மாணிக்க விழுமியங்கள் - 11 (நூற்றாண்டு நினைவு வெளியீடு) நாடகங்கள் - 11  மனைவியின் உரிமை - முதல் பதிப்பு 1947  நெல்லிக்கனி - முதல் பதிப்பு 1962 ஆசிரியர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் பதிப்பாளர் கோ. இளவழகன் மாணிக்க விழுமியங்கள்- 11 ஆசிரியர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2017 பக்கம் : 22+298 = 320 விலை : 300/- வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 320 கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 1000  நூலாக்கம் : கோ. சித்திரா, ப. கயல்விழி   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006. நுழைவுரை தமிழ் மரபுகளைத் தலைமுறை தலைமுறையாகக் காத்து வரும் தமிழ்ச்சமூகங்களில் தலையாய சமூகம் நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகம். இந்தச் சமூகம் ஈன்றெடுத்த அரும்பெரும் அறிஞரும், நாடு, மொழி, இனம், சமுதாயம், கல்வி, இலக்கியம், வாழ்வு முதலான பல்வேறு பொருள்களைப் பற்றித் தம் தெள்ளத் தெளிந்த சிந்தனைகளால் தமிழ் இலக்கிய வானில் சிந்தனைச் சிற்பியாக வலம் வந்தவர் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் ஆவார். இப்பெருந்தமிழ் ஆசான் வாழ்ந்த காலத்தில் தமிழர்க்கு எய்ப்பில் வைப்பாக எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச்செல்வங்களைத் தொகுத்து மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் மாணிக்க விழுமியங்கள் எனும் தலைப்பில் 18 தொகுதிகளாக தமிழ்கூறும் நல்லுலகம் பயன் கொள்ளும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. “மூதறிஞர் மாணிக்கனார் தமிழ் ஆராய்ச்சி உலகில் தமிழ்ப் பேரொளியாய் விளங்கியவர்; அவருடைய ஆய்வு நெறி தமிழ் மரபு சார்ந்தது. தொல்காப்பியத்தின் புதுமைக் கூறுகளையும், பாரதியின் பழமைக் கூறுகளையும் கண்டு காட்டியவர். உரையாசிரியர்களைப் பற்றி நிரம்பச் சிந்தித்த உரையாசிரியர். தொல்காப்பியத்திற்கும், திருக்குறளுக்கும் தெளிவுரை கண்டவர். மரபுவழிப் புலமையின் கடைசி வளையமாகத் திகழ்ந்தவர், ஆய்வு வன்மைக்குத் `தமிழ்க்காதல்’, சிந்தனைத் தெளிவிற்கு `வள்ளுவம்’, புலமை நலத்திற்குக் `கம்பர்’ ஆகிய இவர் எழுதிய நூல்களைத் தமிழ்ச் சான்றோர்கள் இனம் காட்டி மகிழ்வர். ” என்று மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இப்பெருந்தமிழ் ஆசானின் அறிவின் பரப்பை வியந்து பேசுகிறார். வளர்ந்து வரும் தமிழாய்வுக் களத்திற்கு வ.சுப. மாணிக்கனார் பதித்த பதிப்புச் சுவடுகள் புதிய வழிகாட்ட வல்லன. தாம் எழுதிய நூல்களின் வழி தமிழின் தனித்தன்மையை நிலைநாட்டியவர். மறைமலையடிகளின் ஆய்வுத் திறனும் கொள்கை உறுதியும்; திரு.வி.க.வின் மொழிநடையும் சமுதாய நோக்கும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. இத்தொகுப்புகளைப் பயில்வோர் இவ்வுண்மையை முழுதாய் உணர முடியும். தமிழ்மண் பதிப்பகம் தமிழ் - தமிழர்க்குப் பெருமை சேர்க்கும் பயனுள்ள நல்ல தமிழ் நூல்களை வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் தனித்தன்மையுள்ள நிறுவனம் என்பதை நிறுவி வருகிறது. இதன் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனாரின் அறிவுச் செல்வங்களை வெளியிடுவதன் மூலம் உவகையும், களிப்பும், பூரிப்பும் அடைகிறேன். இவர் நூல்களை நாங்கள் வெளியிடுவதை எங்களுக்குக் கிடைத்த நற்பேறாக எண்ணி எண்ணி மகிழ்கிறேன். நல்ல தமிழ் நூல்களைப் பதிப்பித்துத் தமிழ்கூறும் உலகிற்கு அளிக்கும் போதெல்லாம் என் சிந்தை மகிழ்கிறது; புத்துணர்வும், பூரிப்பும், புத்தெழுச்சியும் அடைகிறேன். தமிழ்ப் பதிப்பு உலகில் உயர்வுதரும் நெறிகளை மேற்கொள்ள உறுதி ஏற்கிறேன். நன்றிக்குரியவர்கள் மணிவாசகர் பதிப்பக நிறுவனர் அய்யா ச. மெய்யப்பன் அவர்கள் இவ்வருந்தமிழ் அறிஞர் எழுதிய நூல்கள் பலவற்றை வெளியிட்டுத் தமிழுக்கும் தமிழருக்கும் அருந்தொண்டு செய்தவர். இந்த நேரத்தில் அவரை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பாரி நிலையம் மற்றும் காரைக்குடி செல்வி புத்தக நிலையம் ஆகிய இரண்டும் பெருந்தமிழ் அறிஞர் வ.சுப.மா. நூல்களை வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளதையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். பேரறிஞரின் மக்கள் அனைவரும் இந்நூல் தொகுப்புகள் எல்லா நிலையிலும் செப்பமுடன் வெளிவருவதற்கு உதவினர். இச்செந்தமிழ்த் தொகுப்புகள் வெளிவருவதற்கு மூல விசையாய் அமைந்தவர்கள் திருமதி. தென்றல் அழகப்பன், திருமதி மாதரி வெள்ளையப்பன் ஆகிய இவ்விரு பெண்மக்கள் மாணிக்க விழுமியங்கள் தமிழ் உலகம் பயன் கொள்ளும் வகையில் வெளிவருவதற்குத் தோன்றாத் துணையாக இருந்ததை நன்றி உணர்வோடு நினைவு கூறுகிறேன். மொழியை மூச்சாகவும், அறத்தை வாழ்வாகவும், இலக்கிய வேள்வியை வினையாகவும் ஆக்கிக் கொண்டவர் மூதறிஞர் வ.சுப.மா அவர்கள் என்பதை மேலைச்சிவபுரி, கணேசர் கலை அறிவியல் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் இனம் காட்டி உள்ளது. இது முதுமுனைவர் இரா. இளங்குமரனார் கூறிய புகழ் வரிகள். “மாணிக்கச் செல்வ மணித்தமிழ் அன்னைக்குக் காணிக்கை யாய்வாய்த்த கண்ணாள - பேணிக்கை வைத்த துறையெல்லாம் வாய்ந்த துறையாக்கி வைத்தநீ எங்களின் வைப்பு” இப்பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய நிறைதமிழ் அறிஞரின் அறிவுச் செல்வங்களை உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்குவதன் மூலம் நிறைவடைகிறேன். “தனக்கென வாழ்வது சாவுக்கு ஒப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும்” எனும் பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திருமதி ப. கயல்விழி திருமதி வி. ஹேமலதா திரு. டி. இரத்திரனராசு நூல் வடிவமைப்பு: திருமதி கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) முதல் திருத்ததிற்கு உதவியோர்: திருமதி. தென்றல் அழகப்பன் திரு. புலவர். த. ஆறுமுகம் திரு. க. கருப்பையா முனைவர். க. சுப்பிரமணியன் புலவர். மு. இராசவேலு திரு. நாக. சொக்கலிங்கம் இறுதித் திருத்தம் : முனைவர் மாதரி வெள்ளையப்பன் நூலாக்கத்திற்கு உதவியோர்: இரா. பரமேசுவரன், கு. மருது, வி. மதிமாறன் அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை. `மாணிக்க விழுமியங்கள்’ எல்லா நிலையிலும் செப்பமுற வெளிவருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நெஞ்சம் நிறைந்த நன்றியும் பாராட்டும். அறிமுகவுரை செம்மல் வ.சுப.மாணிக்கனார் தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் முன்னோர் எடுத்து வைத்த அடிச்சுவட்டில் தாமும் கால் பதித்து எழுத்துக்களையும் ஆய்வுகளையும் செய்த காலத்தில் தனக்கென ஒரு தனி வழியை அமைத்துக்கொண்டவர் செம்மல் அவர்கள். தமிழகத்தில் பிறந்து இரங்கூனில் வளர்ந்து வாய்மைக் குறிக்கோளைத் தன் வாழ்வின் குறிக்கோளாக எண்ணிய பள்ளிப்படிப்பை நிறைவு செய்யாத ஒரு சிறுவனை அடையாளம் கண்டாள் தமிழன்னை. அச்சிறுவனைத் தமிழ்க்கொடையாக உலகிற்குத் தந்தாள். பண்டிதமணி கதிரேசனார் துணை கொண்டு தமிழைக் கசடறக் கற்றவர், வ.சுப. சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்ந்தவர். தமிழ்க்கொடையாக வந்த வ.சுப. தமிழுக்குச் செய்த கொடை மிக அதிகம். தமிழால் அடையாளம் காணப்பெற்ற அவர் கற்றோருக்கு முதன்மையராகவும் எல்லோருக்கும் தலைவராகவும் விளங்கினார். சங்க இலக்கியங்களை புதிய நோக்கில் ஆய்வு செய்தவர். இனி வரும் காலங்களில் சங்க இலக்கியம் கற்பாரின் நுழைவாயில் வ.சுப.வின் அகத்திணை ஆய்வு நூல் `தமிழ்க்காதல்’. இராமாயணத்தில் பற்றில்லாமல் இருந்தவர்களையும் `கம்பர்’ என்ற நூல் கம்பராமாயணத்தைக் கற்கத் தூண்டுகின்றது. சிலப்பதிகாரத்தின் பெயர்க்காரணத்தை ஆய்வு செய்தது `எந்தச் சிலம்பு’. திருக்குறளைப் புதிய கோணத்தில் ஆய்வு கண்டது `வள்ளுவம்’ மற்றும் `திருக்குறட்சுடர்’. திருக்குறளின் மூலமும் உரையும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல் காணும் `உரை நடையில் திருக்குறள்’. தொல்காப்பியத்தை வெளியுலகிற்குக் கொண்டு வந்து அறிஞர்களிடையே நிலைநிறுத்தியவர் வ.சுப. தமிழ்க்கொடை மட்டுமன்று ஒரு தமிழாசிரியனாலும் அறக்கொடை செய்ய முடியுமென்பதை நிலைநாட்டியவர். அறம் செய்ய பணம் வேண்டியதில்லை. மனம் தான் வேண்டும். அழைப்பு வேண்டியதில்லை. உழைப்புத்தான் வேண்டும். அறிவு கூட வேண்டியதில்லை. அன்பு கூட வேண்டும். என்பதை உணர்த்தியவர். செம்மல் வ.சுப. அவர்களின் புகழ் தமிழ் வாழும் காலமெல்லாம் நிலைத்து நிற்கும். அந்நிய மோகத்தில் அடிமைப்பட்டு, உரிமை கெட்டு, ஆட்சிஅதிகாரம் தொலைத்து அல்லலுற்றுக்கிடந்த இந்திய மண்ணில், அக்கினிக் குஞ்சுகளை வளர்த்தெடுத்த அண்ணல் காந்திக்குப் பாரதி பாடிய வாழ்த்துப் பா இது: “வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க வாழ்க!” இதைப் போலவே, தமிழ் மண்ணில் அந்நிய மொழிகளின் ஆதிக்கத்திற்குத் தமிழர் அடிபணிந்து, மொழி உரிமை இழந்து, தமிழ்க் கல்விக்குப் பெருங்கேடு நேர்ந்த போது, இந்த அவலத்தை மாற்றும் முயற்சியில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் அண்ணல் வ.சுப.மா. அண்ணல் காந்தியை பாரதி பாடியதுபோல், அண்ணல் மாணிக்கனாரை, “வாழ்க நீ எம்மான், இங்கு வந்தேறி மொழிமோ கத்தால் தாழ்வுற்று உரிமை கெட்டுத் தமிழ்க்கல்வி தனையும் விட்டுப் பாழ்பட்டுப் பரித வித்த பைந்தமிழ் தன்னைக் காத்து வாழ்விக்க வந்த புதிய வள்ளுவமே வாழ்க! வாழ்க! என்று பாடிப் பரவத் தோன்றுகிறது. - தென்றல் அழகப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) மாணிக்கம் - தமிழ் வார்ப்பு வாய்மை வாழ்வைத் தன் உயிராகவும், திருவாசகம், திருக்குறள், தொல்காப்பியம் மூன்றினையும் போற்றிப் பாதுகாத்து பொய்யாமை, தூய்மை, நேர்மை, எளிமை என்ற நான்கு தூண்களையும் அடித்தளமாகவும் வரலாறாகவும் கொண்டு வாழ்ந்தவர் தமிழ்ச் செம்மல், மூதறிஞர் முது பேராய்வாளர், பெருந்தமிழ்க் காவலர், முதுபெரும் புலவர், தொல்காப்பியத் தகைஞர் எனது தந்தை வ.சுப. மாணிக்கனார். பெற்றோர்கள் இல்லாமலே வளர்ந்தாலும் தன்னை நற்பண்புகளாலும் நல்லொழுக்கத்தாலும் நற்சிந்தனைகளாலும் செதுக்கிக் கொண்டவர்கள். அவர்களின் மறைவிற்குப் பின் தாயார் திருமதி. ஏகம்மை மாணிக்கம் அவர்கள் தந்தை இட்ட புள்ளிகளைக் கோலமாக்கினார்கள். அப்பா தனது வாழ்நாளில் 50 ஆண்டுகட்கு மேலாக தமிழைப் போற்றினார்கள். தாயார் (தந்தையின் மறைவிற்குப் பிறகு) 20 ஆண்டுகட்கு மேலாக தந்தையின் குறிக்கோள்களைப் போற்றி நிறைவேற்றினார்கள். தமிழறிஞர்களும் ஆர்வலர்களும் இன்று தந்தையைப் போற்றுகிறார்கள். செம்மலின் அறிவுடைமை தமிழக அரசால் பொது வுடைமை ஆக்கப்பட்டது. என் தந்தையின் தொண்டுகள் பலதிறத்தன. மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவின் நிலைப்பயனாக செம்மலின் நூல்கள் அனைத்தையும் மறுபடியும் பதிப்பித்து அவற்றை தமிழுலகிற்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும் எனவும் செம்மலின் படைப்புக்களை வெளியிடுவது விழாவிற்கு உயர்வும் நூல்கள் வழிவழி கிடைக்கவும் தேடலின்றிக் கிடைக்கவும் வழி வகுக்க வேண்டும் என்றும் மக்கள் நாங்கள் எண்ணினோம். நூற்றாண்டு விழாப் பணியாக மாணிக்கனார் நூல்களை யெல்லாம் வெளியிடும் அமையத்து செம்மலின் தமிழ்மையை திறனாய்ந்து தமிழறிஞர்களின் முத்திரைகளும் நூல்களாக வெளிவருகிறது. இவ்வாண்டில் பொறுப்பெடுத்து வெளியிட்ட தமிழ்மண் பதிப்பகத்திற்கும் எம் தந்தையின் தமிழ்ப்பணிக் குறித்து பெருமை தரும் நூல்களாக எழுதியுள்ள நூலாசிரியர் கட்கும் தமிழினமே நன்றி கூறும். முனைவர். மாதரி வெள்ளையப்பன் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) கோவை 11.8.2017 என் அன்புறை எட்டு வயது பாலகனாக இருந்தபோதே ஈன்றெடுத்த பெற்றோர்கள் விண்ணுலகு எய்திய சூழ்நிலை. இளம் வயதிலேயே “லேவாதேவி” என்று சொல்லப்படும் வட்டித் தொழிலைக் கற்றுக் கொள்ள பர்மா சென்று வேலைப்பார்த்த இடத்தில் முதலாளி, வருமானவரி அதிகாரியிடம் பொய் சொல்லும்படி அப்பாவை வற்புறுத்தியதால், திண்ணமாக மறுத்துவிட்டுத் தாயகம் திரும்பிய உத்தம மனிதர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பண்டிதமணி, கதிரேசனாரிடம் தமிழ் பயின்று, பிற்காலத்தில் காரைக்குடியில் தான் கட்டிய இல்லத்திற்கு “கதிரகம்” என்று பெயர் சூட்டி, ஆசானுக்கு மரியாதை செலுத்திய மாமனிதர். சிற்பி ஒரு கல்லை உளியைக் கொண்டு செதுக்கிச் செதுக்கி, சிறந்த சிற்பமாக்குவான். அதேபோல், தன் மனதை எளிய வாழ்வு, எதிர்கால நம்பிக்கை, தெளிவான சிந்தனைகள், வாழ்க்கைக்கான திட்டங்கள், உயர்ந்த குறிக்கோள், உன்னத மான செயல், வாய்மை, தூய்மை, நேர்மை, இறை வழிபாடு போன்ற எண்ணத் திண்மையுடன் தன்னைத்தானே பக்குவப் படுத்திக் கொண்டதால், உயர் பதவியான துணைவேந்தர் பதவி அப்பாவை நாடி வந்தது. திருக்குறள், திருவாசகம், தொல்காப்பியம் ஆகிய மூன்று தமிழ் மறைகளும், பண்புடன் வாழ்வதற்குரிய வழிகாட்டிகள் என்று நினைத்து வாழ்வில் கடைப்பிடித்து வெற்றி கண்ட உயர்ந்த மனிதர். அப்பா எழுதியுள்ள `தற்சிந்தனை’ என்னும் குறிப்பேட்டில் “நான் படிப்பிலும் எழுத்திலும் ஆய்விலும் பதவிப் பணியிலும் முழு நேரமும் ஈடுபடுமாறு குடும்பப் பொறுப்பை முழுதும் தாங்கியவள் ஏகம்மை என்ற என் ஒரே மனைவி” என்று எழுதியுள்ளதிலிருந்து அப்பாவின் முன்னேற்றத்திற்கு அம்மா முழு உறுதுணையாக இருந்துள்ளார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே கல்விக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் என் தாய்தந்தையர் இருவருக்கும் ஒருமித்தக் கருத்தாக இருந்ததால், தன் குழந்தைகள் அறுவரையும் பள்ளிப் படிப்போடு நிறுத்திவிடாமல், ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் பட்டப் படிப்புக்கள் வரை பயில வைத்து வெற்றி கண்டுள்ளார்கள். என் இளங்கலை வணிகவியல் சான்றிதழிலும், என் கணவரின் பொறியியல் சான்றிதழிலும் துணைவேந்தரின் கையொப்ப இடத்தில் என் தந்தையாரின் கையொப்பம் இருக்கும். இதை நான் பெற்ற பாக்கியமாக நினைக்கிறேன். நான் பெங்களூரில் இருந்தபோது, அப்பா எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும், “அவிநயன் திருக்குறள் சொல்லு கிறானா? புதிதாகச் சொல்லும் குறளுக்கு அய்யா காசு தருவார்கள் என்று சொல்” என்ற வரிகள் நிச்சயமாக இருக்கும். என் மகன் இளம் வயதிலேயே திருக்குறள் கற்க வேண்டும் என்பது என் தந்தையாரின் எண்ணம். இளஞ்சிறார்களுக்குப் பிஞ்சு நெஞ்சங்களிலேயே திருக்குறள், திருவாசகம் படித்தல், இறைவழிபாடு செய்தல் போன்ற விதைகளை விதைத்து விட்டால், முழுவாழ்வும் மிகவும் சிறப்பாக அமையும் என்பது தந்தையாரின் திண்மையான கருத்து. மிகச் சிறு வயதில் பெற்றோரை இழந்த சூழ்நிலையில், அடிப்படை பொருளாதாரம் இல்லாத நிலையில், அதிகமான உழைப்பாலும், முயற்சியாலும், நேர்மையான வழியில் தான் ஈட்டிய பொருளாதாரத்தில், அதாவது தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை தனது சொந்த ஊரான மேலைச்சிவபுரியின் மேம்பாட்டுக்காக உயர்திணை அஃறிணை பாகுபாடுயின்றி செலவு செய்ய வேண்டும் என்று தன் விருப்பமுறியில் எழுதியுள்ளார்கள். தந்தையாரின் விருப்பப்படியே தாயார் அவர்கள் 20-4-1992 இல் அப்பாவின் பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து நடத்தி வந்தார்கள். இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பா எழுதிய முப்பதுக்கும் மேலான நூல்களில் `வள்ளுவம்’, `தமிழ்க்காதல்’, `கம்பர்’, `சிந்தனைக்களங்கள்’ போன்றவை தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகச்சிறந்த ஆய்வு நூல்களாகக் கருதப்படுகிறது. உன்னத வாழ்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்துள்ள என் தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்பவர்களின் வாழ்விலும் நல்ல திருப்புமுனை ஏற்பட்டு வாழ்வு செம்மையாகும் என்பது உறுதி. பொற்றொடி செந்தில் (வ.சுப. மாணிக்கனாரின் மகள்) மும்பை 21-7-2017. மனைவியின் உரிமை முதற் பதிப்பு 1947 இந்நூல் 1969இல் பாரிநிலையம் வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன. முகவுரை நாடகங்கள் ஐந்தனுள் முதலன மூன்றும் புறப்பொருளைச் சார்ந்தன; நான்காவது அகமும் புறமும் தழுவியது; இறுதியது அகப்பொருள் பற்றியது. சென்றகாலத் தமிழ் மொழியின் தூய்மை, வருங்காலத் தமிழ் மொழியின் செம்மை, நிகழ்காலத் தமிழ் மக்களின் மொழியறிவு என்ற மூன்றினையும் ஆசிரியன் கருத்திற்கொண்டு, எழுதியதொரு இலக்கிய நடையாகும். இந்நாடகங்களின் நடை என்பதும், அப்படியே நடக்கத்தகும் அரங்கு நடையன்று என்பதும் அறிவார்க்குப் புலனாம். ஒரு நூலின் தவப் பெருமையும் நனி சிறுமையும் காண விழைவார், அதனைப் பன்முறை கற்றல் வேண்டும். இங்ஙனம் கற்கும் முறையினையே, ‘நவில் தொறும் நூல் நயம்’ என்றார் ஆசிரியர் திருவள்ளுவர். பன்முறை கற்றலோடு, நுணுக்கத் தினைக் காணவல்ல அடிப்படை அறிவும், நன்று தீது துணிய வல்ல நேர்மையும் கற்பார்க்கு இன்றியமையாதன. ஆதலின், என் உழைப்பின் முதல் உருவங்களாகிய இந்நாடகங்களின் இழிவு சிறப்பு உயர்வு சிறப்புக்களைச் சீர்தூக்கிக் காணும் பொறுப்பு கற்பார் பாலதாகும் என்பது என் பணிவுடைக் கொள்கை. என் நாடகங்களை முதற்கண் வெளியீடு செய்ய அன்பொடு முன் வந்தருளிய நண்பர், புதுக்கோட்டைத் தமிழ் நிலையத் தலைவர் அவர்களுக்கு என் உள்ளன்பு உரிமையாகும். காரைக்குடி 1-6-1957 வ. சுப. மாணிக்கம் அன்புறை எங்கள் தாயின் பெற்றோர்களுக்கு என்னை உடனைவர் ஏங்காதே வாழ்வளித்த அன்னை முதல்வர் அடிபணிந்தோம்;-பொன்னை உறவினர் வாழ உவந்தளித்தார்; ஆயுள் நிறைவினர் நின்ற நெறி. பொருளடக்கம் 1. இனிய சாவு 5 2. உழவப் புலவன் 24 3. புகழ்த்துறவு 52 4. மனைவியின் உரிமை 67 5. பிள்ளைத் தூது 113 1. இனிய சாவு குழவி யிறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆளன் றென்று வாளிற் றப்பார் தொடர்ப்படு ஞமலியின் இடப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத் தாமிரந் துண்ணு மளவை ஈன்ம ரோவிவ் வுலகத் தானே. - புறநானூறு 74 சேரமான் கணைக்கா லிரும்பொறை சோழன் செங்கணா னொடு திருப்போர்ப்புறத்து பொருது பற்றுக்கோட் பட்டுக் குடவாயிற் கோட்டத்து சிறையிற் கிடந்து தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப்பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு. 