மாணிக்க விழுமியங்கள் - 18 (நூற்றாண்டு நினைவு வெளியீடு)  மாணிக்கனாரின் முகவுரைகள், முன்னுரைகள்... - முதல் பதிப்பு 2017  தலைவர்கள்,அறிஞர்கள் இதழ்கள் பார்வையில்... - முதல் பதிப்பு 2017 ஆசிரியர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் பதிப்பாளர் கோ. இளவழகன் மாணிக்க விழுமியங்கள்- 18 ஆசிரியர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 16+272 = 288 விலை : 270/- வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 288 கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 1000  நூலாக்கம் : கோ. சித்திரா, ப. கயல்விழி   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006. நுழைவுரை தமிழ் மரபுகளைத் தலைமுறை தலைமுறையாகக் காத்து வரும் தமிழ்ச்சமூகங்களில் தலையாய சமூகம் நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகம். இந்தச் சமூகம் ஈன்றெடுத்த அரும்பெரும் அறிஞரும், நாடு, மொழி, இனம், சமுதாயம், கல்வி, இலக்கியம், வாழ்வு முதலான பல்வேறு பொருள்களைப் பற்றித் தம் தெள்ளத் தெளிந்த சிந்தனைகளால் தமிழ் இலக்கிய வானில் சிந்தனைச் சிற்பியாக வலம் வந்தவர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் ஆவார். இப்பெருந்தமிழ் ஆசான் வாழ்ந்த காலத்தில் தமிழர்க்கு எய்ப்பில் வைப்பாக எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச்செல்வங்களைத் தொகுத்து மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் மாணிக்க விழுமியங்கள் எனும் தலைப்பில் 18 தொகுதிகளாக தமிழ்கூறும் நல்லுலகம் பயன் கொள்ளும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. “மூதறிஞர் மாணிக்கனார் தமிழ் ஆராய்ச்சி உலகில் தமிழ்ப் பேரொளியாய் விளங்கியவர்; அவருடைய ஆய்வு நெறி தமிழ் மரபு சார்ந்தது. தொல்காப்பியத்தின் புதுமைக் கூறுகளையும், பாரதியின் பழமைக் கூறுகளையும் கண்டு காட்டியவர். உரையாசிரியர்களைப் பற்றி நிரம்பச் சிந்தித்த உரையாசிரியர். தொல்காப்பியத்திற்கும், திருக்குறளுக்கும் தெளிவுரை கண்டவர். மரபுவழிப் புலமையின் கடைசி வளையமாகத் திகழ்ந்தவர், ஆய்வு வன்மைக்குத் `தமிழ்க்காதல்’, சிந்தனைத் தெளிவிற்கு `வள்ளுவம்’, புலமை நலத்திற்குக் `கம்பர்’ ஆகிய இவர் எழுதிய நூல்களைத் தமிழ்ச் சான்றோர்கள் இனம் காட்டி மகிழ்வர். ” என்று மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இப்பெருந்தமிழ் ஆசானின் அறிவின் பரப்பை வியந்து பேசுகிறார். வளர்ந்து வரும் தமிழாய்வுக் களத்திற்கு வ.சுப. மாணிக்கனார் பதித்த பதிப்புச் சுவடுகள் புதிய வழிகாட்ட வல்லன. தாம் எழுதிய நூல்களின் வழி தமிழின் தனித்தன்மையை நிலைநாட்டியவர். மறைமலையடிகளின் ஆய்வுத் திறனும் கொள்கை உறுதியும்; திரு.வி.க.வின் மொழிநடையும் சமுதாய நோக்கும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. இத்தொகுப்புகளைப் பயில்வோர் இவ்வுண்மையை முழுதாய் உணர முடியும். தமிழ்மண் பதிப்பகம் தமிழ் - தமிழர்க்குப் பெருமை சேர்க்கும் பயனுள்ள நல்ல தமிழ் நூல்களை வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் தனித்தன்மையுள்ள நிறுவனம் என்பதை நிறுவி வருகிறது. இதன் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனாரின் அறிவுச் செல்வங்களை வெளியிடுவதன் மூலம் உவகையும், களிப்பும், பூரிப்பும் அடைகிறேன். இவர் நூல்களை நாங்கள் வெளியிடுவதை எங்களுக்குக் கிடைத்த நற்பேறாக எண்ணி எண்ணி மகிழ்கிறேன். நல்ல தமிழ் நூல்களைப் பதிப்பித்துத் தமிழ்கூறும் உலகிற்கு அளிக்கும் போதெல்லாம் என் சிந்தை மகிழ்கிறது; புத்துணர்வும், பூரிப்பும், புத்தெழுச்சியும் அடைகிறேன். தமிழ்ப் பதிப்பு உலகில் உயர்வுதரும் நெறிகளை மேற்கொள்ள உறுதி ஏற்கிறேன். நன்றிக்குரியவர்கள் மணிவாசகர் பதிப்பக நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இவ்வருந்தமிழ் அறிஞர் எழுதிய நூல்கள் பலவற்றை வெளியிட்டுத் தமிழுக்கும் தமிழருக்கும் அருந்தொண்டு செய்தவர். இந்த நேரத்தில் அவரை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பாரி நிலையம் மற்றும் காரைக்குடி செல்வி புத்தக நிலையம் ஆகிய இரண்டும் பெருந்தமிழ் அறிஞர் வ.சுப.மா. நூல்களை வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளதையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பேரறிஞரின் மக்கள் அனைவரும் இந்நூல் தொகுப்புகள் எல்லா நிலையிலும் செப்பமுடன் வெளிவருவதற்கு உதவினர். இச்செந்தமிழ்த் தொகுப்புகள் வெளிவருவதற்கு மூல விசையாய் அமைந்தவர்கள் திருமதி. தென்றல் அழகப்பன், திருமதி மாதரி வெள்ளையப்பன் ஆகிய இவ்விரு பெண்மக்கள் மாணிக்க விழுமியங்கள் தமிழ் உலகம் பயன் கொள்ளும் வகையில் வெளிவருவதற்குத் தோன்றாத் துணையாக இருந்ததை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். மொழியை மூச்சாகவும், அறத்தை வாழ்வாகவும், இலக்கிய வேள்வியை வினையாகவும் ஆக்கிக் கொண்டவர் மூதறிஞர் வ.சுப.மா அவர்கள் என்பதை மேலைச்சிவபுரி, கணேசர் கலை அறிவியல் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் இனம் காட்டி உள்ளது. இது முதுமுனைவர் இரா. இளங்குமரனார் கூறிய புகழ் வரிகள். “மாணிக்கச் செல்வ மணித்தமிழ் அன்னைக்குக் காணிக்கை யாய்வாய்த்த கண்ணாள - பேணிக்கை வைத்த துறையெல்லாம் வாய்ந்த துறையாக்கி வைத்தநீ எங்களின் வைப்பு” இப்பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய நிறைதமிழ் அறிஞரின் அறிவுச் செல்வங்களை உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்குவதன் மூலம் நிறைவடைகிறேன். “தனக்கென வாழ்வது சாவுக்கு ஒப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும்” எனும் பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திருமதி ப. கயல்விழி திருமதி வி. ஹேமலதா திரு. டி. இரத்திரனராசு நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) முதல் திருத்ததிற்கு உதவியோர்: திருமதி. தென்றல் அழகப்பன் திரு. புலவர். த. ஆறுமுகம் திரு. க. கருப்பையா முனைவர். க. சுப்பிரமணியன் புலவர். மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் இறுதித் திருத்தம் : முனைவர் மாதரி வெள்ளையப்பன் நூலாக்கத்திற்கு உதவியோர்: இரா. பரமேசுவரன், கு. மருது, வி. மதிமாறன் அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை. `மாணிக்க விழுமியங்கள்’ எல்லா நிலையிலும் செப்பமுற வெளிவருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நெஞ்சம் நிறைந்த நன்றியும் பாராட்டும். அறிமுகவுரை செம்மல் வ.சுப.மாணிக்கனார் தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் முன்னோர் எடுத்து வைத்த அடிச்சுவட்டில் தாமும் கால் பதித்து எழுத்துக்களையும் ஆய்வுகளையும் செய்த காலத்தில் தனக்கென ஒரு தனி வழியை அமைத்துக்கொண்டவர் செம்மல் அவர்கள். தமிழகத்தில் பிறந்து இரங்கூனில் வளர்ந்து வாய்மைக் குறிக்கோளைத் தன் வாழ்வின் குறிக்கோளாக எண்ணிய பள்ளிப்படிப்பை நிறைவு செய்யாத ஒரு சிறுவனை அடையாளம் கண்டாள் தமிழன்னை. அச்சிறுவனைத் தமிழ்க்கொடையாக உலகிற்குத் தந்தாள். பண்டிதமணி கதிரேசனார் துணை கொண்டு தமிழைக் கசடறக் கற்றவர், வ.சுப. சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்ந்தவர். தமிழ்க்கொடையாக வந்த வ.சுப. தமிழுக்குச் செய்த கொடை மிக அதிகம். தமிழால் அடையாளம் காணப்பெற்ற அவர் கற்றோருக்கு முதன்மையராகவும் எல்லோருக்கும் தலைவராகவும் விளங்கினார். சங்க இலக்கியங்களை புதிய நோக்கில் ஆய்வு செய்தவர். இனி வரும் காலங்களில் சங்க இலக்கியம் கற்பாரின் நுழைவாயில் வ.சுப.வின் அகத்திணை ஆய்வு நூல் `தமிழ்க்காதல்’. இராமாயணத்தில் பற்றில்லாமல் இருந்தவர்களையும் `கம்பர்’ என்ற நூல் கம்பராமாயணத்தைக் கற்கத் தூண்டுகின்றது. சிலப்பதிகாரத்தின் பெயர்க்காரணத்தை ஆய்வு செய்தது `எந்தச் சிலம்பு’. திருக்குறளைப் புதிய கோணத்தில் ஆய்வு கண்டது `வள்ளுவம்’ மற்றும் `திருக்குறட்சுடர்’. திருக்குறளின் மூலமும் உரையும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல் காணும் `உரை நடையில் திருக்குறள்’. தொல்காப்பியத்தை வெளியுலகிற்குக் கொண்டு வந்து அறிஞர்களிடையே நிலைநிறுத்தியவர் வ.சுப. தமிழ்க்கொடை மட்டுமன்று ஒரு தமிழாசிரியனாலும் அறக்கொடை செய்ய முடியுமென்பதை நிலைநாட்டியவர். அறம் செய்ய பணம் வேண்டியதில்லை. மனம் தான் வேண்டும். அழைப்பு வேண்டியதில்லை. உழைப்புத்தான் வேண்டும். அறிவு கூட வேண்டியதில்லை. அன்பு கூட வேண்டும். என்பதை உணர்த்தியவர். செம்மல் வ.சுப. அவர்களின் புகழ் தமிழ் வாழும் காலமெல்லாம் நிலைத்து நிற்கும். அந்நிய மோகத்தில் அடிமைப்பட்டு, உரிமை கெட்டு, ஆட்சிஅதிகாரம் தொலைத்து அல்லலுற்றுக்கிடந்த இந்திய மண்ணில், அக்கினிக் குஞ்சுகளை வளர்த்தெடுத்த அண்ணல் காந்திக்குப் பாரதி பாடிய வாழ்த்துப் பா இது: “வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க வாழ்க!” இதைப் போலவே, தமிழ் மண்ணில் அந்நிய மொழிகளின் ஆதிக்கத்திற்குத் தமிழர் அடிபணிந்து, மொழி உரிமை இழந்து, தமிழ்க் கல்விக்குப் பெருங்கேடு நேர்ந்த போது, இந்த அவலத்தை மாற்றும் முயற்சியில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் அண்ணல் வ.சுப.மா. அண்ணல் காந்தியை பாரதி பாடியதுபோல், அண்ணல் மாணிக்கனாரை, “வாழ்க நீ எம்மான், இங்கு வந்தேறி மொழிமோ கத்தால் தாழ்வுற்று உரிமை கெட்டுத் தமிழ்க்கல்வி தனையும் விட்டுப் பாழ்பட்டுப் பரித வித்த பைந்தமிழ் தன்னைக் காத்து வாழ்விக்க வந்த புதிய வள்ளுவமே வாழ்க! வாழ்க! என்று பாடிப் பரவத் தோன்றுகிறது. - தென்றல் அழகப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) மாணிக்கம் - தமிழ் வார்ப்பு வாய்மை வாழ்வைத் தன் உயிராகவும், திருவாசகம், திருக்குறள், தொல்காப்பியம் மூன்றினையும் போற்றிப் பாதுகாத்து பொய்யாமை, தூய்மை, நேர்மை, எளிமை என்ற நான்கு தூண்களையும் அடித்தளமாகவும் வரலாறாகவும் கொண்டு வாழ்ந்தவர் தமிழ்ச் செம்மல், மூதறிஞர் முது பேராய்வாளர், பெருந்தமிழ்க் காவலர், முதுபெரும் புலவர், தொல்காப்பியத் தகைஞர் எனது தந்தை வ.சுப. மாணிக்கனார். பெற்றோர்கள் இல்லாமலே வளர்ந்தாலும் தன்னை நற்பண்புகளாலும் நல்லொழுக்கத்தாலும் நற்சிந்தனைகளாலும் செதுக்கிக் கொண்டவர்கள். அவர்களின் மறைவிற்குப் பின் தாயார் திருமதி. ஏகம்மை மாணிக்கம் அவர்கள் தந்தை இட்ட புள்ளிகளைக் கோலமாக்கினார்கள். அப்பா தனது வாழ்நாளில் 50 ஆண்டுகட்கு மேலாக தமிழைப் போற்றினார்கள். தாயார் (தந்தையின் மறைவிற்குப் பிறகு) 20 ஆண்டுகட்கு மேலாக தந்தையின் குறிக்கோள்களைப் போற்றி நிறைவேற்றினார்கள். தமிழறிஞர்களும் ஆர்வலர்களும் இன்று தந்தையைப் போற்றுகிறார்கள். செம்மலின் அறிவுடைமை தமிழக அரசால் பொது வுடைமை ஆக்கப்பட்டது. என் தந்தையின் தொண்டுகள் பலதிறத்தன. மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவின் நிலைப்பயனாக செம்மலின் நூல்கள் அனைத்தையும் மறுபடியும் பதிப்பித்து அவற்றை தமிழுலகிற்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும் எனவும் செம்மலின் படைப்புக்களை வெளியிடுவது விழாவிற்கு உயர்வும் நூல்கள் வழிவழி கிடைக்கவும் தேடலின்றிக் கிடைக்கவும் வழி வகுக்க வேண்டும் என்றும் மக்கள் நாங்கள் எண்ணினோம். நூற்றாண்டு விழாப் பணியாக மாணிக்கனார் நூல்களை யெல்லாம் வெளியிடும் அமையத்து செம்மலின் தமிழ்மையை திறனாய்ந்து தமிழறிஞர்களின் முத்திரைகளும் நூல்களாக வெளிவருகிறது. இவ்வாண்டில் பொறுப்பெடுத்து வெளியிட்ட தமிழ்மண் பதிப்பகத்திற்கும் எம் தந்தையின் தமிழ்ப்பணிக் குறித்து பெருமை தரும் நூல்களாக எழுதியுள்ள நூலாசிரியர் கட்கும் தமிழினமே நன்றி கூறும். முனைவர். மாதரி வெள்ளையப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) கோவை 11.8.2017 என் அன்புறை எட்டு வயது பாலகனாக இருந்தபோதே ஈன்றெடுத்த பெற்றோர்கள் விண்ணுலகு எய்திய சூழ்நிலை. இளம் வயதிலேயே “லேவாதேவி” என்று சொல்லப்படும் வட்டித் தொழிலைக் கற்றுக் கொள்ள பர்மா சென்று வேலைப்பார்த்த இடத்தில் முதலாளி, வருமானவரி அதிகாரியிடம் பொய் சொல்லும்படி அப்பாவை வற்புறுத்தியதால், திண்ணமாக மறுத்துவிட்டுத் தாயகம் திரும்பிய உத்தம மனிதர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பண்டிதமணி, கதிரேசனாரிடம் தமிழ் பயின்று, பிற்காலத்தில் காரைக்குடியில் தான் கட்டிய இல்லத்திற்கு “கதிரகம்” என்று பெயர் சூட்டி, ஆசானுக்கு மரியாதை செலுத்திய மாமனிதர். சிற்பி ஒரு கல்லை உளியைக் கொண்டு செதுக்கிச் செதுக்கி, சிறந்த சிற்பமாக்குவான். அதேபோல், தன் மனதை எளிய வாழ்வு, எதிர்கால நம்பிக்கை, தெளிவான சிந்தனைகள், வாழ்க்கைக்கான திட்டங்கள், உயர்ந்த குறிக்கோள், உன்னத மான செயல், வாய்மை, தூய்மை, நேர்மை, இறை வழிபாடு போன்ற எண்ணத் திண்மையுடன் தன்னைத்தானே பக்குவப் படுத்திக் கொண்டதால், உயர் பதவியான துணைவேந்தர் பதவி அப்பாவை நாடி வந்தது. திருக்குறள், திருவாசகம், தொல்காப்பியம் ஆகிய மூன்று தமிழ் மறைகளும், பண்புடன் வாழ்வதற்குரிய வழிகாட்டிகள் என்று நினைத்து வாழ்வில் கடைப்பிடித்து வெற்றி கண்ட உயர்ந்த மனிதர். அப்பா எழுதியுள்ள `தற்சிந்தனை’ என்னும் குறிப்பேட்டில் “நான் படிப்பிலும் எழுத்திலும் ஆய்விலும் பதவிப் பணியிலும் முழு நேரமும் ஈடுபடுமாறு குடும்பப் பொறுப்பை முழுதும் தாங்கியவள் ஏகம்மை என்ற என் ஒரே மனைவி” என்று எழுதியுள்ளதிலிருந்து அப்பாவின் முன்னேற்றத்திற்கு அம்மா முழு உறுதுணையாக இருந்துள்ளார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் என் தாய்தந்தையர் இருவருக்கும் ஒருமித்தக் கருத்தாக இருந்ததால், தன் குழந்தைகள் அறுவரையும் பள்ளிப் படிப்போடு நிறுத்திவிடாமல், ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் பட்டப் படிப்புக்கள் வரை பயில வைத்து வெற்றி கண்டுள்ளார்கள். என் இளங்கலை வணிகவியல் சான்றிதழிலும், என் கணவரின் பொறியியல் சான்றிதழிலும் துணைவேந்தரின் கையொப்ப இடத்தில் என் தந்தையாரின் கையொப்பம் இருக்கும். இதை நான் பெற்ற பாக்கியமாக நினைக்கிறேன். நான் பெங்களூரில் இருந்தபோது, அப்பா எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும், “அவிநயன் திருக்குறள் சொல்லு கிறானா? புதிதாகச் சொல்லும் குறளுக்கு அய்யா காசு தருவார்கள் என்று சொல்” என்ற வரிகள் நிச்சயமாக இருக்கும். என் மகன் இளம் வயதிலேயே திருக்குறள் கற்க வேண்டும் என்பது என் தந்தையாரின் எண்ணம். இளஞ்சிறார்களுக்குப் பிஞ்சு நெஞ்சங்களிலேயே திருக்குறள், திருவாசகம் படித்தல், இறைவழிபாடு செய்தல் போன்ற விதைகளை விதைத்து விட்டால், முழுவாழ்வும் மிகவும் சிறப்பாக அமையும் என்பது தந்தையாரின் திண்மையான கருத்து. மிகச் சிறு வயதில் பெற்றோரை இழந்த சூழ்நிலையில், அடிப்படை பொருளாதாரம் இல்லாத நிலையில், அதிகமான உழைப்பாலும், முயற்சியாலும், நேர்மையான வழியில் தான் ஈட்டிய பொருளாதாரத்தில், அதாவது தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை தனது சொந்த ஊரான மேலைச்சிவபுரியின் மேம்பாட்டுக்காக உயர்திணை அஃறிணை பாகுபாடுயின்றி செலவு செய்ய வேண்டும் என்று தன் விருப்பமுறியில் எழுதியுள்ளார்கள். தந்தையாரின் விருப்பப்படியே தாயார் அவர்கள் 20-4-1992 இல் அப்பாவின் பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து நடத்தி வந்தார்கள். இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பா எழுதிய முப்பதுக்கும் மேலான நூல்களில் `வள்ளுவம்’, `தமிழ்க்காதல்’, `கம்பர்’, `சிந்தனைக்களங்கள்’ போன்றவை தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகச்சிறந்த ஆய்வு நூல்களாகக் கருதப்படுகிறது. உன்னத வாழ்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்துள்ள என் தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்பவர்களின் வாழ்விலும் நல்ல திருப்புமுனை ஏற்பட்டு வாழ்வு செம்மையாகும் என்பது உறுதி. பொற்றொடி செந்தில் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) மும்பை 21-7-2017. மாணிக்கனாரின் முகவுரைகள், முன்னுரைகள்... பொருடளடக்கம் 1. முகவுரைகள், முன்னுரைகள் 3 2. தலைவர்கள் 129 3. அறிஞர்கள் 131 4. கவிஞர்கள் 243 5. இதழ்கள் 245 வள்ளும் முகவுரை திருக்குறள் நண்பர்களே! வணக்கம் வள்ளுவம் எனப் பெயரிய நூல் பன்னிரண்டு சொற் பொழிவுகளைக் கொண்டது. இவை யாண்டும் யார் முன்னும் பேசப்பட்டன வல்ல; யானே திருவள்ளுவரை முன் வைத்துப் பேசினாற்போல் எழுதிய கற்பனைச் சொற் பொழிவுகள். இஃதோர் இலக்கியப் புதுநெறி. உங்கட்கும் எனக்கும் நெஞ்சக் கலப்பு - சுற்றப்பிணிப்பு - உண்டாகும் என்ற நோக்கத்தால், கற்பனைப் பொழிவு நெறியை மேற்கொண்டேன். சென்ற கால நம்மொழித்தாயின் இயற்கை வளம், நிகழ்காலத் தமிழ் மக்களின் மொழியறிவுக் குறைவு, வருங்காலத் தமிழகத்தின் தூய பெருஞ் செயல்கள் என இவ்வெல்லாம் நீள நினைந்தேன். இந் நினைவுச் சூல் முதிர்ச்சியால் பிறந்தது வள்ளுவத் தமிழ்க் குழவி. வள்ளுவ நூலின் நடை கற்பவரை நிறுத்திக் கற்கச் செய்யும்; வேகப் படிப்பைக் குறைத்து விளங்கிப் படிக்கத் தூண்டும்; சொல் தோறும் ஒன்றி நின்று மனம் வைத்து அறிவு செலுத்தி உண்மை காணச் சொல்லும். ஓரளவேனும் தமிழ் இலக்கியம் பயின்றார்க்கு - மொழியறிவு பெற விழைவார்க்கு - வள்ளுவம் அரிய நடையதன்று; கருத்துக்கு உரிய நடையது எனத் தமிழறிஞர் உடன்படுவர். வள்ளுவம் தொகுப்பு நூலன்று; முதற்கண் முழுதும் வரையறுத்துக் கொண்டு முரணறுத்து எழுதிய முறைநூல். ஆதலின், கற்கும் பெருமக்கள் சோற்றுப்பதம் காண்பது போல் இடையிடையே ஒரு பக்கத்தை விரித்துத் தள்ளிக்கல்லாது, முதல் தொடங்கி வரன்முறையாய்க் கற்பாராக, இஃது என் விழைவு. தூய கிழமையீர்! வள்ளுவநூற் கருத்துக்களைப் பிறர் ஏற்றல் வேண்டும்; ஏற்குமாறு வலிந்தேனும் உரைத்தல் வேண்டும் என்பது என் குறிக்கோள் அன்று. யான் கண்ட வள்ளுவங்களை - அவற்றுக்கு நிலைக்களனாகக் கொண்ட உலகியல் விளக்கங்களை - பிறர் அறிதல் வேண்டும்; அறியுமாறு அழுத்தம் பெற மொழிதல் வேண்டும் என்பதுவே என் குறிக்கோள். கொள்ளுவதும் தள்ளுவதும் நும் அறிவின் தனியுரிமை. தள்ளுங்கால் ஆசிரியனுக்கு மாசு கற்பிக்க முயல வேண்டா என்று வேண்டுவல். வள்ளுவநூல் இயற்கையழகொடு வெளிவரற்குப் பதிப்புதவியும் பார்வையுதவியும் செய்தளித்த சாது அச்சகத்தார்க்கும், பாரி நிலையத்தார்க்கும் உள்ளன்பு பெரிது உடையேன். வ.சுப. மாணிக்கம் காரைக்குடி, 1-4-1953 தமிழ்க்காதல் முகவுரை காதல் உடலுக்கு நல்லது. உள்ளத்துக்கு நல்லது, ஊருக்கு நல்லது, உலகத்துக்கே நல்லது. அந் நல்ல காதல் எது? காதல் என்பது உடற்பசி, உள்ளப்பசி, உயிர்ப்பசி, பிறவிப் பசி, அப்பசி தீர்க்கும் உணவு நெறி எது? அஃறிணையுயிர்களின் காதலாவது கல்லாக் காமம், இயற்கை வீறு. மொழி பேசும் மக்களினத்தின் காதல் நினைவில் இனித்து, அறிவில் விளங்கிக் கல்வியில் வளர்வது, அவ் வளர்ச்சிக் கல்வி எது? காதலையும் அதன் உணர்வையும் அதன் கல்வியையும் தெளிய வேண்டின், தெளிவுக்கு வேறிடம் இல்லை. தமிழ்ப் பேரினம் கண்ட அகத்திணையை நாடுக. தொல்காப்பியம் சங்கவிலக்கியம் திருக்குறள் என்ற முத்தமிழக நூல்களைக் கற்க முந்துக. காதல் சான்ற தமிழியங்களையெல்லாம் தெளிந்து நுகர்ந்து குடிதழைத்து வாழ்க. நெறியாகவும் அளவாகவும் உரமாகவும் நாணமாகவும் கற்பாகவும் காமக்கூறுகளைச் செவ்வனம் காட்டும் ஓர் உலக இலக்கியம் தமிழிற்றான் உண்டு. அதுவே அகத்திணை. இத் திணைக்கல்வி பருவம் வந்துற்ற நம்பியர் நங்கையர்க் கெல்லாம் வேண்டும், வேண்டும். அன்னவர் திருமணம் நறுமணம் பெறும். அக் காதலர்தம் வாழ்வில் உள்ளப்பூசல் இராது. ஊடற்பூசலே இருக்கும்; வெங்கட்சினம் இராது, செங்கட் சினமே இருக்கும். அகத்திணை கற்ற கணவனும் மனைவியும் பிறந்த உலகை மதிப்பர். எடுத்த உடம்பை மதிப்பர், கொண்ட மணத்தை மதிப்பர், ஒருவர் ஒருவர்தம் காம நாடிகளைப் புரிவர், காமக்குறைவு கடமைக் குறைவாம் என்று உணர்வர், வித்தில்லாக் காமப் பழத்தை உண்பர், மெய்யின்பத்தை உயிரின்பமாகப் போற்றி ஒழுகுவர், அகத்திணை வாழ்க்கையை அன்புத்திணை வாழ்க்கையாகக் காண்பர். சென்னைப் பல்கலைக் கழகத்தின் டாக்டர் பட்டத்துக்கு யான் எழுதிய ஆங்கில நூலின் முடிபுகள் இத்தமிழ் நூற்கண் விரிவாகவும் விளக்கமாகவும் அமைந்துள. இந்நூலின் செம்மைக்கு உதவிய திருக்குறள் உரை வேற்றுமை ஆசிரியர் இரா. சாரங்கபாணி எம்.ஏ. அவர்கட்கு நன்றியன். இந்நூலைச் செவ்வனம் பதிப்பித்த காரைக்குடி தென்னிந்திய அச்சகத்தார்க்கு நன்றியுடையேன். இந்நூலைக் கற்கத் தொடங்குவோர் இறுதியில் உள்ள அகத்திணைக்கல்வி என்னும் பகுதியை முதற்கண் கற்க வேண்டுவன். வ.சுப. மாணிக்கம் கதிரகம், காரைக்குடி, 15.6.1962. என் அன்புறை மகா மகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களுக்கு பார்காத்தார் ஆயிரம்பேர்; பசித்தார்க் காகப் பயிர்காத்தார் ஆயிரம்பேர்; பாலர்க் காக மார்காத்தார் ஆயிரம்பேர் வாழ்ந்த நாட்டில் மனங்காத்த தமிழ்த்தாய் “என் உடைமை யெல்லாம் யார்காத்தார்” எனக்கேட்க, ஒருவன் அம்மா யான்காப்பேன் எனவெழுந்தான் சாமி நாதன் நீர்காத்த தமிழகத்தார் நெஞ்சின் உள்ளான் நிலைகாத்த மலையிமய நெற்றி மேலான். பொய்யாத தமிழ்க்குமரி ஈன்ற சாமி! போகாத புகழ்க்கன்னி மணந்த நாத! செய்யாத மொழித்தொண்டு செய்த ஐய! சிறுகாத நெஞ்சத்தேம் வணங்கு செம்மல்! எய்யாத திருவடியால் எண்பத் தாண்டும் இளையாத உள்ளத்தால் எங்குஞ் சென்று நெய்யாத தொன்னூல்கள் நிலைக்க வைத்த நீங்காத தமிழ்க்குயிரே! நின்தாள் வாழ்க. வ. சுப. மாணிக்கம் கம்பர் முன்னுரை தமிழ்ப் பேராசிரியர் மூதறிஞர் இரா. பி. சேதுப்பிள்ளை தம் அன்னையார் நினைவாகச் சொருணாம்பாள் நிதிச் சொற் பொழிவு என்னும் ஓர் அறக்கட்டளையை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிறுவினர். இவ் வமைப்பின்கீழ் கம்பர் என்ற புலவர் பெருமான் தலைப்பில் 1964 பிப்பிரவரி 21-22-23ஆம் நாட்களில், காப்பியப் பார்வை, காப்பியக் களங்கள், காப்பிய நேர்மை என்ற முத்திறப் பொருள் பற்றிச் சொற்பொழிந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவனாகப் படிப்புதவி பெற்றுச் சேர்ந்து 1940இல் வித்துவான் பட்டம் எய்தியதும், ஆய்வு மாணவனாக இருந்தபின் விரிவுரையாளனாகப் பணி தொடர்ந்ததும், நெட்டிடைக்குப்பின், முத்துறையும் ஒருங்கிணைந்த தமிழ்ப் பெருந்துறைக்கு 1970 முதல் ஏழாண்டுக் காலம் தமிழ்ப் பேராசிரியனாகவும் இந்தியப் புல முதன்மையராகவும் பணியில் இருந்ததும், பல்கலைக்கழகம் 1979இல் பொன் விழாக் கொண்டாடிய ஞான்று மூதறிஞர் (னு. டுவைவ) என்ற சிறப்புப் பட்டம் எனக்கு வழங்கியதும் எல்லாம் என் வாழ்வின் நற்கூறுகளாகும். வள்ளல் அண்ணாமலையரசர் மேல், ‘நில்லாத செல்வத்தை நிலைக்கச் செய்தான்’ என்று யான் பாடிய எண்சீர்ப் பாட்டும், அரசர் முத்தையவேள் மேல், ‘மணி காட்டும் கோபுரம் போல் உயர்ந்த நெஞ்சும்’ என்று தொடங்கும் எனது எண்சீர்ப் பாட்டும் பல்கலைக்கழக வாழ்த்துப் பாடலாக ஏற்றுக்கொள்ளப் பெற்றன. இப்பாடல்கள் என் நன்றியுணர்வுப் பதிகங்களாகும். கம்பர் என்ற முப்பொழிவுகளும் காப்பியவிலக்கியத்தின் முழுப் பார்வையை வலியுறுத்துவன. பெருங்காப்பியச் செய்யுட் களைத் தனிப்பாடற் றிரட்டாக மதித்துத் தொகுக்கும் குறும் பார்வை முழுவுண்மையங்களைப் புலப்படுத்த மாட்டாது. காப்பியங்களில் பல செய்யுட்களைத் தேர்ந்து பொதுவிலக்கியப் பரப்புக்காகத் தொகுத்துத் திரட்டு வெளியிடுவதையும், தனிப் பாடல்களில் இலக்கிய நயங் காண்பதனையும் நான் குறையாகக் கருதவில்லை. அவை ஒரு வகை இலக்கியத் தொண்டுகள். எனினும் காப்பியம் என்ற இலக்கியவினத்தைப் பொறுத்தவரை, முழுப் பார்வையே உரிய நெறியாகும். ஆழ்ந்து நின்று தொடர்ந்து ஓடிக்கிடக்கும் கவியுள்ளத்தையும் அனைத்துப் பாடல்களிலும் பாய்ந்தோடும் உணர்ச்சியொருமையையும் கவிஞனின் நினைவாற்றலையும் அமைப்புக் கட்டுமானங் களையும் காண்பதற்கு முழுப்பார்வையே தலைப்பார்வையாகும் என அறிக. முழுப்பார்வையம் என்ற இலக்கியக்கண் எனைக் காப்பியங்கட்கும் எம்மொழிக் காப்பியங்கட்கும் பொருந்தும் எனவும் உணர்க. ‘மயிலுடைச் சாய லாளை வஞ்சியா முன்னம் நீண்ட எயிலுடை இலங்கை நாதன் இதயமாஞ் சிறையில் வைத்தான்’ ஆரணிய. (3151) ‘கள்ளிருக்கும் மலர்க் கூந்தற் சானகியை மனச்சிறையிற் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி’ உயுத்த. (9940) இதயமாஞ் சிறையில் சீதையை வைத்தான் இராவணன் என்ற ஆரணியக் கருத்துக்கும் மனச்சிதையிற் கரந்த காதல் சுவடற்று அறவே ஒழிந்தது என்ற உயுத்தக் காண்டக் கருத்துக்கும் இடைப்பட்டு 6589 செய்யுட்கள் கிடக்கின்றன. இவ்வளவு பெரிய தொகைச் செய்யுட்களின் உள்ளோட்டமும் பயனும் இராவணன் தூய்மையாக்கம் என்ற முழுப்பார்வை யினாற்றான் வெளிப்படும். இன்றைய கல்வியுலகிலும் ஆய்வுக்களத்திலும் முழுப் பார்வையம் என்ற திறப்பாடு கடைப்பிடிக்கப்படவில்லை. அதனால் பெருங்காப்பியர்களின் சிந்தனை யோட்டங்கள் வெளிப்படாமல் திருமறைக் காடாயின. இதன் விளைவென்ன? சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி, பெரியபுராணம், இராமாயணம் போன்ற பெருங்காப்பியம் இயற்றும் படைப் பாற்றலை இக்காலக் கவிஞர்கள் இழந்து வருகின்றனர். முழு நூற்படிப்பும் முழுச் சிந்தனையும் வாயாதபோது, தனிச்செய்யுள் வேட்கையும் சிந்தனைக் குறுக்கமும் மேலோங்கும்போது, அகல் நெடுங்காப்பியப் படைப்புக்குத் தக்க சூழ்நிலை எங்கே வரும்? முன்னைக் காப்பியங்களை முழுப்பார்வையோடு திறனாடுவதற்கும், வருங்காலத்துப் பெருங்காப்பியப் பனுவல்கள் முழுப்பார்வையோடு பிறப்பதற்கும் கம்பர் என்ற இத்திறனூல் தூண்டுகோலாகும் என்று நம்புகின்றேன். இப்பொழிவுகளின் முழுநோக்கம் இதுவே. மணந்த ஞான்றினும் மக்களை ஈன்ற ஞான்று வயாவும் வருத்தமும் உற்ற பெண்குலம் பெரிதும் உவக்கின்றது. அதுபோல நூல்களை வரைந்தெழுதிய காலத்தைக் காட்டிலும் அவை முகவழகும் முதுகழகும் பெற்றுப் பதிப்புருவம் கொண்டபோது, எழுத்துக்குலம் செம்மாப்பு எய்துகின்றது; தம் கருத்துக்கள் மக்கட் சந்தையில் அங்காடும்போது எழுத்தாண்மையர் ஏதோ ஒருவகைக் கொடை உலகிற்குச் செய்தது போன்ற பெருமிதவுணர்வு பெறுகின்றனர். இவ்வுணர்வே எழுத்தின் உண்மைச் செல்வம். என் எழுத்துப் பலவற்றைச் செவ்வரிசைப்படுத்தி யான் கண்டு மகிழவும் மன்பதையினர் கற்று மகிழவும் பதிப்பித்து வரும் மணிவாசகர் பதிப்பகத்திற்கும் பதிப்புச் செம்மல் மெய்யப்ப னார்க்கும் நன்றியுணர்வொடு வாழ்த்துக் கூறுகின்றேன். பதிப்பகம் பல பரிசு பெற்று நாடு மதிக்கும் நூலகமாக மேலும் வளர்ந்தோங்குக என்று வாழ்த்துவன். என் வரிசை நூல்கள் பிழைதிருத்தம் இல்லாத பதிப்பாகச் செப்பமொடு வெளிவருதற்கு உறுதுணை செய்து வரும் என் வகுப்புத் தோழர் நண்பர் முன்னை முதல்வர் திரு. சி. செல்வத் தாண்டவர்க்கு நன்றி கூறல் நட்புக்கு மிகையாகி விடாதா? எனினும் நன்றியை உணர்கின்றேன். வ. சுப. மாணிக்கம் கதிரகம், காரைக்குடி ஆவணி 2018 ஒப்பியல் நோக்கு முன்னுரை ஒப்பியல் தமிழுக்குப் புதியதுறையோ எனின், இல்லவே யில்லை. தொல்காப்பியம் களவுக் கூட்டத்தினைக் கந்தருவ வழக்கத்தோடு ஒப்பிடக் காண்கின்றோம். ஒலி நிலையில் அந்தணர் மறையோடும் சொல் நிலையில் வடமொழியோடும் தொல்காப்பியத்தில் சில ஒப்பிடல்கள் உள. `நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ எனவும், `யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை’ எனவும் வரும் திருக்குறள்களில் ஒப்பியற்பார்வை முகிழ்க்கின்றது. எனினும் ஒப்பீடுண்மைக் காலத்துத்தான் ஒரு பெருந் தனித்துறையாக வேரோடிக் கிளை விரித்து வருவதை அறகின்றோம். இத்துறையிலும் நம் தமிழ் வளர்ச்சி பெறல் வேண்டும். அவ்வளர்ச்சி ஆழப் பரந்த அறிவு நிலையிலும் சூழச்செறிந்த ஆக்கநிலையிலும் வளருமாயின் தமிழ்ச் செல்வங்கள் உலகக் கண்ணிற்குப் புலப்படும். ஒரு புலவன் தன்னுள் ஒப்பு, புலவர் தம்முள் ஒப்பு, ஓர் இலக்கியந் தன்னுள் ஒப்பு, இலக்கியங்கள் தம்முள் ஒப்பு, ஒரு மொழி தன்னுள்ஒப்பு, மொழிகள் தம்முள் ஒப்பு, ஒருகாலந் தன்னுள் ஒப்பு, காலங்கள் தம்முள் ஒப்பு எனவாங்கு ஒப்பியல் நிலங்கள் பல வரப்புக்கள் உடையவை என்றாலும் புலமையுலகின் பொதுத் தடங்களையும் ஒவ்வொருவரின்தனிச் சுவடுகளையும் ஆறும் நீரும் போல எடுத்துக்காட்டுவதே ஒப்பியலின் முதற் பயனாகும். ஒப்பியல் நோக்கு என்ற இந்நூலின்கண் உள்ள பதினான்கு கட்டுரைகளில் பெரும் பாலானவை ஒருபுடை ஒப்புமைப்பால் உடையவை. முழுதும் வேறுபட்டனவும், முற்றும் ஒற்றுமைப் பட்டனவும் ஒப்பீடு வட்டத்துக்குச் சாலாதன. எதனையும் எதனோடும் ஒப்பிடுவதற்கு அவற்றின்கண் ஒத்தகூறு, ஒவ்வாக்கூறு என்ற இரு தன்மையும் வேண்டும். வேற்றீட்டையும் உள்ளடக்கியது ஒப்பீடு என்ற குறியீடு. இவ்வொப்பியல் நெறிகள் இந்நூற் கட்டுரைகளில் தினையளவு விளக்கம் பெறுகின்றன. மணிவாசகர் பதிப்பகம் தமிழுக்கு அரிய உரிய பெரிய ஆக்க நூல்களை வெளியிடும் பெருமித மரபு கொண்டது. அதன் உறுதுணையாளர் திரு. ச.மெய்யப்பன் மரபு குன்றா ஆக்க நூல்களை வெளியிடும் ஊக்கப் பதிப்பாளர். அவர் தொண்டுக்கு நன்றி. வ.சுப. மாணிக்கம் காரைக்குடி, 26-1-78 தொல்காப்பியக் கடல் முன்னுரை ஓர் எழுத்தாசிரியன் தான் சீராக வளர்ந்து வரும் அறிவுப் பருவ காலங்களில் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி வெளியிடுகின்றான். முப்பது வயதில் எழுதியவற்றிற்கும் எண்பது வயதில் எழுதுவனவற்றிற்கும் வேறுபாடு இருப்பதே அறிவியல்பு. சொல்லால் நடையால் பொருளால் புலமையால் கொள்கையால் ஏற்றம் இருக்கலாம்; இறக்கம் இருக்கலாம்; இரண்டும் கலந்த மறுக்கம் இருக்கலாம். எப்படியும் மாற்றம் இருந்தாகும்; எனினும் இம்மாற்றத்தூடே இவன் இன்னான் என்று சுட்டத் தக்க நிலைநாடியொன்று அவ்வெழுத்தாளன் படைப்பில் இழைந் தோடும் பிறந்த குழந்தையின் என்பு வடிவமைப்பு பின்னைப் பருவங்களிலும் வேறுபடுவதில்லையே. ஒவ்வொன்றுக்கும் நிலையியம் உண்டு. என் நாற்பத்தையாண்டுக் கால எழுத்துத் தொகுதிகளை மறித்து நோக்கி, ஓரினப் பதிப்புக்களாகக் கொண்டு வரும் வாய்ப்பினை மணிவாசகர் பதிப்பகம் எனக்கு வழங்கியுள்ளது. எந்தப் பதிப்பகத்தாரிடமிருந்தும் யாருக்கும் கிட்டாத இனிய வாய்ப்பினை நான் பெறுகின்றேன். இஃது அறிவறிந்த பேறன்றோ! சிந்தனைக் களங்கள், தொல்காப்பிய புதுமை, இலக்கிய விளக்கம், ஒப்பியல் நோக்கு, எந்தச் சிலம்பு, தொல்காப்பியத் திறன் என்ற என் ஆறு நூல்களிலும் பலவேறு பொருட் கட்டுரைகள் பலசரக்குப் போல் கலந்து விரவிக் கிடக்கின்றன. அவ்வப்போது அப்பதிப்புக்கள் உருப்பெற்றமையின், பல்துறைக் கலப்பினைத் தவிர்க்க முடியவில்லை; எனினும் அதனால் இரு பயன் உண்டு. கற்பவர்க்குக் கலப்பு பல்சுவை பயந்தது. என் கட்டுரைகள் தனி இழைத்தாளாகக் கிடவாமல் பதிப்பாடை பெற்றுக் காப்புறுதி எய்தன. ஆசிரியன் எழுத்துக்கள் உடனுக்குடன் பதிப்படக்கம் பெறாதிருந்தால், அவற்றின் ஊழ்வினை என்னாங்கொல்? மேலே குறித்த எனது ஆறு நூல்களில் உள்ள கட்டுரை யாய்வுகள் தொல்காப்பியம் பற்றியவை, திருக்குறள் பற்றியவை, சங்கவிலக்கியம் பற்றியவை, காப்பியங்கள் பற்றியவை, திறன் பற்றியவை, கலைவாழ்வு பற்றியவை எனவாங்கு இனவகை செய்யப்பட்டுப் புதிய தலைப்புக் கொண்ட ஆறு நூல்களாகப் பதிப்புப் பெறுகின்றன. ஓரின மலர்த் தொடையல்போல இவை ஓரினப் பொருட் பதிப்புகளாம். இவ்வகைப் பதிப்புக்களால் கற்பவர்க்கு ஒரு துறையறிவு கைகூடும். சிந்தனைச் செல்வம் திரண்டு கிடைக்கும். இப் புதுவரிசையில் தொல்காப்பியக் கடல் என்பது முதல் நூலாகும். தமிழுக்கும் தொல்காப்பியமே முதனூலன்றோ! கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் நேமிநாத ஆசிரியர் குணவீர பண்டிதர் தொல்காப்பியத்தைக் கடலாகவும் நேமிநாத நூலை அக்கடற்பரப்பில் பன்முறை ஓடும் சிறு படகாகவும் கொள்வர். தொல்காப் பியக்கடலிற் சொற்றீபச் சுற்றளக்கப் பல்காற் கொண்டோடும் படகென்ப என்பது பாராட்டு வெண்பா. பெருங்கடலில் ஒரு படகு தானா ஓடும்? திருக்குறள் வங்கம், சிலப்பதிகாரம் மணிமேகலை சிந்தாமணி பெருங்கதை பெரியபுராணம் இராமாயணம் முதலான கலங்கள், வீர சோழியம் வெண்பாமாலை நன்னூல் தொன்னூல் முதலான நாவாய்கள், சிற்றிலக்கியத் தோணிகள், வள்ளலார் பாரதியார் பாரதிதாசன் கண்ணதாசன் ஓடங்கள் எல்லாம் தொல்காப்பியக் கடலில் மிதந்து கரைகடந்தவை யல்லவா? தொல்காப்பியத்தின் இன்றைய நிலை ஒரு நூற்றாண்டுக்கு முந்தையினும் வேறுபட்டது. தொல்காப்பியக் கழகங்கள் நாட்டிற் பல, தொல்காப்பியன் பெயர் கொண்டோர் பலருளர். பள்ளிச் சிறார்கள் கூடத் தமிழ்த் தொன்னூல் தொல்காப்பியம் என்பதனை அறியும் நற்காலம் இது. அரசியல் பாலியல் இல்லியல் உலகியல் போரியல் நிலவியல் மன்பதையியல் மெய்யியல் மொழியியல் நாடகவியல் உளவியல் என எத்துறைக்கண்ணும் தொல்காப்பியச் சிந்தனை வளர்வதைக் காண்கின்றோம். உலக மொழிஞர்கள் நம் தொல்காப்பியத்தை உலக மொழிப் பேரிலக்கணமாக மதிக்கின்றனர் ஏன்? பலர் கருத்துப்படி, தமிழ் உலக முதன் மொழியல்லவா? மூவாயிரம் ஆண்டுக்கு முந்திய நூலாயினும் கருத்தாலும் மொழிநடையாலும் பழமை என்று சொல்லுதற்கில்லை. ‘சீரிளமைத் திறம்’ என்று வியந்தார் மனோன்மணியம் சுந்தரனார். பலகோடியாண்டு படிந்த சுரங்கக் கனிமங்கள் பழமையா? தொழிற்புரட்சி தரும் புதுமையன்றோ? சிந்திப்பார் சிறப்புக் காண்பர். தொல்காப்பியக் கடல் எனப் பெயரிய இந்நூல் முப்பத்தொரு தலைப்புக்கள் கொண்டது. தொல்காப்பியத்தின் தொன்மை புதுமை பெருமை ஆக்கம் அருமை ஆழம் நயம் செல்வாக்கு எளிமை இனிமை எதிர்கால நோக்கு எல்லாம் இவற்றால் அறியலாம். மலை பழமை என்று மலைக்கவா செய்கின்றோம்? இமயத்தின் முடியேறிப் பாரதக் கொடியை நாட்டினோமன்றே. தொல்காப்பியம் காலத்தாற் பழமை யாயினும், அதனைப் போல் நடையெளிமையும் கருத்தினிமையும் கொண்ட நூல் வேறு எதுவும் இல்லை. மூவாயிரம் ஆண்டுகளாக முழுமையாக நிலை பெற்று வருவதற்கு அதன் எளிமையும் இனிமையும் தெளிவுமே சான்றாம். நாமிருவர் நமக்கொருவர் என்று குடும்பநலத் திட்டத்தில் இன்று ஒரு தொடர் விளம்பரப் படுத்துகின்றோமே; ஒருவர் என்பதற்குரிய இலக்கணம் அன்றே தொல்காப்பியர் கூறியுள்ளார். தமிழ் பகுத்தறிவு மொழி, இயற்கை மொழியாதலின், கால வீழ்ச்சி அதற்கில்லை. அதனாற்றான், என்றும் உள தென்தமிழ் என்று உண்மை காட்டினார் கம்பர். கற்பவர்தம் மொழித்தரம், சிந்தனைத்தரம், நெஞ்சுத் தரங்களை உயர்த்துவதே எழுத்தின் பயன். சிந்தனைச் செல்வங்கள் ஒளிறும் தொல்காப்பியக் கடலாடுவார் ஆக்கவறிவும் ஊக்க நெஞ்சும் முற்போக்கு நோக்கும் பெறுவர். எதற்கும் ஒரு சிறு பயிற்சியாவது வேண்டும். மிதிவண்டி ஓட்டுவதாயினும் பழகி விழுந்து, புண்படும் பயிற்சி வேண்டாமா? குழந்தை நடப்பதற்கும், உண்பதற்கும், உடுத்துவற்குமே எவ்வளவு ஆண்டுகள் பயில்கின்றது. கெடுதல்களுக்குத்தான் பயிற்சி தேவையில்லை. கவர்ச்சியால் அவை தாமே வந்து கவ்வும். நல்லது எதற்கும் அக்கறையும் முயற்சியும் கைப்பிடியளவாவது வேண்டும். ஆதலின் தொல்காப்பியம் சங்கவிலக்கியம் முதலான இவ்வுலக வாழ்வுச் சிந்தனை நூல்களைக் கற்கும் பயில்வைப் பெற்றுக் கொள்ளுங்கள். சின்னாட் பயிற்சியும் வாழ்வு நலம் தரும். தமிழ் யாக்கை பெற்ற எவருக்கும் தமிழ்த்தாய்க்கு முதனூலான தொல்காப்பியக் கல்வி பொதுப்படையாக வேண்டும். தமிழின தனித் தூய்மை அறியவும் வளர்க்கவும், நல்ல குடும்பம் நடத்தவும், உலகியல் ஒழுங்கு பெறவும், தீமை குறைந்து நன்மை பெருகவும், சான்றோர் ஆகவும் வேண்டுமேல், வேண்டுவது தொல்காப்பிய அறிவு. இவ்வறிவுச் செல்வங்களைத் தொல்காப்பியக் கடல் என்ற இந் நூல் வழங்கும். மணிவாசகர் பதிப்பகம் மொழித் தரமும் அறிவுத் தரமும் வாசகர் தரமும் உயர்தற் பொருட்டு, நன்னடை நூல்களையும் ஆழ்ந்தகன்ற நூல்களையும் வழிகாட்டும் நூல்களையும் வருவாய் நோக்கின்றி வெளியிடும் துணிவுடைப் பதிப்பகம். பதிப்பகங்கள் எழுத்தாளரின் தாயகங்கள். ஆதலின் என் நூல்கள் மணிவாசகர் பதிப்பகத்தின் கருவறையிலிருந்து வெளி வருவதை நன்றியொடு மதிக்கின்றேன், வாழ்த்தொடு மகிழ்கின்றேன். இந்நூற்பதிப்பு நிறை செம்மையோடு வெளிவருவதற்குப் பேருதவி செய்த என் வகுப்புத் தோழர் முன்னை முதல்வர் திரு. சி. செல்வத்தாண்டவனார்க்கு நன்றியன். வ. சுப. மாணிக்கம் கதிரகம், காரைக்குடி சித்திரை 2018 திருக்குறட் சுடர் முன்னுரை நம் திருக்குறளின் பெருமைகள் பலவற்றை நாம் அறிந்திருந்தாலும், தலையான உண்மையான ஒரு பெருமை மட்டும் நம் உள்ளத்திற் பதிந்து வேர் விடவில்லை. வேரோடு மாறு நம் நெஞ்சப் பாத்திகளை ஈரப்படுத்திக்கொள்ளவில்லை. அதுதான் செயல்வேர். திருக்குறள் தோன்றிய நாள்முதல் தமிழிலக்கியங்களைக் கருத்தாலும் சொல்லாலும் வளஞ்செய்து வருகின்றது. காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், அருட்பாரங்கள், நீதியிலக்கி யங்கள், புராணங்கள், சிறுகதை புதின நாடகங்கள் என வகை யெதுவாயினும், குறள் நீர் பாயாத இலக்கியக்குளம் இல்லை. உரைகள், உரை வேற்றுமைகள், உரை வளங்கள், உரைக் களஞ்சியங்கள், ஆய்வுரைகள் திருக்குறட்கு அமுதசுரபி போல மேன்மேலும் பொங்கி வருகின்றன. மொழி பெயர்ப்புக்கள் முழுவளவிலும் சிறுவளவிலும் உலகப் பன்மொழிகளில் வந்த வண்ணம் உள. அண்மையில் எழுத்து வடிவு பெற்ற சௌராட்டிர மொழியிலும் திருக்குறள் பெயர்ப்பாயிற்று. வள்ளுவர் நூலகம் எனத் தனிபெரு நூற்கட்டிடம் காணுமள விற்குத் திருக்குறள் குறித்த நூல்களும் ஓவியங்களும் பிற பொருட்களும் குவிந்து கிடக்கின்றன. வள்ளுவர் பெயர் கொண்ட மக்கள் பலர், மன்றங்களும், கழகங்களும், நிறுவனங் களும், கோட்டங்களும், போக்குவரத்துக்களும், கூட்டுறவுச் சங்கங்களும் பலப் பல. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்டு விட்டோம்; ஆம்! அவனால் நாம் புகழ் கொண்டோ மேயன்றி, நம்மால் அவன் புகழ் கொண்டானா? உரைகள் மொழி பெயர்ப்புக்கள் கோட்டங்கள் மன்றங்கள் எல்லாம் புறப் பெருமைகளேயன்றி நூலோடு உடன்பிறந்த உள்ளீடான அகப்பண்பல்ல. திருவள்ளுவர் தன் நூல் பன்மொழியில் பின்னொரு காலத்துப் பெயர்க்கப்படவேண்டும் என்று எதிர் நலம் நோக்கி எழுதவில்லை. திருக்குறளின் அகப்பயன் யாது? புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்; செய்யாது இகழ்ந்தார்க் கெழுமையும் இல் பாராட்டிய நெறிகளை வாழ்விற் கடைப்பிடிக்க வேண்டும்; பிடிக்காது விட்டவர்க்கு எந்த முன்னேற்றமும் இல்லை என்பர் வள்ளுவப் பெருமான். ஓர் எடுத்துக்காட்டு: நல்ல மருத்துவன் இலவசமாகச் சோதித்து இலவசமாக மாத்திரைகளைத் தருகின்றான். அவன் தகுதியைப் பலரிடம் பாராட்டுகின்றோம். அவன் தந்த மாத்திரைகளை மட்டும் உட்கொள்வதில்லை. அம்மருத்துவன் உட்கொண்டீரா என்று கண்டு கேட்டால், ஆ ஆ உட்கொண்டேன் என்று பொய்யும் சொல்லி மகிழ்கின்றோம். நமக்கும் அருமைத் திருக்குறட்கும் உள்ள தொடர்பு இவ்வளவுதான். வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டிய திருக்குறள் இலக்கிய ஆதிக்கம் செய்து வருகின்றதேயன்றி வாழ்வாதிக் கமோ அரசியலாதிக்கமோ உலகாதிக்கமோ செய்யவில்லை. அது பிறந்த நாள் தொட்டே தமிழ்ப் புலவர்கள் இலக்கியப் பயன் கொள்ளத் தவறவில்லை. புலவர் குழாம் இதுவும் செய்திராவிட்டால், ஆய்வறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய ‘மறைந்து போன தமிழ் நூல்கள்’ என்ற தொகுப்பில் திருக்குறளும் ஒன்றாகியிருக்கும். புலவரினமும் உரையினமும் போற்றிய மரபால் முப்பால் உய்தி பெற்றது. இது நன்றிக்குரிய வரலாறு. இதன் மேற் சிறப்பு திருக்குறளின் செயலாதிக்கமே. மக்கள் தத்தம் நாள் வாழ்விலும் மன்னர்கள் தம் அரசியல் நடப்பிலும் திருக்குறளைச் செயல் வழிகாட்டியாகவோ சிந்தனையியக்க மாகவோ கொள்ளத் தவறி விட்டனர். இச் செயல் மறை இன்றும் கற்றற்கும் சொற்பொழிதற்கும் உரிய பெருமைப் பொதுமறை யாகப் பாராட்டப்படுவதன்றி, ஒவ்வொருவரும் வினைப்படுத் தற்குத் தகும் வாழ்வுத் தனி மறையாக எண்ணப்படுவதில்லை. திருக்குறளைக் கற்கத் தொடங்கிய நாள்தொட்டு, செயல் நோக்கே என் முதற் பார்வையாயிற்று. தனித் தொடர்பு, மன்பதையுறவு, பொருளியல், அறிவியல், பண்பியல், இல்லறம் எனப் பல வகையிலும் பொருந்திய குறட்கள் என்னை நெறிப்படுத்தியுள்ளன. முப்பதாண்டுகட்கு முன்னரே ‘வள்ளுவம்’ என்னும் என் நூலில், திருக்குறளின் முழுவமைப் பையும் தனியதிகாரத்தையும் சொல் தொடர் நடைமாண்பு களையும் செயற்களத்தனவாக, நடப்பியல் அறங்களாக வலியுறுத்தி யுள்ளேன். திருக்குறட்சுடர் என்ற இந்நூலும் அதன் தொடர்ச்சியே. செயல் வாழ் வினை நோக்கத்தை அழுந்தக் காட்டுவதே திருக்குறள் குறித்த என் எழுத்துப் பயன். ஒருவர் வாழ்வின் நடப்பு பல நிலைப்பட்டது. அதற்கேற்ப அறக்கூறு களும் பலவாகும். ஆதலின் குறட்களும் பல நிலையறம் கூறுவன. இப்போது தன் நிலை எது என்று எண்ணி அந்நிலைக் குறளைத் தேர்ந்து வினையாளும் பகுத்தறிவு வேண்டும். பகுத்தறிவின்றிப் பொதுமையாக, பொது நிலையாகத் திருக்குறளைப் பார்ப்பது எல்லார்க்கும் எல்லா நோய்க்கும் ஒரு மருந்து சொல்வது போலாம். அத்தகைய பொது மருந்து உண்டா? மருந்துப் பன்மையே உலகியல். திருக்குறட் பொருட்பால் வலுவான செயலாற்றல் கொண்டது. இன்றைய ஞாலவரசியலுக்கும், சிறப்பாக நம் இந்தியவரசியலுக்கும் அரசு வள்ளுவங்கள் இன்றும் உயிர்ப் புடையன. ஆதலின் இந்திய வழிகாட்டி, தேசிய மறை திருக்குறள், நிகழ்காலப் பார்வை என்ற மூன்று கட்டுரைகளும் பாரதத்தின் வலிமையும் வளர்ச்சியும் மதிப்பும் நோக்கி எழுதப் பெற்றவை. திருக்குறட் சுடரில் இக்கட்டுரைகள் முச்சுடராகும். அரசின் நடப்போட்டங்கள் நாட்டன்போடு இவற்றில் திறனாயப்பட்டுள. நம் பாரதம் வல்நல்லரசாக வேண்டும் என்று விழையாத இந்தியர் உண்டோ? என் நடை பற்றி ஒரு குறிப்பு: என் எழுத்துக்கள் கட்டளைச் சொற்களால் கட்டளை நடையால் அமைந்தவை. சொற் பல்குதல் என்ற மிகைக்கு இடமில்லாதவை; செறிவு மிகுந்தவை; வேண்டுங்கால் புதிய சொல்லாக்கங்களும் புதிய சொல் வடிவுகளும் புதிய தொடராட்சிகளும் உடையவை. நீண்ட செந்தமிழுக்கு எதனையும் நிறைவாகத் தூய்மையாகச் சொல்ல வல்ல தற்கிழமைத்திறம் உண்டு; அம்மொழித் திறத்தைப் பயன்படுத்தும் பயில் திறம் எழுத்தாண்மையர்க்கு வேண்டும்; தூய செந்தமிழால் ஒருவர் எழுதவில்லையெனின், அது தமிழ்க் குறைபாடன்று; தெளிவும் உறுதியும் பயில்வும் இல்லா எழுதுகையர் குறைபாடு என்று உணர்வதே மெய்யுணர்வு. இலக்கிய விளக்கம், எந்தச் சிலம்பு, ஒப்பியல் நோக்கு, தொல்காப்பியத் திறன், சிந்தனைக் களங்கள் என்ற பல தலைப்புடை நூல்களில் இடைமடுத்துக் கிடந்த திருக்குறட் கட்டுரைகளும் இரண்டு புதிய கட்டுரைகளும் திருக்குறட் சுடர் என்னும் புதுப் பெயர் கொண்ட இந்நூலின்கண் ஒரு பொருள் மாலையாகத் தொகை பெற்றுள. என் முன்னைக் கட்டுரை எல்லாம் ஒரு பொருள் நுதலியனவாகப் புதிய தொகைப்பாடு பெறவேண்டும் என்று திரு.ச.மெய்யப்பன் விழைந்தார். உயர்வுள்ளலும் உள்ளியபடி செய்தலும் ஆகிய அருந்திறல் வாய்ந்த மெய்யப்பனாரின் கருத்தினை வரவேற்றேன். அதன்படி முருகனைய ஆறு புது நூல்கள் இப்போது வெளிவருகின்றன. மணிவாசகர் பதிப்பகத்தார்க்கு என் வாழ்த்தும் பதிப்புச் செம்மல் மெய்யப்பனார்க்கு என் நன்றியும் உரிய. வ.சுப.மாணிக்கம் கதிரகம், காரைக்குடி வைகாசி 2018 சங்கநெறி முன்னுரை பேராசிரியர் அறிஞர் இராமானுசனார் ஐ. நா. ஆதரவில் வெளியிட்ட ‘Poems of Love and war’ என்ற நூலின்கண், சங்கப் பாடல்கள் பலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பதினைந்தாண்டு உழைத்து ஆங்கிலக் கவியாகப் படைத்துள்ளார். இந்நூல் உலக வரவேற்புக்கு உரியதாக விளங்குகின்றது. சங்கத் தமிழ் இலக்கியத்தை அறியாதார் இந்திய நாகரிகத்தின் தனிச் சிறப்புடைய இலக்கிய நிறைவை அறியாதவர் எனவும், இவை சமயஞ் சாராத இலக்கியத் தொகைகள் ஆதலால் சமயச் சார்பு மிக்க பிற்காலத்தார் இவற்றைக் கல்லாது ஒதுக்கி விட்டனர் எனவும், உண்மை கூறப்புகின், சங்கப் பனுவல்கள் காலத்தை வென்று மன்னிய செவ்விலக்கியம் எனவும் பேராசிரியர் இராமானுசர் ஆங்கிலத்தில் வல்லமையாகக் கூறியிருப்பது இந்தியக் கண்களையும் உலகக் கண்களையும் விழிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கின்றேன். தமிழ்க் காதல் குறித்த என் ஆங்கில நூலிலும் தமிழ் நூலிலும், பேராசிரியர் சோதிமுத்து மரபு குன்றாமல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஐங்குறுநூற்றின் என் அணிந்துரை யிலும் சங்கவிலக்கியம் உலகமாட்சி கொண்டது என்ற குறிக்கோளைப் புலப்படுத்தியுள்ளேன். இவ்விலக்கியம் காலத்தாற் பழமையே யன்றி, முன்னேற்றக் கருத்துக்களால், காலையில் மலரும் நாண்மலர் போன்றது. தமிழ் நாகரிகம் என்பது இவ்வுலகக் களம் கண்ணியது; பசியும் பிணியும் பகையும் நீங்கி வாழும் நலப்பாடு கொண்டது; வையத்துள் வாழ்வாங்கு வாழும் உறுதி காட்டுவது; சாதிக்கட்டு சமயக்கட்டு மதக்கட்டு கட்சிக்கட்டு பிறப்புக்கட்டு என்றினைய இக்கட்டுக்கள் புகாத மக்கட் சமன்மை பற்றியது; பொருளா தாரத்திற் கூடக் கொடையால் செல்வச்சமம் காண்பது; செங்கோல் ஆட்சியில் புலமைச் சான்றோர்களின் பங்கு தழுவியது; ஆள்வாரைச் செவி கைப்ப இடித்துரைத்துத் திருத்தும் அறிவுடையது. இங்ஙனம் நற்கூறுபல பொதிந்த தமிழ் நாகரிக மாண்பினைச் சங்கவிலக்கியங்கள் கண்ணாடி போலக் காட்டி நிற்கின்றன. இவை இன்றைய இந்தியக் குடியரசின் ஒத்துரிமைக் கோட்பாட்டிற்கு ஒத்துவரும் பேதமிலா இலக்கியங்கள் ஆகும். சாதியடைகளோ சமய வெறிகளோ இனக் கலவரமோ இல்லாத நல்லுலகத்தை இப்பனுவல்கள் போற்றுகின்றன. காதலும் வீரமுமே இவற்றின் பாடு பொருள்கள் என்பது முழுவுண்மையன்று. இவற்றைப் பாடுங்கால் கருப்பொரு ளாகவும் செய்திப் பொருளாகவும் பல துறையறிவுகள் கட்டுமான மாகின்றன. எனவே சங்கவிலக்கியங்கள் தமிழ்த் தேசியவிலக்கியங்கள் எனவும் பாரதத்தின் இவ்வுலக நாகரிக மறைகள் எனவும் உலகின் மக்கட் பண்பிலக்கியங்கள் எனவும் கருதற்குரியவை. சங்கப்பனுவல்கள் விழுமிய பண்பினால் உலகம் தழுவியவை எனினும் மொழியால் தமிழினத்துக்கு நெருக்கமானவை. இவ்வகையில் தமிழர்கள் நற்பேற்றினர். மொழியால் நடையால் கடினமானவை. விளங்காதவை என்ற மிகத் தவறான மயக்கம் ஒரு சாராரிடை எப்படியோ பரவிக் கிடக்கின்றது. எத்துணையோ அறிவில் மயக்கங்களுள் இதுவும் ஒன்று. கடினமான வேற்று மொழிச் சொற்கள் நிறைந்த சிறுகதை புதினங்கள் எங்கட்குப் புரிகின்றன என்று பகரும் ஊனத் தமிழ்மக்கள் தூய தமிழ்ச் சொற்களால் ஆகிய நம் சங்கப் பாடல்கள் புரியவில்லை என்பது புதிராகத் தோன்றுகின்றது. எந்த மொழி வரலாற்றிலும் இல்லாதபடி, நானூறு புலவர்கள் மக்கள் நலம் நோக்கிக் கட்டுக் கோப்பாகப் பாடிய செய்யுட்களே சங்கவிலக்கியம் ஆம். இவற்றைத் தண்ணென்ற ஒழுக்கம் உடையன எனவும் இப்புலவர்களைச் சான்றோர் எனவும் கம்பர் காப்பியப் பாராட்டுச் செய்வர். ‘நீண்ட தமிழ்’ எனவும் ‘என்றுமுள தென்றமிழ்’ எனவும் கம்பர் போற்றிப் புகழ்வதற்குச் சங்கவிலக்கியச் செல்வமே காரணமாம். இந்நூல்கள் பழமைப்பட்டன, விளங்கா என்று சொல்வோரை நம்பவேண்டா. குறுந்தொகை என்ற நூல் 400 செய்யுட்கள், 2500 அடிகள் கொண்டது. அச்சு வடிவில் 100 பக்கம் வரும். அக்கறையோடு ஒரு திங்கள் மும்முறை தொடர்ந்து படித்தால், குளிர்நீர், இளநீர் போல எளிமையும் இன்சுவையும் தோன்றுவதோடு, பெருமிதமும் செம்மாப்பும் உயரும். தமிழ்ப்பிறப்பு எடுத்த தமிழர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருதிங்கள் சங்கவிலக்கியக் கல்விக்குப் பயன்படுத்தக் கூடாதா? பயன்படுத்தி அரிய சிந்தனைக் களஞ்சியத்தைத் தேடிக் கொள்ளக் கூடாதா? குறுந்தொகை ஒன்றோடு உறவு கொண்டாலே, சங்கத் தமிழ் நாகரிகம் நம்மோடு படிந்துவிடும். மனைமாட்சி யில்லாவிட்டால் எனைமாட்சியும் இல்லை என்று திருக்குறள் கூறுவது போல, சங்கக் கல்வி பெறாவிட்டால் தமிழனுக்கு ஏனைக் கல்வியால் இனப் பெருமையில்லை என்று கூறுவேன். தமிழ்க்காதல் என்னும் என் ஆய்வுடை நூலின்கண் அகத்திணை நெறிகள் விரிவாகவும் நுணுக்கமாகவும் சொல்லப் பட்டுள. சங்க நெறி என்ற இந்நூலின்கண் பெரும்பாலும் புறத்திணை பற்றிய கட்டுரைகள் உள. புறத் தொகை நூல்களுள் பதிற்றுப் பத்து பல வகையாலும் தனித்தன்மை கொண்ட தாகலின், அதன் பெற்றிகள் ஐந்து கட்டுரையாக வளர்ந்தன. புறநானூறு பற்றியும் வரம்பான சில புது ஆய்வுகளைக் காணலாம். தமிழ் வான்மீகியார், பறம்புப்போர் வஞ்சனையா? முத்தொகை வாழ்த்துக்கள் என்பன ஆய்வுக் கிளர்ச்சிக் கொண்டவை. மரபின் வந்த எட்டுத் தொகை பத்துப்பாட்டுக்கள் பெரும்பாலும் அடியளவால் கொண்ட தொகைகள் ஆகும். சமரசம் அரிதின் முயன்று பதிப்பித்த சங்கவிலக்கியம் ஆசிரிய முறையால் அமைந்த தொகுப்பாகும். இப் பதிப்புக்கள் சிலவகையாய்வுக்குப் பயன்களமாயின. கால முறைப்பதிப்பு என ஒன்று வந்தால், ஆய்வுக் களங்கள் இன்னும் பல்கும்; முடிவுகளும் உறுதியாகும். இப்பணி எதிர்காலத் தமிழாக்கப் பணிகளுள் முதன்மை பெறும் என எண்ணுகிறேன். இலக்கிய விளக்கம், தொல்காப்பியப் புதுமை, தொல்காப்பியத் திறன், எந்தச் சிலம்பு, சிந்தனைக் களங்கள் என்ற என் முன்னை உரைநடை நூல்களில் பரவிக் கிடந்த சங்கவிலக்கியம் பற்றிய கட்டுரைகள் சங்க நெறி என்ற இப்புதுத் தலைப்புடை நூலின்கண் ஒருங்கு குடிகொண்டுள. ஒரு பொருட்பட்ட என் கட்டுரையெல்லாம் இணைந்து ஒரு நூற்பதிப்பாதல் நல்லது என்று திரு ச. மெய்யப்பனார் விரும்பிய வண்ணம், தொல்காப்பியக் கடல், திருக்குறட் சுடர், சங்க நெறி, காப்பியப் பார்வை, இலக்கியச்சாறு, தமிழ்க்கதிர் என்றாங்கு என் கட்டுரைகள் ஆறு வண்ணம் பெற்றுப் புதுப்பொலிவு எய்துகின்றன. என் எழுத்துக்களை புதிய வடிவாக்கி உயர்தரமாகப் பதிப்பிக்கும் மணிவாசகர் பதிப்பகத்திற்கும் பதிப்புச் செம்மல் திரு. ச. மெய்யப்ப னார்க்கும் உளமார்ந்த நன்றிக் கடப்பாடுடையேன். வ. சுப. மாணிக்கம் கதிரகம், காரைக்குடி வைகாசி (2018) தொல்காப்பியத்திறன் முன்னுரை தொல்காப்பியம் தமிழுக்கும் தமிழினத்துக்கும் முதனூல்; இன்று தமிழாய்வுக்கும் முந்துநூலாக விளங்குகின்றது. உரைவளங்கள் பல்குகின்றன. பழைய புதிய துறைகட்கெல்லாம் தொல்காப்பிய வேர் காணத் துடிக்கின்றோம். இந்தியப் பெருநாடு பன்னூறாண்டு அடிமைப் படுவிருளிற் கிடந்து இந்நூற்றாண்டில் விடுதலைப் புத்தொளி பெற்றதுபோல, அயலிருள் படிந்த தொல் காப்பியமும் இஞ்ஞான்று ஆய்வொளி கதிர்த்து இலங்குகின்றது. காலப் பழமையான தொல்காப்பியத்தின் பொருட் கருக்களைக் கண்டு தெளிதற்கு இடையறா ஆய்வினைகள் வேண்டும்; புதிய நெறியங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்; இதுகாறும் மண்டிக் கிடக்கும் கருத்துரைகளை கட்டளைக்க வேண்டும். தொல்காப்பியத் திறன் என்ற இந்நூலில் ஆறு கட்டுரைகள் தொல்காப்பியம் பற்றியன. இவற்றில் புதிய நெறிக்கோடுகளையும் மறுத்து நிறுவிய முடிபுகளையும் சில நூற்பாவின தெளிவுகளையும் அறியலாம். ஏனைக் கட்டுரைகள் பிற பொருளவாயினும் ஆங்காங்கு புள்ளி நீழல்போலத் தொல்காப்பியச் சாயல் உண்டு. தொல்காப்பியப் புதுமை என்ற என் முன்னைய நூல் போலவே இந்நூலும் தமிழ்க் கருவூலமாம் தொல்காப்பியப் பெருமையை உணர்த்தும் என்று நம்புகின்றேன். ஆக்கமும் ஆழமும் இணைந்த நூல்களை வெளியிடும் மணிவாசகர் பதிப்பகம் அன்புத் தொடர்ச்சிபோல என் நூல்களைப் பதிப்புத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது. இத்தொடர்புக்கு திரு. மெய்யப்பன் என்பாலும் என் எழுத்தின் மேலும் கொண்டிருக்கும் ஈடுபாடே காரணமுதலாகும். நூலகம் பரந்தோங்கிச் செழித்து வளர்க என்று நன்றியொடு வாழ்த்துவன். வ. சுப. மாணிக்கம் கதிரகம், காரைக்குடி,15.3.1984 காப்பியப் பார்வை முன்னுரை இலக்கிய வகைகளுள் மிகப்பெரிய பரப்புடையது காப்பியம் ஆகும். கதை நீளம், பாத்திரப்பன்மை, புனைவுச்சூழல் இவற்றால் காப்பியத்துக்குத் தனிநெறிகள் பலவாகின்றன; எனினும் இலக்கியம் என்ற பொருண்மையில் வகைவடிவு எதுவாயினும் பொதுவுத்திகளும் உள. ஆதலின் பொதுவுத்திகள் சிறப்புத்திகள் என்ற இருபாங்கினையும் ஒவ்வோர் இலக்கியத்தும் பகுத்தறிந்து காண்பது திறனியின் கடனாகும். நிலக்காப்பியம், தழுவு காப்பியம் எனப் பெரும்போக்காகக் காப்பியத்தை இருபாற் படுத்தலாம். சிலப்பதிகாரம் மணிமேகலை பெரியபுராணம் ஊன்றுகோல் என்பன நிலக்காப்பியங்கள் ஆகும். காந்திப்புராணமும் நிலக்காப்பியமே. தழுவு காப்பியங்களே மிகுதியாகப் பெருகும். தழுவல் என்பதனால் இவை குறைமதிப்பின என்பது கருத்தன்று. தழுவல் என்பது நுணுக்கமான விரிவுடையது; மூலமொழி, பெயர்ப்பு மொழியென இருமொழிச் சார்பு காட்டுவது. இரு மொழியும் இருமொழிக்குரிய இனமக்களின் பழக்க வழக்கங்களும் அம்மொழிப் புலவர்களின் புலமையாற்றல்களும் தழுவு காப்பியத்தில் ஒருமைப்பாடு உறுகின்றன. இதுவே ‘மொழி பெயர்த்து அதற்பட யாத்தல்’ என்ற தொல்காப்பியத்தின் குறிப்பாகும். உன்பெருந் தேவியென்னும் உரிமைக்கும் உன்னைப்பெற்ற மன்பெரு மருகியென்னும் வாய்மைக்கும் மிதிலைமன்னன் தன்பெருந் தனயையென்னும் தகைமைக்கும் தலைமைசான்றான் என்ற அநுமன் கூற்றில் தழுவு காப்பியத்தின் ஒருநெறி ஒளிந்து கிடக்கின்றது. ஓர் நங்கை தான் மகளாகப் பிறந்த குலத்திற்கும் மருமகளாகப் புகுந்த குலத்திற்கும் செய்யும் நல்லுறவையும் காட்டும் நன்மதிப்பையும் தழுவு காப்பியங்கள் கடைப்பிடிக்கின்றன. சீவகசிந்தாமணி, பெருங்கதை, சூளாமணி, பாரதம், இராமா யணம், தேம்பாவணி, சீறாப்புராணம் முதலியன இரு பைஞ் ஞிலத்துக்கும் ஏற்பப் பதங்கொண்ட தழுவு காப்பியங்களாம். காப்பியப் பார்வை என்ற இந்நூலின்கண் இருவகைத் தமிழ்க் காப்பியங்களும் பார்வை செய்யப்பட்டுள. என்றாலும் சிலப்பதிகாரம், மணிமேகலை இராமாயணம் மூன்றும் பெரும் பங்குகொள்கின்றன. இந்நூல் முன்பு வெளியிட்ட காப்பியக் கட்டுரைகளின் ஓரணித் தொகுப்பாதலின் இவ்வாறு அமையலாயின. கட்டுரை ஒவ்வொன்றும் காப்பியத்தின் ஒருவகைப் பார்வையைப் புலப்படுத்தும். சிலப்பதிகாரத் திறன், மணிமேகலைத் திறன் என்ற இருபகுதிகளிலும் பல்வேறு திறனெறிகளைக் காணலாம். எந்தச் சிலம்பு, மாதவியின் மறுவோலை, சிலப்பதிகாரம் முற்றும் என்ற மூன்று ஆய்வுகளும் பழைய தடத்திலிருந்து மாறுபட்டவை. கம்பர் எனப் பெயரிய என் பொழிவுத் தனி நூலில் காப்பியப் பார்வை, காப்பியக் களம், காப்பிய நேர்மை என்ற முப்பால் நெறிகள் பட்டாங்கு விளக்கம் பெற்றுள. ‘கம்பன் இறுதியடிகள்’ என்ற புதிய கட்டுரை காப்பியத்தின் யாப்புநெறியை நமக்குக் கற்பிக்கின்றது. காவியப் பேச்சு, இலக்கிய விளக்கம், இலக்கியக்கலை, இலக்கியத்தளம் என்ற கட்டுரைகள் படைப்பிலக்கியர்க்கு வழிகாட்டும் என எதிர்பார்க்கின்றேன். இருவகைச் சிலப்பதிகாரம், மிருச்சகடிகமும் சிலப்பதிகாரமும் என்ற கட்டுரைகள் ஒப்பாயத்தின் பாலன. என் பல்வேறு உரைநடை நூல்களிற் பிரிந்து கிடந்த காப்பியக் கட்டுரைகள் இனம் இனத்தோடு சேர்வதுதான் அழகு என்ற வனப்புக்கேற்ப, ‘காப்பியப் பார்வை’ என்ற புதிய நூற்றலைப்பில் ஒன்றுபடுகின்றன. இத்தொகையால் காப்பிய நெறிகள் பலவும் ஒரு சேரப் புலனாகும் கற்பவர்க்கு. இங்ஙனம் ஒரு பொருள் குறித்த கட்டுரைகளையெல்லாம் ஒரு நூற்றொகை யாக்குவது நல்லது என்ற கருத்தையளித்தவர் பதிப்புச்செம்மல் திரு.மெய்யப்பனார். தமிழ்வளர்ச்சியில் புதுமை நோக்குடைய மெய்யப்பனார்க்கும் மணிவாசகர் பதிப்பகத்திற்கும் என் செவ்வாழ்த்து பலப்பல. வ.சுப. மாணிக்கம் கதிரகம், காரைக்குடி எந்தச் சிலம்பு முகவுரை இலக்கிய வளர்ச்சியில் தனிக் கட்டுரைகளுக்கு ஒரு நன்மதிப்பு உண்டு. அவை பொருளால் வேறுபடுதலின் கற்பவர்தம் அறிவை வளர்க்கின்றன; காலத்தால் வேறு படுதலின் கட்டுரையாளன் தன் நடை வளர்வைக் காட்டு கின்றன. பிரிந்து கிடந்த கட்டுரைகள் ஒன்றுகூட நுற்புணர்ச்சி பெறும்போது, ஆசிரியன் நிலைபேறான இன்பம் எய்து கின்றான். எந்தச் சிலம்பு முதலான பன்னிரு கட்டுரைகள் கொண்டது. இத்தொகுதி ஒன்பது, பத்து பதினொன்றுஎன்று மூன்றும் வானொலித்தவை. பிற பல மலர்களில் வெளி யானவை. திருக்குறளை இலக்கிய நூலாகவே மதிப்பதினும் நாட்டுக்கு நல்வழி காட்டும் இயக்க நூலாக மதிக்கவேண்டும். இலக்கிய பார்வை திருக்குறளின் உயிர்ப்பை ஒருக்காலும் வெளிப்படுத்தாது. நடப்புப் பார்வையே அதன் நாடிப்பார்வை. இக்கட்டுரையில் விளக்கப்படும் அரசியற் கருத்துக்களில் வேறுபடுவார் படுக. இந்திய வழிகாட்டி என்னும் கட்டுரை திருக்குறளை எங்ஙனம் கற்க வேண்டும் என்பதற்கு ஒரு வழிகாட்டி; அத்துணையே. வ.சுப. மாணிக்கம் காரைக்குடி, கதிரகம் 1-12-1964. இலக்கியச்சாறு முன்னுரை பதினெண்கட்டுரைகள் கொண்ட இந்நூல் `இலக்கியச் சாறு’ என்ற இனிய புதிய பெயர்த் தலைப்பினைப் பெறுகின்றது. இது மிகப் புதிய தொடரன்று. கருப்பஞ்சாறு என்ற வழக்கினை நாம் பலகால் கேட்டிருக்கின்றோம். பழச் சாற்றுக்கடைகள் எங்கும் பெருகி வரும் காலம் இது. சாறு என்பதற்குச் செறிவு என்பது பொருள். `சாறயர்களம்’ எனவும் `சாறுதலைக் கொண்டென’ எனவும் `வேறு வேறு கடவுளர் சாறு சிறந்தொருபால்’ எனவும் விழா என்ற பொருளில் இச்சொல் சங்க காலத்துப் பெருவழக்காக இருந்தது. மக்கள் செறிவாகக் கூடிய நெருக்கம் என்பது இதன் கருத்து. சாறு என்பதற்குச் சத்தின் பிழிவு என்ற பொருளும் உண்டு. `ஆலைச்சாறு பாய் ஓதை’ என்பர் கம்பர். `திருந்து சாறு அடுவுழிப் பிறந்த தீம்புகை’ என்பர் திருத்தக்க தேவர். அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தாற் பெரும்பயனும் ஆற்றவே கொள்க - கரும்பூர்ந்த சாறுபோற் சாலவும் பயனுதவி மற்றதன் கோதுபோற் போகும் உடம்பு என்ற நாலடியில் கரும்பின் பிழிவு சாறெனவும் அதன் சக்கை கோதெனவும் குறிக்கப்படுதல் காண்க. `நறவுப் பிழிந்திட்ட கோதுடைச் சிதறல்’ என்ற புறநானூறும் நினையத் தகும். எனவே இலக்கியச் சாறு என்ற சொற்றொடருக்கு இலக்கியப் பிழிவு என்பது கருத்தாம். இரும்பனையின் குரும்பை நீரும் பூங்கரும்பின் தீஞ்சாறும் ஓங்குமணற் குவவுத் தாழை தீநீரோ டுடன்விராஅய் முந்நீருண்டு முந்நீர்ப் பாயும் தாங்கா வுறையுள் நல்லூர் என்ற மாங்குடிகிழார் புறநானூற்றுச் செய்யுளால், பனைநுங்கின் நீர், கரும்பின் தேறல், தென்னை இளநீர் மூன்றும் விரவிய கலவைச் சாறு குடித்த பழக்கம் பண்டைக் காலத்து இருந்ததை அறியலாம். தனிப் பழச்சாற்றோடு பல்வகைப் பழங்கள் பிழிந்த கலப்புச்சாறும் இன்று கடைகளில் கிடைக்கின்றன. இலக்கியச்சாறு என்ற இந்நூல் பல இலக்கியங்களின் பிழிவாகும். திருவாசகம், திருக்கோவை, கோவையிலக்கியம், திருப்பாவை, திருவெம்பாவை, தைப்பாவைகள், பல சிற்றிலக்கியங்கள், தாயுமானவர் கவிதை, காந்திக் கவிதை, பாரதிகவிதை என்ற இலக்கிய வகைகளை ஒவ்வோர் கூறுபற்றி வடித்தெடுத்த கருத்துச் சாறுகளை இத்தொகுப்பிற் காணலாம். இடைநூற்றாண்டு இலக்கியங்களும் இந்நூற்றாண்டு இலக்கியங்களும் மரபுச்சுடர் குன்றாமல் புத்தொளி நந்தாமல் திறப்பாடு செய்யப்பட்டுள. தற்சிறுமை, தேவர்கள் படும்பாடு, காந்திக்கவிதை, பாரதீயம் என்றினைய கட்டுரைச் சாறுகள் அறிவு மறுமலர்ச்சியைப் பண்படுத்தும் என்று நம்புகின்றேன். படைப்பிலக்கியப் பாங்கு என்ற முதற்சாறு கவர்ச்சி கருதிப் பெண்ணினத்தின் பெருமை மாசு படக்கூடாது என்ற நோக்கில் பிழியப் பெற்றது. தமிழ்ச் சொல்லாட்சியும் தமிழ்மையாகப் போற்றப்படவேண்டும் எனவும் தமிழாற்றலை அயல்மாசு படுத்தலாகாது எனவும் இக்கட்டுரை தெளிவுபடுத்துகின்றது. புதினம், சிறுகதை, நாடகம் படைக்கும் புத்தெழுத்தாளர்கள் பொருண்மையிலும் சொன்மையிலும் மக்கள் நலங்களையே நயத்தக்க நாகரிகச் சால்போடு கடைப்பிடிக்கவேண்டும் என்பதும், தங்கள் மறுபதிப்புக்களை மொழித் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதும் இக்கட்டுரையின் சாறாகும். பழமைக்குள் மூழ்கினாலும் புதுமைமேல் நீந்தினாலும், நாட்டின் எதிர்கால முனனேற்றமும் நிகழ்கால நல்வாழ்வுமே என் எழுத்துக்களின் உள்ளொளி. என் ஏனைவகை நூல்களிலும் இவ்வொளிக்கதிர் பிறங்கக் காணலாம். என் நூல்களை வரிசைப் பதிப்பாக்கித் தமிழ்மக்கட்கு வழங்கவேண்டும் என்று திட்டப்படுத்தினார் பதிப்புச் செம்மல் மெய்யப்பனார். அவர் எண்ணியாங்கு பட்டுத் துகில்போலக் குறுகிய காலத்தில் என்பனுவல்கள் அச்சிழை பெற்றுக் கண்கவர் வனப்போடு வந்து கொண்டிருக்கின்றன. தன் குழந்தை வரிசை வரிசையாகப் பரிசு வாங்கும்போது மகிழும் தாயுணர்வை நான் பெறுகின்றேன். மணிவாசகர் பதிப்பகத்தார்க்கு என் வாழ்த்தும் நன்றியும் உரிய. என் வகுப்புத் தோழர் முன்னை முதல்வர் திரு. சி. செல்வத்தாண்டவனாரின் அன்புத் தொண்டினால் என் பதிப்புக்கள் பிழையூனம் பெறவில்லை. அவர்க்கு என் நன்றிக்கடன் மரபாயிற்று. வ.