மாணிக்க விழுமியங்கள் - 14 (நூற்றாண்டு நினைவு வெளியீடு) உரைநடையில்திருக்குறள் - முதல் பதிப்பு 1963 கம்பர் நாற்பது - முதல் பதிப்பு 1984 தொல்காப்பியம் எழுத்ததிகாரமும் நூன்மரபும் - முதல் பதிப்பு 1990 ஆசிரியர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் பதிப்பாளர் கோ. இளவழகன் மாணிக்க விழுமியங்கள்- 14 ஆசிரியர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 16+392 = 408 விலை : 380/- வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 408 கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 1000  நூலாக்கம் : கோ. சித்திரா, ப. கயல்விழி   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006. நுழைவுரை தமிழ் மரபுகளைத் தலைமுறை தலைமுறையாகக் காத்து வரும் தமிழ்ச்சமூகங்களில் தலையாய சமூகம் நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகம். இந்தச் சமூகம் ஈன்றெடுத்த அரும்பெரும் அறிஞரும், நாடு, மொழி, இனம், சமுதாயம், கல்வி, இலக்கியம், வாழ்வு முதலான பல்வேறு பொருள்களைப் பற்றித் தம் தெள்ளத் தெளிந்த சிந்தனைகளால் தமிழ் இலக்கிய வானில் சிந்தனைச் சிற்பியாக வலம் வந்தவர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் ஆவார். இப்பெருந்தமிழ் ஆசான் வாழ்ந்த காலத்தில் தமிழர்க்கு எய்ப்பில் வைப்பாக எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச்செல்வங்களைத் தொகுத்து மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் மாணிக்க விழுமியங்கள் எனும் தலைப்பில் 18 தொகுதிகளாக தமிழ்கூறும் நல்லுலகம் பயன் கொள்ளும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. “மூதறிஞர் மாணிக்கனார் தமிழ் ஆராய்ச்சி உலகில் தமிழ்ப் பேரொளியாய் விளங்கியவர்; அவருடைய ஆய்வு நெறி தமிழ் மரபு சார்ந்தது. தொல்காப்பியத்தின் புதுமைக் கூறுகளையும், பாரதியின் பழமைக் கூறுகளையும் கண்டு காட்டியவர். உரையாசிரியர்களைப் பற்றி நிரம்பச் சிந்தித்த உரையாசிரியர். தொல்காப்பியத்திற்கும், திருக்குறளுக்கும் தெளிவுரை கண்டவர். மரபுவழிப் புலமையின் கடைசி வளையமாகத் திகழ்ந்தவர், ஆய்வு வன்மைக்குத் `தமிழ்க்காதல்’, சிந்தனைத் தெளிவிற்கு `வள்ளுவம்’, புலமை நலத்திற்குக் `கம்பர்’ ஆகிய இவர் எழுதிய நூல்களைத் தமிழ்ச் சான்றோர்கள் இனம் காட்டி மகிழ்வர். ” என்று மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இப்பெருந்தமிழ் ஆசானின் அறிவின் பரப்பை வியந்து பேசுகிறார். வளர்ந்து வரும் தமிழாய்வுக் களத்திற்கு வ.சுப. மாணிக்கனார் பதித்த பதிப்புச் சுவடுகள் புதிய வழிகாட்ட வல்லன. தாம் எழுதிய நூல்களின் வழி தமிழின் தனித்தன்மையை நிலைநாட்டியவர். மறைமலையடிகளின் ஆய்வுத் திறனும் கொள்கை உறுதியும்; திரு.வி.க.வின் மொழிநடையும் சமுதாய நோக்கும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. இத்தொகுப்புகளைப் பயில்வோர் இவ்வுண்மையை முழுதாய் உணர முடியும். தமிழ்மண் பதிப்பகம் தமிழ் - தமிழர்க்குப் பெருமை சேர்க்கும் பயனுள்ள நல்ல தமிழ் நூல்களை வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் தனித்தன்மையுள்ள நிறுவனம் என்பதை நிறுவி வருகிறது. இதன் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனாரின் அறிவுச் செல்வங்களை வெளியிடுவதன் மூலம் உவகையும், களிப்பும், பூரிப்பும் அடைகிறேன். இவர் நூல்களை நாங்கள் வெளியிடுவதை எங்களுக்குக் கிடைத்த நற்பேறாக எண்ணி எண்ணி மகிழ்கிறேன். நல்ல தமிழ் நூல்களைப் பதிப்பித்துத் தமிழ்கூறும் உலகிற்கு அளிக்கும் போதெல்லாம் என் சிந்தை மகிழ்கிறது; புத்துணர்வும், பூரிப்பும், புத்தெழுச்சியும் அடைகிறேன். தமிழ்ப் பதிப்பு உலகில் உயர்வுதரும் நெறிகளை மேற்கொள்ள உறுதி ஏற்கிறேன். நன்றிக்குரியவர்கள் மணிவாசகர் பதிப்பக நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இவ்வருந்தமிழ் அறிஞர் எழுதிய நூல்கள் பலவற்றை வெளியிட்டுத் தமிழுக்கும் தமிழருக்கும் அருந்தொண்டு செய்தவர். இந்த நேரத்தில் அவரை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பாரி நிலையம் மற்றும் காரைக்குடி செல்வி புத்தக நிலையம் ஆகிய இரண்டும் பெருந்தமிழ் அறிஞர் வ.சுப.மா. நூல்களை வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளதையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பேரறிஞரின் மக்கள் அனைவரும் இந்நூல் தொகுப்புகள் எல்லா நிலையிலும் செப்பமுடன் வெளிவருவதற்கு உதவினர். இச்செந்தமிழ்த் தொகுப்புகள் வெளிவருவதற்கு மூல விசையாய் அமைந்தவர்கள் திருமதி. தென்றல் அழகப்பன், திருமதி மாதரி வெள்ளையப்பன் ஆகிய இவ்விரு பெண்மக்கள் மாணிக்க விழுமியங்கள் தமிழ் உலகம் பயன் கொள்ளும் வகையில் வெளிவருவதற்குத் தோன்றாத் துணையாக இருந்ததை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். மொழியை மூச்சாகவும், அறத்தை வாழ்வாகவும், இலக்கிய வேள்வியை வினையாகவும் ஆக்கிக் கொண்டவர் மூதறிஞர் வ.சுப.மா அவர்கள் என்பதை மேலைச்சிவபுரி, கணேசர் கலை அறிவியல் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் இனம் காட்டி உள்ளது. இது முதுமுனைவர் இரா. இளங்குமரனார் கூறிய புகழ் வரிகள். “மாணிக்கச் செல்வ மணித்தமிழ் அன்னைக்குக் காணிக்கை யாய்வாய்த்த கண்ணாள - பேணிக்கை வைத்த துறையெல்லாம் வாய்ந்த துறையாக்கி வைத்தநீ எங்களின் வைப்பு” இப்பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய நிறைதமிழ் அறிஞரின் அறிவுச் செல்வங்களை உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்குவதன் மூலம் நிறைவடைகிறேன். “தனக்கென வாழ்வது சாவுக்கு ஒப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும்” எனும் பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திருமதி ப. கயல்விழி திருமதி வி. ஹேமலதா திரு. டி. இரத்திரனராசு நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) முதல் திருத்ததிற்கு உதவியோர்: திருமதி. தென்றல் அழகப்பன் திரு. புலவர். த. ஆறுமுகம் திரு. க. கருப்பையா முனைவர். க. சுப்பிரமணியன் புலவர். மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் இறுதித் திருத்தம் : முனைவர் மாதரி வெள்ளையப்பன் நூலாக்கத்திற்கு உதவியோர்: இரா. பரமேசுவரன், கு. மருது, வி. மதிமாறன் அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை. `மாணிக்க விழுமியங்கள்’ எல்லா நிலையிலும் செப்பமுற வெளிவருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நெஞ்சம் நிறைந்த நன்றியும் பாராட்டும். அறிமுகவுரை செம்மல் வ.சுப.மாணிக்கனார் தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் முன்னோர் எடுத்து வைத்த அடிச்சுவட்டில் தாமும் கால் பதித்து எழுத்துக்களையும் ஆய்வுகளையும் செய்த காலத்தில் தனக்கென ஒரு தனி வழியை அமைத்துக்கொண்டவர் செம்மல் அவர்கள். தமிழகத்தில் பிறந்து இரங்கூனில் வளர்ந்து வாய்மைக் குறிக்கோளைத் தன் வாழ்வின் குறிக்கோளாக எண்ணிய பள்ளிப்படிப்பை நிறைவு செய்யாத ஒரு சிறுவனை அடையாளம் கண்டாள் தமிழன்னை. அச்சிறுவனைத் தமிழ்க்கொடையாக உலகிற்குத் தந்தாள். பண்டிதமணி கதிரேசனார் துணை கொண்டு தமிழைக் கசடறக் கற்றவர், வ.சுப. சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்ந்தவர். தமிழ்க்கொடையாக வந்த வ.சுப. தமிழுக்குச் செய்த கொடை மிக அதிகம். தமிழால் அடையாளம் காணப்பெற்ற அவர் கற்றோருக்கு முதன்மையராகவும் எல்லோருக்கும் தலைவராகவும் விளங்கினார். சங்க இலக்கியங்களை புதிய நோக்கில் ஆய்வு செய்தவர். இனி வரும் காலங்களில் சங்க இலக்கியம் கற்பாரின் நுழைவாயில் வ.சுப.வின் அகத்திணை ஆய்வு நூல் `தமிழ்க்காதல்’. இராமாயணத்தில் பற்றில்லாமல் இருந்தவர்களையும் `கம்பர்’ என்ற நூல் கம்பராமாயணத்தைக் கற்கத் தூண்டுகின்றது. சிலப்பதிகாரத்தின் பெயர்க்காரணத்தை ஆய்வு செய்தது `எந்தச் சிலம்பு’. திருக்குறளைப் புதிய கோணத்தில் ஆய்வு கண்டது `வள்ளுவம்’ மற்றும் `திருக்குறட்சுடர்’. திருக்குறளின் மூலமும் உரையும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல் காணும் `உரை நடையில் திருக்குறள்’. தொல்காப்பியத்தை வெளியுலகிற்குக் கொண்டு வந்து அறிஞர்களிடையே நிலைநிறுத்தியவர் வ.சுப. தமிழ்க்கொடை மட்டுமன்று ஒரு தமிழாசிரியனாலும் அறக்கொடை செய்ய முடியுமென்பதை நிலைநாட்டியவர். அறம் செய்ய பணம் வேண்டியதில்லை. மனம் தான் வேண்டும். அழைப்பு வேண்டியதில்லை. உழைப்புத்தான் வேண்டும். அறிவு கூட வேண்டியதில்லை. அன்பு கூட வேண்டும். என்பதை உணர்த்தியவர். செம்மல் வ.சுப. அவர்களின் புகழ் தமிழ் வாழும் காலமெல்லாம் நிலைத்து நிற்கும். அந்நிய மோகத்தில் அடிமைப்பட்டு, உரிமை கெட்டு, ஆட்சிஅதிகாரம் தொலைத்து அல்லலுற்றுக்கிடந்த இந்திய மண்ணில், அக்கினிக் குஞ்சுகளை வளர்த்தெடுத்த அண்ணல் காந்திக்குப் பாரதி பாடிய வாழ்த்துப் பா இது: “வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க வாழ்க!” இதைப் போலவே, தமிழ் மண்ணில் அந்நிய மொழிகளின் ஆதிக்கத்திற்குத் தமிழர் அடிபணிந்து, மொழி உரிமை இழந்து, தமிழ்க் கல்விக்குப் பெருங்கேடு நேர்ந்த போது, இந்த அவலத்தை மாற்றும் முயற்சியில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் அண்ணல் வ.சுப.மா. அண்ணல் காந்தியை பாரதி பாடியதுபோல், அண்ணல் மாணிக்கனாரை, “வாழ்க நீ எம்மான், இங்கு வந்தேறி மொழிமோ கத்தால் தாழ்வுற்று உரிமை கெட்டுத் தமிழ்க்கல்வி தனையும் விட்டுப் பாழ்பட்டுப் பரித வித்த பைந்தமிழ் தன்னைக் காத்து வாழ்விக்க வந்த புதிய வள்ளுவமே வாழ்க! வாழ்க! என்று பாடிப் பரவத் தோன்றுகிறது. - தென்றல் அழகப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) மாணிக்கம் - தமிழ் வார்ப்பு வாய்மை வாழ்வைத் தன் உயிராகவும், திருவாசகம், திருக்குறள், தொல்காப்பியம் மூன்றினையும் போற்றிப் பாதுகாத்து பொய்யாமை, தூய்மை, நேர்மை, எளிமை என்ற நான்கு தூண்களையும் அடித்தளமாகவும் வரலாறாகவும் கொண்டு வாழ்ந்தவர் தமிழ்ச் செம்மல், மூதறிஞர் முது பேராய்வாளர், பெருந்தமிழ்க் காவலர், முதுபெரும் புலவர், தொல்காப்பியத் தகைஞர் எனது தந்தை வ.சுப. மாணிக்கனார். பெற்றோர்கள் இல்லாமலே வளர்ந்தாலும் தன்னை நற்பண்புகளாலும் நல்லொழுக்கத்தாலும் நற்சிந்தனைகளாலும் செதுக்கிக் கொண்டவர்கள். அவர்களின் மறைவிற்குப் பின் தாயார் திருமதி. ஏகம்மை மாணிக்கம் அவர்கள் தந்தை இட்ட புள்ளிகளைக் கோலமாக்கினார்கள். அப்பா தனது வாழ்நாளில் 50 ஆண்டுகட்கு மேலாக தமிழைப் போற்றினார்கள். தாயார் (தந்தையின் மறைவிற்குப் பிறகு) 20 ஆண்டுகட்கு மேலாக தந்தையின் குறிக்கோள்களைப் போற்றி நிறைவேற்றினார்கள். தமிழறிஞர்களும் ஆர்வலர்களும் இன்று தந்தையைப் போற்றுகிறார்கள். செம்மலின் அறிவுடைமை தமிழக அரசால் பொது வுடைமை ஆக்கப்பட்டது. என் தந்தையின் தொண்டுகள் பலதிறத்தன. மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவின் நிலைப்பயனாக செம்மலின் நூல்கள் அனைத்தையும் மறுபடியும் பதிப்பித்து அவற்றை தமிழுலகிற்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும் எனவும் செம்மலின் படைப்புக்களை வெளியிடுவது விழாவிற்கு உயர்வும் நூல்கள் வழிவழி கிடைக்கவும் தேடலின்றிக் கிடைக்கவும் வழி வகுக்க வேண்டும் என்றும் மக்கள் நாங்கள் எண்ணினோம். நூற்றாண்டு விழாப் பணியாக மாணிக்கனார் நூல்களை யெல்லாம் வெளியிடும் அமையத்து செம்மலின் தமிழ்மையை திறனாய்ந்து தமிழறிஞர்களின் முத்திரைகளும் நூல்களாக வெளிவருகிறது. இவ்வாண்டில் பொறுப்பெடுத்து வெளியிட்ட தமிழ்மண் பதிப்பகத்திற்கும் எம் தந்தையின் தமிழ்ப்பணிக் குறித்து பெருமை தரும் நூல்களாக எழுதியுள்ள நூலாசிரியர் கட்கும் தமிழினமே நன்றி கூறும். முனைவர். மாதரி வெள்ளையப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) கோவை 11.8.2017 என் அன்புறை எட்டு வயது பாலகனாக இருந்தபோதே ஈன்றெடுத்த பெற்றோர்கள் விண்ணுலகு எய்திய சூழ்நிலை. இளம் வயதிலேயே “லேவாதேவி” என்று சொல்லப்படும் வட்டித் தொழிலைக் கற்றுக் கொள்ள பர்மா சென்று வேலைப்பார்த்த இடத்தில் முதலாளி, வருமானவரி அதிகாரியிடம் பொய் சொல்லும்படி அப்பாவை வற்புறுத்தியதால், திண்ணமாக மறுத்துவிட்டுத் தாயகம் திரும்பிய உத்தம மனிதர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பண்டிதமணி, கதிரேசனாரிடம் தமிழ் பயின்று, பிற்காலத்தில் காரைக்குடியில் தான் கட்டிய இல்லத்திற்கு “கதிரகம்” என்று பெயர் சூட்டி, ஆசானுக்கு மரியாதை செலுத்திய மாமனிதர். சிற்பி ஒரு கல்லை உளியைக் கொண்டு செதுக்கிச் செதுக்கி, சிறந்த சிற்பமாக்குவான். அதேபோல், தன் மனதை எளிய வாழ்வு, எதிர்கால நம்பிக்கை, தெளிவான சிந்தனைகள், வாழ்க்கைக்கான திட்டங்கள், உயர்ந்த குறிக்கோள், உன்னத மான செயல், வாய்மை, தூய்மை, நேர்மை, இறை வழிபாடு போன்ற எண்ணத் திண்மையுடன் தன்னைத்தானே பக்குவப் படுத்திக் கொண்டதால், உயர் பதவியான துணைவேந்தர் பதவி அப்பாவை நாடி வந்தது. திருக்குறள், திருவாசகம், தொல்காப்பியம் ஆகிய மூன்று தமிழ் மறைகளும், பண்புடன் வாழ்வதற்குரிய வழிகாட்டிகள் என்று நினைத்து வாழ்வில் கடைப்பிடித்து வெற்றி கண்ட உயர்ந்த மனிதர். அப்பா எழுதியுள்ள `தற்சிந்தனை’ என்னும் குறிப்பேட்டில் “நான் படிப்பிலும் எழுத்திலும் ஆய்விலும் பதவிப் பணியிலும் முழு நேரமும் ஈடுபடுமாறு குடும்பப் பொறுப்பை முழுதும் தாங்கியவள் ஏகம்மை என்ற என் ஒரே மனைவி” என்று எழுதியுள்ளதிலிருந்து அப்பாவின் முன்னேற்றத்திற்கு அம்மா முழு உறுதுணையாக இருந்துள்ளார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் என் தாய்தந்தையர் இருவருக்கும் ஒருமித்தக் கருத்தாக இருந்ததால், தன் குழந்தைகள் அறுவரையும் பள்ளிப் படிப்போடு நிறுத்திவிடாமல், ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் பட்டப் படிப்புக்கள் வரை பயில வைத்து வெற்றி கண்டுள்ளார்கள். என் இளங்கலை வணிகவியல் சான்றிதழிலும், என் கணவரின் பொறியியல் சான்றிதழிலும் துணைவேந்தரின் கையொப்ப இடத்தில் என் தந்தையாரின் கையொப்பம் இருக்கும். இதை நான் பெற்ற பாக்கியமாக நினைக்கிறேன். நான் பெங்களூரில் இருந்தபோது, அப்பா எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும், “அவிநயன் திருக்குறள் சொல்லு கிறானா? புதிதாகச் சொல்லும் குறளுக்கு அய்யா காசு தருவார்கள் என்று சொல்” என்ற வரிகள் நிச்சயமாக இருக்கும். என் மகன் இளம் வயதிலேயே திருக்குறள் கற்க வேண்டும் என்பது என் தந்தையாரின் எண்ணம். இளஞ்சிறார்களுக்குப் பிஞ்சு நெஞ்சங்களிலேயே திருக்குறள், திருவாசகம் படித்தல், இறைவழிபாடு செய்தல் போன்ற விதைகளை விதைத்து விட்டால், முழுவாழ்வும் மிகவும் சிறப்பாக அமையும் என்பது தந்தையாரின் திண்மையான கருத்து. மிகச் சிறு வயதில் பெற்றோரை இழந்த சூழ்நிலையில், அடிப்படை பொருளாதாரம் இல்லாத நிலையில், அதிகமான உழைப்பாலும், முயற்சியாலும், நேர்மையான வழியில் தான் ஈட்டிய பொருளாதாரத்தில், அதாவது தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை தனது சொந்த ஊரான மேலைச்சிவபுரியின் மேம்பாட்டுக்காக உயர்திணை அஃறிணை பாகுபாடுயின்றி செலவு செய்ய வேண்டும் என்று தன் விருப்பமுறியில் எழுதியுள்ளார்கள். தந்தையாரின் விருப்பப்படியே தாயார் அவர்கள் 20-4-1992 இல் அப்பாவின் பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து நடத்தி வந்தார்கள். இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பா எழுதிய முப்பதுக்கும் மேலான நூல்களில் `வள்ளுவம்’, `தமிழ்க்காதல்’, `கம்பர்’, `சிந்தனைக்களங்கள்’ போன்றவை தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகச்சிறந்த ஆய்வு நூல்களாகக் கருதப்படுகிறது. உன்னத வாழ்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்துள்ள என் தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்பவர்களின் வாழ்விலும் நல்ல திருப்புமுனை ஏற்பட்டு வாழ்வு செம்மையாகும் என்பது உறுதி. பொற்றொடி செந்தில் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) மும்பை 21-7-2017. உரைநடையில் திருக்குறள் முதற் பதிப்பு 1963 இந்நூல் 1969இல் பாரிநிலையம் வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன. முகவுரை திருவள்ளுவரின் எல்லாக் கருத்துக்களையும் எல்லாரும் எளிதில் அறிந்து கொள்ளுதற்குத் தெளிவான இந்த உரைநடைத் திருக்குறள் பெரிதும் துணை செய்யும் என்று நம்புகிறேன். கதிரகம் காரைக்குடி வ.சுப. மாணிக்கம் முதலாவது அறத்துப்பால் மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. 1. கடவுள் வாழ்த்து அகரஒலி எல்லா எழுத்துக்கும் முதலாகும்; ஆதிபகவன் உலகுக்கெல்லாம் முதலாவான். 1 கற்றதன் பயனென்ன? தூய அறிஞனது நல்ல திருவடியை வணங்கா விட்டால். 2 நெஞ்சமலரில் இருப்பவன் அடியை நினைப்பவர் இவ்வுலகில் நெடுங்காலம் வாழ்வர். 3 விருப்பு வெறுப்பு இல்லாதவனை நினைந்தவர்க்கு என்றும் துன்பங்கள் இல்லை. 4 இறைவனது உண்மைப் புகழை விரும்புவாரை அறிவில்லாத வினைகள் நெருங்கா. 5 ஐம்புலனையும் அழித்தவனது மெய்ந் நெறியைக் கடைப் பிடித்தவர் நெடுங்காலம் வாழ்வர். 6 உவமை கடந்தவன் அடியை நினைந்தாலன்றி மனக் கவலையை மாற்ற முடியாது. 7 அறக்கடலாம் அருளாளன் அடியை நினைந்தாலன்றிப் பாவக் கடலைக் கடக்க முடியாது. 8 எண்குணம் உடையவன் அடியை வணங்காத்தலை பாராதகண் கேளாதசெவி போலப் பயனற்றது. 9 இறைவன் அடியை நினைந்தவர் பிறவிக்கடலைக் கடப்பர்; நினையாதவர் கடவார். 10 2. வான்சிறப்பு மழையால் உலகம் நிலைபெற்று வருவதால் மழையே அமிழ்தம் என்று உணரவேண்டும். 11 உண்பவர்க்கு நல்ல உணவுகளை உண்டாக்கித் தானும் குடிநீராய்ப் பயன்படுவது மழை. 12 மழையில்லாது போகின் கடல்சூழ் உலகத்தில் பசி உயிர்களை வாட்டும். 13 மழைவருத்துக் குறையின் உழவர்கள் உழுவதற்கு ஏர் பிடிக்க மாட்டார்கள். 14 உழவர்களைக் கெடுக்கவும் துணைநின்று ஆக்கவும் வல்ல பேராற்றல் உடையது மழை. 15 மேலிருந்து துளிமழை விழாவிட்டால் நிலத்தில் பசும்புல்லின் நுனியையேனும் காண முடியுமா? 16 மேகம் நீரைத்தாங்கித் திரும்பப் பொழியாவிடின் நெடுங்கடலும் தன்வளம் குறைந்து விடும். 17 வானம் வறண்டால் திருவிழாவும் வழிபாடும் உலகில் வானவர்க்கும் நிகழ மாட்டா. 18 மேலுலகம் நீரை வழங்கா விட்டால் தானமும் தவமும் மறைந்து விடும். 19 உலகநடப்புக்கு ஒழுக்கம் வேண்டும்; அவ்வொழுக்கம் மழையில்லா விட்டால் யாரிடமும் இருக்குமா? 20 3. நீத்தார் பெருமை ஒழுக்கம் விடாத துறவிகளின் பெருமையே நூல்கள் ஒருமுகமாகப் பாராட்டும் பெருமை. 21 துறவிகளின் பெருமையை அளக்க முடியாது; உலகில் இறந்தவர்களை எண்ண முடியுமா? 22 வாழ்வின் இருவேறு நிலைகளை ஆராயந்து துறந்தவர் பெருமையே உலகில் விளங்கும். 23 அறிவுக்கோலால் ஐம்பொறிகளை அடக்கியவன் மேலான நிலத்துக்கு ஒரு வித்தாவான். 24 ஐந்தும் அடக்கியவன் ஆற்றலுக்கு வானவர் தலைவனாம் இந்திரனே தக்க சான்று. 25 அரிய செயல்களைச் செய்பவர் பெரியவர்; அவற்றைச் செய்ய முயலாதவர் சிறியவர். 26 சுவை ஒறி ஊறு ஓசை மணம் என்ற ஐவகைகளை அறிந்தவன் வசம் உலகம். 27 நிறைமொழி மாந்தரின் பெருமையை உலகுக்கு அவர்கூறிய உண்மைகளால் அறியலாம். 28 குணக்குன்று போலும் சான்றோரின் சினத்தைச் சிறுபொழுதும் யாரும் தாங்க முடியாது. 29 அந்தணர் என்பவர் துறவிகளே. ஏன்? அவர் எவ்வுயிர்க்கும் அருள் செய்பவர். 30 4. அறன் வலியுறுத்தல் அறம் மதிப்பும் செல்வமும் தரும்; ஆதலின் அறத்தினும் வாழ்வுக்கு நல்லது வேறில்லை. 31 அறத்தைப்போல நன்மை வேறில்லை; அதனை மறத்தலைப் போலக் கேடு வேறில்லை. 32 இயன்ற அளவு இடைவிடாது அறத்தை ஏற்கும் இடமெல்லாம் செய்க. 33 மனப்பிழை யின்றி நட; அதுவே அறம்; மற்றவை யெல்லாம் வெளிப் பகட்டு. 34 பொறாமை ஆசை சினம் கடுஞ்சொல் வாராமல் ஒழுகுவதே அறம். 35 சாகும்போது பார்த்துக்கொள்வோம் என்னாது நாளும் அறஞ்செய்க; அதுவே உயிர்த்துணை. 36 பல்லக்கில் இருப்பவனையும் சுமப்பவனையும் பார்த்து அறத்தின் பயனை மதிப்பிடாதே. 37 நாள் தவறாமல் அறம்செய்க; அது ஒருவன் பிறப்பு வழியை அடைக்கும் கல்லாகும். 38 அறநெறியால் வருவதே இன்பம்; பிறவழியால் வருவன துன்பம், பழி. 39 யாரும் செய்ய வேண்டுவது அறமே; யாரும் விடவேண்டியது பழியே. 40 5. இல் வாழ்க்கை இல்லறத்தான் மரபான மூவேந்தர்க்கும் நல்லாட்சிக்கு உற்ற துணையாவான். 41 துறவிக்கும் வறியவர்க்கும் நிலைதிரிந்தவர்க்கும் இல்லறத்தானே துணைவன். 42 தென்புலத்தார் நிலத்தெய்வம் விருந்து சுற்றம் தன்குடும்பம் என்ற ஐவகையையும் காக்க. 43 பழியஞ்சிப் பகுத்துண்ணும் இல்லறத்தானுக்கு வாழ்வு குறையாது; வழியும் நில்லாது. 44 அன்பும் அறனும் உடைய குடும்பம் நாகரிகமும் நலமும் பெற்று விளங்கும். 45 அறத்தின்படி குடும்பம் நடத்தினால் அதனைத் துறந்துபோய்ப் பெறுவது என்ன? 46 இயல்பாகக் குடும்ப வாழ்வு வாழ்பவன் முன்னேற முயல்வார் எல்லாரினும் சிறந்தவன். 47 பிறரை நெறிப்படுத்தித் தானும் நெறிநிற்கும் இல்வாழ்வே தவத்தினும் ஆற்றல் உடையது. 48 அறமென்று உறுதிப்பட்டது குடும்ப வாழ்வே; துறவும் பழியில்லா விட்டால் அறமாகும். 49 உலகத்தில் மணந்து முறையாக வாழ்பவன் மேலுலகத் தேவராக மதிக்கப் படுவான். 50 6. வாழ்க்கைத் துணைநலம் வாழ்க்கைத்துணை யார்? குடும்பப் பண்பினள்; கணவன் வருவாய்க்கேற்ப வாழ்பவள். 51 வீட்டுப்பண்பு மனைவியிடத்து இல்லையானால் வாழ்வில் பிறநலம் இருந்தும் பயனில்லை. 52 மனைவிக்குப் பண்பிருப்பின் எது இல்லை? மனைவிக்குப் பண்பில்லை எனின் எது உண்டு? 53 கற்புத் திண்மை செறிவாக இருப்பின் ஆணுக்கு மனைவியினும் நற்பேறு உண்டா? 54 தெய்வத்தை வணங்காது கணவனை வணங்குபவள் பெய்யென்றால் மழையும் பெய்யுமே. 55 தன்னையும் கணவனையும் புகழையும் போற்றிச் சுறுசுறுப்பாக இருப்பவளே மனைவி. 56 மனைவியர்க்குக் கற்புக் காவலே காவல்; வீட்டுச் சிறை என்ன பயன் செய்யும்? 57 கணவனது அன்பைப் பெறும் மனைவியர் மேலுலகிலும் பெருஞ்சிறப்புப் பெறுவர். 58 மனைவு புகழ் காவாவிடின் பகைவர் முன் காளைபோன்ற நடை கணவனுக்கு இராது. 59 மனைவியின் பண்பே குடும்பத்துக்கு மங்கலம்; குழந்தைப் பேறே குடும்பத்தின் நல்லணி. 60 7. மக்கட்பேறு அறிவுடைய குழந்தைச் செல்வத்தைத் தவிரப் பிறசெல்வங்களை யாம் மதிப்பதில்லை. 61 பழியில்hப் பண்புக் குழந்தைகளைப் பெற்றால் பெற்றோரை எப்பிறவியும் தீயவை நெருங்கா. 62 தம் நல்வினையால் குழந்தைகள் பிறத்தலின் குழந்தைகளே பெற்றோரின் பொருளாவர். 63 அமிழ்தினும் மிக இனிக்குமே தம் குழந்தைகள் இளங்கையால் கிண்டிய உணவு. 64 குழந்தை மேனிபடுவது உடலுக்கு இன்பம்; மழலைக் சொல் கேட்பது காதுக்கு இன்பம். 65 தம் குழந்தைகளின் மழலைச்சொல் கேளாதவரே குழலிசை யாழிசை இனியது என்பர். 66 அவையில் முந்தியிருக்கும்படி அறிவளிப்பதே தந்தை மகனுக்குச் செய்யும் கடமை. 67 தம் குழந்தைகளைப் பேரறிவுடையவர் ஆக்குவது பெற்றோர்க்கும் எல்லோர்க்கும் இனியது. 68 தன்மகன் வீரன் என்று புகழக்கேட்ட தாய் பெற்றகாலத்திலும் பெருமகிழ்ச்சி அடைவாள். 69 எத்தவஞ் செய்து பெற்றான் இவன்தந்தை என்று பலர் சொல்லும்படி நடப்பதே மகன் கடமை. 70 8. அன்புடைமை அன்புக்கும் அடைப்பு உண்டோ? அன்புடையவர் கண்ணீரே உள்ளத்தைக் காட்டிவிடும். 71 அன்பிலார் எல்லாம் தமக்கே கொள்வர்; அன்பினர் உடம்பையும் பிறர்க்கு வழங்குவர். 72 உயிர் உடம்பினைப் பெற்ற தொடர்பு இருவர் அன்புத்தொடர்பால் வந்ததுஎன்பர். 73 அன்பு பழகும் விருப்பத்தைத் தரும்; அவ்விருப்பம் புதிய நட்புச்சிறப்பைத் தரும். 74 உலகத்தில் காதலர்கள் அடையும் சிறப்பு அன்போடு வாழ்ந்ததால் வந்தது என்பர். 75 அறத்திற்கு மட்டும் அன்பு துணையில்லை; வீரத்திற்கும் அதுவே துணை. 76 எலும்பில்லாப் புழுவை வெயில் வருத்தும்; அன்பில்லா உயிரை அறம் வருத்தும். 77 நெஞ்சத்தில் அன்பின்றி வாழ முடியுமா? பாலை நிலத்தில் பட்டமரம் தளிர்க்குமா? 78 அன்பாம் உறுப்பு அகத்தில் இல்லையெனின் புறத்து உறுப்பெல்லாம் இருந்தும் என்ன? 79 உயிருடைய உடம்பாவது அன்புடைய வாழ்வு; அன்பிலார் உடம்புகள் எலும்புத் தோல்கள். 80 9. விருந்தோம்பல் குடும்பமாக இருந்து சிறந்து வாழ்வதெல்லாம் விருந்துபேணி உதவி செய்தற்கே. 81 வந்தவிருந்து வெளிப்புறம் இருக்க, தனக்குச் சாவாமருந்து கிடைப்பினும் உண்ணல் ஆகாது. 82 நாளும் வருகின்ற விருந்தைப் போற்றுக; வாழ்வு துன்பப்பட்டு அழியாது. 83 முகம் மலர்ந்து விருந்து செய்பவன் வீட்டில் அகம் மலர்ந்து திருமகள் தங்கிவிடுவாள். 84 விருந்து செய்தபின் மிச்சத்தை உண்பவனது நிலத்துக்கு விதைகூட இடவேண்டுமா? 85 வந்தாரைப் போற்றி வருவாரை ஏற்பவன் தேவர்க்கு நல்விருந்து ஆவான். 86 விருந்தின்பயன் இதுவென்று அளக்க முடியாது; விருந்தினர் பெருமையே விருந்தின் பெருமை. 87 விருந்து என்னும் வேள்வியில் ஈடுபடாதவர் காத்த பொருளையும் இழந்துபின் வருந்துவர். 88 செல்வத்தில் வறுமை விருந்திடா மடமையாம்; இக்குணம் முழுதும் அறிவிலியிடமே இருக்கும். 89 அனிச்சப்பூ மோந்தால் வாடும்; விருந்தோ முகமாறிப் பார்த்தாலே வாடிப் போம். 90 10. இனியவை கூறல் அன்பும் தூய்மையும் அறமும் உடைய உண்மையாளர் சொல்லே இன்சொல்லாம். 91 முகமலர்ந்து என்றும் இன்சொற் கூறின் அகமலர்ந்து கொடுப்பதினும் சிறந்தது. 92 முகம் மலர்ந்து இனிமையாகப் பார்த்து உள்ளத்தோடு சொல்லுக; அதுவே அறம். 93 யார்க்கும் இன்பச் சொல்லைச் சொல்லுக; துன்பந்தரும் வறுமை வாராது. 94 பணிவும் இன்சொல்லுமே உயிரணிகள்; பிறவெல்லாம் உடலணிகள். 95 நல்லவற்றைக் கண்டு இனிமையாகக் கூறின் தீமை தேயும்; அறம் வளரும். 96 பிறர்க்கு நற்பயன் தரும் உயர் பண்புச்சொல் தனக்கும் நயமும் நலமும் தரும். 97 சிறுதன்மை இல்லாத இன்சொல் எப்பிறப்பிலும் இன்பம் தரும். 98 இன்சொல் தனக்கு நலந்தருவதைக் கண்டவன் ஏன் பிறரிடம் கடுஞ்சொற் கூறுகிறான்? 99 இன்சொல் இருக்கவும் கடுஞ்சொல் கூறாதே; கனியை விடுத்துக் காயைக் கவரலாமா? 100 11. செய்ந்நன்றி அறிதல் கேளாமலே முன்வந்து செய்த உதவிக்கு உலகமும் வானமும் கொடுத்தாலும் ஈடாகா. 101 நற்சமயத்துச் செய்த உதவி சிறிதாயினும் உலகத்தைவிட மிகச் சிறந்தது. 102 பயன் கருதாது செய்த உதவியின் நன்மை எண்ணிப் பார்ப்பின், கடலினும் பெரியது. 103 சிறிதளவு நன்மை செய்தாலும் பயனறிந்தோர் பெரிய நன்மையாகக் கருதுவர். 104 உதவி உதவிய பொருளைப் பொறுத்ததன்று; உதவி பெற்றவரின் பண்பினைப் பொறுத்தது. 105 தூயவர் நட்பை மறவாதே; துன்பத்தில் துணைசெய்தார் நட்பைத் துறவாதே. 106 துன்பக் கண்ணீரைத் துடைத்தவர் நட்பினை எடுக்கின்ற பிறப்பெல்லாம் எண்ணுவர். 107 உதவியை மறப்பது என்றும் நல்லதில்லை; உதவாமையை உடனே மறப்பது நல்லது. 108 ஒருநன்மை செய்தவர் பெருந்தீமை செய்தாலும் அந் நன்மையை நினைக்கவே தீமை மறையும். 109 எந்த நலத்தை அழித்தாலும் பிழைக்கலாம்; நன்றி கெட்டால் பிழைப்பில்லை. 110 12. நடுவு நிலைமை இடந்தோறும் முறையோடு ஒழுக முடியின் நடுவு நிலைமை மிகச்சிறந்த அறமாம். 111 நேர்மை உடையவனது செல்வம் குறையாமல் வழி வழி மக்கட்குத் துணையாகும். 112 நலமே தரினும் நேர்மையில்லா ஆக்கத்தை அப்போதே விட்டு விடுக. 113 இவர் நேர்மையர் நேர்மையற்றவர் என்பது அவரவர் வழியினரால் காணமுடியும். 114 அழிதலும் ஆதலும் உலகியற்கை; ஆதலின் மனம் சாயாமையே சான்றோர்க்கு அழகு. 115 நின் நெஞ்சம் நேர்மை தவறிச் செல்லின் கேடு காலம் என்று தெரிந்து கொள்க. 116 நேர்மையாக நின்றமையால் தாழ்வு வரின் அதனைக் கேடாக உலகம் கருதாது. 117 சமமாக நின்று பின் நிறுக்கும் தராசுபோல மனஞ்சாயா நேர்மையே நடுவர்க்கு அழகு. 118 உள்ளம் சிறிதும் சாயாமல் இருந்தாலன்றோ சொல்லுகின்ற சொல் நேர்மைச் சொல்லாகும். 119 விலைப்பொருளையும் கொள்பொருளாக மதித்தால் வணிகர்க்கு நல்ல வணிகம் ஏற்படும். 120 13. அடக்கமுடைமை அடக்கம் வீரருள் ஒருவனாக்கும்; அடங்காமை பேதைக் கூட்டத்தில் சேர்க்கும். 121 அடக்கத்தை ஒரு குறிக்கோளாகப் போற்றுக; உயிர்க்கு அதனினும் முன்னேற்றம் இல்லை. 122 அறிவன அறிந்து முறையோடு அடங்கின் அதனை உலகம் தெரிந்து சிறப்பிக்கும். 123 தரத்திலே குறையாது அடங்கியவன் தோற்றம் மலையினும் பார்வைக்குச் சிறந்தது. 124 எல்லார்க்கும் பணிவுடைமை வேண்டும்; அது செல்வர்க்கு இருப்பது இன்னும் செல்வமாம். 125 ஒருபிறப்பில் ஆமைபோல்ஐம்பொறியும் அடக்கின் எழு பிறப்பிலும் சேமம் உண்டு. 126 எவற்றை அடக்காவிடினும் நாவை அடக்குக; அடக்காவிடின் சொற்குற்றப்பட்டு வருந்துவாய் 127 ஒரு சொல்லிலேனும் தீமை நேருமாயின் எல்லா நன்மையும் கெடுதலாகி விடும். 128 தீச்சுட்ட புண்ணோ உ;ளளே ஆறிப்போம்; சுடுசொல்லோ வடுவாகி என்றும் ஆறாது. 129 உள்ளக் கொதிப்பை அடக்கிய வல்லவனைக் காண்பதற்கு அறம் காத்துக் கிடக்கும். 130 14. ஒழுக்கமுடைமை ஒழுக்கம் பெருஞ்சிறப்புத் தரும் ஆதலின் உயிர் கொடுத்தும் காக்க வேண்டும். 131 எவ்வளவு வருந்தினாலும் ஒழுக்கமாக இரு; எவ்வளவு ஆராய்ந்தாலும் அதுவே துணை. 132 விடா ஒழுக்கமே உயர்ந்த குடிப்பிறப்பு; ஒழுக்கத்தை விடுவது விலங்குப்பிறப்பு. 133 கற்பவன் மறந்தாலும் படித்துக் கொள்ளலாம்; மானிட ஒழுக்கம் குறைந்தாலோ கெடுவான். 134 பொறாமைப் பட்டவனுக்கு வளர்ச்சி உண்டோ? ஒழுக்கம் கெட்டவனுக்கு உயர்வு உண்டோ? 135 உரமுடையவர் ஒழுக்கம் சிறிதும் தளரார்; தளரின் துன்பம் பல வருமென்று அறிவார். 136 விடா ஒழுக்கத்தால் முன்னேற்றம் வரும்; விடுவதால் பொருந்தாப் பழி வரும். 137 நல்லொழுக்கம் நன்மைக்கெல்லாம் வித்து; தீயொழுக்கத்தால் எந்நாளும் துன்பமே. 138 என்றும் ஒழுக்கம் உடையார் வாயிலிருந்து தவறியும் தீய சொற்கள் தோன்றா. 139 உலகத்தோடு ஒட்டி ஒழுகத் தெரியாதவர் பல கற்றிருந்தும் அறிவு இல்லாதவரே. 140 15. பிறனில் விழையாமை பிறன் மனைவியை விரும்பும் மடமை உலகில் அறம்பொருள் அறிந்தவரிடம் இருப்பதில்லை. 141 பிறனது வாயிலில் நிற்பவனைப் போலப் பெரும்பாவியும் பெரும்பேதையும் இல்லை. 142 நம்பினவர் வீட்டில் தீமை செய்பவர் செத்தவரல்லது வாழ்பவர் அல்லர். 143 அறிவின்றி அயலான் மனைவியை விரும்புபவன் எவ்வளவு பெரியவனாயினும் என்ன? 144 எளிதென்று கருதிப் பிறன்மனை நுழைபவன் என்றும் தீராத பழியை எய்துவான். 145 பகை பாவம் அச்சம் பழி என்ற நான்கும் பிறன் வீட்டில் நுழைவானை விடமாட்டா. 146 நெறியோடு வாழும் குடும்பத்தான் யார்? இன்னொரு குடும்பத்தாளை விரும்பாதவனே. 147 பிறன்மனையை விரும்பி நினையாத பேராற்றல் சான்றோர்க்கு அறமும் ஒழுக்கமும் ஆம். 148 உலகில் எந்நன்மைக்கும் உரியவர் யார்? பிறனுக்கு உரியவளை அணையாதவரே. 149 அறங்கடந்து தீமைபல செய்யினும் செய்க; பிறன்மனை விருப்பத்தை அறவே ஒழிக. 150 16. பொறையுடைமை குழிபறிப்பாரையும் நிலம் சுமப்பது போல நம்மை இகழ்வாரையும் பொறுப்பதே சிறப்பு. 151 பிறரது பெருங்குற்றத்தை என்றும் பொறுக்க; முடியுமாயின் மறக்க; அது மிக நல்லது. 152 பெரியவறுமை வந்த விருந்தை நீக்குவது; பெரியவலிமை பேதையைப் பொறுப்பது. 153 பெருந்தன்மை நீங்காதிருக்க வேண்டின் பொறுக்குந் தன்மையைப் போற்றிக் கொள்க. 154 தண்டித்தவரை யார் மதிப்பர்? பொறுத்தவரையே பொன்போல் போற்றி மதிப்பர். 155 தண்டித்தவர்க்கு அப்போதைய மகிழ்ச்சியே; பொறுத்தவர்க்கோ உலகம் உள்ளளவும்புகழ். 156 பிறர் முறையல்லவற்றைச் செய்தாலும் வருந்தி நீ அறமல்லவற்றைச் செய்யாதே. 157 தன் இறுமாப்பால் தீமை செய்தவரை நீ உன் பொறுமைச் சிறப்பால் வென்று விடுக. 158 தரங்கெட்டவரின் வசவைப் பொறுப்பவர் துறந்தவரினும் தூயவர். 159 பட்டினி கிடந்து நோன்பிருப்பவர் பெரியவர்; அவரினும் பெரியவர் வசவைப் பொறுப்பவர். 160 17. அழுக்காறாமை மனத்தில் பொறாமை இல்லாத நிலையே ஒழுக்க நெறியாம் என்று கொள்க. 161 யார்மேலும் பொறாமை இல்லை எனின் சிறந்த மேன்மை வேறில்லை. 162 தனக்கு நல்வளர்ச்சி வேண்டாம் என்பவனே மற்றவன் வளர்ச்சிக்குப் பொறாமைப் படுவான். 163 பொறாமையால் தமக்குத் தீதுவரும் ஆதலின் பொறாமையால் பிறர்க்குத் தீது செய்யார். 164 பொறாமையாளரைக் கெடுக்க அதுவே போதும்; பகைவர் கெடுக்கத் தவறினும் அது தவறாது. 165 கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுபவனது சுற்றத்தாரும் உணவுஉடை இன்றி அழிவர். 166 மனம் சுருங்கிப் பொறாமைப் படுபவனைச் தேவி மூதேவியிடம் ஒப்படைப்பாள். 167 பொறாமையாகிய பாவம் செல்வம் கெடுத்துத் தீய வழியிலும் கொண்டுபோய் விடும். 168 பொறாமைப்படுபவன் உண்மையில் வளர்கிறானா? நல்லவன் கெடுகிறானா? எண்ணிப்பார். 169 பொறாமையால் வாழ்வு விரிந்தவரும் இல்லை; பொறுப்பதால் வளர்ச்சி குறைந்தவரும் இல்லை. 170 18. வெஃகாமை நேர்மை யின்றிப் பிறர்பொருளைக் கவர்ந்தால் உடனே குடியழிந்து குற்றங்கள் பெருகும். 171 கொள்ளை விரும்பிக் கூடாதன செய்யார் நேர்மைக்கு அஞ்சும் பெரியவர். 172 சிறுநலத்தை விரும்பிக் கொடியவை செய்யார் பெருநலத்தை நாடு பவர். 173 ஆசைகளை அடக்கிய உயர்ந்த அறிஞர் இல்லை என்பதற்காகப் பிறர்பொருளை நாடார். 174 எவர்பொருளையும் நச்சிக் கொடுமை செய்தால் நுணுகிப் பரந்த அறிவால் பயன் என்ன? 175 அருளை நாடி உரியவழியில் நிற்பவன் பிறர் பொருளைக் கவர நினைப்பின் கெடுவான். 176 பிறர்பொருளால் வரும்விளைவு மிகப் பொல்லாது; ஆதலின் தீய முன்னேற்றத்தை வேண்டாதே. 177 தன் செல்வம் குறையாமைக்கு வழி யாது? பிறன் செல்வத்தைப் பறிக்க விரும்பாமை. 178 முறையறிந்து பிறன்பொருளை விரும்பாத அறிஞரைத் தெரிந்து திருமகள் அடைவாள். 179 பின்வருவது பாராமல் விரும்புவது அழிவு; வேண்டாம் என்னும் பெருமிதம் வெற்றி. 180 19. புறங்கூறாமை ஒருவன் அறத்தைப் பழித்துத் தீமை செய்யினும் கோள் சொல்லான் என்பது காதுக்கு இனியது. 181 அறம் அழித்துச் செய்யும் தீமையினும் தீது புறத்தே இகழ்ந்து முன்னே புகழ்வது. 182 கோள்சொல்லி நடித்து உயிர் வாழ்தலினும் சாவது நல்லது; அறத்தின்பயன் கிடைக்கும். 183 எதிரே கடுமையாகச் சொல்லினும் சொல்லலாம்; ஆளில்லாத போது கோள் சொல்லற்க. 184 இவன் நெஞ்சத்தில் நேர்மை இல்லை என்பது கோள்சொல்வதிலிருந்து கண்டு கொள்ளலாமே? 185 பிறரது குறையை நீதேடிக் கூறின் உன் பெரிய குறையை மற்றவர் விடுவாரோ? 186 மகிழ்ந்துபேசி நட்புச் செய்யத் தெரியாதவர் கோள்சொல்லி நண்பரையும் பிரித்து விடுவர். 187 பழகியவர் குற்றத்தையே தூற்றித் திரிபவர் பழகாதவரிடம் எப்படி எப்படியோ? 188 போனது பார்த்துப் புறங்கூறுபவனை உலகம் சுமக்கிறது; அதுவும் ஓர் அறமோ? 189 பிறர்குறை காண்பதுபோல் தங்குறை காணின் வாழும் உயிர்க்குத் தீது உண்டோ? 190 20. பயனில சொல்லாமை கேட்டார் வெறுக்க வீணாகப் பேசுபவனை எல்லாரும் இகழ்வர். 191 பலர்முன் வீண்பேச்சுப் பேசுவது நண்பர்க்கு வேண்டாதன செய்தலினும் தீது. 192 பயனில்லாத வற்றை விரித்து உரைத்தால் விளங்காதவன் என்று பேராகும். 193 பயனில்லாத சிறு சொல்லைப் பலர்முன் கூறுவது அறிவும் இல்லை; நன்மையும் இல்லை. 194 பண்புடையவர்கள் பயனில சொன்னால் தரமும் சிறப்பும் போய் விடும். 195 பயனில சொல்வானைப் புகழ்கின்றவனை மனிதன் என்னாதே; மனிதப்பதர் என்று சொல். 196 சான்றோர் முறையல சொல்லினும் சொல்லலாம்; பயனற்றவை சொல்லல் ஆகாது. 197 அரிய பயனை அடைய முயலும் அறிஞர் பெரியபயன் இல்லாதவற்றைச் சொல்லார். 198 மயக்கம் இல்லாத நல்லறிஞர் மறந்தும் பொருளற்ற சொற்களைச் சொல்லார். 199 பயனுள்ள நல்ல சொற்களையே சொல்லுக; பயனில்லா வீண் சொற்களைச் சொல்லாதே. 200 21. தீவினையச்சம் கொடியவர் தீவினைகளை அஞ்சாது செய்வர்; நல்லவர் செய்ய அஞ்சுவர். 201 யார்க்கும் கொடுமைகள் கொடுமை தரும்; தீயைக்காட்டிலும் அவற்றை நெருங்காதே. 202 கொடுமைகளைப் பகைவர்க்கும் செய்யாது ஒழிக; அதுவே அறிவிற் சிறந்த அறிவாகும். 203 மறந்தும் பிறனுக்குக் கேடு எண்ணாதே; எண்ணின். அறம் உன்னை வாழவிடுமா? 204 இல்லை என்பதற்காகத் தீமைகள் செய்யாதே; செய்யின் திரும்பவும் பெரிய ஏழையாவாய். 205 துன்பங்கள் தன்னைத் தொடவிரும்பாதவன் பிறர்க்குத் தீமைகள் செய்யாது இருப்பானாக. 206 எனைப் பெரிய பகையிலிருந்தும் தப்பிக்கலாம்: கொடுமைப் பகையோ விடாது கொல்லும். 207 கொடுமை செய்தார் கெடுவது உறுதி; நிழல் ஒருவன் அடியைவிட்டு நீங்குமா? 208 தான்வாழ ஆசை இருக்குமானால் சிறிதும் தீவினைப் பக்கம் செல்லாதே. 209 நெறிவிலகிக் கொடுமை இழையாதவன் என்றும் கேடில்லாதவன் எனத் தெளிக. 210 22. ஒப்புரவறிதல் (பொதுக்கொடை) கடமை கைம்மாறு எதிர் பார்ப்பதில்லை; உலகம் மழைக்கு என்ன செய்ய முடியும்? 211 மிக முயன்று சேர்த்த பொருளெல்லாம் உதவிபெறத் தக்கவர்க்கு உதவிசெய்தற்கே. 212 தேவர் உலகத்திலும் நம் உலகத்திலும் பொதுநன்மையினும் சிறந்த செயல் இல்லை. 213 ஒத்த பொதுநலத்தை அறிந்தவனே வாழ்பவன்; அறியாதவன் செத்தவரைச் சேர்ந்தவன். 214 உலக நலம் விரும்பும் பேரறிஞனது செல்வம் ஊருணியில் நிறைந்த நீர் போலாகும். 215 உலக அன்பு உடையவனிடம் செல்வம் இருப்பது பழமரம் ஊர்நடுவே பழுத்தது போன்றது. 216 பேரருளாளன் இடத்துச் செல்வம் இருப்பது யார்க்கும் கிடைக்கும் மருந்துமரம்போலும். 217 ஊர்க்கடமையை அறிந்த அறிவுடையவர் வறுமைக்காலத்தும் பொதுநலம் குறையார். 218 செய்யவேண்டியன செய்ய இயலாமையே நல்ல அன்பனுக்கு வறுமையாகும். 219 பொது நன்மையினால் கேடு வருமென்றால் அக்கேடு விலைபோகும் மதிப்புடையது. 220 23. ஈகை (தனியுதவி) ஈகை என்பது ஏழைகளுக்குக் கொடுப்பதே; பிறர்க்குச் செய்வது எதிர்பார்த்துக் கொடுப்பது. 221 வீட்டுநெறி என்றாலும் வாங்குவது தீது; வீடில்லை என்றாலும் கொடுப்பது நல்லது. 222 இல்லை என்ற துயரை எடுத்துரைக்கும் முன்பே கொடுக்குங்குணம் குடிப்பிறந்தவனிடம் உண்டு. 223 கேட்பவரின் முகமலர்ச்சியைக் காணும் வரை கேட்கவிடுதல் இனியது ஆகாது. 224 பசி பொறுப்பது பேராற்றல்; அதனினும் பேராற்றல் பிறர் பசியை ஆற்றுவது. 225 ஏழைகளின் பெரும் பசியைத் தீர்ப்பாயாக; அதுதான் செல்வனுக்குச் சேமிப்பிடம். 226 பகுத்துக் கொடுத்து உணவருந்தியவனைத் தீய பசிநோய் என்றும் தீண்டாது. 227 பொருளைத்தேடி இழக்கும் கொடியவர்கள் கொடுத்து மகிழும் இன்பத்தை அறியாரோ? 228 நிறைந்த உணவைத் தனித்து உண்பது இரப்பதினும் பார்வைக்கு அருவருப்பானது. 229 ஓர் ஏழைக்கு உதவ முடியாத போது விரும்பாச் சாவும் விரும்பத் தகும். 230 24. புகழ் வறியார்க்கு ஈக; புகழோடு வாழ்க; அதுவே உயிர்க்குச் சிறந்த ஊதியம். 231 உலகில் பாராட்டுவார் பாராட்டுவன எல்லாம் வறியவர்க்கு ஈந்த வள்ளல்களின் புகழ்களே. 232 நிலையாத உலகத்து உயர்ந்த புகழ் தவிர எதுவும் அழியாது நிலைப்பதில்லை. 233 உலகில் நெடும்புகழ் ஈட்டிய மக்களையே வானுலகம் போற்றும்; தேவரைப் போற்றாது. 234 புகழின் பொருட்டு அழிதலும் சாதலும் அறிவுடையவர்க்கே இயலும். 235 அவைக்கண் புகழ் நோக்கொடு தோன்றுக; அந்நோக்கம் இலாதார் தோன்றாமை நல்லது. 236 புகழில்லார் தம்மேல் வருத்தப்படாது தம்மை இகழ்வார்மேல் வருத்தப்படுவது ஏன்? 237 பின்நிலைக்கும் புகழை ஒருவன் பெறாவிடின் அவன்பிறப்பு உலகிற்கே ஒரு பழி. 238 புகழில்லா உடம்பைச் சுமப்பின் நல்ல நிலங்கூட வளம் குறையும். 239 வசையின்றி வாழ்பவரே வாழ்பவர் இசையின்றி இருப்பவரே இறந்தவர். 240 25. அருளுடைமை அருளே செல்வத்துள் சிறந்த செல்வம்; பொருளோ கயவரிடத்தும் உண்டு. 241 நல்லவழியை ஆராய்ந்து அருள் செய்க; எவ்வகையால் பார்த்தாலும் அருளே துணை. 242 அறியாமையும் துன்பமும் உடைய உலகத்தை அருள்நெஞ்சம் கொண்டவர் அடைய மாட்டார். 243 எல்லா உயிர்களையும் பேணும் அருளாளனுக்குத் தன்னுயிர் பற்றிய கவலை வினை இல்லை. 244 அருளாளர்க்குத் துன்பம் என்பது இல்லை; காற்றுடன் வளமுடைய இவ்வுலகமே சான்று. 245 அருள் இல்லாமல் கொடுமைகள் செய்பவர் பொருளிழந்து வாழ்வும் வழுவினார் ஆவர். 246 பொருளில்லார்க்கு இவ்வுலக வாழ்வு இல்லை; அருளில்லார்க்கு அவ்வுலக வாழ்வு இல்லை. 247 பொருளில்லார் ஒருநாள் செல்வத்தால் செழிப்பர்; அருளில்லார் தொலைந்தவரே; திரும்ப மீளார். 248 அருளிலான் அறஞ்செய்தான் என்பது பேதை இறைவனைக் கண்டான் என்பது போலாம். 249 உன்னினும் எளியவனை நீ வருத்தும்போது உன்னினும் வலியவன்முன் உன்னை நினை. 250 26. புலால் மறுத்தல் தன்தசை பெருக்கப் பிறதசை தின்பவனுக்கு எங்ஙனம் அருள் பிறக்கும்? 251 போற்றதார்க்குப் பொருள்வரவு இல்லை; புலால் தின்பவர்க்கு அருள் வரவு இல்லை. 252 இறைச்சி சுவைத்தவனுக்கு அருள் தோன்றாது; ஆயுதம் தாங்கியவனுக்கு இரக்கம் இருக்குமா? 253 கொல்லாமையே அருள்; கொல்லுதலே பாவம்; புலால் உண்ணுதலே சிறுமை. 254 புலால் உண்ணாமையால் நீண்ட ஆயுள் உண்டு; புலால் உண்டவனை நரகமும் உண்ணாது. 255 உலகத்தார் தின்னுதற்குப் புலால் வாங்காவிடின் விற்பதற்கென்று விற்பார் யாரும் இரார். 256 ஓருடம்பின்புண் என்று அருவருப்புத் தோன்றின் புலாலை யாரும் உண்ண விரும்பார். 257 உயிரை நீக்கிக் கொண்டுவந்த இறைச்சியைக் குற்றத்தை நீக்கிய அறிஞர் உண்ணார். 258 ஆகுதி பெய்து ஆயிரவேள்வி செய்தலினும் ஓருயிரைக்கொன்று தின்னாமை மேல். 259 கொல்லாதவனையும் புலால் உண்ணாதவனையும் கைகூப்பி எல்லா உயிர்களும் வணங்கும். 260 27. தவம் தவத்தின் வடிவு தன் துன்பத்தைப் பொறுத்தல் எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாமை. 261 தவக்கோலமும் தவமுடையவர்க்கே சிறப்பு; அதனைத் தவமிலாதார் கொள்வது பழிப்பு. 262 இல்லறத்தார் ஏன் தவஞ் செய்ய மறந்தனர்? துறவிக்கு உதவ வேண்டும் என்பதற்காகவா? 263 பகைவரை அழிக்கலாம், நண்பரை ஆக்கலாம்; இந்த ஆற்றல் நினைப்பின் தவத்தால் வரும். 264 வேண்டுவன வேண்டியபடி பெறலாம்; ஆதலின் உரிய தவத்தை உடனே முயலுக. 265 தவஞ்செய்பவரே தங்காரியம் செய்பவர்; பிறர் ஆசையால் வீண்காரியம் செய்பவர். 266 காய்ச்சக் காய்ச்சப் பொன் ஒளிமிகும்; துறவிக்குத் துன்பம் தாக்கத் தாக்க மெய்யறிவு மிகும். 267 தன்னுயிர் தன்முனைப்பு இல்லாதவனை உலகத்து உயிரெல்லாம் வணங்கும். 268 தவத்தின் ஆற்றல் கைகூடியவர்கட்கு யமனைத் தாண்டுதலும் இயலும். 269 உலகில் வறியவர் பலர். ஏன்? முயலாதார் பலர்; முயல்வார் சிலர். 270 28. கூடாவொழுக்கம் வஞ்சகனது மறைந்த நடத்தையைக் கண்டு ஐம்பூதங்களும் உடம்பினுள்ளே சிரிக்கும். 271 தன்மனம் குற்றமென அறிந்தும் செய்தால் பெரிய தவக்கோலத்தால் என்ன பயன்? 272 அடக்கமிலான் கொண்ட கொடிய வேடம் பசு புலித்தோலிட்டுப் பயிர்மேய்வது போலாம். 273 வேடத்தில மறைந்து வேண்டாதன செய்தல் புதரில் மறைந்து பறவை பிடிப்பது போலாம். 274 ஆசையில்லை எனச்சொல்வாரது பொய்நடத்தை சீசீ என்று இகழும் துன்பத்தைத் தரும். 275 மனத்தால் துறவாது துறந்தவர் போல ஏய்ப்பவரே எல்லாரினும் கொடியவர். 276 குண்டுமணி போலப் புறத்தே காவியும் அகத்தே கருமையும் உடையார் உண்டு. 277 மனத்தில் அழுக்கிருக்கவும் நீரெல்லாம் ஆடி ஏய்த்து நடப்பவரே உலகில் ஏராளம். 278 பார்வைக்கு அம்புநேர்; யாழ்வளைவு ஆயினும் செயலைக் கண்டு உண்மை அறிக. 279 உலகம் தூற்றும் கெட்ட நடத்தையை விடின் தலை மழித்தலும் சடை நீட்டலும் வேண்டாம். 280 29. கள்ளாமை வசைவேண்டாம் என்பவன் மிகச் சிறிதும் கள்ளமின்றித் தன் நெஞ்சைக் காக்க. 281 பிறன் பொருளை மனத்தால் நினைப்பதும் தீது; ஆதலின் திருடிப் பறிக்க எண்ணாதே. 282 களவினால் வந்த செல்வம் மிகவும் பெருகுவது போலத் தோன்றிக் கெடும். 283 களவிலே மிகுந்த ஆசை இருப்பது கடைசியில் நீங்காத துன்பம் தரும். 284 பிறர் ஏமாந்த நிலையைப் பார்த்திருப்பவனிடம் அருளும் அன்பும் இரா. 285 களவிலே மிக்க சுவை கண்டவர்கள் அளவிலே நின்று வாழ்க்கை நடத்தார். 286 நெறிபட வாழும் உறுதியுடையவர் இடத்துத் திருடும் பெரும்பேதைமை இராது. 287 நெறியாளர் நெஞ்சு அறத்துக்கு இருப்பிடம்; திருடர்கள் நெஞ்சு மறைவுக்கு இருப்பிடம். 288 களவுதவிர வேறொன்றும் அறியாதவர்கள் தீமைகள் செய்து விரைவில் அழிவர். 289 திருடுபவருக்கு விரைவில் உயிர் போகும்; திருடாதவர்க்கு வானுலகமும் போகாது. 290 30. வாய்மை வாய்மை என்று போற்றப்படும் பண்பு எது? சிறிதும் தீமை இல்லாத சொற்களைக் கூறுவது. 291 பொய்யினால் பிறர்க்குத் தூயநன்மை வரின் அப்பொய்யையும் மெய்யாகக் கொள்ளலாம். 292 உன்நெஞ்சறியப் பொய் கூறாதே; கூறின் உன்நெஞ்சம் உன்னைச் சுடாதா? 293 மனமறியப் பொய் சொல்லாதவன் உலகத்தார் மனத்தில் எல்லாம் இருப்பான். 294 தவமும் தானமும் செய்வதினும் மேலானது உள்ளத்தோடு உண்மை சொல்வது. 295 பொய்சொல்லாமை பெரும் புகழாம்; பொய் சொல்லத் தெரியாமை பேரறமாம். 296 உண்மையை உண்மையாகவே கடைப்பிடித்தால் பிறஅறங்கள் செய்யவும் வேண்டுமோ? 297 புறத்தூய்மை நீரால் உண்டாகும்; மனத்தூய்மை பொய்சொல்லாமையால் விளங்கும். 298 எல்லா ஒளியும் ஒளியல்ல; சான்றோர்க்கு உண்மை ஒளியே ஒளி. 299 யாம் உண்மையாகக் கண்ட உண்மைகளுள் வாய்மையினும் நல்லறம் வேறில்லை. 300 31. வெகுளாமை பலிக்குமிடத்துச் சினவாதவனே காப்பவன்; பலியா இடத்து எப்படி நடந்தால் என்ன? 301 பலிக்காத இடத்துக் கோபிப்பது தீது; பலிக்கும் இடத்தும் அதுபோல் தீயது இல்லை. 302 யார்மேலும் சினத்தை மறந்துவிடுக; மறவாவிடின் தீமைகள் பிறந்துவிடும். 303 முகமலர்ச்சியையும் அகமலர்ச்சியையும் கொல்லும் சினத்தினுள் பிறபகை உண்டோ? 304 நீ வாழவேண்டின் சினத்தை ஒழிக்க; ஒழிக்காவிடின் சினம் உன்னை ஒழிக்கும். 305 சினத்தீ சினங்கொண்டானையும் கொல்லும்; இனமாகிய துணையையும் எரிக்கும். 306 சினத்தைப் போற்றிக்கொண்டவன் கெடுவான்; தரையைக் குத்தியவனுக்குக் கைவலியாதா? 307 பூங்கொத்தை நெருப்பில் இட்டாற்போலக் கொடுமைகள் செய்யினும் கோபம் கூடாது. 308 மனத்தாலும் வெகுளியை மறந்துவிடின் நினைத்த எல்லாம் உடனே கிடைக்கும். 309 சினத்தில் மிக்கவர் செத்தவர்க்கு ஒப்பாவர்; சினத்தை விட்டவர் துறவியர்க்கு ஒப்பாவர். 310 32. இன்னா செய்யாமை சிறப்புச் செல்வம் கிடைப்பினும் பிறர்க்குத் துன்பம் செய்யாமையை தூயவர் கொள்கை. 311 கருவம் கொண்டு துன்புறுத்தினும் திரும்பத் துன்பம் செய்யாமையே தூயவர் நோக்கம். 312 வலிய வந்து பகைத்தவர்க்குங்கூடத் துன்பம் செய்யின் துயரம் நீங்காது. 313 கொடுமை செய்தாரைத் தண்டிப்பது எப்படி? அவர் வெட்கப்படும்படி நன்மை செய்வது. 314 பிறர் துன்பத்தைத் தன்துன்பம் போலக் கருதாத இடத்து அறிவினால் என்ன பயன்? 315 தனக்குக் கொடியது எனப் பட்டதைத் தான் பிறர்க்குச் செய்ய விரும்பலாமா? 316 எவ்வகையாலும் என்றும் எவர்க்கும் மனமறியக் கொடுமை செய்யாதே. 317 தன்னுயிர்க்குப் பிடிக்காது என்ற தீமையைப் பிறவுயிர்க்கு ஏன் செய்கின்றான்? 318 காலையில் பிறர்க்குக் கொடுமை செய்யின் மாலையில் உனக்குக் கொடுமை தானேவரும். 319 கேடுகள் கேடுசெய்தார்க்கே வந்துசேரும்; துன்பம் வேண்டாதார் துன்பம் செய்யார். 320 33. கொல்லாமை எவ்வுயிரையும் கொல்லாமையே அறமாம்; கொல்லுதல் எல்லாத் தீமையும் தரும். 321 ஆசிரியர்கள் கூறிய அறத்துள் மேலானது பகுத்துண்டு பல்லுயிரையும் காப்பதுவே. 322 நிகரற்ற அறம் கொல்லாமை: அதற்குத் துணையாகும் வாய்மையும் நல்ல அறம். 323 நன்னெறி என்பது யாது, ஓருயிரும் கொலைப் படாதபடி எண்ணும் நெறி. 324 பிறந்த உயிரைக் கொல்ல அஞ்சுபவனே பிறவிக்கு அஞ்சும் துறவியினும் மேலானவன். 325 கொல்ல அறத்தைக் கொண்டவன் ஆயுளை உயிருண்ணும் யமன் நெருங்க மாட்டான். 326 இன்னொருவன் உன்னுயிரை எடுக்கும் போதும் அவனது இன்னுயிரை எடுக்காதே. 327 வீரர்க்குப் போரில் படை விளைவு சிறந்தது; தனிக்கொலை விளைவு இழிந்தது. 328 எல்லா இழிவுகளையும் ஆராய்ந்த பெரியவர் கொலைஞனை மிக இழிந்தவனாகக் கருதுவர். 329 நோயுடலும் தீயவாழ்வும் உடையார் யார்? ஓருயிரை உடம்பிலிருந்து பிரித்தவர். 330 34. நிலையாமை நிலையாத பொருள்களை நிலைக்கும் என்று கருதும் அறிவு மிகவும் கடையானது. 331 பெருஞ் செல்வம் வந்துபோவது நாடகத்துக்கு மக்கள் வருவது போவது போன்றது. 332 செல்வம் நிலைப்படாதது; அது கிடைத்தால் நிலைத்தவற்றை உடனே செய்து கொள்க. 333 காலம் உயிரறுக்கும் வாள்; நாளன்று; உணர்வார்க்கு உண்மை விளங்கும். 334 நாச்சுருண்டு விக்கல் வருமுன்னே அறத்தைத் தானே முற்பட்டுச் செய்க. 335 நேற்று இருந்தான் இன்று இறந்தான் என்பதே இவ்வுலகத்தின் பேரியல்பு. 336 மறுகணம் இருப்பதை அறிய மாட்டாதவர் கட்டுகின்ற கோட்டைகள் எவ்வளவோ கோடி. 337 உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு கூடுவிட்டுப் பறவை ஓடுவது போன்றது. 338 தூங்குவது போன்றது சாவு; தூங்கி விழிப்பது போன்றது பிறப்பு. 339 உடலில் ஒட்டுக் குடியிருக்கும் உயிர்க்கு நிலையான ஒரு வீடு கிடைக்க வில்லையோ? 340 35. துறவு எந்தெந்தப் பொருளைத் துறந்தோமோ அந்தந்தப் பொருளால் துன்பம் இல்லை. 341 பொருள் உள்ளபோதே துறக்க; துறந்தால் இப்பிறப்பில் வரும்நலன்கள் பல. 342 ஐம்புல உணர்ச்சிகளை அடக்க வேண்டும்; எல்லாத் தேவையையும் விடுக்க வேண்டும். 343 யாதும் இல்லாமையே தவத்தின் இயல்பு; ஏதும் இருப்பது ஆசையாகி விடும். 344 பிறப்பற முயல்வார்க்கு உடலும் கூடாதெனின் பிறதொடர்பு பற்றி என்ன சொல்வது? 345 யான் எனது என்னும் கருவமற்றவன் தேவர்க்கும் எட்டா உயர்நிலையை அடைவான். 346 பற்றுக்களை விடாது பிடித்துக் கொள்பவரைத் துன்பங்களும் விடாது பிடித்துக் கொள்ளும். 347 முற்றத் துறந்தவரே வீடடைவார்; அங்ஙனம் துறவாதவர் பிறப்புவலையில் மயங்கி வீழ்வார். 348 பற்று விட்டபோதுதான் பிறப்பு விடும்; விடாதபோது இறப்பும் பிறப்பும் வரும். 349 பற்றில்லாத இறைவனைப் பிடித்துக் கொள்க; அப்பிடிப்பே உலகப்பற்றை விடுதற்கு வழி. 350 36. மெய்யுணர்தல் பொய்ப்பொருள்களை மெய்ப்பொருள் என்று மயங்குவதால் பிறப்புத் தோன்றும். 351 மயக்கம் விட்டுத் தெளிந்த அறிஞர்களுக்குப் பேதைமை இராது; பேரின்பம் உண்டாம். 352 ஐயம் இன்றி உண்மை கண்டவர்களுக்கு வீட்டுலகம் கிட்ட உள்ளது. 353 உண்மை யுணர்ச்சி இல்லாதவர்களுக்கு ஐம்புல அடக்கம் இருந்தும் பயனில்லை. 354 ஒரு பொருள் எத்தன்மையதாக இருப்பினும் அதன் உண்மையைக் காண்பதே அறிவு. 355 இப்பிறப்பில் கற்று உண்மை கண்டவரே திரும்பப் பிறவா வீட்டினை அடைவர். 356 உள்ளம் உண்மையை உணர்ந்து கொண்டால் பின்னும் பிறப்புண்டோ என்று அஞ்சாதே. 357 பிறப்பாகிய பேதைமை நீங்குமாறு சிறப்பாகிய பொருளைக் காண்பதே அறிவு. 358 மெய்ப்பற்றை உணர்ந்து பொய்ப்பற்றை விடின் வருகின்ற நோய்கள் மீறி வாரா. 359 காமம் சினம் அறியாமை மூன்றும் அடியோடு கெடவே நோயும் கெடும். 360 37. அவாவறுத்தல் ஆசைதான் எவ்வுயிர்க்கும் என்றும் நெடும் பிறவி தரும் வித்து என்பர். 361 ஒன்று விரும்பின் பிறவாமையை விரும்புக; விரும்பாமையை விரும்பின் அது கைகூடும். 362 ஆசையின்மையே சிறந்த செல்வம்; அதுபோன்ற செல்வம் எங்கும் இல்லை. 363 மனத்தூய்மை என்பது ஆசையின்மையே; அத்தன்மை வாய்மையினால் வரும். 364 ஆசைவிட்டவரே பற்று விட்டவர் ஆவார்; மற்றவர்கள் முடிவாகப் பற்று விட்டதில்லை. 365 ஆசை யாரையும் ஏய்த்து விடும் ஆதலின் அதற்கு அஞ்சி நடப்பதே அறம். 366 ஆசையை முழுதும் அறுத்து விட்டால் நல்வினை நாம் விரும்பியபடி வரும். 367 ஆசையில்லார்க்குத் துன்பம் இல்லை; அது உடையார்க்குத் துன்பம் வளரும். 368 ஆசையாகிய பெருந்துன்பம் அகன்று விட்டால் இன்பம் வந்துகொண்டே இருக்கும். 369 என்றும் நிரம்பாத ஆசையை நீக்கிவிடின் நீங்காத இன்பம் உடனே கிடைக்கும். 370 38. ஊழ் (உலகமுறை) பொருள் வளருங்கால் ஊக்கம் பிறக்கும்; பொருள் போகுங்கால் சோம்பல் வந்து விடும். 371 அழிவு காலம் அறியாமையைத் தரும்; ஆகுங்காலம் அறிவைப் பெருக்கும். 372 நுண்ணிய நூல்பல கற்றாலும் ஒருவர்க்குத் தன் போக்கிலேதான் அறிவு வளரும். 373 உலகத்தின் இயல்பு இருவேறு பட்டது; செல்வமுறை வேறு, அறிவு முறை வேறு. 374 நேர்வழி செல்வம் ஈட்டுதலைக் கெடுக்கலாம்; தீவழி அதற்குத் துணையாகலாம். 375 வருந்தினும் உனக்கு இல்லாதவை வாரா; வாரி எறியினும் உரியவை போகா. 376 அமைத்தவன் அமைத்த நெறிப்படி யல்லது கோடி தொகுப்பினும் நுகருதல் இயலாது. 377 அடைய வேண்டுவன அடையா என்றால் வறியோரும் துறவியாகி இருப்பார்களே? 378 நன்மை தரும்போது நல்லதாக மதிப்பவர் தீமை தரும்போது துன்பம் கொள்வதேன்? 379 ஊழைக் காட்டிலும் வலியது உண்டோ? எது தொடர்ந்தாலும் அது முந்தி விடும். 380 இரண்டவாது பொருட்பால் ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர். 39. இறைமாட்சி படைகுடி உணவு அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையவன் அரசரிற் சிறந்தவன். 381 அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் நான்கும் வேந்தனுக்கு நன்கு வேண்டும். 382 காலந்தாழாமை கல்வி துணிவு மூன்றும் நிலன் ஆள்பவனுக்கு நீங்காது வேண்டியவை. 383 அறம் வழுவாது தீமைகளை நீக்கி மறம் வழுவாது மானம் காப்பது அரசு. 384 பொருளை ஆக்கி ஈட்டிக் காத்து வகைசெய்யும் ஆற்றல் உடையதே அரசு. 385 பார்வைக்கு எளிமை சொல்லுக்கு இனிமை உடைய மன்னனது நாடு புகழப்படும். 386 இனிது சொல்லி அளிசெய்யும் அரசன் தன்சொற்படி உலகத்தைக் காண்பான். 387 முறையோடு காக்கும் மன்னன் குடிகட்குக் காணும் கடவுள் ஆவான். 388 கசப்பான சொல்லையும் கேட்கும் பண்புள்ள வேந்தனது குடைக்கீழ் உலகம் தங்கும். 389 கொடை அன்பு நேர்மை குடிபோற்றல் உடையவனே மன்னர்க்கு ஒளியாவான். 390 40. கல்வி கற்கத்தக்க நூல்களைத் தெளிவாகக் கற்க; கற்றபின் தக்கபடி வாழ்வில் நிற்க. 391 எண்ணும் எழுத்தும் ஆகிய இரண்டும் வாழ்வார்க்குக் கண்கள் என்பர். 392 கற்றோர்க்கே கண் உண்டு; கல்லாதவர்க்கோ முகத்தில் இரண்டு புண் உண்டு. 393 மகிழுமாறு பழகுவர்; நினைக்குமாறு பிரிவர்; இதுவே புலவரின் பண்பு. 394 செல்வர் முன் வறியர்போல ஏக்கத்தோடு படித்தவரே மேல்; படியாதவர் கீழ். 395 மணற்கேணி தோண்டத் தோண்ட நீர் ஊறும்; நூல்கள் கற்கக் கற்க அறிவூறும். 396 எந்நாடும் தன்னாடாம்; எவ்வூரும் தன்னூராம்; ஏன் ஒருவன் சாகும்வரை படிப்பதில்லை? 397 ஒருபிறப்பில் படித்த படிப்பு ஒருவர்க்கு எழுபிறப்பிலும் வந்து உதவும். 398 தன்னின்பம் உலக இன்பம் ஆதலின் கற்றவர் கல்வியை nன் மேலும் காதலிப்பர். 399 அழியாத சிறந்த செல்வம் கல்வியே; பிறபொருள்கள் செல்வம் அல்ல. 400 41. கல்லாமை பலநூல் அறிவின்றி அவை யேறுதல் அரங்கின்றிக் காய் உருட்டுவது போலும். 401 படிப்பு இல்லாதவன் பேச விரும்புதல் முலையில்லாதவள் இன்பம் விழைவது போலும். 402 கற்றவர்முன் பேசாது அடங்கி இருப்பரேல் கல்லாதவரும் மிக நல்லவர் ஆவர். 403 கல்லாதவன் உடைய இயற்கையறிவு கூர்மை யாயினும்அறிஞர் கொள்ளார். 404 கற்றவரோடு கலந்து உரையாடிய அளவில் கல்லாதவன் மதிப்புக் கரைந்து போகும். 405 உயிரோடு இருக்கிறார் எனலாமே யன்றிக் கல்லாதவர் களர்நிலம் போன்றவர். 406 நுண்மை மாட்சி கூர்மை பொருந்திய அறிவு இல்லாதவன் அழகு நிறப்பொம்மை போலும். 407 படித்தவர் எய்திய வறுமையைக் காட்டிலும் படியாதவர் எய்திய செல்வம் கேடாகும். 408 கல்லாதவர் உயர் குடியிற் பிறந்திருப்பினும் தாழ்குடியிற் பிறந்த அறிஞர்க்கு ஒவ்வார். 409 விலங்கும் மக்களும் வேற்றுமை எவ்வளவு அவ்வளவு கற்றாரும் கல்லாரும். 410 42. கேள்வி செல்வத்திற் சிறந்தது கேள்விச் செல்வம்; அச்செல்வம் எச்செல்வத்தினும் மேலானது. 411 செவிக்கு உணவு கிடைக்காதபோது வயிற்றுக்குக் கொஞ்சம் உணவு அளிக்கலாம். 412 செவியுணவு உண்டவர் அவியுணவு உண்ட தேவர்க்கு ஒப்பாவர் இவ்வுலகில். 413 கல்லாவிடினும் கற்றார் சொல்லைக் கேட்க; சோர்வுக் காலத்துத் தாங்கும் துணையாகும். 414 ஒழுக்கம் உடையவர் சொல்லைக் கேட்பது வாழ்வில் வழுக்கும்போது ஊன்று கோலாம். 415 எவ்வளவாயினும் நல்லவற்றைக் கேட்க; அவ்வளவிற்குச் சிறந்த பெருமை உண்டு. 416 ஆராய்ந்து உணர்ந்து நிரம்பிய கேள்வியாளர் தவறியும் அறிவில்லன சொல்லார். 417 கேள்வியறிவு நுழையாத செவிகள் ஓசை கேட்டாலும் முழுச் செவிடுகளே. 418 நுட்பமான கேள்வியறிவு இல்லாதவர்க்கு வணக்க ஒடுக்கமான வாய் இராது. 419 செவிச்சுவை தெரியா வாய்ச்சுவை மக்கள் வெந்தால் என்ன? இருந்தால் என்ன? 420 43. அறிவுடைமை அறிவு குற்றம் தடுக்கும்படை; பகைவரும் ஊக்கம் அழிக்க முடியாத அரண். 421 சென்ற மனத்தைச் சென்றபடி விடாது தீது நீக்கி வழிப்படுத்துவதே அறிவு. 422 எச்செய்தியை யார் யாரிடம் கேட்டாலும் அதன் உண்மையைக் காண்பதே அறிவு. 423 அருமையை எளிமையாக நீ சொல்லுக; பிறர்கூறும் நுண்மையை விளங்கிக் கொள்ளுக. 424 உலகத்தைத் தழுவிப் போவது சாதுரியம்; மகிழ்தலும் வருந்தலும் இல்லாதது அறிவு. 425 எங்ஙனம் போகின்றது உலகம் அங்ஙனம் ஒட்டி வாழ்வதே அறிவுடைமை. 426 மேல்வருவதை அறிபவர் அறிவுடையவர்; அத்திறமை இல்லாதவர் அறிவில்லாதவர். 427 அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதைத்தன்மை; அதற்கு அஞ்சுதல் அறிவுத்தன்மை. 428 வருமுன்னர்க் காக்க வல்லஅறிஞர்க்கு அதிர்ச்சி தரும் துன்பம் வாராது. 429 அறிவுடையவர் அறிவால் எல்லாம் உடையர்; அறிவிலார் என்ன இருந்தும் இலர். 430 44. குற்றங் கடிதல் கருவமும் சினமும் இழிவும் இல்லாதவர் முன்னேற்றம் மேலானது. 431 கஞ்சத் தன்மையும் பொய்யான மானமும் வேண்டாத மகிழ்ச்சியும் வேந்தன் கேடுகள். 432 சிறுகுற்றம் செய்யினும் பெரிதாக எண்ணுவர் பழிக்கு நாணும் பெரியவர். 433 குற்றமே குழிதோண்டும் உட்பகை ஆதலின் குற்றத்தை விழிப்போடு தடுப்பாயாக. 434 குற்றம் வருமுன்னே தடுக்காதவன் வாழ்வு தீ முன் வைக்கோற் போர்போல அழியும். 435 தன் குறையை நீக்கிப் பிறர்குறை கூறின் அரசனை யாரும் குறை சொல்லார். 436 செய்வன செய்யாது சிக்கெனப் பிடித்தவனது செல்வம் தப்பும் வழியின்றிக் கெடும். 437 பொருட் பற்றாகிய கஞ்சத் தன்மை எத்தன்மையிலும் மிக இழிந்தது. 438 எக்காலத்தும் தன்னைப் புகழாதே; கெடுதல் வினையை என்றும் விரும்பாதே. 439 தன்விருப்பம் வெளிப்படாதபடி நடப்பின் பகைவர் சூழ்ச்சிகள் பயன்படா. 440 45. பெரியாரைத் துணைக்கோடல் அறமும் முதிர்ந்த அறிவும் உடையவரது நட்பைத் தெரிந்து பெற்றுக் கொள்க. 441 வந்த துயரைப் போக்கி வருமுன் காக்கும் திறமுடையவரைத் தழுவிக் கொள்க. 442 பெரியவர்களைப் போற்றி உறவு கொள்வதே அரிய செயல்களுள் எல்லாம் அரியது. 443 நம்மினும் பெரியவர் நம்மவராக நடப்பது எல்லா வன்மையினும் ஏற்றமானது. 444 அறிஞர்களே அரசன் கண்கள் ஆதலின் அவர்களை ஆராய்ந்து அணைத்துக் கொள்க. 445 பெரியவர்கள் துணையாக ஒழுகுபவனைப் பகைவர்கள் என்ன செய்ய முடியும்? 446 கடிந்துரைக்கும் நண்பர் உடையவரை யாரும் கெடுக்க முடியுமா? 447 கடிந்துரைப்பார் இல்லாத தனி மன்னன் பகைவர் இன்றியும் கெடுவான். 448 முதல் இல்லாதவர்க்கு ஊதியம் உண்டோ? துணை இல்லாதவர்க்கு ஒரு நிலை உண்டோ? 449 நல்லவர் ஒருவர் நட்பை விடுவது பலரைப் பகைப்பதினும் பெருந் தீமை. 450 46. சிற்றினம் சேராமை பெரியவர் சிறியவரோடு பழக அஞ்சுவர்; சிறியார் சிறியாரையே உறவு கொள்வர். 451 மழை தான்விழுந்த மண்தன்மையைப் பெறும்; அறிவு சேர்ந்த குழுத்தன்மையைப் பெறும். 452 மக்கட்கு மனத்தால் உணர்ச்சி உண்டாம்; சேர்க்கையால் உரிய மதிப்பு உண்டாம். 453 அறிவு மனத்தை ஒட்டியது போல் தோன்றும்; உண்மையில் பழகும் இனத்தை ஒட்டியது. 454 மனத் தூய்மை செயல் தூய்மை இரண்டும் நல்ல கூட்டுறவால் வரும். 455 நன்மனத்தார்க்குப் பின்வழி நன்றாகும்; நல்லினத்தார்க்கு எல்லாமே நன்றாகும். 456 நன்மனம் உயிர்க்கு ஆக்கம் தரும்; நற்கூட்டு எல்லாப் புகழும் தரும். 457 சாலன்றோர்க்கு மனம் நல்லதாக இருப்பினும் இனமும் நல்லதாக இருப்பது சிறப்பு. 458 நன்மனத்தால் மறுமை யின்பம் கிடைக்கும்; அதற்கும் நற்கூட்டு நல்லது. 459 நல்ல சேர்க்கையினும் சிறந்த துணையில்லை; கெட்ட சேர்க்கையினும் வேறு கேடில்லை. 460 47. தெரிந்து செயல்வகை அழிவதும் ஆவதும் பின் வரும் ஊதியமும் எல்லாவற்றையும் எண்ணிச் செய்க. 461 தேர்ந்தவர்களைக் கலந்து செய்பவர்க்குச் செய்ய இயலாதது ஒன்றுமே இல்லை. 462 வருவதை நம்பி உள்ளதை இழக்கும் காரியத்தில் ஈடுபடார் அறிவு இருப்பவர். 463 வெட்க உணர்ச்சிக்கு அஞ்சுகின்றவர் விளங்காத காரியத்தை மேற்கொள்ளார். 464 உட்கூறுகள் தெரியாது செய்யப் புறப்படுதல் பகைவர் வெற்றிக்குப் பாத்தி பிடிப்பதாகும். 465 செய்ய வேண்டாதன செய்தாற் கெடுவான்; வேண்டியன செய்யாவிட்டாலும் கெடுவான். 466 நன்றாக நினைத்துக் காரியத்தில் இறங்குக; இறங்கியபின் பார்க்கலாம் என்பது தவறு. 467 முறைப்படி உழையாத உழைப்பு பலர்துணை இருப்பினும் ஓட்டைபடும். 468 அவரவர் இயல்பு அறிந்து செய்யாவிடின் நன்மை செய்வதும் தவறாகி விடும். 469 உன் நிலைக்கு ஏற்காததை உலகம் ஏற்காது; உலகம் இகழாதவற்றை எண்ணிச் செய்க. 470 48. வலியறிதல் செயல், தான், பகைவன், துணைவன் என்ற எல்லா வன்மைகளையும் சீர்தூக்கிச் செய்க. 471 இயலும் செயலையும் அறிவையும் தெரிந்து நடப்பார்க்கு நடவாதது இல்லை. 472 ஆற்றல் அறியாது ஆர்வத்தால் செய்து இடையிலே நொடித்தவர் மிகப் பலர். 473 அமைத்தபடி நடவாதவன் அளவறியாதவன் தன்னைப் புகழ்ந்தவன் சடுதியிற் கெடுவான். 474 மயிலிறகையும் அளவுக்கு மிஞ்சி ஏற்றினால் பாரவண்டியும் அச்சு முறிந்து விடும். 475 நுனிக்கொம்பில் ஏறியவர் மேலும் ஏறின் உயிர்க்கு முடிவுகாலம் வந்து விடும். 476 முறைப்படி பொருள்நிலை அறிந்து கொடுக்க; அதுவே மேன்மேலும் கொடுக்கும் நெறியாம். 477 வருவாய் அளவாக இருப்பினும் கேடில்லை; செலவு மட்டும் விரிதல் கூடாது. 478 பொருள்நிலை அறிந்து வாழாதவன் வாழ்க்கை இருப்பதுபோல ஒன்றும் இராது. 479 உள்ள நிலை பாராது ஊர்நன்மை செய்தாலும் செல்வநிலை விரைவில் சீரழியும். 480 49. காலம் அறிதல் காக்கை கோட்டானைப் பகலில் வென்றுவிடும்; வேந்தர் வெல்லும் காலம் பார்க்க வேண்டும். 481 காலம்பார்த்து ஏற்ப நடப்பது நிலையாகச் செல்வத்தைக் கட்டும் கயிறாகும். 482 ஆற்றலோடு காலமும் அறிந்து செய்யின் செய்தற்கு அரியதென ஏதும் உண்டோ? 483 காலமும் இடமும் கணித்துச் செய்யின் உலகமே வேண்டினும் கிடைக்கும். 484 ஞாலம் முழுதும் ஆளக் கருதுபவர் காலம் பார்த்துக் கலங்காது இருப்பர். 485 ஊக்கம் உடையவன் ஒடுங்கி இருப்பது சண்டைக்கடா பின்வாங்கும் குறிப்பாகும். 486 அறிவுடையார் வெளிப்படக் கொதிப்படையார்; காலம் பார்த்து உட்கொதிப்பு அடைவர். 487 பகைவரைக் காணும்போது பணிக; காலம் வந்தபோது அவர் கவிழ்வர். 488 கிடைத்தற்கு அரியது கிடைத்தால் உடனே செய்தற்கு அரியதைச் செய்து கொள்க. 489 ஒடுங்கிய காலத்துக் கொக்குப் போல்க; சிறந்த காலத்து அதன் குத்துப் போல்க. 490 50. இடனறிதல் முழுதும் வாய்ப்பான இடம் பெறும்வரை எச்செயலையும் தொடங்காதே புறக்கணியாதே. 491 வேறுபட்ட ஆற்றல் உடைய அரசர்க்கும் அரண்துணை பல நன்மை அளிக்கும். 492 இடம்பார்த்து விழிப்போடு பகைவரிடம் நடப்பின் வலியிலாரும் வலிபெற்றுப் போரிடுவர். 493 இடம்பார்த்துப் பிடியை விடாது செய்யின் பகைவர் தம்சூழ்ச்சியைக் கைவிடுவர். 494 தண்ணீரில் முதலை எதனையும் வெல்லும்; தரையில் முதலையை எதுவும் வெல்லும். 495 நல்ல பெரியவண்டியும் கடலில் ஓடாது; நீரோடும் கப்பலும் நிலத்தில் ஓடாது. 496 முழுதும் எண்ணி இடமறிந்து செய்யின் துணிச்சல் தவிரப் பிறதுணை வேண்டாம். 497 படை குறைந்தவனுக்கு ஏற்ற இடம் சென்றால் படைநிறைந்தவன் உள்ளம் சோர்வடைவான். 498 நல்லரணும் சிறப்பும் இல்லை யெனினும் எதிரியை வாழுமிடத்தில் தாக்க இயலாது. 499 வேல்வீரர்களைக் குத்தி எடுத்த யானையையும் சேற்று நிலத்தில் நரி கொன்று விடும். 500 51. தெரிந்து தெளிதல் அறம்பொருள் இன்பம் உயிர்க்கு அஞ்சுதல் இவ்வகையால் ஒருவனை ஆராய்ந்து தெளிக. 501 நற்குடியிற் பிறந்து குற்றம் இல்லாமல் பழிக்கு நாணுபவனே நம்பத் தக்கவன். 502 சிறந்தவை கற்றுத் தெளிந்தவர் இடத்தும் பார்த்தால் ஓரளவு அறியாமை இருக்கும். 503 ஒருவர் குணங்களையும் குற்றங்களையும் பார்த்து அவற்றுள் மிகுதியைக் கொண்டு தெளிக. 504 இவர் பெரியவர் இவர் சிறியவர் என்றுஅறிய அவரவர் செயலே உரைகல்லாகும். 505 மிக வறியவரை நம்பாதே; ஏன்? அவர் எப்பிடிப்பும் இல்லார்; பழிக்கும் அஞ்சார். 506 அன்பு காரணமாக அறிவிலாதவரை நம்புதல் எல்லா மடமையும் தரும். 507 ஆராயாது எவனோ ஒருவனை நம்பினால் வழிவழித் தீராத துன்பம் வரும். 508 ஆராயாது யாரையும் எளிதில் நம்பாதே; ஆய்ந்த பின்னும் நம்பும் பொருளை நம்புக. 509 ஆராயாது நம்புதலும் பெருந்துன்பமே; நம்பியவனை ஐயப்படுதலும் பெருந்துன்பமே. 510 52. தெரிந்து விளையாடல் ஒரு செயலின் நன்மையும் தீமையும் பார்த்து நலஞ்செய்வானை வேலைக்குக் கொள்க. 511 வருவாய் பெருக்கி வளஞ் செய்து மேலும் ஆராய்பவனே காரியம் செய்யத் தக்கவன். 512 அன்பு அறிவு தெளிவு ஆசையின்மை நான்கும் உடையவனே நம்பத் தக்கவன். 513 எவ்வாறு தெளிந்தாலும் காரியத்தின் போது வேறாக நடப்பவரே மிகப் பலர். 514 ஒருவினையை அறிந்து முடிப்பவனிடமே ஏவுக; பெயர் பெற்றவன் என்பதற்காக ஏவற்க. 515 செய்பவன் தன்மையையும் செய்யும் செயலையும் ஏற்ற காலத்தையும் உணர்ந்து செய்க. 516 இச்செயலை இம்முறையால் இவன் முடிப்பான் என்று தெளிந்து வினையை ஒப்படைக்க. 517 வினைக்குத் தக்கவன் என்று தெளிந்தபின்பு அவனை முழுப் பொறுப்பு உடையவன் ஆக்குக. 518 காரியத்தில் கருத்தாக இருப்பவன் பண்பைத் தவறாக நினைத்தால் செல்வம் தவறும். 519 அரசன் நாள்தோறும் அலுவலரை ஆராய்க; அவர் பிசகாவிடின் நாடு பிசகாது. 520 53. சுற்றந் தழால் பற்றில்லாத போதும் பழைய உறவைப் போற்றுதல் சுற்றத்தாரிடமே உண்டு. 521 அன்பு குறையாத சுற்றம் இருப்பின் வளர்ச்சி குறையாத முன்னேற்றம் வரும். 522 கலந்து பழகாதவன் வாழ்க்கை பெருகாது; குளம் கரையின்றி நீர் நிரம்புமா? 523 சுற்றத்தார் சுற்றி இருக்குமாறு உதவுவதே செல்வம் பெற்றால் பெறவேண்டும் பயன். 524 கொடுத்தல் இன்சொல் இரண்டும் இருந்தால் சுற்றப்படை சூழ்ந்து விடும். 525 கொடுப்பான் கடுகடுக்க மாட்டான் என்றால் அவன்போல் சுற்றமுடையார் உலகத்தில்லை. 526 காக்கை தன் சுற்றத்தை அழைத்து உண்ணும்; அப்பண்பினர்க்கே முன்னேற்றம் உண்டு. 527 அரசன் பொதுமையின்றிச் சிறப்பாக நோக்கின் அதனால் வாழும் சுற்றத்தார் பலர். 528 கிளையாகிப் பிரிந்தவரும் அவர் உறவினரும் வெறுப்பு நீங்கியபின் விரும்பிவந்து கூடுவர். 529 இருந்து பிரிந்து ஒருநோக்கத்தோடு வந்தவனை அரசன் பொறுத்துப்பார்த்து ஏற்றுக் கொள்க. 530 54. பொச்சாவாமை (மறவாமை) பெரிய மகிழ்ச்சிக்கிடையே காரியத்தை மறத்தல் மிகுந்த சினத்தைக் காட்டிலும் தீது. 531 நாளும் வறுமை அறிவை அழிக்கும்; நாளும் மறதி புகழை அழிக்கும். 532 மறதி உடையார்க்குப் புகழ்வாழ்வு இல்லை; இது எல்லா ஆசிரியர்க்கும் முடிந்த முடிவு. 533 மறதிவாய்ப் பட்டார்க்கு எந்நலமும் இல்லை; அஞ்சிக் கிடப்பார்க்கு அரண் உண்டோ? 534 நினைவோடு முன்னே தடுக்காது மறந்தவன் தன்பிழைக்குப் பின்னே வருந்தி இரங்குவான். 535 மறவாத தன்மையைத் தவறாது பெற்றால் அதுபோன்ற ஆற்றல் வேறில்லை. 536 மறவாத கருவிகொண்டு விழிப்போடு செய்தால் முடியாத காரியம் என்பது யாதும் இல்லை. 537 புகழ்தரும் வினைகளை மதித்துச் செய்க; செய்யாது விட்டவர்க்கு என்றும் வாழ்வில்லை. 538 நீ மகிழ்ச்சியிலே திளைத்திருக்கும் போது அங்ஙனம் இருந்து கெட்டாரை எண்ணிப்பார். 539 எண்ணியதை மறவாதே எண்ண முடிந்தால் எண்ணியதை எளிதில் எய்திவிடலாம். 540 55. செங்கோன்மை (நல்லாட்சி) கேட்டு ஒருபக்கம் சாயாது தண்டித்து யாரையும் ஆராய்ந்து செய்வதே நீதி. 541 உயிரெல்லாம் மழையை எதிர்பார்த்து வாழும்; குடியெல்லாம் நல்லாட்சியை நோக்கி வாழும். 542 அருளாளர்தம் நூலுக்கும் அறத்துக்கும் அடிப்படை அரசனது ஆட்சியே. 543 குடிகளை அணைத்து ஆளும் பெருவேந்தனது அடிகளைப் பற்றி உலகம் நிற்கும். 