுக் காவலையுடைய அரண்மனையில் அழகாக வைக்கப்பட்டுள்ளன. (இவை போரில் பயன்படாமையால் இவ்வாறு வீணே வைக்கப்பட்டுள்ளன). அதியமான் தான் பெற்ற செல்வத்தைப் பலர்க்கும் பங்கிட்டுத் தரும் இயல்புடையவன். அவனுடைய போர்க் கருவிகள் பல போர்களில் ஈடுபடுகின்றன. ஆதலால் நுனி தேய்ந்து எப்பொழுதும் கொல்லன் உலைக் களத்திற் கிடக்கின்றன.” என்று நயம்பட நவின்றார். இக்கூற்றில், தொண்டைமானைப் புகழ்வது போலப் பழித்தமையும், அதியமானைப் பழித்தது போலப் புகழ்ந்தமையும் கூர்ந்து நோக்கத்தக்கது. இதிலிருந்து ஒளவையாரது பேச்சாற்றல் எத்தகையது என்பதை எண்ணிப் பார்க்கலாம். தொண்டைமான் அம்மையாரை நோக்கி, “புலவீர், உங்கள் நாட்டில் என்னுடன் போர் புரியும் வலியார் உளரோ?” என்று வினவினான். உடனே அம்மையார், “அரசனே, நீ போர் புரியக் கருதுவையாயின், அடிக்கும் கோலுக்கு அஞ்சாது எதிர் மண்டும் அரவம் போன்ற வீர இளைஞர் பலர் இருக்கின்றனர். பொது இடத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ள மத்தளம் காற்றடித்தலால் ஓசையை எழுப்பும். அவ்வோசையைப் ‘போர் ஓசை’ என்று எண்ணி மகிழ்ந்து, உடனே படைக்கலம் தாங்கிப் போருக்குப் புறப்படும் எனது தலைவனும் இருக்கின்றான்.” என்று குறித்தார்; இக்கூற்றால் அதியமானது போர் விருப்பத்தையும் கொங்கு வீரர் சிறப்பையும் விளக்கினார். பின்னர் அவ்வரசனிடம் விடைபெற்றுத் தகடூரை அடைந்தார்; அடைந்து, காஞ்சியில் நடந்தவற்றைத்தமது வள்ளலிடம் விளக்கமாக வுரைத்தார். 4. அதியமான் - காரி போர் -1 போர் நிகழ்ச்சி அதியமான் காலத்தில் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு மலையமானாடு என்பதனை ஆண்டுவந்தவன் திருமுடிக்காரி என்பவன். இவனைப் பற்றிச் சென்ற பிரிவிற் கூறப்பட்ட தன்றோ? இவன் வள்ளன்மையிற் சிறந்திருந்தாற் போலவே வீரத்திலும் சிறந்து விளங்கினான். இவனது பெரு நாடு விரிதல் அதியனது நாட்டிற்கு ஆபத்தாகும். ஆதலின், அதியமான் இவனை விரைவில் ஒடுக்கத் தீர்மானித்தான்; தன் பண்பட்ட படைகளைத் திரட்டிச் சென்று திருக்கோவலூரைத் தாக்கினான். பெருவீரனான காரி தன் குதிரை மீது ஏறிப் போர்க்களம் குறுகினான். இருதிறத்துப் படைகட்கும் கொடிய போர் நடை பெற்றது. அதியனும் காரியும் வீராவேசத்துடன் மலைந்தனர். அதியமான் காரியைவிடச் சிறந்த போர்வீரன் ஆதலாலும், கொங்கு வீரர் போர்ப் பயிற்சி மிக்குடையார் காரியின் படை வன்மை வரவரக் குறையத் தொடங்கிற்று. பல உயிர்கள் வீணாக மதிலைக் கண்ட ஒளவையார், காரியைப் போரை விடுமாறு தூண்ட விரும்பினார்; விரும்பி அவன் வீரரை நோக்கி, ஒளவையார் அறிவுரை “அதியமான் போர் செய்ய விரும்பி உரையிலிருந்து உருவிய வாட்கள், பகைவரது தசையில் மூழ்கிப் பதிந்து நுனி தேய்ந்து அழகு கெட்டன.அவனுடைய வேல்கள் குறும்பருடைய அரண்களை வென்று, அவர் தம் நாட்டை அழித்தலால் காம்பும் ஆணியும் ஆட்டங் கண்டு கெட்டன. பகைவருடைய கோட்டைக் கதவுகள் கணைய மரத்தால் தடுக்கப்பட்ட கதவுகளை உடையன. அவற்றைக் குத்தலால் அதியமானுடைய யானைகளின் பெரிய கொம்புகளிற் பூட்டிய பூண்கள் கழன்றன. அவனுடைய பரிகள், போர்க்களததில் போரிட்ட வீரருடைய மார்பு உருவழியும்படி ஓடி உழக்குதலால், இரத்தக் கறைபட்ட குளம்புகளை உடையவாயின. அதியமான் பெரிய படையை உடையவன்; கழல் வடிவாகவும் கிண்ணி வடிவமாகவும் செய்யப்பட்ட கேடயம் உடையவன். அக்கேடயத்தில் அம்புகள் துளைத்த துளைகள் பலவாகும். இத்தகைய பகை வன்மையுடைய அரசனால் கோபிக்கப்பட்டவர் பிழைத்தல் அரிது! மருதவளம் செறிந்த உங்கள் ஊர்கள் உங்களுக்கு உரியவாக வேண்டும் என்பதை விரும்புவீராயின்,அவனுக்குக் கப்பம் கட்ட வேண்டும்; அதைக் கட்ட மறுப்பீராயின் அவன் உங்களை விடக் கூடியவன் அல்லன். அவனது பேராற்றலை நான் அறிந்தவாறு சொன்னேன். அதனை நீங்கள் உணராது போர் செய்யின், கழற் கனியால் வகிர்ந்த கூந்தலையுடைய உங்கள் மனைவியரை விட்டுப் பிரிதல் உறுதியாகும். ஆதலின், ஆராய்ந்து போர் செய்க,” என்று அதியனுடைய பெருவீரத்தை விளங்க வைத்தார். இவ்வாறு அருள் மிகுந்த அம்மையார் அறிவித்தும் பகைவர் போரை விடவில்லை. போர் உச்ச நிலையை அடைந்தது. இறுதியில் அதியமான் வெற்றி பெற்றான். திருக்கோவலூர் அவன் கைப்பட்டது. இவ்வெற்றியைப் பாராட்டிப் பரணர் என்னும் பெரும் புலவர் செந்தமிழ்ச் செய்யுள் பாடி மகிழ்ந்தார். ஒளவையார் பாராட்டுரை ஒளவையார் தம் அரசனது வெற்றிக்கு மகிழ்ந்து அவனைப் பார்த்து, “உன்னுடைய முன்னோர் தேவர்களைப் போற்றி வழி பட்டவர்; அவர்கள் பொருட்டு வேள்வியில் ஆகுதி செய்தவர்; பெறுதற்கு அரிய கரும்பை விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகத் திற்குக் கொணர்ந்தவர்; வீரக் கழலையும் பனந் தாரினையும் தேவர் தொடர்பு கொண்ட சோலையையும் பெற்றவர்; நெடிய வேலேந்திய வீரர். நீயும் அப்பெரு வீரர்களைப் போன்றவன்; சேரன், சோழன், பாண்டியன், திதியன், எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்ற ஏழரசர்க்குரிய இலச்சினையைப் பெற்றவன்; நீங்காத அரச உரிமையை உடையவன்; நீ, மேற்சொன்ன ஏழரசரை வென்ற அந்நாளிலும் நின்னைப் புலவர் பலர் வாயார வாழ்த்தினர். திருக்கோவலூரைக் கைப்பற்றிய இன்றும் நினது வலிமிக்கதோளைப் பரணன் என்னும் பெரும்புலவன் தன் கல்விப் பெருமையாற் பாடினான்.” என்று தாம் ஒரு செய்யுள் பாடி அதியனை மகிழ்வித்தார். மகப்பேறு இங்ஙனம் அதியமான் திருக்கோவலூரைக் கைப்பற்றி, வெற்றி முழக்கத்துடன் ஒளவையார் உடன்வரத் தகடூரை அடைந் தான்; அடைந்ததும், நெடுநாள் மகவு இல்லாத தனக்கு ஆண்மகவு பிறந்திருத்தலைக் கேள்வியுற்றான்; வெற்றி மகிழ்ச்சியில் மூழ்கி யிருந்த அவன், புத்திரப் பேறு பெற்றதால் உண்டான பெரு மகிழ்ச்சியுள் ஆழ்ந்தான்; தனது போர்க்கோலத்தைக் களையாமலே அந்தப்புரம் விரைந்து சென்றான்; குழந்தையின் மலர் முகத்தைக் கண்டு மகிழ்ந்தான். அப்பொழுது அவன் அருகில் இருந்த நமது மூதாட்டியார் உளம் மகிழ்ந்து, “அரசனது கையில் வேல் இருக்கின்றது; கால்களில் வீரக் கழல்கள் இருக்கின்றன. உடம்பில் பகைவரால் உண்டாக்கப்பட்ட புண்கள் இருக்கின்றன. கழுத்தின் மீது ஈரம் புலராத பசிய புண் இருக்கின்றது. குடுமியில் பனந்தோடும் வெட்சி மலரும் வேங்கைப் பூவும் இருக்கின்றன. பகைவரை வெகுண்டு பார்த்த கண், தவப் புதல்வனைத் தரிசித்த பிறகும் சிவப்பு நீங்கவில்லை. ஆதலின், இவனது சினத்திற்கு ஆளான பகைவர் தப்புதல் உண்டோ!” என்று அவனது வீரப் பொலிவைப் பாராட்டி மகிழ்ந்தார். 5. காரி - அதிகன் போர் - ஐஐ காரியும் சேரனும் அதியமான் தகடூரில் தங்கி இருக்கையில், அவனிடம் தோல்வியுற்ற மலையமான் தனது உயிர் நண்பனான சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்பவனைத் துணைபுரிய வேண்டினான். அச்சேரமான் பலமுறை காரியின் உதவி பெற்றவனாவன். ஆதலின், அவன் உடனே காரிக்கு உதவிபுரிய முன் வந்தான்; சேரநாட்டுச் சிறப்புடைய வீரர்களைக் கொண்ட படையைத் திரட்டிக் கொண்டு கொங்கு நாட்டின் மீது படையெடுத்தான். அவன் கொல்லிமலைத் தலைவனான வல்வில் ஓரியின் வலியை அடக்கி, அவன் அதியமானுக்கு உதவி செய்யாதவாறு தடுக்க விரும்பினான்; அதனால் முதலில் கொல்லிமலை நாட்டைத் தாக்கினான். சேரமான் வெற்றி இஃதறிந்த அதியமான் சேரனை நையப் புடைக்கத் தக்க சமயம் அதுவே என்றெண்ணித் தன் படைகளைத் திரட்டிச் சென்றான். கொல்லி மலை நாட்டில் ஓரியும் அதியனும் ஒருபுற மாகவும் சேரனும் காரியும் மற்றொருபுறமாகவும் நின்று மலைந்தனர். போர் மிகவும் கடுமையாக நடந்தது. அதியமானுக்கு உதவியாகச் சோழ பாண்டியரும் வந்து போரில் கலந்து கொண்டனர்.அதனால் அப்போர் பெரும்போரின் தன்மையை அடைந்தது. எனினும், பெருவீரனான சேரமான்,சோழ பாண்டியரையும் அதியமானையும் வென்று துரத்தினான்; அவர்களுடைய முரசவாத்தியத்தையும் குடையையும் கவர்ந்தான்; ஓரியைக் கொன்றான்; கொல்லிமலை நாட்டைக் கைப்பற்றிக்கொண்டான். தகடூர்க் கோட்டை போரில் தோற்ற அதியமான் நாணமுற்றுத் தன் கோட்டைக்குள் புகுந்து கொண்டனன். சேரனும் காரியும் தகடூர்க் கோட்டையை முற்றுகையிட்டனர். அதியமான் போர்புரிய முன் வரவில்லை. இந்நிலையைக் கண்ட ஒளவையார் அதியமானுக்கு அவனது பேராற்றலை உணர்த்திப் போரில் ஊக்கம் உண்டாக்க விரும்பி, “நன்றாக மலர்ந்த வெண்காந்தள் பூவுடன் மலை மல்லிகை மணங் கமழும் மலைச்சாரலில் உள்ள புலி சீறுமாயின், அதனை எதிர்த்து நிற்கவல்ல மான் கூட்டமும் உண்டோ? சூரிய மண்டிலம் கொதித்து எழுமாயின் ஆகாயத்திலோ உலகிலோ இருள் இருத்தல் உண்டோ? பாரத்தின் மிகுதியால் நிலத்தில் பதிந்த சக்கரத்தின பள்ளத்தைப் போக்குவதற்கு மணலைப் பரக்கவும், கல் பிளக்கவும் நடக்க வல்ல மனவன்மை படைத்த கடாவிற்குப் போதற்கு அருமையான துறையும் உண்டோ? இல்லை அல்லவா? அவைபோல நீ போர்க்களம் புகுந்தால், உன்னை எதிர்க்கும் வீரர் இருப்பாரோ?” என்று இதமுறக் கூறினார். அதியமான் இறப்பு ஒளவையாரது வீரவுரையைக் கேட்ட அதியமானது உள்ளம் கிளர்ச்சி அடைந்தது. அவன் உடனே போர்க்கோலம் பூண்டு, மதிற் புறத்தே தோன்றினான்; வீராவேசங்கொண்டு அமர் செய்தான். அந்த அமரில் பகைவர் விட்ட அம்புகள் அவன் உடலிற் பல இடங்களில் தைத்துப் புண்படுத்தின. அதனால் அவன் சோர்ந்து விடுவானோ என்றஞ்சிய அம்மையார் அவனைக் குறுகி, “பெருமானே, போரில் போதுமான காயங்களை அடைந்து விட்டனை. அங்ஙனம் அடையாத நின் பகைவர் போரில் இறவாமை யால் உண்டாகும் குற்றத்திற்கு ஆளாவர்; அக்குற்றம் நீங்கும்படி, நோயால் இறந்த தமது உடம்பைத் தருப்பையிற் கிடத்தி வாளால் பிளந்து அடக்கம் செய்யப்படுவர். நீ, போரில் வீரர் பலரை வெட்டி வீழ்த்த, அவர் அனைவரும் நினது தொண்டினால் துறக்கம் அடைந்தனர். நீ இனி வருந்திப் போர் செய்து வெல்ல வேண்டுவது ஒன்றும் இல்லை,’ என்று அன்புடன் கூறினார். அதுகேட்ட அதியன் மகிழ்ந்து பின்னும்போர் புரிந்தான்; இறுதியில் சேரமான் விட்ட வேல் ஒன்று மார்பிற் பாய்ந்து இறந்தான். 6. ஒளவையார் புலம்பல் அந்தோ! ஒளவையார் துயரம் அளவிடற்கரியது. அவர் அவன் பிரிவை நினைந்து பலவாறு புலம்பினார்.இரவலர்க்கு எளியனாய் இலங்கிய பேரருளாளனைப் பிரிந்தால்,யார்தாம் வருந்தார்? ஒளவையார் அவனுடைய செவ்விய குணநலங்களைச் சொல்லி வருத்தமுறலானார்: “அதியமான், சிறிய அளவில் தேன் கிடைப்பினும் அதனைத் தான் உண்ணாது எங்கட்கே விரும்பி அளிப்பான்; இனி அது கழிந்ததே! பெரிய அளவில் தேன் கிடைப்பின், முதலில் எங்கட்குப் பங்கிட்டுக் கொடுப்பான்; நாங்கள் அதனை உண்டு மகிழ்ந்து பாடுவோம்; எஞ்சிய தேனை எம்பெருமான் உண்டு மகிழ்வான்; அது கழிந்தது! சிறிய அளவினையுடைய சோறு கிடைப்பினும், பலரோடும் உண்ணும் இயல்புடையன் அதியமான்; அது கழிந்ததே! பெரிய அளவினையுடைய சோறாயின், மிகப் பலரோடு இருந்து உண்பன்; அது கழிந்ததே! உணவிருக்கும் இடம் முழுவதும் யாங்கள் உண்டு களிக்க அளிப்பான்; அது கழிந்ததே! போர்க்களம் முழுவதும் பெரு வீரனாக நடந்து திரிவான்; அது கழிந்ததே! தன் மனைவியர்க்கு மாலை சூட்டலால் கரந்தப்பூ நாறும் தூய தனது கையினால் அன்பு அதிகப்பட புலால் நாறும் எமது தலையைத் தடவி நலம் விசாரிப்பான்; அது கழிந்ததே! எம் கோவேந்தன் மார்பில் தைத்து அவனை மடியவைத்த வேல், அவன் மார்பில் மட்டும் பட்டதன்று; அது பாணரது மண்டைப் பாத்திரத்தின் துளையில் உருவியுள்ளது; இரப்போர் கையினுள்ளும் தைத்து உருவியுள்ளது; இரவலரால் புரக்கப்படும் சுற்றத்தாரது கண்மணிப் பாவையின் ஒளியை மழுங்கச் செய்துள்ளது; நுண்ணிய சொல் ஆராய்ச்சியுடைய புலவரது நாவிற் சென்று தைத்துள்ளது. எமக்கு ஆதரவாக இருந்த எமது இறைவன் எங்குச் சென்றிருக்கிறான்? அவன் இல்லாததால், இனி இத் தமிழகத்தில் பாடுவோர் இல்லை; பாடுவோர்க்கு ஒன்று ஈவோர் இல்லை. குளிர்ந்த நீர்த்துறையில் உள்ள பகன்றைப் பூவைப் பறித்துச் சூடுவார் இல்லாததால் அது வீணாகின்றது. அதுபோலப் பிறர்க்கு வழங்கிப் பயன் நுகராது மாளும் மக்கள் பலராவர். எம்மரசன் அவர் போன்றவன் அல்லன். அப்பெருமானை விட்டு எங்ஙனம் பிரிந்திருப்போம்!” “அதியமான் இல்லாததால் நாட்கள் கழித்தல் அருமை; ஆதலின், அவன் இல்லாத காலையும் மாலையும் இல்லையாகுக; அவன் இன்றி யான் உயிர் வாழ்தல் பயனில்லை; ஆதலின் என் வாழ்நாட்கள் விரைவில் ஒழிந்து போவனவாக; அதியமான் தாயத்தாரால் கொடுக்கப்பட்ட நாட்டை வேண்டா என்று சொன்னவன். அத்தகையவன், நடுகல்லில் மயிற் பீலியைச் சூட்டிப் படைக்கும் படையலை ஏற்பானோ, ஏற்கானோ!” இங்ஙனம் ஒளவையார் துயரமடைந்தபொழுது அதியமான் உடல் ஈமச் சிதை மீது வைத்து எரியூட்டப்பட்டது. அது கண்ட ஒளவையார், “ஈமத்தீ இவ்வள்ளியோனது உடலைச் சிதைக்காமல் அவியினும்” அவிக; அன்றிச் சிதையும்படி ஓங்கி எரியினும் எரிக; ஞாயிற்றை ஒப்போனது புகழ் உடம்பு ஒரு காலத்திலும் அழியாது,” என்று அவனது புகழைப் பாராட்டிக் கண்ணீர் விட்டனர். பொகுட்டெழினி இவன் அதியமான் மகன். இவன் தந்தை இறந்த பிறகு அரசனாக முடிசூட்டப்பட்டான். இவன் மிக்க இளையவன் ஆதலின், அரசியல் அநுபவம் வாய்ந்த பெரியோர் உடனிருந்து நாட்டை ஆண்டுவந்தனர். ஒளவையார் அவனை நல்வழிப்படுத் தினார்; அவனுடைய கல்விச் சிறப்பு, கொடைச் சிறப்பு முதலியன தோன்றப் பாடி,அவனை நன்முறையில் நடத்தி வந்தார். 7. நாஞ்சில் வள்ளுவன் நாஞ்சில் நாடு என்பது தமிழ் பேசப்படும் தென் திருவாங்கூர்ச் சீமையின் ஒரு பகுதியாகும்.அங்கு “நாஞ்சில்” மலை இருக்கின்றது. அதனை அரணாகக்கொண்டு அந்நாட்டை வள்ளுவன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனை ‘நாஞ்சில் வள்ளுவன்’ என்று அக்காலத்தார் அழைத்தனர். அவன் தமிழ் மொழியினிடத்தும் புலவரிடத்தும் இசைவாணரிடத்தும் சிறந்த பற்று உடையவன்; அவர்கட்குத் தன்னால் இயன்ற அளவு உதவி புரிந்து வந்தான். அம்மையார் அப்பெருந்தகையினிடம் சென்று அரிசி வேண்டினார். அவன் ஒளவையாரது பெரும் புலமையையும் புகழையும் அறிந்தவன் ஆதலின், அவர் கேட்ட அரிசி தராது, யானையைத் தந்தான். அம்மையார் அவனது கொடைச் சிறப்பை வியந்தார்: “நாஞ்சில் மலைத் தலைவன் மெய்யாகவே அறிவு மெல்லியனே; நாம் இலைக்கறி மேல் தூவச் சிறிது அரிசி வேண்டினோம்; அவனோ, பரிசிலர்க்கு உதவும் வரிசை அறிந்தவன் ஆதலால், எமது வறுமையை எண்ணியதோடு தனது தகுதியையும் எண்ணி ஒரு யானையைப் பரிசிலாகத் தந்தான். ஆதலின், ஒருவருக்கு ஒன்றைக் கொடுக்குமுன் அவரது தகுதியறிந்த கொடுத்தல் வேண்டும். பெரியோர்கள் தாங்கள் செய்யத்தகும் முறை அறிந்து செய்யார் போலும்!” என்று, அவனது வள்ளன்மையைப் பாராட்டினார்; அப் பாராட்டலோடு அவரவர் தகுதிக்கும் தேவைக்கும் தக்கவாறு பரிசில் தரவேண்டும் என்ற பாடத்தையும் குறிப்பாகச் சுட்டிக் காட்டினார்; பின்னர், அவனிடமிருந்து நீங்கிப் பல நாடுகளைப் பார்த்துக் கொண்டே சென்று, சோழ நாட்டை அடைந்தார்; சோழர் பெருமானான பெருநற்கிள்ளி என்பவன் இராஜசூயயாகம் செய்யப் போவதைக் கேள்வியுற்று உறையூரைக் குறுகினார். 8. மூவேந்தரை வாழ்த்துதல் இராஜசூய யாகம் சோழன் பெருநற்கிள்ளி சேர, பாண்டியர்க்கு நண்பன்; மிகவும் நல்லவன். ஆதலின் அவன் இயற்றிய இராஜசூய யாகத்திற்குச் சேரமான் மாரிவெண்கோ என்பவனும், பாண்டிய அரசனான உக்கிரப் பெருவழுதியும் வந்திருந்தனர். ஒருவர்க்கு ஒருவர் பகைமை கொண்டு ஓயாது போர் செய்யும் இயல்பினை யுடைய முடியுடை மூவேந்தர் மரபினர், இங்ஙனம் ஒற்றுமைப்பட்டவராய், ஓர் இடத்தில் மனமகிழ்ச்சியோடு கூடியிருத்தலைக் கண்ட நமது ஒளவையார் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்; தமது மகிழ்ச்சியை அவர்களுக்கு வெளிக்காட்ட விரும்பி, ஒளவையார் வாழ்த்துரை “தேவலோகத்தை ஒத்த நாடே தம்முடையதாக இருப்பினும், அஃது எப்போதும் தம்முரிமைப்பட்டே நடவாது; அந்நாட்டுக்கு உரியவர் அல்லராயினும், நற்றவம் செய்தவராயின், அஃது அவர்க்கே உரியதாகும். ஆதலால், நீங்கள் உங்களை யாசித்த பார்ப்பார் கை நிறையப் பூவையும் பொன்னையும் நீரோடு சொரிக; இரப்போர்க்குக் குறைவற வழங்குக; நல்லொழுக்கத்துடன் வாழ்க; நல்லொழுக்கம் என்ற தெப்பத்தாற்றான் பிறவிக் கடலை நீந்த முடியும். புலனடக்கம் பெற்ற அந்தணர் வேள்வியில் வளர்க்கும் முத்தீப்போல ஒருங்கு கூடியுள்ள மூவேந்தர்களே, உங்கள் ஒற்றுமையால் உண்டாகும் இன்பமும் அமைதியும் பிற நலன்களும் நான் எடுத்துக் கூறும் அளவினவோ? உங்கள் வாழ்நாள் விண்மீன்களிலும் பலவாகப் பெருகுக! மழைத்துளியினும் மேம்பட்டுப் பெருகுக!” என்று கூறி மனமார வாழ்த்தினர். முடியுடை மூவேந்தரும் களிப்புற்று, அம்மையார்க்கு வேண்டிய உபசாரங்களைச் செய்தனர். 9. ஒளவையாரும் பாரி மகளிரும் பாரி மகளிர் பாரி என்பவன் சங்க கால வள்ளல்களில் ஒருவன். அவன் சிறந்த கொடையாளி; எல்லாப் புலவராலும் ஏத்தெடுக்கப் பெற்றவன். அவன் பறம்பு நாட்டுத் தலைவன். அவன் புகழ் பரவுதலை வெறுத்த மூவேந்தர் அவனது மலையை முற்றுகை யிட்டனர். பாரியின் உயிர் நண்பரான கபிலர் என்னும் பிராமணர் தம்மால் இயன்றவரை சந்து செய்ய முயன்றார். அவர் முயற்சி பலன் தரவில்லை. இறுதியில் பாரி வள்ளல் கொல்லப்பட்டான்; பறம்பு நாடு பகைவர் கைப்பட்டது. கபிலர் தம்மிடம் மாணவி களாக இருந்து கவிபாடும் ஆற்றல் பெற்ற பாரி மகளிர் இருவரை உடன் அழைத்துக் கொண்டு பறம்பு மலையை விட்டு வெளிப் பட்டார்; அம்மகளிரை மணந்து கொள்ளுமாறு சிற்றரசர் பலரை வேண்டினார். அவர்களை மணப்பின் பேரரசர் பகைமை ஏற்படலாம் என்று அஞ்சிய அச்சிற்றரசர் மணத்திற்கு இசையவில்லை. மனம் வெறுத்த கபிலர் திருக்கோவலூரை அடைந்து, பார்ப்பார் சிலரு பாதுகாவலில் தம் மாணவியரை விட்டு, பாரியை நினைந்து உள்ள முருகித் தீப்பாய்ந்து இறந்தார். ஒளவையாரும் பாரி மகளிரும் ஒளவையார் இந்த விவரங்களை எல்லாம் நன்கு அறிந்தார்; உடனே திருக்கோவலூர் விரைந்து சென்றார்; பாரி மகளிரைக் கண்டார். அம்மகளிர் புலவரை முன்னரே நன்கு அறிந்தவர் ஆதலின், தம்மால் இயன்ற அளவு நன்றாக உபசரித்தார். அம்மையார் அவர்களது இரங்கத்தக்க நிலையைக் கண்டு மனம் வருந்தினர்; முல்லைக்குத் தேர் ஈந்த பெரு வள்ளலான பாரி மகளிர் தமது அரச போகத்தை இழந்து வறிய நிலையில் இருத்தலைக் காண எவர் மனந்தான் உருகாது! அம்மையார் அங்குப் பல நாள் தங்கி அவர்கள் மணத்தை முடித்தனர் என்பது கூறப்படுகின்றது. 10. முடிவுரை இங்ஙனம் ஒளவை மூதாட்டியார் தம் கல்விச் சிறப்பாலும் ஒழுக்க மேம்பாட்டாலும் தமிழ்நாட்டுப் பேரரசர். சிற்றரசர் - குடி மக்கள் இவர்தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டார்; தமது திருந்திய நாவினாற் பல பைந்தமிழ்ப் பாக்களைப் பாடினார். அப்பாடல்கள் மேற்சொன்ன சங்க நூல்களில் சிதறுண்டு கிடக்கின்றன. நீங்கள் பெரியவர்களான பிறகு அவற்றைப் படித்துப் பயன் பெறுக. இங்ஙனம் தமிழகம் மதிக்கத் தக்கவாறு பெண்பாற் புலவர் பலர் நமது தமிழ்நாட்டில் ஆயிரத்தொண்ணுhறு ஆண்டுகட்கு முன் இருந்தனர் என்பதை நினைவு கொள்ளுக. இத்தகைய புலமையுடைய தமிழ்ப் பெண்மணிகள் தோன்றினாற் றான் நமது மொழியும் சமூகமும் சிறப்புடையும். 5. பெருந்தலைச் சாத்தனார் 1. கல்விப் பயிற்சி பெயர் சங்க காலத்தில் ‘சாத்தன்’ என்ற தெய்வப் பெயர் பெரு வழக்காய் மக்கட்கு இடப்பட்டு வந்தது என்பதைக் ‘கூலவாணிகன் சாத்தன்’ சீத்தலைச் சாத்தன், பேரி சாத்தன் ‘கிரஞ்சாத்தன்’ பெருஞ்சாத்தன் என்ற பெயர்களைக் கொண்டு அறியலாம். சாத்தன் என்பது ஐயனார்க்கு வழங்கிய பெயராகும் ‘சஹஸ்தன்’ என்பது புத்த பகவானுக்கு வழங்கிய பெயர் அது தமிழில் உருமாறிச் சாத்தன் என்று வழங்கலாயிற்று என்று கூறலும் உண்டு. உண்மை எதுவாயினும் இப்பெயர் தெய்வத்தின் பெயராகும், ‘ஆர்’ விகுதி உயர்வைக் குறிப்பது. இப்புலவர் சிறிது பெரிய தலையைப் பெற்றிருந்தமையால் (திருச்சி அலமேலு நிலையம் வெளியிட்டுள்ளது, முதல் பதிப்பாண்டு குறிப்பு இல்லை) ‘பெருந்தலைச் சாத்தனார்’ எனப் பெயர் பெற்றர் போலும்! அல்லது ‘செந்தலை’ என்னும் ஊர்ப் பெயரைப் போலப் ‘பெருந்தலை’ என்பது ஊர்ப் பெயராக இருப்பினும் இருக்கலாம்! உண்மை யாதெனப் புலனாகவில்லை. ஊர் இவர் ஆவூர் மூலங்கிழார் என்ற பைந்தமிழ்ப் புலவர் மகனார் ஆவர். ஆதலில் இவரது ஊர் ‘ஆவூர்’ என்று கொள்ளலாம் அது சோழ நாட்டில் காவிரிக் கரைமீது உள்ள செழும்பகுதியாகும் இவர் பெரும் புலவரான பிறகு ‘பெருந்தலை’ என்ற ஊரில் குடி புகுந்து நிலைத்து விட்ட காரணத்தால் ‘ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்’ என்ற பெயர் பெற்றிருக்கலாம். மரபு இவர் வேளாளர் மரபினர் என்பது ‘கிழார்’ என்ற பெயரால் விளக்கமாகும். ‘அம்பர் கிழான் நாகன்’ வல்லங்கிழான் மாறன் கொண்காணம் கிழான், என வரும் வேளாளர் பெயர்களைக் காண்க கல்விப் பயிற்சி ஆவூர் மூலங்கிழார் சிறந்த தமிழ்ப்புலவர்; அவர் விண்ணந் தாயன் ‘கிள்ளி வளவன்’ பாண்டியன் - நன்மாறன், பாண்டியன் கிரஞ் சாத்தன் முதலிய பேரரசரையும் வள்ளல்களையும் பாடிப் புகழ் பெற்றவர். சிறந்த ஒழுக்கம் உடையவர். அப்பெரியார்க்கு அருந்தவப் புதல்வராகப் பிறந்தவர் ‘பெருந்தலைச் சாத்தனார்’ எனின், இவர் சிறப்பினை என்னென்பது! சாத்தனார் இளமைப் பருவத்தில் தந்தையாரிடமே முறையாக இலக்கண இலக்கியங் களைப் பாடம் கேட்டு வந்தார்; தந்தையாருடன் சென்று, அரசர்கள் வள்ளல்கள் இவர்தம் அறிமுகம் பெற்று வந்தார்; இளமை முதலே நற்குணச் செல்வராய்த் திகழ்ந்தார். அடக்கம், பொறுமை, பெரியோரிடம் மதிப்பு, தெய்வ பக்தி, குடும்பப் பொறுப்பு முதலிய நல்லியல்புகள் வாய்க்கப் பெற்றிருந்தார். 2. இல்லற வாழ்க்கை திருமணம் சாத்தனார் உரிய காலத்தில் ‘ஒத்த குணமும்’ ஒத்த கல்வியும் ஒத்த பண்பும் உடைய அம்மையார் ஒருவரை மணந்து, இல்லறம் என்னும் நல்லறத்தை இனிதாக நடத்தி வந்தார். அம்மையார் மாசற்ற கற்புடையவர்; வருவிருந்து உவப்ப ஊட்டும் நேசம் மிக்குடையவர் கணவன் நினைப்பை அறிந்து ஒழுகும் தன்மை உடையவர். ஆதலின் அவர்கள் இல்லறம் இன்பந்தரும் நல்லறமாக நடைபெற்று வந்தது. இல்லறத்தை இன்பப்படுத்தும் மக்களும் நாளடைவில் தோன்றிப் பெற்றோரை மகிழ்வித்தனர். வறுமைப்பிணி சாத்தனார் இல்லறம் இனிதாக நடந்து வந்தது அவர் சிறந்த கல்விச் செல்வம் பெற்று விளங்கினார்; ஆனால் பொருட் செல்வம் இன்றித் துன்பப்படலானார். “பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பது உண்மை அன்றோ? வீட்டுக்கு வேண்டும் பொருள்கள் குறைவற இருந்தால் அல்லவா மனைவியார் மனக் கவலையின்றி இல்லத்து ஆட்சியை இனிதாக நடத்த முடியும்? தந்தையார் காலமானார்; அதுவரை வெளிச்சென்று புரவலர்பால் ஒன்றும் கேட்டறியாது நூல்களைப் படித்து இன்புறுவதிலேயே தமது பொழுதைப் போக்கி வந்த சாத்தனார், செல்வப் பொருளுக்கு என்ன செய்வது என்பது தோன்றாது விழிக்கலானார். அவர் மான வுணர்ச்சி மிக்கவர்; ஆதலால் கல்வியறிவற்ற செல்வரிடம் சென்று தமது வறுமையைச் சித்திரித்துக் கூறிப் பொருள் கொடு என்று இரப்பதை வெறுத்தார். தாம் பிறந்த சோணாட்டை ஆண்டுவந்த சோழ மன்னரிடம் சென்று குறை இரக்கலாம் என்று எண்ணினார். ஆனால், அவ்வமயம் உறையூர்ச் சோழர்க்கும் புகார்ச் சோழர்க்கும் பூசல் நடந்து கொண்டிருந்தது. அதலால் அவர் எம்மன்னர்களிடம் சென்று உதவி பெறலாம் என்பதை எண்ணிப் பார்த்து இறுதியில் கொங்கு நாட்டை நோக்கிச் செல்லலானார். 3.கொங்கு நாட்டு யாத்திரை பெருஞ்சித்திரனார் சாத்தனார் கொங்கு நாட்டு எல்லைக்குள் புகுந்து சென்று கொண்டிருக்கையில், யானைமீது ஒருவர் எதிரே வந்தார். அவர் யார்? அவர்தாம் பெருஞ்சித்திரனார் என்ற பைந்தமிழ்ப்புலவர் அவர் நமது சாத்தனாரைப் போல வறுமைப் பிணியால் பீடிக்கப் பட்டுச் சொல்ல இயலாத துன்பத்தில் ஆழ்ந்திருந்தவர்; இறுதியில் கொங்கு நாட்டுப் பெருவள்ளலான குமணன் என்ற சிற்றரசனைச் சென்று கண்டார்; தமது வறிய நிலைமையை விளக்கினார். அருளே உருவாக வந்தாற்போன்ற குமணன், அவரது வறுமைப் பிணியைப் போக்கும் அருமருந்தாக அமைந்தான்; அவருக்கு வேண்டிய பெருஞ் செல்வத்தை ஈந்தான்; அவர் இவர்ந்து செல்வதற்கு யானை ஒன்றையும் அளித்தான்; அந்த யானைமீது இவர்ந்து தான் பெருஞ் சித்திரனார் மனமகிழ்ச்சியுடன் வந்துகொண்டிருந்தார். புலவர் ஆற்றுப்படை இங்ஙனம் வந்துகொண்டிருந்த சித்திரனார் சாத்தனாரை நன்கு அறிந்தவர் ஆதலின், அவரைக் கண்டதும் யானையி னின்றும் கிழிறங்கி வந்து தழுவிக்கொண்டு, விசாரித்தார்; புலவரது பரிதாப நிலையை நன்கு உணர்ந்தார்; உடனே அப்பெரியார் சாத்தனாரை அன்புடன் நோக்கி, “நண்பரே உமது வறுமையை எண்ணி இனி வாட வேண்டா. முதிரமலைக் கிழவனான குமண வள்ளல் சிறந்த ஒழுக்கமும் நிறைந்த கல்வியும் உடையவன்; வறியவர்க்கு அடையாத வாயிலை உடையவன்; அருளே உருக்கொண்டு வந்தாற்போன்றவன்; புலவர்களைத் தன்னுயிர் போல மதிப்பவன்; வறிஞரைக் காணச் சகியாதவன். அவனிடம் சென்று உமது வறுமை பறந்தோடச் செய்வான். என்னை வாழ்வித்த பெருவள்ளல் அவனேயாவன்,” என்று குமண வள்ளலது ஈதற் சிறப்பை விளக்கிப் புலவரை அவன் பால் ஆற்றுப்படுத்தினார். சாத்தனார், சித்திரனார் அன்புரைக்கு வாழ்த்திக் குமண வள்ளலது நாட்டை நோக்கி நடக்கலானார். 4. சாத்தனாரும் குமணனும் குமண வள்ளல் குமணன் முதிரமலை நாட்டுத் தலைவன். முதிரமலை உடுமலைப் பேட்டைத்தாலுக்காவில் உள்ளது; இப்பொழுது ‘குதிரை மலை’ எனப்படுகின்றது. குமணன் சிறந்த கொடையாளி; வறியவர்க்கு வாரி வழங்கும் இயல்பினன். இவனுடைய நல்லியல்புகட்கு முற்றும் மாறான தம்பி ஒருவன் இருந்தான். அவன் பெயர் இளங்குமணன் என்பது. அவன் தமையனுடைய அறச் செயலை அறவே வெறுத்தான்; அவனால் அரண்மனைச் செல்வம் காலியாய் விடும் என்று அஞ்சினான்; அதனால் அவனை ஒழித்துவிட்டுத் தானே அரசனாவதற்கும் துணிந்தான். இத் துணிவை எவ்வாறோ அறிந்து கொண்ட நற்குணக் குன்றான குமண வள்ளல், நாட்டைத் துறந்து காடு சேர்ந்து மறைந்து உறைவானாயினன். இளங்குமணன் அரசுக் கட்டில் ஏறினான். அக்கொடியவன் அத்துடன் அமையாது காட்டில் கரந்துறையும் தன் தமையனது தலையைக் கொய்து கொண்டு வருபவர்க்குத் தக்க பொருள் பரிசளிப்பதாகப் பறையறைவித்தான். சாத்தனாரும் குமண வள்ளலும் இந்த நிலையில், சாத்தனார் முதிரமலை நாட்டை அடைந்தார்; குமண வள்ளல் காட்டில் வசிப்பதைக் கேள்வியுற்றார்; இளங்குமணனைக் காண மனம் வராது காடு சென்றார்; அரும்பாடுபட்டுக் குமணனைக் கண்டார். கண்டு, அவனை வாயார வாழ்த்தினார். அவன் முகமலர்ச்சியுடன் அவரை வரவேற்று உபசரித்தான். புலவர் அவனுடைய உடற்கட்டு, முக ஒளி, நயமான பேச்சு, இரக்க உள்ளம் இவற்றைக் கண்டு மனம் இளகினார்; அன்பினால் பிணிப்புண்டார். அவர் வள்ளலை நோக்கித் தாம் வந்த நோக்கத்தை அறிவிக்க விரும்பியவராய். “அரசே, நான் ஆவூர் மூலங்கிழார் மகன்; ஏழைத் தமிழ்ப் புலவன். வறுமை என்னை வாட்டுகின்றது. சமைத்தல் தொழில் இல்லாமையால் அடுப்பில் காளான் பூத்துக் கிடக்கின்றது. நேரத் திற்குப் போதிய உணவில்லாமல் என் மனைவி உடல் மெலிந்து வாட்டமுற்றுக் கிடக்கின்றாள்; அவள் அந்நிலையில் இருத்தலால் தாய்ப்பால் பருக வழியின்றி என் குழந்தை அலறுகின்றது. இங்ஙனம் அழும் குழந்தை தாய் முகம் நோக்க, ‘இதற்கு என்ன செய்வது?’ என்ற முறையில் என் மனையாள் என் முகம்நோக்க, யான் நின்முகம் நோக்க ஓடி வந்தேன். நீ இரவலர் வறுமையைப் போக்கும் பொருளாளன். நீ வறுமையுற்றுக் காட்டில் வாடும் இந்தக் கொடிய நிலையில் நான் வந்தது தவறு. நான் என்ன செய்வேன்? எனது கொடிய வறிய நிலை உன்னை இந்த நிலையிற் காணச் செய்தது,” என்று கேட்போரைப் பிணித்து உள்ளத்தை உருக்கும் நிலையில் தமது வறிய நிலையை விளக்கமாக உரைத்தார். ‘தலைதனைக் கொள்க’ புலவரது உருக்கமான பேச்சு குமணன் உள்ளத்தை உருக்கி விட்டது. அவன் விழிகளில் நீர்த்துளிகள் தோன்றின. அவன் அருந்தமிழ்ப் புலவரைப் பார்த்து, “ஐயன்மீர், உமது வறுமையைக் கேட்டு வருந்துகிறேன். நான் அரியாசனத்தில் இருந்துகொண்டு இரப்போர் மனம் உவப்பப் பொருள் கொடுத்துவந்த காலத்தில் நீவிர் வந்ததில்லை; இந்நாள் வந்து துன்புறுகின்றீர். உமது துன்பத்தை எவ்வாறு போக்குவேன்?..... சரி; நான் சொல்லுவதைக் கேளும். என் தலையைக் கொண்டு வருபவர்க்குத் தக்க பரிசு தருவதாக என் அருமைத் தம்பி அறிவித்திருக்கிறான். ஆதலால், நீவிர் என் தலையை அறுத்துச் சென்று அவனிடம் அளிப்பீராயின், பெரும் பொருள் பெறலாம். உமது வறுமைப் பிணி இன்றே ஒழிந்துவிடும். கொலையஞ்சான் ஒருவன் என்னைக் கொன்று, என் தலையைக் காட்டிப் பரிசு பெறுதலைவிட, அறிவும் கல்வியும் ஒழுக்கமும் உடைய உம்மைப் போன்ற புலவர் என்னைக் கொல்லின், யான் மன அமைதி பெறுவேன். எனது தலை உமது வறுமையைப் போக்கு மெனின், யான் பெரும்பேறு பெற்றவனானேன். ஆதலின் ஐய, அன்புகூர்ந்து, மறுமொழி கூறாது, என் தலையை இந்த வாளால் அரிந்து எடுத்துச் செல்லுக,” என்று முகமலர்ச்சியுடன் உள்ளம் உருகக் கூறித் தன் வாளை எடுத்துப் புலவர் கையில் ஈந்தான். புலவர் யோசனை சாத்தனார் அரசனது வாளை வாங்கிக்கொண்டார். ஏன்? அவன் தலையை அறுப்பதற்கோ, அன்று, அன்று; அதனை வாங்க மறுப்பின்,அவன் அதனைக் கொண்டு தானே தன் தலையை அரிந்துவிடுவானோ என்ற அச்சத்தாற்றான், அருள் உள்ளம் கொண்ட அப்புலவர் மறுமொழி பேசாது வாளைப் பெற்றுக் கொண்டார்; குமணனது பேச்சு, அவரை வியப்பும் திகைப்பும் கொள்ளச் செய்தது; அவன், தலையைத் தரத்துணிந்த ஈடும் எடுப்பும் அற்ற பெருஞ் செயலால், கடையெழு வள்ளல்களினும் சிறப்புப் பெற்றனன் என்பதை உணர்ந்தார்; அவனது பேரருள் திறத்தினை எண்ணி எண்ணி வியந்தார்; வியப்பும் அன்பும் அதிகப்பட, விழிநீர் பெருக்கி நின்றார்... இங்ஙனம் நின்ற புலவர்க்குத் திடீரென யோசனை ஒன்று தோன்றிற்று. அதன்படி அவர், “இவ்வாளுடன் சென்று இளங் குமணனைக் காண்பேன்; இங்கு நடந்ததை நடந்தவாறு நவின்று அவன் உள்ளத்தை உருக்குவித்து, உடன்பிறந்தார் இருவரையும் ஒன்றுபடுத்துவேன்; குமண வள்ளலைப் பழையபடியே அரசனாகச் செய்விப்பேன்,” என்று தமக்குள் முடிவு செய்து கொண்டார். உடனே புலவர், குமண வள்ளலிடம் விடைபெற்று ஏகினார். புலவரும் இளங்குமணனும் வாளேந்திச் சென்ற சாத்தனார் இளங்குமணன் அரண்மனையை அடைந்தார். அவர் வருகையைக் காவலர் அரசற்கு அறிவித்தனர். வாளோடு வந்தனர் என்றதைக் கேட்ட இளங்குமணன், “அவரை உடனே வரவிடுக” என்றனன். புலவர் உட்சென்று அரசனைக் கண்டார். அவன் அவரை நல்வரவேற்று ஆசனம் ஒன்றில் அமரச் செய்தான்; தன் தமையனைக் கொல்லக் காடு செல்ல வந்துள்ள ஒருவராக அவரைக் கருதியதாற்றான், அவன் புலவரை இங்ஙனம் உபசரித்தான். புலவர் அவனை உள்ளத்தில் வெறுத்தனர். ஆயினும், தம் யோசனை பலிக்க வேண்டும் என்பதற்காக அவனிடம் அன்புடையவரைப் போல நடித்து, “அரசே, நீ வாழ்க! இவ்வுலகம் நிலையற்றது.மனிதர் வாழ்வும் நிலையற்றது; ஆயின், ‘நிலையுள்ளதுதான் எது?’ எனின், புகழ் ஒன்றே என்னலாம். அது வீரத்தாலும் கொடையாலும் வருவது. இதனை நன்கறிந்தே பாரி வள்ளல் போன்ற பெருமக்கள் பிறர்க்கு வரையாது வழங்கினர்; புலவரால் ஏத்தெடுக்கப் பெற்றனர். புலவர் பாக்களில் அவர்கள் பெயர்கள் பதிவு பெற்றுவிட்டன. அப்பாடல்களை வழி வழியாகத் தமிழ் மக்கள் படித்துப் பயன்பெறுவர்; பாரி போன்ற வள்ளல்களை எண்ணி வாழ்த்துவர்.இங்னம் உடல் நிலையா விடினும் புகழை நிலைபெறச் செய்த அப்பெரியோர் போன்றவர் சிலரே ஆவர். பலர் செல்வம் பெற்றவர் ஆயினும், அதனை ஈத்துவக்கும் குணம் இன்மையால், இவ்வுலகில் பெயரும் புகழும் பெறாது மறைந்தொழிந்தனர். இவ்வுண்மையை நன்றாக உணர்ந்து தான் உன் தமையன் வரையாது வழங்கி வள்ளலானான்; தமிழகம் முழுவதும் அவனது பெயரும் புகழும் பரவி நிற்கின்றன. அப்பெருமானது சிறப்பினைக் கேள்வியுற்றே, யான் சோழநாட்டில் இருந்து கொங்கு நாடு வந்தேன். நீ இதனை எண்ணிப் பார்க்க வேண்டும். அவன் நாட்டைத் துறந்து காட்டை அடைந்தனன் என்பதைக் கேள்வியுற்று, யான் அங்குச் சென்று அவனைக் கண்டேன். அப்பேரருளாளன் என் வறிய நிலைக்குக் கண்ணீர் விட்டு, “புலவனாகிய நீ வறிதே திரும்பிப் போதல், நான் நாடிழந்து அடையும் துன்பத்தைவிட கொடியதாகும்” என்று கூறி, “என் அருமைத் தம்பி என் தலையைக் கொண்டு வருபவர்க்குப் பெரும் பொருள் பரிசளிப்பதாக வாக்களித்தான். ஆதலால், இவ்வாளினால் என் தலையை அரிந்து எடுத்துச் செல்லும்” என்று தன் வாளை என் கையில் கொடுத்தான். அப்பெருந்தகையின் அருள் உள்ளத்தை வியந்தபடி, அவனுக்கு இளையனான உன் உள்ளத்தைக் காண இவ்வாளுடன் இங்கு வந்தேன்.” என்று மிகவும் உருக்கமான முறையிற் பேசினார். உடன்பிறந்தார் ஒன்றுபடுதல் இங்ஙனம் பெருந்தலைச் சாத்தனார் பரிந்துரைத்த சொற்கள் இளங்குமணனது உள்ளத்தைத் தூய்மையாக்கின. அவன் ‘உடன் பிறந்தார் பற்று’க் கொணடான்; அவன் முகம் பொலிவுற்றது. அகத்தூய்மை இருப்பின், முகம் தூய்மையாகக் காணப்படுதல் இயல்பன்றோ? அவன் அரியாசனத்திலிருந்து குதித்தெழுந்து புலவரைத் தழுவிக்கொண்டான்; “ஐயனே, என் ஆருயிர்த்துணைவனைக் காண என் நெஞ்சம் அவாவுகின்றது. அவன் அருங்குணச் சிறப்பை யான் உள்ளவாறு உணரவில்லை; அதனால் அவனுக்குக் கேடு சூழ எண்ணினேன். நான் அவனைக் கண்டு மன்னிப்புப் பெறுதல் வேண்டும்; அவனைப் பழையபடி அரசனாக்க வேண்டும். அவன் இருக்கும் இடத்திற்கு என்னை அழைத்துச் செல்லும்,” என்று கூறித் துடித்தான். புலவர் இளங்குமணனிடம் இந்த மாறுதலைத்தானே எதிர் பார்த்தார்! அதனால் அவர் மட்டற்ற மகிழ்ச்சி பொங்க, இளங்குமணனை அழைத்துக்கொண்டு காடு சென்றார்; குமணவள்ளல் இருந்த இடத்தைக் காட்டினார்; இளங்குமணன் விரைந்தோடிச் சென்று தன் தமையனைக் கட்டிக்கொண்டு கதறினான்; “ஐயனே! என் பிழையைப் பொறுத்தருளல் வேண்டும். உன்னைத் தவறாகக் கருதியதால் தவறு இழைத்தேன். நீ இன்னே என்னுடன் வந்து நினக்கு உரித்தாகிய அரசாட்சியை ஏற்றுக் கொள்க. யான் நின் அடிக்கீழ் இருந்து, நின் மொழிவழி ஏவல் கேட்பேன்,” என்று கூறிப் பணிந்து பரிவுடன் நின்றான். குமணன் தன் தம்பியிடம் இம் மனமாற்றத்தைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஆதலால், அவன் ஒன்றும் தோன்றாமல் திகைத்துச் சிறிது நேரம் நின்றான்; பின்னர், ‘சாத்தனார் அறிவு மொழிகளால் இவனது கல்மனம் கரைந்திருக்கிறது போலும்!’ என்று எண்ணினான், எண்ணித் தம்பியை மார்புறத் தழுவி அன்புக் கண்ணீர் சொரிந்தான். இருவரும் கண்ணீர் விட்டு ஒருவாறு தேறினர். சாத்தனார் சிறப்புப் பெறுதல் பின்னர், இளங்குமணனும் நகர மாந்தரும் சாத்தனாரும் பரிவுடன் வேண்ட, குமண வள்ளல் காடு நீங்கி நாடு அடைந்தான்; முன்போல அரசனாகிக் குடிகளையும் இரவலரையும் மகிழ்விக்கத் தொடங்கினான்; தான் மீட்டும் அரியணை ஏறக் காரணமாக இருந்த சாத்தனார்க்கு அவர் உள்ளம் உவப்பப் பரிசில் நல்கி மகிழ்ந்தான்; அவரை அடிக்கடித் தன் வளநாட்டிற்கு வந்து போகுமாறு வேண்டினான். புலவரும் அதற்கிசைந்து, அவனிடம் விடைபெற்றுத் தம்மூர் மீண்டான்; வறுமைப் பிணியை வள்ளலது கொடையாகிய மருந்தாற் போக்கி, மன அமைதியோடு வாழலானார். கூடிய நெடுவேட்டுவன் சாத்தனார் ஒருமுறை பாண்டிய நாட்டில் சுற்றுப்பிரயாணம் செய்தார். அப்பொழுது அவர் பாண்டியன் படைத்தலைவனும் வேட்டுவர் வழித் தோன்றலும் கோடை மலைத் தலைவனுமான கடிய நெடுவேட்டுவன் என்பவனைக் காண விழைந்தார். அவன் புலவர் போற்றும் புரவலன்; அருள் உள்ளம் கொண்ட உத்தமன். அவன் புலவரை வரவேற்று உபசரித்தான்; ஆனால், எக்காரணத் தாலோ உடனே பரிசில் தராது காலம் தாழ்த்தினான். அதனாற் புலவர் உள்ளம் கொதித்தது. கற்றவர், பிறர் தம்மை அவமதிக் கின்றனர் என்பதைக் காணப் பொறார் அல்லவா? அதனால் சாத்தனார் கோடைமலைத் தலைவனைப் பார்த்து, “அஞ்சுபவர்க்கு அரண் போன்றவனே, அஞ்சாது எதிர்ப் பவரை வாட்போரில் வெல்லும் வீரப் படையை உடையவனே, முல்லைக் கொடிகளை வேலியாகக் கொண்ட கோடைமலைத் தலைவனே, சினமிக்க நாய்களையும் வில்லையும் உடையாய், செல்வத்தாற் சிறந்த முடியுடை மூவேந்தரே ஆயினும், அவர் எங்களை வரவேற்று உபசரித்தால் அல்லாமல், அவர் தரும் பொருளை ஒரு பொருளாக மதித்துப் பெறுதற்கு விரும்போம். கடலை அடையும் மேகங்கள் நீரை முகவாது வறிதே மீள்வதில்லை. அவை போலவே தண்ணளியுடைய வள்ளலை அடையும் பரிசிலர் சுற்றம், தேரும் யானையும் செல்வமும் பெறாது மீள்வதில்லை. ஆனால், உன்னைப் பாடிவந்த யானோ, அவை பெறேனாய் வறிதே மீள்கின்றேன். வேட்டுவர் தலைவனே, நீ நோயின்றி வாழ்க!” என்று வெறுப்புடன் கூறி அகன்றார். அவர் ஈற்றில் உரைத்த “நோயின்றி வாழ்க!” என்பது தம்மைச் சபிப்பதற்கு அடையாளம் என்பதை அத்தலைவன் அறிந்து கொண்டான்; ஆதலால் அச்சமுற்று, அப் புலவரை அழைப்பித் தான்; தன் பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டித் தன்னுடன் இருந்து உண்ணச் செய்தான்; அவர் விரும்பிய வற்றை விரும்பியவாறே அளித்தான். புலவர் உள்ளம் அமைதி பெற்றது. அவர் வள்ளலை வாழ்த்திச் சென்றார். இளங்கண்டீரக்கோ - இளவிச்சிக்கோ புலவர், தோட்டிமலைத் தலைவனும் சிறந்த கொடையாளியு மான கண்டீரக்கோப் பெருநள்ளி என்பவனுக்குத் தம்பியான இளங்கண்டீரக் கோவை காணச் சென்றார். அங்கு நன்னன் என்ற வள்ளல் மரபில் வந்த இளவிச்சிக்கோ என்பவனும் உடன் இருந்தான். சென்ற புலவர் முன்னவனை அன்பு கனியத் தழுவினார்; பின்னவன் நாணமுற்றுப் புலவரை நோக்கி, “ஐய, நீர் என்னைத் தழுவாமைக்குக் காரணம் யாது?” என்று உசாவினன். உடனே புலவர் அவனை நோக்கி, “யான் இவனைத் தழுவினமைக்கும் உன்னைத் தழுவாமைக்கும் உரிய காரணங்களைக் கூறுவேன். கேட்பாயாக: இந்த இளங்கண்டீரக்கோ அருளே உருவெடுத்தாற் போன்ற வள்ளல்கள் மரபில் வந்தவன். இவன் மரபில் வந்த பெண்மணிகள், தம் கணவர் அரண்மனையில் இல்லையாயினும், அவர்களைத் தேடி வந்த பரிசிலர் மனமுவக்கும்படி வரிசைகள் நல்கும் சிறந்த பழக்கம் உடையவர்கள்; ஆதலால் இவனைத் தழுவினேன். நீயோ பரிசிலரைப் பரிந்து உபசரித்து வேண்டியன வேண்டியாங்கு அளித்த நன்னன் என்ற கொடையாளியின் மரபில் வந்தவன். ஆயினும், அந் நன்னன் செய்த கொடுஞ்செயல் ஒன்றைக் கூறுகின்றேன், கேள்; அவனது சோலையில் இருந்த மரத்தின் பசுங்காய் ஒன்று அருகில் பாய்ந்து கொண்டிருந்த நீரில் மிதந்து சென்றது. அப்பொழுது அந்நீரில் நீராட வந்த பார்ப்பனச் சிறுமி ஒருத்தி அதனை எடுத்து உண்டாள். அஃதறிந்த நன்னன் அவளைக் கொலை செய்ய முற்பட்டான். அஃதறிந்த அவள் தந்தை, தன் மகள் செய்த தவற்றுக்காக எண்பத்தொரு யானைகளும் அவளது நிறையளவு பொன்னாற் செய்த பாவை ஒன்றும் தருவதாகக் கூறித் தன் மகளை விடுமாறு வேண்டினான். நன்னன் அவ்வேண்டுகோளைப் பொருட்படுத்தாமல் அச்சிறுமியைக் கொன்றான். உன் முன்னோருள் மற்றொருவன் உலோப குணம் மிக்கவன்; புலவர் பாணர் - விறலியர் சொல்லின், வாயிற் கதவுகளை அடைத்து விடுதல் வழக்கமாகக் கொண்டிருந் தான். இத்தகையவர் தீச்செயல்கள் உன் மரபுக்கு வசையாக இருந்து வருகின்றன. ஆதலின், அந்நாள் முதலாக உங்கள் மலையைப் புலவர் பாடுதல் இல்லை. இக்காரணங்களாற்றான் உன்னை யான் தழுவாது விட்டேன்.” என்று புலவர் பெருமான் தம் மனத்தில் இருந்ததை ஒளியாமல் உரைத்தார். பின்னர், இளங்கண்டீரக்கோ புலவர்க்கு வேண்டிய பரிசில் நல்கினான். புலவர் அவற்றைப் பெற்றுக் கொண்டு அவனை வாழ்த்தி அகன்றார். மூவனை முனிதல் பெருந்தலைச் சாத்தனார் மூவன் என்ற சிற்றரசனைக் காணச் சென்றார். அவன் கோடைமலைத் தலைவனைப் போலப் புலவரை உபசரித்தான்; ஆனால், அவனைப் போலவே பரிசில் தராது காலம் நீட்டித்தான். புலவர் சினங் கொண்டார்; அவனுக்கு நல்லறிவு புகட்ட விரும்பினார். அவர் அக்குறுநில மன்னனை நோக்கி, “வள்ளலே, நினது நாடு மிக்க வளமுடையது; பொய்கைகள் மிக்குடையது. பொய்கைக்கண் மேய்ந்த நாரை நெற்போரின்கண் உறங்கும். வயலில் நெய்தற் பூக்கள் மிக்கிருக்கின்றன. நின்நாட்டு உழவர் விளைந்த நெல்லை அறுத்துவிட்டு,ஆம்பல் இலையில் மதுவை வார்த்து உண்பர்; பிறகு அருகில் உள்ள கடல் ஒலியையே தாளமாகக் கொண்டு பாடி ஆடுவர். இங்ஙனம் நாட்டிற்கு முதுகெலும் பாகவுள்ள உழவர் மகிழ்ந்தாடுகின்ற நன்னாட்டை யுடைய அரசே, பல் பழங்களை உண்ண விரும்பி, ‘வானத்தில் உயரப் பறந்து, மலைக் குகைகள் எதிரொலி முழங்கப் பறவைகள் குதூகலித்துச் செல்கின்றன. ஆயின், நாடிச் சென்ற மரம் பழுத்து ஓய்ந்துவிட்டதை அறிந்து வருந்திப் பழம் பெறாமல் மீள்கின்றன. அவற்றைப் போல பிறரால் விரும்புதற்குரிய உன் நற்குணங்கள் பலவும் கேள்வியுற்று உன்னைக் கண்டு பரிசில் பெறுவோம் என்னும் நம்பிக்கையுடன் பல காவதம் கடந்து வந்தேன். இப்பொழுது வெறுங்கையனாய் மீள்கிறேன். வாட்போரில் சிறந்த அரசே, நீ பரிசில் கொடாய் ஆயின், அதற்கு யான் வருந்தவில்லை; ஆனால், புலவரை அவமதித்ததால் துன்பப்படுவாயே என்பதற்குத்தான் வருந்துகிறேன். உனது இழி செயலை உன் அவையாரைத் தவிர மற்றையோர் அறியா திருப்பாராக!” என்று உரைத்துவிட்டுச் சென்றார். சில நாட்கள் கழிந்தன. மூவனுக்கும் சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் போர் மூண்டது. அப்போரில் மூவன் வெல்லப்பட்டான். அவன் பல், தொண்டி நகரத்துக் கோட்டைக் கதவில் பதிக்கப்பட்டது. இது பெரியோரை அவமதித்ததால் வந்த பரிசுபோலும்! புலவர் பாக்கள் பெருந்தலைச் சாத்தனார் என்ற நமது புலவர் பெருமானுடைய பாக்கள் புறநானூறு முதலிய நூல்களில் காணக் கிடக்கின்றன. அவை எளிமையும் இனிமையுமான செந்தமிழ் நடையில் இயன்றவை. இச்சாத்தனார் போன்ற புலவர் பெருமக்கள் பலர் வரலாறுகள் அந்நூல்களைக் கொண்டே தொகுத்தறிய வேண்டும். தமிழ் மாணவராகிய நீங்கள் இப்பணியில் முனைந்து, நம் தாய்மொழியாகிய தமிழை மேல் நிலைக்குக் கொண்டுவர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக! தளவாய் அரியநாத முதலியார் முதற் பதிப்பு - 1944 இந்நூல் 2003 இல் வசந்தா பதிப்பகம், சென்னை - 88. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. முகவுரை அரியநாதர் கி.பி. 16-ஆம் நூற்றாண்டுத் தமிழர்; ஏழைக் குடும்பத்திற் பிறந்தவர்; பிழைப்புக்காகப் பலநூறு மைல்கள் நடந்து விஜயநகரம் சென்றவர்; அங்குத் தம் வேலை - ஒழுக்கம் - நுண்ணறிவு இவற்றால் கணக்கர் பதவியிலிருந்து அமைச்சர் பதவி வரை பெற்று மகிழ்ந்தவர்; பின்னர் மதுரையில் நாயக்க அரசை ஏற்படுத்தி நான்கு தலைமுறை அமைச்சராகவும் தளவாயாகவும் இருந்து தமிழ் நாட்டில் ஒழுங்கான அரசியலை நடைபெறச் செய்தவர்; இராயரது பெருநாட்டுத் தளவாய்ப் பதவியும் பெற்றவர்; தம் பொதுநலத் தொண்டினால் தமிழ் மக்கள் ‘உள்ளம் கவர்ந்த கள்வர்’. தமிழ் நாட்டிற் பிறந்த இத்தமிழர், தெலுங்க நாட்டிற் பெரும்பதவிகள் பெற்று, தெலுங்க மன்னர்க்கு அமைச்சராகவும் தளவாயாகவும் இருந்து அழியாப் புகழ் பெற்றார் - வரலாற்றில் இடம் பெற்றார் எனின், அப்பேரறிஞர் வரலாறு தமிழ் மாணவர்க்கு ஒரு வழிகாட்டியாக அமையும் அல்லவா? ஆதலால், தமிழ் மாணவர்களே, உங்கள் தளவாய்ப் பெரியாரது ஆண்மை மிக்க வரலாற்றைப் படியுங்கள்; படித்துப் பயன் பெறுங்கள், அஃது உங்கள் வாழ்க்கைக்கு விளக்காக அமையும். ஆசிரியன், கா. அப்பாத்துரை. 1. பிறப்பும் இளமையும் அரியநாதர் சிறப்பு அரியநாயகர் அல்லது அரியநாதர் என்பவர் வேளாளர்; மிக எளிய குடும்பத்திற் பிறந்தவர்; வறுமையில் வாடியவர்; தம்மீது இரக்கம் கொண்ட ஆசிரியரிடம் இலவசமாகக் கல்வி கற்றவர். இவர் கால்நடையாக விஜயநகரம் சென்றார்; தென்னாட்டு மண்டலேசுவரரிடம் கணக்கர் ஆனார்; பின்னர் அரண்மனைக் கணக்கர் ஆயினார்; படிப்படியாக உயர்ந்து தளவாய் ஆனார்; பிறகு அமைச்சர் ஆனார்; இறுதியில் தமிழ் நாட்டில் நாயக்க அரசு ஏற்பட்டபொழுது அந்த அரசுக்கு அமைச்சராகவும் தளவாயாகவும் இருந்தார்; நாடு முழுவதும் பரவி இருந்த குழப்பங்களையும் அரசியல் அமைதி இன்மையையும் தம் அரசியல் நுண்ணறிவினால் அகற்றினார்; பாளையக்காரரை நிறுவி, அரசை வலுப்படுத்தினார்; கணக்கு - அரசியல் - சோதிடம் - போர் முதலிய பல துறைகளிலும் சிறந்து விளங்கினார். இவர் சிறந்த தெய்வ பக்தி உடையவர். இங்ஙனம் குடிசையிற் பிறந்த இத்தமிழர் தம் நல்ல இயல்புகளால் பல உயர் பதவிகளைத் தாங்கித் தமிழ்நாட்டில் அழியாப் புகழ் நாட்டினார் எனின், இப்பெருந் தமிழர் வரலாற்றை இக்காலத் தமிழர் ஆகிய நாம் படித்து நல்வழிப்படுதல் நல்லதன்றோ? அரியநாயர் எவ்வூரினர்? அவர் இளமைப் பருவம் யாது? அவர் ஏன் விஜயநகரம் சென்றார்? அங்கு எவ்வாறு படிப்படியாய் உயர்பதவிகளைப் பெற்றார்? தமிழ்நாட்டில் அவர் செய்த மாபெருஞ் செயல்கள் எவை? அவரது அழியாப் புகழுக்குக் காரணம் என்ன?-என்பன போன்ற கேள்விகட்கு இச்சிறுநூலில் விடை காண்போம். காஞ்சி மாநகரம் தொண்டை நாட்டின் தலைநகரம் காஞ்சி மாநகரம். இஃது ஏறத்தாழ 2500 ஆண்டுகளாக வரலாற்றுப் புகழ்பெற்ற இடம். புத்தர் பெருமான் இங்கு அறம் உபதேசித்தனராம். அசோகர் காலத்தில் காஞ்சியில் பௌத்தர் கோவில் கட்டப்பட்டது; பௌத்தப் பள்ளிகள் தோன்றின. அசோகர் காலம் முதல் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு வரை காஞ்சி பௌத்தர்க்கு உரிய சிறந்த கலைப்பீடமாகவும் சமயப் பீடமாகவும் இருந்தது. காஞ்சி சமணத்துக்கும் இடம் தந்தது. இந்நகரம் சைவம், வைணவம் என்னும் சமயங்களையும் வளமுற வளர்த்தது. காஞ்சியில் மணிமேகலை அறம் வளர்த்தாள். காஞ்சி, பல்லவர் காலத்தில் சிறந்த வடமொழிக் கல்லூரி ஒன்றைப் பெற்றுத் திகழ்ந்தது. அக்கல்லூரிக்கு இந்தியா முழுவதிலுமிருந்து மாணவர் வந்து பயின்றனர். காஞ்சி வடமொழிக் கல்வியில் பெயர் பெற்றது; வட இந்தியாவில் சிறப்புற்று விளங்கிய நாலந்தாப் பல்கலைக் கழகத்திற்குத் தர்மபாலன் என்ற பேராசிரியரை அனுப்பியது; சீனத்திற்கு அரசகுமாரர் ஒருவரைப் பௌத்த சமயப் பிரசாரகராக அனுப்பிய பெரும் பெயர் பெற்றது; அப்பர் - சம்பந்தர் - சுந்தரர் வந்து தரிசித்து மகிழ்ந்த சிவன் கோவில்களை உடையது; திருமங்கையாழ்வார் போன்ற ஆழ்வார்களால் பாடப்பெற்ற அரும்பெரும் வைணவக் கோவில்களைத் தன் அகத்தே பெற்றது; தர்க்க வாதங்களில் வல்ல சமண முனிவர் வந்து தரிசித்த ‘சமணக் காஞ்சி’யை உடையது. காஞ்சி சமயத்துறையிலும் கல்வித்துறையிலும் சிறந்து இருந்தாற் போலவே அரசியல் உலகிலும் ஒப்பற்று விளங்கியது. அது முதலில் சங்க காலச் சோழர்க்கு உட்பட்டு இருந்தது; பின்னர் அறுநூறு வருடகாலம் பல்லவர் தலைநகரமாக விளங்கியது; மீண்டும் முந்நூறு ஆண்டுகள் சோழர் கோநகரமாக இலங்கியது; அதன்பின் பாண்டியர், ஹொய்சளர் முதலியவர்க்குத் தொண்டை நாட்டுத் தலைமைப் பட்டணமாகத் திகழ்ந்தது. விஜயநகரப் பேரரசு தெற்கே பரவிய காலத்திலும் காஞ்சி தலைநகரமாகவே இருந்தது. மெய்ப்பேடு இங்ஙனம் சமயம் - கல்வி - அரசியல் துறைகளில் தலைமணியாக விளங்கிய காஞ்சி மாநகரத்துக்கு அருகில் மெய்ப்பேடு என்னும் சிற்றூர் இருக்கின்றது. அச்சிற்றூரில் வேளாளர் வாழ்ந்துவந்தனர். அவர்கள் அனைவரும் சைவ வேளாளர். அவருள் பலர் விஜயநகர அரசாட்சியில் உயர்பதவிகள் பெற்று வாழ்ந்தனர். ஆனால், சிலர் பரம ஏழைகளாகவே இருந்து வந்தனர். அத்தகைய எளிய குடும்பம் ஒன்றில் பிறந்தவரே நமது அரியநாயகர். பெற்றோர் வறுமை அரியநாயகர் தந்தையார் பெயர் காளத்தியப்பர்; தாயார் பெயர் சிவகாமி அம்மை. இருவரும் உயிரும் உடலும் போலவும் நகமும் சதையும் போலவும் மலரும் மணமும் போலவும் வாழ்ந்து வந்தனர். ஆயினும் வறுமை அவர்களை வாட்டத் தொடங்கிற்று. உலகின் பாழும் வறுமை கொடியதன்றோ? அஃது அவர்கள் வாழ்வைச் சிதைத்தது. வேளாண் குடியிற் பிறந்தவர் பிறர்க்குக் குற்றேவல் புரியார் ஆதலால் பிறரிடம் சென்று வேலை செய்து வாழ அவர்கள் விரும்பவில்லை. காளத்தியப்பர்க்குச் சிறிது நிலம் உண்டு. அதனை உழுது பயிரிட்டு மிக எளிய வாழ்க்கையை நடத்தி வந்தார். அரியநாயகர் இத்தகைய எளிய பெற்றோர்க்குப் பிறந்த அரியநாயகம் என்ற குழந்தை அரச இலக்கணங்கள் பெற்றிருந்தது. அக்குழந்தையின் இனிய முகமும் சிவந்த தோற்றமும் பருத்த உடல் அமைப்பும் பெற்றோரை மகிழ்வித்தன. அப்பெற்றோர் தமது வறுமைக்கிடையே தம் தவக் குழந்தையைச் செல்லமாக வளர்த்து வந்தனர். குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது. நாகம் காட்டிய நற்குறி ஒரு நாள் காளத்தியப்பர் வெளியே சென்றிருந்தார். அவர் மனைவியார் நீர் எடுத்துவர வெளியிற் சென்றார். குழந்தை ஒரு கந்தைத் துணிமீது தூங்கிக் கொண்டு இருந்தது. அப்பொழுது ஒரு நாகம் அங்கு வந்தது. அது வீடு முழுவதும் சென்று பார்வை யிட்டது; இறுதியில் குழந்தை இருந்த இடத்தை அடைந்தது; குழந்தையின் தலைக்குமேல் குடையைப் போலத் தன் படத்தை விரித்துக் கொண்டு குழந்தையைக் கூர்ந்து நோக்கியது. அந்தச் சமயத்தில் தாயார் உள்ளே வந்தார்; நாகத்தைக் கண்டார்; தம்மை மறந்து நின்றார். ஆள் அரவம் கேட்டதும் மாநாகம் குழந்தையை ஒருமுறை வலம் வந்து சென்றுவிட்டது. அம்மையார்க்கு அக்காட்சி கனவைப் போல இருந்தது. அவர் தம்மை மறந்தவராய்ப் பட்டமரம் போல நின்று கொண்டு இருந்தார். அவ்வமயம் காளத்தியப்பர் அங்கு வந்தார். அப்பொழுதுதான் அம்மையாருக்கு தம் உணர்வு வந்தது. அவர் தாம் கண்ட அற்புதக் காட்சியைத் தம் கணவரிடம் உரைத்தார். காளத்தியப்பர், “பெண்ணே, அரியநாயகம் அரசயோகம் பெறுவான் என்பதை நாகம் அறிவித்துச் சென்றது. எல்லாம் ஏகம்பன்1 அருள்” என்றார். அம்மையார் களிப்படைந்தார். பெற்றோர் கவலை அரியநாயகர் ஐந்து வயதுடையவர் ஆனார். ‘ஐந்தாம் வயதில் கல்வி தொடங்க வேண்டுமே, என்ன செய்வது! பள்ளிக்கு அனுப்பப் பணம் இல்லையே!’ என்று தந்தையார் கவலை கொண்டனர்; ‘செல்லப் பொருள்-கல்விப் பொருள் ஆகிய இரண்டில் கல்வியே சிறந்தது. செல்வம் இல்லாத நிலையில் கல்வியும் இல்லை ஆயின், அரியநாயகத்தின் எதிர்கால வாழ்வு பயனற்றதாகுமே!’ என்று வருந்தினர். காளத்தியப்பர் வருந்துவதைக் கண்ட அம்மையார், “ஏகம்பன் திருவருள் இதுவாயின், நாம் என்ன செய்வது! உழவுத் தொழிலையேனும் நம் சிறுவன் கற்கட்டும். நாம் வேறு என்ன செய்யலாம்!” என்றனர். அப்பொழுது காளத்தியப்பர் கல்வியின் சிறப்பையும் தேவையையும் கீழ்வருமாறு சொல்லலானார்: ‘கல்வி’ - பொருளும் வகையும் “அன்புடையாய், கல்வி என்பது ‘கல்லுதல் - தோண்டி எடுத்தல்’ என்றும் பொருள் தரும். அஃதாவது, ‘அறிவைத் தோண்டுதல் - படித்தறிதல்’ என்பதாகும். அக்கல்வி உத்தியோகக் கல்வி, தொழிற் கல்வி, ஒழுக்கக் கல்வி என மூவகைப்படும். இவற்றுள் முற்கூறிய இரண்டும் உலக வாழ்வைத் தருவன; பின்னதோ எனின், அவ்வாழ்க்கையைச் செம்மையாக்குவது. இம்மூன்றும் வாழ்க்கைக்கு உரியன. எனவே, இவைகளை உடையவரே மேலான மனிதர் என்பது சொல்லாமலே அமையும். அத்தியோகக் கல்வி கற்றவர் உத்தியோகஸ்தர்; தொழிற் கல்வி கற்றவர் தொழிலாளர்; ஒழுக்கக் கல்வி கற்றவர் சான்றோர். உத்தியோகஸ்தரும் தொழிலாளரும் ஒழுக்கக் கல்வி கற்பாராயின், பொன் மலர் மணம் பெற்றவாறு ஆவர். உயிரை வளர்ப்பதும் உலகில் நற்பெயர் எடுக்க உதவுவதும் ஒழுக்கக் கல்வியேயாகும். பெரியோர் வரலாறுகள், அறிவுரைகள், சமயக் கருத்துக்கள், உண்மையான கொள்கைகள் இவற்றை அறிவுறுத்துவதே ஒழுக்கக் கல்வி. அக்கல்வியைக் கற்று, அதன்படி நடப்பவரே அடக்கம் உடைய சான்றோர் ஆவர்.” கல்விக்கும் செல்வத்திற்கும் உள்ள வேறுபாடு “கல்வி என்பது ஒருவனது உள்ளத்தில் நிலைத்து நிற்பது. அதனைக் கண்ணால் காண முடியாது; செயலால்தான் அறிய முடியும். அது செல்வம் போல எந்த இடத்திலும் வைக்கத் தக்கதன்று; நினைத்த சமயத்தில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றத்தக்கதும் அன்று. கல்வி, செல்வம் போல நெருப்பில் வேகாதது; வெள்ளத்தால் கொண்டு போகப் படாதது; அரசராலும் கவர்ந்து கொள்ள முடியாதது; பிறர்க்கு நிறையக் கொடுத்தாலும் சிறிதும் குறைவுபடாதது; தோண்டத் தோண்ட (நீர்) ஊறும் மணற் கேணி போல-எடுக்க எடுக்க (பிறர்க்குச் சொல்லச் சொல்ல)க் குறையாமல் (அறிவு) வளர்ச்சியடைவது; கள்வரால் திருடிக் கொண்டு போக முடியாது. நாட்டை ஆளும் அரசனும் தன் ஊரளவே சிறப்புச் செய்யப் படுவான்; வெளியூரில் சிறப்புச் செய்யப் பெறான். ஆனால் கற்றவனோ எனின் செல்லும் இடம் எல்லாம் சிறப்படைவான்.” “மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின், மன்னனில் கற்றோன் சிறப்புடையன்;-மன்னற்குத் தன்தேசம் அல்லாற் சிறப்பில்லை; கற்றோர்க்குச் சென்றஇடம் எல்லாம் சிறப்பு.” என்னும் பெரியோர் பொன்மொழியும் இக்கருத்தே பற்றி வந்ததன்றோ? எனவே, கல்வியே செல்வத்தினும் சிறந்தது என்பது ஒருதலையாகும். கல்வி கற்றல் “இளமையிற் கல்’ என்றும், ‘இளமையிற் கல்வி சிலையில் எழுத்து’ என்றும் பெரியோர் கூறியுள்ளனர். இவையனைத்தும், ‘கல்வி கற்க ஏற்ற பருவம் இளமைப் பருவமே’ என்பதை நமக்குத் தெரிவிக்கவில்லையா? பெண்ணே, இளமைப் பருவத்தில்தான் பிள்ளைகளின் மனம் மாசற்று இருக்கும்; உலக விவகாரங்களில் கருத்துச் செலுத்தாத பருவமும் அதுவே. அப்பொழுது படிக்கும் படிப்புப் ‘பசுமரத்து ஆணி போல்’ நன்றாக உள்ளத்தில் அமையும். ஆகையால், இத்தகைய சிறந்த பருவத்தில் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிக் கல்வி கற்று வருமாறு பெற்றோர் செய்ய வேண்டும். பிள்ளைகளும் இத்தகைய பருவத்தை வீணாக்காமல் கல்வி கற்று, வேலையில் அமர்ந்தபின் - குடும்ப நிலையை ஏற்ற பிறகு ஒழுக்கக் கல்வி சம்பந்தப்பட்ட உயரிய நூல்களை விடாமல் கற்க வேண்டும். ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ ஆதலால், உயிரினும் மேலானதான ஒழுக்கத்தைத் தரும் சிறந்த நூல்களைத் தொடர்ந்து படிப்பதே அவர்களின் தலைசிறந்த கடமையாகும். பிள்ளைகள், அவ்வண்ணம் கற்றவற்றை அடிப்படையாகக் கொண்டே தம் வாழ்க்கை என்னும் கவினுறு மாளிகையை அமைத்தல் வேண்டும். இது கருதியே,” “கற்க கசடறக் கற்பவை; கற்றபின் நிற்க அதற்குத் தக,” என்று நம் பெரும்புலவர் வள்ளுவர் கூறிச் சென்றார். கல்வியின் பயன் “மேலும், கற்றவண்ணம் ஒழுகி, ‘நாம் அறியா வண்ணம் இவ்வுலகை நடத்துவிக்கும் (நம் சக்திக்கும் மேற்பட்ட) பொருள் ஒன்று உண்டு. அப்பொருளே இறைவன். அவன் முடிவற்ற ஞானமுடையவன். அவனை நாம் எண்ணி எண்ணி, உள்ளம் கசிந்து ஆன்ம வளர்ச்சி அடைய முயல வேண்டும்’ என்று கருதி அப்பரம்பொருளை வழிபாடு செய்பவனே மேலானவன்; உண்மையான - முழு அறிவு பெற்றவன். இங்ஙனம் உள் உணர்ச்சி பெறாதவன் கற்ற கல்வி பயனுடைய கல்வியாகாது என்பதனை, நம்மவர்க்கு வான்புகழ் தேடித் தந்த வள்ளுவனார்.” “கற்றதனால்ஆய பயன்என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்” என்னும் அடிகளால் விளக்கிப் போந்தார். “அருங்குண நங்காய், இவ்வாறு மக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் கல்வி, இவ்விரண்டிற்குமுள்ள ஏற்றத் தாழ்வு களை நன்கு உணர வேண்டும்; வாழ்க்கையை உண்மையான வாழ்க்கையாகச் செய்யும் கல்வி கற்க வேண்டும்; பின்னர்க் கற்ற வண்ணம் நின்று தம் கடமைகளைச் செய்ய வேண்டும்; இறைவன் மனம் மகிழப் பிறர்க்கு உதவி வாழ்ந்து ஈடிலா இன்பம் அடைய வேண்டும். இதுவே சிறப்புடைமையாகும். ஆதலால், அருந்தவத் தாற் பெற்ற நம் பிள்ளையை நீ எவ்வகையில் வாழவைக்க விரும்புகிறாய்? நீயே நன்கு யோசித்துச் சொல்வாய்.” இலவசக் கல்வி மெய்ப்பேட்டில் வேதியர் ஒருவர் இருந்தார். அவர் சிறந்த சிவபக்தர். காளத்தியப்பரும் சிவ பக்தர். ஆதலின் அவர் காளத்தியப்பர் மீது மிக்க அன்புடையவராக இருந்தார். அவர் காளத்தியப்பர் கவலையைப் போக்க விரும்பினார்; அரிய நாயகர்க்கு இலவசமாகக் கல்வி கற்பிக்க இசைந்தார். அப்பெரியவர் அரியநாயகரது நுட்ப அறிவைச் சில நாட்களிலே கண்டு கொண்டார். ‘எண்ணும் எழுத்தும் கண்எனத் தகும்’ என்பது பெரியோர் வாக்கு; அஃதாவது இலக்கியமும், கணிதமும் இரண்டு கண்களாகக் கருத வேண்டும் என்பது பொருள். அரியநாயகர் அந்த இரண்டிலும் வளர் பிறை போல அறிவு வளர்ச்சி பெறலானார். உடற்பயிற்சி மெய்ப்பேட்டுக் கிராமத்து இளைஞர் சிலம்பம், குத்துச் சண்டை, வாள்வீச்சு முதலியவற்றைக் கற்கப் பயிற்சிக்கூடம் ஒன்று இருந்தது. பிள்ளைகள் பலர் அக்கூடத்தில் பயிற்சி பெற்றனர். அஞ்சா நெஞ்சம் படைத்த அரியநாயகர் அக்கூடத்தில் சேர்ந்து பயிற்சி பெறலானார். அவர் பதினாறு வயதிற்குள் உடற்பயிற்சி விளையாட்டுகளையும் போர்ப் பயிற்சி விளையாட்டுகளையும் குறைவறக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். அவரே அவ்வூர் இளைஞருள் கல்வியிலும் பிற பயிற்சிகளிலும் முதல்வராக விளங்கினார். அதனால் இளைஞர் அனைவரும் அவரைப் பாராட்டினர்; தங்கட்குத் தலைவராக அவரை மதித்து அன்புடன் நடந்து வந்தனர். ஒரு நாள் மாலை மெய்ப்பேட்டுப் பிள்ளைகள் ஒரு நாள் மாலை ஊர்வெளியில் மற்போர், சிலம்பப் பயிற்சிகளைச் செய்து கொண்டு இருந்தனர். அப்பொழுது அவ்வழியே சாஸ்திரியார் ஒருவர் வந்தார். அவர் கைரேகை, சோதிடம் முதலியவற்றில் வல்லவர். அவர் பிள்ளைகள் விளையாட்டுகளைக் கவனித்தார். அரிய நாயகரின் விளையாட்டில் அவர் கருத்துச் சென்றது. அவர் அவரைக் கூர்ந்து கவனித்தார்; அவரை நெருங்கி, “தம்பீ, நான் சிலம்பத்தில் உன் கை வண்ணம் கண்டேன்; உனது கைரேகை வண்ணத்தையும் காண விரும்புகிறேன், காட்டு என்றார்.” வருவது உரைத்தல் அரியநாயகர் பெரியோரிடம் மிக்க மதிப்புடையவர்; வணக்க ஒடுக்கம் உடையவர்; அதனால் அவர் அப்பெரியவரை முதலில் வணங்கினார்; பின்னர்ச் சிறிது வெட்கத்துடன் தம் கையைக் காட்டினார். இரேகை சாஸ்திர நிபுணர் சிறுவர் கையை உற்று நோக்கினார். அரியநாயகர் அவரது முகத்தை உற்று நோக்கினார். முதியவர் முகம் நொடிக்கு நொடி வேறு பட்டது. முடிவில் அப்பெரியவர் அரியநாயகரைப் பார்த்து. “அப்பனே, நான் சொல்வதைக் கேள்; உனக்குச் சிறந்த அரசயோகம் இருக்கின்றது. நீ அரசரால் நன்கு மதிக்கப்படுவாய்; குடிகளால் போற்றப்படுவாய். அரசரை ஆக்கும் சக்தி உனக்கு உண்டாகும். உன்னால் இந்நாடு சிறப்படையும். உனது பெயரும் புகழும் இந்நாட்டில் என்றும் நிலைபெறும். நீ இச்சிறிய கிராமத்தில் இருத்தல் ஆகாது. நீ உடனே விஜயநகரம் செல்; அங்கு அரசரது சேவையில் பங்குகொள்; படிப்படியாக உயர்வைப் பெறுவாய். நீ நன்னிலையில் இருக்கும் பொழுது நான் அல்லது என் மக்களில் ஒருவன் உன்னிடம் வந்து, இப்பொழுது நான் சொன்னதை நினைவூட்டினால், உனது சம்பளத்தில் நான்கில் ஒரு பகுதியேனும் கொடுப்பாயா? பிராமணன் வாக்குப் பலித்ததே என்ற நன்றி இருக்குமா?” என்று கனிவுடன் கூறிக் கேட்டார். அரியநாயகர், “ஐயனே தாங்கள் சொல்வது போல நடந்தால் தங்களை ஒருபோதும் மறவேன். நானோ ஏழை...” என்று நாணிக் கூறினார். பெரியவர், “அப்பனே, நீ இப்பொழுது ஏழை என்பதை நான் நன்கு அறிவேன். நான் சொன்னபடி நீ விஜயநகரம் சென்று இரு; சிறிது காலத்திற்குள் அரச பதவியை அடைவாய். நீ அப்பொழுது என்னை நினைப்பாயா? நினைத்து எனக்கு உதவி செய்வாயா?” என்று கேட்டார். வாக்குறுதி அரியநாயகர் அவரை அன்புடன் நோக்கி, “பெரியீர், தாங்கள் ஐயப்படுதல் நியாயமே. ‘பணம் கைவரப் பெறின், அருள் உள்ளம் படைத்த பெரியவரும் மனம் மாறுபடுவர்’ என்று பெரியோர் கூறுகின்றார். உண்மை அப்படி இருக்க, என்னைப் போன்ற சாதாரண சிறுவனைப் பற்றித் தாங்கள் சந்தேகம் கொள்ளுதல் சரியானதே. நான் தங்கள் யோசனைப்படி விரைவில் விஜயநகரம் செல்வேன். தங்கள் ஆசியும் என் நல்வினையும் சேர்ந்து எனது நிலைமையைத் தாங்கள் கூறியது போல உயர்த்துமாயின், என் சொத்தில் கால் பகுதியை உங்கட்குத் தருதல் உறுதி. ஐயம் வேண்டா” என்றனர். ஓலையில் எழுதுதல் சாஸ்திரியார் விடவில்லை; “தம்பீ, உன் வாக்குறுதியை ஓர் ஓலையில் வரைந்து கொடு” என்றார். அரியநாயகர் அதற்கு இணங்கினார். உடனே பெரியவர் எழுத்தாணியோடு கூடிய ஒரு சூரிக்கத்தியைத் தம் இடுப்பிலிருந்து எடுத்தார்; பக்கத்தில் கீழே காய்ந்து கிடந்த ஒரு பனை ஓலையை எடுத்தார்; அதனைச் சீவித் தண்டித்தார்; ஓலை நறுக்கையும் எழுத்தாணியையும் இளைஞர் கையிற் கொடுத்தார். அரியநாயகர், “எனக்கு அரச யோகம் வந்த காலத்தில் இச்சீட்டை என்னிடம் காட்டுபவர்க்கு எனது சமீபத்தில் கால்பாகம் தட்டாது தருவேன்” என்று எழுதிக் கையெழுத்து இட்டார்; பின்னர் அதனை அன்புடன் சாஸ்திரியாரிடம் கொடுத்து வணங்கினார். சிறுவர் குறும்பு அரியநாயகர், “ஐயா, உங்கள் ஊர் - பெயர் ஒன்றும் தெரிவிக்கவில்லையா?” என்று கேட்டார். சாஸ்திரியார், “அவை உனக்கு வேண்டுவதில்லை.” என்றார். உடனே அங்கு இருந்த இளைஞருள் ஒருவன், “குறி பொய்க்குமாயின் தம்மை ஏளனம் செய்வர் என்னும் அச்சத்தால் சாஸ்திரியார் தமது முகவரி கூறவில்லை” என்றான். சாஸ்திரியார், “உண்மை பிறகு தெரியும்” என்றார். அவ்விளைஞன், “குறி பலியாவிட்டால் நீங்கள் என்ன கொடுப்பீர்கள்?” என்று குறும்பாகக் கேட்டான். முதியவர், “என் வறுமை முழுவதையுமே கொடுப்பேன். நான் வேறு என்ன தரமுடியும்? என் சோதிடத்தில் ஐயப்பட வேண்டா” என்று கூறி அகன்றார். அடிக்குறிப்பு 1. ஏகம்பன் - காஞ்சியில் உள்ள ஏகாம்பரேசுவரர் பெயர். 