1. இனிய சாவு காட்சி -1 (திருப்போர்ப்புறம் என்னுமிடத்துச் சேரமான் கணைக்கால் இரும்பொறை, சோழன் செங்கணானொடு போர் செய்கின்றான். சேரன் படைகளெல்லாம் மாண்டு போகின்றன. சோழனுஞ் சேரமானைத் தளையாற் பிணித்துவந்து, குட்வாயிற் கோட்டத்துச் சிறையில் வைக்கிறான்.) பொறை: (திடீரென விழித்துக் கொண்டு) ஆ! என்ன! யானிருக்குமிடம் உலகில் எவ்விடம்? இவ்விடம் எவ்னுடையது? இவ்விடத்து இருக்கும் நான் யார்? இருக்க வைத்தவன் யார்? (ஏளனமாக) ஓ! ஓ! நான் சேரனல்லனோ! நெடுநல் சோழ னொடு பொருது நன்றாகத் தோல்வி பெற்ற சேரர் பெருமானல் லனோ! (கேலியாகச் சிரித்துக் கொள்கின்றான். கண்கள் விழுப் புண்மேல் படுகின்றன.) ஆம்; ஆம், இவ்விழுப் புண்கள் சோழன் அருளியவை. வாழட்டும்! யான் பெற்ற தோல்வி காட்டும் வடுவாகட்டும். குருதி புதுச் செம்புனல் போல் வடியட்டும்! என் உடம்பு புதிதாகட்டும்! மானக்குருதி ஊறட்டும்! என்னைச் சோழன் நன்றாக வென்றான். (தயங்குகிறான்) உள்ளதைச் சொல்லுவதற்கு ஏனோ தயக்கம்? மண்ணாடுடைய சோழன் மலைநாடுடைய என்னைப்போல் மறப்படை யுடையனல்லன். சோறுண்டு, வயலில் கிளி மழலைகேட்டு அமையுஞ் சோழப் படையினர், கிழங்குண்டு, பொதும்பரில் புலி முழக்கங்கேட்டுச் சினவுஞ் சேரமறவர் போலுந் தறுகண்மை யுடையரல்லர் என்றாலும், நூல்நெறி மறந்தேன். மறதி கெடுத்தது. மானங் கெட்டேன். கடலன்ன தானையும் மலை யன்ன யானையும் உடையராயினும் பகைவன் நாட்டகத்துச் சென்று பொருதல் கூடாது; மெலியோரும் பிறந்த மண்ணில் யாரையும் வெல்லும் வலியோராவர் என்ற அரசியலை இகழ்ந்தேன். இப்படியா னேன், மலையிற் போர் பயின்ற பொருநர்க்கு மண்ணிற் போரிடும் பழக்கமில்லை; தோற்றனர். இல்லை, இல்லை. தோலாது வானுலகெய்தினர். என் படை யாளர் எல்லோரும் ஓருயிர்போலே ஒக்க மடிந்தனர். அவர்கள் சாவவும், யான் சாகாதிருக்கின்றேன். (அழுகின்றான்; உடனே வீறுகொண்டு) சாகாதது நல்லதுதான். இநிச் சாகவுமாட்டேன். திருப்போர்ப் புறத்து என் மானங்கெடுத்த சோழன் தன்மானம் கெடுத்தல்லது சாவமாட்டேன். சாக விரும்பேன்; கூற்றுவன் அழைத்தாலும் போகேன்? எதுவரை? குடவாயிற் கோட்டத்துச் சிறை வைத்துக் குலப்பழி தந்த சோழனை குணவாயிற் கோட்டத்துச் சிறைப்படுத்தி நிலைப்பழி செய்யும் வரை சாவ மாட்டேன். சேர மறவன் ஓருயிர்க்குச் சொழமறவர் ஈருயிரை வாங்கியல்லது சாவமாட்டேன். என் விற்பிடித்த கைக்கு விலங்கணிந்தான் சோழன். அதனாலென்? அவன் கழலணிந்த கால்கட்டு, யானைத்தளை பூட்டியல்லது சாவ மாட்டேன். உடலைச் சிறை வைத்தான். வேறென் செயவல்லான்? மான புணர்ச்சி காவிரிபோற் பெருகுவதைச் சிறைப்படுத்த முடியுமா? பகையுணர்ச்சி பொங்கியெழுவதைச் சிறைப்படுத்த வல்லனா? அவனைக் குலத்தொடு வெல்லச் சூழும் அறிவைச் சிறைப்படுத்த மாட்டுவனா? மடவன் என் செய்தான்? வீரனாய வன்றே பிணமாய் வேறான இவ்வுடலைச் சிறைப்படுத்தினான். தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொண்டான் (கலகலவென்று சிரிக்கின்றான்). என்னே! என் வெண்மை. (சோர்வாக) நாற்படையிழந்து, என் கைப்படையும் இழந்து, பகைவன் வெஞ்சிறையும் புகுந்த நான் வஞ்சினங்கூறிப் பயனென்? கருவி பிளந்த குருதி நீர், செவ்வாடைபோல் வடிகின்றதே. வடிய வடிய நாவறட்சி மிகுகின்றதே. நாவுள்ளிழுக்கின்றதே. கண்ணீரும் ஒழுகுகின்றது. கிறுகிறுப்பும் உண்டாகின்றது. இப்போது வேண்டுவது தண்ணீர், தண்ணீர் (என்று புலம்புகின்றான்.) (காவலர்கள் காலடியோசை கேட்கின்றது. பொறை சாளரத்தின் வழியாக எட்டிப் பார்க்கின்றான். ஒரு கிழவனும் ஒரு இளையானுங் கம்பு ஊன்றிக்கொண்டு மாறி மாறி நடக்கின்றார்கள். பொறை : நீங்கள் யார்? காவலர்கள் : எங்களையா கேட்கிறீர்? நாங்கள் உமக்குக் காவலர்கள். பொறை: அப்படியா? ஒரு வாய்க்குத் தண்ணீர் தாருங்கள். கிழவன் : (இரக்கமாக)மிகவும் வேட்கையோ? இளையான் : (உரக்க) ஐயா, நாங்கள் உமக்கு காவலரே யொழிய ஏவலரில்லை. பொறை: (நாணித் தன்னுள்) ஈதென்ன, அறிவின்மை. உயிர் பெரிதென நினைக்கின்றேன். அரனினும் உடம்பு பெரி தென நினைக்கின்றேன். சோழனுடைய துணைதான் இவர்களை இப்படிக் கண்டபடியெல்லாம் பேசும்படி செய்திருக்கின்றது. கல்லாதவர்களே அரசன் காவலுக்குத் தக்கவர்கள் என்று கருதிச் சோழனும் இவர்களை வைத்திருக்கின்றான். உயிரிருந் தன்றோ வஞ்சினத்தை முடிக்க முடியும். எதிர்மறை இரண்டு கூடின் உடன்பாடாதல்போல இவ்விருவர் அறியாமை ஒருவற்கு ஓரறிவைப் பிறப்பிக்கலாம். (அவர் கேட்க) காவலரே, நீங்கள் பேசுவது கேட்கச் செவியால் முடியவில்லை. விடை சொல்ல நாவெழவில்லை. தண்ணீர் தராவிட்டால் என்னுயிர்க்கு எமன் நீங்களே. பின்பு என்னுடலுக்குத் தான் காவலர் ஆவீர்கள். இச்சிறைக் கோட்டஞ் சிறிது போழ்தில் பிணக்கோட்டம் ஆகும். சொல்லிவிட்டேன், அவ்வளவுதான். உங்கள் உயிர்க்கும் கேடுவரும். பார்த்துக்கொள்ளுங்கள் (என்று சொல்லிச் சாய்ந்து விடுகின்றான்.) இளையான்: இவர் சொல்லுவது மெய்யோ, பொய்யோ? நம்மை அச்சப்படுத்தித் தண்ணீர் வாங்கிக் குடிக்க நினைக்கிறார். கிழவன் : மெய்யாகத்தானிருக்க வேண்டும். ஒரு வேந்தர் இப்படி வாய்விட்டுக் கேட்பதாயிருந்தால், பொய்யாக இருத்த லில்லை. (இரக்கத்தோடு) இவர் எவ்வளவு நாள் பட்டினியோ? இளையான் : நம் வேந்தர் இவரைக் கொலைப்பட்டி னியாப் போட நினைத்திருக்கிறாரோ, என்னமோ? நாம் தண்ணீர் கொடுத்து இவரை உயிருண்டாக்கி விட்டுவிட்டால் நம்மிருவர் உயிர்போனாலும் போகும். அப்பப்பா! அது செய்யவே கூடாது. கிழவன் : தம்பி, எது எது எப்படியிருந்தாலும், தண்ணீர் என்ற வாயைச் சிறிதாவது நனைக்கத்தான் வேண்டும். இரக்கம் யாரையுங் கேட்டுக்கொண்டா உண்டாகும். மனிதனாகப் பிறந்தவன் எதையும் பாராது இரங்க வேண்டும். இளையான் : அண்ணா, காவல் உங்கள் தொழில் என்று அவ்வளவுதானே - படைத்தலைவர் சொன்னது. சொன்னதை மீறலாமா? மனிதனுக்கு அழகா? விதியென்றால் விதிதானே. ஓர் ஊருணியில் என் பிள்ளை விழுந்து விட்டது. (நிமிர்ந்து) நான் எடுக்கவே யில்லையே. கிழவன் : (விரைந்து) ஏடா, பாவி. முன்னே சொல்வதில் லையா? ஓடிவா. எடுக்கப்போவோம். புறப்படு. புறப்படு. ஏன் நிற்கிறாய்? இளையான் : (நகைத்துக்கொண்டு) இது நடந்து நெடு நாஅஅ ளாயிற்று. ஓர் ஊருணியில், “யாரும் இறங்கக் கூடாது” என்று விளம்பரம் போட்டியிருந்தது. அப்புறம் மீறி இறங்குவது நல்லாயில்லை, பாரு. கட்டளையென்றால் கட்டளைதானே. இறங்கக்கூடாது என்ற குளத்தில் இறங்கினதாலேதான் அப் பிள்ளை, என் பிள்ளையாயினுஞ் செத்தது. நானும் இறங்கி னால், அந்தப் போக்கிலே போக வேண்டியதுதான். கிழவன்: (வருந்தி) அப்படியா கெடுத்தாய். பாவியாய்ப் பிறந்தவனே; நீயும் அந்தப்போக்கிலே போயிருக்கலாமே. நீ வாழ விதியில்லை. விதி வாழநீ இருக்கின்றாய். ஒரு மனிதன் இட்ட விதியே, எப்படியிருப்பினும் உலகிற்கு விதியென்றால், எல்லா மக்களுக்கும் படைப்பில் மூளை எதற்கோ? (தனக்குத் தானே) அவர் சொல்வது மெய்யாக இருந்து செத்து விட்டால், கொன்றவர்கள் நாமேயென்று அரசன் நம்மையும் வழிவழி மக்களையுங் கொல்லுவது கட்டாயம். பொய்யாக விருந்தாலும், வேறென்ன அள்ளிவிடப் போகிறோம். இவ்வளவு தண்ணீர் தானே கேட்கிறார். கொடுப்போம். அதற்கு அரசன் நம்மைச் சினந்துகொள்வான் அல்லது தொழிலைவிட்டு நீக்குவான்; போனால் போகட்டுமே. கூடினால், இரங்கியதற்காகக் கொல்லு வான். அவ்வளவுதான். நம் பெண்டு பிள்ளைகளை ஒன்றுமே செய்யமாட்டான். இளையான் : மெய்யென்பதையும் பொய்யென்பதையும் நாம் எப்படி அண்ணா முடிவு கட்டுவது? நமக்கென்ன கெட்ட காலம். தண்ணீர் நாம் கொடுக்கலாமா? அவ்வளவு அறிவு நமக்கிருந்தால், கிறை காவலராக நாம் ஏன் இருக்கிறோம்? நாடு காவலராக இருந்திருக்க மாட்டோமோ? நம் பெண்டுகள் தேவியராக ஆகியிருப்பரே. கிழவன் : ஒன்றுக்குப் பத்தாய்ப் பேசி, என்னிரக்கத்தையுந் தடுக்கிறாய். நீயும் இரங்கமாட்டேன் என்கிறாய். எனக்கு ஒரு சூழ்ச்சி தோன்றுகிறது. அரசருக்கு முன்பு இச்செய்தியைச் சொல்ல நானே போகிறேன். நீ வரவேண்டாம். நீ தடுத்தாலுஞ் சொல்லாமல் இருக்கமாட்டேன். நடமாடுந் தூண்போலச் சுற்றிச்சுற்றிப் பார்த்துக்கொண்டு நில்லு. இளையான் : அரசர் உன்னை என்ன செய்வாரோ? ஏடா, காவலை விட்டுவிட்டு வந்தாய் என்று சினந்தால், என்ன சொல்வாய்? எனக்கு அச்சமாயிருக்கிறது. எப்படியுந் தாமதி யாமல் வந்துவிடு. அண்ணா, தனியே நெடுநேரம் இருந்தால், எனக்கு உறக்கம் வரும். நல்லமுறையாப் போய் நல்ல முறையா வந்துசேர். காட்சி - 2 களம் : நாண்மகிழிருக்கை (அரசவை) காலம் : நண்பகல். கூற்று : சோழன், அமைச்சன், படைத்தலைவன், மருத்துவர், காவலன். சோழன் : ஓடோடி வந்து நிற்கின்ற இவன் யாரோ? படைத்தலைவன் : குடவாயிற் கோட்டத்துச் சிறை காப்பவன். சோழன் : ஏடா, நீ ஏன் சிறைக்காவலை விட்டு வந்தாய்? காவலன் : (நடுங்கி) வாழ்க, வேந்தே! வாழ்க. உள்ளிருப்ப வர் காய்ச்சல் கொண்டவன் போலத் தண்ணீர் தண்ணீர் என்று புலம்புகிறார். அவர் குரலோசை தொண்டை கட்டினது போலக் கம்முகின்றது. வேனில் ஞமலி போலப் பெருமூச்சு வாங்கி யிளைக்கிறார். சொல்லிவிட்டு ஓடிப் போகலாமென்று வந்தேன். சோழன் : அறிவுடையவன்; தக்க சமயத்துச் சொல்ல வந்தான் (என்று புகழ்கின்றான்) படைத்தலைவன் : ஏடா வில்லி! நீ இங்கு வந்து விட்டாயே. அங்கு இருப்பவன் யார்? காவலன் : வேலனை இருக்கச் சொல்லி வந்தேன். இதோ போய்விடுகிறேன். (சோழன் கையசைக்கப் போய்விடுகிறான்.) சோழன் : அமைச்ச! தண்ணீர் உடனே போதல் வேண்டும். சேர நன்னாட்டு வேந்தர் மானம் விட்டு இரத்தலினும், உயிர் விட்டு இறத்தல் பெரிதென எண்ணுபவர். மார்பு வழியாக ஏற்பட்ட முதுகுப் புண்ணையும், புறப்புண்ணெனக் கருதி, நொய்ம்மையுடைய என் யாக்கை வீழ்க, என் ஆயுள் கெடுக என்று, தானே உயிர் நீத்த மானவேந்தன் சேரர் குலத்தவ னன்றோ! அக்குலத்துத் தோன்றலாகிய இரும்பொறை, தண்ணீரென வாய் விட்டுக் கேட்டிருப்பது, ஏதோ, நம்முடைய நல்லூழ்தான். எம்மனைய தமிழ் வேந்தர் சுற்றத்தார்போல நாள்வாழ்விற் பகையாயிருப்பர். சாவிற் பகையும் பங்குங் கொள்ளார். பகைவர் ஆற்றலையறுத்து அவர் முரணையும் இகலையுங் கொல்ல நினைப்பதல்லது, அவரையே கொல்ல நினையார். சிறைப்படுத்தி யிருப்பதன் நோக்கமும் அதுவே யன்றோ? சேரமானைச் சிறைகொள்ளும் வரை, அவன் நாட்டு மலைபோலத் திண்ணிதாக விருந்த என்னெஞ்சம், சிறைக் கொண்டபின், என்னாட்டுக் காவிரி நீரினுஞ் சாயலுடைய தாயிற்று. ஆகாதென்செய்யும்! வான் பொய்ப்பினுந் தான் பொய்யாக் காவிரி சூழ் சோழவள நாட்டில், தண்ணீர் பெறாது, தண்ணீர் தண்ணீர் என்று ஓருயிர் புலம்புவது (என்று சொல்லிக் கண் கலங்குகிறான்). கணைக்காலன் எம்போல் ஒப்புடைய வேந்தன். எனக்குரிய குடி தண்ணீரைக் கொடுத்தருள்க. அமைச்சன் : வாழ்க, நின்னறம். சிறைப்பட்ட வேந்தனை விருந்தினனாகக் கருதுவது பகைமையின் முடிபு. குடி தண்ணீர் நோயணுவின்றித் தூய்மையுடையதா என்று பின்னும் ஒரு முறை பார்ப்பது நல்லது. (அரச மருத்துவர் வருகின்றார்). மருத்துவர் : (கருவி கொண்டு தண்ணீரை ஆய்ந்தபின்) அரசே! கார்காலத்து வானம் மாசின்றி யிருந்த அமயத்து நிலத்தில் விழுதற்கு முன்பு, உயரத்துக் கொள்ளப்பட்ட மழைநீர்; ஆகலின் நோய்தரும் எவ்வகை அணுவும் இல்லை. நன்றாகக் குடிக்கலாம். சோழன் : (மருத்துவரைப் பார்த்து) நீவிரும் உடன்செல்க. விழுப்புண்களை மருந்து தடவிப் புகழ்காட்டும் வடுவாக்குமின். சிறை வதியுஞ் சேரமான் உடலுக்கு ஒரு நோய் வருமாயின், சேர நாடு நமக்கு வழிவழிப் பகையாய் விடும். அது விரும்பத்தகாதது. விழுப் புண்ணிலிருந்து குருதி தமிழ் மொழிக்கு ஊறுகண்ட புலவர் கண்களிலிருந்து நீர் ஒழுகுவது போல மடமட வென்று பெருகுமாயின், அவ்வொழுக்கை முதலில் தடைப்படுத்துக. புதிய செங்குருதி உடலின் மிகுமாறு, வேந்தன் உடம்பிற்கேற்ற நல்லுணவு நல்குக. யாக்கை முழுதும் பார்வை செய்து, நோய் காணின், போர்க்கு முன்னதோ பின்னதோவென ஆராய்வதை விடுத்தும், மிகச் சிறு நோயென இகழாதும், அரசனுடம்பாத லின், அரிது பேணுதல் வேண்டும். நோயரியதாயினும், மருந்து அரியதாயினும், மலையாது மதியொடு ஆவன செய்ம்மின். சேரன் மெய்யை எமதாகவே கருதி ஓம்புமின். அமைச்சன் : வளவ! நூன்முறைப்படி, குடநாட்டு வேந்தனைச் சிறை செய்தோம். குணங் குறைந்து கொலை களவு முதலாய குற்றமிகுந்த தீவினையாளரைச் சிறை செய்தற்கும், மறம் பிழைப்ப, மான மிகுந்த வேந்தர்களையும் மறவர்களையுஞ் சிறை செய்தற்கும், சிறை செய்தல் என்ற வினையொப்பே யொழியப் பயனொப்பில்லை. தீவினையாளரை மானமுடைய வராக்கவும், தம்முயிர் கொடுக்கும் நல்லவராக்கவுஞ் சிறை செய்கின்றோம். போர்வினையாளரை நம்முயிர் வாங்குங் கூற்றுவராக்கச் சிறை காக்கின்றோம். நம் பகைவர்க்குச் சிறையே வீடாகுமாயின், அதனால் பெருமையிழப்பும் ஆண்மைக் குறைவும் நமக்கே வரும். ஆதலால் இரும்பொறையை இன்றே சிறைவீடு செய்தலுந் தக்கதெனத் தங்கள் திருமுன்பு அறிவிப்பல். சோழன் : நல்ல கருத்து. காலத்து நினைவூட்டினிர். இன்னே செய்யத்தக்க செயல். சுற்றத்தீர்! பாறையன் புலவர் போலுங் கல்வித் திறமுடையவன். நம்மைப் போல் வடவரை வணக்கிய வானவர் குலத் தோன்றல். தமிழ் கூறும் நல்லுலகத் தில், நம்மொடு இகலுதற்கு ஒத்தவலியும் மதிப்பும் பெற்ற சேரர் மருமான். திருப் போர்ப்புறத்துப் போர் சேரற்குத் தோல்வியை யும் நமக்கு வெற்றியையுந் தந்தது என்பர் அறியார். அவர் கிடக்க, சினம் நீங்காச் சேரன் தன்னுடைய பேராண்மையைச் சோழனுக்கும் இனந்தழுவுஞ் சோழன் தன்னுடைய ஊராண் மையைச் சேரனுக்கும் காட்டும் ஒரு நிகழ்ச்சிப்படம் என்பதே அறிவுடைமை. சேரன்பால் என் உறவுச் செய்தியை, அமைச்சரே, உளம்பதியச் சொல்க. எம் வேந்தன் வயப்புலி தம்முள் பொருதல் போன்றதெனக் கடந்த போரை மதிக்கின்றான் என்றும், அப போர்க்களத்து வெஞ்சினம் வீசிய நும் வில்லின் திறத்தைத் தன்னிருகண் களிப்பக் கண்ட எம் வேந்தன் ஒத்த நட்பாடல் விழைகின்றான் என்றும், மயக்கமறச் சொல்லி விருந்தாக அழைத்து வருக. எதிர்கொள்வதற்கு ஆவன செய்விப்பல். (விரைவாக) நல்லது, நல்லது. பலவற்றைப் பேசி நீட்டிக்க இது காலமன்று. பிச்சைக்கு ஓர் ஓடு இரப்பானுக்கு இல்லை என்னுங் குயவன் போல, ஒரு குவளை நீ வேண்டும் ஒருவனுக்குக் காவிரி சூழ்நாடன் இல்லை என்றான் என்றால், அது பாடல் பெறும் பழியாகும். புறப்படுங்கள். கடிது செல்லுங்கள் (சோழன் பார்க்க, மருத்துவரும் அமைச்சரும் தேரேறிச் செல்கின்றனர்.) காட்சி - 3 களம் : சிறைக்கோட்டம். கூற்று : காவலர்கள், அமைச்சன், மருத்துவர், சேரமான் இளையான் : அண்ணா, முன்பாவது தண்ணீர் தண்ணீர் என்றார். இப்போது அந்தக் குரலுங் கேட்கவில்லையே. நாடி ஒடுங்கிவிட்டதோ? பாவம்! என் மனமும் வெண்ணெய் போல் உருகுகின்றது. கிழவன் : தம்பி, அப்படி எளிதாய் நினையாதே. நம்மைப் போலவா அரசர்கள் உடம்பு இருக்கும். அடித்துப் போட்டா லும் உயிர் போவதற்கு ஆறு திங்கள் செல்லுமே. வாளைச் சுழற்றிச் சுழற்றி நாடி வலுப்பட்டிருக்கும். சிறு குழந்தைபோல் உயிர் இழுத்துக் கொண்டிருக்கும்; அவ்வளவு தான். நாடகத்திற் செத்தவன் போலப் பிழைத்துக்கொள்வார்கள். இளையான் : எனக்கு எல்லாம் விளங்க நீதான் சொல்ல வேண்டும். சிறைக்குள்ளே இருக்கிறவர் அரசர் தாமே? கிழவன் : அதிலென்ன, தம்பி, ஐயம். ஆம்; இவர் ஒரு பெரிய வேந்தர். நாமெல்லாம் பிறந்த இந்தப் பூம்பொழில் நாட்டிற்குத் தமிழகம் என்று பெயர். அதுமுப்புறமுங் கடல் முழங்கும் ஒரு பெரிய உலகம். அந்நாட்டில் மூன்றில் ஒரு பகுதிக்கு இவர் அரசர். நம் மன்னர் ஆளுகின்ற வளநாட்டிலே நெல் மிகுதி. இவர் ஆளுகின்ற மலை நாட்டிலே கல் மிகுதி. இளையான் : அப்படியா நிலைமை. அவ்வளவு பெரிய மனிதரா இவர்! இப்படித் தவித்த வாய்க்குத் தண்ணீரில்லாமல் உயிர் விடுகிறாரே. அடடா! இது நிரம்பக் கொடுமை. அரசராக நாமெல்லாம் பிறவாதது நல்லதென்று சொல்லு. நாடில்லாவிட் டாலும், நினைத்த போதெல்லாம் நாம் வேண்டியவளவு தண்ணீராவது குடிக்கலாம். (கையிலிருந்த நீரைக் குடித்துக் கொள்கிறான்) அரசராகப் பிறந்தவர்க்கு நாடிருப்பதாலே தண்ணீர் கூடக் கிடைக்கவில்லை. ஐயோ, பாவம். என்ன உலகம்! கிழவன் : வேலா, நீ நாவிலே பேசுவதொன்று, நடப்பிலே செய்வதொன்று. இளையான் : வில்லியண்ணே, அப்படி மலையாக என்ன செய்கிறேன். பேசுவது போல செய்யத்தான் முடியுமா? கிழவன் : அது முடியாவிட்டால் செய்வது போலப் பேசித் தொலையேன்; அதுவுமா முடியாது. செய்ய முடியாதவன் நாவை வெளியே நீட்டலாமா? உன் வீட்டிலே பச்சைப் பசுங்கிளி யொன்றைக் கூட்டிலே அடைத்து வைத்திருக்கிறாயே, அது நல்லதா? பாவமில்லையா? இளையான் : (வெடி சிரிப்புற்று) பாவமாவது கீபமாவது. இதிலென்ன பாவம் வந்துவிட்டது. கொன்றால் பாவம்; தின்றால் பாவம். வெயிலிலே பறக்காமே, இரை தேட எங்கும் அலையாமே, இரை கொடுத்து நிழலில் யாருங்கூட்டி போகாமே வைத்திருப்பதா