544 முறையாக அரசாளும் மன்னவன் நாட்டில் மழையும் விளைச்சலும் இரண்டும் இருக்கும். 545 அரசனுக்கு வெற்றி தருவது வேலில்லை; அவனது நேரான செங்கோல் ஆட்சியே. 546 நாட்டை யெல்லாம் அரசன் காப்பான்; குறையற்ற நீதி அவனைக் காக்கும். 547 இரக்கமாகப் பார்த்து முறைவழங்கா அரசன் தன்குற்றத்தால் தானே கெடுவான். 548 நற்குடியைக் காத்து தீயகுடியைத் தண்டித்தல் பழியில்லை; வேந்தனது கடமை. 549 கொடியவர்க்கு அரசு கொலைத்தண்டனை செய்தல் பயிர்வளரக் களைபறிப்பது போலும். 550 56. கொடுங்கோன்மை குடிகளை வருத்தித் தீமை புரியும் வேந்தன் கொலையாளியினும் கொடியவன். 551 கோலுடைய அரசன் குடிகளிடம் பொருள்கேட்டல் வேலுடைய திருடன் கெஞ்சுவதை ஒக்கும். 552 நாள்தோறும் ஆராய்ந்து ஆளாத அரசனது நாடு நாளும் கெட்டுக்கொண்டு போகும். 553 நீதிதவறி ஆராயாது செய்யும் அரசன் பொருளும் குடியும் ஒரு சேர இழப்பான். 554 கொடுமை தாங்காது குடிகள் அழுத கண்ணீர் அரசை அடியோடு அழிக்கும் படையாகும். 555 மன்னனுக்கு நிலை நல்லாட்சியால் உண்டாகும்; அது இன்றேல் அவன் அதிகாரம் நிலையாது. 556 மழையின்றேல் உலகம் என்னாகும்? அரசனது அன்பின்றேல் குடிகள் வாழுமா? 557 நீதியில்லா மன்னனது ஆட்சிக்கு உட்படின் பொளின்மையினும் உடைமை கேடுதரும். 558 மன்னவன் நீதிமுறையோடு ஆளாவிட்டால் மழை பருவமுறையோடு பெய்யாது போம். 559 காத்தற்கு உரிய அரசன் காவாவிடின் பசு பயன்தாராது; எத்தொழில்களும் இரா. 560 57. வெருவந்த செய்யாமை தக்கபடி ஆய்ந்து மேலும் குற்றம் செய்யாவாறு பொருந்தத் தண்டிப்பவனே வேந்தன். 561 நெடுநாள் ஆக்கம் நிலைக்க விரும்புபவர் வன்மையாக ஓங்கி மெல்ல அடிப்பாராக. 562 குடிகளை மிரட்டும் கொடிய வேந்தன் கட்டாயம் விரைந்து அழிவான். 563 அரசன் கடுமையன் என்று குடிகள் கூறின் இடஞ்சுருங்கி விரைந்து அழிவான். 564 பார்க்க அருமையும் முகங்கடுமையும் உடையவன் பெருஞ்செல்வம் பேய்காத்தது போலும். 565 கண்ணிலும் சொல்லிலும் கடுமையன் ஆயின் அவன் நெடுஞ்செல்வம் நாளாகாமல் கெடும். 566 கடுஞ்சொல்லும் அளவுகடந்த தண்டனையும் அரசனது படைவலியை அறுக்கும் அரம். 567 அரசன் அமைச்சரைக் கலந்து செய்யாது சினங்கொண்டு செய்யின் செல்வம் சுருங்கும். 568 போர்க்காலத்துத் தீயகுடியைச் சிறையிடாத அரசன் கலங்கி வெதும்பி அழிவான். 569 கடும்ஆட்சி அரசியல் கல்லாதவரையே கவரும்; நாட்டுக்குப் பாரம் அவ்வாட்சியே, பிறிதில்லை. 570 58. கண்ணோட்டம் (இரக்கம்) இரக்கம் என்னும் அழகிய பெரும்பண்பு இருத்தலால் இவ்வுலகம் இருக்கின்றது. 571 உலகியல் என்பது இரக்கப்பண்பில் உள்ளது; இரக்கமிலார் இருப்பது பூமிக்குப் பாரம். 572 பாட்டுக்குப் பொருந்தாத இசையாற் பயனென்? இரக்கம் காட்டாத கண்ணால் என்ன பயன்? 573 வேண்டும் அளவு இரக்கம் ஓடாத கண் முகத்தில் இருப்பதுபோல் காட்டுவது எதற்கு? 574 கண்ணிற்கு நகையாவது இரக்க உணர்வே; இரக்கமிலாக் கண்ணைப் புணணென்று கொள்க. 575 கண்ணோ டிருந்தும் இரக்கம் இல்லாதவர் மண்ணோ டிருந்தும் வளராத மரம் போல்வர். 576 இரக்கம் இல்லாதவர் கண்ணில்லாதவர் கண்ணுடையவர் இரக்கம் உடையவர். 577 காரியம் கெடாமல் இரக்கம் காட்டுவார்க்கு வயப்பட்டது இவ்வுலகம். 578 தண்டிக்கும் ஆற்றல் இருப்பினும் மனமிரங்கிப் பொறுத்துக் கொள்ளும் பண்பே சிறந்தது. 579 யாவரும் விரும்பும் நாகரிகம் உடையவர் நேரே நஞ்சிடினும் உண்டு அடங்குவர். 580 59. ஓற்றாடல் (உளவு) உளவும் புகழ்பெற்ற நீதிநூலும் இரண்டும் மன்னவனுக்குக் கண்கள் என்று தெளிக. 581 யாரிடத்தும் எதனையும் என்றும் உளவால் விரைந்து அறிதல் வேந்தன் கடமை. 582 உளவால் செய்தி அறிந்துகொள்ளாத அரசன் கொள்ளும் வெற்றி எதுவும் இல்லை. 583 வினையாளர் சுற்றத்தார் பகைவர் என்ற எத்திறத்தாரையும் ஆராய்வது உளவு. 584 ஐயப்படாத வடிவோடு அஞ்சாது பார்த்து எவ்விடத்தும் வெளியிடாதவனே ஒற்றன். 585 துறவு வேடங்கொண்டு எவ்விடமும் புகுந்து என்ன நேரினும் வாய்விடாதவனே ஒற்றன். 586 மறைவான செய்திகளை ஒட்டுக் கேட்டு அறிந்தவற்றில் தெளிவுடையவனே ஒற்றன். 587 ஓர் உளவாளி கொண்டு வந்த செய்தியையும் பின்னும் ஓர் உளவாளியால் தெளிக. 588 உளவாளிகளைத் தம்முள் தெரியாவாறு ஆள்க; மூவர்க்கும் ஒத்த செய்தி நம்பத்தகும். 589 பலரறிய ஒற்றனுக்குச் சிறப்புச் செய்யாதே; செய்யின் மறைவு வெளிப்படுத்தியதாகும். 590 60. ஊக்கம் உடையாமை ஊக்கமே சொத்தாகும்; அது இல்லாதவர் பிற இருப்பினும் சொத்துடையர் ஆகார். 591 ஊக்கச் சொத்தே சொத்து; பொருட்சொத்து நில்லாது போய்விடும். 592 ஊக்கத்தைத் திண்ணமாகக் கையில் கொண்டவர் செல்வம் போயிற்றென்று வருந்தார். 593 சோர்வில்லா ஊக்கம் உடையவனது வீட்டுவழி கேட்டுச் செல்வம் சேரும். 594 மலரின் நீளம் நீரின் அளவு; மாந்தர்தம் வாழ்வின் உயர்ச்சி ஊக்கத்தின் அளவு. 595 நினைப்பதெல்லாம் உயர்வையே நினைக்க; உயர்வு வாராவிடினும் அந்நினைவை விடாதே. 596 உறுதியாளர் அழிவிலும் ஊக்கம் தளரார்; அம்புகள் தைத்தாலும் யானை வலிபொறுக்கும். 597 உலகத்தில் பெருஞ்செல்வன்என்னும் சிறப்பை ஊக்கம் இல்லாதவர் அடையார். 598 பருமனும் கூரிய கொம்பும் இருந்தும் புலி தாக்கினால் யானையும் அஞ்சுமே. 599 ஊக்க மிகுதியே வலிமை; அது இல்லாதவர் நிலையால் மரம்: வடிவால் மானிடர். 600 61. மடியின்மை குடும்பம் என்னும் அணையாத விளக்கு சோம்பல் என்னும் இருளால்அணைந்து விடும். 601 குடும்பம் சிறந்த குடும்பமாக விரும்புவர் சோம்பலை அழித்து முயற்சியாக நடக்க. 602 சோம்பலை மடியிற் கொண்டிருக்கும் மடவன் பிறந்தகுடி அவனுக்குமுன் விரைந்தழியும். 603 சோம்பலிற் பட்டுச் சுறுசுறுப்பு இல்லாதவர்க்குக் குடும்பமும் அறிழயும் குற்றமும் பெருகும். 604 காலத்தாழ்வு மறதி சோம்பல் உறக்கம் இவை கெடுவார் ஆசைப்படும் நகைகள். 605 நாடு ஆள்பவரின் நல்லுறவு இருப்பினும் சோம்பேறி பெரும்பயன் அடையான். 606 சோம்பலில் ஆழ்ந்து நல்லுழைப்பை விட்டவர் பலரால் இடிபட்டு இகழப்படுவார். 607 குடும்பத்தில் சோம்பல் குடிபுகுந்து விட்டால் பகைவர்க்கு அடிமையாகி விடுவோம். 608 குடும்பம் நடத்துகையில் வந்த குறைபாடுகள் சோம்பலை ஒழிக்கவே நீங்கிப்போம். 609 திருமால் தாண்டிய உலகம் முழுதும் சோம்பல் இல்லா மன்னவன் அடைவான். 610 62. ஆள்வினையுடைமை (முயற்சி) அரிய காரியம் என்று மலைக்க வேண்டாம்; முயற்சி எல்லாப் பெருமையும் தரும். 611 எடுத்த வினையை அரைகுறையின்றிச் செய்க; கடமையை விட்டாரை உலகம் விட்டு விடும். 612 பிறர்க்கு உதவும் பெருமிக எண்ணம் உழைக்கின்ற பெரும்பண்பால் உண்டாகும். 613 உழைப்பில்லா தவன் யார்க்கும் உதவ முடியுமா? பேடிபகைவர்முன் வாள் வீசமுடியுமா? 614 இன்பம் நாடாது காரிய முடிவை நாடுபவன் சுற்றத்தின் துன்பம் தாங்கும் தூணாவான். 615 உழைப்பு செல்வ நிலையை உண்டாக்கும்; உழையாமை வறுமையைத் தந்துவிடும். 616 சோம்பேறியின் மடியில் இருப்பாள் மூதேவி; உழைப்பவன் அடியில் இருப்பாள் சீதேவி. 617 உடல் ஊனம் யார்க்கும் பழியில்லை; அறிவை வளர்த்து முயலாமையே பழி. 618 தெய்வத்தால் ஒரு செயல் முடியாது போகினும் முயன்றால் அதற்குரிய கூலி உண்டு. 619 சோர்வின்றிக் காலம் தாழ்க்காது உழைப்பவர் மாறான விதியும் ஓடக் காண்பர். 620 63. இடுக்கண் அழியாமை துன்பம் வரும்போது கேலிசெய்க; அதுவே துன்பத்தைக் கடக்க வழி. 621 வெள்ளம் போன்ற நெருக்கடியும் அறிஞன் ஊக்கத்தினால் நினைக்கவே ஓடிப்போம். 622 துன்பங் கண்டு துன்பப் படாதவர் துன்பத்தைத் துன்பப் படுத்துவர். 623 கடினப்பாதை செல்லும் காளைபோன்றவனுக்கு வந்த துன்பமன்றோ துன்பப்படும்! 624 அடுக்கடுக்காக வரினும் அசையாதவனுக்கு வந்த துயரமன்றோ துயரப்படும்! 625 செல்வம் வந்தபோது பற்றற்று இருப்பவர் போனபோது துயரப் படுவரோ? 626 இவ்வுடம்பு நோய்களுக்கு இலக்கு என்று இயல்பறிந்த மேலோர் கலக்கம் கொள்ளார். 627 இன்பத்தை விரும்பாது இடையூற்றை இயல்பு என்று கருதுபவன் வருத்தம் அடையான். 628 மகிழ்ச்சியில் மகிழ்ச்சி அடையாதவன் கவலையில் கவலை அடையான். 629 துன்பத்தை இன்பமாகக் கருதுபவனுக்கு எதிரியின் மதிப்பும் கிடைக்கும். 630 64. அமைச்சு கருவிகாலம் செய்யுந் தன்மை காரியம் இவற்றில் நன்கு சிறந்தவனே அமைச்சன். 631 துணிவு குடிபேணல் கல்வி அறிவு முயற்சி இவ்வைந்திலும் சிறந்தவனே அமைச்சன். 632 பகைவரைப் பிரித்தல் நண்பரை அணைத்தல் பிரிந்தவரைக் கூட்டல் வல்லவன் அமைச்சன். 633 ஆராய்தல் தெளிந்து செய்தல் உறுதியாகச் சொல்லுதல் வல்லவனேஅமைச்சன். 634 அறமும் அமைந்த சொல்லும் திறமும் உடையவனே தெளிவுக்குத் துணையாவான். 635 கூரிய அறிவும் நூலறிவும் உடையவர்க்குத் தீர்க்க முடியாத சிக்கல்கள் உளவோ? 636 நூல்சொல்லும் முறைகளை அறிந்திருந்தாலும் உலக நடைமுறைகளை அறிந்து செய்க. 637 சொன்னாலும் தன்னாலும் அறியான் எனினும் அரசனுக்கு உறுதிகூறல் அமைச்சன் கடன். 638 கேடுசூழும் ஒரு மந்திரியினும் அருகே எழுபது கோடி பகைவர் நல்லவர். 639 முறையாக எண்ணினும் முடியாதபடி செய்வர் செய்யும் திறமை இல்லாதவர். 640 65. சொல்வன்மை நாவன்மை ஒருவர்க்கு நல்ல சொத்து; அது எல்லா நன்மையினும் சிறந்தது. 641 சொல்லால் ஆக்கமும் வரும், கேடும் வரும். ஆதலின் சொல்லை விழிப்போடு சொல்லுக. 642 கேட்டாரைக் கவர்ந்து கேளாதவரையும் கேட்கத் தூண்டுவதே சொல்வன்மை. 643 சொல்லின் ஆற்றலை அறிந்து சொல்லுக; அதுவே அறமாம்; பொருளாம். 644 வேறு சொல்லும் சொல்லலாம் என இடமின்றி முதலிலேயே பலிக்கும் சொல்லைச் சொல்லுக. 645 கேட்குமாறு சொல்லல் பிறர்சொல்லக் கேட்டல் இவை நல்லறிஞரின் கொள்கை. 646 சொல்வன்மை சோர்வின்மை அச்சமின்மை உடையவனை யாரும் வெல்ல முடியாது. 647 முறையாக இனிது சொல்லுவோமாயின் நம் சொற்படி உலகம் விரைந்து நடக்கும். 648 நல்லவற்றைச் சுருக்கமாகச் சொல்லத் தெரியாதவரே பலபடப் பேச ஆசைப்படுவர். 649 கற்றதை எடுத்துச் சொல்ல முடியாதவர் மணமில்லாத கொத்துமலர் போன்றவர். 650 66. வினைத்தூய்மை நல்ல துணை முன்னேற்றத்தைத் தரும்; நல்ல செயல் வேண்டியன எல்லாம் தரும். 651 புகழும் நன்மையும் தராத காரியத்தை என்றும் ஒழித்துவிட வேண்டும். 652 முன்னேற வேண்டும் என்பவர் மதிப்புக் குறையும் காரியங்களைக் கொள்ளாது விடுக. 653 அதிராத அறிஞர் நெருக்கடிபட்டாலும் இழிந்த செயல்களைச் செய்யார். 654 என்செய்தேன் என்று பின்வருந்தும் செயலைச் செய்யாதே; செய்தால் திரும்பவும் செய்யாதே. 655 பெரியவர் பழிக்கும் தீய வினைகளை நின்தாய் பசித்துக் கிடந்தாலும் செய்யாதே. 656 நல்லவர் பழிசூடி எய்தும் செல்வத்தினும் அவர்தம் வறுமையே பெருமையுடையது. 657 விலக்கியவற்றை விலக்காது செய்தவர்க்குக் காரியம் முடிந்தாலும் துன்பம் உண்டாகும். 658 பிறர் அழக்கொண்டவை நாம் அழப்போகும்; நல்லவை முன்தொலையினும் பின் பயன்தரும். 659 ஏமாற்றிக் கொண்ட பொருள் நிலைக்காது; சுடாத மண்பானையில் நீர் தங்குமா? 660 67. வினைத்திட்பம் வினையுறுதி என்பது நம் நெஞ்சுறுதி; மற்றையவை உறுதியாகா. 661 வருமுன் காத்தல், வந்தால் தளராமை இவ்விரண்டே அறிஞர் கண்ட வழிகள் 662 முடிந்தபின் வெளியாம்படி செய்வதே திறமை; இடையே வெளிப்படின் பெருந்துன்பம் வரும். 663 அழகாகச் சொல்லுதல் யார்க்கும் முடியும்; சொன்னபடி செய்தலே முடியாது. 664 பெருமிதம் மிக்கவரின் வினைத்திறத்தை வேந்தன் கேள்விப்பட்டு மதிப்பான். 665 எண்ணியவற்றை எண்ணியபடியே எய்தலாம் எண்ணியவர் உறுதியாக எண்ணினால். 666 ஆளின் தோற்றம் பார்த்து இகழவேண்டாம்; ஓடும் வண்டி பெரிது; அச்சாணி சிறிது. 667 கலங்காது கண்ட காரியத்தைத் தளராது காலம் தாழ்த்தாது செய்க. 668 துன்பம் மேன்மேலும் வந்தாலும் துணிவோடு இன்பந்தரும் காரியத்தைச் செய்க. 669 என்ன உறுதியிருந்தாலும் எடுத்துக் கொண்ட வினையில் உறுதியிலாரை உலகம் விட்டுவிடும். 670 68. வினைசெயல் வகை ஆராய்ந்து ஒரு துணிவுக்கு வரவேண்டும்; அத்துணிவைச் செய்யாது தாழ்த்தல் தீதாகும். 671 தாழ்த்துச் செய்யும் வினையைத் தாழ்ததுச்செய்க; உடனே செய்ய வேண்டியதைக் கடத்தாதே. 672 முடிந்தவரை தூதால் முடித்துக்கொள்ளல் நன்று; முடியாக்கால் பலிக்குமுறை பார்த்துச் செய்க. 673 காரியக்குறை பகைக்குறை என்ற இரண்டும் நெருப்புக்குறை போல வளர்ந்து அழிக்கும். 674 பொருள் கருவி காலம் செயல் இடம் என்ற ஐந்தினையும் மயக்கமற ஆராய்ந்து செய்க. 675 முடிவும் இடையூறுகளும் முடிந்த பின்னர் வரும் பயனும் பார்த்துச் செய்க. 676 ஒருசெயலைச் செய்பவன் செய்யும்முறை அதனை நன்கறிந்தவனது உறுதியைப் பெறுதல். 677 யானையைக் கொண்டு யானை பிடிப்பது போல ஒரு செயலால் இன்னொன்றையும் செய்துகொள். 678 நண்பர்க்கு நல்லன செய்தலைக் காட்டினும் விரைவாகப் பகைவரை அணைத்தல் வேண்டும். 679 சிற்றரசர் குடிமக்கள் நடுங்குவது கண்டு தூதுவரின் பேரரசரைப் பணிந்து கொள்வர். 680 69. தூது அன்பும் குடிப்பிறப்பும் அரசர்கள் விரும்பும் பண்பும் தூதுவனுக்கு உரிய தகுதிகள். 681 அன்பு அறிவு தெளிந்த பேச்சுவன்மை மூன்றும் தூதுவனுக்கு இன்றியமையாதவை. 682 பகைவர்முன் வெற்றித் தூது சொல்பவன் கற்றவருள் கற்றவனாக விளங்க வேண்டும். 683 அறிவு தோற்றம் தெளிந்த கல்வி இவற்றில் நிறைந்தவன் தூது செல்வானாக. 684 விடாது சொல்லி விடுவனவற்றை விட்டுச் சிரிக்கப்பேசி நலம் செய்பவனே தூதன். 685 கற்று அஞ்சாது எடுத்துச் சொல்லிச் சமயத்துக்கு ஏற்றது அறிந்தவனே தூதன். 686 கடமை காலம் இடம் இவற்றைப்பார்த்துச் சிந்தித்து உரைப்பவனே சிறந்த தூதன். 687 தூய்மை துணை துணிவு இம் மூன்றும் நன்கு வாய்த்தல் தூதுவன் தகுதியாம். 688 பழிச் செய்தியை வாய்விடா உறுதியாளனே பகைவர்முன்சென்று செய்திகூறத் தக்கவன். 689 தனக்குச் சாவு வரினும் தன் அரசனுக்குக் குறையாத நலம் செய்பவனே தூதன். 690 70. மன்னரைச் சேர்ந்ததொழுகல் மன்னரொடு பழகுபவர் குளிர்காய்வார் போல் மிக நீங்காமலும் மிக நெருங்காமலும் பழகுக. 691 அரசர் விரும்புவனவற்றை விரும்பாவிடின் அவரால் நிலையான முன்னேற்றம் கிடைக்கும். 692 பெருங்குற்றம் வாராதபடி காத்துக் கொள்க; அரசர் ஐயப்படின் தெளிவித்தல் முடியாது. 693 காதோடு ஓதுதலையும் பார்த்துச் சிரித்தலையும் பெரியவர்முன் வைத்துக் கொள்ளாதே. 694 எந்தச் செய்தியையும் ஒட்டுக் கேளாதே; சொல்லும்படி கேளாதே; சொன்னாற் கேள். 695 மன்னனின் குறிப்பறிந்து காலம் பார்த்து வேண்டியவற்றை விரும்புமாறு சொல்லுக. 696 வேண்டியதைக் கேளாவிடினும் சொல்லுக; வேண்டாததைக் கேட்டாலும் சொல்லற்க. 697 இளையவன் உறவினன் என அவமதியாமல் அரசனது அதிகாரத்தை மதித்து ஒழுகுக. 698 மதிக்கப்பட்டேன் என்று மதியாதன செய்யார் பிறழாத அறிவினை யுடையவர். 699 பழக்கம் என்று பண்பில்லாதபடி நடந்தால் அந்த நட்புரிமை கேடு விளைக்கும். 700 71. குறிப்பறிதல் கூறாமலே முகம்பார்த்துக் குறிப்பு அறிபவன் உலகத்துக்கு என்றும் ஓர் அணியாவான். 701 தெளிவாக உள்ளோட்டத்தை உணர்பவனைத் தெய்வத்துக்கு நிகராக மதிக்க. 702 முகச்சாடையினால் உள்ளத்தை உணர்பவரை எது கொடுத்தும் அவையில் அமர்த்திக்கொள்க. 703 குறிப்பைக் கூறாமலே அறிய வல்லவர்க்கும் அறியாதவர்க்கும் உடம்பளவில் ஒற்றுமை. 704 முகங்கண்டு உள்ளம் காணவில்லை யாயின் கண் என்ற உறுப்பின் பயன் என்ன? 705 முன்னுள்ள பொருளைக் கண்ணாடி காட்டும்; உள் மிக்க உணர்ச்சியை முகம் காட்டும். 706 மகிழ்வையும் வெறுப்பையும் முகம் முந்திக் காட்டும்; முகம்போல் அறியுந்திறம் பிறிதிற்கு இல்லை. 707 நிகழ்வதை உள்ளத்தால் உணர்வார்க்கு முன்னே முகம் பார்த்து நின்றால் போதுமே. 708 பகையா நட்பா என்பதைக் கண் சொல்லும்; கண்ணின் கூறு தெரிந்தவர்கட்கு. 709 கூரிய அறிவுடையோம் என்பவர்க்கு அளவுகோலாவது பிறர்கண்ணே, வேறில்லை. 710 72. அவையறிதல் சொற்பொழிவின் விளைவை அறிந்த நல்லவர் கூட்டத்தின் நிலையறிந்து ஆராய்ந்து பேசுக. 711 சொல்லின் நடையறிந்தவர் இடையிடையே கூட்டத்தின் போக்கை விளங்கிச் சொல்லுக. 712 கூட்டம் அறியாது பேச முற்படுபவர் பேச்சு வகையறியார் வல்லமையும் இல்லார். 713 அறிவுக் குழுவில் நல்லறிஞனாய் விளங்குக; பேதைக் குழுவில் வெள்ளைபோல் நடக்க. 714 அறிஞர் குழுவில் முந்திக்கொண்டு எதனையும் சொல்லாத அடக்கம் மிகநல்ல குணம். 715 நிரம்பக் கற்றார் முன்னே குற்றப்படுதல் வழியிடை வழுக்கி விழுந்தது போலும். 716 தெளிவாகச் சொற்பொருள் அறிவார் அவையில் கற்றவர்தம் கல்வி மேம்பாடு அடையும். 717 உணரும் தன்மை உடையார்முன் கூறுவது வளரும் பாத்தியில் நீர் பாய்ச்சியது போலும். 718 நற்கூட்டத்தில் நன்கு பேச வல்லவர் இழிகூட்டத்தில் மறந்தும் போய்ப் பேசற்க. 719 தன்னிலைக்குத் தகாதவர் கூட்டத்தில் பேசுவது சாக்கடையிற் கொட்டிய அமிழ்தம் போலும். 720 73. அவையஞ்சாமை சொற்பொழிவை அறிந்தவர் பாகுபாடு தெரிந்து இன்னாதவற்றைத் தவறியும் சொல்லார். 721 கற்றவருள் கற்றார் எனப்படுவார் யார்? கற்றவர்முன் எடுத்துச்சொல்ல வல்லவரே. 722 போரில் சாக அஞ்சாதவர் மிகப்பலர்; அவையில் பேச அஞ்சாதவரோ மிகச்சிலர். 723 கற்றவர்முன் கற்றதை எடுத்துச் சொல்லுக; மிகக் கற்றவரிடம் மிகுதியைத் தெரிந்துகொள்க. 724 அவைக்கண் அஞ்சாது மறுமொழி சொல்ல முறையாகத் தருக நூல் அறிந்து கற்க. 725 வீரர் அல்லார்க்கு வாளோடு என்ன உறவு? மேடை அஞ்சுவார்க்கு நூலோடு என்ன உறவு? 726 மேடையில் அஞ்சுபவன் கற்ற நூற்படிப்பு போரில் பேடி பிடித்த கூரியவாள் போலும். 727 நல்லவையில் எடுத்துச் சொல்ல இயலாதவர் பல படித்தும் பயனில்லை. 728 படித்தறிந்தும் நல்லவையில் பேச அஞ்சுபவர் படியாதவரினும் கீழ் என்பார்கள். 729 மேடைக்கு அஞ்சிச் சொல்ல மாட்டாதவர் வாழ்ந்தாலும் மாண்டவருக்கு ஒப்பாவர். 730 74. நாடு குறையாத விளைச்சலும் நடுநிலைமை யாளரும் சோர்விலாத வணிகரும் உடையது நாடு. 731 பொருட் பெருக்கத்தால் விரும்பத் தக்கதும் கேடின்றி மிக விளைவதும் நாடு 732 வரும் சுமையெல்லாம் தாங்கி அரசனுக்கு வரியெல்லாம் கொடுப்பதுவே நாடு. 733 தீராப்பசியும் தீராநோயும் தீராப்பகையும் இல்லாது நடப்பதுவே நாடு. 734 பலகட்சி, உட்பகை, அரசினை ஆட்டும் காலிக் கூட்டம் இல்லாததே நாடு. 735 கேடறியாது கெட்டாலும் வளங்குறையாது என்ற நாடே தலையான நாடு. 736 அகழியும் வாய்ப்பான மலையும் அருவியும் வன்மதிலும் நாட்டின் உறுப்புக்கள். 737 நோயின்மை செல்வம் விளைச்சல் இன்பம் காவல் ஐந்தும் நாட்டிற்கு அணி என்பர். 738 தன்னிறைவுடைய வளநாடே உரிமை நாடு; பிறநாட்டை எதிர்நோக்கும் நாடு நாடன்று. 739 மேலைச் சிறப்பெல்லாம் இருந்தும் பயனில்லை; நல்லாட்சி இல்லாத நாடு. 740 75. அரண் போர்மேற் செல்வார்க்கும் மதில்வேண்டும்; அஞ்சித் தற்காப்பவர்க்கும் அது வேண்டும். 741 அகழியும் வெட்டவெளியும் மலையும் செறிந்த காடும் சேர்ந்தது அரணாகும். 742 உயரம் அகலம் உறுதி அருமை நான்கும் அமைந்ததே அரண் என்று நூல் கூறும் 743 காக்கும் அளவு சிறிதாய் இடம்பெரிதாய்ப் பகைவரின் எழுச்சியை மழுக்குவதே அரன். 744 பிடிப்பதற்கு அரியதாய் உணவு நிறைந்ததாய் உள்ளிருப்பவர் செயலுக்கு எளியதே அரண். 745 எல்லாப் பொருளும், இடத்துக்குக் கொண்டுபோய் உதவும் நல்லாளும் உடையதே அரண். 746 வளைந்தோ, திடீரெனத்தாக்கியோ, வஞ்சித்தோ பிடிக்க முடியாதது அரண். 747 வலுவாகச் சூழ்ந்து வளைத்தவரையும் நிலைதளராது நின்று வெல்வதே அரண். 748 போர்முனையில் பகைவர் ஓடுமாறு போர்வினையில் பெருமிதச் சிறப்புடையதே அரண். 749 அரண் எவ்வாற்றல் உடையதாக இருந்தாலும் போராற்றல் இல்லாதார்க்குப் பயன் இல்லை. 750 76. பொருள் செயல்வகை மதிப்பு இல்லாதவரையும் மதிப்பு உடையராகச் செய்யும் செல்வமே சிறந்த செல்வம். 751 செல்வம் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர்; உடையவரை எல்லாரும் சிறப்புச் செய்வர். 752 செல்வம் என்னும் அழியாத ஒளி எவ்விடமும் சென்று இருளை ஓட்டும். 753 நெறியோடு குற்றமின்றி ஈட்டிய பொருள் அறமும் தரும்; இன்பமும் தரும். 754 அருளும் அன்பும் பொருந்தாத செல்வத்தைத் தொடாது போகவிடுக. 755 வரியும் சுங்கமும் பகைவரின் திறையும் அரசனுக்கு வருவாய்ப் பொருளாம். 756 அன்புத் தாய் பெற்ற அருட்குழந்தை செல்வத் தாதியால் வளரும். 757 கையிற் பொருள் வைத்துக் காரியம் செய்தல் மலையேறி யானைப்போரைப் பார்ப்பது போலாம். 758 ஈட்டுக பொருளை; எதிரியின் இறுமாப்பை அறுக்கும் கருவி அதுபோல் வேறில்லை. 759 சிறந்த பொருளைத் திரளாக ஈட்டியவர்க்கு அறமும் இன்பமும் எளிதிற் கிடைக்கும். 760 77. படைமாட்சி போருடல் பெற்றுப் புண்ணுக்கு அஞ்சாத வெற்றிப்படை வேந்தன் செல்வத்திற் சிறந்தது. 761 கெடுதலான இடத்து அஞ்சாத உறுதி தூரத்தில் பழம்படைக்கே உண்டு. 762 எலிக்கூட்டம் கடல்போல் கத்தினால் என்ன? ஒருபாம்பு சீறிய அளவில் ஓடிப்போமே. 763 அழியாதும் வஞ்சனைக்கு ஆளாகாதும் வழிவழி வீரமுடையதுவே படை.. 764 எமனே சினந்து வந்தாலும் ஒன்றுகூடி எதிர்க்கும் வீரமுடையதுவே படை. 765 வீரம் மானம் சிறந்தநடை தெளிவு என்ற நான்கும் படைப்புக்கு வேண்டியவை. 766 வந்த போரைத் தடுக்கும் முறையறிந்து முற்படையைச் செலுத்துவதே சேனையாம். 767 அழித்தலும் பொறுத்தலும் இல்லை எனினும் சேனை தோற்றத்தால் சிறப்பு அடையும். 768 இழிவும் நீங்காத மனக்கசப்பும் வறுமையும் இல்லை யென்றால் படைவெல்லும். 769 படையில் வீரர் பலர் இருந்தாலும் நல்ல தலைவர் இல்லையெனின் பயனில்லை. 770 78. படைச்செருக்கு எதிரிகளே! என் தலைவன்முன் நில்லாதீர்! அவன்முன் நின்று கல்லானவர் பலர். 771 காட்டு முயலைக் கொன்ற அம்பைக் காட்டினும் யானைக்குறி தவறியவேலை ஏந்தல் சிறப்பு. 772 பகைவரைக் கொல்லுதல் வீரம்; அவர்க்குத் துன்பம்வரின் உதவுதல் வீரத்தின் சிகரம். 773 கைவேலை யானைமேல் வீசிவரும் வீரன் நெஞ்சில் தைத்தவேலைப் பறித்துச் சிரிப்பான். 774 பார்த்தகண் பகைவேலுக்கு மூடி இமைப்பினும் வீரர் புறங்காட்டியதற்குச் சமமாம். 775 வீரப்புண் படாத நாட்களை யெல்லாம் குற்ற நாட்களாகக் கொள்வான் வீரன். 776 புகழை மதித்து உயிரை மதியாத வீரர் கட்டிய வீரக்கழலே கண்ணுக்கு அழகியது. 777 போர்வரின் உயிருக்கு அஞ்சாத வீரர் அரசன் அடக்கினும் வீரவுணர்ச்சி குறையார். 778 வஞ்சினம் தவறாமல் உயிர் கொடுத்தவரை வெற்றி தவறினார் என்று தண்டிப்பார் உண்டோ? 779 காத்தவர் கண்கலங்கும்படி சாகப் பெற்றால் அச்சாவு வேண்டியாயினும் பெறும் சிறப்பினது. 780 79. நட்பு நட்புப்போல் செய்தற்கு அரியதும் இல்லை; அதுபோல் காரியத்துக்குத் துணையும் வேறில்லை. 781 நல்லவர் நட்பு வளர்பிறை போன்றது; பேதையர் நட்புத் தேய்பிறை போன்றது. 782 பழகப் பழகப் பண்புடையவர் நட்பு படிக்கப் படிக்க நூலின்பம் போலும். 783 நட்புச் செய்தல் அரட்டை அடித்தற்கன்று; பிழை செய்யும்போது முன்வந்து இடித்தற்காம். 784 நட்புக்குப் பலநாட் பழக்கம் வேண்டாம்; ஒத்த மனப்பான்மையே உறவு தரும். 785 முகம் இனிக்கப் பழகுவது நட்பாகாது; மனம் இனிக்கப் பழகுவதே நட்பு. 786 தீமைகளை நீக்கி நல்வழிப் படுத்தித் துன்பத்தில் தொடர்பு கொள்வதே நட்பு. 787 உடைநெகிழின் உடனே உதவும் கைபோல நண்பன் துயரை முந்திக்களைவதே நட்பு. 788 நட்பின் உயிர்நிலையாது? வேறு படாமல் முடிந்தவரை நண்பனைத் தாங்கி நிற்றல். 789 இவர் இன்னார் யான் இன்னவன் என்று பிரித்துக் கூறினும் நட்பு பெருமை இழக்கும். 790 80. நட்பாராய்தல் ஆராயாது நட்பதுபோல் கேடில்லை; ஏன்? நட்புச் செய்தபின் என்றும் விடுதலை இல்லை. 791 பலமுறை ஆராய்ந்து கொள்ளாத நட்பு இறுதியில் சாகும் துயரத்தைத் தரும். 792 குணம் குடிப்பிறப்பு குற்றம் கூட்டாளி எல்லாம் அறிந்து நட்புக் கொள்க. 793 நற்குடியிற் பிறந்து பழிக்கு அஞ்சுபவனை எது கொடுத்தும் நட்புக் கொள்வாயாக. 794 அழும்படி சொல்லி இடித்துரைக்கும் ஆற்றல் உடையவர் நட்பை உணர்ந்து கொள்க. 795 கேடுகாலத்தும் ஒரு நன்மை உண்டு; அன்று நண்பர் யார் என்று அளந்து கொள்ளலாம். 796 ஒருவர்க்கு வருவாய் என்பது யாது? அறிவிலார் நட்பை அகற்றிக் கொள்ளுதல். 797 மனம் சுருங்கும் எண்ணங்களை எண்ணாதே; துன்பத்தில் கைவிடுவார் நட்பைக் கொள்ளாதே. 798 துன்பக் காலத்துக் கைவிட்டவர் நட்பினை ஈமத்தீயில் நினைப்பினும் நெஞ்சம் எரியும். 799 குற்றமிலார் நட்பைக் கொள்ளுக; எது கொடுத்தும் ஒவ்வாதார் நட்பை உதறித் தள்ளுக. 800 81. பழமை (நல்ல நட்பு) நல்ல நட்பு என்பது யாது? எவ்வகையாலும் உறவை முரித்துக் கொள்ளாத நட்பு. 801 நட்புக்கு இலக்கணம் உரிமையோடு செய்தல்; அச் செயலுக்கு மகிழ்தல் உயர்ந்தோர் கடமை. 802 உரிமையோடு செய்ததை உடன்படா விட்டால் பழகிய பழக்கத்தின் பயன் என்னவோ? 803 உரிமையோடு நண்பர் கேளாது செய்தால் அங்ஙனம் செய்வதை ஆவலோடு எதிர்பார்ப்பர். 804 வருந்தும் செயல்களை நண்பர் செய்தால் அறியாமையோடு உரிமையும் என உணர்க. 805 துன்பத்தும் நெடுநாள் நண்பர் தொடர்பினைப் பண்பில் உயர்ந்தவர் விட்டுவிடார். 806 அன்பு நெறியிலே பழகியவர் நண்பன் தீமை செய்தாலும் அன்பை விடார். 807 நண்பரின் பிழைக்குக் காதுகொடாதவர்க்கு நண்பர் பிழைசெய்யும் நாள் நன்னாளாகும். 808 கெடாமல் வந்த நட்பின் தொடர்பை விடாமல் போற்றுவாரை உலகம் விரும்பும். 809 பழகியவர்பால் பண்பு மாறாதவரைப் பகைவரும் விரும்புவர். 810 82. தீ நட்பு தீயவர் ஆர்வம் காட்டினாலும் அவர் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது. 811 கிடைக்குமானால் பழகி இல்லையானால் கைவிடும் தீயவர் நட்பு இருந்தாலென்? போனால் என்? 812 வரும்படி பார்க்கும்நண்பரும் பரத்தையரும் திருடரும் தம்முள் சமம். 813 போரில் கால்வாங்கும் குதிரை போன்றவரின் பறவைக் காட்டிலும் தனிமை நல்லது. 814 உதவி செய்தும் பயனில்லாச் சின்னவர் நட்பு இருப்பதினும் இல்லாமை நல்லது. 815 பேதையின் பெருநட்பைவிட அறிஞரின் பகை கோடிமடங்கு நல்லது. 816 முகத்தளவில் மலரும் நட்பைக் காட்டிலும் பகை பத்துக்கோடி நல்லது. 817 முடிக்கக் கூடிய காரியத்தைச் செய்யாதவரின் நட்பினைச் சொல்லாதே நழுவ விடுக. 818 செயல் வேறு சொல் வேறு என்பவரின் நட்பு கனவிலும் நன்மை தாராது. 819 வீட்டில் புகழ்ந்து வெளியி;ல் தூற்றுபவரின் தொடர்பினைச் சிறிதும் வரவொட்டாதே. 820 83. கூடா நட்பு உள்ளம் பொருந்தாது ஒழுகுபவர் நட்பு வாய்ப்பு வரின் அடிக்கும் பட்டரையாம். 821 உறவுபோல நடிக்கும் வஞ்சகரின் நட்பு பரத்தை மனம்போல மாறுபடும். 822 நல்ல பல நூல்களைக் கற்றிருந்தாலும் வஞ்சகர்க்கு நல்ல மனம் வாராது. 823 முகத்திலே புன்சிரிப்புக் காட்டி அகத்திலே கொடிய வஞ்சகரை அஞ்ச வேண்டும். 824 மனத்தில் ஒட்டாதவரை எந்த அளவிலும் சொல்லினால் நம்புதல் கூடாது. 825 நண்பர் போல நல்லன கூறினாலும் தீயவர் கருத்து உடனே தெரிந்து விடும். 826 பகைவரின் சொற்பணிவு கண்டு ஏமாறாதே; வில்லின் வளைவு தீமைக்கு அறிகுறி. 827 பகைவர் தொழுத கைக்குள் படையிருக்கும்; அவர் அழுத கண்ணீரும் படையாகும். 828 மிகவும் பழகி உள்ளே இகழ்பவருடன் நீயும் மகிழப் பேசி நட்பைக் குறைக்க. 829 பகைவன் நண்பனாக வரும் சமயம் முகத்தால் ஏற்று அகத்தால் நட்பை விடுக. 830 84. பேதைமை பேதைமை என்ற நிலையின் இயல்பு யாது? தீமையைக் கொண்டு நன்மையை விடுதல். 831 அறியாமையுள் எல்லாம் பெரிய அறியாமை வேண்டாத பொருள்மேல் விருப்பம் கொள்வது. 832 வெட்கமின்மை நாட்டமின்மை உறுதியின்மை பேணுதலின்மை பேதையின் இயல்புகள். 833 கற்றும் உணர்ந்தும் கற்பித்தும் தான்மட்டும் அடங்காத அறிவிலிபோல் அறிவிலி இல்லை. 834 எழுபிறப்பிலும் தான் தங்கும் நரகத்தினை ஒரு பிறப்பிலேயே பேதை தேடிக் கொள்வான். 835 செயலறியாத பேதை செய்யப் புகுத்தால் பொய்சொல்வான்; கைவிலங்கும் கொள்வான். 836 பேதை உரிமையால் பெருஞ் செல்வம் பெற்றால் அயலவர் கொழுப்பர்; உறவினர் வாடுவர். 837 அறிவிலிக்குப் பொருளும் கிடைக்குமாயின் பைத்தியம் கட்குடித்த நிலை போலாகும். 838 பேதையின் உறவு பெரிதும் இனியது; பிரியுங்கால் யாதும் வருத்தம் இல்லை. 839 அறிஞரின் அவைக்கு அறிவிலி போதல் கழுவாதகாலைத் தவப்பள்ளியில் வைப்பதுபோல். 840 85. புல்லறிவாண்மை அறிவு வறுமையே வறுமை; பிறவற்றை வறுமையாக உலகம் கருதாது. 841 அறிவிலான் மனம்உவந்து ஈவானாயின் கொள்பவன் நல்வினையே காரணமாம். 842 அறிவிலி தானே தேடிக்கொள்ளும் துயரைப் பகைவரும் அவனுக்குச் செய்ய இயலாது. 843 அறிவின்மை என்பது யாது? எனக்கு எல்லாம் தெரியும் என்னும் இறுமாப்பு. 844 படியாதவற்றை மேற்கொண்டு நடப்பின் நன்கு படித்ததிலும் உலகம் ஐயம்கொள்ளும். 845 உன்பால் குற்றத்தை ஒழிக்காத போது ஆடைகட்டுதல் அறிவாமோ? 846 மறைவான செய்தியைச் சொல்லிவிடும் அறிவிலி தனக்குத் தானே கேடாவான். 847 சொன்னாலும் செய்யான் தன்னாலும் தெளியான் இவன் சாகும்வரை பிறர்க்கு நோயாவான். 848 அறிவிலி தான் கண்டதையே கண்டவன்; அவனை அறிவுறுத்துபவன் அறியாதவன். 849 உலகம் கூறும் உண்மையை மறுப்பவன் காணும் பேயாகக் கருதப் படுவான். 850 86. இகல் (மாறுபாடு) மாறுபாடு என்னும் குணம் உயிக்ளுக்குள் பகையுணர்ச்சியைப் பரப்பும் நோயாகும். 851 பகைமை கருதிக் தகாதன செய்தாலும் மாறுபாடு கருதிக் கொடுமை செய்யற்க. 852 மாறுபாடு என்னும் தொழுநோய் நீங்கினால் அழிவில்லாத அறிவுவிளக்கம் உண்டாகும். 853 மாறுபாடு என்னும் பெருந்துன்பம் ஒழிந்தால் சிறந்த இன்பம் விளையும். 854 மாறுபாட்டுக்கு ஒதுங்கிப் போய்விடுவாரை வம்புக்குத் தூண்ட யாரால் இயலும்? 855 வீம்பு மிகுதியை விரும்புபவன் வாழ்வு சிதைதலும் அழிதலும் நாளாகாது. 856 மாறுபடுதலை விரும்பும் கொடிய அறிவினர் மேன்மை தரும் உண்மைப் பொருளை அறியார். 857 மாறுபாட்டுக்கு ஒதுங்குதல் முன்னேற்றமாம்; ஒதுங்காது நிமிர்ந்தால் கேடு வளரும். 858 தனக்கு நலம்வரும்போது வேற்றுமை பாரான்; பிறனைக்கெடுக்க வேறுபாட்டைப் பெருக்குவான். 859 எல்லாத் துன்பமும் வேற்றுமையால் வரும்; நலமான உணர்ச்சி நல்லுறவால் உண்டாம். 860 87. பகைமாட்சி வலியவரோடு முரணுதலை விடுக; தன்னைக் காவாத எளியவரைப் பகைக்க. 861 அன்பும் பெருந்துணையும் வலியும் இல்லாதவன் பகைவன் வலியை எங்ஙனம் தாங்குவான்? 862 துணிவும் அறிவும் ஒழுங்கும் கொடையும் இல்லாதவன் பகைவர்க்கு எளியவன். 863 பொறுமையும் உறுதியும் சிறிதும் இல்லாதவன் என்றும் யார்க்கும் எளியவன். 864 வழியும் பொருத்தமும் பழியும் பாராதவன் பண்பும் இல்லாதவன் பகைவர்க்கு இனியவன். 865 புரியாத சினமும் அளவிலாத காமமும் உடையவனது நிலையைப் பயன்படுத்திக் கொள்க. 866 பக்கத்திருந்தும் புரியாது செய்பவனது எதிர்ப்பை யாது கொடுத்தும் கொள்க. 867 குணமின்றிக் குற்றம்பல கொண்ட அரசன் துணையற்றவன், பகைவர்க்கு வாய்ப்பானவன். 868 அறிவற்ற துணைவற்ற பகைவர் கிடைப்பின் பகைப்பவர்க்கு என்றும் நலம் உண்டு. 869 கல்லாதவனை, சினப்பவனை, சிறிய முயற்சியால் பெரும் பொருளீட்டாதவனை அதிகாரம் அடையா. 870 88. பகைத்திறம் தெரிதல் பகைக்கும் தீய குணத்தை யாரும் விளையாட்டாகவும் விரும்புதல் கூடாது. 871 வில்லுடைய வீரரைப் பகைத்துக் கொண்டாலும் சொல்லுடைய புலவரைப் பகைக்காதே. 872 தனியனாக இருந்து பலரைப் பகைப்பவன் பித்தனைக் காட்டிலும் இரங்கத்தக்கவன். 873 பகைவனையும் நண்பனாகக் கருதும் உயர்ந்தவனது பெருந்தன்மையால் உலகம் வாழ்கின்றது. 874 தனக்கோ துணையில்லை; பகையோ இரண்டு; ஒரு பகையை நல்ல துணையாக்கிக் கொள்க. 875 தெளியினும் தெளியாவிடினும் துன்பநிலையில் நம்பி விடாதே; பகைத்து விடாதே. 876 துன்பத்தை உணரா நண்பர்க்குச் சொல்லாதே; தன்குறைபாட்டைப் பகைவர் முன் காட்டாதே. 877 வகையாகத் தன்வலி பெருக்கிக்கொண்டால் மாற்றாரின் ஆணவம் தானே மறையும். 878 முள்ளுடைய மரத்தை முளையிலே அழிக்க; முதிர்ந்துவிடின் வெட்டுவார் கை புண்படும். 879 பகைப்பவரின் இறுமாப்பை அழிக்காதவர் பகைவர் மூச்சுவிட்டாற் போதும், அழிவர். 880 89. உட்பகை குளிர்ந்த நீரும் தீமை எனின் விரும்பத்தகா; உறவினர் குணங்களும் கேடுதரின் பிடிக்கா. 881 வாள்போல் கொடிய பகைக்கு அஞ்சவேண்டாம்; உறவுபோல் நடிக்கும் உட்பகைக்கு அஞ்சுக. 882 உட்பகையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்க; தளருங்கால் மண்வெட்டிபோலச் சாய்த்து விடும். 883 உள்ளம் ஒட்டாத உட்பகை இருந்தால் சுற்றம் ஒட்டாதபடி பல துன்பம் தரும். 884 உறவு முறையில் பகை உண்டாகின் சாகும்படியான பல துன்பம் தரும். 885 கூடஇருப்பவர்பால் கூடாமை ஏற்படின் ஒருநாளும் அழிவிலிருந்து தப்ப முடியாது. 886 தவலையும் மூடியும்போலச் சேர்ந்திருந்தாலும் உட்பகை உள்ள குடியினர் மனம் ஒன்றுபடார். 887 உட்பகை உள்ளகுடி மெல்ல வலிகுறைந்து அரம் அராவிய இரும்புபோல் தேயும். 888 எள்ளின் பிளவுபோலச் சிறிதாக இருந்தாலும் உட்பகையால் கேடு உண்டு. 889 மனவொற்றுமை இல்லாதவரோடு வாழ்தல் பெட்டியில் பாம்புடன் வாழ்வதைப்போலும். 890 90. பெரியாரைப் பிழையாமை எதுவும் செயவல்லவரின் ஆற்றலைப் பழிக்காதே; அதுவே தன்னைக்காக்கும் தலையாய நெறி. 891 பெரிய ஆற்றலுடையாரை மதியாது நடந்தால் தவிர்க்க முடியாத துன்பம் வரும். 892 தொலைக்க நினைப்பின் தொலைக்க வல்லாரிடம் தொலைய வேண்டின் உன்மனம்போல் நடக்க. 893 வலியாரை மெலியார் வம்புக்கு இழுத்தல் யமனைக் கையால் அழைப்பது போலாகும். 894 வலிமிக்க வேந்தனை எதிர்த்துக் கொண்டவர் எங்கெங்கு போனாலும் உய்ய முடியுமா? 895 தவறி நெருப்பில் விழுந்தாலும் தப்பிக்கலாம்; பெரியவர்க்குத் தவறு செய்தால் பிழைப்பில்லை. 896 எல்லாத் தகுதியும் நிறைந்தவர் சினந்தால் ஏற்றமான வாழ்வும் செல்வமும் என்னாகும்? 897 குன்றுபோல் வலியுடையார் அழிக்க நினைப்பின் குடிதழைத்து நின்றவரும் வழியின்றி மறைவர். 898 மேலான கொள்கையர் சீறினால் இடைநடுவே வேந்தனும் அரசு இழப்பான். 899 சிறப்பு மிக்க பெரியவர் சினந்தால் ஆற்றல் மிக்கவர் துணையிருப்பினும் மீளமுடியாது. 900 91. பெண்வழிச் சேறல் பெண்வழி நடப்பவர் பெரும்பயன் அடையார்; காரியம் விரும்புபவர் அங்ஙனம் நடவார். 901 காரியம் பேணாமல் மனைவிவழி நடப்பவனது மேன்மை பெரிய வெட்கத்துக்கு உரியதாகும். 902 மனைவிக்குப் பணிந்து நடக்கும் போக்கு என்றும் அறிஞரிடை வெட்கம் தரும். 903 மனைவிக்கு அஞ்சுபவன் மறுமை இழந்தவன்; அவன் காரியத்திறம் சிறப்பு அடையாது 904 மனைவிக்கு அஞ்சுபவன் நல்லவர்க்கு நல்லது செய்ய என்றும் அஞ்சுவான். 905 மனைவியின் அழகிய தோளுக்கு அடங்கியவர் தேவர்போல வாழ்ந்தாலும் சிறப்பில்லை. 906 மனைவி கட்டளைப்படி நடக்கும் ஆடவனைவிட நாணமுடைய பெண்ணே மதிக்கத்தக்கவள். 907 நல்ல நெற்றியுடையவள் சொற்படி நடப்பவன் நண்பர்க்கு உதவான் நல்லதும் செய்யான். 908 மனைவி ஏவக் காரியம் செய்வாரிடத்து அறமும் பொருளும் இன்பமும் இரா. 909 சிந்தனை செறிந்த மனத்திட்பம் உடையார்பால் மனைவி சொற்படி நடக்கும் மடமை இராது. 910 92. வரைவின் மகளிர் (பரத்தை) அன்பின்றிப் பொருளை விரும்பும் பரத்தையரின் நயமான சொல் துன்பம் தரும். 911 பயனளவு பார்த்து இனிதுபேசும் பரத்தையரின் வஞ்சனையை அறிந்து ஒதுங்குக. 912 பொருள்விரும்பும் பரத்தையரின் பொய்த்தழுவல் இருட்டறையில் ஒரு பிணம் தழுவியதுபோலும். 913 அருளை ஆராயும் அறிவினை யுடையவர் பொருளை ஆராயும் பரத்தையைத் தழுவார். 914 இயற்கையறிவோடு நூலறிவும் உடையவர் பொது இன்பப் பெண்டிரைத் தழுவார். 915 அழகுத் திமிரால் சிறுநலம் பரப்புவாரது தோள்களை நன்மை நாடுபவர் தொடார். 916 பலவற்றைக் கருதிக் கூடும் பரத்தையரின் தோள்களை நெஞ்சுறுதியற்றவரே தீண்டுவர். 917 மாயம்வல்ல பரத்தையரின் தழுவல் சிந்தனையற்றவர்க்குத் தெய்வப்பேறு ஆகும். 918 மிக இழிந்தவர் கிடக்கும் நரகம் எது? ஒருவரம்பில்லாத பரத்தையரின் தோளாகும். 919 திருமகள் கைவிட்டவர்களுக்கு உறவாவன பரத்தையும் கள்ளும் சூதாட்டமும் ஆம். 920 93. கள்ளுண்ணாமை என்றும் கள்ளாசை கொண்டு திரிபவர் வெட்கப்படார்; மதிப்புக்குறைவர். 921 கள் குடியற்க;பெரியோரிடம் மதிப்புப் பெற விரும்பாதார் வேண்டுமானால் குடிக்கட்டும். 922 கள்ளாட்டம் தாய்க்கும் அருவருப்பைத் தரும்; பெரியவர்க்கு என்ன ஆகும்? 923 கள்குடிக்கும் தகாத பெருங்குற்றம் உடையவரை நாண் என்னும் நங்கை விட்டுப் போவாள். 924 விலை கொடுத்தும் மெய்ம்மறதியை வாங்குதல் வாழத் தெரியாமையாகும். 925 துஞ்சினவர் என்பவர் செத்தவரே; கள்ளுண்பவர் என்பவர் நஞ்சுண்பவரே. 926 கள்ளை மூடிக்குடித்துக் கண் தடுமாறுபவரின் உள்ளத்தை அறிந்துகொண்டு ஊர்சிரிக்கும். 927 குடியை மறைக்கலாம் என்பதை விட்டொழி; மறைத்ததைக் குடி உடனே வெளியாக்கும். 928 குடிகாரனைச் சொல்லித் திருத்துதல் குளத்தில் விழுந்தவனை விளக்கால் தேடுதல் ஒக்கும். 929 தான் குடியா நிலையில் குடித்தவனைக் காணின் தன் குடிமயக்கத்தை ஒருவன் உணரமாட்டானா? 930 94. சூது வெற்றிதரினும் சூதினை விரும்பாதே; அவ்வெற்றி தூண்டிற்கொக்கி மீனை விழுங்கினது போலும். 931 ஒன்றுபெற்றுப் பல இழக்கும் சூதாடிக்கும் நலமாக வாழும் முறை உண்டாகுமா? 932 காயை ஓயாது சொல்லி உருட்டினால் பொருள் வருவாய் ஓடிப்போய் விடும். 933 பல இழிவு தந்து பண்பைக் கெடுக்கும் சூதுபோல் வறுமை தருவது வேறில்லை. 934 சூதாடுகாயும் கழகமும் கையும் விடாது அழுந்தியவர் வறுமையாகி விடுவர். 935 சூதென்னும் மூதேவிக்கு ஆட்பட்டவர் வயிறு நிறைய உண்ணாது வருந்தவர். 936 சூதாடு கழகத்துக்கு நாளும் சென்றால் பழைய செல்வமும் பண்பும் தொலையும். 937 சூது பொருள் கெடுக்கும், பொய்யனாக்கும்; அருள் கெடுக்கும், துன்பத்தில் அழுத்தும். 938 உடையும் செல்வமும் உணவும் மதிப்பும் கல்வியும் எல்லாம் சூதாடியை அடையா; 939 தோற்கத் தோற்கச் சூதில் ஆசைவளரும்; துன்பம் படப்பட வாழ்வில் பற்றுவளரும். 940 95. மருந்து மருத்துவர் கூறும் வாத பித்த கபங்கள் கூடினாலும் குறைந்தாலும் நோய் தரும். 941 முன் உண்டது செரித்தது பார்த்து உண்டால் உடம்புக்கு மருந்து எதுவும் வேண்டாம். 942 செரித்தால் செரிமானம் பார்த்து உண்; அதுவே உடல்பெற்றவன் நெடுநாள் வாழும்நெறி. 943 செரித்தது பார்த்து அம்முறை பற்றி ஒத்துக்கொள்வதை நன்கு பசித்தபின் உண்க; 944 ஒத்துக்கொள்வதையும் அளவாக உண்டால் உயிர்க்கு யாதும் நோய் இல்லை. 945 கழிவறிந்து உண்பவனிடம் உடல்நலம் இருக்கும்; நிரம்பத் தின்னியிடம் நோய் குடிகொள்ளும். 946 பசியளவு தெரியாமல் மிக உண்டால் நோய் அளவில்லாமல் வரும். 947 நோயையும் காரணத்தையும் தீர்க்கும் வழியையும் மருத்துவன் அறிந்து வெற்றியாகச் செய்க. 948 நோயாளியின் நிலையையும் நோயின் நிலையையும் காலத்தையும் மருத்துவன் அறிந்து செய்க. 949 நோயாளி மருத்துவன் மருந்து துணையாளி என்ற நான்கும் மருத்துவத்தின் கூறுகள். 950 96. குடிமை இயற்கையாகவே ஒழுங்கும் நாணமும் நற்குடிப் பிறந்தாரிடம் சேர்ந்து இருக்கும். 951 ஒழுக்கம் உண்மைச்சொல் நாணம் மூன்றிலும் குடிப்பிறந்தவர் என்றும் குறையார். 952 முகமலர்ச்சி கொடை இன்சொல் மதித்தல் இவை ஒழுங்கான குடியின் இயல்புகள். 953 கோடி கோடி பெற்றாலும் உயர் குடியாளர் குறைவான காரியங்களைச் செய்யார். 954 கொடுத்தற்குப் பொருள் சுருங்கிய இடத்தும் பழங்குடி மக்கள் கொடைத்தன்மையை விடார். 955 நற்குடும்பத்துக்கு ஏற்ப நடக்கின்றோம் என்பவர் வஞ்சகங் கொண்டு பொருந்தாதன செய்யார். 956 வானத்தில் மதிக்கண் களங்கம் போல உயர்ந்தோர் குற்றம் ஊருக்குத் தெரிந்துவிடும். 957 குடும்பப் பண்பில் பற்றில்லா விட்டால் அவன் குடும்பப் பிறப்பில் ஐயம் தோன்றும். 958 நிலத்தின் தன்மையை முளை காட்டும்; குலத்தின் தன்மையைச் சொல் காட்டும். 959 நன்மை வேண்டின் தீயது செய்ய நாணுக; குலப்பெருமை வேண்டின் யார்க்கும் பணிக. 960 97. மானம் கட்டாயம் செய்ய வேண்டியன என்றாலும் பெருமைக்குக் குறைவானவற்றைச் செய்யற்க. 961 பெருமையொடு பேராற்றல் வேண்டுபவர் புகழ்களில் மானக் குறைவானவை செய்யார். 962 வளம் பெருகும்போது பணிவு வேண்டும்; வளம் சுருங்கும்போது பெருமிதம் வேண்டும். 963 மக்கள் உயர்ந்த தரத்திலிருந்து இறங்கினால் தலையிலிருந்து விழுந்த மயிர் போல்வர். 964 குண்டுமணி அளவு தரக்குறைவாக நடந்தால் மலைபோல் உயர்ந்தவரும் தாழ்வர். 965 மதியாதார் பின்னே மானங்கெட்டு நிற்பதேன்? புகழ் வருமா? தேவருலகு கிடைக்குமா? 966 பகைவருக்குப் பின்போய் வாழ்ந்தான் என்பதினும் மானத்தோடு கெட்டான் என்பது நல்லது. 967 மானத்தின் ஏற்றம் அழியும் நிலையில் உடலை வளர்த்தல் உயிருக்கு மருந்தாகுமா? 968 மயிர் பறிப்பின் இறக்கும் கவரிமான் போன்றவர் மானம் போவதாயின் உயிரைப் போக்குவர். 969 இழிவு நேர்ந்தால் சாகும் மானமுடையவரின் புகழ் விளக்கை உலகம் தொழுது போற்றும். 970 98. பெருமை ஊக்கம் மிகுதியே ஒருவர்க்கு மதிப்பாகும்; அதனை விட்டு வாழ்தல் என்பது குறைவாகும். 971 ஒரு தாய் வயிற்று மக்களுக்குள்ளும் செயல் வேற்றுமையால் சிறப்பு வேறுபடும். 972 மேலிருந்தும் மேலான செய்யாதார் சிறியவர்; கீழிருந்தும் கீழான செய்யாதார் பெரியவர். 973 மகளிர் கற்பைத் தாமே காத்தல் போலப் பெருமையும் அவரவர் காத்தால் உண்டு. 974 பெருமையைக் காத்துக் கொண்டவர் முறையாக அருமையான காரியங்களைச் செய்து முடிப்பர். 975 பெரியவர்களைப் போற்றிக் கொள்ளும் கருத்து சிறியவர்கள் அறிவிற் படுவதில்லை. 976 சிறப்புக்கள் இழிந்தவர்களைச் சேருமாயின் தாறுமாறான காரியங்களே நடக்கும். 977 என்றும் பணிதல் பெருமையின் இயல்பு; தற்புகழ்ச்சி பாடுதல் சிறுமையின் இயல்பு. 978 தற்செருக்கு இன்மை பெருமையின் குணம்; தற்செருக்கின் வடிவு சிறுமையின் குணம். 979 பிறர் குற்றம் மறைத்தல் பெருமையின் இயல்பு; குற்றமே கூறுதல் சிறுமையின் இயல்பு. 980 99. சான்றாண்மை (நிறை குணம்) கடமை அறிந்து நிறைகுணம் கொண்டவர்க்கு நல்லவை எல்லாமே கடமைகள் என்பர். 981 நற்குணமே பெரியவர்தம் நலம்; பிறநலங்கள் அவர்க்கு ஒரு நலமும் இல்லை. 982 அன்பு நாணம் பொதுநலம் இரக்கம் வாய்மை ஐந்தும் சால்புக் கட்டிடத்தின் தூண்கள். 983 ஓருயிரையும் கொல்லாமை தவமாகும்; யாரையும் குறைகூறாமை சால்பாகும். 984 வலியார்க்கு வலியாவது தாழ்ந்து போதல்; அதுவே சான்றோர் பகைவரைத் திருத்தும்படை 985 நிறைகுணத்தை மதிப்பிடும் உரைகல் யாது? தோல்வியைத் தாழ்ந்தவரிடத்தும் ஏற்பது. 986 துன்பம் செய்தவருக்கும் இன்பம் செய்யாவிடின் நிறைகுணத்துக்கு என்ன பொருள்? 987 சால்பாகிய உறுதிமாத்திரம் இருக்குமானால் வறுமை ஒருவர்க்கு இழிவாகாது. 988 நிறைகுணம் என்னும் கடலுக்குக் கரையானவர் காலம் பிறழ்ந்தாலும் தாம் ஒழுக்கம் பிறழார். 989 நிறைந்தவர் நிறைகுணம் குறைந்தால் நிலம் பாரம் பொறுக்குமா? 990 100. பண்புடைமை பண்புடைமை என்ற நடத்தையை யாரிடத்தும் எளிதாகக் கலந்து பழகுவதால் எய்தலாம். 991 அன்பு கொள்ளுதலும் குடிக்கேற்ப ஒழுகுதலும் இரண்டும் பண்பான நெறிகளாம். 992 முகமொப்பு ஒருகுடி மக்கள் ஒப்பாகாது; நிறைந்த குணவொப்பே ஒப்பாகும். 993 விருப்பத்தோடு நன்மை செய்து வாழ்பவரின் எளிய குணத்தையே உலகம் போற்றும். 994 நட்பிலும் இகழ்ச்சி பிடிக்காது; பண்பாளரிடம் பகைவரும் மதிக்கும் குணங்களே இருக்கும். 995 பண்புடையார் இருப்பதால் உலகம் இருக்கிறது; இல்லாவிடின் மண்ணாகிப் போயிருக்குமே. 996 சமுதாயப் பண்பில்லாதவர் அரம்போன்ற கூரிய அறிஞராயினும் மரம் போல்வர். 997 நட்புக் கொள்ளாமல் தீமை செய்வாரிடத்தும் பண்பொடு பழகாமை இழிவாகும். 998 யாரோடும் சிரித்துப் பழகத் தெரியாதவர்க்கு இப்பேருலகம் பகற்காலத்தும் இருளாகும். 999 தீயவன் பெற்ற செல்வம் நல்ல பால் தீய பாத்திரத்தால் முரிந்தது போலாம். 1000 101. நன்றியில் செல்வம் (பயனிலாச் செல்வம்) இடமெல்லாம் பெரும்பொருளை ஈட்டிவைத்து உண்ணாது செத்தவனுக்கு உரிமை யாதுமில்லை 1001 எல்லாம் பொருளால் ஆகும் என்று கொடாது இறுக்கிய பேதைக்கு இழி பிறப்பு உண்டாகும். 1002 ஈட்டிய பொருளை இறுகப் பற்றிக் கொண்டு புகழ்விட்ட ஆடவர் பூமிக்குப் பாரம். 1003 ஒருவராலும் விரும்பப் படாத கஞ்சன் தனக்குப் பின் என்று எதனைக் கருதுகிறான்? 1004 பிறர்க்கு வழங்கான் தானும் உண்ணான் இவனுக்குப் பலகோடி இருந்தால் என்ன? 1005 தானும் நுகரான் ஏழைக்கும் ஈயான் இவன் பெருஞ்செல்வத்துக்கு ஒரு நோய். 1006 ஏழைக்கு யாதும் ஈயாதவனது செல்வம் அழகுள்ள குமரி மணவாது மூத்தது போலும். 1007 யாராலும் விரும்பப் படாதவனது செல்வம் நடுவூரில் நஞ்சுமரம் பழுத்தது போலாம். 1008 அன்பின்றித் தன் வாய்வயிற்றைக் கட்டிச் சேர்த்த பொருளை எடுத்துகொள்வார் யாரோ? 1009 கொடைச் செல்வர்கள் சிலநாள் வறுமைப்படுதல் மேகம் வறுமைப்படுவது போலும். 1010 102. நாணுடைமை (வெட்கம்) வெட்கம் என்பது தீயசெயலுக்கு நாணுதல்; பெண்களின் வெட்கம் வேறுவகை. 1011 உணவு உடை பின்வழி எல்லார்க்கும் பொது; வெட்கமே நன்மக்களின் சிறப்பு. 1012 உயிரெல்லாம் உடம்பைப்பற்றி நிற்கின்றன; நிறைகுணம் வெட்கத்தைப்பற்றி நிற்கின்றது. 1013 பெரியவர்கட்கு வெட்கம் ஓர் அழகாகும்; வெட்கமில்லாத வீறுநடை நோயாகும். 1014 பிறர்பழிக்கும் தம்பழிக்கும் நாணுபவரை வெட்கத்தின் வாழ்விடமென உலகுபோற்றும். 1015 நாணாகிய வேலியை அமைத்துக் கொண்டன்றி உயர்ந்தோர் உலகத்தை மதியார்கள். 1016 நாணம் மிக்கவர் அதற்காக உயிர்விடுவர்; உயிருக்காக நாணத்தை விடார். 1017 பிறர் வெட்கப்படுதற்குத் தான்வெட்கப் படாவிடின் அவன் செயலுக்கு அறம் வெட்கப்படும். 1018 கொள்கை தவறினால் குடி அழியும்; நாணம் கெட்டால் நன்மை கெடும். 1019 நாணம் இல்லாதாரின் நடமாட்டம் மரப்பாவை கயிற்றால் நடமாடியது போலும். 1020 103. குடிசெயல் வகை குடும்பக்கடமை செய்யப் பின்வாங்கேன் என்ற பெருமைபோலப் பெருமையுடையது வேறில்லை. 1021 நீண்ட முயற்சியும் நிறைந்த அறிவும் என்ற இரண்டின் பெருஞ்செயலால் குடி பெருகும். 1022 குடும்பத்தை உயர்த்துவேன் என்பானுக்குத் தெய்வம் வரிந்து கட்டிக்கொண்டு முன்வரும். 1023 தன்குடும்பம் கீழாகாமல் உழைக்கின்றவனுக்கு இயல்பாக எல்லாம் தானே நிறைவேறும். 1024 குற்றமின்றிக் குடும்பம் காத்து வாழ்பவனைச் சுற்றமாக உலகம் சுற்றிக் கொள்ளும். 1025 ஒருவர்க்கு நல்லவீரம் என்பது தான்பிறந்த வீட்டுப்பொறுப்பைத் தனதாக்கிக் கொள்ளுவதே. 1026 போரில் பொறுப்பு பெருவீரரையே சாரும்; வீட்டுச்சுமை தாங்கவல்லார்மேலே விழும். 1027 கடமை செய்வார்க்குக் காலம் என்பது இல்லை; சோம்பி வீண்பெருமை கருதின் குடிகெடும். 1028 குடும்பத்தைக் குற்றப் படாமல் காப்பவனது உடம்பு துன்பத்தின் உறைவிடமோ? 1029 முட்டுக் கொடுக்கும் ஆளில்லாத குடும்பம் துன்பம் தாக்கினால் அடியோடு வீழும். 1030 104. உழவு உலகம் முன்னேறினாலும் உழவுக்குப் பின்னே; துயரப் பட்டாலும் உழவே தலைத்தொழில். 1031 உழ அஞ்சி ஓடுவாரைத் தாங்குதலால் உழவரே எல்லார்க்கும் அச்சாணி ஆவர். 1032 உழுது உண்டு வாழ்பவரே உரிமையாளர்; பிறரெல்லாம் உழவரைத்தொழும் அடிமைகள். 1033 நெற்கதிரின் நிழலில் வாழும் உழவர்கள் பலரையும் தம் அரசனுக்குக் கீழ்ப்படுத்துவர். 1034 உழுதுண்ணு;ம உழவர் பிச்சை எடுக்கார்; பிச்சைக்காரர்களுக்கு ஒளிக்காது கொடுப்பர். 1035 உழவர்கள் வேலை நிறுத்தம் செய்வாராயின் துநவிகட்கும் பற்றுக்கோடு இல்லை. 1036 பலப்புழுதியைக் காற்புழுதியாகக் காயவிடின் பிடியளவு உரமின்றியும் நிலம் நன்கு விளையும். 1037 உழுதல் உரமிடல் களைபறித்தல் நீர்பாய்ச்சல் காத்தல் ஒன்றைவிட ஒன்று நல்லது. 1038 உடையவன் வயலுக்கு நாளும் போகாதிருப்பின் வயல் மனைவிபோலப் பிணங்கி வாடும். 1039 ஏழை என்று சோம்பியிருப்பாரைக் கண்டால் நிலமகள் சிரிப்பாள். 1040 105. நல்குரவு (வறுமை) வறுமைபோலக் கொடியது ஒன்று உண்டா? அதுபோலக் கொடுமையுடையது அதுவே. 1041 வறுமை என்ற பேர்பெற்ற பாவி எப்பிறப்பிலும் தொடர்ந்து வரும். 1042 வறுமைப்பிடி வழிவந்த குடிப்புகழையும் உடல் வனப்பையும் ஒருங்கே அழிக்கும். 1043 வறுமை உயர்குடிப் பிறந்தார்க்கும் தாழ்வான சொல்லைச் சொல்லச் செய்யும் 1044 வறுமையாகிய நெருக்கடியில் பல துன்பங்கள் வந்து சேரும். 1045 நல்ல பொருளை நன்றாகச் சொன்னாலும் வறியவர் சொல் ஏறாது. 1046 வாழ்வுக்கு பொருந்தாத வறுமை வரின் பெற்ற தாயும் யாரோ எனப் பார்ப்பாள். 1047 நேற்றும் வந்த கொலை போன்ற வறுமை இன்றும் என்னை வாட்டுதற்கு வருமோ? 1048 நெருப்பிற்கூட உறங்கவும் செய்யலாம்; வறுமையில் சிறிதும் கண்மூட முடியாது. 1049 வறியவர் முற்றும் துறவியாகாது இருத்தல் உப்புக்கும் கஞ்சிக்கும் தண்டம். 1050 106. இரவு (பிச்சை) கேட்கத் தக்கவரிடம் உதவி கேட்க; ஒளித்தால் அவர்க்குப்பழி, உனக்கு இல்லை. 1051 கேட்ட பொருள்கள் கடினமின்றிக் கிடைப்பின் உதவி கேட்பதும் மகிச்சியைத் தரும். 1052 ஒளிக்காத மனமும் கடமையுணர்ச்சியும் உடையவர் முன்நின்று இரத்தலும் ஓர் அழகு. 1053 ஒளிப்பதைக் கனவிலும் அறியாதாரிடம் சென்று கேட்பது கொடுப்பதை ஒக்கும். 1054 நேர்நின்று ஒருவர் இரக்க முற்படுவது ஒளிக்காதவர் உலகத்து இருப்பதால் அன்றோ? 1055 ஒளிக்கும் துயரம் இல்லாரைக் கண்டால் வறுமைத் துயரம் எல்லாம் போய்விடும். 1056 இகழ்ந்து பேசாது கொடுப்பாரைக் கண்டால் உள்ளம் உள்ளுக்குள்ளே மகிழும். 1057 உதவிகேட்பார் இல்லாவிடின் இப்பேருலகம் மரப்பாவைபோல உணர்ச்சியற்று நடக்கும். 1058 இரந்து கொள்ள விரும்புவோர் இல்லாதபோது கொடுப்பவர்க்குப் பெருமிதம் என்ன உண்டு? 1059 இரப்பவனுக்குக் கோபம் வருதல் கூடாது; தான் வறுமைப்படுவதே அதற்குக் சான்று. 1060 107. இரவச்சம் (கேட்க அஞ்சுதல்) ஒளிக்காது மகிழ்ந்து கொடுக்கும் அன்பரிடத்தும் ஒன்றுபோய்க் கேளாமை கோடி நல்லது. 1061 பிச்சையாலும் வாழ ஏற்படுத்தி இருப்பின் படைத்தவன் கெட்டு அலைவானாக. 1062 வறுமைத் துன்பத்தை வாங்கித் தீர்ப்பேன் என்பது பெரிய முரட்டுத்தனமாம். 1063 இல்லாத போதும் இரக்காத நிறைகுணம் வீடு நிறைந்த செல்வத் தன்மை உடையது. 1064 உழைப்பால் வந்தது கஞ்சித் தண்ணீராயினும் அதனை உண்பதுபோல் சுவை வேறில்லை. 1065 பசுவுக்குத் தண்ணீர் என்று கேட்டாலும் கேட்ட நாவிற்குப் பெருமை இல்லை. 1066 கேட்டாலும் ஒளிப்பாரிடம் கேளாதீர் என்று இரப்பாரை எல்லாம் கேட்டுக் கொள்வேன். 1067 பிச்சை என்னும் துணையற்ற படகு ஒளிப்பாகிய பாறை மோதின் உடைந்துவிடும். 1068 பிச்சையை நினைத்தால் மனம் குலையும்; மறைப்பதை நினைத்தால் மனம் சாகும். 1069 கேட்பவருக்குக் கேட்டளவில் போகும் உயிர் மறைப்பவருக்குப் போகாது எங்கிருக்கும்? 1070 108. கயமை(கீழ்மை) கயவர் மக்கள் போன்றே இருப்பர்; அன்ன வடிவொற்றுமையை யாம் கண்டதில்லை. 1071 மெய்யறிஞர் போலக் கயவரும் மகிழ்வுடையர்; ஏன்? மனத்தில் எதற்கும் கவலைப் படார். 1072 கயவர்கள் அரசர் போன்றவர்கள்; ஏன்? தாம் விரும்பியபடியே நடப்பார்கள். 1073 கயவர் தம்மினும் இழிந்தவரைக் கண்டால் அவரால் போற்றப்பட்டு இறுமாப்பர். 1074 அச்சமே கயவர்களின் இயல்பு; புகழாசை இருந்தால் சிறிது இருக்கலாம். 1075 கயவர் அறிவிக்கும் பறைவோல்வர்; ஏன்? மறைச்செய்தியைப் பிறரிடம் போய்க்கூறுவர். 1076 பல்லை உடைக்கும் கொடுங்கையர்க்கு அன்றிக் கயவர்கள் எச்சிற்கையும் உதறமாட்டார்கள். 1077 சொன்ன அளவிலே பயன்செய்வர் மேலோர்; கரும்புபோல் நசுக்கின் பயன்செய்வர் கீழோர். 1078 உண்டு உடுத்து நடப்பதைக் கண்டாலே அவர்கள்மேல் குற்றஞ் சுமத்துவான் கயவன். 1079 எதற்குத் தகுதி கயவர்? ஏதும் கிடைப்பின் விரைந்து தன் மானத்தை விற்கத் தகுதி. 1080 மூன்றாவது காமத்துப் பால் மலரினும் மெல்லியது காமம்; சிலர் அதன் செவ்வி தலைப்படு வார். 109. தகையணங்குறுத்தல் (அழகு வருத்தல்) தெய்வமோ மயிலோ தோடணிந்த பெண்ணோ என்று என் நெஞ்சம் மயங்கும். 1081 பார்த்தவள் மேலும் எதிர்ப்பார்வை பார்த்தல் கொடுந்தெய்வம் சேனையோடு தாக்கியதுபோல். 1082 கூற்றை முன்பு கண்டறியேன்; இன்றறிந்தேன் பெண்மையும் பெருங்கண்ணும் உடையது. 1083 பார்த்தவரின் உயிர்குடிக்கும் கவர்ச்சிகொண்டு பெண்ணின் கண்கள் போர்செய்கின்றன. 1084 இது எமனோ கண்தானோ பெண்மானோ இவள் பார்வையில் இம் முக்குணமும் உண்டு. 1085 வளைந்த புருவம் நேர்நின்று தடுப்பின் இவள் கண்கள் என்னை நடுக்கா. 1086 கைபடாத முலைமேல் கிடக்கும் மெல்லாடை மதயானைக்கு இட்ட முகமூடி போலும். 1087 போரில் வாராதவரும் அஞ்சும் என் ஏற்றம் இந்த நெற்றி யழகுக்கே உடைந்து விட்டதே! 1088 மான்பார்வையும் வெட்கமும் உடையவளுக்கு வேறு அணிகள் போடுதல் எதற்கு? 1089 கள் குடித்தால்தான் மகிழ்ச்சிதரும்; காமம்போல் பார்த்தளவில் மகிழ்ச்சி தருமா? 1090 110. குறிப்பறிதல் இவள் மைக்கண்ணில் இருபார்வை உண்டு; ஒன்று நோயாகும்; ஒன்று மருந்தாகும். 1091 கண்கொண்டு கவரும் சிறிய பார்வை இன்பத்தில் சரிபாதியினும் கூடுதலாகும். 1092 பார்த்தாள் பார்த்துக் குனிந்தாள்; அது அவள் காதற் பாத்தியில் இறைத்த நீராகும். 1093 நான் பார்க்கும்போது நிலம் பார்ப்பாள்; பாராக்கால் என்னைப் பார்த்துப் புன்சிரிப்பாள். 1094 என்னை நேராகப் பார்க்கவில்லையே யன்றி ஒருகண்ணை இடுக்கினாற்போலச் சிரிப்பாள். 1095 உறவில்லாதவர் போலச் சொன்னாலும் வெறுப்பில்லாதவர் சொல் விரைவில் புரியும். 1096 பகையாத கடுஞ்சொல் பகைபோல் பார்வை இவை அயலவர் போன்ற அன்பர் குறிப்பு. 1097 யான் பார்க்க நெகிழ்ந்து மெல்லச் சிரிப்பாள்; மெல்லியலுக்கு அப்போது ஓர் அழகு உண்டு. 1098 அயலவர்போல மேலோடாகப் பார்த்தல் காதலரிடமே உண்டு. 1099 கண்ணோடு கண் இணையும் பார்வை இசையின் வாய்ப்பேச்சுக்கு என்ன பயன் உண்டு? 1100 111. புணர்ச்சி மகிழ்தல் கண்டு கேட்டு உண்டு முகர்ந்து தொடும் ஐம்புல இன்பமும் இவளிடமே உண்டு. 1101 நோய்வேறு அதற்கு மருந்து வேறு; இவள் தந்த நோய்க்கோ இவளே மருந்து. 1102 தன்காதலியின் மென்தோளில் துயிலுதலைவிடத் திருமாலின் மேலுலகம் இனிதாமோ? 1103 நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும்; இன்ன தீயை இவள் எங்கிருந்து பெற்றாள்? 1104 பூங்கொத்து நிறைந்த கூந்தலவள் தோள்கள் விரும்பியபோது விரும்பிய பொருள் ஆகும். 1105 உடல் அணையுந்தோறும் உயிர் தழைத்தலால் இவளுக்குத் தோள்கள் அமிழ்தால் ஆயவை. 1106 அழகிய மாநிறப் பெண்ணைத் தழுவுதல் தன்வீட்டிலிருந்து தன்பங்கை உண்பதுபோல். 1107 காற்றும் புகாதபடி தழுவும் தழுவல் காதலர் இருவர்க்கும் பேரின்பமாம். 1108 பிணங்குதல் தெளிதல் சேருதல் இவை இன்பக் கூட்டுறவினர் பெற்ற பயன்கள். 1109 நகையுடையாளைக் கூடுந்தோறும் காமவுணர்ச்சி அறிய அறிய அறியாமையை அறிவதுபோலும் 1110 112. நலம் புனைந்துரைத்தல் அனிச்சப்பூவே! நற்பண்பு உடையாய் வாழ்க; என் காதலி உன்னைவிட மென்மையள். 1111 நான்ஒருவன் பார்க்கும் இவள்கண், மனமே! பலர்பார்க்கும் மலர் ஒக்குமென மயங்குகிறாய். 1112 மூங்கில் போலும் தோளிக்குத் தளிரே மேனி முத்தே பல், மலரே மணம், வேலே கண். 1113 குவளைகள் இவள் கண்ணைக் காண நேர்ந்தால் உவமையாகோம் என்று தலைசாய்ந்து குனியும். 1114 ஓர் அனிச்சமலரைக் காம்புடன் சூடினாள்; இவள் இடைக்கு நல்ல பறைகள் ஒலியா. 1115 வானவட்டத்துச் சுழன்றுதிரியும் விண் மீன்கள் இது திங்கள் இது மாதர் முகம் என அறியா. 1116 குறைந்து நிறையும் திங்களுக்குப் போலக் காதலி முகத்தில் களங்கம் உண்டோ? 1117 என்காதலி முகம்போல ஒளிவிட முடியின் திங்களே! நீயும் என்காதலுக்கு உரியை. 1118 மலர்க் கண்ணாளின் முகம்போல் ஆகவிரும்பின் திங்களே! பலர் பார்க்கத் தோன்றாதே. 1119 அனிச்ச மலரும் அன்னத்தின் இறகும் காதலியின் அடிக்கு நெருஞ்சி முள். 1120 113. காதற் சிறப்புரைத்தல் கொஞ்சுமொழி பேசும் வெண்பல்லில் ஊறிய நீர் பாலும் தேனும் கலந்தாற் போலும். 1121 உடம்புக்கும் உயிருக்கும் என்ன உறவு அன்ன உறவு இவளுக்கும் எனக்கும். 1122 என் நெற்றியழகிக்கு இடம் வேறில்லை; கருவிழியிற் பாவையே! நீ போய்விடு. 1123 புணருங்கால் உயிர் இருத்தல் போன்றவள்; பிரியுங்கால் அது பிரிதல் போன்றவள். 1124 போராடும் கண்களை யுடையவள் குணங்களை மறந்தால் நினைப்பேன்; மறக்கவே இல்லை. 1125 எம் காதலர் மிகவும் சிறிய வடிவினர்; கண்ணுள் இருப்பார், இமைப்பின் வருந்தார். 1126 காதலர் கண்ணுள் இருக்கின்றார் ஆதலின் சிறிது மறைவார் என்றஞ்சி மையும் தீட்டேன். 1127 காதலர் நெஞ்சில் உள்ளார் ஆதலின் வெந்து போவார் என்று சூடாக உண்ணேன். 1128 இமைத்தால் மறைவாரென இமையென்: அதற்கே அவரை அயலவர் என்று இவ்வூர் தூற்றும். 1129 என்நெஞ்சில் என்றும் மகிழ்ந்து இருக்கின்றார்; பிரிந்தார் அயலவர் என்று ஊர் பழிக்கும். 1130 114. நாணுத் துறவுரைத்தல் காமத்தில் பட்டு வருந்தினவர்கட்கு மடல் ஏறுதலல்லது வேறு பற்றுக்கோடு இல்லை. 1131 காமம் தாங்காத உடம்பும் உயிரும் வெட்கத்தை விட்டு மடல் ஏறத் துணியும். 1132 நாணமும் வீரமும் முன்பிருந்தன; இன்றோ காமங்கொண்டார் ஏறும் மடற்குதிரை உண்டு. 1133 நாணமும் வீரமும் ஆகிய தெப்பம் என்னைக் காமப் பெருவெள்ளத்தில் தள்ளிவிடுமே. 1134 மடலோடு மாலையிற் படும் காமத்துயரை அடுக்கிய வளையல் அணிந்தவள் தந்தாள். 1135 மடலேறுதலை நடுயாமத்தும் நினைப்பேன்; ஏன்? காதலியை நினைத்து என் கண்கள் மூடா. 1136 கடல்போன்ற காமத்து வருந்தினும் மடலேறாப் பெண்பிறவியே பெருமைக்கு உரியது. 1137 திட்பமற்றவர் அருளத் தக்கவர் என்னாது காமம் ஒளிக்க முடியாமல் அம்பலப்படும். 1138 இதுவரை யார்க்கும் தெரியாது என்பதனால் என்காமம் மயங்கித் தெருவெல்லாம் திரியும். 1139 நான் பட்டது தாங்கள் படாமையினால் பேதையர்கள் என் கண்பார்க்கச் சிரிப்பார்கள். 1140 115. அலர் அறிவுறுத்தல் ஊர் தூற்றுவதால் என் உயிர் வாழ்கின்றது; நல்ல காலமாக அது பலருக்குத் தெரியாது. 1141 மலர்போல் கண்ணாளின் அருமையை அறியாமல் இந்த ஊர் எனக்கு அலரைத் தந்தது. 1142 ஊர்ப்பேச்சு எனக்கு வாராதோ? அதனைப் பெறாமலே பெற்றதுபோல் என் மனம் மகிழும். 1143 காதல் ஊர்ப்பேச்சால் கவர்ச்சி அடைகின்றது; இல்லாவிடின் சிறப்பிழந்து சப்பென்றிருக்கும். 1144 மகிழ மகிழக் கள்ளில் ஆசை பெருகும்; பலர் அறிய அறியக் காதல் சிறக்கும். 1145 அவரைக் கண்டது ஒருநாள்தான்; ஊர்ப்பேச்சோ திங்களைப் பாம்பு பிடித்தது போலப் பரவியது. 1146 ஊர்ப்பேச்சு உரம்; தாயின் கடுஞ்சொல் நீர்; இப்படியாக வளரும் இக்காதற் பயிர். 1147 ஊர்ப்பேச்சால் காமத்தீயை அணைக்க முடியுமா? நெய்யூற்றி நெருப்பை நூக்க முடியுமா? 1148 அஞ்சாதே என்றவர் பலரறியப் பிரிந்தபோது ஊர்ப்பேச்சுக்கு அஞ்சி இருக்க முடியுமா? 1149 காதலர் அவர் விரும்பினால் அருளுவார்; இவ்வூர் நாம் எதிர்பார்த்தபடி தூற்றுகின்றது. 1150 116. பிரிவாற்றாமை பிரியேன் எனின் எனக்குச்சொல்; பிரிந்தால் நின் வேண்டா வருகையை இருப்பார்க்குச் சொல். 1151 அவர் பார்வை இனிமையுடையது; புணர்ச்சியோ பிரிவுக்கு அஞ்சும் துன்பக் குறிப்பு உடையது. 1152 பிரியேன் என்றவர் ஒரு சமயம் பிரிதலால் நன்கு தெரிந்தவரையும் நம்புதல் அரிதாம். 1153 அணைத்துக் ‘கலங்காதே’ என்றவர் பிரிந்தால் உறுதியை நம்பியவர்மேல் குற்றம் உண்டோ? 1154 தடுப்பின் புறப்படுவார் பிரிவைத் தடுக்க; அவர் பிரியின் நான் இருந்து கூடுதல் எங்கே? 1155 பிரிவு பேசும் துணியுடையார் ஆயின் வந்து அருளுவார் என எதிர்பார்த்தல் பயனற்றது. 1156 மணிக்கட்டிலிருந்து சுழலுகின்ற வளையல்கள் தலைவன் பிரிவை bளிப்படுத்த வில்லையா? 1157 உறவில்லாத ஊரில் வாழ்தல் துன்பம்; இன்பக் காதலரைப் பிரிதல் பெருந்துன்பம். 1158 நீ தொட்டால் சுடும்; காமசுரம் போல விட்டாலும் சுடுமோ? 1159 பொறுத்துத் துன்பம் நீக்கிப் பிரிவைத்தாங்கி அவருக்குப் பின்னும் இருப்பார் பலர். 1160 117. படர் மெலிந்திரங்கல் நான் காம நோயை மறைக்க மறைக்க அது இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போலப் பெருகும். 1161 மறைக்க முடியவில்லை; நோய் செய்தாருக்கு நாணம்விட்டு உரைக்கவும் முடியவில்லை. 1162 பொறுக்காத என் உடம்பினுள் காமமும் நாணமும் உயிர்க்காவடியின் இருபுறமும் தொங்குகின்றன 1163 காமக்கடல் மட்டும் உண்டு; அதனைக் கடக்கச் சேமத் தெபந்தான் இல்லை. 1164 துயரத்தை உறவினர்க்குச் செய்ய வல்லவர் பகைவர்க்கு என்னதான் செய்ய மாட்டார்? 1165 காம இன்பம் கடலாகும்; வருத்தும்போது காமத்துன்பம் கடலினும் பெரிதாகும். 1166 காம வெள்ளத்து நீந்திக் கரைதெரியேன்; நடுச்சாமத்தும் தனியே விழித்துள்ளேன். 1167 எல்லா உயிரையும் துயிலச் செய்து அருளியபின் இரவிற்கு என்னை யல்லது துணையில்லை. 1168 இப்போது நேரமாகி விடியும் இரவுகள் பிரிந்த தலைவரினும் கொடுமையுடையன. 1169 அவர் இடத்துக்கு என்மனம் போவதுபோல் கண்களும் போக முடியின் கண்ணீரில் நீந்தா. 1170 118. கண் விதுப்பழிதல் தீராத நோயைக் கண்காட்ட நான் பெற்றேன்; நோய் தந்த கண் இப்போதுஏன் அழுகின்றன? 1171 அன்று ஆராயாது அவரை நோக்கிய கண்கள் இன்று பொறுக்காமல் துன்பப் படுவது ஏன்? 1172 அன்று விரைந்து பார்த்தன; இன்று அழுகின்றன; இது கேலிக்கு உரியது. 1173 தப்ப முடியாத நோயை எனக்குத் தந்து விட்டுக் கண்கள் இனி அழமுடியாமல் வறண்டன. 1174 கடலினும் பெரிய காமம் தந்த என் கண்கள் தூங்க முடியாது துன்பப் படுகின்றன. 1175 எனக்கு இத்துன்பம் தந்த கண்கள் தாமும் அத்துன்பப் படுவது எவ்வளவோ மகிழ்ச்சி. 1176 விரும்பி உருகிக் காதலரைக் கண்ட கண்கள் வருந்தி வருந்தி வறண்டு போகட்டும். 1177 மனமின்றியே காதலித்தார் ஒருவர் உளர்; அவரைப் பாராது கண்கள் தூங்கா. 1178 அவர் வாராவிடினும் தூங்கா; வரினும் தூங்கா; இருநிலையிலும் கண்கள் பெருந்துயர்ப்பட்டன. 1179 பறைபோலும் கண்ணுடைய மகளிரிடமிருந்து மறைவை ஊரார் அறிதல் கடினமில்லை. 1180 119. பசப்புறு பருவரல் பிரிவை விரும்பியவர் கொடுமைக்கு இசைந்தேன்; பின் என்பசலையை யார்க்குச் சொல்வது? 1181 தந்தவர் அவர் என்னும் பெருமிதங் கொண்டு பசலை படர்ந்து என் மேனிமேல் ஏறும். 1182 காமத்தையும் பசலையையும் மாற்றாகத் தந்து சாயலையும் நாணையும் எடுத்துக் கொண்டார். 1183 நினைப்பதும் பேசுவதும் எல்லாம் அவரையே; இருந்தும் பசலைவந்தது கள்ளத்தனமா வேறா? 1184 அதோ பார்! காதலர் போகிறார்; இதோபார்! என்மேனிமேல் பசலை படர்கிறது. 1185 இருள் வெளிச்சம் மறைவதை எதிர் பார்க்கும்; பசலை தலைவன் தழுவாமையை எதிர்பார்க்கும். 1186 தழுவிக்கிடந்த நான் சிறிது தள்ளிப்படுத்தேன்; அவ்வளவிற்கே பசலை கொட்டிக் கிடந்தது. 1187 பசலையுற்றாள் இவள் எனப் பழிக்கின்றனர்; பிரிந்தாரே அவர் எனச் சொல்வார் இல்லை. 1188 பிரிவை இசைவித்த தோழி நலம் எனின் பட்டுப் போலும் என் மேனி பசக்கட்டும். 1189 தோழி அவர் கொடுமையைத் துற்றாளெளின் பசலைப்பேர் பற்றிக் கவலையில்லை. 1190 120. தனிப்படர் மிகுதி நாம் காதலித்தவர் நம்மைக் காதலித்தால் கொட்டையிலாத காமப்பழம் பெற்றது போலும். 1191 காதலியர்க்குக் காதலர் காட்டும் அன்பு எதிர்பார்த்த உழவர்க்கு மழைபெய்ததுபோல் 1192 காதலரால் என்றும் காதலிக்கப் பட்டார்க்கு வாழ்கின்றோம் என்ற பெருமிதம் பொருந்தும். 1193 தாம் விரும்பியவரே விரும்ப வில்லை யெனின் விரும்பிய மகளிர் எவ்வுறவும் இல்லாதவர். 1194 நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கா விடின் அவர் நமக்கு வேறு என்ன நலம் செய்வார்? 1195 காமம் ஒரு பக்கம் இருப்பது துன்பம்; காவடிப் பாரம்போல் இருபக்கமும் இருப்பது துன்பம். 1196 மன்மதன் ஒருவரிடமே இருக்கின்றான் ஆதலின் காமத் துன்பமும் வருத்தமும் அறியானோ? 1197 காதலரின் இன்சொல்லைப் பெறாமல் பிரிந்து உலகத்து இருக்கும் மகளிரே கொடியவர். 1198 காதலர் அருளார் எனினும் அவரைப் பற்றிக் கூறும் புகழ்ச் சொற்கள் காதுக்கு இன்பமாம். 1199 துன்பப் படாதவர்க்கு நீ உற்ற துன்பத்தைத் தூதாற் சொல்; நெஞ்சே! கடலை வெறுக்காதே. 1200 121. நினைந்தவர் புலம்பல் நினைத்தாலும் நீங்காத மகிழ்ச்சி தருதலால் கள்ளைக் காட்டிலும் காமம் இன்பமானது. 1201 எந்த அளவிற்கும் இனியது காமம்; காதலர் நினைத்தால் துன்பம் ஒன்றும் வாராது. 1202 தும்மல் வருவதுபோல நின்றுவிடுதலின் அவர் என்னை நினைப்பதுபோல விட்டுவிடுவாரோ? 1203 அவர் நெஞ்சில் நான் இருக்கின்றேனா? என் நெஞ்சிலோ அவர் நன்றாக இருக்கின்றார். 1204 தன் நெஞ்சில் என்னை வரவொட்டா தவர் என் நெஞ்சில் ஓயாது வர நாணவில்லையே. 1205 அவரோடு கூடியிருந்த நாட்களை நினைப்பதால் வாழ்கின்றேன்; வேறு எதனால் வாழ்கின்றேன்? 1206 கூட்டத்தை மறந்தால் என்னாவேன்? மறவேன்; பிரிவை நினைப்பினும் உள்ளம் கொதிக்கும். 1207 எத்தனைமுறை நினைத்தாலும் காதலர் சினவார்; எனக்கு அவர்காட்டும் பெருமை அவ்வளவு. 1208 நாம் ஒருவர் என்று சொன்ன காதலரின் கொடுமையை மிகஎண்ணி என் உயிர் போகும். 1209 துணிந்து சென்றவரைக் கண்டுபிடிப்பதற்குள் திங்களே! நீ மறைந்து விடாதே; வாழ்க. 1210 122. கனவுநிலை உரைத்தல் காதலரின் தூதாக வந்த கனவுக்கு என்ன விருந்து நான் செய்வேன்? 1211 கண்கள் தூங்கின் கனவில் வரும் காதலர்க்கு எப்படிப் பிழைத்துளேன் என்பது சொல்வேன். 1212 நனவிலே வந்து அணையாத காதலரைக் கனவிலேனும் பார்த்தலின் என்உயிர் உண்டு. 1213 நனவில் அருளாதவரைத் தேடிக் காட்டுதற்குக் கனவில் காமம் உண்டாகின்றது. 1214 கனவும் பார்க்கும் அப்போது இனிது; நனவும் அவரைப் பார்க்கும் அப்போது இனிது. 1215 விழிப்புநிலை என்பது ஒன்று இல்லையெனின் காதலர் கனவை விட்டு நீங்கார். 1216 நேரிலே வந்து அன்பு bய்யாத கொடியவர் கனவிலே வந்து என்னை வருத்துவது ஏன்? 1217 தூங்கும்போது கனவில் தோள்மேல் இருந்து விழித்தவுடன் நெஞ்சிற்குள் போய்விடுவர். 1218 கனவிலும் காதலரைக் காணாதவர்கள்தாம் நேரிலே அருளாத அவரைப் பழிப்பர். 1219 நனவிலே விட்டுப்பிரிந்தார் என்பர் இவ்வூரார்; கனவிலே வருவதை அறியமாட்டார்களோ? 1220 123. பொழுதுகண்டு இரங்கல் பொழுதே! நீ மாலைக்காலமா? இல்லை; கூடிப்பிரிந்தார் உயிர்குடிக்கும் கூரியவேல். 1221 மயங்கும் மாலையே! நீயும் வருந்துகின்றாய்; என் காதலன்போல் நின்காதலனும் கொடியனா? 1222 நடுங்கி வருந்தும் மாலை வெறுப்பு ஊட்டிப் பிரிவுத் துன்பம் பெருகுமாறு வருகின்றது. 1223 காதலர் இல்லாதபோது மாலைக் காலம் கொலைக்களத்துக்குப் பகைவர்போல வரும். 1224 காலைப் பொழுதுக்கு நான் செய்த நலம் என்ன? மாலைப் பொழுதுக்கு நான் செய்த தீமை என்ன? 1225 மாலைக்காலம் நோய் செய்யும் என்பது காதலர் பிரியாதபோது எனக்குத் தெரியாது. 1226 காமம் என்னும் பூ காலையில் அரும்பும்; பகலெல்லாம் மொட்டாகும்; மாலையில் மலரும். 1227 புல்லாங்குழல் என்னைக் கொல்லும் படையாகும்; தீப்போன்ற மாலைக்குத் தூதும் ஆகும். 1228 திங்களோடு மாலைக்காலம் வரும்போது ஊரே மயங்கி வருந்தும். 1229 பொருள் மயக்கம் உடையவரை நினைந்து பொறுத்த என்னுயிர் இம்மாலையில் போகும். 1230 124. உறுப்புநலன் அழிதல் நமக்குத் துன்பம் தந்து தொலை சென்றாரை நினைந்தழுத கண்கள் மலருக்கு நாணின. 1231 சோகைநிறம் பெற்று அழுகின்ற கண்கள் காதலரின் கொடுமையைக் காட்டுவன போலும். 1232 கூடியநாளில் பெருத்த தோள்கள் மெலிந்து அவர் பிரிவை அம்பலப்படுத்துவன போலும். 1233 துணைவரைப் பிரிந்து அழகு வாடிய தோள்கள் பருமன் நீங்கி வளையல்களைக் கொட்டும். 1234 வளையல்களும் வனப்பும் சுருங்கிய தோள்கள் கொடியவரின் கொடுமையைச் சொல்லுகின்றன. 1235 வளையலும் தோளும் நெகிழ்வதால் அவரைக் கொடியரெனக் கூறக்கேட்டு வருந்துகிறேன். 1236 காதலர்க்கு மெலியும் தோள்களின் மாறுபாட்டைச் சொல்லி, நெஞ்சே! பெருமை அடையாயா? 1237 அணைத்த கைகளைத் தளர்த்திய அளவிற்கே இப்பேதையின் நெற்றி பசலை பெற்றது. 1238 தழுவலிடைக் குளிர்காற்றுப் புகந்த அளவிற்கே இப்பேதையின் குளிர்ந்த கண்கள் பசந்தன. 1239 நல்ல நெற்றி பசலை அடைந்ததைப் பார்த்துக் கண்ணின் பசலையோ வருத்தப்பட்டது. 1240 125. நெஞ்சொடு கிளத்தல் சிறிதாயினும் காமநோய் தீர்க்கும் மருந்தினை நெஞ்சே! எண்ணிப் பார்த்துச் சொல்லாயா? 1241 நம்மேல் காதல் இவருக்கு இல்லாத போது நீ வருந்துவது நெஞ்சே! மடமை. 1242 நெஞ்சே! நீ இருந்து நினைந்து வருந்துவதேன்? அன்பெண்ணம் நோய் செய்தாருக்கு இல்லை. 1243 நெஞ்சே! கண்களையும் அழைத்துக்கொண்டு போ; அவரைக் காண விரும்பி என்னைத் தின்னும். 1244 நாம் துன்புற்றாலும் வாராதவர், நெஞ்சே! நம்மைக் கைவிட்டாரென விட முடியுமா? 