மாணிக்க விழுமியங்கள் - 13 (நூற்றாண்டு நினைவு வெளியீடு) கொடை விளக்கு - முதல் பதிப்பு 1957 மாமலர்கள் - முதல் பதிப்பு 1978 மாணிக்கக் குறள் - முதல் பதிப்பு 1991 என் பொழிவுகள் - முதல் பதிப்பு 2017 ஆசிரியர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் பதிப்பாளர் கோ. இளவழகன் மாணிக்க விழுமியங்கள்- 13 ஆசிரியர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 18+382 = 400 விலை : 375/- வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 400 கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 1000  நூலாக்கம் : கோ. சித்திரா, ப. கயல்விழி   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006. நுழைவுரை தமிழ் மரபுகளைத் தலைமுறை தலைமுறையாகக் காத்து வரும் தமிழ்ச்சமூகங்களில் தலையாய சமூகம் நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகம். இந்தச் சமூகம் ஈன்றெடுத்த அரும்பெரும் அறிஞரும், நாடு, மொழி, இனம், சமுதாயம், கல்வி, இலக்கியம், வாழ்வு முதலான பல்வேறு பொருள்களைப் பற்றித் தம் தெள்ளத் தெளிந்த சிந்தனைகளால் தமிழ் இலக்கிய வானில் சிந்தனைச் சிற்பியாக வலம் வந்தவர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் ஆவார். இப்பெருந்தமிழ் ஆசான் வாழ்ந்த காலத்தில் தமிழர்க்கு எய்ப்பில் வைப்பாக எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச்செல்வங்களைத் தொகுத்து மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் மாணிக்க விழுமியங்கள் எனும் தலைப்பில் 18 தொகுதிகளாக தமிழ்கூறும் நல்லுலகம் பயன் கொள்ளும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. “மூதறிஞர் மாணிக்கனார் தமிழ் ஆராய்ச்சி உலகில் தமிழ்ப் பேரொளியாய் விளங்கியவர்; அவருடைய ஆய்வு நெறி தமிழ் மரபு சார்ந்தது. தொல்காப்பியத்தின் புதுமைக் கூறுகளையும், பாரதியின் பழமைக் கூறுகளையும் கண்டு காட்டியவர். உரையாசிரியர்களைப் பற்றி நிரம்பச் சிந்தித்த உரையாசிரியர். தொல்காப்பியத்திற்கும், திருக்குறளுக்கும் தெளிவுரை கண்டவர். மரபுவழிப் புலமையின் கடைசி வளையமாகத் திகழ்ந்தவர், ஆய்வு வன்மைக்குத் `தமிழ்க்காதல்’, சிந்தனைத் தெளிவிற்கு `வள்ளுவம்’, புலமை நலத்திற்குக் `கம்பர்’ ஆகிய இவர் எழுதிய நூல்களைத் தமிழ்ச் சான்றோர்கள் இனம் காட்டி மகிழ்வர். ” என்று மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இப்பெருந்தமிழ் ஆசானின் அறிவின் பரப்பை வியந்து பேசுகிறார். வளர்ந்து வரும் தமிழாய்வுக் களத்திற்கு வ.சுப. மாணிக்கனார் பதித்த பதிப்புச் சுவடுகள் புதிய வழிகாட்ட வல்லன. தாம் எழுதிய நூல்களின் வழி தமிழின் தனித்தன்மையை நிலைநாட்டியவர். மறைமலையடிகளின் ஆய்வுத் திறனும் கொள்கை உறுதியும்; திரு.வி.க.வின் மொழிநடையும் சமுதாய நோக்கும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. இத்தொகுப்புகளைப் பயில்வோர் இவ்வுண்மையை முழுதாய் உணர முடியும். தமிழ்மண் பதிப்பகம் தமிழ் - தமிழர்க்குப் பெருமை சேர்க்கும் பயனுள்ள நல்ல தமிழ் நூல்களை வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் தனித்தன்மையுள்ள நிறுவனம் என்பதை நிறுவி வருகிறது. இதன் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனாரின் அறிவுச் செல்வங்களை வெளியிடுவதன் மூலம் உவகையும், களிப்பும், பூரிப்பும் அடைகிறேன். இவர் நூல்களை நாங்கள் வெளியிடுவதை எங்களுக்குக் கிடைத்த நற்பேறாக எண்ணி எண்ணி மகிழ்கிறேன். நல்ல தமிழ் நூல்களைப் பதிப்பித்துத் தமிழ்கூறும் உலகிற்கு அளிக்கும் போதெல்லாம் என் சிந்தை மகிழ்கிறது; புத்துணர்வும், பூரிப்பும், புத்தெழுச்சியும் அடைகிறேன். தமிழ்ப் பதிப்பு உலகில் உயர்வுதரும் நெறிகளை மேற்கொள்ள உறுதி ஏற்கிறேன். நன்றிக்குரியவர்கள் மணிவாசகர் பதிப்பக நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இவ்வருந்தமிழ் அறிஞர் எழுதிய நூல்கள் பலவற்றை வெளியிட்டுத் தமிழுக்கும் தமிழருக்கும் அருந்தொண்டு செய்தவர். இந்த நேரத்தில் அவரை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பாரி நிலையம் மற்றும் காரைக்குடி செல்வி புத்தக நிலையம் ஆகிய இரண்டும் பெருந்தமிழ் அறிஞர் வ.சுப.மா. நூல்களை வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளதையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பேரறிஞரின் மக்கள் அனைவரும் இந்நூல் தொகுப்புகள் எல்லா நிலையிலும் செப்பமுடன் வெளிவருவதற்கு உதவினர். இச்செந்தமிழ்த் தொகுப்புகள் வெளிவருவதற்கு மூல விசையாய் அமைந்தவர்கள் திருமதி. தென்றல் அழகப்பன், திருமதி மாதரி வெள்ளையப்பன் ஆகிய இவ்விரு பெண்மக்கள் மாணிக்க விழுமியங்கள் தமிழ் உலகம் பயன் கொள்ளும் வகையில் வெளிவருவதற்குத் தோன்றாத் துணையாக இருந்ததை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். மொழியை மூச்சாகவும், அறத்தை வாழ்வாகவும், இலக்கிய வேள்வியை வினையாகவும் ஆக்கிக் கொண்டவர் மூதறிஞர் வ.சுப.மா அவர்கள் என்பதை மேலைச்சிவபுரி, கணேசர் கலை அறிவியல் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் இனம் காட்டி உள்ளது. இது முதுமுனைவர் இரா. இளங்குமரனார் கூறிய புகழ் வரிகள். “மாணிக்கச் செல்வ மணித்தமிழ் அன்னைக்குக் காணிக்கை யாய்வாய்த்த கண்ணாள - பேணிக்கை வைத்த துறையெல்லாம் வாய்ந்த துறையாக்கி வைத்தநீ எங்களின் வைப்பு” இப்பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய நிறைதமிழ் அறிஞரின் அறிவுச் செல்வங்களை உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்குவதன் மூலம் நிறைவடைகிறேன். “தனக்கென வாழ்வது சாவுக்கு ஒப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும்” எனும் பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திருமதி ப. கயல்விழி திருமதி வி. ஹேமலதா திரு. டி. இரத்திரனராசு நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) முதல் திருத்ததிற்கு உதவியோர்: திருமதி. தென்றல் அழகப்பன் திரு. புலவர். த. ஆறுமுகம் திரு. க. கருப்பையா முனைவர். க. சுப்பிரமணியன் புலவர். மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் இறுதித் திருத்தம் : முனைவர் மாதரி வெள்ளையப்பன் நூலாக்கத்திற்கு உதவியோர்: இரா. பரமேசுவரன், கு. மருது, வி. மதிமாறன் அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை. `மாணிக்க விழுமியங்கள்’ எல்லா நிலையிலும் செப்பமுற வெளிவருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நெஞ்சம் நிறைந்த நன்றியும் பாராட்டும். அறிமுகவுரை செம்மல் வ.சுப.மாணிக்கனார் தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் முன்னோர் எடுத்து வைத்த அடிச்சுவட்டில் தாமும் கால் பதித்து எழுத்துக்களையும் ஆய்வுகளையும் செய்த காலத்தில் தனக்கென ஒரு தனி வழியை அமைத்துக்கொண்டவர் செம்மல் அவர்கள். தமிழகத்தில் பிறந்து இரங்கூனில் வளர்ந்து வாய்மைக் குறிக்கோளைத் தன் வாழ்வின் குறிக்கோளாக எண்ணிய பள்ளிப்படிப்பை நிறைவு செய்யாத ஒரு சிறுவனை அடையாளம் கண்டாள் தமிழன்னை. அச்சிறுவனைத் தமிழ்க்கொடையாக உலகிற்குத் தந்தாள். பண்டிதமணி கதிரேசனார் துணை கொண்டு தமிழைக் கசடறக் கற்றவர், வ.சுப. சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்ந்தவர். தமிழ்க்கொடையாக வந்த வ.சுப. தமிழுக்குச் செய்த கொடை மிக அதிகம். தமிழால் அடையாளம் காணப்பெற்ற அவர் கற்றோருக்கு முதன்மையராகவும் எல்லோருக்கும் தலைவராகவும் விளங்கினார். சங்க இலக்கியங்களை புதிய நோக்கில் ஆய்வு செய்தவர். இனி வரும் காலங்களில் சங்க இலக்கியம் கற்பாரின் நுழைவாயில் வ.சுப.வின் அகத்திணை ஆய்வு நூல் `தமிழ்க்காதல்’. இராமாயணத்தில் பற்றில்லாமல் இருந்தவர்களையும் `கம்பர்’ என்ற நூல் கம்பராமாயணத்தைக் கற்கத் தூண்டுகின்றது. சிலப்பதிகாரத்தின் பெயர்க்காரணத்தை ஆய்வு செய்தது `எந்தச் சிலம்பு’. திருக்குறளைப் புதிய கோணத்தில் ஆய்வு கண்டது `வள்ளுவம்’ மற்றும் `திருக்குறட்சுடர்’. திருக்குறளின் மூலமும் உரையும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல் காணும் `உரை நடையில் திருக்குறள்’. தொல்காப்பியத்தை வெளியுலகிற்குக் கொண்டு வந்து அறிஞர்களிடையே நிலைநிறுத்தியவர் வ.சுப. தமிழ்க்கொடை மட்டுமன்று ஒரு தமிழாசிரியனாலும் அறக்கொடை செய்ய முடியுமென்பதை நிலைநாட்டியவர். அறம் செய்ய பணம் வேண்டியதில்லை. மனம் தான் வேண்டும். அழைப்பு வேண்டியதில்லை. உழைப்புத்தான் வேண்டும். அறிவு கூட வேண்டியதில்லை. அன்பு கூட வேண்டும். என்பதை உணர்த்தியவர். செம்மல் வ.சுப. அவர்களின் புகழ் தமிழ் வாழும் காலமெல்லாம் நிலைத்து நிற்கும். அந்நிய மோகத்தில் அடிமைப்பட்டு, உரிமை கெட்டு, ஆட்சிஅதிகாரம் தொலைத்து அல்லலுற்றுக்கிடந்த இந்திய மண்ணில், அக்கினிக் குஞ்சுகளை வளர்த்தெடுத்த அண்ணல் காந்திக்குப் பாரதி பாடிய வாழ்த்துப் பா இது: “வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க வாழ்க!” இதைப் போலவே, தமிழ் மண்ணில் அந்நிய மொழிகளின் ஆதிக்கத்திற்குத் தமிழர் அடிபணிந்து, மொழி உரிமை இழந்து, தமிழ்க் கல்விக்குப் பெருங்கேடு நேர்ந்த போது, இந்த அவலத்தை மாற்றும் முயற்சியில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் அண்ணல் வ.சுப.மா. அண்ணல் காந்தியை பாரதி பாடியதுபோல், அண்ணல் மாணிக்கனாரை, “வாழ்க நீ எம்மான், இங்கு வந்தேறி மொழிமோ கத்தால் தாழ்வுற்று உரிமை கெட்டுத் தமிழ்க்கல்வி தனையும் விட்டுப் பாழ்பட்டுப் பரித வித்த பைந்தமிழ் தன்னைக் காத்து வாழ்விக்க வந்த புதிய வள்ளுவமே வாழ்க! வாழ்க! என்று பாடிப் பரவத் தோன்றுகிறது. - தென்றல் அழகப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) மாணிக்கம் - தமிழ் வார்ப்பு வாய்மை வாழ்வைத் தன் உயிராகவும், திருவாசகம், திருக்குறள், தொல்காப்பியம் மூன்றினையும் போற்றிப் பாதுகாத்து பொய்யாமை, தூய்மை, நேர்மை, எளிமை என்ற நான்கு தூண்களையும் அடித்தளமாகவும் வரலாறாகவும் கொண்டு வாழ்ந்தவர் தமிழ்ச் செம்மல், மூதறிஞர் முது பேராய்வாளர், பெருந்தமிழ்க் காவலர், முதுபெரும் புலவர், தொல்காப்பியத் தகைஞர் எனது தந்தை வ.சுப. மாணிக்கனார். பெற்றோர்கள் இல்லாமலே வளர்ந்தாலும் தன்னை நற்பண்புகளாலும் நல்லொழுக்கத்தாலும் நற்சிந்தனைகளாலும் செதுக்கிக் கொண்டவர்கள். அவர்களின் மறைவிற்குப் பின் தாயார் திருமதி. ஏகம்மை மாணிக்கம் அவர்கள் தந்தை இட்ட புள்ளிகளைக் கோலமாக்கினார்கள். அப்பா தனது வாழ்நாளில் 50 ஆண்டுகட்கு மேலாக தமிழைப் போற்றினார்கள். தாயார் (தந்தையின் மறைவிற்குப் பிறகு) 20 ஆண்டுகட்கு மேலாக தந்தையின் குறிக்கோள்களைப் போற்றி நிறைவேற்றினார்கள். தமிழறிஞர்களும் ஆர்வலர்களும் இன்று தந்தையைப் போற்றுகிறார்கள். செம்மலின் அறிவுடைமை தமிழக அரசால் பொது வுடைமை ஆக்கப்பட்டது. என் தந்தையின் தொண்டுகள் பலதிறத்தன. மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவின் நிலைப்பயனாக செம்மலின் நூல்கள் அனைத்தையும் மறுபடியும் பதிப்பித்து அவற்றை தமிழுலகிற்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும் எனவும் செம்மலின் படைப்புக்களை வெளியிடுவது விழாவிற்கு உயர்வும் நூல்கள் வழிவழி கிடைக்கவும் தேடலின்றிக் கிடைக்கவும் வழி வகுக்க வேண்டும் என்றும் மக்கள் நாங்கள் எண்ணினோம். நூற்றாண்டு விழாப் பணியாக மாணிக்கனார் நூல்களை யெல்லாம் வெளியிடும் அமையத்து செம்மலின் தமிழ்மையை திறனாய்ந்து தமிழறிஞர்களின் முத்திரைகளும் நூல்களாக வெளிவருகிறது. இவ்வாண்டில் பொறுப்பெடுத்து வெளியிட்ட தமிழ்மண் பதிப்பகத்திற்கும் எம் தந்தையின் தமிழ்ப்பணிக் குறித்து பெருமை தரும் நூல்களாக எழுதியுள்ள நூலாசிரியர் கட்கும் தமிழினமே நன்றி கூறும். முனைவர். மாதரி வெள்ளையப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) கோவை 11.8.2017 என் அன்புறை எட்டு வயது பாலகனாக இருந்தபோதே ஈன்றெடுத்த பெற்றோர்கள் விண்ணுலகு எய்திய சூழ்நிலை. இளம் வயதிலேயே “லேவாதேவி” என்று சொல்லப்படும் வட்டித் தொழிலைக் கற்றுக் கொள்ள பர்மா சென்று வேலைப்பார்த்த இடத்தில் முதலாளி, வருமானவரி அதிகாரியிடம் பொய் சொல்லும்படி அப்பாவை வற்புறுத்தியதால், திண்ணமாக மறுத்துவிட்டுத் தாயகம் திரும்பிய உத்தம மனிதர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பண்டிதமணி, கதிரேசனாரிடம் தமிழ் பயின்று, பிற்காலத்தில் காரைக்குடியில் தான் கட்டிய இல்லத்திற்கு “கதிரகம்” என்று பெயர் சூட்டி, ஆசானுக்கு மரியாதை செலுத்திய மாமனிதர். சிற்பி ஒரு கல்லை உளியைக் கொண்டு செதுக்கிச் செதுக்கி, சிறந்த சிற்பமாக்குவான். அதேபோல், தன் மனதை எளிய வாழ்வு, எதிர்கால நம்பிக்கை, தெளிவான சிந்தனைகள், வாழ்க்கைக்கான திட்டங்கள், உயர்ந்த குறிக்கோள், உன்னத மான செயல், வாய்மை, தூய்மை, நேர்மை, இறை வழிபாடு போன்ற எண்ணத் திண்மையுடன் தன்னைத்தானே பக்குவப் படுத்திக் கொண்டதால், உயர் பதவியான துணைவேந்தர் பதவி அப்பாவை நாடி வந்தது. திருக்குறள், திருவாசகம், தொல்காப்பியம் ஆகிய மூன்று தமிழ் மறைகளும், பண்புடன் வாழ்வதற்குரிய வழிகாட்டிகள் என்று நினைத்து வாழ்வில் கடைப்பிடித்து வெற்றி கண்ட உயர்ந்த மனிதர். அப்பா எழுதியுள்ள `தற்சிந்தனை’ என்னும் குறிப்பேட்டில் “நான் படிப்பிலும் எழுத்திலும் ஆய்விலும் பதவிப் பணியிலும் முழு நேரமும் ஈடுபடுமாறு குடும்பப் பொறுப்பை முழுதும் தாங்கியவள் ஏகம்மை என்ற என் ஒரே மனைவி” என்று எழுதியுள்ளதிலிருந்து அப்பாவின் முன்னேற்றத்திற்கு அம்மா முழு உறுதுணையாக இருந்துள்ளார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் என் தாய்தந்தையர் இருவருக்கும் ஒருமித்தக் கருத்தாக இருந்ததால், தன் குழந்தைகள் அறுவரையும் பள்ளிப் படிப்போடு நிறுத்திவிடாமல், ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் பட்டப் படிப்புக்கள் வரை பயில வைத்து வெற்றி கண்டுள்ளார்கள். என் இளங்கலை வணிகவியல் சான்றிதழிலும், என் கணவரின் பொறியியல் சான்றிதழிலும் துணைவேந்தரின் கையொப்ப இடத்தில் என் தந்தையாரின் கையொப்பம் இருக்கும். இதை நான் பெற்ற பாக்கியமாக நினைக்கிறேன். நான் பெங்களூரில் இருந்தபோது, அப்பா எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும், “அவிநயன் திருக்குறள் சொல்லு கிறானா? புதிதாகச் சொல்லும் குறளுக்கு அய்யா காசு தருவார்கள் என்று சொல்” என்ற வரிகள் நிச்சயமாக இருக்கும். என் மகன் இளம் வயதிலேயே திருக்குறள் கற்க வேண்டும் என்பது என் தந்தையாரின் எண்ணம். இளஞ்சிறார்களுக்குப் பிஞ்சு நெஞ்சங்களிலேயே திருக்குறள், திருவாசகம் படித்தல், இறைவழிபாடு செய்தல் போன்ற விதைகளை விதைத்து விட்டால், முழுவாழ்வும் மிகவும் சிறப்பாக அமையும் என்பது தந்தையாரின் திண்மையான கருத்து. மிகச் சிறு வயதில் பெற்றோரை இழந்த சூழ்நிலையில், அடிப்படை பொருளாதாரம் இல்லாத நிலையில், அதிகமான உழைப்பாலும், முயற்சியாலும், நேர்மையான வழியில் தான் ஈட்டிய பொருளாதாரத்தில், அதாவது தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை தனது சொந்த ஊரான மேலைச்சிவபுரியின் மேம்பாட்டுக்காக உயர்திணை அஃறிணை பாகுபாடுயின்றி செலவு செய்ய வேண்டும் என்று தன் விருப்பமுறியில் எழுதியுள்ளார்கள். தந்தையாரின் விருப்பப்படியே தாயார் அவர்கள் 20-4-1992 இல் அப்பாவின் பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து நடத்தி வந்தார்கள். இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பா எழுதிய முப்பதுக்கும் மேலான நூல்களில் `வள்ளுவம்’, `தமிழ்க்காதல்’, `கம்பர்’, `சிந்தனைக்களங்கள்’ போன்றவை தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகச்சிறந்த ஆய்வு நூல்களாகக் கருதப்படுகிறது. உன்னத வாழ்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்துள்ள என் தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்பவர்களின் வாழ்விலும் நல்ல திருப்புமுனை ஏற்பட்டு வாழ்வு செம்மையாகும் என்பது உறுதி. பொற்றொடி செந்தில் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) மும்பை 21-7-2017. கொடை விளக்கு முதற் பதிப்பு 1957 இந்நூல் 1969இல் பாரிநிலையம் வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன பொருளடக்கம் 1. கொடை விளக்கு 5 2. மக்கள் புலம்பல் 6 3. அழகப்பர் கொடைச் சிறப்பு 10 4. அழகப்பர் கொடைகள் 13 5. அழகப்பர் வாழ்வியல் 23 6. அழகப்பர் பெருமைகள் 27 7. அழகப்பர் அறிவுரை 34 8. அழகப்பர் கனவுகள் 36 9. அழகப்பர் வாழ்த்து 38 10. உலகக் கடன் 41 பாயிரம் உள்ளம் உவப்ப உடைமை யெல்லாம் பள்ளிகள் நிறுவிப் பண்பியல் வளர்க்க அள்ளி வழங்கிய அழகன் கொடையினை நீடும் புகழென நினைத்தே னாயினும் பாடுங் குறிப்புப் பண்டெனக் கில்லை. ஆவி தனித்த அண்ணல் மேனியைக் கூவிக் கொடுந்தீ குறைக்குங் காலை வண்ணத் தமிழனை வள்ளல் அழகனைத் தண்ணந் தமிழில் தலைவனாய்ப் பாடும் எண்ணம் முகிழ்ப்ப எழுந்ததிப் பாட்டு. பழுதறு நம்பியின் பார்புகழ் வாழ்க்கையை முழுதுற விரிக்கும் முழுப்பெருங் காப்பியம் எழுதும் புலமை என்னள வன்றுகாண்; அன்னைத் தமிழின் அணிவிரல் மோதிரம் என்னப் புனைந்த இளஞ்சிறு காப்பியம் தொடைக்குப் பொருளாய்த் தோன்றிய அழகனைக் கொடைக்கு விளக்கெனக் கூறப் பெறுமால் முன்னை வள்ளியோர் மூவாத் தமிழணிந்து என்றும் வாழ்வர் இவனும் வாழ்வன் அரிய பொருளால் அறிவு பரப்பிய பெரிய கொடையான் பிறப்பினை உரிய நெறியால் உள்ளுவம் நாமே. வ.சுப. மாணிக்கம் அன்புறை அழகப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் திரு. அ. நா. தம்பி அவர்களுக்கு நாடாளுந் தமிழ்ச்சிறப்பு வகுப்புக் கண்டான் நாவளர்க்கும் கலைக்கழகம் நடக்கக் கண்டான் வீடாளும் முத்துசிவன் மலரும் கண்டான் விருந்துதமிழ்க் கலைவிழா விளங்கக் கண்டான் ஏடாளுங் கொடையழகன் இனித்த வள்ளல் எடுத்தமுதற் கல்லூரி முதல்வ னாகி நீடாளும் ஏழாண்டு வளர்ச்சி கண்டான் நிறைகுணத்தன் பெருந்தம்பி நீடு வாழ்க. கொடை விளக்கு தலைவன் பெருமை 1. கம்பனும் இல்லை கபிலனும் இல்லையே தம்பொன் துறந்தான் தகைபாட; - நம்பன் நிலையைப் புகழ நினைத்தேன்மன்; யானை வலையிற் படுத்தும் வகை. முத்துசிவனார் பேறு 2. முன்னைத் தமிழாசான் முத்துசிவன் சொல்லாளன் தன்னைப் புகழ்பாடத் தான்கேட்டான்; - நின்னை இறந்தபின் பாடும் இதனைத் தமிழிற் பிறந்துநீ கேட்பாயோ பேசு. மக்கள் புலம்பல் தலைவன் மறைவு 3. வள்ளல் அழகப்பா வாழ்ந்தார் மறைந்தாரென்று உள்ளம் இனியேனும் ஒப்புமோ? - வெள்ளம் புரண்டனைய மக்கள் புழுதிமே லாடித் திரண்டு வருதல் தெரிந்து கையறு நிலை 4. துக்கத் துணிதாங்கித் தொய்யும் மனந்தாங்கி நெக்கு வடிகின்ற நீர்தாங்கி - எக்கால் இனியோர் அழகப்பா எங்கட்கு எனாஅ நனிசோர்வர் மக்கள் நலிந்து. கடையடைப்பு 5. காரை வணிகர் கடிதிற் கடையடைத்து வேரை யிழந்த விழுத்தளிர்போல் - நீரை முகஞ்சொரிய விம்மி முதிர்ந்தபே ரன்பை அகஞ்சொரிய வந்தார் அதிர்ந்து. கதியின்மை 6. பாரத ரத்தினங்கள் பாராட்டுஞ் செந்தமிழா! தேரதிர வந்தாய்நீ செத்தாயோ? - காரதிர விண்ணே விழினும் வினையே கருதுகின்ற கண்ணே இனியார் கதி? காரைக்குடி வளம் 7. காரைக் குடியெல்லாம் கல்விப் பயிர்வளரக் கூரைக் குடியெல்லாம் கூனிமிர - நீரைப் புழங்கினால் என்னப் பொருட்செல்வம் எல்லாம் வழங்கினான் வாழ்க வழி. கடைப்பெருக்கம் 8. உடையில் உணவில் உறுப்புத் தொழிலில் கடைகள் பலபெருகக் கண்டோம்; - தடையென்ன கல்லூரி தோன்றாதேல் காரைக் குடியென்றோ புல்லூரும் பாம்பூரும் புற்று. தொழுகை 9. விட்ட களரெல்லாம் வேண்டும் விலைசொரிந்து கட்டும் மனைகளாய்க் காண்கின்றோம்; - தொட்ட அழகன்கை வண்மையே வண்மை; அவனைத் தொழுதகை மாறார் துடித்து. அழுகை 10. நிறையப் படித்தவன் : நெஞ்சத்தின் மாசு குறையப் படித்தவன் : கொள்கை - உறையப் படித்தவன் ஒன்றோ; படியாத நோயால் துடித்தவன் என்பர் துளித்து. திருவழகன் 11. கல்வி யழகன் கலங்கா மனவழகன் : செல்வி விழையும் திருவழகன் : - நல்ல கொடையழகன்: ஆங்கிலச் சொல்மாரி பெய்யும் தொடையழகன் என்பர் தொடுத்து. அறிவழகன் 12. பல்லார் புகழும் பணவழகன்; ஈயாத செல்லார் அழுங்கும் சிறப்பழகன் :- கல்லார் மடங்கொல் அறிவழகன் வாழ்ந்து துயிலும் இடங்கொல்லோ என்பார் இது. இனி யார் 13. கொடுக்க நினைத்தான் கொடுத்தான் எனும்பேர் எடுக்க உரியான் இவனே:- விடுத்தப் படுக்க நினைத்தான் பகுக்க நினைத்தான்; கொடுக்க இனியாரே கூறு. அழுகையும் தொழுகையும் 14. நேரு வருகையினும் நீண்ட பெருங்கூட்டம் தேரு வருகைக்குத் தேம்பிற்று:- பாரும் அழாஅமை யாரே அறிந்தார்காண்; வானும் தொழாஅமை கண்டாரைச் சொல். பொது இழப்பு 15. எதுவுடைமை எண்ணாது இறுகப் பிடிப்பின் பொதுவுடைமை தோன்றாதுபோமோ?- புதுவுடைய பன்னிலைக் கட்சியும் பற்றோ டழுதனவே இன்னிலை கண்டான் இழப்பு. அருட்பா ஓதல் 16. வாரங்கள் பாடவும் வாசகம் ஓதவும் ஆரங்கள் தாங்கவும் ஆயினான்;- தீரங்கள் எந்நாளும் வல்ல இயற்றினாள்; யாரறிவார் இந்நாளும் செய்வான் எழுந்து. ஊரதிர்ச்சி 17. ஆக்கும் வழியே அறியும் உலகத்துப் போக்கும் வழியும் புரிந்தபெரு - நோக்கனெனப் பாரத ரத்தினம் பண்பிசைக்க வாழ்ந்தவன் ஊரதிர வீழ்ந்தான் உழைத்து. மக்கள் வேட்கை 18. இன்னும் சிலவாண்டு இரானோ? இருந்தானேல் என்ன குறைகள் எமக்கிருக்கும்?-அன்னோ அழிநேய் அணுகா அணிபிறவி தாங்கி எழுவானோ எங்கள் இடத்து. தமிழ் வேட்கை 19. மீண்டும் பிறப்புண்டேல் மேனி நலஞ்சிறந்து ஈண்டே பிறக்க இவனென்று - வேண்டுவாள் அன்புத் தமிழன்னை; ஆராத் தமிழிசையால் என்பு குளிர்ப்பாள் இனிது. பேரிழவு 20. பெரிய குடும்பத்தைப் பேணுமோர் தந்தை பிரியக் கலங்குறூஉம் பெண்போல் - உரிய அழகன் இழந்த அணிநகரம் உற்ற இழவுக்கு மீள்வே இலை. அழகப்பர் கொடைச் சிறப்பு கரிகாலன் 21 காடு கெடுத்துக் கரிகால் வளவனார் நாடு படைத்தமை நாமறிவோம்; - கூடும் வரிப்பொருளைக் கொண்டு வரிமிகுக்கக் செய்தான்; உரிப்பொருளnh ஈந்தான் உழைத்து? பாரி 22 ஊர்கொடுத்தான் கற்றார்க்கு; உரையாதமுல்லைக்குத் தேர்கொடுத்தான் என்று திறம்பாடப் - பேர்கொடுத்த பாரியும் வாழ்ந்த பறம்பு கொடுத்தானோ? ஆரிலும் தந்தான் அழகு. மாரி 23 நீர்பெய்யும் மாரிக்கு நீரை வழிப்படுத்தி ஏர்செய்யும் ஆற்றல் இயல்பில்லை;--சீர்செய்யும் செல்வநீர் பெய்து சிறுமக்கள் நெஞ்சத்துக் கல்வியேர் பூட்டினார் கற்று. முவ்வென்றி 24. பாரியை வென்றான் மனைக்கொடையால்; பாரிநகர் மாரியை வென்றான் மதிக்கொடையால்;-நீரியைந்த ஏரியை வென்றான் இடக்கொடையால்; காலவாட் கூரினை வெல்லான் கொடுத்து. சுந்தரன் பாட்டு 25 பாரியை விஞ்சிய பல்கொடையால்வ சுந்தரன் பேரியல் பாட்டிற் பெயர்மாற்றம்:-நீரியல் செல்வ அழகப்பச் சீரோன்நீ என்றிசைத்தும் ஒல்வ கொடானென் றுரை. பேகன் 26 பேகன் கொடையைப் பெருமடம் என்றுமுன் வேகம் படமொழிந்தார் மேலோரார்;-பேகன் மடம்பட் டெறிந்தான் மயிற்போர்வை; கல்லார் மடம்பட ஈந்தான் மதி. குமணன் 27 காட்டுக் குமணன் கருந்தலை கொள்ளெனப் பாட்டுப் பெருந்தலையைப் பார்த்துரைத்தான்:-நாட்டு வளர்ச்சி கருதியோ வாளீந்தான்? வந்தான். தளர்ச்சி கருதியோ தான்? கல்வி வள்ளல் 28 பாடும் புலவோர்க்குப் பண்டெழு வள்ளியோர் நாடும் பிறவும் நயந்தளித்தார்;-ஒடுகின்ற கல்லா இளைஞர்க்குக் கல்விப் புலமளித்தான்; எல்லாரும் வாழ இனிது. சான்று வள்ளல் 29 தான்பிறந்து செய்த தனிக்கொடையால் நம்முன்னோர் தான்துறந்த வண்மைக்குச் சான்றானான்;-வான்கறந்த மாரியோ ஒப்பான்? மழைப்பின் அடிவருடும் ஏரியோ ஒப்பான் இவன்? வள்ளல் புகழ்ந்த வள்ளல் 30 அள்ளும் புகழாளன் அண்ணா மலையரசன் வள்ளல் எனச்சொல்ல வந்தமகன்;-பள்ளும் பறையும் முதலாப் பழந்தமிழ் மக்கள் அறையும் புகழான் அழகு. தமிழ்த் தவம் 31. வள்ளற் றமிழ்ச்சொல் வணங்கித் தவஞ்செய்து கொள்ளப் பிறந்த கொடையழகன்- உள்ள உடைமை அனைத்தும் ஒழித்தான்; ஒழியார் மடமை தொலைக்கும் மகன். தமிழன் கொடை 32 தமிழன் கொடையே தனிக்கொடை என்ன இமிழ்கடல் ஞாலத்தார் ஏத்த - உமிழ்கின்ற எச்சிலைப் போலவ உடைமை எதனையும் துச்சமா விட்டான் தொகுத்து. அழகப்பர் கொடைகள் கல்லூரிப் பிறப்பு 33 அன்னை பெசண்டினார் ஆண்டு நிறைவிழவில் சென்னைத் துணைவேந்தர் செல்சொல்லால்- இன்னேயோர் கல்லூரி காண்பனெனக் கையொலிக்கக் கூறினான்; நல்லூறும் வாயான் நமக்கு. இடப்பரப்பு 34. விரிந்த மனத்தன்: விரைந்த செயலன்: தெரிந்த பொருளியல் தேர்ந்தோன்:-கரிந்த நிலமென்று தள்ளாதே ஆயிரநீள் ஏக்கர் வலமென்று சேர்த்தான் வளைத்து. இடக்காவல் 35 நிலமகள் கைவிட்ட நீள்சுரத்தை வீட்டுக் குலமகள் போலக் குறித்தான்;- வலமகள் தன்னையே காமுறக் தானோ கொடுத்தற்குப் பொன்னையே காமுற்றான் போந்து. ஆடுகளம் 36 நரியிசைத்த காடு நகராய்ச் சிலம்பின் வரியிசைக்கப் பள்ளி வகுத்தான்;-உரியசைத்துப் பாம்பா டிடமெல்லாம் பந்தா டிடமாகும்; தாம்பாடு கன்னியர்க்குத் தாம். மாணில் 37 கள்ளரும் புக்கஞ்சும் காட்டழுவம் கல்விக்குத் தள்ளரும் மாணவர் தங்கில்லம்:-முள்ளுறும் இட்டிடை யெல்லாம் இளங்காலார் துள்ளிவரும் கட்டிடம் ஆயிற்றே காண். கல்வித் திருவிளக்கு 38 ஒருவிளக்கு இல்லா உதிகாட்டில் கல்வித் திருவிளக்கு ஏற்றிய செய்யன்;- பெருவிளக்கு மின்னொளி ஆயிரம் வீதிக்கு நாட்டினான்; தன்னொளி கண்ட தகை. விருந்து விழா 39 பருந்தும் பறவாப் படுசுரத்து நாளும் விருந்து தலைவர்க்கு வேட்டான்;-மருந்தினை ஊணாக வாங்கி உடலைக் கெடுத்தொழிந்தான்; பூணாகக் கொண்டான் புகழ். கல்லூரிக் கோயில்கள் 40 புகையூர்தி ஏறிவழிப் போவார்க்குத் தோன்றும் பகையாரும் எண்ணான் படைத்த-தொகையான குன்றன்ன கல்லூரிக் கோயில்கள்; நாமகள் நின்றன்ன காட்டு நிலத்து. கல்விப்பேறு 41 பள்ளி நுழைபையன் பட்டமும் பெற்றுவந்து வெள்ளி பெறூஉம் வினைபெறுவான்-உள்ளி ஏனைவகைக் கல்லூரி ஈண்டே அமைத்தான்; புனைவகை யன்று; புகழ். இளம்பள்ளிகள் 42 ஆயத்தப் பள்ளியோடு ஆதாரப் பள்ளிகள்: மேய தொடக்கத்து மேம்பள்ளி:- தூய இசைப்பள்ளி கண்டான் இளஞ்சிறார் கற்க; வசைப்புள்ளி இல்லா மகன். மாண்டிசோரிப் பள்ளி 43 மறந்தபாற் பிள்ளையரை மாணாக்கும் தாயர் கறந்தபால் உண்பித்துக் காக்கும் - சிறந்தபால் மாண்டிசோர் பள்ளி வகுத்தான்; மதிநெஞ்சே காண்டிசோர் வில்லான் கதை. தாயழகன் 44 எங்குப் பறந்தாலும் இம்மக்கள் ஆடவென அங்குச் சிறந்த அரும்பொருளைத் - தங்கு தடையின்றி வாங்கிவரு தாயழகன் வாழ்வில் எடையின்றிக் கொண்டான் இசை. பகலுணவுக்கொடை 45 படிக்கும் குழந்தை பகலுணவு கொள்ள அடுக்கும் இலக்கம் அளித்தான்; - நடுக்கும் கொடையாளி: நாளிழக்கும் கோடியர்க்கு நல்ல விடையாளி காட்டும் விளக்கு. கலைக்குழந்தை 46 நாட்டின் உயிர்ச்செல்வம் நல்ல அறிவுபெறும் வீட்டின் கலைக்குழந்தை மெய்யேகாண்; - பாட்டின் இனிய இசையன் : இள மக்கள் கற்க எனைய நலஞ்செய்தான் ஈந்து. கல்விக்குழுத் தலைமை 47 சென்னை அரசு சிறுகல்வித் திட்டத்தை நன்னர் அழகன்பால் நாடிற்றால்;-என்னை? பலவகையாற் பள்ளிகள் பாலார்க்குக் கண்ட நலவகையான் என்று நயந்து. கோட்டையூர்க் குழந்தை 48. கோட்டையூர் பெற்ற குறும்பிள்ளை இந்திய நாட்டையே ஊராக நாடிற்றால்; - வீட்டேயும் கல்லூரி கண்டான் கனிமொழியார் கல்விக்கு நல்லாரும் கற்பதுவே நாடு. உடற்கல்விக் கல்லூரி 49 வல்ல உடம்பின்றேல் வாழ்வு நலிவறிந்தான் நல்லவுடற் கல்லூரி நாட்டினான்; - சொல்லும் அகத்தும் புறத்தும் அணிநலஞ் செய்ய மிகத்தான் உழைத்தான் மெலிந்து. பல்வகைக் கல்லூரிகள் 50 சுட்டிச் சிறுவர் தொடைமுடியாக் கூந்தலர் கட்டுக் கடங்கிவரு காளையர் - பட்டம் அடுத்த முதியர் அனைவரும் கற்க எடுத்தான் பலபள்ளி ஈங்கு. ஆண்டோ? கல்லூரியோ? 51 ஆண்டு தவறாது அடுத்தடுத்துக் கல்லூரி யாண்டும் நிறுவ அயர்ந்திலனால்; - வேண்டும் இறையுணர்ச்சி மிக்கான்: இயலும் வினையிற் குறையுணர்ச்சி கொள்ளான் குறி. தொழிற் கல்வி 52 தொழிலோடு கல்வி தொடர்புற்றால் அன்றோ எழிலாடு நாடாகும் என்பான்;- பொழிலாடு காரைக் குடியாக் காடு திருத்தினான்; நீரைக் கொணர்ந்தான் நிலத்து. மின்சார வேதியல் ஆராய்ச்சிக் கழகம் 53 நீரார் இடஞ்சுட்டி நின்ற தடைவிலக்கி ஆராயும் மின்சார ஆய்வுக்குச் - சீராய மூவைந் திலக்கமும் முந்நூறாம் ஏக்கரும் நாமுந்தி ஈந்தான் நயந்து. யாமக்கொடை 54 பாரும் உறங்கும் படுயாமம் தில்லியில் நேருவைக் கண்டு நிதியளித்தான்;- யாரும் மடித்துத் தொகுக்கின்ற மண்ணுலகில் ஏனோ துடித்துக் கொடுத்தான் தொகை. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 55 எண்ணாத் தமிழிசைக்கு ஏற்ற உயிர்கொடுத்த அண்ணா மலையான் அமைத்தபெருந் - திண்ணார் கலைப்பல் கழகம் கலைப்பொறி காண்பான் நிலைப்பல் நிதியளித்தான் நேர். கொடையழைப்பு 56 அழைத்துக் கொடுத்தானோர் ஐயிலக்கம் என்ப உழைத்துக் கொடுக்கும் ஒருவன்; - தழைத்துப் பொறிவளங்கள் நாடு பொலிய அமைத்தான்; அறிவினங்கள் கற்ற அவன். சென்னைப் பல்கலைக்கழகம் 57 அன்னைக் கழகமென் ஆன்றோர் புகழ்பாடும் சென்னைக் கழக்ச் செயல்பெருகப் - பின்னரும் ஐயிலக்கம் ஈந்த அழகன் கொடைதனக்கே கையிலக்கம் ஆனான் கனிந்து. திருவிதாங்கூர்ப் பல்கலைக் கழகம் 58 சிலம்பு பிறந்த திருநாடென் றெண்ணிக் கலங்கு தமிழியலைக் காண - இலங்கும் இலக்கதொன் றீந்தான்; இடும்பை தனக்கும் கலக்கமொன் றீந்தான் களித்து. மதுரை டோக் கல்லூரி 59 தாயாம் மகளிர்க்குத் தானுமோர் கல்லூரி வாயாகத் தோற்றி வளர்ப்பவன் - சேயான பெண்பாலார் பள்ளிக்குப் பேரா நிதியளித்தான் மண்பாலோர் காணா மகன். பேறு மருத்துவசாலை 60 உள்ளாடு பிள்ளை உருவ நலங்கண்டு தள்ளாடு தாயர் தனியுவப்பக் - கள்ளாடு கூற்றைத் தடுக்கக் குறித்தான்; மருத்துவ ஏற்ற நிலையம் இவர்க்கு. சேவாசதனம் 61 சேவா சதனமெனும் சேயிழையார் இல்லிற்கத் தாவா இலக்கம் தகவளித்தான்; - ஆ ஆ எனைவகை பெண்ணின் இயல்வளர்ச்சி யுண்டோ அனைவகை செய்தான் அழகு. தக்கர் பாபா கல்விச்சாலை 63 அன்றாடு கூலி அரிசனத்தார் வாழ்வுயர ஒன்றோடு காலிலக்கம் ஒப்பித்தான்;- நன்றோடும் நெஞ்சழகன் காந்தி நிலையத்துக் கல்நாட்டக் கொஞ்சமோ பெற்றான் குளிர்ப்பு. இராமானுசம் கணக்கு நிலையம் 63 பிணக்கில் அனுசன் பெயராற் சிறந்த கணக்கு நிலையத்தைக் கண்டான்:- மணக்கும் இசையாளன்; தக்காரை என்றும் மதிக்கும் நசையாளன் காட்டும் நடப்பு. சண்முக நூல் நிலையம் 64 பண்முக நல்லிசைக்குப் பண்டைப் புகழ்காத்த சண்டுக நூல்நிலையம் சாற்றினார்; - உண்முகம் ஈந்து மகிழ்ந்தான்; எனைய துயர்வரினும் சோர்ந்து கிடவான் துணிவு. வீரப்ப அம்மான் விடுதி 65 ஒன்று குணத்துள் உயர்ந்த குணமென்னும் நன்றி யுணர்வில் நனிபெரியன்:- நின்றுயரும் வீரப்ப அம்மான் விடுதியெனக் கட்டினான்; தீரப்பன் ஈகைத் திறத்து. தென்னிய கல்விக் கழகம் 66. தில்லைத் தலைநகரில் தென்னாடு கண்டவொரு கல்விக் கழகக் கல்நீங்க - நல்ல இருபத்தை யாயிரம் ஈந்தான்; தனக்கென்று ஒருபத்தும் கொள்ளான் உயர்வு. இந்தியக் கொடை 67 தில்லி முதலாத் திருவனந்தை ஈறான கல்விக் கழகங்கள் கைகொடுத்தான்;- நெல்லி குடிக்க இனிக்கும்; கொடையழகன் வாழ்வு படிக்க இனிக்கும் பகுத்து கொச்சி 68 கொச்சித் திருநாடு கோடா வளம்பெருக மெச்சும் நிலையங்கள் மேவினான்; - நச்சித் தொழில்செய் யிடத்தினும் தொண்டுகள் ஆற்றும் எழில்செய் வணிகன் இவன். மலேயா 69 மாணப் பொருள்சேர் மலேயா வளநாட்டும் காணவோர் கல்லூரி கட்டுரைத்தான்;- சேணும் அழகப்பா பேர்விளங்க அன்புருவாம் அய்யா கழகத்தைக் காண்பார் கடிது. சென்னை வணிக்க் கழகம் 70 சென்னை வணிகத் திருநிலையக் கட்டிடம் என்னை இடமளிக்க ஏறிற்று;- நன்னர்த் தொழிலைப் படிப்பைத் துணியைத் தமிழை எழிலைப் பெருக்கினான் ஈந்து. பலகொடை 71 புயலுக்குத் தந்தான்; புதைபொருளைக் காணும் வயலுக்குத் தந்தான்; வழக்கில் - செயலுக்கு நல்ல தெனக்கொண்ட நாட்டு மருத்துவக் கல்விக்குத் தந்தான் கதி. கணக்கில் கொடை 72 பத்தாக நூறாகப் பத்துநூ றாயிரமாய் எத்தனையோ ஈகை இவனளித்தான்; - அத்தனையும் சொல்லக்கணக்கறியேன்;சொல்லுமோர் சொல்லறிவன் எல்லாங் கொடுத்தவன் என்று. பிறவிக்குணம் 73 இலக்கியம் கற்றான்; இயல்சட்டம் கற்றான்; கலக்கியல் வாணிகமும் கற்றான்; - இலக்கம் அடுக்கப் பயின்ற அழகப்பன் எங்கோ கொடுக்கப் பயின்றான் கொடை. மாணவக்கொடை 74 உடன்கற்கும் மாணோர் உறுதுயர் கண்டு கடன்கொடான் கைமாற்றும் தாரான்;- மடம்படச் சென்று கொடுப்பான் திரும்ப ஒருசிறிதும் என்றும் தரவேண்டாம் என்று. கொடை ஞானி 75 கல்லாக் கொடையான்: கடலகமே பெற்றாலும் நில்லாப் பொருளான்: நிலைப்புகழான்:-எல்லாம் நிலையாமை கண்டுணர்ந்த நெஞ்சழகன் ஞானி அலையாமே ஈந்தான் அனைத்து. புகழுடைமை 76 பிறந்தபின் வந்த பெரும்பொருளை ஈயாது இறந்தபின் வைத்தல் இயல்போ? - அறிந்தபின் ஒன்றுமைமை வையா தொழித்தான்; புகழென்னும் நன்றுடைமை கொண்டான் நயம். கோடிக் கொடைஞன் 77 கோடி கொடுத்த கொடைஞன்; குடியிருந்த வீடுங் கொடுத்த விழுச்செல்வன்:- தேடியும் அள்ளிக் கொடுத்த அழகன்: அறிவூட்டும் வெள்ளி விளக்கே விளக்கு. அழகப்பர் வாழ்வியல் உழைப்பு 78 இன்ன பெருவள்ளல் ஏலாத் துயருறுகை முன்னை விதியென்றால் முற்றுமோ? - என்னையோ ஊணும் உறக்கமும் ஓய்வும் மறந்து நாம் காண உழைத்த கதி. யார் விதி? 79 முன்னை விதியென்பார் முன்னாரோ? பிள்ளைபெறும் அன்னை விதியென்று அவள்சாதல்;- பின்னையென்? வள்ளல் விதியன்று; வாழக் கொடாஅநாம் கொள்ளும் விதியே கொடிது. அன்பில் நோய் 80 கற்றுநோய் தீரவே கல்வி அளித்தானைப் புற்றுநோய் தீண்டல் பொருந்துமோ? - சற்றுநோய் நின்றுபோம் என்று நினைத்தோமன்; சென்னையில் கொன்றுபோம் சூழ்ச்சித்தே கூற்று. அறிவில் நோய் 81 ஆளிலையோ பற்றுதற்கு; அன்னவனைப் பற்றுதற்கும் நாளிலையோ? என்புருக்கும் நன்னோயே! - வாளிலையே? கண்ணுக்குத் தோன்றாக் கடுநோய்க் கொடியாயை மண்ணுக்குள் மாய்க்கும் பொருட்டு. சாபம் 82 இன்று குமரிமுனை நாளை இமயமலை என்று பறந்த இவனுக்கோ - தின்றுபோம் நோய்ப்புற்று வந்ததுகாண்; நோயுட் கொலையாயை வாய்ப்புற்றுக் கொல்லாதோ வந்து. குற்றிளமை 83 நூறாண்டு கொள்ளும் நுவலரிய பல்வினைகள் ஆறாண்டிற் செய்த அழகனோ - கூறாண்டாம் ஐபத்தும் வாழான்: அறமும் தனித்திரங்க மெய்பற்று விட்டான் விரைந்து. கலைநகர் 84 நம்ப முடியவில்லை நாற்பத்தெட் டாண்டிற்குள் கம்பனும் காணாக் கலைநகராய்த் - தம்பொருளால் எல்லாரும் கல்வி யெழிலைப் பெறவைத்தான் பல்லாரும் வாழப் பகுத்து. அருவக்காட்சி 85 பென்னம் பெரியவன் பித்துக் கொடையாளன் சின்னம் சிறுகாலைத் தேரேறி - முன்னம் வருவானைக் கண்டேனும் வாழ்த்தினோம்; இன்றோ அருவானான் எங்கள் அழகு. மெய்யுணர்வு 86 தீராத நோய்களெனத் தேர்ந்தோர் முடித்திட்ட பேராத நோய்க்குப் பிறப்பளித்தான்; - சாராத துன்பத்தான் இன்பத்தான் தொண்டால் துயர்மறக்கும் அன்பத்தான் எங்கள் அழகு. பகை வென்றி 87 அறப்பகை வொன்ற அறிவன் முடிவில் புறப்பகை கொல்லப் பொடிந்தான்; - திறப்பகை உள்ளத்தின் மாசோ? உடலின் நலக்குறைவோ? எள்ளும் பகையோ எது? வானச் செலவு 88 வானூரக் கற்றான் மடிந்தபின் தாழாது தானூர என்றோ தமிழ்வள்ளல்; - மீனூரும் நேருக்கா கண்டான்; நெடுமூச்சு நின்றவரை ஊருக்கா வாழ்ந்தான் உயிர். திருக்குறள் விளக்கம் 89 செயலுக்கு உரிய திருக்குறள் என்று மயலுக்கு இடமின்றி வாழ்ந்தான்; - உயலுக்கு நாடா மருந்தறைந்த நல்ல திருக்குறளைக் கோடாது விட்டான் கொடைக்கு. மருந்தூண் 90 மக்கள் உளதே வரையப் பெருங்கருத்துத் தக்கநற் றாளெனத் தானறிந்தான்; - ஒக்க விருந்துண்ண வைப்பான் விழாக்கள்; உடலை மருந்துண்ண விட்டான் மறந்து. துன்பமாலை 91 தில்லியிற் காலொடிந்தான்; தென்னாலை மாடிமேல் வெல்லும் அயிவயர்ந்து வீழ்வுற்றான்;- கொல்லுகின்ற புற்றுநோய்ப் பட்டான்; பொழுதுபடா ஈகையாற் சற்றுநோய் வென்றான் தணித்து. கொடைத் தொழில் 92 நூலை நெசவாக்கும் நுட்பத் தொழில் புகுந்து ஆலை பலவமைத்தான் ஆயினுந்தன் - வேலை கொடையாகக் கொண்ட குறிக்கோளி வாழ்க்கை தடையாகக் கண்டோம் தவித்து. தற்பேணாமை 93 வேலை புரண்டனைய மேலாம் பணங்கொழிக்கும் ஆலை முதலாளி யானாலும் - மாலை வளிவாங்கச் செல்லான்: வயிறதைக்கச் சாயான்; அளிதாங்கும் கோளான் அழகு. காட்டுப்பள்ளி 94 காட்டினை நாடாகக் கண்டவன் இன்றுதனிக் காட்டினை வேறாகக் கண்டானால்;-வீட்டினைப் பள்ளிக்கு விட்டான்; பலவாண்டு இராஅது கொள்ளிக்கு விட்டான் குடர் வாழ்க்கை ஓட்டங்கள் 95 படித்தான் பறந்தான் படைத்தான் நினைத்தான் கொடுத்தான் சிறந்தான் குறித்தான் - துடித்தான் எடுத்தான் முடித்தான் இனித்தான் அழகன் படுத்தான் விடுத்தோம் பணிந்து. அழகப்பர் பெருமைகள் விரைந்த கொடை 96 பணந்தான் நிலையாமை பார்த்தோ கொடுக்கும் குணந்தான் நிலையாமைகொண்டோ - கணந்தானும் மெய்தான் நிலையாமை மேவியோ வாழ்நாளிற் செய்தான் விரைந்து செயல் விரைந்த செயல் 97 வெள்ளி விடியுமுன் வீறுசால் கட்டிடங்கள் உள்ளும் உயரம் உயர்த்துவான் - நள்ளிரவும் மின் விளக்கம் வைத்து மிகவிரைந்து கட்டினான்; பொன்விளக்கங் கண்ட புதிர். வடிவழகன் 98 நெற்றித் திலகன் நிவந்தசெம் மேனியன் கற்றை முடியன் கவின்வகுப்பன் - முற்றும் அரிய உழைப்பன் அணியில் எளியன் பெரிய கொடையன் பிறப்பு. அறிஞன் 99 கூர்த்த மதியன்: கொடையால் நிலமகளைப் போர்த்த புகழன்: புது நோக்கன்:- தீர்த்த துணிவுடையான்: நட்டோரைத்தோள் தழுவிப்பேசும் பணிவுடையான் வாழ்க்கைப் பதிவு. தமிழ்ப் பொழிவு 100 சேயான ஆங்கிலத்தைத் தேர்ந்த அறிவுடையன் தாயான செம்மொழியைத் தாங்குமவன் - வாயான பேச்சுத் தமிழில் பிறமொழி நுண்மைகளை நீச்சின் உரைப்பான் நிறுத்து. திருக்குறட்கல்வி 101 பன்னூற் கடலனைய பண்டித நன்மணிபால் தொன்னூற் குறளைத் தொடங்கினோன்;- நன்னூற் கலையார் களஞ்சியம் காணத் தமிழில் தலையார் நிதிதொடுத்தான் தந்து. குறள் உவமை 102 திறனாக யாரும் தெளிக்குந் திறத்தைக் குறள் போல என்று குறிப்பான்;- மறனாக யார்க்கும் பொருளால் நலியான்; கனவினும் வேர்க்குங் கொடையான் வெறி. அருள் நூற்கல்வி 103 ஆயசோர் வின்றி அருந்தமிழைக் கற்றுரைக்கும் ராயசொ நண்பன்: நறுந்தமிழன்:- தூயசொல் தேவாரம் அன்ன திருநூல் பலதெளிந்தோன் பூவாரம் பூண்டான் பொலிந்து. அப்பர் கொள்கை 104 ஆர்க்குங் குடியலமென்று அப்பர் துணிபுரைக்கும் சீர்க்குந் தமிழ்ப்பாத் திறனறிந்தான்;- தேர்க்கிடை அன்று தமிழ்க்கல்வி பட்ட அவலத்தை நன்று மொழிவான் நகைத்து. தமிழ்க் குறிக்கோள் 105 முன்னைக் கலைப்பள்ளி மூத்த குறிக்கோளைக் கன்னித் தமிழ்ச்சொலாற் காதலித்தான்;- நன்னீர் அன்பும் பணியும் அறமும் எனமூன்றும் இன்பிற் குறித்தான் எழுத்து. தமிழ்ச் சொல்லாக்கக்குழு 106 ஆக்கக் குழுவொன்று அமைத்தான்; தமிழ்வளர்வில் ஊக்கம் உடையான்: உறுத்துடையான் - நோக்கரிய நோக்கம் உடையான்; நொடியில் அதைமுடிக்கும் ஏக்கம் உடையான் இவன். பெரியாரைத் துணைக்கோடல் 107 நாட்டுப் பெரியோரை நல்லுலக வாழ்க்கைக்குக் காட்டாகக் கொண்டான்; கவிஞர்க்குப்-பாட்டாகத் தானும் விளங்கினான்; தன்னாட்டு மக்கட்கு வானும் கொடுப்பான் வரின். காந்தி பாராட்டு 108 காந்தி முதலாக் கருதரிய பல்புகழ் ஏந்தியர் எல்லாம் இவற்புகழ்ந்தார்;- போந்தபெருஞ் செல்வ வுடைமையைச் சீராய்ப் பொழிகின்ற கல்வி முகிலெனக் கண்டு. கொடைப்பெருமை 109 சாதுவும் நேருவும் தன்னில்லம் வந்தாரேல் யாதுங் கொடுத்த கொடையன்றோ;-ஏதும் தனக்கென்னத் தேடாத் தனியிலி மாய்ந்தால் எனக்கென்ன என்பார் இலர். தாமரையணி 110 வேற்றரசு தந்த விலைமதியாச் சர்ப்பட்டம் மாற்றரசு நீங்க வழக்கொழித்தான்;- போற்றரசு நன்னர் மதித்தளித்த நற்றா மரையணிந்தான்; இன்ன பெரியன் இவன். டாக்டர் 111 பண்ணார் தமிழகத்துப் பண்பார் இரண்டென்னும் கண்ணார் கலைப்பல் கழகங்கள்- எண்ணார் பெரும்பட்டம் தந்து பிறசிறப்புச் செய்த அருந்திட்டம் இட்ட அவற்கு. மக்கட்பேறு 112 ஒருமகள் செல்வ உமையாள் மணத்தைத் திருமகள் கண்களிப்பச் செய்தான்;- வருமகன் இல்லை தனக்கென் றினையாள்; எவர்மகவும் சொல்ல மகிழ்வான் சுவைத்து. மக்கட் செல்வன் 113 சாய்ந்த படுக்கையன் சாரா உணவினன் ஓய்ந்த உடலன் உளம்வலியன்;- வாய்ந்தவோர் ஆயிர மாணவரை அங்கழைத்துப் பேசினான்; சேயர் பலருடையான் சீர். அணைப்பியல் 114 உருத்துச் சினந்தாலும் ஊழியர்கள் தம்மைப் பிரித்து விடாத பெரியன்;-திருத்தும் நெறியாளன்: வாழி: நிரம்பக் கொடுக்கும் குறியாளன் கொண்ட குறிப்பு. நட்பியல் 115 அல்லற் பொழுதில் அணைத்துக் கிடந்தாரைச் செல்வப் பொழுதிற் சிறப்பித்தோன்;-ஒல்வ உடம்பால் அறிவால் உயிராற் பொருளால் திடம்படச் செய்தான் திறம். கல்விப்பயன் 116 அரிய கருத்தினைக் கற்றால் அதனைத் தெரியப் பிறர்க்குத் தெரிப்பான்;- பெரிய தனக்கொரு நூல்நிலையம் கண்டான்; தமிழ்பாடு எனக்கொரு நூலானான் இன்று. அறிவுபரப்பல் 117 பல்பொருட் காட்சி பரப்பி அறிவென்னும் கல்பொருள் மக்கட்குக் கற்பித்தான்;- நில்பொருள் ஈகையான் வந்த இசையென எண்ணினான்; வாகையான் வாழ்ந்த வழி. அன்பியல் 118 வேட்ட பரிசெல்லாம் வேண்டியார்க்கு ஈந்தவன் தோட்டப் பரிசுத் தொகைபெற்றான்;- வீட்டுப் பயிர்புரக்கும் பண்பன்: படியாத மக்கள் உயிர்புரக்கும் அன்பன் உயர்வு. துணிபு 119 தொலைபேசி கொண்டு துளைக்கும் அறிவு வலைவீசிக் கல்வி வளர்த்தான்;- விலைபேசிப் பம்பை விடுதியைப் பள்ளிக்கு வாங்கினான் தும்மை யுடையான் துணிவு. மனத்திட்பம் 120 பட்டப் படிப்பினன்; பார்கடந்து பெற்றபெருஞ் சட்டப் படிப்பினன்; சால்வணிகன்; - நட்டம் மலைபோல் அழுத்தினும் மாமல் புரத்துச் சிலைபோல் இருப்பன் சிரித்து. 121 இடுக்கண் அழியாமை 121 அரித்துக் குடையும் அழிநோய் வருந்தச் சிரித்துக் குலுங்குந் திறத்தன்;- திரித்தும் இறைபழியா அன்பன்; இருந்தும் கொடாஅர்க் குறைபழியாச் சான்றோன் குணம். நடுநிலைமை 122 நக்கீரன் போலும் நடுவுடையான் நஞ்சிவனார்க்கு ஒக்குமோ என்பான் உதைத்தமை; - தக்கவிதிக் காலம் முடிந்தமார்க் கண்டனை ஊரொப்பக் காலன் கவர்ந்தான் கடன். சிவனடியான் 123 நன்றி யுணர்வொடு நாளும் இறைவனை ஒன்றி வணங்கும் ஒருமையன்;- என்றும் நலிவிலும் வாழ்விலும் நாயனார் போல வலிய மனத்தன் வழக்கு. மெய்யறிவு 124 செய்ஞ்ஞானம் பெற்றுச் சிறந்த தொழில்பெருக விஞ்ஞானக் கல்லூரி வித்திட்டான்;- எஞ்ஞான்றும் மெய்ஞ்ஞானம் வேண்டினான் மேலோரை நாடினான் பொய்ஞ்ஞானம் தீர்தற் பொருட்டு. பெருஞானி 125 தன்னைத் துயிற்றுந் தனியிடஞ் சுட்டிய பின்னர்த் துயின்ற பெருஞானி; - கொன்னே இறப்பினுக்கு அஞ்சான் எடுப்பின் கொடாஅப் பிறப்பினுக்கு அஞ்சும் பெரிது. அழகப்பர் அறிவுரை இருபெருஞ் சொற்பொழிவுகள் 126 பட்டப் பொழிவும் பலர்புகழ் நேருமுன் திட்டப் பொழிவும் திறக்குமே:- சட்டச் செறிவும் துணிபும் செயலும் தெளிவும் அறிவும் உடையான் அகம். பட்டம் அளிப்புவிழா 127 ஆண்டில் இளைஞன் அறிவில் முதியனாய் நீண்ட அவைமுன் நிகழ்த்தினான்;- வேண்டும் கலைமைசால் சென்னைக் கழகத்துக் கல்விப் புலமைசால் பட்டப் பொழிவு. மாணவர்க்கு 128 கற்ற பெரும்பட்டம் காதலிக்கும் மாணவர்காள்! வெற்றி பெறுவீர்; வினை செய்வீர்; - உற்ற பெரியோர் உரைமறவீர்; பெற்றநன் னாட்டுக்கு உரியோராய் வாழ்வீர் உயர்ந்து. உரிமை வளம் 129 உரிமைக்கு முன்னர் ஒருவளமும் ஒவ்வா அரிய முடிபை அறைந்தான்; - தெரியப் பலநாடு சுற்றிப் பகுத்துணர்ந்தான்; செல்வக் கலைநாடி வாழ்ந்தான் கலித்து. இந்தீயம் 130 எண்ண விடுதலையே இந்தீயம் ஆமென்று திண்ணம் அறியத் தெளித்தானால்; - உண்ணும் உணவும் உரிமையும் ஒன்றாகா என்று குணமாகச் சொன்னான் குறிப்பு. தனிப்பண்பு 131 கல்வி வழியால் கருத்துக் கருவியைக் கொல்ல நினைத்தல் கொடிதென்றான்; - வல்ல இறைவன் படைப்பில் எவர்க்கும் தனிப்பண்பு உறையக் கிடத்தலை ஓர்ந்து. வேற்றுமை வளர்ச்சி 132 ஒன்றுபோல் எண்ணும் ஒருகல்வி நல்கினால் நன்றுபோம் என்று நலிவுரைத்தான்; - சென்ற இடைக்காலப் பேதைமை இன்றொழிக என்றான் கொடைக்காலங் கண்டான் கொதித்து. ஆராய்ச்சி 133 எல்லையே ஆய்வுக்கு இலையென்றான்; இவ்வுலகத் தொல்லையே வாழ்வுக்குத் தூணென்றான்;- கல்லையும் பொன்னுக்கு வாங்கிப் பொறிக்கோயில் கட்டினான்; என்னுக்கு மாய்ந்தான் இவன். அழகப்பர் கனவுகள் நனவுக் கனவு 134 நனவில் ஒருநாள் நடக்கும் பெரிய கனவினைச் சோராது காண்பான்;- நினைவில் உருக்கொண்ட வெல்லாம் உரைப்பான்; கொடையில் மருக்கொண்டான் போலும் மகன். மருத்துவக் கல்லூரி 135 மருத்துவக் கல்லூரி வைக்க நினைந்தான் கருத்து நிறைவேறக் காண்மின்;- திருத்தினும் முள்வளருங் காட்டில் முதிர்ந்த மடமைபோய் உள்வளர வைத்தான் ஒளிர்ந்து தமிழ்விழா 136 பண்ணார் தமிழ்விழாப் பார்க்க நினைத்தான்தன் எண்ணணம் செயலாக எண்ணுமினோ; - திண்ணம் வழிதெரியாக் காட்டில் வருகின்ற பெண்ணின் விழிதெரிய வைத்தான் விருந்து. தமிழ் ஆராய்ச்சிக்கழகம் 137 ஆயுந் தமிழ்க்கழகம் ஆக்க நினைத்தான்தன் தூய பணியைத் தொடங்குமினோ; - காயும் வெயிலாடு காட்டில் விளங்கிழை நல்லார் மயிலாட வைத்தான் மகிழ்ந்து. அழகப்பா பல்கலைக்கழகம் 138 பல்கலை தேர்கழகம் பற்றாய் நினைத்தான்தன் நல்ல குறிக்கோளை நாட்டுமினோ;- தொல்லைச் செடிநின்ற காட்டகத்துச் சில்லென்று பூக்கும் கொடிநிற்க வைத்தான் குறித்து. அழகப்பர் வாழ்த்து மொழிவழி வாழ்வு 139 குணமாய்ப் பிறந்தானோர் கோடி கொடுத்தான் பிணமாய் எனயாரும் பேசேல்;- மணமாய் வருதமிழ்ப் பாட்டிலும் வாழ்வான்; உமையாள் தருவழியும் வாழ்வான் தழைத்து. நிலைவாழ்வு 140 பத்தடுத்த கல்லூரி பாங்காய் நிறுவியவன் செத்தடுத்தான் என்றல் சிறக்குமோ;- முத்தெடுக்கும் தாய்நாடு வாழ்நாளும் தக்கோன் பெயர்சொல்ல வாய்நாடும் அன்றோ வழி. நல்லிளமை 141 எல்லாங் கொடுத்தான் இளமையில் ஏகினான் பொல்லா வினையென்று போற்றற்க; - கல்லாத பேயாரும் ஈயாரும் பேராண் டிருந்தென்ன நாயாரச் சாவார் நசித்து. வாழ்வுநயம் 142 தாயாங் கொடையாளி சான்ற படிப்பாளி நோயாய் இறந்தான் எனநொடியேல்; - காயாத மெய்யாற் பயனென்? விறகுக்கும் ஆகாது பொய்யாய்க் கழிவார் புகைந்து. உயிர்மணம் 143 சாந்த விறகடுக்கித் தக்க மணம்பூசிப் போந்த உடலைப் புதைத்தாலென்? - வாழ்ந்த உயிர்மணக்கச் செய்தான்; உறுகொடையால் மக்கட் பயிர்மணக்கச் செய்தான் படித்து எதிரிலி 144 மாந்தரை யெல்லாம் மதிபெற வைத்தானைச் சாந்தரை பூசித் தகித்தாலென்? - வேந்தரை ஈகையான் வென்ற எதிரிலி; இவ்வெல்லாம் நாகைப்பின் வந்த நடப்பு. இறவாப் பிறவி 145 இறந்தான் எனச்சொல்ல ஏதில்லை; என்றோ மறந்தான் உடலை மதியான்; - சிறந்தான் பிறந்தான் எனநான் அறிவன்; பிறிதொன்று அறந்தான் அறியும்; அறி. மறுபிறப்பு 146 மறப்பின்றிக் கல்வி வளர்த்தாளை ஈண்டுப் பிறப்பில்லை என்றமதம் பேசேல்; - சிறப்பின்றி நாம்பிறத்தல் காறும் நலஞ்செய் அழகனைத் தாம்பிறக்க வேணடல் தகும். வேண்டல் 147 மீண்டும் பிறப்பாய்: மிகப்பலவாய் நீபடைத்த ஈண்டு படிப்பாய்; இசைபெறுவாய்;- வேண்டும் நிதியை அளிப்பாய்: நினைமறந்த எங்கள் விதியை நகுவாய் வியந்து. காந்தி வாழ்த்தல் 148 அண்ணலார் காந்தி அழகனார் வாழ்கவென எண்ணினார் மாலை இறைதொழுதார்; - திண்ணம் அழகப்பா மாட்சி அரியவை யேனும் பழகப்பார் நெஞ்சே பகுத்து. உலகக் கடன் மாணவர் நன்றி 149 வள்ளலின் மெய்த்தேரை வாழ்த்திப் பிடித்துவந்த எள்ளலில் நன்றி இளைஞர்காள்! - உள்ளுதிர் ஞாலத்தை வாழ்வித்தான் நல்ல குறிக்கோளான் காலத்தை வென்றான் கதை. மாணவர் ஒழுக்கம் 150 பொற்குன்றம் அன்ன பொருளை அறிவூறும் கற்குன்றம் ஆக்கினான் காண்மினோ; - சொற்குன்ற என்றும் ஒழுகாரே ஈண்டுப் படிக்கவரும் நன்றுசால் மாணோர் நயந்து. மாணவர் குறிக்கோள் 151 தந்தை மறுக்கவும் தானே படித்தானை வந்தனை செய்ம்மினோ மாணவரீர்;- சிந்தை அழிநூல் தொடாஅது அரியகுறள் போலும் மொழிநூல் படிக்க முனைந்து. ஆசான்கள் 152 புத்தம் புது நூல்கள் புகுந்து படிப்பானை மெத்தநல் லாசான்கள் வேண்டுமினோ; - நித்தமும் ஊதியம் எண்ணாது உயரவரும் மாணவர் பேதைமை நீக்கப் பெரிது. செல்வர்கள் 153 நன்று கொடுத்தானை நாடிக் கொடுத்தானைச் சென்று தொழுமினோ செல்வரீர்; - இன்றுவரை இம்மி கொடாரும் இவனைத் தொழுதபின் வம்மென ஈவர் வலிந்து. வணிகர் 154 பாழ்த்த நிலையிலும் பண்பிற் றிரியானை வாழ்த்துமினோ நல்ல வணிகரீர்; - ஊழ்த்த பொருளைக் குவிக்குங்கால் போயொழியும் என்ற தெருளை நினைக்கத் தெளிந்து துன்பர் 155 வந்த இடும்பையெலாம் வாழப் பிறந்தானை நொந்த மனத்தீர் நுவலுமினோ;- கந்தை உடுத்து நிலையிலும் உள்ளச் சிறப்பை அடுத்து நிலைத்தல் அணி. இளம்பெண்கள் 156 ஊரார் குழந்தையை ஊட்டி வளர்த்தானைக் கூரார் குவிமுலையீர் கூப்புமினோ; - சீரார் அழகனைப் போலொருநாள் அள்ளிக் கொடுக்கும் குழகனைப் பெற்றுக் கொள. தமிழ் மக்கள் 157 சங்கப் பெருங்கொடைக்குச் சான்றாகி நின்றானைப் பொங்கற் றமிழகத்தீர் போற்றுமினோ; - எங்கும் வறனிலைத்த காட்டில் வழிகாட்டுங் கல்வி அறநிலையம் கண்டான் அழகு. இந்திய மக்கள் 158 பூத்திரை கொண்டான் புதிய தலம்நாடி யாத்திரை செய்ம்மினோ நாட்டவரீர்;- தீத்திரை கொள்ள இறவான்; கொடுத்த பசும்பொன் போல் உள்ளம் ஒளிர்வான் உயர்ந்து. உலக மக்கள் 159 கல்லாரும் கற்றாரும் காளையரும் கன்னியரும் எல்லாரும் இன்றுமுதல் ஏத்துமினோ;- வல்லவரை ஆக்குவோம் காப்போம் அழகப்பன் போலொருநாள் போக்குவோம் கல்விப் பொருட்டு. வழுத்து முறை 160 பழுத்த கொடையாற் பரந்தானை மக்காள் வழுத்து முறையால் வழுத்தீர்;- உழுத்தும் கொடுக்க நினையார் கொடுப்பவர் கையைத் தடுக்கப் புகாமை தலை. கல்விப் பூசனை 161 காசினை விட்டானைக் கல்லூரிக் காதலனைப் பூசனை தொண்டாற் புரிமினோ;- பேசிலென்? பிள்ளைகள் கற்கப் பிறந்தநும் ஊர்தொறும் பள்ளிகள் வைத்தல் பயன். பூக்கள் 162 தொண்டாடும் நெஞ்சால் துயரம் மறந்தான்பால் வண்டாடும் பூக்காள் மணம்பெறுவீர்;- திண்டாடும் மக்கட் பசிக்கு மருந்தளித்தான்; வாயூறும் மிக்க புகழ்மணத்தான் மீது. புள்ளினங்கள் 163 ஊனோடு நாளும் உறுகொடை செய்தானை வானோடு புள்ளினங்காள் வாழ்த்துமினோ;- தேனொடு சோலை அமைத்தான்; தொழில்வழங்கித் தீயார்தம் கோலைப் பறித்தான் குணம். குருவிகள் 164 பொட்டுத் திகழும் புகழ்சான்ற நெற்றியனைச் சிட்டு குருவிகாள் சேர்மினோ;- வட்டினால் நொந்தாடி நும்மை நொடிப்படுத்தும் பிள்ளையாரைப் பந்தாடச் செய்தான் படித்து. கிளிகள் 165 ஆண்டுக் கணக்காக ஆயுள் முடித்தான்பால் ஈண்டுங் கிளிகாள் இரமினோ;- மீண்டிவண் கற்கும் மகளிர்க்குக் காதலந் தோழியராய் நிற்கும் மறுபிறவி நேர்ந்து. குயில்கள் 166 பாலுங் கொடுத்துப் பயிற்றும் அழகனை ஏலுங் குயில்காள் எழுப்புமினோ;- சாலுங்காண் இங்ஙன் அமைத்த எழுபள்ளி காணாதே எங்ஙன் உறங்கும் இவன். வண்டு 167 நானோதும் செல்வனை நாடும் உலகோர்க்குத் தேனூது வண்டே தெரிப்பாயால்;- தானூது இயற்கை யிசையோ இனியபிறர் சொல்லும் செயற்கை யிசையோ சிறப்பு. நாட்டுடைமை 168 ஈண்டுநீர் ஞாலத்தார் இக்கோயில் காக்கவெனப் பாண்டியன் சொன்ன பரிசேபோல் - வேண்டுதும் பாட்டுக்கு உரியான் படைத்த நிலையங்கள் நாட்டுக்கு உடைமை நனி. பெரியபடைப்பு 169 உடைப்பிற் புனல்போல் ஒருங்கு துறந்தான் நடைப்பின் சிறிதும் நடப்போம்;- தடைப்பென்? படைப்பிற் பெரியானைப் பாடினேம் பண்பை நடப்பிற் பழக நயந்து. கொடைநன்றி 170 காதற்ற வூசியும் வாராமை கற்றுணர்ந்த தீதற்ற ஞானி திருவுளத்தை - ஓதுற்றுக் கூட்டிய செல்வத்துள் கூடும் கொடைசெய்து காட்டுவோம் நன்றிக் கடன். பகுத்துவாழ் 171 நீள எழுதும் நினைப்பிலேன் செல்வத்தை ஆளப் பிறந்தான் அணிகதையை;- மீள வழிகாட்டுந் தோன்றல் வரலாறு கேட்பார் பழியோட்டி வாழ்வார் பகுத்து. பின்குறிப்பு 2. திரு. ஆ. முத்துசிவனார் அழகப்பா கல்லூரி தமிழ்ப் பேராசிரியர், அசோக வனம், மேடைக்கலை, அசலும் நகலும், கவிதையும் வாழ்க்கையும் முதலான திறனாய்வு நூல்கள் எழுதியவர். இவர் மிக்க இளமையில் மறைவு எய்தினார். இவர் தம் வாழ்க்கை வரலாற்றை அழகப்பா கல்லூரி வெளியிட்ட ‘முத்துசிவனார் நினைவு மலர்’ என்னும் நூலிற் காணலாம். டாக்டர் அழகப்பா ஐரோப்பிய நாடுகள் சென்று திரும்பி வந்தபோது 1-9-1951இல் பேராசிரியர் தமிழ்ப் பாராட்டிதழைப் பெருமிதத்தோடும் கணீர்க் குரலோடும் படித்துக் கொடுத்தார். ஆங்கிலப் பாராட்டை முன்னரே கேட்ட அழகப்ப வள்ளல் ‘எது மூலம் எது மொழிபெயர்ப்பு என அறியேன்’என்று ஆ.மு. வின் தமிழ்நடையைக் கூட்டத்தே புகழ்ந்தனர். 3. மக்கள் அழுவதால் அழகப்பா இறந்துவிட்டார் என்ற செய்தியை இனி நம்பத்தான் வேண்டும். 5. காரைக்குடி வணிகப் பெருமக்கள் இரண்டுநாள் கடையடைத்தனர். 6. அழகப்பாவைப் பாராட்டிய பாரத ரத்தினங்கள்:- ச. இராசகோபாலாச்சாரி, பண்டித சவகர்லால் நேரு, ச. இராதாகிருட்டினன், சி.வி. இராமன், மோ. விசுவேசரய்யா தேர் - அழகப்பா உடலைத் தாங்கி வந்த ஊர்தி 12. செல்லார் - செல்லாத காசு உடைய செல்வர் 13. வள்ளல் என்ற கொடைப் பெயருக்குத் தக்கவன் அழகப்பனே என்றபடி உயிரைவிட்டு நிலையாகப் படுக்க நினைத்தவன் யாரெனின், வாழ்நாளில் எல்லாவற்றையும் பகுத்துக் கொடுக்க நினைத்தவன். 14. 25-7-1948இல் மின்சார வேதியல் ஆராய்ச்சி நிலையத்துக்குக் கால்கோள் செய்ய முதலமைச்சர் நேரு காரைக்குடி வந்தார். அன்று பல்லாயிரமக்கள் கூடினர். அக்கூட்டத்தினும் மிகுதியான மக்கட்கூட்டம் அழகப்பாவின் மெய்த்தேரைக் காணக் குழுமிற்று. எல்லா மக்களும் அழுதனர்; தொழுதனர். ஆதலால், நிலம் அழுததையும் வானம் தொழுததையும் காண்பதற்கு யாரும் இல்லை. 17. 25-10-1952இல் பாரத ரத்தினம் ச. இராசகோபாலாச்சாரியார் அழக;பபா கல்லூரிப் பேரவையில் சொற்பொழிவாற்றுங்கால், “பணம் சேர்க்கின்ற ஒரு வழியே பலருக்குத் தெரியும். சேர்த்த பணத்தை எல்லார்க்கும் பகுத்துக் கொடுக்கின்ற மறுவழி ஒருவர்க்கும் தெரியாது. இருவழியும் தெரிந்தவர் அழகப்பா” என்று போற்றினார். 21. “காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கி” - பட்டினப்பாலை. கரிகாலன் வரிப்பொருளால் அன்றித் தானே உழைத்து ஈட்டிய பொருளால் நாட்டு வளர்ச்சி செய்யவில்லை. அழகப்பன் தன் பொருளால் காட்டையழித்து நாடாக்கினான். 22. “யாமும் பாரியும் உளமே குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே” (புறம்.110) இதனால் பாரி தான் இருந்த பறம்புமலையைக் கொடுக்க வில்லை என்பது பெறப்படும். அழகனோ தான் வாழ்ந்த கோட்டையூர் மாளிகையையும் கல்லூரிக்குக் கொடுத்து விட்டான். ஆரில் - அரியமனை, மாளிகை 24 இடக்கொடை - ஆயிரத்துக்கு மேலான ஏக்கர் கல்லூரிக்கு வழங்கினான். 25. “கொடுக்கிலாதானைப் பாரியே யென்று கூறினு கொடுப்பாரிலை” இவ்வாறு சுந்தரர் பாரியின் வண்மையைப் பாடினாலும் வீட்டையும் வழங்கிய அழகப்பர் வண்மை பாரியின் வண்மையினும் பெரிது. ஆதலால் இனி அழகப்பன் என்னோ அழைப்பினும கொடுப்பாரிலை என்று சுந்தரன் பாட்டினை புதுப்பிக்க வேண்டும் என்பது கருத்து. 26 “கடாஅ யானைக் கழற்காற் பேகன் கொடைமடம் படுத லல்லது” (புறம். கசஉ. பரணர்.) “உடாஅ போரா ஆகுதல் அறிந்தும் படாஅம் மஞ்ஞைக்கு ஈந்த எங்கோ” (புறம். கசக. பரணர்.) உடுத்துக் கொள்ள மாட்டா, போர்த்துக் கொள்ள மாட்டா என்று அறிந்தும் பேகன் தன்னறிவு மயங்கி மயில்களுக்குப் போர்வைகள் வழங்கினான். அறிஞர் அழகனோ மயங்காது தன்னறிவைக் கல்லாதவர் அறியாமை தொலைக்க வழங்கினான். 27. தம்பி இளங்குமணன் நாட்டைப் பறித்துக் கொள்ள, அண்ணன் குமணன் காட்டில் வாழ்ந்தான். அங்கும் புலவர் பெருந்தலைச் சாத்தனார் பரிசு பெறச் சென்றார். தன் தலையை வெட்டிக் கொண்டு போய்த் தம்பியிடம் கொடுத்துப் பரிசு பெறுக என்று குமணன் புலவர் கையில் வாளைக் கொடுத்தான் என்பது வரலாறு., (புறம். ககூரு) 28. பழைய வள்ளல்கள் கற்றார்க்குப் பொருள் வழங்கினார்கள். வள்ளல் அழகன் கல்லார்க்குக் கல்விப் பொருள் வழங்கினான். 29. சங்ககாலத் தமிழ் வள்ளல்கள் செய்த பெருங்கொடைகளைத் தன் கொடையால் நம்பும்படி செய்தவன் என்பது கருத்து. 30. பத்தாண்டுகட்கு மன் கோட்டையூரில் நிகழ்ந்த ஒரு பாராட்டுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய அண்ணாமலையரசர் அழகப்பாவுக்கு ‘வள்ளல்’ என்று பெயர் சூட்டினர். அவ்வமயம், பணிவு நிரம்பிய அழகப்பர் நீங்கள் இருக்கும் போது ‘குட்டி வள்ளல்’ என்றுதான் என்னைச் சொல்ல வேண்டும் என்று பல்கலைக்கழகம் கண்ட அண்ணாமலையாரைப் புகழ்ந்து கூறினர். இக்குறிப்பை 15-2-1957 ஆம் நாள் கோட்டையூரில் நடந்த பாராட்டுக் கூட்டத்தில் அழகப்பாவே நினைவுகூர்ந்து சொல்லக் கேட்டோம். 31. வள்ளல் என்ற தமிழ்ச்சொல் செய்த தவத்தால் பிறந்தவன் அழகப்பா. 32. தனிக்கொடைகள்:- முல்லைக்குத் தேர் ஈந்தது, மயிலுக்குப் போர்வையளித்தது, கல்விக்கு மனைவழங்கியது. 33. 3-7-1947 இல் அடையாற்றில் பெசண்டு அம்மையார் நூற்றாண்டு விழாவிற்குத் தலைமை தாங்கிய சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் ஆ. இலட்சுமண சாமி முதலியார் ‘புதிய கல்லூரிகள் நிறுபப் பலர் முன்வரவேண்டும்’ என்று ஆர்வத்தோடு வேண்டுகோள் செய்தார். உடனே டாக்டர் அழகப்ப எழுந்திருந்து ‘இராமநாதபுர மாவட்டத்தில் ஒரு கல்லூரி நிறுவுவேன்’ என்று உரைத்தார். ஒரு திங்களுக்குள் காரைக்குடியில் கல்லூரி தோன்றிற்று. 36. சிலம்பின் வரி- சிலப்பதிகாரத்தின் வரிப்பாட்டுகள். 39. பல துறையிலும் சிறந்த பெரியவர்களை அழகப்பா காரைக்குடிக்கு அடிக்கடி அழைத்துவருவார். இரவிலும் மாலையிலும் விருந்துகள் வைப்பார். இவ்விருந்துகள் பவநகர் முற்றத்தும் நேருக்காவிலும் நிகழும். 40. புகைவண்டி ஏறிக் காரைக்குடி வழியாகச் செல்லும் மக்கள் அழகப்பா நிறுவிய கல்லூரிக் கட்டிடங்களை அணி அணியாகக் காணலாம். 41. இங்கு தொடக்கப் பள்ளியில் வந்து சேர்ந்த ஒரு குழந்தை எல்லாக் கல்வியும் பெற்றுத் தொழிற்படிப்பும் தேர்ந்து நன்றாக வாழும் தகுதியோடு வெளியேறலாம். அவ்வளவு படிப்பிற்கும் ஏற்ற பள்ளிகள் இங்கு உள்ளன. இந்நூலில் ‘ஈண்டு’ எனவரும் இடமெல்லாம் காரைக்குடியைக் குறிக்கும். 43. மாண் ஆக்கும் தாயர் - கல்வி கற்பிக்கும் ஆசிரியச் செவிலிகள். 45 நாள் இழக்கும் கோடியர் - கொடுத்துப் புகழ் ஈட்டாது வாழ்நாளைக் கழிக்கும் கோடிப்பெருஞ் செல்வர். 47. 4-12-1954 சென்னை அரசின் தொடக்கக் கல்விச் சீரமைப்புக் குழுவிற்கு டாக்டர் அழகப்பா தலைவரானார். நாடெங்கும் சுற்றிப் பல பள்ளிகளின் செயல்களை நேரிற் கண்டார். புதிய திட்டங்கள் அமைந்த தம் அறிக்கையைச் சென்னை அரசிடம் (2-10-1955) கொடுத்தார். 48. பட்டம் அடுத்த முதியர் - அழகப்பா ஆசிரியப்பயிற்சிக் கல்லூரி மாணவர்களும், உடற்கல்விக் கல்லூரி மேல் நிலை மாணவர்களும். 53. ஆராய்ச்சிக் கழகத்தைக் காரைக்குடியில் அமைப்பதற்கு அங்குப் போதிய நீர்வசதியில்லை என்று ஒரு தடை உண்டாயிற்று. பெருங்கிணறுகள் தோண்டி நீருண்மை காட்டினார் அழகப்பா. 54. எத்தடையையும் விலக்கிக் காரைக்குடியில் ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவத் துணிந்தார் அழகப்பா. பொருட்கொடையால் ஆகாததில்லை என்று அறிந்த அழகப்பா காரைக்குடியில் ஆராய்ச்சிக் கழகம் நிறுவுவதாயின் முந்நூறு ஏக்கரும் பதினைந்து இலட்ச நிதியும் தருவேன் என்று ஆர்வத்தோடு முதலமைச்சர் நேருவை நள்ளிரவில் கண்டு வாக்களித்தார். 55 அழகப்பா தாமே ஆள்மூலம் சொல்லிவிட்டு ஐந்து இலட்சத்தை நேரடியாகக் கொடுத்தார். 56. பொறிவனங்கள் - பொறியியல் தொடர்பான நிறுவனங்கள். 57 மைசூர், திருவிதாங்கூர், ஆந்திரம், அண்ணாமலை, வேங்கடேசுவரர் பல்கலைக் கழகங்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தினின்றும் தோன்றியவை; ஆதலின் ‘அன்னைக் கழகம்’ எனப்பட்டது. 62. சென்னை தக்கர் பாபா வித்தியாலயத்தில் அழகப்பா மண்டபத்துக்குக் காந்தியடிகள் கல்நாட்டினார். 64. இந்தியக் குடியரசின் முதல் நிதியமைச்சராகவும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும் இருந்த டாக்டர் சண்முகஞ் செட்டியார் நினைவாக இந்நூல் நிலையத்தை அழகப்பா தோற்றினார். 65 அழகப்பா கல்லூரி விடுதி நான்கினுள் இவ்விடுதியும் ஒன்று. வீரப்ப அம்மான் என்று நாம் சொல்வது போலவே முறைப்பெயர் திகழ இவ்விடுதிக்குப் பெயரிட்டார். 69 மலேயா வாழ் செட்டியார்கள் அங்கு ஒரு கல்லூரி அமைத்துக் கல்வித் தொண்டு செய்ய வேண்டும் என்று மலேயா சென்றிருந்தபோது அழகப்பா வேண்டுகோள் விடுத்தார். அதன்படி பெருநிதி சேர்க்கப்பட்டது. திரு. க.வீ. அழ. மு. இராமநாதன் செட்டியார் அவர்கள் (ஐயா என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர்கள்) அக்கல்லூரியை அழகப்பா பெயரால் அழைப்பதென்றும், விரைவில் அதனைத் தொடங்குவதென்றும் நன்றியுணர்வொடு அறிவித்துள்ளனர். 79 பழவினை எனின் அது நம்வினையே என்து கருத்து. 81 அருவப் பொருளாகிய நோயை அழிக்க ஒரு வாளில்லையே என்று வருந்தியபடி. 84 பிறப்பு 6-4-1909 இறப்பு 5-4-1957 85 1957 பிப்ரவரியில் கல்லுரி வட்டத்துக்கு அழகப்பா வந்தார். இருசக்கரம் அமைந்த சிறுவண்டியில் சாய்ந்தவண்ணம் எல்லாவற்றையும் பார்வையிட்டார். கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினார். மக்கள் எல்லோரும் அவரை வணங்கி முழுநலம் பெற்று வருக என்று வாழ்த்திச் சென்னை செல்ல விடையளித்தனர். கல்லூரி வட்டத்துக்கு இதுவே அவருடைய கடைசி வருகை என்று அன்று யாரும் கருதவில்லை. 88 லண்டணில் வானூர்தி இயக்கப்பயின்று சான்றிதழ் பெற்றார். நேருக்கா-சவகர் சோலை. இது அழகப்பா கல்லூரி வட்டத்தில் உள்ளது. இங்கு மாலை விருந்துகள் நடக்கும். 89 கொடை செய்யும் ஒரே நினைவால், ‘மருந்தென வேண்டாவாம்’ என்பது போன்ற திருக்குறள்களைக் கைக்கொள்ள மறந்துவிட்டான் என்பது கருத்து. 90 உயர்ந்த கருத்துக்களை எழுதுவதற்கு ஏற்ற தாள் மக்கள் மனங்களே என்று தெளிந்து கல்வி நிலையங்கள் கட்டினான் என்பது கருத்து. 91 தென்னாலை - கண்ணனூர் உமையால் நெசவாலை. 94 அழகப்பா கோட்டையூரில் பிறந்தவர். இறந்தபின் அவ்வூர் இடுகாட்டில் தம்மை அடக்கஞ் செய்வதை அவர் விரும்பவில்லை. தம் எண்ணத்தை, அறிவை, பொருளை யெல்லாம் பணிகொண்ட கல்லூரி வட்டத்திலேயே தம்மைச் சமாதி செய்ய வேண்டும் என்று விரும்பினார். இறப்பதற்கு இனி நெடுநாள் இல்லை என்று உணர்ந்த அழகப்பா, கல்லூரி வட்டத்துத் தமக்கு உரிய இடம் இது என்று முன்னரே காட்டியிருந்தார். இறந்தபின் அவர் விருப்பப்படி, உடல் அவ்விடத்திலேயே எரியூட்டி அடக்கம் செய்யப்பட்டது. 97 அழகப்பா கல்லூரியின் அறிவியற் கட்டிடங்கள் இங்ஙனம் கட்டப்பட்டன. 101 பண்டிதமணி மகாமகோபாத்தியாய மு. கதிரேசச் செட்டியார் அவர்கள் அண்ணாமலையரசர் கோட்டையூரில் தலைமைவகித்து அழகப்பரைப் பாராட்டிய கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். அதுமுதல் நட்பு வளர்ந்தது. பண்டிதமணியவர்களைச் சென்னை வேப்பேரி மாளிகைக்கு அழைத்துத் திருக்குறட் பகுதிகளை ஓரளவு அழகப்பா கற்றுக் கொண்டனர். தமிழில் கலைக்களஞ்சியம் தொகுப்பதற்குத் தமிழ்வளர்ச்சிக் கழகத்துக்கு ரூபாய் பதினாயிரம் முதற்கண் கொடுத்தார். 102 திரு. இராசகோபாலாச்சாரியார் அவர்கள் எழுதிய ஒரு கடிதத்தைக் ‘குறள் போல’ என்று அழகப்பா குறிப்பிட்டார். 103 அமராவதிபுதூர் தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கம் அவர்கள் அழகப்பாவொடு நெருங்கிப்பழகிய ஒரு பெருந்தமிழ்ப்புலவர்; அழகப்பாவுக்குத் தமிழில் நல்ல ஈடுபாட்டை உண்டாக்கியவர்; தமிழ் இலக்கியத்தின் சிறப்பை நன்கு அறியச்செய்தவர்; அழகப்பா நலத்தோடு இருந்த போதும் நலங்குன்றிய காலத்தும் உடனிருந்து தமிழமுது ஊட்டியவர்; ‘என் ஆசிரியர்’ என்று அழகப்பாவால் அழைக்கப் பெற்றவர். 104 சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புச் சொற்பொழிவில் உரிமைவேண்டும் என்ற கொள்கையை அழகப்பா விரித்து ரைக்கும்போது ‘நாமார்க்கும் குடியல்லோம்’. என்ற திருநாவுக்கரசர் பாடலை மேற்கோளாகக் காட்டினார். காரைக்குடி கம்பன் திருநாளில் பேசுங்கால் தாம் இளமையில் பெற்ற தமிழ்க்கல்வியைப் பற்றிக் குறிப்பிட்டார். 105 முதலில் தோன்றிய அழகப்பா (கலைக்) கல்லூரியின் குறிக்கோள் அன்பு, அறம், பணி என்பது. இக்குறிக்கோளைத் தமிழில் அமைப்பதற்குப் பெருந் தூண்டுதலாக இருந்தவர் திரு. சா. கணேசன் அவர்கள் ஆவர். 