பாவம். இதைப்போல நல்ல காரியம் எங்கே பார்க்க முடியும்! கிழவன் : ஒன்றுந் தெரியாதென்று சொல்லி என்னென் னமோ பேசுகிறாயே. அப்பாடே யென்று காவலை விட்டு விட்டு, வீட்டிற்கு எப்பொழுதடா போவதென நினைக்கிறாயே. ஏன்? இங்கு வெயிலிலேயா நிற்கிறாய்? இல்லை. பட்டினியாக் கிடக்கிறாயா? இல்லை. உறங்காமலாவது இருக்கிறாயா? ஏன் வீட்டை நினைக்கிறாய்? இளையான் : (நாணாமல்) அவள் காதலொடு எதிர் பார்த்துக் கொண்டிருப்பாள். என் சின்ன மகள் அப்பா என்று இனிமையாக மடிமேல் விழும். எங்கள் இனத்தாரெல்லாம் தம்பி தம்பி என்று வந்து கூடுவார்கள். வேறெதற்காக வீட்டிற்குப் போக நினைக்கிறேன். தூங்குவதற்காகவா? மறந்திருந்தேன்; நினைவுபடுத்தி விட்டாய். அண்ணா, வீட்டிற்குப் போய் இதோ நொடியில் வந்துவிடுகிறேன். கிழவன் : நல்ல தம்பியப்பா, நீ. என்ன நடக்கிறதென்று பார்க்கவேண்டாமா? தனக்கு நல்லது தேடிக்கொள்ள ஒருவனுக்கு அறிவிக்கிறது. இன்னொருவர்க்கு நல்லது செய்வதென்றால், அவனுக்கு எங்கிருந்துதான் அறியாமை வருகிறதோ, தெரியவில்லை. உனக்கு இனத்தோட இருக்க வேண்டுமென்று ஆசையிருக்கிறது போலத் தானே அந்தக் கிளிக்கும் இருக்கும். இரும்புக் கம்பி போட்ட இருட்டுச் சிறைக்குள் நடமாட முடியாதபடி சாகும்வரை உன்னைத் தனியாக அடைத்துவிட்டு, நூறாயிரம் பொற்காசுகள் தந்தால், ஆம் என்று இருப்பாயா? இருக்க முடியுமா? இனம் இனத் தோடிருப்பதுதான் உலக வாழ்வு. நீ அடைத்திருக்கும் அக்கிளிக்கு ஞாலமுழுதும் அதன் வீடு. வானமெல்லாம் அதன் அரசவீதி. சோலைப் பரப்பு அதன் குடை. பழமெல்லாம் அதன் உணவு. ஆறுகளெல்லாம் அதன் நீர்க்குடம். பார்! எவ்வளவு விடுதலையாக யார்க்குந் தீங்கு செய்யாது, தன்னியற்கைபடி சுற்றி மகிழ்ந்த கிள்ளையை, ஒரு சாண் கூண்டே உலகமாக அடிமைப்படுத்தி அடைந்திருக்கும் உனக்கு, உரிமை என்றால் என்ன தெரியும்? அஃதொரு தூக்கு என்ன விலை என்று கேட்பாய். கொடுமை, கொடுமை. நீ இனத்தோடிருப்பது போலக் கிளியும் தன்னினத்தோடு சேரவேண்டாமா? இல்லை, நீயும் உன் பெண்டு பிள்ளைகளும் கிளிக்கு இனமா? உன்னாசை அது அடைபட்டது. அது செய்த குற்றமிருந்தாற் சொல்லு. வீடு போய் அக்கிளியைப் பார்; எப்பக்கம் சிறிது இடைவழியிருக்கும்; அப்பக்கமாகப் பறந்தோடிப் போய்விடலாமென்று சுற்று முற்றும் பார்த்து மறுகுவதைத் தெரிந்துகொள்வாய். இளையான்: என் வீட்டுக்கிளி முன்னைப்போலில்லை; என் சொற்படி இப்போது முற்றுங்கேட்கும். சொன்னபடி கேளாவிட்டால் உணவு கொடுக்கமாட்டேன், நீர் வைக்க மாட்டேனென்று அதற்கு இப்போது விளங்கிவிட்டது. மூக்குப்போல் அறிவுமுடைய கிளியாக்கிவிட்டேன். எங்கள் வீட்டிலே எல்லாருஞ் சொன்னபடி கேட்டுப் பணிந்து நடக்கும். அடக்கமுடைமையின் அருமை தெரிந்த கிளி அது. கிழவன்: காட்டுக்கிளியை வீட்டுக்கிளியாக்கிவிட்டா யென்று அப்படிச் சொல்லித்தொலை. நீ இப்போது வைத்து வளர்ப்பது கிளியில்லை (என்று கை சேர்த்துத் தட்டிச் சிரிக்கிறான்.) இளையான்: (பதறி) ஐயையோ, அப்படியென்றால் அது என்ன? கிளியென்று நினைத்தன்றோ பிடித்து வந்தேன். கிழவன்: நொப்பராணையாச் சொல்லுகிறேன். வேலா! நீ வைத்திருப்பது மனிதக் கிளி. அதனை உன்னைப்போல் ஆக்கி விட்டாய். அதனாலேதான், நீ தலையை ஆட்டிப் பேசுவது போல உன் கிளியும் ஆட்டிக் கொண்டு பேசுகின்றது. உன் மகனுக்கு, வே. கீரன் என்று பெயரன்றோ? அதைப் போலவே தான் உன் கிளிக்கும், வே. கிளி என்று பெயர். இளையான்: நீ இதுவரை சொன்னதை காட்டிலும், இப்பொழுது சொன்னாய் பாரு, அது நிரம்பப் பொருத்தம். என் மனைவிபோலச் சிலசமயம் பேசுகிறது. அதிலும் பாரு அண்ணா, நான் வீட்டிற்கு நேரஞ்சென்று போனால், என் மனைவி என்ன கத்து கத்துவாள் என்பது உனக்குத் தெரியுமே. அதைப்போன்றுகூடக் கத்தத் தொடங்கிவிட்டது. எனக்குச் சினம் வந்தால், ஆய் ஊய் என்று கூக்குரலிடுவேனென்று யாருக்குத்தான் தெரியாது. அதையும் அந்தக் கிளி கற்றுக் கொண்டிருக்கிறது. எங்கள் வீட்டிலே கற்கவேண்டியவற்றை யெல்லாங் கசடில்லாமல் கற்று, என்ன வியப்பு, பாரு, கண்ட ஆளுக்குத் தக்கபடி, கற்ற படியும் நிற்கிறது., இரண்டுமுறை சொல்லவேண்டுமென்பதில்லை. எதனையும் ஒரே முறையில் படித்துக்கொள்ளும் தெய்வத் தன்மையுடைய கிளி, அண்ண, அது. கிழவன்: (என் தலையில் அடித்துக்கொண்டு) அட, அறிவறை, கிளி உங்களைப் போலப் பேசவேண்டுமென்றா பிடித்துக்கொண்டு வந்தாய்? உள்ளதைச் சொல்லு. இளையான்: அது இல்லவேயில்லை. அதன் கூக்கூ கீக்கீ செவிக்குத் தேன் போல இருந்தமையாலே, பக்கத்திலிருந்தால் நல்லதென்று பிடித்து வந்தேன். கிழவன்: மனைவிபோல அது பேசுகின்றது என்றால், அவள் அருகில் இருக்கும்போது கிளி உனக்கெதற்கு? உன்போல உளறுகிறதென்றால், நீ இருக்கும்போது அவளுக்குத்தான் கிளி எதற்கு? இளையான்: நன்றாகப் பேசுகிறாயே. நீ சொல்வதைப் பார்த்தால், கிளி வேண்டுவதில்லையென்று படுகிறது. பழையபடி பறக்கவிட்டு விடவா? கிழவன்: நீ மிக நல்லவனாய் வந்துவிட்டாய். நான் சொல்வதைக் கேளு. நல்ல பிள்ளை (என்று முதுகில் தட்டிக் கொடுக்கிறான்) கிளி உன் போலவும் உன் மனைவி போலவும் வேறு யார் போலவும் பேசக்கூடாது; கத்தக்கூடாது. அது தன்வியற்கைப்படி கூவவேண்டும். கிளியைக் கிளியோடு பழக்க வேண்டும். மணல்மேல் இரு குழந்தைகள் தம்முன் மழலை மிழற்றுவதைக் கேட்டின்புறுதல்போலச் சோலையிடைக் கிளிகள் தம்முள் கூவிக்கொள்வதைக் கேட்பதே சிறந்த இன்பம். கூண்டில் அடைபட்ட கிளியோசை, இதோ பார், சிறைக்குள் கிடக்கும் அரசர் குரலை ஒக்கும். இனியாவது நடப்பைத் தெரிந்துகொள். கிளியை நீ சொன்னபடி சொல்லச்செய்ய வேண்டுமென்பது நின்னாசை; இவ்வரசைத் தன் சொற்படி கேட்கச் செய்ய வேண்டுமென்பது நம் வேந்தன் ஆசை. அதனாலே தான், நீ கிளிக்குச் செய்வதுபோலச் சோறுந் தண்ணீருங் கொடுக்கா திருக்கிறார்கள். இளையான் : இவையெல்லாம் நீ, எப்படி அண்ணா, அறிந்திருக்கிறாய்! நாமிருவரும் ஒரு தொழிலாளிகள் தாமே, நீ மாத்திரம் எங்கே படித்துக்கொண்டாய்? பள்ளிப்படியிலே விளையாட்டிற்குக் கூட அடிவைத்தறியேனென்று வேறு சொல்லுகிறாய். கிழவன் : நாலு பெரிய மக்கள் பேசுகின்ற பக்கம் செவியைச் சாய்த்தால், அறிவு நாய்மாதிரி ஓடிவருகின்றது. தெரியவேண்டு மென்பது மட்டும் நினைப்பிருந்தால், பிள்ளை முழுதும் இன்பம் போல உலகமுழுதும் அறிவுதானே. எந்தத் தொழிலிலே யிருந்தாலும், நாலுந் தெரிந்துகொண்டாற்றான், நம்மை விலங்கென்று நினைக்கமாட்டார்கள். என்னிடத்திலே நீ கேட்டறிந்ததுபோல நானும் இப்படித்தான் நாளும் நாளும் பலர் பேசுவதைக் கேட்டு அறிந்திருக்கிறேன். படிக்காவிட்டா லும் நல்லவர் பேசுவதைக் கேளப்பா என்று ஒரு பெரியவர் சொல்லியிருக்கிறார் என்று, இன்னொரு பெரியவர் மூன்றா வது பேர் வழிக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த வழியிற் போன எனக்கு அச்சொற்கள் காதிலே விழுந்தன. அன்று முதல் நான் அந்தப்படியே, யார் சொன்னாலும் கேட்டு அறிவுச் செல்வத்தைத் திரட்டிக்கொள்ளுகிறது பழக்கம். அதனாலே குடி முழுகிப் போகவில்லை. நல்லது நல்லது தானே. இளையான்: (பெருமூச்சு விட்டு) அண்ணா, நீ எவ்வளவோ கரை கண்டவன். அவர்களைப் போல எனக்கு நீ தான் பெரிய வன். நான் இதுவரை தெரிந்தும் தெரியாமலும் முரட்டுத்தன மாகச் சிறு பிள்ளைத்தனமாக ஏதுஞ் செய்திருந்தாலும் பொறுத்துக்கொள். வீட்டிற்குப் போனவுடன் முதல் வேலை என்ன தெரியுமா? கிளியைக் கூண்டிலிருந்து எடுத்துப் பிடித்த விடத்திலேயே கொண்டுபோய் விட்டுவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன். அப்புறம் என்னைக் குற்றஞ் சொல்ல மாட்டாயே. நம்மரசரும் நான் செய்தது போல இவரைச் சிறையிலிருந்து விடுதலை செய்வாரா என்று பார்க்கலாமே. என்ன அண்ணா, இன்னுந் தண்ணீர் வரவில்லை. கிணறு வெட்டித் தண்ணீர் எடுக்கிறார்களென்று நினைக்கிறேன். கிழவன் : (சிரித்துக்கொண்டு) நல்ல தம்பி, நீ சொல்வது பொருத்தம். சோழ நாட்டிலா கிணறு வெட்டித் தண்ணீர் எடுக்கிறார்கள், தோண்டினாற் போதுமே. என்றாலும் தண்ணீர் கொடுக்கலாமா கூடாதா என்று அரசர் அமைச்சர் எல்லாரு மிருந்து ஒரு தீர்மானத்திற்கு வருவதற்குக் கிணறு வெட்டுகிற அளவு காலம் பிடிக்கும். இளையான் : அரசர் தேர் வருகிற ஓசை கிண்கிண் ணென்று கேட்கிறதே. கிழவன் : என் கண்ணுக்கு வருகிறதே தெரிகிறது. (அமைச்சரும் மருத்துவரும் தேரிலிருந்து இறங்கிச் சிறையகம் புகுகின்றனர். உள்ளே இரும்பொறை மூலையில் சாய்ந்த வண்ணங் கிடக்கின்றான்.) அமைச்சர் : (வருந்தி) என்ன விது! மெய்ம்மறந்து கிடக்கின்றாரே. மருத்துவர் : (நாடி பார்த்து) போர்ச் செய்கையாலும் குருதியொழுக்காலுஞ் சோர்ந்து கிடப்பதைத் தவிரப் பிறிதில்லை. அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. நாடியோட்டம் நன்றாக இருக்கின்றது. (முகத்தில் பனி நீர் தெளிப்பவே, பொறைக்கு ஒரு தெளிவு பிறக்கிறது. நீ வேட்கையைத் தணிக்கும் பொருட்டுச் சேரன் தானே ஏற்றுக் குடிக்கும் நிலையிலிலன் என்று கருதிக், குவளை நீரை உட்கொள்ளும்படி, மருத்துவர் அக்குவளையை வாயில் சாய்வாகச் சார்த்துகிறார். வாய்க்குள் நீர் புகாதபடி இதழ்களை வைத்துக்கொண்டு, அக்குவளையைத் தன்கையில் வாங்கிக் கொள்ளுகிறான். அதன் கண் நீரைப் பார்த்தவண்ணமே குடியாமல் இருக்கிறான்.) மருத்துவர் : அரசே! நும் வல்லுடற்குச் சிறிதே அயர்ச்சி பிறந்திருக்கின்றது. ஒரு குவளை நீர் குடித்தாற் போதும். தெளிவுண்டாகும். குடித்தருள்க. பிற பின் செய்வேன். அமைச்சர் : வேந்தே! நும்மரசவுடலைப் பேணுதற்கென நட்பிற்குரிய எம் வேந்தால் ஏவப்பட்டு வந்த முதலமைச்சன் யான். எம் வேந்தர் உம்பால் மதிப்பும் நட்பும் உடையவர் என்று சொல்லப் பணித்தனர். ஈண்டு என்னோடு வந்திருப்பவர் நுமக்கு ஆவன செய்ய வந்த அரச மருத்துவர். முன்னரே அறிந்து நீர் கொண்டுவராத எம் பிழை பொறுத்து, இனியுங் கைக் கொண்டிருந்து காலந்தாழ்க்காது, இப்பனிநீர் அருந்துதல் வேண்டும். பின்னர், எம் வளவர் விருந்தினராக அழைக்கும் அழைப்பினையும் ஏற்றுக்கொண்டு, அரண்மனைக்கு இப்பொ ழுதே எங்கூட வந்தருளுதல் வேண்டும். எதிர்கொள்ள அவர் காத்திருப்பர் (என்று கை கூப்புகிறார்.) பொறை: (அமைச்சர் மருத்துவர் முகங்களைப் பாராதது, தன் கண்ணீர் குவளைத் தண்ணீரில் விழுந்து நிறைந்து வழியும்படி அழுதவனாய்க், குவளை நீரையே பார்த்த வண்ணம்) ஆ! சேரர் குலம். ஆ! என்னுயிர்ச் சேரர் குலம். பெருந்தேவி உயிர்க்குங் கரு இறந்து பிறப்பினும், முற்றாக்கரு பருவ காலத் திற்கு முன் உறுப்பற்ற ஊன் பிண்டமாகக் கருப்பையினின்று வீழினும், போரிற் பகைவரைக் கொன்று அவரால் கொல்லப் பெற்ற அரசர்க்கு ஒப்பாகவே மதித்து, இறந்த கருவையும் வீழ்ந்த பிண்டத்தையும் வாளால் வெட்டுதல் சேரர் குலம். நோய் தாக்கக் கண்மூடி வீட்டில் மடிந்து மண்ணிற்கு உணவாகாது, பகைவர் வாள் உடம்பொடு நட்பாடப், போரில் கண்மூடாது விண்ணிற்கு விருந்தாதல் சேரர் குலம். சான்றோர் பலருந் தன்னோடு வடக்கிருக்கும்படி, மார்பிறுதிப் புண்ணை முதுகின் முதற் புண்ணென்று நாணி, உயிர் காவாது மானங்காத்த சேரலாதன் பிறந்தது சேரர்குலம். உடன் வந்த மலைநாட்டு மறவரெல்லாருந் தொகையாக மடியவும், அதனைப் பார்த்தும் மடியாது, வயிற்றுத் தீத்தணிய, நீர் கேட்டு மருத்துவரை வரவழைத்த யான் பிறந்ததுஞ் சேரர்குலமோ? வீரரெல்லாம் விண்ணிற்கு விருந்தாக, மண்ணில் இப்பகைவனுக்கு விருந்தாகும் யான் பிறந்ததுஞ் சேரர்குலமோ? காவிரி நீர் குடிக்கக் கடறும் மலையும் கடந்து நாற்படையோடு வந்த யான் பிறந்ததுஞ் சேரர்குலமோ? சீ! சீ! யானும் அக்குலமும் இமயமுங் குமரியும் போலும்; மண்ணும் வானும் போலும். என்னுயிர் எனக்குப் பெரிதாயிற்று; போர்முரசு செவி கேட்க, வில்லைக் கண் பார்க்க, நாணிற் கைசெல்லும் குழவிகள் ஈனுஞ் சேரநாடு எனக்குச் சிறிதாயிற்று. என்னுயிர் எனக்குப் பெரிதாயிற்று; வயப்புலித்தாக்கற்குப் பின்வாங்காது, மருப் பினாற் குத்தும் மதயானை வாழுஞ் சேரநாடு எனக்குச் சிறிதாயிற்று. என்னுயிர் எனக்குப் பெரிதாயிற்று; புலவர் பப்பத்துப்பாடல் பாடுவதற்குப் பொருளாகிய மறம் பெருகுஞ் சேரநாடு எனக்குச் சிறிதாயிற்று. (பெரிதும் அழுகிறான். இருவரும் என்னாமோ என்றஞ்சுகின்றனர்.) (வெகுளிச் சிரிப்போடு) இதோ, என் கையிலிருப்பது என்னுயிர் வாழ்விக்க வந்த தண்ணீர். இல்லை, இல்லை. என் உடம்பிலிருந்து எடுத்துச் சோழன் காட்டுஞ் செந்நிறப் புண்ணீர். இதோ, என் கண் முன் காண்பது, நிலையாவுயிரை நிறுத்த வந்த தண்ணீர். இல்லை, இல்லை. சேரா! இன்னுமா உயிர் உனக்குப் பனங் கட்டி; உயிர்விட்டு இனியாகிலும் எம்மோடு சேர்க வென்று வானோர்க்கு விருந்தாய் எம்முன்னோர் வடித்த குருதிக் கண்ணீர். இதோ, யான் பார்ப்பது என்னாவை நனைக்கத்தந்த தண்ணீர். இல்லை. இல்லை. மலைநாட்டுத் தேனினும் இனிதெனக் கருதிய என்னுடலத்தை நிலத்திலிட்டுத் தெளிக்க வந்த மண்ணீர், இதோ, என் ஐவிரல்கள் பற்றியிருப்பது, என்வேணாவா நீங்கக் காவிரி நாடன் விடுத்த தண்ணீர். இல்லை, இல்லை நாட்டினும் குலத்தினும் மானத்தினுங் காட்டில், உயிர் சிறந்ததெனக் கருதிய கணைக்காலா! நிலத்திற்கு இரும் பொறையே! உன்னிலை சேரர்க்கே யன்றித் தமிழக வேந்தர்க்கே இழிவன்றோ என்று நாணிய என் அருமைச் சோழப் பகைஞன் என்னுயிர் உண்ண விடுத்த உண்ணீர்: என் உயிர் உண்ணும் நீர் (சேரன் மெய்த்துடிப்பையும் முகமாற்றத்தையும் கண் வெறிப்பையும் கண்டு, இருவரும் மனங் குழம்புகின்றனர். மருத்துவர் சேரன் கையைப் பிடித்துக் கொள்கிறார். அமைச்சர் அவனை அணைத்துக் கொள்கிறார்.) (உணர்ச்சி பெருக) படைமடியப் போரிற்றோற்ற பின்னும் போகா என்னுயிர், நாய்போற்றளை பூண்ட பின்னும் போகா என்னுயிர், இருட்சிறையில் தலைகுனிய நுழைந்த பின்னும் போகா என்னுயிர், நாவறள நீர் இரந்த பின்னும் போகா என்னுயிர், அந்நீர் வரத்தாழ்ந்த பின்னும் போகா என்னுயிர், வந்த நீரைக் கைக்கண் ஏந்திய பின்னும் போகா என் தமிழ்ச் சிற்றுயிர், அதனைக் குடிக்கு முன்பாவது போ... (குருதிக் கொதிப்பு மேலிட்டு, மார்படைத்து மாய்கின்றான்.) வெண்பா மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார் உயிர்நீப்பர் மானம் வரினே - செயிர்நீத்த பாவின் இலக்கியங்காண் பண்டொருவாய் நீர்குடியாக் கோவின் குலங்காத்த கோள். 2. உழவப் புலவன் நளியிரு முந்நீர் ஏணி யாக வளியிடை வழங்கா வானஞ் சூடிய மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர் முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும் 5. அரசெனப் படுவது நினதே பெரும! அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும் இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் அந்தண் காவிரி வந்துகவர்பு ஊட்டத் தோடுகொள் வேலின் தோற்றம் போல 10. ஆடுகட் கரும்பின் வெண்பூ நுடங்கும் நாடெனப் படுவது நினதே யத்தை; ஆங்க நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே! நினவ கூறுவல். எனவ கேண்மதி. அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து 15. முறைவேண்டு பொழுதிற் பதனெளியோர் ஈண்டு உறைவேண்டு பொழுதிற் பெயல்பெற் றோரே; ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ மாக விசும்பின் நடுவுநின் றாங்குக் கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை 20. வெயில் மறைக் கொண்டன்றோ அன்றோ; வருந்திய குடிமறைப பதுவே கூர்வேல் வளவ! வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக் களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப் 25. பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே; மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் இயற்கை யல்லன செயற்கையிற் றோன்றினும் காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம். 30. அதுநற் கறிந்தனை யாயின் நீயும் நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக் குடிபுறந் தருகுவை யாயினின் அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே - புறநானூறு - 35 வெள்ளைக்குடி நாகனார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பாடிப் பழஞ் செய்க் கடன் வீடுகொண்டது. 