1245 கூடியுணர்த்தும் அவரைக்கண்டால் வெறுக்காய்; நெஞ்சே! இப்போது பொய்யாக வெறுக்கிறாய். 1246 காமத்தை விடு அல்லது நாணத்தை விடு; நெஞ்சே! இரண்டையும் நான் தாங்கேன். 1247 காதலர் அருளார் என்றேங்கி நெஞ்சே! பிரிந்தவர்பின் போவாய்; நீ பேதை. 1248 காதலர் உள்ளத்தில் இருக்கவும் நெஞ்சே! நீ யாரிடம் செல்ல நினைக்கின்றாய்? 1249 வாராது துறந்தவரை நெஞ்சில் வைத்திருக்கவும் இன்னும் அழகை இழக்கின்றோம். 1250 126. நிறையழிதல் நாணத் தாழ்ப்பாள் இட்ட உறுதிக் கதவைக் காமக் கோடாலி தகர்த்து விடும். 1251 காமம் என்பது சிறிதும் இரக்கம் இல்லாமல் என்நெஞ்சத்தை நடுயாமத்தும் ஆளுகின்றது. 1252 நான் காமத்தை மறைக்கத்தான் செய்கின்றேன்; திடீரெனத் தும்மல்போல் வெளியாகின்றது. 1253 உறுதியுடை யேன் என்று சொல்லுவேன் நான்; என் காமமோ ஒளிவின்றி அம்பலப்படும். 1254 வெறுத்தவர்பின் செல்லாத மானவுணர்ச்சி காமநோயாளிக்குத் தெரியக் கூடியதன்று. 1255 வெறுத்தவரின் பின்னே செல்ல விரும்புதலால் என்னைச் சேர்ந்த நோய் இரக்கத்தக்கது. 1256 காதலர் காமத்தோடு நாம் விரும்பியன செய்யின் நாணம் என்ற உணர்ச்சி நமக்குத் தெரியாது. 1257 பசப்புடைய காதலனது தாழ்ந்த மொழியன்றோ நம்பெண்மைக் கதவைத் தகர்க்கும் படை. 1258 நெஞ்சம் கூட விரும்புவதைப் பார்த்துவிட்டுப் பிணங்கச் சென்ற நானும் தழுவினேன். 1259 தீயில் இட்ட கொழுப்புப்போல் உருகுபவர்க்குக் காதலரை நெருங்கி ஊடி நிற்க முடியுமா? 1260 127. அவர்வயின் விதும்பல் அவர்வரும் வழிபார்த்துக் கண்களும் மழுங்கின; அவர்சென்ற நாள்எண்ணி விரலும் தேய்ந்தன. 1261 தோழியே! இன்று அவரை மறந்தால் என்தோள் அழகு கெட்டு வளை கொட்டும். 1262 உறுதியை நம்பி ஊக்கத்தோடு சென்றவர் வருதலை நம்பி இன்னும் வாழ்கின்றேன். 1263 கூடிப்பிரிந்தவர் வருகின்றாரா என்று என் நெஞ்சம் கிளை தோறும் ஏறிப்பார்க்கும். 1264 என்காதலனைக் கண்ணாரக் காண்பேன்; பின்பு என்தோளின் பசலை நிறம் நீங்கிவிடும். 1265 என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவான்; என்நோயெல்லாம் கெட அவனை நுகர்வேன். 1266 கண்போன்ற காதலர் வந்தால் ஊடுவேனா? தழுவுவேனா? கூடுவேனா? 1267 வேந்தன் போரில் ஈடுபட்டு வென்று வருக; மனையில் மகிழ்ந்து மாலையில் விருந்திடுவோம். 1268 தொலைசென்றார் வரும் நாளை எண்ணுபவர்க்கு வாராத ஒருநாள் ஏழுநாள் போல் தோன்றும். 1269 உள்ளம் உடைந்து சிதறியபின் அவரைப் பெற்றால் என்ன? தழுவினாலும் என்ன? 1270 128. குறிப்பறிவுறுத்தல் நீ மறைத்தாலும் மீறி உன் கருங்கண்கள் ஏதோ ஒன்றைச் சொல்லுகின்றன. 1271 கண்நிறைந்த அழகும் மூங்கில்போன்ற தோளும் பெற்ற காதலிக்குப் பெண் தன்மை மிகுதி. 1272 மணிக்கோவையுள் நூல் தெரிவது போல மங்கை அழகில் ஒருகுறிப்புத் தெரிகின்றது. 1273 மொட்டுக்குள் மணம் இருத்தல் போல இவள் சிரிப்புக்குள் ஒரு குறிப்பு உண்டு. 1274 வளை நிறைந்தவள் செய்து போன கள்ளத்தில் என் துயர் தீர்க்கும் மருந்து உண்டு 1275 மிக அன்பு காட்டி ஆசையாகக் கூடுவதில் பிரியும் கொடுமைக் குறிப்பு உண்டு. 1276 குளிர்ந்த துறைவன் பிரிவான் என்பதை நம்மினும் முந்தி வளையல்கள் உணர்ந்தன. 1277 நேற்றுத்தான் காதலர் பிரிந்தார்; அதற்குள் ஏழுநாள் அளவு பசலை அடைந்துவிட்டேன். 1278 வளையலையும் தோளையும் காலையும் பார்த்தாள்; இது பிரிவு சொன்னபோது அவள் செய்தது. 1279 காமநோயைக் கண்ணாற் சொல்லி வேண்டுதல் சிறந்த பெண்தன்மை என்று சொல்லுவர். 1280 129. புணர்ச்சிவிதும்பல் நினைக்கவும் காணவும் மகிழ்ச்சி தருதல் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு. 1281 பனையளவு காமவேட்கை பெருகுமாயின் தினையளவுகூட ஊடுதல் ஆகாது. 1282 புறக்கணித்துத் தாம் விரும்பியனவே செய்தாலும் காதலனைக் காணாமல் என் கண்கள் பொருந்தா. 1283 தோழி! நான் ஊடச் சென்றேன்; என்நெஞ்சோ அது மறந்து கூடச் சென்றது. 1284 மைதீட்டுங்கால் தூரிகை கண்ணுக்குத் தெரியாது; அவரைக்கண்டபோது பழி எனக்குத் தெரியாது. 1285 காணும்போது அவர் பிழையைக் காண்பதில்லை; காணாதபோது பிழைதவிர வேறு காண்பதில்லை. 1286 கரை சேர்த்தலை அறிந்து நீரில் பாய்வதுபோல் பொய் என்று தெரிந்தும் ஊடிப் பயன் என்ன? 1287 இழிவான துன்பங்கள் செய்யினும், கள்வனே! நின்மார்பு குடியர்க்குக் கள் போன்றது. 1288 காமவுணர்வு மலரைவிட மென்மையானது அதன்பக்குவம் அறிந்து துய்ப்பார் மிகச்சிலரே. 1289 தழுவுதற்கு என்னைவிடத் தான் துடிதுடித்துக் கண்ணால் ஊடிக் கலங்கினாள். 1290 130. நெஞ்சோடு புலத்தல் அவர்மனம் அவர்பக்கம் இருப்பதைப் பார்த்தும் என்மனமே! நீ என்பக்கம் இராதது ஏன்? 1291 பொருந்தாதவரின் நிலைதெரிந்த பின்னும் வெறுக்கார் என்று என் நெஞ்சே! போகின்றாய். 1292 நெஞ்சே! உன்நோக்கப்படி அவரிடம் செல்லுதல் கெட்டவர்க்கு நண்பரில்லை என்பது கருத்தோ? 1293 நெஞ்சே! முதலில் பிணங்கிப் பின் கூடாய்; இனி அத்தகைய உன்னோடு யார் ஆராய்வார்? 1294 என் நெஞ்சம் என்றும் துன்பம் உடையது; கூடாமைக்கும், கூடின் பிரிவுக்கும் வருந்தும். 1295 தனித்திருந்து அவரை நினைத்த போது என்நெஞ்சம் என்னைத்தின்ன உடனிருந்தது. 1296 அவரை மறக்கமுடியாத மடமையுடைய சிறிய நெஞ்சின்வயப்பட்டு நாணை விட்டேன். 1297 இகழ்தல் இழிவென்று அவர் பண்புகளையே உயிர்ப்பற்றுடைய நெஞ்சு எண்ணும். 1298 தன்னுடைய நெஞ்சமே துணையாகாத போது துன்பக் காலத்து வேறு யார் துணையாவார்? 1299 தன்னுடைய நெஞ்சமே உறவாகாத போது அயலவர் உறவாகாமை இயல்புதானே. 1300 131. புலவி தழுவாது இருந்து பிணங்குக; அப்போது அவர் படும் துன்பத்தைச் சிறிது காண்போம். 1301 ஊடல் உணவுக்கு உப்பளவு போன்றது; ஊடல் மிகுவது உப்புக் கூடுவது போலும். 1302 பிணங்கிய மகளிரைத் தழுவாது விடுதல் வருந்தியவரை மேலும் வருத்துதல் போலாம். 1303 ஊடிய மகளிரை உணராத் தன்மை வாடிய கொடிய அடியோடு அறுத்தது போலும். 1304 நற்பண்பு உடைய ஆடவர்க்கு அழகு மலரன்ன மகளிரின் ஊடலை நீக்குதல். 1305 துனியில்லாக் காமம் பழம் ஒக்கும்; புலவி யில்லாக் காமம் பிஞ்சு ஒக்கும். 1306 கூட்டம் நீளாதா என்று ஐயப் படுதலின் ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு. 1307 கூடுதற்கு வருந்தினார் என்று ஊடலைப்புரியும் காதலர் இல்லாதபோது வருந்திப் பயனென்? 1308 நீரும் நிழலிடத்தே குடித்தல் இனியது; பிணக்கமும் விரும்புவாரிடத்தே இனியது. 1309 ஊடலை வாட விடுவாரோடு என்மனம் கூட நினைப்பது வெறும் ஆசையே. 1310 132. புலவி நுணுக்கம் பரத்தையர் உன்னைக் கண்ணால் நுகர்வர்; ஆதலின் பரத்தனே! நின் மார்பு தீண்டேன். 1311 பேசாது ஊடியபோது தும்மினார்; அவரை நீடுவாழ்க என்று சொல்வேனென நினைத்து. 1312 குவியாத கோட்டுப்பூவைச் சூடினும் ஊடாத பரத்தையைக் காட்டச் சூடியதாகச் சினப்பாள். 1313 யாரையும் விடக் காதல் உடையோம் என்றதும் யாரைவிட யாரைவிட என்று பிணங்கினாள். 1314 இப்பிறப்பில் பிரிய மாட்டோம் என்றதும் மறுபிறப்பில் பிரிவுண்டோ என்று அழுதாள். 1315 நினைத்தேன் என்றேன்; திரும்ப நினைக்குமாறு முன் ஏன் மறந்தீர் என்று தழுவாது ஊடினாள். 1316 தும்மினேன் வாழ்த்தினாள்; திரும்ப அழுதாள் யார் நினைத்ததால் தும்மல் வந்ததென்று. 1317 வந்த தும்மலை அடக்கினேன் அதற்கும் அழுதாள் உம்பெண்டிர் நினைப்பதை ஒளிக்கிறீர் என்று. 1318 அவள் ஊடலைப் பணிந்து நீக்கினாலும் காய்வாள்; பிறரிடமும் இங்ஙனந்தானே நடப்பீர் என்று. 1319 அவள் அழகை உற்றுநோக்கினாலும் காய்வாள்; யாரோடு ஒப்பு நோக்கினீர் என்று. 1320 133. ஊடலுவகை அவரிடம் ஒரு தவறும் இல்லை யாயினும் ஊடல் அவரைப் பேரன்பு கொள்ளச் செய்யும். 1321 ஊடலால் சிறுபொழுது தோன்றும் வெறுப்பு அவரன்பை வருத்தினும் பெருமைக்கு உரியது. 1322 மன்ணோடு நீர் குழைந்தாற்போன்ற காதலரிடம் ஊடதலைவிடத் தேவருவலகம் இன்பமானதோ? 1323 காதலரை உடனே தழுவிவிடாத ஊடலில் என்நிறையை உடைக்கும் படை பிறக்கின்றது. 1324 தவறில்லை யாயினும் தன்காதலியின் தோளைச் சிறிது பிரிந்திருத்தலில் ஓரின்பம் உண்டு. 1325 உண்பதைவிட உண்டது செரித்தல் இன்பம்; காமம் சேர்தலைவிடப் பிணங்குதல் இன்பம். 1326 ஊடலில் தோல்விப்பட்டவரே வென்றவர்; அவ்வுண்மை கூடுஞ் செய்கையில் விளங்கும். 1327 நெற்றி வேர்க்கப் புணர்ந்த இனிமையை இன்னும் ஒருமுறை ஊடிப் பெறுவேனா? 1328 காதலி மேன்மேலும் ஊடுக; நான் வேண்ட இரவு நேரம் மேன்மேலும் நீளுக. 1329 காமவுணர்ச்சிக்கு ஊடுதல் இன்பம்; கூடித் தழுவுவதே அதற்குப் பேரின்பம். 1330 கம்பர் நாற்பது முதற் பதிப்பு 1984 இந்நூல் 1969இல் பாரிநிலையம் வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன. முன்னுரை ‘புகழ்க் கம்பன் பிறந்த தமிழ் நாடு’ என்று பாராட்டிப் பாடினார் தேசியக்கவி பாரதியார். தமிழ்நாட்டில் கம்பன் பிறந்தவூர் சோழநாட்டுத் தேரழுந்தூர் எனவும், உலகப் பெருங்காப்பியமான இராமாயணத்தைச் செவிநுகர் கனிகளாகப் பாடிப் புகழ்பெற்று மறைந்த ஊர் பாண்டிநாட்டின் நாட்டரசன்கோட்டை எனவும் வரலாறு சொல்கின்றது. ஆதலின், நாட்டரசன் கோட்டை வளாகத்தில் வாழும் நம் சிறுவர்களும் சிறுமிகளும் கம்பரின் செய்யுட்களைக் கற்பது கடமையும் பெருமையும் ஆகும். இளைய உள்ளங்களில் கம்பரின் பாடல் வித்துக்களைப் பதியவைக்கும் நோக்கோடு, இராமயணத்திலிருந்து எளிய இனிய நாற்பது பாடல்களைப் பொறுக்கிக் கருத்துரையும் எழுதிக் கம்பர் நாற்பது என்ற பெயரால் இச்சிறுநூலை ஆக்கித்தந்தார் அறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்கள். வனப்பும் நயமும் சிறந்த இச் சிறுநூலை சிவசத்தி அறநிலையத்தின் சார்பாக நன்கு பரவும் நோக்கோடு வெளியிடுகின்றோம். கம்பரின் காப்பியப் பாடல்கள் சிலவேனும் பலர்க்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று கருதிய நல்லன்பர் நாட்டரசன் கோட்டை திரு. ஏ. சத்தியமூர்த்தி அவர்கள் இந்நூல் வெளியிட்டிற்கு வேண்டும் துணை செய்தார்கள். இத் தொகுப்பினைக் கம்பரிடத்தில் ஈடுபாடு கொண்டவர் எவரும் கற்கலாம். சிறப்பாகப் பள்ளி மாணவ மாணவியர் கற்பது நல்ல தமிழறிவைத் தரும். படிக்குமுறை 1. சொற்களைப் பிரித்துச் சிதைக்காமல், ஓசையும் தொடையும்படச் சேர்த்துப் படிக்க வேண்டும். 2. செய்யுட்களை இடையே நிறுத்தாமல், அடியடியாகப் படிக்க வேண்டும். 3. எல்லாச் செய்யுட்களையும் வரப்பண்ண வேண்டும். இருமுறை படித்தால் மனனம் ஆகிவிடும். 4. கருத்துரையும் சேர்த்துப் படிக்க வேண்டும். 5. எல்லாவற்றையும் எழுதியும் பார்த்தல் வேண்டும். பிழை வராது. கம்பர் நாற்பது கடவுள் வணக்கம் 1 உலகம் யாவையுந் தாமுள வாக்கலும் நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவிளை யாட்டுடை யாரவர் தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே. உலகங்கள் எல்லாவற்றையும் தாமே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றும் நீங்காத, எண்ணற்ற விளையாட்டுக் களை உடையவர் யாவரோ, அவரே தலைவர்; அவர்க்கே நாங்கள் அடைக்கலம். நூலின் பெருமை 2 ஓசை பெற்றுயர் பாற்கட லுற்றொரு பூசை முற்றவும் நக்குபு புக்கென ஆசை பற்றி யறையலுற் றேன்மற்றிக் காசில் கொற்றத் திராமன் கதையரோ! அலையோசையோடு உயர்ந்தெழும் திருப்பாற்கடலை அடைந்து, அதிலுள்ள பால் முழுவதையும் ஒரு சிறு பூனை ஆசையினால் பருகப் புகுந்ததுபோல, யானும் குற்றமற்ற வெற்றியுடைய இராமனின் கதையை என் ஆசையினால் சொல்லத் தொடங்கினேன். அவையடக்கம் 3 அறையு மாடரங் கும்படப் பிள்ளைகள் தறையிற் கீறிடில் தச்சருங் காய்வரோ? இறையு ஞான மிலாதவென் புன்கவி முறையின் நூலுணர்ந் தாரு முனிவரோ? பிள்ளைகள் தரையில் வீட்டறைகளும் நாடக சாலைகளும் தோன்றுமாறு கிறுக்கினால் அவை சிற்ப முறைப்படி இல்லையென்று சிற்பியர் கோபிக்கமாட்டார். அது போல, சிறிதும் அறிவில்லாத என் பாடல்கள் குற்ற முடையனவாயினும் முறையாக நூலுணர்ந்த புலவர்கள் என்னை முனிய மாட்டார்கள். மழைவளம் 4 புள்ளி மால்வரை பொன்னெனல் நோக்கிவான் வெள்ளி வீழிடை வீழ்ந்தெனத் தாரைகள் உள்ளி யுள்ளவெ லாமுவந் தீயுமவ் வள்ளி யோரின் வழங்கின மேகமே. பொன்மயமான இமயமலைமேல் வெள்ளிக் கம்பிகளை ஊன்றியது போலவும், உள்ளவற்றை எல்லாம் உவந்து வழங்கும் வள்ளல்களைப் போலவும், மேகங்கள் மழையைக் கொட்டின. கோசலநாட்டு வளம் 5 வரம்பெலா முத்தம் தத்தும் மடையெலாம் பணிலம் மாநீர்க் குரம்பெலாஞ் செம்பொன் மேதிக் குழியெலாங் பவளஞ் சாலிப் பரம்பெலாம் பவளஞ் சாலிப் பரப்பெலாம் அன்னம் பாங்கர்க் கரும்பெலாஞ் செந்தேன் சந்தக் காவெலாங் களிவண் டீட்டம். வயல் வரப்புக்களில் எல்லாம் முத்துக்கள்; தத்துநீர் மடைகளில் எல்லாம் சங்குகள்; வாய்க்காலின் கரைகளில் எல்லாம் செம்பொன்; எருமைகள் படிந்து புரளும் குழிகளில் எல்லாம் செங்கழுநீர்ப் பூக்கள்; பரம்படித்த வயல்களில் எல்லாம் பவழங்கள்; நெற்பயிர் எரந்த வயல்களில் எல்லாம் அன்னங்கள்; பக்கங்களில் உள்ள கரும்புகளில் எல்லாம் செந்தேன்; சந்தனச் சோலைகளில் எல்லாம் தேனுண்டு களிக்கும் வண்டுக் கூட்டங்கள். கோசலநாட்டு மருதநிலம் இவ்வளவு பெரிய வளம் மிக்கது. மருதநில நாட்டியம் 6 தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக் கொண்டல்கள் முழவி னேங்கக் குவளைகண் விழித்து நோக்கத் தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ. சோலை அரங்குகளில் மயில்கள் நடனமாடவும், தாமரைக் கொடிகள் பூவிளக்குக்களைத் தாங்கவும், மேகங்கள் மத்தளம் ஒலிக்கவும், கருங்குவளைகள் கண்விழித்துக் காணவும், அலைகள் திரைச்சீலையாகவும், வண்டுகள் யாழிசை யொலிக்கவும், கோசலநாட்டில் மருதநிலமென்ற மன்னன் அரசு வீற்றிருப்பான். இயற்கையின் அமைதி 7 நீரிடை யுறங்குஞ் சங்கம் நிழலிடை யுறங்கும் மேதி தாரிடை யுறங்கும் வண்டு தாமரை யுறங்குஞ் செய்யாள் தூரிடை யுறங்கும் ஆமை துறையிடை யுறங்கும் இப்பி போரிடை யுறங்கும் அன்னம் பொழிலிடை யுறங்குந் தோகை. சங்குகள் நீரிடையே உறங்குகின்றன; அவற்றிற்கு இடையூறு செய்யாமல் எருதுகள் நிழலிடையே உறங்குகின்றன; ஆடவர் அணிந்திருக்கும் மாலைகளில் வண்டுகள் உறங்கு கின்றன; செந்தாமரைப் பூக்களில் திருமகள் உறங்குகின்றாள்; சேற்றிடங்களில் ஆமைகள் உறங்குவதனால் துறையிடங்களில் முத்துச் சிப்பிகள் உறங்குகின்றன; வைக்கோற் போர்களில் அன்னங்கள் உறங்க, சோலைகளில் மயில்கள் உறங்குகின்றன. இவ்வாறு கோசல நாட்டில் அடுத்தவர்க்கு இடையூறின்றி எல்லாம் இன்புறுகின்றன. பிள்ளை வளர்ப்பு 8 சேலுண்ட வொண்க ணாரின் திரிகின்ற செங்க லன்னம் மாலுண்ட நளினப் பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை காலுண்ட சேற்று மேதி கன்றுள்ளிக் கனைப்பச் சோர்ந்த பாலுண்டு துயிலப் பச்சைத் தேரைதா லாட்டும் பண்ணை. கோசலநாட்டுப் பண்ணைகளில் கயற்கண்களுடைய மகளிர் நடைபோலத் திரிகின்ற அன்னம், தாமரைப் படுக்கையில் கிடத்திச் சென்ற அன்னப் பிள்ளை, கன்றுகளை நினைத்த எருமைகளின் மடியிலிருந்து பெருகிய பாலையுண்டு துயிலும். அப்போது பச்சைத் தவளைகள் தாலாட்டுப் பாடும். தேன்வளம் 9 ஆலைவாய்க் கரும்பின் தேனும் அரிதலைப் பாளைத் தேனும் சோலைவீழ் கனியின் தேனும் தொகையிழி இறாலின் தேனும் மாலைவா யுகுந்த தேனும் வரம்பிகந் தோடி வங்க வேலைவாய் மடுப்ப வுண்டு மீனெலாங் களிக்கு மாதோ. கோசல நாட்டிலுள்ள ஆலைகளில் கருப்பஞ் சாறாகிய தேனும், தென்னம்பாளைத் தேனும், கனிகளின் தேனும், தேனீக் கூட்டிலிருந்து வழிந்த தேனும், மாலைகளிலிருந்து சிந்திய தேனும், இவையெல்லாம் அளவுகடந்து ஓடிக் கடலிற் சேர, அதிலுள்ள மீன்களெல்லாம் இத் தேன்களையுண்டு களிப்படையும். பால்வளம் 10 ஈர நீர்ப்படிந் திந்நிலத் தேசில கார்க ளென்ன வருகரு மேதிகள் ஊரில் நின்றகன் றுள்ளிட மென்முலை தாரை கொள்ளத் தழைப்பன சாலியே. குளிர்ந்த நீரில் மூழ்கிக் கிடந்து, நிலத்து மேகம்போல எழுந்துவரும் எருமைகள் தம் கன்றுகளை நினைத்து மடி சுரந்த பால்வெள்ளத்தால் கோசல நாட்டில் செந்நெற் பயிர்கள் தழைத்து வளரும். அட்டில்வளம் 11 முட்டி லட்டில் முழங்குற வாக்கிய நெட்டு லைக்கழு நீர்நெடு நீத்தந்தான் பட்ட மென்கமு கோங்கு படப்பைபோய் நட்ட செந்நெலின் நாறு வளர்க்குமே. சமையற்கூடங்களில் உலையரிசி கழுவிய நீர் வெள்ளம் நீர்க்கரைகளில் வளர்ந்தோங்கிய மெல்லிய பாக்கு மரத் தோட்டத்தின் வழியே ஓடிக் கழனிகளில் நடப்பட்ட செந்நெல் நாற்றுக்களை வளர்க்கும். ஓசைவளம் 12 தினைச்சி லம்புவ தீஞ்சொ லிளங்கிளி நனைச்சி லம்புவ நாகிள வண்டுபூம் புனைச்சி லம்புல புள்ளினம் வள்ளியோர் மனைச்சி லம்புவ மங்கல வள்ளையே. கோசல நாட்டுத் தினைப்புனங்களில் இனிய சொற்பேசும் இளங்கிளிகள் ஒலிக்கும்; பூவரும்புகளில் மிக்க இளமையான வண்டுகள் ஒலிக்கும்; நீர்நிலைகளில் பறவைக் கூட்டங்கள் ஒலிக்கும்; வள்ளல்களின் மனைகளில் நெல் குற்றும் மகளிர் பாடும் மங்கலமான வள்ளைப் பாட்டுக்கள் ஒலிக்கும். திணைநெருக்கம் 13 வள்ளி கொள்பவர் கொள்வன மாமணி துள்ளி கொள்வன தூங்கிய மாங்கனி புள்ளி கொள்வன பொன்விரி புன்னையிற் பள்ளி கொள்வன பங்கத் தன்னமே. குறிஞ்சி நிலத்தில் வள்ளிக்கிழங்குகளைத் தோண்டி எடுக்கும் போது உடன்கிடைக்கும் மாமணிகளை வீசியெறி வதனால், பக்கத்தில் உள்ள மருதநிலத்து மாங்கனிகள் சிதைந்து தேன் துளிகளைச் சிந்தும்; மருதநிலத்துத் தாமரைகளில் தங்கும் அன்னம் பக்கத்தில் உள்ள நெய்தல் நிலத்துப புன்னை மலர்க் கொத்துககளில் படுத்துக் கொள்ளும். இவ்வாறு கோசல நாட்டில் நானிலங்களும் நெருங்கிக் கலந்திருந்தன. பெண்கல்வி 14 பெருந்த டங்கட் பிறைநுத லார்க்கெலாம் பொருந்து செல்வமுங் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க் கீதலும் வைகலும் விருந்து மன்றி விழைவன யாவையே. பெரிய கண்களையும் பிறைமதி போன்ற நெற்றியையும் உடைய மகளிர்க்கெல்லாம் தக்க செல்வச் செழிப்பும் கல்வியறியும் இருப்பதனால், வறுமையால் வாடி வந்தோர்க்கு வழங்குதலும், நாள்தோறும் விருந்தினரை ஓம்புதலுமே செய்வர். குடியொழுக்கம் 15 கலஞ்சு ரக்கும் நிதியங் கணக்கிலா நிலஞ்சு ரக்கும் நிறைவளம் நன்மணி பிலஞ்சு ரக்கும் பெறுதற் கரியதம் குலஞ்சு ரக்கும் ஒழுக்கம் குடிக்கெலாம். குடிகளுக்கெல்லாம் கணக்கில்லாத செல்வங்களைக் கடல் கடந்து சென்றுவரும் வணிகக் கலங்கள் கொடுக்கும்; நிறைந்த விளைவுச் செல்வத்தினை நிலங்கள் கொடுக்கும்; சிறந்த மணிகளை நிலச்சுரங்கங்கள் கொடுக்கும்; பெறுதற்கரிய ஒழுக்கத்தினைத் தத்தம் குலங்கள் கொடுக்கும். மாறில்லாதவை 16 கூற்ற மில்லையோர் குற்றமி லாமையால் சீற்ற மில்லைதஞ் சிந்தையிற் செம்மையால் ஆற்ற நல்லற மல்ல திலாமையால் ஏற்ற மல்ல திழிதக வில்லையே. எக்குற்றமும் இல்லாமையால் யாருக்கும் முன்பே இறப்பு நேருவதில்லை; சிந்தையில் செம்மைப் பண்பு இருப்பதால் யாருக்கும் சினம் விளைவதில்லை; நல்லதுதவிர வேறொன்றும் செய்வதற்கு இல்லாமையால் கோசல நாட்டவர்க்கு ஏற்றமே யன்றி இழிவென்பதில்லை. இலக்கியக் கனிகள் 17 கோதைகள் சொரிவன குளிரின நறவம் பாதைகள் சொரிவன பருமணி கனகம் ஊதைகள் சொரிவன உயிருறு மமுதம் காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள். மாலைகளெல்லாம் குளிர்ந்த இளந்தேனைச் சொரியும்; வழி நடக்கும் பாதைகளெல்லாம் மணிகளையும் பொன் களையும் சொரியும்; குளிர்ச்சியுடைய காற்றுக்களெல்லாம் அமுதச்சாரலைச் சொரியும்; இலக்கியமெல்லாம் செவிகள் நுகரும் கனிகளாகிய பாக்களைச் சொரியும். தேவையில்லாதவை 18 வண்மை யில்லையோர் வறுமை யின்மையால் திண்மை யில்லையோர் செறுந ரின்மையால் உண்மை யில்லைபொய் யுரைவி லாமையால் வெண்மை யில்லைபல் கேள்வி மேவலால். அந்நாட்டில் சிறிதும் வறுமை இன்மையால் கொடை யென்பதில்லை; போரிடுவோர் இன்மையால் எவரிடத்தும் வலிமை வெளிப்படவில்லை; யாரும் பொய் சொல்லாமையால் உண்மையென்ற பேச்சுக்கு இடமில்லை. எங்கும் பல்வகைக் கேள்விச் செல்வம் பொருந்தியிருத்தலால் அறியாமைக்கு இடமில்லை. நிலைக்களங்கள் 19 பொற்பின் நின்றன பொலிவு பொய்யிலா நிற்பின் நின்றன நீதி மாதரார் அற்பின் நின்றன அறங்கள் அன்னவர் கற்பின் நின்றன கால மாரியே. நாட்டு மக்களின் நற்பண்பாகிய அகத்தழகில் புறத் தழகுகள் நிலைபெற்றன; அவர்களின் பொய்ம்மையற்ற வாழ்வில் நீதிகள் நிலைத்து நின்றன; மகளிர் அன்பினில் இல்லறங்கள் நிலைபெற்றன; அவர்தம் கற்பினில் காலந்தவறாத பருவ மழைகள் நிலைபெற்றன. அயோத்திநகர்ச் சிறப்பு 20 தெள்வார் மழையுந் திரையாழியும் உட்க நாளும் வள்வார் முரச மதிர்மாநகர் வாழு மாக்கள் கள்வா ரிலாமைப் பொருட்காவலு மில்லை யாதும் கொள்வா ரிலாமைக் கொடுப்பார்களு மில்லை மாதோ. மேகத்தையும் கடலையும்விட ஓசை மிகுந்த முரசம் நாள் தோறும் ஒலிக்கும் அயோத்தி நகர மக்களுள் யாரும் கள்வர்கள் இல்லாமையால் எப்பொருட்கும் காவலுமில்லை; ஒரு பொருளையும் இரப்பார் இல்லாமையால் கொடுப்பாரும் இல்லை. இராமன் அம்பு 21 சொல்லொக்குங் கடிய வேகச் சுடுசரங் கரிய செம்மல் அல்லொக்கு நிறத்தி னாள்மேல் விடுதலும் வயிரக் குன்றக் கல்லொக்கும் நெஞ்சில் தங்கா தப்புறங் கழன்று கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற் றன்றே! சாபச்சொல்லை யொத்த கடுமையான வேகமுடைய அம்பினை இராமன் இருள்போன்ற தாடகை மேல் விட்டான். விட்டவுடன் அவ்வம்பு வைரமலை போன்ற அவளது நெஞ்சில் தைத்து நிற்காமல், அதனை ஊடுருவி முதுகுப்புறம் வெளிப்பட்டது. வெளிப்பட்டு, நல்லோர் சொன்ன கருத்துக்கள் கல்லாதவர் நெஞ்சில் நில்லாமற் போவனபோலப் போய்விட்டது. கொடிகளின் காட்சி 22 மையறு மலரி னீங்கி யான்செய்மா தவத்தின் வந்து செய்யவ ளிருந்தா ளென்று செழுமணிக் கொடிக ளென்னும் கைகளை நீட்டி யந்தக் கடிநகர் கமலச் செங்கண் ஐயனை யொல்லை வாவென் றழைப்பது போன்ற தம்மா. ‘திருமகள் தான் எப்போதும் தங்கியிருக்கும் தாமரை மலரை விட்டு யான் செய்த பெருந்தவப் பேற்றினால் என்னிடத்து வந்து அவதரித்திருக்கின்றாள்; அவளை மணக்க நீ விரைந்து வருவாயாக’ என்று மிதிலை நகரம், அழகிய கொடிகளென்னும் தன் கைகளையசைத்து இராமனை யழைப்பது போல் அந்தக் கொடிகள் அசைந்தன. இராமன் வீதியுலா 23 தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமல மன்ன தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரு மஃதே வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் ஊழ்கொண்ட சமயத் தன்னா னுருவுகண் டாரை யொத்தார். மிதிலை நகரவீதியில் உலாவரும் இராமனின் தோள் களையும் அடிகளையும் தனித்தனி கண்ட பெண்கள் அவ்வவற்றையே கண்டு நின்றனர். அவன்தன் வடிவழகு முழுவதையும் கண்டவர் யாருமில்லை. இக் காட்சி கடவுளின் ஒவ்வொரு வடிவத்தையே பார்த்து அதனையே வழிபடும் வேறுபட்ட சமயத்தாரைப் போன்றது. கையேயி கூறிய தசரதன் ஆணை 24 ஆழிசூ ழுலக மெல்லாம் பரதனே யாள நீபோய்த் தாழிருஞ் சடைகள் தாங்கித் தாங்கருந் தவமேற் கொண்டு பூமிவெங் கானம் நண்ணிப் புயீணயத் துறைக ளாடி எழிரண் டாண்டின் வாவென் றேவினன் அரச னென்றாள். “இந் நிலவுலகையெல்லாம் பரதனே ஆளுமாறு, நீ சடைகளைத் தாங்கித் தவத்தினை மேற்கொண்டு காட்டினை யடைந்து புண்ணிய நதித்துறைகளில் நீராடிப் பதினான்கு ஆண்டுகள் கழித்துப் பின்னர் வா என்று உன் தந்தை தசரத மன்னன் ஏவினான்” என இராமனிடம் கைகேயி மொழிந்தாள். இராமனின் முகப்பொலிவு 25 இப்பொழு தெம்ம னோரால் இயம்புதற் கெளிதோ யாரும் செப்பருங் குணத்தி ராமன் திருமுகச் செவ்வி நோக்கின் ஒப்பதே முன்பு பின்பவ் வாசகம் உணரக் கேட்ட அப்பொழு தலர்ந்த செந்தா மரையினை வென்ற தம்மா! அவ்வாறு கைகேயி மொழிந்ததைக் கேட்ட நிலையில் இராமனது திருமுகப்பொலிவினை இப்பொழுது எம் போல்வார் சொல்வதற்கு எளிதாகுமோ? இயல்பாகத் தாமரை மலரை ஒத்திருந்த இராமன் முகம் இக் கொடியசொல்லைக் கேட்டபின் மிக்க மகிழ்வால் தாமரையை வென்றுவிட்டது. இராமன் விடைபெறுதல் 26 மன்னவன் பணியன் றாகின் நும்பணி மறுப்பெ னோவென் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்றோ என்னினி யுறுதி யப்பால் இப்பணி தலைமேற் கொண்டேன் மின்னொளிர் கான மின்றே போகின்றேன் விடையுங் கொண்டேன். ‘இது மன்னவன் பணியன்றாயினும் நீர் பணித்த பணியை மறுப்பேனோ? என் பின் பிறந்தோனாகிய பரதன் அடைந்த அரசுச்செல்வம் அடியேனாகிய யான் அடைந்ததன்றோ? இதனைவிட நன்மை யாதுளது? இப் பணியைத் தலைமேற் கொண்டேன். காட்டிற்கு இன்றே போகிறேன். விடையினையும் பெற்றுக் கொண்டேன்’ எனக் கைகேயிடம் கூறிப் புறப்பட்டான் இராமன். ஊழ்வினை 27 வாழ்வினை நுதலிய மங்க லத்துநாள் தாழ்வினை யதுவரச் சீரை சாத்தினான் சூழ்வினை நான்முகத் தொருவன் சூழினும் ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற் பாலதோ? அரச வாழ்க்கைக்குரிய மங்கல நாளில் காட்டு வாழ்க்கை வர அதற்குரிய மரவுரியை இராமன் உடுத்தினான். முறைப்படி வரும் வினையை நான்முகனும் ஒழிக்க முடியாது. இராமன் மேனியழகு 28 வெய்யோ னொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப் பொய்யோவெனு மிடையாளொடும் இளையானொடும் போனான் மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ ஐயோவிவன் வடிவென்பதோர் அழியாவழ குடையான். சிற்றிடைச் சீதையோடும் தம்பி இலக்குவனோடும் காட்டிற்குச் செல்லும் இராமன் தன் கருநிற வொளியில் கதிரவனின் செவ்வொளி மறையப் போனான். அவன் மேனி நிறம் கரிய மையோ, மரகத மணியோ, கடலோ, சூல்கொண்ட மேகமோ! அவை யெல்லாவற்றினும் மேம்பட்ட அழகு டையவன் அவன். குகன் நட்புரை 29 ஆழநெ டுந்திரை யாறு கடந்திவர் போவாரோ வேழநெ டும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ? ஏழமை வேடன் இறந்திலன் என்றெனை யேசாரோ. பரதன் படையொடு வருவது பார்த்து, ‘இக் கங்கை யாற்றைக் கடந்தும் இப் படையாளர்கள் இராமனிடம் போவார்களா? இவர்களின் யானைப் படையைக் கண்டு அஞ்சிப் பின்வாங்கும் வீரனோ நான்? தோழன் என்று இராமன் என்னைச் சொல்லிய அச்சொல்லும் ஒப்பற்ற சொல்லன்றோ. கடந்து போக இவர்களை விடுவேனாயின் அதனை எதிர்த்து யான் இறந்தொழியவில்லையே என்று எல்லோரும் என்னை ஏசமாட்டாரோ’ என வெகுண்டுரைத்தான் குகன். குகன் வீரவுரை 30 ஆடு கொடிப்படை சாடி யறத்தவ ரேயாள வேடு கொடுத்தது பாரெனு மிப்புகழ் மேவீரோ நாடு கொடுத்தவென் நாயக னுக்கிவர் நாமாளும் காடு கொடுக்கில ராகி யெடுத்தது காணீரோ. ‘வேட்டுவ வீரர்களே! தான் ஆளுதற்குரிய நாட்டினையே இவர்களுக்குக் கொடுத்துவிட்ட இராமனுக்கு, நாம் ஆளுகின்ற காட்டினையும் கொடுக்க விடாதபடி அவன்மேல் படை யெடுத்து வருவதைப் பார்க்க மாட்டீரோ? பார்த்து, அப் படைகளை மடியத்தாக்கி அறத்தவராகிய இராமஇலக்குவரே ஆளுதற்குக் கோசல நாட்டை வேடுவர்கள் கொடுத்தார்கள் என்ற புகழை நீங்கள் அடையவேண்டாமா?’ குகன் கண்ட பரதனின் நிலை 31 வற்கலையி னுடையானை மாசடைந்த மெய்யானை நற்கலையின் மதியென்ன நகையிழந்த முகத்தானைக் கற்கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான் விற்கையின் றிடைவீழ விம்முறறு நின்றொழிந்தான். மரவுரியை உடையாக உடுத்தவனை, மாசுபடிந்த உடம்பினனை, கலையில்லாத மதிபோல ஒளியிழந்த முகத் தினனை, கல்லும் இளகும்படி பெருந்துன்பம் உடையவனான அப் பரதனைக் குகன் பார்த்தான்; பார்த்தவுடன் தன் கைவில் கீழே விழச் செயலற்று நின்றான். ஒப்பிலாப் பரதன் 32 தாயுரை கொண்டு தாதை யுதவிய தரணி தன்னைத் தீவினை யென்ன நீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கிப் போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால் ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியி னம்மா! ‘புகழுடைய பரதனே! உன் தாயின் வரத்தைக் கொண்டு தந்தை உனக்களித்த அரசாட்சியைத் தீயதுபோல் ஒதுக்கி விட்டாய். கவலை தேக்கிய முகத்தோடு இராமனை அழைத்துப் போக வந்தாய். உன் இயல்பினை நோக்கினால் ஆயிரம் இராமரும் உனக்கு ஒப்பாவரோ’ என்று பரதனைப் பாராட்டினான் குகன். தெய்வத் தமிழ் 33 உழக்குமறை நாலினும் உயர்ந்துலகம் ஓதும் வழக்கினு மதிக்கவி யினுமரபின் நாடி நிழற்பொலி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கண் தழற்புரை சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான். மழுப்படையும் நெற்றிக்கண்ணும் செம்மேனியும் உடைய சிவபெருமான், நான்மறையிலும் சிறந்த, உலகவழக்கும் செய்யுள்வழக்கும் உடைய தமிழை ஆராய்ந்து அகத்தியனுக்குத் தந்தான்; அகத்தியன் அதனை உலகுக்குத் தந்தான். சங்கப்பாடலும் கோதாவரியும் 34 புவியினுக் கணியா யான்ற பொருள்தந்து புலத்திற் றாகி அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறிய ளாவிச் சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதா வரியினை வீரர் கண்டார். கோதாவரியாறு, சங்கப் புலவோர் பாடிய அகத்திணைப் பாடல்களைப் போல இந் நிலவுலகுக்கு அணியாகும்; நிறைந்த பொருள்களைத் தரும் விளக்கம் பெற்றதாகும்; துறைகளை யுடையதாய்க் குறிஞ்சி முதலான ஐந்திணைகளின் வழியே ஓடும்; செம்மையுறத் தெளிந்து ஒழுங்குறச் செல்லும். சங்கத் தமிழிலக்கியம் போல விளங்கும் இத்தகைய ஆற்றினை இராமனும் இலக்குவனும் கண்டனர். பாண்டநாட்டுச் சிறப்பு 35 அத்தி ருத்தகு நாட்டினை யண்டர்நாடு ஒத்தி ருக்குமென றாலுரை யொக்குமோ எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ் முத்தும் முத்தமி ழுந்தந்து முற்றலால். சீதையைத் தேடிச் சென்ற வானரவீரர் கண்ட பாண்டிய நாடு, ஏழுலகத்தினரும் புகழுகின்ற முத்துக்களையும் முத்தமிழையும் தருகின்றது. இவற்றைத் தராத வானுலகம் பாண்டி நாட்டுக்கு ஒப்பாகுமா? சீதையின் தவக்கற்பு 36 விற்பெருந் தடந்தோள் வீர வீங்குநீர் இலங்கை வெற்பின் நற்பெருந் தவத்த ளாய நங்கையைக் கண்டேன் நல்லேன் இற்பிறப் பென்ப தொன்றும் இரும்பொறை யென்ப தொன்றும் கற்பெனும் பெயர தொன்றும் களிநடம் புரியக் கண்டேன். இராமனே! இலங்கையில் மிக்க தவம் செய்து கொண்டிருக்கும் சீதையைக் கண்ட பேறு பெற்றேன். நற்குடிப் பிறப்பு, மிக்க பொறுமை, திண்மையான கற்பு என்ற இவையெல்லாம் சீதையாக வடிவெடுத்து நடம்புரியவும் பார்த்தேன். நாம் எழுவர் 37 குகனொடும் ஐவ ரானோம் முன்புபின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவ ரானோம் எம்முழை யன்பின் வந்த அகனமர் காத லைய நின்னொடும் எழுவ ரானோம் புகலருங் கானந் தந்து புதல்வராற் பொலிந்தான் நுந்தை. “அயோத்தியில் நால்வராக உடன்பிறந்த நாங்கள் முன்னர்க கங்கைக் கரையில் குகனொடு சேர்ந்து ஐவரானோம். பின்னர்க் கிட்கிந்தையில் சுக்கிரீவனொடும் சேர்ந்து அறுவரானோம். இப்பொழுது எம்மிடத்தே அன்பினால் வந்தடைந்த வீடணனே, நின்னொடும் சேர்ந்து எழுவரானோம். புகுதற்கரிய காட்டினை எனக்குத் தந்து, நும் தந்தையாகிய தசரதன், புதல்வர்களைப் பெருக்கிக் கொண்டான்” என்று வீடணனுக்கு அடைக்கலமளித்த இராமன் கூறினான். அருள் வீரம் 38 ஆனை யாவுனக் கமைந்தன மாருதம் அறைந்த பூளை யாயின கண்டனை இன்றுபோய்ப் போர்க்கு நாளை வாவென நல்கினன் நாகிளங் கமுகின் வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல் இளம் பாக்கு மரத்தில் வாளைமீன் தாவிக் குதிக்கும் வளமிக்க கோசலநாட்டையுடைய வள்ளலாகிய இராமன், தன்னிடத்து முதற்போரில் தோற்று மகுடமிழந்து வெறுங் கையனாய் நிற்கும் இராவணனை நோக்கி, ‘இன்று உன்னுடன் வந்த படைகளெல்லாம் பெருங்காற்றினால் வீசப்பட்ட பூளைப் பூக்களைப்போல் சிதறிப் போயினதைப் பார்த்தாய். இந்நிலையில் நீ இன்று உன் இருப்பிடம் போய்ப் படையோடு நாளைக்குப் போர்செய்ய வா’ எனக் கருணையோடு சொல்லி விடுத்தான். தோல்விச் சோர்வு 39 வாரணம் பொருத மார்பும் வரையினை யெடுத்த தோளும் நாரத முனிவற் கேற்ப நயம்பட வுரைத்த நாவும் தாரணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும் வீரமுங் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான். முதற் போரில் இராமனிடத்துத் தோற்ற இராவணன் திகையானைகளைப் பொருத மார்பையும், கயிலாய மலையைப் பெயர்த்தெடுத்த தோளையும், நாரத முனிவனுக்கேற்ப நயம்படப் பாடிய நாவையும், பத்து மணிமுடிகளையும், சிவ பெருமான் கொடுத்த வாளையும், தன்னுடைய வீரத்தையும் போர்க்களத்திலேயே போட்டுவிட்டு, வெறுங்கையோடு மீண்டும் இலங்கையிற் புகுந்தான். இராமன் திருமுடி சூடல் 40 அரியணை யனுமன் தாங்க அங்கதன் உடைவா ளேந்த பரதன்வெண் குடைக விக்க இருவருங் கவரி வீச விரைசெறி குழலி யோங்க வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி. அரியணையை அனுமன் தாங்கவும், உடைவாளை அங்கதன் ஏந்தவும், பரதன் வெண்குடையைப் பிடிக்கவும், இலக்குவ சத்துருக்கனர் இருவரும் வெண்கவரி வீசவும், மணம் நிறைந்த கூந்தலையுடைய சீதை அருகே வீற்றிருக்கவும்-திருவெண்ணெய்நல்லூர்ச் சடையப்ப வள்ளலின் மூதாதையர் திருமுடியை ஏந்திக் கொடுக்க, அதனை வாங்கி வசிட்டனே இராமனுக்கு முடிசூட்டினான். தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன்மரபு மொழிமரபும் முதற் பதிப்பு 1963 இந்நூல் 1969இல் பாரிநிலையம் வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன. உரைப்பாயிரம் – மாணிக்கவுரை தமிழுரிமை செந்தமிழ் தாயாகத் தென்பிறப்புக் கொண்டநாம் வந்தமொழிக் கெல்லாம் வயிற்றடிமை யாகாமல் சொந்த மொழிக்கே தொல்லுரிமை நாடாமோ; தொல்தமிழ் தாயாகச் சொற்பிறப்புக் கொண்டநாம் பல்கலை யெல்லாம் பழகுதமிழ் கல்லாமல் அல்மொழியிற் கற்பிக்கும் ஆணவத்தைச் சாடாமோ; பைந்தமிழ் தாயாகப் பண்பிறப்புக் கொண்டநாம் சொந்த நிலத்தினும் தூயதமிழ் வாழாமல் நொந்து மடிக்கும் நொடிநிலைக்கு நாணாமோ நாணியும் சாடியும் நாட்டியும் சங்கநூல் பேணியும் நிற்கும் பெருந்தமிழ் மக்களே ஊணும் உடையும் உணர்வும் உடையர்; உலக மொழியான உந்து தமிழை அலகு நிறைய அறிவிய லாக்கும் திலக அரசுக்கே செய்ந்நன்றி பாடுதும். தொல்காப்பியம் என்ற உலகக் களஞ்சியம் மொழியிலும் அகவாழ்விலும் புறச்சூழலிலும் கட்டுப்பாடு, வளர்ச்சி, தூய்மை வேண்டும் வரம்புநூல்; தொல்காப்பியம் என்ற தமிழ் முதனூல் வழிவந்த பழமைத் தடங்காட்டி, நிகழ்காலச் செவ்வி சேர்த்து, வளரும் எதிர்காலப் புதுமைப் புரட்சிக்கு இடம் வகுக்கும் இயக்கநூல்; தொல்காப்பியம் என்ற மறைநூல் பிறப்பு மதம் பால் குழு இடம் பொருள்நிலை வேற்றுமைகளைப் பற்றாது இயற்கை, அறம், மறம், வெற்றி, அமைதி, காதல், இன்பம் என்னும் இவ்வுலகியங்களை மானிடவினத்திற்கு எடுத்துக் காட்டும் உலக வாழ்வுநூல். இயக்க வாழ்வுப் பெருமறையான தொல்காப்பியத்தை ஈன்றவள் தமிழ்த்தாய். தமிழர்களாகிய நாம் மூவாயிரம் ஆண்டுத் தொன்மையுடைய இந்நூலை நம் தாய்மொழியிலேயே இன்றும் படிக்கும் எளிய இனிய நேர்வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றோம். இதுவே தமிழ்ப்பிறப்பின் ஒரு சிறப்பென உணர்க. மேலும் தொல்காப்பியத்துக்கு இன்றுகாறும் பின்தோன்றிய பெரிய சிறிய இலக்கிய இலக்கண நூல்களில் எல்லாம் தொல்காப்பிய நீரோட்டம் உண்டு. ஆதலின் தொல்காப்பிய நினைவும் தொல்காப்பியக் கருத்தறிவும் பெறுதல் தமிழன்என்பான் ஒவ்வொருவனின் பிறப்புக் கடமையாகும் இன்று தமிழினம் ஆயிரம் பிரிவு பிளவு பட்டிருப்பினும் எல்லார்க்கும் பொது முன்னோன் தொல்காப்பியனே என்று உணர்வோமாக. ஒருமையினவுணர்வு பெறுவோமாக. மேற்சுட்டிய நல்லுணர்வுகளோடு என் தொல்காப்பியவுரை தோன்றுகின்றது மரபுப்படி இவ்வுரை மாணிக்கம் எனப் பெயர் பெறும். கிடைத்த வரலாற்றின்படி இளம்பூரணர் முதலுரை யாசிரியர் ஆவார். இவர்க்கு முன்னும் உரைகள் இருந்தன என்ற குறிப்பு உண்டு. இளம்பூரணர்க்குப்பின் தொல்காப்பிய உரைக் குலம் இடைக்கால முதல் இன்றுகாறும் வளர்ந்துகொண்டே வருகின்றது. இவ்வளர்ச்சி பின்னடையாது. இந்நூற்றாண்டில் பன்னாட்டு அறிஞர்களும் பல்துறைஞர்களும் வெவ்வேறு முனையில் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியத்தினைப் பரந்து விரிந்து நுணுகி ஆய்ந்து வருவதனாலும், தமிழகத்திலும் நல்வல் இளைஞர்கள் தொல்காப்பிய ஆய்வுக் காதலர்களாக வளர்ந்து சிறந்து பயில்வதாலும், யார் எழுத்திலும் பேச்சிலும் எவ்வகைத் தலைப்பிலும் குயில்நுழை பொதும்பர் போலத் தொல்காப்பியத் தென்றல் தூசொழிய வீசுவதாலும், தமிழின் பொற்காலம் தொல்காப்பியத்தின் வருங்காலமாக விளங்கும் என்று நனவு காண்கின்றேன். பெருநூற் படைப்பாளர்கள் நீண்ட வருங்கால நோக்கொடு தம் நூலாக்கங்களைச் செய்ய. மக்கள் இயல்பான வாழ்க்கையிற்கூட வீடு கட்டும்போதும் தென்னந் தோட்டம் வைக்கும்போதும் நூறாண்டு எதிர்காலம் கொள்வதில்லையா? மாமல்லச் சிற்பம், தஞ்சைப் பெருவுடையார் கோயில் போலும் கலைச் செல்வங்களையும் தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களையும் தோற்றுநர் இவை தங்காலத் தொடு நிற்க என்றா கருதுகின்றனர்? எவ்வளவு எதிர்காலக் குறிப்போட்டம் அவர்கள் சிந்தனைக்குள் இருந்திருக்கும்? ஆதலின் தொல்காப்பியம் திருக்குறள் சிலப்பதிகாரம் திருவாசகம் பாரதீயம் என்றினைய பனுவல்கள் ஐம்பூதங்கள் போலும் என்றும் அடிப்படைச் சிந்தனைக்கு உரியவை: உள்ளங்கள் உள்ளளவும் உள்ளத்தக்கவை: அறிவுக்கூர்மைக்கும் அறிவுப்பாய்வுக்கும் கட்டளைக் கல்லானவை: தமிழியத்துக்கும் தமிழினத்துக்கும் தமிழ்மொழிக்கும் அடையா ஊற்றுக்கண் களானவை. மலை கடல் வானம் மரஞ்செடி கொடிகள் பழமை என்று ஒதுக்க முடியுமா? உண்மையும் இயற்கையும் உயிர்ப்பும் உடையவையெல்லாம் காலவட்டங்கடந்து மன்னியவை என்று உணர்வோமாக. தொல்காப்பிய முழுமைக்கும் உரைசெய்நோக்கமும் உரைக்குறிப்புக்களும் உளவெனினும் காலப்பதம்பார்த்து முதற்கண் எழுத்ததிகாரத்துக்கு மாணிக்கவுரை எழுதியிருக் கின்றேன். இவ்வுரையங்கள் வருமாறு: அ) இயல்முன்னுரை இஃது இயலுக்கு ஒரு சிறிய முன்னுரையாகும். இயல் தோறும் வரும் இலக்கணக்கருத்துக்களின் சிறப்புக்களைப் புலப்படுத்தும். இன்றும் மக்கள் நடைமுறையில் இருக்கும் வழக்குக்களோடு பொருந்திக்காட்டும். இதனால் கற்பவர்க்குத் தமிழிலக்கண நன்மரபுகள் தெரியவரும். இலக்கணக்காப்பில் அவர்கட்குப் பற்றும் பயிற்சியும் உண்டாகும். ஆ) இயற்கருத்து நூற்பாக்களின் கருத்துக்கள் முதற்கண் சுருக்கமாகத் தொகுத்துக் கூறப்படும். இ) அகலவுரை நூற்பாவிற்குப் பெரும்பாலும் சொல்லுக்குச்சொல் கிடந்தாங்கு சொல்லுரை எழுதவில்லை. கற்பவர் உடனே விளங்கிக் கொள்ளுமாறு வேண்டும் விளக்கஞ்¨சேர்ந்து விரிவுரையாக அமையும். முன்னை நூற்பாவின் தொடர்போடு இயைபு தெரிய வரும். கருத்தோடிப் படிக்கும் எளிமையுண்டு. வேண்டு மிடத்துச் சொல்லுக்கு உரிய பொருள் கூறப்படும். ஈ) வழக்கு இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்படும் உரையாதலின், இன்றைய பேச்சு வழக்கிலிருந்தும் எழுத்துநூல் வழக்கிலிருந்தும் இலக்கண விதிகட்கு ஒல்லுமளவு எடுத்துக் காட்டுக்கள் தரப்படும். இலக்கணவிதிகள் செய்யுட்கு மிகுதியும் உரியவை என்பது மிகத் தவறான கருத்து. வேறொரு புலமைப் பயன்கருதிச் செய்யுட்காட்டுக்கள் தரும் மரபு ஏற்பட்டது. அவ்வளவே. உண்மையச் சீர்தூக்கின் தொண்னூறு விழுக்காடு இலக்கணப்பாங்கு நடைமுறை மக்களின் உரைநடைப் பேச்சில் அமைந்துகிடப்பது. தொல்காப்பிய இலக்கணக் கூறுகள் அவைய நூல் போலும் பழமைசார்ந்தவை என்பதும் மற்றொரு தவறான கருத்து, ஆதலின் அண்மைக்கால இலக்கியங் களிலிருந்தும் சான்றுகள் காட்டப்படும். தொல்காப்பியம் என்றும் வழக்கிறவாதது. நிலை நின்றவழக்கினது என்ற மெய்ய்யுணர்வைத் தமிழ்மன்பதைக்கு ஊட்டும் சால்பில் எடுத்துக்காட்டுக்கள் பலகாலத்தனவாக இருக்கும். இது வலிந்த நோக்கன்று; மரபும் வளர்ச்சியும் கலந்த நோக்கு. உ) திறனுரை நூற்பாவின் பொருள், அமைப்பு, நடை, சொல்லாட்சி, காட்டுக்கள் என்றாங்கு நூற்பாவின் பெருவிளக்கமாக இப்பகுதி அமையும். நூற்பாவுக்கு வரைந்த உரைப்பொருத்தம் தெளிவு செய்யப்படும். ஒத்த பிற கருத்துக்களும் ஒவ்வாப்பிற கருத்துக்களும் குறுகியவளவு இடம்பெறும். இதனால் ஐயங்கள் நீங்கித் திரிபுகள் அகன்று நூற்பாவின் மெய்ம்மைகள் மேலும் தெளிவாகும் பொருள் பொதிந்த பாடபேதங்கள் உளவேல் அவற்றையும் இக்கூறு சுட்டித் திறன் செய்யும். எதிர்காலத் தொடர்ச்சி குறிக்கப்படும். ஊ ) இயல்முடிவுரை தொல்காப்பியத்துக்குப் பல்லுரைகளும் பல திறனாய்வு நூல்களும் ஆய்வுக்கட்டுரைகளும் பிறங்கி வந்துள. தனித்த ஒரு நூற்பாவை நுணுகி ஆய்ந்தொழிய கட்டுரைகளும் உள. தன் உரைக்கருத்தே தகும் என்ற நம்பிக்கை வேண்டியதே எனினும் பிறர் கருத்துக்களும் நல்லவனவாக இருக்கும் என்ற சால்புப்பார்வை உரையாளன் பண்பாகும். நல்லனவற்றைச் சுட்டிக் காட்டுவது தன் உரைமதிப்பைக் கூட்டும். அல்லனவற்றை இன்சொல்லால் இன்னடையால் மறுப்பதும் இன்றியமையாத உரைநெறி ஆகும். அனைத்தையும் வாரி வளைத்துக்காட்டப் புகுவது கருத்துமண்டிய ஆய்வுக்காடாக முடியுமாதலின் கற்பார்க்குத் தெரிய வேண்டுமளவு கற்பார்க்குச் சுமையெனத் தோன்றாத கொள்ளளவு இயல் முடிவுரை அமையும். ஒவ்வோர் இயலிலும் வரும் சில பல நூற்பாக்கட்குப் புறவுரைபோல் இயலின் இறுதியில் இம் முடிவுரை எழுதப்படும். இதனால் நுண்மையும் ஆழமும் அறிவுச் சுவையும் மாணவர்க்குப் பிறக்கும். பாரதப் பெருநாட்டில் மொழிக்கெனத் தோன்றிய முததற்கழகம் தமிழ்ப் பல்கலைக்கழகமாகும். தமிழ்க்குறிக்கோளும் தமிழ்நினைவும் சான்ற பேரறிஞர் அண்ணாவின் வழிவந்த தமிழ்க முதல்வர் புரட்சித் தலைவர் ம.கோ.இராமச்சந்திரனார் இப்பல்கலைக் கழகத்தைத் தோற்றிய பெருமான் ஆவார். இப்பல்கலைக்கழகத்தின் வல்லுநர் குழுத்தலைவராக இருந்து பல்கலைக்கழகவமைப்பினை உருவாக்கிக் கொடுக்கும் ஒருபேறு எனக்குக் கிடைத்தது. இதன் முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியனாரும் ஆட்சிக் குழுவினரும் தமிழ் முதனூலான தொல்காப்பியத்தின் தனிப்பெருமை கருதித் தொல்காப்பியப் புலத்தகைமை என்ற ஓர் ஆய்வுக் கட்டில் உண்டாக்கி, அதன் தொல்காப்பியத் தகைஞராக என்னைப் பணி கொண்டனர். இவ்வனைவோர்க்கும் வழிவழி நெடிதுவாழும் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கும் மிக்க நன்றியன். இளங்கோவடிகள் தம் பெருங்காப்பியத்துள் தன் வாழ்க்கை குறித்து ஒரு சில சுட்டிப்போந்த மரபுண்டு. அவ்வழி யானும் மிகச் சில கூறிக்கொள்வேன். இக்குறிப்பினால் கற்போர்க்கு நம்பிக்கையும் பெருமிதமும் உண்டாகும். என் பதினெட்டாம் அகவையில் பருமாவின்தலைநகரான இரங்கூனில் கடைப் பணியாளராக இருந்தபோது வாய்மைக் குறிக்கோள் கொண்டேன். அதன் பின் தமிழகம் வந்து அண்ணாமலைப்பல்கலைக்கழகம் சேர்ந்து புலவர் தமிழ் பயின்றேன். பண்டிதமணி கதிரேசனார், நாவலர் வேங்கடசாமி மகாவித்துவான் இராகவனார், துறவி கந்தசாமியார் என்றின்ன பெரும்புலமையாளர் என் ஆசிரியப் பெருமக்கள் ஆவர். அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரிய னாகவும் முதல்வனாகவும், என் கல்வித் தாயகமான அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துத் தமிழ்த்துறைப் பேராசிரியனாகவும் இந்தியப் புலத்துறை முதன்மையனாகவும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணை வேந்தனாகவும் பணிசெய்தவன். வள்ளுவம், தமிழ்காதல், கம்பர் என்ற ஒரு பொருள் ஆய்வுநூல்களும்; சிந்தனைக்களங்கள், ஒப்பியல்நோக்கு, தொல்காப்பியப்புதுமை, தொல்காப்பியத்திறன், எந்தச் சிலம்பு, இலக்கிய விளக்கம் என்ற பல்பொருள் ஆய்வுநூல்களும்; மனைவியின் உரிமை, நெல்லிக்கனி, உப்பங்கழி, ஒரு நொடியில் என்ற நாடக நூல்களும், கொடைவிளக்கு, மாமலர்கள் என்ற கவிதைநூல்களும்; இரட்டைக் காப்பியம் என்ற பதிப்புநூலும் இன்னும் சிலவும் ஆங்கிலநூல் சிலவும் என் எழுத்துப் பிறப்புக்கள். பன்னூறாண்டுகளாக அயல்மொழிகளின் அரசியல் ஆதிக்கத்தால் உணர்வு மடங்கித் தமிழ்க்கல்வி தமிழ் மக்களிடை குன்றிய வரலாற்றையே காண்கிறோம். பின்னும் நாடு தழுவிய ஆங்கிலப் பேராதிக்கத்தால் உள்ள நிலையும் வற்றிக் கால வளர்ச்சி பெறமாட்டாத தமிழின் அவலநிலை வரலாற்றை உணர்கின்றோம். பால்குடிமறவா வரியிளஞ்¨ செங்காற் குழவிகளைத் தமிழ்ப்பால் உண்ணவிடாது ஆங்கில முதலான அயல் மடிப்பால்களை வலிந்து மயங்கி ஊட்டும் கடும்கொடும் போக்கினைக் கண்டு கையாறு எய்தியிருக்கின்றோம். அதன் மேலும் வரம்பற்றுத் தடையற்று வேற்றுமொழிச் சொற்களையும் ஒலிகளையும் எழுத்துக்களையும் தம்முடைமை போற்றாது கலக்கவிட்ட ஒரே காரணத்தால் தமிழக நிலவெல்லைகள் அண்மைக்காலத்துப் பறிபோய் மண்ணகம் சுருங்கிய இழப்புக்களையும் தமிழ்நெஞ்சங்கள் மறக்கமுடியவிலலை பள்ளிமுதல் பல்கலைக்கழகம்வரை, கைக்குழவி முதல் கற்றார் வரை அயல்வழி ஓடும்போது, எதனை எவ்வளவு எளிமையாக எழுதினாலும், தமிழில் குறுந்தரமும் இல்லாதார்க்கு என்ன செய்வது தம் தரமின்மை நோவாது தமிழை நோவது நன்றா? தமிழர் தரத்தால் உயர்ந்து தமிழை வணங்க வேண்டுமே யன்றித் தாம் தாழும் கலப்புக்குழிக்குத் தமிழை வணக்கலாமா? எனினும் தமிழின் வருங்காலம் நறுங்காலமாக இருக்கும் என்ற நம்பிக்கையுண்டு. தமிழ் மக்களின் தரத்தை உயர்த்துவதே நம் கல்விக்கோள். எழுத்துக் கோள் இழந்த வரலாற்றுக்குக் கவலாது சோர்வுறுத்தாது எதிர்கால நல்வல் வரலாற்றைக் காண்பதே அறிவுடைமை. ஆதலின் எல்லாத் தமிழரும் அறிய வேண்டிய தமிழ்மறை முதþனூலான தொல்காப்பியத்தை `எண்பொருள வாகச் செலச்சொல்லி' என்ற திருக்குறட்படி ஒல்லும் வழியெல்லாம் எளிமைப்படுத்துவோம்; காலத்துற்கேற்ற எடுத்துக்காட்டுகள் தந்தும் இலக்கியம் காட்டியும் எண்மைப் படுத்துவோம். தமிழ் `கல்லாது நிற்பார் பிறரின்மையின் கல்வி வல்லாருமில்லை. அவை வல்லரல்லாரும் இல்லை' என்ற கம்பர் பெருமான் கவிதை நனவாகக் காண்போம். மக்களின் தமிழ்ப்பிடியும் தமிழ்த்தரமும் தொல்காப்பிய வுணர்வுமே என் உரை நோக்கம். காரைக்குடி வ.சுப.மாணிக்கம். 6-8-1986 பனம்பாரனாரின்சிறப்புப்பாயிரம் பாயிரச்சிறப்பு பாயிரம் என்பது முன்னுரை, முகவுரை, அணிந்துரை, மதிப்புரை போல்வது; எனினும் இலக்கணத்துக்குக் கூறப்படும் முன்னுரையைப் பாயிரம் என்றல் புலவழக்கு. இலக்கணப் பாயிரத்தில் மொழிவழங்கும் எல்லைகள், அடிப்படை, நுவல்பொருள், நெறி, நோக்கம், அரங்கேற்றிய இடம், காலம், ஆசிரியன் பெயர், ஆசிரியன் தகுதி என்ற அறிமுகக் கூறுகள் பெருமிதமாகவும் சுருக்கமாகவும் சுட்டப்படுதல் உண்டு. எல்லைகூறல் நல்வரம்பாகும். ஒரு நாட்டின் அரசியலமைப்பினை வகுக்குநர் அந்நாட்டிற்கு உட்பட்ட நான்கெல்லைகளையும் முதற்கண் சுட்டிக்காட்டுவர். அதனால் விதிகளின் ஆட்சிக்கோடுகள் தெளிவாகும். விடுதலை பெற்ற நம் பாரதவமைப்பினைக் காண்க. இந்நன்முறை தமிழ்ப்பாயிரத்தில் பண்டே உண்டு. பதிவுசெய்த திருமணம் போல அரங்கேற்றம் இசைவு முத்திரை என்ப. ஒரு நூலைப் புலவரவை ஒப்புக் கொள்வது என்பது அறிவுலக முறையாகும். இது குடியரசு முறை போன்றது. மக்கள் கற்பதற்குத் தக்கநூல் என்ற மதிப்பு விளம்பரம் இதனாற் கிடைக்கும். இன்று திரைப்படங்கள் கூடத் தணிக்கை முத்திதிரை பெற்ற பின் காட்சிக்கு வரக் காண்கிறோம். இவ்வரன்முறை தொல்காப்பியக் காலத்திலேயே உண்டு என்பது தமிழ் மரபின் சிறப்பைக் காட்டும். அடிப்படை, நெறி, நோக்கம், காலம், ஆசிரியன் தகுதி பற்றிய பாயிரக் குறிப்புக்கள் ஒரு நூலைக் கற்பதற்கு மதிப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளையும், பார்வைகளையும் உணர்ச்சிகளையும் தருகின்றன. பாயிரம் நூலாசிரியனுக்காக எழுதப் படுவதில்லை; நூலைக் கற்போரை வழிநடத்துவதற்காக எழுதப்படுவது இது கருதியே நூல் முற்றுப் பெற்ற பின் செய்யப்படுவது பாயிரமாயினும் நூலுக்கு முன் வைக்கப்படும் என்று அறிக. தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் பாடியவர் பனம்பாரனார். `வடவேங்கடம் தென்குமரி' என்று தொடங்கும் பாட்டு பதினைந்து அடிகள் கொண்டது. இடைக்காலத்துத் தோன்றிய மெய்க்கீர்த்தியை ஒருவாறு ஒப்புநோக்குக; தொல்காப்பியம் நூற்பாவால் ஆனது. இப்பாயிரமோ ஆசிரியப்பா எனப்படும் கவிதை வடிவினது. தமிழிலக்கிய வரலாற்றில் முதற்பாட்டு எனத்தகும் தொன்மையது. இப்பாயிரத்தில் தன்னைப் பற்றியோ தனக்கும் தொல்காப் பியனுக்கும் உரிய தொடர்பு பற்றியோ யாதும் கூறவில்லை யாயினும், அரங்கேற்றிய அவையுள் கேட்ட ஒருவராகப் பனம்பாரனார் இருந்திருப்பர் என எண்ண இடமுண்டு. பெயர் சுட்டாமல் அதங்கோட்டாசான் என்று பெருமைபடச் சுட்டுவதால், தொல்காப்பியனாகும் பனம்பாரனாரும் அவர்தம் ஒருசாலை மாணாக்கர் என்று கொள்ளவும் இடமுண்டு. பாயிரக்கருத்து வடவேங்கடத்துக்கும் தென்குமரிக்கும் இடைப்பட்ட நாடு தமிழ்மொழி வழங்கும் நாடாகும். மக்கள் வழக்கையும் செய்யுள் வழக்கையும் அடிப்படையாக வைத்து முற்பட்ட நூல்களையும் பார்த்து எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம் எழுதப்பட்டன. பாண்டியன் அவையில் அதங்கோட்டாசான் தலைமையில் அரங்கேறியது. போக்கறு பனுவல் என்பது நூலின் பெயர். தம் நூலின் குற்றமற்ற தெளிவும் எழுதிய முறைகளும் அவையோர்முன் விளக்கப்பெற்றன. தொல்காப்பியன் என்பது நூலாசிரியன் இயற்பெயர். அரங்கேறியபின் `ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்ற புகழ்ப்பெயர் பெற்றார். இவர் வாழ்வில் பல புகழ்கொண்ட சான்றோர். சிறப்புப் பாயிரம் வடவேடங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ்¨ செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத் தறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட் டாசாற் கரில்தபத் தெரிந்து 10 மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியனெத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே. 15 என்பது சிறப்புப் பாயிரம். அகலவுரை வடக்கே திருவேங்கடமலையின் வடபகுதி. தெற்கே குமரிமலையின் தென்பகுதி, கிழக்கும் மேற்கும் கடல்கள் இந்நான்கும் எல்லையாக, இவற்றுக்கு உட்பட்ட பெருநாடே தமிழ்மொழி பேசும் நன்மக்கள் வாழும் நிலமாகும். இத் தமிழக மக்களின் வாழ்க்கை வழக்கம் செய்யுள்முறை இரண்டினையும் அடிப்படையாகக் கொண்டு எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று கூறுகளையும் ஆராய்ந்தான்; பன்னிரு தமிழ்நிலப் பகுதி வழக்கங்களையும் முற்பட்ட இலக்கண நூல்களையும் கற்றுத் தெளிந்தான். இவற்றை யெல்லாம் நெறியாக எண்ணிச் சீர்தூக்கிப் பார்த்துப் போக்கறு பனுவல் என்ற பெயரில் இலக்கணவிதிகளை ஒருசேரக்கூட்டி எழுதினான். வசிப்போர் செய்து மாற்றார் நாட்டுப் பகுதிகளைச் சேர்க்கும் வெற்றித் திருவுடைய பாண்டியனது அரசவைக்கண், செந்நாவும் நாற்பொருள்கூறும் தமிழ் மறைப்புலமையும் உடைய பெரும்புலவர் அதங்கோட்டாசான் தலைமை தாங்க அவரும் அவைப்புலவோரும் பாண்டியனும் எழுப்பிய சிக்கல்கள் எல்லாம் தீரும்படி ஆராய்ந்து தெளிவான நெறிகளில் தான் நூலெழுதிய முறைகளை மேற்கோளோடு எடுத்துக்காட்டினான். அவன் யாரென்னின், கடல் சூழ்ந்த இவ்வுலகில் ஐந்திணையிலக்கணங் கூறும் ஆற்றல் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயரைச் சிறப்பாக அறியச் செய்து பல்துறையிலும் புகழை நிலைநிறுத்திய சான்றோன். திறனுரை “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து”என்பதன் விளக்கம்: கிழக்கும் மேற்கும் கடல்கள், நிலங்கள் இல்லை; ஆதலின் இத்திசைகளுக்கு எல்லை வெளிப்படை, வேங்கடமலையின் வடபகுதிவரையும் குமரி மலையின் தென்பகுதி வரையும் தமிழக எல்லைக்கு உட்பட்டன என்பது வடவேங்கடம், தென்குமரி என்ற அடைகளின் கருத்து. வடவேங்கடத்துக்கு வடக்கிலும் தென்குமரிக்குத் தெற்கிலும் வேற்றுமொழிகளும் வேற்றரசுகளும் தொல்காப்பியர் காலத்து இருந்தன; ஆதலின் இந்த இரு திசைகளுக்கு மட்டும் நிலவெல்லைகள் குறித்தார். இதனையுட்கொண்டே “நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது” என்று தொல்காப்பியர் செய்யுளியலில் தெளிவிப்பர். இன்று காண்பதுபோல் தெற்கும் குமரிக்கடலாக இருந்திருப்பின் வடதிசைப்பகுதிக்கே எல்லை கூறியிருப்பார். தென்குமரியென்று நிலவெல்லை வரையப்பட்டிருத்தலின், தொல்காப்பியர் காலத்து நீண்ட நிலப்பரப்பும் பிறவும் குமரிக்குத் தென்பால் கிடந்தமை தெளிவு. இந்நிலக்கருத்தால் நாம் அறிவது என்ன? தெற்கே பஃறுளி யாறும் குமரிமலையும் இருந்த காலத்துப் பிறந்தது தொல்காப்பியம் எனவும் அந்நெடும் பகுதியில் வாழ்ந்த தமிழ்மக்களின் வழக்கையும் தழுவி இலக்கணம் கூறியது தொல்காப்பியம் எனவும் அறிகின்றோம். `தமிழ் கூறு நல்லுலகம்' என்றது கடல்கொள்ளப் படாது அன்றிருந்த பன்மலை யடுக்கத்துக் குமரிமுடியையும் உள்ளடக்கியதாம் எனவும் அறிகின்றோம். இத்தொன்னிலம் சங்க விலக்கியத்தாலும் சிலப்பதிகாரத்தாலும் அடியார்க்கு நல்லார் உரையாலும் இறையனார் அகப்பொருள் உரையாலும் பெருமருங்கு தெளிவுபடும். `கடல் கொள்வதன் முன்பு பிறநாடும் உண்மையின் தெற்கும் எல்லை கூறப்பட்டது' என்பர் இளம்பூரணர். இத்தகு கடல்கோள்கள் பற்றி நம் நாட்டவரும் பிறநாட்டவரும் பலதுறைச் சான்றுகள் கொண்டு நிறுவியுள்ளனர். தொல்காப்பியக் காலத் தமிழ்ப் பெருநிலம் அரசு வகையால் முத்திறப்பட்டிருந்தது என்ற நிலை “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” எனவும் “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூ” எனவும் கூறப்படும் அகச் சான்றுகளால் விளங்கும். வேந்து வகையால் முப்பிரிவுப் படினும் தமிழ் என்ற ஒரு மொழியடிப்படையில் தமிழகம் என்றும் ஒருமைப்பாடு மன்னியது என்ற பேருண்மையைத் `தமிழ்கூறு நல்லுலகம்' என்ற பாயிரத்தால் உணரலாம். தொல்காப்பியத் தமிழகம் நீர்வளமிக்குத் தழைத்துச் செழித்துக் கொழுவிய நிழலாகக் குளிர்ந்த வண்ணக்காட்சியைத் `தண்பொழில் வரைப்பு' என்ற தொல்காப்பியத் தொடர் மெய்ப்படுத்தும். தமிழ்கூறு உலகம் என்றளவில் சொல்லாமல் `நல்லுலகம்' என்று சொல்லிய அடைப்புணர்ப்பு நாட்டுப்பற்றுக்கும் மொழிப் பற்றுக்கும் அடையா ஊற்றுக்கண்ணாம். பனம்பாரனார் பாயிரத்தை அடியொற்றிய மாக்கவி பாரதியார் “குமரி யெல்லை வடமாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு” என்று அள்ளூரப்பாடுவார். `ஆயிடை' என்பதனை `இவற்றிடையே' எனவும் `நல்லுலகம்' என்பதனைப் `புகழ் மண்டிக்கிடக்கும்' எனவும் விரிவுபடுத்துவர். பண்டைக்கால வெல்லைகள் தொல்லையுட்பட்டாலும் தொல்காப்பியப் பாயிரத்தின் மொழிநடை காலவெல்லைப் படாது இன்றும் உயிர்ப்புடையதாக ஓடுகின்றது. அரசு ஆட்சி நாகரிகம் முதலிய மாற்றங்களால் எத்துணைத்தாக்குறினும் இன்றும் என்றும் தமிழ்கூறும் தமிழ்நாடாக விளங்கும் மொழியொழுக்கமே இவ்வுயிரோட்டத்துக்குக் காரணமாம். இம்மொழியொழுக்கச் சிறப்பினைநாம் உணர்வோமாக. தமிழ் பேசப்படும் வழக்குமொழியாதலின் `தமிழ்கூறு' என்ற வினைச் சொல் பெய்தார். முக்காலத்தும் நிகழ்மொழி யாதலின், `கூறு' என வினைத்தொகை செய்தார். `என்றுமுள தென்றமிழ்' என்பது கம்பர் கவிமொழி. `சீரிளமைத் திறம்' என்பது சுந்தரனார் தரவுமொழி. ஆ) “வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி” என்பதன் விளக்கம்: செய்யுளிலக்கியம் தொல்காப்பியக் காலத்து உயர் வளர்ச்சி எய்தியிருந்தமையைச் செய்யுளியல் காட்டும். ஆதலின் வழக்கிற்கு நிகராகச் செய்யுளும் அடிப்படையெனக் கொள்ளப் பெற்றது. இதனால் நல்லுலகம் என்பது ஆகுபெயராய் மக்களையும் புலவர்களையும் குறிக்கும். வழக்கடிப்படையில் எழுத்தும் சொல்லும், பொருளும், அதுபோல் செய்யுளடிப்படையில் எழுத்தும் சொல்லும் பொருளும் தேடிக் கண்டார் என இயைத்துக் கொள்ள வேண்டும். எழுத்து என்பது எழுத்திலக்கணம் : பொருளொலி, ஒலிநிலை கள், புணர்ச்சிகள் என்றின் னவை இதனுள் அடங்கும். சொல் என்பது சொல்லிலக்கணம் : சொற்கள், தொடர்கள், தொடர்நிலைகள் என்றின்னவை இதனுள் அடங்கும். பொருள் என்பது பொருளிலக்கணம் : மக்களின் அகவாழ்க்கை, புறவாழ்க்கை இவை குறித்த நூன்முறைகள் இதனுள் அடங்கும். ஈண்டு ஒரு வினா, எழுத்தும் சொல்லும் மொழி பற்றியன ஆதலின், மொழியதிகாரம் என ஒன்று சொன்னாற்போதுமே. அகம் புறம் என வாழ்க்கை இரு கூறாயினும் பொருளதிகாரம் என்று ஒன்றாகக் கூறவில்லையா என்று வினவலாம். தொல்காப்பியம் அவ்வாறு ஓரதிகாரமாகக் கூறியிருக்குமேல், அதனையும் நாம் உடன்படுபவர்கள் ஆவோம். எழுத்தோத்து, சொல்லோத்து என ஈரதிகாரமாக வைத்திருத்தலின், அதற்கும் ஒரு காரணம் இருக்கும். மொழி என்பது மக்களினத்துக்கே உரிய நுணுக்கமான ஆற்றலான ஆக்கமான தனிமுதலும் தனிக் கருவியும் ஆகும். மொழியின்றேல் நாகரிகக் கருத்து எங்கே? வளர்ச்சி யெங்கே? இத்தனிப் பெருங்கருவி நன்கு புலப்படுவதற்கு எழுத்து, சொல் என்ற இரு பாகுபாடு வேண்டியதே. வகைபடக் கூறுங்கால் கூடுதலான இலக்கணங்கள் சொல்லமுடியும் ஒலி என்ற நுண்ணுடலையும் சொல் என்ற பருவுடலையும் வேறுபட இலக்கணிப்பதே மொழித் தெளிவும் மொழியாக்கமும் தரும் என்ற நோக்கால் தொல்காப்பியம் ஈரதிகாரம் பட வகுத்தது என்பது என் கருத்து. ஈண்டு மற்றொரு வினா: `எழுத்தும் சொல்லும் பொருளும்' என்ற தொடரோட்டத்தால் பொருள் என்பது சொல்லுக்குரிய பொருள் என்று படாதா என்பது வினா. ஒரு சொல்லின் உண்மைப் பொருளைப் அத்தொடரளவிற் பாராது, முன்னும் பின்னும் வருவன கண்டு பொருள் செய்ய வேண்டும். ஆசிரியன் நிறுத்திய முறைப்படி, இது அகப்பொருள் புறப்பொருளெனக் கொள்ளப்படும்' இவ்விளக்கம் ஒக்கும் என்றாலும் சொல் காட்டும் பொருளை எங்குக் கூறினான் என்பது அடுத்த வினா. பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லின் ஆகும் என்மனார் புலவர் என்ற பெயரில் நூற்பாவில் சொல் என்றாலே பொருளையும் கொண்டது என்ற ஒருமைப்பாட்டினை அறியலாம். எனவே இரண்டாவதான சொல்லதிகாரம் ஓராற்றால் சொற்பொருளதிகாரம் எனத்தகும். இ) “செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுந் தோனே போக்கறுபனுவல்” என்பதன் விளக்கம்: தொல்காப்பியக் காலத்துத் தமிழகம் அரசாட்சி நிலையில் சேரசோழ பாண்டியம் என மூவகையாக இருந்தாலும் உள்ளெல்லைப் பிரிவுநிலையில் பன்னிரண்டு பகுதிகளாக இருந்தன. இன்று தமிழகம் பல மாவட்டங்களாகப் பிரிவு செய்திருப்பதை ஒப்புநோக்குக. நிலம் என்பது மாவட்டம் போன்றது. `செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்' என்று தொல்காப்பிய எச்சவியல் சொல்வதைத்தான் இப்பாயிரத் தொடர் நினைவுபடுத்துகின்றது. எனவே பன்னிரு நிலத்துச் சிறப்பு வழக்கையும் நன்கு அறிந்து இலக்கணம் மொழிந்தவர் தொல்காப்பியர். செந்தமிழ் என்பது தமிழுக்கு இயற்கையடை; அன்புத் தாய், நல்லருள், என்பது போல, `செந்தமிழ் நாடெனும் போதினிலே’ எனவும். `வாழிய செந்தமிழ்' எனவும். `செந்தமிழ் நாட்டு பொருநர்' எனவும் பாரதியார் இயல்பாகப் பாடுதல் காண்க. செந்தமிழியற்கை என்னும்போது மொழியில்பை மட்டும் பாயிரம் சுட்டவில்லை. வாழ்க்கை வழக்கையும் குழும வழக்கையும் நாகரிகத்தையும் சேர்த்துச் சுட்டுகிறது. தமிழ் என்ற சொல் பண்டைக்காலத்துத் தமிழினத் தொடர்பான தமிழ்மை பலவற்றையும் குறித்துவரும் ஒரு பொதுப்பெயர். `தமிழ்தலை மயங்கிய தலையாலங்கானத்து' என்ற(19) புறநானூறும் `கொண்டி மிகைபடத் தண்டமிழ் செறித்து' என்ற (63) பதிற்றுப்பத்தும், `அருந்தமிழாற்றல் அறிந்திலர்' என்ற சிலப்பதிகாரமும் தமிழ்ப் படையைக் குறிக்கும். `நற்றமிழ் முழுதறிதல் (50) என்ற புறமும் `தமிழ் முழுதறிந்த தன்மையன்' என்ற சிலம்பும் தமிழறிவைக் குறிக்கும். `தமிழ் நிலை பெற்ற' என்ற சிறுபாண் தமிழ்ச் சங்கத்தினையும் `தமிழ்தழிய சாயல்' என்ற சிந்தாமணி தமிழ்ப் பண்பையும் தமிழ்மருந்து தமிழிசை என்ற தொடர் தமிழ்க்கலைகளையும் குறிக்கும். பிறவுமன்ன. பன்னிரு வழக்கையும் சுற்றிப் பார்த்து அறிந்ததோடு நில்லாமல், தமிழில் தாம் நூல் எழுதுவதற்குமுன் பிறரால் எழுதப்பட்டு வழங்கிய எல்லாத் தமிழிலக்கண நூல்களையும் கற்றுத் தெளிந்தார். தொல்காப்பியர், ஈண்டு நூல் என்பது ஒரு நூலை மட்டும் குறியாது. நூலகம், நூற்காட்சி, நூற்பயிற்சி என்பதுபோல் தொகுதிப் பன்மையைக் குறிக்கும். `முந்நூல்' என்பதனால் தொல்காப்பியர் காலத்துத் தொன்றுதொட்டு வந்த தொன்மை நூல்கள் எண்ணிற்ந்தன என்பது உணரப்படும். நில வழக்கையும் நூல்வழக்கையும் நேரடியாக அறிந்து கண்டு செய்திகளைத் தொகுத்தவன் என்பதனைக் `கண்டு' என்ற சொல் காட்டும். வழக்காலும் நூல் வழியாலும் பல்வேறு செய்திகளைத் தாம் எழுதப்புகும் நூலுக்கு ஏற்ற வகையிற் சிந்தித்தான்: அவற்றின் கூறுகளை இயல்முறைப்படி தொகுத்தெழுதினான். புலந்தொகுத்தல் - கண்டறிந்த இலக்கணங்களைப் பல தலைப்புகளில் நெறிப்படுத்தல். போக்கறு பனுவல் என்பது நூற்பெயர். நன்þனூல் சின்þனூல் தொன்னூல் என வருவது காண்க. இப்பாயிரத்தைக் கருத்துத் தெளிவுக்கு இருகூறாகக் கொள்வோம். வடவேங்கடம் என்பது முதல் போக்கறுபனுவல் என்பதுவரை முற்கூறு, இப்பகுதியில் நிலவெல்லை அடிப்படை, பொருட்பாகுபாடு, செய்தித்தொகுப்பு, வகைப்படுத்தல், நூற்பெயர் என்றிவை கூறப்பட்டன. நிலந்தருதிருவின் என்பது `தொடங்கி நிறுத்தபடிமை யோனே என்பது காறும் பிற்கூறு. அரங்கேறிய இடம், அரங்கத்தலைமை, ஒப்புதல், நூலாசிரியன் பெயர், சிறப்புக்கள் என்றிவை கூறப்படும். ஈ) “நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட் டாசாற்கு அரில்தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி” என்பதுவரை விளக்கம்: பாண்டியன் அவைக்களத்து அதன்கோட்டாசான் தலைமையில் இந்நூலரங்கேற்றம் நடைபெற்றது எங்கோ ஒரு தனியிடத்து அரங்கேற்றம் நிகழ்ந்தது என்பதன்று. பாண்டியன் வீற்றிருக்க அமைச்சர் சூழ அரசுப் பெருமையோடு நடந்தது. அதங்கோட்டாசானுக்கு விளக்கினார் என்று ஒருவர் மேலதாகச் சொல்லப் பட்டாலும் அவையாதலின் புலமைச் சான்றோர்கள் கூடியிருந்தனர் என்று கொள்க. அதங்கோட்டாசான் தலைமை தாங்கி அரங்கம் நடத்தினன் “மாங்குடி மருதன் தலைவனாக”(72) எனப்புறத்து வருதலின் அவைக்குத் தலைமைப்புலவர் இருந்த மரபு உணரத்தகும். புலவர் பெருமக்கள் பலர் இருப்பினும் இவர் ஆசிரியனாக இருந்தமையின் முதற்பொறுப்பு வழங்கப்பெற்றது. எனவே புலவருள்ளும் கற்பிக்கும் ஆசிரியனுக்கு இருந்த தனிமதிப்பு விளங்கும். பாண்டியன் அவையாக இருந்தாலும் அரங்குத் தலைமை பூண்டான் அதங்கோட்டாசான். ஆசான் - ஆசிரியன் குமரன் ஆசான் என்பது இன்றும் நிலவும் நம் மலையாள வழக்கு. நிலந்தரு திருவிற்பாண்டியன் என்பது இயற்பெயரன்று; இயற்பெயர் சொல்லாத ஒரு சிறப்பு மரபு தமிழகத்து இன்றும் உண்டு. நிலந்தருதிரு என்பது ஆளும் அரசர்க்குரிய இயல்படை. “போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅது இடஞ்¨சிறி தென்னும் ஊக்கத் துரப்ப”(8) என்று புறநாþனூற்றில் இடம் பெருக்கும் அரசப்பற்றைக் குறிப்பர் கபிலர். “நிலந்தரு திருவின் நெடியோய்”(22) எனப் பதிற்றுப்பத்தில் சேரவேந்தனும் குறிக்கப்படுவன். அதங்கோட்டாசான் என்பதும் இயற்பெயரன்று; ஊரும் தொழிலும் இணைந்த பெயர். இதுவும் இயற்பெயர் சொல்லாச் சிறப்பு மரபுடையது. பட்டினத்தடிகள், காரைக்காலம்மையார், திருமங்கையாழ்வார், மதுரைக் கணக்காயனார், மதுரை வேளாசான் இவை ஒப்புநோக்குக. இவ்வாசான் அறம் சொல்லும் செந்தாவுடையவர், அறம்பொருள் இன்பம் வீடு என்ற நாற்பொருளைக்கூறும் மறையை நன்கு கற்றுத் தெளிந்தவர். கரைதல் - அறத்தின் பக்கம் வாருங்கள், ஒழுகுங்கள் என்று எல்லாரையும் அழைத்தல் கலங்கரை விளக்கம் என்பது காண்க. நான்மறை என்பது அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கனையும் குறிக்கும் என்பதற்கு. `அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கனையும் இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடி' என்ற திருவாசகமும் ஒரு சான்றாதால் கொள்க. பாண்டியனும் ஆசானும் அவையப் புலவர்களும் வினவிய சிக்கல்கள் எல்லாம் நீங்கும் வகை ஆராய்ந்தார் தொல்காப்பியர். சில இலக்கணங்கள் பல வியல்களில் வந்திருந்தாலும் மயக்கம் தோன்றாதபடி தாம் வகுத்த பகுப்புமுறைகளை மேற்கோள்கள்; சான்றுகள் தந்து தெளிவித்தார். எழுத்துமுறை - நூலை எழுதிய அமைப்புமுறை. காட்டி - எடுத்துக்காட்டுக்கள் தந்து, தெரிந்து - சிக்கல்களை எப்படி விளக்குவது என்று தொல்காப்பியர் ஆராய்ந்து அறிந்து, தெரிந்து அதற்கேற்ப எழுத்துமுறை காட்டி என இயைக்க, உ) “மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப் பியனனெத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே” என்பதுவரை விளக்கம். தொல்காப்பியன் என்பது இயற்பெயர். போக்கறு பனுவலாகிய இந்நூல் எழுதிய பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயரை உலகம் அறியச் சிறப்பாக வெளிப்படுத்தினான். பெருந்தேவனார் பாரதம் பாடிய பின் பாரம் பாடிய பெருந்தேவனார் எனவும் பெருங்கடுங்கோ பாலை பாடிய பெருங்கடுங்கோ எனவும் இளங்கடுங்கோ மருதம் பாடிய இனங்கடுங்கோ எனவும் தம் இயற்பெயர்களைப் புலமைச் சிறப்புடைய பெயர்களாக வெளிப்படுத்திக் கொண்டதை ஒப்பு நோக்கவேண்டும். `தொல்காப்பியன் எனத் தன் பெயர்' என்பதனால் இயற்பெயர் தெளிவாயிற்று. இந்நூல் யாத்து அரசவையில் அரங்கேற்றிய பின் தமிழுகம் தொல்காப்பியனை எப்படிப் பாராட்டிற்று என்பார். `ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' எனச் சுட்டினார் பனம்பாரனார். தோற்றி - தோன்றச்செய்து, பிறரறியச் செய்து; பிறவினை “தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும்” என்றது காண்க. ஐந்திரம் - ஐவகையாற்றல். நிறைந்த என்ற வினையால் ஐந்திரம் நூற்பெயரன்று என்பதும், ஆற்றல் நிறைவு என்பதும் பெறப்படும். நூலாயின் நான்மறை முற்றிய என்பது போல, ஐந்திரம் முற்றிய என்ற வினை வந்திருக்க வேண்டும். `வேதம் நிறைந்த தமிழ்நாடு, என்ற பாரதி பாட்டில், `நிறைந்த' என்பது மிகுந்த என்ற பொருளில் வருவதை எண்ணுக. நிறைவு - குறைவிலாத்தன்மை. ஐந்திரமாவது - ஐந்திணை இலக்கணம் கூறும் அறிவாற்றல். எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் எல்லாம் கூறியிருப்பினும் பொருலிலக்கணமே வாழ்வுச் சிறப்புடையது; ஆதலின், அச்சிறப்பாற்றல் தொல்காப்பியரிடத்து மிகுந்திருக்கக் கண்டனர் அவையத்தார். அதனால் `ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்ற சிறப்படைக்கு உரியவர் ஆயினர் தொல்காப்பியர். தமிழ்ப் பெரியார் உ.வே.