சுப. மாணிக்கம் கதிரகம், காரைக்குடி ஆவணி 2018 தொல்காப்பியப் புதுமை முகவுரை தொல்காப்பியம் தமிழ்நாட்டுக்கு முதனூல், தமிழ்மொழிக்கு முதனூல், தமிழர்க்கு முதனூல். இந் நூலறிவு எத்துறைத் தமிழனுக்கும் வேண்டும். தொல்காப்பிய அறிவுடைய தமிழன் எண்ணத்திலும் வாழ்விலும் ஏற்றமாக விளங்குவான். பலமொழிக் கலப்புடைய இன்றைத் தமிழர்க்குத் தமிழ்மொழி மூவரசாண்ட நன்னாளில் தோன்றிய தொல்காப்பியம் எடுத்தவுடன் புரியாதுதான். ஆயினும் தொல்காப்பியம் விளங்கும் நற்றமிழர்களாக நாம் உயர வேண்டாமா? உயர்ந்து தமிழை மேலும் உயர்த்த வேண்டாமா? தொல்காப்பியப் புதுமை என்பது இந்நூலின் பெயர். தொல்காப்பிய நூல் காலத்தால் மிகப் பழமையாக இருக்கலாம். காலப் பழமைக்காகக் கருத்தும் பழமை என்று மயங்கி எடுத்து எறிந்து இகழ்ந்து விடக்கூடாது என்று விழிப்பூட்டவே `தொல்காப்பியப் புதுமை’ என்ற பெயரை இந்நூற்கு வழங்கினேன். தொல்காப்பிய நிழல்படாத தமிழ் நூல்கள் இல்லை. இன்று பிறக்கும் நூல்களுங்கூட இந்நிழல் படிந்தனவே. இன்றைய தமிழ்மொழி வழக்கினைச் சிறிது நோக்கினும், ஒலியும் தொடரும் பிற அமைப்பும் தொல்காப்பிய நெறிப்பட்டனவே என்பது தெளிவு. பரந்து வளரும் மொழியியல் இவ்வுண்மையை மெய்ப்பிக்கின்றது. காதலுலகிலும் கற்புலகிலும் தொல்காப்பிய வுள்ளமே தமிழ்மக்களின் உள்ளமாக இன்றும் வாழ்கின்றது. எனவே நம் பரம்பரை செம்மையானது, வழி நெறி வருவது, காலம் பொருந்தியது, சாலச் சிறந்தது என்று ஒவ்வொரு தமிழனும் செம்மாப்புக் கொள்க. இதன் முன்னைப் பதிப்புக்கள் 14 கட்டுரை கொண்டவை. இப்பதிப்பில் சங்க நெறிகள், தொல்காப்பிய நெறிகள் என்ற இருபொழிவுகள் மேலும் கூடியுள்ளன. நூலின் பெயருக்குத் தக 16 கட்டுரைகளிலும் தொல்காப்பிய நீரோட்டத்தைப் பருகலாம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே மூத்த மனிதக்குடி எனப் புகழப்படும் தமிழினம் மூத்தும் மூவாத் தொல்காப்பியத் தமிழ்மறையைக் கைமணக்க வாய்மணக்க வாழ்வுமணக்கக் கற்க முன்வருக. வ.சுப. மாணிக்கம் காரைக்குடி 1-3-80 இலக்கிய விளக்கம் முன்னுரை இலக்கிய விளக்கம் என்ற இந்நூல் பதினான்கு கட்டுரைகள் கொண்டது. செம்பாகம் ஏழு கட்டுரைகள் திருக்குறள் பற்றியவை. நடைமுறையும் செயலும் தெளிவும் நோக்கி எழுதப்பட்டவை. திருக்குறளும் இலக்கியம் ஆதலின் இவ்வேழினையும் இலக்கிய விளக்கமாகவே கருதலாம். ஏனைக் கட்டுரைகள் புறம், அகம், காப்பியம், சிற்றிலக்கியம், நீதியிலக்கியம் என்ற நூல் வகைகளை ஒவ்வொரு கூறுபற்றி ஆராய்பவை. இவற்றில் சில இலக்கியப் பாங்குகள் புதுவிளக்கம் பெற்றுள. நீதிவிளக்கம் என்ற இறுதிக்கட்டுரை `சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர், என்றபடி சிறு நூல்களும் இலக்கியத்திறனுக்கு உரிய ஆய்வுத் தளங்களாம் என்பதை மெய்ப்பிக்கும். இக்கட்டுரைக்கண் ஏழிளந்தமிழ் என்ற புதுத் தொகைநூல் படைக்கப்பட்டிருப்பதை நினைவுகொள்ள வேண்டுகின்றேன். இக்கட்டுரையிற் சில வானொலியில் எழுந்தவை சில மலரில் மலர்ந்தவை. வெவ்வேறு காலத்தில் எழுதப்பட்டவை எனினும் ஒரு நூல் வடிவம் பெறும் இப்போது வேண்டும் ஒழுங்கு செய்து வெளியிடுகின்றேன். வெவ்வேறு ஆண்டிற் பிறந்த மக்களை ஒருங்கு காணும் குடும்பக் காட்சியின் இன்பம் இந்நூற் காட்சியிலும் தோன்றுகின்றது. கட்டுரைத் தனிமலர்களை நூன்மாலையாகப் பதிப்பிக்க அன்போடு ஏற்றுக்கொண்ட சிதம்பரம் மணிவாசக நூலகத்தார்க்கு நன்றியன். வ.சுப.மாணிக்கம் காரைக்குடி.,, 1-12-1971 சிந்தனைக் களங்கள் முன்னுரை சிந்தனைக் களத்திற் புகுமுன் எல்லா இடத்தும் நீர் ஊறுமா? எல்லாப் பகுதியிலும் பால் சுரக்குமா? இலக்கியத்திலும் இலக்கணத்திலும் வரலாற்றிலும் சமயத்திலும் எல்லா இடங்களும் ஆய்வாகுமா? நீர் எங்கும் ஊறும்; பால் எங்கும் சுரக்கும்; ஆய்வு எங்கும் நிகழும் என்பது அறிவின் முதற்கோணல் ஆகும். மண்ணறிஞன் நீர் உள்ள இடம் காண்பது போலவும், மருத்துவன் உடலில் வலியுள்ள இடம் காண்பது போலவும், ஆய்வாளன் இலக்கியம் முதலான எத்துறைக் கண்ணும் ஆய்வுக்கு உரிய இடங்களை அறிவு மதுகையால் கண்டு கொள்ள வேண்டும். சிறப்பிடங்களே சிந்தனைக் களங்கள். ஒரு நூலை, ஒரு துறையைப் பொதுவாகக் கற்றுக்கொண்டு செல்லுங்காலை, காலுக்கு மேடு பள்ளம் தோன்றுவது போல, அறிவுக்கும் கருத்தோட்டத்தில், நடைப்போக்கில், அமைப்பு முறையில், முடிவு நிலையில் முட்டுமுரண்களும் எதிர்குதிர்களும் புலப்படும். இவ்விடங்களைச் சுரங்கங்களாக மதித்து, மண் மேடிட்ட பதுக்கல்களைத் தொல்லியலார் தோண்டிக் காண்பது ஒப்ப. ஆய்வாளர் அறிவை நிறுத்தித் தீட்டி ஆய்வினை செய்ய வேண்டும். படித்துக் கொண்டே செல்லும் அறிவிற்கு அகலம் ஏற்படும்; நின்று உசாவி நுனித்துத் திறம் காணும் அறிவிற்கு ஆழம் ஏற்படும். நின்று துளைக்கும் அறிவே, பாரதியார் சொல்லியாங்கு, ஆழ்ந்து நிற்கும் கவியுளத்தைப் பார்க்க முடியும். இதற்கு ஒரே வழி இலக்கியமாயினும் வேறு எத்துறையாயினும் சிந்தனை எழுப்பும் சிலவாய களங்களைத் தேர்ந்து மேற்கொள்வது. களத்தேர்வு செய்யாது செய்யும் முயற்சி யெல்லாம் கைவருந்த உமிக் குத்துவதாகும். இந்நூலில் 37 சிந்தனைக் களங்கள் உள்ளன. இவை ஒரு துறைக்களம் அல்ல. தொல்காப்பியக்களம், சங்க இலக்கியக் களம், காப்பியக்களம், உரைக்களம், சமயக்களம், வரலாற்றுக் களம் எனப் பலதிறத்தவை. ஒவ்வொரு துறையிலும் முட்டிய முரணிய மோதிய போலிய மெலிய வலிய பகுதிகளை ஆய்வுத் திட்டுக்களாகக் கோலிக்கொண்டு யான் கண்ட முடிபுகளை அவை வழிவழிக் கருத்துக்கு மாறு எனினும் காரணம்படக் காட்டியுள்ளேன். என் சிந்தனைக் களங்கள் நுண்ணியோர்க்குச் சிந்தனைக் குளங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றேன். தனக்கு முன்தோன்றிய நூல்களும் உடன் தோன்றிய நூல்களும் ஏன், பின் தோன்றிய நூல்களும், பல பெயர்ச் சுவடும் தெரியாமல் மறைந்தொழிய, தொல்காப்பியம் ஒன்று மட்டும் காலப்பெருங் கடலைக் கடந்து நீந்தி நிலைத்திருப்பக் காரணம் யாது? எல்லாத் தொகைகளிலும் திணைவரிசை நூலுக்கு ஒன்றாக மாறாக இருக்கும் போது ‘சொல்லியமுறை’ என்ற தொல்காப்பியத் தொடருக்குத் திணைவரிசை முறை என்று உரை கண்டது பொருந்துங்கொல்? மயக்கம் என்ற கிளவிக்குப் புணர்ச்சி என்பதன்றோ பண்டைப்பொருள்? பின்னையோர் வழு என்று பொருள் கொண்டதனால் ஆயிரம் ஆண்டுகளாக வந்த இலக்கணத்தீமை என்ன? உரையாசிரியர் தம் கருத்துக்களை வாங்கிக்கொண்டு நூற்பா வடிவில் ஆக்கிய பவணந்தி முதலியோர் நூலாசிரியர் எனின், உரைவடிவில் எழுதியதற்காக இளம்பூரணர் முதலியோர் நூலாசிரியர் ஆக மாட்டார்களா? பாவின் இனங்கள் எனப்படும் தாழிசை துறை விருத்தம் ஒரு வரம்பிற்கு உட்பட்டனவாக இல்லை. அவற்றை எங்ஙனம் சீர்திருத்தம் செய்யலாம்? பிற மொழியில் தமிழ்ச் சொற்களை எழுதும்போது தமிழ் எழுத்தாளர் கடைப்பிடிக்கும் ஒலிநேர்மையைத் தமிழ் மொழியில் பிற சொற்களை எழுதும் போது அவர்கள் கடைப் பிடிக்க வேண்டாமா? இவையனையன இலக்கணத்துறையின் சிந்தனைக் களங்கள். பாரியை மூவேந்தரும் வஞ்சித்துக் கொன்றனர் என்ற முடிபுக்குப் புறநானூற்று உரையாசிரியர் தரும் ஒரு நயக் குறிப்பு சான்றாகாது. சங்க மூலம் வேண்டும். ‘பாவையன்ன நல்லோள்’ என்ற பதிற்றுப்பத்துத் தொடர் சேரன் தேவியைக் குறிக்குமே யன்றி வழிவழிக் கூறிவருவது போலப் பாரிமனைவியைக் குறிக்காது. பதிற்றுப்பத்து இற்றைத் தமிழர் என்பார்க்கு மலைநடையாகத் தோன்றினும் இலக்கியப் பண்பு என்னும் நளிர்சுனையில் குறைந்ததில்லை. தமிழ் மொழியில் எல்லாச் சமயத்துக்கும் காப்பியங்கள் இருப்பினும் உட்பண்புகளை நோக்குங்கால், அவை தமிழ்ச் சமுதாயக் காப்பியங்களே. ‘மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும்’ என நீண்ட இறுதித் தொடரில் மணிமேகலை என்பது மணிமேகலைக் குமரியைச் சுட்டுமேயன்றிப் பன்னூறாண்டு களாகக் கருதிவரும் மணிமேகலைக் காப்பியத்தைச் சுட்டவே சுட்டாது. இவை போல்வன இலக்கியத் துறைச் சிந்தனைக் களங்கள். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருக்குறள் அதிகாரத் தலைப்பின்படி பெருமை காட்டுவதா? பொதுமை காட்டுவதா? ‘நற்பெருந் தவத்தளாய நங்கையைக் கண்டேனல் லேன்’ என்ற இராமாயணத் தொடரை எவ்வாறு பிரித்துப் பொருள் கொண்டால் சீதைக்கு ஏற்றம் ஆகும்? புறத்து, புறத்தோர் என்ற தொல்காப்பியச் சொற்களுக்கு முரணற்ற பொருள் யாவை? ‘பெருஞ்சோற்று மிகுபதம்’ என்று முடிநாகர் கூறுவது பிதிரர் படைப்பா? இவ்வெல்லாம் உரை வழிச் சிந்தனைக் களங்கள். இறைவன் பெருமைபாடும் தெய்வப் பாசுரங்களில் அடியவர்கள் தற்சிறுமையை நாணாது பகரக் காண்கின்றோம். நல்வினையாற்றி உயர்ந்த தேவர்களைத் திருவாசகம் கண்டபடி இழித்துரைக்கின்றது. இறைவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட திருக்கோவையின் அகத்துறைகள் ஒருசில பங்கில் சங்க இலக்கியத்தோடு உடலுகின்றன. மனம் இறக்கக் கற்க வேண்டும் என்று உளைந்து பாடும் தாயுமான அடிகளையும் சேர்ந்தாரைக் கொல்லி என்னும் சினம் விட்டு வைக்கவில்லையே! இவையெல்லாம் சமயச் சிந்தனைக் களங்கள். சிலப்பதிகார மணிமேகலைகளின் மொழிக்கூறுகளை ஆராயுங்காலை, சங்க காலத்தைக் கி.மு.வுக்கு முன்னே இன்னும் கொண்டு செல்ல வேண்டுமேயன்றி இவ்விரு காப்பியங்களின் காலத்தைக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னே தள்ளலாமா? பண்டைத் தமிழினத்தின் தொல் பிறப்பிடத்தை உறுதிப்படுத்துவதற்குத் தமிழ் நூற் சான்றுகள் தக்கன ஆகாவா? தமிழிலக்கிய வரலாற்றில் இன்னும் துணிய முடியாது தங்கிக் கிடக்கும் புலவோர் தம் காலங்கள் யாவை? துணியாமைக் காரணங்கள் என்னோ? இன்னவை வரலாற்றுச் சிந்தனைக் களங்கள். அரிலான ஒரு பொருட் களத்தை அவ்வப்போது தேர்ந்தெடுத்து மறித்தோடிச் சிந்தித்து ஒரு துணிவுபடக் கருத்தரங்குகளுக்கும் மலர்களுக்கும் வழங்கிய இக் கட்டுரைகள் எண்ணத் தக்கவை என்ற பொருளில் எண்சுவையுடையன. இவை பல்துறை பற்றியன. ஆதலின் எல்லார்க்கும் பொது விருந்தாகுக என்று படைக்கின்றேன். ஆய்வு நூல்களை முதலிட்டு வெளியிட அஞ்சும் நிலையங்கள் மலிந்து வரும் இத்தமிழகத்தில் சிறந்த மணிவாசக நூலக உறுதுணையாளர் திரு, மெய்யப்பன், தமிழ் நோக்கு உடைய அன்பராதலின், என் சிந்தனைக் களங்களை வழக்கம் போல் விரும்பி ஏற்று வெளியிடுகின்றார்; கற்பார் மனங்கவரும் வனப்பில் வெளியிடுகின்றார். இப்பதிப்பினால் மணிவாசகர் நூலகம் பன்மடங்கு நன்மதிப்புப் பெற்று வளர்க என்று தமிழருளை வேண்டுகின்றேன். வ.சுப. மாணிக்கம் கதிரகம், காரைக்குடி 1-5-1975 இரட்டைக் காப்பியங்கள் முதற் பதிப்பின் முகவுரை ஐம்பெருங் காப்பியங்களுள் அழிவுபடாது நாம் பெற்றுள்ளவை மூன்றே. அம்மூன்றனுள்ளும் சிலப்பதிகாரம் மணிமேகலை என்ற இரண்டும் கதையாலும் கருத்தாலும் காலத்தாலும் தொடர்புடையவை. இவ்வுறவுக் காப்பியங்கள் ‘இரட்டைக் காப்பியங்கள்’ என்னும் புதிய தொகைப் பெயரால் ஒருபதிப்பாக வழங்கின், தமிழ்ப் பரவலுக்கும் ஆராய்ச்சி ஊற்றுக்கும் இடமாகும் என்று எண்ணினேன். என் எண்ணத்தைச் செயலாக்கிய பெருமை காரைக்குடி செல்வி பதிப்பகத்துக்கு உரியது. இப்புதிய தொகைநூலை ஒரு தனிப் பதிப்பாகவும் பெரிய மலிபுப் பதிப்பாகவும் செல்வி பதிப்பகத்தார் மூனறாண்டுகட்கு முன் வெளியிட்டனர். வளர்ந்துவரும் இவ்வெளியீட்டு நிலையத்தின் தமிழ்த் தொண்டுக்கு நன்றியன். முற்றும் புணர்ச்சி பிரியாத வலிந்த பதிப்புக்கள் இன்று தமிழர்க்குக் கைத்துணையாகா. எல்லாப் புணர்ச்சிகளையும் அலக்கலக்காகப் பிரித்த மெலிந்த தமிழர் அறிவு பெறவும் நாளைத் தமிழ் ஆக்கம் பெறவும். ஊடலும் கூடலும் போல, செவ்வி நோக்கிப் பிரிதலும் புணர்தலும் பெற்ற அளவுப் பதிப்புக்கள்-நடுத்தரப் பதிப்புக்கள்-தமிழகத்திற்கு வேண்டுவன. இந்நோக்கத்தால் எழுந்த பதிப்பு இரட்டைக் காப்பியங்கள் ஆகும். சந்தி பிரித்தறிவதற்கு இலக்கண நூற் பயிற்சி வேண்டும் என்று நம் மக்கள் தவறாக எண்ணி மலைக்கின்றனர். விளையாடுங் குழந்தைக்கென வீதி சமைப்பாருண்டோ? தொல்காப்பிய முதலான இலக்கணப் பனுவல்கள் தோன்றிய நோக்கம் வேறு. சொற்கட்டி விளையாடல்போலத் திருக்குறளில் ஒரு பத்து அதிகாரங்களைப் புணர்த்தும் பிரித்தும் சொல்லி வாய்ப்பயிற்சி செய்யுங்கள், போதும். தமிழ்ப் புணர்ச்சியின் இயல்பு, எளிமை, இனிமை இன்றியமையாமை எல்லாம் யார்க்கும் விளங்கிக் கிடக்கும். தமிழர்கள் தாய்மொழியிலக்கியங்களைக் கற்கும் பெரிய எளிய நேர்முறை இதுதான் என்பது முடிந்த துணிபு. இப்பதிப்பில் உள்ள தமிழ்ப் புணர்ச்சி என்னும் கட்டுரை இம்முறையில் பயிற்சிக்குத் துணைசெய்யும். காதைச் சுருக்கம் என்ற பகுதியில் இரட்டைக் காப்பியங்களைக் கற்க விழையும் தொடக்கத்தார்க்குப் பயன்படும். சிலப்பதிகாரத்திறன் மணி மேகலைத்திறன் என்ற பகுதிகள் இக்காப்பியங்களில் முன்னறிவுடையார்க்கு மேலும் திறங்காண வாயில் காட்டும். ஒப்புமைச் சுருக்கம் என்ற பகுதி இரட்டைக் காப்பியங்கள் என்னும் புதிய தொகைப் பெயர்க்கு ஒருவகையால் சான்று தரும். சில அடிகளுக்கு ஒருமுறை நூல்முழுவதும் மேலே தந்துள்ள கருத்துரைகள் வேண்டும் இடங்களைத் தேட வேண்டாதே எளிதிற் காணச் செய்யும். அருஞ்சொற்பொருள் என்ற பகுதி, சுருக்கம் போலத் தோன்றினும், இரு காப்பியங் களிலும் வரும் பொதுவான சொற்கள் பெரும்பாலும் இடம் பெற்றுள என்பது குறிப்பிடத்தகும். நூல் முழுவதற்கும் அடிகள் வரிசையாகத் தொடர்ந்து எண்ணப்பட்டுள. சிலப்பதிகாரம் மணிமேகலைக்கு இத்தொட ரெண் முறை இப்பதிப்பிற்கே உரியது. இடங் குறித்துக் கொள்ளவும் மேற்கோள் காட்டவும், இவ்வகை எண்ணுப் பதிப்பு கற்றார்க்கும் கற்பார்க்கும் பெருந்துணையாகும். காதை முடிவில் வலப்பக்கத்துள்ள தமிழெண்கள் அக்காதைக்கு உரிய அடியெண்ணிக்கையைக் காட்டும். இரண்டாம் பதிப்பாகிய இவ்வெளியீட்டில் சிலப்பதிகார மாந்தர், மணிமேகலை மாந்தர், சிலப்பதிகார இலக்கியக் குறிப்புக்கள், மணிமேகலை இலக்கியக் குறிப்புக்கள் என்ற புதிய பகுதிகள் சேர்ந்துள்ளன. இலக்கியக் குறிப்புக்கள் நிரம்பியவை யல்ல; எனினும் இலக்கிய நிலத்துக்கு உரிய உரங்களையும் இலக்கிய உழவுக்கு வேண்டும் முறைகளையும் செவ்வனம் புலப்படுத்தும். இரட்டைக் காப்பியம் பதிப்புவனப்பெல்லாம் பொலிய அச்சிட்டுத் தந்த காரைக்குடி தென்னிந்திய (சௌத் இந்தியா) அச்சகத்தார்க்கு மிகவும் நன்றியுடையேன். வ.சுப. மாணிக்கம் காரைக்குடி, கதிரகம், 15.12.1960 மனைவியின் உரிமை முகவுரை நாடகங்கள் ஐந்தனுள் முதலன மூன்றும் புறப்பொருளைச் சார்ந்தன; நான்காவது அகமும் புறமும் தழுவியது; இறுதியது அகப்பொருள் பற்றியது. சென்றகாலத் தமிழ் மொழியின் தூய்மை, வருங்காலத் தமிழ் மொழியின் செம்மை, நிகழ்காலத் தமிழ் மக்களின் மொழியறிவு என்ற மூன்றினையும் ஆசிரியன் கருத்திற்கொண்டு, எழுதியதொரு இலக்கிய நடையாகும். இந்நாடகங்களின் நடை என்பதும், அப்படியே நடக்கத்தகும் அரங்கு நடையன்று என்பதும் அறிவார்க்குப் புலனாம். ஒரு நூலின் தவப் பெருமையும் நனி சிறுமையும் காண விழைவார், அதனைப் பன்முறை கற்றல் வேண்டும். இங்ஙனம் கற்கும் முறையினையே, ‘நவில் தொறும் நூல் நயம்’ என்றார் ஆசிரியர் திருவள்ளுவர். பன்முறை கற்றலோடு, நுணுக்கத் தினைக் காணவல்ல அடிப்படை அறிவும், நன்று தீது துணிய வல்ல நேர்மையும் கற்பார்க்கு இன்றியமையாதன. ஆதலின், என் உழைப்பின் முதல் உருவங்களாகிய இந்நாடகங்களின் இழிவு சிறப்பு உயர்வு சிறப்புக்களைச் சீர்தூக்கிக் காணும் பொறுப்பு கற்பார் பாலதாகும் என்பது என் பணிவுடைக் கொள்கை. என் நாடகங்களை முதற்கண் வெளியீடு செய்ய அன்பொடு முன் வந்தருளிய நண்பர், புதுக்கோட்டைத் தமிழ் நிலையத் தலைவர் அவர்களுக்கு என் உள்ளன்பு உரிமையாகும். வ. சுப. மாணிக்கம் காரைக்குடி, 1-6-1957 நெல்லிக்கனி முகவுரை மக்களின் தேவைப் பொருள்களுக்கும் அடிப்படை உணர்ச்சிகளுக்கும் இடையே இன்று பூசல்கள் பெருகியிருக் கின்றன. வாழ்வின் புறநலங்களைப் பெருக்கிக்கொள்வதற்காக நிலையான மனித உணர்வுகளைக் குறைக்கவும் திரிக்கவும் அழிக்கவும் முயல்கின்றோம். தேவையின் வேட்கைக்கும் இயல்பான உணர்ச்சிக்கும் புறப்போராட்டம் நடப்பது போலவே, மானிட உணர்ச்சி களுக்குள்ளும் அகப்போராட்டம் நிகழ்கின்றது. பிற உணர்ச்சிகளை மிகையாக வளர்த்து, தலையான இயற்கை உணர்ச்சிகளை நசுக்க முயல்கின்றோம். பிறவிக்கு உரிய உணர்ச்சிகளை, மழையை மண் ஏற்பதுபோல, ஏற்று நல்வழிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் வாழ்வு நெறி; அதுவே உடம்பையும் உள்ளத்தையும் சமுதாயத்தையும் உலகையும் வாழ்விக்கும் நெறி. இந்த உண்மையை நாட்ட எழுந்தது இந்நாடகம். டாக்டர் வ.சுப.மாணிக்கம் கதிரகம், காரைக்குடி-2 1-12-1962 உப்பங்கழி முகவுரை போரதிர்ச்சி, பகையதிர்ச்சி, தேர்தலதிர்ச்சி, பதவியதிர்ச்சி, புகழதிர்ச்சி, பொருளதிர்ச்சி, உடலதிர்ச்சி என்றவாறு உலகில் பல அதிர்ச்சிகள் உள்ளன. இவற்றுள் குடும்ப அதிர்ச்சியே மனிதனுக்கு நெருங்கியது, நெஞ்சத்தை உறுத்துவது, ஏனையதிர்ச்சிகளுக்கும் உட்காரணமாவது. எல்லார்க்கும் எல்லாப் பூசல்களும் வருவதில்லை. குடும்பப் பூசலோ யாரையும் விடுவதில்லை. ஏன்? குடிவழியின்றி யார் பிறந்தவர். பல பூசல்களைத் தாங்கும் பேராண்மையன் கூடக் குடியதிர்ச்சியைத் தாங்கமாட்டான். உப்பங்கழி என்ற இக்குடும்ப நாடகம் குடிச்சிக்கல்கள் என்ன, அவற்றை யார் யார் எத்துணையளவு தாங்கிக் கொள் கின்றனர், எம்முறையில் மெல்ல ஏற்று நல்லவழி காண்கின்றனர், ஒரு சிலரால் தாங்க முடியாமை ஏன்? என்ற வாழ்வியல்களைக் காட்டுகின்றது. காதலுக்கு நிறம் இல்லை, முதலில் தோன்றும் நல்லெண்ணத்துக்கு மதிப்பளிக்க வேண்டும், இயற்கையொடு பழகுவது உணர்ச்சியை ஒழுங்குபடுத்தும் என்ற நல்லோட்டங்கள் வளியிடை வீசும் வானொலி போல இந்நாடகத்தில் கலந்து வருகின்றன. சமுதாயப் பொதுச் சீர்திருத்தமின்றிச் சில குடும்பச் சூழல் களைத் தனித்தனி ஒவ்வொருவரும் மாற்றிக்கொள்ள இயலாது என்ற புரட்சிக் குறியும் இந்நாடகத்தில் அடங்கி யுள்ளது. புது ஆராய்ச்சிகளையும் படைப்புக்களையும் தமிழ்ப் பணியாக ஏற்றுப் பதிப்பித்து வரும் பண்புடைய சிதம்பரம் மணிவாசக நூலகத்தார்க்கு வாழ்த்துக் கலந்த நன்றி. வ.சுப. மாணிக்கம் காரைக்குடி, 1-11-72 ஒரு நொடியில் முகவுரை உயிரின் சிந்தனைக்கு வாழ்வில் ஒரு முறையாவது தற்கொலையை எண்ணாத வள் இல்லை; எண்ணாதவன் இல்லை. இந்த நலிவெண்ணம் எந்த வயதிலும் முளைக்கின்றது. ஏன்? துன்பத்திலிருந்து விரைவில் விடுதலைபெறத் தன் கையில் இருக்கும் எளியவழி தற்கொலை என்ற கருத்தினைப் பல்லாயிரம் ஆண்டுகளாகச் சமயங்களும் இலக்கியங்களும் அறங்களும் நடைமுறை வழக்கங்களும் ஊட்டிப் பாராட்டி வந்திருக்கின்றன. உலகில் மக்கள் மதியாத பொருள் ஒன்று உண்டெனின் அது உயிர் என்பது நான் கண்டது. மதிப்பதாகச் சொல்வ தெல்லாம் நடிப்பே. உண்மையான உயிர்ப்பற்று உடையவன் உடல் நலத்தைக் காப்பான், குணநலத்தைக் காப்பான், பிற நலத்தையும் காப்பான். குடலையும் உடலையும் பணத்தையும் குணத்தையும் புணர்ச்சியையும் உணர்ச்சியையும் எடுத்ததற் கெல்லாம் கெடுத்துக் கொண்டு வேகதாகப்பட்டுக் கொந்த ளிக்கும் இவ்வுலகம் உயிரைப் போற்றுகிறது என்பதனை எவ்வாறு ஒத்துக்கொள்வது? உயிர் என்பது தானே வந்த தனக்குவமையில்லாத வித்துச் செல்வம். கொள்கை வறுமை மானம் மற்றவற்றுக்காக உயிரைக் கிள்ளுக் கீரை போல நீக்கலாம் போக்கலாம் என்று பாடி எழுதிப் பறைசாற்றிப் பரப்பிவரும் பழம்போக்கைத் தடைப்படுத்த வேண்டும் என்ற எதிர்ப்பு நோக்கத்தாலும், உயிரிடத்துத் தற்பற்று ஊட்டி வாழ்வில் நம்பிக்கை கொள்ளச் செய்ய வேண்டும் என்ற கண்ணோட்டத்தாலும் இப்பத்து நாடகங் களையும் படைத்துள்ளேன். இவை ஒரு பொருள்மேல் எழுந்த தனிமொழி நாடகங்கள். தனியான தன்மொழி உள்ளத்தை ஒருமைப்படுத்தும், உணர்ச்சியைத் தூண்டி ஒழுங்குபடுத்தும், துணிவோடு வாழும் வழிகாட்டும் என்பதனால் இந்நாடக வடிவை மேற்கொண்டேன். எதனை நாம் பிறந்தபின் பெற்றோமோ அந்த உடைமையை விடும் உரிமை நமக்கு உண்டு. உயிர் என்பது இயற்கை வரவு. அஃது இயற்கையாகப் போக வேண்டும். இந்த இயல்பான விதையை மன்பதைக் களத்தில் புதிய உரமிட்டு உழவுசெய்ய முயல்கின்றேன். இடையிட்டு வந்துபோம் பதவிகளை அழுத்த மாகப் பிடித்துக்கொள்ளப் பாடுபடும் இவ்வுலகம், மெய்யான பிறவிப் பதவியைப் பலுவன் காற்றுப்போல எளிதாக விடலாம் என்று இன்னும் எழுதிப் பரப்பிக் கொண்டிருப்பது பொருந்துமா? எதனையும் செய்யலாம்; ஒரு நாள் தற்கொலை செய்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற தவறான எண்ணத்தை உயிர்க்குணமாக ஆக்கி வந்திருக்கின்றோம். அதனால் இளைஞர்களுக்கும் உணர்ச்சிப் பிண்டர்களுக்கும் நேர்வழி தோன்றவில்லை; குறுக்கு வழியே சட்டெனப் படுகின்றது. கடவுட் பற்றும் தற்கொலையும் முரண் என்று சமயப் பெரியார்கள் இடித்துரைக்க வேண்டும். தற்கொலையாக நிகழ்ச்சிகளை முடித்துக் காட்டாதபடி கதைஞர்கள் கவிஞர்கள் திரைஞர்கள் அறிஞர்கள் எல்லோரும் தம்படைப்புக்களை நலமாக நெறிப்படுத்த வேண்டும். உயிரோடும் முன்னறிவோடும் துணிவோடும் பண்போடும் எந்நிலையிலும் திருந்தியும் திருத்தியும் வாழலாம், வாழ்க என்ற புது மனப்பான்மையை இளைஞர்களுக்குப் பாய்ச்ச வேண்டும். இவை என் வேண்டுரை. தற்கொலை யெண்ணம் எழுவதும் ஒரு நொடியில்; தற்கொலை செய்து தொங்குவதும் ஒரு நொடியில்; அந்தப் பாழெண்ணம் மாறுவதும் ஒரு நொடியில். ஒரு நொடிப் பொறுமை இல்லாமையால் எய்தற்கரிய அருமையை, வாழும் உரிமையை, செல்வவுயிரை இழக்கலாமா? தற்கொலை யெண்ணம் வந்தவுடன் ஒன்று செய்யுங்கள். உங்கள் எண்ணத்தை ஒரு நண்பனிடமோ, பெரியவரிடமோ, ஆசிரியரிடமோ வாய்விட்டுத் தெரிவித்துவிடுங்கள். உயிரோடு வாழ்வீர்கள்! உயர்வாக வாழ்வீர்கள்! உண்மையாக வாழ்வீர்கள்! வ. சுப. மாணிக்கம் கதிரகம், காரைக்குடி -2 1-12-1972 கொடைவிளக்கு பாயிரம் உள்ளம் உவப்ப உடைமை யெல்லாம் பள்ளிகள் நிறுவிப் பண்பியல் வளர்க்க அள்ளி வழங்கிய அழகன் கொடையினை நீடும் புகழென நினைத்தே னாயினும் பாடுங் குறிப்புப் பண்டெனக் கில்லை. ஆவி தனித்த அண்ணல் மேனியைக் கூவிக் கொடுந்தீ குறைக்குங் காலை வண்ணத் தமிழனை வள்ளல் அழகனைத் தண்ணந் தமிழில் தலைவனாய்ப் பாடும் எண்ணம் முகிழ்ப்ப எழுந்ததிப் பாட்டு. பழுதறு நம்பியின் பார்புகழ் வாழ்க்கையை முழுதுற விரிக்கும் முழுப்பெருங் காப்பியம் எழுதும் புலமை என்னள வன்றுகாண்; அன்னைத் தமிழின் அணிவிரல் மோதிரம் என்னப் புனைந்த இளஞ்சிறு காப்பியம் தொடைக்குப் பொருளாய்த் தோன்றிய அழகனைக் கொடைக்கு விளக்கெனக் கூறப் பெறுமால் முன்னை வள்ளியோர் மூவாத் தமிழணிந்து என்றும் வாழ்வர் இவனும் வாழ்வன் அரிய பொருளால் அறிவு பரப்பிய பெரிய கொடையான் பிறப்பினை உரிய நெறியால் உள்ளுவம் நாமே. வ.சுப. மாணிக்கம் மாமலர்கள் முன்னுரை என் முதற் கவிதைநூல் கொடை விளக்கு என்பது ஒரு பொருள் நுதலியது, வெண்பாவால் அமைந்தது. மாமலர்கள் என்ற இக்கவிதைப் பனுவல் என் இரண்டாவது படைப்பாகும். இது பல்வகைச் செய்யுளொடு பல்வகைப் பொருள் சார்ந்தது. இளமை முதலே அவ்வப்போது பாடிய செய்யுட்கள் இத் தொகுதியின் முற்பகுதியில் இடங்கொண்டன என்றாலும் அவையெல்லாம் இன்றைய என் உணர்வுக்கும் மொழி நடைக்கும் ஏற்பச் செவ்விய திருத்தங்கள் பெற்றுள என்று கருத வேண்டும். எண்ணம் இருபது, ஊர்தி முப்பது, தமிழாட்டு, தமிழ்சூடி, புரட்சி மண்டோதரி, கொல்லாச் சிலம்பு, அன்னை கொதிக்கிறாள், உலகப்பாயிரம் என்ற எண் பகுதிகள் இத்தொகுப்பின் பிற் பகுதியில் உள. இவை அண்மைப் புதுப் படைப்புக்களாகும். புரட்சி மண்டோதரி, கொல்லாச்சிலம்பு என்ற இரு பகுதிகள் இராமாயணம், சிலப்பதிகாரம் சார்ந்தவை; கதை முடிவுகள் முற்றும் மாறானவை; பெண்மைக்கும் புரட்சிப் பண்புக்கும் மதிப்பளிப்பவை; காப்பியங்கள் திடீரென மங்கலமாக முடியக் கூடாவா என்று சிந்திக்க வைப்பவை; வழிவந்த கதைக்கு மாறாயினும் புதிய உத்திக்கு வழி காட்டுபவை. இத்தகு புது மாற்றங்கள் நல்லறிஞர்களின் முதலெதிர்ப்புக்கு உரியவை எனினும் அடிப்படைப் பண்புகளை வளர்க்கும் நோக்கில் இலக்கியக் கனவுலகில் இவை எதிர் பார்க்க வேண்டியவையே. ‘அன்னை கொதிக்கிறாள்’ என்னும் அங்கதக் கவிதை ஓர் இயக்கப் பாட்டாகும். இவ்வியக்கம் தமிழை வாழ்வு மொழியாகவும் உயர்ந்த இந்தியப் பொது மொழியாகவும் உலக மொழியாகவும். ஆக்கும், தமிழினத்தை உய்விக்கும், தமிழக அரசை வழிப்படுத்திச் செயற்படுத்தும். தமிழ் வளர்ச்சியில் நமக்கு வேறென்ன வேண்டும்? வ. சுப. மாணிக்கம் கதிரகம், காரைக்குடி 1.12.1978 உரைநடையில் திருக்குறள் முகவுரை திருவள்ளுவரின் எல்லாக் கருத்துக்களையும் எல்லாரும் எளிதில் அறிந்து கொள்ளுதற்குத் தெளிவான இந்த உரைநடைத் திருக்குறள் பெரிதும் துணை செய்யும் என்று நம்புகிறேன். வ.சுப. மாணிக்கம் கதிரகம், காரைக்குடி கம்பர் நாற்பது முன்னுரை ‘புகழ்க் கம்பன் பிறந்த தமிழ் நாடு’ என்று பாராட்டிப் பாடினார் தேசியக்கவி பாரதியார். தமிழ்நாட்டில் கம்பன் பிறந்தவூர் சோழநாட்டுத் தேரழுந்தூர் எனவும், உலகப் பெருங்காப்பியமான இராமாயணத்தைச் செவிநுகர் கனிகளாகப் பாடிப் புகழ்பெற்று மறைந்த ஊர் பாண்டிநாட்டின் நாட்டரசன்கோட்டை எனவும் வரலாறு சொல்கின்றது. ஆதலின், நாட்டரசன் கோட்டை வளாகத்தில் வாழும் நம் சிறுவர்களும் சிறுமிகளும் கம்பரின் செய்யுட்களைக் கற்பது கடமையும் பெருமையும் ஆகும். இளைய உள்ளங்களில் கம்பரின் பாடல் வித்துக்களைப் பதியவைக்கும் நோக்கோடு, இராமயணத்திலிருந்து எளிய இனிய நாற்பது பாடல்களைப் பொறுக்கிக் கருத்துரையும் எழுதிக் கம்பர் நாற்பது என்ற பெயரால் இச்சிறுநூலை ஆக்கித்தந்தார் அறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்கள். வனப்பும் நயமும் சிறந்த இச் சிறுநூலை சிவசத்தி அறநிலையத்தின் சார்பாக நன்கு பரவும் நோக்கோடு வெளியிடுகின்றோம். கம்பரின் காப்பியப் பாடல்கள் சிலவேனும் பலர்க்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று கருதிய நல்லன்பர் நாட்டரசன் கோட்டை திரு. ஏ. சத்தியமூர்த்தி அவர்கள் இந்நூல் வெளியிட்டிற்கு வேண்டும் துணை செய்தார்கள். இத் தொகுப்பினைக் கம்பரிடத்தில் ஈடுபாடு கொண்டவர் எவரும் கற்கலாம். சிறப்பாகப் பள்ளி மாணவ மாணவியர் கற்பது நல்ல தமிழறிவைத் தரும். வ.சுப. மாணிக்கம் கதிரகம், காரைக்குடி தொல்காப்பியம் எழுத்ததிகாரமும் நூன்மரபும் உரைப்பாயிரம் - மாணிக்கவுரை - தமிழுரிமை செந்தமிழ் தாயாகத் தென்பிறப்புக் கொண்டநாம் வந்தமொழிக் கெல்லாம் வயிற்றடிமை யாகாமல் சொந்த மொழிக்கே தொல்லுரிமை நாடாமோ; தொல்தமிழ் தாயாகச் சொற்பிறப்புக் கொண்டநாம் பல்கலை யெல்லாம் பழகுதமிழ் கல்லாமல் அல்மொழியிற் கற்பிக்கும் ஆணவத்தைச் சாடாமோ; பைந்தமிழ் தாயாகப் பண்பிறப்புக் கொண்டநாம் சொந்த நிலத்தினும் தூயதமிழ் வாழாமல் நொந்து மடிக்கும் நொடிநிலைக்கு நாணாமோ நாணியும் சாடியும் நாட்டியும் சங்கநூல் பேணியும் நிற்கும் பெருந்தமிழ் மக்களே ஊணும் உடையும் உணர்வும் உடையர்; உலக மொழியான உந்து தமிழை அலகு நிறைய அறிவிய லாக்கும் திலக அரசுக்கே செய்ந்நன்றி பாடுதும். தொல்காப்பியம் என்ற உலகக் களஞ்சியம் மொழியிலும் அகவாழ்விலும் புறச்சூழலிலும் கட்டுப்பாடு, வளர்ச்சி, தூய்மை வேண்டும் வரம்புநூல்; தொல்காப்பியம் என்ற தமிழ் முதனூல் வழிவந்த பழமைத் தடங்காட்டி, நிகழ்காலச் செவ்வி சேர்த்து, வளரும் எதிர்காலப் புதுமைப் புரட்சிக்கு இடம் வகுக்கும் இயக்கநூல்; தொல்காப்பியம் என்ற மறைநூல் பிறப்பு மதம் பால் குழு இடம் பொருள்நிலை வேற்றுமைகளைப் பற்றாது இயற்கை, அறம், மறம், வெற்றி, அமைதி, காதல், இன்பம் என்னும் இவ்வுலகியங்களை மானிடவினத்திற்கு எடுத்துக் காட்டும் உலக வாழ்வுநூல். இயக்க வாழ்வுப் பெருமறையான தொல்காப்பியத்தை ஈன்றவள் தமிழ்த்தாய். தமிழர்களாகிய நாம் மூவாயிரம் ஆண்டுத் தொன்மையுடைய இந்நூலை நம் தாய்மொழியிலேயே இன்றும் படிக்கும் எளிய இனிய நேர்வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றோம். இதுவே தமிழ்ப்பிறப்பின் ஒரு சிறப்பென உணர்க. மேலும் தொல்காப்பியத்துக்கு இன்றுகாறும் பின்தோன்றிய பெரிய சிறிய இலக்கிய இலக்கண நூல்களில் எல்லாம் தொல்காப்பிய நீரோட்டம் உண்டு. ஆதலின் தொல்காப்பிய நினைவும் தொல்காப்பியக் கருத்தறிவும் பெறுதல் தமிழன்என்பான் ஒவ்வொருவனின் பிறப்புக் கடமையாகும் இன்று தமிழினம் ஆயிரம் பிரிவு பிளவு பட்டிருப்பினும் எல்லார்க்கும் பொது முன்னோன் தொல்காப்பியனே என்று உணர்வோமாக. ஒருமையினவுணர்வு பெறுவோமாக. மேற்சுட்டிய நல்லுணர்வுகளோடு என் தொல்காப்பியவுரை தோன்றுகின்றது மரபுப்படி இவ்வுரை மாணிக்கம் எனப் பெயர் பெறும். கிடைத்த வரலாற்றின்படி இளம்பூரணர் முதலுரை யாசிரியர் ஆவார். இவர்க்கு முன்னும் உரைகள் இருந்தன என்ற குறிப்பு உண்டு. இளம்பூரணர்க்குப்பின் தொல்காப்பிய உரைக் குலம் இடைக்கால முதல் இன்றுகாறும் வளர்ந்துகொண்டே வருகின்றது. இவ்வளர்ச்சி பின்னடையாது. இந்நூற்றாண்டில் பன்னாட்டு அறிஞர்களும் பல்துறைஞர்களும் வெவ்வேறு முனையில் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியத்தினைப் பரந்து விரிந்து நுணுகி ஆய்ந்து வருவதனாலும், தமிழகத்திலும் நல்வல் இளைஞர்கள் தொல்காப்பிய ஆய்வுக் காதலர்களாக வளர்ந்து சிறந்து பயில்வதாலும், யார் எழுத்திலும் பேச்சிலும் எவ்வகைத் தலைப்பிலும் குயில்நுழை பொதும்பர் போலத் தொல்காப்பியத் தென்றல் தூசொழிய வீசுவதாலும், தமிழின் பொற்காலம் தொல்காப்பியத்தின் வருங்காலமாக விளங்கும் என்று நனவு காண்கின்றேன். பெருநூற் படைப்பாளர்கள் நீண்ட வருங்கால நோக்கொடு தம் நூலாக்கங்களைச் செய்ய. மக்கள் இயல்பான வாழ்க்கையிற் கூட வீடு கட்டும்போதும் தென்னந் தோட்டம் வைக்கும்போதும் நூறாண்டு எதிர்காலம் கொள்வதில்லையா? மாமல்லச் சிற்பம், தஞ்சைப் பெருவுடையார் கோயில் போலும் கலைச் செல்வங் களையும் தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களையும் தோற்றுநர் இவை தங்காலத் தொடு நிற்க என்றா கருதுகின்றனர்? எவ்வளவு எதிர்காலக் குறிப்போட்டம் அவர்கள் சிந்தனைக்குள் இருந்திருக்கும்? ஆதலின் தொல் காப்பியம் திருக்குறள் சிலப்பதிகாரம் திருவாசகம் பாரதீயம் என்றினைய பனுவல்கள் ஐம்பூதங்கள் போலும் என்றும் அடிப்படைச் சிந்தனைக்கு உரியவை: உள்ளங்கள் உள்ளளவும் உள்ளத்தக்கவை: அறிவுக்கூர்மைக்கும் அறிவுப்பாய்வுக்கும் கட்டளைக் கல்லானவை: தமிழியத்துக்கும் தமிழினத்துக்கும் தமிழ்மொழிக்கும் அடையா ஊற்றுக்கண் களானவை. மலை கடல் வானம் மரஞ்செடி கொடிகள் பழமை என்று ஒதுக்க முடியுமா? உண்மையும் இயற்கையும் உயிர்ப்பும் உடையவை யெல்லாம் காலவட்டங்கடந்து மன்னியவை என்று உணர்வோமாக. தொல்காப்பிய முழுமைக்கும் உரைசெய்நோக்கமும் உரைக்குறிப்புக்களும் உளவெனினும் காலப்பதம்பார்த்து முதற்கண் எழுத்ததிகாரத்துக்கு மாணிக்கவுரை எழுதியிருக் கின்றேன். இவ்வுரையங்கள் வருமாறு: அ) இயல்முன்னுரை இஃது இயலுக்கு ஒரு சிறிய முன்னுரையாகும். இயல் தோறும் வரும் இலக்கணக்கருத்துக்களின் சிறப்புக்களைப் புலப்படுத்தும். இன்றும் மக்கள் நடைமுறையில் இருக்கும் வழக்குக்களோடு பொருந்திக்காட்டும். இதனால் கற்பவர்க்குத் தமிழிலக்கண நன்மரபுகள் தெரியவரும். இலக்கணக்காப்பில் அவர்கட்குப் பற்றும் பயிற்சியும் உண்டாகும். ஆ) இயற்கருத்து நூற்பாக்களின் கருத்துக்கள் முதற்கண் சுருக்கமாகத் தொகுத்துக் கூறப்படும். இ) அகலவுரை நூற்பாவிற்குப் பெரும்பாலும் சொல்லுக்குச்சொல் கிடந்தாங்கு சொல்லுரை எழுதவில்லை. கற்பவர் உடனே விளங்கிக் கொள்ளுமாறு வேண்டும் விளக்கஞ்¨சேர்ந்து விரிவுரையாக அமையும். முன்னை நூற்பாவின் தொடர்போடு இயைபு தெரிய வரும். கருத்தோடிப் படிக்கும் எளிமையுண்டு. வேண்டு மிடத்துச் சொல்லுக்கு உரிய பொருள் கூறப்படும். ஈ) வழக்கு இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்படும் உரையாதலின், இன்றைய பேச்சு வழக்கிலிருந்தும் எழுத்துநூல் வழக்கிலிருந்தும் இலக்கண விதிகட்கு ஒல்லுமளவு எடுத்துக் காட்டுக்கள் தரப்படும். இலக்கணவிதிகள் செய்யுட்கு மிகுதியும் உரியவை என்பது மிகத் தவறான கருத்து. வேறொரு புலமைப் பயன்கருதிச் செய்யுட்காட்டுக்கள் தரும் மரபு ஏற்பட்டது. அவ்வளவே. உண்மையச் சீர்தூக்கின் தொண்னூறு விழுக்காடு இலக்கணப்பாங்கு நடைமுறை மக்களின் உரைநடைப் பேச்சில் அமைந்துகிடப்பது. தொல்காப்பிய இலக்கணக் கூறுகள் அவைய நூல் போலும் பழமைசார்ந்தவை என்பதும் மற்றொரு தவறான கருத்து, ஆதலின் அண்மைக்கால இலக்கியங் களிலிருந்தும் சான்றுகள் காட்டப்படும். தொல்காப்பியம் என்றும் வழக்கிறவாதது. நிலை நின்றவழக்கினது என்ற மெய்ய்யுணர்வைத் தமிழ்மன்பதைக்கு ஊட்டும் சால்பில் எடுத்துக்காட்டுக்கள் பலகாலத்தனவாக இருக்கும். இது வலிந்த நோக்கன்று; மரபும் வளர்ச்சியும் கலந்த நோக்கு. உ) திறனுரை நூற்பாவின் பொருள், அமைப்பு, நடை, சொல்லாட்சி, காட்டுக்கள் என்றாங்கு நூற்பாவின் பெருவிளக்கமாக இப்பகுதி அமையும். நூற்பாவுக்கு வரைந்த உரைப்பொருத்தம் தெளிவு செய்யப்படும். ஒத்த பிற கருத்துக்களும் ஒவ்வாப்பிற கருத்துக்களும் குறுகியவளவு இடம்பெறும். இதனால் ஐயங்கள் நீங்கித் திரிபுகள் அகன்று நூற்பாவின் மெய்ம்மைகள் மேலும் தெளிவாகும் பொருள் பொதிந்த பாடபேதங்கள் உளவேல் அவற்றையும் இக்கூறு சுட்டித் திறன் செய்யும். எதிர்காலத் தொடர்ச்சி குறிக்கப்படும். ஊ ) இயல்முடிவுரை தொல்காப்பியத்துக்குப் பல்லுரைகளும் பல திறனாய்வு நூல்களும் ஆய்வுக்கட்டுரைகளும் பிறங்கி வந்துள. தனித்த ஒரு நூற்பாவை நுணுகி ஆய்ந்தொழிய கட்டுரைகளும் உள. தன் உரைக்கருத்தே தகும் என்ற நம்பிக்கை வேண்டியதே எனினும் பிறர் கருத்துக்களும் நல்லவனவாக இருக்கும் என்ற சால்புப்பார்வை உரையாளன் பண்பாகும். நல்லனவற்றைச் சுட்டிக் காட்டுவது தன் உரைமதிப்பைக் கூட்டும். அல்லனவற்றை இன்சொல்லால் இன்னடையால் மறுப்பதும் இன்றியமையாத உரைநெறி ஆகும். அனைத்தையும் வாரி வளைத்துக்காட்டப் புகுவது கருத்துமண்டிய ஆய்வுக்காடாக முடியுமாதலின் கற்பார்க்குத் தெரிய வேண்டுமளவு கற்பார்க்குச் சுமையெனத் தோன்றாத கொள்ளளவு இயல் முடிவுரை அமையும். ஒவ்வோர் இயலிலும் வரும் சில பல நூற்பாக்கட்குப் புறவுரைபோல் இயலின் இறுதியில் இம் முடிவுரை எழுதப்படும். இதனால் நுண்மையும் ஆழமும் அறிவுச் சுவையும் மாணவர்க்குப் பிறக்கும். பாரதப் பெருநாட்டில் மொழிக்கெனத் தோன்றிய முததற்கழகம் தமிழ்ப் பல்கலைக்கழகமாகும். தமிழ்க்குறிக்கோளும் தமிழ்நினைவும் சான்ற பேரறிஞர் அண்ணாவின் வழிவந்த தமிழ்க முதல்வர் புரட்சித் தலைவர் ம.கோ.இராமச்சந்திரனார் இப்பல்கலைக் கழகத்தைத் தோற்றிய பெருமான் ஆவார். இப்பல்கலைக்கழகத்தின் வல்லுநர் குழுத்தலைவராக இருந்து பல்கலைக்கழகவமைப்பினை உருவாக்கிக் கொடுக்கும் ஒருபேறு எனக்குக் கிடைத்தது. இதன் முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியனாரும் ஆட்சிக் குழுவினரும் தமிழ் முதனூலான தொல்காப்பியத்தின் தனிப்பெருமை கருதித் தொல்காப்பியப் புலத்தகைமை என்ற ஓர் ஆய்வுக் கட்டில் உண்டாக்கி, அதன் தொல்காப்பியத் தகைஞராக என்னைப் பணி கொண்டனர். இவ்வனைவோர்க்கும் வழிவழி நெடிதுவாழும் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கும் மிக்க நன்றியன். இளங்கோவடிகள் தம் பெருங்காப்பியத்துள் தன் வாழ்க்கை குறித்து ஒரு சில சுட்டிப்போந்த மரபுண்டு. அவ்வழி யானும் மிகச் சில கூறிக்கொள்வேன். இக்குறிப்பினால் கற்போர்க்கு நம்பிக்கையும் பெருமிதமும் உண்டாகும். என் பதினெட்டாம் அகவையில் பருமாவின்தலைநகரான இரங்கூனில் கடைப் பணியாளராக இருந்தபோது வாய்மைக் குறிக்கோள் கொண்டேன். அதன் பின் தமிழகம் வந்து அண்ணாமலைப்பல்கலைக்கழகம் சேர்ந்து புலவர் தமிழ் பயின்றேன். பண்டிதமணி கதிரேசனார், நாவலர் வேங்கடசாமி மகாவித்துவான் இராகவனார், துறவி கந்தசாமியார் என்றின்ன பெரும்புலமையாளர் என் ஆசிரியப் பெருமக்கள் ஆவர். அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரிய னாகவும் முதல்வனாகவும், என் கல்வித் தாயகமான அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துத் தமிழ்த்துறைப் பேராசிரியனாகவும் இந்தியப் புலத்துறை முதன்மையனாகவும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணை வேந்தனாகவும் பணிசெய்தவன். வள்ளுவம், தமிழ்காதல், கம்பர் என்ற ஒரு பொருள் ஆய்வுநூல்களும்; சிந்தனைக்களங்கள், ஒப்பியல்நோக்கு, தொல்காப்பியப்புதுமை, தொல்காப்பியத்திறன், எந்தச் சிலம்பு, இலக்கிய விளக்கம் என்ற பல்பொருள் ஆய்வுநூல்களும்; மனைவியின் உரிமை, நெல்லிக்கனி, உப்பங்கழி, ஒரு நொடியில் என்ற நாடக நூல்களும், கொடைவிளக்கு, மாமலர்கள் என்ற கவிதைநூல்களும்; இரட்டைக் காப்பியம் என்ற பதிப்புநூலும் இன்னும் சிலவும் ஆங்கிலநூல் சிலவும் என் எழுத்துப் பிறப்புக்கள். பன்னூறாண்டுகளாக அயல்மொழிகளின் அரசியல் ஆதிக்கத்தால் உணர்வு மடங்கித் தமிழ்க்கல்வி தமிழ் மக்களிடை குன்றிய வரலாற்றையே காண்கிறோம். பின்னும் நாடு தழுவிய ஆங்கிலப் பேராதிக்கத்தால் உள்ள நிலையும் வற்றிக் கால வளர்ச்சி பெறமாட்டாத தமிழின் அவலநிலை வரலாற்றை உணர்கின்றோம். பால்குடிமறவா வரியிளஞ்¨ செங்காற் குழவிகளைத் தமிழ்ப்பால் உண்ணவிடாது ஆங்கில முதலான அயல் மடிப்பால்களை வலிந்து மயங்கி ஊட்டும் கடும்கொடும் போக்கினைக் கண்டு கையாறு எய்தியிருக்கின்றோம். அதன் மேலும் வரம்பற்றுத் தடையற்று வேற்றுமொழிச் சொற்களையும் ஒலிகளையும் எழுத்துக்களையும் தம்முடைமை போற்றாது கலக்கவிட்ட ஒரே காரணத்தால் தமிழக நிலவெல்லைகள் அண்மைக்காலத்துப் பறிபோய் மண்ணகம் சுருங்கிய இழப்புக்களையும் தமிழ்நெஞ்சங்கள் மறக்கமுடியவிலலை பள்ளிமுதல் பல்கலைக்கழகம்வரை, கைக்குழவி முதல் கற்றார் வரை அயல்வழி ஓடும்போது, எதனை எவ்வளவு எளிமை யாக எழுதினாலும், தமிழில் குறுந்தரமும் இல்லாதார்க்கு என்ன செய்வது தம் தரமின்மை நோவாது தமிழை நோவது நன்றா? தமிழர் தரத்தால் உயர்ந்து தமிழை வணங்க வேண்டுமே யன்றித் தாம் தாழும் கலப்புக்குழிக்குத் தமிழை வணக்கலாமா? எனினும் தமிழின் வருங்காலம் நறுங்காலமாக இருக்கும் என்ற நம்பிக்கையுண்டு. தமிழ் மக்களின் தரத்தை உயர்த்துவதே நம் கல்விக்கோள். எழுத்துக் கோள் இழந்த வரலாற்றுக்குக் கவலாது சோர்வுறுத்தாது எதிர்கால நல்வல் வரலாற்றைக் காண்பதே அறிவுடைமை. ஆதலின் எல்லாத் தமிழரும் அறிய வேண்டிய தமிழ்மறை முதþனூலான தொல்காப்பியத்தை `எண்பொருள வாகச் செலச்சொல்லி' என்ற திருக்குறட்படி ஒல்லும் வழியெல்லாம் எளிமைப்படுத்துவோம்; காலத்துற்கேற்ற எடுத்துக்காட்டுகள் தந்தும் இலக்கியம் காட்டியும் எண்மைப் படுத்துவோம். தமிழ் `கல்லாது நிற்பார் பிறரின்மையின் கல்வி வல்லாருமில்லை. அவை வல்லரல்லாரும் இல்லை' என்ற கம்பர் பெருமான் கவிதை நனவாகக் காண்போம். மக்களின் தமிழ்ப்பிடியும் தமிழ்த்தரமும் தொல்காப்பிய வுணர்வுமே என் உரை நோக்கம். வ.சுப.மாணிக்கம் காரைக்குடி, 6-8-1986 நகரத்தார் அறப்பட்டயங்கள் பதிப்புரை நகரத்தார் அறப்பட்டயங்கள் என்னும் இந்நூலில் எட்டுவகை ஏடுகள் உள்ளன. இவற்றின் காலம் கி.பி.1600 முதல் 1800 வரை என்று மதிப்பிடலாம். நாட்டுவரலாறு என்பது போர்ச் செயல்களையும் அரசர்களின் செய்திகளையும் மட்டும் குறிப்பதன்று; குடிமக்களின் செயல்களையும் சமுதாய நடப்புக் களையும் கூறவேண்டும். அவ்வக்காலத்து மனப்பான்மைகளைக் காட்ட வேண்டும். இவ்வேடுகள் பழனித்தலத்து முந்நூற்றைம்பது ஆண்டுகளாக நிகழ்ந்துவரும் சமய நடப்புக்களையும் நடத்தியவர் களையும் அவர்களின் அற்புதச்செயல்களையும் அச்செயல்களை வியந்த அரசர்களையும் அவ்வரசர்களின் சமய மதிப்பினையும் விரிவாகக் கூறுகின்றது. இவ்வறங்களைச் செய்தருளியவர்கள் நகரத்தார்கள்; ஆதலின் நகரத்தார் வரலாற்றினையும் பெருமையினையும் இவ்வேடுகள் சுடடிக்காட்டுகின்றன. நூற்றுக்கு மேற்பட்ட பக்கம் கொண்ட இவ்வேடுகள் பாண்டியர், சோழர், மதுரை நாயக்கர், சிவகங்கைச்சீமை மருது, புதுக்கோட்டைத் தொண்டைமான் முதலியோரைப் பற்றிய குறிப்புக்களைக் கொண்டிருக்கின்றன. ஆதலின் வரலாற்றாசிரியர் களுக்குத் துணை செய்யும் என நம்புகின்றேன். முந்நூற்றைம்பது ஆண்டுகட்குமுன் பேச்சுத் தமிழ்ப்படி எழுதப்பட்ட இவ்வேடுகள் தமிழ்மொழி யாராய்ச்சியாளர்க்கும் நல்ல துணை செய்யும். சமயம் பற்றிய பல மரபுகள் இருத்தலின், சைவ சமய வரலாற்றிற்கும் ஈண்டுச்சான்றுகள் உண்டு. இவ்வச்சு நூலில் அடங்கிய ஏடுகளின் வகை:- பட்டயத்தின் அமைப்பு முறைகள் சாலி, கலி, தமிழ் என்ற மூன்றுவகை ஆண்டுகளும் திங்கள் நாள் கிழமை ஓரைகளும் பல பட்டயங்களில் குறிக்கப்பட்டுள்ளன. இன்னாருக்கு இன்னார் முன்பாக இன்னார் கொடுத்த தர்மசாசனப்பட்டயம் என்று எழுதுமுறையைக் காண்கின்றோம். விளக்கமாகவும் முடிவில் தொகுத்தும் சாசன நோக்கம் தரப்பட்டுள்ளது. சமயத்துறையில் யார் யார்க்கு என்னென்ன மரியாதைகள், மரியாதை வரிசைகள் அவ்வரிசைக்குரிய காரணங்கள், அற்புத நிகழ்ச்சிகள், பூசை நடப்புக்கள், அந்நடப்புக்கு வேண்டும் பொருள் தரங்கள் எல்லாம் ஐயத்திற்கும் வழுவிற்கும் இடமின்றிக் குறிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைக்குறிக்கும் நோக்கமே இப்பட்டயங்கள் தோன்றிய நோக்கமாகும். ஒரு பழங் கையெழுத்துப் புத்தகப்படியிலிருந்து இந்நூல் அச்சாக்கப்பட்டுள்ளது. எனினும் மூலப்பட்டயங்கள் ஏடுகளாக இருந்தன என்று அறியவேண்டும். ஒவ்வொரு பட்டயத்திற்கும் எத்தனை ஏடுகள் என்பதனை மேல் அட்டவணையிற் காணலாம். இவ்வறப் பணியை உலகம் உள்ளவரை நடத்துவோம் எனவும், எது நிலை திரிந்தாலும் இவ்வறநிலை திரியோம் எனவும், இவ்வறத்திற்கு இடையூறு செய்தவர்கள் இன்னபழிக்கு ஆளாவார்கள் எனவும், உதவி செய்தவர்கள் இங்ஙனம் வாழ்வார்கள் எனவும் இறுதியில் விடாது குறிப்பிடுவது இப்பட்டயங்களின் வழக்காறாகும். இச்சாசனம் எழுதினது இன்னார் சொற்படிக்கு இன்னான் என்று காட்டி முடிக்கப்படும். யார் எழுதினால் சாசன நோக்கம் வலுப்படுமோ அவரைக்கொண்டு எழுதச்சொல்லும் அறிவுடை மையைப் பார்க்கின்றோம். பட்டயத்தின் தொடக்கத்திலும் கடைசியிலும் முருகன் பாடல்கள் இருத்தலுண்டு. இனி ஒவ்வொரு பட்டயத்தின் கருத்தினையும் சுருக்கமாகக் காண்போம். 1. பழனிக்கோயில் நடப்பு அட்டவணை (பக்கம் 1- 27) நேமங்கோயில் இளநல வகுப்பு குப்பாபிச்சஞ் செட்டி மகன் குமரப்பன் பழனித்தலஞ் சென்று உப்பு வணிகஞ் செய்தது, பழனிக்கோயில் தெய்வநாயக பண்டாரத்து மனையில் தங்கிப் பண்டாரத்தின் உதவியையும் அவர்மனைவி, பார்வதியம்மாள் உதவியையும் பெற்றது. வேலாயுத சுவாமிக்கு இலாபத்தில் மகமைப் பணம் சேர்த்தது, பிறகோயில் நகரச் செட்டியார்களும் குமரப்பனோடு உப்பு வாணிகத்திற்குச் சேர்ந்து கொண்டது. உப்புச் செட்டிகள் என்ற பெயர் பெற்றது. (கலாமடம்)ஈசானிய சிவாசாரியார் கட்டளைப்படி குமரப்பன் பழனிக்குக் காவடி கட்டியது, இன்னின்ன இடத்தில் தங்கிச் சென்று,ஐந்து நாள் மகேசுவர பூசை செய்வது, ஏழு கோவில் நகரத்தாரும் காவடி எடுத்தது. ஈசானிய குருதேசிகர் குமரப்பன் முதலானவர் பசியைப் போக்கியது, பூசைக்குப் பிரம்புத்தடி அருளியது, குமரப்பன் சம்பட்டியில் நத்தலிங்க நாயக்கர் மனைவியின் வயிற்றுவலியைப் பழனியப்பர் அருளாற் போக்கியது. நாயக்கர் மனைவி குமரப்பன் வீடு தேடிவந்து நன்றி செலுத்தியது, நாயக்கர் இரண்டு வேலாயுதம் பழனியப்பருக்குக் கொடுத்தது, வேலாயுத சுவாமி பார்வதியம்மாளுக்கும் குமரப்பன் பெண்சாதி சிட்டாளுக்கும் ஈசானியசிவாசாரி யாருக்கும் ஆயிக்குடி சமீன்தாருக்கும் கனவில் தோன்றிச் சொல்லியது, சமீன்தாரின் சுரநோயைப் போக்கியது, மண்டகப்படி நடத்துவது, பண்டாரத்து மனையை மடமாக வைத்துக் கொள்வது, பண்டாரத்துக்குக் குடும்பத்தார்க்கும் வழி வழி நன்றி மறவாதிருப்பது என்ற கருத்துக்களும் இன்னாருக்கு இன்ன கொடுப்பது என்ற கட்டளை வரன்முறைகளும் இவ்வட்டவணையில் சொல்லப்பட்டுள. மண்டகப்படியில் பண்டாரத்துக்கு அரிதிப் பரிவட்டமும், குமரப்பனுக்கு அலங்காரப் பரிவட்டமும், நகரத்தார்களில் முதலாவது திருநீறும் காளாஞ்சியும் கொடுப்பது எனவும், நகரப்பொதுவிலிருந்து (கலாமடம்) ஈசானிய குருதேசிகருக்கும் (பாதரக்குடி) திருப்புனல் தேசிகருக்கும், தெய்வநாயக பண்டாரத்துக்கும், குமரப்பனுக்கும் கொடுப்பது எனவும், இனம் ஒன்றுக்குத் திருநீற்றுப்பை ஒன்று கொடுப்பது எனவும் மரியாதைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. (பக்.24) 2. ஏழுநகரத்தார் தருமசாசனம் (பக்கம் 28 -42) இது தெய்வசிகாமணி பண்டாரத்து மகன் தெய்வநாயக பண்டாரத்துக்கு ஏழு நகரத்தாரும் எழுதிக்கொடுத்த தருமசாசனம். சாலி ஆண்டு 1780 என்பது பிழையெனத் தோன்றுகின்றது. கலியாண்டோடும் பிறசாசனங்களோடும் ஒத்திட்டுப் பார்க்கும்போது, சாலி 1520 என இருத்தல் வேண்டும் போலும். யுகங்களின் பெயர்கள், நகரத்தார் பெருமைகள், ஏழு நகரத்தாரின் இருபத்திரண்டு வகுப்புகள், தெய்வநாயக பண்டாரத்துக்கும் அன்னதான மடத்துத் திருவிழாவிற்கும் கொடுக்கவேண்டும் அரிசி முதலான பொருளளவுகள், தீர்த்தமும் திருநீறும் வழங்கும் மரியாதை வரிசைகள், பத்தாந்திருநாள் மண்டகப்படியில் கொடுக்கும் பொருளளவுகள், தங்கி வரவேண்டிய இடங்கள் எல்லாம் இச்சாசனத்து எழுதப்பட்டுள்ளன. சோழவரசன் நகரத்தார் பெண்ணைமருவிப் பொறுக்க முடியாத தொந்தரவு செய்தபடியால், இளையாத்தங்குடி வந்த செய்தியையும், அரச தண்டனைக்கு ஒக்கூருடையான் மறுதலை கொடுத்தபடியால் நகரக்கோயில்களில் ஒக்கூருடையானுக்கு முதல் மரியாதை நடக்கின்ற செய்தியையும் அறிகின்றோம்; எனினும், நேமம் குமரப்பன் பழனித்தலத்துக்கு உப்பு விற்கவந்து பட்டபிரயாசையை மதித்து, பழனித்தலத்தில் முதல் விபூதியும் காளாஞ்சியும் பரிவட்டமும் குமரப்பனுக்கு நடக்கட்டும் என்று (பக்.38) எழு நகரத்தார் அனைவோரும் ஒரேமனதாய்ப்பேசி முடித்தனர் என்பது இச்சாசனத்தின் உயிரான கருத்தாகும். இச்சாசனம் நகரத்தார் சொற்படிக்கு ஒக்கூருடையான் உடையப்ப செட்டி அடைக்கப்பன் எழுதியது. ஒக்கூருடையான் தனக்கு உரிய முதல் மரியாதையைப் பழனித்தலத்தில் நேமம் குமரப்பனுக்கு விட்டுக்கொடுக்க வேண்டியிருப்பதால், இச்சாசனத்தை ஒக்கூருடையானைக் கொண்டு எழுதச் சொல்லினர் நகரத்தார் என அறியவேண்டும். ஏழு நகரத்தாரும் தனித்தனி ஆறு கால் கூடத்தில் குமரப்பனைக் கும்பிட்டு விழுந்து திருநீறு வாங்கிக்கொள்வது என்ற மரியாதைச் செய்தியும், குமரப்பன் சந்ததியில் முதல்வருடம் பட்டம் கட்டுகின்ற விவரமும் அறியலாம். 3. ஏழு நகரத்தார் தருமசாசனம் (பக்கம் 42 - 65.) இது சாலி 1688 - கலி 4868 (கி.பி.1766) ஆம் ஆண்டில் குழந்தை பண்டாரத்து மகன் குமாரசாமி பண்டாரத்துக்கு ஏழு நகரத்தாரும் அளித்த சாசனப்பட்டயம். மேலைச்சாசனம் போல யுகங்களின் பெயர்களும் நகரத்தார் பெருமைகளும் பிரிவுகளும் பண்டாரத்துக்கும் குடும்ப வழியினர்க்கும் கொடுக்கும் கட்டளைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இரணிக்கோயில் பெ. குட்டயன் வைகாவூர் நாட்டு விசயகிரி வேலாயுதத் துரையர் களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று சொல்லியது, துரையின் பட்டத்தம்மாள் குட்டயனிடம் மகப்பேறு கேட்டது, குன்னக் குடியில் பெரியமருது பாண்டியர் மூன்று கேள்வி கேட்டுத் தக்க விடைபெற்றது, குட்டயனுக்குக் கணையாழியும் யானைக் கொம்பும் கொடுத்தது என்ற அற்புதங்களை அறியலாம். விசயகிரித் துரையும் மருதுபாண்டியரும் உத்தர விட்டபடி, இரணிக்கோயில் பெ. குட்டயனுக்கு அருளாடும் காரணத்தால், இரண்டாவது காளாஞ்சியும் மரியாதைக் காளாஞ்சியும் கொடுப்பது என்ற முடிவு இச்சாசனத்தின் உயிரான செய்தியாகும். மரியாதை வரிசைகளும் காரணங்களும் முறைகளும் 59 - 62ஆம் பக்கம் வரை விரிவாக இடம் பெற்றுள. இப்பட்டயத்தில் விசயநகரத்து அரசர்களையும் அவர்கள் வழியாண்ட நாயக்கர் களையும் மகாமண்டலேசுவரன் எழுபத்தேழு பாளையம் முதலியவற்றையும் பற்றிச் சிறந்த குறிப்புக்கள் உள (பக். 47 - 49) 4. ஏழு நகரத்தார் தருமசாசனம் (பக்கம் 66 -78) இது சாலி 1710 கலி 4889 (கி.பி. 1788) ஆம் ஆண்டில் குமாரசாமி பண்டாரத்து மகன் தெய்வநாயக பண்டாரத்துக்கு ஏழு நகரத்தாரும் கொடுத்த தரும சாசனப்பட்டயம். நகரத்தார்களின் பெருமைகள் பிரிவுகள் ஐந்து நாள் பூசைக்கும் அன்னதான மடத்துத் திருவிழாவுக்கும் கொடுக்கும் அரிசி பொன் பழம் முதலியவை, பள்ளயத்துக்குக் கொடுக்கும் பொருள் அளவுகள் குறிக்கப்பட்டுள. வெற்றிலை பாக்கு பழம் காய்கறி களோடு போயிலையும் சுருட்டும் கொடுப்பதுண்டு என்ற ஒரு புதுச்செய்தியை இப்பட்டயத்தில் கற்கின்றோம். நேமங்கோவில் குமரப்பனுக்கும் இரணிக்கோயில் குட்டயனுக்கும் பிறருக்கும் உரிய மரியாதை வரிசைகளும் காரணங்களும் 73 -76 ஆம் பக்கங்களில் இடம்பெற்றுள. தெய்வநாயக பண்டாரத்து மனையில் முன்பிருந்த ஆறுகால் கூரைக் கூடத்தைக் கல்திருப்பணி செய்து ஆறுகால் சவுக்கையாக்கியதும், 78 கால் திருப்பணி மண்டபம் செய்ததும் குறிக்கத்தக்க முன்னேற்றங் களாம். இங்ஙனம் நகரத்தார் செலவு செய்து பணி பெருக்கி னாலும் அனுபவிக்கும் உரிமை பண்டாரத்து வழியினர்க்கு என்றும் உண்டு. வயிரவன் கோயில் வேலப்ப செட்டி வயிரவன் திருப்பணி வேலையில் மிக்கமுயற்சி எடுத்துக் கொண்டதனாலும், சுவாமி வயிரவனிடம் நேரில் தோன்றிப் பேசியதனாலும் (பக்.76) நகரத்தார்களில் மூன்றாவது மரியாதை வயிரவனுக்கு உரியது என்பது இச்சாசனத்தின் உயிரான செய்தியாகும். 5. பிறாமலை ஆதீனம் நடப்பு அட்டவணை (பக்கம் 79 -85) பழனிக்கோயில் இடும்பன்மலை முதல் ஊர் வரும் வரையில் ஈசானிய சிவாசாரியார், பண்டாரம், குமரப்பன் நகரத்தார் செய்யவேண்டிய முறைகள் கூறப்பட்டுள. இன்னாருக்கு இன்ன கடமை என்று சன்னிதானம் சொல்லியபோது ஆதீன மரியாதை தனக்கும் வேண்டும் என்று இரணிக்கோயில் திருவேட்பூ ருடையான் குட்டயன் கேட்டான். மற்றவர்களைக் கலந்தாலோசித்து, திருவாவினன்குடியில் நடக்கிற பட்டுபரிவட்டமும் அந்தச் செலவும் குட்டயன் தனதாக இருக்கட்டும் என்று சுவாமி சொல்லியது. சன்னிதானம் ஊருக்கு வரும்போது குட்டயனுக்கு மூன்றாவது பட்டுப் பீதாம்பரம் கொடுக்கின்றது. 6. ஆதீனம் பட்டாபிடேக அட்டவணை (பக்கம் 86 -90) குமரப்பன் பழனியாண்டவர் அனுக்கிரகம் பெற்ற படியானும், ஆதீனத்துக்கு வேண்டும் காரியங்களும் உழைப்பும் செய்தபடியாலும் ஆதீனப்பட்டாபிடேகத்து. இரண்டாவதாகக் குமரப்பன் பட்டு சாத்துகின்றது என்று ஈசானகுருதேசிகர் மொழிந்தார். இதனை இருபத்தொரு கோத்திரத்து நகரத்தார் களும் சரியென ஒத்துக்கொண்டனர். வழக்கம்போல் நடக்க வேணுமேயொழியப் புதுவழக்கம் செய்யப்படாது என்று இளையாத்தாங்குடி பட்டணசுவாமி வகுப்பு அருணாசலஞ் செட்டி அண்ணாமலை மட்டும் சன்னிதானத்தின் திருவடியில் விழுந்து மறுப்புக் கூறினார். குமரப்பன் பெருமையைக் குருதேசிகர் எடுத்துரைத்தபின் அண்ணாமலையும் ஒத்துக் கொண்டார். ஒத்துக்கொண்டதற்கு உறுதியாக அண்ணா மலையையே அட்டவணை எழுதும்படி ஈசானிய சிவாசாரியார் கணித்தார். 7. மடவாலயத் தருமசாசனம் (பக்கம் 91 - 100) இது சாலி 1727 கலி 4906 (கி.பி.1805) ஆண்டில் நாகப்ப பண்டாரத்து மகன் குழந்தைவேலுப் பண்டாரத்துக்கு ஏழுநகரத்தார் அனைவோரும் கொடுத்த சாசனப்பட்டய மாகும். முன்னைச்சாசனங்கள் போலப் பண்டாரத்துக்குக் கொடுக்கும் நடப்புக்களும் பிறவும் குறிக்கப்பட்டுள. இடம் போதாமையினால் அடுத்தமனை மோளையத்தேவன் வகையறா இடத்தை விலைக்கு வாங்கி ஆக்குபுரையும் முப்பத்தொன்பது கால் திருப்பணி மண்டபமும் கட்டிய வளர்ச்சி குறிப்பிடத்தகும். மடத்திற்காக வாங்கிய இம்மனைகளும் பண்டாரத்தின் அநுபோகத்திற்கு உரியனவே பிள்ளையார்கோயில் வகுப்பு முத்தப்பனுக்குச் சிவப்பட்டியில் பழனியாண்டவருடைய அருள்வந்த செய்தியும், தொண்டைமான் அரசர் முத்தப்பன் வீட்டிற்கு வந்து நினைத்த காரியத்தைக் கேட்டு மகிழ்ந்து சால்வை முதலியன கொடுத்த செய்தியும், முத்தப்பன் கேட்டுக் கொண்டபடி கோவில் வீட்டுக்குத் தாம்பூரவேல் கொடுத்த செய்தியும், நேமங்கோவில் பழனியப்பன் பழனிக்கோவிலுக்குக் காவடி எடுத்து வரும்போது இந்த வேலாயுதத்தையும் வைத்துப்பூசை செய்துவரும்படி சொல்லிய செய்தியும், இதனைச் சொல்வதற்காகப் பழனியப்பனை அரண்மனைக்கு அழைத்துவந்து மரியாதை செய்த செய்தியும் இப்பட்டயத்துக்கு முக்கிய செய்திகளாகும். (பக். 96 -98) தேவகோட்டை ரத்தினவேலாயுதமும் குன்றக்குடி வேலாயுதமும் சேர்த்துக்கொள்ளப்பட்டன. 8. நிரம்பவழகிய தேசிகர் பட்டயம் (பக்கம் 100 -116) இது சாலி 1549 கலி 4730 (கி.பி.1627) ஆம் ஆண்டில் ஏழு நகரத்தார் முன்பாகக் குன்றக்குடி ஆதீனம் நிரம்ப வழங்கிய தேசிகர் (துளாவூர் மடம்) கொடுத்த பட்டயம். யுகங்களின் பெயர் களும் நாயக்கர் பெயர்களும் முன்னர்க் குறிக்கப்பட்டுள்ளன. தேசிகர் பெருமை, நகரத்தார் பெருமை, கோத்திரம், குலசேகரபுர சவுந்தரபாண்டியன் நகரத்தார்களை நற்குடியாகத் தன் சீமைக்கு அழைத்தது, நகரத்தாரின் வெள்ளாட்டிப் பெண்கள் சோழன் உத்திர விட்டும் (கலாமடம்) ஈசானிய குருதேசிகரை தொழ மறுத்தது எங்கள் நிரம்பவழகிய குருதேசிகர் (துளாமடம்) பாண்டிநாட்டிற்கு வந்தால் நாங்களும் போவோம் என்று உரைத்தது, வெள்ளாட்டிப் பெண்கள் தங்கள் குருவிடம் முறையிட்டது, சோழன் குருதேசிகரை வரவழைத்துப் பாண்டியன் பல கிராமங்கள் தருவான் என்று மொழிந்து இருபத்திரண்டு கோத்திரத்து நகரத்தார் ஆண்களும் வெள்ளாட்டிப் பெண்களும் பாண்டி நாட்டிற்கு வந்தது, பாண்டியன் எல்லோரையும் எதிர் கொண்டழைத்து மாகாணங்கள் சர்வமானியமாக அளித்தது. குன்றக்குடி ஆதீனம் அமைந்தது முதலான நகரத்தார் வரலாற்றுக் குறிப்புக்களை இப்பட்டயத்துத் தெளிவாக அறியலாம். நேமங்கோயில் குமரப்பனும் அவன் மனைவி வெள்ளாட்டி சிட்டாளும் உப்புமாறி எடுத்த மகமையால் இந்த ஆதீனமும் பிற தருமங்களும் நடைபெறுகின்றன எனவும், பழனித்தலத்தில்போல இந்தத்தலத்திலும் நகரத்தார்களில் முதலாவது தீர்த்தம் திருநீறு குமரப்பனுக்குக் கொடுப்பது எனவும் நிரம்பவழகிய தேசிகர் உத்தரவுப்படி நகரத்தார் அனைவோரும் உடன்பட்ட செய்தியை இப்பட்டயம் முக்கியமாகச் சொல்லுகின்றது. மரியாதை வரிசைகள் 114 -15 ஆம் பக்கங்களில் உள்ளன. பட்டயங்களும் நடைமுறைகளும் பட்டயங்களில் குறித்துள் நடப்புக்கள் இன்றும் பெரும்பாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காலப்போக்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும். எல்லாப் பட்டயங்களிலும் முதல் மரியாதைக்குரியவரான நேமம் குமரப்பன் வழி வந்தோரே இன்று நெற்குப்பை கு.பழ. வீட்டினராவர். இரண்டாம் மரியாதைக்கு உரிய அருளாடி இரணிக்கோயில் பெ.குட்டயன் வழிவந்தோரே இன்று கண்டனூர் குப.சு. வீட்டினர் நகரத்தார்களில் மூன்றாம் மரியாதைக்கு உரிய வயிரவன்கோயில் வயிரவன் வழிவந்தோரே இன்று காரைக்குடி கும.பெரி.சு.பழ. வீட்டினர். தாம்பூரவேல் பெற்ற பிள்ளையோர் கோவில் முத்தப்பன் வழிவந்தவரே இன்று மேலைச்சிவபுரி ஆறு.முரு. குடும்பத்தினர் இங்ஙனம் தெய்வ அருள்பெற்ற நகரத்தார் நால்வர் வழிவந்தோர் ஆல்போல் தழைத்து வாழ்ந்து வருதலின், முன்னோர் பணிகள் இடையறாது காக்கப்பட்டு வருகின்றன என்ற உணர்தல் வேண்டும். இக்குடும்பத்தார்கள் தம் குழந்தைகளுக்கு முருகன் பெயர்களையே வைப்பர் என்பதும் நினையத்தகும். பட்டயங்களும் தமிழும் ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகட்கு முன்தோன்றிய இச்சாசனத் தமிழ் பலவகையாலும் ஊன்றி ஆராய்வதற்கு உரியது என்று மட்டும் ஈண்டுச் சுட்ட விரும்புகின்றேன். தமிழ் உரைநடை வரலாற்றில் இச்சாசன நடை இடம்பெறத் தகுவது. ஒரு பெரும் புத்தக அளவிற்கு ஒப்பான இச்சாசனப் பட்டயங்கள் பேசுவது போன்ற தமிழ் நடையில் எழுதப்பட்டுள. ஒண்ணு, ரெண்டு, மூணு, பனிரெண்டு, அருசி, குடுத்து, ராசா, போயி, துண்ணுத்துப்பை, மதியாரி, சிறைசாக்கினை, வீட்டுக்குப் போரது, பொக்குசம், நச்சேத்திரம் எனப்பல மரூஉச்சொற்களை நிரம்பக்காணலாம். அக்காலத்துத் தமிழ்ச்சொற்களை எங்ஙனம் ஒலித்தார்கள் என்றும் அறிந்து கொள்ளலாம். மாறி (விற்று) அதுமேரைக்கு (அதுபோல) பரங்கள் (பரதேசிகள்) வளமை (வழக்கம்) பெண்ணாட்டி (பெண்டாட்டி) நெட்டெழுத்து (கையெழுத்து) என்ற சொற்களையும், அடகெடுத்தல், அரிதிப்பரிவட்டம், அலங்காரப் பரிவட்டம், வேற்படி, அருளாடி முதலான சொற்களையும் அறிகின்றோம். உண்டுமா, மெழுகிவைத்துவை. நானும் வருக, வருவோமாகவும் என்ற தொடர் முடிபுகளையும் அறிகின்றோம். நகரத்தார்கள் ஒளவையின் தமிழ்ப்பாட்டுக்குப் பொற்பாடகம் கொடுத்தார்கள் எனவும், வரப்புயர என்று ஒளவை உழவர்களை வாழ்த்தியது போல மடிச்சீலை பெருக என்று வணிகஞ்செய்யும் இந்நகரத்தார்களை வாழ்த்தி வரங்கொடுத்தார் எனவும் இப்பட்டயங்கள் விளம்புகின்றன. நாயக்க மன்னன் முத்தமிழ் அணங்கன் எனவும், வள்ளுவமறையுங் கற்று முப்பால் மொழியும்படியே அறிவை அறிந்து அல்லவை கடிந்து நல்லவை நாட்டிக் குடிதழைக்க ஆண்டான் எனவும் மொழிகின்றன. நாங்கள் ஏழு நகரத்தார்கள் நட்டகல்லையும் இட்டசூலமும் அழிக்க மாட்டோம்; மகாமேருகிரி சாய்ந்தபோதிலும், கடல் ஏழும் வற்றின போதிலும், காவேரி வறண்ட போதிலும், சந்திராள் சூரியாள் தெற்கு வடக்கானபோதிலும் நாங்கள் நகரம் பொய்சொல்ல மாட்டோம் எனவரும் உறுதிப்பாடுகள் நகரத்தாரின் நாணயத்தைப் பறைசாற்றுகின்றன. ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு ஆழி யெனப்படு வார் என்ற வள்ளுவமறைப்படி வாழ்ந்தவர்கள் நகரத்தார்கள் என்பதனை இந்த அறப்பட்டயங்கள் காட்டிக்கொண்டு நிற்கின்றன. பண்டையோர் தம் பொய்யாப் பண்பினையும் கட்டுப்பாட்டினையும் புகழினையும் ஒழுங்கினையும் அறிதற்கு இப்பட்டயநூல் ஆராய்ச்சியாளர் கைப்பட்டுப்பரவும் என்று எதிர்பார்க்கின்றேன். நகரத்தார் சமுதாயம் தமிழ்ப்பெருஞ் சமுதாயத்தின் ஒரு பகுதியாதலின், இப்பட்டயங்கள் தமிழினத்தின் நாகரிக வளர்ச்சியைக் காண முயல்வார்க்குத் துணைசெய்யும் என்று சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். பெறுதற்கரிய தம்முன்னோரின் தருமப் பட்டயங்களை யாவரும் அறியும் வண்ணம் அச்சு நூல்வடிவாக்கி உதவிய திரு.கு.பழ.சு.பழ.சுப்பிரமணிய செட்டியார் அவர்களுக்குத் தமிழுலகம் மிக்க கடப்பாடு உடையது. எல்லா நகரத்தார் களுடைய பொருளுதவியினாலும் இவ்வெளியீடு வருகின்றது. நகரத்தார்களுக்கு எல்லாத் தமிழ் மக்களின் நன்றியுரியது. டாக்டர். வ.சுப.மாணிக்கம் நீதிநூல்கள் மாணிக்கனார் வகுத்த எளிய உரை மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் உள்ளம், சொல், செயல்களால் தூயர். நாடு நலம் பெற நற்கருத்துக்களை நாளும் எண்ணி எழுதியவர். சிறுவர் நெஞ்சகளில் நற்கருத்துக்கள் நாளும் விதைக்கப் பெறல் வேண்டும் என்ற நல்ல நோக்கினர். ஆத்தி சூடி அமைப்பில் ‘தமிழ்ச்சூடி’ இயற்றிச் சிறுவர் உள்ளமும் வாழ்வும் செழிக்க வழிவகை கண்டவர். நல்ல கருத்துக்களைப் பரப்பும் நோக்கில் ‘மாணிக்கக் குறள்’ இயற்றிய மாண்பினர். திருக்குறள் சிந்தனைகளைத் தெளிவாக உணர்த்த செவ்விய உரை கண்ட செம்மல். காரைக்குடியில் தமிழ்ச்சங்கம் அமைத்து அதன் தலைவராய் விளங்கிய மாணிக்கனார் தமிழ்ப் பாடல்களையும் நீதி நூல்களையும் சிறுவர்கள் நெஞ்சகத்தில் என்றும் நிலை நிறுத்த விரும்பினார். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நறுந்தொகை, மூதுரை, நல்வழி, நன்னெறி, உலக நீதி ஆகிய நூல்களுக்கு எளிய தெளிவுரை வகுத்துத் தமிழ்ச் சங்க வெளியீடாகப் பல பதிப்புக்கள் வரச் செய்தார். தமிழ்ச்சங்கம் மூலம் நீதி நூல் ஒப்புவித்தல் போட்டி நடத்தி ஆண்டுதோறும் சிறுவர்களுக்குத் தொடர்ந்து பரிசுகள் நல்கினார். வளரும் பயிருக்கு உரமும் நீரும் ஒளியும் அளித்துக் காப்பதில் வல்லவர். செறிவு நடையும் புலமை நடையும் வல்ல மாணிக்கனார் சிறுபர் பொருட்டு மிக மிக ளயி தமிழில் பழகு நடையில் உரை வகுத்துள்ளார். நீதி நூல் கருத்துக்கள் பரவ வேண்டும் என்ற எண்ணத்திற்குச் செயல் வடிவம் கொடுத்தார். காரைக்குடி தமிழ்ச் சங்கத்தைப் பயன்படுத்திக் கொண்டார். பயிற்று வித்தார். பரிசுகள் நல்கினார். நீதி நூல்களுக்கு எளிய உரை வகுத்தார். செயல் செயல் என வாழ்ந்த செம்மல். வாய்ச்சொல் வீரராக வாழாமல் சொல்லியவண்ணம் செய்து முடித்த பெருமகனாராகவும் திகழ்ந்தார். இவர், கற்றல், கற்பித்தல் முதலிய கல்வி நெறிகளில் சீரிய கோட்பாடுகளுடன் வாழ்ந்த பேராசிரியர். இவரது எழுத்தும் பேச்சும் இவர்தம் கல்விக் கொள்கைகளைப் பறைசாற்று கின்றன. தூய வாழ்விளராகிய மூதறிஞர் நன்முறையில் நீதி நூல் இயற்றத்திட்டமிட்டிருந்தார். இவரது வாழ்க்கைக் குறிப்பு இதனை உணர்த்துகிறது. சிறுவர்களுக்குரிய நீதி நூல்களைப் பற்றி பேராசிரியர் எழுதிய ஆய்வுக் கட்டுரை பெருஞ் சிறப்புடையது. இளைஞர்களுக்கு உடல், உள்ளம், உயிர் பற்றிய நல்வழிக் கருத்துக்கள், நல்வாழ்வுக் கோட்பாடுகள் தமிழில் எவ்வாறு சொல்லப்பட்டுள்ளன என்பதை நீள நினைந்தவர். நன்கு ஆராய்ந்தவர். தமிழ் நெடுங்கணக்கோடு தமிழ் அறக்கோட் பாடுகளும் வளரும் குழந்தைகள் நெஞ்சில் பதிய வைப்பதில் செயல் ஆர்வம் காட்டியவர். ஆத்திசேர் கொன்றை அழகுதமிழ் மூதுரை பாத்திசேர் நல்வழி பண்புலகம் - பூத்த நறுந்தொகை நன்னெறி ஏழும் குழந்தைக் குறுந்தமிழ் என்றறிந்து கொள். நீதிநூல்கள் பற்றி மாணிக்கனார் உள்ளம் உவந்து இயற்றிய இப்பாடலை என்றும் நெஞ்சில் நிறுத்துவோம். தமிழர் வாழ்வுநலக் கோட்பாடுகளை ஏழு நீதிநூல்களும் இலக்கிய இன்பமுறும் வகையில் எடுத்தியம்பும் திறத்தினை இவர்தம் ஆராய்ச்சி முன்னுரையில் அறிந்து கொள்ளலாம். பேராசிரியரின் கனவு நனவாகத் தமிழ்நாட்டுத் தொடக்கப் பள்ளிதோறும் மீண்டும் நீதிநூல் கல்வி கட்டாயப்படுத்தப்பட வேண்டும். இந்த அரிய நல்ல பணியைச் செய்த பேராசிரியர்க்குத் தமிழ் உலகம் கடமைப்பட்டுள்ளது. நீதிநூல்களைப் பல பதிப்புக்கள் வெளியிட்டுப் பரப்பிய காரைக்குடி தமிழ்ச்சங்கச் செயலாளர் மா.அ. ஞான சேகரபாண்டியன் அவர்களுக்கும் வ.சுப.மா. எழுத்துக்கள் அனைத்தும் அச்சில் காண அவாவி நிற்கும் அண்ணல் மாணிக்கனாரின் இளவல் வ.சுப.சொக்கலிங்கம் அவர்களுக்கும் மாணிக்கனாரின் அனைத்து நூல்களின் பதிப்புச் செம்மைக்கு உறுதுணையாய் இருக்கும் வாழும் வ.சுப.மாவாகிய டாக்டர் இரா.