106 திரு ச. இராசகோபாலாச்சாரியார் வேண்டுகோட்படி தமிழ்ச் சொல்லாக்கக்குழு அழகப்பா கல்லூரியில் 30-1-1954இல் நிறுவப்பட்டது. 109 14-8-1956 இல் குடியரசுத்தலைவர் டாக்டர் இராசேந்திரப் பிரசாதும், 30-1-1957இல் முதலமைச்சர் சவகர்லால் நேருவும் வள்ளல் அழகப்பாவை அவர்தம் வேப்பேரி மாளிகைக்கு வந்து நலம் உசாவினர். 110 தாமரையணி இந்திய அரசு வழங்கிய ‘பதும பூசணம்’ என்னும் பட்டம். 111 1943இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் டி.லிட். பட்டமும் 1944இல் சென்னைப் பல்கலைக்கழகம் எல்.எல்.டி. பட்டமும் அழகப்பாவுக்கு வழங்கின. பிற சிறப்பு:-அழகப்ப செட்டியார் தொழில் நுணுக்கக் கல்லூரி தோற்றியது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பொறியியற் கல்லூரிக் கட்டிடங்களுக்கு அழகப்பாவின் பெயரைப் பொறித்தது. 112 அழகப்பருக்கு ஆண் மகவு இல்லை. உலக வழக்கம்போல ஒரு மகனைத் தமக்குக் கூட்டிக்கொள்ளவும் விரும்பவில்லை. 113 நோய்வாய்ப்பட்ட அழகப்பா 27-8-1956 இல் உடற்கல்விக் கல்லூரித் துவக்க விழாவிற்குப் படுத்த படுக்கை நிலையிலேயே சென்னை யிலிருந்து கல்லூரி வட்டத்துக்கு வந்தார். சிறு பள்ளி முதல் கல்லூரிகள் வரை படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களை அருகே அழைத்துத் தனித்தனி கண்டு படிப்பு நலம் முதலியவற்றை வினவினார். 117 17-11-1955இல் அழகப்பா கல்லுரி வட்டத்துள்ள பல்துறைக் கல்லூரிகள் பொருட்காட்சி நிகழ்த்தின. ஐம்பதினாயிரமக்கள் ஆண்களும், பெண்களும் அக்காட்சிகளை வரிசையாகவும் அமைதியாகவும் நின்று பார்த்து அறிவு பெற்றனர். 118 சென்னை வேப்பேரி மாளிகைப் பூந்தோட்டத்துக்குப் பரிசு பெற்றார் அழகப்பா. 119 பம்பாய் விடுதியை வாங்கிய வரலாறு:- பம்பாய் ரீட்சு விடுதி மேலாள் அழகப்பர் தங்குவதற்கு அறை காலியில்லை என்றார். எத்தனை அறைகள் இந்த விடுதியில் உண்டு? என்றார் அழகப்பர். விலைக்கு வாங்குபவர் போலக் கேட்கிறீரே? என்றார் மேலாள். ஆம் என்று விடையிறுத்து உடனே முன்பணம் கொடுத்தார். பின்னர் அவ்விடுதியை விலைக்கு வாங்கிக் கல்லூரிக்கு நிதியாக வைத்தார் என்ப. 122 சிவன் அளித்த பதினாறு ஆண்டு முடிந்தபின் மார்க்கண்டனை இயமன் கவர்ந்தது முறை என்றும், சிவன் உதைத்தது முறையன்று என்றும் அழகப்பா சொல்வார். புராணக் கருத்தையும் இங்ஙனம் அலசிப் பேசுவது அவர் பண்பியல். 126 18-8-1954இல் சென்னைப் பல்கலைக் கழகப் பட்டம் அளிப்பு விழாச் சொற்பொழிவு நிகழ்த்தினார் அழகப்பர். 25-7-1948 இல் மின்சார வேதியல் ஆராய்ச்சி நிலையத்துக்கால்கோள் செய்ய முதலமைச்சர் நேரு காரைக்குடி வந்தார். அன்று அழகப்பா தம் வரவேற்புரையில் தாம் மேல் நிறுவ எண்ணியிருக்கும் திட்டங்களை வெளியிட்டார். 129 மனிதன் உரிமையாக எண்ணவும், உரிமையாகப் பேசவும், சில வரம்புக்கு உட்பட்டு உரிமையாகச் செய்யவும் வேண்டும். இவ்வுரிமைக்குத் தக்க செவ்வியை என்றும் காத்துக் கொள்ள வேண்டும். எனையளவு செல்வமும் உரிமை கொடுக்கும் ஒரு சூழ்நிலைக்குச் சமம் ஆகாது என்று அழகப்பா பட்டப்பொழிவில் அறுதியிட்டுரைத்தார். 130 எண்ணும் உரிமையை எங்ஙனம் நம் முன்னோர் வளர்த்தார்கள் என்பதை இந்திய வரலாற்றிலிருந்து பலபட எடுத்துக்காட்டினார். 131 மனிதன் சொந்த எண்ணத்தை அழிப்பதே பிழை. இன்றோ அவ்வெண்ணத்தை அழிப்பதோடு நில்லாது. கல்விப் பெயரால், எண்ணுதற்குரிய மூலநெஞ்சினையே குழந்தை நிலைமுதல் கெடுத்துவிடுகின்றோம் என்று உரிமையழிவு பற்றி வருந்திக் கூறினார். 132 அரசியலிலும் பிறதுறைகளிலும் ஒருசார்பான கோட்பாடுகளையே மாணவர் அறியும்படி மேற்படிப்புத் திட்டங்களை அமைத்தல் முடிவில் நாட்டிற்குக்கேடு என்றும், பிற நாட்டவரின் நல்ல கருத்துக்களைத் தழுவிக்கொள்ளாது நமக்குத் தெரியாது என்ன இன்று இடைக்கால இந்தியர் போலத் தற்பெருமை பேசல் அறிவீனம் என்றும் அழகப்பர் பட்டப்பொழிவில் அறிவுறுத்தினார். 135 காரைக்குடியில் மருத்துவக் கல்லூரி ஒன்று நிறுவ வேண்டும் என்பது அழகப்பாவின் திட்டங்களுள் ஒன்று. அதனை நிறைவேற்றுவதற்கு வேண்டும் தொடக்கமுயற்சிகளையும் செய்தார். இதற்கென அரசியலார் அமைத்த குழுவும் அழகப்பாவின் திட்டத்தை உடன்பட்டது. இப்பகுதிச் செல்வர்கள் மருத்துவக்கல்லூரியின் நலத்தை அறிந்து பெருநிதி அளித்து அழகப்பாவோடு ஒத்துழைத்திருப்பின், இக்கல்லூரி இதுகாறும் தோன்றியிருக்கும். இனியேனும் தோன்ற ஆவன செய்ய வேண்டும். 136 சென்னை தமிழ்வளர்ச்சிக் கழகத்தின் சார்பாகப் பேரூர்களில் நடத்தப்படும் தமிழ்விழாவை அழகப்பாகல்லூரி வட்டத்து 1955 செப்டம்பரில் நடத்த அழகப்பா முடிவு செய்திருந்தார். அவர் அண்ணனின் மறைவாலும், இப்பகுதியில் எழுந்த பெரும்புயலாலும், பின்னர் அழகப்பரின் நோயாலும் இவ்விழா நிகழ்ச்சி கைகூடாது போயிற்று. 137 திரு. ராய. சொ. அவர்களை ஆராய்ச்சிப் பேராசிரியராக அமர்த்தி 1956 சூலையில் ஓர் ஆராய்ச்சித் தமிழ்க்கழகம் அழகப்பா கல்லூரி வட்டத்து நிறுவ எண்ணியிருந்தார். 138 அழகப்பாவின் தலையான வேட்கை தாம் நிறுவிய பல கல்லூரிகளையும் ஒள்றுபடுததி ‘அழகப்பா பல்கலைக்கழகம்’ என ஒரு தலைமைக்கழகம் அமைப்பது. அவர்தம் இவ் விருப்பத்தை எல்லோரும் அறிவர். தாம் வாழ்ந்தகாலத்தே இந்திய அரசோடு கடிதப் போக்குவரத்துச் செய்து அடிப்படை கோலி வைத்திருக்கிறார். அவர் முயற்சியை மேலும் தொடர்ந்து அழகப்பா பல்கலைக் கழகத்தைக் காண்பது தமிழர் கடனாகும். 140. 1. அழகப்பா கல்லூரி, 2. அழகப்பா ஆசிரியப் பயிற்சிக்கல்லூரி, 3. அழகப்பா பொறியியற் கல்லூரி, 4. அழகப்பா மகளிர் கல்லூரி, 5. அழகப்பா பல்தொழிற் கல்லூரி, 6. அழகப்பா உடற் கல்விக் கல்லூரி, 7. அழகப்பா நகர் பல் தொழிற் கல்லூரி, 8. அழகப்பா தொழில் நுணுக்கக் கல்லூரி,(சென்னை) 9. காரைக்குடி மின்சார வேதியல் ஆராய்ச்சிக்கழகம், 10. அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பொறியியற் கல்லூரியும் அழகப்பாவின் பெருங்கொடையால் தோன்றியவை. 144. நாகைப்பின் வந்த நடப்பு :- சிறுவயதிலேயே அழகப்பாவுக்குப் பெரும் படிப்புப் படிக்க வேண்டும் என்று ஆசையிருந்தது. தந்தை சொற்படி, உயர்நிலைப்பள்ளிப் படிப்புக்கூட முடிக்காது 1925இல் மலேயா செல்லப் புறப்பட்டார். சென்னைத் துறைமுகத்து மலேயாவுக்குக் கப்பல் ஏறினார். கப்பலில் இவருக்கு அம்மை நோய் தோன்றிற்று. அம்மை என அறிந்த வெள்ளைக்காரக் கப்பல் தலைவன் நாகப்பட்டினத் துறைமுகம் வந்ததும் அழகப்பாவை இறக்கி விட்டுவிட்டான். இந்நிகழ்ச்சிக்குப்பின்தான் அழகப்பா டாக்டர் அழகப்பாவாகவும் வள்ளல் அழகப்பாவாகவும் சிறந்து விளங்கினார். 145 இருந்த காலத்தே உடலை மறந்த ஒருவனை இறந்தான் என்று எங்ஙனம் சொல்வது? அழகப்பா படைத்த கல்வி அற நிலையங்கள் இருக்கும்போது அவனை இறந்தான் என்று அறமும் சொல்லாது என்பது கருத்து. 147 அழகப்பா இப்பிறப்பில் காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியிலும் சென்னை மாகாணக் கல்லூரியிலும் படித்தார். இனிப் பிறந்து தாமே படைத்த மாண்டிசோரி, தொடக்கப்பள்ளி, மாதிரி உயர்நிலைப்பள்ளி, கலைக்கல்லூரி முதலியவற்றில் கல்வி கற்க வேண்டும் என்பது கருத்து. 148 அழகப்பாக இளவயதில் தொழுநோய்க்கு உள்ளானார். இவர் கொடைக் குணத்தைக் கண்டறிந்த காந்தியடிகள் ‘அழகப்பா நோய்நீங்கி வாழ்க’ என்று ஒருநாள் மாலைத் தொழுகையில் இறைவனை வழுத்தினார். இக் குறிப்பை இந்திய நல்வழித்துறை அமைச்சி இராசகுமார் அமிர்தகௌர் 3-8-1954-ல் அழகப்பா கல்லூரி வட்டத்து உமையாள் மருத்துவ சாலைக் கால்கோள் விழாவில் வெளிப்படுத்தினார். 149 அழகப்பாவின் உடலைத் தாங்கிய ஊர்தியை வடந்தொட்டு எல்லாக் கல்லூரி மாணவர்களும் கோட்டையூரிலிருந்து கல்லூரி வட்டத்துக்குக் கொண்டு வந்தனர். 157. தாம் நிறுவிய நிறுவனங்கள் பலவற்றையும் வழிவழிக் காப்பதற்கு ‘டாக்டர் அழகப்ப செட்டியார் கல்வி அறநிலையம்’ என ஒரு பெருநிலையத்தை வள்ளல் அழகப்பா அமைத்துள்ளார். இந் நிலையத்தின் செயலாளர் பெருந்தகை க.வெ. சித. வேங்கடாசலஞ் செட்டியார் அவர்கள் ஆவர். 165 அழகப்பா 6-4-1909இல் பிறந்து 5-4-1957இல் இறப்பெய்தினார். கணக்காக நாற்பத்தெட்டாண்டுகள் வாழ்ந்தார். 166 நோய்வாய்ப்பட்ட துயர் நிலையிலும் மும்முறை கல்லூரி வட்டத்துக்கு வந்து தம் நிறுவனங்களைக் கண்டு மகிழ்ந்தார். 168 சடையவர்மன் பராக்கிரமபாண்டியன் (கி.பி. 1422-63) தென்காசிப் பெருங்கோயிலைக் கட்டினான். அக்கோயில் திருப்பணி முழுதும் முடிவதற்குமுன் இறந்துபோனான். இறப்பை உணர்ந்த பாண்டியன் பாடல் சில பாடி அவற்றைத் தென்காசிக் கோயிலின் கோபுரத்தில் வெட்டச் செய்தான். அத்தமிழ்ப் பாடல்களை இன்றும் காணலாம். அவற்றுள் ஒன்று:- சேலே றியவயற் றென்காசி யாலயந் தெய்வச்செய லாலே சமைந்ததிங் கென்செய லல்ல வதனையின்னம் மேலே விரிவுசெய் தேபுரப் பாரடி வீழ்ந்தவர்தம் பாலேவல் செய்து பணிவன் பராக்ரம பாண்டியனே. 169 “காதற்ற வூசியும் வாராது காணுங் கடைவழிக்கே” என்ற பட்டினத்தார் பாடல் அடியை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமக்கு டாக்டர் பட்டம் வழங்கிய விழாவில் (1943) அழகப்பா எடுத்துக் காட்டினார். அழகப்பாவின் கொடைவளம் 1 அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பொறியியற் கல்லூரிக்கு ரூ. 500,000 2 சென்னைப் பல்கலைக்கழகத் தொழில் நுணுக்கத் கல்லூரிக்கு ரூ. 500,000 3 திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் நிலைக்கு ரூ. 100,000 4 காரைக்குடி மத்திய மின்சார வேதியல் ஆராய்ச்சிக் கழகத்துக்கு ரூ. 15,00,000 (இத்தொகையோடு முந்நூறு ஏக்கர் இடமும் 5 சென்னை தக்கர் பாபா வித்தியாலயத்துக்கு ரூ. 17,000 6 சென்னை சேவாசதனத்துக்கு ரூ. 75,000 7 சென்னை தென்னிந்திய வணிகக் கழகத்துக்குக் கட்டிடம் கட்ட இடம் வழங்கியமை ..................................... 8 மதுரை டோக் மகளிர் கல்லூரிக்கு ரூ. 25,000 9 புதுதில்லி தென்னிந்தியக் கல்விக் குழுவுக்கு ரூ. 25,000 10. தமிழ்க் கலைக்களஞ்சிய வெளியீட்டுக்கு ரூ. 10,000 11. கொச்சிப் புயலுதவி நிதிக்கு ரூ. 10,000 12. திருவிதாங்கூர் அரசின் நிலவாராய்ச்சி நிதிக்கு ரூ. 20,800 13. கொச்சி மாணவர்களின் வெளிநாட்டுப்படிப்புக்கு ரூ. 100,000 14. எர்ணாகுளம் மகாராசர் கல்லூரியின் நாட்டு மருத்துவ ஆராய்ச்சிக்கு ரூ. 80,000 15. கொச்சி நாட்டு குழந்தைகள் பகலுணவுக்கு ரூ. 1,50,000 16. கொச்சி அழகப்பா நகர் பேறுமருத்துவ சாலைக்கு ................................. இவை பெரும்பாலும் வெளிப்படையாகச் சொல்லப் பெறும் கொடைச்செயல்கள். ஆயிரம் ஐயாயிரம் பதினாயிர மாக நண்பர்கட்கும் உறவினர்கட்கும் நிலையங்கட்கும் அளித்த கொடைகள் பலவுள என்று அறியவேண்டும். அழகப்பா தம்பெயரால் காரைக்குடியிலும் பிறவிடத்தும் நிறுவிய பல்வகைக் கல்லூரிகளும் பள்ளிகளும் பல. அவற்றிற்கு வழங்கிய இலட்சக்கணக்கான தொகை கணக்குக்கு உட்படுவதன்று. மாமலர்கள் முதற் பதிப்பு 1978 இந்நூல் 1969இல் பாரிநிலையம் வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன. முன்னுரை என் முதற் கவிதைநூல் கொடை விளக்கு என்பது ஒரு பொருள் நுதலியது, வெண்பாவால் அமைந்தது. மாமலர்கள் என்ற இக்கவிதைப் பனுவல் என் இரண்டாவது படைப்பாகும். இது பல்வகைச் செய்யுளொடு பல்வகைப் பொருள் சார்ந்தது. இளமை முதலே அவ்வப்போது பாடிய செய்யுட்கள் இத் தொகுதியின் முற்பகுதியில் இடங்கொண்டன என்றாலும் அவையெல்லாம் இன்றைய என் உணர்வுக்கும் மொழி நடைக்கும் ஏற்பச் செவ்விய திருத்தங்கள் பெற்றுள என்று கருத வேண்டும். எண்ணம் இருபது, ஊர்தி முப்பது, தமிழாட்டு, தமிழ்சூடி, புரட்சி மண்டோதரி, கொல்லாச் சிலம்பு, அன்னை கொதிக்கிறாள், உலகப்பாயிரம் என்ற எண் பகுதிகள் இத்தொகுப்பின் பிற் பகுதியில் உள. இவை அண்மைப் புதுப் படைப்புக்களாகும். புரட்சி மண்டோதரி, கொல்லாச்சிலம்பு என்ற இரு பகுதிகள் இராமாயணம், சிலப்பதிகாரம் சார்ந்தவை; கதை முடிவுகள் முற்றும் மாறானவை; பெண்மைக்கும் புரட்சிப் பண்புக்கும் மதிப்பளிப்பவை; காப்பியங்கள் திடீரென மங்கலமாக முடியக் கூடாவா என்று சிந்திக்க வைப்பவை; வழிவந்த கதைக்கு மாறாயினும் புதிய உத்திக்கு வழி காட்டுபவை. இத்தகு புது மாற்றங்கள் நல்லறிஞர்களின் முதலெதிர்ப்புக்கு உரியவை எனினும் அடிப்படைப் பண்புகளை வளர்க்கும் நோக்கில் இலக்கியக் கனவுலகில் இவை எதிர் பார்க்க வேண்டியவையே. ‘அன்னை கொதிக்கிறாள்’ என்னும் அங்கதக் கவிதை ஓர் இயக்கப் பாட்டாகும். இவ்வியக்கம் தமிழை வாழ்வு மொழியாகவும் உயர்ந்த இந்தியப் பொது மொழியாகவும் உலக மொழியாகவும். ஆக்கும், தமிழினத்தை உய்விக்கும், தமிழக அரசை வழிப்படுத்திச் செயற்படுத்தும். தமிழ் வளர்ச்சியில் நமக்கு வேறென்ன வேண்டும்? கதிரகம் வ. சுப. மாணிக்கம் காரைக்குடி 1.12.1978 அன்புரிமை பாரி நிலையம் செல்லப்பனார்க்கு பாரியெ னுந் தமிழ்நிலையம் பதிப்பிற் கண்டோன் பாரிசெல் லப்பாவென் றழைக்கப் பெற்றோன் யாரிவர்தாம் எனக்கேட்கும் அமைதிச் சான்றோன் யாவரினும் நாணயத்திற் புகழ்மை கொண்டோன் ஓரியெனக் காரியென உலகு போற்ற ஒருநூறு புலவோர்க்கு வருவாய் செய்தோன் மாரியிவன் எனச் சொன்னால் உவமை போதா மற்றொன்று சொல்லுதற்கோ புலமை போதா. அடக்கப் பாயிரம் குழந்தை மண்ணைக் குவித்து மகிழும்; இழைத்த மண்ணில் இல்லமுங் காணும்; பழமைக் குப்பை பயன்படா வெனினும் கிழமை யென்னுங் கேண்மை விடுமோ? என்றோ தொடுத்த இத்தமி ழரும்புகள் பொன்றுத லின்றிப் புகழு மின்றி ஒன்றுதல் படூஉம் ஊழைப் பெற்றன; அடுக்கிக் கொடுத்தால் அச்சுப் பொறிக்கு மறித்துத் தள்ளும் மானமும் உண்டு கொல்? தொன்மைப் பொருள்கள் சொல்விலை போகும் நன்மையும் வணிக நடப்பில் உண்டே; புரட்சி வீசும் புதிய பறவையும் திரட்சிக் கூட்டில் சேர்ந்துள காண்க; ஊனக் குழந்தை ஒன்று பிறந்தால் ஏனக் குழவியென் றெறியாள் தாயவள்; என்னைப் பெற்ற என்தமி ழன்னை என்னிற் பிறந்த இதனைத் தன்னிற் பேரரெனத் தழுவுவள் பெரிதே. உள்ளுரை 1. இந்தியப் பாயிரம் 63 2. காந்தி எட்டு 66 3. திருவாசகச் சுவட்டில் 69 4. உரிமைப் பாடல்கள் 71 5. கையுறைப் பாடல்கள் 74 6. வள்ளல் அண்ணாமலையரசர் 75 7. பாராட்டுப் பாடல்கள் 87 8. வாழ்த்துப் பாடல்கள் 90 9. குழந்தைப் பாடல்கள் 100 10. அறப் பாடல்கள் 104 11. பாடற் கலப்பகம் 108 12. அழகப்பர் பத்து 115 13. எண்ணம் இருபது 118 14. ஊர்தி முப்பது 125 15. தமிழாட்டு 135 16. தமிழ்சூடி 140 17. புரட்சி மண்டோதரி 145 18. கொல்லாச் சிலம்பு 152 19. அன்னை கொதிக்கிறாள் 159 20. உலகப் பாயிரம் 183 1. இந்தியப் பாயிரம் வடவிமயம் தென்குமரி ஆயிடைக் குடியரசு நடத்துங் கோடாச் செங்கோல் படிமிசைச் சிறந்த பாரதம் வாழிய; 5. வாழிய பாரதம் வாழிய பல்படை வாழிய பன்மொழி வாழிய பல்வினை ஆழிக் குமரியும் அண்ணல் இமயமும் ஊழி ஊழி ஒன்றி வாழிய; 10. இந்தியத் துகளினை எப்பகை அவாவினும் முந்துக போர்க்களம் சிந்துக உயிரை சாதிப் பற்றும் சமயப் பற்றும் காதல் அன்ன கட்சிப் பற்றும் மோதல் இல்லா மொழியின் பற்றும் ஆசை நீங்காக் காசுப் பற்றும் 15. பாசம் ஏறிய பதவிப் பற்றும் நேசங் கலந்த ஈசன் பற்றும் தேசப் பற்றுமுன் சிறுபற் றாகுக; பற்றுக நாட்டுப் பற்றினைப் பற்றுக மற்றோர் பற்று மனம்புகல் வேண்டா; 20. பெருமகன் காந்தி பிறந்த நாட்டில் ஒருமகன் நேரு உழைத்த நாட்டில் இன்முறை என்னும் நன்முறை ஓங்குக வன்முறை என்னும் சின்முறை ஒழிக; அடிப்படை யுரிமைகள் வடுப்பட லின்றிக் 25. கொடுப்பன கொடுக்க கொள்வன கொள்க எடுத்தற் கெல்லாம் நிறுத்தம் விடுக்க; முறையை அறத்தை மொழியை மதத்தைப் பறைபடு தேர்தலில் பணயம் வையற்க; பத்தொடு நான்கு பாரத மொழிகள் 30. ஒத்தநல் லுரிமையும் ஒருமையும் தழுவிப் பாராள் மன்றம் பாங்கினில் ஏறுக; பொதுநல வினையைப் பொறுப்போ டாற்றுக எதுநலம் வரினும் பொதுநலம் செய்க மக்கள் உழைப்பு மலையினும் ஓங்குக 35. தக்க நலமெலாம் சமநலம் ஆகுக; கட்டுப் பாடெனும் கரவினைத் தளர்த்தி முட்டுப் பாடெனும் முடியை விலக்கித் தட்டு பாடகலத் தனிவழி காண்க; பொய்யா வள்ளுவன் புகழ்சேர் நாட்டில் 40. மெய்யாச் சொல்லுவன் மெய்யாச் சொல்லுவன் எய்யா இந்தியர்க்கு மெய்யாச் சொல்லுவன் பேச்சிலும் எழுத்திலும் பெருமிதம் வேண்டும் ஏச்சுரை தாக்குரை எவர்க்கு வேண்டும்? எய்திய உரிமையை இடித்துக் காக்கும் 45. செய்தித் தாள்கள் செம்மாந் தியங்குக; வாக்கினை வேண்டி வாய்மை பிறழேல் நாக்கினைக் காப்பான் நாடு காப்பான் மதித்துப் பேசும் வள்ளுவம் பரவுக மிதித்துப் பேசும் விலங்கியம் படுக; 50. விழுப்பம் வேண்டின் எல்லா வினையிலும் ஒழுக்கம் வேண்டும் ஒழுக்கம் வேண்டும் இழுக்கம் செய்பவன் இந்தியன் ஆகான்; பசியே இல்லாப் பல்வளம் சுரந்து பிணியே இல்லாப் பெருநலம் பெற்றுப் பகையே இல்லாப் பல்மறம் வீங்கி வாழிய பாரதம் வாழிய பாரதர் 57. ஏழிசை தாங்கி வாழிய பாரதம். (தலைவர்கட்கு என்ற நூலிலிருந்து) 2. காந்தி எட்டு ஒன்றியாம் துணிந்தாம் நெஞ்சே ஒழுக்கத்து நூலாருள்ளே வன்றிறல் வாழ்வு காட்டும் வள்ளுவற் சிறந்தார் இல்லை; நன்றுயர் செயல்கள் ஆற்றி ஞாலமே மகிழ்ந்தா ருள்ளே வென்றுவாழ் காந்தி போல விளங்கியோர் யாரும் இல்லை. 1 உலகத்துத் தீமை யெல்லாம் உய்வித்தோர் பெயரைச் சொல்லிக் கலகத்துத் தலைவர் என்பார் கண்கூடாச் செய்தல் கண்டாம்; நலகற்பான் முயலும் நெஞ்சே! நல்லவர் காந்தி பேரைச் சொலகற்பான் முந்த வேண்டாம் சொல்மறைந் தொழுக வேண்டாம். 2 வள்ளுவன் வகுத்தான் வாழ்க்கை; வாழ்ந்தவர் காந்தி பேரை உள்ளுவன் உணர்வன் செய்வன் உரைப்பதோ செய்ய மாட்டேன்; பள்ளுவன் பறைய ரெல்லாம் பகைவினை மக்கள் எல்லாம் கொள்ளுவன் சுற்ற மாகக் குறுகிய நோக்கங் கொள்ளேன். 3 சான்றோர் காந்தி காந்தியைத் தெய்வ மாக்கின் கயவர்க்கோர் போர்வை யாகும்; மாந்தருக் குதவார் போல வழிபடும் உணர்ச்சி யோங்கும்; மாந்தருட் சான்றோ ராகி மாநிலங் கதற வீழ்ந்த காந்தியின் குணத்தைப் பெற்றார் காந்தியின் தொண்ட ராவர். 4 குறிக்கோள் தாய்தரு வாய்மை மூன்றும் தன்புல னடக்கம் ஐந்தும் பாய்வரும் இரக்க வூற்றும் பற்றிலா ஒழுக்கப் பற்றும் மாய்வருங் கோள்செய் தார்க்கும் மறுத்தினா நினையா நோன்பும் ஓய்வருங் கடன்கள் ஆற்றி யர்ந்தவர் காந்தி அம்மா. 5 அடிகளார் வாழ்வில் யாதும் அறிவினுக் காற்றற் கொவ்வாப் படியுளார் பற்ற வொண்ணாப் படிமைகள் பார்த்தோ மில்லை; மடியிலா இமய நெஞ்சும் மன்னுயிர் வளர்ச்சிப் பற்றும் வெடிவிலா இனிமைப் போக்கும் வினைதொறும் விளங்கக் கண்டோம். 6 காந்தியேன் உயர்ந்தா ரென்று கருதுவார்க் குயர்ச்சி யுண்டு; மாந்தருள் தெய்வ மென்பார் வழியினை மறைப்ப ராவர்; தாழ்ந்தவர் திருந்த வேண்டின் தம்மவர் காந்தி யென்று தேர்ந்தவர் செயலின் நுட்பந் தெளிந்தவர் உயர்வர் மாதோ. 7 பிறப்பினில் மேல்கீழ் இல்லை பிறந்தபின் வாழ்ந்து மீளும் இறப்பினிற் சிறப்புண் டென்ன எந்தையால் தெளிந்தோம் மன்ற; மறப்பது தீது நெஞ்சே மாசறு வுடம்பி னோடும் துறப்பதுங் கொள்கை யாக்கித் தொண்டுகள் ஆற்றல் வேண்டும். 8 (2-10-1948) 3. திருவாசகச் சுவட்டில் வாய்மைப்பே ருயிரினையென் வாழ்வறியாக் காலத்தே தூய்மைப்பே ருடம்போடு தொடர்படுத்தித் தந்தபொருள் நாய்மைக்கு மிழிவாகி நாணின்றித் திரிந்தக்கால் தாய்மைக்கு முயர்வாகித் தகவொறுத்தல் செய்யாதென்? பிறந்தசிற் றுணர்ச்சிதான் பிறங்கிய நாள் முதலாகத் துறந்தபெரு நல்லொழுக்குஞ் சுவடற்றுப்போம் வண்ணம் இறந்தகழி காமத்துள் இடர்ப்பட்டுந் துய்ப்பேனை மறந்தனையோ காக்கநீ மறவாத தன்மையனே. 2 காமத்து நினைவன்றி யொருபொருண் மேற்காதலால் யாமத்துங் கெடுநினைவு யார்க்குமே நினைத்ததிலை; காமத்து நினைவொன்றே கயவற்குக் காணாதோ தாமொத்த பெருமானின் தாழ்வில்தாள் தாழ்ந்தனனே. 3 தினைத்துணைய மனத்திடமுஞ் சேணோங்கிச் சென்றொழியப் பனைத்துணைய நினைப்பென்னைப் பாழாக்குஞ் செயல்கண்டும் எனைத்துணைய பொருள்கட்கும் ஏற்றஞ்சால் எம்மோய்நீ மனத்தினைவை மாற்றாக்கால் மாணடிக்கோர் இழுக்கன்றோ. 4 செய்யாத வுறுதியோ செத்தொழியா மனத்திடமோ பொய்யாத நன்னாளோ புதிதறியாப் பாழ்சுவையோ துய்யாத தீநினைவோ இல்லையெனுஞ் சொல்லேனை நையாத நோய்தந்து நலிவிப்ப தெந்நாளோ? 5 பல்லாண்டுப் பழக்கத்தாற் படுங்காம நெடுங்குழியில் வல்லாண்டு வீழ்வேனை வழிதெரிந்தும் மாழ்வேனைச் சில்லாண்டு தெய்வஞ்சால் திருக்குறளின் வழிச்செலுத்தின் பல்லாண்டு கடந்தாற்குப் பாராட்டுப் பாடேனோ? 6 உறுதியிட்ட மனவொருமை உடையாமற் பெறவேண்டின் அறுதியிட்டுக் கூறுதும்யாம் அடகெடுவாய் மடநெஞ்சே சிறிதுபட்ட காமத்தூண் தீநினைவு வளர்வழிகள் மறதிபட்டுத் தூருமேல் மனக்கவலைக் கிடமுண்டோ. 7 பஞ்சனையாஞ் சுவைநினைவைப் பாயல்கொள உடன்கொண்டு வஞ்சனையால் வருங்காமம் வழியில்லை யெனமீள நெஞ்சினையான் அடைத்தமையு நீளுரமாங் கதவினுக்குத் தஞ்சமென அஞ்சலெனத் தாழாகத் தாளளிப்பாய் 8 சின்னாட்கள் காமத்தின் செருக்கடக்கி நின்றக்கால் பன்னாட்கள் வாழ்வனெனப் பாழாக மகிழ்வேனை என்னாவேன் கேட்டீயால் இறைவாநின் அருள்மறுத்துப் பின்னாவேன் காமத்தின் பேரடிமை யாவேனே. 9 நிறைமாசு சூழ்நெஞ்சை நெடுங்காமப்பேய்க் குடிலைத் துறைபோய வல்வினையின் தொலையாப்பே ரிருளகத்தை இறைமா சொன்றில்லாத எம்மானேஎன் செய்தாய் உறைவாழ்வாய்க் கொண்டாயால் உனக்கதுவோர் இழுக்கன்றே. 10 கூடாத தீநினைவைக் கொள்ளாதே யென்றுணர்த்தத் தேடாதே யூர்முழுதுந் தேடுவ போல நினைவெழுப்பிக் கோடாதே திறங்கெட்டுக் குன்றியபின் வலியிழந்து வாடாதே வீடாதே வழிதெரிந்தும் உழல்வதெவன்? 11 (24-11-1943) 4. உரிமைப் பாடல்கள் 1. எங்கள் தாயின் பெற்றோர்க்கு என்னை உடனைவர் ஏங்காதே வாழ்வளித்த அன்னை முதல்வர் அடிபணிந்தோம்; - பொன்னை உறவினர் வாழ உவந்தளித்தார்; ஆயுள் நிறைவினர் நின்ற நெறி. (மனைவியின் உரிமை: 1957) 2. அண்ணன் திருப்பதிக்கு எங்கள் குலமுதல்வன்; இல்லாண்மை ஏற்றமகன்; பொங்கல் மனைபோற் பொலிவுடையன்; - சங்கத் தமிழனைய தூயன்; தனைமறந்த தொண்டன்; கமழுங் குடிமைக்கோர் காட்டு. (1) குடும்பக் களத்துக் குறிக்கோட் படையால் இடும்பைப் புறங்கண்ட எம்முன் - நெடும்பொறையை வள்ளுவ நூலகத்து வாழ்வெண்ணிக் கற்பவர் கொள்ளுப நெஞ்சிற் குறித்து. (2) (வள்ளுவம்: 1953) 3. மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர்க்கு பார்காத்தார் ஆயிரம்பேர்; பசித்தார்க் காகப் பயிர்காத்தார் ஆயிரம்பேர்; பாலர்க் காக மார்காத்தார் ஆயிரம்பேர் வாழ்ந்த நாட்டில் மனங்காத்த தமிழ்த்தாய் “என் உடைமை யெல்லாம் யார்காத்தார்” எனக்கேட்க ஒருவன் அம்மா யான்காப்பேன் எனவெழுந்தான் சாமி நாதன்! நீர்காத்த தமிழகத்தார் நெஞ்சின் உள்ளான் நிலைகாத்த மலையிமய நெற்றி மேலான். 1 பொய்யாத தமிழ்க்குமரி ஈன்ற சாமி! போகாத புகழ்க்கன்னி மணந்த நாத! செய்யாத மொழித்தொண்டு செய்த ஐய! சிறுகாத நெஞ்சத்தேம் வணங்கு செம்மல்! எய்யாத திருவடியால் எண்பத் தாண்டும் இளையாத உள்ளத்தால் எங்குஞ் சென்று நெய்யாத தொன்னூல்கள் நிலைக்க வைத்த நீங்காத தமிழ்க்குயிரே! நின்தாள் வாழ்க! 2 (தமிழ்க்காதல்: 1962) 4. முதல்வர் அ. நா. தம்பிக்கு நாடாளுந் தமிழ்ச் சிறப்பு வகுப்புக் கண்டான் நாவளர்க்கும் கலைக்கழகம் நடக்கக் கண்டான் வீடாளும் முத்துசிவன் மலரும் கண்டான் விருந்துதமிழ்க் கலைவிழா விளங்கக் கண்டான் ஏடாளும் கொடையழகன் இனித்த வள்ளல் எடுத்தமுதற் கல்லூரி முதல்வ னாகி நீடாளும் ஏழாண்டு வளர்ச்சி கண்டான் நிறைகுணத்தன் பெருந்தம்பி நீடு வாழ்க. (கொடை விளக்கு - 1957) 5. காரைக்குடி இராமசாமி செட்டியார்க்கு பெற்ற தாயும் பெருமகிழ் வெய்த உற்ற கல்வியும் உண்டியும் அளித்து வருகுலம் பாராது வறிய சிறார்க்குக் குருகுலம் நடத்தும் ஒருதமிழ்த் தோன்றல்; 5 பள்ளிப் படிப்புக்குப் பற்பல ஆயிரம் அள்ளிக் கொடுக்கும் அறிவுடைக் கையன்; நாடும் குடிகளின் நலிவு நீக்கி வாடும் பயிர்க்கு வாய்க்கால் போல்வான்; தோட்டச் செடிகளைத் துடிக்க விட்டு 10 நாட்டு மரங்களை நாடாத் தொண்டன்; ஈட்டுஞ் செல்வர்க் கிதுபொருள் என்று காட்டும் வாழ்க்கைக் கடமைச் சான்றோன்; ஆதல் பெருக்கி அறங்கள் வளர்க்கும் ஈதல் நெறிமேற் காதல் உடையோன்; 15 தன்னெஞ் சுவப்பத் தன்கடன் ஆற்றுவோன் என்னெஞ் சறிந்த இயல்பு வள்ளல்; செயற்கைப் புகழைச் சிந்தை செய்யா இயற்கைக் கொடைஞன் இராம சாமி இல்லறம் தழைக்கும் இனியனைப் 20 பல்லறம் தழைக்கப் பாடுவம் நாமே. (இரட்டைக் காப்பியங்கள் - 1960) 5. கையுறைப் பாடல்கள் அறிஞர் சிதம்பரநாதனார்க்கு நாதன் சிதம்பரம் நந்தமிழ்ப் பேராசான் கோதில் அறிஞப்பேர் கொண்டவற்குத் - தீதில் பணிவுடையேம் கையுறைகாண் பண்டுதமிழ் பேணுந் துணிவுடையேம் கூத்தின் தொகை 1 பண்டிதமணி கதிரேசனார்க்கு புலமைக் கதிராற் பொதிநயங் காட்டித் தலைமை யொளிபரப்புந் தந்தை - கலையின் அடிதொழுவேம் கையுறைகாண் அன்பிற் றமிழக் குடிதொழுவேம் கூத்தின் தொகை. 2 புலவர் சிவனடியார்க்கு அடியான் சிவனம் அறிவிற் கினியான் நடியாத் தமிழர்க்கு நண்பன் - அடியானைப் போற்றுவேம் கையுறைகாண் பொய்யாத் தமிழ்க்கடமை ஆற்றுவேம் கூத்தின் அணி. 3 திருநாவுக்கரசுக்கு நாவுக் கரசன் நமக்கோ பழமையன் பாவுக் கினியதமிழ்ப் பண்பினோன் - வாழ்வுக்கு நட்புடையேம் கையுறைகாண் நன்றி மறக்ககில்லாப் பெட்புடையேம் கூத்தின் பிணிப்பு. 4 (மனைவியின் உரிமை என்ற என் நாடகநூல் அன்பளிப்பு 29. 9. 1947) 6. வள்ளல் அண்ணாமலையரசர் 1. கலைவணங்கு சிலை கலைவணங்கு சிலையாளன் கண்கள் காணக் கடவுள்சால் தமிழிசைபாற் காதல் ஆனோன்; மலைவணங்கு நிலையாளன்; மன்னர் மன்னன் வரலாறுபுதுப்பித்த வாழ்க்கைச் செல்வன்; அலைவணங்கு வணிகத்தான்; ஆற்றல் சான்ற அன்புருவ முத்தையவேள் தந்தை; தில்லைத் தலைவணங்கு கொடையண்ணாமலையன் தன்னைத் தமிழகத்தார் குறளகத்தார் மறவார் அம்மே. 1 வெயில் சிரிக்கும் வேட்களத்தைச் சோலை யாக்கி விரித்தகருங் கூந்தலொடு பந்தும் ஏந்திக் குயில்சிரிக்கும் தமிழ்மொழிந்து குளிர்ந்த புல்மேல் குதிசெருப்புக் குலுங்காமற் குலவி யாடி மயில்சிரிக்கும் மலைநகரை அமைத்தான் மன்னோ மறுபிறப்புக் கரிகால மன்னன் ஆவான்; துயில்விரிக்கும் மேகங்கள் மேலே பார்த்துத் துளிவீச மாட்டாமற் சொக்கி நிற்கும். 2 குனித்தவடி நடம்பயிலும் தில்லை மண்ணில் கோதற்ற தமிழ்நடமும் காண வேண்டித் தனித்தபெருங் கொடைமழையால் கழகம் கண்டான்; தமிழ்மன்னன் என்ற பெரும்புகழும் கொண்டான்; இனித்ததேன் இறால்போலும் எந்தை மைந்தன் இணைவேந்தர் முத்தையவேள் வாழ்க என்று பனித்தசடை கனல்விரிக்கும் கூத்தைக் கண்டு பற்றோடு தமிழ்சூடிப் பணிவம் நாமே. (நாண் மங்கல வாழ்த்து : 24-7-1971) 2. கலைப்புரட்சியாளன் பாலகத்துச் சுவையொப்பான் பண்ணகத்துத்தமி ழொப்பான் நூலகத்துக் கவியொப்பான் நுண்ணகத்து மதியொப்பான் வேலகத்துப் பிடியொப்பான் விருந்தகத்துத் தனையொப்பான் ஆலகத்து நிழலொப்பான் அரசண்ணா மலையானே. 1 நில்லாத செல்வத்தை நிலைக்கச் செய்தான்; நீங்காத கலைப்புரட்சி நிரம்பச் செய்தான்; கல்லாத இனமெல்லாம் கற்க வைத்தான்; காணாத பெருங்கழகம் களத்து வைத்தான்; இல்லாத புலவர்களை இருப்போர் ஆக்கி இணையாத தமிழ்ப்புகழை ஈட்டிக் கொண்டான்; வெல்லாத செயலில்லை என்று போற்ற விளங்கியவன் மன்அண்ணா மலையன் வாழ்க. 2 மணிகாட்டும் கோபுரம்போல் உயர்ந்த நெஞ்சும் மலைகாட்டும் அகலம்போல் விரிந்த நோக்கும் பணிகாட்டும் திருக்குறளிற் படிந்த வாழ்வும் பதவியெலாம் படிபோலக் கடந்த பாங்கும் அணிகாட்டும் தாமரையாள் அடைந்த மார்பும் ஆரையுமே உறவாக அணைக்கும் கையும் பிணிகாட்டும் மருத்துவன்போல் பேணும் அன்பும் பெற்றதமிழ் முத்தையவேள் பெரியோன் வாழ்க. 3 அங்கை கொடைபயின்ற அண்ணா மலையரசே! பொங்கு கடல்பிறவாப் பொய்தீர் தமிழ்முத்தே! உங்கள் கொடையால் உயர்ந்தகுடி எத்தனையோ? சங்க நடையேபோல் சான்றோர் தரமேபோல் 5 வங்கப் புகழ்கொண்ட மாணவர்தாம் எத்தனையோ? எங்கள்பால் நீவிர் எதிர்பார்ப்ப தொன்றுமிலை; இங்கண் ஒளிபெற்ற எம்போலும் மாணவர்கள் உங்கட்குச் செய்யும் உறுநன்றி ஒன்றுண்டு. தெங்கு நிரையேரி; தேனின் இசைப்பள்ளி; 10 கொங்கு மலருதிரும் கூந்தலார் ஆடுகளம்; துங்கக் கலைகள் தொடர்ந்த முதுதுறைகள் எங்கும் உவமையிலா எங்கள் கழகத்தைப் பங்கப் படாமல் பழுதொன்றும் செய்யாமல் மங்குங் குறைச்செய்தி மற்றொருவாய் கூறாமல் சங்கின் புகழுக்குத் தாழ்வேதும் நேராமல் கங்குல் பகலெல்லாம் கல்வியிலே கண்ணிருத்தித் தங்கக் கழகமெனச் சாற்றுவோம் எங்கோவே. 4 (நாண்மங்கல வாழ்த்து: 5 - 4 - 1973) 3. தமிழிசையாளி ஈட்டுகின்ற ஒருவழிதான் வழியாக் காண்பார்; எடுத்துவிடு மறுவழியும் உண்டென் றெண்ணார்; காட்டுகின்ற நல்லறத்தைக் கனவும் காணார்; கதிபணமே என்றிருக்கும் கலிசூழ் நாட்டில், ஈட்டுகின்ற திருக்குறளை எழுதிக் கொண்டோன் இயற்றலொடு கொடுத்தலையும் இணைத்துக் கொண்டோன் கூட்டுகின்ற புகழென்னும் அருவி யெல்லாம் கூடிவரும் மலையண்ணா மலையே யன்றோ. 1 உனக்கினிய புகழ்கேளாய்! உலகம் காணா ஒருகொடையால் கலைக்கழகம் கண்ட செல்வன்; தனக்கினிய நெறியாளி; தளர்ந்து நின்ற தமிழ்த்தாயின் இசையாளி; சார்வோர்க் கெல்லாம் மனக்கினிய கொடையாளி; மதிஞர் பாடும் வாய்க்கினிய பாட்டாளி; வள்ளல் வள்ளல்; எனக்கினிய தமிழாளி; இவனைப் பாட எவர்பிறந்தார் அவர்பிறப்பும் போற்றி போற்றி. 2 அன்றெழுந்த மலர்முகத்தான் அருளும் நெஞ்சன் அணைத்தணைத்து விருந்தோம்பும் அறத்துச் செம்மல் நின்றெழுந்து வழிவிடுக்கும் நீண்ட தோளன் நிற்பாரை இருவென்னும் நிறைந்த சொல்லன் தொன்றெழுந்த தமிழ்க்கொடிக்குப் பாரிபோல்வான் துள்ளுதமிழ் மயிலினுக்குப் பேகன்போல்வான் கன்றெழுந்த ஆப்போலக் கனிந்த மன்னன் கலைவள்ளல் முத்தையவேள் காட்சி வாழ்க. 3 அண்ணா மலையின் அகலப் பெருங்கொடையால் எண்ணாத வாய்ப்பெல்லாம் ஈண்டிக் கிடக்குமிடம்; பண்ணார் தமிழ்வழங்கும் பல்லார் துறைவளரும் கண்ணார் இருகுளங்கள் கண்ணாடிபோன்றிருக்கும் 5 அண்ணா மலைநகரைப் பாடாதார் யாருண்டு? யாழ்நூல் நுனித்தெழுதி ஏழிசை காத்தவன் வீழ்புலன் வென்ற விபுலாஅ னந்தரும், செல்வம் கருதாச் சிறந்த தமிழ்ச் செல்வன் கல்வி நிறைந்தநற் காசுப் பிள்ளையும், 10 அச்சமோ இல்லான் அருந்தமிழைப் போற்றாரைத் துச்சமாய்த் தூற்றிய சுந்தர பாரதியும், ஏட்டிற் சிறந்த எழில்வா சகமென்னும் பாட்டின் நயங்கூறு பண்டித மாமணியும், துங்கப் பெருமிதத்தன் தோலா உரையாளன் 15 சங்க நடையாளன் தன்னிகரில் நாட்டாரும் ஆரும் தொழத்தக்க அண்ணா மலையரசால் பாரி கதைதொடுத்த பண்பார் இராகவனும், நேர்மை வினைத்திட்பம் நீங்காத் தமிழ்த்துடிப்புச் சீர்மை பொழிந்த சிதம்பர நாதனும், 20 நாடு புகழ் கம்பருக்கு நல்ல பதிப்பெடுத்துக் கூடுபுகழ் கொண்டவொரு கோசுப் பிள்ளையும், மாசிரியப் பாடங்கள் மதிபெருகச் சொல்வன்மை ஆசிரியச் செம்மல் அருணா சலனாரும் போற்றித் தமிழால் புகழ்ந்த மலைநகரை 25 ஆசிரியர் என்னும் அறிவுலகம் உள்ளவரை மாணாக்கர் என்னும் மணியுலகம் உள்ளவரை தில்லைநகர்க் கூத்தன் திரும்பாமல் ஆடுவரை மல்குதுறை கூடி வளர்கவென வாழ்த்துவமே. (நாண் மங்கல வாழ்த்து: 30 - 9 - 1973) 4. புகழ்வளர் வள்ளல் பாடுகின்ற புலவோர்க்குப் பாலாய் நின்றான்; பற்றிழந்த தமிழிசைக்குப் பதியும் ஆனான்; ஓடுகின்ற செல்வத்தை உறுதி செய்தும் ஒப்புரவாற் பெருங் கழகம் ஒன்று கண்டும் நாடுகின்ற கலையெல்லாம் நகரில் வைத்தும் நாமெல்லாம் கற்கவழி வகுத்துத் தந்தான்; ஆடுகின்ற கூத்தன்தன் அருளைப் பெற்ற அண்ணா மலையெங்கள் அரசே போற்றி. 1 தந்தைவழி நடக்கின்ற தகைசால் மைந்தன் தமிழிசைக்கு மதுரையிலும் மன்றம் கண்டோன்; சிந்தைவழி திறம்பாத செல்வக் கோமான் சென்னையிலும் தமிழாய்வுக் கழகம் செய்தோன்; நிந்தைவழி செல்லாத நெறிமை யாளன் நெஞ்சமரும் விருந்தாளன் நேர்மை யாளன் முந்தைவழி முத்தையவேள் வாழ்க என்று முத்தமிழால் இணைவேந்தை மொழிவம் நாமே. 2 பல்கலையாம் கழகத்தைக் கட்டி யாளல் படையாளும் வேந்தர்க்கும் ஆமோ? ஆமோ? தொல்கலையாம் உளத்துறையில் உலக றிந்தோன் சொற்பொறுமைத் துணைவேந்தன் தூயதோன்றல் பல்கிவரும் சிக்கல்களைப் பரிந்து கேட்டுப் பதமாக முடிக்கின்ற பதவி மேலோன் அல்கவரும் ஞாயிறுபோல் அறிவுச் செம்மல் ஆதிநாரா யணனெனும் அறிஞன் வாழ்க. 3 இத்தகைய பெருநலங்கள் யாரே பெற்றார்? ஏழைமலி இந்நாட்டில் பெற்ற நாமோ எத்தகைய சூழலிலும் கல்விச் செல்வம் ஈட்டுகின்ற நாளன்றோ இருப்பு நாளாம்; புத்தகமும் ஆய்வகமும் போற்றி வாழும் புதுவாழ்க்கைச் செயலன்றோ புரட்சி யாகும்; பொய்த்தகைய உணர்ச்சிகளைப் புறமே வைப்போம்; புகழ்வளரும் வள்ளலுக்குப் போற்றி செய்வோம்; 4 (நாண்மங்கல வாழ்த்து 28-6-1975) 5. கல்வி வளர்தெய்வம் பாராளும் மதிநுட்பம் படைத்தான் என்கோ! பல்துறைசேர் கலைக் கழகம்படைத் தான் என்கோ; ஊராளும் கண்ணோட்டம் உடையான் என்கோ; உறுமெதிர்ப்புக் கண்டஞ்சி உடையான் என்கோ; சீராளும் தமிழிசைக்குத் தந்தை என்கோ; செழுந்தமிழ்வேள் முத்தையனார் தந்தை என்கோ; காராளும் கொடையண்ணா மலையான் தன்னைக் கல்விநலக் கண்ணளித்த தெய்வம் என்கோ; 1 சங்கநூற் கடல்தந்த சாமி நாதன் தமிழிசையாழ் நூல்செய்த தவத்துச்செம்மல் பொங்குகவி இராகவனாம் புலமைத் தோன்றல் புதுநயஞ்சொல் பண்டிதமா மணியெம் மாசான் துங்கமுயர் பாரதியார் தூய காசு தொல்லுரைசெய் நாட்டாரும் நாமும் எல்லாம் தங்கநிகர் மங்கலங்கள் பாடப் பெற்றோன் தமிழண்ணா மலைவேந்தன் தலைமை வாழி. 2 பெண்தந்த குடும்பத்தைப் பேணார் இல்லை; பேணாக்காற் பொறுக்கின்ற பெண்ணும் இல்லை; மண் தந்த மனைதந்த மதியுந் தந்த மாபெரிய கடவுளரை வணங்கார் இல்லை எண்தந்த இயல்தந்த இசையுந் தந்த எதுகல்வி யென்றறியா எங்கட்கெல்லாம் கண்தந்த மலையானை மறக்க மாட்டோம் கண்ணிருந்தும் மறப்பாரை மதிக்க மாட்டோம். 3 எழுகின்ற ஞாயிறுபோல் எண்ணங் கொண்டோன்; இணைந்துநின்று மனங்குளிர இன்சொற் சொல்வோன்; உழுகின்ற கொழுமுனையின் ஒளியே போல உயர்கல்வி விழைகின்ற அறிவுக் கண்ணோன்; வழிகின்ற தேன்போலும் தமிழ்கள் வாழ வாரிபோல் வழங்கிவரும் மரபு வள்ளல்; தொழுகின்ற கூத்தனடி மறவா அன்பன் தொண்டுபுகழ் முத்தையவேள் துலங்கி வாழ்க. (நாண் மங்கல வாழ்த்து 22. 9. 1976) 6. முத்தைய வேள் மணிவாழ்த்து வாழ்க முத்தைய மன்னவன் வாழ்க; வாழ்க மனையொடு மக்களும் வாழ்க; பல்கலைக் கழகமும் பண்ணார் இசையும் தொல்கலைத் தமிழும் சூழ வகுத்த 5 அண்ணா மலையெனும் அரசப் பெருந்திறல் கண்ணார் மணியெனக் கவின்புகழ் பெற்றோய்! தந்தை தொடங்கிய தனிப்பேர் அறங்களை முந்தி வளர்க்கும் முத்தைய வேந்தே! பல்வகைப் பட்டமும் பன்னிலைப் பதவியும் 10 செல்வகை எய்திய செட்டிநாட் டரச! வங்கித் துறையும் வணிகத் துறையும் அங்கம் சிறந்த அமைச்சுத் துறையும் தங்கம் போலத் தாங்கிய பெரும! அன்னைத் தமிழிசை ஆய்வொடு பரவச் 15 சென்னை நகரில் சிறப்புடைத் தந்தை மன்னன் பெயரால் மன்றம் கண்டோய்! எளிமையும் இரக்கமும் இனிமையும் மிக்கோய்! அளிமையில் அன்பினில் ஆற்றலிற் சிறந்தோய்! யாதும் ஊரே யாரும் உறவெனப் 20 பேதம் இன்றிப் பிறநலம் செய்வோய்! ஆறுபத் தாண்டின் அணிமணம் கண்டோம் நூறுமிக் காண்டும் நோயின்றி வாழ்க; குடிதொழு தெய்வக் கூத்தன் அருளால் படிதொழு வாழ்க்கைப் பன்னலம் பெற்று மேன்மை சிறந்த மெய்யம்மை அரசியொடு கோன்மை உயர்ந்து கொடிவழி வளர்கெனப் 27 பான்மையிற் கூடிப் பரவுதும் யாமே. (26 . 6. 65) 7. நூறாண்டு வாழ்க கண்ணிறைந்த மேனியனைக் கவினிறைந்த பெயரானைப் பண்ணிறைந்த தமிழிசைக்குப் பற்றாகி நிற்பானை மண்ணிறைந்த புகழானை மதியானை நிதியானை உண்ணிறைந்த மனத்தாலே ஒருநூறும்வா ழ்த்துவனே. 1 தனக்குநிகர் இல்லானைத் தந்தையாய்ப் பெற்றானை நினக்குநிகர் இல்லென்ன நேயமாய் நின்றானை மனக்குநிகர் சொல்லானை மணியானை அணியானை எனக்குநிகர் இல்லென்ன எழுநூறும் வாழ்த்துவனே. 2 தெரிந்தவரைக் கண்டக்கால் சிறியவரே யானாலும் எரிந்தவர்மேல் வீழாமல் இடங்கொடுத்து முகநோக்கிப் பரிந்தவரை நலம்வினவிப் பண்போடு விடையளிக்கும் விரிந்தமனம் உடையானை மேல்நூறும் வாழ்த்துவனே. 3 குலம்வாழ இனம்வாழக் குறள்பெற்ற மொழிவாழப் புலம்வாழச் செய்கின்ற புலவரெலாம் நனிவாழ நலம்வாழப் பாரதத்தார் நாடாளும் செயல்வாழ நிலம்வாழப் பிறந்தானை நீடூழி வாழ்த்துவனே. 4 8. மாபெருந்தேவி (கையறு நிலை) 1. வருந்தும் உலகம்; வருந்தும் உலகம்; பருந்தின் அகம்போல் பசியுடை ஏழையர் அருந்த உணவும் அன்பும் ஊட்டிய மருந்து போன்ற மாபெருந் தேவி விருந்தாய் வானத்து விளங்கினாள் என்று வருந்துமே உலகம்; வருந்துமே உலகம்; 2. சுற்றம் கலங்கும்; சுற்றம் கலங்கும்; பற்றென வருவார் பணிமொழி கேட்டுக் கற்றா மனம்போல் கசியும் கண்ணும், உற்றார் துயரை ஒண்பொருள் வழங்கி அற்றம் துடைக்கும் அருளார் கையும், கண்டிட வருவார் கணக்கி லாரை உண்டிடு கென்னா உரைதரு நாவும் மண்டிணி ஞாலத்து மறைந்தன என்று நற்றாய் அரசியின் நற்குணம் சொல்லிச் சுற்றமோ கலங்கும்; சுற்றமோ கலங்கும்; 3. புலம்புவர் புலவோர்; புலம்புவர் தமிழர்; நலம்பல குன்றிய நற்றமிழ்த் தாய்க்கு வலம்பல செய்தோன் வளரிசை காப்போன் பதவி எனைத்தும் பண்பொடு வகிப்போன் உதவி அனைத்தும் உவப்பச் செய்வோன் நாடும் அரசும் நட்புக் குழாமும் ஏடும் புகழும் இன்மொழித் தலைவன் முத்தமிழ்வள்ளல் முத்தைய வேந்தன் 4. “ஒத்த கருத்தினள் உணர்ந்த வாழ்க்கையள் எத்திறத் தாலும் இணைந்த இல்லவள் பத்தினி மெய்யம்மை பணிவுடைக் கோமகள் இத்தரை நீத்தாள் வாராள் இனி”யென நித்தம் நினைந்து நினைவாற் கலங்கும் அரைசர் தமக்கோர் ஆறுதல் சொல்ல உரைகள் எம்பால் உளவோ என்று கரைகுவர் புலவோர் கையறு நிலையே. அரசி மெய்யம்மை நினைவுமலர் (21. 11. 1970) 9. எத்தமிழால் யாப்பேன் (கையறு நிலை) வேண்டு புகழ்பெற்றேம் வேண்டுதும் யாம்வீடென்று ஈண்டகவை நாற்பதில் ஏகினையோ? - தூண்டும் நினைவுமலர் கொள்வான் நினைந்தனையோ? நாங்கள் இனைவுமலர் பாட எடுத்து. 1 விளையாடு சங்கத்து வீர; உயிரை விளையாடு மாறு விடுத்தாய்; - உளையாடு துன்பக் கடலுக்கோர் தோணிபுரம் காணோமே அன்புக் கடலுள் அணைந்து. 2 அண்ணா மலையரசர் அன்பே; தமிழ்ப்புலவோர் கண்ணான முத்தையவேள் கண்மணியே; - பண்ணான முத்தமிழ்க்கு வாய்த்த முதன்முத்தே; உன்பிரிவை எத்தமிழால் யாப்பேன் இனி. 3 ஏறுபோல் தோற்றம் இளவரசர் முத்தையர்க்கு ஆறுபோல் செல்லும் அழகுடைமை; - சாறுபோல் சொல்லுடைமை; சோர்வில் துணிவுடைமை; யாவர்க்கும் நல்லுடைமை நம்பி குணம். 4 வங்கித் தொழிலோ வளமார் வணிகமோ பொங்கும் புரவிநடைப் போரியலோ - தங்கி வெளிநாடு காணும் விருப்போ இளவற்கு எளிதாக வந்த இயல்பு. 5 ஆற்றதுமே நாங்கள்; அரசிளவல் முத்தையன் மாற்றுவழி யில்லா மனத்துயரைப் - போற்றி ஒருநாள் தமிழ்க்குடியில் உட்பிறப்பான் என்று வருநாளை எண்ணி மதித்து. 6 (இளவரசர் முத்தையா நினைவு மலர்) 23 - 10 - 1970 10. தமிழிசை மலர்ச்சி மகனே! மகளே! மழலை வாயால் ஒண்டமிழ்ப் புலவோ ரொருங்கே பாடிய அண்ணா மலையெனு மப்பெயர் சொல்வீர்! மகனே! மகளே! மகிழ்தரு கண்ணால் 5 யாவரு மெங்கணுங் காண விழையும் அண்ணா மலையி னவ்வுருத் தீட்டிய பண்ணார் படத்தின் பாங்கினைப் பார்ப்பீர்! ஒண்டொடி அமிழ்தென வெச்சிலை வுமிழும் பிள்ளையை 10 இமிழ்கடல் வரைப்பி லென்றோ பிறந்த தமிழ்தரு இசையொடு தாலாட்டு காலை ஒண்ணார் விழையும் ஒப்புர வுடைய அண்ணா மலையெனும் அவனை மறவேல்; அவன்றன், 15 தொல்கலைக் கிடமாய் எல்கதிர் போலும் பல்கலைக் கழகப் பதியை மறவேல்; இசையொ டியைந்த ஏத்தினை மறவேல்; அசைவி லூக்கத் தமைவினை மறவேல்; கொடைதான் பிறந்த நெடுங்கை மறவேல் 20 படைதான் எடாஅ அரசினை மறவேல் மறவேல் அவனைச் சுட்டி உறவே வுணர்வுற வுறங்கச் செய்கென். தமிழிசையை உயிர்ப்பித்து அதன் வளர்ச்சி கருதி வெண் பொற்காசு பதினாயிரம் அளித்த வள்ளல் அண்ணாலை யரசைப் பாடியது. (23. 9. 1941) 7. பாராட்டுப் பாடல்கள் 1. திருவாசகவுரைப் பாராட்டு புலமையே உருவம் ஆனோன்; புலவர் தம் பாடல் பெற்றோன்; தலைமையே அவையிற் கொண்டோன்; தமிழ்மகள் தவத்திற் றோன்றி நிலைமையை அறிந்து தாயின் நிலைமொழி கல்லா மக்கள் கலைமையைச் சுவைக்கச் செய்தோன் கதிரவத் தோன்றல் என்ப. 1 திருவாசகத்தேன் திருந்தியல் அடிகள் நூலைத் தேனென்ற பெரியோன் சொல்லைப் பொருந்தவே கருத்திற் கொண்டு புகழ்நின்ற எழுத்துத் தோறும் மருந்தினும் அரிய தேனை மணியனார் உரையே காட்டும் வருந்தினார் காணாத் தேனை வகையொடும் உண்ண வாரீர்! 2 கதிர்மணி விளக்கம் சைவத்தின் ஒழுக்கங் காட்டிச் சமயங்கள் கடந்து நிற்கும் தெய்வத்தின் விழுப்பங் காட்டித் தெளியாரும் ஒப்ப வேண்டி வையத்தின் வழக்கங் காட்டி வகுத்தநல் லுரையைக் கண்டேம் கையொத்துத் தொழுது சொல்வேம் கதிர்மணி விளக்கம் வாழ்க. 3 உரையின் வீறு சொல்லியற் கரையன் போலும்; தொன்மறைக் கழகன் போலும்; புல்லியல் பிறவி போக்கும் போதக்கு முனிவன் போலும்; மெல்லியல் கோவைக் கொப்ப விரிசெய்த ஆசான் போலும்; கல்லியல் கனியுஞ் சொற்குக் கதிரவ மணியன் என்க. 4 நீடு வாழ்த்து நாடுசெய் தவத்தி னானும் நற்றவ அடிகள் செய்த ஏடுசெய் தவத்தி னானும் இயற்றமிழ் நூல்கள் எல்லாம் பாடுசெய் தவத்தி னானும் பண்டித மணியோன் எந்தை நீடுசெய் புகழோன் வாழ்க; நீள்தமிழ் நிரம்ப வாழ்க. 5 (பண்டிதமணி எழுதிய திருவாசகத் திருச்சதகத்தின் கதிர்மணி விளக்கம் என்ற உரையைப் பாராட்டியது : 17. 12. 1947) 2. சிவன் சுவடி காலத் தனிமைக்கோர் கைச்சுவடி கொண்டசிவன் மூலச் சுவடியோ டென்செய்வான்? - நீலக் கழுத்தழகா எந்தை கதிர்விளக்கஞ் சேர்ந்த விழுத்தப் பதிப்பொன்று வேண்டு (பண்டிதமணியின் திருவாசக வுரையான கதிர்மணி விளக்கத்துக்குப் பாராட்டு 13 .8 . 1953) 3. முருகன் நூல் 1. என்னுடன் கற்ற இளநந்தன் செவ்வேளை மன்னும் வலிதீரப் பாடினனால் - உன்னும் நினைவிலே வந்து நிலைப்பான் தமிழின் சுனையிலே தோன்றுஞ் சுடர். 2. மருந்தினால் தீரா வயிற்றுவலி வேலின் விருந்தினால் தீர விழைந்தான் - பொருந்தினால் வேலன் அடியே விழைமினோ அவ்வடிகள் காலனும் அஞ்சுங் கழல். (வகுப்புத் தோழர் சீரானி நந்தகோபாலன் பாடிய செந்தூர் முருகன் செய்யுட்கோவை என்ற நூலுக்குப் பாராட்டு 20 - 12 - 1971) 8. வாழ்த்துப் பாடல்கள் 1. நாவுக்கரசன் நன்மணவாழ்த்து தமயனின் முடங்கல் வண்ணம் தம்பியின் கண்கள் காண்க; இமயத்தின் எல்லை கண்ட எந்தமிழ் என்றும் வாழ்க; தமயன்தான் கொண்ட வாழ்வைத் தம்பியுங் கொள்வான் காணுஞ் சமயத்தின் அருமை கேட்டுத் தமிழ்த்தொடை தீட்டு கின்றாம். 1 செல்வழி யறியா மாந்தர் சிறுமதிப் பயிற்சி ஒன்றோ ஒல்வழிப் புழைகள் தோறும் உடற்றிறங் குறைக்கு நோய்போல் பல்வழிச் செலவும் வேண்டாப் பழக்கமும் குலமுங் கண்டாய் இல்வழிச் செலவின் வாழ்வை இன்னாமை என்று காட்டும். 2 வாழ்வினிற் குறிக்கோ ளற்று வாழுமா றறியாப் பேதை ஆழ்கடல் வங்கச் செல்வம் அகத்தமி ழன்ன கோதை ஏழ்புகழ் இளங்கோ போலும் இவன்புகழ் கண்ணை போலும் சூழ்தரு மக்கள் பெற்றுந் துன்பந்தான் காணுமாறே. 3 மனவழி ஓட்டம் பொய்ப்பின் மதிவழி ஒழுகுந் தன்மை இனவழி கெடுதல் காணின் எதிர்வழி பற்றும் உள்ளம் நினைவழி வறுமை யின்றி நெறிவழி வருவாய்க் கேற்ப வினைவழிச் செலவு செய்து மேல்வழி உள்ளும் நோக்கம்; 4 எண்வழி எல்லாம் எண்ணி இடங்கழி காம மூர்ந்து கண்வழி இழுக்கப் பட்டுக் காமனே ஆன போதும் விண்வழி உயர்ந்து சென்றும் வெளிமனம் குறுகப் பெற்ற பெண்வழிச் செல்லாப் பேறு பிறமகள் நினையா ஆண்மை; 5 ஒன்றிய உணர்ச்சி யன்பால் உடன்பிறப் பாய தம்பி கன்றிய கலவி மிக்குக் காதல்வாய்ப் பட்ட காலை பொன்றிய நோய்கள் நும்மின் புதுமேனி பற்றா வண்ணம் பின்றியல் இரங்கா வண்ணம் பின்னறிவு உடையன் ஆக. 6 வாழ்வினிற் குறிக்கோள் பெற்றோம்; வாடாத உள்ளம் வாய்த்தோம்; தாழ்வினை என்றுந் தாராத் தாய்க்கல்வி தழைக்கக் கற்றோம்; வீழ்வினை உரத்தால் மாய்த்த மேலவர் வரவு கண்டோம்; ஊழ்வினை இடையில் நிற்பின் உயர்குறள் மறக்க கில்லோம். 7 நல்லவை உள்கு வாரும் நாடொறுங் கலக்கஞ் செய்யும் அல்லவை படுவர் கண்டாய்; அறிவுதான் மயங்குங் காலைப் பல்லவை கற்பின் நெஞ்சிற் படுவுரன் குறைந்து போகும்; புல்லவை நகுக வென்னும் புதுச்செயற் குறளே கற்க. 8 வெறுமண வாழ்க்கை வேண்டேல் விதியெனும் நினைவு வேண்டேல் நறுமண வாழ்க்கை வேண்டும் நல்லவர் நினைவு வேண்டும் சிறுமையின் உள்ளங் கொண்ட சில்லவர் தூற்றுக் கஞ்சேல் பொறுமையின் கருவி கொண்டு புதுநலத் தடங்கள் காண்க. 9 மனைவியின் உள்ளங் கற்று மனத்தது மாசு போக்கி நினைவினை நின்ன தாக்கி நீடுவாழ் கென்பேமி யாமே; வினையெனும் விருந்து பேணி விளைவெனும் மக்கள் பெற்றுப் புனைவருந் தமிழே நினைவாப் பொதுநலத் தொண்டு செய்க. 10 (12 - 1 - 46) 2. தம்பி மணவாழ்த்து ஒற்றுமை சிறந்த தம்பி உடன்பிறப் புடைய நம்பி நற்றுணை வாழ்க்கை நீயும் நடத்துநாள் அணுகப் பெற்றாய்; கற்றநல் லறிவி னோடும் கருத்தறி மனைவி யோடும் முற்றநல் மகவி னோடும் முழுதுநாள் இனிது வாழி. 1 குழவியாய் ஐவர் நம்மைக் குற்றமில் தந்தை தாயர் அழுகையாய் உலகில் விட்டே அவனடி சேர்ந்த அந்நாள் மழலையிவ் வகையில் மக்கள் வாழுமா றெங்ஙன் என்று தொழுகையாய் விதிமே லிட்டுச் சோர்ந்தனர் கேட்ட மாந்தர். 2 தந்தைநல் லெண்ணத் தாலும் தாய்த்தெய்வம் பிறந்த வீட்டுத் தந்தைநல் லருளி னாலுமத் தாயின்நற் காப்பி னாலும் முந்தியே பிறந்த அண்ணன் முழுதறி பொறுப்பி னாலும் இந்தமா வாழ்வை நாமும் இன்றுநாள் எய்தல் உற்றோம். 3 துன்பமே பெருக்கு ஞாலச் சூழ்நிலை கடக்க வேண்டின் இன்பமே மறத்தல் வேண்டும் எண்ணமே திண்மை வேண்டும்; அன்பொடு கலந்த நெஞ்சும் அறிவொடு கலந்த சொல்லும் வன்பொடு கலந்த மெய்யும் வாய்மையோ டிருக்க வேண்டும். 4 பிறந்தகுலம் உயர வேண்டும் பிணிமூப்புத் துன்பம் நீக்குஞ் சிறந்ததமிழ் பயில வேண்டும் திருக்குறளே அகத்து வேண்டும் அறந்தவறா இன்பு வேண்டும் அடுஞ்செலவு குறைக்க வேண்டும் கறந்தபாற் றூய்மை வேண்டும் கனிந்தபழ நெகிழ்ச்சி வேண்டும். 5 ஒன்றுநான் உரைப்பன் தம்பி உலகமே சான்று காண்க நன்றுநாம் வாழ வேண்டின் நமக்குள்ளே ஒருமை வேண்டும் ஒன்றுதாய் வயிற்று மக்கள் ஒற்றுமைக் குறைவா லன்றோ வென்றுவாழ் பெருமை யின்றி விலங்கின மாக்கள் ஆனார். 6 பெண்வழிச் செல்லா வாண்மை பிணக்கினைப் பொறுக்கும் ஆற்றல் கண்வழி இமையைப் போலும் கருமமாய்க் குடியைப் போற்றல் பண்வழித் தமிழே போலும் பயனுள கொடுத்துக் கொள்ளல் மண்வழி ஒருமை செய்யும் மயக்கமில் மருந்து கண்டாய். 7 கடவுளின் அருளை வேண்டு கடனறி அண்ணன் தானும் உடன்வழி மகப்பே றெய்தி உட்கவல் நீங்கி வாழ்க திடனுறை கல்வி ஈட்டித் திறமெனுங் கருவி கொண்டு மடனறி மனைவி மக்கள் மனங்கவர் தலைவ னாவாய். 8 (15-7-1948) 3. மாணிக்க வாசகன் மணவாழ்த்து உள்ளம் உவப்ப உயர்வழி நிற்க! புதுவழி காட்டிப் புலம்பல தொடுக்கும் நந்தமிழ் நாட்டிற் செந்தமிழ் அன்னைக்கு எளிதிற் பாடி இன்கவி சூட்டும் மதிநலம் மிக்க மாணிக்க வாசக! உண்மையும் அதன்கண் நன்மையும் போல இல்லாள் தன்னொடும் இல்லறம் நடாத்துக! ஆண்மை பெண்மை அணைந்த ஒருமையால் காட்ட இயலாப் பாட்டுக் காதலால் வீரம் ஈண்டிய தீரரைத் தருக! நீண்டநாள் நிலவுக! வேண்டுவல் ஒன்றே! இயற்கையோ டியைந்த யின்பந் தழுவி மயற்கை அயற்கை யின்றிச் செயற்கை போற்றிச் செல்வமொடு வாழிய. 1 புத்துணர்வு பெற்றோயே! புதுவுள்ளம் படைத்தோயே! புலமை வீசும் எத்துணையோ பாவேட்ப அத்துணையும் அருளவல்ல ஆற்றல் கொண்டோய் சித்திரம்போல் வயல்செழித்த சேந்தவுயர் மங்கலத்தில் செய்ய நல்லாள் ஒத்துரிமை பெற்றுநிற்க உலகுக்கோர் வழிகாட்டி உயரு வாயால். 2 இன்பத் துயரும் இருபாலீர் அஃதின்றாம் துன்பத் துழலா விடின். 3 (வகுப்புத் தோழர் சேந்தமங்கலம் மாணிக்க வாசகன் மணவாழ்த்து) 4. நண்பர்க்கு அறிவு வாழ்த்து புகழ்தந்து நாகரிகப் பொருள்தந்து நூன்முறையை இகழ்தந்து பாட்டெனவும் இயற்றுவார் பல்கினரால் திகழ்தந்த பாநெறியைத் தெரிவந்த அறிவினைநீ மகிழ்தந்து பாடாது மடிபுகுந்து கிடப்பதெவன்? 1 உமிழ்தக்க ஒலியானும் உவர்த்தக்க சொல்லானும் தமிழ்தக்க பாட்டெனவே சாற்றுவார் பல்கினரால்; கமழ்தக்க ஒலியானும் கனிதக்க சொல்லானும் அமிழ்தொக்கும் பொருட்பாவை அளிப்பநீ தயங்குவதென்? மடிதொட்ட போர்வைக்குள் மார்பொட்டி மயங்குநீ இடிதொட்ட எங்கூற்றுக் கிசைந்துவந்து பாடாயேல் தொடிதொட்ட இல்லறத்தோய் தொல்லோர் தந்நூல் நுழைந்தோய் அடிதொட்ட கைக்கேனும் அழகியபாப் பாடுவையால் தூயதமிழ்ச் சொல்லானும் தொன்மைநூல் எழுத்தானும் மேயபுதுப் பொருளானும் மிகமிகவே பாடுவையால் ஆயவரும் உணர்வானும் ஆடிவருஞ் சொல்லானும் பாயவரும் இன்னீரைப் பருகுவதெம் பொறுப்பாமால் (உடன்வகுப்புத் தோழர் சேந்தமங்கலம் சே.ரா. மாணிக்கவாசகனாருக்கு அறிவுறுத்தல்; 15-11-1942) 5. முருகப்பர் மணிவாழ்த்து நாட்டுக்கு நல்லவன்; நம்பும் புரட்சியன்; பாட்டுக் கிளகிய பக்குவன்; - கூட்டுக்கு நண்பன் முருகப்பன் நாம்வாழ வாழியரோ பண்பும் செயலும் பகிர்ந்து. 1 துன்பத் தமிழகத்துத் தொண்டுகள் எத்தனையோ அன்பன் முருகப்பன் ஆற்றுகிறான் - இன்பக் கவியினிப்புக் கண்ட கலைஞன் தமிழ்ச் செவியினிக்க வாழ்க சிறந்து. 2 (சொ. முருகப்பர் அறுபதாம் ஆண்டு வாழ்த்து: 10-8-1953) 6. தெ.பொ. மீ. மணிவாழ்த்து கோனாட்சிப் போரிற் குதித்தானை நன்மக்கள் தானாட்சி கண்ட தவத்தானை - மீனாட்சி சுந்தரனை வாழ்த்துவோம் சுந்தரர்கள் தொண்டிழைக்கும் செந்தமிழை வாழ்த்துவோம் சேர்ந்து. 1 என்றும் தமிழுக் கினியானை நூல்நிலைய மன்றுள் நடமாடும் மாணவனை - நன்றும் பலகலை தேர் வண்டானைப் பாடியக்கால் நாமும் சிலகலை தேர் வண்டாவோம் சென்று. 2 ஞாலம் மொழியால் அளந்தானை நல்லதமிழ்க் காலம் வருமென்று கண்டானை - மூலம் ஒருபொருளே என்ன உணர்ந்தானை உண்மை வருபொருளை ஆய்வானை வாழ்த்து. 3 7. கி.ஆ.பெ.வி. முத்துவிழா வாழ்த்து இந்திப் பகைஞன் எழுபத்தைந் தாண்டினன் முந்தி இனங்காக்கும் முத்தமிழன்-பிந்தி வருதமிழர் நெஞ்சில் வரலாறு தீட்டும் திருவிசுவ நாதன் சிறப்பு. (19-10-73) 8. கி.ஆ.பெ.வி. வைரவிழாவாழ்த்து சங்கம் மொழிந்த சான்றோன் யாரென எங்கும் வினவும் இளைய தமிழீர்! இங்கே வம்மின்; எம்மொடுங் காண்மின்! பல்கிளைக் காவிரி பசுங்கலை வளர்க்கும் மல்குசிராப் பள்ளி மாநகர்ப் பிறந்தோன்; எத்திசைக் கண்ணும் இயங்கிய மொழியாம் முத்தமிழ்க் காவலன் மூவா முதியவன்; இந்தியை எதிர்த்த விந்தியத் தலைவன் வெந்தழல் போலும் விசுவ நாதன்; இனமோ இயலோ இசையோ கூத்தோ மதமோ குலமோ மன்றோ அரசோ எதுவோ இவனால் ஏற்றம் பெறாதது; யாரையும் அணைக்கும் அன்புப் பெரியன்; பாரையும் எதிர்க்கும் படுநாத் தளபதி; எழுத்தில் சொல்லில் ஈட்டும் பொருளில் அழுத்தச் செலவில் அயரும் விருந்தில் எம்முறைத் தொண்டையும் எழுத்து வடிவில் செம்முறை காக்கும் செய்யொழுங் குடையோன்; தன்னிக ரில்லாத் தமிழினத் தலைவன் மன்னும் அரசு மதிக்குங் குரிசில் பேதைத் தமிழினப் பீழைகள் நீங்க மேதைக் காவலன் வாழ்கென கோதைத் தமிழாற் கூறுதும் யாமே. (முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதரின் வைர விழா வாழ்த்து 12-11-1978) 9. திருப்புத்தூர் ஆறுமுகனார் மணிவாழ்த்து நல்ல கொடையாளன்; நாகரிகப் பண்பாளன்; வல்ல உழைக்கும் மனத்தாளன்; - சொல்லத் திதிக்கும் பெயராளன்; செந்தமிழ்ச் சிங்கை மதிக்கும் அறுமுகனார் மாண்பு. (5-12-1975) 10. தமிழ்க்கல்லூரி நிறுவனர் வாழ்த்து பிறப்பறியாத் தமிழன்னை பெற்ற மைந்தன் பேராற்றற் பெருங்கருப்பன் பிறவி யன்பன் மறப்பறியாக் கொடையாளன் இராம சாமி மாண்புசால் குலமுதல்வன் தந்தை பேரால் சிறப்பறியாத் தெய்வநிகர் மொழிதான் வாழச் செந்தமிழ்க்குக் கல்லூரி செவ்வன் கண்டான் நிறப்பறியாக் கடல்போல நெடிது நின்று நெஞ்சினிய மொழித்தொண்டு பரப்பி வாழி! (1970) 11. அழகப்பர் மணி வாழ்த்து பாரியைக் காரியைப் பாடல்சால் மாரியை ஓரியை வென்ற உயரழகன் - தேரின் எனைவகை ஈகைகள் இந்தியா எங்கும் நினைவகை செய்தான் நிலத்து. அழகப்பரின் திருவுரு கொடையறத்தின் திருவுருவைக் கொடுத்துவளர் திருக்கையை நடையறத்தின் திருவடியை நாண் மலரின் திருமுகத்தை விடையறத்திற் சிவன்போல விளங்குகின்ற திருநிறத்தைத் தொடையறத்தின் திருவழகைத் தொழுதுநின்று பாடுவமே. (வெள்ளி விழா மலர் 1972) 9. குழந்தைப் பாடல்கள் 1. பாடு பாடு என்ன பாடு? பாட்டுப்பாடு என்ன பாட்டு? தமிழ்ப் பாட்டு என்ன தமிழ்? சங்கத் தமிழ் என்ன சங்கம்? அன்னைச் சங்கம் என்ன அன்னை? அன்பு அன்னை என்ன அன்பு? உயிர் அன்பு என்ன உயிர்? மக்களுயிர் என்ன மக்கள்? நாட்டு மக்கள் என்ன நாடு? காந்தி நாடு என்ன காந்தி? உண்மைக் காந்தி என்ன உண்மை? நேர் உண்மை என்ன நேரு? தலைமை நேரு என்ன தலைமை? உலகத் தலைமை என்ன உலகம்? போருலகம் என்ன போர்? களப்போர்? என்ன களம்? ஆடுகளம் என்ன ஆடு? விளையாடு. (‘நெல்லிக்கனி’ யிலிருந்து) 2. நூல் விளையாட்டு யாரும் தின்னாத காரம் - சிலப்பதிகாரம் யாரும் குடியாத பால் - முப்பால் யாரும் உடுத்தாத கலை - மணிமேகலை யாரும் தொடுக்காத கோவை - திருக்கோவை யாரும் வெறுக்காத தொகை - கலித்தொகை யாரும் பூணாத நூல் - நன்னூல் யாரும் அடிக்காத மணி - சிந்தாமணி யாரும் கொட்டாத இயம் - தொல்காப்பியம் யாரும் அணியாத அணி - தேம்பாவணி யாரும் நடுங்காத வாடை - நெடுநல்வாடை யாரும் சொல்லாத கதை - பெருங்கதை யாரும் நடக்காத அடி - நாலடி (‘நெல்லிக்கனி’ யிலிருந்து) 3. நடித்தாடு நடித்தா டம்மா நடித்தாடு நடனச் சிலையே! நடித்தாடு; குடித்தா டம்மா குடித்தாடு கொம்புத் தேனே! குடித்தாடு; அடித்தா டம்மா அடித்தாடு அள்ளும் சிலம்பே! அடித்தாடு; படித்தா டம்மா படித்தாடு பவளக் குறளே; படித்தாடு! முடித்தா டம்மா முடித்தாடு முல்லைப் பாட்டே! முடித்தாடு; வடித்தா டம்மா வடித்தாடு வளரும் தாயே! வடித்தாடு; துடித்தா டம்மா! துடித்தாடு துள்ளும் இசையே துடித்தாடு; பிடித்தா டம்மா பிடித்தாடு பிறவிக் கொழுந்தே! பிடித்தாடு. (‘நெல்லிக்கனி’ யிலிருந்து) 4. குடித்துவிளையாடு குடித்து விiளாயடுவோம் - பாலைக் குடித்து விளையாடுவோம்; இடித்து விளையாடுவோம் - பொடியை இடித்து விளையாடுவோம். சுற்றி விளையாடுவோம் - முருக்குச் சுற்றி விளையாடுவோம்; சுட்டு விளையாடுவோம் - தோசை சுட்டு விளையாடுவோம்; ஆட்டி விளையாடுவோம் - மாவை ஆட்டி விளையாடுவோம்; அரைத்து விளையாடுவோம்... துவையல் அரைத்து விளையாடுவோம். சீவி விளையாடுவோம் - தோலைச் சீவி விளையாடுவோம்; செதுக்கி விளையாடுவோம்- பட்டை செதுக்கி விளையாடுவோம்; உருட்டி விளையாடுவோம்- சீடை உருட்டி விளையாடுவோம்; உடைத்து விளையாடுவோம் காயை உடைத்து விளையாடுவோம்; வெறுத்து விளையாடுவோம் அடிமை வெறுத்து விளையாடுவோம்; உடுத்து விளையாடுவோம் மானம் உடுத்து விளையாடுவோம்; கொடுத்து விளையாடுவோம் உயிரைக் கொடுத்து விளையாடுவோம். (‘நெல்லிக்கனி’ யிலிருந்து) 5. போற்றுவோம் பெற்ற தாயைப் போற்றுவோம் பிறந்த நாட்டைப் போற்றுவோம் - சங்கம் சிறந்த மொழியைப் போற்றுவோம்; இமயம் ஏறி ஆடுவோம் எல்லை மீறின் சாடுவோம் - பகைவர் பல்லை வாரிப் பாடுவோம்; பாரும் எங்கள் பகையிலை யாரும் எங்கள் தொகையிலை - காந்தி நேரும் எங்கள் விலையிலை; பாயும் வேங்கை நிகரிலை தீயும் எங்கள் சினமிலை-பேசி ஓயும் வாழ்க்கை இனியிலை. (‘நெல்லிக்கனி’யிலிருந்து) 6. ஆடலும் பாடலும் யார் தடுத்தாலும் தடுக்கட்டும் யாங்கள் திரைக்குச் செல்வமே ஓங்குந் தமிழைக் கேட்பமே; பேர் எடுத்தாலும் எடுக்கட்டும் பெரிய கலையை வளர்ப்பமே உரிய முறையில் வளர்ப்பமே; ஊர் விடுத்தாலும் விடுக்கட்டும் ஓரக் கதையை வெறுப்பமே வீரக் கதையை விழைவமே; போர் தொடுத்தாலும் தொடுக்கட்டும் புதிய கருவி எடுப்பமே உதிரம் நெடுகக் கொடுப்பமே; ஆர் நடித்தாலும் நடிக்கட்டும் ஆடல் பாடல் வேணுமே கூடல் ஊடல் நாணுமே. (‘நெல்லிக்கனி’ யிலிருந்து) 10. அறப்பாடல்கள் 1. பொதுவறங்கள் உயிரினங்கள் வளமார உண்ணு மாக; உடலுறுப்புச் சொன்னபடி கேட்கு மாக; பயிரினங்கள் தழையுரத்தால் வளரு மாக; பசுவினங்கள் இல்தோறும் பரவுமாக; செயிரினங்கள் கல்வியினால் திருந்து மாக; செய்தித்தாள் திரிபின்றிச் செப்பு மாக; தயிரினங்கள் கைபட்டால் தகர்தல் போலத் தடைமனங்கள் திருக்குறளால் தளர்க மாதோ. (உப்பங்கழி என்ற நாடகநூலிலிருந்து) 2. யாம் மதிப்பவை தாய்காட்டும் தாய்மொழிக்கே முதன்மை வேண்டும் தாராத அரசினையாம் மதிப்பதில்லை; தாய்நாட்டுப் பற்றுக்கே முதன்மை வேண்டும் தடுமாறும் கட்சியையாம் மதிப்பதில்லை; ஓய்வீட்டும் உழைப்புக்கே முதன்மை வேண்டும் ஊழ்கூறும் சமயத்தை மதிப்பதில்லை; சேய்கூட்டும் படைப்பெருக்கே முதன்மை வேண்டும் செய்யாத நாட்டினையார் மதிப்பர் ஐயா! (நெல்லிக்கனி என்ற நாடக நூலிலிருந்து) 3. இயற்கைத் தொண்டு நல்லாவின் பால்முழுதும் கன்றுக் கில்லை; நறும்பூவின் மணமுழுதும் சோலைக் கில்லை; நெல்லாகும் கதிர்முழுதும் நிலத்துக் கில்லை; நிறைகின்ற நீர்முழுதும் குளத்துக் கில்லை; பல்லாரும் கனிமுழுதும் மரத்துக் கில்லை; பண்ணரம்பின் இசைமுழுதும் யாழுக் கில்லை; எல்லாமே பிறர்க்குழைக்கக் காணு கின்றேன் என்வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும் வேண்டும். 4. இயற்கை இயற்கையொடு பழகிவா-மனிதா எளிமையொடு ஒழுகிவா செயற்கையொடு சிறிது வா-மனிதா சிந்தையொடு பெருகி வா (‘நெல்லிக்கனி’ யிலிருந்து) 5. வஞ்சின வெண்பா இல்லாளின் இன்றே பிரிக; உடனுறைந்த நல்லாரின் நட்பு நனிதுறக்க - ஒல்லாரின் பின்முதுகு கண்டு பெரிதென் னுளம்விரும்பும் வன்முதுபோர் செய்யா விடின். 1 இல்லாள் தோள்கூடி இனிதுறும் என்மாலை அல்லாள் தோள்கூடி அவமுறுக; - ஒல்லார்தோள் கூடிப்போய் விண்ணுலகும் கூடினார் என்றுசொல் நாடிப்போர் செய்யா விடின். 2 கொடுங்கோலன் என்று குடிபழிக்க; நூலிற் படுங்கையர் பாடா தொழிக; - கடுஞ்சினத்தின் எம்மை யிகழ்ந்தோரே என்செய்தேம் என்றிரங்கித் தம்மை யிகழா விடின். 3 (11-6-1940) 6. கருத்து வெண்பா இனியசாவு மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார் உயிர் நீப்பர் மானம் வரினே; - செயிர்நீத்த பாவின் இலக்கியங்காண்பண்டொருவாய் நீர்குடியாக் கோவின் குலங்காத்த கோள். 1 உழவப்புலவன் தொழிலும் படிப்புந் துணையாயின் செல்வ எழிலும் நடுவும் இருக்கும்; - பொழிலுந் தமிழும் படைத்த தமிழ்நிலத்தீர்! வாழ்க இமிழுங் கடல்சூழ் இவண். 2. புகழ்த்துறவு உடைமை யெனப்படுவதி யாதெனின் யாதுங் கொடைமை யிலாத குணமே; - கொடைமை உடையான் தொகுத்த துலகமே யாக உடையான் இரப்பவனென் றோது. 3 மனைவியின் உரிமை உரிமை பலதிறத்த; ஒவ்வொன்றும் வேண்டும் அருமை வழக்கி லறிவார் - பெருமை அடைவார்; உலகத் தமைதியுங் காப்பார் படைவார் பகையைப் பழித்து. 4 பிள்ளைத் தூது கள்ளந் தொடாத கனியே! வா! காதலர்தம் உள்ளந் தொடுக்கும் உவப்பே வா! - பள்ளம் விழுகச் சிரிக்கும் வியப்பே! அமிழ்தம் இழுகத் திறவாய் இதழ். 5 மனைவியின் உரிமை என்ற நாடக நூலிலிருந்து (1949) 7. காதல் நெறி காட்டுவோம் நல்வழி; காதல் உலகத்துக் கூட்டுவோம் இன்பக் குடி. கூற்றுப்போல் ஓடும் குமர மனங்களை ஆற்றுப்போற் செய்வோம் அணைத்து, எளிதெனக் காதலை எண்ணுக; சிக்கல் வெளிதெனத் தானே விடும். (‘நெல்லிக்கனி’ யிலிருந்து) 8. திருமணப் பொது வாழ்த்து திருமணக் கழகம் வாழ்க; திருக்குறட் காதல் வாழ்க; கருமணற் கூந்த லார்க்குக் கடிணம் எளிமையாக; அருமணத் துறைகள்கண்ட ஐந்திணைத் தமிழ்நாட்டில் ஒருமணச் சோலைபோல உயிர்மணம் பெற்று வாழ்க! (உப்பங்கழியிலிருந்து) 11. பாடற் கலப்பகம் 1. காதலுருவம் சித்தன்ன மண்டபத்துச் சிரிக்கின்ற தாமரைகாண் வித்தென்ன என்னுயிர்க்கு வேரென்ன வந்தவளாம்; முத்தன்ன வெண்ணகையை முழுதலர்த்தும் திருவாயாள் பித்தென்னைப் படுத் தவந்த பெருமணத்தி இவளலவோ 1 பெருவுடையார் கோயிலினுட் பேசுகின்ற ஓவியங்காண் உருவுடைய என்னுயிருள் உடலாக வளர்ந்தவளாம்; இருணிறத்த குடையாகி எனைச் சுருக்கும் கூந்தலியாள் மருணிறத்தேன் பிணிபெருக்கும் மருத்துவிச்சி இவளலவோ 2 கடல்மல்லைப் பெருந்தலத்துக் கல்வாழும் அணங்கேகாண் உடலெல்லைத் துடிப்படக்கி உயிராட்சி செய்பவளாம்; தொடலறியாப் பந்தேபோல் தொய்யாத துணைமுலையாள் விடலறியா மயலூட்டும் விளையாட்டி இவளலவோ. 3 திரண்டுவளர் பெண்சோலை; தேனூறும் திருமேனி; உருண்டுவளர் பழவிரட்டை; உவைமறைக்கும் எழில்மூடி; இருண்டுவளர் நிழற்கூந்தல் என்னொருவன் தனிப்பொய்கை புரண்டுபிறழ் கண்மீன்கள் புகழிகழும் புதுநோக்கு. 4 2. தாமரை விளக்கம் நீர்வளரும் நிலவிளக்கோ நிலம்வளரும் திருமதியோ ஏர்வளரும் செங்கரும்போ இடைவளரும் புதுமுகமோ பார்வளரும் செந்தமிழோ பதிவளரும் செங்கோலோ ஊர்வளரும் ஒற்றுமையோ ஒற்றுமையின் பொற்பரிசோ (நெல்லிக்கனி என்ற நாடகநூலிலிருந்து) 3. ஊற்றுக் கோல் பொன்னென முள்ளும் முள்ளென முனையும் மின்னென வொளியும் விரலென வுடம்பும் மெய்ப்பை பிரியா மேவிய நட்புடை ஊற்றுக் கோலே ஊன்றிப் பாராய் நாடொறும் நின்னை நன்னீ ராட்டி ஆடொறுங் கொடாஅ தழகுறப் பேணிப் பாடுபெற முயன்ற பண்பின் பயனோ உள்ளது போல இல்லது காட்டிப் பள்ளித் தேர்வினை எழுதும் அமையத்துக் கேடுறச் செய்த கேண்மையை யாயினை மையெனும் உயிரிலை மாழ்கினை போலும் புறத்து மூடி பூண்டனை அகத்துப் பொருளிலார்க் கதுவே இயற்கை. (6-9-1941) 4. மாலைக் கனவு எல்லும் மெல்லெனச் சாய்ந்தன்று; அதன்வாய் வளியுஞ் சிறிதே வந்தன்று; ஓடையில் திரையும் பையென அலைந்தன்று; நீர்வயற் பயிரும் அழகுற நடித்தன்று; காலில் ஆடையும் ஒருபுறம் அசைந்தன்று; காலும் மெத்தென நடையைச் செய்தன்று; மீனும் பொத்தென வெழும்பிக் குதித்தன்று; வானும் ஒல்லென ஓரொலி கொண்டன்று; யானும் புல்லெனக் காற்றிற் பொருள்க ளசையவும் அசையா வுள்ளம் அமைய விருந்தனன்; ஆங்கே, எண்ணிய எண்ணம் எண்ணில அவற்றுள் பொதுப்பொருள் கொண்ட பொய்யா வுலகில் தனிப்பொருள் ஈட்டும் உரிமை நினைப்பின; நினைத்தபோதே, ஒட்டிய வயிறன் உடையில் தொடையன் முழுகுநீ ரளவென வொழுகுநீ ரில்லன் அழுகுநீ ருடலன் அழகுநீர் மாதர் ஞாதி யற்ற வீதிச் சிறாஅர் கண்ணீர் வடித்துக் கண்முன் தோன்றினர்; அதுகண்டு, ஒன்று நிறைந்த உலகை நினைத்தேன் பெரியவர் பிறந்தவிப் பிறப்பை நினைத்தேன் என்றுந் தோலா இறப்பை நினைத்தேன் உயிரை வழங்கும் உணர்வை நினைத்தேன் உடலை வருத்தும் உழைப்பை நினைத்தேன்; அதன்பின், அழேஎல் அழேலெனத் தனித்தனி ஆற்றி நீர்வார் கண்ணை நீங்கத் தொட்டுழிக் கண்ணெதிர் யாருங் காணாமை கண்டுபின் உணர்வு தந்த கனவெனப் புணர்வுற் றாங்குப் பொழுது கழித்தனென். (24-9-1941) 5. படைப்பு நிதி வாழிய பாரதம் வளத்தொடு வாழிய எப்பணி தரினும் ஏற்றுப் புகழ்பெறும் ஒப்புமை யில்லாச் சுப்பிர மணிய! செப்பருங் கீர்த்திச் சீர்சால் அமைச்ச! ஆழிசூழ் உலகம் அறிவால் அளந்தனை; மேழிசூழ் செல்வ விளைவு பெருக்கினை; ஒருமைப் பாரதம் ஒற்றுமைப் பாரதம் அருமைத் தமிழில் ஆக்கும் ஆசையேன் நாட்டுக் குகந்த நல்லவென் ஆசையைப் பாட்டிற் பிணிக்கும் படைப்பு வினைக்குத் தக்க நிதிகள் தருகைநுங் கடனென மிக்க பணிவொடு வேண்டுதும் யாமே. (ஒருமைப் பாரதம் என்ற காப்பியப் படைப்பிற்கு அரசின் பொருளுதவி வேண்டிப் பாடியது 14-1-1977) 6. பெண் தத்தெடுப்பு வாடிய குடிகள் நாடிய கழகம் கூடி யிருக்கும் குடும்பத் தீரே! ஒன்று சொல்லுவன்; உணர்ந்து சொல்லுவன் அவலம் என்ற அச்சம் வேண்டாம் இல்லறம் சான்ற இன்ப உழவில் நல்ல சிறுவர் நால்வர் பெற்றோம் அன்னை யெனவோர் அணிமகள் பெற்றிலோம் இதுகுறை என்ற ஏக்கம் இல்லை; பெண்பல பெற்ற பிறிதோர் குடியில் கண்பல பெற்ற காதலன் போலத் திருமகள் அனைய ஒருமகள் எடுத்துக் குடிநிறை செய்து கொண்டனம் படிமுறை இதுவெனப் பகர்வோம் நாமே. (‘நெல்லிக்கனி’ யிலிருந்து) 7. அழவேண்டா நீ ஏன் அழுக வேண்டும்? அழுவதை நிறுத்தி மகிழ வேண்டும்; அழுவதற்கு உலகத்தில் ஆளில்லையா? அணைப்பதற்கு உலகத்தில் கையில்லையா படுவதற்கு உலகத்தில் நோயில்லையா? படிப்பதற்கு உலகத்தில் மதிப்பில்லையா? -நீ ஏன் நாட்டுக்குப் பாடுபடும் நல்ல பெண்ணே! வீட்டுக்கு நீவிளைத்த கெடுதல் என்னே! பாட்டுக்குப் பொருளாகப் படித்த பெண்ணே; கூட்டுக்குள் நீகிடக்க வேண்டுவதென்னே! -நீ ஏன் உற்றவர் அழுகையை ஒழிக்க வந்தாய் ஊரவர் வாழ்க்கையை உயர்த்த வந்தாய் கற்றவர் கடமையைக் காட்ட வந்தாய் காந்தியின் நெறிகளைக் காக்க வந்தாய் - நீ ஏன் (‘நெல்லிக்கனி’ யிலிருந்து) 8. பள்ளத்தூர் முருகப்பர் புகழ் அன்புத் தொழில்முதல்வர் அண்ணல் முருகப்பர் இன்ப வழிகாட்டும் இன்முகத்தர் - நன்மைத் தொழிலாளர் வாழ்வுக்குத் தொண்டுகள் செய்த எழிலார் பெரியவரை ஏத்து. (தொழில் முதல்வர் அ.மு.