சா பலவகை இலக்கியங்களையும் இலக்கணங்களையும் தேடிக்கண்டு பதிப்பித்திருப்பினும் சங்கநூற் பதிப்பாற் சிறப்புப் பெறுவதையும், அடிகள் விபுலானாந்தர் யாழ்நூலாற் சிறப்பு; பெறுவதையும், பண்டிதமணி கதிரேசனார் சுக்கிர நீதிமொழி பெயர்ப்பாற் சிறப்புப் பெறுவதையும் ஈண்டு நினைவு கொள்வோம், ஐந்திரம் நிறைந்த ஒரு வகைப் புகழ் ஈண்டுச் சொல்லப்பெற்றது. தொல்காப்பியனார் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவது பனம்பாரனார் பாயிரக் கருத்தன்று, பாயிரம் நூல் பற்றியதேயாகும்; எனினும் `பல் புகழ்' நிறுத்த படிமையோன்' என்ற இறுதியடி தொல்காப்பியர் வேறு வகையாலும் நன்மதிப்புடையவர் என்பதனைத் தொகுத்துக் காட்டும். படிமையோன் - பிறருக்கு எடுத்துக்காட்டான வாழ்க்கையோன். அத்தகு வாழ்க்கை தனக்கென வாழாப் பிறர்க்கென வாழும் ஒழுக்கத்தால் வருவது. படிமை - ஒழுக்கமுடைமை. நடைமுடிபு: பொருளும் நாடி முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் போக்கறு பனுவலாகத் தொகுத்தான் யாவன் எனின். பாண்டியன் அவையகத்து அதங்கோட் டாசானுக்கு ஆராய்ந்து முறைகாட்டி ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயரைச் சிறப்பாகத் தோன்றச் செய்து மல்குநீர் வரைப்பின் பல்புகழை நிலைநிறுத்திய சான்றோன் ஆவான். திறனுரைத் தொடர்ச்சி வடவேங்கடம் தென்குமரி - வடக்கே வேங்கடம் தெற்கே குமரி என்பது பொருளாயினும் உண்மைக்குறிப்பு என்ன? வேங்கடத்தின் வடக்கு வரையும் (அஃதாவது வடபெண்ணை வரையும்) குமரி மலையில் தெற்குவரையும் உள்ளடங்கக் கொண்டது தமிழ் நிலப்பரப்பு என்பதாம். `இவை அகப்பாட் டெல்லை' என்று இளம்பூரணர் தெளிவுபடுத்தியிருப்பது பொருந்தும். `தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின்காறும்' என்பர் அடியார்க்கு நல்லார். போக்கறு பனுவல் - நூலின் பெயர். துகளறுபோதம் என்பது போல. தொல்காப்பியன் எனத் தன்பெயரை நூலுக்கு வைத்தான் என்ற கருத்துப் பொருந்தாது. `ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' எனத் தன் பெயர் தோற்றி என முன்வருவதையும் `பல் புகழ்நிறுத்த' எனப் பின்வருவதையும் சேர்த்துப்பார்க்க வேண்டும். குற்றமற்ற பனுவல். குற்றம் அறுக்கும் பனுவல் என இருபொருளும் இயையும். புலந்தொகுத்தோன் - பரந்து பட்ட இலக்கணக் கூறுகளை இயல்களாக அடக்கிக் கூறினான். “இது தொகுத்து யாக்கப் பட்டது; என்னை? உலகத்து நடக்கும் அகப்பொருட் செய்யுள் இலக்கணமெல்லாம் இவ்வறுபது சூத்திரத்துள்ளே தொகுத்தானாதலின்” என்று தொகுத்தல் என்பதற்கு விளக்கஞ் செய்வர் இறையனார் அகப்பொருள் உரையாசிரியர். இதனால் எங்கோ கிடந்த பல நூற்பாக்களைத் திரட்டினார் என்ற கருத்து வன்மையாக மறுக்கத்தகும். ஐந்திரம் நிறைந்த - ஐந்திணை இலக்கணம் சொல்லும் ஆற்றல் நிறைந்த என்பது பொருள். இப்பொருள் கூறல் இடர்ப்பாடுடையது. எதிர்ப்புக்கு உரியது எனினும் உள்ளவற்றுள் ஒத்தது காணல் என்ற உத்திப்படி ஊகிக்க வேண்டும். ஒருவரைப் பாராட்டுங்கால் செய்ததைச் சுட்டிப் பாராட்ட வேண்டுமேயன்றிச் செய்ததை விட்டுவிடுதல் பொருந்தாது செய்ததைச் சுட்டியபின், பொருந்திய பிறவற்றையும் இணைக் கொள்ளலாம். திருவள்ளுவர் கற்ற நூல்கள் எவ்வளவோ இருக்கும் எனினும் பாராட்டு திருக்குறட் படைப்புக்கே ஆனந்தரங்கம் பிள்ளைக்குப் பாராட்டு தமிழ்நாட் குறிப்புக்கே. அழகப்பர் பல்புகழ் சான்றவர் எனினும் பாராட்டு முழுக் கொடைக்கே; கொடைவெளிப்பாடே ஏனைப் புகழ்களையும் வெளிச்செய்தன. எனவே `ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்பது அவர் எழுதிய நூல் தந்த புகழடை. அவர் நூலே அவருக்கு வழிவழி உலகப் புகழ் நிறுத்தும் சான்று. கடல் சூழ் உலகில் ஐந்திரம் என்னும் வடமொழி வியாகரணத்தை நன்கறிந்த தொல்காப்பியன் எனத் தன் பெயரை வெளிப்படுத்தினார் என்று பொருள் கொண்டால்.. இந்த வேற்றுமை நூலறிவு அவருக்கு உலகப்புகழுக்குப் போதிய காரணம் ஆகுமா? அவர் நூலுள் இதுபற்றிய ஒரு குறிப்பாவது உண்டா? அப்படிப் புகழ்பெறுவதற்கு ஐந்திரத்துக்கு மாபாடியம் எழுதினாரா? ஐந்திரம் என்ற சொல்லொப்புமை கொண்டு வடமொழியோடு ஒட்டிய இடைக்காலச் சாயல் இது. இவ்வாறு மயங்கிய சொல்லொப்புமையால் இலக்கிய இலக்கணத் துறையிலும் சமயத்துறையிலும் பிறதுறையிலும் தமிழுக்கு விளைந்த களைகள் பலப்பல; ஐந்திரம் என்ற வடமொழியிலக்கண நூல் தொல்காப்பியர் காலத்து இருந்திருக்குமேல் அவர் அதனை நன்கு கற்றுப் பார்த்திருக்கலாம். அது தவறில்லை; எந்நூலையும் கற்பது முறையே; எனினும் இந்தத் தொடருக்கு அது பொருந்துவதன்று; பாயிரத்துக்குள் வரவேண்டியதுமன்று. இப்பாயிரத்தில் வரும் எண்ணிக்கை தொடர்பான ஓரமைப்பைச் சுட்டிக் காட்டவிரும்புவன். ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து பன்மை என்ற எண்ணிக்கை நாட்டம் பனம் பாரனார்க்கு இருந்தமை தெளிவாகின்றது. ஒன்று தமிழ் கூறு நல்லுலகம்; இரண்டு வழக்கும் செய்யுளும்; மூன்று எழுத்தும் சொல்லும் பொருளும்; நான்கு நான்மறை: ஐந்து ஐந்திரம்; பன்மை பல்புகழ் நிறுத்த, இவ்வோட்டத்தைக் காணுங்கால், நான்மறைக்குப் பின் வரும் ஐந்திரம் என்பது எவ்வாறேனும் ஐந்து என்னும் எண் குறிப்பினதாக இருத்தல் வேண்டும். ஒருசாரார் உரை கூறுவதுபோல் எழுத்து, சொல், பொருள் யாப்பு அணி என்று ஐந்தினைக் கொள்ளலாம் எனினும் எழுத்தும் சொல்லும் பொருளும் என முப்பாகுபாடே அன்றிருந்த வழக்காதலானும், மெய்ப்பாடு விடுபட்டுப் போதலானும் அவ்வுரை பிற்காலச்சாயலது. திருக்குறள் உரைகளையெல்லாம் கற்ற பெருக்கம் ஒருவனுக்கு இருந்தாலும் பரிமேலழகர் உரையை நன்கு கற்றவன் என்று வீறுபடப்பாராட்டுவது உண்டன்றோ? அதுபோல் எழுத்து, சொல், பொருள் என்ற முப்புலவறிவு இருந்தாலும் தொல்காப்பியர் தம் ஐந்திணையிலக்கண வன்மையைப் பொருளதிகாரத்து விரிவுபட வெளிப்படுத்தியுள்ளார். ஆதலின் `ஐந்திரம் நிறைந்த' என்ற பெயர் வீறு பெற்றாhர் என்க. இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக்கூட்டம்' என்ற தொல்காப்பியத்தொடர் ஒரு சான்றாகும். ஐந்திணை எனவே ஒருவாறு புறமும் அடங்கும், எழுத்தும் சொல்லுமே புலந்தொகுத்திருந்தால் தொல்காப்பியர் ஒல்காப்பெருமை எய்தியிருப்பாரா? எழுத்தும் சொல்லும் இல்லாது. பொருளொன்றுக்கே புலந்தொகுத்திருந்தால் அப்பெருமை பெற்றிருக்கமாட்டாரா? உறழ்ந்து பார்க்க. ஐந்திறம் என வல்லினப்பாடம் இருந்திருக்க வேண்டும் என்பர் சிலர். அத்தகு பாடபேதம் இல்லை; எனினும் திரம் என்ற இடையினப் பாடத்துக்கே மிகுதல். ஆற்றல் என்ற பொருள் கொள்ளலாம். 14-4-1986இல் உலகத் தமிழ் சங்கத் தொடக்கவிழாவில் வெளியிடப் பெற்ற ஐந்திறம் என்ற நூல் அண்மைக் காலத்துத் தோன்றியது. தூய நற்றமிழில் நூற்பா யாப்பினது. பலதுறைக் கலைக்குறிப்புடையது. மயக்கநடை மிக்கது. பனம்பாரனார் பாயிரம் கூறும் ஐந்திரத்துக்கும் இப்புது நூலுக்கும் எவ்வகையானும் தொடர்பில்லை. `மயங்காமரபின் எழுத்துமுறை காட்டி' என்பதற்கு முன்னை நூல்களில் எழுத்திலக்கணம் சொல்லிலக்கணத்துள் மயங்கிக் கிடந்தது என இளம்பூரணரும், முத்தமிழ் மயங்கிக் கிடந்தது எனச் சிவஞான முனிவரும் விளக்குவர். தொல் காப்பியத்துக்கு முந்திய நூல் எதுவும் கிடைக்காதபோது, இவ்வாறு பொருள் கொள்ளச் சான்று என்ன? எழுத்துமுறை - நூன்முறை என்று பொருந்த பொருள் செய்வர் அரசஞ் சண்முகனார். `எழுத்துமுறை' என்ற என் சிந்தனைக் கட்டுரையில் தொல்காப்பியர் நூல் எழுதிய முறைகளை ஆராய்ந்து எழுதியுள்ளேன். இப்பாயிரத்தில் வரும் போக்கறு பனுவல், நான்மறை, ஐந்திறம் என்ற பகுதிகள் மேலும் சிந்தனைக்கு உரியவை. பாயிரமுடிவுரை இப்பாயிர முடிவுரையாக வரலாற்று நோக்கிலும் காப்பு நோக்கிலும் வளர்ச்சி நோக்கிலும் தமிழ், தமிழினம், தமிழகம் பற்றி எஞ்ஞான்றும் இன்றியமையாத அறிவுரையை எழுதுவேன். இஃது உரைக்குப்புறமென எண்ணுவது தவறு. உரைக்காப்பு, உரைவளர்ச்சி, உரைக்கல்வி எல்லாம் நிலைபெற வேண்டுமெனின் தமிழ் நிலைபெற்றாக வேண்டும்; தமிழ் நிலைபெறுதல் என்பது தமிழர் நிலைபேறாகும்; தமிழர் நிலைபேறு என்பது தமிழகம் நிலை பேறாகும்; தமிழகம் இடத்தாற்குன்றின், தமிழர் எண்ணிக்கை இயல்பாகக் குன்றும்; தமிழர் எண் குன்றின். குடியரசில் தமிழின்நிலை ஆற்றலற்றுக் குன்றும். இவ்வாறு நிலமும் மக்களும் மொழியும் குன்றின் எல்லாக்கலையும் தமிழில் குன்றும். மறையவும் அழியவும் செய்யும். உலகினை நிலைபெறுத்தலும் இறைவனின் ஒரு கடமையாகச் சுட்டப் படுமாயின். தமிழினை நிலத்தாலும் ஆளெண்ணாலும் நிலைபெறுத்தல் தமிழினத்தின் கடமை யன்றோ? தொல்லூழிக் காலத்துத் தமிழ் நாகரிகம் மொகெஞ்சொதரை ஆரப்பாகாறும் பரந்து கிடந்தது. பனம்பாரனார், தொல்காப்பியனார் காலத்துத் தமிழுலகம் தெற்கே பன்னெடுங் காவதம் பஃறுளியாற்றொடு குமரிக்கோடாக நீண்டிருந்திருந்தது. பெருங்கடல் கோளுக்குப்பின் குமரிக்கோடு தாழத் தென்னெல்லை மாகடலாயிற்று. கிழக்கே பூம்புகார் மாமல்லபுரம் எல்லாம் கடல்வாய் அமிழ்ந்தன. தென்குமரியும் பன்முறை அலைவாய்ப் பட்டுச் சுருங்கலாயிற்று. இயற்கைச் சீற்றத்தால் தமிழ்ப்பெருநிலம் எய்திய அழிவுகள் நிலநூலினர் தொகுத்துச் சான்றுபடக் காட்டுவர். நம் கண்காணக் கோடிக் கரையும் கரையலாயிற்று. பெருந் தமிழகம் பெருக்குறுக்கம்பட்டதற்குச் சினப்பெருங்கடல் பெருங்காரணம். இதனைப் பொறாத துறவி இளங்கோவடிகள். “குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்று வைது பாடினார்; வைது பாடி நாட்டுப்பற்றையூட்டினர். கடல்கோள் போல மொழிக்கலப்புக்கோளும் தமிழ்ப் பெருநிலத்தைக் குறுக்கியது என்ற வரலாற்றுண்மை பலர்க்குப் படவில்லை; எடுத்துச் சொன்னாலும் ஏறுவதில்லையே. சிலப்பதிகாரமும் பதிற்றுப்பத்தும் இன்ன பிறவும் வழங்கிய சேரநாடும் ஆழ்வார்கள் பாசுரம் இசைந்த வேங்கடமலையும் தமிழிற் பிரிந்து பாரதத்தின் பிற மாநிலங்கள் ஆயின. அயல்நாடு கவரவில்லை என்ற ஓர் அமைதி நமக்குத் தோன்றினும். தமிழுக்கு இழப்பு என்பது வெளிப்படை. தங்கப் பொன்கட்டி மடி தவறிப் பாரத நிலத்துப்புதையுண்டாலும், உடையானுக்கு இழப்புத் தானே. வேங்கடமும் குமரியும் தெய்வத்தன்மையன. கேடில என்று இளம்பூரணர் முதலாயினோர் புகழ்ந்தாலும் தமிழர்க்கு என்னாயின? பன்னெடுங்காலம் தமிழகமாக இருந்த சேரநாட்டுப் பகுதியும் வேங்கடப்பகுதியும் அயல்நிலமானது படையெடுப் பாலன்று. பண்பாடு மாற்றத்தாலன்று. ஆட்சி வேறுபாட் டாலான்று. ஒரே ஒரு காரணம் அயலொலி அயலெழுத்துக் கலந்த அயல்மொழிக் கலப்பாகும். தமிழகத்தின் எல்லைப் பகுதிகளை விழிப்போடு தமிழாகக் காத்துக் கொள்ளத் தவறியதாலும், அயல்மொழிகள் எல்லார்தம் செவிவாய்களில் நிரம்பப் புகுந்தமையாலும், அம்மொழிகளைத் தொல் காப்பியம் முதலான இலக்கணங்கள் கூறியபடி தமிழ் வடிவாக்கிக் கொள்ளாது விட்டமையாலும், அயலொலி களோடு அயல்வரிவடிவங்களும் எழுத்துவழக்கில் இடம் பெற்றமையாலும் தமிழுக்கு உள்ள இடம் சுருங்கிற்று; அயலுக்கு இடம்பெருகிற்று; எனவே மொழியொலிக் கலப்பு தமிழுக்கு இடவிழப்பு; பிறமொழிகட்கு இடவிரிப்பு. இவ்வரலாற்று நிலையை இனியேனும் தமிழினத்தார் எண்ணி உள்ள தமிழ் நிலத்தையாவது எம்மொழிக்கலப்பும் எவ்வொலிக் கலப்பும் எவ்வெழுத்துக் கலப்பும் புகவிடாது காத்துக் கொள்ள வேண்டாமா? கண்காண இழந்தும் அறிவுணர்வு வேண்டாமா? கலப்பின்றித் தமிழைத் தமிழியற்கைப்படி காக்கும் துணிவும் அறிவும் அவ்வியற்கைப்படி காலத்துற்கேற்ற கலைத் துறைகளை யெல்லாம் கொண்டு வந்து வளர்க்கும் உரமும் தரமும், தமிழைத் தன்னிறைவுடையதாக்கும் ஆள்வினையும் ஆசையும் ஒவ்வொரு தமிழச்சிக்கும் தமிழனுக்கும் பிறப்புக் கடமையாகும். இதுவரை உணராரும் இனியுணர்க. ஒருபால் இவ்வாறு பல்லிழப்பு நேரினும் இந்திய மொழிகளுள் தமிழுக்குத் தனி முதன்மையுண்டு. உலகமொழி, உலகளாவிய மொழி என்று ஒவ்வொரு பாரதனும் பாரதத் தமிழனும் சுட்டிக்காட்டத் தக்க ஒருமொழி தமிழ்மொழியே. பலவெளி நாடுகளில் தமிழ்க்குடிகள் உள்ளன. சில நாடுகளில் தமிழ் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு நடத்திய ஓர் இந்தியமொழி தமிழே. இந்திய மொழிகளுள் முதற்கண் உலக மாநாடு கண்டதும் தமிழே, இந்தியாவில் பிற பல மாநிலங்களிலும் தமிழர் தமிழ்ப் பற்றோடு வாழ்கின்றனர். எந்த அயல்நாட்டில் இருந்தாலும், எந்த அயல்மாநிலத்தில் இருந்தாலும் தமிழர்க்கு வீட்டுமொழி தமிழே. மனையகத்துள் தமிழ்க்குடும்பத்தார் பேசுவது தமிழே. இன்னநடைமுறையால் கன்னித்தமிழுக்குத் தனித்த வாழ்வுண்டு. பலதொன் மொழிகளைப்போல அழித்தொழிந்து சிதையாமல். நின்று வளர்ந்து பெருகும் சீரிளமைத் திறம் உண்டு. தமிழ்க்குலம் சுருங்காமல். தமிழினம். சுருங்காமல், தமிழ்சுருங்காமல். கலப்பு இனியும் பெருகாமல் தமிழ்த்தாயைக் காக்கும் குறிக்கோள் தமிழர்க்கு என்றும் வேண்டும். இன்றைய தமிழர் இக்குறிக்கோளுடையவர் என்பது கண்டு இவ்வுரை பாராட்டுகின்றது; எதிர்காலத்தமிழரையும் யாண்டிருந்தாலும் எந்நிலையில் இருந்தாலும் தமிழ்க் குறிக்கோளோடு பாரதத்தில் தழைத்து வாழுங்கள் என்று வழிகாட்டி வாழ்த்துகின்றான் இவ்வுரையாளன். தமிழர் குறிக்கோள் தவறார் கலப்பில் தமிழே நிலைப்புத் தரும். சிறப்புப்பாயிரம் மாணிக்கவுரை முற்றும். தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் முதலாவது நூன்மரபு - மாணிக்கவுரை இயல் முன்னுரை நூலுக்கு மரபாக வழங்கிய குறியீடுகளைக் கூறுவது நூன்மரபாகும். இவ்வியலில் எழுத்திலக்கணத்துக்கு உரிய எழுத்து, உயிர், குறில், நெடில், மெய், வல்லினம், மெல்லினம். இடையினம் முதலான பல குறியீடுகள் கூறப்படும். சுருக்கம், விளக்கம், எடுத்தாட்சி இவை குறியீட்டின் பயன். அறிவியல் கலையியல் எனப்பட்ட எல்லாத்துறைகட்கும் குறியீடுகள் உள. எழுத்ததிகாரத்தின் முதலியலான நூன்மரபில் எழுத்துக் குறியீடுகளைச் சொல்வது போலச் சொல்லதிகாரத்தின் முதலியலான கிளவியாக்கத்தில் உயர்திணை, அஃறிணை, பெயர்வினை இடை உரி என்றின்ன சொல்லிலக்கணக் குறிகளையும் பொருளதிகாரத்தின் முதலாவது அகத்திணை யியலில் பெருந்திணை, ஐந்திணை, கைக்கிளை, முதல் கரு உரி என்றினைய பொருளிலக்கணக் குறிகளையும் சொல்லுவர் ஆசிரியர். பாயிரம் கூறுவதுபோல இது மயங்காமரபின் ஓர் எழுத்துமுறை. நூல் - இலக்கணநூல்; ஈண்டு போக்கறு பனுவலான தொல்காப்பியத்தைக் குறிக்கும். முதலாவது இயலுக்கு எழுத்துமரபு என்று பெயர் இருக்கலாம். ஆனால் நூலின் தொடக்கவியல் என்று காட்டுவதற்கு நூன்மரபு என்ற பெயர் வைக்கப்பட்டது. முன்னுரையை நூன்முகம் என்று இன்றும் நாம் வழங்குகின்றோம். இயற்கருத்து தமிழ்மொழி அகரமுதல் னகரம் வரை முப்பது எழுத்துக்கள் (ஒலிகள்) கொண்டது. குற்றியலிகரம். குற்றியலுகரம். ஆய்தம் என்ற மூன்றும் எழுத்துப் போல்வன. இவை சார்பெழுத்தாம். புள்ளிபெறும். குற்றெழுத்து ஐந்து ஒரு மாத்திரை இசைக்கும். நெட்டெழுத்து ஏழு. இரண்டு மாத்திரை இசைக்கும் ஓரெழுத்து மூன்று மாத்திரை ஒலிக்கும் தன்மை தமிழில் இல்லை. கூடுதலான மாத்திரை ஒலிக்கவேண்டின். வேண்டிய அளபுக்குரிய எழுத்துக்களைக் கூட்டி ஒலிக்க வேண்டும். இமைக்கும் காலமும் நொடிக்கும் காலமும் ஒரு மாத்திரைக் காலவளவாம். அகரமுதல் ஒளகாரம் வரை பன்னிரண்டும் உயிர் என்ற குறியும். ககரமுதல் னகரம் வரை பதினெட்டும் மெய் என்ற குறியும் பெறும். மெய்க்கும் மூன்று சார்பெழுத்துக்கும் மாத்திரை அரை. மகரமெய் கால் மாத்திரை ஒலிக்கும் இடனுண்டு. கால் மாத்திரை பெறும் மகரமெய்க்குப் புள்ளி வடிவு உள்ளாக இருக்கும். (ம) பொதுவாக மெய்யெழுத்துக்கள் தனிநிலையில் புள்ளிவடிவுகள் பெறும். உயிரெழுத்துக்களில் எகரத்துக்கும் ஒகரத்துக்கும் புள்ளிவடிவு உண்டு. (எஒ) மெய்யும் உயிரும் சேர்ந்து உயிர் மெய்யாகுங்கால் வரிவடிவு மாற்றங்கள் ஏற்படும். க், ச், த் எனவரும் மெய்யெழுத்தின் மேல் இருக்கும் புள்ளியை மட்டும் எடுத்துவிட்டால் க, ச, த, என்று அகரத்தொடு கூடிய உயிர்மெய்யாகிவிடும். ஏனை உயிர் மெய்கள் கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ என்றவாறு பல வடிவுத்திரிபுகள் எய்தும். உயிர்மெய் என்பது குறியீடாக இருந்தாலும் முதலில் மெய்யொலியும் பின் உயிரொலியும் தோன்றும். மெய் வல்லெழுத்து ஆறு, மெல்லெழுத்து ஆறு, இடையெழுத்து ஆறு என்று முவ்வினமாம். இவை தம்முள் தொடருவது மெய்ம்மயக்கம் (கலப்பு, இயைபு,) எனப்படும் அப்பா, அண்ணா, அல்லா, எனத் தன்மெய்க்குப்பின் தன்மெய்யே வருதலுண்டு. ஆட்சி, ஆண்டு ஆய்வு என ஒருமெய்க்குப்பின் வேற்றுமெய் வருதலுமுண்டு. இவை ஒரொற்றுடனிலை எனப்படும். பதினெட்டு மெய்களில் ர, ழ, நீங்கிய பதினாறு மெய்கள் தம்முன்தாம் வரும். ர, ழ, இரண்டின் முன் சார்பு வாழ்வு எனப் பிற எழுத்துக்களே வரும். குற்றெழுத்து ஐந்தில் அ, இ, உ என்ற மூன்றும் சுட்டுக் குறியும். நெட்டெழுத்து ஏழில் ஆ, ஏ, ஓ என்ற மூன்றும் வினாக்குறியும் பெறும். உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் மேலே சொல்லிய மாத்திரையளவுகளைக் கடந்து, இசைத்தமிழில் இசைத்தல் உண்டு என்று யாழ்மறை கூறும். கருத்து விளக்கம் எழுத்து என்பது தமிழில் பொருட்சுட்டுடைய மொழியொலியைக் குறிக்கும்; வரிவடிவையும் குறிக்கும். நூன்மரபு முதற்கண் ஒலிகளையும் ஒலிக்குரிய அளபுகளையும் கூறிய பின், சிலவற்றிற்கு வரிவடிவும் கூறும். இலக்கணத் தெளிவுக்கு வேண்டப்படும் வரிவடிவுகளை மட்டும் தொல்காப்பியம் நூன்மரபிற் சொல்லும். மயக்கம் - ஒரு மெய்யெழுத்தோடு ஒரு மெய்யெழுத்துத் தொடரும் நிலை, சேர்ந்தியையும் தன்மை. நாம் இன்று கூறும் கலக்கம், குழப்பம் என்ற பொருளில்லை. மெய்ம்மயக்கம் என்பது தமிழுக்கு உயிரனைய அமைப்புக்கூறு. இன்ன மெய்க்குப்பின் இன்னமெய்தான் வரலாம் என்ற மொழியியல்பை இதனால் உணரலாம். மொழி நிலைபேற்றுக்கும் மொழிக் காப்புக்கும் சொல்லாக்கத்திற்கும் சொல்லொழுங்குக்கும் இவ் விலக்கணம் வரம்பானது. இது செயற்கையாகப் புகுத்தும் புறவிதியன்று. மக்கள் வாய்வழக்கிலிருந்து தோன்றும் இயல்பு நெறி. மொழிக்கு மொழி இம்மயக்கம் வேறுபடுமாதலின் தமிழ்மொழியின் அமைப்பை நன்குஅறிந்து வழாது பேசவும் எழுதவும் வேண்டும். எல்லா இலக்கணங்களும் இதனை யொட்டி நடத்தலின் நூன்மரபு மெய்ம்மயக்கம் பற்றி ஒன்பது நூற்பாக்களில் விரித்துக் கூறுகின்றது. ஒலி, எண்ணிக்கை, வகை, அளபு, வடிவு, மயக்கம் என்ற எழுத்தின் அறுகூறுகள் நூன்மரபில் மொழியப்பட்டன. மேலும் இந்நூன்மரபு தனியெழுத்துக்குத் தனித்த நிலையில், அதன் தன்மைகளை நுவலும். வரிவடிவுபற்றிய செய்தி நூன்மரபளவில் நின்றுவிடும். புணர்ச்சியிலக்கணம் அனைத்தும் ஒலிநிலையில் வைத்து விதிக்கப்படுவன என்பதனை மறவாது நினைத்துக் கொள்க. ஆதலின் எழுத்து என்பது ஒலிநிலையைக் குறிக்கும் எனவும் எழுத்ததிகாரம் என்பது ஒலிநிலை யடிப்படையில் ஒலி, பிறப்பு, ஒலியிடைப்புணர்ச்சி முதலான இலக்கண விதிகளைச் சுட்டும் அதிகாரம் எனவும் அறிக. முப்பது தனியொலிக்கும் முப்பது தனிவரிவடிவங்கள் தமிழில் உண்டு; அஃதாவது ஒவ்வோர் ஒலியும் தனக்கென ஒருவரிவடிவு உடையது. இவ்வுடைமை செம்மையான தமிழ் வரலாற்றுக்கு எடுத்துக்காட்டு. இங்'னம் ஒற்றுமையிருத்தலின் எழுத்து என்ற ஒரு குறியீடே இரண்டினையும் குறிக்கப் பயன்பட்டது; எனினும் இக்கால வளர்ச்சியில் மேலும் தெளிவு கருவி ஒலியெழுத்தை ஒலியன் எனவும் வரியெழுத்தை வடிவன் எனவும் புதிய குறியீடுகள் அமைத்துக்கொள்வோம். ஒலியனை `எழுத்தொலி' என்பர் நன்நூலார். தமிழுக்கு எழுத்து முப்பது (1) எழுத்தெனப் படுப அகரமுதல் னகர விறுவாய் முப்பஃ தென்ப சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே இந்நூற்பா எழுத்து என்ற முதற்குறியீடும் முப்பது என்ற எண் வரம்பும் கூறும். அகலவுரை தமிழ்மொழிக்கு அடிப்படை முதலெழுத்து என்று வழிவழிச் சொல்லப்படுபவை முப்பது. இவை அகரம் தொடங்கி னகரவிறுதியாகும். சார்பெழுத்து என்று அடுத்த நூற்பாவில் கூறப்படும் மூன்றும் இவற்றொடு சேரா. முதலெழுத்தாகா: முதலெழுத்து வரிசையில் எண்ணப்படா என்பது கருத்து. மூன்றலங்கடை - மூன்று அல்லாத இடத்து அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள; க் ங் ச் ¨ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற்ன் -இவை இக்கால வடிவன்கள். திறனுரை எழுத்து என்பது ஈண்டு ஒலியெழுத்தைச் சுட்டும். எல்லா மொழிக்கும் ஒலி மூலம் ஆதலானும், இஃது எழுத்ததிகாரம் ஆதலானும் முதல்நூற்பா எழுத்து எனத் தொடங்குகின்றது. மக்கள் வாயிலிருந்து வரும் ஓசையெல்லாம் எழுத்தெனப் படுவதில்லை. பொருண்மையாற்றலுடைய ஒலியே எழுத்து எனப்படும். இத்தனிச் சிறப்பினைச் சுட்டுதற்கே `எழுத்து எனப்படுப' என்று நடைசெய்தார் ஆசிரியர். தமிழ்மொழியில் வழங்கும் பல்லாயிரக்கணக்கான சொற்களைக் கொண்டு கூட்டியலசிப் பார்ப்பின், அவையெல்லாம் முப்பது ஒலியனில் அடங்கி நிற்கும் என்பது தமிழ் நூலோர் கண்ட அறிவியல் முடிபு. இவ்வரம்பு தொல்காப்பியர்க்குப் பன்னெடுங்காலத்திற்கு முன்பே ஏற்பட்டு வழிவழி வந்தது என்ற பேருண்மையை `முப்பஃது என்ப' என்ற தொடரால் அறியலாம். எழுத்து என்பதன் இலக்கணம் யாது? பொருண்மைச் சுட்டு மட்டும் உடையதன்று; அதனோடு தனக்கென்ற பொருட்குறிப்பாற்றலும் பொருள் வேறுபடுக்கும் முரணாற்றலும் உடையது. முப்பது எழுத்துக்களும் இவ்விலக்கணப்படி ஒன்றனையொன்று வேறுபடுத்தும் ஆற்றலுடையவை; தம் பொருளாற்றலை நிலை நிறுத்துபவை. அவன், அவள், அவர் என்ற மூன்று சொற்களும் எதனால் பொருள்வேறும் பால்வேறும் படுகின்றன? ஈற்றிலுள்ள னகரம் ளகரம் ரகரம் என்ற வேறுபட்ட ஒலி வரவே காரணம். வால், வாள், வாழ் இவை ஈற்றில் வரும் லகரம் ளகரம் ழகரம் இவற்றால் பொருள் வேறுபடுகின்றன. எனவே இவை ஒலியன்கள் அடு, ஆடு, இடு, ஈடு: உடு, ஊடு, எடு, ஏடு; ஒடு, ஓடு இவையெல்லாம் பொருள் வேறுபடுதற்கு வேறுவேறு உயிரெழுத்துக்களே அடிப்படையாம். இங்ஙனம் பல்லாயிரம் தமிழ்ச்சொற்களைப் பொருள்பட வைத்து வேற்றுமைக்காரணம் பார்ப்பின், அவையெல்லாம் முப்பது எழுத்துக்களின் சேர்க்கையாகவும் முப்பது எழுத்துக்களின் வேற்று நிலைத் தனியாற்றலாகவும் முடியக் காணலாம். உலகப் பொருட்களையெல்லாம் 110 மூலங்களாக வேதியியல் அடக்கி முடிப்பதை ஒப்புநோக்குக. வேதியியல் பொருள்மூலத்திற்கும் தமிழ் ஒலி மூலத்திற்கும் ஒரு வேற்றுமையுண்டு. புதுப்பொருள் காணக்காண வேதியியல் மூலக்கூறுகளின் எண்ணிக்கை கூடிவரும். பண்பட்ட தமிழுக்கு முப்பது ஒலியன் என்பது முடிந்தவரம்பு. அயலொலியன் வந்து கூடுதற்குத் தமிழில் இடனில்லை, தமிழுக்கு இயற்கையில்லை என்பது இம்முதல் நூற்பா காட்டும் முடிந்தநிலை. அதனாலன்றோ குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் மூன்றும் தமிழொலிகளாக இருந்தாலும் முதலெழுத்தாக எண்ணப்பட வில்லை. இதனை மூன்றலங்கடை எழுத்தெனப்படுவன முப்பஃது என்ற எதிர்மறை நடையால் வலியுறுத்தினார் ஆசிரியர். சார்பெழுத்தாம் தமிலொலிக்கே இது வரம்பாயின், அயலொலியும் அயலெழுத்தும் தமிழ் வரம்புக்குள் நுழைதலோ நுழைத்தலோ சாலுமா? தொல்காப்பியத்துக்குப் பின் வந்த இலக்கண நூல்களும் இதால்காப்பியத்தடம் பதிந்தனவே. முப்பது என்ற எண் வரம்பும் எழுத்து வரம்பும் தமிழ் நன்செய்க்கு என்றும் மாறாதவை. தொல்காப்பியர் வரைந்த இம்மொழி வரம்பினைத் திருவள்ளுவரும் உடன்பட்டனர். முதற்குறள் `அகரமுதல்' எனத் தொடங்குவதும் இறுதிக்குறள் `கூடி முயங்கற்பெறின்' என னகர ஈறாக முடிவதும் காண்க. எறும்புமுதல் யானை ஈறாக எனவும் ஒன்று முதல் நூறு ஈறாக எனவும் குமரி முதல் இமயம் வரை எனவும் நடைவழக்கு உண்டு. அதுபோல் அகரமுதல் னகரவிறுவாய் என்றார். பலர்க்கும் இயல்பாகத் தெரிந்த செய்தி என்பது இந்நடைக் கருத்து. எவ்வகை எழுவாயும் கூறாமல் `என்ப' என்றதனால் முப்பது என்ற தொகை வழக்கு காலஞ்சுட்ட முடியாத் தொன்மைத்தாகும். சார்ந்து வரல் மரபின்மூன்று - தன் பிறப்புக்கும் வெளிப்பாட்டிற்கும் ஒரு முதலெழுத்தைச் சார்ந்து வரும் இயல்புடையன. இதனால் எழுத்தெனப்பட்ட முப்பதும் பிரிதொன்றினை ஒட்டிநில்லாது தாமே பிறந்து வெளிப்படும் தனித்தன்மையான என்பன தெளிவாம். தொல்காப்பியர் `எழுத்து' என்று ஈண்டுக் கூறியதனைப் பின்னையோர் முதலெழுத்து என்று தெளிவுபடுத்துவர். அயல் நாட்டவனை நோக்கி உள்நாட்டவன் எனவும் அயல்மொழியை நோக்கித் தமிழ்மொழியைத் தாய்மொழி எனவும் சொல்வதை ஒப்புநோக்குக. `சார்ந்து வரல் மரபின்' என்ற அடையே இம் மூன்றும் முதலெழுத்தாகா என்பதற்குரிய ஏதுவைக்காட்டி நிற்கும். ஒருவினா: “எழுத்தெனப் படுப அகரமுதல் னகரவிறுவாய் முப்பஃதென்ப” என்ற அளவில் முதல் நூற்பா அமைந் திருக்கலாமே; மூன்றும் அல்லாத விடத்து என்று விலக்கிச் சொல்லியதன் பயன் என்ன? இது பற்றி அடுத்த நூற்பா இருக்கும்போது, இவ்விலக்குச் சொல்லவேண்டுமா? இது விலக்கிச்சொல்லும் குறிப்பன்று. முப்பத்து மூன்று என்று எண்ணாவிடினும் ஒக்க உடன் நினைக்கத் தக்கவை என்பது குறிப்பு. முப்பது பழங்கள் இக்கூடையில் உள்ளன. மூன்று பிஞ்சுகள் தவிர என்ற நடைபோன்றது முதல் நூற்பா நடை. “மூன்றுதலையிட்ட முப்பதிற்றெழுத்து” என்று தொல்காப்பியம் புணரியல் இயைத்துமொழிதலை நினைக. இம்மூன்றுக்கும் தனிப்புணர்ச்சிகள் உண்மையின் ஒக்கக் கூறவேண்டிய கடப்பாடு இலக்கணிக்கு உண்டு. இவ்வாறு ஒரு நூற்பாவிற் கூறாவிட்டால். இம்மூன்றும் சார்பெனத் தோன்றாது தனிமுதன்மை பெற்று விடுமன்றோ? இதனைத் தவிர்க்கவே `மூன்றலங்கடை' என இறுதியிற் கூறினார். `முப்பஃது என்ப சார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே' என்பதனால் முப்பது எழுத்துப்போல இம்மூன்றும் தொல்மரபுடையவை என்ற வரலாறு பெறப்படும். தமிழ்மொழிக்கு எழுத்து முப்பது என்ற ஒரு செய்தியைத் தருவது தொல்காப்பியத்தின் நோக்கமன்று இவ்வாறு இவ்வரம்பைக் கடைப்பிடித்து ஒழுகுக என்பது நூற்பாவின் பயன். யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற என்று தாம் தெளிந்துணர்ந்ததை வெளிப்படுத்திக் கொள்வதா திருவள்ளுவரின் எண்ணம்? இல்லை. இல்லை. இத்தகு சிறப்புடைய வாய்மையொழுக்கத்தைப் பொய்யாது கடைப் பிடித்து வாழ்க என்று வழிகாட்டுவது திருக்குறளின் பயன். இந்நெறிப்பிடியைத் தொல்காப்பியத்துக்கும் திருக்குறட்கும் போற்றல் வேண்டும். சார்பெழுத்து மூன்று (2) அவைதாம் குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஆய்த மென்ற முப்பாற் புள்ளியு மெழுதோ ரன்ன இது முன்நூற்பாவிற் சுட்டிய சார்பு மூன்றினைக் கூறும். அகலவுரை மேலைநூற்பாவில் சார்ந்து வரல் மரபுடைய மூன்று என்றாரல்லவா? அவை குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்று குறியன. இவை மூன்றும் புள்ளி பெறுவன. மேலைநூற்பாவிற் சொல்லிய எழுத்தை யொத்தன. வழக்கு கேண்மியா, நாடு, எ.கு (எஃகு) திறனுரை குறியீடு நேர்குறி, விளக்கக்குறி என இருவகை. முக்காலி, நாற்காலி, காற்றாடி என்ற சொற்கள் விளக்கக்குறிகள்; இவற்றின் ஓவியங்கள் நேர்குறிகள், தனக்குத்தானே பெயர் நேர்குறி: தன்னியல்பைச் சுட்டும் பெயர் விளக்கக்குறி இவ்வகையில் எழுத்து (முதலெழுத்து) முப்பதும் நேர்குறிகள். அ ஆ க் ங் என்பன பிறப்புப் பெயர். குற்றியலிகரம் மூன்றும் காரணப்பெயர்கள் அல்லது விளக்கப் பெயர்கள் என்பது வெளிப்படை. இவற்றுக்கு நேர்பெயர்கள் இல, சார்ந்து வருவனவாதலின் இதுகருதியே, `எழுத்தோரன்ன' என்று சார்பு கூறினார். குற்றியலிகரம் குற்றியலுகரம் என்ற பெயர்கள் இகர வுகர எழுத்துக்களின் சாயலின என்பது தெளிவு. இகரமும் உகரமும் முதலெழுத்தாம். குற்றெழுத்தாம் அவை ஒரு மாத்திரை யுடையவை; குற்றிகரம் குற்றுகரம் எனவும் சொல்லப்படும். இவற்றை வேறுபடுத்தவே அரைமாத்திரையுடைய சார் பெழுத்துக்கள் குற்றியலிகரம் குற்றியலுகரம் எனப்பெயர் எய்தின. தேய்ந்த காசு, கிழிந்த ஆடை, இடிந்த சுவர் போல என்க. குற்றியலிகரம் குற்றியலுகரம் போல ஆய்தமும் குறுமை யுடையதேனும் நேரடியாக ஒரு முதலெழுத்தின் சாயலன்று. சில வுயிரும் சில மெய்யும் கலந்த சார்புப்பிறப்பினது. தேய்வுத் தன்மையது. ஆய்தம் என்பதனை “ஆய்தல் உள்ளதன் நுணுக்கம்” என்ற உரியியலானும், “நலிபுவண்ணம் ஆய்தம் பயிலும்”என்ற செய்யுளியலானும் அறியலாம். ஆயுதங்கள் கூர்மைக்காகத் தீட்டித் தேய்க்கப் படுதலை வழக்கானும் உணர்க. இம்மூன்றும் ஓரினம் ஆதலால் மாத்திரையளவு கூறும்போது `அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே' என நூன்மரபிலும் பிறப்பிலும் கூறுங்காலை தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் எனப் பிறப்பியலிலும் `ஏனைமூன்று' என்ற தொகைக்குறி ஆளுவர். முப்பதினொடு ஒத்த ஏனை மூன்று என்பது இதன் கருத்து. இம்மூன்றும் சார்ந்துவரும் ஒலி நிலையில் மட்டும் ஓரினம் அல்ல; புள்ளிபெறும் வரிவடிவிலும் ஓரினப்படும் என்று உடன்தெரிவிக்கவே `முப்பாற்புள்ளி' என்றார். எனவே ஒவ்வொன்றும் புள்ளிபெறும் என்பது தெளிவு. “ஒற்றெழுத்தியற்றே குற்றிய லிகரம்” என்பது செய்யுளியல் இதனால் குற்றியலிகரம் ஒற்றாகிய புள்ளி பெறும் என்பது போதரும். “மெய்யீறெல்லாம் புள்ளியொடு நிலையில் “குற்றிய லுகரமும் அற்றென மொழிப” என்ற புணரியல் நூற்பாக்களால் குற்றியலுகரம் புள்ளிபெறும் என்பது வெளிப்படை. `ஆய்தப்புள்ளி' என்றே மொழி மரபிலும் புள்ளி மயங்கியலிலும் குற்றியலுகரப் புணரியலிலும் கூறுவதால் புள்ளிபெறும் என்பது தெளிவு. புள்ளி எய்தும் தன்மையாலும் இவை ஓரினம் என்பதனை வெளிப்படுத்தவே `முப்பாற்புள்ளி' என்றார் ஆசிரியர். இவை புள்ளிபெறுங்கால் புள்ளி நிற்கும் நிலையில் சில வேறுபாடு உண்டு. குற்றியலிகரமும் குற்றிய லுகரமும் உரிய இகர உகர வடிவின்மேல் ஒருபுள்ளி பெறும். மியா, நாடு என வரும்; முதலெழுத்து வடிவனே இவற்றின் வடிவன்; புள்ளி மேலே பெறுவது சார்பு காட்டுவதாம். ஆய்தம் சிலவுயிரும் சில மெய்யும் கலந்த சார்பாதலின். எந்த உயிர்வடிவன் மேலோ எந்த மெய்வடிவன் மேலோ புள்ளி பெறுதல் பொருந்தாது. அவ்வாறு பெற்றால் மெய்க்குரிய புள்ளியாகவோ சிலபோது எகர ஒகரங்கட்குரிய புள்ளி யாகவோ மயக்கத் தரும். தனியுயிரும் ஆகாது தனிமெய்யும் ஆகாது என்ற இரண்டுங் கெட்டான் நிலையில் நடுவே ஒரு புள்ளி இடைப்பட்டு நிற்கும். எஃகு, அஃறிணை, வெஃகு, எனவரும். குற்றியலிகரம் குற்றிய லுகரம் தத்தம் முதல் வடிவனைச் சார்ந்தன. ஆய்தத்துக்கு அன்ன சார்பின்மையால் ஒரு நடுப்புள்ளியே அதன் வடிவன் ஆயிற்று. 0 என்ற இன்மைக் குறிபோல ஆய்தம் (.) என்ற புள்ளியே கொண்டது எனவும். ஒரு புள்ளிதான் உடையது எனவும் அது நடுவில் நிற்பது எனவும். குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே என்ற மொழிமரபு நூற்பாவால் தெளியவேண்டும். ஆய்தப்புள்ளி என்பதனால் புள்ளியுருவே அதனுரு என்பதும் புள்ளி மிசைய என்னாமல் `மிசைத்து' என்ற ஒருமைப் பயனிலையால் அப்புள்ளி ஒன்றுதான் என்பதும் முன்னர் மிசைத்தே என்பதனால் நிற்குமிடம் இடை அல்லது நடுவு என்பதும் தெற்றென விளங்கும். இவ்விளக்கத்தால் இந்நூற்பாவின் நேருரை பின்வருமாறு: குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்றுவகையான புள்ளியொலிகளும் மேற்கூறிய எழுத்தோடு ஒப்பன. குற்றெழுத்து (3) அவற்றுள் அ இ உ எ ஒ வென்னு மப்பா லைந்தும் ஓரள பிசைக்குங் குற்றெழுந் தென்ப இஃது ஒரு மாத்திரை பெறும் எழுத்துக்குறி கூறும். அகலவுரை முதல் நூற்பாவில் எழுத்து முப்பது எனப்பட்டதல்லவா? அவற்றுள் அ இ உ எ ஒ என்ற அந்தப்பகுதி ஐந்தும் தனித்தனி ஒரு மாத்திரையளவு ஒலிக்கும். அதனால் குற்றெழுத்து என்ற குறிபெறும் என்று சொல்லுவர் நூலோர். திறனுரை `அவற்றுள்' என்பது `அகரமுதல் னகர விறுவாய்முப்பஃது' என்பதனைச் சுட்டும். மேலை நூற்பாவைக் குறிக்காது,அங்கு தொகைச் சொல் இல்லாமையின், `ஓரளவு இசைக்கும் குற்றெழுத்து' என்பதில் குறில் என்று சொல்வதற்குக் காரணம் அமைந்துள்ளது. இது பெயரெச்சக் காரணநடை. பொய் சொல்லும் சின்னவன், படித்த மேதை என்பன வழக்கு. ஐந்தும் ஒரு மாத்திரை இசைக்கும் என்றாலும் ஒவ்வொரு குற்றெழுத்தும் ஒரு மாத்திரை பெறும் என்பது நடையின் கருத்து. குடும்ப அட்டைக்காரர்க்கெல்லாம் பொங்கலுக்கு ஒரு கிலோ சீனி கூடுதலாக வழங்கப்படும் என்ற நடையை நாம் இன்றும் கூறவில்லையா? அளபும் அளவும் வேறுவேறு பொருளன. அளபு - மாத்திரை, ஒலியின் காலக்கணக்கு. அளபெடையென வருமேயன்றி அளவெடையென வாராது. அளவு - தரம், கூறு இது எண்ணளவு நிறையளவு என வரும். குற்றெழுத்து ஒரு மாத்திரையளவு. நெட்டெழுத்து இரு மாத்திரையளவு எனக்கூறலாம். கொள்ளளவு, அளவோடு பெறுக என்பன இன்றைய வழக்கு. இசைத்தல் - பொருண்மைப்பட ஒழுங்குபட ஒலித்தல். இது மொழியொலியைக் குறிக்கும். நெட்டெழுத்து (4) ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள வென்னு மப்பா லேழும் ஈரள பிசைக்கும்நெட்டெழுத் தென்ப. இஃது இரண்டு மாத்திரை பெறும் எழுத்துக்குறி கூறும். அகலவுரை ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்ற அப்பகுதி எழும் தனித்தனி இரண்டு மாத்திரை ஒலிக்கும். அங்ஙனம் இருமாத்திரை காரணமாக நெட்டெழுத்து என்ற குறிபெறும் என்று சொல்லுவர் நூலோர். திறனுரை மேலைச் சேவற்பட்டி கீழைச்சேவற்பட்டி என்றாற்போல் குற்றெழுத்து நெட்டெழுத்து என்பன ஒன்றையொன்று நோக்கின; என்றாலும் குற்றெழுத்து ஒரு மாத்திரை. மேலும் நீண்டு நெட்டெழுத்தாக மாறவில்லை. அ அ இரண்டு சேர்ந்து ஆ என்ற நெடிலாவதில்லை இ இ இரண்டு சேர்ந்து ஈ என்ற நெடிலாவதில்லை. அ என்பதும் தனிப்பிறப்பு; ஆ என்பதும் தனிப்பிறப்பு. இ என்பதும் தனிப்பிறப்பு; ஈ என்பதும் தனிப்பிறப்பு. ஐ ஒள முதலான பிறவும் அன்ன. இதனாற்றான் குற்றெழுத்து நீண்டு நெட்டெழுத்து ஆகும் என்னாமல் `ஈரளபிசைக்கும் நெட்டெழுத்து' என்றார். முதல் நூற்பாவில் வரையறுத்ததுபோல் எழுத்தெனப்படும் ஒவ்வொன்றும் பொருண்மையில் தனித்தன்மையும் முதன்மையும் உடையது. இவ்விலக்கணம் என்றும் நினைவு கொள்ளத்தக்கது. ஐந்தும் குற்றெழுத்தென்றாலும் அளபொற்றுமையில் ஓரினமாமன்றிப் பொருள் வேற்றுமையிலும் பிறப்பிலும் தனித்தன்மைப் பெற்றியன. இம்மொழியுண்மையை நெட்டெழுத்துக்கும் மெய்யெழுத்துக்கும் வல்லின மெல்லின இடயினத்துக்கும் கொள்க. தாய் தந்தை கணவன் மனைவி மக்கள் உடன்பிறந்தார் என உறவொற்றுமையிருந்தாலும் வாயும் வயிறும் வேறு என்ற வழக்குண்டன்றோ. ஒருவினா: குற்றெழுத்து ஐந்தாக நெட்டெழுத்து ஏழு வரலாமா? உயிர் பன்னிரண்டாக மெய்பதினெட்டு வரலாமா? நன்றாக வரலாம். குறியிலிருந்து நெடில் பிறப்பதில்லை; உயிருக்கும் மெய்க்கும் ஒத்த தொடர்பில்லை எல்லாம் பொருண்மையாற்றலால் தனித்தனிப் பிறப்பினவை ஐம் பொறிகளுள் மெய்ஒன்று, வாய் ஒன்று, மூக்கு இரண்டு, கண், இரண்டு, செவியிரண்டு இருக்கலாமா என்பது போன்ற வினா இது. இது பிறப்பின் இயற்கை. நெட்டெழுத்து ஈண்டு ஓர் ஒலியனைத்தான் குறிக்கும்; வடிவனைக் குறிக்கவில்லை. அதனால் ஊ ஒள என்ற இடங்களில் ஒவ்வொன்றுக்கும் இரண்டு வடிவன்கள் வந்துள்ளனவே என்று மயங்க வேண்டா. அளபெடை (5) மூவள பிசைத்தல் ஓரெழுத் தின்றே நீட்டம் வேண்டி னவ்வள புடைய கூட்டி யெழூஉத லென்மனார் புலவர் இஃது எழுத்து வரம்பினை உறுதிப்படுத்துவதோடு கூறுதலொலிக்கு வழி கூறும். அகலவுரை தமிழ்மொழிக்கண் ஒரு மாத்திரையுடைய ஓர் ஒலியன் உண்டு; இரு மாத்திரையுடைய ஓர் ஒலியன் உண்டு. மூன்று மாத்திரையுடைய ஓர் ஒலியன் இல்லை. இரண்டு மாத்திரைக்கு மேலாக வேண்டினால் அந்த அளபுக்குரிய ஒலிகளைக் கூட்டி ஒலித்துக் கொள்க என்று வழி கூறுவர் இலக்கணப்புலவர். உடைய - உடைய ஒலிகளை; உடையனவற்றை; அன்சாரியை பெறாத குறிப்பு வினையாலணையும் பெயர் செயற்படுபொருள், எழுஉதல் - ஒலியெழுப்புக, ஒலிக்க, வியங்கோள்வினை. வழக்கு அண்ணாஅ, தோழீஇ, ஆடூஉ, வேஎல், கோஒன்எனவும் புகாஅஅர் நம்பீஇஇ எனவும் வரும். `நற்றாள் தொழாஅர் (2) `செறாஅ அய் வாழிய' (1200) என்பன திருக்குறள். திறனுரை (அ) இந்நூற்பா தமிழின் அடிப்படை எழுத்துவரம்பை நினைவூட்டி உறுதிப்படுத்தும் பெருஞ்சிறப்பினது; ஒப்பியல் மொழியாய்வுக்கு உறுதுணையாவது. எழுத்தெனப்படுவது வெற்றொலியன்று; வெறும் வாயோசையன்று; பொருண்மை பொதிந்ததன்றே. ஓரளபிசைக்கும் குறிலுக்கும் ஈரளபிசைக்கும் நெடிலுக்கும் பொருண்மையுண்டு என்பதும் குறிலிலிருந்து நெட்டெழுத்து நீண்டு பிறக்கவில்லை என்பதும் ஒவ்வோர் எழுத்தும் தனக்கென்ற தன்மையும் வேறுபடுத்தும் ஆற்றலும் வாய்ந்தது என்பதும் முன்னர்த் தெரியக் கண்டோம். இவ்விளக்கம் பின்வரும் பதினெட்டு மெய்யெழுத்துக்கும் ஒக்கும். காண்க: அலி அளி அழி; ஆலி ஆளி ஆழி; கலி களி கழி; வலி வளி வழி; நட நடி நடு; கட கடி கடு; பட்டு பாட்டு பிட்டு பூட்டு பொட்டு; நான் நாம் நாண் நாய் நார் நால் நாள். (ஆ) இங்ஙனம் பல்லாயிரக்கணக்கான சொற்கள் ஒலியன் மாற்றங்களால் வேறுபடுகின்றன. பெருகுகின்றன. வளந்தருகின்றன. ஓர் ஒலியன் ஓரிடத்து மாறினாலும் பல ஒலியன்கள் முதனிலை இடைநிலை இறுதிநிலைகளில் மாறினாலும் பொருள் மாற்றத்தை அறிகின்றோம். இம்முறை உலக வொலியன்முறை. சில மொழிகளில் மூன்று மாத்திரை யுடைய ஒலியனும் உண்டு. தமிழில் அத்தகு அமைப்பு இல்லை. ஈண்டு ஒலியனைப் பற்றியப் பேசும் போதெல்லாம் கண் பார்க்கும் வடிவன்களை உடன் எண்ணக்கூடாது செவிகேட்கும் ஒலியளவையே கருதல் வேண்டும். (இ) அடு - குற்றெழுத்துத் தொடங்கியது; ஆடு - நெட்டெழுத்துத் தொடங்கியது. ஆ என்ற நெடிலுக்குமேல் பொருள் தரும் மூவுளவுடைய உயிர்நெடில் தமிழில் இல்லை. மாத்திரை கூடுதலாக ஒலிப்பதை இந்நூற்பா தடுக்கவில்லை அங்ஙனம் ஒலிக்கலாம் என்பதனையும் விதிக்கின்றது. ஆனால் அக்கூடுதலான ஒலிகட்குப் பொரு ளில்லை எனவும் பொருளில்லையெனவே எழுத்தாகா எனவும் தெளிவு செய்கின்றது. ஆஅடு ஆஅஅடு என்று மூன்று மாத்திரையாகவும் நான்கு மாத்திரையாகவும் கூடுதலாக நீட்டினாலும் ஆடு என்ற பொருள் வேறுபடுதலுமில்லை கூடுதலுமில்லை என்பது மொழியியல். (ஈ) `ஓரெழுத்து இன்றே' என்பதன் கருத்து: மூன்றளவு ஒலித்தல் ஓர் ஒலியன் இல்லை என்பதால் இரண்டு ஒலியன்களில் உண்டு என்று கருத்துக் கொள்ளல் தவறு தமிழில் எவ்வகையாலும் அப்படிப்பட்ட ஒலியன் இல்லை என்பதுவே முடிந்த முடிபு. இரு ஒலியன்களில் மூவளவு இசைக்கும் என்று கொண்டால் ஒலியனுக்கு இன்றியமையாத இலக்கணமான பொருண்மை கூடுதல் வேண்டுமன்றோ? ஆஅடு என்ற நீட்சியால் பொருண்மை வேறுபடாமையின் முப்பதுக்கு மேற்பட்ட எழுத்தே இல்லை என்பது தெளிவு. எனவே அளபெடை ஒலியன் அன்று. (உ) `நீட்டம் வேண்டின் அவ்வளபுடைய கூட்டி எழூஉதல். என்பதன் கருத்து: தேவைப்பட்டால் என்பதனால் இது மொழிக்கு அடிப்படையன்று என்பதும் கூட்டி ஒலித்துக் கொள்க என்பதனால் செயற்கை என்பதும் பெறலாம் தொழாஅர், போஒய், புலாஅல், தூஉய்மை வாஅய்மை என்றவிடத்து ஒரு மாத்திரை கூட்டினாற்போதும். விடூஉம், பெறூஉம், வரூஉம், தரூஉம் என்றவிடத்து இருமாத்திரை கூட்ட வேண்டும். ஆதலின் `அவ்வளபுடைய' என்று பன்மைப்பட மொழிந்தார். `எழுஉதல்' எனநூற்பாவிலே அகக்காட்டு அமைந்திருக்கும் நயம் காண்க. (ஊ) இது அளபெடை என்ற குறிபெறும் செய்யுட்கும் பொது நீட்டம் வேண்டின் என்று பொதும்படச் சொன்னமை யால் மூன்று முதலாகப் பல மாத்திரையளவு ஒலிக்கும். ஒருவரைக் கூப்பிடும் விளிவழக்கில் நீண்டு பயின்று வரும் என்பதனை விளிமரபியலிற் காண்க. (ஏ) அளபெடையைச் சொல்லுவதிலும் எழுதுவதிலும் இன்று நடைமுறைப்பிழை மலிந்து வருகின்றது. நூற்பாவின்படி கூடுதல் ஒலியைக் கூட்டிநீட்டிச் சொல்ல வேண்டுமேயன்றிப் பிரித்துத் தனித்துச் சொல்லவும் கூடாது. எழுதவும் கூடாது. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை ழா, தூ இவற்றை மேலும் ஒரு மாத்திரையளவு அப்படியே நீட்டிச் சொல்லுக; அர், உம், எனப் பிரித்துச் சொல்லற்க; பிரித்து எழுதற்க; அடுத்த வரிக்குக் கொண்டு செல்லற்க. இது கற்பிக்க வேண்டிய ஒலி நெறி. மாத்திரை (6) கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை நுண்ணிதி னுணர்த்தோர் கண்ட வாறே இது மாத்திரை என்ற குறியிடும் அதற்கு விளக்கமும் கூறும். அகலவுரை மாத்திரை என்பது குறியீடு. இது ஒலியளவுக்கு வரும். மாத்திரை யென்றால் என்ன? ஒவ்வொரு முறையும் இயல்பாகக் கண்திறந்து இமைப்பதற்கு எத்துணைக் காலம் இருக்கும். அத்துணையளவுடைய ஒலி ஒரு மாத்திரைக்கு ஒப்பாம். அது போலவே பெருவிரலை நடுவிரலோடு சேர்த்துக் கைவிரலை இயல்பாகச் சுண்டும் போது எந்தவளவு காலம் வேண்டும். அந்தவளவு ஒரு மாத்திரைக்குச் சமம். மாத்திரையைக் கண்ணாலும் செவியாலும் நுண்மையாக உணர்ந்த முத்தமிழ்ப் புலவர்கள் அளந்து கண்டமுறைகள் இவை. அவ்வே அப்படிப்பட்ட ஈரளவாம். கண்டவாறு அவ்வே என முடிக்க மாத்திரை இரண்டாம் வேற்றுமைத் தொகை. திறனுரை அளபு என்பதன் மற்றொரு தமிழ்ப் பெயர் மாத்திரை எம்மாத்திரம் என்பது வழக்கு. மா என்ற சொல் சிறிய அளவுக்கு ஒரு பெயராகும் என்பதனை மாகாணி ஒருமா இருமா என்ற வழக்கிற் காண்க. `வழங்கியல் மா' எனத் தொல்காப்பியமும். `மாநிறைவில்லதும் பன்னாட்காகும்' (184) எனப்புறநாþனூறும் மொழியும். கண்ணிமை இயற்கை. தொழிற்காலம்; நொடி செயற்கை; ஓசைக்காலம். இரண்டுமே கால வளவைக் குறிக்கும். இமைப்பொழுது நொடிப்பொழுது என்பது வழக்கு. எழுத்தின் மாத்திரை ஓசையும் காலமும் இணைந்ததாதலின், தொல்காப்பியம் இருசான்று சொல்லும். இரண்டும் ஒரே நேரத்துச் செய்தற் குரியவை. ஈண்டுக்கூறும் இலக்கணம் ஒரு மாத்திரைக்கு உரியது. இமைத்தலை இமை எனவும் நொடித்தலை நொடி எனவும் முதனிலைத் தொழிற்பெயராகக் கூறினார். புகைத்தலைப் புகை என்றும் வெடித்தலை வெடி எனவும் கூறுமாப்போல எளிதாகப் புரிந்து கொள்ளலாம் என்பது `அவ்வே' என்ற சுட்டின் குறிப்பு. கண்ணிமையும் நொடியும் யார்க்கும் எளிமையல்லவா? `மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன் என்பது திருக்குறள் நடைக்குறிப்பு. மாத்திரையை நுண்ணிதின் உணர்ந்தோர் - கண்ணால் இமையளவையும் செவியால் நொடியளவையும் கணித்தோர், இக்கருத்தினையே. கண்ணினும் செவியினும் திண்ணிதி னுணரும் உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின் நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே என்று தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலிற் புலப்படுத்துவர். அளபு, மாத்திரை என்ற கிளவிகள் ஒரு பொருளன வாயினும் தொடராட்சியில் வேறுபாடு உண்டு. அளபெடை என்போம். மாத்திரையெடை என்னோம்; மாத்திரையளவு என்போம் அளபளவு என்னோம் அளபிறந்து உயிர்த்தல் என்போம். மாத்திரையிறந்து உயிர்த்தல் என்னோம். இவ்வேற்றுமைக்குக் காரணம் அளபு என்பது மாத்திரையிலும் விரித்த தன்மையுடையது. உயிர்க்குறி (7) ஒளகார விறுவாய்ப் பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப. இது முப்பது எழுத்துக்களும் உயிரெழுத்துக் குறி கூறும். அகலவுரை முதல் நூற்பாவில் எழுத்தெனப் படுவன அகரமுதல் என்று சொல்லியிருப்பதனால், இந்நூற்பாவில் ஒளகார இறுதி என்றார். எனவே அகர முதலாக ஒளகாரம் வரை பன்னிரண்டு ஒலியனும் உயிர் என்ற குறியீடு கொள்ளும் என்று சொல்லுவர் நூலோர். வழக்கு அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள எனப் பன்னிரண்டாம். திறனுரை மேலே ஐந்தும் குற்றெழுத்தாம், ஏழும் நெட்டெழுத்தாம் என்று உட்குறியீடு சுட்டினவர் இந்நூற்பாவில் அவ்விரு பகுதிக்கும் உயிர் என்ற பொதுக்குறி காட்டுவர். உயிர் என்ற பெயர்க்காரணம் யாது? ஒலிப்பான். ஒலிப்படுவான், ஒலிப்பிடம், ஒலிப்புமுறை என்ற நான்குஞ் சேர்வதால் ஒலியன் பிறக்கும். இந்நான்கும் ஒலியன் பிறப்புக்கு வேண்டும். “உற்றவன்தீர்ப்பான்மருந்து உழைச் செல்வான் என்று அப்பால் நாற்கூற்றே மருந்து” என்ற குறளை ஒப்புநோக்குக உள்ளிருந்து வருங்காற்று வரும்வழியில் நா அண்ணம் பல் இதழ் மூக்கு முதலான படுவுறுப்புக்களைத் தொடுதலும் உறுதலு மின்றித் தன்னளவில் ஒலிக்கும்போது உயிர்பிறக்கும். மெய்யுறுப்புத் தீண்டலின்றி உயிர்ப்பளவில் பிறத்தலின் உயிர் என்பது காரணப்பெயர். உயிர் - ஒருவகைக் காற்று `காற்றடைத்த பையடா' என்ப. “பன்னீ ருயிரும் தந்நிலை திரியா மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்” என்ற பிறப்பியல் நூற்பா உயிர்கள் மெய்தீண்டித் திரியாது மிடற்றிலிருந்து வரும் காற்றியகத்தாற் பிறக்கும் ஒலியன்கள் என்பதனை வெளிப்படுத்தும். மெய்க்குறி (8) னகார விறுவாய்ப் பதினெண் ணெழுத்தும் மெய்யென மொழிப. இது முப்பது எழுத்துக்களுள் மெய்யெழுத்துக் குறி கூறும். அகலவுரை ககரமுதல் னகரம் வரை யுள்ள பதினெட்டு ஒலியன்களும் மெய் என்ற குறியீடு பெறும் என்று மொழிவர் நூலோர். வழக்கு க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் எனப் பதினெட்டாம். திறனுரை முப்பது எழுத்துக்கள் இவையெனத் தொன்றுதொட்டு எல்லாரும் அறியப்பட்ட உலக வழக்காதலின், `அகரமுதல் னகர விறுவாய்' எனவும் `ஒளகாரவிறுவாய்' எனவும் `னகாரவிறுவாய்' எனவும் வாளா கூறினார். ஒன்று முதல் நூறுவரை. ஒன்றுமுதல் பத்துவரை என்று கூறும் வழக்கினை நினைக. முந்துநூல் எதனையும், முந்துநூலோர் எவரையும் தொல்காப்பியம் பெயர் சுட்டவில்லை. என்ப மொழிப, என்மனார் புலவர் என்மனார் புலமையோரே, கடிநிலையின்றே ஆசிரியற்க என்ற நடைபடத் தொல்காப்பியத்துப் பன்þனூறு இடங்களில் வரும். இவ்விலக்கணங்கள் தொன்றுதொட்டுவரும் அடிப்பட்ட இருவகை வழக்கு மரபுகள் என்று காட்டுவதே இந்நடையின் கருத்து. அதனாலன்றோ எழுவாய் பொதுவாகவுள்ளது; மேலும் பல நூற்பாக்கள் மொழிப, என்ப என்றளவில் எழுவாயின்றியும் உள. முதல்நூற்பா கூறும் முப்பது எழுத்துக்கள் உயிர் எனவும் மெய் எனவும் இரு பகுதிப்படும் என்று அறிவதோடு, மூன்றாவது பகுதி ஒன்று இல்லை எனவும் தெளிகின்றோம். மெய் என்பதன் பெயர்க்காரணம் யாது? உள்ளிருந்து வருங்காற்று நா அண்ணம் பல் இதழ் மூக்கு முதலான உறுப்புக்களின் தசைப்பகுதியோடு தசைப்பகுதி தொட ஒலி பிறத்தலின் மெய் எனப்படும்; அதனாற்றான் ஒற்று என்ற குறியும் மெய்க்கு உண்டு. குற்றெழுத்து, நெட்டெழுத்து, உயிரெழுத்து, மெய் யெழுத்து, வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என்பவை இன முழுவதையும் குறிக்கும் தொகுதிக் குறியீடு களாகவும் வரும்; அ என்ற குற்றெழுத்து, ஆ என்ற நெட்டெழுத்து, ய என்ற இடையெழுத்து என்றாற்போல அவற்றுள் ஒன்றைச்சுட்டும் பகுதிக் குறியீடுகளாகவும் ஆளப்படும். உயிரின் நிலை (9) மெய்யோ டியையினும் உயிரியல் திரியா இது மெய்யொடு சேர்ந்து ஒலிக்கும்போது உயிரின் நிலை கூறும். அகலவுரை முதலெழுத்து உயிர் என மெய் என இருவகைப்படும் என்று மேலே கூறினார். அவை தம்முட் சேர்ந்து வரும்; மெய்ம்மேல் உயிர் ஏறிவரும். தடைப்பட்டுப் பிறக்கும் மெய்யொலியனொடு சேர்ந்திருந்தாலும் உயிர் தன்னியல்பின் படி உறுப்புத் தொடாது காற்றளவில் ஒலிக்கும். இத்தன்மை யிலிருந்தும் மாறுபாடில்லை. இதனால் நாம் அறிவது என்ன? உயிர்மெய் என்ற கூட்டுறவில் உயிரோ மெய்யோ தன் பிறப்பின் முறையையும் தன்பெயர்க் காரணத்தையும் இழப்பதில்லை. உயிரியல் - உயிரானது மெய்யொடுபடாது பிறக்கும் வளிநிலை. திறனுரை சொல்லாங்குங்கால் உயிரும் மெய்யுமாகிய முப்பது எழுத்துக்களின் நிலை என்ன? இவை தனித்தனியே நிற்பதில்லை. உயிர்மெய்யாக இணைந்தே வரும். உயிர்மொழிக்கு முதலில் மட்டும் தனித்து நிற்கும் அவ்வளவே. காண்க: அன்பு, ஆண், இசை. முதலல்லாத இடை இறுதியெல்லாம் மெய்யொடு கூடித்தான் நிற்க வேண்டும். காண்க: அறம், அடவி, அறுவடை மொழிமுதலான சொற்களிலுங்கூட மெய்க்குப்பின்னே தான் உயிர்வரும். காண்க: கசடு, காசு, குறிப்பு, கூட்டுறவு சொற்களில் இவ்வாறு மெய்களோடு கூடி வருவதே உயிர்களின் வெளிப்பாடு. ஆதலின் `மெய்யோடு இயையினும்' என்று உயிர்மேல் வைத்து நூற்பித்தார் ஆசிரியர். மெய்க்கோ எல்லாவிடத்தும் உயிரோடு சேர்ந்துதான் வெளிப்படும் என்ற நிலையில்லை. மொழிமுதலில் மட்டும் வெளிப்பாட்டிற்குமெய்கள் உயிர்களோடு கூடி உயிர் மெய்களாக நிற்கும். காண்க: படு, பாடு, பிடி, பீடு, இதனை, “உயிர் மெய்யல்லன மொழி முதலாகா” என்ற நூற்பா தெளிக்கும். ஏனைப் பின்னிடங்களில் எல்லாம் மெய் உயிரோடு கலந்தும் வரும். தனித்தும் வரும். காண்க: தொல்காப்பியன் வள்ளுவர், பச்சையப்பர் ஆதலின் மெய் உயிரோடு இயைந்து வருதல் பெரிதில்லை. மெய்யோடு உயிர் இயைந்து வருதலே பெரிது என்ற வேறுபாடு இந்நூற்பாவால் விளங்கும். புலாலுண்ணா ஒருவர் புலாலுண் ஒருவரைக் காதலித்துக் கூடினாலும், உண்ணாத தந்நிலையிலிருந்து மாறார் என்ற உவமையை இந்நூற்பாவிற்கு ஏற்றித் தெளிக. மெய்க்கு மாத்திரை (10) மெய்யி னளபே அரையென மொழிப இது மெய்க்கு மாத்திரையளவு கூறும். அகலவுரை முப்பது எழுத்துள் ஒருவகையான உயிருக்கு மேலே மாத்திரை கூறப்பட்டது. இன்னொரு வகையான மெய்க்கு மாத்திரை அரையாகும் என்று மொழிவர் நூலோர். ஒவ்வொரு மெய்யும் அரைமாத்திரை பெறும் என்பது கருத்து. திறனுரை உயிர் வகையில் மாத்திரை காரணமாகக் குற்றெழுத்து நெட்டெழுத்தென இரு பகுதியுண்டு. வல்லினம் மெல்லினம் இடையினம் என்று மெய் பிரிவு பட்டாலும் மாத்திரை காரண மாக வேற்றுமையின்மை தெளியலாம். மனிதன் ஆறறிவுடையன் என்றால், ஒவ்வொருவனும் ஆறறிவுடையான் என்று நடைப் பொருள்படுமன்றோ. அதுபோல் மெய்ம்மாத்திரை அரை என்பது ஒவ்வொரு மெய்யும் அரைமாத்திரை எனப் பொருள்படும். தூய்மை, இன்பம், தமிழ் என உயிர்மெய்யாக இருந்தாலும், ஒற்றாக இருந்தாலும் எந்நிலையிலும் மெய்க்க அரை மாத்திரை உண்டு. சார்புக்கு மாத்திரை (11) அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே இது சார்பெழுத்துக்கு மாத்திரை கூறும். அகலவுரை முப்பது எழுத்துக்கு உயிர் வகையாகவும் மெய்வகை யாகவும் மாத்திரை கூறினார். குற்றியலிகரம் குற்ற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பது எழுத்துள் அடங்காத ஏனை மூன்றும் மெய்யெழுத்துப் போல அரைமாத்திரை பெற்று நிற்கும். வழக்கு: கேண்மியா. பாடு. எஃகு. திறனுரை மெய்யும் ஏனை மூன்றும் அரையளவு பெறும் என்று ஒரே நூற்பாவாகக் கூறியிருக்கலாமே எனின், மெய் உயிரோடு ஒத்த முதலெழுத்தாதலின் தனியே முன்பாகக் கூறினார். மெய் எழுத்தாம் எனவும் ஏனை மூன்றும் `எழுத்தோரன்ன' எனவும் சொல்லிய வேற்றுமையை யுணர்க. ஆன் ஈன் என்பனபோல ஏன் என்பதுவும் இடம் பற்றிய அடிச்சொல். இது எஞ்சியதைக் குறிக்கும். ஏனை, ஏனைய, ஏனது, ஏனவை, ஏனோர் என்றெல்லாம் வருதல் காண்க. மகரக்குறுக்கமும் வடிவும் (12) அரையளபு குறுகல் மகர முடைத்தே, இசையிடன் அருகுந் தெரியுங் காலை உட்பெறு புள்ளி யுருவா கும்மே. இது மெய்யெழுத்துள் ஒன்றற்கு மாத்திரைக் குறைவும் அதற்குரிய வரிவடிவும் கூறும். அகலவுரை மெய்யெழுத்துக்கு மாத்திரை அரையென்று முன்பு கற்றோம். அந்த அரைமாத்திரை பாதியளவாகக் குறுகுதல் - அதாவது கால் மாத்திரையாகக் குறைதல் மகரமெய்க்கு மட்டும் உண்டு. ஆராய்ந்து பார்த்தால் இக்குறுக்கம் ஒலி நெருக்கடியில் அரிதாக வரும். அரை மாத்திரையாக இருக்கும் மகரமெய்க்கும் கால் மாத்திரையாக ஒலிக்கும் மகரக் குறுக்கத்திற்கும் வரிவடிவில் ஒரே ஒரு வேறுபாடுண்டு. இயல்பான மகரமெய்க்கு உரியவடிவின்மேல் ஒரு புள்ளி இருக்கும். குறுகிய மகர மெய்க்கோ உரியவடிவின் உள்ளே அப்புள்ளி இருக்கவேண்டும். எனவே புள்ளி மேலிருந்தால் குறுகாத இயல்பு மகரம்; புள்ளி உள்ளேயிருந்தால் குறுகிய மகரம். வழக்கு: இயல்பான மகரம், அரை மாத்திரை, மேற்புள்ளி -ம் மகரக்குறுக்கம், கால்மாத்திரை, உட்புள்ளி - ம போன்ம - ஒருமொழியில் மகரக்குறுக்கம்; செய்யுள் வழக்கில் மட்டும் வரும். வரும வண்டி - இருமொழிப்புணர்ச்சியில் மகரக்குறுக்கம்; உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வரும். திறனுரை: மகரம் குறுகுமிடன் இரண்டு: “செய்யு ளிறுதிப் போலி மொழிவயின் னகார மகாரம் ஈரொற் றாகும்” “னகாரை முன்னர் மகாரங் குறுகும்” என மொழி மரபில் இருநூற்பாக்கள் உள. இது போன்ம என்ற ஒரு சொல்லளவில் அதுவும் செய்யுளிற்றான் காணப்படும். “வகார மிசையும் மகாரங் குறுகும்” என்பதுபுள்ளி மயங்கியலில் வரும் ஏனையிடம். இது வழக்கிற்கும் செய்யுட்கும் பொது. இருமொழிப்புணர்ச்சியில் நிலைமொழி மகரம் வருமொழி வகரத்தின்முன் மாத்திரை குறுகும். (காண்க: தரும வள்ளல், பறக்கும வண்டு, சொல்லும் வாய்) `இசையிடன் அருகும் தெரியுங்காலை' என்று நூன்மரபிற் சொல்லியதைத் தெரிவிக்கும் முகத்தான். மொழிமரபிலும் புள்ளி மயங்கியலிலும் உரிய இடங்களைச் சுட்டினார் தொல்காப்பியர். அதனாலன்றோ `மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி' என்று பாயிரம் தொல்காப்பிய நூனெறியைப் பாராட்டுகின்றது. இந்நெறி தானே தெளிவித்தல் எனப்படும். அரையளவு குறுகல் என்பது இருவகையில் ஒரு பொருளே கொள்ள இடனுண்டு. மெய்க்குக்கூறிய அரை மாத்திரையனின்று குறுகுதல் என்றும் உரை செய்யலாம். அதனோடு அரையளவாகக் குறுகுதல் என்றும் உரை செய்யலாம். ஒரு கல்லில் இருமாங்காய் வீழ்த்தும் நடை இது. தமிழிலக்கணக்கத்தில் ஒன்றன் குறுக்கமாவது செம்பாகம் குறைதலாம். `தெரியுங்காலை' என்பதனை `உட்பெறு புள்ளி யுருவாகும்மே' என்பதனோடும் இயைத்து முடிக்கலாம். ஆராயுமிடத்து புள்ளை நிற்கும் இடவேற்றுமை யானும் மகரக்குறுக்கம் தெளிவாகும் என்பது கருத்து. தமிழ் வடிவன்களுள் புள்ளிக்கு வேறுபாடு தெரிக்கும் சிறப்பாற்றல் உண்டு. ஆய்தத்தைச் சுட்டும்போது நடுவிலும், மகரக் குறுக்கத்திற்கு உள்ளேயும், மெய்ம் முதலியவற்றிற்கு மேலேயும் இருக்கும். மகரக் குறுக்கத்தின் வடிவன் பிற்காலத்து வழக்கு விழுந்தது. மெய்க்குப் பொதுவடிவன் (13) மெய்யி னியற்கை புள்ளியொடும் நிலையல் இது மெய்யெழுத்துக்குப் பொது வடிவு கூறும். அகலவுரை மெய்கள் பதினெட்டன்றோ ஒவ்வொரு மெய்க்கும் தனி வடிவு உண்டு. இது உரிவடிவன் எனப்படும். அதன்மேல் மெய் என்ற இனங்காட்டப் புள்ளி என்ற ஒரு பொது வடிவனும் இருக்கும். இரு வடிவும் சேர்ந்ததுதான் மெய்யின் உரு. இயற்கை - இயல்பு, தன்மை. நிலையல் - நிற்க. வழக்கு: க் ங் ச் ஞ ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் திறனுரை மெய்புள்ளியடையது என்ற நடைமாடு கொம்புடையது என்ற நடையை ஒக்கும். கொம்புடையதெனவே தலைமேல் என்பது பெறப்படுமாறு போல, புள்ளியுடையதெனவே உரி வடிவத்தின் மேல் என்பது பெறப்படும் வெறும் புள்ளி மெய்யாகாது. புள்ளியொடும் நிலையில் என்ற உம்மையால், புள்ளியும் மெய்க்கு இன்றியமையா வடிவம் என்பது உறுதியாம். புள்ளி நீங்கின் மெய்யின் தன்மையும் நீங்கிவிடும். ஒருவினா: மெய்கட்கு உரிவடிவன்கள் இருக்கும்போது மேலும் ஒரு புள்ளிப் பொதுவடிவன் ஏன்? இவ்வடிகன் இன்றேல் கஙசஞ முதலாயின அகரம் ஏறிய உயிர்மெய்யாகி விடும். இயற்கையான தனிமெய்க்கும் அகரம் ஊர்ந்த உயிர் மெய்க்கும் வேற்றுமை தெரிவிப்பது தனிமெய் புள்ளி பெறுகை யாகும். எனவே புள்ளிப் பேற்றின் பயன் ஒத்த வடிவினில்; வேற்றுமைத் தெளிவு செய்வது. முன்சொன்ன உட்பெறு புள்ளியும் பின்னே சொல்லப்படும் எகர ஒகரப்புள்ளியும் இப்பயனே கொண்டவை. மாத்திரைச் சுருக்கத்துக்குப் புள்ளியிடல் என்ற கோட்பாடு பெரிதும் பொருந்தாது. அவ்வாறாயின், நெட்டெழுத்தை நோக்கக் குற்றெழுத்தெல்லாம் புள்ளிபெறுதல் வேண்டும். அளபெடையை நோக்க நெட்டெழுத்துப் புள்ளி பெறுதல் வேண்டும். எகரமும் ஒகரமும் புள்ளி பெறுகை மாத்திரைக் குறுக்கத்தாலன்று. அவை ஓரளபு இசைக்கும் இயற்கைக் குற்றெழுத்துக்கள் ஈரளபிசைக்கும் ஏகார ஓகாரத்தோடு வடிவன் வேற்றுமை தெரிக்கவே எகரமும் ஓகரமும் புள்ளி பெறலாயின. ஆய்தம் எதன் குறுக்கம்? அரைமாத்திரையுடைய மெய் எதன் குறுக்கம்? அது நிலையான புள்ளிபெறுதலின் வடிவன் வேற்றுமை தெளிப்பது புள்ளிப்பயன் என்பது கண்கூடு. புள்ளிடைய ஓர் எழுத்து மாத்திரை குறைவாகவும் இருக்கலாம்; அதனைத் தெரிக்கப் புள்ளி குத்தப்பெற்றது என்றால் நிறையான விதியன்று. ஒலியன்களின் உரிவடிவன்கள் ஒத்தனவாக இருக்கும் நிலையில், வேற்றுமைப்படுத்த புள்ளிக்கொடை வேண்டப்படும். இது தமிழ் வடிவ நெறி. மெய்ப்புள்ளி இன்றும் உண்டு. என்றும் வேண்டும். இது மேற்புள்ளியாகும். புள்ளிபெறல் (14) எ எகர ஒகரத் தியற்கையு மற்றே இது குற்றெழுத்துக்களுள் எகர ஒகர வடிவன் கூறும் அகலவுரை குற்றெழுத்துக்களுள் எகர வொலியனும் ஒகர வொலியனும் மேற்சொல்லியப்பு உரிவடிவத்தின்மேல் புள்ளி பெற்றே நிற்கும் இயல்பின. வழக்கு: எ ஓ திறனுரை `மெய்யினியற்கை' என்றதுபோல `எகர வொகரத்தியற்கை' என்பதனால் மெய்போல இவையும் புள்ளியொடு நிற்றல் தொன்மரபு என்பது தெளிவாம். மொழிவரலாற்றில் ஒலியன்கள் மிக முன் எழுந்தவை. வடிவன்கள் மிகப் பின்தோன்றியவை. அதன்மேலும் ஒப்புநோக்கின் தமிழ்மொழி பல்லூழித் தொன்மை, செம்மை, இயற்கை, நிலைபேறு உடையதாம். ஆதலின் பிறமொழிகளைச் சார்த்தித் தமிழ் மொழியின் ஒலியன் வடிவன்களைக் கணிப்பது அறிவுடைமை யாகாது. அண்மைக்கால ஆய்வுகள் தமிழின் முதுதொன்மையை உணர்ந்து உலகத்துப் பலபிற மொழிகளைத் தூக்கிப் பார்க்கும் நன்னடையைப் புலப்படுத்தி வருகின்றன. இதனால் பண்டுதொட்டே உலகப் பன்மொழிகட்குத் தமிழ்தாயாகவோ செவிலியாகவோ வழங்கிய ஊட்டம் வெளிப்படுகின்றது. இந்நற்செய்தி விரிப்பிற் பெருகியோடுமாதலின், ஆங்காங்கு வேண்டுமளவு வழிக்கல்போற் காட்டப்படும். ஒருவினா: அ இ உ என்ற குற்றெழுத்துக்கள் புள்ளிபெற வில்லையே : எ ஒ இரண்டு மட்டும் புள்ளி பெறுவது ஏன்? அ இ உ என்ற குற்றெழுத்துக்கும் ஆ ஈ ஊ என்ற நெட்டெழுத்துக்கும் தொல்காப்பியர் காலத்தும் வடிவன்கள் தெளிவாகத் தம்மளவில் வேற்றுமைப்பட்டிருந்தன. இச்சிக்கலில் அரிதான ஒன்றினை ஆழமாக நாம் நினைய வேண்டும். நெட்டெழுத்துக்கு எ ஒ வடிவன்கள் இருந்தபோதே குற்றெழுத்துக்கும் புள்ளியொடு கூடிய எ ஒ வடிவன்கள் இருந்தன. குழப்பம் வந்து மயங்கி வேற்றுமைப் படுத்துவான் இப்புள்ளிகள் பின்பு வைக்கப்பட்டனவல்ல என்பதனை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். முப்பது முதலெழுத்துக்களின் வரிவடிவ வேற்றுமையைக் கூர்ந்து பார்ப்பின் மாற்றம் சிறிய கோடாகவோ சிறிய வளைவாகவோதான் இருக்கும். எனினும் இவ்வேற்றுமைக் கூறுகள் உடன்காலத்துக் கண்டவை. மகரக் குறுக்கப்புள்ளியும் மெய்ப்புள்ளியும் எகர வொகரப் புள்ளியும் குழப்பம் வந்து வேற்றுமை காட்ட வேண்டிப் பின்சேர்ந்தவை யல்ல என்பது முதன்மையான கருத்து. கோடு, வளைவு போலப் புள்ளியும் தமிழ் வடிவன்களில் ஓர் கூறு அவ்வாறாயின் புள்ளியை மட்டும் விதந்து நூற்பாக்கள் செய்வதன் காரணம் என்ன? நல்ல வினா. முப்பது ஒலியன்களும் பண்டும் ஒவ்வோரெழுத்தாலானவை. அஃதாவது ஓரெழுத்தை எடுத்தெழுதவேண்டும் என்பதில்லை. எழுத்தெனப்படுப முப்பஃது என்ப என்ற நடையில், வரிவடிவாம் எழுத்து முப்பதுவே என்ற குறிப்புப் பெறப்படும். பத்து நூறு ஆயிரம் குறித்த தமிழெண்கள் (ய, ள, த)ஓரெழுத்தாக இருப்பதை உணர்க. இம்முப்பது எழுத்துக்களுள் ஒரு சாரன புள்ளியும் பெறுவனவாக இருந்தன. எழுத்தாணியை எடுத்தெழுதாமல் புள்ளி வைக்க முடியாதன்றோ? இன்றைய நிலையும் அதுதானே. மேலும் எழுதும் வேகத்தில் புள்ளி விடப்படுதலும் உண்டன்றோ? இன்றும் இந்நிலையுண்டு. எடுத்தெழுதும் அமைப்பை நினைந்து விட்டெழுதக் கூடாத உறுப்பு புள்ளியென்பதைச் சுட்டிக் காட்டவும் புள்ளி குறித்த நூற்பாக்களை யாத்தார் தொல் காப்பியர் என அறிக. மெய்யின் இயற்கை எகர வொகரத் தியற்கை என்ற சொல்லாட்சியாலும் இவ்வுண்மை போதரும். எகர ஒகரத்தியற்கை என்பதனால் இப்புள்ளிகள் உயிர்க் குறிலுக்கே. (காண்க: எடு, ஒடு) மெய்யின் இயற்கை என்பது உயிர்மெய்யைக் குறிக்காததுபோல இதனையும் கொள்வோம். ஏரி புள்ளி பெறின் எரி என்ற நெருப்பைக் குறிக்கும்; ஓதி புள்ளி பெறின் ஒதி என்ற மரத்தைக் குறிக்கும் என்ற செய்யுள் மேற்கோள்ளிலும் உயிர்க்குறிலே புள்ளிபெறலை ஒப்பிடுக. எகர ஒகரம் புள்ளியின்றி எழுதப்படுவதும் ஏகாரம் கீழ்ப்படுக்கைக்கோடு பெறுவது; ஓகாரம் கீழ்க்காது பெறுவதும் அண்மையை வழக்கு. உயிர்மெய் வடிவன்கள் (15) புள்ளி யில்லா எல்லா மெய்யும் உருவுரு வாகி அகரமோ டுயிர்த்தலும் ஏனை யுயிரோ டுருவுதிரிந் துயிர்த்தலும் ஆயீ ரியல வுயிர்த்த லாறே. இது பதினெட்டு மெய்யும் பன்னிரண்டு உயிரொடும் சேரும் உயிர்மெய்கட்கு வடிவன் முறைகளைக் கூறும். அகலவுரை புள்ளியொடு நிற்கும் மெய்வடிவன்கள் (க்ங்ச்ஞ்) முன்னே கூறப்பட்டன. அப்புள்ளிகள் இல்லாத மெய்வடிவன்கள் (கஙசஞ) அவ்வடிவே வடிவாக அகரம் ஏறிய உயிர்மெய்யாக ஒலிக்கப்படும். இஃது ஒருமுறை. புள்ளியில்லாத வடிவன்கள் ஆ முதலான பதினொரு உயிர்களோடு சேரும்போது தம் உரிவடிவு பலவாறு திரிந்து ஒலிக்கும். இஃது ஒருமுறை. பதினெண் மெய்யும் பன்னிருயிரொடும் சேர்ந்து உயிர்மெய்யாகுங்கால் புள்ளி நீங்கிய மெய்வடிவத்தின் அடிப்படையில் இவ்விரு முறையில் உயிர்மெய்களின் திரி வடிவன்கள் தோன்றும். உருபு - வடிவு. உயிர்த்தல் - ஒலித்தல். ஆறு - நெறி. வழக்கு: இருமுறைகளாவன: 1. அகரவுயிர்மெய்க்குப் புள்ளியில்லாத மெய்வடிவன்கள்: க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன 2. ஆகார முதலான ஏனை உயிர்மெய்கட்குப் புள்ளி யில்லாத மெய்வடிவன்கள் பல்வேறு திரிபுபடுதல்: கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ இவை இக்கால வடிவன்கள் உயிர்மெய்யில் வரும் திரிகுறிகள் ஆ - பக்கத்துக் கால் வாங்குதல்: h - கா - ஙா சா இன்ன பிற (15) - கீழ்விலங்கு இடமாக வளைதல் : இ - ணா றா னா (3) இ - கொக்கி மேலே பெறுதல் : - கி ஙி சி இன்ன பிற (18) ஈ - சிறிது நீண்ட மேல் வளைவுச்சுழி பெறுவன - கீ ஙீ சீ இன்ன பிற (18) உ - கீழ்விலங்கு இடமாக வளைவு பெறுவன - - கு, டு, மு, ரு, ழு , ளு (6) - கீழ்விலங்கு சுழித்து நேர்கோடு பெறுவன: - நு, ணு,து, நு, லு, று, னு (7) - சிறுகோடு கீழே இழுப்பு: 1 - சு பு யு வு (5) ஊ - தலைதூக்கிய படுக்கைக்கோடு - உ - கூ (1) - கீழிழுப்பும் இடமாகச் சுழியும் : - ஙூ, சூ, டூ, பூ, மூ, றா, ரூ, வூ, ழூ, ளூ (10) - கீழ்விலங்குச் சுழிப்பும் கால் வாங்கலும் : நூ - ஞா ணூ, தூ, நூ, லூ, னூ, றூ, þனூ (7/) எ - இடப்பக்கம் ஒரு சுழிக்கொம்பு : b - கெ, ஙெ, செ இன்ன பிற (18) ஏ - இடப்பக்கம் இரு சுழிக்காது: n - கே, ஙே, சே இன்ன பிற(18) ஐ - இடப்பக்கம் இணைப்புக்கொம்பு : i - கை, ஙை, சை, இன்ன பிற(14) - இடப்பக்கம் சேர்ந்த யானைக்கை: -?, ?ண, ?ல, ?ள, ?ன(4) ஒ - இடப்பக்கக் கொம்பும் வலப்பக்கக் காலும் : b-h - கொ, ஙொ, சொ, இன்ன ற (15) - இடப்பக்கக் கொம்பும் கீழ் விலங்கு இடமாக வளைவும்: b - b‚, bƒ, b„ (3) ஓ - இடப்பக்கம் இருசுழிக்காதும் வலப்பக்கம் காலும் : n - கோ, ஙோ, சோ இன்ன பிற (15) இடப்பக்கம் இரு சுழிக்காதும் கீழ்விலங்கு இடமாக வளைவும்: n - n‚, nƒ, n„. (3) ஒள - இடப்பக்கம் ஒரு சுழிக்கொம்பும் வலப்பக்கம் கொம்பு சேர்ந்த பாதிக்காலும் : b - ள- கௌ ஙௌ சௌ இன்ன பிற (18) திறனுரை மேற்காட்டிய உயிர்மெய்க் குறிகள் சில நூற்றாண்டு களாகப் பெருவழக்கில் உள்ளவை. அச்சியல்முறை நன்கு கால் கொண்ட பின் எல்லாமொழிக்கும் போலத் தமிழ்மொழிக்கும் எழுத்து வடிவங்கள் செம்மையெய்தின கையெழுத்து வடிவங்களிற்கூட வேறுபாடுகள் கறைந்து வருகின்றன. வட்டார வழக்குப் போலவும் குழூஉக்குறி போலவும் வடிவ வழக்கிலும் சில வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை. எனினும் அச்சுருவங்கள் பல்லாண்டுகளாகச் செவ்வுருவம் ஆயின. அண்மையில் தமிழக அரசாணையின்படி உயிர்மெய்யில் ஆகாரத்திலும் ஐகாரத்திலும் ஒகரத்திலும் ஓகாரத்திலும் பதின்மூன்று திருத்தங்கள் ஏற்பட்டன. இவ்வாணை யெழுத்துக்கள் பள்ளியிலும் அரசு வினையளவிலும் பரப்பப்படுகின்றன. இத்திருத்தங்களில் பெருங்கூறுகள் முன்பே இருந்து பின்பு தெளிவும் எளிமையும் கருதி மாறியவை என்று வரலாறு அறிதல் நல்லது. அரசாணையிட்ட பெரியார் எழுத்துக்களாவன: ணா றா னா; ணை லை ளை னை; ணொ றொ னொ; னோ றோ னோ. எழுத்துவடிவங்கள் காலக்கோட்படுதலும் கருவிக்கோட் படுதலும் கைக்கோட்படுதலும் உண்மையானும், ஒலியன் பொருளொடு நேர் தொடர்பு இன்மையானும் இன்னபிற காரணத்தானும் தொல்காப்பியம் உயிர்வடிவன்களையும் மெய் வடிவன்களையும் விளம்பவில்லை. வேற்றுமைத் தெரிவுக்கு வேண்டியவளவே நனி சில நூற்பாக்களில் அதுவும் புள்ளி பற்றிய எழுத்துரு வினைக் கூறியுள்ளது. இடைக்காலத்து எழுந்த இலக்கணங்களும் தொல்காப்பியத்தைப் பின்பற்றிச் சில உரியுருவங்களையே தொட்டுச்செல்கின்றன. அச்சுப்பதிவுச் செம்மை வந்த இஞ்ஞான்று வடிவங்கள் ஒருநிலை வார்ப்புருப் பெற்றனவாதலின் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறுவகை யிலக்கணம் கண்ட தண்டபாணி சுவாமிகள் உயிர்க்கும் மெய்க்கும் உயிர்மெய்க்கும் எல்லாம் தனித்தனி வடிவங்களை விரிவுபடப் புனைந்து நூற்பாவிற் காட்டியுள்ளார். இது நிற்க. `புள்ளியில்லா எல்ல மெய்யும்' என்ற இந்நூற்பாவில் உயிர்மெய் வடிவன்களை இருவகையுள் அடக்கிக் காட்டுவர் தொல்காப்பியர். உயிர்மெய் அகரத்திற்கு மட்டும் ஒருவகை; ஏனைய பதினொன்றுக்குமாகப் பிறிதொருவகை. மெய் புள்ளி நீங்கி விட்டாற் போதும், க ங முதலான உயிர்மெய்யாகிவிடும். இங்கு புள்ளி நீக்கம் என்ற அளவில் எளிய விலக்கு முறையாகும். ஏனையுயிரோடு உருபு திரிந்து உயிர்த்தல் என்று சுருங்க மொழிந்தமையால், ஆ முதலியன சேரும்போது வரும் திரிபுகள் ஒருபாற் படாதன என்பது பெறப்படும். உயிரெழுத்துக்குரிய பன்னிரண்டு தனிவடிவன்களும் உயிர்மெய்களாகும்போது சிறிதும் சேரக்காணோம். மெய்க்குரிய வடிவங்களோ எனின் நடுவுருத் திரிபின்றியே உயிர் மெய்யாகும். நிலைப் போக்கைக் காணலாம். இதனாலன்றோ `எல்லாமெய்யும்' எனத் திரிபில் மெய்வடிவின் மேல் வைத்து உயிர்மெய்கட்கு வடிவம் சுட்டுகின்றார் தொல்காப்பியர். க கா கி கீ கு கூ என்றாங்கு இன்றுவரை மெய்வடிவமே நடுநாயகமாக நின்று நிலவும் ஒருமை வரவை உணர்க. உயிர்மெய் நிலை (16) மெய்யின் வழிய துயிர்தோன்ற நிலையே. இதுஉயிர்மெய்யில் உயிரிடம் கூறும். அகலவுரை மேலைநூற்பாவில் உயிரும்மெய்யும் கலந்து உயிர் மெய்யாகுங்கால் வரும் வடிவத் திரிபுகள் மட்டும் இருவகையாகச் சுட்டப்பட்டன. உயிர்மெய் என்ற குறியீட்டில் உயிர் முதலில் உள்ளது. “பன்னீரெழுத்தும் உயிரென மொழிப” என்றதன் பின்பே “பதினெண்ணெழுத்தும் மெய்யென மொழிப” எனச் சொல்லப்பட்டது. ஆதலின் உயிர்மெய்க் கலப்பில் உயிரே முன்னொலிக்கும் என்று கருதப்படுவது இயல்பு இதனைத் தெரிவிக்கவே அவ்வாறில்லை: மெய்யொலிமுன் தோன்றும். அதன் பின்னரே உயிரொலி தோன்றும் என்று தமிழொலி முறை கூறுவர் ஆசிரியர். ஐயங்களைதல் இந்நூற்பாவின் பயன். வழக்கு: க கா கி கீ கு கூ இன்னபிற. திறனுரை உயிர்மெய் - உயிரொடு கூடிய மெய், தயிர்வடை என்பது போல. வேற்றுமைத்தொகை நிலை சிலவிடங்களில் உயிரும் மெய்யும் என உம்மைத் தொகையாகவும் வரும். இரவுபகல் என்பது போல. உயிர்மெய்க் கலப்பில் எதுமுன் எதுபின் என்று தெளிவிப்பதற்கு ஒரு காரணம் உண்டு. மேலைநூற்பாவில் `ஏனையுயிரோடு உருவு திரிந்து நிற்கும்' என்றார். அங்ஙனம் நிற்கும் திரிபு வடிவங்கள் சில முன் சிற்கும். (காண்க: கெ கே கை); சில பின்னேவரும் (காண்க: கா கி கீ கு கூ ) இன்னுஞ்¨சில முன்னும் பின்னும் நிற்கும் காண்க: கொ கோ கௌ) இங்ஙனம் உயிர்மெய்யில் திரிகுறி முன்னும் பின்னும் வருதலின், தொல்காப்பியக் காலத்தும் இந்நிலை இருந்திருக்கு மாதலின், குறி நிற்கும் வரிசையன்று ஒலிதோன்றும் நிலை என்று தெளிவு செய்வர் தொல்காப்பியர். ஒரு வினா: உயிர்மெய் வடிவில் மெய்யொலி முன்னும் உயிரொலி பின்னும் இருத்தலின் நின்ற முறைப்படி `மெய்யுயிர்' என்றே குறியீடு செய்திருக்கலாமே? வடிவுக்காக அவ்வாறும் இருக்கலாம்; எனினும் உயிர்மெய் என்பது முதலெழுத்து வரிசையாதலின், அங்ஙனம் மொழிந்தார். `ஒற்று முன்னாய் வரும் உயிர்மெய்யே' என்று பவணந்தியார் இதனையே பின்பற்றுவர். ஆண் பெண், இரவு பகல், தாய் தந்தை என்ற வழக்குமுறைகளையும் நினைக. மெய்ம் மூவினம் (17) வல்லெழுத் தென்ப கசட தபற. (18) மெல்லெழுத் தென்ப 'ஞஙண நமன. (19) இடையெழுத் தென்ப யரல வழள இவை மெய்யெழுத்தின் மூவினங்களையும் கூறும். அகலவுரை குறில் நெடிலென்று பன்னிரண்டு உயிரெழுத்தும் இருவகைப்பட்டதன்றே. அதுபோல் வல்லினம் மெல்லினம் இடையினம் எனப்பதினெட்டு மெய்யெழுத்தும் ஆறு ஆறு ஆறாக மூவகைப்படும் என்று சொல்லுவார் நூலோர். வல்லெழுத்து மெய்கள் - க் ச் ட் த் ப் ற் மெல்லெழுத்து மெய்கள் - ஞ் ங் ¨ ண் ந் ம் ன் இடையெழுத்து மெய்ய்கள் - ய் ர் ல் வ் ழ் ள் திறனுரை வல்லாறு, வன்றொடர், வல்லொற்று, வலித்தல், வலிப்பு, வல்லிசை, வன்மை எனவும்; மென்றொடர், மெல்லொற்று, மெலித்தல், மெலிப்பு, மெல்லிசை, மென்மை எனவும்; இடைத் தொடர், இடையொற்று, இடைமை எனவும் இம்மூவினமும் ஆட்சிபெறும். முன்னிரண்டும் வலித்தல், மெலித்தல் என வினையாக வரும். இடைச்சொல்லுக்கு வினையாந்தன்மை யில்லை. இங்கு மூவின மெய்களையும் க ங ய என்றாங்கு அகரம் படக் கூறினாலும் இவை ஒற்றுக்களேயாம். “மெய்யினியக்கம் அகரமொடு சிவணும்” என்ற தொல்காப்பிய விதிப்படி, அகரவொலியனாகக் கொள்ளாமல் அகர வோசையாகக் கொள்ளவேண்டும். `புள்ளியில்லா எல்லா மெய்யும்' என்று முன்னே அகரவுயிர் மெய்யாகக் கூறப்பட்டனவே. அவையல்ல இவை என்று தெளிக. வாய்வழிக் காற்று மிக்க அடைப்பாலும் உறுப்புத்தசைத் தடையாலும் பிறப்பது வல்லினம். வன்மை போலவே உறுப்புத் தடைப்பட்டு மூக்கின்வழிக் காற்றோட்டத்தால் பிறப்பது மெல்லினம். காற்றும் உறுப்பும் மிக்க தடையின்றி வன்மை யுறாமலும் மென்மைப் படாமலும் பிறப்பது இடையினம். இதற்கு ஓரளவு உயிர்த்தன்மையும் உண்டு. இடையென்பது ஒருபக்கம் சாராத நெகிழ் விசையைக் குறிக்கும். `அகலாது அணுகாது தீக்காய்வார்போல என்பதை ஒருவாறு ஒப்பு நோக்குக. செய்யுளியலில். வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே என்ற வண்ண நூற்பாக்களில் இயைபு என்ற சொல் இடை என்பதற்கு நிகராக ஆளப்படும். இவ்வாட்சியை நோக்கின் வல்லொலிப் பிறப்புப் கூறும். மெல்லொலிப் பிறப்புக் கூறும் இயைந்த நிலை இடையெழுத்தாம் என்று உணரலாம். பெயரினும் வினையினும் மெய் தடுமாறி வரும் சொல்லை இடைச்சொல் என்று இலக்கணம் கூறுமன்றோ? ஒப்பிட்டுக் காண்க. மேலும் இடையெழுத்துக்கள் செய்யுளில் ஆசிடை யெதுகைத் தொடையாக வந்து இயைதலையும் எண்ணுவோம். வல்லெழுத்தும் மெல்லெழுத்தும் வளிவேற்றுமை யிருப்பினும் உறுப்புத்தடையால் இனமாக ஒற்றுமைப்பட்டன எனினும் பொருண்மை நிலையில் ஒவ்வொன்றும் முதலெழுத் தாம் என்ற ஒலியனியலை மறவாது கொள்ளவேண்டும். ஓரளவு ஈரளவு என்ற மாத்திரை வேற்றுமையால் உயிர்இருபாற்பட்டது. மெய்களுக்குள் மாத்திரை வேற்றுமையில்லை. வளியின் திசையானும் உறுப்புத் தீண்டும் முறையானும் மெய் மூவினமாயிற்று. பொருண்மை மதிப்பில் முப்பது ஒலியன்களும் தனிப் பெற்றியன என்பது முடிந்த தெளிவு. ஒன்றினுள் ஒன்று அடங்காதாதலின் ஒவ்வொன்றையும் தனியாகச் சுட்டுவதுதான் மதிப்பியல். எனினும் வழக்கெளிமையும் கற்போர் நினை வாற்றலும் தொகைநலமும் ஆட்சித் தெளிவும் புணர்ச்சிப் பொதுமையும் நோக்கி உயிராக மெய்யாகக் குறிலாக நெடிலாக வன்மையாக மென்மையாக இடைமையாக எல்லாம் இனங்களாயின. மனத்தி னெண்ணி மாசறத் தெரிந்துகொண்டு இனத்திற் சேர்த்தி யுணர்த்தல் வேண்டும் நுனித்தகு புலவர் கூறிய நூலே என்ற தொல்காப்பிய இறுதி நூற்பா இனநெறி கூறல் நினையத்தகும். மெய்ம் மயக்கங்கள் (20) அம்மூ வாறும் வழங்கியல் மருங்கின் மெய்ம்மயங் குடனிலை தெரியுங் காலை ட ற ல ள வென்னும் புள்ளி முன்னர்க் க ச ப வென்னும் மூவெழுத் துரிய. இதுமுதல் எட்டு நூற்பாக்கள் மெய்ம்மயக்கம் குறித்த வரம்புகள் கூறுவன. இஃது ஓரொற்றுடனிலை எனப்படும். அகலவுரை முன்னர் - பின்பு, அடுத்து, உரிய - உரியன. மயக்கம் - கலத்தல். ஒன்றோடொன்றும் அடுத்து நிற்றல் என்பது பொருள். மெய்ம்மயக்கம் - இன்னமெய்யெழுத்துக்குப்பின் இன்ன மெய்யெழுத்து வருதல் : மெய்யும் மெய்யும் இணைதல். பதினெட்டு மெய்யும் தமிழ் ஒலியன்களாயினும் அடுத்தடுத்து நிற்கும் உறவில் வரையறையுண்டு அடுத்து நிற்கத்தகும் மெய்யை நட்புமெய் எனவும் நிற்கக் தகா மெய்யைப் பகைமெய் எனவும் கொள்வோம். இதனை மூன்று வகைப்படுத்தலாம். 