2 விஜயநகரப் பேரரசு இந்தியாவில் முஸ்லிம்கள் வட இந்தியா கஜ்னி முஹம்மது படையெடுப்புகளினால் நிலை தளர்ந்தது. வட இந்தியாவில் இருந்த இராஜபுத்திரரும் தமக்குள் ஒற்றுமை இன்றிச் சச்சரவிட்டுக் கொண்டு இருந்தனர். எல்லா அரசனையும் அடக்கி ஆளத்தக்க பேரரசன் அப்பொழுது வட இந்தியாவில் இல்லை. அதனால் அயல்நாட்டு முஸ்லிம்கள் எளிதாக இந்தியா வரலாயினார்; ஒற்றுமையற்ற அரசருள் ஒருசாரார் துணையைக் கொண்டு இந்தியாவில் முஸ்லிம் ஆட்சியை நிலைநாட்டினர். பின்னர்ச் சிறிது சிறிதாக வட இந்தியா முழுவதையும் தங்கள் ஆட்சிக்குக் கொணர்ந்தனர். தக்ஷிணத்தில் முஸ்லிம் ஆட்சி கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் முற்பாதியில் தக்ஷிணத்தில் பெரிய முஸ்லிம் படையெடுப்புகள் அடிக்கடி ஏற்பட்டன. அப் படையெடுப்புகளால் விந்தமலைக்குத் தெற்கே இருந்த யாதவர், காகதீயர், ஹொய்சளர், பாண்டியர் நிலை தளர்ந்தனர். யாண்டும் கொள்ளையும் குழப்பமும் நிலவின. முஸ்லிம் ஆட்சி தக்ஷிணத்தில் ஏற்பட்டது. மதமாற்றம் முதலியன நடைபெற்றன. இம்மாறுபாடுகளைக் கண்ட இந்துப் பெருமக்கள் மனம் புண்ணாயினர். இந்து மதத்தைக் காக்கத்தக்க பேரரசு ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்று அப்பெருமக்கள் சிந்திக்கலாயினர். விஜயநகர அரசு அப்பெருமக்களுள் ஹரிஹர ராயர், புக்க ராயர் என்ற இரு சகோதரரும் சிறந்தனர்.1 அவர்கள் இருவரும் துங்கபத்திரை யாற்றின் கரையை அடைந்தனர். அவர்கள் குரு வித்யாரண்யர் என்பவர். அவரது ஆசிகொண்டு அவ்விருவரும் துங்கபத்திரைக் கரையில் ஒரு நகரத்தை அமைத்தனர்; அதற்கு வித்யாநகரம் என்று தம் குருவின் பெயரை இட்டனர். அதுவே நாளடைவில் விஜயநகரம் என வழங்கலாயிற்று. நகரத்தை உண்டாக்கிய பெருமக்கள் இருவரும் அங்குப் புதிய அரசை ஏற்படுத்தி நேர்மையாக அரசாளலாயினர். முஸ்லீம் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளிலிருந்து இந்து சமயப்பற்று மிகுந்த பெருமக்களும் வீரரும் படைத்தலைவரும் பிறரும் நாளடைவில் இப்புதிய நகரத்திற்கு குடிபுகலாயினர். சகோதரர் இருவரும் தங்கள் வாள்வலியாலும், அறிவு நுட்பத்தாலும் நாட்டை விரிவாக்கி ஆண்டனர். மக்கள் தங்கள் சமயப்பற்றுடன் மன அமைதி கொண்டு வாழலாயினர். விஜயநகரம் விஜயநகரம் இயற்கை அரண்களுக்கு இடையே அமைப்புண்ட நகரம். அதனைச் சூழ மலைகளும் காடுகளும் இருந்தன. துங்கபத்திரையாறு நகரத்தின் இடையில் பாய்கின்றது. விஜயநகர அரசருள் சிறந்தவரான கிருஷ்ணதேவராயர் காலத்தில் அந்நகரம் மிக உயரிய நிலையில் விளங்கலாயிற்று. அதனைக் கண்ணுற்ற இத்தாலிய அறிஞர் ஒருவர், “விஜயநகரம் போக பூமி; துங்கபத்திரையின் வடகரையில் ‘ஆனைகுந்தி’ நகரமும் கோட்டையும் அமைந்திருக்கின்றன. தென்கரையில் விஜயநகரம் விளங்குகிறது. நாற்புறமும் குன்றுகளும் பாறைகளும் மிகுதி. அவற்றை, நகரைக் காத்து நிற்கும் கல்மதிகள் பிணைத்து நிற்கும். நகரத்தின் சுற்றளவு எழுபது கல்லுக்கு மேல் இருக்கலாம். இந்த எல்லைக்கு உட்பட்ட பெரிய நகரத்தில் பளிங்குக் கற்கள் மீது பாயும் கால்வாய்களை எங்கும் காணலாம்,” என்று வியந்து கூறியுள்ளார். கட்டடங்கள் நகரம் முழுவதிலும் வானளாவிய மாடமாளிகைகள் விளங்கின. ஆவணத் தெருக்கள் பேரியாறு போன்று காட்சி அளித்தன; மக்கள் மாலைப் பொழுதில் உலாவுவதற்கு உரிய பூங்காவனங்கள் பொலிந்திருந்தன. கண்ணைக் கவரும் சிற்பச் சாலைகள், ஓவியக் கூடங்கள், மனத்தை ஒருவழிப்படுத்தும் திருக்கோவில்கள், கல்வி அளிக்கும் பட்டி மண்டபங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், நடனசாலைகள், நாடக அரங்குகள், பல்கலைக் கழகங்கள் முதலியன அந்நகரத்தைப் போக பூமி ஆக்கின. அரண்மனை அரண்மனையைச் சுற்றி ஏழு மதில்கள் இருந்தன. அரண்மனைக்கு வலப்பக்கத்தில் மந்திர ஆலோசனைச் சபை இருந்தது. அச்சபை மண்டபம் தொண்ணூறடி நீளமும் முப்பதடி அகலமும் கொண்டது. அம்மண்டபத்தின் கோடியில் இருந்த உயர்ந்த ஆசனத்தில் இருந்து நீதிபதி வழக்குகளை விசாரித்தல் வழக்கமாம். அரசர் மாளிகைக்கு இடப்பக்கத்தில் தங்கசாலை இருந்தது. அதனில் பொன், வெள்ளி, செம்பு நாணயங்கள் அச்சடிக்கப் பட்டன. அரண்மனை கண்ணையும், கருத்தையும் கவரத்தக்க அழகுடையது. அரசரது ஆலோசனை மண்டபம், கொலு மண்டபம், நர்த்தன மண்டபம், நாடகமேடை, அரச மாதேவியர் வாழ்ந்த அந்தப்புர மாளிகைகள், பூஞ்சோலைகள், செய்குன்றுகள், செய்குளங்கள், படைக்கலக் கொட்டில் முதலிய பலவகைக் கட்டடங்களையும் இடங்களையும் தன் அகத்தே பெற்ற அரண்மனை காணத்தக்க ஒரு காட்சிக் கூடமாகும். கோவிகள் நகரத்தில் சமணர் கோவில்கள் இருந்தன. பம்பாதுசுவரர் கோவில் காணத்தக்கது. அக்கோவிலில் கருங்கற்களில் அமைந்துள்ள சிற்ப வேலையின் திறம் கண்டு களிக்கத்தக்கது. நகரத்தின் தென் கிழக்கு மூலையில் மால்யவந்தம் என்னும் மலை முகட்டில் இருகுநாத சுவாமி கோவில் இருக்கின்றது. அது மிக்க கம்பீரமாக நின்று பக்க இடங்களை அழகுபெறச் செய்கிறது. அக்கோவிலில் உள்ள சிற்பவேலை மிகச் சிறந்தது. அக்கோவிலில் ஒரு மண்டபம் உண்டு. அதன் கறுப்புத் தூண்களில் உள்ள சிற்பங்கள் பெரிதும் வியந்து பாராட்டத்தக்கவை. சமயம், வரலாறு, ஆடல் - பாடல், போர் இவைகளை உணர்த்தும் அச் சிற்பங்களும் பிற ஓவியங்களும் அக்காலச் சிற்ப-ஓவியக் கலைகள் அடைந்த உயர்வினைக் காட்டத்தக்கவை ஆகும். துங்கபத்திரைக் கரையில் விஜய விட்டல சுவாமி கோவில் இருக்கிறது. அக்கோவிலில் ஓர் இரதம் இருக்கின்றது. அஃது ஒரே கல்லில் செய்யப்பட்டது. அதன் உருளைகளும், அடித் தட்டுகளும் மேல் விமானமும், சிற்பங்களும் அக்காலச் சிற்பிகள் ஆற்றலை விளக்கத்தக்கவை. அரண்மனைக்குள் இராமசுவாமி கோவில் இருந்தது. அதன் அழகிய அகன்ற மண்டபங்கள் அக்கோவிலுக்குத் தனிச்சிறப்பை அளித்தன. கோவில் மதிற் சுவர்களில் வீரர் உருவங்களும் குதிரைகளின் வரிசைகளும் யானைகளின் வரிசைகளும் ஒன்றன் கீழ் ஒன்றாகத் தெளிவாகத் தெரியும்படி செதுக்கப்பட்டு இருந்தன. நகரத்தில் அநுமார் கோவில்கள் பல. வாலி, சுக்கிரீவன் ஆண்ட கிஷ்கிந்தை என்ற இடத்திற்றான் நகரம் அமைந்திருந்தது. அதனால் அநுமார் கோவில்கள் பல காணப்பட்டன. பாறைகளில் எல்லாம் அநுமார் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. சுற்றுப்புற மலைகளில் ஆயிரக்கணக்கான குரங்குகள் வாழ்ந்து, தம் பழைமையை மெய்ப்பித்தன; இன்றும் மெய்ப்பிக்கின்றன. கடைத்தெருக்கள் அரண்மனைக்குப் பக்கத்தில் எதிர் எதிராக நான்கு கடைத்தெருக்கள் இருந்தன. ஒவ்வொரு தெருவும் மிக்க நீளமாகவும் அகலமாகவும் இருந்தது. கடைத்தெருக்களின் கோடியில் குளம் ஒன்று இருந்தது. அதற்குப் போகும் பாதைகள் அழகானவை. ஒவ்வொரு தொழிலை மேற்கொண்ட மக்களுடைய கடைகளும் வரிசை வரிசையாக இருந்தன. உயர்தர நகைவகைகளும் நவரத்தின வகைகளும் நகரத்தில் சாதாரணமாக விற்கப்பட்டன. நகரத்தில் ரோஜா மலர்கள் நாளும் விற்பனையாயின. மலர்க்கடைகளே மிகுதியாக இருந்தன. அரசர் கொலு மண்டபம் கொலு மண்டபத்தைக் கண்டு வியந்த அயல்நாட்டு யாத்திரிகர் பலர் பாராட்டி எழுதியுள்ளனர். அங்கு ஒரு பக்கம் ஆடல் - பாடல்கள் நடந்து கொண்டிருக்கும்; மற்றொரு பக்கம் வேதசாஸ்திர விற்பன்னர் தம் வாதங்கள் நடைபெறும்; பிறிதொரு பக்கம் அரசரைக் கண்டு அன்புகொள்ள வந்த அந்நிய நாட்டுத் தூதுவர் கூட்டம் காத்திருக்கும். மாகாணத் தலைவர்கள் அனுப்பிய தூதரும், அரசாங்க உயர் அலுவலாளரும் அரசியல் செய்திகளைச் சொல்ல ஒரு பக்கம் காத்திருப்பர். துங்கபத்திரை முதல் குமரி முனைவரை இருந்த சிற்றரசர் விடுத்த தூதுவர் ஒரு பக்கம் காத்திருப்பர். விஜயநகரப் பேரரசர் இங்ஙனம் பலவகையாலும் சிறப்புற்று விளங்கிய விஜய நகரத்தைத் தலைநகராகக் கொண்ட அரசர்கள் தங்கள் வாள் வன்மையாலும், படை வன்மையாலும் தென் இந்தியா முழுவதையும் வென்று ஆண்டு வந்தனர். அவர்கட்கு ‘மஹாராயர், மஹாராயலு’ என்ற பட்டப் பெயர்கள் வழங்கின. அவர்கள் கருநாடகத் தெலுங்கு மன்னர்கள், பேரரசர்க்கு அடுத்தபடி மாகாணங்களை ஆண்டவர் ‘மண்டலேசுவரர்’ எனப்பட்டனர். மாகாண அரசாங்கங்களை நடு அரசாங்கம் இணைத்து நின்றது. பேரரசரிடம் ஏறக்குறையப் பதினைந்து லக்ஷம் போர்வீரர் இருந்தனர்; யானைகள் ஆயிரக்கணக்கில் இருந்தன; குதிரைகளும் ஆயிரக்கணக்கில் வாழ்ந்தன. எனவே, பேரரசரிடம் யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, என்னும் மூவகைப் படைகளும் இருந்து வந்தன. முதலாம் புக்கராயர் புத்திருரான கம்பண உடையார் என்பவர் அப்படை வன்மை கொண்டு சேர -சோழ-பாண்டிய நாடுகளை வென்றார்; தென்னாட்டு மஹா மண்டலேசுவராக இருந்தார். கிருஷ்ணதேவராயர் காலத்தில் தென்னாட்டு மஹா மண்டலேசுவரர் நாகம நாயக்கர் என்பவர். கிருஷ்ணதேவராயர் இவர் ஏறக்குறையக் கி.பி. 1509-ல் பேரரசர் ஆனார். அப்பொழுது இவருக்கு வயது இருபது. சிங்கக்குட்டிக்கு வீரம் இயல்பாகவே பிறப்புடன் பிறந்து வளர்ந்து வருதல் இயல்பு அல்லவா? அது போலவே அரசமரபில் வந்த கிருஷ்ண தேவராயர் அஞ்சாமை, வீரம், அரசியல் அறிவு முதலிய பண்புகள் வாய்க்கப் பெற்றிருந்தார். அவர், பேரரசுக்கு அடங்காமல் இருந்த சிற்றரசர்களை அடக்கி ஆண்மை காட்டியவர்; வடக்கே பிறவிப் பகைவராக இருந்த முஸ்லிம் அரசர் ஐவரையும்2 நடுங்க வைத்தவர். இவருடைய பெருவெற்றிகட்கும், செங்கோல் அரசுக்கும் காரணமாக இருந்தவர் அப்பாஜி என்ற திம்மரசு என்னும் அமைச்சர் ஆவர். இராயர் போர்ச்சுகீசியர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்து அவர்களைக் கோவாவில் நிலைக்க வைத்தார். போர்ச்சுகீசியர் எழுதிவைத்த செய்திகளிலிருந்து இவரது வரலாறு, ஆட்சிமுறை, பேராண்மை முதலியவற்றைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. இப்பேரரசர் பெரும் புலவர். இவரது அவையில் பெரும் புலவர் எண்மர் இருந்தனர். அவர்கள் (1) அல்லசான் பெத்தன்னா, (2) நந்தி திம்மன்னா, (3) அய்யலராஜு ராமபத்திரகவி, (4) தூர்ஜடி, (5) மாதய்யகாரி மல்லன்னா, (6) பிங்கலி சூரன்னா, (7) இராமராஜ பூஷணன், (8) தெனாலி இராமகிருஷ்ணர் என்பவர். அவர்கள் ‘அஷ்ட கஜங்கள்’ எனப்பட்டனர். அப்பெருமக்கள் கூட்டுறவினால் பேரரசர் புலவராகி, ஆண்டாள் வரலாற்றைத் தெலுங்கில் பாடியுள்ளார்.3 இவரது மகளான இலக்ஷ்மிதேவி என்பவளும் தெலுங்கில் சிறந்த புலமை பெற்றவள். இங்ஙனம் பலவகையிலும் புகழ்பெற்று விளங்கிய கிருஷ்ணதேவராயர் கி.பி. 1509 முதல் 1530 வரை பேரரசராக இருந்தார். இப்பேரரசர் காலத்திற்றான் நமது அரியநாயகர் விஜயநகரம் செல்ல வேண்டும் என்று சோதிடர் கூறினார். அடிக்குறிப்புகள் 1. இவர்களுடன் பிறந்தவர் வேறு மூவர் இருந்தனர். அவர்கள் கம்பணர், முத்தப்பர், மாரப்பர் என்பவர். 2. ஐவர் - அஹ்மத்நகர், விஜப்பூர், கோல்கொண்டா, பிதார்பிரார் என்ற பெயர்களைக் கொண்ட நாடுகளை ஆண்டவர். 3. அதன் பெயர் ஆமுக்தமால்யதா என்பது. 3. விஜயநகரத்தில் அரியநாயகர் தெலுங்கு கற்றல் அரியநாயகர் சோதிடரைவிட்டுப் பிரிந்து வீடு வந்து சேர்ந்தார்; சோதிடர் கூறிய செய்தியைப் பெற்றோரிடம் உரைத்தார். இராயரிடம் சென்று சேவை செய்வதெனில், தெலுங்கு மொழியில் பயிற்சி பெற வேண்டும். அக்காலத் தமிழகத்தில் இராயர் ஆட்சி பரவி இருந்தது; மண்டலேசுவரர் முதல் அரசியல் உத்தியோகஸ்தர் அனைவரும் தெலுங்கில் வல்லவராக இருந்தனர்; கல்விகற்று தமிழ் அறிஞரும் அரசியல் மொழியாகிய தெலுங்கைக் கற்றிருந்தனர். ஆதலின், அரியநாயகர் தெலுங்கு கற்றுக் கொள்ள வசதி இருந்தது. நுட்ப அறிவு வாய்ந்த அவர் எளிதில் தெலுங்கு மொழியைக் கற்றுக் கொண்டார்; அதில் திறம்படப் பேசவும் எழுதவும் ஆற்றல் பெற்றார். பெற்றோர் கலக்கம் தம் முதுமையில் தம் தவமகனை எப்படிப் பிரிந்து இருப்பது என்பதே பெற்றோர்க்குப் பெருங்கவலையைத் தந்தது. காஞ்சிபுரத்திற்கும், விஜய நகரத்திற்கும் நெடுந்தொலைவு; பல நூறு மைல்களைக் கடந்து செல்ல வேண்டும். மிகவும் எளிய தம் மகனை அவ்வளவு தூரம் நடந்து செல்ல விடுவதற்கு அப்பெற்றோர் மனம் துணியவில்லை. இளைஞர் முறையீடு அரியநாயகர் பெற்றோர்க்கு ஆறுதல் கூறினார். ஆயினும் அவர்கள் மனத்துணிவு கொள்ளவில்லை. ஒருநாள் இளைஞர் தம் பெற்றோரை நோக்கி, “என் அருமைத் தாய் தந்தையரே, நான் உங்களுடன் இங்கு இருந்து வறுமையைத்தானே நுகர வேண்டும். சோதிடர் கூறியபடி விஜயநகரம் செல்லின், நல்ல நிலைமை அடையலாம் அல்லவா? அப்பொழுது நமது குடும்பம் சுகமாக வாழ வழி உண்டாகும் அல்லவா? சோதிடர் கூற்றுப் பொய்த்துப் போயினும், சாராரண உத்தியோகஸ்தனாகவாவது நான் இருக்க முடியும்; உங்களுக்கு வேண்டும் உதவி செய்யத் தவறேன். ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு,’ என்று சொல்லிப் பொருள் ஈட்ட ஊக்கிய இத்தமிழ் நாட்டிற் பிறந்த நீங்கள், என்னைப் போகவிடாது தடை செய்தல் அறமன்று; மனம் துணிந்து என்னை ஆசிகூறி அனுப்புங்கள்” என்று உருக்கமாக உரைத்தார். பிரியா விடை தம் பிள்ளையின் உருக்கமான பேச்சைக் கேட்ட பெற்றோர் அவரது பிடிவாதத்தைக் கண்டு அவர் விருப்பத்துக்கு உடன்பட்டனர். அரியநாயகரின் ஆசிரியர் ஒரு நல்ல நாளைக் குறித்தார். அந்த நாளில் அரியநாயகர் அன்னையார், தந்தையார், குரு ஆகிய மூவர் பாதங்களிலும் தம் முடிபடப் பணிந்து நின்றார். மூவரும் ஒருபால் மனமகிழ்ச்சியுடனும் மற்றொருபால் அவரைப் பிரியவேண்டுமே என்ற வருத்தத்துடனும் போராடினர்; ஆனால் இளைஞர் அகமும் முகமும் மலர்ந்திருத்தலைக் கண்டு மன ஆறுதல் பெற்று அவருக்கு ஆசி கூறி அனுப்பினர். வழிப் பிரயாணம் அரியநாயகர் பதினாறு வயது இளைஞர்; நல்ல உடற்கட்டு உடையவர்; பரந்த மார்பு முறுக்கு அமைந்த நரம்புக்கட்டும் பெற்றவர். அவர் விழிகள் பரந்த பார்வை உடையவை; உள்ளம் அஞ்சாமையை அணியாகக் கொண்டது. ஆதலின் அவர் தனிப் பிரயாணம் செய்ய அஞ்சவில்லை; அவ்விளைஞர் தம் சிலம்பப் சுழியையும், உடைவாளையும் எடுத்துக் கொண்டார்; பெற்றோர் - குரு - சோதிடர் இவர்தம் ஆசீர்வாதத்தின் துணையைக் கொண்டு புறப்பட்டார். அக்காலத்தில் விஜயநகரம் செல்வது எளிதன்று; நேரான பாதை எதுவும் ஒழுங்காக அமைந்திருக்கவில்லை. அவ்வளவு தூரத்தையும் கடக்கத் தக்க வண்டிகள் வசதியாக அக்காலத்தில் இல்லை. வண்டி அமர்த்திக் கொண்டு செல்ல அரியநாயகரிடம் பொருளும் இல்லை. எனவே, அவர் ஏகம்பன் திருவருளை எண்ணிக் கால் நடையாகவே புறப்பட்டார். பெற்றோர் அவரிடம் கொடுத்த உணவு ஒரு நாளில் கரைந்துவிட்டது. அவர்கள் கொடுத்த சிறுபொருள் சில நாட்களில் செலவழிந்து விட்டது. பின்னர் இளைஞர் பட்டபாடு கூறுந் தரத்ததன்று. சில சமயங்களில் அவரது நிலையைக் கண்டு அவருடன் அவ்வழிச் சென்றவர் உபசரித்து அன்னம் படைத்தனர். அவர் தங்கி இருந்த ஊர்களில் நல்லவர் சிலர் உணவு படைத்தனர். தமக்கு எதிர்பாராத வகையில் உணவு கிடைத்தபோதெல்லாம் இளைஞர் கச்சி-ஏகம்பனை எண்ணித் துதித்தார். அரியநாயகர் இங்ஙனம் பலவாறு துன்பப்பட்டு, இறுதியில் தாம் அடைய விரும்பிய போக பூமி ஆகிய விஜயநகரத்தை அடைந்தார். அப்போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. நகரத்தைப் பார்வையிடல் அரியநாயகர் விஜயநகரத்தின் சிறப்பை வணிகர் மூலமாக முன்னர்க் கேட்டறிந்தவர்; ஆதலால், அந்நகரத்தை நன்றாகச் சுற்றிப் பார்க்க விரும்பினார். அவர் நகரத்தின் நடுநாயகமாக விளங்கிய அரண்மனை, அதன் எதிரில் அமைந்திருந்த கடைத்தெருக்கள், அரசியல் உத்தியோகஸ்தர் வாழ்ந்த பெரும் தெருக்கள், நடன - நாடக - இசை மண்டபங்கள், உடற்பயிற்சி - போர்ப் பயிற்சிக் கூடங்கள், கல்விச் சாலைகள், மருத்துவச் சாலைகள் முதலியவற்றைப் பார்வையிட்டார்; பின்னர்க் கோவில்களைக் கண்டார்; அங்கு விளங்கிய சிற்ப ஓவியங்களில் கருத்தைச் செலுத்தினார். அறிவு நுட்பம் இளைஞர் இவ்வாறு பேரழகு மிக்க கோநகரத்தைப் பார்வையிட்டுக் கொண்டே துங்கபத்திரை ஆற்றங்கரைக்கு வந்தார்; கரைமீது உட்கார்ந்தார்; தமது எதிர்கால வாழ்வைப் பற்றி எண்ணமிடலானார். அப்பொழுது அவருக்குத் திடீரென ஓர் எண்ணம் உதித்தது. ‘இந்த விஜயநகரப் பேரரசு துங்கபத்திரை முதல் குமரி முனைவரை பரவி இருக்கின்றது. அதனில் நமது தமிழகம் தனிப்பட்ட மண்டலம். அதனை அரசப் பிரதிநிதியாக இருந்து கவனிப்பவர் மஹா மண்டலேசுவரர் அல்லவா? நாம், அவர் யாவர் என்பதை விசாரித்து, அவரைக் காண்போம்; அவரிடம் நமது வறுமையைக் கூறி வேலை பெறுவோம்’ என்பதே அந்த எண்ணம். உடனே அவர் உணர்ச்சி கொண்டவரைப் போல் எழுந்தார்; நேரே அரண்மனைப் பக்கமாகச் சென்றார்; தக்காரைக் கண்டு தக்ஷிண மஹா மண்டலேசுவரர் பெயர், இருக்கும் மாளிகை இவற்றைக் கேட்டறிந்தார். நேரே அம்மாளிகையை நோக்கி நடந்தார். நாகம நாயக்கர் தக்ஷிண மஹா மண்டேலசுவரர் நாகம நாயக்கர். அவர் பேரரசர்க்கு அடுத்த படியில் இருந்த பிரபுக்களில் சிறந்தவர். அப்பெரியவர் மிகச் சிறந்த போர்வீரர்; சேனைத் தலைவர்; அநுபவம் மிகுந்த அரசியல் நிபுணர். பேரரசர் அவரை மிக்க சிறப்புடன் நடத்திவந்தார். அப்பெரியவரிடம் அரசியல் உத்தியோகஸ்தர் அனைவரும் மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தனர். அத்தகைய சிறப்புடைப் பெரியவரைக் காணவே நமது அரியநாயகர் விரைந்து நடந்தார். கணக்கர் வேலை அரியநாயகர் நாகம நாயக்கர் மாளிகையை அடைந்தார். வாயிற் காவலர் அவரை நாயக்கர் முன் கொண்டு நிறுத்தினர். இளைஞர் அம்மண்டலேசுவரரைக் கண்டதும் இரு கைகளையும் கூப்பு வணங்கி, மிக்க அடக்கத்துடன் நின்றார். நாகமர் இளைஞரை ஏற - இறங்கப் பார்த்தார். அரிய நாயகரின் மலர்ந்த முகம் அவரை வசீகரப்படுத்தியது. அரியநாயகர் தமது வரலாற்றை மிகவும் உருக்கமாக உரைத்தார். அவர் வழியிற்பட்ட கஷ்டங்களைக் கேட்ட நாகமர் உள்ளம் கரைந்தது. ‘பதினாறு வயதுடைய சிறுவன் இவ்வளவு தூரம் நடந்து தனது வறுமையைப் போக்க வந்திருக்கிறானே!’ என்பதை எண்ணி, அவர் இளைஞர் மீது இரக்கம் கொண்டார். அரியநாயகர் தெளிவான நடையில் தெலுங்கு பேசியதைக் கண்டதும் நாகமர் கொண்ட வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் அளவில்லை. அவர் இளைஞர்க்கு என்ன வேலை தரலாம் என்று யோசித்தார்; முடிவில் அவரைத் தம்மிடமே கணக்கராக அமர்த்திக் கொண்டார். விசுவநாதர் நாகம நாயக்கர் நெடுங்காலம் பிள்ளை இல்லாமல் வருந்தினார்; தம் மனைவியாருடன் தீர்த்த யாத்திரை செய்தார்; இறுதியில் காசியை அடைந்து விசுவநாதப் பெருமானை வணங்கி வரம் கிடந்தார். விசுவநாதர் அருளால் அவருக்கு ஆண்மகவு பிறந்தது. நாகமர் அப்பிள்ளைக்கு விசுவநாதன் என்று பெயரிட்டு அருமையாக வளர்த்து வந்தார்; 1அவருக்குத் தம் தகுதிக்கு ஏற்பப் போர்ப் பயிற்சியும், அரசியல் கல்வியும் புகட்டச் செய்தார்; விசுவநாதரைப் பதினைந்தாம் வயதில் கிருஷ்ண தேவராயரிடம் அடைப்பம் முதலிய சிறு வேலைகள் செய்யவிட்டார். விசுவநாதர் அழகு மிக்கவர்; அறிவிற் சிறந்தவர்; ஆண்மை உடையவர்; குதிரை ஏற்றம், யானை ஏற்றம், மற்போர், சிலம்பம், விலங்கு வேட்டை முதலியவற்றில் சிறந்து விளங்கினார்; அன்பு இலங்கினார். இத்தகைய வீர இளைஞரை யாரே விரும்பாதவர்? பேரரசர் அவரைத் தம் புதல்வராகக் கருதி அன்புடன் நடத்தி வந்தார். வேலையில் மதிப்புப் பெறுதல் அரியநாயகர் நாகம நாயக்கரிடம் கணக்கராக அமர்ந்தார் அல்லவா? அவர் அன்று முதல் தம் வேலையைச் சரிவரச் செய்துவந்தார். நாகமரிடம் இருந்த கணக்கர் கணக்கில் பல தவறுகள் செய்வது இயல்பு; ஆனால் அரிய நாயகர் பார்த்துவந்த கணக்கில் பிழை என்பது மருந்துக்கும் ஏற்பட்டதில்லை. அதனால் நாகமர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்; மற்றவரைக் கடிந்து கொண்டார். ஆனால் சில நாட்களுக்குப் பின் அனைவர் கணக்குகளும் பிழையற்றுக் காணப்பட்டன. நாகமர் உண்மையை உணர்ந்தார். அஃதாவது, ‘அரியநாயகர் நாகமர் தம்மைப் புகழ்ந்து, ஏனையோரை இகழ்ந்ததை விரும்பவில்லை. அவர்களும் பாராட்டுக்கு உரியவர் ஆதல் வேண்டும் என்ற எண்ணத்துடன் நாள்தோறும் கணக்கை முடிக்கும் சமயத்தில் அவர் எல்லோர் கணக்குகளையும் பார்த்து ஒழுங்கு செய்து வந்தார்’ என்பதே ஆகும். இதனை உணர்ந்த நாகமர் அரியநாயகர் மீது அளவற்ற அன்பும் நம்பிக்கையும் கொண்டார்; அவரைத் தம் பிள்ளையாகவே மதித்து நன்மை செய்து வந்தார். இளைஞர் இருவர் அரியநாயகர் ஓய்வு நேரங்களில் தம் பழைய விளையாட்டுகளைப் பயிலலானார். அவற்றைக் கண்ட நாகமர் விசுவநாதரை அவருடன் இணைத்தார். அந்த இணைப்பு அந்த இளைஞர் இருவரையும் ஆயுட்காலம் முழுவதும் பிணைத்து விட்டது. இளைஞர் இருவரும் போர்ப் பயிற்சிகளில் பண்பட்ட புலமை எய்தினர். இருவரும் கண்கவர் வனப்பினர்; நல்ல உடற்கட்டு உடையவர்; சிறந்த போர்ப் பயிற்சிகளில் வல்லவர்; நல்ல ஒழுக்கத்தினர்; தெய்வ பக்தியிற் சிறந்தவர். இளைஞர் இருவரும் நாளடைவில் ஓர் உயிரும் ஈருடலும் என்னும்படி இணைந்து இருந்தனர். அந்த இளைஞர் இணக்கத்தைக் கண்ட நாகம நாயக்கரும் அவர் மனைவியாரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். பேரரசர் அறிமுகம் விசுவநாதர் நாள்தோறும் பேரரசருடன் இருப்பவர். அவர் தம் உயிர் நண்பரான அரியநாயகரைப் பற்றிச் சமயம் பார்த்துப் பேரரசரிடம் சொல்லியிருந்தார். அதன் பிறகே விசுவநாதர் ஒரு நாள் அரியநாயகரைப் பேரரசரிடம் அழைத்துச் சென்றார். பேரரசர் தமிழ் இளைஞருடைய முகப் பொலிவையும் தோற்றத்தையும் கண்டு மகிழ்ந்தார்; அரியநாயகரின் வரலாற்றைக் கேட்டு அவர்மீது அன்பு கொண்டார். அன்றுமுதல் அரியநாயகர் பேரரசர் அன்புக்கு உரியவர் ஆனார். அடிக்குறிப்பு The History of the Carnataca Governors 4 அரண்மனைச் சேவகம் பேரரசர் சபை ஒருநாள் அரசர் அவையில் பெருமக்கள் கூடியிருந்தனர். விண்மீன்களுக்கு நடுவில் முழுமதி விளங்குதல் போல அமைச்சர், பிரபுக்கள், சேனைத் தலைவர் முதலிய அலுவலாளர்கட்கு நடுவில் பேரரசர் விளக்கமாக அமர்ந்திருந்தார். பக்கத்தில் விசுவநாதர் நின்றிருந்தார். நாகம நாயக்கருடன் சென்றிருந்த அரியநாயகர் ஒரு தூணைப் பற்றிக் கொண்டு நின்றிருந்தார். பேரரசர் கேள்வி முதலில் அரச காரியங்கள் கவனிக்கப்பட்டன. பின்னர்ப் பேரரசர் எல்லோரையும் பார்த்து அளவளாவிக் கொண்டு இருந்தார். அப்பொழுது அவர், “சபையோர்களே, இன்று காலை நாம் அரண்மனைக் குளத்தில் நீராடச் சென்றோம். அப்பொழுது அங்கு அழகிய தாமரை மொட்டு ஒன்று காணப்பட்டது. அது முக்கால் சாண் நீளம் இருக்கும். அதன் தான் முழுவதும் தண்ணீருக்குள் இருந்தது; மொட்டு மட்டுமே நீர் மட்டத்துக்கு மேலாக நின்றது. நாம் குளத்தில் குதித்த அதிர்ச்சியில் அந்த மொட்டு மூன்றே முக்கால் சாண் தூரம் பின் சென்றது. அப்பொழுது அதன் தலையும் நீர் மட்டத்துக்குச் சமமாக நீர்க்குள் மறைந்துவிட்டது; ஆயின், அம்மொட்டு நின்றிருந்த இடத்தில் குளத்தின் ஆழம் என்ன?” என்று கேட்டார். அரியநாயகர் பதில் “இதற்கு யார் விடை கூற முடியும்?” என்றனர் சிலர். வேறு சிலர் முணுமுணுத்துக் கணக்குப் பார்க்கத் தொடங்கினர்; சிலர் ஒன்றும் புரியாது விழித்தனர். ஒருவர், “எவராலும் சொல்ல முடியாது” என்றனர். மற்றொருவர், “நான் போய் அளந்து பார்த்து வருகிறேன்” என்று புறப்பட்டனர். பேரரசர் அவர்களைப் பார்த்துக் கலகல என்று நகைத்தார். யாவரும் திகைத்து நின்றனர். அப்பொழுது அரியநாயகர். “பேரரசர் கட்டளையிடின், அடியேன் அதற்கு விடை தெரிவிப்பேன்” என்று வணக்கத்துடன் தெரிவித்தார். உடனே எல்லோரும் அரியநாயகரை வியப்புடன் நோக்கினர். பேரரசர், “யார் அது, அரியநாயகமா? முன்னே வா; சொல், கேட்போம்” என்றனர். அரியநாயகர் பேரரசர் முன் சென்று வணங்கி, “அவ்விடத்தில் குளத்தின் ஆழம் - அஃதாவது தாமரைத் தண்டின் நீளம், பேரரசர் பக்கத்தில் நிற்கும் விசுவநாத நாயக்கர் உயரமேதான்” என்று பணிவுடன் பகர்ந்தார். பேரரசர் உடனே விசுவநாதர் பக்கம் திரும்பி, “உன் உயரம் என்ன, விசுவா?” என்று கேட்டார். அவர் பணிந்து, “ஒன்பது சாண்” என்று பதில் கூறினார். உடனே சபையில் இருந்த கணித சாஸ்திரி ஒருவர் கணக்குப் பார்த்து, “விடை சரிதான்” என்றார். பேரரசர் ஒருவனைக் குளத்திற்கு அனுப்பினார். அவன் தாமரைத் தண்டினை அளந்துவந்து “குளத்தின் ஆழம் ஒன்பது சாண்” என்றான். பேரரசர் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார். அவர் அரிய நாயகரைப் பார்த்து, “நீ சொன்னது சரி; விசுவநாதர் உயரத்தை எப்படி அளந்தாய்?” என்று கேட்டார். அரியநாயகர் வணங்கி, “பெருமானே, அடியேன் உயரம் எட்டரைச் சாண்; விசுவநாதர் என்னைவிட அரைச் சாண் அதிக உயரம் உடையவர். கண் அளவாததா கை அளக்கும்?” என்று பதில் அளித்தார். அரண்மனைக் கணக்கர் பேரரசர் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. அவர் நாகமரைப் பார்த்து, “இன்றுமுதல் அரிய நாயகம் நமது அரண்மனைக் கணக்கனாக இருக்கட்டும்” என்றார். அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். பேரரசர் அன்றுமுதல் அரியநாயகரிடம் அன்பும் மதிப்பும் கொண்டு நடந்து வந்தார். அரியநாயகர் கணக்கில் வல்லவர் என்பதை நாளடைவில் எல்லா அலுவலாளரும் உணர்ந்து, கொண்டனர்; உணர்ந்து அவரிடம் மரியாதையாக நடந்து வந்தனர். நவராத்திரி விழா விஜயநகரத்தில் நவராத்திரி விழாச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது.1 விழாவின் கடை நாளில் காட்டு எருமைக் கடா ஒன்றைப் பலியிடுதல் வழக்கம். அரியநாயகர் அரண்மனைச் சேவகம் பெற்ற அந்த ஆண்டில் பலிக்காகப் பிடித்து வந்திருந்த எருமைக்கடா மிகப் பெரியது; கொழுத்தது; மூர்க்கமுள்ளது. அதன் கொம்புகள் முதுகின் இருபுறமும் வால்வரை நீண்டு இருந்தன. பேரரசர் கவலை பேரரசர் தம் பரிவாரங்களுடன் காளி கோவிலுக்குச் சென்றார்; பலிக்காக நிறுத்தப்பட்டிருந்த எருமைக்கடாவைக் கண்டார்; அதன் நீண்ட கொம்புகளைக் கண்டு திகைத்தார். “பலி கொடுப்பதாயின் ஒரே வீச்சில் தலை வேறு, உடல் வேறாக வெட்டித்தள்ளுதல் விதி. இல்லையேல் அஃது அபசகுனமாகக் கருதப்படுமே! இந்த எருமையின் கொம்புகள் வால்வரை நீண்டு இருப்பதைக் காணின், இதன் கழுத்தை ஒரே வீச்சில் வெட்ட முடியாதே! கொம்புகளையும் சேர்த்து ஒரே வீச்சில் வெட்டுதலும் முடியாத செயல். வேறு கடாவைப் பிடித்துக் கொண்டுவரவும் போதிய நேரம் இல்லை. என்ன செய்வது!” என்று பேரரசர் தமக்குள் எண்ணிக் கலங்கினார். அமைச்சரும் பிரபுக்களும் பிற அரசியல் அலுவலாளரும் செய்வது தோன்றாது விழித்தனர். அரியநாயகரின் அரிய யோசனை அச்சங்கடமான சந்தர்ப்பத்தில் அரியநாயகர் அங்கு வந்தார்; எல்லோர் உள்ளத்திலும் இருந்த கலக்கத்தை உணர்ந்தார்; எருமைக் கடாவை நன்கு கவனித்தார். அவர் முகம் தெளிவுற்றது. அவர் பேரரசரைப் பணிந்து, “பெருமானே, கவலைப்பட வேண்டா. அடியேன் யோசனைப்படி செய்யின், இதே எருமையை எளிதில் பலியிட்டு விடலாம்” என்றனர். பேரரசர்க்கு உண்டான வியப்புக்கு அளவில்லை. ஆயினும் அவர் அரிய நாயகரிடம் நம்பிக்கை வைத்தவர் ஆதலால், “என்ன யோசனை?” என்று ஆவலுடன் கேட்டார். அரியநாயகர், “பலி பீடத்தண்டை ஒரு குழி தோண்ட வேண்டும். அதனில் பசும்புல்லைப் போட வேண்டும். கால்களின் இடையே குழி இருக்குமாறு எருமையை நிறுத்த வேண்டும். புல்லைத் தின்னும் ஆசையால், எருமை உள் கழுத்தை நன்றாக வளைத்துக் குனிந்து குழிக்குள் தலையிட்டுப் புல்லைத் தின்னும். அப்போது அதன் கொம்புகள் வேறாக விலகி நிமிர்ந்து நிற்கும். அச்சமயம் ஒரே வீச்சின் தலைவேறு உடல் வேறாக வெட்டிவிடலாம்” என்று விளக்கமாகக் கூறி வணங்கினார். பேரரசர், “உன் யோசனைப்படி செய், பார்ப்போம்” என்றனர். அவர் மனம் குழப்பமாகவே இருந்தது. யோசனை பலித்தது அரியநாயகர் யோசனைப்படி குழி தோண்டிப் புல் பரப்பப்பட்டது. பலி பீடத்தின் அருகில் எருமைக்கடா கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. எருமை பசும்புல்லைக் கண்டு பரவசம் அடைந்து, நன்றாகக் குனிந்து புல்லைத் தின்னத் தொடங்கியது. அப்போது அதன் கொம்புகள் உயர்ந்து நின்றன. அவ்வமயம் சிறந்த வாள் வீரரான விசுவநாதர் அதனை ஒரே வீச்சில் தலைவேறு உடல் வேறாக வெட்டிச் சாய்த்தார். பதவி உயர்வு பேரரசர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்; அங்குக் கூடியிருந்த அனைவரும் கலக்கம் ஒழிந்து இன்பம் அடைந்தனர். எல்லோரும் அரிய நாயகரது அரிய மூளையைப் பாராட்டினர். பேரரசர் அரியநாயகரை அரண்மனைத் தலைமைக் கணக்கராக அமர்த்திக் கொண்டார்; அவருக்கு அந்த நல்ல நாளில் பரிசுகள் அளித்து மகிழ்ந்தார். அரசாங்கத் தலைமைக் கணக்கர் அரிய நாயகரது கணிதப் புலமை அளவிடற்கு அரியது. ஒரு முறை பேரரசின் கணக்கர் அனைவரும் ஒன்று கூடி வரவு - செலவுகளைக் கணக்குப் பார்த்து, இருப்புக் கட்ட முனைந்தனர். நாட்கள் பல சென்றனர்; கணக்குச் சரியாக வரவில்லை. கணக்கர் ஏடுகளைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தனர்; புள்ளி போட்டுப் பார்த்தனர். யாவும் பயனற்றவை ஆயின. மறுநாள் பேரரசரிடம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். கணக்கோ சரியாக முடியவில்லை. அரசாங்கக் கணக்கர் வழி அறியாது திகைக்கலாயினர். அவ்வமயம் அங்குச் சென்ற அரியநாயகர் அவர்களது முகவாட்டத்தைக் கண்டனர்; விசாரித்து உண்மை அறிந்தனர்; உடனே அங்கு உட்கார்ந்தனர்; புள்ளிகளைச் சோதித்தனர்; பிழைகள் அகப்பட்டன; அவற்றை ஒழுங்கு செய்து, இருப்புக்கு ஏற்றவாறு கணக்கைச் சரிக்கட்டிக் காட்டினர். கணக்கர் அனைவரும் அவ்வறிஞரைப் பாராட்டித் தம் நன்றியைத் தெரிவித்தனர். இச்செய்தியை எவ்வாறோ பேரரசர் கேள்வியுற்றார்; அரியநாயகரிடம் அவர் முன்னரே கொண்டிருந்த பற்றும் மதிப்பும் மேம்பட்டன; அரசாங்க விஷயத்தில் அவருக்கு இருந்த பற்றை நன்கு உணர்ந்தார்; அவரைத் தம் அரசாங்கத்தின் பெரிய கணக்கராக அமர்த்தினார். அடிக்குறிப்பு 1. இதன் விவரங்களை அறிய விரும்புவோர், Swell’s A Forgotten Empire’. pp. 86 175 and 376 காண்க. 5. தகுதிக்கு ஏற்ற பதவிகள் மற்போர் வீரன் ஒரு நாள் அரசர் அவையில் மல்லன் ஒருவன் வந்தான். அவன் வடநாட்டு மல்லன். அவன் வட இந்தியாவில் இருந்த அரசர் சபைகட்கு எல்லாம் சென்றவன்; அங்கங்குப் புகழ்பெற்று இருந்த மல்லரைப் புறம் கண்டவன். அவன் விந்த மலைக்குத் தென்பாலும் தன் வெற்றிக் கொடியை நாட்ட எண்ணினான்; அதனால் தக்ஷிணத்திற் புகுந்தான். ஒரிஸ்ஸா, பீஜப்பூர் முதலிய நாடுகளிலும் வெற்றி பெற்றான். அவன் இறுதியில் விஜயநகரப் பேரரசிலும் பெயர் பெற்று மீளலாம் என்ற எண்ணத்துடன் வந்தான். அவன் பேரரசரை வணங்கித் தன் வரலாற்றைக் கூறினான். இராயர் அவனது வெற்றிப் பிரதாபத்தைக் கேட்டார். அவையில் இருந்த அனைவரும் கேட்டனர். ‘அடியேன் இருக்கிறேன்’ பேரரசர் தம் அவையில் இருந்த பெரிய தளபதிகளைப் பார்த்தனர்; மற்போர் வீரர்களைக் கவனித்தனர்; நாகமர் போன்ற பிரபுக்களைப் பார்த்தனர். ஒருவரும் புதிய மல்லனுடன் மற்போர் புரிய முன்வரவில்லை. இராயர் மனம் வருந்தினார்; ‘ஓர் அந்நியன் நமது சபையில் விருது கூறுகின்றான். இவனை எதிர்க்கத் தக்கவர் நம்மிடம் இல்லை எனின், நமது பேரரசு என்ன வலிமையை உடையது!’ என்று எண்ணிக் கலங்கினார்; இறுதியில், ‘இவனுக்கு ஏற்ற ஜோடி விஜயநகரத்தில் இல்லையோ?’ என்று கேட்க வாய் திறந்தார். அப்பொழுது, ‘அடியேன் இருக்கிறேன்; ஆணை தர வேண்டும்’ என்று ஒருவர் கூறி அரசரை வணங்கினார். அவர் யார்? அவரே நமது அரியநாயகர். இராயர் முதலில் திகைத்தார்; அரியநாயகரது போர் வன்மையை இராயர் கண்டதில்லை. ஆயினும் விசுவநாதர் ‘அவரே ஏற்றவர்’ எனக் கூற இராயர், ‘சரி மற்போர் நடை பெறட்டும்’ என்றார். மற்போர் அரியநாயகர் அரையில் கச்சை கட்டினார்; தோற் தட்டினார்; “வடநாட்டு வீரனே, வருக; நம் இருவர் தோள் வரிசையை இச்சபையார் காணட்டும்” என்றார். உடனே போர் மூண்டது. வட நாட்டான் அரியநாயகரின் கையைக் குலுக்குபவன் போலப் பாசாங்கு செய்தான். அரியநாயகரும் ‘வந்தனம்’ என்றார். அவ்வளவில் புதியவன் அவரை வாரி எடுத்து மேலே வீச எண்ணினான். அரியநாயகர் மற்போரில் சிறந்த பயிற்சி உடையவர் அல்லவா? அவர் அவனது எண்ணத்தை உணர்ந்து கொண்டார்; அவனிடம் அறப்போர் செல்லாது என்பதை உணர்ந்தார். அதனால் அவர் காலம் தாழ்த்தாது, அவன் கையைப் பற்றிக் கரகர என்று இழுத்து அவனைக் காற்றாடி போலச் சுற்றினார்; முகத்திலும், மார்பிலும், தாளிலு,ம் தோளிலும் மாறி மாறிக் குத்தினார்; தன் தலை கொண்டு அவன் தலையைப் படீரென மோதினார். அவ்வளவில் அவனுடைய கழுத்து எலும்பு நறநற என்றது; தலை சிவந்தது; தாளும், தோளும் நசுங்கின. ஆயினும் அவன் வைரங்கொண்டு அரிய நாயகரது கழுத்தை நெரித்தான்; தொடைகளைப் பிசைந்தான்; அவருடைய தாள்களைத் தனித் தனியே இழுத்து எறிய முயன்றான். அவையோர், “இஃது என்ன? மற்போரா? மரணப் போரா?” என்று கவலையோடு கண் இமை கொட்டாது கவனித்தனர். அரியநாயகர் போரை விரைவில் முடிக்க விரும்பித் தம் மதிவன்மையும், தோள்வன்மையும் கொண்டு, அம்மல்லனைத் தந்திரமாகத் தூக்கித் தரையில் போட்டார்; புதிய மல்லன் முதுகில் மண்படியச் செய்தார். அவ்வளவில் அவையோர் ‘அரியநாயகர் வாழ்க!’ என்று ஆரவாரம் செய்தனர்.1 ‘தளவாய்’ப் பதவி பேரரசர் புதிய மல்லனுக்குப் பரிசுகள் தந்து அனுப்பினர்; தமது பேரரசின் மானத்தைக் காத்த அரியநாயகரை அனைவர் முன்னும் பாராட்டிப் பேசினர்; அவருக்கு வீரக் கழலும் வெற்றி வாளும் பரிசு அளித்தனர்; அவரைத் தமது பெருநாட்டுத் தளபதிகளும் ஒருவராக நியமித்தனர். அன்று முதல் அரிய நாயகர் ‘தளவாய் - அரியநாயகர்’ என வழங்கப்பட்டனர். அவர் அடைந்த பெருஞ் சிறப்பைக் கண்டு நாகம் நாயக்கரும் விசுவநாதரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். பேரரசர் நோய்வாய்ப்படுதல் சில மாதங்கள் கழிந்தன. பேரரசர் திடீரென நோய்வாய்ப் பட்டார். அரண்மனை மருத்துவர் அரிய மருந்துகளைக் கொடுத்தனர். நோயின் வேகம் குறையவில்லை. அந்தப்புர மாதரசியர் கவலை கொண்டனர். அவர்கள் சோதிடரை வரவழைத்தனர்; ஆயுள்பாவம் ஆராய்ந்தனர். சோதிடர் திட்டமாக ஒன்றும் சொல்லாமல் தயங்கினர். சாதாரண மக்களிடம் சோதிடம் தம் கைவரிசையைக் காட்டுவர். அரசரைப் பற்றி வாய்க்கு வந்தவாறு கூற முடியாதன்றோ? அதனால் அவர்கள் ஆயுள் பாவத்தைப் பற்றி ஒன்றும் கூறாது துன்புற்றனர். சோதிடர் மயங்குதலைக் கண்ட மன்னரும் மாதரசியரும் கவலை கொண்டனர். அரியநாயகர் சொன்ன சோதிடம் அரியநாயகர் அந்தப்புர மாதர் குழப்பத்தை அறிந்தார்; சோதிடரது மனத் தயக்கத்தையும் உணர்ந்தார். அவர் சிறந்த சோதிடப் பயிற்சி பெற்றவர். ஆதலால், தாமே பேரரசரது ஜாதகத்தைக் கவனித்தார்; இறுதியில், “பேரரசர் ஒரு வாரத்தில் குணம் அடைவார். மயக்கமும், கலக்கமும் தேவை இல்லை. அவர் நோய் நீங்கியதும் பெரும் போர்களில் வெற்றி மேல் வெற்றி பெறுவார். என் உரை தவறாது” என்று அழுத்தமாக உரைத்தார். சோதிடம் பலித்தது அரியநாயகர் கூறிய சோதிடம் பேரரசருக்கும், அரச மாதேவியர்க்கும் அரிய மருந்தாக இருந்தது. இறைவன் இன்னருளால் பேரரசர் அன்று முதலே படிப்படியாகக் குணம் அடையலானார். எட்டு நாளைக்குள் அவர் நன்னிலையை அடைந்தார். பேரரசரும் அவர் தேவியரும் அரிய நாயகரை வாழ்த்தினர்; அவர் மனம் மகிழப் பரிசுகள் பல ஈந்தனர். பின்னர், பேரரசர் உடல் வன்மைக்கு உரிய மருந்து வகைகளை உண்டு உடல் உரத்தை வளர்க்கலானார். தந்தைக்குத் தந்த வாக்குறுதி பேரரசரான கிருஷ்ணதேவ ராயருக்குத் தந்தையார் நரசிம்ம ராயர் என்பவர். அவர் பல நாடுகளைக் கைப்பற்றிய பெருவீரர். எனினும் அவரது முதுமைப் பருவத்தில் பீஜப்பூர்ச் சுல்தான் இராயச்சூர், முதகல் முதலிய இடங்களை விஜயநகர ஆதிக்கத்திலிருந்து கவர்ந்து கொண்டார். அவற்றை மீட்க வேண்டும் என்பது அம்முதிய வீரர் அவா. அதனால் அவர் தாம் இறக்குந் தறுவாயில்2 கிருஷ்ணதேவரை அழைத்து, “கிருஷ்ணா, இராயச்சூர், முதகல் முதலிய ஊர்களைப் பீஜப்பூர்ச் சுல்தான் கவர்ந்து கொண்டனர். நீ அவற்றை மீளவும் பெறவேண்டும். அப்பொழுதுதான் என் ஆன்மா அமைதி பெறும்” என்றார். இளைஞரான கிருஷ்ணதேவராயர் தந்தையைப் பணிந்து, “ஐயனே, உமது ஆணையை நிறைவேற்றுவேன்” என்று வாக்களித்தார். இராயச்சூர் மீது படையெடுப்பு நோய் நீங்கி நலம் பெற்ற பேரரசர், ஒரு நாள் தனித்து இருந்த பொழுது தம் தந்தையார் நினைவு கொண்டார். உடனே தாம் அவருக்கு இராயச்சூரைக் கைப்பற்றுவதாக அளித்த வாக்குறுதியும் நினைவிற்கு வந்தது. அதே சமயத்தில் அவர், ‘போர்களில் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும்’ என்று அரியநாயகர் சோதிடம் சொன்னதையும் எண்ணினார்; மறுநாள் அரச சபையில், “நாளை இராயச்சூர் மீது படையெடுப்போம்” என்று கூறினார். படைக் காட்சி மறுநாள் படைகள் திரண்டுவிட்டன. யானைப்படை, குதிரைப்படை, வேற்படை, ஈட்டிப்படை, வாட்படை வீரர்கள் ஆயிரக்கணக்கில் கூடிவிட்டனர்; அந்தந்தப் படைவீரர் தத்தம் போர்க் கருவிகளுடன் அணி அணியாக நகருக்கு வெளியே நின்றனர். அரியநாயகர் முதலிய படைத்தலைவர்கள் அவரவர் படைகட்குத் தலைமை வகித்தனர். யானைகளும் குதிரைகளும் போர் உடையில் திகழ்ந்தன. வீரர்கள், “பீஜப்பூர்ச் சுல்தானைப் புறம் காண்போம்; இராயச்சூரை மீட்போம்” என்று முழங்கினர். பேரரசர் எல்லாப் படைகளையும் பார்வையிட்டார். குறித்த நேரத்தில் படைகள் இராயச்சூரை நோக்கிப் புறப்பட்டன. பேரரசர் படைகட்கு நடுவில் நடுநாயகமாகச் சென்றார். போர் இராயச்சூர்க்கு அருகில் இருதிறத்துப் படைகளும் கைகலந்தன.3 இருபக்கத்து வீரரும் தம்மை மறந்து போரிட்டனர். பீஜப்பூர்ப் படையில் இருந்த குதிரைவீரர் ஆவேசத்துடன் விஜயநகரப் படைகளின் முன் வரிசையிற் பாய்ந்தனர். அப்பொழுது எண்ணிறந்த வீரர் இருபக்கத்திலும் மாண்டு ஒழிந்தனர். பகைவரது மூர்க்கத்தைக் கண்டு விஜயநகரப் படைகள் சிறிது பின்வாங்கின. அதே சமயத்தில் சுல்தானுடைய காலாட்படை கடுகி வந்தது. இராயர் படைகளின் நிலைமை வலியற்றதாக இருந்தது. ஆனால், நல்ல காலம்! துணைப் படை வீரர் பல்லாயிரவராக விஜயநகரத்திலிருந்து விரைந்து வந்தனர். பேரரசர்க்கு ஆபத்து பேரரசர் வெற்றி காணவேண்டும் என்னும் வேட்கையால், போர் முனையில் யாவரும் காண நின்றார்; தம் வீரர்க்கு வீராவேசத்தை ஊட்டினார். பேரரசரைக் கண்ட வீரர் ஊக்கம் கொண்டனர்; துணைப்படை வந்தவுடன் மேலும் கிளர்ச்சி கொண்டனர். அதனால் அவர்கள் தங்கள் முழு ஆற்றலையும் காட்டிப் போரிட்டனர். பீஜப்பூர்ச் சேனை பின் வாங்கி ஓடியது. அப்பொழுது பகைவர் தளபதிகளுள் ஒருவர். அப்பொழுது பகைவர் தளபதிகளுள் ஒருவர் முதுகுகாட்டி ஓடுவதாகப் போக்குக் காட்டிப் பின்புறமாக வந்து திடீரெனத் தாக்கினார். அத்தாக்குதலுக்குக் கூப்பிடு தூரத்திற்றான் பேரரசர் நின்றிருந்தார். தனித்தனிப் பகைவர் படைகளுடன் போராடிக் கொண்டிருந்த இராயருடைய தளபதிகள் இப்பேராபத்தைக் கவனிக்கவில்லை. அரிய சமயத்தில் அரியநாயகர் பகைவருடன் போரிட்டுக் கொண்டு ஒரு புறத்தில் இருந்த அரியநாயகர் தெய்வாதீனமாகத் திரும்பிப் பார்த்தார். பகைவர் தளபதி பின்வந்து தாக்குதலையும் அவருக்கு அருகில் பேரரசர் தனித்து நின்று கொண்டு இருந்ததையும் கண்டார்; பேரரசர்க்கு நேர இருந்த பேராபத்தை உணர்ந்தார்; உடனே தம் படையுடன் விரைந்து சென்று, அத்தளபதிக்கும் பேரரசர்க்கும் இடைப்பட்ட தூரத்தில் நின்று போர் புரியத் தொடங்கினார். அப்பொழுதுதான் தமக்கு நேர இருந்த பேராபத்தையும் அதனை அகற்ற அரியநாயகர் திடீரென அங்குத் தோன்றியதையும் பேரரசர் உணர்ந்தார். பிற தளபதிகளும் இதனை உணர்ந்து அவ்விடத்திற்கு விரைந்தனர். அவர்கள் வருவதற்குள் அரியநாயகர் பீஜப்பூர்த் தளபதியைச் சிறை செய்து, பேரரசர் முன் கொணர்ந்து நிறுத்தினார். அமைச்சர் பதவி பேரரசர் விழிகளில் ஆனந்தக் கண்ணீர் துளித்தது. அவர் அரியநாயகரை மார்போடு அணைத்து, “என் உயிரைக் காத்த உத்தம, நீ எனக்குக் கிடைத்த அரிய நாயகமே, இதில் ஐயம் இல்லை. நீ ஈசனைப் போலத் திடீரெனத் தோன்றி என்னைக் காத்ததால் எனக்கு அரியநாதனும் ஆயினை. நீ இன்று முதல் நம் அமைச்சரில் ஒருவனாக இருக்கக்கடவை; ‘முதலி’ என்னும் பட்டம் பெறுவை; இன்றுமுதல் பல்லக்கில் செல்லும் உரிமையும் எய்துவை; உன்னை எல்லோரும் அரியநாத முதலியார் என்று அழைப்பர்,” என்று கூறி மகிழ்ந்தார். வெற்றிக் கொடி பின்னர்ப் பேரரசர் வெற்றி முழக்கத்துடன் இராயச்சூர்க்குள் நுழைந்தார். அந்நகர அரண்மனைமீது இராயர் கொடி பறக்கவிடப்பட்டது. தம் தந்தையார்க்கு அளித்த வாக்குறுதி நிறைவேறிற்று என்று இராயர் பெருமகிழ்ச்சி அடைந்தார்; இராயச்சூரில் தம் தளபதி ஒருவரைப் படையுடன் இருக்கவிட்டு, எஞ்சிய வீரருடன் விஜயநகரத்தை அடைந்தார். பேரரசர் பெற்ற வெற்றியைக் கேள்வியுற்ற மாநகரத்தார், அவரையும் அவர் ஆருயிரைக் காத்த அரியநாதரையும் சிறப்புடன் வரவேற்று விழாக் கொண்டாடினர். அரியநாதர்க்குத் திருமணம் மேற்சொன்ன நிகழ்ச்சிக்குப் பிறகு அரியநாதர் இராயர் அவையில் மிகுந்த செல்வாக்கு உடையவர் ஆனார். அவர் விரைவில் பேரரசின் வருமானம் - செலவினம் - மாகாணங்களின் நிலைமை - பெருநாட்டைக் கட்டியாள்வதில் உள்ள சிக்கல்கள் முதலிய அரசியல் விவரங்களை நன்கு அறிந்து கொண்டார்; இராயருக்கு ஐயம் உண்டாகும் பொழுதெல்லாம் அதனைத் தக்க ஆதாரங்களுடன் தெளியவைத்தார். இத்தகைய சிறப்புகளால் அரியநாதர் இராயரது பெருமதிப்புக்கு ஆளானார். பதினாறு வயதில் மெய்ப்பேட்டை விட்டு விஜயநகரத்தில் பிழைக்கவந்த அரியநாதர் தமது நல்ல ஒழுக்கத்தாலும் பிற பண்புகளாலும் படிப்படியாக உயர்ந்து, இராயரது பெரு மதிப்பைப் பெற்றுவிட்டதனால், அவரது வாழ்வு அரச வாழ்வாக மாறியது. அவர் தாம் இருந்த கோநகரத்திலேயே இராயர் வாழ்த்துக் கூறத் தம் திருமணத்தை முடித்துக் கொண்டனர். அடிக்குறிப்புகள் 1. Indian Antiquary, 1915, p. 64. 2. இவர் கி.பி. 1498இல் காலமானார். 3. இப்போர் கி.பி. 1520 மே மாதத்தில் நடந்தது. 6 தமிழ் நாட்டில் இராயர் ஆட்சி தமிழகமும் முஸ்லிம்களும் பத்மினி வரலாற்றை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? அவன் இருந்த சித்தூர்க் கோட்டைக் கைப்பற்றியவர் யார்? டெல்ஹியை ஆண்ட அலாவுத்தீன் கில்ஜி அல்லவா? அவருடைய சேனைத்தலைவர் மாலிக் காபூர் என்பவர். அவரே முதன் முதல் தமிழ் நாட்டின்மீது படையெடுத்து வந்த முஸ்லிம் ஆவர், அவர் திக்கு விஜயமாகப் புறப்பட்டுத் தெற்கே சேதுவரை வந்தனர். அப்பொழுது சைவ-வைணவக் கோவில் விக்கிரகங்களும் நகைகளும் பொது மக்களுடைய செல்வங்களும் பலவாறு ஒளித்து வைக்கப்பட்டன; பல கொள்ளை போயின. மதுரையில் முஸ்லிம் அரசு அக்காலத்தில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு இராஜம்ம பாண்டியன் என்பவன் அரசாண்டு வந்தான். அவன் மாலிக்காபூர் வருவதை அறிந்து மதுரையைவிட்டுச் சின்னமனூர்க்குச் சென்று ஒளிந்து கொண்டான். மதுரை முஸ்லிம்கள் கைப்பட்டது. அது முதல் ஏறத்தாழ ஐம்பது வருடகாலம் மதுரையை முஸ்லிம்கள் அரசாண்டனர்.1 அப்பொழுதுதான் புகழ்பெற்ற - பாடல் பெற்ற திருஆலவாய் சீரழிந்தது. மீனாஷி - சுந்தரேசர் கோவில் மதில்களும் பதினான்கு கோபுரங்களும் மதில்கட்கு உட்பட்டிருந்த தெருக்களும் அழிக்கப்பட்டன. கருவறை, நடு மண்டபம், முன் மண்டபம் என்பவையே விடப்பட்டன. பாண்டிநாட்டுக் கோவில்கள் சீரழிந்தன; கிராமங்கள் கொள்ளையடிக்கப் பட்டன; நகரங்கள் சூறையாடப்பட்டன. பாண்டியநாட்டு வாணிகம் நின்றுவிட்டது. இராயர் கவலை விஜயநகரப் பேரரசு வலுவடையத் தொடங்கியதும், அதனை ஆண்ட வேந்தர் தென்னாடு முழுவதையும் கைப்பற்ற விரும்பினார்; தென்னாடு முழுவதும் தம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பது அவரது கவலை; அதனால் தமது சிறந்த தளகர்த்தர் ஒருவரைப் பெருஞ்சேனையுடன் தமிழ் நாட்டிற்கு அனுப்பினார். கம்பண உடையார் அச்சேனைத் தலைவர் பெயர் கம்பண உடையார் என்பது. அவர் முதலாம் புக்கராயர் புதல்வர். அவர் சிறந்த போர் வீரர் அஞ்சா நெஞ்சம் பெற்றவர்; பல போர்களில் முன் அணியில் நின்று தம் வீரத்தை விளங்க வைத்தவர்; இராயரது நம்பிக்கைக்குப் பெரிதும் பாத்திரமானவர். அப்பெரு வீரர் பெரும்படையுடன் தென்னாடு வருவதை அறிந்த சோழனும், பாண்டியனும் அவருடன் சேர்ந்து கொண்டனர். போர் மதுரையில் நடைபெற்றது. முஸ்லீம் ஆட்சி ஒழிக்கப்பட்டது. பாண்டிய நாடு பாண்டியன் வசம் ஒப்புவிக்கப்பட்டது.2 சோழ நாட்டைச் சோழ வேந்தன் ஆண்டு வந்தான். இவர்கள் விஜயநகரப் பேரரசர்க்கு அடங்கிய சிற்றரசராக இருந்துவர இசைந்தனர். கம்பண உடையார் தக்ஷிண மஹா மண்டலேசுவரர் ஆனார். கம்பண உடையார் நாட்டில் அமைதியை நிலை நாட்டினார்; அவருடைய படைவீரர்களை நாடு முழுவதும் பரவி வாழச் செய்தார்; முஸ்லீம்களால் அழிக்கப்பட்ட கோவில்களைப் புதுப்பித்தார்; பூசையும் விழாக்களும் நடைபெறச் செய்தார்; நாடு முழுவதிலும் உழவு - கைத்தொழில் - வாணிகம் முதலியன செவ்வனே நடைபெற வசதிகள் செய்தார்3 பேரரசர் - சிற்றரசர் உறவு பாண்டியரும் சோழரும் வலியற்றவர் ஆதலின் விஜயநகரப் பேரரசின் கீழ் இருக்க ஒப்புக் கொண்டனர். பேரரசர் தம் செல்வாக்கு மட்டும் தெற்கே குமரிவரை பரவியிருத்தலே போதியது என்று எண்ணி, இவர்களிடமே தாம் வென்ற நாடுகளை ஒப்புவித்தனர். மஹா மட்லேசுவரர் இவர்களுடைய உள்நாட்டு அரசியலில் தலையிடவில்லை; தமக்குச் சேர வேண்டிய பகுதிப்பணத்தை வசூலித்துக் கொண்டனர்; பேரரசுக் குரிய படையை நிர்வகித்தனர்; எஞ்சிய பணத்தைப் பேரரசர்க்கு ஆண்டுதோறும் அனுப்பினர்; சோழ - பாண்டியருடைய வெளி நாட்டு விவகாரங்களை மேற்பார்த்தனர்; அவர்கள் பேரரசுக்குத் தீங்கு இயற்றாவாறு அவர்களுடைய நடவடிக்கைகளைக் கவனித்து வந்தனர்; சோழ - பாண்டியர் தத்தம் நாட்டிற் கல்வி - சமயம் - கலைகள் சம்பந்தமாகச் செய்த நல்ல காரியங்களுக்கு முழு ஆதரவும் காட்டினர். சோழ - பாண்டியர் போர் கிருஷ்ணதேவர் காலத்தில் நாகம நாயக்கர் தக்ஷிண மஹா மண்டலேசுவரர் அல்லவா? அக்காலத்தில் சோழநாட்டை வீர சேகரன் என்பவன் அரசாண்டான்; பாண்டி நாட்டைச் சந்திரசேகரன் என்பவன் ஆண்டுவந்தான்.4 பேராசை பிடர் பிடித்து உந்தியதால் சோழன் பாண்டிய நாட்டைக் கவர எண்ணினான். பெரும்படையுடன் சென்று பாண்டியனைப் போரில் முறியடித்துப் பாண்டிய நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். பாண்டியன் முறையீடு பாண்டியன் தன் மைந்தனுடன் விஜயநகரம் சென்றான்; நடந்ததைப் பேரரசரிடம் நவில முயன்றான். அவனுக்கு எளிதில் இராயரது பேட்டி கிடைக்கவில்லை. காரணம் என்ன? சோழன் தன் பணத்தை வாரி இறைத்து அமைச்சர் சிலரைக் கைவசப்படுத்தினான். பாண்டியன்மீது இரக்கம் கொண்டவர் அரிய நாதர் ஒருவரே. அவர் சோழனது செல்வத்துக்கு அடிமை ஆகாதவர். அரியநாதர் உதவி பேரரசர் அரியநாதரிடம் அன்பு பாராட்டி வந்ததை மற்ற அமைச்சர் உள்ளூர வெறுத்தனர். அறிவு ஆற்றல்களில் குறைந்தவர் தம்மினும் மிக்காரைக் கண்டு பொறாமைப்படுதல் இயல்புதானே! அரியநாதர் சமயம் பார்த்து, இராயரிடம் பாண்டியனது பரிதாப நிலையை விளக்கி, அவனுக்கு நியாயம் வழங்குமாறு மன்றாடினார். இராயர் ஆணை மறுநாள் அரச சபையில் அனைவரும் கூடியிருந்த பொழுது இராயர் பாண்டியனை வரவழைத்தார்; நேரே அவனது முறையீட்டைக் கேட்டார்; உடனே நாகம நாயக்கரை நோக்கி, “நீர் பெரும்படையுடன் சென்று சோழனை முறியடித்து, இப்பாண்டியனை அரியணை ஏற்றுக” என்று ஆணையிட்டார். நாகம நாயக்கர் படையெடுப்பு பேரரசர் ஆணை பிறந்தவுடன் படைகள் தென்னாடு செல்லத் தயாராயின. நாகம நாயக்கர் வயது முதிர்ந்தவர்; ஆயினும் ஊக்கமும், உடல் உரமும் குன்றாதவர். மேலும் தக்ஷிண மஹா மண்டலேசுவரர் ஆதலால் அவரே செல்ல வேண்டியர் ஆனார். அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். பல போர்களில் வெற்றி ஒன்றையே தரிசித்துப் பெருமிதம் கொண்ட இராயர் படை, போர்ப்பாடல்களைப் பாடிக் கொண்டு சோழ நாட்டை நோக்கிச் சென்றது. ஆணை நிறைவேற்றல் நாகம நாயக்கர் வருவதை அறிந்த சோழன் கடுங்கோபம் கொண்டான்; தன் படைகளைத் திரட்டினான். அவன் போர்க் கோலம் கொண்டு நாகமச் சேனையைத் தாக்கினான். பல போர்களில் வெற்றி பெற்ற நாகமர்க்கு அச்சோழன் எம்மாத்திரம்! அப்பெருவீரர் சோழனை ஒரு பகற்பொழுதில் வென்றார்; பாண்டியனை மதுரையில் வைத்து முடி சூட்டினார்; ‘இராயர் ஆணை நிறைவேற்றப்பட்டது’ என்ற செய்தியை இராயர்க்கு ஆள்வசம் அனுப்பினார்; பிறகு பாண்டிய நாட்டில் அமைதி நிலவும் வரை மதுரையில் தம் படையுடன் தங்கியிருக்கலானார். வேலியே பயிரை மேய்தல் ‘செல்வம் மயக்க மருந்து போன்றது. அது நல்லவரையும் கெட்டவர் ஆக்கும் ஆற்றல் வாய்ந்தது; யோக்கியரை அயோக்கியர் ஆக்கி விடும்; அறமே நிரம்பி, அருளே பூத்த அருந்தவ முனிவரையும் மனம் மாறச் செய்து விடும்,’ என்று ஆன்றோர் கூறியிருப்பது நாகம நாயக்கர் விஷயத்தில் உண்மை ஆயிற்று. அவர் பாண்டிய நாட்டை வென்ற பிறகு அந்நாடு முழுவதும் சுற்றிப் பார்த்தார். அதன் குறிஞ்சி - முல்லை - மருதம் - நெய்தல் என்னும் நானில வளம் அவரது உள்ளத்தைக் கவர்ந்தது; பல நூற்றாண்டுகளாக அயல் நாடுகளுடன் முத்து வாணிகம் செய்து வந்த கொற்கைத் துறைமுகம் அவரது உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. “நாம் இந்த நாட்டை வென்றோம். நாமே இதனை ஆளாமல் பாண்டியனுக்குக் கொடுக்க வேண்டுமா? நாம் மஹா மண்டலேசுவரராக இருப்பதைவிட மன்னராக இருத்தல் சிறந்தது அன்றோ? ” என்ற எண்ணினார். இந்த எண்ணம் வலுப்பட்டது. அதனால் அதுவரை இராயர் ஆணை கடவாது நடந்து வந்த உண்மை ஊழியரான அவர், அறநெறி தவறினார்; சேனையைத் தம் வசமாக்கிக் கொண்டார்; பாண்டியனைச் சிறை செய்தார்; தாமே பாண்டி மன்னராகி, நாட்டை ஆளத் தொடங்கினார். வேலியே பயிரை மேய்ந்து விட்டது.5 இராயர் ஆணை சிறை செய்யப்பட்ட பாண்டியன் மகன் நாகமர் கைக்கு அகப்படாமல் தப்பித்துக் கொண்டான். அவன் நேரே விஜயநகரம் சென்ற இராயரைக் கண்டான்; அவர் அடிகளில் முடிபட வணங்கி நடந்ததை நவின்றான். உடனே இராயர் அடக்க முடியாத கோபம் கொண்டார்; “எமது கட்டளையை மீறக் காரணம் யாது? மோசமும், துரோகமும் புரியலாமோ? காரணம் கூறக் கூடுமாயின் நேரே வருக” என்ற அரச முத்திரையிட்ட கடிதம் ஒன்றை மதுரைக்கு அனுப்பினார். ஆணை அலக்ஷியம் நாகமர் இராயர் கடிதத்தைப் படித்தார். அவர் அரச இறுமாப்பினால் தம் கடமையை மறந்தார்; தாம் விஜய நகரத்திற்கு நேரிலும் செல்லவில்லை; தாம் அரசரானதற்குக் காரணம் ஆள்வசம் தெரிவிக்கவும் இல்லை; ‘பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பேரரசர் என்ன செய்யப் போகிறார்? நமது செல்வ மகன் இராயரது சீற்றத்தைத் தணிப்பான்’ என்று எண்ணிக் கொண்டு பேசாதிருந்தார். அரியநாதர் கவலை நாகமரால் சிறை செய்யப்பட்ட பாண்டியன் சிறைக் கூடத்திலே இறந்தான். அவன் மகன் விஜயநகரத்தில் இருந்து துன்பப்பட்டான். விஜயநகர அமைச்சருள் அரியநாதர் ஒருவரே தமிழர். அதனால் பாண்டிய குமரன் அவரை அடைக்கலமாகக் கொண்டான். நாகமர் நெறி தவறி விட்டார் என்பது அரியநாதர்க்குக் கவலையை உண்டாக்கியது. அவர் “நாகமர் நமது பழைய தலைவர்; நம் நண்பர் விசுவநாதர்க்குத் தந்தையார், ஆயினும் அவர் செய்தது தவறு. ஆதலின் பாண்டியனுக்கு நீதி வழங்குதலே முறை” எனத் துணிந்தார். இராயர் மனக்கவலை கிருஷ்ணதேவராயர் நாகமரிடமிருந்து பதில் வராததால் மனம் புண்பட்டார்; ‘நீதி தவறாத நமது அரசியலுக்கு நாகமரால் கெட்ட பெயர் வந்ததே!’ என்று கலங்கினார். தமது ஆணையைப் பொருட்படுத்தாத அவரது ஆணவத்தை எண்ணிக் கொதித்தார்; நாகமரைப் போரில் வென்று பாண்டிய குமரனை அரசனாக்கத் துணிந்தார். நாகமரைச் சிறைசெய்து கொண்டு வரவேண்டும் என்பது இராயர் விருப்பம். இராயர் சீற்றவுரை இராயர் ஒரு நாள் தம் சேனைத் தலைவர்களையும் அமைச்சர்களையும் பிரபுக்களையும் அவைக்கு வரவழைத்தார்; “நாம் மதுரையைச் சோழனிடமிருந்து மீட்டுப் பாண்டியனுக்குத் தருமாறு நாகமரை அனுப்பினோம் அல்லவா? அவர் அதனை மீறப் பாண்டியனைச் சிறையில் இட்டுத் தாமே மதுரை அரசராக இருக்கின்றார்; அத்துடன் நாம் விடுத்த கடிதத்திற்குப் பதில் அளியாமல் இருப்பது நமது பெருமைக்குச் சிறுமையாகும். பாவம்! அவரால் சிறை செய்யப்பட்ட பாண்டியன் சிறையிலே மடிந்தான். அவன் மைந்தன் தப்பிப் பிழைத்து இங்கு வந்து முறை யிடுகின்றான். நமது ஆணையை மீறிய நாகமரைச் சிறை செய்துவரும் வீரர் நமது நன் மதிப்பைப் பெறுவார்” என்று சீற்றத்துடன் பேசினார். அவையோர் மௌனம் ‘நாகம நாயக்கர் சிறந்த வீரர்; பல போர்களில் வெற்றி மாலை புனைந்தவர்; மஹா வீரராகிய விசுவநாதர்க்குத் தந்தையார்; பிரபுக்களில் முதல் வரிசையில் இருப்பவர். அச்சிறப்புடைய பெரியவரை நாம் எவ்வாறு போரில் வென்று சிறைப்பிடித்து வருவது! இஃது இயலாத காரியம்... பேரரசரோ சீற்றத்துடன் காண்கிறார்’ என்று அவையோர் தமக்குள் எண்ணி, வாளா இருந்தனர். இருவர் துடிப்பு அவ்வமயம் அவையில் இருந்த இளைஞர் இருவர் மாத்திரம் துடித்துக் கொண்டு இருந்தனர். பேரரசர் சீற்றவுரை அவர்கட்கு, இராஜபக்தியையும் வீரவுணர்ச்சியையும் ஊட்டியது. அவர்கள் கண்கள் சிவந்தன. மீசை துடித்தது. அவர்கள் ஏதோ கூற எழுந்தனர்; பின் உட்கார்ந்தனர். சுருங்கக் கூறின், அவர்கள் தம்மை மறந்த சீற்றத்தில் ஆழ்ந்திருந்தனர்; ஆனால், என்ன பேசுவது என்பது அறியாமல் விழித்தனர். அவர்கள் யார்? ஒருவர் விசுவநாதர்; மற்றவர், அரியநாதர். இராயர் எழுச்சி இராயர் சீற்றத்துடன் பேசிய பிறகு அவையினரைக் கூர்ந்து நோக்கினர்; ‘யான் இப்பணியை முடித்து வருவேன்’ என்று ஒருவரும் முன் வராதது அவருக்குக் கோபத்தையும் ஏமாற்றத்தையும் உண்டாக்கியது. அதனால் வெகுண்ட இராயர், “எம் கட்டளையை நிறைவேற்றத் தக்க வீரர் ஒருவரும் இங்கு இல்லையா? நல்லது. நாமே புறப்பட்டுப் பாண்டி நாடு செல்வோம்” என்று கூறித் தம்மை மறந்த ஆத்திரத்துடன் ஆசனத்தை விட்டு எழுந்தார். ‘நான் போவேன்’ ‘அரசே நான் போவேன்’ என்று எழுந்தார் ஒருவர். அவர் யாவர்? அவரே விசுவநாதர். பேரரசரது இறுதி வாக்கியத்தைக் கேட்டதும் விசுவநாதர் தம்மை மறந்தார்; உடனே எழுந்தார்; மேற்சொன்னவாறு மொழிந்தார். அவர் மேலும் பேரரசரைப் பணிந்து, “பெருமானே, நாகமர் என் தந்தையார். எனினும் அவர் செய்தது தவறு. நான் அவர் மைந்தன் ஆதலால், நானே அவரை எதிர்த்துச் சிறை செய்துவருதல் முறையோ என்று அஞ்சினேன். இப்பொழுது தாங்களே போருக்குப் புறப்படுவது எனின், நான் இங்கு இருந்து பயன் என்ன? ‘இராஜபக்தியிற் பிழைத்த பாவி’ என்று அல்லவா உலகம் என்னைப் பழிக்கும்! ஆதலால் நான் இப்பொழுதே மதுரை செல்வேன்; நாகமரைப் போரில் வென்று தங்கள் முன் கொணர்ந்து நிறுத்துவேன்,” என்று பேசினார். இராயர் எண்ணம் இராயர் விசுவநாதர் பேச்சைக் கேட்டார். அவருக்குச் சிறிது சீற்றம் தணிந்தது. ஆயினும், ‘விசுவநாதன் நாகமர் மகன். இரத்த பாசம் கொடியது. இன்னும் தகப்பனுடன் சேர்ந்து கொண்டால் என்ன செய்வது! ஆதலால் முன் எச்சரிக்கையாக விசுவநாதனுடன் நமது அரியநாதனை அனுப்புவோம். அவன் விசுவநாதனுக்கு எவ்வகையிலும் சமமானவனே. மேலும் அவன் தமிழ் நாட்டான்; அங்குள்ள தமிழரைத் தன் வயப்படுத்த வல்லவன்; நமக்காக உயிரையும் விடும் உத்தமன்’ என்று தமக்குள் முடிவு செய்து கொண்டார். இராயர் ஆசி கூறல் இராயர் விசுவநாதரை அன்புடன் நோக்கி, “அப்பனே, உன் இராஜபக்தியைப் பாராட்டினோம். நீ உன் உயிர் நண்பனான அரியநாதனுடன் உடனே புறப்படு. உனக்கு வெற்றி உண்டாகுக!” என்று ஆசீர்வதித்தார். பேரரசர் தம்மை உடன் அனுப்பும் நோக்கத்தைக் குறிப்பால் உணர்ந்த அரியநாதர், அரசரைப் பணிந்து விடை பெற்றுக் கொண்டார். விசுவநாதரும் அரியநாதரும் பண்பட்ட படைகளுடன் தென்னாடு நோக்கிப் புறப்பட்டனர். மதுரை நிகழ்ச்சிகள் இராயர் ஆணைப்படி தம் மைந்தரே போருக்கு வருகின்றார் என்பதை நாகமர் அறிந்தார்; அவருடன் தம்மிடம் கணக்கராக இருந்த அரியநாதரும் வருவதைக் கேள்வியுற்றார். அவர் அடைந்த கோபத்திற்கு அளவில்லை; உடனே தம் படைகளைத் திரட்டிப் போருக்குத் தயாராக இருந்தார். அந்த வேளையில் விசுவநாதரும், அரியநாதரும் தம் பெரும் படையுடன் மதுரையை அடைந்தனர். தந்தைக்கும், தனயர்க்கும் போர் மூள இடந் தரலாகாது என்பது அரியநாதர் விருப்பம். அதனால் அவர் சமாதான வழியின் நாகமரைச் சரிப்படுத்த முயன்றார். அவரது முயற்சி பலன் அளிக்கவில்லை. ஆதலின் இருதிறத்துப் படைகளும் போர்புரியத் தொடங்கின. கடும் போர் நாகமர் பக்கம் இருந்த படைவீரருள் பாதி எண்ணிக்கை உடையவர், முன்னர் அவருடன் விஜயநகரத்திலிருந்து வந்தவர்; மற்ற பாதியினர் தமிழர். விசுவநாதருடன் வந்தவர் அனைவரும் பாண்டிய நாட்டிற்கே புதியவர்; சிறந்த பீஜப்பூர்ச் சுல்தான் படைகளை முறியடித்த வீரர்கள். அதனால் அவர்கள் மிக்க திறமையுடன் போர் செய்தனர். விசுவநாதர், தாம் தம் தந்தையாருடன் போரிடுவதை மறந்தார்; எதிரி அரசன் ஒருவனுடன் போரிடுவதாகவே எண்ணிக் கடும் போர் புரிந்தார். விசுவநாதர் உண்மையான வீரம் காட்டிப் போர் புரிதலைக் கண்ட அவருடைய வீரர்கள் உற்சாகம் கொண்டு கடும்போர் புரிந்தனர். போரை விரைவில் முடிக்க விரும்பிய அரியநாதர் வீரரை உற்சாகப்படுத்தினார். அவர் நாகர் சேனையைச் சின்னாபின்னப் படுத்தினார். நாகமர் படை கதிகலங்கி ஓட்டம் எடுத்தது. மஹா மண்டலேசுவரர் ஆகிய நாகமரை அவர் தவப்புதல்வரான விசுவநாதர் சிறைப் படுத்தினார். வருந்தத்தக்க காட்சி விசுவநாதர் தம் தந்தையாரைச் சிறைப்படுத்தும் பொழுது, “எந்தையீர், என்னை மன்னித்து ஆசீர்வதிக்க வேண்டும். நான் அரசர் ஆணைப்படி இங்கு வந்தவன். நான் அரசர் ஆணையை நிறைவேற்றுகிறேன்” என்று கூறிக் கண்ணீர் விட்டார். நாகமர் தம் தவற்றை எண்ணிக் கண்ணீர் உகுத்தார். இவர்கள் வருத்த நிலையைக் கண்டு அரியநாதர் வருந்தினார். பாண்டியநாட்டில் அரியநாதர் விசுவநாதர் அரியநாதரை நோக்கி, “நண்பரே, நான் தந்தையாரை விஜயநகரம் அழைத்துச் செல்வேன். பேரரசர் பாண்டிய நாட்டைப் பற்றி ஒரு முடிவுக்கு வரும்வரை நீர் இங்குப் பாண்டியனுக்கு உதவியாக இருந்து வருக; நம் பேரரசின் பிரதிநிதியாக இருந்து கவனிக்க வேண்டும் வேலைகளையும் கவனித்து வருக” என்று கூறினார். அரியநாதர் அதற்கு உடன்பட்டார். விசுவநாதரும் நாகம நாயக்கரும் விஜயநகரம் நோக்கிச் சென்றனர்.6 இராயர் திருமுன் சில நாட்களில் இருவரும் தம் படையுடன் விஜயநகரம் மீண்டனர். அவர்கள் மீண்ட நேரத்தில் பேரரசர் அவையில் இருந்தார். விசுவநாதர் நாகம நாயக்கருடன் அவைக்குள் நுழைந்தனர். இருவரும் பேரரசரை வணங்கி நின்றனர். இராயர் கொண்ட மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. சபையோர், “விசுவநாதர் உண்மையான இராஜபக்தி உடையவர். பிள்ளை என்பவன் இப்படி அல்லவா இருத்தல் வேண்டும்!” என்று பேசிக் கொண்டனர். நாகமர் சொல்ல முடியாத நாணத்தால் தலைகுனிந்து நின்றார். விசுவநாதர் வேண்டுகோள் இராயர் விசுவநாதரை அன்புடன் நோக்கினார்; “உனது உண்மையான ஊழியத்தைப் பாராட்டுகின்றோம். உனக்கு யாது பரிசு வேண்டும்?” என்று கேட்டார். உடனே விசுவநாதர் இராயரை வணங்கி, “பெருமானே, எனக்குப் பொன்னும், பொருளும், போகமும் வேண்டுவதில்லை. என் தகப்பனார் ஆகிய நாகமரைத் தாங்கள் மன்னித்து, அவரை மஹா மண்டலேசுவரர் பதவியில் மீட்டும் வைப்பதாகிய பரிசு ஒன்றையே வேண்டுகிறேன்” என்று உருக்கமாக உரைத்து நின்றார். இராயர் கருணை இராயர் விசுவநாதர் முகத்தைப் பார்த்தார். அப்பொழுது விசுவநாதர் கண்கள் இராயரை ஆவலோடு நோக்கின. நாகமர் சிறிதே முகத்தை தூக்கி, இராயர் முகத்தைக் கவனித்தார். இராயர், அவையினர் கருத்தை அறிய அவர்கள் முகத்தைப் பார்த்தார்; முடிவில், விசுவநாதரை நோக்கி, “வீரனே, உன் விருப்பம் போல் ஆகுக. நாகமரே, நீர் உமது பழைய ஆசனத்தில் அமரும்” என்று அருளிச் செய்தார். அக்கருணை உரையைக் கேட்டு, நாகமர் ஆனந்தக் கண்ணீர் விட்டார்; இராயரை வணங்கித் தம் இருப்பிடத்தில் அமர்ந்தார். இந்த மங்கல முடிவைக் கண்ட விசுவநாதர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை உண்டோ? இராயர் அருளால் பாண்டிக்குமரன் மதுரைக்கு அரசன் ஆக்கப்பட்டான். அடிக்குறிப்புகள் 1. அவர்கள் ஆட்சி ஏறத்தாழக் கி.