மு. கையறுநிலை 10-1-1976) 9. இறவாத் தமிழவேள் சிங்கநிகர் தோற்றத்தான் செந்தமிழின் காவலான் பொங்கும் தமிழ்முரசப் போர்மறவன் - சிங்கைநகர்ச் சாரங்க பாணி தமிழவேள் நம்முன்னே ஓரங்கம் ஆனான் உறைந்து. இன்றும் தமிழவேள் எம்மோடு இருப்பானைப் பொன்றினான் என்பர் புகழறியார் - நின்றுவளர் அன்னை மடிமேல் அறிதுயில் கொள்வானை என்றும் தொழுவோம் இணைந்து. (சிங்கப்பூர் தமிழ்முரசு தமிழவேள் சாரங்கபாணி கையறுநிலை) 10. துக்கம் ஏனோ துக்கம் ஏனோ? துக்கம் ஏனோ? பக்கம் இருந்து பண்டித மணிவயின் தக்க பாடம் தனியே கற்றோன்; பண்டித மணியார் பாங்குற வளர்த்த தண்டமிழ்ச் சபையைத் தளருழித் தளருழி ஒண்பொருள் அளித்து வண்புகழ் கொண்டோன்; ஆசான் நினைவாய் ஆண்டு தோறும் காசார் பரிசுகள் கண்ட மாணவன்; பற்றிய உறவைப் பரிவோடு அணைத்துச் சுற்றம் போற்றும் துணிவுடைச் செல்வன்; நீடு தமிழ்நெறி நீங்கா மரபிற் பாடும் புலவன்; பாடுவார் புரவலன்; தெய்வம் சிவனே சிவனே என்று சைவம் சாற்றும் மெய்ந்நூல் கற்று நீறு விளங்கும் நெற்றியன்; உமையொரு கூறு விளங்கும் கூத்தன் திருவடி எண்ணிச் சார்ந்த இராம சாமி மண்ணகம் விடுத்து மறைந்தனன் ஆயினும் மன்புகழ்த் தந்தைக்கு மகனெனத் தக்கோன் வன்மை அறிவே வளமார் கொடையொடு நன்மை நினையும் நாகப் பெயரோன் ஒழிவில் ஊக்கத்து இளைஞன் வழிவழி சிறந்து வாழ்த லானே. (மகிபாலன்பட்டி சி. இராம. கையறுநிலை) 11. கடவுட் காட்சி ஒளியானை வளியானை ஒவ்வாத மரச்சடங்கின் உளியானை நெளியானை உயிர்க்கறையை விளக்கவரும் புளியானை அளியானைப் பொய்ம்மனத்தார் தமிழ்ப்பாவிற் களியானை வெளியானைக் கண்ணெதிரே வணங்குதுமே. வாழுங்கால் துன்பங்கள் மலைமலையா வந்தாலும் ஆழுங்கால் கலம்போல அலையலையா வந்தாலும் சூழுங்கால் என்நினைவைச் சூழ்பவனே நின்னடியில் தாழுங்கால் அவ்வனைத்தும் சலிசலிக்கக் காணுதுமே. (உப்பங்கழி என்ற நாடகநூலிலிருந்து) 12. கலைபயில் கடவுள் தலைபயில் காதலானாய்; தனிவளர் கருவும் ஆனாய்; முலைபயில் குழந்தையானாய்; மொழிபயில் குமரி யானாய்; நிலைபயில் அன்னையானாய்; நெறிபயில் அப்பன் ஆனாய்; கலைபயில் குடும்பமான கடவுளைத் தொழுது வாழ்வாம். (நெல்லிக்கனி என்ற நாடக நூலிலிருந்து) 13. கோட்டையூர்க் கோயில் வானாட்சி மழைபொழிய வையமெலாம் வளங்கொழிக்க ஊனாட்சி போயகல உயிராட்சி புகுந்தருள நானாட்சி வினையோட நல்லன்பர் கைகூப்ப மீனாட்சி சொக்கனார் மெல்லடிகள் வணங்குவமே. 1 பேறு வாழ்க்கை பெற்றுப் பெருகவும் வீறு கல்வி விளங்கித் திகழவும் கூறு பாகன் குணத்தை நினைந்துநாம் நீறு பூசுவாம் நெற்றி பொலியவே. 2 (கோட்டையூர்க் கோயில் குடமுழுக்கு விழா 21-5-1962) 14. தொல்காப்பிய வாழ்த்து ஒல்காத் தமிழ்முதல்வன் ஒப்பில் மொழித்தெய்வம் தொல்காப் பியனே துணை. 12. அழகப்பர் பத்து பாயிரம் உள்ளம் உவப்ப உடைமை யெல்லாம் பள்ளிகள் நிறுவிப் பண்பியல் வளர்க்க அள்ளி வழங்கிய அழகன் கொடையினை நீடும் புகழென நினைத்தே னாயினும் பாடுங் குறிப்புப் பண்டெனக் கில்லை; ஆவி தனித்த அண்ணல் மேனியைக் கூவிக் கொடுந்தீ குறைக்குங் காலை வண்ணத் தமிழனை வள்ளல் அழகனைத் தண்ணந் தமிழில் தலைவனாய்ப் பாடும் எண்ணம் முகிப்ப எழுந்ததிப் பாட்டு; பழுதறு நம்பியின் பார்புகழ் வாழ்க்கையை முழுதுற விரிக்கும் முழுப்பெருங் காப்பியம் எழுதும் புலமை என்னள வன்றுகாண்; அன்னைத் தமிழின் அணிவிரல் மோதிரம் என்னப் புனைந்த இளஞ்சிறு காப்பியம் தொடைக்குப் பொருளாய்த் தோன்றிய அழகனைக் கொடைக்கு விளக்கெனக் கூறப் பெறுமால்; முன்னை வள்ளியோர் மூவாத் தமிழணிந்து என்றும் வாழ்வார் இவனும் வாழ்வான்; அரிய பொருளால் அறிவு பரப்பிய பெரிய கொடையான் பிறப்பினை உரிய நெறியால் உள்ளுவம் நாமே. கம்பனும் இல்லை கபிலனும் இல்லையே தம்பொன் துறந்தான் தகைபாட; - நம்பன் நிலையைப் புகழ நினைத்தேன்மன் யானை வலையிற் படுத்தும் வகை. 1 காரைக் குடியெல்லாம் கல்விப் பயிர்வளரக் கூரைக் குடியெல்லாம் கூனிமிர - நீரைப் புழங்கினா லென்னப் பொருட்செல்வ மெல்லாம் வழங்கினான் வாழ்க வழி. 2 பேகன் கொடையைப் பெருமடம் என்று முன் வேகம் படமொழிந்தார் மேலோரார்; - பேகன் மடம்பட் டெறிந்தான் மயிற்போர்வை; கல்லார் மடம்பட ஈந்தான் மதி. 3 வள்ளற் றமிழ்ச்சொல் வணங்கித் தவஞ்செய்து கொள்ளப் பிறந்த கொடையழகன் - உள்ள உடைமை அனைத்தும் ஒழித்தான்; ஒழியார் மடமை தொலைக்கும் மகன். 4 பாரும் உறங்கும் படுயாமம் தில்லியில் நேருவைக் கண்டு நிதியளித்தான்; - யாரும் மடித்துத் தொகுக்கின்ற மண்ணுலகில் ஏனோ துடித்துக் கொடுத்தான் தொகை. 5 சிலம்பு பிறந்த திருநாடென் றெண்ணிக் கலங்கு தமிழியலைக் காண - இலங்கும் இலக்கமொன் றீந்தான்; இடும்பை தனக்கும் கலக்கமொன் றீந்தான் களித்து. 6 கோடி கொடுத்த கொடைஞன்; குடியிருந்த வீடுங் கொடுத்த விழுச்செல்வன்; - தேடியும் அள்ளிக் கொடுத்த அழகன்; அறிவூட்டும் வெள்ளி விளக்கே விளக்கு. 7 நெற்றித் திலகன் நிவந்தசெம் மேனியன் கற்றை முடியன் கவின்வகுப்பன் - முற்றும் அரிய உழைப்பன் அணியில் எளியன் பெரிய கொடையன் பிறப்பு. 8 பன்னூற் கடலனைய பண்டித நன்மணிபால் தொன்னூற் குறளைத் தொடங்கினோன்; -நன்னூற் கலையார் களஞ்சியம் காணத் தமிழில் தலையார் நிதிதொடுத்தான் தந்து. 9 ஊரார் குழந்தையை ஊட்டி வளர்த்தானைக் கூரார் குவிமுலையீர் கூப்புமினோ - சீரார் அழகனைப் போலொருநாள் அள்ளிக் கொடுக்கும் குழகனைப் பெற்றுக் கொள. 10 (கொடை விளக்கு என்ற கவிதையிலிருந்து) 13. எண்ணம் இருபது குறிக்கோள் குறிக்கோள் இலாத வாழ்வு கோடுகள் இலாத ஆட்டம்; நெறிக்கோள் இலாத நெஞ்சு நிறைநீர் இலாத யாறு; மறிக்கோள் இலாத கல்வி வரப்புகள் இலாத நன்செய்; செறிக்கோள் இலாத மேனி திறவுகோல் இலாத பூட்டாம். 1 வையத்து மக்கட் சுட்டாய் வாழ்வாங்கு வளர்தல் வேண்டும்; ஐயத்திற் கிடத்த லின்றி அச்சத்திற் சாத லின்றிக் கையத்துப் பொருளைக் கண்டால் கடிநாய்போல் ஓட லின்றி வையத்தோர் இமயம் போல வாழ்வதே குறிக்கோ ளாகும். 2 வாய்மை குணங்களுள் உயிரேபோலும் குற்றந்தீர் மருந்தே யொக்கும் மணங்களுள் அறிவும் ஒத்த மணமக்கள் இன்பம் மானும் பணங்களுள் ஞாலம் ஏற்கும் பவனெனும் மாற்றுப் போலும் வணங்கியாம் தெளிந்து கொண்ட வாய்மைப்பே ரொளிய தாமே. 3 வள்ளுவம் நிலத்திடைக் குழப்ப மெல்லாம் நெஞ்சகம் திறந்து சொல்லா மலத்திடைப் பிறத்தல் கண்ட வள்ளுவர் யாது சொன்னார் புலத்திடை யாய்ந்த வற்றுள் பொய்யாமை யன்ன வேறு நலத்தது கண்ட தில்லை யாமென நிறுத்தி னாரே. 4 நாலறம் ஈட்டுக மேலும் மேலும் ஈவதே எண்ண மாயின்; நாட்டுக எழுத்துஞ் சொல்லும் நாணமே நோக்க மாயின்; தீட்டுக வேலும் வாளும் தீமையே ஒழிவ தாயின்; வீட்டுக தனது மெய்யை விதைப்பது கொள்கை யாயின். 5 திருமணக்காதல் திருமணக் காத லென்று செந்தமிழ் கூறும் இன்ப வருமணப் பேற்றைத் துய்க்க வளர்கின்ற பருவ மக்காள்! இருமணப் பழத்தின் சேர்க்கை ஈன்றவோர் ஒட்டுப் போல ஒகுமண வாழ்க்கை வேண்டும்; உயிர்மலர் மணக்க வேண்டும். 6 எது காதல் செயலெலாம் உரிமை யாகா; சிரிப்பெலாம் உவகை யாகா; பெயலெலாம் விளைச்ச லாகா; பித்தெலாம் பத்தி யாகா; புயலெலாம் கூந்த லாமோ? பொருப்பெலாம் தோள்கள் ஆமோ? மயலெலாம் காதலாகா; வரலாறு மறக்க லாகா. 7 பருவத்து முளைத்த வெல்லாம் பல்கிளை மரங்க ளாகா; உருவத்தின் கவர்ச்சி யெல்லாம் உள்ளத்தின் கவர்ச்சி யாகா; செருவத்துச் சென்றா ரெல்லாம் சிறப்புடைக் கல்லாய் நில்லார்; கருமத்தை செய்தா ரெல்லாம் கவிப் புகழ் பெற்ற துண்டோ? 8 துன்பவொருமை அழகினாற் கவரப் பட்டார் அன்பினாற் கலந்தா ராகி மெழுகினால் இருபாற் பாவை மிடைந்ததோர் உருவம் போலத் தழுவினால் மெய்யொன் றாகித் தலைத்தலை வந்த துன்ப உழவினால் உயிரொன் றாகும் ஒருமனப் பான்மை வேண்டும். 9 செல்வவொப்பு ஆண்டகத் தொப்பும் கல்வி யறிவகத் தொப்பும் சேரின் காண்டக அழகின் ஒப்பு காட்சிக்கு நன்று நன்று; மாண்டகு மனமும் ஒப்பின் மற்றது வாழ்க்கை யென்ப பூண்டகு செல்வ வொப்போ பூசிய காதல் போலும். 10 ஊக்கச் செல்வன் பொருளினத் தரமே பார்த்துப் புகுமணப் பருவம் வாய்ந்த இருளினக் கூந்த லாரை இன்னமும் வைத்துக் காக்கும் மருளினப் பெற்றோர் வேண்டா; வழக்கினைத் துணிந்து மீறித் தெருளினக் குடியில் ஊக்கச் செல்வனுக் களிப்பின் என்னோ? 11 பெற்றோர் ஒப்பல் பிறக்கின்ற காதல் வித்தைப் பெற்றோரும் வாழ்த்த வைத்துச் சிறக்கின்ற மணமாக் கொள்க; தீனிநீர் வைப்பார்க் காகக் கறக்கின்ற ஆவை விட்டுக் கன்றுதான் விலக லுண்டோ? பிறக்கின்ற செல்வந் தந்தார் பெரியதோர் உலகம் தந்தார். 12 இருபாற் கற்பு பிறப்புக்கோர் உடம்பே போலப் பிறவியிற் பெரிய இன்பச் சிறப்புக்கோர் துணையே சாலும்; சிறப்பில வந்துற் றாலும் இறப்புக்கும் விடுதலன்றி இடையேயோர் குற்றம் பார்த்துத் துறப்புக்காம் மெய்ப்பை போலத் தொடர்பினை மாற்ற லாமோ? 13 விளங்கவே சுருங்கச் சொல்லின் விடுநோக்கம் என்றும் இன்றி உளங்கவர் புணர்ச்சி பெற்றார் உயிர்கவர் பண்ப ராகித் துளங்கலர் காதல் மாற்றார் தொண்டுசெய் நோன்பு கொள்வர்; களங்கவர் வீரத் தன்மை காதலர் தமக்கும் வேண்டும். 14 வேற்றுமை விளம்பல் மனையறம் புகுந்த நல்லீர் வாழ்தற்கோர் காலம் வேண்டும் தினையினும் உவர்ப்புத் தோன்றின் தெரியவோர் புறத்து விட்டால் பனையினும் பெரிய வாகிப் பாறையின் பிளவும் உண்டாம்; வினையினை அறிவார் தாய்க்கும் வேற்றுமை விளம்ப மாட்டார். 15 காலத் தூது தேடிய செல்வ மன்ன தித்திக்கும் அறத்தின் பாலீர்! கூடிய முதல்நாட் கொள்க; கோடிய கசப்புத் தேன்றின் மூடிய தங்கம் போல மூன்றாண்டுக் கால மேனும் பேடியல் பொறுமை காண்போம் பேச்சினைக் காத்துக் கொள்வோம். 16 நுகர்ச்சியின்பம் திங்களும் பகலும் ஒன்று திரண்டன்ன ஆற்றல் பெற்றீர்! சங்கமும் தமிழும் போலத் தண்ணீரும் செய்யும் போலப் பொங்கலும் உழவும் போலப் பொருந்திய கேண்மை கொண்டீர்! நுங்குவும் வெயிலும் போன்ற நுகர்ச்சியே இன்ப மாகும். 17 பொருளீட்டம் பிழைக்கின்ற தொழிலுங் கற்றுப் பெருமித நடைய ராகி உழைக்கின்ற மானச் செல்வம் உடையவர் மணந்த வாழ்க்கை தழைக்கின்ற காதலின்பத் தளிருக்கு நீர தொன்றோ இழைக்கின்ற தீயோர் சொல்லை எரிக்கின்ற தீயு மாகும். 18 மணமகட்கு இன்னிலை விளக்கே! எம்மை ஈன்றதாய்க் குலமே! வாழி. புன்னிலைச் சடங்குப் பற்றும் புறக்கோல வாழ்வும் வேண்டா; முன்னிலை அறிவுப் பற்றும் மூவாத புதுமைப் போக்கும் மென்னிலை அடக்கப் பண்பும் மேலான சொல்லும் வேண்டும். 19 மணமகற்கு மணியகக் குடுக்கை தன்னுள் வளைந்துசெல் நெடுமுட் போல்வாய்! துணியழி விதிமேற் பற்றும் சோதிடப் பசையும் ஏனோ? பணிவளர் உறுதிக் கோள்கள் பணைக்கின்ற பொருளின் நாட்டம் பிணிநகு முயற்சிச் செல்வம் பெருகிய திட்டம் வேண்டும். 20 14.ஊர்தி முப்பது எல்லைகள் வரையெல்லை கடந்து போதல் வளர்புகை வண்டிக் காமோ? உரையெல்லை கடந்து பொய்த்தல் உயர்வுடை மாந்தர்க் காமோ? தரையெல்லை தாண்டிப் பற்றல் சார்பயல் அரசுக் காமோ? கரையெல்லை கடந்தாற் கேடு கைகளால் அழைப்ப தாகும். 1 தடவழி தன்னிலை பிறழா னாயின் தனக்கொரு கேடு செய்து பின்னிலைப் படுத்த வல்ல பெரும்பகை இல்லை கண்டாய்; தன்னிலைத் தடத்தின் நீங்காத் தனித் தொடர் வண்டிப் போக்கின் முன்னிலைப் பொருள்கள் அன்றோ முத்திவாய்ச் சென்று வீழும். 2 ஊர்தித் தோற்றம் அட்டைபோற் பலகால் பெற்றும் ஆனைபோல் தோற்றம் பெற்றும் ஒட்டைபோல் நீருட் கொண்டும் ஒட்டத்தாற் குதிரை போன்றும் வட்டமாம் திங்கள் போலும் வடிவத்தால் ஒருகண் பெற்றும் நெட்டென உயிர்ப்பு விட்டு நில்லென வந்து நிற்கும். 3 பொதுநோக்கு இறப்பிடை இடுகா டேகும் இயல்பினில் ஒன்றாம் மக்கட் பிறப்பிடை உயர்வு தாழ்வு பிறப்பிக்கும் மறைகள் நாணச் சிறப்புடை ஒருமை காட்டச் செல்வழி நிலையந் தோறும் மறப்புடை யின்றி நின்று மக்களை யெல்லாம் ஏற்கும். 4 கைகாட்டி கைகாட்டி வருக வென்னக் கரிய முகங் கொண்டு நீண்ட மெய்காட்டி நுழைந்து நிற்கும்; மீட்டுங்கை தாழ்த்த பின்பு மைகாட்டி உயிர்க்கும் மூக்கால் வருவனெனப் பிளிறிக் கொண்டு பொய்காட்டி இளைத்த போலப் புடைபெயர்ந்து புகைத்துப் போகும். 5 காலவொழுங்கு நாட்டின்கண் செப்ப மின்மை நடைப்படியில் தொங்கி நிற்கும் கூட்டத்தின் இளையோர் சான்று; குறித்தமணி செய்ய வல்ல நாட்டத்திற் குறையா டுண்மை நம்மை விட்டகன்ற தில்லை; ஓட்டத்திற் காண்பீர் ஓடி உலர்ந்தநா இளைப்பே சான்று. 6 குழுவொழுங்கு சீட்டினை வாங்கும் போரில் சிறுபணம் கொண்ட கையை நீட்டலுந் துன்பம் அம்ம நெடுந்துணை சென்ற கையைச் சீட்டொடு மீட்டல் துன்பம் சினத்தொடு தள்ளி முள்ளிக் கூட்டத்துத் திரும்பல் துன்பம் குழுவொழுங் கில்லா நாட்டில் 7 சீட்டு நெருக்கடி தோண்மையில் தடித்தார்க் கன்றித் தொடர்வண்டிச் சீட்டு வாங்கல் ஆண்மையில் குறைந்தார் யார்க்கும் அரியதோர் செயலாம் என்றால் நாண்மையிற் சிறந்தார் தாமும் நாடியில் கிழவர் தாமும் சேண்மையில் நிற்ற லன்றிச் செருக்களம் செல்ல லாமோ. 8 சீட்டுவாயில்கள் ஆடவர் தொகையின் மேலாம் அணங்குகள் உலகத் தென்றால் பாடகக் காட்சிச் சீட்டுப் பாவையர் தனித்து வாங்கும் கூடகம் இருத்தல் போலக் கொடிவண்டி நிலையத் தொன்று வீடகம் இருத்தல் வேண்டும் வினைசெய்வார் அறிவ ராயின். 9 ஆர்வமொழிகள் எத்தனை மணிதான் வண்டி இவண்வர ஆகு மென்றும் இத்தனை போதுங் காணோம் என்னமோ ஆயிற் றென்றும் கத்துதல் கேட்ப தென்றும் கண்ணுக்குத் தெரிகு தென்றும் பொத்தென எட்டிப் பார்த்துப் பொய்யெனச் சிரித்து நிற்பர். 10 குரங்கின் வழி பிறங்கிய மூடை யோடும் பெண்டிர்தம் பிள்ளையோடும் இறங்குவார் இறங்க வொட்டார்; ஏறுவோர் ஏற வொட்டார்; குரங்கினில் வந்தா ரென்னுங் கொள்கையை அறைவார் போல இறங்குவார் குதித்து வீழ்வர்; ஏறுவார் தாவிப் பாய்வர். 11 வெறுங்கைகாட்டல் எப்படி யேனும் நிற்போம் ஏறினாற் போது மென்று மெய்ப்படி வேர்வை மிக்கு விரைந்தோடி வருவார் தம்மைப் பொய்ப்படி உளத்த ராகிப் போமிடம் ஆங்குண் டென்று செப்படி வித்தை போலச் செறிந்துமுன் அடைத்து நிற்பர். 12 சிறுபோர் மொழிபல இரைச்ச லானும் முகம்பல சுளித்த லானும் விழிபல சிவத்த லானும் வெற்றெனக் கத்த லானும் இழிபல வுளத்தார் வந்தார்க் கிடம்விடா வஞ்சி யானும் கழிசிறு களமா மென்று கரித்தேரைக் கருத லாமே. 13 இடங்கொடுத்தல் படைப்பினில் இரக்கம் உண்டால் பகலெல்லாம் நின்று நின்று துடைப்பிண மாயோர் தாமும் தோள்மீது சார்த்தத் தூங்கும் படைப்பினில் அரிய செல்வம் படுக்கவென் றெழுந்து நின்று கிடைப்பினில் அன்பு முத்தம் கிள்ளிக்கொள் காட்சி காணீர். 14 நிற்கின்ற தவத்தாற் பெற்ற நிலைச்சிறு இடத்தைப் பாலூண் கற்கின்ற பிள்ளைச் செல்வம் கையகத் தெடுக்கி வந்து நிற்கின்ற தாயைக் கண்டு நீயிரு வென்று பின்னும் நிற்கின்ற கிழவற் காண்பார் நிலையருள் படைப்பிற் காண்பார். 15 சிற்றுறவு ஒருவரின் ஒருவர் சாய ஓருட லாய தோற்றம் பெருகிய அன்பின் மேற்றோ பெருமைசால் அறிவின் மேற்றோ பருகிய ஒளியும் அண்மை பரவிய இருளும் போலும் அருகிய இருக்கைக் கேண்மை அடுத்ததோர் நிலைய மட்டாம். 16 வழிவிடல் எழுதுக முடங்கல் என்பர்; இன்னநாள் மீள்வல் என்பர்; அழுதுகும் மகவை நோக்கி அடடாஅ காட்டு கென்பர்; முழுதுமெய் யுறக்கங் கொள்ளேல் மூட்டைகள் போற்றி என்பர்; தொழுதகு கழுத்து நாணைத் துணியொடு காக்க என்பர். 17 பிச்சை மரபுகள் பையெனச் சுருண்டு போன பசிக்குடில் வயிற்றைத் தொட்டுக் கையெனும் ஓட்டை நீட்டக் கடவுளின் எழுத்தைச் சொல்லி வையவோர் நாவைப் பெற்று வளர்க்கவோர் நிறைந்த சாக்குப் பையென வயிறு பெற்றோர் பாவம்போ என்பார்க் காண்மின். 18 உழைப்பின்றி நிறைய வுண்டும் உறக்கின்றிக் கனவு கண்டும் அழைப்பின்றி நோய்கள் தாக்க அளவின்றி மருந்தூண் செல்வர் உழைப்பின்றிக் குறைந்த நாட்டில் உறுப்பறை உடலைக் காட்ட அழைப்பின்றி வருவான் அப்பா ஆளைப்பார் என்பார்க் காண்மின். 19 படுக்கைமே லிருந்து கொண்டும் பணப்பையைப் பற்றிக் கொண்டும் உடுக்கையுள் நிறைந்த பெட்டி ஒருகண்ணாற் பார்த்துக் கொண்டும் மிடுக்கென இருக்கும் போது மிகவயிறு பசிக்கு தென்ன வெடுக்கெனத் திரும்பிப் பார்க்க வேறிடம் என்பார்க் காண்மின். 20 வீட்டிலே கட்டி வந்த விளைதயிர் பிசைந்த சோற்று மூட்டையை அவிழ்க்க ஐய மூன்றுநாட் காணேனென்று பாட்டிலே பிச்சை கேட்கும் பட்டினிப் புலவன் கையாம் ஓட்டிலே மிச்சில் வீழ ஒதுங்கியே எறிவார்க் காண்மின். 21 பட்டினி பலநாள் ஐயா பசியினை ஆற்றிக் கொள்ள இட்டிலி ஒன்று வாங்க ஈகவோர் காசு வேண்டச் சட்டினி பக்க மாகச் சாம்பாரும் மேல தாக இட்டுணும் இராமர் இல்லை சில்லறை என்பார்க் காண்மின். 22 பாத்தூண் கூழ்வளஞ் செறிந்த நாட்டிற் குறைவயிறு பலர்பாற் கண்டும் ஊழ்வினை என்பார் என்க; ஊழலின் மக்க ளாட்சிப் பாழ்வினை என்பார் என்க; பகுத்துணும் அறிவில் அன்பில் தாழ்வினை என்பேம் யாமே; சான்றவர் யாது சொல்வார். 23 ஊழ்வினை என்ப ராயின் ஒருநாட்டிற் கென்றும் உண்டோ? பாழ்வினை என்ப ராயின் பண்டைநாள் வறுமை யின்றோ? தாழ்வினை இல்லாச் சான்றோர் தம்பொருள் பகுக்குங் காலை வாழ்வினைக் கண்டார் வறுமை வழியினைக் கண்டார் ஆவர். 24 கட்சிக் கூட்டம் விலைப்படு மாலை சூட்டி விழுக்கைகள் அரவஞ் செய்ய அலைப்படு வீரச் சொற்கள் அனைவரும் ஒத்துக் கூறத் தலைப்படு சொல்லி னம்பால் தத்தம கட்சிக் கொள்கை வலைப்பட எய்யும் நாவோர் வருகையைப் பார்க்குங் கூட்டம் 25 மறைமலையடிகள் வருகை தங்களின் உயிரை ஈந்தும் தனித்தமிழ் இயக்கம் பேணும் கங்கணம் கொண்ட வீரர் காலத்தை வென்ற தாயின் மங்கலம் காக்கும் மன்னன் மறைமலை வாழ்க என்னும் செங்களப் பாடல் கேட்டுச் செருக்களம் எங்கே என்பர். 26 பண்டிதமணி வருகை தண்டமிழ்ப் பிறவி பெற்றும் தாய்மொழி கல்லாக் கற்றோர் எண்டிசைப் புகழும் கேடே இவன்புகழ் புகழே என்றும் பண்டித மணியும் வாழ்க பாநயம் வாழ்க என்றும் வண்டிசை மாலை சாத்தும் வளர்மொழிப் புலவர் கூட்டம். 27 திரு.விக. வருகை பெண்ணெனும் பிறப்பைக் கேளீர்; பெற்றதைக் காக்குந்தெய்வம்; திண்ணெனும் கற்புத் தெய்வம்; தீயரைத் திருத்துந் தெய்வம்; பெண்மையின் பெருமை சாற்றிப் பெருந்தமிழ் வரைந்த ஆரூர் எண்மையின் அழகற் கண்டார் இவன் தமிழ் வணங்கி நிற்பர். 28 பெருமகன் காந்தி வருகை ஏந்துகாற் பெரியோன் ஆண்டிற் கிருமுறை வந்த நாளில் சேர்ந்தநல் லன்பர் கூட்டம் சிறிதெனக் கூறும் வண்ணம் காந்தியெம் பெம்மான் வந்து கைகூப்பக் கூப்பி நிற்கும் மாந்தர்தம் தொகையுள் நின்றேன் மனமொழி மெய்கள் வாழ்க. 29 பெரியார் வருகை திருந்துதன் அறிவுத் தொண்டர் சிறுசிறு கொண்மூ வாகக் கருந்துகில் மெய்ப்பை பூண்ட கரியமால் யாவ னென்னின் விருந்துசெய் பேறு தந்தோன் வேண்டாத வழக்க நோய்க்கு மருந்துசொல் பெரியார் கண்டாய் வாழ்கவன் பிறந்த நாடு. 30 15. தமிழாட்டு முல்லை நறுமுகையோ முழுதலராத் தாமரையோ புல்லின் பனித்துளியோ பொற்கதிரே கண்வளராய் 1 காலை அறிவாகிக் கடும்பகலில் அன்பாகி மாலை அருளாகி வளர்மதியே கண்வளராய் 2 தென்னை முழுப்பயனோ தித்திக்கும் பனிப்பழமோ என்னை வளர்ப்பவனோ இசைத்தமிழே கண்ணுறங்காய் 3 மாவின் இளந்தளிரோ மாம்பழத்தின் தனிச்சாறோ நாவின் வடிதேனோ நான்துயிலக் கண்ணுறங்காய் 4 வருக்கைச் சுளையாகி வாழைப் பழமாகிப் பருக்கைச் சோறாகும் பசியமுதே துயிலாயோ? 5 கண்ணுளே விதையாகிக் காதலர்தம் உரமாகிப் பெண்ணுளே கனியாகிப் பிறந்தவனே துயிலாயோ? 6 உண்டுபசி தீரலையோ ஊறுபால் போதலையோ கண்டுபசி கொண்டனையோ கறவைப்பால் வேண்டினையோ? 7 மெலிவுடையாள் தாயென்று வெகுளிமுகங் காட்டாமல் பொலிவுடைய குழலிசையே! புட்டிப்பால் விழைந்தனையோ? 8 ஊனுடம்பின் ஓவியமே! உயர்திணையாம் நாயகமே! மானுடத்தின் காவியமே! மறைத்துநீ சிரிப்பதெவன்? 9 சும்மா சிரித்தனையோ சூதாக நகைத்தனையோ அம்மா குரல்கேட்க அகமகிழ்ந்த புன்னகையோ? 10 எப்பாவை இசைத்தாலும் இன்னுங்கா லாட்டுகின்றாய் அப்பாவைக் காணாமல் அழுவதோ நின்குறிப்பு 11 மாசிலாத் திருக்குறளோ மனங்கவரும் சிலம்படியோ காசிலா வாசகமோ கம்பனார் காப்பியமோ 12 சங்கத்தின் இலக்கியமோ தடம்புதிய பாரதியோ எங்கள்தொல் காப்பியமோ எல்லாமும் நீதானோ? 13 எல்லாம் உடையாரும் ஈன்றமக வில்லாரேல் கல்லாம் வாழ்வென்று கண்ணோடிப் பிறந்தவனோ? 14 கல்லாமுன் கேளாமுன் காணாமுன் அம்மம்மா நில்லாமுன் மெய்விதிர்ப்பால் நினைப்பூட்டும் ஆசானோ? 15 கால்வீசிக் கண்ணிமைத்துக் கைவீசி மெய்குலுக்கி மால்வீசிப் பேரின்ப வலைவீசும் வேடுவனோ? 16 செல்வமே நீபிறந்த திருநாட்டின் அகமெல்லாம் நெல்வளமும் சொல்வளமும் நினைத்துநீ கண்வளராய் 17 வாய்மைக்கோர் திருக்கோவில் வன்மைக்கோர் இமயமலை தாய்மைக்கோர் காவிரியே தமிழாலே கண்வளராய் 18 மாந்தரெலாம் தாய்மொழியில் வளர்கல்வி கற்பதற்கு வேந்தரெலாம் இல்லையென்று வெதும்பியோ அழுகின்றாய் 19 முரசறைந்து மொழிபரப்பி முடியிமயம் வென்றதமிழ் அரசரெலாம் இல்லையென அலறியோ அழுகின்றாய் 20 அம்மாவோ என்னைநீ ஆங்கிலவாய்ப் பள்ளிக்குச் சும்மாவும் விடாயென்று சொல்லவோ துடிக்கின்றாய் 21 சிறியவாய்க் குழந்தைகள் செந்தமிழை உண்ணாமல் தெரியவாய் ஆங்கிலத்தைத் திணிப்பதற்கோ துடிக்கின்றாய் 22 அப்பாநல் லம்மாவென்று அழகுதமிழ் கூறாமல் எப்படியோ வாய்பிளக்கும் இழிவுகண்டு நாணினையோ? 23 உலக மொழியாக ஒண்டமிழை வளர்க்காமல் உலக வெறிபிடித்த ஊமையர்க்கு நாணினையோ? 24 குறையுடைய தமிழென்று கொடுநாவால் சொல்வாரின் நிறையுடைய மதிகண்டு நெடும்பொழுது சிரித்தனையோ? 25 ஒருகுறையும் வாராமல் உயர்தமிழால் உனைவளர்ப்பேன் பெருவிரலைச் சுவைத்துநீ பெருமிதமாய்க் கண்வளராய் 26 ஆண்டாளாய்ப் பத்தினியாய் அம்மையாய் என்குடலைத் தீண்டாது வந்துதித்த தென்மகளே கண்வளராய் 27 சோற்று வயிறென்று சுடுசொல்வார் நாமடங்கப் பேற்று வயிறளித்த பெருந்தவமே கண்வளராய் 28 என்னம்மா என்னப்பா என்றினிய குழல்கேட்க அன்னம்மா எனவந்த அகப்பொருளே கண்வளராய் 29 எந்தமிழ்க்கு நிகரில்லை என்றுயாம் முரசறையச் செந்தமிழ்க்குக் கைகூப்பிச் செவிசாய்த்துக் கண்வளராய் 30 (1978) 16. தமிழ் சூடி தமிழ்சூடி வழிபாடு செய்வாய் குழந்தாய் தாய்மொழி தவறாது கற்பாய் குழந்தாய் திருக்குறள் கண்போலத் தெளிவாய் குழந்தாய் தீமைகள் மனத்தினும் தீண்டாய் குழந்தாய் துடிபோலப் பள்ளிக்குத் தொடர்வாய் குழந்தாய் தூய்தமிழ் எங்குமே சொல்வாய் குழந்தாய் தென்றலில் நன்றாகத் திளைப்பாய் குழந்தாய் தேனினிய நூலகம் செல்வாய் குழந்தாய் தைத்திங்கள் பொங்கலில் தளிர்ப்பாய் குழந்தாய் தொண்டுகள் பலசெய்யத் துடிப்பாய் குழந்தாய் தோலாத தமிழ்நூல்கள் தொகுப்பாய் குழந்தாய் தமிழ்சூடி வழிபாடு செய்வாய் குழந்தாய். 1. அகத்தமிழ் படி 2. ஆழ்வார் நெறிநில் 3. இந்தியனா யிரு 4. ஈட்டுக பொருள் 5. உடலை வளை 6. ஊழையும் வெல்க 7. எழுச்சி பெறுக 8. ஏனென்று கேள் 9. ஐ.நா. நன்று 10. ஒருமை வழிபடு 11. ஓசி கேளேல் 12. ஒளவையைப் போற்று 13. எஃகுபோல் நில் 14. மக்களை மதி 15. பொங்கல் அயர்க 16. எச்சில் துப்பேல் 17. தஞ்சையைக் காக்க 18. கட்டுக்குட் படு 19. கண்ணகி வழிநட 20. முத்தின் எழுது 21. இந்தியை விலக்கு 22. தப்பினை ஒப்பு 23. வம்பை வளர்க்கேல் 24. பொய்யை விடு 25. வேர்க்க உழை 26. கல்லை எறியேல் 27. எவ்வம் எதற்கு 28. வாழ்வை உயர்த்து 29. உள்ளிப் பழகு 30. நற்சான்று பெறு 31. உன்னைத் திருத்து 32. கலகல வென்றிரு 33. காந்தி வழிச்செல் 34. கிளர்ச்சி எதற்கு 35. கீதை நெறிநில் 36. குறுந்தொகை படி 37. கூட்டுறவு கொள் 38. கெடுபிடி வேண்டா 39. கேண்மை பெருக்கு 40. கையூட்டு மறு 41. கொரான் வழிநில் 42. கோதுமை யுண் 43. கௌவை பரப்பேல் 44. சங்கநூல் போற்று 45. சாவிலும் மகிழ் 46. சிலம்பை நடி 47. சீறூர் வாழ் 48. சுண்டை வளர் 49. சூளைப் போற்று 50. செந்தமிழ் பயில் 51. சேமிப்புப் பழகு 52. சைவம் பிடி 53. சொல்லைக் கலவேல் 54. சோர்வை விடு 55. ஞமலியின் உணர் 56. ஞாலம் பார் 57. ஞிணம் பெருக்கேல் 58. ஞெசிழ்ச்சி வேண்டும் 59. ஞேயரை ஆராய் 60. ஞொள்குதல் செய்யேல் 61. தமிழிசை பரப்பு 62. தாய்மொழி முதன்மொழி 63. திருக்குறள் வரப்பண் 64. தீண்டாமை யொழி 65. தும்பையின் இரு 66. தூணென நில் 67. தெருவை அழகுசெய் 68. தேவாரம் பாடு 69. தையல் பழகு 70. தொல்காப்பியம் படி 71. தோட்டம் வளர் 72. நகத்தைக் கடியேல் 73. நாட்டை நினை 74. நிறுத்தம் விடு 75. நீளப்பேசேல் 76. நுகத்தொழில் சிறப்பு 77. நூல்கள் எழுது 78. நெஞ்சை உயர்த்து 79. நேற்றை மற 80. நைநை என்றிரேல் 81. நொடியில் முடி 82. நோக்கைப் புரி 83. நௌவியின் மருளேல் 84. படிப்பைத் தொடர் 85. பாரியின் இரங்கு 86. பிறவியை மதி 87. பீடுவினை செய் 88. புறத்திணை படி 89. பூம்புகார் போற்று 90. பெரியார் வழிநில் 91. பேகனைப் புகழ் 92. பையவும் ஓட்டு 93. பொறியியல் வளர் 94. போரை யொழி 95. பௌவம் செல் 96. மதுவை விலக்கு 97. மாற்றம் விரும்பு 98. மிதியடி குறை 99. மீண்டும் நினை 100. முத்தமிழ் பரப்பு 101. மூடை தூக்கு 102. மேநாள் அயர் 103. மையம் கடைப்பிடி 104. மொழிபல கல் 105. மோதுதல் தவிர் 106. மௌவல் சூடு 107. யமனைப் புறங்காண் 108. யாப்புப் பழகு 109. யூகி போலிரு 110. யோகம் பயில் 111. வருவாய் பெருக்கு 112. வானொலி கேள் 113. விவிலியம் படி 114. வீண்மை விடு 115. வெட்கப் படு 116. வேலையை நிறுத்தேல் 117. வைவதை விடு 118. வெளவியாய் இரேல் (1978) 17. புரட்சி மண்டோதரி தன் கணவன் இராவணன் பிறன்மனையாளாகிய சீதையைக் காமுற்று அசோக வனத்திற் கொண்டு வந்து வைத்திருக்கிறான் என்ற தீயசெய்தி கேட்டு வெதும்பினாள் மண்டோதரி. அவனைத் திருத்தும் துணிவு கொண்டாள். இராவணன் நள்ளிரவில் அசோகவனஞ் சென்று இரந்து சீதையின் காலடியில் விழ முற்பட்டபோது, அங்கு முன்னரே சென்றிருந்த மண்டோதரி எதிரே நின்றாள். தன் மனையாளைக் கண்ட இராவணன் நடுநடுங்கினான். மண்டோதரி அவனுக்கு அரசு நெறியையும் ஒழுக்க நெறியையும் இடித்துச்சொல்லிச் சீதைக்கு உடனே விடுதலையளித்தாள். கணவனைத் திருத்திய மண்டோதரியின் கற்புப் புரட்சி இது. மண்டோதரி போராரும் இலங்கையனின் புதியசிறு செயல்கேட்டுப் பொத்திக் கொண்டாள் சீராரும் வாசகத்தில் திருவழகுப் புகழ்பெற்ற தீஞ்சொற் றேவி; ஊராரும் உழையாரும் ஊமைகளாய் உண்டுறங்கும் ஒழுக்கங் கண்டாள் ஏராரும் திருக்குறளின் இல்வாழ்க்கைத் துணைக்குறளை எண்ணி நின்றாள். 1 கற்பின் இயக்கம் மற்கொண்ட திசையானை மருப்பொசித்த நிறைகையன் மடங்கா வேந்தன் பொற்கொண்ட மலையெடுத்த பொருதோளன் வரம்பெரியன் பூட்கை மன்னன் நெற்கொண்ட செய்யெல்லாம் நெடுநரம்பின் யாழிசையால் நீளும் நாடன் எற்கொண்டான் மனங்காப்பேன் எங்குடியின் சொற்காப்பேன் இதுவும் கற்பே. 2 தேவர் சூழ்ச்சி என்னகத்தான் என்னுயிரான் இருபத்துத் தோளினாலும் இறுக்கிக் கொள்ளும் தன்னகத்தான் என்மார்புத் தடம்புரண்டு போகாத இருப்புப் பாதை மன்னகத்தான் மரபான மாற்றாரின் வஞ்சகத்தை மறித்துப் பாராப் பின்னகத்தான் குறள்கடிந்த பிறன்மனையை நோக்காத பெருமை யாளன். 3 மனையாளும் என்னன்பன் மாசொன்றும் இல்லாதான் மக்கட் காக வினையாளும் பொதுநலத்தன் வீரத்தின் கருவறையன் வேதம் பாடும் நினைவாளன் சிவன்மறவா நெஞ்சாளன் உள்ளத்தே பிறனோர் இல்லாள் தனையாளும் சிற்றெண்ணம் தந்தவர்யார் தேவரெனுஞ் சாதி யாரோ. 4 அழுக்காற்றிற் படிந்தவர்கள் அயன்தேவர் உள்ளிட்டோர் ஆணும் பெண்ணும் புழுக்காற்றில் அரக்கமனைப் பொதுவேலை செய்பவர்கள் நாளும் நாளும் தழுக்காற்றிற் கைகூப்பித் தம்வயிறு வளர்ப்பவர்கள் இலங்கை வேந்தை ஒழுக்காற்றிற் குறைசொல்லி ஒழிப்பதற்கு வழிகண்டார் உய்த்த சூழ்ச்சி. 5 இலங்கைக் கற்பு இலங்கையிலே எங்கேனும் இன்னொருவன் நன்மனைமேல் இச்சை யுண்டோ? விலங்கினமும் நாயினமும் வெருவருக்கும் நஞ்சினமும் விரிநீ ராடும் மலங்கினமும் ஓரொழுக்க வாழ்வினையே மதிக்கின்ற உயர்ந்த நாட்டில் கலங்கினத்துத் தேவகுலம் காட்டுகின்ற தீச்சூழல் கலங்கக் காண்பேன். 6 ஆண் கற்பு குலத்திற்கும் அரசியலின் கோன்மைக்கும் குறைவேண்டுங் குடிகள் மக்கள் நலத்திற்கும் உலகத்தின் நடப்புக்கும் அறிவுடையோர் நயந்து சொன்ன புலத்திற்கும் பெண்ணினத்தின் பொற்புக்கும் கற்புடையோர் போற்றுந் தாலிக் கலத்திற்கும் ஆணுலகம் கட்டுண்டு வழிநடத்தல் கடப்பா டாகும். 7 கற்பின் பொறுப்பு நுழையாத குடிசைக்குள் நோன்பிருப்பார் விட்டகன்ற நொடிமை பார்த்து விழையாத முனிவேடம் மேற்கொண்டு பிறனுடலை விரும்பித் தூக்கி இழையாத துயர்வனத்தில் இல்லாள்கள் செவிகேட்க வைத்தான் என்றால் பிழையாத மனைவியர்க்கும் பிழைசெய்ய ¹இடங்கொடுத்த பிசகு போமோ. 8 களித்தாடுங் கணவனையும் கழிகாமக் கணவனையும் கன்று சூதில் விளித்தாடுங் கணவனையும் வினைசுருக்கித் தசைபெருக்கி வீம்பே பேசி நெளித்தாடுங் கணவனையும் நெஞ்சரிக்கும் புகைகுடித்து நீள ஊதித் திளைத்தாடுங் கணவனையும் திருத்துகின்ற பொறுப்புடையாள் தீமை யில்லாள். 9 இராவணன் செலவு காமத்தின் வெப்பம் மிக்க கடலுடை இலங்கைக் கோமான் யாமத்துங் கண்கள் காண ஞமனிகர் சீதை நஞ்சை ஏமத்துப் புணையென் றெண்ணி இடையிலார் விளக்கங் காட்டச் சேமத்துப் படையு மின்றித் திறளளி வனத்துச் சென்றான். 10 குறிக்கோள் சென்றவன் இன்றெ னக்குச் சிறந்தவோர் நாளாம் என்றான் வென்றநல் மனிதப் பெண்ணை விழுந்தடி வணங்கி யேனும் ஒன்றுதல் பெறுவேன் இன்பம் உம்பரார் தேவன் போலப் பொன்றுதல் வரினும் ஏற்பேன் புதியதோர் நுகர்ச்சி போதும். 11 பிதற்றல் என்னகர் வந்த பின்னர் என்னுடை உரிமை யானாள்; முன்னவன் கணவன் என்றல் முதுமொழி யளவே யாகும்; என்னவன் உனக்குச் செய்வான் இழிதவம் நோற்கும் மெய்யன்; மன்னவன் உனக்கு நானே; மனையவள் எனக்கு நீயே. 12 தாழ்வு புலக்கின்ற மனைவி யில்லேன்; பொதுமகள் ஊடிக் கூடும் அலக்கின்ற மயக்கம் இல்லேன்; அயன்மனை அழகு கேட்டுக் கலக்கின்ற நெஞ்சன் ஆனேன்; கற்பினைச் சிறிது நீக்கி உலக்கின்ற உயிரைத் தாவென் றுன்னடி வணங்கு வேனே. 13 வீழ்ச்சி வீழ்தற்கே முனைந்த வீரன் விருப்பொடு விழித்த போது சூழ்தற்கே அறிவும் இன்றிச் சொல்லற்கே நாவும் இன்றிப் போழ்தற்கே உயிரும் இன்றிப் பொலபொல தலையன் ஆனான் வாழ்தற்கே புரட்சி செய்யும் மயன்மகள் எதிரே நின்றான். 14 கள்ளமாய் எழுதித் தேர்வில் கைப்படு பேதை போல எள்ளலாய்ப் பெண்ணைப் பேசி இடிபடுங் கயவன் போலத் துள்ளலாய் வேலி தாண்டித் தொடுத்துணும் மாடு போல உள்ளமாய் நடுக்கங் கொண்டான் உம்பரை நடுக்கஞ் செய்தான். 15 அறப்புரட்சி கற்புருக்கும் நல்லாளைக் கவின்மறைந்த நிறத்தாளை எற்புருக்குந் தவத்தாளை இல்நோக்குஞ் சானகியை பொற்புருக்கும் வனம்விட்டுப் போய்வருக என்றாளே அற்புருக்கும் மயன்மகளார் அறப்புரட்சி வாழ்த்துவமே. 16 தேவர் கயமை தேவரவர் கயவரெனத் திருக்குறளுஞ் சாற்றலையோ? பாவருசீர் இராமபிரான் பத்தினியைத் தனியாக்கி ஏவருசீர் இராவணனாம் என்னரசை முனியாக்கிக் கேவலமார் வினைசெய்தார் கீழோராம் மேலோர்கள். 17 இடித்துரை மனமடங்கி நிற்கின்ற வரையெடுத்தான் கைநோக்கி இனமடங்கு புன்செயலை இன்றோடு விட்டொழிக; தனமடங்கு நின்மனையைத் தாசரதி எண்ணினால் சினமடங்கு போரன்றித் தெம்மாங்கு பாடுவையோ? 18 வேந்தனார் நடையறிந்த வீதிவாய் இளையரெலாம் ஏந்தலார் செவிகேட்க ஏதேதோ புலம்புவரால்; மாந்தனார் ஒழுங்காவர் மன்னனார் ஒழுங்காயின்; கூந்தலார் கற்பாவர் குடியரசுங் கூத்தாடும். 19 தோளாற்றல் கையாற்றல் தோலாத வரமாற்றல் வாளாற்றல் பலவுடையாய் வளருகின்ற உடற்பசியேல் நாளாற்றுங் கன்னியரை நான்கட்டி வைக்கின்றேன் தேளாற்றற் பிறன்மனையைத் தீண்டாமை வாழ்வாகும். 20 சீதை விடுதலை விடுதலை வழங்கிய வீரியை வணங்கி முடிதலைத் திரிசடை முன்வழி காட்ட அடுதலை விரும்பும் அழகனை எண்ணிச் செடிதலைச் சானகி செல்வதைக் காணீர். 21. (1978) 18. கொல்லாச் சிலம்பு பொற்கொல்லன் மனைவி செம்மலர் என்பவள் தன் வீட்டின் உள்ளறைக்குள் விலையுயர்ந்த சிலம்பொன்று மறைத்து வைக்கப்பட்டிருப்பதைத் திடீரெனக் கண்டாள். பாண்டிமாதேவி தன் ஒரு சிலம்பு காணாமற் போயிற்று என்று சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது. குடுகுடுப்பைக் காரனுக்குப் பொற்கொல்லன் கொடை செய்த அருமையும் அவள் நினைவுக்கு வந்தது. உடனே பாண்டியன் தேவியைப் பார்த்தாள். புகாரிலிருந்து மனைவி யொடு வந்த ஒரு வணிகன் தன் சிலம்பைக் களவாடினான் எனவும் பெருந்தண்டனை பெறுவான் எனவும் தேவி வெளிப்படுத்தினாள். இருவரும் அரசவைக்குச் சென்ற சமயம் ‘கள்வனைக்கொன்று சிலம்பினைக் கொண்டு வருக’ என்று பாண்டியன் ஊர் காவலர்க்குக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தான். அரசனை இடைமறித்துச் செம்மலர் இத்தீர்ப்பு முறையற்றது எனக்கூறித் தான் அன்று எதிர்பாராது ஓரிடத்துக் கண்ட சிலம்பினைக் காட்டினாள். அதுதான் காணாமற்போன தேவியின் காற்சிலம்பு. கொலையைத் தவிர்த்துச் செங்கோலையும் தங்கள் உயிர்களையும் காத்தளித்த செம்மலர் நல்லாளைப் பாண்டியன் அரசவையில் பொதுமக்கள்முன் பாராட்டினான். அவள் பெருந்தொண்டினையும் துணிவையும் உலகோர் அறிய வேண்டிச் ‘செம்மலர்’ என்ற நாடகம் அரசு விழாவாக ஆண்டு தோறும் நடைபெறவேண்டும் என்று ஆணையிட்டான். பாண்டியன் அன்புப் பரிசாக வழங்கிய முத்துமணிமாலையைச் செம்மலர் தன்தொண்டின் பரிசாக வாங்க மறுத்துவிட்டனள். தங்கட்கு வரவிருந்த தீயவிளைவுகள் செம்மலரின் கடமை வீரத்தால் மாறிவிட்டன என்ற நிலையறிந்த கோவலனும் கண்ணகியும், ‘வீரச்செல்வி’ என்று அம்மலராளை நெஞ்சத்துள் வைத்துப் போற்றினர். செம்மலர் நங்கை சோலை மலருட் சுருண்ட பாம்புபோல் சேலை யடுக்கினுட் சிலம்பணி கண்டாள் பொன்செய் கொல்லன் பொன்னன் மனையாள் நன்செய் போலும் நல்வரம் புடையவள் பைங்கலன் கொழிக்கும் பட்டினம் பிறந்தவள் 5 செம்மலர் என்னும் செல்லப் பெயரினள் நாற்பது வயதினும் நலியா இளமையள் ஏற்பதை ஏற்பாள் எதிர்ப்பதை எதிர்ப்பாள் திண்ணைப் பள்ளியிற் சிறுதமிழ் கற்றாள் எண்ணல் பெருக்கல் இளங்கணக் கறிவாள் 10 உண்மைக் கதைகளை உள்ளங் கொள்வாள் அரிய தாயினும் உரியதைப் பேணி உரிய தாயினும் ஊர்வம்பு பேசாள் அன்புடைக் கணவன் அரண்மனைக் கொல்லன் என்ற தொடர்பால் இல்லற முதலே 15 பாண்டிய தேவியொடு பழகி வருவாள்; சிந்தனை செய்தல் அருவினை பொலிந்த அயலார் சிலம்பணி ஒருவிலை யின்றி உள்வீடு வந்த காரணம் யாதோ கலங்குமென் னறிவு; செப்பஞ் செய்கெனச் செல்வர் கொடுத்ததோ? 20 விற்பனை செய்கென வெளியார் தந்ததோ? பார்த்தொன்று செய்யப் பரிந்து பெற்றதோ? ஒருமகள் மணத்துக் கொண்பொருள் வேண்டிப் பெருமகன் துணிந்த பீடில் நெறியோ? பட்டறை நடத்தும் பணிவினை யெல்லாம் 25 கட்டறை வைக்கும் கடனெனக் குண்டு; நன்னெறி வந்த தொன்னெறிச் சிலம்பெனின் அடுக்கிய புடவையுள் ஒடுக்கம் புக்கதென்? பத்துநாள் முன்னர்ப் பாண்டிமா தேவி ஒத்த சிலம்பினுள் ஒன்று தொலைந்தென 30 முத்துநீர் பனித்து முறையிடக் கேட்டேன்; அதுகொல் இதுவென அறியே னாயினும் வாளா விருத்தல் வாழ்வா காதே; பொற்கொல்லன் குறிப்பு நல்ல காலம் நாடி வருகுது கெட்ட காலம் கீழ்த்திசை போகுது 35 செல்வம் கொழிக்குது சேருது தங்கம் வயிரஞ் சொலிக்குது வாழ்வு பலிக்குது மெய்யாப் பகவதி மேற்கண் பார்க்குது அய்யா சொக்காய் ஆடை தருகுது நல்ல காலம் நாளை வருகுது 40 என்றோர் உடுக்கையன் என்மனை வந்தோன் அன்றோர் இரவில் அதிர அடித்தான்; கொடைமை யறியாக் கொல்லன் பொன்னன் இடைமேல் ஆடையை இனிதென வழங்கினன்; நடையின் மாற்றம் நன்றோ தீதோ? 45 ஐயப் படுதல் அழகிலை யாயினும் உண்மை காணல் உயிர்க்காப் பென்ற சிந்தனை நீடிய செம்மலர் அறிஞள் செம்மலரும் தேவியும் அடுக்களைத் தொழிலை நறுக்கென முடித்துச் சந்தனப் புடவையைப் பந்தெனக் கட்டிக் 50 கொந்தலர் கண்ணியைக் கூந்தலுட் சொருகிப் பாண்டித் தேவியைப் பார்க்க ஏசினள்; அயற்பொதுச் செய்திகள் அளவிய பின்னர் கயற்பொறித் தேவி களித்த முகத்தொடு காவிரி வணிகனாம் களவுக் கலைஞனாம் 55 பூவிரி கூந்தற் புனையிழை மனைவியொடு இந்நகர் வந்தோன் என்கால் ஞெகிழம் ஒன்றைத் திருடி உயர்விலை கூறிச் சென்ற காலை செய்பொற் கொல்லன் தன்கைப் பட்டான் தண்டனை பெறுவான். 60 உயிர்வினைக் கொல்லரும் ஒண்பணிக் கொல்லனும் செயிர்வினைத் தென்னவன் திருமுன் உள்ளனர்; தென்னவன் கோயிலுள் திருடிய மூடனை என்னவன் செய்வான் இன்னுயிர் பறிப்பான் என்று கூறிய இடிமொழி கேட்டுப் 65 பதறிய செம்மலர் பழிபடாத் தேவியே உண்மை யிடத்தை உணர்தல் வேண்டும் பெண்மையின் பொறுப்புப் பெரும்பொறுப் பாகும்; கொலையைத் தடுத்தல் அரைசனை நேரே அணுகி உண்மையை உரைசெயல் நன்றாம் புரைசெயல் தீதாம்; 70 இருவரும் போவோம் இப்போ தென்று மெய்ம்மை காண விழைந்த தேவியொடு மெய்ம்மை காட்ட விரைந்த செம்மலர். அதிரும் அவையை அடுத்த பொழுதில் கன்றிய கள்வன் கைய தாகிற் 75 கொன்றச் சிலம்பு கொணர்க வென்று தென்னவன் முழங்கிய தீர்ப்பைக் கேட்டனள்; கேட்ட செம்மலர் கேடில் மன்னவ கொல்லுந் தீர்ப்புக் கொடுங்கோ லாகும்; நல்லவன் கொலை ப்படின் நாடா காதே; 80 கண்டதைக் கேட்டுத் தண்டஞ் செய்தல் மண்டிணி ஞாலத்து மரபா காதே; அரசியின் சிலம்போ அயலவர் சிலம்போ எவரது சிலம்பென யானறி கில்லேன்; 85 நாடா வகையில் நானொரு சிலம்பு தேடா விடத்துத் தேளெனக் கண்டேன்; ஏடார் காவல இதோவச் சிலம்பு கண்ட தெவ்விடம் காட்டெனல் வேண்டா; கண்டவிச் சிலம்பின் காலார் யாரென விண்டு பார்த்தலே விதிமுறை யாகும் 90 என்று செம்மலர் எடுத்துக் காட்டினள்; கள்ளம் அறிந்தனள் காதலி எனாஅ உள்ளம் சுருங்கி உட்கிய பொன்னன் பார்ப்பவன் போலப் பசப்புக் காட்டி ஆர்க்குமிஞ் ஞெகிழம் அரசியதென்றான்; 95 உள்ளவோர் சிலம்பொடு ஒத்தீடு செய்து கள்ளமில் இனமெனத் தெள்ளினள் தேவி; களவினைப் பிடிக்கும் உளவினை விடுத்துத் தேவியின் ஊடல் தீர்க்க வாய்த்த ஓவியச் சிலம்பென உவந்தனன் செழியன்; 100 பொதுமக்கள் ஒளிதரு வேகத்து ஊரூர் தோறும் களிதரு செய்தி காற்றெனப் பரந்தது; மக்கள் கூட்டம் வளருந் தமிழின் சொற்கள் கூட்டம் போலத் தொக்கது; சேர்ந்த மக்கள் செழுந்தமிழ் எழுத்தில் 105 நேர்ந்த ஒழுங்கின் நிரைநிரை நின்றனர்; குழந்தை யில்லாக் கோலனும் கோலியும் குடிகள் அனைவரும் குழவிய ராக முடியிற் கொள்ளும் அடியோ ராதலின் அருகிற் சென்றும் அன்புரை மொழிந்தும் 110 நெருக்கடி யின்றி இருக்கச் செய்தபின் விழுமிய குடிகளை விதிசெய் அவையரை முழுதுணர் அமைச்சரை முத்தமிழ்ப் புலவரைச் செம்மலர் மங்கையைக் கைம்மலர் கூப்பி பாண்டியன் அறிவிப்பு எம்மலர் வனப்பினும் செம்மலர் சிறந்தது 115 அம்மலர்ப் பெயரிய அறத்துறை மாதே! உலகோர் முன்னர் உன்னடி வணங்குதும்; புலவோர் பின்னர்ப் புகழ்ந்து பாடுவர்; என்மொழி கேட்ட ஏவல் மாக்கள் புன்மொழி நம்பிப் பொருவாள் கொண்டு 120 புகாஅர் வணிகனைப் பொய்யன் என்று தகாஅத் தண்டம் சாடினர் என்றால் கணவனை யிழந்த காரிகை விடாஅள்; கற்பின் கொழுந்து வெற்பையும் பொடிக்கும்; கோடாக் குலத்தோர் கோடின ரென்று 125 வாடாப் பழிச்சொல் வழிவழி பரவப் பாடாப் புலவோர் பாடா தொழியார்; வளையாச் செங்கோல் வளைத்தேன் உயிரும் வளையார் தேவியின் வல்லா வுயிரும் உளையா அளையா ஒருங்கே போகும்; 130 மதுரைத் தென்னகர் வடிவம் மாறிப் புதரும் சிதலும் புற்றுச் சுவரும் வெதிரும் பாலை வெடிப்பு மாகும்; செம்மலரின் புகழ் எதிரது அறிந்துடன் எல்லாம் தடுத்த முதுக்குறை நங்கைக்கு முடிதாழ் வணக்கம்; 135 கொலையும் பழியும் கொடுமையும் தவிர்த்து நிலையும் புகழும் நேர்மையும் காட்டி உற்ற காலத்துள் ஓடோடி வந்து குற்றம் புகாமல் கோன்மை காத்துப் பெற்ற தாயினும் பேரன்பு செய்த 140 வெற்றிச் செம்மலர் வீரியை வணங்குதும்; கோடாச் செங்கோல் குறையுங் காலை ஏடா நமக்கென் என்றொழி யாமல் கோடாது நிறுத்தல் குடிக்குங் கடனெனக் குடியரசு புதுக்கிய கொள்கை மகளை 145 முடியரசு போற்றல் முறையா கும்மே; பெண்மையின் ஆற்றல் பிழையா அரசியல் உண்மையின் வெற்றி உலகோர் அறியச் செம்மலர் என்னும் செவ்விய கூத்தினைப் பாண்டி நாடும் பண்பார் தமிழும் 150 ஆண்டு தோறும் அரசு விழாவா அயர்தல் வேண்டும்; அரசின் ஆணை; ஆணை மொழிந்தபின் அரசனும் அரசியும் சேணிடை யிருந்த செம்மலர் நங்கையைக் காண வந்து கடிமலர் அளித்து 155 முத்துக் குயிற்றிய மும்மணி மாலையை வைத்துக் கொள்ளென வணங்கிக் கொடுத்தலும் ஊதியங் கருதுவோர் உண்மை கூறார் உண்மைப் பயனோ ஊதிய மன்று பண்பெனப் படுவது பரிசில் தொண்டே 160 என்று செம்மலர் எளிதில் மறுத்த நன்றுயர் காட்சியை நயந்து பார்த்தனர்; கோவலன் கண்ணகி பார்த்தோர் யாரெனின் பாண்டியன் கட்டளைக் கொலையிற் றப்பிய கோவலன் கண்ணகி நிலையின் மாற்றம் மலையென வுணர்ந்து வாழ்வு தருமென வந்தவிம் மதுரையில் வீழ்வு தடுத்த வீரச் செல்வியென நிறைபட நெஞ்சாற் றொழுது குறையற வாழ்ந்தனர் கூடி மகிழ்ந்தென் 169 9. அன்னை கொதிக்கிறாள் கொதிசொல் போய்வரு கின்றேன் போய்வரு கின்றேன்; நாய்படும் பாடு தாய்பட லாமா? சேய்தரும் இழிவுகள் செப்பற் கின்றித் தாயெனப் படூஉம் தமிழெனும் அன்னை நான் போய்வரு கின்றேன் போய்வரு கின்றேன்; 5 ஆங்கில முதலாம் அயல்மொழி தாயாய் ஓங்கி வாழ்வீர் உண்டு வாழ்வீர். முரண் பிறப்புக்கள் காப்பியன் பிறந்த கருப்பையிற் பிறந்தீர் சான்றோர் பிறந்த தசையிற் பிறந்தீர் வள்ளுவன் உதித்த வயிற்றில் வந்தீர் 10 இளங்கோ சாத்தன் இடத்தில் இருந்தீர் எம்மொழி கற்பினும் இனிது வாழ்க அம்மையின் விருப்பம் அதுவே யாகும்; தேவன் கொங்கன் சேக்கிழான் கம்பன் தோலா மொழியன் தொடர்புக ழேந்தி 15 வில்லி கச்சி வீர பாண்டியன் கேழில் உமறு கிருட்டிணப் பிள்ளைச் சேய்கள் வளர்ந்த சீரிடம் பிறந்தீர் பூரணன் ஆசான் பொருவில் இனியன் ஏரண வரையன் இன்னுரைச் சிலையன் 20 நன்னடை அழகன் நல்லார் நாதன் சொன்னடை முனிவன் தொன்முறைச் சண்முகன் உதித்த அகட்டில் உடன்பிறந் தோரே போய்வரு கின்றேன் போய்வரு கின்றேன்; என்னைச் சிதைத்தும் என்னியல் மறைத்தும் 25 பன்மொழி தேறிப் பாங்குற வாழ்க; மூவர் ஆழ்வார் மூலன் வாசகன் அருணன் பட்டினன் அருட்குணங் குடியான் சங்கரன் அனுசன் தவப்பெருஞ் சித்தர் தாயு மானவன் தனிப்பெரு வள்ளல் 30 அன்பர் தோய்ந்த அரத்தக் கலப்பீர்! மீனாட்சி சுந்தரன் வேத நாயகன் தாமோ தரனே சாமி நாதன் ஆறு முகனே ஆனந்த முனிவன் பரிதிமாற் கலைஞன் பண்டித மணியன் 35 வையா புரியான் மறைமலை காசு நாட்டார் இராகவர் நற்றமிழ்த் திருவி சுந்தரப் பாரதி சுவைமணிச் சிதம்பரன் பைந்தமிழ்ச் சேது பண்டா ரத்தார் எனையோர் கிடந்த இன்னுடல் மக்காள்! 40 உலகமொழி அறிவுப் பிறப்பென ஒருகுலம் உண்டோ? அறிவியல் மொழியென ஒருமொழி உண்டோ? பிறந்தோர் வளர்த்தால் பெருமொழி யாகும்; பிறந்தோர் துறந்து பிறமொழி வளர்த்தால் எம்மொழித் தாயும் இடுகா டடைவாள்; 45 உலக மொழியென ஒருபிறப் பில்லை; எங்ஙனம் தம்மொழி ஏனையர் வளர்த்தனர் அங்ஙன முறையை அறிவொடும் பொருளொடும் துணிவொடும் முழுதொடும் தொடர்ந்து வளர்த்தால் உம்மொழி தானும் உலக மொழியாகும்; 50 பாக்கியத் தாய் நாடகச் சுந்தரன் நாட்டுக் கவிஞன் பாரதி கவிமணி பாரதி தாசன் பட்டுக் கோட்டையன் பாமகள் தாசன் குழந்தைப் புலவன் கூத்திசை சங்கரன் பம்மல் கிட்டன் பாங்கார் சண்முகம் 55 திருவீழி மிழலை திருப்பாம் பரனே கலையார் வாணன் கல்கி முவ வரலாற் றிராசன் வன்தொண் டிலக்குவன் புதுமைப் பித்தன் புனைகதை அழகிரி பலரைப் பெற்ற பாக்கியத் தாய்நான்; 60 ஆள்வினைத் தாய் கரிகால் வளவன் கடற்படைக் குட்டுவன் எரிகா லன்ன இளந்தேர்ச் செழியன் இராச ராசன் இராஅ சேந்திரன் பொருகடல் ஓட்டிய புலவன் சிதம்பரம் இந்தியத் தலைமை இராசகோ பாலன் 65 பகுத்தறிவு பரப்பிய பார்புகழ் பெரியார் கல்விக்கண் பரப்பிய காம ராசன் எழுத்திற் சொல்லில் ஈடில் அண்ணா அனைவரைப் பெற்ற ஆள்வினைத் தாய்நான்; வள்ளல் தாய் சங்கம் புகழ்ந்த தனியெழு வள்ளல் 70 பாண்டியர் சோழர் பல்லவர் சேரர் கொடையிற் பயின்ற குறுநில மன்னர் நடையிற் சிறந்த நல்வினை யாளர் சடையன் காங்கையன் சந்திரன் வாணன் சீதக் காதி சேது பதிகள் 75 பாண்டித் துரையான் பழநி யப்பன் உமா மகே சுவரன் ஊற்றுமலைச் சிதம்பரன் படிப்புக் கொடைஞன் பச்சை யப்பன் அண்ணா மலையெனும் அருங்கொடை யரசன் கோடி கொடுத்த கொடைக்கடல் அழகன் 80 எண்ணில் கொடையரை ஈன்ற தாய்நான்; பெருந்தாய் அரசர் வள்ளல் அறிஞர் ஆட்சியர் புரையில் கவிஞர் பொழிஞர் அடியார் நல்லிதழ் எழுத்தர் நாடகர் இசைஞர் பல்புகழ்ச் சான்றோர் வல்துறைக் கலைஞர் 85 கொல்துறை மறவர் குடியறப் பெண்டிர் என்வயிற் றுதித்தோர் எண்ணப் படுமோ? கன்னி யாயினும் கற்பொடு வாழ்ந்த மன்னுபுகழ்ப் பெருமை மறுதாய்க் கில்லை. தமிழின் பெருமைகள் என்னை வெறுக்குந் தொன்னை யுளத்தீர் 90 அன்னை பெருமை யறியாச் சிறியீர் நாணம் விட்டு நானே சொல்லுவன் மானம் இருந்தால் மதிப்பொடு வாழ்மின் முன்பே உலக மொழியாந் தாயை நன்கு வளர்க்கும் நல்லூழ் இல்லீர் 95 இந்திய மொழிகளுட் செந்தமிழ் ஒன்றே உலக மொழியெனும் ஒண்புகழ்க் குரியது; இலங்கை சிங்கை எழிலார் மலேயா பருமா செய்கோன் பல்வள மொரைசு பீசி முதலாப் பிறநா டெல்லாம் 100 தமிழ்மொழி பேசுந் தங்குடி கொண்டது; அதனா லன்றோ இந்திய மொழியுட் பைந்தமிழ் தனக்குக் குரைகடல் கடந்த கோலம் பூரில் உலக முதலரங்கு உருவா யிற்று; 105 கலையார் களஞ்சியம் கண்ட முதன்மொழி நிலையார் தமிழே என்பதை நினைவாய்; அறிவில் மக்கள் அளவில ராயினும் பிறந்த நாள் இல்லாப் பெரியாள் ஆதலின் இறந்தநாள் என்பதோ என்மாட்டில்லை; 110 அன்று முதலா இன்று வரையும் என்னைப் பேசியோர் எண்ணப் படினே எந்த மொழிக்கும் என்மொழித் தொகையோர் விஞ்சுவ ரல்லது எஞ்சுவ ரில்லை; தொன்று பிறந்த தொன்மை மொழிகளுள் 115 நின்று நிலவி நீடும் மொழியான்; அதனால், அலகில் மொழிகளுள் உலக மொழியென இலகுபுகழ் பெறூஉம் ஏற்றம் எனதே; அம்மொழி யெல்லாம் அடியவள் காணப் 120 பின்னர் முளைத்த பிஞ்சுகள் காணீர்; உலகுபுகழ் நேருவின் உடல்மறை காலை ஞாலத் தலைவர்கள் நடத்திய தில்லி இரங்கற் கூட்டத்து எளியோர் தலைவன் காமனை வென்ற காம ராசன் 125 தமிழிற் பேசித் தாய்புகழ் நிறுத்தினன்; ஞாலப் பெரியோன் நம்மகன் காந்தி சாலும் தமிழில் தன்பெயர் எழுதினன்; தன்கல் லறையில் தண்டமிழ் மாணவன் என்று பொறித்தனன் இறையடி போப்பன்; 130 முதுமையில் தமிழை முறையொடு கற்றபின் எதுகை குறையா ஏகக் காப்பியம் ஆரமா அணிந்தான் வீரமா முனிவன்; தனித்து வளரும் தகையது எனவே கணித்துப் புகழ்ந்தனன் கால்டு வேலன்; 135 வடமொழி பிரெஞ்சு வளமார் ஆங்கிலம் நடைமொழி பலவும் நவின்ற பாரதி யாமறி மொழிகளுள் நற்றமிழ் ஒன்றே தாமினி தாகும் சால்பது என்றான்; அலைகள் கையா ஆழ்கடல் நங்கை 140 சிலைகளை வணங்கும் சென்னைக் கடற்கரை உலகம் ஓங்கிய ஒருதமி ழன்னையின் அலகில் தொண்டரை அழகுறக் காட்டும்; என்ன காட்டியும் ஏறுமா றென்னை? அன்னை யாரென அறியா தோர்க்கே; 145 தாயின் கொதிப்பு போய்வரு வேனா? போய்வரு வேனா? தாய்மொழி விற்றுப் பிறமொழி நம்பும் பேய்வழி மக்களைப் பெற்றதற் காக ஊழி முதலா உறைவிடம் விட்டு வாழிய வென்று வயிறோ எரியப் 150 போய்வரு கின்றேன்; போய்வரு வேனா? தமிழ்ச்சுமை கொதிகலன் மானக் கொதிக்கும் அன்னை தொல்காப் பியத்தொடு தொல்லவை யிலக்கியம் ஒல்காச் சிலம்பொடு ஒண்குறள் நாலடி நந்தா மேகலை நற்பெரும் புராணம் 155 சிந்தா மணியொடு சிந்தனைக் கம்பன் தேம்பா வணியே சீறாப் புராணம் வெண்பா மாலை வீர சோழியம் ஒண்பாக் காரிகை உயரணி நன்னூல் கறைநடை யில்லா இறையனா ரகப்பொருள் 160 ஒலிநடை மிக்க பொலிசிற் றிலக்கியம் அமிழ்தினு மினிய தமிழ் விடுதூதொடு உள்ளொளித் திருமுறை ஒருநா லாயிரம் தெள்ளொளி வீசும் தெய்வப் பாடல்கள் பார தீயம் பாரதி தாசம் 165 மனோஒன் மணீயம் மறைமலை சகுந்தலை உரைவழி வந்த வரையியல் தொகுதி புரைவழி சாராப் புதுவகை நூல்கள் எடுக்கு மளவும் எடுத்துக் கொண்டு மடுத்து மார்பிலும் மறைத்துப் போர்த்தி 170 இவைகளை இங்கே இட்டுச் சென்றால் நவையறு செல்வ நலமறி யாமல் ஆற்றலில் அறிவில் அன்பில் மக்கள் தூற்றியும் தொடாதும் தொலைப்பர் என்னா உடலகம் கருகி உயிரகம் உருகிப் 175 போறாள் என்னும் புலம்புச் செய்தி செய்தி பரவல் பெருமகன் காந்தி சிறுமகன் கையாற் சுடப்பட்டு வீழ்ந்த துயர்க்கொடு நிகழ்ச்சி ஒருநொடிக் கணத்துள் உலகறிந் ததுபோல் தமிழக மெங்கும் தழலெனப் பரந்தது; 180 ஆருயிர் போகிய அண்ணா அறிஞரின் பேருடல் காணப் பின்றா உணர்வொடு ஊர்தி யேறி உம்பரில் இருந்தோர் சேரா முன்னம் செத்தோர் போல எதற்கும் துணிந்த இளைய தமிழர் 185 கொதிக்குந் தாயின் குறுவடி தீண்டி மதிக்கும் உயிரை வழங்க வந்தனர்; தமிழர் பெருங்கூட்டம் ஆட்சி முதல்வர் ஆளுநர் அமைச்சர் மாட்சி மிக்க மன்ற வுறுப்பினர் பல்வேறு கட்சியர் நல்வேறு மதத்தர் 190 பாராள் உறுப்பினர் ஊர்நகர் ஆட்சியர் பன்மொழி யறிஞர் பல்கலைக் கழகர் பெருந்துறை வாரியர் அருந்துறைப் பொறிஞர் அறிவியல் தொழிலியல் அணுவியல் மருந்தியல் எண்ணியல் மின்னியல் இடவியல் மொழியியல் 195 நுண்ணியல் வணிகியல் விண்ணியல் வழக்கியல் பொருளியல் அரசியல் போக்கியல் எனப்பல துறைகள் மூழ்கித் தோய்ந்த வல்லுநர் முத்தமிழ்ப் புலவோர் பத்திமை மிக்கோர் எழுத்தினை ஆள்வோர் இதழினை ஆள்வோர் 200 நூலகர் பதிப்போர் நுண்கலைத் தொழிலர் ஆசார் மாணவர் அருங்கலைப் பொழிஞர் சான்றோர் தொண்டர் தனிக்கொடை வள்ளல் பட்டியர் நகரர் பட்டினர் ஊரர் மழலையர் குழலியர் மங்கையர் கிழவியர் 205 விடலையர் குரிசிலர் வீங்குதோள் மறவர் நடவை குறைந்தோர் நன்னலம் குறைந்தோர் புடவை குறைந்தோர் புலன்கள் குறைந்தோர் எனைப்பல தமிழரும் ஈண்டிய கூட்டம் ஒப்பருஞ் சென்னையில் உலகத் தமிழ்விழா 210 செப்பருங் காட்சிகள் தெருவிடை ஊர மெய்ப்படு துடிப்பொடு விளங்கிய நாளில் பிறப்பால் வாய்த்த பெருமொழி என்று மறப்பால் மகிழ்ந்த மக்கள் தொகைபோல் வெற்றிட மின்றி விளம்பர மின்றிச் 215 சுற்றமாய் அன்னையைச் சூழ்ந்து சுற்றி எற்றோ எற்றோ என்றுகண் கலங்கினர்; கலங்கிய கண்ணீர் காலென ஓடி விலங்கிய தாயின் வெற்றடி தோய்ந்தது; பேச்சே பழுத்த பெருங்குடி யரசில் மூச்சும் பேச்சும் முன்வர வில்லை; 220 உதட்டொடு கண்ணும் ஊமை யானது; அடக்கம் அமைதி ஆட்சி செய்தன; யாது செய்வது யார்க்கும் விளங்கிலை; தமிழ்வாழ்த்து சுந்தரன் பாடிய தொழுதகு வணக்கச் 225 செந்தமிழ்த் தாயின் தெய்வக் கலியை மண்ணும் மலையும் வானும் உயிர்பெற எண்ணம் இயங்கத் திண்ணம் இயக்கப் பண்வாய் இசையில் பள்ளிச் சிறுமியர் கண்வாய் பனிப்பக் காதலிற் பாடினர்; 230 காதலிற் பாடிய கலிப்பாத் துள்ளல் மாதரிற் பெரியாள் மனச்செவி அசைத்தது; அந்நிலை கண்டு, தமிழ்ப்புலவன் குழுவில் இருந்த குறிக்கோட் சான்றோன் பழுதறு தமிழை முழுதுறக் கண்டோன் 235 வழுவில் வாழ்க்கை மரபறி புலவன் பொதுமை நோக்கொடு புதுநோக் காளன் பலரும் மதிக்கும் பற்றில் கேண்மையன் பொய்ம்மை நுழையா வாய்மை நெறியன் வசைநா இல்லா இசைநா வுடையன் 240 பழக்க வழக்கப் பக்குவம் பெற்றோன் கேளார் கருத்தையுங் கேட்குஞ் செவியன் துணிந்து முடிக்கும் சொல்லன் ஆயினும் பணிந்து வினைசெய் பண்பிற் பெரியோன் கூப்பிய கையொடு கூட்டம் அமர்த்தி 245 அருகிற் போகி அன்னையை வணங்கினன்; பொறுக்க குற்றம் பொறுக்க குற்றம் வெறுக்கச் செய்த வினையோ மாயினும் பொறுக்க குற்றம் பொறுக்க குற்றம்; கொதிக்கச் செய்தோம் கொதிக்கச் செய்தோம் 250 மதிக்க அறியா மடவோ ராகிக் கொதிக்கச் செய்தோம் கொதிக்கச் செய்தோம்; ஏற்றுச் செய்வோம் இன்னே செய்வோம் போற்றும் நிறைகளை அன்னை புகன்றால் காற்றினும் வேகக் கடிய ராகி 255 ஏற்றுச் செய்வோம் இன்னே செய்வோம்; அறியா வினா அனைவரும் வணங்கி அம்மே உன்னை இனையதோர் விளக்கம் ஏங்கிக் கேட்பர்; எல்லா நூலையும் எடுக்கிப் போர்த்தி எல்லைத் தமிழகத் தொல்லைவிட் டேகி 260 எங்குபோ யிருக்க எண்ணங் கொண்டாய்? கோயில் விட்டுக் குடியிடம் பெயரவும் தாயின் வயிறு தழல்போற் கொதிக்கவும் பேயின் மக்கள் பிழைத்தனர் என்றால் நாயின் இனமும் நற்றிணை யாமே; 265 எங்கள் குற்றம் ஏதென அறியோம் பேது கொண்டு பிதற்றுவ தல்லது யாது செய்வ தென்பதும் அறியோம் உண்மை யிதுவே பொய்ம்மை யில்லை; வஞ்சம் இல்லை நெஞ்சம் உண்டு 270 தஞ்சம் புகுந்தோம் தமிழ்மொழித் தாயே புக்க கொதிப்பைப் புறமே தள்ளி மக்கள் செய்யும் மடமையைச் சிறுமையைத் தக்க வுணர்வொடு சாற்றுக தாயென்று உக்க நீரொடும் உரைத்தனன் புலவன்; 275 மேடை வீரர்கள் புலவன் மொழிந்த பொருள்வினாக் கேட்டும் உலக மொழித்தாய் உட்கொதிப் படங்கிலள்; பெய்யும் மழைபோற் பெரியவாய்த் தொடர்ந்து செய்யும் பிழைகள் தெரியா ரல்லர் பிறமொழி அடிமைப் பெரிய மக்கள் 280 உரிமை நாட்டில் அடிமை உடல்கள் கூட்டங் கூடிக் கூவிப் பிதற்றி நாட்டங் கொள்ளார் என்றான் நன்மகன்; மேடையில் முழங்கும் சோடை வீரர் எளிதிற் கூடுவர் எளிதிற் கலைவர் 285 பேசி யொழிவர் ஓசிக் கையர் என்ன சொல்லியும் என்செய என்று பின்னையுங் கொதித்த பெருந்தமி ழாட்டி. அன்னை பார்வை மக்கட் கூட்டத்தை மதிப்பவ ளாதலின் கூப்பிய புலவனைக் குறிப்பொடு பார்த்தும் 290 பாடிய சிறுமியைப் பரிவொடு பார்த்தும் நாடியல் மக்களை நகைத்துப் பார்த்தும் மண்ணோ விண்ணோ மயங்கப் பார்த்தும் எண்ணா நெஞ்சம் இயக்கமற் றிருப்பக் கண்ணோ துளிப்ப இதழோ துடிக்கக் 295 குப்பை மேட்டிற் குதித்துநின் றேறி புறப்படு முன்னே மறப்படு மக்களின் இறப்படு சிறுமைகள் எடுத்துக் காட்டிப் புறப்படு கின்றேன் புறப்படு கின்றேன் என்றோர் நினைவை எழுப்பிக் கொண்டனள்; 300 அன்றோர் புரட்சி அயல்மொழி வீழ்ச்சி; என்ன உறவு நீங்கள் எவரோ நிற்பவள் எவளோ? எனக்கும் உமர்க்கும் என்ன உறவோ? நீலிக் கண்விடும் போலித் தமிழீர் உண்மைத் தமிழ்மை உங்கட் கில்லை 305 உமரைத் தமிழரென் றுள்ளவு மில்லை நாமத் தமிழரென நகைத்தான் பாரதி; சேமத் தமிழைச் செல்லாத் தமிழெனப் போமத் தமிழெனப் புகலும் சான்றீர் செந்தமிழ் இயற்கை வெந்த நிலத்தை 310 வந்த மொழிகள் வளரும் நிலத்தை இன்னே நான்விட் டேகும் முன்னர் என்றும் நுமரோர் எனக்குச் செய்யும் கொன்றது போலும் கொடும்பழி வினைகளை நானிலம் சிரிப்ப நாணிப் பகருவன்; 315 பாலர் பள்ளி பாலர் பள்ளியாம் பாழ்கொலைக் களங்கள் காளான் போலவும் கறையான் போலவும் பட்டி தொட்டி பட்டினம் எல்லாம் எட்டிப் பிடித்தும் இழுவலை வீசியும் மூன்று வயதில் முழுத்தமிழ்க் குழவிகள் 320 அஆ என்பதை அறியா வகையில் ஆங்கிலம் ஒன்றே ஆசையொடு கற்கும் பாங்கில் உணர்ச்சியைப் பரப்பு கின்றன; பள்ளிச் சிறாஅர் படிப்பிது வாயின் கொள்ளி தமிழ்க்கெனக் கூறவும் வேண்டுமோ? 325 எது உரிமை உரிமை நாடிது உனக்கென் கேள்வி தாய்மொழி ஒழியப் பிறமொழி கற்றலே எம்மனோர் வளத்துக்கு ஏற்றம் அதனால் எங்கள் உரிமை என்ப ராயின் சோற்று மொழியே சுவர்க்கம் என்னின் 330 அயலவர் நம்மை ஆண்டா லென்ன? ஆங்கில அரசினை அகற்றிப் பயனென்? இந்திய ரல்லா எவரும் ஆள்வது எங்கள் விருப்பம் என்பதும் உண்டோ? மக்கள் விருப்பம் மன்னுக என்று 335 தக்கநம் மரசு சாற்றுமோ பறையே? உரிமை என்பதன் உயிர்நிலை விளம்பின் முறைவழி வந்த மொழியையும் நாட்டையும் துறைவழி வந்த தொன்மைப் பண்பையும் குறைவழி வின்றி நிறைபடப் போற்றி 340 அறவழி நெறியில் ஆளும் பொறுப்பாம். இந்தியும் தமிழும் இந்தியை ஏனையோர் இனித்துக் கற்க உந்தும் நடுவரசு உறுபொருள் அளிக்கும்; நந்தமி ழரசோ நம்மவர் தமக்கே 345 செந்தமிழ் வாயிலாய்ச் சிறப்புமேற் கல்வியை வந்து கற்க வருபொருள் வழங்கும். சிறுமையோ பெருமையோ சிந்திப் பீரே. ஆண்மையும் துறவும் அரசுக் கில்லை மானமும் தெளிவும் மக்கட் கில்லை. 350 ஒருமொழிக் கொள்கை ஒருமொழிக் கொள்கையே உறுதிக் கோளாம். இருமொழிக் கொள்கை எப்படி வந்ததோ? வந்த முறையில் வாழ்வுதமிழ்க் கில்லை, தமிழோ டாங்கிலம் தமிழ்நா டதனில் சமமா மென்றல் சால்பா காது; 355 தாயகப் பரப்பில் தமிழ்மொழிக் குரிய நாயக மான நல்லிட மெல்லாம் ஆங்கிலம் ஆள அடிமைப் படுத்தி ஓங்கி வளரும் உரிமையைப் பறித்தபின் அறிவியல் கூறும் ஆற்ற லிலதென 360 முறையில் குற்றம் மொழிமேல் ஏற்றின் அன்னை என்பாள் ஆமென் பாளோ? கொஞ்சங் கூட நெஞ்சம் இல்லா வஞ்சர் என்பது மறைக்கப் படுங்கொல்! ஆங்கில மோகம் ஆங்கில மோகம் அடிமையிற் கூட 365 ஏங்கிய தமிழர்க்கு இவ்வள வில்லை; ஆங்கில மோகம் யாருக் குண்டென ஓங்கிய போட்டி உலகிடை வைப்பின் ஆங்கில நாடரும் ஆஆ என்னத் தாங்கும் பரிசு தமிழர்க்கு உண்டே; 370 ஆங்கிலம் கற்றா லல்லது வாழ்வுகள் ஓங்கா உயரா உலகம் அறியா தேங்கிப் போவோம் தென்மொழி கற்பின் என்ற கூப்பாடு இன்னும் தமிழர் அடிமையி னின்றும் விடுதலை பெற்றிலர் 375 கடமை எதுவெனும் காட்சி அறிகிலர் இதுவோர் சிற்றினம் என்பது காட்டும். தமிழுக்குப் போட்டியா ஆண்டு தோறும் அறிவுமேற் கல்வியில் மாணவர் சேர்க்கையை மதிக்குங் காலை சூலைத் திங்களில் என்சூல் படும்பாடு 380 ஆலைப் பொறியிடைத் தோல்படும் பாடாம்; தமிழ்வழிப் பயிலத் தயங்குவர் மாணவர் வலிந்து சேர்த்தலும் வழங்கிச் சேர்த்தலும் நலிந்த முறையென நாடுபுகழ் இதழ்கள் பத்தி பத்தியாய்ப் பசும்புண் செய்யும்; 385 தமிழ்நா டதனில் தமிழக இளைஞரை விருப்பம் தமிழா வேற்று மொழியா என்று பிரிக்க இடமது கொடுத்தல் இந்நாட் டல்லது எந்நாட் டுண்டு? பன்னாடு சுற்றிய பல்புகழ் மக்காள்! 390 என்னது மண்ணில் எனக்குநேர் போட்டியா? இருமொழிக் கொள்கையின் திரிநிலை இதுவாம். தமிழ்பயில் சாதி பிறபயில் சாதியென என்வழி மக்களை என்திரு நாட்டில் இருமொழிச் சாதியாய் இருபாற் பிரித்தல் 395 ஒருதமிழ் வளர்க்கும் உரமா கும்மோ? இப்படி ஓரூழ் இருக்கும் வரையும் எப்படித் தமிழ்மொழி இயல்பில் வளரும்? செப்படி வித்தையாம் செந்தமிழ்க் கொள்கை செய்யும் சிறுமைகள் சிலவா பலவா? ஒருமைத்தமிழகம் உய்யும் நெறிகள் உணர்த்தினும் உணரீர்! 400 அடிமைக் காலத்து அன்னைத் தமிழாள் பருமா கொழும்பு பன்னா டெல்லாம் மருவிப் பரவி மன்குடி பரப்பினள்; தொடர்பிலும் தமிழர் தொகையிலும் பெருகினர்; ஒருமைத் தமிழர் ஓருல காயினர்; 405 தமிழ ரெல்லாம் தமிழ்வாய் பெற்றனர்; அதன்பின், இந்தி பேசுவோர் எண்ணிடம் பெருக முந்திப் பிறந்த இந்திய முதுதமிழ் நந்தி வளர்த்த நல்லயல் உறவைப் 410 பேணாது விடுத்தல் பீழை யாகும்; தூது விடுத்தும் நூல்கள் வழங்கியும் பயிற்றுநர் விடுத்தும் பல்துணை அளித்தும் ஒருமை யுறவை ஊன்றல் வேண்டும்; உறவை விடுதல் உரிமையல்லவே; 415 கூலித்தமிழர் அயலகத் தமிழர் அயலவர் ஆயினர் உள்ளகத் தமிழர் உயர்ந்த அடிமையர் எல்லைகள் சுருங்கின இழப்பும் வந்தது என்னை மொழிவோர் எண்ணும் குறைந்தது என்னைக் கல்லார் எண்தொகை வளர்ந்தது 420 உரிமை மொழியை உயர்த்துத லன்றி உரிமை நாட்டோம் என்பது மின்றி வேலைக் கோடும் கூலித் தமிழரால் எல்லை சுருங்கித் தொல்லை பெருகி எண்ணும் சுருங்கி ஏற்பார் சுருங்கிக் 425 கல்வி சுருங்கிக் கற்பார் சுருங்கி அயன் மொழி மோகம் ஆற்றிற் பெருகி இத்தகு கெடுதல் எவையெவை வருமோ? சுருக்கம் மேலும் தொடர்ந்து வந்தால் மண்ணும் பேசும் மக்களும் இன்றி 430 வானவர் பேசும் வடமொழி போல நானும் ஆதல் நாளா காதே! மானமில் மக்களை வருந்திப் பெற்ற ஈனமில் பெண்ணுக்கு இதுவும் வேண்டும். குறை பரப்பல் என்னை இழிக்கவும் என்னைக் குறைக்கவும் 435 என்னை நீட்டவும் என்னமோ செய்ப. அன்பரும் செய்குவர் அல்லரும் செய்குவர் அறிஞரும் செய்குவர் வறிஞரும் செய்குவர் நானோர் மொழியிலை எனக்கோர் மரபிலை என்னை யாரும் எதுவுஞ் செய்யலாம் 440 அன்ன வுரிமை அவரவர்க்கு உண்டாம்; பிறமொழி பெறூஉம் பிறழா மதிப்புகள் பெற்றவள் தனக்குச் சற்றும் இல்லை. இடையோ ரெல்லாம் என்னைத் திருத்தி வடமொழிச் சாயலில் வார்க்க முயன்றனர்; 445 முயன்றோ ரெல்லாம் முடிவில் தோற்றனர்; ஆங்கில வடிவில் அம்மைத் தமிழைப் பாங்குற வார்க்கப் பதறுவோர் இற்றையர்; பித்துப் போலப் பெருகிப் பிறமேல் வைத்த மோகம் என்று மாளும்? 450 ஆஆ இவர்தாம் அழகிய அடிமைகள்! எழுத்திலும் ஒலியிலும் சொல்லிலும் தொடரிலும் எத்துணைக் குறைவென இரங்குவர் ஒருபால்; உள்ளவை மிகையாம் ஒழிக்க எனவும் இல்லவை பலவாம் இணைக்க எனவும் 455 செல்லொழுங் கில்லை திருத்துக எனவும் பிறமொழி வடிவம் பேணிக் கொள்ளின் உலகு தமிழா உயரும் எனவும் மொழியெனப் படுவதோர் கருவியே யாதலின் கருவியில் எளிமை காண்க எனவும் 460 முற்போக் கென்னும் முழுநோக் கிருப்பின் பிற்போக் கெல்லாம் பெயர்க்க எனவும் அறிவியல் நோக்கியும் மொழியியல் நோக்கியும் புதிய வடிவெலாம் புகுத்துக எனவும் மாலார் கலைஞனும் மறைமலை யானும் 465 ஏலாக் கலப்பென இடித்த பின்னும் அப்படி அப்படி ஆங்கிலத் தொடர்களை எப்படி யேனும் எழுதுக எனவும் கம்பன் பிறந்த கவிதை நாட்டில் எதுகை மோனை இலக்கண மரபெலாம் 470 அதிகத் தடையென அழித்து மீறி ஒருவரம் பில்லா உயர்புதுக் கவிதை பருவரம் பாகப் படைக்க எனவும் எழுதிய வெல்லாம் இலக்கண மாகும் படியாது எழுதல் பாட லாகும் 475 வந்தவாறு எழுதல் வளர்ச்சி யாகும் தமிழில் எழுதல் தள்ளுபடி யாகும் என்ற கொள்கையில் எளிய ராகித் தன்னைத் திருத்தும் தகுதி பெறாஅது என்னைத் திருத்துவோர் எண்ணிலர் ஆயினர்; 480 எல்லா விகாரமும் எனக்குச் செய்ய வல்லமை உடையோர் வளர்ந்து வருவர்; தாயின் கொதிப்பு முப்பது செய்யுளை முறைமையிற் பிரித்துச் செப்பப் பயிற்சி செய்திற மின்றி ஒவ்வொரு பாட்டையும் உரித்துப் பதிக்கும் 485 கவிதைக் கொலையென் கண்கொலை யாகும்; மருத்துவங் கற்குநர் மாய்சில வுடல்களை அறுத்துக் காண்பர் அறிவியல் முறையில்; ஒவ்வோர் உடலையும் உரித்தா பார்ப்பர்? காலம் விழுங்கும் ஏனை மொழிகளின் 490 சாலா அமைப்பைச் சால்பென நம்பிக் காலங் கடந்த கன்னித் தாயின் தன்மை திருத்துதல் தற்கொலை யாகும்; என்னியல் பறிந்தோர் என்னை வளர்ப்பீர் அறியீ ராயின் அறியும் வரையும் 495 அம்மா வேண்டின் சும்மா இருப்பீர் தமிழ்மொழி கடினம் தமிழ்மொழி கடினம் குறைபல வுடையது கொள்ளுதற் கரியது கடினப் பட்டுக் கற்றற் குரியது கற்ற பின்னும் கற்போ லாகும் 500 வருந்திக் கற்பினும் வாழ்வு தாராது என்றபொய் யுணர்வை இளைய வுளங்களில் பதியப் பரப்பும் பாவி மக்காள்! மாண்டேன் எனினும் மானம் பிழைக்கும்; வேண்டேன் எனினும் விடுதலை கிடைக்கும் 505 பொதுமொழிகள் தாயுரை கேட்டுத் ததும்பிய கண்ணொடு நெருங்கிய கூட்டம் நின்ற போதும் கொதித்த உள்ளம் குறையா ளாகிப் பீறிய வுணர்வொடும் பிசைந்த கையொடும் மீறிய சினத்தொடும் மேனி விதிர்ப்பொடும் 510 ஊறிய விழியொடும் ஊன்றிய விரலொடும் கூறிய அன்னையின் கொள்கைக் கிளவிகள் ஈரம் குளிர்ந்த இளஞ்சிறு காலில் கூர்முள் நுழைந்த குருதி போல அனைவோர் நெஞ்சிலும் ஆழப் பதிந்தன; 515 சிறுமைகள் நீவிர் செய்யினும் எனக்குப் பெருமை செய்யுமோர் பேரிடம் உண்டால்; இந்திய மொழிகளுள் இந்தியும் ஒன்றாம் என்னுடைப் பேர்த்தியுள் இவளொரு சிறுமி அன்ன உறவில் அன்பும் உடையேன் 520 அவள்தன் வளர்ச்சியில் அழுக்கா றில்லை இந்தி ஒன்றே பொதுமொழி என்பதை இந்தியன் இன்றே எதிர்க்க வேண்டும் எதிர்க்கா எவனும் இந்தியன் ஆகான் இந்தித் தாய்மொழி இந்தியன் கூடப் 525 புந்தியில் கொள்கையைப் பொசுக்க வேண்டும் இந்தியை எதிர்த்தல் இந்தியத் தொண்டாம் ஒருமொழி என்னும் பொதுமொழிக் கொள்கை பன்மொழிப் பண்ணையில் பயிரா காது; நாட்டின் ஒருமையை நலத்தின் ஒருமையைக் 530 கூட்டின் ஒருமையைக் கொல்லவே செய்யும்; ஆங்கிலம் தானோர் அயலூர் மொழியாம் ஈங்கதற் குரியோர் எண்ணிற் சிலரே அதனை அகற்றல் அரும்பா டன்று வேண்டாம் என்றால் தாண்டிப் போகும்; 535 இந்தியின் நிலையோ இதனினும் வேறு நாட்டு மொழியுளோர் நடைமொழி யாகும் பேசுவோர் தொகையும் பேரள வென்ப பொதுமொழி என்ற பொதுவதி காரமும் கூடச் சேர்ந்தால் குரங்கின் ஆட்டாம்; 540 அகற்றவும் முடியா ஆளவும் முடியா உரிமையின் பேரால் அடிமை எஞ்சும் தெய்வ அடிக்கீழ்க் கிடப்பது போலாம்; இந்தி ஒன்றே இந்திய மொழியென 545 உலக மெல்லாம் உறவு கொள்ளும்; ஏனை மொழிகளின் இருப்பிடந் தெரியா; ஆலவோர் மரத்தின் அகன்ற நீழலில் கூலப் புல்லும் குடியிருக் காதே; இந்திக்கு அடிமையை ஏனை மொழியார் சிந்திக்கத் தவறின் செத்தோ ராவர்; 550 எதிர்வரு காலத்து இளையோ ரெல்லாம் புதிர்நிலை கலங்கிப் புன்மை உறுவர்; இந்தித் திணிப்பே இலையிலை எனவும் எந்த மொழிக்கும் எதிரிலை எனவும் முந்திக் கொண்டு முரசறைந் தாலும் 555 நம்புதல் ஒழிக நம்புதல் ஒழிக; நாட்டின் ஒருமை நாடவர் ஒருமை கூட்டின் ஒருமைநம் குறிக்கோள் என்க; மொழிகளின் ஒருமை முறைநிறை வாகும் மொழிகளுள் ஒன்று முறையழிவாகும்; 560 எட்டாம் பகுதியில் எண்ணப் பட்ட எல்லா மொழிகளும் பொதுமொழி யாகுக பாராள் மன்றத்தில் பங்கு பெறுக; இந்தி மொழிகளுள் இந்தி ஒன்றே அப்பெரு மன்றில் ஆட்சி செய்யும்; 565 ஏனைய மொழிகள் எல்லாம் என்னோ? கோப்பெரு வேந்தன் குறுநில மன்போல் பாரத மொழிகளா மாநில மொழிகளா? இன்றைய தொகுதியில் எண்ணப்படாத முந்தைய ஆங்கிலம் மொழிதற் குரித்தெனின் 570 இந்தி யல்லா ஏனை மொழிகள் அந்த உரிமைக்கும் அருகதை யிலவோ? விழைபெரு மன்றத்துள் நுழையும் உரிமை இன்றே நம்மொழிக் கில்லை யாயின் இந்தி யாளர் எதிர்ப்பா ராயின் 575 இன்னா தம்மநம் எதிர்வருங் காலம்! இந்திப் பரப்பை எதிர்க்கும் தமிழ்போல் ஏனை மொழியினர் இன்னும் உணர்ந்திலர் வடமொழிச் சார்பு மறைக்கும் போலும்; வெம்மொழி இந்தியின் வீர எதிர்ப்பில் 580 தம்முயிர் சிந்தினர் தமிழர் மூவர் சிந்தியோர் இந்தியத் தொண்டரும் ஆவர்; இந்தியப் பணியினை முந்துறச் செய்க பாரத வுணர்வொடு பகிர்ந்து செய்க. தமிழ்க்கொள்கை இந்தி ஒன்றே பொதுமொழி என்பதால் 585 இந்தியை நேரடி எதிர்ப்ப தல்லது இந்தி மொழிமேல் இயற்பகை யில்லை; இந்தி கிடக்க எம்மொழி மேலும் வெந்து விழூஉம் வெறிநெறி யன்று; யாதும் மொழியே யாவையும் படிமின் 590 அகன்ற பார்வை அருந்தமிழ்க் குண்டு தமிழ்நாட் டளவில் தமிழ்மொழி ஒன்றே பெரிய சிறிய பெற்றிய வாய உரிய இடமெலாம் பெறுதல் வேண்டும்; ஆங்கில மாயினும் அல்மொழி யாயினும் 595 பின்னின் றுதவும் பெருமையோ டமைக. இந்திய மன்றில் இந்திய ஆட்சியில் பொதுமொழி என்னும் பொதுப்புகழ் வேண்டும். என்னுடை உரிமையை யான்வாழ் எல்லையில் எவரும் பறிக்க இடமது கொடேஎன்; 600 பிறமொழி யுரிமையை அம்மொழி யிடத்தில் புகுந்துகா லூன்றும் புன்மையும் வேண்டா தன்னைக் காக்கும் சால்புடைக் கொள்கை என்னைக் கேட்பின் இவையே காணீர்! தமிழ்மயம் அன்னையின் கொள்கையை அறிவொடும் உணர்வொடும் 605 நன்னர்த தெளிந்த நளிபெருங் கூட்டம் கொதிக்கும் தாயவள் குளிர்ந்தாள் போலென மதித்துச் சிறிது மகிழ்ந்த காலை போவதை நிறுத்திய புலமைத் தலைவ யாவது செய்வீர்? யாங்ஙனம் செய்வீர்? 