சாரங்கபாணி அவர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி. மாணிக்கனார் எழுத்துக்கள் அனைத்தையும் ‘மாணிக்க நூல் வரிசை’யில் வெளியிட்டு மகிழ்ந்தோம். இந்த ஆண்டு திருக்குறளுக்கு மாணிக்க உரையினைப் பதிப்பித்துப் பேருவகை கொண்டோம். தொடர்ந்து மாணிக்கக் குறளை வெளியிட்டு மட்டிலா மகிழ்ச்சியுற்றோம். மாணிக்கனார் இளைஞர் களுக்காகவே எளிய முறையில் எழுதிய நீதிநூல்களின் உரைகளைப் பதிப்பித்துப் பேருவகை கொள்கிறோம். The Tamil Concept of Love Preface I deem it my sincere duty to present before the scholars of the world the noble principles of Aham Literature whose origin is as old as Tamil language itself and whose influence on all kinds of Tamil literature of all periods is incalculable. An elementary knowledge of Aham is indeed essential even for a beginner in Tamil. Without its study, Tamil culture and civilisation will be a sealed book. Love is no doubt the common theme of any literature in any language. The selective nature of the love-aspects, the impersonal and algebraic form of the characters and the universal and practical treatment of the subject are the differentiating points of Ahattinai. What is the impulse behind the creation of Aham literature? The unity of the family is the bed-rock of the unity of the world. The achievement of that conjugal unity depends upon the satisfaction of the sexual congress between the rightful lovers in youthhood. Dissatisfaction unconsciously disintegrates the family. There will be few problems in society, religion and politics, if family life is a contented one and the husband and wife pay high regard to each other’s sexual hunger. Therefore sex education is imperative to every young man and woman before and after marriage. How to educate them? The ancient Tamils saw in literature an effective and innocent means for instructing boys and girls in sexual principles and sexual experiences and with that noble motive created a well-defined literature called Ahattinai with inviolable rules. I hope the study of this book will be highly useful for promoting good relations between young lovers, whatever their race and nationality may be. I am greatful to the authorities of the University of Madras for their kind permission to publish my thesis (“Love in Sangam Poetry”) submitted by me for the Ph.D. Degree in 1956. My thanks are due to my colleagues Lieut. U. Bala Subramaniam M.A., and Thiru R. Sarangapani M.A., M. Litt. for their assistance in publishing this book. I shall always cherish the selfless service of the Saiva Siddhanta Works Publishing Society for coming forward to publish my work. ‘KATHIRAKAM’ V. Sp. MANICKAM, Karaikudi-2 15-5-1962 Collected Papers Preface The research papers presented and key-note addresses delivered in seminars and conferences and articles contributed to journals and souvenirs by me on different occassions are now being collected and published in the form of a book entitled collected papers. It is natural for any author to enjoy a delightful feeling when the stray flowers of his papers are strung together into a garland of book. These seventeen papers are related to the varied aspects of Tamil Language. litereature, history and culture. It is gratifying to note that Tolkappiyam, the earliest Tamil work finds a place in many papers. The author will feel rewarded if the discerning readers find that his views regarding the orderly and continued growth of Tamil are worthy of consideration and discussion. My thanks are due to Thiru. C. Kathirvelu, Research Scholar, Annamalai University for going through the proof and M/s. Sivakami Printers for the neat printing and execution. V. Sp. MANICKAM T.D.A.R. Centre, Karaikudi-2 15-6-1970 A study Of Tamil Verbs Preface It really gives me immense pleasure to publish after a long spell of twenty four years, my research thesis “Tamil Verbs” approved by the University of Madras for the award of M.O.L. Degree in 1948. I am aware that most of the philological terms used in this thesis are not now in vogue and that new linguistic terms have replaced them. Notwithstanding the change of terminology, I do hope that the collection of material bearing on the several aspects of verbs in Tmail and the conclusions based on them are still valid in the field of linguistics. This prompted me to make this thesis available to researchers in print. I feel honoured by the favour shown to me by the Vice-Chancellor and members of the Syndicate of the Annamalai University for sanctioning publication of this book in the University series. I am very grateful to them for their kindness. It is my duty to record my sincere obligation to the late Dr. A. Chidambaranathan Chettiar, former Professor of Tamil in this University for his fruitful guidance in this research work of mine. I wish to express my thanks to Dr. S. Agesthialingom, Director of the Centre of Advanced Study in Linguistics, Annamalai University for his valuable Foreword. My thanks are due to Dr. S.V. Shanmugam, Reader in Linguistics for going through the thesis before publication and for his useful suggestions and to Thiru K. Narayanan, M.A., Lecturer in Tamil for preparing Index. V.Sp. Manickam Annamalainagar, 12-10-72 திருமுறை தில்லையம்பலம் ஏறியது! தேவார திருவாசக முதலான தெய்வத் திருமுறைகளைத் தில்லை நடராசர் கோயிலில் கீழே நின்றுதான் பாடும் வழக்கம் இதுவரை இருந்து வந்தது. திருமுறைகளை அம்பலத்தின் மேல் பாட குருக்கள் அனுமதிப்பதில்லை. இது திருமுறைக்கு மதிப்புக் குறைவாக இருந்தது. மதுரைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர். வ.சுப.மாணிக்கனார் தலைமையில் திருமுறை இயக்கக்குழு போராடத் தொடங்கியது. திருமுறைகள் குடமுழுக்கு விழாவிற்குள் தில்லையம்பலம் ஏறாவிட்டால் உண்ணா நோன்பு தொடங்கவும் முடிவு செய்தது. மக்களும், மாணவர்களும் திரளாக இதற்கு ஆதரவு தந்தனர். தமிழக அரசும் இக்கோரிக்கைக்கு ஒத்துழைத்தது. கோட்டாட்சி உயர் அலுவலர்கள் பொதுக் குழு குருக்களிடம் தமிழுக்கும் திருமுறைக்கும் உரிய மதிப்புக் கொடுக்க வேண்டும் எனவும் 11.2.87 ஆம் நாள் நடைபெறும் குடமுழுக்கு இடையூறின்றி நடைபெற வேண்டும் எனவும் எடுத்துச் சொன்னார்கள். உண்மை நிலையை உணர்ந்த குருக்கள் பெருமக்கள் இசைந்தனர். 1.2.87 ஆம் நாள் முதல் திருமுறைகள் தில்லையம்பலத்தின் மேல் குருக்களால் பாடப் பெறுகின்றன. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றமாகும். இது பல்லாயிரக் கணக்கான மக்கட்கு மகிழ்ச்சியையும் உணர்ச்சியையும் தந்தது. தெய்வத் தமிழ்த் திருமுறை தலைமையான தில்லைக் கோயிலில் அம்பலம் ஏறி முழங்கத் தொடங்கி விட்டது. இனி எல்லாக் கோயில்களும் தமிழ் வழிபாட்டைத் தானே விரைவில் மேற்கொள்ளும் எனவும் இதற்கு ஓர் இயக்கம் தேவைப்படாது எனவும் நம்புகின்றோம். மக்களின் தமிழ்ப் பக்குவத்தையும் அரசின் தமிழுறுதியையும் கோயிலாளர்கள் புரிந்து செயற்படுவார்களாக - தென்மொழியில் எழுதியது, வ.சுப. மாணிக்கம், காரைக்குடி-2 தலைவர், திருமுறை இயக்கக்குழு. தமிழின் பொற்காலம் இருபத்தோராம் நூற்றாண்டுக்கு முந்தியே, இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தே, தமிழுக்குப் பொற்காலம் தொடங்கிவிட்டது என்றுதெளிகின்றேன். ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ எனப் பாட்டுக்கொரு புலவன் பாரதி தெளிந்து,இறந்த கால நடையிற் பாடினான்; அது பொய்க்கவில்லை. நாடுவிடுதலை பெற்ற வரலாறு அறிவோம் தொல்காப்பிய மரபின்படி எதிர்காலத்துத் தெளிவும் நம்பிக்கையும் கொண்ட மெய்ம்மைகளை இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தலே தமிழ் நடையாகும். இந்நடைப்படி ஞாலம் அளந்த தொல் புதுத் தமிழ் மொழி மழலைப் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை ஒரே பயிற்றுமொழியாக ஆகிவிட்டது எனவும் கலைக்கல்வி, அறிவியல் கல்வி, தொழிலியற் கல்வி எல்லாத்துறையிலும் தமிழ் ஒன்றே தமிழகத்தில் பயிற்று மொழியாயிற்று எனவும் தமிழ்வழிக் கற்றவர்க்கே உயர்கல்விச் சேர்க்கை உண்டு எனவும் தமிழ்வழிப் பயின்றவர்க்கே தமிழகத்தில் எல்லா வேலை வாய்ப்புகளும் உண்டு எனவும் நனவு காண்போமாக! மையப் பாராள் மன்றங்களில் தமிழும் ஆட்சி மொழியாகும் உரிமை வாய்ப்புப் பெறும் எனவும் மையவரசோடு தமிழிலும் எழுத்துறவு நடைபெறும் எனவும் அயலகத் தூதரங்களிலும் தமிழ் நல்லிடம்பெறும் எனவும் இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சீரிளமைத் திறம் வாய்ந்த செந்தமிழின குரல் ஐக்கிய நாட்டவையின் அரங்கில் முழங்கும் எனவும் நம்புவோமாக. இந்நம்பிக்கை வேணவாவால் சொல்லப்படுவதன்று; தமிழ் இதற்கெல்லாம் இதற்கு மேலாகவும் தகுதிப் பேறுடைய செல்வ மொழி என்பதனை உலகம் அறியும். உலக மொழிகளோடு தமிழின் வரலாற்றை ஒப்பிடுவார் தமிழ்மொழியின் உள்ளாற்றலை நன்கறிவர். தொன்மையில் குறைவா? அமைப்பில் குறைவா? இலக்கண வரம்பில் குறைவா? நூற்செல்வத்தில் குறைவா? ஒலித் தூய்மையில் குறைவா? நம் தாய்மொழியின் மேன்மையை அறியகில்லாத தமிழ்ப் பாவிகளின் குறைவொன்றைத் தவிர தமிழுக்கு என்ன குறைவுண்டு? நிறைவைக் குறைவென்று தூற்றும் மடவோர்களின் அடிமையைத் தவிரத் தமிழின் செம்மைக்கு என்ன குறைபாடு உண்டு? இக்குறை கூறுவார் எல்லாம் இருபத்தோராம் நூற்றாண்டில் உண்மையை உணர்ந்து அறிவு செம்மைப்பட்டு உரிமை பூண்டு தமிழ்க் கடமை செய்வர் என்று நம்புவோமாக! யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று கவிப்பறையறைந்த பாரதி வாக்கு குறள் வாக்கன்றோ? எங்கும் காணோம் என்பதென்ன என்றும் காணோம் என்ற நிலைக்குத் தமிழ் இன்னும் சில ஆண்டுகளிலே உயர்வளர்ச்சி பெறும். தகுதியுடைய வல்லாளனை யாரும் அடக்கி வைக்க முடியாததுபோலத் தகுதி மிக்க தமிழ்மொழியின் பூதவாற்றலை ஆங்கில மோகங்கொண்ட எத்தமிழ்க் கூட்டமும் தடுத்துவிட முடியாது. முடியவே முடியாது. `தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்ற மொழி வீரர்கள் ஆங்கிலப் பாசமும் வாசமும் பற்றிய எவ்வளவு தாய் தந்தையர் தடுத்தாலும், தமிழ்மொழியைத் தமிழகத்தில் எல்லாத் துறையிலும் முடிமொழியாக்கி வெற்றி காண்பர்; பொருளாதார வாழ்வெல்லாம் தமிழ்வழிக்கே; பிழைப்பு வாய்பெல்லாம் தமிழ்வழிக்கே; கொள்வினை கொடுப்பினையெல்லாம் தமிழ் வழிக்கே என்று தமிழ்மொழி மறவர்கள் இன்னும் சிலவாண்டில் மொழி வாகை சூடுவர். அன்னைத் தமிழே வேலை பெறு; ஆங்கிலமே வெளியேறு என்ற இடிக்குரல் முழங்கத் தொடங்கிவிட்டது. இத்தமிழ்க் குறிக்கோளில் நாம் எல்லாம் ஒன்றாதல் கண்டு, எங்கும் தமிழ் எதிலும் தமிழ்எல்லா வேலையும் தமிழுக்கே என்ற புதுக்குரல் கேட்டு ஆங்கில மோக மாயைகொண்ட பகைவர் இன்னும் சிலவாண்டில்இருப்பிடம் தெரியாது எங்கோ மறைந்து விடுவர்; பலர் `திருந்தி விடுவர். தமிழ் வாழும் வளரும் கல்வி உறுப்பெறும்; எல்லாரும கல்விச்செல்வம் பெறுவர்; பாரத நாடுதமிழ் வளர்ச்சியால் உயர்வு பெறும். இதனாலன்றோ தேசியம் பாடிய பாரதியார் வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்; வாழிய பாரத மணித் திருநாடு’ என்று காரண காரிய முறைப்படி பாடினார். இப்பாட்டின் உண்மை என்ன தெரியுமா? பாரதத் திருநாட்டின் வாழ்வு தானும் செந்தமிழின் வாழ்வைச் சார்ந்திருக்கின்றது; தமிழ் வாழ்வு குன்றினால் பாரதத்தின் திருவும்குன்றிவிடும் என்ற குறிப்புப் புலப்படவில்லையா? பாரதியை உணராதவர் பாரதத்தையே உணராதவர் ஆவர். எங்கும் தமிழ் எந்துறையும் தமிழ் எவ்வேலையும் தமிழுக்கே என்று நாம் சொல்லும்போது, இரு கருத்துக்களைத் தெளிய வேண்டும் இந்தியாவில் உள்ள தெலுங்கு, பஞ்சாபி, குசரத்து, இந்தி முதலிய ஏனைமொழிகள் தத்தம் இடங்களில் முழுவுரிமை பெற்று வளர வேண்டும என்பதுவே நம்கொள்கை, இன்று ஆங்கில ஆதிக்கம் இந்தியாவின் எந்த மொழிகளையும் காலத்துக்கேற்ற உயர்மொழியாகவும் வேலை வாய்ப்பு மொழியாகவும் வளரவிடவில்லை இந்தியர்களை வளர்க்கவும் இந்திய மொழிகளை வளர்க்கவும்தான் இந்தியா உரிமை பெற்றது. இந்தியர்கள் ஆங்கிலத்தை வளர்க்கவும் ஆங்கிலத்தால் ஒரு சில இந்தியர்கள் வளரவும் நாம் விடுதலை பெறவில்லை. விடுதலைக் கடமை என்ன என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும். பெருமக்கள் எவ்வளவுதான் பொருளாதாரத்தில் வளர்வது போலத் தோன்றினாலும், மக்கள் மொழி உரிமையும் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும், பெறாதவரை, சிந்தனையடிமையாகத்தான் இருக்கும் உரிமைபெற்று நாற்பது ஆண்டுகளாகியும் நாம் இன்னும் அடிமைச் சிந்தனையாளர்களாகத் தான் உயிர் வைத்துக் கொண்டிருக்கின்றோம். நம்வழியினரையும் ஆங்கில அடிமைத் தனத்திற் பழக்கிக் கொண்டிருக்கிறோம். நம்நாட்டில் உயர்கல்வி கற்றவர்கள் எல்லாம் மனத்தாலும் நடைமுறையாலும் இலண்டனையும் அமெரிக்காவையும்தான் தாய் நாடாகக் கருதுகின்றார்கள். அங்குக் குடியுரிமை பெறுவதைத்தான் விரும்புகின்றார்கள். ஆங்கில மோகம் ஆங்கில நாடுகளின் மோகமாகி இந்தியத் தேசியப் பகையாகிவிட்டது. வெளிப்பட்ட புறப்பகையை விட ஆங்கில மோகங்கொண்ட உட்பகையே இந்தியத் தேசியத்திற்கு அணுக்குண்டாகும். ஆங்கில மோகம் அழியும் நாள் எந்நாளோ அந்நாள் இந்தியத்தேசியம் வாழும் நாளாகும். ஆதலின் இருபத்தோராம் நூற்றாண்டில் இந்திய மொழிகள் எல்லாம் மழலை முதல் பல்கலை வரை உரிய இடங்களில் பயிற்று மொழிகள் ஆகும் எனவும் எல்லாவேலை வாய்ப்பும் இந்திய மொழி வழியினர்க்கே கிடைக்கும் எனவும் நனவு கொள்வோமாக! இன்றைய உலகச் சூழலில் பிற மொழியும் அயல் மொழியும் கற்பது இன்றியமையாதது என்ற கருத்தில் எனக்கு வேற்றுமையில்லை. தாய் மொழியை எல்லாத்துறையிலும் முதன்மையாகக் கற்பதோடு. சிலவாண்டுகட்குப்பின் அயல் மொழிகளையும் கற்கும் வாய்ப்பு இருக்க வேண்டும். அயல் மொழிகளிலும் ஆங்கிலம் ஒன்றுக்கே தனி முதன்மை கொடுக்காமல் உருசியம் பிரெஞ்சு, செருமனி, பானிசு, சப்பான் முதலான மொழிகளையும் இந்தியப் பிறமொழிகளையும் நன்கு கற்றுக் கொள்ளும் வாய்ப்பினை எங்கும் வழங்க வேண்டும். எனவே இருபத்தோராம் நூற்றாண்டில் நம் கல்விக் கொள்கைகள் பின்வருமாறு அமையும் என்று எதிர்பார்க்கின்றேன். 1. தமிழகத்தில் தமிழ் ஒன்றே மழலை முதல் பல்கலை வரை எத்துறையிலும் பயிற்று மொழி. 2. தமிழ்வழி மாணவர்க்கே எல்லா வேலை வாய்ப்பும் உயர் கல்வியும். 3. இந்தியப் பிற மொழிகளையும் அயல் மொழிகளையும் மேல் வகுப்புக்களில் நன்கு கற்று கொள்வதற்கு நிறைந்த வாய்ப்பும் திட்டங்களும் அமைத்தல். - மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் எழுத்துச் சீர்திருத்தம் எங்கே போய் முடியும்? தமிழெழுத்துச் சீர்திருத்தம் பற்றி அரை நூற்றாண்டுக் காலமாக எழுந்து வரும் கருத்துப் பூசல்கள் நமக்குத் தெரியும். தமிழெழுத்து வரிவடிவம் காலந்தோறும் மாறி வந்துள்ள நீண்ட வரலாறும் நமக்குத் தெரியாததன்று. பெரியாரின் `எழுத்துச் சீர்திருத்தம்’, துணைவேந்தர் வாசெ. குழந்தைசாமியின் `தமிழ் எழுத்துச் சீரமைப்பு’, கொடுமுடி சண்முகனாரின் புதிய தமிழ் வடிவம், கொண்டல் மகாதேவனாரின் `எழுத்தும் கருத்தும்’, செ.வை. சண்முகனாரின் `எழுத்துச் சீர்திருத்தம்’, வீரா. இராசகோபாலனாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் புரட்சி’, தமிழ் மொழியியற் கழகத்தின் `எழுத்துச் சீர்திருத்த மலர்’, வெள்ளையாம்பட்டுசுந்தரனார் தொகுத்த `எழுத்துச் சீர்மை’ மணவையாரின் `காலம் தேடும்தமிழ்’, சு. இரத்தினசாமியின் `தமிழ் எழுத்து வரிவடிவ வரலாறு’ முதான நூல்களும் பல இதழ்களில் எழுதிய அறிஞர்களின் கட்டுரைகளும நம் உரிமைப் பார்வைக்கும் பகுத்தறிவுச் சிந்தனைக்கும் உரியவை. இக்கால வளர்ச்சிக்கெனத் தமிழ் எழுத்துத் திருத்தம் தேவையே இல்லை என்பவரைப் பழமைவாதிகள் என்றோ, சமுதாய வளர்ச்சியின் எதிரிகள் என்றோ, புரியாத பிற்போக்காளர்கள் என்றோ, 21ஆம் நூற்றாண்டின் வளர்ச்சி வேகத்தை அறியாதவர்கள் என்றோ, தமிழ்க் குழந்தைகளின் எழுத்துச் சுமையைக் கண்டும் இரங்காதவர்கள் என்றோ, பழிப்பட்டம் சூட்ட வேண்டியதில்லை. அது போல எழுத்துத் திருத்தம் விரும்புவோரைத் தமிழுக்கு எதிரிகள் என்றோ, தமிழ்ப் பகைவர்களின் கையாட்கள் என்றோ, தமிழ் மரபு அறியாதவர்கள் என்றோ, அறிந்தும் கற்பனை வாதிகள் என்றோ, தமிழின் தனித்தன்மையைக் கெடுப்பவர்கள் என்றோ இளிவரவு சொல்ல வேண்டியதுமில்லை. இவையெல்லாம் கொண்ட கொள்கையை வலியுறுத்தும் அறிஞர்கள் கருத்து. எழுத்துச் சீர்திருத்தத்துக்கு யார் யார் இசைந்துள்ளனர், ஆதரவு நல்கினர் என்ற பெயரிவர்தம் பட்டியலைத் துணைவேந்தர் வா.செ.கு. அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இத்திருத்தத்துக்கு இசையாதோரும், வேண்டாம் என்போரும் பலருளர். தமிழாழ்வார் எனப் போற்றப்பெற்ற மொழியறிஞர் தேவநேயப் பாவாணர் வடமொழியெழுத்துக் கலப்பு தமிழின் தூய்மையைக் கெடுக்கும் எனவும் தமிழெழுத்து வரிவடிவ மாற்றமும் தமிழுக்குத் தேவையில்லை எனவும் அழுத்தமாகக் கூறியவர். பெரியாரின் வழித்தோன்றலான அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்த பின்னும் பெரியாரின் எழுத்து மாற்றத்தைப் பின்பற்றவில்லை; கலைஞரின் ஆட்சிக் காலத்தும் இதுதான் நிலை. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., தீபம் பார்த்தசாரதி, பெருஞ்சித்திரனார், புதுவைத் துணைவேந்தர் வேங்கடசுப்பிரமணியன் என்றின்ன பலர் முறையெழுத்து வடிவினையே வேண்டினர். இன்றும் இலங்கை மலேசியா முதலான வெளிநாட்டுத் தமிழினத்தார் முறைவடிவையே கடைப்பிடிக்கின்றனர். அரசாணையிட்ட திருத்த வடிவங்களை ஏற்றுக் கொள்ளாத பல தமிழிதழ்களும் இன்னும் நமது நாட்டில் உள. கணிசமான பொதுப் பெருமக்களும் இதனைப் பின்பற்றவில்லை. ஆணையெழுத்து பாடநூல்களே விடாப்பிடியாக ஆணையெழுத்தைப் பயன் படுத்துகின்றன. ஆணையெழுத்தில் அச்சிட்ட நூல்களைத்தான் பொது நூலகத்தில் வாங்க வேண்டும் என்ற விதியினால், பதிப்பாளிகள் விற்பனை கருதி இவ்வெழுத்தில் அச்சிடுகின்றனர். இந்த ஆணையெழுத்தால் பக்கங்கள் அச்சுச் செலவுகள் கூடுகின்றன. என்பதனை அறிந்தும் நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டியதாயிற்று. தந்தை பெரியார் 1935இல் காட்டிய எழுத்துத் திருத்தங்களை அரை நூற்றாண்டுக் காலம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அவர்மேல் அன்பில்லை என்பது பொருளன்று. அவர்தம் சமுதாயப் போராட்டக் கொள்கைகளை ஏற்று ஒத்துழைத்த தொண்டர்கள்கூட மொழி பற்றிய இந்த ஒன்றினை மேற்கொள்ள முயலவில்லை. அதற்குக் காரணங்கள்: பல மாற்றங்கள் செய்வதற்கு இந்த எழுத்து மாற்றம் தேவையில்லை என ஒரு சாரார் கருதினர். ஒரு தடவை எழுத்து வரிவடிவில் கைவைக்க இடங்கொடுத்து விட்டால், யார் யாரோ அவரவர்ம் ஆதிக்கத்திற் கேற்ப, கைவைத்துக் கொண்டேயிருப்பர்: தொடர்ச்சியின்றி மொழிச்சிதைவும், மொழிக்குலைவும், நூலழிவூம் ஏற்படும் என ஒருசாரார் அஞ்சினர். இஃது இன்றைக்கும் பொருந்தும். பெரியார் நூற்றாண்டு விழாவின் நினைவாக 19.10.1978இல் 15 எழுத்துகட்கு மாற்றான சீர்திருத்த எழுத்துக்களைத் காட்டி அன்றிருந்த அரசு அரசாணை பிறப்பித்தது. ஆணையிட்ட சில திங்கட்குள்ளேயே, ஐகாரமும் ஒளகாரமும் மாறின்றிப் பழைய வடிவங்களிலேயே இருக்கும் என அரசு வெளியிட்டது. இதனை ஓர் எச்சரிக்கை என்று கொள்ளவேண்டும். திருத்தக் காரணங்கள் இன்ன எழுத்துக்கு இன்ன எழுத்துக் குறியீடு அமைய வேண்டும் என்ற முயற்சியை மேற்கொள்வதற்கு முன், திருத்தம் வேண்டிகள் அதற்குச் சொல்லிவரும் காரணப்பாடுகளை முதற்கண் நாம் ஒத்துக கொள்கின்றோமா? ஒத்துக்கொள்ள முடியுமா? ஒத்துக் கொண்டால், இவை தமிழ் மொழியை எங்குப்போய் எப்படிச் சாய்க்கும் என்று உன்னிப்பாகப் பார்க்கவேண்டும். இக் காரணத் தன்மைகளை நோக்கும் போதுதான் உலகமலைகளை ஒன்று சேர்த்தாலன்ன மலைப்பு நம்மைப் பிணிக்கின்றது. முடிந்த நோக்கம் வேறு: தமிழன்று `ஒரு மொழிக்கு ஒலிதான் அடிப்படை: எழுத்துக்கள் ஒலிகட்கு நாம் கொடுக்கும் குறியீடுகள்; ஒலியன்களை நாம் குறைக்கவில்லை; வரிவடிவு மொழிக்கு ஒரு கருவியே. வடிவத்தை மாற்றுவதாலோ குறைப்பதாலோ மொழி பாதிக்கப்படுவ தில்லை’ என்பது எழுத்துத் திருத்திகளின் ஒரு வாதம். இது அஞ்சத்தக்க வாதம் ஆகும். இவ்வாதம் கற்காலத்தைச் சார்ந்தது: பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரு மொழிக்கும் அதன் எழுத்து வடிவுக்கும் உயிரும் உடலும் போன்ற பிணைப்பு மரபாக, வரலாறாக வந்திருக்கிறது. ஓர் எழுத்து வடிவைப் பார்த்தவுடன் இது இன்ன மொழி என்று நாம் அறிந்துகொள்வதில்லையா? ஒரு மொழியின் ஒலிக்கும் அதன் எழுத்துக்கும் மரபுத் தொடர் பில்லை என்றால், தமிழ் மொழியின் ஒலிகளை எந்த எழுத்திலும் எழுதலாம் என்ற அச்சமான ஓர் உட்கருத்து இதனுள் அடங்கிக் கிடக்கிறது என்பதனை உணர்த்த விரும்புகிறேன். தமிழிசைக் கிளர்ச்சியில் இசைக்கு மொழி தேவையில்லை; எந்த மொழியிலும் பாடலாம் என்ற வாதத்திற்கும் இதற்கும் வேறுபாடு உண்டா? `உயிர்கள் கொல்லப் படுவதில்லை; உடல்களை யாதும் செய்யலாம்’ என்ற கீதையின் போக்கே இங்கு வெளிப்படுகின்றது. இந்த முடிவு நோக்கத்தை மேலும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் வேண்டுநரின் கருத்துக்களையும் விளக்கங்களையும் தொகுத்துக் கணித்துப் பார்த்தால், இந்திய நாட்டின் ஒருமைப்பாடு நோக்கி, தேவநாகரி எழுத்துக்களைத் தமிழும் மேற்கொள்ள வேண்டும் என்று அறைவாரும் உளர். உலகவொருமைப்பாடு கருதி உரோமன் எழுத்துக்களையே தமிழ் ஏற்றுக்கொள்ளலாம் எனவும் இதனால் ஆங்கிலம் கற்கும் எல்லாத் தமிழ்க் குழந்தைகட்கும் ஒரு மொழிச் சுமை குறையும் எனவும் வலியுறுத்தும் அறிஞர்களும் உளர். மேற்குறித்த இருவகையினருள் உரோமன் எழுத்துவாதிகளே குறிப்பிடத்தக்கவர்கள். `மும்மொழிக் கொள்கை ஏற்கப்பட்டு அது வட மாநிலங்களில் செயல்படுத்தப்படுமாயின் வரிவடிவ எளிமை காரணமாக மற்ற மொழிகளை விடத் தமிழ் அதிக மாணவர்களால் கற்கப்படுவது சாத்தியமாகும்’ என்பது ஓர் அறிஞர் கருத்து. எனவே இவர் கட்கெல்லாம் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் ஓர் இடைகழி நோக்கே என்பது மறுக்கவோ மறைக்கவோ இயலாத உண்மை. இன்றைய அறிவியல் யுகத்தில் எவ்வகையாலும் தமிழின் தூய்மையும், தனித்தன்மையும் இன்னோர்க்குக் கசப்பாகும். முதல்வர் கலைஞர் கருணாநிதியார் பின்வருமாறு எழுதுகின்றார். `தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்தம் செய்யும் பேரால் தமிழையே சீர்திருத்தம் செய்யப்போவதாகப் பறைசாற்றித் திரிபவர்களும, இந்தப் போர்வையில் தமிழின் ஒலி-ஓசையைக்கூட மாற்றியமைக்கும் செயல்களில் துணிந்திறங்கும் தோழர்களும் கெடுத்து விட்டிருக்கிறார்கள். ஒலியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, தமிழை ரோமன் லிபியில் மாற்றினால்கூடப் பரவாயில்லை என்று சொல்லும் ஆபத்தான வாதமும் சிலரால் துணிந்து எழுதப்படுகின்றது. எனவே கலைஞரின் கருத்து எழுத்துத் திருத்திகளின் உள்நோக்கத்தை வெளிப்படுத்தக் காண்பீர்கள். துணை வேந்தர் வா.செ. குழந்தைசாமி தமிழ் எழுத்துச சீரமைப்புக்குக் கூறும் அத்தனை காரணக்கூறுகளும் உரோமன் எழுத்தின் அடித்தளத்தைக் கொண்டவை. செருமானிய, இந்தோநேசிய, மலேசிய மொழிகள் எல்லாம் உரோமன் வடிவத்தைப் பெற்று வளர்கின்றன என அவர் எடுத்துக் காட்டுவர். `எப்படியோ உயிர்மெய் வடிவங்களை உருவாக்குவதில் எண்ணற்ற சிக்கல்களை நாம் உருவாக்கிக் கொண்டோம் எனவும், `உரோமன் வரிவடிவத்தோடு ஒப்பிடும்பொழுது நமது வரிவடிவத்தின் சிக்கல்கள் புரியும்’ எனவும் அவர் சொல்வதி லிருந்தே தமிழுக்கு அவர் கொண்ட அளவுகோல் உரோமன் என்பது தெளிவாகும். உயிரும் மெய்யும் என்ற இரண்டோடு உயிர்மெய் என்ற மூன்றாவது கூட்டுறவைக் கண்டதும், அதற்கெனத் தனிக்குறியீடுகள் கொண்டதும் தமிழ் மொழிக்கே யுரிய திராவிடவியலாகும். இத் தன்மையை வடமொழியும் வட விந்திய மொழிகளும் ஏற்றுக்கொண்டபின், அது இந்திய மொழிகளின் தன்மையாக விரிந்தது. `இத்திராவிடவியல் சிக்கலானது. அறிவியல் வளர்ச்சிக்கு உதவாதது’ என்று வா.செ. குவும் அவர் போன்ற எழுத்து மாற்றம் வேண்டுநரும் சொல்வதற்கு அடித்தளம், உரோமனை அளவுகோலாகக் கொண்டதாகும். உயிர்மெய் என்ற கூட்டுநிலையை நாம் உடன்படாவிட்டால், தமிழ் மொழிக்கேயன்றி இந்திய மொழிகட்கும் உடன்படா விட்டால் இலக்கணத்தில் என்ன சிதைவுகள் ஏற்படும் எனக் கற்பனை செய்யவும் இயலாது. எழுத்துத் திருத்திகட்கு இது பற்றிய கவலை இல்i. உரோமன் அளவை கருவிகட்கேற்பத் தமிழெழுத்து வடிவங்களைச் சீரமைப்புச் செய்யவேண்டும் என்று சொல்லும் அறிஞர் வா.செ. குழந்தைசாமி குறியீடு என்பது உயிர், மெய்எழுத்துக்களின் பாதியளவு அகலமுள்ளதாகவும் இரு இணைகோடுகட்குள் அடங்குவதாகவும் இருக்கவேண்டும் எனவும் நெறி கூறுவர். இந்த அளவியல் உலக மொழிகளின் பொதுமையா? எந்த மொழியின் அடிப்படையில் இந்த அளவு முறை தமிழுக்கு இலக்கணமாகச் சொல்லப்படுகின்றது? மேலும் இருஇணைக் கோட்டிற்குள் தமிழ் வரிவடிவுகளை அடக்கிவிட்டால் பொறிவழி அச்சிற்கும் தட்டச்சு, தொலைபேசி, மின்னியல் தொலைபேசி ஆகிய வற்றிற்கும் பெரிதும் துணை செய்யும் என்பது இன்னோர்தம் கருத்து. - மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம் அகத்திணை பாகுபாடு அகப்பொருள் புறப்பொருள் என்னும் தமிழ் நூல்வகை இரண்டனுள் சிறந்த அகத்திணையாய்வு இனிப் பன்முறையான் மேற் கொள்ளப்படும். ஆய்வுக்கிடை எத்தனையோ கருத்து மாறாட்டங்கள் வல்லவன் இட்ட முடிச்சுப்போலத் தோன்றி நம்மை மலைவிக்கின்றன; குழந்தைக்குப் போடும் புதிர்க்ள் போல நம்மறிவைச் சோதிக்கின்றன. கயிறு செய்வோன் முடிச்சோடு செய்வதில்லை. அதனைப் பயன் கொள்வார் தம் அறியாமை யாலும் துணிச்சலாலும் முடிச்சுக்கள் பட்டுவிடுகின்றன. “புதிர்கள் போடுவார்க்கேனும் விளங்கவேண்டுமல்லவா?” சிலர்க்குப் புதிர்கள் இடத் தெரியுமேயன்றி அவற்றை விடத்தெரியா. இங்ஙனமாக அகத்திணைக்குக் காலந்தோறும் ஏறிய முடிச்சுக்களும் பலவாயின. இப்படி முடிச்சுக்களை - கடும் புதிர்களைக் கண்டு மலையாதும், இடையில் தோன்றிய முடிச்சு எடுத்துப் புதிர்விடுத்துப் போவதுதான் ஆய்முறை என்று மயங்காதும், ஆய்வாளன் அகத்திணை மூல இலக்கியத்தோடு நேரடி அறிவுத் தொடர்புகொள்ளும் அடியவன் போலச் செம்பொருள் காண்பான். மரபியல், நூலியல், அறிவியல், உளவியல் பற்றிச் சொல்லுங்காலைத் தம் முயற்சிக்கு ஏற்ப அகத்திணை ஐயங்கள் அகன்றொழியக் காண்பான். தொல்பழம் படைப்பான அகவிலக்கியத்தின் உள்ளங்காண முயலும் நமக்கு, இற்றைத் தமிழ் மொழியின், நாகரிகத்தின் வேறுபாட்டால் ஐயப்பாடு பல தோன்றுதல் இயல்பினும் இயல்பே. ஐயத்தோற்றம் உண்மைத் தோற்றத்துக்கு வழி காட்டும் ஆதலின், அகத்திணைக் கல்வியாளர்க்கு உண்டாம் ஐயக்கூறுகளை முதற்கண் மொழிகுவல். (அ) அகத்தின் இலக்கணம் யாது? அகப்பாட்டு என்பது காதற் பாட்டாயின், காதற்றிணை என்று பெயர் வைத்திருக்கலாமே? அகத்திணை எனப் பெயரியதேன்? அகம் காதல் என்பன ஒருபொருட் பன்மொழியா? இடைக்கால உரையாசிரியர்களும் இக்காலப் புலவர் பெருமக்களும் அகத்திற்குக் கூறிவரும் இலக்கணம் தகவுடையதா? (ஆ) அகத்திணை எழுவகைப்படும் என்ற பாகுபாடு இசையுமா? இவ்வெண்ணிக்கைதானும் பிழையெனத் தோற்றவில்லையா? சங்கவிலக்கியத்து 1862 அகப்பாக்களுள் கைக்கிளைக்கு நான்கே, பெருந்திணைக்குப் பத்தே உரியவாகக் கற்கின்றோமே! கைக்கிளை பெருந்திணைகள் அகமாயிருப்பவும், சங்கச் சான்றோர் இவற்றைப் போற்றிப் பாடல் பல செய்யாமைக்கு ஏதுவென்னையோ? தமிழ் இலக்கியமெல்லாம் அகம் புறம் என்னும் வகையிரண்டாய் அடங்கும் என்ற கருத்துரை ஏற்புடைத்தா? (இ) தமிழ் மொழிக்கண் அகத்திணை நூல் பிறத்தற்கு உதவிய சூழ்நிலைகள் யாவை? அகத்திணைக்கு விதிகள் வகுத்தார் யாவர்? ஒப்பற்ற அறிவு முனைவன் ஒருவன் இது விதி, இது மரபு என்று கற்பித்தருளினனோ? அன்றிப் பலர் கூடி ஆய்ந்த அறிவுக் காட்சியின் விளைவோ? அகவிலக்கியம் இலக்கிய வுலகிற்கு ஒரு தனித்தமிழ் ஞாயிறு எனவும், எண்ணம் நுண்ணிய தமிழறி வினோர் அகலக்கருதி ஆழநினைந்து படைத்தளித்த இலக்கியப் புதுக்கோள் எனவும் சொல்லி மகிழ்வோமேல், அன்ன புதுபபடைப்பினைச் செய்தற்கு உரிய நோக்கம் என்ன? அந்நோக்கம் அறவழிப்பட்டதா? தலைவன் தன் கற்புடை நல்லாளை அழவைத்துப் பரத்தை வேட்டம் நாடுகின்றான்; இந்த இல்லற வழுக்கலை ஒரு திணைப்பொருளாகக் கொண்டு அகத்திணை பாடுகின்றதே! இதுவா நோக்கம்? இதுவா அறம்? (ஈ) பாடுவார்க்கு ஏராளமான விதிகளை இம்மியும் வழுவலாகா மரபென விதிக்கும் அகவிலக்கணம் கற்பனை யூற்றுக்குக் கல்லாகாதோ? அறிவுக் கூர்மையை மழுக்கும் அரம் ஆகாதோ? அவையக்கால அகப்புலவர்கள் தொல்காப்பியம் கூறும் அகவிதிகளை முழுதும் பின்பற்றினர்கொல்? முரணியனவும் பெருக்கியனவும் உளவோ? இவ்வாறு அகத்திணை குறித்து ஐயவினாக்களை அடுக்கிச் சொல்லுதலோ எளிது; அறிவொக்கும் விடைத் தெளிவு காண்பது அத்துணை எளிதன்றேனும், காண முயல்வதும் முயல்விப்பதும் இவ்வாராய்ச்சியின் பாடாகும். சங்க விலக்கியமே நாம் பெற்றிருக்கும். தமிழ் நூல்களுள தொன்மையான அகவிலக்கியம், இலக்கிய இலக்கண ஆராய்ச்சி, காதலர்கள் போல தம்முள் பிரிந்து நில்லாதவை; பிரிக்க முடியாதவை; வலிந்து பிரித்தால் வளப்படாதவை. ஆதலின், அகவிலக்கியமும் அகவிலக்கணமும் சங்கநூற் செல்வங்களின் பெருந்துணை கொண்டு ஒருங்கு ஆராய்தற்குரியன. ஆயுந்தோறும் மேலெண்ணிய ஐயச் சிக்கல்கள் ஒருவாறு அறுபடக் காண்பீர். அகத்திணைப் பிரிவுகளின் அடிப்படை 1. கைக்கிளை 2. குறிஞ்சி 3. முல்லை 4. மருதம் 5. நெய்தல் 6. பாலை, 7. பெருந்திணை எனப்பட்ட ஏழும் அகத்திணைப் பாகுபாடாம். இவற்றுள் குறிஞ்சி முதல் பாலை இறுதியாகிய இடைநின்ற ஐந்தும் ஐந்திணையென ஒரு கூட்டாக வழங்கப்படும். இப்பிரிவுகளுக்கு அடிநிலைக் காரணம் யாது? கைக்கிளையாவது ஒருதலைக்காமம் என்றும், ஐந்திணையாவது ஒத்த காமம் என்றும், பெருந்திணையாவது ஒவ்வாக்காமம் என்றும் அறிந்தோர் சொல்லுவர். இங்ஙனம் காமத் தன்மைகள் அடிப்படை ஆகுமாயின், ஐந்திணையை ஒரே பிரிவாகக் கொண்டு, அகத்திணைப் பிரிவுகள் மூன்றெனல் பொருந்து மேயன்றி ஏழெனல் பொருந்தாதுகாண். மேலும், கைக்கிளை பெருந்திணை என்னும் பெயர்க்குறிகள் தம் காமத்தன்மை சுட்டும் கை, பெரு, அடைகள் பெற்றுள. அது வொப்ப அன்புத்திணை என்ற பெயரன்றோ ஐந்திணைக்கு வருதல் வேண்டும்? ஐந்திணை என எண்ணடையிருத்தல் ஒக்குமா? ஆதலின் அகப்பிரிவுகட்குக் காமத்தன்மை அடிப்படையாகாது. தமிழ் அகத்திணை கூறும் பல்வேறு காதற் கூறுகள் தமிழகத்தின் பல்வேறு நிலக்கூறுகளைச் சார்ந்து எழுந்தவை என ஒரு கோட்பாடு உளது.1 நம் தாயகத்துப் பாலை என்று சுட்டிக் காட்டத்தக்க நிலப்பால் இல்லை (தால், 947) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நாற்றிணைகளுக்கே இயல்பான நிலப்பாங்குகள் உள. இதனால் நானிலம் என்பது உலகிற்கு ஒரு பெயராயிற்று. பாலைக்கு இயல்நிலம் இன்றேனும், திரிநிலம் உண்டு என்றும், காடும் மலையும் கோடைத் தீ வெப்பத்தால் தத்தம் பசுமை இழந்த திரிநிலையே பாலை என்றும் சிலப்பதிகாரம் நன்கு தெளிவுபடுத்தும். வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தானலந் திருகத் தன்மையிற் குன்றி முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளும் (சிலப். 15, 95-9) ஒரு காலவேற்றுமையால் இரண்டு திங்கள் இயல்புமாறித் தோன்றும் நிலச்செயற்கையே பாலைத்திணைக்கு இடமாம். எனினும், நிலையா நீரில்லா நிலத்திலிருந்து நீடித்து நிலைக்கும் பன்னூறு பாலைப் பாடல்களை விளைவித்துககொண்ட சங்க காலச் சொல்லேருழவர்களின் இலக்கிய உழவு அறிவின் கொழுமுனைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இங்ஙன் பாலைத் திணைக்கு ஒருவகையான நிலம் உண்டென்று கொள்ளினும் கைக்கிளை பெருந்திணைகட்கு எவ்வாற்றானும் நிலம் இல்லை என்பது நூன்முடிவு. ஆதலின் எழுதிணை அகப்பிரிவு நிலவடிப் படை கொண்டது என்றாலும் பொருந்தாமை காண்க. திணை ஏழாயினமைக்குக் காரணம் முக்காமத்தன்மையும் அன்று; நானிலப் பாங்கும் அன்று எழுவகைக் காதலொழுக்கங் களே உரிப்பொருள்களே - ஆம், என்று அறிவோமாக. இவ்வொழுக்கங்கள் தனி நிலைகொண்டவை; தம்முள் தொடர்பு வேண்டி நில்லாதவை என்பது நீள நினையத்தகும் ஒரு சிறப்பியல்பு. ஆதலாலன்றோ குறிஞ்சி முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பவை ஒத்த காமத்தன்மையால் ஒன்றாயினும், ஐந்திணை எனத் தனிநிலை குறிக்கும் எண்ணுப் பெயர் பெற்றன. குறிஞ்சி முதலாய குறியீடுகள் அவ்வந்நிலத்துக்கு உரிய மலர்களின் பெயர்களே என்றும், இப்பெயர்கள் பின்னர் உரிப்பொருள்களைப் புலப்படுத்தும் குறியீடுகளாயின என்றும் கருதுவர் ஒரு சாரார்2. அற்றன்று என மறுத்துக் குறிஞ்சி முதலாயவை புணர்தல் முதலாய உரிப்பொருள்களை முதற்கண் தருவன எனவும் பின்னரே மலர்களையும் நிலங்களையும் குறிக்கப்போந்தன எனவும் கருதுவர் மற்றொரு சாரார். முதற்பொருள் எது? வழிப்பொருள் எது? எனத் துணிவதில் இன்னோர் மாறுபடுவர். இருவகைப் பொருளும் குறிஞ்சி முதலாம் சொற்களுக்கு முன்னோ பின்னோ உண்டு என்பதிலும், அகத்திணையிலக்கணம் வகுத்த நாளில் இருபொருளும் வழங்கின என்பதிலும் இன்னோர் வேறுபட்டிலர். எனினும் கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் எழுதிணை என எண்ணுங்கால், குறிஞ்சி முதலாம் சொற்கள் தரும், தரவேண்டும் பொருள்கள் என்ன? நிலமில்லாக் கைக்கிளை பெருந்திணை களோடு எண்ணப்படுதலின், இவற்றுக்கு நிலப்பொருள் செய்தல் ஆகாது; உரிப்பொருள் கோடலே முறை என்பது தெளிவு. ஐந்திணையுள் அடங்கிய ஒவ்வொன்றும் தனித் திணையாகக் கருதப்பட்டமையின், அவையப் புலவர்கள் ஐந்திணை மேலும் பாடாது ஆளுக்கு ஒரு திணையாக இலக்கியம் கண்டனர். மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன் கருதுங் குறிஞ்சி கபிலன் - கருதிய பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே நூலையோ தைங்குறு நூறு. எட்டுத்தொகையுள் ஐங்குறுநூறும் கலித்தொகையும் பாடினோர் எண்ணிக்கை குறைந்த நூல்கள். ஆண்டும் திணைக்கொரு ஆசிரியரான செய்தியை - ஐந்திணையையும் ஓராசிரியன் பாடா முறையை மேலை வெண்பாக்கள் அறிவிக்கும. பெருங்கடுங்கோன் பாலை கபிலன் குறிஞ்சி மருதனிள நாகன் மருதம் அருஞ்சோழன் நல்லுத் திரன்முல்லை நல்லந் துவனெய்தல் கல்விவலார்த கண்ட கலி. பெருங்கடுக்கோ பாலைத்திணை (பிரிவு) ஒன்றனையே பாடிப் `பாலை பாடிய’ என்ற சிறப்புப் பெற்றவர். ஒரு திணைக்குரிய உரிப்பொருளைப் பாடுங்காலும், எல்லாத் துறை மேலும் பாடாது ஒரு துறையளவில் பாடிநின்ற அகப் புலவர் பலர். வெறி பாடிய காமக்கண்ணியார் ஒரு துறை பாடிய சிறப்புப் புலவர். மேலும் முதல் கருப்பொருள்களைச் சிறிதும் கூறாதே உரிப்பொருள் மட்டும் கூறும் அகப்பாடல்களும் பலவுள. நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே இமைதீய்ப் பன்ன கண்ணிர் தாங்கி அமைதற் கமைந்தநங் காதலர் அமைவில ராகுதல் நோமென் னெஞ்சே (குறுந் 4) உரிப்பொருள் ஒன்றே நுவலும் இவ்வனைய பாக்கள் பாலைத்திணை, குறிஞ்சித்திணையெனச் செவ்விதின் பெயர் பெறுகின்றன. காரணம் திணைமையாவது உரிப்பொருளே பற்றியது. முதலும் கருவுமோ அப்பொருட்குத் துணைமையாம் அத்துணையே. ஆதலின் அகத்திணை எழுமைப் பகுப்பு காதலர்களின் கைக்கிளை புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல்பெருந்திணை என்னும் காமவொழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்று தெளியத்தகும் அகத்தின் இலக்கணம் என்னை? அகம் என்ற கிளவிக்குப் பொருள் என்னை? இவை இனித் தொடர்ந்து ஆயவேண்டுபவை எனினும், இப்போது ஆய்வு பெறுமாறில்லை. இடையே சிலபல அகச்செய்திகள் விளக்கம் பெற்ற பின்பு. இவ்வாய்வைத் தொடங்குது தெளிவுக்கும் முடிபுக்கும் எளிமை செய்யும். அகத்திணையும் ஐந்திணையும் அகத்திணைப் படைப்பில் கைக்கிளை பெருந்திணைகளை விட ஐந்திணை பல்லாற்றானும் மேலாயது என்பதற்கு உறழ்கூற்று வேண்டா. அகத்திணைத் தொல்லாசிரியர் தொல்காப்பியர் கைக்கிளை பெருந்திணைகளின் பொருள்களை இருவேறு தனிச்சிறு சூத்திரங்கள் அளவில் (995-996) அகத்திணையியல் இறுதிக் கண்ணே சொல்லி அமைகுவர். `கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்’ (949) என எண்ணுங்கால் முதலிடம் பெற்ற கைக்கிளைகூடப் பொருள் கூறுங்கால் அவ்விடம் பெறாமை கருதத்தகும். `கைக்கிளைக் குறிப்பே’, `பெருந்திணைக் குறிப்பே என்று இவ்விரு திணைகளின் சிறுநிலை தோன்ற அவற்றின் பொருட் சூத்திரங்களை முடித்துக் காட்டுவர். `குறிப்பு’ என்ற சொற்பெய்வால் இவ்விரு திணைகள் விரித்துப்பாடும் பெற்றியவல்ல என்று சுட்டுவர். இதனால் தொல்காப்பியம் ஐந்திணையே அகத்திணை என்பதுபோல, ஐந்திணையின் இலக்கணக் கூறுகளைப் பலபட விரித்துரைப்பக் காணலாம். அகத்திணையியல் 55 நூற்பாக்களைக் கொண்டது. அகத்திணை எனப் பொதுப் பெயர் பூண்டிருந்தும், இதன் 50 நூற்பாக்கள் ஐந்திணையின் நெறிகளையே விரித்து மொழிதல் காண்க. களவில் கற்பியல் பொருளியல் மெய்ப்பாட்டியல் எனப்படும் பிற நான்கு இயல்களுங்கூட ஐந்திணை நுவலும் அமைப்பினவாகவே உள. ஐந்திணைக் காதல் அறநலத்தது. உலகம் ஒப்புவது, மக்கட்கு இயல்வது, இலக்கியத்துக்கு இசைந்தது. இன்ன நன்னயங்களை நோக்கிச் சங்கப் புலமையினோர் ஐந்திணைத் துறைகளையே பெரிதும் பாடினர். தொல்காப்பியர் செய்தது போலக் கைக்கிளை பெருந்திணைகட்கு உரிய ஒதுக்கிடம் நல்கினர். இப்பாங்கின்படி, ஐந்திணை பெரிதும், ஏனை இருதிணை சிறிதுமாக இந்நூலிலும் ஆராய்ச்சிப்படும். ஐந்திணை இவ்வளவு மேலாந் தரத்ததெனினும், அகத்திணை ஐந்திணை என்ற சொற்கள் ஒருபொருட் பன்மொழியாகா என்பது அறிக. இவற்றை ஒன்றெனக் கருதியும், கைக்கிளை பெருந் திணைகளை அகத்தின் வேறெனக் கருதியும் வளர்ந்த எழுத்தெல்லாம் பெரும் பிழை. “அகத்திணையின்கண் கைக்கிளை வருதல் திணை மயக்காம் பிறவெனின், கைக்கிளை முதற் பெருந்திணை யிறுவாய எழுதிணையினுள்ளும் கைக்கிளையும் பெருந்திணையும் அகத்தைச் சார்ந்த புறமாயினும்” (பா. 4) என்னும் திருக்கோவை யுரையாசிரியர் கருத்துரை இப்பிழையிடங்களுள் ஒன்று. ஒருகுடிப் பிறந்த பல்லோருள் சிலர் சிறப்புற்றும் மற்றும் சிலர் சிறப்பின்றியும் இருந்ததற்காக, அன்னோர் ஒரு குடிப்பிறப்புக்கு இழுக்குண்டோ? ஐந்திணை நோக்கக் கைக்கிளை பெருந்திணைகள் சிறப்பிலவாகலாம்; எனினும், அவ்விரண்டும் எழுதிணை எனப்பட்ட அகத்திணை யாதற்கு இழுக்கில்லை. கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை யென்ப (தொல், 946) என்ற தொன்னெறிப்படி, அகத்தின் முதலாகவும் இறுதியாகவும் எண்ணுப்பெற்ற கைக்கிளை பெருந்திணைகளை `அகத்தைச் சார்ந்த புறம்’ என்று கோவையுரையாசிரியர் குறிப்பது அடி முரணில்லையா? இவ்விரண்டையும் புறமாக்கிய அவர் `அகத்தை” என்ற சொல்லால் முழுதும் ஐந்திணையைத்தானே கருதிவிட்டார் என்பது புலப்படவில்லையா? கைக்கிளை பெருந்திணைகளின் பெருமைப்பாடு எவ்வாறாயினும், அவற்றை அகத்திணைப் பகுப்பினின்று தள்ள முடியாமைக்கும், ஐந்திணையோடு உடனெண்ணு தற்கும் குருதி யொப்பன்ன பண்பொப்பினை இவற்றிடைத் தமிழ் மூதாளர் கண்டிருத்தல் வேண்டும். அவ்வொப்பினை பின்னியல்களில் விரிப்போம். இவ்விரண்டையும் சேர்த்து கொள்ளாவிடின், அகத்திணை நகமற்ற விரல்போலவும் படியற்ற மனைபோலவும் முழுவனப்பில் ஒரு குறைவுபடையதாகத் தோன்றும் என ஈண்டுக் குறிப்பிடல் போதும், ஏழு திணைகளையும் ஒருங்கு சுட்ட வேண்டுங்கால், அகத்திணை என்னும் பொதுக் கூறியீட்டை ஆளுதல் தொல்காப்பிய வழக்கு. புறத்திணை மருங்கிற் பொருந்தி னல்லது அகத்திணை மருங்கின் அளவுத விலவே. (தொல். 1000) அகத்திணை மருங்கின் அரில்தப வுணர்ந்தோர். புறத்திணை யிலக்கணம் திறப்படக் கிளப்பின் (தொல். 1001) அகத்திணைப் பொதுப்பெயரை ஐந்தினைப் பிரிவின் மறு பெயராகத் தொல்காப்பியம் ஆண்டதில்லை. “மக்கள் நுதலிய அதன் ஐந்திணை” (999) “அன்பொடு புணர்ந்த ஐந்திணை (1037) என்றாங்கு உரிய பிரிவுப் பெயரால் விதந்து சொல்லும் நடைநினையத்தகும். `அகன் ஐந்திணை’ என்ற பொதுவடையால், ஐந்திணை அகத் திணையுள் ஒருவகை என்பதும், அகக்கைக்கிளை அகப்பெருந் திணை எனப் பிறவகைகளும் உள என்பதும் கொள்ளக்கிடத்தல் காண்க. “அன்பின் அகத்திணை களவெணப்படுவது எனனாது” என்னாது, “அன்பின் ஐந்திணை களவெனப்படுவது” என்ற இறையனாரும் “அகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறியளாவி” என்று விழிபபோடு சொற் பெய்தலை ஒப்பு நோக்கவேண்டும். ஆதலின் கைக்கிளை பெருந்திணைகள் குறைந்த பாடல்கள் உடையனவே யெனினும் அகத் திணை ஆராய்ச்சியில் இடம்பெற வேண்டியவை என்பது தெளிவு. அடிக்குறிப்புகள் 1. The Ancient Tamils, Part 1: p 46. S.K. Pilllai. 2. தொல்-பொருள். ரு. இளம்பூரணம்; தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி ப. 24; பழந்தமிழர் நாகரிகம்; ப. 18. ளுவரனநைள in கூயஅடை டுவைநசயவரசந யனே ழளைவடிசல ஞ. 273. 3. இறையனார் அகப்பொருள். பவானந்தர் கழகப் பதிப்பு, ப. 25 தொல். பொருள். 5. நச்சினார்க்கினியம்; டாக்டர் பாரதியார். தொல், அகம், பாயிரம் இளவழகனார் அகத்திணையியல் விளக்கம், ப. 87-89. அடிக்குறிப்பு. - மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம் புதிய பார்வை ஜுன் 2016 அகத்திணை பாகுபாடு 1. ஐந்திணை - களவியல்- இயற்கைப் புணர்ச்சி அகத்திணையின் பெருங்கூறான ஐந்திணைக் காதல்களை இனி ஆராய்வோம். சங்க அகப்பாடல்களைச் சான்றாகக் கொண்டு ஐந்திணைத் துறைகளின் திறன் காண்போம். களவொழுக்கம் கற்பொழுக்கம் என ஐந்திணை இருபாற்படும் என்று பொதுவாகக் கூறினாலும், குறிஞ்சிக்களவு குறிஞ்சிக் கற்பு, பாலைக்களவு பாலைக்கற்பு, முல்லைக்களவு முல்லைக்கற்பு, மருதக்களவு மருதக்கற்பு, நெய்தற்களவு நெய்தற்கற்பு எனத் திணைதோறும் இரண்டும் கொள்ளத்தகும். இங்ஙனம் கொள்வதால் களவுக்காதலும கற்புக்காதலும் எல்லா நிலத்திலும் நிகழ்வனவே என்னும் உலக வழக்கம் பெறப்படும். காதலுக்குக் காரணம் காமப்புருவம் எய்திய நங்கை, தாய் ஏவற்படி தினைப்புனம் செல்கின்றாள். தோழியரும் உடன்செல்கின்றனர். முற்றிய கதிர்களைக் கவரும் கிளிக்கூட்டத்தைத் தட்டைக் கருவிகொண்டு வெருட்டுகின்றனர். அருவியாடியும் தழை கொய்தும் மலர் தொடுத்தும் வந்து அசோகந்தண்ணிழலில் அமர்கின்றனர் (குறிஞ்சிப், 39, 102) குமரப்பருவம் எய்திய நம்பி தன் வேட்டைநாயொடு மலையெலாம் சுற்றித் திரிகிறான். பல் மணம் கமழும் தலைமாலை அணிந்து இவ்வேட்டுவக் குமரன் நங்கை இருக்குமிடத்துக்குத் தானாக வந்து சேருகிறான் (அகம். 28). தன் அம்பால் புண்பட்ட மதயானை இப்பக்கம் பேர்ந்ததுண்டோ? போக நீவிர் கண்டதுண்டோ? என்று மலரூதும் வண்டின் இசைக்குச் செவி கொடுத்திருந்த இளம் பெண்களை உசாவுகிறான் (அகம். 388) அப்போது அவனுக்குக் காதற் குறிப்பு இல்லை. மார்பில் செங்கழுநீரும் தலையில் வெட்சிப்பூவும் அகத்துச் சந்தனப் பூச்சும் கையில் வில்லம்பும் கொண்டு முன்னிற்கும் இளைஞனுக்கு முன்னே இளமாதர்கள் நிற்கக் கூசினர். வினாவுக்கு மறுமொழி அன்னோர் நாவெழவில்லை. இதற்கூடே நம்பியின் கண்ணும் நங்கையின் கண்ணும் நட்புக்கொண்டன. காதலாடின; காமத்தீப்பற்றின. (அகம். 48). கண்டதும் காதல் என்பது இதுவே. “கண் தரவந்த காம ஒள்ளெரி” (குறுத 305) என்று குப்பைக் கோழியார் காமத்தின் பிறப்பிடமாகக் கண்ணை கூறுவர். கல்லொடு கல் சேர்ந்து தீ உண்டாவதுபோலத் கண்ணொடு கண்ணும் சேர்ந்து தீ உண்டாம்; அது காமத்தீயாம் என்று இப்புலவர் குறிப்பிப்பர். கல் பிறப்பித்த தீ பஞ்சு முதலான பற்று பொருள் இல்லையாயின் வளராது. கண் பிறப்பித்த காமத்தீ தானேயும் வளரவல்லது என்பதை `ஒள்ளெரி’ என்னும் அடையால் அறியலாம். கண்கள் கலந்தபின் காதலர்தம் உள்ளங்கள் கலக்கின்றனவா? முன்னரே உள்ளங் கலந்தமையைக் காட்டும் அறிகுறியா கண்கலப்பு? நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும் (தொல். 1041) ஒன்றுபட்ட உள்ளக்குறிப்பைத் தலைவன் பார்வை தலைவிக்கும், அவள் பார்வை அவனுக்கும் உரைக்கின்றன. ஒரு கருத்தை வாயாற் சொன்னால் வெளிப்படையாக நன்கு விளங்கும். வாயாற் சொல்லிக் கொள்ளுதல் காதலுலகிற்குப் பொருந்துமா? காதல் நோயை வளர்க்குமா? ஆதலின் காதலர்கள் உள்ளக்கருத்தைக் கண்ணாற் சொல்லிக்கொள்ப அஃது அவர்கட்கு வாயாற் சொல்லிக் கொள்வதுபோலப் புரியும். வாயின் செயலைக் கண் செய்தலால், “நாட்டம் இரண்டும் உரையாகும்” என்பர் தொல்காப்பியர். காதற் களத்தில் கண்ணுக்குரிய மதிப்பு சிறிதும் வாய்க்கில்லை. “வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல” என்பர் திருவள்ளுவர். கண் தந்த காமம் என்பதற்காகக் காமத்துக்குக கண் காரணமாய்விடுமா? வீரனைப்பெற்ற வயிறு (“ஈன்ற வயிறோ இதுவே” புறம் 89) என்றால், வீரன் பிறப்புக்கு வயிறு காரணம் என்று சொல்ல மாட்டோம். ஆதலின் உள்ளக் காமம் கண்ணில் வெளிப்பட்டது என்பதல்லது காமத்துக்கும் கண்ணுக்கும் பிறப்புத் தொடர்பின்று. பால் வேறுபட்ட ஆண்மையும் பெண்மையும் பார்த்ததும் உள்ளம் பறிகொடுத்துக் காமப் பித்தேறுதற்குக் காரணம் என்கொல்? இவ்வினா இன்னும் தீரா வினாவோ. காதல் காரணம் என்று எளிதாகச் சொல்லி விடுகின்றோம். காதல் என்பதுதான் யாது? இதற்கு அறிவியலும் விடை கூற ஒண்ணாமையைக் கென்னத்து வாக்கர் `பாலுடலியல்’ நூலில் ஒப்புகிறார்: “பாலுணர்வுபற்றி ஒரு பொருத்தமான கொள்கையை நாம் கூறுவதற்கியலவில்லை என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். பெண்ணொருத்தியைக் காண்கின்றான்; அவள் மொழியைக் கேட்கின்றான்; அவள் மணத்தை மோக்கின்றான். அவள் மெய்யைத் தீண்டுகின்றான். கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் போது உள்ளம் காமத்தின் கொள்கலம் ஆகின்றது. உடம்பில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. இவையெல்லாம் புணர்ச்சியிற்போய் முடீவடையும் காதல் புறநிலைகளைக் கண்டு கூறுமளவே அறிவியல் செய்யக்கூடியது. அதன் தோற்றத்தை இது தெளிவாக்குமா? இல்லவே இல்லை.” ஏராளமான இளைய ஆண்களும் பெண்களும் நாள்தோறும் சாலையிலும் சோலையிலும் ஒருவரையொருவர் காண்கின்றனரே, கண்டும், ஒருவன் யாரோ ஒருத்திமேல் காதல் கொள்கின்றான்; ஒருத்தி எவனோ ஒருத்தன்பால் கண்சாய்க்கின்றாள். பலரை விலக்கி ஒருவரைத் தேர்ந்து விரும்பும் இச்சிறப்புப் பார்வைக்குக் காரணம் இதுவென உயிரியல் நூலும் சொல்ல முடிவதில்லை. இஃது. ஆய்வுக்கு உரிய அரிய சிக்கல் என்று நம் முன்னோரும் கருதினர். வாளாவிராது காரணங்காண முயன்றனர். ஆண் பெண் என்பன படைப்புத் தொடக்கத்து ஒரே ஒரு பொருளாம் என்றும், தெய்வ சாபத்தால் பிளவுபட்டு இரண்டாயின என்றும், அன்று முதல் ஒன்றாய் இணையப் பாடுபடுகின்றன என்றும் காதலுக்கு விளக்கம் கூறுவர் பிளேட்டோ. இது உமையொரு பாகம் அருத்தநாரீசுவரன். எனச் சிவனுக்கு ஆண்பாதி பெண்பாதி உருவம் கற்பிக்கும் இந்துப் புராணத்தைப் போன்றது. ஒன்றே வேறே என்றிரு பால்வயின ஒன்றி உயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப. (தொல். 1038) உயர்ந்த பாலின் ஆணையால். நல்லூழின் ஏவலால் காதற் காட்சி நிகழும் என்பர் தொல்காப்பியர். கிழவன் கிழத்தியைக் காண்பான் என்றோ, கிழத்தி கிழவனைக் காண்பாள் என்றோ எழுவாயும் செயப்படு பொருளுமாகத் தொல்காப்பியம் நடை தொடுக்கவில்லை. முந்திக் காதலித்தவர் யார்? என்ற காதலியல்பு புலப்பட, கிழவனும் கிழத்தியும் காண்ப என இருவரையுமே எழுவாயாக, வைத்துக் காட்டும் நடைப்பாடு அறியத்தகும். இப் பாலாட்சியைச் சங்கப் புலவர்களாம் பேரிசாத்தனாரும் அம்மூவனாரும் ஒப்புப. பால்வரைந் தமைத்தல் அல்லது அவர்வயின் சால்பளந்தறிதற்கு யாஅ யாரோ (பேரிசாத்தனார் குறுந் 366) பிறிதொன் றாகக் கூறும் ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே (அம்மூவனார் ஐந். 10) ஒரே பாடலின் ஆசிரியர் மோதாசனார் காதற் பாங்கை அழுந்த ஆராய்ந்தார். காதலராவார் வெவ்வேறிடத்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. முன்பின் முகமறியாப் புதியவர்களாதல் வேண்டும் என்பதில்ல. நாள்தோறும் பல்கால் பழகிக்கொண்டு வரு ஓர் இளையானும் இளையாளும் என்றோ ஒருநாள் திடீரெனக் காதல் தோன்றப் பார்த்தல் இயல்பேயாம். சிறுவன் சிறுமியாய் இருந்த பருவத்து இவ்விருவரும் தலைமுடி பற்றியிழுத்து அடித்துக் கொண்டனரே, செவிலியர் இடைமறித்து விலக்கவும் விடாது சண்டையிட்டனரே. இன்றே இணைந்த மலர்மாலை போல மண மக்களாக விளங்கக் காண்கின்றோம் நல்லூழின் விளையாட்டன்றே இது என்று தலைவன் தலைவியைச் சிறுபருவம் தொட்டு அறிந்தோர் அவ்விருவர்தம் உடன் போக்கைக் கண்டு பாலாற்றலை வியக்கின்றனர். இவனிவள் ஐம்பால் பற்றவும் இவளிவன் புன்தலை ஒரி வாங்குநள் பரியவும் காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது ஏதில் சிறுசெரு உறுப மன்னோ நல்லைமன் றம்ம பாலே மெல்லியல் துணைமலர்ப் பிணையல் அன்னவிவர் மணமகிழ் இயற்கை காட்டி யோயே. (குறுந். 229) மோதாசனாரின் இப்பாடல் “பாலதாணையின்” என்ற தொல் காப்பியத்துக்கு நல்விளக்கமாதல் காண்க. இளம்பூரணர் தொல் காப்பியத்துக்கு முதலுரையாசிரியர். இவர் உரை உள்ள உரைகளுள் ஏற்றமுடையது. ஒன்றே வேறே (1038) என்னும் நூற்பாவிற்கு. “ஒருவரையொருவர் கண்டுழியெல்லாம் புணர்ச்சிவேட்கை தோற்றாமை யின், பாலதாணையான் ஒருவரையொருவர் புணர்தற் குறிப்போடு காண்ப என்றவாறு” என அரிய விளக்கம் தருவர் இளம்பூரணர். கண்டதும் காதல்கண்ட முதற்பார்வையிலே காதல்கொண்டு விடுதல் என்ற கோட்பாட்டை ஒருபால் மறுப்பர். ஆண் பெண் பாலர்களைச் சந்திக்கச் செய்வது விதியின் வேலையன்று. அவர்கள் முதல்முறை சந்திக்கலாம்; பலமுறை சந்தித்தும் இருக்கலாம். இச் சந்திப் பெல்லாம் பாலதாணையில்லை. முதல்நாள் முதற்பார்வை யிலோ, பின்னால் பல பார்iவியலோ, ஒரு பார்வையைக் காதலோடு பார்க்கச் செய்வதே விதியின் ஆணை என்று தெளிவிப்பார் உரையாசிரியர். இக்காதற் புணர்ச்சிவிதி கூட்டிய முதலுறவு இயற்கைப் புணர்ச்சி என்று பொதுவாகப் பெயர் பெறும். தலைவனும் தலைவியுமாம் விதி முன்னரே உண்டெனினும் தோன்றாது, காலம் பார்த்து அடங்கியிருக்கும். காலமாவது இருவரும் காமம் நுகர்வதற்குரிய குமரப் பருவம். அப்பருவம் வாயாதார்க்குக் கண்ணில் காதல்நோக்கம் எழாது; பிறர் கண்ணில் எழுந்த காதல்நோக்கத்தைப் புரிந்து கொள்ளும் அறிவும் இராது. ஆதலின் அடங்கியிருந்த விதி, புணர்தற்குரிய இருவரும் ஆளான பின்னர்த்தான் வெளிப்படுவது முறையும் பயனுமாம். இதுகருதியே, தொல்காப்பியமும் இறையனார் அகப்பொருளும், காமபுணர்ச்சி என்று இம்முதற்புணர்ச்சிக்குப் பெயரிட்டுள. இக்குறியீடு இயற்கைப் புணர்ச்சி என்ற குறியீட்டினும் விரும்பத்தக்கது. இதுவரை ஆராய்ந்த காமத் தொடர்புபற்றி இறையனாரகப் பொருள், திருக்கோவையார் உரையாசிரியர்களும தொடைவிடைபட எழுதியுள்ளனர். உள்ளப்புணர்ச்சியும் மெய்யுறுபுணர்ச்சியும் ஆண்பெண் உறவுக்குக் காதல் காரணம் என்றோம். காதலுக்குப் பால் காரணம் என்றோம். அறிதோறும் அறியாமை கண்டதல்லது என்ன விளக்கம் உண்டோம்? பாலாவது யாது? பாலதாணை என்பது என்? பால் கூட்டு வித்தற்குக் காரணம் என்ன? ஒத்த தலைவனும் தலைவியும் பாலதாணையால் காதற் குறிப்பொடு காண்பர் எனின், அவ்விருவரும் ஒத்தவர்களாக இருப்பதற்குக் காரணம் என்ன? ஒத்த தலைவனும் தலைவியும் பாலதாணையால் காதற் குறிப்பொடு காண்பர் எனின், அவ்விருவரும் ஒத்தவர்களாக இருப்பதற்குக் காரணம் பிறிதுண்டோ? ஒப்பு என்பது எது? அஃது ஒருபிறவியொப்பா? பல்பிறவி யொப்பா? இம்மை மாறி மறுமை யாயினும் நீயா கிரென் கணவனை யானா கியர்நின் னெஞ்நேர் பவளே. (குறுந்.49) நினக்கிவன் மகனாத் தோன்றி யதூஉம் மனக்கினி யாற்குநீ மகளா யதூஉம் பண்டும பண்டும் பல்பிறப் புளவால் கண்ட பிறவியே யல்ல காரிகை (மணிமே. 24, 569) என்று இலக்கியம் கூறுமாங்கு, தலைவன் தலைவியர் வழிவழிக் கணவன் மனைவியரா? இன்ன ஐயங்கள் நம் அறிவியல் கிளைக்கின்றன. திருக்கோவை உரைப் பேராசிரியர் காதல் வாழ்க்கையில் விதிக்கு உயரிய மதிப்பு நல்கவில்லை. பாங்கற் கூட்டம் தோழியற் கூட்டங்களுக்குப் பாங்கனும் தோழியும் துணையாவார் அத்தணை யல்லது தலைவன் தலைவி காதலுக்குக் காரணமாகார் அன்றே; அதுபோல இயற்கைப்புணர்ச்சியில் விதி கூட்டுவித்த துணையல்லது அவர்தம் அன்புக்கு காரணமாகாது என்பது அவ்வுரையாசிரியர் துணிபு. நிற்க, காதலர்தம் மனவொற்றுமையே அகத் திணையின் உயிர்ப் பண்பு. இவ் வொற்றுமையை உள்ளப் புணர்ச்சி’ என்று அகவிலக்கணம் கூறும். எவ்வகை அகத்திணைப் பாடலுக்கும் அகத்துறைப் பாடலுக்கும் உள்ளப் புணர்ச்சி இன்றியமையாதது; புற நடையில்லாதது; இறைமை சான்றது. அகப்புலவர் இவ்வடிப்படைக்கு ஊறுபடயாதும் கூறார். ஊறுபடா நிலையில் யாதும் கூறுவர். இப் பேருண்மை இவ்வாராய்ச்சி முழுவதும் நீள நினைய வேண்டுவது என்று குறிக்கொண்மின். ஆளான தலைவன் தலைவி உள்ளம் புணர்ந்தபின் உடற்புணர்ச்சிக்கு அவாவுதல் முறையே. மனம் ஒன்றிய காதலோர் உடல் ஒன்றுதற்குத் தக்க தனியிடம் தேர்வர். இடம் வாய்ப்பின் இன்பப்பாயல் கொள்ளப் பின் வாங்கார். பெற்றோரைக் கலந்து மேல்செய்வன செய்வோம் என்னும் அறிவு ஒடார். மண் சுழலினும் கடல் பொங்கினும் மலை பெயரினும் விண் வீழினும் அரசு விதிப்பினும் மக்கள் எதிர்ப்பினும், வருவது வருக என்று, அச்சம் அறியார். காதல் காதல் காதல், காதல் நீங்கிற் சாதல் சாதல் சாதல் என்னும் பேராண்மை கொண்ட இளைய உள்ளங்கள் பெற்றோர்க்கு அஞ்சியோ பிற அச்சங்கொண்டோ புணர்ச்சியைத் தள்ளிப்போட எண்ணா. இடம் வாயாமையின் புணர்ச்சி நிகழாதிருக்கலாம். இடம் வாய்த்தும் தாய்துஞ்சாமை நாய்துஞ்சாமை முதலான இடையூறுகளால் புணர்ச்சி தடைப்பட்டிருக்கலாம். உள்ளம் கலந்த சின்னாட்களில் திருமணம் நடைபெற்றிருக்கலாம். களவுக்காலத்து உடற் கூட்டுறவே இல்லை என்றும், அது கூடாது என்றும் கூறுவார் கொள்கை பிழையாம்; இயற்கை யுணர்ச்சிக்கு முரணாம். கற்பு எனப்படுவது காதலர்தம் மெய்த்தொடர்புக்குப் பின் வரும் ஒழுக்கமன்று. ஒருவரை யொருவர் உள்ளத்தால் நினைத்த அப்பொழுதே கற்பென்னும் திண்மை வேண்டப்படும். மெய்ப்புணர்வு பட்டபின், பெற்றோர் இசையாராயின், என்செய்வது? கற்புக் கெடுமன்றே; அன்னோர் இசைவு தெரியும்வரை உள்ளம் புணர்ந்த அளவில் வைத்துக் கொள்வோம் என்ற பகுத்தறிவு உண்மைக் கற்புத்திறமாமோ? “உள்ளத்தான் வேட்கை செல்லினும் மெய்யுற்றாராயிற்று” என அறுதியிட்டுரைப்பர் இறையனாரகப் பொருள் உரையாசிரியர். ஆதலின் கற்புக் கருதி, களவில் மெய்யுறார் என்பது அறமாகாது. களவுக் காலத்து மெய்யின்பம் துய்த்தமை பற்றிய அகப்பாடல்கள் பலவுள. மெய்யுறும் செய்கை இன்றாயின, இரவுக்குறி முதலான எத்துணையோ துறைகள் சிறந்த பயனிலவாய் ஒழியுங்காண். அயத்துவளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன நகைப்பொலிந் திலங்கும் எயிறுகெழு துவர்வாய் ஆகத் தரும்பிய முலையள் பணைத்தோள் மாத்தாட் குவளை மலர்பிணைத் தன்ன மாயிதழ் மழைக்கண் மாஅ யோளொடு பேயும் அறியா மறையமை புணர்ச்சி (அகம். 62) தலைவன் முதற்புணர்ச்சியை மீண்டும் நினையும் பாட்டு இது. மாநிறத் தலைவியின் செவ்விதழ் சுவைத்து, அரும்பிய மார்பையும் அகன்ற தோளையும் தழுவி நுகர்ந்த மறைத்தற்கரிய முதற் கூட்டுறவை நினைவு கொள்கின்றான். பேயும் நடமாட்டம் ஒடுங்கித் தூங்கும் நள்ளிரவில் துய்த்த களவுப் புணர்ச்சி என்று பெருமிதங் கொள்கின்றான். உள்ளப் புணர்ச்சிக்கு மறைவிடம் வேண்டிய தில்லை. பேயும் அறியா நடுயாமம் வேண்டியதில்லை. ஆதலின் பரணர் இப்பாட்டில் களவுக் காதலரின் மெய்ம்முயக்கத்தைக் கூறுகிறார் என்பது வெளிப்படை முன்பின் யாதொரு உறவும் முகவறிவும் இல்லாதார் உள்ளம் அன்புற்று உடல் இன்புற்ற காட்சியை ஒருகுறுந்தொகைப் பாட்டால் அறிகின்றோம். காதலன் புணர்ச்சி நிறைவில் காதலியை நோக்கி, இப்போது நம் உடல்களா கலந்தன? “அன்புடை நெஞ்சந் தாம் கலந்தனவே” (குறுந் 40) என்று நாகரிகமாக நலம் பாராட்டுகின்றான். 2. இடந்தலைப்பாடு தற்செயலாக ஒருநாள் கண்ட இருவர் உள்ளம் புணர்ந்தனர்: காதலராயினர். அடங்கிய வேட்கை பெருகிற்று. முதல்நாள் கண்டவிடத்தே இன்றும் காணலாம் என்ற நம்பிக்கையோடு தலைவன் தானே அவ்விடம் செல்கின்றான். ஆராக் காதலுடைய தலைவியும் அவனுக்கு முன்னரே வந்து அங்கு நிற்கின்றாள். ஏன்? ஒருமுறை ஆண் புல்லியபின், பெண்ணுக்குக் காமம் சிறக்கும். முன்போல தோழியரோடு விளையாட வந்தும் விளையாட்டில் மனங்கொள்ளாள் பூப்பறித்து மலர் தொடுக்க உள்ளம் நாடாள். அவள் காதற் பெருக்கை உணர்ந்த தலைவன், “ஆடலும் தொடுத்தலும் செய்யாது தனித்துநிற்கும் நீ யாரோ: உனக்கு என் வணக்கம். கண்டவர் கண்ணைப் பறிக்கும் அழகியே! கடல் வாழ் தெய்வமோ நீ?” யாரை யோநிற் றொழுதனம் வினவுதும் கண்டோர் தண்டா நலத்தை தெண்டிரைப் பெருங்கடற் பரப்பின்அமர்ந்துறை அணங்கோ (நற். 155) என்று தன் காதற்பறையை முழக்குகின்றான்; அழகுத் தெய்வமாகத் தொழுகின்றான். ‘வளை ஒலிப்ப நண்டினை ஆட்டுபவளே! நண்டினை ஆட்டுபவள் போலக் கூந்தலால் முகத்தை மறைத்து நிற்பவளே மாலை மறையின் நின்முயக்கம் கிடைக்கும்” (ஐங். 197) என்று வாயூறி மொழிகின்றான். என் சொல்லுக்கெல்லாம் மறுமொழி சொல்லாது நாணுபவளே! நின் நாணம் என் காமத்தைப் பெருக்கின் தாங்குவது எப்படி? (“காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ”) என்று தானே தானே பன்னுகிறான். இடந்தலைப்பாடு பற்றி மூன்று பாடல்களே (ஐங். 197. நற். 39; 153) சங்கவிலக்கியத்தில் உள. புணர்ச்சி வேட்கை காணப்படுவதன்றிப் புணர்ந்த குறிப்புச் சிறிது இப்பாடல்களில் இல்லை. இயற்கைப் புணர்ச்சி, பாங்கற் கூட்டம், தோழியிற்கூட்டம் என்ற குறியீடுகள் காதலரிடைப் புணர்ச்சியுண்டு என்பதை வெளிப்படையாகக் காட்டுவது போல, இடந்தலைப்பாடு (தொல். 1443) என்னும் குறியீடு காட்டவில்லை. இதன் உட்கோள் என்ன? கண்டால் முயங்குதல், முயங்குதற்கே காணுதல் என்பது ஆசைக்காமம் ஆகுமன்றி அன்புக் காமம் ஆகாது. காதலர்கள் புணர்வு விருப்பின்றியும் கண்டு கொள்வார்; காணுந்தோறும் புணர்வு மேற்கொள்ளார் என்பது (கீழான பருவ எழுச்சிக்கு இடங்கொடா) உயர்ந்த காதலாகும். இயற்கைப் புணர்ச்சியில் கண்டு கலந்த தலைவனுககும் தலைவிக்கும் அவ்வளவில் மனநிறைவு ஏற்படுமா? பிரிந்த பின் புணர்ந்த நினைவும் புணர்ந்தார் உருவமும் நெஞ்சை அரித்தன. புதிய பெரிய உறவை மீண்டும் ஒருமுறை களித்துக் காண்பதே இடந்தலைப்பாடு. இத் தலைப்பாட்டால் ஆரா இளைய நெஞ்சங்கள் வேகந்தணிகின்றன; அமைதிக்கு வருகின்றன; நம்பிக்கை கொள்கின்றன. 3. பாங்கற் கூட்டம் இடந்தலைப் பாட்டின் பின்னர், நண்பன் தலைவனைக் கான்கின்றான்; முகச்சோர்வைக் கண்டு இரவெல்லாம் உறக்க மில்லையோ என்றுபொதுப்படக் கேட்கின்றான். காமத்தைப்பற்றி வெளிப்படையாக உரையாடல் ஆண் நண்பர்களின் மனக்கூறு. உறங்கவில்லையோ என்ற வினாவுக்கு ஒரு குறச்சிறுமியின் தண்ணிர்போலும் மென்சாயல் தீப் போலும் என் நெஞ்சுரத்தை அவித்துவிட்டது; சிறுகுடிக் குறவன் நெருந்தோட் குறுமகள் நீரோ ரன்ன சாயல் தியோ ரன்னவென் உரனவித் தன்றே. (குறுந் 95) என்று தலைவன் ஒளிவு மறைவின்றிப் பெருமிதம் தோன்ற மறுமொழி கின்றான். இவ்வொழுக்கம் நின் அறிவுக்கும் பெருமைக்கும் குடிமைக்கும் தகுமோ என்று இடிக்கும் நண்பனுக்கு, `இவையெல்லாம் உன்னைவிட எனக்குத்தெரியும். அவள் குவளைக் கண்ணைப் பார்ப்பதற்குமுன் பேச வேண்டிய பேச்சுக்கள்’ எனத் தலைவன் எதிருரைக்கின்றான். (நற். 190) அறிவுநிலையில் நிற்கும் இளம்பாங்கன். “தலைவி அரியவள்; அவள் நினைப்பை விட்டொழி (நற். 201) என்று மேலும் தடுத்துரைப்பவே. தலைவன் ஆற்றலன் ஆயினான். காமக்கிறுக்கனாய்க் காதற்பித்தனாய் கைகடந்து பேசல் ஆனான். கேளிர் வாழியோ கேளிர் நாளுமென் நெஞ்சுபிணிக் கொண்ட அஞ்சில் ஓதிப் பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாகம் ஒருநாட் புணரப் புணரின் அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே (குறுந் 280) இறைவனைப் பேசாத நாளெல்லாம் பிறவாத நாளாக அன்பன் கருதுவான். போர்க்களம் புக்குப் புண்படாத நாளெல்லாம் புறங்கொடுத்த நாளாக மறவன் கருதுவான். அகம் புகுந்தவளின் மெல்லிய ஆகத்தை மேவாத நாளெல்லாம் வாழா நாளாகக் காதலன் கருதுவான். மக்கள் ஆண்டு பலவாக ஆயிரம் ஆயிரம் நாட்கள் வாழ்கின்றனர். பலர் வாழ்க்கையை நினைந்து பார்ப்பின், எல்லா நாளும் சிறப்பின்றி, ஒருநாள் போலவே கழிகின்றன. இன்னநிலையை மேற்காட்டி குறுந்தொகைத் தலைவன் வெறுக்கிறான். இதுவரை வாழ்ந்ததை வாழ்ககைiயாக அவன் மதிக்கவில்i. இனியும் இவ்வாறு செல்வதை அவன் விரும்பவில்லை. நினையத்தக்க வினைச்சிறப்புடைய ஒரு நாளாவது வேண்டும் என்றும், அந்நாள் தன் உள்ளம் கவர்ந்த கள்வியின் ஆகத்தைத் தழுவும் நாளே என்றும், அதன்பின் வீண்வாழ்க்கை சிறுபொழுதும் வேண்டாம் என்றும், ஆராக் காதலால் தன் நண்பன் அதிரும் குறிக்கோளைச் சொல்லுகிறான். கேளிர் கேளிர் என்று தோழனை அன்புதோன்ற அடுத்தடுத்து விளித்தல் காண்க. உண்மை நட்பு மறுப்பறியாது; காமத்துக்குக் கண்ணில்லை (குறுந் 78); அந்நோய் பற்றிய தலைவனுக்கு எப்போதும் உறக்கமில்லை (ஐங் 173); என்செய்வது என்று இயல்பு உணர்ந்த தோழன் தலைவன் சொன்ன குறியிடம் செல்கின்றான். முன்னரே வந்துநிற்கும் தலைவியின் அன்பைக் கண்டு வியக்கின்றான் (ஐங் 174) பாங்கனால் தலைவனுக்குத் தலைவியோடு ஒரு கூட்டம் நிகழ்கின்றது. இது பாங்கற்கூட்டம் எனப்படும். பாங்கற் கூட்டம் பற்றி 27 அகப்பாடல்கள் உள. இவற்றுள் பாங்கன் கூற்றாய் வருவன இரண்டே (குறுந். 