2. உழவப் புலவன் களம் : கிள்ளி வளவன் அரச வாயில் காலம் : காலை கூற்று : வெள்ளைக்குடி நாகனார் என்ற புலவரும். வாயில் காப்பவனும் நாகனார் : (விரைவோடு) வேந்தன் இருப்பது இவ்விடந் தானோ? உள்ளே இப்பொழுது இருக்கின்றானா? காவலன் : ஏ! ஐயா. திறந்த வாயை மூடு. மூடிய வாயைத் திறவாதே. (வேறு பக்கந் திரும்பிக்கொண்டு) மறு பிறவி எடுக்கும் அளவுக்கு மூத்தும், உலக வழக்கம் தெரியவில்லை. இவர் வைத்த ஆள் போல, வேந்தர் பெருமானை அவன் இவன் என்று பேசுகிறார். நாகனார்: உலகத்திலே எனக்குப் பின் பிறந்த அவனை ...... காவலன் : என்ன இது. சொல்லச் சொல்ல மீண்டும் மீண்டும். ஓய் நிறுத்து ஐயா, உன் வீட்டில் மாடு மேய்த்தவரோ? நாகனார் : (தொடர்ந்து) அதுவும் நான் பார்க்கப் பிறந்த சோழனை, அப்படிப் பேசாமல் வேறு எப்படி அப்பா பேசுவது? உனக்குப் பின் பிறந்தவர்களை நீ அவர் இவர் என்றுதான் அழைப்பாய் போலும். இனி அங்ஙனம் சொல்லாதே. பார்ப்பவர்க்குக் கேலியாகத் தெரியும். காவலன் : அரசர் என் கண் பார்க்கப் பிறந்து, கைதூக்க வளர்ந்தவர் தாம். அதனாலே (மெல்ல சிரித்துக் கொண்டு) நானும் உம்மைப் போலப் பேசலாமா? நீ என்று சொன்ன வாய்க்குச் சோறு கிடைக்குமா? என்னை நீ என்று சொல்லு கின்ற வாயால் அவரை அவன் என்று சொல்லுகின்றீரே, உமக்கு என்ன ஊற்றம்! நாங்களிருவரும் உம் அறிவிற்கு ஒரு மாதிரியாகத் தெரிகிறதோ? (இரக்கத்தோடு) உமக்கு நல்ல வேளை. என் முன் சொல்லித் தொலைத்தீர். அரசரிடம் சொன்னால், புழுப்போல் நாக்குத் துண்டிக்கப்படுமே. நாகனார் : நீ என்றால் இழக்கமா? உன் தாய் வயிற்றினின் றும் எட்டு மாதத்திலே வெடித்துக்கொண்டு வந்தனையோ? இல்லை. பன்னிரண்டு திங்கள் வரை சிறைப்பட்டுக் கிடந்த னையோ? பத்து மாதத்திற் பிறந்தவன் தானே நீ, உன் வேந்தனும் அப்படித்தானே. காவலன்: (பேதைமையாக) நான் எந்த மாதத்திற் பிறந்தவ னென்று எனக்குத் தெரியாது. பெற்ற ஆத்தாளைக் கேட்டாலே அது தெரியவரும். நாகனார் : (கடகடவென்று சிரித்துக்கொண்டு) எவ் வகையிலும் நீ அரசனைவிடத் தாழ்ந்தவனல்லன் ; ஒருபடி உயர்ந்தவன் என்றுகூடச் சொல்லலாம். காவலன் : (விரைந்து) நீர் சொல்வதிலே முக்காற் பங்கு சரியில்லை. சோழவரசரைவிட நான் உயர்ந்தவன் தான். நீர் சொல்வதுபோல ஒருபடி அளவில்லை. இருவரும் நின்றால், காற்படி அளவுதான் நான் உயரமாக இருப்பேன். நாகனார் : தம்பி, உனக்கு நல்ல மூளை. காவலன் : இல்லாவிட்டால் என்னைக் காவற்காரனாக வைப்பார்களா? நாகனார் : (அவன் பெரிய தலையைப் பார்த்துக் கொண்டு) உனக்கு மூளை ஒருபடி இருக்கும்போல் இருக்கின்றதே. காவலன் : ஆடு மாடுகளுக்கே அரைப்படி மூளை இருக்கும்போது, மனிதனுக்கு ஒரு படி மூளையாவது இருக்க வேண்டாமா? நாகனார் : உன் அறிவின் அழகே அழகு! குடிகளைக் காக்குங் காவலன் அவன். அவ்வளவு தானே. நீயோ, அவனை யும் காக்கும் காவலன் அன்றோ! நீ எவ்வகையிற் சோழனைவிடக் குறைந்தவன்; அவன் கையிலிருப்பது போலத்தான் உன் கையிலும் கோலிருக்கின்றது. காவலன் : சோழர் கையிலிருக்கும் கோல் (தன் கம்பைக் காட்டி) இவ்வளவு நீளமுடையதுமில்லை. கனமுடையது மில்லை. நாகனார் : ஏன்? அப்பா, இதனாலேகூடத் தெரியவில் லையா, நீ அவனையும் காக்கும் காவலன் என்று. நல்லது, சோழனைப் பார்க்க..... காவலன் : (தன்னைப் புகழ்ந்தாரெனப் பெருமிதங் கொண்டு) ஐயா, பெரியவரே. தெய்வம் ஏறப்பட்டவன் போலத் திரும்பத் திரும்ப அவன் என்று சொல்கிறீரே. உம் செயல் பிச்சை வாங்கப் புகுந்த புதியவன், “ஐயா, தந்தையே பிச்சை போடுங்கள்” என்று கேட்பது போலன்றோ முறைகெட்ட நிலையாய் இருக்கின்றது. இதுவரை நீர் இப்படியில் ஏறியதில்லையோ? (இரக்கத்தோடு) பாவம். நானாவது சொல்லித் தருகிறேன்; கேட்டுக் கொள்ளும். அரசருக்கு முன்பு சென்று, கைகூப்பி, வேந்து வாழ்க, இறை வாழ்க, நின்குடை வாழ்க, கோல் வாழ்க என்று புகழ்ந்த பிற்பாடுதான் எதனையும் கூறல் வேண்டும். கூறி முடிக்கும்போது மறுபடியும் வாழ்க என்று சொல்லுதல் வேண்டும். தெரிந்துகொண்டீரா? நாகனார் : நீ சொல்வதுபோல முதலிலும் முடிவிலும் வாழ்க என்று சொல்லுகின்றேன். (தமக்குள் சிரித்துக் கொள்ளு கிறார்) காவலன் : மன்னரைப் பார்க்க இவ்வழியாகத் தான் செல்லவேண்டும். இவ்வாயில் யாரும் தடையின்றிப் போய் வருங் கடைத்தெரு என்று எளிதாக நினையாதீர். இங்கு நான் ஒருவன் நிற்பதனாலேயே, தடையுடையது என்று தெரிகின்ற தன்றோ? நீர் வந்த செய்தி வளவரின் அறிவிக்கத்தக்க அருமைப் பாடு உடையதா? அருமையுடையதேயாயினும், சொல்லுவதற்கு நீர் உள்ளே செல்லத்தக்க பெருமையுடையவரா என்பதைக் காண்பதற்குத் தானே என்னை இவ்விடத்து நிறுத்தியிருக் கிறார்கள். நாகனார் : அதற்கில்லை யென்றால், உனக்குப் பதில் ஒரு மரம் நிற்கலாமே. காவலன் : இல்லை. ஒரு மாடுதான் நிற்கலாமே. நாகனார் : நன்றாகக் கேட்டாய். உன் அறிவே அறிவு. மாடோ நிறுத்தினவிடத்து நில்லாது போய்விடும். மனிதன் தான் இப்படி அப்படி அசையாது, பார்ப்பதற்கு மரமாகவே நிற்பான் என்று கருதித்தானே உன்னை நிறுத்தியிருக்கிறார்கள். காவலன் : உள்ளதை உள்ளபடி சொல்கிறீர். நல்லது, நீர் சொல்ல நினைக்கும் செய்தி யாது? நாகனார் : (இழுத்தாற்போல) அதுவா, என்னை நீ உள்ளே போகவிடல் வேண்டும் என்பதுதான். காவலன் : அதுவில்லை, முதியவரே! (செவிடு என நினைத்து உரத்தி) உள்ளே போய்ச் சொல்ல வேண்டிய அலுவல் என்ன? நாகனார் : (தாமும் உரத்தி) அதுவா? உள்ளே போய்க் கொண்டன்றோ சொல்லவேண்டும். அகத்திருந்து பேசவேண்டி யதைப் புறத்து நின்று சொல்வது எப்படி? திரைப் பேச்சைத் தெருப் பேச்சாக்கலாமா? காவலன்: அப்படியானால், உள்ளே விடுகிறேன்; போய்க் கொண்டு சொல்லும் (போகவிடுகின்றான். நாகனார் உள்ளே போய்க் கொண்டு நில்லாமல் மேலும் நடக்கத் தொடங்கு கிறார்.) ஓய், பெரியவரே நில்லும். செய்கிறபடி சொல்லமாட் டீரோ? உள்ளே வந்துவிட்டோம்; இவன் தயவு இனி நமக்கு எதற்கு? என நினைத்திட்டாற்போல் தெரிகின்றதே. அரசரிடம் சொல்லப்போகின்ற காரியம் என்ன ஐயா. (முன் வந்து நின்று மறித்துக் கொள்கிறான்.) நாகனார் : என்ன, தம்பி! அறியாப் பிள்ளைபோல நடிக்கின்றாய். அதை அரசனிடம் அன்றோ சொல்லவேண்டும். தன்னுட் பேசுவதும், ஒருவருக்குச் சொல்லுவதும், உலகோருக்கு உரைப்பதும் எனச் சொல் பலதிறப்படும். துவாரம்பட்ட மட்கலம்போல, எல்லாவற்றையும் எல்லாரிடமும் கொட்டித் தொலைக்கலாமா? காவலன் : இப்பொழுதுதான் என் வழிக்கு வந்து விட்டீர். சொல்லிற் பிடி கொடுத்துவிட்டீர். நீர் மட்டும் வந்த காரியத்தை எல்லாரிடமும் சொல்லக்கூடாதாக்கும். நான் மட்டும் யார் வந்தாலும் எல்லாரையும் உள்ளே விட வேண்டுமாக்கும். நீ என்றால் ஒருமுறை நான் என்றால் ஒரு முறையா? நீ நானாதலும் நான் நீயாதலும் உண்டுதானே. பேச்சில் வல்லவராக இருக்கிறீர். சிரிக்கச் சிரிக்கச் சொல்லி, நடையைக் கட்டகிறீர். நான் ஒன்று உம்மைக் கேட்பேன். என் மனத்திற்குச் சரியென்று படும்படி விடை சொல்லும். உம் வீட்டிற்குள்ளே நீர் போவதுபோல, உள்ளேயும் போகலாம். பெரிய அரசர்க்கெல்லாம் அவசரைப் பார்க்க, யார் வந்தாலும் தங்குதடையின்றி உள்ளே விடலாமா? எல்லோருமே பார்ப்பதென்றால், அரசர் ஏன் ஓர் அரண்மனை கட்டி அதற்குள்ளே இருத்தல்வேண்டும்? அம்பலக் கல்லிலேயே இருந்துவிடலாமே? நானும் இவ்வளவு பெரிய மனிதன், மொக்கைக் கம்பு ஒன்றை ஊன்றிக் கொண்டு, இடையன்போலக் கால்கடுக்க நிற்க வேண்டியதில்லையே. வீடு போ போ, காடு வா வா, என்று கூப்பிடக் கூடிய, தள்ளாடும் பருவத்திற்கு வந்த உமக்கு, என்னைய்யா, அரசரிடம் வேலை? ஒருவன் கேட்கி றானே என்று என்னவாவது சொல்லவேண்டுமா இல்லையா? நையாண்டி பண்ணுகின்ற உம்மை உள்ளுக்கு விடலாமா? என்னிடத்தில் பேசுகின்ற இப்பழக்கம்தானே அவரிடமும் வரும். பழக்க வழக்கந் தெரியாதவரைப் போக விடுத்தால் நாளைப் பின்னை என் தலை மேலே இடிவிழுமா இல்லையா? நாகனார் : நீ கேட்ட கேள்வியே கேள்வி! கடவுளுக்கும் இறைவன் என்று பெயர். அரசனுக்கும் . . . . காவலன் : அவருக்கும் இறைவரென்றுதான் பெயர். அதனாலென்ன, கெட்டுப்போயிற்று. நாகனார் : அப்படிச் சொல்லாதே, தம்பி! கடவுள் எல்லாருமறிய, அம்பலத்திலே இருப்பதுபோல அரசனும் இருக்க வேண்டியவன் தானே. காவலன் : பெயர்ப் பொருத்தம் என்னவோ சரிதான். நடைப்பொருத்தம் வேறு மாதிரியாகவன்றோ இருக்கின்றது. அரசர் அரண்மனைக்குள் அன்றோ இருக்கின்றார். நாகனார் : அவன் உள்ளேதான் அமரவேண்டுமென்று நானுஞ் சொல்லுவேன். காவலன் : என்ன கிழவரே! பருவ மயக்கம் வெளிப்படு கின்றதே. முன்னுக்குப்பின் முரணாகப் பிதற்றலாமா? சொன்னதைக்கூடவா திரும்பச் சொல்லத் தெரியாது. நாகனார்: முன்னுக்குப்பின் என்பது முரண்தானே, தம்பி! கடவுள் நாம் நினைப்பதைச் சொல்லாமலே அறிந்துகொள் வார். உன் அரசனுக்கு எதுவும் சொன்னாற்றானே தெரியும். காவலன் : ஆம்; ஆம். நீர் வந்திருப்பதைக்கூட நான் சொன்னாற்றான் அவருக்குத் தெரியும். நாகனார் : நான் சொல்லுவதைப் பட்டென விளங்கிக் கொள்ளுகின்றனையே. இன்னவன் சொல்லுவது இதுவென மயக்கமின்றி அறிந்துகொள்ளும் அறிவு மனிதனுக்கு இருந்தாற் போதும்; உலகம் வாழும். காவலன் : எனக்கு அந்த அறிவு உண்டோ? நான் ஒரு மனிதனா? நாகனார் : நீ ஒரு மனிதனில்லாவிட்டால், நான் பேசிக் கொண்டு நிற்பேனா? நீ கேட்ட கேள்வியை மறந்துவிட்டாயே. தம்பி! வேந்தன் பலரறிய மன்றத்திலே வீற்றிருந்தால், குடிமக்கள் தங்கள் குறைகளைச் சொல்லிக்கொள்ள நாணார்களோ? நாடு குறைபட, வினையாளர்கள் செய்யும் சீர் முறைகெட்ட செயல்களைப் பலர் அறியக் கேட்டால், அரசனுடைய வணங்காத் தலையும் தானே வணங்காதோ? உலகத்தில் கவலைக்கிடமான பெரிய காரியங்களும் உரியாரைக் கண்டு, சூழ யாருமில்லாது தனிமையில் பேசினால் செவ்வனே முடிவுபெறும். பலர் குழுமிய சூழல் நடுவில் உரையாடினால், செருக்கும் பொய்மதிப்பும் விரைவும் ஆகிய திரைப்படலங்கள் உண்மைக் காட்சியை மறைக்கும். அதன்மேலும் மற்றையோர் குறுக்குப் பேச்சு தன் நினைவுக்கயிற்றை அறுத்துத் திட்பக் கல்லை மணலாக்கும். ஆதலான் அவரவர் குறையைத் தனியே கேட்டறிந்து, முறை செய்யத்தான் அரசன் தனியிடத்திருக் கிறான். அதனாலேதான் அவன் தனிமையை மக்களும் விரும்புகின்றனர். மயிரிழை போன்ற இச்சிறு அறிவுகூட இல்லாத நீ, அரசனுக்குக் காவலனாக அமர்ந்த பொருத்தத்தை என்னென்பேன்! காவலன் : முதியவரே! எம் மன்னர் அம்பு பகைவர் நெஞ்சிலே தைப்பது மாதிரி, என் மனம் நறுக்கென்னும்படி குத்திப் பேசுகிறீரே. மயிரிழை என்றால் என்ன? சிறு பொருளா அது, இரு கண்ணுக்குந் தெரியாமல், சோற்றிலே கிடந்து வாய்வழியா வயிற்றிலே புகுந்து, அன்று என்னைப் படுத்திய பாடு விளக்கெண்ணெய் தடவிய என் மனைவிக்கு அன்றோ தெரியும்! சோற்றிலே கல்லுக் கிடக்கிறதென்று பல்லுக் காட்டினால் ஒழியத் தெரியாத மக்களுக்கு, இந்த அறிவு இல்லாதது குற்றமே இல்லை. உம்; நல்லது, நீர் சொல்லுவதைப் பார்த்தால், வேந்தருக்கும் குடிமக்களுக்கும் இடையே நான் ஏன் விலங்காக இருக்கவேண்டும். அறிவிலி என்று என் மானத்தைக் கப்பலேற்றுகிறீர். இதனை மன்னரிடம் சொல்லி வேலையை விட்டு விலகிக் கொள்வேன். நான் என்ன நொண்டியா? உம்மைப்போலக் கிழவனா, தடியனாய் நிற்பதற்கு. நாகனார் : தம்பி! அப்படிச் சொல்லாதே. வேலையை விட்டுவிடாதே. நீ இங்கே நிற்கத்தான் வேண்டும். நீ வெளியே நிற்பதனாலன்றோ, வருகின்ற மக்கள் அரசன் உள்ளே இருக்கிறான் என்று தெரிந்துகொள்கிறார்கள். பார்க்க வரும் மக்களை வடிகட்டிவிடுவதற்காக நீ இங்கே நிற்கவில்லை. காவலன்: அதற்கென்றுதானே நினைத்துக் கொண்டிருக் கிறேன். நாகனார் : நன்று; மிக நன்று. வடிகட்டிய அறிவுடைய நீயோ அதற்கு ஏற்றவன். வேந்தன் என்றும் யார்க்கும் மருத்துவர் போல் காட்சிக்கு எளியவன். குடி மக்கள் கூப்பிட்டால் உறக்கத்திலும் விழிக்கவேண்டியவன். குறை கூறினால் கனவிலும் முறை செய்யவேண்டியவன். அவ்வாறு தாய்போல எளியவனை அருமையாக்கும் பேயோ நீ. அதற்கோ நீ தடிகொண்டு நிற்கின்றாய். காவலன் : நான் அரிய வேயுமல்லன்; வருவாரையெல் லாம், பரத்தை இல்லம் போல உள்ளே விட்டுக் கொண்டு இருத்தற்கு உரிய பேதையுமல்லன். நாகனார் : பேயினும் பெரியவனே! பேதையினும் உயர்ந்தவனே! பரத்தை இல்லத்திற்கு வருவார் ஆண்மையிலும் சிறந்தவனே! காவலன் : என் மனங்குளிரச் சொன்னீர். அளிகூர்ந்து என் கடமை யாது என்று தெரிவிப்பீர். நாகனார் : விருந்தினர் போல் வருங் குடிமக்களை வீட்டவன்போல் முகமலர்ந்து, வம்மின் என்று இன்சொல் வழங்கி நல்வரவு கூறுவது நின் கடன். வேந்தன் நான் மகிழ் இருக்கை இது; செல் வழியிது. காணும் செவ்வியிது என்று கைகாட்டிமரம்போல் நின்று அறிவித்தல் நின் கடன். காவலன் : (இகழ்ச்சியாக) பூஉஉ, என் வேலை இவ்வளவு தானோ? ஏதேதோ வானக்கோட்டை கட்டிக்கொண்டிருந் தேன். இனி என் பாரங் குறைந்தது. நீர் பேசுவதைப் பார்த்தால், என்னைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு படித்தவராகக் காணப்படுகின்றீர். அரசரிடம் சொல்லும் காரியத்தைக்கூட வெளியிட வேண்டா. அது கிடக்கட்டும். நீர் யார் என்று சொன்னாற் போதும். நாகனார் : நானா? உன் அரசனுக்குத் தாய் என்று வைத்துக் கொள்ளேன். காவலன் : (வெடி சிரிப்புற்றுக் கண்ணைத் துடைத்துக் கொண்டு) ஓ! ஓ! நீங்கள் தாயா? குமரியாய்க் கிழவியாயவரோ? இந்த இழவை முதலிலே சொல்லியிருந்தால் மகனைப் பார்க்க மாடுபோல் குறுக்கே நிற்பேனா? அவரையே இங்கு அழைத்து வந்திருப்பேனன்றோ? (பின்னும் நகையாக) நீங்கள் அரச குலமா? ஏனோ இவ்வளவு மெலிவு? ஆணுடையில் உள் வரிக்கோலம் கொண்டு பட்டப்பகலில் வரலாமா? நல்லது; நல்லது. உங்களைப் போன்றாரைக் கட்டாயம் வந்த வழியே போகும்படி செய்க என்பது எனக்குப் பெருமான் கட்டளை. நாகனார் : (சினந்து) மடமைக் காவல! நான் தாயென்று சொல்லக் கேட்டதும் நீ பேதுற்றாய். தாய் என்றால் பெண் பிறவியாகவே இருத்தல் வேண்டும் என்று நீ எங்குக் கற்றனை? பள்ளிப்படியேறியதுண்டா? இக்கோல் பிடித்த கை ஏடு பிடித்ததுண்டா? வரியெழுத்தைப் பார்த்த தலையெழுத்து உடையையோ? பெண்ணேயன்றி, ஆணல்லாத பொருள்களாகிய தமிழ் மொழியையும், தமிழகத்தையும், தாய்மொழி என்றும் தாயகம் என்றும் சொல்லற்குத் திறவாது, உண்ணற்குத் திறந்த வாயுடையையோ? பிறர் சொல்லியும் கேளாது விரிந்த செவியுடையையோ? தாயின் தன்மை கொண்ட பொருளெல் லாம் தாயெனப்படும் என்ற தமிழ் மரபு கூடக் கல்லாத காவலனே! நீயோ, யாம் உட்புகுதற்கு அருகதையுடையேம் என்பதைக் கணிக்க வல்லவன். முல்லை நறுமணத்தைப் பொடியுண்ணும் மூக்கு அறியுமோ? பாலின் சுவையைப் புகையிலை அதக்கிய வாய் அறியுமோ? ஏடா! அரசனுக்குத் தாய் நான் என்று சொன்னதிற் பிழை எவனோ? காவலன் : (அச்சத்தோடு) பெரியவரே! பாட்டன் முன்பு பேரன்போல விளையாடிப் பார்த்தேன். அது பிழையா? வயது ஆக ஆகச் சினம் பெருகும் என்று படித்ததை மறந்துவிட்டேன். கையின் ஆற்றலைக் கம்பு அறியாது என்றபடி உங்கள் வாயாற்றலை யானோ அறிய முடியும்! (பணிந்து) என்னை வெட்டிப்போடுங்கள்; பட்டுக்கொள்கின்றேன். (தலைகொடுக் கிறான்.) நாகனார் : தம்பி! நீ நல்ல பையனாக வந்துவிட்டாய். மறப்பதற்கா படிப்பது? மறதி கேடு தரும்; கேடு மறதியைத் தரும் என்று இனியாவது அறிந்துகொள். காவலன்: தாயென்று சொன்னீர்களே, எனக்கு விளங்கவே மாட்டேன் என்கின்றது. நாகனார் : அப்படிக் கேட்டால் சொல்லுகின்றேன். நீ எனக்குச் சோறு போட்டு என் உடலைப் பேணி வளர்த்தால் நீ எனக்குத் தாய். காவலன் : நீங்கள் எனக்குச் சோறு ஊட்டி வளர்த்தால்.... நாகனார் : நான் உனக்குத் தாய் தான். காவலன் : அப்படியானால் எனக்குந் தாய்; அரசருக்கும் தாயா நீங்கள்? நாகனார்: இது உனக்கு மிக மிகப் புதுமையாகத் தோன்று கிறது. கணவன் உடலைப் பேணுவதனாலே, மனைவியைக் கூடத் தாய் என்று முறை கூறியிருக்கிறார்கள் என்றால், வேறு என்ன சொல்லுவது? காவலன் : படித்ததெல்லாம் மறந்துவிட்டேனென்று நினைத்துக் கொள்ளாதீர்கள். தாய்க்குப் பின் தாரம் என்பது ஒரு பழமொழியன்றோ! நாகனார் : நான் ஒரு உழவன். காவலன்: மேலே எதுவுஞ் சொல்ல வேண்டாம். எல்லாம் தானே விளங்கிப் போயிற்று. அரசர் முதலாக நாட்டிலுள்ள அனைவருக்கும், ஏன் விலங்கு பறவைகளுக்குக்கூட நீங்கள் தாம் தாயார். நாகனார் : நாங்கள் உழுது பயிர் வளர்த்து விளைத்துச் சாப்பாட்டிற்கு நெல் தராவிட்டால்..... காவலன் : நெல் தரத்தான் வேண்டும். இல்லாவிட்டால் என்பாடு கூப்பாடுதான்; பின் சாக்காடுதான்; முடிவில் சுடுகாடுதான். எல்லாம் நீங்கள் சொன்ன பிற்பாடுதான் தெரிகின்றது. இந்த மூளைக்குப் பிறர் சொல்லியே எதுவும் தெரிய வேண்டியிருக்கின்றது. (கம்பால் தன் தலையில் இரண்டு போடு போட்டுக் கொள்கின்றான்.) நாகனார் : காவலாளி! வருந்தாதே. உனக்குமட்டுமன்று; யாருக்கும் எதுவும் நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும். காவலன் : வந்த காரியத்தை மறந்திட்டாற்போலத் தெரிகின்றது. என் கூடவே நிற்க வந்நீர்களா? உள்ளே போக வந்தீர்களா? (உள்ளே போக விடுகின்றான்.) காட்சி - 2 களம் : அரசவை காலம் : காலை கூற்று : கிள்ளிவளவன் என்ற சோழனும், நப்பசலையார், கோவூர் கிழார், நல்லிறையனார், தாயங்கண்ண னார் என்ற புலவர்களும், நாகனார் என்ற உழவப் புலவரும். கிள்ளி : புலவர் பெருமக்களே! சின்னாட்களாக உங்களைக் காணப்பெறாது கவன்றேன். இன்று ஒரு முகமாகக் காணப் பெற்றமையான், பேருவகை எய்தினேன். உங்கட்கு யாவரும் கேளிர். அவர் வாழ்க்கைத் தீதும் நன்றும் உள்ளபடி அறிந்து கொள்ளும் ஆர்வம் உடையவர்கள். உங்களுக்கு யாதும் ஊர். நாடோடிகள் போலச் சென்று சுற்றிப் பரந்த அறிவுடைய வர்கள். ஆதலின் நீவிரன்றோ எம் குடிமக்களின் துயர் காணவும், என் நாட்டின் நிலை காணவும் வல்லீர். பழியேல் அஞ்சாது எதிர்த்து இடித்துக் கூறவல்ல பேராண்மையும் ஆகிய இரு பண்புகளும் நாட்டிற்கு வேண்டும். இன்றேல், அரசு என்ற ஊர்தி பள்ளத்துப் புக்குப்பட்டுவிடும்; அன்றி மேடு ஏற மாட்டாது பின்வாங்கும். தான் பட்ட துயரை என் எதிரே வந்து மனங் கொளச் சொல்லும் பிறப்புரிமை என் நாட்டு ஒவ்வொரு குடிக்கும் உண்டு என்பது யாராலும் அறியப்பட்டதொன்று. அவ்வுரிமையை மக்கள் யாரும் செலுத்தவில்லை. அதற்குக் காரணம், அவர்கள் இதுவரை துன்பம் யாதும் உறவில்லை என்று ஆகுமா? யான் அவ்வாறு கருதேன். மக்கட்குப் பிறவி யிருக்கும் வரை துன்பமும் பிறத்தல் இருக்கும் என்ற தெளிவா னன்றோ பிறப்புரிமை என்று ஒன்று விதிக்கப்பட்டது. என் குடிமக்கள் தம் அறியாமை காரணமாகவும், தம்முட் பகை காரணமாகவும், என் வினையாளர் நடந்துகொள்ளும் போக்கு காரணமாகவும், நான் செய்த விதி காரணமாகவும் உழக்கும் துன்பங்கள் பல. அவற்றை அவர் தம்மினும் விரைந்து வந்து என் உளம் பதியப் புலவர்கள் செவியுறுத்துகின்றனர். ‘யானை வரும் பின்னே மணியோசை வருமுன்னே’ என்ற இயற்கைப்படி, புலவர் முன் வந்து உரைக்கும் சிறப்புரிமையன்றோ, நாட்டு மக்கள் தம் பிறப்புரிமையை மறக்கச் செய்தது. உழைப்ப வனுக்குத் தன் குடி முழுதும் காக்கும் உணவிற்குப் பஞ்சமில்லை போலப் பெரியாரைத் துணைக்கொண்ட அரசனுக்குத் தன் நாடு முழுதும் காக்கும் அறிவிற்குப் பஞ்சமில்லை. ஆக்கம் அதற்வினாவிச் செல்லும் என்றால், அறிவும் என் அவை வினாவி வருமன்றோ? அஃறிணைப் பொருள்களின் உள்ளங்களையும் தம் உள்ளத்தால் அறியவல்ல மதுகையுடைய நீங்கள் சென்ற ஊர்களிற் கண்ட குறை