610 இப்பெரு நாட்டில் செப்பரும் உரிமையொடு முப்பது ஆண்டுகள் முடிந்தே போயின; எல்லாம் தமிழா என்று செய்வீர்? உழைப்புத் தொழிலும் உயர்நிலைப் பதவியும் பிழைப்பு வாய்ப்பும் பெரியதோர் செல்வமும் 615 அறிவியல் மேன்மையும் ஆய்வுத் திறமும் உலகிடை நடப்பும் உயர்மேற் கல்வியும் பல்துறை அறிவும் பலர்புகழ் பரிசும் இன்றைய உலகில் ஏற்றத் தோடு வாழ்தற்கு வேண்டும் வழிவாய்ப் பெல்லாம் 620 சப்பான் ஆங்கிலம் சருமனி போலத் தமிழொன்று கற்றால் தமக்கு வருமென எல்லாத் தமிழரும் இளையரும் குழவியும் எண்ணியும் மகிழ்ந்தும் இயங்குந் திறத்தில் பள்ளி முதலா பல்கலை ஈறா 625 எல்லாத் துறையும் தமிழெனல் வேண்டும்; வாழ்வு தமிழால் வளம்பெறும் என்றால் தாழ்வு வாராது தமிழரே காப்பர். தமிழால் தமிழர் தழைக்க வேண்டும்; தமிழும் தமிழரால் தழைக்க வேண்டும்; 630 ஒன்றிய உறவே உலக வாழ்வாம் அத்தகு உறவை ஆக்கி அளித்தல் மெய்த்தகு அரசின் மேன்மைப் பொறுப்பாம்; என்மொழிக் கொள்கையை இன்னும் கேளென அன்னை மேலும் அறிவுறுக் கின்றாள். 635 அரசின் பொறுப்பு எல்லாந் தமிழாய் இயலும் போது பன்மொழி கற்றல் நன்முறைப் படுமால்; தமிழை விடுத்துப் பிறமொழி கற்பின் பொறுக்க முடியாப் புன்செய லாகும்; முழுத்தமி ழோடு பிறமொழி கற்பின் 640 விழுத்தகு நெறியென விழைகுவன் யானே; விரிந்தும் சுருங்கியும் வேறுபடும் உலகில் பரந்த மொழிகளின் பயிற்சி நன்றே; உயர்நிலைப் பள்ளியில் உன்தமி ழோடும் இந்திய மொழிகளில் எதனையுங் கற்க; 45 ஆங்கிலந் தன்னை அயலக மொழிகளுள் மோக மின்றி மொழியாய்க் கற்பது வேக அறிவுக்கு விளையூற் றாகும்; தமிழின் வளர்ச்சிக்கு அமிழ்து மாகும்; வரலாற்று முறையில் வந்த மொழியது; 650 பாராள் மன்றத்துப் பன்மொழி வரவை இந்தி யாளர் எதிர்ப்பினும் எதிர்ப்பர்; தமிழகம் தன்னுள் தமிழ்மொழி வருவதை எதிர்ப்பா ரல்லர் இந்தி யாளர்; இந்தி நமக்குப் பொதுப்பகை யாகும்; 655 தமிழுக்கு உட்பகை தமிழரே யாவர்; இந்திக்கு எதிராய் இணைவோ ரெல்லாம் தமிழை ஏற்க இசைவோ ரல்லர் ஆங்கிலத் தாங்கிகள் அம்மொழிப் பற்றினர்; தமிழருள் மிக்கார் தமிழ்மய மாவதை 660 அன்பர் போல அடைப்பர் ஆதலின் சினக்கும் என்முன் சேர்ந்த கூட்டமே! இனத்துள் எதிர்ப்பை எங்ஙனம் மாய்ப்பீர்? தீதும் நன்றும் பிறர்தர வாரா; யாது செய்து யாங்ஙனம் வெல்வீர்? 665 ஆண்மையும் பொறுப்பும் அரசுக்கு வேண்டும்; அரசின் பொறுப்பை ஆற்றுங் காலை அறியா மக்கள் எதிரா நின்றால் அறிவு கொளுத்தித் தமிழ்மயம் ஆக்குக; கொளுத்திய அறிவு கூம்பு மானால் 670 சீசீ பதவி சிறிய தென்று தமிழ்மொழி காக்குந் தன்வர லாற்றில் பதவி துறந்து பல்புகழ் பெறுக; பதவி துறந்து பல்புகழ் பெறுவார் பல்புகழ் மேலும் பதவி பெறுவரே! 675 20. உலகப்பாயிரம் நன்மாற்றம் இனிய உலகம் இன்னா உலகா அளிய உலகம் அடிதடி உலகாப் பெரிய உலகம் பின்னிய உலகா நல்ல உலகம் நம்பா உலகா மாறி வருவதை மாற்றல் வேண்டும்; 5 மாற்றம் இன்றேல் கூற்றம் வருமால்; இற்றைப் போக்கே இன்னும் வளரின் நாளைய உலகம் நன்றா காதே! மக்கட் குள்ளே சிக்கல் மலிந்து தலைவர்க் குள்ளே கொலைவர் தோன்றிப் 10 படையோ ரெல்லாம் கடையோ ராகி அரசுக் குள்ளே ஐயம் பெருகி அறிவியல் எல்லாம் அரசியல் ஆகி பொதுஉலகம் உலகம் என்பது கலகம் ஆகி இன்றோ நாளையோ என்றோ அறியோம் 15 வாரா அழிவுகள் வருவ போலும்; மாயமுன் னேற்றம் மயங்க வேண்டா; அடக்கமொடு வளர்தல் அறிவா கும்மே; உலகம் என்பது உயிர்களின் உடைமை மரமுத லாக மானிடம் ஈறா 20 எல்லா வுயிர்க்கும் இருப்பிடம் ஆகும்; மண்ணிடை முந்தி வந்த உயிர்க்கே மண்ணின் உரிமை முன்ன தென்க; கடலில் நிலத்தில் காட்டில் வானில் வாயில் உயிர்களின் வாழ்விடம் அழித்தும் 25 வாழ்வதைக் கலைத்தும் சூழ்வதைத் தடுத்தும் உணவுக் குரிய ஊழ்விடம் பறித்தும் இன்பம் கெடுத்தும் இன்துயில் கெடுத்தும் இனந்தன் னோடும் இருப்பது கெடுத்தும் மானிடம் ஒன்றே மன்பதை போலத் 30 தானிட மெல்லாம் தன்னினம் பெருக்குதல் தெய்வம் சினக்கும் சிறுசெய லன்றோ? எவ்வுயிர்க்கும் விடுதலை மானிடம் ஒழிந்த மற்றை யுயிர்களை இயற்கை யிடத்தில் இயங்க விடாமல் உழைத்துத் தாமே உண்ண விடாமல் 35 ஓடித் திரியும் உரிமை கொடாமல் மானிடக் கண்கள் மகிழ்ந்து காண காட்சிச் சாலைக் கடிய சிறைக்குள் சாகும் வரையில் தள்ளி ஒளித்தல் நோகுமென் னெஞ்சம் நோகுமென் னெஞ்சம்! 40 விடுதலை முழங்கும் வீர மக்காள்! விடுதலை என்பது வேற்றுயிர்க் கிலையோ நீவிர் அறையும் நெட்டறப் பொதுநலம் தன்னினம் காக்கும் தன்னலமாமே; மக்களே பெருகுதல் தக்க தன்று; 45 மற்றை உயிர்களும் வளரு மாயின் மானிடம் குறையா வாழ்வு சிறக்கும். உலகச் சிக்கனம் மலர்தலை யுலகம் வழிவழி நிலைக்கவும் பின்வரும் உயிரெலாம் பிடிபசி நீங்கவும் உலகச் சிக்கனம் உருப்பெறல் வேண்டும்; 50 தாந்தோம் வாழ்க்கை சரிப்போகாதே எண்ணத் தொலையா இயற்கைய வாயினும் மண்ணின் வளங்கள் வரம்பு பட்டவை; விண்ணின் பொருள்கள் விரிந்தன எனினும் மண்ணகத் தார்க்கு வரவா கும்மா? 55 ஆழ்ந்த கோடி அளப்பில் ஆண்டுகள் வாழ்ந்த உயிர்கள் வழக்க மாக வீட்டில் காட்டில் நாட்டில் கடலில் உணவிலும் உடையிலும் ஊணுடை வகையிலும் அணியிலும் மணத்திலும் ஆசைப் பாங்கிலும் 60 மேனி மினுக்கிலும் விளையாடு பொருளிலும் ஊர்வரு தேரிலும் உயிர்வரு படையிலும் நீரிலும் நெருப்பிலும் நீங்குநோய் மருந்திலும் விழவிலும் இழவிலும் விருந்தார் வகையிலும் சிற்றில் பேரில் செழுநகர் அமைப்பிலும் 65 அளவினுங் குறைவாய் அளந்து வாழ்ந்தனர்; அந்த அளவையும் ஆசை என்றனர்; இன்றோ, இருசிறு அடிகள் எத்துணைச் செருப்புகள் இருசிறு கண்கள் எத்துணை ஆடிகள் 70 ஒரு முழச் சிற்றிடை ஒழிவில் உடைகள் ஒருசாண் வயிற்றிடம் ஓயா ஊண்கள் ஒரு சிறு உடலம் ஊரிற் பெருமனை ஊதார் வாழ்க்கை உலகம் தாங்குமோ? பன்னூ றாண்டாய்ப் பார்மகட் போற்றி முன்னோர் காத்த முதுநிலைச் செல்வம் 75 இந்நூ றாண்டில் எஃகுப் பொறிகளால் புரைபுரை யாகிப் போயொழிந் தனவே; ஞாலந் தோன்றிய நாள்முத லாக நடந்த செலவை நயந்து பார்ப்பின் 80 இந்நாட் செலவுக்கு ஈடா காதே அறிவியல் வேகமும் செலவியல் வேகமும் போரியல் வேகமும் போக்கியல் வேகமும் குறியியல் வாழ்வுக்குக் கூற்றாம் காணீர் ஆர வார அறிவியல் வேகம் 85 சீர தாகிச் சிறந்தா லன்றிப் பார வாழ்வெலாம் படுஞ்சுமை யாகும்; உலகச் சிக்கன ஒரு நெறி யிலையேல் வளர்ந்தோர் மேலும் வளத்தை நுகர்வர் தளந்தோர் நாடி தளர்ந்தோர் ஆவர்; 90 சமநிலை என்ற தகைநிலை காண நுகர்நிலை அளவிலும் நோன்பு வேண்டும்; கொடைகள் செய்யும் குணமில ராயினும் உடையிலும் உணவிலும் நடையிலும் இல்லிலும் செலவியல் வகையில் சிக்கனம் பிடிப்போர் 95 நிலவியல் வாழ்வின் நெறியறிந் தோரே; அதனால் உலகச் சிக்கனம் உலக இயக்கமாய் ஒருவர் வாழ்விலும் ஊரோர் குடியிலும் அரசியல் விதியிலும் ஆள்வோர் பாங்கிலும் பரவுதல் பெறுக பண்பொடு சிறந்தே. 101 மாணிக்கக்குறள் முதற் பதிப்பு 1991 இந்நூல் 1969இல் பாரிநிலையம் வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன. தமிழியக்க ஊற்று பேராசிரியர் முனைவர் ச. மெய்யப்பன் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் அழகப்பா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராய், முதல்வராய், அண்ணா மலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவராய், புலமுதன்மைய ராய் திகழ்ந்தார். புலவர் குழுவின் தலைவர். பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்தலைவர். தமிழ்வழி கல்வி இயக்கம் கண்டவர். மதுரைப் பல்கலைக் கழக துணை வேந்தர். மணிவாசகர் பதிப்பகத்தின் பெருமை மிகு நூலாசிரியர். அவர்களின் அரிய நூல்கள் அனைத்தையும் சிறப்பாக வெளியிட்டு இலக்கியப் பணி, மொழிப்பணி செய்து வருவதில் நாம் பெருமை கொள்கிறோம். மூதறிஞரின் தொல்காப்பிய உரையினை தமிழ்ப் பல்கலைக்கழகம் ‘மாணிக்க உரை’ என வெளியிட்டுள்ளது. அவர்களின் திருக்குறள் உரையினை ‘மாணிக்க உரை’ என்றும் அவர்கள் இயற்றிய குறள் நூலை ‘மாணிக்கக் குறள்’ என்றும் வெளியிட்டுள்ளோம். ‘மாணிக்கனாரின் வாழ்வும், பணியும்’, ‘மாணிக்கனாரின் சொல்லாக்கம்’ என்னும் நூல்களைத் தொடர்ந்து அறிஞர் தமிழண்ணல் மாணிக்கனார் ஆய்வுத் திறனை விளக்கும் வகையில் ‘மாணிக்கத்தமிழ்’ என்னும் பெரு நூலை உருவாக்கியுள்ளார்கள். மாணிக்கனார் புதிய ஆத்திச்சூடி இயற்றியுள்ளார்கள். குறள் யாப்பில் நூல் இயற்றியுள்ளார்கள். தமிழ் மக்களுக்கு நற்கருத்துக்களை, புதிய கருத்துக்களை எப்பொழுதும் அழுத்தமாகவும், அழகாகவும் எடுத்துச் சொல்லுவது மாணிக்கனார் இயல்பு. ஆழ்ந்து கற்றுப் பல்துறைகளில் பட்டறிவிற் சிறந்த செம்மல் அவர்கள் தமிழ் மொழி, இலக்கியம் தமிழறம், சான்றோர் பற்றிய தம் கருத்துக்களை தமிழ்ச் சூடியிலும், மாணிக்கக் குறளிலும் தெளிந்த தமிழில் இனிய ஓசையில் பாடியுள்ளார்கள். தமிழ் ஆயிரம், வாழ்க்கை ஆயிரம் எனக் குறள் இயற்றத் திட்டமிட்டிருந்தார்கள். தீ ஊழினால் நூல் முற்றுப் பெறவில்லை. 506 குறள்களே கிடைத்துள்ளன. மூதறிஞரின் தமிழ் உணர்வு, பற்று, மொழிக் கொள்கை, இனமான உணர்வு, அறக்கோட்பாடு, வாழ்வியல் நெறி, உலக நலம் அனைத்தையும் பற்றி அவர்தம் கருத்துக்களை இந்நூல் விளக்கம் செய்கிறது. பொன்மொழியாய், நன்மொழியாய், புதுமொழியாய் வாழும் வகை சொல்கிறது. மூதறிஞரின் தலைமகன் தொல்காப்பியன் அவர்தம் தமிழ்க் கொள்கைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் தலையாய பணியில் தம்மை முழுதும் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். மாணிக்கக் குறளின் கையெழுத்துப் படியினைச் செப்பம் செய்து, அச்சில் மெய்ப்புப் பார்த்து நூல் செம்மைக்கு மிகுதியும் துணை நின்றவர் பேராசிரியர் டாக்டர். இரா. சாரங்கபாணி அவர்கள். செம்மலின் சீர்சான்ற கருத்துக்களை நாளும் பரப்பி மொழியும், நாடும் உயர உழைப்போம். வ.சுப. மா. வாழ்க்கை வரலாறு அண்ணாமலையெனப் பிள்ளைத் திருநாமங் கொண்ட மாணிக்கனார் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மேலைச்சிவபுரியில் 17-4-1917-இல் சுப்பையா செட்டியாருக்கும் தெய்வானை ஆச்சிக்கும் மகவாய்த் தோன்றினார். இப் பருவத்திலே பெற்றோரையிழந்த இவர் தம் பாட்டனாரால் புரக்கப் பெற்றார். பின் பர்மாவுக்குச் சென்று கடையிற் பணிபுரிந்த காலத்தில் பொய் கூநவேண்டிய கட்டாய நிலை ஏற்படவே அப்பணி துறந்து தமிழ் பயிலத் தொடங்கினார். பண்டிதமணி கதிரேசன் முதலியோர்தம் உதவியால் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் புலவர் வகுப்பிற்பயின்று முதன்மையாக தேர்ச்சி யுற்றார். இத்திங்கள் அப்பல்கலைக் கழகத்திலேயே ஆய்வு மாணவராகவிருந்தார். பின் ஏழாண்டுகள் அங்கேயே விரிவுரையாளராகப் பணியாற்றினார். அப்பொழுதே தனிமையாகப் படித்து பீ.ஓ.எல். எம்.ஓ.எல். பட்டமும் ‘தமிழில் அகத்திணைக் கொள்கைகள்’ பற்றி ஆய்ந்து பி.எச்.டி. பட்டமும் பெற்றார். பின்னர் 1948 தொடங்கி இருபதாண்டுகள் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணிபுரிந்தார். மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் போந்து, தமிழ்த்துறைத் தலைவராகவும் இந்திய மொழிப்புல முதன்மையாராகவும் தொண்டாற்றினார். பின் மதுரை காமராசர் பல்கலைக் கழக துணைவேந்தர் பதவியேற்றுத் தமிழியல் வளர்ச்சிக்கும் பல அறிவியல் துறைகளின் வளர்ச்சிக்கும் வழிவகுத்துத் துணை நின்றார். திருவனந்தபுரத்தின் மொழியியற்கழக ஆய்வு முதியராக வேலை பார்த்தபோது, தமிழ் யாப்பு வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ‘தொல்காப்பிய தகைஞ’ ராகப் பணி செய்ததன் பயனாகத் தொல்காப்பியத்துக்கு அவர்தம் புத்துரை விளக்கம் கிடைத்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பொன் விழாவில் இவர்க்கு டி.லிட். பட்டம் நல்கிச் சிறப்புச் செய்தது. குன்றக்குடி ஆதீனம் ‘முதுபெரும் புலவர்’ என்னும் சிறப்புப் பட்டத்தையும் மேலைச் சிவபுரி சன்மார்க்க சபை ‘செம்மல்’ என்னும் சிறப்பு பட்டத்தையும் நல்கின. அரசு இவர் மறைவிற்குப் பின் ‘திருவள்ளுவர் விருது’ வழங்கிச் சிறப்பித்தது. தமிழ்ப் பல்கலைக் கழகத் தொடக்க நிலையில் செயன்முறைகளை வகுக்க அமைக்கப் பெற்ற வல்லுநர் குழுவின் தலைவராகவிருந்து அதன் வளர்ச்சிக்கு வழி வகுத்தார். தமிழகப் புலவர் குழுவிற்கும் இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்திற்கும் மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை கணேசர் செந்தமிழ்க் கல்லூரிக் குழுவுக்கும், தலைவராகத் திகழ்ந்து இவர் ஆற்றிய பணிகள் மிகப்பல. ‘காரைக்குடி தமிழ்ச் சங்கம்’ நிறுவிச் சங்கவிலக்கிய வகுப்பு நடத்தியும் இளஞ்சிறார்க்கு ‘அறநூல்கள் ஒப்பித்தல் போட்டி’ வைத்துப் பரிசுகள் வழங்கியும் ஒல்லும் வகையெல்லாம் தமிழ்த் தொண்டு செய்தார். தில்லையில் அம்பலத்தின்கண் நின்று திருமுறைகள் ஓதி வழிபடப் பேராசிரியர் வெள்ளை வாரணனார் போன்றோரின் துணையோடு போராடி வாகை சூடினார். வள்ளல் அழகப்பரின் கொடைவளம் ஏத்திக் ‘கொடை விளக்கு’ என்னும் கவிதைநூல் படைத்தார். இவர்தம் தனிப்பாடல்களின் தொகுப்பு ‘மாமலர்கள்’ என்னும் பெயரில் வெளிவந்துள்ளது. இவர்தம் படைப்புக்களுள் வள்ளுவமும் தமிழ்க் காதலும் இரு கண்களெனப் போற்றத்தக்கவை. தொல்காப்பியக் கடல், திருக்குறட்சுடர், சங்கநெறி, காப்பியப் பார்வை, இலக்கியச் சாறு, தமிழ்க் கதிர், தலைவர்களுக்கு முதலியவை இவர்தம் பிற படைப்புகள். திருக்குறளை யாவரும் எளிதில் புரிந்துகொள்ள ‘உரை நடையில் திருக்குறள்’ என்னும் நூலை இயற்றியுள்ளார். மணிவாசகர் பதிப்பக வெளியீடான ‘கம்பர்’ என்னும் இவரது நூல் தமிழக அரசின் பரிசு பெற்றது. தமிழ் யாப்பு வரலாறு, தமிழில் வினைச் சொற்கள், தமிழில் அகத்திணைக் கொள்கைகள் என்னும் நூல்கள் இவரால் ஆங்கிலத்தில் எழுதப் பெற்றவையாகும். மன்பதையின் முன்னேற்றங்கருதி இவர் படைத்த நாடகங்கள் மனiவியின் உரிமை. நெல்லிக்கனி, உப்பங்கழி, ஒரு நொடியில் என்பனவாம். இத்தலைமுறையில், பல நிலையினும் சிறந்தோங்கித் தமிழ்ப் பணிக்காகவே வாழ்ந்து பண்பின் திருவுருவாகத் திகழ்ந்த மூதறிஞர், செம்மல் மாணிக்கனார் 24.4.89 இல் எதிர்பாரா வகையில் மறைவெய்தியது தமிழன்னையின் தவக்குறையேயாம். மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் மாணிக்கக் குறள் தமிழிற் சிறந்ததோர் தாய்மொழி யில்லை இமிழ்கடல் ஞாலத் தெமக்கு 1 எமக்கென்ப தென்னோ எனைமொழி யாளர் தமக்கும் பழந்தாய் தமிழ் 2 தமிழ்முதற் றாயென்ற பாவாணர் தஞ்சொல் அகழ்விலும் சான்றாம் அறி. 3 அறியார் எவர்கொல் அரப்பா நகரும் வளமார் தமிழே வழக்கு. 4 வழக்காட வேண்டா வடமொழிக்குச் செப்பம் தழக்காடத் தந்த தமிழ். 5 தமிழின் அகலமென் சப்பான் மொழியும் மகிழும் தமிழ்ச்சொல் மலிந்து 6 மலிந்த சரக்கன்று மாந்தன் முதல்வாய்ப் பொலிந்த தமிழெனப் போற்று. 7 போற்றுதல் செய்யோம் புகழறியார் நெஞ்சினை மாற்றுதல் செய்வோம் மதித்து. 8 மதிப்போம் தமிழை மலைப்பிறப் பென்று குதிப்போம் முருகியற் கூத்து. 9 கூத்தும் இயலும் குழல்யாழ் இசைமூன்றும் ஏத்தும் மொழியே எமது. 10 எமதென்பர் வாய்மை இசைத்த குறளைத் தமதென்பர் சான்றோர் தகைத்து. 11 தகைப்பால் அகத்தமிழ் தானுணரார் காதல் நகைப்பாம் இளமை நடிப்பு. 12 நடிப்புக்கோர் தெய்வ நடலரசன் ஞாலத் துடிப்புக்கோர் கூத்தன் துடி. 13 துடியிடைப் பெண்குரல் தொல்லிசை கேட்டுக் கடியிடைத் தூங்குங் களிறு. 14 களிறு பிடியொடு கையுறிஞ்சிக் காதல் பிளிறும் மலையகத்துப் பீடு. 15 பீடு நடவாய் தமிழா பெருஞ்சங்க ஏடு நமதுடைமை என்று. 16 என்றுமுள தென்றமிழ் என்றான் இசைக்கம்பன் இன்றுமுள நூல்செய்தான் ஏன். 17 ஏனோ தமிழினம் ஏமாந்தும் பேமாந்தும் தானோ எனக்கிடக்குஞ் சாய்வு. 18 சாயும் நிலைவேண்டா சாய்க்க வருவோரைப் பாயும் நிலைவேண்டும் பார்த்து. 19 பார்க்காதே சாதிமதம் பார்வைக் குறிதப்பித் தூர்க்காதே அன்புத் துளை. 20 துளைதுளையா ஏடுகளைத் தொட்டு வணங்கி உளையுளையா விட்டகதை யொன்று. 21 ஒன்றாக ஏடுகளை ஊர்கறையான் உண்கவென நன்றாக விட்டகதை நாடு. 22 நாடாதும் நாணாதும் நாத்தீப் பருகவெனச் சூடாக விட்டகதை சொல். 23 சொல்லத் தொலையுமோ சூடுண்ட மாடுபோல் புல்லத் தொலையுமோ புண். 24 புண்பெருக்க மன்றிப் பொதுவுடைமை காக்கின்ற எண்பெருக்க முண்டோ இழவு. 25 இழந்தோம்; இழிந்தோம்; இழிக்கவும் பட்டோம்; உழந்தோம் இருக்கா உணர்வு. 26 உணர்ச்சிக்கும் பஞ்சமிலை ஓம்பறைபோற் கத்தும் புணர்ச்சிக்கும் பஞ்சமிலை பொய். 27 பொய்யோ அடிநல்லார் போற்றிய நூலெல்லாம் அய்யோ எவணோ அவை. 28 அவைமூன்று கண்ட அருந்தமிழ்கள் எல்லாம் பகைமூன்றாற் போயின பட்டு. 29 பட்டப் பகலில் பதியீழ நூலகம் சுட்ட பகையைத் தொழு. 30 தொழுவாய் விழுவாய் சொரணை இழப்பாய் எழுவாய் இரைவிரும்பி ஏன். 31 ஏனென்று துள்ளாரே எங்கே தமிழிறலின் தேனென்று கொட்டாரே சேர்ந்து. 32 சேர்த்துச் சுவடிகளைச் செல்லரிக்க விட்டமடம் பேர்த்துந் தொலையலையே பித்து. 33 பித்துத் தமிழர் பெருக்கெடுக்கும் இஞ்ஞான்று சொத்துத் தமிழ்க்கார் துணை. 34 துணையாகிக் காத்தான் துயர்சாமி நாதன் புணையாகி நின்றானைப் போற்று. 35 போற்றற் குரித்து புகழ்நா வலர்பெருமான் தேற்றப் பதிப்பின் திறம். 36 திறமிக்க தாமோதர் செம்மைப் பதிப்பும் அறமிக்க தொண்டென் றறி. 37 அறியார் உளரோ அகநற் றிணையை நெறியாய் உரைத்தான் நிலை. 38 நிலைநூல்கள் காத்தான் நெடும்பவா னந்தன் சிலைநடற் குற்ற சிறப்பு. 39 சிறப்பழிக்க வந்தீரோ மாக்காள் தமிழின் பிறப்பழிக்க லாமோ பிறந்து. 40 பிறந்தார் உலகப் பெருந்தமிழ்த் தாயை மறந்தார் கெடுக மறைந்து. 41 மறைக்க முடியுமோ கன்னி மறத்தைக் குறைக்க முடியுமோ கூறு. 42 கூறுடைக் கோட்டுக் குமரித்தொல் கண்டத்தும் பேறுடைச் செந்தமிழே பேச்சு. 43 பேச்சு மொழியுள் பெருந்தமிழே இற்றைக்கும் மூச்சோடு வாழும் மொழி. 44 மொழியயல் கற்க முயலுமுன் உன்தாய் மொழிதமிழ் கற்பாய் முதல். 45 முதலாகக் கற்பின் முழுக்கூர்மை பெற்று முதலாவாய் கல்வி முறை. 46 முறைதமிழ் போற்றி முழுமடங் கொன்று மறைகுறள் கற்க மதி. 47 மதியிலி தன்மொழியில் வள்ளுவம் கற்கும் விதியிலி மற்றோர் விலங்கு. 48 விலங்கும் பிறகுரல் விள்ளா இனத்தின் இலங்கு குரலே எழும். 49 எழுகென்றான் பாரதி என்செய்தோம் புல்லீர் தொழுகின்றோம் அவ்வுருவைச் சூழ்ந்து. 50 சூழ்ந்தவன் நூறாண்டு சுற்றிக்கொண் டாடுகின்றோம் வீழ்ந்தவன் கண்விழியான் என்று. 51 என்றென் வசைதீரும் என்றிருப்பான் என்றான்தனை கொன்றனைய சொல்லைக் குறி. 52 குறில்கள் நெடில்கள் குரல்வகை மெய்கள் அறுதிசால் முப்ப தரண். 53 அரண்சிறந்தும் என்பயன் ஆங்கில மோகம் முரண்வளர்ந்த மூட ரிடத்து. 54 மூடருள் மூடன் எனப்படுவான் தாய்மொழி வாடக் களிக்கும் மகன். 55 மகவென்கோ, மண்ணென்கோ, மக்கென்கோ தான் நகலென்பான் பிண்டத் தசை. 56 தசைபெருத் தென்பயன் தாய்தமிழ் உண்ணா வசைபெருத்துச் சாயும் வயிறு. 57 வயிறு கழுவுவான் வாழ்வார்க்குத் தூக்குக் கயிறே நலஞ்சால் கலன். 58 கலனும் புலனும் கலையும் நிலையும் வலனும் தமிழால் வரும். 59 வருவாய்க் குரிய வளர்தமி ழாக விரிவாய்ப் புதுக்க விரும்பு. 60 விரும்பு துறையெலாம் வெண்தமிழிற் கற்க அரும்பு தொகுதிகளை ஆக்கு. 61 ஆக்க அறிவனைத்தும் அன்னை வழிபயிலக் காக்கும் நிறுவனங்கள் காண். 62 காண முடியும் கலைமுழுதும் செந்தமிழிற் பேண முடியும் பெரிது. 63 பெரிய தமிழெனினும் பேணத் தவறின் கரிய இனமாவோம் காய்ந்து. 64 காய்ந்த மொழியெலாம் கல்வி மொழியாக ஓய்ந்துநீ நிற்றல் ஒழி. 65 ஒழிகெனக் கத்துதற்கோ இந்தி மொழியும் ஒழியும் தமிழை யுயர்த்து. 66 உயர்த்துவோம் நந்திமிழை ஊர்ப்பள்ளி தோறும் துரத்துவோம் அல்மொழியைத் தூர்த்து. 67 தூர்ந்த மொழிகள் துளிர்க்கு நிலைகண்டும் சோர்ந்துநீ நிற்றல் தொலை. 68 தொலைநோக்கு வேண்டும் சொலல்வல்ல அண்ணா நிலைநோக்கு வேண்டும் நிமிர்ந்து. 69 நிமிர்ந்து பறப்பாய் குழந்தாய் தமிழைக் கவர்ந்து படிப்பாய் களித்து. 70 களிமிக்க அப்பா கடமை தமிழின் தெளிமிக்க பள்ளிக்கண் சேர். 71 சேர விரும்பும் திருமகவே நாடாளும் வீர அரசினை வேண்டு. 72 வேண்டுக அன்னாய் விடுதலை பெற்றது யாண்டும் தமிழ்வைக்க என்று. 73 என்று முதற்பள்ளி எந்தமிழ் இல்லாமோ அன்று பிறக்கும் அறிவு. 74 அறிவு வளர்ச்சிக் கயல்மொழிகள் வைக்கும் குறியை மறிப்போம் குறி. 75 குறிக்கோள் அரசெங்கும் கொள்ளுக என்றும் அறிக்கோள் தமிழ்வழியே யாம். 76 ஆமெனச் செய்குவோம் அன்றேல் பாவியைப் போவெனக் காண்போம் பொருது. 77 பொருதுதான் என்பயன் புல்லடிமை மாக்கள் எருதுதான் என்றே இரங்கு. 78 இரப்பேன் தமிழரை இன்றேனும் தாயைப் புரப்பீர் புரப்பீர் புரிந்து. 79 புரியவே யில்லை புறநாட்டுப் போக்கு தெரியவே யில்லை திமிர். 80 திமிராக வாழலீர் தீந்தமிழைக் கற்று நிமிராக வாழ்வீர் நிலைத்து. 81 நிலம்வாழ் மொழியே நெறிகல்வி வாயில் பலம்வாழ் அரசுகளைப் பார். 82 பாரடா சப்பான் படிமொழி யாதென்று தேரடா உண்மை தெளி. 83 தெளிமிக்க பாரதி தேசுபுகழ் தாகூர் ஒளிமிக்க காந்திசொல் ஓம்பு. 84 ஓம்பும் திரு.வி.க. ஒண்சொல் மறைமலை நாம்புகழ் தாசனை நம்பு. 85 நம்பற் குரியது நந்தமிழே அல்லவை கொம்பிற் சுழலுங் கொடி. 86 கொடியார் எவரெனிற் கோல்தமிழைப் பள்ளி படியார் பிறப்பிற் பதர். 87 பதரும் படாமற் பரமொழியாற் பள்ளி புதரும் படாமற் புதுக்கு. 88 புதுக்குதல் யார்கடன் போர்செய் பகையைச் செதுக்குதல் யார்கடன் செப்பு. 89 செப்புதும் யாமே திராவிடப் பற்றினர் ஒப்புயர் ஆட்சிக்கே உண்டு. 90 உண்டுமே லுண்டே உயிர்வாழ் நமக்கெலாம் கொண்ட கடனெனக் கொள் 91 கொள்வீர் தமிழென்று கூறும் தமிழர்களை எள்ளல் விடுக இனி. 92 இனிப்பு விரும்பும் இதழ்மழலாய் மற்றைத் திணிப்பு மறுப்பாய் சினந்து. 93 சினக்கும் அறிஞர்காள் செல்நாடு தோறும் கனக்கும் மொழிகளே காட்டு. 94 காட்டாக வேண்டும் கருத்துத் தமிழிதழ்கள் பூட்டாகச் செய்தல் புரை. 95 புரையில் வணிகீர் பொருட்பாற் குறளை உரையொடு கற்றல் உயர்வு. 96 உயர்வு தமிழால் உளதெனுங் கொள்கை மயர்வறக் கோடல் மதிப்பு. 97 மதிப்பிலாச் செல்வம் மலையிமய மேனும் கொதிப்பிலா ஞாயிறெனக் கொள். 98 கொள்ளுக செந்தமிழ் கூறுக பள்ளிகள் உள்ளுக தாமே உறைத்து. 99 உறையுள் உணவுடை யெல்லாம் தமிழால் நிறையக் கிடைக்கும் நினை. 100 நினைவு தமிழாயின் நீள்நில வாழ்க்கை புனைவிலை பொற்றாலிப் பொன். 101 பொன்னிற் சிறந்த பொதுவுடைமை யாதெனின் தன்னிற் சிறந்த தமிழ். 102 சிறந்த தமிழன்னை செங்குருதி சோரும் இறந்த பனுவல் எனைத்து. 103 எனைத்தானும் காக்க இருக்கின்ற நூல்கள் உனைத்தானும் வேண்டுவன் ஒன்று. 104 ஒன்றோ பலவோ உறுபிறப்பில் சங்கநூல் நன்றாகக் கற்போம் நயந்து. 105 நயங்கண்ட பண்டித நன்மணிபோல் நாமும் வயங்கண்டு கற்போம் வரிந்து. 106 வரிவரியாய்க் கற்பின் மனவுடைமை யாகும் தெரிவறியா நூல்கள் சில. 107 சிலவே முழுநூல்கள் செம்மையுறக் கற்றால் பலவே தமிழின் பயன். 108 பயனாக அவ்வைநூல் பன்முறை கற்பின் வியனானும் ஆற்றல் விரிந்து. 109 விரியும் தமிழ்த்திறம் வெள்ளோட்ட மாகப் புரியுஞ் சிறுநூல்கள் போற்று. 110 போற்றிப் படிப்பின் புகழ்பெருத்த நூலெல்லாம் காற்றில் மிதக்குங் கலம். 111 கலங்குதல் வேண்டா கடிது தமிழென்று அலங்குதல் வேண்டா அறி. 112 அறியார் நரியார் அயல்மொழியே நாடும் வெறியார் பலரின் விரிப்பு. 113 விரித்தபாய் போல விளங்குந் தமிழைச் சிரித்தநாய்க் கென்னோ திணிப்பு. 114 திணிக்கும் மொழியன்று தீந்தமிழ் நெஞ்சைப் பிணிக்கும் மொழிகாண் பெரிது. 115 பெருஞ்சமயக் காப்பியங்கள் பெற்றவள் என்னும் அருஞ்சிறப்புக் கொண்டாள் அவள். 116 அவள்பிறந்த நாளில் அனைத்துலக மண்ணில் எவள்பிறந்தான் சொல்லென் றெழுப்பு. 117 எழுந்த மொழிகளுள் ஏட்டளவில் நின்று விழுந்தபல என்னோ வினவு. 118 வினவினால் உண்மை விளங்குமே செம்மை நினைவினாற் செந்தமிழே நேர். 119 நேரசை கொண்ட நெடுந்தமிழைப் பள்ளியில் வேரசை வின்றி விதை. 120 விதைக்க முயலார் விளிவில் தமிழைப் புதைக்க முயல்வார் புரிந்து. 121 புரிந்தே சுரண்டும் புகழ்ச்சிறு கூட்டம் தெரிந்தே வரைவன் சிரித்து. 122 சிரிக்கஞ் செயலோ சிவன்போல் ஒருநாள் எரிக்குஞ் செயலாய் விடும். 123 விடுக அயன்மை விளையும் முளையில் தொடுக தமிழ்ச்சுவடித் தூக்கு. 124 தூக்கிய தில்லையான் சொற்றமிழை அம்பலமேல் நீக்கிய சூழ்ச்சி நினை. 125 நினைவினிய வாசகம் நேரொலியாக் கோயில் கனவினும் தோன்றா கதிர்த்து. 126 கதிரொடு தோன்றிய கண்மொழி வாழ்க மதிகொடு நூல்கள் மலிந்து. 127 மலிவு விலைவைத்து மக்களார் வாங்கப் பொலிவுப் பதிப்புக்கள் போடு 128 போடுவோம் சத்தூண்; புகட்டுவோம் செந்நமிழ் சாடுவோம் அன்மொழிச் சத்து. 129 சத்திற் சிறந்த தமிழ்மொழி எட்டோடு பத்திற் பிறந்தபெரும் பாட்டு. 130 பாவகை எத்தனை பாசுரம் எத்தனை காவியம் அத்தனை கல். 131 கல்லாப் பிறப்பே கடிவிரைவில் கல்வியில் எல்லாம் தமிழாம் இரு. 132 இருமொழிக் கொள்கை எதற்கோ தமிழில் ஒருமொழிக் கொள்கை உறும். 133 கொள்கை தமிழாகக் கொண்டபின் பன்மொழி எள்கை இலதே எனக்கு. 134 என்னவர் பன்மொழிக் கென்றும் இசைகுவர் பின்னல் தமிழுக்குப் பின் 135 பின்னாகச் சின்மொழி பேணுக; அஃதின்றேல் முன்னேற மாட்டோம் முயன்று. 136 முயற்சிக் கெதிரன்று முத்தமிழ்; ஞால உயர்ச்சிக்குப் பாரதி உண்டு. 137 உண்டு தமிழ்த்திறம் ஊர்புகழ் கால்டுவெல் தொண்டு விளைத்த துணிபு. 138 துணிந்த பெருந்தலைவன் சொற்றமிழ் ஒன்றால் திணிந்த புகழ்பெற்றான் தெம்பு. 139 தெம்மாங்கு பாடும் சிறுநகையீர் எஞ்செவிநும் கும்மாளம் கேட்கும் குதித்து. 140 குதிக்கும் குரக்கினம் கூடிப்பின் ஊடிப் புதுக்கும் அகத்திணைப் போர். 141 போர்த்தும்பை கண்ட புகழ்மறவர் தாய்மொழியின் தேர்த்தும்பை விட்டார் சிறுத்து. 142 சிறுமை பலவிழைத்துச் செய்தமிழை விட்டான் மதிமை புரியா மகன். 143 மகனாக வாழ்க வளர்தமிழ் கன்னிக்கு எமனாக வாழல் இழிவு. 144 இழிவை இனியேனுஞ் செய்யற்க; செய்யின் அழிவை இனத்தொடும் அட்டு. 145 அட்டுண்க சுற்றம்; அமர்ந்துண்க இல்லவர் இட்டுண்க சங்க வியல். 146 இயல்பாக இல்லற இன்பம் விழைவார் பயில்வாராம் சங்கப் படிப்பு. 147 படிக்க முடிந்தளவு பார்க்க; அவற்றுள் படிக்க சிலசங்கப் பாட்டு. 148 பாட்டைப் புணர்த்துப் படித்தால் கவிஞனின் ஓட்டம் படியும் உளத்து. 149 உளத்துப் பதிக்கும் உயர்தொடைகள் கொண்டு களத்து வருபொருளைக் காண். 150 காணல் அரிதன்று காசற நூல்சில பேணல் திருப்புதல் பெட்பு. 151 பெட்டகம் காக்கும் பெருவணிகீர் செந்தமிழ் ஒட்டகம் காப்பீர் உருத்து. 152 உருத்துவந் தூட்டும் உயிர்ச்சிலம்பு கூறும் கருத்துவந்து கொள்வீர் கடிது. 153 கடியும் மொழியன்று காப்பியக் கம்பன் அடியும் முடியும் அது. 154 அதுவன்றோ போப்பையர் ஆயுள் அறைமேல் இதுமகன் என்ற எழுத்து. 155 எழுத்துத் திருத்தம் இயல்போ தமிழைக் கழித்துச் சுழிக்குங் கதை. 156 கதைநீள வேண்டாகாண் காத்தவை மீண்டும் புதையாழ லாமோ பொறு. 157 பொறுத்தனம் சிற்றாணை போக்கறியா வன்னை மறுத்தனம் மற்றென் செய. 158 செயற்குரிமை யாதெனின் செந்தமிழை யாண்டும் கலைக்குரிமை யாக்கல் கடன். 159 கடனுரிமை யாதெனின் கல்வி முழுதும் உடனுரிமை எந்தமிழ்க்கே உண்டு. 160 உண்டென நம்பினால் ஓலையை நம்பற்க குண்டெனக் செய்க கொதித்து. 161 கொதிப்பற்ற ஆட்சியின் கொள்கை படைகள் பொறுப்பற்றுச் செய்கின்ற போர். 162 போராட்டம் இன்றிப் பொருவில் தமிழுக்குத் தேரோட்டம் இல்லை தெளிவு. 163 தெளிந்த ஒலியனும் சேரடிச் சொல்லும் நெறிந்த தொடரும் நிலை. 164 நிலைபெற்ற செம்மொழி நீளாள வேண்டின் விலைபெற்ற நூல்கள் விளை. 165 விளைநெறித் திட்டம் விளக்கப் பகட்டுக் களைநெறி யெல்லாம் களை 166 களைக அயலொலி காண்க தமிழ்ச்சொல் அளைக பொருள்வளம் ஆர்ந்து. 167 யார்யார் எழுதினும் யாவையும் நம்மொழி பேராரக் கொள்ளுதல் பேறு. 168 பேறு பெரிதாயின் பிஞ்சுத் தமிழ்க்குழவி வேறு மொழிகற்கை வீண். 169 வீணாகக் காலத்தை வேற்று மொழியுணல் பூணோ அறிவோ புகல். 170 புகலிடம் செந்தமிழே போயடகு வைத்தால் நகலிடம் வாரா நகை. 171 நகைமுன் அழுகை நயன்பாடு கூறும் வகைமுதல் நூலை வழுத்து. 172 வழுத்தும் வகையென்கொல் வாழ்வியல் நூலை முழுத்தும் படித்தல் முறை. 173 முறையொடு கற்பின் முதற்பழ நூலால் நிறையொடு நேர்படும் நெஞ்சு. 174 நெஞ்சப் புணர்ச்சி நிலைக்குடி யாக்குமால் வஞ்சப் புணர்ச்சி வடு. 175 வடுச்சிறிது வேண்டாத வாய்மைபோல் வஞ்சம் கடுச்சிறிது வேண்டாதாம் கற்பு. 176 கற்புடைமை யாதெனின் காதலர் தம்முள்ளம் நிற்புடைமை நட்புடைமை நேர். 177 நேர்மாறா நிற்பினும் நெஞ்சத் தறிவுடையார் பேர்மாறார் இல்லறப் பெட்பு, 178 பெட்பறார் வீம்பிற் பெரும்பிணக்கு மிக்குறினும் நட்பறார் மானம் நயந்து. 179 மானம் நயந்தார்க்கு மாண்புடை இல்லறம் கானம் பயந்து விடும். 180 விடுக குடிமானம் விட்டதன் பின்பே தொடுக திருமணத் துய்ப்பு. 181 துய்க்கு நெறிகூறும் தொல்முதற் காப்பியம் உய்க்குந் திணையை உணர். 182 உணர்வீர் புதுப்பால் உயிர்கலந்து கற்பிற் புணர்வீர் உடல்நலம் பூத்து. 183 பூத்து மணக்கும் பொழிற்சுனைகள் சென்றாடிக் கூத்துக் களிப்பீர் குடைந்து. 184 குடையின்பம் பேறன்று கூடுவார் உள்ளத் தொடையின்பம் பேறென்னும் தொல். 185 தொல்லொளிக் காப்பியம் தொட்டும் அறியாதார் பல்லொளி ஊமைப் பகட்டு. 186 பகட்டுக் கயலயற் பாடைகள் கற்கும் உதட்டுக்கு மற்றென் உணவு. 187 உணவொரு கொள்கையா சிச்சீ உடையின் கணமொரு கொள்கையா காப்பு. 188 காப்புடைமை யாதெனின் கைக்குழவி யாவர்க்கும் யாப்புடைமை செந்தமிழே யாம். 189 யாஞ்சொல் மொழிப்புரட்சி நன்கு செயற்படுத்தல் தீஞ்சொல் தமிழுக்கோர் தேர்வு. 190 தேர்தற் களத்திற் செழுந்தமிழ்க் கொள்கையால் தோல்வி கிடைப்பினும் தொண்டு. 191 தொண்டது திண்பட்டுத் தோலாத வாகையாம் பண்டது காட்டும் படிப்பு. 192 படிக்க துறையனைத்தும் பைந்தமிழ் மூலம் முடிக்க அதுவே முறை. 193 முறைவைத்துச் சொல்லும் முதுநெறியே இன்றும் நிறைவைத் தரூஉம் நெறி. 194 நெறியயல் போற்றுக போற்றுங்கால் மூட வெறிமயல் வேண்டா விலக்கு. 195 விலக்கற்க என்றும் வெளியார் அறிவைச் செலக்கற்க ஆய்வு செறிந்து. 196 ஆய்வு வளங்கள் அகலநூல் ஒப்பீட்டுத் தோய்வுப் பயில்வால் துறும். 197 துறுகல் எனக்கொண்டு துஞ்சும் களிற்றைக் குறுகுமாம் மாணைக் கொடி. 198 கொடிவருத்தங் கண்டான் கொடித்தேர் நிறுத்தி அடிவருத்தஞ் செய்தான் அவன். 199 செய்தா னவனொருவன் சீகாதி மோதிரத்தைப் பெய்தான் பிரிந்ததன் பின். 200 பின்னுடைமை வேண்டாப் பெருவள்ளல் பேரழகன் தன்னுடைமை இல்லான் தனி. 201 தனித்தொரு பல்கலைத் தாய்க்கழகம் கண்டான் மனித்தருள் அண்ணா மலை. 202 மலைபச்சை நேரில்லை மாயா அறத்தால் நிலைபச்சை யப்பனே நேர். 203 நேரினிய சொற்செல்வன் நெல்வேலிச் சேதுவின் ஊரினிய பேரறத்தை ஓது. 204 ஓதுவார் பாடும் உயர்வார வாசகங்கள் தீதுபார் வண்டுக்குத் தேன். 205 தேனின்பம் பாயுமால் செந்தமிழ் நாடென்ற பாவின்பம் பொய்யோ பறை. 206 பறைமுதல் பல்குடிகள் பண்டு தொழிலின் வரைமுதல் வந்த வழக்கு. 207 வழக்கு வடக்காகி வன்பால் வருணச் சழக்கு தினப்பட்டோம் சாய்ந்து. 208 சாய வரணம் தழுவித் தமிழினம் மாயுமே வீம்பில் மடிந்து. 209 மடிவில்லை என்றிருந்தோம் மாணாத தேர்தல் விடிவில்லை என்றுரைக்கும் வெந்து. 210 வெந்து வெதும்பி வெறிபடப் பாரதி நொந்து மடிந்தான் நொசிந்து. 211 நொசியாது சாதி நுழையாது சட்டம் பசியாது தேர்தற் பணம். 212 பணவாய் விரியுமேல் பாரதத் தேர்தல் பிணவாய் மணக்கும் பிளந்து. 213 பிளவின்றி மக்கள் பெரும்பங்கு கொள்ளக் களவின்றித் தேர்முறையைக் காண். 214 காணல் அரிதன்று; கட்சிகள் இந்தியம் பேணும் பொதுக்கோள் பெறின். 215 பெறுக குழந்தை பெருவருவாய்க் கேற்ப உறுக தமிழ்ப்பேர் ஒலி. 216 ஒலிகூட்ட வேண்டா உயர்தமிழ்க் கல்வி வலியூட்ட வேண்டும் வரிந்து. 217 வரிவரியாய்ப் பார்த்து வரையின் பிழைகள் கரிகரியாய்ப் போஒய் விடும் 218 விடுபிழை செந்தமிழில் மிக்கில்லை தூய நடுமழை போலும் நடப்பு. 219 நடக்குஞ் சிறியதோர் நல்லமைச்சுப் போல அடுக்கும் ஒலிகள் அளவு. 220 அளக்கும் ஒலியதனால் அன்றுமுதல் என்றும் கிளக்கும் குமரியாம் கேள். 221 கேட்கும் ஒலியெலாம் கேடுணரார் சேர்ப்பரேல் வாய்க்கு விளங்கா வரம்பு. 222 வரப்பொலி போற்றி வழிநூல்கள் யாக்க கரப்பொலி வேண்டா களை. 223 களைகண் தமிழுக்கு யாதெனின் தூய்மை விளைகள் இதழ்கள் விளக்கு. 224 விளக்கு தமிழேயாம் வேற்று மொழிகள் விளக்கு பொடியாம் விரும்பு. 225 விரும்புக எம்மொழியும் வேற்றுமை யில்லை விரும்புக தன்மொழிக்குப் பின். 226 பின்வாழ்க்கை வேண்டின் பெரும்பொருள் ஈட்டுக என்வாழ்க்கை இல்லா தவர்க்கு. 227 இல்லா தவராயின் எந்நாய் முகத்துக்கும் பொல்லா தவராவர் பொய்த்து. 228 பொய்யன்று ஞாலம் பொருளிலார்க் கில்லின்பம் மெய்யன்று வள்ளுவம் மெய்த்து. 229 மெய்யென்று செய்யற்க மெய்யல் கரும்பணம் தய்யென்று கைப்பூண் தரும். 230 தருமென்று வாடித் தகுமுயற்சி குன்றின் வருமன்றோ இன்மை வடு. 231 வடுவிற் பெரியது வாய்வறுமை ஆண்டும் படியிற் பெரியது பண்பு. 232 பண்புடையார் துன்பப் படுவர் படுசூழ்ச்சி வன்புடையார் உள்ள வரை. 233 வரையறுத்த ஊதியம் வந்தால் செலவைக் கரையறுத்துச் செய்தல் கடன். 234 கடன்பழக்கம் வேண்டாமே காலிப் பழக்கம் விடும்வழக்கம் ஆகி விடின். 235 விடத்துணிக அச்செலவு மேல்வரவு போலாம் மடத்துணிவும் போகும் மறந்து. 236 மறந்தொழிக வெண்சுருள் வாய்நாற்றம் நோய்தான் பறந்தொழிக நெஞ்சிற் பரிந்து. 237 பரிந்திரப்பன் சாராயப் பாலைப் பருகி எரிந்திறக்க வேண்டாமே யென்று. 238 என்றும் மதுவூட்டி ஏழை மடிகறத்தல் கன்றுமுன் காட்டும் கறப்பு. 239 கறக்கும் மதுவால் கருவூலம் ஈட்டல் சிறக்குமோ காந்தியின் சீர். 240 காந்திசீர் போற்றுவோம் கள்ளுக் கடைதிறந்து வாந்திநீர் விற்போம் மகிழ்ந்து 241 மகிழ்ச்சி ஒருபுறம் மாண்குறளைப் போற்றும் புகழ்ச்சி மறுபுறம் பூச்சு. 242 பூச்சும் குறியும் புகழ்மதமும் வேதமும் பேச்சும் செயலும் பிற. 243 பிறந்தோம் இறந்தோம் பெரியோரின் சொல்லை மறந்தோம் நினைந்தோமா மற்று. 244 மற்றவர்க்குத் தீமை வகைவகையாச் செய்தலே கற்றவர்க்கு வந்த கலை. 245 கலையின்பம் மக்கட்கே காணும் விலங்கிற்கு இலையின்பம் உள்ளத் தியல்பு. 246 இயல்பை வடிக்கும் எழிற்கலை மாமல் பயில்வுக் கடற்புரம் பார். 247 பாரிற் கொழுத்த பசுமுட்டு கன்றினை நேரிற் களிக்கலாம் நின்று. 248 நின்றுமேற் பார்த்தால் நெடுந்தவச் சிற்பங்கள் என்றுமே இல்லை இணை. 249 இணைந்த குடிமந்தி ஈர்பேன் எடுக்கும் பிணைந்த உறவோ பெரிது. 250 பெரிதே உயர்ந்த பெருவுடையார் கோயில் அரிதேகாண் நந்தி அமைப்பு. 251 அமைவுடை வள்ளுவர் அன்புருக் கோட்டம் தகைவுடைச் சிற்பத் தமிழ். 252 சிற்பத் தமிழெங்குஞ் செல்லா இடமில்லை பொற்பமரிக் காவும் பொலிந்து. 253 பொலிவார் சிலைக்களவு போம்விலை கேட்டால் மலிவார் கலையன்று மற்று. 254 மற்றைக் கலைமேல் மதிமோகம் போனதனால் பற்று தமிழிசைக்குப் பாழ். 255 பாழ்நூல் இசைகண்டு பண்ணாடி ஆனந்தர் யாழ்நூல் வரைந்தார் நமக்கு. 256 நமக்கோர் இசைத்தமிழை நாடோடிக் காத்தான் அவைக்கொரு அண்ணா மலை. 257 மலைப்பேரான் ஆற்றிய வண்தமிழ்த் தொண்டு நிலைப்பேரா ஞாயிறு நேர். 258 நேர்பகை நந்தமிழ்க்கு யாரெனின் நெஞ்சங்கள் யார்பகை நாமே நமக்கு. 259 நமனாக நாமே இருக்கப் பிறரை எமனாகக் கூறல் எதற்கு. 260 எதற்கும் தமிழை இளக்காரம் பேசும் அதற்கு மகிழ்வோம் அசடு. 261 அசடு முகம்வழிய அன்மொழி நாறும் கசடு தொலையாதோ காடு. 262 காடுகாண் காதை கடக்க இளங்கோவின் நாடுகாண் பாதை நடந்து. 263 நடந்தால் உடல்நலம் நன்றாகும்; வாய்மை கடந்தால் நிலைபோம் கழிந்து. 264 கழிக்கதில் பொய்ம்மைக் கவர்ச்சி; தலையை மழிக்கதில் பிள்ளை மயிர். 265 மயிர்வளராக் கன்னிமை மானும் தமிழின் பயிர்வளராப் பள்ளிப் படிப்பு. 266 படித்து முழங்கும் பறைஞன்நான் கேளிர் தடுத்து வளருந் தமிழ். 267 தமிழா பகையா தகையா நகையா உமிழா பிணமா உணர். 268 உணர்ச்சித் தமிழா ஒருமுறை யேனும் கிளர்ச்சிச் சிலம்பினைக் கேள். 269 சிலம்பினைக் கற்றால் சிதைமுலைக் கற்பி புலம்பினைக் கேளாய் புகைந்து. 270 புகைகுடி யில்லாப் புகழ்நூல் மதுரை தொகைமடி பட்ட சுருண்டு. 271 சுருண்டு விழுந்தான் சுடர்தொடி யோடும் வெருண்டு நெடுஞ்செழிய வேந்து. 272 வேந்தனும் வெந்தான் விரிகுழல் ஓர்நங்கை ஏந்தும் கனலிக் கெதிர். 273 எதிர்த்தாள் ஒருத்தி இழந்தது ஒருகோல் உதித்தது காப்பியம் ஒன்று. 274 ஒன்றிய சேரன் உயரிமயக் கல்சுமத்தி வென்றதமிழ் நாட்டினான் வீறு. 275 வீறுடை மாதவி வெண்கற்புக் காதலாள் மாறுடையாள் தாயின் வழிக்கு. 276 வழிபல காட்டி மணிமே கலையாள் அழிபசி தீர்த்தாள் அறம். 277 அறத்திற் பெரியது அழிபசி தீர்த்தல் மறத்திற் பெரியது மாண்பு. 278 மாணாக வாழ்தல் மனிதம்; தமிழுக்குப் பூணாக வாழ்தல் பொருள். 279 பொருள்செய்வார் வேண்டின் பொதியத் தமிழை இருள்செய்வார் தம்மை இகழ். 280 தம்மை இகழத் தமிழை இகழ்வரேல் அம்மை யுறுக அவர். 281 அவரும் இவரும் உவரும் எவரும் கவரும் தமிழினைக் காண். 282 காண்போம் முழுக்குறள் கற்போம் வரப்பண்ணிப் பூண்போம் ஒழுக்கப் பொறை. 283 பொறையின்றி இல்லறப் பூட்டகம் செல்லா உறையின்றி இல்லை ஒளி. 284 ஒளிவாழ்வு வேண்டின் ஒருகுறளை யேனும் தெளிவாழ்ந்து செய்தல் திறம். 285 திறமை அடைவார் திருக்குறளைக் கற்பார் குறைமை குறைவார் கொதித்து. 286 கொதிப்பு குறையின் குடும்பம் வளரும் மதிப்புக் குறைவை மறந்து. 287 மறந்தனம் என்னும் மனநினைவும் இல்லார் சிறந்தனர் இல்லச் சிரிப்பு. 288 சிரித்துக் கலகலெனும் செவ்வாயார் இல்லம் அரித்துக் கரையாத ஆறு. 289 ஆறும் வறளும் அடுப்பும் அணையுமால் ஏறும் இறங்கும் இயல்பு. 290 இயல்புக் கெதிர்ப்பும் எதிர்ப்புக் கியல்பும் செயல்நலம் பார்த்துச் செயல். 291 செயலென எண்ணிச் சிறியனவும் செய்யேல் கயலென ஆகுமோ கண். 292 கண்ட படியெழுதும் கைவணக்கம் கொள்ளற்க மண்டு தமிழ்கெடுக்கும் மை. 293 மைதொட் டெழுதுமுன் மண்தொட் டெழுதுக பொய்விட் டெழுதுக பொன். 294 பொன்னுடையார் எல்லாம் பொருளுடையார் ஆகாரே என்னுடையார் ஈயா தவர். 295 ஈயா தவரென் றிருப்பவர் சொல்லுவார் ஈயா தவராயின் என். 296 என்னென்ன சொல்லினும் இன்தமிழைக் கல்லாதார் முன்னின்றாற் பொங்கும் முகம். 297 முகமுடையார் எல்லாம் மொழியுடையா ரல்லர் அகமுடையார் ஆழ்வார் தமிழ். 298 ஆழ்வார் தமிழிலும் ஆண்டாள் தமிழிலும் வீழ்வார்க் குளதோ விதி. 299 விதியில் மொழியெலாம் மேலாளக் காணும் பொதியில் தமிழைப் புதைத்து. 300 புதைத்தோம் சிதைத்தோம் புகழ்ந்தோம் தமிழை உதைத்தோம் பிறர்யார்க் குரித்து. 301 உரிமை யடைந்தும் உயர்நம் மொழிகள் சிறுமைப் படூஉம் சிறப்பு. 302 சிறந்த வரலாறு செல்தமிழுக் குண்டு குறைந்த வரலாறுங் கூறு. 303 கூறிய வேங்கடம் கோனொடு போயிற்று மாறிய கேரளம் மற்று. 304 மற்றுங் குமரி மலையொடு மூழ்கிற்று பற்றும் முதுகோடி பாழ். 305 பாழில் பிராகூய் பரவிய எல்லையும் ஊழின் இழந்தோமோ ஓது. 306 ஓதுவார் ஓர்வார் உறைவட பாரதம் ஆதி தமிழின் அணை. 307 அணைக்கட்டுச் சோழர் அயல்கிழக்கிற் கண்ட துணைக்கட்டும் போயிற்றே தொக்கு. 308 தொக்குத் தமிழர் தொகைவாழ் இலங்கையும் கக்குவா னாமோ கருது. 309 கருதுவார்க் கில்லை கலக்கம் தமிழ்ப்பால் பருகுவார்க் கில்லை பழுது. 310 பழுக்கா மொழியாளர் பார்பரக் கண்டும் இழுக்காத் தமிழாளர் என். 311 என்னை வினவின் எதுபடித் தாயென உன்னை யறைவேன் ஒழுங்கு. 312 ஒழுங்கு வரலாறு உலகுதமிழ்க் குண்டே விழுங்கும் உமிழில்லை வெந்து. 313 வெந்த சினத்தொடு வெற்பிமயம் விற்பொறித்து வந்த புகழ்காண் வரவு. 314 வரவுக்கு மிஞ்சிய வள்ளல்கள் நாட்டின் புரவுக்குத் துஞ்சினர் போர். 315 போராடி வென்ற பொருள்கள் இசைஞர்க்குச் சீராடிச் சென்ற செழித்து. 316 செழியன் எழுவரையும் சின்னப் பருவத்து அழியப் பொருதான் அடர்த்து. 317 அடர்த்தெழு கண்ணகி அல்லற வேந்தை இடர்ப்படச் செய்தாள் எதிர்த்து. 318 எதிர்ப்புக் கடங்கா இராமப் பெரியார் கொதிப்புறு தன்மானம் கொள். 319 கொள்கைப் பெரியார் குறித்த நெறிகூறத் தள்ளினார் மூடம் தகர்த்து. 320 தகரக் குழாய்போல் சடங்கு மதங்கள் சிகரம் இழந்த சிதைந்து. 321 சிதைந்தன நல்ல திரவிடச் சீர்மை புதைந்தன ஆரியம் புக்கு. 322 புக்கன சாதிகள் போய சமனிலை நக்கன ஆரிய நச்சு. 323 நச்சு வருணங்கள் நற்றமிழ் ஏறின துச்சப் புராணம் தொடர்ந்து. 324 தொடர்ந்தன வேள்விகள் தோற்றது பௌத்தம் படர்ந்தன வேதப் படிப்பு. 325 வேதப் படிப்பில் வெறுப்பில்லை மேலோர்தம் சாதித் தடிப்பே சழக்கு. 326 சழக்குகள் ஒன்றல் சாதிப் பரதம் உழக்கும் இகலை ஒழி. 327 ஒழிந்தது சாதி உறுமத மாற்றம் அழிந்தது கேட்பின் அழகு. 328 அழகுடைமை யாதெனின் யாரொடும் ஒன்றிப் பழகுடைமை பாரதப் பற்று. 329 புற்றுடையார் தேர்தற் பகட்டுடையார் செந்தமிழை விற்றுடையார் நாட்டின் விதி. 330 விதியென்று பேசி வினைமடிந்து சாவார் நிதியறியார் ஏழை நிலை. 331 ஏழை நிலையறிந்தார் எந்தை பெரியாரை ஊழை மறுத்தாரை ஒப்பு. 332 ஒப்புக்குக் கூடி உயர்சாதி என்பாரின் தப்புக்கு வேதமோ சான்று. 333 சான்றாகச் சொல்வதெலாம் தான்தழைக்க என்பதலால் ஊன்றாக நில்லார் உணர். 334 உணர்ந்தால் எதிர்ப்பரோ உன்தமிழால் கோயில் வணர்ந்து வழிபடும் வாழ்வு. 335 வாழ்வுக் குகவா வறட்டு மரபுகள் பாழ்வுக் கிணற்றின் படி. 336 படிக்க வழிசெய்தார் பார்புகழ் காமர் அடிக்கவோ மூடவோ அன்று. 337 அன்றன்று பாடம் அறிவோடு கற்பித்தால் என்றென்றும் வாழும் இனம். 338 இனப்பற் றிலாஅத இந்தியன் நாயார் சினப்பற்று நேர்வான் சிறுத்து. 339 சிறுமை தமிழெனச் செப்புவார் வீந்து மறுமையை எய்தாரோ மற்று. 340 மற்ற மொழிகள் மயக்கறக் கற்கதன் கற்ற மொழியைத் தொடர்ந்து. 341 தொடர்வு வடமொழி தொன்றுதொட் டுண்டால் இடருடன் ஆக்கம் இணைந்து. 342 ஆக்கஞ் சிலவால் அழிவு பலவாமால் போக்கும் வரவும் புதிர். 343 புதிர்களுள் ஒன்று பொருந்தா வருணம் எதிரும் தமிழின் இடத்து. 344 இடத்தால் திணைகண்ட எந்தமிழர் சாதி மடத்தால் இழந்தார் மதிப்பு. 345 மதிப்புக் குரிய வடமொழி நம்மால் புதிப்பிக்கப் பட்ட பொருள். 346 பொருளென எண்ணும் புலமைத் தமிழர் தெருளெனக் கற்றார் சிறந்து. 347 சிறந்த வடநூல்கள் தென்தமிழ்ப் பட்ட துறந்த தனிமை தொலைந்து. 348 தொல்லைச் சகுந்தலை சொற்றமிழ் ஆயினாள் வல்லை மறைமலை வாய்த்து. 349 வாய்த்த பொருள்நூல் வளர்தமிழ் வந்தநற் கூர்த்த மணியனைக் கொண்டு. 350 கொண்டபோர்க் கீதை குளிர்தமிழ் ஆயிற்று தொண்டர் பவானந்தர் தொட்டு. 351 தொட்டுக் கிடந்த தொலைவில் புராணங்கள் மட்டுத் தமிழாம் மலிந்து. 352 மலிவுப் புராணம் மடமை தரினும் வலிவு மொழிக்கு வளம். 353 வளஞ்சால் வடமொழி வாய்வழக் கற்றும் துளங்கா தமிழின் துணை. 354 துணையென வந்த தொகைமொழிகள் வீட்டுள் மணையென லான மகிழ்ந்து. 355 மகிழ்வு கொடுத்தனர் மற்றையோ ரல்லர் புகழ்வுத் தமிழர் புரி. 356 புரியாத் தமிழர் பொதுவாய்த் தமிழர் வெறுவாய்த் தமிழர் விளம்பு. 357 விளம்பரம் செய்தென்கொல் வெல்தமிழே யாண்டும் களம்பரம் ஆக்கல் கருத்து. 358 கருத்துடையார் செந்தமிழ்க் கண்ணுடையார் நெஞ்சம் பருத்துஐடயார் ஒல்லார் பணிக்கு. 359 பணிக தமிழ்முன் பயில்க அவைநூல் துணிக ஒருசட்டத் துப்பு. 360 துப்பாக வேண்டின் தொடர்தமிழ்ச் சட்டங்கள் உப்பாக வேண்டும் உணர். 361 உணர்வார் உடன்படுவர் ஒண்தமிழ்க்கு ஈண்டை இணையாகும் சட்டம் எதற்கு. 362 எதற்கும் தமிழ்ச்சட்டம் இந்நிலத்து வேண்டின் அதற்கும் எதிர்ப்போ அறிவு. 363 அறிஞர் கொதிப்பர் அகன்தமிழ் நாடு குறுகிச் சிறுகிய கூன். 364 கூனாய்க் குறையாய்க் குறிசுருக்குப் பையளவாய்ப் போனாய் தமிழகமே பொய்த்து. 365 பொய்யில் புலவோர் புகழ்பொதிந்த பெட்டகமே மெய்யில் தமிழினமே மீள். 366 மீட்சியுளதோ மொழிக்கலப்பால் வேங்கடத்தின் ஆட்சி யிழப்பை அறி. 367 அறிவாய் கலந்த அயலொலியால் சேரல் தனியாய்ப் பிரிந்த தவறு. 368 தவற்றுக் கலப்பால் தமிழ்நிலம் விட்டோம் கவற்றுப் படையெடுத்தோ காட்டு. 369 காட்டும் பயனென் கலப்பொலி நீங்காதேல் மீட்டும் நிலக்குறை வெட்டு. 370 வெட்டி நிலங்கரைய வேண்டேல் மொழித்தூய்மை கட்டித் தலைக்காக்கை கற்பு. 371 கற்புடைமை யாதெனின் கைந்நிலமும் குன்றாமல் நிற்புடைமை நீண்ட பொறுப்பு. 372 பொறுப்பின்றிச் சொல்வார் பொதுமை தமிழுக்கு உறுப்பின்றித் தைக்கும் உடை. 373 உடைய தமிழ்நூல்கள் உள்ளும் புறத்தும் அடைய வழித்திட்டம் அன்பு. 374 அன்புக் குடல்நிலை அன்னையைக் கற்பது முன்பு வளர்ப்பது மொய்ம்பு. 375 மொய்யெனக் கற்க முதுதமிழ் பண்தமிழை ஙொய்யென மீட்டல் நொடித்து. 376 நொடியை அளவாய் நுனித்தறிந்து கொண்டான் துடியை வெறியாகத் தொட்டு. 377 தொட்டக்கால் தீட்டெனும் தொல்வேத நாகரிகம் பட்டக்கா லன்றோ பழம். 378 பழுத்த தமிழிருக்கப் பாங்கு கெடுத்த உழுத்த மொழிக்கலப்பேன் ஒர். 379 ஓர்ந்தார் ஒளிக்கார் உயர்தமிழ்க் கேடெல்லாம் சேர்ந்த கலப்பால் தெளி. 380 தெளிந்தேம் பகர்வேம் செறித்த கலப்பால் விளிந்தோம் இழந்தோம் விழி. 381 விழித்துப் பயனென் விதியில் தமிழைக் கழித்துப் படிப்பவரைக் கண்டு. 382 கண்டு சுவைக்கும் கனிதமிழ்க் கல்லாதார் மண்டுகள் வாழும் மடம். 383 மடைமைக் களவுண்டோ வன்கண் தமிழர் கடைமைக் களவுண்டோ காட்டு. 384 காட்டும் திருக்கோயில் கல்லால் கலையழகு பூட்டும் சிலைகள் புடைத்து. 385 புடையான சிற்பங்கள் பொந்தாய் உதிர்ந்த அடையான ஆட்சிகள் அற்று. 386 அற்றற் றிழந்தன ஆயிரம் கோபுரம் எற்றுக்குச் சோற்றூண் எமக்கு. 387 எமக்குத் தெரியும் எனைப்பல் கலைகள் நமக்குள் அழிந்த நடப்பு. 388 நடப்புக் கணக்கொரு நாடிக் கலையும் அடுப்புக் கலையும் அறிவு. 389 அறியும் அயலோர் அருவியப்புக் கொள்வர் தெரியும் கடல்மல்லைத் தேர். 390 தேர்த்தொழில் கைவந்த தென்னாடு யானையால் போர்த்தொழில் கண்ட புறம். 391 புறமதில் காட்டும் பொறிக்கலை வன்மை மறமதிர் சூழ்ச்சி வரைந்து. 392 வரைபடம் இன்றிப் மனப்படங் கொண்டு திரைகடல் ஓடினான் திக்கு. 393 திக்குத் தெரியாத தென்கிழக்கில் நாவாய்கள் புக்குக்கல் வெட்டினான் போந்து. 394 கல்வெட்டிற் காண்க கடுங்குடுமி யான்மலைத் தொல்லெட் டிசையின் தொகை. 395 தொகையாகக் காணலாம் தொல்காஞ்சி ஓங்கும் வகையான சிற்ப வளம். 396 வளத்துப் பழமை மகஞ்சோ தெரிக்கும் உளத்துப் புதுமையும் உண்டு. 397 உண்டாய வள்ளுவர் ஓங்குநிலைக் கோட்டத்தைக் கொண்டாடிக் கற்க குறள். 398 குறளை உணராக் கொடுந்தமிழன் வீதிச் சரளைப் பொடிக்குச் சமம். 399 சமமெனல் ஆமோ சரளை தெருவுக்கு அமையுடைத் தாகும் அறி. 400 அறியாதான் முப்பால் அறிந்தறிந்தும் பொய்ம்மை முறியாதான் வெந்த முளை. 401 முளையா மொழியெலாம் முன்னேற்றம் காண இளையாத் தமிழ்க்கோ இடர். 402 இடருற்ற ஞான்றும் இலக்கணம் காத்துத் தொடருற்ற நூலன்றோ தொல். 403 தொல்முதற் காப்பியம் தொட்டுத் தொழாதவன் பல்முதிர்ந்து என்னோ பயன்? 404 பயனிலை என்பானோர் பாவிக்கு மூளை வயமிலை கீழ்ப்பாக்கம் வா. 405 வாலியென் சொற்றமிழ் வான்மீகம் எறிற்று பாலியுட் புக்க பல. 406 பலநாடு சென்றனம் பற்றுத் தமிழா நிலைநாடி நல்லுறவை நேர்ந்து. 407 நேர்ந்த இலங்கை நெடிதுவாழ் இந்தியா தேய்ந்தனர் நூலகம் தீய்ந்து. 408 தீச்சுவை கண்டறியாச் செந்தமிழ் அல்லவே பூச்சுவை யன்று பொறு. 409 பொறுத்துக் கறுத்தார் புலமாள்வர் தம்முள் நிறுத்தும் இனவொருமை நீண்டு. 410 நீண்ட கொடையால் நிலைநூ லகங்காணத் தூண்டும் தமிழரசுத் தோள். 411 தோளும் கொடுப்போம் தொலைவாழ் தமிழர்க்கு நாளும் கொடுப்போம் நலம். 412 நலஞ்சால் திருச்சிங்கை நல்லரசு என்றும் வலஞ்சால் தமிழுக்கு வாய்ப்பு. 413 வாய்க்கினிய சாரங்க பாணியார் வன்தொண்டு தாய்க்கினிய செல்வத் தளிர். 414 தளிர்த்த மலேயா தமிழ்க்கலைகள் காக்கும் அளித்த செவிலி யவள். 415 அவள்தமிழ் நேசனும் அன்பார் முரசும் இவள்தமிழ் போற்றும் எழுத்து. 416 எழுதின் எழுதலாம் எல்லாத் திசையும் உழுத தமிழ்க்கலையின் உந்து. 417 உந்திக் குடிவாழ் உரிமைத் தமிழொன்றே இந்தியப் பன்மொழியுள் ஏறு. 418 ஏறுபோல் ஓடிய எந்தமிழ்ப்பால் காவிரி ஆறும் வறளும் அடைத்து. 419 அடைத்து வறண்டால் அணிவயல் தஞ்சை துடைத்தவோர் பாலையாம் தொட்டு. 420 தொட்டு வணங்கித் தொழுதால் வருமோநீர் பட்டோம் வெறும்பேச்சுட் பட்டு. 421 பட்டதைச் சொன்னால் பழங்கதை என்பரால் விட்டதைச் சொன்னால் வெறி. 422 வெறிப்பட் டிருந்தால் விரிதமிழ் நாடு குறிப்பட் டிருக்குமோ கூறு. 423 கூறுவ தல்லது கூடித் தமிழ்காக்கும் வீறு நமக்கில்லை வீண். 424 வீணாரம் செய்வோம் வெறுஞ்செயலைப் போற்றுவோம் பூணாரம் பூட்டுவோம் பொய்த்து. 425 பொய்சொல அஞ்சோம் புகழ்க்குறள் போற்றுவோம் மெய்யெ மாட்டோம் விதிர்த்து 426 விதிர்த்துப் பிறன்மேல் விடுபழி தூற்றி உதிர்த்து வசைப்போம் உயர்ந்து. 427 உயர்ந்த குறிக்கோள் உளங்கவர் பேச்சாம் அயர்ந்த செயலாம் அடுத்து. 428 அடுக்கி மொழிவோம் அடடாஅ என்போம் தடுக்கி விழுவோம் தடித்து. 429 தடிகொண் டடிப்பினும் தன்மானம் இல்லார் அடிகொண்டு வாழ்வர் அயல். 430 அயலே அவாவும் அறிவில் தமிழர் புயலென மாறாரோ போழ்ந்து. 431 போழ்ந்த பனைபோல் பொருகளிற்றைத் துண்டித்துச் சூழ்ந்த மறக்குலமே சொல். 432 சொல்லில் உயர்வு தொழுதமிழ் என்றானே பள்ளியில் அஃதுண்டோ பார். 433 பாரெங்கும் வீசும் பசுந்தமிழ் நம்நகர் ஊரெங்கும் இல்லை உணர். 434 எங்கும் தமிழென்போம் எல்லாம் தமிழென்போம் கங்குல் பகலாமோ கட்கு. 435 கட்கினிய செப்புக் கடவுள் திருமேனி மட்கினிய செம்பாம் மறைந்து. 436 மறைந்தநூல் இவ்வென்று மாணூல் தெரித்தான் சிறந்த மயிலை சினந்து. 437 சினத்திற் பயனென் திருக்குறள் கண்ட இனத்திற் பிறந்தும் இது. 438 இதுநெறி என்ற இயல்குறள் கற்றும் மதுவெறி புக்கான் மலிந்து. 439 மலிவு விலையில் மதுக்கள் திறப்போம் பொலிவு வரியின் பொருட்டு. 440 பொருளூட்டம் ஆமோ பொதுநல் லரசு மருளூட்டி வாங்கும் வரி. 441 வரியென்னாள் கள்வருவாய் வாய்நாறு தண்ணீர் சரியென்னாள் பாரதத் தாய். 442 தாயின் வறியோர் சமநலம் வேண்டுமேல் பேய்மதுக் கள்ளைப் பிரி. 443 பிரியத் தெரியாத பேதைகாள் உண்ணற்கு உரிய உணவன் றுணர். 444 உணர்ந்தாரைக் கட்கடை உள்ளேவா என்று புணர்ந்து வலிக்குமோ போர்த்து. 445 போரிற் புரண்டால் புகழுண்டு சாராய நீரிற் புரண்டால் நினை. 446 நினைமறித்து வேண்டுவன் நின்வாக்கைக் கள்ளின் நனவிலக்குங் கட்சிக்கு நல்கு. 447 நல்கின் புரியும் நலங்கொல் வருவாயைப் புல்கல் ஒழுக்கத்துப் புற்று. 448 புற்றுவளர்க்கும் புகைப்பிடிப்பு விட்டக்கால் வற்றுமே நெஞ்சு வலி. 449 வலியென் றறிந்தறிந்தும் வாயூதிக் கற்கும் எலியர் தமக்கே எமன். 450 எமனும் முகம்பாரான் ஈக்கள் சுவைக்கும் கமழ்வாய்ச் சடலத்தைக் கண்டு. 451 கண்டபடி ஊதிக் கரித்தூள் உறிஞ்சற்க உண்டபடி மாறும் உடல். 452 உடலே சிறந்த உடைமை மதுவின் குடமாதல் அன்புக் கொலை. 453 கொலையிற் கொடியது கூடாப் பழக்கம் விலையிற் பெரியது வீம்பு. 454 வீம்பு தமிழினத்தின் வேண்டாப் பிடியாகும் நாம்புகல்வ தென்னோ நடப்பு. 455 நடப்பு மொழியிலும் நல்லதமிழ் இல்லை படிப்பும் தமிழில்லை பார். 456 பாராள் துறையெல்லாம் பண்பார் தமிழ்மொழியில் ஊராள் கொணர்வாரோ ஒப்பு. 457 ஒப்புக்குக் கத்தும் உயர்தமிழா ஒல்காசுச் செப்புக்கு விற்பாய் சிறப்பு. 458 சிறப்பைப் பழித்தாற் சினங்கொள்வாய் நீயே மறப்பாய் தமிழை மடித்து. 459 மடித்தநாள் போதும் வளர்தமிழா பிள்ளை படித்தநா ளன்றோ பழம். 460 பழம்போலும் சங்கப் பனுவலைக் கற்றால் கிழம்போகும் கீழ்மையும் போம். 461 கீழ்க்கணக்கு நூலைக் கிளர்வொடு கற்றக்கால் ஊழ்க்கணக்கு நன்றாம் உயர்ந்து. 462 உயர்திணை அஃறிணை உட்பால் அனைத்தும் பயில்நிலை கண்ட பகுப்பு. 463 பகுத்தறி காரணம் அன்றி வருணம் வகுத்தல் தமிழுக்கு மாறு. 464 மாறுபா டொன்றோ வடமொழி சொல்லுக்குக் கூறுபால் ஒவ்வாக் குறை. 465 குறைநிறை ஆங்கிலம் கும்மாளம் போடும் நிறைசெந் தமிழின் நிலத்து. 466 நிலத்தோர் கடமை நிலமொழி போற்றித் தலைமொழி யாக்கல் தலை. 467 தலையார் பொறுப்பு தமிழ்மொழி வாழப் பலவாம் புதுநூற் படைப்பு. 468 படைக்க புலத்தொகுதி பாரறி வெல்லாம் கிடைக்கும் கிளர்தமிழில் என்று. 469 என்றும் தமிழால் எதுவும் பெறலாகும் என்னும் புதுப்பெருமை ஈட்டு. 470 ஈட்டுக ஆங்கிலத்திற் கீடாய்த் தமிழ்மொழியைத் தீட்டுக நம்குறை தேர்ந்து 471 குறைமை தமிழென்று கூறிலார் கூறும் மடமைகட் கென்னோ மறுப்பு. 472 மறுக்கும் பொழுதை வளர்ச்சிப் பணியில் நறுக்கெனச் செய்தல் நலம். 473 நலங்கூர் தமிழென நம்பிக்கை யூட்டல் வலந்தரும் வாழ்வு தரும். 474 வாழ்வு தமிழர் வலிபெறச் செய்யாக்கால் தாழ்வுக்குக் கற்பாரோ தாம். 475 தமக்கு வருவாய் தமிழ்தரும் என்றால் எமக்குமக் கென்பார் இடித்து. 476 இடியப்பம் போலும் இனிமைத் தமிழைப் படியப்பா என்பார் பரிந்து. 477 பரிந்துரைக்க வேண்டா படிதமிழ் என்று வரிந்தீட்டும் செல்வம் வரின். 478 வருவாய் வரவெனின் வன்மொழியும் ஏற்பர் நரிவாயின் ஊனையும் நன்று. 479 நன்று தமிழ்தான் நடைபள்ளி ஆளாமல் தின்று கொழுத்தல் திமிர். 480 திமிராக ஆங்கிலம் தில்லியில் இந்தி நிமிராக வாழும் நிலத்து. 481 நிலவுரிமை பெற்றென் நிலத்துப் பிறந்த தலமொழிகட் கில்லை சமம். 482 சமனிலை இல்லை தமிழ்மொழிக் கென்னின் எமனிலை வேறுண்டோ எண்., 483 எண்ணுத் தமிழ்க்குறிகள் எங்கோ மறைந்தன பண்ணுந் திறங்களும் பாழ். 484 பாழ்கண்டு ஞாலம் பரப்பிய எண்தமிழ் சீழ்கொண்ட தென்னோ தெளி. 485 தெளிந்த மருத்துவச் சித்த முறையும் நலிந்தது காணாய் நசித்து 486 நசிக்கும் தமிழன்று நாடி பிடித்துப் பசிக்கும் வலிவூட்டும் பண்டு. 487 பண்டைய சித்தர்கள் பச்சிலை கைக்கொண்டு மண்டுநோய் தீர்ப்பர் வடித்து. 488 வடுவாழ் எலும்பு மடைமுறியும் தைலக் கடுசார நீங்கும் கடுப்பு. 489 கடிவாய்த்த நஞ்சும் கணவேப் பிலையால் அடிவாய்த்துப் போகும் அற. 490 அறவிலை வாணிகம் ஆற்றார் மருந்தின் குறுவிலைக்கே செய்வர் குணம். 491 குணமாகா தென்பர் கொடுபணத்தால் வித்தை மணமாகா தென்பர் மதித்து. 492 மதிமகள் அவ்வைக்கு வாழ்நெல்லி ஈந்தான் அதிமகன் தன்மை அறிந்து. 493 அறிந்த தமிழ்மக்கள் அங்கையுட் போற்றிப் பொதிந்தனர் நெல்லிப் பொருள் 494 நெல்லிக் கனியை நெடுநாள் சுவைத்தக்கால் புல்லு பனையாம் புடைத்து. 495 புடைகீழா நெல்லியால் போயொடுங்கும் என்ப மடைதாழா மஞ்சட்கா மால். 496 மாலுக்கும் என்மிச்சை வாய்மருந்து கைந்நகச் சூறுக்கும் நல்ல துணை. 497 துணைத்து வளர்த்த துறைவிளக் கெல்லாம் அணைத்துக் குறைத்தோம் அழிந்து 498 அழியும் மருந்தல்ல ஆரா எளிமை இழியும் நிலைபயந்த தின்று. 499 இற்றைக் கவர்ச்சி எளிமையில் இல்லையே கற்றைக் குதிசெருப்பு காட்டு. 500 காட்டும் தரமன்று கற்ற மடவார்க்கு மாட்டுவாய் தீவனத்தை வை. 501 வைத்தாலும் தின்று வருமொழிக்குக் கைகொடுப்பர் எத்தாலும் வாழ்வர் இவர். 502 இவர்போல் தமிழர் இருத்தலால் முட்டும் சுவர்போல நின்றோம் சுமந்து. 503 சுமந்த அயல்மொழிகள் சும்மாட்டில் ஏறும் அமைந்த நிலத்தமிழை அற்று. 504 அற்ற வருமொழிகள் ஆட்சி அணையேறும் சுற்ற மொழியைத் துடைத்து. 505 மொழிப்பறிக்கு ஒப்பில்லை மூவாக் கடுப்போல் நிலப்பறியும் உள்ளடங்கும் நீண்டு. 506 தமிழாயிரமாகக் கிளர இருந்தது மாணிக்கக் குறளாய் இவ்வளவில் அமைந்தது. என் பொழிவுகள் பொருளடக்கம் பொழிவு - 1 235 பொழிவு - 2 247 பொழிவு - 3 250 பொழிவு - 4 253 பொழிவு - 5 258 பொழிவு - 6 265 பொழிவு - 7 269 பொழிவு - 8 272 பொழிவு - 9 276 பொழிவு - 10 282 பொழிவு - 11 285 பொழிவு - 12 289 பொழிவு - 13 294 பொழிவு - 14 301 பொழிவு - 15 305 பொழிவு - 16 309 பொழிவு - 17 312 பொழிவு - 18 325 பொழிவு - 19 333 பொழிவு - 20 339 பொழிவு - 21 350 பொழிவு - 22 354 பொழிவு - 23 357 பொழிவு - 24 363 பொழிவு - 25 371 பொழிவு - 26 376 பொழிவு - 27 379 பொழிவு -1 நாள் : 10.1.1986 வெள்ளிக்கிழமை 29 மார்கழி 2016 இடம் : காந்தி பொருட்சாலை, மதுரை, மாலை 5.30 மணி நிகழ்ச்சி : மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர்சீனி. கிருட்டிண சாமியையும் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஆ. ஞானத்தினையும் உயர் பதவிக்காகப் பாராட்டுதல் தலைமை : அறிஞர் வ.சுப. மாணிக்கம், முன்னாள் மதுரை பல்கலைக்கழகத் துணைவேந்தர் அமைப்பு : விருந்துக் குழு, வரவேற்புத் தலைவர் தமிழவேள் பழநிவேல் இராசன் பேரன்புப் பெருமக்களே! புதிய இரு துணை வேந்தர்களையும் பலர் பாராட்டியபின் என் தலைமையுரை நிகழ்கின்றது. அச்சிட்டபடி தலைமையுரை முதலில் நிகழவேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். தலைமை கூட்டமெனில் முழுதுக்கும்தானே தலைமை. ஆதலின் தலைமை யுரை எந்நேரமும் அமையலாம். மதுரை பல்கலைக்கழகத் துணை வேந்தராக நான் இருந்தபோது என்னோடு நாள்தோறும் நெருங்கிப் பழகிப் பலவகையாலும் உள்ளன்போடு ஒத்துழைத்த உதவி புரிந்த இரு பேராசிரியர்கள் துணைவேந்தர்களாக உயர்ந்திருப்பது எனக்குத் தனி மகிழ்வுதரும் செய்தி. யாரும் அவர்கள் தன்னலமோ பதவியாசையோயின்றி ஆட்சி செய்ய வல்லதகையாளர்கள் உலகப் புகழ் வாய்ந்த அறிவியலறிஞர்கள். நம் தமிழக வரசினரும் மேதகு ஆளுநரும் தக்க பேரறிஞர்களைத் துணை வேந்தர்களாக அமர்த்தி வருவதை நான் பாராட்டுகின்றேன். பதவியுர்வு பெற்றவர்களைப் பாராட்டுவது பொருத்தமே. என்னையும் தலைமை தாங்கச் செய்து பாராட்டுக்கு உட்படுத்தி யுள்ளனர். என் பெரு மதிப்புக்குரிய தமிழவேள் பழநிவேல் இராசன் குறள்வேள் மணிமொழியனும் தேசிய அன்பர் இரத்தினமும் இதற்குத் துணையாக நிற்கிறார்கள். பதவியுயர் வானவர்கட்குப் பாராட்டுவது தகும். எனக்கு ஏனோ? துணை வேந்தர் பதவியை முன்கூட்டியே துறந்து போனவன் என்பதற் காக பாராட்டு வைத்துள்ளார்கள் என்று கருதுகின்றேன். எப்பதவி வந்தாலும் பதவி ஏறும்போதே ஒருநாள் இறங்க வேண்டிவரும் என்ற நடைமுறையை நன்கு உணர்ந்தவன் நான். பிறப்பே மனிதனுக்குப் பெரும் பதவி. ஏனைய பதவியெல்லாம் உட்சிறு பதவிகள் என்று கணக்கிடும் போக்கு எனக்கு உண்டு. பதவிக் காலத்து என்னுடைய வாழ்முறை பற்றிப்பல அன்பர் சுட்டிக் காட்டினர். எப்போதும் எளிமையாக இருப்பது நல்லது. அதிலும் பதவிக் காலத்துப் பொதுப்பணத்தைத் தன் ஆடம்பரத்துக்காகச் செலவு செய்தலாகாது. பதவி தொண்டு கட்கு உரியதே யன்றி நம் துய்ப்புக்கு உரியதன்று. சில காலம் பதவியில் இருக்கும்போது எல்லா வகையிலும் வசதி வாழ்வைப் பெருக்கிக் கொண்டுவிட்டால், நம் குடும்பத்த வருக்கும் அத்தகைய வாழ்வை ஊட்டிவிட்டால், பதவி நீங்கிய பின் வீணான பொய்ம்மதிப்பில் உழல நேரிடும். பதவிக்குப் பின் அவ்வாறே வாழ வேண்டும் என்ற வேட்கையால் வேறு வழியிற் பொருள் சேர்த்து வைத்துக் கொள்ளும் ஆசை வந்துவிடும். ஆதலின் பதவிக்குப்பின் வாழ்வையும் நினைத்துப் பதவி வாழ்க் கையை அமைத்துக் கொள்ள வேண்டும். இதன் கருத்து என்ன? பதவிக் காலத்து உரியவற்றைக்கூடச் செய்து கொள்ளக் கூடாது என்பதில்லை. வேண்டியவற்றை அடக்கத்தோடு செய்து கொண்டுதான் ஆகவேண்டும் என்பதனையும் சொல்லுகின்றேன். எளிமைக்கு ஓர் நல்ல எடுத்துக்காட்டு, மேற்குச் செருமனி அழைப்பின் பேரில் பல்கலைக் கழக மானியக் குழுவின் தலைவர் மாதுரிசாவும் நான்கு துணைவேந்தர்களும் சென்றோம். விருந்தில் ஒரு நிகழ்ச்சி. அந்த அம்மையார் முழுச் சைவம். நானும் முழுச் சைவம். ஒரு தட்டில் சோறு வைத்துப் பரிமாறினர். அந்த அம்மையார் சொன்னார்கள். மாணிக்கம் நாமிருவரும் கொஞ்சம் கொஞ்சம் தான் உண்போம். ஆளுக்கு ஒருதட்டுச் சோறு வாங்கிக் கொடுக்க வேண்டாம். ஒரு தட்டே போதும். பகிர்ந்து உண்போம் என்றார்கள். அப்படியே செய்து கொண்டோம். செருமானிய அரசின் செலவுதானே என்று நாங்கள் நினைக்க வில்லை. பிறர் கொடுப்பதுதானே என்று கருதவில்லை. உண் பொருள் எத்துணையும் வீணாகக் கூடாது. ஒரு சோறாக இருந்தாலும் அது பிறக்க எவ்வளவு காலம் எவ்வளவு முயற்சி வேண்டியுள்ளது. நெல் விளையக் காவிரியில் நீரில்லை என்று கவலைப்படுவதை எண்ணிப் பாருங்கள். விளைப்பது அருமை, வீணாக்கி விடுவது எளிமை. எங்கள் எளிமை சிறியதாகத் தோன்றலாம். உள்ள நோக்கமே பெரியது. நம் பாரத நாட்டில் வறுமை நீங்க வேண்டும் என்று பறையறைந்து முழங்குகின்றோம். 