78,204) எஞ்சிய இருபத்தைந்தும் தலைவன் கூற்றாவன. சங்கப்புலவர்களுள் மிளைப் பெருங் கந்தனார் என்பவரே தலைவன் கூற்றாகவும் பாங்கன் கூற்றாகவும் இரு பாடல்கள் பொருள் தொடர்ச்சி படப் பாடியிருக்கக் காண்கின்றோம். சங்கப் பாடல் எல்லாம் ஒன்றோடொன்று கருத்துக் கோவையில்லாத் தனித்தனித் துறைப்பாடல்களே எனினும் கந்தனார் போலும் ஓரிரு புலவர்கள் சில துறைத் தொடர் அமையப் பாடிய கோவைப் பாடல்களும் உள என்பது குறிப்பிடத்தகும். மிளைப்பெருங் கந்தனா: காமம் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக் கடுத்தலும் தணிதலும் இன்றே யானை குளகுமென் றாண்மதம் போலப் பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே (குறுந். 136) இது தலைமகன் பாங்கற்கு உரைத்தது. காமம் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின் முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல் மூதா தைவந் தாங்கு விருந்தே காமம் பெருந்தோளோயே (குறுந் 204) இது தலைமகற்குப் பாங்கன் உரைத்தது. இருபாட்டிலும் முதலடிகள் இரண்டும் ஒத்தன. காமம் என்னும் சொல் பண்டு இடத்திற்கேற்ப உயர்காமத்தையும் இழிகாமத்தையும்குறித்தது போலும், உயர்ந்த காமத்தை இழிவான காமமாக உலகோர் கருதுவர்; அவ் வுயர்காமம் இழிகாமம் போல வருத்தமும் நோயும் தருவதில்லை, என்று மிளைப்பெருங் கந்தனார், காதலை நுகர்ந்த தலைவன் வாயிலாகவும், அவனை இடித்துரைத்தம் அறிஞன் வாயிலாகவும் உலகோர்க்கு மறுப்பு உரைப்பர்; காமத்தின் சிறப்பைப் புலப்படுத்துவர். இவ்வுயர் காமழாவது யாது; அன்புடைய எதிர்பாலாரைக் காணும்போது வெளிப்படுவது என்கின்றான் தலைவன். இஃது இவன் துய்த்துக் கண்டது. காமமாவது ஒரு மனநிலை; விரும்பினோரை அது, விடாது வெறுத்தோரை அது தொடாது என்று இடித்துரைக்கின்றான் பாங்கன். இஃது இவன் துய்ப்பன்மையால் வந்த அறிவுரை; அல்லது, கடமை யுணர்ச்சியால் எழுந்த உரை என்றும் கொள்ளலாம் பாங்கற் கூட்டச் செய்யுட்கள் எல்லாமே அறிவுச் செறிவும் இலக்கியப் பொலிவும் உடையன. காதலியர் தம் கண் என்னும் பின்னா வலையுள்ளும், கூந்தல் என்னும் பின்னிய வலையுள்ளும் பட்ட ஆடவர் தம் நெஞ்சத் துடிப்பைக் காட்டுவன. இப் பாடல்களால் காதலாவது ஒற்றுமை வேற்றுமைத்தரம் பார்த்து ஆராய்ச்சி செய்து அறிவுநிலையில் நிகழ்வதன்று; `இதற்கிது மாண்டது என்னாது அதற்பட்டு ஆண்டொழிந்தன்றே மாண்தகை நெஞ்சம்’ (குறுந். 184) என்று ஒரு தலைவன் கூறியபடி, காரணம் கடந்த தூய மனநிலையில் அமைவது என்ற உண்மையைக் கற்கின்றோம் ஐந்திணை இலக்கிய மாந்தர்களில் 75 படைப்பு இருவகைப் பயனுடையது. செகப்பிரியர் எழுதிய `பன்னிரண்டாம் இரவு’ நாடகத்தில், இலீரியாக் கோமகன் ஆர்சினோ செல்வப் பெருமாட்டி ஒலுவியாவைக் காதலிக்கின்றான். இவன் காதலுக்கு அவள் இணக்கக்குறிப்பு நல்கவில்லை. ஆதலின் தன் பாங்கன் செசாரியோவைத் தூது விடுக்கவே அவன் ஒலீவியாவை நேரிற் கண்டு அவள் தனியழகையும் ஆர்சினோவின் பெருங்காதலையும் கவிஞன் போல் எடுத்தியம்புகின்றான். மிக நலம் பெற்ற நீ ஒரு தமியளாய் மூப்படையலாமா? உன் எல்லையற்ற அழகுக்கு உலகில் ஒருபடி வேண்டாமா? என்று இனிக்கப் பேசுகின்றான். இங்ங்ன். தலைவியாவாளைப் பாங்கன் நேர்நின்று காணலும் முன்னின்று மொழிதலும் தமிழ் அகத்திணைக்கு ஒவ்வா; தமிழகம் பெற்ற மகளிர் நாணத்துக்கு ஏலா ஈண்டு பாங்கன் தலைவியைத் தான்காண்பான், அவளால் காணப்படான். தலைவி பாங்கன் தன்பக்கமாகச் செல்வதைக் கண்டாலுங்கூட, அவனை ஒரு வழிப்போக்கன் எனவே கருதிவிடுவாள். தன்னைப் பார்த்துவரத் தலைவன் விடுத்த தோழன் என எண்ணாள் ஏன்? தலைவனது தோழர்கள் யார் என்பதுபற்றி அவளுக்குத் தெரியாது. `தோழியிற் கூட்டம் போலப்பாங்கன் உரையாடி இடைநின்று கூட்டாமையின்’ (தொல். 1047) என நச்சினார்க்கினியரும், “தன் வயற்பாங்கன் அவள்வயிற் பாங்கு செய்யான்” (தொல். 1443) எனப் பேராசிரியரும் பாங்கன் கருமத்தை வரையறுத்தல் காண்க. - மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம் புதிய பார்வை சூன் 2016 அகத்திணை பாகுபாடு பாங்கற் கூட்டம் குறித்த இடத்துத் தலைவி வந்து நிற்கின்றாளா என்பதைப் பார்த்துச் சொல்லும் ஓர் அறிவிப்பாளனே பாங்கனாவான். எனினும், இவன் தொடர்பால் அகத் தலைவனுக்கு இருநலம் உண்டு. இன்ப வெள்ளத்தால், துன்பப் புயலால் நெஞ்சு அலையும்போது, அவற்றைப் பிறரிடம் பேசினால் ஆறுதல் உண்டாகும். கேட்பதற்கு உற்ற நண்பர்களும் நண்பிகளும் வேண்டும் தலைவன் எதிர்பாரா நிலையில் ஒரு நங்கை பால் காதல் கொண்டு தன் நெஞ்சகத்தைப் புதிய உணர்ச்சிகளுக்குப் பறிகொடுத்து விட்டான். காம வணுவும் காம சுரமும் அவன் உள்ளத்தைத் தின்றன. ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற் கையில் ஊமன் கண்ணிற் காக்கும வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே (குறுந் 58) என்றபடி, களவுத்தலைவன் தன்வயம் இழந்து, காமவயத்தன் ஆனான். திருமணத்துக்குப்பின் தலைவி உடன்வாழ்வாளாதலின், தலைவனது காமவேகத்துக்கு இடனில்லை. களவொழுக்கத்தோ அவள் காணற்கும் கலத்தற்கும் அரியவள். அதனால் அவனுக்கு மேலும் காமசுரம் பெருகின் உயிர்போதலும் கூடும்: அறிவு திரியவும் செய்யும். இந்நிலையில் பாங்கன் ஒரு பற்றுக்கோடு. அவனிடத்துத் தன் தலைவியைத் `தெய்வச்சாயல் உடையவள், மெல்லியள்’ அரும்பிய முலையள், சிவந்த வாயினள் (ஐங் 255) என்று சொல்லுந் தோறும் சிறுபாம்புக்குட்டி காட்டானையை வருத்தியதுபோல அவள் மெல்லுறுப்புக்கள் என்னைத்தாக்கின. (குறுந் 119) என்று சொல்லுந்தோறும் தலைவனுக்கு மனவேகம் தணியவும், அறிவு நிலைக்கு வரவும் காண்கின்றோம். தலைவன் கூற்றாக 25 பாடல் இருப்பதற்கு இவ்வுளவியலே காரணமாம். பாங்கன் தலைவனுடன் சேர்ந்து அவன் செல்லுழி எல்லாம் செல்லும் வழக்கமுடையவன். விட்டுப் பிரியாத தோழமை கொண்டவன். தலைவன் ஒருத்திபாற் பட்ட பின்னும் பாங்கன் முன்போல் உடன்வருதுல் தகாதன்றோ. இதனை அவன் எப்படி அறிவான்? தலைவனது புதிய உணர்ச்சியையும் புதிய உறவையும் அவன்தன் மெய்ப்பாட்டாலும் சொல்லாலும் தெரிந்து கொண்ட பாங்கன் குணமும் குலமும் அறிவும் சுட்டி மாற்ற முயல்கின்றான்; பயனின்மை கண்டபின் அவனோடு கூட வருவதை நிறுத்திக் கொள்கின்றான். இதனால் தலைவனுக்குத் தலைவியைக் காணவேண்டும்போது தனித்துச் செல்லும் பெருவாய்ப்புக் கிடைக்கின்றது. இவ்வாறு பாங்கன் தலைவனது காமப்புதுமையைக் காது கொடுத்துக் கேட்கும் செவியனாய், மேலும் சிறிது இடையூறும் செய்யாத தோழனாய்க் களவின் தொடக்கத்தே வந்து போய்விடக் காண்கின்றோம். ஐந்திணை இலக்கியத்து இவன்வரவு இதனொடு முற்றும். மேல் விளங்கிய இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம் என்ற மூன்று காட்சிக்கும் குறியிடம் ஒன்றே ஆகவும், தலைவன் இடந்தலைப்பாடுபோல் மீண்டும் ஏன் தானே சென்றிருத்தல் கூடாது? பாங்கனை விடுத்ததன் நோக்கம் என்ன? பல் இழந்த கிழப்பசு இளம்புல்லைத் தடவி மகிழ்ந்த மனவின்பமே காமவின்பம்; காமமாவது தன்னை உணர்ந்தார் உணராதார் எனப் பாராது எல்லாரையும் பற்றும் பெரும் பேதைமையுடையது; இனி உள்ளல் கூடாது என்றெல்லாம் காதல்காயும் தலைவனைப் பாங்கன் நகையாடி இடித்துரைக்கின்றனன். தன் வேட்கை தக்கதே என்றும், இடிப்புரையால் ஒழியாதது என்றும் உணர்த்த விருமபினான் தலைவன். பாங்கன் தன் சொல்லை நம்பான்; தன்னை மயக்கியவளைக் கண்டால் நம்புவான்; பின்னர் இடித்துரையான் என எண்ணினான். அம்ம வாழி கேளிர் முன்னின்று கண்டனி ராயிற் கழறலிர் மன்னோ... நற்றேர் வழுதி கொற்கை முன்றுறை வண்டுவாய் திறந்த வாங்குகழி நெய்தற் போதுபுறங் கொடுத்த உண்கண் மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே. (அகம். 130) `தோழ! என்னைப் பிணித்தவளின் நோக்கு மதர் மதர்ப்பு உடையது. அவள் கண் பசுமைக்குக் கைபடாத, வண்டுவாய் திறந்த, துறையிடத்து வளர்ந்த நெய்தற்பூவும் நிகராகாதே. இந் நோக்கழகியை முன்னின்று நீ ஒருமுறை கண்டுவிட்டாற் போதும்; பின் என்னைக் கடிந்துரையாய் என்று ஏவவே, பாங்கனும தலைவன் சொன்ன குறியிடம் சென்று, அத்தகையாளைக் காண்கின்றான். `நெய்தற்பூ மணக்கும் கூந்தலழகியின் பிடிப் பட்டோர் இரவும் உறங்குவாரோ? பாம்பு கடித்தன்ன பாடுபடாரோ?’ என்று பாங்கனே உணரக் காண்கின்றோம். இரவி னானும் இன்துயில் அறியாது அரவுறு துயரம் எய்துப தொண்டித் தண்ணாறு நெய்தலின் நாறும் பின்னிரும் கூந்தல் அணங்குற் றோரே. (ஐங். 173) 4. தோழியிற் புணர்ச்சி சங்க இலக்கியத்து 882 களவுப் பாடல்கள் உள. இவற்றுள் 40 பாடல்களே இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு. பாங்கற் கூட்டம் என்ற மூன்று வகைக்கும் உரியன. எஞ்சிய 842 பாடல் - 95 விழுக்காடு - தோழியிற் புணர்ச்சி என்னும் ஒரு வகைக்கே வருவன. இதனால் தோழியின்றிக் காதலர்களின் களவொழுக்கம் நீளாது என்பதும், ஐந்திணை இலக்கியப் படைப்புக்குத் தோழி என்னும் ஆள் (பாத்திரம்) இன்றியமையாதவள் என்பதும், தோழியிற் புணர்ச்சிக்குரிய துறைகளே புலவர்களின் நெஞ்சைக் கவர்ந்தன என்பதும் பெறலாம். தோழியின் தொடர்புக்குப் பின்நிகழும் காதற் செய்திகள் அளவில. அவற்றையெல்லாம் இங்குக் கூறப் புகுதல் மிகையும் குறையுமாம், வேண்டுமளவே விளம்புவல். காதலியைத் தற்செயலாக எவ்வளவு நாள் காண முடியும். பாங்கன் எவ்வளவு உதவி செய்வான்? நினைத்த விடமெல்லாம் சுற்றித்திரியும் போக்குரிமை ஆடவர்க்குத் தமிழ்ச் சமுதாயத்துக்கு உண்டு. அன்ன உரிமை குலமகளிர்க்கும் குமரியர்க்கும் இல்i. யாயே கண்ணினும் கடுங்கா தலளே எந்தையும் நிலனுறப் பொறாஅன் சீறடி சிவப்ப எவனில குறுமகள் இயங்குதி என்னும் (அகம். 12) காப்பும் பூட்டிசின் கடையும் போகலை பேதை யல்லை மேதையங் குறுமகள் (அகம். 7) இரவும் பகலும் தாய் தந்தையின் கடுங்காப்புக்கு இல்லக் குமரியரை உள்ளாக்குவது தமிழ் நாகரிகம். “வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்” எனச் சிலப்பதிகாரமும், “கன்னிக் காவலும் கடியிற் காவலும் விலைமகளிர்க்கு இல்லை” என மணிமேகலைக் காப்பியமும் மொழிதல் காண்க. ஒருகால் பெற்றோர் இசைவுபெற்று வெளிச் செல்லினும் விடாது தோழியும் உடன் செல்வாள். யாமே பிரிவின் றியைந்த துவரா நட்பின் இருதலைப் புள்ளின் ஒருயி ரம்மே (அகம். 12) எனத் தலைவி தோழியின் இணைபிரியாக் கேண்மையைக் கபிலர் இல்பொருளுவமை என்னும் கற்பனையால் வெளிப்படுத்துவர். இவ்விருவரும் ஒருநாள் நீர்விளையாடப் பார்த்த தலைமகன் அவ்hதம் கடுநட்பைத் தெளிந்தான். தெப்பத்தின் தலைப் பாகத்தைத் தோழி பிடித்தால், இவளும் அப்பாகத்தையே பிடிக்கின்றாள். அவள் அதன் கடைப்பகுதியைத் தழுவினால் இவளும் அதனையே தழுவ முந்துகின்றாள். தோழி தெப்பப்பிடி வழுவி நீருள் மூழ்கினால், இவளும் உடன் மூழ்குவாள் போலும் (குறுந் 222)” எனக் கண் சான்றாகத் தலைவன் கண்டு கொண்டனன். தோழி நீங்கா ஓர் இடையூறு என்றும், தோழியின் தோழமையைப் பெற்றாலன்றித் தலைவியின் தோளைப் பெறுதல் அரிது என்றும் அவனுக்குப் புலனாயிற்று. களவுத் தொடர்பைத் தோழிக்கு உணர்த்துவது எங்ஙன்? தலைவி நாணொடு பிறந்து நாணிலே வளர்ந்தவள். ஆதலின் தோழியிடத்துத் தன் புதிய உறவைக் கூறவே கூறாள். கூறும் பொறுப்போ கூசாப் பிறப்பினானாகிய ஆடவனைச் சார்ந்தது. தோழியும் தலைவியும் ஒருங்கு இருக்கும்போது சென்று வெளிப் படையாகவோ குறிப்பாகவோ களவை நயமாகப் புலப்படுத்தல் தலைவன் முறையாகும். ஒன்று, இரப்பான்போல் எளிவந்து சொல்லும் உலகம் புரப்பான் போல்வதோர் மதுகையும் உடையன் வல்லாரை வழிபட் டொன்றறிந் தான்போல் நல்லார்கட் டோன்றும் அடக்கமும் உடையன் இல்லோன் புன்கண் ஈகையிற் றணிக்க வல்லான் பேல்வதோர் வன்மையும் உடையன் அன்னான் ஒருவன்தன் ஆண்டகை விட்டென்னைச் சொல்லுஞ்சொற் கேட்டீ சுடரிழாய் (கலி. 47) எளிமை, பெருமிதம், அறிவு அடக்கம், அருள் ஆற்ற்ல உடைய ஒரு நம்பி எவ்வன்மையும் இல்லாத என்பால் வந்தான்; நின்னை இன்றி எனக்கு வாழ்க்கை இல்லை என்றான்; ஒரு பெண்பொருட்டுத் தன் ஆண் தகுதிகளையெல்லாம் கை விட்டான். இவன் சொல் நம்பத்தக்கதோ? தனி ஒரு பெண்ணால் ஆராய்ந்து உண்மை காணும் தகுதியுடையதோ என இவ்வாறு தலைவனின் தோற்றத்திலும் பண்பிலும் தோழி ஈடுபட்டாள். அவன் குறையை முடித்து வைக்கவும் எண்ணினாள். எனினும் தலைவியை அணுகுவது எப்படி? களவுச் செய்தி தோழிக்குத் தெரியும் என்று அறிந்தாற்கூட அவள் நாணம் பொறுக்காதே? மெய்யான நிகழ்ச்சியைச் சொல்லியோ (கலி. 60), பொய்யாக நிகழ்ச்சியைக் கற்பித்தோ (கலி. 37, அகம். 32) இரு பொருள்படும்படி தொடரமைத்து, எவ்வகையானும் தலைவியின் மெல்லிய நாணம் ஊறுபடாதவாறு, அவள் நெஞ்சத்தை அறிய முயல்க என்று தொல்காப்பியர் வழி கூறுவர். மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும் (தொல். 1059) மகளிற்கு நாணுணர்ச்சி மிகக் கூரியது. ஒரு பெண்ணின் காதலுள்ளத்தை நெருங்கிப் பழகும் மற்றொரு தோழிப் பெண் வினவத்துணியாள். “என் தோழி நனி நாணுடையள் (ஐங். 205) என்று தன் தலைவியின் இயல்பை ஒரு தோழியே கூறுதல் காண்க. தோழி என்ன, ஈன்று வளர்த்தத் தாய்கூடத் தன் ஒரு மகளின் காதற்கரவைக் கேட்க அஞ்சுவாளென்றால் திருதுதல் நல்லவர் நாணின் நுண்மை அறியத்தக்கதோ? `தன்மகள் போக்கைத் தாயே அறிந்துகொள்ளட்டும்; இது பற்றி நமக்கென்ன கவலை என்று வாளா இராது, வாய் கொழுத்த ஊர்ப் பெண்டுகள் ஒருநாள் இருநாள் அல்ல, பலநாள் வந்து வந்து என்னிடம் என்மகள் பற்றிச் சொல்லுகிறார்கள். யானோ அவளிடம் அதுபற்றி ஒன்றும் வாய்திறப்பதில்லை. ஏதும் கேட்கப் புகின், நாணம் அவளைக் கொல்லும். ஆதலின் ஊரார் சொல்லும் செய்தியை மிகவும் மறைத்து வைத்துக் கொள்கிறேன்”. உவக்குந ளாயினும் உடலுந ளாயினும் யாயறிந் துணர என்னார் தீவாய் அலர்வினை மேவல் அம்பற் பெண்டிர் இன்னள் இனையள்நின் மகளெனப் பன்னாள் எனக்குவந் துரைப்பவும் தனக்குரைப் பறியேன் நாணுவள் இவளென நனிகரந் துரையும் யான் (அகம். 203) என ஒரு தாய் கூற்றில் வைத்துக் கபிலர் பெண்பாலின் நாணச் செவ்வியைப் புலனாக்குவர். குமரியர் தம் காமக்குறிப்பைச் சொல்லாலும் வெளிப்படுத்துவதில்லை. எண்ணத்தாலும் அறிய இடங்கொடுப்பதில்லை. ஆகலின், அன்னவர் அகமனத்தைக் காண்பதற்கு ஒருவழி போதாதென்று தோழிக்கு எழுவழி கூறுவர் தொல்காப்பியர். அவையாவன. 1. புதிய மணம் 2. புதிய களை 3. புதிய ஒழுக்கம் 4. உணவில் மனம் செல்லாமை 5. செயலை மறைத்தல் 6. தனியே செல்லல் 7. தனியே இருத்தல். மடலேறுதல் தலைவியின் நற்குறிப்பு அறிந்தபின், காதலர்கள் பகலும் இரவும் காணவும் கூடவும் தோழி வழிசெய்வாள். இயற்கைப் புணர்ச்சி முதலான முன்னைக் கூட்டங்கள் நிகழ்ந்த இடத்தே நிகழும். தோழி கூட்டுவிக்கும் கூட்டங்களோ வேறுவேறிடத்து நடக்கும். இன்ன இடம் என்று களம் சுட்டுவது, தோழியின் பொறுப்பாகும். இக்காட்சிக் களங்கள் பகற்குறி, இரவுக்குறி எனப்படும். தலைவனோடு தலைவியின் உறவை அறிந்துகொண்ட பின்னும், தோழி தலைவனுக்கு இடையூறு போலக் காட்டிக் கொள்வாள். அவனது பொங்கிய காதலுக்குச் செவிசாயாள். அவன் அரிது முயன்று ஆர்வத்தோடு கொண்டுவரும் கையுறையை ஏற்க மறுப்பாள். வேண்டுமென்றே கூட்டம் நிகழாவாறு நாட் கடத்துவாள். தலைவியின் அருமையைத் தலைவன் உணர வேண்டும் என்பதும், தலைவனின் உறுதியைத் தான் உணர வேண்டும் என்பதுமே தோழி இங்ஙனம் செய்வதன் நோக்கம். அகத்திணைக்கண் மடல் அல்லது மடல்மா என்பது பனங்கருக்கால் செய்யப்பட்ட குதிரையைக் குறிக்கும். இக் குதிரைக்கு ஆவிரம்பூ மாலையும் மணியும் அணிதல் உண்டு. (குறுந் 173) காமுற்ற பெண்ணை எய்தப்பெறாத ஆடவன் மார்பில் எலும்பு மாலையும் தலையில் எருக்க மாலையும் கொண்டு மடல்மாமேல் ஏறித் தெருவில் வருவான் (குறுந் 17, 182). இவ்வழக்கு மடலேறுதல் எனப்படும். இதனால் தவைனின் திட்பத்தையும் அவன் காதற்கு இலக்கான நங்கையையும் ஊரார் அறிவர்; மேலும் அரம்போலும் பனங்கருக்குப் பட்டுப்பட்டு அவன் மேனியிலிருந்து ஓடிவரும் குருதியொழுக்கைக் கண்டு இரக்கங் கொள்வர். இன்ன காதலுனுக்கு மகளைக் கொடுக்க மறுக்கலாமா என்று அவள் பெற்றோரைக் குறையுங் கூறுவர். ஆதலின் ஊரறிய மடலேற்றம் நிகழாதபடி மணங்கள் முடிந்துவிடும் என அறியலாம். தோழி, முன் சொல்லியபடி தலைவனது குறைக்குச் செவிசாய்க்காது, கையுறைக்குக் கைகொடாது காலந் தாழ்த்தும்போது, இனி மடலேறுவது தான் எண்ணியது எண்ணியாங்கு எய்துவதற்கு வழி என்று அவன் அவளிடம் கூறுவான். மாவென மடலும் ஊர்ப பூவெனக் குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப மறுகின் ஆர்க்கவும் படுப பிறிதும் ஆகுப காமங்காழ்க் கொளினே. (குறுந். 71) இக்கூறுகை தோழிக்குச் சிறிது கலக்கத்தை உண்டாக்கும். அதன்பின் தோழி துணையால் களவு நீளவும் காமம் செழிக்கவும் காண்கின்றோம். சங்கப் புலவர் மாதங்கீரனார் பாடிய செய்யுட்கள் இரண்டே (குறுந் 182, நற். 377) அவ்விரண்டும் மடல் மாத் துறை பற்றியன. `மடல்பாடிய மாதங்கீரனார்’ என்ற சிறப்புப் பெயர் இப்புலவர்க்கு வழங்கியிருத்தலைக் கருதுங்கால், இரண்டு சிறிய பாடல்களுக்காக இப் பெயர் பெற்றிரார் என்றும், இவ்வொரு துறையில் பல பாடல்கள் ஆக்கியிருப்பர் என்றும் துணியலாம். மடல்மாப்பொருள் குறித்துப் பதின்மூன்று பாட்டுக்கள் சங்க இலக்கியத்து உள. இவற்றுள், நற்றிணை 143, 152, 342, 377; குறுந்தொகை 14, 17, 32, 173, 182 என்ற ஒன்பதும் ஐந்திணைக்கு உரியவை. கலித்தொகை 138, 139, 140, 141 என்ற நான்கும் பெருந்திணைக்கு உரியன. ஐந்திணை மடலுக்கும் பெருந்திணை மடலுக்கும் நுண்ணிய பெரிய வேறுபாடு உண்டு. மடல்மா ஏறுவேன் என்று வாயளவிற் சொல்லுதல் ஐந்திணையாம். “மடல்மா கூறும் இடனுமார் உண்டே”(தொல். 1047) என்பது இலக்கணம். அவ்வாறன்றி மாமேல் ஏறியே காட்டும் செய்கை பெருந்திணையாய் விடும். “ஏறிய மடற்றிறம்” (தொல். 969) என்ற தொடரில் `ஏறிய’ எனவரும் இறந்த காலவினை பெருந்திணை யிலக்கணத்தைச் சுட்டுதல் காண்க. பகல் இரவுக் கூட்டங்கள் களவொழுக்கம் திடீரென நின்றுபோதற்கு இடனுண்டு. தோழியின் உறுதுணையால் அது நீடித்து ஓடுகின்றது. தோழி பெண்ணாயினும் பணிமகளாகலின், தலைவியைவிடத் தனித்துச் செல்லும் உரிமையும் கடமையும் அவளுக்கு உண்டு. காதலோர்தம் கூட்டத்துக்கு தகும் இடம் எது? தகுங்காலம் எது என்று அவளால் காணமுடியும். எனினும், அவளும் ஒரு குமரியாதலானும் ஏவல் மகளாதலானும் சில எல்லைக்கு உட்பட்டே உதவிசெய்யக் கூடும். அவளுடைய சுற்றுச் செலவும் ஓளரவுபட்டதே, மறைவொழுக் கத்தைச் சமுதாயப் பெருங்கண்கள் பார்த்துக் கொண்டிரா; சுற்றுப் புறக் குளவிகள் கொட்டாது விடா; எண்ணவூசிகள் துளையாது போகா; ஆதலின் காதற்களவுக்கு உலகில் புகலிடம் இல்லை. களவைக் கற்பாக்கினாலல்லது உலகுக்கு உறக்கம் இல்லை. `மலர்ந்த வேங்கை மரநிழலில் தலைவனொடு ஒக்க இருந்து கதிர்தின்ன வந்த கிளிகளை இருவரும் எழுந்துஒட்டி அருவியாடிச் சந்தனம் பூசி மகிழ்ந்த இன்பப் புணர்வுக்கு இனி வாய்ப்பு உண்டோ? தினைக்கதிர்கள் முற்றி விளைந்தன. வேட்டுவர் கொய்து செல்வர். ஆதலின் புனங்காவலைச் சாக்காக வைத்துத் தலைவனொடு அளவளாவுதுல் இனிமேல் இயலாது’ (நற். 259) என்று தோழி தலைவிக்கு அறிவிக்கின்றாள். தலைவனுக்கும் அது கேட்கின்றது. முற்றிய திணை களவொழுக்கத்திற்கு முதல் இடையூறாகும். தலைவி புனங் காத்தல் இல்லெனவே, பகற்காட்சியும்புணர்ச்சியும் இல்லை யன்றே. பின்னர் இரவுக்குறிக்கு வழிசெய்க என்று தலைவன் தோழியைக் குறையுற்று நிற்பான். இரவுக் களவின் தொடக்கத்துக் கூட்டத் தலைவி வீட்டின் புறத்து நடக்கும் என்றும், சிலநாளைக்குப்பின் அச்சம் ஒழிந்து உள்மனையிலும் சென்று களவு நிகழ்த்துவர் என்றும் நச்சினார்க்கினியர் குறிப்பிடுவர் (தொல். 1076). “மனையோர் கிளவி கேட்கும் வழி” என்பதனால், வீட்டின் புறமாவது வீட்டார் பேசுவது கேட்கக்கூடிய அருகு என்பது பெறப்படும். புதியராய் இல்லம் வந்தார் யார்க்கும் விருந்தோம்புதல் தமிழர்தம் இல்லறமரபு. மாலைப்போது கதவைச் சார்த்துவதற்கு முன் விருந்தினராய் வெளியில் நிற்பார் உண்டோ எனக்கேட்டுச் சார்த்தல் பண்டைப் பழக்கமாம் (குறுந். 118). ஒரு சமுதாயத்தை அது நம்பும் பழக்க வழக்கங்களைக் கருவியாகக் கொண்டே ஏய்த்துவிட முடியும். ஆதலின் களவுத் தலைவன் தலைவியின் இல்லத்துக்கு மாலையிற் செல்லுதலும், அவள் தாய் அவனை விருந்தினன் எனக் கருதி முறையாக வரவேற்றலும் உண்டு. எனினும் ஒரு தாய்க்கு உறக்கம் வரவில்லை. குமரி வாழும் வீட்டகத்துப் புதிய ஓர் இளைஞன் வருதலும், இரவில் தங்குதலும் அவளுக்கு ஐயத்தை உண்டாக்கின. தாயின் விழிப்பு இரவுப் புணர்ச்சிக்குத தடையாயிற்று. எதிர் பார்த்தது நடவாமையின், மகளுக்கு ஒரே சினம். அரிதாக ஒரு நாள் நம் மகிழ்ச்சிக்கு உரிய விருந்தினன் வந்தான்.பகைவன் வந்த ஊரினர்போல அன்னை தூங்கவில்லை. காதலர் தம் இன்பத்துக்குக் குறுக்காக நின்ற இவள் நரகத் துன்பம் என்றும் பெறுக”. பெண்கொலை புரிந்த நன்னன் போல வரையா நிரையத்துச் செலீஇயரே அன்னை ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப் பகைமுக ஊரிற் றுஞ்சலோ இலளே (குறுந் 292) எனப் பெண்ணாக ஈன்று குமரிவரை வளர்த்த தாயையும் மகள் சபிக்கக் காண்கின்றோம். பருவத் துணிச்சல் இது. பெற்ற மகளைக் காவல் செய்யும் தாயைப் பெண் கொலை புரிந்த நன்னனோடு ஒப்பிடும்போது, இளம் பெண்ணின் ஆராக் காம வுணர்ச்சியையும், அதனால் வரும் வெகுளியுணர்ச்சியையும், அன்னையை நன்னனெனக் கருதும் வெறுப்புணர்ச்சியையும் உணர்ச்சி யுடையோர் புரிந்துகொள்ள முடிகின்றது. காதலர்கள் காதலிக்கும் தொடக்கத்துத் தம்மை எதிர் நோக்கி யிருக்கும துன்பத் தொகையைப் பற்றி அறியார். அதுபோல் துன்பமலையை இன்பக் கடலுக்குள் தூக்கி எறியும் வன்மை காதலுயிர்களுக்கு உண்டு என்பதையும் அறியார். காலப்போக்கு காதலின் பேராற்றலையும் வழி துறைகளையும் மெல்ல மெல்ல அன்னோர்க்குக் கற்றுக் கொடுக்கும். காதல் வெள்ளத்து மூழ்க்கிய ஆடவன் மத யானைகளையும் சுழித்தடித்துக் கொண்டோடும் காட்டாற்று வெள்ளத்தைப் பொருட்படுத்தாது குறுக்கே பாய்ந்து ஆண் பன்றி போல நீந்தித் தலைவியைக் காண நடுயாமத்துப் புறப்படுகிறான். இரவுக்குறியிடம் வந்து நிற்கிறான் (அகம், 18) கூர்த்த மதியுடைய மடந்தை, முருகன் போலும முன்சினம் கொள்ளும் தந்தை வீட்டில் இருப்பவும், காற் சிலம்பை ஓசையிடாதபடி கட்டிக் கொண்டு, ஏணிமேல் ஏறித் தோட்டத்து இறங்கி, மழை சோ எனப் பெய்யும் நள்ளிரவில் காதலன் அகலத்தைத் தழுவுகிறாள் (அகம். 158, 198) இதுபற்றிக் கேட்கும் செவிலிக்கும், நீகண்டது கனவு எனவும், வேண்டிய வடிவம் எடுத்து மலர்சூடி நம் தோட்டத்து ஒரு பேய் வந்து போவதை அறியாயோ எனவும் தோழி நகையாகவும் நயமாகவும் வேறொன்று சொல்லி மழுப்பக் காணலாம். முன்பில்லாத ஆற்றலும் துணிவும் ஒட்பமும் காமத்தால் உண்டாகும் என்ற அடிப்படையில் இரவுக் குறிப்பாடல்கள் அமைந்துள்ளன. தோழியின் நோக்கம் ஐந்திணை இலக்கியத்துத் தோழி என்னும் ஆளைப் படைத்த பயன் என்ன? அவள் துணையின்றிப்பகற்குறி, இரவுக்குறிகள் நிகழா; களவொழுக்கம் நீடிக்காது; ஆதலின் தோழி வேண்டும் எனப் பலர் கருதுவர். இக்கருத்துப் பிழைபட்டது. களவு நீளவேண்டும் என்பதும், காதலாயினார் இருவகைக் குறிகள் நிகழ்த்த வேண்டும் என்பதும் அகத்திணையின் நோக்கம் இல்லை. பால் வயத்தால் தாமே கண்டு தம்முட்புணர்ந்த களவுக் காதலர்கள் கற்பாக வேண்டும்; வெளிப்படையாக மணந்து இல்லறம் நடத்த வேண்டும் என்பதே அதன் நோக்கம். இந்நோக்கத்தை நிறைவேற்ற வருபவளே தோழி என அறிக. இதனால் தோழி கற்பொழுக்கத்திற் காட்டிலும் களவொழுக்கத்தில் இன்றியமையாதவள் என்பதும் விளங்கும். நோக்கம் நிறைவேறத்தக்க காலம் வாயாவிட்டால், களவு நீடிக்கும் என்றும், களவு நீளும்போது பகற்புணர்ச்சி, இரவுப் புணர்ச்சிகள் நடைபெறும் என்றும் கொள்ளவேண்டும். காமம் காழ்க்கொண்ட இளைய நெஞ்சங்களுக்குமேல் செய்ய வேண்டுவன புலப்படா. எண்ணிப்பார்க்கும அறிவு சில நாளைக்குத் தோன்றாது. இவ்விருவர் செய்கையைத் தோழி அறிவுநிலையில் நின்று நாடுகிறாள். களவு நீடிப்பின், வரத்தகும் கேடுகளைக் காண்கின்றாள். இளையளாயினும் பொறுப்பு உணர்ந்தவளாதலின், திருமணம் செய்து கொள்க என்று தலைவனை இடித்துரைக்கின்றாள். `இவள்மீது வைத்த அன்பால் முதலைகள் வழி மறைத்துக் கிடக்கும் கடற்கரையில் மீன் கூட்டம் துள்ளும் உப்பங்கழிகளை நீந்தி இரவென்று பாராது நீயோ வருகின்றாய். இவளோ நீ வரும் வழியின் கொடுமையை எண்ணிப்பார்த்துத் தன் பேதைமையால் கலங்குகின்றாள். நஞ்சுண்ட இரட்டைக் குழந்தைகளுக்கு வருந்துவதுபோலக் காமங்கொண்ட உங்கள் இருவர் பொருட்டு நான் அஞ்சுகிறேன்.’ கொடுங்கால் முதலைக் கோள்வல் ஏற்றை வழிவழக் கறுக்கும் கானலம் பெருந்துறை இனமீன் இருங்கழி நீந்தி நீநின் நயனுடை மையின் வருதி இவள்தன் மடனுடை மையில் உயங்கும் யானது கவைமக நஞ்சுண் டாஅங்கு அஞ்சுவல் பெருமவென் னெஞ்சத் தானே (குறுந். 234) என்று தலைவனது அன்பையும் தலைவியின் அறியாமையையும் தன் அச்சத்தையும் சுட்டிக்காட்டித் தலைவனுக்கு வரைவுணர்ச்சி ஊட்டக் காண்கின்றோம். “திருமணம் தவிர்க்க முடியாதது; இன்றியமையாதது. இதனைப் புரிந்து கொள்ளுவோமேல், நயமும் பொருத்தமும் உடையதாகத் திருமணத்தைச் செய்ய முயல்வோம்” என்று அறிஞர் பென்னாட்சா `மணங்கோடல்’ என்னும் நூலின் முன்னுரையில் குறிப்பிடுவர். களவொழுக்கம் தூயது, கள்ளவொழுக்கம் தீயது. களவுக் காதலர் மனமாசற்றவர், மணந்து கொள்ளும் உள்ளத்தினர், வெளிப்பட்ட பின்னும் வாழ்பவர். கள்ளக் காதலர் தம்முள் அன்பற்றவர், மணம் என நினையா வஞ்சகர், வெளிப்படின் மாய்பவர் அல்லதுமாய்க்கப்படுபவர். காதலுக்குத் திருமணமின்றேல் சமுதாயத்துக்கு வாழ்வில்லை. ஆதலின், அகத்திணை கண்ட தமிழ்ச் சான்றோர் வரைவை மன்றலை வலியுறுத்தினர் எனத்தெளிக. தோழி களவொழுக்கத்தில் பேரிடம் பெற்றிருப்பதற்கும் 882 களவுப் பாடல்களில் பாதிக்குமேல் வரைவுத் துறைகளாய் இருப்பதற்கும் திருமணக் கொள்கையே ஏதுவாகும். நள்ளிரவில் தலைவன் வரும்வழி யானையும் புலியும் பாம்பும் நடமாடுவது. தடம் குறுகலும் வழுக்கலும அமைந்தது. மழை இட மின்னலோடுகொட்டுவது. மரப்பொந்தும் செடித்தூறும் கொடிப் பிணக்கமும் உடையது. நடுயாமம் எனக் காலம் பாராதும், உயர்ந்து சரிந்த சிறிய இட்டிடை என இடம் பாராதும, காதல் வலியே வலியாகத் தலைவன் வருவது தோழிக்கு நல்ல வரவாகப் படவில்லை. மன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்றோ இன்றுதலை யாக வாரல் (அகம். 318) `திருமணம் உடனே செய்துகொள்ள விரும்பினாலும் செய்து கொள்க; இனிமேல் இரவுக்குறி வராதே’ என்று தோழி கடுமையாக முன்னுறுத்தக் காண்கின்றோம். வழியச்சம் தோழிக்கே இருக்கும்போது, தலைவிக்கு எவ்வளவு இருக்கும்? செங்குத்தான யானை போலும் ஓங்கலின்மேல் கயிறுபோலும் ஒற்றைச் சிறுதடத்து இருளில் தலைவன் வருகின்றானே, ஈரம் வழுக்கிப் படுகுழியில் விழுதலும் கூடுமே அங்கிருந்து அடிதாங்கி அணைத்தற்கு ஆள் வேண்டுமே என்று என் நெஞ்சு என்னைக் கேளாது உன்னிடமும் சொல்லாது புறப்பட்டுப் போய்விட்டது’; எவன்கொல் வாழி தோழி மயங்கி இன்ன மாகவும் நன்னர் நெஞ்சம் என்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்கு இறும்புபட்டிருளிய இட்டருஞ் சிலம்பிற் குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக் கான நாடன் வரூஉம் யானைக் கயிற்றுப்புறத் தன்ன கன்மிசைச் சிறுநெறி மாரி வானம் தலைஇ நீர்வார்பு இட்டருங் கண்ண படுகுழி இயவின் இருளிடை மிதிப்புழி நோக்கியவர் தளரடி தாங்கிய சென்ற தின்றே (அகம். 128) எனத் தலைமகன் கேட்குமாறு தோழிக்குச் சொல்வது போலத் தலைவி தன் அச்சத்தைப் புலப்படுத்துகின்றாள். இரவுக்குறி வந்த தலைமகனை, `வழி கொடியது. உன் உயிர்க்கு ஊறுவந்தால் இவளுயிர் என்னாகும்? இனி இரவில் வருவதைத் தவிர்க. பழங்கள் தொங்கும் காந்தட் சோலையில் பகல் நீ வரினும் புணரலாம் (அகம். 18), என்று கூறுவதும், பகல் வந்தொழுகும் தலைமகனை, `பெருங்களிறு புலியொடு பொருது வலி சோரும் மலைச்சாரலில் நடுயாமத்து வருக, ஏதத்துக்கு நானோம் (குறு. 88) என்று கூறுவதும், `நீ பகல் வரின் ஊரார் அலருக்கு அஞ்சுகின்றோம்; ஆதலின் இரவும் பகலும் வராதே” (அகம் 118) என்று கூறுவதும், அடிக்கடி இவ்விடம் வருக, அவ்விடம் வருக என இடமாற்றி உரைப்பதும் எல்லாம், பார்வைக்குத் தலைவனை அலையவைத்து அலைக்கழிவு செய்வதுபோல் தோன்றினும், அவன் நாள் நீடிக்காமல் தலைவியை மணந்துகொள்ள வேண்டும் என்பதே பொறுப்புடைய தோழியின் உட்கிடையாகும். தோழியின் செய்கையெல்லாம் `வரைதல் வேட்கைப் பொருள்’ (தொல். 155) என்று தொல்காப்பியம் எடுத்துக் காட்டுதல் காண்க. காதலர்கள் அன்புடையவர் களாயினும், களவு என்பது எப்படியும் களவுதானே. அதற்குரிய அச்சமும் இடையூறும் சூழ்நிலையும் வெளிப்பட மணந்தாலன்றி எங்ஙனம் ஒழியும்? இதனை அறிவுடைத் தலைவன் அறியாதானல்லன். மணமே மறைவுக்கு முடிவு என அவன் அறிந்திருந்தும், அச்சநிலையில் ,களவு தரும் பேரின்பம் கருதி, அதனில் சின்னாள் நீடித்தொழுக விரும்புவான். எனினும் தோழியின் முடுக்கும் வேறுபல இடையூறுகளும் விரைந்து மணக்குமாறு தலைவனைத் தூண்டும். சங்கப் பெரும் புலவர் பரணர் களுவு நெறிக்கு வரும் முட்டுப்பாடுகளை யெல்லாம் அடுக்கி ஒருபாட்டில் (அகம். 122) சொல்லுவர். இப்பாட்டு அவலச் சுவைக்குப் பேரிலக்கியம். நாள்தோறும் எதிர்பார்த்திருந்த கூட்டம் நாள்தோறும் வந்த புதிய இடைஞ்சலால் நடவாமற் போயிற்று என்றும், இங்ஙனம் ஏழுநாள் ஏழு இடையூறுகள் ஏற்பட்டன என்றும், இது எங்கள் குறையுமன்று, யார் குறையுமன்று, களவின் குறை என்றும் ஒரு தலைவி ஏங்கி இரங்கி மொழிகின்றாள்; “விழாக் காலத்துத்தான் ஊhமக்கள் தூங்கமாட்டார்கள். இவ்வூராரோ விழா இல்லாக் காலத்தும் உறங்குகின்றிலர். ஒருகால் இவ்வூரினரும் வாணிகம் பெருத்த கடைத்தெருவினரும் துரங்கிப்போனாலும், என் தாயென ஒருத்தி இருக்கின்றாளே, எப்போதும் வெடுக்கென்று கொத்துகின்ற அவளுக்கு உறக்கம் என்பது ஒன்று வருவதேயில்லை. என்னை வீட்டகத்துப் பூட்டி வைக்கும் அன்னை மறந்து ஒரு வேளை தூங்கிவிடினும், ஊர் காவலர்கள் விழித்த கண்ணராய் வேலேந்தி மூலை முடுக்கெல்லாம் கிடுகிடெனச் சுற்றித் திரிவர். ஒரு சமயம் அவர்கள் தூங்கினும், வால் மடங்காக் காவல் நாய் விடாது குரைக்கும். ஓயாது குரைத்து அயர்ந்து அக் கூரிய பல் நாய் ஒருகணம் கண் சாயினும், வெண்ணிலா வானத்து நின்று பகல்போலப் பேரொளி வீசும். மதியும் தண்கதிர்சுருக்கி மலைக்குள் மறையும்போது, இன்னாக் குரல் கொண்ட கோட்டான்கள் வீட்டெலிகளை இரைகொள்ள வேண்டி, பேய் திரியும் நடுச்சாமத்து விடாது குழறும். கோட்டானும் கத்துதல் நின்றபோது, விடிவை அறிவிக்கும் கோழி கூவும். இவ்விடையூறெல்லாம் இல்லாத நாளொன்றில்லை. ஊராரும் தாயாரும் காவலோரும் நாயாரும் துங்கித் திங்களும் தோன்றாது கோட்டான் குழறாது கோழி கூவாது ஒரு நல்லிரவு வரப் பெற்றேனாயின், ஐயகோ, நாள்தொறும் பயனின்றி வந்த அவர் அன்று வராதிருந்து விடுவார். தித்தன் உறந்தைக் காட்டுப்பாதை எவ்வளவு முட்டுப்பாடு உடையது. அவ்வளவு இடர்ப்பாடு நிரம்பியது நம் களவு நெறி”. எல்லாம் மடிந்த காலை ஒருநாள் நில்லா நெஞ்சத் தவர்வா ரலரே அதனால் ...................... நொச்சி வேலித் தித்தன் உறந்தைக் கல்முதிர் புறங்காட் டன்ன பல்முட் டின்றால் தோழிநங் களவே. (அகம். 122) வெறியாட்டு தன்மகள் மேனி நாள்தோறும் மெலிவதைப் பார்த்து நற்றாய் (செவிலித்தாய்) கவல்கிறாள். உண்மையான காரணம் அவளுக்குப் புலனாகவில்லை. மரபுவழிப்பட்ட தாயாதலின், இம்மெலிவு முருகனால் வந்தது என்று நம்பி, முருக பூசை செய்யத் துணிந்தாள். இதுவே வழியெனக் கிழவிகளும் கூறினர். வீட்டில் நல்லதோர் இடத்து நடுயாமத்துப் பூசை தொடங்கிற்று. முருக பூசாரி வேலன் எனப்படுவான். தினையை இரத்தத்திற் கலந்து எறிந்துமுருகனைக் கூவி அழைப்பதும், வெறியாட்டு என்னும் ஆவேசக் கூத்தை ஆடுவதும், கழற்சிக்காயிட்டு நோய்க்கும் முருகென மொழிதல் அவன் வாய் மரபு (அகம். 22; ஐங். 249). வழக்கம்போல, இவள் முருகேறப்பட்டவள் என்று தாய்க்குக் கூறினான். தன் காதல் நோய்க்குப் பிறிதொரு காரணம் தெய்வச்சார்பு ஆகுக. கற்பிக்கப்படுவதைக் கற்புடைக் குமரி பொறாள் அன்றோ? ஆயினும் `என் நோய் காதல் நோய்; தலைவன் மார்புத் தழுவலால் வந்த நோய். கடவுளான நீ இதனை அறிந்திருப்பாய். அறிந்து வைத்தும், மரபறிவு அன்றி மெய்யறிவு இல்லாத பூசாரி அழைக்கத் தோன்றிய முருகனே! என் சொல்வது? கடவுளாயினும் உனக்குத் தன்னறிவு இல்லை. இத்தகைய இடங்களில் இனி வாராது வாழ்க’; அருவி யின்னியத் தாடும் நாடன் மார்புதர வந்த படர்மலி யருநோய் நின்னணங் கன்மை யறிந்தும் அண்ணாந்து கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட வெறிமனை வந்தோய் கடவு ளாயினும் ஆக மடவை மன்ற வாழிய முருகே (நற். 94) எனத் தெய்வத்தை எள்ளுகின்றது கற்பு. கற்புச் சினக்கும் போது தெய்வம் முன்னிற்குமோ? காதல் நோயைக் கழற்சிக் காயால் அறியலாம் என்றால், இவள் கற்பு மேன்மைக்கு அவமானம் என்பது தோழி கருத்து; நன்றால் அம்மநின்ற இவள் நலனே (ஐங் 248). எனினும், இவ்வெறியாடு காலத்துக் களவுத் தொடர்பைத் தாய் வெளிப்படையாகவோ குறிப்பாகவோ அறிய வாய்ப்பு உண்டு. அறிவித்து விடவும் தலைவியும் தோழியும் முயல்வர். ஒருதாய் கட்டுவிச்சியை அழைத்துத் தன் மகளின் நோய்க் காரணத்தை வினவினாள். முறத்தில் நெற்களைப் பரப்பி எண்ணிக் குறி சொல்வது கட்டுவிச்சியின் வழக்கம். குறி சொல்லும்போது பல்வேறு மலைகளைச் சொல்லிப் பாடுவது உண்டு. அதன்படி முதிய அகவல்மகள் (கட்டுவிச்சி) தமிழ் நாட்டு ஒவ்வொரு மலையாகப் பாடிக்கொண்டு வந்தாள். தங்கள் தலைவன் வாழும் மலையைப் பாடியபோது. அகவல் மகளே பாடுக பாட்டே இன்னும் பாடுக பாட்டே அவர், நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே (குறுந். 23) என்று தோழி இடைப்புகுந்து உரைக்கப் பார்க்கின்றோம். பிற மலைகளை மேலே பாடாதபடியும், தலைவனது மலையையே திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருக்கும்படியும் கட்டு விச்சியை வேண்டினாள் தோழி. தோழியின் துணிச்சல் தாயின் சிந்தனையைத் தூண்டுமன்றோ? `இம்மலை யொன்றில் இவர்கட்கு ஈடுபாடு ஏன்? `நன்னெடுங் குன்றம்’ என்று பாராட்டுவதேன்? மகள் மெலிவுக்குக் காரணம் இம்மலைவாழ் ஒருவனோ? தமிழ்ப் பெண்கள் கணவர் பெயர் கூறார் ஆதலின், அவர் என்று சுட்டினரோ?’ என்றெல்லாம் தாய்க்கு ஆராய்ச்சி தோன்றுகிறது. வெறியாட்டால் இவ்வாறு தோழி அன்னைக்கு அறத்தொடு நிற்கவும், மறை வெளியாகவும் இடம் ஏற்படுகின்றது. மேலும் தலைவனை நோக்கி, நின்னால் இவள் வருந்தவும், முருகனால் வந்தது என்றுவேலன் சொல்ல நீ வைத்துக் கொள்ளலாமா? இது கெழுதகை கொல்?’ (ஐங் 245) என்றுதோழி இடித்துரைக்கவும் வரைவு முடுக்கவும் வெறியாட்டு கருவியாகின்றது. சமுதாயச் சடங்குக்கும் கற்பொழுக்கத்துக்கும் ஒரு போராட்டத்தை வெறியாட்டிற் காணலாம். முதுமை மரபைப் பின்பற்றும், இளமை முதுமையை எள்ளும் என்ற நிலையில் வெறித்துறைப் பாடல்கள் எழுந்துள. எதிர்ப்புணர்ச்சிகள் புலவோர் பாடுதற்குக் கவர்ச்சியான இடங்களாம். ஆதலின் இத்துறையில் 40 பாடல்கள் சங்கவிலக்கியத்து உண்டு. காமக்கணியார் மூன்று அகச்செய்யுட்கள் பாடிய பெண் புலவர். இம் மூன்றும் (அகம் 22, 98; நற். 268); வெறிப்பொருளனவே. இவ்வொரு துறையை ஆழ்ந்து பாடவல்ல புலமை பற்றி, `வெறி பாடிய; காமக் கணியார் என்று இவர் சிறப்புப் பெற்றார். அன்னை மகள் பூசலை ஒரு பெண் புலத்தி பாடுவது சிறப்புத் தானே! கபிலரின் `வெறிப் பத்துப் பாடல்கள் அன்னையின் அறியாமை, வேலனின் அறியாமை, தோழியின் எதிர்ப்பு, தலைவியின் கற்பு முதலியவற்றைத் தொடர்பாக நமக்கு அறிவூட்டுகின்றன. எல்லாப் பாடலிலும் கற்பின் வென்றியே இலங்கக் காண்கின்றோம். அலர் ஐந்திணை இலக்கியத்துக்கு அழகு செய்பவர் உள்ளுர்ப் பெண்டுகள். அவரின்றேல் அவ்விலக்கியம் உப்பின்றியிருக்கும். `அல்லது செய்தல் ஒம்புமின்’ (புறம். 195) என்பதற்கு நேர்மாறாக ஊர்ப்பெண்டிர் செய்வது அல்லதேயாயினும், சமுதாய நெறிக்கு நல்லது என்ற கருத்தால் தமிழ்ச் சான்றோர் ஊராரையும் அகத்திணை யிலக்கியத்துப் போற்றிக் கொண்டனர். களவிலும் கற்பிலும் ஊரார்க்கு இடனுண்டு, (தொல். 1107) ஊரார் என்பது ஆண்பெண் இருபாற்கும் பொதுச் சொல்லாயினும் அகத்திணையில் பெண்டிரையே குறிக்கும். வீட்டகத்துச் செய்திகளை அடுக்களைப் புகைபோல நுழைந்து காணும் ஆசையும், கூடியிருந்து முணுமுணுத்துப் பேசும் துணிவும் எப்படியோ பெண் சமுதாயத்துக்குப் பிறவிக்குணம்போல் அமைந்துவிட்டன. ஒரு குமரியின் காதலொழுக்கம் பற்றி ஊர்மகளிர் வாய்க்குள் பேசிக்கொள்வது அம்பல் எனவும், வெளிப்படையாகப் பேசுவது அலர் எனவும் பெயர்பெறும். “அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர்” (நற். 143) “அலர்வினை மேவல் அம்பற் பெண்டிர்” (அகம். 203) என இவ் வாய்ப்பட்டிகளை அகப்புலவர்கள் குறிப்பிடுவர். ஊரார் தூற்றம் அலரால் பல நலங்கள் உண்டு. `மணங்கமழும் கடற் சோலையில் எங்கள் இன்பப் புணர்வைத் தடுத்து விட்டதே; நாள்தோறும் வத்ந தேரை நிறுத்திவிட்டதே’ (நற். 203) என்று தலைவி சில பலபோது அவரைப் பழித்தாலும் `எம் அன்னை என்னை வீட்டினுள் அடைத்து வைப்பதற்கு ஊர்வாயன்றோ காரணம்; இனி என் மாநிற அழகு வெண்ணிறப் பசலையாகிப் போகுமோ? (நற். 63) என்று ஊரார் வைதாலும், முடிவில் அலரின் நல்விளைவைத் தலைவியும் தோழியும் அறிந்தே யிருந்தனர். ஒருதாய் தன் மகளைச் சிறிது கடிந்துரைத்தாள். அது தெரிந்த முல்லைநிலப் பெண்டுகள் இவளுக்கு இவனோடு தொடர்பு உண்டு என அலர் தூற்றினர். இவ்வலர் கேட்ட தலைவி வருத்தப்படவில்லை. தன்னை அவனோடு சேர்த்துப பேசப்பேச அவளுக்குப் பெருமகிழ்ச்சி. ஊருக்கு உண்மை தெரிந்தது என்றும், இனித் தன் வீட்டார் அவ்விடையனுக்கே தன்னை மணப்பிப்பர் என்றும், கற்புக்கு ஊறு இல்லை என்றும் நன்முறையில் அலரை மதிக்கின்றாள். ஒண்ணுதால், இன்ன உவகை பிறிதியாது யாயென்னைக் கண்ணுடைக்கோலள் அலைத்ததற் கென்னை மலரணி கண்ணிப் பொதுவனோ டெண்ணி அலர்செய்து விட்டதிவ் வூர். (கலி. 105) இனி அலரைத் தவிர்க்கமுடியாது. ஊர் வாயை மூட முடியாது என்ற எண்ணத்தால், காதலர்களுக்குத் திருமண நினைவு பெருகுகின்றது. மணப்பது உறுதி என்ற துணிவாலும், `இனிமேல் களவொழுக்கம் கிடைக்கப்பெறாது என்ற நசையாலும்’ சில ஆடவர்களுக்குக் களவின்பத்தை நீடிக்கும் மனப்பாங்கு வருதல் உண்டு. “மாணா ஊர் அம்பல் அலரின் அலர்கென, நாணும் நிறையும் நயப்பில் பிறப்பிலி’ (கலி, 60) என்ற பாட்டால் அலருக்கு நாணாத ஆண் பிறப்புக்களை அறியலாம். முகிழ்முகிழ்த்த அம்பல் இன்னும் விரிந்து மலர்போல மலரட்டுமே என்று ஒரு தலைவன் துணிவாகப் பேசுகின்றான். எனினும் இவ்வகைத் துணிவு நாண்பிறப்பு எனத்தக்க பெண்பிறப்புக்கு வருவதில்லை. `துணையெனத் தொழுத தெய்வமே அன்பனுக்குக் கொடுமை செய்தது என்னுமாப் போல, காதலனாகிய நீ காதலிக்குக் கொடியவனாகின்றாய். உன்னால் அவளுக்குப் பழிதோன்றவும் அலர் பரவவும் மனம் அலையவும் காண்கின்றேன். இனியேனும் வரைந்து ஆட்கொள்’ என்று தலைவன் நாணுமாறு தோழி இடித்துரைக்கின்றாள்: வழிபட்ட தெய்வந்தான் வலியெனச் சார்ந்தார்கண் கழியுநோய் கைம்மிக அணங்காகி யதுபோலப் பழிபரந் தலர்துற்ற என்தோழி அழிபடர் அலைப்ப அகறலோ கொடிதே. (கலி. 132) ஊரலரை மிக வெறுக்கும் ஓர் ஐந்திணைப் பாத்திரம் தலைவியின் தாயே (அல்லது தலைவியை வளர்த்த செவிலியே). எவ்வகையானும் அம்பலையோ அலரயோ அவள் விரும்பு வதில்லை. தன் குடும்பத்தைப்பற்றிப் பேசுதற்கு இவர் யார்? தன் மகள் நடத்தைபற்றி வாயெடுத்ததற்கு ஊரார்க்கு என்ன உரிமை யுண்டு” என்றெல்லாம் தாய் மனம் கொதிக்கின்றது. கௌவை மேவலராகி இவ்வூர் நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ புரைய அல்லவென் மகட்கு (அகம். 95) ஊர் கூறும் அலர் என்மகளுக்குப் பொருந்துமோ? என்று சொல்லும் போது, தாயின் குடிப் பெருமிதத்தையும் என் மகள் மேல் இடுதேளிட்டாற்போல் பழிபரப்பும் இவ்வூர்ப் பெண்டுகள் இவ்வுலகப் பெண்டுகள் இல்லை, நரகப்பெண்டுகள் என்று சொல்லும்போது, தாயின் ஆறாச் சினத்தையும் நாம் புரிந்து கொள்கின்றோம். குடிப்பெருமைக்குக் கேடு வருங்கால், வெகுளி பிறக்கும் என்பர் தொல்காப்பியர். அத்தகைய வெகுளித் தாயர்களை அலர்த்துறைபற்றிய பாடல்களில் காணலாம். தன் மகள் களவொழுக்கத்தைத் தாயே ஒரு நாள் தெரிந்து கொள்வாள் என்று சும்மா இராமல் (`யாய் அறிந்து உணர என்னார்’) என் வீட்டுப்படியேறி வந்து என்னிடமே பலகாலும் குறைசொல்லும் இவ்வூர் மாதர்கள் நல்ல வாயும் குடும்பத் தொழிலும் உடையவர்கள் இல்லை; “தீவாய் அலர்வினை மேவல் அம்பற் பெண்டிர்” (அகம். 203) என்று பெற்ற மனம் பித்தாக ஒருதாய் வசை பொழிகின்றாள். பெதும்பைப் பருவ மகளைப் புறத்தே போகவிடாள், கோல்கொண்டு அலைப்பாள், இரவு பகலெல்லாம் கண்காணிப்பாள் என்று தாயின் செய்திகளை அகவிலக்கியத்துப் படிக்கின்றோம். படிப்பார்க்கும் தலைவிக்கும் தோழிக்கும் தலைவனுக்கும் அன்னை கொடியவளாகவும் காதலுக்குப் பகைத்தி ஆகவும் தோற்றம் தந்தாலும் இளமை வேகத்தால், தன் பழங்குடி ஒழுக்கவடுப்படுதல் கூடாது, ஊர் வாய்ப்படுதல் கூடாது என்ற விழிபபுத்தான் முதிய அன்னையின் கடுமைக்குக் காரணம். சிலரும் பலரும் மூலை முடுக்கெல்லாம் கூடிநின்று மகளைப் பற்றிச் சாடையாகவும் நேராகவும் பேசும்போது, அங்ஙனம் பேச நடந்துகொண்ட மகள்மேல் எவ்வன்னைக்குத்தான் சினம் கனலாது? சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகின் பெண்டிர் அம்பல் தூற்றச் சிறுகோல் வலந்தனள் அன்னை (நற். 149) தலைவர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், இதழ்கள் பார்வையில்... தலைவர்கள் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் வாழ்வும் பணியும் வற்றாத தமிழ்க்கடல் வ.சுப. மாணிக்கம் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு திகைத்துப் போனேன். கடந்த இரண்டுகிழமைகளுக்கு முன்புதான் என்னை வந்து சந்தித்து நீண்ட நேரம் உரையாடி விட்டுச் சென்றார். இன்று இப்படியொரு செய்தி என்கிற போது தாங்கிக் கொள்ள இயல வில்லை. எத்தனையோ விழாக்களில் நானும் அவரும் கலந்து கொண்ட பசுமையான நினைவுகள் நெஞ்சில் அலை மோதுகின்றன. எப்போதும் தமிழ் தமிழ் தமிழ் என்றே ஒலித்துக் கொண்டிருந்த அந்த இனிய இதயம் இந்தத் தமிழகத்துக்கு வழங்கியுள்ள இன உணர்வினை எப்படித்தான் மறக்கமுடியும். ஏடுகள் பல அவர்புகழ்பாடும் - தமிழுக்கும் தமிழர்க்கும் அவர் ஆற்றிய தொண்டு நின்று நிலைபெற்று, இளைய தலைமுறைக்கு ஒளிக்கதிராக என்றென்றும் விளங்கும்! வாழ்க. பெரும்புலவர் மாணிக்கனார் அவர்களின் மங்காப்புகழ் - தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி வாழ்த்து பேராசிரியர் டாக்டர் வ.சுப. மாணிக்கம் அவர்களின் மறைவு தமிழுக்கும், தமிழர்க்கும் பேரிழப்பாகும். அதிலும் தமிழகப்புலவர் குழுவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அப்பெருமான் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலிருந்து செய்த தமிழ்த்தொண்டுகளைவிட பதவியை விட்டு விலகிய பிறகு செய்த தமிழ்ததொண்டுகள் மிகப் பலவாகும். அவர்தம் வாழ்நா ளெல்லாம் தமிழகத்தில் “தமிழ்மொழி” பயிற்று மொழியாக வேண்டும் எனப் பெரிதும் முயன்று, பாடுபட்டு, பலன் காணாமல், உயிர் நீத்த செய்தியை எண்ணி, எண்ணி, தமிழக மக்கள் அனைவரும் புண்பட்ட மனத்துடன் வருந்திக் கொண்டிருக்கின்றனர். - முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் அறிஞர்கள் தொல்காப்பியக் கடல் பயணம் செய்வோம் மூதறிஞர் டாக்டர் வ.சுப. மாணிக்கம் அவர்கள் கடந்த நாற்பது ஆண்டுகளாக எழுதிய கட்டுரைகள் அனைத்தையும் வகைப்படுத்தி, ஓரினப் பொருளை ஒரு தலைப்பின் கீழ் நூலாக்கும் திட்டத்தில் இந்நூல் வெளி வருகிறது. இந்நூல் வரிசை ஆய்வாளருக்கு மிகுந்த பயனை அளிக்கும்; இவ்வகை நூல்கள் வருங்கால ஆய்வுக்கு அடிப்படையாய் அமைவன. ஆய்வுக் களங்கள் பல அமைந்த இக்கட்டுரைகள் அனைத்தும் ஒரு நூலாக அமைவதால் பயன் மிகுதியாகிறது. குறிப்பிட்ட துறையில் பார்வை நூலாக அமைகிறது. இவ்வகை நூல்கள் மேற்கோளாட்சிக்கு மிகுதியும் பயன்படுவன. செம்பதிப்புக்கேற்ப, கட்டுரைகள் ஒருசேர வரிசைப் படுத்தப்பட்டுள்ளன; வகைமைப் படுத்தப் பட்டுள்ளன. பேரறிஞர் ஒருவர் ஒரு துறையைப் பற்றி நீண்ட நெடிய காலம் சிந்தித்த சிந்தனைகள் எல்லாம் அவராலேயே ஒழுங்குபடுத்தப் பெற்று ஒரு நூலாக அமைக்கப் பெறுவது பல்வகைப் பலனைத் தரும் அரிய முயற்சி, பெரிய முயற்சியாகும். ஆசிரியர் இக்கட்டுரைகளை மறுபரிசீலனை செய்து, சீர்திருத்தி, செம்மைப்படுத்தி, முறைப்படுத்தி, வகைமைப் படுத்தி நூலாக்கியுள்ளது வளர் தமிழ் ஆராய்ச்சிக்கு வழிவகுக்கும். இத்தொகுப்பு நிகழ்கால ஆய்வு வளத்திற்குக் கண்ணாடி. பேராசிரியரின் ஆய்வு வன்மைக்கு, அருந்தமிழ் ஆற்றலுக்கு இந்நூல் வரிசை பெருமை சேர்ப்பன. இவ்வாசிரியர் ‘தொல்காப்பியக் கடல்’ எனும் பெரு நூலில் தமிழிலக்கணத்தின் தொன்மையையும் தூய்மையையும் தன்மையையும் தலைமையையும் தாய்மையையும் நிறுவியுள்ளார். இந்நூல் தொல்காப்பிய ஆழத்தையும் அகலத்தையும் அறியத் துணைபுரியும். தொல்காப்பியரை மொழிநூல் அறிஞரெனவும் தொல்காப்பியம் தமிழின் உயிர்நூல் எனவும் இன்றும் இனியும் என்றும் வாழும் நூல் எனவும் விளக்குகிறார். தமிழில் தொல்காப்பியத்தின் நிழல் படியாத இலக்கியம் இல்லை என்று நிறுவுகிறார். எவ்வகை இலக்கிய வடிவத்திற்கும் வித்தையும் வேரையும் தொல்காப்பியத்தில் காண்கிறார். பாரதியார் -- கண்ணதாசன் வரை தொல்காப்பிய நிழல் படிந்துள்ள பாங்கினை விளக்குகிறார். தொல்காப்பியத்தின் பல்துறைப் பயனை - இனிமையினை - எளிமையினை எடுத்து விளக்குவதைத் தலையாய பணியாகக் கொண்டுள்ளார். தொல்காப்பிய நெறிப்பட்ட இலக்கணமே என்றும் வாழும் என்ற கருத்தினர். தொல்காப்பியம் தமிழ்க் கருவூலம், வற்றாத ஊற்று என்பதனை ஒவ்வொரு கட்டுரையிலும் உறுதிப்படுத்துகிறார். மாணிக்கனாரின் புதிய சொல்லாக்கங்கள் தமிழுக்குப் புது வரவும் தமிழுக்கு ஆக்கமும் ஆம். இந்தத் தலைமுறையில் இவரைப்போல் புதிய சொற்களைப் படைத்தவர் இலர். வாழும் சொற்களைப் படைப்பதில் வல்லவர்; பழஞ்சொல் புதுப்பிப்பதிலும் வல்லவர். இவர் படைத்த பல சொற்கள் பலராலும் ஏற்றுக் கொள்ளப் பெற்று, நாளும் பயன்படுத்தப் பெற்று வருவது இவரது சொல்லாக்கச் செந்நெறிக்குச் சான்றாகும். இவருடைய சொல்லாக்கங்களைச் செய்தி இதழும் வானொலியும் நாளும் பயன்படுத்துவதே இவரது மொழிக் கொடைக்கு ஒப்பற்ற சான்றாகும். வெல்லும் சொல் படைக்கும் வித்தகரெனத் தமிழ்கூறு நல்லுலகம் போற்றுகின்றது. இவர் நடையில் நின்றுயர் நாயகனாக விளங்குகிறார். இவர் நடை சொற் செட்டும் சுருக்கமும் தெளிவும் செறிவும் திட்பமும் நுட்பமும் வாய்ந்தது. புலமை நலம் சான்ற பெருமித நடை இவர் நடை. பழந்தமிழ்ச் சொற்கள் மிகுந்துவரும் இலக்கிய நடை. புதுச்சொற்கள் பொலியும் புதுவகை நடை. எல்லா வகையாலும் இவரது நடை தனித்தன்மை சான்றது. பேராசிரியருடைய மூன்று வரிகளைக் கொண்டே அவர் தமிழ்நடையின் தனித் தன்மையினை இனம் காணலாம். அவர் பயன்படுத்தும் சொற்கள், சொல்லாக்கம், சொல்லாட்சி ஆகியவை அவர் நடையின் இயல்பினை இனங்காட்டுவன. ஆய்வு அவருக்கு இயல்பாக அமைந்ததொன்றாகும். திருக்குறளைச் செயல் நூலாக வள்ளுவமாக நூலாக்கினார். கம்பனைக் கற்கும் நெறியில் புதிய தடம் அமைத்தார். அகத் திணையியல் ஆய்வில் ‘தமிழ்க்காதல்’ நெறி விளக்கினார். இவை என்றும் தமிழுக்குப் பொன்றாப் புகழ் தருவன. ‘மறைமலை அடிகளாரின் ஆய்வுத் திறனம் கொள்கை உறுதியும் திரு.வி.க. வின் மொழி நடையும் சமுதாய நோக்கும் பேராசிரியரின் எழுத்தில் பளிச்சிடுவதாகத்’ திறனாய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். வெள்ளிவிழாக் கண்ட தமிழகப் புலவர் குழுவின் தலைவராக இருந்து இவர் ஆற்றிய பணிகள் அளவிடற் கரியன. தமிழ் மக்களின் நீண்ட நெடிய கனவுகளுக்கு உருவம் கொடுக்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வடிவமைப்புக் குழுவின் தலைவராகயிருந்தார். சாதனைகளால் சிறந்து விளங்கும் தமிழ்ப் பல்கலைகழகத்தில் தொல்காப்பியத் தகைஞராக, சிறப்புப் பேராசிரியராக நியமிக்கப் பெற்று, உரை எழுதி வருகிறார். புலமையாலும் தலைமையாலும் சிறந்து விளங்கும் இவர்கள், இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவராகத் திகழ்கிறார். எங்கள் பதிப்பகத்திற்குப் பெருமை சேர்க்கும் நல்லாசிரியப் பெருமக்களுள் முதன்மையானவர். அவர்தம் படைப்புக்களைப் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வெளியிட்டுப் பதிப்பகம் பேரும் புகழும் பெற்று வருகிறது; பயனுள்ள நூல்களை வெளியிடும் ஒவ்வொரு முறையும் பூரிப்போடும் உவகையோடும் களிப்போடும் சாதனை மலர்களைச் சூடி மகிழ்கிறது. ச. மெய்யப்பன், எம், ஏ., அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொல்காப்பியக்கடல் நூல், திருக்குறளின் சுடரொளி மூதறிஞர் டாக்டர் வ.சுப. மாணிக்கம் அவர்கள் கடந்த நாற்பது ஆண்டுகளாக எழுதிய கட்டுரைகள் அனைத்தையும் வகைப்படுத்தி, ஓரினப் பொருளை ஒரு தலைப்பின் கீழ் நூலாக்கும் திட்டத்தில் இந்நூல் வெளி வருகிறது. இந்நூல் வரிசை ஆய்வாளருக்கு மிகுந்த பயனை அளிக்கும்; இவ்வகை நூல்கள் வருங்கால ஆய்வுக்கு அடிப்படையாய் அமைவன. ஆய்வுக் களங்கள் பல அமைந்த இக்கட்டுரைகள் அனைத்தும் ஒரு நூலாக அமைவதால் பயன் மிகுதியாகிறது. குறிப்பிட்ட துறையில் பார்வை நூலாக அமைகிறது. இவ்வகை நூல்கள் மேற்கோளாட்சிக்கு மிகுதியும் பயன்படுவன. செம்பதிப்புக் கேற்ப, கட்டுரைகள் ஒருசேர வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. வகைமைப்படுத்தப்பட்டுள்ளன. பேரறிஞர் ஒருவர் ஒரு துறையைப் பற்றி நீண்ட நெடிய காலம் சிந்தித்த சிந்தனைகள் எல்லாம் அவராலேயே ஒழுங்குப்படுத்தப் பெற்று ஒரு நூலாக அமைக்கப் பெறுவது பல்வகைப் பலனைத் தரும் அரிய முயற்சி, பெரிய முயற்சியாகும். ஆசிரியர் இக்கட்டுரைகளை மறுபரி சீலனை செய்து, சீர்திருத்தி, செம்மைப்படுத்தி, முறைப்படுத்தி, வகைமைப்படுத்தி நூலாக்கியுள்ளது வளர்தமிழ் ஆராய்ச்சிக்கு வழிவகுக்கும். இத்தொகுப்பு நிகழ்கால ஆய்வு வளத்திற்குக் கண்ணாடி. பேராசிரியரின் ஆய்வு வன்மைக்கு, அருந்தமிழ் ஆற்றலுக்கு இந்நூல் வரிசை பெருமை சேர்ப்பன. மூதறிஞர் செம்மல் டாக்டர் வ.சுப. மாணிக்கம் அவர்கள் ‘வள்ளுவம்’ எனும் அரிய பெரிய ஆய்வு நூலைத் தமிழ்கூறு நல்லுலகத்திற்கு அளித்தார். திருக்குறள் ஆய்வில் அந்நூலுக்குத் தனிச் சிறப்பிடம் உண்டு, ஆசிரியரின் அறிவியல் அணுகுமுறை திருக்குறளைச் செயல் நூலாக நிறுவிற்று. திருக்குறளை ஓதி உணர்ந்ததோடு உணர்த்தலிலும் வல்லவராகத் திகழ்கிறார். திருக்குறள் வாழ்க்கை நூல்; நடைமுறையில் பின்பற்றப் பட வேண்டிய நன்னூல்; திருக்குறளைப் பெற்ற இனம் தனிச் சிறப்புடையது; வாழ்வின் எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வு நல்கி, வழிகாட்டும் வளமுடையது என்பதனை இந்நூலில் விரிவாக விளக்கியுள்ளார். திருக்குறள் அமைப்பினையும் அழகினையும் ஆராய்கிறார். சொல்லழகு, தொடரழகுகளை விளக்குகிறார். இந்தியாவுக்கு மட்டுமின்றி வையத்திற்கே வழிகாட்டும் வளமுடையது திருக்குறள் என்பதனை நிறுவியுள்ளார். ஆசிரியரின் ஒவ்வொரு கட்டுரையிலும் ஏதேனும் புதுச்செய்தி பொதிந்திருக்கும். அதுவே ஆசிரியரின் நிலைத்த புகழுக்குக் களமாகும். மாணிக்கனாரின் புதிய சொல்லாக்கங்கள் தமிழுக்குப் புது வரவும் தமிழுக்கு ஆக்கமும் ஆம். இந்தத் தலைமுறையில் இவரைப்போல் புதிய சொற்களைப் படைத்தவர் இலர். வாழும் சொற்களைப் படைப்பதில் வல்லவர். பழஞ்சொல் புதுப்பிப் பதிலும் வல்லவர். இவர் படைத்த பல சொற்கள் பலராலும் ஏற்றுக்கொள்ளப் பெற்று, நாளும் பயன்படுத்தப் பெற்று வருவது இவரது சொல்லாக்கச் செந்நெறிக்குச் சான்றாகும். இவருடைய சொல்லாக்கங்களைச் செய்தி இதழும் வானொலி யும் நாளும் பயன்படுத்துவதே இவரது மொழிக் கொடைக்கு ஒப்பற்ற சான்றாகும். வெல்லும் சொல் படைக்கும் வித்தக ரெனத் தமிழ்கூறு நல்லுலகம் போற்றுகின்றது. இவர் நடையில் நின்றுயர் நாயகனாக விளங்குகிறார். இவர் நடை சொற்செட்டும் சுருக்கமும் தெளியும் செறிவும் திட்பமும் நுட்பமும் வாய்ந்தது. புலமை நலம் சான்ற பெருமித நடை இவர் நடை. பழந்தமிழ்ச் சொற்கள் மிகுந்துவரும் இலக்கிய நடை. புதுச்சொற்கள் பொலியும் புதுவகை நடை. எல்லா வகையாலும் இவரது நடை தனித்தன்மை சான்றது. பேராசிரியருடைய மூன்று வரிகளைக் கொண்டே அவர் தமிழ்நடையின் தனித்தன்மையினை இனம் காணலாம். அவர் பயன்படுத்தும் சொற்கள், சொல்லாக்கம், சொல்லாட்சி ஆகியவை அவர் நடையின் இயல்பினை இனங்காட்டுவன. ஆய்வு அவருக்கு இயல்பாக அமைந்ததொன்றாகும். திருக்குறளைச் செயல் நூலாக வள்ளுவமாக நூலாக்கினார். கம்பனைக் கற்கும் நெறியில் புதிய தடம் அமைத்தார். அகத்திணையியல் ஆய்வில் ‘தமிழ்க் காதல்’ நெறி விளக்கினார். இவை என்றும் தமிழுக்குப் பொன்றாப் புகழ் தருவன. ‘மறைமலை அடிகளாரின் ஆய்வுத் திறனும் கொள்கை உறுதியும் திரு.வி.க.வின் மொழி நடையும் சமுதாய நோக்கும் பேராசிரியரின் எழுத்தில் பளிச்சிடுவதாகத் திறனாய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். வெள்ளிவிழாக் கண்ட தமிழகப் புலவர் குழுவின் தலைவராக இருந்து இவர் ஆற்றிய பணிகள் அளவிடற்கரியன. தமிழ் மக்களின் நீண்ட நெடிய கனவுகளுக்கு உருவம் கொடுக்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வடிவமைப்புக் குழுவின் தலைவராகயிருந்தார். சாதனைகளால் சிறந்து விளங்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியத்தகைஞராக, சிறப்புப் பேராசிரியராக நியமிக்கப் பெற்று, உரை எழுதி வருகிறார். புலமையாலும் தலைமையாலும் சிறந்து விளங்கும் இவர்கள், இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவராகத் திகழ்கிறார். எங்கள் பதிப்பகத்திற்குப் பெருமை சேர்க்கும் நல்லா சிரியப் பெருமக்களுள் முதன்மையானவர். அவர்தம் படைப்புக் களைப் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வெளியிட்டுப் பதிப்பகம் பேரும் புகழும் பெற்று வருகிறது. பயனுள்ள நூல்களை வெளியிடும் ஒவ்வொரு முறையும் பூரிப்போடும் உவகையோடும் களிப்போடும் சாதனை மலர்களைச் சூடி மகிழ்கிறது. ச. மெய்யப்பன், எம்.ஏ., அண்ணாமலைப் பல்கலைக்கழகம் திருக்குறட்சுடர் சங்க நெறி கற்போம் மூதறிஞர் டாக்டர் வ.சுப. மாணிக்கம் அவர்கள் கடந்த நாற்பது ஆண்டுகளாக எழுதிய கட்டுரைகள்அனைத்தையும் வகைப்படுத்தி, ஓரினப் பொருளை ஒரு தலைப்பின் கீழ் நூலாக்கும் திட்டத்தில் இந்நூல் வெளிவருகிறது. இந்நூல் வரிசை ஆய்வாளருக்கு மிகுந்த பயனை அளிக்கும்; இவ்வகை நூல்கள் வருங்கால ஆய்வுக்கு அடிப்படையாய் அமைவன. ஆய்வுக்களங்கள் பல அமைந்த இக்கட்டுரைகள் அனைத்தும் ஒரு நூலாக அமைவதால் பயன் மிகுதியாகிறது. குறிப்பிட்ட துறையில் பார்வை நூலாக அமைகிறது. இவ்வகை நூல்கள் மேற்கோளாட்சிக்கு மிகுதியும் பயன்படுவன. செம்பதிப்புக் கேற்ப, கட்டுரைகள் ஒருசேர வரிசைப் படுத்தப்பட்டுள்ளன; வகைமைப் படுத்தப்பட்டுள்ளன. பேரறிஞர் ஒருவர் ஒரு துறையைப் பற்றி நீண்ட நெடிய காலம் சிந்தித்த சிந்தனைகள் எல்லாம் அவராலேயே ஒழுங்குபடுத்தப் பெற்று ஒரு நூலாக அமைக்கப் பெறுவது பல்வகைப் பலனைத் தரும் அரிய முயற்சி, பெரிய முயற்சியாகும். ஆசிரியர் இக்கட்டுரைகளை மறு பரிசீலனை செய்து, சீர்திருத்தி, செம்மைப்படுத்தி, முறைப் படுத்தி வகைமைப் படுத்தி நூலாக்கியுள்ளது வளர் தமிழ் ஆராய்ச்சிக்கு வழிவகுக்கும். இத்தொகுப்பு நிகழ் கால ஆய்வு வளத்திற்குக் கண்ணாடி. பேராசிரியரின் ஆய்வு வன்மைக்கு, அருந்தமிழ் ஆற்றலுக்கு இந்நூல் வரிசை பெருமை சேர்ப்பன. மூதறிஞர் வ. சுப. மாணிக்கனார் சங்க இலக்கிய வல்லுநர். சங்க இலக்கியச் சால்பு உணர்ந்த சான்றோர். பாட்டும் தொகையும் பகுதறக் கற்றவர். சங்க அகத்திணை மரபுகளை ஆய்ந்தவர். சங்க இலக்கியப் பரப்பும் பாங்கும் பண்பும் ஆராய்ந்த பண்பாளர். சங்க இலக்கியத்தின் தூய்மையையும் தாய்மையையும் போற்றுபவர். சங்க இலக்கியம் பரவ வழிவகுப்பவர். சங்க இலக்கியத்தைப் பல்வகைச் செம்பதிப்பு களாகக் கொணரும் நோக்குடையவர். சங்கப் புலவர்களைச் சான்றோராகக் கருதி வழிபடும் மரபைப் போற்றுபவர். அவர் எழுத்திலும் பேச்சிலும் சங்க இலக்கியச் செல்வாக்கைக் காணலாம். சங்க இலக்கியமே தமிழர் வாழ்வின் உயிரெனக் கருதுபவர். சங்க நெறிக் காவலர். இந்நூல் சங்க இலக்கிய ஆய்வாளருக்கு ஒரு வழிகாட்டி. மாணிக்கனாரின் புதிய சொல்லாக்கங்கள் தமிழுக்குப் புதுவரவும் தமிழுக்கு ஆக்கமும் ஆம். இந்தத் தலைமுறையில் இவரைப்போல் புதிய சொற்களைப் படைத்தவர் இலர். வாழும் சொற்களைப் படைப்பதில் வல்லவர்; பழஞ்சொல் புதுப்பிப்பதிலும் வல்லவர். இவர் படைத்த பல சொற்கள் பலராலும் ஏற்றுக் கொள்ளப் பெற்று, நாளும் பயன்படுத்தப் பெற்று வருவது இவரது சொல்லாக்கச் செந்நெறிக்குச் சான்றாகும். இவருடைய சொல்லாக்கங்களைச் செய்தி இதழும் வானொலியும் நாளும் பயன்படுத்துவதே இவரது மொழிக் கொடைக்கு ஒப்பற்ற சான்றாகும். வெல்லும் சொல் படைக்கும் வித்தகரெனத் தமிழ்கூறு நல்லுலகம் போற்றுகின்றது. இவர் நடையில் நின்றுயர் நாயகனாக விளங்குகிறார். இவர் நடை சொற் செட்டும் சுருக்கமும் தெளிவும் செறிவும் திட்பமும் நுட்பமும் வாய்ந்தது. புலமை நலம் சான்ற பெருமித நடை இவர் நடை. பழந்தமிழ்ச் சொற்கள் மிகுந்துவரும் இலக்கிய நடை. புதுச்சொற்கள் பொலியும் புதுவகை நடை. எல்லா வகையாலும் இவரது நடை தனித்தன்மை சான்றது. பேராசிரியருடைய மூன்று வரிகளைக் கொண்டே அவர் தமிழ்நடையின் தனித் தன்மையினை இனம் காணலாம். அவர் பயன்படுத்தும் சொற்கள், சொல்லாக்கம், சொல்லாட்சி ஆகியவை அவர் நடையின் இயல்பினை இனங்காட்டுவன. ஆய்வு அவருக்கு இயல்பாக அமைந்ததொன்றாகும். திருக்குறளைச் செயல் நூலாக வள்ளுவமாக நூலாக்கினார். கம்பனைக் கற்கும் நெறியில் புதிய தடம் அமைத்தார். அகத்திணையியல் ஆய்வில் ‘தமிழ்க் காதல்’ நெறி விளக்கினார். இவை என்றும் தமிழுக்குப் பொன்றாப் புகழ் தருவன. ‘மறைமலை அடிகளாரின் ஆய்வுத் திறனும் கொள்கை உறுதியும் திரு.வி.க வின் மொழி நடையும் சமுதாய நோக்கும் பேராசிரியரின் எழுத்தில் பளிச்சிடுவ தாகத்’ திறனாய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். வெள்ளிவிழாக் கண்ட தமிழகப் புலவர் குழுவின் தலைவராக இருந்து இவர் ஆற்றிய பணிகள் அளவிடற் கரியன. தமிழ் மக்களின் நீண்ட நெடிய கனவு களுக்கு உருவம் கொடுக்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வடிவமைப்புக் குழுவின் தலைவராகயிருந்தார். சாதனை களால் சிறந்து விளங்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியத் தகைஞராக, சிறப்புப் பேராசிரியராக நியமிக்கப் பெற்று, உரை எழுதி வருகிறார். புலமையாலும் தலைமையாலும் சிறந்து விளங்கும் இவர்கள், இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவராகத் திகழ்கிறார். அவரது நூல்களை வெளியிடுவதில் உவகையும் களிப்பும் பூரிப்பும் சூடி மகிழ்கிறோம். ச. மெய்யப்பன் எம்.ஏ அண்ணாமலைப் பல்கலைக்கழகம் காப்பியக் கல்வியில் புதுநெறி மூதறிஞர் டாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்கள் கடந்த நாற்பது ஆண்டுகளாக எழுதிய கட்டுரைகள் அனைத்தையும் வகைப்படுத்தி, ஓரினப் பொருளை ஒரு தலைப்பின்கீழ் நூலாக்கும் திட்டத்தில் இந்நூல் வெளிவருகிறது. இந்நூல் வரிசை ஆய்வாளருக்கு மிகுந்த பயனை அளிக்கும். இவ்வகை நூல்கள் வருங்கால ஆய்வுக்கு அடிப்படையாய் அமைவன. ஆய்வுக் களங்கள் பல அமைந்த இக்கட்டுரைகள் அனைத்தும் ஒரு நூலாக அமைவதால் பயன் மிகுதியாகிறது; குறிப்பிட்ட துறையில் பார்வை நூலாக அமைகிறது. இவ்வகை நூல்கள் மேற்கோளாட்சிக்கு மிகுதியும் பயன்படுவன. செம்பதிப்புக்கேற்ப, கட்டுரைகள் ஒருசேர வரிசைப் படுத்தப்பட்டுள்ளன; வகைமைப்படுத்தப் பட்டுள்ளன. பேரறிஞர் ஒருவர் ஒரு துறையைப் பற்றி நீண்ட நெடிய காலம் சிந்தித்த சிந்தனைகள் எல்லாம் அவராலேயே ஒழுங்குபடுத்தப் பெற்று ஒரு நூலாக அமைக்கப் பெறுவது பல்வகைப் பலனைத் தரும் அரியமுயற்சி; பெரிய முயற்சியாகும். ஆசிரியர் இக்கட்டுரைகளை மறுபரிசீலனை செய்து சீர்திருத்தி, செம்மைப்படுத்தி, முறைப்படுத்தி, வகைமைப்படுத்தி நூலாக்கியுள்ளது வளர்தமிழ் ஆராய்ச்சிக்கு வழிவகுக்கும். இத்தொகுப்பு நிகழ்கால ஆய்வு வளத்திற்குக் கண்ணாடி. பேராசிரியரின் ஆய்வு வன்மைக்கு, அருந்தமிழ் ஆற்றலுக்கு இந்நூல் வரிசை பெருமைசேர்ப்பன. ஒருநாட்டிற்கு மலைகளும் ஆறுகளும் பெருமை சேர்ப்பது போல மொழிக்குக் காப்பியங்கள் பெருமை சேர்க்கின்றன. வளம் சுரக்கும் ஆறுகளைப்போல, காப்பியங்கள் வற்றாத இலக்கிய நயங்கள் சுரப்பன. அளக்கலாகா அகலமும் உயரமும் உடைய மலைகளைப்போல, காப்பியங்கள் ஆழமும் பருமையும் பெருமையும் உடையன. பேராற்றல் மிக்க, தம் படைப்புத்திறனால் கவிஞர்கள் பெருங்க காப்பியங்களைப் படைத்து மொழிகளுக்குப் பெருவளம் சேர்க்கின்றனர். தமிழில் உலகப் பெருங்காப்பியங்கள் வரிசையில் வைத்து எண்ணத் தக்கவை பல உள. காப்பியங்கள் தமிழ்ச் சிந்தனைக்குச் செழுமை சேர்த்துள்ளன. வளமான காப்பியங்கள் புலவர்களின் வற்றாத கற்பனை ஊற்றுக்கள். அவை அறிவுநலம் சுரக்கும் அமுத சுரபிகள். பெருநகரங்கள் நாட்டிற்கு வளம் சேர்ப்பதுபோல, பெருங்காப்பியங்கள் மொழிக்கு வளம் சேர்க்கின்றன. மாடமாளிகைகள் நகருக்கு அணி சேர்ப்பதுபோல, காப்பியங்கள் மொழிக்கு அணி சேர்க்கின்றன. பெருங்காப்பியப் படைப்பு ஒரு மொழியில் அடிக்கடி நிகழும் நிகழ்ச்சியன்று. அஃது ஒரு அரிய நிகழ்ச்சி; வரலாற்று நிகழ்ச்சி. மொழியின் வரலாற்றில் காப்பியங்கள் பல புதிய போக்குகளையும் நோக்குகளையும் உண்டாக்குகின்றன. இவ்வாறு பல்வகை நலங்களைச் சார்ந்த காப்பியங்களைப் படைப்பது ஓர் அருங்கலை; கற்பது ஓர் அருங்கலை; அதனை ஆராய்வது ஓர் அருங்கலை. காப்பிய ஆய்வுகளில் புதுநெறி புகுத்தியவர் மூதறிஞர் டாக்டர் வ.