1. தன்மெய்க்குப்பின் தனதே - இது தனதே வரும் உப்பு (க் ச் த் ப் - 4) மயக்கம் 2. ஒருமெய்க்குப்பின் பிறிதே வரும் - இது பிரிதே மயக்கம் வாழ்க (ர்ழ்-2) 3. தன்மெய்க்குப்பின் தனதும் கன்னி - இது தனதொடும் வரும் அல்லது பிறிதும் வரும் கன்று மயக்கம் பிறிதொடும் (ட் ற் ங்ஞ்ண் ந் ம் ன் ய் ல் வ் ள் - 12) மயக்கம் மெய்யோடு மெய்கலக்கும் இம்மயக்கத்தில் முதல்மெய் புள்ளியுடைய தனிமெய்யாகவே இருக்கும்; அடுத்து வருமெய் உயிர்மெய்யாக இருக்கும் எனினும் உயிர்மெய்யில் முதற்கண் ஒலிப்பது மெய்யேயன்றோ ஆதலின் மெய்ம்மயக்கமாகக் கொள்ளப்படும். உரை: மேற்கூறிய பதினெட்டு மெய்களும் மக்களின் பேச்சுவழக்கில் ஒரு மெய்யோடு இன்னொருமெய் சேரும் இணைநிலையை விளங்கக் காண்போமானால் ட் ற் ல் ள் என்ற புள்ளியெழுத்து ஒவ்வொன்றுக்குப் பின்னும் க ச ப என்ற மூன்று மெய்களும் வருவதற்கு உரியவை. இது பிறிதொடும் மயக்கம். வழக்கு: க ச ப ட் வெட்கம் காட்சி நட்பு ற் தொழிற்களம் தொழிற்சாலை தொழிற்பயிற்சி ல் எல்கை பல்சுனை வெல்பகை ள் கொள்கலம் கொள்சாடி கொள்பலி திறனுரை மயக்கம் சொல்லிடை வைத்துக் காணப்படுமாயினும், தனியெழுத்து நிலையிலேயே இன்னதற்குப்பின் என்று சுட்ட முடியுமாதலின், எழுத்துக் குறித்த நூன்மரபியலில் மயக்கங் கூறினார். ஒரு மொழியில் எழுத்திணைதல் என்ற மயக்கத்தைப் பலவகைப்படுத்தலாமெனினும் பயனும் வரம்பும் உடைய மயக்கமே கூறப்படும். உயிர்மெய் ஓரெழுத்தன்று; செய்கை நடைமுறையில் உயிராகவோ மெய்யாகவோ தனிப்படுத்தப்படும் ஆதலின் மயக்கப் பேச்சில்லை. மெய்யும் உயிரும் இணைவது ஒருவகை எனலாமாயினும், “உடன்மேல் உயிர்வந் தொன்றுவ தியல்வே” என்று நன்னூல் வெளிப்படுத்திய படி, இதுவும் மயக்கம் எனப்படாது. உயிர்மெய்யும் உயிர்மெய்யும் மயக்கமாமோ எனின் உயிருமெய்யும் என்ற இரண்டே எழுத்தின் அடி வகையாகக் கொள்ளப்படும்போது உயிர்மெய்ம் மயக்கத்திற்கு இடனில்லை. உயிரொடு உயிரும் உயிரொடு மெய்யும் மயங்குதல் உண்டேயெனினும், இவையெல்லாம் எதனையடுத்த எதுவும் வரலாமாதலின், வரம்பின்மைக்கும் பயனின்மைக்கும் இலக்கணப்பேறில்லை. மூடையரிசியை எண்ணிப் பயனென்ன? குடத்தில் நீர்த்துளி மயக்கத்தைக் கூறிப் பயனென்ன? இலக்கணத்தின் பயன் தெளிவும் கடைப்பிடிப்புமாம். வரம்புடையதே இலக்கண வளைவுள் இடம்பெறும். எழுத்து மயக்கத்தில் மெய்யொடு மெய் ஒன்றிநிற்கும் மயக்கமே தமிழ்மொழியின் அமைப்பைக் காட்டுவது. வரம்புடையது பிறழாது கடைப்பிடிக்க வேண்டியது. புணர்ச்சியிலக்கணத் திற்கும் தளமாவது. ஆதலின் விரிவுபட எட்டு நூற்பாக்கள் மெய்ம்மயக்கத்திற்கே யாத்தார் தொல்காப்பியர். இயற்றமிழ் கூறும் இவ்விலக்கணத்தை இசைத் தமிழில் வரும் இணை கிளை நட்பு பகை நரம்புகளோடு ஒப்பிடுக. வழங்கியல் மருங்கு - மக்கள் பேச்சு வழக்கில் உள்ளது என்றபடி. எனவே செய்யுள் வழக்குக்கும் இதுவே அடிப்படையாம் மெய்ம்மயங்கு உடனிலை என்பதன் விளக்கம்: வாழ்க என்ற சொல்லில் ழகரம் புள்ளியாக இருக்கும். `க' உயிர் மெய்யாக இருக்கும். இது ஓரொற்றுடனிலை எனப்படும். வருமெய் உயிரோடு கூடிநிற்கும் என்பதைச் சுட்டவே உடனிலை என்றார். இதுவே பொருள் என்பதனை ட ற ல ள என்னும் புள்ளி எனவும் க ச ப வென்னும் மூவெழுத்து எனவும் கூறுவதால் தெளிவாம். மேலும் க ச ப என அகரவுயிர் மேலனவாகக் கூறினாலும் கா சா யா கி சி பி என்றாங்கு எல்லாவுயிர் மெய்க்கும் கொள்ளவேண்டும். இவ்விளக்கம் பின்வரும் நூற்பாக்கட்கும் ஏற்கும். இஃது இனந்தழுவுதல் என்னும் நெறி. ஒரு வினா: மெய்ம்மயக்கம் ஒருமொழியில் வருமா? மொழித் தொடரில் வருமா? பயிற்சி காட்சி வெல்க ஒருமொழியில் வந்தன கொள்க கடற்கரை மொழித்தொடரில் வந்தன நாட்காட்டி வெட்டும் புலி பூங்கா ஒருமொழியாயினும் பன்மொழியாயினும் ஈண்டு ஒலித்தொடர்ச்சியே இலக்கணமாகும். `இன்னவொலிக்குப்பின் இன்னவொலி' என்ற அணுக்கநிலையே மெய்ம்மயக்கமாம். பின்வரும் புணரியல்கள் கிளவித் தொடராயினும் அவற்றுக்கும் இம்மயக்கமே இலக்கணம் என்றறிக நூன்மரபு கூறும் எழுத்திலக்கணம் புணர்ச்சியில் மாறுவதில்லை. இதுவுமது (21) அவற்றுள், லளஃகான் முன்னர் யவவுந் தோன்றும் இது முன்சொன்னவற்றுள் இருபுள்ளிகட்கு மேலும் மயக்கம் கூறும். அகலவுரை மேற்சொன்ன நான்கு புள்ளிகளுள் ல் ள் என்ற இருபுள்ளிகட்குப்பின் யகர வகர எழுத்துகளும் வரும். எனவே க ச ப ய வ என்ற ஐந்தும் மயங்கும் என்பது கருத்து. வழக்கு: ய வ ல் - நல்யானை நல்வரவு ள் - ஆள்யார் ஆள்வார் இதுவுமது (22) ஙஞண நமன வெனும்புள்ளி முன்னர்த் தத்த மிசைகள் ஒத்தன நிலையே இது மெல்லினத்துக்கு இனமான வல்லினத்தோடு மயக்கம் கூறும். அகலவுரை எழுத்து வரிசையில் ங் ஞ் ண் ந் ம் ன் என்ற மெல்லொற்றுக்களுக்கு மேலே இருக்கும் க ச ட த ப ற என்ற வல்லெழுத்துக்கள் இனமுறைப்படி பின்னே வந்து நிரலே மயங்கும். ங்க: ¨ஞ்ச; ண்ட; ந்த; ம்ப; ன்ற என்றவாறு இணைந்துவரும். மிசைகள் - மேலே நிற்கும் எழுத்துக்கள். வழக்கு: ங்க - வங்காளம் ¨ ஞ்ச - தஞ்சை ண்ட - இலண்டன் ந்த - இந்தியா ம்ப - பூம்புகார் ன்ற - குன்றக்குடி திறனுரை முப்பது எழுத்துக்களின் வரிசை இன்று அகரச் சுவடியிற் காண்பது போலவே தொல்காப்பியக் காலத்துக்கு முன்பும் இருந்து வந்தது. அகரமுதல் னகர விறுவாய், ஒளகாரவிறுவாய், குற்றெழுத்து, நெட்டெழுத்து, வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து முதலிய நூற்பாக்களும், பிறப்பியல் உயிர் மயங்கியல் புள்ளிமயங்கியலில் வரும் எழுத்து வரிசைகளும், `தத்தம் மிசைகள்' என்ற இந்நூற்பாவும் `அப்பதினொன்றே புள்ளியிறுதி’ என்ற மொழிமரபு நூற்பாவும் `ஞகார முதலா னகார வீற்றுப் புள்ளியிறுதி இயைபு' என்ற செய்யுளியல் நூற்பாவும் தமிழெழுத்து மாறாத வரலாற்றொருமைக்குச் சான்றாகின்றன. இதுவுமது (23) அவற்றுள், ணனஃகான் முன்னர்க் கசஞப மயவவ் வேழும் உரிய இது முன் சொன்னவற்றுள் இரு புள்ளிகட்கு மேலும் மயக்கம் கூறும் அகலவுரை மேற்சொன்ன ஆறு புள்ளிகளுள் ண்ன் என்ற இரு புள்ளிகட்குப் பின் க ச ஞ ப ம ய வ என்ற ஏழு எழுத்துக்களும் வரும். எனவே இவற்றொடு ணகரத்துக்கு டகரமும் னகரத்துக்கு றகரமும் முற்கூறியபடி சேரும். வழக்கு: க ச ஞ ப ண் உண்கலம் வெண்சாந்து ஒண்ஞாண் வெண்பூதி ன் நான்கு புன்செய் பொன்ஞாண் அன்பகம் ம ய வ உண்மை ஆண்யார் மண்வெட்டி இன்மை கூன்யார் பொன்வயல் இதுவுமது (24) ஞநமவ வென்னும் புள்ளி முன்னர் யஃகான் நிற்றல் மெய்பெற் றன்றே இது நான்கு புள்ளிகட்கு ஒரு மெய்ம்முன் மயக்கம் கூறும். அகலவுரை: ஞ் ந் ம் வ் என்ற நான்கு புள்ளிகட்குப் பின்னே யகரம் வருவது பொருளுடையதே. மெய் - பொருள் பெற்றன்று - பெற்றது வழக்கு உறிஞ் யாது, பொருந் யாது, திரும் யாது, தெவ் யாது உரிஞ் - உரிஞ்சுதல், பொருந் - பொருந்துதல், திரும் - திரும்புதல், தெவ் - பகை. திறனுரை இம்மெய்ம்மயக்கம் புணர்மொழில் வருகின்றது. முன்விளக்கியபடி மெய்ம்மயக்கங்கள் ஒரு மொழியிலும் வரலாம். அது கணக்கன்று. இன்ன எழுத்துக்குபிப்பின் இன்ன எழுத்து வரும் என்ற அத்துணையே ஈண்டு இலக்கணம்; எழுத்துத் தொடர்ச்சிக்கே இலக்கணம் என்பதை மறவற்க. தொல்காப்பியர் காலத்திலே இம்மயக்கம் அரிதாக இருந்தமையின், வழக்கில் அரிதாக உண்டு என்று தெரிவிப்பதற் காக `மெய்பெற்றன்று' என நடைசெய்தார். யகரம் என்று பொதுப்படக் கூறினாலும்' ஆவோ டல்லது யகரம் முதலாது' என்பதனால் `யா' என்ற ஓருயிர்மெய்யே வரும் என்பது பெறப்படும். பல மெய்ம் மயக்கங்கள் ஒரு சொல்லிலும் புணர்மொழியிலும் வரும். சில மயக்கங்கள் புணர்மொழியில் மட்டும் வரும். இந்நூற்பா கூறும் மயக்கம் இரண்டாம் வகையைச் சார்ந்தது. உறிஞ், பொருந், திரும் என்ற மூன்றும் உறிஞ்சு, பொருந்து, திரும்பு எனக் குற்றியலுகரமாகப் பிற்காலத்துத் திரிந்தன. இம்மெய்ம் மயக்கம் பிற்காலத்து வழக்காறில்லை. `ஐயன் வெந் விடாத கொற்றத் தாவம் வந்தடைந்த தன்றே' என்ற வாலிவதைப்படலச் செய்யுளில் நகர வகர மயக்கம் புதிய வரவாகும். இதுவுமது (25) மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும். இது முன்சொன்னவற்றுள் ஒருபுள்ளிக்கு மேலும் மயக்கம் கூறும். அகலவுரை: மேற்கூறிய நான்கு புள்ளிகளுள் ம் என்ற ஒரு புள்ளிக்குப் பின்னே வகரமும் வரும். எனவே ய வ, என இரண்டு வரும் என்பது கருத்து. வழக்கு: வலம் வருக. திறனுரை `யவவுந் தோன்றும்' `ஏழுமுரிய' `வவ்வுந் தோன்றும்' என்ற உம்மைகள் இவற்றுக்குமேல் இல்லை என்ற முற்றுமை காட்டுவன லளஃகான், ணனஃகான், யஃகான், மஃகான் என்ற ஆய்தவொலிகள் இசைநயம் தருபவை. இதுவுமது (26) யரழ வென்னும் புள்ளி முன்னர் முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும் இது மூன்று புள்ளி முன் பத்தெழுத்துக்களின் மயக்கம் கூறும். அகலவுரை மொழிமரபு என்ற அடுத்தவியலில் க ச த ப ஞ ந ம வ ய என்ற ஒன்பது மெய்யெழுத்துக்கள் மொழிக்கு முதலாக வரும் என்று சொல்லுவர். ய் ர் ழ் என்னும் புள்ளிக்குப் பின்னே அவ்வொன்பது எழுத்துக்களும் ¨ஙகரமும் வந்து மயங்கும். வழக்கு க ச த ப ஞ ய் செய்கை தாய்சேய் செய்தி ஆய்பவை ஆய்ஞர் ர் தேர்கை வார்சிலை ஊர்தி மார்பு ஊர்ஞமலி ழ் ஆழ்கடல் வீழ்சுடர் வாழ்தி வீழ்படை வீழ்ஞாயிறு ந ம வ ய ங ய் ஆய்நர் வாய்மை தெய்வம் செய்யாறு வேய்ஙனம் ர் தேர்நர் நேர்மை நேர்வழி போர்யானை வேர்ஙனம் ழ் வாழ்நர் கீழ்மை வாழ்வு பாழ்யாது வீழ்ஙனம் திறனுரை மொழிமரபில் வரும் எதிரது நோக்கி `முதலாகெழுத்து’ என்ற குறியீடு ஈண்டு ஆளப்பட்டது. முதலெழுத்துக்கும் முதலாகெழுத்துக்கும் வேற்றுமை யுணர்க. ஙகரத்தைப் பிரித்துக் கூறினமையின், அது நேரிய முதலாகெழுத்தில்லை என்பது வெளிப்படை. முதலாகெழுத்து என மொழிமேல் வைத்துச் சுட்டப்பட்டதுபோல் தோன்றினும் அது சுருக்கங் கருதியதேயாம். ஒலித் தொடர்ச்சியென்னும் மெய்ம்மயக்கமே ஈண்டுப் பொருளாம். முதலாகெழுத்து ஙகரத்தோடு சேர்ந்து வரிசையாக இரண்டும் வரும் என்பது கருத்தன்று. யரழக்களின் பின்பு ஙகரமும் தனி ஓர் எழுத்தாக வேய்ஙனம், வேர்ஙனம் வீழ்ஙனம் என மயங்கும் என்று கொள்க. ஙனம் - தன்மைப் பொருளும் இடப் பொருளும் தரும் சார்புச்சொல், தானே நிற்கும் முதன்மையில்லை யாதலின், மொழி முதலெழுத்தோடு எண்ணப்படவில்லை போலும். மெய்ம்மயக்கத்தில் முன்னது புள்ளியாக இருக்கும். பின்னது உயிர்மெய்யாகவும் இருக்கும் என்ற முறைப்படி ஙகரத்தை `ஙனம்' என உயிர்மெய்யாகவே கொள்ள வேண்டும். `ஆங்ஙனம் விரிப்பின்' ஆங்ஙனம் அறிப' `ஆங்ஙனம் ஒழுகின்' எனத் தொல்காப்பியத்தில் இச்சொல் சுட்டடுத்து ஆளப்படும். ஙகரத்தை தூயமொழி முதலெழுத்தாகக் கொள்ளாமைக்கு ஒரு காரணம் ஆங்ஙனம் என்பது ஆங்கனத்தின் மெல்லினத் திரிபாகக் கருதியிருக்கலாம். ஆங்கனம் என்ற வழக்கும் உண்டு. ஆங்கு, ஆங்கண் என்ற இடங்களில் ககரம் வருதலைக் காணலாம். மலையாள மொழியில் நிங்ஙள், மாங்ஙா, மாங்ஙா, தேங்ஙா என வல்லொலிகள் மூக்கொலிகளாக மாறிய பெரும்போக்கினை ஒப்பிடுக. திரிந்தநிலையில் வரும் எழுத்திணை மொழி முதலாகத் தொல்காப்பியம் மதிக்கவில்லை. `அவ்வை யொட்டி ஙவ்வும் முதலாகும்மே' என்ற நன்னூலார் சுட்டிய முடவநடை ஏற்கத்தகும். எங்ஙன் இருந்ததெவ் றெவ்வண்ணம் சொல்லுகேன் அங்ஙன் இருந்ததென் றுந்தீபற என்ற உய்யவந்த தேவநாயனார் திருவுந்தியாரில், ஙனம் என்பது ஙன் என்ற வடிவில் நிற்பதைக் காணலாம். இதுவே அடிவடிவாயின் நெஞ்சம் என்பதிற்போல் அம் என்பது சாரியையாகும். இதுவுமது (27) மெய்ந் நிலை சுட்டின் எல்லா வெழுத்தும் தம்முற் றாம்வரூஉம் ரழவலங் கடையே இது பதினாறு மெய் சுட்குத் தன்வரவுமயக்கமும் இருமெய்கட்குப் பிறவரவு மயக்கமும் கூறும். அகலவுரை இதுகாறும் மெய்ம்மயக்க நிலையில் ஒரு புள்ளிமுன் பிறமெய்கள் வரும் பிறவரவு மெய்ம்மயக்கமே கூறப்பட்டன. இந்நூற்பாவில் க் ங் ச் ஞ்¨ ட் ண் த் ந் ப் ம் ய் ல் வ் ள் ற் ன் என்ற பதினாறு எழுத்துக்களும் தன்முன் தான் வரும் எனவும் ர் ழ் என்ற இரு எழுத்துக்களும் தன்முன் பிறிதே வரும் எனவும் வரம்பு செய்யப்படுகின்றன. உரை மெய்யோடு மெய்ம்மயங்கு நிலையைப் பொதுப் படையாகச் சுட்டினால், ர ழ என்ற இரண்டு நீங்க ஏனைப் பதினாறு புள்ளிகளும் தன்முன் தான் வரும். நடையாற்றலால், ர ழ இரண்டன்முன் பிறவே வரும் என்பது பெறப்படும். மெய்ந்நிலை - மெய்ம்மயக்க நிலை. வழக்கு: தன்முன்தான் (16) க் ஊக்கம் :ங் யாங்ஙனம் ச் மூச்சு ஞ்¨ மஞ்சை ட் எட்டு ண் எண்ணம் த் பத்து ந் வெந்நீர் ப் துப்பு ம் தும்மல் ய் மெய்யம் ல் செல்லம் வ் செவ்வான் ள் பள்ளம் ற் காற்று ன் சென்னை தன்முன் பிற (2) ர் ஆர்வம் ழ் மூழ்கு திறனுரை இது மெய்ம் மயக்கம் பற்றிய இறுதி நூற்பா. இன்னமெய்க்குப் பின் இன்னமெய் வருதல் என்பது தமிழின் இயற்கையாதலின் இவ்வமைப்பினை நன்கு விளங்கிக் கொள்ளவேண்டும். மிகத் தொன்மையான தமிழ் இன்றுவரை நிலைபெற்றிருப்பதற்கும் வருங்காலமெல்லாம் நிலைபெற்ற வழக்குப் பெறுதற்கும் இத்தகைய அமைப்பினைக் கடைப் பிடிப்பது மக்கள் கடமை. தமிழ்மொழிக்கு நிலைபேறும் காலவொருமையும் கன்னிமையும் தரும் மெய்ம்மயக்கவியல் குறித்து இவ்விடத்து வேண்டுமட்டும் தெரிந்து கொள்வோம். பதினெட்டுமெய்களை மயக்க வரவில் தனதே மயக்கம், பிறிதே மயக்கம், தன்னொடும் பிறிதொடும் மயக்கம் என மூன்றாகப் பகுக்கலாம். 1. தன்முன் தானே வருகை: நான்கு மெய்கள்: இது தனதே மயக்கம் க் அக்காள் ச் ஆச்சி த் ஆத்தாள் இந்நான்கின் முன்பிற மெய்கள் வாரா ப் அப்பன் 2. பிற வரவு: தன்முன் பிறிதே வருகை. இரு மெய்கள்: இது பிறிதே மயக்கம். ர் சார்பு ழ் வாழ்வு இவற்றின் முன்பிற மெய்களே வரும் இருவரவு : தன்முன் தானும் பிறிதும் வருகை: பன்னிரு மெய்கள்: இது தன்னொடும் பிரிதொரும் மயக்கம். தான் பிற ங் யாங்ஙனம் யாங்கு ஞ்¨ அஞ்ஞை காஞ்சி ட் வேட்பாளர் கட்சி ண் பண்ணன் தண்டி ந் முந்நூறு முந்தானை ம் அம்மானை கம்பன் ய் நொய்யல் நெய்தல் ல் நெல்லி பல்கலை வ் எவ்வம் தெவ் யாது ள் கிள்ளி ஆள்வினை ற் பற்று கொற்கை ன் நன்னன் நன்றி ஒருமொழியின் இலக்கணக் கூறுகள் தாய்மொழி யாளர்க்கும் குழந்தைகட்கும் மொழிச் சூழ்நிலையுடையார்க்கும் கேள்வியுடையார்க்கும் மூச்சோட்டம் போலவும் குருதி யோட்டம் போலவும் தாமே பதியும் கேட்டுவருவது மொழி: மொழியறிவு பெறச் செவி வழியே எளிய இயற்கையாகும். செவிவழி உணரப்படுதலின் இசைக்குக் கேள்வி என்ற பெயருண்டு. இத்தன்மையையும் இதுபோன்ற மொழித் தன்மை களையும் தாய்மொழி மக்கள் தம் மொழியைப் பேசத் தொடங்கியநாள் முதலே உணர்ந்திருப்பர் எனவும் புதிய கருத்துக்களை மரபுமுறையிற் படைத்துக்கொள்வதற்கும் இலக்கிய வுடைமைகளைப் பேணிக்கொள்வதற்கும் பிறதாக்கு தலால் மொழிக்குக் கேடு வாராது காத்துக்கொள்வதற்கும் விதிமீறல்களைக் களைந்துகொள்வதற்கும் இலக்கண வரன் வேண்டும் எனவும் இலக்கணமில்லாமொழி அரசில்லா நாடு ஒக்கும். எனவும் கேரள பாணினீய ஆசிரியர் அரச வருமன் சாற்றிய பொன்மொழி தொல்காப்பியத்துக்குச் செவ்வன் பொருந்தும். பேசக்கற்றுக் கொடுப்பது. இலக்கணமன்று: காக்க ஆக்க வளர்க்க வழிவழிவிளங்கத் தடங்காட்டுவதே இலக்கணம் என்று தெளிக. இலக்கணம் புறமிருந்து திணிக்கப்படும் செயற்கையன்று. மக்களின் வாய்மொழிக் கூறுகளைக்கண்டு கரையுடையாது கட்டி உயர்த்தி வளர்ப்பதே இலக்கண நோக்கம். தமிழுக்கு இவ்வரண்களுள் ஒன்று மெய்ம்மயக்கம் எனப்படும். அதனை ஒன்பது நூற்பாக்களில் விரித்துரைப்பர் தொல்காப்பியர். பின்வரும் புணர்ச்சிகட்கும் இம்மயக்க நட்பு பேரடிப்படையாகும். இதனைப் பிறழாது கடைப்பிடிப்பதே மொழிக்காப்பு. பரந்து ஓங்கிய பன்மொழித் தாக்கம் சாடுறும் இக்காலத்து, தமிழ்மொழியின் இயற்கையைக் கருத்தூன்றிக் காக்கவேண்டும். கரையுடைந்தால் மதுராந்தக ஏரிபோல் ஆறுதரையாகித் தடமாகி மேடாகிக் காடாகாதா? கலப்புப் பெருகிவருதலின் மொழி விழிப்பு வேண்டும் காலம் இது ஆதலின் உலகத்துப் பலமக்கட் பெயர்களையும் பன்னாட்டுப் பெயர்களையும் பலபொருட் பெயர்களையும், அயன்மொழிச் சொற்களையும் இன்னோரன்ன எல்லாவற்றையும், உணவை வாய் வரம்புக்குள் அடக்கிக் கொள்வது போலத் தமிழ் மெய்ம்மயக்க வரம்புக்குள் அடைத்துச் செவ்வியல் காண்க. தமிழ்ச்சொற்களைக் கூடப் பிழைமயக்கமாக எழுதும்போக்கு எழுத்தாளரிடை வளர்ந்து வருகின்றது. கவலைப்படுவார் சிலரே. சீத்தலைச் சாத்தனார்கள் பெருகவேண்டும். படுபிழை களையும் தமிழ் வளர்ச்சியென வாதிடுவார்க்கு இரங்கியொழிக. ஆங்கிலமொழி இந்தியப் பெயர்களைத் தனக்கேற்ப மாற்றிக் கொண்டதையும் நாம் ஏற்றுக்கொண்டதையும் நன்கு சிந்தியுங்கள். பெரும்பிழையாக எப்படியெல்லாம் தமிழைப் பாடுபடுத்துகின்றனர் என்பதற்கு எடுத்துக்காட்டுக்கள் தரவரும்பவில்லை எவற்றை எவ்வாறு எழுதவேண்டும் என்ற நேர்காட்டுக்கள் சிலவற்றை வரைவன். மெச்சிக்கோ, தென்மார்க்கு, ஆலந்து, காந்திலந்து, செருமனி, பிரஞ்சு, ஆத்திரேலி, வாசிங்கன், ஆப்பிரிக்கா, பாகித்தான், இசுரேல், மாசுக்கோ, இரங்கூன், தில்லி, நாகபுரி, பாட்டினா, காசுமீரம் என்றாங்கு ஊர்ப்பெயர்களையும்: குரோமிகோ, செருநன்கோ, கோர்ப்பச்சேவ், சிட்டினி, தென்னிசன், சான்சன், பருக்கு, அலச்சாந்தர், பென்னாட்சா, அரித்தாட்டி, அகமது. அபுதுல், அக்குபர், பதுமாவதி, வீடணன், சுக்கிரீவன், அருச்சுனன், வீடுமன், சந்திரகுத்தன், சூரபன்மன், மரியாள், ஏசு, யோவான். சூசையப்பர், தோமையர் என்றாங்கு மக்கட் பெயர்களையும்; பிப்பிரவரி, ஏப்பிரல், ஆகத்து, செட்டம்பர், அட்டோபர், பத்தி, முத்தி, சத்தி, மானியம், புண்ணியம், கண்ணியம், சித்திரம், சத்திரம், பத்திரம், சாத்திரம், தோத்திரம், மருமம், வருணனை, வருமன், தருக்கம், அக்கினி, முக்கியம், பாக்கியம், சாங்கியம், கருப்பிணி, கருப்பத்தடை, வருக்கம், அருச்சனை, சொருணம், ஆன்மா, ஆத்துமா, தருமம், தன்மம், சத்தம். நிருவாணம், வாக்கியம், ஆசிரமம், வாத்தியம் என்றாங்கு பல சொற்களையும் தமிழியற்கைப்படி எழுதுவது அருமையோ? இப்பல சொற்களில் தமிழ்ச்சொற்களும் உண்டு. அயற் சொற்களைக் கையாள நேரிடின் அப்போதும் தமிழ் மெய்ம்மயக்கத்தைப் போற்ற வேண்டுமளவுக்கே மேலைக் காட்டுக்கள். இதுமொழிக் காப்பு நெறி எனப்படும். வெள்ளி, பொன், கலைக்கோட்டு முனிவன், புகை நிறக் கண்ணன், வேள்வி பகைஞன், வச்சிரத் தெயிற்றன். மாபெரும்பக்கன் என்று கம்பர் செய்ததுபோல ஒல்லுமளவு தமிழாக்கி விடுவதுவே நன்மரபாகும். மொழிமுதலெழுத்திலும் மொழியீற்றெழுத்திலும் இலக்கியங்கண்டு சிறுபாங்கு தொல்காப்பியத்திலும் வேறுபடும் பவணந்தி முதலானோர் இடைநிலை மெய்ம்மயக்கத்தில் வேறுபடவில்லை. இதனால் தமிழுக்கு இவ்விலக்கணத்தின் உயிர்ப்பாங்கு உறுதியாம். மெய்யின் மயக்கம் வெளிமயக் கன்றுகாண் செய்ய தமிழின் திறம். சுட்டுக்குறி (28) அஇ உஅம் மூன்றுஞ்¨ சுட்டு. இது சுட்டு என்ற குறி கூறும். அகலவுரை ஓரளபு இசைக்கும் குற்றெழுத்துக்கள் ஐந்தாம் என்று முன்பு கூறப்பட்டது. அவற்றுள் அகரம் இகரம் உகரம் என்ற மூன்றும் உயிர்க் குற்றெழுத்து நிலையில் நின்றே சுட்டுக் குறிப்பினையுணர்த்துதலின் சுட்டு என்ற குறியும் பெறும். அகரம் சேய்மைச் சுட்டு, இகரம் அண்மைச்சுட்டு, உகரம் இடைச்சுட்டு. வழக்கு அத்தெரு, இத்தெரு, உத்தெரு, அவ்வீடு, இவ்வீடு, உவ்வீடு, `அம்மூன்றும் என்பதுவும் அகக்காட்டு. இச்சுட்டு பெயர்க்குமுன் வரும். திறனுரை அ இ உ மூன்றும் சுட்டு என்ற குறி பெறும். இவை தனியெழுத்தாகவே இருக்கும். இவற்றுக்கு உயிர் மயங்கியலில் தனிப்புணர்ச்சி விதி கூறுவர் ஆசிரியர். சுட்டே இறுதியாகவும் அமைதலின், `சுட்டினிறுதி' என்பர். அது இது உது என்பன வற்றைச் `சுட்டு முதலுகரம்' எனவும் அவை இவை உவை என்பனவற்றைச் `சுட்டு முதலாகியவை யென் னிறுதி' எனவும் அவ் இவ் உவ் என்பனவற்றைச் `சுட்டுமுதல் வகரம்' எனவும் இச்சுட்டினும் வேறுபட ஆளல் காண்க. அது முதலியவற்றுக் கெல்லாம் உருபியலிற் சாரியை கூறும் ஆசிரியர் சுட்டுக்கு அங்ஙனம் கூறாமையும் கருதுக. நடுமை காட்டும் உகரச் சுட்டு. இன்று பெரும்பான்மை வழக்கில் இல்லை; எனினும் இடைநிலையான நடுவிடம் உண்மையின் அதற்கு ஓர்சொல் வேண்டுமன்றோ? பொரு ளிருப்பச் சொல் வீழ்தல், வீழவிடுதல் அறியாமையாகும். இன்றோ இப்பகுதியைக் குறிப்பதற்கு மெய்ப்பாடு காட்டித் தடுமாறுகின்றோம். ஆதலின் உகரச்சுட்டுக் கிளவிகளை யெல்லாம் பெருவழக்காற்றுப்படுத்தல் நல்லது. கல்வியாலும் எழுத்தாலும் உயிர்ப்பிக்க வேண்டியன இவை. “ஒரு கூட்டத்தார் இங்கும் மற்றொரு கூட்டத்தார் உங்கும் இன்னொரு கூட்டத்தார் அங்கும் நின்று கடவுளை வழிபடல் வேண்டும்” என்பது திரு.வி.க.நடை. அ அவனும் இஇவனும் உஉவனும் கூடியக்கால் எஎவனை வெல்லா ரிகல் இந்நடை வாய்பாடு ஆங்கிலத்தின் இருபத்து நாலாவது எழுத்தும் இருபத்தைந்தாவது எழுத்தும் போலப் பயன் படுவதை ஒப்புநோக்குக. வினாக்குறி (29) ஆஏ ஓஅம் மூன்றும் வினா. இது வினா என்ற குறி கூறும். அகலவுரை ஈரளவு இசைக்கும் நெட்டெழுத்து ஏழென முன்பு கூறப்பட்டது. அவற்றுள் ஆ ஏ ஓ என்ற அந்த உயிர் மூன்றும் நெட்டெழுத்து நிலையில் நின்றே வினாப்பொருளைத் தருதலின் வினா என்ற குறியும் பெறும். வினா அ என அளபெடைப் பாடம் ஒன்று கொள்ளல் யாப்புப் பொருத்தமாகும் என்ற வேங்கடராசுலு குறிப்பு ஒக்கும். வழக்கு: அவனா சொன்னான்? நீயே சொன்னாய்? யானோ சொன்னேன்? இவை பெயர்வழி வந்த வினாக்கள். அவன் வருவானா? நீ செல்வாயே? யான் சொல்வேனா? இவை வினைவழி வந்த வினாக்கள். இம்மூன்றும் பெயர்க்கும் வினைக்கும்பின் வருவன. முச்சுட்டில் இடவேற்றுமையிருப்பதுபோல இம்மூன்று வினாவிலும் சில வேறுபடு பொருண்மை தொல்காப்பியர் காலத்து இருந்திருத்தல் வேண்டும். திறனுரை சுட்டுப்பொருளும் வினாப்பொருளும் தரும் இவை நூன்மரபில் இடம்பெறலாமா? என்பது வினா. நூற்மரபு முப்பத்து மூன்று எழுத்துள் வருவனவற்றிற்கு ஓரினம் நோக்கிக் குறியீடுகள் கூறும் இயலாதலால் சுட்டும் வினாவும் இவ்வியலிற் சேர்க்கப்பட்டன. இவை சுட்டுக்குறிப்பும் வினாக்குறிப்பும் உடையவாதலின் மொழியாந்தன்மையில் ஐயமில்லை எனினும் ஈண்டு நோக்கம் குறியீடே. அதனாற்றான் சுட்டு எனவும் வினா எனவும் குறியீடுகளையே பயனிலையாக அமைத்தார் ஆசிரியர். குறியீடு கூறுவது பின்னர் எடுத்தாளும் சுருக்கத்திற்கன்றே. ஐந்தினைக் குறில் எனவும் ஏழினை நெடில் எனவும் பன்னிரண்டினை உயிர் எனவும் பதினெட்டினை மெய் எனவும் இவ்வாறே வன்மை மென்மை இடைமை எனவும் ஒருபடித்தான எழுத்துக்களுக்கு ஒரு குறியீடு படுத்தியதைக் காண்கின்றோம். அம்மரபுப்படி அ இ உ மூன்று உயிர்க்குறிலும் ஓரியல்புடைய சுட்டுக் குறியாம். ஆ ஏ ஓ மூன்றும் ஓரியல்புடைய வினாக் குறியாம். இதனால் நாம் அறியக் கிடப்பது என்ன? ஒருவழிப் பட்ட எழுத்துத் தொகுதிக்கு குறியீடு ஒன்று வடிப்பதே நூன்மரபின் கருத்து என்பதாம். ஆதலின் முழுச்சொன்னிலையில் வரும் அது, அவ், அவை, அவன், யா, யாது, யாவன், எவன் முதலியவற்றுக்கு நூன்மரபில் இடமில்லை. சொல் நோக்கில் சுட்டும் வினாவும் இடைச்சொற்கள் என்க. ஏகாரமும் ஓகாரமும் பிறபொருட் குறிப்புக்கும் வருதலின் இடையியலில் நூற்பாக்கள் யாத்தார். ஆ வினா என்ற ஒரு பொருட்குறிப்பேயுடைமையின் இந்நூற்பாவே போதிய தாயிற்று. சுட்டுக்கும் இஃதொக்கும். இது முன்சொல்லியது போதும் என்ற நெறி. குறில்கள் சுட்டாதலும் நெடில்கள் வினாவாதலும் இயற்கை நயமுடையன. எ என்ற குறிலும் ஒருவகை வினாவாய் வருதல் உண்டு. எம் பெயர், எம்முறை, எம் மெய் என வருமிடங்கள் உள. எனினும் பெரும்பாலும் எகரம் அகரச் சுட்டுக்கு முன்னோடியாய் வரும் சுட்டு நடையைக் காண்கிறோம். “எப்பொரு ளாயினும் அல்ல தில்லெனின் அப்பொரு ளல்லாப் பிறிதுபொருள் கூறல்” “எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப” “எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்பு அவ்விரு முதலிற் றோன்று மென்ப” மேலும் இவ்விடங்களில் எகரச் சேர்க்கை எல்லாம் என்ற பொருண்மைக் குறியாகத் தோன்றுவதை உய்த்துணர்க. எப்பொருள் யாய்hர்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. என்ற திருக்குறளும் இவ்வொட்டு நடையாகும். இனத்திற் சேர்த்தி உணர்த்தல் வேண்டும் என்ற தொல்காப்பிய எண்ணப்படி, எகரத்தையும் வினாவாகக் கொள்ளலாம். காண்க: எப்படி, எம்மொழி, எக்குறள். இயலும் இசையும் (30) அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய வென்மனார் புலவர். இஃது இசைத் தமிழின் அடிப்படையும் அளபு மிகுதியும் கூறும். அகலவுரை நூன்மரபின் தொடக்கத்தில் உயிரெழுத்துக்களுக்கும் மெய்யெழுத்துக் களுக்கும் மாத்திரை கூறப்பட்டன. இவை பேச்சு வழக்குக்கும் இயல்வழிப்பட்ட செய்யுள் வழக்குக்கும் உரியவை. இசைத்தமிழுக்கும் இவ்வெழுத்துக்களே அடிப்படை; எனினும் இசை பண்ணாதலின் ஆளத்தி செய்யுங்கால் இயலுக்குச் சொல்லிய எழுத்தின் மாத்திரைகள் மிக்கு ஒலிக்கும் என்பது கருத்து. உரை: உயிருக்குக் கூறிய மாத்திரைகள் கூடுதலாக ஒலித்தலும் மெய்யொற்றுக்கள் ஓசை நீட்டித்து ஒலித்தலும் ஆகிய இரண்டும் உண்டு என்று சொல்லப்படுபவை வாய்ப்பாட்டொடு பொருந்திய யாழிசை நூலிடத்தன என்பர் இயற்புலவர். அளபு - மாத்திரை; இயைநீடல் - அலகு கூட்டல் மொழிப - மொழியப்படுபவை, வினையாலணையும் பெயர். இசை - மிடற்றிசை. மறைய - கலையிடத்தன, அஃறிணைப் பலவின்பாற் குறிப்பு வினைமுற்று. மொழிப - எழுவாய்; மறைய - பயனிலை. இந்நூற்பா நடையை எண்ணெண்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழு முயிர்க்கு என்ற திருக்குறள் நடையோடு ஒப்பிட்டுத் தெளிக. திறனுரை மொழியின்றி இயலில்லை; அதுபோல் மொழியும் இயலுமின்றி இசையில்லை. இயலுக்கும் இசைக்கும் தளமாவது மொழி எனினும் இயலுக்கு உரிய எழுத்தொலி தானோ இசைக்கலைக்கும் என்பது வினா. இவ்வினாவுக்கு விளக்கம் தருவது இந்நூற்பா. இசையில் வரும் சொல்லும் பொருளுடைய தன்றே; பொருண்மையளவில் இயலொலியன்களின் தன்மை உண்டு. “செய்யுளிடத்து எழுத்துக்கள் பெறும் மாத்திரை யளவுரைக்கும் இலக்கணம் இயற்றமிழுக்கும் இசைத்தமிழுக்கும் பொதுவாம்” என்பர் யாழ் நூல் எனப்படும் தமிழ் வாழ்நூல் கண்ட அடிகள் விபுலானந்தர். இயலொலியனை உட்கொண்டது இசை. பண்களுக்கும் திறத்துக்கும் பொருந்த ஆரோசை அமரோசை பண்ணுங் காலும் ஆளத்தி செய்யுங்காலும் முதலெழுத்து எனப்படும் ஒலிகள் பலவாறு நீண்டிசைக்கும், உயிரொலியே இசைவீச்சுக்கு இழுமை யூட்டுமாதலின், `அளபிறந்துயர்த்தல்' என அவ்வொலியை முதற்கண் மொழிந்தார். ஒற்று மாத்திரை நீளுவதில்லை; ஓசையே நீளுமாதலின், இசைநீடல் என்றார். உரையாசிரியர்களுள் இசைமறை தெளிந்த அடியார்க்கு நல்லார் இசையில் வரும் உயிர்களையும் மெய்களையும் குறித்துப் பின்வருமாறு உரைவிளக்கம் எழுதுகின்றார்: “குன்றாக் குறிலைந்துங் கோடா நெடிலைந்தும் நின்றார்ந்த மந்நகரந் தவ்வொடு - நன்றாக நீளத்தா லேழும் நிதானத்தால் நின்றியங்க ஆளத்தி யாமென் றறி” என்பது ஆளத்திக்கு இன்னும் படுவதோரிலக்கணம் உணர்த்து கின்றது. குன்றாக் குறிலைந்தும் கோடா நெடிலைந்தும் என்றது குற்றெழுத்தாலும் நெட்டெழுத்தாலும் ஆளத்தி செய்யப்படும் என்றவாறு. குற்றெழுத்தைந்தாவன அ இ உ எ ஒ; நெட்டெழுத்தைந்தாவன ஆ ஈ ஊ ஏ ஓ என இவை, நின்றார்ந்த வென்றது - மெய்யெழுத்தாகிய பதினெட்டெழுத்துள்ளும் மவ்வும் நவ்வும் தவ்வுமென மூன்றெழுத்துமல்லா மற்றை யெழுத்துக்கள் ஆளத்திக்கு வரப்பெறா என்றவாறு “எனவும் முதலிற் பாடுமிடத்து மகரத்தின் ஒற்றாலே நாதத்தை உச்சரிக்கும் மரபு உண்டு எனவும் கூறுவர்.” இதனால் நாம் உணரக்கிடப்பது என்ன? தமிழின் உயிரொலிகளே நிறங்களின் அளத்தியாய் இசைப்பண்ணிற்கு உரிய சுரங்களாக இருந்தன என்பதும் சரிகமபதநி என்ற பெயர்களின் முதலெழுத்துக்கள் பின்னர் சுரங்களாகக் கொள்ளப்பட்டன என்பதும் இசை வரலாற்று முறையில் தெளிவாம். ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்றும் இவ்வேழெழுத்தும் ஏழிசைச் குரலே என்ற சேந்தன் திவாரகமும் சான்றாதல் காண்க. இதற்கு அகாரசாதகம் என்பது வடமொழிப் பெயர். `இசையொடு சிவணிய நரம்பின் மறை' என்பதன் விளக்கம்: தமிழிசையில் யாழ்க்கருவியே முதன்மைபெறும். சிலப்பதிகாரம் பெருங்கதை சிந்தாமணி முதலிய காப்பியங்களில் காப்பிய தலைமாந்தர்களின் யாழிசையறிவு போற்றப்பட்டுள்ளது. எல்லா இசை நுணுக்கத்திற்கும் கொள்ளிடமாவது யாழே ஆதலின் `நரம்பின் மறை' என்றார் தொல்காப்பியர். பொருளதிகாரத்திற் கருப்பொருள் கூறுமிடத்தும் `யாழின் பகுதி' என்ற கருவியே இசை சார்பாக நிற்றல் காணலாம். நரம்பின் மறை என்பதே இசையைக் குறிக்கப் போது மாயிருக்க, ` இசையொடு சிவணிய' என்றதன் கருத்து யாது? ஈண்டு இசை என்பதுமிடற்றிசை என்னும் வாய்ப்பாட்டினைக் குறிக்கும். இவ்வாயிசைக்குத்தானே எழுத்தடிப்படையுண்டு. அளபு கடந்து ஒலித்தலும் மெய்யோசை நீளலும் உண்டு. குழல் யாழ் தண்ணுமை முழவு முதலியனவெல்லாம் குயிலுவக் கருவிகள் எனப்படும். இவை மிடற்றிசைக்குப் பின்வழி நிற்பன என்பதனைச் சிலப்பதிகாரம் தெளிவாக்கும். ஆதலின் `இசையொடு சிவணிய நரம்பின் மறை' என்பது மிடற்றிசை யொடு ஒத்திசைக்கும் யாழ்க்கலையைக் குறிக்கும். தொல்காப்பியம் இயற்றமிழ் இலக்கண நூலாயினும் ஏற்ற பெற்றி இசைத்தமிழ்க் குறிப்பும் கொண்டது என்பதனை, `வல்லோன் புணரா வாரம் போன்றே' என்ற மரபியல் நூற்பாவாற் காண்கிறோம். பண்டைக் காலத்துத் தமிழிசை வல்லுநர் தாமே பாட்டும் பாடி உடன் யாழும் மீட்டினர். `கோவலன் கையாழ் நீட்ட வவனும் காவிரியை நோக்கினவும் கடற்கானல் வரிப்பாணியும் மாதவிதன் மனமகிழ வாசித்தல் தொடங்குமன்' என்ற சிலப்பதிகாரவடிகளும், `இருங்கடற் பவளச் செவ்வாய் திறந்திவன் பாடினாளோ நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ' என்ற சீவக சிந்தாமணியடிகளும், “மன்பெரும் பாண னாரும் மாமறை பாட வல்லார் முன்பிருற் தியாழிற் கூடல் முதல்வரைப் பாடுகின்றார்.” என்ற திருத்தொண்டர் புராணவடிகளும் மிடறும் யாழும் இணைந்த தமிழிசை மரபை எண்பிக்கும். `இசையொடு சிவணிய நரம்பின் மறைய' என்ற தொல்காப்பியத்துக்கு இக்காப்பியங்கள் உரையுதவி செய்கின்றன. `இசையொடு சிவணிய நரம்பின் மறைய' என்பது பாயிரத்தில் வரும். `செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு' என்பதற்கு ஒரு சான்று. எனவே `முந்துநூல்' என்பது இயல்நூலோடு ஏனைக்கலைகளையும் குறிக்கும். தமிழில் எழுத்து வடிவுக்கும் எண் வடிவுக்கும் இசை வடிவுக்கும் நெருங்கிய தொடர்பு தொன்று தொட்டு உண்டு. ககரங் கொட்டே எகரம் அசையே ஏகரம் தூக்கே அளவே ஆய்தம் என்பது அடியார்க்கு நல்லார் மேற்கோள். “இவைமாத்திரைப் பெயர்கள் “கொட்டு அரை மாத்திரை, அதற்கு வடிவு க: அசை ஒரு மாத்திரை, அதற்கு வடிவு எ: தூக்கு இரண்டு மாத்திரை, அதற்கு வடிவுஉ. அளவு மூன்று மாத்திரை அதற்கு வடிவு ஃ எனக்கொள்க” என்பது நல்லாரின் விளக்கம். `எட்டினொடு இரண்டும் அறியேனையே' என்ற திருவாசமும், `அ உ அறியா அறிவில் இடைமகனே' என்ற யாப்பு மேற்கோளும். எட்டேகால் லட்சணமே' என்ற தனிப்பாடலும் எழுத்தொடு எண்ணுக்கு வடிவுத் தொடர்பு சுட்டல் காண்க. தமிழுக்குத் தனிமதிப்பு நிறுவும் எழுத்து வடிவு போலத் தனிமதிப்புச் சுட்டும் எண் வடிவையும் பதிப்புத் துறையிலும் பிறவிடங்களிலும் நல்வழக்கிற் பேணிக் காத்தல் நற்றமிழர் கடன். `உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்' என்பது சான்றோர் சுட்டு, ஆதலின் எத்துறையிலும் நீண்ட வரலாறும் தனித்தன்மையும் காட்டும் தமிழுடைமைகளைக் காத்தலும் புதிய காலத்திற்கு ஏற்ப வழக்கிற் பயன் கொள்ளலும் தமிழ்வழித் தோன்றல்களின் பொறுப்பு. நூன்பமரபு - இயல் முடிவுரை சிறப்புப் பாயிரம் (அ) `இப்பாயிரத்தினை “வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே” என்ற செய்யுளியலின்படி, நூல்வாழ்த்தாகவும் நூலாசிரியன் வாழ்த்தாகவும் கொள்ள இடனுண்டு. `வடவேங்கடம் தென்குமரி' என்ற பா நிலைமண்டில ஆசிரியப்பா எனக்கருதலாம். மண்டிலயாப்பு நேரடியாக வரும் எனவும் ஆசிரியம் என்னும் செந்தூக்காகும் எனவும் பேராசிரியர் உரைவரைதலின், இவ்வாறு கருத இடனுண்டு; எனினும் சொற்சீரடியால் இப்பாயிரம் தொடங்குவது முரணாகவுள்ளது. நிலைமண்டிலம் எல்லா வடியும் நாற்சீர் கொள்வதன்றோ? வேறுவகை ஆசிரியப்பாவுங்கூட முதலடி நாற்சீர் பெறுவதன்றோ? ஆதலின் பாயிரத்தை அடிவரை யறையில்லா நூற்பாவாகக் கொள்ளுதலும் தொல்காப்பியம் நூற்பாவண்ணத்தாதலான், பாயிரமும் அவ்வண்ணமே என்று கொள்ளுதலும் அரிலற்றது. (ஆ) நான்மறை எவை? தொல்காப்பியத்துக்கு முந்தியநூல்களும் உடன்நூல்களும் உடன்பிந்திய நூல்களும் நமக்குக் கிடைக்காத நிலையில், ஒரு தலையாக நான்மறை பற்றித் துணிதற்கில்லை என யானும் உடன்படுகின்றேன்; எனினும் தொல்காப்பியம் முழுதும் கிடைத்தலானும், அம்மரபின் வந்த அவையப் பனுவல்கள் அளவாகக் கிடைத்தலானும், தக்கார் சிலர் நேர்பட ஆய்வு செய்திருத்தலானும் பெரும்பாங்கு சில கருத்துக்களைக் கணிக்கலாம். வேதவியாசர் வகுத்த இருக்கு எசுர் சாமம் அதர்வணம் இந்நான்மறையாகா என்பது நச்சினார்க்கினியர் காலமுதல் வரும் கருத்தாகும். அவர் கூறும் தைத்திரியம் முதலியன அவர் காலத்தும் இல்லாத நூல்களாதலின் யாதும் சொல்லுதற்கில்லை. மேலும் பெயரளவானே அவை தமிழ் மறையல்ல என்பது தெளிவு. மறை என்ற நூற்சொல் தொல்காப்பியத்துச் சிலவிடங்களில் வருகின்றது. இசைமறையை `நரம்பின்மறை' என்பர். மறைஈண்டு கலை என்ற பொருளைக் குறிக்கும். அந்தணர் மறைத்து, மறையோர் ஆறு. மறைமொழி மந்திரம் என்றிவை மறைப்பெயர் பெற்றன என்று எண்ணலாம். வேதம் நிறைந்த தமிழ்நாடு என்பது பாரதியம் `அறங்கரை நாவின் நான்மறை' என்பதனால் அறம் பொருள் இன்பம் வீடு பற்றிய நான்மறை என்று கருதலாம். `அற முதலாகிய முழுமுதற் பொருட்கும்' என்பது தொல்காப்பியம். இருக்கு எசுர் சாமம் அதர்வணம் என்ற ஆரிய மறையைச் சொல்லக்கூடாது என்ற கருத்தில் எழுதப்படுவது இவ்வுரையன்று; அங்ஙனம் ஒரு தலையாக மொழிதற்கு வலுச்சான்றில்லை. தொல்காப்பியத் தொன்மையை நோக்குங்கால் பிந்திய வியாசர் தொகுப்பு சுட்டத்தக்கதன்று. அதர்வணம் வசிய மந்திரங்கள் உடைமையின் நான்காக எண்ணத்தக்க மறைக்குரிய தகுதியுடையதுமன்று. `நாஅல்வேத நெறி திரியினும்' (புறம்.2) என்ற பெருமதிப்புக்கு உரியதுமன்று. திரியீ என்ற சொல்லில் அதர்வணத்துக்கு இடனில்லை. தொல்காப்பியத்தை முதற்கண் தமிழ்க்கண்ணோடு காண்பது தான் செந்நெறி. அங்ஙனம் பார்க்கும் நிலையில் இயல்பாக வேற்றுச் சாயல் வரின் மெய்ப்பொருள் காண்பது சார்பு நெறி. எனவே நான்மறை என்பதற்கு அறம்பொருள் இன்பம் வீடு என்ற நாற்பொருளைக் கூறும் ஒரு மறை என்று இப்போது உரைசெய்திருக்கின்றேன். `தொய்யாவுலகத்து நுகர்ச்சியும்' (புறம்.214) `அருளுடையார்க்கு அவ்வுகப்பேறும்' (குறள்.247) தமிழ்க்கொள்கையாதல் தெளிக. புறநானூறு முதலான அவையப் பனுவல்களில் வரும் நால்வேதம், நான்மறை என்ற சொற்களுக்கு, மறைகூறும் பொருள் நான்கு என்றே கொள்ளல் தகும். மறை நூல்கள் நான்கு என்று கொள்வது சாலாது. ஐம்பெரும்குழு எண்பேராயம் என வரும் தொடர்களை ஒப்புநோக்குக. குழு ஐந்து ஆயம் எட்டெனப் பொருள்படுமா? (இ) ஐந்திரம் என்பதன் பொருள் என்ன? வடமொழியில் இந்திரனற் செய்யப்பட்ட ஐந்திரம் என்ற வியாகரணநூல் என்பது பலர் கருத்து. அத்தகு ஒருநூல் இருந்திருப்பினும் காலத்தால் தொல்காப்பியத்துக்கு முந்தியதோ என்பது பேரையம். பன்னூறாண்டுக்கு முன்னே மறைந்தது என்பது ஒரு வரலாறு. ஐந்திர வியாகரணம் சொல்லிலக்கணம் கூறும். மொழியிலக்கணம் என்பது பலர் சொல்லும் முடிவு. எழுத்துக்கும் சொல்லுக்கும் அதன்மேல் வாழ்க்கைப் பொரு ளுக்கும் இலக்கணம் கண்ட தொல்காப்பியர் ஒருதுறைப்பட்ட ஐந்திரம் கற்றர் என்பது என்ன பெருமை யாகும்? நரம்பின் மறைய, அந்தணர் மறைத்து, யாப்பறி புலவர் என்று சுட்டியதுபோல, ஐந்திரக் குறிப்பேனும் தொல்காப்பியத்துள் உண்டா? பல்லைக்கழகங்கண்ட அண்ணாமலை வள்ளல் எனத் தன் பெயர் தோற்றி, ஒளிச்சிறதல் நீளலை கண்ட இராமன் எனத் தன் பெயர் தோற்றி, அமெரிக்காவைக் கண்ட கொலம்பசு எனத் தன் பெயர் தோற்றி, சார்பியம் தெரித்த ஐன்சிடின் எனத் தன் பெயர் தோற்றி என்று சொல்லுமாறுபோல, `ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி' என்ற நடை ஓடுகின்றது. எனவே இவ்வீறு பிறரொருவர்க்கில்லாத சிறப்பாக இருக்கவேண்டும். தொல்காப்பியர்க்கு ஐந்திரக்கல்வி அன்ன சிறப்புக்கு உரியதோ? அன்று. (ஈ) அகப்பொருளான ஐந்திணையிலக்கணம் திறப்பட வகுத்தவர் தொல்காப்பியர். அவையச் சான்றோர்க்கும் திருவள்ளுவர்க்கும் இளங்கோவுக்கு இன்ன பெரும்புலவர்க்கும் திணை வழிகாட்டியவர் தொல்காப்பியர். பொருளதிகாரமே தமிழுக்கும் தொல்காப்பியத்திற்கும் சிறப்பு. ஆதலின், ஐந்திணை அல்லது ஐந்திணை யொழுக்கம் கூறவல்ல திறம் நிறைந்தவர் என்பதே இப்போது எனக்குத் தோன்றும் உரையாகும். ஈண்டு ஒருவினா. இவ்வுரைக்கு ஐந்திறம் என வல்லினமாக வாவது சொல் இருக்கவேண்டுமல்லவா? வினா நேரிய வினாவே. இத்தொடருக்குப் பாடபேதமும் இல்லை. எனினும் றகரமும் ரகரமும் பொருள் வேறின்றி மாறி நிற்கும் சில தமிழ்ச் சொற்கள் உள. முரி, முறி, புரம். புறம், பிரிவு, பிறிவு, பெரும்பிறிது, புரத்தல், புறந்தரல், நிரப்பு, நிறை, சிதர், சிதறு; கருப்பு. கறுப்பு என வருதலை ஒப்புநோக்கு. உருத்திரன்போலத் திரண் என்ற சொல்லுக்கே ஆற்றற்பொருள் கொள்ளலாம். திரணை, திரட்சி என்பனவும் காண்க. `அயிந்திரம் நிறைந்தவன் ஆணை யேவலால்' என்ற கம்பரின் தொடரில் `ஐந்திரம் நிறைந்த' என்ற பாயிரப்பகுதி பட்டாங்குப் பதிந்துளது. அயிந்திரம் நிறைந்தவன் அனுமன் ஆவன். இவன் ஐந்தவிந்த பேராற்றலன்; மாணிப்படிவம் கொண்டவன். `மாணியாம் படிவமன்று' என இராமனாலும் `நெறிநின்று பொறிகள் ஐந்தும் வென்றவன்' `ஆற்றல் ஈதே ஐம்புலத்தின் செறியும் ஈதே' எனச் சீதையாலும் புலனடக்கப் புகழ்பெற்றவன்.ஆதலால் `அயிந்திரம் நிறைந்தவன்' என்ற கம்பர் பாடலுக்கு ஐம்புலவடக்கத்தால் நிறைந்த ஆற்றலுடைய அனுமன் என்று பொருள் கொள்வது மிகையாமோ? (உ ) தொல்காப்பியம் குறித்த பலர் தம் பல்வேறு கொள்கைகளை அளவை முறையிற் சான்றுபட ஆராய்ந்து என் முடிவினைப் புலப்படுத்தற்கு இவ்வுரை இடனன்று என்பதனை உணர்கின்றேன். இவற்றுட் பலவற்றைப் பற்றிய என் கருத்துக் களைத் தமிழ்க்காதல், சிந்தனைக்களங்கள், தொல்காப்பியப் புதுமை, தொல்காப்பியத்திறன், ஒப்பியல்நோக்கு ஆகிய என் உரை நடைநூல்களில் மேற்கோள் பொதுளக் காணலாம்; ஆதலின் என் தொல்காப்பியக் கொள்கைகளை இவ்வுரையைப் பயில்வார்க்கு வேண்டியவளவு கருத்தாற்றுப்படுத்து முறையில் நடுகற்கள் போலச் சில சொல்லி வைப்பேன். தொல்காப்பியன் என்பது நூலாசிரியரின் இயற்பெயர். போக்கறுபனுவல் என்பது நூற்பெயராகலாம் எனினும் வழிவழி வழங்கப்பட்ட தொல்காப்பியம் என்ற நூற்பெயர் எனக்கு உடன்பாடே. தமிழின் முது தொல்வரலாறு நோக்கின், தமிழுக்கு முதன்முதல் தோன்றிய நூலன்று தொல்காப்பியம். இன்று நல்லூழால் நமக்குக் கிடைத்துள்ள பனுவற் செல்வத்துள் காலத்தால் தொன்மைவாய்ந்த முதல்நூல் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியத்துக்கு முந்திய நூல்களும் உடன் தோன்றிய நூல்களும் உடனடுத்துத் தோன்றிய நூல்களும் ஐம்பூதச் சீற்றத்தாலும், இனநலப் பொதுநோக்கு இன்மை யாலும், அயன்மொழி நாகரிகவேட்கை அறிவை மயக்கியமை யாலும் அழிந்தொழிந்தன. ஒரு பெருநூலகம் நிறைக்கும் பல்கலைச் சுவடிகள் படிவாய்ப்பின்றி ஐயகோ எங்கோ எப்படியோ மடிந்தன. செல்வாக்குடைய பெருமக்கள் வல்லடிமையை நல்வாழ்வென மகிழ்ந்து கூலிமனம் கொண்டு தாழ்ந்து இழிந்தமையானும், கல்வி கலை சமயம் சடங்கெல்லாம் வேற்றுமொழிகளாய் உருவெடுத்தமையானும் சாதிமேல் கீழ் கீழின்கீழ் என்ற பிறப்புப்வழிப் பூசல்களாணும் எத்துணையோ வடிவில், கேடுகள் ஆழங்கொண்டன. தமிழுக்குப் பழைய பெருவாய்ப்புக்களையெல்லாம் தூர்த்துப் புதிய வாய்ப்புக்களை எவ்வகையிலும் நெருங்க விடாமையாலும், தமிழ் வாழ்க என்ற செயலொட்டா ஆரவாரப் பகட்டு முழக்கத்தாலும், உண்மைத் தமிழ்ச் சான்றோரைப் பின்பற்றா மடமையானும் எவ்வளவோ பன்þனூறாயிரமாண்டுத் தமிழ்ச் செல்வங்கள் எஞ்சியனவும் அழிந்து வருகின்றன. எத்துணை மாபெரிய தமிழினத்துக்கு இதுவா வரலாறு? எதிர்கால வரலாறு என்னோ? நம்பிக்கை கொள்வோம். இந்நிலையில் தொல்காப்பியம் ஒன்றே ஞாலப் பழைய தமிழினத்தின் தொல்லுயிரும் புத்துயிருமாக மன்னி விளங்குகின்றது இந்த ஒன்றையாவது சிக்கெனப்பற்றி வளர்ந்து உய்தி பெறுவோமாக. (ஊ) தொல்காப்பியத்தின் காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தியது என்பார்தம் காலக்கொள்கை எனக்கு உடன்பாடு. இன்று நம் பேறாகவுள்ள அவையநூல்கள் திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவை தொல்காப்பியத்தை நோக்கக் காலப்பிந்தியன என்றாலும் இந்திய மொழிகளின் வரலாற்றோடும் உலக மொழிகளின் வரலாற்றோடும் ஒப்பிடுங்கால் நம் நூற்செல்வங்கள் தொன்மை சான்றனவே. தொல்காப்பியக் காலக்கல்வி முறைகள் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுவரை உயிரோட்டம் பெற்றிருந்தனவாதலின், தொல்காப்பியவுரை காண்பதற்கு இத்தொன்னூல்கள் பெருவிழுக்காடு நற்றுணையாவனவே. முற்கால மரபுணர்ச்சியும் மரபுப்பற்றும் சில நூற்றாண்டுவரை தொடர்ந்து வந்தமையின் இடைக்காலத்தும் தொல்காப்பியக் கல்விமரபு தொல்லாணை நல்லாசிரியர்கள்பால் தழைத்திந்தது. அதனாலன்றோ கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டிற்குப்பின் தொல்காப்பியம் இலக்கணவுலகிலும் உரையுலகிலும் தணியாப் புத்துயிர் பெற்றது. இலக்கண விளக்கம் இலக்கணக்கொத்து வரையில் தொல்காப்பிய வூற்றுக்கண்களைக் காண்கின்றோம். தொல்காப்பியம் சென்ற நூற்றாண்டிலிருந்து மீண்டும் தமிழகத்தின் தாய் நூலாகவும் உலகப்பண்மொழியரங்கில் ஒப்புயர் வற்ற பொது மொழியியல் நூலாகவும் அறிவொளி வீசுகின்றது. (எ) தொல்காப்பியர் காலத்து வடமொழிவரவும் உண்டு; அயல் நாகரிக வரவும் உண்டு. இவை தொடர்வருகையாகும். ஒப்புமை சுட்டும் பாங்கில் இவை மிகச் சிறுவரவின. அன்று ஆசிரியச் சூழ்நிலையும் ஆரியத் தாக்கமும் அவ்வளவாக இல்லை. ஆதலின் ஆரியக் கருத்துத் தோன்ற நூற்பாக்கட்கு உரையெழுதல் பொருத்தமன்று. தமிழ் நெஞ்சங்கொண்டு தமிழ் வழியாகவே தொல்காப்பியத்துக்கு உரையும் விளக்கமும் காணல் எழுத்து நெறியாகும். தொல்காப்பியத்து இடைச்செருகலான சில நூற்பாக்கள் உள என்ற கருத்து எனக்கு உடன்பாடன்று. சிறியவளவு பாடபேதங்கள் உண்டு. தொல்காப்பியம் யாத்த தொல்காப்பியர் இருவர் ஆவர் என்ற மருட்கொள்கை. ஆய்வுக்களத்துக்கே வரத்தக்கதன்று. இது இல் பொருள் என்க. தமிழுக்கும் தமிழினத்துக்கும் வளமையான உயர்ந்த புதிய எதிர்கால வாழ்வு தொல்காப்பியத்தைப் போற்றும் அரசாலும் தொல்காப்பியப் பற்றுடைய மக்களாலும் தொல்காப்பியவறி வுடைய இளைஞர்களாலும் தொல்காப்பிய உணர்வுடைய எழுத்தாளர்களாலும் உண்டாகும் என்பது என் நம்பிக்கை. இதுவே இவ்வுரை எழுதுவதன் நோக்கம். நூற்பா 3 குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன என்ற நூற்பாவிற்கு இருவேறு உரையுண்டு. ஒருசாரார் உரை `குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன' என்பதாம். ஆய்தம் முப்பாற்புள்ளி என மறுபெயர் என்பதும் அஃது அடுப்புக்கூட்டுப்போல மூன்று புள்ளி வடிவு பெறும் என்பதும் இவ்வுரையின் முக்கிய கருத்து. `ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும்' என்பது ஒரு தொடராக அமையும். இவ்வுரைக்குக் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் என்ற ஈரிடங்களில் உம்மைத் தொகையாகக் கருதவேண்டும். இளம்பூரணர், நச்சினார்க்கினியர், வெள்ளைவாரணர் இத்தகுவுரையினர். மறுசாரார் உரை குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற மூன்றுவகைப் புள்ளிகளும் `எழுத்தோரன்ன' என்பதாம். ஈண்டுமுப்பாற் புள்ளி என்பது ஆய்தத்தை மட்டும் குறியாது மூன்றையும் குறிக்கும். `என்ற’ என்பது மூன்றினையும் சேர்க்கும். ஆய்தம் முப்பாற்புள்ளி யன்று; குற்றியலிகரம் குற்றியலுகரமும் போல அதுவும் ஒன்று பேராசிரியர். சிவஞான முனிவர் சுப்பிரமணிய சாத்திரியார். வேங்கடராசலு, மீனாட்சி சுந்தரனார், துரையரங்கனார் இத்தகுவுரையினர். கருத வேண்டிய வினா என்ன? முப்பாற் புள்ளி ஆய்தத்தைக் குறிக்குமா? மூன்றையும் குறிக்குமா? முதலுரை சில இடர்ப்பாடுடையது. குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் மூன்றும் என்ற நடையிருந்தாற்போதும். ஆய்தம் என்ற ஒன்றுக்குமட்டும் ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் என்று விரித்துச்சொல்வது மிகையாகும். `என்ற' என்பது ஆய்தம் ஒன்றுக்கே சேருவதாயின் இகரமும் உகரமும் என உம்மை நூற்பாவில் `விரிந்தாற்றான் பொருள் தெளிவாகும். `முதல் கருவுரிப்பொருள் என்ற மூன்றே' என்ற அகத்திணையியல் நூற்பவிலும், `கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்' என்ற புறத்திணையியல் நூற்பா விலும் வரும் `என்ற' என்னும் பெயரெச்சம் மூன்றினையும் அகப்படுத்தலை ஒப்புநோக்குக. ஆய்தம் புள்ளிபெறும் என்ற கருத்தில் வேறுபாடில்லை. அதனைச் சுட்ட வேண்டின் பிற இடங்களிற் சொல்லியதுபோல `ஆய்தப்புள்ளி; என்றாற் போதுமே. முதற்சாரார் கருத்துப்படி ஆய்தம் மூன்று புள்ளியுடையதெனக் கொண்டாலும் `முப்புள்ளி' என்று வருவதுதான் பொருத்தமேயன்றி முப்பாற் புள்ளி என்று பாலிடை வருதல் பொருத்தமன்று. பால் என்பது பகுதியைக் குறிக்கும். `அப்பால் ஐந்தும் ஓரள பிசைக்கும்' எனவும். `அப்பால் ஏழும் ஈரளபிசைக்கும்' எனவும் அடுத்து வரும் நூற்பாவுக்களில் பால் - பகுதி எனப் பொருள்படுதலை உணரலாம். எனவே `முப்பாற்புள்ளி என்பது மூன்றெழுத்துக்கும் உரிய புள்ளிகளையே குறிக்கும். இம்மூன்றும் வடிவாலும் சார்பெழுத்தாம் என்பதற்கு இதுவுமோர் சான்று. ஆய்தமே முப்பாற்புள்ளி பெறுமென்றால் மூன்று புள்ளிக்குள் தம்முன் வேறுபாடு இருக்க வேண்டுமன்றோ? அடுப்புக் கூட்டுப்போல் என்றலின் வேறுபாடின்மை வெளிப்படை. முப்புள்ளி என்னாது முப்பாற்புள்ளி என்று கூறியிருத்தலானும், `என்ற' என்பது உம்மை தொக்க ஒருநிலையில் மூன்றையுமே குறிக்குமாதலானும் இரண்டாவது உரையே பொருந்தும். நூற்பா - 8 உயிர்மெய் என்ற குறியீடுகளை உவமை யாகுபெயராகக் கொண்டு மெய்ப்பொருள் கூறுவர் பலர். உயிர் தனித்தியங்கும் தன்மையது. தனித்தியங்கமாட்டா மெய்யை இயக்குவது எனவும் மெய்க்குத் தனித்தியங்கும் ஆற்றலின்று. உயிர் சேர்ந்துதான் இயக்கம் பெறும் எனவும் பண்டைத் தமிழரின் மெய்மையியலை இலக்கணமும் காட்டுவது எனவும் விளக்கஞ் செய்ப. தமிழர் கண்ட மெய்மையியலின்படி, உயிர் சார்ந்ததன் தன்மைத்து, இறையையோ கட்டினையோ பற்றி நிற்குமியல் பினது. இறைக்கு உடம்பாவது, மெய்யுங்கூட உயிர்க்கு விளக்காவது என்ற உண்மைகளை அறிகின்றோம். உயிர் ஏதாவது ஒன்றினைப் பற்றாது நில்லாது என்ற மெய்ய்ம்மையைப் பற்றுக பற்றாற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு என்ற துறவுக்குறள் புலப்படுத்தும். `அவையே தானே யாயிரு வினையின்' என்ற சிவஞான போத மறையாலும், `எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே' என்ற திருவாசக முறையாலும், `உடம்பார் அழியின் உயிரார் அழிவர்' என்ற திருமந்திரநிறை மொழியானும்; உயிரின் சார்பியல் விளங்கும். ஆதலின் இம்மெய்ப் பொருளுணர்வை இலக்கணக் குறியீடுகளான உயிர்மேலும் மெய்ம்மேலும் ஏற்றிக் காண்பது கருத்தேற்றம் என்ற குற்றத்தின்பாற்படும் ஏனை இலக்கணக் குறியீடுகட்கும் இவ்வாறு மெய்மையியல் காட்டுவது ஒவ்வாது. இதற்குமேல் இங்கு இக்கருத்தாராய்ச்சி உரைப்புறமாய்விடும். உயிராயினும் மெய்யாயினும் முப்பதும் முதலெழுத்து எனப்படுபவை; பிறப்பு வேற்றுமையும் வேற்றுப் பொருண்மையும் தனித்த ஒலியன் நிலையும் கொண்டவை; தம் பொருண்மைக்கு மெய்கள் உயிர்களைச் சார்ந்து நிற்கும் சார்பெழுத்துக்கள் அல்ல; உயிரொலியன்களை ஒத்தவை மெய்யொலியன்கள். முதல் நூற்பாவியல் `அகரமுதல் னகர விறுவாய்' என்று முடிக்கும் தொடர்நிலையால் சமத்தன்மை தெளிவாம். ஆதலின் வாயுள் உறுப்புத் தடையின்றி வரும் ஒலியன் உயிர் எனவும் உறுப்புத் தீண்டிப் பிறக்கும் ஒலியன் மெய் எனவும் ஒலியியல் முறையிற் காரணங் கூறுவதே மொழிநெறி. நூற்பா -9 பிறர்கருத்து: இந்நூற்பா உயிர்மெய்க்கு அளவு கூறுவது; மெய்யோடு கூடினாலும் கூடிய உயிர் தன் மாத்திரையில் திரியாது; க என்ற உயிர்மெய்க்குறில் ஒன்றரை மாத்திரை யாகாது; கா என்ற உயிர்மெய்நெடில் இரண்டரை மாத்திரை யாகாது எனவும்; அரைநாழி யுப்புநீர்போல உயிர்மெய்யில் மெய் தன் மாத்திரையை இழக்கும் எனவும் கருத்துக் கூறுவர். உயிரியல் - உயிர்க்குரிய மாத்திரை எனப்பொருள் செய்வர். முன்னும் பின்னும் வரும் அதிகாரம் மாத்திரைப்பட்டதாதலின் இவ்வாறு பொருள்கொள்ளத் தூண்டியது. உயிர்மெய்யுள் மெய்க்கு மாத்திரை இல்லை என்பதுவே ஆசிரியர் கருத்தாயின், மெய்யியல் திரியும் என்று நூற்பித்திருப்பர். `உயிரியல் திரியா' என்ற நடையால் திரியுமோ அன்றோ என்ற ஐயப்பாடு உயிரை ஒட்டியதாகும். மெய்த்திரிபு பற்றிய குறிப்புக்கே இடினில்லை. ஐயப்பாடு மெய் பற்றிய தாயின், உயிரோடியையின் மெய்யளவு இழக்கும் என நூற்பா பிறந்திருக்கும். ஈண்டு அதிகாரமும்; முற்றும் அளவின் மேலதன்று. உயிரென மொழிப, மெய்யென மொழிப என்பதனால் காரணப்பெயர்த் தொடர்ச்சி பெறப்படும். படவே, தடைப்படும் மெய்யொலியோடு சேர்ந்தாலும் இவ்வியைபினால் உயிர் தன் பிறப்பு வழியினின்று திரிவதில்லை; அதாவது தடைப்படா நிலையினின்றும் மாறுவதில்லை என்பதே தெளிவு. நூற்பா 10 ஒருவினா மெய்க்கு மாத்திரை அரை என்பதில் கருத்துவேறுபாடு இல்லை இது தனிமெய்க்கா? உயிர்மெய்க்கும் உண்டா? உயிர்மெய் இணைப்பில் மெய் தன் அரை மாத்திரையை இழந்துவிடுகின்றது என்பதும் `க' ஒரு மாத்திரை யாம் `கா' இருமாத்திரையாம் என்பதும் எல்லாhர்தங் கருத்து. இக்கொள்கை பொருந்துமா? மெய்க்கு மாத்திரை யுண்டென வெளிப்படையாக நூற்பித்திருக்கும் தொல்காப்பியம் உயிர்மெய்யாகுங்கால் மெய்க்கு மாத்திரையிழப்புச் சுட்டக் காணோமே. ஆதலின் ஒன்றரை இரண்டரை உயிர்மெய்கட்கு உண்டெனச் சொன்னால் வரும் பிழையென்ன? மொழிப்படுத் திசைப்பினும் தெரிந்துவே றிசைப்பினும் எழுத்தியல் திரியா வென்மனார் புலவர்” என்று மொழிமரபு வலியுறுத்துவதாலும், “மாத்திரை யளவும் எடுத்தியல் வகையும் மேற்கிளர்ந் தன் வென்மனார் புலவர்” என்று செய்யுளியல் எடுத்து மொழிவதாலும் உயர்மெய்க் கண்ணும் மாத்திரை மெய்க்குக் கொள்ளலாம் என்பது கருத்து “உயிரில் லெழுத்தும் எண்ணப் படாஅ உயிர்த்திற மியக்கம் இன்மை யான” என்ற செய்யுளியல் நூற்பாவில் உயிர்மெய் விலக்கப்படவில்லை என்பதனையும் நினைக. உயிர்மெய்க்கு மாத்திரையில்லை யெனின் ஒலியனாம் பெற்றியிராது. `நீர் தனித்து அளந்துழியும் நாழியாய் அரைநாழி உப்பிற் கலந்துழியும் கூடி ஒன்றரை நாழியாய் மிகாதவாறு போல்வதோர் பெற்றி யென்று கொள்வதல்லது காரணம் கூறலாகாமை யுணர்க; எனவும் ஆசிரியன் ஆணை யென்பாரும் உளர் எனவும் நச்சினார்க் கினியர் சொல்லியமைவர் என் கருத்து மேலும் சிந்தனைக் குரியது. நூற்பா 12 பிறர்கருத்து: “உட்பெறு புள்ளி யுருவா கும்மே” என்ற நூற்பா பகரத்தோடு மகரத்திற்கு வரிவடிவு வேற்றுமை கூறுவது என இளம்பூரணரும் நச்சினாக்கினியரும் உரைப்பர். இவ்வுரை முற்றுப் பொருத்தமின்று; எனினும் இருபெரும் உரை யாளர்களும் இவ்வாறு உரைத்திருப்பதற்கு அவர் தங்காலத்து வரிவடிவச் சூழ்நிலை ஒரு காரணமாக இருக்கலாம். இயல்பு மகரத்துக்கும் மகரக் குறுக்கத்துக்கும் வரிவடிவு வேற்றுமை கூறுவது எனவும் மகரக்குறுக்கம் புறத்துப்பெறும் ஒரு புள்ளியோடு உள்ளேயும் ஒரு புள்ளிபெறும் எனவும் இதுகாறும் பலர் உரை செய்து வருகின்றனர். குறுகா மகரத்தொடு குறுகிய மகரத்தின் வடிவு வேற்றுமை மொழியும் என்ற கருத்து உடன்படத்தக்கதே. ஆனால் இரு புள்ளி பெறும் என்ற கருத்து பொருந்திய உரையன்று. வேறுபாடு சுட்டுவது இந்நூற்பாவின் நோக்கம். அதற்கு இன்னொரு புள்ளி பெறும் என்ன்று ஒரு விதி சொன்னாற் போதுமே. அந்த இரண்டாவது புள்ளி உள்ளே இருக்கும் என்று மேலும் ஒரு விதி வேண்டுமா? இரண்டு புள்ளி வரும் என்பது தொல்காப்பிய நோக்காயின் உட்பெறு புள்ளியும் உருவாகும் என்ற உம்மை வேண்டும். உம்மையின்மையின் நாம் கருதவேண்டியது என்ன? மகரக் குறுக்கம் மெய் என்பதற்குரிய புள்ளி பெறும் எனவும் குறுக்கம் என்பதனைத் தெரிக்க அவ்வொருபுள்ளி தானும் உள்ளே இருக்கும் எனவும் கொள்ளவேண்டும். (காண்க. போன்ம) இது ஒரு கணித முறை. ஆதலின் இரு புள்ளிபெறும் என்ற உரைகள் சாலா. நூற்பா: 15 எழுத்துவடிவங்களும் கருத்துக்களும் தமிழ் எழுத்து வடிவு குறித்துத் தொல்காப்பியம் சிலவற்றைப் பாங்குபெற விதிக்கும். இப்பகுதிக்கண் வரிவடிவுபற்றிக் காலத்துக்கேற்ற சிந்தனைகளைச் சிந்திக்க வைப்பது இவ் வுரையின் கடமையாகும். யாண்டும் தமிழ்க்காப்பும் தமிழ் வளர்ச்சியுமே இவ்வுரையின் குறிக்கோள். தமிழொலியன் பற்றியும் வடிவன்பற்றியும் அண்மைக் காலத்துப் பலதுறையினர் பல்வேறு கருத்துக்களை எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரால் வேகமாக வெளிப்படுத்தி வருகின்றனர். இது குறித்துக் கட்டுரைகளும் நூல்களும் பல வந்துள. உலகத்து அறிவியலால் இன்று எல்லாம் விரைவும் மாற்றமும் பெறுவதுபோல மொழிகளும் பெற்றாக வேண்டும். எண்ணங்களின் வேகவோட்டத்துக்கு ஏற்ப மொழிகள் தகுதிபெற வேண்டும். ஆதலின் மொழிச் சீர்திருத்தம் என்பது காலத்தாய் பெற்ற சிந்தனைக் குழவியாகும். பலர் கருத்துக்கள் உயிரொலியன்களுள் ஐகாரம் ஒளகாரம்; இரண்டும் வேண்டியதில்லை; மெய்யொலியன்களுள் ஙகரம் ஞகரம் நகரம் றகரம் ழகரம் வேண்டியதில்லை; உயிர்மெய்யிலும் ஐகார ஒளகாரங்கள் வேண்டியதில்லை; உயிர்மெய் என்ற இனமே வேண்டியதில்லை என்பாரும் உளர். வடமொழியொலிகளுள் எட்டாமெய்யும் முப்பதா மெய்யும் முப்பத்தோராமெய்யும் முப்பத்திரண்டாமெய்யும் முப்பத்துமூன்றாமெய்யும் முப்பத்தைந்தாமெய்யும் ஆங்கில மொழியுள் ஆறாம் ஒலியும் பல ஒலிப்புடையொலிகளும் வேண்டும் என்பாரும் உளர். வரிவடிவம் பற்றி வெளியிடும் கருத்துரைகள் பலபல. எழுத்து முப்பது என்றாலும் ஆய்தத்தையும் உயிர் மெய்யெழுத்துக்களையும் எண்ணுங்கால் ஒலிகள் 247 ஆம். இவற்றில் வரும் 131 குறியீடுகள் வேண்டியதில்லை. 28 அல்லது 30 குறியீடுகள் போதும். ஐ ஒள என்பனவற்றை அய், அவ் என எழுதலாம். ஐந்து குற்றெழுத்துக்களும் கால் வாங்கினால் நெட்டெழுத்தாகிவிடும். தனிநெட்டெழுத்து வடிவங்கள் வேண்டியதில்லை. புதிய உயிர்க்குறிகளை ஆக்கிக் கொண்டால் அ என்ற ஒரு வடிவே உயிரினத்துக்கு அமையும். ஆய்தம் வேண்டியதில்லை. கெ கே கை என்றினைய உயிர்மெய்களில் உயிர்க்குறிகள் முன்னே வருகின்றன; கொ கோ கௌ என்றினைய உயிர்மெய்களில் உயிர்க்குறிகள் முன்னும் பின்னும் வருகின்றன. இவை பொருத்தமில எனவும் உயிரொளி பின் நிகழ்வதால் உயிர்க்குறில்கள் எல்லாம் மெய்வடிவுக்குப் பின்பு வருவதுதான் முறை எனவும் உயிர்மெய் வடிவுகள் தேவையில்லை; ஆங்கிலம் போல் மெய்வடிவனையும் அடுத்தடுத்து எழுதினாற்போதும் எனவும் கூறுவாரும் உளர். இவற்றினும் பலபடி கடந்து இந்தியவொருமைப் பாட்டிற்கு எழுத்தெல்லாம் ஒருவடிவாக அதுவும் தேவநாகரி யாக இருக்க வேண்டும் என்பாரும் உலகமுழுநோக்கில் உரோமன் எழுத்துக்களைத் தழுவிக் கொள்ளலாம் என்பாருமாகத் தமிழெழுத்துச் சீர்திருத்தம் குறித்துக் கருத்துரை வழங்குவர் மிகப்பலர். உயிர்மெய்யெழுத்துக்களைப் பெருக்கிக் காட்டி எழுத்தெண்ணிக்கை சுமை என்று கூறுவது தவறு; பல்வேறு வடிவங்களில் ஒருமைப்பாடு உண்டு; ஆணையின்றியும் இயக்கமின்றியும் கட்டாயமின்றியும் நெடுங்காலமாக இயல்பான மாற்றங்கள் பெற்று நிலைப்பதம் எய்தியவை தமிழ் வடிவங்கள். கையெழுத்தில் தேவைக்கேற்ற வட்டார வழக்குகளும் உண்டு. எவ்வகை வளர்ச்சிக்கும் முப்பது ஒலியன்களும் இன்றுள்ள வரிவடிவுகளும் போதும். உள்ளதை முறைவைத்துக் கற்பிக்க வேண்டும். உள்ளதே நல்லது, வல்லது என்பாரும் உளர். தமிழெத்துச் சீர்திருத்தம் கூறுவோர் காலத்துக்கேற்பத் தமிழ் பெருவளர்ச்சியுற வேண்டும். குழந்தைகட்கு எழுத்துச் சுவை குறைந்து தமிழ் எளிமையாக வேண்டும். கல்வி பெருகிக் கல்லாமை ஒழிய வேண்டும். தட்டச்சு வரியச்சு முதலான புதுப்புதுப் பொறியிலுக்கேற்ப எழுத்து வடிவங்கள் சுருங்கவேண்டும். உலக முழுதும் தமிழ் பரவ வேண்டும் என்ற நன்னோக்கம் கொண்டவர்களே. யார்தாம் இந்நல்லுள்ளம் தமிழுக்கு இல்லாதவர்கள்? எனவே நல்லுள்ளம் ஈண்டு ஐயப் பொருளில்லை. எழுத்துக் கருத்துக்கோள்களை யெல்லாம் தனிப்பொருளாகத் தருக்கிப்பதற்கு இது முழு விடமன்று உள்ளது காப்பதற்கும் வருங்காலப் பெருவளர்ச்சிக்கும் என்று முளதமிழுக்கும் பண்புத் தமிழினத்துக்கும் உலகத் தமிழ்ப் பரப்புக்கும் நல்லன என்று யான் உராய்ந்து கண்ட சில முடிபுகளை எழுதி வைப்பேன். இது மற்றொன்று விரித்தலன்று; உற்றொன்று கூறுதலாம். இருநூறாண்டுகட்கு மேலாகத் தமிழ்மொழிக்கு அடித்தளத்தில் விளைந்த வேர்க்கேடுகள் பலப்பல. அயலரசு மாற்றக்களால் தமிழ்மொழி வழக்கிலும் இளங்கல்வியிலும் அழிவும் இழிவும் உற்றது. ஆங்கில ஆட்சியில் மக்களுணர்வு ஆங்கில மொழிமேல் ஓங்கி வளர்ந்தது. விரித்துப் பயனென்? தமிழ்மக்கட்குத் தமிழிழெழுத்தென்ன, தமிழே சுமையாகத் தோன்றிவிட்டது. இல்லறப் பெண்ணுக்குக் கரு சுமையென்றால் யாது செய்யமுடியும்? பல்லாயிரம் ஆண்டாகத் தமிழ் மாந்தர் எண்ணியறியாத எழுத்துச் சுமை என்ற போலியுணர்வு இந்நூற்றாண்டில் எழுந்ததற்குக் காரணம் தமிழ்மொழி குற்றுயிரானது மட்டுமன்று; ஆங்கில முதலான பிறமொழிகளின் அழுத்தமான மயலான ஆதிக்கமும் ஆம். ஒரு தமிழ்க்குழந்தை தமிழ் கற்கும் நேரத்தையும் ஆங்கிலம் கற்கும் நேரத்தையும் தமிழுணர்வையும் ஆங்கிலவுணர்வையும் கணித்துப்பார்த்தால், தமிழில் எவ்வளவு எழுத்துத் திருத்தமும் என்ன திருத்தமும் உழுத்துப்போம் என்பது வெள்ளிடைமலை. இக்கொடும் போக்கு எந்நிலைத் தமிழரிடத்தும் தடித்துவிட்டது. எனவே எழுத்துச் சுமையென்பது பொய்யான ஒரு தோற்றம். இக்கருத்து தமிழ்மொழிக்கு மட்டுமன்று; இந்திய நாட்டின் பலமொழிக்கும் ஏற்கும். ஆங்கிலத்தின் 26 எழுத்துக்கு நால்வகை வடிவம் இல்லையா? தமிழ்மொழி வரலாற்றில் எழுத்துருவங்கள் மாறிவந்துள என்பதனை நானும் அறிவேன். ஒருமொழியில் சொற்கள் இலக்கணங்கள் நடைகள் மாற்றமுறுவது போல வடிவங்களும் மாற்றம் பெறுவது இயல்பே. ஒரு நல்லுடம்பு நாள்தோறும் கண்ணுக்குத் தோன்றாமல் வளரும் இயல்பு வளர்ச்சியே மாற்றம் எனப்படும். அதுபோல் மொழியின் பல கூறுகளும் வளர்ச்சியென்னும் மாறுதல்கள் பெறுவது பொருளின் இயற்கை. அவ்வாறுதான் எழுத்து வடிவங்கள் சிறிதாகவும் நுண்ணிதாகவும், வேற்றுமையுணர்வில்லாமலும் மாறி வந்துள. அதனால் எழுதப்பட்ட இலக்கியங்களும் பிற பனுவல்களும் அலைமாறுவதுபோல் மாற்றம் தோன்றாமலே உள்மாற்றம் பெற்றன. இதுகாறும் தமிழ்வடிவன்கள் மாறி வரவில்லையா என்று வினவும் எழுத்துத் திருத்திகள் மாற்றம் என்பது தோன்றாமல் இயல்பினும் இயல்பாக மாறி வந்திருக்கும் பாங்கினையும். அதனால் எல்லா இலக்கியங்களும் ஊறுபடா வாழ்வையும் கருதிப் பார்க்கவில்லை. கட்டாய மாற்றம் இவர் தம் விதியாகும். வடிவங்கள் பலவற்றையொழித்துப் பழையவும் புதியவுமான 30 குறிகளுள் தமிழ்மொழியை அடக்கிவிடலாம் என்றால், அடக்கிவிடலாம். ஆனால் இதுகாறும் வந்த இலக்கியங்களும் நல்லடக்கம் எய்தாவா? இப்புதிய திருத்தத் தால் எழுதப்பட்ட நூலே தமிழ் என்ற மயக்கப் போக்குகள் ஏற்படாவா? முறையான தமிழ்க்கல்வியும் தமிழ்க் கல்விக்குரிய சூழ்நிலையும் இன்றுபோலவே இழிவாக இருந்தால் இப்புதுவெழுத்துக் களின் வாழ்வுதான் எங்கே? மேலும் தமிழ் வரலாறே சிலவெழுத்துக்கு முந்தியநூல், சில வெழுத்துக்கு பிந்திய நூல் என்று இருபெரும் பிளவுபட்டு, முற்காலத்து நெருப்பாலும் நீராலும் பலதொகுதி அழிந்தமைபோல, எழுத்தாலும் இன்றுள்ளனவும் அழிந்தொழியாவா? இதனை நினைக்கும் போது நெஞ்சம் குலைகின்றது. உள்ள நூல்களை யெல்லாம் ஆணையெழுத்தில் கொண்டுவந்து விடுவோம் என்ற நயப்புக்கு யார் உறுதி? இதுவரை சொன்னதுபோதும் போதும். ஏட்டுச் சுவடிகளும் கல்வெட்டுக்களும் பதிப்புமுகம் பெறா நிலையை இன்றும் காண்கின்றோமே? பழைய எழுத்துமரபில் உள்ள தமிழ் நூல்கள் எல்லாம் இனி வருங்கால மக்கள் வளர்ச்சிக்கு வேண்டியதில்லை; அவை பழங்கொள்கைகள் என்று ஒரேயடியாகத் தூக்கியெறிந்து பெருமை கொள்ளும் ஆணவமே எழுத்துத் திருத்தத்தால் விளையும் வினை என்று அஞ்சுகின்றேன். அந்த எண்ணம் உடைய வலிய ஒரு சாரரும் இல்லாமல் இல்லை இன்றுள்ள எழுத்து வடிவிலேயே இம்மனப்போக்கை காணும்போது, வேறு எவ்வாறு எண்ணம் தோன்றும்? `உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்’ என்ற சங்கமொழி நம் வழிகாட்டியாகுக. நாடு விடுதலை பெற்றுப் பல்லாண்டு சென்றபின், இன்று மழலையர் பள்ளியெல்லாம் தமிழ் விதைகுழிகளாக இல்லாமல் புதைகுழிகளாக இருக்கும் அவலத்தைப் பார்க்கும்போது, தமிழில் தவறி ஒரு சொற்சொன்னாலும் தமிழ்க் குழந்தை களிடம் தண்டக்காசு வாங்கும் பள்ளிகள் தமிழ்மாநிலத்தில் கொடிகட்டி வளரும்போது, எழுத்துச் சீர்திருத்தம் பேசுவார் முதற்கண்பேச வேண்டியது தமிழன்றோ. தமிழ் வைப்பன்றோ, தமிழ் கல்விமொழியாதலன்றோ? இவ்வுண்மை மனம் பதியுமாக. காலத்திற் காணப்பெறும் பொறிகட்கு ஏற்பத் தமிழ்வடிவங்களை அமைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் வளர்ச்சி. இன்றேல் தமிழ் பின்னடையும் என்ற கோட்பாடு அறிவுடைமையன்று. தொழில்நுட்பங்கள் மிகவிரைவில் பழைமையாகி வருகின்றன. பொறிகள் விரைந்து மாற்றம் பெறுகின்றன. பத்தாண்டளவில் பொறி மாற்றங்கள் தலைகீழாக வந்துவிடக் காண்கின்றோம். மின்னணுவியலும் கணிப்பானும் செய்யும் மாறுதல்கள் புராணத்தையும் விஞ்சுகின்றன. எனவே மக்களினத்துக்கு உரிய பொதுவுடைமையும் தன்னிகரில்லாக் கருவியுமான மொழியைக் காலத்துவிழும் கருவிகளிடம் ஒப்படைத்தற்கில்லை. செய்பொறிகள் மாறுந்தோறும் எழுத்துருவங்களைக் மாற்றிக்கொண்டு போவது. அறிவாகுமா? அறிவியலாகுமா? மொழி நோக்கிச் செய்பொறிகள் வரவேண்டும். காணப்பட வேண்டுமேயன்றி, செய்பொறிக்கு மொழியடிமைப் படக்கூடாது. இப்போக்கு செய்பொறிவீழ்ச்சிபோல, செய்யெழுத்தும் வீழ்ச்சியாகி, பல்காலப்பிளவு ஏற்பட்டு அறிவுத் தொடர்ச்சியை அறுத்துவிடும். தொழில்நுட்பம் இன்னும் வளருங்கால் இன்றைய தமிழ் எழுத்து வடிவங்கள் அப்படியே எளிமை செய்யும் புதுப்பொறிகள் கண்டுபிடிக்க முடியும் என்பது என் நம்பிக்கை. எவ்வாறாயினும் மொழி என்ற நிலைக் கருவியைக் காலந்தோறும் சடுதியில் மாறும் நிலையில்லாச் செய்பொறிகட்கு வணக்கக்கூடாது. வணக்கின், உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் என்ற கதையாக்கிவிடும். முழுதும் நிகழ்காலக் கண்கொண்டு மொழித் திருத்தம் சொல்வது ஒருவகைக் குருடு என விடுக. முற்காலத்து மொழிவாயில் கேள்விச் செல்வமாக இருந்தது. சில நூற்றாண்டாக எழுத்துவாயில் பேரிடம் பெற்று வருகின்றது. அச்சுப்பொறி பலவகையில் கண்டுபிடிக்கப்பட்ட பின் எழுதப்படிக்கத் தெரிவதே கல்வியென்ற நிலை பதிந்து விட்டது. மொழிக்கு ஒலியன் உள்ளுறுப்பாகவும் வடிவன் புறவுறுப்பாகவும் முதன்மையாக விளங்குகின்றன ஆதலின் எழுத்துருவங்களைப் புதுப்புதுப் பொறிகட்கேற்பத் திரித்தல் என்பது இதுவரை தோன்றிய நூல்களைப் பழம் பொருட் காட்சியாக்குவதோடு, ஓரளவு கற்றாரையும் கல்லாதாராக்கி விடும். திருந்தாத சில நாடோடி மொழிகட்கு எழுத்துக்களை இற்றை மொழியியலார் வடித்துக் கொடுப்பது போல ஞாலத் தாயான தமிழையும் கருதிவிட்டனரே எழுத்துத்திருத்திகள். ஏழையெளியவர்கட்கும் இளங் குழந்தைக்கும் இரய்குவார்போல எழுத்துத் திணிப்பிகள் செய்யும் முனைப்பு அழி கொல்லியாகி விடும். செவ்வெழுத்தில் இருபத்தைந்து வரியுள்ளவை திணிப்பெழுத்தில் முப்பத்திரண்டு வரிகளாகின்றன என்ற பெருங்குறையாலும் ஓரளவு கற்றதற்குறித் தமிழர்களும் இவ்வெழுத்தால் கல்லாராகி விடுவர் என்ற நல்லச்சத்தாலும் ஆணையெழுத்தைத் தமிழிதழ்கள் நடைமுறையிற் பின்பற்ற வில்லை. ஆங்கிலத்தை முன்மாதிரியாக வைத்து எழுத்துத் திருத்திகள் தமிழ்வடிவங்களைப் புதுக்க நினைக்கின்றனர். உயிர்மெய் என்ற இனமே வேண்டா என்ற தடிப்புக்கு இவ்வாதிக்கம் ஒரு பின்னணி. எழுத்துத்திருத்தத்தால் ஆங்கிலம் போல் தமிழ் வளர்ந்து விடும் என்பது இன்னோர் எண்ணம் போலும், எண்ணம் பழுதில்லை; செய்முறையே பழுது. ஓங்கிவளர் ஆங்கிலம் மொழியமைப்பில் ஒலியானும் வடிவானும் ஒலிப்பானும் முன்னொட்டுப் பின்னொட்டாலும் வினையொட்டானும் காலவுறுப்புக்களானும் ஒருமை பன்மையானும் பல்வேறு குறையுடையது; ஒழுங்கற்ற மொழிகளுள் ஒன்று என்பது; மொழியியலார் ஒப்பிய கருத்து. `ஒலியனுக்கொத்த வடிவன் எண்ணிக்கையில்லை என்பதும் வெளிப்பட்ட செய்தி, பிரெஞ்சு மொழியளவு இல்லாவிடினும் ஆங்கிலத்தில் சொல்லின் எழுத்து வேறு, அதனை ஒலிக்கும் நிலை வேறு; அஃதாவது எழுதியதை ஒலிக்கமுடியாது; ஒலிப்பதற்குத்தனிப் பயிற்சி வேண்டும். ஆங்கிலவகராதிகள் இப்பயிற்சிக்கு முதன்மை கொடுக்கின்றன. இந்திய மொழிகளிலும் சிறப்பாகத் தமிழ்மொழியிலும் எழுதற்கும் ஒலித்தற்கும் வேறுபாடில்லை கிடந்தாங்கு எழுத்தைக் கூட்டுவதே ஒலியாகிவிடும். கையகல வரிச்சுவடி யட்டையைத் தெரிந்துகொள்ள ஒரு கிழமை போம். தெரிந்து கொண்டால் தொல்காப்பியத்தையே எழுத்துக்கூட்டிப் படிக்கலாமே. இதற்குமேல் ஓர் எளிமையுண்டா? ஐரோப்பிய இனத்தைச் சார்ந்த வடமொழியும் பிற இந்திய ஆரிய மொழிகளும் தமிழ் மரபினவே. இதனை இங்குக் கூறுவதன் கருத்தென்ன? குறைபாடு நிறைந்தது எனச் சுட்டப் பெறும் உலக ஆங்கிலம் குறைபாடுகளை நீக்கி உலக மொழியாயிற்றா? ஆங்கிலத்தில் சில திருத்தத்துக்கு ஆங்கொன்று ஈங்கொன்றுமாகச் செய்த முயற்சியும் செலவும் என்னாயின? ஆங்கிலத்தார் தம் உள்ள வடிவங்கட்கு அச்சுப் பொறி வகை கண்டனரேயன்றி இவ்வகைக்காக வடிவங்களைச் செதுக்கவில்லை. வழிவழிவந்த செவ்வடிவங்களைக் காலத்து வீழும் பொறிகட்கென மாற்றவில்லை. உடலுக்கு உடையா, உடைக்கு உடலா? கண்ணுக்கு ஆடியா? ஆடிக்குக் கண்ணா? காலுக்கு நடையனா, நடையனுக்கு காலா? எதற்கு எது, அதற்கு எப்படி என்ற வாய்பாடு தெளிவாக வேண்டும். ஒப்பிட்டு ஒப்பிட்டுப் பார்த்தால் வளர்ந்தோங்கிய மொழிகள் கூடப் பல குறைபாடுகள் உடையனவாகவே தோன்றும். எ ஒ என்ற குற்றுயிர் இரண்டும் இல்லாத மொழிகளும் பலவுள. பல ஒலியன்களுக்குச் சிலவடிவன்களை வைத்துக் கொண்டு சரிக்கட்டி வளரும் மொழிகளும் பலவுள. ஆங்கிலத்தில் பன்னூறாயிரம் சொல் படித்தாலும் ஒவ்வொன்றையும் எப்படி ஒலிப்பது, எப்படி எழுதுவது என்று தனித்தனியான சிறப்புப்பயிற்சி கடைசிவரை வேண்டும். எப்பொருளுக்குப் பெரிய எழுத்துப்போடுவது என்ற நினைவு வேண்டும். ஆங்கிலத்தில் 104 எழுத்துக்கள் தொடக்கத்திலேயே வரைய வேண்டும். உரோம எண்களின் அமைப்பு (ஆஊஆஓடுஐஏ - 1944) பின்முன் நோக்கியதல்லவா? இந்துணைக் குறை பாடுள்ளும் ஆற்றல் வாய்ந்த ஒழுங்கியல் மொழிதோறும் உண்டு என்பதை உணர்வோமாக. அம்மொழி வளர்வதற்கு அந்த உள்ளொழுங்கு மரபு இடங்கொடுத்துக் கொண்டிருக் கின்றது என்பதனையும் உணர்வோமாக. மொழிகளிடை ஒலியன் எண்ணிக்கையும் வரியன் எண்ணிக்கையும் வேறுபடுகின்றன. சொற்சேர்க்கையும் தொடரமைப்பும் வேறுபடுகின்றன. எவ்வளவு வேறும் மாறும் என்று தோன்றினாலும் குழந்தைகளும் கல்லாரும் செவிவழிப் பயின்று தாராளமாகப் பேசுகின்றனர். உள்ளே ஒரு மரபு வாய்பாடு கிடக்கின்றது என்பது தெளிவு. ஆதலின் நம் அளவுகோலும் அளக்குமுறையும் இன்னும் சொல்லப்போனால் மரபாழும் அறியாமையுமே குறையுடையன. வளர்ந்த செம்மொழி களை அவற்றின் மரபழுத்தம் கண்டு அத்தடங்களில் புதிய பாத்திபிடித்து வளர்க்க வேண்டும். மாற்றமும் திரிபும் இயல்புக்கு விட்டுவிட வேண்டும். ஆங்கிலமொழி உலக மொழியாகப் பரந்தோங்கி யிருக்கும் வாய்ப்பு நெறிகளைத் தமிழ்ப்பரப்புக்கு நாம் கடைப்பிடிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். எவ்வகை மொழியும் அமைப்பின் சிறப்பாலும் பொறிக்கருவியின் துணையாலும் உலக மொழியாகி விடவில்லை. ஆட்சிமொழி யாகவும் கல்விமொழியாகவும் அரங்கு மொழியாகவும் செய்திமொழியாகவும் நூல்மொழியாகவும் எல்லாத் துறையிலும் ஆங்கில வாயில்கள் விரிந்தன. ஆங்கிலவாட்சி பெருகிய பிறதிசை நாடுகளிலும் ஆங்கிலமே மேன்மொழி யாயிற்று. சிறிய நாட்டுக்குரியதாக இருந்த ஆங்கிலம் ஞாலமொழியானதற்குப் பெருநாடான அடிமைப்பாரதம் பெருங் காரணமாகும். சிறந்த தொல் பலமொழிகளைக் கொண்ட இந்திய மக்கள் தத்தம் வளஞ்சான்ற தாய்மொழியை எல்லா வழியாலும் நல்குரவுப்படுத்தி, ஆங்கிலத்தையே நாடி வளர்த்ததும் ஆங்கிலம் உலக மொழியானதற்குப் பெருவாய்ப் பாயிற்று. இது இருநூறாண்டுக்கதை. இக்கதையை விரித்துப் பயனில்லை. ஆங்கிலேயரிடமிருந்து நாம் நாட்டுரிமை மீட்டோம்; எனினும் நம் மொழிகள் நம்மிடருந்து உரிமை பெற முடிய வில்லை. விடுதலை பெற்று முப்பத்தெட்டாண்டுகள் ஆகியும் நம் பதினான்கு மொழிகளில் ஒன்றுகூட ஆங்கிலத்துக்குப் பக்கமாக வளரவில்லை. நம் நாட்டுப்பற்று ஐயகோ இத்தகைத்து. அங்ஙனம் ஆங்கிலத்தை வளர்த்துவிட்ட இந்தியர்களுள் ஒருபகுதியான தமிழர்கள் ஆங்கிலம் வளர்ந்த செயல் நெறிகளைப் பாராமல், தமிழ்மொழியை ஆங்கில அமைப்புக்குச் செதுக்கி ஒதுக்கிப் பிதுக்கி கொண்டுவர முனைகின்றனர். தமிழுக்கேற்ற அரும்பொறிகள் காண அறிவியல் முனைப்புக் கொள்ளாமல், எலிக்கூண்டிற்குள் புலியை அடக்கமுயல்வதுபோல, எதற்கோ கண்ட அச்சுப்பதிப்புப் பொறிகளுள் தமிழின் இயற்கையை ஒடுக்கத் துடிக்கின்றனர். அதற்குமேல் இதுதான் வளர்ச்சி என்று அடாத வாழ்த்துக் கூறுகின்றனர். தெளிந்து சொல்லின் இப்போக் கெல்லாம் கைவிட வேண்டியவை என்பது என் கருத்து. சிந்துவெளி நாகரிகத்துக்கு முற்பட்டே எழுத்துவடிவு பெற்றுத் திண்மை எய்திய நம் தமிழுக்குச் சொந்த எழுத்தே யில்லை; இதுவும் ஒரு மொழியா என்று பிற்காலத்து வசையுண்டாகும்படி இப்போக்குக் கொண்டுபோய்விடுமோ என்று கவல்கின்றேன். தமிழ் தனிமொழி. எம்மொழியிலிருந்தும் பிறவாத தனிமொழி, பல மொழிகளைத் தோற்றிய தாய்மொழி, செவிலி மொழி என்ற உண்மைப் பெருமை அண்மைக் காலத்துத்தான் புதைபொருள் போல வெளிப்பட்டு வரும் இந்நன்னிலையில் மதிப்பிழக்கும் ஒரு தவறு நாம் செய்யலாமா? தன்மானம் செய்ய இடங்கொடுக்குமா? ஆடத் தெரியாதவள் முற்றம் கோணல் என்பது போலவும், பாடத்தெரியாதவள் அவையோர் எண்ணிக்கை கூடுதல் என்பது போலவும், ஓடத்தெரியாதவன் உள்ளூர் என்பது போலவும் சிலரின் திருத்தமுயற்சிகள் நமக்குத் தோன்றுகின்றன. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதனை ஆங்கில மொழியுணர்த்தி விட்டது. ஆதலின் தமிழ் எழுத்து வரிவடிவு பற்றிப் பின்வரும் தெளிவுகளையும் உறுதிகளையும் செயற்பாடுகளையும் நாம் கொள்வோமாக. (1) உள்ள எழுத்து வடிவங்களை நிலைபேறாக வைத்து அதற்கேற்ற அச்சுப்பொறிகளை நுண்ணிய அறிவியல் முறையில் காண வேண்டும். விரைந்து காலக்கோட்பட்டு மாறும் பொறிகட்கு நிலையான தமிழ்மொழியை அடிமைப்படுத்தக் கூடாது. முன்போல இயல்பான வழக்காற்றில் வரும் மாறுதல்கள் வந்து போகட்டும் வலிந்த இயக்கமான எழுத்துப்புரட்டு வேண்டா. அங்ஙனம் செய்வதற்குத் தமிழ் புதிய மொழியோ திருந்தா மொழியோயன்று. எழுத்துவடிவங்கள் முதலாவதாகக் கையெழுத்துக்கும் எளிதாக இருக்கவேண்டும் என்ற பொது நிலையைப் போற்ற வேண்டும். பொறிவழக்காற்றினும் கைவழக்காறே மொழிக்கு உயிர்ப்புடையது. (2) தமிழ் எழுத்துக்கள் ஒரு சுமையல்ல. இது உண்மை, வெறும் மயக்கன்று. வழிவழி வந்த தமிழ்க்கல்வி முறைப்படி குழந்தைகட்குச் சொல்லிக் கொடுத்தால் எல்லாம் எளிமையே. தடம்வாய்ந்த வரிவடிவங்களைத் திருத்தத்திருந்த அவை குழந்தைகட்குப் பழையவற்றோடு சேர்ந்து கூடுதலாகி விடுகின்றன. இது முரணான விளைவு. வீட்டில் தமிழ், பாலர் பள்ளியில் தமிழ், பல்கலைக்கழகம் வரை தமிழ், ஆட்சியில் தமிழ், கோயிலில் தமிழ், என்ற இசையில் தமிழ், கடையில் தமிழ், உரிய அனைத்திலும் தமிழ் என்ற உரிமைநிலை தமிழுக்குத் தமிழகத்து இருக்க வேண்டும்; இது இருந்துவிடுமானால் தமிழ் போல இனிய எளிய மொழி தமிழருக்கு வேறொன்றில்லை. எழுத்துத் திருத்தம் குறித்த ஓரு காலச்செய்தியை இத்துணை முகமாகச் சொல்லியதற்குக் காரணம். தமிழும் தமிழ்க்கல்வியும் தமிழ்க்காப்பும் வழிவழித் தொடர்ச்சியும் இருந்தாற்றானே தொல்காப்பியம் சங்கவிலக்கியம் திருக்குறள் சிலப்பதிகாரம் பாரதியம் முதலாக எல்லாம் வாழும்; தமிழினத்துக்கு நன்மதிப்பும் எதிர்காலத் தனித்தன்மையும் உண்டாகும். ஆதலின் காலத்திற்கேற்ற இவ்வுரையில் தமிழ் எழுத்து வடிவம் பற்றித் தமிழ் மக்கட்குத் தெளிவு செய்வது என் செங்கடமையாயிற்ற. செய்தக்க வல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும் என்றார் பொய்யில் புலவர். எழுத்துத் திருத்தம் போன்றவை தமிழுக்குச் செய்யத் தகாதவை; எங்கும் எல்லாம் முதலிடம் என்பவை தமிழுக்குச் செய்யத் தக்கவை. பல்வேறு ஒலிநிலைக்கூறுகளையும் சில அறிவியல் நுட்பங்களையும் மயக்கமறக்காட்டுதற்கு அவ்வப்போது நுண்குறியீடுகள் வேண்டப்படும். இவை உயர்கல்விக்கும் உயராய்வுக்கும் வேண்டிய சிறப்புக்குறிகள்; வருமிடங்களும் பயன்களும் வேறானவை. இவை நாம் மேலே கூறிய எழுத்து வழக்காறல்ல; அறிவு வழக்காறு. நூற்பா 20 `மெய்ம்மயங் குடனிலை என்பதற்கு ஒரு மெய் பிறமெய்யோடு மயங்குதல் மெய்ம்மயக்கம்; ஒரு மெய் தன் மெய்யோடு தான் மயங்குதலை உடனிலை மயக்கம் என இருவகைப்படும் என்று பொருளுரைப்ப. அவ்வாறு இருவகை யெனக் கூறுவது கருத்தாயின், “ஆயிரியல வுயிர்த்த லாறே” “மெய்யேயுயிரென றாயீ ரியல” “ஆயீரியல புணர்நிலைச் சுட்டே” என்ற நடை அமைந்திருக்கும். தெரியுங்காலை என்பதற்கு மெய்ம்மயங்குடனிலை செயப்படுபொருளாகும். அம்மூ வாறும் வழங்கியல் மருங்கின் மெய்ம்மயங் குடனிலை தெரியுங் காலை என்ற இந்நூற்பாவின் முதலீரடிகளைப் பின்வரும் மெய்ம்மயக்க நூற்பாக்கட் கெல்லாம் தோற்றுவாயாகக் கொள்க. தொல்காப்பியம் சிறப்புப்பாயிரமும் நூன்மரபும் மாணிக்கவுரையும் முற்றும். இரண்டாவது மொழிமரபு - மாணிக்கவுரை இயல்முன்னுரை நூன்மரபில் எழுத்து நிலையில் தனியெழுத்துக்களின் குறியீடுகள் கூறப்பெற்றன. இக்குறிகள் சுருக்கமாக ஆளுதற்கமைந்த ஆட்சிச் சொற்களாகும். இவ்வெழுத்துக்கள் பொருள்தரும் சொல்லாகிச் சொல்லில் முதலிலோ இறுதியிலோ நிற்கும் நிலைபற்றி மொழிமரபு கூறும். சொன்னிலையில் எழுத்துக்கள் படும் இலக்கணங்கூறுதலின் மொழிமரபு எனப்பட்டது. இஃது எழுத்ததிகாரம் ஆதலின் மொழிமரபு என்பதற்குச் சொல்லில் வரும் எழுத்துக்களின் மரபுநிலை எனப்பொருள் கொள்க. ஒலி, எழுத்து, சொல் என்பன பஞ்சு, நூலிழை, ஆடை போன்றவை. அரிசி சோறாகும் போதுதான் உண்பயன் தரும். எழுத்தொலி என்ற ஒலியனுக்குப் பொருண்மையுண்டு. அவ்வளவே. அதுவே ஒரு பொருள் காட்டாது. ஒலியன் சிறுபான்மை தனியாகவும் பெரும்பான்மை எழுத்துக்கள் தொடர்ந்தும் பொருளை நேரடியாகக் குறிக்கும்போது சொல் அல்லது மொழி எனப்படும். எழுத்துக்கும் சொல்லுக்கும் உரிய தொடர்பு குருதியோட்டமும் நீரோட்டமும் ஒக்கும். சொல், மொழி, கிளவி என்ற தமிழ்ச்சொற்கள் மக்கள் வழக்கிற் பேசப்படும் உயிர்ப்பு மொழியைக் குறிக்கும். எழுத்து சொல் என்ற குறியீடுகள் முதற்கண் ஒலிநிலைக்கு உரியவை. ஆ என்ற எழுததை ஒலிக்க, ஆடு என்ற சொல்லைச் சொல்லுக என்பதுவே ஒலி முதன்மரபு. ஆ என்ற எழுததை எழுதுக. ஆடு என்ற சொல்லை எழுதுக என்பது பின் வந்த வரிவடிவ மரபு. இம்மரபும் பொருந்தும்; எனினும் இலக்கணங்கள் ஒலிநிலைக்கே உரியன என்பதை மறவாது நினைவு கொள்ள வேண்டும். இயற் பகுப்புக்கள் தம்முள் தொடர்புடையவை. ஓரியலுக்குக் கூடுதலான விளக்கங்களை அடுத்த வியலிலோ பின்னியல்களிலோ ஆசிரியன் சொல்லுவான். இது மலைப்பில் நெறி எனப்படும். ஓரியலில் அனைத்தையும் சொல்லிவிடுதல் என்பது உண்ணும் உணவனைத்தையும் முதலிலேயே இலையிற் போட்டுவிடுவதை யொக்கும். நூன்மரபிற் கூறிய சார்பெழுத்துக்கள், அளபெடை, மெய்ம்மயக்கம், வரிவடிவு பற்றிய மேல்விளக்கங்கள் மொழிமரபின் தொடக்கத்து வருவன. மொழிமரபிற்கே யுரிய இன்றியமையாத ஈரிலக்கணங்கள் மொழி முதலெழுத்துக்களும் மொழியிறுதி யெழுத்துக்களும் ஆம். மொழிவரலாற்றிடை இவற்றில் சில வரவும் சில போக்கும் ஏற்பட்டிருக்கின்றன; ஏற்படுவதும் இயல்பே. எனினும் இம்மாற்றங்கள் தலைதட்டலோ தரைதட்டலோ வாராமல் விழிப்பாகப் போற்றிக் கொள்ளத்தகுவன. கரை பல்லிடத்து உடைந்தால் புகுவதும் போவதும் எது என்று சொல்ல முடியுமா? எல்லா மொழிகளுள்ளும் பழந்தமிழ்மொழி உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையாமல் சீரிளமைத் திறம் குன்றாமல் இன்றும் புதுமொழியாக வாழ்வதற்கு உரிய காரணங்களுள் இரண்டு மொழி முதலெழுத்துக் கட்டுப்பாடும் மொழியிறுதியெழுத்துக் கட்டுப்பாடும் ஆகும். பின் இயல்களில் வரம்புபடுத்தும் புணர்ச்சியெல்லாம் இந்த இருதளங்களின் மேல் எழுவன. இத்தளம் தளரின் தமிழ் தளரும். ஆதலின் முதலீறு என்ற அமைப்பு தமிழ்மொழிக்கு நல்லொழுக்கமாகும்; செவ்விழுப்பமுமாகும்; எனவே இம்மொழியுயிரினைச் செவ்வனம் ஓம்புதல் இலக்கணத்தின் கடமை. முதலும் இறுதியும் முட்டாது காக்கும் அதுகாண் தமிழின் அரண். இயற்கருத்து குற்றியலிகரம் `மியா’ என ஒரு மொழியிலும், வீடியாது நாடியாது எனப் புணர்மொழியிலும் வரும். ஒருமொழிக் குற்றியலுகரம் ஆறுவல்லெழுத்தின் மேல் ஏறி, நாடு, உலகு, வாத்து, பஞ்சு, பாம்பு, ஒன்று என்றவாறு அறுவகையாக வரும். சுக்குக்கோடு எனப் புணர்மொழியிலும் வரும் எஃகு, அஃது, கஃசு என்றவாறு ஒருமொழி ஆய்தம் குற்றெழுத்துக்குப் பின்னும் உயிர்வல்லெழுத்துக்கு முன்னும் வரும். அஃறிணை, பஃறுளி என்றவாறு புணர்மொழியிலும் வரும். சிலவிடங்களில் ஆய்தம் மொழிக்குறிப்பாக நீண்டு எழுதப்படுவதில்லை. நூன்மரபிற் கூறிய சார்பெழுத்து மூன்றும் எவ்வாறு சார்ந்து தோன்றும் என்ற சார்பு நிலையை மொழிமரபில் முதலெழு நூற்பாக்கள் விளக்குவன. இசை குன்றும்போது அளபெடை என்ற முறை தழுவப் படுமன்றே. அங்ஙனம் அளபு எழுந்த ஒலி நீட்டத்தைக் காட்டுவதற்கு நெட்டெழுத்துக்குப் பின் அதற்கு ஒத்த குற்றெழுத்து (போஒய்) பக்கமாக எழுதப்படும். ஐ, ஒள என்ற இரண்டு நெடிலுக்கும் நேரடியான குற்றெழுத்து இல்லாமை யால் ஐகாரத்துக்கு இகரமும் ஒளகாரத்திற்கு உகரமும் ஒத்த குற்றெழுத்தாக அளபெடையிற் கொள்ளவேண்டும். தமிழ்ச்சொற்கள் ஓரெழுத்தொருமொழி (ஆ, மா) எனவும் ஈரெழுத்தோரு மொழி (ஆன்,மான்) எனவும் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துடைய தொடர்மொழி (ஆண்டு, ஆண்டாள், ஆண்டவர்) எனவும் மூன்று வகைப்படும். இப்பாகுபாடு தமிழ்ச்சொற்களின் தோற்றத்தையும் அமைப்பையும் ஆக்கத்தையும் அறிவிக்கவல்லது. மெய் முதலெழுத்தாயினும் பிறப்பில் தனித்தன்மை யுடைய தாயினும் சொல்லுங்கால் க ங ச ஞ என்று அகரத்தோடு சொல்லப்படும். நூன்மரபில் இன்ன மெய்யெழுத்துக்குப்பின் இன்ன மெய்யெழுத்து வரல் வேண்டும் என்ற வரம்பினைக் கற்றோம். எந்த மெய்யெழுத்தும் தன்னைக் கூறும்போது எதற்குப் பின்னும் வரலாம் என்ற கட்டுப்பாடற்ற பொது நிலையுண்டு. இது நடைமுறைக்கொத்த இலக்கணம். மெய்ம்மயக்கத்தில் பீர்க்கு, வார்ப்பு, பாழ்ங்கிணறு என ஈரொற்றும் வரும். இவை ய ர ழ என்ற மூன்றின் பின்னர் தோன்றும். தமிழ்ச் சொல்லமைப்பின்பிடி ரகரவொற்றும் ழகரவொற்றும் தனிக்குற்றெழுத்துக்குப் பின் வரமாட்டா. வர்க்கம், வர்ணனை, கர்ப்பிணி என்று சொல்வதும் எழுதுவதும் தவறு. வருக்கம், வருணனை, கருப்பிணி என்பதே தகும். செய்யுளில் `போன்ம் என்று ஈரொற்று நிற்கும். அவ்விடத்து மகரவொற்று கால்மாத்திரையாய்க் குன்றி யொலிக்கும். எழுத்துக்களைச் சொல்லிடைப்படுத்திச் சொன்னாலும், சொல்லிடை விதந்து வேறாகச் சொன்னாலும், கூட்டு வடிவு பெற்றாலும் தம் தன்மையினின்று மாறுபடா. தனியெழுத்தாக இருந்தபோது என்ன தன்மையுண்டோ அத்தன்மை வந்தான் இருந்தான் சென்றான் என்று எழுத்துக்கூட்டிச் சொல்வதற்காக மாறிவிடாது. வடிவு மாறுபட்டாலும் பொருள் வேறுபடாது. இது எழுத்தியல் எனப்படும். இது மொழியின் நிலை விதி. ஐ என்ற ஒலியனுக்குத் தனிவரிவடிவு உண்டு. அஇ அய் என்ற கூட்டு வடிவுகளும் உண்டு. அஇ அய் என்பன சிலவிடங்களில் மாறி வரும். ஒள ஒலியனுக்கு உரிய வடிவு உண்டு. அஉ என்ற கூட்டு வடிவும் உண்டு. இவை வடிவு மயக்கங்கள். இவற்றால் பொருள் மாறுபடுவதில்லை. எழுத்தியல் திரிவதில்லை. மொழிமரபின் முதன்மையான இலக்கணக்கூறுகள் இரண்டே. தமிழில் மொழிக்கு முதலாகும் எழுத்துக்கள்; மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள். மொழி முதலெழுத்துக்கள் இது பற்றிப் பத்து நூற்பாக்கள் உள. 12 உயிர்களும் மொழி முதலாகி வரும். மெய்கள் மொழிமுதலாகும் என்றாலும் உயிரோடு கூடிய உயிர் மெய்கள்தாம் அங்ஙனம் வரமுடியும். இது தமிழ்மொழியின் மன்னிய அமைப்பு. அயன்மொழிச் சொற்களை ஒருகால் தழுவினாலும், இவ்வமைப்புக்கு உட்பட்டே தியானம், நியாயம், கிருபை என்று வரவேண்டும். முதலாகு மெய்களுக்கும் அவைபெறும் உயிர்களுக்கும் வரம்புண்டு. பதினெட்டு மெய்களுள் க ச த ப என வல்லினத்தில் நான்கும் ஞ ந ம என மெல்லினத்தில் மூன்றும் ய வ என இடையினத்தில் இரண்டும் ஆக ஒன்பது மெய்கள் மொழி முதலாகும். இவற்றுள், 12 உயிரொடும் வருவன க் த் ந் ப் ம் 9 அ ஐ ஒள நீங்க ச் 8 உ ஊ ஒ ஓ நீங்க வ் 3 ஆ எ ஒ சேர்ந்து ஞ் 1 ஆ சேர்ந்து ய் மெய்ம்மயக்கத்திற்குச் சொல்லியதுபோல முதலாகா எனப்பட்ட எல்லா வெழுத்துக்களுமே தன்னைச்சுட்டும் போது (ணொ, ளொ, டொ என்றவாறு) மொழிமுதலாக வரும் என்பது நடைமுறைக்கு ஒத்த பொதுவிதி. இதுவே மொழியிறுதியாகவும் கொள்ளப்படும். நுந்தை, நுந்தாய் என மொழிமுதற் குற்றியலுகரம் ஒன்று உண்டு. இதற்கும் நகர மெய்யே முதல். மொழியிறுதியெழுத்துக்கள் இது பற்றிப் பதினான்கு நூற்பா உண்டு. ஒளகாரம் நீங்கிய பதினோருயிரும் இறுதியாக வரும். ஒளகாரமும் கௌ வெள என ஓரெழுத்தொருமொழிகளில் ஈறாகும். எகர வுயிர் ஈறாகாது. நொ என்ற ஓரிடத்து ஒகரம் ஈறாம். ஞே ஞோ என ஞகரம் ஈராக வாராது. உசு, முசு என ஈரிடத்துச் சுகரம் ஈறாம். தபு என்ற ஒரு சொல்லில் புகரம் ஈராகி இருநிலையில் அழுத்தம் பெறும். பதினெட்டு மெய்களுள் ஞ ண ந ம ன என மெல்லினத்துள் ஐந்து ய ர ல வ ழ ள என இடையினம் ஆறு ஆகப் பதினொரு புள்ளியும் மொழிக்கு ஈறாக வரும். வெரிந், பொருந் என இருசொற்களில் நகரமெய் ஈறாம். உரிஞ் என்று ஞகரம் ஒரு சொல்லில் ஈறாம் ஆனால் இருபொருள் அழுத்தம் பெறுவதில்லை. அவ்இவ் உவ் தெவ் என வகரம் நான்கு சொற்களில் கடைசியாக வரும். அஃறிணைப் பெயர்களில் னகரமெய்க்கு ஈறாக மகரமெய் (புறன் - புறம்) வந்துநிற்கும்; எனினும் ஒன்பது சொற்கள் விலக்காகும். ஒருமொழிக் குற்றியலிகரம் (31) குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும யாவென் சினைமிசை யுரையசைக் கிளவிக் காவயின் வரூஉ மகர மூர்ந்தே. இஃது ஒருமொழிக் குற்றியலிகரத்தின் சார்புநிலை கூறும். அகலவுரை சார்ந்து வரல்மரபின் என்று நூன்மரபின் முதல்நூற் பாவிற் கூறினாரன்றே. குறுகுதற்கு எச்சொல்லில் எதனைச் சார்ந்து வரும் என உரிய இடச்சூழ்நிலை காட்டுகின்றார். மியா என்ற உரையசையிடைச் சொல் ஒன்று உண்டு. இதன் கண் யா என்ற எழுத்துக்கு மேலே அவ்விடத்து மகரமெய்யைச் சார்ந்து குற்றியலிகரம் நடுவே நிற்கும். உரை - பேச்சு வழக்கு. நிற்றல் வேண்டும் - இடைப்பட்டு நடுவே நிற்க வேண்டும். வழக்கு: மியா - இது பேச்சு வழக்கிடை முன்னிலையில் வரும் ஏவற் சொல். கேண்மியா, சொன்மியா, கேளப்பா, சொல்லப்பா என்பது பொருள். திறனுரை நூற்பாவில் எடுத்துக்காட்டே தந்து இலக்கணம் விளக்கும் நூற்பா இது. இது காட்டுநெறி எனப்படும். ஆகாரத்தோடு கூடிய யகரவுயிர்மெய்க்கும் மகரவொற்றுக்கும் இடைப்பட்டு நெருக்குண்ணும்போது இகரம் அரைமாத்திரையாகக் குறுகும் என்பது சூழ்விதி. யா என்ற ஆகாரவுயிர்மெய் முழுதும் பின்பற்றுக்கோடு; ஒற்று முன்பற்றுக்கோடு என்க. இவ்விதியை யொட்டி வியாழன் என்ற சொல்லில் இகரம் இக்காலத்துக் குறுகுவதை உணரலாம். வியாதி, வியாசம், தியானம், பியாண்டு வாத்தியம் என்ற பிறமொழி வருகையிலும் இச்சூழ்நிலையால் இகரம் குறுகுவதைக் காண்க. எனவே இச்சூழ்விதி உலகமொழிப் பொதுவிதி போலும். சொற்கு உறுப்பாக வரும் ஒலிகளைச் சினை என்பது ஒரு குறியீடு. குறியதன் இறுதிச் சினை என உயிர் மயங்கியலிலும் சுட்டுச் சுனை நீடிய ‘ஈறுசினையொழிய என’ ஈரிடத்துக் குற்றியலுகரப்புணரியலிலும் இக்குறியாட்சி வரும். `குற்றியலிகரம் நிற்றல் வேண்டும்’ என்ற ஒரு தலைநடை இப்படிச் சார்பு இருந்தாற்றான் இகரம் குறுகும் என்ற வன்புறையாகும். மியா மியா என்று வரும் பூனையின் பொருளில் ஒலிக்குறிப்பை நீக்குதற்கு. உரையசைக் கிளவி எனப் பட்டது. பயனிலையை முன்னும் எச்சத்தைப் பின்னும் கூறிய நடையோட்டம் இது. இலக்கியம்போல் தொல்காப்பியத்து இவ்வாறு நடையோட்டங்கள் பலவுள. மியா என்ற உரையசைச் சொல் பின்னாள் வழக்கு வீழ்ந்தது. புணர்மொழிக் குற்றியலிகரம் (32) புணரியல் நிலையிடைக் குறுகலு முரித்தே உணரக் கூறின் முன்னர்த் தோன்றும். இது குற்றியலிகரம் இருமொழிப்புணர்ச்சியிடைக் குறுகும் எனக்கூறும். அகலவுரை குற்றியலிகரம் மியா என்பது போல் ஒரு மொழியிற் குறுகுதலோடு இருசொற்புணர்ச்சியில் குறுகுதலும் உண்டு. மொழிமரபு ஒரு சொல்லளவிற்குக் கூறும் இயலாதலின் ஈண்டு விரிந்துரைப்பது பொருந்தாது. இப்புணர்மொழிக் குறுக்கம் பின்பு குற்றியலுகரப் புணரியலில் வெளிப்படும். வழக்கு: நாடு + யாது - நாடியாது; மாசு + யாது - மாசியாது திறனுரை சார்பெழுத்துக்கான குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம்என்ற மூன்றும் ஒரு சொல்லிலும் வரும்; புணர்மொழி யிலும் வரும். மொழிமரபு ஒரு சொல்லில் வரும் எழுத்துக்கட்கு இலக்கணம் கூறும் இயல்பிற்று ஆதலின் புணர்மொழியுள் சார்பெழுத்த வருவன பற்றி அவை உண்டு என ஈண்டுச் சுட்டினாரேயன்றி இடனும் பற்றுக்கோடும் விரித்துரைக்க வில்லை தொல்காப்பியர். `உணரக் கூறின் முன்னர்த் தோன்றும் எனப் புணர்மொழிக் குற்றிய லிகரத்துக்கும், `கடப்பாடறிந்த புணரியலான’ எனப் புணர்மொழிக் குற்றியலுகரத்துக்கும், `ஈரியல் மருங்கினும்’ எனப் புணர்மொழி ஆய்தத்துக்கும் உரிய வேறியல்களிற் காண்க என்றார் ஆசிரியர். இவ்வாறு இலக்கணத் தெளிவுபட நூன்முறை வகுத்திருப்பதையே `மயங்காமரபின் எழுத்துமுறை காட்டி’ எனப் பாயிரம் பாராட்டுகின்றது. “யகரம் வருவழி யிகரங் குறுகும் உகரக் கிளவி துவரத் தோன்றாது” எனவரும் குற்றியலுகர நூற்பாவைத்தான் `உணரக்கூறின் பின்னர்த் தோன்றும்’ என்பது சுட்டும்; எனவே ஒரு மொழிக் குற்றியலுகாச் சொற்கள் நிலைமொழியாக நிற்க வருமொழி யகரம் யகரம் புணரும்போது குறுகிய இகரம் தோன்றும் என அறிகின்றோம். யகரம் வருமொழி என்று கூறினாலும், `ஆவோடவல்லது யகரம் முதலாது’ என்றபடி, யா என்ற ஆகாரவுயிர் மெய்யே கொள்ளப்படும். ஒருமொழிக் குற்றியலிகரத்திற்கும் புணர்மொழிக் குற்றியலிகரத்திற்கும் சூழ்நிலையில் ஓர் ஒற்றுமையுண்டு. மியா நாடியாது என ஈரிடத்தும் யா என்ற ஒலிக்குமுன் இகரம் குறுகுகின்றது. முன்னர் என்பது எதிர்காலத்தைக் குறிக்கும். முற்போக்கு என்பது போல, `புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே என்ற உம்மைக்குக் குறுகாமலும் வரும் என்பது பொருளன்று. ஒரு மொழியிலேயன்றிக் குற்றியலுகரம் புணர்மொழியிலும் குறுரும் என்ற எச்சவும்மையாகும். `இடனுமாருண்டே என்று வரும் நூற்பா நடைக்கும் இதுவே பொருள். ஈண்டு ஒருநல் விளக்கம் நாடியது என்ற புணர்மொழி நாடு + யாது எனவும் நாடி + யாது எனவும் பிரிப்பதற்கு இடனாகின்றது. வேறுபாடு காண்பது எப்படி? நாடு என்பது நிலைமொழியாயின் அவ்விடத்து இகரம் குற்றியலிகரமாய் அரைமாத்திரையாய் ஒலிக்கும். எழுத்துவடிவில் நாடியாது என இகரத்தின் மேல் புள்ளிபெறும். நாடி என்பது நிலை மொழியாயின் இகரம் குற்றுகரமாய் ஒரு மாத்திரை இசைக்கும். நாடி யாது என எழுத்து வடிவில் புள்ளிபெறாது. எம்மொழியிலும் இத்தகைய மயக்கங்கட்கு இடனுண்டெனினும் பேச்சுச் சூழ்நிலை நோக்கிப் பொருள்தானே விளங்கித் தோன்றும். மாடியாது வண்டி யாது, காசியாது, கொக்கியாது என்பனவும் அத்தன்மையன. தூசியாது என்ற புணர்ச்சியில் தூசும் தூசியும் ஒரு பொருளனவாதலின் இலக்கணத்தால் பொருள் வேறுபடவில்லை என அறிக. இவ்விலக்கணம் பிற்காலத்து வழக்கு வீழ்ந்தது. ஒருமொழிக் குற்றியலுகரம் (33) நெட்டெழுத் திம்பரும் தொடர்மொழி யீற்றும் குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே. இஃது ஒருமொழிக் குற்றியலுகரத்தின் சார்புநிலை கூறும். அகலவுரை `சார்ந்துவரல் மரபின் என்ற நூற்பாவிற் கூறிய வரிசைப்படி குற்றியலுகரம் குறுகுதற்கு எவற்றைச் சார்ந்துவரும் எனக்காட்டுகின்றார். குற்றியலுகரம் தனி நெட்டெழுத்துக்குப் பின் ஆறு வல்லெழுத்துக்கள் மேல் ஏறிவரும். தொடர் மொழிக்கு இறுதியில் அதுபோல் ஆறு வல்லெழுத்துக்களைச் சார்ந்து வரும். இம்பர் - பின்பு. தொடர்மொழி - எழுத்துக்கள் தொடர்ந்த ஒரு சொல் வல்லாறு - க ச ட த ப ற என்ற வல்லினம். வழுக்கு: போகு, மாசு, ஆடு, ஓது, கைபு, ஆறு - நெடில் போக்கு: வீச்சு, ஆட்டு, சாத்து, காப்பு, மாற்று - வன்றொடர் அங்கு, அஞ்சு, அண்டு, அந்து, அம்பு, அன்று - மென்றோடர் எய்து, மார்பு, பல்கு, மாழ்கு, மாள்கு - இடைத்தொடர் எஃகு, கஃசு, பஃது - ஆய்தத்தொடர் பழகு, தராசு, தவிடு, பாதீடு, கழுகு, வல்லூறு, சொல்லெடு, நாளேடு, நிறைபு. - உயிர்த்தொடர். திறனுரை குற்றியலுகரம், நெடில், உயிர்த்தொடர், வன்றொடர், மென்றொடர், இடைத்தொடர், ஆய்தத் தொடர் என ஆறு வகைப்படும் எனக் குற்றியலுகரப் புணரியற்கண் வகைசெய்வர் ஆசிரியர் இவ்வகைக்கேற்பப் புணர்ச்சி வேறுபடுதலை அவ் வியலிற் காண்க. மொழிமரபு என்ற இவ்வியலில் குற்றியலுகரம் சார்பெழுத்தாகும் மொழிச் சூழ்நிலையே கூறுவர். தொல்காப்பியத்தைக் கற்போர் `தொடர்மொழி’ என்ற குறியீட்டினை மயங்காது விளங்கிக்கொள்ள வேண்டும். இரண்டெழுத்துக்கு மேல் தொடர்ந்து ஒருசொல் என்பது பொருள். மகன், பாட்டு, பிணங்கு, வள்ளுவர், தொல்காப்பியர் இவையெல்லாம் தொடர்மொழிகள் ஆ, வா, போ, தீ இவை ஓரெழுத்தொருமொழி எனப்படும். அடை, அது. நாம் காசு இவை ஈரெழுத்தொருமொழி எனப்படும். பிற்காலத்தும் இக்காலத்தும் தொடர்மொழி என்பது சொற்கள் தொடர்ந்த நடையைக் குறிக்கும். சிதம்பரனார் செக்கிழுத்தார்; சிதம்பரனார் சிறைச்சாலையில் நாட்டு விடுதலைக்காகச் செக்கிழுத்தார்; பாரதியார் இவர் பெருமையைப் பாடினார். இவையெல்லாம் தொடர்மொழி என இக்காலத்துப் பெயர்பெறுகின்றன. இவ்வேற்றுமையைக் கருத்துட்கொண்டு தொல்காப்பியத்திறனைக் கற்கவேண்டும். நாம் இன்று தொடர்மொழி என்பதனைத் தொல்காப்பியர் புணர்மொழி என்பர். இதன்மேல் விளக்கத்தை `ஓரெழுத்தொரு’ மொழி எனப் பின்வரும் நூற்பாவுரையிற் காண்க. நெட்டெழுத்திம்பர் என்பது நாடு. பேச, காது முதலியவற்றைக் குறிக்கும். இவை ஈரெழுத்தொரு மொழிகள். தொடர்மொழியீறு என்பது படம். பண்டு, மார்பு, எஃகு, பார்ப்பு, கூப்பாடு முதலியவற்றைக் குறிக்கும். இவை இரண்டுக்கும் மேற்பட்ட எழுத்துடைச் சொற்கள். அதனாலன்றோ ஒருமொழிக் குற்றியலுகரம் எனப்பட்டன. `நெட்டெழுத்திம்பர் என்றதனால் அது. படு, பசு எனத் தனிக் குற்றெழுத்தால் இறுவன குற்றியலுகரம் ஆகா என்பதும் `வல்லாறு ஊர்ந்து’ என்பதனால் தும்மு, மண்ணு, தாவு, புள்ளு, செலவு, வரவு என்பன மெல்லீறும் இடையீறும் கொள்வதால் குற்றியலுகரம் ஆகா என்பதும் தெளியப்படும். ஆதலின் இந்நூற்பா விலக்கியுணர்த்தும் நடையுடையது எனக்கொள்க. இந்நூற்பாவில் பயனிலை இல்லை. நிற்றல்வேண்டும் என்ற முந்தைக்கு முந்திய நூற்பாத் தொடரைப் பயனிலையாக மாட்டேற்றல் இயைபன்று. தோன்றா எழுவாய் போல அரிதாகத் தோன்றாப் பயனிலையும் கொள்ளலாம். நன்னூலாரும் பதவியலில் `ஆயீறையும் ஈயீறிகரமும்’ என்று முடியாது முடித்திருத்தலை ஒப்புநோக்குக. `எல்லாம் மழை’ என்ற திருக்குறள் நடையும் இதன்பாற்படும். இதனை அவாய்நிலை என்பர் இலக்கணியர். இன்னொரு வகையாகவும் இம்முடிபினைச் சிந்திக்கலாம். மலையாளத்தில் வினை முற்றுக்கள் பாலீறுகள் பெறுவதில்லை. பண்டு தமிழில் வழக்கிலிருந்த வினைமுற்று வடிவங்கள் பின்பு தமிழில் வழக்கற்று இன்று மலையாளத்தில் வழங்குகின்றன என்று கேரளபாணினீயம் எடுத்தக்காட்டியபடி, வல்லாறு ஊர்ந்து என்பதனை பாலீறுபெறா முற்றாகவும் கருதிக்கொள்ள இடனுண்டு. இது சிந்தனைக்குரியது. இன்று எவ்வகைச் சொற்களிலும் இறுதியுகரம் ஓரளவேனும் குறுகியொலிப்பதைக் கேட்கின்றோம்; எனினும் புணர்ச்சிக்கண் முன்போலவே வேறுபாடுகள் உள. புணர்மொழிக் குற்றியலுகரம் (34) இடைப்படிற் குறுகு மிடனுமா ருண்டே கடப்பா டறிந்த புணரிய லான. இது குற்றியலுகரம் இருமொழிப்புணர்ச்சியிடைக் குறுகும் என்று கூறும். அகலவுரை ஒருமொழிக் குற்றியலுகரச் சொற்கட்கு இடனும் பற்றுக்கோடும் மேலே கூறினார். அச்சொற்கள் நிலைமொழியாக வருமொழியாக புணரும்போது உகரம் இடைப்படுமல்லவா? அவ்வாறு வரும் உகரம் குறுகும் இடங்களும் உண்டு; அவற்றை முறையாகச் சொல்ல வேண்டிய குற்றியலுகரப் புணரியலின் கண்ணே காணலாம். இடைப்படின் - நடுவே வரின். கடப்பாடு - சொல்லத்தகும் இடம். ஆன் - இடத்து. வழக்கு நாடு சிறக்கும், அழகு வளரும் - அல்வழித்தொடர் நாட்டுக் கடமை, அழகுக் கலை - வேற்றுமைத்தொகை திறனுரை இது மொழிமரபாதலின் ஒரு மொழியளவுக்கே இலக்கணம் கூறப்படும். புணர்மொழிக்கு உரியவியல்களிற் கூறுவதே கடப்பாடு. ஆதலின், `கடப்பாடு அறிந்த புணரியல் என்றார். அஃது ஒன்பதாம் இயலான குற்றியலுகரப் புணரியல் ஆகும். `அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எல்லா விறுதியும் உகரம் நிறையும் என ஆங்கு வரும் நூற்பாவே ஈண்டுக் குறிக்கப் பெறுவது எனக் கொள்க. நாடு சிறந்தது என்பதில் குற்றியலுகரம் ஈறாக, இருந்தாலும் புணர்மொழியில் நடுவேயிருத்தலின் `இடைப்படின் எனப்பட்டது. `இடனுமாருண்டே' என்பது அருகிவருவதைக் குறிக்க வில்லை. குற்றியலுகரம் ஒரு மொழியில் இருப்பது போலப் புணர்மொழிவிலும் உண்டு என்பதே பொருள். இஃது எச்சவும்மை. ஒருமொழியாய்தம் (35) குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே. இஃது ஒருமொழியாய் தத்தின் சார்பு நிலைகூறும். அகலவுரை `சார்ந்து வரல் மரபின்மூன்று' என்ற வரிசைப்படி ஆய்தம் கூறுகின்றார். ஆய்தப்புள்ளி குற்றெழுத்திற்குப்பின்னே உயிர்மெய் வல்லெழுத்துக்களுக்கு முன்னே வரும். மிசைந்து - இடப்பக்கமாக அடுத்தது. வழக்கு: (எ.கு) (எஃகு) க.சு (கஃசு) அ.து (அஃது) ப. றி (பஃறி) திறனுரை ஆய்தத்திற்கு முன்னும் பின்னும் வரும் இருபாற் சூழ்நிலை கூறுவது இந்நூற்பா. இதன் அமைப்புப்படி ஒரு மொழியாய்தம் எ.கு (எஃகு) வெ.கா (வெஃகா) என மூன்றெழுத் தளவில் அடங்கும். அஃதாவது இரண்டிறந்திசைக்கும் தொடர் மொழி வகையாகும். அறுவகைக் குற்றியலுகரத்துள் ஆய்தத் தொடர்மொழியும் ஒன்று என்பதை நினைக. முன்னே குற்றெழுத்து என்பதனால் (எ.கு) (எஃகு) என்பது போலத் தனிக்குறிலாகவோ க.சு. (கஃசு) என்பது போல உயிர்மெய்க் குறிலாகவோ இருக்கலாம்; எனினும் அதற்குமுன் இன்னொரு எழுத்துத் தொடர்வதில்லை என்பது தெளிவு. `உயிரொடு புணர்ந்த வரலாறு' என்பதனால் ஆய்தத்திற்குப் பின்பு எந்த ஒற்றெழுத்தும் வாராது என்பதும் வல்லெழுத்து வரினும் அவை உயிரொடு சேர்ந்த உயிர் மெய்யாகவே வரும் என்பதும் பெறப்படும். உயிரொடு எனப் பொதுப்படக் கூறியமையால் வெ.கா. (வெஃகா) அ.தை (அஃதை) ப.றி. (பஃறி) என எந்தவுயிரும் தொடரலாம் என்பதும் பெறப்படும். புள்ளிவடிவு பெறும் எழுத்துக்கள் தமிழிற் பலவுண்டு. அவையெல்லாம் ஒரு முதலெழுத்திருக்கக் கூடுதலாக உடன் வருபவை. குற்றியலிகரமும் குற்றியலுகரமும் முதலெழுத்தாகிய இகர வுகர வடிவங்களின் மேலே புள்ளியும் பெறும். ஆய்தத் திற்குப் புள்ளியல்லது முதலெழுத்து வடிவம் இன்மையின், `ஆய்தப்புள்ளி' என்றே பெயருண்டாயிற்று. இஃது ஓராட்குழு என்று சொல்லும் இன்றைய வாழ்க்கை ஒத்தது. இன்னொரு விளக்கம்: புள்ளிக்குறிகள் நிற்கும் இடங்களில் வேறுபாடுண்டு. ஆய்தப்புள்ளி என்ற எழுவாய்க்கு `மிசைத்து' என்ற ஒன்றன்பால்வினை முற்று இருத்தலின், புள்ளி ஒன்றே என்பதும், குறியதன் முன்னரும் ஆறன் மிசைத்தும் என்பதனால் நடுவே இடப்பக்கத்து அடுத்து நிற்கும் என்பதும் போதரும். காண்க: எ.கு. க.சு அ.து. `தத்தமிசைள் ஒத்தன' என நூன் மரபிலும், `வகார மிசையும்' எனப்புள்ளி மயங்கியலிலும் `அத்தும் ஆன்மிசை' என அவ்வியலிலும் இடப்பக்கத்து அடுத்து என்ற பொருள்பட வருதலையுணரலாம். ஒருமொழிக் குற்றியலிகரம் ஒரு சொல்லளவில் வருதலின் மியா என்ற அச்சொல்லையே நூற்பாவில் வைத்து விளக்கினார் ஆசிரியர். ஒருமொழிக் குற்றியலுகரமும் ஒருமொழி யாய்தமும் பலசொற்கள் உடைமையான், இலக்கண வகையால் வரு¨சூழ்நிலைகள் கூறப்பட்டன. ஆய்தத்தைச் சிலவாண்டுகளாக இதழ்களிலும் நூல்களிலும் விளம்பரங்களிலும் எழுத்துவழக்கில் தவறாகக் கையாளும் ஒரு தீய போக்கினைச் சுட்டிக் காட்டி இடித் துரைத்துக் களைய விரும்புகின்றேன். இளைதாக முள்மரம் களையாவிட்டால் அயற்களைகள் மேவித் தமிழ்நாற்றுக்கள் இடம்பெறா. குற்றெழுத்துக்குப் பின்னும் உயிர்மெய்வல்லெழுத்துக்கு முன்னும் இரண்டின் சார்பாக ஆய்தவொலி தோன்றும். இரு சிறகெழுப்ப எழும் உடலது போல் என்று உரையாசிரியர்கள் உவமை கூறுவர். ஆய்தம் நுணுகிய நலிவோசையாதலின் குழந்தையைக் தூக்குவதுபோல இருகைகளாலும் எழுப்ப வேண்டும். இவ்வாறே எஃகு, பஃது, வெஃகாமை, அஃகாமை, அஃறிணை, பஃறொடை, பஃறுளி முதலான தமிழ்ச்சொற்கள் அமைந்துள. இன்றோ ஆறாவது ஆங்கிலவொலிக்கு நிகராக ஆய்தத்தை மொழிமுதலாகக் கையாளும் போக்கு ஒருபகட்டாகப் பெருகி வருகின்றது. புல்லிய இப்போக்கால் ஆறாவது ஒலியுடைய பல ஆங்கிலச் சொற்கள் அப்படியே தமிழெனப் புகுத்தப்படுகின்றன. விசிறி, கடை, நிதியகம், திரைப்படம், நிலைவைப்பு, சீட்டுக்கடை, சுத்தி, படிப்புதவி, படிவம், கோப்பு, குளிர்ப்பொறி, தூயாலை, தொழிற்சாலை, அழகி, தந்தை. தீப்பெட்டித் தொழில், நிதிமுடக்கம் என்ற பொருளுடைய ஆங்கிலச் சொற்கள் எல்லாம் ஆய்தத்தை முதலாகக் கொண்டு ஒருவாறு தமிழெழுத்தால் எழுதப்படு கின்றன. இவ்வொரு ஒலிக்களையால் அண்மைக்காலத்துத் தமிழுக்கு விளையும் ஊறுகள் பல. இவ்வாறு சென்றால் ஆங்கிலவகராதியில் ஆறாவது ஒலியுடைய எண்ணிறந்த சொற்களும் ஆய்தமுதலாகத் தமிழகராதியில் ஏறுமல்லவா? ஏமாந்தால் வேறு ஒலிகளும் ஏறலாமென்று பதம் பார்க்குமல்லவா? ஆறாவது ஒலி இடையிலும் இறுதியிலும் வரும் ஆங்கிலச் சொற்கள் கூட வரவரக் கலக்கின்றன. நல்ல தமிழ்ச் சொற்களுங்கூட ஆய்தம் இருப்பதால் ஆங்கில ஆறாவது ஒலியாகப் படிக்கப்படுகின்றன. இதனால் தமிழாக்கம் செய்வது தடைப்படுவதோடு இன்றொரு அடிமுரணும் ஏற்படுகின்றது. எழுத்துக்கு ஒலி, சொல்லாகும் போது ஓர் ஒலி, சொல் லொலிப்பு முறையெல்லாம் ஆங்கிலத்துக்கு உண்டு. தமிழுக்கு அன்னநிலையில்லை. எழுத்தொலியைக் கூட்டிப் படித்தால் சொல்லைச் சொல்லிவிடலாம். சொற்களைச் சொல்லுவதற் கென்று தனியொலிப்புப் பயிற்சி வேண்டிய தில்லை. இது நம் மொழியின் இயல்பு. அயலொலிகளையும் அயற்சொற்களையும் தமிழெழுத்தில் எழுதிவிடுவதால், தமிழாகிவிடாது; தமிழாக்கமும் ஆகாது. இன்றோ ஆங்கிலத்தின் ஆறாவது ஒலியை முதலிலோ இடையிலோ இறுதியிலோ போடுவதால் தமிழ்முறைப்படி எழுத்துக் கூட்டிப் படிக்கமுடியாது. இப்படி இச்சொல்லைச் சொல்ல வேண்டுமென்று தனியிலக்கணம் தெரியவேண்டும். ஆங்கிலத்தைச்சுட்டித் தமிழ்ச் சொல்லைக் கற்பித்தாக வேண்டும். பண்பட்ட செந்தமிழுக்கு விளைந்து வரும் கீழறை இது. எஃகு, அஃறிணை என இடையில் இருக்க வேண்டிய அடுப்புக்கூட்டு வடிவு மொழிக்கு முதலில் வந்திருக்கும் தீயூழ்க்காலம் இது. இலக்கண வரம்புமிக்க செம்மொழிக்கு அறிவியல் வளரும் இக்காலத்து, ஒருசாரார் இழைத்து வரும் அட்டூழியம் இது. ஆதலின், `அல்லது செய்தல் ஓம்புமின்' என்றபடி இனியேனும் நாம் கடைப்பிடிக்க வேண்டிய மொழியொழுக்கங்கள் யாவை? 1. ஆங்கிலத்தின் ஆறாவது ஒலிக்கு நிகராக நம் ஆய்தவொலியை எவ்விடத்தும் பயன்படுத்தக்கூடாது. 2. அத்தகு ஆங்கிலச் சொற்கள் பலவற்றிற்கு முன்னரே தக்க தமிழ்ச்சொற்கள் உள. அவற்றை ஆளவேண்டும். உரிய சொற்கள் இலவெனின் தமிழாக்கம் செய்து கொள்ள வேண்டும். 3. தொல்காப்பியம் முதல் எல்லா இலக்கணிகளும் ஆய்தம் குற்றெழுத்துக்குப் பின்னும் உயிர்மெய் வல்லெழுத்துக்கு முன்னும் வரும் என்று கூறிய வரம்பினைக் கடைப்பிடிக்க வேண்டும். 4. தமிழில் எழுத்துக்கூட்டிச் சொற்களைப் படித்துவிடும் இயல்முறையை என்றும் போற்ற வேண்டும். மொழிக்காப்பு என் உரைநோக்கங்களுள் ஒன்றாதலின் ஆய்தப்போக்கினைச் சுட்டி நெறிப்படுத்துவது என் கடமையாயிற்று. முன் எழுந்த உரைகளும் இது தகும் இது தகாது என்று மொழியறம் சுட்டி நெறிப்படுத்தியிருப்பதை நாம் அறியாதவர்களல்லர். ஆய்த நிலையை யறிக இலக்கணஞ் சாய்தல் தமிழுக்குச் சாய்வு புணர்மொழியாய்தம் (36) ஈறியல் மருங்கினும் இசைமை தோன்றும். இஃது ஆய்தம் இருமொழிப் புணர்ச்சியிலும் வருவது கூறும். அகலவுரை மேற்சொல்லிய ஒரு மொழிக்கண்ணேயன்றி நிலைமொழியீறு வருமொழியோடு புணரும் புணர்ச்சியிலும் ஆய்தச்சார்பொலி தோன்றும். இசைமை - ஒலித்தன்மை. வழக்கு: அ. றிணை - அஃறிணை (அல் + திணை) ப. றுளி - பஃறுளி (பல் + துளி) ப. றொடை - பஃறொடை (பல் + தொடை) க. றீது -கஃறீது (கல் + தீது) மு. டீது -முஃடீது (முள் +தீது) அ. கடிய - அஃகடிய (அவ் + கடிய) திறனுரை மூன்று சார்பெழுத்துக்களுமே ஒரு மொழியிலும் புணர்மொழியிலும் வருமென இதுகாறும் கூறப்பட்டன. மொழிமரபு ஒருமொழி பற்றியதாகலின் இம்மூன்றும் உரிய பற்றுக்கோடுகளை ஈண்டே கூறிமுடித்தார். புணர் மொழிக் குரியவற்றை உரிய புணரியல்களிற் கண்டுகொள்க என்றும் நினைவூட்டினார். `கடப்பாடறிந்த புணரியலான' என்று குற்றியலுகரத்துக்குக் கூறியதை இங்கும் ஏற்றிக்கொள்ள வேண்டும். “தகரம் வருவழி ஆய்தம் நிலையலும் புகரின் றென்மனார் புலமை யோரே” “ஆய்தம் நிலையலும் வரைநிலை யின்றே தகரம் வரூஉங் காலை யான” “வேற்றுமை யல்வழி யாய்த மாகும்” என்று புள்ளி மயங்கியலில் வரும் மூன்று நூற்பாக்களே புணர்மொழியாய்தம் பற்றியவை. இகரவுகரங்கள் முதலெழுத்தாகவும் இருத்தலின் குற்றியலிகரம் குற்றியலுகரமென இவ்விரண்டும் குறுமையடை எய்தின. ஆய்தத்திற்கு அங்ஙனம் ஒரு முதலெழுத்தின்மையின் குற்றாய்தம் அல்லது குற்றியலாய்தம் என்ற பெயருக்கு இடனில்லை, குறுக்கம் என்ற கருத்துமில்லை. அரைமாத்திரைப் பேறு அதனியல்பு. புணர்மொழிக்கண்ணும் ஆய்தம் ஒருமொழியிற் போலவே குற்றெழுத்தின் பின்னும் உயிர்மெய் வல்லெழுத்தின் முன்னும் வரும். காண்க: அஃறிணை, கஃறீது, முஃடீது. ஈண்டுவரும் வல்லெழுத்து தகரம் திரிந்த றகரமாகவோ டகரமாகவோ இருக்கும் `ஈறியல் மருங்கின்' என்பதனால் ஈறு திரிந்து ஆய்தமாகும் என்பது பெறப்படும். பல்தமிழ்க்கழகம் பஃறமிழ்க்கழகம் எனவும் பல்தொழிற்கல்லூரி பஃறொழிற்கல்லூரி எனவும் பண்டை இலக்கணப்படி வரவேண்டும். பிறக்காலத்து வழக்கு வீழ்ந்த புணர்ச்சியிலக்கணங்களுள் இதுவும் ஒன்றாதலின், பல் தமிழ்க்கழகம், பல்தொழிற்கல்லூரி என இன்று எழுதுவது பொருந்தும்; இஃது அடிப்படைக்கு மாறுபாடன்று. மொழிக்குறிப்பு (37) உருவினும் இசையினும் அருகித் தோன்றும் மொழிக்குறிப் பெல்லாம் எழுத்தி னியலா ஆய்த மஃகாக் காலை யான. இது வரிவடிவில்லாத ஆய்தநிலை கூறும். அகலவுரை நிறம் பற்றியும் ஓசை பற்றியும் அருகி வருவன மொழிக்குறிப்பு எனப்படும். இவை நேர் பொருண்மையுடைய சொற்கள் அல்ல. ஆதலின் எழுத்துக்களால் எழுதிக்காட்ட முடியா. இவற்றில் வரும் ஆய்தவோசைகள் நலியாமல் நீண்டொலிப்பன. ஆய்தம் நலியா இடத்து எழுத்துப்பெறா என்ற எதிர்மறையால் ஆய்தம் நலிந்தவிடத்தும் பொருண்மையுடைய சொற்கள் எஃகு, கஃசு என வடிவவெழுத்துப் பெறும் என்பது கருத்து. உரை : ஆய்தம் அரைமாத்திரையாக நலியாது நீண்ட இடங்களில் நிறத்திலும் ஓசையிலும் சிறப்பாக வரும் மொழிக்குறிப்பெல்லாம், சொற்கள் எழுத்தில் எழுதப்படுவது போல, எழுதமுடியா. வழக்கு: கஃறு என்னும் கல்லதரத்தம் - நிறம் பற்றியது. சுஃறு என்னும் தண்டோட்டுப் பெண்ணை - ஓசை பற்றியது. திறனுரை குற்றியலிகரத்துக்கு இருநூற்பா, குற்றியலுகரத்துக்கு இருநூற்பா கூறிய ஆசிரியர் ஆய்தத்துக்கு மூன்று நூற்பா செய்வர். முதலிரு நூற்பாக்கள் ஆய்தம் அரைமாத்திரை கொண்ட சொற்களில் வரும்போது இலக்கணம் கூறுவன. இவை மொழிகளேயன்றி மொழிக்குறிப்பில்லை. நலிவுடையாய் தம் இவற்றின் அடிப்படை. நிறக்குறிப்பும் ஓசைக்குறிப்புப் புலப்படுத்த ஆய்தவோசை வரும் இடங்களும் உண்டு. இவை மொழிக்குறிப்பு எனப்படும். இவ்விடங்களில் இவ்வோசை மாத்திரைக்கு உட்படாது சொல்வான் அழுத்தத்துக்கேற்ப நீளும். அளபெடைபோல எழுத்தின் அடிப்படையில் நீளாமல், ஓசை தன்னளவில் நீண்டொலிக்கும். அளபிறந்துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் இசைத்தமிழில் எழுத்துப் பெறாமையை ஒப்பிடுக. வருகின்ற நூற்பாஅளபெடை பற்றியது. அளபெடை நீட்சிக்கண் அஃதாவது, அஃகாக்காலை, மொழிவயின் ஒத்த குற்றெழுத்து வடிவினால் எழுதப்படும் என்ற இலக்கணம் கூறுவது. அதனோடு இந்நூற்பாவை இணைத்துக் காண வேண்டும். காணின், உருவினும் இசையினும் வரும் ஆய்தவோச மொழிக்குறிப்பாதலின் எழுத்துக்குறிக்கு வாரா என்பது போதரும். அளபெடை முதலெழுத்துக்கே யாதலின் இவ்வாய்த நீட்சி அளபெடையெனலாகாது. “கண்ண் டண்ணணெனக் கண்டுங்கேட்டும்” என்ற மலைபடுகடாம் ஒற்றள பெடைபோல ஆய்தம் இரண்டு பெறுதற்குமில்லை. ஆய்தம் தானே சார்பாக இருக்கும்போது தான் இன்னொன்றுக்குச் சார்பாக உதவும் என்பது பொருத்தமன்று. இருநலிவு நீட்சியுமாகாது. ஆதலின் ஆய்தவோசைப்பட வரும் நிறம் ஒலி பற்றிய சொற்குறிப்பு நீண்டோசைப்படுங்கால் எழுத்துவடிவுக்கு உட்பட்டு வாரா என்பதும், எழுத்துவடிவுக்கு உட்படுவன முதலிரு நூற்பாக்களில் சுட்டிய அரைமாத்திரை கொண்ட பொருட் சொற்களே என்பதும் இம்மூன்றாம் நூற்பாவின் தெளிபொருளாம். ஒத்தது கூறல் என்றும் நெறியால் எவ்வகைமொழிக் குறிப்பும் நேரிய எழுத்து வடிவம் பெறா எனக்கொள்க. உண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே டொண்டொண்டொண் டென்னும் பறை என்பது நாலடியார், இசைநிறை (38) குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும் நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே. இஃது இசைநிறைப்பும் அதற்குக் குறியும் கூறும். அகலவுரை சில சொற்களில் இசை குறையும்போது நெட்டெழுத் துக்குப் பின்னே அதற்கினமான குற்றெழுத்துக்கள் வந்துநின்று இசையை நிறைவுசெய்யும். வழக்கு: வாஅய்மை, குரீஇ, ஆடூஉ, சேஎய், அளைஇ, போஒய், கௌஒவை, துன்புறூஉம், எடுப்பதூஉம், செறாஅஅய். திறனுரை எழுத்திலக்கணக்கூறுகளுள் இந்நூற்பாவின் கருத்து சிறப்புடையது; நன்கு ஆராய்ந்து தெளிதற்கும் உரியது. இசை குறைவது செய்யுளில் என்றோ இசை நிறைப்பது அளபெடை என்றோ எக்குறிப்பும் நூற்பாவில் இல்லை. எனவே இந்நூற்பா வழக்கிற்கும் செய்யுட்கும் பொதுவெனக் கொள்ள வேண்டும். வழக்கில் ஆடூஉ மகடூஉ மரூஉ என வருதலும் என்பதூஉம் என உரைநடையில் வருதலும் காண்க. சேய்மை விளியில் எல்லாம் இசைநிறைவு வரும். செய்யுளிலுங்கூட இன்னிசையளபெடை என்பது யாப்பு நோக்கியதன்று எனவும் வழக்கிற்போல இன்னோசை நிறைவுக்கு வருவது எனவும் கொள்ளவேண்டும். இவ்வாறு சொல்லோசை யிருத்தலின் `குன்றிசை மொழிவயின்' எனப் பொதுப்படக் கூறினார் ஆசிரியர். குன்றுதல் என்பது யாப்புக்காகவும் குன்றலாம், செவிக்கு இன்னோசையும் குன்றலாமன்றோ. இசை குன்றுவது சொல். அதனை நிறைக்குங்கால், அச் சொல்லில் முதலிலோ இடையிலோ இறுதியிலோ இருக்கும் நெட்டெழுத்தே உரிய இடமாகும். அந் நெட்டெழுத்துக்குப் பின் உரிய குற்றெழுத்து வந்து இசை நிறைவு செய்யும். வாஅய்மை - முதலில் - `ஆ' நெட்டெழுத்துக்குப்பின் `அ' குற்றெழுத்து வந்தது புலாஅல் - இடையில் அவ்வாறு வந்தது படாஅ - இறுதியில் அவ்வாறு வந்தது வரூஉம், தரூஉம், படூஉம் என்ற இடங்களில், வரும், தரும், படும் என்று குற்றுகரம் நெட்டெழுத்தாகி அளபெடையதால் காண்க. இசை நிறைக்கும் இக்குற்றெழுத்துக்கள் அ, இ, உ, எ, ஒ என்ற உயிர் வடிவிலேயே நெட்டெழுத்தின்பின் எழுதப்படும். தமிழில் சொற்களுக்கு இடையிலோ இறுதியிலோ உயிர் வடிவு வருதலில்லை. அளபெடையில் வரும்போது அறிகுறி என்று வேறுபடுத்திக் காட்டுவதற்கே உயிர்வடிவு நிற்கும். குற்றெழுத்து என்பது உயிர்க்குற்றெழுத்து வடிவன் என்று கொள்க. நின்று என்பதனால் இந்நூற்பா வரிவடிவு குறித்ததாம். இதுவுமது (39) ஐ ஒள வென்றும் ஆயீரெழுத்திற்கு இகர உகரம் இசைநிறை வாகும். இஃது இரண்டு நெட்டெழுத்துக்கு ஒத்த குற்றெழுத்துக் கூறும். அகலவுரை நெட்டெழுத்து ஏழு குற்றெழுத்து ஐந்து என்ற நெடுங்கணக்கில் ஐ, ஒள என்ற இரண்டு நெட்டெழுத்துக்கும் ஒத்த குற்றெழுத்துக்கள் இல்லையல்லவா? இசை நிறைக்குங்கால், அறிகுறியாவன யாவை? என்பது வினா. அதனைத் தெளிவிக்கத் தோன்றியது இந்நூற்பா. ஐ என்ற நெடிலுக்கு இகரமும், ஒள என்ற நெடிலுக்கு உகரமும் ஒத்த குற்றெழுத்தாகிக் குன்றிசை மொழியிடத்து இசை நிறைக்கும். வழக்கு: வளித் தலைஇய தீயும்; ஐவரொடு சினைஇ. தௌஉவை, மௌஉவல். திறனுரை ஐயங்களைவது இந்நூற்பாவின் பயன். ஐ என்று ஒலிக்கும் போது இகரமும் ஒள என்று ஒலிக்கும் போது உகரமும் இறுதியில் இழுமென் ஓசையாக விழுவதைச் செவி கருவியாக உணரலாம். ஆதலின் இவ்விரு குற்றெழுத்துக்களும் இயல்பாக ஒத்தனவே. முன்நூற்பாவிலும் இந்நூற்பாவிலும் கூறியபடி சொற்களே இசைநிறைவுக்குரியன; நெட்டெழுத்துக்கள் அல்ல. எனினும் அந்த நிறைவை ஈரளபுடைய நெடில்கள் மேலும் நீண்டு நிறைக்கும் எனவும் அந்த ஓசைச்செய்தியைக் காட்டும் அறிகுறியாக உயிர்க்குறில் வடிவங்கள் நிற்கும் எனவும் தெளிக. இவ்விரு நூற்பாவிலும் அளபெடைக் கருத்து வெளிப்படையாக வில்லை. இசை நிறைவு என்பதும் ஓர் இலக்கணக் குறியீடாகும். அளபெடை இசைநிறைவுக்குள் அடங்கியது. மேலும் இசை நிறைவு என்பது ஒலி நீட்சியின் பயனைக் குறிக்கும். நெட்டெழுத்து ஏழனுள் ஐ ஒள என்ற இரண்டும் சிலவற்றில் நெருக்கம் உடையவை. `ஆயீரெழுத்திற்கு' என்ற நடை இதனைக் காட்டும். ஒருமொழி (40) நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே. இஃது உயிரெழுத்துகட்கு மொழித்தன்மை கூறும். அகலவுரை நூன்மரபில் ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்பன நெட்டெழுத்து என்றார். நெட்டெழுத்தாம் அவ்வொலியன்களே நின்றாங்கு பொருண்மை குறிக்கும் ஓரெழுத்தொரு மொழிகளாக வரும். குற்றெழுத்தின் நிலை என்ன? அ இ உ எ ஒ என்ற ஐந்து ஒலியன்களும் நின்றாங்கு பொருண்மை குறிக்கும் சொற்களாக முழுமை பெறுவதில்லை. ஈண்டு நெட்டெழுத்து குற்றெழுத்து என்பன உயிர்களையே குறிக்கும். உயிர்மெய்களைக் குறியா. நிறைபு - நிறைதல், தொழிற்பெயர். வழக்கு:ஆ - பசு முதலிய பொருள் ஈ - கொடு, பறக்கும் ஈ முதலிய பொருள் ஊ - தசை ஏ - அம்பு ஐ - தலைவன், வியப்பு ஓ - மதகுநீர்தாங்கும் பலகை, ஒளி ஒள - கவ்வுதல், கோணல். திறனுரை குறில் நெடிலென உயிர் இருவகைப்படும். இவற்றுள் நெடில்கள் கிடந்தாங்கே சொல்லாகவும் வரும் சிறப்புடையன. இச்சிறப்புக் கிடப்பினைப் புலப்படுவதே இந்நூற்பாவின் நோக்கம். நெடில்கள் இவ்வாறு வருமெனின், உயிரின் இன்னொருவகையான குறில்களின் நிலை என்ன? என்ற வினா எழவே செய்யும். அவ்வினாவிற்கு விடை சொல்வது போல அமைந்ததே `குற்றெழுத்தைந்தும் மொழி நிறைபிலவே' என்ற அடி. ஐந்தும் என்பது முற்றும்மை. அ இ உ எ ஒ என்ற எந்த உயிர்க் குற்றெழுத்தும் பொருட்பொருள் காட்டா. அ இ உ என்பன சுட்டுப்பொருளையும் எ தேற்றத்தையும் ஒ சிறப்பினையும் குறிக்குமெனினும் அவை தனிமொழியாந் தன்மையில. இதனை நினைந்தே ஆசிரியர் மொழியாகா என்னாமல் `மொழி நிறை பில' என்றார். மேலை நூற்பாவிற் கூறியபடி குற்றெழுத்துக்கள் இசை நிறைப்பன. மொழி நிறைப்பனவல்ல. மொழி முழுமையல்ல என்பது இந்நூற்பாவின் தெளிவு. மூன்று மொழிநிலை (41) ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி உளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே இது தமிழ்ச் சொற்கூட்டத்தில் மூன்று வகையைக் கூறும். அகலவுரை ஒரு மொழி - ஒரு சொல். தொடர்மொழி - இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் கூடிய ஒருசொல். மொழிநிலை - சொல் வகை. தமிழ்ச் சொற்கள் பல்லாயிரக்கணக்காக இருப்பினும், அனைத்தையும் மூன்றுவகையாக அடக்கிக் கொள்ளலாம். இப்பகுப்பு புணர்ச்சி நோக்கியது. பின்வரும் புணர்ச்சி யிலக்கணங்கள் இந்த மூன்றின் அடிப்படையில் தோன்று கின்றன. ஆதலின் அதற்கு முன்னோடியாக அச்சொற் பாகுபாடுகளையும் குறியீடுகளையும் இந்நூற்பா பொதிந்து வைத்துள்ளது. உரை: ஓரெழுத்தொருமொழி (ஆ,கா.); ஈரெழுத் தொருமொழி (கண், காடு) இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் கூடிவரும் தொடர் ஒருமொழி (தமிழ், அன்பு, தெய்வம், ஞாயிறு) என்று சொற்கள் புணர்ச்சியிடை நிற்கும் நிலைவகை மூன்றேயாம். வழக்கு: ஆ. மா; ஈ, கீ, ஊ, பூ: ஏ, சே; ஐ, கை; ஓ போ; கௌ, வெள, து, நொ - ஓரெழுத்தொருமொழிகள். பல், பால், பாதி, பல சில, கடு, காடு - ஈரெழுத்தொரு மொழிகள். குறள்,கூத்து, வயிறு, குரங்கு: கடவுள், கபிலன், அவிநயன், - இரண்டிறத் திசைக்கும் தொடர்மொழி, அஃதாவது நீண்ட ஒரு சொல். திறனுரை இம்முச்சொற் பாகுபாட்டில் தமிழ்ப்புணர்ச்சிகள் வேறுபாடுறுவதைக் கண்டறிந்தவர் பண்டை இலக்கண நூலோர் என்பது `மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே' என்ற நடைப்பிடியால் அறியலாம். இந்நெறியப்பட்டவரே தொல்காப்பியர். கா, மா, யா, பூ, சே, நீ என்றாங்கு பல ஓரெழுத்தொரு மொழிகளும்; ஆல், வேல், பீர், தாய், மீன், விசை, ஞெமை, இரா, நிலா, பனி, புளி, எடு, செரு என்றாங்கு பல ஈரெழுத்தொரு மொழிகளும்; எல்லாம், ஆவிரை, ஆதன், பூதன், அழன், புழன், பதக்கு, வெயில், மக்கள், வேட்கை, இல்லம் என்றாங்கு பல தொடர் ஒருமொழிகளும் தொல்காப்பியத்தில் பாகுபடப் புணர்க்கப்படுவதைக் கற்கின்றோம். குற்றியலுகரம் அறுவகைப்படும். அவற்றைக் குறிக்கும் போது, “ஈரெழுத்தொருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர் ஆய்தம் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர் ஆயிரு மூன்றே உகரங் குறுகிடன்” என்று குற்றியலுகரப் புணரியலில் இப்பாகுபாட்டினை நினைவூட்டுவர் தொல்காப்பியர். ஈரெழுத்தொருமொழி என்பது காசு, கூடு, கூறு என்று நெடிற்குற்றியலுகரமாம். நெடிற்றொடர் என்று இதனைப் பெயர்ப்படுத்தவில்லை. ஏனைய ஐந்தினையுமே தொடர் என்ற குறியாற் சுட்டுவர். நெடிற்குற்றியலுகரத்தைப் பலவிடங்களில் நெட்டெழுத்திம்பர் எனவும் குறிப்பிடுவரேயன்றித் தொடர் என்று மறந்தும் கூறியதில்லை. பிற்கால இலக்கணிகள் நெடிற்றொடர்க் குற்றிலுகரம் என்று ஏனை ஐந்தினையொப்ப இதனையும் குறிக்கலாயினர். தொல்காப்பியத்து ஆளப்படும் இலக்கணக் குறியீடுகள் பலப்பல. அவை மயக்கமற்றவை. நல்லுரை செய்வதற்கு இக்குறியீடுகளின் பண்டைப் பொருளைக் கூர்ந்து அறியவேண்டும். இந்நூற்பா சிறப்பு மிக்கதாதலின் இன்னொரு முறையும் எழுதிச் சிந்திப்போம். ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி இரண்டிறந் திசைக்கும் தொடர்மொழி உளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே. ஓரெழுத்துச்சொல், ஈரெழுத்துச்சொல், இரண்டுக்கு மேற்பட்ட சொல் என எழுத்தெண்ணிக்கையில் சொல் மூன்று வகைப்படும் என்பது கருத்து. ஆதலின் இரண்டிறந்து இசைக்கும் தொடர்மொழி என்றிருந்தாலும் தொடர் ஒருமொழி அஃதாவது பலவெழுத்துத் தொடரும் ஒருசொல் என்றுதான் பொருள்படும். ஒருமை பன்மை அல்லது ஒன்று பல என்ற தமிழெண் வழக்கு பயனிலையாக வரும் வினைமுற்றுக்கு உரியது. பெயர்ச்சொற்கட்கு எல்லாம் ஒருவர் இருவர் மூவர் நால்வர் எழுவர் பன்னிருவர் அறுபத்துமூவர் என எல்லா எண்களும்; ஒருமொழி, இருகண், ஐந்தமிழ், எழுபிறப்பு, எண்குணம், பதிற்றுப்பத்து, நூற்றிதழ், ஆயிரவூழி என எல்லா எண்ணடைகளும் வரும். `இருபெயர் பல்பெயர் அளவின் பெயர்' என எச்சவியலில் தொல்காப்பியரும், `ஒருநாட் செல்லலம் இருநாட்செல்லலாம், பலநாட் பயின்று பலரொடு செல்லினும்' என்ப (101) புறþநானூறும் `ஒன்றென இரண்டென மூன்றென நான்கென ஐந்தென ஆறனெ எழென எட்டெனத் தொண்டென' என (3)ப் பரிபாடலும் கூறுப. ஆதலின் `இரண்டிறந்திசைக்கும் தொடர்மொழி' என்ற இந்நூற்பா நடை தமிழ்வழக்கேயாகும். ஈண்டு எழுத்து என்பது ஒலியைக் குறிக்குமா? வரிவடிவைக் குறிக்குமா? நல்ல வினா. ஆ - ஓரெழுத்தொருமொழி வரிவடிவு : 1 ஒலியன் ஆ =1 கா - மேற்படி மேற்படி மேற்படி க் + ஆ =2 ஆண் - ஈரெழுத்தொருமொழி வரிவடிவு: 2 மேற்படி ஆ + ண் = 2 காண் - மேற்படி மேற்படி மேற்படி க+ஆ+ண்=3 காடு - மேற்படி மேற்படி மேற்படி க் + ஆ + ட் + உ = 4 காப்பு - தொடர்மொழி வரிவடிவு: 3 மேற்படி க் + ஆ + ப் + ப் + உ =5 கபிலன் -மேற்படி வரிவடிவு: 4 மேற்படி க்+அ+ப்+ இ +ல்+அ+ன்=7 எழுத்துநிலையில் உயிரும் மெய்யும் தனியாக இருந்தாலும் தனி வடிவுகள் பெற்றிருந்தாலும் சொன்னிலையில் உயிர்மெய்யாகவே ஒற்றுமைநயம்படக் கலந்துவிடுதலின், உயிர்மெய்யை ஓரெழுத்தாகக் கொள்வதே பெருவழக்கு. பல, சில, நில், கல் என்பவற்றை இரண்டெழுத்தாகவும் தமிழ், அன்பு, குறள் என்பவற்றை மூன்றெழுத்துக்காகவும் கல்லாதாரும் எண்ணுவர். `அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்' என்ற சிலப்பதிகாரத்தில் இம் மந்திரங்கள் உயிர்மெய்களை ஓரெழுத்தாகவே கொள்கின்றன. எழுத்தெண்ணும் கட்டளை யடியில் உயிர்மெய் ஓரெழுத்தாகவே கணிப்புப் பெறும். ஆண், காண் என்பன நேரசையாகவும் அவை, சுவை என்பன நிரையாசையும் செய்யுட்கண் அலகுபெறும். தமிழ்மொழிக்கண் ஒலிக்கும் வரிவடிவுக்கும் தொல்பழங் காலத்தே இணைந்த செம்மையையும் எழுத்துவழக்கும் நல்லிடங்கொண்ட ஆட்சியையும், அதனால் முப்பது ஒலியும் முப்பது எழுத்து என்றே பெயர்பெறும் ஒற்றுமைக் காட்சியையும் இவ்வுரை பன்மாணும் வரலாற்று முறையிற் சாற்றி வருகின்றது. ஆதலின் ஓரெழுத்துச் சொல் ஈரெழுத்துச்சொல் இரண்டுக்கு மேற்பட்ட சொல் என்று எழுத்துநிலையில் மூன்றுவகை செய்தது வரன்முறைப் பொருத்தமாகும். இன்னொரு முறையாகவும் தெளியலாம். கா, கெ, கே, கொ, கோ, கௌ என்பன ஓருயிர் மெய்யாயினும் வடிவில் இரண்டு மூன்றாகத் தோன்றுகின்றன. எனினும் ஈரெழுத்து மூவெழுத்து என்று யாரும்; சொல்வதில்லை. :ஓருயிர்மெய் என்ற ஒலிநிலையை நோக்கி ஓரெழுத்து என்றே சொல்வோம். காக்கை நாலெழுத்தென்றோ வெளவால் ஆறெழுத்தென்றோ சொல்லோம். எனவே ஓரெழுத்தொரு மொழி முதலான குறியீடுகள் ஒலித்தன்மையினையும் உட்கொண்டனவாம். இப்பாகுபாடு இருவகை வழக்கும் எளிமையும் தெளிவும் பற்றி கொள்ளப்பட்டது. `ஓரெழுத்தியல் பதம்' எனவும், `பகாப்பதம் ஏழும் பகுபதம் ஒன்பதும் எழுத்தீறாகத் தொடரும்' எனவும் பவணந்தியார் முன்னோர் முறையைப் பின்பற்றி யிருத்தல் போற்றத்தகும். தனிமெய்யியக்கம் (42) மெய்யி னியக்கம் அகரமொடு சிவணும். இது தனிமெய்யைச் சொல்லு முறையும் எழுதுமுறையும் காட்டும். அகலவுரை நூன்மரபில் “மெய்யினியற்கை புள்ளியொடு நிலையல்” என்ற புள்ளியொடுநிற்கும் இயற்கை மெய்களைப் பட்டாங்கு எளிதாக ஒலிக்க முடியாதல்லவா? அதனால் அம்மெய்யொலி யன்கள் அகவொலி சேர்த்து ஒலிக்கப்படும் அங்ஙனம் ஒலியொடு இயங்கினும் புள்ளியுடைய மெய்யாகவே கருதப் படும். அகர உயிர்மெய்யாகா. இது சொல் வழக்கிற்கும் எழுத்து வழக்கிற்கும் ஏற்ற நடைமுறை. வழக்கு: வல்லெழுத் தென்ப க சட த ப ற தொல் 17 மெல்லெழுத் தென்ப ங' ஞ ண ந ம ன மேற்படி 18 இடையெழுத் தென்ப ய ர ல வ ழ ள மேற்படி 19 இம்முறையை நூல் முழுதுங் காணலாம். இக்கு, இச்சு, இத்து, இப்பு, இண்ணு என்றவாறும் க்கன்னா, ச்சன்னா, ட்டன்னா, என்றவாறும். கன, னங, சன, ஞன என்ற வாறும் பேச்சுவழக்கில் மெய்கள் இயக்கம் பெறுதலும் உண்டு என்றாலும் இவை தனிமெய் என மக்கள் புரிந்து கொள்வர். திறனுரை பிறப்பில் ஒவ்வொரு மெய்யும் தனக்கென்ற பொருண்மை யுடைய முதலெழுத்து; உயிருக்கு நிகரான முதலெழுத்து; எனினும் எளிமையாகச் சொல்வதற்கும் கேட்பதற்கும் அறிவதற்கும் அகரம் துணையொலியாகும் : அவ்வளவே அனா ஆவன்னா இன ஈயன்னா என உயிரும் காவன்னா கீயன்னா கோவன்னா கௌவன்னா என உயிர்மெய்யுங்கூடத் துணையொலி பெறுகின்றன. முற்கூறியாங்கு ஒவ்வொரு மெய்க்கும் உரிவடிவும் அதன்மேல் ஒற்று என்பதற்குரிய புள்ளிவடிவும் உண்டு. உரிவடிவுகள் பன்னிரண்டு உயிரும் ஏறி உயிர்மெய்யாகும் போதும் க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ என்று நடுவுருவாக நிற்கும். ஒற்று என்பதற்குரிய பதினெட்டு மெய்க்கும் பொதுவான புள்ளிவடிவு மட்டும் நீங்கி உயிரேற இடங் கொடுக்கும். அம்முறைப்படி, மெய்யின் இயக்கத்துககு அகரம் வரும்போது மேற்புள்ளி நீங்கும் என்று கொள்க. `புள்ளி யில்லா எல்லா மெய்யும் உருவுரு வாகி அகரமோ டுயிர்த்தலும்' என்று நூன்மரபிற் சொன்ன விதியை நினைக. எழுத்து மெய்யாகுக. உயிராகுக, நடைமுறை யியக்கத்திற்குச் சில சாரியைகள் பெறும். இந்நூற்பாவில் `அகரமொடு சிவணும்' எனச் கரச்சாரியை வந்திருத்தல் காணலாம். னஃகான், றஃகான் ஐகாரம், ஒளகாரம், தகரம், வகரம், ளகாரம், லகாரம், ரகாரம் எனவும் வரும். அகரச்சாரியையுடைய ககரத்திற்கும் அகர வுயிர்மெய்யான ககரத்திற்கும் வேறுபாடு நடைமுறையில் உணரப்படும். `இதன் நடைமுறையிது’ என்று காட்டுவது இந்நூற்பாவின் பயன். மெய்ம்மயக்கம் (43) தம்மியல் கிளப்பின் எல்லா வெழுத்தும் மெய்ந்நிலை மயக்க மான மில்லை. இது மெய்ம்மயக்கப் பொதுநிலை கூறும். அகலவுரை நூன்மரபில் இன்ன மெய்க்குப்பின் இன்னமெய் வரும் என்று விரிவாகக் கூறப்பட்டது. அது சொன்னிலையில் அமைந்த எழுத்துத் தொடர்ச்சியாகும். அதற்கு மேல் நடைமுறை விளக்கமாக எழுந்தது இந்நூற்பா. எல்லா மெய்யெழுத்துக்களும் மெய்யெழுத்து என்ற பெயர் நிலைபெறும்போது, எதற்குப்பின் எது வந்தாலும் குற்றமில்லை. தன்னைச்சுட்டி வருமிடத்து மேற்கூறிய வரையறையில்லை. எல்லாவெழுத்தும் - எல்லா மெய்யெழுத்துக்களும், மானம் - குற்றம், வரம்பு. வழக்கு: அவன் மகரம் எழுதினான் அவள் லுகரம் எழுதினான் பேச்சுவழக்கு அவர் நிகரம் எழுதினார் “ணனவென் புள்ளிமுன் டணவெனத் தோன்றும்” “ஒற்றவும் வருடவும் லகார ளகாரம்” “வருட ரகாரம் ழகாரம்” “தாம் வரூஉம் ரழவலங் கடையே” என்பன தொல்காப்பிய நூற்பாக்கள். திறனுரை வேண்டுமிடங்களில் காரணம் சொல்லிச் சிறப்பு விதிகூறுவது தொல்காப்பிய நெறி. `தம்மியல் கிளப்பின்' என்பது காரண நடை. மெய் என்பது எழுத்தாயினும் தன்னைக் குறிக்கும் நிலையில் பெயராகிச் சொல்லாகும். மயங்குதற்கு உரியவாகா என்று முன்வரம்பிட்ட எழுத்துக்களும் இந்தக் கருத்தளவில் பொருந்திய மயக்கமாகக் கொள்ளத்தகும். இவ்வரம்பில் வரம்பு இலக்கணநூல் களிற்றான் வரும் முழுதும் நடைமுறைப்பாடு நோக்கிச் சொல்லப்படும் இலக்கணங்களுள் இதுவொன்று. “மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்” என்ற மேலைநூற்பாவும் இதனைச் சார்ந்தது இது நடைமுறைப்பாடு என்ற நெறிப்பெயர் பெறும். ஒரு சொற்பொழிவுக் கூட்டத்திற்கு மனைவி மக்கள் முதலான உறவினர்களும் வந்திருக்கலாம். அப்போதும் சொற்பொழிஞன் என் அன்பான உடன்பிறப்புக்களே என்று தன்பொழிவைத் தொடங்குகின்றான் இதுவே நடைமுறைப் பாடு எனப்படும். மெய்ம்மயக்கம் பற்றி மீண்டும் ஒரு தெளிவை நினைத்துக் கொள்ளவேண்டும். லண்டன், லெனின், லூதர், டர்பன், டாக்கா, டெல்லி, ரங்கூன், ரசியா என்பனவெல்லாம் பொருள் குறிக்கும் சொற்களாதலின், தம்மியல் கிளப்பனவாகா. இவற்றைத் தமிழ் மரபுப்படி உயிர் சேர்த்தோ வடிவு திரித்தோ தமிழ்மையாக்கிக் கொள்ளவேண்டும். ஈரொற்றுடனிலை (44) ய ர ழ வென்னும் மூன்றுமுன் ஒற்றக் க ச த ப ங ஞ ந ம ஈரொற் றாகும். இஃது ஈரொற்றுடனிலை கூறும்; இதுவும் மெய்ம்மயக்கத்தைச் சார்ந்தது. அகலவுரை நூன்மரபில் மெய்ம்மயக்கம் விரிவாகக் கூறப்பட்டது. அங்குக் கூறியவை ஓரொற்றுடனிலை மெய்ம்மயக்கமாகும். அப்போது முதல்மெய் புள்ளியடையதாகும். அடுத்துவருமெய் உயிர்மெய்யாக இருக்கும் (அன்பு) என விளக்கினேன். இந்நூற்பா கூறுவது என்ன? இரண்டுபுள்ளி அல்லது இரண்டொற்று இருக்கும். அடுத்துவருமெய் முன்புபோல் உயிர்மெய்யாக இருக்கும் (வாழ்த்து) உரை: ய் ர் ழ் என்னும் மூன்றும் முன் ஒற்றாக இருக்க க் ச் த்ப் ங ஞ ந் ம் என்பவை மீண்டும் ஒற்றாக வர ஈரொற்றுப் பெறும். ய்க், ய்ச், ய்த், ய்ப், ய்ங், ய்ஞ், ய்ந், ய்ம்: ர்க், ர்ச், ர்த், ர்ப், ர்ங், ர்ஞ், ர்ந், ர்ம்: என இரண்டிரண்டு ழ்க், ழ்ச், ழ்த், ழ்ப், ழ்ங், ழ்ஞ், ழ்ந், ழ்ம்; ஒன்றாக வரும். ஒற்று - மெய்ப்புள்ளி, புள்ளி என்பது மெய்ப்புள்ளி. சார்புப்புள்ளி, எகர ஒகரப்புள்ளி, மகரக் குறுக்கப்புள்ளி எனப் பலவற்றையும் குறிக்கும். ஒற்று என்பது மெய்ப்புள்ளி ஒன்றனையே சுட்டும். வழக்கு : க் ச் த் ப் ங் ஞ ந் ம் ய் : வாய்க்கால் பாய்ச்சு சேய்தது வாய்ப்பு வேய்ங்குழல் தேய்ஞ்சு மாய்ந்து மொய்ம்பு ர் : ஈர்க்கு சார்ச்சி சார்த்து வார்ப்பு ஆர்ங்கோடு கூர்ஞ்சிலை கூர்ந்து கூர்ம்படை ழ் : வாழ்க்கை வீழ்ச்சி வாழ்த்து காழ்ப்பு பாழ்ங்கிணறு பாழ்ஞ்சுனை வாழ்ந்து வீழ்ம்படை திறனுரை “யரழ வென்னும் புன்னி முன்னர் முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும்” என நூன்ன்மரபிற் கூறியது (ஆய்க, ஆர்க, ஆழ்க) ஓரொற்று மெய்ம் மயக்கமாகும். இந்நூற்பா வேய்க்குறை, வேர்க்குறை, வீழ்க்குறை, என ஈரொற்றுப் பற்றியது என்று தெளிவுபடுத்து கின்றது. `ஈரொற்றாகும்' (இருபுள்ளிபெறும்) என்பதனால் வடிவு நோக்கியும் இந்நூற்பா அமைந்தது எனக்கொள்ளலாம். ய் ர் ழ் என்ற முதலொற்றுக்குப் பின் வருவன க் ச் த் ப் ங் ஞ் ந் ம். இரண்டாவது ஒற்றுக்குப்பின் வருவன எவை என்பதனை நூன்மரபிற் கண்டு கொள்க. மெய்ம்மயக்கம் என்பது இன்ன மெய்யொலியனுக்குப் பின் இன்ன மெய்யொலியன் வரும் என எழுத்தளவில் கிடக்கை நிலை தெரிப்பது எனவும் இது ஒரு சொல்லுக்கும், புணர் மொழிக்கும் பொதுவெனவும் ஒற்றுக்கு அடுத்துவருவது உயிர்மெய்யாக இருக்கும் எனவும் முற்கூறிய கருத்துக்களை ஈண்டும் நினைவுகொள்க. `மூன்றேமொழிநிலை தோன்றிய நெறியே' என்ற சொன்னிலையமைப்புக் கூறுகின்றாராதலானும், ஈரொற்று தொடர்மொழியுள் வருவதாதலானும் இந்நூற்பா மொழி மரபாயிற்று. “ஈரொற்றுத் தொடர்மொழி இடைத்தொடராகா” என்னும் குற்றியலுகரப் புணரியல் நூற்பா இதற்குச் சான்று. இன்னொரு கோட்பாடுங்கொள்ள இடமுண்டு. நூன்மரபு இயல்பான அடிப்படையிலக்கணங்கூறும்; இயல்புக்கு கூடுதலானவற்றையும் இயல்புக்கு வேண்டியமேல் விளக்கங் களையும் மொழிமரபு கூறும். இவ்வாறு கொள்ளின் இயல்வைப்பும் நூற்பாவைப்பும் இன்னும் தெளிவுதரும். ர் ழ் அமைப்பு (45) அவற்றுள் ரகார ழகாரம் குற்றொற் றாகா. இது ரகரவொற்றும் ழகரவொற்றும் முதற்கண் வரும்நிலை காட்டும். அகலவுரை மெய்ம்மயக்கம் எழுத்துக்கிடக்கை நிலை பற்றியதேனும் சொன்னிலையில் வைத்துத்தானே விளக்கஞ்¨ செய்ய வேண்டும். ய ர ழ என்ற மூன்றனுள் ரகரமும் ழகரமும் முதற்கண் தனிக்குறிலுக்குப் பின் ஒற்றாக வந்துநில்லா. அஃதாவது அர் பர் எனவோஅழ், பழ் எனவோ வாரா. எப்படி வரும்? ஆர், பார், ஆழ், பாழ் என நெடிலுக்குப் பின்னும் பகர், தமிழ் எனக் குறிலிணைக்குப் பின்னும் ஒற்றாக வரும். இவ்வாறே புகார், பைங்கூழ் எனப் பலவெழுத்துத் தொடர்மொழியில் எல்லாம் வரும். தனிக்குறிற்கீழ் வரும்போது உரி திரு கரை எனவும் அழி விழு மழை எனவும் உயிர்மெய்யாகவே வரும். தனிக்குறிற்கீழ் ஒற்றே வாரா என இதனால் விலக்கப்பட்டது அவ்வாறு விலக்குவது எளிதாகலின், யகரவொற்றே மெய், பொய், செய், கொய் என குற்றொற்றாகவும் வரும் என்பது வெளிப்படை. குற்றொற்று - முதற்கண் தனி உயிர்க் குற்றெழுத்து அல்லது தனி உயிர்மெய்க்குற்றெழுத்து. வழக்கு: நீர், நகர்; பாழ்; புகழ் எனவரும். அருச்சனை, அருச்சுனன், நருமதை, தருப்பம், சுருணன் என்ற அயற்சொற்களை ஆள வேண்டின் இவ்வமைப்புப்படி எழுதல் தமிழாம். கருப்பிணி, வருணனை வருக்கம், கருப்பூரம், மருமம், கருமம், கருத்தன் என்ற தமிழ்ச் சொற்களை இவ்வாறே பிழையின்றி எழுதுக. திறனுரை ஐகார ஒளகாரம் போல் இடையினங்களுள் ரகரமும் ழகரமும் ஒரு தன்மையன. “மெய்ந்நிலை சுட்டின் எல்லா வெழுத்தும் தம்முற்றாம் வரூஉம் ரழவலங் கடையே” என்ற நூன்மரபில் ரகர ழகரம் தன்முன் தான் வாரா என்று விலக்கியதை நினைக. இதுகாறும் இன்னமெய்க்குப்பின் இன்னமெய்வரும் என்று மெய்ம்மயக்கம் கூறிவந்த ஆசிரியர் இன்ன வுயிருக்குப் பின் இன்ன மெய்வாரா என இந்நூற்பாவில் உயிரொடு மெய்ம்மயங்காமை கூறும் ஒரு மொழியமைப்பைக் கற்கின்றோம். ஈண்டு ஒரு விளக்கம் `ஆர் ஆர் ப வென வரூஉ மூன்றும்' `இர் ஈர் மின் என வரூஉ மூன்றும் என வினையியற்கண் ரகரம் குற்றொற்றாக வந்துளதே என்று வினவலாம். ஆம்; அர் இர் என வந்துள. ஆனால் இவை சொல்லமைப்பில் சொற்கிடையே வரும் உறுப்புக்கள் தெளியிற்காகத் தனித்துக்காட்டப்பட்டன. பொறிமுதலான பொருள்களின் பாகங்களைக் கற்பிப்பதற்காக அவ்வமயம் வேண்டுமென்றே தனியுறுப்புக்களைப் பிரித்துக் கொள்கின்றோ மல்லவா? செடியின் நரம்புகளை, மலரின் இதழ்களை, ஆடையின் இழைகளை, படையின் திருகுகளை. ஊர்திகளின் சேர்க்கைகளை உதிரிகளாகப் பாகுப்படுத்திக் காண்பதை ஒப்பிடுக. இங்ஙனம் வாரா, வரக்கூடாது என்று சொல்லுமிடங் களிலும் தவறான எடுத்துக்காட்டுக்களைத் தந்துதான் விளக்குவதும் விலக்குவதும் உண்டு. கல்விநெறி என்று இதனைக் கொள்ள வேண்டும். செவ்வன் வடிவு என்ற இக்கால வினாமுறையும் இந்நெறித்து. தொடர்மொழி விளக்கம் (46) குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின் தொடர்மொழி யெல்லாம் நெட்டெழுத் தியல. இது தொடர்மொழிக்கு ஒரு விளக்கம் செய்யும். அகலவுரை ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, இரண்டிறத் திசைக்கும் தொடர்மொழி என்று தமிழ்ச் சொல்லினை முவ்வகையுள் அடக்கிக் கொண்டார் தொல்காப்பியர். அவற்றுள் தொடர் மொழிக்கு ஒரு புதுவிளக்கம் தருவது இந்நூற்பா. குறுமை என்பது நெடுமை என்பதும் எழுத்தெண்ணிக்கை அளவிற் கொள்ளுதலால் எல்லாத் தொடர் ஒரு மொழிகளும் நெடிலோடிய இயன்றனவாகக் கருதப்படும். நெட்டெழுத்து - இரண்டிற்குமேல் நீடிய எழுத்துக்கள், நெட்டோட்டம் கழிநெடில் போல். வழக்கு: புகழ், அழகன், அண்ணாமலை, பனம்பாரன் திறனுரை இலக்கண நூலில் எல்லாவியல்களும் வன்கரையுடையன வல்ல; ஒன்றினொன்று செய்திகள் தந்துப்பின்னியல்களுக்கு வரம்பு காட்டுபவை. இது படிக்கட்டுநெறி எனப்படும். மீண்டும் நினைவு கூர்வோம். ஓரெழுத்தொருமொழி - ஆ, மா ஈரெழுத்தொருமொழி - ஆன், மான், சில, பலா, ஆடு, ஊதா தொடர்மொழி - நலம், நான்கு, அணங்கு, மதுரை, இளங்கோ, திருவள்ளுவர் முவ்வகை மொழிகளிலும் நெட்டெழுத்துக்கள் உள்ளன என்றாலும் அவற்றை இந்நூற்பா பொருளாகக் கொள்ள வில்லை. வரிவடிவான எழுத்தெண்ணிக்கையை அளவாக வைத்துப் பார்க்கும்போது தொடர்மொழிதான் இரண்டுக்கு மேற்பட்ட பலவெழுத்துடையவை. ஒரு வடிவு கொண்டது ஓரெழுத் தொருமொழி: இரு வடிவு கொண்டது ஈரெழுத் தொருமொழி: குறியீடுகளே தற்சான்று. ஈண்டு எழுத்து என்பது வரிவடிவைக் குறிக்கும் என உரிய நூற்பாவில் முன்தெளிவு செய்யப்பட்டது. இந்நூற்பா மாத்திரை பற்றியதன்று என்பதற்கு அளவிற் கோடல் என்ற சொல் அமைந்திருப்பது ஒரு சான்று. ஈண்டு அளவு என்பது எழுத்தெண்ணிக்கையைக் குறிக்கும். `எழுத்தளவெஞ்சினும் சீர்நிலைதானே' என்ற செய்யுளியல் இவ்வுரைக்கு அரண்செய்வதையுணர்க. பின்வரும் இயல்கள் புணர்மொழிச்செய்கை கூறுவன. புணர்மொழி என்பது மொழிகளின் இயைபாதலின், மொழி மரபில் புணர்மொழிக்குத் தக்க பாங்குகளை அடிகோலுவர் ஆசிரியர். மூவ்வகைச் சொற்பாகுபாடு இந்நோக்கினது. “குறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும் அறியத் தோன்றும் அகரக் கிளவி” “குற்றெழுத் திம்பரும் ஓரெழுத்து மொழிக்கும் நிற்றல் வேண்டும் உகரக் கிளவி” “ஈரெழுத் தொருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர்” “மகரத்தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்ப” “பலவற் றிறுதி நீடுமொழி யுளவே செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான” “தொடரல் லிறுதி தம்முற் றாம்வரின் லகரம் றகரவொற் றாகலு முரித்தே” எனப் பரந்து வரும் இடங்களில் இம்மூவகைக் குறிகள் ஆளப்படுவதைத் தெளியலாம். `குறியதன் முன்னர்' என்பது ஈரெழுத்தொருமொழியைக் குறிக்கும். போன்ம் (47) செய்யு ளிறுதிப் போலி மொழிவயின் னகார மகாரம் ஈரொற் றாகும் னகாரை முன்னர் மகாரங் குறுகும். இஃது ஈரொற்றும் குறுக்கமும் பெறும் ஒரு சொல்லைக் காட்டும்; இதுவும் மெய்ம்மயக்கமாகும். அகலவுரை “ய ர ழ வென்னும் மூன்றுமுன் ஒற்றக் க ச த ப ங ஞ ந ம ஈரொற் றாகும்” என்று பரந்துபட்ட நிலையில் வழக்கிற்கும் செய்யுட்கும் பொதுவாக ஈறொற்றுமயக்கம் கூறினார். இந்நூற்பாவில் போலும் என்ற ஒரு சொல்லைச் சுட்டிக்காட்டி, அது போன்ம் என ஈறொற்றாக வரும். செய்யுட்கண்ணே வரும். வருங்கால் மகரம் குறுகும் என்று மூன்று இலக்கணம் கூறுகின்றார். உரை: செய்யுட்கண் இறுதியடியில் இறுதிச்சீரில் `போலும்' என்ற வினைமுற்றுச் சொல் போன்ம் எனக்குறுகி நிற்கும்போது `ன்ம்' என ஈரொற்றாகும். அவ்விடத்து னகரத்தின் பின்வரும் இறுதி மகரம் கால்மாத்திரையாகக் குறுக்கம் பெறும். வழக்கு: “சிதையுங் கலத்தைப் பயினாற் றிருத்தும் திசையறி மீகானும் போன்ம்” (பரிபா.10) “நெஞ்சம் பிளந்திட்டு நேரார் நடுவட்டன் வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்” (கலி.101.) இது போன்ம என்ற வடிவுபெறும். மகரத்திற்கு உள்ளே (ம) புள்ளியிருக்கும். திறனுரை இந்நூற்பாவிதி செவ்வரம்புடையது, இடந்தெளிவானது. இவ்வீரொற்று வழக்கில் வராது, வேறுசொல்லில் வாராது, செய்யுட்கண்ணும் வேறிடங்களில் வாராது என்ற எதிர்நிலை பெறப்படும். செய்யுளிறுதி என இடங்கூறுவதால் போலும் என்பது செய்யும் என்ற முற்றாரும்; பெயரெச்சம் இறுதியில் நில்லாதன்றே. இதுகாறும் கற்ற மெய்ம்மயக்கங்களில் ஓரொற்றுக்குப் பின் (வாழ்க) உயிர் மெய்யும், ஈரொற்றுக்குப்பின் (வாழ்த்து) உயிர்மெய்யும் இருக்கும். போன்ம் என்ற இந்த ஈரொற்றில் பின் எதுவுமில்லை; ஈரொற்றளவாகவே நின்று மகரம் நலிகின்றது. இதனல் மகரத்திற்குக் கால் மாத்திரைக் குறுக்கம் தோன்றும். “அரையளவு குறுகல் மகர முடைத்தே இசையிட னருகுந் தெரியுங் காலை உட்பெறு புள்ளி யுருவா கும்மே” என்ற நூன்மரபு நூற்பாவை நினைவு கொள்க. ஒரு விளக்கம்: போன்ம் என்ற முற்று செய்யுளிடையில் வந்தால் ஈரொற்றும் ஆகாது; குறுக்கமும் பெறாது. “பெருங்கல் லடாரும் போன்மென விரும்பி” (புறம். 