85 கோடி மக்களுள் 45 கோடி மக்கள் வறுமை. இந்நாடு செய்யும் ஆடம்பரச் செலவுகளையும் அழி செலவுகளையும் சிறிது சீர்தூக்கிப் பார்த்தாலும் தெரியும் இந்த நாட்டில் வறுமை பெருக்கெடுக்குமே தவிர நீங்காது. வறுமை நீக்கத்துக்குப் பொதுப்பணத்தை நன்முறையில் அடக்கமாகச் செலவு செய்து சிக்கனப்படுத்தி வளஞ் செய்ய வேண்டும். புறம்பாக இருந்தாலும் ஒன்றிரண்டு சொல்வேன். தேர்தலில் ஒருவர் ஈரிடங்களில் நிற்கலாம் என்பது நம் விதி. ஈரிடத்து நின்றும் சிலர் வெற்றிபெறகின்றனர். வெற்றி பெற்றபின் ஒன்றினை விட்டு விடுகின்றனர். மறுபடியும் அவ் விடத்துக்குத் தேர்தல், இடைத் தேர்தல் நடைபெறுகின்றது. பாராள்மன்ற இடமாக இருந்தால் எவ்வளவு இலக்கங்கள் செலவாகின்றன, எவ்வளவு உழைப்பு, எவ்வளவு பேச்சு, எவ்வளவு சுவரொட்டிகள், அதிகாரிகளின் உழைப்பு எவ்வளவு. ஏன் இந்த விதி. ஓரிடத்தில் மட்டும்தான் நிற்கலாம் என்றால் எவ்வளவு சிக்கனம். இல்லை ஈரிடத்தும் நிற்கலாம் என்றால் நின்று வெற்றி பெற்றால், அவருக்கு இருவோலை மதிப்பே கொடுத்துவிடலாமே. அவைத் தலைவருக்கு இத்தகைய ஒரு கூடுதல் மதிப்பினைக் கொடுத்து வருகின்றோம். இடைத்தேர்தல் பலகாரணங்களால் அடிக்கடி நாடு முழுவதும் நடைபெறுன்றது. தேர்ந்தெடுக்கபட்ட ஒரு கட்சி வேட்பாளர் இடைக்காலத்து இறந்துபட்டார் என்று வைத்துக் கொள்வோம் இடைத் தேர்தல் நடத்த வேண்டுமா? இந்த மாதிரி இடைத்தேர்தல் ஓரிடத்துக்காக இருந்தாலும் பொதுத் தேர்தல் மாதிரி பெருஞ்செலவோடும் வெறியோடும் நடப்பதைப் பார்க் கின்றோம். சமுதாயமே அல்லோலப் படுகின்றது. எளிய வழியுண்டு. முன்னரே வெற்றி பெற்ற அந்தக் கட்சியே இடைக் காலத்துக்குத் தன் ஆள் ஒருவரை போட்டுக்கொள்ளலாமே. இதிலென்ன அறக்கேடு. பொதுத் தேர்தல்கள் நடந்தபின் இடைத்தேர்தல்கள் இல்லாதவாறு சென்றால்தான் நாடு செழிக்க முடியும். வளம் வறியவர்கட்குச் செல்லும் அதிகாரிகள் ஆள்வினை செய்ய முடியும். பொதுப் பணத்தை மிகத் தாராள மாகப் பொறுப்பின்றிப் பெரும் பயனின்றி வரவர அரசுகள் கட்சிப் போர்வைக்குள் செலவழிக் கின்றதைப் பார்க்கும் போது கண்ணராவியாகவுள்ளது. இத்தகைய போக்கில் வறுமைவளம் பெருகுமேயன்றி வறுமை வறுமைப்படாது. சிக்கன நாள் என்று ஒரு நாள் கொண்டாடு கின்றனர். அன்று செய்தித்தாளில் விளம் பரங்கட்கு என்று நம் அரசுகள் எவ்வளவு செய்கின்றன. இவ்வளவு செலவழிப்பில் கல்விக்கும் ஆராய்ச்சிக்கும் உருப்படி யான நிதி எங்ஙனம் செய்யமுடியும். நிதி வறுமையால் பல்கலைக் கழகங்கள் இடுக்கப்படுகின்றன. தமிழகத்தில் சில காலமாகப் பல்கலைக்கழகங்கள் பெருகி வருகின்றன. மகிழ்வான செய்தி. ஆனால் இவற்றுக்கு அளவான நிதி கூடக் கிடைப்பதில்லை. பத்துக்கு மேற்பட்ட பல்கலைக் கழகம் இருக்கும் இம் மாநிலத்தில் பத்துக் கோடியினும் குறைவாகவே ஆண்டுதோறும் தமிழக வரசு நிதி ஒதுக்குகின்றது. அதனால் வரவர என்ன நிலை ஏற்பட்டு விட்டதை வெளிப்படை யாகவே நாணமின்றிச் சொல்லி விடுகின்றேன். பல்கலைக் கழகங்கள் அஞ்சல் வழிக் கல்வித்துறை என்ற சிறுகடை நடத்திப் பொருளீட்டி பல்கலைக் கழகத்தை ஓட்ட வேண்டிய புதுப்போக்கு ஏற்பட்டு விட்டது. தொடர் கல்வியைப் பரப்புதல் என்ற குறிக்கோளின் பேரால் நம் பல்கலைக் கழகங்கள் அஞ்சல் வழி வருவாய்த் துறையை மும்முரமாக நடத்தி வருகின்றன. மதுரை அண்ணாமலை, சென்னைப் பல்கலைக் கழகங்கள் ஒவ்வொரு வகையில் போட்டிபோட வேகப்பட்டுவிட்டன. இதனால் தரக்குறைவும் இரட்டிப்பும் பெருகுவதைக் கண்கூடாகக் காண்கின்றோம். துணைவேந்தர் களின் கவனம் ஆய்வுத் திட்டங்களிற் செல்லவில்லை. நிதியை எப்படியாவது சரிக்கட்டும் வணிக மனப்பான்மையை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். பல்கலைக் கழகங்களின் மெய்யான மேம்பணி தடைப்பட்டு விட்டது என்றே தெளிய லாம். அஞ்சல் வழிக் கல்வித்துறை கல்விப் பரப்புக்கு இன்றி யமையாத ஒரு வாயிலாகும். அதனை நன்முறையிற் போற்ற வேண்டும். மேனாட்டு பல்கலைக்கழகங்கள் அஞ்சல் வழியை இணைத்துக் கொள்ளவில்லை. அங்கு அஞ்சல்வழிப் பல்கலைக் கழகம் என ஒன்று தனியாகவே நிறுவப் பெற்றுள்ளது. அவ் வாறே அண்மையில் நம் பாரத நாட்டில் இந்திராகாந்தி அஞ்சல் வழிப் பல்கலைக் கழகம் தோன்றி யுள்ளதை அறிவோம். இந்த முறையில் தமிழகத்திலும் அஞ்சல் வழிப் பல்கலைக் கழகம் என்ற ஒன்று தனியாக நிறுவவேண்டும். மெய்யான பல்கலைக் கழகங்களை அஞ்சலினின்று விடுதலை செய்யவேண்டும். மெய்யான ஆய்வுத் தடத்தில் வேண்டும் நிதி வழங்கி உய்க்க வேண்டும். யாதானும் நாடாமல் ஊராமல் என் னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு. சாகும்வரை கற்கவேண்டும் என்று தொடர் கல்விக் கொள்கையை வலியுறுத்திய முதல்வர் நம் திருவள்ளுவர். என் எண்ணப்படி, தமிழகம் தொடங்கும் என எண்ணுகின்றேன். அங்ஙனம் நிறுவப் பெறும் அஞ்சல்வழித் தொடர் கல்விப் பல்கலைக் கழகத்தைத் திருவள்ளுவர் அஞ்சற் பல்கலைக்கழகம் எனப் பெயரிடலாம் என்பது என் விழைவாகும். புதிய கல்விக் கொள்கை பற்றிய கருத்துக்களை நடுவணரசு வெளியிட்டுள்ளது. பற்பலர் தம் எண்ணங்களை வெளியிட்டுக் கலந்துரையாடலைப் பார்க்கின்றோம். மிகப் பெருந்திரளாக இங்கு கூடியிருக்கும் கல்விப் பெருமக்கள் முன் என் கருத்துக் களைச் செய்வது இடப் பொருத்தமே. இரண்டொரு கருத்துக் களைக் காண்போம். நடுவணரசின் வெளியீட்டில் இதுகாறும் உள்ள கல்வித் திட்டங்களைப் பல குறையுடையனவாக வருணித்திருப்பதைக் காண்கின்றோம். பாடத் திட்டங்கள் குறைவு. சொல்லிக் கொடுக்கு முறைகள் குறைவு, ஆசிரியர்களின் தரக் குறைவு, மாணவர்களின் நிலை, தேர்வு ஒழுங்கீனங்கள் என்று ஏறக் குறைய எல்லாமே கேவலம் என்ற போக்கில் குறைவு சாட்டப் பட்டுள்ளது. முழுமாற்றம் தேவை, ஒவ்வொரு கூறிலும் மாற்றம் தேவை எனவும் வருமாண்டு முதல் புதியகல்விக் கொள்கை நடைமுறைக்கு வரவேண்டும் என்பதும் கேட்கப்படு கின்றன. படிப்படியாக மாற்றம் வந்துதான் இருக்கிறது, வரவும் தான் போகிறது. இது தடுப்பதற்கில்லை, தடுக்க வேண்டியதுமில்லை. இதுவரை கற்பிக்கப்பட்ட கல்வியெல்லாம் உதவாக்கரை எனவும் முழுமாற்றம் செய்தாக வேண்டும் எனவும் கூறுவது தான் ஏற்புடைத்தாக இல்லை. வழி வழி வந்த நல்லவற்றையும் கெடுத்துவிடக் கூடாது என்று அஞ்சுகின்றேன். பாரத விடுதலைக்குப் போராடி உரிமை வாங்கித் தந்த நம் தலைவர்கள் இந்தக் கல்வியைப் படித்தவர்கள் அல்லவா? எத்துணைப் பெரிய எழுத்தாளர்கள், ஆட்சியாளர், அறிவியலறிஞர், பொறிஞர்கள், மருத்துவர்கள், முனிவர்கள் இந்தக் கல்வி முறையில் சிறப்படைந் திருக்கிறார்கள் என்பதனை வரலாறு காட்டும். ஆங்கில வாட்சி தந்த கல்வி சிறு எழுத்தர்களைத்தான் அலுவல வேலை செய்ய உருவாக்கியது என்ற பழி பொருத்த மில்லை. இது வீண்பழி சுமத்தலாகும். அண்மைக்காலத்து நம் பாரதப் பெரியவர்கள் பலரின் நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடியிருக்கின் றோம். கொண்டாடுகின்றோம். இத்துணைப் பேரும் அடிமைக் காலம் தந்த கல்வியால் உரிமையும் புலமையும் தொண்டுணர்வும் பெற்ற பெருந்தகை யாளர்கள். சீர்தூக்கிப் பார்ப்பின் இன்றி ருக்கும் நெடுங்காலக் கல்விமுறை பெருங் குறையுடையதன்று. இப்போது பத்தாண்டுகளாக அரசியல் காரணமாகத் தேர்தல் காரணமாக கட்டுப்பாடான வேலை நிறுத்தங்க ணள் காரணமாக அகத்தும் புறத்தும் ஒழுங்கீனம் வளர்ந்துவிட்டது. வள்ளுவர் கூறியது போல தன்னலம் வேட்டைகொண்ட பல்குழுக்கள் குடியரசின் பெயரில் நாட்டை உள்ளடிமையாக்கி வருகின்றன. வாக்கோலை வாங்கும் ஒரே நோக்கில் ஆட்சியாளர் களும் ஏனோ தானோ என்று விட்டுக் கொடுத்து வருவது மரபாகி விட்டது. மேலும் அரசியற் கட்சியாளர்கள் மிகத் தரங்குறைந்து விட்டனர். நாடு எங்கணும் ஆசிரியர் களிடத்தும் மாணவர் களிடத்தும் சமுதாயத்திடத்தும் ஒழுங்கீனம் வளர்ந்து விட்டதே இன்றைய பல இன்னல்களுக்குக் காரணம். எந்தப் புதிய கல்விக் கொள்கை வந்தாலும் இன்று பெருகிவரும் ஒழுங்குகெட்ட சூழ்நிலையில் உருப்படாது. மேலும் தள்ளாட வே செய்யும். எனவே வருமாண்டு புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் எண்ணத்தைச் சிலவாண்டு தள்ளிப் போடவேண்டும். இன்று நாட்டின் எந்த முன்னேற்றத்துக்கும் அடிப்படையான தேவைக் கட்டுப்பாடு, ஒழுங்கு, வேலையில் ஊற்றம், கடமையழுத்தம். புதிய கல்விக் கொள்கை வெளியீட்டில் எந்த மொழி கல்வி மொழியாகும் என்ற பேச்சேயில்லை. இல்லாமையினால் இந்தி யே வலுப்படுத்தப்படும் என்பது மறை பொருளாகின்றது. உண் மைப் போக்கும் அதுதான். நடுவணரசின் கொள்கை மும் மொழித் திட்டம் என்று சொல்லப்படுகின்றது. இது மாயை யான ஒரு தொடர். மும்மொழி என்றால் ஒவ்வொரு மொழிக் கும் கல்வித்திட்டத்தில் எந்த இடம், எவ்வளவு விழுக்காடு, எவ்வளவு பங்கு, எதற்கு முதன்மை என்று தெளிவுபடுத்த வேண்டும். கல்வித் திட்டத்தில் பன்மொழி படிப்பது என்பது வேறு, பலதுறைகளைப் படிப்பது போன்றது அது. வயிற்றுக்கு ஒரு வாய் போலக் கல்வி மொழி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருமொழியாகத்தான் இருக்க முடியும். பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை கல்விவாயில் மொழி ஒன்றுதான் இருக்கவேண்டும். பன்மொழிப் படிப்பை இதனோடு சேர்த்து எண்ணக்கூடாது. மாநிலந்தோறும் எம்மொழி வாயில் என்று ஊற்றமான கொள்கை. தமிழகத்தின் இருமொழிக் கொள்கை என்பதும் மும்மொழிக்கொள்கை போலப் போலிக் கொள்கையாகும். நடைமுறையில் நாடு முழுதும் ஆங்கிலம் என்றும் எம்மொழி வாயிற் கொள்கைதான் இருக்கின்றது. நம் அரசியலமைப்பில் பதினான்கு மொழிகள் பெரு மொழிகளாக ஒப்புக் கொள்ளப்பட்டுள. எந்த மொழியையும் ஆங்கிலத்துக்கு நிகராக நாம் வளர்க்கவில்லை. அறிவியலில், மொழியிலில், வணிகவியலில், படையியலில் இன்னபலவற்றில் நம் பாரதம் முன்னேறியுள்ளது. நாடும் மொழியும் இருகண்கள் மொழிக்கண்ணை இன்னும் நாம் மங்கலாகவே வைத்திருக் கின்றோம். இவ்வளவு மொழிச் செல்வமிருந்தும் கல்விக்கும் அறிவுக்கும் பார்வைக்கும் ஆங்கிலக் கண்ணையே போட்டுக் கொண்டிருக்கின்றோம். மாட்டிய ஆங்கிலக் கண்ணாடியை எடுக்க மறுக்கின்றோம். அதுமட்டுமன்று. நம் சின்னஞ்சிறு குழந்தைகட்கும் ஆங்கிலக் கண்ணாடியை மாட்டி அழகு பார்க்கும் பேதையான மேதையர்களாகிவிட்டார். உலக மாயை என்பது அத்துவிதம். நமக்கு மாயை ஆங்கிலமே. உரிமைப் படலத்தில் ஆங்கிலமில்லாமல் வாழ முடியாது. அறிவுபெற முடியாது உலகத் தொடர்பு இராது என்ற உண்மையைக் கண்டு பிடித்திருக்கின்றோம். நோபல் பரிசு பெறவேண்டிய கண்டு பிடிப்பு இது. எவ்வளவு அறிவீனம். நம் குழந்தைகள் அறிவு வறியவர்களாகி வருகின்றார்கள். சிறிது சிந்தித்தால் தெரிந்துவிடும். சோறு என்ற ஒரு பொரு ளுக்கு நாலைந்து மொழிகளில் சொற்கள் தெரியும். தண்ணீர் என்ற ஒரு பொருளுக்கு நான்கு மொழிச் சொற்கள் தெரியும். அப்பா, அம்மா, அண்ணன், வா, போ, இரு, உண், உறங்கு, அடி, பிடி முதலான பொருள்களுக்குப் பிறமொழிச் சொற்கள் தெரியும். யாத்திரைத் தலங்களில் வழிகாட்டுபவர்கட்கும் வணிகர்கட்கும், கூலியாட்களுக்கும் வண்டிக்காரர்கட்கும் பல சொற்கள் தெரியுமல்லவா! அதுபோல் நம் பள்ளிக் குழந்தை கட்கு ஒரு பொருட்டுப் பிறமொழிச் சொற்கள் தெரியும். சொற் பயிற்சியே இன்று நம் கல்விப் பயன். சிந்தனை யோட்டமோ பொருளறிவோ இன்மையாகின்றது. ஐந்து பொருட்களுக்கு ஐந்து பிறமொழிச் சொற்களை தெரிவிக்கும் கல்வியில் அறிவும் சிந்தனையும் பெருகுமா? ஒரு பொருட்குப் பத்து பிறமொழிச் சொற்களைக் கற்பிப்பதால் பொருளறிவு வளருமா? எளிதான கணக்கு எனவே ஒரு மொழி வாயிலாக எல்லாத் துறையும் கற்கும் குழந்தைகளே, மாணவர்களே, பெருமக்களே சொல்லர் களாகவன்றிப் பொருளர்களாகவும் அறிஞர்களாகவும் சிந்தனையாளர் களாகவும் இருக்க முடியும் இவ்வுண்மையை. தாய்மொழி ஒன்றின் வாயிலாகவே கற்பிக்க வேண்டும் என்ற ஒரு மொழிக் கொள்கையை எல்லாக் கல்வியாளர்களும் நம் நாட்டுப் பெரியவர்களும் வலியுறுத்தி வந்துள்ளனர். நம் பாரதம் இன்று வரை நம்மொழிகட்கு வளரும் உரிமையும் வாழும் உரிமையும் கல்வி வாயிலாகும் உரிமையும் வழங்கவில்லை. இன்னும் நாம் அயல்மொழி அடிமைகளாகத் தான் இருக்கின்றோம். நம் குழந்தைகளைக் கிரேக்க அடிமைகள் போலக் கண்ணுங்கருத்து மாக வாட்டி வதக்குகின்றோம். மனித வளமேம்பாடு என்ற அமைச்சுத்துறை நடுவணரசில் புதிதாக உண்டாகியது. 85 கோடி மக்களே ஒரு நல்வளம் போன்ற பேருண்மையைக் கண்டார் நம் இளையதலைமை யமைச்சர் இராசீவ் காந்தியார். அத்துறையின் அமைச்சரான நரசிம்மராவ் அண்மையில் பெங்களூரில் ஓர் ஆங்கில நிறுவனக் கல்விக் கருத்தரங்கிற் பேசுங்காலை, ஒன்பதாவது பத்தாவது வகுப்புக்களில் ஆங்கிலங் கற்பித்தாற் போதும். கீழ்வகுப்புக்களில் ஆங்கிலம் வேண்டுவதில்லை. பல்லாண்டு ஆங்கிலம் படிப்பதற் காகச் செலவழித்துப் பெறும் பயனை ஒன்பதாவது பத்தாவது வகுப்புக்களில் சொல்லிக் கொடுத்து அடையலாம் என்று தெளிவு செய்துள்ளார் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வேங்கடராமன் அவர்கள் பச்சிளம் குழந்தைகளை இரண்டு மூன்று வயதிற் பள்ளிகட்கு போகச் செய்து ஆங்கிலச் சுமை யேற்றுவதை வருத்தத்தோடு தெரிவித்துள்ளார். இக் கருத் தெல்லாம் நம்முன்னைப் பெரியவர்கள் வலியுறுத்தியனவே. ஆதலின் உரிமை பெற்ற தன் மொழிகளுக்கு ஆங்கில வடிமை யிலிருந்து விடுதலை வழங்கவேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்நில மொழி யொன்றே கல்வி வாயிலாக இருக்க வேண்டும். இந்த அடிப்படை ஒரு மொழிக் கொள்கையை எந்தக் கல்வி முறையும் ஏற்றால்லது, நம் நாட்டுக்குத் திறமான உய்தியில்லை. மொழியடிமையாக இருக்கும்வரை நாட்டுரிமையை நம்பமுடியாது. எனவே முதல் மாற்றம் ஆங்கில விறக்கமும் நம் மொழிகளின் ஏற்றமும் ஆம். நான் தமிழ் மொழி ஒன்றுக்கு மட்டும் பரிந்துரைக்கவில்லை. நம் பாரத மொழிகள் அனைத்துக்கும் அடிமைத்தளையறுக்க வேண்டுகின்றேன். நம் மொழிக்கு முதற் கால்கோள் செய்வோம். துணைவேந்தர் பதவிப் பெருமைபற்றிச் சிலசொற்கள், கல்வியுலகில் இப்பதவி மிகப் பெரியது, மேலானது, பெருமித மாக நாட்டில் எந்த மேம்பதவியிலிருந்த பெரியவர்களும் மீண்டும் துணைவேந்தர் பதவிக்கு வந்துள்ளனர். பாரத நாட்டின் முதல் நிதி மந்திரியாக இருந்த ரா.கி. சண்முகஞ் செட்டி யார் ஆட்சித் திறனும் அறிவுத் திறனும் மிக்க சர். இராசையர் அய்யர், பல்துறை வல்லுநர் ஆ. இராமசாமி முதலியார், தலைமை நீதிபதிகள், உயர்மன்ற நீதிபதிகள், ஆளுநர்கள் இத்தகையோரெல்லாம் முன்னைப் பதவிகட்குப்பின் துணை வேந்தர்களாக இருந்தனர். எனவே துணைவேந்தர் பதவி பலவுயர்பதவிகட்கு நிகரானவை என்பது போதரும். ஆதலின் பெருமிதந் தரும் நிலை இதுவாகும். இந்தியாவிலும் தமிழகத்திலும் துணைவேந்தருக்கு உரிய அதிகாரம் மிகவும் குறைக்கப்பட்டுவிட்டது. இங்கு பாராட்டிய பலரும் துணைவேந்தர்கள். ஏராளமான நலங்களைச் செய்ய முடியும் என்பதுபோல எதிர்பார்த்துப் பேசியிருக்கின்றார்கள். அவர்கள் ஏமாறக்கூடாது என்பதற்காகச் சொல்லி வைக்கின் றேன். பேர் பெரிது. அதிகார வேர் சிறிது. எனினும் பேரும் மரபும் பெரிதாதலின் நிறுவனம் பெரிதாதலின் எத்துணை நெருக்கடி யிலும் திட்டமும் துணிவும் இருந்தால் சிலவற்றையாவது செய்ய முடியும் என்பது என் கட்சியாகும். பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழுவில் தமிழவேள் பழநிவேல் இராசன், முதல்வர் சத்திவேல், முதல்வி சகுந்தலை, முதல்வர் சங்கரநாராயணன் போன்ற நல்லன்பர்கள் இருந்த துணையினால், நான் பலவற்றைச் செம்மை செய்யவும் புதியவற்றைச் கொண்டுவரவும் முடிந்தது. பல்கலைக்கழகம் அதுவரை கண்டிராத பெரிய போராட்டங்கள் என் காலத்துச் சொத்துத் தாக்கின. மிக்க அவமதிப்பினை பொறுத்தும் துணிந்தும் திருக்குறள்களை நினைந்தும் பணியாற்றினேன். சிலகோடி வருவாய் பெருக்கி ஆக்கங்கள் செய்து சிலகோடி சேமிப்பும் செய்ய முடிந்தது. சிக்கனம் வேறு, கருமித்தனம் வேறு. செய்ய வேண்டிய பல செலவும் செய்து ஊழியர்கட்குப் பல நலங்கள் ஆற்ற முடிந்தது. ஓர் உண்மை கூறவேண்டும். ஆட்சியினால் எனக்கு இடையூறில்லை. தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் என்னிடம் ஒரு பரிந்துரை கூடச் செய்ததில்லை. பல்கலைக்கழகத்தினர் நீண்ட நெடிய வேலைநிறுத்தம் மேற்கொண்டபோது நான் அவரைப் பார்த்தேன். என் ஆட்சி நலத்தை பாராட்டிப் பேராதரவு அளித்தார். பல்கலைக் கழக வூழியர்கள் குற்றஞ் சாட்டப் பெற்று வழக்குக்கு இடறாக இருந்தபோது, என் பல்கலைக் கழக ஊழியர்கள் இப்போது நன்றாக நடந்து கொள்கின்றனர். அவர்கள் மேலுள்ள வழக்குகளைத் தொட ராது விட்டு விடவேண்டுகின்றேன் என்று என் கைப்பட முதல் வருக்கு ஒரு வேண்டுகோள் விளம்பரப்படுத்தாது எழுதியிருந் தேன். என் வேண்டுகோளை மதித்து உடனே ஏற்று அங்ஙனம் வழக்கினைத் தொடராது விட்டு விடும்படி மதுரை மாவட்ட ஆட்சியர்க்கு அரசு ஆணைபிறப்பித்தது. இவ்வாறு என் துணை வேந்தர் பதவிக் காலத்துத் தமிழக வரசின் துணை பெற்றேன். வரும் துன்பங்களை அதுவும் இயல்பு என்று கருதி விட்டால், மனவேகம் தோன்றது. மனக் கொதிப்பு எழ வள்ளுவர் நன்கு சொல்லியது போல், துன்பங்களையும் இடையூறு களையும் மழைக்கால வெள்ளம் போல் இயல்பு என் கொண்டு விட்டால், உடல் நலம் இருக்கும். செய்ய வேண்டிய அறிவு புலப் படும். உயர்பதவிகட்கு ஏற்பவும் கடமையுணர்வுக்கு ஏற்பவும் செயல் வேகத்திற்கு ஏற்பவும் நல்லவற்றுக்குத் தான் இடை யூறுகள் தொத்திக் கொண்டு வரும். அறிவுடைத் துணிவுக்கு முன் துன்பம் இன்பமாகிவிடும். இன்று பாராட்டப் பெறும் இரு துணைவேந்தர்களும் எவ்வளவு இடையூறுவரினும் திட்டங்கள் நிறைவேற்ற வல்லவர் கள். அதிகாரம் அதிகம் இல்லாவிட்டாலும், நிதி அதிகம் இல்லா விட்டாலும், உள்ளவற்றை ஒழுங்குப்படுத்திப் புதிய வழிகளைக் கண்டு சிலவற்றையாவது தங்கள் பதவிக்காலத்துச் செய்யக் கூடியவர்கள். நான் என் பதவிக் காலத்துப்பட்ட துன்பம் இவர் கட்கு வரக்கூடாது என்பது என் வாழ்த்துக்கள். அவற்றை யெல்லாம் எவ்வாறு நான் பொறுத்துச் சிந்தனை செய்து நல்ல பல திட்டங்களை ஆய்விலும் ஆட்சியிலும் செய்தேன் என்ப தனை என் உடனிருந்து நாள் தோறும் கண்டவர்கள். ஆதலின் என்னொடு நண்பர்களாகப் பழகிய இப்பேராசிரியத் துணை வேந்தர்கள், உலகப் புகழ் வாய்ந்த அறிவியலறிஞர்கள் நாட்டுக் கும் தமிழ்மொழிக்கும் நலமும் வலமும் பெருக்குவார்கள். “எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல். என்றார் பொய்யில் புலவர். உரிய அரிய செயல்களைச் செய்விக்கும் புதிய வழக்கத்தை இப்பாராட்டு விழா அவர்கட்கு வழங்கியுள்ளது. மதுரை நகருக்கும் தமிழுக்கும் புகழ் சேர்த்த கல்வித் தகைகளைப் பாராட்டுவதற்குப் பெருவிழா எடுத்த நல்லன்பர் கட்கெல்லாம் என் நன்றி. பொழிவு -2 நாள் : 12.1.1986 ஞாயிற்றுக்கிழமை 26 மார்கழி 2016 இடம் : மின்சார வேதியியல் ஆய்வு நிறுவனம், காரைக்குடி நிகழ்ச்சி : விவேகானந்தர் நினைவு நாள் விழா தலைமை : அறிஞர் வ.சுப. மாணிக்கம், தலைவர் விவேகானந்தர் அமைப்பு : காரைக்குடி விவேகானந்தர் மையம் பெருமக்களே காரைக்குடியில் விவேகானந்தர் மையம் அண்மையில் நிறுவப் பெற்றது. பல்வேறு சங்கங்கள் உள்ள காரைக்குடியில் இருந்த குறையை இப்புது மையம் நிறைவு செய்துள்ளது. விவேகானந்தர் பிறந்த இவ்வாண்டினை இளைஞர் ஆண்டாகக் கொண்டாடப் பாரத வரசு முடிவு செய்துள்ளது. சுவாமிகளின் அறவுரைகள் குழந்தை முதல் பெரியவர் ஈறாக எல்லாப் பருவத்தினர்க்கும் ஏற்றவை. இளைஞர்கட்கு மட்டும் ஏற்றது என்று சொல்ல முடியாது. எப்பருவத்தினராயினும் ஊக்கமும் உணர்ச்சியும் கட்டுடலும் எழுச்சியும் விழிப்பும் உடைய இளமை மனம் எல்லாம் வேண்டும் என்பதே அடிகளார் வாழ்வு காட்டும் படிப்பினை. அடிகளாரின் நெடிய வுருவம், பரந்த முகம், முகத்தின் ஒளி, நிமிர்ந்த நிலை, கூரிய பார்வை எல்லாம் நமக்கு இளமை யுணர்வை ஒரு முறை நோக்கினும் ஊட்ட வல்லவை. பல பெரியவர்களின் நினைவு விழாக்களை அவர்கள் பிறந்த நாட்களில் கொண்டாடி வருகின்றோம். ஏனை நாட் களில் எல்லாம் அப் பெரியவர்களின் எண்ணங்களை நினைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைவூட்டும் நாளே இந்நன்னாளாகும். முன்பெல்லாம் பெரியவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பது பெரும் பழக்கமாக இருந்தது. அதனால் உள்ளங்கள் செழிப்படைந்தன. புகழுடம்பும் தொண்டுள்ளமும் கொண்ட சான்றோர்களோடு நெஞ்சத் தொடர்பு எண்ண முறையில் ஏற்பட்டது. இக்கால வழியினரிடை அத்தகைய பண்புப் பழக்கம் இல்லை. இதனை வளர்ப்பது பெற்றோர்களின் கடமை. வாழ்க்கை வரலாறு களைப் படிப்பது போல் பேருரம் தரும் ஆற்றல் வேறு எந்த நூற்கும் இல்லை. சுவாமிகள் பண்டைப் பெரியோர்கள் சொல்லிய சிந்தனை களையும் விளக்கிச் சொன்னார்; சிலவற்றைப் பிரித்தெடுத்து அழுத்தமாகச் சொன்னார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுந்த உலகவுணர்வுகளையும் பாரத நாட்டின் தகாத போக்கு களையும் உளங்கொண்டு படைவேகத்தில் புதிய சிந்தனை களையும் இணைத்துத் தந்தார். அவர் தம் புதிய எழுத்துக்கள், பெருமகன் காந்தியடிகள், தவமுனிவர் அரவிந்தர், பண்டித நேரு, இராசாசி, சுபாசு சந்திரபோசு முதலான பெருமக்கட்கெல்லாம் தீப்பொறிகளாகச் சுட்டெழுப்பின. சமயத்தோடு நாட்டுணர் வைக் கலந்தவர் சுவாமிகள் இல்லறத்தோடு வீரத்தைக் கலந்தவர் சுவாமிகள். தெய்வ வுணர்வோடு உடல் வன்மையைக் கலந்தவர் சுவாமிகள். இந்து மதத்தோடு வலுவுடன் பிறப்பைக் கலந்தவர் சுவாமிகள். தெய்வ உணர்வோடு உடல் வன்மையைக் கலந்தவர் சுவாமிகள். இந்து மதத்தோடு உலகவுடன் பிறப்பைக் கலந்தவர் சுவாமிகள். வலிமையுடையதே மதம் என்றார். நாட்டு விடுதலைக்கு உடல் வன்மை வேண்டும். அதற்காகப் புலாலுண்ணல் வேண்டும் என்று பற்றோடு கூறினார். வீரத்தையும் உடலாற்றலையும் அரசியலுணர்வையும் பாரத விடுதலை வேட்கையையும் தெய்வவுணர்வோடு ஊட்டியவர் விவேகானந்தர். பட்டினத்தார் பாடல்களைப் படிக்கும் போது துறவுள்ளம் எழுவதுபோல விவேகானந்தரின் எழுத்துக்களைப் படிக்கும் போது எழுச்சியும் விழிப்பும் பிறக்கின்றன. சில வார்த்தைகளே போதும் இவற்றைப் பெறுவதற்கு. எதற்கும் பயிற்சிவேண்டும். அறிவுக்குப் பயிற்சி இல்லா விட்டால் பயன் விளையாது. கெட்டவற்றிற்குப் பயிற்சியை ஆசையோடு செய்கின்றோம். கெட்டவை நம்மைப் பயிற்சி செய்யும்படி கவர்ந்திழுக்கின்றது. நல்லவற்றைப் பயில மனம் முந்துவதில்லை. தீமைகட்கு கவரும் ஆற்றல் மிகுதி. ஆதலின் நாமே வலிந்து குறிக்கோளொடு நல்லவற்றில் நம்மைத் தள்ளிக் கொள்ளவேண்டும். குழந்தைப்பருவத்திலும் காளைப் பருவத் திலும் முதுமைப்பருவத்திலும் எல்லாம் குறிக்கோள் வேண்டும். அப்பர் பெருமான் அறிவுறுத்துகின்றார். குறிக்கோளில்லா விடில் கெடுதல் நிச்சயம் என்று எச்சரிக்கின்றார். விவேகானந்தர் இளமை முதலே குறிக்கோள் கொண்டவர் ஏதாவது ஒரு குறிக்கோளைக் கடைப்பிடி. அதனை விடாது தொடர்ந்து கடைப்பிடி; நெஞ்சுரம் பெருகும் என்று சுவாமிகள் வழிகாட்டியிருப்பதை நாம் என்றும் நினைவு கொள்வோம். பொழிவு -3 நாள் : 7.2.86 வெள்ளிக்கிழமை மாலை 25 தை 2016 இடம் : ஆயிர வைசியர் சங்க மண்டபம், காரைக்குடி நிகழ்ச்சி : திருக்குறட் கழகம், முப்பத்திரண்டாவது ஆண்டு விழா தலைமையுரை : பரிசளிப்பும் குன்றக்குடி அடிகளார் திருவள்ளுவர்விருது பெற்றமைக்கு பாராட்டுரையும் தலைமையுரை : வ.சுப. மாணிக்கம். திருக்குறட் கழக அமைப்பாளர்களே, பெருமக்களே, காரைக்குடி திருக்குறட் கழகம் சில ஆண்டுகட்குப்பின் மீண்டும் புத்தார்வத்தொடு உயிர்ப்புப் பெற்று இவ்வாண்டு தொடங்குகின்றது. பள்ளிச் சிறுமிகளும் சிறுவர்களும் குறள் ஒப்பித்தற் போட்டியிற் கலந்து பரிசுகள் பெற வந்துள்ளனர். பரிசுத் தொகை முழுவதையும் வழங்க முன்வந்திருக்கும் சுழற் குழுத் தலைவர் திரு இராம. அருணாசலத்தை நாம் நன்றியொடு போற்றுகின்றோம். பரிசுகளை வழங்க அவரே நேரில் வந்திருப் பது மேலும் பெருமையாகும். திருக்குறள் சொல்லியபடி ஈத்துவக்கும் இன்பத்தை அவர் பெறுகின்றார். “உரைப்பார் உரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்” என்றபடி திருக்குறட் கழகத் தொண்டுக்கு திரு அருணா சலனாரின் கொடையே புகழ் பெருக்குகின்றது. ஆண்டுதோறும் இப்பரிசுத் தொகையை வழங்கும் கடமையை அவர் ஏற்றுக் கொண்டிருப்பது மிக்க பெரிய பண்பாகும். திருக்குறட் கழகத் தார்க்கு மேலும் பணியூக்கம் தருவதாகும். இளையராயினும் இத்தகைய மொழிப் பணியிலும் குழுமப் பணியிலும் திரு. அருணாசலம் ஈடுபடுவது செல்வாக்கு வழிகாட்டுவ தகாவும் அமைந்துள்ளது. திருக்குறள் உலகிற் சிறந்த நூலாயினும் அதனைத் திருவள்ளுவர் எழுதிய தமிழ்மொழியிலேயே படிக்கும் பிறப்பினைத் தமிழர்களாகிய நாம் பெற்றிருக்கின்றோம். இது சிறந்த மானிடப்பிறப்பினுள்ளும் சிறந்த பிறப்பாகும். சமயங்கள் சின்னங்கள் இருப்பது போலத் தமிழனுக்கும் ஒரு சின்னம் உண்டு. திருக்குறள் இருப்பது தமிழ் வீட்டுக்கு அடையாளம். அதனால் நல்ல பண்புகள் இயல்பாக வளரும். குழந்தைகளைப் பண்பாளனாக வளர்ப்பதில் முன்னை விட இக்காலத்துப் பெற்றோர்கட்குப் பெரும் பொறுப்புண்டு. பள்ளிகள் முன்போல் நடக்கவில்லை. ஆசிரியர்களும் ஊதிய நோக்கஉடையோராகி விட்டனர். மாணவர்களை உருவாக்கும் நாட்டமும் தகுதியும் பெறவில்லை. ஆதலின் பெற்றோர்கள் இந்நிலையை உணர்ந்து உடையுணவு பிறவசதிகள் செய்வதோடு நில்லாமல், குழந்தைகளின் நடைமுறை பழக்கவழக்கங்களைப் பக்குவப்படுத்த வேண்டும். காலையில் விழித்தெழும் போதும், உறங்கச் செல்லும்போதும் திருக்குறளையும் அருள்நூற் பாடல்களையும் சொல்லுமாறு வழக்கப்படுத்த வேண்டும். மெல்ல மெல்ல நல்லுணர்வுகள் குழந்தைகளின் உள்ளத்திற் பாயும். பின்னர்ப் பெரிதாக நற் பயன் தரும். நம் தமிழகவரசு திருக்குறளைப் பரப்புவதில் சிறந்த ஈடுபாடுகாட்டிவருகின்றது. இந்திய மொழிகளில் திருக்குற ளைப் படிப்போர்க்குப் பரிசு வழங்கும் திட்டத்தை அறிவித் துள்ளது. திருவள்ளுவர் விருது நம் குன்றக்குடி அடிகளார்க்கு முதன் முதல் வழங்கப்பட்டிருக்கின்றது. திருக்குறட் கழகங்கள் நிறுவி யும் மாநாடுகளில் பெரியவளவில் நடத்தியும் உரை விளக்கம் எழுதியும் பல அமைப்புக்கள் கண்டும் நாற்பது ஆண்டுகளாக அடிகளார் இடையறாத் தொண்டு செய்து வருகின்றது. அவர்கட்கு வழங்கிய இவ்விருது நம்மை ஊக்கப்படுத்துகின்றது. நம் அடிகளார் மக்களோடு மக்களாகப் பழகுபவர். மக்களின் இன்பதுன்பங்களைப் பகிர்ந்து கொள்பவர் ஏழை மக்களின் வறுமையொழிய ஊரகத்திட்டங்கள் கண்டு பாரத அரசு போற்ற நடத்தி வருபவர். மந்திர தந்திர அற்புதங்கள் காட்டி வியப்படையச் செய்யாது மக்களோடு கலந்து உறவாடும் சமுதாயத் துறவியாக வாழ்பவர். திருக்குறட்களைச் செயலாக்கிக் கொண்டிருப்பவர். துறவி எப்படித் தொண்டனாக விளங்க வேண்டும் என்பதற்கு இன்று எடுத்துக்காட்டாக வாழ்பவர். நமக்கெல்லாம் வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் விளங்கும் பெருமகன். வாழ்த்துகின்றோம், பாராட்டுகின்றோம் என்று சொல்வதைக் காட்டிலும் துறவிப் பெருமகனாரை வணங்குகின்றோம் என்று கூறுவதே நமக்குப் பண்பாகும். பொழிவு - 4 நாள் : 19.2.86 புதன்கிழமை மாலை 7 மாசி, 2016 இடம் : மதுரை அமெரிக்கன் கல்லூரி மதுரை நிகழ்ச்சி : மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் கிறித்துவ ஆய்வுத்துறைத் தொடக்கவிழா துணைவேந்தர் சீனி. கிருட்டிணசாமிக்கு பாராட்டுவிழா தலைமை : பேரருட்டிரு ஐ. ஏசுதாசன், தென்னிந்திய திருச் சபைகளின்தலைமைப் பேராயர் எங்கள் வணக்கஞ் சான்ற பேராயப் பெருமக்களே, அன்பர்களே, எனக்குமுன் சொற்பொழிவு செய்த பலரும் ஆங்கிலத்திற் பேசியதைப் பார்த்து, மாறான ஒரு கூட்டத்திற் கலந்து கொள்ள வந்துவிட்டேமோ, நானும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டு மோ என்ற கலக்கவுணர்வு எனக்கு வந்துவிட்டது. அண்மையில் தமிழகம் வந்து உலகப் பெருமுனிவரான போப் பாண்டவர் தமிழிற் பேசிய நெறியைக் கண்டோம். செந்தமிழியற்கை சிவணிய நிலத்துப்பிறந்து வளர்ந்த வர்களாகிய நாமோ நம் மொழியிற் பேசப்பின் வாங்குகின்றோம். பெரியவர்கள் முன்னோடியாகச் செய்து காட்டினாலும், நாம் எப்படியோ பின்பற்றத் தவறி விடுகின்றோம். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்துத் துணைவேந்த ராக இருந்த நான் கண்டு கேட்குமுன் கிறித்தவத் தமிழ்த் துறையும் பல்கலைக் கழகத்து இருக்க வேண்டுமென்று கிறித்தவப் பெருமக்கள் செய்த முயற்சிக்கு உறுதுணையாக ஊக்க மளித்தேன். இப்பெருமக்கள் சிறுதொகையல்ல, ஐந்தி லட்சம் பெருந்தொகை திரட்டி இன்று வழங்குகின்றார்கள். இதில் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் ஆசையான ஒரு வருத்தமும் உண்டு. நான் தொடங்கிய முயற்சியின் இப் பெருந்தொகை என் காலத்து என்னிடம் கிடைக்கவில்லை. என் நண்பர் துணைவேந்தர் கிருட்டிணசாமி அவர்கள் அல்லவா தட்டிக் கொண்டு செல்லுகிறார்கள். இதுவும் நல்ல உலகியற்கை தான். துணைவேந்தர் கிருட்டிணசாமி எதனையும் போற்றி வளர்த்து மேன்மேலும் பெருக்கும் தகுதி வாய்ந்தவர். இப்புதிய துறைக்கு மேலும் வருவாயும் வளமும் பெருக்கி ஆக்கஞ் செய்வாரிடம் இந்நன்கொடை சென்றிருப்பது எனக்கும் நம் எல்லாருக்கும் மகிழ்ச்சியே. உலக மொழிகளில் தமிழ் ஒன்றுதான் எல்லாச் சமயங் கட்கும் பெருங்காப்பியங்கள் கொண்டதாக விளங்குகின்றது. பௌத்தத்திற்கு மணிமேகலை, சமணத்துக்குச் சீவகசிந்தாமணி, சைவத்துக்குப் பெரியபுராணம், வைணவத்துக்கு இராமாயணம், இசுலாத்துக்குச் சீறாப்புராணம், கிறித்தவத்துக்குத் தேம்பாவணி, வீரசைவத்துக்குப் பிரபு லிங்க லீலை என்பன பல சமயக் காப்பியங்கள். சிலப்பதிகாரம் போலும் பொதுமைக் காப்பியங் களும் உள. ஆதலின் தமிழ் மொழியில் உலகளாவிய ஆய்வுக்கு வளங்கள் உண்டு. தமிழுக்குத் தொண்டு செய்த கிறித்தவப் பெருமகனார் பலர் தத்துவபோதகர். சீகன்பால்கு, கால்டுவெல், போப்பு, வீரமாமுனிவர் என்ற தமிழ்த் தொண்டர்களை நினைக் கின்றோம். அப்பரம்பரையில் இன்னும் பலர் உள்ளனர். தனிநாயக வடிகள் மிகச் சிறந்த தொண்டர் முன்னோடி. உலகத் தமிழ் மாநாடு என்ற எண்ணத்தை உருவாக்கியவர் அவரே. கோலாலம்பூரில் இம்மாநாட்டினைக் கூட்டி நல்ல வித்திட்டார். ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு இதுவரை கொண்டாடி யிருக்கின்றோம். இவ்வெண்ணம் இந்திய நாடு முழுவதும் பரவி விட்டது. மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, வடமொழி எனப் பலமொழி கட்கும் உலகமாநாடு காணும் எழுச்சி பெருகி வருகின்றது. இதற்கெல்லாம் மூலர் தமிழ் மாணவராகிய தனி நாயக வடிகள். இன்னும் நம் முன்வீற்றிருக்கும் தொண்டு கிழவராகிய பேராசிரியர் சோதி முத்து அவர்களும் பல நூல் களைப் பதிப்பித்த தவத்திரு அறிஞர் இராசமாணிக்கம் அவர் களும் வழிவழித் தமிழ்த் தொண்டர்களே. கிறித்தவம் தமிழுக்குக் காட்டிய சில நன்னெறிகள் அயற் சொற்கள் எங்ஙனம் தமிழ்வடிவாதல் வேண்டும், எப்போது தமிழாக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்குக் கிறித்தவத் தமிழ் எடுத்துக்காட்டாகும். மரியாள், சூசையப்பர், ஏசு, தோமையர், இராயப்பர், அருளப்பர், யோவான், தாவீது, உரோமை, ஒல்லாந்தா, போப்பரசர், குருசு, பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, திருப்பலி, நற்செய்தி, பேராயர் என்றவாறு நல்லவடிவான தமிழ்ச் சொற்கள் தமிழை வளப்படுத்தியுள்ளன. கிறித்தவ ஆய்வுத் துறை தொடங்கப்படுதலின் ஆய்வு நெறி பற்றி ஒரு சில சொல்லல் இவ் விழாவிற்குப் பொருந்தும். எச் சமயமும் உண்மை முழுவதையும் கூறிவிடவில்லை. ஒவ்வோர் கூறு ஒவ்வொரு மதத்தில் மீதூர்ந்து கிடக்கின்றது. சமய மெய்ம்மைகள் என்பவை அறிவுக் கோட்பாடுகளே இவற்றுக்கு அக்காலச் சமுதாயச் சூழ் நிலைகளும் முன் வரலாற்றுப் போக்கு களும் பின்னணியாக இருந்திருக்கும். இவற்றைப் பிணக்கின்றி எவ்வளவு இணக்காகக் காண முடியுமோ அவ்வாறு காண்பதே ஆய்வுத் துறைகளின் போக்காக இருத்தல் வேண்டும். இறைவன் இன்மை என்றும் சூனியத்திலிருந்து உலகைப் படைத்தான் என்று கிறித்துவப் பழைய மறை கூறுகின்றது. சைவம் போன்ற மதங்கள் இதனை ஒத்துக் கொள்ளா. உள்ளதன் தோற்றம் என்ற சற்காரிய வாதத்தை இருமதங்கள் வலியுறுத்தும் இறைவன் எல்லா வல்லமையும் உடையவன் என்பதனை உடன் பட்டால், இன்மையிலிருந்து எதனையும் உண்டாக்கும் தனியாற் றலும் அவனுக்கு ஏன் இராது என்று கிறித்தவர் கேட்பதும் சிந்திக்க வேண்டிய வினாவே. இதற்கு ஓரளவு உடன்பட்டாற் போல, விச்சதின்றியே வினவு செய்குவாய் என்று திருவாசகம் கூறுகின்றது. ‘கல் நார் உரித்தன்ன’ எனவும் ‘ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்’ எனவும் திருவாசகம் பாடு கின்றது. இதனால் நாம் அறிவது என்ன? ஒரு மதத்தில் விரிவாக நிற்கும் கொள்கை இன்னொரு மதத்தில் குறிப்பாகச் சுட்டப்படும். இவ்வகைகளில் பல்வேறு மதங்களின் பிறவுக் கொள்கை, வினாக் கொள்கைகளைப் பல துறைகளும் சேர்ந்து ஒப்பீட்டு முறையில் விளக்கம் செய்யலாம். தேம்பாவணியின் கதை அயலது, மாந்தர்களும் அயல் நிலத்தினர் என்றாலும் பாடிய இடம் தமிழாதலாதலும், படிப் போரும் தமிழ் நிலத்தவர், தமிழ் மக்களாதலின், வீரமாமுனிவர் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஏற்கும் வண்ணம் சில களங்களைப் பக்குவப்படுத்திப் பண்படுத்திப் பாடியுள்ளார். இல்லறத் திருந்தும் முறையாக கருவுறாது ஏசு பெருமகனைப் பெற்றாள் கன்னிமரியாள் என்பது கவலைதரும் ஐயத்திற்கிடமான கதை யாகும். கற்பின் தெய்வமான கண்ணகி பிறந்த நாட்டில் இத்தகைய கதையைக் கொண்ட காப்பியம் பாடுகின்றோமே என்கிற சிந்தனை வீரமாமுனிவருக்கு எழுந்திருக்க வேண்டும். ஐயந் தோற்றுபடலம், ஐயம் நீங்குப்படலம் என விரிவாக நாகரிகமாக இக்களங்களைப் பாடியுள்ளார். திருமணம் செய்து கொள்ள மரியம்மை எதிர்ப்பு உரைத்தபோதும் தெய்வக் கருக்கொள்ள எதிர்மொழி கூறியபோதும் அவள் கற்புக்கு தேவதூதன் கப்ரியேல் வணங்கி மொழிவதாக வீரமாமுனிவர் பாடுவர். “தொய்யலுற் றிறைவன்தாளைத் தொழுது வாழ் திருவல்லோனே மய்யலற் றழிவில்கன்னி மைந்தனைப் பெறுதல் ஏதென்று அய்யமுற்றிவள் வினாவ அரியமா தடியைப் போற்றி வெயிலுற் றடைந்த தூதன் விடைமொழி யுரைப்பான் மன்றோ” என்று வானவன் மரியாள் கேட்ட வினாவை மதித்த தோடன்றி அவள் பதிலையும் வாங்கி மறுமொழி பகிர்ந்தான் என்பர் புலவர் வானவன். இறைவன் ஆற்றலை உரைத்த பின்னும் மரியம்மை உடனே இசைவளிக்கவில்லை; இரவெல்லாம் கவலையில் ஆழ்ந்தாள். தேவர்களும் கன்னி என்ன சொல் வாளோ என்று கலங்கினாள். இத்தயக்க நிலையில் “நன்னிலா உதயத் தெந்தை நயப்புற வியப்ப வானோர் மன்னியம் எவரும் வாழ வந்த வானவனை நோக்கி கன்னி தாழ் சிரத்தைத் கோட்டி கடவுளாள் என்னை யீதோ பன்னி வாயினநின் வாய்ச் சொற்படி எனக்காக என்றாள்” என மரியாளின் நாணமான இசைவைப் புலப்படுத்துவர் முனிவர் கன்னியாகிய நான் மைந்தனைப் பெறுகின்றேன் என்று சொல்லக்கூசி நின் வாய்ச் சொற்படி எனக்கு ஆகுக’ என்றாள் என இங்ஙனம் சொற்பெய்திருப்பது நாகரிகமான தமிழ் மரபாகும். கிறித்தவத் திருமறையில் சில வரிகளில் அமைந்த இந் நிகழ்ச்சியை இருநூறு பாடலளவு வீரமானிவர் விரித்துரைப் பது தமிழ்ச் சமுதாயத்தை நோக்கியாகும். ஆதலின் தமிழில் உள்ள தழுவற் காப்பியங்கள் தமிழ்ச் சமுதாயப் பண்புக் கேற்பப் பக்குவமாகி இருப்பதை ஆய்வாளர்கள் கண்டெடுத்துக் காட்ட வேண்டும். பொழிவு - 5 நாள் : 21.3.1986, வெள்ளிக்கிழமை காலை, அ, பங்குனி, 2016 இடம் : அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி நிகழ்ச்சி : பலதுறைத் தமிழ்ப் பணிமனைத் தொக்கம் தலைவர் : துணைவேந்தர் அறிஞர் திருமதி இராதா தியாகராசன் தொடக்கவுரை : அறிஞர் வ.சுப. மாணிக்கம் தொடக்கவுரைச் சுருக்கம் நன்மதிப்புக்குரிய துணைவேந்தர் அவர்களே, பெருமக்களே. அழகப்பா கலைக்கல்லூரி, அழகப்பர் பொறியியற் கல்லூரி, அழகப்பர் மகளிர் கல்லூரி, அழகப்பர் பல்தொழிற் கல்லூரி, அழகப்பர் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி என்று அழகப்பர் பெயரால் கல்லூரிகளைக் கண்டு கேட்டு வந்த நமக்கு அழகப்பர் பல்கலைக் கழகம் என்ற புது நிறுவனத்தைக் கேட்கும்போது ஒரு இனிய பூரிப்பு ஏற்படுகின்றது. பல்கலை ஓர் கழகம் மற்றாய் நினைத்தான் தன் நல்ல குறிக்கோளை நாட்டு மினோ என்று என் கொடை விளக்கு என்ற கவிதை நூலில் வள்ளல் இறந்தவுடனே பாடியிருக்கின்றேன். அந்த எண்ணம் தமிழக முதல்வர் புரட்சித் தலைவரின் ஆட்சியில் இப்போது நிறைவேறி யிருப்பதறிந்து என் நன்றியை அப்பெரு மகனுக்குப் புலப் படுத்திக் கொள்கின்றேன். துணைவேந்தர் இராதா தியாகராசன் அவர்கள் நான்கு துறையில் தமிழைப் பயில் மொழியாகக் கொண்டு வருகின் றார்கள். அவர்கள் நிரம்பத் தமிழாய்வு செய்தவர்கள். கலைத் தந்தை தியாகராச செட்டியாரின் தமிழக குடும்பத்தைச் சார்ந்த வர்கள். தியாகராசரே பல கல்லூரிகள் கண்ட கொடை யாளர். ஆதலின் அக் குடும்பத்தவரான துணைவேந்தர் தமிழை வளர்க்கத் திட்டங்கள் கொண்டு வருவது இயல்பினும் இயல்பே. தமிழகத்தில் அண்மையில் பல பல்கலைக் கழகங்கள் தோன்றி யிருக்கின்றன, வரவேற்போம். இவையெல்லாம் தமிழ் வளர்ச்சிக் கும் பயில் தமிழ்மொழிக்கும் முதன்மைத் திட்டங்கள் வகுக்க வேண்டும். தமிழ் நினைவும் தமிழ் வலுவும் தமிழ் வளமும் இல்லாத தமிழகப் பல்கலைக் கழகங்கள் மாற்றுக் குறைந்தனவே. இவை தம் மொழிக் கடமையை உணர வேண்டும். நம் அழகப்பர் பல்கலைக் கழகம் தோன்றிச் சில திங்களே யாயினும் தமிழுக்கு தொழில் சார்ந்த திட்டங்கள் தொடங்கியிருப்பது எல்லார் தம் பாராட்டுக்கும் உரியதாகும். வள்ளல் அழகப்பர் தமிழ் வளத்துக்குக் கொடைவளஞ் செய்தவர் சிலப்பதிகாரம் பிறந்த திருநாடான சேரநாட்டில் திருவனந்தைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தோன்ற ஓரிலக்கத் தொகை வழங்கினார். இந்திய மொழிகளிலே முதற்கண் கலைக் களஞ்சியம் கண்ட மொழி தமிழ்மொழி. அத்திட்டத்துக்குப் பதினாயிரம் உரூபா முந்துற்று வழங்கியவர் வள்ளல் அழகப்பர். அன்பு, அறம், பணி என்ற குறிக்கோளைக் கலைக் கல்லூரிக்கு நல்ல தமிழாற் கண்டவர் அழகப்பர். ஆதலின் இப்புதிய தமிழ்த் திட்டங்கள் வள்ளலின் உயர்வுக்கு இனியவாம். பாரத நாட்டின் புதிய கல்விக்கொள்கை இன்று எங்கும் பேசப்படுகின்றது. இதுபற்றி ஓரிடு அடிப்படை தளங்களை நாம் புரிந்து கொள்ளவேண்டும். நாட்டின் ஒருமைப்பாடு கல்வித் திட்டத்தில் எல்லா நிலையிலும் இடம் பெற வேண்டும் என்ற ஒரு கோட்பாடு வலியுறுத்தப் படுகின்றது. ஒருமைப்பாடு வேண்டும் என்பதனை நாம் வரவேற்கின்றோம். அது கல்விக் கொள்கையா என்பது வினா. பொதுமக்கள் இயல்பான நிலை யில் ஒருமைப்பாட்டு வழியினரே. வேறெண்ணம் அவர்கட்கு இல்லவே இல்லை. இல்லாததை ஏன் கிளப்ப வேண்டும்? யாருக்கு இதனைச் சொல்ல வேண்டும் தெரியுமா? சட்டமன்றங் கட்கும் பாராளுமன்றங்கட்கும் தேர்ந்தெடுத்த வேட்பாளர் உறுப்பினர்கட்கும் பல கட்சித் தலைவர்கள் அமைச்சர்கட்கும் வலுவான ஆட்சியிடத்தைப் பிடிப்பவர் கட்கும் ஒருமைப்பாடு பற்றிச் சொல்ல வேண்டும். இவற்றைச் சொல்லுங்கள், செய்யுங் கள், பரப்புங்கள். இவற்றைச் சொல்லாதீர்கள், செய்யாதீர்கள், பரப்பாதீர்கள் என்று அறிவுறுத்த வேண்டும். இடமறிந்து ஒருமைப்பாடு செய்வதை விட்டுக் கல்வித் திட்டத்தில் புகுத்து வது தேவையற்றதாகும். கடலில் நீர் பாய்ச்சுவதாகும். கோடைக் கானலில் விசிறி வீசுவதாகும். இயல்பானவர்களைக் கெடுக்க வேண்டாம். கல்வியின் பெயரால் என்பது என் எச்சரிக்கை. பட்டங்களைத் தொழிற் பதவிகளினின்று பிரித்துவிட வேண்டும் என்ற கல்விக் கொள்கை பாராட்டப்படுகின்றது. இது வேண்டாத போக்கு படித்தவர்கட்கெல்லாம் பட்டம் பெற்றவர் கட்கெல்லாம் வேலை கொடுப்பது என்ற நல்லுறதி அரசுக்கு இருந்தால் இப்பிறப்பு பற்றி ஓரளவு சிந்திக்கலாம். அதுவும் கூட இளைஞர்களின் வளர்ச்சிக்கு நல்லதன்று. ஏதோ இந்திய நாட்டில் பட்டங்கள் பெற்றவர் தொகை பெருகி விட்டது போலவும் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது போலவும் பொய்ப் பறையும் பொய்ப் பூசலும் இடுகின்றார்கள். இந்திய மக்களின் எழுபதுகோடி தொகையைப் பார்க்கும்போது ஒரு விழுக்காடுகூடப் பட்டம் பெற்றோர் இருக்க மாட்டார்கள். கிராம மக்களும் அட்டவணைக் குலத்தாரும் இப்போதுதான் கல்லூரிகளைக் காண்கின்றனர். மேலும் சிறிய வேலைக்குக் கூடக் கூடுதலாகப் படித்தவர்கள் அமர்ந்தால் பின்னர் உயர்வுக்கு வழியுண்டு. பல்கலைக்கழகம் கல்லூரிகளில் தேர்வு முறை படிப்பு முறைகளை வன்மையாக ஒழுங்குபடுத்திப் பட்டங் களின் தரங்களை உயர்த்துவதான் முறையேயன்றி அறுப்ப தன்று. வேலை கொடுப்போர் பொறுப்பில் தகுதிகாண விட்டு விடுவது ஊழலுக்கும் தன்னாதிக்கத்துக்கும் பாத்தியாகிவிடும். ஆதலின் தரங்காப்பது முதற்கண் உயர் கல்வி நிறுவனங்களின் கடன். புதிய கல்விக் கொள்கையின் அடிப்படைக் கேட்டினை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். கல்விக் கொள்கை யேட்டில் கல்வி மொழி அல்லது பயில்மொழி பற்றிய குறிப்பு இல்லை. பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை எந்த மொழிகள் பாட வாயில் மொழியாக இருக்குமென்று வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. வேண்டுமென்றே மூடி மறைத்திருப்பதாக நாம் கருத வேண்டியுள்ளது. உண்மைத் திரை அண்மையில் வெளிப்பட்டு விட்டது. 14.3.1986 உ (தேதி) பாராள்மன்றத்தில் கல்வித் துணையமைச்சி திருமதி சுசிலா உரோகத்தி மாவட்டந்தோறும் அமைச்சர் நன்முறைப் பள்ளியின் நடைமுறை பற்றிக் கூறி யுள்ளார். ஆறாவது வகுப்பு முதல் பன்னிரண்டாவது வகுப்பு வரை நாடு முழுதும் இந்தி அல்லது ஆங்கிலமே கல்வி மொழி யாக இருக்கும் எனவும் ஐந்தாவது வகுப்பு வரை மாநில மொழி களிற் படித்த மாணவர்கள் ஆறாவது வகுப்பில் மொழி மாற்றம் இந்திக்கோ ஆங்கிலத்துக்கோ பெறுவார்கள் எனவும் எல்லாம் இலவசம் எனவும் சொல்லியுள்ளார். ஐந்தாவது வகுப்பு வரை மாநில மொழிகள் எனவும் ஆறாவது வகுப்பு முதல் பன்னிரண்டாவது வகுப்பு வரை இந்தி அல்லது ஆங்கிலமும் இருக்கும் எனவும் வேலியிட்டால் பெற் றோர்கள் என்ன செய்வார்கள்? அறியாதவர்களா எதிர்காலம் தெரியாத பேதையர்களா? தங்கள் குழந்தைகளை ஆறாவது வகுப்பில் மொழி மாற்றஞ் செய்து துன்பத் தொல்லைப் படுத்துவதைவிட முதல் வகுப்பிலிருந்தே இந்தியோ ஆங்கில மோ படிக்க வைத்துவிட்டால் நல்லது என்று மொழி மாற்றத் திற்கு இடனின்றியே கீழிருந்தே மாநில மொழிகளை ஒதுக்கிவிட மாட்டார்களா? மேலும் இந்தி மாநிலங்களில் வாழும் மக்கட்கு எவ்வகுப்பிலும் மொழி மாற்றம் இல்லாத நேர் போக்கு இருப்ப ஏனை மாநில மக்கட்குத் தானே மொழி மாற்றம் என்ற பூச்சாண்டி தோன்றும். இதனால் விளையும் விளைவுகள் பலப்பல. ஆறாவது முதல் பன்னிரண்டுவரை இந்தி அல்லது ஆங்கிலம் என்றால் என்ன உட்கிடை? கல்லூரி பல்கலைக் கழகக் கல்வி மொழி யெல்லாம் இவ்விரண்டில் ஒன்று என்பது தானே வெளிப்படை. இன்னும் உள்நோக்கம் சொன்னால் ஆங்கிலத்தைச் சேர்த்திருப்பது கூட ஒப்புக்குத்தான். காலா வட்டத்தில் இந்தி ஒன்றே இந்தியா முழுதும் கல்வி மொழி யாகும். பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை கல்வி மொழியாகும் என்ற மனப்பால் இப் புதிய கல்விக் கொள் கைக்குள் கிடக்கின்றது. புதுக் கல்விக் கொள்கை நாடெங்கும் மேடைகளில் அலசி ஆராய்ந்து பேசப்படுகின்றது குடியரசு முறையில் என்று பறை சாற்றுகின்றார்கள். கல்வி மொழி பற்றி யாராவது வாயெடுக் கின்றார்களா? துணை வேந்தர்களோ கல்லூரி முதல்வர்களோ அரசியற் கட்சியாளர்களோ அறிவியல் மேதைகளோ தாங்களே வாய்ப்பூட்டு பூட்டிக் கொள்கின்றார்கள். இன்று தான் கல்வி யறிஞர்களின் அடிமைப்பற்றினை, பதவியடிமையை பார்க்கின் றோம். பாரத முதலமைச்சர் முதல் எல்லாரும் இந்தியா வொரு மைப்பாடு பற்றிக் கணந்தோறும் பேசுகின்றார்கள். ஐம்பது கோடி மக்கட்கு மொழியுரிமை வழங்காத கல்விக் கொள்கை எவ்வளவு தீமைதரும். இந்திய வொருமைப்பாட்டினை இந்தி தரும் என்பது பொய்க் கொள்கை. வடநாடு இன்று எவ்வளவு குழப்பமாக இருக்கின்றது? இந்தி ஒற்றுமை செய்திருக்கின்றதா? இந்தியிலே தான் கராபுரா என்று பேசி அடித்துக் கொள்கின் றார்கள். எல்லார்க்கும் எல்லாமதத்துக்கும் பெண்கட்கும் நலிந் தோர்க்கும் சமவுரிமை சம வாய்ப்பு என்பது நம் அரசியல மைப்பு. எட்டாவது அட்டவணையிற் கண்ட பதினான்கு மொழிகளுள் பதின்மூன்று மொழிகட்குக் கல்வியுலகில் ஒரு சிறு வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. எல்லாம் இந்திக்கே. மொழிகட்குச் சமவாய்ப்பு இல்லாத போது இந்தியல்லாத ஏனை மொழியாளர்கட்கு என்ன வளமும் வாய்ப்பும் இருக்கும். இந்தி படித்தால்தான் வடநாட்டில் வேலை வாய்ப்பு என்று இப்போதே பலர் கூக்குரலிடத் தொடங்கி விட்டார்கள். நான் தமிழுக்கு மட்டும் வாதாடவில்லை. இந்தியொப்ப எல்லா இந்திய மொழிகட்கும் சிறிதிலும் பெரிதிலும் சமவாய்ப்பு வேண்டும் என்பதே என் துணிவு. நல்ல வேளையாக ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலத்து நாம் அடிமையாக இருந்த காலத்து பணத்தாளில் நாணயத் தாளில் பதின்மூன்று மொழிகளும் இடம் பெற்றுவிட்டன. இதனை நான் சொல்வதை மறைவாக வைத்துக் கொள்ளுங்கள். ஒருமையும் சமன்மையும் அறையும் நம் இந்தியவரசின் காதுக்கு எட்டினால் நாணயத் தாளில் இந்தி ஆங்கிலம் இரண்டாகக் குறைத்து வருவார்கள். இந்தியல்லாத நம் மொழிகளைப் பொறுத்தவரை, இன்றுள்ள, எதிர்கால நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அடிமைக் காலமே நமக்கு நன்றாக இருந்தது என்று சொல்லிவிடலாம். இவ்வளவு இலங்கைப் போராட்டத்திலும், முத்திரைகளிலும் பிறவற்றிலும் சிங்களத் தொடு தமிழும் இணைந்திருப்பதைப் பார்க்கும்போது, அந்த நாள் நம் பதின் மூன்று மொழிகட்கும் எந்த நாள் வருமோ என்று ஏங்க வேண்டியுள்ளது. ஆட்சித் தமிழ், சட்டத் தமிழ், அறிவியல் தமிழ், பதிப்பு தமிழ் என்ற நான்கு துறைகளில் தமிழ் வாயில் கொண்டு வந்து சான்றிதழ் வழங்க அழகப்பா பல்கலைக் கழகம் திட்டம் தொடங்கியுள்ளதை வரவேற்கின்றோம். இந்நிலையில் தமிழ்ச் சொல்லாக்கம் பற்றி ஒரு சில கருத்துக்களைக் காணலாம். உலகில் பலதுறைகளிலும் கருத்து வளர்ச்சி பெருகி யுள்ளது. நாம் கருத்துப் பொருள் தேடிச் செல்ல வேண்டிய தில்லை. நாம் தமிழில் செய்ய வேண்டியன வெல்லாம் உரிய வேண்டிய சொல்லாக்கங்களே. புதிய பொருள் வரவர உடனுக் குடன் ஆங்கிலம் சொல்லாக்கிக் கொண்டு விடுகின்றது. பதின் மூன்றாம் நூற்றாண்டிற் கிளைத்த ஆங்கிலமொழி கிரேக்க இலத்தீன் துத்தானிய மொழியினங்களின் சேர்க்கையால் சொல் வளர்ச்சி பெற்றது. இதனை விளக்க இது இடனில்லை. முன்னொட்டுக்கள் பின்னொட்டுக்களின் பலவகைச் சேர்க்கை களே ஒரு மொழியிற் புதிய சொற்களை உருவாக்கப் பெருந் துணை செய்வன. nடிn, னந, அளை, நn, in,னளை, அயட, நஒ, டிரவ, நெ, டிn, உடிn, ளரb, அடிnடி, ரn, நஅ என்ற பல முன்னொட்டுக்களும் நச, டிச, னடிஅ, நந, hடிடின, hநயன, ளாiயீ, iபே, ளடிஅந, கரட, iளா, டல, நn, வiடிn, ளைஅ, அநவே என்ற பல பின்னொட்டுக்களும் பல்வேறு திரிபுகளில் புதிய சொல்லாக்கங் களை விளைவிக்கின்றன. அடிப்படைச் சொற்கள் சில. இத்தகைய ஒட்டுக்களால் வேறு வேறு பொருட்குறிப்புச் சொற்கள் பல்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ் ஒட்டு நிலை மொழியாகும். நால்வகைச் சொற்களுள் இடைச்சொல் என்ற வகை இச் சொல்லாக்கத்திற்கே உரிய தாகும். இடைச்சொல்லின் ஆக்கவாற்றலை நம்மனோர் இன்னும் உணரவில்லை. உணர மறுக்கின்றோம் எனறு கூடச் சொல்லலாம். அல் என்ற முன்னொட்டு உண்டு. அஃறிணை அன்மொழித் தொகை, அல்வழி என்ற தொடர் மொழிகள் ஆங்கிலத்தில் nடிn என்பதற்கு நிகராகும் nடிn கடிசஅயட நனரஉயவiடிn என்பதனை முறை சாராக் கல்வி என்று கூறுகின்றார்கள். இக்கல்விக்கும் ஒரு நன்முறையுண்டு. அன் முறைக் கல்வி என்றதே தமிழ் மரபு nடிn ளநஅநளவநச என்பதனைப் பருவமல்லா என்பதும் தவறு அல் பருவமுறை என்பதே தமிழ் மரபு. தல் அல் அம் கை வை கு பு தி சி வி உள் காடு மாடு முதலான ஈறுகளும் மை ஐ சி பு உடு நா முதலான ஈறுகளும் இ ஐ அம் முதலான ஈறுகளும் கொண்டு எண்ணிறந்த சொற்களைச் சிறிதாக எளிதாக வழக்காகப் படைக்கலாம். தொகைச் சொற்களின் படைப்பும் தமிழில் எளிதாகும். ஈனில், துச்சில், புக்கில், காப்பகம், இனிப்பகம், படிப்பகம், நூலகம், துணியகம், உணவகம், வினை வழங்கி, தொழில் வழங்கி, காசோலை, வேண்டோலை, சான்றிதழ் என்றவாறு வெள்ளம் போற் சொல்லாக்கம் செய்யத் தமிழுக்கு வன்மையுண்டு. சொல்லும் திறமை தமிழ் மொழிக்கு மிகுதியுண்டு. பத்தாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட மூத்த வழக்கு மொழியான தமிழுக்குப் புதுச் சொல்லாக்கும் திறன் இல்லையெனின் பிற எந்த மொழிக்கு இருக்க முடியும். தமிழின் தொல்லாற்றலையும் தனியாற்றலையும் உள்ளாற்றலையும் வளராற்றலையும் நாம் உணராத பேதையர் களாகி விட்டோம். அயற் சொற்களை வைத்துக் கொண்டே காலந் தள்ளும் பழக்கராகிவிட்டோம். தமிழுரிமையையும் தன்கடமையையும் வழிவழி யுணரும் அறிவர்களாக நாம் வளர வேண்டும்; வளர்க்க வேண்டும். பொழிவு - 6 நாள் : 13. 04. 1986 ஞாயிறு 31 பங்குனி 2016 இடம் : மதுரை நிகழ்ச்சி : உலகத் தமிழ்ச் சங்கம் தொடக்கம், கருத்தரங்கம் கருத்தரங்கு : அகம் வ.சுப. மாணிக்கம் உரைச் சுருக்கம் தலைவர் மாண்புமிகு அமைச்சர் அறிஞர் காளிமுத்து அவர்களே, மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் நாவலர் அவர்களே, பெருமக்களே. உலகத் தமிழ்ச் சங்கம் என்ற எண்ணம் எத்துணையோ ஆண்டுகட்கு முன்பு தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் அவர் களின் உள்ளத்துக் கருக் கொண்டிருந்தது. இன்று அச்சங்கம் முறையான தொடக்கம் பெறுகின்றது. இந்திய மொழிகளுள் தமிழ் ஒன்றுதான் உலகம் பரவிய இந்திய மொழி. பன்னாடுகளில் தமிழ் மக்கள் குடிகளாகப் பல்லாயிரக்கணக்கில் வாழ்கின்றனர். இலங்கை மற்றொரு தமிழகம். தமிழ்மொழி உலகத் தமிழ் மாநாடு கொண்டாடியது. இது காறும் ஐந்து உலகத் தமிழ் மாநாடு நிகழ்த்தியிருக்கின்றோம். நம்மைப் பின்பற்றிப் பிற இந்திய மொழிகளும் உலக மாநாடு கொண்டாடி வருகின்றன. இது வளர்ந்து வரும் காலப்போக்கு ஏனைய இந்திய மொழிகள் உலகத் தெலுங்கு மாநாடு, உலக மலையாள மாநாடு, உலகக் கன்னட மாநாடு, உலக இந்தி மாநாடு, உலக வடமொழி மாநாடு என்று நிகழ்த்துவது இந்தியா வுக்குப் பெருமை சேர்க்கும் என்றாலும் அவையெல்லாம் தமிழ் போல உலக மொழியாகிவிடா. தமிழ்க் குடியேற்றம் கொண்ட தமிழ் ஒன்றுதான் இந்திய மொழிகளில் வரலாறுடைய உலக மொழியாகும். பன்னாடுகளில் உலகத் தமிழ் மாநாடுகள் நிகழ்ந்ததனால் பரவிக் கிடக்கும் தமிழினத்தார்க்குத் தாய்மொழியாம் தமிழ் பற்றுக் கிளர்ந்து தமிழையும் தமிழ் நாகரிகத்தையும் கற்று அறிந்து கொள்ள வேண்டும். தம் குழந்தைகளும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற புதிய துடிப்பு எங்கு வாழ் தமிழர்க்கும் தோன்றியுள்ளது. இப் புத்துணர்வினை உலகத் தமிழ்ச்சங்கம் நல்லுருவாக்க வேண்டும். சில ஆண்டுகட்கு முன் நான் “ஆங்காங்கு” என்ற நாட் டிற்குச் சென்றிருந்தபோது தமிழாக்கத்திற்குரிய நன்னெறியை ஒரு தமிழ்க் குடும்பத்தினின்று தெரிந்து கொண்டேன். அது முகமதியர் தமிழ் குடும்பம். அக் குடும்பத்துச் சிறு குழந்தைகள் நல்ல தமிழில் தாராளமாகப் பேசின. அயற் சூழ்நிலைக்குத் தலைசிறந்த நாகரிக நகரமான ஆங்காங்கில் இங்ஙனம் தமிழ் நன்றாகப் பேசப்படும் நிலை எப்படி என்று அக்குடும்ப நங்கையைக் கேட்டேன். அத் தங்கை சொல்லிய நெறி இது. வீட்டிற்குள் வந்துவிட்டால் கணவனும் குழந்தைகளும் வந்த தமிழர்களும் தமிழில்தான் பேசவேண்டும் என்ற கட்டாயச் சூழ்நிலையை நான் போற்றிவருகின்றேன். என் குழந்தைகட்கு வீட்டில் தமிழ் எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுக்கின்றேன். வீட்டுக்குள் எல்லாரும் வரும் தமிழரும் தமிழே பேசுவதால் குழந்தைகள் இயல்பாகத் தமிழிற் பேசுகின்றன. இவ்வாறு ஆங்காங்கில் இத்தமிழ்த் தங்கை நல்ல தமிழ்ப் பற்றோடு சொல்லிய மறுமொழியிலிருந்து நாம் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ் காப்புக்கும் கடைபிடிக்க வேண்டிய ஒரு நெறி என்ன? எந்த நாட்டிலிருந்தாலும் அந்நாட்டு மொழிகள் எதுவாக இருந் தாலும், தமிழ்க் குடும்பங்கள் வீட்டளவில் தமிழிலே பேசும் வழக்கத்தை உறுதியாகக் கடைப்பிடிக்கவேண்டும். இந்த ஒரு முறையைத் தழுவினால், வீட்டுள் தமிழ் நடமாடினால் தமிழ் எங்கும் வளரும். நிலைபெறும் என்பது நாம் அறிய வேண்டிய கருத்தாகும். ஆதலின் உலகத் தமிழ்ச் சங்கம் வீட்டுள் தமிழே பேசுதல் என்ற இயக்கத்தைப் பரப்பவேண்டும். இன்றோ தமிழகத்திற்கூட வீட்டில் தமிழ் பேசாத ஒரு தீயபோக்கைக் காண்கின்றோம். தமிழ் பேசாமை நாகரிகச் சின்னம் என்று ஒரு சாரார் குழந்தைகளை ஆங்கில மொழியில் பழக்கும் மொழிக் கொடுமையைக் காண்கின்றோம். ஆதலின் உலகத் தமிழ்ச் சங்கத்தின் பணி தமிழகத்திற்கும் வேண்டியதாகும். உலகம் என்பது தமிழகத்தையும் உட்படுத்துமன்றோ. எங்கு வாழ் தமிழ்க் குடும்பத்தும் வீட்டகம் தமிழகமாக இருந்தால் தமிழ் என்றும் உலக மொழியாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும். இது உலகத் தமிழ்ச் சங்கத்தின் முதற் குறிக்கோளாதல் வேண்டும். தமிழ் என்னும் போது மொழியையும் இலக்கியத்தையும் எங்கும் நாம் குறிக்கவில்லை. தமிழ் பரவவேண்டும் என்று சொல்லும் போது தமிழினங்கண்ட பண்பு நாகரிகமும் மக்கள் நாகரிகமும் பரவுதலையும் காண்கின்றோம். இவ்வுலகத்தின் நல்வாழ்வையும் ஒழுக்கநெறியும் ஒழுங்குமுறையையும் கண்டது தமிழினம். “மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் முட்டாச் சிறைப்பிற் பட்டினம்” என்று பட்டினப்பாலை பன்னாட்டு மக்களின் ஒருமைப் பாட்டினைக் கலந்தினிது உறையும்” என்ற தெளிந்த சொற் களால் புலப்படுத்தும். தமிழினங் கண்ட உலக வாழ்வு நாகரிகங்களில் தலை யாயது இனிய எளிய ஒற்றுமையான குடும்ப வாழ்வாகும். ஆண் பெண் பாலார் மணமாகி இல்லறமாக இன்பமாக வாழ வேண்டும். தனித்தனிக் குடும்ப நலமே அரசு நலம். உலக நலம். உலக மாந்தர்க்குத் தமிழினம் வழங்கத் தக்க ஒரு நற்செய்தி இல்லறம் பற்றியதாகும். குடும்பப் பூசல்களே வேறு வேறு உருவில் அரசியற் பூசலாகப் போர் பூசலாக வளர்ந்த வரலாறு களை நாம் கற்றிருக்கின்றோம். குடும்பவமைதி நாட்டமைதி உலக வமைதிக்குத் தளமாகும். இன்பம் குறித்த தமிழினத்தின் கொள்கை உயிரினம் முழுதும் தழுவியதாகும். “எல்லா வுயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்” என்பது தமிழ் முதல்வன் தொல்காப்பியனார் கண்ட மெய்ப்பொருள். எவ்வுயிரின் செயலும் இன்பத்தை நாடியே செல்வது; துன்பத்தை வரவொட்டாமல் தடுப்பது என்பது எளிய உயிரறமாகும். ஆதலின் தமிழர் கண்ட அகத்திணை யிலக்கியம் மக்களின்பம் பற்றி நுண்ணெறிகளைச் சுட்டும் போது, பிறவுயிரினங்களின் இன்பத்திற்கு இடையூறு செய்யாது போற்ற வேண்டும் என்ற அன்பறத்தை வலியுறுத்திக் கூறக் கற்கின்றோம். போர் முடித்து மாலையில் இல்லம் திரும்பும் தலைவன் சோலை வழியே தேரேறி வருகின்றான். வரும்வழியில் சோலைப் பூக்களில் வண்டுகள் இணைந்து கலவி செய்வதைக் காண்கின் றோம். தேரின் மணியோசையால் வண்டுக்கூட்டம் கலைந்து விடக்கூடாதே. தன்னின்பத்திற்காக ஏனையுயிரினங்களின் இன்பத் தன்மையைக் கெடுக்கக் கூடாதே என்று உள்ளிருக்கும் தலைவன் என்ன செய்கிறான் தெரியுமா? ஓசைப்படாதபடி மணிகளின் நாவைக் கட்டி ஓசையை யடக்குகின்றான். “பூத்த யொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண் பறவை பேதுற வஞ்சி மணிநா வார்த்த மாண்வினைத் தேரன்” என்று அகநானூறு தலைவனின் பண்பினை, சிறிய உயிரி னத்தின் இன்பத்தைப் போற்றும் இல்லறத்தை எடுத்துக் காட்டு கின்றது. இந்த உலகப் பார்வையும் உயிரினப் பார்வையும் தமிழ் என்னும்போது உலக மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அப்போது தான் தமிழின் மொழிச் சிறப்போடு குடிச் சிறப்பும் உலகந்தழுவிய, உயிரினம் தழுவிய பண்புச் சிறப்பும் எல்லார்க் கும் தெளிவாகும். அப்போதுதான் தமிழரல்லார்க்கும் தமிழ் நாகரிகத்தின் வாழ்வியல் விளங்கி நம்மேல் மதிப்பு ஏற்படும். பொழிவு - 7 நாள் : 3.5.86, சனிக்கிழமை மாலை 5.30 மணி 20 சித்திரை 2017 இடம் : காரைக்குடி, இராமசாமி தமிழ்க் கல்லூரி நிகழ்ச்சி : இராமசாமி தமிழ்க் கல்லூரி நிறுவனர் இராம. பெரிய கருப்பன் இரங்கற் கூட்டம். தலைமை : வ.சுப. மாணிக்கம் தலைமையுரைச் சுருக்கம் பெருமக்களே, இப்படி ஒரு இரங்கற் கூட்டம் இப்படி ஒருவர்க்கு நடக்கும் என்று நாம் எதிர்பார்த்ததில்லை. எப்படியோ நாம் இதற் கூடவேண்டிய காலநிலை ஏற்பட்டிருக்கின்றது. இயற்கை என்பார்கள் ஒரு சாரார். பூத்துக் காய்த்து கனியாகி மூத்து விடுவதுதான் இயற்கை. மிக நல்ல உடல் நலமாக இருந்தவர் அயல்நாடு சென்று வழியிடை ஊர்தி மோதலால் வீவுற்றார் என்பதனை இயற்கை என்று நாம் கருத முடியவில்லை. பெரிய கருப்பன் சிங்கப்பூர் செல்வதற்கு முன் யாவரும் அவரைப் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு இருந்தது. அழகப்பர் பல்கலைக் கழகம் நடத்திய தமிழ்ப் பணிமனை விழாவிற்கு வந்திருந்தார் இங்குள்ள பலரும் அன்று அவரொடு பேசி அளவளாவினோம். பெரியகருப்பன் சிறந்த தமிழ்ப்புலவர். கட்சியைப் புரக்கின்றவர்களும் சமயத்தைப் புரக்கின்றவர்களும் கல்வியைப் புரக்கின்றவர்களும் பலர் உளர். தமிழ்த் தாயைத் தமிழ் மொழி யைத் தமிழ்ப் புலவர்களை, தமிழ் நிறுவனங்களைப் புரக்கும் எண்ணம் உடையோர் தமிழ்நாட்டில் அருகி வருகின்றனர். எங்கோ சிலர் காணப்படுகின்றனர். பெரிய கருப்பன் இயல்பான, பகட்டில்லாத தமிழ்ப்புரவலர். திரு.வி.க. என்று தம் இல்லத் துக்குப் பெயரிட்டவர். நல்ல செந்தமிழ்ப் பற்றாளர், தமிழினத் திலும் தமிழ் நாகரித்திலும் ஈடுபாட்டினர் தக்க தமிழறிவுடையர். அவரில்லம் தமிழ்ப் புலவர்கள் கூசாது நாளும் நுழையத் தக்க தமிழில்லம். இளைய வயதிலேயே அறஞ் செய்யும் துடிப்பெண்ணம் பெரியகருப்பனுக்குத் தோன்றியது; தொழிலும் செல்வமும் வளரும் போதே தொண்டும் உடன்வளர வேண்டும் என்று தெளிந்தார். என்னவகையான அறஞ் செய்யலாம் என்று என்னிடம் கேட்டார். மருத்துவமனை, கல்விச்சாலை, ஏழையர் விடுதியெல்லாம் வைப்பதற்கு ஆட்கள் இருக்கின்றனர். கோயில் தொடர்பான அறங்கள் செய்யத் தக்கவர்கள் இருக்கின்றார்கள். நான் குறிப்பிட இருக்கும் ஓர் அறத்தைச் செய்வதற்கு யாரும் முன்வரக்காணோம். தமிழ் நலிவுறுகின்றது. தமிழ்த்தாய் மெலி கின்றாள். தமிழ் வளர்ச்சி தளருகின்றது. வள்ளல் அழகப்பர் பல கல்லூரிகள் வைத்துள்ளார். அவர் நிறுவாத கல்லூரி தமிழ்க் கல்லூரி. நீ தமிழ்க் கல்லூரி நிறுவ வேண்டும் எனவும் புலவர் வகுப்பு நடத்த வேண்டும் எனவும் மதுரைப் பல்கலைக்கழகத் தோடு இணைய வேண்டும் எனவும் எடுத்துச் சொன்னேன். முன்னரே தமிழ்ப் பயிர் வளர்ந்த நெஞ்சமாதலின் பெரிய கருப்பன் உள்ளம் என் வேண்டுகோட்கு உடனே இசைந்தது. இன்னொரு தனிச் சிறப்பும் பெரியகருப்பனுக்கு உண்டு. பல கொடையாளர்களைப் பார்த்திருக்கின்றோம். எவ்வளவு பெருங்கொடை செய்தவர்களும் தங்கள் நிறுவனங்கட்குத் தங்கள் பெயரையே வைப்பதுண்டு. இதுவும் ஒரு முறையே யாகும். குறை கூறுதற்கில்லை. இயல்பினும் இயல்பே. ஆனால் பெரியகருப்பன் தமிழ்க் கல்லூரிக்குத் தன் பெயர் வைக்க வில்லை. தன்னை வளரக்கூட்டிய தந்தையார் பெயரால் இராமசாமி தமிழ்க் கல்லூரி என்று அமைத்தார். தந்தையார் இயற்கைக் கொடைஞர், இடையறாது அறஞ்செய்பவர். அறத்திற் கென்று பெருநிதி யொதுக்கிக் காப்பவர். பெரியகருப்பனுக்குத் தோன்றிய இளமையறவுணர்ச்சி தந்தையால் வந்தது என்றுங் கருதலாம். இவ்வகையில் தன் பெயர் வையாத, தன்னலங்கடந்த கொடை முறையைப் பெரியகருப்பனிடம் காண்கின்றோம். பெரியகருப்பன் தமிழுக்கும் தமிழ்ப் புலவர்கட்கும் கல்வியாளர்க்கும் நல்லுதவி செய்தவர். அழகப்பா கல்லூரியில் நான் முதல்வராக இருந்த போது ஒரு சமயம் அதனைத் துறக்க வேண்டி இருந்தது. அப்போது பெரியகருப்பன் என் இல்லம் வந்து, என்னிடம் நீங்கள் பொருள் பற்றிக் கவலைப்பட வேண் டாம். நான் இருக்கின்றேன் என்று ஆதரவு மொழி கூறினார். நான் மீண்டும் அப்பதவியில் திரும்பச் சேர்ந்து கொண்டேன். ஆதலின், அவரிடம் உதவி பெறும் நிலையில் இல்லை. எனினும் அவர் சொற்கள் என்றும் மதிப்புக்குரியவை. மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை தமிழ்க் கல்லூரியை நிலைநிறுத்துவதற்கு நன்கொடை பெறச் சிங்கப்பூர், மலேசியா சென்றோம். பெரியகருப்பன் அங்கிருந்து எங்களை வரவேற்றுப் பெருநிதி பெறத் துணைசெய்தார். தமிழ் நெஞ்சமும் கொடை நெஞ்சமும் நட்புப் பண்பும் நிறைந்த பெரியகருப்பனார் மறைவு நம்மை விட்டு விரைவில் அகலாது நின்றான், கிடந்தான், இருந்தான் தன் கேள் அலறச் சென்றான் என்ற உலகியல் மறைவு இவருக்கு வரவில்லை. இது இவருக்கு இவ்வாறு வரக்கூடாத சாவு. எங்கேனும் பெரிய கருப்பன் என்ற ஒரு பெயரைக் கேட்டால் நமக்குத் தமிழ்க் கல்லூரிப் பெரியகருப்பன் எண்ணம் தான் எழும். அவர்தான் இன்னும் உயிருடன் உள்ளாரோ என்ற ஆவல்தான் எழும். அத்தகைய பாசம் அவரிடத்து நமக்கு உண்டு. உடல்நலம் குன்றியிருக்கும் பெரியகருப்பன் மனைவியர் விரைவில் உடல் நலம் நன்கு பெற்றுத் தந்தையும் தாயுமாய் இரு பொறுப்பையும் ஏற்றுப் பெருங்குடும்பத்தைக் காக்க வேண்டு மென்று இறைவனை வருத்துவோம். இதுவே இன்று நம் தொழுகை. பொழிவு -8 நாள் : 12.5.86 திங்கட்கிழமை, காலை 10 மணி 26 சித்திரை 2017 இடம் : திருச்சிராப்பள்ளி நிகழ்ச்சி : மணிவாசகர் நூலகம், திருச்சிராப்பள்ளி, கிளை திறப்பு தலைமை : வ.சுப. மாணிக்கம் தலைமைப் பொழிவுச் சுருக்கம் பேரன்புடையீர், நாணயமான நிலைமை எனப் பெயர் பெற்ற பாரி நிலைய உரிமையாளர் செல்லப்பனார் மரபுப்படி இன்று புதுக் கணக்கு எழுதியுள்ளார்கள். பேராசிரியர்கள், முதல்வர்கள், எழுத்தாளர் கள், பல்துறையறிஞர்கள். திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தார் பலரும் இக்கிளை திறப்பு விழாவிற் கலந்து கொள்கின்றனர். எவ்வளவு பெரிய மதிப்பு நிலையாக இருந்தாலும் வேறு வணிகம் போல, இதில் பெரும் பொருள் குவிந்துவிட முடியாது. மொழிக் தொண்டும் கல்வித் தொண்டும் அறிவுத் தொண்டும் பதிப்பக வணிகத்தினின்றும் பிரிக்க முடியாதவை. பெரும் பாலும் நூல் வெளியீடுகள் இன்றும் தனியார் நிறுவனங்களின் பணிகளாகவேயுள்ளன. முன்பெல்லாம் பாடநூல்கள் வெளி யிட்டு வருவாய் பெருக்கும் வாய்ப்பு பல பதிப்பகங்கட்கு இருந்தது. அவ் வருவாயைக் கொண்டு செவ்விய இலக்கிய இலக் கணங்களையும் அரிய நூல்களையும் தொண்டாக இப்பதிப்ப கங்கள் வெளியிட்டுத் தமிழைக் காத்தன. சில ஆண்டுகளாகப் பாடநூல் வெளியிடும் முழுவுரிமையையும் இதற்கென அமைந்த தமிழ்ப் பாடநூல் நிறுவனம் ஏற்றுக் கொண்டுவிட்டது. அதனால் எந்தத் தனியார் பதிப்பகமும் மிக முந்துற்று நல்ல நூல் களை அடக்க விலையில் வெளியிட வியலவில்லை. இந் நிலை யிலும் சில பதிப்பகங்கள் மேலான செந்நூல்களை வெளியிடு வதைத் தம் கடமையாகவும் தம் நிறுவனத்துக்கு நன் மதிப்பா கவும் கருதுகின்றன. பாரிநிலைய சங்கவிலக்கிய முழுதையும் பன்னிரண்டு உரூபாவுக்கு வெளியிட்டுத் தமிழ்த் தொண்டு செய்தது. மணிவாசகர் நூலகம் பல துறைகளில் உயர்நூல் களைப் பதிப்பித்துப் பல பரிசுகளை வென்றுள்ளது. மக்கள் பொதுவாகத் தமிழ் நூல்களை வாங்குவதில்லை என்ற ஒரு குறை சொல்லப்படுகின்றது. வாரவிதழ்களையும் கதையிதழ்களையும் சில மெல்லிலக்கியங்களையும் படிக்கவே மக்கட்கு ஆர்வம் பெருகியுள்ளது. இதற்குக் காரணம் மக்கள் குறையன்று. தமிழ்க் கல்வித் தரம் மிகக் குறைவு. புதிய சொற் பயிற்சிகள் இல்லை. அதனால் உயர்நூல்களை விரைந்து படிக்கும் தகுதியில்லை. தெரிந்த சில சொற்களுக்குள்ளேயே உயர்நூல்கள் எழுதிவிட முடியுமா? சிந்தனைகளைச் சொல்லி விட முடியுமா? இன்று என்றுமில்லாத அளவுக்குத் தமிழறிவுத் தரம் குறைந்து வருகின்றது. ஒரு முழு நூலாவது பலர் படித்திருப் பார்களா? ஒரு நூலிற் கூட ஒதுக்கிவிட்டு மனம் போல சில வற்றைப் படிக்கும் குறுக்குப் போக்கே பெருகி வருகின்றது. மேலும் வேண்டாத தீய ஒரு போக்குத் தமிழுக்கு ஏற்பட்டிருப் பது கண்டு வருந்துகின்றேன். தமிழ் மொழியில் ஒலிகள் கூடுதல், எழுத்துக்கள் கூடுதல் சீர்திருத்தம் வேண்டும். பிறமொழிகளைக் கலந்தால்தான் தமிழுக்கு சொல்லுந்திறமையாகும் என்று என்னென்னமோ தமிழுக்குக் குறையறைய வலுவான சிலர் புறப்பட்டிருக்கின்றார் கள். நாமறிந்தவரை தமிழ் மொழிதான் ஒலி சிலவாகவுடைய மொழி, எழுத்து வடிவு பொருத்தமாக அமைந்த மொழி. இந்திய பிற மொழிகளில் தமிழை விட உயிரிலும் மெய்யிலும் இருபது ஒலிகள் கூடுதல். அதற்கு தக்கபடி வரி வடிவங்களும் கூடுதல். இப்படிக்கு மேலாக இன்னும் சில பல மொழிகளில் எகர ஏகரங் கள் கூட இல்லை. தமிழ் தொல்காப்பியம் காலந்தொட்டு ஒலி முப்பது என்ற வரம்புடையது. கையகல ஓர் எழுத்தட்டைக்குள் தமிழின் அவ்வளவு எழுத்துக்களையும் அடக்கிவிடலாம். உயிர், மெய், உயிர்மெய் என்ற முவ்வகையும் கையகலத் தாளில் அடங்கி விடும். இயல்பான குழந்தை ஐந்தேநாட்களில் இவற்றைச் சொல்லவும் எழுதவும் செம்மையாகப் பழக்கிவிடலாம். இந்தச் சிறுதாளைக் கற்றுவிட்டால் தொல்காப்பிய முதலான எந்தத் தமிழ் நூலையும் குழந்தை ஓட்டமாகப் படிக்கமுடியும். எழுத்துக் கூட்டிப் படிப்பது தமிழ் முறையாதலின் படிப்போட்டத்திற்குத் தடையிராது. நூல்களின் பொருள் புரிவது நூற் பயிற்சியைப் பொறுத்தது. ஆனால் நூலின் சொற்களைப் படித்துவிடுவதற்கு எந்தத் தடையுமில்லை. இப்படி அருமையான ஒரு மொழி தமிழ். நாம் மிகவும் போற்றிப்படிக்கின்ற ஆங்கிலத்தை எண்ணி ஒரு கனம் பாருங்கள். எழுத்துக்களைப் படிக்குமுறை சொல்லைப் சொல்லப் பயன்படாது. ஒவ்வொரு சொல்லையும் சொல்லு தற்கு ஒரு பயிற்சி வேண்டும். எழுத்தொலிக்கும் சொல்லொ லிக்கும் ஆங்கில முதலான ஐரோப்பிய மொழிகளில் உறவில்லை. பிரெஞ்சு மொழியில் எழுத்து பலவிருக்கும். சொல் லாகச் சொல்லும்போது சொல்லொலி சிறிதாக இருக்கும். மேலும் ஆங்கிலத்தில் ஒரு வினைச் சொல்பின்வரும் முன் னொட்டுக்கேற்ப முழுப் பொருளும் மாறுபட்டுவிடும். இவ்வாறு தமிழில் இல்லை. அதனாற்றான் யாமறிந்த மொழி களிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பன்மொழி கற்ற பாரதிப் பெருமகன் தனித்துப் புகழ்ந் தான். தமிழ் தன் தாய்மொழி என்பதற்காக அவர் புகழவில்லை. இனிதாவது மட்டுமன்று; எளிதாவதும் எங்கும் காணோம். அண்மையில் அரசு விதித்த ஆணையெழுத்தால் குழந்தைகள் இந்த ஆணையெழுத்துக்களையும் நடைமுறை யெழுத்துக் களையும் கற்க வேண்டிய கூடுதலான சுமை ஏற்பட்டு விட்டதை யும் இதனால் இச்சிறு குழந்தைகள் விரைந்து செய்தித் தாள் களையும் பல நூல்களையும் படிக்க வியலாச் சூழ்நிலையையும் நாம் சிந்தித்துப் பார்க்கவில்லை. மாற்றமே புரட்சி என்று மயங்கு கின்றோம். மாற்றத்தின் நல்ல தீய பயன்களைத் தொடர்ந்து கவனிக்கத் தவறுகின்றோம். இந்நிலையில் பதிப்பாளர்கட்குப் பெருந்தமிழ்த் தொண்டுக்கு இடம் பெருகுகின்றது. மணிவாசகவுரிமையாளர் திரு. மெய்யப்பன் நன்கு தமிழகற்ற பேராசிரியர் செய்யுந்திறம் படைத்தவர், ஆள் வினைமிக்கவர் வீண் பொழுதுபோக்காத கடின உழைப்பாளி. தமிழுக்கு எந்தெந்தத் துறையில் ஆக்கஞ் செய்யவேண்டுமென்று திட்டஞ் செய்து கொண்டேயிருக் கின்றார். தக்கவர்களிடம் இதுபற்றிக் கருத்துக்களையும் கேட்டுக் கலந்து தெரிந்து கொள்கின்றார். மணிவாசக நூலகம் ஓர் ஆலமரம். அதன்வேர் வலு வானது. இம்மரத்தின் நான்காவது விழுது திருச்சிராப் பள்ளிக் கிளை. இவ்விழுது விடுவதற்கு இன்னும் பல நகரங்களும் உண்டு. தில்லி, பம்பாய், கல்கத்தா முதலான வடமாநிலங் களிலும் மணிவாசகர் நூலகம் கிளை விடவேண்டுமெனவும் இந்தியா எங்கும் தமிழ்த் தொண்டு செய்யும் நூலகமாக வளர்ந்து பரந்து ஓங்கவேண்டும் எனவும் வாழ்த்துகின்றேன். உரிமையாளர் மெய்யப்பனின் தந்தையார் சண்முகனார் தூயதுறவி. வள்ள லாரின் பெருந்தொண்டர். நல்லுள்ளம் மிக்கவர். “தந்தையருள் வலியாலும்” என்று பாரதியார் பாடியபடி தந்தை சண்முக னாரின் அருளாலும் மணிவாசகர் நூலும் நன்கு நீடித்துத் தழைக்கும் என்று வாழ்த்துகின்றேன். மணிவாசகர் நூலகம் தன்பெயருக்குத் திருவாசகத்தை மலிவுப்பதிப்பாக வெளியிட்டுத் திருவாகத் தொண்டினை ஒரு குறிக்கோளாகவே செய்யவேண்டும் என்று என் விழைவைத் தெரிவித்துக் கொள்கின்றேன். உயிர்மாசுபோக்கி உயிரைத் தூய்மைப்படுத்தும் உயிர் நூல் திருவாசகம். அப்பணி இந் நூலகத்தின் தலையான கடமையாகும். பொழிவு -9 நாள் : 13.6.1986 வெள்ளிக்கிழமை காலை 10 மணி 30வைகாசி 2017 இடம் : ஈரோடு கலைக்கல்லூரி நிகழ்ச்சி : அனைத்திந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், 18ஆவது கருத்தரங்கு மாநாடு தலைமை : அறிஞர் வ.