பி. 1324 முதல் 1371 வரை இருந்தது. அப்பொழுது மதுரையை ஆண்ட சுல்தான்கள்: 1. ஷரீப் ஜலாலுத்தீன் அஸன் ஷா 2. அலாவுத்தீன் உதௌஜி 3. குத்புத்தீன் பிரோஜ் லூ 4. கியாதுத்தீன் முஹம்மத் தமகன் ஷா. 5. நசருத்தீன் முஹம்மத் காஸி தமகன் ஷா 6. அடில் ஷா 7. பக்ருத்தீன் முபரக் ஷா 8. அலாவுத்தீன் சிகந்தர் ஷா 2. கம்பணர் உதவியால் அரியணை ஏறியவன் சோமசேகர பாண்டியன் என்பவன். 3. Vijayanagara Sexcentenary Commemoration Vol. PP. 175-176. 4. கம்பண உடையார் காலத்துச் சோமசேகர பாண்டியனுக்கும் இச் சந்திர சேகர பாண்டியனுக்கும் இடையில் விஜய நகரப் பேரரசுக்கு உட்பட்டு இருந்த பாண்டியர் இவராவர்:- சோமசுந்தர பாண்டியன், பீமசேன பாண்டியன், இராஜகுஞ்சர பாண்டியன், பிரதாபராஜ பாண்டியன், இராஜ சேகர பாண்டியன், வரகுண பாண்டியன், இராம வர்ம பாண்டியன், குமாரசந்திர பாண்டியன், வரதராஜ பாண்டியன், வரதுங்க பாண்டியன், குமாரசிங்க பாண்டியன், குலோத்துங்க பாண்டியன். 5. இதற்கு மாறாக, ‘சந்திரசேகர பாண்டியனிடம் குடிகட்கு நம்பிக்கை இல்லை. அவன் திறமை அற்ற அரசன். ஆதலின் பெருமக்களின் வேண்டுகோளின் படி நாகமர் அரசர் ஆனார்’ என்று மற்றொரு வரலாறு கூறுகின்றது. நாகமரை அரசாளுமாறு பாண்டியன் வேண்டினான் என்று மற்றொரு நூல் கூறுகிறது. Vide The Aravidu Dynasty of Vijayanagar, PP. 125-130. 6. ‘Indian Antiquary, 1914, p.254. 7. மதுரையில் நாயக்கர் ஆட்சி மதுரையார் வேண்டுகோள் கிருஷ்ணதேவ ராயர் ஆணைப்படி அரியணை ஏறிய பாண்டியகுமாரன் இரண்டு ஆண்டுகளே அரசாண்டான்; பிறகு அவன் நோய்வாய்ப்பட்டு மடிந்தான். அவனுக்குப் பின்னர்ப் பட்டம் பெறத்தக்கவர் அவன் மரபில் யாரும் இல்லை. பட்டத்திற்கு உரியவர் எவரும் கிடைக்கவில்லை. மதுரையை முஸ்லிம்கள் அரசாண்ட காலத்தில் பாண்டிய மரபில் ஒரு கிளையினர் தென்காசிக்குச் சென்றனர்; அதனைத் தலை நகராகக் கொண்டு தென் பாண்டி நாட்டை ஆண்டுவந்தனர் என்று முன் சொன்னோம் அல்லவா? அந்தக் கிளை மரபினரும்1 மதுரைப் பட்டத்திற்கு முயலவில்லை; அவர்களில் தக்கவரை அரசராக்க வேண்டும் என்று பேரரசரும் கவலை கொள்ளவில்லை. இந்தக் குழப்ப நிலையில் கிருஷ்ணதேவராயர் காலமானார். உடனே அவரது உடன்பிறந்த அச்சுத ராயர் பேரரசரானார்1 அப்பொழுது மதுரை நகரப் பெருமக்கள் பேரரசர்க்கு வேண்டுகோள் ஒன்று விடுத்தனர். அஃதாவது, “பாண்டிய நாட்டில் விசுவநாத நாயக்கரும் தளவாய் அரியநாத முதலியாரும் இருந்து நாட்டைப் பாதுகாத்தல் வேண்டும்” என்பது. மதுரையில் நாயக்கர் அரசு மதுரையார் மனம் களிக்க விசுவநாதர் பாண்டிய நாட்டை அடைந்தனர். அரியநாதரும் மதுரை மாநகரத்தாரும் அவரை மிக்க சிறப்புடன் வரவேற்றனர். குறித்த நல்ல நாளில் விசுவநாதர் விஜயநகரப் பிரதிநிதியாகவும் மதுரை அரசராகவும் முடி சூடினார்.2 அரியநாதர் அமைச்சர் பதவியையும், சேனைத் தலைவர் (தளவாய்) பதவியையும் பெற்றார். நியாயமாக நோக்கின், அமைச்சர் வேலையை ஒருவரும், தானைத் தலைவர் வேலையை மற்றொரு வரும் பார்க்க வேண்டும். ஆனால் பாண்டிய நாட்டின் நிலைமை ஒரே குழப்பமாக இருந்ததால், இரண்டு பதவிகளையும் அரியநாதரே தாங்க வேண்டும் என்பது பேரரசர் கட்டளை ஆகும்.3 இராயர் அரியநாதர்மீது வைத்திருந்த நம்பிக்கையையும், மதிப்பையும் இக்கட்டளையிலிருந்து நன்கு அறியலாம் அல்லவா? பாண்டிய நாட்டு நிலைமை விசுவநாதர் அரசரான பொழுது பாண்டிய நாட்டு நிலைமை எப்படி இருந்தது? மாலிக்காபூர் படையெடுப்பி லிருந்தே பாண்டிய நாட்டின் அமைதி குலைந்தது. ஐம்பது ஆண்டுகள் மதுரையில் முஸ்லிம்கள் ஆட்சி புரிந்தன. பின்னர்ப் பாண்டி நாடு விஜயநகரப் பேரரசர்க்கு அடிமைப்பட்டது. பாண்டிய மரபினர் கொற்கை, தென்காசி முதலிய இடங்களில் இருந்து தனித்தனியாக அரசாண்டு வந்தனர். சோழ-பாண்டியர் போர்களினால் நாடு அல்லல் உற்றது. பிறகு நாகமர் ஆட்சி சிறிது காலம் நடந்தது. அதன் பின்னர் நாடெங்கும் ஒரே குழப்பம் பரவியது. ‘தடியெடுத்தவன் தண்டல்காரன்’ என்ற முது மொழிப்படி, பாண்டிய நாடு சிறு சிறு அரசர்கள் கையில் சிக்குண்டு தவித்தது. பழைய பாண்டியன் அரசன் காதற் கிழத்தியின் மைந்தர் ஐவர் தங்களைப் ‘பஞ்ச பாண்டியர்’ என்று கூறிக் கொண்டு, பாண்டிய அரசு தங்கட்கே உரியதென்று வாதாடினர்; அங்கங்கே கலகங்களும் குழப்பமும் செய்து வந்தனர். அந்தக் குழப்ப நிலையிற்றான் விசுவநாதர் மதுரை மன்னராக முடிசூடினார். அரியநாதர் அரும்பணி அரியநாதர் நாட்டில் அமைதியை உண்டாக்கப் பல பணிகள் புரிந்தார். அவற்றுள் முதன்மையானது சோழ பாண்டிய நாடுகட்குத் திட்டமான எல்லை வகுத்ததேயாம். அவர் தஞ்சையை அடுத்த வல்லத்துக் கோட்டையைச் சோழனுக்குக் கொடுத்தார்; அதற்கு ஈடாகத் திருச்சிராப் பள்ளியைப் பாண்டிய நாட்டுடன் சேர்த்தார்; அடுத்தபடியாகக் காவிரியாற்றின் இரு பக்கங்களிலும் இருந்த நாடுகளை அழித்தார். அக்காடுகளில் வழிப்பறிக் கொள்ளைக்காரர் இருந்து, சோழ - பாண்டிய நாட்டு மக்கட்கு ஓயாத துன்பம் விளைத்து வந்தனர். அரியநாதர் அக்கள்வர்களைப் பிடித்து, அவர்கட்கு நன்மதி கூறி, அவர்களை எல்லைக் காவலராக நியமித்தார்; காடுகளை அழித்த இடங்களில் கிராமங்களை உண்டாக்கினார்; காவிரியிலிருந்து பல கால்வாய்களை வெட்டி நீர்ப்பாசன வசதிகளைச் செய்தார். திருச்சிராப்பள்ளி முதலியார் திருச்சிராப்பள்ளியைச் செப்பம் செய்ய முயன்றார்; அது பாண்டிய நாட்டிற்கு எல்லை நகரம் ஆதலின், அங்குக் கோட்டை - கொத்தளங்களை அமைத்தார்; நகரத்தைச் சுற்றிலும் இரண்டு பெரிய மதிற் சுவர்களை எழுப்பினார்; ஆழ்ந்த அகழி ஒன்றை வெட்டுவித்தார்; இப்பொழுது அங்குள்ள தெப்பக்குளத்தை உண்டாக்கியவர் அரியநாதரே ஆவர்; அவர் அரசர்க்கு வேண்டிய அரண்மனை ஒன்றையும் அமைத்தார். மதுரை மாநகரம் முதலியார் மதுரையையும் காவல் மிகுந்த நகரமாக்க முனைந்தார்; அங்கங்கு இடிந்தும் பழுதுபட்டும் கிடந்த பாண்டியர் காலத்து மதிற் சுவரை நீக்கிப் புதிய வன்மையான மதிற் சுவர் ஒன்றை நகரைச் சுற்றி எழுப்பினார்; கோட்டையைப் புதுப்பித்தார்; எழுபத்திரண்டு கொத்தளங்களைப் புதியனவாக அமைத்தார்; அவற்றில் காவலாளிகளையும் வீரர்களையும் நியமித்தார்; அங்கங்குப் பீரங்கி முதலிய போர்க் கருவிகளை வைத்தார். வையை நீர் வையையாற்று நீர் வயல்களுக்குப் பெரிதும் பயன்படுமாறு செய்த பெருமை முதலியாருக்கே உரியதாகும். அவர் அந்தப் பழைய ஆற்றில் அங்கங்கே அணைகளைக் கட்டினார்; பல கால்வாய்களை வெட்டினார்; அவற்றின் வழியே வையைநீர் பாண்டிநாட்டு வயல்களுக்குப் பாயுமாறு செய்தார். இப்புண்ணியமான வேலையில் ஆயிரக்கணக்கான தமிழர்க்கு வேலை கிடைத்தது. கரம்பாகக் கிடந்த நிலங்கள் பயிர் செய்யத்தக்க பண்பு பெற்றன. குடிமக்கள் முதலியாரைக் கண்கண்ட தெய்வமாகப் போற்றலாயினர். திருநெல்வேலியில் குழப்பம் முதலியார் வட பாண்டி நாட்டில் இத்தகைய அரும் பணிகள் செய்து வந்ததால், மதுரையில் நாயக்கர் அரசு வேரூன்றலாயிற்று. வட பாண்டி நாட்டார் ‘நாயக்கர் அரசே வேண்டும்’ என்று சொல்லி, முதலியார் அரும்பணிகளைப் பாராட்டி வந்தனர். இவற்றைக் கண்டு கயத்தாறு என்னும் ஊரில் இருந்த பஞ்சபாண்டியர் அச்சங் கொண்டு கிளர்ச்சி செய்தனர், “பாண்டி நாட்டில் பாண்டியர் ஆட்சி வேண்டும்; தெலுங்கர் ஆட்சி வேண்டா. நாடு எங்கட்குச் சொந்தம். அந்நியர் இங்குப் புக இடம் இல்லை” என்று பிரசாரம் செய்தனர்; திருநெல்வேலி ஜில்லாவில் இருந்த கள்ளர் - மறவர் - முதலிய வீர மக்களைத் தட்டிக் கிளப்பினர். அதனால் தமிழ் வீரர்கள் கொதித்து எழுந்தனர்; தென் பாண்டி நாட்டில் பெரும்படை திரண்டது. பஞ்ச பாண்டியர் அப்படையை நடத்திக் கொண்டு, நாயக்க அரசை ஒழிக்கும் நோக்கத்துடன் போருக்குப் புறப்பட்டனர். போர் நிகழ்ச்சிகள் பஞ்சபாண்டியர் நாட்டுப்பற்றை அரியநாதர் பாராட்டினார்; எனினும் அரச சேவையை நிறைவேற்ற வேண்டும் பொறுப்பினால் அவர்களுடன் போர் புரியத் துணிந்தார்; வடபாண்டிய நாட்டுப் படையுடன் சென்று போரிற் குதித்தார். இரு திறத்துப் படைகளும் கடுமையாகப் போர் புரிந்தன. எனினும் பாண்டியர் படை நாட்டுப்பற்று மிகுந்த நிலையில் உயிரைத் துரும்பாக மதித்துப் போரிட்டது. முதலியாரும் போரைக் கடுமையாகவே நடத்தினார். வாரங்கள் மறைந்தன; மாதங்கள் தோன்றின; ஆறு திங்கள் அரும்போர் நிகழ்ந்தது. எவருக்கும் வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை; அரியநாதரும் விசுவநாதரும் அச்சமும் கவலையும் கொண்டனர். நாட்டுப் பற்று மிகுந்த வீரரை எதிர்த்து வெல்லுதல் இயலாதென்பதை அவ்விருவரும் உணர்ந்தனர். முதலியார் யோசனை ‘நாம் தென்பாண்டி நாட்டாரைப் போரில் வெல்ல இயலாது; ஆதலின் சூழ்ச்சியினால்தான் வெல்ல வேண்டும். வீணாகப் பலரைப் போரில் பலியிடுவதில் பயனில்லை. அவர்கள் தங்களுட் சிறந்த வீரன் ஒருவனை அனுப்பட்டும். நாமும் நம்மவருட் சிறந்த வீரன் ஒருவனை அனுப்புவோம். இருவரும் தனிப்போர் புரியட்டும். அவருள் வெல்பவர் கட்சிக்கே பாண்டிய நாடு உரியதாகும். இந்த யோசனையைப் பகைவரிடம் தெரிவிப்போம்’ என்று அரியநாதர் எண்ணினார். அவர் முடிவை விசுவநாதர் ஆதரித்தார்; பஞ்சபாண்டியரும் ஆதரித்தனர். வீரர் இருவர் ‘ஒவ்வொரு கட்சியின் சார்பாகப் போர்புரியும் வீரர் யாவர்?’ என்ற கேள்வி அடுத்து எழுந்தது. மதுரை அரசர் பக்கம் முதலியார் ‘நான்’ என்றார். விசுவநாதர் ‘நான்’ என்றார். பின்னர் விசுவநாதர் போர் செய்வது என்பது முடிவாயிற்று. பஞ்ச பாண்டியருள் தென்பாண்டி வீமன் என்ற பாண்டியன் போர் வீரனாக தேர்ந்தெடுக்கப்பட்டான். வீரர் தனிப்போர் வீரர் இருவரும் தத்தம் வழிபடு கடவுளை வேண்டிப் போர் தொடங்கினர். தென் பாண்டி வீமன் திருநெல்வேலி ஜில்லாவில் புகழ் பெற்றவன்; வாட்போரில் வலியவன்; ஈட்டிப் போரில் இணையற்றவன்; மற்போரில் முதலிடம் பெற்றவன். அவன் மீசையை முறுக்கிவிட்டு வந்து தயாராக நின்றான். விசுவநாதர் எளியவரா? அவர் அரச மரபினர்; விஜயநகரப் பேரரசின் வலிய தூண் என்று சொல்லப்பட்ட நாகம நாயக்கர் புதல்வர் அல்லவா? அவர் தோள்வலி கொண்டவர்; அஞ்சாத ஆண்மையாளர். அவர் மன மகிழ்ச்சியுடன் வந்து, பாண்டி வீமனைப் புன்முறுவலுடன் கைகுலுக்கினார். வீரர் இருவரும் மற்போர் புரிந்தனர்; இடசாரி வலசாரி வந்தனர்; முன் பாய்ந்தனர்; பின் சாய்ந்தனர்; மேல் எழுப்பிக் குதித்தனர்; ஒருவரை ஒருவர் முட்டிக் கொண்டனர்; மோதிக் கொண்டனர்; குத்திக் கொண்டனர்; ஒருவர்க்கு ஒருவர் பாய்ச்சல் காட்டினர். இருதிறத்துப் படைவீரரும் இமை கொட்டாமல் அவர்களைக் கவனித்து வந்தனர். இருவரும் வாட்போரில் இறங்கினர். விசுவநாதர்க்கு உடம்பெங்கும் காயங்கள் உண்டாயின. உதிரம் பெருக்கெடுத்தது. அது கண்டு அவர் அஞ்சினார். உடனே தம் சுயமதிப்பு அவர் நினைவிற்கு வந்தது; மானவுணர்ச்சி மேல் எழுந்தது. அவர் வீராவேசம் கொண்டார்; வாளை வேடிக்கையாகச் சுற்றுவது போலப் பாசாங்கு செய்து திடீரெனப் பாண்டி வீமன் வயிற்றிற் பாய்ச்சினர்; அதே சமயம் அவரும் நிலத்திற் சாய்ந்தார். ஆயின் விசுவநாதர் உயிர் பிழைத்தார். பாண்டி வீமன் பரகதி அடைந்தான்.4 போரின் முடிவு பஞ்ச பாண்டியர் ஒப்பந்தப்படி தோற்றவர் ஆயினர்; அதனால் அவர்கள் மனம் வருந்திப் பொதியமலைப் பிரதேசத்திற்குச் சென்றுவிட்டனர். விசுவநாதரே பாண்டி நாட்டு அரசர் என முடிவு செய்யப்பட்டது. விசுவநாதர் காயங்கள் ஆறி உடல் நலம்பெறப் பல மாதங்கள் ஆயின. ஆயினும், நாட்டில் அமைதி ஏற்பட்டதன்றோ? அரியநாதரே அரசர் பெயரளவில் விசுவநாதர் அரசர்; செயல் அளவில் அரிய நாதரே அரசர். அவர் திருச்சிராப்பள்ளி முதல் கன்னியாகுமரி வரையுள்ள நாட்டை அமைதிப்படுத்தினார்; திருநெல்வேலியில் உள்ள சிவபிரான் திருக்கோயிலைப் புதுப்பித்தார்; தாமிர பரணியிலிருந்து பல கால்வாய்களை வெட்டுவித்து நாட்டை வளப்படுத்தினார்; அவ்யாற்றின் கரைகளில் இருந்த காடுகளை அழித்துக் கள்வர் பயத்தைப் போக்கினார்; திருநெல்வேலி நகரத்தைப் புதுப்பித்தார்; பாளையங்கோட்டை என்னும் இடத்தில் பெரிய கோட்டை ஒன்றை எழுப்பினார்; மேற்கு மலைச் சாரலில் இருந்த குறுநில மன்னரை அடக்கி, அப்பகுதியில் அமைதியை நிறுவினார். முதலியாரும் சேதுபதியும் இராமநாதபுரம் ஜில்லாவை ஆண்ட சேதுபதி உரிமை வீரர். அவர் விஜயநகரப் பேரரசுக்கு ஒரு சமயம் அடங்கி நடப்பார்; மற்றொரு சமயம் அடங்காது நடப்பார். அவர் நாட்டில் மறவர் மிகுதி. மறவர் சிறந்த தமிழ் வீரர். அவர்கள் பல நூற்றாண்டுகளாகத் தமிழ்நாட்டில் போர்த் தொழிலில் ஈடுபட்டுவந்த மரபினர். சேதுபதி அம்மறவர் துணையைப் பெற்று எந்த அரசரையும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் பெற்றவர். அரியநாத முதலியார் அத்தகைய சேதுபதியைச் சாம - பேத - தான - தண்டத்தால் அடக்கி, அவருடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். முதலியாரும் கொங்குநாடும் இவ்வாறு பாண்டிய நாட்டைப் பயன்படுத்திய முதலியார் கொங்கு நாட்டை அடைந்தார். அந்நாடு சேலம், கோயமுத்தூர், நீலகிரி ஜில்லாக்களைக் கொண்டது. இராயர் ஆட்சிக்கு அடங்காமல் குறுநில மன்னர் சிலர் அங்குச் சென்றதும், அவர்கள் பெட்டிப் பாம்புபோல அடங்கினர். இங்ஙனம் அரியநாத முதலியார் நாயக்க அரசரைத் தென்னாட்டில் பரப்பி நிலைபெறச் செய்தார். நாடெங்கும் கோட்டைகள் இந்தப் பரந்த பெருநாட்டைக் காப்பது எப்படி? முதலியார் இப்பெரு நாட்டின் முக்கிய இடங்களில் கோட்டைகளை எழுப்பினார்; மைசூர்க்கும் கோயமுத்தூர்க்கும் இடைப்பட்ட சத்தியமங்கலம் என்னும் ஊரில் ஒரு சிறந்த கோட்டை எழுப்பப்பட்டது. பவானித் தாலூகாவில் காவேரிபுரத்தில் ஒரு கோட்டை அமைக்கப்பட்டது. ஆண்டியூர்க் கோட்டையும் ஒன்று. கோயமுத்தூருக்கு அப்பால் பாகேசுவரன் கோட்டை, மலைக்கோட்டை முதலியன எழுப்பப்பட்டன. சேலத்திலும் ஒரு கோட்டை எழுந்தது. ஓமலூர், சேத்தமங்கலம், அனந்தகிரி, மோகனூர், பரமட்டி, சங்கரிதுர்க்கம், நாமக்கல், திருச்செங்கோடு முதலிய இடங்களில் கோட்டைகள் கட்டப்பட்டன. தெற்கே மதுரை, திண்டுக்கல், அழகர்மலை முதலிய இடங்களில் கோட்டைகள் அமைப்புண்டன. இவ்வாறு சிறந்த அரசியல் நிபுணரான முதலியாரால் பல கோட்டைகள் கட்டப்பட்டன. ஒவ்வொரு கோட்டையிலும் காவலாளரும் படைவீரரும் வைக்கப்பட்டனர்.5 அடிக்குறிப்புகள் 1. இவர் ஆட்சிக் காலம் 1530-1542. 2. விசுவநாதர் ஆட்சிக் காலம் 3. Indian Antiquary, 1914, P. 257 4. Indian Antiquary, 1915, PP. 37-38. 5. Indian Antiquary, 1915, PP. 86-87. 8. பாளைய வகுப்பு தமிழ் நாட்டுப் பெருமக்கள் அரியநாதர், ‘நாம் அமைதிபெறச் செய்த பெரிய நிலப்பகுதி, என்றென்றும் நாயக்கர் ஆட்சிக்கு உட்பட்டு இருக்க வேண்டுமே! அதற்கு என்ன செய்வது!’ என்று யோசித்தார். பல நாடுகளைக் கொண்ட பேரரசை நிலைபெற ஆள்வது எளிதன்று. அந்நாடுகளில் பலவகைப் பெருமக்கள் இருந்தனர். அவர்களுள் சிலர் இக்கால ‘ஜமீந்தார்’ போன்றவர்; தங்கள் மனம்போலச் சுதந்திர அரசர்களாக இருந்தவர் ஒரு வகையினர்; ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ்நாட்டு மூவேந்தர்தம் அரசியலில் அமைச்சர், தானைத் தலைவர் முதலிய பெரிய பதவிகள் தாங்கிவந்த மரபினர் ஒரு சாரார்; வீராதி வீரர்களாகப் பல போர்களில் விளங்கித் தம் ஆண்மையைக் காட்டி ஊர்களையும் கோட்டைகளையும் கைக்கொண்டு சிற்றரசு செய்தவர் ஒரு வகையினர். விஜயநகர அரசு தெற்கே பரவிய பொழுது தென்னாடு வந்த படையில் தொடர்பு கொண்டு, தென்னாட்டில் சிற்றரசராக நிலைத்துவிட்ட வடுகப் பெருமக்கள் ஒரு வகையினர். பாளையங்கள் கம்பண உடையார் காலத்திலும் அவர்க்குப் பிறகும் வந்த தெலுங்கப் படைவீரர்கள் தமிழ் நாட்டு முக்கிய இடங்களில் நிலையாகத் தங்கிவிட்டனர். அந்த இடங்கள் பாளையங்கள் எனப்பட்டன. அப்பாளையங்களில் பெரும்பாலான மக்கள் முதலில் தெலுங்கரே யாவர். படை வீரருடன் அவர்கட்கு உதவியாகப் பலவகைத் தொழிலாளரும் தெலுங்க நாட்டிலிருந்து வந்து குடியேறினர். இங்ஙனம் மதுரை, திருச்சி ஜில்லாக்களில் உண்டான பாளையங்கள் பல.1 கொங்குநாட்டுப் பாளையங்கள் பல.2 திருநெல்வேலி ஒன்றிற்றான் பெரும்பாலான் பாளையக்காரர் தமிழர்.3 விருப்பும் வெறுப்பும் புதியவராகத் தமிழகத்திற் குடியேறிய தெலுங்கப் பெருமக்கள் விசுவநாதர் ஆட்சி மதுரையில் ஏற்படப் பேருதவி புரிந்தவர்கள்; தங்கள் உயர்வை அவ்வரசினால் நிலைநாட்டிக் கொள்ள விரும்பியவர்கள். அவர்கள் தங்கட்கு அரசாளும் சிறப்பு வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தார்கள். தமிழ் நாட்டுப் பெருமக்கள் நாயக்க அரசு நம் நாட்டில் ஏற்பட்டதை வெறுத்தனர்; தங்கள் உரிமை கெட்டதென்று சீறிக் கொண்டு இருந்தனர். புதுக்கோட்டைத் தொண்டைமான் போன்ற சிற்றரசர் முணுமுணுத்தனர். முதலியார் யோசனை இப்பல திறப்பட்ட பெருமக்களையும் நாயக்க அரசர்க்கு உண்மை உடையவராகச் செய்ய வேண்டுமாயின், அவர்கள் மனம் குளிர ஏதாகிலும் செய்தாக வேண்டும். மேலும், அவர்கள் ஒழுங்காக இராவிடில் நாயக்க அரசு தமிழ்நாட்டில் நிலையாது. முதலியார் இவ்விரண்டையும் நன்கு அறிந்தார். அதனால், அப்பேரறிஞர் இவ்விரண்டும் வெற்றி பெறத்தக்க திட்டம் ஒன்றைத் தயாரித்தார். அதனை விசுவநாதர் முழு மனத்துடன் ஆதரித்தார். மேற்சொன்ன அத்திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். முதலியார் அத்திட்டத்தை நடத்திக் காட்டிப் பெரும்புகழ் பெற்றார். அதுதான் ‘பாளைய வகுப்புத் திட்டம்’ என்பது.4 பாளைய வகுப்பு நாயக்கர் ஆட்சிக் உட்பட்ட நிலப்பகுதியில் தொன்று தொட்டு இருந்துவந்த சிற்றரசர்கள், பெருமக்கள், வீரர் தலைவர் முதலியோர் பெயர்களும் புதியவராகக் குடியேறிய தெலுங்கப் பெருமக்கள் பெயர்களும் தொகுக்கப்பட்டன. அவர்கள் கைவசம் இருந்துவந்த ஊர்களும் கணக்கிடப் பட்டன. முதலியார், அவரவர் ஆண்டுவந்த பகுதியை அவரவர் வசமே விட்டார்; புதியவர்க்கும் அதுவரை ஒன்றுமே பெறாதிருந்த பெருமக்கட்கும் பல சிற்றூர்களை அளித்தார்; அவர்கட்குப் பாளையக்காரர் என்ற பெயர் சூட்டினார். பாளையக்காரர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி பாளையம் எனப் பெயரிடப்பட்டது. பாளையக்காரர் உரிமைகள் பாளையத்தில் வரிதண்டுதல், நீதி வழங்குதல், படை வைத்துக் கொள்ளுதல், பாதுகாவல் புரிதல் முதலிய அனைத்தும் பாளையக்காரர் கடமை. பாளையத்தின் மொத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு பாளையக்காரர் எடுத்துக் கொள்ளலாம். ஒரு பங்கைப் பாளையத்துக்காகச் செலவிட வேண்டும், ஒரு பகுதியை நாயக்க மன்னருக்கு ஆண்டுதோறும் சேர்ப்பிக்க வேண்டும். பாளையக்காரர் தம் பாளையத்திற்கு அரசர் ஆவர். பாளைய மக்கள் அவரை ‘அரசர்’ என்று அழைப்பர். பாளையக்காரர் விடுதி ‘மாளிகை’ அல்லது ‘அரண்மனை’ என்றே அழைக்கப்படும். பாளையக்காரர் பெரு மக்களும் பிறரும் புடைசூழக் கொலு இருப்பர். சிறப்பு நாட்களில் குடிகள் அரசரைப் பணிந்து காணிக்கை செலுத்துவர். அவர் முடி மன்னரைப் போலப் பரிவாரங்கள் புடை சூழப் பவனி வருவர். இராஜ சின்னங்களான குடை - சாமரம் - முரசம் முதலியன அவர்க்கு உண்டு. பாளையக்காரர் கடமைகள் பாளையக்காரர் தம் ஆட்சிக்கு உட்பட்ட இடத்தில் காடழித்தல், கிராமங்கள் அமைத்தல், பயிர்த் தொழிலைப் பெருக்குதல், கைத்தொழில்களை வளர்த்தல், கோவில்களை அமைத்தல், அவற்றைப் பாதுகாத்தல், சாலைகளை அமைத்தல், நீர்ப்பாசன வசதிகளை உண்டாக்குதல், நாட்டைக் காவல் புரிதல், வழக்குகளை விசாரித்து நீதி வழங்குதல், கல்விச் சாலைகளை வைத்தல், படை ஒன்றைத் தயாரித்துப் பாதுகாத்தல் வருதல் முதலியன செய்யக் கடமைப்பட்டவர்; தேவை உண்டாயின; பேரரசருக்கு அப்படையைப் போருக்கு உதவவும் கடமைப்பட்டவர் ஆவர். பாளையக்காரர் தமது பாளையத்தை அடுத்து இருக்கும் (அரசர்க்குச் சொந்தமான) சிற்றூர்களையும் கண்காணிக்க வேண்டும். கோட்டைக் காவல் அரியநாதர் அமைந்த பாளையங்கள் எழுபத்திரண்டு. ஆகவே பாளையக்காரர் எழுபத்திரண்டு பேர் உண்டாயினர். மதுரைக் கோட்டையின் கொத்தளங்கள் எழுபத்திரண்டு அல்லவா? ஒவ்வொரு கொத்தளமும் ஒரு பாளையக்காரர் காவலில் விடப்பட்டது. அப்கொத்தளத்தைப் பாதுகாப்பதற்கு உரிய செலவு முழுவதும் அப்பாளையக்காரரைச் சேர்ந்தது. போர்க்காலத்தில் தாம் பேரரசர்க்கு அனுப்பும் படைக்கு உண்டாகும் செலவை அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும்; தம் பிரதிநிதியாகத் தம் பாளையச் செய்திகளை அரசர்க்கு எடுத்துக் கூற, அறிஞர் ஒருவர் அரச சபையில் எப்பொழுதும் இருந்துவர ஏற்பாடு செய்ய வேண்டும். பாளையத்தில் தலையாரி பாளையக்காரர் உத்தியோகஸ்தர் பலரை நியமித்துப் பாளைய விஷயங்களைக் கவனிப்பர். அவரது பாளையத்தைக் காவல் புரியத் தலையாரி ஒருவன் இருப்பான். ஊரையும் ஊர்ப்பாதைகளையும் காவல் புரிதல் அவன் தொழில். களவைக் கண்டுபிடிக்கும் தொழிலும் அவனுடையதே. திருட்டைக் கண்டு பிடியாவிடில் களவுபோன பொருள்களின் மதிப்பை அவன் கட்டித்தரவேண்டும். இந்தக் கடுமையான விதியினால், தலையாரி இராப்பகலாகப் பாளையத்தைக் காத்து வருவான் அல்லவா? அனைவருக்கும் ஆறுதல் முதலியார் அமைத்த இப்பாளைய வகுப்புத் திட்டத்தால் பெருமக்களும் சிற்றரசரும் ஆறுதல் அடைந்தனர்; நாயக்கர் அரசின்மீது இருந்த சீற்றத்தை விட்டனர்; மன மகிழ்ச்சியோடு தத்தம் பாளைய முன்னேற்றத்தில் கருத்தைச் செலுத்தினர்; காடுகளைக் கெடுத்து நாடாக்கினார்; அதனால் கொடிய விலங்குகளின் தொல்லையையும் வழிப்பறி செய்பவர் தொல்லையையும் ஒழித்தனர்; நீர்ப்பாசன வசதியைப் பெருக்க ஆறுகளிலிருந்து கால்வாய்களை வெட்டினர்; ஏரிகளைத் தோண்டினர்; வறண்ட நிலப்பகுதிகளை வேளாண்மைக்கு உரிய நன்னிலம் ஆக்கினர்; கைத்தொழில்களை வளர்த்தனர்; மலையடிவாரங்களைப் பண்படுத்திப் பயிர் செய்யவழி உண்டாக்கினர். இத்தகைய முயற்சிகளால் ஒவ்வொரு பாளையப்பட்டுக் குடிகளும் உழைப்பும் ஊக்கமும் கொண்டனர்; பயிர் வேலையில் ஈடுபட்டனர்; கைத்தொழில்களைக் கண்ணியமாகச் செய்தனர்; வாணிகத்தை வளம்பெற வளர்த்தனர்; பாளையக்காரரை அன்புடன் பாராட்டி அமைதியான வாழ்க்கையை நடத்தி வந்தனர். பாளையக்காரர் தம் பாளையத்தைப் பாதுகாத்து வந்ததுடன் பக்கத்தில் இருந்த அரசர் நிலங்களையும் கிராமங்களையும் காவல் புரிந்தனர்.5 சீமைகள் அடுத்தபடியாக முதலியார், நாயக்கர் ஆட்சிக்கு உட்பட்ட பெரு நாட்டைப் பல மண்டலங்கள் அல்லது சீமைகளாக வகுத்தார்; ஒவ்வொரு சீமைக்கும் ஆணையாளர் (கவர்னர்) ஒருவரை நியமித்தார். அவர் அந்தச் சீமையில் உள் பாளையக் காரரை மேற்பார்வையிடுவர்; மாகாண ஆட்சியை ஒழுங்காக கவனித்துக் கொள்வர். ஆணையாளர் பதவி சிறந்த சேனைத் தலைவர்கட்கே அளிக்கப்பட்டது. முதலியார் பிரித்த சீமைகளுள் சத்தியமங்கலம், கோயமுத்தூர், திண்டுக்கல், மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், திருநெல்வேலி என்பன குறிப்பிடத்தக்கன. ‘மதுரை சீமை,’ ‘திருநெல்வேலிச் சீமை’ என்னும் வழக்கு இன்றளவும் இருந்து வருகின்றது அன்றோ? இந்த வழக்கு நமது முதலியார் காலத்திலிருந்தே ஏற்பட்டதாகும். தலைநகரங்கள் முதலியார் நாயக்க அரசுக்கு இரண்டு தலைநகரங்களை அமைத்தார்; ஒன்று மதுரை; மற்றொன்று திருச்சிராப்பள்ளி. இரண்டு இடங்களிலும் அரண்மனைகள் அழகாகத் தக்க பாதுகாப்புடன் அமைக்கப்பட்டன. நாயக்கரும் அரியநாத முதலியாரும் மதுரையில் மீனாஷி-சுந்தரேசரையும் திரிசிரபுரத்தில் தாயுமானவரையும் மனமுருக வழிபட்டு வந்தனர். நாடெங்கும் அமைதி அரியநாத முதலியாரது அரிய அரசியல் திட்டம், குழப்பத்திலும் வறுமையிலும் சிறப்புற்றிருந்த தமிழகத்தை நல்வழிப்படுத்தியது; மக்கள் பழைய தமிழ் அரசர் காலத்தில் பெற்றிருந்த மன அமைதியைப் பெற்றுத் தம் வாழ்க்கையை நேரிய முறையில் நடத்திவரலாயினர். அரியநாதர் அவ்வப் போது பெருநாடு முழுவதும் சுற்றிப் பாளையக்காரர் மகிழ்ச்சி அடையுமாறு செய்துவந்தார். அப்பாளையக்காரர் பரம்பரையினர் இக்காலத்திலும் இருந்து வருகின்றனர். அவர்களைக் காண்கையில் நமக்கு அரியநாதர் நினைப்பு எழுதல் இயற்கை அன்றோ? அடிக்குறிப்புகள் 1. மதுரை, திருச்சி ஜில்லாக்களில் இருந்த பாளையங்கள்:- துறையூர், இலுப்பூர் குளத்தூர், பெரமூர் அரியலூர், மருங்காபுரி நத்தம், தோகைமலை, பிள்ளைவிழுங்கி, இராமகிரி, வீரமலை, ஆயக்குடி, பழநி, கன்னிவாடி, இடையகோட்டை, மதூர், எமகலாபுரம், தவசிமடை, அம்மைய நாயக்கனூர், கூளப்ப நாயக்கனூர், கொப்பைய நாயக்கனூர், தோட்டியன் கோட்டை, கண்டம நாயக்கனூர், போடிநாயக்கனூர், பெரிய குளம், கோம்பை, கம்பம், கூடலூர், எர்ரசக்க நாயக்கனூர், ஊத்தப்ப நாயக்கனூர், தொட்டப்ப நாயக்கனூர், வெள்ளைய குண்டம், புளியங்குளம் முதலியன. 2. கொங்குநாட்டுப் பாளையங்கள் சில:- காகவாடி, காடையூர், மஞ்சாபுரம், சாமத்தூர், ஊத்துக்குழி, நிமந்தபட்டி, தாரமங்கலம், போரவிபாளையம், தோப்பம் பட்டி, மரக்கூர், செவ்வூர், பழையகோட்டை அவ்வம்பட்டி, சமச்சுவாடி, ஆண்டிப்பட்டி, மயிலாடி, வேடப்பட்டி, சொதம் பட்டி, துங்காவி முதலியன. 3. திருநெல்வேலியில் இருந்த தமிழர் - தெலுங்கர் பாளையங்கள்:- ஊத்துமலை, சிங்கம்பட்டி, ஊர்க்காடு, சிவகிரி, ஏழாயிரம் பண்ணை, சேத்தூர், தலைவன் கோட்டை, சொக்கம்பட்டி, எட்டையபுரம், பாஞ்சாலக் குறிச்சி, நாகலாபுரம். Indian Antiquary, 1914, PP. 114-120. 4. Indian Antiquary, 1915, PP. 60-62. 5. Indian Antiquary, 1915, PP. 71-74. 9. அன்று கொடுத்த ஓலை வேதியர் வருகை இங்ஙனம் நாடு முறைப்படுத்தப்பட்ட பிறகு நாயக்கர் ஆட்சி தமிழ் நாட்டில் நன்கு வேரூன்றியது. ஒரு நாள் விசுவநாதர் அரச சபையில் கொலுவீற்றிருந்தார். அவருக்கு அருகில் தளவாய் அரியநாத முதலியார் அமர்ந்து அரச காரியங்களைக் கவனித்திருந்ததார்; பாளையப் பட்டுகளின் பிரதிநிதிகள் எழுபத்திரண்டு பேரும் தத்தம் இருக்கையில் இருந்தனர். அப்பொழுது வேதியர் ஒருவர் அரண்மனை வாயிலை அடைந்தார். அவர் நெற்றியிலும் கை, கழுத்து, மார்பு முதலிய இடங்களிலும் திருநீற்று ஒளி விளங்கியது. வண்ணான் வெளுக்காத ஆடை ஒன்றும் அவர் அரையை அழகு செய்தது. மேலாடை ஒன்று அங்ஙனமே இருந்தது. அவரது பரந்த முகமும் பெருத்த விழிகளும், கூரிய பார்வையும் அவரை அறிஞர் என்ற புலப்படுத்தின. அவர் சிறந்த வைதிகராகக் காணப்பட்டார். வாயிலில் வேதியர் அரண்மனை வாயிற்காவலர் அவரை உள்ளே விட மறுத்தனர்; “ஐயா, இஃது அரண்மனை, அரசர் கொலு மண்டபத்தில் அரச காரியங்களை ஆராய்கின்றார். அநுமதி இன்றி நீங்க உட்செல்லுதல் முடியாது” என்றனர். வேதியர், “காவலாளிகளே, நீங்கள் உங்கள் பணியை நன்கு நிறை வேற்றுகிறீர்கள். அது கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் தளவாய் அரியநாதர் முதலியார் அவர்களைக் காணவேண்டும். அவர்கள் சபையில் இருக்கிறார்களா?” என்றார். வாயிற் காவலர், “ஐயரே, தளவாய் அவர்கள் உள்ளே இருக்கிறார்கள். இப்பொழுது அவர்களைப் பார்ப்பது முறையன்று. வேலை முடிந்தபின் அவர்கள் மாளிகைக்குச் செல்வார்கள். நீங்கள் அவர்களை மாளிகையில் பார்ப்பது நலம்” என்றனர். மறையவர் அதற்கு உடன்படவில்லை. அவர் காவலரை நோக்கி, நீங்கள் அரியநாதரிடம் சென்று, ‘பிராமணர் ஒருவர் உங்களைப் பார்க்க விரும்புகிறார்; வாயிலில் காத்திருக்கிறார்’ என்று சொல்லுங்கள். நீங்கள் எனக்கு இந்த உதவி செய்தாற் போதும் என்றனர். வாயிற் காவலருள் ஒருவன் வேறு வழியின்றி உள்ளே சென்றான்; சமயம் பார்த்து முதலியாரைப் பணிந்தான்; மறையவர் வருகையைத் தெரிவித்தான். முதலியார், “அவரை உடனே அழைத்து வருக” என்றார். அடுத்த நிமிடம் மறையவர் முதலியார் முன் தோன்றினார். உரையாடல் முதலியார்:- ஐயர் அவர்களே, வாருங்கள். தாங்கள் என்னையா தேடி வந்தீர்கள்? ஐயர் :- ஆம்; தாங்கள்தானே அரியநாத முதலியார் அவர்கள்? முதலியார் :- ஆம் அடியேன் பெயர் அதுதான். தாங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? ஐயர்:- நான் மெய்ப்பேட்டிலிருந்து இங்கு வந்தேன். முதலியார்:- (வியப்புடன்) மெய்ப்பேட்டிலிருந்தா வந்தீர்கள்! மிக்க மகிழ்ச்சி. அதுதான் இந்த ஏழை பிறந்த ஊர். அங்கு எல்லோரும் சுகத்துடன் இருக்கின்றனரா? ஊர் நல்ல நிலையில் இருக்கிறதா? ஐயா:- எல்லோரும் சுகமே. ஊர் நல்ல நிலையில் இருக்கிறது. தாங்கள் பிறந்த இடம் வேறு எப்படி இருக்கும்? ஊரார் தங்களைப் பற்றியே எப்பொழுதும் பாராட்டிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலியார்:- எல்லாம் ஏகம்பன் திருவருள். அவன் அருள் இல்லாவிடில் இந்த ஏழைக்குப் பெருமை ஏது? மறையவரே, தாங்கள் யார்? என்னிடம் வந்த காரணம் யாது? ஐயர்:- முதலியார் அவர்களே, நான் மெய்ப்பேட்டைச் சேர்ந்தவன். என் இளமையில் தந்தையார் காலமானார். நான் காப்பவர் இன்றிக் காசியாத்திரை சென்றேன்; அங்குப் பெரியவரைச் சரண் அடைந்து வேத - ஆகம - புராணங்களைப் பல ஆண்டுகள் படித்தேன்; இராமேசுவர யாத்திரையாக வந்தேன். முதலியார்:- அப்படியா! மிக்க மகிழ்ச்சி, எனக்குத் தங்களைப் போன்ற படிப்பாளிகளிடம் மிக்க மதிப்புண்டு. தாங்கள் என்னை நாடி வந்த காரணம் கூறவில்லையே? ஐயர்:- தங்களைப் பார்த்துப் போகவே வந்தேன்; எல்லோரும் இன்பமாக வாழவேண்டும் என்னும் ஒன்றைத் தவிர, உத்தம பிராமணனுக்கு வேறு என்ன வேண்டும்? முதலியார்:- மிக்க மகிழ்ச்சி, உத்தம வேதியர் இலக்கணம் அதுதான். சான்றோர் அதனைத்தான் விரும்புவர். தாங்கள் என்னைப் பார்க்க விரும்பியதற்கு மூலம் என்ன? ஐயர்:- மூலமா? மொழிகின்றேன்; நான் காசியிலிருந்து சில மாதங்கட்கு முன்பே மெய்ப்பேடு மீண்டேன்; இந்தக் கன்னி மாதத்தில், சரசுவதி பூசைக்காகப் பழைய ஏடுகளைப் புரட்டினேன்; அப்பொழுது என் தந்தையார் கைப்பட எழுதிய ஓர் ஓலை நறுக்கும் வேறோர் ஓலை நறுக்கும் அகப்பட்டன. அந்த ஓலை நறுக்கு இதுதான். இது தாங்கள் எழுதியதுதானா? ‘அன்று கொடுத்த ஓலை’ அரியநாத முதலியார் அந்த ஓலையை வாங்கிப் பார்த்தார்; அதில்’ இருந்த செய்தியைப் படித்தார்; கீழே ‘அரிய நாயகன்’ என்று இருந்த தம் கையெழுத்தைப் பார்த்தார்; “ஆ! இஃது அன்று கொடுத்த ஓலை” என்று தம்மை மறந்து கூவினார். விசுவநாத நாயக்கர், மறையவர் வந்தது முதல் அதுவரை அரியநாதரையே கவனித்துக் கொண்டு இருந்தார். ஆதலால் அவர் அரியநாதரைப் பார்த்து, “முதலியாரே, என்ன விஷயம்? எங்களுக்குச் சொல்லலாகாகதா? ‘அன்று கொடுத்த ஓலை’ என்று உம்மையும் மறந்து கூவினீரே, என்ன செய்தி?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார். முதலியார் தமது இளம்பருவத்தில் (நாற்பது ஆண்டுகட்கு முன்) தமக்கு வாழ்வு வரும் என்று சாஸ்திரி ஒருவர் சொன்னதையும் தாம் அவருக்கு எழுதிக் கொடுத்த ஓலை பற்றிய விவரத்தையும் அவையோர் அனைவரும் கேட்க விளக்கமாக விளம்பினார்; பின்னர் மறையவரைக் காட்டி, “இவர் அப்பெரிய சோதிடர் புத்திரர்” என்று கூறினார். சொல் தவறாத செம்மல் பிறகு முதலியார் மறையவரைப் பார்த்து “ஐயரே, இது நான் எழுதிக் கொடுத்த ஓலைதான்; சிறிதும் ஐயம் இல்லை. அதனிற் கண்டபடி நான் எனது சம்பத்தில் காற்பகுதியை இப்பொழுதே உங்கட்குத் தருகிறேன், பெற்றுக் கொள்க” என்றனர். உடனே சபையோர், “அடடா! என்ன! என்ன! சம்பத்தில் காற்பகுதியா! சொன்ன சொல் தவறாத செம்மல் இவர் அல்லவா? என்ன பெருந்தன்மை!” என்று வியப்புடன் பாராட்டிக் கூறினர். முதலியார் பேச்சைக் கேட்டு மறையவரும் திகைத்தார். அவர் கண்களில் ஆனந்த நீர் வெளிப்பட்டது. அவர் முகம் மலர்ந்தது. அம்மறையவர் பேரன்புடன் முதலியாரைப் பார்த்து, “முதலியார் அவர்களே, தங்கள் சத்தியமே சத்தியம்! தாங்களே சொல் தவறாத உத்தமர். நீங்கள் மேலும் பல போக பாக்கியங்களைப் பெற்று நீடு வாழவேண்டும். தங்கள் புகழ் எங்கும் பரவவேண்டும். தமிழ்நாடு உள்ள அளவும் தங்கள் பெயர் இந்நாட்டில் நிலவ வேண்டும். நான் வேதம் ஓதும் பிராமணன் எனக்குத் தங்கள் சம்பத்தில் கால் பாகம் எதற்கு? பிறவிப் பெரும்பயன் அடைவதே என் நோக்கம். மக்கள் சமரச சன்மார்க்க நெறியில் வாழப் பார்ப்பதே எனது விருப்பம்” என்று மகிழ்ச்சி பொங்கப் பேசினார். வேதியர் விருப்பம் அரியநாதர் அகம் குழைய அந்தணரை நோக்கி, “ஐயரே நீங்கள் உங்கள் பரந்த கல்விக்கும், நிறைந்த ஒழுக்கத்திற்கும் ஏற்பப் பேசியது சரியே, ஆயினும், தங்கட்கு ஏதேனும் கொடுத்தால்தான் என் மனம் அமைதியுறும். ஆதலின், ‘வேண்டா’ எனக் கூறாது. தாங்கள் ஏற்றருளல் வேண்டும்; தங்கள் விருப்பத்தை உரைத்தருள்க” என்று வேண்டினார். மறையவர் முதலியார் வற்புறத்தலுக்கு இணங்கி, “முதலியார் அவர்களே, நீங்கள் வற்புறுத்துவதால் தெரிவிக்கிறேன். காஞ்சிபுரத்தில் வாழ ஒரு வீடு வேண்டும்; குடும்பம் நடத்துவதற்கு ஏற்ற நிலங்கள் வேண்டும்; ஒரு தோட்டம் வேண்டும்; பால் அருந்தப் பசு மாடு ஒன்று வேண்டும். பிராமணனுக்கு வேறு என்ன வேண்டும்? இவற்றை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன்” என்றார். தளவாயின் தாராளம் வேதியர் கூற்றைக் கேட்ட சபையோர் அவரது மன நிறைவைக் குறித்து மகிழ்ந்தனர். அரியநாத முதலியார் அவர் பேச்சைக் கேட்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார்; அந்தணர் கேட்டவற்றை அவர் கேட்டதினம் பன்மடங்கு மிகுதியாகவே உதவி மகிழ்ந்தார். அவையோர் தளவாயின் தாராளத்தைக் கண்டு பாராட்டினர். வேதியர் வாழ்த்துரை அந்தணர் அகமகிழ்ந்து, “வள்ளலே, சொன்ன சொல் தவறாத செம்மலே, தங்களால் மெய்ப்பேடு மெய்யாகவே பெருமை பெற்றது; வேளாளர் மரபு விழுப்பம் உற்றது; எனது வாழ்க்கை நலம் பெற்றது; என் பின்வரும் என் மரபினர் தங்களை எந்நாளும் வாழ்த்துவர். நான் காசியிலிருந்து இங்கு வரும் போது, விஜயநகரத்தில் தங்களைப் பற்றிக் கேள்வியுற்றேன்; பின்னர்த் தொண்டை நாட்டில் தங்கள் வீரச் செயல்களையும், ஈகைத் தன்மையையும் பற்றிக் கேள்விப்பட்டேன்; நான் கேள்விப்பட்ட அனைத்தும் உண்மை என்பதை இன்று நேரிற் கண்டேன். வேளாண்குடிச் செல்வரே, தங்கள் மரபு என்றும் நின்று, தங்கள் புகழை உலகிற்கு உணர்த்தி நிற்க வேண்டும். ‘தளவாய் மரபு’ தமிழகத்தில் வாழ வேண்டும். தங்களைத் தமிழ்நாட்டுக் குடிகள் உள்ளம் குளிரப் பாராட்டுகின்றனர். நான் அது கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். நீங்கள் பல ஆண்டுகள் இருந்து குடிகட்குச் சிறந்த தொண்டு செய்து அழியாப் புகழ் பெறுவீர்களாக! உத்தமரே, நான் விடை பெறுகிறேன்” என்று சொல்லி, அரச அவையை விட்டு அகன்றார். 10. பேரரசின் தளவாய் முதலியார் ‘முடி மன்னர்’ விஜயநகரப் பேரரசில் கணக்கராக நுழைந்த அரியநாதர் உழைப்பு, ஊக்கம், நல்ல ஒழுக்கம் முதலிய நற்பண்புகளால் படிப்படியாக உயர்ந்து, இறுதியில் தென்னாட்டுத் திலகமாக விளங்கினார்; பேரரசின் அமைச்சராக இருந்தார்; தளவாயாக இருந்தார்; பின்னர்த் தமிழ்நாட்டில் நாயக்கர் ஆட்சியில் அமைச்சராகவும் தளவாயாகவும் இருந்தார். இனி முடி மன்னர் ஆதல் ஒன்றே அவர் பெறத் தக்கது அன்றோ? “நீர் எங்கட்குப் பிறகு முடி மன்னராக மகுடம் சூடி நமது பேரரசைக் காப்பீராக!” என்று இராமராயர் அரியநாதரை வாழ்த்தினர் எனின், அவர் பெற்ற பெருமையையும் இராயர் அவர்மீது வைத்திருந்த அன்பையும் நம்பிக்கையையும் என்னென்பது! இராயர் இங்ஙனம் கூறிய சந்தர்ப்பம் யாது என்பதைக் காண்போம். இராம ராயர் பெரும்புகழ் படைத்த கிருஷ்ணதேவராயர் கி.பி. 1530-ல் காலமானார். உடனே அவர் உடன் பிறந்தார் ஆகிய அச்சுத ராயர் பேரரசர் ஆனார்.1 என்பதை முன்னர்க் கண்டோம். அச்சுதர்க்குப் பிறகு சதாசிவராயர் பட்டம் பெற்றார். சதாசிவராயர் பெயரளவில் பேரரசராக இருந்தார். ஆட்சி முழுவதையும் கவனித்து வந்தவர் இராமராயர் என்பவர். அவர் கிருஷ்ணதேவராயர்க்கு மருகர். அவருக்குத் திருமலைராயர், வேங்கடாத்திரிராயர் என்று உடன்பிறந்தார் இருவர் இருந்தனர். இராமராயர் அவ்வுடன் பிறந்தாரை நம்பாமல் தாமே அரசியலைக் கவனித்து வந்தார். இராமராயர் மிக்க சமர்த்தர்; ஆனால் இறுமாப்புக் கொண்டவர்; அரசியல் தந்திரத்தில் தகுதி அற்றவர். ஆயினும் கிருஷ்ணதேவ ராயரைப் போலத் தம் பெயரை நான்கு திசைகளிலும் பரப்ப அவாக் கொண்டவர்; அதனால், தம் ஜன்மப் பகைவராக தக்ஷிணத்துச் சுல்தான்களுடைய உட்பகைப் போர்களில் தலையிட்டார்; பீஜப்பூர்ச் சுல்தானுக்குப் பரிந்து சென்று அஹமத் நகரச் சுல்தானான நிஜாம் ஷாவின் கடும்பகையைத் தேடிக் கொண்டார். சுல்தான்கள் ஒற்றுமை பல ஆண்டுகள் தம்முட் பகை கொண்டு விளங்கிய சுல்தான்கள் நல்லறிவு பெற்றனர்; தம் உட்பகையை மறந்தனர்; ஐவரும் ஒன்று சேர்ந்து விஜயநகரப் பேரரசை ஒழிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்; அம்முடிவுக்கு ஏற்ப ஒவ்வொரு சுல்தானும் பெரும்படை திரட்டலாயினர். அரியநாதர்க்கு அழைப்பு ‘தான்’ என்னும் இறுமாப்பில் மூழ்கிக் கிடந்த இராமராயர் சுல்தான்களின் பகைமையை வலிதிற் பெற்ற தம் தவற்றை உணர்ந்தார்; உணர்ந்த பின்னரேனும் தக்கவாறு தலை நகரத்தைப் பாதுகாக்க ஏற்பாடு செய்தனரா? முன் எச்சரிக்கையாகப் புதிய படைவீரரைச் சேர்த்தனரா? இல்லை! இல்லை!! தம்மிடம் இருந்த படைகளையே திரட்டினார்; அப்படைகளைக் கொண்டே பகைவரை முறியடித்து விடலாம் என்று எளிதாக எண்ணிவிட்டார். அவர் தம் உடன்பிறந்தாரை நம்புவதில்லை என்று முன் சொன்னோம் அல்லவா? போர் மூளும் என்பதை உணர்ந்ததும் அவர், “பேரரசு ஆபத்திற்குள்ளாகும் போல் இருக்கிறது உடனே படையுடன் வருக!” என்று அரியநாதர்க்கு ஆணை அனுப்பினார். அரியநாதர் நிலைமை இராம இராயரது ஆணை மதுரைக்கு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்னரே விசுவநாத நாயக்கர் மண்ணுலக வாழ்வை விட்டார்.2 அவர் மைந்தர் குமார கிருஷ்ணப்ப நாயக்கர் முடிமன்னரானார்.3 தம் உயிர் நண்பரைப் பிரிந்த வருத்தத்தினால் முதலியார் பெரிதும் மனக்கவலை கொண்டார். அதே சமயம் இளைஞராகிய குமார கிருஷ்ணப்ப நாயக்கர்க்குத் துணைவராக இருந்த அரசியல் வேலைகளைக் கவனிக்கும் பொறுப்பு அவர்க்கு மிகுதியாயிற்று. இந்தச் சங்கடமான சந்தர்ப்பத்தில்தான் இராம ராயர் கடிதம் அரியநாதர்க்குக் கிடைத்தது. அவர் என்ன செய்வார், பாவம்! இளைஞரான மதுரை அரசர்க்கு நன்மதி கூறி விடைபெற்று, ஒரு தக்க படையுடன் விஜயநகரம் சென்றார். விஜயநகரத்தில் மந்திராலோசனை தம் நம்பிக்கைக்கு உரிய அரியநாதரைக் கண்டதும் இராமராயர் அவரை மார்புறத் தழுவி மகிழ்ந்தார்; தம் உடன் பிறந்தாரையும் பெரிய தானைத் தலைவரையும் வரவழைத்து யோசனை செய்தார்; “இந்தச் சுல்தான்கள் நமக்கு எம்மாத்திரம்! இவர்களைப் பஞ்சுபோலப் பறக்க அடிப்போம்” என்று உறுமினார். அரியநாதர், “பெருமானே, தாங்கள் கூறுதல் இயலும் காரியமே. ஆயினும், நாம் தக்கவாறு முன் எச்சரிக்கையாக இருந்து, படைகளை அணிவகுத்து ஒழுங்காகப் போராட வேண்டும். நம் பகைவரோ ஒருவர் - இருவர் அல்லர்; ஐவர் என்பதை மறத்தல் ஆகாது. ஆதலின் பகைவர் படைகளை மூன்றாகப் பிரிப்பின், தங்களுக்கு இடப்புறமும் வலப்புறமும், உடன் பிறந்தார் இருவரும் படைத் தலைவராக இருந்து போர் புரிதல் நல்லது. தாங்கள் நடுப்படையைத் தாக்கலாம். நான் தங்கட்கு உதவியாக இருப்பேன்” என்றார். அவரது யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது. தலைக்கோட்டைப் போர்4 இது விஜயநகரப் பேரரசை ஒழித்த போராகும்; முஸ்லீம்கட்கு வெற்றி அளித்த போராகும். முஸ்லீம்கள் முதலில் தங்கியிருந்த தலைக்கோட்டையின் பெயரே இப்போர்க்கு இடப்பட்டது. ஆனால் உண்மையான இப்போர் கிருஷ்ணையாற்றுக்குத் தெற்கே உள்ள போகபுரம் என்னும் ஊரின் அருகில்தான் நடைபெற்றது. இராம ராயர் ஐராவதம் போன்ற பெரிய யானை மீது அமர்ந்து இருதிறத்துப் படைகளும் காணுமாறு இருந்தார். அவர் வயது முதிர்ந்த கிழவர்; ஆயினும், முப்பது வயதுடைய காளையைப் போலக் கம்பீரமாகக் காட்சி அளித்தார். அவருக்கு இருபுறங்களிலும் அவர் தம்பியர் படைத் தலைமை தாங்கினர். இராமராயர் தம் படைவீரர்களைப் பரிசுகள் முதலியன அளித்து ஊக்குவித்தார். பகைவர் அணிவகுப்பு திருமலை ராயர்க்கு எதிராகப் பீஜப்பூர்ப் படைகள் அணி வகுக்கப்பட்டன. பீஜப்பூர்ச் சுல்தான் அலீ ஆடில் ஷா அவற்றுக்குத் தலைமை தாங்கினார். வேங்கடாத்திரி ராயர்க்கு முன்பாகப் பிதார், பீரார், கோல்கொண்டாச் சுல்தான்கள் தம் படைகளுடன் போருக்குத் தயாராக நின்றிருந்தனர். இராம ராயர்க்குக் கொடிய பகைவராக அஹமத் நகரச் சுல்தான் நிஜாம் ஷா தம் படைகளுடன் இராமராயர்க்கு எதிராக நின்றார். சுல்தான்கள் தமது நீண்ட படைமுகத்தின் நடுப்பகுதியைப் பீரங்கிப் படைகளால் காத்து நின்றனர். நிஜாம் ஷா தமது போர்முகத்தின் நடுவில் மூன்று வரிசையாக அறுநூறு பீரங்கிகளை அமைத்து, அவை எதிரிகட்குப் புலப்படா வண்ணம் அவற்றின் முன்புறம் இரண்டாயிரம் வீரர்களை நிறுத்தியிருந்தார். போர் நிகழ்ச்சிகள் விஜயநகர வீரர்கள் வெடிகுண்டு பாணங்களைச் சோனை மாரிபோலப் பொழிந்தனர்; பகைவரை நெருங்கிக் கைகலந்து தாக்கினர்; பகைவர் பின்னிடும்படி உற்சாகத்துடன் போர் புரிந்தனர்; போரின் நடுவில் பகைவரது முன்னணிப் படையைச் சிதற அடித்து முன் சென்றனர். அப்பொழுது மறைத்து வைக்கப்பட்டிருந்த பீரங்கிகள் குபீர் குபீர் என்று நெருப்பைக் கக்கின. இப்புதிய தாக்குதலை விஜயநகர வீரர்கள் எதிர்பார்க்க வில்லை. ஆதலின் அவர்கள் நெருப்பின் வேகத்தைத் தாங்கமாட்டாது பின்வாங்கினர். போர்க்களத்தில் உரையாடல் உடனே இராம ராயர் யானையை விட்டுப் பல்லக்கில் ஏறினார்; போர்க்களம் முழுவதும் திரிந்தார்; தம் படை வீரர்கட்குப் பொன்னும், பொருளும் வழங்கி ஊக்குவித்தார். பேரரசரைக் கண்ட வீரர் ஊக்கம் கொண்டு முன்னேறினர். அப்பொழுது அரியநாதர் முதலியோர், “இராயர் அவர்கள் பல்லக்கில் இருப்பது தகாது. ஒரு சமயம் தோல்வி நேரின், விரைவில் தப்பி ஓடுவதற்குக் கரி அல்லது பரியே ஏற்றது” என்று தெரிவித்தனர். இராம ராயர்: இந்த அஹமத் நகரப் பூனைகளது போர் வலிமையை யான் அறிவேன். இந்த நிஜாம் ஷா எத்தனை முறை என்னிடம் தோற்றோடினவன்! இன்னும் ஒரு நாழிகையில் இவன் சூறைக் காற்றில் அகப்பட்ட பூளைப்பூப்போலப் பறக்கப் போகிறான், பாருங்கள். அரியநாதர்: பெருமானே, தங்கள் கூற்றுப்படி நடக்கலாம். எதற்கும் நாம் முன்எச்சரிக்கையாக இருத்தல் நல்லது. மேலும் எப்பொழுதும் நமக்கே வெற்றி கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டு கடமைகளிலிருந்து சிறிதும் தவறலாகாது அன்றோ? இராம ராயர்: அரியநாதரே, இது வீண் பேச்சு, விஜய நகரத்துக்கே வெற்றி; இதில் ஐயமே இல்லை. ஒரு வேளை தோல்வி நேரின், நான் இப் போர்க்களத்தை விட்டு போகேன்; இங்குத்தான் இறப்பேன். இன்று நான் அல்லது இந்த நிஜாம் ஷா மடிவது திண்ணம். நான் மாள்வதாயின் இப்பொழுதே எல்லோர் முன்னிலையிலும் கூறிவிடுகிறேன், கேளுங்கள்; சதாசிவ ராயர் பயனற்றவர். என் தம்பிமார் எனக்கே துரோகம் செய்பவர்கள்; நான் இறந்த பிறகு இப்பேரரசை நாசமாக்கிவிடுவர். ஆதலில் எனக்குப் பின் இப்பேரரசைக் காக்கத் தக்கவர் அரியநாதர் ஒருவரே. என் அம்மான் கிருஷ்ணதேவ ராயர் காலந்தொட்டு அரசியல் அறிவு நிரம்பப்பெற்ற உத்தமர் அவர் ஒருவரே. எனக்குப் பின் அவரே மஹா ராயராக மகுடா பிஷேகம் செய்து கொண்டு இப்பேரரசைக் காப்பாராக! அரியநாதர்: தங்கட்கு ஒன்றும் நேரிடாது. மாப்பிள்ளை ராயர் கவலைப்பட வேண்டுவதில்லை. எதிர்பாராவிதம் ஏதேனும் நேரின், தங்கள் ஆணைப்படி என் உயிரைத் தரக் காத்திருக்கிறேன். இராம ராயர்: அரியநாதரே, நீர் நீடு வாழ்க! கடும்போர் விஜயநகரப் படைகள் பீரங்கிப் படைகளையும் துணிவுடன் தாக்கின; நெருப்பு மழையை எதிர்த்து முன்னேறின. அப்பொழுது நிஜாம் ஷா, செப்புக் காசுகளை பீரங்கிகளிற் போட்டுச் சுட ஏற்பாடு செய்தார். இந்த யோசனையினால், உருக்கிய செம்பு வந்து மழைபோலப் பொழிந்தது. பாவம்! விஜயநகரப் படைகள் நாற்புறமும் சிதறி ஓடின. கெட்ட காலத்துக்கு ஏற்ற புத்தி இராமராயரைப் பிடித்துக் கொண்டது. அவர் அரியநாதர் முதலியோர் யோசனையையும் கேளாமல் பல்லக்கிலேயே இருந்தார். அவரை யானைமேற் காணாத படைவீரர் அவர் கொல்லப்பட்டார் என்று எண்ணி அச்சம் கொண்டனர். இந்த இரண்டு காரணங்களாலும் அவர்கள் சிதறிவிட்டார்கள். இவ்வாறு சிதறிய வீரர்களை அழிக்கும்படி நிஜாம் ஷா ஐயாயிரம் பரி வீரரை ஏவினர். அவர்கள் பாய்ந்து சென்று படுகொலை புரிந்தனர். இவற்றைக் கண்ணூற்ற இராம ராயர் அச்சம் கொண்டார். அப்பொழுதும் அவர் யானை மீது ஏறவில்லை; ஏனைய நான்கு சுல்தான்களையும் தம் தம்பிமார் தோற்கடித்ததையும் அவர் அறியார். அவர் மனம் குழப்பமுற்றது. இராம ராயர் தலை தூரத்தில் இருந்தவாறே இராமராயரையே கவனித்திருந்த நிஜாம் ஷா, தம் படைவீரருடன் அவரை நோக்கிச் சென்றார். நிஜாம் ஷாவின் போர் யானையும் படை வீரரும் பல்லக்கை நெருங்கவே, பல்லக்கைச் சுமந்திருந்தவர் அதனை விட்டு ஓடிவிட்டனர். உடனே இராமராயர் பல்லக்கை விட்டு இறங்கினார். அப்பொழுது பக்கத்தில் இருந்த வீரன், தான் ஏறி இருந்த குதிரையை அவருக்கு உதவினான். இராம ராயர் அக்குதிரைமீது ஏறினார். இதற்குள் நிஜாம் ஷா இராயரை நெருங்கித் தம் வாளை வீசினார். அந்தோ! இராமராயர் தலை நிலத்தில் வீழ்ந்தது. படுதோல்வி உடனே பகைவர் இராமராயர் தலையை ஒரு வேல் நுனியில் தூக்கி உயர்த்தி வெற்றி முழக்கம் செய்தனர். இராயர் தலையைக் கண்ட முஸ்லிம் வீரர்கள் மனக்களிப்புக் கொண்டனர்; விஜயநகர வீரர் மனக்கலக்கம் கொண்டு சிதறினர். போர்க்களத்தில் ஒரே குழப்பம் உண்டாகிவிட்டது. இக்குழப்பத்தினால் இராமராயர் தம்பிமார் பெற்ற வெற்றிகளும் பயனற்றுப் போயின. அவர்களுடைய படைகளும் அச்சங் கொண்டு ஓடத்தொடங்கின. அப்பொழுது உண்டான குழப்பத்தில் வேங்கடாத்திரி ராயர் கொல்லப்பட்டார். இவ்வளவு அழிவிற்கும் காரணம் இராமராயரது பிடிவாதமே ஆகும். முடிவென்ன? விஜயநகரப் படைகள் படுதோல்வியுற்று ஓடிவிட்டன. திருமலை ராயர் உயிர் பிழைத்த திருமலை ராயர் அரியநாதர் சொற்படி விஜயநகரத்தைக் காக்க முனையவில்லை. அவர் சதாசிவ ராயரையும் அரச குடும்பத்தாரையும் பெனுகொண்டாக் கோட்டைக்கு அனுப்பினார்; அரசர்க்குரிய செல்வம் அனைத்தையும் நூற்றைம்பது யானைகள் மீது ஏற்றிக் கொண்டு தாமும் அக்கோட்டையை அடைந்தார். அவர் எடுத்துக் காண்டு சென்ற செல்வத்தின் மதிப்புப் பத்து கோடி பவுன் இருக்கலாம். அரியநாதர் வீண்முயற்சி அரியநாதர்க்குத் திருமலை ராயர் செயல் பிடிக்கவில்லை. அவர் இராமராயர் கட்டளைப்படி தாம் ‘மஹாராய’ராக முடிசூடி நகரத்தைக் காக்க விரும்பினார். அதற்குக் காரணம் பேராசை அன்று; இராமராயர் ஆணைப்படி நடக்க வேண்டும் என்ற அரச பக்தியே காரணமாகும். அவர் நகரப் பெருமக்களையும் தம் உற்றார் உறவினரையும் யோசனை கேட்டார். “இராயர் குடும்பமே அஞ்சி ஓடிவிட்ட பின், இங்கு நமக்கென்ன வேலை? நாம் ஏன் மக்களை வீணே பலியிட வேண்டும்? இந்த முயற்சி வேண்டா” என்று அனைவரும் அறிவித்தனர். அந்நிலையில் முதலியார் என்ன செய்யக்கூடும்! ‘முடியும் அளவு பேரரசேனும் சிதைவுறாமல் இருக்க முயற்சி செய்வோம்’ என்று எண்ணி, அவர் பெனுகொண்டாவுக்குச் சென்றார். பேரரசு நிலைக்க யோசனை “பேரரசை மூன்று பகுதிகளாகப் பிரிக்க வேண்டும்; ஒன்று பெனுகொண்டாவைத் தலைநகராகக் கொண்ட வட பகுதி; சீரங்கப் பட்டணத்தைத் தலைநகராகக் கொண்ட மேற்குமலைத் தொடர்க்கு அப்பாற்பட்ட நிலப்பகுதி ஒன்று; சந்திரகிரியைத் தலைநகராகக் கொண்ட தென்னாட்டுப் பகுதி ஒன்று. வடபகுதியை ஆள்பவரே மஹாராயர். அவருக்கு அடங்கியவரே மற்ற இருபகுதிகட்கும் அரசராக இருப்பவர். பேரரசர் முஸ்லீம் பகைவரைத் தடைசெய்து வடபகுதியைக் காத்துவர வேண்டும்”-என்று முதலியார் யோசனை கூறினார். அந்த யோசனைப்படி யாவும் செய்யப்பட்டன. இப்புதிய பேரரசு முழுவதற்கும் தளவாய் யாவர்? நமது அரியநாதரே ஆவர். விஜயநகர அழிவு எதிர்பாராத வெற்றியினால் வெறிகொண்ட தக்ஷிணா படைவீரர் போகபூமியான விஜயநகரத்திற்குள் புகுந்தனர்; அங்கு ஐந்துமாத காலம் தங்கி, அந்நகரத்தைக் கொள்ளை அடித்தனர்; அழகிய அரண்மனை முதலிய பெரிய மாடமாளிகைகளையும் கூட கோபுரங்களையும் இடித்து நாசமாக்கினர்; பல ஆண்டுகளாகக் கொண்டிருந்த பகைமையை நகரத்தை நாச மாக்கும் திருப்பணியால் தீர்த்துக் கொண்டார். அவர்கள் செய்துள்ள அழிவு இத்தகையது என்பதை அறிய வேண்டு மாயின், நீங்கள் விஜயநகரம் சென்றுதான் பார்க்க வேண்டும். பேரரசின் தளவாய் புதிய பேரரசர்க்குத் தளவாயாக நியமனம் பெற்ற முதலியார், விஜயநகர அழிவைக் கேட்டு வருந்தினார். அவர் ஒரு வருடம் பெனு கொண்டாவில் இருந்து, புதிய பெருநாடு அழியாதிருக்கச் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார்; திருமலை ராயர்க்குப் பண்பட்ட படைகளைத் தயாரித்தார்.5 தமிழ்நாட்டு நிகழ்ச்சிகள் முதலியார் தலைக்கோட்டைப் போருக்குச் சென்ற பிறகு மதுரைச் சீமையில் சில நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தும்பிச்சி நாயக்கன் என்பவன் ஒரு பாளையப்பட்டுக்காரன். அவன், முதலியார் இல்லாததால் தைரியம் அடைந்தான்; மதுரை அரசர் மீது போர் தொடுத்தான். குமாரகிருஷ்ணப்ப நாயக்கர் அவனைக் கொன்றார்; அவனது பாளையத்தைத் தமதாக்கிக் கொண்டார். இலங்கையில் கண்டியை ஆண்ட அரசன் தும்பிச்சி நாயக்கன் நண்பன். அவன் தன் நண்பன் கதியைக் கேட்டுச் சீறி எழுந்தான். உடனே கிருஷ்ணப்பர் படையெடுத்துச் சென்று அவ்வரசனைக் கொன்றார்; அவனது நாட்டைத் தம் பிரதிநிதி ஒருவரிடம் ஒப்புவித்து மீண்டார்.6 தளவாயின் சுற்றுப் பிரயாணம் மேற்சொன்ன நிகழ்ச்சிகட்குப் பிறகு7, புதிய பெருநாட்டைச் சுற்றிப் பார்வையிட்டு வந்த பேரரசின் தளவாய் - அரியநாத முதலியார் மதுரையை அடைந்தார்; மேற்சொன்ன நிகழ்ச்சி களைக் கேட்டு மதுரை மன்னரைப் பாராட்டி வாழ்த்துக் கூறினார். அடிக்குறிப்புகள் 1. அச்சுத ராயர் ஆட்சிக்காலம் கி.பி. 1530-1542, சதாசிவ ராயர் ஆட்சிக்காலம் கி.பி. 1542-1565. 2. விசுவநாதர் காலமான ஆண்டு கி.பி. 1564. 3. இவர் ஆட்சிக்காலம் 1564-1572. 4. இப்போர் கி.பி.1565 ஜனவரி மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. 5. Indian Antiquary, 1916, PP. 83-85. 6. R. Sathayanantha Iyer, History of the Nayaks of Madura, P.74. 7. இப்போர் நிகழ்ச்சிகள் நடந்த காலம் கி.பி. 1556-1569. 11 இறுதி நாட்கள் சோழவந்தான் மதுரைக்கும், திண்டுக்கல்லுக்கும் இடைப்பட்ட இந்த இடம் ‘சோழாந்தகன்’1 என்ற பெயர் பெற்றது. அது மருவிச் ‘சோழ வந்தான்’ என்று ஆயிற்று. அவ்விடம் பாண்டிய நாட்டுப் படை இருந்த இடங்களில் ஒன்றாகும். அந்த இடத்தை முதலியார் தம் வாழிடமாகக் கொண்டார். மதுரைச் சீமையில் சோழவந்தானே வளமிக்க இடம். அது வையையாற்றின் கரையில் அமைந்திருப்பது; நீர் வளம் குறைவில்லாதது. இயற்கையில் பூசாரம் அங்கு மிகுதி. ஆற்றோரங்களில் கண்ணூக்கு இனிய தென்னந் தோப்புகள் உண்டு. செந்நெல் விளைநிலங்கள் கண்ணுக்குப் பசுமையை நல்கும். இங்ஙனம் கண்ணையும் கருத்தையும் கவரத்தக்க நல்லிடத்தை முதலியார் தேர்ந்தெடுத்தது அவரது அறிவு நுட்பத்தைக் காட்டுகிறது அல்லவா? முதலியார் கோட்டை ‘செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்’ ஆதலால், முதலியார் தம் தொண்டை மண்டல வேளாளரைப் பாண்டி நாட்டில் பசுமை நிலவிய இடங்களில் எல்லாம் குடியேற்றினார்; சோழவந்தானுக்கு முந்நூறு வீட்டாரைக் கொணர்ந்தார்; அவர்கட்கு விடுதிகள் கட்டித்தந்தார்; அவர்களுக்கு உதவியாகப் பலவகைத் தொழிலாளரைக் குடியேற்றினார்; ஊரைச் சுற்றிலும் கோட்டை ஒன்றை எழுப்பினார். அது ‘முதலியார்-கோட்டை’ எனப்பட்டது. வேளாளர் குடியேற்றம் மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம் ஜில்லாக்களில் இருக்கின்ற தொண்டை மண்டல முதலிமார்கள் அங்கு எவ்வாறு சென்றார்கள்? அவர்களுடைய முன்னோர் - அரியநாத முதலியார் காலத்து முன்னோர் அரியநாதர் தூண்டுதலால் பாண்டிய நாட்டிற் குடியேறியவர் ஆவர். அவர்கள் தமிழகம் முழுவதும் பரவிக் குடியேறினமைக்குத் தளவாய் அவர்களே காரணம். முதலியார் தாமிரபரணி ஆற்றங்கரையில் தம் பெயரால் அரியநாயகபுரம் என்ற கிராமத்தை அமைத்தார்.2 அக்கிரகாரங்கள் வேதம் - உபநிடதம் - புராண இதிகாசங்கள் இவற்றில் முதலியாருக்கு மிகுந்த மதிப்புண்டு. அவற்றைப் படித்து ஒழுக்கத்தில் சிறந்து இருந்த நான்மறையாளரிடம் அவருக்குப் பற்று மிகுதி. அவர் அவர்களுக்குப் பல ஊர்களில் அக்கிரகாரங்களை அமைத்துக் கொடுத்தார்; அவர்கட்கு வேண்டிய நிலங்களைத் தாம் செய்தார். கோவில் திருப்பணிகள் முதலியார் கோவில் திருப்பணி செய்வதில் ஊக்கம் உடையவர். அவர் திருப்பணி பெறாத பெருங்கோவில்கள் தென்னாட்டில் சிலவென்றே சொல்ல வேண்டும். பாளையங்கோட்டையில் அவர் அமைத்த கோவில்கள் இன்றும் அவர் பெயரைச் சிறப்பிக்கின்றன. திருநெல்வேலி - நெல்லையப்பர் ஆலயம் அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கோவில், அவர் அங்குக் கோபுரங்களையும் மண்டபங்களையும் எழுப்பினார். அங்குள்ள ஆயிரக்கால் மண்டபம் அவர் எழுப்பியதாகும். மதுரையில் திருப்பணி மீனாக்ஷி - சுந்தரேசர் கோவிலில் முதலியார் செய்த திருப்பணிகள் மிகப் பல. அங்குள்ள ஆயிரக்கால் மண்டபம் அவரால் எழுப்பப்பட்டது. அவர் அறுபத்து மூவர் மண்டபத்தை எழுப்பினார்; மீனாக்ஷி அம்மைக்கு அளவற்ற அருங்கலன்கள் செய்தளித்தார்; பள்ளியறை, அறச்சாலை அமைத்தார்; சொக்கப் பெருமானுக்கு வெள்ளி அரியணை ஒன்று செய்து வைத்தார்; வன்னியடி நந்தவனமும் அமைத்தார்; சிவராத்திரி விழாவிற்குப் பன்னீராயிரம் பொன் அளித்தார்.3 சிற்பக்கலை வளர்ச்சி நமது தமிழ் நாடு பண்டு தொட்டே சிற்ப - ஓவியக் கலைகட்குப் பெயர் இடமாகும். பல்லவர் காலத்தில்4 இக்கலைகள் நன்றாக வளர்ச்சி பெற்றன; பிறகு இராஜராஜன் முதலிய சோழப் பேரரசர்களால் வளம்பெற்றன. அவர்கட்குப் பிறகு தமிழகம், முன் சொன்னவாறு, பலவகை அரசியல் குழப்பங்கட்கு நிலைக்களம் ஆகியது. அதனால், கலை வளர்ச்சிக்கு நாட்டில் இடம் இல்லாதிருந்தது. நாயக்கர் ஆட்சி ஏற்பட்ட பிறகே - அரியநாதர் சமயத்துறையில் ஊக்கம் காட்டத் தொடங்கிய பிறகே தமிழகத்தில் சிற்ப - ஓவியக்கலைகள் உருப்பெறலாயின. கல்லுளித் தச்சர்கள், கொத்தர்கள், கூலியாட்கள், சித்திரம் வரைவோர் முதலியோர் பிழைப்புப் பெற்றனர். மக்களுக்கு ஆன்ம வளர்ச்சியை உண்டாக்கும் திருக்கோயில்கள் அழகு பெற்றன. முதலியார் மேற்கொண்ட இத்திருப்பணிகளினால் நாகரிகக் கலைகள் வளர்ச்சி பெற்றன. அரியநாதரைப் பின்பற்றி நாயக்க மன்னர்களும் கோவில் திருப்பணிகள் பல செய்து அழியாப் புகழ் பெற்றனர். வீரப்ப நாயக்கர் முதலியார் இத்திருப்பணிகளில் ஈடுபட்டிருந்த காலத்தில் குமார கிருஷ்ணப்ப நாயக்கர் காலமானார். அவர் மைந்தர் வீரப்ப நாயக்கர்5 அரியணை ஏறினார். அப்பொழுது அவருக்கு உறுதுணையாக இருந்து அவர் சார்பில் நாட்டைப் பார்த்து வந்தவர் நமது தளவாயே ஆவர். வீரப்ப நாயக்கர் முதலியாரைத் தம் பாட்டனாராகக் கருதி, மிக்க மதிப்புடன் நடந்து வந்தார். ‘அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது’ என்பதுபோல, முதலியாரைக் கேளாது எந்த அரசியல் காரியமும் நடைபெற்றதில்லை என்னலாம். பாண அரசன் பணிவு பாளையக்காரரில் ஒருவன் மாவலி பாணராயன் என்பவன். அவன் சிறந்த போர் வீரன். அவன் அரசனாக விரும்பி, மானாமதுரை6, காளையார் கோவில் முதலிய இடங்களைப் கிள்ளி எறிய வேண்டும் என்பது முதலியார் கருத்து. அதனால் அவர் வீரப்ப நாயக்கருடன் ஒரு படை கொண்டு சென்றார்; பாண ராயனைச் சமாதானம் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தினார். அவன் இணங்கவில்லை; தன்னால் இயன்ற வரை போர் புரிந்து தோற்றான். வீரப்ப நாயக்கர் அவனது பாளையத்தைக் கைப்பற்றி அவனை விரட்டிவிடத் துணிந்தார். ஆனால் முதலியார் அவர் துணிவை மாற்றிப் பாண அரசனைப் பழையபடியே பாளையக்காரன் ஆக்கினார். பாண அரசன் மனம் மாறியது. அவன் முதலியாரைப் பாராட்டி, அன்று முதல் நாயக்க மன்னர்க்கு அடங்கி அமைதியாக இருந்து வந்தான். வீர கிருஷ்ணப்ப நாயக்கர் வீரப்ப நாயக்கருக்குப் பின் வீர கிருஷ்ணப்ப நாயக்கர்7 பட்டம் பெற்றார். அப்பொழுது அவரது தம்பியாரான விசுவப்பர் என்பவர் சற்றுப் பிணங்கினார். உடனே அரியநாதர் அவரை இளவரசராக முடி சூட்டி அரசியலில் ஈடுபடுத்தினார். உடன் பிறந்தார் இருவரும் ஒற்றுமையுடன் ஆட்சியைக் கவனித்து வந்தனர். அவர்கள் காலத்திலும் மிக்க முதியவரான அரியநாத முதலியாரே அமைச்சராகவும் தளவாயாகவும் இருந்து வந்தார். வயது முதிர்ந்த அவர், நாயக்க மன்னர்களின் வற்புறுத்தலால் அப்பதவிகளில் இருந்து வந்தார். அதிவீரராமர் நட்பு முதலியார் காலத்தில் தென்காசியை அதிவீரராம பாண்டியர் ஆண்டு வந்தனர். அந்தப் பாண்டியரே தமிழில் நைடதம் பாடிய பெரும் புலவர். அவர் தமையனார் வரதுங்க ராம பாண்டியர் என்பவர்; காசிகண்டம் முதலிய நூல்களைப் பாடியவர். அத்தமையனார் மனைவியாரும் சிறந்த புலமை உடையவர் என்று வரலாறு கூறுகின்றது. நமது தமிழகப் பெரியார் ஆகிய அரியநாத முதலியார் தமிழ்ப் பெரியார் ஆகிய அதிவீரராம பாண்டியருடன் நட்புக் கொண்டு தமிழ்க் காவியச் சுவையை நுகர்ந்து வந்தார் என்று செவிவழிச் செய்தி செப்புகின்றது. முதலியார் மறைவு பீஷ்மர் தம் தம்பியர் காலத்தில் அரசியல் குருவாக உடன் இருந்து உதவி செய்தார்; பின்னர் அவர்கள் மக்களாகிய திருதராஷ்டிரன், பாண்டு இவர்களுடன் இருந்து உதவி செய்தார்; அதன் பினனர்த் துரியோதனா- தியர்க்கும் பாண்டவர்க்கும் தாத்தாவாக இருந்து அறவுபதேசம் செய்தார். இங்ஙனம் சந்திர மரபைச் சேர்ந்த அரசர்க்குப் பீஷ்மர் அமைந்தாற் போல - மதுரை நாயக்கர் மரபிற்குத் தளவாய் முதலியார் அரசியல் குருவாக அமைந்தார். இத்தகைய பெரியார் கி.