யாதுமுண்டேல், கேட்கப் பெரிதும் விரும்பினன். கோவூரார்: அரசே! வாழ்க. நின் நிழல் வாழ்வார் உழைப் பிற்கேற்ற உணவும், உணவிற்கேற்ற உழைப்பும், கனவு தோன்றாத உறக்கமும் சிறக்க வாய்ந்தவராதலின் பசியறியாமையும் பிணியறியாமையும் உடையர். உயிருடனிருந்தாரேனும், பொருளில்லாதார்க்கு இவ்வுலகத்து வாழ்வில்லை என்று கருதி, வழியல்லாத வழியானும் அதனையே குவிக்கும் வேட்கை மக்கட்கு இயல்பில் எழும். அம் மனப் பான்மையை அறிந்தே, நீ முட்டுப்பாடின்றிப் பொருள் பெறுமாறு எல்லாக் குடிகட்கும் தொழில் வகுத்துக் கொடுத்திருக்கின்றாய். அவரவர் செய்த வினையின் பயனை அவரவரே நுகருமாறு விதிகோலியும் இருக்கின்றாய். ஆதலின், நின் மக்கள் பொருட் பகையறியார். பொருளுடன் வாழ்ந்தாரேனும், புகழில்லாது இறந்தாரை இத்தமிழகத்துப் புலவர், பாட்டினில் பிறந்த பதிவு செய்யார் என்று எண்ணி உண்மை மயங்கி அறங்கடந்தும் புகழ்காணும் மதி நுட்பம் மக்கட்கு உண்டு. அவ்வுண்மையை அறிந்தே உரிமைக்காக, வேற்றுப் பகைக்கு உயிர் கொடுக்கும் மறமும் புகழைத் தரும்; ஒற்றுமைக்காக, வீட்டுப் பகைக்கு மானம் ஒன்றினை விடாது பொருள் முதலாய எதனையும் விட்டுவிடுங் கொடையும் புகழைப் பயக்கும் என்று புலவர்கள் வழி காட்டியிருக்கின்றனர். அதனால், நின் மக்கள் புகழ்ப்பகை யறியார். நின் நாடோ எனின், ஒரு பெண் யானை படுத்துக் கிடக்கும் சிறிய இடத்து, ஏழு ஆண் யானைகளை உண்பிக்கும் அளவான நெல் விளைக்குங் காவிரி சூழ்ந்த நாடு. ஆதலின், உழைப்பார்க்கு உணவுப் பஞ்சமில்லை. நின் குடி மக்களோ எனின், தமிழ் வழங்கும் நாட்டகத்தே பிறப்பும் இறப்பும் வேண்டும் என்ற பெரும் பற்றாளர்; ஆதலின் நாட்டிற்குக் காவற் பஞ்சமில்லை. நீயோ எனினும் குருளையைப் புறங்காக்கும் புலி போலவும் குட்டியை அகத்தெடுத்துக் காக்கும் குரங்கு போலவும் குடிகளின் புறமும் அகமும் காப்பவன்; ஆதலின், நின் அரசில் செம்மைப் பஞ்சமில்லை நின்னிடத்துக் குறை யுடையார் பகைவருமிலர், அவரும் வேண்டும் பொழுதெல் லாம் தோற்க நின் பகையைப் பெறுகின்றனர் அன்றோ. (அப்பொழுது வெள்ளைக்குடி நாகனார் உள்ளே நுழைகின்றார். அரசனிடம் முறை வேண்டுவோர் இருப்பதற் கென ஓரிடம் உண்டு. அப்பக்கத்து அமர்கின்றார்.) பசலையார் : கோவே! வாழ்க! நின் மக்கள் பசியறியார், பிணியறியார், பகையறியார் என்றார் கோவூர் கிழார். இவ்வறி யாமை மூன்றும் வாழ்க. (எல்லோரும் சிரித்தல்) இம் மூன்று மன்றிப் பிறிதொரு அறியாமையும் மக்களிடம் வாழ்கின்றது. அதுதான் கல்விப் பசி அறியாமை. இவ்வறியாமை அகல வேண்டாவா? வயிற்றுப் பசி சோறு உண்டால் நீங்கும். கல்விப் பசி அறிவை உண்ண உண்ண மிகப் பசிக்கும். வயிற்றுத் தீ தணிக்கும் நாடு வளநாடே. கல்வித் தீ பரப்பும் நாடோ நிலை நாடு. நின் மறவர்களிற் பலர், கூற்றுவனை விருந்தாக ஏற்று உயிர்ச்சோறு ஊட்டும் ஆண்மையாளர்கள்; ஆயின் என்! தம் பெயர் எழுதத் தெரியாத தற்குறியாளர். நின் குடிமக்களிற் பலர் திருக்குறளில் சொல்லப்படும் அறங்கட்கு இலக்கியமாகும் பெருமக்கள்; ஆயின் என்! எழுத்துக்களைக் கீறிய கோடுகள் என மயங்கும் குழந்தைகள். ஒரு மகனுக்கு நோய் நீக்கி உடலை வளர்க்கும் தொழிலிருந்தாற் போதுமா? அறியாமை நீக்கி உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் கல்வியும் வேண்டுமன்றோ? ஒரு நாடு கேவலம் தொழிலையே வளர்க்க நினைப்பது ஒருவன் உடலையே வளர்க்க நினைப்பதை ஒக்கும். எவ்வளவுதான் முயன்றாலும் எவ்வெவற்றை உண்டாலும் உடல் குறிப்பிட்ட எல்லையளவு பெருகிப் பின் குறையக் காண்கின்றோம். அதுபோலத் தானே ஒரு நாடும். மலை ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அறிகுறியா? அன்றிக் கடல் தாழ்ச்சிக்கு அறி குறியா? புற வளர்ச்சிக்கு ஒரு எல்லையுண்டு; அகவளர்ச்சிக்கு எல்லை இல்லை; ஆதலின், நாட்டின் நிலையான வளர்ச்சிக்குக் கல்வியே உயிர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. கிள்ளி : பசலையார் கருத்து என்னெஞ்சிற் பசுமரத்தாணி போற் பதிகின்றது. நீருஞ் சோறும் ஏனை உயிர்கள் போல மக்கட்கு இன்றியமையாதவையேயாம். என்றாலும் அவை வாழ்வின் குறிக்கோளாகுமா? இதனைப் பரப்ப அரசு யாது செய்யவேண்டும்? பசலையார் : நின் மறவர்கள் படைக்கலம் பயின்று பயின்று உயிர்களைக் கொடுத்துக் கொடுத்து வீரவுணர்ச்சியைக் கற்கவில்லை. உயிர்களைக் கொடுத்த அஞ்சாத் நெஞ்சி னோர்க்குப் பிறந்தமையினாலே மறத்தன்மையை இயல்பிற் பெற்ற கல்லா மறவர்கள். அதுபோல நின் குடிமக்கள் கல்லாத் தொழிலாளிகள். செய்திறம் வாய்ந்த தொழிலாளர் குடும்பத்துப் பிறந்து வளர்ந்த முறையினாலேயே தாமுந் தொழிலில் வல்லவர்கள். அவ்வன்மை அவர்களுக்கு ஏடு கற்ற கல்வியான் அமைந்ததன்று. ஆதலின் மறவர்க்கும் ஏனை மக்கட்கும் தாம் செய்யும் தொழிலைப் பற்றிய அறிவு வேண்டும். ஊர்தோறும் அவ்விடத்து இருக்கும் தொழிலுக்கேற்ற தொழிற்கல்விக் களங்களை அரசு அமைத்தல் முதற்கடன். அதன் பின்னர், வாழ்வினைப் பற்றியும் உலகம் பற்றியும் கற்பதற்கு அறிவுக் கல்வி நிலையங்கள் நிறுவுதல் வேண்டும். (நின்று பேசியவர் இடத்தில் அமர்கின்றார்.) கோவூரார் : (பசலையாரைப் பார்த்து) உரிய போழ்தில் அரிய கருத்தை வெளியிட்டீர். (கை குலுக்குகின்றார்.) வளவ! நின் நாடு ஆண்டுகள் பலவாக அமைதி பெற்றிருக்கின்றது. பகைவரும் கொடுக்கு நறுக்கப்பட்ட தேள் போலாயினர். பசலையார் சொல்லிய அறியாமைப் போரைத் தொடங்க இது நல்லகாலமெனக் காண்க. கிள்ளி : ஆம்; இது ஏற்றகாலமே. வில்லும் வேலுங் கொண்டு அறியாமையை வெல்லுதல் முடியாது. சொல்லும் நூலுங்கொண்டே அறியாமையைப் புறங்காட்டச் செய்ய முடியும். இப்போருக்குப் புலவர்களே மறவர்கள். அம்மறவர் களுக்குத் தானைத் தலைவர் நப்பசலையாரே. (எல்லோரும் கை தட்டல்.) இறையனார் : வேந்தே! மலை என்ற சொல் சிறியது. அதனுட்பொருள் பரப்பினும் உயரத்தினும் பெரியது. அதுபோலவே பசலையார் சொல்லிய சொற்கள் எண்ணத் தக்கனவாயினும், அவற்றினுட்பொருள் நாடு முழுவதும் பரவத்தக்க எல்லாரையும் உயர்த்தத்தக்க சிறப்புடையது என்று அறிதல் வேண்டும். கிள்ளி : அக்கருத்தின் சிறப்பை நாடு அறியச்செய்தல் நம் கடன். இறையனார்: நாடறியச் செய்வதன் முன் அதன் சிறப்பை நாமறிதல் நல்லது அரசே! சான்றோர்கள் “தமிழ் கெழு கூடற் றண்கோல் வேந்து” என்றும், ‘தமிழ் நிலைபெற்ற தாங்கரு மரபின், மகிழ்நனை மறுகின் மதுரை’ என்றும் பாண்டியனைத் தமிழனாகப் புகழ்கின்றனர். ‘தண்புனற் காவிரிக் கிழவனை’ எனவும், ‘ஒரு பிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடு கிழவோய்’ எனவும் நின்னை வளவனாகப் புகழ்கின்றனர். இதன்கண் ஓர் உண்மையைக் காணலாம். கிள்ளி : உண்மையின்றி உரைப்பார்களா? சான்றோரும் மறவரும் உழவரும், நாட்டிற்கு அறிவும் உடம்பும் உயிரும் போல்வர். மதுரைத் தமிழ், வஞ்சிமறம், புகார்வளம் என்று விதந்து புலவர்கள் காட்டுவதன் நோக்கம், தமிழகம் யாதானுங் குறைவற்ற நாடு என்று சுட்டுவதற்கேயன்றோ? அஃதன்றி, ஓரரசின்கண் ஏனையிரண்டும் இல என்று இழித்துக் காட்டு வதோ அவர் நோக்கம். அதுவே கருத்தாயின், பிழையெனக் கூறவும் வேண்டுமோ? இறையனார் : இப்பொழுது உள்ள படியை நோக்கின், நின் கருத்து பிழையில்லை; எனக்கும் உடன்பாடே. என்றும் உள்ள இயற்கை நோக்கின் அவர் கருத்தும் பிழையில்லை. புலியும் யானையும் உருமிப் பொரும் கரடும் முரடும் கொண்ட மலைநாடு, மறத்தை மாந்தர்க்கு இயற்கையில் பிறப்பிக்கும் இடமென அறிக. நீரும் மண்ணுங் கலந்து நிலமகளை மெல்லியளாக்கும் மருதநாடே வளநாடு என்று அறியாதார் யார்? புலவர்கள் வந்து ஒருங்கு கூடி அளவளாவிக் கற்றதை விரிக்கும் அவைக்களம் உடைய பாண்டிய நாடு தமிழினை எளிதாகப் பரப்ப வல்லதன்றோ? ஆதலின் வையைநாடன் கல்வி வளர்க்கும் முறையைக் காவிரி நாடன் மேற்கொள்ளல் சாலச் சிறந்தது என்று வேண்டிக் கொள்கின்றேன். கிள்ளி : அறியாமை என்னும் இருளை அகற்றுதல் வேண்டும்; அறிவொளியைப் பெருக்குதல் வேண்டும் என்பது என் உணர்ச்சியைத் தொட்ட கருத்தேயாம். ஆயின், கல்வி பரப்ப என்னிடம் தோற்ற பகையரசன் முறையைக் கைக் கொண்டால், அவன் எள்ளி இறும்பூது எய்தானா? சோழர் குடிப்பெருமை சிறுமையடையாதா? நாட்டிற் கல்விக் குறைவு உண்டு என்று கண்ட உங்கள் அறிவு அரசிற்கு மானக்குறைவை உண்டு பண்ணாது என்று நம்புகின்றேன். கண்ணனார்: வேந்தே! நீயும் உன் குடிமக்களும் நாங்களும் இன்புறும் தென்றல், போதிய மலையிற் பிறப்பினும், அது பகைவன் உடைமையோ? பாண்டியன் ஈண்டுச் செல்லவிடாது விலக்க நினைப்பின், அவ்வாற்றலுக்குக் கட்டுப்பட்டுப் பரவாது நிற்குமோ தென்றல்? அன்றி, நாம் பகைவன் பொருளென வரவேற்க விழையாது தடுக்க நினைப்பின், அதற்கு உடன்பட்டுப் பின் வாங்குமோ தென்றல்? வஞ்சியான் மலையிற் பிறந்து வரும் நீரே காவிரி என்று நாம் அறியாதவர்களா? அறிந்தும் அந்நீரைப் பயன்கொள்ளுவதால், வந்த சிறுமை தினையளவேனும் இல்லையே. “வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடற் காவிரி” என்று புலவர் புகழ்ந்தது பொய்ப்புகழ்ச்சி யன்றே! காற்றும் நீரும் மக்களின் பொதுவுடைமை என்று காண்பாய். அதுபோல அறிவும் ஒரு நாட்டின் தனிப்பொரு ளன்று. அது பரவுதலுக்கு எல்லையுமின்று. ஒருவர் தா என்று கேட்ப, மற்றவர் கொள் என்று கொடுக்கும் பொருளுமில்லை; ஆதலின், அறிவு உலகத்தார்க்கே பொதுமை. நின்னாட்டிற் பிறந்த நாங்கள் பெற்ற அறிவுக்கு வழிவழி வளர்ந்த முத்தமிழ் நாட்டுக் கல்வியே தாயன்றோ! சோழர்குலப் பெருமையும் மறப்பெருமையும் வளர்தற்குக் காரணமாயோர், மற்று நின் பகை வேந்தர் தாம் என்று நீ நன்கு அறிவை. மூவேந்தர் நாடும், மறம், வாணிகம், சூழ்ச்சி, அரசியல மைப்பு, வரிவிதிப்பு, மணவுறவு முதலான வளர்ச்சிக்குக் காதலர் போல ஒன்றையொன்று தழுவி நிற்கின்றன என்பது கண்கூடு. புணர்ச்சியின்பத்தைப் பெருக்கிக் கொள்வதற்குக் காதலர்கள் இடையிடையே ஊடற்பிரிவு கொள்வர். அதுபோல முத்தமிழ் நாடும் தம்மட் பகைகொள்ளுதல் மானத்தைப் பெருக்கிக் கொள்ளுவதற்கேயாம். இறையனார் : ஆம், மூவேந்தர் ஊடினாலும் காதலர் போல் அவ்வூடல் நீட்டிப்பதில்லை. போருக்குப்பின் மகளைக் கொடுத்து மணமுறை கொள்கின்ற இன்பந்தானே நாம் காண்கிறோம். கிள்ளி : (சிரித்துக்கொண்டு) மூவேந்தர் ஊடர் மகட் கொடையாலும் நீங்கும்; வடநாட்டவரொடு போர்ப் புணர்ச்சி கொள்ளவும் அவ்வூடல் நீங்கும். பசலையார்: ஆதலின், பாண்டிநாடு ஆண்மைக்குப் பகை நாடேயன்றி அறிவுக்குப் பகை நாடன்று என்பது வெள்ளிமலை (எல்லாருங் கை தட்டல்) இறையனார் : இப்போது பாண்டி நாட்டில் வேந்தனாக இருப்பவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். கல்வி வளர்க்கும் பொறுப்பை அவனே மேற்கொண்டிருக்கின்றான். அவன்தான் முடிசூடிக்கொண்ட நாளில் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் செய்தான். அன்று கூடிய அவையில் யானும் இருக்கும் பேறுபெற்றேன். அவ்வேண்டுகோள் இதுவே. (ஓர் ஓலையை நீட்டுதல்) கிள்ளி : (வாங்கிப் படித்தல்) “பழந்தமிழ் மக்களே! அவைப் புலவர்களே! கோடாச் செங்கோலால் குடிகளைப் போற்றிய பாண்டிய அரசிற்கு யான் வேந்தனாகிய நன்னாள் இந்நாள். இன்று உங்கள் அகமும் முகமும் ஒருங்கு மலரக் கண்டு எல்லையில்லா உவகையடைகின்றேன். உங்கள் வாழ்வே என் உயிர். உங்கள் மதிப்பே எனது ஊக்கம். உங்கள் அறிவே என் துணை. தாயும் கருவும்போல, நாடும் தனி மக்களும் நீடூழி நலத்தொடு வாழ்வதற்குக் கேடில் விழுச் செல்வமாகிய கல்வியே நல்ல உணவு. தாய் ஒரு நிகராகத் தன் பிள்ளைகளைப் பத்துத் திங்கள் சுமந்து பெற்றவள் என்றாலும், கல்வி சான்ற மகனிடத்துத் தனியன்பு காட்டுவாள். அரசனும் ஆண்டில் மூத்தோனை மதியாது அறிவிற் பெரியவனையே தன் கண்ணெனக் கருதுவான். கற்றவனே அகத்தும் புறத்தும் எல்லோராலும் பாராட்டப்படுவான். நான் என் வாழ்க்கையில் இன்று கண்ட ஓர் உண்மையைச் சொல்லுவன். அக்கருத்து உங்கள் மனத்து நன்கு பதியும். பொருட் செல்வத்தினும் கல்விச் செல்வம் எவ்வளவு உயர்ந்தது என்று தானே புலப்படும். அதன்பின், பொருளை ஒரு செல்வமென்று கூட எண்ணத் துணிய மாட்டீர்கள். பாண்டிய நாடு குமரிவரை பரந்த நாடு; தென்னிலங்கையும் அடங்கிய தென்னாடு; வையையாறு தாயாய் மக்களை வளர்க்கும் நாடு; புகழ்தந்த பொதிய மலை நாடு; ஆதலின், என் நாடு எல்லாப் பொருட் செல்வமும் நிறைந்த நாடு.” (படிப்பதை நிறுத்து கின்றான்; தற்புகழ்ச்சி மிகுதியாக இருக்கின்றதே என்று கிள்ளி சொல்கின்றான்.) இறையனார் : அரசே! தற்புகழ்ச்சி யில்லை. முற்றும் படித்தால் உண்மை விளங்கும். கிள்ளி : (தொடர்ந்து படித்தல்) “இத்தகைய நாட்டினுஞ் சிறந்தபொருட் செல்வம் யாது உளது? அச்செல்வத்தை, மக்களே பாருங்கள், யான் யாதொரு வருத்தமுமின்றி அரசனுக்கு மகனாய ஒரு பிறவிக் காரணத்தாலேயே பெற்றேன். செல்வம் கை மாறுதல் வெள்ளம் பள்ளத்து வீழ்வதுபோல மிக எளிது. பிறிதொன்றையும் நினைமின்! என் தந்தை பல்லாண்டு பெற்ற அரசியல் அறிவை யான் மகனாய காரணத்தால் பெறமுடியுமோ? (உண்மை உண்மை என்றல்) உங்கள் வாழ் விலும் யான் சொல்லும் உண்மையை அறிந்திருக்கிறீர்கள். கல்விச் செல்வம் ஒருவன் தானே வருந்தி ஊன்றி யீட்டக் கிட்டவதல்லது, வாணிகத்தால் பெறுதல் ஒல்லாது. அடைதற்கு எளிதாகிய பொருள் காத்தற்கோ அம்மம்ம! மிகவும் அருமையது. கல்வியோ எனின், வருந்திப் பெறுதற்கு உரியது; பெற்றால், அது தன்னையே காத்துக்கொள்ளும் தகுதியது. ஆதலின், அன்பு கனிந்த குடிமக்களே! ஆண்களும் பெண்களும் மெய்வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது, பொருளானே எல்லாம் ஆகும் என்னும் சிறியோர் சொல்லிற்குச் செவி சாய்க்காது, வானத்தினும் பரந்த கல்வியை, மலையினும் உயர்ந்த எண்ணத்தைத் தரவல்ல கல்வியை, கடலினும் ஆழ்ந்த கருத்தினை ஊட்டுங் கல்வியை, உயிரினும் சிறந்த ஒழுக்கக் கல்வியைக் காற்றினும் கடிதாகக் கற்றல் வேண்டும். சாந்து ணையும் கற்றல் வேண்டும். ஏனை நாட்டார் எழுத்தறியாதி ருக்கும் இந்நாளில், எங்குடி மக்கள் கல்வியில் புலமை பெற்றவர்கள் என்றால், நம் நாட்டின் பெருமைக்கு அஃது ஒன்று போதுமே. புலவர்கள் தாயாக நூல்கள் முலையாக அறிவு பாலாக எங்குடியாகிய மக்கள் கொழுகொழுவென வளர்க. (நல்ல கருத்து. எல்லோரும் கை தட்டல்) என் எண்ணம் உங்கள் உறுதியால் நிறைவேறுக.” (படித்து முடிக்கின்றான்) பாண்டியன் கல்வி வளர்க்குமுறை பின்பற்றத் தக்கமுறை; நல்லது. வஞ்சி நாட்டார் கருவூர்ப் போர் நடந்ததற்குப்பின், என் குடி மக்களை மறக்குடும்பம் எனப் புகழ்வாராயினர். இனிப் பாண்டி நாட்டார் நம்மைத் தமிழ்க் குடும்பம் எனப் புகழுமாறும் செய்வேன். அந் நாட்டவரெல்லாம் என் குடிகள்போலக் கொடைக் குடும்பமாதல் என்றோ? பசலையார் : அதற்கு வளமும் வேண்டும்; மனமும் வேண்டும். உடலது மறத்தினும் அறிவுத் தமிழினும் சிறந்த கொடை யுள்ளம் வாய்ந்த நின் நாடு வாழ்க. அரசே! பிறி தொன்றும் வேண்டுவல். நாட்டின் தலைநகராகிய உறந்தை மூதூரில், கல்வி மாளிகை ஒன்று கட்டி நிறுவின், ஊர் தோறும் உள்ள புலவர்களும் அறிவு விழையுங் குடிகளும் உவப்பக் கூடி இன்புற ஓர் ஏதுவாகும். கிள்ளி : நீங்கள் சொல்லத்தக்கன செய்யத்தக்கனவே. (நாகனார் இருந்தபக்கம் திரும்புகின்றான்) தாங்கள் வந்து நெடுநேரம் ஆயிற்றுப் போலும். நாகனார் : “நின் அரசிற் செம்மைப் பஞ்சமில்லை. நின்னிடத்துக் குறையுடையார் பகைவருமிலர்” என்று அவர் (கோவூர் கிழாரைச் சுட்டிக்காட்டி) சொல்லிக் கொண்டிருந்த போதுதான் வந்தேன். கிள்ளி : (நாகனாரை முன்னர் அறியாதவனாகலின்) நீங்கள் இவ்வரசைச் சேர்ந்தவர் தாமோ? நாகனார் : (பெருமிதத்தோடு) தமிழகம் மூன்று அரசு உடையது. வானமுடியும், மண்ணடியும், கடலாடையும், முரசுச் சிலம்பும், தானை மக்களும் உடையது என்று சிறப்பிக்கப்படும் அரசு எதுவோ, (சிறிதுநின்று) அதனைச் சேர்ந்தவன் நான். (எல்லோரும் அது யாதென ஆராய்கின்றனர்). கிள்ளி : நல்லது. வடநாட்டவரிற் பலர் தமிழ் கற்றிருக் கின்றனர். நீங்கள் வடநாட்டவரோ என்று ஐயுற்றேன். என் தமிழ் நாட்டவர் என்று அறிந்துகொண்டேன். மகிழ்ச்சி. தமிழ் நாட்டிலும் தங்கள் நாடு எதுவோ? நாகனார் : கதிரவன் கீழ்த்திசையில் தோன்றாது திசை நான்கினும் கெட்டுத் தோன்றுக; வெள்ளி வடதிசையின் கீழ் நில்லாது தென் திசையில் திரிந்து செல்லட்டும். இயற்கை மாறினும் ஏன்? கரும்பின் வெண்பூ வேலின் கூட்டம் போல விளங்கும்படி செய்யும் தண்ணீரை என்றும் உடைய காவிரி எந்நாட்டிற்கு உடைமையோ, (சிறிது தயங்கி) அந்நாட்டிற்கு உடைமை யான். (சோழன் குடி என எல்லாரும் அறிந்து கைத்தட்டுகிறார்கள். தன்னையும் தன்னாட்டையும் புகழ்வ தற்குச் சோழன் உவகை அடைகின்றான்.) கிள்ளி : உம் பேச்சு அவையோரையும் என்னையும் இன்புறுத்தியது. புலமை சான்ற உம்மை மற்றைப் புலவர்களும் யாரென அறிந்தாரில்லை. நாகனார் : (பசலையாரைக் காட்டி) அவர் சொல்லியது போல் கல்வி மாளிகை இருந்தால் புலவர் தம்முள் அறியாமை இருக்கமாட்டாது. (எல்லாரும் சிரித்தல்.) கிள்ளி : பேச்சால் மகிழ்வூட்டும் பெரும் புலவரே; நீர் இன்று இவ்விடம் வந்த காரியம் யாதோ? அறிய விரும்புவல். நாகனார் : அரசே! என் சுற்றமும் பசித்துக் கிடக்கின்றது; யானும் பசித்து மடிகின்றேன்; ஆதலின், நெய்யிற் பொரித்த மானிறைச்சியையும், மணிக்கலம் நிறைந்த மதுவையும் அருளி, எம் பசிப்பிணி நீக்குக என்று உன்னிடத்து இரக்க வந்த இரவலன் அல்லேன். கிள்ளி : (அமைதியாக) அங்ஙனம் நீர் வந்ததாக யாம் நினைக்கவில்லை. அதற்கென வருவார், நீர் சொல்லியபடி, காவிரி புரக்கும் இந்நாட்டில் யாருமில்லை. நாகனார் : அற்றம் மறைத்தற்கு வேண்டிய ஆடை என் சுற்றத்திற்கும் எனக்கும் இல்லை. நீயே பாம்புரித்தாற்போன்ற கலிங்கவாடை தந்து, என்னுடல் மானத்தைக் காக்கவேண்டு மென்று உயிர் மானத்தை