சுப. மாணிக்கம் தொடக்கவுரை: கல்வியமைச்சர் செ. அரங்கநாயகம் தலைமையுரைச் சுருக்கம் மாண்புமிகு கல்வியமைச்சர் அவர்களே, பல்கலைக் கழக மன்றப் பெருமக்களே, நம் கருத்தரங்கு நன்முறையில் 18 ஆண்டுகளாக இயங்கி வளர்ந்து வருகின்றது. அதற்குக் காரணம் மன்றத்தின் நல்லமைப் பாகும். ஆய்வையும் புலமையையும் தமிழையும் வளர்ப்பது ஒன்றே இம்மன்றத்தின் நோக்கம். எவ்வகையான தீர்மானமும் போடுவதில்லை. தேர்தல் என்பதில்லை. அச்சுக்கோ பிறருக்கோ வேண்டுகை செய்வதும் கிளர்ச்சி பூசல் செய்வதுமில்லை. பெரும் பொருள் கட்டணமாகச் சேர்ப்பதுமில்லை. ஆதலின் சீரான முறையில் நம் மன்றம் வளர்ந்து காளை பருவம் அல்லது குமரிப்பருவம் அல்லது பொதுவாகச் சொல்லின் குமரிப் பருவம் அடைந்துள்ளது. வளர்ச்சிக் கூறுகளை நம் மன்றம் நன்கு பற்றிநிற்கின்றது. ஆய்வு வளர்ச்சியைச் சிறப்பாக இளைஞர்களிடை வளர்ப்பது மன்றத்தின் எண்ணம். யார் எப்பொருளில் கட்டுரை எழுதி னாலும் ஏற்கின்றோம். ஆறு பக்க வளவில் மிகாமல் இருக்க வேண்டும் என்பதுதான் பெரிய வரம்பு. இவ் வரம்பினைப் பின்பற்றி நடப்பதால் பலர்க்கு எழுத்து வாய்ப்புக் கிடைப்ப தோடு கட்டுரைகளும் செறிவாக அமைந்து விடுகின்றது. பதினெட்டு ஆண்டுகளாக இந்தியா முழுதும் இம் மன்றத்தின் கருத்தரங்கு பல மாநிலங்களில் நடைபெற்று வருகின்றது. இம் மன்றத்தின் தொண்டினால் ஆய்வு வளம் சிறந்து நிற்கின்றது. இன்னொரு தனிச்சிறப்பும் இம்மன்றத்துக்கு உண்டு. கருத்தரங்கு நடைபெறும் நாளன்றே கட்டுரைகள் ஆய்வுக் கோவைகளாக அச்சிட்டு வழங்கப்பெறுகின்றன. இதுகாறும் 41 தொகுதிகள் வெளிவந்துள்ளன. சில ஆண்டுகளாக ஆய்வுத் துறையை வலுப்படுத்த வேண்டி, ஒரு நூல் பற்றி ஒரு தொகுதிக் கட்டுரையும் வெளியிட்டு வருகின்றோம். இது காறும் பல கட்டுரைகள் பல பக்கங்கள் 41 தொகுதிகளில் வெளிவந்துள. முதலிரண்டாண்டுக் கட்டுரைகள் அச்சாகவில்லை. மூன்றாவ தாண்டுக் கருத்தரங்கு முதல் ஆய்வுக் கோவை என்ற பெயரால் தொகுதிகள் வந்திருக்கின்றன. இதனாற் கட்டுரையாளர்கட்குப் புகழ் மதிப்பும் தமிழுக்கு ஆய்வுச் செல்வமும் மன்றத்துக்கு ஓரளவு வருவாயும் ஆய்வாளர் கட்குக் கருத்துச் செய்திகளும் ஆண்டுதோறும் கிடைக்கின்றன. இத் தமிழாய்வு மன்றத்தினை நிறுவி நின்றியங்குமாறு நல்லடிப் படைகளைத் தொடக்கத்திலேயே வகுத்துக் கொடுத்த பெருமகன் பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆவர். அவர் தொண்டினை இன்று நாம் நன்றியொடு நினைக் கின்றோம். இக்கருத்தரங்கிற்கு மாண்புமிகு கல்வியமைச்சர் அரங்கநாயகம் அவர்களும் தமிழுணர்வும் தமிழ்ப் புலமையும் மிக்க துணைவேந்தர் குழந்தை சாமி அவர்களும். புலவர் பெருமகன் உரைவேந்தர் அவ்வை துரைசாமி பிள்ளை மகனாரும் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறைச் செயலருமான அவ்வை நடராசன் அவர்களும் பல மாநிலங்களின் தமிழ்ப் பேராசிரியர்களும் உலகம் புகழும் பகுத்தறிவுப் பெருந் தந்தை பெரியார் பிறந்த ஈரோடு நகரத்துக்கு வந்திருப்பது நம் சிறந்த தொண்டுக்கு நல்லுரமாகும். வருங் காலத்தில் உள்ளது சிறக்கவும் புதியன கலக்கவும் திட்டங்கள் கொண்டு வருவோம். நம் மன்றத்தின் கருத்தரங்கிற்கு எம் மாநிலத்தில் நடந்தாலும்தவறாது வந்து கலந்து சிறப்பு நல்குவர் நம் கல்வியமைச்சர். இந்த ஆண்டும் வந்து கலந்ததோடமையாமல் மையவரசு கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கைபற்றியும் மாதிரிப் பள்ளி பற்றியும் நெடுநேரம் பேசிப் பல முனையிலும் விளக்கி, இக் கொள்கை தமிழ் மொழிக்கும் தமிழ் எழுத்துக்கும் இந்திய வொருமைப்பாட்டிற்கு எவ்வளவு தீதானது என்று நாட்டுப் பார்வையிலும் மொழிப் பார்வையிலும் எடுத்துச் சொன்னார்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலான இந்த அறிவுப் பொழிவைப் பாரத முதலமைச்சர் இராசீவ் காந்தியும் மனித வள மேம்பாட்டுத் துறையமைச்சர் நரசிம்மராவும் இங்கு வந்து கேட்டிருந்தால், தங்கொள்கையை மாற்றிக் கொண்டிருப்பர். அதற்கு அவர்கட்கு இம்மன்றத்தில் பேராளராகும் தகுதி யிருந்தாலல்லவோ வந்திருக்க முடியும். அமைச்சர் கருத்தினைத் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை பற்றி ஒரு சில சொல்லுவேன். நான் சொல்வது தமிழ் மொழிக்கு மட்டுமன்று, தமிழ்க் குழந்தைகட்கு மட்டுமன்று. இந்தியாவின் பன்மொழிகட்கும் பன்மொழி மக்கட்கும் பொருந்தும். நமக்கு நெருங்கிய நிலைபற்றித் தமிழ்மேல் வைத்துப் புலப்படுத்துகின்றேன். தமிழே நம்மொழிக் கொள்கை. முதற்கண் தமிழ், தமிழன்; பின்னர் இந்தியன்; தமிழ் வழிப் பாரதம் என்று இயற்கை யுணர்வு தழுவி அமைச்சர் புதிய மொழிக் கொள்கையின் விளைவுகளை ஒரு மணிப் பொழுது தமிழ்ப் பேராசிரியர்கள் கூடிய இவ் விந்திய மன்றத்தில் விளக்கிக் கூறினார். புதிய கல்விக் கொள்கை இயல்பான கல்வி நெறிக்கு மாறாக இருப்பது பற்றித் தமிழ்நாட்டுத் துணைவேந்தர்களும் கல்வியறிஞர்களும் எதிர்ப்புச் சொல்லாது அடக்கமாக இருக்கின்றார்கள். தமிழக வரசின் நல்ல கல்விக் கொள்கைக்குத் துணையறிவிப்புச் செய்யாமலும் இருக்கின்றார்கள். பாரத முதலமைச்சர் இராசீவ் காந்தியின் கருத்தாகப் புதிய கல்விக் கொள்கை வெளியிட்டுப் பரப்பப்படுதலின், நம் துணை வேந்தர்கள் இது அரசியற்பட்டது. நமக்கென்ன வம்பு என்று இருக்கின்றார்களா? இன்று அரசியற் சாராதது எதுவுமில்லை. ஆதலின் கல்விக் கொள்கைகளும் அரசியற் சார்புடையதாகத் தான் இருக்கும். எனினும் கல்வியறிஞர்கள் தத்தம் கருத்தைச் சொல்லும் உரிமை இல்லாமல் இல்லை. தாய் மொழிக் கல்வி என்பது உலகமெல்லாம் ஒப்புக் கொள்ளப்பட்ட தாய்ப்பால் போலும் இயற்கைக் கொள்கை காந்தி, தாகூர், இராசாசி, காமராசர், அண்ணா, திரு.வி.க, பண்டிதமணி என்ற பல பெருமக் களும் வலியுறுத்திய கொள்கை. தாய்மொழி பாட மொழியாக இல்லாத கல்விக் கொள்கை வேறுவகை எவ்வளவு சிறப்பிருப்பினும் மணல் மேற் கட்டிய கட்டிடமாகித் தாழ்ந்து விடும். கல்வியில் ஒரு மொழி வாயில் தொடர்ச்சியாக இருந்தாற்றான், குழந்தைகளின் மொழித் திறனும் சிந்தனைத் திறனும் செய்தி நிறைவும் ஏற்படும். ஐந்தாவது வரை ஒரு பாடமொழி, ஆறாவது ஒன்பதாவது முதல் வேறுபாட மொழி என்பது குழந்தைகளின் சிந்தனையில் திருவிளையாடல் செய்வதாகும். படிப்பில் மேல் வகுப்பு ஏற ஏறத் துறை வளர்ச்சிகளும் துறை மாற்றங்களும் இருக்க வேண்டுமெயன்றி மொழி மாற்றம் என்பது கூடவே கூடாது. எட்டாவது அட்டவணையில் எண்ணப்பட்ட பதின் மூன்று மொழி கட்கும் பாலர் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை ஒத்தவுரிமையும் வாய்ப்பும் வழங்கிப் பாடமொழிப் பேறு தருவதே உரிமை நெறி. மொழியைப் பறிப்பது அம் மக்களின்உரிமையைப் பறிப்பதாம். மொழி வளரும் வாய்ப் பினைப் பறித்துவிட்டுப் பேச்சுரிமையுண்டு என்று குடியரசு பேசுவது ஏய்ப்புசையாகும். புதிய கல்விக் கொள்கையை ஒப்புக் கொண்டால், இந்தி தவிரத் தமிழ் மொழி முதலான பன்னிரண்டு மொழிகளும் ஐந்தாவது வகுப்புக்குமேல் வளர்ச்சி பெறாத குறு மொழிகளாக நின்றுவிடும். மக்களும் மேல் வகுப்பில் இந்தியோ ஆங்கிலமோ பாடமொழியாக வருமென்றால், ஏன் அவ் வளவுக்கு காத்திருக்க வேண்டும் என்று பாலர் வகுப்பு முதலே இந்தி அல்லது ஆங்கிலத்தைத் தங் குழந்தைகள் படிக்கப் புகுத்தி விடுவார்கள். இப் போக்கு என்ன செய்யும்? கீழ்ச் சிறு வகுப் பிலும் தாய்மொழிப் படிப்பை அறுத்துவிடும். நாட்டொருமைப்பாடு எனவும் நாட்டின் பண்பாடு களைக் காப்போம் எனவும் இத் திட்டம் பட்டி தொட்டி ஏழைக் குழந்தைக்கே எனவும் முரசறையும் திரு. இராசீவ் காந்தியார் தாய்மொழியைப் புறக்கணித்துச் செய்து விடலாம் எனத் திட்டமிடுவது பேதைமையாகும். பன்மொழிச் செல்வம் பாரத நாட்டிற்குப் பெருஞ் செல்வம். தாய்மொழி வாயிலாகவே விடுதலையுணர்வு பெற்று உரிமை யடைந்தோம், விடுதலை யுணர்வுக் கென்று இந்தியிலும் ஆங்கிலத்திலும் மாதிரிப் பள்ளிகளா அமைத்தார்கள்? இன்ன நெறிகள், இன்ன நோக்கங்கள் என்பன பொதுவாக இருக்கலாம். இன்ன மொழியிற்றான் என்று தாய்மொழியை நில மொழி யைப் புறக்கணிப்பது பேதைமையுள் எல்லாம் ஒரு பேதைமை யாகும். ஒருமைப்பாடு இந்தி என்ற ஒரு மொழியினாற் முன் வரும் என்ற பறையறைவு பொய்யானது, தீங்கானது, பகையானது. இன்று இந்தியாவில் வட மாநிலங்களிற்றான் குழப்பமும் பூசல் களும் கிளர்ச்சிகளும் மிகுதி. பஞ்சாபு மக்களுக்கும் அரியானா மக்களுக்கும் காசுமீர மக்களுக்கும் பீகார் உத்தரப்பிரதேச மக்கட்கும் இந்தி தெரியுமே’ என்ன அமைதியைக் கண்டோம். ஒருமைப்பாடு உணர்வைப் பொறுத்தது, மொழியைப் பொறுத்ததன்று. ஓரளவேனும் மொழியைச் சார்ந்தது எனின் அது தாய்மொழியைச் சார்ந்ததாகத்தான் இருக்கும். தன் பெயரைக் கேட்கும்போது ஒருவன் திரும்பிப் பார்ப்பது போலத் தாய்மொழியைக் கேட்கும் போது சொல்லும் போது தான் சிந்தனையியக்கம் ஏற்படும். கல்விக் கொள்கையில் எல்லா வகுப்பிலும் எல்லாத் துறையிலும் தாய்மொழிக்குத்தான் முதன்மை. இதில் கருத்து வேறுபாட்டினை ஒத்துக் கொள்ள வியலாது; ஒத்துக் கொண்டு குழந்தையறிவுகளைத் திரிக்கக் கூடாது ஒரு மொழி வாயில் தொடர்பே ஒழுங்கு நெறியாகும். இந்தக் காலத்துச் சிலமொழியறிவு மிக மிக இன்றி யமையாதது. பிற மொழிகள் கற்கப் பள்ளிகள் வாய்ப்பு கட்டாயம் வழங்கவேண்டும். இதுவும் இக்காலக் கல்விநெறியில் பிணைப் பான ஒரு கூறு. தாய்மொழி பாட மொழி; பிற மொழிகள் துணையாடங்கள். இது இந்திய மொழிகள் எல்லா வற்றிற்கும் ஒத்த பொதுக்கோட்பாடு. பொழிவு -10 நாள் : 15.6.1986 ஞாயிறு காலை 10 மணி, 1 ஆனி2017 இடம் : ஈரோடு வேலா நிலையக்குறளியப் பள்ளி யரங்கம் நிகழ்ச்சி : வேலா நடத்தும் குறளாய மன்றம், கூட்டத் திற்குக் குறளாய பெருமக்கள் கலந்து கொண்டனர் கலந்துரை : வ.சுப. மாணிக்கம் உரைச் சுருக்கம் பேரன்புக்குரிய குறளாயப் பெருமக்களே, திருக்குறட் பெருமகன் வேலா பல்லாண்டுகளாகக் குறட் பணி செய்வதை நாடறியும். தன் பொருட்செலவில் குறள் பரப்பு நெறிகளைச் சோர்வின்றி நடத்தி வருகின்றார். வேலாவின் தமிழ்ப் பணிகளையும் தன்னல மற்ற தொண்டினையும் பல்லாண்டுகளாக அறிவேன் இப்போதுதான் நேரே வந்து கலந்து கொண்டு இன்புறும் வாய்ப்புப் பெற்றேன். திருக்குறட்கு ஓர் செயல் மன்றமாக; ஓரியக்க மன்றமாக திரு. வேலா இதனை வளர்த்து வருகின்றார். வழக்கறிஞர் ஆனந்தனார். பேராசிரியர் பாலசுப்பிரமணியம் புலவர் தங்கவேலனார் வேலா இராச மாணிக்கனார்க்கு உற்ற தோழர்களாக நிற்பதைக் கண்டு மகிழ் கின்றேன். திருக்குறளை அகவியக்கம், புறவியக்கம் என்ற இரு வழியிற் செயற்படுத்தலாம். அக வியக்கந்தான் திருக்குறளுக்கு நேரான செவ்வியது. மனமாசின்மையே அகவியக்கமே. தனி மனிதன் உள்ளத் தூய்மையே திருக்குறளின் குறிக்கோள். குழுமம் என்பது தனிமனிதன் கூட்டுறவு. ஒருவன் தன்னை நெறிப் படுத்திச் செம்மைப் படுத்தி வாழவேண்டும். தன்னைப் பற்றிய தற்சிந்தனை வேண்டும். ஒரு சில குறளின் தொடர்களை வைத்து அடிக்கடி தன் வாழ்வோடு பொருத்திப் பார்த்துப் பயிற்சி பெறுவது நல்லது. தன்னுடைய நல்ல பண்புகளை மேலும் எப்படி வளர்ப்பது, தன்னுடைய தீய நெறிகளை எப்படிக் குறைப்பது, தன் மனம் அறிவு உணர்வு, பிறரொடு தொடர்பு களை எவ்வாறு நலப்படுத்துவது வளப்படுத்துவது என்ற தன்முகச் சிந்தனைகளே திருக்குறட் செயல்களாகும். நாம் திருக்குறளைப் பரப்புவது, படிக்கச் செய்வது, புறவியக்கம் நடத்துவதெல்லாம் கூட முடிவாக அகவியக்கமாக வலுப்பட வேண்டும். இன்றைய சூழலில் திருக்குறட்கும் ஒரு படையணி இருப்பதை வரவேற்கின்றேன். கால விளம்பரத்துக்கு ஒட்டிக் கவர்ச்சி வனப்பில், சில புறக்கோலங்களை மேற்கொள்வதில் தவறில்லை. ‘படைத் தகை யாற் பாடு பெறும்’ என்று ஆரவாரத் தையும் ஓரளவு உடன்பட்டார் திருவள்ளுவர். ஆதலின் திருக்குறட் படைக்கு ஏற்ற சின்னமும் கொடியும் இருக்கலாம். மகளிர் அணி, இளைஞரணி, மழலையர் அணி என்றெல்லாங் கூட திருக்குறட் படையில் பிரிவணிகள் இருக்கலாம். தற்சிந்தனை, மனத் தூய்மை என்ற அகவியக்கமும் திருக்குறட் படையணிகள் என்ற புறவியக்கமும் கூடும் இவை யிரண்டிலும் குறளாயம் ஈடுபட்டிருக்கின்ற புதுமையைக் கண்டு பாராட்டுகின்றேன். திருக்குறளில் காமத்துப்பாவென ஒன்று இருப்பதைப் பலர் மறந்துவிட்டனர், மறக்கடிக்கின்றனர். தகாத ஒரு பகுதி இறுதியில் இருப்பதாகத் துணிவொடு நினைக்கின்றனர். அக வியக்கம் என்ற உள்ளத் தூய்மைக்கு இன்றியமையாத மருந்துப் பகுதி காமத்துப் பாலாகும். காமத்துப் பால் என்ற அகத்திணை தமிழர் கண்ட இல்லற நெறியாதலின், மரபுத் தொடர்ச்சி விடாதபடி, திருவள்ளுவர் காமத்துப்பால் நல்லியல்போடு பாடினார். காமத்துப் பால் என்பதற்கு ஒவ்வொருவரும் விரும்பிக் கற்க வேண்டிய பகுதி என்றுகூடச் சொல்லலாம். கற்க கசடறக் கற்பவை என்பதனுள் காமத்துப் பாலும் ஒன்றாகும். இன்று உலககெங்கும் மனநோய் மருத்துவத்துறை வளர்ந்து வருகின்றது. “மயிரினும் நுண்ணிது காமம், சிலர் அதன் செவ்விதலைப்படுவார்” என்று ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே இதன் சிறப்பை உணராதவர் பலர் என்று வள்ளுவர் எச்சரித்துள்ளார். குடும்ப வாழ்விலும் தனிமனித வாழ்விலும் பல மனச்சிக்கல்கள் காமக்கோளாறுகளால் பிறந்து அலைக் கின்றன. ஆதலின் புறவியக்கத்தில் காமத்துப் பாலுக்கும் ஒரு நல்லிடம் காண வேண்டும். பொழிவு - 11 நாள் : 4.7.1986, வெள்ளி மாலை 7 மணி, 20 ஆனி 2017 இடம் : சென்னை சீனிவாச சாத்திரி மண்டபம் நிகழ்ச்சி : முகிலன் யாத்த ‘கானகம்’ என்ற கவிதை நூல் வெளியீடு சிறப்புரை : மாண்புமிகு வனத்துறை யமைச்சர் இராம. வீரப்பன் வெளியீட்டுரை : அறிஞர் வ.சுப. மாணிக்கம் பொழிவுச் சுருக்கம் மாண்புமிகு அமைச்சர் அவர்களே, பெருமக்களே, வரவேற்புரை கூறிய அன்பர் கவிதையிடுதல் புலவர்க்கே உரியது; ஏனையோர் பாடக் கூடாது என்று புலவர்கள் செருக்கு டையவர்களாக இருக்கின்றார்கள். ஏனையோருக்கும் பாட வுரிமையுண்டு, பாடும் வன்மையுண்டு என்று முகிலன் புலப் படுத்தியுள்ளார் என்று ஒரு கருத்தினை வெளியிட்டார். அப்படி யொரு தடிப்பெண்ணம் புலவர்கட்கு என்றும் இருந்ததில்லை. சங்கச் சான்றோர்களில் பலர் மருத்துவராகவும் உழவராகவும் வணிகராகவும் குறவராகவும் அரசராகவும் இருந்த வரலாற்றை நாம் அறிவோம். அண்மைக் காலத்தும் பேராசிரியர் சுந்தரனார், நீதிபதி வேதாசலனார், வெள்ளக் கால் சுப்பிரமணியனார், வ.உ. சிதம்பரனார், நாவலர் பாரதியார், இப்போது துணைவேந்தர் வா.செ. குழந்தைசாமி இன்ன பெருமக்கள் பிறதுறையின ரல்லவா? ஆதலின் கவிதைப் படைப்புரிமை எல்லா மாந்தர்க்கும் பொது. யார் பாடினாலும் பாராட்டுகுரியோர் புலவர் என்ற முதன்மை இன்றும் நிலவுகின்றது. முகிலனார் கானகக் கவிதை யைப் புலவர்களாகிய நாங்கள் பாராட்ட வேண்டும், எங்களால் அவர் பாராட்டப்பட வேண்டும் அதுதான் சிறப்பு என்று எம்போல்வாரை அழைத்திருக்கிறீர்கள். ஊரகக்காடு வளர்ச்சி என்ற இயற்கையியக்கத்தை நம்மரசு பரப்பி வருகின்றது. ஊர்கள், மனைகள் சுற்றுச் சூழலெல்லாம் சோலையாக இருக்க வேண்டும் என்பது கருத்து. தமிழினம் இயற்கையைக் காதலித்த இனம். சங்கப் பாடல்கள் இயற்கை சான்ற பாடல்கள் என்பதனை ஓரிரு பாடல்களைப் படித்தாலும் பளிச்செனத் தெரியும். தெய்வம் உணாவே மாமரம் புட்பறை என்ற தொல்காப்பியத் தொடர் இதனை உறுதிப்படுத்தும். சிலப்பதிகாரம் காடு காண் காதை, கானல்வரி முதலிய பகுதி களிலும் காப்பியங்களின் நாட்டுப் படலங்களிலும் இயற்கைச் சூழலைக் காணலாம். “காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற்றிப் பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து தேமாங்கனி சிதறி வாழைப்பழங்கள் சிந்தும் ஏமாங் கதமென் றிசை யாற்றிசை போய துண்டே ” என்று திருத்தக்கதேவர் வெற்றிடம் என்பதில்லாதபடி மரங் களின் செறிவைத் தொகுத்துக் காட்டுகின்றார். உயரத் திற்கேற்ப மரங்களின் இனங்களை வளர்த்திருக்கும் வனப்பையும் வெளிப்படுத்துகின்றார். திணை நிலமக்களின் வாழ் மனை களிலும் வேலிகளிலும் கூடைகளிலும் படப்பைகளிலும் மரஞ் செடி கொடிகள் தழுவி முத்தமிட்டுக் கிடப்பதைப் பாடுவது புலவர் விருந்தாக இருந்தது. முகிலனார் கானகக் கவிதையைப் பாடியிருப்பது சங்க மரபை நமக்கு நினைவூட்டுகின்றது. கா, கான், கானகம், கானல் என்றெல்லாம் சோலைகட்குப் பெயருண்டு. பூங்கா, கானாடு, கோடைக் கானல் என்று வழங்குகின்றோம். வனம் என்பதும் வனப்பு என்ற பொருளைத் தரும் தமிழ்ச் சொல்லேயாகும். சங்கவுணர்வோ சங்கவறிவோ சங்கமரபோ அறியாதவன் கவிதை தமிழூற்றம் உடையது ஆகாது. அத்தகைய குறைபாடு முகிலனாரிடம் இல்லை. கற்பனைகளும் உவமைகளும் முகிலனாரின் சங்கவுணர்வைச் சாற்றுகின்றன. “பத்துப் பாட்டைப் போல் உயர்ந்த - பல பயன் மரங்களும் ஓங்கும் எட்டுத் தொகை நூலை ஒத்த - பழம் ஈயும் மரங்களும் உண்டாம்” என்ற உவமைகள் இலக்கியவுவமைகளாம். காட்டு முல்லை நிலத்தில் பல்வகை மரங்கள் வேறு வேறு உயரங்களாக இருக் கின்றன. எல்லாமே உயர்ந்த மரங்கள் என்றாலும் அந்த நீண்ட மரங்களுக்குள்ளும் ஏற்றத்தாழ்வுண்டு என்பதற்குப் பத்துப் பாட்டுக்களைக் காட்டியது புதிய பொருத்தமான அறிவுடை உவமம் ஆகும். திருமுருகாற்றுப் படை 317 அடிகள் பொருநராற்றுப் படை 248 அடிகள் சிறுபாணாற்றுப்படை 269 அடிகள் பெரும்பாணாற்றுப்படை 500 அடிகள் முல்லைப்பாட்டு 103 அடிகள் மதுரைக் காஞ்சி 782 அடிகள் நெடுநல் வாடை 188 அடிகள் குறிஞ்சிப் பாட்டு 261 அடிகள் பட்டினப்பாலை 301 அடிகள் மலைபடுகடாம் 583 அடிகள் ஏனைத் தொகைகளை ஒப்பிடும்போது முல்லைப் பாட்டு நீண்ட பாட்டாகும். 103 முதல் 782 வரை பல்வேறு தரத்தில் பத்துப் பாட்டின் நீட்சியமைந்தோடுகின்றது. பல்வேறு உயரத்தில் வளமாகச் செறிவாக ஓங்கிய மரங்கட்குத் தமிழ் பத்துப் பாட்டை உவமித்த சிறப்பு முகிலனார்க்கே உரியது. இவ்வாறே திருக்குறள் நாலடியார் சிறுபஞ்சமூலம் திரிகடுகம் முதலிய தொன்னூல் களையும் உவமைகளாக மாற்றும் தனியியல்பினை முகிலனாரிடம் காண்கின்றோம். உலகில் பொருள்கள் அளவின, அவற்றின் வடிவங்களே பயன்படும். ஒவ்வொரு பொருளும் மக்களின் கவர்ச்சிக்கு ஏற்பக் கோலம் பல பெறுகின்றன. எழுதுகோல், உடை, சேலை, செருப்பு, வளையல், மணிப்பொறி, விளக்கு, செம்பு, குவளை, குடம், நாற்காலி எல்லாம் பயன் ஒன்றாகவிருந்தாலும் காலந் தோறும் கவர்வடிவு புதுமையாகப் பெறுகின்றன. மக்களின் சுவைக்கேற்பக் கவர்ச்சிப் பன்மை உருவாகின்றன. இலக்கியத் திலும் புதிய வடிவங்கள் வளர்ந்திருப்பதை இலக்கிய வரலாற் றால் அறியலாம். புதிய வடிவப்படைப்பு நல்ல கவிஞனுக்கு ஓர் அடை யாளம். முகிலனார் இளங்கவியாக இருந்தாலும் சில புதிய வடிவங்களை இம் முதல் நூலிற் காட்டியுள்ளார். ‘வனவிலங்கு கள் மாநாடு’ என்ற தலைப்பு காலந்தோற்றிய வடிவாம். நாம் பாராள்மன்றம் வைப்பது போலவும் மாநாடு கூட்டுவது போலவும் உரிமைப்போர் தொடுத்துத் தீர்மான முடிவுகள் செய்வது போலவும் வனத்துறையும் விலங்குகள் அரிமா தலைமையில் யானை முன்னிலையில் கூடுகின்றன. மனிதர்களின் கொடுமையால் பல உயிர் வகைகள் அழிந் தொழிந்தன எனவும் விலங்குகள் அழிவதால் இந்தியப் பெருமை குறையும் எனவும் யானையின் வீரத்தைப் பாடுவது களவழி நாற்பது எனவும் மயில்தான் இந்தியத் தேசியப் பறவை எனவும் பொழிவுகள் இம் மாநாட்டில் நடைபெற்றன. சந்தனமரம், வெள்ளாடு, அரிமா, யாளி, மனித மதிப்பும் மரத்தின் மதிப்பும் இத்தலைப்புக்களில் நயமான கவிதைகள் வந்துள. ஆதலின் முகிலன் கவிதைத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்று வாழ்த்துகின்றேன். பொழிவு - 12 நாள் : 16.8.1986 சனி காலை 31 ஆடி 2017, 17.8.1986 ஞாயிறு மாலை 1 ஆவணி 2017 இடம் : சென்னை மறைமலையடிகள் நூல் நிலையம் நிகழ்ச்சி : ஈரோடு குறளாயம்: குறளியம், கூட்டங்கள், ஆண்டுவிழா(குறள்வேள் வேலா இசைமாணிக்கனார் நிறுவனர்) தலைமையுரை : கருத்தரங்கு வ.சுப. மாணிக்கம் பொழிவுச் சுருக்கம் 16.8.1986 திருக்குறட் பெருமக்களே, திருக்குறட் பாக்களளவு (1330) இக்கூட்டத்திற்குக் கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கமுடியாது. திருக்குறள் அதிகார எண்ணிக்கை (133) யளவு வந்தாலே சிறப்பாகும். இக் கூட்டத் திற்கு வந்துள்ளார் சிலரே யாயினும் ஒவ்வொருவரும் முன்னரே பல்துறையில் குறளைப் பரப்பி வருபவர்கள். ஒவ்வொருவரும் ஒருவகைத் தலைமையாற்றல் உடையவர்கள், நாம் இங்கு புலப்படுத்தும் கருத்தோட்டங்களைத் தம் மனத்து வாங்கிக் கொண்டு பலர்க்கு எடுத்துச் சொல்லவல்ல சாம்பவான்கள். அத்தகைய ஆக்கச் சிறப்பினரே திருக்குறட்குத் தூணாவார்கள். குறளாயம் கண்டவரும் குறளிய இதழ் ஆசிரியருமான வேலா இராமாணிக்கனார், ‘ஈட்டியவெல்லாம் இதன் பொருட்டு’ என்றபடி தம் பொருளையெல்லாம் திருக்குறளின் தொண்டுக்கே வழங்குபவர். குறள் பரப்புவதையே வாழ்க்கை நெறியாகக் கொண்டவர். சில நாட்களுக்கு முன் ஈரோடு சென்றிருந்தபோது அவர் தம் ஆக்கப் பணிகளை நேரிற் கண் டேன். அவர் தொண்டுக்கு உறுதுணையாக என் மாணவர் பேரா சிரியர் பாலசுப்பிரமணியமும் நற்றமிழாசிரியர் தங்கவேல னாரும் பணியாற்றி வருவதையும் கண்டு மகிழ்ந்தேன். குறளாயத்தின் உறுப்பினர் ஆவதற்கு ஒரே ஒரு விதிதான் வைத்திருக்கின்றோம் எனவும் திருக்குறள் நம் மறை என்று உடன்படுவார் உறுப்பினராகலாம் எனவும் விளக்கமாகக் கூறினர். இது ஒரு நல்ல முறையே. எனினும் நான் கூடுதலான ஒரு விளக்கம் தர விரும்புகின்றேன். ஓர் எடுத்துக்காட்டு. வகுப்பறை யில் வரவுப் பதிவேடு எடுப்பதில் எளிய முறை ஒன்றுண்டு. யார் யார் வந்த மாணவர்கள் என்று கேட்கப் புகுந்தால் நூற்றுக்கு மேல் மாணவத் தொகையுடைய வகுப்பில் காலக்கழிவு வருமன் றோ. அதனால் வராதவர்கள் யார் என்று மட்டும் பார்த்தும் கேட்கும் வாராக் குறி போடுவதுண்டு. இந்த முறையைக் குறளாயமும் கொள்ளலாம். தமிழகத்தில் திருக்குறள் நம்மறை என்று எண்ணாதார் யாருமிருக்க மாட்டார்கள். உடன்படுவார் யார் என்ற உடன்பாட்டு முகத்தால் கேட்கப் புறப்பட்டால் எண்ணிக்கை எண்ணமுடியாது. ஆதலின் எதிர் மறை முகத்தாற் கேட்கலாம். திருக்குறள் நம் மறை என்று உடன்படாதார் யார் என்று கேட்டுப் பார்க்கலாமே. இம்முறையைப் பின்பற்றினால் எல்லாரும் நம் மறை திருக்குறள் என்று இசைபவராக இருப்பக் காணலாம். எல்லாரும் குறளிய வுறுப்பினராகும் தகுதியுடை யவர்களாகவே காணலாம். இது ஊக்கந்தரும் முறையாக குறளிய வுறுப்பினர்களாக எழுத்தளவிற் சேராவிட்டாலும் கொள்கை யளவில் உறுப்புத் தகுதியினர் எண்ணிப் பெருமிதங் கொள்ள லாம். திருக்குறள் வாழ்வுச் செயலுக்குரிய இயக்கநூல் என்பது குறளாயத்தின் கோட்பாடு. என் வள்ளுவநூலில் திருக்குறள் செயல்நூல் என முழுக்க முழுக்க முப்பதாண்டுகட்கு முன்பே உறுதிப்படுத்தியிருக்கின்றேன். ஆதலின் குறளாயத்தின் கோட் பாடு என்னை மகிழ்விக்கும் கொள்கையே. திருக்குறட் பார்வைபற்றி ஒருவகைத்திறன் செய்ய விரும்பு கின்றேன். திருக்குறள் செயல் நூலாக இருந்தாலும் அது தோன்றிய காலந்தொட்டு அதனைப் பார்க்க வேண்டிய முறை யில் ஒரு குறைபாடு புகுந்துவிட்டது. வழிவிலகிப் பார்த்துப் பயின்றுவிட்டோம். புதிய புதிய உரை காணும் பார்வையே அன்று முதல் வழக்காயிற்று. உரைகாணும் கருவூலமாகவும் புதிய வுரைகட்கு இடம் தரும் சுரங்கமாகவும் திருக்குறளைப் பரப்பி விட்டோம். உரை வளங்களும் உரை வேற்றுமைகளும் பல்கலாயின. இன்றுவரை அந்த ஒரு போக்கே வளரவும் காண்கின்றோம். இந்நூற்றாண்டிற் கூட எவ்வளவு உரைகள் வந்திருக்கின்றன. பிறமொழிகளில் மொழி பெயர்ப்பிகள் கூடப் புத்துரை காண முயன்றனர். எந்தத் தமிழ் நூலுக்கும் திருக் குறட்குப் போல உரையாசிரியர்களும் உரைகளும் பெருகிய தில்லை. திருக்குறள் உரைவளமே பெருகிவரும் உரை வளம். அண்மையில் இந்துச் செய்தித்தாள் கடிதப் பகுதியில் அமெரிக்காவில் உள்ள ஒருவர் திருக்குறளைக் குறிப்பிடும் போது இனியவுளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்ற குறட்கு ஒரு புதிய விளக்கம் காண்கின்றார். தன் தோட்டத்தில் பழங்கள் இருப்பவும் இன்னொருவன் தோட்டத்தில் காயைப் பறிப்பது போல என்று விளக்கம் தருகின்றார். நான்கு நாட்கு முன் என்னிடம் வந்த ஓர் எளிய மனிதர், ஓரளவு தமிழ் மனம் உடையவர். ‘குடம்பை தனித் தொழியப் புட்பறந்தற்றே’ என்ற குறட்குப் புதிய பொருள் கண்டிருப்பதாக விளக்கினார். திருக்குறளைப் படிக்கும் போ தெல்லாம் நினைக்கும்போதெல்லாம் உரைநயமும் உரைப் புதுமையும் காணும் ஒரே போக்கினைத்தான் எல்லா ரிடமும் வளர்த்து வந்திருக்கின்றோம். மெய்யாக கூறினால் உரைகாணும் முழுப்போக்கு திருக்குறளின் அடிப்படையன்று. உரைபெருகி யிருப்பதைத் திருக்குறட்குப் பெருமையாகக் கூறுவதைப் போலவே, பன்மொழிகளில் திருக்குறள் பெயர்க்கப்படுவதை யும் சிறப்பாகச் சொல்லி வருகின்றோம். ‘பொதுமறை என்று சொல்லியும்’ திருக்குறளின் நடைமறையை மறைத்து வருகின்றோம். திருவள்ளுவர் ஒவ்வோர் குறளையும் செயல் என்ற கட்டளைக்கல்லில் உரைத்து எழுதியவர். அறத்தை ஒல்லும் வகையாற் செய்க எனவும் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் எனவும் ஆற்றின அளவறிந்தீக எனவும் தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல்தலை எனவும் பொருளில்லார்க்கிவ்வுலகம் இல்லை எனவும் ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் எனவும் இரக்க இரத்தக்கார்க் காணின் எனவும் ஒவ்வொருவனும் தான் வாழ்க என்று உலகியலிலும் பல்லறங்கள் கண்டார். திருக்குறளில் மிகுதியாகப் பேசப்படும் செய்தி அரசிய லாகும். பொருட்பால் எழுபது அதிகாரம் உடையது. இதனை விடுத்து அறத்துப்பாலையே பரப்பும் வழக்காறு பெருகி விட்டது. திருக்குறள் அரசியல் நூலாக விருந்தும், இடைக்காலத் தமிழரசர்கள் ஆட்சி செய்யும்போது திருக்குறளை எண்ணிய தாகக் கல்வெட்டுக் குறிப்போ பிற வரலாற்றுக் குறிப்போ இல்லை. வேந்தர்கள் திருக்குறளைக் கூறினார்களா என்பதும் ஐயமே. திருக்குறள் புலமை நூலாக மதிக்கப்பட்டுப் புலவர்கட்கு ஒதுக்கப்பட்டு விட்டது. கருத்து வழங்கும் நூலாகவும் மேற்கோ ளாகப் புலவர்கள் போற்றும் வைப்பாகவுமே போய்விட்டது. அண்மைக்காலத்து ஒரு மாறுபாடு. கலைஞர் கருணாநிதியார் திருக்குறளை நடைமுறை நூலாகத் தம் குறளோவியத்தில் புலப்படுத்தியுள்ளார். அரசியற்குறள்கட்கு இக்கால வரலாறு களைச் சிலவிடங்களிற் காட்டியுள்ளார். நடைமுறை காணும் செயற்போக்குத்தான் திருக்குறட் பயன்பெறும் மெய்யான நெறி. இருநெறியே பெருக வேண்டும். வேலா இராச மாணிக்கனார் கண்ட குறளாயம் நடைமுறைக் காட்சி கொண்டிருப்பது போற்றத்தகும். முப்பது ஆண்டுகட்கு முன் திருக்குறளை எல்லாத் துறையிலும் செயல் காட்டியாகக் கொள்ளவேண்டும் எனவும் என்மறை எனத் திருக்குறளை ஒவ்வொருவரும் தன்மறையாகப் பற்ற வேண்டும் எனவும் நடைமுறைகளை எடுத்துக்காட்டி வள்ளுவம் என்ற நூலைப் படைத்தேன். குறளாயம் செயற் குறிக்கோளைக் கொண்டியங்குவது என நன்றிக்குரியதாகும். என் கருத்தில் ஒரு தெளிவு. உரைகளையோ உரை யாசிரியன்மார்களையோ உரைவளங்களையோ கீழ்மைப் படச் சுட்டியதாக எண்ணிவிட வேண்டாம். புலவர்கள் காவியர்கள் இலக்கணர்கள் கைப்பட்டுக் காக்கப் பெற்ற மையாற்றான் திருக்குறள் மறையாமல் சிதையாமல் மறைக்கப்படாமல் நிலைபெற்று வந்திருக்கின்றது. காத்துக் கொடுத்த இலக்கியக் காவலர்கள் புலவர்களே. அவர்கள் காவா தொழிந்திருந்தால், அழிந்து போன பெயர் பட்டியலில் திருக்குறள் சேர்ந்திருக்கும். அடியார்க்கு நல்லார் எண்ணும் மறைவுப் பட்டியலில் ஒன்றாகி யிருக்கும். மயிலை சீனி வேங்கடசாமி தொகுத்த ‘மறைந்து போன தமிழ் நூல்கள்’ என்ற காப்புத் தொகுதியில் ஒன்றாகிச் சில குறள்கள் காணப்படும். ஆதலின் உரைகள் திருக்குறள் நிலை பேற்றுக்கும் வழிவழி வரவுக்கும் காப்பாயின. உரையாசிரியர்கள் தோன்றித் தோன்றிக் காப்போர் ஆயினர். இக்காத்தற் பணியும் தமிழின் வளர்ச்சிக்கு மிக இன்றியமையாதது. இக் காப்புத் தொண்டினைச் சங்கப் பின்னோர் நன்கு பேனாமையால் பன்னூறு தமிழ்த் துறை நூல்கள். அழிந்தொழிந்தன; மொழி மாறி உரு மாறின. இன்றுங்கூட கவலையோடு கூறுகின்றேன். உள்ளத் தமிழ் நூல்களைக் காக்கும் பொறுப்பும் மீண்டும் பதிக்கும் பணியும் குறைந்து வருகின்றன. ஆதலின் காப்புப் பணி எவ்வகையானும் குறைய விடலாகாது. உரை காண்பது எல்லா நூற்கும் போலத் திருக்குறட்டுப் பொதுநெறி. அது வளரும் முறைப்படி வளர்க. திருக்குறட்குச் சிறப்புப் பார்வை செயற் பார்வையாகும்; வாழ்வுப் பார்வை யாகும். பொருளியலிலும் அரசியலிலும் கல்வி யியலிலும் குழும வியலிலும் இல்லறவியலிலும் நடை நிகழ்வுகளைத் திருக்குற ளோடு பொருத்திப் பார்ப்போமாக; தனி வாழ்க்கையோடு பொருத்திப் பார்ப்போமாக. “புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும்” என்ற திருக்குறள் தன்னைப் பார்க்க வேண்டிய நெறியையும் தன்னைப் பயன்கொள்ள வேண்டிய வழியையும் புலப்படுத்தியிருப்பதை நினைவு கொள்ளுங்கள். செயற்பார்வை என்பதனைப் புரிந்து கொண்டோமானால் எல்லாத் திருக் குறளும் அணுப்போல் ஆற்றலுடையனவாக விளங்கக் காண்போம். நம்மை ஆற்றல் மிக்கவராக்குவதே திருக்குறளின் இயக்கம். பொழிவு - 13 தொடர்ச்சி : 17.8.1986 ஞாயிறு மாலை 1 ஆவணி 2017 (குறளியம் ஏழாம் ஆண்டுத் தொடக்கவிழா) பேரன்பர்களே, முத்தமிழ்க் காவலர் அவர்களே, நேற்றுக் காலை நிகழ்ந்த குறளாய விழாவில் திருக்குறளை நடைமுறை நிகழ்ச்சியோடும் நடைமுறைப் பயனோடும் செயற் பார்வையாகப் பார்க்கவேண்டும் எனவும் குறளைப் படிக்கும் முறையைத் திருப்ப வேண்டும் எனவும் உரைநயம் காண்பதும் உரைப் புதுமை காண்பதும் பாராட்டத்தக்க நெறி எனினும் அது குறள் கண்ட நோக்கமன்று எனவும் சுட்டிக் காட்டினேன். இச் செயல்நெறியில் இன்று பெரிதும் பேசிப் பரப்பப் படும் புதிய கல்விக் கொள்கை பற்றித் திருக்குறளோடு வைத்துப் பார்ப்போம். திருக்குறள் கல்வி கல்லாமை கேள்வி அறிவு டைமை என்ற பல அதிகாரங்களில் படிப்புக் குறித்த அடிப் படைகளை நுதலுகின்றது. அறிதோறு அறியாமை கண்டற் றால், பல்லவைகற்றும் பயமிலரே, ஓதியுணர்ந்தும் பிறர்க் குரைத்தும் என வாங்குப் பிறவதிகாரங்களிலும் கல்விக் குறிப்புக் களும் கல்விப் பயன்களும் பகரப்பட்டுள. நான் அடிக்கடி அழுத்தமாகச் சொல்லும் ஒரு பண்புரையுண்டு. ஒரு கொள் கையைப் பற்றித் தொடை விடையாடும்போது, அக் கொள் கைகளைச் சொல்லு வாரைப்பற்றி மிகவும் பாராட்டவோ சிறிதும் இகழவோ வேண்டியதில்லை. ஓரளவு ஆட்சுட்டுத் தவிர்க்க முடியாதெனினும் அது பற்றிய சொல்லும் நடையும் பண்பாக இருக்க வேண்டும். அதுபோல கொள்கைகளை உடன்பட்டோ மறுத்தோ திறனும் போது கெட்ட நோக்கம் கற்பிப்பதும் கொள்கைக்கு வலுக் காரணமாகாது. எவ்வாறு பண்பாக நடந்தாலும் கருத்துத் தாக்குதல் சிலவுணர்வுகளைத் தூண்டவே செய்யும். இது பொழிவின் இயல்பு. பாரதத் தலைமையமைச்சர் இராசீவ் காந்தி தான் பதவி யேற்றவுடனேயே கல்வியில் பெரிய மாறுபடுதல் வேண்டும் என்றுணர்ந்து புதிய கல்விக் கொள்கைகளை எதிர்கால வளர்ச்சியும் மாற்றமும் தழுவி வெளியிட்டுள்ளார். இவற்றின் முதன்மையான சில கூறுகளைக் காண்போம். கற்க கசடறக் கற்பவை, கேடில் விழுச்செல்வம் கல்வி, நிற்க அதற்குத் தக, சாந் துணையும் கல், கற்றில னாயினும் கேட்க எனக் கல்வி வள்ளுவங்கள் பலவுள. புதிய கல்விக் கொள்கையில் சிறிதும் ஒத்துக் கொள்ள மனமும் அறிவும் இடங்கொடாத பல கூறுகள் உள்ளன. அவற்றுள்ளும் இரு கூறுகள் பெருங்கேடு பயப்பவை. நவோதய வித்தியாலயம் என்ற புது மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்படும். இதன் நோக்கம் என் திறமையும் சமவியமும் இணைந்த தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பது; ஆற்றல் வாய்ந்த சிறுவர்களின் உள்ளார்ந்த ஆற்றல் பெருக வாய்ப்புகளை வழங்குவது என்ற இருவகையாம். இதற்காக எல்லா மாநிலத்திலும் ஒரு மாவட்டத்துக்கு மாதிரிப் பள்ளி ஒன்று நிறுவப்படும். இது ஏழாவது ஐந்தாண்டுத் திட்டகாலத்துக் கொண்டுவரப்படும். இப் பள்ளியில் ஆறு முதல் பன்னிரண்டு வகுப்பு வரை (ஏஐ - ஓஐஐ) இருக்கும். ஒரு வகுப்பு இருபிரிவுடையதாகும். 80 மாணவ மாணவியர் இருப்பர். இதில் 20 விழுக்காடு (16 பேர்) வேறு மொழி பேசும் பிற மாநிலத்துக் குழந்தைகளாக இருப்பர். ஏழு வகுப்பும் சேர்த்துப் பார்க்கும்போது மாதிரிப் பள்ளியில் 560 எண்ணிக்கையிருக்கும். இதில் 112 வேற்றுமொழி வேறு மாநில எண்ணிக்கையாக இருக்கும். இங்ஙனம் ஒவ்வொரு பள்ளியிலும் தேசிய வொருமைபாட்டுக்கு மாணவர் கலப்பு உறுதுணை செய்யும். கிராமப்பகுதிகளுக்கு இப்பள்ளிகளில் சேர்க்கை முதன்மை கொடுக்கப்படும். இருபாலாரும் கற்கும் இணைப் பள்ளிகளாக இருக்கும். வரையறைச் சாதிகட்கும் பழங் குடிகட்கும் உரிய ஒதுக்கீடும் இருக்கும். இப்பள்ளி உறையுட் பள்ளியாகும். உணவு, உடை, பாடநூல் போக்கு வரவு எல்லாம் எல்லாப் பிள்ளைக்கும் இலவசம். இம் மாதிரிப் பள்ளியில் கல்விக்குரிய இன்றைய புதுக் கருவிகள் இருக்கும். வானொலி, தொலைக்காட்சி, சிறு கணிப் பான்கள் அகலாயவறை முதலிய எல்லா வாய்ப்புக்களும் அமை யும். கலையியல் அறிவியல் வணிகவியல் தொழிலியற் பாடங் களும் இருக்கும். உடலியற்கல்வி, கவின்கலைகள், மெய்வேலை, விளையாட்டுக்கள், கலை நிகழ்ச்சிகள், மற் பயிற்சி பிறவும் சேரும். வகுப்புத் தூய்மை, சூழல் தூய்மை மாணவர்கள் பொறுப்பாகும். தாய்மொழியிலோ மாநில மொழியிலோ ஐந்தாம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கட்கு நுழைவுத் தேர்வு வைக்கப்படும். தகுதியடிப்படையில் ஆறாம் வகுப்பிற் சேர்த்துக் கொள்ளப் படுவர். ஓராண்டுவரை, முன்படித்த தாய்மொழியோ மாநில மொழியோ தொடர்ந்து கல்விமொழியாக இருந்துவரும். அதனொடு இந்தியும் ஆங்கிலமும் பாடங்களாக அழுத்தமாக கற்பிக்கப்படும். இதன் நோக்கம் என்றால் எட்டாவது வகுப்பில் இம் மாணவர்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் எல்லாத் துறை களைப் படிக்கும் படியான தகுதியை உண்டாக்குவதாம். அதாவது எட்டாவது வகுப்பிலிருந்து மாதிரிப் பள்ளிகளில் இந்தியும் ஆங்கிலமுமோ, இந்தி அல்லது ஆங்கிலமோ கல்வி மொழியாகும். அப்போது தாய்மொழி/மாநில மொழிகளின் நிலை என்ன? மூன்றாவது மொழியாக ஒரு பாட மொழியாக இருக்கும். எட்டாவது வகுப்பு முதல் பன்னிரண்டாவது வகுப்பு வரை மேனிலைப்பள்ளிவரை இந்தியும் ஆங்கிலமுமே கல்வி மொழியாக இருக்கும். இது திட்டத்தின் மொழிநிலை. இரண்டு பெருங்குறைபாடுகளைத் திருக்குறட் கூட்டத் திற்கு வந்திருக்கும் அறிஞர்கட்குச் சுட்டிக் காட்ட விரும்பு கின்றேன். கல்வியின் மூலமாகத் தேசிய ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் உணர வைத்தல், மனிதவாற்றல் வெளிப்படும் படியாகக் கல்வி கற்கும் புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்தல் இவையெல்லாம் நல்ல கொள்கைதாம். இவை முன்னும் இல்லா தவையல்ல. இப்போது இவை புதிய கல்விக் கொள்கை என்றே வைத்துக் கொள்வோம். இவை மாதிரிப் பள்ளிகளுக்கு மட்டும் கொள்கைகளா? மாதிரிப் பள்ளி மாணவர்கள் மட்டும் பெறவேண்டிய கல்வி களா? இந்திய நாட்டில் உள்ள எல்லாப் பள்ளி கட்கும் பள்ளி மாணவர்கள் பொதுவல்லவா? தேசியக் கொள்கையடிப் படை களை எல்லாப் பள்ளிகட்கும் பொதுவாக்கி மேற்கொள்ளச் செய்வது தானே ஒரே காலத்துத் தேசிய வொருமைப் பயிர் செழித்து வளரும். இங்கு ஒரு பெரும் பிளவு படைக்கப்படுகின்றது. மாதிரிப் பள்ளிகள் இக் கொள்கையில் உருவாவன என்பதனால் அப் பள்ளியிற் பயிலும் மாணவர்கள்தான் தேசிய வொருமைப்பாட் டால் உருவானவர்கள் எனவும் அப்பள்ளிகளில் தான் பிற மொழி மாநிலத்து மாணவர்களும் சேர்ந்து பயில்வதால் தேசிய வொருமை உருவாகின்றது எனவும் இந்தி மொழியைச் சிறப்பாக முதன்மையாகப் படிப்பதனால் தேசிய வொருமைப் பாட்டு நீரோட்டத்தை யுடையவர்கள் எனவும் ஒரு ஆதிக்க மேலாண்மை ஏற்படும். வளர்ச்சி யுதவிகட்குப் பதவிகட்கும் இன்னபிறவற்றிற்கும் விண்ணப்பஞ் செய்யுங்கால் இம் மாணவர் களே எடுக்கப்படுவர். அம் மாதிரிப் பள்ளிகளிற் படிக்காதவர்கள் தேசிய வொருமைப் பாட்டு எண்ணத்தில் பயிலாதவர்களாகவும் எண்ணமே இல்லாதவர்களாகவும் அனைத்திந்திய வாய்ப்பு கட்குத் தகாதவர்களாவும் கழிக்கப்டுவர். எனவே இளைய மாணவருலகத்தை இரு பிளவு இனப்படுத்துவதோடு இந்திய மாணவர்கள் மாநில மாணவர்கள் இரு பிரிவுப்படுத்துவதோடு முதல்தரம் இரண்டாந்தரக் குடிமக்களாக்கிவிடும். மேலும் நடுவணரசு ஒவ்வொரு மாநிலத்திலும் தனக்கென ஒரு சார் இளைஞர்களைக் கைப்படுத்திக் கொள்வதாகவும் இனஞ் சேர்ப்பதாகவும் ஆகிவிடும். மாதிரிப் பள்ளிகள் என்பவை இளைஞருலகத்தை இரு வருக்கமாக உணர்வாலும் ஆதிக்கத் தாலும் மதிப்பாலும் பிளபுபடுத்துவதால் புதிய கல்விக் கொள்கை ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதற்கு மாறாக ஒருமைப் பாட்டுக்குக் கேடும் அழிவும் செய்வதாகும். இது நான் கருதும் முக்கியமான தீமையாகும். இன்னும் பல தீய விளைவுகளைக் கூறலாமாயினும் இன்றும் ஒன்றினையும் இன்று சுட்டுவேன். மாதிரிப் பள்ளியில் மொழிகள் பற்றிய நிலையாகும். ஆறாவது வகுப்பு முதல் இரண்டொரு மேல் வகுப்பு வரை தாய்மொழியோ மாநில மொழியோ பயிற்று மொழியாக இருக்குமெனினும் இந்தியும் ஆங்கிலமும் அழுத்தமாகச் சொல்லிக் கொடுக்கப்படும் எனவும் எட்டு வகுப்புமேல் பன்னிரண்டு வகுப்பு வரையும் இந்தியும் ஆங்கிலமும் பயிற்று மொழியாக வந்துவிடும் எனவும் தாய்மொழியே மாநில மொழியோ மூன்றாம் மொழியாக ஒரு பாடமொழி என்ற அளவிற் சொல்லிக் கொடுக்கப்படும் எனவும் அறிகின்றோம். இம்மொழி மாற்றங்கள் தேவையா? தாய்மொழி மாநில மொழி என எல்லா வகுப்புக்கும் தொடர்ந்து பயிற்று மொழியாக இருக்கக் கூடாது. ஐந்தாவது வகுப்பு வரை பத்து வயது வரை ஒரு மொழியிற் படித்துவிட்டு அதற்கு மேல் வேறொரு மொழிக்கு ஏன் மாறவேண்டும்? பயிலும் நோக்கமும் என்ன? ஒருமைப்பாடுக்கு இந்தி தான் வேண்டும் என்பது நோக்கமா? தாய்மொழியிலோ மாநில மொழியிலோ படித்தால் மாநிலவுணர்வோடுதான் இருக்கும் என்ற எண்ணமா? அது கருத்தாயின் இந்தியைத் தாய்மொழி மாநில மொழியாகக் கொண்ட இந்திப் பிள்ளை கட்குத் தேசிய வொருமையுணர்வு எப்படி வரும்? நினைத்துப் பார்த்தால் தமிழ் தெலுங்கு முதலியன மாநில மொழிகளாயின் இந்தியும் ஒரு மாநில மொழியே. தமிழ் தெலுங்கு முதலிய மொழி பேசுவோர் பம்பாய், கல்கத்தா, தில்லி, நாகபுரி, காசி என எல்லா இடங்களிலும் பரவியிருப்பதை எண்ணினால் இவையெல்லாம் தேசிய மொழிகளே. ஆதலின் எல்லாரும் இந்தியா என்பது போல எல்லா மொழிகளும் இந்திய மொழிகள் எனக் கொண்டு வளர்ச்சிக்கு ஒத்த வாய்ப்புக்களும் நிதியும் நடுவணரசு வழங்க வேண்டும். முக்கியமான ஒரு வினா, பள்ளியில் ஆறாவது வகுப்பு முதல் ஏன் மொழிமாற்றம் செய்ய வேண்டும். இந்திக்கும் ஆங்கிலத்துக்கும் ஏனை மொழிகளை ஏன் பலியாக்க வேண்டும். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட வடநாட்டுப் பிள்ளைகட்கு முதல் வகுப்பு முதல் பன்னிரண்டு வகுப்பு வரை இந்தியாகிய ஒன்றே தொடர்ந்து பயிற்று மொழியாக வரும் ஏனை மொழிப்பிள்ளைகளிடம் ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழி நிற்கும் மதமாற்றம் போல ஆறாம் வகுப்பு முதல் மொழி மாறிகளாதல் வேண்டும். ஆறாம் வகுப்பிலும் ஏழாம் வகுப்பிலும் தாய்மொழியுண்டே யென்றால், ஏன் உண்டு தெரியுமா? இந்தி ஆங்கில மொழி மாற்றத்துக்குத் துணையாகத் தகுதி செய்யும் வரை தாய்மொழி இருக்கும். ஒரு பகுதிக் குழந்தைகட்கு ஒன்று முதல் பன்னிரண்டு வரை இந்தி என்னும் ஒரே மொழி. ஏனைக் குழந்தைகட்கு மொழி மாற்றம் ஏன்? நோக்கம் என்ன? தரம் என்ன? ஏன் எல்லாக் குழந்தைகட்கும் தாய்மொழியாகிய அதுவே தொடர்ந்து ஒரு பயிற்று மொழியாக இருக்கக் கூடாது? இதன் விளைவு என்னாகும்? அச்சமாகவும் சினமாகவும் சொல்கின்றேன். ஆறாம் வகுப்பு முதல் இந்தியோ ஆங்கிலமோ இரண்டுமோ பயிற்று மொழியாக மாறிவருமென்றால், ஏன் தம் குழந்தைகளை முதல் வகுப்பிலிருந்து இந்தியும் ஆங்கிலமும் படிக்கும் படியும் இவற்றைக் கற்பிக்கும் பள்ளியில் சேர்க்கும் படியான ஓரெண்ணத்தைப் பெற்றோர்கட்குத் தூண்டாது? தம் குழந்தைகள் ஐந்தாண்டுக்குப் பின் மொழி மாற்றத்தால் தொல்லைப்படுவதையும் தரங்குறைவதையும் தவிர்க்கும் முன்னறிவோடு கீழ் வகுப்புக்களிலும் தாய்மொழியை புறக் கணிக்கும் போக்கு வருவது இயல்புதானே. இடைநிலைக் கல்வி யிலும் பிறமொழி, உயர்கல்வியிலும் பிற மொழி என்று மேலே ணிகள் இருக்குமானால், கீழேணிப் படிகளில் தாய் மொழியும் பிறமொழியாகத்தானே செய்யும். எனவே இந்தியல்லாத பிற மொழிகளின் நிலை என்ன? ஒரு கால் ஐந்தாவது வகுப்பு வரை தாய்மொழி இருப்பது கூடப் பெற்றோர்களின் விருப்பத்தைப் பொறுத்தது என்றாகிவிடும். புதிய கல்விக் கொள்கையில் எல்லா இந்திய மொழிக்கும் இடமிருப்பதாகப் பறைசாற்றப்படுகின்றது. பிற மாநிலங்களில் இந்திக்கு வாரத்துக்கு 20 மணி, ஏனை ஏனை இந்திய மொழிக்கு இரண்டு அல்லது மூன்று மணி. இந்தியோ எல்லாத் துறையிலும் பிற மாநிலங்களில் பயிற்றுமொழி. ஏனை இந்திய மொழியோ தன் நிலத்தும் ஒரு பாடமொழி. இதுவா சமனிலை. கட்சித் தலைவர்கள் உள்ள நிலைகளை மறைக்கின்றார்கள். தெரியாத வர்கள் என்று சொல்வது மதிப்பில்லை. இன்றும் என்னாகும் தெரியுமா? இன்று இந்தியோடு ஆங்கிலம் என்று ஒப்புக்கு இணைத்துச் சொல்கிறார்கள். இந்தி மட்டுந்தான் என்பது இறுதி நோக்கம். புதிய கல்விக் கொள்கை கள் செயற்பட வேண்டுமென்பதற்காக, உண்டி உறையுள் பாடநூல் விடுதி. வழிச் செலவு துணிமணி எல்லாம் இனாம் என்று அறிவித்துள்ளார்கள். இனாம் என்பதற்கு ஆசைப்பட்டுச் சேர்வார்கள் என்ற எண்ணம். பலவகையில் ஆசைப்பட்டுப் பெற்றோர்கள் பிள்ளைகளைச் சேர்ப்பிப் பார்கள். இன்றும் காலப் போக்கில் இந்திக்கு மிகவும் கூடுதலான அளிப்புக்கள் வழங்கிய பிறமொழிப் பெற்றோர்க்கும் இளைஞர்க்கும் பொருளாசையைப் பெருக்குவார்கள். நமக்கு ஆங்கிலம் நிலையாக இன்றுள்ளது போல் இருக்க வேண்டும் என்ற கருத்தில்லை. இந்திய மொழிகள் எல்லாம் வளர்ச்சியில் ஒத்த சம வாய்ப்புப் பெற வேண்டும் என்பதே நோக்கம். முடிவாகச் சொல்வேன். புதிய கல்விக் கொள்கை இந்திய நாட்டிற்குப் பொதுவான சில கல்விக கூறுகளை வகுக்கலாம். அது முறையே. அந்த வரம்புச் சட்டகத்துள் மாநிலங்கட்கு மிக வுரிமை வழங்கவேண்டும். ஒவ்வொரு மாநிலத்தும் பிற மொழிகள் கற்கும் வாய்ப்பும் கருவிகளும் வழங்கவேண்டும். ஒவ்வொரு இந்தியனுக்கும் எந்த மாநிலத்தவனாயினும் பன்மொழிப்படிப்பு ஓரளவாவது இக் காலத்து இன்றியமை யாதது. ஆனால் இவையெல்லாம் தன் மொழிக்குப் பின் என்ற தெளிவு வேண்டும். பயிற்று மொழியாகப் பாலர் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை ஒரு மொழித் தொடர்ச்சியே பொருந்தும். இடையில் மொழி மாற்றம் பெருங்குறைபாடு. எனவே இன்று பறைசாற்றப்படும் மாதிரிப் பள்ளி மாணவர்களை இரு வருக்கப்படுத்தும் பேருளம் உடையது. ஒத்த சமவாய்ப்புக்களைத தன் மாநிலத்திலும் மாநில மொழி களுக்கு வழங்காமல், அவற்றைத் தாழ்த்தி மொழித்து இந்தி யொன்றையே யாண்டும் புகுத்தும் ஆதிக்க நோக்குடையது. இவை நாட்டின் ஒருமைப்பாட்டுக்குக் கேடு செய்யும் என்று பெற்றோர்கள் உணர்வார்களாக. பொழிவு 14 நாள் : 31.8.1986, ஞாயிறு 15 ஆவணி 2017 இடம் : திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கக் கட்டிடம் நிகழ்ச்சி : நகரத்தார் மலர் ஏழாவது ஆண்டு நிறைவு விழா சிறப்புரை : வ.சுப. மாணிக்கம் கலந்து : இரா. இராமநாதனார், கானாடுகாத்தான், கொண்டோர் மதுரை இலெ. நாராயணனார், பள்ளத்தூர் அருணாசலனார் இன்னும் சிலர் பொழிவுச் சுருக்கம் பேரன்புடைய பெருமக்களே, தலைமை தாங்கும் பெரியவர் இரா. இராமநாதன் செட்டி யார் அவர்கள், அண்ணாமலைப்பல்கலைக் கழகம் தோன்றிய வள்ளல் குடும்பத்தவர். பண்டிதமணியிடம் மிக்க ஈடுபாடு கொண்டவர். இரு மொழிப் புலவர் பண்டிதமணி மறைவு கேட்டதும் சென்னையிலிருந்து வான்வழி வந்து அன்றே ஈமச்சடங்கிற் கலந்து கொண்டவர். நாட்டுக்கோட்டை நகரத் தார் வரலாற்றைப் பண்டிதமணியைக் கொண்டு திருத்தஞ் செய்து தம் நன்கொடையால் வெளியிட்ட செல்வர். இந்நூல் 1953 இல் வெளியாயிற்று. கற்பார்க்கும் ஆய்வார்க்கும் கிடைக்க வில்லை. 33 ஆண்டுகள் கடந்துவிட்டன. பெரியவர் இராம அவர்கள் தம் நன்கொடையால் இவ்வரலாற்று நூலை மறுபதிப்புச் செய்யும்படி இன்றும் கேட்டுக் கொள்கின்றேன். முன்பும் நினைவூட்டியுள்ளேன். தொடக்கவுரை நிகழ்த்திய தொழிலதிபர் இலெ. நாராயணன் செட்டியார் அவர்கள் இப்போது பொதுத் தொண்டில் கூடுதலாக ஈடுபட்டு வருகின்றனர். நல்ல தமிழறிவும் முன்னேற்ற நோக்கும் உடையவர். மதுரையில் இவர்கள் நிறுவிய சரசுவதி நாராயணன் கல்லூரி பொருள் முட்டுப்பாடின்றிப் பல்துறை முதுகலை வகுப்புக்களோடு சிறப்பாக நடைபெறு கின்றது. அவர்கள் தம் அறுபதாம் ஆண்டு மணிவிழாவில் நகரத் தரினத்து ஒரு பெண்ணுக்குப் பொருள் வழங்கித் திருமணஞ் செய்வித் தார்கள். இச்சிறப்பு ஏனையோர்க்கு எடுத்துக் காட்டாகும். அறுபதாண்டு மணிவிழாச் செய்யும் செல்வர்களும் எண்பதாண்டு முத்துவிழா எடுக்கும் செல்வர்களும் இவ் விழா வின் சிறப்பாக நம் இனத்து ஏழைக் கன்னியர்கட்குப் பொருள் வழங்கி மணஞ்செய்து வைக்கும் இவ்வறத்தைக் கடைப்பிடிப் பார்களாயின், அவர்கட்கும் பெருமை. நம்மினத் துக்கும் தொண்டாகும். நம் திருமணச் சீர்திருத்தங்கள் பற்றி மிகுதியாகப் பேசு கின்றனர். நான் இவற்றை அதிகமாகப் பேச விழைவதில்லை. சீர்திருத்தம் பேசப் பேசச் சீர்கள் தான் கூடிக் கொண்டு போ கின்றன. பெண் பாரம் பெரிதாகி விட்டது. வயது மிக்க கன்னி யர்கள் நம் சமூகத்தில் இருப்பது போலப் பிற சமூகங்களில் இருக்கக் காணோம். நம்மவர்கள் சிறிய தொகையினராயினும் தமிழகமும் பாரதமும் உலகமும் அறியப் பெருங் கொடைகளும் அறங்களும் திருப்பணிகளும் செய்திருக்கிறார்கள். எனினும் ஒரு நிலையைப் பார்க்கின்றோம். வேற்றினத்தாரெல்லாம் தம்மின நலத்துக்குச் செய்த நலங்களும் உதவிகளும் பலப்பல. அவர்கள் இனந்தாண்டிச் செய்தவை மிகக் குறைவு. நம்மினத்தவரோ தம்மினத்துக்குச் செய்த உதவிகள் மிகமிகக் குறைவு. ‘ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர்’ என்ற திருக்குறட்கு நம்மிசை செல்வர்கள் சான்றாவார்கள். நான் பிறருக்கும் பிறவற்றிற்கும் செய்கின்ற கொடைகளைப் பாராட்டுபவனே. அதோடு கண்ணாரக் காணும் நம்மினத்து ஏழையர்கட்கும் செய்யுங்கள். ஒரு பகுதி செய்யுங்கள் என்பதுவே என் வேண்டுகோள். இருவகைக் கொடையும் அறமும் வேண்டும். மக்கள் தொகையளவில் உலகப் புகழ் பெற்றவரும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துணைவேந்தருமான அறிஞர் சந்திரசேகரனார் தென்னிந்திய நகரத்தார் என்ற வரலாற்று ஆங்கில நூலில் நம் இனத்தின் பல்வேறு தனிச் சிறப்புக்களைச் சுட்டியுள்ளார். அவற்றை எழுதுவதற்கு 1580 பார்வைக் குறிப்புக்களைத் தொகுத்துமுள்ளார். இதனால் நகரத்தார் வரலாறு ஓரின வரலாறன்று என்பதும் நாம் போடும் சமயத்தோடும் மொழியோடும் பொருளாதார வளர்ச்சியோடும் பிணைந்த வரலாறு என்பதும் தெளிவாம். எனவே நம் முன்னோர் பெருமை நமக்குக் கிடைத்த புகழ்ச் சொத்து. பெண்களின் திருமணங்களைப் பற்றி நம்மினத்தவர் வரவர மிகக் கவலைப்படுவதைக் காண்கின்றேன். சீதனம் நகை முதலியன கூடிவருகின்றன. இவற்றைச் சட்டத்தாலோ பிறவற்றாலோ கட்டுப்படுத்த முடியாது. இன்று இந்நிலை நம்மினத்தை மட்டும் வாட்டுவதன்று. பலவினங்களையும் வருத்தி நாடு முழுவதும் தலையெடுத்து வருகின்றது. இசுலாம் கிறித்தவ மதங்களிற் கூட வரதட்சிணைக் கொடுமை அலைக் கின்றது. ஆண் பெண் சமம் என்று வானளாவப் பறையப்படும் இந்நாளில் இந்த நிலைமையா என்று எண்ணும் போது ஒருவகைப் புரட்சிதான் இதனைமாற்ற வேண்டும். எதிர்காலம் திருமணத்தில் பெண்ணினத்துக்கு நற்காலமாக இருக்குமென்று நம்புவோமாக. ஒன்றின நாம் உணர வேண்டும். திருமணக் கொடுமைக்கு மூத்த பெண்களே காரணமாவார்கள். யான் பெற்ற துன்பம் எனக்கு வரப்போகும் மருமகளும் பெறட்டும் என்ற போக்கிலேதான் முன்பு மருமகளாக வந்து இப்போது ஆண் பெற்ற மாமியார் பதவிக்கு உயர்ந்து விட்ட மூதாட்டிகள் இழைக்கின்றனர். ஆண்களின் சொல் இங்கு ஏறவில்லை என்பத னோடு, ஆடவர்களும் இளைஞர்களும் இதனை மதிப்பாகவும் நல்வருவாயாகவும் கருதும் மனப்பான்மையும் வளர்ந்து வருகின்றது. எனினும் நல்லமாறுதலை எதிர்பார்ப்போம். நம்மினத்தவர்க்கு இன்று நான் துணிந்து செல்லக்கூடிய தீர்வு இதுதான். பெண்களுக்குத் திருமணஞ் செய்வதை இரண் டாவது கடமையாக மாற்றிக் கொள்ளுங்கள். காலத்திற்கேற்ற புதியதுறைகள் எவ்வளவு உயர்பட்டங்களுக்கு படிக்க வைக்கு முடியுமோ அவ்வுயர் படிப்பு வரை எவற்றையெல்லாம் விற்றா யானும் படிக்க வைத்து விடுங்கள். இது பெற்றோர்கள் பெண் மக்கட்கு நிறைவேற்ற வேண்டிய தலைமுதற் கடமை. பெண் மக்கள் உயர் படிப்புப் படித்து விட்டால், தன்னம்பிக்கை பெறுவர். பெற்றோரின துயரினையும் புரிந்து கொள்வர். பெற்றோரையும் காப்பர். பொருளாதார வாழ்வில் உரிமை பெறுவர். நம் குடும்பப் பெண்கள் - குறிப்பாக ஏழைக் குடும்பத் தார் தம் மக்களை நன்கு படிக்கவைத்துக் கொண்டிருப்பதைக் காண்கின்றேன். எவ்வளவோ தொல்லைக் குட்பட்டும் அயலூர்கள் சென்று இருந்து கொண்டு படிக்க வைப்பதையும் காண்கின்றேன். இப்பெண் குழந்தைகள் போட்டிபோட்டு நன்கு முன்னேறுவதையும் முதன்மைகள் பெறுவதையும் பலர் அறிவர். ஆதலின் பட்டப் பேறே முதற் கடமை; திருமணப்பேறு பிற்கடமை என்று கொள்வோம். அண்மைக் காலத்து இரண்டொரு விரும்பத் தகாத மனப் பான்மை ஏற்பட்டிருக்கின்றது. பெண்கள் உயர் கல்வி பெற்றிருந் தால் அதற்குத் தக்க மாப்பிள்ளைகள் தேடுவது தொல்லையாக இருக்கின்றது எனவும் பெண் படித்து வேலையில் உள்ளாள் என்பதற்காகக் குறையக் கேளாமல் கூடுதலாகவும் மாப்பிள்ளை வீட்டார் கேட்கின்றனர் எனவும் எண்ணிப் பெண்களை பத்தாம் வகுப்போடு நிறுத்து மனப்பான்மை வளர்வதைப் பார்க்கின்றோம். இது சரியான மனப்பான்மையன்று. சிக்கலைத் தீர்ப்பதுமன்று. கேட்கின்ற மாப்பிள்ளை வீட்டார் எப்படியும் பறிக்கவே எண்ணுவார்கள். பட்டப் படிப்புப் படித்திருந்தால் இவ்வளவு கேட்கமாட்டோம் என்று தோசை திருப்பி போல் திருப்பியும் பேசுவோர் உளர். பெண் இரண்டாவது மூன்றாவ தளவே படித்திருந்தால், தொல்லை குறைவு, கேட்பது குறை வாகும் என்று எண்ணுகின்றீர்களா! சிந்தித்துப் பாருங்கள். திருமணத் தொல்லை கருதிப் பெண் மக்களின் அறிவாற்றலை முடமாக்குவது கொடுமை; மாப்பிள்ளை வீட்டார் செய்யப் போகும் கொடுமையினும் பெற்றவீட்டார் செய்யும் கொடு மையே பெரிது. திருமணத்துக்குப் பின்புகூட, கணவன் வீடு சென்றபின்கூட, ஒரு பெண்ணுக்குப் பொருளாதாரத்தாலும் தன்னைக் காத்துக் கொள்ளும் தகுதியும் திறமையும் வேண்டி யுள்ளன. ஆதலின் உயர் கல்விப் படிப்பு பெண்மக்கட்கும் எவ்வாறேனும் செய்து வைப்பதே பெண் பெற்றோர் கடமை. நான் சொல்லும் அறிவுரை காலத்திற் கேற்றது மட்டுமன்று; எதிர்கால வளத்துக்கும் வாய்ப்புக்கும் ஏற்றதாகும். பொழிவு - 15 நாள் : 5.9.1986, வெள்ளி 20 ஆவணி 2017 இடம் : காந்தி மெ. வீடு செக்காலை, காரைக்குடி நிகழ்ச்சி : காந்தி மெய்யப்பர் நூற்றாண்டுவிழா தலைமை : வ.சுப. மாணிக்கம் கலந்து : மெ. நா. சிதம்பரனார், ஆத்தங்குடி காடப்பர்: கொண்டோர் பள்ளத்தூர் அருணாசலம்: இன்னும் சிலர். பொழிவுச் சுருக்கம் பேரன்பர்களே, காந்தி மெய்யப்பர் காந்தியடிகள் சொல்லிய எனைவகைப் பணி உண்டோ அவ்வளவையும் தொல்லையான காலத்துத் துவளாது செய்தவர். இன்றுங் கூடப் பெருமகன் காந்தி காட்டிய சாதி சமய சமுதாயச் சீர்திருத்தங்கள் எளிதாகச் செய்ய வியல வில்லை. அத்தகைய நடைமுறைச் செயல் திருத்தங்களை எழுபதாண்டுகட்கு முன்பே மெய்யப்பர் துணிந்து விடாப் பிடியாகச் செய்தார். தீண்டத்தகாதவர் என்று விலக்கப்பட்ட நம் அரிசனமக்கட்குக் கல்வி நிலையம் கண்டார். அந்நிலையத் தையும் தன்இல்லத்திலேயே அமைத்தார். உண்டி உடை யெல்லாமும் பாடநூல் எல்லாமும் இலவசமாக வழங்கினார். அரிசனக் குடியிருப்புக்குச் சென்று துப்புரவு முதலிய தொண்டு செய்தார். தன்வீட்டிற்குக் காந்தி வில்லம் என்று பெயரிட்டதும் தன் மக்கட்குக் காந்தி, காந்திமதி எனப் பெயரிட்டதும், தான் பொருளீட்டிய வருவாயில் காந்தி நூல் நிலையம் அமைத்ததும். தாம் நூற்ற நூலைக் கொண்டே குடும்பமுழுதும் கதராடை உடுத்தியதும் வாரந்தோறும் இல்லத்தில் நூற்பு வேள்வி செய்ததும் முழுவொளிக் கழகத்தில் தலைவராக இருந்து பணி செய்ததும் இவர்தம் தொண்டுகளாம். மாபெரு மறவர் சுபாசு சந்திரநேதாசி இந்திய தேசியப் படையமைத்துப் பருமா வந்திருந்தபோது, காந்தி மெய்யப்பர் முப்பதினாயிர உருவாயும் அறுபது பவுன் தங்கமும் நிதியாக வழங்கினார் என்று அறிகின்றோம். காந்தியவாதியான மெய்யப்பரை முதற்கண் வேறு வகையாகக் குறைத்துக் கணித்த சுபாசு மெய்யப்பரின் பேராண்மையை யுணர்ந்து கட்டித் தழுவிக் கொண்டு, நிதிக் குழுவில் சேர்த்துக் கொண்டார். காந்தி மெய்யப்பர் நல்ல பள்ளிக்கெல்லாம் உழைப்பும் நிதியும் வழங்குபவர். பெண் கல்வியில் மிக்க ஈடுபாடுடையவர். கொப்பனாபட்டி கலைமகள் கல்லூரி நன்கு உருவாவதற்கு அதனை நிறுவிய மெய்யப்பருக்கு இம் மெய்யப்பர் வலக்கை யாக இருந்தார். அறுபதாம் ஆண்டு மணிவிழாவைச் சிக்கனமாகச் செய்து காரைக்குடி இந்து மதாபிமான சங்கம் தனக்கென ஒரு கட்டிடம் பெற மூவாயிர உருபா முதற் கொடையாக வழங்கினார். செல்வர்கள் மிக்க செட்டி நாட்டில் மிக எளிய வருவாயுடைய மெய்யப்பர் இப் பெருந் தொகையை நாற்பதாண்டுகட்கு முன் கொடுத்தார். இன்று பார்வைக்கு மூவாயிரம் சிறு தொகையாகத் தோன்றலாம். நாற்பதாண்டுகட் முன் மூவாயிரம் என்பது அரும்பெரும்நிதியாகும். மெய்யப்பர் இத் தொகையை அன்று அளித்துக் கால்கோள் செய்திராவிட்டால், இச்சங்கம் அத் துணை நிலைபேறும் நிதிவளமும் பெற்றிரா. 1935ஆம் ஆண்டில் காரைக்குடியில் நடந்த முப்பத் தேழாவது தமிழ் மாநிலக் காங்கிரசு மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பெற்றார் காந்தி மெய்யப்பனார். காரைக்குடி வட்டாரம் விடுதலைப் போராட்டவுணர்வும் மிக்க தேசியவுணர்வும் கொண்டிருப்ப தற்குக் காந்தி மெய்யப்பரின் தொண்டு பெருங் காரணமாம். பெருமகன் காந்தியடிகளும் அவர் மனைவியாகும் 23.9.1927இல் செக்காலை மெய்யப்பர் இல்லம் வந்தார்கள். கதர் மாலையும் கதர் நிதியும் பெற்றுக் கொண்டனர் என்றால் மெய்யப்பரின் பெருமைக்கும் தொண்டுக்கும் வேறு சான்று வேண்டுமோ? காந்தி மெய்யப்பரோடு எனக்கு நல்ல தொடர்பு உண்டு. 1948இல் நான் அழகப்பர் கல்லூரியின் தமிழ் விரிவுரை யாளராகக் காரைக்குடிக்கு வந்தேன். செக்காலையில் வசிக்க எண்ணினோர். எனக்கு வீடு அமைத்துக் கொடுத்தவர் மெய்யப்பர் அவர் இருந்த இதே தெருவில் பன்னிரண்டு ஆண்டு கள் பக்கத்து வீட்டில் வசித்தேன். காந்தி போலவே மெய்யப்பர் அரையாடையர். வைகறைத் துயிலெழுந்து நெடுந் தொலை நடந்து செல்வார். நான் இப்பெருமகனிடம் சிறப்பாகக் கண்டது பேச்சு மிகமிகக் குறைவு. செயல் மிகுதி. விடாப்பிடியான செயல்கள். நான் வசித்த இடம் சிறிதாக இருந்தது. ஆய்வுக்கும் எழுத்துக்கும் போதவில்லை. என்பணிக்கு மெய்யப்பர் அவர்கள் தன்வீட்டு மேல் மாடியை விட்டுத் தந்தனர். நாலாண்டுகள் இருந்து வள்ளுவம் என்ற என் நூலை நான் எழுதிய மனை காந்தி மெய்யப்பர் மனை. என் வரலாறு எழுதப்படுமானால், நான் இருந்து வள்ளுவம் எழுதிய காந்தி மனையும் குறிப்புப் பெறும். காந்தி மெய்யப்பரை எண்ணும்போதெல்லாம் பெரிய புராண அப்பூதியடிகள் நினைவே என்முன் நிற்கும். அவருக்கு அப்பர் எப்படியோ அப்படியே மெய்யப்பருக்குக் காந்தியடிகள் தன் மூன்றாவது மகனுக்கு திருநாவுக்கரசன் என்ற பெயர் வைத்ததும் இதனை நினைவூட்டும். நாவுக்கரசர் அப்பூதியார் இல்லஞ் சென்றது போலவே காந்தியடிகளும் மெய்யப்பர் இல்லம் வந்தார். அப்பூதியார் குடும்பம் முழுவதும் நாவுக்கரச ருக்குத் தனிப் பற்றுக் காட்டியது போலவே மெய்யப்பரின் மனைவி மக்கள் எல்லாரும் காந்தியிடம் பெரும் பற்றுக் கொண்டிருந்தனர். எல்லாத் துறையிலும் நாட்டுப் பணியும் மக்கட் பணியும் செய்த நன்மகன் காந்தி மெய்யப்பரின் நூற்றாண்டு விழாவிற் கலந்து கொள்ளும் பேறு நமக்கெல்லாம் கிடைத்திருக்கின்றது. இவ்விழாவினை மெ.குடும்பத்தார் அகவிழாவாகக் கொண்டாடு கின்றனர். இது காரைக்குடி யூரார் கொண்டாட வேண்டிய ஊர் விழாவாகும். ஆர்ப்பாட்டமும் விளம்பரமும் பெருகிவரும் இக்காலத்தில் உண்மைத் தொண்டர்கள் மறக்கப்படுவது கால வியல்பே. எனினும் இளைஞர்களிடை எதிர்காலத்துத் தொண்டு ணர்வு பெருக வேண்டுமெனின், மெய்த் தொண்டர்களை எதிர்கால இளைஞர்கட்கு அறிமுகப்படுத்த வேண்டும். இன்றைய விழாவைத் தொடக்க விழாவாக நாம் கருதுகின் றோம். மெய்யப்பரின் சேவையை நன்குணர்ந்த பெருமக்கள் இன்றும் நம்மிடை உளர். இவ்விழா ஊர்விழாவாகக் கொண்டா டப்படும் என்று நம்புகின்றேன். நம் கண் காணப் பெருந் தொண்டாற்றிய ஒரு பெருமக னாரின் விழா சீரொடு நடக்க வேண்டும் என்று எண்ணி, மெய்யப்பனாரின் மகனார் காந்தியிடம் கவியரங்கும் இவ் விழாவில் அமையவேண்டும் என்று நினைவூட்டினேன். அதன்படி இன்று காலையில் தக்கபல கவிஞர்கள் காந்தி மெய்யப்பரின் பல்வேறு தொண்டுகளைக் கவிதையாற்பாடி தமிழ் மாலை சூடியுள்ளனர். காந்தி மெய்யப்பரின் தொண்டு வெளிப்படையாகத் தெரிவதற்குத் தொண்டுத் தூண் ஒன்று கல்லால் நிறுவ வேண்டும் என்று விழாமலர்க் கட்டுரையில் நான் ஆசைப் பட்டிருக்கின்றேன். தொண்டுத் தூணும் ஊர் விழாவும் நிறை வேறும் என்று எண்ணி காந்தி மெய்யப்பரை வழிபடுவோமாக. பொழிவு - 16 நாள் : 11.9.1986 வியாழக்கிழமை 24 ஆவணி 2017 இடம் : மின்சார வேதியல் ஆய்வு நிறுவனம், காரைக்குடி நிகழ்ச்சி : விவேகானந்தர் மையம், உலக மறுமலர்ச்சி நாள், பாரதியார் நாள் தலைமை : வ.சுப. மாணிக்கம், தலைவர் விவேகானந்தர் கலந்து : 1. தவத்திரு குன்றக்குடி அடிகளார், கொண்டோர் 2. இயக்குநர் கை.இ. வாசு , 3. சாரதை தொண்டகம் பழநியப்பனார், 4. அழகப்பர் பல்கலைக் கழகப் பதிவாளர் சங்கரராசுலு. பொழிவுச் சுருக்கம் தவத்திரு அடிகளார் அவர்களே, இயக்குநர் வாசு அவர்களே, பெருமக்களே, சுவாமி விவேகானந்தர் மையம் தொடங்கி ஓராண்டு ஆகின்றது. ஒரு சில வகையில் தொண்டுகள் செய்து வருகின் றோம். குழந்தைகளை நல்வழிப்படுத்துவதும் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புக்கள் அளிப்பதும் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்துவதும் மையத்தின் இன்றைய பணிகளா கும் சென்ற ஆண்டினைவிட இவ்வாண்டு பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் கூடுதலாகப் பங்கு பெற்றிருப்பதும் கூட்டத் துக்குத் திரளான ஆடவர் பெண்டிர் வந்திருப்பதும் மையத்தின் தொண்டுக்கு விளக்கமாகும். சிவகங்கையிலும் மையத்தின் ஒரு கிளையை தொடங்க முயல்கின்றோம். விவேகானந்த அடிகளார் தம் பெருமை அமெரிக்காவில் உலகச் சமய வரங்கில் வெளியிட்ட நாள் செப்புடம்பர் 11ஆம் நாளாகும். தேசியத் தமிழ்க் கவி சுப்பிரமணிய பாரதியார் புகழுடம்பு எய்திய நாளும் இதுவேயாகும். நாட்டுணர்வுக்கும் இளைஞருலகின் முன்னேற்ற வேகத்திற்கும் தூண்டா விளக்காக ஒளிவிட்ட இருபேரும் இந்தியச் சான்றோர்களை நாம் எண்ணி உணர்வு பெறவேண்டிய நாளிது. விவேகானந்தரின் மேனாட்டு மாணவி நிவேதிதாதேவி. இப்பெருமாட்டியைத் தம் குருவாகக் கொண்டவர் பாரதியார். இக்குருவின் அருள் அன்பு ஒளி முதலிய உயர் நலங்களைப் பாரதியார் ஒரு பாடலில் நெஞ்சுருகப் பாடியுள்ளார். “அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய் அடியேன் நெஞ்சில் இருளுக்கு ஞாயிறாய் எமதுயிர் நாடாம் பயிர்க்கு மழையாய் இங்கு பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப் பெரும்பொருளாய்ப் புன்பைத்தாத சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்” என்பது அப்பாடல், பாடல் ஒன்றே யாயினும் இத்தாயிடத்துக் கொண்ட பாரதியாரின் ஈடுபாடு கனிந்த சொற்களால் பெறப் படும். அடிகளாரும் பாரதியாரும் பலதுறைகளில் நமக்கும் நாட்டுக்கும் வழி காட்டியவர்கள். உருவத்தால் வீரத் தோற்றம் கொண்டவர்கள். அஞ்சா நெஞ்சுபடைத்தவர்கள். அஞ்சாமை வேண்டும் என்று வழி காட்டியவர்கள். இவ்விரு பெருமக்களின் சொற்களும் நடைகளும் கருத்துக்களும் வீரவுணர்வை ஊட்டுவன. விவேகானந்தர் வீரமுனிவர் எனப் புகழ் பெற்றவர். அவர்தம் சமயப்பற்று நாட்டுப்பற்றொடு கலந்தது. அவர்தம் அறநெறி மறநெறியோடு இணைந்தது. நம் பாரதியாரைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இளமையிலேயே கனத்த நீண்ட தடியைக் கைக்கொண்டவர். அந்தணர் குலத்தவராயினும் அடர்ந்த மீசையினர். பலே பாண்டியா என்று முழங்கியவர். வலிமையற்ற தோளினாய் போ போ போ மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ எனவும் ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா எனவும் இருமுகமாகப் பாடியவர். இன்று நமது நாடு பகைச் சூழ்நிலையில் உள்ளது. பக்கத்துப் பாகித்தான், சீனா, பங்களாதேசம் எல்லாம் வலிமை பெருக்கி நம்மை அச்சுறுத்துகின்றன. வரவர நம் பகை நாடுகள் வலிமை பெறுகின்றன. இதனை விரிவாகக் கூற இது இடமில்லை. சமூகமாகச் சொல்கின்றேன் நாடு வீர சுதந்திரம் பெற்றோம். சுதந்திரத்தை வீரத்தாற்றான் காத்து வளர்க்க முடியும். இந்த இரு பெரும் வீரத் தலைவர்களின் நன்னாளை வீரநாளாக நாம் கொண்டாடவேண்டும், வீரவுணர்வே இன்று நமக்கு வேண்டும் நாட்டுணர்வு. ஒவ்வோர் பாரதனும் பாரதியும் வீரர்களாகுக. பொழிவு - 17 நாள் : 14.9.1986 ஞாயிறு காலை 26 ஆவணி 2017 இடம் : மதுரை, திரையரங்கம், இரீகல் நிகழ்ச்சி : மதுரை மாவட்டத் திருக்குறட் பேரவை, இரண்டாவது மாவட்ட மாநாடு தலைமை : வ.