19) மழையுண் மாமதி போன்மெனத் தோன்றுமே (சீவகசிந்.127) இங்ஙனம் இடையில் வரும் `போன்ம்' என்ற முற்றுச் சொற்கள். ண னஃகான் முன்னர்க் கசஞப மயவவ் வேழும் உரிய என்ற இலக்கணப்படி ஓரொற்று மயக்கமாகும். அரந்தின்வாய் போன்ம்போன்ம் போன்ம் பின்னு மலர்க்கண் புனல் (பரிபாடல். 10) என்ற பரிபாடற்கண் வருவன ஈரொற்றாகும் எனினும் இறுதியாகி இசையிடன் அருகாமையின் மகரம் குறுக்கம் பெறாதுஎன உய்த்துணர்க. ஈரொற்று என்பதற்காகக் குறுக்கம் தோன்றுவதில்லை; ஈரொற்று நிற்கும் இசை நெருக்கத்தைப் பொறுத்தே குறுக்கம் வரும். செய்யுளிறுதி எனப் பொதுப்படக் கூறினாலும் ஏற்புழிக் கோடலால்' `போன்ம்' என்ற ஈரொற்றுக் குறுக்கம் வெண்பாவின் இறுதிச் சீர்க்கே கொள்ளத்தகும், போலும் என்று நிற்க இயலாதாகலின், போன்ம் என்பது இரண்டிறந்திசைக்கும் தொடர்மொழி, மூன்றெழுத்து உடைமையின். இச்செய்யுள் வழக்கு பிற்காலத்து வீழ்ந்தது. எழுத்தியல் நிலை (48) மொழிப்படுத் திசைப்பினும் தெரிந்துவே றிசைப்பினும் எழுத்தியல் திரியா வென்மார் புலவர். இஃது எந்நிலையிலும் எழுத்தியல் மாறாமை வலியுறுத்தும். அகலவுரை முப்பது ஒலியன்கள் அல்லது எழுத்துக்கள் தமிழின் மூலங்கள் என்று நூன்மரபின்முதல்நூற்பாவிற் கற்றோம். பொருண்மைத் திறன்கொண்ட ஒலியே ஒலியன் எனப்படும். இவ்வொலியனின் பல்வேறு இயக்கங்களும் சேர்க்கை களும் எழுத்ததிகாரவியல்களிற் சொல்லப்படுகின்றன. மாத்திரை, வடிவு, மயக்கம், சார்பு, இசைநிறை, முப்பாகுபாடு, ஈறொற்று நிலை இவற்றை இதுகாறும் அறிந்தோம். இனிமொழி முதலெழுத்துக்கள். மொழியிறுதியெழுத்துக்கள், புணர்மொழி யியல்புகள், திரிபுகள் இவற்றை விரிவாக அறிவோம். இந் நிலையில் ஒரு பெருந்தெளிவையும் மன்னிய அடிப்படையையும் சுட்டிக்காட்டப் பிறந்தது இந்நூற்பா. எழுத்து அல்லது ஒலியன் பொருண்மை யாற்றலுடையது என்றாலும் சொல்லாகிச் சொல்லுக்கு உறுப்பாகித்தான் பொருளை வெளிப்படையாகக் குறிக்கமுடியும். அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. என்று வரும்போது எழுத்துக்கள் கூடிச் சொல்லாந் தன்மை பெறுகின்றன. மொழியாகி ஒலிக்கின்றன. இங்ஙனம் உறுப்பாகிக் கூடுங்கால் ஒலியன்கள் தம் பொருண்மை யாற்றலை அஃதாவது எழுத்தியலை இழக்குமா? திரிபுபடுமா? உயிர்மெய்வடிவில் உயிர் வடிவுகள் திரிபு பெறுகின்றன; உயிர்மெய் என்று பெயர் பெற்றிருந்தாலும் மெய்க்குப்பின் உயிர்கள் தோன்றுகின்றன; அரைமெய்யுடைய மகரவளவு காலமாகக் குறைகின்றது; உயிர்கள் அளபு கடக்கின்றன; ஒற்றுக்கள் இசை நீளுகின்றன. குற்றெழுத்துக்கள் நின்ற இசைநிறைக்கின்றன; மொழிநிலை மூன்றுக்கு வரிவடிவு அடிப்படையாகின்றது; மெய் அகரமொடு இயங்க வேண்டியுள்ளது; தம்மைக் சுட்டும்போது மெய்ம்மயக்க வரம்பு ஒழிகின்றது; ரகார ழகாரம் குற்றொற்றாதல் இல்லை; போன்ம் என்பது ஈறொற்றாய் நலிகின்றது. பின்வரும் புணரியல்களிலும் பல்வகை எழுத்து மாற்றங்களைப் பார்க்கின்றோம். “மெய்பிறி தாதல் மிகுதல் குன்றலென இவ்வென மொழிப திரிபு மாறே” என்றபடி ஓரெழுத்து, இன்னொரு எழுத்தாகத் திரிகின்றது பதிற்றுப்பத்து, புளியங்குடி, நன்னிலம், மட்கலம், அஃறிணை, புறத்திணை, நாட்கூலி, அறக்கட்டளை, புறநகர், கடற்கரை, மணற்பாறை, பூம்புகார், மானக்கேடு, பூந்தோட்டம், பூஞ்செடி, அறுபது என்றாங்கு ஓரெழுத்துக் கூடவும் குறையவும் இன்னொரு எழுத்தாகத் திரியவும் காண்கின்றோம். நூன்மரபிற் சொல்லிய முப்பது எழுத்துக்கள் இன்னணம் மாறுபடுவதை நினையுங்கால் ஒலியன்கள் திரிபுறுகின்றன என்ற உணர்வு நமக்கு எழுதுவது இயற்கை. நிலமதிர்ந்தால் நெடுமாடம் என் செய்யும்? இவ்வுணர்வினை விளங்கிக் கொண்ட தொல்காப்பிய முன்னோர் ஒலியன் எந்நிலையிலும் தன் பொருண்மைத்திறம் திரியாது என்ற உண்மை கூறும் நூற்பா இது. உரை: சொல்லுக்கு உறுப்பாக ஒலிக்கும்போதும் புணர்மொழியில் வெவ்வேறு மாற்றங்கொண்டு ஒலிக்கும் போது, கூட்டுவடிவு பெறும்போதும், ஒலியன்கள் தமக்குரிய பொருண்மைத் தன்மையினின்றும் திரிவதில்லை என்று தெளிவுசெய்வர் இலக்கணப் புலவோர். அஃதாவது சொல்லுக்கு உறுப்பாவதற்கு முன்னும் புணர்மொழி மாற்றம் பெறுவதற்கு முன்னும் ஓர் எழுத்துப் பெற்றிருந்த முதற்பொருண்மையாற்றல் எதுவோ அது அவற்றுக்குப் பின்னும் திரிபு படாது அவ்வாறே இருக்கும். எழுத்து இயல் திரியா - எழுத்துக்கள் தம் பொருண்மைத் தன்மையினின்று மாறுபடா. தெரிந்து வேறிசைத்தல் - நிலைமொழி வருமொழியாக வரும் புணர்ச்சித் திரிபு; கூட்டு வரிவடிவுபெறுதல். திறனுரை எழுத்து அல்லது ஒலியனின் இலக்கணத்தை மீண்டும் நினைவுகொள்வோம். ஒலியனாவது தனக்கென்ற பொருண்மையும் இன்னொன்றினை வேறுபடுத்திக் காட்டும் முரண்மையும் உடையது. அடு, ஆம்; படு, பாடு; ஆல், ஆன், ஆழ்; கால், மால், வால் காண்க. னகர மகர மயக்கங்கள் : நிலன்-நிலம் அறன் - அறம் வளன் - வளம் இடன்-இடம் இனைய சொற்களில் னகரத்துக்குரிய இடத்தில் மகரம் மயங்கி வரக்காணலாம் என்றாலும் னகரம் இருந்தால் என்ன பொருளுண்டோ அப்பொருள்தான் மகரம் மயங்கிய பின்னும் உண்டு. எனவே முதல் எழுத்தின் இயல் திரியவில்லை. அது போலவே போன்ம் என்ற சொல்லில் மகரம் கால் மாத்திரை யானாலும் தன் பொருண்மையில் மாறவில்லை. இவ்வாறே அடுத்துவரும் ஐந்து நூற்பாக்கட்கும் கருத்துக்கொள்க. இவையெல்லாம் `மொழிப்படுத்திசைப்பினும் எழுத்தியல் திரியா' என்பதற்குச் சான்றுகள். குளம் + சிறிது = குளஞ்¨சிறிது - மகரம் ஞகரமாதல் குளம் + கரம் = குளக்கரை - மகரம் ககரமாதல் ஆறு + படை = அறுபடை - நெடில் குறிலாதல் நீ + ஐ = நின்னை - நெடில் குறிலாகி னகாரம் பெறல் பல + பல = பற்பல - லகரவுயிர்மெய் றகரமெய்யாதல் பனை + காய் = பனங்காய்-ஐ கெடல், அம்வரல், இன்னணம் வரும் புணர்மொழிகளில் ஓர் ஒலியின் (எழுத்து) வேறோர்; ஒலியனாகத் திரியக் காண்கின்றோமே என்று வினவலாம். இது தெளியவேண்டிய வினாவே. அங்ஙனம் திரியுங்கால் நிலைமொழியாக முதலிலிருந்த ஒலியனுடைய பொருளுக்குத் திரிபுண்டா? குளம் ஆறு நீ பல பனை என்ற சொற்கட்குப் பொருள்மாறு உண்டா? ஓர் ஒலியன் ஏனை யொலியனாகப் புணர்ச்சிக்கண் திரிபு பெற்றாலும் தன் முதனிலைப் பொருளினின்று திரிபு பெறவில்லை. இதனைத் தான் `தெரிந்து வேறிசைப்பினும் எழுத்தியல் திரியா' என்பர் தொல்காப்பியர். முப்பது எழுத்துக்களும் சொல்லுக்கு உறுப்பாகி ஒரு மொழியாகும் போதும், சொற்கள் புணர்மொழியாகும்போதும் ஒலித்திரிபுகள் ஏற்படும்; மாத்திரை குறையவும் செய்யும்; சொல் வடிவங்கள் மாறும். இவை பொருண்மையைத் தாக்கா. இங்ஙனம் திரிபுபெற்றாலும் ஓர் எழுத்து முன்னிருந்த பொருண்மைச் சுட்டுத் தன்மையிலிருந்து திரிபு பெறா. அஃதாவது எழுத்துக்குப் பொருண்மைத் திரிபில்லை. இதுவே `எழுத்தியல்திரியா' என்பதன் விளக்கம். மேற்கூறிய கருத்துக்களை வேற்றுநிலை வழக்கு. துணை நிலை வழக்கு உறழ்ச்சி என்ற குறியீடுகளால் வளர்ந்துவரும் இற்றை மொழியியலார் நன்கு விளக்க முற்படுவர். தொல்காப் பியரோ எனைத்திரிபுக்கும் திரிபில்லா முதற்பொருண்மை என்ற ஒரு மூலக்கூறு எழுத்துக்கு உண்டு எனவும் அது எழுத்தியல் என்ற குறிபெறும் எனவும் நிலைபேறு சுட்டியிருப்பது மேலும் நம் சிந்தனையை வளர்ப்பதாகும். வடிவுமயக்கம் - ஐ (49) அகர யிகர; ஐகார மாகும். இஃது ஐகார ஒலியனுக்கு உருவுமயக்கம் கூறும். அகலவுரை மேலை நூற்பாவில் `எழுத்தியல் திரியா' என்மனார் புலவர்' எனப்பட்டது. அஃதாவது ஒலியன் தன்பொருண்மைத் திறத்தினின்றும் திரியாது என்று தெளிந்தோம். இந்நூற்பாமுதல் “இகரயகரம் இறுதி விரவும்” என்று நூற்பாவரை வரிவடிவு மயங்குவது பற்றி விளக்குவர். இம்மயக்கங்கள் ஐ ஓள என்ற இரண்டு நெட்டுயிர்கள் பற்றியன. உரை: அகரவடிவும் இகர வடிவும் சேர்ந்து ஐகார ஒலியனைக் குறிப்பதாகும். வழக்கு: மயிந்தன் - மைந்தன் கயிலை - கைலை தயிலம் - தைலம் மயிலம் - மைலம் அயிந்திரம் - ஐந்திரம் வயிரி - வைரி வயிரம் - வைரம் திறனுரை ஐகாரம் பொருண்மையுடைய தனியொலியன், அதற்கு உயிரிலும் உயிர்மெய்யிலும் வடிவுண்டு. எனினும் வேறு இரண்டு ஒலியன்களின் வடிவங்கள் ஐகார ஒலியனுக்குப் பொருந்தியனவாக வடிவ வரலாற்றில் வழங்கின. இந்த உருவு வழக்கை இந்நூற்பா கூறும். இவ்வாறு வடிவியல் மாறுபடினும் முன்þநூற்பாவில் கூறியபடி எழுத்தியல் என்னும் பொருண்மைச் சுட்டு மாறுபடா எனத்தெளிக. பின் வருவனவற்றிற்கும் இவ்விளக்கம் பொருந்தும். அகரமும் இகரமும் சேர்ந்தபோது யகரவுடம்படுமெய் பெறுவது இயல்பாதலின், அ + இ = அயி எனவாயிற்று. உடம்படுமெய் என்று சொல்லாமல். `அகர யிகரம் ஐகார மாகும்' என்றே நூற்பாவைப் படிப்பதிலும் தவறில்லை. இவ்வாறு கொண்டால் அயி என்பது ஐ ஆகும் என்ற நேர்கருத்துத் தோன்றும். வடிவு மயக்கம் - ஒள (50) அகர வுகரம் ஒளகார மாகும். இஃது ஒளகார ஒலியனுக்கு உருவு மயக்கம் கூறும். அகலவுரை ஒளகாரம் ஓர் ஒலியன்; அதற்கு ஓர் தனிவடிவுண்டு என்றும்; அகரவடிவும் உகரவடிவும் சேர்ந்து ஒளகாரமாக ஒலிக்கும். வழக்கு: கவுதாரி - கௌதாரி கவுரியர் - கௌரியர் கவுரி - கௌரி கவுதமனார் - கௌதமனார் பவுத்தம் - பௌத்தம் கவுந்தி - கௌந்தி “தவிரா வீகைக் கவுரியர் மருக” (புறம். 3) “அமரி குமரி கவுரி சமரி” (சிலப். 12.67) திறனுரை கௌதாரி என்பது கவுதாரி என்று ஈரெழுத்தாக வரிவடிவில் எழுதப்பட்டாலும் ஒள என்ற ஒலியன் தன் பொருண்மையினின்று மாறுபடவில்லை அஃதாவது வடிவியல் திரிந்தாலும் எழுத்தியல் திரியவில்லை. அகரமும் உகரமும் சேர்ந்தபோது வகரவுடம் படுமெய் தானே வரும் ஆதலின்அ+ உ = அவு எனவாயிற்று. ஏனைத் திராவிட மொழிகளான தெலுங்கு கன்னட இலக்கணங்களும் அயி, அவு என்று கூறல் ஒப்புக்குரியது. உடம்படுதல் என்று சொல்லாமல் அகர வுகரம் ஒளகார மாகும் என்றே நூற்பாவைக் கொள்வதிலும் தவறில்லை. இங்ஙனம் கொண்டால் அவு என்பது ஒள ஆகும் என்ற பொருள் நேரே தோன்றிவிடும். இவ்விடங்கள் அ இ (வஇரம்) அ இ (கஇலை) என்று இகரத்தையும் உகரத்தையும் தனிவுயிர் வடிவாக எழுதல் ஏலாது இசைநிறைவுக்கு அறிகுறியாக வரும் குற்றெழுத்துக்களே நெட்டெழுத்தின்பின் உயிர்வடிவாக இடையில் நிற்பன. “ஐ ஒள வென்றும் ஆயீரெழுத்திற்கு இகர உகரம் இசைநிறை வாகும்” என்றபடி இசை நிறைதான் இடையில் உயிர்வடிவமாக எழுதப்படும். `செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்' என்ற கிளவியாகக் கவியலின்படி ஐகாரம் ஆகும். ஒளகாரம் ஆகும் என வினைப் படுத்தியமையால் இவை இயற்கையில எனவும். ஐகார ஒளகார ஒலியன்கட்கு இயற்கையான தனி வரவு உண்டு எனவும் கொள்க. வடிவுமயக்கம் - ஐ (51) அகரத் திம்பர் யகரப் புள்ளியும் ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும். இது மீண்டும் ஐகாரத்திற்கு உருவு மயக்கம் கூறும். அகலவுரை மேலைநூற்பாவில் அகரத்திற்குப்பின் இகரவடிவு வந்து ஐகாரம் ஆகும் எனக் கற்றோம். இந்நூற்பாவில் அகரத்திற்குப் பின் யகரவொற்று வந்தும் ஐயொலி காட்டும் என்பர். உரை: அகரத்திற்குப்பின்பு இகரவடிவு போலவே `ய்’ என்ற ஒற்றுச் சேர்ந்தும் ஐ என்ற நெட்டொலி பொருள் பெற நிற்கும். மெய் - பொருண்மை, நெடுஞ்சினை - சொல்லுக்கு நெட்டுறுப்பு சினை -உறுப்பு. வழக்கு: அய்யர் - ஐயர் அய்ந்து - ஐந்து மய்யம் - மையம் வய்யம் - வையம் மய்யொடும் பகைத்து நின்ற நிறுத்தினான் வயிர மார்பில் பொய்யொடும் பகைந்து நின்ற குணத்தினான் புகுந்து மோத வெய்யவ னதனைத் தண்டால் விலக்கினான் விலக்கலோடும் கய்யொடு மிற்று மற்றக் கதைகளம் கண்ட தன்றே என்பது கம்பர்தரும் செய்யுள் வழக்கு. திறனுரை மெய் என்பது மெய்யொலியன், பொருள், வரிவடிவு என்ற பல பொருளொரு சொல். அது ஈண்டு பொருளைக் குறிக்கும். `மொழிப்படுத்திசைப்பினும்' என்றபடி, எழுத்து சொல்லுக்கு உறுப்பாதலின், `ஐ என் நெடுஞ்சினை' என்றார். சினை என்ப எழுத்திலக்கணக் குறியீடு, யாவென், சினைமிசை, குறியதன், இறுதிச்சினை, சுட்டுச் சினை நீடிய, ஈறு சினையொழிய எனக் குறியாட்சி பெறும். உறுப்பாக வரும்போது `அய்' என்ற இரட்டைவடிவு பெறும் என்றமையால் ஓரெழுத்தொருமொழியாகிய தனிநிலையில் இதுவாராது என்பதும் ஐ என்ற தன்வடிவே பெறும் என்பது; தெளிவாம். “ஐ வியப்பாகும்” என்பது உரியியல்நூற்பா ஆங்கிலத்திலும் ஒன்பதாவது எழுத்தாகிய ஐ ஒலி தனிப்படுங் காலை தனித்து ஒரு வடிவன் பெறுதலை ஒப்பு நோக்குக. மாத்திரைக் குறுக்கம் (52) ஓரள பாகும் இடனுமா ருண்டே நேருங் காலை மொழிவயி னான. இஃது ஐகாரத்திற்கு அளபுகுறைவு குறிக்கும்' அகலவுரை மேலைநூற்பாவில் ஐ என்பது அய் என்ற வடிவு மயக்கம் பெறும் என்றார். அப்போது ஆராயுமிடத்துச் சில சொல்லிடை அய் என்பது இரண்டு மாத்திரையின்றி ஒரு மாத்திரையாக ஒலிப்பதும் உண்டு. இது வழக்கிற்கும் செய்யுட்கும் பொது. வழக்கு: அய்ம்பது, அய்ந்து, மய்யல், வய்யம், அய்வரு ளொருவ னன்ன அடிசில்நூல் மடையன் ஏந்த மய்வரை மாலை மார்பன் வான்சுவை யமிர்த முண்டான் (சீவக.2744) திறுனுரை ஓரளபாகும் இடனாவது மேலைநூற்பாவிற்கூறிய அகரத்திற்குப் பின்னே யகரப் புள்ளிவரும் நிலை. இது மொழிமுதல் வரும். அகர இகரம் ஐகாரம் ஆகும்போது மாத்திரைக் குறைவில்லை. இடனுமாருண்டே என்பதனால் அருகித்தோன்றும் என்பது கருத்தில்லை. ஓரொரு சூழ்நிலையில் வரும் என்பதே பொருள். அச்சூழ்நிலையளவில் நிரம்பத் தோன்றும். ஐகாரம் மூவிடத்தும் குறுகுமாயின் இரண்டு மாத்திரை என்ற முதல் விதி பொருளற்றதாகிவிடும். இரண்டுக்கும் ஒன்றுக்கும் இடைப்பட்டு ஒன்றரை மாத்திரையாக வரும் என்பதும் செம்பாக மரபுக்கு மாறாம். `ஓரளபாகும்' என்று தொல்காப்பியம் சொல்வது தகும். தேருங்கால் ஐ மொழிவயின் என்று பிரித்து இந்நூற்பா ஐகாரம் பற்றியது என்று கூறலாம். இப்பிரிவு சிறப்பில்லை. அதிகாரத்தாற் பெறலாமாதலின் வேண்டியதுமில்லை. இந்த அளபுக் குறுக்கம் செய்யுட்குத் தொடை யொழுங்குக்கு மிகவும் ஆளப்படும். அவ்விடங்களில் அய் என்ற வடிவு பெறவும் எழுதப்படும். விரவு வடிவம் (53) இகர யகரம் இறுதி விரவும். இஃது ஐகார வடிவுபற்றி ஒரு தெளிவு காட்டும். அகலவுரை ஐகாரம் அ இ எனவும் வடிவ மயக்கங்கள் பெறும் என்று மேலே கூறினாரன்றே. இவ்விருவடிவுகள் பற்றி ஒரு தெளிவு செய்வர் ஆசிரியர். அகரத்திற்குப் பின்னே இகரம்; அகரத்திற்குப் பின்னே யகரம்; இவ்விடத்தில் அகரம் பொதுவாக முன்னிற்கின்றது; இகர யகரமே இறுதியில் வேறுபடுகின்றன. இவை எப்படி வரும் என்பது ஐயம். அதனைத் தெளிவிக்க எழுத்தது இந்நூற்பா. உரை : ஐகார வடிவின் பகுதியாகச் சொல்லப்பட்ட இகரமும் யகர வொற்றும் இறுதியிடத்தில் மாறி வரும். யகரம் - யகரப்புள்ளி. இறுதி - அகரத்திற்குப்பின்னே விரவும் - மாறி நிற்கும். வழக்கு வய்தான், அய்ந்து, அய்ம்பது, வய்யம், கய்யாறு, பய்தல், பய்ய, மய்யம் இந்தச் சொற்களில் இரகம் வாரா; யகரப் புள்ளி வரும். இதுபோல் மயிந்தன், கயிலை, தயிலம் வயிரம் என்ற சொற்களில் யகரப் புள்ளி வாராது; இகரம் வரும். இதனால் நாம் அறியக்கிடப்பது என்ன? ஐகாரத்திற்கு அஇ அய் என இருவகை வடிவங்கள் உள எனினும் ஒன்று வருமிடத்து மற்றொன்று வாராது எனவும் சொற்கட்குத் தக்கபடி விரவி வரும் எனவும் கொள்ள வேண்டும். திறனுரை வடிவு மயக்கம் குறித்து ஐ ஒள இரண்டே பேசப்படுபவை. இவை சொன்னிலையில் எழுத்துவடிவில் காணப்படுவன வாதலின், மொழிமரபியலுக்கு விதியாயின. இவை கூட்டெலி யன்கள் அல்ல. ஏனையுயிரொலிகள் போலத் தூய தனியொலி யன்கள் அதனாற்றான் நூன்மரபில் ஐ ஒள என்பன `ஈரள பிசைக்கும் நெட்டெழுத்து' என இடம்பெற்றன; பிறப்பியலிலும் மிடற்றுப்பிறந்த வளிவொலியாக எண்ணப் பெற்றன. அகர இகரம் தொடங்கி ஐந்து நூற்பாக்களிற் சொல்லப்படுவ தெல்லாம் இவ்விரண்டிற்குக் கூட்டு வடிவங்களும் உண்டு என்பதுவே. எடுத்துக்காட்டாக பத்து நூறு ஆயிரம் என்ற எண்கட்கு ய, , சூ, என்ற தனிவடிவங்கள் உள; இன்று எழுதுவது போல் க0, க00, க000 என்ற கூட்டு வடிவங்களும் உளவன்றே. ஓரளவு இவற்றை ஒப்புநோக்குக. உரோம மொழியிலும் ஐந்து (ஏ) பத்து (ஓ) ஐம்பது (டு) ஐந்நூறு (னு) ஆயிரம் (ஆ) இவற்றுக்கு ஒற்றைக் குறிகள் உண்டு. நாணயத் தாள்களும் இவ்வாறு உள. பின்þனூலோர் இத்தகு எழுத்து மாற்றங்கட்கு `எழுத்துப் போலி' என்ற குறியிடுவர். அது கொள்ளத்தக்க குறியீடே எனினும் போலி என்று சொல்வதற்கு இலக்கண வரம்பு வேண்டும். ஒலியனையும் பொருளையும் தாக்காநிலையில் ஒழுங்குகொள்ள வேண்டும். போலியாவதற்கும் ஒருமரபு உண்டு என்ற கோட்பாட்டை மறவற்க. வரும் மாற்று வடிவங்களும் தமிழொலியன்கட்கு உட்பட்ட வடிவங்களே. எல்லாம் தமிழெழுத்துக்குள் மாறுதல்களே. போலியாயினும் அய லெழுத்துப் புகுதற்கு விதியில்லை. இது எழுத்துப் போலியின் வரம்பு. அதனாற்றான் வீரசோழியமும் நன்னூலும் வடமொழி யாக்கத்தைப் போலியாகக் கொள்ளவில்லை. “மொழிப்படுத் திசைப்பினும் தெரிந்துவே றிசைப்பினும் எழுத்தியல் திரியா வென்மனார் புலவர்” என்ற நூற்பாவிற்கு அடுத்துவரும் இவ்வைந்தும் தொல் காப்பியமே நூலகத்து வழங்கும் எடுத்துக்காட்டுக்கள் இது காட்டு நெறியாகும். மொழிப்படும் போது ஐ இரு வடிவும் ஒள இருவடிவும் பெற்றாலும், ஐகாரம் ஓரளபானாலும் பொருண்மை காட்டும் ஒலியனாகிய எழுத்தியலில் குறைவுபடா என்ற மொழியுண்மையைத் தெளிகின்றோம். ஒள என்பது பிற்காலத்து `அவ்' என்ற கூட்டுவடிவும் பெற்றது. இதனைப் பின்னிலக்கணிகள் விதியாக்கினர். இதுவும் எழுத்தியல் மாற்றாத போலியாதலின் மரபாயிற்று. இங்ஙனம் வருவன கொள்ளத் தகுவன. மொழி முதலெழுத்துக்கள் உயிர்மொழிமுதல்கள் (54) பன்னீ ருயிரும் மொழிமுத லாகும். இனிவரும் பத்து நூற்பாக்களில் மொழிக்கு முதலாக வரும் எழுத்துக்களைக் கூறுவர். இதனால் மொழி வரம்பு பெறப்படும்; மொழிக்காப்புப் புலப்படும். இந்நூற்பா உயிர்மொழிமுதல் கூறும். அகலவுரை மொழி மரபு என்பது ஈண்டு ஒரு சொல்லியல்பு. சொல்லுக்கு முதலில் வரும் ஒலியன்கள் எவை? இறுதியில் வரும் ஒலியன்கள் எவை? இவ்விரண்டு இயல்புகளும் தமிழ் மொழி பற்றித் தெரிய வேண்டியவை. உயிர் பன்னிரண்டும் சொல்லுக்கு முதலாகி வரும். உயிர் - மெய்யொடு சேராத தனியுயிர் எனக்கொள்க. வழக்கு அழகு, ஆசான், இலக்கணம், ஈழம், உண்மை, ஊக்கம், எழில்,. ஏகம்மை, ஐந்தமிழ், ஒழுக்கம், ஓவியம், ஒளவை எனவரும். அமெரிக்கா, ஆசியா, இந்தியா, எரான், உருசியா, ஊட்டி, எமர்சன், ஏசு, ஐராவதி, ஒலிம்பிக்கு, ஓமான், ஓளரங்கசீப்பு இவையுங்கொள்க. திறனுரை முதலெழுத்து வேறு; மொழி முதலெழுத்து வேறு. முதலெழுத்துக்கள் முப்பது. அவை தமிழ்மொழியின் அடிப்படை ஒலியன்கள். இது எழுத்து நிலை இவை சொல்லுக்கு முதலில் வரும்போது மொழிமுதலெழுத்து எனப்படும். இது சொன்னிலை பன்னீருயிரும் என்பது முற்றும்மை. எல்லாவுயிர்களும் மொழிமுதலாகி நிற்கும் என்பது பொருள். அ ஆ இ உ எ ஒ என்றிவை முதலாக வரும் சொற்கள் பலவுள. ஐ ஒள என்பன சில சொற்கள் அளவே வரும். பன்னீருயிரும் என்பதனைச் சிறப்பும்மையாகக் கொண்டால், இவ்வாறு பதினெட்டு மெய்யும் மொழி முதலாகா என்ற குறிப்புப் பெறப்படும். உயிர்மெய் மொழிமுதல் (55) உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா. இது மெய் உயிரோடு கூடி மொழிமுதலாகும் என்று கூறும். அகலவுரை தனியுயிர் மொழிமுதலானதுபோலத் தனிமெய் மொழி முதலாகி வருமா? மெய் முதலாகும் ஆனால் உயிரோடு சேர்ந்து அங்ஙனம் வரும். உரை: உயிரோடு கூடிய மெய்களல்லாது க் ச் த் ப் என்ற தனிப்புள்ளி மெய்கள் மொழி முதலாக மாட்டா. உயிர்மெய் - உயிரோடு கூடிய மெய். வழக்கு: கண், காண், கிளி, கீரி இவ்வாறு உயிர்மெய்யாக வரும். இது தமிழ் மொழியின் இயல்பு. ச்ருதி, த்யாகம், க்ருபை, ம்ருகம், ந்யாயம் என வடமொழியிலும், ப்ரேக், ப்ளாக் க்லெய்ம், க்ளார்க்,ட்ரெய்ன், ட்ராம் என ஆங்கிலத்திலும் இன்ன பிறமொழிகளிலும் ஒற்று மெய்களே மொழி முதலாம் என அறிக. இது அம்மொழிகளின் இயல்பு. திறனுரை மெய் உயிரொடுகூடி மொழி முதலாகும் என உடன்பாட்டு நடைப்படுத்தாமல் “உயிர்மெய் யல்லன மொழி முதலாகா” என்று எதிர்மறையாற் கூறியது ஏன்? தனிமெய் என்று எந்நிலையிலும் மொழி முதலாகா என்று தமிழ் மொழியின் சொல்லியல்பினைத் தெளிவு செய்வதாம். அயற்சொற்கள் கலந்தாலும் தமிழ்மை பெற வேண்டும் என்பது மொழியாணை. அயற்சொற்கள் கொள்ள வேண்டிய அருமை ஏற்பட்டால், தியானம், சுருதி, சிரமம் என உயிர்மெய்ப்படுத்த வேண்டும். இதன் விரியை வீரசோழியத்திலும் நன்þþþனூலிலும் கற்க. மெய் மொழி முதலாகி வாராது என்பதும் உயிர் மெய்தான் முதலாகும் என்பதும் இந்நூற்பாவின் கருத்தி லில்லை. உயிர்மெய் என்பதனை ஒற்றுமை நயமாக ஓரெழுத் தாகக் கொள்ளற்க. உயிர்மெய் - உயிரொடு கூடியமெய் என்பது பொருள். எனவே மொழி முதலில் இருமெய்கள் இணைந்து வாரா என்பதும் உயிர்கள் பின்வர மெய்கள் முதலாகும் என்பதும் தெளியத்தகும் இலக்கணம். உயிரிறு சொன்முன் உயிர்வரு வழியும் உயிரிறு சொன்முன் மெய்வரு வழியும் மெய்யிறு சொன்முன் உயிர்வரு வழியும் மெய்யிறு சொன்முன் மெய்வரு வழியும் இவ்வென அறியக் கிளக்குங் காலை நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவியென் றாயீ ரியல புணர்நிலைச் சுட்டே என்ற புணரியல் நூற்பாவில் வருமொழிமுதல் மெய்யாக நிற்கும் என்று புணர்நிலை கூறுவதாலும், கசதப முதலிய மொழி, ஞநமயவ எனும் முதலாகுமொழி, அளவிற்கும் நிறையிற்கும் மொழி முதலாகி வல்லெழுத்தியையின் அவ்வெழுத்துமிகுமே, வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழி என்றாங்குப் பின்னியல்களில் எல்லாம் வருமொழி மெய்ம்முதற்புணர்ச்சி கூறப்படுவதாலும், உயிர்மெய் என்பதற்கு உயிரொடு கூடிய மெய் முதலாகும் என்று மெய்க்கு அழுத்தம் கொடுத்துப் பொருள் காண்க. உயிர்மெய் என்பது மூன்றாம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்க தொகையாம். தயிர்வடை, பூரிகிழங்கு போலக் கொள்க. உயிரும் மெய்யும் என்ற உம்மைத் தொகையோ, உயிரும் மெய்யும் கூடிய ஓரெழுத்து என்ற அன்மொழித் தொகையோ அன்று. மெய்உயிரோடு சேர்ந்து மொழிமுதலாகும் என்பதனால் பெறப்படும் பிறிதொரு குறிப்புண்டு. அண்ணல், நன்னாகன் என்பனபோலச் சொல்லின் இடையிலும் இறுதியிலும் மெய் தனியேயும் நிற்கும் என அறிக. உயிர் வடிவங்களோ எனின் இசைநிறை அளபெடைக் கண்ணன்றி சொல்லின் இடையிலும் இறுதியிலும் நில்லா என்பதும் நினையத்தகும். புறா, பலக்காய், பிராண்டுதல், தராசு, வியாழன், வறட்டி, விளாம்பழம் என்ற சில தமிழ்ச்சொற்களைச் சிலர் இன்று மெய்ம் முதலாக ஒலிப்பதைக் கேட்கின்றோம். இது பிழை வழக்கு, கடியத்தகும். முதலெழுத்தாம் மெய்களே உயிரொடு கூடிய மொழி முதலாகும் என்பது விதியாதலின், கடன்வாங்கும் அயற்சொற் களுக்கு நம் ஆய்தத்தை மொழி முதலாக்கும் போக்கினை என் னென்பது? தேவையின்றி அப்படியே சொற்கடன் கொள்வது முதற்பிழை; அதன்மேலும் ஆய்தத்தை முன்னிறுத்துவது அடிமுதற் பிழை. அன்புடையோர் செய்யும் அறிவில்மொழிக் கேடு இது. மொழியிடைப் பகுத்தறிவு வேண்டும். மொழிமுதல் மெய்கள் (56) க த ந பமவெனும் ஆவைந் bழுத்தும் எல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே. இது பன்னிரண்டு உயிரொடும் கூடிவரும் ஐந்துமெய்கள் கூறும். அகலவுரை பதினெட்டனுள் க த ந ப ம என்ற ஐந்து மெய்யெழுத்துக் களும் பன்னிரண்டு உயிரோடும் கூடி மொழிமுதலாக வரும். முதல் - சொல்லுக்கு முதனிலை. வழக்கு கலைஞர் தமிழ் நான்னாகன் பச்சையப்பன் மறைமலை காரைக்குடி தாடிக்கொம்பு நாட்டார் பாரி மாதரி கிள்ளை திருப்பதி நிகழ்ச்சிநிரல் பிரான்மலை மின்னியல் கீழாநெல்லி தீயைணப்பு நீலக்கண்டம் பீர்க்கம்பூ மீனவர் குடியரசு துறைமுகம் நுழைவுத் புரட்சித்தலைவர் முதல்வர் தேர்வு கூட்டுறவு தூத்துக்குடி நூலகம் பூங்குன்றன் மூதறிர் கெடிலம் தென்றல் நெல்லிக்கனி பெருந்தலைவர் மெய்கண்டான் கேதாரம் தேவர் நேரு பேயாழ்வார் மேலூர் கைத்தொழில் தைப்பாவை நையாண்டி பைங்கிளி மைசூர் கொங்குவேள் தொல்காப் நொண்டிச் பொற்றொடி மொழியியல் பியன் சிந்து கோடைக் தோகைமயில் நோன்பு போப்பு மோசிகீரன் கானல் கௌவை தௌவை நௌவி பௌவம் மௌவல் தொல்காப்பியம் நின்றுநிலவும் வழக்கு நூலாதலின் இக்கால வழக்குகளும் காட்டப்பெற்றன. திறனுரை உயிர்மெய் என்பதற்கு உயிரொடு கூடிய மெய் என மேலே பொருளுரைக்கப்பட்டது. `எல்லா வுயிரொடும்' என்ற நடை அதன் விளக்கமாகும். `ஆவைந்தெழுத்தும்' என்ற உம்மை ஏனைமெய்கள் சிற்சில வுயிர்களோடுதான் வரும் என்பதனைக் குறிக்கும். சகரமுதல் (57) சரக் கிளவியும் அவற்றோ ரற்றே அ ஐ ஒளவெனும் மூன்றலங் கடையே இஃது என்பது உயிரொடும் கூடிவரும் சகரமுதல் கூறும். அகலவுரை சகரமெய் அ ஐ ஒள (ச, சை, சௌ) என்னும் மூன்றுயிர் நீங்கலாக எல்லாவுயிரொடும் அஃதாவது ஏனை ஒன்பதி னொடும் கூடி மொழிமுதலாக வரும். அலங்கடை - தவிர, நீங்கலாக. வழக்கு சாரப்பள்ளம் சிவபுரி சீர்காழி சுழற்கழகம் சூளாமணி செந்தில் சேயிழை சொக்கலிங்கம் சோழவேந்தன் திறனுரை இந்நூற்பா விளக்கியற் பொதுமை என்ற நடையாகும். ஒப்பும் சுருக்கமும் இந்நடையின் பயன். “மெய்ந் நிலை சுட்டின் எல்லா வெழுத்தும் தம்முற் றாம்வரூஉம் ரழவலங் கடையே” என்ற நூற்பாவும் இந்நடைப்பட்டது. ச சை சௌ முதலாகிய சொற்கள் தொல்காப்பியர் காலத்தில் இல்லை. சகரக்கிளவி என இந்நூற்பாவில் வந்துள்ளதேயெனின், “முதலாவேன தம்பெயர் முதலும்” என்ற விதிப்படி தன்னைச் சுட்டுமளவில் எவ்வெழுத்தும் முதலாக வருமன்றோ. “டகார ணகாரம் நுனிநா அண்ணம்” “றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்” “ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்” “லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்” என்றாங்கு ஓரெழுத்துத் தன்னைக் குறிக்கும்போது முதலாக வருதல் உணரத்தகும். ழகரத்தைப் பிழையாக ஒலிக்காதே; றகரத்தைப் பிழையாக எழுதாத என்று நாம் இன்றும் வழக்கிற் சொல்லுகின்றோம் அல்லவா? பிற பொருளைச் சுட்டின் இவை முதலாக வாரா என்று தெளிக. தொல்காப்பியத்துக்குப்பின்னே அவைய நூல்களில் சகரமுதற் சொற்கள் மிகச்சில வந்தன. வடமொழிக் காப்பு ஏறிய காலங்களில் ச சை சௌ முதலாகிய சொற்கள் பல்வழியாகச் கால் கொண்டன. வடமொழிக் கலப்பின் வரலாறு பெரிது. அதனால் இலக்கிய வளர்ச்சியிலும் வகைமையிலும் பல நலன்கள் பிறந்தன. மொழியளவில் தமிழ்ச் சொற்களஞ்சியம் இயக்கமும் ஆக்கமுமின்றி வழக்கும் வாழ்வும் இழந்தன. தமிழ் வடமொழியிற் பிறந்தது என்னும் அளவுக்கு மயக்கம் நுனிக் கொம்பு ஏறிற்று. இலக்கணக் கொத்திலும் பிரயோக விவேகத்திலும் இப்புன் மயக்கம் கூடிற்று. “நாளடைவிற் புலவர் தனித்தமிழ்ச்சொற்களைத் தெரிந்து வழங்கும் மதுகையின்மையானும், ஒரோவழித் தெரியினும் அவற்றினும் வடசொற்றொடை செவிக்கு இன்பம் பயப்பனவாம் என மாறுகொள வுணர்ந்தமை யானும், தனித்தமிழ்ச்சுவை கண்டு இன்புறும் தவைர் அருகினமையானும், வடமொழி யாளர் உவப்பத் தமிழிற் பாட்டு உரை முதலியன இயற்ற வேண்டுமென்றும் விழைவு மேற்கொண்டமையானும், பொதுவெழுத்தானும் சிறப்பெழுத்தானும் ஆய வடசொற்கள் பலவற்றைத் தமிழில் வரம்பின்றி வழங்கி வருவாராயினர்” என வடமொழிக் கலப்பின் முனைப்புக்களை என் ஆசிரியர் இருமொழிப் புலமைப் பண்டிதமணிப் பேராசான் மனம் வெதும்பி மொழிவர். இவ்வூறு போக்கை அன்றே உணர்ந்த உரையாசிரியர்களான இளம்பூரணரும் நச்சினார்க் கினியரும் வடசொற்களும் ஆரியச் சிதைவுச் சொற்களும் தமிழிலக் கணத்துக்குக் கொள்ளத் தக்கவையல்ல என நல்லாணை காட்டினர். பிற்காலத்தில் தமிழ்ச் சொற்களே சிதைந்து சகர முதலெழுத்தாக உருமாறின. “சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி சளிசகடு சட்டை சவளி - சவிசரடு சந்து சதங்கை சழக்காதி யீரிடத்தும் வந்ததனாற் சம்முதலும் வை” என மயிலைநாதர் பட்டியலிடும் சரக முதற்சொற்கள் பெரும்பாலும் சிதைந்த தமிழ்ச்சொற்கள் எனக்கொள்ள வேண்டும். அமர், சமர்; அமை - சமை; அரண் - சரண்; அவை - சபை; அமண் - சமண்; அதிர் -சதிர்; அண்ணு - சண்ணு: தசை - சதை: சாகாடு - சகடம் என்ற ஒலிமாற்றங்களும் ஒலிக்குறிப்படி யாகப் பிறந்தனவும் மொழிவேர்கள் திரிந்தனவும் பின்னர் சரக முதன்மொழியாகப் பெருகின. செய்கை சைகையாறிற்று. `சையெனத் திரியேல்' என்பது ஒலிக்குறிப்பு. இன்ன உள்மாற்றம் எம்மொழிக்கும் இயற்கை. நூன்மரபிற் கூறிய மெய்ம்மயக்கங்கள் ஒலிபற்றியன வாதலின் பிறழத் தகாவரம்புடையவை. மொழி முதலெழுத்துக் களும் வரம்புடையனவே என்றாலும் பொருள் பற்றியனவாதலின் வரம்புக்குட்பட்ட வளர்தரு மாற்றங்கள் செய்துகொள்ளலாம். பல்வேறு நாகரிகத் தொடர்பும் பன்மொழியுறவும் ஒன்றி நெருங்கி வருங்காலங்களில் எம்மொழியின் வரம்பும் தானே அகன்று விரிந்து நெகிழ்ந்து கொடுக்கும். முறியாது ஒடியாது தழுவி வளைந்து உட்கொள்ளும் அகவாற்றல் தமிழுக்குத் தொன்றுதொட்டு இருந்தலாலன்றோ தமிழ் என்றுமுள தென் தமிழாகவும் சீரிளமைக் கன்னியாகவும் நின்று விளங்குகின்றது. இப்பக்குவ நெகிழ்வினைத் தொல்காப்பியம் இடையிலும் முடிவிலும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. “விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத் தென்மனார் புலவர்” “சொல்லிய வல்ல பிறவவன் வரினும் சொல்லிய வகையாற் சுரங்க நாடி மனத்தின் எண்ணி மாசறத் தெரிந்துகொண்டு இனத்திற் சேர்த்தி யுணர்த்தல் வேண்டும் நுனித்தகு புலவர் கூறிய நூலே” என்ற நூற்பாக்கள் எதிர்காலத் தமிழ்க்காப்பும் வளர்ச்சியும் நோக்கியவை. காலந்தோறும் வளரவேண்டிய தமிழ்மொழிக்கு மாற்றமும் புதுமையும் சேர்த்துக்கொள்ள உரிமை வழங்குபவை; எனினும் இவ்வுரிமையைச் சீர்தூக்கிப் பகுத்தறிந்து அறிவோடு அரிதாகப் பயன்படுத்த வேண்டியது நம் கடன். எத்துணையளவு இயல்பான வரம்பு போற்ற முடியுமோ அத்துணையளவும் மரபினை உறுதியாகப் பின்பற்ற வேண்டும். வரம்பு மாற்றத்தை எளிய வழியாகக் கருதி விடலாகாது. கருதின் கிட்கிந்தை மராமரம் போல மொழி மெலிந்தது துளைப்புரையோடிவிடும். தமிழ்ப்பல்கலைக்கழகம் 28-3-1985 ஆம் நாள் நடத்திய தமிழிலக்கணக் கோட்பாடு வளர்ச்சிக் கருத்தரங்கில் நான் ஆற்றிய `தமிழில் மொழி முதலெழுத்துக்களின் வரம்பு' என்ற பொழிவுக் கட்டுரை வரலாற்று முறையிலும் வளர்ச்சி நோக்கிலும் பல மொழிமுதற் கூறுகளைப் புலப்படுத்துகின்றது. இக்கட்டுரையிணைப்பினை இவ்வியலின் இறுதியிற் காண்க. சொல்லாக்கமோ மொழிபெயர்ப்போ பிறவகையோ செய்யவியலாத அயற்பெயர்க்குறிகளை மிக்க விழிப்போடு போற்றிக் கொள்ளலாம். தமிழ்ப் பெருங்காப்பியக் கவிஞர்கள் அயற்பெயர்களை ஆண்ட தமிழ் வடிவங்கள் நல்லமொழிச் சுவடாகும். சங்கரன், சப்பான், சமணம், சைனம், சைவம், சௌராட்டிரம் போன்றவை தவிர்க்கமுடியாதவை. இவையும் மெய்ம்மயக்க விதிக்கு மாறாமல் வரவேண்டும். தமிழினை `ஒருபாடை' யென்று இன்னாங்கு பாடிய இலக்கணக் கொத்துத் தேசிகர்கூட ஒலிவரம்பையும் மயக்க வரம்பையும் கடக்கவில்லை. சங்கீதம், சத்தம், சங்கரி,¨சஞ்சரி, சங்கடம், சம்பிரதாயம், சன்னிதி, சன்மானம், சன்னம், சமீபம், சௌந்தரம், சௌக்கியம், சௌகரியம், சௌபாக்கியவதி என்ற சொற்கள் முற்றும் தவிர்க்க வேண்டியவை. பாரதியாரின் ஆத்திச்சூடியில் 87 முதல் 102 வரையுள்ள பாடல்கள் அல்லிலக்கணமானவை; இவற்றுக்கு எளிய பல தமிழ்ச் சொற்கள் உள. தமிழ்ச்சொற்கள் தன் மொழியில் நடமாடும் உரிமை வாய்ப்பைப் பறிக்கக் கூடாதல்லவா? இங்கு சகரமெய்க்கு யான்கூறிய மொழிமுதல் விளக்கங்கள் ஏனைய மொழிமுதல் தமிழ் மெய்கட்கும் பொருந்தியவை. வகர முதல் (58) உ ஊ ஒ ஓ வென்னும் நான்குயிர் வ வென் எழுத்தொடு வருத லில்லை. இஃது எட்டுயிரொடும் கூடிவரும் வகர முதல்கூறும். அகலவுரை வகரமெய் உ ஊ ஒ ஓ என்ற நான்குயிரோடும் வாரா. எனவே அ ஆ இ ஈ எ ஏ ஐ ஒள என்ற எட்டுயிரொடும் கூடி மொழிமுதலாகும். எழுத்து - மெய்யெழுத்து வழக்கு வள்ளுவர் கோட்டம் வானொலி விழுப்புரம் வீரசோழியம் வெண்ணிலா வேங்கடவன் வைக்கம் வெளவால் திறனுரை இன்றுவரை மாறுதல் இல்லை. வோட்டு என வருமே எனின் ஆங்கிலச் சொல்லென மறுக்க. குடவோலை, வாக்குச்சீட்டு, வாக்குரிமை, வாக்குச் சாவடி என்ற தமிழ்ச்சொற்கள் உள. ஓட்டாண்டி என்பது தமிழ்ச்சொல் ஓடு என்பது கையில் ஏந்திவரும் பிச்சைப் பாத்திரத்தைக் குறிக்கும். ஞகர முதல் (59) ஆ எ ஒ வெனும் மூவுயிர் ஞகாரத் துரிய. இது மூன்றுயிரோடும் கூடிவரும் ஞகரமுதல் கூறும். அகலவுரை ஞகரமெய் ஆ எ ஒ என்ற மூன்றுயிர்களோடு கூடி மொழி முதலாக வரும். வழக்கு ஞாயிறு ஞெகிழ் ஞொள்குதல் திறனுரை ஞஞ்ஞை, ஞமலி, ஞமன், ஞமர, ஞயம் என அகரமும், ஞமிறு ஞமிர என இகரமும் ஞேயம் என ஏகாரமும், பின்வந்த வழக்காறுகள். இவற்றுட் சில நகரத்தின் திரிபுகள். இவை கொள்ளத்தக்கன. ஞகரமும் நகரமும் தம்முள் உறழ்ந்து வந்த ஒலிப்போலி என்று மொழி வரலாறு காட்டும். யகர முதல் (60) ஆவோ டல்லது யகரம் முதலாது. இஃது ஓருயிரோடு வரும் யகர மொழிமுதல் கூறும் அகலவுரை பன்னிரண்டு, ஒன்பது, எட்டு, மூன்று என்ற இறங்கு வரிசையில் மொழிமுதல் மெய்கள் கூறிவந்த நன்மரபுடைய தொல்காப்பியர் யகரமெய் ஓருயிரொடுமட்டும் கூடிவரும் என்று இறுதியாக இந்நூற்பாவிற் கூறுவர். முதலாது - மொழிமுதலாக வாராது. குறிப்புவினை முற்று. வழக்கு: யாடு, யாப்பு, யாக்கை, யாமை, யாமம், யாழ், யானை, யாண்டு, யாவன், யாவள், யாவர், யாவை, யாது. திறனுரை ஆ என்ற ஓருயிரோடு கூடித்தான் யகரமெய் மொழி முதலாகும் என்று உடன்பாட்டு நடையிற் கூறாமல் எதிர்மறை நடையிற் கூறியதன் கருத்து என்ன? தொல்காப்பியர் காலத்தும் சில பிழையான வழக்குகள் புகுந்து பரவிவரத் தொடங்கி யிருக்கலாம்; அதனைச் செம்மைப்படுத்த இவ்வாறு அழுத்த மாகச் சொல்லியிருக்கலாமன்றோ? யகரத்தின் வரலாறு ஒருபால் இறக்கமும் ஒருபால் ஏற்றமும் உடையது. யாமுதலாகிய பல சொற்கள், ஆடு, ஆக்கை, ஆமை, ஆனை, ஆண்டு, ஆறு, ஆப்பு, ஆய், ஆளி, ஆர் என்றாங்கு யகரம் வீழ ஆ முதலாயின. இதனால் இவை அகராதியிற் பலபொருளொரு சொல்லாய் விட்டன. முன்னிருந்த பொருட்செம்மை மறைந்துவிட்டது. யாழ், யான், யாது, யாமம் என்ற ஒரு சில சொற்களே திரிபுவாய்ப்படாமல் உய்திபெற்றன. பழங்கன்னடம் புதுக்கன்னடம் போல் இவ்வொலித்திரிபால் சங்க மொழிக்கும் பிற்சங்க மொழிக்கும் ஒலிவழக்கில் வெட்டனைய வேறுபாடு ஏற்பட்டது. வீரசோழியமும் நன்னூலும் அ ஆ உ ஊ ஓ ஒள என்ற ஆறுயிரோடும் யகரம் மொழி முதலாகும் என்று கூறுவன. இவ்வளர்ச்சி ஒருமருங்கு ஏற்றுக்கொள்ள வேண்டியதே. யவனர், யமுனை, யசோதை, யுனானி, யூதர், யூகி, யூபம், யூகம் என்ற சொற்கள் தவிர்க்க முடியாதவை. சில சொற்களை எசுர், அசோதை, எந்திரம், இயந்திரம், உகம், ஓசனை என வேறு முதலெழுத்தாக்கலும் உண்டு. யுத்தம், யோக்கியம், யௌவனம் போன்ற சொற்களின் பொருட்டு முன்னரே பல தமிழ்ச் சொற்கள் இருத்தலின் தேவையற்றவை. இங்ஙனம் பகுத்தறிந்து கொள்வன கொண்டும். திரிப்பன திரித்தும். தள்ளுவன தள்ளியும் மொழிநாட்டம் காணவேண்டும். இத்தகைய நாட்டம் மொழிக்கருவைக் கலைக்காது ஊட்டம் தரும் இடைக்கால வளர்ச்சியைப் பாங்குபெறச் சீர்தூக்காது இலக்கண விளக்கத்தின் ஆசிரியர் `ஆவோடு யகாரமும் முதலும்' என்று தொல்காப்பியத்தின்படியே திருப்பி மொழிதல் இலக்கண மரபாகாது. எல்லாம் மொழிமுதல் (61) முதலா வேன தம்பெயர் முதலும். இது முன்கூறப்படாத மெய்களும் மொழி முதலாகும் எனக்கூறும். அகலவுரை மெய்கள் 18: இவை 12 உயிரோடும் கூட 216 உயிர்மெய்யாகும் இதுகாறும் கூறப்பட்டவை தனிவுயிர்கள். 12 உயிர் க த ந ப ம - 12 உயிரொடும் 60 உயிர்மெய் ச - 9 ” 9 ” வ - 8 ” 8 ” ஞ - 3 ” 3 ” ய - 1 ” 1 ” 1. எஞ்சியவை ச - 3 உயிரொடும் 3 உயிர்மெய் கூறப்பட்ட வ - 3 உயிரொடும் 3 உயிர்மெய் வற்றுள் : ஞ - 9 ” 9 ” ய - 11 ” 11 ” 2. முற்றும் கூறப்படாதவை (9) - 12 ” 108 ங ட ண ர ல ழள ற ன 3. தனிமெய்கள் 18 உரை: மேலே மொழி முதலாகும் என்று கூறிய க த ந ப ம ச வ ஞ ய என்ற ஒன்பது மெய்களுள் இருபத்தேழு உயிர்மெய்களும் அறவே கூறாத ங ட ண ர ல ழ ள ற ன என்ற ஒன்பது மெய்களின் நூற்றெட்டு உயிர்மெய்களும் பதினெட்டுத் தனிமெய்களும் தம்மையே பெயராகச் சுட்டிச் சொல்லும் போது அவ்வளவில் அம்மொழிக்கு முதலாக வரும். இதன் கருத்து எல்லா எழுத்தும் தம்மைச்சுட்டுங்கால் முதலாகும் என்பதாம். வழக்கு: ஙா என்ற ஒலியை நன்கு சொல்க. ரகரத்தையும் றகரத்தையும் வேறுபட ஒலிக்க நகரத்தையும் னகரத்தையும் ஒழுங்காகச் சொல்லுவாய். லகர ளகர ழகர வேறுபாடுகளை உணர். ணா, ழு, ஙூ, டு என்ற வடிவங்களைச் செவ்வனம் எழுதுவாய். னகார இறுவாய், லளஃகான் முன்னன், ண னஃகான் முன்னர், டகார னகாரம் என்று இங்ஙனம் இலக்கண நூல்களில் எழுத்துக்கள் தம் பெயர் கூறுங்கால் முதலாகவரும். திறனுரை பொருண்மை, தற்பொருண்மை எனப் பொருட்சுட்டு இருவகைப்படும். கொலை, தற்கொலை என்னும்போது பிறர் கொலைக்கு அடை வேண்டாதது போல, சொல் காட்டும் பிற பொருண்மைக்கு அடையில்லை. “சொன்மை தெரிதலும் பொருண்மை தெரிதலும் சொல்லி னாகும் என்மனார் புலவர்” என்று தொல்காப்பியம் பொருண்மை என்றே ஆளுதலையும் தற்பொருண்மையைச் சொன்மை எனறு சுட்டுதலையும் காண்க. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்ற நூற்பா குறிப்பது பொருண்மையேயாகும். தன்னைத்தானே பாராட்டிக்கொள்ளும் தற்புகழ்ச்சி புகழாகாது பிறர் பாராட்டும் போதுதான் புகழ் எனப்படும். அதுபோல் ஒருசொல் தன்னைச் சுட்டும் சொன்னிலை விட்டுப் பிறபொருள்களைக் குறிக்கும்போதுதான் சொல் என்ற பெயர்க்கு உரியவாகும். `பன்னிருயிரும்’ என்ற நூற்பா முதல் `ஆவோடல்லது' என்பது வரை பொருண்மை பற்றிக் கூறப்பட்டன: அஃதாவது உலகப் பொருள் குறித்தன. எழுத்தும் சொல்லும் தம்மளவிற் பேசப்பட வேண்டிய இடங்களும் உண்டு. இவை பெரும்பாலும் இலக்கணவுலகிற்கும் பயிற்சிக் களத்திற்கும் உரியவை. அவ்வளவில் இன்றியமை யாதவை. எல்லா மெய்யெழுத்துக்களும் தம்மைச் சுட்டுங்கால் மெய்ம்மயக்க வரம்பில்லை என்று நூன்மரபிற் கூறினாரன்றே. அதுபோல் ஈங்கும் எல்லா வெழுத்துக்களும் தம் பெயரைச் சொல்ல வேண்டிய நிலைவரும்போது மொழி முதலாகும் என்றார். இவையெல்லாம் தன்னுரிமைநெறி எனப்படும். இதனாலும் தொல்காப்பியம் நடைமுறைப் பார்வை தழுவியது என்பது தெளிவாம். மொழிமுதற் குற்றியலுகரம் (62) குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். நகரமெய்யின்கண் குற்றியலுகர மொழிமுதல் கூறும். அகலவுரை நுந்தை, நுந்தாய் என்ற சொற்கள் இதற்கு எடுத்துக்காட்டுக்கள். இவை முறைப் பெயர்கள். நுந்தை என்ற சொல்லில் ந் + உ +ந் + தை என இரண்டு நகரங்கள் உள. முதலாவது நகரத்தின்மேல் வரும் உகரம் குற்றியலுகரமாகி மொழி முதலாகும். ஒற்றிய நகரம் - புள்ளியுடைய இரண்டாவது நகரம். முதலும் - மொழி முதலாகும்; குறிப்புவினை முற்று. திறனுரை இது சார்பெழுத்து ஆதலின் உயிர் முதலும் மெய்ம் முதலும் கூறிமுடித்தபின் சொல்லுவர் ஆசிரியர். “ உ ஊ ஒஓவென்னும் நான்குயிர் வவென் எழுத்தொடுவருத லில்லை” என்ற நூற்பா நான்குயிரும் வகரத்தொடு வாரா என்று நடைப்படுத்தினாலும், வகரமெய் நான்குயிரொடு வாரா என்பதுவே நடையின்பொருள். வகரமே இங்கு மொழிமுதல் மெய். அதுபோல் இந்நூற்பாவையும் கருதுக. குற்றியலுகரம் நகரமொடு முதலாகும் என்பதற்கு நகரமெய்மேல் குற்றியலுகரம் ஊர்ந்து வரும் எனவும் நகரமெய்யே மொழிமுதல் எனவும் கொள்க. இவ்வாறு கொள்ள வேண்டியதன் கடப்பாடு என்ன? மொழி முதலெழுத்து, மொழியீற்றெழுத்து என்று வரம்பு செய்வன வெல்லாம் புணர்ச்சி நோக்கியன்றே; நிலை மொழியீறும் வருமொழி முதலும் புணரும் விதி கூறுதற்கன்றே. நுந்தை, நுந்தாய் வருமொழியாகுங்கால் நகரமெய் முதலா? உகரம் முதலா? குற்றியலுகரம் முதலாயின், ஈற்றுக் குற்றியலுகரப் புணர்ச்சி கூறியதுபோல முதற்குற்றியலுகரப் புணர்வு தனியே கூறவேண்டாமா? கலித்தொகை மருதக்கலியில் நுந்தை என்ற சொல்லாட்சி பல்கிவரக் காணலாம். “உளமென்னா நுந்தைமாட் டெவ்வ முழப்பார்” “உய்வின்றி நுந்தை நலனுண” “நல்காது நுந்தை புறமாறப் பட்டவர்” “வருந்தியாம் நோய்கூர நுந்தையை யென்றும்” “வனப்பெல்லா நுந்தையை யொப்பினும்” என்று வரும் பலவிடங்களிலும், `வஞ்சி மூதூர் மணிமண்டபத் திடை நுந்தை தாணிழ லிருந்தோய்' என்ற சிலப்பதிகாரக் காதையிலும் இயல்பான நகரத்துக்குரிய புணரியல் விதிகளே பெறுகின்றன. உகரம் வருமொழியாயின் இப்புணர்விதிகள் பெறா. ஆதலின் ஏனை மெய்களொப்ப நகரமே மொழிமுதல் எனவும் குற்றியலுகரச் சார்புடையது எனவும் முறைப் பெயரளவில் இஃது அமையும் எனவும் தெளிவோமாக. குகனொடும் ஐவ ரானேம் முன்புபின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவ ரானேம் எம்முழை அன்பின் வந்த அகனமர் காத லைய நின்னொடும் எழுவ ரானேம் புகலருங் கானந் தந்து புதல்வராற் பொலிந்தா னுந்தை என்ற கம்பர் காப்பியத்தில் `பொலிந்தா னுந்தை' என்ற தொடர் பொலிந்தான் + நுந்தை எனவும் பொலிந்தான் + உந்தை எனவும் பிரிக்க இடங்கொடுக்கும். முதற்பிரிவுக்கு நகரமெய்யே வருமொழியாகும். `உன்னொடும்' என்றில்லாமல் `நின்னொடும்' என்ற நடையை நோக்கின் நுந்தை என்ற பிரிப்பே பெருமிதம் தரும். நுந்தாடு. நுந்நகர், நுந்நுதல் என்ற சொற்களிலும் ஒற்றிய நகரமிசை நகரம் இருப்பினும், முறைப்பெயரன்மையின் குற்றியலுகரம் ஆகா. முறைப்பெயர்க்கே இவ்வுகரத்தை வரம்பு செய்தார். அப்பெயர் வழக்கடிப்பட்டுக் குறைந்தமையின். புணர்ச்சி நிலை (63) முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅது அப்பெயர் மருங்கின் நிலையிய லான இது மொழிமுதற் குற்றியலுகரத்துக்கு ஒரு தெளிவு கூறும். அகலவுரை இம்மொழிமுதற் குற்றியலுகரம் நுந்தை என்னும் முறைப்பெயரிடத்து நிலையாக வருவதால் முற்றியலுகரத் தோடு பொருள் மாறுபடுவதில்லை. அஃதாவது புணர்ச்சி யிலக்கணம் வேறுபடுவதில்லை. திறனுரை எழுத்ததிகார இறுதியில் குற்றியலுகரப் புணரியல் என ஒரு தனியியல் உண்டு. இது குற்றியலுகரத்திற்கே உரிய இயல். ஈற்றுக்குற்றியலுகரங்களும் அவற்றின் புணர்ச்சிச் செய்கை களுமே இவ்வியலிற் சொல்லப்படுவன. மொழிமுதற் குற்றிய லுகரமும் இருத்தலின் அதன் விதிகளும் இவ்வியற்கண் சொல்லப்பட வேண்டுமன்றோ? அஃதாவது, உயிர்க்கும் மெய்க்கும் முன் நுந்தை என்பதன் நகரம் வருமொழியாக, வரும்போது என்ன விதிபெறும் என்று சொல்வதுமுறை. இது இவ்வியலில் இடம் பெறவில்லை. அங்ஙனம் சொல்லாமையையும் சொல்ல வேண்டாமையையும் தெளிவுபடுத்துவதுதான் `முற்றியலுகரமொடு' என்ற இந்த நூற்பாவாகும். எங்ஙனம் தெளிவிக்கின்றார்? ஈற்றுக் குற்றியலுகரச் சொற்கள் பல்பொருளுடையவாய்ப் பலவாதலின் ஈறுபற்றிய பொது நிலையில் புணர்விதிகளைக் குற்றியலுகரப் புணரியல் பரந்துபட இயம்புகின்றது. உயிர்மயங்கியல், புள்ளி மயங்கியல்கள் போல இவ்வியலும் ஈற்றடிப்படை கொண்டது. மொழிமுதற் குற்றியலுகரமோவெனின் முறைப் பெயரிடத்து ஓரிரு சொல்லில் வருவது. நுந்தை என்பதனை முற்றியலுகரமாக ஒலித்துப் பார்த்தாலும் பொருள் வேறுபடுவ தில்லை. முறைப்பெயர் எனச் சொல்லிடம் வரையறுக்கப் படுதலின் இதன் கருத்து என்ன? எனச் சொல்லிடம் வரையறுக்கப்படுதலின் இதன் கருத்து என்ன? முற்றியலுகரம் வந்த நுகம், நுனி, நுதல், நுண்மை என்ற நகரச் சொற்கள் புணரும் விதிகளே குற்றியலுகரம் வந்த நுந்தைக்கும் பொருந்தும். ஏனை நகரங்கேளாடு இந்நகரத்திற்கு புணர்ச்சி வேறுபாடின்மை இதனாற் பெறப்படும். “ஞ நமய வவெனும் முதலாகுமொழியும்” என்ற தொகை மரபு நூற்பாவில் நுந்தையது என உரையாசிரியரும் நச்சினார்க்கினியரும் எடுத்துக் காட்டுத் தந்திருப்பது என் விளக்கத்துக்குச் சான்றாகும். முதலெழுத்தான உயிர்முதனிலைக்கும் மெய்ம்முத னிலைக்கும் அடுத்து இச்சார்பு முதனிலையைச் சுட்டியமை யானும் இக்கருத்து வலியுறும். நுந்தை குற்றியலுகரமாதலின், உகரத்தின் மேற்புள்ளி பெறும். “அவைதாம் குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம்” எனச் சார்பெழுத்தை எண்ணியவிடத்தும், “அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே” என அரை மாத்திரை மதிப்பிட்ட விடத்தும் ஈற்றுக் குற்றியலுகரம் என்ற சிறு குறிப்புமில்லை. ஆதலின் புள்ளிப்பேறும் அரைமாத்திரை மதிப்பும் மொழி முதற் குற்றியலுகரத்திற்கும் உண்டாம். (நுந்தை.) மொழியிறுதி யெழுத்துக்கள் (64) உயிர் ஒள எஞ்சிய இறுதி யாரும் இஃது உயிர் இறுதிகள் கூறும். அகலவுரை மொழிமுதலெழுத்துக்களை நிரல்பட விதித்த ஆசிரியர் மொழியிறுதி யெழுத்துக்களைப் பதின்மூன்று நூற்பாக்களில் மொழியத் தொடங்குவர். உரை: உயிர் ஒள நீங்கலான அ இ உ எ ஒ ஆ ஈ ஊ ஏ ஐ ஓ என்ற உயிர்கள் இறுதியாக வரும். எஞ்சிய - எஞ்சியவை, எஞ்சியவுயிர்கள். வழக்கு: உயிர்: அ இ உ சுட்டுநிலையில் ஈறாயின. ஏஎ எனத் தேற்றத்திலும் ஓஒ எனச் சிறப்பிலும் ஈறாக வந்தன. ஆ ஈ ஊ ஏ ஐ ஓ - பொருள் நிலையில் ஈறாயின. திறனுரை இஃது ஓரடிச் சுருக்க நூற்பாவாக இருந்தாலும் முன்பின் வரும் விதிகளைக் கொண்டுகொள்ளுவனவும் விலங்கு வனவும் தெளிவாகக் காணலாம். “குற்றெழுத் தைந்தும் மொழி நிறைபிலவே”என்று முன்னர்க் கூறினமையின், பொருண்மை நிலையில் அவை ஈறாகா. “ அ இ உ அம்மூன்றுஞ்¨ சுட்டு” என்ற குறிப்பு நிலையில் அவை மூன்றுமே ஈறாவன. அதனாலன்றோ உயிர் மயங்கியலில் ஓரெழுத்தாயினும் இவற்றைச் சுட்டின் இறுதி என மொழிந்து புணர்விதிகள் கூறினர். “தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும் மேற்கூ றியற்கை வல்லெழுத்து மிகா” என ஈறுபற்றி உயிர்மயங்கியலில் புணர்ச்சிவிதி கூறுதலானும், “தெளிவின் ஏயும் சிறப்பின் ஓவும் அளபின் எடுத்த இசைய வென்ப” என இடையியலில் அளபெடையைக் குன்றிசை நிறைக்க வந்த அறிகுறிகள் என்ற கொள்ளாமல் பொருட் குறிப்பின என்று ஏகார ஓகாரத்தோடு ஒலியன்பட இணைத்துக் கூறுதலானும் ஏ எ கொண்டான், ஓ ஓ கொண்டான் என்பவற்றில் எகரஒகரம் நிலை மொழியீறுகளாகக் கொள்ளப்படும். எனினும் இவை அ இ உச்சுட்டுப்போலத் தனி நிலையீறல்ல என்பதும் நினையத் தகும். ஆஅ ஈஇ ஊஉ ஏஎ ஓஒ எனக் குறில் ஐந்தும் அளபெடையில் உயிர் ஈறாயின் என்று இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் கொள்வர். “குற்றுயிர் அளபின் ஈறாம்” என்று பவணந்தியாரும் இயம்புவர். மொழியீறுகள் சொல்வதும் மொழிமுதனிலைகள் சொல்வதும். “நிறுத்த சொல்லின் ஈறாக கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியைய” என்றபடி புணர்ச்சி வரம்புக்கன்றோ? இசைநிறைக்க வந்த குற்றுயிர்கள் அளபெடையில் ஈறாகுமென்றால், அவை புணர்ச்சிக்கு உரியனவாகுமா? படாஅ என்பது புணர்ச்சியில் ஆகாரவீறா, அகரவீறா? “குறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும் அறியத் தோன்றும் அகரக் கிளவி” எனவரும் இடங்களில் எல்லாம் நெட்டெழுத்துக்களே நிலைமொழியீறாக விதிக்கப்பட்டுள. `எ என வருமுயிர்' எனவும். `ஒவ்வுமற்றே' எனவும் ஈறாக வந்தனவாலெனின் அவை தம்மையே சுட்டிக் கொள்வன வாதலால், பொதுவியற்கையாகும். “குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும் நெட்டெழுத் திம்பர் ஒத்த குற்றெழுத்தே” எனத் தொல்காப்பியமும், இசைகெடின் மொழிமுதல் இடைகடை நிலைநெடில் அளபெழும் அவற்றவற் றினக்குறில் குறியே என நன்னூலும் இக்குறில்களை ஒலிவடிவாகக் கூறாமல் அறிகுறி வடிவாகக் கூறுதல் சிந்தனைக்குரியது. இதனால் அவைமொழிக்கு ஈறாக என்பதும் புணர்ச்சிக்குக் கருவியாகா என்பதும் தெளிவு. இந்நூற்பா உயிர்க்கும் உயிர்மெய்க்கும் பொது எனக்கொண்டு விள, பலா, கிளி, குரீ, பனை எனவாங்கு முன்னையுரைகள் காட்டுக்கள் தரும். “உயிர் ஒள எஞ்சிய” என்று உயிர்மேல் வைத்து எஞ்சியவை என்றமையால், உயிர்மெய் கொள்ள இடனில்லை. அங்ஙனம் கொண்டால் கௌ, வெள என்று ஒளகாரம் உயிர்மெய்யாய் வருதலின், எஞ்சியவை என்பதனுள் அடங்கத் தனிநூற்பா நுவல வேண்டிய நிலை வாராதன்றோ? ஆதலின் எஞ்சியவை என்பது ஒளகாரம் ஒழிந்த தனியுயிர்களையே குறிக்கும். “பன்னீருயிரும் மொழி முதலாகும்”எனத் தனியுயிர்முதனிலைக்கு ஒருநூற்பா யாத்தது போல், தனியுயிர் இறுதி நிலைக்கும் தனிப்பா யாத்தார் எனக் கொள்க. அடுத்துவரும் நூற்பாக்கள் உயிர்மெய்யீறு பற்றியன. எப்பொருள், எச்சொல், எவ்வயின், எவ்வழி என்று எகரவுயிரும் இறுதியில் வரும் வழக்கை ஏற்றுக்கொள்க. “சுட்டுமுதல் வயினும் எகர முதல் வயினும்” எனப் புள்ளிமயங்கியலில் ஆசிரியர் உடம்பொடு புணர்த்திக் கூறியிருப்பது கருதத்தகும். ஒள ஈறு (65) களவோ டியையின் ஒளவு மாகும். இது ஒளகார வுயிர்மெய் வரவு கூறும். அகலவுரை மேலே தனிநிலையாக வாராதெனப்பட்ட ஒளகாரம் ககரத்தோடும் வகரத்தோடும் சேரின் கௌ, வெள என இறுதியாக வரும். வழக்கு கௌ பெயராகவும் வினையாகவும் வரும். கௌ - கொள்ளு என்ற தானியம். வெள - வினைச்சொல். திறனுரை தமிழில் ஒளகார இறுதியுடைய சொற்கள் இரண்டே என்பது வரம்பு. இங்ஙனம் தமிழ் மொழிக் களஞ்சியத்தில் சில சொற்களின் எண்ணிக்கையை எடுத்து விளம்புவது தொல்காப்பிய நெறி. இதனால் தமிழ் முழுத்தறிந்த ஆசிரியன் புலமையும் பெருமையும் நூன்மதிப்பும் மாணக்கர் உள்ளங்களிற் பதியும். எகரவுயிர் (66) எ என வருமுயிர் மெய்யீ றாகா இஃது எகரத்தின் இயல்பு கூறும். அகலவுரை “உயிர்ஒள எஞ்சிய இறுதியாகும்” என்ற நூற்பாவில் எகரம் தனிநிலையாக இறுதி பெறாது என்று கண்டோம். ஒளகாரம் அங்ஙனம் இறுதி பெறாவிடினும், கௌ வெள என மேலை நூற்பாவிற் மெய்க்கு இறுதியாக வருவதையும் கண்டோம். அதுபோல் எகரம் எந்த மெய்க்காயினும் ஈறாகவாவது வருமோ என்ற வினா எழுகின்றது. எகரம் எம்மெய்க்கும் ஈறாகாது என்று விடையிறுப்பது இந்நூற்பா. திறனுரை அகர இகர உகரச்சுட்டுப்போல எகரம் தனிநிலையிலும் ஈறாகாது; கௌ, வெள, நொ போல உயிர்மெய்யினும் ஈறுபெறாது. எனவே தமிழ்ச் சொற்களில் ஈறாகும் இயல்பு எகரத்திற்கு இல்லை. எகரவுயிர் என்னாது எ என வருமுயிர் என்ற இழுப்புநடையால் அதன் தன்மைக்குறைவு காண்க. மொழி முதலிலோ எண் எனத் தனி உயிராகவும் பெண், செய் என மெய்யொடு கூடிய உயிராகவும் வரும். செத்து, செந்தனன், செந்தனள் என வினையெச்ச வடிவிலும் முற்று வடிவிலும், சங்கவிலக்கியத்தில் சில சொற்கள் பயின்று வரக்காண்கின்றோம். ஒப்பாகக் கருதி, ஒப்பாகக் கருதி மயங்கி என இதற்குப் பொருளுண்டு. செ என்ற உயிர்மெய் இதன் முதனிலையாக இருக்கவேண்டும். இறத்தற் பொருளில் வரும் செத்து, செத்தான் என்பதற்குச் சா என்பது பகுதியாகும். ஒப்பாகக் கருதி என்ற பொருளுடைய செ என் பகுதி தொல்காப்பியத்திற்குப்பின் தோன்றி சில நூற்றாண்டு வழக்கிலிருந்து நன்னூல் காலத்திற்கு முன்பே வழக்கிறந்தது. தீமை நன்மையை அழிக்கும் என்ற ஓருகொள்கைப்படி, இறத்தற் பொருளுடைய வடிவங்கள், ஒப்புப்பொருள் தந்த வடிவங்களை வழக்கொழியச் செய்தன. மாண்ட, மாண்டான் என்பனவற்றை ஒப்புநோக்குக. வெந்த, வெந்து, வெந்தான் என்ற வடிவங்களில் வெ என்ற வகர எகரம் முதனிலையாகப் பட்டாலும். வே என்பதன் குறுக்கமாகவே கருதுவதுண்டு. முன்னிலை ஏவல் வடிவு அதுவாதலின். ஒகரவுயிர் (67) ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே. இஃது ஒகரத்தின் இயல்பு கூறும். அகலவுரை ஒகரத்தின் இறுதிநிலையும் எகரம் போல மெய்யீறாகா. நகரமெய்யொடு சேர்ந்து நொ என ஓரிடத்தே வரும் எனக்கொள்க. பிறமெய்களோடு வாரா. வழக்கு: நொ வினைச்சொல், ஓரெழுத்தொருமொழி. “அ உ அறியா அறிவில் விடைமகனே நொஅலையல் நின்னாட்டை நீ” திறனுரை எகரவுயிர்பற்றி முன்கூறியபடி, ஒகரம் ஓஒ பெருமை எனச்சிறப்புப் பொருளில் அளபெடையாக இறுதியில் வரும். அ இ உச் சுட்டுபோலத் தனியுயிராக வாராது. எகரத்தைவிட ஒகரத்திற்கு ஒரு நன்னிலையுண்டு. அதுதான் ந என்ற ஒரு மெய்யிலாவது ஈறாக வருவது. ஒத்த, ஒத்து, ஒத்தான், ஒப்பு என்ற சொற்களில், ஒ என்ற தனியுயிர் முதனிலை என்று கொள்ளலாம் போல நிற்கின்றது. எனினும் ஒ என்பது அப்பொருளில் தனித்துவரும் வினை வழக்கின்மையான் கொள்ளவில்லை. ஏ ஓ (68) ஏ ஓ வெனுமுயிர் ஞகாரத் தில்லை. இது ஏ ஓ என்ற ஈறுகளின் நிலை கூறும். அகலவுரை ஏ ஓ என்ற இரு நெடிலுயிர்கள் ஞகரமெய்யொடு இறுதியாக வருவதில்லை. ஞே ஞோ என்று வாரா. எனவே வரத்தக்க அ ஆ இ ஈ உ ஊ ஐ என்ற ஏழுயிரொடும் இறுதியாக வரும். வழக்கு உரிஞ, உரிஞா, உரிஞி, உரிஞீ, உரிஞு, உரிஞூ, மஞ்ஞை திறனுரை ஏகார ஓகாரங்கள் மெய்களின் மேல் ஈறாக வருவன பெரும்பாலும் இடைச் சொற்களாக இருக்கும். ஞகரம் உரிஞ்¨என ஒரு கிளவியில் மட்டும் ஈறாக வருதலின் பல உயிர்களையும் ஈறாகப் பெறும் திறமுடையதன்று. உ ஊ (69) உ ஊ காரம் நவ்வொடு நவிலா. இது உ ஊ என்ற ஈறுகளின் நிலை கூறும். அகலவுரை முதலுரை உ ஊ என்ற ஈருயிர்கள் நகரமெய்யொடும் வகர மெய்யோடும் இறுதியாக வாரா. நு நூ, வு வூ என இறுதி வாரா. எனவே அ ஆ இ ஈ ஏ ஐ ஒ ஓ என நகரம் எட்டுயிரொடும் அ ஆ இ ஈ ஏ ஐ ஓ ஒள என வகரம் எட்டுயிரொடும் வரும். வழக்கு: பொருந, நா, பழநி, நீ, நே,பொருநை, நொ, நோ, உவ; உவா, குவி, வீ. வே, ஒளவை, வாழ்வோ, வெள. திறனுரை இவ்வுரைப்படி, நு, நூ, வு, வூ எனவாரா. ஆனால் பொருநு. நூ (எள்) பொருநூ (செய்யூ என்னும் வினையெச்சம்) எனவரக் காண்கின்றோம். ஏனை மூன்றும் வருதல் அரிதாக இருந்தாலும் வுகரவீறு களவு. உறவு, கனவு, இரவு எனப் பல சொற்களில் உள. ஆதலின் இவ்வுரை குறைபாடுடையது. ஆதலினன்றோ `நவிலா' என்றதனாலே வகரவுகரம் கதவு, துரவு, குவவு, புணர்வு, நுகர்வு, நொவ்வு, கவ்வு எனப் பயின்று வருதலுங்கொள்க என நச்சினார்க்கினயர் நிரப்புரை எழுதவேண்டியதாயிற்று. இரண்டாம் உரை உகரம் நகர மெய்ய்யொடு இறுதி வாராது. ஊகாரம் வரக மெய்யோடு இறுதி வாராது. இவ்வாறு நிரனிறையாகப் பொருள் கொள்ளலாம். எனவே நு இறுதியும் வூ இறுதியும் வாரா. திறனுரை “நகர விறுதியும் அதனோ ரற்றே” என்பதனால் பொருநுக்கடிது என நகர வுகரம் வரக் காண்கின்றோம். கௌ, வெள என்பன வினைச்சொல்லாதலின் கௌவூ, வெளவூ எனச் செய்யூ என்ற வாய்ப்பாட்டு வினையெச்சமாக வடிவுபெற இடனுண்டு. ஆதலின் இவ்வுரையும் குறைபாடுடையது. மூன்றாமுரை “உஊகாரம் நவ்வொடு நவிலா” எனப் பாடங்கொண்டு நு, நூ என்பன இறுதி வார எனப் பொருள் செய்தலுமுண்டு. ஈண்டு வகரம் விலக்கப்படுகின்றது. திறனுரை முன்னுரைகளில் இத்தகைய பாடமில்லை. இது ஊகமே. இது பாடமாயின் `ஒவ்வும் அற்றே நவ்வலங்கடையே' என்பதனை அடுத்ததாக இருக்கவேண்டும். மேலும் பொருது எனவும் பொருநூ எனவும் எள் என்ற பொருளில் நூ எனவும் வருதலின், வாரா என்ற உரை மிகக் குறைபாடுடையது. திறன்முடிபு களவு, வரவு, புரவு, துறவு, உறவு, விரிவு எனவாங்கு எண்ணிறந்த சொற்கள் தொல்காப்பியத்திலே இருக்கும்போது, வகரவுகரயிறுதி வாராது என்றல் எங்ஙனம்? இது பெருந் தடையாதலின் முதலுரை கொள்ளுமாறில்லை. நிரனிறையாகப் பொருள் செய்யும் இரண்டாவது உரையே பெரும்பாலும் பொருந்தும். காலப்போக்கில் நூற்பாவில் ஏதும் திரிபு நிகழ்ந்திருக்குமோ? இந்நூற்பா மேலும் நோக்கத்தகும். சு இறுதி (70) உச்ச காரம் இருமொழிக் குரித்தே. இது சுகர இறுதிக்கு வரையறை கூறும். அகலவுரை உகரத்தோடு கூடிய சகரம் அஃதாவது என்றஈறு இரண்டே சொற்களில் வரும். வழக்கு: பசு, முசு, திறுனுரை இந்நூற்பா ஈரெழுத்தொருமொழி பற்றியது. இரண்டிறத் திசைக்கும் தொடர்மொழி உகரச் சொற்கள் வரம்பில. இடக்கர்க் காற்றான சொல் ஒலிக் குறிப்பாதலின் இடம் பெறவில்லை. பு இறுதி (71) உப்ப காரம் ஒன்றென மொழிப இருவயின் நிலையும் பொருட்டா கும்மே. இது புகரவிறுதிக்கு வரையறையும் பொருள் நிலையும் கூறும். அகலவுரை உகரத்தொடு கூடிய பகரம் அஃதாவது புகரவிறுதி ஒரே ஒரு சொல்லிற்றான் வரும் என்று சொல்லுவர். அவ்வாறு வரும்போது தன்னைச் சார்ந்தும் பிறிதைச் சார்ந்தும் குறிக்கும் பொருளதாகும். வழக்கு தபு என்ற வினைச்சொல். இது அழிவு, நீக்கம் என்ற பொருளில் வரும். “தாய்தப வரூஉம் தலைப்பெயல் நிலை” (தொல்.புறம்) - தாய் தன்னை அழித்துக் கொள்ள வரும் சேர்க்கை நிலை. இங்கு தன்பால் வந்தது. `குறுநடைப்புறவின் தபுதியஞ்சி” (புறம்.43) என்பதும் அது. “அரில் தபத் தெரிந்து” (பாயிரம்) “காதலி இழந்த தபுதாரநிலை” (தொல்.புறம்.) “மாதபுத்த வேலோய்” (பரிபா.18) “மறந்தபக் கடந்தே” (பதிற்.11) “மதந் தபு ஞமலி” (மலைபடு. 609) இவையெல்லாம் பிறிதின்பால் வந்தன. அழிவு பிறபொருளாயின. திறனுரை `இருவயின் நிலையும் பொருட்டாகும்’ என்பதில் இருவயின் யாது? “இதுசெயல் வேண்டும் என்னுங் கிளவி இருவயின் நிலையும் பொருட்டா கும்மே தன்பா லானும் பிறன்பா லானும்” என்ற வினையியல் நூற்பா இந்நூற்றபாவுக்கு விளக்கமாகும். எனவே உப்பகாரமாகிய தபு என்ற ஒருசொல் தானழிதலையோ பிறிதழி தலையோ ஒருங்கே குறிக்கும். வெளு என்ற வினைச்சொல்லும் இங்ஙனம் வருதல் காண்க. தன்வினை பிறவினை என்பதற்குச் செயப்படு பொருளுண்டு. அந்த இலக்கண நோக்கில் தபு என்பது சுட்டப்படவில்லை. தற்புகழ்ச்சி, தற்கொலை, தற்பெருமை, தற்குறி என்றாற்போல் வருவது தன்பால் எனவும் அயலாக வருவது பிறன்பால் எனவும் படும். பிறன் என்பது ஈண்டு ஒருபாற் கிளவி ஏனைப்பாலையும் இனமாகக் குறிக்கும் எனக்கொள்க. சாத்தன் வெளுத்தான் அல்லது வெளுத்துவிட்டான்; சாத்தான் ஆடையை வெளுத்தான் எனத் தன்பாலும் ஆடையின் பாலும் வெளுமை ஏறல் காணலாம். மொழியிறுதியெழுத்துக் கூறுபவர் அதன்பொருள் நிலையையும் உடன் கூறியது ஏன்? இவ்விறுதிச் சொல்லின் அரிய அமைப்பினை எடுத்துக் காட்டினார். கூடுதற் செய்தி குற்றமில்லை. இனியவை கூறல் என்ற குறல் அதிகாரத்தில் `பணிவுடையன் இன்சொலனாதல்' என்ற ஒத்த செய்தியை உடன் மொழிந்ததை ஒப்புநோக்குக. விட்டவை கொள்ளல் (72) எஞ்சிய வெல்லாம் எங்சுதல் இலவே. இது மேல் விளக்கமாக எடுத்துக்காட்டாது விட்டனவற்றைக் கொள்க என்று கூறும். அகலவுரை உயிர் ஒள என்ற நூற்பா முதல் இவ்வுயிர்கள் இம்மெய்மேல் இறுதியில் வாரா என்று விலக்கப்பட்டன. இவையிவை மொழி யிறுதியாகும் என்று உடன்பாட்டு முறையிற் சொல்லப்படவில்லை. அவ்வாறு சொல்லாத உயிரெழுத்துக்களும் கொள்ளப்பட வேண்டும். என்பது இந்நூற்பாவின் கருத்து. உரை: இன்ன உயிர் இன்ன மெய்மேல் வருமென உடன்பாட்டு நெறியிற் சொல்லாத ஏனை உயிரெழுத்துக்களும் மொழியிறுதியெழுத்துக்களாக வருவதிற் குறைவில்லை. எஞ்சியவை: வருபவை நீங்கலாக முன் சேர்க்க சொன்னவை ககரத்தில் 9 எ ஒ ஒள 10 சகரத்தில் 9 எ ஒ ஒள ஞகரத்தில் 7 எ ஒ ஒள ஏ ஓ டகரத்தில் 9 எ ஒ ஒள ணகரத்தில் 9 எ ஒ ஒள தகரத்தில் 9 எ ஒ ஒள நகரத்தில் 7 எ ஒள உ ஊ ஒ 8 பகரத்தில் 9 எ ஒ ஒள மகரத்தில் 9 எ ஒ ஒள யகரத்தில் 9 எ ஒ ஒள ரகரத்தில் 9 எ ஒ ஒள லகரத்தில் 9 எ ஒ ஒள வகரத்தில் 7 எ ஒ உ ஊ ஒள 8 ழகரத்தில் 9 எ ஒ ஒள ளகரத்தில் 9 எ ஒ ஓள றகரத்தில் 9 எ ஒ ஒள னகரத்தில் 9 எ ஒ ஒள 147 சேர்க்க கௌவெள நொ 3 தனி உயிரீறு (எ ஒ ஒள நீங்கலாக) 9 கூடுதல் 159 ஈறாக வரும். திறனுரை ஙகரம் முப்பது எழுத்துக்களுள் ஓர் ஒலியன். சொல் நடுவே உறுப்பாக வரும். சொல்லுக்கு முதலிலும் வருவதில்லை. இறுதியிலும் வருவதில்லை. இது வெளிப்படை யாதலின் ஆசிரியர் ஙகரம் பற்றி ஈண்டு யாதும் கூறிற்றிலர். முழுதும் வாராமை குறிப்பிடத்தக்கதன்று. எஞ்சியவெல்லாம் என்பதன் பொருள் யாது? மேலைநூற்பாக்களின் இன்னவுயிர்கள் இன்னமெய்களோடு வரும் என்று உயிர் வரிசையாகவோ மெய்வரிசையாகவோ விதிக்கவில்லை. சுருக்கங்கருதி இன்னவற்றோடு சில வரும், சில வாரா என்றளவிற் சுட்டினார். ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத் தொருமொழியளவிலும் மிகச் சிலவற்றைக் காட்டினார். ஏனையவற்றின் நிலை என்ன என்பதற்கு விடையாகும். “எஞ்சியவெல்லாம் எஞ்சுதல் இலவே” என்ற நூற்பா. இவை எழுத்து நிலைபற்றியனவல்ல; சொன்னிலை பற்றியன. எனவே சொல்லிற்கு இறுதி என்றே `எஞ்சியவெல்லாம் என்பதற்குப் பொருள் கொள்ளவேண்டும். இதன் கருத்து என்ன? “முதலா வேன தம்பெயர் முதலும்” என்ற நூற்பாவில் சொல்லுக்கு முதலில் வாரா என்று விலக்கப்பட்ட எழுத்துக்களும் தம்மைச்சுட்டிப் பெயராக வரும்போது முதலாகக் கொள்ளவேண்டும் என்று இலக்கணநெறி காட்டினார். நூலின் நுனிவருமென்றால் அடிப்பகுதி வருவதை உடன் குறிப்பது போல, எழுத்து தன் பெயர் சுட்டுங்கால் முதலாக வருமென்றால், அதே காரணத்தால் இறுதியாகவும் வரும் என்பது வெளிப்படை. அதற்கோர் தனிவிதி வேண்டியதில்லை. இவ்வாறு அடங்குதலின் ஈறில் ஏனை தம் பெயர் ஈறாம் என்று தொல்காப்பியர் நூற்பா செய்யவில்லை என்று தெளிக. இதனைத் தெளிந்த பவணந்தியார் “தம்பெயர் மொழியின் முதலும் மயக்கமும் இம்முறை மாறியும் இயலும் என்ப” என்று நூற்பித்தார். “ஈறும்” எனச் சேர்க்காமை நினையத்தகும். `எஞ்சியவெல்லாம்' என்பதனுள் குற்றியலுகரவீறும் அடங்கும் அடக்கிக் கொள்ளவும் வேண்டும். `நெட்டெழுத் திம்பரும் தொடர்மொழியீற்றும்' என முன்பே இவ்வீறு சுட்டப்பட்டது. `குற்றியலுகரத்திறுதியும் உளப்பட' எனவும் `குற்றியலுகரக் கின்னே சாரியை' எனவும் `யாதென்னிறுதி' எனவும் பின்னியல்களில் இவ்வீறு புணர்க்கப்படுதல் காண்க. “அறுநான் கீற்றொடு நெறி நின்றியலும்” என்று புணரியலின் முதல் நூற்பாவில் குற்றியலுகரத்தையும் சேர்த்துத் தொகை கூறுவதாலும் இஃது உறுதிப்படும். மெய்யிறுதிகள் (73) ஞணநம னயரல வழள வென்னும் அப்பதி னொன்றே புள்ளி யிறுதி. இது பதினொரு மெய்கள் மொழியீறாகும் எனக்கூறும். அகலவுரை மேலே உயிர்கள் தனியாகவும் மெய்யோடு சேர்ந்தும் ஈறாகும் நிலை நுவலப்பட்டது. இந்நூற்பாவில் சொல்லி னிறுதியில் புள்ளியுடைய மெய்கள் ஈறாதல் நுவலப்படும். ஞ் ண் ந் ம் ன் என்னும் மெல்லெழுத்து ஐந்து: ய் ர் ல் வ் ழ் ள் என்னும் இடையெழுத்து ஆறு ஆகப் பதினொன்றே புள்ளி யாகச் சொல்லின் இறுதியில் வரும். எனவே க் ச் ட் த் ப் ற் என்ற வல்லெழுத்தாறும் ங் என்ற மெல்லெழுத்தொன்றும் வாரா. வழக்கு: உரிஞ்¨ எண்ணெய் முரண் வள்ளலார் பொருத் அண்ணல் கழகம் தெவ் வெள்ளையப்பன் தமிழ் திருக்குறள் திறனுரை “உயிர்மெய்யல்லன மொழி முதலாகா” என்றபடி சொல்லுக்கு முதலில் புள்ளியுடைய மெய்வருவதில்லை; ஆனால் இறுதிக்கண் புள்ளியொடு பதினொரு மெய்கள் வரும். இதனைத் தெளிவிக்கவே மெய்யிறுதி என்னாமல் `புள்ளியிறுதி' என்று வடிவொடு கூறினார் ஆசிரியர். மொழி முதற்கண் வல்லெழுத்து கூடுதலாட்சி பெறுதலையும் இறுதிக்கண் அறவே பெறாமையும் காண்க. ஓரிடத்து உயர்ந்தோர் பிறிதோரிடத்துத் தாழ்வார்போலும். இடையெழுத்து ஆறும் இறுதிச் செல்வாக்குடையன. மெய்ய்நிலைகள் அ. மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை ஞ ந ம ய வ ஆ. மொழி முதலில் மட்டும் வருபவை க ச த ப இ. மொழி யிறுதியில் மட்டும் வருபவை ண ன ர ல ழள. ஈ. மொழி முதலிலும் இறுதியிலும் வாராதவை ட ற ங இவையெல்லாம் புள்ளியாக நடுவில் வரும். இவை தமிழ்ச் சொல்லமைப்புக்கள். அயற்சொற்களைத் தழுவ வேண்டின் இவ்வமைப்பினைப் போற்றவேண்டும். பாரத், அலகாபாத், ஐதராபாத், இசுலாமாபாத், பாரத்சேவக்சங்க், பந்த், ஆனந்த், என்பனவெல்லாம் தமிழ் வடிவிழந்தவை. தமிழெழுத்தில் எழுதி விடுவதாலே தமிழெனவோ தமிழுக்கு வளர்ச்சியெனவோ மயங்க வேண்டா. துணிந்து ஒதுக்குக. தெளிவுக்கு இரண்டொரு விளக்கம் தருவன்: போதும். பாரத் என்பது தகரப் புள்ளியீறு உருபுகள் சேருங்கால் பாரதை. பாரதால், பாரக்கு. பாரதின், பாரதது, பாரத்கண் என வருமா? இயையுமா? பாரதத்தை, பாரதத்தால், பாரதத்துக்கு, பாரதத்தின், பாரதத்தினது, பாரதத்தின்கண் என்றே வரும். எனவே பாரதம் என மகரவீறே நம் தமிழ் மரபு. பாரதநாடு, பாரத தேசம், பாரத தேவி, பாரத நாயகி, பாரதப்போர், பாரத மக்கள் என்று மாக்கவி பாரதி தமிழ் மரபுப்படி பாடுதல் காண்க. அலகாபாத்து, ஐதராபாத்து, இசுலாமாபாத்து, பாரத சேவக சங்கம், பிரசாது, பானிபட்டு, தேசுமுகம் என்று இறுவதே தமிழ் வடிவம். ஐ, ஆல், கு, இன், அது, கண் என்ற உருபுகளைச் சேர்த்துப் பார்த்தால், மொழியமைப்புப் புரியும். வல்லொற்று இறுதியாகத் தமிழில் இருக்கமுடியா என்பது பளிச்சிடும். இவ்வகையில் தமிழ் பிற மொழியமைப்புகளோடு வேறுபட்டது. வல்லொற்றுக்கள் ஈறாகும் அயன்மொழிகளிலுங்கூட இறுதி உயிரிழுப்பாக ஓடி நிற்பதைச் செவியால் உணரலாம். தமிழ்மொழியில் சொல்லிறுதி பற்றிய கணிப்பு: உயிர் (தனியாக) - 9 எ, ஒ, ஒள நீங்கலாக கவ்வரிசை - 10 சவ்வரிசை - 9 ஞவ்வரிசை - 7 டவ்வரிசை - 9 ணவ்வரிசை - 9 தவ்வரிசை - 9 நவ்வரிசை - 8 பவ்வரிசை - 9 மவ்வரிசை - 9 யவ்வரிசை - 9 ரவ்வரிசை - 9 லவ்வரிசை - 9 வவ்வரிசை - 8 ழவ்வரிசை - 9 ளவ்வரிசை - 9 றவ்வரிசை - 9 னவ்வரிசை - 9 மெய்ய்ப்புள்ளி - 11 170 ஈறுகள் 170 ஈறுகள் என்று எண்ணிக்கை பெரிதாகத் தோன்றினாலும் புணர்ச்சிக்கு நிலைமொழியில் நிற்கும் உண்மையான ஈறுகள் உயிர் பன்னிரண்டும் மெய் பதினொன்றும் ஆக இருபத்துமூன்றேயாம். குற்றியலுகரமும் சேரும்போது இருபத்து நான்காம். “ஆவி ஞண நமன யரலவ ழளமெய் சாயு முகரம் நாலாறு மீறே” என்று நன்னூல் எளிய இனிய வரம்புகாட்டும். எழுத்து அல்லது ஒலியன் என்பது பொருண்மை யுடையதும் பொருள் வேற்றுமை செய்வதும் ஆம். இதுவே இதன் தலையிலக்கணம்; மொழி முதலிலும் வரலாம். இறுதியிலும் வரலாம். வாராமலிருக்கலாம்; அங்ஙனம் வாராதவை இடையிலாவது வரும்; எங்கோ ஓரிடத்து வந்து பொருண்மை தோற்றும். ஙகரம் முதலிலும் இறுதியிலும் வாரா தொழியினும் இடையில் வந்து பங்கம் ஓ பக்கம் கங்கு ஓ சுக்கு; பாங்கு ஓ பாக்கு எனப் பொருள் வேற்றுமைத் திறன் செய்கின்றது. மொழிப் பரப்பில் அரிதாக ஓரிடத்துத் தோன்றித் தனக்கெனப் பொருண்மை காட்டிவிடின், அதுபோதும் அதனை ஒலியன் என்று மதிப்பதற்கு; அதனாற்றான் ஙகரம் முப்பது எழுத்தினுள் ஒன்றாயிற்று. நகரமெய்யிறுதி (74) உச்ச காரமொடு நகாரஞ் சிவணும். இது நகரமெய்யிறுதிக்கு வரையறை கூறும். அகலவுரை சு என்ற இறுதி இருசொல்லளவில் வந்ததுபோல நகரமெய் யிறுதியும் இரு சொல்லளவில் வரும். அஃதாவது நகரவிறுதி சுகரத்தையொக்கும். வழக்கு பொருந் - ஒத்தல். ஒத்த வேடங்கொள்ளல்; வினைச்சொல் வெரிந் - முதுகு; பெயர்ச்சொல். திறனுரை பொருநன் என்ற சொல் ஒத்தவன், ஒப்புடையவன் என்று பொருள்படுங்கால், பொருந் என்பது பகுதியாகும்; வீரன் என்று பொருள்படுங்கால் பொரு என்பது பகுதியாகும் என்ற வேற்றுமையுணர்க. மாண்டான் என்பது மாண்புடையான் என்றக்கால் மாண்பகுதி என்னவும் இறந்தான் என்றக்கால் மாள் பகுதி எனவும் வருதலை ஒப்புநோக்குக. வெரிந் என்ற சொல் பண்டு மிக்க பயிற்சியுடையது என்பதனைப் புள்ளி மயங்கியல் காட்டும். சிலப்பதிகாரம் வரை இச்சொல்வரவைக் காண்கின்றோம். இது உயர்திணை முதுகைக் குறியாது. செடிகொடி விலங்குகளின் பின்புறத்தை அல்லது மேற்புறத்தைக் குறிக்கும் என்பதனை அவையநூல் ஆட்சிகளால் அறியலாம். வழக்கிற்குக் கொண்டு வரத்தகும் அறிவியற்சொல் இது. ஞகர மெய்யிறுதி (75) உப்ப காரமொடு ஞகரையும் அற்றே அப்பொரு ளிரட்டா திவணை யான. இது ஞகரமெய்யிறுதிக்கு வரையறை கூறும். அகலவுரை பு என்ற இறுதி ஒரு சொல்லளவில் வந்தது போல ஞகரமெய்யீறும் ஒரு சொல்லில் வரும். இந்தவளவில் ஞகரம் புகரத்தை யொக்கும். புகரம் போலத் தன்பால் பிறன்பால் எனப் பொருளிரட்டுதல் ஞகரத்திற்கு இல்லை. வழக்கு: உரிஞ் - உரிஞ்சுதல், வினைச்சொல் திறனுரை பொருந் பொருந்து எனவும் உரிய உரிஞ்சு எனவும் உரிய வல்லினம் பெற்றுப் பிற்காலத்து நீண்டன. புறம் புறம்பு என வருதலை நோக்குக. மாணாக்கர்க்கு முன்னும் பின்னும் நினைவூட்டி ஒப்புமை காட்டி நூல் முழுதும் கருத்தோடச் செய்தல் கல்வி முறை யாதலின், தொல்காப்பியம் மாட்டேற்றினை நிரம்பப் போற்றியது. ஒத்ததறிதல், ஒவ்வாமையறிதல், ஆய்வுகாணல் இவை மாட்டேற்றின் பயன்கள். வகர மெய்யீறு (76) வகரக் கிளவி நான்மொழி யீற்றது. இது வகரமெய்யீற்றுக்குச் சொல்வரையறை கூறும். அகலவுரை வகரமெய்யெழுத்து நான்கு சொல்லில் ஈறாக வரும். வழக்கு: அவ் இவ் உவ் தெவ் முதல் மூன்றும் அஃறிணைப் பன்மைச் சுட்டுப் பெயர்கள்; அவை, இவை, உவை என்பது பொருள். தெவ் - பகை; பெயர்ச்சொல். திறனுரை மலையாளம் தோன்றிய காலத்து உவ் என்பது வழக்கின்மையின் இலீலா திலகம் அவ், இவ், தெவ் என்ற மூன்றினையே உடன்படும். அவ், இவ் என்பன உடம்படு மெய்யல்ல என்பதும் இந்நூல் தெளிவிக்கும் கருத்துரை. தொல்காப்பியத்தினைப் பின்பற்றி நன்þனூல் நான்மொழியீறு சொல்லும். கவ், வவ் என்ற போலி வகரவீறுகளை நன்னூல் குறித்தாலும், உண்மையாகக் கொண்டு மெய்யீற்றுப்புணரியலில் புணர்ச்சிக்கு மேற்கொள்ளவில்லை. கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை யிழந்து என்ற திருக்குறளில், கவ், தவ் என வகரவீறுகள் வந்திருந்தும் பிற்கால இலக்கணத்தார் இவற்றைச் சேர்க்கவிவ்லை. போலி என்று கவ்வையும் ஒலிக்குறிப்பெனத் தவ்வையும் கருதிவிட்டனர் போலும்; அல்லது கவ்வு, தவ்வு என உகரவீறாகக் கொண்டு மிருக்கலாம். னகர மகர மயக்கம் (77) மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்ப புகரறக் கிளந்த அஃறிணை மேன. இது னகரவீற்று மெய்க்கு மயக்கமும் வரையறையும் கூறும். அகலவுரை தமிழ்ச்சொற்களின் உயிரிறுதிகளையும் மெய்யிறுதி களையும் வரன்முறை செய்துவந்த ஆசிரியர் மெய்யிறுதிக்கண் ஓர் ஒலிப்போலியை இந்நூற்பாவில் இயம்புவர். அஃறிணைப் பெயர்ச் சொல்லாகத் தொடர்மொழியில் வரும் னகரமெய்யீறு மகர வீறாக மயங்குதலுண்டு. இது பொதுவிதி எனினும் ஒன்பது னகரப் பெயர்கள் மட்டும் அவ்வாறு மயக்கம் பெறுவதில்லை என்று புலப்படுப்பர் புலவர். புகர் அறக்கிளந்த - குற்றமின்றித் தெளிவாகச் சொல்லப்பட்ட மேன - மேலே, இடத்து. வழக்கு: பொதுவிதி: நிலன் -நிலம்; அறன் - அறம்; கலன் -கலம்; வலன் -வலம்; அகன் - அகம்; புறன்- புறம்; திறன் - திறம். இவ்வாறு பல. மயங்காதன ஒன்பது 1. எகின் - அன்னம், புளி 2. பயின் - பிசின் 3. அழன் - பிணம் 4. குயின் - மேகம் 5. வயான் - காரிப்புள 6. செகின் - 7. விழன் பொருள் தெரியவில்லை 8. புழன் 9. வயான் - . அழன், புழன், எகின், குயின் என்பவை தொல்காப்பிய நூற்பாவில் ஆளப்பெற்றுள. திறனுரை இம்மயக்கம் அஃறிணைப் பெயரில் தொடர்மொழியில் வரும் என்பது வரம்பு. தொடர்மொழி இரண்டிறந்திசைக்கும் சொல்லாதலிதன், வலியன், கலுழன், அலவன் என்பனவற்றையும் குறிக்குமாயினும் இருவகை வழக்கு நோக்கி, நிலன், அகன், புறன், உரன் என வாங்கு மூவெழுத்துச் சொற்களே ஏற்புழிக் கொள்ளப்படும். முன்பே விளக்கியபடி பொருள் வேற்றுமை செய்யாமை ஒலிப்போலியின் இலக்கணமன்றோ. மகரத்தோடு மயங்கினாலும் னகரவீராகவே வைத்துப் புணர்க்கப்படும் என்பது இந்நூற்பாவின் அறிவிப்பு. மயங்காத சொற்கள் ஒன்பது: மயங்கும் சொற்கள் தொல்காப்பியக்காலத்தே மிகப்பல வழக்கிலிருந்தன. ஆதலின் மகர வீறாகப் புணர்க்கப்பட்ட இடங்களும் தொல்காப்பியத்து உள. மறங்கடை, சுரமெனமொழிப, நிலம்பெயர்ந்து, மடம்பட என்பன சான்றுகள். இடைக்காலத்து மகரவீற்று வழக்கு மரபாயினமையின் பின்னிலக்கணிகள் மகரம் னகரமாக மயங்கும் எனச் சுட்டினர். இதுவும் கெடுதலில்லை, பொருளைத் தாக்காமையின். ஒரு கருத்தினைப் புலப்படுத்த மொழிக்கண் சொல் வடிவங்களும் இலக்கணவடிவங்களும் கூடுதலாக இருப்பது மக்கட்கு எளிமையாகும்; மொழிக்கு வளமாகும்; நடைக்கு ஆற்றலாகும். மொழியிறுதியெழுத்துக்களைக் கூறும் தொல்காப்பியம் ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, தொடர் மொழி என்ற மூன்று மொழி நிலைகளில் வைத்துச் சில வரையறை செய்திருப்பதைக் கற்கின்றோம். இந்நூன்முறை பின்னூல்களில் இல்லை. மொழி மரபு - இயல் முடிவுரை நூற்பா : 34 குற்றியலுகரவிலக்கணம் பற்றிப் பல்வேறு கொள்கை களும் அதனால் சில குழப்பங்களும் வழிவழி வந்துள்ளன. இதனைத் தனிப்பொருளாக இங்கு முழுதுற ஆய்தல் இடனன்று. ஆதலின் சிந்தனைக்கு உரமாகும் சில குறிப்புக்களைத் தருவேன் மூன்று நூற்பாக்கள் நம் விளக்கத்துக்கு உரியவை. “இடைப்படிற் குறுகு மிடனுமா ருண்டே கடப்பா டறிந்த புணரிய லான” இது மொழிமரபு நூற்பா. “அல்லது கிளப்பினும் வேற்றுiமைக் கண்ணும்; எல்லா விறுதியும் உகரம் நிறையும்” “வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழி தொல்லை யியற்கை நிலையலு முறித்தே” இவ்விரண்டும் குற்றியலுகரப் புணரியல் நூற்பா. `உகரம் நிறையும்' என இளம்பூரணரும் பேராசிரியரும், `உகரம் நிலையும்' என நச்சினார்க்கினியரும் பாடங் கொள்வர். பிறர்கூறும் கருத்துரைகள் 1. `இடனுமாருண்டு' என்பதனால் குற்றியலுகரம் புணர்மொழியில் சிறுபான்மையாக அருகி வரும். 