முன் விட்டுப் பின் இரக்க வந்த ஒரு பிறவியுமல்லேன். கிள்ளி : (பின்னும் அமைதியாக) எம்மினும் நல்லாடை அணிந்த நீர் அங்ஙனம் வந்ததாக யாரும் நினைக்கவில்லை. யவனர் மானம் காக்கப் பட்டாடையும் பருத்தியாடையும் ஏற்றுமதி செய்யும் எம் நாட்டகத்து, ஆடையின்றி மானத்தை ஏற்றுமதி செய்வார் இன்னும் பிறக்கவில்லை. நாகனார் : (முன்னைவிடக் கடுகடுத்த முகத்தோடு என் கண்ணைப் பறிக்கும் ஒளியுடைய நின் குடை விண்ணளவு உயர்ந்திருக்கின்றது. வெயில் படாமைப் பொருட்டோ, அக்குடையை விரித்துக் கொண்டனை? கிள்ளி: (புன்முறுவலோடு) அதற்குக் கொண்டதாக யாம் கனவிலும் நினைக்கவில்லை. நினைக்கவும் மாட்டோம். எழுநிலை மாடத்தின் கீழே இருத்தலால், நினைப்பார் யாருமிலர். நாகனார் : நின் குடை கொற்றக்குடை என்று பெயர் பெறுமென்பர். குடிமக்களின் இன்பத்தைக் கொல்லுவதோ, அக்குடைக் கொற்றம்? நின் குடை வெண்குடை என்று பண்பு பெறுமென்ப. குடிகள் படுந்துயரை அறியாமலிருப்பதோ, அக்குடையின் வெண்மை? பழங்கணுற்ற உயிர்களின் துன்பவெயிலைத் தொலைப்பேன்; இன்ப நிழல் கொடுப்பேன் என்பதற்குச் சுருக்காது என்றும் விரித்து வைத்த குடைகாண் இது! (குடையைச் சுட்டிக் காட்டுதல்.) கிள்ளி : அதில் என்ன, ஐயம். என் குடை வெயிலைத் தடுத்து நிழல் கொடுக்கும். இதோ என் கைவாள் வெய்யவனைக் கடலில் விழும்படி செய்யும். என் குடிகள் பட்ட துயர் உண்டேற் சொல்லும். இடுக்கண் படுத்துவார் வேந்தராயினும், அவர் என் வாளுக்குப் பிணமாவார். ஐய! வருந்துங்குடி யாதோ? வருத்துவான் யாவனோ? நாகனார் : (தன் நெஞ்சினைச் சுட்டிக்காட்டி) வருந்துங் குடி நின் முன் நிற்கின்ற யானே. கிள்ளி : (கடுகடுத்த முகத்தோடு) ஆ! நீவிரோ வருத்த முற்றீர். புலவராகிய உமக்கோ வருத்தம்? சொல்லேருழவராகிய உம்மையே வருத்திய ஒருவன் என் செயமாட்டான்! ஏனை உழவர்களை எளிதில் துன்புறுத்துவான். என்னாட்டுக் குடியும் புலவருமான உம்மை வருத்தினான் யாவனோ? நாகனார்: (அமைதியாக) என்னை வருத்தினான் என்முன் இருக்கின்ற நீயே. (அரசன் தலை குனிகின்றான். அவைப் புலவர்கள் பாவைபோலாயினர். அரசனைப் பாராது அவைப் புலவர்களைப் பார்த்து பேசுகின்றார்.) என் நண்பிற்குரிய புலவர்களே! நம் கூர்வேல்வளவன் சின்னாட்களுக்கு முன் சேர னோடு கருவூர்ப் பறந்தலையிற் போரிட்டான் அல்லனோ? அப் போரில் யானைகளின் காலென்ன கையென்ன எல்லாம் நால் வேறாகும்படி, சிறு சிறு பனந்துண்டம்போல வெட்டி, வீழ்த்திச் சேரன் வீரரர்கள் ஓடும்போது முதுகு கண்டு கைகொட்டி ஆர்த்தனர் நம் வேந்தன் மறவர் என்பது கேட்டு, மிக மகிழ்ந்து தருக்கினோம். அவ்வெற்றி இவன் படையாளர் பகைவர் மார்பை உழுத வேற்படையான் ஆயிற்று என்று நினைக்கிறீர் களோ? இல்லை, இல்லை. அந்நினைப்பு பிழை, பிழை. அம்மறவர் என்பு இரும்பாகவும், எதிர்த்தோர் அஞ்சக் கடித்துப் பேசும் அவர் தம் பல் கல்லாகவும், அவர் சுழற்றி எறியும் வேல் செய்த கொல்லன் கை கருங்கையாகவும், செய்தவர் யார்? யானையும் மறையும் நெற் கதிர், வானுற வோங்கி வளரும்படி, கீழது மேலாகவும் மேலது கீழாகவும், மண்ணை மயக்கிய படை எது? யாங்கள் நிலமகளை மணந்திலமேல், அவள் பைங்கூழ் என்ற மக்களைப் பெறாது மூத்த குமரியாவாள்; ஆயின் அரசன் திருமகளை மணப்பதெங்கே? அகம்படியார்கள் வெற்றி மகளை மணப்பதெங்கே? புலவர்கள் தம் நாமகள் நலத்தைப் பருகுவதெங்கே? அது கிடக்க, குடிமக்கள் தாம் தம் அம்மான் மகளை அத்தை மகளை வரைவது எங்கே? ஆதலின், உலகம் வாழ்வது படையாளர் வேலாள் ஆவதூஉமன்று; அரசன் கோலான் ஆவதூஉமன்று; புலவர் சொல்லான் ஆவதூஉ மன்று; எம் நெல்லான் ஆவது. உழவு ஒடுங்கின் ஏனையோர் தொழில் ஒடுங்கும். உழவன் இறப்பின் உலகம் இறக்கும். நாகரிகத்தின் முதற்படி உழவெனவும், முடிவுப்படி உழவின்மை எனவும் அறியாதார் உண்மையே அறியாதார் ஆவர். கிள்ளி : (வருத்தத்தோடு) மூதறி புலவரே! உம் மனத் துடிப்பு, சொற்றுடிப்பு, மெய்த்துடிப்பெல்லாம் எமக்கு உயிர்த்துடிப்பை உண்டாக்குகின்றன. ஏனை நாடுகளைக் காட்டிலும் எம் நாடே உழவர்கள் நிறைந்த நாடு. அவர்கள் எம் முதற் குடிகள். இந்நாடு வளநாடு ஆவதற்கும், யான் வளவன் ஆவதற்கும், இந்நாடு காரணமன்று; யான் காரணமல்லன். மண்தேய்த்த புகழையுடைய உழவர்களே முதற்காரணம். அவர்கள் ஏர்ப்படையே துணைக் காரணம். ஆதலின் உழவப் புலவராகிய நீர் எம்மாற் படுதுயரைச் சொல்லுமாறு வேண்டு வதும். செய்தி முழுதும் ஆர அமரச் சொல்லுவீர். நாகனார் : வாழ்க, அரசே. எம்மூர் வெள்ளைக்குடி என்பது. பிறவூர் நிலங்கட்கெல்லாம் கால்வாய் என்னும் முலை வழியாக நீர்ப்பாலூட்டி வரூஉங் காவிரித்தாய், இறுதியிலுள்ள எம் ஊர்க்கு மட்டும் இல்லி தூர்ந்த பொல்லா முலையினள் ஆயினள். மேன் மழை யில்லாமையாலும், நீர் வரூஉங் கால்வாய் வழிதூர்ந்து மேடிட்டமையாலும், எம் நன்செய்ப் பரப்பு விளையா தொழிந்தது, இன்றன்று; ஆண்டுகள் மூன்றாயின. வரிவாங்க வந்த விருந்தினரிடம் வாய்க்கால் முற்றும் ஊமையாயிற்று என்று எங்குறையை எடுத்துச் சொல்லியும் பயன்படக் காணேம். அதன்மேலும், அவ் வினையாளர்கள் மூன்றாண்டுகளாக விளையா நிலத்திற்கு முழு வரியும் விதித்தனர். அவ்வரியை அளித்தருளத் தக்க செல்வமுடையே மாயினும், முறை கெட்ட வரிகட்டும் அறிவுடையே மல்லேம். வேந்தே! புலவர்களே! விளையா நிலை எமக்கு மட்டும் நேர்ந்ததன்று. ஒரு குடி தவறாமல் எம்மூர் முழுமைக்கும் நேர்ந்துளது. இந்நிலையில் அரசன் வினையாளர்கள் வரிகட்டா நிலங்களை ஏலம் போடவும், தமதாக்கவுஞ் செய்வோமென்று குடிகளை அச்சுறுத்துகின்றனர். இன்ன நாளைக்குள் வரி கட்டாவிட்டால் நிலமும் ஏனை மனையும் இழக்கப் பெறுவீர்கள் என்று இழவுப்பறை யறைகின்றனர். ஊர் முழுதும் படும் உள்ளத்துயரைப் பொறாது விரைந்து வந்தேம். வினையாளர் தங் கொடிய செய்கைக்கு வேந்தனே பொறுப்பன்றோ? கிள்ளி : அவர் செய்கை கொடியது; யானே பொறுப்பு. அதிலென்ன, ஐயம். (முகமாறி) இதுவரை கேளாச் செய்தி, நடவா நடப்பு. குற்றமலிந்த கொடுமை. நிலம் விளையாமை காணக் குருடர்; காட்டியுங் காணமாட்டாக் கண்மூடிகள்; ஊர் மக்கள் புகட்டியுங் கேளாச் செவிடர்; உற்றது சொல்லாத ஊமையர்; தெரிந்தும், இகழ்ந்து நடக்கும் வம்பர்; கோலை வளைக்குங் கொல்லர். என் குடிமக்கள் வாழ்வே என் வாழ்வு. அவர்தந் தாழ்வே என் தாழ்வு. அவர்கள் என்னை ஒரு வேந்தனென உயர்த்து மதியாரேல், நானும் ஒரு குடிதானே. மக்கள் மறவர்களாக, விலங்குகள் படைகளாக, இரும்புகள் கருவியாக நானொரு மனிதன் வேந்தனானேன். குடிகளின் மறத்தொகையே என் வெற்றி. அவர் தம் முயற்சித் தொகையே என் செல்வம். அவர்தம் உள்ளத் தொகையே என் துணை. அவர்தம் உரிமைக் காப்பே என்னரசு. (மீண்டுஞ் சினந்து) என்னுள்ளத்தைக் கல்லாத மானிட விலங்குகள். தமது கருத்தே அரசன் கருத்தென நினைக்கும் அறிவறைகள். குடிகளின் ஆக்கமே அரசன் நோக்கமென அறிந்தும் வேறு செய்யும் குறும்பர்கள். என் உட்பகை, என்னுடல் நோய்கள். எவ்வூர் மக்களுக்கு அத்தீயவர் கொடுமை செய்தனரோ, அவ்வூர் மக்கள் கண்டு துயர் நீங்கவும், ஏனையூர் மக்கள் என்முறை காணவும், தீய அவரை, அவ்வூரிடத்து, ஏனைவினையாளர் முன்பாகப் பலவகையால் ஒறுப்பேன், பார்மின். (நாகனாரை நோக்கி) நல்ல புலவரே! உம் செய்திக்கு எம் நன்றி. உம்முடைய நன் செய்க்கும் ஊரார் நன் செய்க்கும் விளையாத காலந்தொட்டு விதித்த வரியெல்லாம் விதிக்கக்கூடா வரி. ஆதலின் நீங்கள் வரிக்கடன் கொடுத்தல் வேண்டா. கொடுக்காது எங்கோலைச் செங்கோ லாக்கினீர்கள். கொடுத்திருப்பின், அது பொழுதே எங்கோல் கோடியதாகுமன்றோ! நும் வரவு நல்வரவு. முறை கோடிவரும் வரிப்பொருள் அரசைக் கீழறுக்கும். ஆதலின் விளையாத நிலத்திற்கு வரி கொடுத்தல் வேண்டா என்று என் நாட்டு ஒவ்வொரு ஊரிலும் பறையறையச் செய்வேன். கோவூரார் : (நாகனாரைப்பார்த்து) நண்ப! உம் அரசியலறிவு பெரிதும் பாராட்டுதற்குரியது. கண்ணனார் : அதனைவிட இவர் அஞ்சாமை கண்டும் வினையாளர் அஞ்சவில்லை என்றால் அவர் கொடுமை அளத்தற்கரியது. இறையனார் : நாகனார் பேசும்போது இளங்காளை போலத் தோன்றுகிறார். நாகனார் : எனக்கு என்ன தோண்ணூறு வயதுதானே ஆகின்றது. கிள்ளி : வெள்ளைக்குடியில் உம்மைவிட இளமையான வர்கள் இன்னும் இருக்கிறார்களோ? நாகனார் : நீங்கள் தாம் எல்லோரும் ஒரு நாளைக்கு வரவேண்டியிருக்குமே. அன்று பார்த்தால் தெரிகின்றது. என் பாட்டனாரைக் காட்டுகின்றேன். அவரால் ஒரு காததொலை விற்குமேல் நடக்க முடியாது. (எல்லாருஞ் சிரித்தல்) ஏன், எல்லாருஞ் சிரிக்கிறீர்கள். எல்லாரும் வாழ வாழ்கின்ற உழவன், எல்லாருஞ் சாகத்தானே சாவான். (உண்மை, உண்மை.) பசலையார் : வளவ! நம் நாகனார் ஓர் உழவுத் தொழிலு டையவர். நான் வேண்டியபடி, புலமைக் கல்வியும் உடையவர். ஆதலின், கண்ட குறையை அவையேறி எடுத்துச் சொல்லி, அரசைச் செம்மைப்படுத்தினார். இந்நிகழ்ச்சியால் குறை நீங்கிக் குடிகள் வாழ்வதற்குத் தொழிலோடு கல்வியும் வேண்டும் என்பது மிகத் தெளிவாகின்றது. கோல் கோடாமை வேண்டும் அரசனாகிய நீ ஆவன செய்க. நாகனார் : வேந்தே! நீ காட்சிக் கெளியன் ஆனாய். நான் கடுஞ் சொல்லன் ஆனேன். குறையை அமைதியாகக் கேட்டுக் கோடாது முறை செய்யுங் குணம் கரிகாலன் வழித் தோன்றலாகிய உனக்குக் குடிமையொழுக்கங் காண். யான் எம் வேந்தனையும், புது நண்பர்களாகிய புலவர்களையுங் காணுமாறு ஏவிய நின் வினையாளர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய வல்லேன். (எல்லாருஞ் சிரித்தல்.) கிள்ளி : அதனைப் பற்றிய கவலை தங்கட்கு வேண்டுவ தில்லை. நான் பார்த்துக்கொள்ளுகிறேன். உரிய கைம்மாறு செய்யத்தான் வேண்டும். வெண்பா தொழிலும் படிப்புந் துணையாயின் செல்வ எழிலும் நடுவு மிருக்கும் ; - பொழிலுந் தமிழும் படைத்த தமிழ்நிலத்தீர்! வாழ்க இமிழுங் கடல்சூ ழிவண். 3. புகழ்த்துறவு வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறி துறீ இப் புழற்றலைப் புகர்க்கலை யுருட்டி உரற்றலைக் கேழற் பன்றி அயலது 5. ஆழற் புற்றத் துடும்பிற் செற்றும் வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன் புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும் கொலைவன் யார்கொலோ கொலைவன் மற்றிவன் விலைவன் போலான் வெறுக்கை நன்குடையன் 10. ஆரந் தாழ்ந்த அம்பகட்டு மார்பிற் சார லருவிப் பயமலைக் கிழவன் ஓரி கொல்லோ அல்லன் கொல்லோ பாடுவல் விறலியோர் வண்ணம் நீரும் மண்முழா அமைமின் பண்யாழ் நிறுமின் 15. கண்விடு தூம்பிற் களிற்றுயிர் தொடுமின் எல்லரி தொடுமின் ஆகுளி தொடுமின் பதலை யொருகண் பையென இயக்குமின் மதலை மாக்கோல் கைவலந் தமினென்று இறைவ னாகலிற் சொல்லுபு குறுகி 20. மூவேழ் துறையும் முறையுளிக் கழிப்பிக் கோவெனப் பெயரிய காலை ஆங்கது தன்பெய ராகலின் நாணி மற்றியாம் நாட்டிடன் நாட்டிடன் வருதும் ஈங்கோர் வேட்டுவ ரில்லை நின்னொப் போரென 25. வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்தில் தானுயிர் செகுத்த மானிணப் புழுக்கொடு ஆனுருக் கன்ன வேரியை நல்கித் தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன் பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்மெனச் 30. சரத்திடை நல்கி யோனே விடர்ச்சிமை ஓங்கிருங் கொல்லிப் பொருநன் ஓம்பா ஈகை விறல்வெய் யோனே. - புறநாநூறு - 152 வன்பரணர் வல்விலோரியைப் பாடியது. 3. புகழ்த்துறவு களம் : காடு காலம் : நண்பகல் கூற்று : வவ்விலோரி, வன்பரணர், பாணர் முதலாயவர். (வன்பரணர் என்ற தலைமைப் பாணரும், ஏனைப் பாணர்களும் நடவை வருத்தத்தால், பலா மரத்தினடியில் தங்கியிருக்கின்றனர். எந்த வள்ளலிடஞ் சென்று இருக்கலா மென்று உரையாடுகின்றனர்.) பண்ணன்: பேச்சை நிறுத்துங்கள். ஏதோ விறுவிறு என்று ஒரு ஓசை கேட்கின்றதே. ஆம். அதோ பாருங்கள். அம்பொன்று செம்முகத்தோடு செல்கின்றதைப் பாருங்கள். ஆ! என்ன வியப்பு. நிலத்திற்குள் மறைந்துவிட்டதே. வெளியன் : நீ சொல்லியபடி அந்த மரத்தடியில் இருந்திருந்தால் நம்முள் ஒருவன் உயிர்...நாமெல்லாஞ் செய்த நற்பேறுதான், இந்த மரத்தடியிலே தங்க வேண்டுமென்று நான் சொல்லியதை நீங்கள் ஒத்துக்கொண்டீர்கள். வன்பரணர்: மூட்டை முடிச்சுக்களைத் தூக்கிக் கொண்டு புறப்படுங்கள். அம்பு மறைந்த இடத்திற்குப் போக வேண்டும். அம்பெறிந்தவன் யாரென்று பார்த்து, அவனிடத்திலே போய் இரந்து இற்றைப் பொழுதைக் கழித்துவிடலாம். (பாணர்கள் பல்லியங்களைப் பலாக்கொத்துப் போலக் காவில் தொங்கவிட்டுக்கொண்டு புறப்படுகின்றனர். சேந்தன் என்ற பாணன் புற்றில் நுழைந்திருந்த அம்பை வெளியில் எடுக்க, அஃது உடும்பொடு வருகின்றது. அம்மாடி! என்றலறி, அப்படியே கீழே போட்டுவிட்டுத் துள்ளுகிறான். செத்த உடும்பிற்கு நடுங்கியதுகண்டு மற்றைப் பாணர்கள் நகைக் கிறார்கள்.) சேந்தன் : செத்த உடும்பா? அம்பு தலையிலே தைத்தத னாலே, ஒரே குத்திலே செத்துவிட்டது. (சுற்று முற்றும் பார்த்து) அம்புக்குரிய வேடுவனைக் காணோமே. நல்ல பேறு. உடும்பு ஆளுக்கு ஒவ்வொரு வாய்க்குப் போதும். பண்ணன் : அம்பு யாருடையதென்று பாரு. உடும்பை நாம் தின்றுவிட்டாலும் அம்பினை உடையவனிடத்துக் கொடுத்து விட வேண்டும். அதுதானே முறை. வெளியன்: நீ சொல்லுவது நிரம்பப் பொருத்தம். அம்பு நம்மிடத்திருந்தால், நம்மை வீரர்களாகவும் பகைவர்களாகவும் யாரும் நினைத்துவீடப் போகிறார்கள். அது தானே நீ கருதுவது. வன்பரணர் : (அம்பின் பல பகுதிகளையும் திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு வியப்போடு) ஓர் எழுத்துங் காணப்பட வில்லையே! பெயர் பொறிக்கப்படாத அம்பை இதுவரை, எனக்கும் எண்பது அகவை ஆய்விட்டது, பார்த்ததில்லையே. புதிதாக அம்பெறிந்து பழகுபவன்போலும். குறி பிழைத்து, வருவார் போவார் மேற்படின், என் செய்வதென அஞ்சிப் பெயர் தீட்டாமல் இருக்கலாம். அல்லது தன் பகைவரை, நேர் நின்று எதிர்க்காது, இராமன் போல் மறைந்து நின்று எய்யும் ஒரு வஞ்சகன் அம்பாக இருக்கலாம். அப்படியே இருந்தாலும், அவனைப் போல் அம்பிற் பெயர் பொறித்திருக்கலாமே. (நாற் புறமும் பார்த்து) எய்தவனைக் காணோமே. குறி பொய்த்ததா, வாய்த்ததா என்பதைக்கூட வந்து பாராத ஒருவனும் உண்டா? வழிப் போவாரைக் கொன்று பிழைக்கும் ஒரு வேடனா? வாருங்கள். உண்மை காணாது போவதில்லை. அம்பு வந்த திசை நோக்கிச் செல்லுவோம். மறுபடியும் புறப்படுங்கள். (உடும்பையும் அம்பையும் எடுத்துக்கொண்டு சிறிது தொலைவு சென்றதும் ஆண் பன்றி இறந்து வீழ்ந்து கிடப்பதைப் பார்க்கிறார்கள்.) வன்பரணர் : ஆம். இந்த அம்பு இப் பன்றியின் வயிற்றுள் புகுந்துதான் அங்கு வந்து தங்கியிருக்கின்றது. ஐயமில்லை, ஐயமில்லை. இவ்வம்புக் குடையான் புதிதாகப் பழகுபவன் என்று நினைத்ததிருக்கின்றதே அது முக்காலும் பிழை. சேந்தன் : உணவுக்கு வேட்டையாடியிருந்தால், இப்பன்றி இதுவரை இங்கே கிடக்குமா? அம்பு கூடவே ஓடி வருவா னன்றோ? ஆதலால் மாணாக்கர்களுக்குப் பழக்கிக் கொடுக்கும் வில்லாசிரியனாக இருந்தாலும் இருக்கலாம். வெளியன் : என்ன, தம்பி, பொருத்தமில்லாமற் சொல்லு கிறாய். எய்யப் பயிற்றிக் கொடுக்கும் ஆசிரியன் இறந்த பொருளை எடுக்கப் பயிற்றிக் கொடுக்காமலா இருப்பான்? இல்லாவிட்டால், எய்து போதல் நங்கடன்; எடுத்து போதல் பிறர் கடன் போலும் என்று மாணாக்கர் நினைத்துக் கொள்ளமாட்டார்களா? கல்பட்டு மாங்காய் விழுந்தால் அதனைக் கடியாதவர் இலரே. மூவன் : இன்று நல்ல விருந்து. உடும்பு ஒரு வாய்க்குக் காணாதே; முழுப்பசியாக இருந்தாலும் இருக்கலாம்; அரைகுறைப் பசியாக இருப்பது முடியாதே; கிடைத்த உடும்பை விட்டுவிட்டாலென்ன என்று பெற்ற உடும்பிற்குக் கவலைப் பட்டோம். நல்ல பன்றி. கொழுத்த பன்றி. சிற்றானைக் குட்டி போல இருக்கிறது. தலையைப் பாருங்கள், உரலைப் போல. இதுபோதும் இரண்டு நாளைக்கு. உணவுக் கவலை ஒருவாறு ஒழிந்தது. (என்று பன்றியைத் தோளில் தூக்கப்போகிறான்.) பண்ணன் : ஏனடா, இதனைத் தோளிற் சுமக்கின்றாய். எல்லாருங் கொஞ்சங் கொஞ்சமாக வயிற்றிலே வைத்துக் கொண்டாற் சுமையே தோன்றாது. திரும்ப வந்து அப்படிச் செய்வோம். அதுவரையிலே இங்ஙனே கிடக்கட்டும். நம்மைத் தவிர இதனை யார் எடுக்கப்போகிறார்கள். (பன்றியை அங்ஙனே கிடத்தி மறுபடியும் புறப்பட்டு, ஒரு ஆண் மான் இறந்துகிடப்பதைப் பார்க்கிறார் வன்பரணர்.) வன்பரணர்: என்ன விசை! என்ன அருமை! அம்பொன்றா இவ்வளவு உயிர்களைக் கொன்றது! நம்பத்தக்கதாக இல்லை யென்றாலும் நடந்திருப்பதனாலே நம்பத்தானே வேண்டியிருக் கின்றது. ஓடு மானை எறிவது செயற்கரிய செயலன்றோ! இம்மான் எத்தனை முறை புரண்டிருக்கின்றது. புரண்டு புரண்டு இருந்த தடங்களை, உதுக்காணீர். இவ்வம்புக் குடையான் பிறவியிற் கல்லா வேட்டுவன். இருந்தாலும் ஒன்றுதான் விளங்கவில்லை. ஏன் இவைகளை அவன் எடுக்க வரவில்லை? அவனைக் காண வேண்டும்; கண்டு வணங்கவேண்டும்; மானையும் பன்றியையும் ஒரே விசையிற்கொன்ற முதல்வா! என்ற புகழுதல் வேண்டும். (மீண்டும் புறப்படும்போது சிறிது தொலைவிலே புலியொன்று படுத்தாற்போற் கிடப்பதை முன்சென்ற மூவன் பார்த்து, பேசாதீர்கள். உறக்கத்தைக் கலைக்காதீர்கள் என்று பொருள்படும்படி, வாய் பொத்தியுங் கன்னத்தைச் சாய்த்துக் கைவைத்துங்காட்டுகிறான். பின்செல்லுமாறு கையசைத்துக் கையாற் புலி கிடப்பதைச் சுட்டிக் காட்டுகிறான். எல்லாரும் திரும்பி ஓடப்பார்க்கிறார்கள்.) பண்ணன்: (ஓடாது உற்றுப்பார்த்து, உரத்தி) ஓடாதீர்கள். செத்த புலிக்கு அஞ்சி ஓடுகின்ற நமக்கும் வீரத்திற்கும் குமரி முதல் இமயம் வரை அளவு தொலைவிருக்கும். புலி பட்டப்பகலில் நடுவழியிற் கழுதைபோல் படுத்து கிடப்ப துண்டா? எல்லாரும் என்பின் வாருங்கள். பாணர்களுக்குள் நான் தான் ஆண் பிள்ளை. நான் ஒரு மறவன். சேந்தன் : (எட்டிப் பார்த்து) புலி வாய் பிளந்தன்றோ கிடக்கின்றது. பல்லைப் பாருங்கள்! எவ்வளவு