சுப.மாணிக்கனார். ‘கம்பர்’என்னும் மிகச்சிறந்த ஆய்வுநூலில் காப்பியம் கற்கும் நெறியையும் துய்க்கும் நெறியையும் புதுவகையில் விளக்கியுள்ளார். காப்பியக் களன்களின் இயல்புகளையும் கட்டமைப்புக்களையும் அகநலங்கள் புறநலங்களையும் தனிச் சிறப்புக்களையும் புதிய அணுகுமுறையில் விளக்கியுள்ளார். ‘கம்பர்’ நூல் காப்பிய ஆய்வில் தாய்மையும் தலைமையும் உடையது; முற்றிலும் இம்மண்ணிற்குரிய மரபுகளை அடிப்படையாகக் கொண்டது; ஆசிரியரின் அறிவாற்றலின் தனிக்கொடையாகும். முழுப்பார்வை கொள்கையினைப் படைத்தளித்தது இவரது தமிழ்த் திறனாய்வின் கொடையாகும். இந்நூல் திறனாய்வு நெறியில் புதிய தடம்பதிந்துள்ளது. இந்நூலில் ஆசிரியர் தமிழ்க் காப்பியங்கள் பலவற்றின் பொது அமைப்பினையும் மொழி நலங்களையும் ஆராய்கிறார். ஒவ்வொரு காப்பியக் கவிஞர்களின் படைப்புத் திறனையும் கருத்துக்கொடையினையும் விளக்குகின்றார். காப்பியம் கற்க தனிப்பயிற்சி, மொழிப்புலமை வேண்டும் என்பதை காப்பியக் கவிஞனின் கவியுள்ளம் காண்பதற்கு ஆழ்ந்த புலமை வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு, காப்பியங்களில் புதைந்துள்ள நுண்ணமைப்புக்களைப் பல எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கு கின்றார். காப்பியங்களை அறிந்து புரிந்து துய்ப்போர் கொள்ளும் மனமகிழ்ச்சியினையும் கல்வி விரிவினையும் சுவைநலம் தோன்ற விளக்குகிறார். ஒவ்வொரு கட்டுரையிலும் காப்பியங்களின் ஏதேனும் ஒரு நலன் தக்க சான்றுகளுடன் ஆராய்ந்து விளக்கப் பெற்றுள்ளது. காப்பியத் திறனாய்வில் புதிய கோட்பாடுகளை இந்நூல் உருவாக்குகிறது. ஆசிரியர் புலமை நலத்தாலும், அறிவாற்றலாலும், புதிய ஆய்வு நெறிகளை, திறனாய்வு முறைகளை, புதிய இலக்கிய நெறிகளைப் படைத்துள்ளது இந்நூலுக்கு வலிமை சேர்க்கிறது. ஆசிரியரின் ‘தொல்காப்பியக் கடல்’ ‘சங்கநெறி’ ‘திருக்குறட் சுடர்’ என்னும் மூன்று அரிய நூல்களை மணிவாசகர் பதிப்பகம் மூன்று திங்களுக்கு முன் செம்பதிப்பாக வெளியிட்டது. அவற்றின் நலங்களைப் பத்திரிகைகள் பாராட்டு கின்றன. தமிழ்கூறு நல்லுலகம் தலைமேல் வைத்துக் கொண்டாடு கின்றது. இவ்வகை நூல்களுக்குக் கிடைக்கும் வரவேற்பையும் நல்லாதரவையும் கண்டு பதிப்பகம் கழிபேருவகை கொள்கிறது. இந்நூல்களுக்கு எல்லா வகையினர், எல்லாத் தரத்தினரிட மிருந்தும் வரவேற்புக் கிடைக்கிறது. இலக்கண அறிஞர்கள், இலக்கியக் கலைஞர்கள், புலவர் பெருமக்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் இந்நூல் வரிசையைப் போற்றி, பாராட்டி மகிழ்கின்றனர். மாணிக்கனாரின் புதிய சொல்லாக்கங்கள் தமிழுக்குப் புதுவரவும் தமிழுக்கு ஆக்கமும் ஆம். இந்தத் தலைமுறையில் இவரைப்போல் புதிய சொற்களைப் படைத்தவர் இலர். வாழும் சொற்களைப் படைப்பதில் வல்லவர்; பழஞ்சொல் புதுப்பிப்பதிலும் வல்லவர். இவர் படைத்த பல சொற்கள் பலராலும் ஏற்றுக் கொள்ளப் பெற்று நாளும் பயன்படுத்தப் பெற்று வருவது இவரது சொல்லாக்கச் செந்நெறிக்குச் சான்றாகும். இவருடைய சொல்லாக்கங்களைச் செய்தி இதழ்களும் வானொலியும் நாளும் பயன்படுத்துவதே இவரது மொழிக் கொடைக்கு ஒப்பற்ற சான்றாகும். வெல்லும் சொல் படைக்கும் வித்தகரெனத் தமிழ்கூறு நல்லுலகம் போற்றுகின்றது. இவர் நடையில் நின்றுயர் நாயகனாக விளங்குகிறார். இவர் நடை சொற் செட்டும் சுருக்கமும் தெளிவும் செறிவும் திட்பமும் நுட்பமும் வாய்ந்தது. புலமை நலம் சான்ற பெருமித நடை இவர் நடை. பழந்தமிழ்ச் சொற்கள் மிகுந்துவரும் இலக்கிய நடை. புதுச்சொற்கள் பொலியும் புதுவகை நடை. எல்லா வகையாலும் இவரது நடை தனித்தன்மை சான்றது. பேராசிரியருடைய மூன்று வரிகளைக் கொண்டே இவர் தமிழ்நடையின் தனித்தன்மையினை இனம் காணலாம். இவர் பயன்படுத்தும் சொற்கள். சொல்லாக்கம், சொல்லாட்சி ஆகியவை இவர் நடையின் இயல்பினை இனங்காட்டுவன. ஆய்வு இவருக்கு இயல்பாக அமைந்ததொன்றாகும். திருக்குறளைச் செயல் நூலாக வள்ளுவமாக ஆக்கினார். கம்பனைக் கற்கும் நெறியில் புதிய தடம் அமைத்தார். அகத்திணையியல் ஆய்வில் ‘தமிழ்க் காதல்’ நெறி விளக்கினார். இவை என்றும் தமிழுக்குப் பொன்றாப் புகழ் தருவன. ‘மறைமலை அடிகளாரின் ஆய்வுத் திறனும் கொள்கை உறுதியும் திரு.வி.க.வின் மொழிநடையும் சமுதாய நோக்கும் பேராசிரியரின் எழுத்தில் பளிச்சிடுகின்றன.’ எனத் திறனாய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.” வெள்ளிவிழாக் கண்ட தமிழகப் புலவர் குழுவின் தலைவராக இருந்து இவர் ஆற்றிவரும் பணிகள் அளவிடற் கரியன. தமிழ் மக்களின் நீண்ட நெடிய கனவுகளுக்கு உருவம் கொடுக்கும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வடிவமைப்புக் குழுவின் தலைவராகயிருந்தார். சாதனைகளால் சிறந்து விளங்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியத் தகைஞராக - சிறப்புப் பேராசிரியராக நியமிக்கப் பெற்று, உரை எழுதி வருகிறார். புலமையாலும் தலைமையாலும் சிறந்து விளங்கும் இவர் இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவராகத் திகழ்கிறார். எங்கள் பதிப்பகத்திற்குப் பெருமை சேர்க்கும் நல்லாசிரியப் பெருமக்களுள் முதன்மையான இவர் தம் படைப்புக்களைப் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வெளியிட்டுப் பதிப்பகம் பேரும்புகழும் பெற்று வருகிறது; பயனுள்ள நூல்களை வெளியிடும் ஒவ்வொரு முறையும் பூரிப்போடும் உவகையோடும் களிப்போடும் சாதனை மலர்களைச் சூடி மகிழ்கிறது. ச. மெய்யப்பன், எம்.ஏ., அண்ணாமலைப் பல்கலைக்கழகம் காப்பியப்பார்வை கருத்துவளம் கொழிக்கும் கவின்மிகு நாடகங்கள் பேராசிரியர் வ.சுப. மாணிக்கனார் அவர்கள் படைப்புக்கள் அனைத்தையும் வகைப்படுத்திச் செம்பதிப்புக் கொணரும் திட்டத்தில் பத்து நூல்கள் இதுவரை வெளி வந்துள்ளன. ஆசிரியரின் எழுத்துக்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து நோக்கும்போது அவரது அளப்பரிய தமிழ்க்கொடை மலையென உயர்ந்து விளங்குகிறது. ஆசிரியரின் புலமை நலம், படைப்புத்திறன், மொழித்திறன் ஆகிய முக்கூறுகளின் பேராற்றலை உணர முடிகிறது. இவ்வகை புதிய பதிப்புக்களால் ஆசிரியரின் பேரும் புகழும் பெருமையும் எல்லோராலும் எளிதில் உணர முடிகிறது. ஆசிரியரின் ஆளுமையும் அனைத்துத் துறையின் ஆற்றலும் யாவராலும் அறியப்பெற்று அவரது இலக்கியக் கொடையின் பயன் பல்வகையாலும் போற்றப் படுவது அறிந்து பதிப்பாளர் மகிழ்வது இயற்கைதான். பேராசிரியரின் முதல் படைப்பே நாடகம்தான். நாடகத் தலைப்பும் புதுமையானது புரட்சியானது. அறம் சார்ந்த கருத்துக்களைப் பரப்புகிறார். ‘மனைவியின் உரிமை’ எனும் நாடக நூலில் புகழ்துறவு, உளவுப் புலவன் என்னும் நாடகங்கள் வாயிலாக மன்பதைக்கு வளம் நல்கும் கருத்துக்களை வழங்குகிறார். ஆசிரியரின் சமூகப் பார்வை நாடக மூலம் நன்கு புலனாகின்றது. சில வகைகளில் சில கருத்துக்களை ஆசிரியர் வன்மையாகவும் அழுத்தமாகவும் பிரசாரம் செய்வதற்குத் தமது நாடகங்களைப் பயன்படுத்துகிறார். ‘நெல்லிக்கனி’ நாடகத்தின் கருத்து, கருத்துப் புரட்சியை மையமாகக் கொண்டது. பேராசிரியரின் நாடகங்கள் பொதுவாகச் சாதி, சமயங் களைக் குறிப்பிடாத மனித வாழ்வின் பொது சிக்கல்களை அடித்தளமாகக் கொண்டு அமைவன. புதியதோர் உலகு காண விழையும் ஆசிரியரின் உள்ளார்ந்த ஆர்வத்தை நாடகங்கள் நன்கு விளக்குகின்றன. மனங்களின் சிறிய அலைகள், நெஞ்ச நெகிழ்வுகள், நெஞ்சங்களின் நினைவலைகள் ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை ஆசிரியர் வண்ணக்கோலங்களாக வரைந்துள்ளார். நாடகப் படைப்புக்கள் அனைத்திலும் சமூக விழிப்புணர் வுடைய சமூக மாற்றத்தைக் காண விழைகிற சான்றோரின் குரல் மூலநாதமாக ஒலிக்கிறது. ஆசிரியரின் தூய நெஞ்சமும் தூய வாழ்வும் பெரிய செயல்களும் நாடகப் படைப்புக்கள் அனைத்திற்கும் ஆக்கமும் பெருமையும் அளிக்கின்றன. இவரது நாடகப் படைப்புக்கள் மூலம் ஆசிரியருக்கென அமைந்த வளமான நடை நலத்தை நன்குணர முடிகிறது. நல்ல தமிழ் நடையும் நெகிழ்ந்த தமிழ் நடையும் ஆற்றொழுக்கான அழகிய நடையும் ஆசிரியரின் நடைச் சிறப்பு என்பது நாடகங்களால் புலனாகிறது. இயல்பான இனிய தமிழ் நடையில் அமைந்து இன்பம் பயப்பன. பல்வகையான நடை நயங்களை ஆசிரியர் பயன்படுத்துவதற்கு இந்நாடகங்கள் களங்களாக அமைந்துள்ளன. ஒரு கருத்தை மையமாகக் கொண்டு நாடகங்கள் உருவாகின்றன. அரிய பொருளை மையக் கருத்தாகக் கொள்கிறார். கருத்துக்களின் வலிமையை நாடக யுக்திகளால் பின்னியுள்ள திறம் கருத்துக்களின் வன்மை, மென்மைகள், ஆசிரியரின் அழுத்தமான வெளிப்பாட்டுத் திறத்தால் வாசகர் உள்ளங்களில் படிகின்றன. கதையின் கருவும் கருத்தும் கதை அமைப்பும் நாடக நலத்திற்கு வலிமை தருகின்றன. எடுத்த கருத்தை விளக்குவதற்கு கதையமைப்பையும் பாத்திரப் படைப்பையும் கதை நிகழ்வுகளையும் செறிவாக அமைத்து, உயிரோவியமாக்கி யுள்ளார். பேராசிரியர் தமிழுக்குப் பல நூறு சொற்களை வழங்கும் வள்ளல். புதிய சொல்லாக்கம் படைப்பதில் வல்லவர். நாளும் அவர் வழங்கும் சொற்கள் நல்ல தமிழுக்கு ஆக்கம் அளிப்பன. படைப்பிலக்கியங்களில்தான் புதிய சொல்லாக்கத்திற்கு வாய்ப்பு அதிகம். ஆசிரியரின் சொற்படைப்பு வீச்சின் விகிதம் நாடகங்களில் மிகுதி. மாறிவரும் சமூக அமைப்புக்கேற்ப புதிய பொருள்களுக்கேற்பப் புதிய சொற்களைப் படைக்கிறார். அவர் படைத்த எளிய, இனிய, அழகிய சொற்கள் சொல்லாக்கங்கள் வழக்கில் வந்துவிட்டன. ஆயிரத்துக்கு மேற்பட்ட புதிய சொல்லாட்சிகளை, தொடரமைப்புக்களை அவர் போல் தமிழுக்கு அளித்தவர் இலர். ‘ஒரு நொடியில்’ ஒரு நொடிப் பொழுதில் மனம் கொள்ளும் மாற்றத்தை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்தினைப் பலரின் மனநிலைகளைப் படம் பிடித்துக் காட்டுவதன் மூலம் விளக்கு கிறார். தற்கொலை தவிர்க்கப்பெறல் வேண்டும் என்பதனைத் திட்ப நுட்பத்துடன் தெளிவாக்கியுள்ளார். புதுக் கருத்தினைப் பிரச்சாரம் செய்யும் தலைசிறந்த சமூக நாடகமாக இதனைக் கற்றோர் போற்றுகின்றனர். இதனைப் படிப்பவர் பயன்பெறு வர். தமிழ் நாடகத்துறை நலம்பெறும். இத்தகைய நூலால் ஆசிரியரும் பதிப்பகமும் பெருமை பெறுவது உறுதி என நம்புகிறேன். ச. மெய்யப்பன், எம்.ஏ., அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஒருநொடியில் தமிழியக்க ஊற்று மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் அழகப்பா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராய், முதல்வராய், அண்ணா மலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவராய், புலமுதன்மைய ராய் திகழ்ந்தார். புலவர் குழுவின் தலைவர். பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்தலைவர். தமிழ்வழி கல்வி இயக்கம் கண்டவர். மதுரைப் பல்கலைக் கழக துணை வேந்தர். மணிவாசகர் பதிப்பகத்தின் பெருமை மிகு நூலாசிரியர். அவர்களின் அரிய நூல்கள் அனைத்தையும் சிறப்பாக வெளியிட்டு இலக்கியப் பணி, மொழிப்பணி செய்து வருவதில் நாம் பெருமை கொள்கிறோம். மூதறிஞரின் தொல்காப்பிய உரையினை தமிழ்ப் பல்கலைக்கழகம் ‘மாணிக்க உரை’ என வெளியிட்டுள்ளது. அவர்களின் திருக்குறள் உரையினை ‘மாணிக்க உரை’ என்றும் அவர்கள் இயற்றிய குறள் நூலை ‘மாணிக்கக் குறள்’ என்றும் வெளியிட்டுள்ளோம். ‘மாணிக்கனாரின் வாழ்வும், பணியும்’, ‘மாணிக்கனாரின் சொல்லாக்கம்’ என்னும் நூல்களைத் தொடர்ந்து அறிஞர் தமிழண்ணல் மாணிக்கனார் ஆய்வுத் திறனை விளக்கும் வகையில் ‘மாணிக்கத்தமிழ்’ என்னும் பெரு நூலை உருவாக்கியுள்ளார்கள். மாணிக்கனார் புதிய ஆத்திச்சூடி இயற்றியுள்ளார்கள். குறள் யாப்பில் நூல் இயற்றியுள்ளார்கள். தமிழ் மக்களுக்கு நற்கருத்துக்களை, புதிய கருத்துக்களை எப்பொழுதும் அழுத்தமாகவும், அழகாகவும் எடுத்துச் சொல்லுவது மாணிக்கனார் இயல்பு. ஆழ்ந்து கற்றுப் பல்துறைகளில் பட்டறிவிற் சிறந்த செம்மல் அவர்கள் தமிழ் மொழி, இலக்கியம் தமிழறம், சான்றோர் பற்றிய தம் கருத்துக்களை தமிழ்ச் சூடியிலும், மாணிக்கக் குறளிலும் தெளிந்த தமிழில் இனிய ஓசையில் பாடியுள்ளார்கள். தமிழ் ஆயிரம், வாழ்க்கை ஆயிரம் எனக் குறள் இயற்றத் திட்டமிட்டிருந்தார்கள். தீ ஊழினால் நூல் முற்றுப் பெறவில்லை. 506 குறள்களே கிடைத்துள்ளன. மூதறிஞரின் தமிழ் உணர்வு, பற்று, மொழிக் கொள்கை, இனமான உணர்வு, அறக்கோட்பாடு, வாழ்வியல் நெறி, உலக நலம் அனைத்தையும் பற்றி அவர்தம் கருத்துக்களை இந்நூல் விளக்கம் செய்கிறது. பொன்மொழியாய், நன்மொழியாய், புதுமொழியாய் வாழும் வகை சொல்கிறது. மூதறிஞரின் தலைமகன் தொல்காப்பியன் அவர்தம் தமிழ்க் கொள்கைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் தலையாய பணியில் தம்மை முழுதும் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். மாணிக்கக் குறளின் கையெழுத்துப் படியினைச் செப்பம் செய்து, அச்சில் மெய்ப்புப் பார்த்து நூல் செம்மைக்கு மிகுதியும் துணை நின்றவர் பேராசிரியர் டாக்டர். இரா. சாரங்கபாணி அவர்கள். செம்மலின் சீர்சான்ற கருத்துக்களை நாளும் பரப்பி மொழியும், நாடும் உயர உழைப்போம். பேராசிரியர் முனைவர் ச. மெய்யப்பன் மாணிக்கக் குறள் நூலில் இருந்து எடுத்தது. நகரத்தார் அறப்பட்டயங்கள் அத்தாட்சி உரை பழநிமலை வேலாயுத சுவாமியாருக்கு நடந்து வருகிற தர்ம அட்டவணை பற்றிய “நகரத்தார் அறப்பட்டயங்கள்” ஏழு அடங்கிய நூல் ஒன்று நெற்குப்பை திரு. பழ.சு. பழ. சுப்பிரமணியன் செட்டியாரவர்களால் 22-7-61இல் முன்னுரையில் அறப்பட்டயங்களின் கையெழுத்துப் பிரதி ஒன்றும் அதற்குச் சரியாக அச்சிடப் பெற்ற அச்சுப் பிரதி ஒன்றும் என்னிடம் காட்டப் பெற்றதாக அப்போது எழுதியுள்ளேன். மேற்கண்ட கையெழுத்து -அச்சுப் பிரதிகளுக்கு மூலமான எட்டுப் பிரதிகளை இப்பொழுது பழனி பண்டாரத்தையா வீட்டிலிருந்து தேடி எடுத்து வாங்கிக் கொண்டு வந்து சுப. அவர்கள் காட்டினார்கள். சுவடிகள் பழமை யானவையாகவும், கி.பி. 1608இல் எழுதப்பெற்ற சுவடியில் ஒக்கூருடையான் உடையப்ப செட்டி அடைக்கப்பன் என்ற நெட்டெழுத்தும் 1766இல் எழுதப் பெற்ற சுவடியில் இளநலமுடையான் அடைக்கப்ப செட்டி அருணாசலம் என்ற நெட்டெழுத்தும் 1788இல் எழுதப்பெற்ற சுவடியில் பிள்ளையார் பட்டிக் கோயில் அருணாசலஞ் செட்டி குமரப்பன் என்ற நெட்டெழுத்தும் 1805இல் எழுதப் பெற்ற சுவடியில் இலுப்பைக்குடி லெட்சுமணஞ் செட்டி அருணாசலம் என்ற நெட்டெழுத்தும் உடையனவாகவும் கையெழுத்துப் பிரதியில் எழுதியவர்கள் கவனக்குறைவால் விட்டுவிட்ட சில சொற்கள் - சொற்றொடர்களைக் காட்டுவன வாகவுமிருக்கின்றன. ஏட்டுப் பிரதியில் உள்ள சொற்கள் - சொற்றொடர்களைக் காட்டுவனவாகவுமிருக்கின்றன. ஏட்டுப் பிரதியில் உள்ள சொற்கள் - சொற்றொடர்கள் அச்சுப் பிரதியில் உள்ள சொற்கள் - சொற்றொடர்களோடு பொருள் மாறுபா டுடையனவாகப் பெரும்பாலுமில்லை என்றாலும் ஏட்டுப் பிரதி கிடைத்ததனால் முன்னர் தெளிவு பெறாதிருந்த சிற்சில கருத்துக்கள் இப்போது தெளிவு பெற்றுவிட்டன. எடுத்து காட்டுக்கு அச்சுப் பிரதியின் 3-ஆம் பக்கத்து 16,17 வரிகளில் “முதல் ஒரு பங்கும் இரண்டு பங்கும் உண்டாச்சுது” என்றிருப்பது ஏட்டுப் பிரதியில் “முதல் ஒருபங்கும் லாபம் இரண்டு பங்கும் உண்டாச்சுது” என்று காணப்பெறுவதை நினைவூட்ட விரும்புகின்றேன். இம்மூல ஆதரவைக் கொண்டு இவைகளிற் கண்ட நடைமுறைகள் தொடக்க காலந்தொட்டு இடையில் எவ்வித மாற்றமுமின்றி நிகழ்ந்து வந்தவை என்பதை உறுதியாக அறிந்து கொள்ளலாம். புதிதாகக் கிடைத்த பழைய ஏட்டுச் சுவடிகளில் உள்ளபடி பட்டயங்களை, அடுத்த பதிப்பு வெளியிடும் போது அச்சிட்டு வெளிப்படுத்துவார்கள். மறைந்திருந்த மூலப் பிரதியை வெளிப்படுத்தித் தந்த ஸ்ரீ ஞானதெண்டாயுதப் பெருமான் நாட்டுக் கோட்டை நகரத்தார்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளாகப் பழநி அன்னதான மடத்தின் அறப்பணிகளை மேற்கொண்டு தொண்டுபுரிந்து வரும் நெற்குப்பை கு.பழ. குடும்பத்தாருக்கும், கண்டனூர் கு.ப.சு. குடும்பத்தாருக்கும் காரைக்குடி கும.பெரி.சு. பழ. குடும்பத்தாருக்கும் பட்டயங்களிற் கண்ட நடை முறைகளின்படி பெறும் அருட் பிரசாதங்களின் வாயிலாக எல்லா நலன்களையும் வழங்கியருளுவாராக! நலம் பெருகுக. வே. இராமநாதன், தேவகோட்டை, பாலகவி., 5-3-63 பாராட்டுரை நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் நெடுங்காலமாகச் செய்துவரும் இறை திருப்பணிகள் மிகப்பலவாகும். இப்பணி களுக்காகப் பல கோடிக்கணக்கான செல்வங்களை நகரத்தார்கள் ஆர்வமுடன் பயன்படுத்தியுள்ளார்கள். இப்பணிகள் புகழ் கருதாமல் புண்ணியமே கருதிச் செய்யப் பெற்றன. ஆதலால், இப்பணிகளுள் பலவற்றைப் பற்றிய செய்திகள், இன்றும் பலர் அறியப்படாமல் உள்ளன. இவ்வாறு பலர் அறியாமல், தொடர் புடையவர்களால் மட்டும் அறியப்பெற்று, நடைபெற்றுவரும் பணிகளுள், பழநிமலை வேலாயுதசுவாமியாருக்கு நடந்துவருகிற தரும அட்டவணையில் உள்ள அறப்பணியும் ஒன்றாகும். இவ் அட்டவணையை நிறைந்த கடவுட்பற்றும், உயர்ந்த குணங்களும் உடைய திரு. கு.பழ. சு.பழ. சுப்பிரமணியன் செட்டியாரவர்கள் நூல்வடிவில் அச்சிட்டு வெளியிடுவது பாராட்டுதற்குரியது. இந்நூலின் வாயிலாகச் சில நூற்றாண்டுகளுக்குமுன் நெற்குப்பை கு.பழ. குடும்பத்தார் பழநிமலை முருகப்பெருமானுக்குச் செய்யத் தொடங்கிய வழிபாட்டு முறைபுலப்படுகின்றது. இந்நூலில் எழுத்திலும், சொல்லிலும், தொடரிலும் இலக்கணப் பிழைகள் பல உள்ளன; ஆயினும் இது அறப்பணிக்கு உரிய சான்று ஆதலால் பிழைகளைத் திருத்தாமல், தம் முன்னோர்கள் எழுதிவைத்த மூலத்தில் உள்ளவாறே திரு. சுப்பிரமணியன் செட்டியார் அவர்கள் அச்சிட்டுள்ளார்கள் என எண்ணுகிறேன். இவ் அறத்தினைத் தொடங்கிய முன்னோர் கருத்திற் கேற்ப இனியும், இவ் அறம், தொடர்ந்து நடைபெற்று வருவதற்கும், இத்தகைய அறப்பணிகளை மேலும் மேலும் ஆற்றுமாறு அடியவர்களைத் தூண்டுதற்கும் இந்நூல் உதவும் என்பதில் ஐயமில்லை. பழநிமலை முருகப்பெருமான் இவ் அறம் வளர அடியவர்களுக்கு அருள்புரிவானாக. லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் அண்ணாமலைநகர், 26-5-61 தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முன்னுரை நெற்குப்பை திரு.கு.பழ.சு.பழ. சுப்பிரமணியன் செட்டியார் அவர்கள் பழனிமலை வேலாயுத சுவாமியாருக்கு நடந்துவருகிற தர்ம அட்டவணையின் பழைய கையெழுத்துப் பிரதி ஒன்றையும் அதற்குச் சரியாக அச்சிடப்பெற்ற அச்சுப்பிரதி ஒன்றையும் என்னிடம் காட்டினார்கள். அதில் பழனி ஸ்ரீ தெண்டாயுதபாணி சுவாமிக்கு ஆண்டுதோறும் நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் காவடியெடுத்து, மாகேசுவரபூசை வழக்கமாக நடத்திக் கொண்டு வருவதன்வரலாற்றுக் குறிப்பு தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. நெற்குப்பை கு.பழ. குடும்பத்தின் முன்னோர்களால் மிகச்சிறிய அளவில், சில நூறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப் பெற்ற இவ்வழிபாடு ஸ்ரீ தெண்டாயுத பாணியின் பேரருளாலும், நகரத்தார்களின் ஒத்துழைப்பாலும் நாளுக்கு நாள் மேலோங்கிச் சிறப்புற்றுப் பயன் வழங்கி வந்திருக்கிறது என்பதை இவ்வட்டவணை நன்கு தெரிவிக்கிறது. இத்தகைய உயர்ந்த வழிபாடு இடையில் சில ஆண்டுகளாக இதில் தொடர்புடையார் சிலர் கொண்டமனப்பிணக்குகளால் கொஞ்சம் மாறுதல்களை அடைந்து வருகிறது என்று தெரிகிறது. பழைய ஆதரவாகிய இவ்வட்டவணையில் கண்டபடி இச்சிவ புண்ணியச் செயல் தொடர்ந்து நிகழ்ந்து வருமானால், நகரத்தார்களுக்கு அது இம்மை மறுமைக்குரிய இருவகைப் பேறுகளையும் எளிதில் வழங்கும் என்பதைச் சொலவும் வேண்டுமோ? ஆண்டவன் திருமுன்பில் அடியார்கள் அனைவரும் தொண்டுசெய்யும் மனப்பான்மையை அன்றிப் பிணக்குக்குரிய வேறு மனப்பான்மைகளைக் கொள்ளுதல் சிறிதும் பொருந்துவது ஆகாது. இவ்வட்டவணையில் எழுத்துப் பிழைகள், சொற் பிழைகள், சொற்றொடர்ப் பிழைகள் உள்ளன வேனும் இதனை எழுதிய முன்னோர்கள் இதிலுள்ள பொருளையே குறிப்பாகக் கொண்டவர்கள் ஆதலின் அவர்களைப் பின் பற்றி நாமும் இதன்பொருளிலேயே கருத்தைச் செலுத்துதல் வேண்டும் என்பதனாலேயே பிழைகளைத் திருத்தாமல் அச்சிடும்படி தெரிவித்தேன். அதனை ஏற்று, திரு. சுப்பிரமணியன் செட்டியார் அவர்கள் இதனை வெளியிட்டுள்ளார்கள். இவ்வட்டவணை வெளியீடு, இடையில் ஏற்பட்டிருக்கிற பிணக்குகளை மாற்றி முன்புபோல் முறையாக வழிபாடுகள் நிகழும்படி செய்யும் என்றும் உறுதி கொண்டு அவ்வாறு நிகழப் பழநிமலை ஸ்ரீ ஞான தெண்டாயுதபாணியின் பொன்னடிக் கமலங்களை வாழ்த்தி வணங்குகின்றேன். அன்புள்ள வே. இராமநாதன்செட்டியார் நகரத்தார் அறப்பட்டயங்கள் நூலுக்கு எழுதியது 3-5-61 குறள் வழி வாழ்ந்த, பொய் சொல்லா வ.சுப. மாணிக்கனார்! வள்ளுவம், தொல்காப்பியக்கடல், தமிழ்க்காதல், கம்பர்’ என, உரை நடையாகவும், கவிதையாகவும், நாடக வடிவிலும், வ.சுப. மாணிக்கனார், பல நூல்களை எழுதியிருந்தாலும், அவற்றின் படைப்புகளில் தலையாயது, வள்ளுவம் என்ற நூலாகும். ஆகையால் தான், தமிழக அரசு அவருக்கு, `திருவள்ளுவர் விருது’ வழங்கி சிறப்பித்தது. முன்னாள் முதல்வர், கருணாநிதி, `குறளோவியம்’ எழுதிய பின், அதற்கு அணிந்துரை எழுதுவதற்கு, தகுதியானவராக நம், பொய் சொல்லா மாணிக்கனாரைத் தான் தேர்ந்தெடுத்தார். அது போல, மதுரை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, அவரை, எம்.ஜி.ஆர்., நியமித்து பெருமைப்படுத்தினார். திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும் என, குரல் கொடுத்தவர். நம் மாணிக்கனார், தன் பேச்சாலும், மூச்சாலும், சொல்லாலும், செயலாலும் குறள் வழி வாழ்ந்த மாணிக்கனாருக்கு, மதுரை உலகத் திருக்குறள் பேரவையின் சார்பில், நூற்றாண்டு விழா எடுப்பது மிக பொருத்தமானதாகும். இந்த அரிய நூலை வெளியிடுவதில், மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். `தமிழ்க் கதிர் வ.சுப. மாணிக்கனார்’ என்ற நூலின் தலைப்பு, மிகுந்த நுண்மாண் நுழைபுலத்துடன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தன் ஆசிரியர், `பண்டிதமணி’ கதிரேசன் செட்டியார் மீது மாணிக்கனார் அளவற்ற மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார். தான் காரைக்குடியில் கட்டிய புது வீட்டிற்கு, `கதிரகம்’ என, தன் ஆசிரியரின் பெயரை சூட்டினார். உருவச்சிலை தான் பிறந்த ஊரான மேலைச்சிவ புரியில், பண்டிதமணியின் நூல்களை மறுபதிப்பு செய்து சிறப்பித்தார். பண்டிதமணியின் பிறந்த ஊரான, மகிபாலன்பட்டியில், அவருக்கு முழு உருவச்சிலை நிறுவி, மகிழ்ந்தார். அவர் தன் ஆசிரியரிடம் கொண்ட அளப்பரிய அன்பையும், மதிப்பையும் குறிக்கும் விதமாக, இந்த நூலுக்கு, `பண்டிதமணி கதிரேசன் செட்டியார்’ என்ற பெயரில் இருந்து, `கதிர்’ என்ற சொல்லை எடுத்து வைத்த ஆசிரியர்களின் திறத்தை வியந்து போற்றுகிறேன். இந்த நூலின் மூலம், இலக்கியத்தின் மீது அவர் கொண்டிருந்த முழுமையான பார்வையை, நாம் உணர முடிகிறது. `தொல்காப்பியக் கடல், தமிழ்க்காதல், வள்ளுவம், கம்பர்’ என, அவரின் சிறப்பான நூல்களை ஆழமாக ஆராய்ந்து, தெளிவான சிந்தனையுடனும், அழகான மொழி நடையிலும் இந்நூலை எழுதியுள்ளனர். இதன் ஆசிரியர்கள். மாணிக்கனார், தன் சிறு வயதில், பர்மாவில் வட்டிக் கடையில் சேர்ந்த போது, ஒரு அதிகாரி வரும் போது, `இல்லை’ என, முதலாளி சொல்ல சொன்ன போது, பொய் சொல்ல மறுத்தார். அந்த அதிகாரி, ஒரு வருமான வரி அதிகாரி. மாணிக்கனார், மிகுந்த தமிழ்ப் பற்று உடையவர். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, `படி அரிசி திட்டம்’ கொண்டு வந்த போது, `படி தமிழ் திட்டம்’ கொண்டு வர வேண்டும் என, சொன்னவர். தன் குழந்தைகளுக்கு, தொல்காப்பியன், பூங்குன்றன், பாரி, தென்றல், மாதரி, பொற்றொடி என, தூய தமிழ் பெயர்களை சூட்டி, மகிழ்ந்தவர். மறைமலையடிகளின் தனித் தமிழ் இயக்கத்துக்கு உறுதுணையாக இருந்தவர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், தொல்காப்பிய தகைஞராக பணியாற்றியவர். மறைவுக்கு பின், தன், 4,600 புத்தகங்களையும், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்திற்கு கொடுத்து, தமிழ வாழ்வதற்காக பாடுபட்டவர். அன்னம் பாலிக்கும் தில்லையில், திருமுறைகள் பாடப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். தமிழ்க் கதிருக்கு, தமிழ் சுடர்கள் எழுதிய இந்த நூலை, வெளியிடும் விழாவில், வருமான வரித்துறை அதிகாரிக்கு என்ன வேலை... என, பலரும் யோசிக்கலாம்’ மாணிக்கனார், தன் சிறு வயதில், பர்மாவில் வட்டிக் கடையில் சேர்ந்தபோது, ஒரு அதிகாரி வரும் போது, `இல்லை’ என, முதலாளி சொல்ல சொன்ன போது, பொய் சொல்ல மறுத்தார். அந்த அதிகாரி, ஒரு வருமான வரி அதிகாரி. அந்த அதிகாரியின் பொருட்டு, பொய் சொல்ல மறுத்த காரணத்தால் தான், அவர் தமிழகம் வர நேர்ந்து, பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் மாணவராக சேர்ந்து, தமிழ்ப் புலமையும், தேர்ச்சியும் பெற்றார். எனவே, மாணிக்கனாரை பர்மாவில் இருந்து, தமிழகத்துக்கு திருப்பி அனுப்ப காரணமாக இருந்தவர், ஒரு வருமான வரி அதிகாரி. அதை கருதி தான், விழாக் குழுவினர், இந்த பொறுப்பை எனக்கு அளித்துள்ளனர் போலும். முழுமையாக படிக்க வேண்டும் மாணிக்கனார் வலியுறுத்திய முழுப்பார்வை, இலக்கிய உலகுக்கு மட்டுமின்றி, நம் வாழ்வின் அன்றைய நிகழ்வுகளுக்கும் பொருத்தமானதாகும். வருமான வரி தொடர்பான, ஒரு உச்ச நீதிமன்ற தீர்ப்பில், இந்த பார்வைதான் அடி நாதமாக விளங்குகிறது. ஒரு நூலையோ, கட்டுரையையோ படிக்கும் போது, ஓரிரு வார்த்தைகள் அல்லது வரிகளை மட்டுமே படித்து, ஒரு முடிவுக்கு வராமல், அந்த நூலை அல்லது கட்டுரையை முழுமையாக படித்து முடிவுக்கு வரவேண்டும் என கூறுகிறது. எனவே, மாணிக்கனாரின் முழுப் பார்வையை நாமும், நம் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்ற செய்தியை, அவரின் நூற்றாண்டு விழாவில், உங்களின் மேலான சிந்தனைக்கு வைத்து, வாய்ப்பளித்த உலகத் திருக்குறள் பேரவையைச் சார்ந்த பெருமக்களுககு நன்றி பாராட்டுகிறேன் நன்றி. வணக்கம். குறிப்பு: `காலேஜ் ஹவுஸ்’ திருக்குறள் செம்மல் மணிமொழியனார் அரங்கில், பேராசிரியர் ரா.மோகன் மற்றும் போசிரியை நிர்மலா மோகன் இணைந்து எழுதிய, `மாணிக்கக் கதிர் வ.சுப. மாணிக்கனார்’ என்ற, நூல் வெளியீட்டு விழாவில், ச. சங்கரலிங்கம் இ.வ.ப., ஆற்றிய உரையின் ஒரு பகுதி. -ச. சங்கரலிங்கம், இ.வ.ப, ஆணையாளர், மாணிக்கக் குறள் என்பேராசிரியரும், என் வழிகாட்டியுமாகிய மூதறிஞர், செம்மல் வ.சுப.மாணிக்கனார், காட்டிய வழியில் நடப்பது, என் வாழ்க்கை முறை. அவர்கள் தோன்றிய ஊருhகிய மேலைச் சிவபுரியில் நடைபெறும் குடமுழுக்கு விழாவில், அவர்கள் கொள்கைகளை விளக்கும் ஆவணமாகிய மாணிக்கக்குறள் நூலை, மிகுந்த மகிழ்ச்சியுடனும், பணிவுடனும், மேலைச் சிவபுரி வாழும் மக்களுக்கு பதிப்பளிப்புச் செய்து மகிழ்கிறேன். தமிழ் மொழி, தமிழிசை, தமிழர் நாகரிகம், பண்பாடு, வரலாறுபற்றிக் குறள் யாப்பில், அந்தாதி அமைப்பில் அவர்கள் இயற்றிய இத்திருநூலைக் குடமுழுக்குத் திருநாளில், அவர்கள் திருப்பெயர் விளங்கவும், அவர்கள் கொள்கை கோலோச்சவும், செம்பதிப்பாக வெளியிட்டு உவகை கொள்கிறேன். மாணிக்கக்குறளை மதித்துக் கற்போம். செம்மலின் செந்நெறியைப் பின்பற்றுவோம். முனைவர் ச. மெய்யப்பன் மாணிக்கக் குறளில் மணித்தமிழும், குறளும் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனாரின் நூற்றாண்டு இது. ஐயா அவர்கள் மாணிக்கக் குறள் என்ற தலைப்பில் 506 குறட்பாக்களை எழுதியிருக்கிறார்கள். இதில் சிறப்பு பாதிக்கு மேல் குறட்பாக்கள் தமிழையும் திருக்குறளையும் சிறப்பிக்கும் பாக்கள் ஆகும். இவ்வகையில் மணித்தமிழை, முப்பால் குறளைப் போற்றும் பத்து குறட்பாக்களையும், வாழும் வள்ளுவம் இரா. இளங்குமரனாரின் தெளிவுரையையும் தந்துள்ளேன் சுவையுங்கள். 1. நன்று தமிழ்தான் நடைபள்ளி ஆளாமல் தின்று கொழுத்தல் திமிர். நல்ல தமிழானது தொடக்கப் பள்ளி ஆட்சியையும், கொள்ளாத நிலையில் சோறுண்டு கொழுத்தல் தடித்தனம் என்றே கருதப்படுவது ஆகின்றது. 2. நலங்கூர் தமிழென நம்பிக்கை யூட்டல் வலந்தரும் வாழ்வு தரும். கற்பார்க்கு நலஞ் செய்யும் தமிழ் என்னும் நம்பிக்கை உண்டாக்கின், அது தமிழுக்கு வெற்றியையும் சிறந்த வாழ்வையும் தரும். 3. என்றும் தமிழால் எதுவும் பெறலாகும் என்னும் புதுப்பெருமை ஈட்டு. எந்நாளும் தமிழால், வேண்டும் எத்துறையையும் பெறுவதற்குக் கூடும் என்னும் புதிய தாம் பெருமையைத் தேடிச் சேர்ப்பாயாக. 4. பாரெங்கும் வீசும் பசுந்தமிழ் நம்நகர் ஊரெங்கும் இல்லை உணர். உலகமெலாம் தமிழ் இந்நாளில் பசுமையாகப் பரவுதல் காண்கிறோம்; ஆனால், நம் நகரங்களிலும், ஊர்களிலும் அதற்கு இடமில்லை. இதனை உணர்ந்து கடனாற்றுவாயாக. 5. குறளை உணராக் கொடுந்தமிழன் வீதிச் சரளைப் பொடிக்குச் சமம். திருக்குறள் பிறந்த மண்ணின் பிறப்பியாக இருந்தும் அதனைக் கல்லாத கொடிய தமிழன், நடைபாதைக்குப் போடப்படும் சரளைக் கல்லுக்கு ஒப்பானவன் ஆவான். 6. உண்டாய வள்ளுவர் ஓங்குநிலைக் கோட்டத்தைக் கொண்டாடிக் கற்க குறள். அண்மைக் காலத்தே உருவாக்கப்பட்ட உயர்ந்த புகழ் வாய்ந்த வள்ளுவர் கோட்டத்தின் சிறப்பைக் கொண்டாடி திருக்குறளையும் அப்பெருமையுடன் கற்பாயாக. 7. பழுத்த தமிழருக்குப் பாங்கு கெடுத்த உழுத்த மொழிக் கலப்பேன் ஓர். பல்வகை கலைத்துறைகளுக்கும் ஏற்றவாறு முதிர்ந்த தமிழ் இருக்கவும், அதன் சிறப்பைக் கெடுத்ததாகிய அழிவு மொழிக் கலப்பு எதற்காக? நீ ஆராய்வாயாக. 8. துப்பாக வேண்டின் தொடர்தமிழ்ச் சட்டங்கள் உப்பாக வேண்டும் உணர். தமிழ் உரிய வலிய பாதுகாப்புடன் விளங்க அதற்குத் தக்க சட்டங்கள் உண்டாக்கப்பட வேண்டும் இதை உணர்வாயாக. 9. புரியாத தமிழர் பொதுவாய்த் தமிழர் வெறுவாய்த் தமிழர் விளம்பு. செய்வது என்னவென்று விளங்காத தமிழராகவும், பொது பொது என்று பேசும் வாய் வீச்சுத் தமிழராகவும், எதுவும் செய்ய இயலாத வெட்டித் தமிழராகவும் இன்று தமிழர் உள்ளனர். இந்நிலையில் என்ன செய்வதெனக் கூறு. 10. பணிக தமிழ்முன் பயில்க அவைநூல் துணிக ஒருசட்டத் துப்பு. தமிழ்கற்றார். தமிழ்த் தொண்டர் முன் பணிவு கொள்வாயாக; சங்க நூல்களைக் கற்றுத் தெளிவாயாக; தமிழ் வளர்ச்சிக்குரிய ஒப்பற்ற சட்டத்தின் பாதுகாப்பைத் துணிந்து தருவாயாக. ஒவ்வொரு குறளும் தமிழ், குறள் போற்றும் மாணிக்கக் குறள் கற்போம்! மனித மாண்பு காப்போம்! - மேலை பழனியப்பன். கருவூர், பூச்சரம் சித்திரை - ஏப்ரல் 2017 முன்னுரை “...நூல்களை வரைந்தெழுதிய காலத்தைக் காட்டிலும் அவை முகவழகும் முதுகழகும் பெற்றுப் பதிப்புருவம் கொண்டபோது, எழுத்துக்குலம் செம்மாப்பு எய்துகின்றது; தம் கருத்துக்கள் மக்கட் சந்தையில் அங்காடும்போது எழுத்தாண்மை யர் ஏதோ ஒருவகைக் கொடை உலகிற்குச் செய்தது போன்ற பெருமித உணர்வு பெறுகின்றனர். இவ்வுணர்வே எழுத்தின் உண்மைச் செல்வம்...” (கம்பர், வ.சுப.மா. முன்னுரை). இத்தகைய பெருமித உணர்வோடும் வாய்மைக் குறிக்கோளாடும் மக்களினத்தின் மேல் தீரா அன்போடும் படைத்தளிக்கும் எந்தவொரு நூலாசிரியரும், தன் படைப்பானது காலங்கள் கடந்தும் நிலைபெறவேண்டும், அதன் தேவை காலவரையறையின்றி நீடிக்க வேண்டும் என்றுதான் விரும்புவர். இந்த நூலைத் தவிர.... மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் அவர்கள், ஓர் உண்மை இந்தியத் தமிழனாய் “இந்நூல் என் நாட்டுத் தொண்டு” என்ற ஒற்றைவரி முகவுரையுடன், தன் எழுத்தால் இந்தியத் திருநாட்டிற்கு ஒரு நன்மை செய்ய முடியும் என்ற திண்மையுடன் 25 தொடர் கடிதங்களாக தலைவர்களுக்கு வணக்கத்துடனும், மொழிச்சிக்கலுக்கு முடிவான நிலையான வழிகாட்ட இயலும் என்ற கூடி வரும் நல்ல நம்பிக்கையுடனும் 1965 ஆம ஆண்டு எழுதிய இந்த நூலின் தேவை, அரை நூற்றாண்டிற்கு பிறகும் கூடுதலாகத் தேவைப்படும் காலக்கட்டம் இப்பொழுது என்று அறிவரேல் ஆற்றொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்திருப்பார். ஆகாரம் முதல் ஆதாரம் வரை அதிகாரமின்மை; நீருக்கான வஞ்சனை; தேர்வுக்காக அஞ்சும் பேதைமை; நிறுவனப்படுத்தப் பட்ட ஊழல் நிர்வாகம்; நிவாரணம் கோரி நிர்வாணம்; நெடுஞ்சாலை முதற்கொண்டு கல்விச்சாலை வரை பிறமொழிக் கட்டாயத் திணிப்பு; நாடாளுமன்றத்தில் தாய்மொழிக்காக நாளும் மன்றாடும் நிலை; கொஞ்சிய தன் தாயை, தன்னுடைய தாய்தான் என்று அங்கீகரிக்குமாறு கெஞ்சவேண்டிய அவலம்.... இப்படியாக, இன்றைய இந்தியத் தமிழனின் வாழ்வானது கோரிக்கைப் போராட்டங்களாகவே முன்னெடுக்கப்படுகின்றது. மாறாக, கோரிக்கை வைத்து கூட்டத்துடன் கெஞ்சி நிற்கும் போராட்டம் அல்ல ஐயாவுடனது; கோவின் அறிக்கைக்கு நிகர் தீர்வுதனை முனைப்புடன் முன்வைத்து விஞ்சி நிற்கும் எழுத்தோட்டம். மொழிச்சிக்கல் தொடரும் இதுநாள்வரை நம்மை நாமே சீர்தூக்கி தன்னாய்வு செய்துகொள்ளும் பட்சத்தில் நாம் சிறப்புற்றிருக்கிறோமா? அல்லது சீரழிந்திருக்கிறோமா? சற்றே எண்ணிப்பாருங்கள். இக்காலகட்டத்தில், நாம் எந்த ஒரு தனிமொழியிலும் முழு அடிப்படையின்றி, மேதமைக்குன்றி நுனிப்புல் மேய்ந்த ஒரு சந்ததியாகவே உருவாகியிருக்கிறோம். அறிவார்ந்த பல கலந்துரை யாடல்கள் தவிர்த்து பலமொழி கலந்து உரையாடல்கள் நடத்துகின்றோம். எந்தவொரு மொழியிலும் தொடர்ச்சியாக இலக்கணப்பிழையின்றியும் கருத்துச் செறிவாகவும் பேசுவதற்கு எழுதுவதற்கு இயலாதவர்களாகவே வாழ்கிறோம். ஆகமொத்தம் தன்னம்பிக்கை இழந்த கூட்டமாகவே காட்சியளிக்கின்றோம். தற்சிந்தனைக்கு வழியில்லாமல் எதை எவர் சொன்னாலும், எவை நமக்கு பொருளாதாரத் தேவைகளுக்கு விதிக்கப்பட்டதோ, அதனைத் திண்ணமாகச் செய்து முடிக்கும் ஆட்டுமந்தை கூட்டமாகவே உணருகிறோம். நடைமுறையில் மொழி என்பதனை பேச்சாகவும், எழுத்தாகவும் மட்டுமே கருதுகின்றோம். ஒரு கேள்வி - எந்த மொழியில் சிந்திக்கின்றோம்? மனிதன் சிந்தனைவயப்பட்டவன். சிந்தனை என்பது தற்சிந்தனையாய் சிறக்க வேண்டும். வழிவழிச் சிந்தனையுடன் தற்காலச் சிந்தனையை தொடர்புப்படுத்தியும் ஒப்பிட்டும் இணைத்தும், புறச்சிந்தனைகளை சீர்தூக்கியும் பகுத்தறிந்தும் தற்சிந்தனையானது உருவாகவேண்டும்; அடுத்த தலைமுறைக்கு கடத்தவேண்டும். இதனை செவ்வன செய்வதற்கு மொழிதான் முதன்மையான கருவியாகும். தாய்மொழிக் கல்வியே தற்சிந்தனைக்கு ஆக்கம் தரும் என்பது உலகியலார் மறுக்கமுடியாத உண்மை. தற்சிந்தனை குன்றிய நிலையில், எந்தவொரு உலகளாவிய இலக்கிய வெளிப்பாடுகளோ, அறிவுசார் பங்களிப்புகளோ நம்மிடையே தற்காலத்தில் உருவாவதில்லை. தாய்மொழியின் நிலை அன்றாட அலுவல் நடைமுறைகளுக்கே அல்லாடும் பொழுது, இன்றும் பொதுமொழி, தொடர்புமொழி, கல்விமொழி, ஆட்சிமொழி, அலுவல்மொழி, மற்றும் மொழிததிட்டம் என்றே விவாதிக்கும் பொழுது, சிந்தனை நோக்கைப் பற்றி சிந்திக்க இடம் ஏது? நாட்டுமொழிகளை துணிவாக உயர்த்தும் பட்சத்தில் நம் நாட்டில் உண்டாகக்கூடிய வளங்களாக “உடல்நலம் பெருகும், கல்வித் தெளிவு உண்டாகும், அறிவுப் புரட்சி ஏற்படும், எண்ணவீறு செறியும், இனிய உறவு தழைக்கும், ஒற்றுமை யூரன் கூடும், உள்ளம் உயரும், நோபல்பரிசு வாங்கும் பல்லுயிர்கள் பிறக்கும்”, என்று மொழியின் அருமை பெருமை ஆற்றலை அதிகாரத்தை ஐயா வ.சுப.மா. பட்டியலிட்டாலும் மொழி வளர்ச்சி பற்றியே இன்றும் வழக்காடிக்கொண்டேயிருந்தால் என்றுதான் மொழியை நம் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளப் போகின்றோம்? ஐயா மாணிக்கனார், மக்களுரிமை பற்றி கூறுங்கால், மொழியுரிமையே பிறப்புரிமை, தனியுரிமை, வழியுரிமை, வழிவழிப் பொதுவுரிமை எனவும், சமயவுரிமையினும் மதவுரிமை யினும் கட்சியுரிமையினும், மொழியுரிமை மக்களுரிமைகளில் தலைச்சிறந்த ஒன்று எனவும் நமக்குரிய உரிமையுணர்வை ஊட்டினாலும்; மக்கள் உரிமைகள் கட்சிப் போராட்டதுக்கோ, தேர்தல் மேடைக்கோ உரியவை அல்ல என்று சுட்டினாலும்; கட்சி மாறுந்தோறும் மனிதவுரிமை மாறின் நாடு காடாகிவிடும் என்று எச்சரித்தாலும்; மக்களுரிமைக்கேற்ற அரசின் கடமையென்பது சிறுபான்மை பெரும்பான்மை வைத்து உரிமைகளை நிறைவேற்றக்கூடாது எனவும், அவை எப்பான்மைக்கும் சமம் என்று வலியுறுத்தினாலும், இவற்றை, நாமும் உணரவில்லை; தலைவர்களுக்கு உணர்த்தவுமில்லை. தலைவர்களும் உணரவில்லை; நம்மை உணரவிடவுமில்லை. அரசியலுக்கும் கட்சிக்கும் அப்பாற்பட்டவராய், நாட்டுக்கும் மொழிக்கும உட்பட்டவராய், வன்முறைகளை எதற்கும் என்றும் எவரும் கையாளக்கூடாது என்ற தெளிவுடனும், பாரதத்தின் ஒருமைப்பாடு பாழ்படக் கூடாது என்ற உறுதியுடனும், அடிப்படையுரிமையில் ஏற்றத்தாழ்வு கூடாது என்ற குறிக்கோளுடனும், தூற்றலில்லாத ஏற்றத்துடனும், மழுப்பலில்லாத அழுத்தத்துடனும், கசப்பிலாத கனிவு நோக்கத்துடனும், உலகியல் பார்வையுடனும், அறிவியல் அடிப்படையுடனும், அரசுகளின் பல்வேறு பொதுமொழி (அலுவல் மொழி) கொள்கைகள் பற்றியும் அதனதன் சாதகபாதகங்கள் பற்றி அலசி ஆராய்ந்து சிறந்த தீர்வோடுடனும், உலகளாவிய புள்ளிவிவரங்களுடனும், சட்ட நுணுக்கத்துடனும், அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டும், அரசியல் யதார்த்தத் துடனும், இயற்கை நெறியுடனும், வரலாற்றுச் செறிவுடனும், மனிதவியல் அறத்துடனும், வளரும் தொழில்நுட்பத்தின் மேல் நம்பிக்கையுடனும், ஐயா மாணிக்கனார் மொழிச்சிக்கலுக்கு முன்வைக்கும் கருத்துத்தொடர் தீர்வுகள் நம்மை வியப்பில் ஆழ்த்தினாலும், குறிப்பிடத்தகுந்த செயலாக்கம் பெற இன்னும் தொடங்கவில்லையே எனும்பொழுது வருத்தம் தான் மிஞ்சுகிறது. நன்மாற்றம் விழையவில்லையே, எனும்பொழுது ஏமாற்றமும் நெஞ்சத்தில் குற்றவுணர்வும்தான் விஞ்சுகிறது. தாய்மொழியின் இன்றியமையாமையை உணர்ந்தோரே! இந்திய இறையாண்மையைக் காக்க விழைபவர்களே! கருத்து வேற்றுமைப் பட்டாலும் காரிய ஒற்றுமை வேண்டும் முனைவோர்களே! “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்னும் மரபினோரே! வாய்மை நெறியினோரே! ஒன்று செய்யுங்கள்- இந்த நூலினை குறைந்தபட்சம் இரு பிரதிகள் பெற்றுக் கொள்ளுங்கள்; ஒன்றை நீங்கள் மதிக்கும் அல்லது உங்களை மதிக்கும் ஒரு தலைவருக்கேனும் பரிசளியுங்கள்; வாய்ப்பு இருந்தால், தமிழில்லாத உங்கள் இந்திய சகோதரருடன் நண்பருடன் அவரவர்களின் தாய்மொழியிலேயோ ஆங்கிலத்திலோ இந்நூலின் கருத்தை மட்டுமாவது பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த நூலின் மறுபதிப்பிற்கான வருங்காலத் தேவை இல்லாமல் ஆக்குங்கள் - இதுவே இந்த நூலின் நோக்க வெற்றி. -மருத்துவர் சுப. திருப்பதி மேலைச் சிவபுரி. நீதிநூல்கள் - ஏழிளந்தமிழ் எந்த ஒரு ஐந்தறிவு வரை உள்ள ஓரியல்பு உயிரினமும், பிறந்தவுடன் தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கிவிடுகிறது. ஆறறிவு மனிதனைத் தவிர, பல்நிலை இயல்புடைய மனிதனின் படிநிலை வளர்ச்சிக்கு முறையான பயிற்சியும் தொடர் முயற்சியும் இன்றியமையாதவை. தன் வளர்ச்சி புரந்து, பரிமாண வளர்ச்சி அடைந்து, பரிணாம வளர்ச்சிக்குப் பங்களிக்கும் கடப்பாடும், கடமையும் உடையவன் மனிதன். மனிதன் எண்ணம் உடையவன்; சிந்தனைவயப்பட்டவன்; இன்பம் விழைபவன். எண்ணமானது உயர்வானதாகவும், தற்சிந்தனையானது நற்சிந்தனையாகவும், இன்பமானது அறத்தான் வருவதாகவும் இருத்தல் வேண்டும். முதுமை வரை நீடிக்கும் முழு வாழ்வும் மிகச் சிறப்பாக இயல்பாக அமைவதற்கு, “நினைவு நல்லது வேண்டும்”; அத்தகைய நீடித்த நினைவாற்றலுக்கு இளமைக் கல்விதான் அடிப்படை. தலைமைச் செயலகமாம் மனித மூளையில் நினைவாற்றலைப் பதிவு செய்து வகையிட்டு பேணுவதற்கு அறிவியல்பூர்வமாகவும், உயிரியல் பூர்வமாகவும், மெய்யியல் பூர்வமாகவும் உளவியல்பூர்வமாகவும் ஒரு படிநிலை கட்டமைப்பு, இயற்கையாக அமைந்து கற்றலினால் வரையறுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் செம்மையாக பழக்கப்படுத்திக்கொண்டும் வழக்கமாகக்கொண்டும் நாகரீக சமூகமாக நாம் வாழ்வாங்கு வாழ நமக்காக மூத்தோர் கொடையாக படைக்கப்பட்டவைதான் இந்த நீதிநூல்கள். மேலும் வ.சுப.மாணிக்கனார் தற்சிந்தனைகளில் குறிப்பிடுவார், “தீயவற்றை பரப்பும் குறிக்கோள்கொண்டு எவையும் தோன்றவில்லை..... பெரியவர்களும் நூல்களும் எவற்றைச் சொல்லவில்லையோ அவற்றை மக்கள் வேண்டுமென்றன்று, இயல்பாகவே ஈடுபட்டு ஆசையோடும், அறிவொடும் செய்து கொண்டிருக்கிறார்கள். இயல்பும் அக்கறையும் தீமை வழிப்பட்டுள. தாமே தீ வழிச் செல்வது இயற்கை என்றாகின்றது. சான்றோர்கள் அறநூல்கள் செய்யும் முயற்சியெல்லாம் மக்களைத் தீமைத் திசையினின்று திருப்பப் பார்ப்பது....”. ஒரு தமிழ்க் குழந்தையின் இயல்பான படிநிலை தன்வளர்ச்சிக்கும் உளவியலுக்கும ஏற்ப, ஒருங்கே அமைந்துள்ள இந்த எழிளந்தமிழ் நூல்களின் அறிவுசார் மொழி கட்டமைப்பினையும், தக்க ஒலியமைப்பையும், அடிப்படை இலக்கணத்தையும், இலக்கிய ஆர்வத் தூண்டுதலையும், சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் அறிவாற்றலையும், அறச்சிந்தனை களையும் நோக்குங்கால் வியப்பும் உறுதியும், மேலோங்கியும் உள்ளார்ந்தும் இருப்பதனை உணர்வீர்கள். 1. ஆத்திசூடி: அகரவரிசைப் படி இரு சொற்கள்; ஒரு வரி - எண்ணைக்கை 108 “அறஞ்செய விரும்ப”ச் சொல்லி “ஓரஞ் சொல்லேல்” என அறிவுறுத்தி முடிகிறது. 2. கொன்றைவேந்தன்: அகரவரிசைப்படி நான்கு சொற்கள்; ஒரு வரி - எண்ணிக்கை 91 “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று முதன்மைப் படுத்தி, “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்று ஆற்றுப்படுத்தி, “ஓதாதார்க் கில்லை உணர்வொடு ஒழுக்கம்” என்று தொடர்ந்து மனப்பாடம் செய்தலின் மேன்மையை எச்சரிக்கையுடன் வலியுறுத்தி முடிகிறது. 3. மூதுரை: நான்கு வரிகள் (வெண்பா) - எண்ணிக்கை 30 நன்மை செய்தால் நன்மை வரும் என்று உறுதிகூறி, கற்றலின் இயல்பையும் சிறப்பையும் வலியுறுத்தி, துன்பம் செய்வார்க்கும் இன்பமே செய்தல் என்று நல்வழிக்கு வித்திட்டு முடிகிறது. 4. நல்வழி: நான்கு வரிகள் (வெண்பா) - எண்ணிக்கை 40 நன்மையே செய்க என்று தொடங்கி, மேலும் மேன்மையுற வேண்டுமெனில் கற்க வேண்டிய சிறந்த நூல்களைப் பரிந்துரைத்து மேற்கொண்டு நல்வழி காட்டி முடிகிறது. 5. நறுந்தொகை: ஒரு வரி முதல் ஐந்து வரிகள் - எண்ணிக்கை 81 நல்லனவாகிய நீதிகளின் தொகுப்பாக, “எழுத்தறிவித்தவன் இறைவனாகும்” என்று தொடங்கி, பல்துறை பல்நிலை மனிதர்களின் செயல் அழகுகளை வரையறுத்து, உலகியலுக்கு ஏற்ற வழிகள் இவை என முடிகிறது. 6. நன்னெறி: நான்கு வரிகள் (வெண்பா) - எண்ணிக்கை 40 உவமைகளைக் கையாண்டு, புகழ் கருதாமல் உதவச் சொல்லி, அரசரினும் அறிஞரே சிறந்தவர் என்று பறைசாற்றி முடிகிறது. 7 உலகநீதி: எட்டு வரிகள் - எண்ணிக்கை 13 வயது கூடக்கூட, ஒரு சிறாருக்கு எதிர்மறைச் சிந்தனைகள் எழுவது இயல்பு. அந்த எதிர்மறை உளவியல் நெஞ்சத்தின் வாயிலாகவே நற்சிந்தனைகளை வலியுறுத்தும் உத்தியாக விளங்குகிறது. நீடித்த நல் நினைவாற்றலைத் தக்க வைக்கும் பொருட்டு, “ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டா” என்று வலிமையூட்டி, மனிதவியலால் பண்புலகத்தைப் பேணவும், பூலோக முள்ளளவும் வாழ்வதற்குரிய உலகியல் நீதிகளை வலியுறுத்தி முடிகிறது. நன்மக்களாம் நம்மக்களை மேன்மக்களாக ஆக்கமடையச் செய்யும் குறிக்கோளினையே தம் வாழ்வுச் செயலெண்ணமாக கொண்ட மூதறிஞர் வ.சுப. மாணிக்னார் அவர்களின் முன்னுரையாம் அறி(வு)முகத்தோடு, அவர்தம் உரையாம் உறுதியான பற்றான கைகளைப் பிடித்துக்கொண்டு, இந்த மனித வாழ்வியலை உயர்த்திக்கொள்ளவும் உய்விக்கவும் ஆன “எழிளந்தமிழ்”ப் படிகளில் பாதுகாப்பாக முன்னேறுவோம்; வாருங்கள். நல்லதொரு மரபார்ந்த அனுபவத்தில் திளையுங்கள்- “அறத்தான் வருவதே இன்பம்”; அதுவும் வ.சுப.மா. ஐயாவின் துணையுடனும் எனும்பொழுது - அது பேரின்பம். மருத்துவர் - சுப. திருப்பதி, மேலைச்சிவபுரி நடையில் நின்றுயர் நாயகர் நடையில் நின்றுயர் நாயகன் என்பது கல்வியிற் பெரிய கம்பர் வாக்கு. இத்தொடர்ச் சொற்கள் ஓர் இல், ஒருசொல், ஒருவில் என்ற உத்தம குணசீலனாய் வாழ்ந்த இராமனைக் குறிக்கும். அவ்வாறே இன்று 12-4-2017 நூற்றாண்டு நிறைவைக் காணும் செம்மல் வ.சுப. மாணிக்கனார்க்கும் அத்தொடர்ப் பொருள் பொருந்தும். புகழ்புரிந்த இல், மனைத்தக்க மாண்புடையவள் என்ற குறள் சொற்களுக்குரிய ஏகம்மை ஆச்சியின் கணவராய், வாய்மையையே தாரக மந்திரமாய்க் கொண்டவர்தான் வ.சுப.மா. நடை என்றால் பொதுவாகக் காலால் நடத்தலைக் குறிக்கும். ஏறுபோல் பீடுநடை (59) என்கிறது குறள். நடைமெலிந்து ஓரூர் நண்ணினும் நண்ணுவர் (50) என்கிறது வெற்றி வேற்கை. இப்படிக் காலால் நடப்பதினும் மனத்தால் நடப்பதையே கம்பர் நடையில் நின்றுயர் - என்றார். நற்பண்புகளின் மாண்பால் உயர்ந்த மாந்தனே மனிதன். கை, கால் முதலிய உறுப்புத் தோற்றத்தால் மட்டும் ஒருவர் மனிதராகார், உயர் பண்பாளரே மனிதர் என்றார் அய்யன் திருவள்ளுவர். உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்கப் பண்பொத்தல் ஒப்பதாம் ஒம்பு (993) என்ற குறளின் இரண்டாம் தொடர்ப் பொருளுடையவரே மனிதர் என்பதால் அவரே மனிதருள் மனிதர் என்பதினும மாமனிதர் என்ற கருத்தில் (ஆயn டிக ஆயn) நடையில் நின்றுயர் நாயகர் ஆவார். ஆக, நடை என்பது மனிதப் பண்பான ஒழுக்கம் எனப் பொருள்படும். இத்தகு ஒழுக்கம் வாழ்வின் எல்லாத் தரப்பிலும் மேற் கொள்ளப்படவேண்டிய சீலமாகும். அது வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந்த தாய் (குறள் 718) இளமை தொட்டே வளர்வதாகும். இதற்கேற்ப அமைந்ததே செம்மல் வ.சுப.மா. வின் வாழ்வு. இளம் வயதில் பெற்றோரை இழந்தவர் தம் தாய்வழிப் பாட்டன் பாட்டியாரால் புரக்கப்பட்டார். பெற்றோரிட்ட அண்ணாமலை என்ற பெயரோடே ஏழு வயதில் புதுக்கோட்டையில் ஏட்டுக்கல்வி பயின்றார். குடும்பச் சூழலால் நாட்டுக்கோட்டைச் செட்டியார் மரபுப்படி வட்டித் தொழில் காரணமாகப் பருமா தலைநகர் இரங்கூன் சென்று வட்டிக் கடையில் வேலைபார்த்தார். ஒருநாள் கடை முதலாளி, அண்ணாமலைச் சிறுவரிடம் இன்னார் வந்து கேட்டால் முதலாளி இல்லை எனச் சொல்லச் சொன்னபோது, `முதலாளி இருக்கும்போது அப்படி எப்படிச் சொல்ல முடியும்?’ என்று எதிர் வினாவை விடையாகச் சொன்னதும் கடைக்காரர் கொஞ்சமும் தாமதிக்காமல் வேலையிலிருந்து நீக்கி விடவே தாயகம் திரும்ப நேர்ந்தது. திக்குத் தெரியாத மரக்கலத்திற்கு கலங்கரை விளக்கம்போல் கல்விக் கலங்கரை விளக்காக விளங்கிய சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் புலவர் பயிலத் தம் பதினெட்டாம் வயதில் கல்விப் பயணத்தைத் தொடங்கினார். நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும் என்பதற்கேற்பத் தமிழின் கீழ்மேல் கணக்குகளின் பெருமையாய், மாமலையின் விளக்காய்ப் படிப்படியே ஒளிர்ந்தார். தமிழ் கூறு நல்லுலகின் மாணிக்க மணியாய் உயர்ந்தார். பதினோராம் வயதில் பருமாவில் பெற்ற பொய்சொல்லாப் பண்புதான் அவரைப் பின்னாளில் மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராய் ஆக்க அடிக்கல்லானது. 17.8.1979இல் துணைவேந்தரானதும் காரைக்குடிக்கு வந்த செய்தியறிந்து தமிழாசிரியர் கழகத்தார் அன்னாரைப் பாராட்டிச் சிறப்பிக்கக் கவியரசு முடியரசர் தலைமையில் சென்றோம். அப்போது அவர் சொன்னது; மேதகு ஆளுநர் அவர்கள் பதவிக்கான ஆணை வழங்கும் போது என் தலைமீது கைவைத்து வாழ்த்தியதோடு, நீங்கள் எவ்வளவோ பட்டம் விருதுகள் பெற்றிருந்தாலும் பருமாவில் பொய் சொல்லா மாணிக்கமாய் இருந்த ஒன்றே தங்களை இவ்வுயர் பதவிக்கு அடையாளம் காட்டியது - எனவாயாரப் புகழ்ந்தார் என்றார். தாம் வாய்மையையே வாழ்க்கைக் குறிக்கோளாகத் தொடர்ந்து கொண்டிருந்தது பற்றி அவரே தம் தொல்காப்பிய எழுத்ததிகார உரைப்பாயிரத்தில் குறித்துள்ளார். பண்டிதமணி கதிரேசன் செட்டியார், அ.சிதம்பரநாதர், பூவராகவன் பிள்ளை, மு. அருணாசலம் பிள்ளை போன்றோர் வ.சுப.மா.வின் ஆசிரியர்கள், அவ் ஆசிரியத் தாயார்களின் தமிழ்த் தாலாட்டில் வளர்ந்தவர்க்குப் பண்டிதமணியாரே குரு. வ.சுப.மாவின் கல்விக் கெல்லாம் கதிரேசனாரின் பொருளுதவி துணையாக இருந்ததோடு வள்ளல் அண்ணாமலை அரசரிடம் பரிந்துரை செய்து விரிவுரையாளராகப் பணியில் சேர்த்து வ.சுப.மா.வின் வாழ்வில் ஒளியேற்றினார். இச் செய்ந்நன்றிக் காகவே காரைக்குடியில் செம்மல் தம் இல்லத்திற்குக் கதிரகம் எனப் பெயரிட்டார். எதையும் மறித்தோடிச் சிந்திப்பதை இயல்பாகக் கொண்ட செம்மலின் வள்ளுவம் என்னும் கற்பனைப் பொழிவான நூலுக்கு ஈடுஇணையே இல்லை. அவரே தம் முகவுரையில், “வள்ளுவ நூலின் நடை கற்பவரை நிறுத்திப் படிக்கச் செய்யும், வேகப்படிப்பைக் குறைத்து விளங்கப் படிக்கத் தூண்டும்” என எழுதியுள்ளார். செம்மலுக்குச் சங்கநூலும் திருக்குறளும் வலது இடதாய கண்கள். தொல்காப்பியம் நெற்றிக்கண். பழந்தமிழ் நூல்களைப் போலவே இடைக்கால, தற்கால நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். திரைப்படப் பாடலாயினும் நாமறிய ஏதேனும் கிடைக்கும் என்ற பரிவோடே அப்புத்தகங்களை வாங்கிப்படிப்பார். ஒருமுறை அவரில்லம் சென்றிருந்த என்னிடம் சில திரைப்படப்பாடல் புத்தகங்களைக் காட்டி இவற்றைச் சிற்றிலக்கியச் சார்பாகக் கொண்டு தேவைக்குரியதைத் தேடிக்கொள்ளல் தமிழ்க்கடன் - என்றார். நவில்தொறும் நூல்களை மதித்தல்போல் பயில்தொறும் பண்புடைய சான்றாரை மதித்த ஒழுக்க சீலம் போற்றுதற்குரிய தாகும். 20.11.1973இல் தந்தை பெரியார் காரைக்குடிக்கு வந்தார். அன்று மாலை அவரைக் கண்டுவரச் செம்மலும் திருக்குறள் விருதானர் இரா. சாரங்கபாணியாரும் சென்று கண்டு வந்தனர். அவர்களைப் போலவே காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரி முன்னாள் முதல்வர் கரந்தை ந. இராமநாதருடன் நானும் பேராசிரியர் தியாகராசன், அருச்சுனன் சென்றோம். இடைமறித்த வ.சுப.மா. சொன்னார், “ஐயாவைப் பார்த்து நூற்றாண்டை எட்டும் தங்களின் விழாவை நாங்கள் கொண்டாடி மகிழவேண்டும் என்றேன் அதற்கு அவர் “இருந்து பார்த்தாத் தெரியும்” என்றார். இப்படிச் சொன்னதோடு, இருந்து பார்த்தாத் தெரியும் என்றதை ஒருதட்டிலும் நாம் கற்ற நூல்களை ஒருதட்டிலுமாக வைத்து நிறுத்தால் சமன் செய்து சீர்தூக்கிய தாக உள்ளதல்லவா? வாழ்க்கைதான் நூல்கள்; அவற்றின் சாரமே அனுபவ வார்த்தை என்பதைப் பெரியார் சொல்லாமல் சொல்லிவிட்டாரே என்று கூறிவிட்டுப் பெரியாரைக் காண எங்களை ஆற்றுப்படுத்தினார். மற்றொரு நிகழ்ச்சி, குவலயம் போற்றும் குன்றக் குடிக்குச் சொந்தமான பாரிபறம்பு மலையின் பிரான்மலைச் சிவன் கோயில் சித்திரைப் பெருவிழாவில் நடந்த பாரிவிழா, செம்மல் தலைமையில் நடந்தது. செம்மலுடன் முடியரசன், பாவலர்மணி ஆ. பழனி, நான் மூவரும் சென்றோம். விழா தொடங்குமுன் செம்மல் அவர்கள் தமிழ்மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளாரிடம் கோயிலுக்குப் போய் வருகிறோம் என்றார். மங்கை பங்கன் கோயிலுக்கா? மாலையாகி விட்டதே என்றார் அடிகள். இல்லை, மலையடிவாரக் கோயிலுக்கு எனச் செம்மல் கூறிட, சிலரை உதவிக்காக அடிகளார் அனுப்பினார்கள். நானும் உடன் சென்றேன். தோளின் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு கோயிலுககுள் சென்று சிவன் சந்நிதியில் மூன்று நிமிடம் கண்மூடி நின்று விழித்ததும் என்னிடம் ஒரு திருவாசகம் பாடச் சொன்னபடி “இன்றெனக்கருளி இருள் கடிந்து உள்ளத்து எழு ஞாயிறே போன்று என்ற திருப்பெருந்துறைப்பாடலைப் பாடி முடித்தேன். அடிகளார் ஆணைப்படிச் செம்மலுக்குக கோயில் சிறப்பெல்லாம் செய்யப்பட்டதோடு நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் பாய்ந்தாற்போல் நானும் அச்சிறப்பிற்காளாகித் தீர்த்தமாடினேன். கோயில் விட்டு வெளியில் வந்தோம். துண்டைத் தோள் மீது போடும் போது, நீங்கள் பாடிய பாட்டில் கருமுத்துவுக்குப் பெரிதும் ஈடுபாடுண்டு என்றார். சேனாவரையரைச் சீடன் வினாவியதுபோல அதனை விளக்கமாகக் கூறக் கேட்டேன். கலைத்தந்தை தினாவுக்கு (கருமுத்து தியாகராச செட்டியார்)க் கட்டிடக் கலையில் ஆர்வம் உண்டு. சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து இருளில் நுண்ணிதாய் இருப்பவராகவே சிவனைமணிவாசகர் பார்த்த பார்வையில் தான் திருப்பெருந்துறை சென்று கருமுத்து வணங்கினார் - என்றதும் திருமடத்திற்குப் போய் விழாவிற்குச் சென்று விட்டோம். இரவு விழா முடிந்ததும் அடிகளாரின் ஆசியுடன் விடைபெறும் போது வ.சுப.மா. அடிகளின் பாதம் தொட்டு வணங்க நானும் நிழலாய் வணங்கினேன். மகிழுந்தில் பயணமானோம். பயணத்தின்போது நெஞ்சில் ஒரு முள்ளாயிருந்ததைச் செம்மலிடம் முடியரசர் “ஐயா! நீங்கள் இருவரும் பாதம் தொட்டு வணங்கியது போல் நாங்கள் செய்யாமல் இருந்ததை அடிகள் வேற்றுமையாகக் கருத நேர்ந்திருக்காதோ?” என்பதாகக் கூறினார். செம்மல் சொன்னார். “முடியரசன்! அப்படி நினைக்காதவர் அடிகள்! நாமாகி, அவர்களின் கோலத்திற்கும் தமிழுக்குமாக வணங்குகிறோம்! யார் இப்படிக் கோயில் விழாவில் பாரி விழா என்ற பெயரில் சங்கத் தமிழ் பரப்புவதைத் தெய்வத்தொண்டாகச் செய்கிறார்கள்? இல்லையே! அதற்காகவே அந்த வணக்கம்!” என்றார். பதிலைக் கேட்ட முடியரசருக்கு இருக்கையில் இருப்புக் கொள்ளவில்லை. முன்னிருக்கையில் இருந்த செம்மலிடம் “ஐயா! நீங்கள் தமிழ்ச்செம்மல் தமிழ்ச் செம்மல்தான்” என்று கூறிப் புளகாங்கிதம் கொண்டார் முடியரசர். ஆராய்ச்சிப் பணியில் பலரைத் தூண்டிய செம்மல், அன்று பாரி விழாவின்போது திருவாசகப் பற்றாளர் கருமுத்து தியாகராசரைப் பற்றிய நினைப்பைத் தூண்டிய கருத்து யானை அடக்கிய கல்லாக என்னுள் கிடந்தது. அது வெளிப்படுதற்கான வாய்ப்பும் வந்தது. கலைத் தந்தை மனைவி கலையன்னை இராதா தியாகராசன் (முன்னாள் துணை வேந்தர் - அழகப்பா பல்கலைக்கழகம்) அவர்கள் கணவர் நினைவாக நடத்தும் திருவாசகச் சொற்பொழிவிற்கு என்னைப் பேசும்படிப் பணித்தபோது தியாகராசரின் வரலாற்றை முழுக்கப் படித்தறிய வேண்டிப் பேராசிரியர் குழந்தை நாதன் எழுதிய ஆலை அரசர் பற்றிய நூலின் 191 ஆம் பக்கம் படித்தபோதுதான் வ.சுப.மா. கூறிய சுருக்கம் நெஞ்சில் பெருக்கமானது. என்னே வ.சுப.மா.வின் தூண்டல்! என வியந்து, “தூண்டு சுடர் அணை சோதிகண்டாய்” என்ற அப்பரடிகளின் தாண்டக வாய்மையை வ.சுப.மா. வடிவில் நினைந்து போற்றினேன். துணைவேந்தரான பெரும்பதவிக்கே அவர் ஓர் எடுத்துக்காட்டாய் இருந்தார். எளிமை, நேரந்தவறாமை, அன்றன்டாக் கடமை முடிப்பு, அளவான பேச்சு, ஆரவார மின்மை, உள்ளத்தனைய உயர்சிந்தனை, பிறர்க்குதவும் மனோலயம் என்பவையெல்லாம் இவர்தான் செம்மல் வ.சுப.மா. என அடையாளங் காட்டின. விளம்பரம் விரும்பாத வித்தகருக்குத் தாமாகவே இவையெல்லாம் கள விளம்பரமாயின. சாதாரண வெள்ளை அரைக்கைச் சட்டை, வேட்டி, தோளில் துண்டு என்ற எளிய தோற்றத்துடன் துணைவேந்தராகக் காலடி எடுத்துப் பல்கலைக்கழகம் நுழைந்த போது, இவரா இப்பெரிய பல்கலைக் கழகத்தை... எனக்கூறி ஏக்கப் பெருமூச்சுவிட்டவர்களெல்லாம் பாராட்டும்படித் தம் மேலாண்மைத் திறனால் கோபுரக் கலசமாகத் தம்மை உயர்த்திய பல்கலைக்கழகத்தை உயர்த்தினார். செம்மலின் நூல்கள் தன்னேரில்லாத் தனித்த வழியானவை. உரைநடை, நாடகம், சிறுகதை என்ற நூல்களைப் போலவே அன்னாரின் கவிதைப் படைப்புகள் சங்கப் பாடலின் நிலைபேறுடையனவாகும். கொடைவிளக்கு என்ற நூல் காரைக்குடி கல்வி வள்ளல் அழகப்பரின் கொடை பற்றிய வெண்பா நூலாகும். அதில் பாடிய, “கோடி கொடுத்த கொடைஞன், குடியிருந்த வீடும் கொடுத்த விழுச்செல்வன்” என்ற பாடல் இன்றும் அழகப்பர் கல்வி வளாகத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. திருக்குறள் போல் மாணிக்கக்குறள் என்றதொரு கவிதை நூல் காலத்தின் கண்ணாடி நூலாகும். சாடிக்கேற்ற முடிபோல் அக்குறள் நூலுக்கு முதுமுனைவர் இளங்குமரனாரின் தெளிவுரை பண்ணிடைத் தமிழொப்பதான சிறப்புடையதாய் அமைந்துள்ளது. போராட்டம் இன்றிப் பொருவில் தமிழுக்குத் தேரோட்டம் இல்லை தெளிவு. (163) என்ற செம்மலின் குறள், நடந்து மடிந்த சல்லிக்கட்டுப் போராட்டத்தை உள்ளடக்கிக் கூறப்பட்ட உணர்வை நினைவூட்டுகிறது. தமிழ் என்றால் மொழிமட்டும் இல்லை. மொழி பேசுவோரின் பண்பாட்டைக் குறிக்கும் என்பதை மெய்ப்பிக்குமாறு ஏறுதழுவலான தமிழர் வீரப்பண்பை மீட்டுருவாக்கப் போராடி வெற்றி பெற்றதை மேற்படி வ.சுப.மா.வின் குறளுக்கான காணிக்கை எனலாம். செம்மலின் தமிழ்மொழி வளர்ச்சிப் பயணத்தில் அமைந்த பன்முகப்பாங்கில் காரைக்குடியில் இராமசாமி தமிழ்க் கல்லூரி என்ற ஒன்றைச் செந்தமிழ்ச்செல்வர் இராம பெரியகருப்பர் நிறுவ உறுதுணையாக இருந்து வழி காட்டியர் வ.சுப.மா. ஆவார் என்ற செயல், வடலூரில் வள்ளலார் மூட்டிய நெருப்பு அணையாமல் அன்னதானச் சிறப்பைத் தொடர்ந்து செய்வதுபோன்றதாகும். ஓசைபடாமல் செய்த எழுத்துச் சீர்திருத்த பணியில் ஒன்று தான், மதுரை - காமராசர் பல்கலைக்கழகம் என எழுதிக் காட்டியதாகும். மதுரைப் பல்கலைக்கழகம், தொடங்கிய போது எவரது பெயரும் இணைக்கப்பட வில்லை. காலப்போக்கில் காமராசர் பெயரைச் சேர்த்த நிலையில் மதுரைக் காமராசர் என எழுதப்பட்டது. இதுகண்ட வ.சுப.மா. தமிழறிந்த நெடுஞ்செழியன் கல்வியமைச்சராக இருக்கும்போது இப்படி ஓர் எழுத்துப் பிழையோடு எழுதலாமா? என்ற கருத்தை எடுத்துரைத்ததோடு பிழை, பிழையின்மை பற்றியும் கூறினார். மதுரைக் காமரசர் என்றால் விருது நகரில் பிறந்தவரை மதுரையில் பிறந்தவராக மாறிநினைக்கும் வரலாற்றுப் பிழை நேர்ந்துவிடும். ஆதலால் தமிழின் சந்திக் குறியீட்டின் வழி மதுரைக்குப் பிறகு ஒரு சிறு கோடிட்டுப் பின் காமராசர் என எழுதினால் எழுத்துப்பிழை, பொருட்பிழைகள் வாரா - என்று அறிவுறுத்தியபடி மதுரை - காமராசர் பல்கலைக்கழகம் என்று எழுதப்பட்டது. இந்த மிதவாதப் போராட்டம் போலத் தீவிரவாதப் போராட்டத்தையும் செம்மல் அவர்கள் செய்தார்கள். தில்லைச் சிற்றம்பல மேடையில் திருமுறைப் பாடல்கள் பாடப்பெற வேண்டும் என்பதை முன்மொழிந்து நடத்திய போராட்டத்தில் திருமுறைச் செல்வர் க. வெள்ளை வாரணர் போன்ற பலர் செம்மலுடன் களம் கண்டனர். தில்லைக் கோயில் காணும் குடமுழுக்கு நினைவாகத் திருமுறைகள் பாடப்படத் தீட்சதர்கட்கு விண்ணப்பிக்கப் பட்டபடி அவர்களும் ஏற்றுப் போற்றினர். தீட்சதர்களில் 3 மணிநேரம் திருமுறைக் கச்சேரி செய்வோர் உளராயினும் சிற்றம்பல மேடையில் அவ்வக்காலப் பூசை வேளையில் பன்னிரு திருமுறையைத் தீட்சதர்களைக் கொண்டே பாடச் செய்ததை வ.சுப.மா. வெற்றியாகக் கொண்டார். அதற்காக அவர் சொன்ன அமைதியே ஒரு சிறப்புத் திருத்தமாயிருந்தது. “சொற்றமிழ் பாடுகென்றார் தூமறைபாடும் வாயார்” என்பது சேக்கிழார் வாக்கு. அதனை மாற்றித் தூமறைபாடும் வாயர் சொற்றமிழ்ப் பாடுகின்றார் என்றார். இந்தத் தீவிரவாதப் போராட்ட வெற்றி குறித்து சிதம்பரம் சார்ந்த புலவர் த. முருகேசனார், திருமுறையை அம்பலத்தில் ஏற்றிடவே தெளிவோடும் உறுதி யோடும் ஒருமனதாய் அனைவரையும் உட்படுத்தி அரசினரின் துணையுங் கொண்டு மருவியசீர்த் தீட்சிதர்கள் மனமொப்பித் திருமுறையை இசைக்கச் செய்த பெருமைமிகு வரலாற்றைப் பொன்னேட்டில் பதித்திட்ட பெரியோய் வாழி! என வாயாரப் பாப் புனைந்தார், தாய்மொழியாம் தமிழுக்குள்ள அடைமொழிச் சிறப்பு எந்தச் செம்மொழிக்கும் இல்லை என்று உறுதிப்படுத்தும் வண்ணம் செம்மலின் பாக்கள் உள்ளன. சிவபெருமானைப் பிறவா யாக்கை பெரியோன் என்ற சிலப்பதிகாரம் போலப் பிறப்பறியாத் தமிழன்னை என ஒரு தனிப்பாடலில் வ.சுப.மா. பாடினார். மாணிக்க வாசகர் சிவனைத் தன்பெருமை தானறியாத் தன்மையன்காண் என்றபடி (திருச்சாழல் 19)ச் செம்மல் அவர்கள் “சிறப்பறியாத் தெய்வம் நிகர் மொழிதான் வாழ” - என அத்தனிப்பாடலில் குறித்தார். தனக்குவமை இல்லாதான் எனக் கடவுள் இலக்கணத்தை வள்ளுவர் கூறியது போல் (குறள் 7) தெய்வத் தமிழை அடைமொழியால் செம்மல் சிறப்பித்தது புத்தாக்கம் ஆகும்! எதையும் மறு சிந்தையாக மறுத்துக் கூறுவதை அவர், அவர்பாணியில் மறித்தோடிச் சிந்தித்தல் என்பார். சிலப்பதிகாரத்தில் ஒருகாட்சியைப் புரட்சியாகப் படைக்கிறார். கொல்லாச் சிலம்பு என்ற தலைப்புடைய கவிதை நாடகப் (டீநே ஹஉவ ஞடயல) பாங்கு அது. மூலக் கதையில் கோவலன் இறந்துபட்டாலும் பொற்கொல்லன் மனைவி செம்மலர் என்பவளால் வழக்கின் தீர்ப்பு மாற்றப்பட்டுக் கோவலன் கொலை செய்யப்படாமல் தப்பிக்கின்றான். பாண்டி மாதேவியின் சிலம்பு காணாமல் போனதை அரண்மனையில் பணிபுரியும் செம்மலர் தெரிந்திருந்திருந்தலால் தன் கணவன் பொற்கொல்லன் தனக்குத் தெரியாமல் பேழையில் மறைத்து வைத்த சிலம்பால் தன் கணவனே அச்சிலம்பு திருடியவன் என்ற கருத்தை யூகித்து அதனை வெளிப்படுத்தாமல் கணவனையும் ஏதும் கேட்காமல் அரசவையில் வழக்காடும் நிலையில் தண்டனை உறுதிப்படுத்தும் போது குறுக்கிட்ட செம்மலர் தான் எடுத்து வந்த சிலம்பைக் காட்ட, திருடிய சிலம்புதான் என்ற உண்மை தெரிந்ததும கோவலனின் கொலை தண்டனை நிறுத்தப்படுகிறது. இதில் உள்ள நுட்பம் யாதெனில் சிலம்பு கிடைத்த மகிழ்ச்சியில் திருடப்பட்டது பற்றிய ஆய்வுகள் வெளிவராமல் இருந்த ஒன்றே, பொற்கொல்லனின் நெஞ்சைத் தன்நெஞ்சே தன்னைச்சுடும் என்பதாக்கியது. மேலும் இதனால் தற்காத்துத் தற்கொண்டாற் பேணிய மனைவியின் மாண்பும் உணர்த்தப் பட்டது. இது பெண்ணியச் சிந்தனைக்குப் புதுப்பொருள் உணர்த்தும் உரமான கருத்தாக உள்ளது எனலாம். பொதுவாகப் பெண்ணிய வளர்ச்சிக்கான பங்களிப்பில் வ.