பி.1600-ல் நாயக்க மன்னர் மனம் கலங்க - பாளையப்பட்டார் உளம் பதற - தமிழ் மக்கள் தாயிழந்த பிள்ளைகள் போல் அலற, மண்ணுலகில் தம் புகழை நிறுத்தி விண்ணக வாழ்வை மருவினார். உள்ளம் கவர்ந்த உத்தமர் அமைச்சர் அரியநாதர் குடிகளின் நன்மையையே பெரிதாகக் கருதியவர். அவர் கல்வி கற்ற நான்மறையாளர்க்கு மானியங்கள் அளித்தார்; அழகிய அக்கிரகாரங்களை அமைத்தார்; இவற்றால் மறையவர் மனத்தைக் கவர்ந்தார். அப்பெரியவர் நீர் வளத்தைப் பெருக்கக் கால்வாய்களும் குளங்களும் ஏரிகளும் வெட்டுவித்து வேளாளர்க்குப் பெருநன்மை செய்து அவர்கள் அகக்கோவிலைக் கொள்ளை கொண்டார்; மாடமாளிகைகள், கூடகோபுரங்கள், கோட்டை-கொத்தளங்கள், கோபுரங்கள், மண்டபங்கள் முதலியவற்றை அமைக்கப் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்க்கு வேலை தந்து, அவ்வுழைப்பாளிகளின் உள்ளத்தில் கோவில் கொண்டார். நாயக்க அரசைத் தமிழகத்தில் நிலைபெறச் செய்து, கலகங்களை அடக்கி, நன்முறையில் அரசாட்சியை அமைத்து நாயக்க மன்னர் உள்ளங்களைக் கவர்ந்தார்; பாளையப்பட்டுகளை வகுத்துப் பெருமக்களும் சிற்றரசரும் தம்மை வழிவழியாகப் போற்றுமாறு செய்தார். இங்ஙனம் முதலியார் அரசர் முதல் ஆண்டி வரை அனைவர் உள்ளத்தையும் கவர்ந்த உத்தமராக விளங்கினார். பரந்த சமய நோக்கம் முதலியார் ஏகம்பனைக் குல தெய்வமாகப் பெற்றவர்; சிறந்த சிவபக்தர்; ஆயினும் வைணவம் முதலிய பிற சமயங்கள் மீது மதிப்புக் குறைந்தவர் அல்லர். அவர் மதுரை அமைச்சராக இருந்த பொழுது கிறித்தவப் பாதிரிமார் தென் பாண்டிக் கரையோர நகரங்களில் தங்கள் சமயபோதனை செய்து வந்தனர். அவர்கள் அதனை மதுரையிலும் செய்ய விரும்பி அரசரை அனுமதி கேட்டனர். அரசர் அமைச்சரைக் கேட்டார். அமைச்சரான முதலியார் பரந்த சமய நோக்கம் கொண்டவர் ஆதலின், உடனே அனுமதி தருமாறு அரசர்க்கு யோசனை கூறினார். ‘மக்களுக்குச் சமயத்தில் கட்டுப்பாடு இருத்தல் ஆகாது; அவரவர் தத்தமக்கு விருப்பமான சமயத்தைப் பின்பற்றி வாழ உரிமை இருத்தல் வேண்டும்’ என்பதே அப்பெரியாரது பரந்த சமய நோக்கம் ஆகும். பொன்றாப் புகழ் அரியநாதர் குடிசையிற் பிறந்தவர்; ஆனால் தம் வாள்வலியாலும் அறிவாற்றலாலும் ஒழுக்கத்தின் விழுப்பத்தாலும் கணக்கர் - அரண்மனைக் கணக்கர் - அரண்மனைப் பெரிய கணக்கர் - அரசாங்கப் பெரிய கணக்கர் - தளவாய் - அமைச்சர் என்ற பதவிகளைப் படிப்படியாக விஜயநகரத்திற் பெற்றார்; பின்னர் அப்பேரரசு முழுவதற்குமே தளவாய் என்ற பதவியும் பெற்றார்; மதுரை நாயக்க மன்னர் நால்வர்க்கு அமைச்சராகவும் தளவாயாகவும் இருந்து அரும்பணி செய்தார்; குடிகட்கு நலன்களைச் செய்தார்; சமயத் துறையில் தொண்டு செய்தார்; இங்ஙனம் பல துறைகளிலும் பங்கெடுத்துக் கொண்டதால் அப்பெருந் தமிழர் விஜய நகர வரலாற்றிலும், மதுரை - நாயக்க மன்னர் வரலாற்றிலும் அழியாத இடத்தைப் பெற்றுவிட்டார்; நாயக்க மன்னர் காலக் கட்டடக் கலை வரலாற்றிலும் தக்க இடம் பெற்றார். இஃதன்றோ பொன்றாப்புகழ்!8 அடிக்குறிப்புகள் 1. சோழனுக்கு யமன் - இது பாண்டியன் விருதுப் பெயராகும் 2. Indian Antiquary, 1916, PP. 85-86. 3. மதுரைத் திருப்பணிமாலை 4. கி.பி. 600-900 5. கி.பி. 1572-1595. 6. மாளவீரன் மதுரை என்ற பெயர் இவ்வாறு மருவியது போலும்! 7. இவரது ஆட்சிக்காலம் 1595-1601. 8. “A Warrior as well as statesman. Visvanatha had the further advantage of the precepts and counsels of a remarkable minister and companion, Ariyanatha. No king has ever had an abler or a more faithful lientenant and no master ever been served with a greater devotion of a more genuine feeling of loyalty. But Ariyanatha was not a mere devoted servant. He was much more. He was an uncommonly prudent and orderly minded statesman with a keen eye for practical organisation and administration. Among the many rules, generals and public men that flit across the pages of Indian History and vanish into darkness as soon as their meteoric career is over, there are comparatively few substantial statesmen whose wisdom, foresight and zeal were such as introduce a new institution or policy which became an enduring factor in the history of their country. But even such rare individuals have either owing to the scarcity of materials or ignorance of historians, been thrown into undeserved oblivion. Of these real but unrecognised makers of history, Ariyanatha Mudaliyar is one. A contemporary of Akbar and Tondarmal, a trusted lieutenant of Vijayanagar and Visvananha, he has left, as monuments of his genius, institutions which have not died to the present day. A profound scholar, it is said, in the sciences of astrology and mathe- matics, a good geneal and a far seeing statesman, Ariyanatha was a versatile genius, and could acquit himself with as much felicity in the field as in the court. He took a prominent part in the establishment of the Naik dynasty of Madura, and co-operated with its founder, Visvanatha, in the government of the Kingdom, the evolution of order in place of confusion, and good government in place ofo anarchy. For more than half a century after Visvanatha’s death, he was the pilot of othe infant Kingdom, the trusted minister and adviser-thanks to the amiability of his mannes, the moderation of ohis counsels and his fact in managing men of different noods, desires and temperaments, of three successive rulers of Madura; so that. when he died about 1600, he left it a strong and well-defended state, with sound finances, an efficent army and a wholesome policy to be pursued by his successors.” -Professor V. Rangachari, M.A.L.T., Indian Antiquary, 1915, PP. 62-64. 12 மதுரை ஆயிரங்கால் மண்டபம் கோவில் மண்டபம் தமிழ்நாட்டை ஆட்சி செய்த அரசப் பெருமக்களால் கட்டப்பட்ட பெருங்கோவில்கள் எல்லாவற்றிலும் பல மண்டபங்கள் அமைந்துள்ளன. அம்மண்டபங்களில் திருவிழாக் காலங்களில் மக்கட்கு அறிவு தரும் புராணக் கதைகள் படிக்கப்பட்டன; அங்கு இசையும் நடனமும் வளர்க்கப் பட்டன; அத்தகைய காலங்களில் ஆன்ம அமைதியைத் தரும் இனிய பாடல்கள் பாடப்பட்டன; விறல் படநடனமும் ஆடப்பட்டது. இராஜராஜன் போன்ற சிறந்த பேரரசர்களின் வரலாறுகள் நாடகங்களாக எழுதி நடிக்கப் பட்டன. திருவிழாக் காலத்தில் மட்டுமன்றி, மற்ற எல்லா நாட்களிலும் அங்கு எளிய மாணவர்க்கு உணவும் அறிவும் கொடுக்கப்பட்டன. இவையேயன்றி, அரசர்கள் விசேட காலங்களில் அறிஞருடன் கூடிப் பேசுவதற்கும் மண்டபங்கள் பயன்பட்டன. இங்ஙனம் அரசர்கள் பயன்படுத்திய பெரிய (ஆயிரங்கால்) மண்டபங்களே இன்றும் தில்லை முதலிய இடங்களில் ‘ராஜ சபை’ என்னும் பெயருடன் விளங்குகின்றன. ஆயிரங்கால் மண்டபம் மதுரையை ஆண்ட மன்னர்களுக்குப் பயன்பட்ட மண்டபம் ஒன்று மதுரை - மீனாக்ஷியம்மன் கோவிலில் இருக்கிறது; இதனைக் கட்டிய பெருமை, நம் தளவாய் அரியநாத முதலியார்க்கே உரியது. இம்மண்டபத்தில் ஆயிரம் கால்கள் (தூண்கள்) இருக்கின்ற காரணம் பற்றி இம்மண்டபம் ‘ஆயிரங்கால் மண்டபம்’ என்னும் பெயர் பெற்றது. இம்மண்டபம் கீழ்வாசலுக்கு அண்மையில் இருக்கிறது. மண்டப அமைப்பு இம்மண்டபம் இரண்டு யானைகளால் இழுக்கப்படும் ஒரு தேர் போன்ற அமைப்பில் அமைந்துள்ளது. மண்டபத்தில் உள்ள தூண்கள் வரிசை வரிசையாகவும், எங்கிருந்து பார்ப்பினும் ஒரே வரிசையாகவும் காட்சியளிக்கின்றன. ஒருவன் இம்மண்டபத்தில் எந்த இடத்தில் நின்றாலும், மண்டபத்தின் நடுவில் அமைந் திருக்கும் கூத்தப்பிரான் திருவுருவத்தினைக் கண்டு களிக்க முடியும். தளவாய் உருவச்சிலை ஆயிரங்கால் மண்டபத்திற்குள் நுழையும் வாசலில் ஏறக்குறைய ஆறு சிலைகள் காட்சி தருகின்றன. அவை ஒவ்வொன்றும் உயிருடன் இருப்பவை போலவே காணப்படு கின்றன. அவற்றுள் தலைசிறந்தன அரியநாத முதலியார் சிலையும் அரிச்சந்திரன் சிலையுமாம். அரியநாதரின் சிலை அமைப்பைக் காணூம்போது, ‘இவ்வுருவத்தை அமைப்பதற் கென்றே இதனைச் செய்த சிற்பி பிறந்தானோ!’ என்னும் எண்ணம் உண்டாகிறது. குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் தளவாயின் தோற்றம் - அவருடைய அஞ்சா நெஞ்சம், உழைப்பு, எடுத்த காரியத்தைச் செவ்வனே செய்வதில் உள்ள ஆர்வம், முகப் பொலிவு இவற்றை நமக்கு உணர்த்துகிறது. அரியநாத முதலியார் ஏறி நடத்தும் குதிரை, நாற்கால் பாய்ச்சலில் ஓடுவது போலக் காணப்படுகிறது. முதலியார் அதன் கடிவாளங்களை மிகவும் உறுதியாக இழுத்துப் பிடித்துள்ளார். எனினும் அக்குதிரை அதனைப் பொருட்படுத்தாது போவது போலக் காணப்படுகிறது. கண்ணப்பர் நாம், அரியநாதர் சிலைக்கு அண்மையில் கண்ணப்பர் வரலாற்றைச் சிற்பங்களின் மூலமாகக் காணலாம். அங்குள்ள சிற்பங்களைக் கொண்டே கண்ணப்பர் வரலாறு முழுவதும் உணரத்தக்க முறையில் சிற்பி அமைத்துள்ளான். அரிச்சந்திரன் வாசலின் மறுபக்கத்தில் அரிச்சந்திரன் உருவச்சிலை காணப்படுகிறது. அதன் பக்கத்தில் இறந்த தன் மைந்தனைத் தன்னுடைய இரு கைகளில் ஏந்திய வண்ணம் சந்திரமதியின் சிலை தோன்றுகிறது. அவ்விடத்தில் அரிச்சந்திரன், சந்திரமதி ஆகிய இவர் முகத்தில் மட்டும் உணர்ச்சியை வெளிப்படுத்தாது, அவர்களின் நிலைக்கேற்ப உடை, அணி முதலியவற்றைக் கற்பனை செய்துள்ளமை, சிற்பியின் உயர்ந்த கலைப்பண்பைக் காட்டுவ தாகும். அவர்களின் உருவத்தில், அவர்கள் தம் கொள்கையை நிலைநாட்ட, அடைந்த துன்பமும் அக்காலத்திலும் அவர்கள் கொண்டுள்ள அமைதியும் இலங்குகின்றன. குறவன் - குறத்தி முன் சொல்லப்பட்ட சிலைகளுக்குப் பக்கத்தில் இரு தூண்களில் குறவன் - குறத்தி இவர்தம் சிலைகள் காணப்படுகின்றன. குறவனின் உடல் கட்டமைப்பு வாய்ந்தது. அவர் மார்பு அகன்று காணப்படுகிறது; உடல் தடித்து வளமுடையதாகத் தோற்றுகிறது; பார்வை சற்றுக் கடுமையாகத் தோற்றுகிறது. அவ்வுருவம் அங்குச் செல்வோர் அனைவர் உள்ளத்தையும் தன் வயப்படுத்தும் தன்மை வாய்ந்ததாகவே விளங்குகிறது. அவன் உடல் அமைப்பும் முகத் தோற்றமும் ‘இவன் நன்றாக உழைத்து வாழ்பவன்’ என்னும் கருத்தை எழுச் செய்கின்றன. அவன் அணிந்துள்ள அணிகளோ அளவற்றவை. இனி, குறத்தியின் சிற்பத்தைக் காண்போம்; சிற்பி இக்குறத்தியை நான்கு பிள்ளைகளுடன் தோற்றுவித்துள்ளான். ஒரு குழந்தை குறத்தியின் முதுகின் மீது இருக்கிறது. மற்றொன்று கூடைக்குள் காணப்படுகிறது. மூன்றாம் குழந்தை அவள் மார்பில் துணியால் கட்டப்பட்டுத் தொங்கிக் கொண்டிருக்கிறது. கடைசிக் குழந்தை அவள் கையைப் பற்றிக் கொண்டு நிற்கிறது. குழந்தை இருக்கும் கூடையைச் சிற்பி எவ்வளவு அழகுறச் செய்துள்ளான் என்பதை நேரிற் காண்பவரே அறிந்து கொள்ள வல்லவர் ஆவர். பூதம் இவ்வுருவம் குறவன் - குறத்தி உருவங்களுக்குப் பக்கத்தில் காணப்படுகிறது. பரமசிவன் பாதத்தில் விழுந்து கிடக்கும் பூதத்தின் முகத்தோற்றம், தனக்கு யாதொரு கதியும் இல்லை என்பதை உணர்த்துகிறது. அதனை மிதித்துள்ள சிவன் முகத்தில் அமைதியும் புன்னகையும் காணப்படுகின்றன. நாம் மேலே கண்ட சிற்பங்கள் பலவும் மண்டபத்தின் வாயிலில் உள்ளவை. அங்கு, மேலே கூறப்பட்ட சிற்பங்களே யன்றி மேலும் பலவகைப் பட்ட சிற்பங்கள் உள்ளன. அம்மண்டபத்தின் சிறப்பை - அம் மண்டபத்தைத் தோற்றுவித்த அரியநாதரின் சிறப்பை - அவர் காலத்துச் சிற்பக் கலை வளர்ச்சியின் மேன்மையை உணர்த்தச் சிலவற்றைக் கூறினோம். இனி, மண்டபத்தின் உட்புறத்தில் உள்ள சிறந்த சிற்பங்கள் சிலவற்றைக் காண்போம். கலைமகள் மண்டபத்தின் உள்ளே நுழைந்ததும், நம் கண்ணுக்குப் புலப்படும் சிற்பங்களுள் நம் கருத்தை ஈர்ப்பது கலைமகள் சிற்பமேயாகும். இவ்வுருவமும் சாதாரண மனித அளவுக்கு ஏற்பச் செய்யப்பட்டிருக்கிறது. கலைமகளின் மெல்லிய இடுப்பும் பிற அங்க அமைப்பும் வீணை வாசிப்பதில் திறமை வாய்ந்த மெல்லிய விரல்களை உடைய கைகளும் கண்கவர் வனப்புடையன. வீணையும் அவள் கைகளில் நன்றாக அமைந்துள்ளது. வீணையிலுள்ள நரம்புகளும் தெளிவுறக் காட்டப்பட்டுள்ளன. கலைமகள் முகத்தில் அமைதியுடன் கூடிய இன்பம் தாண்டவமாடுகிறது. இந்த ஆயிரக்கால் மண்டபத்தில் உள்ள உருவங்களில் இஃது ஒன்றே மிகவும் உயர்வுடையதாகும். பால முருகர் இவ்வுருவம் மயில் வாகனத்தின் மீது அமைந்துள்ள. முருகர் தேவர்களின் படைத் தலைவராதலின், அத்தகுதிக்குத் தகுந்த நிலைமை இங்கே தரப்பட்டுள்ளது. இவர் முகத்தில் இளமையின் அழகு விளங்குகின்றது. இவர் அமர்ந்துள்ள மயிலின் சுறுசுறுப்பு, அதன் மெல்லிய கால்களிலும் உடலிலும் காட்டப்பட்டிருக்கிறது. நாம் மேலும் உட்செல்வோமாயின், இருபக்கமும் சிலைகளால் அழகு செய்யப்பட்ட தூண்களுக்கிடையே உள்ள சில சிறந்த சிற்பங்களைக் காணலாம். ரதி தேவி நாம் தென்னிந்தியக் கோவில்களில் இத்தகைய ரதி தேவியின் உருவத்தைக் காண இயலாது. இங்கே அமைந்துள்ள உருவம் புதுமை உடையதாகவும் வியக்கத்தக்கதாகவும் ஒப்பற்றதாகவும் காட்சி தருகிறது. ரதி தேவி அமர்ந்துள்ள அன்னப்பறவை நடப்பது போலவே அமைக்கப் பட்டுள்ளது. இந்த ரதி தேவியின் உறுப்புகள் ஒவ்வொன்றிலும் அமைந்துள்ள அழகு நமக்கு வியப்பையும் இன்பத்தையும் தருவதாகும். யாளியின் உருவம் மண்டபத்தில் நுழையும் ஒருவர் தமக்கு இடப்பக்கமாக உள்ள தூண் வரிசையில் காணத்தக்கது ஒன்று உண்டு. அதுவே யாளியின் உருவம். யாளியின் வாயில் ஓர் உருண்டைக்கல் இருக்கிறது. நாம் அதை வெளியே எடுக்க முடியாது. ஏனெனில், கல் உருண்டை யாளியின் வாய்த் துவாரத்தினும் பெரிது. இங்ஙனம் சிறிய வாயில் பெரிய கற்குண்டைச் செய்தமைத்த சிற்பியின் திறமையை என்னென்பது! இந்த யாளியைப் போலவே கிளிக் கூண்டு மண்டபத்தில் விநாயகருக்கு வலப்பக்கத்தில் மற்றொரு யாளியும் இருக்கிறது. மண்டபத்தில் உள்ள சிற்பங்களின் சிறப்பை உணர்த்தவே, மேற்சொன்ன சிற்பங்கள் விளக்கப்பட்டன. மண்டபத்தில் இன்னும் எண்ணிறந்த சிற்பங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் இவன் விரித்துரைக்க இயலாது. எனினும் நாம் மேலே கண்டவற்றைக் கொண்டு, ‘இங்குள்ள சிற்பங்கள் சிற்பக் கலையறிவு படைத்த சிற்பிகளால் செய்யப்பட்டன; இக்கோவிலின் பிற பகுதிகளில் உள்ள சிற்பப் பெருமையை இம்மண்டபச் சிற்பங்கள் கொண்டே நன்கறியலாம்; தமிழ்நாட்டுச் சிற்பியின் திறமையும் சிற்பமும் பிற நாட்டார் போற்றும் தன்மை வாய்ந்தவை; இங்குள்ள சிற்பங்கள் அணிந்துள்ள ஆடை, அணி, செருப்பு, தலையணி முதலியன அச்சிற்பங்கள் தோற்றுவிக்கப்பட்ட காலத்தின் நாகரிகத்தை நன்கு உணர்த்துகின்றன’ என்பன போன்றவற்றை எளிதில் உணரலாம். இத்தகைய சிறந்த மண்டபத்தை தோற்றுவித்தவர் நமது அரியநாதர் என்பதை நினைக்கும் பொழுது நமது உள்ளம் மலர்கின்றது அன்றோ? BIBLIOGRAPHY 1. Oriental Historical Manuscripts. 2 Vols. by William Taylor. 2. Catalogue Raisonne of Oriental Manuscripts, 3 Vols. by William Taylor. 3. The Madura Vountry by J.H. Nelson. 4. History or Tinnevelly by Caldwell. 5. A Forgotten Emire by Sewell. 6. The History of the Naik Kingdom of Madur by Prof. T. Rangachari - Indian Antiquary, Vols. for the years 1914-1916. 7. Vijayanagara Sexcentenary Commemoration Volume (1936). 8. History of the Nayaks of Madura by R. Sathyanatha Aiyar. 9. Madurai Tiruppani Malai 10. Meenakshi Temple. Madura by K.S. Srikantan. 11. The Aravidu Dynasty of Vijayanagara by Rev. H. Heras. கிருட்டிண தேவராயர் (கி.பி. 1509 - 1529) முதற் பதிப்பு - 1946 இந்நூல் 2003 இல் வசந்தா பதிப்பகம், சென்னை - 88 வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. முகவுரை தென் இந்தியப் பேரரசன் என்று சங்க காலத்திற் கருதப்பட்டவன் கரிகாற் சோழன் ஆவன்; இடைக்காலத்தில் அப்பட்டத்தைப் பெற்றவன் வாதாபி வென்ற நரசிம்ம பல்லவன்; பிற்காலத்தில் புகழ் பெற்றவன் இராஜேந்திர சோழன். இவர்கட்குப் பிறகு தென் இந்தியாவிற் புகழ் பெற்ற பேரரசர் கிருஷ்ணதேவராயர் ஒருவரே ஆவர். விஜயநகர அரசர்கட்குள் பெயரும் புகழும் பெற்றவரும் அவர் ஒருவரேயாவர். பகைவரை வென்ற பேராண்மையும், போரை அறமுறைப்படி நடத்திய திறமையும், பெருநாட்டுச் சிற்றரசர்களை அடக்கி ஆண்ட முறைமையும், அயல்நாட்டு அரசர்களுடன் உறவு கொண்டாடிய பண்பும், அயல்நாட்டு வாணிகத்தை வளப்படுத்திய வகையும், நாகரிகக் கலைகளாகிய இசை - நடனம் - நாடகம் - ஓவியம் - சிற்பம் - மருத்துவம் முதலியவற்றை வளர்த்த முறையும், தம் பெருநாட்டு மொழிகள் அனைத்தையும் சமநிலையில் வளர்த்த திறமும் கிருஷ்ணதேவராயரைப் பேரரசர் ஆக்கின. தென் இந்தியாவில் அந்நியர் படையெடுப்பைத் தடுக்க ஏற்பட்ட விஜயநகரப் பேரரசின் தலை மணியாக விளங்கிய கிருஷ்ணதேவராயர் வரலாறு தென்னாட்டு மக்களாகிய நாம் படித்துப் பயன்பெறத் தக்கதன்றோ? அவருடைய பரந்த நோக்கம், விரிந்த சிந்தை, ஆழ்ந்த கல்வி, அரசியல் அறிவு, பேராண்மை இன்ன பிறவும் தமிழ் இளைஞர் பின்பற்றத்தக்க நற்பண்புகள் ஆகும். கா. அப்பாத்துரை 1. விஜயநகர அரசு விந்தியமலைக்குத் தென்பால் கி.பி. 14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டெல்ஹியைத் தலைநகராகக் கொண்டு வட இந்தியாவை அல்லாவுத்தீன் என்பவர் ஆண்டுவந்தார். அக்காலத்தில் விந்திய மலைக்குத் தெற்கே நான்கு பேரரசுகள் இருந்துவந்தன. தபதியாற்றுக்கும் கோதாவரியாற்றுக்கும் இடைப்பட்ட நிலப் பகுதியை, தேவகிரியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த யாதவ அரசு ஒன்று; கிழக்கே கோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட ஓரங்கல்1 என்னும் நகரத்தைத் தலைநகரமாகக் கொண்ட காகதீய அரசு ஒன்று; மைசூர்ப் பகுதியில் உள்ள துவார சமுத்திரத்தைத் தலைநகரமாகக் கொண்ட ஹொய்சள அரசு ஒன்று; தெற்கே மதுரையைக் கோநகரமாகக் கொண்ட பாண்டிய அரசு ஒன்று. இப்பேரரசுகள் நான்கும் முழு உரிமையுடன் அரசாண்டு வந்தன. தேவகிரியில் ஆண்ட யாதவர் பெருஞ் செல்வம் படைத்தவர். அவரது செல்வச் சிறப்பு வட இந்தியாவிலும் பரவியது. ஓரங்கல் நாட்டை, ஆண்ட காகதீயரும் செல்வப் பெருக்குடையவர். துங்கபத்திரைக்கும் காவிரிக்கும் இடைப்பட்ட பெருநாட்டை ஆண்ட ஹொய்சளரும் பணப் பெருக்கம் கொண்டிருந்தனர். அவர்கள் இராஜராஜ சோழனால் ஏற்படுத்தப்பட்டு ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் வரை வலியுற்றிருந்த சோழப் பெருநாட்டை விழுங்கியவர்கள்; அதனால் செல்வச் செருக்குடனும் பெருமிதத்துடனும் பெருநாட்டை ஆண்டு வந்தனர். ஹொய்சளருக்குத் தெற்கே இருந்த பாண்டியர் வாணிகப் பெருக்கம் உடையவர். விந்தியமலைக்குத் தெற்கே வாழ்ந்த இந்தப் பேரரசர் நால்வரும் இந்து சமயத்தினர்; ஆதலால் சைவ-வைணவ-பௌத்த-சமண சமயங்களை ஆதரித்தனர்; இந்து சமயக் கோவில்களை வளப்படுத்தினர்; அவற்றில் இருந்த உருவச் சிலைகட்கு விலையுயர்ந்த பொன் நகைகளை அணிவித்தனர்; நவரத்தினங்கள் பதித்த நகைகளைத் தானம் செய்து கண் குளிரக் கண் மகிழ்ந்தனர்; பல பெரிய கோவில்களில் தங்கக் கலசங்களைச் செய்து வைத்தனர்; தங்கம், வெள்ளி முதலிய உலோகத் தகடுகளால் கோவிற் பகுதிகளை அலங்கரித்தனர். இந்தப் பேரரசர் தம் அரண்மனைப் பண்டாரத்திலும் பெருஞ் செல்வத்தைச் சேமித்து வைத்திருந்தனர், குடிகளும் அரசரும் மனமொத்துக் கவலையின்றி - பிற நாட்டார் படையெடுப்பின்றி இன்பமாக வாழ்ந்து வந்தனர். அல்லாவுத்தீன் படையெடுப்பு வடஇந்தியாவில் பேரரசராக இருந்த அல்லாவுத்தீன் மேற்சொன்ன பேரரசுகளைப் பற்றிக் கேள்விப்பட்டார். அவர் பொன் வேட்டைக்காரர்; தென் நாட்டிலும் தம் செல்வாக்குப் பரவவேண்டும் என்ற விருப்பங்கொண்டவர். ஆதலின், அவர் கி.பி. 1294-இல் விந்தியமலையைத் தாண்டி வந்தார். அவரது பெரும் படையைக் கண்ட தேவகிரி அரசன் அவருக்குக் கீழ்ப் படிந்தான்; அவருக்கு விலைமதிப்பற்ற நகைகளையும் பொற்குவியல்களையும் கொடுத்தான். அல்லாவுத்தீன் அரசு மகிழ்ந்தது டெல்ஹிக்கு மீண்டார். மாலிக் காபூர் படையெடுப்பு அல்லாவுத்தீன் தன் சேனைத் தலைவரான மாலிக்காபூர் என்பவரைப் பெரும்படையுடன் கி.பி. 1309-இல் தெற்கே அனுப்பினார். மாலிக் காபூர் முதலில் தேவகிரியைத் தாக்கினார். அரசன் சிறைப்பட்டான்; அவனது பண்டாரம் கொள்ளை போயிற்று. அவன் ஆண்டுதோறும் கப்பம் கட்டுவதாக ஒப்புக் கொண்டு விடுதலை பெற்றான். அடுத்தபடி மாலிக் காபூர் ஓரங்கல் நகரத்தைத் தாக்கினார். அதன் அரசனான பிரதாபருத்தின் முஸ்லிம் படைகளை எதிர்த்துத் தாக்கினான்; முடிவில் தோற்று பெரும் பொருள் தந்து சமாதானம் செய்துகொண்டான். பின்னர் மாலிக் காபூர் தெற்கே இருந்த ஹொய்சள நாட்டைத் தாக்கினார். அப்பொழுது ஹொய்சள அரசனாக இருந்தவன் மூன்றாம் வல்லாளன் என்பவன். அவன் அறிவிற் சிறந்தவன்; கட்டுப்பாடும் தக்க பயிற்சியுமுடைய முஸ்லிம் படைகட்கு முன் நிற்பது தவறென்பதை உணர்ந்து அடங்கினான்; பெருஞ் செல்வத்தை அளித்து, டெல்ஹி அரசுக்கு அடங்கியிருப்பதாக உறுதி கூறினான். அவ்வமயம் பாண்டியன் அரியணைக்கு மதுரையில் போட்டி உண்டாயிற்று. அதனால் நாட்டில் குழப்பம் உண்டானது. அக்குழப்ப நிலையைக் கேள்வியுற்ற மாலிக் காபூர் பாண்டிய நாட்டின்மீது பாய்ந்தார். பாண்டியன் ஓடி ஒளித்தான். பாண்டிய நாட்டுக் கோவில்கள் சூறையாடப் பட்டன. விக்கிரகங்கள் தவிடு பொடியாயின. பல கோயில்கள் அழிக்கப் பட்டன. கோவில்களில் குவிந்திருந்த செல்வமும் பாண்டியன் அரச பண்டாரமும் கொள்ளை போயின. மதுரையில் சுல்தான் பிரதிநிதி ஒருவர் அரசராக்கப் பட்டார். இங்ஙனம் மாலிக் காபூர் நான்கு பேரரசுகளையும் ஒடுக்கி அளவற்ற செல்வத்துடன் டெல்ஹி மீண்டார். முஹம்மத் பின் துக்ளக் இவர் டெல்ஹியில் பேரரசர் ஆவதற்கு முன்னரே ஓரங்கல் நாட்டைக் கைப்பற்றினார். அதனால் கிருஷ்ணையாறுவரை இவரது செல்வாக்குப் பரவியது. இவருக்கு அடங்கிய மாகாணத் தலைவரும் அத்தை புத்திரருமான பஹாபுத்தீன் என்பவர் இவரைப் பேரரசராக மதிக்கவில்லை. அதனால் இவர் பஹாவுத்தீனைப் போரில் முறியடிக்க முனைந்தார். பஹாவுத்தீன் துங்கபத்திரைக் கரையில் உள்ள கம்பிலி நகர அரசனிடம் சரண் புகுந்தார். துக்ளக் சினங்கொண்டு கம்பிலி நகரை முற்றுகையிட்டுக் கடும்போர் புரிந்து 1326-இல் கம்பிலி அரசனைக் கொன்றார்; பஹாவுத்தீனும் கொல்லப்பட்டார். மூன்றாம் வல்லாளன் இங்ஙனம் கம்பிலி முஸ்லிம் ஆட்சிக்கு உட்பட்டவுடன் மூன்றாம் வல்லாளன் திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் உள்ள கண்ணனூரைத் தலை நகரமாகக் கொண்டான்; மதுரையை ஆண்ட சுல்தான்கள் தொல்லை மிகுதிப்படவே, கண்ணனூரைத் துறந்து திருவண்ணாமலையைத் தலை நகரமாகக் கொண்டான்; அங்கிருந்து பெரும்படை திரட்டிக் கண்ணனூரை அடைந்து, மதுரைச் சுல்தான் படைகளுடன் போரிட்டான்; முஸ்லிம்கள் சமாதானத்தை விரும்பினர். வல்லாளன் அதற்கு உடன்பட்டான். ஆயின் அன்றிரவே பகைவர் திடீரென வல்லாளன் படைகள்மீது பாய்ந்து கொன்றனர். வல்லாளனும் கொல்லப்பட்டான். இந்தியாவின் தென்பகுதியில் சிறப்புற்றிருந்த நான்கு வல்லரசுகளும் அயலவர் படையெடுப்பினால் இங்ஙனம் அழிந்தொழிந்தன. சங்கமன் மக்கள் ‘யது’ என்னும் அரச மரபினைச் சேர்ந்த சங்கமன் என்பவனுக்கு மக்கள் ஐவர் இருந்தனர். 2அவர்கள் ஹரிஹரர், கம்பணர், புக்கர், மாரப்பர், முத்தப்பர் என்பவர். அவருள் ஹரிஹரரும் புக்கரும் காகதீய அரசனான பிரதாபருத்திரனிடம் அரச பண்டார அதிகாரிகளாக இருந்தனர். காகதீய அரசு வீழ்ச்சியுற்ற பிறகு கம்பிலி அரசனிடம் சென்று, அவனுடன் மணவுறவு கொண்டு வாழ்ந்தனர். கம்பிலி அரசன் போரில் கொல்லப்பட்டதும் ஹரிஹரரும் புக்கரும் சிறைசெய்யப்பட்டு டெல்ஹிக்கு அனுப்பப் பட்டனர். அவர்கள் சிறையில் ஒழுங்கு தவறாது நடந்து கொண்டமையால் சுல்தான் மகிழ்ச்சியடைந்து, அவர்களைத் தம் அரச சபையிலேயே உயர் அலுவலாளராக அமர்த்தினார்; அவ்விருவரையும் இஸ்லாத்தைத் தழுவச் செய்தார். அவர்கள் சுல்தானது பெருமதிப்புக்கு உரியவராக இருந்து வந்தனர். அக்காலத்தில் மூன்றாம் வல்லாளன் கன்னட காட்டில் குழப்பத்தை உண்டாக்கினான். துக்ளக் ஹரிஹரரையும் புக்கரையும் பெருஞ் சேனையுடன் அனுப்புனார். சகோதரர் இருவரும் கர்நாடகத்தை அடைந்து குழப்பத்தை அகற்றி அமைதியை நிலைநாட்டினர். சுல்தான் மனமகிழ்ந்து அவர்களைக் கர்நாடகத்தை ஆண்டுவருமாறு செய்தார். அதனால் கம்பிலி நகரம் உட்பட்ட3 கர்நாடகம் சகோதரர் ஆட்சிக்கு உட்பட்டது. அக்கால நிலை விந்தியமலைக்குத் தெற்கே அல்லாவுத்தீன் படையெடுத்த காலமுதல் நாட்டின் அமைதி குலைந்தது. முஸ்லிம்கள் இந்துக்கள் செல்வத்தைக் கவர்ந்தனர்; இந்து சமயத்தைப் பின்பற்றுவதை நிறுத்த முயன்றனர்; ஒரு நியாயமும் இன்றி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றனர். இந்துக்கள் விலங்குகள் போல வேட்டையாடப் பட்டனர்; இந்து விழாக்களும் பிறவும் அடக்கப்பட்டன. மதுரையை ஆண்ட கியாசுத்தீன் என்பவர் தினந்தோறும் குற்றமற்ற இந்துக்களைப் படுகொலை புரிந்தார். சுருங்கக்கூறின், முஸ்லிம்கள் ஆட்சியில் இந்துக்கள் நெருப்பிற் பட்ட புழுப்போலத் துடித்தனர் என்னல் தவறாகாது4. அக்கால மக்கள் தங்கள் கோவில்கள் கொள்ளையடிக்கப் பட்டதையும் பேரூர்களும் சிற்றூர்களும் சூறையாடப்பட்டதையும் தம் இந்துசமய அரசர்கள் கொல்லப் பட்டதையும் சிறை செய்யப் பட்டதையும் நேரிற் கண்டு விழிப்படைந்தனர். தங்கள் உரிமைகளைக் காக்கத்தக்க வலிய இந்து அரசு ஒன்று தேவை என்பதை உணர்ந்தனர்; வன்மை மிகுந்த துக்ளக் ஆட்சி தளர்ச்சியுறும் சந்தர்ப்பத்தை ஆவலோடு எதிர்பார்த்துவந்தனர். முஹம்மத் பின் துக்ளக் இந்தியா முழுவதையும் வென்றார். ஆயினும், முழு இந்தியாவையும் அடக்கி ஆள அவரால் இயலவில்லை. அவரால் நியமிக்கப்பட்ட மாகாணத் தலைவர்கள் ஆங்காங்குக் கலகம் விளைத்தனர். சுல்தான் இஸ்லாத்தைத் தழுவிய இந்துக்களை மிக்க அன்புடன் நடத்தி வந்தமையால் பழைய முஸ்லிம் பிரபுக்களும் படைத்தலைவரும் சுல்தானை வெறுத்தனர். இங்ஙனம் உண்டான பல காரணங்களால் துக்ளக் பேரரசு பல பகுதிகளாகப் பிரிந்தது. அச்சமயத்தையே ஹரிஹரரும் புக்கரும் எதிர்பார்த்திருந்தனர். அக்கால மடங்கள் நமது தென்னாட்டில் சமயத் தொடர்பான மடங்கள் நெடுங்காலமாக இருந்துவந்தன. இவை கோவில்களை அடுத்து இருந்தன. சைவ மடங்கள், வைணவ மடங்கள், பௌத்த மடங்கள், சமண மடங்கள் என்பன இவ்வகையின. இவை சமயக் கல்வியை அறிவுறுத்தியதுடன் நாட்டுப்பற்று, பல கலை அறிவு, சமூக அறிவு என்பவற்றையும் ஊட்டிவந்தன. இவை அந்தந்த இடத்துப் பொது மக்கள் துணையாலும் அரசர் ஆதரவினாலும் சிறந்த முறையில் தொண்டாற்றி வந்தன. அரசரும் அரசியல் உத்தியோகஸ்தர் களும் இவற்றிற்கு நிலங்களையும் பொருளையும் மானியமாக விட்டனர்; அடிக்கடி இவற்றைப் பார்வையிட்டனர். இந்த மடங்களில் சமயக் கல்வி கற்கும் மாணவர் இருந்தனர்; பொதுமக்கட்குச் சமயக் கல்வி புகட்டத் துறவிகள் இருந்தனர். அவர்கள் தங்கள் சமயம் வேற்று நாட்டார் படையெடுப்பினால் பாதிக்கப்படாமல் இருந்ததற்காகப் பொது மக்கட்கு நாட்டுப் பற்றை நன்முறையில் ஊட்டி வந்தனர். இத்தகைய மடங்களின் தலைவர்கள் அடிக்கடி அரசர்களைச் சந்திப்பதுண்டு; அவர்களைக் கொண்டு சமய முன்னேற்றத்துக்கான தொண்டுகளைச் செய்விப்பதும் உண்டு. சிருங்கேரி மடம் இங்ஙனம் பொது மக்கட்குத் தொண்டாற்றி வந்த மடங்களுள் சிருங்கேரி மடம் ஒன்று. அது துங்கபத்திரை யாற்றுக்குத் தென்பால் கர்நூல் ஜில்லாவில் இருக்கின்றது. அஃது ஆதி சங்கரரால் ஏற்படுத்தப் பட்ட எட்டு மடங்களில் ஒன்று. அதனில் கல்வியிலும் ஒழுக்கத்திலும் நாட்டுப்பற்றிலும் மிகச் சிறந்துவிளங்கிய துறவிகளே தலைவர்களாக இருந்து வந்தனர். அவர்கள் தக்கணப் பீடபூமியில் அத்வைத மதத்தைப் பொது மக்களிடம் பரவச் செய்து வந்தார்கள். துங்கபத்திரை, கிருஷ்ணை. கோதாவரியாறுகளின் அருகில் வாழ்ந்த அரசர்கள் சிருங்கேரி மடத்தை ஆதரித்து வந்தார்கள். ஆதிசங்கரர் காலத்தில் இருந்த சாளுக்கியர் என்ற பேரரசர்கள் சிருங்கேரி மடத்தை ஆதரித்துவந்தார்கள். அவர்கட்குப்பின் துவார சமுத்திரத்தைத் தலைநகராகக் கொண்ட ஹொய்சளரும் தேவகிரி5 யைத் தலைநகராகக் கொண்ட தக்காணப் பீடபூமியை ஆண்ட யாதவரும் சிருங்கேரி மடத்திற்கு ஆதரவு செய்துவந்தனர். வித்தியா சங்கரர் கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வித்தியா சங்கரர் என்னும் பெரியார் சிருங்கேரி மடத்துத் தலைவராக இருந்தார். அவர் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர்; நாட்டுப்பற்று மிக்கவர்; வீரவுணர்ச்சி கொண்டவர். அவர் சிருங்கேரி மடத்தை நன்னிலைக்குக் கொணர்ந்தார்; பக்கத்தில் இருந்த அரசர்களுடன் பழகி அவர்கள் ஆதரவைப் பெற்றார். அவர் எழுபத்து மூன்று ஆண்டுகள் மடத்துத் தலைவராக இருந்தார்; எட்டு இடங்களில் மடங்களை அமைத்துச் சமயக் கொள்கைகளைத் தம் சீடர் வாயிலாகப் பரப்பி வந்தார்; இறுதியில் இமயமலை அடிவாரத்தில் பதினைந்து ஆண்டுகள் யோகத்தில் இருந்து முத்தி அடைந்தார். அவருடைய சீடர்களிற் சிறந்தவரே விஜயநகரத் தோற்றத்திற்குக் காரணரான வித்தியாரண்யர் என்பவர். வித்தியாரண்யர் இவருக்கு மாதவர் என்ற பெயரும் உண்டு. இவர் வேதங்களில் பெரும் புலமை உடையவர்; வேதங்களில் அழுத்தமான அறிவுடையவர்; இறை வழிபாட்டில் இணையற்றவர்; தர்க்க வாதங்களில் வல்லவர்; கம்பீரமான தோற்றம் உடையவர்; அக்கால இந்துக்கள் மனப்பான்மையை நன்கு அறிந்தவர். இப்பெரியார் சிருங்கேரி மடத்துத் தலைவர் ஆனபிறகு அம்மடம் மிக வுயரிய நிலையை அடைந்தது. மடத்துத் தலைவர் ‘இராஜ குரு’ என்ற பெயர் பெற்றார். அரச மரியாதைகள் நடைபெற்றன. சமய நூல்களைப் படித்தல் - அமைதியாக இருந்து யோகம் செய்தல் என்ற வழக்கமான நிகழ்ச்சிகளுடன் இத்தலைவர் நிற்கவில்லை. இவர் அரசியல் முனிவர் கோலத்திலும் விளங்கினார். அதற்கு அக்காலத்தில் விந்திய மலைக்குத் தென்பால் உண்டான முன்சொன்ன அரசியல் குழப்பமே காரணமாகும். வித்தியாரண்யரும் சீடர்களும் வித்தியாரண்யர் சிருங்கேரி மடத்தில் இருபத்திரண்டாம் குருவாக இருந்து தம் சீடர்களுக்குப் பக்தியுடன் நாட்டுப் பற்றையும் சமயவுணர்ச்சியையும் ஊட்டி வந்தார். அக்காலத்தில் அவரிடம் புதியவராகச் சீடர் இருவர் வந்து சேர்ந்தனர். அவர்கள் ‘சங்கமர்’ என்ற வீரருடைய பிள்ளைகள். அவர்கள் புக்கர், ஹரிஹரர் என்பவர். அவர்கள் தக்க இடத்தில் ஒரு நகரை அமைத்துத் தமது அரசை ஏற்படுத்த விரும்பினர். முஸ்லிம் படையெடுப்புக்களைத் தடுக்கவும் இந்து சமயத்தைப் பாதுகாக்கவும் இந்து இராச்சியத்தை நிலை நாட்ட அவாவினர்; அதற்காக வித்தியாரண்யர் ஆசியையும் உதவியையும் பெறச் சிருங்கேரிக்குச் சென்றனர். விஜயநகரம் வித்தியாரண்யர் அவர்களது நல்ல நோக்கத்திற்கு உதவி செய்ய விரும்பினார். உடனே அவர்களுடன் புறப்பட்டுத் துங்கபத்திரைக் கரையருகிற் சென்றார். அவர் ஓர் இடத்தில் தங்கி இளைப்பாறினார். அப்பொழுது குருக்கள் ஒருவர் அவ்வழி வந்தார். வித்தியாரண்யர் அவர் அந்த இடவரலாறு கூறுமாறு கேட்டார். குருக்கள், “இந்த இடமே பம்பை என்றும் ஹம்பி என்றும் சொல்லப்படுவது. இதனைச் சுற்றிலும் மாதங்கமலை. மாலவதம், ஏமகூடம், பசுபசிருங்கம், கிஷ்கிந்தம் என்னும் ஐந்து மலைகள் இருக்கின்றன. வால்மீகியால் புகழப்பட்ட பாம்பாசரஸ் இங்குத்தான் இருக்கின்றது. இவ்விடத்தில்தான் சுக்கிரீவன், அநுமார் முதலிய வானர வீரர் வசித்தனர். இராமன் வானரரைச் சந்தித்த இடம் இதுதான்” என்று கூறினர். உடனே முனிவர், “இந்தப் புண்ணிய பூமியே புதிய நகரத்திற்கு ஏற்ற இடமாகும்,” என்று கூறினர். பிறகு நல்ல நாளில் நகர அமைப்புத் திட்டம் போடப்பட்டது. உடன் பிறந்தார் இருவரும் முனிவரும் பொருள் உதவி செய்து கட்டிட வேலையைத் தொடங்கினர். அவர்கள் அங்கிருந்த மலைக்குகை ஒன்றில் பெருஞ் செல்வத்தைக் கண்டெடுத்தனர்; அதன் உதவியைக் கொண்டு நகர அமைப்பு வேலை நடந்தது. விஜயநகர அரசு வித்தியாரண்யர், ஹம்பியில் கோவில் கொண்டுள்ள விரூபாக்ஷருக்கு நாட்டை அளித்து ஹரிஹரரை அக்கடவுளின் பிரதிநிதியாக இருந்து அரசாளுமாறு யோசனை கூறினார். ஹரிஹரரும் புக்கரும் இஸ்லாத்தை விட்டு முன் போல இந்துக்களாகி வித்தியாரண்யர் கூறியவாறே நாட்டை விரூபாக்ஷருக்குத் தானமாக அளித்து, அவர் பிரதிநிதியாக இருந்து நாட்டை ஆளலாயினர்; வித்தியாரண்யர் உதவி கொண்டு அமைக்கப்பட்ட நகரத்திற்கு வித்தியாநகரம் எனப் பெயரிட்டனர். அந்நகரமே நாளடைவில் விஜயநகரமே எனப் பெயர் பெற்றது. விஜயநகர அரசு முஸ்லிம் படையெப்பைத் தடுக்கவும் இந்து தர்மத்தைப் பாதுகாக்கவும் ஏற்பட்டது. அஃது ஏறத்தாழ கி.பி. 1336-இல் ஏற்பட்டதென்னலாம். வித்தியாரண்யர் இராஜ குருவாக இருந்த அரசு வலுப்பெறத் தம்மால் இயன்றன எல்லாம் செய்து 1386-இல் காலமானார். அப்பெரியாருக்கு ஹம்பியில் விரூபாக்ஷர் கோவிலுக்கு மேல் அமைந்துள்ள பாறைமீது கோவில் கட்டப் பட்டது. அப்பாறைமீது இருந்து கவனிப்பின் விஜயநகரத்தின் முழு அமைப்பையும் செவ்வனே காணலாம். அடிக்குறிப்புகள் 1. இதனை ‘வாரங்கல்’, ‘வாரங்கல்’, ‘ஓரங்கல் என்றும் கூறுவர். 2. இச்சங்கமன் ஹொய்சளர் படைத்தலைவன்; கருநாடகத்தின் ஒரு பகுதிக்குத் தலைவனாக இருந்தான். இவன் முஸ்லிம்களுடன் போரிட்டவன்; சீரங்கப் பட்டணத்தை வென்றவன்Beginnings of Vijayanagara History, PP. 73-74. 3. Further Sources of Vijayanagara History, l. Vol. I. PP. 32-33. 4. Ibid. P. 42. 5. தேவகிரி பிற்காலத்தில் ‘ஒளரங்கபாத்’ எனப் பெயர் பெற்றது. V.A.Smith, Oxford History of India. P. 204. 2 தமிழகத்தில் விஜயநகர அரசு நாட்டின் உட்பிரிவுகள் துங்கபத்திரையாற்றுக்குத் தென்பாற்பட்டதும் காவிரியாற்றுக்கு வடபாற்பட்டதும் ஆகிய சங்கமன் மக்கள் ஆட்சிக்கு உட்பட்டது. அப்பகுதி பல இராச்சியங்களாகப் பிரிக்கப்பட்டது. கீழ்க்கரையில் இருந்த உதயகிரி ராச்சியம் என்பது கம்பணர் ஆட்சியில் இருந்தது. ஹொய்சள நாட்டு உயிர் நிலையான பகுதி - பெனுகொண்டா, ஹளபீடு முதலிய கோட்டைகளைக் கொண்ட பகுதி - புக்கர் ஆட்சியில் இருந்தது. தென் மஹாராஷ்டிரம் எனப்பட்ட மேல்கரைப்பகுதி ஹரிஹரர் ஆட்சியில் இருந்தது. மைசூரில் ஷிமோகா ஜில்லாவில் உள்ள ஆரகம் என்பதைத் தலைநகராகக் கொண்டு சுற்றிலும் உள்ள நிலப்பகுதியை மாரப்பர் ஆண்டுவந்தார். பெனுகொண்டாவில் முத்தப்பர் ஆண்டுவந்தார்.1 இந்த ஐவர் ஆண்ட நிலப்பகுதிக்குத் தெற்கே இருக்கும் நிலப் பகுதிக்குப் புக்கரது புத்திரர் அரசப் பிரதிநிதியாக இருந்தார். அவர் ஆண்ட பகுதிக்குத் தலைநகரம் ‘முள்பாகல்’ என்பது. அவர் பெயர் கம்பணவுடையார்2 என்பது. தமிழக நிலைமை தமிழகம் நீண்ட காலமாகச் சேர, சோழ, பாண்டியரால் ஆளப்பட்டு வந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை சோழர் பேரரசராக இருந்தனர்; பின்னர்ப் பாண்டியர் பேரரசர் ஆயினர். அவர்கள் இருவரும் வலிகுன்றிய காலத்தில் ஹொய்சளர் செல்வாக்குத் தமிழகத்தில் பரவியது. சோழ பாண்டியர் ஹொய்சாளரிடம் பெண்கொண்டு உறவு கொண்டாடினர். ஹொய்சளர் கண்ணனூர், திருவண்ணாமலை என்ற இடங்களில் தலை நகரங்களை அமைத்துக் கொண்டு சோழ நாட்டை ஆளத் தொடங்கினர். சோழப் பெருநாடு சிதறுண்ட பிறகு தொண்டை மண்டலம் சாம்புவராயர் என்ற சிற்றரசர் ஆட்சியில் இருந்தது. வடபாண்டிநாடு முஸ்லிம்கள் கைப்பட்டது. கம்பணவுடையார் வெற்றி கம்பணவுடையார் ஏறத்தாழ கி.பி. 1352-இல் தொண்டை நாட்டைக் கைப்பற்ற விரும்பினார். அவரது தானைத் தலைவரும் அமைச்சரும் ஒருவரே. அவர் சோமய்ய தண்ட நாயக்கர் என்பவர். அவர் மைந்தர் மாரய்ய நாயக்கர் என்பவர் கம்பணவுடையாரிடம் சேனைத்தலைவராக இருந்தார். அச்சேனைத் தலைவர் ஒரு பெரும்படையுடன் தொண்டை நாட்டின்மீது படையெடுத்தார்; எளிதில் சாம்புவராயரைத் தோல்வியுறச் செய்தார். இராஜ நாராயணச் சாம்புவராயர் என்பவர் கம்பணவுடையார்க்கு அடங்கிய சிற்றரசராக இருக்க ஒப்புக் கொண்டார். இந்த வெற்றியால் விஜயநகர அரசு தென் ஆர்க்காடு ஜில்லாவரை பரவியது. மதுரையில் முஸ்லிம் ஆட்சி மதுரையில் கி.பி. 1324 முதல் 1371 வரை முஸ்லிம் ஆட்சி நிலவி இருந்தது. அக்காலத்தில் பாண்டிய நாடு கொள்ளை கொலை கொடுமை ஆகிய மூன்றையும் தரிசித்தது. புகழ்பெற்ற மதுரை மீனாக்ஷியம்மன் கோவில் சீரழிக்கப்பட்டது. அதன் ஏழு மதில்களும் பதினான்கு கோபுரங்களும் மதில்கட்கு இடைப்பட்ட தெருக்களும் தலைமட்டம் ஆயின; கருவறை, நடு மண்டபம், முன் மண்டபம் ஆகிய மூன்றே விடப்பட்டன. கோவிலில் இருந்த விக்கிரகங்கள் நாஞ்சில் நாட்டுக்கு (தென் திருவாங்கூர்க்கு) எடுத்துச் செல்லப்பட்டன. சீரங்கம் கொள்ளைக்கும் கொலைக்கும் நிலைக்களன் ஆயது. பல கோவில்கள் பாழாயின. பலவற்றில் இருந்த விக்கிரகங்கள் வேறு இடங்கட்குக் கொண்டு செல்லப்பட்டன. நாட்டில் சைவ வைணவச் சமயங்கள் தத்தளித்தன. முஸ்லிம் ஆட்சிக் கொடுமையிலிருந்து தங்களைக் காப்பவர் ஒருவரும் இல்லையே என்று பாண்டி நாட்டுக் குடிகள் தத்தளித்தனர். மதுரையில் விஜயநகர அரசு தொண்டை நாட்டைக் கைப்பற்றிய கம்பணவுடையார் மிகப் பெரிய படைகொண்டு மதுரையில் இருந்த முஸ்லிம்களைத் தாக்கினர். போர் கடுமையாக நடந்தது. முடிவில் முஸ்லிம் அரசு ஒழிந்தது. மதுரை, கம்பணர் கைப்பட்டது. அவ்வீரர் பாண்டிய நாட்டில் அமைதியை உண்டாக்கினார்; மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலைப் புதுப்பித்தார்; ஸ்ரீரங்கம் கோவிலை நன்நிலைக்குக் கொணர்ந்தார். இந்த இரண்டு பெருஞ் செயல்களால் அவ்வீரர் சைவர் வைணவர் நன்மதிப்பைப் பெற்றார். நாட்டில் அமைதி ஏற்பட்டதால் மக்கள் அவரைக் கண்கண்ட தெய்வமாகப் போற்றினர். திருப்பதிக்குக் கொண்டு செல்லப்பட்ட அரங்கநாதர் சிலை மீட்டும் திருவரங்கத்திற்குக் கொண்டுவரப்பட்டது. நாட்டில் மூடப்பட்டு இருந்த கோவில்கள் திறக்கப்பட்டன. பூசை, விழாக்கள் முதலியன முன்போல நடைபெறத் தொடங்கின. கம்பணவுடையார் நாயக்கர் பலரைக் கோவில் நிருவாகத்தை மேற்பார்க்க நியமித்தார்; பாண்டிய நாட்டில் முஸ்லிம் அரசுக்கு அஞ்சி மறைந்திருந்த வீரபாண்டியன் என்பவனை மதுரைக்கு அரசனாக்கினார். இது பெருந்தன்மையான செயல் அன்றோ? இலங்கை வெற்றி கம்பணர் இலங்கையைக் கைப்பற்ற விரும்பினார்; பண்பட்ட தம் படைகளைப் பல கப்பல்களில் ஏற்றி வாழ்த்துரை கூறி அனுப்பினார். அவருடைய படைத்தலைவர்கள் வீரமிக்க இளைஞர்கள்; வெற்றி ஒன்றைத் தவிர வேறு அறியாதவர்கள்; ஆதலின் ஈழநாட்டை எளிதில் வெல்லலாம் என்று எண்ணினர். ஆயின், அவர்கள் அரும்பாடு பட்டே இலங்கையை வெல்ல வேண்டியவர் ஆயினர். இலங்கை இறைவன் விஜயநகர அரசுக்கு அடங்கி நடப்பதாக ஒப்புக் கொண்டான்; ஆண்டுதோறும் கப்பங் கட்டுவதாக இசைந்தான். தென்காசிப் பாண்டியர் மாலிக் காபூர் படையெடுப்பினால் நிலைகுலைந்த பாண்டியருள் ஒரு கிளையினர் திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள தென்காசி என்னும் நகரத்தில் தங்கிவிட்டனர். அவர்கள் அமைதியாக திருநெல்வேலி ஜில்லாவை ஆண்டுவந்தனர். அவர்கள் கம்பணவுடையாரை வரவேற்று வேண்டிய உதவிகள் செய்தனர்; விஜயநகர அரசுக்கு அடங்கியிருப்பதாக வாக்களித்தனர். இங்ஙனம், கொள்ளை - கொலை - கொடுமை இவற்றுக்கு நிலைக்களனாக இருந்த தமிழகத்தைக் கம்பணவுடையார் என்ற பெருவீரர் கைப்பற்றி நாட்டில் அமைதியான அரசியலை நிலை நாட்டினார். தமிழகம் விஜயநகரப் பெருநாட்டின் தென்பகுதி யாகத் திகழத் தொடங்கியது. புதிய அரசியல் விஜயநகர ஆட்சியில் பண்டைத் தமிழர் அரசியல் சிறிது மாறுதல் அடைந்தது. தமிழர் ஆட்சியில் கோவில்கள் சிறந்த தொண்டாற்றி வந்தன. அவை மக்கட்குப் பணவுதவி செய்தன; கிராமப் பொது நலன்களுக்காக நிலங்களை வாங்கின; வரிகட்ட இயலாதவர் நிலங்களை விலை கொடுத்து வாங்கி வரிப் பணத்தைத் தட்டாமல் அரசாங்கத்திற்கு உதவி வந்தன. பொதுமக்களின் நன்மைக்கான பல்வேறு துறைகட்கும் கோவில்கள் பயன்பட்டன. அந்த நிலைமை புதிய அரசியலில் மறைந்துவிட்டது. கிராமச் சபைகள் மறையத் தொடங்கின. ‘குடிமக்கள் ஆட்சி’ என்ற சோழர் அரசியல் தத்துவம் மறைந்தது; அதற்குப் பதிலாக ‘ஓர் அரசன் ஆட்சி’ ஏற்பட்டது; நாட்டின் ஆள் பலமும் பொருள் பலமும் முஸ்லிம் படையெடுப்புத் தென்னாட்டில் உண்டாகாதிருக்க திரட்டப்பட்டன. இந்த ஒரு துறையிலேயே புதிய அரசு மிகுந்த கவலை கொண்டது. விஜயநகரப் பேரரசர் வடக்கே இருந்த முஸ்லிம்களுடன் போர் தொடங்கிய பொழுதெல்லாம் தமிழ் நாட்டுப் படைகள் அவர்க்கு உதவியாக அனுப்பப்பட்டன; தமிழ் நாட்டுப் பொருளும் அனுப்பப் பட்டது. இந்த இருவகைத் தொண்டுகளையும் தமிழ் நாட்டார் மிக்க மகிழ்ச்சியோடு செய்து வந்தனர். அரசர் நல்லவராயினும் உத்தியோகஸ்தர்களில் பலர் பலவாறு இருந்தனர்; விஜயநகர அரசர் ஒவ்வொருவர் பட்டம் பெறும் பொழுதும் ‘பரிசு’ என்று பொதுமக்களிடம் பணம் பெற்று வந்தனர். அரசர் அறிந்தவுடன் இந்தப் பழக்கம் நின்றுவிட்டது. அதிகாரிகளால் சில புதிய வரிகள் அதிகமாக விதிக்கப்பட்டன. அவை அரசர்க்கு அறிவிக்கப்பட்டதும், அந்த அதிகாரிகள் தண்டிக்கப்பட்டனர். இவை சிறிய குறைபாடுகள். பொதுவாக விஜயநகர அரசு தமிழ்நாட்டில் ஏற்பட்டது. அக்கால நிலையை நோக்க, மிகவும் பாராட்டத்தக்கது என்று திண்ணமாகக் கூறலாம். அடிக்குறிப்புகள் 1. ஹரிஹரர் மூத்தவர்; இரண்டாம் சகோதரர் கம்பணர்; புக்கர் மூன்றாம் சகோதரர்; மாரப்பர் நான்காம் சகோதரர், முத்தப்பர் ஐந்தாம் சகோதரர். 2. இவர் இரண்டாம் கம்பணர் எனப்படுவர், 3. விஜயநகரம் நகர அமைப்பு வித்தியாநகரம் அல்லது விஜயநகரம் என்பது துங்க பத்திரையின் தென் கரையில் அமைப்புண்ட நகரமாகும். ஆற்றின் வடகரையில் ஆனெ கொந்தி நகரம் அமைந்திருந்தது. அது கம்பிலி அரசனுக்குரிய சிறப்பிடங்களில் ஒன்றாகும். அதனைச் சூழ மலைகள் இருக்கின்றன. விஜயநகரத்தின் சுற்றளவு அறுபது கல் என்று 1420-இல் அதனைப் பார்வையிட்ட இத்தாலியர் ஒருவர் குறித்துள்ளார். நகர மதில் பக்கத்தில் உள்ள மலையடிவாரம் வரை கொண்டு செல்லப்பட்டிருந்தது. நகரம் ஏறத்தாழ மலையரணைப் பெற்றதாக இருந்தது. விஜயநகரம் ஏழு கோட்டைகளைக் கொண்டது. ஏழாம் கோட்டையின் நடுவிற்றான் அரசர் அரண்மனை அமைந் திருந்தது. வெளிக் கோட்டைச் சுவரிலிருந்த வடக்கு வாயிலுக்கும் தெற்கு வாயிலுக்கும் இடைப்பட்ட நீளம் ஏழு அல்லது எட்டுக் கல்லாகும். மேற்கு வாயிலுக்கும் கிழக்கு வாயிலுக்கும் இடைப் பட்ட தூரமும் இவ்வளவேயாகும். முதல் மூன்று கோட்டைச் சுவர்கட்கு இடையில் விளை நிலங்கள், தோட்டங்கள், போர்வீரர் இல்லங்கள் அமைந்திருந்தன. மூன்றாம் மதிற் சுவரிலிருந்து ஏழாம் கோட்டைச் சுவர் வரை கடைகளும் கடைத் தெருக்களும் குடிகள் வாழ் தெருக்களும் நெருங்கியிருந்தன. அரண்மனைக்குப் பக்கத்தில் பெரிய கடைத்தெருக்கள் நான்கு காணப்பட்டன. அவை ஒன்றுக்கொன்று எதிராக அமைந்திருந்தன. ஒவ்வொரு கடைத்தெருவின் தலைப்பிலும் பெரிய மேடையும் மக்கள் இருக்கத் தக்க இடமும் அமைந்திருந்தன. துங்கபத்திரை யாற்றில் பெரிய அணைகட்டுக் கட்டி நீர் தேக்கப் பட்டது. அத்தேக்கத்திலிருந்து பதினைந்து கல் தொலைவில் நீர் கொண்டுவரப்பட்டு நகரத்திற்கு உதவுமாறு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கடைத் தெருக்கள் மேற்சொன்ன நான்கு கடைத்தெருக்களும் கண்டு களிக்கத் தக்கவையாக இருந்தன. மிக்க விலை மதிப்புள்ள நவரத்தினக் கடைகள், பொன்நகைக் கடைகள், பொன்னும் மணியும் விரவிச் செய்யப்பட்ட நகைகளை விற்கும் கடைகள், வெள்ளிப் பாத்திரக் கடைகள் என்பன சிறப்பிடம் பெற்றிருந்தன. அவற்றை அடுத்துச் செம்பு, ஈயம், வெண்கலம், தகரம், இரும்பு முதலிய உலோகப் பொருள்களைக் கொண்ட கடைகள் அமைந்திருந்தன. பருத்தியாடைக் கடைகள், சீனப் பட்டாடைக் கடைகள் ஒருபுறம் சிறப்புறத் திகழ்ந்தன. ஒருபால் தந்தம், மரம், வெள்ளி, வெண்கலம் இவற்றால் செய்யப்பட்ட பலவகைப் பொருள்களைக் கொண்ட கடைகள் இடம் பெற்றிருந்தன, ஒருபக்கம் அகில், சந்தனம், குங்கிலியம் முதலிய மணப் பொருட் கடைகள் மலிந்திருந்தன. குழல், யாழ், வீணை, மத்தளம் முதலிய இசைக் கருவிகளை விற்கும் கடைகள் வீறுகொண்டிருந்தன. நெல், சோளம், வரகு, தினை, சாமை, முதலிய கூலப் பொருட் கடைகள் பல இருந்தன. எள்நெய், தேங்காய்நெய், முத்துக்கொட்டை நெய் முதலிய நெய் வகைக் கடைகள் பல; புத்தகங்கள், எழுதுவதற்குரிய பனை யோலை ஏடுகள், பதப்படுத்தப்பட்ட எழுத்தாணிகள் என்பன வைக்கப் பட்டிருந்த கடைகள் பல; மல்லிகை, முல்லை, இருவாக்ஷி, ரோஜா முதலிய மலர்களைக் கொண்டு செய்யப்பட்ட பலவகை மனப் பொருட்கடைகள் பல பொலிந்திருந்தன. விஜயநகரத்தில் இருந்த அரசர்முதல் ஆண்டியீறாக அனைவரும் தினந்தோறும் ரோஜா மலர்களை மிகுதியாகப் பயன்படுத்தி வந்தனர். அதனால் விஜய நகரத்தில் ரோஜா மலர் விற்பனை மிகுதியாக நடைபெற்று வந்தது. வெற்றிலை - பாக்குக் கடைகளும் மிகப் பலவாக இருந்தன. நகர மக்கள் வெற்றிலை பாக்கை மிகுதியாகப் பயன்படுத்தினமையே இதற்குக் காரணம். நகர மாந்தர் தெருக்கள் அரண்மனையைச் சுற்றிலும் அமைச்சர், பிரபுக்கள், மண்டலத் தலைவர், படைத்தலைவர், அரசாங்க அலுவலாளர், அவைப் புலவர்கள் முதலிய பெருமக்கள் வாழ்ந்த தெருக்கள் அமைந்திருந்தன. ஒவ்வொரு தெருவும் அகன்று காற்றோட்டம் பொருந்தியதாக இருந்தது. அத் தெருக்களில் மாடமாளிகைகளே காணப்பட்டன. அத்தெருக்களை அடுத்து வாணிகப் பெரு மக்களின் தெருக்கள் விளங்கின. விஜயநகரப் பெருநாட்டில் உள்நாட்டு வாணிகமும் அயல்நாட்டு வாணிகமும் சிறந்த முறையில் நடைபெற்று வந்ததால் வாணிகப் பெருமக்கள் வளமுற்று வாழ்ந்தனர். அவர்கள் தெருக்கள் பொன் கொழிக்கும் தெருக்களாகக் காணப்பட்டன. அவற்றுக்கு அப்பால் பொற்கொல்லர், இரும்புக் கொல்லர், கன்னார், தச்சர், தந்தவேலை செய்பவர், முத்துக் கோப்பவர், பவள வேலைக்காரர் கல் இழைப்பவர், கல்லுருச் செய்பவர், செம்பு, வெண்கலம், வெள்ளி, பொன் இவற்றைக் கொண்டு பல உருவங்களை அமைப்பவர் முதலியோர் வாழ்ந்த தெருக்கள் வளமாகக் காணப் பட்டன. நகரத்தின் சிறப்பிடத்தில் நடன மகளிர், நாடக மகளிர், இசைவாணர், ஆடல் ஆசிரியர், இசை ஆசிரியர், குழல்-யாழ்-வீணை-முழவு முதலியவற்றை இசைப்பவர், ஓவியக் கலைஞர் முதலியோர் வாழ்ந்த தெருக்கள் அழகுற்று விளங்கின. இசை, நடனம், நாடகம் இவற்றில் வல்லவராக இருந்த பொதுமகளிர் தெருக்கள் மாடமாளிகைகள் பெற்றுப் பெருவனப்புற்று விளங்கின என்று யாத்ரிகர் ஒருவர் குறித்துள்ளனர். அவர் கணக்குப்படி நகரத்தில் ஏறத்தாழ இலக்ஷம் வீடுகள் இருந்தன என்னலாம்; மக்கள்தொகை ஐந்து இலக்ஷம் என்று சொல்லலாம். அரண்மனை நகரத்தின் நடுநாயகமாக விளங்கியது அரசர் அரண்மனை யாகும். அஃது அமைந்துள்ள இடத்தில் துங்கபத்திரையாற்றுக் கால்வாய்களிலிருந்து பிரிக்கப்பட்ட நீரோட்டங்கள் பளிங்குக் கற்கள்மீது பாய்ந்த வண்ணம் இருந்தன. அரண்மனை வானளாவிய கட்டிடங்களைப் பெற்றிருந்தது. அதன் வாயிலில் (கிருஷ்ணதேவராயர் காலத்தில்) கிருஷ்ணதேவராயர் உருவச் சிலையும் அவர் தந்தையாரான நரச நாயக்கரது உருவச் சிலையும் மிகவுயர்ந்த கற்களில் செய்து நிறுத்தப்பட்டிருந்தன. அரண்மனைக்குள் அரசர் மாளிகை, அரசமகளிர் மாளிகை, அரசர் தொழில் நிலையம், நடன மண்டபம், நாடக அரங்கு, இசை அரங்கு முதலியனவும் செய்குளங்களும் செய்குன்றுகளும் வளமுற்ற பூஞ்சோலைகளும் பொலிவுற்று விளங்கின. அரண்மனையில் இருந்த அறைகள் பலவற்றுள் பெரு வேலைப்பாடு கொண்டது தந்த அறையாகும். அதன் சுவர்கள், மேற்கூரை, தூண்கள், அனைத்தும் தந்தத்தால் அமைந்திருந்தன. அவற்றின்மீது தாமரை மலர்கள் அழகாகச் செதுக்கப்பட்டிருந்தன. அத்தகைய அறையைத் தாம் யாண்டும் கண்டதில்லை என்று மேனாட்டு யாத்ரிகர் ஒருவர் குறித்துள்ளார் எனின், அதன் பேரழகை என்னென்பது! பார்க்கத்தக்க மற்றோர் அறை செல்வ அறையாகும். அதன் சுவர்கள் பொன் தகடுகள் அறையப் பெற்றவை. மேற்சொன்ன யாத்ரிகர் நெடுநேரம் விழித்த கண் இமையாமல் அந்த அறையைப் பார்த்து வியந்தனராம். அவ்வறையில் பொன் கட்டிகள், பொன் தகடுகள், நவரத்தினக் குவியல்கள், விலை மதிப்புடைய நகைகள் முதலியன நிறைந்திருந்தனவாம். அரண்மனை வெள்ளிப் பாத்திரங்களும் பொன் பாத்திரங் களுமே வழக்கில் இருந்தன என்று அந்த யாத்ரிகர் குறித்துள்ளார். அரண்மனையுள் இருந்த நடன மண்டபம் விழிகட்கு விருந்தளித்தது. அதன் சுவர்கள் முழுவதிலும் பல திறப்பட்ட அழகிய ஓவியங்கள் நிறைந்திருந்தன. தூண்கள்மீது நடன ஓவியங்கள் பேரழகுடன் காணப் பட்டன. மண்டபத் தரை ஒளிபெற்றும் வழவழவென்றும் காணப் பட்டது. அம்மண்டபத்தில் அரச மாதர் நடனம் கற்று வந்தனர். நடனமாதர் அரசர் கண்டுகளிக்க நாடோறும் நடித்துவந்தனர். அரசர் அரசியருடன் செய்குன்றுகளில் மாலைப் பொழுதினைக் கழிப்பது வழக்கம். அக்குன்றுகள் மீது பச்சைக் கொடிகள் படர்ந்து பசுமைக் காட்சியை நல்கின. குன்றுகளைச் சுற்றிலும் நறுமணம் நல்கும் மலர்ச் செடிகள் வைத்துப் பயிராக்கப் பட்டிருந்தன. செய்குளங்கள் ஆழமற்றுத் தெளிந்த நன்னீரைப் பெற்றுத் திகழ்ந்தன. அரசரும் அரசமாதரும் நீராடத் தனித்தனிச் செங்குளங்கள் இருந்தன. அரண்மனைக்குள்ளேயே அழகிய பூஞ்சோலைகள் இருந்தன. அவற்றில் வானுற ஓங்கி வளம்பெற வளர்ந்த பாக்கு, தென்னை, மா, பலா முதலிய மரவகைகள் காணப்பட்டன. அசோக மரங்கள் மிக்கிருந்தன. மரக்கிளைகளில் ஆங்காங்கே ஊஞ்சல்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. நகரப் பெருமக்கள் மண்டலேசுவரர் (மாகாணத் தலைவர்கள்), அமைச்சர், பிரபுக்கள், சேனைத்தலைவர் முதலியோர் அரையில் ஆடையும் உடம்பில் சட்டையும் தலையிற் பாகையும் அணிந்திருந்தனர். அவரவர் அலுவலுக்குத் தக்க ஆடை வேறுபாடுகள் இருந்தன. அவர்கள் பல்லக்கிற் செல்லும் உரிமை பெற்றிருந்தனர். பிரபுக்கள் தங்கள் வருவாயைத் தாராளமாகச் செலவிட்டுப் போக பாக்கியங்களை அநுபவித்து வந்தனர். அவர்கள் இல்லங்கள் மாடமாளிகைகள். அவை திருமகள் திருவோலக்கம் கொண்ட இடங்களாகக் காட்சி அளித்தன. கலை மகளிர் விஜயநகரத்தில் இருந்த இசை-நடன-நாடகக் கலைகளை வளர்த்த மகளிர் அரசராலும் பொது மக்களாலும் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டனர். அவர்கள் உயர்ந்த மாடமாளிகைகளில் வாழ்ந்து வந்தனர். பிரபுக்கள் முதலிய பெருமக்கள் அவர்கள் மாளிகைக்கட்குத் தாராளமாகச் சென்று வந்தனர். அஃது இழிவாகக் கருதப்படவில்லை. அம்மகளிர் அரண்மனையைச் சேர்ந்த பெண்மணிகட்கு ஆடல் பாடல்களைக் கற்பித்து வந்தனர்; தங்களுடைய ஆடல்-பாடல்களால் அரசரையும் அவையோரையும் அடிக்கடி மகிழ்வித்து வந்தனர்; ஆண்டு தோறும் மஹாநகமியன்று அரசர் முன்னர் மற்போர் புரிந்து பரிசு பல பெற்றனர். அவர்கள் அணிந்திருந்த அணிகள் விலைமதிப்புப் பெற்றவை. அவர்கள் தாம்பூலம் தரிப்பதில் பெருவிருப்பம் உடையவர்; தாம்பூலப் பட்டிகளைப் பலவகை யாக மடிப்பதில் பயிற்சிபெற்றவர். அரசரும் பிரபுக்களும் அவர்கட்கு நிலங்களை மானியமாக விட்டிருந்தனர். சுருங்கக் கூறின், கலை மகளிர் எல்லா நலன்களையும் பெற்று இனிதாக வாழ்ந்து வந்தனர் என்னலாம். மக்கள் வாழ்க்கை விஜயநகரத்தில் எல்லாப் பொருள்களும் குறைந்த விலைக்குக் கிடைத்தன. மேனாட்டு யாத்ரிகர் ஒருவர், ‘ஒரு கோழியின் விலை அரையணா; ஆறு முதல் எட்டுக் கவுதாரியின் விலை ஒன்றரையணா; மூன்று திராiக்ஷக் குலைகளின் விலை எட்டணா; பன்னிரண்டு ஆடுகளின் விலை ஐந்து ரூபாய் என்று குறித்துள்ளார்.’ இக்குறிப்பைக் கொண்டு பொருள்களின் விலை மலிவினை நன்கறியலாம்; அறியவே, எளிய மக்கம் இன்பமாக உணவுண்டு வாழ்ந்து வந்தனர் என்பதை எளிதில் உணரலாம் அல்லவா? பொழுது போக்கு பெருமக்கள் காலையிலும் மாலையிலும் உடற்பயிற்சி, படைப் பயிற்சிக்குரிய வேலைகளில் ஈடுபட்டனர்; மற்ற நேரங்களில் தத்தம் உத்தியோகம் காரியங்களைக் கவனித்தனர்; ஓய்வு நேரங்களில் இசை, நடனம், நாடகம் முதலியவற்றில் ஈடுபட்டனர். பொது மக்கள் மாலை வேளைகளில் கோவில்கட்கும் சென்று இறை வணக்கம் செய்தனர்; அங்கு நடைபெற்ற ஆடல், பாடல்களைக் கவனித்தனர்; பிற நேரங்களில் தத்தம் அலுவல்களை ஊக்கமாகக் கவனித்து வந்தனர். சுருங்கக் கூறின். “வண்ணம் இல்லையோர் வறுமை இன்மையால்; திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால்; உண்மை இல்லைபொய் உரைஇ லாமையால்; வெண்மை இல்லைபல் கேள்வி மேவலால்”1 என்ற கம்பர் பெருமானது கூற்று விஜயநகர மக்கள் அளவில் மிகவும் பொருத்தமாக இருந்தது என்னல் தவறாகாது. கோவில்கள் தலைநகரத்தில் சைவ, வைணவ, சமணக் கோவில்கள் இருந்தன. பம்பாபதீசுவரர் கோவில், இராமசுவாமி கோவில், விட்டலசுவாமி கோவில், கிருஷ்ணசுவாமி கோவில் என்பன குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்தும் முதல்தரமான கற்களைக் கண்டு கட்டப்பட்டவை; வானளாவிய கோபுரங்களைக் கொண்டவை. இவற்றில் உள்ள இரட்டைத் தூண்கள் கவனிக்கத்தக்கவை. தூண்களும் சுவர்களும் மேற்கூரைகளும் சிறந்தது சிற்ப வேலைப்பாடு கொண்டவை. ஓவியங்கள் விழிகட்கு விருந்தளிப்பவை. கோவில்களில் உள்ள சிற்பங்களும் ஓவியங்களும் விஜயநகரப் பேரரசின் காலத்தில் உண்டான கலை வளர்ச்சியை உலகறியச் செய்வனவாகும். விஜயநகரம் அழிந்து பட்ட இந்தக் காலத்திலும் அதன் சிற்ப-ஓவியச் சிறப்பு உலகம் பாராட்டத் தக்கதாக இருக்கின்றது எனின், அந்நகரம் வளமுற்றிருந்த காலத்தில் அக்கலைகள் எங்ஙனம் வளர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் என்பதை ஒருவாறு உய்த்துணரலாம் அல்லவா? அடிக்குறிப்பு 1. பாலகாண்டம், நாட்டுப்படலம் - 53. 4. விஜயநகர அரசர்கள் ஹரிஹரர் விஜயநகர அரசு ஏறத்தாழ கி.பி. 1335-இல் ஏற்படுத்தப் பட்டது என்னலாம். அதன் முதல் அரசர் ஹரிஹரர் ஆவர். அவர் ஆட்சிமுறையைச் செவ்வைப்படுத்தினார்; நான்கைந்து சிற்றூர்களை ஓர் ஊராக்கி அதன் ஆட்சியைக் கணக்கர் ஒருவர் வசம் ஒப்புவித்தார்; இருபது அல்லது முப்பது கிராமங்களை ‘ஸ்தலம்’ என்ற பெயரால் ஒன்றாக்கி, அத்தொகுதியை ஸ்தல கணக்கர் அதிகாரத்திற்கு உட்படுத்தினார். பல ஸ்தலங்கள் சேர்ந்தது நாடு. நாட்டில் சட்டத்தையும் அமைதியையும் நிலைநாட்ட நாடாள்வாரை நியமித்தார். புக்கர் ஹரிஹரர் தம்பியாரான புக்கர் ஆண்ட காலத்தில் சமண - வைணவப் போராட்டம் ஏற்பட்டது. புக்கர் இருதிறத்தாரையும் வரவழைத்தார்; சிறுபான்மையோரான சமணரை வைணவரிடம் ஒப்புவித்து, “இச்சமணர்களைக் காத்தல் உங்கள் கடமை. இவர் சமயத்தைப் பாதுகாத்தலும் உங்கள் கடனாகும். இவர்களும் உங்களைப் போல இந்நாட்டிற்கு உரியவர். நீங்கள் அநுபவிக்கும் எல்லா உரிமைகளையும் அநுபவிக்க இவர்கட்கும் நமது அரசாங்கத்தில் உரிமையுண்டு. எல்லாச் சமயங்களும் ஒற்றுமையுடன் இந்நாட்டில் வாழவேண்டும்” என்று அறிவுறுத்தினார். இதிலிருந்து விஜயநகர அரசரது பரந்த சமரச மனப்பான்மையை நன்குணரலாம் அல்லவா? இரண்டாம் ஹரிஹரர் இவர் புக்கராயர் மகனாராவர். விஜயநகரப் ‘பேரரசர்’ என்ற பட்டத்துடன் மணிமுடி தரித்து அரசாண்ட முதல் அரசர் இவரேயாவர். இவர் காலத்தில் போர்கள் நடைபெறவில்லை. இவர் ‘வேத விதிகளைப் பின்பற்றுபவர்’, ‘வேத உரைகளை வெளியிடுபவர்’ என்று கல்வெட்டுகள் குறித்திருத்தலால், இவர் வடமொழிப் பற்றுடையவர் - வடமொழிப் புலவர்களை ஆதரித்தவர் என்பன புலனாகும். முதலாம் தேவராயர் விஜயநகர அரசு ஏற்பட்ட சில ஆண்டுகட்குப் பின் துங்க பத்திரைக்கு வடக்கே பாமினி அரசு ஒன்று ஏற்பட்டது. அதன் சுல்தான்கள் தமது புதிய அரசினைப் பலப்படுத்துவதில் அக்காலப் பாமினி சுல்தான் ஆண்டுக்கு ஒருமுறை விஜய நகரத்தின் மீது படையெடுத்து வந்தார். தேவராயர் ஒவ்வொரு முறையும் பெரும் பொருள் தந்து சமாதானம் செய்து கொண்டார். இரண்டாம் தேவராயர் இவ்வரசர் காலத்திலும் போர்கள் பல நடந்தன. இவர் முஸ்லிம்களைத் தம் படையில் வீரர்களாகச் சேர்த்தார்; எனினும் இவர் எதிர்பார்த்தபடி படைவன்மை பெறவில்லை. அதனால் இவர் சுல்தானுக்குக் கப்பம் கட்டிவர இசைந்தார். இவரது காலத்தில் இந்துக்கள் மானவுணர்ச்சி பெற்றுப் போரில் திறமை பெறலாயினர். இவர் காலத்தில் வெளிநாட்டு வாணிகம் சிறப்புற்றது. வெளிநாட்டுத் தூதுவர் இவரிடம் வந்து சென்றனர். அரசர் அவர்களை வரவேற்று உபசரித்துப் பாராட்டியதையும் விஜயநகரப் பெருநாட்டின் பல விவரங்களையும் அத்தூதர்கள் பாராட்டி எழுதியுள்ளனர். ஹரிஹரர்-புக்கர் முதல் அரசர் பதின்மூவர் 150 ஆண்டளவும் விஜயநகர அரசர்களாக இருந்தனர். அக்காலத்தில் தென் இந்தியா அந்நியர் படையெடுப்புக்கு ஆளாகாது ஒருவாறு அமைதி பெற்றிருந்தது. அதனால் நாட்டில் வடமொழி-தமிழ்-தெலுங்கு-கன்னட மொழிப் புலவர்கள் தோன்றிப் பல நூல்களைச் செய்தனர். சமய வளர்ச்சி மிகுதிப்பட்டது. பழைய கோவில்கள் பழுதுபார்க்கப் பட்டன. சிற்றரசர்கள் பேரரசர்க்கு அடங்கி ஒழுங்காக நடந்து வந்தனர். இரண்டாம் பரம்பரை கஜபதி படையெடுப்பு ஒரிஸ்ஸா மாகாணத்தை ஆண்டுவந்த அரசர்கள் கஜபதிகள் எனப்பட்டனர். அவர்கள் பாமினி சுல்தானையும் விஜயநகர அரசரையும் சமயம் வாய்த்தபோதெல்லாம் தாக்கி வந்தனர். ஏறக்குறையக் கி.பி. 