2. வன்றொடர்க் குற்றியலுகரத்தின் முன்னே வருமாயின் அரைமாத்திரை யாகும். கால்மாத்திரையாகும். ஒரு மாத்திரை யாகும் என்ற மூன்று கருத்துக்கள் உள. செக்குக்கணை சுக்குக்கோடு என்பனவே மூவரும் காட்டும் சான்றுகள். 3. குற்றியலுகரம் இருமொழிப்புணர்ச்சிக்கண் அல்வழியிலும் வேற்றுமையிலும் ஒருமாத்திரையாக நிறையும் என்ற கருத்தும் அரைமாத்திரையாகவே நிலையும் என்ற கருத்தும் உள. இவ்வேறுபாடுகளுள் நாம் மிகவும் கருதத்தக்கது புணர்மொழிக்கண் குற்றியலுகரம் ஒரு மாத்திரையாகி முற்றுகரம் ஆம் என்பது. உரகம் நிறையும் என்று பாடங் கொள்ளும் இளம்பூரணரும் பேராசிரியரும் அவ்வழியினரும் இக்கருத்துடையர். இது பொருந்துமா? சொற்கள் எல்லாம் புணர்மொழிப்படுபவை. புணர் மொழிக்கு வாராத சொற்கள் இல்லை. குற்றியலுகரங்கள் அல்வழி வேற்றுமைப் புணர்மொழியாகுங்கால் ஒரு மாத்திரை யாக நிறைந்துவிடும் எனின், தனிமொழிக் குற்றியலுகரச் சொற்கட்குப் பயனில்லை. உயிரீற்றுப் புணரியலில் உகர வீற்றிலே அடக்கி விடலாமே. குற்றியலுகரப்புணரியல் எனத் தனிப் பேரியல் வேண்டுமா? நிலைமொழியின் இறுதி குற்றியலுகரமாக நின்றாற்றானே, தனிப் புணரியலுக்குப் பொருளுண்டு. குற்றியலுகரத்திற்குத் தனிப்புணர்ச்சி விதிகளும் வேற்றுமைகளும் உண்டு என்பவை எல்லாரும் உடன்பட வேண்டிய கோட்பாடுகளாம். “இருவகை யுகரமோ டியைந்தவை வரினே நேர்பும் நிரைபும் ஆகும் என்ப” என்ற செய்யுளியலில் இருவகையும் என்ற வேறுபாடு படுமிகையாகிவிடுமன்றோ? செய்யுளிற் சொற்கள் அசையாகிச் சீராகியடியாகித் தொடர்ச்சி பெற்றாகும்போது, நேர்பு நிரைபு என்ற குற்றிலுகர வாய்பாடுகட்கு இடம் யாண்டுண்டு? முற்றுகரமாகுமெனின், `போந்து போந்துசார்ந்து சார்ந்து' என்ற கட்டளையடியில் எட்டெழுத்தாக எண்ணப்பட வேண்டுமன்றே? பேராசிரியர் இதற்குக் கூறும் அமைதி நம் உளம் தொடவில்லை. சார்பெழுத்து புணர்ச்சியில் முதலெழுத்தாகிவிடும் என்ற கோட்பாடு அடிமுரண் எனத் தோன்றுகின்றது. புணர்மொழிக்கண் குற்றியலுகரம் கால் மாத்திரை யாகுமென்றால் ஒரு மாத்திரை யாகுமென்றாலும் நூன்மரபில் `அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே'என்றதனையடுத்து இவை சொல்லப்பட்டிருக்கும்; வடிவ நிலை பற்றியும் சொல்லியிருக்க வேண்டும். மகரத்துக்குச் சொல்லியிருப்பதை நினைவுகொள்க. `இடைப்படிற்குறுகும் இடனுமாருண்டே' என்றுமொழி மரபிற் சொல்லியதுபோல, `இடைப்படின் மிகும் இடனுமுண்டு' என்றொரு நூற்பா யாத்திருக்க வேண்டுமன்றோ? `உகரம் நிறையும்' என்ற ஒரு சொல்லை வைத்துப் பல இலக்கணக் கூறும் பழுதாகும்படி கருத்துரைப்பது செவ்விதன்று. `நிலையும்' என்ற ஒரு பாடம் உண்டு. `தொல்லையியற்கை நிலையலும் உரித்தே' என்று அடுத்துவருவதை நோக்கின், இப்பாடமும் பொருந்தும் போலும். எனினும் நச்சினாக்கினியருக்கு முந்திய உரையாசிரியர் இருவரும் `நிறையும்' என்றே ஒரு தலையாகப் பாடங்கொண்டுள்ளனர். ஆதலின் அதுவே வலியுடைத்து. `உகரம் நிறையும்' என்ற பாடத்தினையே கொள்வோம். அதற்காக முற்றுகரமாக, ஒரு மாத்திரை நிறையும் என்ற பொருள் கொள்ளவேண்டும் என்பதில்லை. பேராசிரியர் இப்பொருளினர் என்பது தெளிவு. உகரம் நிறையும் என்பதற்கு மாத்திரை நிறையும் என்ற பொருள் கொள்ள வேண்டா. `குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்' என்பது போல இசைநிறைவாகக் கருதலாம். அதாவது குற்றியலுகரம் புணர்மொழியிலும் தனக்குரிய அரைமாத்திரையோசை நிறையாகவே பெறும் என்பது கருத்து. ஈரெழுத்தொருமொழி என்று தொடங்கும் முந்திய நூற்பாவில் `ஆயிரு மூன்றே உகரம் குறுகிடன்' என வருவதாலும் இக்கருத்து வலியுறும். `ஆறு ஈற்றுக் குற்றியலுகரம் நிறைந்தே நிற்கும்' என்ற இளம்பூரணர் உரையும் இக்குறிப்பே கொண்டது. இவ்வுரையில் மாத்திரைக் குறிப்பில்லை. மேலே முதற்கண் காட்டிய மூன்று நூற்பாக்கட்கும் நான் கொள்ளும் பொருள் வருமாறு: 1. ஒருமொழியிலேயன்றிக் குற்றியலுகரம் புணர் மொழியிலும் குறுகுதல் உண்டு. குற்றியலுகரப் புணரியலில் இதன் விளக்கத்தைக் காணலாம். 2. அறுவகைக் குற்றியலுகர வீறுகளும் புணர்மொழியில் அல்வழியிலும் வேற்றுமையிலும் அரைமாத்திரை யோசை நிறைந்து நிற்கும். அரைமாத்திரையினின்று குறைதலோ, அரைமாத்திரையினும் மிகுதலோ இரா. 3. செக்குகணை, சுக்குக்கோடு போன்ற வல்லொற்றுத் தொடர்மொழிக்கு முன் வல்லெழுத்து வரும்போது, குற்றியலுகரம் முதலெழுத்து உகரம்போல ஒரு மாத்திரை பெறுதலும் உண்டு. இவை மன நிறைவு தரும் உரையல்ல எனினும் உள்ளவற்றுள் ஒத்தது காணல் நெறியாகும். இலக்கணப் பெரும்புலவர் வேங்கடராசுலு எழுதிய `குற்றிய லுகரம்' என்ற ஆய்வுப்பெருங் கட்டுரை மாணவர் பார்வைக்குரியது. நூற்பா 38 இசைநிறை கூறும் இந்நூற்பாவிற்கும், “நீட்டம் வேண்டின் அவ்வள புடைய கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்” என்ற அளபெடை நூற்பாவிற்கும் இயைபுண்டு. வேண்டு மென்றால் வேண்டும் அளபுடைய ஒலிகளைக் கூட்டி ஒலித்துக் கொள்ளலாம் என்பது இதன் கருத்து. ஈங்கும் செய்யுளுக்கே என்ற குறிப்பில்லை என்றாலும் செய்யுட்கே பெருவரவாகும் என்பதில் ஐயமில்லை. இசைநிறை அல்லது அளபெடை எப்படி உண்டாகின்றது. எப்படிப் பயன்படுகின்றது? மூவளபு இசைத்தல்தான் ஏறக்குறையப் பெருவிழுக்காடு விளிநிலைகளில் கூடுதல் வரும்; `செறாஅஅய் வாழியென் நெஞ்சு' என்றவிடத்து நான்கு மாத்திரை என்பதற்காக `செறாஆய்' என மேலும் ஒரு நெட்டெழுத்து வருவதில்லை. `நெட்டெழுத்திம்பர் ஒத்த குன்றெழுத்து’ என்ற இந்நூற்பாவின் தெளிவால், எவ்வளவு அளபெழுந்தாலும் குற்றெழுத்துத்தான் பின்வரும் என்பது பெறப்படும். அளபெடை குறித்து இரு கொள்கைகள் உள. அவற்றை ஈண்டுத் தெளிவது பொருந்தும்: 1. நெட்டெழுத்தே மூன்று நான்கு என அளபெடுக்கும். அறிகுறிகளாகவே ஒத்த குற்றெழுத்து வரும். `நீட்டம் வேண்டின் கூட்டி எழூஉதல்' என்பது தொல்காப்பியம். நீட்டம் என்பதனாலேயே நெட்டெழுத்தின் நீட்டம் என்பது தெளிவாம்; நன்னூல் `நெடில் அளபெழும் அவற்றவற்றினக் குறில் குறியே' என்று வெளிப்படை செய்யும். அளபெடை வந்த சொற்களைச் சொல்லும்போது கூட்டி எழூஉதல் என்றபடி நெடிலை நீட்சியாகவே மூன்று மாத்திரையளவு ஒலிக்கின்றோம். இரண்டும் ஒன்றுமாக விட்டொலிப்பதில்லை. ஆனால் ஒரு சிக்கல் செய்யுட்கண் அலகிடும்போது கராஅம் வரூஉம் என்பதனை நிரை நேராகப் பிரித்தது வாய்பாடு கூறுவதே யாப்பிலக்கணச் செம்மையாகும். மூன்று மாத்திரையை ஓர் எழுத்தாக வைக்கும் நிலை யாண்டும் இல்லை. 2. இன்னொரு கொள்கை: நெட்டெழுத்து அளபு நிறைக்க வில்லை. ஒத்த குற்றெழுத்துத்தான் நிறைக்கின்றது என்பது இன்னொரு கொள்கை. `குன்றிசை மொழிவயின்' என்ற இந்த நூற்பாவில் ஒத்த குற்றெழுத்து நின்று இசை நிறைக்கும் என்று எழுவாய் பயனிலை அமைந்துள்ளன. இசை நிறைப்பது குற்றெழுத்தின் செயலாகச் சொல்லப்படுகின்றது. `நெட்டெழுத் திம்பர்' என்பதனாலும் இது பெறப்படும். இசைநிறைவில் குற்றெழுத்துக்குத் தனிமதிப்பளித்தால் `கராஅம்' என்பதனை நிரைநேர், புளிமா என அலகிடும் யாப்பிலக்கணத்துக்கும் ஒத்துவருகின்றது என்பது இக்கொள்கையர் விளக்கம். இவ்விரு கொள்கைகளும் தம்முள் முரணானவை; ஒன்றையே நாம் உறுதிப்படுத்த வேண்டும். எழுத்து, குறில், நெடில், மெய், வல்மெல்லிடை, சார்பு எல்லாமே ஒலி நிலையில், கேள்விநிலையில் விளக்கப்படுவன. வரிவடிவை வைத்து ஒலியிலக்கணம் வகுக்கப்படுவதில்லை என்ற பேருண்மையைப் போற்றவேண்டும். நாகரிக மொழிவளர்ச்சியில் வரிவடிவத் திற்குப் பேராதிக்கம் உண்டெனினும், ஒலி நிலைக்கு நிகரான மதிப்பு வரிநிலை பெறுவதில்லை. ஓரளபிசைக்கும் குறில், ஈரளபிசைக்கும் நெடில் என்று அளபு கூறிவந்த தொல்காப்பியர் மூவளபு பற்றியும் அவ்வளபுடையன கூட்டி ஒலித்தல் பற்றியும் தொடர்ந்து கூறுவர். இதனால் வரிவடிவு குறித்த எண்ணத்துக்கு இடனில்லை என்பது தெளிவாகும் எழுத்து, குற்றெழுத்து, நெட்டெழுத்து என்பனவெல்லாம் ஒலியன், குற்றொலியன், நெட்டொலியன் என்றே பொருள்படும். எனவே தொழாஅர், படாஅ, வரூஉம் என்பனவற்றை மூன்றொலியளவாகவே நீண்டொலிக்க வேண்டும் என்பது தெளிவாதலோடு இவ்வாறே இன்றும் ஒலிக்குமுறை பொருந்தும் என்பதும் போதரும். மேலும் மூவொலியாகும்போது பொருண்மை யுடைய ஒலியனில்லை என்பதும் முன்விளக்கியபடி உணரப்படும். `குன்றிசை மொழிவயின்' என்பதனால் இசை குன்றிற்றேயன்றிப் பொருண்மை குன்றவில்லை என்பதும் இசை நிறைக்கும் என்பதனால் பொருண்மை நிறைவில்லை என்பதும் விளங்கும். “குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும் நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே” என்ற நூற்பாவை மறுகாலும் சிந்திப்போம். தொல்காப்பியர் முன்பே தமிழுக்கு வரிவடிவும் செம்மையாயிற்று எனவும் செய்யுள் வழக்கும் ஒரு நிகராக மொழியப்படுதலின் அன்றே எழுத்துவழக்கும் முதன்மை பெற்றது எனவும் அதனால் தொல்காப்பியர் வேற்றுமை தெளிக்குமுறையில் வடிவன் பற்றிய செய்திகளையும் இடைமடுத்துள்ளார் எனவும் நாம் அறிவோம். வரிவடிவை அடிப்படையாக வைத்து ஒலியிலக்கணம் மொழியப்படுதல் இல்லை எனினும் வரிவடிவச் செய்தி வருவது முரணாகாதன்றே. “மெய்யினியற்கை புள்ளியொடு நிலையல்” என்றால் அது மெய்யொலியன் இலக்கணம் ஆகாது. புள்ளிவடிவம் ஒலியனிலக்கணத்துக்கு எவ்வாற்றானும் தொடர்பில்லை. ஓர் ஒலியனுக்கு எழுத்துலகில் வந்த வரிக்குறியைக் காட்டும் அளவே அதன் பயன் அது போன்று வரிவடிவம் பற்றியதே இந்நூற்பா என அறிக. ஒத்த குற்றெழுத்து நின்று இசை சிறைக்கும் என்ற அடியில் `நின்று' என்ற வினையெச்சம் காட்டுவது என்ன? அறிகுறியான வரிவடிவைக் குறிப்பதாகும். இசை குன்றிய சொல்லில் இசைநிறைவுக்கு அடையாளமாக நெட்டெழுத்து வடிவுக்குப் பின் ஒத்தகுற்றெழுத்து வடிவம் நிற்கும். அதனால் ஒலிநீட்சி பெறப்படும். இன்னொரு குறிப்பும் இவ்விடத்து உண்டு. சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் தனியுயிர் வடிவங்கள் இருப்பதில்லை. இதனைப் `புள்ளியில்லா எல்லாமெய்யும்' என்ற நூன்மரபு நூற்பாவில் கற்றோம். `போஒய், தொழாஅர், கெடுப்பதூஉம், படாஅ என இசைநிறைக்கும் சொற்களில் தனிக்குற்றுயிர் வடிவு நிற்பதால் இவை நிறைக்க வந்த அறிகுறிகள் என்பது தெளிவாகும். இதனால் `ஒத்த குற்றெழுத்து' என்பதற்கு ஒத்த தனிக்குறில்வடிவு எனப்பொருள் கொள்ளவேண்டும். `செறாஅஅய்' என்ற நாலளபு இசை நிறைப்பினும் அந்த அளபுக்கு சமமான குற்றெழுத்துக்களே அஃதாவது இரண்டு குறில் வடிவங்களே வரும் என்ற குறிப்புப் பெறப்படும். ஆதலின் குற்றெழுத்து நிற்பதனால் இசை நிறையவில்லை எனவும், இசைநிறைவினைக்காட்டும் எழுத்துக் குறியே குற்றெழுத்து எனவும் கொள்ளும் கோட்பாடே பொருந்தும். மேற்கூறிய குறிக்கோட்பாடு ஒக்கும் எனினும் செய்யுட்கண் அலகிடுவதுபற்றி ஒரு சிக்கல் உண்டு. ஏனைக் கோட்பாட்டினர் வினவும் ஒரு கருத்துக்குத் தெளிவான விளக்கம் இதுவரை கிடைக்கவில்லை என்பதனை உடன்படுத்து கின்றேன். அளபெடையில் ஒலியிலக்கணமே யடிப்படை எனின், குற்றெழுத்து அறிகுறியெனின் - போஓய் - நேர்நேர், தேமா; தோழாஅர் - நிரைநேர், புளிமா; செறாஅஅய் - நிரை நேர்நேர், புளிமாங்காய் என அலகிட்டு வாய்பாடு சொல்லுவது பொருந்துமா? மூன்று நான்கு மாத்திரை நீட்டல் அளவுக்கு ஒரு வாய்ப்பாடுகள் வேண்டுமன்றோ? மூன்றினை இரண்டும் ஒன்றுமாகவும் நான்கினை இரண்டும் ஒன்றும் ஒன்றுமாகவும் ஒலிநீட்சியை பிரித்து வாய்பாடு கூறுவதற்கு இலக்கணம் செய்யுளியலிலும் இல்லையன்றே. இவை கருதவேண்டிய வினாக்களே. இச்சிக்கலான வினாக்கட்குப் பின்வரும் விளக்கம் ஒருவாறு பொருந்தினாலும் பொருந்தும். இரண்டு மாத்திரை நெட்டெழுத்தே பொருண்மை யுடைய ஒலியன். அதற்கு மேலே வரும் ஒலிநீட்டம் ஒலியனன்று. நெட்டெழுத்துப் போல அளபெடையெழுத்தென ஒன்றில்லை. அதனால் ஒலியனுக்கு மேற்பட்ட அளபினைத் தனியாக அலகுக் கணிப்பு செய்திருக்க வேண்டும். பத்துக்கு மேற்பட எண்ணும் போது ஒரு சொல்லாற் சொல்லாமல் பதினொன்று பன்னிரண்டெனச் சொல்லும் முறையை ஒப்பு நோக்குக. தமிழுக்கு எழுத்து வடிவு தொல்பழங்காலத்தே அமைவுபெற்று நல்வழக்கும் எய்திற்று என இவ்வுரை பன்முறை வலியுறுத்தியுள்ளது. தொல்காப்பியர் காலத்தும் செய்யுள் வழக்கு சிறந்து விளங்கிற்று. வாய்வழக்கினைக் காட்டிலும் செய்யுள் வழக்கு எழுத்து வடிவினைப் பெரும்பாலும் தழுவி நின்றதாதலின், அசை சீர் முதலியன காணப்படும் எழுத்துருவை வைத்தும் எளிமையாகக் கற்பிக்க முடிந்தது எனக் கொள்ளவேண்டும். இத்தகு கல்விப் பயிற்சி அளபெடைக்கண் அறிகுறியாக எழுதப்பட்ட உயிர்வடிவான குற்றெழுத்துக் களைத் தனியசையாக அறுத்திசைக்கும் மரபினை உண்டாக்கிற்று. பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரைகள் “அளபெடை” யசைநிலை யாகலும் உரித்தே”என்ற செய்யுளியல் நூற்பாவின் கண் இக்கருத்துக்கு ஊன்றாகின்றன. எழுத்துவழக்கிற் சில சொற்கள் தனிவடிவு பெறுவதை `நான்' என்ற ஆங்கிலச் சொல்லிலும் கடவுளைக் குறிக்கும்போது அவன் என்ற ஆங்கிலச் சொல்லும் காண்க. இதுகாறும் நாம் ஆராய்தவையெல்லாம் உயிரளபெடை குறித்தவை. இவ்விசை நிறைவு வழக்கிற்கும் பெரும்பாங்கு வருமாதலின் எழுத்ததிகாரத்திற் கூறினார். ஒற்றளபெடை செய்யுட்கே யுரிமையின், அதன் நிலை செய்யுளியலிற் கூறப்படும். சார்பெழுத்துக்களுக்கு அளபெடை யாகும் தன்மையில்லை. அளபெடை வழக்கிற்கும் செய்யுட்கும் இனியதோர் மொழிக்கருவி. இன்றுவழக்கில் இன்னோசைபடக் கூறினாலும் உரைநடைக்கண் குறிகள் எழுதப்படுவதில்லை. இந்நூற்றாண்டுச் செய்யுட்களில் அளபெடையாட்சி இல்லையென்றே சொல்லலாம். இசை குன்றும்போது அதனை நிரப்புதற்கென்று படைக்கப்பட்ட அளபெடை மரபினைச் பின்பற்றாமல், இக்காலக் கவிஞர்கள் சொற்களைச் சேர்த்து நிரம்புகின்றனர். இதனால் பொருள் நிறைகுறைகின்றது. ஆதலின் ஓரளவேனும் அளபெடை வழக்கினைப் பாட்டுக்களில் உயிர்ப்பித்தல் புலமையாகும். நூற்பா 40 இந்நூற்பா உயிர்க்கும் உயிர்மெய்க்கும் பொது என்பது உரையாசிரியர்கள் கருத்து. அதனால் கா தீ பூ கௌ என உயிர்மெய் நெடிலாகவும் எடுத்துக்காட்டுகள் எழுதினர். உயிர்மெய்க்கும் உரியது என்ற கருத்தினால் `குற்றெழுத்து ஐந்தும்' என்பதனை எச்சவும்மையாகக் கொண்டு சில குற்றெழுத்துக்கள் மொழிகளாம் என்று பொருளெழுதி, து, நொ எனக் காட்டும் தந்தனர். உயிர்மெய் என்பது தொல்காப்பிய நோக்கமாயின் `ஓரெழுத்தொருமொழி ஈரெழுத்தொருமொழி” என்ற நூற்பா விற்குப்பின் இந்நூற்பா கிடக்க வேண்டும். அவ்வாறிருப்பின், மூன்றுமொழி நிலைகளுள் ஓரெழுத்தொரு மொழிக்கு மட்டும் எடுத்துக்காட்டுச் சொல்வானேன் என்ற வினாத் தோன்றும். உயிர் மெய்யாயின் நெட்டெழுத்து ஏழ் எண்ணிக்கையில் நில்லாது. நன்þனூலார் கூறியதுபோல நாற்பது நெடில்கள் என்று முழுதுறச் சொல்லியிருக்க வேண்டும். உயிர்மெய் என்பது தொல்காப்பியர் நோக்கமாயின், நெட்டெழுத்து ஏழே என்று வருவது கூறியதுபோல், குற்றெழுத்தில் நகரவொகரம் ஒன்றே ஓரெழுத்தொருமொழி எனப் பட்டாங்குச் சொல்லியிருப்பர். இவ்வாறு உயிர்மெய் பற்றி மறுப்புக் காரணங்கள் உள. ஓரெழுத்தொருமொழி ஈரெழுத்தொருமொழி என்ற நூற்பாவுக்கு முன்பே கூறியிருத்தலாலும் `நெட்டெழுத்தேழே' “குற்றெழுத்தைந்தும்” என வாளா மொழிந்திருத்தலாலும் தனியுயிர்களே இந்நூற்பாவின் பொருள் எனக்கொள்ள வேண்டும். அவ்வாறு கொள்ளுங்கால் `குற்றெழுத்தைந்தும்' என்பது முற்றும்மையாகி எந்த உயிர்க்குறிலும் முழுமொழியாகா என்பது ஏற்கப்படும். நெட்டெழுத்து ஏழே என்பதில் `ஒள' ஒன்றுமட்டும் உயிர்மெய்யாகவே வருதல் காண்கின்றோம். ஏனையாறும் உயிரளவிலே முழுப்பொருண்மையுடையன. ஒள என்பதும் ஒரு முழுச்சொல்லாக அரிதாகத் தொல்காப்பியக் காலத்து வழங்கியிருக்கக்கூடும். `அவ்வித்து' என்பதனைப் போலியாகக் கொண்டால் `ஒள' வினைச் சொல்லாகும். இது ஒரு குறிப்பே. எனினும் நூற்பாச் சுருக்கம் கருதி `நெட்டெழுத் தேழே' என்று கூறினாராக வைத்துக் கொள்ளலாம். இங்ஙனம் முதற்கண் பொதுநடையிற் கூறிவிடும் போக்குத் தொல் காப்பியத்துப் பல்லிடங்களில் உண்டு. சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அ ஐ ஒள வெனும் மூன்றலங் கடையே என்ற நூற்பா நடை ஓர் எடுத்துக்காட்டு. நெட்டெழுத்திம்பரும் தொடர்மொழியீற்றும் குற்றியலுகரம் வல்லாறு ஊர்ந்துவரும் என்று கூறியிருப்பினும் சில வீறுகள் வாராமை வெளிப்படை. இதுவரை செய்த தொடைவிடையால் நாம் அறிய முடிவது என்ன? உயிர்நெட்டெழுத்துக்கள், அதாவது உயிர் நெடிலொலியன்கள் நின்றாங்கே சொல்லன்களாகவும் விளங்கு கின்றன. அங்ஙனம் பொருண்மை சுட்டும்போது ஒலியில் எதுவும் மாற்றமில்லை. இவ்விருபாலமைப்பு உயிர்களுள் நெடிலுக்கு உண்டு. குறிலுக்கும் உண்டோ எனின் இல்லை. நூற்பா 46 பிறருரை: ரகர ழகரம் குற்றொற்றாக வருவதில்லை என்பது முன் நூற்பாவின் கருத்து. அகர், அகழ், என்றாங்கு குற்றெழுத்துக்கு அடுத்து வருகின்றனவே என்று வினவுவார்க்கு. இங்ஙனம் வந்தன வல்ல; அக என்ற குறிலிணைக்கீழ் வந்தனவாகவே கொள்ள வேண்டும் என்பர். ஏனென்றால் குறிலிணையாகும்போது இரண்டு மாத்திரையளவு பெற்று நெடிலாகி விடுகின்றதல்லவா? நெடிற் கீழ் வந்தனவாகக் கொள்ளலாம் என்று இந்நூற்பாவுக்குப் பொருள் செய்துவருப. ரகர ழகரம் இவ்வாறு வரும் என்று அமைதிகாண இப்படி ஒரு நூற்பா வேண்டுமா? குறிற்கீழ் வாரா என ஓரிடம் விலக்கப்பட்டது. நெடிற்கீழாகவோ குறிலிணைக்கீழாகவோ எழுத்துத் தொடர்ந்து பிறவாறு வருமென்பது தானே கருத்து. அங்ஙனம் கூறல் வேண்டின் நெடிற் கீழும் தொடர்மொழியிலும் வருமெனச் சுட்டினாற் போதுமே. அத்தொடர்மொழி யெல்லாம் நெட்டெழுத்தாம் என்று சமன்கூறும் நோக்கென்னோ? ரகர ழகரம் நெடிற் கீழல்லது வாரா எனவும் எல்லாவற்றையும் நெடிற் கீழாகவே அடக்கிக் கொள்க எனவுசம் விதி வழக்கு உண்டா? அகல் ஆல் என்றும் அகழ் ஆழ் என்றும் மருப் பட்டால் தொடர்மொழி ஈரெழுத்தொரு மொழியாகி விடுமன்றோ? அங்ஙனம் தொடர்மொழி யெல்லாம் ஆகுமா? ஆகுமாயின், தொடர்மொழி என்ற ஒரு பாகுபாடு எற்றுக்கு! “மெய்ந்நிலை சுட்டின் எல்லா வெழுத்தும் தம்முற் றாம்வரூஉம் ரழவலங் கடையே” (தொல்.27) என்ற மெய்ம்மயக்க நூற்பாவில் ரழநீங்கலாக ஏனையவை தமக்கு முன்னே தாம் வரும் என்றார். அதனாற் பெறப்படுவது என்ன? விலக்கப்பட்ட ரகர ழகரம் பிறவே பெறும் என்பது வெளிப்படை. அதுபோலவே ரகர ழகரம் குற்றொற்றாகா என்றால் வேறுவகையில் ஒற்றாகி வரும் என்பது உரை. “அவை நெடிற்கீழ் ஒற்றாம்; குறிற்கீழ் உயிர்மெய்யாம் என்ற இளம்பூரணரின் கருத்துரை பொருந்தும். குறில் நெடில் என்பன முழுதும் மாத்திரை காரணமாக வந்தவையல்ல. இரு குறில் ஒரு நெடிலுக்குச் சமம் எனவோ ஒரு நெடில் இருகுறிலின் இணைப்பு எனவோ கொள்வது தவறு. முப்பது எழுத்துக்களும் பொருண்மையுடைய தனியொலி யன்கள் என்று முன்னரே கண்டோம். ஆதலின் “குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின்” என்ற அடிகட்கு முன்னை யுரைகளை ஏற்பின்' ஒலியனடிப்படை குலைந்துவிடும். அளவு என்ற சொற்கு மாத்திரை யளபு என்று முழுதும் கருதிக் கொண்டமையால் இவ்வுரைப்பிழை நேர்ந்தது. என்னுரை முவ்வகைச் சொற்பாகுபாடு வகுத்துக் கொண்டது புணரியல் விதிகளை வகை தொகை செய்தற்கே. புணர்நெறி பற்றிய ஒரு கோட்பாட்டினை நாம் தெளிந்து கொள்வோமாக. ஈறு பற்றிப் புணர்விதி கூறினாலும் அதே ஈறு ஓரெழுத்தொரு மொழியாகவோ ஈரெழுத்தொருமொழியாகவோ தொடர் மொழியாகவோ இருக்கும் போது பலவிடங்களில் திரிபுகள் வேறுபடும். அஃதாவது ஈறுடைய சொல்வகைக்கும் புணர் விதிக்கும் தொடர்பும் வேறுபாடும் உண்டு. ஈகாரயிறுதி, உகரவிறுதி, ணகாரவிறுதி, யகரவிறுதி என்றெல்லாம் இறுதிபட நடையிருந்தாலும் அவ்விறுதிகள் ஓரெழுத்தொரு மொழியின், ஈரெழுத்தொருமொழியின், தொடர்மொழியின் உறுப்பு என்பதனையும் எண்ணிக் கொள்ள வேண்டும். இங்ஙனம் நினைய வேண்டும் என்பதற்காகவே ஆ மா கா பூ ஊ நீ மீ என்றாங்கு ஓரெழுத்தொரு மொழிகளையும்; பல சில இரா நிலா பனி பளி என்றாங்கு ஈரெழுத்தொரு மொழிகளையும்: அழன் புழன் வெயில் இருள் ஆதன் பூதன் பதக்கு மக்கள் என்றாங்கு தொடர் மொழிகளையும் விதந்து புணர்விதி காட்டுவர் தொல்காப்பியர். “குறியதன் முன்னரும் ஏரெழுத்து மொழிக்கும் அறியற்தோன்றும் அகரக் கிளவி” “பலவற் றிறுதி நீடுமொழி யுளவே செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான” என்றவாறு முவ்வகைக் குறிகளையும் ஆங்காங்கு பயன்படுத்துவர். எனவே புணரியல் கற்கும்போது மொழி மரபிற் சொல்லிய முவ்வகைச் சொன்னிலையின் இன்றியமை யாமை பெறப்படும். “குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின் தொடர்மொழி யெல்லாம் நெட்டெழுத் தியல” என்ற நூற்பாவை மறுபடியும் சிந்திப்போம். அளவு என்பதற்கு எண்ணிக்கை என்பது பொருள், ஓரெழுத்து, ஈரெழுத்து தொடர்மொழி என்ற வகை எழுத்துவடிவினால் அமைந்தது என்று கண்டோம். “எழுத்தளவெஞ்சினும்” என்ற செய்யுளியலில் வரும் கட்டளைச் சீர் இலக்கணம் இதனைத் தெளிவாக்கும். இத்தெளிவுபோதாது, இன்னும் தெளிவு வேண்டும். “தொடர்மொழி யெல்லாம் நெட்டெழுத்தியல” என்று சொல்லியதன் கருத்தும் பயனும் என்ன? குறளடியை நோக்கச் சிந்தடியும் நேரடியும் நெடியவாயினும் அவற்றின் நீண்டவற்றையே நெடிலடி, கழிநெடிலடு எனப் பெயரிடு கின்றோம். இவை எழுத்தெண்ணிக்கையைப் பொறுத்தன. அதுபோல் தொடர்மொழி இரண்டுகடந்த பல எழுத்துக்களை யுடையதாதலின், நீண்ட வரி என்பது போல நெட்டெழுத்து எனப்பட்டது. தொல்காப்பியன் என்பது பலவெழுத்துடைய நெடிய ஒரு சொல் என்பது கருத்து. நெட்டெழுத்து - நீண்ட சொல். “பலவற்றிறுதி நீடுமொழி யுளவே” என்ற உயிர் மயங்கியல் நூற்பாவில் `நீடுமொழி' என ஆட்சி பெறுதலையும் காண்க. எல்லாத் தொடர்மொழியும் நெட்டெழுத்தாக இயலும் என்பதனால் புணரியலில் ஈறு பற்றி விதி கூறினாலும் தொடர்மொழி முழுதினையும் ஒருமையாகக் கருதிப் பார்க்க வேண்டும் என்பது இதன் பயன். இதனை “ஈரளபிசைக்கும் நெட்டெழுத்து” என்ற குறிச்சொல்லொடு மயங்கக் கூடாது. இளம்பூரணர் உரை குற்றமில்லை; நச்சினார்க்கினியர் உரை பொருத்தமில்லை; என்னுரை இன்னும் சிந்தனைக்குரியது. `நெட்டெழுத்தியல்' என்பதற்கு மனநிறையும் பொருள் காணவேண்டும். நூற்பா - 49 - 53 வரை இவ்வைந்து நூற்பாக்களும் ஐ ஒள என்ற ஒலியன்களுக்குத் தன் வடிவுகளேயன்றிக் கூட்டுவரிவடிங்களும் உண்டு என்ற ஒரு பொருள்நுதலியன. மேலும் `மொழிப்படுத்திசைப்பினும்' என்று வரும் முன்நூற்பாவுக்கு விளக்கமாக அமைந்தன இவை. இங்ஙனம் அதிகாரப் போக்கைக் கண்டு பொருள் செய்வது நல்லது. ஐந்தினுள் நான்கு ஐகாரம் பற்றியன என்பது என்க ருத்து. ஆதலின், `இகர யகரம் ஐகாரம் இறுதி விரவும்’ என்பதற்கு ஐகாரம் சார்ந்து உரை செய்ய வேண்டும் இக்கருத்து சிவஞான முனிவர்க்கு உடன்பாடாகும். `அகர இகரம் ஐகாரம் ஆகும்' எனவும் `அகரத்திம்பர் யகரப் புள்ளியும் ஐயென் நெடுஞ்சினை' எனவும் சொல்லியபின், இந்நூற்பா கிடத்தலானும், நூற்பாவில் வேறொரு சூழ்நிலை சொல்லமையானும், ஐகாரவடிவச் சார்பானது என்பது தெளிவு. வயிரம் தயிலம் எனவும் அய்ந்து மய்யம் எனவும் கொள்ளும் உரையே அதிகார வோட்டத்துக்குப் பொருந்தும். நாய், நாயி, நாஇ, என்றாங்கு கருத்துக் கொள்வதற்கு நூற்பாவிலும் இடமில்லை, அதிகார வரன்முறையுமில்லை. ஒலிப்போலி, எழுத்துப் போலி என இருவகையுண்டு. மறன் - மறம்; அறன்- அறம்; பேதைமை - பேதமை; உடைமை; உடமை; மையல் - மயல் என்ற சொற்களில் ஓர் ஒலியனுக்குப் பிறிதோர் ஒலியன் வந்து நிற்கின்றது. இஃது ஒலியன்மயக்கம். பொருள் வேற்றுமை செய்யாமையின் போலியாயிற்று. வைரம் - வயிரம்; மைந்தன் - மயிந்தன்; ஐந்து - அய்ந்து; ஐவனம் - அய்வனம் என்ற சொற்களில் ஐ என்ற ஓர் ஒலியனுக்கு உரிய ஒரு வரிவடிவும் இருக்கவும் வேறு இரு வடிவங்கள் வந்துள. இங்கு ஒலியன் வரிவடிவத்தால் வேறுபடவில்லை. உரிய வரி வடிவத்துக்கு மாறாக அதுவும் இருவடிவுகள் வரக்காண்கின்றோம். எனவே இங்கு `ஐ' என்ற வடிவுக்கும் `அய்' என்ற வடிவுக்கும் விரவல் ஏற்படுகின்றது. ஐ என்ற ஒலியனைப் பற்றிய நோக்கில்லை. இவ்வாறே ஒளகாரத்துக்கும் கொள்க. “அம்முன் இரகம் யகர மென்றிவை எய்தின் ஐயொத் திசைக்கும் அவ்வோ டுவ்வும் வவ்வும் ஒளவோ ரன்ன” என்ற நன்னூற்பா எழுத்துப்போலி கூறுவதென மயிலைநாதரும் சங்கர நமச்சிவாயரும் உரைப்பது பொருந்தும். `ஐயொத் திசைக்கும்' `ஒளவோரன்ன' என்பதனால் முதல் ஒலியனாகிய ஐகாரமும் ஒளகாரமும் தூயன கலப்பற்றன என்பது தெளிவாம். அம்முன் இகரம் ஐயொத்திசைக்கும்; அம்முன் யகரம் ஐயொத்திசைக்கும் என நிரலே உரை செய்யவேண்டும். இசை வடிவு பற்றிய எழுத்துப் போலிகள். போலி என்பது இனத்துள் வருவது. வரிவடிவுக்கு இன்னொரு வரிவடிவு போலியாக முடியுமேயன்றி, ஒலிவடிவுக்கு வரிவடிவு வர முடியாதன்றோ. ஆதலின் எழுத்துக்கு எழுத்து மாற்றாக வருவது எழுத்துப்போலி எனத்தெளிக. சில ஒலியன்களின் சேர்க்கையால் சில வொலியன்கள் பிறக்கும் எனவும் உயிரொலியன்களில் மெய்யொலியன்கள் கலக்கும் எனவும் விரித்துரைக்கும் சிவஞானமுனிவரின் கருத்து முதலெழுத்துக்கள் முப்பது என்ற மொழியின் அடித்தளத் துக்குப் பெரிதும் முரணாகும். ஒலியனுக்கு முன்பு யான் எழுதிய விளக்கம் கொண்டு தெளிக. வடமொழிக்கும் பிற எம்மொழிக் குங்கூட முனிவர் கருத்துப் பொருந்தாது. பிறிதொன்றற் கில்லாத் தனக்கென்ற பொருளாற்றல் உடையதே எழுத்து அல்லது ஒலியன் எனப்படும். இதன்கண் கலப்புக்கு இடனில்லை. முனிவர் கருத்தினை உடன்பட்டால், தமிழுக்கு உயிரொலியன் மூன்றே; அகர முதலவெழுத்தெல்லாம்; என்பதனை நோக்கின் அகரம் ஒன்றே எஞ்சிநிற்கும். தமிழ் நூற்பயிற்சி யொன்றுமே யுடையார் பொருளுணரார் என்று முனிவர் பெருமகன் உரையாசிரியர் உள்ளிட்டோரைப் பழித்துரைத்தாலும், எத்துணை மொழிப் பயிற்சியாளரும் தமிழின் உண்மை காண்பதே மெய்ந்நெறியாகும். நூற்பா: 62 மயிலைநாதர் கருத்து “குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்” என ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வாறு குற்றியலுகரம் மொழிக்கு முதலாம் என்றாரோவெனின். நுந்தை யுகரங் குறுகி வொழிமுதற்கண் வந்த தெனினுயிர்மெய் யாமனைத்தும் - சந்திக் குயிர்முதலா வந்தனையும் மெய்யுணர்ச்சி யின்றி மயலணையு மென்றதனை மாற்று. இவற்றை விரித்துரைத்து விதியும் விலக்கும் அறிந்து கொள்க” என மேற்கண்டவாறு நன்þனூல் உரையாசிரியர் மயிலைநாதர் தொல்காப்பியத்தை வேகமாகச் சாடுவர். நகரமெய்யே மொழிமுதல் என்பது தொல்காப்பிய நூற்பாவின் பொருள் என்று நடைநோக்கிலும் புணர்ச்சி நோக்கிலும் இந்நூற்பாவின் திறனுரையில் முன்பு நான் விளக்கியுள்ளேன். நூற்பாவின் பொருள் இதுவாதலின் மயிலைநாதரின் தொல்காப்பியக் குற்றப்பாட்டுக்கு இடனில்லை. இனி மயிலைநாதர் கூற்றையும் வேறுவகையால் விளக்குவோம். குற்றியலுகரத்தைப் பொறுத்தவரை உகரத்தையும் உகரம் ஏறிய வல்லெழுத்தை யும் ஒற்றுமை நயமாகக் கொள்கின்றோம். அஃதாவது கு சு டு து பு று என்ற இறுதி உயிர் மெய்களை ஓரெழுத்தாகக் கருதுகின்றோம். அதனாலன்றோ எஃகு, பரிசு, பாடு, எய்து பண்பு, பற்று என்பவை ஈற்றயல் பார்த்து அறுவகைக் குற்றியலுகரங்களாக எண்ணப்படுகின்றன. கு சு டு து பு றுக்களை ஈரென ஓரெழுத்தாகக் கருதாவிட்டால் உகரமே ஈராகக் கொண்டால். வன்றொடர்க் குற்றியலுகரம் ஒன்றுதானே இருக்கமுடியும். இதனால் நாம் அறியக்கிடப்பது என்ன? குற்றிய னுகரத்தையும் அது ஏறியமெய்யையும் ஒன்றாகக் கருதுவதே இலக்கணக் கோட்பாடாம். அதுபோல் நுந்தை என்ற மொழிமுதற் குற்றியலுகரத்திற்கும் `நு' என்பதனைப் பிரித்து நகையாடாமல், ஒன்றாகக் கொள்ளவேண்டும். `குற்றியலுகரம் நகரமொடு முதலும்' என்று ஒரு நடைசெய்த தொல்காப்பியக் கருத்தும் இதுவே. சுட்டு வினா வழி அகரத்தை ஒட்டி ஙகரம் முதலாக வரும் என்று நன்னூல் கூறும் அரிய வரவை எதிர்திறன் செய்யாத மயிலைநாதர் குற்றியலுகரத்தை யொட்டி நகரம் முதலாகும் என்ற அரிய இலக்கணத்தையும் ஏற்பதே பொருந்தும். நூற்பா 63 மொழிமுதற் குற்றியலுகரம் நுந்தை முறைப் பெயரளவில் அமைந்து நிற்றலானும் வேறுபாடின்மையானும் தனிப்புணர்ச்சி விதி வேண்டியதில்லை. குற்றியலுகர நகரப் புணர்ச்சி விதிகளே சாலும் என்பது என் உரைமுடிவு. நச்சினார்க்கினியர் உரை: `காது கட்டு கத்து முருக்கு தெருட்டு என்பன முற்றுகரமும் குற்றுகரமுமாய்ப் பொருள் வேறுபட்டு நின்றாற்போல நுந்தை என்று இதழ்கவித்து முற்றக்கூறிய விடத்தும் இதழ் குவியாமல் குறையத் கூறியவிடத்தும் ஒரு கூறியவிடத்தும் ஒரு பொருளே தக்கவாறு காண்க” என்பது இவர் உரை. நுந்தை பற்றி எழுதிய கருத்து ஒக்கும்; ஆனால் காது கட்டு என்பன முற்றுகரமாயின் வினையாகவும் குற்றுகரமாயின் பெயராகவும் பொருள்படும் என்று ஒரு புதிய கொள்கையைக் காண்கின்றோம். இலக்கணப் பெரும்புலவர் வேங்கட ராசனாரும் இக்கொள்கையை உடன்படுவர். “மொழிமுதற் குற்றியலுகரம் பெயர்ச்சொல்லிலே நிற்றலான் முற்றுகரமாக ஒலிக்கப்படினும் பொருள் வேறுபடாது” என்றதனானே மொழியிறுதிக் குற்றியலுகரம் முற்றியலுகரமாகவும் ஒலிக்கும் என்பதும் அவ்வாறு ஒலித்தல் வினைச் சொல்லின் கண்ணே என்பதும் ஆண்டுப் பொருள் வேறுபடும் என்பதும் போதரும்” என்பதும் இவர் தரும் விளக்கம். “அப்பெயர் மருங்கின்” என்பது நூற்பா. அகரச் சுட்டை ஒதுக்கி விட்டு பெயர் மருங்கின் என வைத்துக்கொண்டு விளக்கஞ் செய்கிறார். இது விரித்தாய்ந்து மறுக்கவேண்டிய கொள்கையாதலின், இவ்வுரை தகுமிடனன்று; சில சுட்டியமைவேன். “நெட்டெழுத் திம்பரும் தொடர்மொழி யீற்றும் குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே” என்பது குற்றியலுகரத்திற்கு இடனும் பற்றுக்கோடும் கூறும் மொழிமரபு நூற்பா. இவ்வுகரம் பெயர்ச்சொற்களில் வரும் என்ற குறிப்புமில்லை; வினைச்சொல்லில் நெட்டெழுத்திம்பரும் தொடர்மொழியீற்றும் வரும் உகரம் முற்றுகரமாக ஒலிக்கும் என்ற குறிப்பும் இல்லை. பெயர்வினை பற்றிய பேச்சே இல்லை. குற்றியலுகரம் வரும் சூழ்நிலை இது என்பது இந்நூற்பாவின் பொருள். இச்சூழ்நிலையில் நாடு என்பது பெயராக வருக, வினையாக வருக. எவ்வாறு வரினும் குற்றியலுகரம் என்பதுவே முடிவு. நாடடைந்தான் எனப் பெயராக இருப்பினும் அதனை நாடென்றான் என வினைவாக இருப்பினும் புணர்ச்சி முடிபு ஒன்றாதல் காண்க. “முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅது அப்பெயர் மருங்கின் நிலையிய லான” என்ற நூற்பா நுந்தை முற்றியலுகரமாகவும் ஒலிக்கும் என்று கூறவில்லை. அவ்வாறு கொள்வோமேல் மொழிமுதற் குற்றியலுகரம் என்பது வலுவிழந்து வேண்டாத ஒன்றென ஆகிவிடாதா? `இரண்டுதலையிட்ட முதலாகிருபஃது” என்று புணரியலில் மொழிமுதற் குற்றியலுகரத்திற் ஏனை முதனிலை யொப்ப நன்மதிப்புக் கொடுத்தலின் முற்றியலுகரமாகவும் ஒலிக்கும் என்பது பொருந்தாது. முற்றியலுகரத்திற்குரிய நகரப் புணர்ச்சி விதி பெறும் எனவும் அப்புணர்ச்சி யொற்றுமையால் இம்முறைப் பெயர் பொருள் வேற்றுமைப் படாது எனவும் தெளிவிப்பதே இந்நூற்பாவின் கருத்து. இந்நூற்பாவை மொழிமுதற் குற்றியலுகரமாகிய நுந்தையளவிற் கொள்ளாது. ஈற்றுக் குற்றியலுகரத்திற்குக் கொள்வதும் ஈற்றுக் குற்றியலுகரமெல்லாம் முற்றியலுகரமும் ஆகும் எனக் கொள்வதும், அங்ஙனம் ஆகுங்கால் இருவகை யுகரமும் பெயரும் வினையுமாகப் பொருள் வேறுபடும் எனக் கொள்வதும் எல்லாம் கருத்துச் சுமத்தலாகும். இந்த நூற்பா இவ்வளவு பெரும் மொழிக்கொள்கைக்கு இடன் தருமா? `அப்பெயர் மருங்கின் நிலையியலான' என்று முறைப் பெயர்ச்சுட்டு தெளிவாக இருப்பவும் அகரச்சுட்டை விடுத்து, `பெயர் மருங்கின்' என பிரித்துக்கொண்டு, குற்றியலுகர மெல்லாம் பெயராம்; முற்றியலுகரமெல்லாம் முன்னிலை வினையாம் என்று பலபடக் கூறுவது உரையிகல் என்க. இன்ன வீறெல்லாம் பெயராகும். இன்னவீறெல்லாம் வினையாகும் என்ற பாகுபாடும் தமிழியல்பன்று. நூற்பா 71 இளம்பூரணர் நச்சினார்க்கினியர் உரைகள்: தபு என்பது ஓசைவேற்றுமையால் இருபொருள் தரும் எனவும் படுத்துச்சொல்ல நீ சா எனத் தன்வினையாம்; எடுத்துச் சொல்ல நீ ஒன்றனைச் சாவி எனப் பிறவினையாம் எனவும் உரைசெய்குவர். ஓசை வேற்றுமையால் இலக்கண வேற்றுமையோ பொருள் வேற்றுமையோ யுறுதல் தமிழியல்பன்று. தத்தம் குறிப்பும் பொருள் தரும் உம் ஏ ஓ என்ற இடைச்சொற்கட்குக் கூட ஆசிரியர் ஓசை வேற்றுமைப்பாடு சொல்லவில்லை. பெயரையும் வினையையும் தெரிநிலைவினையையும் குறிப்பு வினையையும் வினையாலணையும் பெயரையும் தொடர் நிலையாலல்லது ஓசையால் வேறுபாடுணரலாம் என்று தமிழிலக்கணம் கூறிற்றிலது. இந்நூற்பாவிலும்; `இது செயல் வேண்டும்' என்ற வினையியல்நூற்பாவிலும் இருவயின் நிலையை ஓசை காட்டும் என்று சுட்டக் காணோம். எனவே மீயொலியன் என்ற ஒலிக்கூறு தமிழ்மொழியின் அடிப்படையில்லை என்பது தெளிவு. நூற்பா: 57. பெருவிளக்கக் கட்டுரை - இணைப்பு தமிழில் மொழி முதலெழுத்துக்களின் வரம்பு (இது தமிழ்ப்பல்கலைக்கழகம் 28-3-1985 இல் கூட்டிய தமிழ் இலக்கணக் கோட்பாட்டு வளர்ச்சிக் கருத்தரங்கில் வ.சுப.மாணிக்கம் படித்த ஆய்வுக்கட்டுரை) தமிழ்மொழிக்கு உரிய எழுத்துக்கள் இத்துணைய எனவும் அவை உயிர், மெய், சார்பு என்ற பெரும்பிரிவும், குறில் நெடில் வல்லினம் மெல்லினம் இடையினம் என்ற உட்பிரிவும் படும் எனவும் எல்லா இலக்கண நூல்களும் தொடக்கத்தே கற்பிப் பதைக் காண்கின்றோம். அதனொடு அமையாது சொற்கு முதலாக வரும் எழுத்துக்கள், இறுதியாக வரும் எழுத்துக்கள், இடைநிலை மயக்காகவரும் எழுத்துக்கள் எனவாங்கு முதலீறிடை நிலைகள் நிரலாகச் சுட்டப்படுவதையும் காண்கின்றோம். சிறுவகுப்புக்குத் தமிழ் பயிற்றும் சிற்றிலக்கணங் களிலும் முதல் ஈறு இடைநிலை பற்றிய வரம்புகள் இடம்பெற்று வருகின்றன. அயல்நாட்டவர்க்குக் கற்பிக்கும் பயிற்சி காட்டிகளிலும் இம் முத்தன்மைகள் ஒலிகளின் ஆய்வொடும் விளக்கம் பெறுகின்றன. தொல்காப்பியம் முதலாவது நூன்மரபில் இடைநிலை மயக்கத்தைக் கூறி இரண்டாவது மொழிமரபில் முதலெழுத்து ஈற்றெழுத்துக்களை விரிவாக இயம்பும். நன்னூல் எழுத்தியலில் முதனிலை இடைநிலை இறுதிநிலை மூன்றையும் இவ்வரிசையிற் கூறும். வீரசோழிய முதலானநூல்களும் இம்மரபைப் போற்றி மொழிகின்றன. இதனால் முதலீறு இடை என்ற முக்கூறு எழுத்திலக்கண விதிகட்கெல்லாம் அடிசமயம் என்பது ஒருவாறு உணரப்படும். இவற்றுள்மொழி முதலெழுத்தின் வரலாறும் வளர்ச்சியும் வரம்பும் எதிர்நோக்கும் பற்றி இக் கட்டுரையில் சில நெறிகளை ஆராய்வோம். முதலெழுத்து வரலாற: பட்டியல் நூல் தொகை உயிர் கதநபம ச ரு ய வ ங கு உ தொல்காப்பியம் 94 12 5 + 12 9 3 1 8 - 1 வீரசோழியம் 102 12 5 +12 12 4 6 8 - - நேமிநாதம் 98 12 5 +12 12 3 3 8 - - நன்னூல் 103 12 5 + 12 12 4 6 8 1 - இலக்கவிளக்கம் 94 12 5 +12 10 3 1 8 - - சாமிநாதம் 105 12 5 +12 12 6 6 8 1 - முத்துவீரியம் 102 12 5 + 12 12 4 6 8 - - தமிழ்நூல் 92 12 5 +12 10 1 1 8 - - இப்பட்டியற்காட்சியிலிருந்து அறியத்தகுவன: அ. வேறுபாடின்மை : (80 எழுத்துக்கள்) 1. பன்னிரண்டு உயிரும் முதன்மொழியாதல் 2. க த ந ப ம எல்லாவுயிரொடும் வருதல் 3. வகரம் (உ ஊ ஒ ஓ நீங்கலாக) எட்டுயிரொடும் வருதல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியிலிலும் மாறாவித் தன்மையைக் காணலாம். அய், அவ் என்ற போலிக்கு முதன்மை கொடுத்து, ஐ, ஒள என்னும் நெடில்களை விலக்கவில்லை என்பது குறிப்பிடத் தகும் இவ்வாறு மூவாயிரம் ஆண்டுக்கு மேலாகத் தொல்காப்பியர் காலமுதல் ஒரு பெற்றித்தாக இந்நல்வரவை அறிகிறோம். ஆ. வேறுபாடு சகரமெய்ம்முதல் தொல்காப்பியம் 9 அ, ஐ, ஒள நீங்கலாக இலக்கண விளக்கம் 10 ஐ, ஒள நீங்கலாக தமிழ்நூல் 10 மேல் உள்ளபடி பிறஎல்லா 12 உயிரொடும்மொழி நூல்களிலும் முதலாகும். சென்னைத் தமிழ்ப் பேரகராதியில் ச - ளெ வரை உண்டு. இலக்கணவிளக்கமும் தமிழ்நூலும் தமக்கு முற்பட்ட வீரசோழியம் நேமிநாதம் நன்னூல் முதலியவற்றைப் பின்பற்ற வில்லை. அஃதாவது சையும் சௌவும் முதலாவதை உடன்பட்டில. ஞகரமெய்ம்முதல் தொல்காப்பியம் (3) ஞா, ஞெ, ஞொ வீரசோழியம் (4) ஞ, ஞா, ஞெ, ஞொ நேமிநாதம் (3) ஞா, ஞெ, ஞொ நன்னூல் (4) ஞ, ஞா, ஞெ, ஞொ இ.விளக்கம் (3) ஞா, ஞெ, ஞொ சாமிநாதம் (6) ஞ, ஞா, ஞி,ஞெ, ஞே, ஞொ முத்துவீரியம் (4) ஞ, ஞா, ஞெ, ஞொ தமிழ்நூல் (1) : ஞா சாமிநாதமும் தமிழ்நூலும் மேல்கீழ் முரணாகவுள. தமிழ்ப் பேரகராதியில் சாமிநாதம்போல ஞகரம் ஆறுயிரோடும் முதலாகும். யகரமெய்ம்முதல் தொல்காப்பியம் (1) : ஆ வீரசோழியம் : (6) அ ஆ உ ஊ ஒ ஒள நேமிநாதம் (3) ஆ உ ஓ நன்þனூல் : (6) அ ஆ உ ஊ ஓ ஒள இ. விளக்கம் : (1) ஆ சாமிநாதம் : (6) அ ஆ உ ஊ ஒ ஓள முத்துவீரியம் (6) அ ஆ உ ஊ ஒ ஒள தமிழ்நூல் (1) : ஆ இலக்கணவிளக்கமும் தமிழ்நூலும் இடைப்பட்ட நூல்களைச் சாராது தொல்காப்பிய வழிச் செல்லுகின்றன தமிழ்ப்பேரகராதி, வீரசோழிய நன்னூல் போல யகரத்துக்கு ஆறுயிர்கொள்ளும். யிப்போது, யெப்போது எனச் சில எழுத்து வழக்கு இருப்பினும் அவை ஏற்கப்படவில்லை. தொல்காப்பியம் கூறிய நுந்தை என்னும் மொழிமுதற் குற்றியலுகரம் பின்னர் வீழ்ச்சியாயிற்று. இவ்விலக்கணத்தை உடன்பட்டால் மெய்ம்முதற்புணர்ச்சி என்ற நிலை இல்லாது போகும் என்று மயிலைநாதர் ஒருபாங்கு மறுத்துரைப்பர். நன்னூலார் கொழுகொம்புபட மொழிந்த ஞகர முதன் மொழியும் பின்னர் கடைபோகவில்லை. `அவ்வை ஒட்டி ஙவ்வும் முதலாகும்' என்ற திறனில் நடையே ஙகரம் ஏனை மெய்களுக்கு நிகரானதன்று என்பதைக் காட்டும் எனச் சங்கர நமச்சிவாயர் தெளிவுபடுத்தியுள்ளார். உரையாசிரியர்களின் கருத்துக்கள் மேற்காட்டியவற்றுள் சகர ஞகர யகர முதன்மொழிகளிடை இலக்கணிகள் வேறுபடக் காரணம் யாது? இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்' என்பது விதியாதலின், இலக்கியம் இருப்பவும் வேறுபடல் தகுமா? உள்ளத்தைப் பட்டாங்கு உடன்படுவது இலக்கணமா? உள்ளதைத் திறனாய்ந்து சீர்தூக்குவது இலக்கணமா? இவை வம்பான வினாக்கள் அல்ல. கருத்து வேற்றுமை மதிக்கும் வினாக்கள். இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் சங்கப்பனுவல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, பெருங்கதை தெய்வப் பாசுரங்கள் முதலானவற்றில் புதிய மொழி முதல்கள் பலவாறு புகுந்துகிடப்பதை அறியாதாரல்லர். யூகமொடு மாமுக முசுக்கலை (முருகு.300) யூபம் நட்ட வியன்களம் பலகொல் (புறம்.15) யூப நெடுந்தூண் வேத வேள்வி (புறம்.224) பிணையூபம் எழுந்தாட (மதுரைக். 27). தலைநுமிந் தெஞ்சிய பொன்மலியூபமொடு (பதிற். 67) உஞ்சையிற் றோன்றிய யூகியந்தணன் (மணி.15) நாக நன்னாட்டு நானூறி யோசனை (மணி.9) பகுவாய் ஞமலியொடு பைம்புதல் (பொருந்.112) தாழடும்பு மலைந்த புணரிவளை ஞரல (பதிற்.30) தெரிகோல் ஞமன்ன் போல (புறம்.6) வரி ஞிமிறு இமிறும் மார்புபிணி மகளிர் (பதிற்.50) இல்லத் துணைக்குப் பாலெய்த இறையமன் (பரி.11) யவனர் ஓதிம விளக்கின் (பெரும்பாண். 315) வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் (முல்லைப். 61) யவனர் இயற்றிய வினைமாண்பாவை (நெடுநல். 101) இன்னணம் பேரிலக்கியங்களில் வந்துகிடக்கும் பல்வேறு (யூ, யோ, ஞீ, ய) மொழி முதலிகளையும் சகடம், சமம், சந்து, சந்தம், சவட்டும், சைவம், சைனம் முதலான வரவுகளையும் நம் தொல்லுரையாசிரியர்கள் காணாதார் என்றுஅறியாமை ஏற்ற முடியுமா? செவ்வன் கண்டுவைத்து இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் எழுத்ததிகாரவுரையில் கொள்ளாமைக்குச் சில விளக்கங்கள் வரைந்துள்ளனர். அவை வருமாறு: 1. சகடம் எனவும் சையம் எனவு; விலக்கினவும் வருமாவெனின் அவற்றுள் ஆரியச் சிதைவல்லாதன கடி சொல்லில்லை என்பதனாற் கொள்க. (இளம்) 2. ஞழியிற்று என்றாற் போல்வன விலக்கினவும் வருமாவெனின் அவை அழிவழக்கென்று மறுக்க. (இளம்) 3. யவனர் என்றாற்போல்வன விலக்கினவும் வருமாவெனின் அவை ஆரியச் சிதைவென்று மறுக்க. (இளம்) 4. சட்டி சகடம் சமழ்ப்பு என்றாற்போல்வன கடி சொல்லில்லை என்பதனாற் கொள்க. சையம் சௌரியம் என்பவற்றை வடசொல்லென மறுக்க (நச்) 5. ‘ஞமலிதந்த மனவுச் சூலுடும்பு’ என்பது திசைச்சொல், ஞழியிற்று என்றாற் போல்வன இழிவழக்கு (நச்) 6. யவனர் யுத்தி யுகம் யோகம் யௌவனம் என்பன வடசொல்லென மறுக்க (நச்) 7. ஞெண்டு என்பது ஞண்டு ஆய்ப் பின்னர் நண்டு என மரீஇயிற்று (நச்.சொல்) 8. சம்பு, சள்ளை, சட்டி, சமழ்ப்பு என வரும். இவை தொன்றுதொட்டு வந்தனவாயின் முதலாகாவற்றின் கண் சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அ ஐ ஒள வெனும் மூன்றலங் கடையே என விலக்கார் ஆசிரியர். அதனான் அவை பிற்காலத்துத் தோன்றிய சொல்லேயாம் என்பது (சேனா) உரைநெறியங்கள் தொல்காப்பியவுரையாசிரியர்களின் குறிப்பிலிருந்து, மொழி முதலெழுத்துக்கோள் பற்றிச் சில நெறியங்களை அவர் தம் கருத்தாகக் கொள்ளலாம். அ. வடசொற்கள் ஆ. ஆரியச்சிதைவுகள் இ. திசைச்சொற்கள் ஈ. அழி வழக்குக்கள் உ. மருவிய வடிவங்கள் தொல்லிலக்கியங்களில் யூகம், யூபம், யூகி, யோசனை என்பன பயின்றிருந்தாலும் முதற்காரணத்தால் மறுக்கப் பட்டன. ஞால, ஞமன், ஞிமீறு போன்றன திரிவடிவங்கள் என்ற கருத்தால் ஒப்புப் பெறவில்லை போலும். மருவிய உருமாறிகட்கு இலக்கண வீறு கொடுத்தால், நாள் வழக்கில் விரைவு பட்டும் உணர்ச்சிவயப்பட்டும் உறுப்புக் குறைபட்டும் பேணாது பேசும் ஒலித்திரி பெல்லாம் முதலெழுத்தாகி வந்துவிடும். ரெண்டு, ரெம்ப, ரொம்ப, ரேழி, ராப்பிச்சை, ராவுதல், ரம்பம், ராத்திரி, ராவாண்டை, ராசன், ரத்தம், ரக்கை, ராப்பி, லக்கு, லாத்து லாவாண்டை என்றாங்கு தமிழ்ச்சொற்களே இந்நிலை எய்துமெனின், அயற்சொற்களின் தாக்கம் தமிழ்முழக்கமாகி விடாதா? எனவே நம் பண்டை உரையாசிரியர்மார்கள் கொச்சை யுருத்தமிழும் வடமொழியும் தமிழின் மொழிமுதல் இலக்கணவரம்புக்கு அடிப்படையாகா என்று கொண்ட மொழிச் செம்மை தெளிவாகும். இடைக் காலத்துப் புதிய மொழி முதலெழுத்துக்கள் தழுவி வீரசோழிய முதலான நூல்களைப் பார்த்தும் வடமொழி மிகுந்து புகுந்த இலக்கியப் பனுவல்களைப் பார்த்தும் அதன்பின்னரே இவ்வாறு ஒரு நன்முடிவு கண்டனர் என்று கொள்ளவேண்டும். வடமொழி மதிப்பு மிக்க உரைப் பெருமகன் நச்சினார்க்கினியர் பதினான்காவது நூற்றாண்டில் வடமொழி பேராதிக்கம் செய்த காலத்தில்:- “காலம், உலகம் என்பன வடசொல் அல்ல; ஆசிரியர் (தொல்காப்பியர்) வடசொற்களை எடுத்தோதி இலக்கணங் கூறார் ஆகலின்” (கிளவி.58) என்று அறுதி யிட்டுரைத்திருப்பது என்றும் நச்சுதற்குரிய இனிய எழுத்தாகும். இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் பிற்கால வளர்ச்சியில் சட்டி சகடம் போலும் சகர முதன்மொழி யொன்றை ஒத்துக் கொண்டார்களேயன்றிப் பிறவற்றை உடன்படவில்லை. வடமொழிச் சார்புடைய சேனாவரையரும் `கடிசொல்லில்லை காலத் துப்படிவே' என்ற நூற்பாவில் சகரமுதலைச் சுட்டினாரேயன்றி சை, சௌ, ய, யு, யூ, யௌ முதலாயவற்றைக் காட்டவில்லை. இலக்கியங்களில் புதிய முதலெழுத்துக்கள் பெருகி வந்திருந்தும் இத்தொல்லுரை யாளர்கள் அவற்றைத் தழுவாமைக்கு மேற்சுட்டிய நெறியங்களே காரணமாகும். சகரத்தை மட்டும் தழுவிக் கொண்டதற்கு இச்சகரமொழிதல் தமிழிலிருந்தே பிறந்தன என்பது காரணமாம். இன்னோர் நெறிமையைப் பின்பற்றி இலக்கண விளக்க நூலாரும் தமிழ்நூலாரும் மொழி முதலெழுத்து வகுப்பாராயினர். வீரசோழியம் நேமிநாதம் நன்னூல், சாமிநாதம் முத்துவீரியம் முதலிய நூல்கள், புகுந்தவை வடசொல்லெனப் பாராது. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் கூறவேண்டும் என்ற பொது நெறியில் சை, சௌ, ய,யு, யூ, யோ, யொ என்ற முதலிகளையும் ஏற்பாராயினர். தொல்காப்பியத்துக்குப்பின் இவ்வடமொழிகளும் திசைச்சொற்களும் தமிழின்கண் பயிற்று வந்தமையால் கொள்ள வேண்டியதாயிற்று என்பர் சிவஞான முனிவர். இவர்கள் முத்திரையே பிற்காலப் பெருவழிக்காயிற்று. ஈண்டுங்கூட 11 ஆம் நூற்றாண்டில் தோன்றிய வீரசோழிய கால முதல் 19 ஆம் நூற்றாண்டில் எழுந்த முத்துவீரியம்வரை வேறு புதுமொழி முதல்களுக்கு இடமில்லை என்பது நினையத்தகும். மன்னிய மெய்வரம்பு இதுகாறும் கூறிய கருத்துத் தொகுதியிலிருந்து மொழிமுதல் வரலாற்றில் மன்னிய ஒரு பேருண்மையை எடுத்துக்காட்ட விரும்புகின்றேன். தொல்காப்பியக் காலத்தி லிருந்து இதுவரை வந்த மொழிமுதல் எண்ணிக்கையெழுத்தை நோக்கின் 94 - 105 என்ற வட்டத்துள் வேறுபாடு அடங்கும். சகரத்தில் மூன்றும் யகரத்தில் ஐந்தும் பிறவற்றில் மூன்றுமே கூடியவை என அறியப்படும். மூவாயிரம் ஆண்டுமொழி வரலாற்றில் மாற்றம் 10 விழுக்காடு சாலப் பெரிதன்று. இந்நிலையிலும் மாறிய இடம் எது? மாறாத இடம் எது என்று சீர்தூக்க வேண்டும். தொல்காப்பியர் கூறிய உயிர் பன்னிரண்டும் மொழி முதலாகும் என்ற இலக்கணம் மாறவே இல்லை. அது மட்டுமன்று எந்த மெய்கள் மொழி முதலாகுமென்று அன்று விதித்தாரோ அவையே கூடுதல் குறைவின்றிப் பின் இலக்கணங் களிலும் கொள்ளப்பட்டன. என்பது வியப்பான செய்தியாகும். க, ச, த, ப, ஞ, ம, ய, வ என்று வல்லினத்தில் நான்கும் மெல்லினத்தில் மூன்றும் இடை யினத்தில் இரண்டும் ஆக ஒன்பது மெய்கள் தொல்காப்பியத்தியல் வரம்புப்பட்டன. பின் வந்த எந்த இலக்கண நூலாவது ற, ட, ண, ன, ர, ல, ழ, ள என்ற மெய் முதலாக வரும் என்று மேலும் சேர்ந்துள்ளதா? இல்லையே. இந்நூல்கள் சேர்த்தனவெல்லாம் தொல்காப்பியம் வேலியிட்ட மெய்த்தளத்தில், சகரத்தின்மேல் மூன்றுயிரும் யகரத்திற்கு ஐந்துயிரும் கூடுதலாக ஏறிவரும் என்ற உயிர்ப் பெருக்கமேயாம். எனவே மொழி முதலாகும் பன்னீருயிரிலும் ஒன்பது மெய்யிலும் மாறாவியற்கையை அறுதியாகக் காண்கின்றோம். இக்கட்டுரை மொழிமுதலாய்வில் புதிதாகக் கண்ட முடிபு இது. தமிழ்மொழி என்றும் விளங்குந் தன்மையும் செம்மையும் பெற்றியிருப்பதற்கு மொழி முதல்வரம்பு பெருங்கரையாகும். மொழிமுதல் இம்மெய்வரம்பு, வடமொழி எவ்வளவு கலப்பினும், உறுதியாக மேற்கொள்ளப்பட்டது என்பதனை இலக்கியத்தாலும் இலக்கணத்தாலும் தெளிகின்றாம். வடமொழியில் எல்லாவெழுத்தும் சொல்லுக்கு முதலாகி வருவதும் தனிமெய்யும் முதலாகி வருவதும் உண்டு. அம்மொழியின் இயல்பு அது. அவை தமிழுக்கு வருங்கால் எந்த வடவெழுத்து எந்தத் தமிழெழுத்தாக மாறல் வேண்டும் என்று சுட்டி ஒலிவேலி கோலிய பெருமை புத்தமித்திரர்க்கும் பவணந்தியார்க்கும் உண்டு. இருமொழிக்கும் உயிரிலும் மெய்யிலும் பொதுவெழுத்தாக உள்ள நிலை சிக்கலற்றது ஆதலின் சிறப்பு நிலை எழுத்துக்களுக்கு மாற்றுவழி காட்டினர். வடநூல் மரபும் தழுவித் தமிழிலக்கணம் கூறுவல் என்று வெளிப்படச் சொல்லிய புத்தமித்திரனார் உலோபம், வெகுவிரிகி, தற்புருடன், சாமசம், துவந்துவம், கன்மதாரயன் வியஞ்சனம், பிரகிருதி, தத்திதம், காரிதம் எனவாறு வடமொழிக் குறியீடுகளை அள்ளிக் கொண்ட போதும், தமிழொலி வரம்பைக் கட்டிக் காத்தார். “கூட்டெழுத் திப்பின் யரலக்கள் தோன்றிடிற் கூட்டிடையே ஓட்டெழுத் தாகப் பெறுமொ ரிகாரம் வவ்வுக்கொ ருவ்வாம் மீட்டெழுத் துத்தமி ழல்லன போம்வேறு தேயச்சொல்லின் மாட்டெழுத் தும்மித னாலறி மற்றை விகாரத்தினே” (59) என்ற காரிகையிலும் வேறு இரண்டு காரிகைகளிலும் அல்தமிழ் ஒலிச்சொற்கள் முதல் ஈறு இடைநிலையில் தமிழாந்தன்மையை விதிக்கின்றார். `தமிழல்லன போம்' என்று ஆத்தி சூடி போல ஒலியிலும் கூறுகின்றார். வீரசோழியத்தை இவ்வகையில் செவ்வன் பின்பற்றும் பவணந்தியார் வடமொழிச் சொல்வெள்ளம் கரையுடைத்து ஓடுவதைக் கண்டு பதவியலில் நான்கு நூற்பாக்கள் யாத்தனர். இன்ன வடசொல் வரலாம். வரக்கூடாது என்று பொருள்பற்றிக் கூறவில்லை என்பதும், ஒலிநிலை மாற்றத்துக்கே வரம்பிட்டார் என்பதும், தமிழின ஒலிக் காப்புக்கு இவ்வரம்பு செம்பிட்டுச் செய்த,¨இஞ்சியாயிற்று என்பதும் நினையத்தகும். “ரவ்விற் கம்முத லாமுக் குறிலும் லவ்விற் கிம்முத லிரண்டும் யவ்விற் கிய்யு மொமுழித லாகி முன் வருமே” (148) ர, ல, ய என்பவை தமிழில் இல்லாத மெய்களல்ல, உள்ளவையே. எனினும் மன்னிய மெய்வரம்பு காக்கும் நோக்கோடு பவணந்தியார் அரக்கன், அரதனம் இலாபம், இராகு, உலோபம், இயக்கன் என உயிரெழுத்துக்களை ஒட்டினார். இத்தகைய மாற்றம் பார்வைக்குச் சிறியதாகத் தோன்றினும், தமிழ்மொழியின் கட்டுக்கோப்புக்குப் பேரரணாயிற்று. மொழியின் அமைப்பு இதுவாதலின், மன்னிய மெய்கள் மாறாமல் இலண்டன், இலேசு, உரோமாபுரி, உருசியா, உரூபா, இரெயில், இரசீது, இலிங்கம், இராசி, இரேகை, இராணுவம், இராமலிங்கம், இராமசாமி, இராமானுசம், இராய்பகதூர், இராமேச்சுரம், இரங்கூன் என மக்கள் நடைமுறையில் இயல்பாக எழுதுவதையும் காண்கின்றோம். தமிழ் ஒலிக்கூட்டமைப்பு இடைக்காலக் காப்பியங்களிலும் பிற இலக்கியங்களிலும் ஊர் வகையாலும் பெயர்வகையாலும் துறைவகையாலும் வடமொழித் தாக்கம் மிகுதி என்பது வெளிப்படை. இராமன், இலக்குவன், இராவணன், இரணியன், உருத்திரத்தன், பதுமாவதி, சீதத்தன், சீதரன். இராசமாபுரம், இரதநூபுரம், இரத்தின பல்லவம், திதி, புனருற்பவம், சகசமலம், அத்துவிதம், பிரணவம் முதலான சொற்கூட்டமெல்லாம் வடசொல்லா யினும், வீரமாமுனிவரின் தமிழ்த்தோற்றம்போல, முதலீறு இடைநிலைக்கண் தமிழுருப் பெற்று அமைகின்றன. சீவக சிந்தாமணி, பெருங்கதை, சூளாமணி, இராமாயணம். பாரதம் எல்லாம் தழுவு காப்பியங்களாயினும் பொருளையும் சொல்லையும் தழுவினவேயன்றி வடமொழி யொலிக் கட்டமைப்பைத் தழுவவில்லை என்பதும், புறவொலியமைப்பைத் தமிழொலியமைப்புக்கு உட்படுத்திக் கொண்டன என்பதும் நாம் கருதவேண்டிய தெறியாகும். வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் இலக்கணம் ஒன்றே; அஃதாவது வடமொழியிலக்கணமே தமிழிலக்கணமாம் என்ற பொய்யான ஒருமைக்கோட்பாடு காணத்துடித்த பிரயோக விவேக நூலாசிரியரும் இவ்வொலி மாற்றத்தை அறவே ஒதுக்கிவிட முடியவில்லை. “பொதுவெழுத்தாய்ப் பற்பல வாகித் திரிவதும் சாற்றினர் பண்டுணர்ந்தோர்” என்று உடன்படுவர். “இலயித்த தன்னிலில யித்ததாம லத்தால் இலயித்த வாறுளதா வேண்டும் - இலயித்த தத்திதியி வென்னி னழியா தவையழிவ தத்திதியு மாதியுமா மங்கு. லகரம் தமிழில் மொழி முதலாது என்பதனால், இச்சிவஞான போத வெண்பாவில் தவமுதல்வர் மெய்கண்டார் இகரத்தைச் சேர்த்து இலயித்தது என்று வரம்பு நனிகடைப் பிடித்திருப்பது மொழிமுதல் இலக்கணத்தின் ஒழுங்கைக்காட்டும். இவ் வரம்பினை அடி தொடை கொண்ட செய்யுளிடத்தேயும் நம் முன்னோர் மாறாது போற்றினர் என்றால், நெகிழ்ச்சிமிக்க உரைநடையில் கைக்கொள்வது மனமிருந்தால் நனி எளிது என்பது வெளிப்படை. “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்ல கும்மே” (தொல்.884) என்று தொல்காப்பியம் வடமொழித் தழுவிலக்கணத்தைச் சுருக்கமாகக் கூறுகின்றது. வீரசோழியம் நன்னூல் போல இன்ன வடவெழுத்து இன்னதமிழெழுத்தாகும் என்று தனி விதப்புச் செய்யவில்லை. எனினும்“எழுத்தொடு புணர்ந்த சொல்”என்ற நுட்பத்தில் சில குறிப்பு அடங்கியுள. ஈண்டு எழுத்து என்பது எழுத்திலக்கணத்தைக் குறித்து நிற்கின்றது. அங்ஙனம் வரும் வடசொல் மொழிமுதல், மொழியீறு, மொழியிடை என்பவற்றிலும் தமிழ்ச்சொல் வடிவுபெறல் வேண்டும் எனவும் ஒலிமாற்றம் தமிழ்ச் சொல்லமைப்புக்கு ஒத்திருக்க வேண்டும் எனவும் கொள்ள வேண்டும். இக்குறிப்பினை உணர்ந்தே வீரசோழியரும் நன்þனூலாரும் இவ்விலக்கணத்தை மேலும் விரிவுபடுத்தினர். வேறு அயன்மொழிகள் வீரசோழியம் `வேறு தேயச் சொல்லின் மாட்டெழுத்தும் இதனாலறி' என்று வடமொழியல்லாத வேறு அயல்மொழி களின் கலப்பிற்கும் எதிரது நோக்கிக் கட்டமைப்புச் சுட்டி யுள்ளது. உலகப் பேருறவில் பல்வேறு மொழிகளின் தாக்கம் செய்திக் கருவிகளால் தடுக்கவொண்ணாது வளர்ந்து வரும், இஞ்ஞான்று, மொழி முதனிலைகள் பற்றி முன்னோர்தம் நெறியங்களை நாம் சீர்தூக்கக் கடமைப் பட்டிருக்கின்றோம். பிற திராவிட மொழிகள், ஆங்கிலம், பிற அயன்மொழிகள் இவற்றிலெல்லாம் வடமொழி யொத்த ஒலிகளே பெரும்பாலும் உள்ளன. வடமொழியில் இல்லாத ஒலிகள் பிற மொழிகளில் சிலவினும் சிலவே. ஆதலின் நம்முன்னோர் வடமொழி மாற்றுக்குக் கூறிய ஒலிப்படு வரம்புகளை வேறு அயல்மொழிகட்கும் ஏற்றுக் கொள்ளலாம். அதன்பின்னும் சில மொழிகட்குச் சில சிறப்பெழுத்துக்கள் இருக்குமெனின், தேவைப்படின், இன்னதமிழெத்தாகத் திரிய வேண்டும் என்று தேவைக்கேற்ப விதி செய்து கொள்ளலாம். எவ்வாறாயினும், தொல்காப்பியமும் பிற்கால இலக்கணங்களும் மாறாது தெளிந்த மொழி முதல் எழுத்துக்களையும், மன்னிய மெய்ம் முதலிகளையும் போற்றிக் காத்து அவ்வட்டத்திற்குள் அயன்மொழி வரவை அடக்கிக்கொள்ளவேண்டும். உலகம் பெரிதாயினும் ஒவ்வொரு விளையாட்டிற்கும் மதிக்கத்தக்க இடவரம்பும் வெளி என்று சொல்லத்தக்க மதிப்பிலாப் புறம் போக்கும் இருப்பதுபோல மொழிகட்கும் உண்டு. அதிலும் இவ்வரம்பு தமிழுக்குச் செறிவாக உண்டு. பிறமொழிகளில் இன்ன இவ்வெழுத்துத் தான் மொழி முதலாகலாம். ஆதற்கில்லை என்ற விதிவிலக்கு இருப்பதாக யானறிந்தவரை காணோம். அம்மொழிக்குரிய அகராதிகளைப் பார்த்தால் இது புலப்படும். அம்மொழி இலக்கணங்களில், உயிரெழுத்து, மெய்யெழுத்து, நெடில், குறில், இன்னவகைப் பாகுபாடு சுட்டப்படுவதன்றி, மொழி தனிலைகள் கூறப்பட வில்லை. புணர்ச்சிக்கோள் தமிழ்மொழியின் நிலைவேறு. முதற்கண் குறித்தபடி மொழி முதல், மொழியீறு, மொழியிடை என்ற முக்களன் தமிழில் எழுத்திலக்கணத்துக்கு இன்றியமையாதது. தொல்காப்பிய எழுத்ததிகார ஒன்பது இயல்களில் பின்னுள்ள ஏழியல்கள் புணர்ச்சிச் செய்கை பற்றியன, நூன்மரபு, மொழி மரபு என்ற முதலிரண்டும் புணர்நிலைக்கு வேண்டிய கருவி களையும் அடித்தளங்களையும் வரம்பறுக்கும் இயல்களாகும். புணர்ச்சி என்பது நிலைமொழியீறு வருமொழி முதலொடு இயைவது, இயையுங்கால் பெறும் இயல்புகளையும் திரிபுகளையும் விரிவுபடக் கூறுவது. “உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும் உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும்” (தொல்.107) “நிறுத்த சொல்லின் ஈறா கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியைய” (தொல்.108) “நின்றசொல் லீறும் வருஞ்சொல் முதலும் நிரவி” (வீர. 9) “மெய்யுயிர் முதலீறாம் இரு பதங்களும்” (நன். 151) என வரும் பல்வேறு புணர்வு நூற்பாக்களில் சொல் பற்றிப் பேசாது ஈறும் முதலும் பற்றிய அடிப்படையில் புணர்ச்சி சுட்டப்படுவதால், எவ்வெழுத்து ஈறாகும், எவ்வெழுத்து முதலாகும் என்ற மொழிக்கணிப்பு தமிழுக்கு ஒருவந்தம் வேண்டற்பாற்று. மொழி மரபு என்ற இரண்டாவது இயல் பத்து நூற்பாக்களால் முதனிலை பற்றியும், பதினான்கு நூற்பாக் களால் இறுதிநிலை பற்றியும் கற்பிக்கின்றது. இதுபார்வைக்குச் சிற்றிலக்கணமாகத் தோன்றினாலும் ஒன்று முதல் பத்துவரை எண்ண அறியாதான் கதியே இந்த இலக்கண வறிவிலக்கு ஏற்படும். `மென்மை யும் இடைமையும் வரூஉங்காலை' (தொல்.130) `மொழிமுத லாகும் எல்லா வெழுத்தும் வருவழி நின்ற ஆயிரு புள்ளியும் ( 147) `அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுத லாகி உளவெனப் பட்ட ஒன்பதிற் றெழுத்தே' (170) `வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே' ( 357) `மெல்லெழுத் தியையின்அவ்வெழுத் தாகும்' ( 380) இன்னணம் வரும் இடங்களில் எல்லாம் மெல்லெழுத்து, இடையெழுத்து, வல்லெழுத்து, மொழி முதலெழுத்து என வருமொழி சுருக்கமாகச் சுட்டபட்டதேன்றி இன்ன தனியெழுத்து என்று சுட்டவில்லை. அதற்குக் காரணம் மொழிமரபில் இவை பற்றிய குறிப்புக்கள் உண்டு. எனவே தமிழ்ப்புணர்ச்சிக்கு ஈற்று நிலை, முதல்நிலை என்ற இருமுனையில் வளர்ந்துள்ள மாறா, மாற்றவியலா வரலாற்றமைப்பினை நாம் உணர்கின்றோம். எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றதிகாரங்களுள் எழுத்ததிகாரம் ஈறு முதல் இணைந்த புணர்ச்சியதிகாரமாகும். தமிழில் மொழியியல்பும் ஒலியியல்பும் மயங்காது தெரிக்கும் கட்டுமான அதிகாரமுமாகும் எழுத்தும் சொல்லும் மொழி பற்றிய இருகூறுகளே. மொழியதிகாரம் என்ற ஒரு பெயரால் இவ்விரண்டினையும் அடக்கி இலக்கணங் கூறியிருக்கலாமே. ஏன் அங்ஙனம் முன்னோர் கூறவில்லை? எழுத்ததிகாரம் மேற்காட்டியபடி தமிழுக்கு விரிந்து பரந்த இன்றியமையாப் புணர்ச்சிக் கட்டமைப்பினைக் கூறுவதாதலின், தனியதிகாரம் என்ற சிறப்பு அளிக்க வேண்டிய தாயிற்று. இப்பேருண்மையை நினைவிற் கொண்டால் மொழிமுதல் எழுத்து வரலாற்றில் ஏற்பட்ட மன்னிய ஒழுங்கியலைப் புரிந்து கொள்ளவியலும். பன்னிரண்டு உயிரும் க ச த ப ஞ ந ம ய வ என்ற ஒன்பது மெய்யும் தொல்காப்பியர் கால முதல் மன்னிய முதல்களாக வருவதைக் கண்டோம். தமிழில் தனிமெய் முதலாக வராது. `உயிர்மெய் யல்லன மொழி முதலாகா' என்றபடி வ்யாதி, த்யானம், க்ருபை, ப்ரணவம் என்று வாராமல், வந்தால், வியாதி, தியானம், கிருபை. பிரணவம் என்று உயிர்மெய்யாகவே வரும். எனினும் வருமொழி முதல் கூறும்போது கண் + பார்வை; தமிழ் +நூல்; வள்ளை + கொடி; கொடி + யாது என்பவற்றில் ப், ந், க், ய் எனத் தனிமெய்களையே புணர்ச்சிக்குரிய எழுத்துக்களாகக் கருதுகின்றோம். தமிழமைப் பின்படி, உயிர்மெய்யே சொல்லுக்கு முதலாக வருமென்றாலும், புணர்நிலைக்கு வேற்றுமை நயத்தால் மெய்யைமட்டும் கொள்கின்றோம். ஆதலின்மொழி முதலெழுத்து என்று கணக்கிடுங்கால் தனிமெய்களே கணக்கிடப்படும். முன்னரே மன்னியமெய்கள் என்று இவற்றைக் குறிப்பிட்டிக்கிறேன். தொல்காப்பியருக்குப்பின் கூடுதலான சிலவுயிர்கள் சகரமெய்க்கும் யகரமெய்க்கும் வந்துள. மெய்ம்மேல் ஏறிய எவ்வுயிர்க்கும் புணர்ச்சியிலக்கணத்து மதிப்பில்லை. முன்னின்றும் மெய்யளவுக்கு இயல்பும் திரிபும் கூறப்படும். ஆதலின், தொல்காப்பியத்துக்கும் பின்þனூல்களுக்கும் மொழி முதலெழுத்துக்களில் சில வேற்றுமைகள் இருந்தாலும் அவ்வேற்றுமைகள் ஏறிய உயிர்பற்றியனவாதலால், புதிய புணர்ச்சித்தாக்கத்துக்கு இடமில்லை என்பது உணரவேண்டிய ஒரு கருத்து. சுருங்கக்கூறின் தொல்காப்பியத்துப் புணர்ச்சிக்கு வருமொழியாகக் கூறப்பட்ட க ச த ப ஞ ந ம ய வ என்ற மன்னிய ஒன்பது மெய்களே பின்னூல்களிலும் மேற்கொள்ளப் பட்டன. எனவே வருமொழிப் புணர்கோடுகள் மாறாமை தெளிவாகும். புதிய மொழி முதல்? தொன்றுதொட்டு இதுகாறும் பல்வேறு மாறுதல் கொண்ட தமிழிலக்கண நூல்களில் மொழிமுதல்மெய் மட்டும் ஒருபெற்றித்தாக நிற்பதற்கே காரணம் புணர்ச்சிக்கோள் என்பது என் துணிவு. இதனை வேறொரு வகையாகக் காணலாம். ரவை, ரெடி, ரொட்டி, ரேடியோ, ரௌடி முதலான ரகரச் சொற்களையும்; லட்டு, லாடம், லுங்கி, லேவாதேவி என்றின்ன லகரச் சொற்களையும்; டமாரம், டாணா, டில்லி, டெலிபோன் முதலான டகரச் சொற்களையும் இவ்வாறே பிற முதற் சொற்களையும் மொழிமுதலாகும் என்று ஏற்றுக்கொண்டால் என்ன? வேற்றுமொழிகளில் எல்லாம் நெடுங்கணக்கில் உள்ள எல்லா எழுத்துக்களும் மொழி முதலாகும்போது, தமிழும் அவ்வழிச்சென்று வளர்ந்தால் என்ன? என்று நல்லன்பர்களே வினவலாம். வினவுகின்றனர். வினவிக் கொண்டுதானிருப்பர். இந்நல்வினாவிற்கு முழுமையாக எதிர்மறுமொழிகூறுவதற்கு இக்கட்டுரை பொற்பன்று எனினும், மூவாயிரம் ஆண்டுக்கு மேலாக எல்லா இலக்கணநூலும் ஒரு படித்தாகப் போற்றி வந்த மரபையே நான் மீண்டும் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். ரகர லகர டகரம் போன்ற முதன்மொழிகளைக் கொண்டால் எழுத்திலக்கணத்தில் இப்புது முதல்கட்குப் புத்திலக்கணம் வகுக்க வேண்டுமன்றோ? அவர் + ரவை வாங்கினார் சாப்பாடு + ரெடி வீட்டில் + ரேடியோ பலர் + ரௌடியாயினர் பத்து + லட்டு வாங்கி வா குதிரைக்கு + லாடம் கட்டினர் நாலு + லுங்கி வேண்டும் கார் + டயர் அவன் + டில்லி சென்றாள் இங்ஙனம் ரகர லகர டகர முதலாய சொற்கள் வரும்போது எந்த நிலைமொழிக்கு முன் எவ்வாறெல்லாம் மாறும் என ஒவ்வொரு மெய்க்கும் புணரியல்களில் விதி சொல்லவேண்டும். வருமொழி முதல் என ஒன்றைக் கொண்டால் தமிழிலக்கணம் அதற்கென ஓரிடம் அளித்து வழி சுட்ட வேண்டும் என்பது மரபு. இத்தகைய மரபினைத் தமிழ்ச்சொல் வட்டத்துக்குள்ளே வைத்துக் கொண்டால் இலக்கணம் தனித்தன்மையுடையதாகவும் சுருக்கமாகவும் கற்பார்க்கு வேண்டுமளவு விளக்கமாகவும் இருக்கும். பிறமொழிக் கலப்பால் வரும் எழுத்து முதல்கட்டும் எழுத்தீறு கட்கும் எல்லாம் புணர்ச்சியிலக்கணம் வகுக்கப்பட்டால் ஒருமொழிக்கு இலக்கணம் வகுப்பது, வரம்பு காட்டுவது என ஆகாமல் ஊர்மொழிக்கெல்லாம் வந்தவாறு ஏதோ விதிப்பறை அடிப்பதாகவே போய்முடியும். ஓடிவரும் நீரையெல்லாம் குடிக்கலாமா? ஒரு மொழியின் இலக்கண நலமாகால் இலக்கணத் தொழுநோய் ஆகிவிடும் என்று தெளிந்த நம் இலக்கண மருத்துவர்கள் தொல்காப்பியர் காலமுதல் வந்த மன்னிய மெய்களை வருமொழியாகப் போற்றிக் கொண்டனர். ஏறும் உயிர்கள் அளவில் புணர்ச்சி இடையூறில்லா மாற்றங்களைத் தழுவிக்கொண்டனர். எனவே தமிழ் மொழிமுதல் வரம்பு புணர்ச்சி வரம்பாகும் என்று இக்கட்டுரையால் அறியலாம். ஆய்தக்கேடு இத்தெளிநிலையில் சில ஆண்டுகளாகப் புற்றீசல் போலப் பெருகிவரும் வரும் ஒரு மொழிக்கேட்டினை ஈண்டுச்சுட்டுவது என் கடமையும் பொறுப்பும் ஆம். ஆய்தம் சார்பெழுத்து எனவும் அஃது எஃது என்றாற்போலக் குற்றெழுத்தின்பின்னும் வல்லெழுத்தின் முன்னும் இடையே நலிந்துவரும் எனவும் நாம் அறிவோம். முதலெழுத்தாக எண்ணப்பட்ட டகர றகர லகர ழகரங்களே மொழி முதனிலையாக வாராதபோது, நலிபு வண்ணம் என்று தள்ளப்பட்ட குற்றாய்தம் இப்போது பல அயற்சொற்களில் முதலாய்தமாக வந்துகொண்டிருக்கிறது. ஃபுளு ஃபைனான்சியர் ஃபைல் ஃபிட்டர் ஃபேர்ம் ஃபெலோசிப் ஃபிபிலிம் ஃபிச்செட் ஃபிரீ ஃபர்னிச்சர் ஃபேர்லேடி ஃபேன்கள் ஃபோர்டு ஃபையர்மென் ஃபிப்சு ஃபுட்வேர் ஃபேன்சி ஃபின்லெண்ட் ஃபார்மசி ஃபிரான்சு ஆங்கிலத்தின் ஆறாவது எழுத்துக்கு நிகராக இவ் வாய்தத்தைக் கொண்டுவரும் போக்கினை விளம்பரங் களிலும் மிகுதியாகக் காண்கின்றோம். இதனால்வரும். வரப்போகும் கெடுதல்களை உணர்வார் சிலரினும் சிலரே. தமிழ் தேர்ந்து தெளிந்த செம்மொழி என்று அறியாதாரும், புகுந்தன வந்தன வெல்லாம் வளர்ச்சி என்று கருதுவாரும் இவ்வாய்க்கேட்டினை உணரமாட்டார்கள். இதனால் புதிய சொற்களில் ஆக்கம் தடைப்படுவதோடு, வேற்றொலிகள் எல்லாம் தமிழுக்கு முதலெழுத்துக்களாகி விடும். ஆதிக்கத்தையும் உணர வேண்டும். ஆய்தமும் ஆங்கிலத்தின் ஆறாவது எழுத்தும் ஒன்று என்ற மயக்கம் ஏற்பட்டுவிட்டால், அஃறிணை, எஃகு, அஃகுதல், வெஃகாமை, பஃறொடை, அஃது, இஃது, பஃறுழி, கஃசு முதலான தமிழ்ச்சொற்கள் வருங்காலத்தில் என்ன ஒலிப்பாடு படுமோ? இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் என்பது நன்மரபாயினும், அங்ஙனம் இலக்கணம் இயம்புவதற்குமுன் எது இலக்கியம் என்று பகுத்தறிவுப் பார்வை வேண்டும். இப்பகுத்தறிவைப் பெற்றிருந்தவர்கள் நம் இலக்கணச் சான்றோர்கள். அதனாலன்றோ நம் தொன்மொழி இன்றும் இலங்குமொழியாக நிற்கின்றது புரிகின்றது. கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந்தமிழ் ஏனை மண்ணிடைச் சிலவிலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ. தொல்காப்பியம் மொழிமரபும் மாணிக்கவுரையும் முற்றும்.