சுப.மாவுக்கு ஓரிடம் உண்டு என்பதை அவர்தம் நூல்கள் சான்றாக உள்ளன. மனைவியானவள் தன் கணவன் பிழைபடும் போது கடிந்துரைப்பதும் திருத்துவதும் உரிமை என மனைவியின் உரிமை என்ற நூலில் வலியுறுத்துகிறார். நெல்லிக்கனி என்ற நாடக நூலில், ஆடவனைத் தத்தெடுப்பதுபோல் பெண்ணையும் தத்தெடுக்கலாம் எனப் புரட்சியாகக் கூறியுள்ளார். செம்மல் வாழ்வில் அரசியல் தலைவர்கட்கும் பங்குண்டு. இராசாசியிடம் பெருமதிப்பு கொண்ட செம்மல் தம் வள்ளுவ நூலில், அரம்போலும் அறிவுக் கூர்மையர் எனப்பாராட்டி எழுதியுள்ளார். பேரறிஞர் அண்ணா, தமிழ்ப்பற்றும தமிழினப்பற்றும் பெருங்கல்வியும் தன்னலமின்மையும் கொண்ட உரு எனப் போற்றித் தம் குறிப்பேட்டில் எழுதியுள்ளார். அரசியலில் துணிவுடன் விளங்கியவர் பெருந்தலைவர் காமராசர் என்றும் தாமறிந்த தமிழ் ஒன்றாலேயே பிறர்க்கில்லாப் பெரும் புகழ் பெற்றார் என மாணிக்கக் குறளில் (139) போற்றியுள்ளார். செம்மல் அவர்கள் தாம் எழுதிய எந்த நூலுக்கும் அணிந்துரையை எவரிடமும் பெற்றதில்லை. அவ்வாறே எவர்க்கும் எழுதியும் தருவதில்லை. ஆனால் ஒரோவழி விதிவிலக்காக முத்தமிழ் அறிஞர் கலைஞரின் குறளோ வியத்திற்கு எவரும் அத்துணைச் சிறப்பாக அளித்திருக்க முடியாது என்ற அளவிற்கு அணிந்துனர நல்கினார் எனக் கலைஞர்க்குள்ள தொடர்பு பற்றிப் பேராசிரியர் தி.அ.சொக்கலிங்கனார் தம் நூல் ஒன்றில் குறித்துள்ளார். செம்மலை மதிக்கும் அரசியல் தலைவர்களுள் ம.கோ. இரா. எனப்படும் புரட்சித் தலைவர் எம்.சி.ஆர். குறிப்பிடத் தகுந்தவராவார். தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைய செம்மல் கூறிய அறுநூறு ஏக்கர் நிலம் போதாதென்று ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கிய முதல்வர் எம்.சி.ஆரை உள்ளக் கருத்தின் அளவே பெருமை எனப் பாராட்டினார். எனக்டன் பணி செய்து கிடப்பதே என்பதாகவும் செய்யும் தொழிலே தெய்வம் என்பதாகவும் தாம் பணியாற்றிய காரைக்குடி அழகப்பா, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழத் தமிழ்த்துறைகளை முத்திரை பதித்ததாக உருவாக்கினார். தகுதி என ஒன்று நன்றே (குறள் 111) என்பதாக வாழ்வாங்கு வாழ்ந்த அன்னாரது நூல்களாயினும் வாழ்வியல் முறைகளா யினும் முரண்பாடில்லாத தொடக்கமும் முடிவும் கொண்டவை யாகும். அந்நிலையில் அவர்தம் எண்ணத்தை மக்களுக்கு அறவுரையாகவும் அறிவுரையாகவும் பகர விரும்பியதை இருகூறாகக் காணலாம். ஒன்று அவர் எழுதிய பாடல் வழி கூறும் குறிக்கோள், மற்றொன்று அவர் எழுதி வைத்த விருப்பமுறி (உயில்). நல்லாவின் பால்முழுதும் கன்றுக் கில்லை! நறும்பூவின் மணமுழுதும் சோலைக் கில்லை! நெல்லாரும் கதிர்முழுதும் நிலத்திற் கில்லை! நிறைகின்ற நீர்முழுதும் குளத்திற் கில்லை! பல்லாரும் கனிமுழுதும் மரத்துக் கில்லை! பண்நரம்பின் இசைமுழுதும் யாழுக் கில்லை! எல்லாமே பிறர்க்குழைக்கக் காணு கின்றேன்! என்வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும்! வேண்டும்! இப்பாடல் நெல்லிக்கனி நாடகத்தில் ஒரு புரட்சிப்பெண் பாடுவதாக அமைந்தாலும் செம்மலின் குறிக்கோள் பாட்டாகவே உள்ளது. ஆம்! இது செம்மலின் உயில் பாட்டு என்பதிலும் மேலான உயிர்ப்பாட்டு எனலாம். வாழ்க்கை நடப்பியலுக்கேற்ப எழுதிவைத்த உயிலில் தம் சொத்துக்களில் ஆறில் ஒரு பங்கை அறநிலை (கூசரளவ) வைப்பாக்கி அதன் வருவாய் வருமானத்தில் தம் பிறந்த ஊரான மேலைச் சிவபுரியின் ஏழை எளிய மக்களின் கல்வி, மருத்துவம், பெண்மை நலவாழ்வு, குழந்தை நலம் மற்றும் அஃறிணை உயிர் நலம் போன்றவற்றைப் பேண விருப்பமுறியில் குறித்தார். இவ்விருப்பமுறிக் குறிப்பு அன்னாரின் மனிதநேய இருப்பாக உலகப் பேரேட்டில் வரவாகி உள்ளது எனலாம். 17.4.1917இல் மேலைச் சிவபுரியில் தோன்றி அண்ணாமலை- காரைக்குடிகளில் பூத்துக் காய்த்து, மதுரையில் பழுத்துக் கனிந்த அந்த மாணிக்கத் தீங்கனி 25.4.1989இல் புதுச்சேரியில் தமிழ் தமிழ் தமிழ் என்றே ஒலித்து உதிர்ந்து விட்டது. ஆம்! தமிழ்க்காதல் எழுதிய செம்மல் வ.சுப.மாவை அவரின் இந்த நூற்றாண்டின் பலனாக அவரைக் காதலிப்போமாக! - தமிழாகரர் தெ. முருகசாமி புதுச்சேரி. குழந்தாய்.... குழந்தாய்.... இந்த ஆண்டு செம்மல் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழா. அன்னார் குழந்தைகளுக்காகச் செய்ததொண்டுகள் பற்பல. அவர் மதுரை காமராசர் பல்கலைத் துணைவேந்தரானதும் குழந்தைகள் இலக்கியத்தை அஞ்சல் வழிக்கல்விப் பாடத் திட்டத்தில் சேர்ந்தார். குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா வேண்டுதலால் குழந்தைப் பாடல்களைக் குறுந்தகடுகளில் வெளியிட்டார். தம் காரைக்குடியில் அழகப்பா கல்லூரி முதல்வராக இருந்தபோதே தோற்றுவித்த காரைக்குடித்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் குழந்தைகளுக்கு நீதி நூற்கள் ஒப்பிக்கும் போட்டியை உருவாக்கி ஒளவையாரின் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம், சிவப்பிரகாசரின் நன்னெறிப்பாடல்களை மனனம் செய்யச் செய்து பரிசுகள் வழங்கச்செய்தார். இப்பொழுதும் அந்தத் தொண்டு நடந்து வருகிறது. அந்நீதி நூல்களைத் தமிழ்ச் சங்கமே அச்சிட்டு அனைவர்க்கும் தரச்செய்தார். மேலும் குழந்தைகளுக்காக அவர் படைத்ததுதான் `தமிழ்சூடி’ என்னும் ஆத்திசூடி போன்ற 118 அகர வரிசைப் பாடல், பாடலின் தொடக்கம் குழந்தாய், குழந்தாய் என்றே முடியுமாறு 12 வரிகள் பாடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாகச் சில வரிகள்: தமிழ்சூடி வழிபாடு செய்வாய்! குழந்தாய்! தாய்மொழி தவறாது கற்பாய்! குழந்தாய்! திருக்குறள் கண்போல் தெளிவாய் குழந்தாய்! தீமைகள் மனத்தினும் தீண்டாய் குழந்தாய்! தேனினிய நூலகம் செல்வாய் குழந்தாய்! தொண்டுகள் பலசெய்யத் துடிப்பாய் குழந்தாய்! 118இல் சில: 1. இந்தியனாய் இரு, 9. சேமிப்புப் பழகு 2. உடலை வளை 10. திருக்குறள் வரப்பண் 3. ஓசி கேளேல் 11. நகத்தைக் கடியேல் 4. எச்சில் துப்பேல் 12. நை நை என்றிரேல் 5. பொய்யை விடு 13. போரை ஒழி 6. வேர்க்க உழை 14. மொழி பல கல் 7.கலகல என்றிரு 15. யோகம் பயில் 8. கேண்மை பெருக்கு 16. வைவதை விடு. இப்படியாகக் குழந்கைளின் அறிவு வளர்ச்சிக்குத் துணையாயிருந்தார். வ.சுப. மாணிக்கனார். -தெ. முருகசாமி, புதுவை பாரதி - ஏப்ரல் 2017. தமிழுக்காகவே வாழ்ந்த வ.சுப. மாணிக்கனார் நூற்றாண்டு இன்று தொடக்கம் தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் நூற்றாண்டு இன்று தொடங்குகிறது. 11 வயதில் ஆறாம் வகுப்போடு வட்டிக் கடை கணக்குப் பிள்ளையாக பர்மாவுக்குச் சென்றார் வ.சுப. அங்கே, `உண்மையை மட்டுமே பேசுவேன்’ என்றதால் 18 வயதில் பர்மா இவரை சொந்த ஊருக்கே திருப்பி அனுப்பியது. ஊருக்கு வந்ததும் தமிழ்படிக்க ஆசைப்பட்டவர், பண்டிதமணி கதிரேசனாரின் கருணையால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் சேர்ந்து புலவர் (பி.ஒ.லிட்) படிப்பில் முதல் மாணவராக வந்து, அங்கேயே ஆசிரியரானார். பிறகு, 1948-இல், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்து, பேராசிரியராக வளர்ந்து, அக்கல்லூரியின் முதல்வராக உயர்ந்தவர். 1970இல் மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கே திரும்பி, மொழிப்புல முதல்வராக அங்கீகரிக்கப்பட்டார். வள்ளல் அழகப்பர் பற்றி வ.சுப. எழுதிய `கோடி கொடுத்த கொடைஞன்’ என்ற நெக்குருகும் வாழ்த்துப்பாதான் அழகப்பா பல்கலையின் நிறுவனர் வாழ்த்தாக இன்றளவும் உள்ளது. சங்க இலக்கியங்களில் அகத்திணை குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதி எச்.டி. பட்டம் பெற்றார். 1979இல் காமராசர் பல்கலை துணைவேந்தராக நியமிக்கப்பட்ட இவர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கியபோது அதன் அமைப்புக் குழு தலைவராகவும் இருந்தார். திருவள்ளுவர் விருது யாப்பிலக்கணம் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தபோது நேர்முகத் தேர்வு ஒன்றுக்காக புதுசசேரிக்கு சென்றிருந்த வ.சுப., அங்கே திடீரென உடல் நலன் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார். நாடக நூல்களில் ஆரம்பித்து 32 நூல்களை எழுதி இருக்கிறார். 2007இல் இவரது நூல்களை அரசுடமை ஆக்கிய தமிழக அரசு, 1990இல் திருவள்ளுவர் விருது வழங்கி கவுரவித்தது. தமிழ்வழிக் கல்விக்காக தனி இயக்கம் தொடங்கிய மாணிக்கனார், மழலையர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழே பயிற்று மொழியாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் யாத்திரை நடத்தினார். தமிழும் தில்லை அம்பலத்தில் அரங்கேற வேண்டும் என போராட்டங்களை முன்னெடுத்தார். எந்தவொரு காரியத்தையும் `உ’ `சிவமயம்’ போட்டு எழுதும் மரபை உடைத்து `த’ (தமிழ்), என்றுபோட்டு எழுதி தமிழுக்கு அணி சேர்த்தார். விருப்ப முறி தனது வீட்டு நூலகத்தில் இருந்த சுமார் 10,000 நூல்களை அழகப்பா பல்கலைக்கு தரவேண்டும் எனவும் தனது சொத்தில் ஆறில் ஒரு பகுதியை, தான் பிறந்த ஊரான மேலச்சிவல்புரியின் வளர்ச்சிக்காக செலவு செய்ய வேண்டும் என்றும் விருப்ப முறி (உயில்) எழுதி வைத்திருந்தார். தந்தையின் விருப்பத்தை இன்றளவும் நிறைவேற்றி வருகிறார்கள் அவரது வாரிசுகள். வ.சுப.மாணிக்கனார் 23 ஆண்டுகள் பணி செய்த காரைக்குடி அழகப்பா பல்பலைக்கழகம் அவரது நூற்றாண்டு விழா தொடக்கத்தை நாளை கொண்டாடுகிறது. அதைத் தொடர்ந்து ஒரு வருடத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மற்ற பல்கலைக் கழகங்களும் விழாவை கொண்டாடுகின்றன. காலம் அழைத்தது “நேர்மை, எளிமை, உண்மையாக வாழ்ந்த அப்பா, திருக்குறளைப் போலவே இரண்டு அடியில் ஆயிரம் குறட்பாக்களை எழுதத் தொடங்கினார் 578 குறட்பாக்கள் எழுதிக்கொண்டிருக்கும்போதே அவரை காலம் அழைத்துக் கொண்டது. அந்த குறட்பாக்களை `மாணிக்கக் குறள்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டோம். 7 ஆண்டுகள் முயற்சியில் தற்சிந்தனைகள் என்ற தலைப்பில் தனது வாழ்க்கை குறிப்பை அப்பா எழுதி வைத்திருந்தார். நாளை அந்த நூலை நாங்கள் வெளியிடுகிறோம். எங்களது சொந்த ஊரில் அப்பாவுக்கு திருவுருவச் சிலை நிறுவி நூற்றாண்டு விழாவை நிறைவு செய்ய இருக்கிறோம்” என்கிறார் வ.சுப.மாணிக்கனாரின் மகள் தென்றல். - குள. சண்முகசுந்தரம் மாணிக்கனாரின் சொல் நேர்த்தி! எழுத்து பேச்சு எதுவாக இருந்தாலும் ஒருவருடைய வெற்றிக்கு அவர் செதுக்குகின்ற சொற்களே அடிப்படைக் காரணமாக அமையும். சிலப்பதிகார இலக்கிய மேடை ஒன்றில் உதிர்க்கப்பெற்ற சில சொற்களை இங்கே அடுக்கிப் பார்க்கலாம். “கோவலன் இறந்தவுடனேயே கண்ணகியும் இறந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? கள்வன் ஒருவன் இறந்தான் என்பதற்கு நாணி கள்வி ஒருத்தியும் மறைந்தாள் எனப் பேசப்பெறுமே தவிர அவளைக் கற்பி என உலகு போற்றியிருக்குமா?” இப்பகுதியில் கள்வன் என்ற ஆண்பாலுக்குரிய பெண்பாலாகக் `கள்வி’ என வருதலும் கற்புடை மங்கை என்ற பொருளை உணர்த்தக் `கற்பி’ என வருதலும் தமிழுக்கான புதுச்சொல் வரவுகள். கள்வி எனச் சில செய்யுள்களில் வருவதாகக் கூறப்பெறினும் தமிழ் உரைநடையில் செறிவும் செழுமையும் நிறைந்து அமைந்தவை இச்சொல்லாடல்கள். இவற்றை மொழிந்தவர் மூதறிஞர் முனைவர் வ.சுப. மாணிக்கனார். பண்டிதமணி கதிரேசனிடம் தமிழ் கற்றவரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பங்காற்றிய வருமான செம்மல் வ.சுப.மாணிக்கம் சின்னஞ்சிறு சொற்களுக் குள்ளே கூடச் செந்தமிழை நிறைத்தவர்; தான் கற்ற நூல்களில் தமிழ்ச் சொற்களின் நிமிர்ச்சியைக் கண்டவர்; தான் கண்டெடுத்த அருமைச் சொற்களை மொழிந்தவர். ஒரு பதச்சோறு வருமாறு: கம்பன் பாடல்களில் புகழ்பெற்ற ஒரு பாடலின் நிறைவு வரியாக “ஏழிரண்டாண்டின் வாவென்று இயம்பினன் அரசன் என்றாள்” என்ற வரி ஒளிரும். ஆணையிடுபவன் தந்தையும் அரசனுமான தயரதன்; இங்கே கதை மாந்தரின் நிலைப்படி ஏவினன் என்று வருவதுதான் முறையே தவிர இயம்பினன் என்ற சொல் பொருத்தமுடையதாக அமையவில்லை எனக் கருதுகிறார் மாணிக்கம். அவ்வாறு ஒரு சொல் மாற்றம் (பாடபேதம்) உள்ளதெனவும் கண்டறிந்த அவர், காப்பியப் பக்கங்களை மீண்டும் மீண்டும் அலசுகின்றார். மரபு, நடைமுறை உளவியல் போன்ற கூறுகளின் அடிப்படையில் தந்தை ஒருவன் தன்மகனுக்குக் கட்டளையிடுவதே முறைமையாகும். ஒரே நிலையில் வாழும் இருவரிடம் இடம்பெறுவதே இயம்புதல் என்ற சொல். அச்சொல் இங்கே ஏற்புடையதில்லை என்ற தன் கருத்தை நிறுவ அவர்பட்ட தொல்லைகள் பற்பல. காப்பியத்தின் வேறிடங்களில் வரும் நிகழ்வுகளில் காப்பியப் புலவன் இழைத்தளித்த சொற்களைத் தரங்காண்கிறார் அவர். `என்று பின்னரும் மன்னன் ஏவியது’ `ஏவிய குரிசல் யாவர் ஏகிலார்’ `தெருளுடை மனத்து மன்னன் ஏவலிற்றிறம்ப’ போன்ற மணிவரிகளைத் தெளிவுற நிரல்படுத்துகிறார் வ.சுப.மா. `தாதை ஏவலின் மாதொடு போந்து’ கானகம் கண்டகாகுத்தன் கதையில் தயரதன் மொழிந்தது இயம்புதல் அன்று; ஏவல் மட்டுமே எனத் தெளிவுறுத்த அவர் மேற்கொண்ட கடுமையான உழைப்பே அடித்தளமானது. பொருத்தமான சொல்லும் நமக்குப் பரிமாறப்பெற்றது. மதுரையில் துணைவேந்தராகப் பணிபுரிந்தபோது உணவுச்சாலைக்கு (ஊயவேநநn) `உண்டியகம்’ எனவும், ஆசிரியர் குடியிருப்புப் பகுதிக்கு (ணுரயசவநசள) `குடிமனை’ எனவும், விருந்தினருக்கான ஓய்விடத்திற்கு (ஆயin ழுரநளவ ழடிரளந) `முதன்மை விருந்தில்லம்’ எனவும் பெயர் சூட்டி, சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் தங்கத்தமிழை வளர்த்தெடுத்ததையும் கணக்கில் கொள்ள வேண்டும. `சொல்லுக சொல்லிற் பயனுடைய’ என்ற வள்ளுவம் மாணிக்கனாரின் வாழ்க்கைப் பாடமானது. அமைதியாக உட்கார்ந்து எழுதும்போது மட்டுமல்லாமல் சட்டென்று மேடைக்கு வரும்போது அவர் நெய்துதரும் சொல்லாட்சிகள் கவனத்துக்குரியன ஆகும். காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்வினை இங்கு பதிவு செய்வது தக்கது. மாணவர்கட்கான மேடைப் பொழிவுக் கலையை வளர்க்கக் `கலைக்கழகம்’ என்ற அமைப்பை உருவாக்கினார் அவர். ஒருநாள் அரங்கில் மாணிக்கனாரும் ஏனைய பேராசிரியர்களும் அமர்ந்திருந்தனர். பேசிப் பழக மேடையேறிய மாணவருக்குப் பேச நா எழவில்லை. ஓரிரு மணித்துளிகள் கடந்தபின் தன் சட்டைப் பையில் வைத்திருந்த ஒரு பக்கக் காகிதத்தை எடுத்து கிடுகிடு என அதில் எழுதியிருந்த கருத்துகளை உரத்து வாசித்துவிட்டு அமர்ந்து கொண்டார். பார்வையாளர்கள் பக்கம் அந்த மாணவர் திரும்பவேயில்லை. நிறைவாக வ.சுப.மா. மேடயேறினார். செந்தமிழ், நாப்பழக்கம் ஆகவேண்டுமென உரைத்து, “முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உயர்ச்சி தானே இடம்பெறும்” என்றார். அவ்வுரையின் நிறைவில் அவர் கூறிய தொடர் குறிக்கத்தக்கது. மாணவர்கட்கு வழிகாட்டிய பிறகு நிறைவில் அவர் மொழிந்த சொல்வரிசை: `ஆள்முகம் பார்த்துப்பேச வேண்டுமே தவிரத் தாள்முகம் பார்த்துப் பேசக்கூடாது! - முனைவர் அ. அறிவுநம்பி தினமணி - தமிழ்மணி 17.4.2016 (சென்னை) பேராசிரியர் வ.சுப. மாணிக்கனார் நூற்றாண்டு சிறப்பு நூல் வெளியீடு பேராசிரியர் வ.சுப. மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவையொட்டி பேராசிரியர் இரா.மோகன் - நிர்மலா மோகன் எழுதிய சிறப்பு நூல் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. உலகத் திருக்குறள் பேரவை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வருமான வரித் துறை முன்னாள் இணை ஆணையர் எஸ்.மோகன் காந்தி தலைமை வகித்துப் பேசினார். நூலின் முதல் படியை மதுரை வருமான வரித் துறை ஆணையர் எஸ். சங்கரலிங்கம் வெளியிட, பேராசிரியர் பா.வளனரசு பெற்றுக் கொண்டு ஆய்வுரையாற்றினார். நூலாசிரியர் இரா.மோகன் அறிமுகவுரையாற்றினார். பேரவைத் துணைத்தலைவர் கா. கருப்பையா தொடக்கவுரை யாற்றினார். மாதரி வெள்ளையப்பன் நினைவுரையாற்றினார். வானதி ராமநாதன், கார்த்திகேயன் மணிமொழியன், எழுத்தாளர் இளசை சுந்தரம், பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ், புலவர் சோமன், புரட்சிக்கவிஞர் மன்றத் தலைவர் பி. வரதராஜன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். பேரவைத் தேர்வுத் துறை செயலர் அ.கி.செ. திருமாவளவன் நன்றி கூறினார். -தினமணி, மதுரை திச. 18 `சிறந்த மொழி பெயர்ப்பு நூலுக்கு வ.சுப. மாணிக்கனார் நினைவு பரிசு’ தமிழில் வரும் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (த.மு.எ.ச.) சார்பில் `தமிழறிஞர் வ.சுப. மாணிக்கனார் நினைவுப் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட வுள்ளது. இந்தப் பரிசுத் திட்டத்துக்கான வைப்புத் தொகை ரூ. 30,000ஐ வ.சுப. மாணிக்கனாரின் மகள் பேராசிரியை மா. மாதரி மற்றும் அவரது கணவர் வெள்ளையப்பன் ஆகியோர் மதுரையில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் த.மு.எ.ச. பொதுச்செயலர் இரா. கதிரேசனிடம் வழங்கினர். இதையொட்டி த.மு.எ.ச. அமைப்பின் வெள்ளிவிழா கருத்தரங்கும், நூல் அறிமுக விழாவும் நடைபெற்றது. கவிதாகுமார் எழுதிய `காயப்படும் காற்று’ என்ற கவிதை நூலை பேராசிரியை மா. மாதரி அறிமுகம் செய்துவைத்துப் பேசினார். `இலக்கிய வானில் வெள்ளிநிலா’ என்ற நூலையும், த.மு.எ.ச. நிறுவனத் தலைவர் `கே. முத்தையாவின் வாழ்க்கை வரலாறு’ என்ற நூலையும் மாநிலக்குழு உறுப்பினர் எழில் அறிமுகம் செய்து பேசினார். மாநிலப் பொதுச்செயலர் இரா. கதிரேசன் கருத்தரங்கு சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கு அமைப்பின் நகர் மாவட்டத் தலைவர் ப. நடராஜன் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச்செயலர் கே. வேலாயுதம், துணைத்தலைவர் காஸ்யபன், துணைச்செயலர் மதுக்கூர் ராமலிங்கம், நகர் மாவட்டச் செயலர் ந. ஸ்ரீதர் ஆகியோர்கலந்து கொண்டனர். பொருளார் சாந்தாராம் நன்றி கூறினார். -தினமணி. 25.07.1999, மதுரை - சூலை 24 சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு வ.சுப. மாணிக்கம் நினைவுப்பரிசு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க சிறந்த நூலுக்கான பரிசளிப்பு திட்டத்தில் தமிழறிஞர் வ.சுப. மாணிக்கம் நினைவுப்பரிசு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் வருடம்தோறும் சிறந்த நூலுக்கான பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. செல்வன் கார்க்கி நினைவுப்பரிசு. பெருமாயி குப்பண்ணன் பரிசு, குன்றக்குடி அடிகளார் நினைவுபரிசு என்ற பெயர்களில் அப்பரிசுகள் வழங்கப்படுகிறது. இப்பரிசுத் திட்டத்தில் தமிழறிஞர் வ.சுப. மாணிக்கம் நினைவுப்பரிசு புதிதாக இணைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்திய மொழிகளிலிருந்து சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யப்படும் நூலுக்கு 3 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. மதுரையில் நடைபெற்ற தமுஎச வெள்ளி விழா கருத்தரங்கில் பொதுச்செயலாளர் இரா. கதிரேசனிடம் பரிசுத் தொகைக்காக 30 ஆயிரம் ரூபாய் காசோலையை வெள்ளையப்பன் பேரா, மாதரி தம்பதியர் வழங்கினர். இவ்விழாவிற்கு தமுஎச மாவட்டத் தலைவர் ப. நடராஜன் தலைமை தாங்கினார். ப.கவிதாகுமார் எழுதிய “காயப்படும் காற்று” கவிதை நூலை பேரா. மாதரி அறிமுகப்படுத்திப் பேசினார். கே.முத்தையா வாழ்க்கை வரலாற்று நூலையும் தமுஎச வரலாற்று நூலையும் மாநிலக்குழு உறுப்பினர் எழில் அறிமுகப்படுத்திப் பேசினார் தமுஎச மாநிலப் பொதுச் செயலாளர் இரா. கதிரேசன் கருத்தரங்க சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் தமுஎச மாநகர் மாவட்ட செயலாளர் ந.ஸ்ரீதர், மாநில துணைத்தலைவர்கள் ந.நன்மாறன், காஸ்யபன். மாநில துணைப் பொதுச் செயலாளர் கே. வேலாயுதம் மாநில துணைச் செயலாளர் மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். - சோலை - 26-7-1999 வ.சுப. ஒரு கலங்கரை விளக்கம்! “தோன்றிற் புகழோடு தோன்றுக” எனும் திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க வாழ்ந்து காட்டியவர் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார். தமிழிலக்கிய உலகில் அவரின் பங்களிப்பு அளப்பரியது. தமிழ்மொழியை உணர்வு மொழியாகவும், சிந்தனை மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் போற்றியவர். புதுக்கோட்டை மாவட்டம் மேலைச் சிவபுரியில் வாழ்ந்த வ.சுப்பையா செட்டியாருக்கும் தெய்வானை ஆச்சிக்கும் 17.4.1917 அன்று இரண்டாவது மகனாகப் பிறந்தவர். `அண்ணாமலை’ என்ற தம் இயற்பெயரை, மாணிக்க வாசகரின் திருவாசகத்தின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டால், `மாணிக்கம்’ என மாற்றிக் கொண்டார் எனச் சொல்லப்படுகிறது. இளம் வயது முதலே பிள்ளைகளுக்குத் திருக்குறள், திருவாசகம், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி முதலிய இலக்கியங்களைப் பிழையின்றி தகுந்த ஒலிப்பு முறையுடன் சொல்லிக் கொடுப்பாராம். அத்துடன் திருக்குறளில் ஓர் அதிகாரத்தை முழுதும் மனப்பாடமாகப் படித்து ஒப்பு வித்தாலோ அல்லது பிழையின்றி எழுதிக் காட்டினாலோ பத்து முதல் இருபது பைசா வரைக் கொடுத்து ஊக்கப்படுத்துவாராம். ஒருமுறை காரைக்குடியில் இல்லத்தின் ஓர் அறையில் வ.சுப.மா., ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தபோது, கொசு ஒன்று அவரது தோள்மீது அமர்ந்து குருதியைக் குடித்துக் கொண்டிருந்தது. இதைக் கண்டுவிட்ட அவருடைய மகள் தென்றல், அந்தக் கொசுவை அடித்து அப்பாவிற்கு நன்மை செய்து விட்டதாக நினைத்து அவரின் பாராட்டை எதிர்பார்த்து நின்றிருந்தாராம். அப்போது வ.சுப.மா., “படிப்பதில் கவனம் இருக்கும்போது கொசு கடிப்பது எப்படித் தெரியும்? நீ எனது தோளில் அடித்ததால் என் சிந்தனையோட்டம் தடைப்பட்டு விட்டது” என்று கடிந்து கொண்டாராம். படிப்பதையும் எழுதுவதையும் வ.சுப. மாணிக்கனார் ஒரு தவமாகவே செய்து வந்திருக்கிறார். எல்லோரும் உறங்கிய பின் உறங்கி, அவர்கள் விழிக்கும் முன் விழித்து தமது கடமைகளைச் செம்மையுடன் செய்ததன் விளைவாகத்தான் கம்பர், வள்ளுவர், அகத்திணை ஆராய்ச்சி (தமிழ்க்காதல்), இலக்கியச்சாறு, கொடை விளக்கு? நெல்லிக்கனி, மாமலர்கள், மாணிக்கக்குறள், மனைவியின் உரிமை, உப்பங்கழி, தலைவர்களுக்கு, உலக முரசு, இரட்டைக் காப்பியங்கள், நகரத்தார் அறப்பட்டங்கள், தற்சிந்தனைகள் முதலிய முப்பதுக்கும் மேலான நூல்களை அவரால் எழுத முடிந்திருக்கிறது. இந்நூல்கள் அனைத்தும் தமிழக அரசால் 2007 ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. காரைக்குடி அழகப்பச் செட்டியார் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியபோது இவரின் தமிழ்ப்புலமையைக் கண்ட அரசர் முத்தையவேள் செட்டியார் 1970இல் தமது அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைக்கு அழைத்து தலைவர் பொறுப்பை அளித்துப் பெருமைப்படுத்தினார். ஏழு ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவர் செய்த தமிழ்ப்பணிகள் இன்று விருட்சங்களாய் வளர்ந்து நிற்கின்றன. சங்கப் பாக்களின் நுட்பங்களையெல்லாம் கட்டுரைகளாக வடித்தவர். பிசிராந்தையார், `யாண்டு பலவாக’ என்று தொடங்கும் புறப்பாடலில், `மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்’ என்று குறிப்பிட்டிருப்பார். இதில் வரும `ஓடு’ என்ற சிறு சொல் மனைவி ஒருத்தி, மக்கள் பலர் எனப் பிரித்துப பொருள் தருவதாக அமைகிறது. இச்சொல் இடம் பெறாதிருக்குமானால் மனைவியும் பலர், மக்களும் பலர் எனப் பொருள் மாறுபட்டிருக்கும் என்பதனை வ.சுப.மாணிக்கனார் சுவையுடன் தெளிவுபடுத்துவார். இவர் உரைநடையில் கையாளும் சொல்லாக்கங்கள் பல அரியவை. “காற்று எனும் சொல் மக்கள் வழக்கிற்குரியது என்றும், வளி என்னும் சொல் இலக்கிய வழக்கிற்குரியது என்றும் பலர் கூறுவார்கள். ஆனால், பொது மக்கள் சூறாவளி என்னும் வழக்கில் வளி என்னும் சொல்லினை மிக எளிதாகப் பயன்படுத்து கிறார்கள்” என்று `இலக்கிய விளக்கம்’ எனும் நூலில் குறிப்பிடுகிறார். வ.சுப. மாணிக்கனார் எதையும் புதிய நோக்கில் சிந்திக்கும் ஆற்றல் படைத்தவர். `எந்தச் சிலம்பு?’ எனும் நூலில் கண்ணகியின் சிலம்பு தான் சிலப்பதிகாரம் என்று பெயர் இடுவதற்குக் காரணம் எனப் பலரும் கூறிவரும் நிலையில், இவரோ பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி பாண்டிமா தேவியின் சிலம்புதான் நூல் பெயர்க்குக் காரணம் எனக் கூறுவது புதுமை. முந்நீர் என்பது ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் எனும் மூன்றும் நிறைந்த கடலைக் குறிக்கும் சொல் என்பது புறநானூற்று உரையாசிரியர்களின் கருத்து. முந்நீர் எனும் சொல் படைத்தல், காத்தல், அழித்தல், எனும் மூவகைச் செயல்பாடுகளையும் குறிப்பது என்பது அடியார்க்கு நல்லாரும், நச்சினார்க்கினியரும் கூறும் கருத்து. இவ்விரு கருத்துகளையும் மறுத்து வ.சுப.மாணிக்கனார், “முந்நீர் எனும் சொல் முப்புறம் தமிழகத்தை வளைத்துக் கிடக்கும் ஒரு பெருநீர்ப்பரப்பைக் குறிப்பது என்பதனையும், தீபகற்பமாகிய நிலவடிவைச் சுட்டுவது என்பதையும் இடைக்கால உரையாசிரியரெல்லாம் எண்ணிப் பார்க்கவில்லை” (தமிழ்க்காதல், ப. 152) என்று குறிப்பிடுகிறார். பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியாரின் மாணவர் என்கிற தனித்த அடையாளம் வ.சுப.மாணிக்கனாரிடம் எப்போதுமுண்டு. தமது இல்லத்திற்குக் `கதிரகம்’ என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தார். அவரது எழுத்தும் பேச்சும் தமிழ்நலம் சார்ந்தவையாகவே இருந்தன. தமிழ் வழிக்கல்விக்காகப் பல்வேறு ஊர்களுக்குச் சென்று கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். எத்தனை இடர்வரினும் நடுவுநிலையோடு நின்று உண்மையின் அடையாளமாய்த் திகழ்ந்தவர். எழுத்திலோ, பேச்சிலோ எவர் பிழை செய்யினும் நெஞ்சுரத்துடன் உடனே வெகுண்டெழுந்து நேருக்கு நேர் சுட்டிக்காட்டும் இயல்பினர். ஒவ்வொரு மனிதரும் ஒரு குறிக்கோளுடன் வாழவேண்டும் என்பதே வ.சுப.மா.வின் வேண்டுகோள். கவர்ச்சி தரக்கூடிய கேளிக்கைப் பேச்சுகளில் பொழுதைக் கழிப்பதை விடுத்து சங்க இலக்கியம், திருக்குறள், திருவாசகம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், மூதுரை, நல்வழி, கொன்றைவேந்தன், ஆத்திசூடி உள்ளிட்ட உயர்வான நோக்குடைய இலக்கியங்களைக் கற்று வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும் என்பதே வ.சுப.மா.வின் கருத்து. ஒரு நூற்றாண்டைக் கடந்தும் (24.4.1989) தமிழ் நெஞ்சங்களில் நிலைத்து நின்று வாழும் வ.சுப.மாணிக்கனார், தமிழ்ச் சமூகத்திற்கு அவர் ஏற்றிய ஒளிகலங்கரை விளக்கமாய் என்றும் அணையாமல் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. தமிழின் மறுவுருவாய் வாழ்ந்து மறைந்த மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவைப் பலரும் சிறப்பாகக் கொண்டாடி வரும் நிலையில், தமிழக அரசு அவருக்கென தனியொரு நினைவிடம் அமைத்து, விழா வெடுத்து, சிறப்பு செய்தால் தமிழ்கூறும் நல்லுலகம் பெருமை கொள்ளும். அந்நாள் எந்நாளோ? - செம்மூதாய் சதாசிவம். தமிழ்மணி - தினமணி 16-4-2017 வ.சுப.மாணிக்கம் - முத்துக்கள் பத்து தமிழறிஞர், கவிஞர், பேச்சாளர், நாடகாசிரியர், ஆய்வாளர், உரையாசிரியர் என பன்முகப் பரிமாணம் கொண்ட வ.சுப. மாணிக்கம் பிறந்த தினம் இன்று (17.4.2017) அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: 1. புதுக்கோட்டை மாவட்டம் மேலைச் சிவபுரியில் (1917) பிறந்தார். இயற்பெயர் அண்ணாமலை. இளம் பருவத்திலேயே பெற்றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி, தாத்தாவிடம் வளர்ந்தார். 7 வயது வரை நடேச ஐயரிடம் குருகுலக் கல்வி கற்றார். 2. வணிகம் பழக 11 வயதில் பர்மா சென்றார். பொய் சொல்லுமாறு முதலாளி கூறியதை ஏற்க மறுத்தவர், வேலையை இழந்து 18 வயதில் தமிழகம் திரும்பினார். பண்டிதமணி கதிரேசன் செட்டியார் உதவியுடன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து `வித்வான்’ பட்டம் பெற்றார். 3. சென்னை பல்கலைக்கழகத்தில் பிஓஎல், முதுகலை பட்டம் பெற்றார். `தமிழில் வினைச்சொற்கள்’ என்ற பொருளில் ஆய்வு செய்து எம்ஓஎல் பட்டமும், `தமிழில் அகத்திணைக் கொள்கைகள்’ என்ற பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். 4. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றபோது, ராகவ ஐயங்கார், ந.மு.வேங்கடசாமி நாட்டார். அ.சிதம்பரநாதன் செட்டியார் உள்ளிட்ட அறிஞர்களிடம் பயிலும்வாய்ப்பு கிடைத்தது. அங்கு விரிவுரையாளராக 7 ஆண்டுகள் பணியாற்றினார். தலைசிறந்த உரைநடை எழுத்தாளராக புகழ்பெற்றார். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வல்லமை பெற்றவர், இரண்டிலுமே நூல்களைப் படைத்தார். 5. காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பணியில் சேர்ந்தார். 1964 முதல் 1970 வரை அதன் முதல்வராகப் பணியாற்றினார். மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து அழைப்பு வந்ததால், அங்கு 7 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார். 6. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக 1979 முதல் 1982 வரை பணியாற்றினார். அப்போது, பண்டிதமணி அரங்கை நிறுவினார். பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன், அங்கு தமிழ் ஆய்வு நடைபெறவும் வழிவகுத்தார். 7. தமிழில் பல புதிய சொல்லாக்கங்களைத் தந்தவர். வீட்டிலும் கலப்படமற்ற தூய தமிழில் பேசினார். தாய்மொழி வழிக் கல்வியை வலியுறுத்தினார். தமிழ்வழி கல்வி இயக்கம் என்ற அமைப்பின் தலைமைப் பொறுப்பேற்று, தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார் 8. துணைவேந்தர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, திருவனந்தபுரம் திராவிட மொழியியல் கழகத்தில் முதுபேராய்வாளர் என்ற பதவியில் `தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொல்காப்பிய ஆய்வு மேற்கொண்டு, நூலாக எழுதி வெளியிட்டார். தொடர்ந்து பல நூல்களை எழுதினார். 9. திருக்குறள் நெறிகளின்படி வாழ்ககை நடத்தினார். தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை அறநிலையத்துக்கும் தன் சொந்த ஊரில் இலவச கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளை வழங்குவதற்காகவும் உயில் எழுதிவைத்தார். தன் நூலக நூல்களை அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு வழங்குமாறும் உயிலில் குறிப்பிட்டிருந்தார். 10. தினமும் அதிகாலையில் எழுந்து 4 மணி நேரத்துக்கு மேல் புத்தகம் படிக்கும பழக்கம் கொண்டவர். கடுமையான உழைப் பாளி. சங்க இலக்கியங்களைத் தன் நுனிநாக்கில் வைத்திருந்தவர். மூதறிஞர், செம்மல், முதுபெரும் புலவர், பெருந்தமிழ்க் காவலர் என்றெல்லாம் போற்றப்படும் வ.சுப.மாணிக்கம் 1989 ஏப்ரல் 25-ஆம் தேதி 72 வது வயதில் மறைந்தார். - இராசலட்சுமி சிவலிங்கம் நூற்றாண்டு காணும் வாய்மை மாணிக்கம் வ.சுப.மா. என வண்டமிழ் உலகம் வாய் மணக்கக்கூறும விலாசம் உடையவர்தான் வ.சுப.மாணிக்கனார் என்னும் மூதறிஞர். அவர் புதுக்கோட்டை மாவட்டத்தின் தமிழ்ச் சோலையான மேலைச்சிவபுரி என்னும் ஊரில் 17.04.1917 வ.சுப்பையா செட்டியாருக்கும் தெய்வானை ஆச்சிக்கும் மகனாய்த் தோன்றினார். அண்ணாமலை எனப் பெற்றோர் வைத்த இயற்பெயர் பின்னாளில் மாணிக்கம் என அழைக்கும் பெயராக மாறியது. சிலப்பதிகாரத்தில் கண்ணகி தொடுத்த வழக்கை மாணிக்கப் பரல்தான் தீர்த்து வைத்தது போலத் தமிழ் மொழிக்கான பல புதிய தீர்வுகளைத் தந்த பெருமை மாணிக்கனாரையே சாரும். எதையும் மறித்தோடிச் சிந்திக்கும் திறன், புதுச் சொல்லாக்கம், புரட்சிப் பார்வை போன்றவற்றால் தமிழைப் புதுக்கினார். பேச்சாற்றலால் ஓரளவே அறிமுகமான மாணிக்கனார் எழுத்தாற்றலால் முழுமையாகப் பரிமளித்தார். உரை நடை, கவிதை, நாடகம், சிறுகதை என்ற எழுத்தாற்றல் பிரிவுகள் அத்தனையிலும் அவர்தம் முத்திரை தனித்தன்மை உடையதாகும். அவர் தம் ஆராய்ச்சி நூல்களாகிய வள்ளுவம், தமிழ்க்காதல், கம்பர், தொல்காப்பிக் கடல், திருக்குறட் சுடர் போன்றவை தனித்தன்மை உடையதாகும். நெல்லிக்கனி, உப்பங்கழி, ஒரு நொடியில், மனைவியின் உரிமை என்பன நாடக நூல்கள். கொடைவிளக்கு, மாணிக்கக்குறள் என்பனவும் பலர்பற்றி எழுதிய கவிதைகளுடன் புரட்சி மண்டோதரி, கொல்லாச் சிலம்பு என்ற புதிதாகத் திருத்திய கற்பனைக் கவிதைகளும் சேர்ந்த மாமலர்கள் என்ற கவிதைத் தொகுப்பும் அவரை கவிஞராக்கு கின்றன. உரைநடையில் திருக்குறளும், தொல்காப்பிய எழுத்ததி காரத்திற்கு உரையும், கம்பரின் நாற்பது பாக்களுக்கான உரையும் அவர்தம் உரை எழுதும் வன்மையையும், வண்மையையும் உரைப்பனவாகும். ஆங்கிலத்திலும் நான்கு நூல்கள் செய்துள்ளார். குழந்தை களுக்காகத் தமிழ்சூடி என ஒளவையாரின் ஆத்திசூடிபோல அகர வரிசையில் நீதிகளைக் கூறியுள்ளார். தமிழை இவர் அறிந்ததால் தமிழ் கூறு நல்லுலகம் இவரை அறிந்தது எனில் மிகையாகாது. வாய்மை, சால்பு, சீலம் என்ற சொற்பொருளுக்கான வடிவத்தைப் பெற்ற சான்றாண்மைப் பண்பினர். இளம் வயதில் (11வயதில்) குடும்பச் சூழலால் பருமாவுக்குச சென்ற அண்ணாமலை ஒரு வட்டிக்கடையில் வேலை பார்த்த போது ஒருநாள் கடைக்காரர் அண்ணாமலையை ஒரு பொய் சொல்லச் சொன்னார். மறுத்ததால் வேலையை விட்டு நீங்கி ஊர் திரும்பியவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து புலவர் படித்தார். படிப்படியே முன்னேறினார். தமிழ் மாணிக்கமாகத் திகழப்போகிறார் என்பதற்கேற்ப அண்ணாமலைப் பெயர் மாணிக்கமானது மிகமிகப் பொருத்த மானது. தமிழாராய்ச்சியில் பலரும் போன பாதையில் போகாமல் தமக்கெனத் தனி வழியில் பயணித்துத் தமிழில் பல புதிய சாதனைகளைப் படைத்தார். நகரத்தார் மரபில் ஆடவனைச் சுவீகாரம் எடுப்பது போலப் பெண்ணே இல்லாதவர்கள் விரும்பினால் பல பெண் உள்ள வீட்டார் தரப் பெண்ணைத் தத்தெடுக்கலாம் என நெல்லிக் கனி நாடகத்தில் ஒரு கருத்தை வழிமொழிகிறார். தமிழுக்குப் போராட்டம் இல்லாமல் வாழ்வில்லை, என மாணிக்க குறளில், போராட்டம் இன்றிப் பொருவில் தமிழுக்குத் தேரோட்டம் இல்லை தெளிவு என்றார். தமிழே மூச்சாக வாழ்ந்ததால்தான் தொல்காப்பியத்தையும், திருக்குறளையும் இரு சிறகாகக் கொண்டு திருவாசக நினைப்போடே தமிழ்வானில் பறந்தார். திருக்குறளைத் தேசிய நூலாக்க ஏன் கூடாது என மத்திய அரசுக்கு வினா தொடுத்தார். சமயச் சார்பின்மை இந்தியக் கொள்கையாக இருப்பதற்கேற்ப இந்தியாவில் சமயச் சார்பின்மையாக இருக்கும் ஒரே திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிப்பது பொருந்தும் என்றார். வங்க மொழியில் தேசிய கீதம் இருப்பதுபோலத் தமிழின் திருக்குறள், தேசிய நூலாக இருப்பதென்பது தமிழும் இந்திய மொழிகளுள் ஒன்று என்பதை ஒப்புக்கொண்ட பெருமை நடுவண் அரசுக்குச சேருமன்றோ என்றார். பண்டித மணியைக் குருவாகக் கொண்டார். தற்சிந்தனை யால் கல்வியில் முனனேறிக் கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையர் எனத் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் விமர்சித்த தலைமைப் பண்பிற்குச் சான்றாகத் திகழ்ந்தவர். காரைக்குடி அழகப்பர் கல்வி நிலையத்திலும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்த சிறப்பு களுடன் மதுரை காமராசர் பல்கலைக்கழத் துணைவேந்தராகப் பதவி ஏற்று அப்பதவிக்கே பொலிவும் வலிவும் ஊட்டினார். காரைக்குடியில் தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவி பள்ளிப் பிள்ளைகளுக்கு நீதிநூல்கள் கற்பிக்கும் தொண்டில் திட்டங்கள் தீட்டி, அத்தொண்டு இடையறவுபடாமல் நடக்க ஏற்பாடு செய்தார். அத்தொண்டு இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், இந்திய இலக்கியக்கழகம் (சாகித்திய அக்காடமி) ஒன்று தில்லியில் உள்ளதுபோலக் காரைக்குடியில் ஒன்றை நிறுவத்திட்டமிட்டார். அதற்குச் செந்தமிழ்ச் செல்வர் இராம. பெரியகருப்பன் செட்டியாரின் உற்ற துணையுடன் அந்தக் கழகத்தை இந்தியப் பல் தமிழ்க் கழகம் என்பதான பெயரில் பெரிய கருப்பன் இல்லத்தில் நிறுவப்பட்டது. சனி, ஞாயிறுகளில் இல்லகண இலக்கிய வகுப்புகள் மாணிக்கனாராலும் பிற தமிழறிஞர்களாலும் நடத்தப்பட்டன. சில ஆண்டுகள் மட்டுமே நடந்த அக்கழகத்தின் தளர் நடையால் அதன் போக்கை வளர் நடையாக மாடைமாற்றம் செய்ய எண்ணித் தமிழ்க்கல்லூரி ஒன்றை நிறுவ வேண்டிப் பெரிய கருப்பரிடம் கூற, அவரும் பைந்தமிழுக்கு ஆக்கம் எனக் கருதித்தம் தந்தையார் பெயரில் இராமசாமி தமிழ்க் கல்லூரியை நிறுவினார். இக்கல்லூரியை நிறுவிய பெருமை பெரிய கருப்பனார்க்காயினும் நிறுவ உதவிய பெருமை வ.சுப.மா. அவர்களைச் சாரும். ஆக தமிழுக்கு ஏதாவது செய்துவிட வேண்டும் என்ற துடிப்புடன் வாழ்ந்த வ.சுப.மா. அவர்கள் தமிழைப் பற்றிக் கூறுகையில், பிறப்பறியாத் தமிழன்னை எனப் போற்றி வணங்கியது புதுமையினும் புதுமை. பிறவா யாக்கை பெரியோன் எனச் சிவபெருமானை இளங்கோவடிகள் கூறியது போல யாரும் கூறாத சிறப்பின். தொடர்ச்சியில் தமிழ்மொழியின் பிறப்பை அறிய முடியாதென்றது புதுமையாகும். - தமிழாகரர் தெ.முருகசாமி புதுச்சேரி-9 மன்னு புகழ் தமிழ்ப் போராட்டம் தமிழ் என்ற சொல், மொழியை மட்டும் குறிப்பதன்று. அம்மொழி சார்ந்த மக்களின் வாழ்வியல் கூறுகள் அனைத்தையும் குறிக்கும். முரசு கட்டிலில் அறியாது ஏறி உறங்கிய மோசி கீரனாருக்குச் சேரமான் ஒருவன் கவரி வீசியதை அறிந்ததும் அப்புலவர் “தமிழ் முழுதறிதல்” என மன்னனது பண்பைப் பாராட்டினார். ஈண்டுத் தமிழ் என்றது தமிழ்ப் பண்பாட்டை (புறம் - 50) குறிப்பதாகும். தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானம் என்ற இடத்துத்தமிழ் என்றது (புறம்-19) தமிழ்ப் போரைக் குறித்தது. குறிஞ்சிப் பாட்டிற்குக் கீழே குறித்த உரைப் பாங்கில் “ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்கு” என்றதில் குறிக்கப்படும் தமிழ் என்ற சொல் அகப்பொருளின் களவு வாழ்வைக் குறிப்பது. இப்படியாக அனைத்தையும் குறித்த வகையாகவே இந்த ஆண்டின் நூற்றாண்டுச் செம்மலான வ.சுப. மாணிக்கனார் தாம் எழுதிய மாணிக்கக்குறள் என்ற நூலில், போராட்டம் இன்றிப் பொருவில் தமிழுக்குத் தேரோட்டம் இல்லை தெளி. (163) எனக் கூறியதில் தமிழ் என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கொப்ப அவர் காலத்தில் அவரே முன்னின்று நடத்தி வெற்றி கண்டதால் தில்லைச்சிற்றம்பல மேடையில் இன்றும் திருமுறை பாடும் நிலை உருவானது. இந்நிலையில் தமிழ் என்பதற்குத் திருமுறை எனப்பொருள் கொள்ளலாம். இங்ஙனமாகப் பன்முகப் பாங்கில் தமிழ் என்ற சொல்லும் சொற்பொருளும் உள்ளதன் தொடர்ச்சியில், தற்போதைய நிலையில் பரவலாக நாளேடுகளிலும் தொலைக்காட்சி ஊடகங் களிலும் தமிழ்ப பண்பாட்டை மீட்டெடுக்கும் வகையாகப் பேசப்படும் “சல்லிக்கட்டு” என்ற பெயரை முன்னிலைப் படுத்திப் போராட்டம் வெடித்துள்ளது தமிழ்ப போராட்டமே ஆகும்! கலித்தொகையின் முல்லைக் கலியில் குறிக்கும் ஏறுதழுவல்தான் சல்லிக்கட்டென்றும் மஞ்சு விரட்டென்றும் வேறுபெயர்களில் குறிக்கப்படுகிறது. ஏறு தழுவல் - ஒரு வீர விளையாட்டு, வீட்டு விலங்குகளுள் காளையே வீரம் மிக்கது, அதனை உழவூக்கும் வண்டி இழுத்தலுக்கும் பயன்கொண்டாலும் ஒரோ வழிக் காளைகளை வீரத்திற்காகவே வளர்ப்பதுண்டு. அங்ஙனம் வளர்க்குங்கால் கொம்புகள் சீவியும் மணல்திட்டைக் குத்தச் செய்தும் வீரத்தோடு வளர்ப்பர், கொல்லேற்றுக் கோடு என்ற கலித்தொகைக் கூற்றால் (முல்லைக்.3) கொம்பு சீவப்படுவதை உணரலாம். மணல் திட்டை (மேட்டை)க்குத்தி வீரத்தில் பழக்கப்படுத்துவதன் குறிப்பைச் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய தேவாரத்தால் உணரலாம். “சில்லைச் சேத்திட்டுக் குத்தித் தெருவே திரியும்” திருப்பரங்குன்றம் என்கிறார் சுந்தரர், சில், ஐ, சே - என்ற சொற்கள் சிறிய அழகிய காளை என்ற பொருள் தருவன ஆகும். திட்டுக் குத்தி என்பதுதான் வீரத்திற்காகக் காளையைப் பழக்கப்படுத்துவதான குறிப்பைத் தருவது. சுந்தரர் காலத்தில் திருப்பரங்குன்றத் தெருவில் திரிந்த காளைகள் அத்தகு வீரத்தோடு இருந்ததைக் கண்டே பாடுவதால் வழிவழியாகக் காளைகளை வீரமாக வளர்த்து வந்த குறிப்பை உணர முடிகிறது. இப்படிக் காளையோடே வீரத்துடன் விளையாடிப் பழகியதை ஒரு குறிப்பிட்ட விழாக் காலத்தில் பொழுது போக்காகப் பலரும் அறியச் செய்து வந்தனர். இந்த வழக்கம் பொதுவானதாக இருந்தாலும் ஒரு விறுவிறுப்பு ஏற்படுமாறு உருவாக்கப்பட்ட மாற்றமே சல்லிக்கட்டு என்ற நிலைக்கு மாறியது. அதாவது பொழுதுபோக்கான நிலை, பந்தய நிலைக்கு மாறியது. பொழுது போக்காகத் தொடங்கிய சூது தான் எல்லா வற்றையும் இழக்கும் பந்தய நிலையாகி அதனால் பாண்டவர் துனபுற்றனர் என்பது பாரதக்கதை. ஆக, விளையாட்டு விளையாட்டாக இல்லாமல் வேகப்படும் வகையில் காளையின் கழுத்தில் சல்லிகளை முடிந்த துண்டைக் கட்டி, இக்காளையை அடக்குவோர் சல்லியை (காசை)ப்பரிசாகக் கொள்ளலாம் என்றநிலை உருவானது. இந்நிலையில் வீரமாக மாடுகள் முகிலைப் போல் ஓடும். தம்மைப்பிடிக்க வருவோரிடம் பிடிபடாமல் தப்பிக்கவே முயலும். அதன் ஓட்டத்தோடு ஓடியே வீரர்கள் மறிப்பர். கையில் எந்தக் கருவியும் கொள்ளாமல் வாயால் உரப்பியே ஓடியாடுவர், இதனால் மாடுகளுக்கு எவ்விதத் துன்பமும் ஏற்படாது. முகிலைப் போல் ஓடும் மாட்டை விரட்டுவதால் மஞ்சு விரட்டு ஆனது, இலக்கணப்படி உவமை ஆகுபெயராகும். ஆக வாழையடி வாழையாகக் கொண்டாடிவரும் வீரவிளையாட்டான ஏறு தழுவுதலை, “விலங்குவதையாகக்” கருதுவது தவறு. இசுபெயின் நாட்டில் வீரர்கள் குத்துக் கோல் கொண்டு மாடுகளைக் குத்திக் குருதிவர வழைத்து அடக்க முயல்கின்றனர், அதுவே “விலங்கு வதை”யாகும். மேலும் விலங்கு வதை என்பது “ஒன்றன் உயிர் செகுத்தலை”க் குறிப்பதாகும். உயிர் செகுத்தலோடு அதனை உண்ணவும் செய்வதை விலங்குவதை முறைமைக்குள் கருதுவதாக இல்லையோ? ஏறு தழுவுதலை விலங்குவதை என்றும் உயிர் செகுத்து உண்ணுதலை விலங்குவதையாகக் கருதாமை என்றும் கூறுவோர் பற்றித் தமிழ் நாட்டுப் பழமொழியின்படிப் பகலில் பசுமாடு தெரியாதவர்க்கு, இரவில் எருமை எப்படித் தெரியும் என்பதாகவே கருதலாம் என்க! வீரமும் காதலும் தமிழ்ப் பண்பாட்டின் குறியீடுகள். இவற்றுள் அறமே ஓங்கி நிற்பதன்றி மறமன்று (அறமல்லாத செயல்) என்பதே உண்மை! எனவே வாழையடி வாழையான வீரவிளையாட்டில் எந்த ஓர் இடத்திலும் காளைகளுக்கு எவ்வித ஊறும் விளைவதில்லை. விளைந்ததாக வரலாறும் இல்லை. விலங்கு வதை என்போரால் சான்றுக்காக ஒன்றையும் காட்ட இயலாது. ஆனால் மாட்டுவண்டிப் பந்தயத்தில் தார்க் குச்சியால் குத்தி மாடுகளை வேகப்படுத்துவதால் அதை விலங்கு வதையாகக் கருதி அதைச்சீர் திருத்தத் தார்க்குச்சியால் குத்தாமல் ஓட்டச் செய்ய வழிவகை செய்யும் கருத்தைக் கூறுவதுதான் பகுத்தறிவாகும். அதனை விடுத்து மாடுகளுக்கு ஊறு நேராமல் நடக்கும் ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டை, அல்லது மஞ்சுவிரட்டை “விலங்குவதை” என விலக்கல். “சிறை நலனும் சீரும் இலரெனினும் மாந்தர் உறை நிலத்தோ டொட்டல் அரிது” என்ற குறட் கருத்தின் (499) படி ஆதலே தமிழ் உறுதியாம் என்க!. -- தமிழாகரர் தெ. முருகசாமி, புதுச்சேரி தெளிதமிழ் குறள்வழி அறியப்படும் ஒருவர் வாழும் தமிழறிஞர் தலைமுறைக்குச் சற்று முந்தைய ஆண்டில் வாழ்ந்த பன்மொழி அறிஞர் தெ.பொ.மீ; முத்தமிழ் அறிஞர் மு.வ., மூதறிஞர் வ.சுப.மா என்ற தலைமை எழுத்துக்களால் முகவரி பெற்ற மூவரும் தமிழின் ஆய்த எழுத்தின் முப்புள்ளி போன்ற வடிவினர். தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மு.வரதாசனார், வ.சுப. மாணிக்கனார் மூவரும் தமிழால் ஏற்றங் கண்டவர்கள், தமிழும் அவர்களால் ஏற்றங்கண்டது, இத்தகு வித்தகர்கள் அகவையால் நூற்றாண்டு கண்ட பெற்றியர். இம்மூவருள் இவ்வாண்டு நூற்றாண்டு காணும் வ.சுப.மா. அவர்கள் ஏனைய இருவரினும் திருக்குறளைக் கூடுதலாகப் பரப்புரை செய்த தனிப்புகழ் உடையவர். அன்னாரது வாழ்வும் வளமும் திருக்குறள் வழியானது என்பதை நினைவுகூரச் செய்கிறது இக்கட்டுரை! புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியில் செம்மாந்து வாழ்ந்த வ.சுப்பையா செட்டியார் தெய்வானை ஆச்சி என்ற தம்பதியரின் மகனாகப் பிறந்த அண்ணாமலை என்பவர்தான் பின்னாளில் மாணிக்கம் எனப்பட்டார். வாய்மையே தாரகமாய்க் கொண்டவர்கள் என நாட்டுக்கோட்டை நகரத்தாரைப் பாராட்டிய மகாகவி பாரதியின் வாக்கிற்கேற்ப அம்மரபில் தோன்றிய (17-4-1917) மாணிக்கனார் தம் குடும்பச் சூழலால் இளம்பருவத்திலேயே பருமா சென்று வட்டிக் கடையில் வேலை பார்த்தார். ஒரு சமயம் கடைக்காரர் சொல்லச் சொன்ன ஒரு பொய்யைச் சொல்ல மறுத்ததால் ஊர் திரும்பியவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் புலவர் வகுப்பில் சேர்ந்து பயின்றார். பருமாவில் பொய் சொல்ல மறுத்த போதே, “யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும், வாய்மையின் நல்ல பிற” (300) என்ற குறட்கருத்து நெஞ்சில் விதையாக ஊன்றியதற்கேற்ப அவர் அண்ணாமலையில் தமிழ் பயிலச் சென்றது அவ்வாய்மை வளர உரமாக இருந்தது. இங்ஙனம் திருக்குறளை முழுமையாகக் கற்கும் முழுவாய்ப்பால் அவர் வாழ்நாள் முழுவதிலும் பொய்சொல்லா மாணிக்கம் எனப்பட்டார். இந்தப் பொய் சொல்லா என்ற அடைமொழி ஒன்றே மாணிக்கனாரை, மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக்கியது என்றால் அது முற்றிலும் உண்மை. தமிழக அரசால் அவர் துணைவேந்தராகத் தேர்வு செய்யப் பெற்றதும் அதற்கான ஆணையை மாண்பமை ஆளுநர் பிரபுதாசுபட்டுவாரி, மாணிக்கனாரிடம் வழங்கும்போது, “உங்கட்குள்ள பல தகுதிகளில்” பொய்சொல்லா மாணிக்கம்” என்ற ஒன்றே உங்களை அடையாளம் காட்டியது எனக்கூறி வாழ்த்தி ஆணையை வாழங்கினாராம். இதுபற்றிய உண்மையை வ.சுப. மா. அவர்களே கூறினார்கள். வாய்மையைப் புராணப் பாங்கில் அரிச்சந்திரனை எடுத்துக்காட்டாக அறிவோம். அவனைப் பற்றிய நாடகத்தைப் பார்த்து வாய்மை வேந்தராகத் திகழ்ந்தவர் மகாத்மா காந்தி அடிகள் என்பதையும் அறிவோம், அந்த வரிசையில் வ.சுப.மாவும் தமிழ்கூறு நல்லுலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளராகித் (294) திகழ்கிறார் எனலாம். யானை ஒருகுட்டி ஈனுதலைச் சிறப்பாகக் கருதல்போல் மேற்படியான ஒப்பற்ற ஒரு குறளால் சார்த்திப் புகழப்படும் வ.சுப.மாணிக்கனார் எழுதிய வள்ளுவம் எனும் நூலுக்கு இணையானதொரு உரைநடைநூல் இல்லை எனப் புகழலாம். யாம்மெய்யாக் கண்டவற்றுள் எனும் குறளில் (300) உள்ள “யாம்” என்ற ஒரு சொல்லில் அவருள்ள ஈர்ப்பு பெரிதாகும், அதனைச் சிறப்பிக்கவே அவர் எழுதிய மாணிக்கக் குறளில், எமதென்பர் வாய்மை இசைத்த குறளைத் தமதென்பர் சான்றோர் தகைத்து (11) என்ற குறள் அவரால் கூறப்பட்டது. இதில் சுட்டிய எமது, தமது என்ற சொற்களை ஒன்றை ஒன்று விஞ்சும் தனிச் சிறப்புடையதாக எண்ணிக் கூறியுள்ளார். பொதுவாக வாய்மையை எல்லோரும் எம்முடையது எனக் கூறினும் எல்லோருள்ளும் சான்றோராய் இருப்பவரே தம்முடையது என்பார் என்கிறார் மாணிக்கனார், இதனால் அறியப்படும் வேற்றுமை யாதெனில் முன்னதான எமது - தன்மை இடத்திற்குரியதாய்ப் பொருள் குறிக்க, பின்னதான தமது - உளப்பாட்டுத் தன்மைப் பன்மையாய்ப் பொருள் குறிப்பதால் எமது என்னும் குறுகிய வட்டத்தினும் விரிந்தது. தமது என்பதாகும் எனத் தெரிகிறது. இதன் நுட்பத்தைத் தம் என்பது ஓர் இடைச் சொல்லாய் எல்லார்தம், அல்லது எல்லார் தம்மையும் என அனைவரையும் சேர்த்து உரைப்பது போல எம் என்பதை எல்லோர் எம்மையும் எனக் கூற முடியாத இலக்கணக் குறையால் தம், தமது என்ற சொற்பொருளால் வாய்மைக்கான சீலம் உடையோரை வ.சுப.மா அடையாளம் காட்டவே தம் மாணிக்கக் குறளில் சான்றோர் தகைத்து என்றார் என உணருமாறுள்ளது. இச்சீரிய பொருள் அடிப்படையில் வாய்மை என்ற குறள்வழி அறியப்பட்ட சான்றோராக வ.சுப.மா திகழ்கிறார் என்பதில் ஐயமில்லை எனலாம். அதற்கேற்ப அன்னார் எழுதிய திருக்குறட் சுடர் என்ற நூலால் அவர் திருக்குறளை மணந்த மணாளராக ஒளிர்கிறார் எனக் கூறுலாம். திருக்குறளைப் பலர் அறிந்ததற்கும் இவர் (வ.சுப.மா) மணந்ததிற்கும் ஒரு வேறுபாடு உண்டு. தேசிய நூலாகத் திருக்குறளை ஆக்கவேண்டும் எனக் கூறிய பலரின் கருத்துக்களுக்கு மேலாகத் துணிந்து கூறிய ஒன்றுதான் இமாலய உயர்வுடையதாக உள்ளது. திருக்குறள் வெற்றென அறந்தொடுக்கும் அடுக்கு நூலன்று. மனித குல நடைமுறைச் செயல் நோக்கி எழுதப்பட்ட இயக்க நூல்; இன்தமிழ்நூல், மேலும் மன்பதையின் நடவடிக்கையோடு திருக்குறளை உராசிப் பார்த்தால் உண்மையைத் தோல் உரித்துக் காட்டும் இதுபோன்றதொரு நூல் உலக அளவில் இல்லை என்கிறார் வ.சுப.மா. சிறப்பாக இந்தியாவில் இல்லவே இல்லை என அறுதியிட்டுக் கூறுகிறார். இப்பேருண்மைதான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்ற பாரதி வாக்கால் இந்தியாவை உள்ளடக்கிய உலக அளவில் சென்ற பறை சாற்றுகிறது. திருக்குறள் எந்த ஒரு சார்பிற்கும் பரிந்துரைப்பதான நூலன்று; அதன் ஆன்மா பொதுமை நோக்கியது. அதனால் தான், திருக்குறளை வழிவழியாக அறிவுலகம் போற்றி வந்ததன் சான்றாக, சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகில் கூறிப் பொருளிது வென்ற வள்ளுவன் எனக் கல்லாடம் எனும் பழம்பெரும் நூல் புகழ்ந்தது. பல நூல்கள் சமய வரம்புக்குள் நின்று கருத்துக்களை உணர்த்த குறள் மட்டும் சமயச் சார்பின்மையால் உலகத் திருக்குறளாக உள்ளது. எனினும் சமயக் கொள்கைக்கு இடம் கொடுக்காததால் குறள்நெறி தமிழகத்திலேயே கோலோச்சாமல் போனது குறளின் குறையன்று நாடாண்டோரின் முற்போக்குணர்வு இல்லாமையே காரணம் என வருந்துகிறார் வ.சுப.மா. அவர்கள். அதாவது தமிழ்நாட்டை ஆண்ட சோழ, பாண்டியர், நாயக்கர்கள், குறுநிலத்தார்கள், பல்லவர்கள் யாவரும் சமயங்களில் வழுக்கி விழுந்ததால் குறளின் குரல் எடுபடவில்லை. சென்றதான இப்பழமை அழிந்து பற்பல அயலக ஆட்சியும் மாறி உரிமை பெற்றுவிட்ட பாரத நாடு சமயச் சார்பின்மையை மையமாகக் கொண்டுள்ள நிலையில் திருக்குறளைத் தேசிய நூலாக ஆக்குதல் வேண்டற்பாலதாகும் என்பது வ.சுப.மா-வின் கருத்தாக உள்ளது. தேசியப் பொதுமையைக் குறிக்கும் வகையில், தேசியக்கொடி, கீதம், பறவை, விலங்கு என்றெல்லாம் கூறப்படுவனவற்றால் ஓரளவே புகழுண்டு. ஏனெனில் அவற்றால் அறியப்பட வேண்டிய யாதொன்றும் இல்லை. சுட்டி உணரும் பெருமைக்குரியவையேயன்றிப் பெரும்பயன் இல்லை. ஆனால் தேசிய நூல் அவைபோன்றதன்று. சிந்தனையைத் தூண்டும் அறிவுக் கருவூலமாகத் திகழ்வது - நூல். அந்நூலின் தகுதி இந்தியப் பரப்பில் திருக்குறளுக்கு மட்டுமே உண்டு. சமயச் சார்பின்மை, சமனியம், குடியொருமை குடிஉரிமை போன்ற பொதுமையை உரைக்கும் நூலாகத் திகழ்வது திருக்குறள் ஒன்றே என்பதால் அதனை இந்திய தேசிய நூலாகக் கொள்வதில் யாதொரு குறையும் நேராது. காலந் தாழ்த்தாது இதனைச் செய்வது சிறப்பு எனக் கூறும் மாணிக்கனார் வடமொழியிலோ இந்தியிலோ இப்படி ஒரு நூல் இருந்திருந்தால் அது தேசிய நூலாகியிருக்கும என்ற ஆதங்கத்தோடு தமிழரை நொந்து கொள்கிறார். அதாவது இதற்கான முயற்சி வேகப்பட வேண்டும் என்பது அவர்தம் அவாவாக உள்ளது எனலாம். இந்த அளவில் மேலும் ஒன்றைப் பாரத ஆட்சியர்க்கும் அறிவுறுத்தும் வகையில் அமைந்த ஒரு வினாவை எழுப்புகிறார்! இந்திய மொழிகளுள் தமிழும் ஒன்று? தேசிய கீதம் வங்க மொழியில் அமைந்தது போலத் தேசிய நூலாகத் தமிழின் திருக்குறள் அமைந்தால் பொருந்தும்தானே? என்கிறார். ஏனெனில் சமயச் சார்பின்மையைப் பின்பற்றும் மதநல்லிணக்க நாடாகத் திகழும் நம் பாரத நாட்டின் பொதுமைக்கேற்ற பொருத்தம் இந்தியப் பரப்பில் உள்ள நூல்களுள் திருக்குறளுக்கு மட்டுமே உள்ளதால் திருக்குறளே தேசியநூல் என்ற அறிவிப்பு மிகமிகப் பொருத்தமுடையதாம் என்க - என்பது வண்டமிழ் வ.சுப. மாணிக்கனாரின் கருத்தாக உள்ளதால் அன்னார்தம் கருத்தைச் செயல்படுத்த தமிழர்கள் முனைவது அவர்தம் நூற்றாண்டு விழாவுக்கான காணிக்கையாய் அமையும் என்பதில் ஐயமில்லை! - தமிழாகரர் தெ.முருகசாமி, புதுச்சேரி-9 மாணிக்கக் குறளின் குரல் தமிழாகரர் தெ. முருகசாமி, முன்னாள் முதல்வர், இராமசாமி தமிழ்க்கல்லூரி, காரைக்குடி, புதுச்சேரி-3 இவ்வாண்டு நூற்றாண்டுகாணும் தமிழ்ச்செம்மல் வ.சுப.மாணிக்கனார், தமிழ் கற்றோர்க்குத் தாம்வரம்பாகிய தலைமையர். எதையும் மறித்தோடி நோக்கும் அரிமாப் பார்வையர்.தமிழ் மொழி வளர்ச்சிக்குப் புதுமை பாய்ச்சிய புலமையர். தொல்காப்பியக் கடலாய், வள்ளுவத் தோற்றமாய் வாழ்ந்த பெற்றியர். ஆம்! அவர் சொல்லும் செயலும் உலகத் தமிழ்ப பேரேட்டில் அடுத்தடுத்த பக்கமாய், செல்லுபடியாகும் நாணயத்தின் இருபக்கம்போல் பதிவானவை. வண்டமிழால் அவர் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டாலும் வளரிளம் பருவத்திலேயே வாய்மைக்கு இருப்பிடமாய், வளர்வதன் பாத்தியுள் வாய்மை நீர் சொரிந்து தம்மை உலகிற்கு அடையாளப் படுத்திக்கொண்ட அண்ணல்! அந்த ஒன்றே அவரை மதுரை-காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக்கியது. அவர் ஒரு படைப்பாளி! போராளி! என்ற குறிப்பின் வழி அவர்தம் நூற்றாண்டை நினைவுகூர்கிறது இக்கட்டுரை! உரையும் பாட்டும் உடையோர் சிலரே எனப் புறநானூற்றில் (27) சோழன் நளங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாராட்டிய பாராட்டு, ஒருபடைப்பாளிக்கும் பொருந்தும் என்பதற்கு சான்றாகத் தாமே பாட்டும் உறையும் போல் வாழ்ந்தவர் வ.சுப.மா. ஆவார்! உரைநடை நூல்களாகத் தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் பற்றியவையாகப் பல எழுதியன போலவே கவிதை நூல்களாக மாமலர்க் கவிதைகள், கொடை விளக்கு, மாணிக்கக்குறள், என்ற மூன்றையும் தோற்றுவித்த பைந்தமிழ்ப் பிரம்மப் படைப்பாளி அவர். மாமலர்ப் பாக்கள் - பற்பல உதிரிகளாகவும், புரட்சியாகச் சிலம்பைப் பற்றியும் கம்ப இராமாயணம் பற்றியும் ஒவ்வோர் கூறுகளின் கருத்தைக் கவிதையால் செதுக்கினவாகவும் அமைந்தவை. கொடை விளக்கோ - ஒருமரத்துக்கனி போல் வள்ளல் அழகப்பரை மட்டுமே மையப்படுத்தி எழுதிய வெண்பாக்களாக அமைந்ததாகும். ஆனால் மாணிக்கக்குறள் நூலோ - தமிழ், தமிழ்ச் சமூகம் என்ற விரிந்துபரந்த நிலையில் அமைந்த வ.சுப.மா.வின் எண்ணச் சுவடியாகும். 1941 இல் பாவேந்தர் தோற்றுவித்த தமிழியக்கத்திற்குப் புத்துயிரூட்ட எழுந்த உறுநூலே மாணிக்கக்குறள். தமிழன்னை பிறந்தபோது உலக அரங்கில் எந்த மொழியும் பிறக்கவில்லை என அறுதியிட்டுக் கூறும் குறளால் உலகத் தமிழ் என்ற அடைமொழியால் தாய்த்தமிழ் என்ற சிறப்பைத் தமிழ் ஒன்றே பெற்ற உண்மையை, அவள் பிறந்த நாளில் அனைத்துலக மண்ணில் எவள் பிறந்தாள் சொல்லென் றெழுப்பு. (117) என்பதாகக் கூறினார் வ.சுப.மா. தமிழ்மொழி ஆரிய மொழிவழிப்பட்டுத் தோன்றியதாகக் கூறுவாரின் வாயை அடைத்து, அவள் என்று பிறந்தவள் என்று சொல்லறிய தோற்றமுடைய இயற்கை (சுயம்பு) மொழியே தமிழ் என்பது கருத்து. அவள் என்றது படர்க்கைச் சுட்டாயினும் இலக்கண உரையாசிரியர்களின் குறிப்பின்படிப் பண்டறிசுட்டு எனப்படும் இரு பெருமைக்குரியதாகும். படர்க்கையினும் உயர்ந்தது பண்டறிசுட்டு. காணாத விடத்ததாயிருந்த ஒன்று, படர்க்கை யாயினும் அது காணப்பட்டக்கால் முன்னிலையாகி விடும். ஆனால் எவ்வாறேனும் காணமுடியாததாய், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்ததாய்க் கணிக்கும் நிலைக்கு உட்பட்டதைக் குறிப்பது பண்டறிசுட்டு. அதுதான் அரும்பெறல் மரபாகிய வழக்காம் என்க! இத்தகு தமிழ் - நூற்பரப்பால் நுவலும் பொருட்சிறப்பால் உயர்ந்தது என்னும் வழிவழியாகப் படைப்பாளிகளால், வள்ளல்களால், மன்னர்களால் காப்பாற்றி வளர்க்கப்பட்டும் வருவதாகவும் பல குறள்களில் வ.சுப.மா. தமிழ்மொழி வரலாற்றை மாணிக்கக்குறள் நூலில் ஒளிரச் செய்துள்ளார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக கவிஞன் தான் வாழும் காலத்தை பதிவு செய்யும் வகையாகச் சிலவற்றைக் கூறும் பொது இலக்கணப்படி வ.சுப.மா.வும் தம் காலத்துச் சூழலில் தமிழ் மொழியைப் போராட்டத்தால் வளர்க்கப்பட வேண்டிய உண்மையைக் குறட்கவியாகக் கூறுவதோடு தாமே முன்னின்று போராளியாக வாழ்ந்ததையும் குறிப்பாகக் கூறியுள்ளார். போராட்டம் இன்றிப் பொருவில் தமிழுக்குத் தேரோட்டம் இல்லை தெளிவு. (163) இக்குறள் வ.சுப.மா.வின் காலச்சுவடான குரல் ஆகும். ஒரு காலத்தில் தமிழ் தானாக வளர்ந்தது. ஆனால் அது இந்நூற்றாண்டில் போராட்டத்தால் புதுக்கப்படவேண்டியதாய் உள்ளது. எடுத்துக் காட்டுக்காகச் சில காண்போம். 1967 இல் தொடங்கப்பட்ட மதுரை பல்கலைக்கழகத்திற்கு ஒருவரது பெயரை ஊடுபயிராக ஊன்ற எண்ணியபோது கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் பெயர் தேர்வு செய்யப்பெற்று இணைத்தபோது `மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்’ எனப்பட்டது. இதனைக் கண்ட வ.சுப.மா. ஒற்றுமிகுத்து மதுரைக் காமராசர் என எழுதாமல் மதுரையை யடுத்து ஒருசிறு கோடிட்டுக்காமராசர் என எழுத வேண்டும் என மேடையில் பேசினார். அரசுக்கும் அறிக்கை விடுத்தார். மதுரைக் காமராசர் என்றால் விருது நகர்ப் பிறந்த பெருந்தலைவரை மதுரையில் பிறந்தவராக கூறும் வரலாற்றுப் பிழையைச் செய்ததாகி விடும் என்பதால் இக்கில்லாமல் (பிழையில்லாமல்) அதாவது மதுரைக்குப் பின்னால் “க்” எழுத்தை மிகுந்து எழுதாமலிருக்க வேண்டும் என்றார். அதற்கு அவர் தமிழ் முறைப்படிக்காரணம் கூறுகையில், எழுத்தும் சொல்லும் பொருளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய செம்மைப் பாங்கின என்பதால் பொருட்பிழை ஏற்படாவாறு சந்திக் குறிப்பின்படிக் காற்புள்ளியிடுமாறு போல ஒருசிற கோடிட்டுப் பிரித்தால் பொருட்குற்றம் வரா - என்றார். அதன்படியே மாண்பமை முதல்வர் ம.கோ. இராமச்சந்திரர் (எம்.ஜி.ஆர்) அரசு ஏற்று அவ்வாறே மதுரை- காமராசர் பல்கலைக்கழகம் என எழுதியது. அப்பெருமை தமிழ்ச் செம்மலின் போராட்ட உணர்வால் எழுந்தது என்பதைச் சிலரே அறிவர். பொன்மனச் செம்மல் ம.கோ. இரா. காலத்தில் எழுத்துச் சீர்திருத்தம் என்ற வகையில் ஐ, ஒள என்ற உயிர் நெடிலுக்கு மாறாக அய், அவ் என எழுத அரசாணை வந்தது. இது கண்ட முத்தமிழ்காவலர் கி.ஆ.பெ. விசுநாதரும் தமிழ்ச் செம்மல் வ.சுப.மா.வும் முதல்வரைச் சந்தித்து அய், அவ் ஒரோ வழியாக வேண்டுவதேயன்றிப் பெரும்பான்மைக்கல்ல என்பதை எடுத்துக் கூறி ஐ, ஒள வுக்கு வாழ்வு தந்தனர். இதனால் அரசு ஆணை திரும்பப் பெறப்பட்டது. மாற்றத்திற்கான காரணம் பற்றி விளக்கியபோது “ஒளவைப் பாட்டியை அறிவோர், அவ்வைப் பாட்டியை அறியார், ஏனெனில் படிப்பவர் அவ் வைப்பாட்டி எனப் பிறழப்படித்து விட்டால் - என்றதும் முதல்வரே சிரித்துவிட்டார்”. என வ.சுப. மாவே வாய்மொழியாகக் கூறினார். மேற்படியான கருத்துக் களுக்குக் கீழ்வரும் மாணிக்கக்குறள் மாணிக்கனாரின் குரலாம் என்க! ஒலிக்கூட்ட வேண்டா உயர்தமிழ்க் கல்வி வலியூட்ட வேண்டும் வரிந்து! (217) எழுத்துத் திருத்தம் இயல்போ தமிழைக் கழித்துச் சுழிக்கும் கதை! (156) இங்ஙனம் மிதவாதமாகப் போராடிய வ.சுப.மா. அவர்கள் தீவிரவாதமாகவும் தமிழ்ப் போராளியாகத் திகழ்ந்ததற்கு அரியபெரிய சான்றொன்றும் உண்டு. தில்லைத் திருக்கோயிலில் நடராசர் சந்நிதியில் உள்ள திருச்சிற்றம்பல மேடையில் தமிழ்த் திருமுறைகள் ஒலிக்கப்பெறாமல் கீழிருந்தவாறாகவே ஒலிக்கப்பட்ட முறையைக் கண்ணாரக்கண்ட வ.சுப. மா. பல அறிஞர்களுடன் கூடிப் போராட்டக் களத்தை உருவாக்கி ஓர் அறிக்கையைத் தீட்சதர்களுக்கு அளித்தார். அதில் நடைபெற உள்ள குட முழுக்குப் பெருவிழாவின் நினைவாக இனித் தொடர்ந்து திருச்சிற்றம்பல மேடையில் திருமுறை முழங்கச் செய்ய வேண்டுமென்றும், இதற்கு மாற்றுச் சிந்தனை அமையின் போராட்டம் நடத்தப் பெறுதலோடு அப் போராட்டம் பெருவேள்விக் குண்டத்தருகில் (யாககுண்டம்) நடைபெறும் என்றும் கூறப்பட்டது. திருமுறைச் செல்வர் க. வெள்ளைவாரணனார், பேராசிரியர் ச.மெய்யப்பனார், புலவர் த. முருகேசனார், வ.சுப.மா. மாணாக்கர்கள். பொன்னம்பலம் போன்ற பலரும் போராளிக் கூட்டத்தினர் ஆவர். இந்நிலையில் தீட்சதர்கள் தாமே முன்வந்து திருமுறையிடுவதாக ஒப்புக் கொண்டனர். இந்த ஏற்பாட்டின் படி இன்றும் அவர்கள் பாடுகிறார்கள் என்பது போராட்டக் குழுக்குக் கிடைத்த வெற்றியன்றோ! இந்த வெற்றி குறித்து வ.சுப.மா. கூறுகையில் “தூமறை பாடும் வாயர் (தீட்சதர்கள்) தூய்தமிழும் பாட ஒப்பியது நமக்கான இரட்டிப்பு மகிழ்ச்சியன்றோ?” என இறும்பூதுற்றார். அன்னார் காலத்திய மாணிக்கக்குறளின் போராட்டக் குரல் - அன்னார் இல்லாத இந்தக் காலத்தில் கல்விகற்கும் மாணாக்கர்கள் நடத்திய சல்லிக்கட்டுப் போராட்ட வெற்றியாக மலர்ந்துள்ளதை வ.சுப.மா.