1475-இல் பாமினி நாட்டிற் குழப்பம் உண்டானது. கஜபதி அரசர் அதனைப் பயன்படுத்திக் கொண்டு கீழ்க் கரையோர நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டே திருவண்ணாமலை சென்றார். அவரை எதிர்க்க அக்கால விஜய நகர அரசருக்கு வலிமை இல்லை. அதனால் உள்நாட்டிலும் சிற்றரசர் பலர் குழப்பங்களை விளைத்தனர். விஜயநகரப் பெருநாடு குழப்பத்திற்கு இடமாயிற்று. சாளுவ நரசிங்கர் திருப்பதியை அடுத்த சந்திரகிரியைச் சாளுவ மரபினரான நரசிங்கர் என்பவர் அரசாண்டு வந்தார். அவர் விஜயநகர அரசர்க்கு அடங்கிய சிற்றரசர். அவர் சிறந்த போர் வீரர்; எடுத்த காரியத்தைச் செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவர்; அஞ்சா நெஞ்சினர்; விஜயநகர அரசரது வலியற்ற நிலையையும் கஜபதியின் படையெடுப்பையும் உள்நாட்டுக் குழப்பத்தையும் கண்டு மனம் வருந்தினார்; பெருநாட்டைச் சிதறவிடாமல் காக்கவேண்டும் என்று உறுதி கொண்டார். அவரது தானைத் தலைவர் நரச நாயக்கர் என்பவர். அவர் நரசிங்கரைப் போலவோ சிறந்த போர்வீரர். நிரசிங்கர் அத்தானைத் தலைவருடன் கலந்து ஆலோசித்தார்; பெரும் படையைத் திரட்டினார்; கஜபதி வென்ற நாடுகளைக் கைவசப் படுத்தினார்; பின்னர் விஜயநகரத்தின் மீது படையெடுத்தார். அப்பொழுதிருந்த பயனற்ற அரசர் நாட்டை விட்டு ஓடி ஒளித்தார். நரசிங்கர் விஜயநகரப் பேரரசர் ஆனார். அவரும் அவர் மரபினரும் விஜயநகரத்தை ஆண்ட இரண்டாம் பரம்பரையினர் எனப்பட்டனர். நரசிங்கர் சிறந்த அரசியல் அறிஞர்; பெருவீரர்; உள்நாட்டுக் குழப்பத்தை அடக்கிய வீரர்; நாட்டு ஆட்சியை நன்முறையில் நடத்தினார்; கோவில்கட்கு மானியங்களை அளித்தார்; கற்றாரைப் பெருமைப் படுத்தினார்; குடிமக்கள் பாராட்டுக்கு உரியவர் ஆயினார். அவரது ஆற்றலையும் நல்லியல்புகளையும் கண்ட அயல்நாட்டுத் தூதுவர் விஜயநகரப் பெருநாட்டை ‘நரசிங்கர் நாடு’ என்று அழைப்பாராயினர். நரசிங்கர் பெருநாட்டைக் காத்து வந்ததுடன் வடக்கே இருந்த சுல்தான்களுடன் ஓயாது போரிட்டு வந்தார். நரசிங்கர் அரேபியாவிலிருந்து போர்க்குதிரைகளை வரவழைக்க விரும்பினார்; அவை வந்தது இறங்குதற்குரிய துறை முகங்களுக்காகத் துளுவ நாட்டைக் கைப்பற்றினார்; அத்துறை முகங்களில் தம் படைகளைப் பாதுகாப்புக்காக வைத்தார்; நல்ல குதிரைகளைக் கொண்டுவந்து விற்ற அரேபிய வாணிகர்க்குப் பெரும்பொருள் பரிசாகக் கொடுத்தார்; இங்ஙனம் அவர் சிறந்த குதிரைப் படைகளைத் தயாரித்தார்; புதிய படைவீரர்களைச் சேர்த்துச் சிறந்த முறையிற் பயிற்சி அளித்தார். நரசிங்கர் விஜயநகர அரசினைக் கைப்பற்றியிராவிடில், விஜயநகரப் பெருநாடு அழிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. நரசிங்கர்க்குப் பின் நரசிங்கர் இறக்குந்தறுவாயில் அவருக்கு ஆண்மக்கள் இருவர் இருந்தனர். அவர் அவர்களைத் தம் சேனைத்தலைவரான நரச நாயக்கரிடம் ஒப்புவித்து, ‘நாட்டைக் காத்து வருக; இச்சிறுவருள் அரசுத் திறமையுடையவன் என்று உமக்குப் புலப்படும் ஒருவனைத் தக்க வயதில் அரசனாக்குக’ என்று கூறி இறந்தார். நரச நாயக்கர் தம் தலைவர் ஆணை கடவாது நாட்டையும் அவர் மக்களையும் காத்து வந்தார். நரசிங்கருடைய மூத்தமகன் திம்ம பூபாலன் என்பவன். நரச நாய்க்கர் அவனை அரசனாக்கினார். ஆனால் நரச நாயக்கருக்குப் பகைவனான திம்மரசன் என்ற தானைத் தலைவன், ‘நரச நாயக்கர் நாட்டைத் தமதாக்க அரசனைக் கொன்றுவிட்டார்’ என்று குடிகள் நினைக்க வேண்டுமென்று கருதித் திம்ம பூபாலனைக் கொன்று விட்டான். அச்சூழ்ச்சியை அறிந்த நரச நாயக்கர் தாம் குற்றமற்றவர் என்பதை நாட்டுக்கு அறிவிக்க நரசிங்கருடைய இரண்டாம் மகனான இம்மடி நரசிம்மன் என்பவனை அரசனாக்கினார்; அவன் இளைஞன் ஆதலின் நாட்டின் முழுப் பொறுப்பையும் தாமே கவனித்து வந்தார். இம்மடி நரசிம்மன் திம்மரசனை மதித்து வந்தான். ‘திம்மரசனே உமது சகோதரன் கொலைக்குக் காரணமானவன். ஆதலின் அவனைத் தக்கவாறு தண்டிக்க வேண்டும்’ என்று நரச நாயக்கர் அரசனிடம் வற்புறுத்தினார். அரசன் அதனைப் பொருட்படுத்தவில்லை. அவன் நரச நாயக்கரது செல்வாக்கை உளமார வெறுத்தான்; அவரால் தாம் பட்டமடைந்ததை மறந்தான்; ‘திம்மரசன் நம் அண்ணனைக் கொன்றதால் அல்லவா நாம் பட்டமடைந்தோம்’ என்று எண்ணி அவனை நேசிக்கலானான்; அக் கொடியவனைச் சிறப்பிக்கலானான்; நரச நாயக்கரை அமைச்சர் பதவியிலிருந்து விலக்கி அப்பதவியில் திம்மரசனை நியமித்தான். நரச நாயக்கர் சிறந்த வீரர்; நாட்டைப் பாதுகாத்தவர். ஆதலால் விஜயநகர வீரர்கள் அவரிடம் மிக்க அன்புடன் நடந்து வந்தனர். அவர் அவ்வீரர்களைத் திரட்டித் திடீரென்று விஜய நகரத்தின் மீது படையெடுத்தார். அனுபவமற்ற இம்மடி நரசிம்மன் அஞ்சிச் சமாதானம் வேண்டினான். நரச நாயக்கர் விருப்பப்படி திம்மரசன் தலை அவரது கோபத்தை அடக்கக் கொண்டுவரப் பட்டது. அவர் செல்வாக்கு முன்னிலும் மிகுதியாக வேரூன்றிப் பரவலாயிற்று. அரசன் ‘பொம்மை அரசன்’ ஆனான். நரச நாயக்கர் சிறந்த அரசியல் அறிஞர். அவர் பொறுப்பற்ற நரசிம்மனைப் பெனுகொண்டாவில் இருந்து இன்பமாக வாழுமாறு யோசனை கூறினார்; ஆண்டுக்கு இருபதினாயிரம் பொன் அவன் செலவுக்கு அளித்தார். அரசன் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு பெனுகொண்டாவில் வாழலானான். அவனிடம் சூழ்ச்சிக்காரர் நெருங்காத படியும் அவனைக் கொலை புரியாதபடியும் பாதுகாக்க இருபதினாயிரம் வீரர் கொண்ட சேனை பெனுகொண்டாவில் வைக்கப் பட்டது. நரச நாயக்கரது நம்பிக்கைக்குப் பாத்திரரான திம்மப்ப நாயக்கர் என்பவர் அச்சேனைத் தலைவராக இருந்தார். மூன்றாம் பரம்பரை இம்மடி நரசிம்மன் தன் தமையனைக் கொன்ற திம்மரசனை அமைச்சனாக்கினவன்; தன்னை வளர்த்துப் பாதுகாத்தது அரசனாக்கிய வரை வேலையிலிருந்து நீக்கியவன்; சூழ்ச்சிகட்கு இடந்தந்தவன். இக் குற்றங்களையுடைய பொறுப்பற்ற இளைஞன் பெருநாட்டுக்கு அரசனாக இருப்பதில் பயன் என்ன? இதனை நரச நாயக்கர் எண்ணி எண்ணி மனம் வருந்தினார்; இறுதியில் அவனை முன்சொன்னவாறு பெனுகொண்டாவில் காலங்கழிக்க விட்டுத் தாமே நாட்டை ஆண்டுவந்தார். அவர் தமது இறுதிக் காலத்தில் தாமே விஜயநகர அரசராக விளக்கமுற்றார். அவருக்குப் பிறகு அவர் மரபினரே அரசர்களாக வந்தனர். ஆதலின் நரச நாயக்கரும் அவர் மரபினரும் விஜயநகரத்தை ஆண்ட மூன்றாம் பரம்பரையினர் எனப்பட்டனர். நரசிங்க சாளுவர் விஜயநகர அரசர் இழந்த இராயச் சூரைக் கைப்பற்ற முனைந்து தோற்றார்; நரச நாயக்கரும் அதனைக் கைப்பற்றிக் கூடவில்லை. சிற்றரசர்களை அடக்கிப் பெருநாட்டைக் காப்பதிலேயே அவர் காலம் கழிந்தது. அப்பெரு வீரர் சேர, சோழ, பாண்டியர்களை அடக்கினார்; கஜபதி அரசரை வென்றார்; வடக்கே இருந்த பாமினி சுல்தான்களது படையெடுப்பைத் தடுத்து நின்றார். சுருங்கக் கூறின், அவரால் பெருநாடு சிதறுண்டு போகமாற் காக்கப்பட்டது என்னலாம். வீர நரசிம்மர் இவர் நரச நாயக்கரது மூத்த புதல்வர். இவர் சில ஆண்டுகள் தம் தந்தையாரைப் போலவே அரசர் சார்பாக நின்று நாட்டை ஆண்டார்; பிறகு கி.பி. 1505-இல் இம்மடி நரசிம்மனைக் கொன்று தாமே அரசராக முடிசூடிக் கொண்டார். இச்செயல் பெருநாட்டில் பெருங் குழப்பத்தை உண்டாக்கியது. சிற்றரசர்கள் கலகம் விளைத்தனர். அவ்வமயம் யூசூப் ஆடில்கான் என்ற பாமினி சுல்தான் விஜயநகரப் பெருநாட்டின்மீது படையெடுத்தார். அவருடன் விஜயநகர அரசுக்கு அடங்கிய சிலர் சேர்ந்து கொண்டனர். எனினும் ‘ஆரவீடு’ சீமையை ஆண்ட சிற்றரசர் முதலியோர் வீர நரசிம்மருடன் உறுதியாக நின்று போரிட்டுச் சுல்தானை விரட்டியடித்தனர். வீரநரசிம்மர் பெரும்படையுடன் கன்னடம், துளு, கொங்கு நாடுகட்குச் சென்று, அங்கிருந்து கலகம் செய்துவந்த சிற்றரசர்களை அடக்கினார். வீர நரசிம்மர் சிறந்த போர் வீரர். வாட்போரினை வளர்த்தார்; குடிகளுள் இருவர் தமக்குள் உண்டான பூசலை வாட்போரைக் கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் என்று பிரசாரம் செய்வித்தார். இப்பிரசாரத்தால் நாட்டில் வாட்போர்ப் பயிற்சிக் கூடங்கள் தோன்றின. குடிகள் வாட்போர்ப் பயிற்சியில் ஊக்கம் காட்டினர். சிறந்த வாட்போர் வீரர்க்கு அரசர் அழகிய பெண்களைப் பரிசாக அளித்தனார். ‘அச்சம் என்பது குடிகளிடம் இருத்தலாகாது. வீர வாழ்க்கையே வேண்டும்’ என்று வீர நரசிம்மர் விரும்பினார். அவர் விருப்பம் ஓரளவு பயனளித்தது. இளைஞர்கள் வீரர்களாக விளங்கினர். அதனால் மூன்றுமுதல் நான்கு லக்ஷம் போர்வீரர் இராணுவத்திற் சேரலாயினர். வீர நரசிம்மர் குடிகளிடம் அன்புடையவர். அவர்கட்கு ஒரு குறைவும் ஏற்படலாகாது என்பது அவர் கருத்து. அவர் தம்மால் இயன்றவரை குடிகட்கு நம்மை செய்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தார். வீர நரசிம்மர் நரச நாயக்கரது முதல் மனைவியின் புத்திரர்; கிருஷ்ணதேவ ராயர் இரண்டாம் மனைவியான நாகலாதேவி குமாரர்; அச்சுத ராயரும் சீரங்கரும் மூன்றாம் மனைவியான ஓபாம்பாள் பிள்ளைகள். வீர நரசிம்மர்க்குப் பிறகு கி.பி. 1509-இல் கிருஷ்ணதேவராயர் அரியணை ஏறினார்1. அவர் முடிசூடிக் கொண்ட நாள் கிருஷ்ண ஜயந்தி நாளாகும். அடிக்குறிப்பு 1. 8-8-1509 5 கிருஷ்ணதேவராயர் போர்ச் செயல்கள் தென்னாட்டு நிலைமை கிருஷ்ணதேவராயர் அரியணையேறிய காலத்தில் தென்னாட்டு நிலைமை எங்ஙனம் இருந்தது? பெருநாட்டில் இருந்த சிற்றரசர்கள் பேரரசர்க்கு முழுவதும் அடங்கியவர்களாக இல்லை. தென் கன்னட நாட்டை ஆண்டுவந்த கங்கராஜன் என்ற சிற்றரசன் இராயர்க்கு அடங்கவில்லை. அவன் தலைநகர் உம்மத்தூர் என்பது. அவன் சீரங்கப்பட்டணம், சிவசமுத்திரம் என்னும் நகரங்களையும் கைப்பற்றி அங்குக் கோட்டைகளை அமைத்துப் பலப்படுத்தினான். வீர நரசிம்மர் காலத்திலேயே அவன் கலகம் விளைத்தான்; கிருஷ்ணதேவராயர் காலத்திலும் அடங்காப் பிடாரியாகத் திரிந்தான்; மைசூர்ப் பிரதேசம் முழுவதையும் தனக்கு உரிமையாக்கிக் கொள்ள எண்ணினான். ஒரிஸ்ஸா அரசனான பிரதாபருத்ரன் விஜயநகரப் பெருநாட்டின் வடகிழக்கு ஜில்லாக்களைக் கைப்பற்றியிருந்தான். அவன் இராயர்க்குக் கொடிய பகைவனாக விளங்கினான். வடக்கே பாமினி அரசு ஐந்து சிற்றரசுகளாகப் பிரிந்து சுல்தான்கள் ஐவர் ஆட்சியில் இருந்தது. அப்பிரிவுகள் பிரார், அஹ்மத்நகர் பிதர், கோல்கொண்டா, பிஜாப்பூர் என்பன. பிஜாப்பூர்ச் சுல்தான் அடிக்கடி விஜயநகரப் பெருநாட்டின் எல்லைப் புறத்தைத் தாக்கி வந்தார். போர்ச்சுகீசியர் இராயர்க்கு வேண்டியவராக இருந்ததும் சில சமயங்களில் துன்பம் இழைத்து வந்தனர். ஆதலின் கிருஷ்ணதேவராயர் பட்டம் ஏற்றது முதல் போர்த்துறையில் இறங்க வேண்டியவரானார். இராயரும் சுல்தானும் பிதர் சுல்தான் மதவெறி கொண்டவர். அவர் ஆண்டுக் கொருமுறை தம் நாட்டுப் பிரபுக்களை அழைத்துப் படை திரட்டி விஜயநகரப் பெருநாட்டின் மீது படையெடுத்து விக்கிரக வணக்கத்தாரை அழித்து அல்லது மாற்றி இஸ்லாத்தைப் பரப்புவதைக் கொள்கையாகக் கொண்டவர். அவர் ஏறத்தாழக் கி.பி. 1501 முதல் அவ்வாறு செய்துவந்தார். கிருஷ்ணதேவராயர் 1509-இல் அரசரானார் அல்லவா? அதற்கு அடுத்த ஆண்டில் குறிப்பிட்ட நாளில் பிதர்சுல்தான் முன்போலப் படை திரட்டி விஜயநகர நாட்டின்மீது படையெடுத்தார். இராயர் இளமை முதலே பிதர்சுல்தான் படையெடுப்பை நன்கறிந்தவர்; ஆதலால் அவர் பட்டம் ஏற்றதும். பெரும்படையைத் தயாரித்தார்; சுல்தான் தன் பிரபுக்களுடன் படையெடுத்து வருவதை அறிந்ததும், இராயர் தம் பெரும்படையுடன் சென்று சுல்தானைத் தீவானீ என்னும் இடத்தில் எதிர்த்துப் போரிட்டார். போர் கடுமையாக இருந்தது. சுல்தான் படை சிதறடிக்கப்பட்டது. சுல்தான் ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டார். அவர் விஜயநகர சேனைத் தலைவர் ஒருவரால் காக்கப்பட்டார். தனியே அகப்பட்ட அவரை விட்டு விடுமாறு இராயர் கட்டளை பிறந்தது. இங்ஙனம் பிதர்சுல்தான் தோல்வியுற்று உயிர் பிழைத்து ஓடலானார். இராயர் அவரது படையைப் பின்பற்றி சென்றார். இராயர் படையைத் தடுக்கப் பிஜப்பூர்ச் சுல்தான் முயன்றார். இரு திறத்தார்க்கும் கோவில் கொண்டா என்னும் இடத்தில் போர் நடந்தது. சுல்தான் போரில் தோற்று உயிர் துறந்தார். கோவில் கொண்டாவில் இருந்த கோட்டை இராயர் வசப்பட்டது. இராயர் மேற்சொன்ன வெற்றிகட்குப் பிறகு விஜயநகரத்தை அடைந்தார்; தம் படைகளைத் திருத்தி அமைத்தார்; குதிரைப் படைகளைப் பெருக்கினார்; சிறந்த வீரர்கட்கு உயர்ந்த பதவிகளை அளித்தார்; உயரிய முறையில் போர்ப் பயிற்சியை மிகுதிப் படுத்தினார். இராயரும் இராயச்சூரும் இராயச்சூர்ப் பிரதேசம் முதலில் இராயர்களைச் சேர்ந்த பகுதியாக இருந்தது. முதல் பரம்பரையினர் காலத்திலேயே பாமினி அரசர் அப்பகுதியைக் கைப்பற்றிக் கொண்டார். அது முதல் அதனைக் கைப்பற்ற நரசிங்கர், நரச நாயக்கர் முதலியோர் முயன்றும் பயன் பெறவில்லை. கிருஷ்ண தேவராயர் அதனைக் கைப்பற்ற வேண்டும் என்று துணிந்து சமயத்தை எதிர் பார்த்திருந்தார். கோவில் கொண்டாப் போருக்குப் பிறகு பிதர், பிஜாப்பூர் அரசர்கட்கும் பிரபுக்களுக்கும் போர் மூண்டது. அவர்கள் நாடுகள் குழப்பத்தில் ஆழ்ந்தன. பிஜாப்பூர் நாட்டைச் சேர்ந்த பெல்காம் முதலிய இடங்களிலிருந்து இந்துக்கள் கலக்கமுற்றுக் கிருஷ்ண தேவராயரைத் துணைக்கு வருமாறு அழைத்தனர். தமது நாட்பட்ட எண்ணத்தை முடித்துக்கொள்ள அதுவே தக்க சமயம் என்று எண்ணிய இராயர் பெரும்படையுடன் 1510-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்று இராயச்சூரைக் கைப்பற்றினார்; பிறகு குல்பர்க்காவைத் தாக்கினார்; அதனைக் கைப்பற்றி அதன் கோட்டைக் கதவுகள் மீது தமது அரச முத்திரையைப் பதித்தார்; சிறைப்பட்டிருந்த பிதர் நாட்டுச் சுல்தானை விடுவித்து அரசராக்கினார்; அதனால் ‘யவன ராச்சிய ஸ்தாபனா சாரியர்’ என்ற பட்டத்தைப் பெற்றார். உம்மத்தூர் அரசனை அடக்குதல் இராயர் அடுத்தபடி உள்நாட்டுக் குழப்பத்தை அடக்க முனைந்தார்; பல ஆண்டுகளாக அடங்காதிருந்த உம்மத்தூர் அரசனை அடக்க விரும்பினார். உம்மத்தூர் அரசனான கங்கராஜன் சீரங்கப்பட்டணம், சிவசமுத்திரம் என்னும் தீவுகளில் கோட்டைகளை அமைத்துக்கொண்டு இராயர்க்கு அடங்காது திரிந்தான். அவன் பெனுகொண்டாவையும் கைப்பற்றிக் கொண்டான். அதனாற் சீற்றங்கொண்ட இராயர் பெரும்படையை அனுப்பினார். சில வாரங்கட்குப் பிறகு பெனுகொண்டா வீழ்ச்சியுற்றது. கங்கராஜன் சிவசமுத்திரக் கோட்டைக்குள் போர்க் கருவிகளைச் சேமித்து வைத்திருந்தான்; அதனையே தன் தலை நகராகவும் கொண்டிருந்தான். இராயர் தம்படையுடன் அங்குச் சென்றார். ஓராண்டுக்கு மேலாக முற்றுகை நீடித்தது. இராயர் வேறு சிற்றரசர் சிலருடைய உதவியைப் பெற்றுச் சிவசமுத்திரக் கோட்டையைக் கைப்பற்றினார்; பின்னர்ச் சீரங்கப் பட்டணத்தையும் வசப்படுத்தினார்; அந்தப் பகுதியைத் தனி மாகாண மாக்கினார். சீரங்கப்பட்டணத்தை அதன் தலை நகரமாக்கினார்; சாளுவ கோவிந்தராசர் என்பவரைக் கவர்னராக நியமித்தார். உதயகிரி முற்றுகை கலிங்கப்போர் சாளுவ நரசிங்கரது ஆட்சி இறுதியில் கஜபதி கைப்பற்றிய உதயகிரி, கொண்டவீடு முதலிய இடங்கள் கிருஷ்ணதேவர் காலம் வரை விஜயநகர அரசர்களால் மீட்கப்படாமல் இருந்தன. கிருஷ்ண தேவராயர் அவற்றை மீட்க மனம்கொண்டார். அவர் கி.பி. 1513-இல் உதயகிரிக் கோட்டையை முற்றுகையிட்டார். உதய கிரிக் கோட்டை எளிதில் கைப்பற்றப்படாதது ஆதலின் முற்றுகை ஒன்றரையாண்டு நீடித்தது. இராயர் மலைப் பாதைகளை அகலமாக்கினார்; பாறைகளை உடைத்து வழிகளை உண்டாக்கினார்; கோட்டையை நெருங்கி வளைத்துக் கொண்டார். அப்பொழுது கோட்டைக்குள் இருந்தவர் கஜபதியின் சிறிய தகப்பனாராவர். அவர் கோட்டையை விட்டு வெளிவரவில்லை. உதயகிரி ஒன்றரை வருடகாலமாக முற்றுகையிடப்பட்டு இருப்பதைக் கேள்வியுற்ற கஜபதி பெரும்படையுடன் உதயகிரியை நோக்கி வந்தான். அதனை அறிந்த இராயர் தம் சேனையின் பெரும் பகுதியை அழைத்துக் கொண்டு எதிர் சென்று கஜபதியைத் தாக்கினார். போர் கடுமையாக நடைபெற்றது. இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடியது. இறுதியில் கஜபதி அரசன் தோற்றோடினான். இராயர் மீட்டும் உதயகிரியை அடைந்தார்; உள்ளேயுள்ள தலைவன் தலைமீது தம் பாதத்தை வைக்கும் வரை தாம் நீராடி உணவு கொள்வதில்லை என்று சபதம் செய்தார். இதனை அறிந்த கோட்டைத் தலைவர் தமது முடியை அனுப்பு அதன்மீது இராயர் பாதத்தை வைத்துத் தமது உயிரைக் காக்குமாறு வேண்டினார். இராயர் அங்ஙனமே செய்து கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டார்; கொண்டமரசையன் என்பனைக் கவர்னராக நியமித்தார். பின்னர் இராயர் தம் மனைவியாரான திருமல தேவி, சின்னாதேவி என்பவருடன் திருவேங்கடத்தை அடைந்தார்; நின்ற கோலத்தில் அங்கு உள்ள நீலவண்ண நெடியோனை - தம் குல தெய்வமான வேங்கடப் பெருமானை மனமார வாழ்த்தி வழிபட்டார்; விலையுயர்ந்த ஆடையணிகளை வழங்கி மகிழ்ந்தார்; பிறகு விஜயநகரத்தை அடைந்தார்; தம் உதய கிரியிலிருந்து கொணர்ந்த பாலகிருஷ்ண விக்கிரகத்திற்குப் புதிய கோவில் கட்டி விழாச் செய்தார். வியாசராயர் என்ற மஹான் அப்புதிய கடவுளுக்குப் பல தோத்திரப்பாக்களை இயற்றினார். உதயகிரி கைப்பற்றப் பட்டதை அறிந்த விஜயநகர மக்கள் அவ்வெற்றியைப் பல நாள் கொண்டாடினார்கள். ‘கொண்டவீடு’ முற்றுகை இராயரது படை உதயகிரியைக் கைப்பற்றிய பிறகு கொண்டை வீடு நோக்கிச் சென்றது. கடல் போன்ற இராயர் சேனையைக் கண்ட கொண்ட வீடு சீமையைச் சேர்ந்த கஜபதியின் படைகள் கலக்கங் கொண்டு ஓடின. குடிமக்கள் தங்கள் பொருள்களைப் போட்டுக் காடுகட்கு ஓடி ஒளித்தனர்; பல கோட்டைகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பிடிபட்டன. இறுதியில் இராயர்படை ‘கொண்டைவீடு’ கோட்டையை முற்றுகை யிட்டது. ‘கொண்டைவீடு’ கோட்டை கிருஷ்ணயாற்றுக்குத் தெற்கே உள்ளது; கஜபதியின் தென் நாட்டின் தலைநகர் என்று அதனைக் கூறலாம். கஜபதி அரசனுக்கு அடங்கிய தலைவர் பலர் தம் சேனைகளுடன் அக்கோட்டைக்குள் இருந்தனர். அவர்கள் இராயர் தாக்குதலை எதிர் நோக்கித் தயாராக இருந்தனர். ஆதலின் முற்றுகை பல நாள் நீடித்தது. இராயரது அமைச்சரான சாளுவ திம்மர் என்ற அப்பாஜி முற்றுகையை வெற்றிபெற நடத்தினார். கோட்டைக்குள் இருந்த உணவுப் பொருள்கள் காலியாயின; வெளியிலிருந்து வர வழியுமில்லை. எனவே, உள்ளே இருந்தவருட் பலர் பட்டினி கிடந்து முடிவில் மடிந்தனர். இராயர் கோட்டை மதிற் சுவர்மீது நின்று போராடுபவருடன் தம் வீரர் சமமாக நின்ற போராட நகரத்தக்க மரமேடைகளை அமைத்துக் கொடுத்தார்; தாம் உடனிருந்து வீரர்களை ஊக்கினார். இறுதியில் கொண்டவீடு இராயர் கைப்பட்டது. கஜபதி அரசன் மகனும் வேறு சிற்றரசர் சிலரும் சிறைப்பட்டனர்; அவர்கள் விஜய நகரத்திற்குக் கொண்டு செல்லப் பட்டனர். இராயர் ‘கொண்டவீடு’ சீமையைத் தம் அமைச்சரான அப்பாஜியின் ஆட்சியில் விட்டார்; கோட்டையில் தம் படையை நிறுத்தி ‘ஆரவீடு’ அரச குடும்பத்தினரான திம்மராஜு என்பவரைச் சேனைத்தலைவராக்கினார். பின்னர்க் கிருஷ்ணதேவராயர் தம் மனைவியருடன் அமராவதி நகரை அடைந்தார்; அமரேசுவரரை வழிபட்டுத் திருப்பருப்பதத்தை (ஸ்ரீ சைலம்) அடைந்தார்; அங்கு எழுந்தருளியுள்ள இறைவரை வழிபட்டுத் தம் கோநகரத்தை அடைந்தார். அவரது படை கொண்டபல்லியை அடைந்தது. கொண்டபல்லி முற்றுகை கொண்டபல்லி என்பது பெஜவாடாவிற்கு வடமேற்கில் சில கல் தொலைவில் உள்ளது. அங்கு வன்மை மிகுந்த கோட்டை இருந்தது. அதுவும் கஜபதியின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அக்கோட்டை மதில்கள் மிக்க உயரமானவை; கோட்டையில் வன்மை மிகுந்த படைகள் வைக்கப் பட்டிருந்தன. கிருஷ்ண தேவராயருடைய படைகள் அக்கோட்டையை வளைத்துக் கொண்டன. இராயர் தலைநகரத்திற்குச் சென்று அரசியல் அலுவல்களைக் கவனித்துவிட்டுக் கொண்டபல்லியை நோக்கிப் புறப்பட்டார். வழியில் அஹோபளம் என்னும் வைணவத் தலத்தைத் தரிசித்துப் பெஜவாடாவை அடைந்தார்; அதனைப் போர்த்தளமாக வைத்துக் கொண்டு கொண்டபல்லியை அடைந்தார்; முற்றுகையைப் பலப்படுத்தினார். இதனை அறிந்த பதினாயிரம் குதிரைகளுடனும் ஐந்து லக்ஷம் காலாட்படை யுடனும் தெற்கு நோக்கி வந்தான். இராயர் தம் படையில் பெரும்பகுதியை அழைத்துக் கொண்டு கஜபதியை எதிர்க்கச் சென்றார். இரண்டு பெரும் படைகளும் இரண்டு கடல்களை ஒத்தன. கரிவீரர் கரிவீரருடன் போரிட்டனர்; பரிவீரர் பரிவீரருடன் போராடினர்; தரைப் படையினர் தரைப்படையினருடன் வாட்போர்-விற்போர்-ஈட்டிப்போர் புரிந்தனர். போர்க்களம் செங்களமாகக் காட்சி அளித்தது. வெட்டுண்ட யானைகள் உடலங்கள் இரத்த ஆற்றுக்கு அமைந்த கரைகள் போலக் காணப்பட்டன. வீரர்கள் யானை உடலங்கள் மீது நின்று போரிட்டனர். போர் கடுமையாகக் காணப்பட்டது. இராயர் வாளேந்திப் போரிட்டார். பகைவர் சேனையாகிய கடலில் இராயர் என்னும் மரக்கலம் தடையின்றிச் சென்று மீண்டது. முடிவில் பகைவர் சிதறிக் கலிங்கம் நோக்கி ஓடினர். இராயர் பெருவெற்றியுடன் கொண்டபல்லிக்குத் திரும்பினார்; வெற்றியால் மனக்களிப்புற்ற படைவீரர் முற்றுகையை நெருக்கினர். இரண்டு மாதங்கட்குப் பிறகு கோட்டை இராயர் வசப்பட்டது. கோட்டைத் தலைவனும் பிறரும் சிறைப்பட்டனர். கொண்டபல்லி வெற்றிக்குப் பிறகு பல கோட்டைகள் பிடிபட்டன. இராயர் கோதாவரிக்கு வடக்கேயுள்ள சிம்மாத்ரியை நோக்கிப் புறப்பட்டார். அப்பொழுது அப்பாஜியும் பிற தானைத் தலைவரும், “நாம் கஜபதி நாட்டிற்குள் போகும் பொழுது வழியில் மேற்குப் பக்கத்திலிருந்து முஸ்லிம்களின் தாக்குதல் ஏற்படின் துன்பம் மிகுதிப்படும். அதே சமயத்தில் கஜபதியும் வடக்கிலிருந்து நம்மைத் தாக்கினால், நாம் தோல்வி அடைய வேண்டியவராவோம். ஆதலின் திரும்பி விடுதலே நல்லது” என்றனர். இராயர் அதற்கு இசையவில்லை; “கஜபதியின் செருக்கை அடக்குதலே நல்லது. அவன் நமது நாட்டின் பல பகுதிகளை நீண்டகாலமாகப் பிடித்து ஆளவில்லையா? அந்த அவமானத்தைப் போக அவன் நாட்டைத் தாக்கி அவனைப் பணியவையாவிடில் நமது பெருமை என்னாம்?” என்றனர். அனைவரும் ‘சரி’ என்று ஒப்பு கொண்டு வடக்கு நோக்கிப் புறப்பட்டனர். வழியில் பொட்னூர்க்குத் தெற்கே மலைக் கணவாயைத் தாண்டிச் செல்ல முயன்றபொழுது முஸ்லிம் தளகர்த்தர் ஒருவர் அறுபதினாயிரம் குதிரை வீரருடன் தாக்கினர். எதிர்பாராத இத்தாக்குதலால் இராயர்படை நிலைகுலைந்தது. ஆயினும் இராயரது பண்பட்ட குதிரைப் படைவீரர்கள் கணவாயின் இரண்டு பகுதிகளிலும் மலைமீதேறிப் பகைவர் படையைத் தாக்கத் தொடங்கினர். அதனால் பகைவர் இருபுறத் தாக்குதலுக்கு உட்பட்டு நிலைகலங்கி ஓடினர். இராயர் அக்கணவாயைக் காக்க முப்பதினாயிரம் வீரரை விட்டு, சிம்மாத்ரியை நோக்கிச் சென்றனர். வழியில் இருந்த ஊர்கள் பாழாயின. சிம்மாத்ரியில் இராயரது வெற்றித் தூண் நடப்பட்டது. இது கலிங்கநாட்டுத் தலைநகரம்; ‘கட்டக்’ அல்லது ‘கட்டாக்’ என இன்று வழங்கப்படுகிறது. இதனைத் தாக்க வேண்டும் என்று இராயர் விரும்பினார்; அதனால் இரைவேட்ட பெரும்புலிபோல் இகல்மேற் சென்றார். கடல் கொந்தளித்து வந்ததுபோல அவரது சேனை கலிங்கநாட்டிற்குட் புகுந்தது. பிருதாபருத்ர கஜபதி தனக்கடங்கிய பதினான்கு சிற்றரசர்களின் உதவியை நாடினான். அவர்கள் தத்தம் சேனைகளுடன் வந்தனர். அனைவரும் இராயர் படையை எதிர்க்கத் தக்க போர் முயற்சிகளை மேற்கொண்டனர். இதனை அறிந்த இராயர் அப்பாஜியுடன் கலந்து ஆலோசித்தார். அப்பாஜி சிறந்த மதிநுட்பம் வாய்ந்தவர் அல்லவா? அவர் பதினாறு பெட்டிகளில் விலையுயர்ந்த ஆடையா- பரணங்களை நிரப்பினார்; ஒவ்வொரு பெட்டிக்கு ஓர் இரகசியக் கடிதம் வீதம் எழுதினார்; பதினான்கு ஆட்கள் தலைமீது அப்பெட்டிகள் வைத்தார்; கடிதங்களைத் தந்தார்; “பெட்டியையும் கடிதத்தையும் கஜபதி பார்க்கும்படி அவருடைய சிற்றரசர்கள் இருக்கும் கூடாரங்கட்குக் கொண்டு செல்லுங்கள்” என்ற கட்டளை யிட்டார். அவர் ஒவ்வொரு கடிதத்திலும் “நாம் முன் கஜபதிக்கு மாறாகச் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இஃது அனுப்பப் பட்டுள்ளது. நாம் தாக்குகையில் கஜபதியைத் தனியே விட்டு விடுக” என்று எழுதியிருந்தார். அப்பாஜியின் சூழ்ச்சியே தவிரக் கடிதச் செய்தி உண்மையன்று. பதினாறு பெட்டிகளையும் கடிதங்களையும் வழிமறித்துப் பார்வையிட்ட கஜபதி, கடிதச் செய்தியை உண்மை என்று நம்பித் தம் சிற்றரசரை நம்பாது, தம் அரண்மனையை விட்டுத் தப்பி ஓடி ஒளிந்து கொண்டான். சூழ்ச்சியை அறியாத சிற்றரசர், “கஜபதியே ஓடிவிட்டார் எனின், நாம் என் செய்வது?” என்று எண்ணித் தத்தம் கோட்டைகட்குத் திரும்பினர். அதனால் போரின்றிக் கடகம் வீழ்ச்சியுற்றது. ஆயின், இராயர் பகைவர்பால் மிக்க பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார். கஜபதி அரசன் வேறு வழியின்றி இராயருடன் சமாதானம் செய்து கொண்டான். அவ்வரசன் தன் மகளான ஜகன்மோகினி என்ற துக்காதேவி என்பவளை இராயருக்கு மணம் செய்து கொடுத்தான்; கிருஷ்ணையாற்றுக்கு வடக்கே இராயர் வென்ற கலிங்க நாட்டுப் பகுதியைத் திரும்பப் பெற்றுக் கொண்டான். இராயச்சூர்ப் போர் கிருஷ்ணதேவராயர் மேற்சொன்ன போர்களில் ஈடுபட்டிருந்த சமயத்தில் பிஜாப்பூர்ச் சுல்தான் இராயர் பிடித்திருந்த இராயச்சூரைத் தம் வசப்படுத்திக் கொண்டார். மேற்சொன்ன கலிங்கப் போரை முடித்துக் கொண்ட இராயர் 1520-இல் இராயச்சூரைத் தாக்கினார்; பிஜாப்பூர்ச் சுல்தானைப் போரில் முறியடித்து, இராயச்சூரைக் கைப்பற்றினார். குல்பர்க்கா மீது படையெடுப்பு இராயருடன் சமாதானம் வேண்டிய பிஜாப்பூர்ச் சுல்தான் 1523-இல் தூதுவர் ஒருவரை அனுப்பினார்; குறித்த நாளில் எல்லைப்புறத்தில் இராயரும் சுல்தானும் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயின், குறித்த இடத்தில் இராயர் ஒருவரே சென்றிருந்தார்; சுல்தான் வரவில்லை. அதனாற் சீற்றங்கொண்ட இராயர் பிஜாப்பூர் நாட்டின்மீது படையெடுத்தார்; கிருஷ்ணையாற்றைத் தாண்டிப் பல கோட்டைகளைக் கைப்பற்றினார்; பல உயிர்கள் தீக்கிரையாயின. வன்மை மிகுந்த குல்பர்க்கா கோட்டையும் பிடிபட்டது. அக்கோட்டைக்குள் பழைய பாமினி அரச மரபைச் சேர்ந்த அரசகுமாரர் மூவர் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இராயர் அவர்களை விடுதலை செய்து சிறப்பு முறையில் நடத்தினார்; அவருள் மூத்தவரை அரசராக்கி இளைஞர் இருவரையும் விஜயநகரம் கொண்டு சென்றார்; அவர்களை மிக்க மரியாதையுடன் நடத்திவந்தார். பெருவீரர் இங்ஙனம் கிருஷ்ணதேவராயர் பட்டமேற்ற நாள்முதல் 1523-வரை பல போர்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்; தம் முன்னோர்களால் அடக்க முடியாதிருந்த கஜபதியை அடக்கி அடிபணிய வைத்தார்; சுல்தான்களைப் பல போர்களில் வென்று அடக்கினார்; தம் பெருநாட்டைப் பலம் மிகுந்ததாகச் செய்தார். தமது படைப் பெருக்கத்தால் எதிரிகளை நடுங்க வைத்தார். போர் வீரர்களை நாள்தோறும் சந்தித்துப் பேசினார்; காயம் பட்டவர்கட்கு உடனுக்குடன் உதவியளித்து வந்தார்; போரில் இறந்த வீரர் குடும்பங்கட்கு அரசாங்க உதவி அளித்தார். போரில் தம் திறமையைப் புலப்படுத்தியவரைக் கனப்படுத்தினார். அவர் ஒவ்வொரு போரிலும் முன்னணியில் நின்று வீரரை ஊக்கப் படுத்தினார். அவரது வீர முகத்தைப் பார்த்தும் வீரவுரைகளைக் கேட்டும் விஜயநகரப் படைவீரர் ஊக்கம் கொண்டு போரிட்டனர். அவரது அன்புக்கு வீரர்கள் அடிமையாயினர்; தம் உயிரைத் துரும்பென மதித்தனர்; சென்ற இடமெல்லாம் வெற்றி பெற்றனர். அப்பாஜி இராயருக்கேற்ற அமைச்சர். அவர் சந்திர குப்தனுக்கு அமைந்த சாணக்கியரைப் போலச் சிறந்த அரசியல் அறிஞர்; நுட்ப அறிவினர்; இராயரைத் தம் உயிரெனக் கருதியவர். இராயரும் அவரைத் தம் தந்தையாராகவும் குருவாகவும் கருதிப் பாராட்டிவந்தார்; அவர் சொற்படியே நடந்து வந்தார். அரசரும் அமைச்சரும் ஒத்த மனத்தினராய் இருந்து வந்தமையே இராயரது வெற்றிக்குச் சிறந்த காரணம் என்னலாம். 6. கிருஷ்ணதேவ ராயர் இராயர் வாழ்ந்த காலம் தென் இந்திய வரலாற்றில் கிருஷ்ணதேவ ராயர் வாழ்ந்த காலம் பொன் எழுத்துக்களில் பொறிக்கத்தக்க காலம் ஆகும். ஓவியம், சிற்பம், இலக்கியம், இசை, நடனம், நாடகம், கட்டடக் கலை முதலிய பலவகைக் கலைகள் வளர்ச்சி பெற்றன. இராயர் அசோகர், சமுத்திரகுப்தர், ஹர்ஷர், இராஜராஜ சோழர் போன்ற பேரரசர்களுடன் ஒப்பிடத் தக்கவர். அவர் பெயரும் அவருடைய அமைச்சரான திம்மரசு என்ற அப்பாஜியின் பெயரும் அறியாத தென் இந்தியர் இல்லை என்னலாம். இராயரது முழு வரலாற்றை அறியத்தக்க சான்றுகள் இல்லை; ஆயின் அவரைப் பற்றிய, அவரை நேரிற்கண்ட அயல் நாட்டவர் எழுதி வைத்த குறிப்புகளைக் கொண்டும் அவர் செய்துள்ள நூல்களைக் கொண்டும் ‘இராய வாசகம்’ முதலிய தெலுங்கு நூல்களைக் கொண்டும் கல் வெட்டுக்களைக் கொண்டும் அவர் வரலாற்றை ஒருவாறு கூறலாம். பெருநாடு இராயர் காலத்தில் விஜயநகரப் பெருநாடு துங்க பத்திரையாறு முதல் குமரி முனை வரை பரவி இருந்தது; வடகிழக்கில் கோதாவரிக்கு அப்பாலும் பரவி இருந்தது. இப்பெருநாடு பல இராச்சியங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்ததது. ஒவ்வொன்றையும் அரச மரபினர் அல்லது சேனைத்தலைவர் ஆகிய பிரபுக்கள் அரசப் பிரதிநிதிகளாக இருந்து அரசாண்டனர். பேரரசரைத் தமிழ் மக்கள் இராயர் என்றும், தெலுங்கர் இராயலு என்றும், கன்னடர் இராயரு என்றும் அழைத்தனர். கிருஷ்ணதேவராயர் கிருஷ்ணதேவராயர் வாழ்ந்த அரண்மனை ‘மலையகூடம்’ என்று வழங்கியது. அவர் கொலுவிருந்த அரண்மனை ‘புவன விஜயம்’ எனப் பெயர் பெற்றது. அவர் நடுத்தர உயரம் உடையவர்; சிவப்பும் வெண்மையும் கலந்த அழகிய நிறம் உடையவர்; நடுத்தர உடல் அமைப்புக் கொண்டவர்; சிறிதளவு அம்மைத் தழும்புடைய வசீகரிக்கத்தக்க முகத்தை உடையவர். அவர் எப்பொழுதும் மலர்ந்த முகத்தோற்றம் உடையவர்; போர்ச்சுகீசியர், அராபியர், பாரசீகர், சீனர் முதலிய அயல் நாட்டினரையும் மலர் முகத்துடன் வரவேற்று அளவளாவும் இயல்புடையவர்; அவரவர் நாட்டுப் பழக்க வழக்கங்கள், நாகரிகம், கல்விநிலை, அரசியல் முதலியவற்றைக் கேட்டறியும் இயல்பு வாய்ந்தவர், அப்பேரரசர் அறநெறியிலிருந்து வழுவாதவர். அவர் இருபது வயதுடைய வாலிபராக இருந்தபோது பட்டம் பெற்றார். எனினும் பெருநாட்டைத் திறம்பட ஆண்டு வந்தமை ஒன்றே அவரது அரசியல் அறிவை நன்கு உணர்த்தப் போதுமானது. இராயர் மெல்லிய வெண்ணிற உடைகளையே உடுத்துவது வழக்கம். அந்த வெள்ளையாடைகள் தங்கரோசா இதழ்கள் வைத்துத் தைக்கப் பெற்றவை. அவர் கழுத்தில் வைர மாலை விளங்கியது. தலையில் அழகிய பீலியணிந்த பாகை இருந்தது. நுனியில் கூர்மைபெற்ற பட்டு ஜோடுகளை அவர் அணிந்திருந்தார். ‘அவர் உடற்கட்டிலும் உடை அழகிலும் பேச்சுத் திறமையிலும் புலமையிலும் அரசர்க்கு உரிய பிற இலக்கணங்களிலும் அணுவளவும் தவறாது இருந்தார்’ என்று அவரை நேரிற் காணும் பேறு பெற்ற அயல் நாட்டினர் பாராட்டி வரைந்துள்ளனர். இராயர் உடற்பயிற்சி இராயர் பலவகை உடற்பயிற்சிகளை நாள்தோறும் செய்து வந்தார். குதிரையேற்றம், மற்போர் இவற்றில் அவருக்கு விருப்பம் மிகுதி. அவர் குதிரை ஏற்றத்தில் நகுலனை ஒத்திருந்தார் என்று பாரிஜாதாபஹரணம் என்னும் தெலுங்கு நூல் கூறுகின்றது. அவர் உடற்பயிற்சிகளால் தமது உடலை வலிய நிலையில் வைத்திருந்தார். அவர் வைகறையில் எழுந்து தமது உடலில் எண்ணெய் பூசிக் கொண்டு, அது காயும் வரையில் குதிரைச் சவாரி செய்வது வழக்கம்; சில நாட்களில் குதிரைச் சவாரிக்குப் பதிலாகக் கனமுள்ள உடற்பயிற்சிப் பொருள்களைக் கைகளில் தூக்கிக் கொண்டு பயிற்சி புரிவார்; அதன் பின்னர்த் தம் அரசாங்க மல்லர் ஒருவருடன் மற்போர் செய்வார். இப்பயிற்சிகள் அனைத்தும் பொழுது விடிவதற்குள் நடைபெறும். பின்னர் இராயர் அரண்மனைக் குளத்திற் குதித்து நன்றாக நீந்திக் களிப்பார். இத்தகைய அரசரை வரலாற்றில் காண்பது அருமை அல்லவா? அடங்காச் சீற்றம் இராயர் சில சமயங்களில் திடீரெனச் சினம் கொள்வார். அப்பொழுது அவருடைய கண்கள் செந்நிறம் அடையும்; மீசை துடிக்கும்; புருவங்கள் நெற்றி முற்றச் செல்லும். அவர் பற்களை நறநறவென்று கடிப்பார். தமது அரசியல் உத்தியோகஸ்தர்கள் தவறு செய்தனர் என்பதைக் கேட்கும் பொழுதும் தமது ஆணை நிறை வேற்றப்படவில்லை என்பதை அறியும் பொழுதும் அவர் இங்ஙனம் அடங்காச் சீற்றம் கொள்ளுதல் இயல்பு. ஒருமுறை அப்பாஜியின் அரசியலில் சில குறைகள் நேர்ந்து விட்டன என்பதை அறிந்ததும் இராயர் அடங்காச் சினம் கொண்டார். அப்பாஜியோ தம்மை வளர்த்த பெரியவர்; தம் நன்மையில் நாட்டம் உடையவர். ஆதலின் அவரைத் தண்டிக்க மனம் இல்லாமல், இராயர் சீற்றம் தணியாதவராய் நகருக்கு வடக்கே இருந்த கோவில் ஒன்றில் சென்று தங்கிவிட்டார். அப்பாஜி இராயரிடம் சென்று பக்குவமாக அவர் சீற்றத்தைப் போக்கி அரண்மனைக்கு அழைத்து வந்தார். தோற்றாரிடம் பெருந்தன்மை பகைவரிடத்தும் போரில் தோற்றவரிடத்தும் பெருந்தன்மை காட்டுதல் இராயரிடம் காணப்பட்ட தனிப்பண்பாகும். பிரதாபருத்திர கஜபதி என்பவன் கலிங்க நாட்டு அரசருள் ஒருவன். இராயர் அவன்மீது படையெடுத்துச் சென்று அவனைப் போரில் முறியடித்தார்; போரில் தோற்ற அவனைக் கௌரவமாக நடத்தினார். இராயர் உம்மத்தூர் முதலிய மேற்குப் பகுதி ஊர்களைக் கைப்பற்றியவுடன் அப்பகுதியில் இருந்த சிற்றரசரை மலர் முகத்துடன் வரவேற்று அன்பு கனியப் பேசினார்; அவர்களை முன்போலச் சிற்றரசராகவே இருக்குமாறு செய்தார். இராயர் பிஜாப்பூர்ச் சுல்தானிட மிருந்து இராயச்சூரைக் கைப்பற்றிய பொழுது சுல்தானுடைய படைவீரர் சிதறி ஓடினர். அங்ஙனம் ஓடிய பகைவரை இராயர் படைவீரர் துரத்தித் துரத்திக் கொன்றனர். அப்படுகொலையைக் கண்ட இராயர் கண்ணீர் வடித்தார்; தம் படைகளைத் திரும்பி விடுமாறு பணித்தார்; ‘பகைவர் படைகளை முற்றும் நாசமாக்குதலே நன்று’ என்று சேனைத் தலைவர்கள் கூறியதற்கு இராயர் இசையவில்லை. நாம் இந் நிகழ்ச்சிகளிலிருந்து இராயரது இரக்கவுள்ளத்தையும் போரில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் சீரிய பண்பையும் நன்கு அறியலாம் அல்லவா? இராயர் குடும்பம் இராயர்க்கு மனைவிமார் பன்னிருவர் இருந்தனர். அவருள் மூவர் சிறந்திருந்தனராம். அவர்தம் பெயர்கள் திருமலாம்பாள், அன்னபூரணி, சின்னாதேவி என்பன. அவருள் திருமாலாம்பாள் பட்டத்தரசி. திருப்பதியில் உள்ள இராயர் சிலைக்கு இருபுறங்களில் அரசியர் இருவர் சிலைகள் இருக்கின்றன. அவை திருமலாம்பாள், சின்னாதேவி என்பவரைக் குறிப்பனவாகும். கிருஷ்ணதேவராயரை மணந்துகொண்ட கஜபதி மகளான ஜகன்மோகினி அல்லது துக்காதேவி என்பவள் மணம் செய்து கொண்ட நாள் முதலே இராயரது அன்புக்கு உரிய முறையில் நடந்துகொள்ளவில்லை என்பது தெரிகிறது. ‘இராயர் அரச மரபினர் அல்லர் - விஜயநகர அரசினைக் கவர்ந்து கொண்ட சேனைத் தலைவருடை புதல்வர். சிறந்த அரச மரபில் வந்த நாம் அவரை மணந்துகொள்ள நேர்ந்தமைக்கு நம் தந்தையார் தோல்வியே காரணமாகும்’ என்ற எண்ணம் இவள் உள்ளத்தில் ஊன்றியிருந்தது. இராயரும், ‘கஜபதி நமக்கு முன்னர்க் கொடிய பகைவனாக இருந்தவன். அவன் தன் மகளை நமக்குக் கொடுத்ததினாலேயே நம் நம்பிக்கைக்கு முற்றும் உரியவனாகான். அவன் சமயம் பார்த்துத் தன் மகளைக் கொண்டு நம்மைக் கொல்லக்கூடும்’ என்று ஐயுற்றார். இராயர் எதிர்பார்த்தபடியே, ‘அவ்வரசமகள் இராயரைப் பள்ளியறையிற் சந்தித்து முதல்நாள் இரவில் (தாயின் சொற்படி) அவரைக் கொல்லத் துணிந்தாள். அச்சூழ்ச்சியை முன்னர் அறிந்த அப்பாஜியின் தந்திரத்தால் இராயர் உயிர் தப்பினார்’ என்று செவிவழிச் செய்தி செப்புகிறது. இன்ன பிற காரணங்களால் அவள் வாழ்க்கையை வெறுத்தாள்; துறவுபூண்டாள்; சுடப்பை ஜில்லாவில் உள்ள கம்பம் என்னும் இடத்தில் ஓர் ஏரியை உண்டாக்கினாள்; அதன் கரையில் ஓர் ஆசிரமத்தை அமைத்து அதனில் வாழ்ந்துவந்தாள். அவள் சிறந்த வடமொழிப் புலமை உடையவள்; தன் கணவர் தன்னைத் துறந்தமைக்காக வருந்தி, வடமொழியில் ஐந்து செய்யுட்களைப் பாடினாள். அது ‘துக்கா-பஞ்சகம்’ எனப்படும். இராயருக்குத் திருமலைராயன் என்ற மகன் இருந்தான். ஆனால் அவன் இளமையிலேயே இறந்துவிட்டதால், இராயருக்கு இளவலான அச்சுதராயர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறகு பட்டம் பெற்றார். இராயருக்குப் பெண்மக்கள் இருவர் இருந்தனர். அவர்கள் திருமலாம்பாள், வெங்கலாம்பாள் என்பவராவர். அவர்கள் அரசமரபினரான ‘ஆரவீடு’ இராமராயர் என்பவரையும் அவர் தம்பியார் திருமலைராயர் என்பவரையும் மணம் செய்து கொண்டனர். ‘இராயருக்குப் புலமை மிக்க மற்றொரு மகளும் இருந்தாள். அவள் பெயர் மோஹனாங்கி என்பது. அவள் ‘மாரீசீ பரிணயம்’ என்னும் நூலை எழுதினாள் என்று செவிவழிச் செய்தி செப்புகிறது. இராயர் புலமை கிருஷ்ணதேவராயர் வடமொழியிலும் தெலுங்கிலும் நல்ல புலமை உடையவர்; ‘ஆமுக்தமால்யதா’ என்னும் நூலைத் தெலுங்கில் பாடியுள்ளார். அஃது ஆண்டாள் வரலாற்றை விரித்துரைப்பது. அவர் வடமொழியில் சில நூல்கள் செய்திருப்பதாக ஆமுக்தமால்யதாவில் கூறப்பட்டுள்ளது. ஜாம்பவதீ கல்யாணம் என்னும் நூல் இப்பொழுது கையெழுத்து நூல் வடிவில் ‘கையெழுத்து நூல் நிலையத்’தில் இருக்கின்றது. கிருஷ்ண தேவராயர் ‘பண்டித சோழன்’ என்ற இராஜேந்திர சோழனைப் போலப் பெரும் புலமை படைத்தவர். போஜன் வடமொழியை வளர்த்தவாறு கிருஷ்ணதேவ ராயர் தெலுங்கு மொழியை வளப்படுத்தினார்; அதனால் ‘ஆந்திர போஜன்’ என்ற புகழ்ப் பெயரைப் பெற்றார். அவர் முல் அமைச்சரான அப்பாஜி, அகத்தியர் என்பவர் வரைந்த சம்பு பாரதத்திற்கு உரை வகுத்த பெரியார் ஆவர். அவைப் புலவர் இராயரது அவைப்புலவர் எண்மர். அவர்கள் (1) அல்லஸானி பெத்தன்னா, (2) நந்தி திம்மன்னா, (3) இளையராஜு ராமபத்திரன் , (4) துர்ச்சடி, (5) மாதய்யகாரி மல்லன்னா, (6) பிங்கள சூரன்னா, (7) பூஷணன், (8) தெனாலி இராமகிருஷ்ணன் என்பவர். அந்த எண்மரும் ‘அட்ட கஜங்கள்’ எனப் பெயர் பெற்றிருந்தனர். புலவர் எண்மருள் அல்லஸானி பெத்தன்னா என்பவரே முதன்மையானவர். இராயர் இப் புலவரிடம் கொண்டிருந்த மதிப்புக் கூறுந்தரத்ததன்று. இராயர் புலவரது பல்லக்கைத் தம் தோளில் தூக்கி மகிழ்வர் - அவருக்குத் தம் கைகளால் தங்கத் தோடாவை அணிவித்து மகிழ்வர் - தாம் செல்லும் எல்லா இடங்கட்கும் அவரை அழைத்தேகுவர் எனின், அம்மம்ம! அரசர் பெருமான் புலவர் பெருமானிடம் காட்டிய பெருமதிப்பை என்னென்பது! பெத்தன்னா வரைந்த மனுசரித்திரம், பாரிஜாதாபஹரணம் என்ற நூல்கள் கிருஷ்ண தேவராயருக்கு உரிமையாக்கப் பட்டன. கிருஷ்ணதேவராயர் புலவர்களைத் தம் உயிரைப் போல எண்ணிப் பாதுகாத்தார்; அவர்கட்கு எல்லாப் போக பாக்கியங்களையும் வழங்கினார்; புலவர்கள் யானைமீதும் பல்லக்கிலும் வருவதைக் கண்டு மகிழும் பெருங்குணம் பெற்றிருந்தார்; அவர்கள் யானைமீதிருந்து இறங்கும் பொழுது கைலாகு கொடுத்து அவர்களை இறக்கி மரியாதை செய்யும் அருங்குணம் வாய்ந்து விளங்கினார். சமயநிலை இராயரது சமயம் வைணவம். அவருக்கு விருப்பமான கடவுள் வேங்கடமலையில் எழுந்தருளியுள்ள திருமாலேயாவர். அவருடைய செப்புச் சிலையும் அவர் மனைவியர் இருவருடைய செப்புச் சிலைகளும் திருப்பதிக் கோவிலில் இன்றளவும் இருந்து வருதல் இதனை மெய்ப்பிக்கும். புக்கராயர் போன்ற பேரரசரைப் போலவே வடக்கே சிம்மாசலத்திலிருந்து தெற்கே இராமேசுவரம் வரையில் உள்ள பெருங் கோவில்களில் இராயர் செய்த திருப்பணிகளைக் காணலாம். விஜய நகரத்தில் கிருஷ்ணன் கோவிலும் இராமசுவாமி கோவிலும் அவர் காலத்தில் கட்டப் பட்டன. விட்டலர் கோவில் கட்டட வேலை இராயர் காலத்தில் தொடங்கப்பெற்றது. ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட நரசிமம் விக்கிரகம் இராயர் காலத்ததேயாகும். இராயர் தம் போர்ச் செயல்கள் முடிந்தபிறகு, திருப்பதி திருக்காளத்தி, காஞ்சி, சிதம்பரம், மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, குற்றாலம், திருச்செந்தூர், இராமேசுவரம், கோகர்ணம் முதலிய தலங்கட்குச் சென்று வழிபட்டார்; அக்கோவில்கட்குப் பல மானியங்களை விட்டார்; ஸ்ரீவில்லிபூத்தூரில் தெப்பக் குளத்தை எடுப்பித்தார்; திருநெல்வேலியில் தாமிரசபையைக் கட்டுவித்தார்; கிருஷ்ணராய சமுத்திரம் என்ற பெயரால் திருநெல்வேலிக்கருகில் ஒரு சிற்றூரைத் தோற்றுவித்தார். இராயர் முஸ்லிம்களால் அழிவுற்ற கோவில்களைப் புதுப்பிக்கப் பதினாயிரம் பொன்னை உதவினார். இந்த உதவி நாளடைவில் வளர்ந்த பல புதிய கோவில்களையும் உண்டாக்கியது. ‘இராய கோபுரம்’ என்னும் பெயருடன் பல இடங்களில் உள்ள கோபுரங்களில் தோற்றத்துக்கு அடிப்படையிட்டவர் கிருஷ்ணதேவராயரே ஆவர். பகைவர் கைப்பற்றிக் கொள்ளத்தக்க புண்ணிய nக்ஷத்திரங்களில் இருந்த மூர்த்தங்களைத் தமது தலை நகரத்திற்கே கொணர்ந்து கோவில் கட்டி அவற்றுக்குப் பூசை முதலியன நடைபெறச் செய்தவரும் கிருஷ்ணதேவராயரே ஆவர். இந்த இரண்டு செயல்களும் போற்றத்தக்க சமயத் தொண்டுகள் அல்லவா? விஜய நகர அரசர்கள் சமய தர்மத்தைக் காக்கவே நாடாண்டனர். ஆதலின் சைவம்-வைணவம்-சமணம் என்னும் சயமங்களைப் பொது நோக்கத்துடன் வளர்த்து வந்தனர்; இம்மூன்றுக்குள் உண்டான பிணக்குகளை வெறுத்தனர்; ஒற்றுமை நிலவச் செய்தனர். கிருஷ்ணதேவராயரும் இனியவராகவே இருந்தார். விஜய நகரத்தில் சமணர் கோவில்களும் நல்ல நிலையில் இருந்தன. விரூபாக்ஷர் கோவில் கோபுரம் இராயரால் கட்டப்பட்டதாகும். இராயர் வல்லபாசாரியர் என்னும் சமணப் பெரியாரைக் கனகாபிஷேகம் செய்து வரவேற்றார். இராயர் சைவ சமயத்திற்கும் தொண்டு செய்துள்ளார். அவர் காலத்தில் சிவன் கோவில்கள் சிறப்புற்று இருந்தன என்பதைக் கொண்டே கிருஷ்ணதேவராயரது பரந்த சமய நோக்கத்தை நன்கறியலாம் அல்லவா? அரசியல் நோக்கம் இராயர் பரந்த அரசியல் நோக்கம் உடையவர் என்பது அவரது ஆமுக்த மால்யதா என்னும் நூலிலிருந்து அறியப்படும். சுக்கிர நீதி முதலிய அற நூல்களில் கூறப்பட்டுள்ள அரச நீதிகளை இராயர் தமது நூலுள் குறித்துள்ளதை நோக்க, அவர் அவற்றின் படி ஓரளவேனும் நடந்திருப்பார் என்பதை நம்பலாம் அல்லவா? ‘குடிகளைத் தன்னால், தன் பரிசனத்தால், கள்வரால், விலங்குகளால், பகைவரால் உண்டாகும் தீமைகளிலிருந்து காத்தல் அரசனது கடமை’ என்ற உயர்ந்த அரசியல் நோக்கத்தை இராயர் கடைப் பிடித்தவர்; எவரும் அறநெறி தவறி நடக்கலாகாது என்பது அவர் கருத்து. எல்லோரும் நடுவு நிலையிலிருந்தது நீதி வழங்க வேண்டும் என்பது அவர் விருப்பம். அரசியல் அறிவு ‘ஓர் அரசன் தன் வருவாயை நான்கு பகுதிகளாகப் பிரித்தல் வேண்டும்; அவற்றுள் ஒன்றைத் தனது நன்மைக்கும் பொது நலத்திற்கும் செலவழிக்க வேண்டும்; இரண்டு பகுதிகளை வன்மை மிகுந்த படையைப் பாதுகாக்கச் செலவிட வேண்டும்; எஞ்சிய ஒரு பகுதியைச் சேமித்து வைக்க வேண்டும்’, என்று இராயர் தாம் இயற்றிய ஆமுக்த மால்யதாவில் குறிப்பிட்டுள்ளார். இதுவே அவரது நோக்கம் என்பதை அவர் அமைத்த எண்ணிறந்த கோவில்களாலும் பிற கட்டடங்களாலும் பெரும் படையினாலும் பெரும் பொக்கிஷத்தினாலும் நன்கறியலாம். இராயர் தம் படை வன்மையை மிகுதியாகப் பெருக்கினார். அவரிடம் ஆறு லக்ஷம் வீரர் இருந்தனர்; அறுபதினாயிரம் குதிரைகள் இருந்தன; இரண்டாயிரம் யானைகள் இருந்தன. இப்பெரும் படையை வைத்திருந்தமையாற்றான் அவரைக் கண்டு எல்லா அரசர்களும் அஞ்சினார்கள். அத்தகைய பெரும்படை இருந்திராவிடில் விஜய நகரப் பேரரசு துங்கபத்திரை முதல் கன்னி முனைவரை நிலைத்து இருந்திருத்தல் இயலாதன்றோ? ‘கரிகளையும் பரிகளையும் வாங்குவதிலும் அவற்றைப் பாதுகாப்பதிலும் வீரரைப் பாதுகாப்பதிலும் செலவழியும் பணமும் இறை வழிபாட்டிலும் கற்றோரைப் பாதுகாப்பதிலும் செலவழியும் பணமும் செலவினத்தில் சேர்க்கத் தக்கவை அல்ல’ என்பது இராயர் கருத்தாகும். இதிலிருந்து அப்பேரரசருடைய அரசியல் அறிவும் பண்பட்ட கல்வி அறிவும் தெற்றெனத் தெரிகின்றன அல்லவா? இராயர் சிறந்த அரசியல் அறிவு படைத்தவர் என்பதை விளக்கப் பல சான்றுகள் உண்டு. அவர் பிஜாப்பூர் முதலிய நாடுகளை ஆண்ட சுல்தான்களை அடக்கி வைத்திருப்பதையே நோக்கமாகக் கொண்டவர்; அதனால் போர்ச்சுகிஸியர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்து அவர்களைத் தம் நண்பராகக் கொண்டார்; தம் பேரரசில் இருந்த சிற்றரசர் அனைவரையும் நன்முறையில் நடத்தி அவர்களது ஒத்துழைப்பைப் பெற்றார்; கலிங்கம் முதலிய அயல்நாட்டு அரசர் நட்பையும் பெற்றுத் தம் பேரரசுக்குப் பலத்தைத் தேடிக் கொண்டார். பேரரசர் தம் அமைச்சர், படைத்தலைவர் முதலியவர்களைக் கலந்து ஆலோசித்தே எக்காரியத்தையும் செய்வது வழக்கம். இந்த வழக்கம் உத்தியோகஸ்தர் உள்ளத்தைத் திருப்திப்படுத்துவதாகும் அல்லவா? சிறந்த கொடையாளி கிருஷ்ணதேவராயர் மாரி அன்ன கையர்; பாரியைப் போலவே இரப்போர்க்கு ‘இல்லை’ என்னாதவர்; புலவர்கட்கு வழங்கி மகிழ்வதே அவரது பழக்கம். அவர் ஆண்டுதோறும் நடைபெற்ற வசந்த விழாவில் புலவர்கட்குப் பலவகைப் பரிசுகள் வழங்குதல் வழக்கம்; தம்மைத் தங்கத்தாலும், நவமணிகளாலும் நிறுத்து அவற்றைக் கோவில்கட்கும் நான்மறையாளர்க்கும் அளித்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார்; தக்க சமயங்களில் தம் அமைச்சர்க்கும் பிற அலுவலர்க்கும் பரிசுகள் அளித்துப் பெருமைப் படுத்தி வந்தார். கலிங்க வெற்றிக்குப் பிறகு அப்பாஜி ஒரு பட்டு ஜமக்காளத்தின் மீது உட்காரவைத்துப் பொன்னாலும், நவரத்தினங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டார் எனின் இராயரது கொடைச் சிறப்பை என்னெனப் புகழ்வது! 7. புவி அரசரும் கவி அரசரும் தென்னிந்திய இலக்கிய வரலாற்றில் கிருஷ்ண தேவராயர் ஆட்சி மிக்க சிறப்புடைய பகுதியாகும். அவரது பேரவையில் வடமொழி-தெலுங்கு-கன்னடம்-தமிழ்மொழிகள் சார்பாகப் புலவர் பெருமக்கள் பலர் இருந்தனர். அவர்கள் தத்தம் மொழியில் பல நூல்களைச் செய்து பெயர் பெற்றனர். கிருஷ்ணதேவராயர் புலவர்களைப் போற்றிய புரவலர்மட்டும் அல்லர். அவரே பெரும் புலவராகவும் இருந்தார்; பிறர் புலமையை அளந்தறியும் ஆற்றல் பெற்றவராயும் இருந்தார்; எச்சமயத்தைச் சேர்ந்த புலவராக இருந்த போதிலும் அவர்கள் புலமை ஒன்றுக்கே மதிப்பீந்து ஆதரித்தார்; புலவர்களைத் தேவைக்கு மேற்பட்ட நிலையில் உயர்த்திப் பல நூல்களை வரையுமாறு செய்தார். இராயரது ஆட்சியில் தெலுங்கு இலக்கியம் ஒப்பற்ற உயரிய நிலையை உற்றது. முதலில் புவியரசராகிய கிருஷ்ண தேவராயர் வரைந்த நூல்களைக் காண்போம். வடமொழி நூல்கள் இராயர் வடமொழி நூல்களை வரைந்தனர் என்பது தெரிகிறது. அவை-(1) மதாலஸ சரித்திரம், (2) சத்யாவ பிரேணனம் (சத்தியபாமா-திருமணம்), (3) சகல கதா சார சங்கிரகம், (4) ஞான சிந்தாமணி, (5) இரச மஞ்சரி என்பன. இவை இப்பொழுது கிடைக்குமாறில்லை. ஜாம்பவதி கல்யாணம் என்பது ஒரு நாடக நூல். இது இராயரால் செய்யப்பட்டது என்பர். ஜாம்பவதி என்பவள் ஜாம்பவான் மகள்; கிருஷ்ணனுடைய மனைவியர் எண்மருள் ஒருத்தி. அவளைக் கண்ணன் மணந்த வரலாற்றை நாடக வடிவில் உணர்த்தும் இந்நூல் ஐந்து காட்சிகளைக் கொண்டது. இஃது ஆண்டுதோறும் விரூபாக்ஷர் கோவிலில் வசந்த விழாவில் நடித்துக் காட்டப்பட்டது. ஆமுக்த மால்யதா1 கிருஷ்ணதேவராயர் பாடிய தெலுங்கு நூல் ஆமுக்த மால்யதா என்பது. அது தெலுங்கு இலக்கிய உலகில் தலை மணியாகத் திகழ்வது. அது பெரியாழ்வார் மகளாரான ஆண்டாள் அம்மையாரைப் பற்றியது. அது பாடத் தொடங்கிய காலம் 23-1-1519. அன்று இராயர் விஜயவதி எனப்பட்ட பெஜவாடாவில் தங்கி இருந்தார்; அங்குக் கோயில் கொண்டிருந்த மதுசூதனப் பெருமானை வணங்கி விரதம் இருந்த ஏகாதசியன்று கனவு கண்டார். கனவில் பெருமாள் தோன்றி ஆண்டாள் வரலாற்றைப் பாடுமாறு பணித்து மறைந்தார். உடனே இராயர் அந்நூலைப் பாடத் தொடங்கினார். நூல் முடிந்த பிறகு அவைப்புலவர் தலைவரான அல்லசானி பெத்தன்னா அதனை முழுவதும் நன்கு பார்வையிட்டுச் செப்பம் செய்தார். வரலாற்றுக் குறிப்புகள் ஆமுக்த மால்யதாவில்1 கிருஷ்ணதேவராயருடைய போர்ச் செயல்கள், அவருடைய அரசியல் கொள்கைகள், பொது மக்கள் இருக்க வேண்டும் நிலை முதலிய குறிக்கப்பட்டுள்ளன. இராயருடைய போர்ச் செயல்களும் படையெடுப்பும் முறையாகக் கூறப்பட்டுள்ளன. இராயர் உதயகிரி-கொண்டவீடு- கொண்டபல்லி இவற்றைவென்று சிம்மாசனத்தில் பெருமானை வணங்கி வெற்றித்தூணைப் பொட்நூர் என்னும் இடத்தில் நாட்டினார்; பின்னர்க் கெம்பாவி2 அரணை அழித்தார்; பிறகு நெய்ராமணம்3 என்னும் இடத்தில் வெற்றிபெற்றார். வடமொழிப் புலவர் 1. இராயர் அவையில் ரக்ஷ்மீதரர், திவாகரர் என்பவர் இருந்தனர். இவர் இருவரும் ஒரிஸ்ஸா நாட்டுக் கஜபதி அரசரது அவைப் புலவராக இருந்தவர். இராயர் கஜபதியை வென்றபிறகு புலவர் இருவரும் விஜய நகரத்தில் இருந்து வரலாயினர். இவருள் முதல்வர் சாஹித்யம், ஆகமம், சோதிடம், வேதாந்தம் பற்றி நூல்களை வரைந்துள்ளார்; சங்கரர் வரைந்த சௌந்தரிய லஹரிக்கு உரை எழுதியுள்ளார். திவாகரர் பாரத வரலாற்றைப் ‘பாரதமித்திர’ என்னும் நூலாகப் பாடிள்ளார். 2. இராயருடைய முதல் அமைச்சரான அப்பாஜி சிறந்த வடமொழிப் புலவர். அவர் அகத்தியர் என்பார் வரைந்த பால பாரதத்திற்கு உரை எழுதியுள்ளார். அந்த உரை ‘மனோரமா’ எனப் பெயர்பெறும். 3. நாதிண்ட்ல கோபமந்திரி என்பவர் கொண்ட வீட்டில் இருந்த அரசப் பிரதிநிதி. அவர் அப்பாஜிக்கு நெருங்கிய உறவினர். அவர் பிரபோத சந்திரோதயம் என்னும் வடமொழி நூலுக்கு உரை வகுத்தவர். அந்த உரையின் பெயர் ‘சந்திரிகா’ என்பது. அந்த உரை கோப மந்திரியின் கல்வி ஆழத்தைக் கவினுறக் காட்டுவது. அவர் தெலுங்கில் ‘கிருஷ்ணர்ச்சுன சம்வாதம்’ என்ற ஒரு நூலையும் எழுதியுள்ளார். 4. கோபமந்திரிக்கு அமைச்சராக இருந்தவர் யுச தேசா என்பவர். இவர் முன்சொன்ன லக்ஷ்மீதரர் மாணவர். இப்பெரியார் 4‘சிவபஞ்ச ஸ்தவம்’ என்ற ஐந்து நூல்கட்கு உரை வரைந்துள்ளார். தெனாலி இராமலிங்கர் இவரிடம் மிக்க மதிப்புடையவர். அவர் தாம் செய்த ‘உத்பட ஆராத்ய சரித்திரம்’ என்னும் தெலுங்கு நூலை இவருக்கு உரிமையாக்கினார் எனின், இந்த அமைச்சருடைய புலமையும் புலவரை ஆதரிக்கும் தன்மையும் நன்கு விளங்கும். இந்த அமைச்சருடைய புத்திரர் சங்கர் கவி என்பவர், அவர் சிறந்த தெலுங்குப் புலவர். அவர் ‘அரிச்சந்திர உபாக்கியாநம்’ என்னும் நூலைத் தெலுங்கில் பாடியுள்ளார். 5. பந்தம் லக்ஷ்மி நாராயணர் என்பவர் ஒரு வடமொழிப் புலவர். அவர் கிருஷ்ணதேவராயர் அவையில் நாட்டியப் புலவராக இருந்தவர். அவர் அபிநவ பரதாசாரியர், சூக்கும பரதாசாரியர் முதலிய பட்டப்பெயர்களைப் பெற்றவர். இராயர் அவருக்கு யானை, தங்கப் பல்லக்கு, வெண் முத்துக் குடைகள் இரண்டு, வாத்தியங்கள் முதலிய அரச மரியாதைகளை அளித்தனர். அப்புலவர் ‘சங்கீத சூரியோதயம்’ என்னும் இசைநூல் ஒன்றை ஐந்து அதிகாரங்களில் வரைந்துள்ளார்; அதனைக் கிருஷ்ணதேவராயர்க்கு உரிமையாக்கியுள்ளார். 6. ஈசுவர தீக்ஷிதர் என்பவர் இராயர் அவைப்புலவருள் ஒருவர். அவர் இராயர் தூண்டுதலால் வால்மீகி ராமாயணத்துக்குச் சிற்றுரை எழுதினர். அவர் வால்மீகி ராமாயணம் முழுவதும் அறுபது நாழிகைக்குள் மனப் பாடமாக ஒப்பித்துக் கிருஷ்ண தேவராயர் வியப்புக்கும் பாராட்டுக்கும் உரியவரானார். 7. துக்காதேவி என்பவள் கிருஷ்ணதேவராயர் மனைவி; கஜபதி மகள். அவள் நிறைந்த வடமொழிப் புலமை உடையவள். அவள் ‘துக்கா பஞ்சகம்’ என்றும் சிறு நூலைப் பாடியுள்ளாள். நூலில் இருப்பவை ஐந்து சுலோகங்களேயாகும். துக்காதேவி ஒருத்தியே கிருஷ்ணதேவராயர் காலத்தில் வடமொழிப் புலமைபெற்ற பெண்மணி ஆவள். தெலுங்கு மொழிப் புலவர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இருந்த தெலுங்கு மொழிப் புலவர் பலராவர். ஆயினும் அவருள் எண்மரையே சிறப்பாகக் கூறுதல் வழக்கம். ஆயின், நாம் இங்கு அந்த எண்மரையும் பிறரையும் பற்றிக் காண்போம்: 1. அல்லசானி பெத்தன்ன-இவர் இராயருக்கு உயிர் போன்ற நண்பர்; முதற்புலவர்; சைவராக இருந்து பின் வைணவரானவர்; பிராமணர். இவர் ‘ஆந்திர கவிதா பிதாமகர்’ என்ற பட்டம் பெற்றவர். இவர் இரண்டு நூல்களை வரைந்தனர்: ஒன்று மனு சரித்திரம்; மற்றொன்று ஹரிகதாசாரம். இராயர் இவரைத் தாம் சென்ற இடமெல்லாம் அழைத்துச் சென்றார்; இவருக்குப் பல்லக்கு, யானை முதலிய அரச மரியாதைகளை அளித்தார். 2. நந்தி திம்மன்னா-இவர் சைவர்; பிராமணர்; அகோர சிவாசாரியார் மாணவர்; கிருஷ்ணதேவராயர் தந்தையாரான நரசராயருக்கு உரிமை செய்யப்பட்டதும் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டது மான வராஹ புராணத்தின் ஆசிரியர் இருவருள் ஒருவரான நந்தி மல்லையர் என்பவர்க்கு நெருங்கிய உறவினர். இவர் பாரிஜாதாபஹரணம், திரிஷ்டஹலி தண்டகம், வாணி விலாசம் என்ற நூல்களை எழுதினார். இவற்றுள் வாணி விலாசம் என்பது கிடைத்திலது. பாரிஜாதாபஹரணம்: இது மிகச் சிறந்த நூல். இந்நூல் பாடியது பற்றி ஒரு வரலாறு வழங்குகிறது. ‘திம்மன்னா இராயரை மணந்த அரசமா- தேவியருள் ஒருவருடன் விஜயநகரம் வந்தார். அந்த அம்மையார் இராயரைச் சிறிது சினங்கொள்ளச் செய்த காரணத்தால் இராயர் அவ்வமையாரிடம் சில நாட்கள் வரை பேசவில்லை; அவர் அந்தப்புரத்திற்குச் செல்லவும் புலவரிடம் கூறினார். புலவர் இராயருக்கு மறைமுகமாக நல்லுரை புகட்ட விரும்பிப் ‘பாரிஜாதாபஹரணம்’ பாடினார்’; அதனில் தன்னிடம் வருத்தம் கொண்ட மனைவியரிடம் கண்ணன் எவ்வாறு நடந்து அவர்களை இன்புறுத்தினான் என்பதைத் தெளிவாக விளக்கினார். அந்நூல் முழுவதையும் படித்துப் பார்த்த கிருஷ்ணதேவராயர் தமக்கு மறைமுகமாக நல்லுரை புகட்டிய புலவரது கவித்திறனைப் பாராட்டிச் சிறப்பித்தார்’ , என்பது வரலாறு. இந்நூலில் கிருஷ்ணதேவராயர் தந்தையரான நரசராயர் செய்த போர்ச் செயல்கள் குறிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணதேவராயர் போர்ச் செயல்களும் இடம் பெற்றுள்ளன. எனவே, இராயர் வரலாற்றை அறிய இந்நூல் ஓரளவு துணைபுரியத் தக்கது. இது சிறந்த நடையில் ஆற்றொழுக்குப் போல அமைந்த நூலாகும். இதனை இராயர் பல முறை படித்து மகிழ்ந்து, திம்மன்னாவுக்கு ஓர் அக்கிரகாரத்தை அளித்து மகிழ்ந்தார். 3. மாதய்யகாரி மல்லன்னா-இவர் சைவர்; பிராமணர்; அகோர சிவாசாரியார் மாணவர். இவர் ‘இராஜசேகர சரித்திரம்’ என்னும் நூலைத் தெலுங்கில் எழுதி, முன்சொன்ன கோப மந்திரியின் உடன் பிறந்தாரான அப்ப - மந்திரி என்பாருக்கு உரிமையாக்கினார். 4. தூர்ச்சடி-இவர் சைவர்; காளத்தியைச் சேர்ந்தவர். இவர் காளத்தி மஹாத்மியம், காளத்தீசுவர சதகம் என்னும் நூல்களை எழுதினவர். 5. அய்யலராஜு இராமபத்திர கவி-இவர் வைணவர்; சகல மதசார சங்கிரகம், இராமாபியுதயம் என்னும் இரு நூல்களை வரைந்தவர். முதல் நூல் கிருஷ்ணதேவராயர் தூண்டுதலால் வரையப்பட்டது. இரண்டாம் நூல் இராயருடைய மருமகனார்க்கு உரிமை செய்யப்பட்டது. 6. பிங்கலி சூரன்னா-இவர் கிருஷ்ணதேவராயர்க்குப்பிறகு பல ஆண்டுகள் இருந்தவர்; அவருக்குப் பிறகே நூல்களைப் பாடியவர். இவர் பாடியன இராகவப் பாண்டவீயம், கலா புருஷோதயம், பிரபாவதி-பிரத்யும்னம் என்பன. இவை பிற்காலத் தெலுங்குப் புலவரால் நன்கு போற்றப்பட்டவை. 7. இராமராஜ பூஷணர்-இவரும் இராயருக்குப் பிறகே நூல் செய்தவர். இவர் செய்த ‘வசு சரித்திரம்’ புகழ்பெற்றது. அது காளத்திக் கவிஞர் என்பவரால் வடமொழியில் பெயர்த்து எழுதப்பட்டது. எனின், அதன் சிறப்பை நன்கறியலாம் அன்றோ? 8. தெனாலி-இராமலிங்கர்-இவர் பிராமணர்; முதலில் சைவராக இருந்தவர்; பின்னர் வைணவராக மாறித் தெனாலி - இராமகிருஷ்ணர் எனப்பெயர் பெற்றார். இவர் ஏறத்தாழக் கி.பி. 1530-இல் ‘உத்படாராத்ய சரித்திரம்’ வரைந்தனர். இவருக்குக் குமாரபாரதி என்ற பெயரும் உண்டு. இவர் பிறகு ‘பாண்டுரங்க மஹாத்மியம்’, ‘கடிகாசல மஹாத்மியம்’ என்றும் நூல்களை (1560-70) எழுதினார். இவர் ‘கந்தர்ப்பகேது விலாசம்’ என்னும் நூலையும் வரைந்தார். தெனாலிராமன் கதைகள் இக்கதைகள் எல்லாம் இப்புலவரைப் பற்றியனவே ஆகும். இவர் சிறந்த புலவர்; அதே சமயத்தில் சிறந்த விகடராகவும் இருந்தவர். இவரைப் பற்றிய கதைகள் எந்த அளவு உண்மையானவை என்பதை உறுதியாக உரைத்தல் இயலாது; ஆயினும் அவை நாட்டில் வேரூன்றி விட்டன; வழிவழியாகத் தென் இந்திய மக்கள் அக்கதைகளைக் கேட்டுத் திளைத்து வருகின்றனர். 9. கந்துகூர்-ருத்ர கவி-இவர் பொற்கொல்லர் வகுப்பினார்; பன்னிரண்டு ஆண்டுகள் கிருஷ்ணதேவராயர் அவையில் இருந்தவர். இவர் ‘நிரன் குசோபாக்கியாநம்’ என்னும் சிறந்த பிரபந்தத்தையும், சுக்கிரீவ விஜயம், யக்ஷகான்ம், ஹரிசதகம் என்னும் நூல்களையும் இயற்றியவர். 10. தல்லபாக பெத்த திருமலய்யா-இவர் திருப்பதியைச் சேர்ந்தவர். இவர் கிருஷ்ணதேவராயர் வழிபடு கடவுளான வேங்கடேசப் பெருமாள்மீது பல சங்கீர்த்தனங்களைப் பாடியவர்; ஹரிவம்சம், சிருங்கார சதகம், நீதி சதகம், வெங்கடேசுவரோத் தாரணம் முதலிய நூல்களை வரைந்தவர்; பகவத்கீதைக்கு உரை எழுதியவர். இவரது நீதி சதகம் கிருஷ்ண தேவராயரால் மிகவும் பாராட்டப்பட்டதாகும். இப்புலவர் யாப்பிலக்கணம் நூல் ஒன்றையும் செய்தனர். 11. தல்லபாக சின்னன்னா-இவர் மேற்சொன்ன புலவர் புத்திரர். இவரது பெயர் திருவேங்கடநாதன் என்பது. இவர் பரமயோகி விலாசம். அஷ்டமஹிஷி கல்யாணம் என்னும் நூல்களை எழுதியுள்ளார். 12. சிந்தல்பூடி எல்ல கவி-இவர் பொட்நூரைச் சேர்ந்தவர். அவ்விடம் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்கு உட்பட்ட பொழுது இவர் விஜயநகரத்திற்கு வந்து சேர்ந்தனர். இராயர் இவரது கவிதா வன்மையைச் சோதித்து அறிந்தனர்; இவர் இயற்றிய ‘இராதா மாதவம்’ என்ற நூலைப் பாராட்டி, இவர்க்கே ‘இராதாமாதவம்’ என்ற பட்டம் அளித்தார். இவர் இராயர் காலமான பின்னர் ‘விஷ்ணூமய நாடகம்’, ‘தாரசு பிரமராஜியம்’ என்பவற்றை எழுதினார்; கடைசி நூலை அச்சுதராயரிடம் படைக் கணக்கு களைப் பார்த்துவந்த அதிகாரி ஒருவர்க்கு உரிமையாக்கினார். 13. வல்லபாசாரியார்-இவர் கவிதேவிந்திரர் எனவும் அழைக்கப் பட்டனர். பாஸ்கராச்சாரியர் வடமொழியில் வரைந்த லீலாவதி என்ற நூலை இப்புலவர் தெலுங்கில் மொழி பெயர்த்தார்; அதனைக் கிருஷ்ணதேவராயர் நம்பிக்கைக்கு உரிய பிரபுவான பொம்மலதகாளர் என்பவர்க்கு உரிமையாக்கினர். 14. குமார மல்லம்மாள்-இவர் ஒரு பெண்பாற் புலவர்; தெலுங்கு மொழியில் சிறந்த புலமை உடையவர். இவர் ஒருவரே கிருஷ்ணதேவராயர் காலத்துத் தெலுங்குப் பெண்பாற் புலவர். இவர் இராமாயணத்தைத் தெலுங்கில் பாடியுள்ளார். கிருஷ்ண தேவராயர் இவருக்கும் பலவகைப் பரிசுகள் அளித்து மகிழ்வித்தார். 15. வேறு புலவர்கள்-கிருஷ்ணதேவராயர் காலத்தில் அவரால் ஆதரிக்கப்படாத புலவர் சிலர் இருந்தனர். அவருள் எடபாட்டி எர்ரன்னா என்பவரும், சங்குசல நரசிமம் கவி என்பவரும் குறிக்கத்தக்கவர் ஆவர். இவருள் முன்னவர் குமாரநைஷதம், மல்ஹண சரித்திரம் என்னும் இரு நூல்களை எழுதியவர்; பின்னவர் கவிகர்ண ரசாயனம் என்ற நூலை வரைந்தவர். கன்னடப் புலவர் கிருஷ்ணதேவராயர் ஆட்சியில் கன்னடம் ஓரளவு சிறப்புற்றது. புலவர் பலர் அவர் காலத்தில் இருந்து பல நூல்களைச் செய்தனர். அவருள் சிலரைப்பற்றி ஈண்டுக் காண்க: 1. திம்மன்னா-இவர் பானுகவி என்பவர் மகனார் ஆவர். பானுகவி என்பவர் கன்னட மொழியில் மிகப் பெரும்புலவர். திம்மன்னா கன்னட மஹாபாரதத்தை முடித்துக் கிருஷ்ண தேவராயர்க்கு உரிமையாக்கி மதிப்புப்பெற்றவர். 2. வியாசராயர்-இவர் வியாச தீர்த்தர் என்றும் அழைக்கப் பட்டனர்; ‘மாத்வமுனிவர்’ எனப் பெயர் பெற்றவர்; வியாசராய மடத்தை உண்டாக்கியவர். இவர் வடமொழியில் தர்க்க தாண்டவம், நியாயமிருதம், தாத்பரிய சங்கிரகம் என்ற நூல்களை எழுதினவர்; கன்னடத்தில் பல கீர்த்தனங்களைப் பாடினவர். கிருஷ்ணதேவராயர் இவரைப் பெரிதும் மதித்து வந்தார். 