வளைவுங் கூர்மையுங். உயிரொடு மாத்திரமிருந்தால் நமக்கு புலி இன்று எமனாக இருந்திருக்கும். புகழுடம்பு அடைந்திருக்கும். நல்ல வேளையிற் பூதவுடம்பை விட்டுப்போய் விட்டது. ஐயோ, பாவம். புலிக்குக் கூட யமனுண்டு என்று சொல்லுங்கள். அதனாலேதான் வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலே உண்டென்று சொல்லி இருக்கிறார்கள் மூதாதையர்கள். வன்பரணர் : தோழர்களே! உலகத்திலே இவை இவை நடக்குமென்று சொல்லும் அறிவுடைமையைக் காட்டிலும் நடவாதது உலகத்தில் யாது என்று வினவும் பேதைமை சிறந்தது போலும். பொய்யாமைக்கு அதுதான் வழிபோலும். பாருங்கள்! ஆலிலை போன்ற ஒரு முழ அம்பு, பாய்வதிற் சிறந்த புலியைப் பள்ளிகொள்ளச்செய்து, விரைவிற் சிறந்த கலையை உருட்டி விளையாடித், தோலிற் சிறந்த கேழற் பன்றியைக் கீழ் மேலாக உழுது, வலியிற் சிறந்த உடும்பின் தலையில் முடிபோல் அரசு வீற்றிருந்தது என்பதைக் கண்ணாரக் காணப் பிறவி எடுத்தோம். அம்பெய்தவனைக் காணாது இறப்பின், நம் என்பு வேவாது. ஆனால் ஒன்று விளங்கவில்லை. புலியையுங்கொன்று, புலிக்கு இரையாகும் பெண்ணோக்குடைய புல்வாயையுங் கொன்ற இவனை அருளுடையவன் என்று யார் நினைப்பர்? பயன் யாதுங் கருதிக்கொல்லுபவனாயின், தானினைத்த பயனைப் பெற்றதுங் கொல்லுதலை நிறுத்துவன். பயன் நோக்காது வினை செய்தல் வேண்டும் என்ற ஒரு சாரார் அறவுரைப்படி, யாதொரு பயனுங் கருதாது, கொலையாகிய வினைசெய்தலே தன் கடனென்று எண்ணுவனாயின், அவனை ஞமன் என்று விளிப்பதல்லது, பிறிது பெயரிட்டழைக்க அறியேன். வம்மின். இன்னும் அவன் செய்த திருவிளையாடல்கள் உளவேற் காண்போம். (முன்னடந்த வெளியன் வீழ்ந்துகிடக்கும் யானையைக் காண்கிறான்.) வெளியன் : புலியைக் கண்டு அஞ்சியதுபோல் அஞ்சற்க. இந்த யானை செத்தேபோயிற்று. வயிறு துடியாதிருப்பதி லிருந்தே தெரியவில்லையா? இந்த யானையை அங்குச் செத்துக் கிடந்த புலிதான் கொன்றிருக்கவேண்டும். இதனைச் சாகடித்துத் தானுஞ் சாவுண்டது. வேண்டும், வேண்டும். “பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்” என்பது விலங்குக்கும் பொய்யா மொழியன்றோ! பண்ணன் : நீ சொல்லுவதைப் பார்த்தால், புலிக்கு இன்னா செய்த அம்புக்குரியவனும் பிறரால் கொல்லப்பட்டுக் கிடக்கவேண்டுமே. மூவன் : போ, அண்ணா. நீ தெரியாமல் பேசுகின்றாய். நீ சொல்லுகிறபடி, நடக்க வேண்டுமென்றால் அம்பிலே பெயரிருக்க வேண்டுமா, இல்லையா? வருவது அறிந்துதான் பெயரில்லாத அம்பை எய்திருக்கிறான். அவன் தன் அம்பு போல அறிவுங் கூர்மையுடையவன். சேந்தன் : (மூவன் தோளைத் தட்டி) நான் எதை நினைத் தேனோ, அதையே சொன்னாய். என்ன செய்தாலும், மனிதன் அறிவினாலே தப்பித்துக்கொள்வான். அதனாலே தான் உலகத்திலே அறிவிருக்கிற மக்கள் எந்தத் தீமையையுந் துணிச்சலாகச் செய்கிறார்கள். வன்பரணர்: நீங்கள் எல்லீரும் மனிதனாற்றல் அறியாமல் பேசுகின்றீர்கள். இந்த யானையைக் கொன்ற (கையம்பைக் காட்டி) இந்த அம்பே அந்த உடும்பையுங் கொன்றது. ஐயமேயில்லை. நல்லோர் சொல்லைக் கல்லார் தஞ்செவி வழியாகத் தடையின்றி விட்டுத் தம் வாழ்வைக் கெடுத்துக் கொள்வதுபோல, இவ்வம்பும் யானையின் செவி வழியாகப் போய் மாளச் செய்த ஒழுங்கினைப் பார்மின்; மருட்கை யடைவீர். அம்பின் கூர்மையோ எல்லா உயிர்களையுங் கொன்றது? இல்லை, இல்லை. இதோ காணீர் அம்பினை. மண் வெட்டிபோல் மழுங்கி மடிந்துவிட்டதே. பேரியாழேயாயினும் அறியாதான் கைப்புகின் என்னாம்? நரம்பு அறுபடுவதல்லது இசை பிறக்குமா? உரைமதி. அம்பிற்கு வன்மையும் விசையும் எய்பவன் கொடுப்பதல்லது இயல்பில் இல்லையே. பண்ணன் : பரணர் சொல்வதே மெய்ம்மை. அம்பிற்கு வன்மை இயல்பென்றால், அது தன்னை வைத்திருக்கிற பரணரை இன்னும் வைத்திருக்குமா? வன்பரணர் : ஒரு தனி வேடுவன் தன் ஆண்மையை ஓருருவாய்த் திரட்டி, இத்துணை உயிர்களையும் அம்பு கருவியாகக் கொன்றிருக்கிறான். அவன் ஓர் வல்வில் வேட்டுவன். புலவர் பாடல் பெறத்தக்க மறவேட்டுவன். (நடுங்கி) ஆனால்...... என்னெஞ்சு துளங்குகின்றது. சொல்ல நா நீளவில்லை. அவ்வேட்டுவனைப் பார்க்க விழைந்த என் வேணவாவும், சாகுந் தறுவாயில் நாடியோட்டங் குறைவதுபோல, வரவரக் குறைகின்றது. அவன் நம்மைப் பாராமல், நாம் மறைந்து திரும்பி விடுவது நல்ல காலம் என்றே கருதுகிறேன். வெளியன்: முன்னேறுங்கள் என்று முதலிலே சொன்னீர். அதன்படி புறப்பட்டு இதுவரை வந்தோம். பின்வாங்குங்கள் என்று இப்பொழுது சொல்லுகிறீர். அதன்படியுஞ் செய்யக் கடமைப்பட்டிருக்கின்றோம், அறிவிலும் முதுமையிலும் முதிர்ந்தோராதலின், எங்கள் நலமே கருதுவராதலின், தலைவராதலின். வன்பரணர் : ஒழுக்கம் கடவாத அறிவிற்குத் தெளிவான காரணங்களைப் பின்வரும் நிகழ்ச்சிகள் காட்டினால், முன் செய்த முடிவை மாற்றிக்கொள்ளக் கடமைப்பட்டவன் மானமுடைய மகன். காரணமில்லாமற் சொல்லவில்லை. தனக்கு ஒரு தீங்குஞ் செய்யாத யானை, புலி, மான், பன்றி, உடும்பு என்ற வரிசைப்படி, உயிரினங்களைக் கொன்றேயிருப் பான். அப்பிணத்தை இன்னுஞ் சிறிதே தொலைவிற் சென்றாற் காணலாம் என்று நான் நினைப்பது முறைதானே? (ஆம்! ஆம்!) மனிதன் முதலா உடும்பு ஈறானவற்றிற்குக் கூற்றுவனாய ஒரு தீயவனைக் காண்பதுந் தீதுதானே? (ஆம், ஆம்) கண்ணால், பண்ணிசைத்து மகிழ்விக்க எனறு அம்பொன்று கையேந்திச் சொன்னால், அப்பாவியை எதிர்ப்பது யார்? ஆதலால் போனது போதும், நிறுத்துங்கள். அம்பையும் உடும்பையும் அப்படியே போட்டுவிட்டுக் கை கழுவுங்கள். இவன் கொன்றவற்றைப் புசித்துப் பிழைப்பதினும் பசித்துச் சாவது நல்லது. கோலால் யாழினையும், குறுந்தடியால் முரசினையும் அல்லது பிறி தொன்றினை வருத்த நினையா நம்மையும், யார் பொருளை யார் எடுப்பதென்று, இவ்வம்பாலே குத்துதலுஞ் செய்வான். (தொலைவிலே மரச் செறிவுக்கிடையே வல்விலோரி வருகின்றான். தலையில் திருமணி; முதுகின் வலப்புறத்தில் அம்பறாத் தூணி; இடது தோளில் வில்; மார்பில் அரச சின்னங்கள்; காலில் குருதி தோய்ந்த கழல் என்றின்ன கோலமுடையவனை வன்பரணர் காண்கின்றார்.) வன்பரணர் : (வாய் பொத்தி) ஆரவாரஞ் செய்யாதீர்கள். அக்கொலைவன் இவனேதான். (மூக்கிற் சுட்டு விரல் சேர்த்தி) இவன் யாராக இருக்கலாம்? முன்பின் அறிந்த முகமாகவுந் தெரியவில்லை. கொலைவன் என்பதிலும் ஐயமில்லை. ஒருகால், ஊன்விலை வாணிகத்திற்குக் கொல்லுபவனாக இருக்கலாம். (சிறிது தங்கி) அப்படியானால் யானையையும் புலியையும் ஏன் கொல்லுகின்றான்? பண்ணன் : ஐய, யானையின் ஊனைப் புலிக்கு விற்பதற்கும், துறவிகட்குப் புலித்தோலை விற்பதற்கும் கொன்றிருப்பன். (ஓரி நெருங்கி வருகிறான். பல அணிகலன்களை வன்பரணர் பார்க்கிறார்.) வன்பரணர் : நான் நினைத்தது பிசகு. இவன் சொல்லிய தும் அப்படியே. ஆயிர நரம்பியாழ் போலும் பெருஞ் செல்வ முடையவன். மார்பிற் கிடக்கு முத்தாரம் ஒன்றே இவன் திருமகள் நோக்குடையவன் என்று காட்டுகின்றதே. கையில் மணிக்கடகங்கள் உடைய இவனோ இறைச்சி விற்கும் பாசவன். (ஓரி அணிமையில் வர அரச சின்னங்கள் விளங்குகின்றன). யான் நினைத்தது ஒவ்வொன்றும் பிழை. இவன் செல்வன் மட்டும் அல்லன்; ஓர் அரசன்; வேட்டுவ அரசன். வேட்டையாடி உயிர்களைக் கொல்லு மறம் இவனுக்கு அறமே யாதலின், கொலைவனும் அல்லன்; விலைவனு மல்லன்; கொடியோனு மல்லன். விளங்காதன எல்லாம் விளங்கிவிட்டன. கொடையா ளனா அல்லனா என்பதும் இன்னுஞ் சிறிய போழ்தில் அறியலாம். (பாணர்களைப் பார்த்து) தவக்கம் வேண்டா. பல இயங்களை இயக்குங்கள். முழவு அதிரட்டும். ஆகுளி தொடுமின். பண்ணை யாழிற் பாடுமின். (விறலியரைப் பார்த்து) வண்ணம் பாடுதிர். (விரைவாக) நம் பாண் தொழிலுக்கு அடையாளமான அந்தக் கரியகோல் எங்கே? என் கையிற் கொடுப்பீர். (வல்விலோரி அணிமையில் வரவே, எல்லாருந் தொழுதெழு கிறார்கள். இருந்து பாடும்படி கைகவித்து, ஒவ்வொருவரையும் இருக்கும்படி செய்கிறான்.) வன்பரணர் : (கைகூப்பி) அரசே, ஒன்று சொல்ல அருளல் வேண்டும். ஓரி : நீங்கள் சொல்ல விழைவதிதுவெனத் தெரிந்து கொண்டேன். மிகப் பசியாக இருக்கிறீர்கள். (மான் தசைத் துண்டை நெருப்பில் வாட்டிக்கொண்டு வந்து) பாணர் தலைவரே! எல்லாரும் இவற்றைத் தின்று பசியாறுங்கள். வன்பரணர் : (தின்றுகொண்டே) மன்ன, யான் சொல்ல நினைத்திருப்பது வேறு. ஓரி : உங்கள் உள்ளத்தை என்னுள்ளத்தால் அறிந்து கொண்டேன். நீடு பசித்திருப்பதால், மான் சூட்டினைத் தின்றவுடன் விக்குள் உண்டாகின்றது. (ஆவின் நெய் போன்ற மதுவடைத்த புட்டில்களை முன்னர் வைத்து) இம்மதுவைச் சிறிது சிறிது குடித்துக்கொண்டு, மான் சூட்டிறைச்சியை அருந்துங்கள். அழிபசி நீங்கும். வன்பரணர் : (மதுவையும் இறைச்சியையும் மாறி மாறி உண்டு) கோவே! நாங்கள் நாடு நாடாக ஊர் ஊராகப் போய்வரும் நாடோடிகள். ஓரிடத்திலாவது தங்களுக்கு ஒப்பாகச் சொல்லத்தக்க வேட்டுவரைக் கண்டதில்லை. உண்டென்று சொல்லக் கேட்டதுமில்லை. தாங்களே மற்றை வேட்டுவர்களுக்கு உவமையாகத் தக்கவர்கள். சேரவேந்தன் தனக்குப் பொறியாக வரைந்திருப்பது உங்கள் கைவல்வில் லன்றோ! (அம்பைக் கையில் எடுத்துக்கொண்டு) வரிசையாக நிறுத்தினால், சாய்கோணம் என்னும்படி, யானைச் செவி நுழைந்து, புலி வாய்பிளந்து, மானுடல் வழியாகப் பன்றியின் குடர்சரித்து, உடும்புத் தலையில் செங்கோலாக நின்றது இவ்வம்பு என்றால், புகழ்ச்சிக்குரியது முனை மழுங்கிய இவ்வம்போ, அன்றி எய்த பெரியவனோ? ஓரி : ஐயப்படாத பொருளில் ஐயப்படுகின்றீர். உயிரில் பொருளாகிய அம்புக்குப் புகழ் பழி என்ற வினைப்பயன் உண்டோ? வினையில் பொருள்களைக் கருவியாகக் கொண்டு வினை செய்தவனே அவை எய்தற் குரியவன். பல்லுயிர்களைப் பதறக் கொன்றது அறநூல்கள் பழிக்குஞ் செயல்; ஆதலின், எய்தவன் பழியுடையவன் என்று சொல்ல ஏனோ தயக்கம்? அப்பழிச் சாவுகளை நேரிற் கண்டு இறந்த உயிர்களிடம் இரக்கமும், இறவாத அவனிடம் கண்ணோட்டமுங் கொள்ளும் நீங்களே புகழ்ச்சிக்குரியவர்கள். (எதனையோ உள்ளத்துக்கொண்டு, இங்ஙனம் புறம்பே தன்னைப் புகழ்கிறார்கள் என்று எண்ணியவனாய்) பெரும் பாணரே! பிறரிடம் இரந்து இரந்து எவ்வளவு நாள் தான் காய் பசியைத் தீர்த்துக்கொள்வீர்கள். வெயிலில் அலைந்து கால்களுஞ் செருப்புப்போல் தேய்ந்துவிட்டன. கண்களும் ஒளி மழுங்கின. அற்ற மறைக்கும் அளவே ஆடை அணிந்திருக் கிறீர்கள். இளமையிலேயே முதுமை யடைந்துவிட்டீர்கள். எவ்வுயிரும் விரும்பும் இசைக் கல்வியுடைமையினாலே, உயிரல் வறுமையும் உங்களை விரும்பி உயிர் பெற்றிருக்கின்றது. நாங்கள் வறியராவதாயினும், உங்களை வண்மைச் செல்வராக்குவதே எங்கள் தொழில். (மார்பிற்கிடந்த முத்தாரத்தைக் கழற்றி அவர் மார்பிற் போடுகிறான். மற்றைய பாணர்கள் தங்கள் கழுத்திடைக் கிடப்பதேபோல் மகிழ்கிறார்கள்.) வன்பரணர் : வள்ளலே! இந்த அம்பை உடையவரிடஞ் சேர்ப்பிக்க வேண்டுமென்றுதான் எடுத்துக் கொண்டு வந்தோம். இதனை உடைய வல்வில் வேட்டுவர் தாங்களேயா விர். தங்களைக் காணாமுன், இதனை எய்தாரை வேறு விதமாக எண்ணியிருந்தோம். இப்பொழுதோ, கொடையிற் சிறந்த தங்களைக் கண்டு, வேறுவிதமாக எண்ணுகிறோம். ஆனால் இன்னும் ஒரு ஐயம். ஓரி : எம் புகழ்ச்சிக்கு உம் வறுமையே காரணம். ஐயம் நீர் கேட்பது இயல்புதானே. மனம் உவக்கும், முகமலரும் பொருள்தர நினைப்பினும், இவ்வமயம் காட்டில் உறைதலின், வேறு கலன்கள் கொடுத்தற்கில்லாத வறியவனாயிருக்கிறேன். (கையில ணிந்திருந்த இரு மணிக் கடகங்களையுங் கொடுத்து) இன்னுந்தர விரும்பினன். வன்பரணர் : (பெருமகிழ்வொடு) என் ஐயம் நீங்கியது. மறத்தினுங்கொடையே விஞ்சியது என்ற தெளிவு பிறந்தது. கொடையரசே, தங்கள் குடைநிழலிற் பட்ட நாடும். இரவலர் புலவலராகிய தங்கள் பெயரும், எங்கள் செவி குளிர மனம் இனிப்பச் சொல்லி யருளுக. இதனைச் செவி கைப்பக் கேட்ட ஓரி தன் புகழ்கேட்க நாணி ஒன்றுஞ் சொல்லாது மறைந்து விடுகிறான்.) வன்பரணர் : (அவன் சென்ற திசை நோக்கித் தொழுது) என்னுள்ளம் நிறையக் கண் மறையச் சென்ற இந்நம்பி வாழிய. ஆவுராய்தற்கு நடுங்கல்லினுந் தம் பெயர் பொறிக்கும் மக்களுடைய இவ்வுலகத்து, இக்குரிசில் போல் வார் அரியரோ அரியர். புகழ் வாங்கப் பொருள் விற்கும் வாணிக வள்ளல் இவரல்லர். மறுமையில் நற்பிறவியை அல்லது பிறவாமையைத் தரவல்லது என்று இம்மையில் கொடைய செய்யும் வினையு டையாருமல்லர். குடிகாத்தல் கருதி மகனுக்குத் தன் பொருளை விடுந் தந்தையுமல்லர். முதுமையிற் காப்பான் மகனென வளர்க்குந் தாயுமல்லர். வெயிலிற் காய்ந்தும், மழையில் நனைந்தும், பனியில் நடுங்கியும், வாடையில் உலர்ந்தும், பசி தணிக்குமளவே கூழ்குடித்து, மானங்காக்கு மளவே கோவணம் அணிந்து, மர முதலா அரசனீறா எல்லா உயிர்க்கும், நினைப் பின்றி உழைக்கும் உழவனே இச் செம்மலுக்கு ஒப்பாவான். கல்லா மறவர் போலுங் கல்லாக் கொடையாளி. (ஏரோ ஒரு நினைவு எழ அவன் கொடுத்த முத்தாரத்தையும் கடகத்தையும் பார்க்கிறார்.) ளஎன்னே, இவருள்ளத்தின் உயர்வு. இவற்றிற் கூடப் பெயரில்லையே! இவையெல்லாம் உடைமைப் பொருளில; பிறர் வைத்த அடைக்கலப் பொருள்கள் என்ற நினைவினர் போலும். தம்மையே பிறருடைமை என்ற துறவிற்கு வந்த ஆண்டகை இவையிற்றைத் தமதாகக் கருதுஞ் சிறுசெல் வரோ! தெரிந்து கொண்டேன். அம்பிற் பெயர் பொறியாத காரணம் அறிந்து கொண்டேன். தம் பெயரை மறத்தினும் அறத்தினும் வெளிப்படுத்த விரும்பாத மறையோரிவர். பெயரும் நாடுங் கேட்டதும், நங்கண் துணுக்குறப்பின் வாங்கினரே. அஃது அவர்க்கு ஒக்கும். போரில் நெடுமொழி கூறப் பின் வாங்காப் பொருநர், புகழ் கேட்க நாணிப் பின்வாங்கல் ஒக்கும். நடமாடத் தெரிந்த பிள்ளையை யாரே எடுக்கிப் பாராட்டுவர். தன் புகழ் பரப்புவதைத் தனது தொழிலாகவும், கடனாகவும் கொண்டு விட்டானுக்குத் துணையாக யாரும் வாரார்; துணைவேண்டுவதுமின்று. கைப்பிள்ளையை முத்தி ஆரத்தழுவி அணைத்துச் செல்ல எல்லாருங் காதலிப்பது போலத் தன்னைப் புகழாதான் புகழே ஞாலத்துப்பலரால் சொல்லப்படுமன்றோ? ஆதலின், அத்தோன்றலின் புகழை மண்தேயப் பரப்புவதே நம் பிறப்பின் தொழில். அப்பெரு மானார் பெயரை யாழிற் பண்படுத்துவதே நங் கல்வியின் பயன். வெளியன் : பெயர் தெரிந்தாலும் போதும். நாடு இதுவெனத் தெரிந்தாலும் போதும். இவற்றை ஏன் உடனே கேட்டீர்கள்? கேளாதிருந்தால் இவண் நெடிது தங்கியிருப்பார். கேட்டதால் கொடைஞர் கள்வன் போல் மறைந்துவிட்டனர். சிறிது போழ்திருந்தாரேல், நாமும் இசை பாடியிருப்போம். அவரும் பண்ணில் மயங்கியிருப்பர். பின்னர்ப் பெயரும் நாடுங் கேட்டக்காற் சொல்லியு மிருப்பர். பண்ணன்: அதனை முன்னர்த் தெரிந்துதான் புறப்பட்டுப் போயினர் போலும். வன்பரணர் : தம்மைப்பற்றிய முத்தமிழையும் முனிபவர் காண் இவர்; என்றாலும் முத்தமிழ் இத்தகையோரைப் பற்றாமலிருக்குமா? பண்ணிசைத்துக் கைம்மாறு காட்டுவர் என்று கருதிச் சென்ற அவர் புகழே புகழ். தம் புகழ் தம் முன்னர்க் கூறக் கேளா அவர் நாணமே நாணம். செய்ந்நன்றி எனைத் துணையும் எண்ணா அவர் கொடையே கொடை. (அப்பொ ழுது வில்லேந்திய கையினராய்ச் சிலர் விரைந்து நடந்து கொண்டே, எம்மரசர் இவ்வழியாகச் சென்றதைக் கண்ட துண்டோ? என்று வினவுகின்றனர்.) வன்பரணர் : (விரைந்து) அவ்வள்ளலின் புகழ்ப் பெயர் யாதோ? வந்தவர்கள் : (ஏளனமாக) அவர் பெயரை அறியாதிருக் கின்ற உம் பெயர் என்னவோ? வெளியன் : (சிரித்துக்கொண்டு) இசையுலகிற் பெயர் போகிய வன்பரணர் என்றிவரை அறியாத உம் பெயர் என்னவோ? மூவன் : (பரணர் மார்பின் ஆரத்தையுங் கைக்கடகத்தை யுங் காட்டி) இக்கலன்கள் அவர் கையால் கழற்றி இவருக்கு எம்மனமார அணியப்பட்டவை. வந்தவர்கள் : இவையுந் தருவார். இக் காடு கடந்து உதுக்காண் தோன்றும் கொல்லிமலை நாட்டிற்கு நீவிர் வருக. எல்லாந் தருவார். வன்பரணர் : (மகிழ்ந்து) உண்மை உணர்த்திய நீங்கள் யாரோ? உங்கட்கு என்ன கைம்மாறு செய்வோம்? (என்று பாடத் தொடங்குதல்) வந்தவர்கள் : நாங்கள் அவரைப் பின் தொடர்பவர்கள். அவர் சென்ற வழிகாட்டிய உங்கட்கு. . . . (ஒருவன் மோதிரத்தைக் கழற்றி அவர் விரற்கண் போடுகிறான். வந்தவர் எல்லாரும் விரைந்து புறப்பட்டு விடுகின்றனர். பாணர்கள் கொல்லிமலை யையும் ஓரியையும் பாடிக்கொண்டு அம்பையும் எடுத்துக் கொண்டு வழி நடக்கின்றனர்.) வெண்பா உடைமை யெனப்படுவதி யாதெனின் யாதுங் கொடைமை யிலாத குணமே - கொடைமை உடையான் தொகுத்த துலகமே யாக உடையான் இரப்பவனென் றோது. 4. மனைவியின் உரிமை மடத்தகை மாமயில் பனிக்குமென் றருளிப் படாஅம் ஈத்தகெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக பசித்தும் வாரேம் பாரமும் இலமே 5 களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ் நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி அறஞ்செய் தீமோ அருள்வெய் யோயென இஃதியா மிரந்த பரிசிலஃது இருளின் இனமணி நெடுந்தே ரேறி 10 இன்னா துறைவி யரும்படர் களைமே. புறநானூறு - 145 வையாபிக் கோப்பெரும் பேகனைக் கண்ணகி காரண மாகப் பரணர் பாடியது. 