வின் மாணிக்கக்குறளுக்கான காணிக்கை எனலாம். போராட்டம் இன்றிப் பொருவில் தமிழ் (163) என்றதில் கூறப்பட்ட ஒப்புமை இல்லாத தமிழ் என்ற சொல்லுக்கு மொழி என்ற அளவில் மட்டுமின்றித் தமிழ்ப் பண்பாடு என்ற பொருளும் உண்டு. அதனையே ஏறுதழுவான சல்லிக்கட்டுப் போராட்டத்தால் மாணாக்கர்கள் உணர்த்தியது காலச் சுவடான வரலாறாகும். இளங்காளை பயமறியாது என்பதற்கேற்ப 1965இல் இந்திப் போராட்டத்தில் அக்காலத்திய மாணாக்கர்கள் மொழிப் போர் நிகழ்த்தியது போல் 2017இல் இந்நாளைய மாணாக்கர்கள் தமிழ்ப் பண்பாட்டுப் போரை நிகழ்த்தி வெற்றி கண்டனர் என்பது சாதனைமேல் சாதனையாம் என்க! மொழிப் போராட்டத்தின் போது பொதுவாகப் பலரின் பங்களிப்போடு மாணாக்கர்தம் பங்களிப்பும் ஒருகூறு என்றால் தற்போது நடந்த பண்பாடு போராட்டத்தின் வெற்றி முழுக்க மாணாக்கர்களால் மட்டுமே தமிழுக்கு வந்த புதுவரவாகும். இதனை வேறு வகையில் கூறினால் மாணாக்கர் ஒன்று கூடிப் போராடவில்லையேல் மஞ்சுவிரட்டலுக்கான சட்டம் வந்தே இருக்காது எனப் பல்லாயிரம் கோயில்களில் கையறைந்து வாயறைந்து கூறலாம். மூன்றாண்டாகத் தடைப்பட்ட சல்லிக்கட்டுப்பற்றிச் சிலர் பேசியும் அறிக்கையும் விட்டனர். சல்லிக்கட்டு நடத்துவோரின் எதிர்குரலுக்கும் மத்திய, மாநில அரசும் செவிசாய்க்கவில்லை, ஆனால் குஞ்சுமீன்கள் கூடிப் பெரிய கப்பலையே கவிழ்த்தது போலச் சட்ட வடிவை மூன்றே நாளில் கொணர மாணாக்கர்களின் ஈகமே (தியாகமே) முதற்காரணம் ஆகும். இந்த இளைய சமுதாய உந்துதலைத் தமிழ்ச் செம்மல் வ.சுப.மா. வின் மாணிக்கக்குறளோடு உரசினால் காதில் கேட்பனவே அன்னாரின் மிதவாத தீவிரவாதப் போராட்டக் குரல்கள் எனலாம். அக்குரல்கள் போராட்டந்தோறும்; தமிழ்க்காய் ஒலிக்கும் என்பதில் ஐயமில்லை! வாழ்க! வ.சுப.மா. நூற்றாண்டு வாழ்வும் மலரும்! குறிப்பு: சங்க இலக்கியப் பொதும்பர் இதழாசிரியர் ச.தமிழரசு அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற காலை வ.சுப.மாணிக்கத்தின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொய்சொல்லா மாணிக்கம்! பர்மாத் தலைநர் இரங்கூனில் வட்டிக்கடை ஒன்றில் பெட்டிஅடிப் பையனாகச் சேர்ந்தார். கைபழகும் நிலையில் அங்கு சென்று தொழில் செய்யப் போனார் அவர். வட்டிக் கடையின் முதலாளி கைபழகச் சென்ற பையனிடம், `இன்னார் வந்து கேட்டால் முதலாளி இல்லை என்று சொல்லிவிடு’ என்றார். அப்பையன், `உண்மையிலேயே முதலாளி வெளியே சென்றிருந்தால் இல்லை என்பேன்; நீங்கள் உள்ளே இருக்கும் போது எப்படி முதலாளி இல்லை என்பேன். இப்படியெல்லாம் பொய் சொல்லமாட்டேன்!’ என்று மறுத்துப் பேசினாராம். அப்படிப் பேசியவர்தான் `பொய்சொல்லா மாணிக்கம்’ என்று போற்றப்பட்ட மூதறிஞர் வ.சுப. மாணிக்கம். 17.4.1917இல் நகரத்தார் மரபில் பிறந்தவர். `வள்ளுவம்’, `தமிழ்க் காதல்’, `கம்பர்” எனப் பன்னூல்களைப் பைந்தமிழுக்குப் படைத்துப் பார்போற்ற வாழ்ந்த பண்பாளர். சங்கத் தமிழ் முதல் திரையிசைப் பாடல்கள் வரை ஆழ்ந்த புலமை பெற்று ஏனைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கிய பெருந்தகை வ.சுப.மாணிக்கம். வாய்மையைத் தம் வாழ்நாட் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர். அண்ணாமலைப் பல்கலைக் கழக வித்துவான் வகுப்பில் பயின்று பின் ஆய்வு மாணவராக அங்கேயே ஆய்வு செய்து அண்ணாமலையிலேயே ஆசிரியரானார். அங்கிருந்து காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் ஆனார் அவருடைய நேர்மைப் பண்பிற்கு ஒரு சான்று: வ.சுப.மா. அப்போது அழகப்பர் கல்லூரி முதல்வராக இருந்தார். தன் மைந்தன் தேர்வில் பல்கலைக் கழக விதிகளுக்குப் புறம்பாக நடந்து கொண்டமையால் தன் மைந்தன் என்றும் பாராமல் தேர்வு விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார். பின் அண்ணாமலைப் பல்கலையில் மீண்டும் மொழிப் புல முதன்மையராகவும் பணியாற்றினார். இவர் தம் நேர்மையும் தமிழ்ப் புலமைச் செழுமையும் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக்கின. 1979 முதல் 1982 சூன் முடியத் துணைவேந்தராக இருந்தபோது ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது மதுரையில். பல்கலைக் கழகத்தின் சார்பில் அரியதோர் கண்காட்சியை அமைத்துத் தம் ஆளுமையை வெளிப்படுத்தினார். சைவப் பெருமக்கள் ஏதேனும் எழுத முனையும்போது பிள்ளையார் சுழி எனப்படும் “உ” போடுவிட்டு எழுதத் தொடங்குவர்; சுழியும் கோடும் எழுதும் போது பனை ஓலை கிழியாமல் இருக்கவேண்டும். அவ்வேட்டின் பக்குவம் பார்க்க முன்னோர் கையாண்ட வழி என்று கி.ஆ.பெ. விசுவநாதன் விளக்கம் தருவார். ஆயின் வ.சுப. மாணிக்கம் “த” என்று எழுதுவது வழக்கம். `த’ என்பது தமிழைக் குறிக்கும் எழுத்து. இவருடைய தமிழ்ப் பற்றினைத் துலக்கிக் காட்டும் குறியீடு. `முத்தமிழ்’ நமக்குத் தெரியும். மாணிக்கனார் “ஏழிளந்தமிழ்” என்னும் புதுமையைப் புகுத்தியவர். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நறுந்தொகை, மூதுரை, நன்னெறி, உலகநீதி என்னும் ஏழு அற நூல்களையும் இணைத்து `ஏழிளந்தமிழ்’ என்று ஏற்றம் தந்து புதுப்பெயர் சூடடி மகிழ்ந்தார். நூலாசிரியராய் விளங்கியதோடு திருக்குறள் தெளிவுரை, நீதிநூல்கள் உரை, தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை என உரையாசிரியராகவும் விளங்கியுள்ளார். `மனைவியின் உரிமை, நெல்லிக்கனி, உப்பங்கழி, ஒரு நொடியில்’ என 4 நாடகங்களை இயற்றியுள்ளார்; கொடை விளக்கு, மாமலர்கள், மாணிக்கக் குறள் என மூன்று கவிதை நூல்களைப் படைத்துள்ளார். இவருடைய நாட்டுப்பற்றுக்கும் மொழிப்பற்றுக்கும், ஆட்சிமொழிச் சிக்கலைத் தீர்க்க வழிவகுக்கும் `தலைவர்களுக்கு’ என்ற நூல் சிறந்த சான்று. வ.சுப. மாணிக்கனார் பதிப்பாசிரியராகவும் விளங்கியமையை வெளிக்காட்டுவன இரட்டைக் காப்பியங்கள், நகரத்தார் அறப்பட்டயங்கள் என்னும் இரு நூல்களும், இரட்டைக் காப்பியங்கள் பதிப்பின் முற்பகுதியில் சிலப்பதிகாரத்திறன், மணிமேகலைத் திறன் என்பன பேராசிரியரின் திறனாய்வுச் சிந்தனையின் மணிமுடியாகும். ‘கூhந கூயஅடை ஊடிnஉநயீவ டிக டுடிஎந, ஹ ளுவரனல டிக கூயஅடை ஏநசளெ, ஊடிடடநஉவநன ஞயயீநசள, கூயஅடைடிடடிபல’ என 4 ஆங்கில நூல்களையும் படைத்து அன்னைத் தமிழுக்கு அணிசேர்த்து மணிமகுடம் சூட்டி மகிழ்ந்துள்ளார். `எழுத்துச் சீர்த்திருத்தம் எங்கே போய் முடியும்?, மொழியறிக்கை, தமிழ்வழிக் கல்வியியக்கம்; மதுரை ஊர்வலம் நிகழ்ச்சி விளக்கம் எனக் கட்டுரைகள் வழங்கித் தம் தமிழ் நேயத்தைப் புலப்படுத்தியுள்ளார். “மொழியார் அழியின் முடியார் அழிவர் விழியார் குறையின் ஒளியார் குறைவர் மொழியை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் மொழியை வளர்ப்பேன் முடிவளர்ப் பேனே” என்று திருமூலர் வழியில் வாழ்வியற் குறிக்கோளை வழங்கியதோடு வாழ்வியலும் கடைப்பிடித்த அவர் வள்ளுவ நெறியாளர். 23 நூல்களைப் படைத்துப் பைந்தமிழை - பழந்தமிழை - மரபுவழி பேணிய மாணிக்கனார் 24.4.1989 அன்று புதுச்சேரியில் நம்மை எல்லாம் விட்டுப்பிரிந்தார். வள்ளுவ நெறியின் நடைமுறையை வாழ்வில் செயற் படுத்திய இவருடைய புதுச்சொல்லாக்கம் தமிழ்ச் சொல் வளத்தைப் பெருக்கும் புது முயற்சியாகும். இதற்குச் சிலசான்று காண்போம். மணவணிகம், குருவிச் சீட்டெடுப்பார், கைக்கோடு காண்பார், நீர்வீழ்வு, வயிற்றீகை, கொள்ளாற்றல், ஊர்ப்பணி, புறத்தாழ்வு உயிர்க்கேடு, வாழ்க்கைச் சுவடி, பூதக்கேடுற்றோர், நெறிக்கோள் எனச் சொற்புத்தாக்கம் யாவும் “வள்ளுவம்” நூலில் வருவன. வ.சுப.மாணிக்கம் தம் கட்டுரைகளில் புதுப்புது உவமைகள் கூறித் தம் உரைநடைக்கு உயிரூட்டுவார்: “குறிப்பவர் நோக்கத்திற்கும் விடையெழுதும் மாணவர் செயற்கும் ஏற்றத்தாழ்வு மரக்கிளைபோல் அகலச் செல்வதால் கல்விச் செம்மை பெரிதும் குறைபடக் காண்கின்றோம்” (வள்ளுவம், ப.வ.) “வீதி விளக்கு ஆயிரமும் ஒளிர ஓரழுத்தம் போதுமாப் போலே, மாந்தரனைவோரும் திருக்குறள் கற்க வேண்டும் என்றற்கு `பொருள் செயல் வகை’ என்னும் ஓரதிகாரம் போதாதா?” (வள்ளுவம், 23) “அறிவாழ்க்கையர் நல்குரவு எய்தல் பள்ளத்து நீர்வீழ்வு போல் இயல்பு எனவும் வள்ளுவர் அறிவர்” (வள்ளுவம் ப. 89) “விரல்கள் சேர்ந்த கைபோன்றது நம் நாட்டமைப்பு” (இந்திய ஆட்சிமொழி, ப. 51) “வெள்ளியில் நாணயம் போல் இயற்கைப் புனைவில் மனிதப் பிணைவு உயிரோடிக் கிடக்கின்றது” (காப்பியப் பார்வை, ப. 22) இப்படி நடைமுறையில் நாம் காண்கின்ற காட்சிகளை உவமையாக்கி மாணிக்கனார் படிப்பவரை வியப்பில் ஆழ்த்துவார். காலம் தோறும் தோன்றிய இலக்கியங்களை எல்லாம் கருத்தூன்றிக் கற்ற பெரும்புலமையாளர் வ.சுப.மாணிக்கம் என்பதை அவருடைய படைப்புக் களங்களின் வாயிலாக அறியலாம். “மாணிக்கச் செல்வ மணித்தமிழ்அன்னைக்குக் காணிக்கை யாய்வாய்த்த கண்ணாள - பேணிக்கை வைத்த துறையெல்லாம் வாய்ந்த துறையாக்கி வைத்தநீ எங்கள் வைப்பு” என்று பெரும்புலவர் இரா. இளங்குமரன், அன்னாருக்கு மகுடம் சூட்டி மகிழ்கின்றார் என்றால் அவர் பெருமைக்கு வேறு என்ன சான்று வேண்டும்? - நெல்லை ந. சொக்கலிங்கம் அமுதசுரபி ஏப்ரல் 2016 புதுக்கோட்டை மாவட்டத் தமிழ்ப்பேராசான் வ.சுப. மாணிக்கனார் (1917-1989) மாணாத தேர்தல் முன்னுரை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தல் நம்மை எப்படியெல்லாம் பாடாய்ப்படுத்துகின்றது. தேர்தலும் அதன்பின் அரசும் அமைந்து எதைச் சாதித்தன? மனம் வெதும்பிய மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் தாம் படைத்துள்ள `மாணிக்கக்குறள்’ என்ற நூலில் இன்றைய தேர்தலைப் பற்றிக் கூறுவனவற்றைக் காண்போம். அன்னாரின் நூற்றாண்டுவிழாத் தொடங்கிவிட்டது. தேர்தலைப் பற்றி அவர் கருத்துக்கள் தமிழ் மன்பதையின் நலம் பற்றியனவாகும். வாக்காளர்கள் கவிஞர் அப்துலரகுமான், வேட்பாளர்களைப் போலி நளன்களாகவும், வாக்களர்களைக் குருட்டுத் தமயந்தியாகவும் `பால்வீதி’யிலே கூறுவது இவண் எண்ணத்தகும். புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில் போலி நளன்களின் கூட்டம் கையில் மாலையுடன் குருட்டுத் தமயந்தி என்பதே அப்புதுக்கவிதை. கள்ளவாக்குப் போடுவதும் வாக்குச் சாவடியைக் கைப்பற்றுவதும், பணத்தால் மக்களை விலைக்கு வாங்குவதும் இன்று நாம் கண்முன் காண்பவை. இப்படிப்பட்ட பணநாயகம் தலைதூக்கி நிற்கும் இத்தேர்தல் பிணத்தினுடைய வாய் பிளந்து கொண்டுதன் நாற்றத்தைக் கொழிக்கும்! தேர்தல் களம் கூறவந்த மாணிக்கனார். பணவாய் விரியுமேல் பாரதத் தேர்தல் பிணவாய் மணக்கும் பிளந்து (மாணிக்கக்குறள், 213) என்று கூறுவார். வாக்காளர் சிறுபிள்ளையாக இருந்தபோது எப்படி இருநதனர்; வளர்ந்த பின்பு தேர்தல் நேரத்தில் வாக்களிக்கும் உரிமை பெற்ற பின்பு எப்படி ஆகிவிட்டனர் என்பதனை எண்ணிய மாணிக்கனார். நொசியாது சாதி நுழையாது சட்டம் பசியாது தேர்தற் பணம் (மேலது, 212) என்று அறம் கூறுவார். ஒன்றின் மேல் ஒன்றைக் குறிபார்த்து எறிந்து குண்டு விளையாடினோம் இன்று எவரெவரோ வந்து எறிந்து விளையாட நாமே குண்டானோம்” (ஊர்வலம், ப. 60) என்று வருந்தும நிலையில் இன்றைய வாக்களார்கள் உள்ளனர். ஆட்கடத்தலும் கள்ளவாக்குப் போடுவதும் தேர்தல் களத்தில் புறையோடிப் போய்விட்ட இன்றைய நடைமுறை களாகும். இது பற்றி, பிளவின்றி மக்கள் பெரும் பங்கு கொள்ளக் களவின்றித் தேர்முறையைக் காண் (மாணிக்கக்குறள், 214) என்று நேர்மையான தேர்தல் முறையைக் காணுமாறு வ.சுப.மா. வலியுறுத்தினார். தோல்வியும் தொண்டும் மக்களாட்சி முறையில் தேர்தல் களத்தில் செந்தமிழ்க் கொள்கையால் தோல்வி அடையமாட்டார். அப்படி ஒருவேளை தோல்வி கிடைத்தால்கூட, அவர் செய்த தொண்டு பசுமையாக நின்று, பின் வெற்றிகளைச் சேர்க்கும். தமிழ்ததொண்டே வெற்றிக்கு வித்திடும்; வெற்றியைத் தரும் என்று நெறிப்படுத்தும் மாணிக்கக் குறட்பாக்கள் வருமாறு: தேர்தல் களத்திற் செழுந்தமிழ்க் கொள்கையால் தோல்வி கிடைப்பினும் தொண்டு. (மேலது, 191) தொண்டது திண்பட்டுத் தோலாத வகையாம் பண்டது காட்டும் படிப்பு (மேலது, 192) இந்தியநாடு உரிமை பெற்றது; உயர்ந்தோம்; மகிழ்ந்தோம் என்று கருதியிருந்தோம். ஆனால் பெருமைக்குத் தக்கபடி நடைபெறாத தேர்தல் இனி நமக்கு விடிவுகாலம் இல்லை என்று நம் மனம் துன்பமடையுமாறு செய்துவிட்டது என்று மாணிக்கனார் வருந்துவார். இதோ அவர்தம் வருத்தம் புலப்படுத்தும் குறள். மடிவில்லை என்றிருந்தோம் மாணாத தேர்தல் விடிவில்லை என்றுரைக்கும் வெந்து (மேலது 210) தமிழ்ப்பற்றுடையவர்களும் இன்று தேர்தல் பகட்டுடையவராகி விட்டனர். செந்தமிழைப் பேசி விற்றுத் தேர்தல் வெற்றிகளை அறுவடை செய்பவர்களாகி விட்டனரே என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் நெஞ்சம் கொதிக்கின்றார் அவ்வுள்ளக் குமுறலை, பற்றுடையார் தேர்தற் பகட்டுடையார்; செந்தமிழை விற்றுடையார்; நாட்டின் விதி (மேலது, 330) என வெளிப்படுத்தி வேதனை கொள்வார் அவர். இல்லாத ஊருக்குப் போகாத வழியை அறியாத மக்களிடம் புரியாதபடி சொல்லி வைக்கும் சத்தியவாக்கு (வெள்ளை மலர்கள், ப. 27) தேர்தல் வாக்குறுதிகள்! எண்ணிச் செயலாற்றுவது மாணிக்கனாருக்கு நாம் செலுத்தும் நன்றியும் மதிப்பும் ஆகும். முடிவுரை செந்தமிழ்ப் பற்றுடையவராய்ச் சமுதாய மேன்மையை எண்ணிச் செயற்படும் சீர்திருத்த உணர்வுடையவராய், மக்கள் நலனில் மட்டுமே கருத்துடையவராய் வேட்பாளர்கள் விளங்க வேண்டும் என்பது செம்மல் மாணிக்கனார் வேட்கை, அவர் வேட்கை என்று மலரும்? என்று அவர் நூற்றாண்டு விழா நேரத்தில் எண்ணிச் செயல் வள்ளுவத்தை மேற்கொள்வோம்! - பேராசிரியர் நெல்லை. ந. சொக்கலிங்கம் நிலமகள் அழுத காஞ்சி! செந்தமிழே நம் தாய்! திருக்குறளே நம்மறை!! நந்தா ஒழுக்கமே நம் படை!!! -வ.சுப.மா. திருக்குறள், `எங்கள் மறை நூல்’ அது தேசிய நூலாக்கப்படுதல் வேண்டும் என்று வலியுறுத்திப் பேசியும் எழுதியும் வந்த தமிழ்மலை இன்று சாய்ந்து விட்டது. அவரோடு சேர்ந்து முன்னும் பின்னுமாகத் தமிழ்த தொண்டாற்றி வந்த தமிழ்ச் சான்றோர்கள் சிலரும் 1989ஆம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்தே நம்மையெல்லாம் ஏழைகளாக்கிச் சென்று விட்டனர். தாங்கள் அன்போடு அனுப்பி வைத்த `குறளியம்’ தமிழ்ப் பெரியார் முனைவர் வ.சுப. மாணிக்கம் அவர்களுக்கும் பிறர்க்கும் செலுத்தும் நினைவிதழாக இருந்தது. படித்துக் கண்ணீர் பெருக்கி நின்றேன். நிலையாமை பல யாண்டுகளுக்கு முனனர் ஒருநாள், எங்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வகுப்பு. எங்கள் ஆசிரியர் நிiலாயாமையினைக் கண்டுணர்ந்தவர் போல, நிலையாமையாகிய காஞ்சித் திணையை, மார்க்கண்டேயனார் என்ற சங்கப் புலவர் இயற்றிய புறம் 365-இன் துணைகொண்டு விளக்கிக் கொண்டு வந்தார். உலகத்தின் பெருமை நிலை யாமையில் தான் உள்ளது போலத் தோன்றுகின்றது. இளமை, யாக்கை, செல்வம் எல்லாம் நிலையற்றவை. மக்கள் பிறந்து இறந்து கொண்டே இருக்கின்றனர். ஒரு தாய்க்குத் தான் பெற்ற குழந்தைகளில் ஒன்று இரண்டு இறந்தால் தாங்கிக்கொள்ளலாம். தான் பெற்றுச் சீராட்டிப் பாலூட்டி வளர்த்த குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராகக்கூற்றுவன் வாய்ப்பட்டால் என்ன செய்வாள்? இந்தக் கொடூரக்காட்சியைக் கண்டு குழந்தைகள் ஒருவர் பின் ஒருவர் இறப்பத் தான் மட்டும் பதை பதைத்து நிற்பதைவிடத் தனக்கும் சாவு வந்து போய்விடக்கூடாதா, என்று மண் மகள் கண்ணீர்விட்டு அழுகின்றாள் என்று சொன்னார்! மாணவர் மனத்தில் என்றும் நிலைத்து நிற்குமாறு, நிலையாமை குறித்துப்பாடி என்றும் நிலைத்து நிற்பவர் மார்க்கண்டேயனார் என்றும், அந்தப்பாடலின் எண் 365 என்றும் பல குறிப்புக்களைக் கொடுத்த அந்தப் பேராசிரியப் பெருமகனார் முனைவர் வ.சுப. மாணிக்கம் அவர்களைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்த போது, எங்கள் ஆசிரியப் பெருந்தகையும் மன்னா உலகத்துப் புகழ்நிறீஇ மறைந்தார் என்ற செய்திகேட்டுச் செயலற்றுப் போனேன்! புலமையின் ஊற்று தமிழ் அன்னை வீறு தோன்றக் கொலுவீற்றிருக்கும் எங்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், நான் க்ஷ.ஹ. படிக்கத் தொடங்கிய அந்தக் காலத்திலேயே வ.சுப. மாணிக்கம் அவர்கள், புலவர் தேர்வில் முதன் மாணவராகத் தேர்வு பெற்று, எண்ணரிய பரிசில்களும் பெற்று, விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து விட்டார்கள். பால்வடியும் முகம், தெய்வ மணம் கமழும் இனிய சொல், தொல்காப்பியத்தினையும் ,தமிழ் மறையினையும், சங்க இலக்கியங்களையும் கரைத்துக் குடித்துவிட்ட தெய்வ அகத்தியரின் தோற்றம் உரையாசிரியர் அனைவருமே தம் நாவில் குடியேறியுள்ளனர் என்ற எளிமை, கணிப் பொறியினது (ஊடிஅயீரவநச) நினைவாற்றல். பலராலும் பாராட்டப்படுகின்ற புலமை. இவை அனைத்தும் அவர்பால் குடி கொண்டிருப்பதைக் கண்ட என்னைப் போன்ற மாணவ நண்பர்கள், வ.சுப. மாணிக்கம் அவர்களைச் சுட்டிக்காட்டி, திருவள்ளுவர் கூறும் `உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் என்பார்கள். நாற்பது ஆண்டுகள் கழித்து அவரை நான் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக வரவேற்ற போது, அவர்கள் மேலும் வளர்ந்து முழுமைபெற்று ஒளி விடுவதைக் கண்டு பெரிதும் வியப்புற்றேன்! மதுரைப் பல்கலைக் கழக வளாகத்தில் அவர்படைத்த பல தமிழ்ச்சொற்கள் இன்று வேரூன்றி வளர்ந்து நிழல்தரும் எழில் சோலையாக விளங்குகின்றன. முனைவர் வ.சுப. மாணிக்கனார் அவர்கள் துணை வேந்தராகப் பதவி ஏற்ற நேரம் சற்று நெருக்கடியான காலந்தான், பல சிக்கல்கள் பின்னிப் பிணைந்து அவிழ்த்துவிட முடியாத நிலையில் இருந்தன. பலவற்றிற்கும் ஒருங்கே தீர்வு காண வேண்டிய சூழ்நிலையும் உண்டாயிற்று. அவை எல்லாம் கண்டு மனம் தடுமாறவில்லை. பேராசிரியர்கள் பலரைக்கூப்பிட்டுக் கலந்து ஆலோசனை செய்வார். ஆட்சிகுழுவினருடன் மனம் விட்டுப் பேசுவார். தாமும் நன்றாக எண்ணி எண்ணிப் பார்ப்பவர் தமக்கு எதுசரி என்று படுகின்றதோ, அதனை அஞ்சாது செயல்படுத்துவார். நாட்டுப்புறத்தில் காளைகளை அடக்கு வோர்க்கும் (ஏறு தழுவுவோர்) கல்வி நிலையங்களில் காரண மின்றிக் கலவரம் செய்யும் மாணவர்களை அடக்குவதற்கும் அஞ்சாமை தவிர வேறு ஒரு துணையும் தேவை இல்லை. இந்த அஞ்சாமையே எஞ்சாது அவருக்குத் துணையாக நின்றதை நானே பலமுறை பல்கலைக்கழகத்தில் பார்த்திருக்கின்றேன். இவர்தம் வாழ்க்கையே. அஞ்சாமை அல்லால் துணைவேண்டா; எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின் என்ற குறள் மணிக்கு (497) ஒரு விளக்கமாக அமைந்து நின்றதைப் பக்கத்தில் நின்று கண்டு உணர்ந்தேன். உள்ளது சிதைப்போர் உளர் எனப்படார் முனைவர் வ.சுப. மாணிக்கனார் அவர்கள் வரவு-செலவுக் கணக்குப் பார்ப்பதில் படு சமர்த்தர்; கண்ணும் கருத்துமாக இருப்பார். தேவையான செலவு செய்ய அஞ்சமாட்டார்; ஆனால் வீண் செலவு செய்வது பிடிக்காது. ஆடம்பரத்திற்காகவோ பிறர் மெச்சவேண்டும் என்றோ `குடிப்பது கூழ், கொப்பளிப்பது பன்னீர்’ என்ற முதுமொழிபோல் செய்யும் தண்டச் செலவு பிடிக்காது. வெறுப்பார்; கூசாமல் மனத்தில் பட்டதைத் தைரியமாகச் சொல்லிவிடுவார். நிறைய அகப்பொருள் இலக்கியம் படித்தவர். ஆதலால் சங்க காலத் தலைமகனைப் போல நாமே பொருள்தேட வேண்டும்; அதற்கு என்ன வழிவகைகள் என்று எல்லோரையும் கலந்து ஆலோசிப்பார். அவருக்கு முன்பிருந்த துணைவேந்தர் பெருமக்கள் திரட்டிச்சேமிப்பாக வைத்துள்ள பணத்தைத் தொடக்கூடாது என்பார்; `உள்ளது சிதைப்போர் உளர்எனப் படாஅர்’ (குறுந்: 283) என்றுமேற்கோள் காட்டுவார். மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் அவர் இருந்த காலத்தில் சிறந்து விளங்கிய அஞ்சல்வழிக் கல்வி நிலையத்தைக் காமதேனு, கற்பகத்தரு என்றெல்லாம் புகழ்வார். அத்துறை செம்மையாக நடக்கக் காமதேனுவைச் சரியாகப் பேணிப் பாதுகாத்தல் வேண்டும். உழவன் `வித்து அட்டு உண்டதனைப்’ (புறம் 230) போல மூலத்தையே அழிக்கின்றார்களே என்பார். பொன்முட்டையிடும் வாத்து என்று வாத்தையே கொன்று விட்டால் என்ன ஆகும் எனச் சுட்டிக்காட்டிப் புதிய புதிய வருவாய்க்கு வழி காண விரும்பினார். வேலைக்குத்தகுந்த கூலி கட்டாயம் தரப்படுதல் வேண்டும்; அதே நேரத்தில் வாங்கும் கூலிக்கேற்ற வேலை செய்கின்றனரா என்பதைப் பார்த்துவிட்டுப் புதிய ஆட்களைக் கேளுங்கள் பதிவாளரே என்பார். உண்டுகளித்து வீணே திரிகின்றவரைக் கண்டால் அவருக்கு அறவே பிடிக்காது. மாணிக்கக்காலம் பொதுவாக, வரலாற்றில் சிறந்த ஆட்சி நிலவிய காலத்தைப் பொற்காலம் என்று சொல்வதுண்டு, நம்முடைய முனைவர். வ.சுப.மாணிக்கம் அவர்கள் துணைவேந்தராக வீற்றிருந்த காலத்தை இப்போதுள்ளோர் வெறும் பொற்காலம் என்று சொல்லாமல், பொன் எழுத்தால் எழுதி வைக்கவேண்டிய `மாணிக்கக் காலம்’ என்று மனமாரப் பாராட்டுகின்றனர். கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகா. பல்கலைக் கழகத்தினை நல்ல நிலைக்குக் கொண்டு வரப் பல திட்டங்களைத் தீட்டி வைத்திருந் தார். அவர் வகுத்த நெறியைப் பின் பற்றிச் சென்றிருந்தால், மதுரை நாகமலையில் மாணிக்கக் குவியலைக் கண்டிருக்கலாம். சிறப்பாகத் திருக்குறளுக்காகவும், பொதுவாகத் தமிழுக்காகவும் தம் உடல் பொருள் ஆவியனைத்தையும் செலவழித்த முனைவர் வ.சுப.மாணிக்கம் அவர்கள் இன்று தெய்வமாகிவிட்டார். அன்று அவர் வகுப்பறையில் கூறிய உள்ளேன் வாழியர் யான்எனப் பன்மாண் நிலமகள் அழுத காஞ்சியும் உண்டென உரைப்பரால் உணர்ந்திசி னோரே! என்ற மார்க்கண்டேயனார் பாடலை மீண்டும் நினைவு கூர்ந்து என், ஆசிரியப் பெருந்தகையை வணங்கி அமைகிறேன். - பேராசிரியர் ப. முருகன் நூல் நிறை நூற்பெயர் : வ.சுப. மாணிக்கனாரின் சொல்லாக்கம் ஆசிரியர்: முனைவர். பழ. முத்து வீரப்பன், இணைப் பேராசிரியர், தொலைதூரக் கல்வி இயக்ககம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர் வெளியீடு : மணிவாசகர் பதிப்பகம், 55, இலிங்கித் தெரு, சென்னை - 600 001. விலை: உருவா பத்து (10.00) ஒரு மொழி உயிருள்ளதென்பதற்கு அடையாளம் அது வழக்கிலிருப்பதும், பழையன கழித்துப் புதியன புக்கு வளம் பெற்றமைதலும் வேண்டும். அவ்வாறின்றேல் எழுத்து வடிவில் மட்டும் இருந்தும் இறந்த மொழியாகிவிடும். நம் தமிழ்மொழி உயிருள்ள மொழியாக இருப்பதற்குப் பழஞ்சொற்கள் பல வழக்கொழிந்து, புதுச்சொற்கள் பல படைக்கப் பெற்றிருப்பதே காரணங்களாகும். புதுச்சொற்களைப் படைப்பவர், அவை நிலைபேறு கொள்ளத் தக்க பல வழிகளை நினைவு கொண்டு படைக்க வேண்டும். அப்போது தாம் அவை கால்கொள்ளும், நல்ல புலமையும் சிந்தனையும் அமைந்த சொற்றிறங்கொண்டவர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார், அவர் நூல்களில் படைத்துப் பயிலச்செய்த புதுக்கிளவிகளைத் தொகுத்து, ஆழ்ந்தாய்ந்து பொருந்துவனவற்றைப் புகழ்ந்தும், பொருள் மலைவு விளைப்பனவற்றை எடுத்துரைத்து, அவற்றுக்கு வழக்கிலுள்ள எளிய சொற்களைக் காட்டியும் ஒப்பாய்வு செய்துள்ளார் முனைவர் பழ. முத்து வீரப்பனார். இவ்வழியில் இப்பணி மிகச் சிறந்தபணி, மாணிக்கச் சொல்லாக்கத்தை முத்து எடுத்து மொழிவதும் மணிவாசகர் பதிப்பகம் பதித்து வெளியிடுவதும் அணி பெற அமைந்துள்ளன. விடுபட்ட சொற்கள் விரிந்த நூலில் இடம்பெறுமென எதிர்பார்க்கலாம். நூல்: பொற்குவியல் தொகுதி ஐஐ நூலாசிரியர் : பாவர். வைரிதரளம் பதிப்பாசிரியர்: கு. உலகநாத வல்வன் எம்.ஏ. வெளியீடு: முத்தமிழ் இலக்கிய மன்றம், அம்மையப்பட்டு, வந்தவாசி - 604 408, விலை: உருவா. ஐந்து வாழ்க்கைக் கடலில் தாம் பெற்ற பட்டறிவை மற்றவர்கட்கு வழங்கி, அவர்களை வாழ வைப்பர் அறிஞர் பெருமக்கள். அவை உலகெங்கும் சிதறிச் செறிந்து கிடக்கும். அவற்றைத் திரட்டித் தொகுத்து `பொற்குவியல்’ என வைரி தரளம் வழங்கியுள்ளார். பல நூல்களையும் பயின்ற பயிற்சியும், கடின உழைப்பும், நுண்ணோக்கும் கொண்ட இவர் திரட்டியவற்றைப் `பொற்குவியல்’ எனப் புகழ்வதினும் `தரளக்குவியல்’ என்றலே சாலும், இவர் முயற்சி பலர்க்குக்கண்ணாடியாகப் பயன் தரும். - புலவர் மீ. தங்கவேலனார் பேராசிரியர் வ.சுப. மாணிக்கனாரின் வாழ்வியல் நெறி செட்டி நாட்டு வரலாறு காசுவேண்டுமா? திருக்குறள் படியுங்கள் ஒருவன் தன் வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்ள பற்பல நூல்களைக் கற்க வேண்டியதில்லை. அவன் ஒரே ஒரு நூலை மட்டும் அதாவது திருக்குறளை மட்டும் தெளிவுடன் ஆழமாகக் கற்று அதன்படி வாழ்க்கை நடத்தினால் போதும். அவனுடைய வாழ்வு சிறப்பாக அமையும் என்பது மாணிக்கனாரின் கருத்து. திருக்குறளை இந்திய நாட்டின் தேசிய இலக்கியமாக ஆக்கவேண்டும் என்பது அவரின் விருப்பமாகும். அவர் தம் பயணப் பெட்டியில் இரண்டு புத்தகங்களை எப்போதும் வைத்திருந்தார். அதில் ஒன்று திருக்குறள். மற்றொன்று திருவாசகம். திருக்குறளை குழந்தைகள் எல்லோரும் பயில வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மாணிக்கனார் தம் பிள்ளைகளிடமும் பேரக் குழந்தைகளிடமும் உறவினர் மற்றும் நண்பர்களின் குழந்தைகளிடமும் இத்தனை திருக்குறள் மனப்பாடம் செய்து ஒப்பித்தால் இவ்வளவு காசு தருவேன் என்று உரைத்தார். குழந்கைள் காசு பெறும் ஆசையில் திருக்குறளைப் படித்து ஒப்பித்தார்கள். பேச்சிலும் சிக்கனம் புகைவண்டியில், பேருந்துகளில் திருமண வீட்டில், பொது இடங்களில் இரண்டு நபர்கள் உரையாடலை உற்றுக் கவனித்தால் அவர்கள் இருவரும் மூன்றாவது நபர் ஒருவரைப் பற்றி குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள். இது உலக வழக்கு. வேண்டியவர் யாரேனும் தம்மிடம் வந்து பிறர் குறைகளையோ தேவையற்ற பேச்சையோ பேசினார் மாணிக்கனார் தண்ணீரை மடை மாற்றுவது போலப்பேச்சின் போக்கைத் திசை மாற்றுவார். புறங்கூறுதல், பிறரின் குறைகளைச் சொல்லல் ஆகியவற்றை மாணிக்கனார் `பயனற்ற சொற்கள்” எனக் கருதினார். அப்படிப் பட்ட பயனற்ற சொற்களை அவர் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை. அவர் எந்தச் சூழ்நிலையிலும் பிறர் குறைகளைப் பேசமாட்டார். பண விஷயத்தில் எப்படி அவர் சிக்கனமாக இருந்தாரோ அது போல பேசுவதிலும் சிக்கனமாக இருந்தார். முக்கியமான விஷயம் பற்றி அவசியமான நேரத்தில் அளவாகப் பேசுகின்ற நற்பண்பு மாணிக்கனாரிடம் இருந்தது. மாணிக்கனாரோடு நெருங்கிப் பழகிய முனைவர் ச. மெய்யப்பன் சொல்கிறார். “காலத்தையும், பொருளையும், சொற்களையும் வீணாக்காமல் பயன் படுத்தியவர்களில் மாணிக்கனார் பலருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.” தமிழ்ப்பற்று வேலா என்பவர் ஈரோட்டைச் சேர்ந்த தமிழறிஞர் ஆவார். இவர் திருக்குறளில் ஆழ்ந்த புலமை மிக்கவர். ஒரு முறை மாணிக்கனார் ஈரோடு சென்ற போது வேலாவைச் சந்திக்க விரும்பினார். வேலா அவர்கள் ஊரில் உள்ளாரா? எனத் தெரிந்து கொண்டு பின் அவரது இல்லம் சென்று சந்திக்கலாம் என்பதற்காக மாணிக்கனார் வேலாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்பொழுது வேலா அவர்கள் “எங்கிருந்துபேசுகிறீர்கள்? இடத்தைக் கூறின் அங்கு வந்து மகிழ்வுந்தில் அழைத்து வருகிறேன்” என்றார். அதற்கு மாணிக்கனார் “வேண்டாம். வேண்டாம், நீங்கள் இங்கு வர வேண்டாம். ஆர்வத்தோடு தமிழ்த் தொண்டு புரியும் அன்பர்களை அவர்தம் இல்லத்திற்குச் சென்று காண்பதே முறை. நான் தங்களை வந்து சந்திக்கிறேன் என்று சொல்லி விட்டு வேலாவை அவர்தம் இல்லத்திற்குச் சென்று சந்தித்து உரையாடி மகிழ்ந்தார். தமிழறிஞர்கள் மீது அவர் கொண்டிருந்த பற்று இதிலிருந்து தெரிய வருகிறது. மாணிக்கனார் செல்வரையோ உயர் பதவியில் உள்ளவரையோ நேரில் சென்று சந்திக்க மாட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. நாமெல்லாம் கடிதம் எழுதும் போது தொடக்கத்தில் பிள்ளையார் சுழி போட்டு எழுதுவோம். ஆனால் மாணிக்கனார் பிள்ளையார் சுழிக்குப் பதிலாக `த’ என்ற எழுத்தை எழுதி விட்டுத் தொடங்குவார். `த’ என்ற எழுத்து தமிழைக் குறிக்கும். தமிழ் வாழ்த்துடன் கடிதம் எழுதுவது மாணிக்கனாரின் தனித் தன்மையாகும். தமிழை அவர் கடவுளுக்கு நிகராகக் கருதினார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. என்னே அவரது தமிழ்ப பற்று! மாணிக்கனாரின் நகைச்சுவை மாணிக்கனார் தம் நண்பர் ஒருவரை நீண்டகால இடைவெளிக்குப் பின் சந்தித்தார். அந்த நண்பர்அடையாளம் காண முடியாத அளவிற்கு உடல் பருத்துக் காணப்பட்டார். அவரைப் பார்த்து மாணிக்கனார் இப்படிச் சொன்னார். “என்னப்பா நீ வான் நோக்கி வளராமல் திசை நோக்கி வளர்கிறாயே!” இதைக் கேட்ட அந்தக் குண்டான நண்பரே தன்னை மறந்து சிரித்து விட்டார். மாணிக்கனார் “தமிழ்க் கல்வி பயின்றவரிடமே அதிகாரம் மிகுதியாக உண்டு. பிற கல்வி பயின்றவர்களிடம் அவ்வளவு அதிகாரம் இல்லை” என்றார். இதைக் கேட்ட அனைவரும் பொருள் புரியாது விழித்தனர். உடனே மாணிக்கனார் விளக்கம் சொன்னார். தமிழ் படிக்கும் நம்மிடமே எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், சிலப்பதிகாரம் எல்லாம் உள்ளன என்றார். இதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். மாணிக்கனாரின் வாழ்க்கை வரலாறு நமக்கெல்லாம் ஒளி விளக்காக அமைந்து “வாழும் நெறி காட்டுகிறது. `தமிழ்க் காந்தி’ எனப் போற்றப்படும் “பொய் சொல்லா மாணிக்கனாரைப்” போல எளிமையாக, அடக்கமாக, நேர்மையாக வாழ்வோம்! முன்னேற்றம் என்பது நம்மைத் தேடி வரும்!! -முனைவர் நா. அழகப்பன் எம்.ஏ., எம்.பில்., பி.எச்.டி., இரா. சாரங்கபாணியாரின் வாழ்த்து அண்ணாமலை யெனப் பிள்ளைத் திருநாமங் கொண்ட மாணிக்கனார் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மேலைச் சிவபுரியில் 17-4-1917இல் சுப்பையா செட்டியார்க்கும் தெய்வயானை ஆச்சிக்கும் மகவாய்த் தோன்றினார். இளம்பருவத்திலே பெற்றோரை யிழந்த இவர், தம் பாட்டனாரால் புரக்கப் பெற்றார். பின் பர்மாவுக்குச் சென்று கடையிற் பணிபுரிந்தகாலை பொய் கூற வேண்டிய கட்டாய நிலை ஏற்படவே, அப்பணி துறந்து தமிழ்பயிலத் தொடங்கினார். பண்டிதமணி கதிரேசனார் முதலியோர்தம் உதவியால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் வகுப்பிற் பயின்று முதன்மையாகத் தேர்ச்சியுற்றார். சில திங்கள் அப்பல்கலைக் கழகத்திலேயே ஆய்வு மாணவராகவிருந்து பின் ஏழாண்டுகள் அங்கேயே விரிவுரையாளராகப் பணியாற்றினார். அப்பொழுதே தனிமையாகப் படித்து பீ.ஒ.எல்., எம்.ஏ. பட்டங்கள் எய்தினார். அதற்குப் பின்னர், ஆய்வு மேற்கொண்டு `தமிழில் வினைச்சொற்கள்’ பற்றி ஆய்ந்து எம்.ஓ.எல். பட்டமும் `தமிழில் அகத்திணைக் கொள்கைகள்’ பற்றி ஆய்ந்து பி.எச்.டி. பட்டமும் பெற்றார். பின்னர் 1948 தொடங்கி இருபதாண்டுகள் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணிபுரிந்தார். மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் போந்து, தமிழ்த்துறைத் தலைவராகவும் இந்திய மொழிப்புல முதன்மையராகவும் தொண்டாற்றினார். பின் மதுரை - காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவியேற்றுத் தமிழியல் வளர்ச்சிக்கும் பிற அறிவியல் துறைகளின் வளர்ச்சிக்கும் வழிவகுத்துத் துணை நின்றார். திருவனந்தபுரத்தின் மொழியியற் கழக ஆய்வு முதியராக வேலை பார்த்த போது தமிழ்யாப்பு வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதினார். தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் தொல்காப்பியத் தகைஞராகப் பணி செய்ததன் பயனாகத் தொல்காப்பியத்துக்கு அவர்தம் புத்துரை விளக்கம் கிடைத்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பொன்விழாவில் இவர்க்கு டி.லிட்டுப் பட்டம் நல்கிச் சிறப்புச் செய்தது. குன்றக்குடி ஆதீனம் முதுபெரும் புலவர் என்னும் சிறப்புப் பட்டத்தையும் மேலைச்சிவபுரி, சன்மார்க்க சபை செம்மல் என்னும் சிறப்புப் பட்டத்தையும் நல்கின. தமிழ்ப் பல்கலைக் கழகத் தொடக்க நிலையில் செயன் முறைகளை வகுக்க அமைக்கப் பெற்ற வல்லுநர் குழுவின் தலைவராகவிருந்து அதன் வளர்ச்சிக்கு வழி வகுத்தார். தமிழகப் புலவர் குழுவிற்கும் இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்திற்கும் மேலைச்சிவபுரி சன்மார்க்க சபைக்கும் தலைவராகத் திகழ்ந்து இவர் ஆற்றிய பணிகள் மிகப் பல. காரைக்குடித் தமிழ்ச்சங்கம் நிறுவிச் சங்கவிலக்கிய வகுப்பு நடத்தியும் இளஞ்சிறார்க்கு அறநூல்கள் ஒப்பித்தல் போட்டி வைத்துப் பரிசுகள் வழங்கியும் ஒல்லும் வகையெல்லாம் தமிழ்த் தொண்டு செய்தார். தில்லையில் அம்பலத்தின்கண் நின்று திருமுறைகள் ஓதி வழிபடப் பேராசிரியர் க. வெள்ளை வாரணனார் போன்றோரின் துணையோடு போராடி வாகைசூடினார். வள்ளல் அழகப்பரின் கொடைவளம் ஏத்திக் `கொடை விளக்கு’ என்னும் கவிதைநூல் படைத்தார். இவர்தம் தனிப்பாடல்களின் தொகுப்பு `மாமலர்கள்’ என்னும் பெயரில் வெளிவந்துள்ளது. இவர்தம் படைப்புக்களுள் வள்ளுவமும் தமிழ்க் காதலும் இருகண்களெனப் போற்றத் தக்கவை. தொல்காப்பியக் கடல், திருக்குறட்சுடர், சங்கநெறி, காப்பியப் பார்வை, இலக்கியச் சாறு, தமிழ்க் கதிர், தலைவர்களுக்கு முதலியவை இவர்தம் பிற படைப்புக்கள். திருக்குறளை யாவரும் எளிதில் புரிந்து கொள்ள உரை நடையில் திருக்குறள் என்னும் நூலை இயற்றியுள்ளார். மணிவாசகர் நூலக வெளியீடான கம்பர் என்னும் இவரது நூல் தமிழக அரசின் பரிசு பெற்றது. தமிழ் யாப்பு வரலாறு. தமிழில் வினைச் சொற்கள், தமிழில் அகத்திணைக் கொள்கைகள் என்னும் நூல்கள் இவரால் ஆங்கிலத்தில் எழுதப் பெற்றவையாகும். மன்பதையின் முன்னேற்றங் கருதி இவர் படைத்த நாடகங்கள் மனைவியின் உரிமை, நெல்லிக்கனி, உப்பங்கழி, ஒரு நொடியில் என்பன. மழலையர் ஆங்கிலப் பள்ளிகளைத் தமிழ்ப் பள்ளிகளாக மாற்றவேண்டும். தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை பயிற்று மொழி தமிழாதல் வேண்டும் என்னும் கொள்கையினைப் பரப்பத் தமிழ்வழிக் கல்வி இயக்கங் கண்டு அதனைத் தமிழகம் எங்கணும் நடத்தி வந்தார். எழுத்துச் சீர்திருத்தம் என்னும் பெயரில் எழுத்து மாற்றம் செய்து தமிழுக்கு ஊறுசெய்த லாகாது என்பதனைத் தம் கட்டுரைவழி அறிஞருலகத்திற்கு உணர்த்தினார். தமிழ்வழிக் கல்வி என்பதும் எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை என்பதும் அன்னாரின் இறுதிக் குறிக்கோளாக அமைந்தன. இவர் எளிய தோற்றமும் உயரிய நோக்கமுங் கொண்ட பழுத்த தமிழறிஞர். சிறந்த சிந்தனையாளர் தனித்தமிழ் ஆக்கத்திற்குத் தாமே புதிய சொற்களைப் படைத்து எல்லா நிலையிலும் எங்குந் தமிழ்வளர ஓய்வென்ப தறியாது உழைத்த உரஞ்சான்ற வித்தகர். அனைத்துக்கும் மேலாகப் பண்புவழி உலகினை நடத்தத் தம் மதி நுட்பத்தையும் நூற்புலமையையும் அசைவிலா ஊக்கத்தோடு பயன்படுத்தி வந்த சான்றோர். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், இத்தலைமுறையில், பல நிலையினும் சிறந்தோங்கித் தமிழ்ப் பணிக்காகவே வாழ்ந்து பண்பின் திருவுருவாகத் திகழ்ந்த மூதறிஞர், செம்மல் மாணிக்கனார் 24-4-89 இல் எதிர்பாரா வகையில் மறைவெய்தியது தமிழன்னையின் தவக்குறையேயாம். - முனைவர் இரா. சாரங்கபாணி சிறப்புநிலைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வ.சுப.மா. வாழ்த்து உலகத்தின் மூத்தமொழி உயர்தனிச்செம் மொழியெனவே உயர்ந்தோ ரேத்தும் நலமிகுநம் தமிழ்மொழியை நல்லாசான் பலரிடமே கற்றுத்தேர்ந்து புலமையொடு பொருவறுஞ்சீர் இயல்பனைத்தின் நிறைகுடமாய்ப் பொலியும் செம்மல் நிலவுலகில் தமிழ்மொழியைத் தாய்மொழியைக் காப்பவருள் நிகரில் லாதோய்! மன்னுபெருந் தமிழ்க்கடலாய் வள்ளுவத்தின் நெறிநிற்கும் வாய்மை யாள! பன்னரிய இலக்கியங்கள் உரைநடைநூல் நாடகங்கள் பலவும் யாத்துப் பொன்னொளிரும் பொருள்பொதிந்த வள்ளுவம்போல் புதுச்சொற்கள் பலவும் ஆக்கும் தன்னிகரில் மூதறிஞ! தமிழ்காக்கும் துணைவேந்தே! தமிழே! வாழி! - பெரும்புலவர் த. முருகேசனார் (சிதம்பரம்) தமிழ்ச் செம்மல் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் அவர்களை முப்பது ஆண்டுகளாக அறிவேன். 1970 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பதவி யேற்றது முதல் கடந்த இருபது ஆண்டுகளாக மிக நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவருடைய தலையாய பண்பு சொல்லும் செயலும் ஒத்திருத்தல், மனத் தூய்மையுடன் எல்லா வினைகளையும் தூய்மையாகச் செய்தல், பதவியில் உள்ள பொழுது ஒல்லும் வகை யெல்லாம் பணிகள் செய்து பதவிக்குப் பெருமை சேர்த்தல் என்பன. காலை 6 மணி தொடங்கி இரவு 10 மணி வரை படிப்பதும் எழுதுவதும் அவர்களுக்குப் பழக்கப்பட்ட செயல். திருக்குறள் பாட நூலாக ஓதப்படுவதைவிட, பின்பற்றப்பட வேண்டிய நூல் என்பதனைத் தம் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், பின்பற்றிக் காட்டினார்கள். அமைச்சர்கள், நீதிபதிகள், உயர் அலுவலர், பணிசெய்யும்போது “முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும் படுபயனும் பார்த்துச் செயல்” என்ற திருக்குறளைக் கருதிச் செயல்படுவார்க ளாயின் பிழை செய்து இரங்கும் நிலை ஏற்படாது என்பதை அடிக்கடி சுட்டிக் காட்டுவர். அவர்கள் பயணப் பெட்டியில் திருக்குறளும், திருவாசகமும் எப்போதும் இருக்கும். ஒவ்வொரு செயலையும் மிகுந்த பயன் விளையும்படி யாகவும், நெடுநாட்களுக்குப் பயன் தரும்படியாகவும் பணவிரையம், கால விரையம், மனித ஆற்றல் விரையம் ஆகாதவாறு செய்வது அவர் இயல்பு. அனைத்திந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மாநாட்டில் படிக்கப்படும் கட்டுரைகள் அனைத்தையும் தட்டச்சு செய்துவழங்கும் வழக்கத்தைத் தவிர்த்து அச்சிட்டு வழங்கும் அரிய பெரிய செயலுக்கு வழிவகுத்தார். காலத்தையும், பொருளையும், சொற்களையும் வீணாக்காமல், பயன்படுத்தியவர்களில் மாணிக்கனார் பலருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அழகப்பா கல்லூரியில் ஆயிரக் கணக்கான தென்னை மரங்கள் வைத்துக் கல்லூரிக்குத் தொடர்ந்த வருவாய்க்கும் வழி செய்தார். மதுரைப் பல்கலைக் கழகத்தில் ஊழியர்களுக்குக் குடியிருப்பு வசதிகள் பெரிய அளவில் அமைத்ததும் கலைநுட்பம் நிறைந்த அழகுமிகு தோரண வாயிலை அமைத்ததும் இவருடைய பெருமைக்குச் சான்றாகும். அறிவியல் துறைகள் பலவற்றைப் புதியவாக உருவாக்கியதும் தமிழியல் துறை அமைத்ததும் வெளியீட்டுத் துறையைத் தோற்றுவித்ததும் இவர் செயற்றிறத்திற்குச் சிறந்த காட்டுகள். ஒவ்வோர் ஆசிரியரும் முப்பத்தைந்து வயதிற்குள் டாக்டர் பட்டம் பெற்று விட வேண்டும்; சொந்த வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என்று கூறி ஒவ்வொருவரும் இதில் முனைப்பாக இருக்க வலியுறுத்தித் தம் உடனாசிரியர்களை நல்லாற்றுப் படுத்துவார். வ.சுப.பொய்ம்மைக்கு மட்டும் பகைவர் அல்லர்; புதுக் கவிதைக்கும், எழுத்துச் சீர்திருத்தத்திற்கும் கூட. ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டைச் சீரோடும் சிறப்போடும், நடத்தியது அவர் செயல் திறனுக்குச் சான்று. தமிழையும் , தமிழாசிரியர்களையும் குறைத்துப் பேசுபவர்களை எந்த உயர்பதவியி லிருந்தாலும் கண்டிக்கத் தவறமாட்டார். யாப்பியலில் தனித்திறம் சான்றவர். தமிழ்யாப்பின் சிறப்புக் கூறுகளை ஆய்ந்து ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். மறைமலையடிகள், பாரதிதாசன், பாவாணர் வழியில் தமிழ் இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார். தமிழ் வழிக் கல்வி இயக்கத்தைத் தொடங்கி இறுதி மூச்சு வரை தமிழகம் எங்கும் பரப்பிவந்தார். திருமுறைகளைத் தில்லைக் கோவிலிலே பொன்னம்பலத்தில் பாட அனுமதி யில்லாத ஒரு மரபை அறவே மாற்றி இப்போது அம்பலத்தில் பாடிவர அவர் வழி வகுத்தது வரலாற்றில் இடம் பெறத்தக்கது. பிறந்து மொழிபயிலத் தொடங்கும நாளிலேயே தாய்மொழி வழியேதான் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். குழந்தைகiளுக்குப் பிறமொழியைத் திணிக்கக் கூடாது. ஆங்கில மொழித் திணிப்பால் தமிழ்க் குழந்தைகள் மரபு திரிந்து பண்பு கெட வாய்ப்பு ஏற்படுகிறது. மழலைகளுக்கு ஆங்கிலத் திணிப்பை எல்லா வகையிலும் தவிர்க்க வேண்டும் என்று அறுதியிட்டுத் தெளிவாக விளக்கினார். மழலையர் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை தமிழ் ஒன்றே பயிற்று மொழியாதல் பல்கலைக் கழகம் என்பதனைப் பரப்பத் தமிழ் வழிக் கல்வியியக்கம் கண்ட தலைவர். இச் செயல் தமிழக வரலாற்றில் என்றும் தன்னிடம் பெறத்தக்க சிறப்பினது. பேராசிரியராகவும் கல்லூரி முதுல்வராகவும் துணை வேந்தராகவும் விளங்கிய அவர்கள் நிழற்படம் எடுத்துக் கொள்வதில் விருப்பம் செலுத்துவதில்லை. உயர் பதவியிலுள்ள ஒவ்வொருவரும் நூற்றுக்கு மேற்பட்ட படங்களைத் தொகுத்து வைத்திருக்கும் இந்நாளில், அவர் இறந்த வேளையில் தொலைக்காட்சியில் காட்டுவதற்கு ஒரு படம் கூடக் கிடைக்கவில்லை. பட்டம் பதவிகளை நாடி அவர் அலைந்த தில்லை பல நிறுவனங்கள் அவருக்குச் சிறப்புச் செய்ய முயன்றும் அவர் மறுத்துள்ளார். அவர் எப்போதும் பரிசுப் பொருள்கள் பெற்றதில்லை. தம்மைக் காண வருபவர் பழங்களைக் கொடுத்தாலும் அப்போதே உடனிருப்போருக்குப் பகிர்ந்து அளிப்பார். நிறுவனங்களில் அலுவலர் சேர்ந்து சுருட்டும் பணத்தைக் “கூட்டுக் கொள்ளை” என வருந்திக் கூறுவார். தம்மிடம் பிறரைப் பற்றி யாரும் குறைவாகப் பேசுவதற்கு அனுமதிக்க மாட்டார். சீரெல்லாந் தூற்றிச் சிறுமை புறங்காப்பது அவர் இயல்பு. வாய்மையும் தூய்மையும் எளிமையும் கடைப்பிடித்த தமிழ்க் காந்தி என அவரைச் சொல்லலாம். துணைவேந்தர் பதவிக் காலத்திலும் தூய்மையான வாழ்க்கை, எளிய உடை, காட்சிக்கு எளிமை, தேவைகளை மிகவும் குறைத்துக் கொள்ளல் ஆகியவற்றைக் கடைப்பிடித்தார். தம் பணிகளைத் தாமே செய்து கொள்வார். எந்த நேரத்திலும் தம் சொந்த வேலைக்குப் பிறர் துணையை நாடாமல் தாமே முடிப்பார். எளிய உணவு, இயற்கை மருத்துவம், தாய் மொழிக் கல்வி, முதலியவற்றில் இயல்பாகவே ஈடுபாடு மிக்கவர். தாம் எழுதும் முன்னுரைகளில் கூட, புத்தம் புதிய உவமைகளைப் படைப்பது இவர் தனிச்சிறப்பு. சங்கச் சான்றோராக வாழ்ந்த மாணிக்கனார் தெளிவான சிந்தனையும் கொள்கையில் உறுதியும் வெளியிடுவதில் துணிவும் கொண்டு நிகரில்லாத தமிழ்ப் பேராசிரியராகத் தமிழகத்திற்கு வழிகாட்டியாக விளங்கினார். தமிழ் வழிபாட்டுத் தொண்டினை இறைவழிபாடாகக் கொண்டவர். பிள்iயார் சுழிக்குப் பதில் “த” என்று தொடங்குவது இவரியல்பு. த-தமிழைக் குறிக்கும் நாடு, மொழி, இனம், அரசு, சமுதாயம், சமயம், கல்வி, பற்றிய இவர்தம் சிந்தனைகள் அனைத்தையும் மிகத் தெளிவாகத் `தமிழ்க்கதிர்’ என்னும் நூலில் விளக்கியுள்ளார். சிந்தனைகளில் கொள்கைத் தெளிவும் உறுதியும் பளிச்சிடக் காணலாம். இந்நூலில் தம்முடைய வாழ்க்கைக் கொள்கை களையும் அறுதியிட்டு உறுதி செய்துள்ளார். - முனைவர் ச. மெய்யப்பன் தணியாத “தமிழ்க்காதல்” கொண்டிருந்தார்! தன்னிகரில் வள்ளுவத்தைப் படைத்து நின்றார்! அணிசிறந்த கம்பனையும் அளந்தார்! வென்றார்! அன்னைக்குத் துறைதோறும் புதுமை கண்டார்! பணியாது தமிழ்க்கென்று துடித்தார்! யார்க்கும் பணியாது மொழிவளர்த்தார்! பயன்நூல் தந்தார்! இணையில்லா மாணிக்கம் இறந்தாராமே! எழுத்தாளர் சிந்தனையால் இருக்கின்றாரே! - பழ. முத்துவீரப்பன் மாணிக்கனார் இலக்கண இலக்கியப் புலமை மட்டும் உடையவர் அல்லர்; அவர் நல்ல கவிஞர்; புதுமை நாட்டம் உடையவர். அவர் சிந்தனை புதிது. மேலும் அவர்களிடம் விழுமிய உணர்ச்சியும், உயர்ந்த கற்பனையும், சிறந்த படைப்பாற்றலும் நிரம்பி இருப்பதால் தான் அவர்களால் புதுச் சொல்லாக்கங்களைத் தமிழுக்குத் தர முடிகின்றது. அவர்களுடைய புதுச் சொல்லாக்கத்திற்கு இலக்கண இலக்கியப் புலமை துணை செய்திருக்கலாம். வழிகாட்டி இருக்கலாம். புதுச் சொல் படைக்கும் வித்தகம் கைவரப் பெற்ற மாணிக்கனார், தமக்கென்று ஓர் அணியை உண்டாக்கியுள்ளார். - பேராசிரியர் மு.வை. அரவிந்தன் -அரசுகலைக்கல்லூரி, கிருட்டினகிரி ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாகத் தமிழ்ப் படிப்பு வட்டத்தில் முதல் நிலைக் கருத்தாளராக மாணிக்கனார் இருந்தார். இவர் ஆய்வுப் பயிற்சி தன் முயற்சியால் பெற்றது. தமிழ் ஆசிரியர்கள் பின்னிற்பதை விரும்பாதவர். எதிலும் முன்னிற்க வேண்டும் என்று விரும்பினார். தானே எடுத்துக்காட்டாக இருக்கவும் முயன்றார். வ.சுப.மா.வின் ஆழ்ந்த பயிற்சியும் நேர்மையும் பற்றற்ற நிலையும் மாணவர்களால் பாராட்டப்பட்டன. தமிழ் இலக்கிய இலக்கண விளக்கத்தின் தனித்துவம் ஒன்றை நிலைநாட்டியவர் வ.சுப.மா. - முதுமுனைவர் வ.அய். சுப்பிரமணியன் (முன்னாள் குமுதம் - மறைந்த தமிழறிஞர் வ.சுப. மாணிக்கம் பற்றி பழைமை நேசனாகவும் புதுமை விரும்பியாகவும் வாழ்ந்து, தமிழ் மொழியின் அகல நீள ஆழங்களை அளக்க முயல்வதிலும் தான் கண்டெடுத்த ரத்தினங்களை வரையாது வழங்குவதிலும் வாழ்க்கையைச் செலவழித்த தில்லை, சம்பாதித்துக் கொண்ட - வள்ளல். புதுப் புதுத் தொடர்களைக் கோத்து ஒளி சிந்திய தமிழ்ச சுடர் (லாபம் ஒன்றையே குறியாகக் கொளவதைச் சந்தை நோக்கு என்பார். தனி மனிதரை ஆகா ஓகோ என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் பழக்கத்தைத் தொழுநோய் என்பார்.) எழுத்தாற்றல் என்பது யாது? அதன் பயன் என்ன? வாசகர்கட்கு மன மெலிவைத் தராது மெலிந்த மனத்தை நிமிர்த்துவது. மின்அலை போல் புதுத் தெம்பு பாய்ச்சுவது, தற்சிந்தனையைக் கிளறுவது இதுவே எழுத்தின் அறுவடை யாகும், என்ற கொள்கை உடைய `ப’டைப்பாளி, வ.சுப. சான்றாண்மை போற்றும் தமிழ்ப்பெரும! கற்றோருள் தோன்றாண்மை மிக்க சுடர்ப்பரிதி! கொள்கையினில் எள்ளளவும் மாறாத ஏந்தலே! எந்தமிழ்தான் உள்ளளவும் வாழும் உரம்மிக்க பேராசான்! மக்கட் பெயரெல்லாம் மாத்தமிழின் நற்பெயராய் ஒக்கவைத்த பற்றாள! உண்மைத் தமிழ்த்தொண்ட! கல்லா இனம்எல்லாம் கற்கவைத்த வேள்என்றே எல்லோரும் ஏத்தஎழில் அண்ணா மலைமன்னைச் சொல்லெடுத்துப் பாடிய தூயோனே! நின்னிடத்தில் ஒல்லும் வகையால் வினைபுரிந்த ஆசான்மார் பல்லோரும் போற்றப் பணிபுரிந்த மூதறிஞ! மாணிக்க மாமலையே! மாட்சியுறும் ஆராய்ச்சி பேணிப் பலபனுவல் பைந்தமிழ்த்தாய் ஏற்றிடவே காணிக்கை வைத்த கவினார் தமிழ்க்களிறே! ஆணிப்பொன் ஒத்த அருந்தமிழ்க்கு இன்னலெனின் ஓடிப்போய் முன்நின்றே உண்மைக் குரல்கொடுக்கும் பாடி மறவனே! பால்போல் மனத்தோனே! தன்மானம் ஓங்கத் தமிழ்ப்புலவன் வாழ்வதற்கு முன்மானம் காத்த முதல்வனே! நற்சிறாஅர் தாய்தமிழே வாயிலாய்த் தாழ்விலாக் கல்விபெற வாய்மை இயக்கம் வளர்த்த தமிழ்மகனே! உள்ளுதொறும் உள்ளுதொறும் ஓங்கும் உணர்வளிக்கும் வள்ளுவரும் கம்பரும் வளர்தமிழ்க் காதலுமே ஆய்வுநெறிக்(கு) ஆணியாய் ஆன்றோர்க்(கு) அருவிருந்தாய் தேய்வறியாச் செல்வங்கள் செந்தமிழ்க்குத் தந்தவனே! எண்மையனே! திண்மையனே! எண்ணம் சிறந்தவனே! `அண்ணா மலையில் அடிவைத்தற்(கு) அஞ்சியே கண்ணார் கதிரேச மாமணியைக் காலன்தான் அண்டர் உலகுய்த்த அற்புதத்தைக் கம்பனின் பண்கொண்டுபோற்றுவோய்! பார்க்கில் அதுநெறியாய் விண்கொண்டு சென்றானோ வீரமிலாக் காலனுமே! மீண்டுமொரு சங்கப் புலவனை மேதையினை யாண்டுபோய்க் காண்போம் இனி. - முனைவர் சொ. ந.கந்தசாமி (தலைவர், இலக்கியத்துறை, தமிழ்ப்பல்கலைக்கழம்) மாணிக்கச் செல்வ மணித்தமிழ் அன்னைக்குக் காணிக்கை யாய்வாய்த்த கண்ணாள - பேணிக்கை வைத்த துறையெல்லாம் வாய்ந்த துறையாக்கி வைத்தநீ எங்களின் வைப்பு. - புலவர் இரா. இளங்குமரன் உலக எழுத்தறிவு ஆண்டு 1990 வ.சுப.மாணிக்கனார் என்னும் வழிகாட்டி `நூறுக்கு மேல் ஊறும்’ என்பது ஒரு பழமொழி. நூற்றொன்று நூற்றிரண்டு ஒன்பதாக எண்ணப்படும் என்பது பொதுவான கருத்தானாலும் அவ் எண்ணிக்கை காற்றோடு காற்றாக இல்லாமல் எல்லோர் எண்ணத்திலும் எண்ணப்படும சிறப்பைத்தான் இப்படி மொழி ஒருவரின் வாழ்ந்த வயதின் பயனைச் சான்றாக காட்டும் என்பது வருத்து. அதாவது எத்தனை ஆண்டு வாழ்ந்தார் என்பதினும் எப்படி வாழ்ந்தார் என்பதே கணக்கிடப்படும் என்ற கருத்தின் அடிப்படையில் மரணமில்லாப் பெருவாழ்வு குறிப்பதே இப்பழமொழிக்கான சிறப்புப் பொருள். அந்தவகையில் தோன்றிற் புகழுடன் தோன்றுக என்றபடி 17.04.1917 இல் தோன்றித் தமிழ்கூறு நல்லுலகிற்குப் பல்வேறு வகையில் அறிமுகமானவரே தமிழ்சசெம்மல் மூதறிஞர் வ.சுப. மா. என்னும் வ.சுப.மாணிக்கனார் ஆவார். வாய்மையைத் தாரக மந்திரமாகக் கொண்டவர், தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழங்கால்பட்டவர், எதையும் மறித்தோடிச் சிந்திக்கும் தற்சிந்தனையாளர். அன்னாரின் நூற்றாண்டுக் கொண்டாட்டம் 17.04.2017இல் நிறைவடையும் நிலையில் அவர் பற்றி உரைப்பது சமுதாயத்திற்குச் சாலும் என எண்ணிக் கீழ்க்கண்ட அவர் தம் பாடலை ஆரோவில் செய்தி மடலுக்குக் காணிக்கையாக்குகிறேன். தரப்படும் பாடல் அவர்தம் உயிர்ப்பாட்டும் எனலாம் ஆம்! உயில் பாட்டு என்றாலும் தகும்! நல்லாவின் பால்முழுதும் கன்றுக்கில்லை நறும்பூவின் மணமுழுதும் சோலைக்கில்லை நெல்லாரும் கதிர்முழுதும் நிலத்திற்கில்லை நிறைகின்ற நீர்முழுதும் குளத்திற்கில்லை பல்லாரும் கனிமுழுதும் மரத்துக் கில்லை பண்ணரம்பின் இசைமுழுதும் யாழுக்கில்லை எல்லாமே பிறர்க்குழைக்க காணுகின்றேன் என்வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும் வேண்டும்! இது அவரது விருப்பமுறி (உயில்) போன்றதொரு பிரகடன வாசகம்! என் வாழ்வும் பிறர்க்கு உழைக்க வேண்டும்! வேண்டும் என்றது இக்கவிதை எழுதியவரின் குறிக்கோள் போல் தோன்றினாலும் இதைப் படிப்போர் யாவரும் தம்மைத் தாமே பிறர்க்கு உழைக்கும் விருப்பைத் தெரிவிப்பது போன்ற பொதுமையில் உள்ளதால் வ.சுப.மாவின் வாழ்வு மனித குலத்திற்கு முன்மாதிரி போன்றதாம் எனலாம்! வாழ்க! வ.சுப.மா. நூற்றாண்டு. - தமிழாகரர் தெ.முருகசாமி புதுவை. மூதறிஞர் செம்மல் வ.சுப.மா. துன்பமாலை செவிப்புலம்புக்க செந்தீ! தி.பி. 12.4.2020 செவ்வாய் காலை (25.4.89) வழக்கம் போல் வானொலி கேட்குங்கால் மாநிலச் செய்தியில் வந்தது செந்தீ! செவிவழி புக்க அது செவியையும், சிந்தையையும் ஒருசேரச் சுட்டது! புதுவைப் பல்கலைக் கழகத்திற்குப் போந்த மூதறிஞர்செம்மல், முனைவர் வ.சுப. மாணிக்கனார் அமரரானார் என்ற அஃது அகமும் முகமும் அழுங்க அலறியது. “ஆங்கிலமே வெளியேறு! அன்னைத்தமிழே வேலை பெறு!” என்ற முழக்கத்தை இனிக்கேட்க இயலாதே எனவும், திருக்குறள் வழி அமைய இருக்கும் சமுதாயமான குறளாயத்தார், `திருக்குறள் நம் மறை” என்று கூறுவது, `நம்மாழ்வார்’, `நம்பிள்ளை’, `நஞ்சீயர்’ என்பவை போன்றதோர் வழக்கென்றும் வலிவு வழங்கிய குரல் இனி ஒலிக்காதே என்றும் உள்ளம் மறுகிக் கவன்றது. உடனே ஓர் பொன்னாடையுடன் காரைக்குடி நோக்கி வழிக்கொண்டோம். பாவலர் திரு. ஈவப்பனார் 3-4-2020 ஞாயிறு (16-4-89) காலை முதல் மாலை வரை திருச்சி தமிழகப் புலவர் குழுக் கூட்டத்திற் கண்டு கலந்துரையாடியக் கால், கோவை நகரத்தில் தமிழ்வழிக் கல்வி இயக்கத்தைச் சிறப்பாகவும் எடுப்பாகவும் அமைக்கத்தக்க முயல்வுகளைச் செய்யுமாறு கூறிய அறிவுரையும், செவியுரையும் சிந்தை நிரம்பப்பெற்ற ஈவப்பனார் வானொலிச் செய்தி வேள் எவ்வி மறைவு பற்றி வெள்ளெருக்கிலையார் பாடிய இரங்கலுரையான `பொய்யாகியரோ’ எனப் பூசல் புரிந்து வழிக்கொண்டார். பிற்பகல் 3.45 மணிக்குப் புதுக்கோட்டை புக்க பின்னர் மாலை ஏடுகளில் மறைவுச்செய்தி வந்திருக்கக்கண்டு மனத்துயர் மிக்கோம். மாலை 6.30 மணிக்குக் காரைக்குடிக் கதிரகத்துள் தமிழ்க்கென உழைத்த தகைசான்ற பருவுடல் அமைதியாகப் பெருந்துயிலில் இருப்பக்கண்டு நெஞ்சு கொள்ளாத விம்மலுடன் கண்ணீர் பெருக்கி நின்றோம். மக்களும் அவர்தம் உடன் பிறந்தார்களும் அருகில் வந்து மனம் மறுகினார்கள். அழகப்பா பல்கலைக் கழகக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் திரு. செல்வக்கணபதி, முனைவர்கள் திரு. அ.விசுவநாதன், திரு. ஞானசேகரன், பாவலர் மணி திரு. ஆ. பழனி, முனைவர் பயிற்சியிலிருந்த முதுகலைஞர் பலரும் சூழவிருந்தனர். நெடுந்துயிலிலிருந்த மூதறிஞர் தலைமாட்டிற் பலகணிப் பாங்கர் இருந்து பட்டுக்கோட்டைப் புலவர் தங்கவேலானரும் தமிழகப் புலவர் குழு உறுப்பினரான பாவலர் சித்தோடு ஈவப்பனாரும் குறளாயமுறை வழுவாமல் திருக்குறள் முற்றோதல் செய்தனர். பிற்பகல் 3,15 மணிக்கு மதுரைத் திரு. பி.டி.ஆர். பழனிவேல்ராசன் அவர்கள் தலைமையில் இரங்கல் கூட்டம் நடந்தது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணை வேந்தர் முனைவர் திரு. இலட்சுமணன் அவர்களும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் முனைவர் திரு.ச. அகத்தியலிங்கனாரும், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் துணை வேந்தர் திருமதி. இராதா தியாகராசன் அவர்களும், திருப்பத்தூர்த் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் திரு. தென்னரசு அவர்களும், காரைக்குடி உறுப்பினர் திரு. இராம. நாராயணன் அவர்களும், அண்ணாமலைப் பல்கலைக் கழகச் சார்பில் முனைவர் திரு. ஆறு. அழகப்பனாரும், குடும்பத்தாருள் மா. பூங்குன்றனும், நெஞ்சம் பிளக்கும் இரங்கலுரை மொழிந்தனர். திரு.செல்வக்கணபதி சிவபுராணம் முற்றும் ஓதி இரங்கல் மொழிந்தார். குறாளயச் சார்பில் ஈவப்பனாரும், தங்கவேலனாரும் மூதறிஞர் உடலில் பொன்னாடை போர்த்தினர். 4.30 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்கர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பழமலை அவர்களும், முனைவர்கள் திருவாளர்கள் இரா. சாரங்கபாணி, அ.விசுவநாதன், சிவகுருநாதன், மு. அப்துல் கறீம், ஞானசேகரன், தமிழண்ணல், சி. நயினார் முகம்மது, சுப.அண்ணாமலை, பா. நமசிவாயம், சவகர்லால், கதிரேசன்,மணிவாசகர் பதிப்பக உரிமையாளர் திரு. ச. மெய்யப்பர், பாவலர் திரு. சொ.சொ.மி. சுந்தரம், முடியரசன், ஆ. பழனி ஆகிய அறிஞர் பெருமக்கள் கண்ணீர் சொரியச் சூழ வந்தனர். மதுரைப் பல்கலைக் கழகத்திலிருந்து இரு பேருந்துகள் நிறைய வந்த பேராசிரியர்களும் பணியாளர்களும் வந்தார்கள். மாலை 5 மணிக்குச் செந்தமிழ் மாணிக்கச் செழும் பழம் செந்தீ மூழ்கியது. இத்தகு காரைக்குடிவாழ் பெருமகனார் புதுவையில் 24.4.89 அன்று இரவு நம்மையெல்லாம் பெருந்துயரத்தில் ஆழ்த்தி இயற்கை எய்திகனார். அவர் இறுதியாகக் கலந்து கொண்ட கூட்டம் திருக்குறள் கூட்டம் என்பது அறிய மேலும் ஆற்றாமைக் காளானோம். தமிழர்க்கு ஒளி கூட்டி வழி காட்டிய ஒப்பிலாக் கலங்கரை விளக்கம் மறைந்ததே! தமிழ் மூச்சும் பேச்சும் ஓய்ந்ததே! குறள் நெறியாய் விளங்கிய பெருமலை மறைந்ததே! தனக்னெ வாழாப் பிறர்க்குரியாளராய் விளங்கிய சான்றோர் பெருந்தகை மறைந்தாரே! இனி அவர் போன்ற ஒருவரை இத் தமிழகம் காண எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ? தேவார ஏடுகளைத் தில்லைக் கோயிலிலிருந்து காத்தவன் அரசன் இராசராசன் என்பது முன்னைய வரலாறு.தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் தேவாரப் பாடல்களைப் பாட வைத்த பெருமை எங்கள் மூதறிஞர் செம்மல் வ.சுப.மா. அவர்களின் புதிய வரலாறு! தமிழ் நாட்டில் தமிழ் வழிக் கல்வி மட்டுமே இருக்க வேண்டும். எத்தனை வேற்று மொழிகளை வேண்டுமானாலும் கற்பிக்கலாம். ஆனால் பாடமொழி தமிழ்தான் என்ற முழக்கத்தை மாவட்டந்தோறும் மாநாடுகள் நடாத்தி விளக்கம் தந்தார். மாண்புமிகு கலைஞர் ஆட்சியில் இஃது எளிதாக முடியும் என நம்பினார். ஒருவேளை முடியாவிட்டால் போராடவும் தயங்கக் கூடாது என்றார். நாம் செய்ய வேண்டிய கடமைகளில் இஃது தலையாயது என அறைகூவல் விடுத்தார். இஃதே அவரது முழுச் சிந்தனையாகவும் இருந்தது. அதற்காகத் தன் கைப் பணத்தையும் செலவு செய்து தமிழ் நாட்டிலுள்ள அனைத்துத் துறை அறிஞர்களோடு நேரிலும், கடிதவாயிலாகவும் தொடர்பு கொண்டார் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.வி. அவர்கள் இப்பெரும் பணிக்கு மூதறிஞர் செம்மலோடு துணையாக இயங்கினார். முத்தமிழ்க் காவலர் அமைத்த புலவர் குழுவின் தலைவராகவும் நம் மூதறிஞர் செம்மலேபணியாற்றிப் பெருமை சேர்த்தார். சென்னை, மதுரை, கோவை நகரங்களில் நடந்த குறளாய மாநாடுகளில் கலந்து பொறுப்பேற்று நடாத்தினார். அவரது ஆய்வும், ஊக்குவிப்பும் குறளாய மறுமலர்ச்சிக்கு வித்திட்டன. திருக்குறள் நம் மறை என்பதே நம் உயிர்மூச்சு. ஆனால் தமிழகத்தின் தமிழறிஞர்களும், தலைவர்களும் திருக்குறளைப் பொதுமறை எனச் சொல்ல விருமபினரே ஒழிய என்மறை - நம்மறை - எனச் சொல்ல முன் வந்தாரில்லை. கரணியம் அவர்கட்கு வேற்றுமறை இருந்ததே. இந்நிலையில் சினங் கொண்ட சிலர் எம்மை நாத்திகர் எனவும் நாக்கூசாமல் கூறினர். நாம் மனம் கலங்கித் தடுமாறினோம். இந்நிலையில் நம்மை ஆற்றுப் படுத்தியவை முத்தமிழ்துக் காவலரின் - மூதறிஞர் செம்மலின் பேச்சுக்களும் எழுத்துக்களுமே. சென்னைக் குறளாய மாநாட்டில். “திருக்குறளை நம் மறை என்மறை” என ஏற்றுக்கொள்ளாத தமிழனை - நான் ஐயப்படுகிறேன்... ஆம் அவன் பிறப்பின் கண் ஐயப்படுகிறேன் என்று கூறிய சொற்கள் எமக்குத் தெளிவு கூட்டி உரமூட்டின. நாம் செல்லும் சாலையே தமிழ் நாட்டிற்கும் உலகிற்கும் வழி கோலும் சாலை என்ற உள்ளத் திண்மை ஏற்பட்டது. இவ்வாறெல்லாம் எங்கட்குத் திண்மைகளை அவ்வப் போது வழங்கிய பெருமகன் மீளாத்துயிலில் உறங்குவது காணக் காண எண்ண எண்ண நெஞ்சு எல்லாம் விம்முகிறதே! “ஈரோடு என்ற நினைவு வந்தால் முதலில் நம் நினைவுக்கு வருபவர் மான உணர்வுகளை வழங்கிய தந்தை பெரியார்; அடுத்து நினைவுக்கு வருபவர் நம் அன்பிற்குரிய வேலா அவர்களே” என ஈரோட்டில் நடந்த உயர்நீதி மன்ற நடுவர்கட்குத் திருக்குறள் பேரவை வழங்கிய வரவேற்பு விழாவின் போது கூறிய மூதறிஞர் செம்மலின் உதடுகள் இனிப் பேசாப் பேரா இயற்கையாய் விட்டனவே! நாம் எங்கு போய் அழுதாலும் இவ்வாற்றாமை தீராதே! யாம் மருத்தவ ஆய்வில் சென்னையில் இருந்தபோது ஈரோட்டில் அவர் கூறியஇச் சொற்கள் எம்மை நெக்குருகச் செய்தன. யாம் உடல் நலம் குன்றிய போது ஈரோட்டிற்கும் சென்னைக்கும் நேரில் வந்தும், கடிதங்கள் வாயிலாகவும். ஈரோட்டு அன்பர்கட்கு எழுதிய கடிதங்களின் வாயிலாகவும் அவர் உசாவிய பாங்கும் ஊக்குவிப்பும் என் உடல் நலத்திற்கே உறுதுணையாகின. திருக்குறளுக்காக வேலா நம்மோடு நலமாக வாழ வேண்டும். உடலை மருத்துவர் சொற்படி தவறாது பேணச் சொல்லவும்’ என அவர் எழுதிய வரிகளை நினைக்க நினைக்கக் கண்கள் குளமாகின்றன. எங்கட்கோர் அண்ணல் இவர் போல் இனி யார் வாய்ப்பார்? செங்குட்டுவன் காலத்தில் இளங்கோ இருந்தார் என்பதை விட இளங்கோ காலத்தில் செங்குட்டுவன் இருந்தார் என்பதே நாம் பெருமிதம் கொள்ளும் வரலாறு. அதேபோல் மூதறிஞர் செம்மல் காலத்தில் கலைஞர் ஆட்சி புரிந்தார் என்ற வரலாறு நாளை நாம் பெறும் பெருமித வரலாறு. பெரும் புலவர் குழந்தையின் இராவண காவியத்திற்குப் பேரறிஞர் அண்ணாவின் அணிந்துரைச் சிறப்பும், மு.வ.வின் திருவள்ளுவர் (அ) வாழ்க்கை விளக்கத்திற்குத் தமிழ்த் தென்றல் திரு.வி.