3. புரந்தரதாசர்-இவர் வியாசராயர் மாணவர்; கன்னடத்தில் சிறந்த எழுத்தாளர்; சிறந்த பாடகர்; இவர் பண்டரிபுரத்தில் வாழ்ந்தவர். இவருடைய பாடல்கள் கன்னட மக்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன. 4. கனகதாசர்-இவர் தார்வார் ஜில்லாவைச் சேர்ந்தவர்; சிறந்த புலவர். இவர் மோஹன தரங்கிணி, நளசரித்திரம், ஹரிபக்தசாரம் முதலிய நூல்களை எழுதியுள்ளார். 5. வித்யானந்தர்-இவர் ‘அபிநவவாதி வித்யானந்தர்’ என்றும் பெயர் பெற்றவர். இவர் ‘காவியசாரம்’ என்னும் தொகுப்பு நூல் செய்தவர். இவர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் விஜயநகரத்தில் இருந்த சமணர் ஆவர். 6. மல்லனார்யா-இவர் குப்பி என்ற ஊரினர்; சைவர்; கிருஷ்ண தேவராயர் காலத்தவர். இப்புலவர் ‘பவசிந்தா ரத்தினம்’, ‘வீரசைவாமிருதம்’ என்னும் நூல்களைச் செய்தவர். 7. சாட்டு விட்டலநாதர்-இவர் பாகவத புராணத்தைக் கன்னடத்தில் வரைந்தவர். இவர் கிருஷ்ணதேவராயர் காலத்திலும் அச்சுதராயர் காலத்திலும் வாழ்ந்திருந்தவர். தமிழ்ப் புலவர் 1. கச்சி ஞானப்பிரகாசர்-இவர் காஞ்சீபுரத்தில் உள்ள ஞானப்பிரகாச மடத்துத் தலைவராக இருந்தவர். அந்த மடத்துத் தலைவர் அனைவர்க்கும் ‘ஞானப்பிரகாசர்’ என்ற பட்டமுண்டு. இவரது இயற்பெயர் தத்துவப் பிரகாசர் என்பது. இவர் வேளாளர்; கல்வி கேள்விகளில் சிறந்தவர்; சிதம்பர புராணம் இயற்றிய புராணத் திருமலைநாதர், அவர் மகனார் பரஞ்சோதி யார் முதலியவர் இவரிடம் சைவதீட்சை பெற்றவர்கள். இந்த ஞானப்பிரகாசர் தம் காலத்தில் விஜயநகரப் பேரரசராக இருந்த கிருஷ்ணதேவர்மீது மஞ்சரிப்பா என்றொரு பிரபந்தம் பாடினார்; கச்சி ஒருமாவின் கீழ் உறையும் பெருமான் மீது கலம்பகம் பாடினார். இந்தக் குறிப்பை, “வானப்ர காசப் புகழ்க்கிருஷ்ண ராயர்க்கு மஞ்சரிப்பா கானப்ர காசப் புகழாய்ந்து கச்சிக் கலம்பகம்செய் ஞானப்ர காச குருராயன் வாழ்ந்து நலஞ்சிறந்த மானப்ர காச முடையோர் வளர்தொண்டை மண்டலமே” என்னும் தொண்டைமண்டல சதகச் செய்யுளால் அறியலாம். இராயர் மனமகிழ்ந்து பலவகைப் பரிசுகள் அவரது தகுதியறிந்து அளித்து மகிழ்ந்தார். 2. குமார சரசுவதி-இவர் இன்ன ஊரினர் - இன்ன மரபினர்-என்னும் விவரங்கள் அறியக்கூடவில்லை. இவர் தமிழில் சிறந்த புலமை பெற்றவர்; கன்னடம், தெலுங்கு, இந்துஸ்தானி மொழிகளை அறிந்தவர். இவர் கிருஷ்ணதேவராயர் அவையில் புலவராக இருந்தவர். இராயர் பிரதாபருத்ர கஜபதி என்ற அரசனை (1504-1532) வென்று அவனது தலைநகரமான கடகத்தை (கட்டாக்கை)க் கைப்பற்றினார்; வன்மகளான துக்காதேவியை மணம் புரிந்து கொண்டார். இது வரலாற்றுச் செய்தி. இதனைக் குமார சரசுவதி சிலேடைப் பொருள் அமைய ஒரு வெண்பாவில் வைத்துப் பாடினார். அப்பாடல் இது: “கலிகம் இகழ்ந்துநுதிக் கைச்சங்கம் தோற்று மெலிந்துகட கம்நழுவ விட்டாள்-மலிந்தமலர்ப் பொன்னிட்ட மானகிட்ண பூபாலா! உன்றனுக்குப் பின்னிட்ட ஒட்டியன்5 போல் பெண்.” கஜபதியைக் குறிக்கும்போது, ‘கலிங்க நாட்டை இழந்தும், பல யானைக் கூட்டங்களைத் தோற்றும், கடகம் என்ற ஊரை விட்டும் ஓடினான்’ என்பது இதன் பொருள். கஜபதி மகளைக் குறிக்கும் பொழுது, ‘(கிருஷ்ண தேவராயரது சிறப்பைக் கேட்ட பொழுது) ஆடையை நெகிழ விட்டாள்; நுனிக் கையில் இருந்த வளையல்கள் கழன்றன; காதல் நோயால் உடல் மெலிந்து தோள்வளையும் கழன்றன’ என்பது பொருள். 3. அரிதாசர்-இவரது இயற்பெயர் திருமலையப்பர் என்பது; இவருக்குக் கிருஷ்ணன் என்ற பெயரும் உண்டு. இவர் தொண்டை மண்டலத்து இருபத்துநான்கு கோட்டங்களுள் ஒன்றான குன்றவர்த்தனக் கோட்டத்து அரிவாசபுரத்தைச் சேர்ந்தவர். அவ்வூர் சந்திரகிரி ராச்சியத்து வேதகிரி, தேசத்து வேதநதி தீரத்து அமைந்திருப்பது என்று கல்வெட்டுக்6 கூறும். இவர் தமையனார் வடமலை என்பவர் சிறந்த அரசியல் பதவி வகித்துவந்தார். அப்பொழுது பேரரசராக இருந்தவர் கிருஷ்ண தேவராயர். திருமலையப்பர் வைணவ பக்தியில் சிறந்து தமதூரில் பெருமாள் கோவில் ஒன்றைக் கட்டி அதனில் கருமாணிக்க வண்ணரையும், வேதவல்லி நாச்சியாரையும் தாபித்துப் பூசை, விழா முதலியவை குறைவற நடக்குமாறு ஏற்பாடுசெய்து அரிதாசர் எனப் பெயர் பெற்றார். கிருஷ்ணதேவராயர் திக்கு விஜயமாகப் புறப்பட்டு வந்த பொழுது அரிதாசர் அவரைத் தம் ஊர் வந்து பெருமானைச் சேவித்துச் செல்லுமாறு வேண்டினார். இராயர் தம் போர்ச் செயல்களை முடித்துக் கொண்டு தெற்கு நோக்கி வந்தபொழுது அரிதாசர் விருப்பப்படி பெருமானைச் சேவித்துப் பல தானங்களைச் செய்து சென்றார் என்று நாகலாபுரக் கோவிலில் உள்ள கல்வெட்டும் பட்டயமும் கூறுகின்றன. அரிவாசபுரம் இராயரது தாயார் (நாகலாதேவி) பெயரால் நாகலாபுரம் என வழங்கலாயிற்று. அரிதாசர் பல நாடுகட்கும் சபைகட்கும் தலைவராக நியமனம் பெற்றார்; பல கோவில்களில் மேற்பார்வையும் இவரிடம் விடப் பட்டது. இப்பெரியார் இருசமய விளக்கம் என்னும் நூலைச் செய்தார். இரு சமய விளக்கம்-இந்நூல் ஆற்றுக்கு நீராடச் சென்ற பெண்மணிகள் இருவர் சைவம், வைணவம் என்னும் சமயங்கள் இரண்டினையும் சீர்தூக்கி, வைணவ சமயத்தின் சிறப்பியல்பு களைத் தம்முன் பேசிக்கொள்வதாக அமைந்திருப்பது. இந்த நூல் நான்கு காண்டங்கள், இருபத்தாறு படலங்கள், நூற்றுமுப்பது பரிச்சேதங்கள், 2119 விருத்தங்கள் உடையது. இது கருமாணிக்க வண்ணரது திருமுன்பு அரங்கேற்றப்பட்டது. அரிதாசர் இந்த நூலில் கிருஷ்ணதேவராயரைப் பாராட்டியுள்ளார். “கிரிபோல் விளங்கிக் கிளரும் புயக்கிட்ண ராயன் தரைமீது சிங்காத் திரியில் செய்த்தம்பம் நாட்ட வரமா தரவால் அளித்தே வடகூவம் மேயும் கருமா மணிவண் ணனைநீ டுகருத்தில் வைப்பாம்.” 4. தத்துவப்பிரகாச-இவர் திருவாரூர்த் தியாகராஜப் பெருமானது கோவில் கண்காணிப்பாளர்; கிருஷ்ணதேவராயர் காலத்தவர். கோவில் அர்ச்சகரான வீழிப் பிராமணர் கோவிற்- காரியங்களைச் செவ்வனே நடத்தவில்லை. விழாக் காலத்தில் செய்யப்பட வேண்டியன செய்யப் படவில்லை. இக்குறைகளைக் கண்ட தத்துவப் பிரகாசர் பெருமான் மீதும் அரசன் மீதும் ஆணையிட்டுக் கொடியிறக்காமற் செய்தார், இதனை, “மருவுபுகழ்க் கிட்ண மாராயர் ஆணை அரிய வடமலையான் ஆணை - திருவாரூர்ப் பாகற் கொடியறுப்பார்7 பாதந் திருவாணை தியாகக் கொடியிறக்காதே” என்று அவர் பாடிய செய்யுள் வலியுறுத்தும். பின்னர் அவர் நடந்த தவறுகளை எல்லாம் கிருஷ்ணதேவராயருக்கு வெண்பா மூலம் தெரிவித்தார். இதனை, “ஊழித் துலுக்கல்ல ஒட்டியான் தானுமல்ல வீழித் துலுக்கு8வந்து மேலிட்டு - வாழி சிறந்ததிரு வாரூர்த் தியாகருடை பூசை இறந்ததே கிருட்டினரா யா” என்னும் வெண்பா உறுதிப்படுத்தல் காண்க. கிருஷ்ணதேவராயர் கோவிலில் தவறு செய்தவர்களை மாற்றி யாஸவம் நன்முறையில் நடைபெறுமாறு செய்தனர். அப்போது தத்துவப் பிரகாசர் வீழிப் பிராமணரை நோக்கி, “உண்ட வயிற்றில் உமிக்காந்தல் இட்டதே தொண்டரே! வீழித் துலுக்கரே! - பண்டெல்லாம் அப்பம் அவல்எள் அதிரசமும் தோசைகளும் கப்புவதும் போச்சே கவிழ்ந்து,” என்று ஏளனம் செய்தார். 5. மண்டல புருஷர்-இவர் சமணர்; தமிழில் சூடாமணி நிகண்டைச் செய்தவர். இவர் கிருஷ்ணதேவராயர் காலத்தவர் என்பது கூறப்படுகிறது. அறம் வளர்த்த முதலியார் என்பவர் கிருஷ்ணதேவராயர் அமைச்சருள் ஒருவர்; பாண்டிய சிற்றரசர் ஒருவன் அம்முதலியார் மீது கலம்பகம் ஒன்றைப் பாடினான்.9 இராயர் மரியாதை இங்ஙனம் தம் காலத்தவராக வாழ்ந்த மேற்சொன்ன கவியரசர் பலரையும் புவியரசராகிய கிருஷ்ணதேவராயர் எங்ஙனம் நடத்திவந்தார்? இராயர் அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு அரச மரியாதைகளைச் செய்தார்; நிலங்களை மானியமாக விட்டார்; பட்டாடைகளை நல்கினார்; உயர்ந்த ஆபரணங் களைப் பரிசாக வழங்கினார்; போஜராஜன் வசந்த விழாவைக் கொண்டாடிப் புலவர்கட்குப் பரிசளித்தது போல இராயரும் வசந்த விழாவில் தம் பெருநாட்டுப் புலவர்களை வரவழைத்து வரையாது வழங்கினார்; அவ்வப்பொழுது துலாபாரம் புகுந்து, அந்தப் பொன்னையும் மணிகளையும் பாவலர்க்கே வழங்கினார்; பெத்தன்னா போன்ற பெரும் புலவர் பல்லக்கைத் துக்கி மகிழ்ந்தார்; யானைமீது அல்லது பல்லக்கில் வந்த பெரும் புலவர்களைத் தாம் எதிர் சென்று வரவேற்று மகிழ்ந்தார். சுருங்கக் கூறின், தம் காலப் புலவர்கட்குக் கிருஷ்ணதேவராயர் பெரிய வள்ளலாக விளங்கினார் என்று கூறுதல் பொருத்தமாகும். அடிக்குறிப்புகள் 1. ஆமுக்த-சூடி, மால்ய - மாலை, தா-கொடுத்தவள், சூடிக்கொடுத்தவள்; ஆண்டாள். 2. இராய்ச்சூர்க்கு 70 அல்லது 80 மைல் தூரத்தில் உள்ளது. குல்பர்காப் போரில் ஈடுபட்ட இடம். 3. இது துங்கபத்திரைக்கு வடகரையில் இராய்சூர்க்கருகில் இருப்பது. 4. ஸ்தவம் - தோத்திரம் 5. ஒட்டியன் - கஜபதி அரசன். 6. நாகலாபுரக் கல்வெட்டு 628 டிக 1905 7. திருவாரூரில் பங்குனித் திருவிழாவில் சுவாமி தேரிலிருந்து இறங்கியபின் இராஜநாராயண மண்டபம் புகுந்து அபிஷேகமான பிறகு அடியார்க்குக் காட்சி தருவார். அதற்கு முன் அண்மையில் உள்ள வேலங்குடி என்னும் ஊரில் இருக்கும் பாகற்காய் மண்டபத்துக்கு எழுந்தருளி அங்கு உண்டாக்கப்பட்டிருக்கும் பாகற்கொடியை அறுத்தல் வழக்கம். 8. திருவீழிமழலையிலிருந்து வந்திருந்த அர்ச்சகர். 9. Dr. N.V.Ramanayya, Studies in the History of the Third Dynasty of Vijayanagar, P. 426.. 8. கலை வளர்ச்சி நாகரிகக் கலைகள் ஓவியம், சிற்பம், இசை, நடனம், நாடகம் முதலியன நாகரிகக் கலைகள் எனப்படும். இவை வளர்ச்சி பெற்ற நாடு நாகரிக வளர்ச்சி பெற்றது என்று அறிஞர் கூறுவர். இந்தக் கலைகள் அனைத்தும் விஜய நகரப் பேரரசில்-சிறப்பாகக் கிருஷ்ணதேவராயர் காலத்தில் வளர்ச்சி அடைந்தன என்பதை, இவற்றை நேரிற் கண்டு குறிப்- பெழுதிய மேனாட்டறிஞர் கூற்றிலிருந்தும் ஹம்பியில் அழிந்து கிடக்கும் கோவில்களிற் காணப்படும் சிற்பங்கள், ஓவியங்கள், கட்டடங்கள் வாயிலாகவும் நன்கறியலாம். ஓவியம் விஜய நகரத்தில் தந்தத்தினால் செய்யப்பட்ட பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்ட அறை இருந்தது. அதனில் இருந்த பொருள்களுடன் சிறந்த ஓவியங்களும் பலவாக இருந்தன. ‘அவை, தமது பெருநாட்டில் பணயர் முதலியோர் வாழும் வகையை அந்தப்புர மாதர் அறிந்துகொள்வதற்காகத் தீட்டப்பட்டவை’ என்று அவற்றை நேரிற்கண்ட மேனாட்டு அறிஞர் கூறியுள்ளார். அரண்மனைக்குள் சில அறைகளின் சுவர்கள் மீது ஓவியங்கள் தீட்டப்பட்டு இருந்தன. “குறிப்பிட்ட ஓர் அறைக்கு மேல் மற்றோர் அறை உண்டு. இவற்றில் பொருள்கள் இல்லை. சுவர்கள் ஓவியங்களைக் கொண்டு விளங்குகின்றன. சுவர்களும் தலையும் தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப் பட்டுள்ளன.” இங்ஙனம் சுவர்களில் ஓவியம் தீட்டல் நாட்பட்ட பழக்கமாகும். அப்பழக்கம் விஜயநகர அரசரும் மேற்கொண்டது பாராட்டத்தக்கது. அவர்கள் அதனை மேற்கொண்டனர் என்பதை, இன்று ஹம்பியில் பழுதுபட்டுக் கிடக்கும் கோவிற் சுவர்களிலும் பிற கட்டடச் சுவர்களிலும் உள்ள சிவப்புமஞ்சள் நிற ரேகைகளைக் கொண்டு உணரலாம். கோவில் மண்டப மேல் கூரையில் காணப்படும் பலவகைச் சிற்பங்கள் நிறம் தீட்டப் பெற்றவையாகக் காண்கின்றன. அரசர் சென்று அரச காரியங்களைக் கவனிக்கும் பெரிய கட்டடம் முழுவதும் திரைச் சீலைகளால் அலங்கரிக்கப் பட்டது. சுவர்கள் மிக்க அழகான ஓவியங்களைக் கொண்டவை. அக்கட்டடத்தின் நாற்புறங்களிலும் வாயில்கள் உண்டு. ஒவ்வொரு வாயிலிலும் அழகிய மாதர் இருவர் ஓவியங்கள் காண்கின்றன. அரண்மனை மாதர்கள் நடனம் பயில்வதற்கு உரிய அரங்கின் சுவர்களில் பலவகை நடன நிலைகளைக் குறிக்கும் ஓவியங்கள் அழகாகத் தீட்டப்பட்டுள்ளன. யானைகள், குதிரைகள் இவற்றின் மீது போடப்பட்ட உயர்வகைத் துணிகள் சிறந்த சித்திர வேலைப்பாடு கொண்டவை. யானைகளின் தலைமீது அரக்கர் முகங்களும், புலி, சிங்கம் முதலிய பெரிய விலங்கு உருவங்களும் தீட்டப்பட்டிருக்கும். ‘இராயர் இருப்பிடத்திற்குச் செல்லும் வழியை உணர்த்தும் வாயிலின் இருபுறங்களிலும் இரண்டு உருவச் சிலைகள் இருக்கின்றன. அவை பல நிறங்களால் அழகு பெறத் தீட்டப் பட்டுள்ளன. வலப்புறம் இருப்பது கிருஷ்ணதேவ ராயர் தகப்பனாரான நரசநாயக்கர் உருவச்சிலை. அவர் சிறிது கறுப்பு நிறம்-நல்ல உடற்கட்டு-அழகிய தோற்றம் உடையவர் என்பனவற்றை அச்சிலையைக் கொண்டு நன்கறியலாம். இடப்புறம் இருப்பது கிருஷ்ணதேவராயருடைய உருவச்சிலை. அஃது அழகிய தோற்றமும் உடற்கட்டும் நடுத்தர உயரமும் கம்பீரமான பார்வையும் கூடியதாய்க் காண்கின்றது.’ இவ்வாறு உருவச்சிலைகள் அமைத்தல் விஜயநகர அரசர்க்குப் பழக்கமானதேயாகும். விஜயநகரத்தில் உள்ள அச்சுதராயர் கோவில் திருச்சுற்றில் ஓர் அரசன், அரசி உருவச் சிலைகள் அழகிய அமைப்பில் இன்றும் காணக் கிடைக்கின்றன. திருப்பதியில் உள்ள கிருஷ்ண தேவராயர், அவர் மனைவியர் இருவர் உருவச்சிலைகளும் இப்பழக்கத்தை மெய்ப்பிக்கின்றன. பேரரசர் பழக்கத்தை அவருடைய சிற்றரசரும் பின்பற்றினர் என்பதை, மதுரை மீனாஷியம்மன் கோவிலில் உள்ள திருமலை நாயக்கர் உருவச்சிலையைக் கொண்டு அறியலாம். கட்டடக் கலை (Architecture) கிருஷ்ணதேவராயர்க்கு முற்பட்ட பேரரசர் தம் நாட்டை முஸ்லிம்களிடமிருந்து காப்பதிலேயே தம் காலத்தைக் கழித்தனர்; ஆதலின், புதிய கட்டங்கள் பலவற்றைக் கட்டவோ, கலைகள் வளர்க்கவோ அவர்கட்கு ஓய்வு ஏற்படவில்லை. ஆனால் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் பிற்பகுதி அமைதி நிறைந்தது. அதனால் அவர் பல கோவில்களைக் கட்டினார். அவற்றில் அவர் காலக் கட்டக் கலையையும் சிற்ப-ஓவியங்கலை வளர்ச்சியையும் வளமுறக் காணலாம். அவர் கட்டிய ஹஸார இராமசுவாமி கோவில், விஜயநகரப் பேரரசின் காலத்துக் கட்டடக்கலை உயர்வுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.2 கட்டடக்கலை வளர்ச்சியை அறிவிக்கும் மற்றொரு கோவில் கிருஷ்ணதேவராயர் கட்டிய விட்டலசுவாமி கோவில் ஆகும். விட்டலசுவாமி கோவிலின் கருவறை, நடுமண்டபம், முன் மண்டபம் என்பன உயரமான தளத்தின் மீது அமைந்தவை. கோவிலின் திருச்சுற்றுத் தாழ்ந்த தளத்தின்மீது அமைந்துள்ளது. திருச்சுற்றுச் சதுரமானது. திருச்சுற்றின் சில பகுதிகளில் வெளிச்சம் உள்ளே வர வசதி செய்யப் பட்டிருக்கிறது. திருச்சுற்றுக்கு வர இரண்டு வழிகள் உண்டு. திருச்சுற்றில் விட்டல சுவாமிக்குரிய ‘கல்தேர்’ இருக்கின்றது. திருச்சுற்றுக்குமேல் உள்ள கட்டட அமைப்புக் காணத்தக்கது. அதனில் ஹொய்சளரும் பாண்டியரும் யானை உருவங்களை அமைத்தனர். ஆனால் கிருஷ்ணதேவராயர் போர்ச்சுகீசிய குதிரைச் சேவகர், அவர்தம் குதிரைகள் உருவங்களை அமைத்தனர். இது காலத்திற்கேற்ற சீர்திருத்தமாகும். இக்கட்டடத்திற்கு மேற்பட்டது ‘உபானம்’ என்பது. உபானத்தில் பலவகைப் பூக்கள், பறவைகள், கட்டங்கள், இலை அமைப்புகள் முதலியன கண்கவர் வேலைப்பாடு கொண்டவை. விட்டலசுவாமி கோவில் உபானம் பார்த்து மகிழத்தக்கது. உபானத்தின்மீது இதழ் விரிந்த தாமரை மலர்கள் செதுக்கப் பட்டிருக்கின்றன. இதழ்கள் நெருக்கமாகவுள்ளன; சிறிது தடித்தும் உயர்த்தியும் காட்டப்பட்டிருக்கின்றன. இவ்வேலைப்பாடு மிக்க அழகுடையது. பதுமத்துக்கு மேலாகக் குமுதம் காணப் படுகிறது. அதனைச் சுற்றிலும் எல்லை கோலப்பட்டுள்ளது. எல்லைக்குள் பலவகைக் கட்டடங்கள் அழகுடன் அமைந்துள்ளன. குமுதத்துக்கு அப்பால் உள்ள பகுதியில் பொது வாழ்வைக் குறிக்கும் சித்திரங்கள் - நடன மாதர், இசை மாதர், மற்போர், சிலம்ப விளையாட்டுகள் முதலியன செதுக்கப் பட்டுள்ளன. இவற்றுடன் தாமரை மலர் தலைகீழாக வைக்கப்பட்டாற் போன்ற வேலைப்பாடு பார்க்க அழகானது. தூண்கள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் சதுரத் தூண்களே பெரும்பாலன. வட்டத் தூண்கள் சதுரத் தூண்களுடன் இணைப் புண்டு, அழகு வேலைகட்கு இடமாகப் பயன்பட்டன. இத்தகைய வேலைப்பாடு கொண்ட வட்டத் தூண்களை அஸார இராமசுவாமி கோவிலிற் காணலாம். தூணின் அடிப்பகுதி சதுர அமைப்புடையது. அதன்மீது அழகிய வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன. சில தூண்களின் அடிப் பகுதிகள் குதிரைச் சவாரி வீரர்களைக் கொண்ட அமைப்புடையன. சில கோவில்களில் சதுரத் தூண்கள் வட்டத் தூண்களுடன் இணைந்து காணப்படு கின்றன; சிலவற்றில் தனித்துக் காண்கின்றன. சில இரட்டைத் தூண்களின் அடிப்பகுதி சிங்க அமைப்புடன் காண்கின்றன. முதல் வரிசையில் உள்ள முக்கியமான சதுரத் தூணில் அரசர், அரசியர் உருவங்கள் செதுக்கப்பட்டதும் உண்டு. வேலூரில் கிருஷ்ண தேவராயர் கட்டிய வைகுந்தப் பெருமாள் கோவிலில் உள்ள கல்யாண மண்டபத் தூண் ஒன்றில் அவரது உருவச்சிலையையும் அரசியர் மூவர் உருவச் சிலைகளையும் காணலாம். அச்சதுரத் தூண்களில் விளக்குகள் மாலைகளைப்போலக் காணப்படும் ஒருவகை வேலைப் பாட்டைக் காணலாம். சதுரத்தூண் பல சதுரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு சதுரத்திலும் தெய்வத்தொடர்புடைய அல்லது சமயத் தொடர்புடைய அல்லது சமூகத் தொடர்புடைய உருவங்கள் - நிகழ்ச்சிகள் செதுக்கப்பட்டு இருக்கும். இத்தூணின் உச்சியில் தாமரைப்போது தொங்கவிடப் பட்டிருக்கும். கிருஷ்ணதேவராயர் காலத்தில் இத்தாமரைப் போது சிறிய அளவினதாகவே இருந்தது. இஃது அச்சுதராயர் காலமுதல் நீண்ட அளவுடையதாகக் காட்டப்பட்டது. கூரை இச்சதுரத் தூண்களுக்கு மேல் உள்ள கூரை மிக்க வேலைப்பாடு கொண்டது. அது நீளமானது; அழகிய பல வேலைப்பாடுகளைக் கொண்டது; கூரைக்கு மேல் சில அறைகள் உண்டு. அவற்றில் பலவகைத் தேவர் சிலைகள் வைக்கப் பட்டிருக்கும். இந்தக் காட்சியை விட்டலசுவாமி கோவிலிற் காணலாம். கூரையின் நான்கு முனைகளிலும் விளக்கு வைக்கத் தக்க அமைப்புக் காணப்படுகிறது. நுழைவின் இரு புறங்களிலும் கதாயுதத்தைப் பிடித்துள்ள வாயிற் காவலர் உருவச்சிலைகள் அல்லது மிக்க திறமை வாய்ந்த வேலைப்பாடு கொண்ட யானைகளின் உருவச் சிலைகள் காணப்படும். விமானம் இவை அனைத்திற்கும் மேலாகக் காண்பது விமானம். இது சில கோவில்களில் நடுமண்டபத்தின்மீது கட்டப்படும். கோபுரங்கள் காணத்தக்க கவின்பெறு வேலைப்பாடு கொண்டவை. விமானம், கோபுரம் என்பன செங்கல், சுண்ணாம்பு, மரம் இவற்றால் ஆகியவை. அவை முழுவதும் கனமுள்ள பாறைக் கற்களால் கட்டப்படல் ஆபத்தானதன்றோ? ஆதலின் அவை ஒரு பலமுள்ள பாளையின்மீது உயர்த்திக் கட்டப்பட்டன. அவை, அந்தோ! அழிந்து கிடப்பதனால் அவற்றைப் பற்றிய முழு விவரங்களையும் உள்ளவாறு உணரக் கூடவில்லை. சிற்பம் விஜயநகரச் சிற்பங்கள் இணையற்றவை. அவை கோவில்களிலும் கட்டடங்களிலும் காணப்படுகின்றன. அக்காலச் சிற்பங்களை விஜயநகரம், வேலூர், முதுபித்ரி, பட்கல் முதலிய இடங்களிற் காணலாம். விஜய நகரத்தில் உள்ள ‘வெற்றி இல்லம்’ சிற்பங்கட்குப் பெயர் பெற்றது. பெரியவும் சிறியவுமான குரங்குகள், அரசர் அயல் நாட்டுத் தூதரை வரவேற்று அளவளாவுதல், அரசரும் அரசமா தேவியரும் நடன நிகழ்ச்சியைக் காணுதல், காட்டில் மான், பன்றி முதலியவற்றைப் பெருமக்கள் வேட்டையாடுதல், அவர்களுடன் அவர் தம் பெண்டிரும் வில்லும் அம்பும் ஏந்தி வேட்டையாடுதல், பெண்கள் கண்ணாடியில் தங்களைப் பார்த்து ஒப்பனை செய்து கொள்ளுதல், பெண்கள் நடனமாடுதல், சிறைப் பட்டோரை அரசர்முன் சிற்பங்களை வெற்றி இல்லத்திற் காணலாம். அக்காட்சிகள் கண்ணையும் கருத்தையும் கவரத்தக்கவை; கற்பனைத் திறமும் கவிமதவன்மையும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பேரழகும் வாய்ந்தவை. மான்கள், நாய்கள், பாய்ந்து செல்லும் குதிரைகள், போர் வீரர் அணிவகுப்பு முதலியவற்றை உணர்த்தும் சிற்பங்கள் உயிருள்ளனபோலக் காட்சி அளிக்கின்றன. அவை, தம்மை ஒரு முறை கண்டவர் கண்களை விட்டு அகலாதவை. இசை கிருஷ்ணதேவராயர் இசையில் ஈடுபாடு உடையவர்; நல்ல இசைப் பயிற்சி உடையவர்; பல்வகைப் பண்களைக் கேட்டு அநுபவிக்கும் ஆற்றல் உடையவர். மேனாட்டு அரசர் ஒருவர் தமக்கு அனுப்பிய இசைக் கருவிகளை இராயர் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார் என்று மேனாட்டு யாத்திரிகர் குறித்துள்ளார். இராயர்தம் அரண்மனையைச் சேர்ந்த இசைமாதர் பாடுவதைக் கேட்டு மகிழ்வது வழக்கமாம். நல்ல காரியங்கள் நடைபெறும் பொழுதும் பெருமக்கள் அரசரைப் பார்க்கச் செல்லும் பொழுதும் அரண்மனையில் இன்னிசை முழங்குதல் வழக்கம். பலவகை இசைக் கருவிகள் அக்காலத்தில் இருந்தன. நாடகம் பண்டைக்காலத்தில் இருவகை நாடகங்கள் நடிக்கப் பட்டன. அவை அரசர்க்கென்று நடிக்கப்பட்டவை. பொது மக்கட்கு என்று நடிக்கப்பட்டவை என்பன. அவை முறையே ‘வேத்தியல், பொதுவியல்’ எனப்பட்டன. இவ்விருவகை நாடகங்களும் இராயர் காலத்தில் வழங்கியிருந்தன. இராயரே பெரும்புலவர் அல்லவா? அவர் செய்த ‘ஜாம்பவதி கல்யாணம்’ என்ற நாடகம் வசந்த விழாக்காலத்தில் நடிக்கப்பட்டது. அத்துடன் ‘தாயிகுந்து நாடகம்’ என்பது ஒன்றும் நடிக்கப்பட்டது. அதனில் சிறப்பும் நடித்த நட்டுவநாயகன் என்பவனுக்கும் ‘பாத்ரி’ என்ற நடனமாதிற்கும் நிலங்கள் மானியமாக விடப்பட்டன. இதிலிருந்து, அக்கால நாடகங்களில் ஆடவரும் பெண்டிரும் சேர்ந்து நடித்தனர் என்பதை நன்குணரலாம் அன்றோ? நடனம் தேவதாசிகள் விஜயநகரத்துத் தேவதாசிகள் பண்பட்ட நடனமாதர். அவர்கள் பத்து வயதிற்குள் கோவிலுக்குப் பொட்டுக்கட்டும் வழக்கத்தை மேற்கொண்டு இருந்தனர். பொட்டுக் கட்டப்பட்ட பிறகு அவர்கள் ‘தேவதாசிகள்’ எனப் பெயர் பெற்றனர். அவர்கள் மிகவும் கௌரவமாக நடத்தப்பட்டனர். பொதுமக்கள் அவர்களை இழிவாகக் கருதவில்லை. அவர்கள் நகரத்தின் சிறந்த பகுதியில் - நல்ல தெருக்களில் - மாடமாளிகைகளில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் அக்காலத்தில் எல்லா நகரங்களிலும் இவ்வாறே நல்ல தெருக்களில் வசித்து வந்தனர். அவர்கள் பிரபுக்களாலும் பொது மக்களாலும் கௌரவமாக நடத்தப் பட்டார்கள். கௌரவமுள்ள எந்த மனிதனும் அவர்கள் வீடுகட்குச் சென்றுவரலாம். அவனைப் பொது மக்கள் இழிவாகக் கருதார். தேவதாசிகள் அரச மாதேவியருடன் நெருங்கிப் பழகினர்; அவர்களுடன் இருந்து தாம்பூலம் தரித்துக் கொள்வர். அவர்கள் மற்போர்ப் பயிற்சியும் பெற்றிருந்தனர். ஆண்டுதோறும் மஹா நவமி அன்று வெற்றி இல்லத்தின் படிக்கட்டு வரை அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அன்று தேவதாசிகளுக்குள் ‘மற்போர்’ நடைபெறும். அரசரும் அரசமாதேவியரும் பிரபுக்களும் அதனைக் கண்டு மகிழ்வர். தேவதாசிகள் செல்வ நிலை இங்ஙனம் அரசரிடமும் பிரபுக்களிடமும் மதிப்புப்பெற்ற தேவதாசிகள் செல்வப் பெருக்குடையராக இருந்தனர் என்பதில் வியப்பில்லை அன்றோ? அவர்கள் அணிந்திருந்த நகைகள் விலை மதிப்பு அற்றவை. வைரம் முதலிய நவரத்தினங்கள் வைத்து இழைக்கப்பட்ட கழுத்தணிகள், கடையங்கள், வளையல்கள், ஒட்டியாணம், காலணிகள் முதலியவற்றை அம்மாதரசியர் மாண்புற அணிந்திருந்தனர். அவர்கட்குச் சொந்தமாக நிலங்கள் இருந்தன; பணியாளர் இருந்தனர்; பிற போக பாக்கியங்கள் இருந்தன. அந்த நடன மாதர் அணிந்திருந்த பலவகை நகைகளையும் அவர்கள் ஆடிய நடன வகைகளையும் ஹஸார இராமசுவாமி கோவில் சிற்பங்களிலும் வெற்றி இல்லத்துச் சிற்பங்களிலும் கண்டு மகிழலாம். நடன உடை நடன மாதர் உடைய விசேடம் பல வகைப்பட்டது. கால்களில் சல்லடம் அணிந்து உடம்பில் கச்சை அணிந்து கொண்டு நடனம் செய்தல் ஒரு வகை. அவர்கள் மார்பில் ஆடையில்லை. பலவகைக் கழுத்தணிகளே மார்பை மறைத்திருத்தன. இப்பழக்கம் மலையாளத்திலும் ‘பலி’ என்னும் தீவுகளிலும் இன்றும் இருந்து வருகிறது. அரைக்கச்சை மட்டும் அணிந்து நடனம் ஆடுதல் மற்றொரு வகை. நடனக்கலை தேவதாசிகள் நடனக்கலையை நன்கு வளர்த்து வந்தனர். மஹாநவமி விழாவில் ஒவ்வொருநாள் காலையிலும் கிருஷ்ணதேவராயர் வெற்றி இல்லத்தில் கொலுவிருக்கையில் நடனம் நடைபெற்று வந்தது. தேர்விழாக் காலங்களிலும் நடனம் நடைபெற்றது. கோவில்களில் விக்கிரகங்கட்கு எதிரில் சனிக்கிழமை தோறும் தேவதாசிகள் நடிப்பது வழக்கம். நடனம் நடைபெற்ற அன்று மாலை அவர்கள் மற்போர் புரிதலும் மரபு. அக்காலத்து நடனமகளிர் தக்க ஆடல் ஆசிரியரிடம் பயிற்சி பெற்றனர், செய்வதற்கு அருமையான நடன வகைகளை நடத்திக் காட்டினர் என்பன விஜய நகரத்துச் சிற்பங்களைக் கொண்டு அறியக் கிடக்கின்றன. நடனமண்டபம் அரண்மனைக்குள் நடனமண்டபம் ஒன்று இருந்தது. அங்குத்தான் அரசமாதேவியர் நடனக் கலையைக் கற்றனர். நடனமண்டபம் நீளமானது. அதன் தூண்கள் சிற்பங்கள் நிறைந்தவை. சில தூண்கள் பாதியளவாக இருந்தன. அவை உள்ளே கூடாகவும் பளபளப்பாகவும் இருந்தன. தூண்களின் மேற்புறத்தில் யானைகள் முதலிய உருவச்சிலைகள் வைக்கப் பட்டிருந்தன. தூண்களின் மேற்புறம் திறந்திருந்தால். மேற்சொன்ன விலங்கு முதலிய உருவச்சிலைகட்குப் பின்னர் வைக்கப்பட்டிருந்த வேறு உருவங்கள் நன்கு தெரியத்தக்கனவாக இருந்தன. முதுகுக்கு முதுகு திருப்பப்பட்ட நிலையில் இருந்த சித்திரங்கள் காணப்பட்டன. இச்சித்திரங்களும் சிற்பங்களும் பலவகை நடனச் சிற்பங்களை அழகுபடுத்தி நின்றன. நடனச் சிற்பங்களும் ஓவியங்களும் நடனக்கலையை அம்மண்டபத்தில் பயின்ற மாதர்க்குப் பேருதவியாக இருந்தன. கிருஷ்ணதேவராயர் நடன மண்டபத்தில் இருந்து தம் அரண்மனை மாதரது நடனப் பயிற்சியைக் கவனிப்பது வழக்கம். அவர் அமரும் இடம் தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்ட தரையையும், சுவர்களையும் பெற்றிருந்தது. ஒரு சுவரின் நடுவில் பன்னிரண்டு வயதுடைய நடனப் பெண்ணின் தங்கச்சிலை வைக்கப்பட்டு இருந்தது.3 கலைகள் வளர்த்த காவலர் இதுகாறும் கூறப்பட்டவை நடன மண்டபத்தை நேரிற்கண்ட மேனாட்டறிஞர் கூற்று. அம்மண்டபம் நமது தவக் குறைவால் அழிக்கப்பட்டு விட்டது. இசை, நடனம் முதலிய நாகரிகக் கலைகளை நன்முறையில் போற்றி வளர்த்த கிருஷ்ணதேவராயர் நாகரிக உலகம் எங்ஙனம் மறத்தல் கூடும்? அடிக்குறிப்புகள் 1. Sewell-A Forgotten Empire, PP. 250, 277, 285-289 2. “Although comparatively a small building it is one of the most perfect specimens of Hindu temple architecture of the Vijayanagara period in existence.” - Longhurst, Humpi Ruins. P.69 3. Sewell, A Forgotten Empire, PP. 288-9.. 9. அரசியல் பெருநாட்டுப் பரப்பு மேற்குக் கரையில் கோவாவிற்குத் தெற்கே இருந்த அங்கோலா என்ற துறைமுக நகரத்திலிருந்து தார்வரர் - இராயச்சூர் வழியே கிருஷ்ணையாற்று முகத்துவாரம் வரை இழுக்கப்படும் கோடு விஜயநகரப் பெருநாட்டின் வட எல்லையாகும்; தெற்கே சேரநாடு தவிர எஞ்சிய நிலப்பகுதி முழுவதும் பெருநாட்டைச் சேர்ந்திருந்தது. மக்கள் தொகை பெருநாடு மக்கள் தொகையை மிகுதியாகப் பெற்றிருந்தது. நிலக்கோலோ கொண்டி, அப்துர் ரஸாக், பார்போசா, பயெஸ் என்ற அயல்நாட்டு யாத்திரிகர், “விஜயநகரப் பெரு நாட்டில் மக்கள் தொகை அதிகம். நன்றாக ஆராய்ந்துபாராமல் எண்ணிக்கை கூற இயலாது. நாடெங்கும் கிராமங்களும் தனியூர்களும் நகரங்களும் நிறைந்துள,” என்று குறித்துள்ளனர். மூர்லண்ட் என்பவர் கணக்குப்படி விஜயநகரப் பெருநாட்டின் மக்கள்தொகை கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஏறக்குறைய 180 லக்ஷம் என்னலாம். நகரங்கள் இராயர் காலத்தில் பெருநாட்டில் இருந்த நகரங்கள் யாவை என்பதைக் காண்போம்: மேற்குக் கரையில் அங்கோலா, மிர்ஜான், தஹானாவர், பத்கல், மைந்தூர், பாரகூர், பஸ்ரூர், மங்களூர் முதலியன; பெருநாட்டின் நடுப்பகுதியில் இராயச்சூர், ஆதவானி, ஆனெகொந்தி, விஜயநகரம், பெனுகொண்டா, ஸ்ரீரங்கபட்டணம், துவாரசமுத்திரம், இக்கேரி, பங்காபுரம் என்பன குறிக்கத்தக்கவை; கிழக்குக்கரைப் பகுதியில் ஸ்ரீசைலம், கொண்ட வீடு, உதயகிரி, காளத்தி, திருப்பதி, சந்திரகிரி, புலிகட், மயிலாப்பூர், காஞ்சி, சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், திருநெல்வேலி, இராமேசுவரம், தனுஷ்கோடி என்பன முக்கியமானவை. இந்த நகரங்களுள் பெரியதும் சிறந்ததும் விஜயநகரமே ஆகும். அதுவே பெருநாட்டின் கோநகரம், கிருஷ்ணதேவராயர் காலத்துத் தலைநகரை, (1) விருபாக்ஷர் கோவிலையும் பெரிய கடைத் தெருவையும் தன்னகத்தே கொண்ட ஹம்பி, (2) அரண்மனை, அரசியற் கூடங்கள், வெற்றி இல்லம், ஹஸார இராமசுவாமி கோவில் முதுலியவற்றைக் கொண்ட நடுப்பகுதி, (3) கிருஷ்ண தேவராயர் அமைத்த நாகலாபுரம் (இக்கால ஹாஸ்பேட்டை) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். இம்மூன்று பகுதிகளும் தண்ணீர் வசதி கொண்டது. துங்க பத்திரையிலிருந்து பல கால்வாய்கள் வெட்டப்பட்டு நகரத்தின் பகுதிகளில் இடம் பெற்றிருந்தன. நகரத்தின் நடுப்பகுதி உயரமான இடத்தில் அமைந்திருந்ததால் கிணற்று நீரே பயன் படுத்தப்பட்டது. கிருஷ்ணதேவராயர் நாகலாபுரத்தில் பெரிய ஏரியைத் தோற்றுவித்தார். விஜயநகரத்தில் ஒரு லக்ஷம் வீடுகள் இருந்தன வென்று அயல் நாட்டு யாத்திரிகர் குறித்துள்ளனர். எனவே விஜயநகர மக்கள்தொகை ஏறத்தாழ நான்கு அல்லது ஐந்து லக்ஷம் என்னலாம். பயிர்த் தொழில் பெருநாட்டில் பயிர்த்தொழில் மிகுதியாக நடைபெற்றது. கன்னட நாட்டில் கரையோரப் பகுதிகளில் ஆட்டுப் பண்ணை, மாட்டுப் பண்ணைகள் மிகுதியாக இருந்தன. நெல் மிகுதியாகப் பயிர் செய்யப்பட்டு மலையாள நாட்டிற்கு அனுப்பப்பட்டது. கோவாவிற்கு அருகில் கோதுமை, இராகி, கீரை வகைகள், பருத்தி, எள் முதலியன நன்கு பயிராயின. ஆடுகளும் மாடுகளும் மிகுதியாகக் காணப்பட்டன. மத்கல் என்னும் இடத்திலிருந்து விஜயநகரம் வரும் சாலையின் இரு பக்கங்களிலும் நெல், சோளம், இராகி, கம்பு, அவரை, மொச்சை, கோதுமை, பருத்தி முதலியன மிகுதியாகப் பயிராயின. ஆடுகள், மாடுகள், எருமைகள் மிகுதியாகக் காணப்பட்டன. தார்வார் ஜில்லாவில் உயர்ந்த விதைகள் சேகரித்து விற்கப்பட்டன; கால்நடைகளைப் பெருக்கும் பண்ணைகள் மிகுதியாக இருந்தன. புலிகட் முதலிய கிழக்குப் பகுதியில் நெல் மிகுதியாகப் பயிர் செய்யப்பட்டது; இறைச்சி மிகுதியாகக் கிடைத்தது; கோதுமையும் காய்கறி வகைகளும் பயிராயின. நீர்ப்பாசன வசதி பெருநாட்டில் இவ்வாறு யாவும் மிகுதியாக விளைந்தன. எனின், அவ்விளைவுக்கு அடிப்படையாக நீர்ப்பாசன வசதிகள் செவ்வையாக இருந்திருத்தல் வேண்டும் அல்லவா? பெருநாட்டில் அத்தகைய வசதிகள் இருந்தனவா? விஜயநகரத்தின் அருகில் உள்ள கடப்பை, கர்நூல், பல்லாரி, அனந்தப்பூர் ஜில்லாக்களில் ஆயிரக்கணக்கான குளங்கள், நூற்றுக் கணக்கான ஏரிகள் தோண்டப்பட்டன. கடப்பை ஜில்லாவில் 3,574 சதுர மைல் உள்ள நிலப் பரப்பில் 4,194 குளங்கள் இருந்தன. அவை இப்பொழுது பாழ்பட்டுக் கிடக்கின்றன. எனின், விஜயநகர அரசர்கள் பயிர்த் தொழிலை வளர்க்க எவ்வளவு பாடுபட்டனர் என்பதை நன்கறியலாம் அன்றோ? “அரசாங்கம் நீர்ப்பாசன வசதிகட்காகக் குளங்களையும் ஏரிகளையும், கால்வாய்களையும் அமைக்கவேண்டும்; ஏழைக் குடியானவர்க்கு நிலங்களைக் குத்தகைக்கு விட்டுவிடவேண்டும். இந்த இருவகை முயற்சியால் அரசாங்கத்திற்கு மிகுந்த வருவாய் கிடைக்கும்,” என்று கிருஷ்ண தேவராயர் தமது ஆமுக்த மால்யதாவில் குறித்திருத்தல் நோக்கத்தக்கது. இராயர் நாகலாபுரத்தில் பெரிய குளத்தைத் தோண்டினார் அல்லவா? அக்குளத்து நீர் ஊர் மக்கட்குப் பலவகையிற் பயன்பட்டது. குளத்திலிருந்து பல கால்வாய்கள் நீரை வயல்கட்குக் கொண்டு சென்றன. மக்கள் நீராடவும் குடிக்கவும் அக்குளத்து நீரைப் பயன்படுத்தினர்; கால்வாய்களில் கால் நடைகள் குளிப்பாட்டப்பட்டன. கிருஷ்ணதேவராயர் நாகலாபுர மக்கட்கு, சுற்றியிருந்த நிலங்களைத் தண்ணீர் வரியில்லாமல் ஒன்பதாண்டுகள் பயிரிட உரிமை அளித்தார். மக்கள் மனமகிழ்வுற்று ஊக்கமாகப் பயிரிட்டு நிலவரியைச் செலுத்தினர்; நிலங்களை நல்ல விளைச்சலுக்குரிய முதல்தர நிலங்களாக மாற்றினர். இராயர் கொர்கொல் என்னும் இடத்தில் அணைக் கட்டும் கால்வாயும் அமைத்தார். அக்கால்வாய் இன்றும் நாட்டு மக்கட்குப் பயன்பட்டு வருகின்றது. இராயருடைய மாகாணத் தலைவரான கொண்டமரசய்யன் என்பவர் உதயகிரி இராச்சியத்தில் ‘அனந்தசாகரம்’, ‘காலுவாயி’ என்ற பெயர் கொண்ட பெரிய குளங்களை அமைத்தார். இவ்வாறே மாகாணத் தலைவர் பலர் தத்தம் மாகாணங்களிற் செய்த நீர்ப்பாசன வசதிகள் பலவாகும். கைத்தொழில் வளர்ச்சி கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் கைத்தொழில் வளர்ச்சியில் ஐரோப்பிய நாடுகளைவிட இந்தியா மிக்க வளர்ச்சி பெற்றிருந்தது. இந்தியா அக்காலத்தில் அயல்நாடுகளை உணவுக்கோ-உடைக்கோ-பிற பொருள்களுக்கோ எதிர்பார்க்க வில்லை. இந்திய மக்கட்கு வேண்டியன அனைத்தும் இந்தியாவிலேயே கிடைத்தன. அக்கால அயல்நாட்டுப் பொருள் குதிரைகளும் அரசர்க்குத் தேவையான ஆடம்பரப் பொருள்களுமேயாகும். ஆதலின் பொது மக்கள் அயல்நாட்டு இறக்குமதிப் பொருள்களை எதிர்பாராது வாழ்ந்துவந்தனர். நெசவுத் தொழில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கோவன்புத்தூர், மதுரை, புலிகட் முதலிய இடங்களில் அழகிய மெல்லிய கண் கவரத்தக்க விலை உயர்ந்த பருத்தி ஆடைகளும், பட்டாடைகளும் நெய்யப்பட்டன. அவை மலாக்கா, பெரு, சுமத்ரா, கூர்ஜரம், மலையாளம் முதலிய அயல்நாடுகட்கு அனுப்பப் பட்டன. வைரம்-பொன்-வெள்ளிப் பொருள்கள் குத்திக்குத் தென்மேற்கே இருபது கல் தொலைவில் உள்ள வச்சிரக்குரூர் என்னும் இடம் அக்காலத்தில் வைரத்திற்குப் பெயர் பெற்றதாக இருந்தது. அங்கு இருந்த அரசாங்க அதிகாரி அங்குக் கிடைத்த உயர்தர வைரக் கற்களை எல்லாம் இராயருக்கு அனுப்பிவந்தான். விஜய நகரத்திலேயே மலைப் பாறைகளிடம் வைரச் சுரங்கம் இருந்ததென்று 1534-இல் இந்தியாவிற்கு வந்த கார்ஸிகாடிவொர்தா என்பவர் குறித்துள்ளார். அவர் தக்கணத்தில் வைரம் கிடைக்கும் இடம் வேறொன்றையும் குறித்துள்ளார். போலி வைரங்கள், புஷ்பராகக் கற்கள் முதலியனவும் மிகுதியாகக் கிடைத்தன. பொன் நகைகள், பொன் பாத்திரங்கள் முதலியன அரண்மனையிலும் பிரபுக்கள் இல்லங்களிலும் மிகுதியாகப் பயன்பட்டன. அரசர் கோவில்கட்குப் பெருவாரியாக நகைகளைத் தானம் செய்தார். அவர் திருக்காளத்தி ஈசுவரர்க்கு மணிகள் பதித்த மாலை, பூசைக்குரிய தங்கப் பாத்திரங்கள் முதலியவற்றைத் தானமாகக் கொடுத்தார். இங்ஙனம் அவர் கோவில்கட்குச் செய்தளித்த விலையுயர்ந்த பொருள்கள் பலவாகும். தேவதாசிகள் அணிந்திருந்த பலவகைப்பட்ட நகைகள் முன்னரே கூறப்பட்டன அல்லவா? போர் வீரர்கள் அணிந்திருந்த நகைகள் பல. கரிகளும் பரிகளும் மணிகள் பதித்த பொன் பட்டங்களை முகத்தில் அணிந்திருந்தன. அவற்றின் மீது போடப்பட்ட பட்டாடைகள் பொன் வேலைப்பாடு கொண்டவை. போர்வீரத் தலைவர்கள் பயன்படுத்திய வாள்களின் கைப்பிடிகள் மணிகள் பதித்தவை. பொது மக்களுள் ஆடவர் காதணிகளை அணிந்தனர். பெண்கள் காதணி, கழுத்தணிகள், மூக்கணி, பவளமாலை, முததுமாலை முதலியவற்றை அணிந்தனர். வெள்ளியிலும் நகைகளும் பாத்திரங்களும் செய்யப்பட்டன. பிற உலோகங்கள் செம்பும் இரும்பும் மிகுதியாகப் பயன்பட்டன. இரும்பு பத்கல் என்னும் நகரத்திலிருந்து மிகுதியாகக் கொண்டு வரப்பட்டது. வாள், வேல், ஈட்டி, போர்க் கோடரி, வில், அம்பு முதலியன அக்காலப் போர்க்கருவிகள் ஆகும். விற்கள் பொன்முலாம், வெள்ளிமுலாம் பூசப்பட்டிருந்தன. விஜயநகரப் பேரரசின் போர் வீரர் பத்து லக்ஷத்துக்கு மேற்பட்டவர்; தேவைப்படின் மற்றொரு பத்துலக்ஷம் வீரர் குவிந்துவிடுவர் எனின், போர்க் கருவிகளின் எண்ணிக்கையை எவ்வாறு கூறுவது! ஆகவே, உலோகத் தொழிலாளர்க்கு எப்பொழுதுமே ஓயாத வேலை இருந்துவந்தது என்று கூறுவதே பொருத்தமாகும். செம்பு, ஈயம், இரும்பு என்பன வீட்டுப் பொருள்கள் செய்ய மிகுதியாகப் பயன்பட்டன. விஜயநகரத்தில் செம்பு, பித்தளை, வெண்கலக் கடைகள் மிகுதியாக இருந்தன. வாசனைப் பொருள்கள் சந்தனம், கஸ்தூரி, புனுகு, சவ்வாது முதலிய மணப் பொருள்கள் விஜய நகரத்தில் விற்கப்பட்டன. சந்தனக் கட்டைகள் சேரநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டன. ரோஜாப் பூக்கள் நாள்தோறும் தலைநகரத்தில் விற்கப்பட்டன. அவற்றை விற்கும் கடைகள் மிகப் பலவாக இருந்தன. ரோஜா மலரை அரச குடும்பத்தினரும் பெருமக்களும் மிகுதியாகப் பயன்படுத்தினர்; நீராடிய பிறகு சாம்பிராணிப் புகை, அகிற்புகை இவற்றைக் கூந்தலுக்கு ஊட்டினர். தொழிலாளர் கூலி வேலையாள் வேலை தொடங்குமுன் வேலை தந்தவர் வீட்டில் உண்பான்; வேலை முடிந்தபிறகு ஒரு பணம் பெற்று மீள்வான். அக்காலக் குதிரைச் சேவகர், குதிரையைப் பழக்குவோர், வண்ணார், தச்சர், கொல்லர் முதலிய அரண்மனைப் பணியாளர் பலர் அன்றாடம் கூலி பெற்றனர். அரண்மனைக் கணக்கன் அரண்மனை வெளிவாயிலில் இருந்து அவர்கட்குக் கூலி தருதல் வழக்கம். அயல்நாட்டு வாணிகம் ‘கிருஷ்ணதேவராயர் காலத்துக்கு முன்வரை அயல் நாட்டு வாணிகம் அராபியர், அபிசீனியர், மூர் வகுப்பார் முதலிய முஸ்லிம்கள் கையில் இருந்தது; ஆனால் இராயர் காலத்தில் போர்ச்சுகீசியர் குதிரைகளையும், முத்துக்களையும், கண்ணாடிப் பொருள்களையும் விஜய நகரப் பெரு நாட்டிற்குக் கொண்டுவந்து வாணிகம் செய்தனர்; பெருநாட்டிலிருந்து அரிசி, ஆடை, சர்க்கரை, இரும்பு, வாசனைப் பொருள்கள் முதலியவற்றை வாங்கி அயல்நாடுகட்குக் கொண்டு சென்றனர். பஸ்ரூர், பாரகூர், மங்களூர் இவற்றிலிருந்து அரிசி மலையாளநாடு, மாலத்தீவுகள், ஏடன் முதலிய இடங்கட்குக் கொண்டு செல்லப்பட்டது. இரும்பு பத்கல் நகரத்திலிருந்து மலையாளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. போர்ச்சுகீசியரும் பெரு நாட்டு வணிகரிடம் இரும்பை வாங்கினர்.பத்கல்லிலிருந்து சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது. அராபியக் கப்பல்கள் பத்கல்லிலிருந்து வாசனைப் பொருள்களை ஏற்றிச் சென்றன.’ விஜயநகரப் பேரரசு மேற்கே போர்ச்சுகல் முதல் கிழக்கே சீன நாடுவரை அயல்நாட்டு வாணிகம் செய்துவந்தது. இவ்வளவு பரந்த நிலையில் வேறு எந்தத் தென் இந்திய அரசும் கடல்வாணிகம் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜயநகரப் பெருநாட்டில் அப்தூர் ரஸாக் என்ற யாத்திரிகர் பிரயாணம் செய்தவர். அவர் அப்பெருநாட்டில் முந்நூறு துறைமுகங்கள் இருந்தன என்று குறித்துள்ளார். மேற்குக் கரையில் மிகச் சிறந்த துறைமுகம் கள்ளிக்கோட்டை என்பது. கிருஷ்ணதேவராயர் கடல்வாணிகத்தில் மிக்க அக்கறை கொண்டவர். அவர் தாம் இயற்றிய ஆமுக்தமால்யதாவில், “அரசன் தன் நாட்டுத் துறைமுகங்களை நன்னிலையில் வைத்திருத்தல் வேண்டும். பரிகள், கரிகள், நவமணிகள், சந்தன மரங்கள், முத்துக்கள் முதலியன பெரிய அளவில் இறக்குமதியாகத் தக்க வசதி செய்துதருதல் வேண்டும். புயற்காற்றினாலோ - உடல் நலிவாலோ - கப்பல் கவிழ்வதாலோ தன் நாட்டுக் கரையை அடையும் கப்பல் வாணிகரையும் மாலுமிகளையும் அரசன் அக்கரையோடு கவனித்து வேண்டும் உதவிகளைச் செய்ய வேண்டும்; பெருநாட்டில் உள்ள தோட்டங்கள், பண்ணைகள், கரங்கங்கள் முதலியவற்றைத் தன் நம்பிக்கைக்கு உரிய அதிகாரிகளிடமே ஒப்புவித்தல் வேண்டும்; கரிகளையும் பரிகளையும் கொணர்ந்து விற்கும் அயல்நாட்டு வணிகர்க்கு வேண்டும் மாளிகை அளித்து, அவர்கட்கு உணவு-உடைகளை வழங்கி, அவர்களை நாடோறும் கண்டு அளவளாவி, மிக்க இலாபத்தை அளித்துப் பலவகைப் பரிசுகளையும் கொடுப்பின், கரிகளும் பரிகளும் பகை அரசர்க்கு விற்கப்படா,”1 என்று குறித்துள்ளார். இதுவே இராயர் கையாண்ட முறை. அறிவும் அன்பும் மிக்க இந்த முறையினால் அவர், அராபிய வணிகரையும் போர்ச்சுசீசிய வணிகரையும் தம்பால் இழுத்துக் கொண்டார். அதனால் அயல்நாட்டு வாணிகம் மிக்க உயரிய அளவில் செம்மையாக நடைபெற்று வந்தது. இறக்குமதிப் பொருள்கள் பெருநாட்டார் அயல்நாட்டாரிடமிருந்து வாங்கியவை குதிரைகள், யானைகள், முத்துக்கள், பவளம், செம்பு, இரசம், சீனப்பட்டு, வெல்வெட் முதலியனவாகும். ஆண்டுதோறும் ஆயிரம் குதிரைகள் தமக்கு வேண்டுமென்று கிருஷ்ணதேவராயர் கோவாவில் இருந்த போர்ச்சுகீசிய வணிகர் தலைவரைக் கேட்டிருந்தார். யானைகள் ஈழத்திலிருந்து இறக்குமதி ஆயின. ஆர்மஸ் என்னும் இடத்திலிருந்து முத்துக்கள் வந்தன. போர்ச்சுகீசியர் செம்பு, பவளம், கண்ணாடிப் பொருள் இவைகளை விஜயநகரப் பெருநாட்டிற்கு உதவினர். சீனர் பட்டினை உதவினர்; வாசனைப் பொருள்களையும் மருந்து வகைகளையும் வாணிகம் செய்தனர். வங்காளமும் மலேயாவும் வாசனைப் பொருள்களையும் மருந்து வகைகளையும் விற்றன. மெக்காவிலிருந்து வெல்வெட் இறக்குமதியாயிற்று. இங்ஙனம் பல நாடுகளிலிருந்து விலையுயர்ந்த பொருள்கள் விஜயநகரப் பெருநாட்டில் இறக்குமதியாயின. கரையோர-உள்நாட்டு வாணிகம் கரையோர வாணிகத்திலும் உள்நாட்டு வாணிகத்திலும் பங்கு கொண்டவர் முஸ்லிம்கள், மலையாளத்தார், தெலுங்கு - கன்னட - தமிழ்ச் செட்டியார் ஆவர். இருவருள் முதல் இருவரும் கரையோர வாணிகம் செய்துவந்தனர்; பின்னவர் மூவரும் உள்நாட்டு வாணிகம் செய்தனர். போர்ச்சுகீசியர் இந்தியாவிற்கு வருவதற்கு முன் கரையோர வாணிகம் முஸ்லிம்கள் கையிற்றான் இருந்தன. போர்ச்சுகீசியர் வந்தபிறகு அந்த வாணிகம் ஓரளவு குன்றியது. எனினும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் அவர்கள் மிகுதியாகவே வாணிகம் செய்துவந்தனர். அவர்கள் முக்கியமான இந்தியத் துறைமுக நகரங்களில் குடியேறி இருந்தனர். அவர்கள் மேற்கு நாடுகளிலிருந்தும் கிழக்கு நாடுகளிலிருந்தும் பொருள்களைக் கொண்டுவந்து, இந்தியாவின் மேற்குகக் கரையிலும் கிழக்குக் கரையிலும் வாணிகம் செய்துவந்தனர். மலையாளிகள் மிக்க சுறுசுறுப்பு வாய்ந்தவர். அவர்கள் தங்கள் நாட்டுப் பொருள்களான வாசனைப் பொருள்கள், தென்னைமரப் பொருள்களைக் கொண்டு செய்யப்பட்ட பலவகைப் பொருள்கள், பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனஞ்சாறு முதலியவற்றைக் கன்னட நாட்டிற்குக் கொண்டுவந்து கொடுத்துப் பதிலுக்கு அரிசியும் இரும்பும் பெற்றுச் சென்றனர். செட்டிமார் உள்நாட்டு வாணிகத்தைத் திறம்படச் செய்து வந்தனர். தமிழ்நாட்டுச் செட்டிமார் நல்ல செல்வநிலை பெற்றவர். விலைமதிப்புயர்ந்த நவரத்தினங்களையும், முத்துக்களையும் மிகுதியாகக் கொண்டுசென்று வாணிகம் செய்தனர். அவர்கள் ஒவ்வொரு வாணிகத் துறையிலும் தந்திரத்திற் பெயர் பெற்றிருந்தனர். உள்நாட்டு வாணிகப் பொருள்கள்-பலவகைத் தானியங்கள், மிளகாய், புளி, மிளகு முதலிய பொருள்கள், கோதுமை, காய்கறிகள், உப்பு, தேங்காய், நெய், வாசனைப் பொருள்கள், சர்க்கரை, வெற்றிலைப் பாக்கு, சாய வகைகள், இரும்பு-தகரம்-செம்புத் தகடுகள் இவற்றால் ஆன பொருள்கள், பருத்தி, நூற்கட்டு, கோணிப் பைகள் முதலியன அக்கால உள்நாட்டு வாணிகப் பொருள்கள் ஆகும். பொருள்கள் சென்ற வகை இப்பொருள்கள் எருது, கோவேறு கழுதை, எருமை முதலியவற்றின் மீதும், கூலியாட்கள்மீதும் கொண்டு செல்லப்பட்டன. சில சமயங்களில் பெரிய இரட்டை மாட்டு வண்டிகளிலும் காவடிகளிலும் கொண்டு செல்லப் பட்டன. மலையாள நாட்டிலிருந்து கழுதைகள் மீது விஜய நகரத்திற்கு மிளகு கொண்டு செல்லப்பட்டது. ஆயிரக் கணக்கான எருதுகள் பண்டப் பொதிகளை ஏற்றிக்கொண்டு விஜயநகரத்திலிருந்து பத்கல் துறை முகத்திற்குச் சென்றன; இங்ஙனமே அந்தந்த ஊர்ப் பொருள்கள் பிற மாகாணங்கட்குக் கொண்டு செல்லப்பட்டன. இருபது அல்லது முப்பது எருதுகட்கு ஒரு மனிதன் வீதம் உடன்செல்வது வழக்கம். பொருள்கள் சென்ற வழிகள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் விஜயநகரம் தென் இந்தியாவின் நடுவிடமாக விளங்கியது. அதனால் அத்தலை நகரத்திலிருந்து பல பாதைகள் பெருநாடு முழுவதும் சென்றன; ஒரு பாதை பங்காபூர் வழியாகக் கோவாவிற்குச் சென்றது; மற்றொன்று பங்காபூரிலிருந்து ஹொனாவர் வழியாகப் பத்கல் துறைமுக நகரத்திற்குச் சென்றது; தலைநகரிலிருந்து பெனு கொண்டா, சந்திரகிரி, திருப்பதி, புலிக்கட் இவற்றின் வழியாக மயிலாப்பூரை அடையப் பெரும்பாதை ஒன்று இருந்தது; மற்றொரு பாதை சிவசமுத்திரத்திற்கும் ஸ்ரீரங்கப் பட்டணத்திற்கும் சென்றது; ஒன்று ஆதவாணி, இராயச்சூர் என்னும் நகரங்கட்குச் சென்றது; பிறிதொன்று உதயகிரி, கொண்டவீடு, கொண்டபல்லி-பிறகு கடலோரமாகச் சிம்மாசலம், ஸ்ரீகூர்மம் முதலிய இடங்கட்குச் சென்றது; மற்றொரு பாதை விஜய நகரத்திலிருந்து புறப்பட்டுத் திருப்பதி, காளத்தி, காஞ்சி, சிதம்பரம், மதுரை, இராமேசுவரம், தனுஷ்கோடி முடியச் சென்றது. நாணய மாற்று விஜயநகர ஆட்சியில் பொன் நாணயங்களே மிகுதி. அரசாங்க முத்திரையிடப்பட்ட நாணயம் வராஹம் என்பது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் கீழ்வரும் நாணயங்கள் வழக்கில் இருந்தன. 1. தங்க நாணயம் வராஹன் 2. தங்க நாணயம் அரை வராஹன் 3. தங்க நாணயம் கால் வராஹன் 4. தங்க நாணயம் பணம் (1/20 வராஹன்) 5. வெள்ளி நாணயம் தர் (1/60 வராஹன்) 6. செம்பு நாணயம் ஜிதல் (1/90 வராஹன்) பொருள் விலை ஒவ்வொரு பொருளின் விலை மதிப்பு மிகக் குறைவானது. விஜய நகரத்தில் அரிசி, கோதுமை, சோளம் கேழ்வரகு, கொள்ளு முதலிய தானிய வகைகளும் கொட்டை வகைகளும் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் மிக்க மலிவான விலைக்கே கிடைத்தன. ஒரு கோழியின் மிதிப்பு அரையணா; ஆறு அல்லது எட்டுக் கௌதாரிகளின் விலை ஒன்றரை அணா; ஒரு பணம் (எட்டணா மதிப்பு) கொடுத்து மூன்று திராiக்ஷக் குலைகள் வாங்கலாம்; பன்னிரண்டு ஆடுகளை ஐந்து ரூபாய்க்குப் பெறலாம். விஜயநகரத்திற்கு வெளியே மேலும் குறைந்த விலைக்கே கிடைத்தன. எனவே, மக்கள் மிகக் குறைந்த பணச் செலவில் சுகமாக வாழ்ந்து வந்தனர் என்பது தெளிவாகிறது அல்லவா? பெருமக்கள் வாழ்க்கை அரசர், பெருமக்கள் தேவதாசிகள், உத்தியோகஸ்தர்கள் என்பர் உல்லாச வாழ்வு வாழ்ந்தனர். அரசர் ஆண்டுதோறும் அரைக்கோடி வராஹன் சேர்த்து வைப்பது வழக்கம். ஆயின், மாகாணத் தலைவர்கள், அமைச்சர்கள், சேனைத் தலைவர்கள், பிற அலுவலாளர் என்பவர் சேர்த்து வைப்பதில்லை. அரசர் தேவைப்படும்பொழுதோ - தம்மீது சினங்கொள்ளும் பொழுதோ தம் பொருளைக் கைப்பற்றிக் கொள்வார் என்ற அச்சத்தினால் அவர்கள் ஈட்டிய பொருளை நன்றாகச் செலவிட்டுச் சுக வாழ்வு வாழ்ந்து வந்தனர். இல்லங்கள் நகரத்தில் அரசர் அரண்மனை நடுநாயகம் போன்றது. அதனுள் பல மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் மலர்ச் சோலைகளும் செய்குளங்களும் விளையாடும் வெளிகளும் இருந்தன. மாகாணத் தலைவர், அமைச்சர் முதலிய பெருமக்கள் விடுதிகளும் இவ்வாறே அமைந்திருந்தன. தலைநகரத்தில் அரண்மனை அடுத்திருந்த தெருக்களில் பெருமக்கள் வாழ்ந்திருந்தனர். அவர்தம் இல்லங்கள் நன்முறையில் - திடமாக - கண்கவர் வேலைப்பாட்டுடன் கட்டப்பட்டிருந்தன. விரூபாக்ஷர் கோவிலுக்கு எதிரில் அமைந்திருந்த அகன்று நீண்ட தெரு, அழகிய மாடங்களைக் கொண்ட இல்லங்களைப் பெற்றிருந்தது. உடை பெருமக்கள் இக்கால ஆந்திரர் கட்டுவது போலப் பல மடிப்புகளுடன் கூடிய வேஷ்டியை அரையிற் கட்டிவந்தனர்; உடம்பில் நீண்டு தொங்கிய சட்டையை அணிந்தனர்; தலையில் பாகை அல்லது ஒரு வகைத் தொப்பியை அணிந்தனர்; காலுக்குச் செருப்பணிந்தனர்; தோள்மீது மடிப்புள்ள மேலாடைகளைப் போட்டிருந்தனர்; பெருமக்கள் வீட்டுப் பெண்மணிகள் பத்துமுழ நீளமுள்ள மெல்லிய வெள்ளைப் பருத்திப் புடைவைகளையும் பட்டுப் புடைவைகளையும் உடுத்தினர்; பட்டுடன் ஜரிகைவேலை செய்யப்பட்ட தோற் செருப்புகளை அணிந்தனர்; கூந்தலை நன்றாகச் சீவித் தலைமீது முடிந்தனர். உணவு அரசர் கொக்கு, புறா, கோழி, ஆட்டிறைச்சி முதலியவற்றை உண்டனர்; பிராமணர், வீரசைவர், சமணர் நீங்கப் பிறர் அனைவரும் இறைச்சி உணவை உட்கொண்டனர். அரண் மனையில் பருவத்திற்குப் பருவம் உணவு வகைகள் வேறுபட்டன. நகரப் பெருமக்களும் பிறரும் தாம்பூலம் தரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்பழக்கத்தை அறியாத அயல் நாட்டு யாத்திரிகர் வியப்புடன் ‘தாம்பூலம் தரித்தல்’ என்னும் ஒன்றைப்பற்றி விளக்கமாக வரைந்துள்ளமை நமக்கு நகைப்பைத் தரும் அல்லவா? குடையும் விளக்கும் கற்கள் பதிக்கப்பெற்ற கைப்பிடி கொண்ட பட்டுக் குடைகளைப் பிரபுக்கள் வைத்திருந்தனர். இரவில் அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு நான்கு முதல் பன்னிரண்டுவரை விளக்குகள் வைத்திருக்கலாம். அரசர்க்கு நூறு முதல் நூற்றைம்பதுவரை வைத்திருக்க உரிமை இருந்தது. பொதுமக்கள் வணிகர், நிலக்கிழவர் முதலிய நடுத்தர வகுப்பினர் நன்னிலையில் வாழ்ந்தனர். அவர்களைப் பற்றி மிகுதியாக அறியத்தக்க சான்றுகள் இல்லை. பொதுமக்கள் - கிராம மக்கள் அரசாங்க அலுவலர் தொல்லைகளால் துன்பப்பட்டனர்; அரசர் அனுமதியின்றி மாகாண வரி உத்தியோகஸ்தர்கள் குடிகட்கு அதிக வரியை விதித்து, அவர்களைத் துன்புறுத்தி வசூலித்தனர். அதிகாரிகளுடைய கொடுமைகட்கு அஞ்சிக் குடிகள் வேறு ஊர்கட்கும் நாடுகட்கும் குடிபோயினர் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. ஆனால் இக்கொடுமைகள் அரசர்க்கு அறிவிக்கப் பட்டவுடன் அவை நீக்கப்பட்டனர்; அதிகாரிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். ஆகவே, அரசர் செங்கோல் அரசர்; அதிகாரிகளுட் பலர் கொள்ளையடிக்கும் மனப்பான்மை கொண்டவர் என்று கூறல் பொருத்தமாகும். சிறந்த ஆட்சி முஸ்லிம்கள் படையெடுப்புகளால் அல்லலுற்ற இந்துக்களையும் அவர்தம் சமயமாகிய இந்துமதத்தையும் காக்க உண்டான விஜயநகர அரசு தன் கடமையைச் செவ்வனே செய்துவந்தது. அது கிருஷ்ணதேவராயர் காலத்தில் பெருஞ் சிறப்புற்றுத் திகழ்ந்தது. விஜயநகரப் பேரரசர்கள் தங்கள் பெருநாட்டை மிக்க திறமையுடன் அரசாண்டனர்; நாட்டு வருவாயின் பெரும் பகுதியைத் தங்கள் இரண்டு நோக்கங்களான (1) சமய வளர்ச்சிக்கும் (2) பெருநாட்டுப் பாதுகாப்புக்கும் செலவழித்தனர். இந்த இரண்டு முயற்சிகட்கும் பெருநாட்டு மக்கள் தங்கள் உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றையும் மனமுவந்து உதவினர். சுருங்கக்கூறின், விஜய நகரப் பேரரசு இரண்டு நூற்றாண்டுகள் (கி.பி. 1336-1565) வரை தென் இந்தியப் பேரரசாக இருந்து தென் இந்தியாவைக் காத்து வந்தது. பொதுவாகக் கிருஷ்ணதேவராயர் ஆட்சியில் பெருநாடு பூலோக சுவர்க்கமாக விளங்கியது என்னலாம்; பயிர்த்தொழில் - கைத்தொழில் - உள்நாட்டு வாணிகம் - வெளிநாட்டு வாணிகம் - படைவலிமை - கலை வளர்ச்சி - ஆட்சிமுறை முதலிய அனைத்தும் மிகவுயர்ந்த நிலையில் இருந்தன என்று உறுதியாகக் கூறலாம். தென்னாட்டுப் பழைய பழக்க வழக்கங்களையும் நாகரிகத்தையும் காப்பதே தமது தொழில் என்று பேரரசர் கூறிவந்தனர். அக்கூற்றுக்கு ஏற்ப அவர்கள் பழைய நாட்டுப் பிரிவுகளை மாற்றவில்லை; நாணயச் செலாவணியை நிறுத்த வில்லை; தமிழ் - தெலுங்கு - கன்னட மக்களுடைய மொழிகளையோ, கலைகளையோ மாற்றவில்லை; இவற்றுக்கு மாறாகப் பழைய பழக்க வழக்கங்களை நிலைபெறவிட்டனர்; சமயத் துறையில் பெருந்தொண்டு செய்தனர்; தக்கவாறு நியாயம் வழங்கினர்; பலவகைக் கலைகளைப் பரப்பினர்; பெருமக்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டனர். பேரரசர் இலக்கிய வளர்ச்சியில் மிக்க ஆர்வம் காட்டினர்; வடமொழி - கன்னட - தெலுங்கு - தமிழ்ப் புலவர்களை ஆதரித்தனர்; பல நூல்களை இயற்றச் செய்தனர்; அவரவர் ஆற்றலுக்குத் தக்க பரிசுகள் அளித்தனர். இங்ஙனம் பேரரசர்களும், சிறப்பாகக் கிருஷ்ணதேவராயரும் கலை வல்லாரை ஆதரித்தமையால் விஜய நகர ஆட்சிக் காலத்தில் தென் இந்தியாவில் இசை - ஓவியம் - சிற்பம் - நடனம் - நாடகம் - மருத்துவம் முதலிய கலைகள் செழித்து வளர்ந்தன. பேரரசரைப் பின்பற்றியே சிற்றரசரும் தத்தம் அளவிற்கு ஏற்றவாறு இக்கiலைகளை வளர்த்துப் புகழ்பெற்றனர். அரசாங்கம் செல்வ வளம் மிக்கது; வாழ்க்கைப் பொருள்களைப் பெற்றது. அது பெருநாட்டுப் பல வருவாய்களைக் கொண்டிருந்ததால் சிறந்த பண்டாரத்தைப் பெற்றிருந்தது. “அரண்மனையில் இருந்த பண்டார அறைக்குள் நில அறைகள் இருக்கின்றன. அவை பொன் கட்டிகள் நிரம்பினவையாகக் காண்கின்றன” என்று அப்துர் ரஸாக் என்ற பாரசீக அரசியல் தூதர் குறித்துள்ளதைக் காண்க. அடிக்குறிப்புகள் 1. verses 245 & 258 2. Within three or four decades of its foundation the King of Vijayanagara became the sole and unchallenged masters of a vast portion of the south, from Goa in the west to the mouth of the Krishna and a little beyond, it in the east. This extensive empire had to be organised in such an efficient way as to make it proof against collapse in times of danger. In this the emperors were eminently successful. While they carried on the struggles with the enemies of Hinduism in the north the provinces supplied them with a perennial source of revenues to continue their wars. Several times in its early days the emperors failed but in the reign of the Maharajadiraja Krishnadeva Raya and even later on till its fall in A.D.1565. Vijayanagara played the part of an arbiter of South Indian Politics. Never was such a conspicuous and important position occupied by any South Indian dynasty. -Rev. H.Heras and V.K.Bhandarkar, Vijayanagara Sexcentenary commemoration Volume, P.93 ஓவியக் கலைஞர் இரவிவர்மா முதற் பதிப்பு - 1949 இந்நூல் 2002இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17 வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது. 