சுப. மாணிக்கம் கலந்து கொண்டோர் : குன்றக்குடி அடிகளார்; இலெ. நாராயணர், துணைவேந்தர் கிருட்டிணசாமி, பாரதி இரத்தினம், மணிமொழியன்,கங்காராம் துரைராசு, அறிஞர் சுப. அண்ணாமலை, பேராசிரியர் குழந்தைநாதன், நீதிபதி முருகேசன்; தொழிற்கல்வி இயக்குநர் இராசாமணி இன்னும் சிலர். பொழிவுச் சுருக்கம் திருக்குறட் பேரன்பர்களே, தவத்திரு குன்றக்குடி அடிகளார் திருக்குறள் நெறி பரப்பும் தொண்டிற்காகத் தமிழகவரசிடம் திருவள்ளுவர் பரிசு பெற்றதைப் பாராட்டுவதற்காகவும் திருக்குறட் பேரவையின் தலைவர் இலெ. நாராயணர் மணிவிழா எய்திய வாழ்நாட் சிறப்பினைப் பாராட்டுவதற்காகவும் இம் மாநாட்டில் சில நிகழ்ச்சிகளை அமைத்திருக்கின்றோம். நா. அவர்கள் அறுபதாண்டு எய்தினார்கள். அதனைச் சிறப்பிக்க வேண்டும் என்பதற்காக நாம் கூடவில்லை. நல்ல வசதி யோடு உரமருந்துண்டு வாழ்ந்தால் அறுபதாண்டு பயிர்க்கும் வந்துவிடும். இன்று எழுபது கோடி இந்தியரில் அறுபது வயதுக்கு மேற்பட்டோர் பல கோடியிருப்பர். ஆறு கோடித் தமிழரிலும் அவ்வாறு இருப்பர். வயது முதுமை சிறப்புக்கு நேர் காரணமில்லை. மணிவிழாவை ஏதீடாக வைத்து நாம் நா. அவர்களைப் பாராட்டுவது அவர்தம் கொடைக்காக, அவர் தம் பொதுத்தொண்டுக்காக, அவர் தம் தமிழறிவுக்காக, அவர் தமிழ் புலவர்களிடம் காட்டும் பெருமதிப்புக்காக, தம் பெருங் கொடையால் சரசுவதி நாராயணன் கல்லூரி கண்டார். தம் நூற் பாலையில் தொழிலாளர்கள் போற்றும் முதலாளியாக விளங்கு கின்றார். மீனாட்சியம்மன் கோயில் தக்காராக விளங்கி சைவ சமயத் தொண்டு செய்தார். இன்று தமிழகத்தில் பல பொது வாழ்வில் ஈடுபட்டு பெருமகனாக வளர்கின்றார். பொதுத் தொண்டில் அவர்தம் ஈடுபாடு பெருக வேண்டும்; அவர் மிகு செல்வம் இன்றும் கொடையாக வேண்டும்; அவரிடமிருந்து நாடும் தமிழும் எதிர்பார்க்கும் பணிகள் இன்னும் பலவுள. எனவே உடல்நலமும் சீரும் சிறப்பும் வளர்ந்து நாராயணன் அவர்கள் மீண்டும் மீண்டும் நம் பாராட்டினைப் பெறுவார் களாக. நம் பாராட்டுக்குரிய இருவருள் ஒருவர் இல்லறத்தார், ஒருவர் துறவறத்தார். இல்லறமும் துறவறமும் ஒரு மேடையில் ஒருங்கு பாராட்டுக்குரியவையாகின்றன. இரு வகையும் பாராட்டுதற்கு மூன்றாவது அறத்தார் யாருமில்லை. இல்லறம் துறவறம் தவிர மூன்றாவது அறம் என்பதொன்றில்லை. துறவி யும் இல்லறத்தின் பிறவியாதலின் என்போன்ற இல்லறத்தார் தலைமை தாங்கிப் பாராட்டுவதே இயல்பு. நம் வணக்கத்துக்கு வாய்த்த அடிகளார் பிறவடியார் களினும் வேறுபட்ட சிறப்புடையவர். இவர்தம் மக்களுறவு எனச் சுருங்கச் சொல்லலாம். முத்தியடைவதோ அவ்வுலகத் தைக் கனாக் காண்பதோ வறட்டு மெய்ம்மைகளை வம்புக் கிழுப்பதோ ஒதுங்கி வாழ்வதோ அடிகளாரின் நெறியன்று. மக்களின் வறுமை நீக்கமே முத்தி எனக் காண்பவர். இன்று ஊரக மக்கள் வாழ்விற் கருத்துச் செலுத்திப் புதிய தொழிலுத்தி களைத் தழுவிக் கூட்டுறவு முறையில் பண்ணைகள் நடத்திச் சிற்றூர் மக்களை வளமாக்கி வருகின்றார் அடிகளார் வீடு தோறும் வேலையின் விளக்கத்தைக் காண்கின்றோம். குன்றக்குடி வடிவு என்ற ஊரகத் தொழிலுத்தி இந்திய நாடு எங்கும் பிற மாநிலங்களிலும் பேசப்படுகின்றது. நலிவும் மெலிவும் எத்துறையிலும் நாட்டில் நீங்க வேண்டும் என்பது அடிகளாரின் வேணவா. அடிகளாரின் தொண்டு புகாத இடமே யில்லை. சமயத்துறை, தமிழ்மொழித் துறை, அரசியல், இலக்கியம், தொழில், அமைதி, சொல்வன்மை, குழுமவியல், கல்வி எனப் பலதுறையிலும் அடிகளாரின் முன்னேற்றச் சுவடுகள் பதியக் காண்கின்றோம். நம் தமிழகத்தில் பொருளாதாரமும் அமைதியும் பெருகி வந்தாலும் உணர்விலும் அறிவிலும் உள்ளொழுங்கிலும் மொழியிலும் சிறப்பாகவில்லை. அடிமையுணர்வும் இவ்வுரிமை நாட்டில் கூலியுணர்வும் கூடுதலாகின்றன. பழைய வீழ்ச்சி களோடு புதிய வீழ்ச்சிகளையும் காண்கின்றோம். தெருக்கள் தோறும் இரண்டு கேடுகள் விளம்பரமாகக் காணப்படுகின்றன. வீதிகள் தோறும் இரண்டொரு பள்ளி என்றார் பாரதியார். ஆம் இன்று வீதி சந்து மூலை மறுகெல்லாம் சாராயக் கடைகள் விளங்குகின்றன. நெடுந்தூரத்திலிருந்தே கவரவல்ல விளம்பரப் பலகை இருக்கின்றன. வீதிகள்தோறும் பள்ளிகள் இல்லாமல் இல்லை. சிறு முளைப்பள்ளிகள் எல்லாம் ஆங்கிலப் பாலர் பள்ளிகளாக உள. ஆங்கிலத்திற் கற்பிக்கப்படும் ஆங்கில விந்தியர்களாற் கற்பிக்கப்படும் என்று சிற்றூர் நகரத் தெரு வெல்லாம் இப்பலகைகள் பளிச்சிடுகின்றன. ‘நலமோர் எட்டுணையுங் கண்டிலேன்; நாற்பதாயிரங் கோயிலிற் சொல்லு வேன்’ என்று பாரதி பாடியது எடுபடவில்லை. இவ்வாறு கட்குடியிலும் ஆங்கிலப்படிப்பிலும் நம் மக்கள் மூழ்கி நடக் கின்ற பெருங்கேடுகளை உணர்ந்தும் அரசு பிற நன்மைகளைப் பெரிதாக எண்ணிக் கிடக்கின்றது. சமுதாய வீழ்ச்சிப் போக்கை எண்ணிக் கவலும் போது அடிகளார் இன்னும் நூறாண்டு வாழ்கவென வாழ்த்துகின்றோம். உருசியாவில் சில நல்லூர் களிற் பலர் 160 ஆண்டுகட்கு மிகுதியாக வாழ்கின்றனர் என்று படித்திருக் கின்றோம். ஆதலின் அறுபதாண்டெய்திய வணக் கத்துக்குரிய நம் அடிகள் இன்னும் நூறாண்டு வாழ்தல் இயற்கைக்கு முரணில்லை. அடிகளை இன்னும் நூறாண்டு வாழ்க என்று வாழ்த்தும்போது நமக்கு என்ன ஆசை பிறக் கின்றது. “வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனநின்பால் தாழ்த்துவதும் தாமுயர்ந்து தம்மையெல்லாந் தொழ வேண்டி” என்ற திருவாசகப்படி, அடிகளை வாழ்த்துவதும் நாம் கூடுத லாக வாழ்வதற்கே. பல்லாண்டு வாழும் அடிகளார் அவரை வணங்கும் நம்மையும் பல்லாண்டு வாழ்கவென்று வாழ்த்தத் தானே செய்வார். எல்லாரும் எவ்வளவு நாள் வந்தாலும் தாழ்வை நெறியாகவும் கூலியை வாழ்வாகவும் பிறமொழியைக் கல்விமொழியாகவும் மயங்கும் நம் மேன் மக்களைச் செம்மைப் படுத்த முடியுமா? நம்புவோம், சோர்வடையோம், நற்காலம் பிறக்கும். இல்லறப் பெருமகனையும் துறவறப் பெருமகனையும் பாராட்டும் இக்குறட் பேரவைக்கண், திருக்குறளை எங்ஙனம் நோக்க வேண்டும் என்பது குறித்துச் சில சொல்லுவேன். இதுவே இக்கூட்டத்தின் பயன். உலகியல் நோக்கில் செயல் நோக்கில் நடைமுறைச் செய்திகளில் வைத்துத் திருக்குறட்களை உராய்ந்து தூக்கவேண்டுமென்று வள்ளுவம் என்ற என் நூலில் முப்பதாண்டுகட்கு முன்பே விரிவாக வலியுறுத்தியுள்ளேன். ‘புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும்’ எனவும், அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் எனவும் திருக்குறள் செயல் வினையை முன்னிறுத்துகின்றது. எப்படியோ திருக்குறட்கு அது தோன்றிய காலந்தொட்டே உலகப் பார்வையும் இலக்கியப் பார்வையும் பெருகி வந்துள்ளன. புதிய புதிய உரை காணும் எண்ணத்தையே வளர்த்து வந்திருக்கின்றோம். இப்பார்வை - உரைப்பார்வை வேண்டியவொன்றே; வளர்ந்த, வளர்த்த முறையும் தவறில்லை. ஆனால் இது புலமைப் பார்வை; கல்விப் பார்வை. இப்பார்வையும் ஆழமாக இல்பொதிருந்திருக்குமே யாயின் பல தமிழ் நூல்கள் போலத் திருக்குறளும் மறுபடியின்றி அழிந்திருக்கும். தமிழில் இன்றுள்ள பல பெரு நூல்களைக் காப்பாற்றியன உரைகளே; அந்நூலாசிரியர்களை வழிவழிக் காத்தவர்கள் உரையாசிரியர்களே, புலமை யாளர்களே. ஆதலின் உரைக் குலத்துக்கும் புலமைக் குலத்துக்கும் நாம் குறையாத கூடுதலான நன்றியுடையோம். திருக்குறட்கு நேர் பார்வை, பயன் பார்வை என்பது செயற் பார்வையே, வாழ்வுப் பார்வையே. திருக்குறளைப் பாரதத் தேசிய நூலாகக் கொள்ளவேண்டும் என்ற கருத்தினை நாம் சொல்லி வருகின்றோம். கீதை, வேதங்கள் எல்லாம் சாதி வருணத் தன்மை யுடையனவாதலால், நம் அரசியல் அமைப்புக் கொள்கைக்குப் பொருத்தமாகத் தேசிய நூலாக முடியாதவை என்றும் திருக்குறள் தான் இந்திய நூல்களுள் தேசிய நூலாகும் சால்பு வாய்ந்தது என்றும் ஓர் ஆங்கிலக் கட்டுரையை நான் எழுதி வெளியிட்டிருக் கின்றேன். அம் முறையில், இன்றைய பாரதவரசியல் மேம்பாட்டிற்குத் திருக்குறள் காட்டும் முதன்மை யான ஒரு வழியை இங்குச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். இன்று நம் பாரதக் காப்புக்கு வேண்டியது மறவுணர்வு, மறப்பயிற்சி, படைப் பெருக்கம், வல்லரசாதல், விடுதலைப் போராட்டக் காலத்து நம் பெருந்தலைவர்களிடத்து அறவழியா யினும் வீரவுணர்வு இருந்தது. நாட்டிற்காக உயிர் ஈயும் உணர்வும் பெருந்துன்பப்படும் முனைப்பும் இருந்தன. விடுதலை பெற்ற பின் அன்னை இந்திராவின் ஆட்சிக் காலத்துக் குறிப்பிடத்தக்க படையெண்ணமும் வீரநாட்டமும் இருந்தன. பாகித்தானை வென்றதும் பங்களாதேசத்தைப் பிரித்ததும் நம் வீரவிளைவுகள். சீனாவும் அடங்கி யிருந்தது. நேரு காலத்தில் உலக வமைதியுணர்வும் புகழும் வளர்க்கப் பட்டதேயன்றி இந்தியக் காப்புமறம் வளர்க்கப்படவில்லை. அதன் விளைவே சீனா நம்மைத் தாக்கியதும் நம் இடத்தைக் கைப்பற்றியதுமாம். இன்றைய நம் தலைமையமைச்சர் இராசீவ் காந்தியின் ஆட்சியில் மீண்டும் உலகவமைதி நாட்டமே பெருக்கப்படுகின்றது. மறவுணர்வு மக்களிடை இளைஞர் களிடை மாணவர்களிடை மிகவும் குன்றிவிட்டது. எப்படி யாவது பொருளாதாரத்தை விரைவில் குவிக்க வேண்டும் என்ற தேட்டம் பரந்தோடி நிற்கின்றது. வீரத்துக்கும் நாட்டிற்காக இழப்புக்கும் யாரும் முன்வருவதில்லை. நம் தலைவர்கள் உள்ளும் புறமும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உலக வமைதியும் அணுச் சோதனைத் தடையும் படைக் குறைப்பும் படையொழிப்புமே பறைசாற்றி வருவதால் நம் படைஞர்க்குக் கூட மறவுணர்வு மங்கிவிடும் என்று கருதலாம். அரசியற் றலை வர்களின் கருத்துக் கேற்பப் படைத்தளபதிகள் தங்கள் வீரவுணர்வுகளை அடக்கிக் கொள்ள வேண்டியவர்கள் ஆகின்றனர். நம் படைப்பாளர்களின் நோக்கபடி வீரவினை கட்கு விட்டிருந்தால் அருணாசலப் பிரதேசத்தில் சீனர்கள் நம் எல்லைக்குள் நெடுந்தொலை நுழைந்திருக்க முடியுமா? அவர்களின் நுழைவை நம் படைகள் சிறிதுகூட மறித்ததான செய்தியில்லையே. உலகவமைதி அறையும் நம் அரசுத் தலைவர் கள் ஏன் இந்தியாவில் இவ்வளவு படைச்செலவு செய்ய வேண்டும். இச்செலவு செய்யாமல் பொருளாதார வுயர்வுக்கு, ஊன் ஓம்பும் உடல் வாழ்வுக்குப் பயன்படுத்தலாமே. இந்நிலையில் திருக்குறள் நம் பாரதவரசியலுக்குக் காட்டும் வழிகள் என்ன? 133 அதிகாரம் கொண்ட திருக்குறளில் 70 அதிகாரம் அரசியல் பற்றியது, ஆட்சியியல் பற்றியது, படை யியல் பற்றியது, உள்நாட்டு ஒழுங்கும் அயல்நாட்டு உறவும் பற்றியது. அடிப்படை இயற்கைச் சிந்தனைகட்குத் தொன்மை புதுமை என்பதில்லை; பழமை என்பதில்லை. உயர்ந்த உலகச் சிந்தனைகள் ஈராயிரம் ஐயாயிரம் ஆண்டுக் காலங்கள் வழக்கு வீழ்ந்து விடுவதில்லை. அரசும் ஆட்சியும் வலியும் நாடும் பற்றிய வள்ளுவங்கள் எந்நாட்டிற்கும் போலவே பாரதத்துக்கும் பொருந்தும். பொருட்பாலின் முதலதிகாரத்தின் முதற் குறள் படை குடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு என அமைந்திருக்கின்றது. அரசியலாதலின், அதனைக் குறிக்கப் படை எனத் தொடங்குகின்றார் வள்ளுவர். அரசின் முதலுறுப்பு படையாக எண்ணப்படுகின்றது. ஏனை ஐந்தினையும் காப்பது படையன்றோ? படையில்லா ஓரமைப்பு எத்தகையதாயினும் அரசெனப்படாது. அரசின் வலிமை என்பது முடிவில் படை வலிமையே. அறத்துப்பால் உயர்ந்த குறிக்கோள் நோக்கியது. தனி மனிதனின் பண்பு ஒழுக்கங்களை உயர்வாகக் காண்பது. பொருட்பால் என்பது உலகியல் நடைமுறை நோக்கியது. செயற்பாட்டுக்கு வேண்டும் நடைமுறைச் சூழ்ச்சி கொண்டது. பரந்த குழும நலமும் நாட்டு நலமும் நோக்கி வெல்லும் திறங் களைக் காட்டுவது. ஆதலின் திருக்குறள் பொருள் வள்ளுவங் களையும் அறங்களென நாம் மதிக்க வேண்டும். ஓர் எடுத்துக்காட்டு, ‘ஒன்றாக நல்லது கொல்லாமை’ என்றார் வள்ளுவர். இது அறப்பாலில் வருவது. பொருட் பாலிலோ படையும் படைமாட்சியும் படைச்செருக்கும் பகை மாட்சியும் பகைத்திறந் தெரிதலும் என்று போரறங்களைப் பல படவிரித்துக்கூறுவர். செறுநரைக் காணிற் சுமக்க சிறுவரை காணிற் கிழக்காந்தலை என்று உயிரழிவு சுட்டுவர். படைஞர் களைக் கொலையாளிகள் என்று கூறுவதில்லை. போரில் எத்துணைப்பேர் அழியினும் மறமெனப்படுவதன்றிக் கொலை யெனப்படுவதில்லை. இம்மறவர்கள்பலரறிய மாராயம் பெறுவர். போர்க்களம் கொலைக் களம் எனப்படுவதில்லை. போர்க்கருவி களைக் கொலைக்கருவிகள் ஆவதில்லை. வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லார்க்குக் கடன் எனவும் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடன் எனவும் போற்றப்படும். இதற்கெல்லாம் ஒரே காரணம் நாட்டுக் காப்பு, தன்குடிக்காப்பு, தன்மானக் காப்பு. போரில்லா அமைதியுலகம் காண விரும்புவதில் தவறில்லை. எங்கும் அமைதி, எங்கும் உறவு என்ற கோட்பாடு தலையாயது. ஆனால் இது குறிக்கோளறம். அது தனிமனித வாழ்க்கையில் நன்கு செயற்படும். பொது வாழ்வில் நாட்டு வாழ்வில் நடைமுறைகள் வேறு. அவையும் இடத்துக்கேற்ற அறநெறிகளே. நீதிபதி ஒரு பெருங்குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கின்றார். அவர்க்குப் பாவஞ் சொல்லப்படுமா? குற்றம் சொல்லப்படுமா? அவனை விடுதலை செய்வது அற மெனப்படுமா? அருளெனப்படுமா? இவற்றின் ஆழ் நிலைகளை நம் பாரத ஆட்சியர்கள் நன்கு பதிய வைத்துக் கொள்ள வேண்டும். ஆட்சித் தலைமைப்பீடத்திலிருப்போர் படைவலிமையை முதன்மை யாகக் கருதவேண்டும். வலிமையாளர் சொல்லும் அறங்கள் ஏனையோர் மனத்திற் பதியும். நல்லாவின் கன்றாயின் நாடும் விலைபெறும் கல்லாரே யாயினும் செல்வா வாய்ச் சொற் செல்லும் என்ற நாலடிப்படி, இந்தியா வல்லரசாக இருக்கும்போதுதான் அது சொல்லும் உலகவமைதிப் பேச்சுக்கள் செவி கைப்பினும் கேட்கப்படும். நம் பாரதத் தலைவர்கள் தாங்கள் அரசுத் தலைவர்கள், ஒரு நாட்டின் ஆளுந்தலைவர்கள் தாங்கள் காக்க வேண்டிய நாடு ஒன்று உண்டு; மக்கள் உளர் என்பதனைப் பல பத்தாண்டுகளாகச் சிறிதும் கருதவில்லை. உரிமை பெற்று நாற்பதாண்டு களாயினும் வல்லரசாகும் எண்ணமே பட வில்லை. வல்லரசில்லாதது நல்லரசாகவும் ஆகமுடியாது. மெல்லரசாகத் தான் போய்க் கொண்டிருக்கும். திருக்குறளின் படி இன்றைய இந்தியவரசு பகைமாட்சிக்கு உரியதாக, அறம் பேசித் திரியும் ஏமாந்த சோலை கிரியாகப் பக்கத்து நாடுகளும் அயல் நாடுகளும் உள்ளூர எண்ணுகின்றன. அணி சேராவியத் துக்கு இந்தியா தலைமை எனவும் பாரதத் தலவர்கள் உலகில் அமைதியை நாட்டப்பாடுபடுவோர் எனவும் புகழப்படுவதெல் லாம் நாம் தலைவர்கட்குத் தலைகால் தெரியா இனியவையாக இருக்கின்றன. இத்தனிப் புகழ்ச்சிகள் இந்திய நாட்டின் வலிமையை வேரறுப்பன எனவும் ஏமாளிச் சின்னங்கள் எனவும் நம் தலைவர்கட்குப் பலவாண்டுகளாகப் புரியவில்லை. காந்தியடிகள் உலகவமைதி பேசலாம் பேசவும் வேண்டும். அது தனி மனிதவறம். அவர் பாரதத் தலைமையமைச்சர் அல்லர். அவர் பொருட்பாலின் பல அதிகாரங்கட்கு உரிய வரல்லர். நேருவோ, இலால்பகதூரோ, இந்திராகாந்தியோ, மொரார்சி யோ, சரண்சிங்கோ, இராசீவ்காந்தியோ இவர்க்குப் பின்வருவ ரோ தலைமை பாரத வாட்சியராக இருக்கும் போது அரசிய லறங்களையும் பொருட்பால் வள்ளுவங்களையும் கடைப் பிடிக்க வேண்டும். நான் சுற்றி வளைத்துச் சொல்லும் ஒரு பெருங்கருத்து என்ன? இந்தியா புதிய நுட்பத் துறையில் எவ்வளவு படை வலிமை பெற வேண்டுமோ அவ்வளவும் பெறவேண்டும். அணுச் சோதனை செய்யும் ஆற்றலுண்டு என்று சொல்லிக் கொண்டிராமல் செய்து அணு வாயுதங்களைப் பெருக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு பாகித்தான் அணுப்படை செய்கின்றது; அமெரிக்கா அதனைத் தடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் கெஞ்சி விடுப்பது மானமாகாது. வகையறிந்து தற்செய்து நற்கால மரபும் பகைவர்கட் பட்ட செருக்கு. என்ற அரசு வள்ளுவம் படைமுதல் வன்மையை ஒரு தலையாக வலியுறுத்தும். பாகித்தான் சீனா இனைய நாடுகளின் போர்ச் சலசலப்பு அழியவேண்டுமெனின் அமெரிக்கா உருசியா விடமிருந்து இணையற்ற மதிப்பும் பாரதத்துக்கு வேண்டு மெனின் படைப் பெருக்கும் படைநுண்மையும் வல்லரசு மேன்மையும் நாம் பெறவேண்டும். ஐ.நா.வின் காப்பு குழுவில் பொதுவுடைமைச் சீனா தன்னிடத்தைப் பெற இந்தியா வாதா டிற்று. எழுபது கோடி மக்கள் வளமும் பழமைச் செல்வமும் புதுமை நடப்பும் வாய்ந்த தனக்கும் ஓரிடம் வேண்டுமென்று அவ்வுலகக் குழுவில் கேட்டிருக்க வேண்டாவா? இன்னும் கேட்கலாமே. தடுப்புரிமை கிடைத்திருக்குமே. வல்லரசாக இவ்வாறு உலகரங்கில் ஒரு முதன்மை பெறல் வேண்டும். இது அமைதிக்குக் கேடு என்று சொல்வது அரசியலன்று; தேசிய மன்று. ஒரு நாட்டின் ஆட்சித் தலைவருக்கு நாட்டுப்பற்றன்று. மீண்டும் சொல்கின்றேன், படை வன்மையினால் போர்கள் நிகழும். உலகம் அழியும் என்பதில்லை. அப்படி இது காறும் அழிந்துவிடவுமில்லை. இயற்கையழிவுகள் போலப் பேரழிவுங் கூடக் கால வரலாறு கண்ட இயற்கை வலிமையோடு இருக்கும் போதுதான் கொள்கைகள் கேட்கப் படும். கேட்கும் மதிப்பும் கேட்பார்க்கு ஏற்படும். முதலமைச்சர் பதவியிலிருக்கும் போது அவர் சொல் எய்தும் மதிப்பு வேறு; இல்லாத போது எய்தும் மதிப்பு வேறு. இவ்வுண்மை பலவற்று நிலைக்கும் பொருந்தும். இன்னொன்றும் இன்றைய இந்திய நிலையிற் சொல்லி யாக வேண்டும். சிலவாண்டுகளாக இந்தியாவில் அச்சுறுத்தி யலும் திடீர்த் தாக்கியலும் கொள்கைக் கொலையியலும் கூடுதலாகி வரக் காண்கின்றோம். இளைஞர்கள் இவ்வாறு இழுக்கப் படுகின்றனர். பஞ்சாப்பிலும் சில மாநிலங்களிலும் இப்போக்கினைக் காணலாம். இளைஞர்களின் இளமை யாற்றல் எப்படியோ வன்கண்மையிற் புறப்படுகின்றது. இதுவும் எண்ணிப்பார்ப்பின் ஒருவகை மறவுணர்வுதான். உண்மையான விரவுணர்விலும் மறவுணர்விலும் ஆண்மை நெறியிலும் நாடு முழுதும் இளைஞர்களின் மெய்யாற்றல் வழிப்படுத்தப்பட்டிருந் தால் இவ்விளந் தோன்றல்கள் வீரக்குடிகளாகவும் நாடு காக்கும் படைஞர்களாகவும் மாறியிருப்பர். இளைஞர்களின் இளமெய் யாற்றலை நெறியாக, உறமாக வழிப்படுத்தும் திட்டம் இல்லை. அவர்களைச் சொல்லிக் குறையென்? ஆற்று வெள்ளம் கரைப் பட்டால், நீர்த் தேக்கப்பட்டால் நாட்டு வளம் வரும். வெள்ளப் போக்கில் விட்டுவிட்டால், ஊர்கள் அழியும். நம் ஆட்சித் தலைவர்கட்கு வல்லரசெண்ணமும் படைவலித் திட்டமும் இல்லாததினால், இவைபற்றிய சிந்தனை வறுமையால், பலகோடி இந்திய இளைஞர்களின் ஆற்றல் வெளிப்படாமை யோடு, வெளிப்பட்டாலும் நெறிப்படாமையாக வருத்தத் தொடு காண்கின்றோம். பள்ளிகளில் எங்கே மறப்பயிற்சியுண்டு? கல்லூரி பல்கலைக் கழகங்களில் எங்கே நன்னெறி வீரப் பயிற்சியுண்டு. படிப்பில் எப்படியாவது முதன்மை பெறுவது பரிசு பெறுவது, பதவி பெறுவது என்ற கல்வியுணர்வை தான் பெருக்கி வருகின்றோம். பெருக்கி வருந்திட்டங்களை கண்டு வருகின்றோம். எல்லார்க்கும் மறப்பயிற்சி என்ற பொதுநாட்ட மில்லை. பலர்க்கு மறப்பயிற்சி இருந்தால் நாட்டிற் கொலைக் குற்றங்கள் பெருகிச் சட்டவொழுங்கு கெட்டுவிடும் என்பதும், மற்றொரு தவறான கருத்து. கொலை விலங்குகள் கூட கண்ட வாறு அழிவு செய்வதில்லை. ஆண் புலி பெண் புலியையும் குட்டிகளையும் தன் இனத்தையும் மாய்ந்து அழிப்பதில்லை. சிங்கம் முதலான கொடிய விலங்குகளும் இயற்கையுறவுணர் வுக்கு உட்பட்டுள. சீவிய கொம்புடைய காளைகள் பிற மாடு களைக் குத்திக் கொல்வது இயல்பில்லை. அதுபோல் பொதுப் படைப் பயிற்சி பெற்ற இளையரும் இளைநிகளும் எண்ணிய வுடனே யாரையும் குத்திக் கொன்று விடுவர் என்று கருத்துக் கொள்வது இயல்பன்று. தற்காப்புக்குரிய ஆற்றலிருந்தால் எதிரி கள் துணுக்குறுவர். எதனையும் செய்யுமுன் தனக்கும் ஊறுவரும் என எண்ணிப் பார்ப்பர். மக்கள் தற்காப்பற்றவர்கள்; ஊறு செய்து விட்டு ஓடிவிடலாம். ஆள் அடையாளம் தெரியாது என்ற கரவு நெறியிற்றான்,பல கொடுமைகள் நிகழ்கின்றன. அச்சுறுத்திகள் படைஞர்கள்போல நேர்நின்று தாக்கும் மறவர் கள் அல்லர். அவர்கள் பயந்தோடிகள், அஞ்சும் மறத் திருடர்கள், மறைவாடிகள். மக்கட்கும் தற்காப்பு இருக்கு மேல் பஞ்சாப்பில் இவ்வளவு திடீர்க் கொலைகள் நடந்திரா. கொலையாளிகள் கொலை செய்துவிட்டு ஓடியிருக்க முடியாது. பஞ்சாப்பு எல்லையில் முக்கிசார் என்றும் இடத்தில் பொதுவூர்தியைத் தடுத்து நிறுத்திப் பயணிகளை அச்சுறுத்திகள் கொன்றிருக்க முடியுமா? மறப்பயிற்சி பெற்றிருந்தால்அவர்களைச் சில பயணிகளாவது தாக்கியிருப்பார் களன்றோ? மறத்தின் வேகம் என்ன? உரிய நேரத்தில் அழிவு பாராது வேகமாகப் புறப்பட்டு எதிர்க்கும். அண்மையில் பாகித்தானின் கராச்சியில் வானூர்தி நிலையத்தில் நடந்த கொடுமைகளை எண்ணிப்பாருங்கள். நூற்றுக்கணக்கான இந்தியர்களும் பிறநாட்டாரும் வானூர்தி யில் இருந்தனர். சுடு குழல்கள் வைத்திருந்த நாலே கடத்திகள் அத்துணைப் பேரையும் அச்சுறுத்திக் கொடுமைப்படுத்திய தோடு இருபது பேரைச் சுட்டுக் கொன்று நூற்றுவரை உறுபடுத் தினர். இவ்வூர்திப் பயணிகட்கு மறப் பயிற்சி யிருந்தால் என்ன மாறுதல்கள் நடந்திருக்கும்? கடத்திகள் நால்வரும் முதலிலே கொல்லப்பட்டிருப்பர். பொதுமக்கட்குப் மறப் பயிற்சியுண் டென்றால், கடத்திகள் உள்ளே வர அஞ்சுவர். மறவுணர்வைப் பொதுமக்கட்குச் சிறுபருவத்திலிருந்தே வளர்த்திருந்தால் கைப்படைகள் கூட வேண்டுமென்பதில்லை. உடலுறுப்புக்களே கும்பனுக்குப் போலப் பெருங்கருவிகள். சிலர் மறவுணர்வோடு மெய்த் தாக்குதல் செய்திருந்தாலும் கடத்திகள் அஞ்சிக் கடந் திருப்பர். இந்தியாவுக்கு இன்றும் என்றும் வேண்டுவது எல்லார்க்கும் இளைய பருவ முதலே பொது மறவுணர்வு. இது தற்காப்புக்கும் எதிரியின் சிந்தனைக்கும் நாட்டின் எழுச்சிக்கும் மடியில்லா ஆள்வினைக்கும் வேண்டும். பழங்காலத் தமிழகம் அகம், புறம் என்ற இருவகை யுணர்வையும் இலக்கியங்களையும் இணையாக வளர்த்தது. வீரஞ்செறிந்த தமிழ்நாடு என்பர் பாரதியார். இது வெற்றுமையன்று. “கன்னின்றான் எந்தை கணவன் களப்பட்டான் முன்னின்று மொய்யவித்தார் என்னையர் - பின்னின்று கைபோய்க் கணையுதைப்பக் காவலன் பின்னோடி எய்போற் கிடந்தானினன் ஏறு” தமிழ்க் குடும்பத்தில் கிழவர் பாலர் வரை எல்லாரும் மறப் பயிற்சி யுடையவராய் நாட்டிற்கு உயிர் கொடுத்த விழுப்புண் பெற்றியைக் கற்கின்றோம். அண்ணன், கணவன் முதலான குடும்பவுறுப் பினர்களைப் போரில் இழந்த ஒரு நங்கை பகைவரின் போர்ப் பறையை மறுபடியும் கேட்டு மற நெஞ்சின ளாய் உடனே அன்று என்ன செய்தாள் தெரியுமா? நினைத் தாலே நமக்குப் புராண மாகத் தோன்றும். இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிது விரித்துடீ இப் பாறு மயிர்க் குடுமி யெண்ணெய் நீவி ஒருமக னல்ல தில் லோள் செருமுக நோக்கிச் செல்கென விடுமே. என்ற புறநானூற்றின்படி நடைபயலும் மகனை - ஒரே ஒரு மகனைப் படை மறத்தோற்றம் செய்து போர்க்களத்துக்குப் போகச் செய்தாள். தமிழத்துப் பண்டு பொதுப்படைப்பயிற்சி இல்லறத்தார்க்கும் இருந்தது. இன்பவுற வோடு மறவுணர்வோடு அகத்தோடு புறமும் கலந்திருந்தன. பொருளீட்டச் செல்வோரும் வேல்வாள் ஏந்தினர். கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த குடி. என்ற தமிழ் மறவரலாறு இன்று நம் பாரதத்துக்கு வேண்டும். அன்று தமிழ் மகளிர்க்குகு மறவுணர்வு இருந்தது. மறப் பயிற்சி இல்லை. இன்று பாரதப் பெண்கட்கு மறவுணர்வும் வேண்டும். மறபயிற்சியும் வேண்டும். படைப்பயிற்சியும் வேண்டும். இவற்றால் உலகம் கெட்டுவிடாது. எல்லார்க்கும் வன்மையே உலகத்தைக் காக்கும். எந்நாட்டிலும் மக்கள் வணங்கும் கடவுளர் கள் கூடப் படைச்சின்னங்கள் வைத்திருப்பதை நினைக. நம் இந்தியப் பெரு மறைகளுள் ஒன்றான கீதை போராண்மையை வலியுறுத்துவது என்பதனை முதலிரண்டு பகுதிகளைப் பார்த்தால் தெரியவரும். இந்நூல் போர்க்களத்தில் எழுந்தது. தேரோட்டியாக இருந்த தெய்வக் கண்ணனால் அருளப் பெற்றது. இரு பக்கத்து அணியிலும் நெருங்கிய உறவினர்கள் நிற்பதைக் கண்ணுற்ற வீர அருச்சுனன் இவர் களைக் கொன்று வென்று நாடு பெறுவதால் என்ன பயன்? என்று பலகாரணங்களைச் சொல்லிச் சோர்வுற்றுப் படைக் கலங்களைக் கீழே போட்டுவிட்டுத் தேர் மேற் சாய்ந் தொழிந் தான். இது போர்க்கள நடுவண் தொடக்க நிகழ்ச்சி. கண்ணன் அறம் பேசவில்லை. உலகவமைதிக்கு இதுவே முறை என்று பாராட்டிப் பேசவில்லை. பெரியவுண்மைகளைப் புலப்படுத்தி னான் கண்ணபிரான். உயிர் அழிவதில்லை, அழிக்கப்படுவது மில்லை, அழிக்கவும் முடியாது என்று உயிரின் நிலைமையை எடுத்து விளம்பி, உன்கடமை போர் செய்வது எனக் கடமை யுணர்வை அருச்சுனன் நெஞ்சில் எழுப்பினான். நின் சொற் களை மெய்யெனக் கொண்டு போர்க் கடமை செய்வேன் என்று சோர்வு நீங்கிப் போருக்கு ஆயத்தப் பட்டான் பார்த்தன் என்று கீதை போரறம் பறைசாற்றுகின்றது. இவ்வரிய உண்மையை, நம் தமிழ்ப் பெருங்கவி பாரதியார் வில்லினை யெடடா - கையில் வில்லினை யெடடா - அந்தப் புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா வாடி நில்லாதே - மனம் வாடி நில்லாதே - வெறும் பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே என்று மற நடையிற் பாடியுள்ளதும் சான்றாகும். மீண்டும் ஒரு முறை அறைந்து சொல்கின்றேன். படை வன்மையிருப்பு உலகழிவாகாது. தற்காப்பாகும்; எதிரிக்கு எச்சரிக்கையாகும். மேலும் போர் நோக்கிய முயற்சிகளே ஒரு நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கும் புதுக் கண்டுபிடிப்புக்கும் எழுச்சித் தூண்டுதலாகின்றன. போர் நோக்கும் போது தான் வேண்டும் நிதிகள் ஒதுக்கப்படுகின்றன. நாடு முழுதும் அறிவுச் சுறுசுறுப்பும் உடற்சுறு சுறுப்பும் முன்னேற்ற வேகங்களாலும் போர்க்கு முன் ஆயத்தங்களால் ஏற்படுகின்றன. உருசியாவும் அமெரிக்காவும் மேற்குச் செரு மணியும் சான்றாகும். ஆதலின் என் விருப்பம், என் வேண்டுகோள் என் அறிவுரை; நம் பாரதம் நுண்பெரும் அரும் படைவன்மை பெறுக; வல்லரசாகுக; மறம் வளர்க்க; வளம் பெருகுக. பொழிவு - 18 நாள் : 14.9.1986 ஞாயிறு மாலை 26 ஆவணி 2017 இடம் : மதுரை திரையரங்கம் நிகழ்ச்சி : திருக்குறட் பேரவை, மதுரை மாவட்டம் கருத்தரங்கம் தலைமை : வ.சுப. மாணிக்கம் கலந்து : அறவோர் முருகேசன், பேராசிரியர் கொண்டோர் குழந்தைநாதன், தொழிற்கல்வி இயக்குநர் இராசாமணி பிறர். பொழிவுச் சுருக்கம் கல்விப் பெருமக்களே, பேரன்பர்களே, இன்றைய மக்கள் நிலை, குடும்பப் போக்கு, அரசியல் நிலை அறிவியற் போக்கு இவற்றை நடைமுறை வளர்ச்சி நோக்கித் திருக்குறட் பார்வை செய்ய வேண்டும் என்பதனை இன்றைய காலையுரையில் வலியுறுத்தினேன். மறம் வேண்டும், படைவேண்டும், பாரதம் வல்லரசாக வேண்டும் என்ற கருத்துக் களை நாம் நாட்டின் நிலையில் வைத்துத் திருக்குறளோடு சுட்டிக் காட்டி திருக்குறட் பார்வை என்பது செயற் பார்வை, திறன் பார்வை பலர் எண்ணிக் கொண்டிருப்பது போல நயப் பார்வை, உரைப் பார்வை, மேற்கோட் பார்வையன்று இவை யெல்லாம் பார்வைகளாயினும் திருக்குறட்கு நேர் பார்வை யாகாது. நாள் வழக்குச் செய்திகளையும் நடைமுறை நிகழ் வோட்டங்களையும் திருக்குறளின் துலாக்கோலில் வைத்து எடை பார்க்கும் நடுப்பார்வை வேண்டும். சீர்தூக்க வேண்டும். இவ்வாறு செய்யப் பலர் அஞ்சுவர். நடைமுறைப் போக்குக் களை நன்கு தீங்கு பார்ப்பின், திருக்குறட் பொதுமைப்புகழுக்கு மாற்றுக் குறைபடுமோ என்றும் அஞ்சுவர். இலக்கியவளவில் உரையளவில் விரிவுரை செய்தால், திருக்குறட்குப் பெருமை யாகும் எனவும் நமக்கேன் வம்பு எனவும் பலர் அஞ்சக்கூடும். அவர் நிற்க. நிகழ்ச்சிகள் கருத்துக்கள் பற்றியே நாம் காண்பது கருத்து வெளியிட்டவர்களைப் பற்றியோ, துணையாக நிற்பாரைக் குறித்தோ நல்லது கெட்டது பேசுதல் என்பது நம் வழக்கன்று. கருத்தின் தாக்கத்தை ஆளின் தாக்கமாகக் கருதி வாளா விருப்பது அழகில்லை. அது அவர்தம் பொறுப்பு. இகழுரையோ ஏச்சுரையோ படாமல் ஒல்லும் வகையில் பண்பாக எடுத்துரைப் போம். இன்று நமக்கு முன் நிற்கும் சிக்கற் பொருள் இந்தியவரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையாகும். பலர்தம் கருத்துரைகள் இதுபற்றிக் குவிந்தவண்ணம் உள. திருக்குறள் நோக்கில் இக்கல்விக் கொள்கையைப் பார்க்கலாம். கல்வி கல்லாமை அறிவுடைமை, புல்லறிவாண்மை, பேதைமை எனக் கல்வி குறித்த அதிகாரங்கள் திருக்குறளில் உண்டு. பிறவதிகாரங்களிலும் கல்விக் குறிப்புக்கள் உள. கற்க கசடறக் கற்பவை, கேடில் விழுச்செல்வம் கல்வி, சாந்துணையும் கல், கற்றிலனாயினும் கேட்க, அறிவுடையார் ஆவதறிவார், நுண்ணிய நூல்பல கற்பினும், அறிதோறு அறியாமை கண்டற் றால், என்ற கல்விக் கருத்துக்கள் நம்முன் நிற்கின்றன. கற்க கசடறக் கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக என்பதும் கேடில் விழுச்செல்வம் கல்வி என்பதும் புதிய கல்விக் கொள்கை குறித்து நாம் சிறப்பாகச் சிந்திக்க வேண்டியவை. புதிய கல்விக் கொள்கையில் முதன்மையான நவோதயப் பள்ளி என்னும் மாதிரிப் பள்ளியைப் பற்றி நாம் சிந்திப்போம். இவற்றுள் இரு கூறுகளை நான் சுட்டிக் காட்ட விரும்பு கின்றேன். நாட்டின் ஒருமைப்பாடும் தரமான கல்வியும் இப்பள்ளியின் நோக்கம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளியிருக்கும். ஆறாவது வகுப்பு முதல் பன்னிரண்டாவது வகுப்பு வரை இருக்கும். ஆண்டு தோறும் 80 குழந்தைகள் இவ் வகுப்பிற் சேர்க்கப்படுவர். பெரும்பாலும் கிராமப்புற குழந்தை களாக இருப்பர். இதில் 20 விழுக்காடு அல்லது 16 மாணவர்கள் பிற மொழி மாநிலத்தவராக இருப்பர். படிப்பு, உண்டி, உறையுள், பாடநூல் அனைத்தும் இலவசமாக இருக்கும். ஆறாவது வகுப்பு முதல் இந்தியும் ஆங்கிலமும் மும்முரமாகக் கற்றுக் கொடுக்கப்படும். தாய்மொழி அல்லது மாநில மொழி எட்டாவது வகுப்பு வரை பயிற்றுமொழியாக ஓரளவு அமைந்தாலும், இந்தியும் ஆங்கிலமுமே எட்டாவது அல்லது ஒன்பது வகுப்பு முதல் முழுதும் பயிற்று மொழியாக வரும். தாய்மொழி அல்லது மாநில மொழி ஒரு பாடமொழி யாக மொழியளவில் நிற்கும். இவை மாதிரிப் பள்ளிகளின் அமைப்புக்களாம். ஆசிரியர் தகுதி, கல்விக் கருவிகள் பற்றிய சிறப்புக்களும் உண்டு. நாட்டொருமைப் பற்றாளரும் பெற்றோர்களும் இப்புதிய கல்விக் கொள்கை பற்றிக் கூடுதலாக எண்ணவேண்டும். கட்சிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அரசியல்வாதிகள் நேர்பட ஆராய வில்லை. பதவியிலிருக்கும் கல்வியாளர்கள், பேராசிரியர்கள், முதல்வர்கள், துணைவேந்தர்கள் ஆராய முன்வரவில்லை. ஏதும் மாறுபடச் சொன்னால் மையவரசுக்கு முரணோ என்று மரமாகவே அஞ்சுகின்றனர். எதிர்க்கட்சிகள் மாறுபடக் கூறுவது அரசியல் நோக்காகக் கருதப்படுகின்றது. மாணவர்தம் கிளர்ச்சி கள் புறத் தூண்டுதலாக எண்ணப்படுகின்றன. பெற்றோர்கள் எல்லாம் இலவசம் என்பதனைக் கண்டு சிந்தனையற்று விடுகின்றனர். யாரோ சொல்லுகிறார்கள், யார்க்கோ வந்தது என்ற மனப்பான்மையில் இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என்ற பழமொழிப் பாதையில் குடிமக்கள் அன்றாடப் பிழைப்பைக் காண்கின்றனர். யாரை நோவது, யார்க்கெடுத்துரைப்பது? இந்நிலையில் பல்வேறு கல்வியாளர்கள் எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் நிரம்பிய இக்கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைச் சிந்தனைகளை நான் விளக்க முற்படுகின்றேன். நம் நாட்டுச் செய்தித்தாள்கள் பதவியில் இல்லா நடுநிலையாளர்கள் சொல்லுங் கருத்துக்களை வெளியிடுவ தில்லை. இதழாளர்கள் இக் கூட்டத்துக்கு வந்திருக்க மாட்டார்கள். கொலை, கொள்ளை, களவு, கற்பழிப்பு, வேலைநிறுத்தம், அடிதடி, ஊர்தி மோதல், சுட்டுக் கொலை, கிணற்றில் வீழ்வு, தற்கொலை என்ற ஆர்ப்பாட்ட மான துணுக்குக்களைக் கட்டங்கட்டிப் போடும் பெரிய இதழ்களே நம் நாட்டில் உள. அரசியல்வாதிகளின் வருகை வரவேற்பு, கொடிக் கம்பங்கள், கூட்டங்கள், வரவேற் றோர் பெயர்கள் மாலையிட்டோர் இவற்றைப்பற்றியும் படங்க ளோடு போடும் அவற்றின் போக்கு இதழுலகிற்குச் சிறுமை யன்றி நமக்கென்ன? இங்கு திரண்டு கூடியிருக்கும் நன்மக்களை மதித்துச் சொல்வது என் கடமை. நாளை இதழ் பற்றி நமக்கு அக்கறை யில்லை. புதிய கல்விக் கொள்கையின் முதற் கேடு, இளைய மாணவருலகத்தை இரு வருக்கமாகப் பிரிவினை செய்கின்றது. ஏற்றத்தாழ்வு உண்டாக்குகின்றது. மாதிரிப் பள்ளியிற் கற்றவர்கள் நாட்டொருமை நாட்டம் உடையவர்கள் தேசிய மனப்பான்மை பயின்றவர்கள், மிகுதிறமையுடையவர்கள் என்று பெயர் பெறுவார்கள். இந்திய நாட்டின் பல்வேறு மேல் நிலைகளுக்கு மாதிரிப்பள்ளி மாணவர்களே முதலிடம் பெறுவர். இம்மாணவர்களையே தேர்வாளர்களும் இயல்பாகத் தேர்வு செய்வர். சுருங்கச் சொல்லின், ஒவ்வொரு மாநிலத்திலும் கற்ற மாதிரிப்பள்ளி மாணவர்கள் மையவரசின் நேர்குடிகளா கவும் வளர்ப்புப் பிள்ளைகளாகவும் ஓர் உயர் சாதியாகவும் இயல்பாகவே சமுதாயத்தில் மேனிலை பெறுவர். மாதிரிப் பள்ளியிற் படியாதோரெல்லாம் மாநில வளவுக்கே தகுதியுடையோராகவும் தேசியவுணர்ச்சியின்றி மாநில வுணர்ச்சி யுடையோராகவும் மாநிலக் குடிகளாகவும் தாழ் சாதியினராகவும் கருதப்படும் நிலையே வளரும். ஆறாவது வகுப்புப் பயிலவரும் குழந்தைகள் பெரும் பாலும் பத்து வயதுடையோராக இருப்பர். இப்பருவத் தோரைத் தேசிய வுணர்வினர், மிகுதிறத்தினர் எனவும் அல்லா தார் எனவும் இருவகைப்படுத்தல் எவ்வளவு பெருங்கேடு. எல்லாப் பள்ளிகட்கும் எல்லாக் குழந்தைகட்கும் ஊட்டப்பட வேண்டிய தேசியவுணர்வை மாதிரிப் பள்ளிக்கு மட்டும் உரிய சிறப்பாக வைத்தல் பொருந்துமா? பத்துவயதில் மிகு திறமை, திறமையின்மையை எப்படி அளப்பது? திறமைக்குரிய பொருள்கள் என்ன? ஒத்த நல்ல வாய்ப்புக்கள் எங்கும் இருக்கும்போதுதான் திறமை வெளிப் படும். இல்லா நிலைக்குக் குழந்தைகளை பலியாக்குவதா? திறமை குறைந்த குழந்தைகட்குத் தானே பெரிய இலவச வாய்ப்புக்கள் அளிக்கவேண்டும்? வளமான வாய்ப்புக் கொடுக்கும்போதுதான் மெல்லிய குழந்தைகளும் திறம் பெறும். ஒரு மாவட்டத்தில் ஐந்தாவது வகுப்பில் ஏறக்குறைய இருபதினாயிரம் பிள்ளைகளாவது படிப்பர். இவர்களிலிருந்து 64 பேரை மிகு திறனோக்கி எப்படி நுழைவுத் தேர்வில் தேர்ந்தெடுப்பது? மையவரசின் பள்ளி, எல்லாம் இலவசம் என்பது கருதி ஆயிரக்கணக்கான பத்துவயதுப் பிள்ளைகள் நுழைவுத் தேர்வு எழுத முற்படுவர். கிராமப் பிள்ளைகள், நகரப் பிள்ளைகள் எனப் பாகுபாடு செய்வது எப்படி? காளான் போல் நுழைவாயத்தப் பள்ளிகள் தோன்றிவிடும். கையேடுகளும் வழிகாட்டிகளும் வெள்ளம்போல் பெருகிவிடும். இது நிற்க. முன்கூறியபடி மையவரசு நடத்தும் தேசிய நோக்குடைய மாதிரிப் பள்ளியிற் கற்ற மாணவர்கள்; அல்லாத மாநிலப் பள்ளியில் கற்ற மாணவர்கள் என்ற சமுதாயப் பிளவும் இரு வருக்கமும் ஏற்றத்தாழ்வும் இப்புதிய கல்விக் கொள்கையின் தீயவிளைவாகிவிடும். இது என் அச்சம். மேலும் ஒரு மாவட்டத்தில் 560 குழந்தைகள் கற்பவர். இச் சிறுதொகையினர் எந்தவளவு தேசிய வொருமையை வளர்த்துவிட முடியும்? ஏனைக் குழந்தைகளை ஒதுக்குவது வன் கிளர்ச்சிக்குப் போய் முடியும். இனி இன்னொரு பெருங்குறையைக் காண்போம். ஆறாவது வகுப்பு முதல் ஆங்கிலமும் இந்தியும் பயிற்று மொழி களாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம், குசராத்து, பஞ்சாபி முதலான இந்திய மொழிகள் இப்பள்ளிகள் பயிற்று மொழியாகா. எட்டாம் வகுப்புக்குமேல் பொதுவான ஒரு பாட மாக இருந்தாலும் இருக்கலாம். இந்தியல்லாத ஏனை மொழி மாநிலங்களில் அம்மாநில மொழிகள் ஆறாம் வகுப்பிற்கு மேலே உரிமைகளை இழந்து விடுகின்றன. ஏன் இந்த மொழி மாற்றம்? தமிழ், தெலுங்கு முதலான மொழிகட்கு ஆறாம் வகுப்புக்கு மேல் பயிற்று மொழியாம் தகுதியில்லையா? இந்தியைப் போல ஏனை இந்திய மொழிகளையும் உயர்கல்வி மொழிகளாக வளர்க்கும் பொறுப்பு மையவரசுக்கில்லையா? தமிழ் தெலுங்கு அசாம் முதலிய மாநிலங்களிற் கூட அந்த மொழிக்கு உரிய பயிற்று மொழி வாய்ப்பைப் பறிக்கலாமா? இந்தியாவின் எல்லா மாநிலங்களில் இந்தியை உறவு மொழியாக வன்றிப் பயிற்று மொழியாகவும் புகுத்தல் என்பது பொருள். உரிய பிற மொழிகளின் நிலவுரிமையைப் பறிப்பது என்பதும் பொருள். மொழிகளின் வளர்ச்சிக்கு ஒத்த சமவாய்ப்பு அளக்காமல் உள்ளவாய்ப்பையும் குறைப்பது மையவரசின் நடுநிலை யாகுமா? இந்தியைத் திணிக்க மாட்டோம் என்பதன் கொள்கை என்னாகின்றது. ஆறாவது வகுப்பு முதல் இந்தியும் ஆங்கிலமும் பயிற்று மொழியாக மாதிரிப் பள்ளிகளில் வருமாயின், பெற்றோர்கள் என்ன கருதுவார்கள்? பின்பு மொழி மாற்றம் செய்து தம் குழந்தைகள் ஏன் தொல்லைப்பட வேண்டும் என்று மறித்து நினைப்பார்கள். நினைத்து கீழ் வகுப்புக்களிலும் பாலர் பள்ளி முதல் ஐந்து வகுப்புக்களிலும் ஆங்கிலமோ இந்தியோ படிக்குமாறு செய்வார்கள். இம்மொழிகள் கற்பிக்கும் பள்ளிகள் இன்றைவிட இன்னும் பல்கிவிடும். இதன் விளைவு பிற இந்திய மொழிகட்கு என்னாகும்? கீழ்வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அதன்பின் கல்லூரி பல்கலைக் கழகம் வரை தொடர்ந்து மாதிரிப் பள்ளிகளில் ஆங்கிலமும் இந்தியுமே பயிற்று மொழிகளாக வரும். தமிழ் முதலான பிற இந்திய மொழிகள் பள்ளியில் எல்லா வாய்ப்புக்களையும் இழக்கும். இவ்வளவோடு நில்லாது மாதிரி யல்லாத பள்ளி களிலும்கூடச் சில பிரிவுகள் மாதிரிப் பள்ளிபோல் ஆகிவிடும். இவை யெல்லாம் நாம் கற்பனையாகச் சொல்வனவல்ல. இன்று நடைமுறையில் காணப்படும் காட்சிகள். பயிற்று மொழி என்பது ஒரு மாநிலத்தில் பாலர் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை ஒரு மொழியாகத்தான் இருக்க வேண்டும். இடையில் வேற்று மொழியாக மாற்ற வேண்டிய நோக்கும் தேவையும் என்ன என்பது புரியவில்லை. இந்தியைத் தாய்மொழியாக வுடைய குழந்தை பாலர் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை ஒரு மொழி வாயிலாகப் பயில்வர, மதமாற்றம் போல் ஏனை இந்திய மொழி குழந்தைகட்குத் தான் பயிற்று மொழி மாற்றம். மையவரசுக்கு உண்மையாகக் கல்வி மொழிக் கொள்கை தெரியாமல் இல்லை. தாய்மொழி தான் தகும் என்று உலகக் கல்விக் கோளும் தெரியாமல் இல்லை. நன்றாகத் தெரிந்திருந்தும் இந்தி வெறியினால், படுவெறியினால் இந்தியே பேராதிக்கஞ் செய்ய வேண்டும் என்ற ஆணவத்தால் பாரதம் முழுதும் இந்தி என்ற ஒரு மொழியைப் பரப்பவும் திணிக்கவும் மிக பாடுபடு கின்றார். இந்திய வொருமைப்பாடு ஒரு மொழியினால், அதுவும் இந்தியிற்றான் வரும் என்று நாட்டுப் பற்றுச் சாற்றுகின்றனர். நாட்டுப்பற்று மாயையை காட்டி இந்தி மாயையை பரப்புவதற்கு மையவரசு எந்தத் தலையமைச்சர் வந்தாலென்ன, பல்கோடி நிதி வழங்கி இந்தி யொன்றை பரப்புவதற்கு ஆதிக்கத் திட்டங்களை வெளிப்படையாகவும் பெரும்பான்மை மறைமுகமாகவும் சூழ்ச்சி செய்து பழக்கப்பட்டு விட்டது. ஏனை இந்திய மொழி யாளர்கள் இன்னும் அடிமை வாடையர்களாக இருக்கின்றன. பாரதவுரிமை எல்லா மக்கட்கும் எல்லா மொழிக்கும் உரிமை என்ற தெளிவு அவர்கட்குத் தோன்றவில்லை. தோன்றினாலும் கட்சிக் கட்டுப்பாடு என்று சொல்லி சில தன்னலங்களைப் பெற்று ஏமாந்த சோனகிரியாகவுள்ளனர். பெற்றோர்களும் எதிர்கால வழியினர் நலம் பேணாது கூலிகள் போல அன்றாட ஊதிய வருவாய்க்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். மாதிரிப் பள்ளியில் மிகுதிறமையுடைய குழந்தைகளைச் சேர்ப்பார்கள். இவர்கள் இந்தியோ ஆங்கிலமோ இந்தி ஆங்கிலம் இரண்டுமோ பயிற்று மொழிகளாகக் கற்கின்றார்கள். இத்துணைத் திறமுடையோர்கள் தாய்மொழி அல்லது மாநில மொழி வளர்ச்சிக்குப் பயன்பட மாட்டார்கள் அல்லவா? மாறாக என்ன நினைப்பார்கள். தாய்மொழியில்லாத பிறமொழி களிற் கற்ற மையாற்றான் திறமையும் தகுதியும் நல்லூதியமும் கிடைத்தாக எண்ணிக் கொள்வர். இது ஒருபுறங்கிடக்க, இன்று நாம் காணும் ஒரு நிலை என்ன? இந்நாட்டு மக்கள் நிதியிலிருந்து இங்கு பொறியியலும் மருத்துவவியலும் பிற அறிவியலும் கற்றவர்கள் இந்நாடு தங்கள் தக்க வருவாய் எதிர்பார்ப்புக்கு ஏழாது; அமெரிக்கா முதலான நாடுகட்குச் சென்று பெரு வருவாய் பெற்று அங்கே குடிமக்களாகி விடும் போக்கு வளர்ந் திருப்பதைத் தெளிவாகக் காண்கின்றோம். எனவே நிவோதயப் பள்ளியிற் கற்று - முழுதும் இலவசமாக கற்றுப் பயன் பெற்ற இளைஞர்கள் தாய் மொழிக்கேயன்றி பாரதத் தாய்நாட்டிற்கும் உதவாத ஒரு கேட்டினைத்தான் காணவேண்டியிருக்கும். விளையாட்டன்று, மெய்யாகக் கூறினால் மாதிரிப் பள்ளியிற் கற்ற மாணவர்களின் பெற்றோர்கள் வரதட்சிணை கூட மிகுதியும் கேட்கும் தனிச் சமுதாயப் போக்கு ஏற்படவே செய்யும். திரட்டிக் கூறினால், மாணவர்களைப் பிரிவினை செய்யும் இந்திய மொழிகளுக்கு ஒத்த சமமின்மை என்ற அடிப்படை கேடுகள் கொண்டதாக இப்புதிய கல்விக் கொள்கை நிற்கின்றது. திறமையற்றவர்கள் என்று பல்லாயிரக்கணக்கான மாண மாணவியரை ஒதுக்குதலாலும், இந்தியல்லாத பிற எல்லா இந்திய மொழிகளை ஒதுக்குதலாலும் புதிய கல்விக் கொள்கை புதுவகை இந்திய வொதுக் கற் கொள்கை என்றே எண்ணு கின்றேன். இதனை இந்திய அயர்த் தீயிட்டு என்று கூற வேண்டும். தென்னாப்பிரிக்காவில் இனவொதுக்கற் கொள் கைக்கு இது ஒப்பாகும். அதனினும் இந்திய வொதுக் கற் கொள்கை கொடுமை வெறியுமாகும். கிளர்ச்சிக்கும் வெற்றிக்கும் இந்திய வொருமைப்பாட்டுக்கும் உரிய நிலை இது. பொழிவு - 19 நாள் : 5.10.1986, ஞாயிறு காலை 16 புரட்டாசி 2017 இடம் : திருச்சிராப்பள்ளித் தேவர் மன்றம், நிகழ்ச்சி : அமைச்சர் இராசராம் மணி விழா புதிய கல்விக் கொள்கைக் கருத்தரங்கு தலைமை : வ.சுப. மாணிக்கம் கலந்து : அமைச்சர் இராசாராம்,கி.ஆ.பெ.வி. கொண்டோர் துணைவேந்தர் : பேராசிரியர் சி.பா.: பேராசிரியர் ஞானம் தமிழண்ணல் பொழிவுச் சுருக்கம் முத்தமிழ்க் காவலர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்களே; துணைவேந்தர் ஞானம் அவர்களே, பேரன்புமிக்க பெருமக்களே, தமிழகப் புலவர் குழு பாராட்டிக் கொண்டாடுகின்ற ஒரே மணிவிழா மாண்புமிக்க அமைச்சர் இராசாராம் மணிவிழாவே என்பதைப் புலவர் குழுவினர்க்கு நினைவூட்ட விரும்புகின்றேன். அமைச்சர் பெருமகனார்க்குப் பல்வேறு நிறுவனங்களில் மணி விழா வாழ்த்துக்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதை நாம் அறிவோம். புலவர் பாடும் புகழுடையோர் என்ற சங்க வழிப் படி, யார் பாராட்டினும் புலவர் பாராட்டுப் பெறுவதே நிறை வும் நிலையும் உடையதாகும். புலவர் குழுவின் வெள்ளி விழா வைச் சிலவாண்டுகட்கு முன் சேலத்திற் கொண்டாடினோம்; தக்க பல்லோர்க்குத் தமிழ்ச் சான்றோர் என்ற பட்டம் வழங்கி னோம். கருத்தரங்குகள் நடத்தினோம். ஏறக்குறைய ஓரிலக்கம் செலவாயிற்று. இத்துணை ஏற்பாடும் அன்பளிப்பும் செய்த பெருந்தகையே நம் அமைச்சராவர். ஒரு கட்சியைச் சார்ந்திருந்தாலும் தமிழகத்திலும் இந்தியாவிலும் பொதுமனம் இணக்க நெஞ்சம் கொண்டவர் என்ற மதிப்பு இத் தோன்றலுக்கு உண்டு. சிக்கல் நேருங்கால் சங்கக் கோவூர் கிழார் போல இடைச் சென்று சந்துவினை செய்யும் வல்லாண்மை கொண்டவர். திருக்குறள் தூது அதிகாரம் கூறும் பண்பு நிறைந்தவர். நிலைகள் மாறினும் தமிழ் நினைப்பும் தமிழ்த் தொண்டும் தமிழ்ப்புலவர்களை மதிக்கும் மதிப்பும் மாறாத தொழிலமைச்சர். பொதுவாழ்வில் நம் நம்பிக்கைக்குரிய பெருமகன் ஆவார். நம் மணி விழா அமைச்சர் இலக்கியக் கல்விமிக்க எழுத் தாளர். அரசியலுலகிற் சென்றிராவிட்டால் நல்ல தமிழ் எழுத் தாளராக விளங்கத் தக்க தமிழாற்றலுடையவர். ‘தென் கிழக்காசியாவில்’ என்ற இவர் தம் பயண நூல் 1964இல் எழுதப் பட்டதானாலும் இன்றும் கருத்தாலும் நடையாலும் சிறப்பு வாய்ந்த நூலாக விளங்கக் காண்கின்றேன். அயல்நாட்டுச் சுற்றுலா வெளியீடுகளைப் படித்துப் பார்த்து புள்ளிக் கணக்குத் தகவல்தரும் நூலன்று. வியட்டுநாம், பார்மோசா, செய்கோன், தைவான், ஆங்காங்கு, சப்பான், சீனா நாட்டு மக்களின் வழக்க வொழுக்கங்களைச் சுவைபட விரிக்கும் குறிப்புக்களைக் காணலாம். தென்வியட்டுநாம் நாட்டின் வளத்தைப் பார்க்குங்கால் உதக மண்டல நினைவு வருகின்றது. ஆசிரியர்க்கு, தலாதது அருவியைப் பார்க்கும்போது, `அருவிகள் வைரத் தொங்கல்’ என்ற பாரதிதாசன் கவிதையைச் சுவைக்கின்றார் வானூர்தி நிலையத்தில் சீனமும் ஆங்கிலமும் இந்தியுங்கூடக் காதில் விழுந்தபோது தமிழொலி கேட்கப்படவில்லையே என்று ஏங்குகின்றன ஆசிரியர்க்கு, இராசாராம் வந்திருக்கின்றாரா என்ற ஒருகுரல் விழுந்ததாம். எவ்வளவோ இன்புற்றார் பார்மோசாவல் ஒன்பது பல்கலைக் கழகங்கள் இருப்பதை அறிந்தபோது, தமிழ்நாட்டில் இரண்டே பல்கலைக் கழகங்களே உள என்ற அவமானம் அவர்க்கு எழுந்தது. சீனநாட்டில் கன்பூசியசின் நாள் ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுகின்றது. அச்சான்றோர்க்குப் பல சிறப்புக்கள் செய்யப்படுகின்றன. உடனே நம் அமைச்சர்க்கு வள்ளுவர் நினைவு வரவே இத் தமிழ்ப் பெருமகனுக்கும் இதுபோன்று செய்ய வேண்டும் என எண்ணுகின்றார். எனினும் ஒரு கவலை. நாமென்ன தனித்தன்மை கொண்டவர்களா? நாட்டின் பொதுத் தன்மை மலர எல்லாவற்றையும் இழந்துவிட்டு நிருவாணமாக நிற்கத் துடிதுடிக்கும் ஓர் இழிவில் நாம் உள்ளோம் என்ற தமிழினத் தாழ்வுநிலை ஆசிரியர் உணர்வை மழுக்கிவிடுகின்றது. சீனாவில் அன்னாசிப் பழம் பக்குவப்படுத்தப்பட்டு அடைப்புப் பெற்று அயல்நாட்டு வணிகப் பொருளாவதைக் கண்ட அமைச்சர்க்குத் தன்னூரான சேலத்து நினைவும் சேலத்து மாம்பழச் சிறப்பும் இப்பழத்தை பக்குவமாக்கி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாமே என்ற ஆர்வமும் பிறக்கின்றன. கம்பருக்குக் கோதாவரியைப் பாடும்போது சங்கக் கவி நினைவு வருகின்றது. காவிரி நாடன்ன கழனிநாடு எனவும் உவமை செய்வர். அதுபோல் தென்கிழக்காசியா சென்ற நம் அமைச்சருக்குத் தமிழ் நினைவும் தமிழக வாழ்வும் இணைந்து தோன்றுகின்றன. எங்குச் சென்றாலும் தமிழுள்ளம் கொண்டவர் அமைச்சர் பெருமகன். இச் செலவு நூலைச் சில வடசொற்கள் நீக்கி மறுபதிப்புச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். (அமைச்சர் புதிய கல்விக் கொள்கைக் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தபின், என் கருத்துரை) அன்பர்களே, மாண்புமிக்க அமைச்சர் அறிஞர் அண்ணா அன்றே தெளிவு செய்து தீர்மானித்த தமிழகவரசின் இரு மொழிக் கொள்கை பற்றியும் அக்கொள்கையில் இன்றையவரசும் உறுதி யாக வுள்ளது எனவும் அழுத்தமாக எடுத்து விளக்கினார்கள். இந்தி எதிர்ப்புக் குறித்த வரலாற்றையும் சொன்னார்கள். இந்நிலையில் நாம் சில சிந்திப்போம். ஒரு திட்டத்துக்கு எதிர் மறையும் உடன்பாடும் என இருபக்கம் உண்டு. தமிழ்க் காப்பும் தமிழ் வளர்ச்சியும் நம் நோக்கம் இந்தி ஆதிக்கம் பெற்றால் தமிழ் வளராது என்ற தெளிவான இந்தித் திணிப்பை முழுமூச்சாக எதிர்க்கின்றோம். இந்தி ஒரு பாடமொழியாகப் பள்ளி இருந்ததைக் கூட அண்ணா ஆட்சிக் காலத்து எடுக்கப்பட்டது. இந்தியாசிரியர்கட்கு மாற்று வேலை பரிவோடு வழங்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கை யோ கிராமத்தில் இந்தியை ஒரு பயிற்றுமொழியாகக் கொண்டு வரத் திட்டஞ் செய்கின்றது. இது எதிர்பாராத கொடுமையான ஆதிக்க வடிவாகும். எனவே இன்று இந்தித் திணிப்பையும் பரவலையும் மிகவும் கடுமையாக எதிர்த்துத் தடுப்பது பிற இந்திய மொழியாளர்களின் பொறுப்பாகும். இந்த எதிர்மறைப் போர் தமிழ் வளர்ச்சியின் ஒருபக்கமே. இந்தியை ஏன் எதிர்க்கிறோம். அது நமக்குப் பகைமொழியா இல்லை, நம் பாரத மொழிகளில் அதுவும் ஒன்று. அதுவும் வளர வேண்டிய ஓர் இந்திய மொழி. ஆனால் அது தனக்குரிய நிலத்தில், மாநிலங்களில் வளரவேண்டும். அங்கு நன்றாக வளரட்டும் என்பது நம் வாழ்த்து. அது இன்னொரு இந்திய மொழிக்குரிய இடத்தைப்பிடிக்க நினைத்து அந்த விடத்துக் குரிய மொழியை வளர விடங்கொடாது ஆதிக்கஞ் செய்யும் போதுதான் தடுத்து ஒடுக்கிப் புறப்படுத்த எண்ணுகின்றோம். எனவே இந்தியை வர வொட்டாது எதிர்ப்பது வறட்டுக் கொள்கையன்று; தமிழ் வளர்க்குங் கொள்கையாகும். தமிழிடத் தை இந்தி கைப்பற்றி உட்கார்ந்து விடக் கூடாது என்பதற் காகவே இந்தி, இந்திய மொழிகளுள் ஒன்றாயினும் மறிக்கி றோம். ஓர் இந்திய மொழி இன்னொரு இந்திய மொழிக்குக் குழி தோண்டக் கூடாது என்பதற்காக மறிக்கின்றோம். எதிர்ப்பதன் நோக்கம் தமிழ் வளர்ச்சி. எதிர்க்கிறோம், வரவேற்கின்றேன். தமிழ் வளர்க்கிறோமா? நாம் தமிழ் மக்கள் தமிழ் உட்காருவதையுமல்லவா எதிர்க்கிறார் கள்? யாரிடம் சொல்வது? யாரிடம் முறையிடுவது? நாணக்கேடு, மானக் கேடாக வல்லவா நிலை இருக்கிறது. தமிழன் இந்தியை எதிர்ப்பதற்குக் கச்சை கட்டுகின்றான். தமிழன் தமிழ் வேண்டுமென்று கேட்கின்றானா? அதுவும் கூடா தன்றல்லவா மிகவும் கேவலமாக நடந்து கொள்கின்றான். இந்தியையும் தமிழை சேர்த்தே எதிர்க்கின்றான். நாமமது தமிழரெனக் கொண்டு வாழும் தமிழன் கூலி மனப்பான்மையாக எதிர்க் கின்றான். தமிழ் வரவைக் கேலி செய்கிறான். நாம் செய்யாமை நிலையில் திண்மையாக இருக்கிறோமேயன்றிச் செயல் நிலைக்குத் திரும்பவில்லை. தமிழுக்கு இந்தி புறப்பகை. ஆனால் இந்திக்காரர் யாரும் தமிழ் வைக்கக் கூடாது என்று சொல்லவில்லை. தமிழ் வைப்பதற்கு அவர்கள் எதிர்ப்பில்லை. வைத்தால் மகிழவும் செய்யலாம். தமிழுக்கு உட்பகை தமிழனே என்பது வெளிப் படை. இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடுப்பது போல் இனி தமிழ் வைப்புப் போராட்டம் தமிழரிடத்திலே நடத்த வேண்டிய கடுஞ்சூழ்நிலை உருவாகி வருகின்றது. தமிழ் உயர்ந்தால் மட்டும் போதாது. தமிழனும் உயர வேண்டும் எனவும் அதனால் ஆங்கிலமே பயிற்றுமொழியாக உயர்கல்வி மொழியாகப் படிக்க வேண்டும் எனவும் சொல்லுகின்ற பெருங்குரலை நாம் கேட்கின் றோம். ஆண்டுதோறும் சூன்சூலைத் திங்கள்களில் நம் நாட்டுப் பெருஞ் செய்தித் தாள்கள் என்ன பறைசாற்றுகின்றன. தமிழ் பயிற்று மொழி வகுப்புகட்கு மாணவர்கள் சேரவில்லை, பெற்றோர்கள் விரும்பவில்லை. வேலைவாய்ப்பும் உயர்வும் கருதி ஆங்கில வழி வகுப்புக்களை விரும்பிச் சேர்கின்றனர். தமிழ் வழி இடங்கள் மிகவும் காலியாக இருக்கின்றன என்று கேலி நடையில் அலைக்கழிவாக எழுதி வருவதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். தமிழ் வாழ முறை யான வழிகளை இந்நாட்டு இதழ்கள் சொல்வதில்லை. தமிழ் வாழ்ந்தாற் போதுமா? தமிழன் வாழ வேண்டுமா என்று நன்கு நலம் பெற வினவுவது போலக் கிண்டலும் கேலியும் செய் கின்றனர். எவ்வளவு காலமாகத் தமிழால் வாழ முடியவில்லை; எவ்வளவுக்குத்தான் பிறமொழியால் வாழ்ந்து விடமுடியும்? தமிழன் கடமையும் பொறுப்பும் என்ன என்பது பற்றிச் சிந்தனையில்லை. தமிழ் வேறு தமிழன் வேறு; மொழி வேறு வாழ்வு வேறு என்று ஒரு மாயமான பிரிவினை செய்வதோடு அதற்குரிய சூழ்நிலைகளையும் வளர்த்துக் கொள்ளக் காண்கின்றோம். தமிழன் தமிழ் வேண்டுமென்று கேட்கும் நாள் எந்நாளோ அந்நாள்தான் தமிழின முழுதும் தன்மானத்தோடு வாழும் வளரும் பொன்னாளாகும். தமிழைத் தன்னிடத்தில் அமர வைப்பதற்கும் தமிழ் மக்கட்கு அதனிடத்து வாழ்க்கை நம்பிக்கை பிறப்பதற்கும் அரசு ஆவன செய்யவேண்டும். பாலர் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை எல்லாத் துறையிலும் தொழிற்கல்வித் துறைகளிலும் தமிழ் ஒன்றே பயிற்றுமொழி என்று அரசு பொதுவான ஒரு மொழி வைப்புக் கொண்டுவரும் திட்டங்களை எதிர்ப்புக்கு அஞ்சாது கொண்டுவரவேண்டும். சில எதிர்ப்புக்கள் வன்மை யாகத் தமிழ் மக்களிடமிருந்தே வரும். தமிழகத்தில் வரும் பிற மொழியாளர்களிடமிருந்தும் வரும். சில நீக்குப் போக்கொடு தமிழ் வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும். தமிழைப் பள்ளி களில் கல்லூரிகளில் பல்கலைக் கழகங்களில் தமிழ்நாட்டில் உட்கார வைக்காத வரை இந்தி ஆதிக்கத்திற்கு வாய்ப்பு இருக்கும். இந்தியை வரவேற்கும் எண்ணங்கூடத் தமிழ் மக்கட்கு ஏற்பட்டுவிடும். உரியதல்லாததைத் தடுப்பதற்கு உரியதை உரிய விடத்தில் அமர்த்த வேண்டும். என் மொழிக் கருத்து இந்தி யில்லாத ஏனை இந்திய மொழிகட்கும் பொருந்தும். பொழிவு - 20 நாள் : 12.10.1986 ஞாயிறு மாலை 26 புரட்டாசி 2017 இடம் : காரைக்குடி ஞானானந்த மண்டபம் நிகழ்ச்சி : அண்ணா விழா, அண்ணா தமிழ்க் கழகம் தலைமை : வ.சுப. மாணிக்கம் கலந்தோர் : பேராசிரியர் அன்பழகன், செல்வேந்தர்கள் சுப. கதிரேசன், ஆ. செகந்நாதன், அ. மணிமேகலை பொழிவுச் சுருக்கம் கேள்விச் செல்வமிக்க கொள்கைப் பெருமக்களே, சுருண்டும் மருண்டும் தாழ்ந்தும் வீழ்ந்தும் படுத்திட்ட தமிழினத்தை உயிர்க்கவும் இயங்கவும் நிமிரவும் போராடவும் செய்த அறிஞர் அண்ணா என்ற ஒரு பெருந் தமிழ்த் தலைவனைப் பற்றி நினைக்கும் நன்னாளாகும். இந்நாள் தமிழார் வமும் துடிப்பும் மிக்க நல்லிளைஞர்கள் பலர்கூடி இக்கழகத்தை மீண்டும் உயிர்ப்பித்து நடத்தி வருகிறார்கள். இடையறவு படாது அண்ணா தமிழ்க் கழகம் இயங்கும் என்று வாழ்த்துகின்றேன். இது மொழித் தொண்டு, தமிழ் மக்கள் தொண்டு, நாட்டுத் தொண்டு என்று கூறிப் பாராட்டுகின்றேன். அண்ணா விழாவை இயக்க விழாவாக எழுச்சி விழா வாகக் கொண்டாடுவது மட்டும் போதாது. தீமைகளையும் நல்லாக்க விழாவாகவும் மாற்ற வேண்டும். முப்பது வயதுக்குட் பட்ட தமிழிளைஞர்கள் அண்ணா செய்த வியத்தகு தொண்டு களையும் மாற்றங்களையும் அறிய மாட்டார்கள். அறிய வேண்டும் என்ற உணர்வும் குறைந்து வருகின்றது. இக்குறைவு அகல வேண்டுமெனின் அண்ணாவின் நூல்கள் பரப்ப வேண்டும். தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள், நாம், நிலையும் நினைப்பும், தமிழின் மறுமலர்ச்சி, உலகப் பெரியார் காந்தி போன்ற கருத்துச் செறிந்த நூல்கள் நம் கையில், நம் வீட்டு நூலகத்தில் இருக்க வேண்டும். அண்ணா என்ற தலைப்பில் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறைச் செயலர் அறிஞர் ஒளவை நடராசன் ஆற்றிய உரைநூல், அளவிற் சிறியதாயினும் ஆழமும் சிந்தனையும் நிறைந்தது; நன்னடைவீறு வாய்ந்தது இதுவும் உங்கள் நெஞ்சுக்கு உரமாகும். தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவோடு ஓரளவு பழக்கம் எனக்கு உண்டு. காரைக்குடி அழகப்பா கல்லூரியின் தொடக்க காலத்து திராவிடக் கழகம் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த யாரையும் பேரவை முதலான கூட்டங்கட்கு அழைப்பதில்லை. ஏன்? அப்போது பேராயக் கட்சியை பற்றிய சில அன்பர்கள் கல்லூரி உறுப்பினர்களாக ஆதிக்கம் பெற்றி ருந்த காலம். என் உயிர் போகும்வரை அவர்களை உள்ளே வர விடோம் என்று மார்தட்டிய காலம் இருந்தது. நான் தமிழ்த் துறைப் பேராசிரியனாக வந்தபோது முதல்வராகத் தம்பி என்ற கேரளப் பெருமகன் இருந்தார். அவர் தமிழுணர்வு மிக்க மலை யாள மன்னன். கவிமணி தேசிய வினாயகம்பிள்ளையின் பாராட்டைப் பெற்றவர். அதனைப் பெருமையாகச் சொல்லிக் கொள்பவர். “நாடாளும் தமிழ்ச் சிறப்பு வகுப்புக் கண்டான் நாவளர்க்கும் கலைக்கழகம் நடக்கக் கண்டான்” என்று அம் முதல்வரின் தமிழ்த் தொண்டினை நான் பாடி மகிழ்ந்த சிறப்பும் உண்டு. நான் தமிழ்ப் பேராசிரியனாக வந்தபின் நல்ல தமிழிற் மொழி பெற்றும் அண்ணா போன்ற நன் மக்களை அழைக்க வேண்டுமென்று மாணவர்கள் சார்பாகவும் கேட்டபோது நல்லதமிழில் தமிழ் பற்றியும் தமிழ் வளர்ச்சி பற்றியும் தமிழ்ப் பெருமை பற்றியும் பொழிவாற்றும் யாரையும் அழைக்க என்று ஆர்வத்தொடு இசைந்தார். அணணாவை அழைத்தோம். கலைக்கழகத்தைத் தொடங்கிக் கலைக்கழகக் கைம்மலரை வெளியிட்டு அதனைப் பாராட்டி மலரினும் தன் கைப்படச் சில பக்கங்கள் எழுதினார் அண்ணா. பாராட்டு மணம் பொதிந்த கலைமலர் இன்றும் அழகப்பா கல்லூரி நூலகத்துப் போற்றப்பட்டு வருகின்றது. நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியனாக இருந்தபோது மாணவர் சேர்க்கைக்குப் பரிந் துரை செய்து அய்யா கைப்பட எழுதிய முடங்கலைப் பொதிந்து வைத்துள்ளேன். அவர் குறிப்பிட்ட மாணவன் இளங்கோவன் சேர்க்கப்பட்டான் என்று நேரிற் சொல்லி நன்றி பெற்றேன். காரைக்குடி செக்காலை சொக்கலிங்க நிலைய விடுதி யில் 1971இல் வந்திருந்தபோது நானும் இரா. சாரங்கபாணியும், சி. செல்வத்தானும் பெரியாரைக் கண்டு ஒரு மணிப்போது நாட்டு நடப்புக்களைப் பற்றிக்கேட்டு மகிழ்ந்தோம். நிழற்படம் எடுத்துக் கொண்டோம். 95 வயது வரை வாழ்ந்து தொண்டு செய்யும் தாங்கள் இன்னும் பல்லாண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்துக் கூறியபோது, கிழவனாகி வாழ்கின்றவனுக் கன்றோ அவன்படுந் துன்பங்கள் தெரியும். நீங்களும் அவ்வளவு வயது வரை வாழ்ந்து பார்த்தால் தெரியும் என்று எளிதாகச் சொன்னார்கள். அண்ணா விழாவில் தந்தை பெரியாரை நினைக்காமலோ சொல்லாமலோ முடியாது. பெரியாரைக் குறிக்காவிட்டால் அண்ணா விழா நிறைவாகாது. பெரியார் கொள்கையளவில் பலரைச் சாடினாலும், தனிமனிதப் பண்பு நிறைந்தவர். மனித மதிப்பை அன்போடு வழங்குவார். தனிமனிதன் பண்புடச் செய் யார். அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேரவையில் பேசுவ தற்குப் பெரியார் வந்திருந்தார். தமிழ்ச் சான்றோரும் சைவப் பெருமகனுமான கா. சுப்பிரமணிய பிள்ளை (கா.சு.பிள்ளை) தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கும் போது கடவுள் வாழ்த்து வழக்கம் போற் பாடப்பெற்றபோது பெரியாரும் எழுந்திருந்தார். பெரியார் நாத்திகர் என்பது நாடறிந்த செய்தி. எனினும் எழுந்து நின்று சிறிய மனப்பான்மை யுடையவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். எழுந்திருந்தால் கடவுள் நம்பிக்கையுடையவர் எனக் கூட்டம் எண்ணி விடுமோ என்று கருதி எழாது உட்கார்ந்தபடியே இருப்பர். எழுந்தாலும் பிடிக்காததைக் காட்ட அரைகுறையாக எழுந்துகாட்டுவர் அல்லது கடவுள் வாழ்த்துப் பாடியபின் வந்து கலந்து கொள்வர் அல்லது ஏதோ ஒரு சாக்குச் சொல்லி வெளியே போய் விட்டுத் திரும்புவர். தந்தை பெரியார் முறை யாகவே எழுந்து நின்றார். அவர் நின்றது கடவுளுக்கன்று; கூட்டமாக எழுந்து நிற்கும் மக்களை மதித்து மக்கள் எல்லாரும் எழுந்து நிற்கும்போது எழுந்து நிற்பதுதானே தன் மதிப்பும் மக்கள் மதிப்பும். இந்நிலை மக்கட் பண்புடையவர் பெரியவர் என்பதற்கு நான் கண்ட காட்சி. இன்னொரு நிகழ்ச்சியும் மாண்புமிகு அமைச்சர் இராசாராம் சொல்லக் கேட்டதுண்டு. பெரியாரின் குடியரசு இதழைத் தொடங்கி வைக்கத் திருப்பாதிரிப் புலியூர் ஞானி யாரடிகள் ஈரோடு வந்தனர். அடிகள் பல்லக்கில் வருவது பழைய மரபு. அங்ஙனம் வருவது கண்ட பெரியார் அடிகளார் காணா மல், பல்லக்கினைக்காவு வாருள் தாமும் ஒருவராகத் தூக்கிக் கொண்டு வந்தார். இது பெரிய புராண அப்பர் தொண்டுப் பணிவை நினைவூட்டுகின்றது. ‘செயற்கரிய செய்வார் பெரியார்’ என்ற வள்ளுவத் தினைப் பெரியவர்கள் தம் சிந்தனைகள் நமக்குப் படிப்பிக் கின்றன. தலைமைப் பண்புக்குச் சிறப்பு கொள்கை யூற்றம், விடாக் கொள்கைப்பிடிப்பு, கொள்கைப் பிடிப்பு மட்டும் தலைமைத் தன்மையைக் காட்டுவதன்ற. நிலக்கேற்றபடி தன்ன லத்திற்காக வன்று. பொதுநலத்திற்காக, மக்கள் நலத்திற்காகக் கொள்கையை மாற்றிக் கொள்வதும் தலைமைத் தன்மையின் இலக்கணம். 1947 ஆகத்துப் பதினைந்தாம் நாள் இந்தியா பன்னுறாண்டு அடிமைத் தளையிலிருந்து உரிமை பெற்றபோது அந்த நாளைக் கரிநாளாகத் துக்கநாளாகக் கருதிச் சிறுமை செய்ய வேண்டு மென்று தந்தை பெரியார் சொன்னார். அது அறிஞர் அண்ணா வுக்கு உடன்பாடில்லை. மகிழ்ச்சி நாளாகவே கொண்டாட வேண்டும் என்று பெரியாரொடு மாறுபட்டார். இம்மாறு பாட்டால் இருவர்க்கும் கடும் பிளவு ஏற்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றக் காரணமாயிற்று. அண்ணாவின் பேராண்மைக்கும் வரலாற்று காட்சிக்கும் இது சான்றாகும். துக்கநாளாக நடத்தியிருந்தால் தமிழினத்துக்கு வழி வழி பழி ஏற்பட்டிருக்கும். என்ன செய்யினும் அவ்வழி போகாது. தனித் திராவிடநாடு திராவிட இயக்கத்துக்கு உயிர்க் கொள்கையாக இருந்தது. அது பற்றிய எழுத்தும் பேச்சும் கருத்தும் காரணமும் பல பத்தாண்டுகள் அடுக்கியடுக்கிக் குவிந் தன. தனித்திராவிட நாட்டுப் பிரிவினை நோக்கமும் இயக்கமும் இனியில்லை என்று உறுதியான அறிவுப்புச் செய்தார். அவ்வாறே கட்சியையும் தொண்டர்களையும் வழிப்படுத்தினார். தலைமைப் பண்பு குறைந்த ஒருவர் இவ்வாறு அறிவித்திருந்தால் அவர் தலைமைக்கு எதிராக எவ்வளவோ கிளர்ச்சிகளும் வீழ்ச்சி களும் எய்தியிருக்கும் அண்ணா தலைமை சரியாகத் தான் முடிவு செய்யும் என்ற நன்னம்பிக்கையில் தொண்ட ரெல்லாம் தலை வணங்கினர். தமிழ்நாட்டுக்கும் இந்திய நாட்டிற்கு இவ்வறிவிப்பு பேராக்கமாயிற்று. ஒருமைப்பாடு கூறும் பேராயக் கட்சி கூட அண்ணா அறிவிப்பை வாழ்த்தி வரவேற்காது அஞ்சிச் செய்த அறிவிப்பு என்று கட்சியுணர் வினாற் கேலி செய்தது. அறிஞர் அதனைப் பொருட்படுத்த வில்லை. தனிநாடு இல்லாவிட் டாலும் திராவிட இயக்கக் கட்சிதான் தமிழகத்தை இனி ஆளும். அதனால் எண்ணிய நலங்களை இந்தியாவின் அக நிலமாக இருந்தே செய்து கொள்ளலாம் என்ற தெளிவு அவர்க்கு இருந்தது. அதனால் இன்றும் தமிழகத்தை அண்ணா வழிக்கட்சி யே மாறி மாறி ஆளும் மாறாநிலையைக் காண்கின்றோம். முதலமைச்சராகப் பதவியேற்றபின் தான் அடைந்த மகிழ்ச்சி மூன்று என அண்ணா குறிப்பிடுவர். மதராசு என்றிருந் ததைத் தமிழ்நாடு என்று பெயர் கண்டது முதல் மகிழ்ச்சி. சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒரு மனமாக இந்நற் பெயரை வரவேற்றன. தமிழ்நாடு வாழ்க என்று அனைத்துக் கட்சி யுறுப்பினர்களும் குரல் எழுப்பினர். இங்கு ஒன்றினை நாம் குறிப்பிட வேண்டும். தமிழில் தமிழ்நாடு என்று இருக்கட்டும். ஆங்கிலத்தில் ஆயனசயள என்றிருக்கலாம் எப்போதும் போல் என்று சிலர் கூறினர். அறிஞர் அண்ணா அதற்கிசையவில்லை. கூயஅடையேன என்று உகரவீறில்லாமல் ஆங்கிலத்தில் எழுதலாம் எனச் சிலர் வாதாடினர். அதனையும் அண்ணா உடன்பட வில்லை. தமிழ் மரபுப்படியே ஆங்கிலத்திலும் நம் நாட்டுப் பெயர் இருக்க வேண்டும். கூயஅடையேனர என உகர வீறாகவே அமைய வேண்டும் என்று கட்டளை யிட்டருளினார் அண்ணா. பெருந்தலைவர் காமராசர் பெயரால் மதுரைப் பல்கலைக் கழகம் பெயர் பெறும் என்று புரட்சித் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவித்தார் என்பதனை நீங்கள் அறிவீர்கள். மதுரை காமராஜ் பல்கலைக் கழகம் எனத் தமிழிலும் ஆங்கிலத் திலும் எழுதும் நிலை ஏற்படலாயிற்று. இது தமிழ் மரபன்று; காமராசர் பல்கலைக் கழகம் என்று தான் எழுதப்படவேண்டும் எனவும் முயஅயசயளயச என்றே ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும் எனவும் புரட்சித் தலைவர்க்கு எழுதினேன் கூயஅடையேனர எனத் தமிழ் மரபுப்படியே எழுதுமாறு அண்ணா கட்டளையிட்டுக் காத்தமையும் எடுத்துக் காட்டினேன். காமராசர் எனத் தமிழில் மட்டும் எழுதுமாறு புரட்சித் தலைவர் இசைவளித்தார். அதனால் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் என எழுதுவதும் சொல்வதும் நன் மரபாயிற்று. ஆங்கிலத்திலும் முயஅயசயளயச என்றிருக்கும் மரபு எதிர்காலத்தில் வரும் என்று நம்புகின்றேன். இந்தி மொழியின் ஈற்றமைப்பும் தமிழ் மொழி யின் ஈறுநிலையும் வடிவ வேறுபாடுடையவை. நாதன், கபிலதேவன், சிவசங்கரன், தேசுமுகம், நாயகன், பாரதம், சேவக சங்கம் என்ற தமிழ் வடிவங்கள் நாத், கபில்தேவ், சிவசங்கர் தேச்முக், நாயக், பாரத், சேவக் சங்க் என்ற வடிவில் இந்தியில் குறைந்து நிற்கும். ஒவ்வொரு மொழிக்கும் உரிய வடிவில் சொற்கள் நிலைபெறவேண்டும். பாரதியார் பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம் என்ற பெயர்களை ஆங்கிலத் திலும் தமிழொலிப்படியும், தமிழெழுத்தின் படியும் எழுதுவதே நன்முறை ஞயசயவலையச, ஞயசயவவையஉயn என்றே எழுதவேண்டும். தவறாக ஒலித்துக் கொண்டு க்ஷhயசயவாலையச, க்ஷhயசயவனையளயn என்று ஒலிப்புடையொலிகளாக எழுதுவது தவறு என்பதனை இரு நாட்டிற் பல்கலைக் கழகங்களே உணரவில்லை. தமிழ்ப் புலவர் கள் பெயரால் இப்பல்கலைக் கழகங்கள் அமைந்திருந்தும் அவர்தம் பெயர்களைத் தமிழ் மரபுப்படி அமைக்கவில்லை. இதனால் அயல்நாட்டவர்கள் எவ்வாறு எண்ணுவார்கள். ஒலிப்புடை ஒலியன்கள் தமிழ்மொழியில் உண்டென எண்ணி மயங்குவர். மொழியியல்வல்ல தமிழ்ப் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரும் கூயஅடை ழநசடிiஉ ஞடிநவசல என்ற அரிய ஆய்வு நூல் எழுதிய கைலாசபதியும் தமிழ்ப் பெயர்களைத் தமிழொலி மரபுப்படி ஆங்கில வெழுத்துக்களால் சுட்டியிருக்கும் மொழி நெறியை நாம் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வுண்மை வலுப்படுங்கால் இவ்விரு பல்கலைக் கழகங்களும் ஆங்கிலத் திலும் தமிழ் மரபைக் காக்கும் ஒரு நாள் வரும் என்று நம்புவோ மாக. தமிழமைப்பினை உலக மொழியியலார் தவறாக எண்ணிக்கற்கும்படி இடங் கொடுக்கலாகாது. அறிஞர் அண்ணா எய்திய மூன்று மகிழ்ச்சிகளுள் ஒன்று மேலே விளக்கியபடி தமிழ்நாடு என்ற பெயர் வைத்தது. தன்மானத் திருமணங்களைச் சட்ட வரம்பிற்குள் கொண்டு வந்து முறைப்படுத்தியது. இரண்டாவது மகிழ்ச்சி மூன்றாவது மகிழ்ச்சியாவது இந்திக்குத் தமிழ்நாட்டில் இனி இடமில்லை என்பதாம். இன்று, அண்ணா எய்திய மூன்றாவது மகிழ்ச்சிபற்றி அதாவது இந்திக்கு இடமில்லை என்பது பற்றிச் சில சொல்வது பொருந்தும். புதிய கல்விக் கொள்கையில் நவோதயப் பள்ளி குறித்த எதிர்ப்புக்களை நீங்கள் அறிவீர்கள். ஏதோ ஒருவகை நல்ல பள்ளி எனவும் மாணவர்கள் தனித் திறமைகளை வளர்க்கும் பள்ளி எனவும் மாணவர்கட்கு எல்லாமே இலவசம் எனவும் ஒவ்வொரு பள்ளிக்கும் மையவரசிடமிருந்து இரண்டு கோடி கிடைக்கும் எனவும் பொதுவாகப் பலர் அறிவர். இதன்நடைமுறைகளையும் எதிர்காலத் தீயவிளைவுகளையும் சமுதாய ஏற்றத் தாழ்வுகளையும் பலர் சிந்தித்துப் பார்க்க முற்படுவதில்லை. அண்ணா விழா, தமிழ் விழா, தமிழ்க்காப்பு விழா, தமிழ் வளர்ச்சி விழா, தமிழ்ச் சமுதாய நலவிழா ஆதலின் இந்நாளில் நவோதயாப்பள்ளி எனப்படும் மாதிரிப் பள்ளியின் விளைவு களை எண்ணி வழிகாட்டுவது என்போல்வார் பொறுப்பு. முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படு பயனும் பார்க்க வேண்டும் என்பது வள்ளுவம். முன்னரே நெடும்பொழுது பேசிவிட்டமையின் சுருக்கமாகத் தீயவிளைவுகளைக் கூறுவேன். மாதிரிப்பள்ளியின் முதல் நோக்கம் தேசிய வொருமைப் பாட்டை வளர்ப்பதாம். இக் குறிக்கோள் எல்லாப் பள்ளிகட்கும் பொதுவல்லவா? பள்ளியில்லாத நிறுவனங்கட்கும் பொது வன்றோ? இந்தியர் எல்லார்க்கும் வேண்டியதல்லவா? இப்பரந்த கோட்பாட்டினை மாதிரிப் பள்ளிக்கு மட்டும் முதன்மையாகக் கொள்வது இப்பள்ளிதான் தேசியப்பள்ளி எனவும் இப்பள்ளி மாணவர்கள் தான் தேசிய வுணர்வில் வளர்ந்து பயிற்சி பெற்ற தேசிய மாணவர்கள் எனவும் ஒருவகை ஏற்றம் ஏற்படும். ஏனை ஆயிரக்கணக்கான பள்ளிகளிற் கற்றுவரும் மாணவர்கள் அத் துணைத் தேசியவுணர்வு இல்லாதவர்களாகவும் மாநிலவுணர் வுடையோர்களாக கருதித் தாழ்த்தப்படுவர். தேச யளாவிய வேலைவாய்ப்புக்களும் பிற மாநில வேலை வாய்ப்புக்களும் அயல்நாட்டு வேலை வினைகளும் பதவிகளும் வரும்போது விண்ணப்பிங்கால், மாதிரிப்பள்ளி மாணவர்தம் விண்ணப்பங் களே தேசிய நோக்கும் மிகுதிறமும் உடையவர்க ளென மேம் பாடு பெற்று முதன்மை பெறும். இவர்களே ஆட்சி மேலிடத்து ஆதிக்கஞ் செலுத்துபவர் ஆவார்கள். இவ்வாறு பத்து வயது மாணவர்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய மாணவரினம், அல்லாத மாணவரினம் என இரு வருக்கப் பிரிவுபடுவது ஒரு மேம்பாட்டுக்கு ஊறாகிக் கிளர்ச்சிக்குத் துண்டுகோலாகிவிடும். அடிப்படைக்கோளாறு களைச் செய்யாதீர்கள் என்பது என் வேண்டுகோள். இன்னொரு பெருங்கோளாறு இந்தி மொழி யாதிக்க மாகும். தமிழ் மாநிலத்தில் பாட மொழியாகக்கூடப்பள்ளியில் இடம் பெறாத இந்தியை, முன்னொரு காலத்தில் இடம்பெற்று எடுத்தெறிந்த இந்தியை மாதிரிப்பள்ளியில் பயிற்றுமொழியாக ஒன்பதாம் வகுப்பிற் கொண்டு வரும் திட்டமிது. அதுவும் கிராமத்தில் கொண்டுவரும் முயற்சி இது. ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி, அதன் பின் இந்தியும் ஆங்கிலமுமாம். இந்த மொழி மாற்றம் ஏன்? இந்தியல்லாத இந்திய மொழிகட்கு ஆறாம் வகுப்பு முதல் பயிற்று மொழியாகும் தகுதியில்லையா? தமிழ், தெலுங்கு, வங்காளம் போன்ற பிற இந்திய மொழிகட்குத் தன் மாநிலங்களிலேயே பயிற்றுமொழியுரிமை மறுக்கப்படுகின்றது. இந்தி பாரத முழுதும் பிற மாநிலங்களும் பயிற்றுமொழியாம் ஆதிக்கத்தை மாதிரிப்பள்ளிகளால் பெறுகின்றது. காப்புக்கும் வளர்ச்சிக்கும் சமவாய்ப்பு எல்லா மொழிகட்கும் வழங்கப் பெற வில்லை. மாறாக இந்தி கூடுதலான பெரிய வாய்ப்பைப் பெறு கின்றது. ஏனை மொழிகள் உள்ள வாய்ப்பையும் இழக்கின்றன. இதனை இந்தித்திணிவு, இந்தியாதிக்கம் என்று சொல்லாமல் இருக்க முடியுமா? ஒரு சாரார் மொழி என்பது ஒருவர் மற்றொருவர்க்குத் தம் கருத்தைத் தெரிவிக்கும் கருவி. அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதுபற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அது பற்றி எதிர்ப்போ கிளர்ச்சியோ வேண்டாதது என்று மிகவியல் பாகச் சொல்லிப்போகின்றனர். அவர்கள் சொல்வது இந்தி மொழிக்கில்லை. இந்தி மொழிக்குச் சார்பாக ஏனை மொழிகள் விட்டு ஒதுங்க வேண்டும் என்பதற்காக. மொழியை ஒருவிளையாட்டுப் பறுப்புப் போல் நினைத்துப் பேசுகின்றனர். மனிதவுயிரை ஏனையுயிர்களினும், மனிதவினத்தை ஏனையினங்களினும் சிறப்பாகப் பிரித்து உயர்த்திக் காட்டுவது மொழியே. அறிவு, சிந்தனை, நாகரிக வளர்ச்சி, உணர்ச்சி, உறவு அனைத்தும் மொழி வளப்பட்டவை. இப்படிப்பட்ட மொழி கேவலம் ஒரு கருவி என்றால், உடம்பும் ஒரு கருவிதான். ஐம்பொறிகளும் கருவிதான். ஆணும் பெண்ணும் பிள்ளைபெறுங் கருவிதான். அரசும் நாடும் கருவிகளே. உயிரினங்களும் கருவிகளே. அறிவியல் சமயங்கள் போர்கள் குடும்பங்கள் எல்லாம் பிறிதொரு பயன்நோக்கிய கருவிகளே. உடம்பு என்ற கருவியின் நலங்காக்க இவ்வளவு மருந்துகள் ஏன், மருத்துவர்கள் ஏன், மருத்துமனைகள் ஏன்? கண் என்ற பல் என்ற, நெஞ்சென்ற ஓர் உறுப்பு நலத்துக்கு எவ்வளவு துறை, எவ்வளவு மருந்தகங்கள்? மிதிவண்டி, பேருந்து, புகைவண்டி, வானூர்தி எல்லாம் போக்குவரத்துக்குரிய கருவிகளே. இவை கட்கு எவ்வளவு நிலையங்கள், காப்புக்கள், எல்லாவற்றுக்கும் அடிப்படைசிந்தனை. அதற்கு அடித்தளம் மொழி. ஒரு சொல் எவ்வளவு உணர்ச்சிக்கும் செயலுக்கும் பிறப்பிடமாகவுள்ளன? காதற்சொற்கள், வீரச்சொற்கள், உவகைச் சொற்கள், கேலிச் சொற்கள் எல்லாம் கருவிகளா? எப்படி வேண்டுமானாலும் கூறலாமா? நாகரிகத்துக்கும் நாகரிக வரலாற்றுக்கும் மனிதத் துக்கும் தாயகமே மொழி, இனமும் மொழியும், நாடும் மொழி யும், நெஞ்சும் மொழியும், அறிவும் மொழியும் பிரிக்க முடியாத வை. அதனை ஏதோ வாழைக்காய் நறுக்கும் அரிவாள் மனை போலவும் மாம்பழம் நறுக்கும் கத்தி போலவும் மயிர் வழிக்கும் கத்தி போலவும் மேலோட்டமாகப் பேசுவது பேதைமையுள் மிக்க பேதைமை. எனவே மொழிக் கோட்பாடு ஓரினத்துக்கு உயிர்க்கோட்பாடு. மொழி மறுப்பு சிந்தனை யறுப்பு, மொழி யடிமை, மக்களடிமை, மாதிரிப் பள்ளித் திட்டம் இந்திக்கு இதுகாறுமில்லாத நிகரற்ற உரிமை வழங்குகின்றது. ஏனைப்பல இந்திய மொழிகளின் உரிமையைப் பறிக்கிறது. தேசிய மாணவர்கள் அல்லாத மாணவர்கள் என இரு வருக்கப்படுத்துவதாலும் அல்லாத மாணவர்களைத் திறமை குறைந்த இரண்டாந்தர மாணவர்களாக ஒதுக்குவதாலும் இந்தி மொழிக்குப் பிற மாநிலங்களிலும் முதன்மையாதிக்கம் தந்து, அம்மாநில மொழிகளைப் பள்ளிகளினின்று ஒதுக்குவதாலும், புதிய கல்விக் கொள்கை ஒதுக்கற் கொள்கையுடையது. தென்னாப்பிரிக்காவில் அயர்த் தீயிட்டு என்றும் நிறவொதுக்கற் கொள்கைபோல, இந்தியாவில் இந்தி யல்லாத பிறவின ஒதுக்கற் கொள்கையும், பிற மொழி யொதுக்கற் கொள்கையும் கொண்ட புதுவடிவான அயர்த் தீயிட்டு என்ற இந்தியவசையை இப்புதிய கல்விக் கொள்கையில் நவோதயப் பள்ளித் தோற்றத்தில் நாம் காண்கின்றோம். புதிய கல்விக் கொள்கையில் சில நல்ல கூறுகள் உள. நவோதயப் பள்ளியைப் பொறுத்தவரை நாட்டுக்கும் மொழிக் கும் மாணவர்கட்கும் மக்கட்கும் கேடான கூறுகளே மிகவுண்டு. ஆதலின் புதிய கல்விக் கொள்கையில் இப்பள்ளித் திட்டத்தை அறவே கைவிடுமாறு நான் கேட்டுக் கொள்கின்றேன். கொள் கை வேறு செயல் வேறாக விளையும் திட்டமிது ஒருமைப்பாட் டைப் பன்மைப்பாடாக விளைக்கும் போக்கு இது. மைய வரசு மாணவர்கள், மாநிலவரசின் மாணவர்கள் என்று பிரிவனை தந்து பெருங்கிளர்ச்சிக்கு இடங் கொண்ட திட்ட மிது. ஆதலின் நவோதயப் பள்ளிகள் வேண்டா வலியுறுத்தி எச்சரிக்கின்றேன். அண்ணாதமிழ் விழாவில் தமிழுக்கு ஒரு நல்ல மாற்றத்தை யாவது கடைப்பிடியுங்கள். மக்கள் தம்பெயருக்கு முன்னுள்ள பெற்றோர் எழுத்தை ஆங்கிலத்தில் சொல்லுவதும் ஆங்கில எழுத்தில் எழுதுவதும் வழக்கமாகி வருகின்றது. பார்க்கக் கண்ணராவியாக இருக்கின்றது. மு. கதிரேசனார், உ.வே. சாமிநாதன், ந.மு.வேங்கடசாமி, மு. இராகவையங்கார், மு. வரதராசன், இரா. நெடுஞ்செழியன், இரா. சாரங்கபாணி, ஞா தேவநேயப்பாவாணர், ச. சோமசுந்தரபாரதி, கா. சுப்பிரமணிய பிள்ளை, ஈ.வே. இராமசாமி பெரியார், மு. கருணாநிதி, க.ந. அண்ணாதுரை, மா.கோ. இராமச்சந்திரனார், க. அன்பழகன், திரு.வி. கலியாண சுந்தரனார், வ.உ. சிதம்பரனார், மு.அ. அண்ணாமலை செட்டியார், இராம. அழகப்பனார், கு. காமராசர், அ. சிதம்பரநாதன், கரு. முத்து. தியாகராசர், நா. மகாலிங்கனார், ம.பொ.சிவஞானம், திரு.வி. கலியாண சுந்தரனார், அவ்வை சு. துரைசாமிபிள்ளை என இவ்வாறு முதலெழுத்துக் களைத் தம் பெயர்க்குமுன் தமிழெழுத்தில் எழுதுவதும் தமிழ் ஒலியாகச் சொல்வதுமே இயல்பும் மரபும் ஆகும். சில வாண்டுகளாக இந் நல்லியல்பு மாறி ஆங்கிலமாகச் சொல்லும் மயக்கம் பெருகிவரக் காண்கின்றோம். இதுகூடவா மாறவேண்டும், இதுகூடவா தமிழில் எழுத முடியாது, எழுதக் கூடாது, நம் பெற்றோர்கள் முன்னோர்கள் தமிழ்ப் பெயராக வைத்திருந் தார்கள். அந் நற்பெயர்களைக் கூட மாற்றித் தொலைக்க வேண்டும். அருணாசலத்தை அரு எனவும் அண்ணாமலையை அண் எனவும் அழகப்பனை அழ எனவும் தலையெழுத்தாக அமைக்கும் போது எவ்வளவு தெளிவு ஏற்படுகின்றது. எல்லாவற்றுக்கும் ஆங்கில முதலெழுத்தான ஹ என்பதனைச் சொல்லுவது தெளிவா? தமிழாகச் சொன்னால் குறைவான மதிப்பு என்று கருதி இன்று பலர் சினக்கவும் செய்கின்றனர். ஆங்கிலத்திற் சொன் னால்தான் காலத்திற்கேற்ற தன் மதிப்பு என்ற அளவுக்குத் தமிழன் பொய்ம் மானம் நச்சிக் கிடக்கின்றான். இவையெல்லாம் எம் மொழிக்கும் இயல்பன்று. இதனால் தமிழ் வளர்ந்து விடுமா என்று கிண்டலும் செய்கின்றார்கள். தானே உணரத் தெரியாத, உணர்ந்தாலும் கக்கரவாதம் பேசுகின்ற இவர்கட்கு நம் காலத் தை வீணடிக்க வேண்டா. இயல்பு எது என்று எண்ணினால் யார்க்கும் புரியாதா? ஆதலின் பேரறிஞர் அண்ணா தமிழ் விழா வில், இனி முதல் தங்கள் தலை முதல் எழுத்தைத் தமிழாக எழுத வும் சொல்லவும் கேட்கவும் செய்யுங்கள். இது புதுமுறையன்று; முன்பு பல்லாண்டு பயின்ற இயல்பு வழக்கு. இயல்பினைக் காக்க வேண்டுகின்றேன். பொழிவு - 21 நாள் : 20.10.1986 திங்கள் 3 ஐப்பசி 2017 இடம் : காரைக்குடி இந்து மதாபிமான சங்கம் நிகழ்ச்சி : காந்தி மெய்யப்பர் நூற்றாண்டுவிழா தலைமை : வ.சுப. மாணிக்கம் கலந்தோர் : சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பேராயக்கட்சி திரு. உ. சுப்பிரமணியம், அறிஞர் வெ.க. அழகப்பன், நா. இலட்சுமணன், அழகு வீரப்பன், காடப்ப செட்டியார் பொழிவுச் சுருக்கம் சங்கத் தலைவர் காடப்ப செட்டியார் அவர்களே, அன்பர்களே, காந்தி மெய்யப்பனாரின் நூற்றாண்டுவிழா செக்காலை யில் மெய்யப்பர் வீட்டில் அவர் குடும்பத்தார் கொண்டாடிய போது மெய்யப்பர் பெரிய காந்தியத் தொண்டர். காந்தியப் பணியே வடிவானவர். அவர் நூற்றாண்டுவிழாப் பெரிய அளவிற் கொண்டாட வேண்டும் என்று என் அவாவினை வெளியிட்டேன். அதனை எண்ணிப் பாரதியார் பாடிய இந்து மதாபிமானசங்கம் இன்று மெய்யப்பரின் நூற்றாண்டு விழா வினைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றது. இது சங்கத்தின் நன்றி விழா என்று கூடக் கருதலாம். சங்கம் நிலையான ஓரிடமும் கட்டிடமும் பெறுதற்கு முதல்வள்ளலாக ஐம்பது ஆண்டுகட்கு முன் உரூபா மூவாயிரம் வழங்கியவர் நம் மெய்யப்பர். அதன் பின்னரே செல்வர்கள் கட்டிடக் கொடை செய்ய முன்வந்தனர். முன்னரே மெ.வின் உருவப்படம் இக்கட்டிடத்தை அணி செய்வது மகிழ்வு தருவதாகும். இரண்டாவது முறையாக இத் தேசிய விழாவில் எனக்குப் பங்கு கிடைத்தமையை எண்ணிப் பெருமிதங் கொள்கின்றேன். காரைக்குடியளவில் இத் தேசத் தொண்டரின் விழாவைக் கொண்டாடினாற் போதாது. இன்று இவ்விழாவிற் சிறப்புரை யாற்ற வந்திருக்கும் பேராயக்கட்சித் தலைவர் சுப்பிரமணியனார் நம்மாவட்டப் பரப்பிலாவது இவ்விழாவினை அயர ஏற்பாடு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். மையவரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையில் ஒரு நல்லகூறு. விடுதலை வரலாற்றினைச் சிறப்பான முறையில் பள்ளிப்பாடமாக வைப்பது என்பதாம். இது எல்லா வகுப்புக் களில் வகுப்பின் தரத்துக்குத் தக இடம் பெறவேண்டிய பொரு ளாகும். பெரும் போரற்ற முறையில், வன்மையில்லாத இன் முறையில் உரிமைப் போர் செய்து விடுதலையடைந்திருந் தாலும் ஒரு நூற்றாண்டுக் காலம் நம் மூதாதையர் எவ்வளவு இழப்பும் துன்பமும் சிறையும் கொடுமையும் பட்டனர் என்ற நெடிய வரலாறு இன்றைய தலைமுறை யினர்க்கு உணர்த்தப் பட வேண்டும். இந்திய நாட்டு வரலாறு விடுதலைக்காலம் தொடங்கிப் பின்னாக எழுதப்படுவது கூடப் பொருத்தமாகும். பழைய வரலாறுகளைச் சொல்லி இக் காலத்துக்கு வருவதற்குள் அறிவும் வளர்ச்சியும் மடங்கிவிடும். இக்காலம் தொடங்கிப் பின்னே சென்றால் உணர்வுக்கு மதிப்பு இருக்கும். விளக்கமும் பயனும் கூடுதலாகும். எனவே இந்திய வரலாற்றில் விடுதலைக் காலம் முதலியலாக இருத்தல் வேண்டும் என்பது என் விழைவு. அங்ஙனம் விடுதலை வரலாறு எழுதும் போது பள்ளிக் குழந்தைகட்குத் தெரிந்த சூழ்நிலை தொடங்கிப் பின் பரந்து படவும் சேய்மைபடவும் எழுதிப் போதல் இயற்கையான நாட் டுணர்வை உண்டாக்கும். தன் ஊரும் தன் ஊர்ப்பகுதிகளும் பக்கத்து மாந்தர்களும் பக்கத்து விடுதலைக் கள இடங்களும் அடுக்கடுக்காகத் தொடுத்துச் சென்றால் விளக்கமான தெளிவு குழந்தைகட்குப் பிறக்கும். இதனால் பாரத முழுநோக்கில் எழுதக் கூடாது என்பது கருத்தன்று. முழு நோக்கே நோக்கமாயினும் பெரும் பங்கு அணித்தான சூழ்நிலை கவர்ச்சியாகவும் புரியும் படியாகவும் அமையும். எடுத்துக்காட்டாகப் பார்ப்போம். காரைக்குடி தேவகோட்டை சிவகங்கை வட்டாரத்துப் பள்ளிபாடங்களில் இப்பகுதிக்கண் விடுதலைக்குப் போராடிய நிகழ்ச்சிகளும் இயக்கங்களும் சங்கங்களும் தொண்டர்களும் முன்னுரிமை பெறுதல் முறையான கல்வி எனப்படும். அந்த இடங்களைப் பார்க்கும்போது குழந்தைகட்குப் பளிச்சென்று பாடப் பதிவு ஏற்படும். விடுதலை வரலாற்றில் எல்லாவிடத்தும் காந்தி, நேரு, படேல், பிரசாது,திலகர், தாதாபாய், இராசாசி, காமராசர் என்றின்ன பெருமக்கள் பெயர்களே திரும்பத் திரும்ப வரு கின்றன. விடுதலைப் போரில் சிறு தொண்டர், பெருந் தொண்டர், உள்ளூர்த் தொண்டர், மாநிலத் தொண்டர் என்ற வாறு பெரும் வேறுபாடு வைத்துக் கொள்ளக் கூடாது. பெரிய புராணம் அறுபத்து மூன்று நாயன்மார்களை மதிப்பது போன்ற பரந்தவுணர்வு நாட்டு வரலாற்றிலும் வேண்டும். உண்மையாகச் சீர்தூக்கினால் பெரிய விடுதலைத் தொண்டர்கள் பெற்ற இழப்பினையும் துன்பத்தையும் கொடுமைளைக் காட்டிலும் ஏனையோர் பெற்றவை மிகுதிகளாம் ஊர்பெயர் தெரியாமல் புகழ் பெறாமல் இழப்புக் கொண்ட நாட்டுப் பற்றாளர்கள் பல்லாயிரம் பேராவார்கள். பெரிய தலைவர்கள் புகழோடும் வசதிவாய்ப்புக்களோடும் தொண்டு செய்தார்கள் என்பது வெளிப்படை. இலாலாலசபதி, வ.உ.சி. பட்டதுயர்கட்கு எல்லை யுண்டோ? ஆதலின் விடுதலை வரலாற்றில், மாவட்ட மாநில வரலாற்றளவிலாவது உள்ளூர்த் தொண்டர்கள் பெரும் பாலோர் குறிக்கப்படுதல் வேண்டும். இது நன்றிக் கடமை மட்டு மன்று; எல்லாத் தொண்டர் களையும் சமமாக மதிக்கின்றோம் என்பது மட்டுமன்று; கல்வி நெறியும் இதுவேயாகும். கிட்ட அறிந்த சூழ்நிலையில் வைத்துத்தான் எட்டிய அறியாத சூழ்நிலை வரலாற்றைப் பயிற்ற வேண்டும். அங்ஙனம் தமிழ் நாட்டில் விடுதலை வரலாறு வரையப்படுங்கால் காந்தி மெய்யப்பரின் பல்வகைத் தொண்டுச் செயல்கள் பங்குபெறும். வீட்டில் வைத்து அரிசனப் பள்ளி நடத்தியது, உணவு வழங் கியது, காந்தியடிகள் அவர் இல்லம் வந்தது, நூல் நூற்பு, குடும்ப முழுதும் நாட்டுத் தொண்டு செய்தமை, வெளிநாட்டில் சுபாசு சந்திரருக்கு உதவி செய்த அருஞ் செயல், அயல்நாட்டிலும் காந்தியியக்கம் கண்டது. தன் சிறிய வருவாயையும் நாட்டுத் தொண்டுக்கு வழங்கியது. கிராமத் தொண்டு, சாதிநோக்க மின்று, பொதுமத நோக்கு, அரையாடை என்ற வரலாறு எல்லாம் காந்தி மெய்யப்பர் தொண்டுகளாகப் போற்றப்படும். தாய்மொழியை மறவாத அவர்தம் பெருங் கொள்கையும் கடைப்பிடிக்கப்படும். தாய்மொழி மறந்தவன் சாதியிற் கீழோன் என்பது மெய்யப்பரின் பொன்மொழி. பொழிவு - 22 நாள் : 11.11.1986 செவ்வாய் 25 ஐப்பசி 2017 இடம் : மேலைச் சிவபுரி சன்மார்க்க சபை நிகழ்ச்சி : செந்தமிழ்க் கல்லூரி மாணவட்கட்கு உரை : வ.சுப. மாணிக்கம் பொழிவுச் சுருக்கம் பேரன்புள்ள ஆசிரியப் பெருமக்களே, மாணவ மாணவியர்களே, நாம் இங்கு கூடியிருக்கும் அவை மண்டபம் தமிழகத்தின் எல்லாப்புலவர்களின் நல்வரவையும் பெற்ற சிறப்புடையது. அரசன் சண்முகனார், உ.வே. சாமிநாதையர், பண்டிதமணி கதிரேசனார், விபுலானந்த அடிகள், சோமசுந்தர பாரதியார், சேதுபிள்ளை, காசு பிள்ளை, இராகவையங்கார், வேங்கடசாமி நாட்டார், அரசர் அண்ணாமலை, கந்தசாமி கவிராயர், இராய சொ. முதலான பெருமக்கள் தொடர்புடையது. எண்பதாண்டுகளாகத் தொண்டு செய்து வரும் பழஞ் சபை சன்மார்க்க சபையாகும். ஒரு காலத்துப் பல்லாயிரக் கணக்கான மக்கட்குக் கேள்விச் செல்வத்தை ஊட்டியது. அன்று வருவார்க்கெல்லாம் உணவும் வழங்கியது. பின்பு மதுரைத் தமிழ்ச் சங்கத்தோடு தொடர்புகொண்டு பிரவேச பண்டித பால மாண்டித வகுப்புக்களை மாணவர்கட்கு உண்டியும் உறையுளும் வழங்கித் தமிழ் வளர்த்தது. பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தோடு இணைந்து புலவர்வகுப்பு தொடங்கப் பெற்றது. நூற்றுக்கு மேலானப் புலவர்களைப் பிறப்பித்து வழங்கியது. இப்போது சில ஆண்டுகளாக இளங்கலைப்பட்டவகுப்பு தொடர்ந்து நடத்தி வருகின்றது. தமிழ் முதுகலைவகுப்பு இரண்டோர் ஆண்டுகளில் தொடங்கப் பாரதிதாசன் பல்கலைக் கழகம் இசைவு தரும் என்ற எதிர்பார்க்கின்றோம். சபை தன் எண்பதாண்டு வரலாற்றில் நிதிக் குறைவால் தடுமாறிய கடுஞ் சூழ்நிலை இருந்தது. சபை முன்னாட் செயலர் சிதம்பரஞ் செட்டியார் அவர்களும் நானும் மலேயா, சிங்கப்பூர் முதலான நாடுகளுக்குச் சென்று பெரிய நன்கொடை பெற்று வந்ததன்பின், சபையின் நிலைபேறு உறுதியாயிற்று. முட்டுப் பாடின்றியும் வளர்வதாயிற்று. தோல் வணிகப் பெருமகன் நாகப்பாவின் பெரிய நன்கொடையால் நாகப்பா விடுதியும் பண்டிதமணியின் சைவ மாணவர் மகிபாலன்பட்டி சி. ராமனின் அரிய நன்கொடையால் மகளிர் விடுதியும் முன்னாள் சபைத் தலைவர் சாமிநாதன் செட்டியார் அவர்களின் தக்க நன்கொடை யால் வகுப்பறைக் கட்டிடமும் பெருகின. இடத்தாலும் நிதியாலும் சபை இன்று தன்னிறைவுடையதாக விளங்கு கின்றது. நீங்கள் படிக்கும் சபையின் வரலாறும் பெருமையும் இது. வள்ளல் பாரி ஆட்சிக்கு உட்பட்ட ஊர் இது என்ற பழம் பெருமையும் உண்டு. நான் இச்சபைப் பள்ளியின் பழைய மாணவன். எங்களுக் கெல்லாம் பாடஞ் சொல்லிய ஆசிரியர் நடேசய்யர் இன்றும் வாழ்ந்து இச் சபைக்குத் தொண்டு செய்து வருகின்றார். இந்த எண்பத்தெட்டாவது வயதிலும் நாள் தோறும் சபைக்கு வந்து பணிசெய்து வருகின்றார். அவர் பாடம் நடத்திய கண்டிப்பும் திருத்திய முறைகளும் எங்களை உருவாக்கிய அன்பும் நினைவுக்கு வருகின்றன. முன்பிருந்ததைவிடத் தமிழ் கற்பார்க்கு இன்று வாய்ப்புக் கள் கூடி வருகின்றன. சில வகைகளில் தமிழ் மதிப்பிலும் கொள்கையிலும் பெருங் குறைபாடுகள் உள. எனினும், வளர்ச்சிப் போக்கு வெளிப்படை நாம் தகுதி செய்து கொள்ள வேண்டும். சிலதுறைகளில், சில பெருநூல்களில் மிகுந்த ஈடுபாடும் வல்லாண்மையும் கொள்ள வேண்டும். இராமா யணம், திருக்குறள், பெரியபுராணம், பாரதம், சிலப்பதிகாரம், திருவாசகம், திருவருட்பா, பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள், அருட்பாடல்கள் இவற்றுள் ஒன்றையே பெரிதும் கற்று மேடையேறிப் பேசிப் பொருளும் புகழும் பெறுவாரைக் காண்கின்றோம். பள்ளி முதலியவற்றில் வேலை வாய்ப்புக்களும் ஆட்சித் துறைகளில் வேலை யமர்வுகளும் தனித் தமிழ் கற்றவர்கட்குப் போதியவளவு இல்லை. இல்லாமலிருப்பது குறை. அதற்காகப் பெரும் புலவர்களின் நூல்களையும் சிந்தனை களையும் கற்ற நாம் சோர்வடைய வேண்டியதில்லை. மாணவர் களாகிய நீங்கள் படிக்கின்ற காலத்திலேயே பாடப்பகுதிகளில் சில நூல்களில் ஈடுபாட்டு காட்டி வளர்த்துக் கொண்டால் பின்பு, கட்டுரை எழுதுவற்கும் பொழிவு செய்வதற்கும் அடிப்ப டையாகும். இன்று நம் நாட்டில் பள்ளியாயினும் கல்லூரியாயினும் அலுவலகமாயினும் பிற இடங்களையாயினும் மூன்றாமவரைப் பற்றிப் பேசும் சிறுமை நயமே பெருகி வரக் காண்கின்றோம். குற்றம் இன்றோ உண்டோ பிறரைப் பற்றி ஏளனம் பேசுவதே வளர்ந்து வரும் மனிதப் போக்காக இருக்கின்றது. மாணவப்பருவத்தில் தன்னை வளர்த்துக் கொள்வதிலே நாட்டம் வேண்டும். மானிடப் பிறப்பில் ஒவ்வொரு பெண்ணுக் கும் ஆணுக்கும் தனித்திறமைகள் கருவிலே திருவாக அமைந்து கிடக்கின்றன. தனித்திறம் இல்லாத மனிதப்பிறவியே இல்லை. நன்கு படித்தும் பெரியவர்கள் வரலாற்றினைக் கற்றும் முன்னேறியவர்கள் உழைப்பினைப் பின்பற்றியும் தற்சிந்தனை செய்தும் தன் திறமையை வளர்த்துக் கொள்ளும் கருமக் கண்ணே நமக்கு வேண்டும். எத்துறை கற்றாலென்ன, எந்நிலை யில் இருந்தாலென்ன, எப்பருவமானாலென்ன, திறமைத் தகுதியும் செய்கைச் செம்மையும் காலம் போற்றுகையும் அடக்க மான பயனுடைய சொல்லும் நல்ல வாழ்வுதரும். இது நம்பிக்கை யன்று; நாம் கண்ணாறக் கண்டுவரும் நனவுச் செயலாகும். பொழிவு - 23 நாள் : 30.11.1986 ஞாயிறு 14 கார்த்திகை 2017 இடம் : மதுரை கல்லூரி மனை விடுதி நிகழ்ச்சி : முதல்வர் அ. சங்கரநாராயணன் அயல்நாடு சென்று திரும்பிய சிறப்பைப் பாராட்டல். முதல்வர் சகதீசன் முழு ஏற்பாடு உரை : வ.சுப. மாணிக்கம், திரு. சங்கரநாராயணனுக்குப் பொன்னாடை போர்த்தல் கலகந்தோர் : கங்காராம் துரைராசு, மணிமொழியன், தமிழ்க் குடிமகன், சங்கரராசலு, இன்னும் சிலர். பொழிவுச் சுருக்கம் பாராட்டு விழாவிற்குக் குழுமியிருக்கும் பெருமக்களே, அழைப்பில் பெயர் அச்சிட்டிருந்தாலும் சிலரால் வரமுடிவதில்லை. முதல்வர் சகதீசன் நேற்று தொலைபேசி மூலம் காரைக்குடியில் இருந்த என்னொடு தொடர்பு கொண்டு, நான் வந்து நண்பர் சங்கரநாராணனுக்குப் பொன்னாடை அணிய வேண்டும் என்று விரும்பினார். சகதீசனும் என் இனிய அன்பர் சங்கரநாராயணன் அவர்களும் என் தோழர். மேலும் நான் துணைவேந்தராக இருந்தபோது ஆட்சிக்குழுவுறுப்பின ரான திரு. சங்கரநாராயணன் என் பணிக்கு மிகவும் உதவியாக இருந்தவர். அவர்க்கு அதுபற்றி என் நன்றியைப் புலப்படுத்தும் வாய்ப்பினைச் சகதீசனார் எனக்கு வழங்கி யுள்ளார். சங்கர நாராயணர் கடமையில் மிகவும் கருத்துடையவர் தாம் நடத்திய தனிப் பயிற்சிக் கல்லூரியைக் கட்டுப்பாடாக நடத்தினார். தாம் பாடம் எடுக்க வேண்டிய வகுப்பைத் தவற விடார். பல்கலைக் கழக ஆட்சிக் குழுவின் கூட்டத்திற்கு வந்தாலும், பாட நேரத்தில் தம் கல்லூரிக்கு வந்து பாடம் நடத்து வார். இது அவருடைய ஒழுங்குணர்வுக்குச் சான்று. இதனாலன் றோ அவர்தம் தனிப் பயிற்சிக் கல்லூரியை மாணவ வுலகம் விரும்பியது. ஆட்சிக் குழுவில் நல்ல சிறந்த பலவுறுப்பினர்கள் இருந் தனர். தமிழவேள் பழநிவேல் இராசன், முதல்வர் சத்திவேலு, முதல்வர் சகுந்தலை, முதல்வர் கனகசபாபதி, முதல்வர் செல்வராசு, முதல்வர் நாசர்உதின், முதல்வர் சங்கரநாராயணன் என்ற இவர்கள் நான் கொண்டுவரும் ஆய்வுத் திட்டங்களுக்கும் வளர்ச்சித் திட்டங்கட்கும் வேண்டிய பல்லிலக்க நிதியை உடனே இசைவளித்தனர். இன்றைய நடைமுறை பல சிறிய திட்டங்கட்குக் கூட விரிவான குறிப்புக்களும் மதிப்பீடுகளும் தரவேண்டும். அது பிறரால் சரிபார்க்கப்படவேண்டும். அதனை ஒத்துக் கொள்வதற்கும் கொள்ளாததற்கும் வெளியிடச் சில திங்கள் ஆகிவிடும். இப்படித்தான் பல திட்டங்கள் கிடப்பில் கிடக்கின்றன. என் காலத்து ஆட்சிக் குழுவினர் திட்டத்தின் நலங்களையும் புதுமை களையும் ஆராய்ந்து முன்கூட்டியே தக்க நிதித் தொகைக்கு மொத்தமாக இசைவு வழங்கி விடுவது வழக்கம். எரியம், சூழ்நிலை இயற்கைவளம் என்பது ஒரு புதிய அறிவியல்துறை. இந்திய நாட்டின் எப்பல்கலைக்கழகத்தும் அதுவரை தோன்றாத் துறை மதுரைப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக இத்துறை வைக்கப்பட வேண்டும் என்று நான் பொழிந்தபோது ஏழிலக்க உரூபாயை ஆட்சிக்குழு ஒத்துக் கொண்டது. பல்கலைக் கழக நிதியிலிருந்தே எடுத்துக் கொள்ள இசைந்தது. இவ்வாறுதான் பல்கலைக் கழகத் திருநெல்வேலி மையமும் ஒரு வாரத்தில் தொடங்கப் பெற்றது. இவ்வாறு உடனடியாக நிகழ்ந்த திட்டங்கள் பலப்பல. பொதுவாக என்ன சொல்லுவார்கள்; மாநிலவரசிடம் ஒப்புதல் பெற வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழுவிடம் ஒப்புதல் பெறவேண்டும். சென்ற ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலேயே இவை பற்றிய குறிப்பு இருக்க வேண்டும் என்றெல்லாம் வறட்டு விதிகளைப் பேசிப்பேசி எதனையும் உருப்படவிடாமல் குறுக்கும் மறுக்கும் செய்வது ஒருவகை ஆட்சிப் போக்கு. இவ்வாறு சென்றால் அதற்குள் நம் பதவிக்காலம் முடிந்துவிடும். திட்டங்கள் தாள் ளவிலேதான் கிடக்கும். ஒரு கோடிக்குமேல் புதிய கட்டிடங்கள் வருவதற்கும் பதிப்புத் துறை அமைப்பதற்கும் கல்லூரி பல்கலைக் கழக ஆசிரியர்கட்கு தனியாய்வு நிதி வழங்குவதற்கும் மாணவ மாணவியர் விடுதிகள் கட்டுவதற்கும் வளாகச் செம்மைக்கும் எல்லாம் விரைந்து முடிப்பதற்கு ஆட்சிக்குழு பெருந் துணை யாக இருந்தது. திரு. சங்கரநாராயணரின் கருத்துக்கு எல்லாரிட மும் மதிப்புண்டு. ஏழை எளியோர் நலிந்தோர் நிலையில் சில கருத்துக்களைச் சொல்வார் அவர். தேர்வுக் கட்டணத்தைக் கூட்டக் கூடாது; திருத்துநர்க்குக் கூடுதல் ஊதியம் கொடுக்க வேண்டும். பேருந்துக் கட்டணம் குறைய வேண்டும். ஆசிரியர் கட்கும் அலுவலர்கட்கும் பல அளிப்புக்கள் நல்க வேண்டும் என்றெல்லாம் செலவு வகையில் சங்கர நாராயணர் தாராளமாக இருப்பார். இச் செலவுக்குப் பல்கலைக் கழகத்துக்கு எவ் வகையில் வருவாய் வரும். வருவாய் வழிகளையும் சொல்லுங்கள் என்று எளிதாக உடன்படார். இது அவர் மனப் பான்மை. சிலவற்றில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் முடிவில் பொது வொழுங்கு நோக்கி ஒத்துப் போகும் பண்பு அவரிடம் உண்டு; தழுவிப் போகும் இயல்பு அவரிடம் உண்டு. எனவே அப்பெரு மகனுக்கு நன்றி காட்டும் இவ்வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்கு மகிழ்கின்றேன். சங்கரநாராயணர் தனிப்பயிற்சிக் கல்லூரி நடத்தினார். ஆட்சிக் குழுவில் இருந்தார் என்பது மட்டுமன்று, என்றும் கல்விச் சிந்தனையாளர். அப்போது அப்போது வரும் கல்விக் கொள்கைகள் பற்றி அறிக்கைகள் வெளியிடுவார். இப்போது வெளிநாடு சென்ற நிலையிலும் அந்நாட்டில் உள்ள கல்வி முறை களைக் கண்டு வந்திருக்கின்றார். ஆதலின் அவர்தம் இப் பாராட்டு விழாவில் ஓரிரு கல்விச் சிந்தனைகளை நான் சொல்ல விரும்புகின்றேன். கல்வியில் தன்னாட்சி முறை என்பது இன்று மிகுதியும் பரவிவரும் கோட்பாடு. உயர்நிலைப்பள்ளியிற் கூடத் தன் னாட்சி வரவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. தன்னாட்சி கல்லூரிகள் என்பவை முதற்கண் தமிழகத்தில்தான் தோன்றின. இவற்றின் நடைமுறைகளை நேரிற் காணும் பெருவாய்ப்பினைப் பெற்றேன். துணைவேந்தராக இருந்த காலத்து இதுபற்றிய நலந் தீங்குகளைக் கண்டதுண்டு. இன்று சொல்லப்படும் புதிய கல்விக் கொள்கையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்லூரிகள் தன்னாட்சி களாக வரவேண்டும் என்று குறிப்பிட்டு அதற்குப் பெருநிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதை அறிவோம். அண்மையில் பல கல்லூரி கள் தன்னாட்சிகளாக மாறியிருக்கின்றன. இதுபற்றிக் கடுஞ் சிந்தனை செய்ய வேண்டும். இந்தியா முழுதும் சீரான கல்விக்கொள்கை வேண்டும் எனவும் மாநிலங்கள்தோறும் மாறிச் செல்லும் மாணவர்களின் சேர்க்கைக்கு இது துணை செய்யும் எனவும் பாடத் திட்டங் களும் பிறவும் ஒத்திருக்க வேண்டும் எனவும் பொறியியல் மருத்துவம் முதலான படிப்புக்களில் ஒத்த பாடு வேண்டும் எனவும் இவ்வாறெல்லாம் ஒழுங்கொருமை வேண்டப்படுங் காலம் இது. கல்வியைப் பொதுப் பட்டியலிற் சேர்த்ததற்கு இது ஒரு நோக்கம். இவ்வாறு பெரும் புறம் ஒரு சீர்மை பேசிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் உயர்நிலைப் பள்ளிக்குங் கூடத் தன்னாட்சி முறை செய்யலாம் என்று கீழிறங்குகின்றோம். பாடத் திட்டம் அந்தந்தப் பள்ளி, கல்லூரியே அமைத்துக் கொள்வது தேர்வும் தேர்வு முறைகளும் வெளியீடும் அவைகளே செய்து கொள்வது. இவற்றின் விதிமுறைகளை அவைகளே வகுத்துக் கொள்வது, மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு அவைகளே நடத்திக் கொள்வது என்றிருந்தால் என்னென்ன கோளாறுகள் வரும் என்று தெரியுமா? பாடச் சுமையைப் பெருக்கி ஆசிரியப் பணிச் சுமையைப் பெருக்கித் தேர்வு மிகுதி காட்டுவதற்காக அயல் முறைகளைக் கடைப்பிடிப்பதைக் காண்கின்றோம். தன் னாட்சிப் பள்ளி கல்லூரிகட்கு ஆசிரியர்கள் பலர்வேண்டும்; அலுவலகச் செலவு பெருகும்; பிற செலவும் பன்மடங்காகும். ஆசிரியர்களின் ஊதிய நிலையும் கூடவேண்டும். நிதிக்கு எங்குச் செல்வது. மேலும் இங்கு படிக்கும் மாணவர்கள் மேற் படிப்புக்குச் சேரும் வாய்ப்புக்களை இழக்கின்றனர். மாநில வளவில் உள்ள தகுதிகளும் பொதுப் பரிசுகளும் சான்று மதிப்புக்களும் இவர்கட்குக் கிடைப்பதில்லை. தன்னாட்சிக் கல்லூரிகளைத் தேர்வில் தோற்றோர்க்கு நடத்தும் தனிப் பயிற்சிக் கல்லூரிகளாகப் பொதுமக்கள் கருதுகின்றனர். பாடப் பகுதிகள் இயையாமல் இருத்தலின் இம் மாணவர்கள் மேற் படிப்புச் சேர்க்கையில் அல்லற்படுகின்றனர். தங்கள் தன் னாட்சிக் கல்லூரி உயர்வு என்று வெளிப்படக் காட்டுவதே இதனை நடத்துவோரின் தற்பெருமையாக இருக்கின்றது. தன்னாட்சி முறை என்ற கல்விக் கோட்பாடு எனக்கு உடன்பாடு. தன்னளவில் அது தவறில்லை. அதற்கு வரம்பும் கட்டுப்பாடும் அளவெண்ணும் வேண்டும். அளவுக்கு மிஞ்சி னால் அமிர்தமும் நஞ்சு என்பது நினையத்தகும். ஒரு வீதியில் இரண்டொரு மருந்துக் கடைகள் இருக்கலாம். தேவையின்றிப் பத்து இருபது கடைகள் வந்தால் விற்பனை பழுத்துப்போகும் இது உலகியல். முதற்கண் இந்நாட்டிற் பல்கலைக் கழகங்கள் தன்னாட்சி யனவாக வளரவேண்டும். உண்மையில் தன்னாட்சி என்பது நிறுவனங்களின் பெருக்கமன்று. நீங்கள் அறிவீர்கள் கல்லூரி களில் முதலாவது இரண்டாவது என ஐந்தாறு பிரிவுகள்தாம் இருக்கும். எத்தனை ஆயிரம்பேர் படித்தாலும் பலவாண்டுகட்கு இப்படியே யிருக்கும். முதற்பிரிவில் கணக்கு, இயற்பியல், வேதியியல், இரண்டாவது பிரிவில் விலங்கியல், மரவியல், வேதி யியல் இவ்வாறு இருக்கும். ஆக எல்லாப் பிரிவிலும் சேர்ந்து பதினைந்து துறைகள்தாம் நடைமுறையில் இருந்துவரும். கல்லூரிகள் பெருகினால் என்ன? துறை யெண்ணிக்கை இவை தான். மாணவர்கள் தம் தகுதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்பத் தேர்ந்து கொள்ளுமாறு துறைகள் ஏராளமாக இருத்தல் வேண்டும். அவர்கள் நோக்கம் போல் இணைப்பும் இருக்கலாம். மேனாட்டில் மருத்துவம் படிப்பவன் தன் விருப்பத்துக்கு ஏற்பச் சட்டவகுப்புக்கோ இசைவகுப்புக்கோ ஓவிய வகுப்புக்கோ சென்று படிக்கும் வாய்ப்புண்டு. பன்னூறு துறைப் படிப்புக்கள் பல்கலைக் கழகங்களிலும் சில கல்லூரிகளிலும் அமைய வேண்டும். மாணவர்தம் தகுதிகளும் சூழலும் என விருப்பமும் பலப்பல. அவர்கள் நோக்கத்துக்கு ஈடுகொடுக்க தெளிவு வேண்டும். மூன்று சீட்டாட்டம் போலச் சில துறைகளுக்குள் உலகத்தை அடக்கி ஒடுக்கக் கூடாது. துறைகளை விரித்துக் கொள்ளுமாறு சில கல்லூரிகட்குத் தன்னாட்சி நல்கலாம். அக் கல்லூரிகள் சிலவாக வேண்டும். எனினும் எல்லாத் தன்னாட்சியிலும் பொதுவொழுங்கு காக்கப்பட வேண்டும். மீண்டும் சொல்கின்றேன். தன்னாட்சிக் கொள்கை எனக்கு உடன்பாடே. அது ஆற்றிற் கரைத்த புளியாகிக் கரைகடந்த போக்காகி விடலாகாது. பொழிவு - 24 நாள் : 26.1.1987 மாலை 7 மணி இடம் : அரசர் முத்தையர் மன்றம், மதுரை நிகழ்ச்சி : கலைஞர் மு. கருணாநிதியின் சங்கத் தமிழ் வெளியீட்டு விழா, மலைக்கோட்டைப் பதிப்பகம் உரை : தலைமை வ.சுப. மாணிக்கம் கலந்தோர் : கலைஞர் மு.க., பேராசிரியர் அன்பழகன், பிதி. பழனிவேல் இராசன், தமிழண்ணல், சஞ்சீவி, மதுரை ஆதினம், வைரமுத்து பிறர் பொழிவு விரிவு தமிழகப் பெருமக்களே, தமிழறிஞர்களே, தமிழ்ச் சான்றோர்களே, இதுகாறும் சங்கத்தமிழ் இத்தகைய பெருவிழாக் கூட்டத்தைக் கண்டிருக்காது. இளையரும் முதியருமாகப் பெண்களும் ஆண்களுமாக இருபத்தையாயிரம் கூடிச் சங்கத் தமிழோசை முழக்கம் செவிமடுக்கும் பெருந்தமிழ் விழா இது. இன்ன பெருங் கூட்டம் சங்கத் தமிழுக்கு வந்தது என்பதை விடத் தமிழ்த் தலைவராகிய கலைஞர்க்குக் கூடியது என்பதே பொருத்தமாகும். வாக்குரிமைத் தேர்தற் காலத்துப் பெருங் கூட்டம் குழுமும் வழக்கு உண்டு. அத்தகைய மக்கள் தொகை சங்கத்தமிழுக்கு ஆறுமணியளவில் அமர்ந்திருக்கின்ற தென்றால், அதற்கு மக்களின் உள்ளோடும் தமிழ்க் குருதியே காரணமாகும். திரைக் காட்சிக்குக்கூட இரண்டரை மணியளவே உட்கார்ந் திருப்பர். இத்தமிழ்க் காட்சிக்கோ தூய சங்கத் தமிழைச் செவி மாந்தப் பன்மணிப் பொழுது நெருக்கடி யாக மன்றத்தின் உள்ளும் புறமும் இருந்தும் நின்றும் திரண்டி ருக்கும் உங்கள் மகிழ் முகங்களைக் காணக் காண நாங்கள் பேரின்பம் எய்துகின்றோம். தமிழன்பு வற்றிவிட்டது என்று சொல்லப் பின் வாங்குகின்றோம். இந்த அன்பு உணர்ச்சி வெள்ளமாக ஓடி விடாமல் தமிழ்க் கல்வியாகவும், தமிழ் வழிப்படிப்பாகவும் விளங்க வேண்டும். கலைஞர் பெருமகனுக்கும் எனக்கும் தமிழன்பினால் நெருக்கமான பல்லாண்டுத் தொடர்புண்டு. அதனால் அவர்தம் நூல்களைப் பாராட்டுவதை நான் மிகப் பெருமையாக மதிக்கின் றேன். என்னாற் பாராட்டப்படுவதையும் அவர் நன்கு மதிக்கின் றார். தென் பாண்டிச் சிங்கம் வெளியிட்டபோதும் தலைமை யேற்றேன். நாடு நன்கு வரவேற்ற கலைஞரின் குறளோவியத் துக்கு மதிப்புரை வழங்கியதோடு வெளியீட்டு விழாவில் தலைமை தாங்கினேன். தமிழினத்தின் தனியிலக்கிய மான சங்கத் தமிழ் விழாவிலும் தலைமையாகக் கலந்து கொள்கின்றேன். கலைஞர் இளமையிலேயே வேண்டிய உயர் தமிழறிவைக் கசடறக் கற்றிருந்த திறமையினாலே சங்கத் தமிழைக் கவிதை யுரை யெழுதி வரையும் பேராற்றலைப் பெற்றுள்ளார். முதலமைச்சராய் உயர் பதவியில் இருந்தபோதும் இன்று பதவி யில் இல்லாதபோதும் வருங்காலத்தில் அப் பதவியில் அமரும் நிலை வந்தபோதும் தமிழையே முதன்மையாகக் .கொண் டொழுகும் பேரன் புடையவர் கலைஞர் எந்த நிலையிலும் தமிழைப் புதுமையாகப் படைத்து வளர்ப்பவர் நம் கலைஞர். முதலமைச்சர்களுள் இச்சிறப்பே கலைஞரின் தனிப்பெருமை என்பதனை நாடறியும். அரசியற் பதவியில் இருந்தோர், இருப் போர் பலர். எனினும் இலக்கியப் புலமையுடையோர் மிகச் சிலரே. அவருள்ளும் நூலெழுதும் ஆற்றலுடையோர் மிகமிகச் சிலரே. அவருள்ளும் சங்கநூற்புலமை மிக்கோர் நம் கலைஞர் ஒருவரே என்பது மிகையன்று, வெளிப்படை. இச்சங்கத் தமிழ் விழா கட்சியோ மதமோ சாதியோ சார்ந்ததன்று. முழுதும் தமிழ் மொழியும் தமிழ் நாகரிகமும் தமிழினமும் நோக்கியது. இங்குக் கூடியிருக்கும் அன்பர் திரளைத் தமிழ் முகங்களாகவே நாங்கள் காண்கின்றோம். நாம் எத்தகைய பரம்பரையைச் சார்ந்தவர்கள், நம் முன்னோர்கள் எத்தகைய பெருமை கொண்டவர்கள் என்பதனை நாம் அடிக்கடி எண்ணிக் கொள்ளவேண்டும். புதியவுணர்வுகட்கும் தற்காப்புக்கும் பழம் பெருமை பேச வேண்டிய காலங்களும் உண்டு. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது மிந்நாடே. அவர் முந்தையராயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்தது மிந்நாடே என்று பாடி ஆடுவதனால் உரிமையுணர்வும் நாட்டுப் பற்றும் பீறிடுகின்றன. சங்கத் தமிழ் என்ற கலைஞரின் நூல் இன்று வெளியிடப் படும் நூல் சங்கக் கவிதைகளைக் கவிதைகளாலே விளக்கும் உரையாகும். கவிதையுரை விளங்குமா என்று சிலர் வாதிடலாம். தமிழினம் கவிதையினம் கவிதைகளைக் கேட்கும் போது தமிழ்மக்களின் அறிவு எளிதில் வாங்கிக் கொள்கின்றது. தமிழ்நாட்டில் எவ் வகை விழாக்களிலும் கவியரங்குகள் நடப்பதிலிருந்தும் மக்கள் திரளாகக் கூடி நயம் அறிந்து கைதட்டுவதிலிருந்தும் மக்களி டைக் கவிதையாட்சி விளங்கு கின்றதன்றோ? ஆதலின் சங்கத் தமிழுக்குக் கவிதையுரை மக்களறிவுக்குப் பொருந்தியதேயாகும். இக்கவிதை யுரையும் பண்டைய மரபாகும். சங்கத் தொகையுள் ஒன்றான அகநானூற்றுக்கு இடையள நாட்டு மணக்குடியான பால் வண்ண தேவனான வில்லவதரையன் அகவல் நடையாற் கருத்துரைத்தான் என்ற வரலாற்றுக் குறிப்புண்டு. இடைக் காலத்துத் திருமுறைகளிலும் ஆழ்வார் பாசுரங்களிலும் சங்கக் கருத்துக்கள் பாவினயாப்பில் வேறு வடிவு பெற்றுள. ‘மள்ளர் தழீஇய விழவினானும்’ என்ற குறுந் தொகைப் பாடலை நம்மாழ்வாரும், ‘பொங்குதிரை பொருத வார் மணல் அடை கரை’ என்ற நற்றிணைப் பாடலை மணிவாசகரும் கவிதை நடைப்படுத்தி யுள்ளனர். இவ்வாறு பலவுள. நம் காலத்துப் பேராசிரியர் மு.ரா. பெருமாள் 75 குறுந்தொகைப் பாடல்களுக்கு இக்கால வழக்குச் சொற்களைக் கொண்டு அகவல் நடையில் விளக்கம் தரும் அருந்தொண்டினைப் பாராட்டுகின்றோம். சென்னையில் சிறப்பாக நிகழ்ந்த குறளோவியம் விழாவில் கலைஞர் அடுத்து எதனை எழுதுவது என்ற பேச்சு எழுந்தது. எஞ்சிய குறட்களுக்கும் தொடர்ந்து எழுதலாம் என்ற கருத்தினைச் சிலர் கூறினர். திருக்குறள் பற்றிய கலைஞரின் தெளிவுகள் குறளோவியத்தில் நன்கு இடம் பெற்றுள. ஆதலின் சங்கத் தமிழ் பற்றி ஓவிய வரைவு செய்ய வேண்டுமெனக் கலைஞரிடம் அன்று கேட்டுக் கொண்டேன். புலவர்கட்கு மதிப்புக் கொடுக்கும் பெரு மகனல்லவா நம் கலைஞர். தமிழ்க் கல்வி என்பது சங்கக்கல்வி. தமிழில் எவ்வகையான நூல்கள் கற்றிருந்தாலும், சங்கத் தமிழ் கல்லாதார் தமிழ் கல்லாத வராகவே கருதப்படுவர். இதனைச் சான்றோர் கவி எனப் பாராட்டிப் பாடுவர் கம்பர். ஆதலின் இச்சங்கத் தமிழ் வெளியீடு தமிழுக்குப் பொருத்தமான பதிப்பாகும். அச்சும் எழுத்தும் ஓவியமும் கட்டும் தாளும் எல்லாம் வனப்பாக வுள. பதிப்புப் பரிசு பெறுதற்குரிய நூலிது. இவ்வண்ணம் பதிப்பித்த மலைக் கோட்டைப் பதிப்பகத்தாரை வாழ்த்திப் பாராட்டுகின்றேன். தமிழிலக்கிய வரலாறு நீண்டது, வளமானது என்றாலும் தமிழின் தனி நாகரிகத்தைக் காட்டும் சிறப்பு சங்கப் பனுவல் கட்கேயுண்டு. தன்னிகரற்ற காதலொழுக்கத்தின் அகத் தூய்மை யையும் வஞ்சியாது மலையும் புறவொழுக்கத்தின் நேர்மை யையும் சங்கப் பனுவல்கள் சான்றுபடக் காட்டி நிற்கின்றன. உலக விலக்கியங்களை அவ்வுலகவிலக்கியம், இவ்வுலக விலக்கியம் என இரு பெருங் கூறாகப் பகுக்கலாம். அவ்வுலக விலக்கியங்களில் தேவர்கள் வரவும் போக்கும் மாயைகளும் இயற்கை கடந்த விளையாட்டுக்களும் மிகை நிகழ்ச்சிகளும் திடீர் மாற்றங்களும் இருக்கும். அவ்வுலகச் சிறப்பை உயர்த்திக் காட்டுவதே அவற்றின் நோக்கம். இவ்வுலக விலக்கியங்கள் மக்களினத்தையும் இயற்கைக்கு உட்பட்ட மாந்தர் நிகழ்ச்சி களையும் உயிரினங்களின் செயல்களையும் மக்களின் இல்லற வொழுக்கங்களையும் வீரக் கருவிகளின் போர்குறைகளையும் கொண்டவையாகும். இவ்வுலகத்தில் வாழ்வாங்கு நெறி யொடும் புகழொடும் வாழ்வு காட்டுவதே இவ்விலக்கியங்களின் நோக்கம். அவ்வுலக விலக்கியங்களை முத்தியிலக்கியம் எனவும் இவ்வுலக விலக்கியங்களை வாழ்விலக்கியம் எனவும் தெளியவேண்டும். பிற் காலத்துத் தோன்றிய பல தமிழிலக்கியங் களில் இருவகை நோக்கும் கலந்து புராணமாக வடிவு பெறக் காண்கின்றோம். சங்க விலக்கியமோ இவற்றினும் வேறாகவும் உண்மையாகவும் மக்கள் வாழ்விலக்கியமாக முழுதும் விளங்குகின்றது. இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலை வாணிகன் ஆ அயலன் என்பதனால் முத்தியிலக்கியக் கோட்பாடு மறுக்கப்படுவது தெளிவாகும். ஈத்துவக்குமின்பமே கொடையின் பயன் எனக் கொள்வது தமிழியம் ‘மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று’ என்பது வள்ளுவம். இவ்வுலக நோக்கே, வாழ்வாங்கு மக்கள் வாழ்த்தலே தமிழ் நெறி என்பதனைப் புறநானூற்றோடும் கீதையோடும் ஒப்பிட்டுக் காண்போம். குருச்சேத்திரப் போர்க்களம் புக்க அருச்சுனன் கண் விரித்துச் சுற்றுமுற்றுப் பார்க்கும்போது, தன்னைப் பார்த்தும் எதிர் பக்கத்தும் நெருங்கிய தாயத்தாரும் கிளைஞரும் உறவி னரும் ஆசிரியன் மார்களும் நிற்பதைக் காண்கின்றான். இவர் களைக் கொல்வித்து என்ன பயன், என்ன அரசாட்சி என்று கலங்குகின்றான். இவர்களைக் கொன்று வெற்றி பெறுவதை விட நரகம் கிடைப்பினும் நன்று என்று கருதுகின்றான். அவன் அம்பும் வில்லும் தாமே விழுகின்றன. அவனும் தேர்த்தட்டில் தூய்கின்றான். இந் நிலையில் பார்த்த சாரதியான கண்ணபிரான் அருச்சுனனுக்குப் பலவாறு மெய்ம்மை கூறும்போது, உயிர்க் கொலை என்பது ஒன்றில்லை. ஓருயிர் மற்றோர் உயிரைக் கொல்வதுமில்லை, கொல்லப்படுவது மில்லை என்று உயிரின் அழியாத் தன்மையைக் கழறிப் போர் தொடங்கும்படி தூண்டு கின்றான் பகவான் கண்ணன். கண்ணன் கூறியது பிடித்த மில்லை, விளங்கவில்லை எனினும் சொல்லுபவன் கண்ணன் என்பதனால் பார்த்திபன் போராடப் புறப்பட்டான். இதற்கிணையான ஒரு நிகழ்ச்சி புறநானூற்றில் உண்டு. கோப்பெருஞ்சோழனும் அவன் மக்களும் போராடத் துணிந்தனர். தாயங் காரணமாக இகல் எழுந்தது. இப்போர்ச் சூழலைக் கேட்ட திகழூர் புல்லாற்றூர் எயிற்றியனார் தந்தை சோழனை நோக்கி, நீ போர் தொடுப்பதினால் நற்பயன் யாது மில்லை. உன் மக்களை நீ வென்றாய் என்று வைத்துக் கொள் வோம். வென்ற உன் தானை பின்பு யாருக்குச் செல்லும்? ஒரு நாள் உன் மக்கட்குத் தானே உரிமையாகும். இதுவே எதிர்கால விளைவு. இவ்வாறு இன்றி நீ இப்போரில் தோற்றாய் என்று வைத்துக் கொள்வோம். அரசினை நீ இழப்பதோடு, பகைவரால் எள்ளவும் படுவாய்; ஈட்டிய மதிப்பும் இழக்கப்பெறுவாய். ஆதலால் ‘ஒழிகதில் அததை நின் மறனே’ என்று இடித்து அறிவுறுத்தினார் போரைத் தூண்டிவிடாது நிறுத்தினார். கீதைப்பிரான் போர் செய்ய மறுத்த அருச்சுனனைக் கொலைப் போர் செய்யத் தூண்டி விடுவதையும் புறநானூற்றுப் புலவர்பிரான் போரணி பூண்ட சோழனைத் தாயகந் துறந்து வடக்கிருக்கச் செய்வதையும் ஒப்பிட்டுப் பார்க்குங்கால் உலக வமைதி, போரொழிப்பு, அணுவாயுதத் தடை பேசும் இக் காலத்துக்கு எந்த நூல் தகும் என்பது விளங்குகின்றதல்லவா? இத்தகைய பண்புச் சிறப்புடையது நம் சங்கத் தமிழ். இன்று வெளியிடப் பெறும் சங்கத்தமிழ் எனவும் அந்த இவ்வுலக விலக்கியச் சான்றோர் வழியில் வந்தவர்கள் நாம் எனவும் நினைவூட்ட விரும்புகின்றேன். கலைஞரின் கவிதையுரை குறளோவியத்தில் நான் எடுத்துக்காட்டியபடி சூழ்நிலையுரையாகும். ஒரு கருத்தைத் தெளிவிப்பதற்கும் பதிவிப்பதற்கும் ஏற்ற பாயிரங் காணல் கலைஞரின் நெறி. அத்தகைய சூழ்நிலைப் புனைவில் கலைஞரின் சொல்லாற்றல், தொடைவனப்பு, உவமைப்புதுமை, உள்ளுறைக் குறிப்பு, உரையாட்டு, நயப்பாடு எனப் பலசிறப்புக்களை வெள்ளம் போற் பருகுகின்றோம். ஆழ்ந்த அகன்ற தமிழ்ப் புலமையும் திண்ணிய சங்கத் தோய்வும் எண்ணிய தமிழ்க்குறிக் கோள்களும் கவிதையுரையில் பட்டாங்குள. வரலாற்று நிகழ்ச்சிகளையும் வரலாற்று மாந்தர் பெயர்களை இடங் களையும் பண்புடைய கலைஞர் நேரடியாகச் சுட்டவில்லை. எனினும் இக்காலத்து வரலாற்றுப் படலங்களை அறிந்த நமக்கு அவை மறை முகப் புலப்படுகின்றன. யார் யாரைப் பாராட்டு கின்றனர். எந்த நிகழ்வுகளைக் குத்தித் தாக்குகின்றார் என்ப வற்றைக் கண்டு சுவைக்கின்றோம். இத்தகைய பலதிறங் கொண்ட கவிதையுரையில் ஒரு சில அளவிலும் அளவாக எடுத்துக்காட்டுவேன். யாண்டு பலவாகியும் நரை திரையில்லையே என்று பிசிராந்தையாரை வினவியபோது, அவர் சில நல்ல சூழ்நிலை களைச் சொல்லுகின்றார். ‘மாண்டவென் மனைவி யொடு மக்களும் நிரம்பினர்’ என்பது ஒரு சூழ்நிலை. என் மனைவி நல்லவள்; மக்களும் நல்ல பண்புகள் உடையவர்கள் என்று காட்டுகின்றார் பிசிராந்தையார். இல்லறத்தார் குழந்தைகள் வேண்டுமென விரும்புவர். அம்மக்கள் திருமணம் எய்தியபின் பேரர்கள் வேண்டுமென மேலும் விருப்பங் கொள்வர். இது குடும்பவியல் முதியவரான பிசிராந்தையரின் மக்கட்கு மணமாகி யிருக்க வேண்டும். போர்கள் இல்லாவிடின் கவலை பிறக்கு மன்றோ? இவ்வாறு ஊகிக்கின்றார் கலைஞர். அதனால் கலைஞர் வடிக்கும் புத்துரை, புதுவிளக்கம் யாது? மனைவி யொடும் மக்களொடும் போர்களொடும் நிரம்பவுடையேன் என்று பிசிராந்தையார் பாட்டிற்குப் பொருள் விரிப்பர் கலைஞர். இவ்வுரை மிகையன்று. தொல்காப்பியங் கூறியபடி, ‘நோக்கு’ என்ற இலக்கிய நெறியின் பாற்படும். “குனியாமை தன்மான வீரத்துக்கு ஒரு சின்னமல்லவா? வளையாத முதுகெலும்பு பெற்றவனோ வணக்கம் எனும் பொருள் விளையாத வயற் காடோ” என்று ஒரு தலைவனைப் பாராட்டும்போது, தன் குழந்தை யையும் தலைக்கு மேலே தூக்கிக் கொஞ்சுகின்ற தன்மானத் தமிழ்ச் சிங்கம் எனப் பாடுகின்றார் கலைஞர். குழந்தையைக் கொஞ்சுவதற்குக் கூடக் குனிய மாட்டான்; குனிந்து பழக்க மில்லாத வீரன் என்று காட்டுகின்றார். ‘செருமுனை நோக்கியகண் தன் சிறுவனைக் கண்டும் சிவப்பானாவே’ என்ற புறநானூற்றில் அன்று பிறந்த தன் முதல் மகனைக் காண வந்தபோதும், பகைவரைப் பார்த்துப் பார்த்துச் சிவப்பேறிய அதியமான கண்கள் அச்சிவப்பு மாறவில்லை என்று சுட்டிக்காட்டுவர் ஒளவையார். சங்கத் தமிழ் என்ற இக்கவிதை யுரையில் தலைவனுக்கும் தோழிக்கும் பாணனுக்கும் புதிய துறைக் காட்சிகள் படைக்கப் பட்டுள. தலைவனே பாணனாக நடிப்பது, தோழி குரல் மாறிக் கோழியாகக் கூவுவது என்பன சுவையான புதுமைகளாம். தலைவன் தோழி வீட்டுக்குச் சென்றான் என்பதும் தலைவியின் தோழி பரத்தை வீட்டுக்குச் சென்றாள் என்பதும் தலைவனும் தலைவியும் இன்பம் துய்க்குங்காலை தோழி திண்ணையிற் படுத்துக் கவனித்துக் கொண்டிருந்தான் என்பதும் ஏற்றுக் கொள்ளத் தக்க புதுமையாக எனக்குப் படவில்லை. இவை சிந்தித்தற் குரியவை. திருக்குறள், சங்கத் தமிழ் இவற்றுக்கு ஓவிய உளர வளம் கண்ட பெருமதிப்பு மிக்க நம் கலைஞர் தமிழ் முதனூலான தொல்காப்பியத்திற்கும் கவிதையுரை செய்யவேண்டும் என்பது என் வேண்டுகோள். இது அவர்தம் தமிழ்க் கடமையாகும். (தொல்காப்பியக் கடல் என்ற என் நூலைக் கருணாநிதிக்கு அன்பளிப்பாக வழங்கினேன்) பொழிவு - 25 நாள் : 12.9.87, சனிக்கிழமை மாலை 6 மணி இடம் : மேலைச் சிவபுரி சன்மார்க்கசபை நிகழ்ச்சி : கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, தமிழ் முதுகலை எம்.ஏ., தொடக்கம் உரை : தலைமை வ.சுப. மாணிக்கம், கல்லூரிக் குழுத் தலைவர் கலந்தோர் : பேராசிரியர் எழில்முதல்வன், அ. விசுவநாதன், ஓய் நாடு பொழிவுச் சுருக்கம் பேரன்பர்களே, பெருமக்களே, ஏறக்குறைய எண்பதாண்டுத் தொன்மையுடைய சன் மார்க்க சபைக்கும் மேலைச் சிவபுரிக்கும் இப்பகுதி வட்டாரத் துக்கும் கூடுதலான பெருமைக்கும் கல்வி வளர்ச்சிக்கும் நல்ல தொடக்கத்தை இன்று கொண்டாடு கின்றோம். இச் சபையைத் தோற்றிக் காத்து வளர்த்த முன்னோர்களின் நல்லெண்ணத்தால் தமிழ் முதுகலை வகுப்பு தொடங்கும் பேறு கிடைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள சங்கங்களுள், மதுரைத் தமிழ்க் சங்கத்துக்கு அடுத்த பழம் பெருமையும் தொண்டும் வாய்ந்தது நம் சபை. தமிழிலக்கிய வரலாற்றில் இந்நூற்றாண்டில் இடம் பெற்றி ருக்கும் புலவர் பலரும், வந்து கலந்து பேசி அணிசெய்த சபை இது. சொற்பொழிவாலும் நூல் வெளியீட்டாலும் மாண வர்க்குக் கல்வியாலும் இடையறாது பணி செய்த சபையிது. இடையே பொருட் குறைவால் சபையின் தொண்டு தடைப் பட்டு நிற்கும் அவலநிலைக்கு வந்தபோது மலேயா சிங்கப்பூர் செய்கோன் வழங்கிய பெருங் கொடையால் சபையின் தளர்ச்சி நீங்கியது. நீங்கிய தொடன்றி நிலை பெறும்திறம் பெற்றது. சபையின் நிலைபேறு அறிந்து நல்ல பெருமக்கள் பெருத்த நன்கொடைகளும் தாமே முன்வந்து வழங்கினர். சபைக்குப் புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் மாணவர் விடுதி, மகளிர் விடுதிகள் எல்லாம் எழுந்தன. தமிழ்க் கல்லூரிகளில் இடத் தாலும் கட்டிடத்தாலும் போதுமான புறநிலை பெற்றது நம் சபை என்று சொல்லலாம். இப்போது முதுகலைப் பெரு வகுப்பு வந்துள்ளதாலும், ஆசிரியர்களின் எண்ணிக்கை கூடுவ தாலும், நூலகர் விளையாட்டாசிரியர்கள் அமர்த்தப்படுவ தாலும் புதிய வசதிகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன. சபையின் தோற்றத்தையும் தளர்ச்சி மறைவையும் வளர்ச்சியை யும் எண்ணும்போது, புதிய வசதிகள் எப்படி நிறை வேறுமோ என்று மலைக்க வேண்டியதில்லை. செம்மையாக ஒழுங்காகச் செய்து வந்தால், காலப் போக்கில் இதன் பயனைப் பார்த்து நன்மக்கள் நிதியுதவி செய்ய முன்வருவார்கள். இந் நம்பிக்கை எனக்கு நிரம்பவுண்டு. மேலைச் சிவபுரி ஒரு சிற்றூர் பஞ்சாயத்து உடைய சிற்றூர். இச்சிற்றூரில் முதுகலை வகுப்பு நடைபெறுகின்றது என்பது வரலாற்றுச் சிறப்பாகும். இங்கு தமிழ் முதுகலை இவ்வாண்டே வருவதற்கு இரு பெரியவர்கள் துணையாவர். பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அறிஞர் ஆ. ஞானம் அவர்கள் சபையின் நெடிய தொண்டினை உளங் கொண்டு இசைவு நல்கியுள்ளார். இந் நன் மகன் நான் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்தபோது உயிரியற்றுறையில் பேராசிரியராகவும் என் நெருங்கிய துணைத் தோழராகவும் பணியாற்றியவர். முதுகலை வகுப்புத் தொடங்கு வதற்குப் பல்கலைக் கழக இசைவு வேண்டும். உரிய ஆசிரியர் களை அமர்த்துவதற்கும் அவர்கட்குரிய முழு மானியம் தருவ தற்கும் கல்லூரி இயக்கத்தின் இசைவும் கட்டாயம் வேண்டும். இன்றைய கல்லூரி இயக்குநர் திரு. அனந்த பத்மநாபன் மதுரைப் பல்கலைக் கழகத்தோடு தொடர் புடையவராக இருந்த மையால், நான் நேரிற் சென்று ஒப்புதல் கேட்டபோது, பெரு மனத்தொடு மானியம் இவ்வாண்டு முதல் இவ்வகுப்புக்கு வழங்க உடன்பட்டனர். இவ் விருநன் மக்களின் பெருங் குணத்தால் நம் சிற்றூரும் தொல் சபையும் புதிய வளர்ச்சி பெறுகின்றது. இவ்வுயர் கல்விக்கேற்பப் புதிய கட்டிட நலங்கள் தேவை தக்க நூலகம். உடனடியாக வேண்டும். 20000 நூல்கள் கொள்ளத் தக்கதும் கருத்தரங்கம் நடைபெறத் தக்கதுமான ஒரு நூலக வளாகம் வேண்டும். இதற்குப் பெருந்தொகை வேண்டும். சில ஆண்டுகள் கழிந்தால் பல்கலைக் கழக மானியக் குழுவின் நிதிப் பங்கு கிடைக்கலாம். மாநில வரசு திங்கள்தோறும் உரூபா 15000 அளவுச் சம்பள நிதி முழுதும் தரும் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். நான் அண்மையில் கோலாலம்பூரில் நடைபெறும் ஆறாவது உலகத் தமிழ் மாநாட்டிற்குச் செல்வேன். செல்லும் போது ‘வினையான் வினையாக்கிக் கோடல்’ என்றபடி கோலாலம்பூரிலும் சிங்கப்பூரிலும் சபைக்குக் கட்டிட நிதி தொகுத்து வர முயல்வேன். ஒல்லும் வகை நிதி கிடைக்கும் என்று நம்புகின்றேன். என் சொற்பொழிவுகள் நிகழ்ந்த குறிப்புக்கள் 8.1.1987 வி. மதுரை. இலக்கியப் பேரவை, தெ.பொ. மீனாட்சி சுந்தரர் பிறந்தநாள் விழாவுரை. தலைமையுரை 13.1.1987 தி. விவேகானந்த மையம், சிவகங்கை, காரைக்குடிக் கிளைகள் - தலைமையுரை 23.1.1987வெ. வள்ளுவர் கோட்டம், கேள்வியதிகார விளக்கம் 26.1.1987தி. சென்னை சைவசித்தாந்தப் பெருமன்றம், தமிழ் தில்லையம்பலம் ஏறுதல் பற்றி 29.1.1987வி. திருமுறை இயக்கக் குழு, விளக்கவுரைக் கூட்டம், சிதம்பரம் 10.2.1987செ. தில்லைக்குடமுழுக்கு, திருமுறைக் கருத்தரங்கிற் கலந்து கொளல். 25.2.1987பு. சென்னைப் பல்கலைக் கழகம், வாழ்வியல் நோக்கில் அறங்கள் என்ற கருத்தரங்கிற் கலந்து கொளல் 11.3.1987பு. பாவாணர் விழா, சென்னை. 23.3.1987தி. அண்ணாமலையார் தமிழ் எழுத்தாளர் மாநாடு, முதன்மையுரை 31.3.1987செ. தஞ்சைத் தமிழ்ச்சங்கம், தலைமை, இராம. வீரப்பன் சிறப்புரை 12.4.1987ஞா. புதுக்கோட்டை தமிழ்மறை மன்றம், தலைமையுரை. 9.6.1987செ. அண்ணாமலைப் பல்கலைக் கழகம், துணைவேந்தர், சேதுநாராயணனுக்குப் பாராட்டு. 7.7.1987செ. வழக்கறிஞர்கள் இலக்கியக் கழகம், வாழ்த்துரை வழங்கல். 12.7.1987ஞா. மதுரை குறளாயக் கூட்டம், பேருரை. 27.7.1987ஞா. மதுரை ஆயிரவைசியா சங்கமாநாடு, வாழ்த்துரை வழங்கல். 31.7.1987வெ. வள்ளுவர் கோட்டம், தெரிந்து வினையாடல் விளக்கம். 5.8.1987பு. அண்ணாமலை நகர், முத்தையவேள், 83ஆவது பிறந்தநாள் விழாவில் வாழ்த்து. 14.9.1987தி. கவிஞர் ரெ.மு. மணிவிழா. 11.10.1987ஞா. கோயம்புத்தூர் குறளாயக் கூட்டம். 8.11.1987ஞா. குழித்தலை கா.சு. நூற்றாண்டுவிழா, தலைமையுரை. 18.11.1987பு. கோலாலம்பூர் ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, கருத்தரங்கு தமிழெழுத்துத் திருத்தம் தேவைதானா? பொது நிலைக் கூட்டம் தொல்காப்பியமும் தமிழின் எதிர்காலமும். 4.5.1987தி. மணிவாசகர் ச. மெய்யப்பன் மகள் திருமண வாழ்த்து. இராமச்சந்திராபுரம் 30.11.1987தி. மணிவாசகர் ச. மெய்யப்பன் மகன் திருமணம் கண்டரமாணிக்கம். பொழிவு - 26 நாள் : 12.1.1988 செவ்வாய்க்கிழமை, மாலை 6.30 மணி இடம் : மைய பின்னணியில் ஆராய்ச்சிக் கூடம் நிகழ்ச்சி : விவேகானந்த அடிகள், 125ஆம் நூற்றாண்டு விழா வரை : தலைமை வ. சுப. மாணிக்கம் கலந்தோர் : குன்றக்குடி அடிகளார், இயக்குநர் வாசு. பொழிவுச் சுருக்கம் பேரன்பர்களே, விவேகானந்த அடிகள் பலதுறைகளின் புது விளக்கம், புது வேகமும் காட்டியது போல நாட்டின் கல்வி மலர்ச்சியிலும், இக் காலத்துக் கேற்பத் தெளிவுரை வழங்கியுள்ளார். அவர்தம் உரையில் எல்லாம் கிழக்கு மேற்கு என்ற இருவகைப் பண்பு நிலைகளும் தழுவிச் செல்வதைக் காண்கின்றோம். அங்ஙனம் ஒருமைப்பட்ட இருகூறுகள் இருந்தும், நாம் என்ன செய்கின் றோம் என்றால், மேனாட்டுப் போக்கிற்கே முழு முதன்மை கொடுத்துவிடுகின்றோம். கொடுத்துவிட்டு நிலை தடுமாறு கின்றோம். கல்வியின் நோக்கம் என்ன? கற்பிக்கும் முறை என்ன? கற்பிக்க வேண்டியவை எவை? இவை பற்றி ஐயாயிரம் ஆண்டுக் கல்விப் பயிலவுடைய இந்நாட்டுக்கல்வி யறிஞர்கள் கருத்துரை வழங்கியுள்ளனர். இதனை வரலாற்று முறையிற் கண்ட அடிகள் விவேகானந்தர் மனிதனிடத்து முன்னரே பதிந்துகிடக்கும் செம்மையைப் புலப்படுத்துவது கல்வி எனவும், குழந்தைதானே எதனையும் கற்றுக் கொள்கின்றது; நாம் அதற்கு உதவுகின்றோம் எனவும் புலன்களின் மலர்ச்சியே கல்வி; நூற் செய்திகளின் தொகுப்பன்று எனவும் இயற்கை சூழ் வாழ்வு கல்விக்குத் துணை யாகும் எனவும் அறிவு உள்மலரும் பொருளேயன்றி வெளியி லிருந்து உள்ளே புகும் பொருளன்று எனவும் எல்லா அறிவும் முன்பே கிடப்பவையே; உராய்ந்து தீயை வெளிப்படுத்துவது போல்வதே கல்வி எனவும் விளக்குகின்றார். இந்த அடிப்படை யை நம் முன்னோர் காட்டிய அகநிலையை நாம் செயற்படுத்தத் தவறுகின்றோம். “பொருள் நீத்தங்கொள வீசிப் புலன்கொளவ மனமுகிழ்த்த சுருள்நீக்கி மலர்விக்கும் கலைபயிலத் தொடங்கு வித்தார்” என்று சேக்கிழார் பெருமான் திருநாவுக்கரசர் புராணத்தில் கலைகளை முன்னரே உள்ளே கிடக்கும் மலர்ச்சுருள் எனவும் அவற்றை மலரச் செய்வதே பயில்வு எனவும் பாடியுள்ளார். எனவே கற்க உதவுதல், உட்செல்வம் வெளிப்பட உதவுதலே கல்வி என்பது கருத்தாம். திருவள்ளுவரும் கற்க கசடறக் கற்பவை என்று தனக்குத் தானே கற்றுக் கொள்வதையே வெளிப்படுத்து கின்றார். இன்று கல்வி என்பது பல்வேறு செய்தித் தொகுப்பு. புத்தகப் படிப்பு என ஆகி விட்டது. தேர்வே கல்வியை வெளிப் படுத்தும் வாயில் என ஆகி விட்டது. உள்ளேகிடக்கும் அறிவுச் சுருள் மலர்தலன்றி மேன்மேலும் புறச் செய்திச் சுமையால் அமுங்கிப் போய் விடுகின்றது. தேர்வே, எப்படியும் மதிப் பெண்கள் பெறுவதே கல்வி நோக்கம் என்று வந்தபின், தேர்வு வைத்து வருவாய் பெருக்குவதே நிதி சேர்ப்பதே பல்கலைக் கழகங்களின் தொழிலானபின், தேர்வாசைப் பணமே ஆசிரியர் களின் நிலையாசை யானபின், உயர்மதிப்பெண் பெறுவதே, பெறப் பலவழியிலும் முயன்று முடிப்பதே பெற்றோர், மாணவர், மன்பதையின் துடிப்பானபின், கல்விக்கு எங்கேனும் இடனுண்டா? அறிவு மலர்ச்சிக்குக் கண்ணுண்டா? உண்மை யான மெய்யான கல்வி - கேடில் விழுச் செல்வம் வளர வேண்டு மெனின், எல்லாவகையாலும் ஊழலும் கேடும் மலிந்த இன்றைய தேர்வு முறை ஒழியவேண்டும். பெரிய ஓட்டைகள் அகலமாகிக் கொண்டிருக்கும் இன்றைய தேர்வு முறையை என்ன பாடுபட்டாலும் சீர்திருத்த முடியவே முடியாது. வீண் பாடு வீண் செலவு வேண்டாம். ஆசிரியர்கள் - கற்பிக்கும் ஆசிரியர்களே மதிப்பீடு செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டும். கற்பிக்கும் ஆசிரியர் களை நம்பாத கல்வி மதிப்பீட்டு முறை என்றும் செம்மைப் படாது. தேர்வு வேறு, மதிப்பீடு வேறு, கல்விக்கு மதிப்பீடு வேண்டும். உண்பதும் செரிப்பதும் ஒருங்கே நடப்பது போலக் கல்வியும் மதிப்பீடும் ஒன்றி நிகழ வேண்டும். பழங்காலத்து, பாடம் நடத்தும் போதே மாணவர்களை ஆசிரியர் வினாக் கேட்பார்; கவனமாகப் பாடங் கேட்கின்றார் களா? என்று இடையிடையே சோதிப்பார். மறுநாட் பாடங் களை நடத்துவதற்கு முன்பு, முன்னாட் பாடங்களைப் படித்து வந்துள்ளனரா என்று சோதித்தே பாடங்களைத் தொடங்குவர் இவ்வாறு இன்றும் செய்யலாம். இதற்கு மாணவரின் எண்ணிக் கை ஒவ்வொரு வகுப்பிலும் சிறிய அளவாக இருத்தல் வேண்டும். இது பேரடிப்படை. இதற்குப் பெருஞ் செலவாகுமே என்று மலைக்க வேண்டியதில்லை. தேர்வின் பேரால் நடக்கும் பெருந் தொகைச் செலவுகளையும் மிக்க முயற்சியையும் காலக் கழிவு களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், சிறு வகுப்பமைப்பு அடக்க மான செலவு ஆவதோடு, உடனடியாகப் பெரும் பயன்களும் நல்கும். இதற்கு இன்னொரு விதியும் வேண்டும். தேர்வுவைத்துத் திருத்திய விடைத்தாட்களை மாணவர்கட்குத் திரும்பக் கொடுக்க வேண்டும். மதிப்பெண்கள் குறைவாக வாங்கியதற் குரிய குறைகளை மாணவர்களும் தெரிவிந்து கொள்ள வேண்டும். அக் குறைபாடின்றி மீண்டும் விடை யெழுதச் செய்ய வேண்டும். அங்ஙனம் மரபுப்படி எழுதிய செவ்வினாக்கட்கு ஓரளவு மதிப்பெண் வழங்கிக் கூட்ட வேண்டும். இதனாற் செம்மையும் ஆர்வமும் தோன்றும். ஆசிரியரின் அகமதிப்பீடும் மாணவர்களின் நேர்பார்வையும் கல்வியுலகில் இனியேனும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கின்றேன். பொழிவு - 27 நாள் : 28.1.1988 வியாழன் முற்பகல் 10 மணி இடம் : அழகப்பர் பல்கலைக்கழகம், காரைக்குடி நிகழ்ச்சி : புறத்திணைக் கருத்தரங்கம் - முதன்மையுரை உரை : வ.சுப. மாணிக்கம், முதன்மையுரை தலைமை : துணைவேந்தர் இராதா தியாகராசன் முதன்மையுரைச் சுருக்கம் பெருமக்களே, தமிழர் கண்ட அகத்திணை போலப் புறத்திணையும் நுண்ணிய அடிப்படையான கூறுகள் உடையது. அகத்திணை உறுப்பு மாந்தர்கள் மிகச் சிலரே. இடஎல்லையும் குறுகியதே. இன்பம் ஒன்றே பொருளானது. எனினும் குடும்ப மாதலின் ஆண் பெண் உறவாதலின், காதலுணர்வாதலின், உளவியல் நுட்பம் அகத்திணைக்கண் தனி விழிப்புக்குரியது. மலரினும் மெல்லிது காமம் என்பார் திருவள்ளுவர். புறத்திணை பற்றிய இயல் தொல்காப்பியத்தில் மிகுதியில்லை யென்றாலும் பொருள் இடம் காலம் உறுப்பெல்லாம் பரந்துபட்டது. பல் வேறு உணர்வுகட்கும் அழிவுக்கும் மாற்றத்துக்கும் இடனானது. அகம் வீடு குறித்தது; புறம் நாடு குறித்தது. எனினும் வீட்டுக்கும் நாட்டுக்கும் இயக்கத் தொடர்புண்டு. வீட்டின் தொகையே நாடெனப்படும். நாடு காப்பது என்றார் வீடு காப்பது என்று பொருளாகும். அழகப்பா கல்லூரியில் நான் தமிழ்ப் பேராசிரியராக இருந்தபோது புறத்திணை என்ற பொருளைச் சிறப்பு விருப்பப் பாடமாகத் தமிழ் முதுகலை மாணவர்க்குக் கற்பித்திருக் கின்றேன். “அகத்திணை மருங்கின் அரில்தப வுணர்ந்தோர் புறத்திணை யிலக்கணம் திறப்படக் கிளப்பின” என்று தொல்காப்பியம் கூறுகின்றபடி புறத்திணைக் கூறுகளை நன்னர்ப் புரிந்து கொள்வதற்கு அகத்திணைப் பாங்குகளைக் கசடறக் கற்க வேண்டும். தமிழ்க் காதல் என்ற என் ஆய்வுப் பெரும் பனுவலில் அகவொழுக்கங்களின் பெற்றி மைகளை விளக்கி யுள்ளேன். உரையாசிரியரின் மார்கள் அகத்தின் அடிப்படை களைத் திரித்து மயக்கிக் கூறிப் பிழைமரபுகளைச் செய்திருப்பதையும் அப்பனுவலில் வாதிட்டு நிறுவியுள்ளேன். தொல்காப்பியம் சொல்லிய அகவியல்புகளும் ஆண் பெண் உளவோட்டங்களும் காதல் ஒழுகலாறுகளும் அவ்வளவு மாறிவிடவில்லை. மன்பதை பழக்க வழக்கங்கள் சில பல மாறியிருந்தாலும் உள்ளப் பாங்குகள் காதலுறவில் மாறவில்லை. ஆனால் புறத்திணையில் போர் பற்றிய பல முறைகளும் சூழ்ச்சிகளும் மாறிவிட்டன. ஆ நிரை கவரும் வெட்சிக்கும் மதிற் போர் செய்யும் உழிஞைக்கும் இக்காலத்து இடமில்லை. திருக்குறள் அரசின் ஆறு உறுப்புக்களுள் ஒன்றாக அரணை எண்ணுகின்றது. அதற்கென ஓரதிகாரம் உண்டு. அம் முறை களும் முற்றுதலும் முற்று விடுதலும் எல்லாம் வானூர்திப் போர் நிகழும் இக் காலத்துக்குப் பொருந்தா என்பது வெளிப்படை. எனினும் போரெழுச்சிக்குக் காரணங்களாகச் சொல்லுபவை என்றும் பொருந்துவனவாகவே உள. மண்ணசையான வஞ்சிக் காரணம் இன்றும் நாடுகளிடை உண்டு. சைனா, உருசியா, இந்தியா, பாகித்தான், சப்பான், பருமா இணைய நாடுகளிடை நிலங்காரண மான தகராறுகள் உள. இவற்றால் பெரும்போர் நிகழா விட்டாலும் போர்ச் சூழல் இருந்து கொண்டேயுள்ளது. காசுமீரம் இந்தியாவுக்கும் பாகித்தானுக்கும் பூசலை உண்டாக் கிக் கொண்டேயுள்ளது. அருணாசலபிரதேசப் பகுதி இந்தியா வுக்கும் சீனாவுக்கும் போரூடவாக அமைந்திருக்கின்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் கச்சத்தீவு ஒரு கலவரத்தை இடைவிடாது செய்து கொண்டிருக்கின்றது. பண்டைக் காலம் போல் மண்பிடி வஞ்சிப் பூசல் இருநூற்றாண்டில் மிகுதியில்லை. இப்போது எங்கும் பரவி வளரும் போர்க்காரணம் தும்மையாகும். “மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்று தலை யழிக்கும் சிறப்பிற் றென்ப” என்று தொல்காப்பியம் போருக்குப் பேரடிப்படையான வலி யாட்டத்தைச் சுட்டிக்காட்டும். யார் படையானும் ஆதிக்கத் தாலும் வலிமிக்கவர்? யாருக்கு யார் அடக்கம்? யாருக்கு யார் பணிவு என்ற வலிப் பெருமையும் தன்முனைப்பும் தும்பை யாகும். இன்று வல்லரசுகள் என்று சொல்லுகின்றோமே அவை தும்பையரசுகளாகும். இவற்றுக்கு நாடுகளைப் பிடிக்க வேண்டும் என்ற உடைமையாசையில்லை. கொள்கையால் உறவால் இரு நாடுகள் தன் ஆதிக்கத்துக்கு உட்பட்டவை. தன் பக்கம் அணி சேர்பவை என்ற முனைப்பில் இரு வல்லரசுகளும் உலக ஆதிக்கம் பெற்று வருகின்றன. இந்த ஆதிக்கப் போட்டி வளர் முகமாகவும் வெளிப்படையாகவும் நிலைபெற்று வருகின்றது. அணி சேரா நாடுகள் என்ற மூன்றாம் அணியில் இருக்கும் நாடுகளிற் பல உண்மை நடைமுறையில் இரு வல்லரசுகளின் ஒன்றன் பக்கம் சார்ந்ததாகவே செல்கின்றது. இவ்வாதிக்க முதன்மையைத் தான் மைந்து பொருள் என்று தொல்காப்பியம் போருள்ளமாக வடித்துக் காட்டுகின்றது. தொல்காப்பியம் கூறும் புறத்திணை இரு தனிநாடுகட்கு இடைப்பட்ட போருறவுகளைக் கூறுகின்றதேயன்றி, ஒரு நாட்டிற்கு உள்ளே தோன்றும் உள்நாட்டுக் கலவரங்களைச் சுட்டுவதில்லை என்ற பொருள் வரம்பைத் தெரிந்து கொள்ள வேண்டும். இனி புறத்திணை கூறும் வாகை காஞ்சி பாடாண் டிணைகள் போரொடு தொடர்புடையவற்றை வகுத்துக் காட்டுவ தோடு பொதுவான உலகக் கூறுகளையும் மன்பதைச் சூழல் களையும் மனித முன்னேற்றங்களையும் தனி மாண்புகளையும் வகைபட விரிக்கின்றது. இவற்றுள் நாட்டு வாழ்த்து என்பது என்றும் பொருந்தும் துறையாகும்.