க. வின் அணிந்துரைச் சிறப்பும்போலக், கலைஞரின் குறளோ வியத்திற்கு மூதறிஞர் செம்மல் அணிந்துரைச் சிறப்பு காலத்தால் அழியாத கல்வெட்டுப்போன்றது. இத்தகு பெருமைகளை எல்லாம் உடைய மூதறிஞர் செம்மல் அவர்களின் இறுதிப் பயணத்தில் தமிழக அரசின் சார்பில் ஓர் அமைச்சர் கூடக் கலந்து கொள்ளாதது, கலந்து கொள்ளச் செய்யாதது நாம் எல்லாம் தேர்ந்தெடுத்த தமிழக முதல்வர் கலைஞரின் குற்றமோ, அமைச்சர்களின் குற்றமோ அல்ல, இயல்பாகவே தமிழர்களிடம் உள்ள அக்கரைப் பச்சை மேலுள்ள மோகமே! காலங் கடந்து உணர்வதிலும் செயற்படுவதிலும் தமிழன் தவறவே மாட்டான்! மூதறிஞர் செம்மலுக்கு நாம் கூறும் உறுதியான வீர வணக்கங்கள்... தமிழ்வழிக் கல்வி இயக்கமும், திருக்குறள் நம் மறைநெறி எனும் சமுதாயமுமே. அண்ணலை வணங்குவோம்; அவர் வழி நடப்போம். - வேலா Dr. V.S.P. Manickam - He who stood by his wisdom We might have come across many scholars of Tamil, but none of them have the unique singularities that V.S.P. Manickam had. His sharp intellect, original and indigenous way of contemplating things the interpretation of the text in an unbiased way, the courage, that threw away all the unjustifiable commentaries and interpretations written by most famous and celebrated dignitaries, and above all his unwearying love of Tamil, mark his grandeur and lofty height of scholarship. From the dawn of twentieth century, most of the critics of Tamil literature, applied the western rules of criticism to Tamil literary texts and interpreted what they could do in their light. A bulk of literature that belongs to the centuries earlier to Christian era, and several centuries before the birth of English, French and other western languages could have no justification to be viewed from the same angle of vision and with the same set of rules of criticism, V.S.P. Manickam knowing fully well that the classical period of Tamil literature was of a hoary past and it was of the birth when several countries did not emerge from the expensive oceanic surface. He clearly declared that Tolkappiam, the grammatical treatise most ancient among the available stock of Tamil works is the only authority and fundamental basis of all literary creations of that age. This is strongly advocated by V.S.P. Manickam and he is of strong opinion that Tolkappiam drawn from long Tamil tradition., stood unshaked through all centuries and even today it is the armour to protect against all intrusions and infiltrations of alien influences. Many scholars in Tolkappiam have existed before V.S.P. Manickam, but he is of a different calibre. The other scholars followed the either Ilampuranar’s or Naccinarkiniyar’s or Cenavaraiyar’s or Perasiriyar’s or Theivacilaiyar’s commentary and selecting one among them they discarded others. But V.S.P. Manickam in his exhaustive study and research of Tolkappiam found out that all the commentaries in certain places did not echo the real meanings of the sutras. He insisted an honest impartial and unbiased interpretation will bring out the real meaning of the texts. V.S.P. Manickam’s The Tamil Concept of Love’ is a monumental work in the research of the classical Tamil literature. Tolkappiam when describing the inner urge of love of a youth states thus: To a damsel to whom love does not abound The youth getting unimpounded distress By praising and blaming And composing the common features of himself and her Telling her for not a reply But rejoicing in his own Is of one side love note In this the youth approaches the damsel himself and utters exuberating love words to her. She did not reply. All the commentators said that she had no passion towards him. But V.S.P. Manickam said she had not attained puberty and no matured mind to accept or deny his love. This is purely of men’s affair and the youth concerned will know that she is not the person for his anguish. Certain verses of Kalitokai provides good example for this. In the same way the unbounded love (Perunthinai) is also interpreted as an unsuitable love by others. V.S.P. Manickam has clearly meant that is a love that rarely surpasses the convention and the expression in both hero and heroine excels the traditional way. A clandestine love and the family life, the two major divisions in agam poetry have distinct way of expressions and Tolkappiam has laid down fitting rules for the composition of a poem. Most of the verses in Cankam classics adhere to these. But there are also exceptions where a few poets do not follow the convention of agam in their poems. In the agam poetry the name of the hero, heroine should not be mentioned, as it is the matter of strict privacy. Avvaiyar, Paranar and Velliveedhiyar by the way of simile have exposed the love of other poets by mentioning their names. This attitude of publicizing the privacy of others is vehemently condemned by V.S.P. Manickam and he says that, this is not inkeeping with the Tamil agam tradition. Nobody else had chided this attitude like Dr. V.SP. Manickam, who points out the great poets like paranar and others had not depicted agam convention properly. V.SP. Manickam’s research on the Tamil verbs and usages is a guiding work for all grammatical researchers to be done in the future. How the positive and negative meaning took place in verbs had been analysed in his work. The appellative and conjugative nouns and these functioning the active and passive voices. The subjunctive mood. infinitive mood and imperative mood are all brought forth extensively in his research. His collected papers exhibit his untiring study and research of multifarious subjects. His book, the Glimpses of Tamilology’ is the collection of articles by many scholars and he has edited it. In this, his article entitled ‘psychological approach to Tamil syntax’ shows how great poets purposely transgress ordinary grammatical rules to depict psychological mind set of the characters concerned. Professor V.SP. Manickam is a puritian in the style of language, a Gandhian in principles of life, indigenous in research, a strict adherent of tradition and above all humanistic in behaviour. Future researches of Tamil language and literature should refer professor V.SP.Manickam’s research works through which they can realize that this professor has contributed much and they could rightly be called archaeological excavations of the classical stock. His English books have to be viewed by all the Indian and foreign scholars which may trained them for a deep insight and inquisitive inquiry which will bring forth new concepts and theories of approach. - Dr.K.V. Balasubramaniam, Former Professor of Tamil University, Thanjavur - 10. கவிஞர்கள் கவியரசு முடியரசன் போதும் எனுமனம் பூத்த நெஞ்சினன், யாதும் அவாவிலன், யாமையென் றடங்கியோன், பயனில சொல்லாப் பாவலன், என்றும் நயனுள மொழியும் நாவலன், என்பால் ஈடிலா அன்பன், எளியன், இனியன், கேடிலா மனத்தன், கிளர்ச்சித் தலைவன், எங்கள் சங்கப் புலவன் இவனெனப் பொங்கும் உணர்வாற் பொலிந்த பெற்றியன், பெருக்கிய புகழ்நிலை பேணிவந் துறினும் செருக்கே அறியாச் சீர்மை யாளன், அருமை! அருமை! என் றான்றோர் போற்றும் பெருமிதங் குன்றாப் பேரறி வாளன், தொல்காப் பியநூல் துருவித் துருவிப் பல்கால் ஓதிப் பாங்குற மொழிந்தவன், உள்ளந் தெளிவுற உலகம் மகிழ்வுற வள்ளுவந் தந்த மாமணி, நாளும் சிந்தனைப் புதுமையைச் செவ்விதிற் காட்டும் செந்தமிழ் நடையிற் சீரியன், கூரியன், ஆள்வோ ராகினும் அவர்க்கும் அறிவுரை கேள்போல் நின்று கிளத்தும் துணிவன், ஆசாற் றொழுதெழும் அரும்பெறல் மாணவன், பேசான் பழிமொழி, ஏசான் பிறரை, நண்பன், பண்பன், நயத்தகு தமிழைக் கண்ணென உயிரெனக் கருதும் இயல்பினன், கல்வியைத் தமிழிற் கற்கத் தடையெனில் அல்வினை யதுதான் அழிகவென் றெழுந்து வல்வில் லம்பெனச் சொல்லமர் தொடுத்தனன், அமர்க்களம் சென்றவன் ஆங்கே மாண்டனன், எமர்க்கெலாம் துயரே ஏற்றினன், ஐயஓ! யாவன் அவனென வினவின், தீவினை செய்யாச்செம்மல் செந்தமிழ்ப் பெம்மான் பொய்யா மாணிக்கப் புலவன் அவனே. -கவியரசர் முடியரசன் மாணிக்கமலை மறைந்ததே! சங்கநூல் மாட்சிகளைத் தனித்தபெருங் காட்சிகளாய்த் தந்தே நாளும் எங்களகம் கவர்ந்துநின்ற ஈடற்ற மாணிக்க ஏந்தல், இந்நாள் இங்கவனின் உயிர்நிகர்செந் தமிழ்விடுத்தும் எமைவிடுத்தும் எங்குச் சென்றான்? பொங்குதுயர்த் தீயினில்எம் சிந்தைமிக வெந்துருகிப் போன தந்தோ! செந்தமிழின் இருகண்ணாய்த் திகழும்தொல் காப்பியம்,நல் திருக்கு றட்கு விந்தைமிகும் விளக்கங்கள் தந்தபெரும் பேராசான், விரிநி லத்தோர் சிந்தைகவர் `தமிழ்க்காதல்’ தந்திட்ட மூதறிஞர் செம்மல், துன்பச் செந்தீயில் எமைவீழ்த்திச் சென்றனனே! இனியெங்குச் சென்றுகாண்போம்? - புலவர் திரு. பொதிகைச் செல்வன். இதழ்கள் முத்துப்பந்தர் “நம் அரசு திருக்குறளின் அறத்துப் பாலுக்கு ஓர் இலக்கியமாக ஒளிர்கின்றதேயன்றி, பொருட்பாலுக்கு இலக்கியமாக உயரவில்லை. ஏன்? தனியமும் அரசியமும் ஒன்று பெரிதும் வேறில்லை என்பது நம் தலைவர்களின் துணிபு. இம்மனப்பான்மையால், உண்ணாட்டு அயல்நாட்டுக் கோட்பாடு களை வகுத்துள்ளனர். அதனால் எதிர்பாரா இன்னா விளைவுகள் புகுந்து விட்டன.”. - மூதறிஞர் வ.சுப. மாணிக்கம், திருக்குறட் சுடர், ப. 4. “மன அலைச் சுழலை நாம் விரும்பும் அளவுக்குக் குறைத்து அந்த நிலையில் நின்று மனம் செயல்படுவதற்கான பயிற்சியே அகத்தவம் எனப்படுகிறது. எப்படி உடலின் வலுவிற்கு நாம் உடற் பயிற்சி செய்கிறோமோ அது போலவே மனதின் மதிநுட்பத்தைப் பெருக்குவதற்கான உளப் பயிற்சியே அகத்தவம்”. - உழவாரம் (ஆகஸ்ட் 2016) தமிழ் இமயம் வ.சுப. மாணிக்கனார் பெற்றோரை இள வயதில் இழந்து சிறு கணக்கராய் இரங்கூன் தலைநகரில் வேலை பார்தத போது தனது பதினெட்டாம் வயதில் வாய்மைக் குறிக்கோளை வாழ்வுக் குறிக்கோளாகக் கடைபிடித்த வ.சுப.மா. அவர்களை எல்லோரும் “பொய் சொல்லா மாணிக்கம்” என்றே இன்றும் அழைக்கின்றார் கள். முறையான பள்ளிக்கல்வி இல்லாத நிலையில் பண்டிதமணி கதிரேசனார் உதவியால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து புலவர் பட்டம் பெற்றார். பின்னர் பி.ஓ.எல், எம்.ஓ.எல்., எம்.ஏ., பட்டம் பெற்றார். சங்க இலக்கியங்களில் அகத்திணைக் கொள்கைகள் கூhந கூயஅடை ஊடிnஉநயீவ டிக டுடிஎந பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இதுவே தமிழ்க்காதல் என்ற நூலாக வெளி வந்துள்ளது. முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை இயற்றி தமிழன்னைக்கு அணிகலனாய் சூட்டியவர். வ.சுப.மா. புகழ் விருப்பமின்றி இருந்த போதும், பல்வேறு சிறப்புப் பட்டங்களும் விருதுகளும் தாமாகவே அவரை வந்து சேர்ந்தன. மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை `செம்மல்’ என்றும, குன்றக்குடி ஆதீனம் `முதுபெரும் புலவர்’ என்றும், ஈப்போ பாவாணர் தமிழ்ச்சங்கம் `பெருந்தமிழ்க்காவலர்’ என்றும் சிறப்புப்பட்டங்களை வழங்கின. மேலும் அண்ணாமலை பல்கலைக்கழகம் தனது பொன்விழா ஆண்டில் `முது முனைவர்’ (டி.லிட்.) பட்டத்தையும், தமிழக அரசு திருவள்ளுவர் விருதையும் வழங்கின. வ.சுப.மா.வின் தமிழால் ஈர்க்கப்பட்டு தமிழ் பயின்றோர் ஏராளம். அவருடைய தமிழ்க்காதல், வள்ளுவம், கம்பர் ஆகிய நூல்களைப் பயிலாமல் தமிழாய்வு மாணவர்கள் முனைவர் பட்டம் பெற முடியாது என்பது தமிழறிஞர்கள் கருத்து. கோழி தன் குஞ்சுகளை சிறகுகளுக்குள் வைத்துக் காப்பது போல மாணிக்கனார் தன் மாணாக்கர்களை காத்து வழி நடத்தினார்கள். அவர்களின் உயர்வுக்கு உற்ற துணையாக இருநதார்கள். மிகச்சிறந்த மாணாக்கர் பரம்பரையை உருவாக்கி உள்ளார்கள். மாணிக்கத் தமிழ் கண்டு வள்ளுவமாய் வாழ்நத அப்பெருமகனாருடைய நூற்றாண்டு விழாவை அவருடைய மாணவர்களும், பல்வேறு பல்கலைக்கழகங்களும், தமிழ் ஆர்வலர்களும், அமெரிக்காவில் பல தமிழ்ச் சங்கங்களும் வெகு சிறப்பாகக் கொண்டாடி வருகின்றார்கள். செம்மலின் நூற்றாண்டு விழாவைத் தமிழின எழுச்சி விழாவாகவே அனைவரும் நடத்தி வருகின்றார்கள். பட்டங்கள் பல பெற்றாலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி வரை உயர்ந்தாலும், என்றும் நெறிகள் பிறழாத, வாய்மை தவறாத, எளிமை வாழ்க்கை வாழ்ந்த பெருமகனார் வ.சுப. தமிழ் வழிக்கல்வி இயக்கத்துக்காக தன் இறுதி மூச்சு வரை அயராது உழைத்தவர். தில்லை திருக்கோவிலில் திருமுறைகள் அம்பலம் ஏறப் போராடியவர். தம் இறுதி மூச்சு வரை திருக்குறளையும் திருவாசகத்தையும் சுவாசித்தவர் வ.சுப. அவர்கள். அவருடைய இந்த நூற்றாண்டில் அப்பெருமகனாரின் நினைவைப் போற்றி நாமும் தமிழ் வளர்ப்போமாக! - அல்லி நடேசன். (நமது செட்டிநாடு- மே 2017) `புதிய சொல்லாக்கங்களை தமிழ் உலகிற்குத் தந்தவர் வ.சுப. மாணிக்கனார்’ புதிய சொல்லாக்கங்களை தமிழ் உலகத்திற்கு தந்தவர் வ.சுப.மாணிக்கனார் என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் நூற்றாண்டு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், வ.சுப. மாணிக்கனாரின் தற்சிந்தனைகள் எனும் நூலை வெளியிட்டு அடிகளார் பேசியது: வ.சுப. மாணிக்கனார் தமிழுக்குக் கிடைத்தமாணிக்கம். பன்முகப் பரிமாணம் கொண்டவர் வாழ்க்கையில் வாய்மையாய் வாழ்வதற்குத தமிழ் ஒன்றே வழியென, அதைத் தேர்ந்தெடுத்தவர். தனது வாழ்நாள் முழுவதும் உழைப்பு, வாய்மை, நேர்மை ஆகிய மூன்றையும் முதன்மையாகக் கொண்டவர். புதிய சொல்லாக்கங்களை தமிழ் உலகத்திற்கு தந்தவர். அவரிடமிருந்து தமிழ் அறிவையும், தமிழ் உணர்வையும் இளம் தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். விழாவில், துணைவேந்தர் சொ. சுப்பையா தலைமை வகித்துப் பேசினார். வ.சுப.மாணிக்கனாரிடம் பயின்ற மாணவர்கள் பேராசிரியர்கள் தே. சொக்கலிங்கம், கு.வெ. பாலசுப்பிரமணியம், பழ.முத்து வீரப்பன், இரா. மோகன் ஆகியோர் பேசினர். முன்னதாக வ.சுப.மாணிக்கனாரின் இணையத்தளம் தொடங்கப் பட்டது. டாக்டர் உமையாள் ராமநாதனின் வாழ்த்துக் கவிதை வாசிக்கப்பட்டது. வ.சுப. மா. தொல்காப்பியன் அறிமுக உரையாற்றினார். வ.சுப. மாணிக்கனாரின் புதல்வர்கள், புதல்வியர்கள், அவரிடம் பயின்ற மாணவர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் மு. பாண்டி வரவேற்றார். பேராசிரியர் சு. ராஜாராம் நன்றி கூறினார். - தினமணி - 18.04.2017 -காரைக்குடி, ஏப். 18 வ.சுப.மா.வின் முத்திரை பதித்த கவிதையாக இரண்டைக் கூறலாம். ஒன்று வள்ளல் அழகப்பர் பற்றியது. மற்றது தொண்டு பற்றியது 1. கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்த வீடும் கொடுத்த விழுச்செல்வன் - தேடியும் அள்ளிக் கொடுத்த அழகன், அறிவூட்டும் வெள்ளி விளக்கே விளக்கு. 2. நல்லாவின் பால் முழுதும் கன்றுக் கில்லை நறும்பூவின் மணமுழுதும் சோலைக் கில்லை நெல்லாகும் கதிர் முழுதும் நிலத்துக் கில்லை நிறைகின்ற நீர்முழுதும் குளத்துக் கில்லை பல்லாரும் கனிமுழுதும் மரத்துக் கில்லை பண்நரம்பின் இசைமுழுதும் யாழுக் கில்லை எல்லாமே பிறர்க்குழைக்கக் காணு கின்றேன் என்வாழ்வும் பிறக்குழைக்க வேண்டும்! வேண்டும்! வாழ்க! வ.சுப.மா. நூற்றாண்டு! வளர்க! வையத்து அவர்தம் எண்ணம்! - அப்பச்சி மலர். நவம்பர் 2016. வண்டமிழ் வ.சுப.மா. நூற்றாண்டு பண்புடைமை என்பது திருக்குறளில் நூறாவது அதிகாரம். பண்பு என்பதைக் கண்ணால் காண முடியாது. கருத்தாலே உணரவல்லது. ஆனால் அப்பண்புடைய பொருள் பண்பி எனப்படும் அளவில் கண்ணால் காணும் ஒருவரைப் பண்புடைமைக்கான அடையாளமாகக் காட்டலாம். அங்ஙனம் சுட்டி உணர்த்தும் ஒருவர்தான் இவ்வாண்டு நூற்றாண்டு காணும் வண்டமிழ் வ.சுப. மாணிக்கனாராவார்! இப்பண்பையே கவியரசர் முடியரசன் தம் கவிதை ஒன்றில் வ.சுப.மா.வை, “தீவினைச் செய்யாச் செம்மல் செந்தமிழ்ப் பெம்மான், பொய்யா மாணிக்கப் புலவன்” எனப் பாராட்டியுள்ளார். இதில் கூறிய பொய்யா மாணிக்கம் என்ற புகழுரைக்கு ஈடே இல்லை. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்குத் துணைவேந்தராகத் தேர்வு செய்த ஆணையை மேதகு ஆளுநர் அவர்கள் தம் கைகளால் மாணிக்கனாருக்குத் தந்து வாழ்த்தும் போது பொய் சொல்லா மெய்யர் என உங்களைப் பற்றிக் கேள்விப்பட்ட பண்பும் உங்களை உயர் பதவிக்கு உயர்த்தியது என்றாராம். ஆக நூறாம் அதிகாரப் பண்புடைமைக்கேற்ற பொருத்தமாக நூற்றாண்டு விழாக் காணும் அன்னாரைப் பற்றி அறிவது தமிழைப் பற்றி அறிதலாக அமையும். ஏனெனில் அவரே தமிழ், தமிழே அவர் என்பதே முற்றிலும் உண்மையாம் என்க! கடை ஏழு வள்ளல் பாரி வாழ்ந்த பறம்புமலைச் சூழல் சார்ந்த பொன்னமராவதி ஊரின் பகுதியில் உள்ள மேலைச்சிவபுரி என்னும் சிற்றூரில் 17.4.197இல் அவ்வூர் செய்த தவத்தால் வ.சுப்பையா செட்டியார் - தெய்வானை ஆச்சி தம்பதியருக்கு இரண்டாவது ஆண்மகவாய்த் தோன்றிய குழந்தைக்குப் பெற்றோர் அண்ணாமலை எனப் பெயரிட்டனர். செட்டி நாட்டு நகரத்தார் குல மரபுப்படி 11 வயதில் பர்மா சென்று வட்டிக் கடையில் வேலை பார்த்தார். அப்போது ஒரு நாள் கடை முதலாளி சொல்லச் சொன்னதொரு பொய்யைச் சொல்ல மறுத்ததால் பொய் சொல்லா மெய்யராய்த் தாயகம் திரும்பினார். தம் பெயருக்கேற்ப அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பயின்று வளர் பிறை போல் கல்வியில் வளர்ந்து நிறை நிலாப் போல் கற்றோர்க்குத் தாம் வரம்பாய் பற்பல உயர்படிப்பால் உயர்ந்தார். பாரதி சொன்னது போல எழுத்தும் தெய்வம் என எழுதுகோலும் தெய்வமாய் வ.சுப.மா.வின் ஒவ்வொரு திறனாய்வு எழுத்தும் அன்னாரை மாணிக்கம் போல் ஒளிர வைத்தார் வ.சுப.மாணிக்கனார். எழுத்துப் படைப்பில் அவரது தூரிகை பல புதுமைகளைப் படைத்தது, `வள்ளுவம்’ என்ற அன்னாரது நூலுக்கு ஈடு இணையில்லை. பல்வேறு ஆய்வுகள், நாடகம், கவிதை எனப் பற்பல படைத்தார் தொல்காப்பியம் அவரது உடல் என்றால் சங்க இலக்கியம் அவரது உயிர் எனலாம். எதையும் மறித்தோடிச் சிந்திக்கும் திறனாளி. புதிய சொல்லாட்சிகளை உருவாக்கம் செய்த சொற்சிற்பி. காட்சிக்கு எளியவர். ஆர்ப்பரிப்பு இல்லா ஆழ்கடல் புலமையர், எதையும் எதற்காகவும் விரும்பாத தமிழ் மட்டுமே விரும்பிய இல்லற விவேகி. 1979இல் ஆகஸ்டு 17 ஆம் நாளன்று, துணைவேந்தர் பொறுப்பைக் கொள்ள பல்கலைக் கழகத்திற்குக் காலடி வைத்தபோது சாதாரண வெள்ளை அரைக்கைச் சட்டையும், வேட்டியும் தோளில் துண்டுமாய்த் தோற்றமளித்தார். அவரைக் கண்ட பல்கலைக் கழகத்தார், `இத்தனை பெரிய பல்கலைக் கழகத்தை இவர் எப்படிக் கட்டிக் காப்பார்?’ என ஐயுற்றதைத் தம் மேலாண்மைத் திறத்தால் மாற்றிக் காட்டினார். உருவுகண்டு எள்ளாமை வேண்டும் (669) என்ற அய்யன் திருவள்ளுவர் வாக்குப்படி வ.சுப.மாவின் செயல் திறன் பளிச்சிட்டது. இதற்குச் சான்றாகவே துணைவேந்தரின் நேர்முக உதவியாளராக இருந்த திரு.ஆர்.ஆர். சத்தியமூர்த்தி என்பவர் 1993-வைகாசியில், மதுரையிலிருந்து வெளிவந்த தமிழ்மாருதம் என்ற இதழில் வ.சுப.மா.வி.ன செயல்திறன் பற்றி எழுதிய கட்டுரை சொற்சித்திரம் போலிருந்தது என்றே கூறலாம். அதில் எப்போதும் பல்கலைக்கழக நாட்டம் உடையவர். இதனால் காலத்தை விரயப்படுத்தாமல் பொது நிகழ்ச்சிகளுக்குப் போவதைத் தவிர்த்தார். மடலோ, கோப்போ எதுவானாலும் தாமே படித்துப் பார்த்தே கையொப்பம் இடுவார். வீண் செலவில்லாத வகையில் பல்கலைக் கழகப் பொருள் நிலையில் தனித்த கவனம் செலுத்தினார். எந்தப் பெரிய இடத்துப பரிந்துரைக்கும் செவிசாய்க்க மாட்டார். எதிலும் தரம் ஒன்றே நிரந்தரம் என்ற கோட்பாட்டுடன் நடத்திச் சென்ற ஆளுமை அவரின் மேலாண்மையைக் காட்டியது - என்ற பொன்னெழுத்தான குறிப்பிற்கு மேல் வ.சுப.மா. அவர்களை அறிய வேறொன்று வேண்டுமோ? இக்குறிப்பே மற்றவர்க்கு முன்மாதிரி (சுடிடட ஆடினநட) யானது எனலாம். வ.சுப.மா. அவர்கள் காரைக்குடியில் அழகப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராய், முதல்வராய்ப் பணியாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் புல முதன்மை யராய்ப் பணியாற்றினார். காரைக்குடியில் காரைக்குடித் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்துத் திங்கள் தோறும் தமிழிலக்கிய இலக்கணப் பொழிவுகளை வல்லுநர்களைக் கொண்டு ஆற்றுவித்துத் தமிழ் பரப்பும் தொண்டில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். சிறுவர்களுக்கான அறநூல்களை அச்சிட்டுத் தந்ததோடு அந்நூல்களில் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்த அத்தொண்டு இன்றும் காரைக்குடியில் தொடர்ந்து நடைபெறுகிறது. அவர்களுடைய ஒத்துழைப்புடன்தான் காரைக்குடியில் இராமசாமி தமிழ்க்கல்லூரி உருவானது. இதனை நிறுவிய செந்தமிழ்ச் செல்வர் இரா.பெரி. பெரியகருப்பன் செட்டியாரின் தமிழ் உணர்வுக்கு உரம் ஊட்டி வளர்த்த காரணத்தால்தான் தமிழ்க கல்லூரியின் தோற்றத்திற்கு முன இந்தியப் பல் தமிழ்க்கழகம் என்ற ஒன்றை 1962இல் தொடங்கினார். பின்னர் அக்கழகம் 1967இல் தமிழ்க்கல்லூரியாக உருவாக வ.சுப.மா. உதவினார்கள். மகாவித்வான்மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்குக் கிடைத்த தமிழ்த்தாத்தா உ.வே.சா. போல் பண்டிதமணிக்குக் கிடைத்த தவச்சீடராக விளங்குகிறார் வ.சுப.மா. என்றால் அது பொருத்தமே ஆகும். செம்மல் அவர்களைப் பலவாறாகத் தமிழ்கூறு நல்லுலகம் அறிந்திருந்தாலும் அவர்தம் கவிதைகள் சில அவரைச் சங்கப் புலவராக அடையாளங் காட்டியது என்பதை மறுத்தற்கில்லை. அவர் எழுதிய `நெல்லிக்கனி’ நாடக நூலில், கதாபாத்திர உரையாடலின் ஊடே எழுதிய கீழ்க்கண்ட பாடலின் சிறப்பே சிறப்பு எனலாம் அப்பாடல் இயற்கைத் தொண்டு எனும் தலைப்பில் தனியாகவும் அவர்தம் மாமலர்கள் என்ற கவிதை நூலிலும் இடம் பெற்றுள்ளது. நல்லாவின் பால்முழுதும் கன்றுக் கில்லை! நறும்பூவின் மணம்முழுதும் சோலைக் கில்லை! நெல்லாகும் கதிர்முழுதும் நிலத்துக் கில்லை! நிறைகின்ற நீர்முழுதும் குளத்துக் கில்லை! பல்லாரும் கனிமுழுதும் மரத்துக் கில்லை! பண்ணரம்பின் இசைமுழுதும் யாழுக் கில்லை! எல்லாமே பிறர்க்குழைக்கக் காணு கின்றேன் என்வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும்! வேண்டும்! இப்பாடலில் வ.சுப.மா.வின், ஆன்மா உள்ளதால்தான் `என்வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும் வேண்டும்’ என்றார். இதுவே அன்னாரின் அறிவுரையாகும். அன்னார்தம் நூற்றாண்டில் அவரின் வாய்மையும் தூய்மைத் தொண்டும் எல்லோர்க்கும் எடுத்துக்காட்டாய் அமைவதாகுக! - தமிழாகரர் தெ. முருகசாமி (புதுச்சேரி) திலகவதியார் திருவருள் ஆதீனச் செய்தி மடல், பிப்-மார் - 2017 முத்துப் பந்தர் 1. “மணிவாசகர் தமிழ் அகத்திணையில் பெரிதும் ஈடுபாட்டினர்; அதனைப் பரப்பும் ஆர்வத்தினர். `உயர் மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந் தமிழின் துறைவாய் நுழைந்தனையோ’ என்று பாங்கனை வினவச் செய்யும் முகத்தால் அகத் தமிழில் தாம் செய்த ஆராய்ச்சியைப் புலப்படுத்தியவர். - மூதறிஞர் வ.சுப. மாணிக்கம், இலக்கியச் சாறு. ப. 98 - ஜுலை 2016 2. “உலகப் பொருள்களை அறிதற்குக் கண்ணிற் சிறந்த உறுப்பில்லை. அது போல நாட்டுப்பற்று உயிரிற் படிவதற்கு மொழியில் சிறந்த வழியில்லை. `பாரத தேசம் என்று சொல்லுவார்’ என்ற தமிழ் என் உயிரிற் புகுவது போல எம் மொழியிற் சொல்லினும் புக மாட்டாது ஏனைய மொழி வாயிலாக நாட்டுப் பற்று ஊட்டுவோம் என்பது `கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள்போல ஆகிவிடும். இவ்வொரு உண்மையையேனும் உணர்ந்தவர்கள் நாடு மொழி என்ற இரண்டையும் உயிர் மெய்யாகவே போற்றுவார்கள்; நாடு பெரிது மொழி சிறிது எனப் பிரிவினை பேசார்கள்”. - மூதறிஞர் வ.சுப. மாணிக்கம், இந்திய ஆட்சி மொழி, ப. 80 (மே 2016) 3. “வாழ்வின் ஓட்டத்தில் எண்ணிப் பார்த்தால் நாம் நம்மையறியாமலே எவ்வெவற்றையோ விட்டுச் செல்கின்றோம். பலர் விட்டுச் செல்லவும் காண்கின்றோம். இவற்றை நினைவுபடுத்துவதுதான் திருவாசகம். திருவாசக நினைப்பு மேன்மேலும் நம் உள்ளத்து வளர்ந்தால், விடாது வைத்துக் கொண்டிருப்பவற்றை உரிய உரிய காலத்தில் விட்டு விட்டு உயர்ந்த உயிர்ப் பக்குவம் பெறுவோம். இம்மைப் பெருவாழ்வுக்கே திருவாசக நினைப்பு எல்லோர்க்கும் வேண்டும்.” - மூதறிஞர் வ.சுப. மாணிக்கம், இலக்கியச் சாறு, ப. 83, மார்ச் 2016 4. திருக்குறளில் மொழி விளக்கத்தையே கண்டும் காட்டியும் வரும் நாம் இனி தன்னிலைப் பார்வையைக் காணுமாறு முயலவேண்டும். இம் முயல்வு ஒவ்வொருவரின் தனி முயல்வாகும். தன் வாய் திறாவிட்டால் தன் வயி நிரம்பாதது போலத் தனிப்பார்வை இல்லாவிட்டால் தன் வளம் இராது. - மூதறிஞர் வ.சுப. மாணிக்கம், திருக்குறட்சுடர் பக். 49. 5. 35 ஆண்டுகட்குமுன் பெருமகன் காந்தி இந்நாள் சுட்டுக் கொல்லப்பட்டார். அடிகளாரின் வாழ்க்கை வெளிப்படை. அதிசயம்; அற்புதம என்ற கதைகள் இல்லாத நம்பிக்கைக்குரிய வரலாறு. உண்மையிலே மெய்யான அற்புத வாழ்ககை. உலகம் பெற்ற பெரியவர்களுள் மிகப் பெரியவர். மானிடவாற்றல் நல வழியில் எல்லையில்லாதது என்று வாழ்ந்து காட்டியவர். உலகப் போராட்டங்களை இயக்கியவர், இந்திய விடுதலை உலகம் நினைக்கின்றது. இந்தியா மறக்கின்றது. பின்பற்றுவதாக ஏய்க்கின்றது. -பேரறிஞர் வ.சுப. மாணிக்கனார், தற்சிந்தனைகள் பக். 21 11 தமிழறிஞர் குடும்பத்துக்கு ரூ. 66 லட்சம் பரிவுத் தொhகை சென்னை மார். 22: சிறந்த தமிழறிஞர்கள் 11 பேரின் குடும்பத்துக்கு, ரூ. 66 லட்சம் பரிவுத் தொகையை, முதல்வர் கருணாநிதி வழங்கினார். மாயூரம் வேதநாயகம் பிள்ளை, சக்தி வை. கோவிந்தன், தெ. பொ.மீனாட்சிசுந்தரனார், த.நா. குப்புசாமி, கா.சு.பிள்ளை, புலவர் குலாம் காதிறு நாவலர், டாக்டர் சி. இலக்குவனார், தி.வை. சதாசிவப் பண்டாரத்தார், மகாவித்வான் தண்டபாணி தேசிகர், தி.ஜ.ரங்கராஜன், நாரண. துரைக்கண்ணன், டாக்டர் மா. ராசமாணிக்கனார், டாக்டர் வ.சுப. மாணிக்கம், புலவர் கா.கோவிந்தன் ஆகிய 14 தமிழ் அறிஞர்களின் நூல்களை நாட்டுடமையாக்கி அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.6 இலட்சம் வீதம் ரூ. 84 லட்சம் பரிவுத் தொகையை, முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார். - தினகரன் மதுரை 22 மார்ச் 2007. வாய்மையால் உயர்ந்தவர்! மதுரை பல்கலைக் கழக துணை வேந்தர் திரு. வ.சுப. மாணிக்கம் கல்வித் துறைக்கு வந்ததில் சுவையான வரலாறு உண்டு. பதினெட்டாவது வயதில் அவர் ரங்கூனில் ஒரு கடையில் வேலை செய்து வந்தார். அவரது முதலாளியைப் பார்க்க ஒரு நாள் ஒரு வியாபாரி வந்தார். ஆனால் அவரைப் பார்க்க விரும்பாத முதலாளி, மாணிக்கத்திடம் `நான் இன்று வீட்டில் இல்லை” என்று கூறி விடு’ என்றாராம். மாணிக்கத்துக்குப் பொய் கூற விருப்பமில்லை. “நான் பொய் கூறமாட்டேன். அதற்கு வேறு ஆள்பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறி அக்கடையை விட்டு விலகிவிட்டார். பின்பு கல்வித் துறையில் கவனம் செலுத்தி பி.ஓ.எல். எம். ஓ.எல், பி.லிட். முதலிய பட்டங்களைப் பெற்று இன்று துணை வேந்தராக உயர்ந்திருக்கிறார். `வாய்மை’ அவரை உயர்த்தியிருக்கிறது. - 1982 சூன் 27 கல்கி இதழில் வெளிவந்தது. தமிழ்வழிக் கல்வியியக்கம் அன்னைத் தமிழே வேலை பெறு: ஆங்கிலமே வெளியேறு என்ற பெருமுழக்கத்தோடு, தமிழ்க் கொடிகளை ஏந்திக் கொடு, பலதுறைப் பொதுமக்களும், தொழிலதிபர்களும் வழக்கறிஞர்களும், எழுத்தாளர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் முன்னைத் துணை வேந்தர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் தலைமையில், மதுரைக் கூடலழகர் பெருமாள் கோயில் முன்பிருந்து 12-6-88 ஞாயிறு மாலை 6 மணிக்கு ஊர்வலம் தொடங்கினார்கள். காவலர்கள் துணை வந்தனர். ஊர்வலம் நான்கு மாசிவீதி வழியாகவும் தமிழே வேலை பெறு: ஆங்கிலமே வெளியேறு என்ற முழக்கமிட்டுக்கொண்டு சென்று சான்சிராணித் திடலை அடைந்தது. வீதியெங்கும் திரளான மக்கள் கூடிநின்று, தமிழ் முழக்கத்தை அமைதியாக வரவேற்றதோடு, கட்சிவூர்வலம், வேலை நிறுத்த ஊர்வலங்களையே கண்டு கசப்படைந்த பொதுமக்கட்குப் பெருந் தமிழறிஞர்களின் மொழி ஊர்வலம் இனிமையாகவும் ஏற்பாகவும் இருந்தது. கல்விக்குழுத் தலைவர் திரு. அ. சங்கரநாராயணன் ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் தலைமையில் தமிழ் வழிக் கல்வியியக்கக் கூட்டம் 12-6-88 ஆம் நாள் இரவு 7.30 முதல் 10.30 மணிவரை நடந்தது. மதுரைக் காமராசர் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் அறிஞர் தமிழண்ணல், அறிஞர் சாம்பசிவனார், தமிழ்ப்பாவை ஆசிரியர் கருணைதாசன், முதல்வர் அறிஞர் சுப. அண்ணாமலை, பேராசிரியர் சாத்தையா, புலவர் இளங்குமரன் அந்தமான் பெரிணான்டர், முதல்வர் அறிஞர் தமிழ்க்குடிமகன் வழக்கறிஞர் இராமசாமி எல்லோரும் உரையாற்றினர். இவர்கள் சொல்லிய கருத்துக்கள் வருமாறு. 1. இருமொழிக்கொள்கை, மும்மொழிக் கொள்கை என்பவை குழப்பமானவை, பொருந்தாதவை. தமிழகத்தில் மழலை முதல் பல்கலைக் கழகம் வரை எல்லா நிலையிலும் எல்லாத் துறையிலும் தொழிற் கல்வியிலும் தமிழ் ஒன்றே பயிற்றுமொழி. இந்த ஒரு மொழிக் கொள்கையே உண்மைக் கொள்கை. ஏனைய மொழிகளைக் கற்பதெல்லாம் துணைமொழிக் கொள்கையென இரண்டாவதாகக் கருதப்படவேண்டும். தமிழகத்தில் தமிழ் மொழிக்கு உரிய முதலிடத்தையும் மேலாண்மையையும் சமமாக வேறு எந்த மொழிக்கும் வழங்கவியலாது. பிற மொழிகளை எவ்வளவு வேண்டுமானாலும் துணை மொழிகளாகக் கற்கலாம், கற்கவேண்டும், கற்கும் வாய்ப்புகள் வேண்டும்; என்றாலும் இவை பயிற்று மொழியாகக் கூடாது, தமிழுக்கு உரிய உரிமையைப் பறிக்கக்கூடாது எங்கும் எதிலும் தமிழ் ஒன்றே பயிற்று மொழி. இதுவே ஒரு மொழிக் கொள்கை. இதுகாறும் ஆங்கிலம் முதன்மொழியாகவும் தமிழ் பன்மொழியுள் ஒன்றாகவும் உள. பன்மொழி என்ற நிலையில் வேறு மொழிகளை எடுத்துக் கொண்டு, தமிழைப் புறக்கணித்து விடுகின்றனர். சிறு தமிழ்கூட இல்லாமல், பட்டமும் பதவியும் பெறும் முறையற்ற தீயூழ் இத் தமிழ் நாட்டில் உண்டு ஆதலின் தமிழ்நாட்டில் தமிழ் ஒன்றே மழலை முதல் பல்கலை வரை பயிற்று மொழி என்ற ஒருமொழிக் கொள்கையைத் தமிழ்வழிக் கல்வியியக்கம் துணிந்து கூறுகின்றது. 2. தமிழ்வழிக் கல்வி என்பது1939 இல் உயர் நிலைப்பள்ளி களில் தொடங்கப்பட்டது; என்றாலும் அங்ஙனம் தமிழ்வழிப் பயின்றவர்கட்கு ஏராளமான தடைகள் இடைஞ்சல்கள் உண்டாக்கப்பட்டன தமிழ் வழியினருக்குப் பட்ட வகுப்புப் படிக்கும்போது ஆங்கில வழியாக மாற்றப்பட்டது உயர்நிலை வகுப்பில் தமிழ்வழி, கல்லூரிப் புதுமுக வகுப்பில் தமிழ்வழி முதுகலை வகுப்பில் மீண்டும் ஆங்கிலவழி என வழிகள் மாறிக்கொண்டே யிருந்தன. மேலே ஆங்கிலம் ஆட்சியழுத்தம் செய்த காரணத்தால், கீழ்வகுப்பிலிருந்தே ஆங்கிலவழிப் படிப்பது என்ற எண்ணம் வேரூன்றியது. மழலை முதல் பல்கலை வரை தடங்கலின்றி ஒரேவழியிற் கற்கும் நெட்டோட்டத்தை அரசும் பல்கலைக்கழகங்களும் வகுத்திருந்தால், தமிழ்வழியில் மாணவர் களும், பெற்றோர்களும் நம்பிக்கை கொண்டிருந்திருப்பர். மேலும் இங்ஙனம் தமிழ் கற்றோர்க்கு வேலை வாய்ப்பும், மேற்படிப்பும் என்ற உறுதியில்லை. முன்னுரிமை கூட எந்தக் கட்சியும் கொடுக்கவில்லை சோற்றுக்கும் வேலைக்கும் உலக வாழ்வுக்கும் பொருளாதரத்துக்கும் உதவாதபோது, தமிழ்வழிக் கல்வியை வடமொழி போல் முத்திக்கா படிப்பார்கள்? வடமொழி படித்திருந்தாற்கூடக் கோயில்களிலும், குடமுழுக்குகளிலும் அருச்சராகிப் பூசை வருமானம் கிடைக்கும். 3. மேலும் தமிழ்வழி என்று பொருளியல், வரலாறு, அரசியல் எனக் கலைத் துறைகளை வைத்தார்களேயன்றிக் காலத்திற்கேற்ற அறிவியற் பாடங்களை வைக்கவில்லை. தமிழில் நூல்கள் இல்லை என்ற பொய்ப்பழியை விடாது சொல்லிக் கொண்டு வருவது மேதைப் பழக்கமாகிவிட்டது. நூற்றாண்டு களாக எவ்வளவோ நூல்களும் பல இலட்சக்கணக்கான புதுச் சொல்லாக்கங்களும் வந்துள. இந்திய நாட்டிலேயே முதன் முதல் 7565பக்கம் கொண்ட கலைக் களஞ்சியம் 10 தொகுதிகள் வந்துளது. ஆயிரத்துக்கு மேலான பட்டத்துறை நூல்கள் வந்துள. இன்னும் அவ்வளவு நூல்களும் அச்சாகி வந்த பின்பு தான் பாடங்கள் வைக்க முடியுமா? அப்படி எந்த மொழிக்காவது உலக வரலாறு உண்டா? பாடம் வைப்பதும், நூல்கள் எழுதுவதும், பதிப்பிப்பதும் இணைந்துதானே போகும். இன்ன ஆண்டுமுதல் எல்லாத் துறையும் எல்லா வகுப்பும் தமிழ்வழி என்று ஆண்டுக் குறிப்பிட்டு விட்டால் கற்றவர்களும் பதிப்பர்களும், வேண்டும் நூற்செல்வங்களை நம்பிக்கையோடும், துணிவோடும் வெளியிடுவர். திருமணநாள் என்று தேதி வைத்த பின்பு தானே பல ஏற்பாடுகள் மும்முரமாக இந்நாட்டில் நடப்பதுண்டு. இலங்கையில் பொறியியல் மருத்துவம் எல்லாம் தமிழ்வழி கற்பிக்கப்படுகின்றன. வேண்டிய உயர் நூல்கள் உள்ளன. ஆதலின் தமிழகத்தில் தமிழ்வழிக் கல்விக்கு நூல்கள் இல என்பது குருட்டுரையாகும். உயர்நிலைப்பள்ளி, மேனிலைப்பள்ளிவரை தமிழ்வழி வந்தபின் இப்போது எவ்வளவோ பாட நூல்கள் வந்துவிட்டனவே. இந்தியா உரிமை பெற்று 40 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நூல்கள் இல்லை என்று கிளிப்பிதற்றிக் கொண்டிருப்பது நாட்டின் கடமையைக் கழிப்பதாகும்.: தமிழுரிமையைப் பழிப்பதாகும். ஆங்கில ஆதிக்கம் கொண்ட கல்விச் சாதியார் தமிழைக் கீழ்ப்படுத்துவதாகும். காந்தியடிகள் தாகூர், இராதாகிருட்டிணன், பாரதியார், காமராசர், அண்ணா முதலான பெருமக்கள் மழலை முதல் பல்கலை வரை, தாய்மொழிதான் எல்லாத் துறையிலும் பயிற்று மொழியாக இருக்கவேண்டும் எனவும், இன்றைய ஆங்கில ஆதிக்கம் சிறுபான்மையரை மேற்சாதியாகவும் பெரும்பான்மையரைக் கீழ்ச்சாதியாகவும் வேற்றுமைப் பிளவு படுத்துகின்றது எனவும் தெளிவாகக் கூறியுள்ளனர். 4. பாராள் மன்றங்களும், சட்ட மன்றங்களும் தாய்மொழிக் கல்விக் கொள்கை பற்றித் தெளிவான தீர்மானங்கள் செய்துள்ளன. தமிழகச் சட்ட மன்றத்திலும், பேரவையிலும், ஆட்சிமொழியாகவும், பயிற்று மொழியாகவும் தமிழ்தான் இருக்கவேண்டும் என்ற முடிவுண்டு. கல்வியமைச்சர்களாக விளங்கிய பெருமக்கள் தி.சு. அவினாசிலிங்கனாரும் சி. சுப்பிரமணியனாரும் தமிழ்ப் பயிற்றுமொழிக் கொள்கையை உறுதியாக வெளியிட்டனர். தமிழகத்தின் எல்லாக் கட்சிகளுமே இக்கொள்கையில் உடன்பாடு கொண்டனவே. எங்கள் தமிழ்வழிக் கல்வியியக்கம் கூறும் தமிழ் ஒன்றே முழுப்பயிற்று மொழி என்ற கொள்கை புதியதன்று: எல்லாப் பெருமக்களும் எல்லாக் கட்சிகளும் முன்பே சொல்லிமுடித்த பழங்கொள்கையே யாகும். 5. கொள்கையில் உறுதியும் தெளிவும் இருந்தாலும், தமிழ் நாட்டின் அரசுகளும், கட்சிகளும் ஐம்பது ஆண்டுகளாக அதனைச் செயற்படுத்திய முறைகள் மிகத் தவறானவை: இடைஞ்சலானவை. கொள்கைக் கேடானவை. முறையற்ற போக்கால் தமிழைத் தமிழ் மக்களிடம் மதிப்பிழக்கச் செய்து விட்டார்கள்: ஆங்கிலப் பக்கம் மிகவும் சாயும்படிச் செய்து விட்டார்கள். `மக்கள் ஆங்கிலத்தையே விரும்புகின்றார்கள்; தமிழை விரும்பவில்லை’ என்று சொல்வது முழுப்புரட்டாகும். மக்கள் ஆங்கில மோகம் கொண்டவர்கள் இல்லை. ஆங்கிலத்தை வளர்ப்பது அவர்கள் எண்ணமும் இல்லை. இந்திப் பக்கம் சாய்கின்றார்கள். இந்திமேல் மோகமா? இந்தியைத் தேசிய மொழியாக வளர்க்கும் ஆசையா? இல்லவே இல்லை. எது சோறு போடும்; எது வேலை தரும்; எதுமேல் வாய்ப்பு தரும்; எது உடனடியாகப் பொருளாதாரம் தரும்; எது உலக வாழ்வு தரும் என்பதுவே இயல்பான மக்களின் பொது நோக்கம். இதுவே `பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பறபடி, வாழ்வு நோக்கம். தமிழ்வழி எத்துறையும் கற்றோருக்குத் தமிழ் நாட்டில் வேலைகள் ஊதியங்கள் வாய்ப்புக்கள். பதவிகள். பதவியுயர்வுகள், உயர்க் கல்விகள் என்று தமிழகவரசுகள் பொருளாதார வாழ்வு வழங்கியிருந்தால் தமிழ்வழிக் கொள்கையை எல்லாத் தமிழ்மக்களும் ஆவலோடு தழுவி யிருப்பார்கள் வாழ்வெல்லாம் ஆங்கில வழிக்கு; வறுமைப் பிணியெல்லாம் தமிழ்வழிக்கு என்றால், பிச்சையெடுக்கவா தமிழ்வழிக் கற்பார்கள்? உலக வாழ்வு கொடுக்க அறியாத தமிழகவரசுகள் தமிழ் மக்கள் மேல் பழிபோட்டு விட்டுத் தமிழ்வழியைக் கேலி செய்து வருகின்றன; இன்னும் மேலும் கேலிக்கு ஆளாக்குகின்றன. தமிழ்மக்கள் குற்றமோ மோகமோ உடையவர்கள் இல்லை; தமிழ் வழிக்கு வேலையும் வேலை வாய்ப்பும் பிற வாய்ப்புகளும் சிறிதும் நல்காத தமிழகவரசுகளே குற்றமுடையன பழியுடையன, மடமையுடையன, இன்னும் இவ்வாறு செல்லுமோ? என்பதே கேள்வி. 6. இன்னொரு கருத்தையும் தமிழ்வழி இயக்கத்தாராகிய நாங்கள் தெளிவாகச் சொல்லுகின்றோம். தமிழ்வழி கற்றவர் கட்கே வேலைகளும் வேலை வாய்ப்புக்களும் தமிழ்நாட்டில் வழங்க வேண்டும் என்று சொல்லும்போது, மக்களை நாங்கள் பிரிக்கவில்லை. தமிழர்கட்குத்தான் வேலை கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. தமிழகத்தில் பலமொழியாளர்கள் வாழ்கின்றனர். தெலுங்கர், கன்னடர், மலையாளர், சௌராட்டிரர் வடநாட்டினர் எனப் பல இனத்தாரும் ஏனை மாநிலங்களிற் போலவே நிலையாக இங்கும் வாழ்ந்து வருகின்றனர். இது இந்தியவொருமைப் பாடாகும். ஆதலின் இந்திய மக்களை இவ்வியக்கம் பிரிக்கவில்லை என்றும் தமிழ் வாழ வேண்டு மல்லவா! தமிழ் நிலத்தில் வளர வேண்டுமல்லவா? தமிழ்நாட்டில் மதிப்போடு செல்வாக்காக இருக்கவேண்டுமல்லவா? தமிழ் ஏனை மாநிலங்களில் உரிமையோடும், வளத்தோடும் காலூன்றமுடியுமா? ஆதலின் தமிழகத்தில் எந்த மொழியினர் தமிழ்வழி கற்றாலும், அவர்கட்கெல்லாம் தமிழகம் வேலையும், பிறவாய்ப்புக்களும் சமமாக வழங்கவேண்டும் என்பதுவே இவ்வியக்கத்தின் தெளிவான கோட்பாடு. தமிழ்வழிக்குப் பிழைப்பு வாய்ப்பு; தமிழுக்கு வாழ்வுவளம் என்பதுவே எங்களின் மொழி மந்திரம். 7. தமிழ்நாட்டில் மழலை முதல் பல்கலை வரை எல்லாத் துறையிலும் தமிழ் ஒன்றே பயிற்றுமொழி என்ற ஒருமொழிக் கொள்கையை வலியுறுத்தும் நாங்கள் ஏனை எந்த மொழிகளையும் யாரும் துணை மொழிகளாகக் கற்பதை வரவேற்கின்றோம். கற்பதற்கு நிறைந்த வாய்ப்பு இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம். இன்றைய உலகச் சூழ்நிலையில் தமிழ்ப் பயிற்றுமொழியோடு வேறு சில இந்திய மொழிகளையும் அயல்நாட்டு மொழிகளையும் கற்றுக் கொள்வது இந்திய வொருமைப்பாட்டிற்கும் உலகவொருமைப் பாட்டிற்கும் நல்லது. ஆனால் எல்லாம் தமிழுக்கு அடுத்து அமையவேண்டுமேயன்றித் தமிழை விடுத்து அமையக்கூடாது. இதுவே உறுதிப்பாடு. 8. `என்றுமுள தென் தமிழ்’ என்று கம்பரும், `சீரளமைத் திறம்’ என்று சுந்தரனாரும் `யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாரதியாரும் இவ்வாறே பலரும் போற்றிய கன்னித் தமிழுக்கு ஆங்கிலப் பள்ளிகளில் சாவுவாடை வீசக்கண்டு மனங்கொதிக்கின்றோம். கிரேக்கம், இலத்தீன் போல நம் செந்தமிழும் வருங்காலத்தில் வழக்கிழந்து விடுமோ என்று உயிர்துடிக்கின்றோம். இதற்குக் காரணம் என்ன? நம் பால்வாய்ப் பசுந்தமிழ்க் குழந்தைகள் இரண்டரை வயதிலேயே டு.மு.ழு. என்ற ஆங்கில வழிப் பள்ளிகள் என்னும் தொழுவங்களில் அடைக்கப்படுகின்றன. அங்குத் தன் பெயர், தாய்ப்பெயர், தந்தை பெயர் கூட ஒலிக்க வராத இப்பச்சிதழ்க் குழந்தைகட்கு அங்கு ஆங்கிலச் சொற்களும் ஆங்கிலவொலியும் ஆங்கிலத் தொடைப் பாடல்களும் திணிக்கப்படுகின்றன; தாய்மொழி தமிழ் என்ற உணர்வு இவர்கட்குப் பொசுக்கப்படுகின்றது; நாட்டுப்பற்று முளையிலே கிள்ளப்படுகின்றது; இதழும் பல்லும் முற்றாத, உணவு ஊட்டிவிடவேண்டிய, உடை மாட்டிவிடவேண்டிய இரண்டரை வயதில் ஆங்கிலமொழி மாற்றம் செய்வது மதமாற்றத்திலும் கொடியது; கொலைக்கு ஒப்பானது. இதன்கேடு சொல்லும் தரமன்று. குழலினும் யாழினும் இனிய தமிழ் பேச வேண்டிய மழலைகள், இரண்டரை வயதில் ஆங்கில வாய்ப்படுதல் என்பது இயற்கையன்று; அறமன்று; எதிர்கால நலமன்று. மேலும் ஆங்கிலப் பள்ளிகள், பிள்ளைக சுமக்க முடியாதபடி நூல் களையும், குறிப்பு நூல்களையும் விதிக்கின்றன. இக்குழந்தைகள் சுமைதூக்கிகளாகக் காட்சியளிக்கின்றன. கல்லூரி மாணவன்கூட மிகச் சில நூல்களையே வகுப்புக்குக் கொண்டு வருகின்றான். இந்த ஆங்கிலப் பள்ளிக் கடைகளில் அடைக்கப்படும் குழந்தைகளோ நாள்தோறும் தள்ளாடிச் சுமக்கும் நூல் மூட்டை கனமானது; பல வீடுகளில் பெற்றோர்களும், வேலைக்காரிகளும் இவற்றைச் சுமந்து கொடுக்கின்றனர். இதுவா கல்வி? மேலும் இந்த ஆங்கிலக் கடைகளில் சேர்ப்பதற்குப் பல்லாயிரம் வன்கொடைகள் கொடுக்கப்படுகின்றன. முதல் வகுப்பிற்கே ரூ. 5000 அளவு ஆகின்றது. மூன்று நான்கு விள்ளைகள் உடைய குடும்பம் இவ்வாறு சிறு கல்விக்குச் செலவழித்தால், ஓடு எடுக்கவேண்டிய நிலை வரும். இவை ஆங்கில மோகத்தின் மாயைகள், தங்கள் குழந்தைகள் நன்றாகப் படிக்கவேண்டும் என்ற பெற்றோரின் ஆசையை, ஆங்கிலப் பள்ளிகள் பணமாக்கிச் சுரண்டுகின்றன. இவையெல்லாம் அரசு பார்த்துக் கொண்டிருப்பதுதான் வேடிக்கையாகும். 9. ஒரு சிறு பெட்டிக் கடை வெற்றிலை பாக்குக் கடை வைப்பதற்கும், காய்கறிக் கடை வைப்பதற்கும், சிற்றுண்டிக் கடை வைப்பதற்கும், சிறு தொழில் நடத்துவதற்கும், சிறு அச்சகம் நடத்துவதற்கும் இசைவு வேண்டும் என்று கடிய விதிகள் செய்யும் அரசு மூலை முடுக்கு மறுகு சிற்றூர் தோறும் டு.மு.ழு. ரு.மு.ழு. என ஆங்கிலப் பள்ளிக் கடைகள் வைப்பதற்கு இசைவு உண்டா என்று கேட்பதில்லை; சிறு குழந்தைகளுக்கு ஆங்கில நஞ்சூட்டும் இப்பள்ளிகளைத் தடைசெய்வதுமில்லை. ஒரு புறம் `நீராரும் கடலுடுத்த நிலமடந்தை’ என்ற தமிழ் வாழ்த்து: இன்னொருபுரம் மம்மி டாடி என்ற ஆங்கிலப் பயிற்சி ஆதலின் எங்கள் தமிழ்வழிக் கல்வியியக்கம் அரசுக்குச் சொல்வது யாது? பச்சிளம் தமிழ்க் குழந்தையினத்தை இரண்டரை வயதிலேயே ஆங்கில மொழிமாற்றம் செய்யும் பள்ளிகளைத் தடை செய்ய வேண்டும். கல்வியின் பேரால் குழந்தைகளைப் புத்தகச் சுமையால் வாட்டிப் பெற்றோர்களிடம் பணம் கறக்கும் கொடுமையை அகற்ற வேண்டும்; இதுமட்டும் போதாது; சிறு மழலைத் தமிழ்ப் பள்ளிகளை ஊர்தோறும் அரசே தொடங்கவேண்டும். குழந்தைகளைக் காப்பது அரசின் பொறுப்பு. ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தேசிய எழுத்தறிவியக்கம் என்ற முதியோர் கல்வித்திட்டம் தொடங்கி அதற்கு 600 கோடி ரூபாய் ஒதுக்கப்படிருந்தது. 50, 60 வயது வந்த முதியோர் கல்விக்குப் பெரும்பயனின்றிச் செலவழிப்பதைவிட, பூஞ்செடிபோல வளரும் பச்சிளங் குழந்தைகளின் தமிழ் மழலைப் பள்ளிக்குத் திட்டமிட்டு நிதி செலவு செய்வது தானே நாட்டுக்கு நிலையான எதிர்கால முன்னேற்றமாகும். தமிழ் நாட்டு அரசுக் கல்வித் திட்ட ஆய்வுக்குழு முக்கியமாக ஆங்கிலச் சிறு பள்ளிகளின் கல்வி முறைகளையும் நூற்சுமைகளையுமாவது உடனே கவனித்து ஒழுங்குபடுத்தவேண்டும். அதன்மேல், தமிழ் மழலைப் பள்ளிகளை அரசு தானே நிறுவுவதோடு, தனியார் தொடங்கும் இப்பள்ளிகட்கு வழக்கம்போல் மானியத்தொகை வழங்க வேண்டும். இந்த நெறிகளை மேற்கொண்டால் பெற்றோரின் சுமை குறைவதோடு, குழந்தைகளின் தாய்மொழிக் கல்வி வளர்வதோடு, தமிழுக்குச் சாவு வாடை நீங்கும். இன்று உணவு இலவசம் காலணி இலவசம், புத்தகங்கள் இலவசம் என்ற பெயரேயன்றி, பள்ளிகளிற் சேர்வது இலவசமாக இருக்கவில்லை. பணம் கறக்கும் தீமையைக் கண்டுவருந்துகின்றோம். இந்த ஊழலை நிறுத்துவது அரசின் தலையாய பொறுப்பு. 10. இன்றைய கல்வி நடைமுறையொன்றை வெளிப்படுத்த விரும்புகின்றோம். ஆங்கிலவழி என்று சேர்ந்துபடிக்கும் மாணவர்களில் பலர் பட்ட வகுப்புகளில் தேர்வு எழுதும்போது தமிழில்தான் எழுதுகின்றார்கள். இதற்குப் பல்கலைக் கழகமும் இசைவு வழங்கியுள்ளது. முழுதும் ஆங்கிலமாக எழுதும் ஆற்றலோ சொல்லிக் கொடுக்கும் ஆற்றலோ வரவரக் குறைந்து விட்டது. ஆங்கிலவழி என்ற பொய்த் தோற்றம் இனியும் ஏன்? சான்றிதழ்களில் இப்போது ஆங்கிலவழி என்றோ தமிழ்வழி என்றோ குறிப்பதில்லை. குறிப்பது தான் நல்லது. அப்போதுதான் உண்மை வெளிப்படும். தமிழ்வழி கற்றவர்க்கே எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் வேலையும் பிற வாய்ப்புக்களும் வரப்போவதால், சான்றிதழ்களில் எந்தவழி என்பதனை இனியேனும் குறித்தாக வேண்டும். வழியை மறைப்பது நலமாகாது. 11. தமிழக ஆளுநர் அரசு இவ்வாண்டுமுதல் தமிழுக்கு மேலும் ஒரு புதைகுழியைத் தோண்டியிருக்கிறது. முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் வாய்மொழிப் பாடமாகச் சொல்லிக் கொடுக்கப்படுமாம். ஐந்துவயதுக் குழந்தைக்கு ஆங்கிலப் பேச்சு எதற்கு? யாரோடு ஆங்கிலம் பேசப்போகிறதோ, தெரியவில்லை. தமிழ் மழலையாகப் பேசும் இவ்வயதில் ஆங்கிலப்பேச்சு ஊடாடினால், தமிழ் ஒலிகள் கெட்டுவிடும். குழந்தையின் இதழ்கள் எட்டு வயதுக்கு மேலே தான் ஒலிச் செம்மையும், நடைச் செம்மையும் பெறும். ஐந்து வயதிலே மணிப்பிரவாளமா? தமிழ் ஒலியும், சொல் வடிவும் எவ்வளவு பாழ்பட்டு விடும்? தமிழை வேரிலே கெடுப்பதற்கு இதைவிட வேறு சூழ்ச்சி வேண்டிய தில்லை. முதல் வகுப்பிலேயே ஆங்கிலம் புகுத்துவது ஏற்கனவே காளான் போலப் பெருகி இருக்கும் ஆங்கில மழலைப் பள்ளிகட்குத் தூபம் போடுவதாகும்; பாதுகாப்புக் கொடுத்து வலுப்படுத்துவதாகும். ஆங்கிலம் கற்பிப்பதுபோல ஓர் ஆசை காட்டிக் கொடுக்கும் போக்கு இது. ஒருவர் பரிந்துரை செய்தார் என்றால் பரிந்துரையெல்லாம் அரசு ஏற்றுக்கொள்கின்றதா? இந்தப் பரிந்துரையைச் சிலகாலமுள்ள ஆளுநர் அரசு நிறைவேற்ற வேண்டுமா? ஆங்கில ஆட்சி இருந்த காலத்திற் கூட ஐந்தாம் வகுப்புக்குப்பின்பு தான் ஆங்கிலம் பள்ளியிற் சொல்லிக் கொடுக்கப்பட்டது. இன்று பக்கத்து மாநிலங்களிற்கூட ஐந்தாவது வகுப்புக்கு மேல் தான் கற்பிக்கப்படுகின்றது. ஆதலின் தமிழக குழந்தைகளைக் கெடுக்கும் முதல் வகுப்பு ஆங்கிலத்தைக் கைவிடுமாறு ஆளுநர் அரசைக் கேட்டுக்கொள்கின்றோம். 12. தமிழ்வழிக் கல்வியியக்கத்தின் முடிவான கொள்கை களை மீண்டும் அரசுக்கும், மக்கட்கும் தெளிவுப்படுத்துகிறோம். அ. மழலை முதுல் பல்கலை வரை எல்லாத் துறையிலும் தமிழ் ஒன்றே பயிற்று மொழியாக வேண்டும். இதுவே ஒரு மொழிக் கொள்கை. ஆ. எந்த இந்திய மொழிகளையும் ஆங்கில முதலான அயன் மொழிகளையும் துணை மொழிகளாகக் கற்கலாம், கற்க வேண்டும், கற்கும்பொழுது வாய்ப்புப் பெருக வேண்டும் இது துணை மொழிக் கொள்கை. இ. தமிழ்நாட்டில் தமிழ்வழி கற்றவர்க்கே வேலையும் வேலைவாய்ப்பும், உயர் கல்வியும், பிற வாய்ப்புக்களும் உண்டு. இது வாழ்வுக் கொள்கை, சோறும், பொருளும் உலக மதிப்பும் தராத தமிழ் தீண்டா மொழியாகிச் செத்துவிடுமல்லவா! ஆதலின் வேலைப் பிழைப்பு தமிழ்வழிக்கே வழங்கப்படும். எந்த இந்தியன் தமிழ்வழி கற்றாலும் அவனுக்கும் அவளுக்கும் எல்லாம் தமிழ்நாட்டில் வேலை கிடைக்கும். ஈ. ஆங்கில வழியில் உயர் கல்வி கற்பார் கற்கட்கும்; அதற்கு இவ்வியக்கம் தடையில்லை. வெளி மாநிலங்களிலும் வெளிநாடு களிலும் பரந்த அளவில் வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று தானே ஆங்கில வழியிற் கற்கின்றார்கள். ஆதலின் அவர்கள் வேலைகளைப் பரந்தவுலகிற் பெறட்டும். தமிழ் வழி கற்றவர்கட்கு, தமிழ் நாட்டில் வேலைகளை விட்டுக் கொடுக்கட்டும். இதுவே வாழ்வறம், உலகமொழியான ஆங்கில வழியிற் பட்டம் பெற்றுவிட்டுத் தமிழ்நாட்டில் வேலை கேட்பதும், தமிழ்நாட்டை நம்பித் தமிழ் கற்றவரின் வேலை வாய்ப்பிற் பங்கு போடுவதும் முறையன்று. தமிழ் மாநிலத்தில் வேலை வேண்டுமென்றால், தமிழ்வழிப்படி; வேறு வழிகளிற் படித்தால் வேறிடங்களில் வேலை தேடு’ இதுவே இவ்வியக்கத்தின் நல்லுரை. உ. தமிழ்நாட்டில் சிறு மழலைப் பள்ளிகளையும் அரசே தொடங்கவேண்டும்; தொடங்கும் தனியார் பள்ளிகட்கு உரிய நிறைமானியம் வழங்க வேண்டும். ஆங்கில வழிப் பள்ளிகளின் நடைமுறைகளைச் செம்மைப் படுத்துவதற்கும், அவற்றைத் தமிழ்வழிப் பள்ளிகளாக மாற்றுவதற்கும் அதிகாரம் மிக்க உயர் குழு ஒன்று அரசு உடனடியாக அமைக்க வேண்டும். வன்கொடை கள் வாங்குவதற்குப் பெறுகைச் சீட்டுக் கொடுத்துவிட்டால் போதாது. அது முத்திரையிட்ட ஊழலாகும். ஆதலின் நேர்மையும், நாணயமும், எளிமையும் கல்வியுலகிற் கடைப்பிடிக்க வேண்டும். ஊ. இவ்வாண்டு முதலாம்வகுப்பு முதல் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் தகாத கல்விமுறையை உடனடியாக ஆளுநர் அரசு நிறுத்தவேண்டும். அப்போது தான் குழந்தைப் பருவத்துத் தமிழ் பிழையற்ற செம்மையான தமிழாக வளர்ந்து பதியும். எ. இத் தமிழ்வழிக் கல்வியக்கம் காந்தீய முறையிலும் வள்ளுவ நெறியிலும் செயல்பட்டு ஒழுகும். எல்லாரும் ஒப்புக் கொள்ளப்பட்ட தமிழ் பயிற்று மொழிக் கொள்கையும், வாழ்வுதரும் வேலை வாய்ப்பும் எத்தகைய போராட்டமுமின்றி விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறோம். மக்கள்மேல் பழி போடாமல், அரசு தான் தெளிந்து துணிந்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டு;ககொள்கின்றோம். `மெல்லத் தமிழினம் சாகும் என்ற சொல்லுக்கு இடமில்லாமல் சாவுத் திசையினின்று கன்னித் தமிழினைக் காப்பது ஒவ்வொருவரின் பிறப்புக் கடமை. இக்கடமையை நினைவுறுத்தவும் நிறைவேற்றவும் தோன்றியது இவ்வியக்ககம். வேண்டுமானால், காந்தியடிகள் காட்டிய அறப் போராட்டங்களையெல்லாம் இவ்வியக்கம் எத்துன்பம் வரினும் மேற்கொள்ளும் என்பது வாய்மை. `வாய்மையே வெல்லும்’ என்பது நம் அரசின் கோபுர மொழி. - மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் மதுரை ஊர்வலம் நிகழ்ச்சி விளக்கம் `குறளியம்’ திங்களிதழ் வெளியீடு குறளியம் (01-05-1989) மூதறிஞர் செம்மல் வ.சுப.மா. மறைந்தாரே! யார், யாரை, யாரால், எவரால், எப்படி ஆறுதல் படுத்துவது? தமிழையே தம் உயிர் மூச்சாகக் கொண்டும், திருக்குறளையும், தொல்காப்பியத்தையும் தம் இரு கண்களாகக் கொண்டும் வாழ்ந்து காட்டிய பெருமகனார் தமிழ்ச் சான்றோர் மூதறிஞர் செம்மல் முனைவர் வ.சுப. மாணிக்கம் அவர்கள் ஆவர். தமிழாசிரியராகத் தொடர்ந்த தம் பணியைத் தம் அறிவின் திறத்தாலும், பண்பாலும், ஒழுக்கத்தாலும், உண்மைப் பிடிப்பாலும், துணைவேந்தர் தகுதியோடு முடித்த பெருமை இவர்க்கே உண்டு. இவா தமிழன்னைக்குப் படைத்த தன்னிகரில்லாத் `தமிழ்க் காதலும்’ வண்மை மிகும் “வள்ளுவமும்” ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியக் கடலும்”, சீரொளி பரப்பும் “திருக்குறட் சுடரும்” ஆகிய நூல்கள் காலத்தால் மறையாதன. தமிழ் உள்ளளவும் புகழ் பரப்பி நிற்பன. எதிர்காலத் தமிழின மக்கட்குக் கலங்கரை விளக்கமாக வழி காட்டி வாழச் செய்வன. தனித்தமிழ்த் தந்தை தமிழ்க்கடல் மறைமலையடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி.க., தமிழ்த் திங்கள் மு.வ. ஆகிய தமிழ்ச் சான்றோர்களின் பேச்சாகவும் மூச்சாகவும் அவர் நம்மிடையே நடமாடினார். தலை சிறந்த தமிழ்ப் பற்றாளராகவும், தமிழ்ப் பற்றை ஊட்டுபவராகவும், தமிழ்க் காப்பாளராகவும் விளங்கினார். மூதறிஞர் செம்மல் ஐயா அவர்கள் தொல்காப்பிய ஆய்விலும் தோய்விலும், சங்க இலக்கிய ஆராய்ச்சியிலும், நம் மறையாம் திருக்குறள் பற்றிலும் அனைத்து இலக்கண இலக்கிய ஆய்விலும் தன்னிகரற்று ளங்கினார். குறளியம் (01-05-1989) தமிழ் உலகத்துக்கு புதிய சொல்லாக்கங்களை தந்தவர் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் - குன்றக்குடிபொன்னம்பல அடிகளார் புகழாரம் தமிழ் உலகத்துக்கு புதிய சொல்லாக்கங்களைத் தந்தவர் மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனார் என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் புகழாரம் சூட்டினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் வ.சுப.மாணிக்கனார் நூற்றாண்டு தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் சொ. சுப்பையா தலைமை வகித்து பேசியதாவது: மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் மிகச் சிறந்த ஆசிரியர். மிகச் சிறிய கிராமத்தில் பிறந்து, மிகப் பெரிய பல்கலைக்கழகமான மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக உயர்ந்திருப்பது இவருடைய உழைப்புக்கு சான்றாகும். இவர் மிகச் சிறந்த தமிழறிஞர், கவிஞர், பேச்சாளர், எழுததாளராகத் திகழ்ந்திருக்கிறார். மேடைகளில் பேசுவது போல வீட்டிலும் கலப்படமில்லாத தூய தமிழில் பேசும் இயல்பினர். தன்னுடைய பணிகளை தானே செய்துகொள்ளும் எளிமைப் பண்பினர். தன்னுடைய சொத்தில் ஆறில் ஒரு பகுதியை பொதுநலத்துக்குச் செலவிட விருப்பம் தெரிவித்தவர். இவர் ஒவ்வொரு நாளும் அதி காலையில் எழுந்து, தினமும் 4 மணி நேரத்துக்கு மேல் நூல்களைப் படிக்கும் இயல்பினர். இவருடைய இத்தகைய பண்புகளை இன்றைய மாணவர்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசும்போது, “தமிழுக்குக் கிடைத்த மாணிக்கம், வற்றாத தமிழக் கடல், பொய் சொல்லா மாணிக்கம், நீண்ட நெடிய வரலாற்றுப் பெட்டகம், பன்முகப் பரிமாணம் கொண்டவர் வ.சுப. மாணிக்கனார். அவர் வாழும் காலத்தில் செய்த பணிகள் அவர் காலத்துக்குப் பிறகும் அவர் காலத்துக்குப் பிறகும் நினைத்துப் பார்க்கப்படுவது சிறப்புக்குரியது. வாழ்க்கையில் வாய்மையாய் வாழ்வதற்கு தமிழ் ஒன்றே வழியென அதைத் தேர்ந்தெடுத்தவர். தன் வாழ்நாள் முழுவதும் உழைப்பு, வாய்மை, நேர்மை, ஆகிய மூன்றையும் முதன்மையாகக் கொண்டவர். பரந்துபட்ட மரபுக் கண்ணோட்டத்தில் ஆராயும் சிறப்பினர். புதிய சொல்லாக்கங்களைத் தமிழ் உலகத்துக்குத் தந்தவர். இளைய தலைமுறையினர் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும், சிந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தை தன் எழுத்துக் களிலும், பேச்சுக்களிலும் தொடர்ந்து வெளிப்படுத்தியவர். இளம் தலைமுறையினர் எந்தப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை எடுத்துரைத்தவர். தில்லை அம்பலத்தில் திருமுறைகள் ஏற மறுக்கப்பட்டபோது, அதனை எதிர்த்துப் போராடிய தமிழ்ப் போராளி வ.சுப.மாணிக்கனார். தமிழ் அறிவையும், தமிழ் உணர்வையும் இளம் தலைமுறையினர் வ.சுப. மாணிக்கனாரிட மிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார். நிகழ்ச்சியில், வ.சுப. மாணிக்கனாரின் மாணவர்களான பேராசிரியர்கள் தே.சொக்கலிங்கம், கு.வெ. பாலசுப்பிரமணியம், பழ. முத்து வீரப்பன், பேராசிரியர் இரா. மோகன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். முன்னதாக, வ.சுப. மாணிக்கனாரின் இணையதளம் தொடங்கப்பட்டது. வ.சுப. மாணிக்கனாரின் தற்சிந்தனைகள் என்னும் நூலை குன்றக்குடி அடிகளார் வெளியிட துணை வேந்தர் சொ.சுப்பையா பெற்றுக்கொண்டார். வ.சுப. மாணிக்கனாரின் மூத்த மகன் வ.சுப. மா. தொல்காப்பியன் அறிமுக உரையாற்றினார். வ.சுப.மாணிக்கனாரின் புதல்வர்கள் பாரி, பூங்குன்றன், புதல்வியர் தென்றல், மாதரி, பொற்றொடி மற்றும் வ.சுப. மாணிக்கனாரின் மாணவர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். முன்னதாக தமிழ்த் துறைத் தலைவர் மு. பாண்டி வரவேற்றார். பேராசிரியர் சு. ராசாராம் நன்றி கூறினார். - தினமணி 18.04.2017 செய்தி. அரும்பேராசான் வ.சுப. மாணிக்கனார் 1975 `முதுகலைத் தமிழ் வகுப்பில் சேரவேண்டி, சென்னைப் பல்கலைக்கழகம் சார்ந்த இரு கல்லூரிகளுக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும விண்ணப்பித்திருந்தேன். கல்லூரிகள் இரண்டிலுமிருந்து சேர்க்கைக் கடிதம் வந்த நிலையில், நான் மிகவும் விரும்பிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து அழைபபு வரவில்லை. தெரிந்து வரலாமென்று நேரில் சென்று, தமிழ்த்துறைத் தலைவரைக் கண்டு வணங்கி, `ஐயா, நான் எம்.ஏ. வகுப்பில் சேர விண்ணப்பித்திருக்கிறேன்’ என்று சொல்லி முடிப்பதற்குள், `எம்.ஓ.எல். வகுப்பில் சேருகிறாயா?’ என்று விடை வினா வந்ததது. அதுவரை நான் அறிந்திராத ஒரு படிப்பில் சேரச் சொன்னதால், `ஐயா, நான் எம்.ஏ..’ என்று இழுப்பதற்குள், `பன்னிப்பன்னிப் பேசக்கூடாது; எம்.ஓ.எல். சேருகிறாயா?’ என்ற அதே வினா! ஒருநொடி நான் வாயடைத்த நிலையில் உடன்பட்டுத் தலையசைத்தேன் போலும். `கடிதம் வரும்’. `உடனே வந்து சேர்’ என்று ஆணை பிறந்தது. வெளியில் வந்துதான் வினவித் தெரிந்துகொண்டேன், எம்.ஓ.எல். என்பது `மாஸ்டர் ஆஃப் ஓரியண்டல் லேர்னிங்ஸ்’ (கீழைக்கல்வி வல்லுநர் - தமிழ்) என்றும், அதைப்படிக்கச் சொன்னவர்தாம் பேராசிரியர் வ.சுப. மாணிக்கனார் என்றும்! அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அந்தக்காலத் தமிழ் எம்.ஏ., யை விடவும் அகலமும் ஆழமும் கொண்ட தமிழறிவுப் பாடத்திட்டத்துடன் பயிற்றுவிக்கப்பட்ட எம்.ஓ.எல். தமிழ்ப் படிப்பைப் பற்றி மாணவர்கள் பலரும் அறியாமையாலும் அறிந்து மிரண்டதாலும் அவ்வகுப்பில் மாணவர் சேர்க்கை அருகி யிருந்தது. ஆயினும், பேராசிரியர் அப்படிப்பை வளர்க்கும் கொள்கைப் பிடிப்போடு, எம்.ஏ. வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களை மடைமாற்றம் செய்து எம்.ஓ.எல். வகுப்பில் சேர்த்துப் பயிற்றுவித்தார். அந்த ஆண்டில் முதல் மாணவனாகச் சேர்ந்த என்னைத் தொடர்ந்து 10 மாணவர்களும 5 மாணவிகளுமாக 16 பேரைச் சேர்த்து வெற்றி கண்டார் வ.சுப. அடுத்த ஆண்டும் தொடர்ந்த எம்.ஓ.எல். 1977இல் பேராசிரியரின் ஓய்வுக்குப்பின் தொடர இயலாமல் துவண்டது. இன்றுபோல் கருத்தரங்குகள் மிகவும்நடைபெறாத அக்காலங்களில், `தொல்காப்பியக் கருத்தரங்கு’ என்பதுபோல் ஒவ்வொரு பொதுத்தலைப்பில் துரையாசிரியர்கள் அனைவரும் தனித்தனி ஆய்வுக்கட்டுரைகள் படிக்க வேண்டும் என்ற கட்டாயத்துடன், ஆண்டிற்கு இரு முறையாக ஏழாண்டுகளில் 14 கருத்தரங்குகளை மும்மூன்று நாள்களில் கோலாகலத் திருவிழாக்களைப் போல் நடத்திய சாதனை குறிப்பிடத்தக்கது. 1976-1977 கல்வியாண்டில் பேராசிரியர் வ.சுப.வின் தலைமைப் பெருமிதம் வெளிப்படுமாறு நிகழ்ந்ததோர் நிகழ்வு இங்கே நினைவுகூரத் தக்கது. நடுவண் அரசில் முனனாள் அமைச்சராயிருந்த ஆற்றலும் செல்வாக்கும் மிக்க ஒருவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராய் வந்திருந்தார். ஒருநாள் முன்னறிவிப்பு ஏதுமின்றித் தமிழ்த் துறையைப் பார்வையிட வந்திருந்த துணைவேந்தர், அங்கே மகா வித்துவான், ச. தண்டபாணி தேசியர், பெரும்புலவர் செவேங்கடராமச் செட்டியார் போன்ற முதுபெரும் பேராசிரியர்கள் அமர்ந்திருந்த ஆய்விருக்கைப் பகுதிக்குள் சென்று, பாரம்பரியத் தோற்றத்திலிருந்த அச்சான்றோர்களை மதிக்காமல், `நீங்கள் யார்? இங்கே என்ன செய்கிறீர்கள்?’ என்று வினவவே, தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு `நான் கம்பராமாயண ஆய்வுசெய்கிறேன்’ என்று கூறிய அறிஞரிடம், `மிகவும் அவசியந்தான்” என்று இகழ்சசியாகக் கூறிப் போய், அடுத்த அறையில் பண்டிதமணியின் மகனார் கதி. தியாகராசன் பாடம் நடத்திக் கொண்டிருந்த எம்.ஓ.எல். முதலாமாண்டு வகுப்பினுள் நுழைந்தவர், தரையில் கிடந்ததோர் காகித கிழிசலைக் கண்டு கொதிப்படைந்து, அதனை எடுக்குமாறு ஆசிரியரையே ஏவினார். அவர் திகைத்து நின்ற நிலையில், மாணவர்கள் பொங்கியது கண்ட துணைவேந்தர் அங்கிருந்து போய்விட்டார். உடனே, மாணவர்கள் அனைவரும் வகுப்பை விட்டு வெளியே வந்து துணைவேந்தருக்கு எதிராக முழக்கமிடவே, அவர்களை உடனடியாக அமைதிப்படுத்திய பேராசிரியர் வ.சுப. தாமே விரைந்துபோய்த் துணைவேந்தரைச் சந்தித்து, நுண்மாண் நுழைபுலத்தோடு நயந்து உரையாடி, அவரே வருத்தம் தெரிவிக்குமளவு அவர்தம் மிகைச்செயல்களை உணர்த்திவிட்டு மீண்டார். அன்றைய நிகழ்வில் அரும்பேராசான் வ.சுப.மலைய மானின் மக்களை யானைக்கால்களால் இடறத் துணிந்த புறநானூற்றுக் கிள்ளிவளவனின் மிகைச்செயலை மாற்றிய கோவூர்கிழாராகவே எங்களுக்குத தோன்றினார். காரைக்குடியில் தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவித் தாம் அதன் தலைவராயிருந்து அருந்தமிழ்த் தொண்டுகள் பல ஆற்றியுள்ளார் வ.சுப. அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பணி ஓய்வுக்குப்பின் மதுரை - காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்றுப் புரிந்த சாதனைகள் பலவற்றுள், அப்பல்கலைக் கழகத்தோடு இணைந்திருந்த வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த ஐந்து கல்லூரிகளின் தமிழ்த்துறைகளை உயராய்வு மையங் களாகத் தர மேம்பாடு செய்தது இங்கே நினைவுகூரத்தக்கது. அம்முறையில் காரைக்குடி அழகப்பா கல்லூரியின் தமிழ்த்துறை முதலில் உயராய்வு மையமானதன் தொடர்ச்சியாகவே அது பல்கலைக்கழகமாய் வளர்ச்சியுற்றது. தாம் ஏற்கனவே பேராசிரியரகவும் துறைத்தலைவராகவும் முதல்வராகவும் பணியாற்றிய அழகப்பா கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் அவ்வகையில் சிறந்த வழிவகுத்தார் வ.சுப. வ.சுப. தமிழகம் உள்ளிட்ட இந்தியத் திருநாட்டிற்கும் உலகத் தமிழர்களுக்கும் கொடுத்துள்ள தமிழ்க்கொடைகள் உச்சிமேற் கொண்டு மெச்சத்தக்கவை. ஆய்வுநூல்களாகவும் அருந்தமிழ்ப் படைப்பிலக்கியங்களாகவும் நேர்முக அரங்குகளிலும் கற்பனை அரங்குகளிலும் ஆற்றிய சொற்பொழிவு நூல்களாகவும் கடித இலக்கியமாகவும் அவரளித்துள்ள நூற்கொடைகள் ஆழ்ந்தகன்ற கருத்துக் கருவூலங்களாய் அமைந்துள்ளன. ஆய்வு நூல்களுள் தலைமை சான்ற தமிழ்க் காதல், தொல்காப்பிய இலக்கணங்களோடு சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற அகத்திணைகளின் தனித்தன்மைகளை ஆய்ந்து விளக்கும் அருமையுடையது. அந்நூல் வெளிவந்த நாள்முதல் அதன் ஆய்வுக் கருத்துகளை மேற்கொள்ளாமல் ஓர் அகத்திணை ஆய்வும் சிறப்புற அமைந்த தில்லை. அவ்வகையில் இன்றியமை யாத அகத்திணை ஆய்வாகத் தமிழ்க்காதலை வடித்துள்ளார் வ.சுப. அண்ணாமலைப் பல்கலைக்கழக அறக்கட்டளை அரங்கில் காப்பியப் பார்வை, காப்பியக்களங்கள், காப்பிய நேர்மை என்னும் மூவகை நோக்கில் கம்பராமாயணத்தின் அமைப்பும் கம்பரின் சிறப்பும் குறித்து வ.சுப. நுட்பமுடன் நிகழ்த்திய மூன்று சொற்பொழிவுகளின் நூல்வடிவே `கம்பர்’ என்பதாம். உலகப்பொதுமறை திருக்குறள் கருத்துகளைப் பன்னிரு தலைப்புக்களில் பகுத்துக்கொண்டு கற்பனை அரங்குகளில் நிகழ்த்திய சொற்பொழிவு நூலாகக் குறிக்கோள் நடையுடன் `வள்ளுவம்’ என்ற நூலையும் வழங்கியுள்ளார். தொல்காப்பியக் கடல், சங்கநெறி, திருக்குறட்சுடர், காப்பியப்பார்வை, இலக்கியச் சாறு ஆகிய ஐந்து தொகுப்புகளில் அவ்வப்பொருண்மை பற்றி மொத்தம் 111 ஆய்வுக் கட்டுரைகளை அளித்துள்ள பேராசிரியரின் ஆய்வு நுட்பங்கள் அறிந்துபோற்றத் தக்கவை. மனைவியின் உரிமை, நெல்லிக்கனி, உப்பங்கழி, ஒரு நொடியில் எனும் நாடக நூல்கள் நான்கினைப் படைத்துள்ள பேராசிரியர், அவற்றின் வாயிலாய் இலக்கிய மரபிலும் சமூக - குடும்ப நிலைகளிலும் கடைப்பிடிக்க வேண்டிய கருத்து விளக்கங்களைக் கவினுறக் காட்டியுள்ளார். இளமை முதலே தோய்ந்த சொல்நயம், பொருள் நயங்களோடு தாம் பாடிய பாடல்கள், கவிதைகளை மாமலர்கள் என்ற தொகுப்பு நூலாக வெளியிட்டுள்ளார் வ.சுப. வள்ளல் அழகப்பரைப் பற்றி அவர் பாடிய 171 வெண்பாக்களின் தொகுப்பு கொடைவிளக்கு என்ற நூலாக ஒளிர்கின்றது. அண்ணாமலை அரசர், முத்தையவேள், அழகப்பர் ஆகியோர் பற்றி, அவரவர் கல்வி நிறுவனங்களில் பாடப்பட்டு வருகின்ற வாழ்த்துப் பாடல்கள் எல்லாம் வ.சுப.வின் வார்ப்புக்களேயாம். இவ்வாறு ஆய்வாளராக, ஆசிரியராக, நாடகப் படைப்பாளராக, கவிஞராக, இன்னும் பன்முகப்பட்ட ஆளுமைத்திறன்களோடு ஆற்றல் வாய்ந்த நெஞ்சுரம் மிக்க நிர்வாகியாகவும் திகழ்ந்தவர் அரும்பேராசான் வ.சுப. மாணிக்கனார் - முனைவர் வ. குருநாதன். தினமணி (தமிழ்மணி 23.4.2017)