1. காவியக்கலைஞன் போற்றிய ஓவியக்கலைஞன் “மலரினில், நீல வானில், மாதரார் முகத்தி லெல்லாம் இலகிய அழகை ஈசன் இயற்றினான், சீர்த்தி யிந்த உலகினில் எங்கும் வீசி ஓங்கிய இரவிவர்மன் அலகிலா அறிவுக் கண்ணால் அனைத்தையும் நுகரு மாறே!” “இயற்கையில் அழகு எங்கும் கனிந்து தவழ்கின்றது. மலரிலே அது புன்னகைபூத்துக் குலுங்குகின்றது. நீலவானிலே அது களிநடம் புரிகின்றது. மாதர்தம் முகங்கள்தோறும் அது தண்ணிலவொளி வீசுகின்றது. இங்ஙனம் இயற்கை தன் அழகுவண்ணத்தை யெல்லாம் காட்டிக் களிகூருவது எதற்காகத் தெரியுமா?” என்று ஒரு கேள்வி கேட்கிறார் கவிஞர் பாரதி. “உலகப் புகழ்பெற்ற கலைஞன் இரவிவர்மன், இந்த மெய்வண்ணங்களை யெல்லாம் காணட்டும்; கண்டு மகிழ்ந்து, தன் மைவண்ணங்களைத் தோய்த்துக் கைவண்ணந் தீட்டிக் காட்டட்டும். இதுவே இயற்கையின் உட்கோளாயிருக்க வேண்டும்!” என்று அவரே தம் கேள்விக்குக் கவிநயம்பட ஒரு மாறுதலையும் தந்து செல்கிறார். கவிஞர் பாரதியின் அணிநயம் கலைஞரின் கலைநயத்தை திறம்பட எடுத்துக் காட்டுகிறது. ரவிவர்மன் இத்தகு சீரிய பாமாலை சூட்டிப் பாடிய ஓவியக் கலைஞன், இரவிவர்மா! இரவிவர்மா மலையாள நாட்டில் பிறந்தவர். மன்னர் குடிமரபில் பிறந்து வளர்ந்தவர். ஆனால், அவர் கலைவனப்பு மலையாள நாட்டெல்லையையும், மன்னர் பெருமக்கள் மரபெல்லையையும் தாண்டி, தமிழகத்தின் மக்கட் கவிஞன் பாரதியின் உள்ளத்தை அளாவிற்று. அது மட்டுமன்று. இரவிவர்மா தென்னாட்டுக்கு உரியவர்; தென்னாட்டின் தலைசிறந்த ஓவியக்கலைஞர். ஆனால், அவர் புகழொளி தென்னாடெங்கும் பரவியதுடன் நிற்கவில்லை. வடநாட்டிலும் பொங்கி வழிந்தோடிற்று. அது கீழ்நாடு கடந்து மேலைநாடு களிலும் பரந்தது. தென்னாட்டுக் கலைஞ ரெவரும் அவரைப் போல வடநாட்டில் புகழ்பரப்பவில்லை. அதுபோலவே கீழ்நாட்டுக் கலைஞர் எவரும் அவரளவு மேல்நாடுகளில் புகழ்பெறவில்லை. அவர் மன்னர் மரபுக்கு உரியவராயிருந்தாலும், மன்னர் பெருமக்கள் மாளிகைக்குரிய கலைஞராய் அமைந்துவிடவில்லை. மன்னர் மாளிகைகளிலும், பெருமக்கள் மாடங்களிலும் அவர் கலைப் படைப்புக்கள் எந்த அளவுக்கு மதிப்புப் பெற்றனவோ, அதிலும் பன்மடங்காக அவை பொதுமக்கள் இல்லங்களில் பாராட்டப்பெற்றன. பொதுமக்களும் அவற்றைப் பேரளவு விரும்பி வழங்கினர். அவரளவு மக்கள் உள்ளங்களில் உலவி ஊடாடி, அவர்கள் இல்லங்களில் நிலவி அணி செய்து, அவர்கள் பண்பாட்டை வளர்த்த வேறொரு கலைஞனைத் தென்னாட்டிலோ, வடநாட்டிலோ காணமுடியாது. மன்னர் குடியில் பிறந்தும் அவர் பேரளவில் மக்கள் கலைஞராக விளங்கினார் என்பதற்கு இதைவிடச் சிறந்த சான்று வேண்டியதில்லை. கலையுலகில் கீழ்நாட்டில் இரவிவர்மாவுக்குப் பல வகைகளில் சீரிய தனியிடம் உரியது. கீழ்நாட்டுக் கலைஞர் எவரும் அவரைப்போல் மேல் நாடுகளில் புகழ்பெற்றது கிடையாது. இதற்கு ஓர் இயற்கையான காரணமும் உண்டு. அவர் மேனாட்டு முறைகளைத் திறம்படக் கையாண்டார். ஆனால், அவர் மேனாட்டு முறைகளைக் கையாண்டதனால், அவர் பண்பு மேனாட்டுப் பண்பாய் விடவில்லை. மேனாட்டு முறையின் உதவிகொண்டே அவர் கீழ்நாட்டுப் பண்பைத் திறம்பட வகுத்துக் காட்டினார். இதன்மூலம் அவர் மேனாட்டவர் போற்றுதலை மட்டுமே பெற்றிருந்தால், நாம் அவர் கலையை உலகக்கலை என்று கூறுவோம்: ஆயினும் அயல்நாட்டுக் கலை என்றே நாட்டுவோம்! ஆனால், உண்மைநிலை இதுவன்று. அவர் மேனாட்டில் கலைவல்லுநர்களால் பாராட்டப்பெற்றது போலவே, இந்தியா முழுவதும் மக்களிடையே பேராதரவு பெற்றார். எனவே, அவர் பொதுப்பட மக்கள் கலைஞரும் உலகக் கலைஞரும் மட்டுமல்லர்: சிறப்பாகக் கீழ்நாட்டுக் கலைஞராகவும், தென்னாட்டுக் கலைஞராகவும் போற்றத்தக்கவரே யாவர். காலத்தாலும், வரலாற்றாலும், மரபாலும், இரவிவர்மா தற்கால இந்தியக் கலைஞரிடையே ஒரு வழிகாட்டியும் முன்னணி விளக்கமும் ஆவார். அவர் வாழ்ந்த காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி. அந் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பொதுவாக இந்தியாவின் கலைமரபு தளர்வுற்று நலிந்துவிட்டது. தென்கோடியில் மரபறாது நிலவிய ஒரு சிற்றிழையைக் கைக்கொண்டு இரவிவர்மா அதைத் திறம்படப் பேணி வளர்த்தார். அவர் கொடுத்த புத்துயிரால் அது புதுவாழ்வு பெற்றுத் தென்னாட்டின் கலைமரபை வளர்த்தது; வடநாட்டிலும் கலையில் மக்கள் ஆர்வத்தைத் தூண்டிப் பெருக்கி, புதிய கலைமலர்ச்சிக்கு வழி வகுத்தது. இங்ஙனம் அவர் தென்னாட்டின் கலைத்துறை மலர்ச்சிக்குத் தந்தையாகவும், வடநாட்டின் கலைமலர்ச்சிக்கு முதல் தூண்டுதல் தந்த முன்னணிக் கலைஞராகவும் திகழ்கின்றார். கலை மக்களுக்காக என்று கொண்டவர் இரவிவர்மா. கலை கலைஞருக்கு மட்டுமே என்றோ, கலை கலைக்கூடங்கட்கு மட்டுமே என்றோ அவர் கருதவில்லை. எனவே, அவர் கலையழகு கலைத்துறை வல்லுநர்கள் மட்டுமே காணக்கூடிய மறையழகாகவோ, பொதுமக்களுக்கு எட்டாத மாயச் சரக்காகவோ அமையவில்லை. மற்றப் பல கீழ் நாட்டுக் கலைஞரைப்போல, அவர் வடிவைப் புறக்கணித்து வடிவு கடந்த தற்புனைவுப் பண்புகளிலும், கற்பனைகளிலும் மட்டும் கருத்தூன்றவில்லை. வடிவழகிலும் அவர் கருத்துச் செலுத்தினார். வடிவழகின் மூலமாகவே கருத்தழகிலும் அவர் உளம் தோய்ந்தது. இதனால் அவர் கலைப் படைப்புகள் எவர் கண்களையும் எளிதில் கவர்ந்தன: கவர்ந்தபின் அவர்கள் கருத்தையும் அவற்றில் நிலைக்க வைத்தன. அவரைத் தனிச் சிறப்புப் பட மக்கட் கலைஞராக்கியது இப்பண்பே எனலாம். கலைத்துறை ஆராய்ச்சியாளர் கலைமரபின் வரலாற்றை இரண்டு கூறுகளாக வகுப்பர். ஒன்று மேலை உலக மரபு. மற்றொன்று கீழை உலக மரபு. பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை மேனாட்டார் மேலை உலக மரபொன்றையே கலைமரபாக மதித்தனர். கீழ்நாட்டுக் கலையை அவர்கள் கலையாகக் கருதவில்லை. இதற்குக் காரணம் யாதெனில், அவர்கள் கலையாராய்ச்சிக்குரிய விதி அமைதியும், இலக்கணமும், அந்நாட்டின் கலை இலக்கியத்தை- கலைப்படைப்பைப் பின்பற்றி அமைந்திருந்தது என்பதே. இலக்கியங் கண்டதற்கே இலக்கணம் அமையமுடியும் என்ற பண்டைத் தமிழர் நுண்கருத்தை உணராமல், அவர்கள் தம் இலக்கணத்தின் அமைதி கொண்டு கீழ்நாட்டுக் கலையை அளக்க முற்பட்டனர். எடுத்துக்காட்டாக, மேனாட்டுக் கலைஞர் தம் கலைப்படைப்புக்களைத் திரைச் சட்டத்தில் (உயnஎயள) அல்லது அட்டைச் சட்டத்தில் (bடியசன) தீட்டுவர். அதில் தம் பெயரைப் பெரும்பாலும் பொறிப்பர். அவற்றில் தத்தம் தனித்திறங்களை வற்புறுத்திக் காட்டுவர். இதனால் கலைஞருக்குத் தக்கபடி கலையும் வேறு வேறு வகைப்பட்டதாய் அமைந்தது. ஆனால், கீழ்நாட்டிலோ ஓவியங்கள் கல்லிலும், சுவரிலும் மட்டுமே தீட்டப்பட்டன. கலைஞன் பெயரோ, தனித்திறமோ வெளிப்பட வழியில்லை. பெரும்பாலும் கலையிலக்கணத்தின் கட்டுப்பாடு காரணமாக, கலைஞர் திறமை ஒன்று நீங்கலாக, வேறு எந்தப் பண்புவேறு பாட்டுக்கும் வழி இருப்பதில்லை. எனவே, மேனாடுகளில் ஒரே காலத்தில், ஒரே இடத்தில் உள்ள இரண்டு கலைஞர்களின் பண்பு வேறுபாட்டைக் கூட, கீழ்நாட்டில் இரு வேறு காலங்களில் இருவேறு இடங்களிலுள்ள இரு மரபுகளிடையே காண்பது அரிது. கீழ்நாட்டுக்கும் மேல்நாட்டுக்கும் நாகரிகத் துறையிலும், கலைத்துறையிலும் உள்ள வேறுபாடுகளைப்போலவே, வடநாட்டுக்கும் தென்னாட்டுக்கும் இரண்டிலும் வேறுபாடு உண்டு. எடுத்துக்காட்டாக, இலக்கியத்துறையில் தென்னாட் டிலக்கியங்கள் வடநாட்டிலக்கியங்களைக் காட்டிலும் பழமையும், வளமும், பரப்பும், தனிப்பண்பும் உடையவை என்று காணலாம். மேலும் தமிழில் பிற்கால இலக்கியத்தையும், சங்க இலக்கியத்தை யும் ஒப்பிட்டுக் காண்போர், பின்னதன் கலவைப் பண்பையும் முன்னதன் தனிப்பண்பையும் வேறு பிரித்துக் காணக்கூடும். இலக்கியத்திலுள்ள இவ்வேறுபாடே நாகரிகத்திலும் கலையிலும் பண்பிலும் உள்ள வேறுபாட்டை நன்கு குறித்துக் காட்டுகின்றது. சங்க இலக்கியம் இயற்கையோடும் வாழ்வோடும் ஒட்டியது. சமயக் கருத்துக்களுடைய தாயினும், சமயச் சார்பற்றது. தற்புனைவும் அணியழகும் நிறைந்ததாயினும், இயற்கை வாய்மை கடவாதது. பொருந்தாக் கற்பனைக்கு அதில் இடமில்லை. கலைத்துறையிலும் வடநாட்டுக் கலை, தென்னாட்டுக் கலை, ஆகியவற்றின் வேறுபாடு இத்தகையதேயாகும். தென்னாட்டுக் கலை வாழ்க்கையையும், இயற்கை வாய்மையையும் பேணுவது; அது மாயக் கற்பனைகளில் உலவுவதன்று. இரவிவர்மா தென்னாட்டில் மட்டுமன்றி, வடநாட்டிலும் கலையியக்கம் தூண்டியவர். ஆனால், தென்னாடு அவர் முறையை நேரடியாகக் கைக்கொண்டு வளர்க்க முடிந்தது. வடநாட்டில் அவரது ஆய்வியல் முறை (சுநயடளைஅ) வளம்பெறவில்லை. கட்டற்ற புனைவியல் முறையே (ஐனநயடளைஅ) வளர்ந்தது. இரவிவர்மாவுக்கு இவ்வாய்வியல் முறையில் மேனாட்டுக் கலைமரபு தூண்டுதல் தந்தது என்பது உண்மையே. ஆனால், அது அயல்நாட்டு முறையாக மட்டுமிருந்தால், அதில் அவர் இவ்வளவு எளிதாகத் தென்னாட்டுக் கலையையும், கீழ்நாட்டுப் பண்பையும் வளர்த்திருக்க முடியாது. உண்மை யாதெனில், மேனாட்டு முறை அவருக்கு முழுவதும் மேனாட்டு முறையாயமையவில்லை. அது அவர் தாயக மரபாகவே, தாயகமரபாகிய தென்னாட்டு மரபுக்கு ஒரு தூண்டுதலாகவே இருந்தது. அவர் குடும்பத்தில் அவருக்கு முன்னும் பின்னும் அவரைப்போலவே மேனாட்டு மரபைப் பின்பற்றி வெற்றி கண்டவர் உண்டு என்பது இவ் வுண்மையை வலியுறுத்துவது ஆகும். மேனாட்டுக் கலைவரலாற்றைப்போலவோ, அல்லது வடநாட்டுக் கலைவரலாற்றைப்போலவோ கூட, இன்னும் தென்னாட்டுக் கலை வரலாறு விளக்கமாக எழுதப் பெறவில்லை. ஆனால், கட்டடக்கலை, இசை, இலக்கியம்,வானநூல், மருத்துவம் ஆகிய எல்லாத் துறைகளையும் போலவே, இத்துறையிலும் தென்னாட்டுக்கென்று ஒரு தனி மரபு உண்டு என்று காண்பது அரிதன்று. மொகஞ்சதரோவிலும், ஹரப்பாவிலும் மற்றும் இவைபோலவே இந்தியா முழுவதிலும் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகள், காசுகள், மட்பாண்ட ஓவியங்கள் ஆகியவை இந்தியாவின் மூலக்கலைப் பண்புகளான தென்னாட்டின் மூலத் தனிப்பண்புகளுக்குச் சான்றுகள் ஆகும். சங்க இலக்கியங்களில் முல்லைப்பாட்டிலும் பிற இடங்களிலும் ஓவியக் கலை பற்றியும், பிற கலைப்பொருள்கள் பற்றியும் விரிவான விளக்கங்கள் காண்கிறோம். புத்த சமண காலக்கலை இந்தியாவுக்குப் பொதுவாயினும், தென்னாட்டுக்கே அது சிறப்பென்பதும், தெற்கு நோக்கி வருந்தொறும் அது தனிப் பண்பு மிக்கதாகிற தென்பதும் உற்றுநோக்கத் தக்கன. தென்னாட்டுக் கட்டடக் கலையில் இத்தனிப்பண்பு இன்னும் முனைப்பாகத் தெரிகின்றது. ஆயினும் சித்தன்ன வாசல் ஓவியங்களில் மட்டுமாவது, இதே அளவு தனிப்பண்பை ஓவியக்கலையிலும் காணாதிருக்க முடியாது. வடநாட்டுப் புத்த சமண ஓவியங்களைப்போல் சித்தன்ன வாசல் ஓவியம் முற்றிலும் சமயச் சார்பாயில்லை. வடிவமைதியில் அது வடநாட்டுப் புத்த சமண மரபையோ, இன்றைய வடநாட்டு மரபையோ நினைவூட்ட வில்லை. மேனாட்டு மரபையும், இரவிவர்மாவின் மரபையும்போலவே அது வடிவமைதியுடைய தாய் அமைகின்றது. வடநாட்டிலும் இரஜபுத்திரர் கலை மரபும் முகலாயர் கலை மரபும் முன் மரபுகளைவிட இதே பண்புகளை ஓரளவு வற்புறுத்திக் காட்டுகின்றன. இவற்றை அயல்நாட்டுப் பண்புகள் என வடநாட்டு ஆராய்ச்சியாளர் ஒதுக்குகின்றனர். உண்மையில் இவை வடநாட்டிலும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் கீழ்நாட்டின் மூலப் பண்பாயிருந்த தென்னாட்டுப் பண்பின் தாக்குதல் விளைவே எனக் கொள்வது பொருத்தமற்றதன்று. இரவிவர்மாவின் வாய்வியல் பண்பைத் தென்னாட்டுப் பண்பு என்று கண்டால், அது கலை வரலாற்றுக்கே பெருவிளக்கம் தருவது ஆகும். இத் தென்னாட்டுப் பண்பு மேனாட்டுப் பண்பின் விளைவுமல்ல- பிற்காலப் பண்புமல்ல. அது உண்மையில் மேனாட்டுப் பண்புகளுக்கும், வடநாட்டுப் பண்புகளுக்கும் முற்பட்ட இந்தியாவின் மூலமுதற் பண்பேயாகும். இலக்கியத்தில் சங்க இலக்கியத்தின் வாய்மைத் திறனும் கலைச்செப்பமும் குன்றிய காலத்தில், கருத்தற்ற கற்பனை புகுந்தது போலவும்; வடமொழியில் காளிதாசனின் செவ்விய இயற்கை நடையும், இயற்கையணியும் குன்றிய காலத்தில், பிற்காலச் செயற்கைக் கடுநடையும், செயற்கையணிகளும் மலிந்தது போலவும்; கலைத்துறையில் வடிவமைதித் திறமும் வாய்மைத் திறமும் கெட்டழிந்த பின்னர், வடநாட்டின் இடைக்காலச் செயற்கை மரபாகிய கற்பனை மரபு புகுந்தது என்னலாம். இடைக்கால மரபாகிய இதனையே இந்தியாவின் பண்டை மரபு எனக்கொண்டு, வடநாட்டார் இன்று தாமும் குழப்பமுறு கின்றனர்; உலகின் பொது அறிவையும் குளறுபடி செய்கின்றனர். இரவிவர்மாவின் சிறப்பு மேற்கூறிய வரலாற்று அடிப்படையிலேயே நன்கு விளங்கத்தக்கது. ஆனால், வரலாற்றுச் சார்பற்ற தனிச்சிறப்புக்களும் அவருக்கு உண்டு. உயிரோவியங்கள் வகையில், அதாவது, தனிப்பட்ட மனிதரைப் பார்த்து வரையும் படங்கள்வகையில், அவர் மேனாட்டாராலும், கீழ்நாட்டாராலும் ஒருங்கே போற்றப்படுகிறார். வங்க மறுமலர்ச்சி இயக்கத்தின் புனைவியல் கலையிலேயே மூழ்கி, அதுவே இந்தியாவின் பண்டை மரபு எனத் தருக்கி, இரவிவர்மாவின் பெயரையே இருட்டடிக முயலும் வடவர்கூட, இத்துறையில் அவர்பெற்ற மேம்பாட்டை ஒத்துக் கொள்ளா திருக்கமுடியவில்லை. இரவிவர்மாவுக்குக் கலைப் பயிற்சியில்லை என்றும், இந்தியமரபை அவர் கவனிக்கவில்லை என்றும், ஆகவே அவர் அருங் கலைத்திறனற்றவர் என்றும் இவர்களில் சில ‘கலைவல்லுநர்’ பத்திரிகைகளில் எழுதுவதுண்டு. அவர் மக்களிடையே பெற்ற செல்வாக்குக் கண்டு அவர்கள் பொறாமையுற்றனர். ஆனால், இவர்கள்கூட அவர் இந்தியக் கலையுலகுக்குத் தந்த விழிப்பையும்; உயிரோவியக்கலை, நெய்வண்ணக் கலை ஆகிய தனித்துறைகளில் அவர் அடைந்த மேம்பாட்டையும் ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் குறிப்பிட்ட நெய்வண்ண ஓவியத்துறையை மேல்நாட்டிலிருந்து கீழ் நாட்டுக்குக் கொண்டுவந்தவர் இரவிவர்மாவின் குடிமரபில் அவருக்கு முற்பட்ட அவர் முன்னோருள் ஒருவரே என்று அறிகிறோம். ஆனால், இரவிவர்மா அதனை முற்றிலும் தமதாக்கி,அதில் ஒப்பற்ற முதன்மை பெற்றார். அவர் கலைப்படைப்புக்களில் மிகப் பெரும் பாலானவை நெய் வண்ணங்களே. பிற்காலங்களில் அவர் நீர்வண்ணத் துறையில் கருத்துச் செலுத்தி அதனையும் பயின்றார். அதிலும் அவர் பேரளவு தேர்ச்சியும் திறமும் காட்டினார். ஆனால்,நெய்வண்ணத்துறை மேம்பாடே அவருக்குக் கீழ்நாட்டில் தனிச் சிறப்பும், உயர்வும் தரும் பண்புகளுள் முதன்மையானதாய் அமைகின்றது. இரவிவர்மா மலையாள நாட்டினர். அவர் கலைவனப்புக்கு ஏற்ற பின்னணி வண்ணமாகவே அந்நாடு அமைந்துள்ளது. அது உண்மையிலேயே கண்கொள்ள வனப்புடையது. கடல்வளம் ஒருபால், மலைவளம் ஒரு பாலாக, இருவளங்களும் அதை அழகுபடுத்துகின்றன. இவ்விரண்டுக்கு மிடையே காட்டுவளம், ஆற்றுவளம், நாட்டுவளம், பயிர்வளம் முதலிய பல வளங்களும் பொங்கிப் பொதுளுகின்றன. அத்துடன் மக்கள் வாழ்க்கை வளத்துக்கும் கலைவளத்துக்கும் இங்கே குறைவில்லை. பெண்ணுரிமை மரபு கெடாது வழங்கும் இந்நாட்டுப் பெண்டிர், பிறநாட்டுப் பெண்களைப்போல அழகொப்பனையில் செயற்கை முயற்சி எடுத்துக்கொள்வதில்லை. அவை இல்லாமலே,எளிய உடையுடன், ஒப்பனை தேவையற்ற இயற்கை அழகுச் செல்வங்களாய் அவர்கள் அமைகின்றனர். ஆடவர் வாழ்விலும் இதே எளிய நயம் காணலாம். இரவிவர்மாவின் திரையில் எந்நாட்டின் அழகுப் படைப்புக்களும் பெரும்பாலும் இந்நாட்டு அழகின் வண்ணமாகவே தீட்டப்பட்டுள்ளன. இது இயல்பு; போற்றுதலுக்குரியதும் கூட. கலைமரபிலும் மலையாள நாடு எந்நாட்டிற்கும் பிற்பட்டதன்று. செந்தமிழ்ச்சிலம்பு தந்த அரசத்துறவி இளங்கோவடிகள் பண்டைத் தமிழ்ச் சேர நாடாகிய மலையாளநாட்டு மன்னர் குடியைச் சேர்ந்தவரே. இடைக் காலத்திலும் சேரமான் பெருமாள் நாயனார் சைவத் திருமுறைகளிலும், குலசேகரப்பெருமாள் என்ற குலசேகராழ்வார் வைணவத் திரு நாலாயிரத்திலும் இறைவனுக்குச் செந்தமிழ்ப் பாமாலைகள் சூட்டியுள்ளனர். பன்னிரண்டாம் நூற்றாண்டு முதல் திருவாங்கூர் மன்னருட் பலரும்; கொச்சி, கோழிக்கோட்டு மன்னரும்; கோட்டயம் தம்பிரான்குடி, இரவிவர்மாவின் கிளிமானூர்த் தம்பிரான்குடி போன்ற அரசமரபுக் குடியினரும் மலையாள மொழிக்கும், நாடகம், இசை, கலை முதலிய துறைகளுக்கும் அருந்தொண்டு ஆற்றியுள்ளனர். இம்மரபுகளில் பலவும், நாடகம், இசை, கலை ஆகியவையும், சிலப்பதிகார காலத்துக்குப்பின் தமிழகத்தில் ஆதரவின்றி நலிந்தழிந் தவையே. மலையாள நாட்டிலும் திருவாங்கூரிலும் அவை ஆதரவு பெற்று அழியாதிருந்தன. அதுமட்டுமன்று. பற்பல காலங்களில் இங்கே அவை புத்துயிர்பெற்றுப் புதுவளர்ச்சி அடைந்தும் வளம் பெற்றுள்ளன. இங்ஙனம் மலையாள நாட்டின் கலைமரபுகள் மலையாள நாட்டுக்குச் சிறப்புரிமையுடையவை மட்டுமல்ல. தமிழகத்துக்கும் தென்னாட்டுக்கும் பொதுவுரிமை உடைய பண்டைப் பெருந்தமிழக மரபின் செல்லங்களே. மலையாளநாடு இன்று அத்தகைய பல பண்டைத் தமிழக மரபுச் செல்வங்களின் அருங்கலச் செப்பாக இருந்து வருகிறது. அச் சேமவைப்பின் ஒரு கால்வழியாகவே இரவிவர்மாவின் கலைமரபு நமக்குக் கிட்டியுள்ளது. அதன் புகழும் வளர்ச்சியும் தென்னாட்டின் வருங்காலப் புகழுக்கும் வளர்ச்சிக்கும் வழிவகுப்பனவாகும். மலையாளக் கலைஞரைத் தமிழகக் கவிஞர் பாரதிபாடியது வெறும் பாராட்டுக்கவி மரபாக அன்று. பாரதி ஒரு நாட்டுக் கவிஞர். அவர் நாட்டுப்பண்புகளையே சிறப்பாகப் பாடியவர். அவர் மக்கட் கவிஞர். நாட்டு மக்களுக்காகவே பாடியவர். ஆனால், நாட்டுக்கு வேண்டிய பண்புகளும், நாட்டு மக்களுக்கு வேண்டிய பண்புகளும் எந்நாட்டிலிருந்தாலும் அவர் உள்ளம் அவற்றின் பால் கருத்துச் செலுத்தி அவற்றில் தம் காவியக்கனலை எழுப்பும். இத்தாலியில் மாஜினியின் நாட்டுப்பற்றை அவர் தமிழகத்துக்கு எடுத்துக் காட்டினார். பெல்ஜியத்தின் வீர எதிர்ப்பை அவர் படம் பிடித்துக் காட்டிப் போற்றினார். இரஷ்யாவின் ஜார் அரசன் வீழ்ச்சியை இடியொத்த வீரமொழிகளில் அவர் மக்கள் கண்முன் கொண்டுவந்து நிறுத்தினார். இவற்றைப் போலவே தமிழகத்துக்குத் தேவையான, பண்டைத் தமிழகத்தின் கலை மரபை உயிர்ப்பிக்கத் தக்க, வருங்காலத் தமிழகக் கலையையும் தென்னாட்டுக் கலையையும் உருவாக்கி வளர்க்கவல்ல பெரும்பண்பாகவே, அவர் இரவிவர்மாவின் கலைப்படைப்பை நம் கண்முன் கொண்டுவந்து காட்டுகிறார். 2. நாடும் மரபும் பண்டைத் தமிழ் மன்னரிடையே சேர,சோழ, பாண்டியர் என்ற முப்பெரு மரபினர் இருந்தனர். இன்றைய மலையாள நாட்டின் பெரும் பகுதி இம் மும்மரபினர் நாடுகளுள் சேர நாட்டைச் சேர்ந்தது. ஆயினும் திருவாங்கூரின் பெரும்பகுதி சேர நாட்டுடனும் பாண்டிய நாட்டுடனும் ஒருங்கே தொடர்புடைய தாய் இருந்து வந்துள்ளது. பிற்காலத்தில் சேரப் பேரரசர் ஆட்சியில், அது சேர நாட்டுடன் தொடர்புகொண்டு, சேரநாட்டுப் பகுதியாகக் கருதப்பட்டது இயல்பே. ஆனால் கி.பி. முதல் நூற்றாண்டில் தமிழகம் பற்றிக் குறிப்பிட்ட கிரேக்க நூலார் கொல்லம் வரையுள்ள பகுதியைப் பாண்டிய நாட்டுப் பகுதி என்றே குறித்துள்ளனர். அதற்கேற்ப இன்றளவும் திருவாங்கூரின் தலைநகரான திருவனந்தபுரம் தென் திருவாங்கூரிலேயே இருக்கிறது. ஒரு நூற்றாண்டுக்குமுன் மார்த்தாண்ட வர்மா காலத்தில் தான் தலைநகரம் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. அதற்குமுன் இன்னும் தெற்கில் தமிழ்த் திருவாங்கூரிலுள்ள பத்மநாபபுரத்திலும், அதற்கு முற்பட்ட நாகர்கோவிலை யடுத்த திருவிதாங்கோடு அல்லது திருவதங்கோட்டிலும் தலைநகர் அமைந்திருந்தது. திருவிதாங்கோடு நீண்ட காலம் தலை நகரமாயிருந்ததினால்தான் நாட்டின் பெயர் திருவாங்கூர் என்றாயிற்று என்பதில் ஐயமில்லை. ஏனென்றால், மலையாள மொழியில் திருவாங்கூரின் பெயர் இன்னும் திருவிதாங்கூர் என்றே எழுதப்படுகிறது. இதுவே தொல்காப்பியம் கேட்ட அதங்கோட்டாசான் ஊர் என்று ஆராய்ச்சியாளர்கள் பலர் கருதுகின்றனர். இத்துடன் திருச்செந்தூர் வரையிலும் உள்ள பகுதி மார்த்தாண்ட வர்மா காலம்வரை திருவாங்கூரில் சேர்ந்திருந்த தாகவும், தென் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு முதலிய இடங்கள் தலை நகரங்களாயிருந்ததாகவும் அறிகிறோம். தவிர சேரமரபு நலிந்த காலத்தில் 14- ஆம் நூற்றாண்டில் திருவாங்கூர் அரசர் சேரநாடு முழுவதையும் சிலகாலம் ஆண்ட தாயும், அதனையடுத்துச் சோழ பாண்டிய பல்லவர்களையும் வென்று தமிழ்ப் பேரரசு நாட்டியதாயும் தெரிய வருகின்றது. இவற்றால் திருவாங்கூர் அரசர் மரபு சேரருடனும் பாண்டியருடனும் அவ்வக்காலத் தொடர்புடையதாயினும், தனிப்பட்ட மரபுடையதென்று ஊகிக்கலாம். உண்மையில் தென் திருவாங்கூரும் தென் திருநெல்வேலி மாவட்டமும் சேர்ந்து, பண்டு பரலிநாடு என வழங்கப்பட்டது என்றும்; கடலுள் அழிந்துபட்ட பஃறுளியாற்றின் தலைப்பகுதியும், அது எழுந்த மலையாகிய பன்மலையடுக்கத்தின் ஒரு பகுதியும் அந்நாட்டில் எஞ்சியிருந்ததனாலேயே அது பஃறுளிநாடு என்று வழங்கியதாகவும் அறிஞர் கால்டுவெல் குறிக்கிறார். திருநெல்வேலியருகிலுள்ள பரலி என்ற ஊர் ஒருவேளை அதன் பண்டைத் தலைநகராக இருந்திருக்கக் கூடும். பரலியின் மன்னன் என்ற முறையில் திருவாங்கூர் மன்னர் பட்டங்களுள் ஒன்றாகப் பரலீசன் என்ற பெயர் இன்றும் நிலவி வருகிறது. மற்றும் சில கல்வெட்டுக்களாலும் ஆராய்ச்சிகளாலும் திருவாங்கூர் மன்னரும் இப்பரலி மரபினரும் உண்மையில் சங்ககாலத்துப் பொதிகைமலை ஆய் என்பவனுடைய வழித்தோன்றல்களே என்று கருத இடமிருக்கின்றது. பழைய பரலிநாடு உண்மையில் தண்டமிழ்ப் பொதிகைமலையைச் சுற்றித் தென்பால் ஒருபிறை வடிவிலேயே கிடந்தது என்னலாம். பொதிகைமலையிலிருந்து எழுந்து கீழ்பால் தண்பொருநை யாகிய தாமிரவருணியும், மேல்பால் குழித்துறையாறு என்ற மற்றொரு தாமிர வருணியும் பாய்கின்றன. இன்னும் சற்று வடக்கேதான் கீழ்பால் பாண்டி நாட்டுக்குரிய வைகையும், மேல்பால் சேரநாட்டுக்குரிய ஆன்பொருநை யாகிய பேரியாறும் எழுகின்றன. இங்ஙனம் நட்பால் கிழக்கு மேற்காகக் கைகோத்த சேர பாண்டிய மரபுகளின் இணைப்பான துணையரசாய் தென்பால் நிலவியது பழைய திருவாங்கூர், அதாவது பண்டைய பரலிநாடு அல்லது பொதிகைநாடு. இதன் சங்ககாலத் தலைவனான வேள் ஆய் தமிழகத்தின் ஏழுவேளிருள் ஒருவன். மூவரசர் எவ்வளவு பழமையான மரபினரோ அதே அளவு பழமையான தமிழ் மரபுகள்தாம், ஆய் முதலிய வேளிர்களின் மரபுளும் என்பதில் ஐயமில்லை. உண்மையில் மூவரசர்களும் பண்டுவேளிருள் வேளிராயிருந்து தலையோங்கியவர்கள் தாமோ என்று கூறக்கூட இடமுண்டு. மும்மரபினரும் முடியரசரான பின்பும் வேளிர்கள் தனிக்குடியரசாயிருந்து பண்டைக் குடியாட்சிப் பண்பு பேணினர். தமிழையும் தமிழ்க் கலைகளையும் தமிழ்ப் பண்பையும் வளர்ப்பதிலும், வீரத்திலும், கொடையிலும் அவர்கள் மூவரசர்களுடன் போட்டியிட்டனர்; பலகால் அவர்களை நாணவும் வைத்தனர். அவர்கள் மரபின் பெருமையை மூவரசர்கூட உயர்வாக மதித்தனர் என்பதைக் காணலாம். ஏனெனில், அவர்கள் பிற முடியரசுடன் பெண் கொள்வதினும் வேளிர்களுடன் பெண் கொள்வதையே பெருவழக்கமாகக் கொண்டிருந்தனர். இங்ஙனம் மூவரசருக்கும் முற்பட்டுத் தண்டமிழ்க் குடியரசுப் பண்பு பேணிய வேளிர்களுள் ஒருவனே ஆய்வேள்! அவன் மரபில் வந்தவர்தாம் திருவாங்கூர் மன்னர் என்பது குறிக்கத்தக்கது. வேளிர் மூவரசருக்குப் பெண் கொடுக்கும் பெருமையுடைய மரபினர். ஆனால், கலைமன்னன் இரவிவர்மாவின் மரபாகிய கிளிமானூர்த் தம்பிரான் குடியோ, திருவாங்கூர் மன்னர் குடியிலிருந்து பெண்கொள்ளும் பெருமையுடையது. தற்போதைய திருவாங்கூர் அரசு பெண்வழி அரசு. எனவே திருவாங்கூர் மன்னராவோரின் தந்தை வழிமரபு இக் கிளிமானூர் மரபேயாகும். கிளிமானூர் மரபுடன் இத்தொடர்பு கொள்வதில் திருவாங்கூர் மன்னர் மிகவும் பெருமை கொண்டிருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் உண்ணி கேரள வர்மா மன்னன் காலமுதல் இன்றுவரை அவர்கள் இடையறாது இத்தொடர்பு பேணியுள்ளனர். சென்ற இரண்டு நூற்றாண்டிலும் உள்ள திருவாங்கூர் மன்னர் அனைவரும் தந்தை வழியில் கிளிமானூர் வழிவந்தவர்களே. கிளிமானூர் மரபினரின் பண்டை இல்லமாகிய ‘தத்தரிக் கோவிலகம்’ மலபார் மாவட்டத்திலுள்ள பெய்ப்பூரில் (வைப்பூரில் ) இருந்ததாக அறிகிறோம். இம்மரபின் வடபாலைய வரலாறுபற்றி நமக்கு மிகுதி தெரியவில்லையாயினும், அதுவும் ஆய்மரபைப் போன்ற சிறப்பு வாய்ந்த பண்டை வேளிர் மரபுகளுள் ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும் என்று கருத இடமுண்டு. பண்டைச் சேர சோழ பாண்டியர் பொதுவாகவும்., சேரர் சிறப்பாகவும் இத்தகைய வேளிர்களுடன் போருடன் படிக்கை, நேச உடன்படிக்கை, மண உறவு ஆகியவை மேற் கொண்டதன் மூலமே படிப்படியாக முடியரசராகவும், பேரரசராகவும் பெருக்கமுற்றனர் என்று அறிகிறோம். வையாபுரி என்றும் திருவாவினன்குடி என்றும் வழங்கும் பழனியில் ஆண்ட வையாவிக்கோமரபு சேரருக்குப் பெண்கொடுத்த மரபுகளுள் ஒன்று. சங்ககாலத்தின் பிற்பகுதியில் சேரருடன் சேரராகச் சில சமயமும், தனிப்படப் பிரிந்து சில சமயமும் ஆண்ட பொறையர் குடியும் வேளிர் குடியாகவே இருந்திருக்கலாம். சேரர், பொறையர், இரும்பொறையர் ஆகியவர் காலத்தில் பழைய வேளிர்களுள் ஒருவனாகிய நன்னனைப்பற்றி நாம் கேள்விப்படுவ தில்லை. பிற்காலக் கள்ளிக்கோட்டை சாமூதிரிப்பாடுகள் இந்த நன்னன் நாட்டை ஆண்டனர் என்பது உறுதி. இது தென்கன்னட மாவட்டத்திலுள்ளது. கிளிமானூர்க்குடி இத்தகைய மரபுகளுள் ஏதேனும் ஒன்றாகவோ, அவற்றின் கிளையாகவோ வடமலையாளப் பகுதியில் இருந்திருக்கலாம். கிளிமானூர் மரபினர் திருவாங்கூர் மன்னர் தொடர்புக் குரிய உயர்குடியினராகமட்டும் இருக்கவில்லை; பெரு வீரராகவும் இருந்தனர் என்று அறிகிறோம். திருவாங்கூர் மன்னன் உண்ணி கேரளவர்மா காலத்தில் அவர்கள் பெய்ப்பூரிலிருந்து திருவாங்கூருக்குக் குடிபெயர்த்துக் கொண்டு வரப்பட்டதன் நோக்கமே. மன்னர்குடிப் பெண்களை மணங் கொள்வதற்காக மட்டுமன்று; அன்றைய அரசியல் குழப்ப நிலையில் மன்னருக்குப் போரில் படைக் காவலராயிருந்து உதவி செய்யும் நோக்கத்திற் காகவுமே என்று அறிகிறோம். அவர்கள் பண்டைய வேளிர்களைப்போலவே சிறந்த வீர மரபினர் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. கிளிமானூர் என்ற பெயரின் பொருள் கிளியும் மானும்உலவும் இடம் என்பது. பைங்கிளிகள் அவ்விடத்தே பசுமரச் சோலைகளில் அமர்ந்து, தீங்கனிகள் உண்டு, தம் இனிய பேச்சினால் யாவரையும் மகிழ்வித்தன. அதன் ஊர்ப்புறக் காடுகளில் மானும், மிளாவும், முயலும் திரிந்தன. இங்ஙனம் நாட்டுவளமும் காட்டுவளமும் ஒருங்கே உடைய இப்பண்ணை கிளிமானூர் மரபினருக்குத் திருவாங்கூர் அரசியலாரால் 1729-ல் அளிக்கப்பட்டது. அது திருவனந்தபுரத்திலிருந்து 27 கல் தொலை வடக்காகவும், ஆற்றங் கலிலிருந்து 7 கல் தொலை வடகிழக்காகவும் இருக்கிறது. அது 17 சதுரக்கல் பரப்பும் 8,000 குடிமக்கள் தொகையும் உடையது. அக்காலத்தில் கிளிமானூர்க் குடியில் கேரளவர்மா என்ற ஒரு வீரச் சான்றோர் இருந்தார். பட்டத்தரசி அவர் வாழ்க்கைத் துணைவியாகவும், வயது வராத மன்னர் அவர் குழந்தையாகவும் இருந்தனர். மன்னர் சிறுவரா யிருக்குமிடங்களில் உள்நாட்டுக் கட்சிகளும், கலவரங்களும், போர்களும் நாட்டை நலிவிப்பது இயல்பு. இத்தகைய சூழலில் மன்னரின் நண்பர் அரச குடும்பத்தைக் கண்ணிமைபோல் காத்தனர். ஆனால், அப்படியும் மன்னர் பாதுகாப்புப் பற்றி அவர்கள் கவலையும் அச்சமுங் கொண்டனர். எனவே, அவர்கள் மன்னர் குடும்பத்தைத் தற்காலிகமாக மறைத்து ஆற்றங்கலுக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுடன் சென்ற வீரநாயர்களின் காவற்படைக்குக் கேரளவர்மாவே தலைவராயிருந்தார். வழியில் கழைக்கூட்டம் என்ற இடத்தினருகில் அரசர் குடியினர் வந்தபோது, புதர்க்காட்டிலிருந்து திடுமெனக் கலகக்கார எதிரிகள் அவர்கள்மீது பாய்ந்தனர். குழந்தையா யிருந்த மன்னரும் அவர் அன்னையராகிய அரசியும் அஞ்சி நடுநடுங்கினர். கேரளவர்மா தம் படையுடன் எதிரிகளைத் தாக்கினார். படை சிறு படையானதால் விரைவில் எதிரிகளின் கைப்பட்டு அழியத் தொடங்கிற்று. அப்பொழுதும் வீரரான கேரளவர்மா ஒரு சிலருடன் உயிர்வெறுத்து நின்று மும்முரமாகப் போராடினார். இப் போராட்டத்தினால் கிடைத்த ஓய்வை மற்ற நண்பர்கள் பயன்படுத்தி, அரசியையும் மன்னரையும் அப்பால் கொண்டு சென்றுவிட்டனர். ஆனால், கேரளவர்மா இறுதி மூச்சுவரைச் சமர்செய்து வீரத்துறக்க மடைந்தார்.அவர் வீரச்செயலை மெச்சி அரசியலார் அவர் மரபுக்கு அளித்த மானியமே கிளிமானூர்ப் பெரு நிலப்பண்ணை. தென்னாட்டுக் கலைக்கும் மலையாள இலக்கியத்துக்கும் கிளி மானூர்மரபு தந்த ஆக்கம் பெரிது. அம்மரபில் எத்தனையோ பேர் அதனை வழிவழி நின்று காத்துள்ளனர். அரசரைக் காத்த வீரர்மரபு நாட்டின் கலைப்பண்பையும் பேணத் தயங்கவில்லை என்பது இங்ஙனம் ‘வெள்ளிடை மலை’யாக விளங்குகிறது. கலைஞரிடையே முடிசூடா மன்னரான இரவிவர்மாவின் சிற்றப்பனாராகிய இராஜராஜவர்மா அவர் காலத்தில் அருஞ்சிறப்புடைய கலைமன்னராகவே இருந்தார். அப்போது மன்னர் சுவாதித் திருநாள் நாடாண்டு வந்தார். அவர் கால அரசவைக் கலைஞராயிருந்தவர் மதுரை மாநகரைச்சார்ந்த அழகிரிநாயடு என்பவர். அக்காலத்தில் இந்தியாவிலேயே அவர் தலைசிறந்த கலைஞராயிருந்ததாக அறிகிறோம். மதுரை நாயக்க மன்னரின் ஆதரவிலிருந்த அவரைத் திருவாங்கூர் மன்னர் தம் அரசவைக்கும் வரவழைத்துப் போற்றிவந்தார். இராஜராஜவர்மா அவரிடம் மாணவராகச் சேர்ந்து கலை பயின்றார். ஆனால், மிகவிரைவில், மாணவர் ஆசிரியரைவிடக் கலைப்புகழ் பெற்றார். இரவிவர்மாவுக்குக் கலைத்துறையில் ஆர்வமூட்டி, அதில் அவரைப் பயிற்றுவிக்கும் முதலாசிரியராயிருந்தவர் இக்கலைஞர் பெருமானே. இரவிவர்மாவின் முன்னோருள் இன்னொருவர்தாம், மேனாட்டிலும் அன்று அருங்கலையாய் இருந்த நெய்வண்ண ஓவியத்தைக் கீழ்நாடுகளில் முதல் முதல் கொணர்ந்து பயிலுவித்தார் என்று அறிகிறோம். இரவிவர்மாவுக்குப் பின்னும் அவருடைய உடன்பிறந்த செல்வர் ஸி. இராஜாராஜவர்மா, உடன்பிறந்த செல்வி மங்காபாய்த் தம்பிராட்டி, அவர் புதல்வர் மாவேலிக்கரை இராஜவர்மா, அவர் உடன்பிறந்தார் புதல்வர் கே. ஆர். இரவிவர்மா ஆகியோர் தனித்தனி கலைப்புகழ் பெற்றவரா யிருந்தனர். இன்னும் அவர் குடும்பம் கலைவளர்க்கும் கலைக் கோயிலாகவே இருந்து வருகிறது. தென்னாட்டுக் கலைஞர்கள் தம் கலைப்பயிற்சியின் முத்தாய்ப்பாகச் சென்று பார்க்கவேண்டு மிடமாய் இன்னும் கிளிமானூர் அரண்மனை இருந்துவருகிறது. மார்த்தாண்டவர்மா, கார்த்திகைத் திருநாள் இராமவர்மா ஆகியவர்கள் காலங்களிலெல்லாம் உள்நாட்டு வெளிநாட்டுப் போர்களில் மன்னர் ஈடுபட்டிருந்தனர். பாலராமவர்மாவின் ஆட்சி தொடங்கியதும் போர் களெல்லாம் பேரளவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. நாட்டில் அமைதி நிலவிற்று. திருவாங்கூருக்கும் மலையாள நாட்டுக்கும் புதிய விழிப்பு ஏற்பட்டது இக்காலத்திலேயே. நாட்டின் நல்லமைச்சராக இதே காலத்தில் ஸர்.டி. மாதவராவைப் பெறும் நற்பேறு திருவாங் கூருக்குக் கிடைத்தது. அவர் ஆட்சியில் கல்வித்திட்டங்கள் தொடங்கப்பட்டன. அவர் ஆங்கிலக் கல்வியில் மட்டுமன்றித் தாய்மொழிக் கல்வியிலும் பெருங்கவனம் செலுத்தினார். ஆங்கிலக் கல்வி உயர் வகுப்பினருக்கு மட்டுமே பயன்படும். தாழ்த்தப்பட்ட, அமுக்கப்பட்ட பெரும்பாலான பொதுமக்களுக்கு வாழ்வும் வளமும் தரத்தக்கது தாய்மொழிக் கல்வியே என்பதை நல்லமைச்சர் ஸர்.டி.மாதவராவ் உணர்ந்து, அதையும் வளர்க்கத் தனித்திட்டம் வகுத்தார். இதன்பயனாகவே, இன்று திருவாங்கூரும் கொச்சியும் தாய்மொழிக் கல்வியிலும் எழுத்து வாசிப்புப் புள்ளி விவரத்திலும் இந்திய மாநில முழுவதிலுமுள்ள மற்ற எந்தப் பகுதியையும் விட நெடுந்தொலை மேம் பட்டிருக்கிறது. திருவாங்கூர் இந்தியாவின் முன் மாதிரி அரசு (ஆடினநட ளுவயவந) என்று புகழ்பெறத் தொடங்கியது இது முதலேயாகும். பாலராமவர்மா, ஸர்.டி. மாதவராவ் ஆகியவர்களின் நல் ஆட்சி யமைதியின் பயனாக ஏற்பட்ட மறுமலர்ச்சியில் இரண்டு புகழ்மணம் பொலியும் பொன்மலர்கள் பூத்தன. ஒரு பொன்மலர் மலையாளப் புத்திலக்கியத்தின் தந்தை என்றும், கேரளபாணினி என்றும், கேரள காளிதாசன் என்றும் போற்றப்பட்ட கேரளவர்மா வலியகோயில் தம்பிரான் ஸி.எஸ்.ஐ.ஆவர். மற்றொரு பொன்மலரே கலைமன்னன் இரவிவர்மா. கேரளவர்மா வலியகோயில் தம்பிரான தலை கவிஞர். மலையாள உரைநடையின் தந்தை. மொழி நூலாராய்ச்சி யாளர்கள் கூட மூக்கில் வியந்து போற்றத்தக்க முறையில், கேரளபாணினீயம் என்ற சிறந்த மலையாள ஆராய்ச்சி முறை இலக்கணம் எழுதியவர். அத்துடன் புலவரேறாகமட்டும் அமையாமல், புலவர்களுக்கு ஆதரவுதரும் புரவலரிடையேயும் அவர் ஒப்புயர்வற்ற புரவலாயிருந்தவர். புலவர்களுக்கே, அதிலும்,தாய்மொழிப் புலவர்களுக்கே இயற்கையான அழுக்காறும், வீறாப்பும் இவரிடம் சிறிதும் கிடையாது. தமிழ்நாட்டு வள்ளற் புலவர் கா. நமச்சிவாய முதலியாரைப் போல, அவரும் வறுமையிலுழன்ற எத்தனையோ கவிஞர் களையும் எழுத்தாளர்களையும் தூக்கி விட்டவர்ஆவார். மக்களின் பழைமை, மடமை ஆகியவற்றுக்கு ஆளாய், மங்கி மறுகிவந்த சீர்திருத்த எழுத்தாளர்களையும், புதுமைக் கவிஞர்களையும் அவர் ஆதரவே தலை காத்துநின்றது. இத்தகைய மலையாள நாட்டின் தந்தையுடன் சரிசமமான நிலையில் நின்று கலைத் தந்தையாய் ஒளிர்ந்த கலைமணியே இரவிவர்மா. கலைஞர் வறுமை உலகெங்கும் பெயர்போனது. அதற்கு விலக்கான ஒரு சிலருள் இரவிவர்மா தலைசிறந்தவர். கலைஞர் வறுமைக்கு அடிப்படையான காரணம் ஒன்று உண்டு. செல்வத்தில் புரளும் உயர்குடியினரி டையே கலை பெரும்பாலும் தோன்றுவதுமில்லை; தோன்றினாலும் வளர்வதில்லை. உயர்குடிப் பிறப்புக் காரணமாகக் கிட்டும் எளிய புகழும், செல்வாக்கும் கலையை விரைவில் போலிக் கலையாக்கிவிடுகிறது. இதற்கு நேர் மாறாக, ஏழை மக்களிடையே கலை வறுமையின் பிடியிற்பட்டு அடிக்கடி கருவிலேயே சிதைக்கப்படுகிறது. எனவே வறுமையிற் பிறந்து எதிர்நீத்து நீந்தி உயர்வுறுகின்ற செயற்கரிய செய்யும் ஒரு சில பெரியாரைத்தான் உலகம் கலைஞர் என வரவேற்க முடிகிறது. எந்நாட்டிலும், சிறப்பாகக் கலை வளர்த்த- இன்னும் மக்கள் பாராட்டு, அரசியல் ஆதரவு ஆகியவை இல்லாமல் கலை சிதைந்து வருகிற- தென்னாட்டிலும், உலகமன்ற மறிந்த கலைஞர்கள் தொகையில் குறைவாயிருப்பதற்கும் பொதுவாக அவர்கள் வறுமையில் உழல்வதற்கும் இதுவே காரணம் என்னலாம். இரவிவர்மா வாழ்வு இந்த இருண்ட சூழ்நிலையை மாற்றியமைக்க முடியவில்லையாயினும், இந்தச் சூழ்நிலையின் இருளை எடுத்துக்காட்டும் சுடரொளியாய் விளங்கிற்று. மன்னர் மரபாயினும், பண்டைத் தென்னாட்டு மரபின் எஞ்சிய ஒரே மரபாகவும், பண்டைக் குடியாட்சி மரபில் வந்த மன்னர் மரபாகவும், மலையாள நாட்டு மன்னர் மரபு விளங்குவதனால்தான் இம்மரபில் இன்னும் மன்னர் மட்டுமன்றி மக்கள் தலைவரும் கலைஞரும் தோற்றுகின்றார்கள் என்னலாம். திருவாங்கூர் மன்னருட் பலரும் கொச்சி மன்னரும் மன்னர் மட்டுமல்லர்; தாய்மொழியிலும் பிற அண்டை மொழிகளிலும் அயல் மொழிகளிலும் வல்ல பெரும்புலவர்கள் கவிஞர்கள் புரவலர்கள் அவர்களிடையே எண்ணற்றவர். அணிமைக் காலத்திலேயே திருவாங்கூரில் கார்த்திகைத் திருநாளும், சுவாதித்திருநாளும் இசைக்கலை மன்னராகவும், புலவராகவும் இருந்துள்ளனர். காலஞ்சென்ற கொச்சி மன்னரும் தமிழ், மலையாளம், வடமொழி முதலிய பன்மொழிப் புலமையும், பல மொழிகளில் கவிபாடும் வல்லமையும் உடையவராயிருந்து வந்துள்ளனர். மன்னர், கோமக்கள் ஆதரவால் மலையாள நாட்டில் தென்னாட்டுக் கலை இடையறாமல் ஓரளவு இன்றுவரை நிலவியுள்ளது. ஆனால், தமிழகத்திலும் பிற தென்னாட்டுப் பகுதிகளிலும் இந்த அளவு தொடர்ச்சியான வளர்ச்சி ஏற்படவில்லை. பேரரசராகும் ஆர்வத்தால் மன்னர் நடத்திய போட்டிப் பூசல்கள் உள்நாட்டுப் போர்களை ஓயாது உண்டு பண்ணின. வெளியார் அவர்களை அடக்கிவெல்ல முடியா விட்டாலும், வெளிநாட்டு அரசியல் தலையீடும் வெளியார் பண்பாட்டுத் தலையிடும் மிகுதியாயிருந்தன. இவ்வரசியல் குழப்பமாகிய பாலைவனத்திலும் ஆங்காங்கே அவ்வக்காலத்தில் கலை, இலக்கிய வளர்ச்சி இருந்ததுண்டு. மதுரை விசுவநாத நாயகர், திருமலை நாயகர், தஞ்சை விஜயராகவர், மைசூர் ராமராஜ உடையார் ஆகியவர்கள் ஆட்சிக் காலங்கள் இத்தகைய ஓய்விடைக் காலக் கலைவளர்ச்சி கண்டன. ஆயினும் இவை முற்றிலும் தொடர்ந்த வளர்ச்சியாக இல்லை. அதன் பயனாகப் பண்டை மரபுத் தொடர்பும் தற்பண்பும் வளர்ச்சியுற்றுத் தழைக்க முடியவில்லை. உயிரிலக் கியங்களும் பெருநிலப் பண்ணைகளும் தந்த ஆதரவு கட்டடக்கலை, இலக்கியம் ஆகியவற்றுக்கு மட்டும் ஓரளவு தொடர்ந்த வளர்ச்சி தந்துள்ளன. இவ்வளர்ச்சியைத் தென்னாட்டின் பண்டைக் கலை மரபில் ஆராய் பவர்க்கும், அதன் தொடர்ச்சியை உயிர் மரபுடன் காண விரும்புபவர்க்கும், மலையாள நாட்டளவு, அல்லது திருவாங்கூர் அளவு பிற தென்னாட்டுப் பகுதிகள் பயன்படமாட்டா என்றால் தவறாகாது. இன்றைய தென்னாட்டு வாழ்வில் பிறநாட்டு மொழிகளுக்கும் பிறநாட்டுப் பண்புகளுக்கும் இருக்கும் ஆதிக்கம் தாய்மொழிக் கலைகட்கும் தென்னாட்டு மரபுக்கும் இருக்க முடிவதில்லை. செல்வரும் ஆதிக்க வகுப்பினரும் பிறமொழி, பிறபண்பு பேணுவதிலன்றித் தாயகப் பண்பில் நாட்டங்கொள்ள முடிவதில்லை. இவற்றின் பயனாகச் சீர்கெட்டு நலிந்து வரும் கலைகள் பல. மேனாட்டு மருத்துவ முறைகளை எதிர்த்து ஓரளவு ஆயுர்வேதம், யூனானி முதலிய கீழ்நாட்டு முறைகள் இன்று தலையெடுக்க முடிகிறது. ஆனால், தென்னாட்டுச் சித்த மருத்துவம் அவற்றுடன் சரி ஒப்பான இடம்பெற முடியவில்லை. தென்னாட்டு வானநூல்முறை வடவர் முறைகளையும் மேனாட்டு முறைகளையும்விடத் தற்கால அறிவுநூல் முறைக்கு ஒத்ததென யாவரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆயினும் அது தமிழக எல்லைக்கு அப்பால் வழக்கிலில்லை. தமிழகத்திலும் உயர்குடி மக்கள் எனப்படுவோரின் அறியாமையாலும், புறக்கணிப்பாலும் அது சிதைவுற்று வருகிறது. இலக்கியத்துறையில் தென்னாட்டின் தலைசிறந்த பண்டைத் தமிழ், கன்னட இலக்கியங்கள் இருக்கவேண்டும் இடத்தில், வடமொழி இலக்கியம் இடம் பெற்றுள்ளது. மேனாட்டவர் கண்கள்கூட மிகுதியாகத் தென்னாட்டி லக்கியத்தின்மீது படுவதில்லை. வடநாட்டுத் தாய்மொழி இலக்கியங்களைப் போல, அவையும் வடமொழி இலக்கியத்தின் நிழல்கள் என்றோ; அல்லது வடமொழி இலக்கியம்போல அவை புராணங்களின் மறுபதிப்புக்கள் என்றோ தவறாகக் கருதப்படுவதே இதற்குக் காரணம். கலைத்துறையில் தென்னாட்டின் பல மரபுகள் மலையாள நாட்டில் மன்னராலும் மக்களாலும் இன்றுவரை பேணப்படினும், தென்னாட்டவரும், பிறநாட்டவரும் அவற்றைத் தென்னாட்டுக் கலைகள் என்று காணாமல், மலையாள நாட்டுக்கு மட்டுமே உரிய கலைகள் என்று ஒதுக்கிவிடுகின்றனர். இரவிவர்மாவின் கலைமரபும் இத்தகையதே. அவர் கலை அவர் காலத் திற்குள்ளேயே வடநாட்டிலும் மேனாட்டிலும் பரந்தாலும், வடநாட்டி லெழுந்த புதிய வங்கக் கலைமலர்ச்சி இயக்கம் அதை இருட்டடிப்புச் செய்து வருகிறது. திருவாங்கூரிலுள்ள ஆசிரியர் கே.பி. பத்மநாபன் தம்பி அவர்கள் இரவிவர்மா பற்றிய வடநாட்டினர் புறக்கணிப்புப் பற்றிக் கூறுவதாவது:- “ஐரோப்பியக்கலை அறிஞர்கள்கூட இப்போது படிவமுறை, திட்பமுறை, வாய்வியல்முறை, தாகூருக்குப் பிற்பட்ட கலைமுறை ஆகிய எத்தனையோ முறைகளைப்பற்றி வானளாவ விளக்கம் தந்தபின்னும், இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்களுள் ஒருவரான இரவிவர்மாவைப்பற்றி ஒரு சிறிது கூட வாயாடாது வாளா செல்வது காண உண்மையிலேயே வருத்தம் அடையவேண்டி யிருக்கிறது. இரவிவர்மாவின் பெயர் இல்லாத இந்தியக் கலை என்பது, ‘வட்டீகன்’* அரண்மனையில்லாத ரோம் நகரம் போன்றதே யாகும். இந்நிலை எதனால் ஏற்பட்டுள்ளது? அவர் தென் இந்தியாவில் பிறந்தார் என்பதனால் மட்டுமா?” ஆம், மேனாட்டுக் கீழ் நாட்டுக் கலைகளை ஆராய்ந்து ஒப்பிடுபவர்கள். ‘அறிஞர் தம்பியின் கூற்று மிகைபட்டதன்று; உண்மைநிலையை ஒரு சிறிதே துணிந்து சுட்டிக் காட்டுவது’ என்று காண்பர். வடவர் செயலே இதற்கு ஒரு வகையில் மறைமுகமான சான்று ஆகும். அவர்கள் இரவிவர்மாவை இருட்டடிக்க முடிகிறதேயன்றி, அவர் பெயர்கூறி எதிர்க்கவோ அல்லது அவரிடம் திறமில்லை என்று மறுக்கவோ முடிவதில்லை. இரவிவர்மாபற்றி எழுத முன்வந்த அறிஞர் சுதாபோஸ் முதலிய சிலர்கூட, “அவர் இந்திய மரபு பேணவில்லை; அவருக்குக் கலைப் பயிற்சியில்லை.” என்று மட்டுமே கூறுகின்றனர். அவரே பண்டை இந்திய மரபான தென் இந்திய மரபுக்கு உரியவர் என்பதையும், உயிரோவியம், நெய்வண்ண ஓவியம் ஆகிய துறைகளில் தனியுயர் சிறப்புப்பெற்ற அவர் பயிற்சியற்றவர் என்று கூறுவது பொருந்தாக் கூற்று என்பதையும் காணலாம். உண்மை என்னவென்றால், அவர்கள் தென் இந்திய மரபை அயல் மரபு என்று ஒதுக்குகின்றனர். அது போல வடஇந்திய இடைக்காலக் கலை இலக்கணம் கொண்டு பண்டைத் தென் இந்தியக் கலையை அளந்து விலக்க முற் படுகின்றனர். தென் இந்தியக்கலை மரபு இன்று புறக்கணிக்கப் பட்டாலும், வருங்காலத்தில் அறிவுலகத்தில் கண்டு மேற்கொள்ளப்படுவது உறுதி. மலையாள நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையேயுள்ளது செந்தமிழ்ப் பொதிகை. தென்னாட்டுக்கு மட்டுமன்றி இந்தியா முழுமைக்கும் பண்டு கலையும் பண்பாடும் அளித்தது அதுவே. இதனைத் தமிழிலக்கியம் மட்டுமன்றி வடமொழி இலக்கியமும் பெரிதும் பாராட்டுகிறது. இம்மலையின் புகழ்ச்சுவடு வடமொழி இலக்கியத்தில்கூடப் பதிந்தேயுள்ளது. மலையமலை என்ற வடமொழிப் பெயருடன் அது காளிதாசன் போன்ற வடமொழிக கவி மணிகளால் பராவப்பட்டுள்ளது. வேனிலும் தென்றலும் தண்ணறும் சந்தனமும் தமிழ் பிறந்த இம்மலையிலேயே தோன்றின என்பதை இவ் வடமொழி வாணர்சாற்றுகின்றனர். இதனாலேயே வடமொழியில் வேனிலான் அல்லது மன்மதன் மலயராஜன் என்றும், தென்றல் மலயமாருதம் என்றும், சந்தனம் மலயஜம் என்றும் வழங்குகின்றன. இம்மரபை வடநாட்டு மொழிகள் யாவுமே இன்றுவரைப் பேணித்தான் வருகின்றன. ஆனால், மலயம் என்பது தமிழும் தாமிரவருணியும் பிறக்கும் பொதிகை என்ற செய்தி இன்று வடநாட்டவர் காதில்படாது மறைக்கப்பட்டு வருகிறது. அது தெரியவரும் காலத்தில் படிப்படியாகத் தென்னாட்டைப் பற்றிய வடவரின் புறக்கணிப்பும், அறியாமையும் குறையும். வட நாட்டின் கலவைப் பண்புகளிடையே அதன் மூலமுதற் பண்பின் கருவூலங்களான தமிழ்ச் சங்க இலக்கியத்தையும் பிற தென்னாட்டுக் கலை மரபுகளையும் அறியும் வாய்ப்பும் அன்றுதான் இந்திய மாநிலத்துக்கும் கீழ் நாடுகளுக்கும் ஏற்படும். இரவிவர்மாவின் கலை மலையாளத்தின் தென்றலாய், அதன் நறுமணச் சந்தனமாய், இந்தியாவின் கலை மரபிடையே மணம் வீசத்தக்கது. பாண்டியர் மரபும் பொதிகை மலை ஆய் மரபும் வடமலையாறச் சேர மரபும் கலந்து வீசும் அவர் கலைத்தென்றல் இடைக்காலப் போலிக் கலை மரபுகளின் மயக்கம் ஒழித்து, தென்னிந்தியாவின் சிறப்புக் கலைமரபாகவும் இந்தியாவின் சிறந்த கலைமரபாகவும் இடம்பெறும் நிலையை நாளடைவில் உண்டு பண்ணும் என்று உறுதியாக நம்பலாம். 3. பயிற்சிப் பருவம் இரவிவர்மா 1848 ஏப்ரில் 29-ம் நாளன்று கிளிமானூர் மரபினரின் பண்டைப் புகழ்பெற்ற அரண்மனையிற் பிறந்தார். அவர் அன்னை உமா அம்பாபாய் ஆவர். அவர் கல்வி கேள்விகளில் மலையாள நாட்டின் தலைசிறந்த பெண்களுள் ஒருவர். இசைச் சுவைத் திறத்திலும் இசையறிவிலும் அவர் மேம்பட்டவராயிருந்ததுடன், தாய்மொழியாகிய மலையாளத் திலும் அரும்புலமை யுடையவராயிருந்தார். சில மலையாளக் காப்பியங்களையும் அவர் இயற்றியுள்ளார் என்று அறிகிறோம். இத்தகைய கலைத்திறம் படைத்த அன்னையாரின் சிறப்பு. மகனாகிய இரவிவர்மாவிடத்திலும் மற்றொரு மகனாகிய இராஜராஜ வர்மாவிடத்திலும் ஓவியத்திறமையாகப் பொலிவுற் றது. இரவிவர்மாவின் உடன்பிறந்த நங்கையாரிடத்தில் இவ் அன்னை யாருடைய ஓவியத்திறமையும் இசைத் திறமையும் ஒருங்கே குலவின. இரவிவர்மாவின் தந்தை ஏழுமாவில் பட்டாதிரி என்ற ஒரு நம்பூதிரிப் பார்ப்பனர். மன்னர்குடிப் பெண்டிர் கிளிமானூர்த் தம்பிரான் போன்ற தம்பிரான் குடியில் மணம் செய்துகொள்வதுபோல, தம்பிரான் குடிப் பெண்டிர் நம்பூதிரி மரபிலேயே மணம் கொள்ளுதல் மலையாளநாட்டு மரபு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஏழுமாவில் நம்பூதிரி வைதிகப் பற்றுடையவர். நம்பூதிரிகளுக்கு இயல்பான பெரும்புலமையு முடையவர். இரவிவர்மாவுடன் பிறந்தவர்கள் அவர் நீங்கலாக இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் ஆவர். இரவிவர்மாவே மூத்த பிள்ளை. குடும்பத்தில் கலைமரபு பொங்கிவழிந்தபோதிலும், அவர் பெற்றோரும் உற்றோரும் அவர் பால் கொண்டிருந்த பேரவா வேறு வகையாயிருந்தது. அவர்கள் அவரை வடமொழிப் புலவராக்க எண்ணி, வீட்டிலேயே வடமொழி கற்றுக்கொடுக்க ஒரு பண்டிதரை அமர்த்தினர். அவரும் ஓரளவு வடமொழியைப் பயின்றார். ஆனால், அவர் விருப்பம் அத்துறையில் செல்லவில்லை. உள்ளார்ந்த கலைமரபு இளமையிலேயே பீறிக்கொண்டு வெளிவந்தது. குழந்தை இரவிவர்மா தாய் மடியிலிருந்துகொண்டே கற்பலகையும் பலப்பமும் எடுத்துச் சுறுசுறுப்பாக வேலை செய்தார். ஆனால், அவர் எழுதியது பாடம் அல்ல, படம்! கலைப்பண்பு வாய்ந்த கிளிமானூர் அரண்மனையின் அழகிய தளங்களையும், பளிங்குபோன்ற சுவர்களையும், அவர் கரிக்குச்சுகளால் தாறுமாறாகப் படம் வரைந்து கெடுத்து வந்தார்.குடும்பத்தின் மூத்தோர் சிலர் அவருடைய இப் போக்குக் கண்டு சீறினர்; சிலர் கடு கடுத்தனர்; சிலர் முனகி முணுமுணுத்துக் கொண்டனர். ஆனால், அவர் தாய்மாமன் இராஜராஜவர்மா கலைஞராயிருந்ததனால், இவ் விளமைப்போக்கின் உட்பொருளை உணர்ந்துகொண்டார். அவர் சிறுவன் போக்கைக் கண்டு சீறவுமில்லை; கண்டிக்கவுமில்லை; ஆனால், திருத்தினார். ‘கரிக்குச்சி யினால் சுவரில் எழுதாதே; எழுதுகோல் தருகிறேன், தாள் தருகிறேன், அதில் படம் வரை’ என்று அவர் ஊக்கினார். தாய்மாமன் நுண்ணுணர்வு, குறும்பனாகத் தோற்றிய சிறுவனைத் திறம்படு கலைஞனாக்கிற்று. கண்டித்து வந்த உறவினரே வியக்கும் வண்ணம் அவர் குடும்பவீடு, கால்நடைகள், உயிரினங்கள், மனிதர் உருவங்களைப் போலப் பொம்மைப் படங்கள் வரைந்து, அவர்களை மகிழ்வித்தார். நச்சுக் குறும்பு, கலைக் குறும்பாய், பின் கலையாக வளரத்தொடங்கிற்று. அக்காலத்தில் கலைஞர் வழங்கிய வண்ணங்கள் தற்காலத்து மேல்நாட்டு வரவான செயற்கை வண்ணங்களல்ல. தூரிகைகளும் இயந்திரப் பொறிகளின் எளிய படைப்பாகிய நேரிய கலைத்தூரிகைகளாயிருக்க வில்லை. புல்பூண்டு தழைகளின் சாறுகள், கடுக்காய் முதலிய கடைச் சரக்குகள், மலர்ச்சாறுகள் ஆகியவற்றின் கலவைகளே வண்ணங் களாயிருந்தன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே தமிழரும் பிறதென்னாட்டவரும் வழங்கிய இந்த வண்ண முறைகள் மலையாளத்துக் கதைகளி, ஓட்டந் துள்ளல், சாக்கியார் கூத்து ஆகிய பண்டை நாடகக் கலைத்துறைகளில் இன்றும் வழங்குகின்றன. தூரிகைகள் இதுபோலவே நார்கள், மயிர்த்துய்கள், தென்னைமட்டைக் குச்சுகள் ஆகியவற்றால் செய்யப்பட்டிருந்தன. கலைச்சிறுவன் இரவிவர்மா படிப்படியாக இத்தகைய சரக்குகளைக் கையாளப் பழகினார். தாய்மாமன் இராஜராஜ வர்மா அவர் கலையார்வத்தைப் பேணிவளர்த்து, அத்துறையில் அவருடைய முதலாசிரியராய் விளங்கினார். வளரும் பிள்ளையைக் கண்டு மகிழும் தாயைப்போல, அவர் கலை வளர்ச்சி கண்டு இராஜராஜ வர்மா மகிழ்வுற்றார். வடமொழிப் பயிற்சியைவிட்டு இரவிவர்மாவின் மனம் வண்ணக் கலையிலேயே சென்றாலும், அவர் வடமொழிப் பயிற்சி முற்றிலும் வீண் போகவில்லை. அது அவர் கலைத்துறையில் யாரும் எதிர்பாராத புதுப்பயனை அளித்தது. காளிதாசனின் சகுந்தலையும் பவபூதியின் மாலதியும் பாணபட்டனின் காதம்பரியும் கவிதையுருவில் அவர் காது வழி சென்று, கலையுருவில் அவர் உள்ளத்தில் கிளர்ந்து, கலைச் சித்திரங்களாக மாற்றமுற்று வளர்ந்தன. வால்மீகியின் இராமாயணமும், வியாசரின் பாரதமும் அவர் மலையாள உள்ளத்தில் தோய்ந்து, எழுத்தச்சனின் பக்தி வெள்ளத்திலும் கண்ணஃச்சப் பணிக்கரின் இன்னிசைப் பண்பிலும் மிதந்து, அலை பாய்ந்து, பழமையிற் புது உலகு படைக்கும் கற்பனைத்திறனை அவருக்கு அளித்தன. ஆனால் கவிதை, பக்தி, கதை யாவும் அவர் உள்ளத்தில் குஞ்சன் நம்பியாரின் உலகியல் திறம்வாய்ந்த அகல்திறப் பண்பளாவிக் கiலையுருவம் பெற்றன. சொற்கள் உருக்களாகவும், பண்புகள் பண்பிகளாகவும் மாறின. உவமைகள் வண்ணங்களாயின. அணிநயங்கள் கைத்திற நுட்பங்களாய்த் தூரிகையை இயக்கும் வடிவழகுக் காட்சிகளாயின. உலகின் மெய்யுருக் காட்சிகளைக் கண்டு தீட்ட விரும்பிய கலைஞன் அகக்கண்முன் இக்காவியங்கள் உலகின் மெய்வண்ணமளாவிய காட்சிகளையும் எழுப்பி வாய்மை வழுவாக் கற்பனைச் செப்பம் வளர்க்கவும் பயன்பட்டன. இச்சமயம் மலையாள நாட்டின் சிறந்த கலைஞராக இராஜராஜவர்மா கோயில் தம்பிரான் கலைப்புகழ்பெற்று விளங்கினார். அவரிடம் கீழ்த்தரக் கலைஞரிடையே காணப்படும் அழுக்காறு, அவா, வெகுளி ஆகியவை சிறிதும் கிடையாது. எனவே, இளமையிலேயே தம் மருமகன் திறங்கண்டு அவர் வியந்தார். ஓவியக் கலையின் உயிர்நிலை ஒளிநிழல் கூறுபாடுதான் என்பதை அவர் அறிவார். குலக்கல்வி கல்லாமற் பாகம்பட்டு வளர்ந்த இரவிவர்மாவிடம் இத்திறம் இளமையிலேயே வளர்தல் கண்டு கலைக் கோமானாகிய ஆசிரியர் இறும்பூது எய்தினார். “தம்மிற்றம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது” என்ற பண்பை இயல்பிலேயே கொண்ட அவர், தம்மைத் தாண்டித் தம் மருமகன் கலைக்குன்றின் உச்சிநோக்கி முன்னேறிச் சென்று மாநில விளக்கமாவார் என்று கண்டு, அவருக்கு மேன்மேலும் உதவிசெய்து ஊக்கமளித்தார். தயாளமிக்க தாய்போன்ற இவ்வாசான் ஆதரவில் இரவி வர்மாவின் இயற்கைக் கலைப்பண்பு பக்குவ நிலையடைந்தது. இரவிவர்மா பதின்மூன்று வயதுச் சிறுவனாயி ருக்கும்போது, இராஜ ராஜவர்மா இவ் வருங்காலக் கலை மன்னனை இட்டுக்கொண்டு திருவனந்தபுரம் சென்றார். கலையரும்பு மன்னர் முன்னிலையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. மன்னர் தம் உறவினரான இச்சிறுவன் கலையார்வத்தைப் போற்றினார். அவர் கலைத்திறத்தைப் பாராட்டினார். அவருக்குத் தாம் ஆதரவு தரவும் இணங்கினார். ஆயினும் மன்னர் பாராட்டு உறவினர் என்ற முறையிலேயே கிடைத்தது. இராஜராஜவர்மாவின் இளமைக்காலத்தில் இருந்த பழைய மன்னர் மதுரையிலிருந்த கலைஞர் அழகிரி நாயுடுவை அரசவைக் கலைஞராக ஆதரித்தது போல புதிய மன்னரும் மதுரையிலிருந்து ராமசாமிநாயுடு என்ற ஒருவரை அரசவைக் கவிஞராக கொண்டுவந்து அமர்த்திப் பெருமைப்படுத்தி வந்தார். இது தவிர மேனாட்டுக் கலைஞருக்கும் அக்காலத்திய மன்னரி டையே பெருத்த செல்வாக்கு இருந்தது. அந்நாளைய இங்கிலாந்தின் தலைசிறந்த ஓவியக் கலைஞருள் ஒருவரான தியோடோர் ஜென்ஸன் அப்போது திருவாங்கூருக்கு வந்திருந்தார். மன்னர் அவரை வரவேற்று அரண்மனையிலேயே அமர்வித்துச் சிலகாலம் அவர் மூலம் கலைச் சித்திரங்கள் எழுதுவித்து வந்தார். உறவினர் என்ற முறையிலேயே சிறுவனுக்குக் கலைப்பயிற்சியில் உதவும்படி மன்னர் ஜென்ஸனைக் கேட்டுக் கொண்டார். பெருந்தன்மை மிக்க அவ்வோவிய வினைஞரும் இப்பொறுப்பை உவந்து ஏற்றருளினார். மேனாட்டினரின் சிறந்த செயற்கை ஓவியவண்ணப் பொருள்களையும் நுண்திற வேலைப்பாடுடைய தூரிகையையும் இரவிவர்மா இப்போதுதான் கையாளப் பழகினார். தாய் மாமனிடமிருந்து இவற்றில் அவருக்குச் சிறிது பழக்கம் ஏற்கெனவே இருந்ததாயினும், இதில் தேர்ச்சிபெறப் போதிய வாய்ப்பு வளமும் துணைவளமும் இதற்குமுன் அவருக்குக் கிடையாது. தவிர மேனாட்டு முறைகளை இப்போது நேரிடையாகக் காணவும், தேர்ந்த மேனாட்டுக் கலைஞரின் தனித்திறங்களையும் போக்குகளையும் வினை யாற்றும்போதே உடனிருந்து கவனிக்கவும், அவருக்கு இடம் கிடைத்தது. செயற்கை வண்ணங்களின் கலப்பால் இயற்கை வண்ணங்களை உண்டு பண்ணும் மேனாட்டுக் கலைஞர் திறங்கண்டு அவர் உள்ளூர வியந்தார். தனித்திறம் பயிலாக் கீழ்நாட்டவர் கலைச் சட்டங்களை விட தனித்திறமும் தனி மனிதன் முயற்சியும் வளர்க்கும் மேனாட்டுக் கலை அவரிடம் எளிதில் தன்னம்பிக்கையையும் தன்முயற்சியையும் வளர்த்தது. தியோடோர் ஜென்ஸனின் அன்புகனிந்த உதவியும் அறிவுரையும் முதன்முதலாக இளைஞன் இரவிவர்மாவின் கலைக்கண்களுக்குப் புதிய கனவுகளை ஊட்டின. அவை அவருக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டின. பாதாளக் கல்லறைச் சிறையில் அடைபட்டுக் கிடந்தவன் திறந்த வானத்தின் ஒரு பகுதியைத் திடுமெனக் கண்டால், குளங்குட்டைகளையே கண்டு உலவியவன் அகன்ற மாகடலை எதிர்பாராது கண்டால் எத்தகைய மனக்கிளர்ச்சி கொள்வானோ, அத்தகைய மனக் கிளர்ச்சி அவருக்கு ஏற்பட்டது. மேனாட்டில் லியோனார்டோ முதலிய கலைஞர்களின் உயர்படைப்புக்கு நிலைக்களானயிருந்த நெய்வண்ண ஓவியத்தின் வியத்தகு பண்பியல்புகளை ஜென்ஸன் அவருக்கு உணர்த்தினார். பயிற்சி மிகுதியில்லாமலே கலைத்தெய்வத்தின் மடிமீது தவழ்ந்த கலைக் குழந்தைக்குக் கலைநுட்பத் துறையிலும் செயல்துறையிலும் ஏற்படும் ஐயவினாக்கள், இடர் மயக்கங்களுக்கு அவர் பொறுமையுடன் தெளிவு தந்தார். ஆசிரியர் அறிவுரைகளை விடத் தூரிகைகைய அவர் கையாளும் போது அவருடனிருந்து செயல்காட்சி காண்பதே மாணவனுக்கு ஒப்பற்ற பயிற்சியா யமைந்தது. ஒளி நிழற் கூறுகளைக் காணும் திறமும்,அதனைப் பயிற்சியில்லாமலே திரையில் தீட்டிக்காட்டும் பண்பும் இரவிவர்மாவிடம் இயல்பில் அமைந் திருப்பதுகண்டு, மாமனைப் போலவே ஆசிரியர் ஜென்ஸனும் வியப்படைந்தார். இருவரும் தந்த ஆதரவைப் பயன்படுத்தி இரவிவர்மா மேலும் கடுமையாக உழைத்தார். கலைத்துறையில் நீடித்துக் கடிது உழைத்தாலன்றித் தாம் தம் கனவுகளை நனவாக்க முடியாதென்பது அவருக்குத் தெரியும். வேறு பல தலைசிறந்த கலைஞர்களைப் போல அவர்தம் இயற்கைத் திறனை நம்பிச் செம்மாந்திருக்கவோ, கலை எழுச்சி நோக்கத்தை மட்டும் நம்பிக் காத்திருக்கவோ செய்யவில்லை. இயற்கைத் திறன் என்று கூறப்படுந் திறங்கள்கூட, நீடித்த உள்ளார்ந்த முயற்சிகளின் பலனேயாகும். இதனை இரவிவர்மா நன்கு அறிந்தவராயிருந்தார். ஆகவே, “உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ.” என்ற வாயுரையையே கடைப்பிடித்து அவர்தம் முழு நேரமும் கவனமும் செலுத்திக் கலையில் உழைத்தார். கலைஞன் ஜென்ஸனுக்குப் பின் இரவிவர்மாவுக்குக் கலைத் துறையில் அறிவுரைதர ஆளில்லாது போயிற்று. தாய் மாமனோ மருமகன் கலைவளர்ச்சி தன் கலையின் வானவிளிம்பு கடந்து சென்றுவிட்ட தென்பதை ஒத்துக் கொண்டுவிட்டார். இந்நிலையில் தாமே தம் கலையின் தனிமுகடு என்று எண்ணும் தற்பெருமை இரவிவர்மா விடம் வளராதது வியப்புக்குரியதே. அது மட்டுமன்று: இதற்கு நேர்மாறாக, தம் இயற்கை வளர்ச்சி கலைத்துறை வல்லுநர் கருத்துக்கு ஏற்புடையதுதானா, அல்லவா என்று அறியும் அவா அவருக்கு அடிக்கடி ஏற்பட்டது. தாய் மாமன் இராஜராஜவர்மா தம்கால அரசவைக் கலைஞன் அழகிரியை அடுத்து மாணவனானதுபோல், தாமும் தம்கால அரசவைக் கலைஞர் இராமசாமி நாயுடுவை அடுத்து உதவிபெற விரும்பினார். ஆனால், இரவிவர்மா தம் ஆற்றலறியாவிட்டாலும், இராமசாமி நாயுடு அதனை நுனித்தறிந்து கொண்டிருந்தார். கீழ் மக்கள் பாராட்டுப் பொறாமை வடிவத்திலேயே வெளிப்படும். இராமசாமி நாயுடு இரவிவர்மாவின் வளரும் இயற்கலைத் திறம் கண்டு பொருமிக்கொண்டிருந்தார். இரவிவர்மா மன்னரின் உறவினர் என்ற செய்தி அவர் பொறாமைத் தீயை இன்னும் வளர்த்தது. ஆகவே, அவர் இரவிவர்மாவுக்கு உதவ மறுத்ததுடன், அவர் கலைச்சுவைத் திறத்தைக் கண்டு ஏளனம் செய்யவும் முற்பட்டார். மக்கள் கலைப்பண்பு, கற்பனைப் பண்பு, ஆற்றல், திறமை ஆகியவை அனைத்தும் வருந்திப் பெறத்தக்கவை. ஆனால், உள்ளப்பண்பு முயற்சியினால் பெறத்தக்கதன்று. நற்குடிப்பிறப்பும் நல்லோர் பழக்கமும் அன்றி அதனை எதுவும் உண்டு பண்ணவும் முடியாது. இப் பண்பு இல்லாதவரிடம் மற்ற எத்தகைய பண்புகள் இருந்தும் பயனில்லை. மற்றப் பண்புகளின் நிறைவுடன் இப்பண்பும் அமைந்திருந்தால்தான் நாம் ஒருவரைச் சான்றோர் என்று கூறமுடியும். இச்சான்றாண்மைக்குடி செல்வக்குடியாய் இருக்க வேண்டுமென்றில்லை. உண்மையில் செல்வக்குடி எல்லாம் சான்றோர் குடியாய் இருப்பதுமில்லை. ஏழைக்குடியில் சான்றாண்மை இருக்க முடியாதென்பதுமில்லை. இரவி வர்மாவின்குடி மன்னர்குடி: அறிவும் கலையும் நிரம்பியகுடி. இத்துடன் அதன் பெருமை அமைந்துவிடவில்லை. அது சான்றாண்மைப் பண்புடைய குடியாகவும் இருந்தது. கலைஞர் இராமசாமி நாயுடுவிடம் இச்சாண்றாண்மைப் பண்பைக் காணாமற் போகவே, இரவிவர்மா அவர் கலைப்பண்புகளையும் மதிக்க மறுத்தார். சான்றாண்மைப் பண்பற்ற துரோணரை வெறுத்து, அவர் களிமண் உருவிடமிருந்தே கலைபயின்ற ஏகலைவன்போல, இரவிவர்மா இதுமுதல் வேறு கலையாசிரியரின் உதவியில்லாமல், தாமே கலைநங்கையிடம் காதல்கூரத் தொடங்கினார். இடையீட்டாளர் இன்றிக் கலைநங்கையை அணுகத் துணிந்த இரவிவர்மாவின் கலைத் துணிச்சலைக்கண்டே, பல கலை வல்லுநர் இன்றும் அவர் கலைத்திறமைக்கு அவரை மன்னிக்க மறுக்கின்றனர். இரவிவர்மாவை மாணவராகப்பெறும் நல்வாய்ப்பைக் கலைஞர் இராமசாமி நாயுடு இழந்தபின், இவரின் கலைத்திறமும் புகழும் தாமாகவே வளர்ந்தன. நாயுடுவின் கலைப்புகழ் தாண்டி, இவர் வளர்ந்துவிட்டார். இரவிவர்மாவின் கலைவாழ்வில் 1873-ம் ஆண்டு ஒரு திரும்பு கட்டமாயமைந்தது. அப்போது அவருக்கு வயது 25. கலை நங்கையையே விரும்பிக் கடமையாற்றியிருந்த அவர் வாழ்வில் இப்போது ஒரு காதல் நங்கை குடிபுகுந்தாள். அவ்வாண்டு அவர் மாவேலிக்கரை அரசர் குடிமரபிலுள்ள ஒரு கன்னியை மணம் புரிந்து கொண்டார். அந் நங்கையார் அந்நாளைய மூத்த பட்டத்திற்குரிய அரசியின் தங்கையாகவும் இருந்தார். இதன் மூலம் மன்னருடன் இரவிவர்மா முன்னிலும் நெருங்கிய நேரடியுறவினரானார். இதுமுதல் அவர் கலைஞராக மட்டுமன்றி மன்னரின் சிறந்த தோழராகவும் மன்னவையில் தலைசிறந்த ஓர் உறுப்பினராகவும் அமைந்தார். அவருக்கென இதுமுதல் அரண்மனையிலேயே கலைக்கூடம் ஒன்று அமைத்துத் தரப் பட்டது. அது மட்டுமன்று. அவர் வாழ்க்கைத் துணைவியின் தமக்கையரான மூத்த உரிமை அரசியின் கணவரே தற்கால மலையாள மொழியின் தந்தையாரான கேரளவர்மா வலியகோயில் தம்பிரான் ஸி.எஸ். ஐ.ஆவர். இங்ஙனம் 19-ம் நூற்றாண்டில் திருவாங்கூர் அரச குடும்பமாகிய கொடியில் பூத்த அரசுரிமைக்குரிய இரண்டு மலரணங்குகளையும் அந்நூற் றாண்டின் இரண்டு கலைக்கோமான்களாகிய கேரளவர்மாவும், இரவிவர்மாவும் துணைவியராகக் கொள்ளும் அரும்பேறு ஏற்பட்டது. திருவாங்கூர் அரசமரபின் தற்போதைய அரச உரிமை யாளரான சித்திரைத் திருநாள் இராமவர்மா, நம் இரவி வர்மாவின் திருமண வாழ்விலிருந்து தோன்றிய மரபுக்கொடியில் இரண்டாவது தலைமுறைக்குரிய ஆண்மரபினர் ஆவர். அவர் தந்தை இரவிவர்மாவின் ஒரு மருமகன். அத்துடன் அவர் பெரியன்னையாரான மூத்த பட்டத்தரசி அவர் புதல்வியின் புதல்வி. இங்ஙனங் கலைக்கோமான் மரபு அரசுரிமைக் கோமான் மரபாகவும் வளர்ந்துள்ளது. 4. புகழ் ஏணி இரவிவர்மாவின் கலையில் இருநோக்குகளைக் காணலாம். ஒன்று தனிப்பொருள்களைக்கண்டு சித்தரிக்கும் உயிரோவியச் சித்திரம். மன்னர், வரலாற்றுப் பெரியார், தனி மனிதர்களின் வடிவப்படங்கள் இத்துறை சார்ந்தவை. கீழ் நாட்டில் அவருக்குப் போட்டியற்ற முதன்மைதரும் துறைகளுள் இது ஒன்று. மேல் நாட்டில்கூட இத்துறையில் அவருடன் வைத்தெண்ணக் கூடியவர்கள் ஒரு சிலரே. இரவிவர்மாவின் கலையின் மற்றொரு நோக்கு கற்பனை நோக்கு. இதில் பல திறங்கள் உள்ளன. ஓருருவும் ஒரு பெயரும் இல்லாத கடவுளுக்குப் பல்லுருவும் பலபெயரும் கொடுத்து வரைந்த கடவுளர் படங்கள்; தெளிந்த உருவற்ற புராண காவிய உருவங்களுக்குத் தெளிந்த உருவளித்துப் பொதுமக்கள் உள்ளத்தே ஊடாடவிடத்தக்க கற்பனைச் சித்திரங்கள்; தனிப்பொருள்கள் பலவற்றை ஒருமுகப்படுத்திப் பொது உருப்படக் காட்டும் ‘தமிழ்ப்பாடகி’, ‘மலையாள நங்கை’, ‘குறவன்’ முதலிய பொது சமூகச் சித்திரங்கள்; பண்பை உருவகப்படுத்திக் காட்டும் ‘வழிபாடு’, ‘பகற்கனா’, ‘நாணம்’, ‘தற்பெருமை’ போன்ற உருவகங்கள் ஆகியவை இதன் பல. திறங்கள். இரவிவர்மா வினுடைய கலையின் ஒருகண் எப்போதும் இங்ஙனம் நேரிடையாக இயற்கையின் அழகையும், தனிப்பொருளையும் கண்டு தீட்டியது. மறுகண் பொது உருவங்களையோ, கற்பனைக் கதை உருவங்களையோ தீட்டிக் காட்டியது. ஒன்று புறமுகக் கலையாகவும் மற்றொன்று அகமுகக் கலை யாகவும் விளங்கிற்று. மன்னரின் தோழராகவும், மன்னவை அரண்மனைக் குழுவின் உறுப்பினராகவும் இரவிவர்மா இடம்பெற்ற பின், அவர் அரசர் அரசியரையும், அரசவை, அரண்மனை உறுப்பினரையும், திரையில் தீட்டிக்காட்டித் தம் கலையை வாழ்வுடன் இணைத்து வளர்த்தார். இதுவே அவர் கலையின் முதற் பயிற்சியாயிற்று. அவரைப் பிற்கால இந்தியக் கலைஞரைப்போல் மாயமருட்கைக் கலைஞனாக்காமல், இயற்கையுடனும் வாழ்க்கையுடனும் ஒட்டிய கலைஞனாக்கியது இப் பயிற்சியே என்னலாம். இதே சமயம் அவர் பொதுப் பண்புச் சித்திரங்களை நோக்கியும் தன் கலைக் கைவிரல்களைப் பரப்பத் தொடங்கினார். வடமொழி, மலையாள காவியங்களின் நிகழ்ச்சிகளையும் உறுப்பினர்களையும் அவர் உள்ளத்தில் உருவகப்படுத்திப் பார்த்துத் தீட்டலானார். அவருடைய தனிச் சித்திரங்கள் அவரைப் பல மன்னர், வெள்ளையாட்சித் தலைவர் ஆகியவர்கள் குழுவில் செல்வாக்குப் பெறச் செய்தன. இதனால், மாடகூடங்கள்மீது அவர் கலை ஒய்யாரமாகப் பறந்தது. அதே சமயம் காவியக் கற்பனைப் படங்கள் பொதுமக்கள் இல்லங்களை நோக்கியும், அவர்கள் உள்ளங்களை நோக்கியும் அவரை இழுத்தன. இயற்கையையும், வாழ்க்கையையும் விடச் சமயத்துறைக் கற்பனைகளில் மிகுதி பற்றுடைய தற்காலக் கீழ்நாட்டுலகில் இரண்டாவது திறம் அவரைத் தனிச்சிறப்புப் படமக்கள் கலைஞனாகவும் கீழ்நாட்டுக் கலைஞனாகவும் இடம் பெறச் செய்தது. கீழ்நாட்டு மரபைப் பின்பற்றுவதாகக் கூறும் எந்தக் கலைஞனும், மேல்நாட்டு முறையைப் பின்பற்றுவதாகக் கருதப்பட்ட இரவிவர்மாவளவு கீழ்நாட்டுக் கலைஞனாக இடம்பெற முடியவில்லை. சரியாகவோ, தப்பாகவோ, கீழ்நாட்டைக் கீழ்நாடாக்கும் வகையில் ‘கீழ்நாட்டுக் கரைமரபு என்று கூறப்படும் கலைமரபைவிட அவர் கலைமரபு மிகுதி உதவிற்று என்பதை எவரும் ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும்! ஆனால், இரவிவர்மா உண்மையிலேயே கீழ்நாட்டுக் கலைஞர்தாம் என்பதை அவர் சமூகச் சித்திரங்களும் பண்புருவச் சித்திரங்களும் நிலைநாட்டுகின்றன. அவர் முறை மேல் நாட்டுமுறை என்பதுகூடச் சரியன்று. அவர் அதை ஜென்ஸன் மூலம் மேனாட்டு மரபினின்று கற்றாலும் அது மொகலாய இராஜபுதனக் கலையுடனும், சிற்றன்னவாசல் சித்திரங்களுடனும், சிந்துவெளி நாகரிக காலமுதலுள்ள கீழ்நாட்டுத் தென்னாட்டு அடிப்படைக் கலைமரபுடனும் பண்பாட்டுடனும் தொடர்பு டையது. இரவிவர்மா மணவாழ்விற் புகுந்த அதே ஆண்டில் சென்னையில் கவின்கலைப் பொருட்காட்சி ஒன்று நடைபெற்றது. இரவி வர்மாவின் நண்பர்கள் இதில் கலந்து கொள்ளும்படி அவரைத் தூண்டினர். அவரும் ‘நாளொப்பனையி லீடுபட்ட நாயர் நங்கை’ என்ற சமூகச் சித்திரத்துடன் அதில் பங்கு கொண்டார். இதுவரை திருவாங்கூரில் அரங்கில் ஆடிவந்த அவர் கலை, இதன் மூலம் வெளியுலகில் அம்பலத்தில் ஆடத் தொடங்கிற்று. அப்படம் யாவர் கண்களையும் கவர்ந்தது. அத்துடன் அது சென்னை மாகாணத் தலைவரின் தங்கப் பதக்கமும் பெற்று, எடுத்த எடுப்பிலேயே மன்னன் இரவிவர்மாவின் கலைப்புகழை உலகறியச் செய்தது. இக்கவின்கலைக் காட்சிக்கு நேராகத் தாமே செல்லும்படி மன்னர் இரவிவர்மாவைக் கோரியிருந்தார். அதன்படி கலைஞர் தம் வாழ்வில் முதல் முறையாகச் சென்னை சென்றார். அச்சமயம் ஹோபர்ட் பெருமானார் சென்னை மாகாண ஆட்சியாளரா யிருந்தார். இரவிவர்மாவுக்கு அவர் பேட்டியளித்து அவரைப் பெருமைப்படுத்தினார். அவர் படங்கள் பலவற்றையும் ஆட்சியாளர் பார்த்து அவற்றின் அருமை கண்டு பாராட்டினார். ‘நாளொப்பனையி லீடுபட்ட நாயர் நங்கை.’ என்ற படம் சென்னைப் பொருட்காட்சிசாலையில் மதிப்புப் பெற்றதுடன் நிற்கவில்லை. மன்னர், சென்னை ஆட்சியாளர் ஆதரவுரையுடன் அது வீயன்னாவில் அடுத்து நடைபெற்ற அனைத்துலக நாடுகளின் கலைப்பொருட்காட்சிக்கும் அனுப்பப்பட்டது. அங்கேயும் அது தங்கப்பதக்கமும் நன்மதிப்புச் சான்றும் பெற்றுப் புகழ் ஒளி வீசிற்று. 1874-ம் ஆண்டிலும் சென்னையில் ஒரு கலைப்பொருட் காட்சி நடைபெற்றது. இத்தடவை இரவிவர்மா ‘யாழ் பயில் தமிழ் நங்கை’ என்ற மற்றொரு சமூகச் சித்திரம் தீட்டி அனுப்பியிருந்தார். இதுவும் பெருஞ் சிறப்புடன் வரவேற்கப்பட்டது. பின்னாளில் ஏழாம் எட்வர்ட் மன்னராக வரவிருந்த வேல்ஸ் இளவரசர் எட்வர்ட் அடுத்த ஆண்டில் சென்னைக்கு வருகை தந்திருந்தார். முன்பே கலைஞருடன் பழகி நட்பாடியிருந்த ஆட்சியாளர் ஹோபார்ட் பெருமானார் அவரை இளவரசருக்கு அறிமுகம் செய்துவைத்தார். ‘யாழ்பயில் தமிழ் நங்கை’ என்ற படத்துடன் வேறு இரண்டு படங்களை இரவிவர்மா இளவரசருக்குப் பரிசளித்தார். ஐரோப்பியக் கலைமுறைகளில் சிறப்புப் பயிற்சி பெறாமலே அவர் ஐரோப்பியக் கலைஞர் போற்றும் திறம் பெற்றிருந்தது கண்டு இளவரசர் அவரை வியந்து மெச்சினார். புராண காவியக் கற்பனை உருவங்களில் இரவிவர்மா பல முதல் முயற்சிகளில் பயின்றுவந்தாலும், சித்திரத்தில் பெருஞ் சிறப்புக்குரிய அவர் முதல் படைப்பு ‘கன்னி சகுந்தலையின் காதல் முடங்க’லே. இது 1878-ம் ஆண்டில் வரைந்து முடிக்கப்பட்டது. இதுவும் கலையரங்குகளில் போற்றப்பட்டுச் சென்னை ஆட்சியாளரின் தங்கப்பதக்கம் பெற்றது. அத்துடன் இப்படமூலமே அவர் அப்போதைய ஆட்சியாளரான பக்கிங்ஹாம்- சந்தாஸ் கோமகன் நன்மதிப்பையும் நேசத்தையும் பெற்று அவருடைய நெருங்கிய நண்பரானார். மேலும் வெள்ளையரான அவர் கண்களைக்கூட, இக் கீழ்நாட்டுப் புராணச் சித்திரம் கவர்ந்ததனால், அவர் அதனை விலை கொடுத்துப் பெற்றுத் தம் மனையின் கலை ஒப்பனைப் பொருளாக்கினார். புராணப்படத்தின் கவர்ச்சியால் பெற்ற நேசம் உயிரோவியத் துறையிலும் அவர் புகழை நாட்ட ஓர் ஏதுவாயமைந்தது. பக்கிங்ஹாம் கோமகன் ஏற்கனவே மேனாட்டுக் கலையில் ஆர்வமும் மேனாட்டுக் கலைஞருடன் தொடர்பும் கொண்டிருந்தவர். மேனாட்டு மரபுப்படி அவர் கலைஞர் முன் பலநாள் உட்கார்ந்து, அவர்கள் மூலம் தம் உயிரோவியப்படம் தீட்டுவிக்கப் பெற்றவர். தவிர,சென்னை ஆட்சியாளர் மாளிகையில் முன் கூடத்தில் பழைய ஆட்சியாளர்கள் அனைவரின் உயிரோவியப் படங்களும் நாற்புறமும் காட்சிக்காக வைக்கப்பெற்றிருந்தன. இரவிவர்மா வினிடம் பக்கிங்ஹாம் கோமகன் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக அவர் படம் தீட்டப்படவேண்டிய முறை வந்தபோது, இரவிவர்மாவிடமே அச் சீரிய பொறுப்பு அளிக்கப்பட்டது. இத்தகு சிறப்புப் பொறுப்புப் பெற்ற முதல்முதல் இந்தியர் அவரே. இப்பொறுப்பை அளித்த பக்கிங்ஹாம் கோமகன் நட்புக்கு அவர் சரியான கைம்மாறு செய்தார். நேச உணர்ச்சியைக் கலைமதித்துணரும் திறமாக அவர் மாற்றினார். பக்கிங்ஹாம் கோமகன் படம் இரவிவர்மாவின் உயிரோவியக் கலைத்திறனுக்கு ஓர் அழியாச் சான்றாக விளங்கிற்று. “முன்பு தலைசிறந்த மேனாட்டுக் கலைஞர் ஒருவருக்கு என் படம் வரைய நான் பதினோரு முறை சென்று அமர்ந்திருக்க வேண்டி வந்தது. ஆனால், ஒரு தடவை கண்டு இரவிவர்மா வரைந்த படம் அதனினும் இரட்டிடைச் சிறப்புடையது. ஏனெனில், மேனாட்டுக் கலைஞர் படத்தைப் பார்க்கிலும் அது உயர்த்திறம் உடையதாய் உள்ளது,” என்று ஆட்சியாளர் அவரைப் பாராட்டினார். இச் சித்திரத்தால் இந்தியாவில் மட்டுமன்றி ஏனைய எல்லா நாடுகளிலும் அவர் புகழ் பரவிற்று. இரவிவர்மாவிடம் நேசம்காட்டி ஆதரித்த திருவாங்கூர் மன்னர் இப்போது நாடு நீங்கினார். இதுவரை இளவரசராயிருந்த விசாகம் திருநாள் பட்டத்துக்கு வந்தார். புதிய அரசரும் வழக்கப்படி இரவிவர்மாவுக்கு ஆதரவு தந்தார். ஆயினும் முந்திய அரசர் காலத்தில் அரசருக்கும் இளவரசருக்கும் பல செய்திகளில் கருத்து வேறுபாடு இருந்து வந்ததுண்டு. இது ஓரளவு பழைய அரசரின் நண்பரான இரவிவர்மாவைப் பாதித்தது. அந்த அளவுக்குப் புதிய ஆட்சியில் அவர் ஆதரவு கனிவு குறைந்த புறமதிப் பாதரவாயிற்று. ஆனால், இரவிவர்மாவின் கலைப்பாசம் மன்னர் நேசத்திடை எப்படியோ அப்படியே அவர் புறக்கணிப் பிடையேயும் வளர்ந்தது. உண்மையில் இரவிவர்மாவின் புகழ் தென்னாடு கடந்து வடநாட்டில் பரவத் தொடங்கியது மன்னர் நேசம் இழந்த இத் தறுவாயின் பின்னரேயாகும். வடமொழியிலும் இந்தியத் தாய்மொழிகளிலும் இராமாயண மகாபாரத இதிகாசங்கள் யாவராலும் போற்றப்பட்டுத்தான் வருகின்றன. ஆனால், அவற்றின் கதைச் சித்திரங்களை இரவிவர்மாவுக்கு முன்னால் எவர் கலையும் மக்கள் மனக்கண்முன் கொண்டுவரவில்லை. இரவிவர்மாவுக்குப் பின்னும் யாரும் அத்துறையில் அவரளவு பொதுமக்கள் ஆர்வந்தூண்ட முடியவில்லை. அவர் படங்கள் மட்டுமே பொதுமக்கள் வாழ்வையும் இலக்கியக் கருத்துகளையும் இணைக்கக் கூடியவையாக இருக்கின்றன. இரவிவர்மாவின் படங்களின் அழகு, கலைத்துறை வல்லுநரல்லாத வரையும் கவரத் தக்கதாயிருந்தது. காவிய புராணங்களில் மக்கள் கொண்ட மதிப்புக்கு ஊறு விளை வியாமலே. இரவிவர்மா உருவங்களுக்கு அழகும் உணர்ச்சியுந் தனிப்பண்புகளும் ஊட்டி, மக்கள் உணர்ச்சிகளையுந் தூண்டினார். பிற்கால வங்கப் புதுமலர்ச்சி இயக்கக் கலைஞர்களும் இதே புராணப் பின்னணியைச் சித்திரிக்க நாடியுள்ளனர். ஆனால், அவற்றில் கலை இருக்க முடியுமே தவிரக் காவியம் இருக்காது. அவர்கள் படங்கள் மனித வாழ்வுக்கும் சமூகத்துக்கும் அப்பாற்பட்டு விடுகின்றன. அவை வாழ்க்கைத் தொடர்பற்ற உணர்ச்சிச் சித்திரங்களாய், கலைவல்லுநர் தவிர ஏனையோர் உணர்ச்சியைத் தூண்ட முடியாதவை ஆகிவிடுகின்றன. மேலும் இரவிவர்மாவின் பல்வேறு படங்களும் பல்வேறு தனித்தன்மையும் தோற்றமும் உடையன. புதிய கலைஞர்களைப் போல் அவர் ஒரே படிவத்தைச் சீதை, சகுந்தலை, திரோபதி யாவருக்கும் தருவதில்லை. ஒவ்வொரு படமும் இன்னார் என்று அறியக் கீழிருக்கும் பெயரை மட்டுமே நம்பவேண்டியது மில்லை. இவ்வகையில் இரவிவர்மாவின் கலை தென்னாட்டு இலக்கியப் பண்பை ஒட்டியது. வடமொழியிலும் பிற்காலத் தாய்மொழி இலக்கியத்திலும் எந்தப் பெண்ணும் ஆணும் உச்ச இலக்கணமுடைய ஒரே உயிர் வடிவமாக, ஒரே வகை உவமை களால் புகழப்படுவர். ஆனால், முற்காலத் தமிழ் நூல்களில் ஒவ்வொரு படிவத்துக்கும் ஒரு தனிப்பண்பும், நிறமும் தோற்றமும் கற்பிக்கப்பட்டிருப்பது காணலாம். இரவிவர்மாவின் கலை இங்ஙனம் வடமொழிப் புராணங்களுக்கும் தென் இந்திய வாய்மைப் பண்பு ஏற்றி அவற்றையும் கிட்டத்தட்ட உயிரோவியங்கள் ஆக்கியுள்ளன. புதிய மன்னரின் தூண்டுதலால் இரவிவர்மா மற்றொரு காவியப் படத்தில் கருத்துச் செலுத்தினார். இதுவே ‘சீதையின் துறவு வாழ்க்கை’. மன்னன் இராமன் மக்கள் தூற்றுரை கேட்டுச் சீதையைக் காட்டுக்குத் துரத்தி விடுகிறான்; பெண்மைக்கு ஆடவருலகம் இழைக்கும் கொடுமையை நினைத்து, சீதை காட்டில் துயர் நினைவுகளில் ஆழ்ந்திருக்கிறாள். இதை மலையாளக் கவிஞன் குமாரனாசான் ‘துயரிலாழ்ந்த சீதை’ என்ற ஒரு காப்பியத்தின் நடுநாயகக் காட்சி ஆக்கியுள்ளார். இதே கட்டத்தை இரவிவர்மாவும் தம் ஓவியத்திரைக்கு இலக்காக்கினார். இச் சமயம் திருவாங்கூருக்கு வருகைதந்த இராஜா ஸர்.டி. மாதவராவ் இப்படத்தைக் கண்டு அதன் கருத்தெல்லை கடந்த கவிதை வெள்ளத்தில் சொக்கிப் போனார். கலைச்சுவை வல்லாராகிய அவர் அதனை உடனே விலை கொடுத்து வாங்கித் தமதாக்கிக் கொண்டார். தாம் மதித்துத் தேர்ந்த இப்படத்தின் அருமையை உலகம் அறியச் செய்யவேண்டுமென்று நினைத்த இக் கலையன்பர் அதை 1880-ல் நடைபெற்ற பூனாக் கலைப் பொருட் காட்சிக்குத் தம் சார்பிலேயே அனுப்பிவைத்தார். பம்பாய் மாகாண ஆட்சியாளர் ஸர் ஜேம்ஸ் ஃவெர்குஸன் கலைக் காட்சியைச் சுற்றிப் பார்வையிட்டு வந்தார். இரவிவர்மாவின் படம் அவர் கண்களைக் கவர்ந்தது. அவரும் ஸர்.டி.மாதவராவைப் போலவே உடனே அதை வாங்கித் தமதாக்க ஆர்வங்கொண்டார். ஆனால், அது முன்பே ஒருவரால் வாங்கப்பட்டு விட்டது என்று அறிந்ததும் அவர் ஏமாற்ற மடைந்தார். ஆயினும் அவர் கலைஞன் முகவரியறிந்து அவருக்கு எழுதி அதன் மறுபடி ஒன்று தீட்டித் தரும்படி கோரினார். இரவிவர்மா அவர் கோரியவண்ணமே வேறு பகர்ப்புப் படம் தீட்டி ஆட்சியாளருக்குப் பரிசளித்தார். ஆட்சியாளர் மன மகிழ்ந்து அவர் கலையைப் பாராட்டி அப்படத்துக்கு எதிராக ஆங்கில நாட்டு மன்னர் குடும்பத்தின் நிழற்படங்களடங்கிய ஒரு படக்கோவையை வழங்கினார். புராண காவியப் படங்கள் எழுதுவதில் இரவிவர்மாவுக் கிருந்த தனிப்பெருஞ் சிறப்பு இதன்மூலம் அகலுலகெங்கும் பரந்தது. இதுமுதல் மன்னரும் பெருமக்களும் வெள்ளையன்பரும் அவர் கலையுழைப்பைப் பெற ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு போட்டியிடலாயினர். கலைமன்னரைப் போற்றும் மரபில்வந்த புவிமன்னர்கள் புவிமன்னர் மரபுக்குரிய இக் கலைமன்னரைப் போற்றித் தம் புகழ் நிறுவ முன்வந்தனர். ஆனால், மன்னருக்காகக் கலைஞர் வரைந்த இப் படங்களே மன்னர் கடந்து மன்பதையின் ஆர்வத்தைத் தூண்டவல்லவையா யிருந்தன என்பது வியந்து பாராட்டுதற்குரியது. தென்னாட்டிலேயே கலைவளர்த்த முதல்தர மன்னர்களில் முதல் வரிசையில் இடம்பெறத் தக்கவர் அக்கால மைசூர் மன்னர் ராமராஜேந்திர உடையார் ஆவர். இசையிலும், ஓவியத்திலும் அவர் அயரா ஆர்வம் உடையவர். அவர் அழைப்புக்கிணங்க இரவிவர்மா மைசூருக்குச் சென்று மூன்று மாதம் தங்கி அந்நாட்டுக் காட்சிகளைப் பார்வையிட்டார். திருவாங்கூரையும் மலையாளத்தையும் போலவே அந்நாடும் மலைநாட்டின் இயற்கைக் காட்சிகளுக்குப் பேர்போனது. மலையத்தின் வடதிசைத் தொடர்ச்சியான குடகு மலையிலிருந்து பொன்கொழிக்கும் பொன்னியாறு பிறக்கும் பகுதி வடகொங்கு அல்லது கங்கநாடாகிய இம்மைசூரே ஆகும். இந்நாட்டுக் காட்சிகளில் பலவற்றைக் கலைமன்னர் வரைந்து காட்டினார். அத்துடன் மன்னர், மன்னர் குழந்தைகள் ஆகியவர்களின் உயிரோவியப் படங்களையும் அவர் பண்பமையத் தீட்டினார். திருவாங்கூர், மைசூர் ஆகிய நாடுகளுடன் ‘முன் மாதிரி’ நாடு என்ற பெயருக்குப் போட்டியிடும் பெருமையுடையது பரோடா நாடு. அதன் மன்னர் கெய்க்வார் என்னும் மரபுப்பட்டம் உடையவர். மைசூர் மன்னரைப்போலவே அவரும் இரவிவர்மா வின் கலைப்புகழைக் கேள்வியுற்று அவருக்கு அழைப்பு விடுத்தார். மன்னர் அப்போது ஒரு புதிய அரண்மனை கட்டியிருந்தார். அதன் கூடங்களைக் கலைஞன் இரவிவர்மாவின் கை வண்ணங்களாலேயே முழுதும் அழகுபடுத்த அவர் திட்டமிட்டார். அத்துடன் படங்களும் இராமாயண மகாபாரதக் காட்சிகளாகவே இருக்கவேண்டுமென்று அவர் விரும்பினார். மன்னன் இரவிவர்மா இப் பாரிய திட்டத்தின் பொறுப்பை ஏற்றார். முற்கால மன்னர், மக்கள் தோற்ற நடையுடைகளைக் கூடியமட்டும் இக்கால மன்னரிடமிருந்தே தேர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டுமென்பது இரவிவர்மாவின் கோட்பாடு. அதற்கிணங்க அவர் மாளவம், இராஜபுதனம், தில்லி, ஆக்ரா, லாகூர், காசி, அலகாபாத், கல்கத்தா முதலிய பல வடநாட்டுப் பகுதிகளுக்கும் சென்றார். மாநிலமுழுமைக்கும் பொதுவான காவியங்களின் கற்பனைக்குரிய பண்புகளை அவர் மாநில முழுமையிலு மிருந்தே தேர்ந்தெடுத்தார். இச் சீரிய கருத்து யாவராலும் போற்றத் தகுந்தது. இந்தியாவின் பண்டைப் பண்புகளைக் காத்த இராஜபுத்திர மன்னர் பண்டைப்புராண இதிகாச மன்னர் தோற்றச் சூழல்களுக்குப் பெரிதும் முன்மாதிரியாயினர். அழகிற் சிறந்த ஆடையணியும் மராட்டியரின் முறையே மாநிலக் கலைக்குரிய கற்பனை ஆடைமுறையாகத் தேரப்பட்டது. மாதர் வடிமைதிக்கும் மாந்தர் முகவெட்டுக்கும் அவ்வத்துறைகளிற் சிறந்த மலையாள நாடும் தமிழகமும் பின்னணி வண்ணங்களாயின. வடநாட்டுப் பயணங்கள் முடிந்ததும், அவர் திரும்பி வந்து இரண்டே ஆண்டுகளுக்குள் உலகம் வியக்கும் பதினான்கு சித்திரங்களை வரைந்து முடித்தார். பரோடாவுக்குச் செல்லுமுன், வழியிலேயே பம்பாய் நகரில் பொது மக்கள் பார்வைக்கு அவர் அப்படங்களை வைத்திருந்தார். வடநாட்டுத் தென்னாட்டுப் பொதுமக்கள், கலையன்பர் பலரும் அப்படங்களின் சிறப்புக் கேட்டுக் கலைவிழாக் காணச் செல்வதுபோல அவற்றைப் பார்வையிடச் சென்றனர். படங்கள் பரோடா சென்று சேருமுன் அவற்றின் புகழாரவாரம் பரோடா மன்னர் அரண்மனையை முற்றுகையிட்டது. பரோடாவுக்குச் செல்லும் பயணம் எதிர்பாராத வகையில் தடைபட்டு ஒத்திவைக்கப்படும்படியாக இரவிவர்மா வாழ்வில் ஒரு பேரதிர்ச்சி ஏற்பட்டது. அவர் பம்பாயிலிருக்கும்போதே அவர் வாழ்க்கைத் துணைவி கடு நோயுற்றதாகச் செய்தி வந்தது. அவர் புறப்ட்டு வருமுன் அவர் உயிர் நீத்தார் என்ற கொடுமொழி அவரை எட்டியது. ஆறாத்துயருடன் அவர் திருவாங்கூருக்கு விரைந்து வந்து மாவேலிக் கரையிலுள்ள தம் மனைவியின் இல்லம் சென்றார். கலைக்கோயிலின் வாயிலில் அவரைக் கைப்பிடித்த அக்காரிகை, கலைமாடியின் உச்சியில் அவரைக் கொண்டு விட்டுவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். 5. மக்கட் கலைஞர் இரவிவர்மாவின் கலைத்திறமையின் புகழ் புராண காவியப் படங்களை மட்டும சார்ந்ததன்று. அவையில்லாமலும் உயிரோவியப் படங்கள், சமூகப்படங்கள் மூலம் அவர் உலகக்கலை வரலாற்றில் இடம் பெறுவது உறுதி. ஆனால், புராண காவியப்படங்களே அவர் புகழை இந்தியா முழுவதும், சிறப்பாக வடஇந்தியா முழுவதும் பரப்பிற்று. காவியங்களை ஒரு கலைஞன் நோக்குடன் கூர்ந்து நோக்கியவர் அவர் ஒருவரே என்பதையும், ஒரு தேசியக் கலைஞன் பாணியுடன் அதனைத் தீட்டியவரும் அவர் ஒருவரே என்பதையும் அவை காட்டுகின்றன. 1878-ல் அவர் தீட்டிய ‘சகுந்தலையின் முடங்கல்’ வெள்ளையரான சென்னை ஆட்சியாளர் ஹோவார்டின் கண்களையே கவரப் போதிய தாயிருந்தது. ஆனால், அது அவர் புராணப்படப் புகழுக்கு ஒரு விடிவெள்ளி மட்டுமே. பரோடா மன்னர் மாளிகையை அணிசெய்ய அவர் வரைந்த பதினான்கு படங்களும் அத்துறையில் அவர் பல்வகைப் பெருக்கமுடைய முழுநிறை கைவண்ணத்தைக் காட்டின. இந்திய மாநிலமெங்கணும் சாதிமத வேறுபாடின்றி மன்னரும், குடிமக்களும், பெருமக்களும், பொதுமக்களும் அவர் படங்களைப்பெற அது முதல் அங்கலாய்த்தனர். கலைஞர் ஒருவர். அவர் கைகள் இரண்டு. ஆனால், அக் கைகளின் மாயப் படைப்புக்களைக் காணத்துடித்த கண்கள் எண்ணில. அவற்றைக் கைப்பற்றித் தமதாக்கச் செல்வர் மட்டுமன்றி ஏழையரும் விரும்பினர். இரவிவர்மாவின் அருந்திறனை முதல்முதல் கண்டுபோற்றியவரும், அவர் புகழ் வளர்ச்சியில் ஈடுபட்டு அவருக்கு மிகவும் ஆதரவு காட்டியவருமான ஸர்.டி.மாதவராவ் இப்போது அவர் கலைப்படைப்புக்களைப் பொது மக்களுக்கும் எளிதாக வழங்கத்தக்க முறை ஒன்றை வகுத்துத் தந்தார். பம்பாயில் ஒரு நெய்வண்ணப்பட அச்சகம் அமைக்கும்படியும், கலைப் படைப்புக்களின் அச்சடிப்படிகளை வாணிகமுறையில் பெருக்கிப் பரப்பும் படியும் அவர் தூண்டுதல் அளித்தார். இரவிவர்மா இச்சமயம் தன் படங்களின் படிகள் கேட்ட நண்பர்களுக்கெல்லாம் கைப்படி எடுத்துத்தர முடியாது வருந்திக்கொண்டிருந்தார். ஆகவே ஸர்.டி. மாதவராவின் புத்துரையை ஏற்று அதன்படி ஒரு அச்சகத்தை அமைத்தார். இந்தியாவிலேயே அமைக்கப்பட்ட முதல்முதல் நெய்வண்ண அச்சகம் அதுதான். இங்ஙனம் இந்தியாவின் முன்னணிக் கலைஞராகிய அவர் இந்தியாவின் முன்னணிக் கலைத்தொழில் முதல்வராகவும் அமைந்தார். அவர் வாழ்நாளின் பிற்பகுதி முழுவதிலும் அவர் பம்பாயையே தம் நிலவரத் தங்கிடமாக்கி, அத்தொழிலைக் கண்ணெனப் போற்றி வளர்த்தார். அவர் படங்கள் இந்தியாவின் பொதுமக்கள் இல்லங்களெங்கும் பரவத் தொடங்கியது இப்போதுதான். 1892-ல் கலைஞர் பத்துப் படங்களடங்கிய ஒரு தொகுதியை வகுத்தமைத்து, அதனை அமெரிக்காவிலுள்ள சிக்காக்கோ கலைப் பொருட்காட்சிக்கு அனுப்பி வைத்தார். இங்கும் அவருக்கு இரண்டு தங்கப் பதக்கங்களும் பல நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இரண்டாண்டுகளுக்குப் பின் திருவாங்கூர் முதல் பட்டத்திளவரசர் மார்த்தாண்ட வர்மாவின் தோழராக அவர் மீண்டும் வட இந்தியாவெங்கும் சென்றுவந்தார். கலைஞரின் பரந்த அறிவாலும் பண்பாட்டாலும் அறிவிற்சிறந்த இளவரசர் பெரிதும் பயனடைந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டில் இந்திய ஆட்சி முதல்வரான கர்ஸன் பெருமகனாரும் அவர் துணைவி யாரான கர்ஸன் பெருமாட்டியும் திருவாங்கூருக்கு எழுந்தருளி யிருந்தனர். கலைஞர் பெருமானும் அவர் உடன்பிறந்தாரும் திருவனந்தபுரத்துக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு அறிமுகப்படுத்திவைக்கப்பட்டனர். அவ் வருகை நினைவாகக் கர்ஸன் பெருமாட்டிக்குக் கலைஞர் தம் படங்களில் இரண்டைப் பரிசளித்தார். ஆட்சி முதல்வர் இக்கலைப் படைப்புக்களைக் கண்டு மனமார வியந்து, வாயாரப் பாராட்டினார். உலகில் தலைசிறந்த கலைப்படைப்புக்களுடன் அவை ஒப்பிடத் தக்கவை என்றும், இந்தியக் கலைஞரிடம் காணப்பெறாத பல நயங்களும் தனிப் பண்புத்திறங்களும் அவற்றில் சிறக்கக் காணப்பட்டன என்றும் அவர் கருதினார். மன்னன் இரவிவர்மனின் கலைக்குப் பேராதரவு தந்த மற்றொரு வடநாட்டு மன்னர் உதயப்பூர் அரசர் ஆவர். அவர் கலைஞரை வரவழைத்துத் தம் உயிரோவியப் படத்தை வரைவித்தார். அத்துடன் அவர் முன்னோர்களின் நால்வர் பழம்படங்களைப் புதுப்பித்துத் தரும்படி அவர் கலைஞரைக் கோரினார். அவரும் அவற்றைத் திறம்பட வரைந்தளித்தார். இந்நான்கு முன்னோர்களில் ஒருவர் பேரரசர் அக்பரை எதிர்த்து நின்று இராஜ புதனத்திற்குப் பெரும் புகழளித்த பேர்போன வீரமன்னர் மகாராணா பிரதாபசிம்மன் ஆவர். இரவிவர்மாவின் உயிரோவியப் படங்களில் தலைசிறந்தவற்றுள் இது ஒன்றாகத் திகழ்ந்தது. மாண்ட மாவீரரின் மாண்பைக் கiலை மன்னரின் கலை மாண்பு பன்மடங்கு பெருக்கிற்று. அப்படத்தில் இராணாபிரதாப சிம்மன் வடிவம் மட்டுமன்று; இராஜ புதனத்தின் வீரமும் இந்தியாவின் புகழும் தீட்டப்பட்டுள்ளன என்னலாம். 1904-ல் ஆம்ப்தில் பெருமகனார் சென்னை ஆட்சி முதல்வராக வந்தார். அவருக்கு முன்னிருந்த ஆட்சி முதல்வர் பெருந்தகை ஆர்தர் ஹாவலக் சிறந்த வீரர். அவர் படம் வரையும்படி நம் கலைமன்னர் அழைக்கப்பட்டார். இதில் கலைஞர் மேனாட்டுக் கலைஞரிடமும் காண்பதற்கு அரிதான ஒரு பெருந்திறம் காட்டினார். பெருந்தகை ஹாவலக்கைக் கலைஞர் கண்டிருந்ததுண்டு. ஆனால் படம் வரையும்போது அவரை நேரில் மாதிரியாக வைத்துப் பார்க்காமலே தன் உள்ளத்திரையிலுள்ள நினைவுருவங் கண்டு அவர் திரையுருவந்தீட்டினார்! உயிரோவியப் படங்கள் வகையில் மட்டுமன்றி, கற்பனைப் படங்கள் வகையில்கூட உலகின் தலைசிறந்த கலைஞர் முன்மாதிரி வைத்துக் கொண்டுதான் வரைவர். முன்னிலை மாதிரியாக இணங்குபவர் பலசமயம் பலநாள் அதற்கென ஆடாது அசையாது இருக்கவேண்டும். கலைஞன் தீட்டிக் காட்ட விரும்பும் கோணங்களிலெல்லாம், கலைஞன் எண்ணிப் பார்க்க விரும்பும் கோலங்கள் எல்லாவற்றுடனும் அவர்கள் இருந்து பாடழிய வேண்டும். இந்நிலையில் ஆளைக் கலைப்படைப்புக்கெனக் காணாமலே நினைவிலிருந்து உயிரோவியம் தீட்டிய கலைஞர் இரவிவர்மன் புகழ் உலகெங்கும் பரந்ததில் வியப்பில்லை. மன்னர் இரவிவர்மாவின் உலகப்புகழ் கண்டு அவருக்கு இந்திய அரசியலார் தனிச் சிறப்பளிக்க விரும்பினர். மன்னர் ஏழாம் எட்வர்டின் பிறந்தநாள் விழாவை ஒட்டி அவருக்கு கெய்ஸரீஹிந்த் பதக்கம் வழங்கும்படி அவர்கள் பிரிட்டனின் மன்னர்பிரான் அரசியலுக்குப் பரிந்துரை அனுப்பினர். அப்பதக்கம் கலைஞரிடையே முதன்முதலாக இரவிவர்மாவுக்கே வழங்கப் பட்டது. இரவிவர்மாவின் உடன்பிறந்தாரும் அவரைப்போலவே சிறந்த கலைஞருமான ஸி.இராஜராஜவர்மா இந் நிகழ்ச்சி பற்றி அவர் நாட்குறிப்பில் வரைந்திருப்பதாவது: “என் உடன் பிறந்தாருக்கு அரசியலார் தந்த சிறப்பு நாடாச் சிறப்பு. அதுபற்றி நாங்கள் யாரிடமும் குறிப்பிட்டதில்லை. அதை நாடி எம்முயற்சியும் செய்ததுமில்லை. இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரு கலைஞனின் திறத்துக்கு இத்தகு பாராட்டும் சிறப்பும் முதன்முதல் அளிக்கப் பட்டது இப்போதுதான். இந்தியாவின் கலை முன்னேற்றத்துக்கு இச்சிறப்புப் பெருந்தூண்டுதலாகும் என்பது உறுதி.” திரு.ஸி. இராஜராஜவர்மாவின் எதிரது குறித்த உரை வீண் போகவில்லை. வங்கப் புதுமலர்ச்சிக் கலைஇயக்கமும் தென் இந்தியாவின் வியன்கலை வளர்ச்சியும் இச்சிறப்பின் பயனாகவே எழுந்து வளர்ந்தன. உயிரோவியக் கலையிலும் புராண காவியக் கற்பனைக் கலையிலும் சமூகக் கலையிலும் தம் கைவண்ணத்தின் மாயத்திறம் காட்டிய இரவிவர்மா, இப்போது பண்போவியத் துறையிலும் தம் திறம் தீட்டினார். மலரில் அழகையும், மாதரார் முகத்தில் அழகையும் இறைவன் படைத்தது இரவி வர்மாவுக்கென்றுதான் என்ற கவிஞர் பாரதியாரின் பாராட்டிற்கு இலக்கான ‘மோகினி’ப்படம் இதில் ஒன்று. ஊஞ்சலில் ஆடும் பெண்ணின் வடிவழகைவிடச் சிறந்த கவர்ச்சியுடைய பெண்மையினழகை எவராலும் கருத்துருவகப் படுத்திக்கூட எண்ணலரிது. உடலமைதி இலக்கண நூலாருக்கு அது இலக்கியமாகத் திகழத் தகுந்தது. செப்பிற் கடைந்த உருவைவிடத் திரண்டு அந்தசந்தமான உறுப்புக்கள்; சிலை வார்ப்பவனால்கூட உருவாக்க முடியாத நுண்ணிய ஒயில்; ஊஞ்சலின் ஓட்டம்; மங்கையின் ஆட்டம்; அவள் உள்ளத்தில் தோன்றி முகத்தில் ஒளிவிடும் ஒய்யாரப் பார்வை ஆகிய எல்லாம் புறத்தோற்றமாக அன்றி, அகத் தோற்றமாகவே நம்முன் காட்சியளிக்கின்றன. இரவிவர்மாவின் தலைசிறந்த படங்களில் “மோகினி” ஒன்றென எவரும் ஒப்பத்தயங்க மாட்டார்கள். பொது மக்கள் இல்லங்களையும் மன்னர் கோமக்கள் மாடங்களையும் ஒருங்கே அழகுபடுத்தும் கலைப்படைப்புக் களுள் ஒன்றாக அது இன்றும் இடம் பெற்றுள்ளது. என்றும் இடம்பெறத் தக்கது. ‘மோகினி’யைப் போலவே ‘நாண்மடம்’ ‘செருக்கு’ ‘பகற்கனா’ ‘வழிபாடு’ ஆகிய பண்புகளைப் பண்பிகள் வாயிலாக இரவிவர்மா நன்கு எடுத்துக் காட்டியுள்ளார். இவற்றுட் கடைசிப் படமான ‘வழிபாடு’ம் புராணப் படங்களில் ஒன்றான ‘அன்னத்தைத் தூதுவிட்ட தமயந்தி’யும் அதே வகையில் சாதனாபோஸ் முதலிய வங்கப் புதுமலர்ச்சி இயக்கத்தார் படைப்புக்களுடன் ஒப்பிடத்தக்கவை ஆகும். வங்கக் கலைக்கு ஒரு தனியழகுத் திறம் உண்டு என்பதில் தடை யில்லை. மனிதரை மறைத்து மனிதப் பண்பையும், கதையை மறைத்துக் கதைப் பண்பையும், உலக வாழ்க்கையை மறைத்து அதின் அரிய உணர்ச்சி களையும் கலைக்குறியீட்டுக் குறிப்புகளின் உதவியால் அவை எடுத்துக் காட்டுவது உண்மையே. ஆனால், உணர்ச்சி காட்டும் கலைக்குக் கலையுலகில் எவ்வளவு இடமுண்டோ, அவ்வளவு உணர்ச்சிக் கனிவுடன் பொருளையும் காட்டும் கலைக்கும் கட்டாயம் இடமுண்டு. முன்னது சமயத்துறையில் பக்தி போன்றது. பின்னது அதே துறையில் நல்லெண்ணம், நல் ஒழுக்கம், நல்வாழ்வு போன்றது. கலைஞன் கண்ணுக்கு முன்னது சிறக்கலாம்; ஆனால், வாழ்க்கைக் கலைஞன் அல்லது அறிஞன் கண்ணுக்கு அது பின்னதன் நிழல் போன்றதே. பொருளைப் படம் பிடிக்காமல் நிழலைப் படம் பிடிக்கும் கலை அருமையான செப்பிடு வித்தையாகப் பயன்படலாம். ஆனால், அது அழகின் நிலையான பண்பாகப் பயன்படமாட்டாது. உயிரோவியம் முதலிய பல துறைகளிலும் பயின்ற இரவிவர்மா வாழ்க்கை யிறுதியில் எல்லாப் பண்புகளும் நிறைந்த ஒரு முழுக்கலைத் திறத்தில் ஈடுபடலானார். பின்னாளில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரான இளவரசர் ஜார்ஜ் 1905-ல் சென்னைக்கு வருகை தந்தார். அச்சமயம் இரவிவர்மா மைசூர் அரசரால் வரவழைக்கப் பட்டு, அவர் அரண்மனையில் ஓவியந் தீட்டிக்கொண்டிருந்தார். அந்நாளைய சென்னை ஆட்சியாளராயிருந்த ஆம்ப்தில் பெருமகனார் அவரை வரவழைத்து இளவரசருக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். இளவரசர் மைசூர் சென்றபோதும் மைசூர் மன்னர் அவரை வரவழைத்தார். மன்னரும் இளவரசரும் காடுகளில் சென்று வேட்டையாடிப் பொழுது போக்கினர். காட்டுக் காட்சிகளையும், வேட்டைக் காட்சிகளையும் படம் பிடித்துத் தீட்டிக் காட்ட இளவரசருடன் பல மேனாட்டுக் கலைஞர் வந்திருந்தனர். ஏற்கனவே மேனாட்டாரும் மேனாட்டுக் கலைஞரும் போற்றும் திறமுடைய கலையரசர் இரவிவர்மாவும் அவர்களுள் ஒருவராக உடனழைத்துச் செல்லப் பட்டார். மன்னரின் மன்னவைக் கலைஞராகவே அவர் இதில் நடத்தப்பட்டார். ஆனைவேட்டை, படைவீடுகள் ஆகியவற்றின் பல இயற்கைக் காட்சிகளை அவை தோன்றிய நொடிப்பொழுதுக்குள் உள்ளத்தில் வாங்கி ஒரு சில மணி நேரத்துக்குள் இரவிவர்மா தீட்டிக் காட்டினார். அவர் விரைவும், திறமும், கலை எளிமையும் கண்டு வெள்ளை நாட்டுக் கலைஞர் வியந்தனர். மைசூருக்கு அவர் மீண்டபோது மக்கள் நாவிலெல்லாம் அவர் பெயர் நடமாடிற்று. மக்கள் நம்பிக்கை என்னும் எழுஞாயிற்றுத் திசைவானில் தோன்றி, புகழ் வானின் உச்சி ஏறி, கலை ஆற்றலால் கீழ்நாட்டில் ஒப்புயர்வற்று விளங்கிய கலைக் கதிரவனாக விளங்கியவர் இரவிவர்மா. அவர் வாழ்வின் பிற்பகுதி படிஞாயிற்றுவண்ணம் தோய்ந்து, மக்கள் உள்ளமெல்லாம் பரந்து கனிவித்து வந்தது. ஆனால், அவர் வாழ்வில் தளர்ச்சி, சோர்வு என்னும் நிழற் படலங்கள் மெள்ளப் படர்ந்து வந்தன. புகழ் மாலையின் பளுவுடன் அவர் மைசூருக்கு மீண்டு வந்தபோது, வேட்டைக் காடுகளில் அலைந்து திரிந்த உழைப்பின் பயனாக அவர் படுக்கையில் வீழ்ந்தார். மனைவி இறந்தபின் அவர் கடமை யாற்றினாரேயன்றி வாழ்வில் மிகுதி அக்கரை காட்டவில்லை. தற்பற்றொழித்துக் கலைக்கென வாழ்வை ஒப்படைத்த கலைத் துறவியாகவே அவர் வாழ்ந்து வந்தார். இந் நிலையில், குடும்பக் கவலைகள் ஒன்றன் மீதொன்றாக அவர்மீது வந்தடுக்கின. இவை தாங்காமல் துன்புறுகையில், நீரிழிவு நோய் அவரை உள்ளூர நின்றரித்தது. அவர் கலந்துகொண்ட கடைசிக் குடும்ப விழா சித்திரைத் திருநாள் இராமவர்மா அரசரின் பெரியன்னையாரான அவர் பேர்த்திக்கும் அவர் மைத்துனர் கேரளவர்மா வலிய கோயில் தம்பிரான் மருமக்களுள் ஒருவருக்கும் நடைபெற்ற திருமண விழாவேயாகும். அதன்பின் நீரிழிவு நோயுடன் தொடர்புறவு கொண்ட புற்றுநோய் ஒன்று அவர் வாழ்வில் தலை காட்டிற்று. அதுவே அவருக்குக் கூற்றுவனனுப்பிய முடங்கலாய் அமைந்தது. 1906-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் நாள் தம் 58-வது வயதில் கலை மன்னன் இரவிவர்மா காலமானார். கலை மன்னன் மறைவு கலை யுலகைக் கலக்கிற்று. கலைஞர், கலை ஆர்வலர் முகங்களிலெல்லாம் துயர்நிழலின் கோடுகள் படிந்தன. திருவாங் கூரும் திருவாங்கூர் மன்னர் குடியும் மாளாத் துயருள் மூழ்கின. இந்தியாவின் முன்னணிக் கலைஞரும், தென்னாட்டின் மன்னர் குடிப்பிறந்த மக்கட் கலைஞருமாய் விளங்கிய அவர் மறைவால் ஏற்பட்ட குறைபாடு இன்னும் நிறைவுபடுத்தப் பெறாமலே உள்ளது. இன்று தென்னாட்டில் அவர் குடும்ப மரபின் கலைப்பயிரும் நாட்டுக் கலைமரபும் வளரத் தான் செய்கின்றன. வடபால் வங்கக் கலையின் நிலவொளி எங்கும் பரவி மாயஒளி திகழத்தான் செய்கிறது. ஆயினும் இரவிவர்மாவை ஒத்த ஒரு பெருங்கலைஞன்- கலைவானில் கீழ்திசையில் ஒளிரும் கதிரவன்போன்ற கலைஞன்- முன்னும் இருந்ததில்லை; இன்னும் இலங்கக் காணோம்! கிட்டுதற்கரிய கலைமணியைத் திருவாங்கூர் தென்னாட்டுக்குப் பெற்றுத் தந்தது. அதன் ஒளியும் மணமும் புகழ் மணியோசையும் தான் இன்று மீந்துள்ளன. அவர் புகழிசை நின்று நிலவி அவர் போன்ற கலைஞர்களைப் படைத்தளிக்கட்டும் என்று மனமார அவாவுகிறோம். 6. கலைஞனும் கலைப்பண்பும் தென்னாட்டின் கலைவானில் திருவாங்கூர் பேரொளிப் பிழம்புகள் துளங்கும் ஒரு வான்கோணம் என்னலாம். அதில் கிளிமானூர் மரபு ஒப்பற்ற ஒரு விண்மணியாரம் போன்றது. கலைவேந்தன் இரவிவர்மா அவ் விண்மணியாரத்தின் நடுநாயக மணியாக விளங்குகிறார். அம் மணியொளி திருவாங்கூரையும் தென்னாட்டையும் நிரப்பி, எந்நாட்டிலும் நிழல்வீசிப் பொலிவுறுகின்றது. கலையும் திருவும் கலந்துறைவதில்லை என்று கூறப்படுவ துண்டு. மேனாட்டிலும் கீழ்நாட்டிலும் பல கலைஞர்கள் வாழ்வு இதற்குச் சான்றாகவே விளங்குகிறது. ஆயினும் இரவிவர்மாவின் வாழ்வு இதற்குக் குறிப்பிடத் தகுந்த ஒரு விதி விலக்காகும். அவர் மன்னர் குடியிற் பிறந்து, மன்னர் பலரின் ஆதரவு பெற்று, மன்னர்களுடனும் மாகாண ஆட்சி முதல்வர்களுடனும் ஊடாடினார். ஆயினும் கலையுலகிலும் அவர் தலைசிறந்த முடிசூடா மன்னராய்த் திகழ முடிந்தது. கலையும் திருவும் மட்டுமன்றி, வேறும் பல அரும் பண்புகள் அவர் கலைவாழ்வில் ஒன்றுபட்டுக் காணப்படுகின்றன. அவர் நல்ல உழைப்பாளி. அத்துடன் அவர் அன்பு கனிந்த உள்ளமும் ஈகைக் குணமும் பெருந்தன்மையும் உடையவர். பொறுமை அவருக்குப் பூணாயிருந்தது. புகழார்வம் அவரிடம் குறைவு. ஆகவே, புகழ் பெருகப் பெருக அவர் பணிவு மிகுந்ததேயன்றி, செருக்கும் தருக்கும் மிகவில்லை. எனவே, கலைஞர் வாழ்வில் பொதுவாகக் காணும் பண்புச் சீர்குலைவு களுக்கு அவரிடம் இடமில்லை. அவர் கலைஞரிடையே ஒரு கோமானாகவும், கோமான்களிடையே ஒரு கலைஞராகவும் விளங்கினார். கலைஞர் கோமான் தோற்றத்தில் அந்தசந்தமானவர். கட்டமைதி யுடைய நெடிய உருவத்தினர். மன்னர் மரபின் வீறும், பெருமக்கள் பண்பும் நயமும் அவர் உருவில் மயிர்க்கால்தோறும் நிரம்பி வழிந்தன. நடையுடையும் வாழ்க்கை முறையும் இதற்கேற்ப மன்னர் வீறும் கலைஞன் எளிமையும் ஒருங்கே உடையவையாயிருந்தன. ‘வாய்மை என்பது அழகே: அழகே வாய்மை’ என்றார் ஆங்கிலக் கவிஞர் கீட்ஸ். ஆனால், ‘கலை, கலைக்கே’ என்று கூறும் கலைஞருட் பலர் இயற்கை கடந்தும், மனித வாழ்வின் வாய்மை கடந்தும் அழகைக் காண விழைவர். தற்கால வங்கக் கலைஞர் இத்தகைய மாயஅழகையே நாடுகின்றனர். அத்தகைய அழகுக் கலையே நாட்டுக் கலை மரபு என்றும் அவர்கள் கொள்கின்றனர். அவர்கள் அழகை நாடிப் பெருமுயற்சி செய்யாமலில்லை. ஆனால், அவர்கள் நாட்டமும் முயற்சியும் புற உலகிலன்று; தங்கள் உள்ளத்திலுள்ள அக உலகிலேயே. அக உணர்ச்சிகளைப் புறத்தே வண்ணத்தில் தீட்ட அவர்கள் முயன்றனர். இதனை உணர்ச்சிக் கலை என்றும் மறைநிலைக் கலை என்றும் அகநோக்குக் கலை என்றும் கூறலாம். கலைத்துறையில் இது ஒரு சிறந்த நேரிய பகுதி என்று கொள்ளத் தடையில்லை. ஆனால், அவர்கள் இதுவே கலை, இதுவல்லாதது கலையன்று என்று கூறும் போது அவர்கள் நோக்கு குறுநோக்காகிறது. உடலின் சிறந்த பகுதி தலை, யானையின் தனிச்சிறப்புத் தரும் பகுதி தும்பிக்கை என்று கூறினால் யாரும் தடைசொல்ல மாட்டார்கள். ஆனால் தலையே மனிதன் தும்பிக்கையே யானை என்று கூறினால் இது அரைகுறை உண்மை என்றே யாவருங் கூறுவர். தலையை மட்டும் கண்டால் மனிதன் என்றும், தும்பிக்கையை மட்டும் கண்டால் நாம் யானை என்றும் கூறமுடிவது உண்மையே. ஆனால் இது குறியீட்டுக் கலை மட்டுமே; முழுக் கலையல்ல. செய்தித் தாள்களில் வரும் கேலிச் சித்திரங்கள் இத்தகு சிறப்புப் பண்பு பெருக்கியே சுவை பயக்கின்றன. இதனால் அது ஒன்றே கலை என்று கூறமுடியாது. முனைப்புக் குறியீட்டுச் சித்திரங்கள் கேலிச் சித்திரமாகவும் குறியீட்டுக் கலையாகவும் ஆகமுடியுமே தவிர, கலை முழுவதையும் குறிக்க முடியாது. இரவிவர்மா இத்தகைய அகநோக்குக் கலை, அல்லது குறியீட்டுக் கலை, அல்லது உணர்ச்சிக் கலையைத் தமதாக்கவில்லை. இயற்கையையும் வாழ்க்கையையும் புற நோக்குடன் சித்திரித்து, அதனடிப்படையிலேயே அவர் பொதுநோக்கும் கற்பனையும் அழகுக்கூறும் வளர்த்தார். அவர்கலை புறநோக்குக்கலை அல்லது வாய்வியற்கலை சார்ந்ததாகும். மேனாட்டுக் கலையின் பெரும் பகுதியும் மொகலாய இரஜபுத்திரக் கலையும் பண்டைத் தென்னிந்தியக் கலையும் பெரும்பாலும் இதே மரபு சார்ந்தனவேயாகும். நல்லகாலமாக மேனாட்டுக் கலைஞர் ஒரு சிலர் அகநோக்குக் கலையிலும் மறைநிலைக் கலையிலும் சிறந்துள்ளனர். கலைஞர் பிளேக் இதற்கு ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டு. இத்தாலிய மறுமலர்ச்சிக் கலைமன்னர் வாழ்வியல் கலையுடன் இவ்வகநோக்கும் புணர்த்தி, இயற்கையையும் தீட்டி இயற்கை கடந்த மாய அகஅழகும் தீட்டிக் காட்டியதுண்டு. ஆயினும் பெரும்பாலான மேனாட்டுக் கலைஞர் புற நோக்கையும் இயற்கை வாய்மையையும் வாழ்க்கை வாய்மையையுமே கலையின் அடிப்படையாகக் கொண்டனர். இதனால் அவர்கள் கலை பல திறப்பட்டு, அறிவியல் துறைகள்போலப் பலபடிப் புதுவது புனைவுகளில் திளைத்து வளமை பெற்றுள்ளது. இரவிவர்மா காட்டும் வழி இதே மேனாட்டு வழியும், மறக்கப்பட்ட பண்டைத் தென்னாட்டு மரபின் மறுமலர்ச்சி வழியும் ஆகும். கலைப்பேரரசர் லியோனார்டா-டா-வின்சி, மைக்கேல் ஏஞ்செலோ, ரஃவேல் ஆகிய இத்தாலிய மறுமலர்ச்சி மன்னர் கலைப்படைப்புக்களால் நாம் அகம்புறம் ஆகியவற்றின் கலைத்தொடர்பை நன்கு காண்கிறோம். வங்கக் கலைஞர் புறவடிவில் அகஉணர்ச்சிகாட்ட முயல்வது போல், அவர்கள் அகஉணர்ச்சியால் புறவடிவின் அழகு தீட்ட முயன்றனர். ஃபீடியஸ் முதலிய பண்டைக் கிரேக்கக் கலைஞர் வழிநின்று ரஃபேல் புற அழகுமட்டும் தீட்டிப் புகழ்பெற்றார். ஆனால் லியோனார்டோ, மைக்கேல் ஏஞ்சலோவின் வீறுமிக்க எழிற்படைப்புக்களைக் கண்டபின்னரே, அவரும் அவர்களை ஒப்பப் போட்டியிட முடிந்தது. அவர்கள் கலை புற அழகில் அக உணர்ச்சியைக் காட்டிற்று. இதனை அவ்விருவரும் புற ஆராய்ச்சி மூலம் அறிந்தனர். வண்ணப் பொருள்களையும் வடிவமைதிகளையும் ஒளிநிழற் கூறுகளையும் இதுபோலவே டச்சுக்கலைஞர் ரெம்ப்ராண்ட், ஜெர்மன் கலைஞர் டியூரேர், ஆங்கிலக் கலைஞர் ஹோகார்த்து ஆகியோர் ஆராய்ந்து தாம் கண்ட புதுப்புனைவு முறைகளாலும் விதிகளாலும் திறம்படத் தீட்டிக் காட்டினர். கலை, கலைப்பயிற்சியையும் உழைப்பையும் மட்டுமே பொறுத்த தன்று. ஆராய்ச்சி வாய்மைக்கும் அதில் இடமுண்டு என்று இச்செய்திகள் காட்டுகின்றன. இரவிவர்மா இளமையில் இயற்கையிலேயே ஒளி நிழற் கூறுகளைத் திறம்பட உணர்ந்து தீட்டுவதில் வல்லுநராயிருந்தார். இத்திறம் கண்டு அவர் தாய்மாமன் இராஜராஜவர்மா பெரிதும் வியப்புற்றதாக நாம் கண்டோம். உண்மையில் இத்திறம் அவர் குடும்பக் குருதிமரபிலும் நாட்டுமரபிலும் இயல்பாகப் படிந்திருந்த ஒன்று எனல் தவறாகாது. வண்ணங்களின் கலப்பும் தூரிகையின் கைத்திற நயமும் அவர் நீடித்த உழைப்பினாலும், பயிற்சியினாலும் செம்மைப்பட்டன. கலைத்துறையில் இன்னொரு முக்கிய கூறு அணிமை தொலைப்பண்பமைதி (ஞநசளயீநஉவiஎந). மேனாட்டில் இதனைத் தெளிவுபட வகுத்தமைத்தவர் டியூரேர். இராஜராஜவர்மாவின் பயிற்சியே இதனை இரவி வர்மாவுக்கு எளிதில் உணர்த்திற்று. மேனாட்டு வண்ண முறைகளை ஜென்ஸன் அவருக்குப் பயிற்றுவித்தார். இத்தனையும் தான் இரவிவர்மாவின் பயிற்சிப் பருவத்திற்குரிய பண்புகள். ஆனால், பாரதியார் அவர் கலைத்திரையில் கண்டு வியந்த மலரில் காணும் அழகும், மாதரார் முகத்தில் காணும் உயிர்த்திற எழிலும், அவர் பயிற்சிக்கும் மரபுக்கும் அப்பாற்பட்ட அவர் தனிப்பண்புகள். வடிவழகிலும் வண்ண அழகிலும் உயிர்த் துடிப்பிலும் இரவிவர்மாவுக்கு இணைகாண்டல் அரிது. இவை அவர் பயிற்சி கடந்த, பயிற்சியில்லாத் தெய்விகக் கலைத் திறமேயாகும். தற்கால இந்தியக் கலையாராய்ச்சியாளர் வங்கக் கலையுடன் இரவிவர்மாவின் கலையை ஒப்பிட்டுக் காணவோ, வங்கக் கலையைமட்டுமே கலையெனநோக்கி இரவிவர்மாவின் கலையையும் கலைமரபையும் பகற்கனவாளர் விளையாட் டென்று புறக்கணித்தொதுக்கவோ முயல் கின்றனர். இது வங்கக்கலைக்கும் சிறப்பன்று; இந்தியக் கலைக்கும் சிறப்பன்று. வங்கக்கலையும், இரவிவர்மாவின் கலையும் கீழ்நாட்டின் இருவேறு கலைமரபுகள். அவை ஒன்றுடனொன்று ஒப்பிடத் தக்கவை அல்ல. பிரித்தறிந்து தனித்தனி பாராட்டத்தக்கவை. வங்கக்கலை புராணங்களிலிருந்தும், சமயத்திலிருந்தும் வாழ்க்கையை அறவே பிரித்தது. வாழ்க்கை கடந்த, மனிதப்பண்பு கடந்த உயர் உணர்ச்சிகளை மட்டும் கலைமரபுப்படி தீட்டிக் காட்டிற்று. ஆனால், இரவிவர்மாவோ வாழ்க்கையை அப்படியே ஒருபுறம் தீட்டிக்காட்டினார்; அதன் அழகை முனைப்பாகக் காட்டினார். அத்துடன் இந்தியர் வாழ்க்கைத் தொடர்பு குன்றிய புராணங்கள் வட மொழிக் காவியங்களைக்கூட இந்தியர் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி அவர் அவற்றுக்கு மனிதப் பண்பு ஊட்டினார். விஞ்ஞான ஊழியில் இந்திய மக்கள் வாழ்வுடன் தொடர் பற்றுவந்த புராணங்களுக்குத் தம் கலைமூலம் இரவிவர்மா உயிர்கொடுத்தார். பகுத்தறிவுக் காலங்களில் மதிப்பிழந்த - உயிரிழந்த - தெய்வங்களுக்குக் கலை மூலம் உருவும் பண்பும் தந்தார். இங்ஙனம் சமயத்துக்கும் சமயஞ் சார்ந்த கீழ்நாட்டின் இடைக்காலப் பண்புக்கும் உண்மையில் அவர்செய்த சேவை சிறிதன்று. ஆயினும், இந்தியாவின் பண்பென்று வடஇந்தியர் கொள்ளும் பண்புக்கூறுகளுக்கு அவர் இவ்வளவு தொண்டாற்றி யிருந்தும், அவர்கலை இந்திய மரபில் வந்ததன்று எனத் தவறாக ஒதுக்கப்படுவது இந்திய அறிவுலகின் ஒரு புதிரேயாகும். அவர் பெருமையை நாட்டச் சமயஞ் சார்ந்த புராண ஓவியங்கள் தேவையில்லை. ஆனால், இந்த ஓவியங்களே அதற்குச் சான்று பகரப் போதியன. இரவிவர்மாவின் கலைக் கற்பனை அழகுவாய்மையில் வேரூன்றி வாய்மை கடந்தது என்பதனை அவர் புராணப் படங்கள் நன்கு காட்டும். இரவிவர்மாவின் ‘அன்னத்தைத் தூதுவிட்ட தமயந்தி’யுடன் நந்தலால் போஸின் ‘ஹம்ஸதமயந்தி’ யை வைத்துப்பார்ப்பவர் இதனை நன்கு காணலாம். இரவிவர்மாவின் அன்னம் தூய வெண்ணிறமுடையது. அதன் முழுவடிவழகும் காணப்பெறுகிறது. அதன் முகத்தில் அதன் அன்புக் கனிவும், தூதுரைக்கும் பாவமும் வெளிப்படு கின்றன. அது அமர்ந்திருக்கும் வெண்சலவைத்தூணும், அயலிலுள்ள காட்சிகளும் அரண்மனையை நினைவூட்டுகின்றன. அருகிலுள்ள தமயந்தியைவிட மடநோக்கும் மங்கைப் பருவ எழிலும் அரசிளங்குமரிக்குரிய தளதளப்பும் இன்ப நாட்டமும் உடைய வேறு அழகுவடிவை எண்ணியும் பார்க்கமுடியாது. ‘பாவம்’ அல்லது மெய்ப்பாடு அவள் முகத்தில் மட்டுமன்றி உடல் முழுவதும் பொங்கி வழிகின்றது. அருகிலுள்ள மலர்களும் வாவியும் சலவைப்படிகளும் கூட அதே பாவத்தை வளர்க்க உதவுகின்றன. தமயந்தியின் உடைகள் அவள் இளவரசி என்பதைக் காட்டுகின்றன. அதேசமயம் அவள் தனியே பகட்டாரவாரமின்றி அரண்மனை மலர் வனத்திலிருக்கும் நிலைமையையும் அவை சித்திரிக்கின்றன. இரவிவர்மாவின் கலை இங்ஙனம் வடிவழகை மட்டுமன்றி எல்லா மெய்ப்பாடுகளையும், சூழல் மரபையும் முழுமையாக எடுத்துக்காட்டுகின்றது. இவ்வழகைக் கண்டு நுகரக் கலைவல்லுநர் வேண்டியதில்லை. கீழே அதற்கான விரிவுரையோ பெயரோகூடத் தேவையில்லை. தமயந்தியின் கதையுணர்பவர்க்கு அவள் பருவம், அவள் கதைச்சூழல், அவள் பண்பு தவிர அதுவேறு எதுவுங் குறிக்க முடியாது. அப் படத்தைக் கண்டபின் நைடதம் படிப்பவர் அந்தப்படமாகவே தமயந்தியை உருவகப் படுத்தாமலிருக்க முடியாது. நேர்மாறாக வங்கப்படத்தில் தமயந்தி, தமயந்தியாயில்லை. ஒரு பெண்ணாயிருக்கிறாள். அரசிளஞ் செல்வியாகவோ மடமங்கையாகவோ இல்லை. பம்பையான தலை, உடலை முற்றிலும் மறைக்காத ஆடை, மங்கைப் பருவத்துக்கு, மானிடப் பெண்ணின் உடலமைதிக்குப் பொருந்தாத வடிவம்! மொத்தத்தில் புராண நங்கையின் வடிவகற்றி அழகைமட்டும் குறித்துக் காட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், அழகு ஒரு சில கூறுகளால் மட்டும் தீட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்ணிமை காதலையும், உதடுகள் ஆர்வத்துடிப்பையும், நோக்கு பற்றுறு தியையும், நீண்ட விரல்கள் அழகையும் உயர்ந்தமுழங்கால்கள் தனிமையையும் குறிக்கும்படி காட்டப்பட்டுள்ளன. இங்கே கலையழகு தோன்றவில்லை. அழகுக்கலை தீட்டப்பட்டுள்ளது. இது கலையன்று, அழகாராய்ச்சிமுறை மட்டுமே. கலையில் இது ஒரு பகுதியாக இடம்பெறத்தக்கது. உயர்பகுதியாக இடம் பெறவும் தடையில்லை. ஆனால், இரவிவர்மாவின் முழுநிறை கலைவேறு, இது வேறு என்பதில் தடையில்லை. இரவிவர்மாவின் கலைவாய்மையையும் பின்னணி வண்ணத் திறனையும் தென் இந்தியாவின் வரலாற்று மரபுக்குரிய மற்றொரு படத்தில் காணலாம். வட இந்தியரால் கூடத் தலை சிறந்த வீரமன்னனாகப் போற்றப்படுபவன் சிவாஜி. இரவிவர்மா மேனாட்டு முறையைப் பின் பற்றினாலும் மேனாட்டுப் பண்பு தீட்டிய கலைஞர் அல்லர் என்பதை மறப்பவர் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். புராணப் படங்களைப்போல இங்கே கற்பனை, மனக் கோட்டை அமைத்த கற்பனையன்று. வரலாற்றின் பழம் பண்புகளை அப்படியே மனக்கண்முன் கொண்டுவந்துதரும் வாய்மை தவறாத கற்பனை இது. சிவாஜியின் வீரவடிவம் வரலாற்றுப் புகழ்பெற்ற அவர் வீரவாள் பவானியை உருவிக்கொண்டு படையெழுச்சிக்குப் புறப்படும் நிலையில் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. அவர் கரியகண் பார்வை அவர் வீரத்தையும் அறிவுத் திறத்தையும் துணிச்சலையும் காட்டு கின்றது. நீடு திறத்தையும் துணிச்சலையும் காட்டுகின்றது. நீண்டு வளைந்த கழுகுமூக்கு சூழ்ச்சித் திறனைக் குறிக்கிறது. இறுகப் பிணைத்த இதழ்கள் அவர் செயலுறுதியையும் செயல் முனைப்பையும் குறிப்பிடுகின்றன. போர் எழுச்சிகளால் திண்மையுற்று முறுக்கேறி நீண்டு திரண்டு கம்பிபோலிறுகிய அவர் உடலும், வெயில் மழைபட்டுச் செம்பு நிறமடைந்த அவர் நிறமும் படத்தில் காணப்படுகின்றன. கார்நிறப் போர்க்குதிரை மீது அமர்ந்து பாய்ச்சலுடன் அவர் தோற்றமளிக்கிறார். பின்னால் அவர் முன்னணிப் படைவீரர் அவரைத் தொடர விரைகின்றனர். பின்னணி சிவாஜியின் படையெழுச்சியை இன்னும் திறம்படக் காட்டுகின்றது. அவருக்குப்பின் மலையுச்சியில், வீரப்புகழ் பெற்ற பிரதாப்கட் கோட்டை! முன்னே அடிவாரத்தில் பகைவர்படை! பிரதாப்கட் கோட்டையைப் பார்த்தவர்கள் அவர் படத்தின் தோற்றம் வெறும் கலைஞன் கற்பனையல்ல; தோற்றத்தின் அழகை அது அப்படியே எடுத்துக் காட்டிப் பாவத்தை மிகைப்படுத்துகிறது என்று ஒத்துக்கொள்கின்றனர். புராணப் படங்களில் கூட இரவிவர்மாவின் வேறு தனிப்பண்புகள் பலவற்றைக் காணலாம். சகுந்தலை, சீதை, தமயந்தி, சாவித்திரி முதலிய எண்ணற்ற பெண்மை அழகுப்படிவங் களை அவர் தீட்டியுள்ளார். எல்லாம் குறைவற்ற அழகுவடிவங் களாகவே கற்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், பிற பல கலைஞரைப் போல எல்லாம் ஒரே வடிவாக அவர் தீட்டவில்லை. ஒவ்வொரு வரும் ஒவ்வொருதனிப் பண்புடைய அழகிகளாகவே வரைந்து காட்டப் பட்டுள்ளனர். அதுமட்டுமன்று. ஒவ்வொருவர் பண்பும் அவர்கள் கதைக் கற்பனையில் தோய்ந்து, அதற்குரிய உள்ளப் பண்பு, உடற்பண்பு வாய்ந்தவையாகவே உள்ளன. தலைமைச் சித்திரங்கள் மட்டுமன்றி, அரசர், தோழியர், பின்னணிக் காட்சிகளிலுள்ள பறவைகள் மலர்கள், பொருள்கள் முதலாக இத்தகைய தனிப்பட்ட வேறு வேறு பண்பு உடையவையாகவே உள்ளன. இத்திறங்கள் நோக்கியே பாரதியார். “அரம்பை யூர்வசி போலுள்ள அமர மெல்லியலார் செவ்வி திறம்பட வகுத்த எம்மான் !” என்று அவரை வியந்து பாராட்டியும், மன்னர் மாளிகையில் ஏழை மக்களின் குடிலில் எல்லாம் உன்னரும் தேசு வீசி உளத்தினைக் களிக்கச் செய்வான் நன்ன ரோவியங்கள் தீட்டி நல்கிய பெருமான்.... என்று வாயார வாழ்த்தியும் அவரை வழுத்தினார். புராணப் படங்களிலும் மனிதப்பண்பை ஊட்டி அவற்றை மக்கட் கலைப் படைப்புக்களாக்குவதில் இரவிவர்மா மேற் கொண்ட முறை பெரும்பாலும் கிரேக்க கலைஞரும் மேனாட்டுக் கலைஞரும் பின்பற்றிய முறையேயாகும். கிரேக்க கலைஞர் கடவுளரை மனித எல்லை கடந்த மனித உணர்ச்சியுடைய பாரிய மனித வடிவங்களாகவே கற்பனைசெய்தனர். ஆனால், அதேசமயம் அவர்கள் வடிவழகை நிறைமனித அழகு வடிவாக்கி அவர்களைக் கலைத் தெய்வங்களாக்கினர், பிற்கால மேனாட்டினரோ பண்டைக் கடவுளரை அவர்களுக்குரிய இயற்கைப் பண்புகளின் புறவடிவங்களாகவோ, இயற்கைத் தோற்றங்களின் மனித உருவங்களாகவோ கொண்டனர். இந்திய புராணவீரரும் தெய்வங்களும் இதேமாதிரிக் கலை வடிவங்களாக்கப் படலாகும் என்ற கருத்தை இரவிவர்மாவுக்கு ஊட்டியவர் கலையார்வலரான சென்னை ஆட்சியாளர் நேப்பியர் பெருமகனாரே என்று தெரியவருகிறது. ஆனால், அவ்வழியில் அவர் கலைத்திறம் கீழ்நாட்டினர் என்றும் அடையாத கலைப்படைப்புக்களை உண்டு பண்ணியது. அவர்முறை மேனாட்டுமுறை. ஆனால், அதன்வாயிலாக அவர் வேறு எந்தக் கீழ்நாட்டுக் கலைஞரும் தீட்டாத அளவில் கீழ்நாட்டுப் பண்புக்கு உயிர்கொடுத்துத் தீட்டிக் காட்டினார். ‘சீதை காட்டுப்புற வாழ்’வில் இரவிவர்மா சீதை உருவுக்கு ஒரு பின்னணி தந்து கதையின் கட்டத்தை நினைவூட்டுவதுடன் அமைய வில்லை. சீதையின் முகத்தையே அவள் உள்ளத்தின் புயலுக்கு ஒரு பின்னணி மேடையாக்கிக் காட்டுகிறார். அவள் உள்ளத்தைச் சுட்டுக் கருக்கும் துன்பத்தின் கோடுகள், அவள் நெஞ்சை வெம்பி வெதும்பச் செய்யும் உள்ளடங்கிய சினத்தின் கனலலைகள் ஆகிய இவற்றை எதிர்த்தடக்கும் அவள் ஒப்பற்ற பொறுமை, பெண்மையின் அமைதி ஆகிய யாவும் இச்சிறு எல்லைக்குள் ஒரு போர்க்களமாகக் காட்டப்படுகின்றன. ‘மைசூர் காட்டு வேட்டைக் கூடாரம்’ இரவிவர்மாவின் இயற்கைத் தோற்ற எழிலுக்கும், ‘பகற்கனவு காணும் சிறுமி’ அவர் உணர்ச்சிச் சித்திரத்துக்கும் இலக்கியம் ஆவன. ‘குழுவர்’ ‘இளவரசியும் வேடனும்’ ஆகியவை சமூகச் சித்திரங்களில் அவருக்குள்ள ஆர்வத்தையும் திறத்தையும் காட்டவல்லன. ‘விராட அரசவை’வீரம். சோகம், சீற்றம், இளிவரல் முதலிய பல மெய்ப்பாடுகளையும் ஒரு திரையிலேயே விளக்கும் ஒப்பற்ற உணர்ச்சி நாடகம். ‘சகுந்தலையும் துஷ்யந்தனும்’ ‘சகுந்தலை காதற் கடிதம்’ ஆகியவை ஒப்பற்ற பண்போவியச் சித்திரங்கள். இவை எல்லாவற்றிலுமே காணப்பெறும் நிழல் ஒளி வேறுபாடு, அணிமைத்தொலைவண்ணம், புற உடலுறுப்புக்களின் சதையுருட்சிவண்ணம், முகத்தின் உயிர்த்துடிப்பு, கண்களின் ஒளி ஆகியவை இரவிவர்மா ஓர் உயிர்க்கலைஞன் என்பதை எடுத்துக் காட்டுகின்றன. ‘வாழ்வு சிறிது, கலை பெரிது’ என்பர் மேலோர். இரவிவர்மாவின் கலை சிறிதான வாழ்வில் ஊன்றிப் பெரிதான கலையின் வரம்பிலா எல்லையில் தாவித் தவழ்கின்றது. அவர் கலையில் குறைகளில்லை என்று கூறிவிடமுடியாது. ஆயினும், கலையின் குறைகள் அதன் குற்றங்களன்று. கலைஞன் கலைநோக்கின் எல்லைகளேயாகும். பெரும்பாலும் இரவி வர்மாவின் கலைப்படைப்புக்கு முன் மாதிரியாயிருந்த வடிவங்கள் பேரளவில் மலையாளநாட்டு உயர்குடிப் பெண்களும், மக்களும், காட்சியுமே; ஓரளவு தமிழ் நாட்டு வடிவங்களும், வடநாட்டு வடிவங்களும் அவற்றில் இடம் பெற்றுள்ளன. காணாதவற்றை அவர் சித்திரிக்க முற்படவில்லை. பிறநாட்டுப் பின்னணியிலோ, தம் நாட்டிலும் உயர்குடிக்கு வெளியிலுள்ள மக்கள் வாழ்விலோ அவர் காட்சி படியவில்லை. இது அவர் வாழ்வின் எல்லை மட்டுமே. ஆனாலும் இதனால், ஏழை மக்கள் வறுமை வாழ்வின் துன்பப் புயல்கள் அவர் திரையில் இடம்பெறவில்லை. மேலும் இரவிவர்மாவின் கலையழகு நிலையான அழகுமட்டுமே. பொருளையும் பண்பையும் பொருளின் நிலையையுமே அவர் பெரும்பாலும் வரைந்தார். இயக்கம், விரைவு ஆகிய செயல்நிலைகளை அவர் கலை புறக்கணித்தது. அவர் கலைமகள், திருமகள், மலைமகள் ஆகிய யாவரும் உயர்குடிப் பெண்டிரின் செயலற்ற அமைதிநிலையையே குறிக்கின்றனர். கலைமகள் ஆடல்பாடல் துடிப்புடைய ஆர்வக் கலைமகளல்ல. திருமகள் பகட்டாரவாரமுடைய செல்வத்தை நினைவூட்டவில்லை. காளிகூட அமைந்த வீரஉருவன்றிச் செயலுருவில் ஊழிப்புயலிடை ஆடும் காளியல்லள். உருவற்ற தெய்வங்களுக்கு அவர்தந்த உருவமும் புராணங்களின் பொருந்தாப் புனைவைத் திரையில் மொழிபெயர்த்தனவே யொழிய, அவர்கள் பண்புருவக ஓவியமாகக் காட்சிதரவில்லை. மனித வாழ்க்கையின் பின்னணியாகவன்றி இயற்கைக் காட்சி இரவிவர்மாவிடம் தனியிடம் பெறவில்லை. இயற்கைப் பின்னணிக்கு அவர் முன்னணிப்படத்தின் உணர்ச்சியை ஊட்டினார் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால், காய்கனி மலருக்கும் பாறைக்கும் அருவிக்கும் உயிர் கொடுக்கும் பல கலைஞர் படைப்புத் திறம் அவர் கலைக்குப் புறம்பானது. இயற்கையையும் வாழ்வையும் அவர் கவனித்தாலும், இயற்கையைவிட வாழ்விலும் வாழ்வைவிடக் காவியக் கற்பனையிலும் அவர் கருத்து முனைப்புற்ற தென்பதில் ஐயமில்லை. உலகியல் கடந்த உணர்ச்சிகள், தெய்வீகத் தோற்றங்கள், பேய்க்காட்சி , அது கண்டவன் திகில் உணர்ச்சி ஆகிய அக நிலைகளையும் அவர் தீட்டவில்லை. உண்மையில் அவர் கலை கிட்டத்தட்ட கிரேக்கக் கலைஞர் கலையுடனேயே மிகுதி அணிமை யுடையது. இத்தாலிய மறுமலர்ச்சிக்கலையின் சாயலும் அதில் சிறிது உண்டு. இது கடந்து தற்கால வங்க அகநிலை, மறைநிலைக் கலையிலோ, தற்கால மேனாட்டு முறையில் காணப்பெறும் பொது மக்கள் வாழ்விலோ, இயற்கைக் காட்சியிலோ அவர் கவனம் ஈர்க்கப்பெறவில்லை. இக்குறைகள் இரவிவர்மாவின் கலைக்கு ஊறு தருபவையல்ல. அவற்றின் அகலத்துக்கு ஓர் எல்லை வகுப்பவை மட்டுமே. அவற்றைக் கலையின் சில பல தனித்திறங்களிலிருந்து பிரித்து, அதனை வகைப் படுத்திக் காட்ட மட்டுமே அவை உதவும். ஆயினும், பொதுவாகக் கலையிலும் சிறப்பாக உயிரோவியக்கலை, நெய்வண்ணக் கலை, புராண கற்பனைக் கலை ஆகிய துறைகளிலும் அவர் ஈடும் எடுப்புமற்ற கலைஞரேயாவர். மேனாட்டுடன் கீழ் நாட்டைத் தொடர்பு படுத்தி, இரண்டுக்குமிடையே பாலமாயமையும் தென்னாட்டுக் கலைக்கு உயிர்கொடுத்து மறுமலர்ச்சிக்குத் தூண்டும் வகையில் தென்னாட்டுக்கு அவர் சிறப்புத் தருபவர் ஆவர். 7. கலைஞன் படைப்புக்கள் கலைஞன் படைப்புக்கள் அவன் புகழை உலகில் நீடித்து நிலைக்கச் செய்கின்றன. ஆயினும் தன் படைப்புக்களைக் காட்டிலும் கலைஞனே சிறப்புடையவன் என்று கூற இடமுண்டு. ஏனென்றால், ஒவ்வொரு படைப்பிலும் அவன் தன் திறங்களில் ஒரு சிலவற்றையே காட்ட முடியும். சிறப்பாக, மன்னன் இரவிவர்மாவின் கலைப்படைப்புக்களான ஓவியங்கள் இத்தகைய பல்வகைப் பெருக்கம் உடையன. அவற்றுள் சிலவற்றை ஒருசேர வைத்து ஒப்பிட்டுக் காண்போம். இரவிவர்மா தம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலரின் உருவோவியங்கள் தீட்டியுள்ளார். அவற்றுள் அவர் துணைவி யாரின் தமக்கையரான அந்நாளைய மூத்த அரசியின் படமும் அவர் கணவனார் கேரளவர்மா ஸி.எஸ்.ஐ. அவர்களின் படமும் குறிப்பிடத் தக்கவை. மூத்த அரசியின் கண்களில் பெண்மையின் அமைதியும் கனிவும் அரசுரிமைக்குரிய துணிவும் உறுதியும் தெளிவாகத் தோற்றமளிக்கின்றன. இடது தோளில் அரசுரிமைச் சின்னம் தொங்குகிறது. காதில் வண்ணத்தோடும் பங்கொண்டை யிற் செருகிய பூக்களும் நிற்கும் நிலையில் அடையும் அரசியின் படம் அவரது சிறப்புரிமைக் கோலத்துக்குரியனவல்ல என்று காட்டுகிறது. கேரள வர்மாவின் தோற்றம் இதற்கு மாறாக, வீரத்தையும் உடல் வலுவையும் எடுத்துக் காட்டுகிறது. கண்கள் சிறுத்துக் கூரியனவாய் இருக்கின்றன. இளமையும் வீரமும் முகபாவத்தில் இடம்பெறுகின்றன. தலையிலணிந்த பாகையும் கையில் வைத்திருக்கும் சுவடியும் அவர் அரச குடும்ப உரிமையையும் கலையார்வத்தையும் சுட்டிக்காட்டுகின்றன. மைசூரில் வேல்ஸ் இளவரசரும் மைசூர் அரசரும் சேர்ந்து வேட்டை யாடும் காட்சியைக் காட்டும் இரண்டு படங்களும் இரவிவர்மாவின் மற்றோரரிய ஆற்றலைக் காட்டுகிறது. இரவிவர்மாவின் மற்றப் படங்களி லெல்லாம் நாம் பெரும்பாலும் நிலைகளையே காண்கிறோம். இயக்க உணர்ச்சி பெறுவதில்லை. அத்துடன் பரந்த இயற்கைக்காட்சிகளிலும் அவர் அவ்வளவு ஈடுபாடு காட்டியதில்லை. இவ்விரு படங்களிலும் நாம் இயற்கை யின் ஓர் அமைதியான சித்திரத்தையே காண்கிறோமாயினும், அவ்வமைதி நிலைமாறா அமைதியல்ல. மற்றும் இப்படங்களில் இரவிவர்மா வரைகளைக் குறைத்து நிழல், ஒளிவண்ணம் தீட்டுவதில் பெரிதும் அக்கரை காட்டி யுள்ளார். மேனாட்டுக் கலைஞர்களைப் பின்பற்றிப் பொருள்களின் உருவமும் இடைவெளிகளும் யாவும் ஒன்றுடனொன்று தொடர்ந்த நிழலொளிப் படலமாகக் காட்டப்பட்டுள்ளது. மரத்தின் இலைகள் மனிதர் வடிவங்கள் மேடுபள்ளங்கள் யாவும் நிழற்படிவங்களாக எல்லைக்கோடுகளின்றித் தீட்டப்பட்டுள்ளன. அரையிருளின் மாலைக்காட்சியை வண்ணங்களின்றி நிழல் வண்ணமாக நம்முன் காண்கிறோம். தனிமனிதர், இயற்கை ஆகியவற்றைவிட்டுச் சமூக வகுப்புக் குறியீட்டுச் சித்திரங்களை நோக்குவோம். இந்திய நாடோடிக் குழுவர் படம், தம்புரா வைத்துக் கொண்டு குழந்தை குட்டிகளுடனே பிச்சையெடுத்துத் திரியும் ஒரு குழுவ மாதின் சித்திரம். மாது ஒரு நல்ல மாடிவீட்டுப் படிப்புரையில் கைக்குழந்தையை மடியிலிட்டு உறங்கவைத்த வண்ணமாய்த் தம்புரா மீட்டிப் பாடுகிறாள். படிப்புரைமீதே முழங்கையைச் சொரிந்து கொண்டு அவள் மூத்த பையனும், கீழே நிலத்தில் ஒரு காலில் குந்தி, நாடியை முழந்தாளின்மீதுள்ள இரு கைகளில் தாங்கிய ஒரு சிறு பெண்ணும் இருக்கின்றனர். மாதின்முன் நிலத்திலும் அருகில் படிப்புரையின்மீதும் அவள் சட்டி, அகப்பை, மூட்டைமுடிச்சுக்கள் இருக்கின்றன. தாயின் முகத்திலும் சிறுமியின் முகத்திலும் துன்பம் இருவேறு வகைகளில் படர்ந்துள்ளன. ஆனால், இரண்டும் சிப்பியணிகளும் பாசிகளும் அணிந்து பெண்மையின் களை சிறிதும் குன்றாதிருக் கின்றன. சிறுவன் அப் பருவ ஆண்களுக்கு இயல்பான நிலையில் குறும்புக்கும் சோம்பலுக்கும் இடையே ஊசலாடும் ஒரு கந்தல் ஆடைப் பையனாகக் காட்சியளிக்கிறான். பெண்மையின் உணர்ச்சிமிக்க மற்றோர் அரிய சித்திரம் விக்டோரியாப் பேரரசியாரிடம் அவரது மணிவிழாப் பாராட்டி தழைத் தட்டில் வைத்துக் கொண்டு திருவாங்கூர் மாதர் சார்பாக அதை அவரிடம் கொண்டு செல்லும் நாயர் நங்கையின் படம் ஆகும். படத்தின் பின்னணி முழுவதும் ஆடை செறிந்த கறுப்பாகவும், அதனிடையே மாதின் உருவம்மட்டும் ஒளிதிகழ் உருவுடன் தெரியும்படியாகவும் தீட்டப்பட்டுள்ளன. கருவிழிகள் வெள்ளையிடையே கண்ணின் வனப்பைப் பன்மடங்கு பெருக்குகின்றன. நேர்பாதி முகம் ஒளியிலும் நேர்பாதி நிழலிலும் இருந்து அதன் இருபுறச் சரிநிகர் செவ்வியைப் புலப்படுத்து கின்றன. கிரேக்க வடிவழகின் வனப்பும் அதனிடம் கூடக் காணப்படாத உணர்ச்சிப் பாவங்களும் இப் படத்தைக் கவர்ச்சிமய மாக்குகின்றன. ‘பகற் கனவு’ என்ற தலைப்புடன் இரவிவர்மா மூன்று வகையான உருவகங்களை நமக்குத் தந்துள்ளார். முதலில் இளமையின் வாயிலில் நிற்கும் ஒரு மாணவிநங்கை கையில் உள்ள புத்தகத்தில் விரலால் அடையாளம் வைத்துக்கொண்டு கிளர்ச்சிமிக்க முகத்தில் சிந்தனை தோன்ற இருக்கிறாள். இரண்டாவதில் ஒரு நடுத்தர அழகி அழகிய கேசம் இரு தோள்மீதும் புரள, ஒப்பனைப் பொருள்கள் அருகே முக்காலித் தட்டத்தில் இருக்க, கையில் கண்ணாடியும் சீப்பும் ஏந்தியவாறு ஒப்பனை மறந்து ஏதோ சோகச் சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறாள். மூன்றாவதில் முதுமைவாயிலிலுள்ள ஒரு தாய் தளர்ந்த முகத்தில் விம்முகின்ற துயர்க் குறியுடன் தன்னுள் ஆழ்ந்திருக்கிறாள். புராணப் படங்களில் திரௌபதி சிம்ஹிகாவில் கள்ளங் கபடற்ற தமயந்தியின் அழகிய முகத்தின் பார்வையுடன், புற அழகில் மறைத்து அகத்தே வர்மங்கொண்ட மற்றைய முகத்தின் பார்வை ஒப்பு நோக்கி இன்புறத்தக்கது. ராதாகிருஷ்ணா என்ற படத்தில் கலைஞர் இதிகாசக் கற்பனையை முற்றிலும் நம்பகமான வாய்மையோடொட்டிய கற்பனை ஆக்கியுள்ளார். இதிகாச கிருஷ்ணனின் இளந்துடிப்புக்கும் ஆய்ந் தோய்ந்துபாரா இன்பக் குறும்புக்கும் ஏற்ப, அவன் இளமைவாயில் கடவாத முதலிளமைப் பருவத்தினனாகவும், ராதை முதிர் இளமை அல்லது கட்டிளமைப் பருவத்தினளாகவும் காட்டப் பட்டுள்ளார்கள். ராதையின் காதல் தன்னை மறந்த- தன்னைத் துறந்த- இக் கணத்தைப்பற்றியன்றி மறுகணத்தைப்பற்றிச் சிந்தியாத காதல் என்பதை அவள் மேனோக்கிய பார்வையும் நாணிழந்த நிலையும் காட்டுகின்றன. அதே சமயம் கண்ணன் முகம் அவளிடத்தில் சற்று ஈடுபாடும் கவர்ச்சியும் கொண்ட, விளையாட்டை முற்றிலும் மறவாத ஒரு குறும்பனின் தோற்றத்தை உடையதாயிருக்கிறது. இளவரசியும் வேட்டுவனும் என்ற படத்தில் பின்னணியில் அடர்ந்த காடும் ஆறும், அதனிடையே காட்டில் மலராத நாட்டு மலர்போல மெல்லிடை மங்கை ஒருத்தியும் காட்சியளிக்கின்றனர். அவள் வீற்றிருக்கும் கற் பிடத்தின் அருகே வீணை வைக்கப்பட்டிருக்கிறது. இருளில் இருள் புடைத்தாற்போன்று கருநிறமும் திரண்டுயர்ந்த தோளும் உடைய வேடன் நீண்ட வில்லுடன் முன்னே நிற்கின்றான். முற்றிலும் கருமையாகத் தோற்றும் அவன் உருவத்தில்கூட, முகத்தில், வேடவாழ்விலும் மறையாத கல்லா வெள்ளையுள்ளம் நிழலிடுகின்றது. அதே சமயம் நாகரிக நங்கையின் வடிவில் நகர உயர்குடி நங்கையரின் நயமும், முகத்தில் எதிர்பாராச் சூழல் காரணமாக ஏற்பட்ட கடுஞ்சினமும் உயிர்த்துடிப்புடன் துலங்குகின்றன. சகுந்தலையின் காதற் கடிதம் என்ற படத்தில் சகுந்தலையின் முகஅழகும் உடலழகும் கிரேக்கரின் சிற்பத்தையும், இத்தாலியரின் ஓவியத்தையும் ஒருங்கே திறைகொள்வதா யிருக்கின்றது. தெய்வமரபில் பிறந்த ஒளி, முனிவர் குடிசையில் வளர்வதால் ஏற்படும் சூதற்ற வெள்ளை யுள்ளம், காட்டில் மரங்களுடன் வளரும் பெண்மையின் தளதளப்பு, அரசகுடியில் புகவிருக்கும் வீறு இத்தனையுடன் வளர்ந்த குழந்தையாக அவள் காட்சி யளிக்கிறாள். செறிந்த நிழலில் ஒளியிழந்து காணப்படும் அவளருகிலுள்ள தோழியின் கவர்ச்சியற்ற இருப்பு அவள் நிமிர்ந்த அழகுப் படிவத்தைப் பன்மடங்கு பெருக்கிக் காட்டுகின்றது. தோழியரைப் பின்பற்றிச் செல்லும் சகுந்தலை, தன் காலில் முள் தைத்ததாகப் பாவனை செய்து, கையைக் காலில் தடவிக்கொண்டே துஷ்யந்தனை எட்டிப்பார்க்கும் காட்சிக்கு, அதை அறியாததுபோல் இருந்துகொண்டே அறிந்து குறும்பு நகையாடும் தோழியர் தோற்றம் இனிய விளக்கமாயமைகிறது. அன்ன தமயந்தியில் அன்னத்தின் பாவங்கூட அதன் உள்ளக் கனிவையும், வருங்காலக் காதலறியாத நங்கையின் மடப்பத்தைக் கண்டு முறுவலிக்கும் முறுவலையும் வெளிப் படுத்துகின்றன. அன்னத்தின் சொற்கள் புகாமுன்னம் தமயந்தியின் உள்ளத்தில் காதல்தீக் குமுறிப் புகைவதை அவள் தளர்ந்த நிலையும் உள் முகநோக்கும் தெளிவாக்குகின்றன. பாஞ்சாலி துயிலுரிதலில் ஓவியக் கலைஞர் இரவிவர்மா ஒரு முழு நாடகக் கலைஞர் ஆகிவிடுகிறார். பாஞ்சாலியைப் பற்றியிழுத்துவந்து தள்ளிய துச்சாதனனின் வீம்பாரவாரத் தோற்றம், பாஞ்சாலி அடியற்ற மரம்போல விழுந்துகிடக்கும் நிலை, சோகத்தில் மிதந்து கிடக்கும் தருமன், அடக்கிய கோபம் பீறிட உறுமியெழும் வீமன், அதன் எதிரொலி எனக் கிளம்பவிருக்கும் விசயன், பல்வகை உணர்ச்சியுடன் இவற்றைக் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும் பிற அரசவையோர் ஆகிய இத்தனை தனித்தனி ஓவியங்களும் ஒரே திரையில் தீட்டிக் காட்டப்பட்டுள்ளன. பாஞ்சாலி துயிலுரிதலை நாணவைக்கும் உச்சநிலைத் துன்ப நாடகம் ஏகாதசி மகாத்மியம். இளையாளாகிய மோகினியின் தூண்டுதலால் உருக்குமாங்கதனை அரசன் கொல்லவேண்டியிருக்கிறது, குழந்தை மனமார இதை ஏற்றுத் தாயிடம் விடைகொண்டு, தெய்வவழிபாடாற்றிவிட்டு, “என் கழுத்தைச் சும்மா வெட்டுங்கள் அப்பா! நீங்கள் கொடுத்த உறுதியிலிருந்து தயங்கக் கூடாது. மனந் தளர்வடைய விடாதீர்கள்,” என்று கூறுகிறான். சோகத்தின் உருவமாகத் தாய் கிழத் தாதியின் மடியில் துவள்கிறாள். கழிவிரக்கமும் இரண்டகக் குழப்பமும் உருவாக அரசன் நிற்கிறான். இவர்களிடையே ஒருபுறம் உவகையும் பெருமித நலமும் உடையவராய் உருக்குமாங்கதனும் கொடுமை புறந்தோன்றாது அடக்கி இனிய அமைதியுடையவளாய் மோகினியும் இடம்பெறுகின்றனர். மொத்தத்தில் இரவிவர்மாவின் படங்கள் கண்டவுடன் கருத்தைக் கவர்பவை. அவற்றை உற்றுநோக்குந் தோறும் அவை கலையுணர்வுக்கு விருந்தேயாகும். அவரை ஓவியக் கலைஞன் என்பதைவிட ஓவியத்தைத் தாய்மொழியாகக் கொண்டு அதில் கவிதை வரைந்த கவிஞன் என்று கூறலாம். அவர் ஓவியத்தில் கவிதையின் முழுநிலவு வீசுகின்றது. ஆனால், அதேசமயம் அந்த நிலவு பொருள்களின் மெய்யுருவத்தை மறைத்து உருவற்ற மாயப் பண்புகளை உலவவிடுவது அன்று; மெய்ம்மையின் நேர்வரைகள் அக் கலை நிலவில் அழகுற நெளியும் வில்வளைவுகளாகவும், அதன் கூர்ங் கோணங்கள் வளைந்தகன்ற குழைபடிவங்களாகவும் நின்று, மெய்யுருவுக்கு மெய்யறா அழகால் மெருகு ஊட்டுகின்றன. வான்மறந் தாலும் வளர்மதி யை; செவ் வண்ணமலர் தேன்மறந் தாலும்; திகழ்தரு நன்னூற் புலவர்தமிழ் தான்மறந் தாலும், தடையின்றி ஓடும் குருதியினை ஊன்மறந் தாலும் மறவா துனை இரவிவர்மனே!