1. பெருங்குன்றூர் கிழார் பாட்டு கன்முழை யிருவிப் பன்மலை நீந்திச் சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக் கார்வான் இன்னுறை தமியள் கேளா நெருநல் ஒரு சிறைப் புலம்பு கொண்டுறையும் 5. அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல் மண்ணுறு மணியின் மாசற மண்ணிப் புதுமலர் கஞல இன்று பெயரின் அதுமனெம் பரிசில் ஆவியர்கோவே புறநாநூறு - 147 4. மனைவியின் உரிமை காட்சி - 1 களம் : சோலை காலம் : மாலை. கூற்று : பேகன் மனைவி கண்ணகியும், தோழியும். கண்ணகி : (தன்னுள்) யான் கெடினுங் கெடுக; என் கொழுநன் புகழ் நிலவுக. ஆம்; இப்படிச் செய்தால் என்ன ஆகும்? அவர்க்கு என் மேல் இப்பொழுதுள்ள அன்பு குறையும். குறையட்டும். மற்றவர் அவர் மேல் வைத்திருக்கின்ற நன்மதிப்புக் குறைதல் கூடாது. நிறைமதி பிறைமதி யாகும். அப்படியே செல்லுமா? மீண்டும் நிறை மதியாகுமன்றோ? உண்மை அறிந்த பின்பு, அவர் அன்பு நிறையும். என்னைப் பற்றி எனக்குக் கவலை யில்லை. எம்பெருமானுக்குந் தன்னைப் பற்றிக் கவலையில்லை. ஒரு குடும்பத்து இருவரும் இங்ஙனம் இருக்கலாமா? ஆம்; அதுதான் நல்ல வழி. நான் அவரைப் பற்றி அக்கரைகொண் டால், அவரும் என்னைப் பற்றி அக்கரை கொள்வார். கொள்ளாவிட்டாலும் அவர் விருப்பம் அது. என் கடனை நான் செய்வேன். கணவன் உடல் பேணுவதும், அவன் புகழ் காப்பதும் வாழ்க்கைத் துணையாக வந்த மனைவிக்கு உரிய செயல்கள் என்று திருக்குறளிற் கற்றதுண்டு. கலங்காமற் கற்றபடி, ஏ! நெஞ்சே, நில். மனமே! நீ தொழுந் தெய்வம் நின்னை மறந்தது. மறதியை நினைவூட்டுக. (சோலைக்குள் நுழைந்த தோழி, கண்ணகி தானே கவலை யொடு பேசிக்கொள்வதை மறைந்து நின்று கேட்கிறாள். கண்ணகி தனக்குத்தானே.) ஆ! எவ்வண்ணம் இருந்த அவருள்ளம் இன்று இவ் வண்ணம் ஆயிற்று. மணஞ் செய்த அன்று போல் இளமைப் பொலிவு மாறா அவர் திருமேனியுமா இப்படித் போதல் வேண்டும். ஆம்; செய்வதைச் செய்து பார்க்கலாம். என் இல்லப் பெண்மை வெல்லுகின்றதா? அவர் போராண்மை வெல்லுகின் றதா என்று பார்க்கலாமே. (சிரித்துக் கொள்ளுகிறாள்) நான் தோற்பதா? இல்லை? இல்லை. பெண்ணலங் கனிந்த என்னுடல், அவரையே துன்பத்தும் இன்பத்தும் நினைக்கும் என்னொருமை நெஞ்சம், அவர் வாழ வாழும் என்னுயிர் என்பதெல்லாம் உண்மையாயின், என் தெய்வப் பெருமானே! கொண்டானே! காதலனே! இனி நீர் என்னைப் பிரியமாட்டீர் என்பதும் உண்மை. யான் உம்மைப் பழியினின்றும் மீட்பேன் என்பதும் உண்மை. நும்மால் வெறுக்கப்படமாட்டேன் என்பதும் உண்மை. அறிவும் அன்புமுடையார் செயல் அழிவைத் தருவதுண்டோ! தோழி : (அருகில் வந்து) கண்ணகி, நான் வருவதற்கு முன் இங்கு வந்துவிட்டாயே. கண்ணகி : (முந்தானையாற் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு) உடன் வாராதது நின் குற்றமே; என் குற்றமன்று. தோழி : நான் அறியக் கூடாதென்று கண்ணீரைத் துடைக் கின்றாய். அதனாலென்? நீ நெடு நேரமாக அழுது கொண்டி ருந்திருக்கிறாய் என்பதை மார்பில் நனைந்த கண்ணீர் காட்டு கின்றதே. சோலைக்கு மாலையில் வருகின்ற நீ வழக்கம் போற் புத்தாடை அணியாமல், ஏன் இப்படித் தூசுபட்ட ஆடையை உடுத்தியிருக்கிறாய்? கண்ணகி : அவர் வெண்ணிறப் புகழாடை அழுக்காக இருக்கும் வரையில், என் புடைவையும் அப்படித்தானே இருக்கும். தோழி : சொல்லும் போதே குடஞ் சாய்ந்ததுபோலக் கண்ணீர் குபுகுபு என்று கொட்டுகின்றதே! (கண்ணீரைத் துடைத்து விடுகிறாள்.) நீ, அரசன் தேவியா, இப்படி அழுவது. உன் முகத்தின் ஒளி, குளிப்பாட்டாத பிள்ளை முகம் போல, மங்கித் தோன்றுகின்றதே. கண்ணகி : அவர் உள்ளொளி இருள் படும்போது, தோழி, என் முகம் ஒளியுடைய வல்லதா? தோழி : நீ அழக்கூடாது. நீ அழக்கண்டால், அவர் பொறுக்கமாட்டார். அழாதே. கண்ணகி : ஆம், ஆம். பொறுக்க மாட்டார். சினந்து கொள்வார். அப்புறமும் எனக்கு அவர் தாம் துணை. அடித் தாலுங் குழந்தை தாயின் காலைத் தானே சுற்றும். தோழி : நீ அழும்படி இப்பொழுது என்ன நடந்து விட்டது? அரசன் குடிகளுக்குக் கொடுங்கோலனாக இருந்தா லன்றோ, தேவி கண்ணீர் வடிப்பாள். எம்மரசன் பேகன் எவ்வு யிர்க்கும் அருள்செய்யும் வள்ளல். கண்ணகி : (தோழி முகம் பாராது வானம் பார்த்து) இவள் சொல்வது ஒக்கும். நன்று; நன்று. மயிலுக்கு நல்லவர்; மக்கட்கு நல்லவர்; பகைவர்க்கும் நல்லவர்; ஆனால் மனைவிக்கு . . . . (அழுகின்றாள்.) தோழி : (சிரித்துக் கொண்டு) தோழி, என்னோடு பேசப் பேச உனக்கு அழுகை மிகுதியாகின்றது. கண் துடிக்கின்றது. நீர் வடிகின்றது. மெய் வெதும்புகின்றது. பேசினால் துன்பம் குறையும் என்பார்கள். அதனாலே பேசினேன். நமக்கென்ன பேச்சு, சோலைக்குப் பேசவா வந்தோம்? எழுந்திரு. நீருட் பாய்ந்தும், சிலம்போடு கூவியும், கிளியோடு பேசியும், பூக்கொய்தும், ஆடிப்பாடி விளையாடுவோம். நேற்று என்னிடம் விளையாட்டில் தோற்றாய். இன்றைக்குந் தோற்பாய், வா. (இருவரும் விளையாடல்.) காட்சி - 2 களம் : நிலா முற்றம் காலம் : நிலவின் இரவு. கூற்று : பேகன், கண்ணகி, தோழி பேகன் : (வியப்போடு) சூல் கொண்ட மேகம் போல் இருண்டு திரண்ட நின் கூந்தற் கற்றை கலைந்த வெண்மேகம் போல் இருக்கக் காண்பானேன். ஆ! இஃதென்னை கொல்! காலைக்கோர் கோலம் மாலைக்கோர் கோலஞ் செய்யும் அழகி, அழுக்கடைந்த உடையொடு நிற்கின்றாயே. என்ன, இது? குளிக்கவும் இல்லையோ? என் வாளொளி போல உடலொளி குன்றியிருக்கின்றதே. அப்படியெல்லாம் நீ இருக்கமாட்டாயே. (கண்ணகி பேசாதிருத்தல்.) தோழி : (அருகில் நின்றவள்) அது மட்டுமில்லை. நாட்கள் இரண்டாக வாயும் பட்டினி. கண்ணும் பட்டினி. பேகன் : என் ஆருயிரே, (தாழ்ந்த கண்ணகி முகத்தை நிமிர்த்தி) முகங் கடுகடுப்பாக இருக்கின்றதே. உடல் நலமில்லை போலும். உடல் காயலா? (கைபிடித்து நாடி பார்ப்பதுபோல் பார்க்கிறான். மார்பைத் தொட்டுப் பார்க்கிறான்.) மார்பு சூடாக இருக்கின்றது. நெஞ்சு படபட வென்று அடிக்கின்றது. (தோழியைப் பார்த்து) ஏதாவது உடம்பு காய்ச்சலா? அரண் மனைப் பெண் மருத்துவரை அழைத்துக் கேட்பதுதானே. தோழி : உடம்பு காய்ச்சலாகத் தெரியவில்லை. உட் காய்ச்சலாக இருந்தாலும் இருக்கலாம். பேகன் : (கண்ணீர் வடிக்கும் கண்ணகியை இறுகத் தழுவிக் கொண்டு) எதற்காக நீ அழவேண்டும்? நீ அழ நான் அழ என்றிருந்தால் நன்றாயிருக்குமா? கன்னத்தில் நீர் ஆறுபோல ஓடியிருக்கின்றதே. கால்வாய் போலத் தடம் படும்படி அழுதிருக்கின்றனையே. அழலாமா? உனக்கு உடம்பு இப்படி இருக்குமென்று தெரியாது. காற்று வழியாகத் தெரிந்திருந்தா லும் வந்திருப்பேனே. கண்ணகி : இப்படி யிருக்குமென்று தெரிந்தாற்றான் வருவீர்கள். உங்களை வரவழைப்பதற்கு நான் உடல் கெட்டி ருக்க வேண்டுமாக்கும். உடம்பு நலமாக இருக்கிறதென்றால் எட்டியே பார்க்க மாட்டீர்கள். பேகன்: ஏடி, தெரியாதவளே. இல்லாளுக்கு உடல் நோய்; பிள்ளைகளுக்கு முடியவில்லை; அல்லது தனக்கு நலமில்லை என்றால், ஆண் பிள்ளை வெளியே போகாமல் வீட்டிலேயே கிடப்பான். எல்லாரும் நலமாக இருந்தால் ஊர் சுற்றியும் சில இடங்களில் தங்கியிருந்தும் வருவான். எப்போதும் வீட்டிலேயே யிருப்பதென்றால், எப்போதுதான் வெளி வேலை பார்ப்பது. நீ சொல்லு. (சிரித்துக்கொள்கிறான்.) கண்ணகி : (குனிந்து கொண்டு) நாட்கள் இரண்டாக நீங்கள் எங்குச் சென்றிருந்தீர்கள்? பேகன் : (சிரித்துக் கொண்டு) நீ தெரியாதவள் மாதிரி பேசுகிறாயே. அரசனுக்கு நாட்டில் அலுவல்கள் பல. இரண்டு நாட்கள் மட்டும் அல்ல. இரண்டு திங்கள் கூட வெளியே தங்கியிருக்க வேண்டியிருக்கும். முன்பெல்லாம் நான் பல நாள் வெளியே போயிருந்தபோதும் நீ அழவில்லையே. இப்போது இரண்டு நாள் பிரிந்ததற்கு இவ்வளவு அழகிறாயே. முன்பு பிரிந்த நாளெல்லாவற்றையுங் கணக்குப் பண்ணிக் கண்ணீர் சிந்துகிறாய் போலும். என் கண்ணே! சிறு பிள்ளைத் தனமாகக் கோப்பெருந்தேவியாகிய நீ அழலாமா? கண்ணகி : இரண்டு நாட்கள் பகலிலும் இரவிலும் எங்குத் தங்கியிருக்கிறீர்கள்? பேகன் : (சிரித்துக் கொண்டு) பகலில் எங்கிருந்தேனோ அங்குதான் இரவிலும் இருந்தேன். வேண்டாததை யெல்லாம் நிலாமுற்றத்திலே இருந்து கொண்டுதான் பேச வேண்டுமாக்கும். கண்ணகி: உங்கள் வருகை கார்த்திகைப் பிறையைக் காணுவது போலாயிற்று. வந்த நேரத்திலே தானே பேச வேண்டும். பேகன் : (புன்சிரிப்போடு) பேசு; பேசு. கேட்கிறேன். நீ பேசினால் என் செவி குளிரும். மனைவி பேசக் கேட்கும் பேறு வேண்டுமே. கண்ணகி : (தழுவிக்கொண்டு) நீங்கள் இனிமேல் இந்த அரண்மனையை விட்டு எங்கும் போகக் கூடாது. போனால் அழுவேன். பேகன்: அரசன் புறத்தே போகாமல் அமைதல் ஒல்லுமா? ஆட்சி செம்மையாக நடக்குமா? அதற்கொரு வழி சொல்லு. யான் இங்கேயே இருந்துவிடுகிறேன். கண்ணகி : நீங்கள் என்னைவிட்டு இனிச் சற்றும் பிரியக் கூடாது. பேகன் : பொன்னே, நீ கேட்பது பொருத்தந்தான். என்னைப் பிரிய உனக்கு மனம் வராதது இயற்கையே. நமக்கு இதுவரை ஒரு குழந்தை பிறந்திருந்தால், என் பிரிவு பிரிவாக உனக்குத் தோன்றாது. அக்குழவி முகத்தில் என் முகங்கண்டு நின்முகம் இன்புறும். என் செய வல்லேன். உன்னைப் பிரியவுங் கூடாது. நாடு முழுவதும், அரசனாதலின், சுற்றிப் பார்த்துக் கண்காணிக்கவும் வேண்டும். பிரிந்தால் நீ வருந்துவாய். கண்காணிக்காவிட்டால் நாடு வருந்தும். கண்ணகி : கோப்பெருந் தேவிதானே நான். நாட்டைக் காக்கும் பொறுப்பு எனக்கும் உண்டுதானே. அதற்கு அறிகுறி யாகத் தானே நான் அரசவையில் உங்களொடு வீற்றிருக்கிறேன். ஆதலின் நீங்கள் நாடு சுற்றிப் பார்க்கும்போது யானும் உடன் வருவேன். பேகன் : ஏது புதுமாதிரியாகப் பேசுகின்றாய். நீ இந் நாள்காறும் இப்படி வாய் திறந்து பேசியதை நான் கேட்டதே யில்லை. (அவள் முகத்தைச் சிறிது நிமிர்த்தி) என் அருமைக் காதலிதானா இப்படிப் பேசுபவள்? இல்லாத வழக்கத்தை ஏற்படுத்த நினைக்கின்றாயே. நான் சுற்றிப் பார்ப்பதில் உனக்கு ஏதுமு ஐயமுண்டா? வேண்டுமானால் (வெறுப்பாக) ஒற்று வைத்துப்பாரேன். அரசவையில் நீ உடனிருப்பதுதான் வழக்கம். உடன் வருவது வழக்கமில்லையே. வேறொன்றுமில்லை. எல்லாம் என் குற்றம். என் பிரிவை நின்னால் ஆற்றியிருக்க முடியவில்லை, அது எனக்குத் தெரியவில்லை. பெண்கள் உள்ளதைச் சொல்லவும் நாணப்படுவார்கள். அடக்க முடைய வர்கள் போலக் காட்டியும் கொள்வார்கள். (தனக்குத்தானே) நாட்டிலே காரியங்கள் எவ்வளவு இருந்தாலும், இனிமேல் வீட்டிற்கு அடிக்கடி வரத்தான் வேண்டும். இதுவும் மணஞ் செய்து கொண்ட மகனுக்கு ஓர் இன்பக் காரியந்தானே. இதுவரை இருந்ததுபோல் இருத்தல் கூடாது. மனைவியைக் கணவன் அழவைப்பானா? கண்ணகி : (அவள் மேற் சாய்ந்த வண்ணம்) நம்மூருக்கு நேர் தெற்கே மூன்று கற்றோலைவில் ஓர் ஊரிருக்கின்றதே. பேகன் : (மகிழ்வொடு) அவ்வூர் தான் முல்லையூர். கண்ணகி : ஆம்; ஆம். அந்த ஊர்தான் (அழுகிறாள்) பேகன் : அந்த ஊரை நினைத்ததும் ஏன் அழுகை வருகிறது? அங்கே யாரும் இறந்துவிட்டார்களா? கண்ணகி : அங்கே வாழ்கின்ற ஒருத்தி இறக்காதிருக் கிறாளே என்றுதான் அழுகிறேன். பேகன் : கண்ணகி, தாறுமாறாக ஏன் பேசுகிறாய்? கண்ணகி : அவ்வூர் அழகி; அழகு அழியாக் குமரி; அவள் கூந்தல் கருமணலாம். அவள் கண் பால் நடுவில் மிதக்கும் நீல மணியாம். அவள் பற்கள், அம்மம்ம! அடுக்கி வைத்தாற்போல் வரிசையாய் வெண்மையிலும், கூர்மையிலும் ஒளியிலும் முல்லை மொட்டையே நிகர்க்குமாம். அவள் மேனி நறுமேனி யாம். அவள் சொல் தித்திக்குமாம். அவளின்பம் இற்றெனப் பெண்களுக்குத் தெரியாதாம். கற்புடைப் பெண்டிரிடங்கூட அவள் காட்டும் அன்பு இல்லையாம். சுருங்கச் சொன்னால், அவள் இறந்தால், இனி அவள் போன்ற ஒரு பிறவி பிறக்காதாம். அவளே மீண்டும் பிறந்தாற்கூட, இத்தகைய அழகொடு இனிப் பிறக்க மாட்டாளாம். அவளையும் தம் அழகால் வயப்படுத்திய ஒரு ஆண் மகனார் உண்டென்றும், அந்த ஆண்டகை தம் மனைவியையுந் துறந்து அவ்வழகி வீடே வீடாக இரவும் பகலும் வாழ்கின்றார் என்றும் சொல்லிக் கொள்ளுகிறார்கள். நாடு சுற்றி வருந் தங்களுக்கு இப்புதுமை தெரியாமலா இருக்கும்? அப்படி நாட்டில் ஒரு புதுமை நடந்தால் மற்றவர் வாய்க் கேட்டு நான் அறிய வேண்டியவளாகின்றேன். அறிந்திருந்தும் எனக்கு மறைத்து வைத்திருக்கிறீர்கள். பேகன் : உனக்கு இது புதுமையாகத் தெரிகின்றது. நாடு சுற்றி வரும் இயல்புடைய எனக்கு இது பழமையாகக் கூடத் தெரியவில்லை. அழகியை அழகன் காதலிப்பதும் அவள் வயப்படுவதும் பேரின்பந் துய்ப்பதும் உலகத்து இயல்புதானே. இன்றுதான் தொடக்கம் என்றால் புதுமை என்று சொல்லலாம். ஆடவரும் மகளிரும் அழகாகக் காதலிப்பது தொன்று தொட்டு வருவதுதானே. நடவாதது நடந்துவிட்டாற் புதுமை. நடப்பதே நடப்பதாக இருந்தால் இயல்பு தானே. கண்ணகி : காதல, என் மனப் புண்ணை ஆழமாக்கா தீர்கள். தானுயிரென அழைத்த மனைவி, தன்னையே உயிரென உடைய மனைவி, அழுத கண்ணளாய், அழுக்குடையளாய், வாடிய உடம்பினளாய், வாழாத உயிரினளாய் இருக்கவும், மற்றொரு பெண்ணை ஓர் இல்லறத்தான் விரும்புதல் அழகா? அறமா? நம் நாட்டிடத்து அங்ஙனம் நடக்கலாமா? நடப்பதை அறிந்த பின்பும் (பொய்ச் சிரிப்பாக) நீங்கள் தடுக்காமல் இருக்கலாமா? பேகன் : (சிறிது சினந்து) கண்ணகி, உன்னை முதுக் குறைவுடையவள் என்று எண்ணினேன். என் நடத்தையை மறைமுகமாக இழித்துப் பேசுகின்றாய். இது மனைவிக்கு அழகா? அறமா? நீ சுட்டிய முல்லையூர் அழகியை விரும்புய அழகன் யானே. நீ எனக்கு வரையப்பட்டவள். நான் உனக்கு வரையப்பட்டவனல்லன். இந்த உலக வழக்கத்தை நீ யறியாது எல்லை தாண்டி ஏதேதோ பேசுகிறாயே. உன்னைக் காதலிக் கின்றேனா என்பதைப் பார்த்துக் கொள்ளும் அவ்வளவு தானே உன் பொறுப்பு. வேறு யாரையுங் காதலிக்கக் கூடாது. உன்னையே காதல் செய்ய வேண்டும் என்று என்னைக் கட்டுப் படுத்துவது கற்புக் கடந்த செயல். (ஆறுதலாக) கண்ணே, உன்னை விரும்பாமலா இப்போது வந்திருக்கிறேன். என் நெஞ்சைத் தொட்டுப்பார். உண்மை தெரியும். உன்னை நான் வெறுத்தேனாயின் என்னை நீ ஏதுங் கூறலாம். நானுங் கேட்டு வாளா இருக்கலாம். அழாதே. (இறுகத் தழுவிக்கொள்ளு கிறான்.) கண்ணகி : (மெய்ந்நடுங்கி) பகைவரைச் சினந்து சினந்து கன்றிய உங்கள் உள்ளம் உயிர் தழுவிய காதலியையும் வெகுள் கின்றது. நான் குடிமக்கள்முன் கோப் பெருந்தேவியாயினும், இல்லறத்துத் தங்கள் மனைவி தானே. நீங்களும் நாட்டிற்கு அரசராயினும் வீட்டிற்குக் கணவர் தாமே. பேகன் : (சிரித்துக் கொண்டு) இதில் என்ன உனக்கு ஐயம். புறத்தே வேற்றரசர் முடி என் காலிற்படும். வீட்டிலே என் முடி உன் திருவடியைத் தொடும். கண்ணகி : அப்படியாயின், வேற்றரசர் முடி வேறொரு காலிற் படுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்களன்றோ? அப்படித் தானே (சிரித்துக்கொண்டு) உங்கள் வீரமுடி என் இன்பத் திரு வடியைத் தவிரப் பிறிதொரு காலைத் தீண்டுவதை நான் விரும்ப மாட்டேன். பேகன் : கண்ணகி, நீ ஆண் தன்மையை அறியாது பேசு கின்றாய். வண்டுக்கு ஒரு மலரிலுள்ள தினைத்துணைத் தேன் போதாது. சிறந்த தேன் ஒரு மலரிலே பனைத் துணை அளவு மிராது. ஒரு வண்டுக்கு ஒரு மலர் என்பது உலக வியற்கையன்று. மலர்கள் நறுமணங்கொண்டு பூப்படையப் பறந்து வந்த ஒரு வண்டு, அம்மலரிடைச் சிறிது சிறிது தங்கி, ஆரத் துய்த்து இன்பந்திளைக்குங் காட்சி நாமிருவருஞ் சோலையிடைக் கண்ட காட்சி தானே. வண்டின் இசை மலரின் குமரித்தன்மையை அழிக்க, மலரின் நறுமணம் வண்டினிசையை ஒடுக்க, இரண்டும் தந்நீர்மை மாறி ஒரு நீர்மைப்படுங் காதல் உலக வியல்புதானே. காதலி, நீ அறியாது அழுகின்றாய். உலக நடப்பை அறிந்து கொள். அரசியல் முறையையும் உனக்கு அறிவுறுத்துகின்றேன். கேள். ஓர் உழவன் தன் வயலுக்கு மடைவாய் நீர் விடுதல் வேண்டும் என்பது கேட்பது உரிமை. மிக்குவருங் கண்மாய் நீரை மற்றையோர் வயலுக்கு விடாது மறித்தல் தன்னுரிமை என்பா னாயின், அது பிழை காணாய். ஆதலால் அகவாழ்க்கையிலும் புறவாழ்க்கையிலும் தன்னலம் பேணிக் கொள்ளும் உரிமை போற்றத்தகும். பிறர்க்கு நலம் வருதலைத் தடுப்பதும் உரிமை எனின், அது களையப்படும். முறை மாறி நடக்காத என்னிடம், அன்பே! முகமாறி நடப்பது அழகில்லை. கண்ணகி : (மாற்புறத் தழுவிக் கொண்டு) என்னழுகை தான் உங்கள் கேள்விக்கு விடை சொல்லல் வேண்டும். காதலில் வினாவுமில்லை; பொருத்தமான விடையுமில்லை. என்னழுகை கண்டவுடன், இனிப் பிரியேன்; அழாதே என்று அழுத கண் துடைப்பீர்கள் என எதிர்பார்த்தேன். என் மனம் தெய்வமாகிய உங்கட்கே கோயில் என்று யான் கூறிய இயல்பைக் கேட்டு என்னைக் காதலாற் கனிவிப்பவள் நீ யல்லது பிறளில்லை என்று உவப்பக் கூறுவீர்கள், என் மெய்ச் சோர்வு தானே நீங்கும் என்று ஏங்கினேன். அழுக்குடை களைந்து, மேகலை அணிந்து, கூந்தல் வாரி, மலர் சூட்டி, மார்புறத் தழுவி, இதழ்மறையச் சுவைத்து, என் இன்பப் பொருளே! என்னெஞ்சினைத் தொட்டுப் பார்; அங்கு நீயே வீற்றிருப்பதை இனியாவது அறிந்து மயக்கொழி என்று மனமகிழ உறுதி தருவீர்கள் என்று நசைப்பட்டேன். ஐயகோ! (அழுது) பலருள் நான் ஒருத்தி. என் கணவன் மார்பு பலர்க்குப் பொது. காதல் ஆழ வேரூன்றும் என்பர். நீங்களோ ஆடவர் காதல் அகலும் என்கிறீர்கள். நூலறிவும் உலகறிவும் வாய்ந்த உங்கட்கு இப்பேதையா எதனையும் எடுத்துக்காட்ட வல்லவள். காதல, பலவாறு சொல்லிப் பித்துடைய என் மனத்தைச் செத்துவிடும்படி செய்வது நன்றன்று. நாடு பிறர்க்குப் பொது எனப் பொறாத தனி உரிமையுடைய உங்கட்கு மனைவி யான நான் நீங்கள் பல பெண்டிர்க்குப் பொதுவெனப் பொறேன். யான் காட்டும் அனபிற் குறைவுண்டா? இல்லை, நான் அழகிற் குறைந்தவளா? இல்லை, இன்பஞ் சிறக்கும் ஊடலை நன்கு ஊடத் தெரியாதவளா? இல்லை, அளவு கடந்து இன்பக் கனியை அழுக வைப்பவளா? என் குற்றம் எவன்? குற்றமிருப்பின், அடித்தேனுந் திருத்துங்கள். உதைத்தேனுந் திருத்துங்கள். மிதித்தேனுந் திருத்துங்கள். என் செய்யினுஞ் செய்து, என்னிடத்து மட்டும் இன்பம் நுகருங்கள். அஃதொன்றே யான் வேண்டுவது. நீங்கள், யான் உயிரோடு அகத்து இருக்கப் பிறளொரு பெண்ணை நயப்பதை நான் ஒவ்வேன், ஒவ்வேன். உங்கள் வேலால் என்னுயிரைக் குத்தி எடுத்துவிட்டு, யான் மறைய எது செய்யினுஞ் செய்யுங்கள். மனைவி இருக்கவும், கணவன் மற்றொரு பெண்ணை விரும்பினால், பெண்டிருலகம் கொழு நன் குற்றமுடையவன் என்று சொல்லாது. மனைவி அவன் இன்பத்திற்கு ஏற்றவளல்லள்; ஆண்மையை வயப்படுத் தும் பெண் தன்மையிலள்; கொண்டவன் குறிப்பறிந்து கூடி வாழாதவள்; ஆனால் மற்றொருத்தி வலையிற் படுமாறு துரத்தி யவள் என்று மனைவியையே மகளிர் தூற்றுவர். பேகன் : (தனக்குள்) ‘பெண்ணறி வென்பது பெரும் பேதைமைத்தே’ என்பது உண்மைதான். அறிவூட்டினாலும் அழுகை குறையக் காணேன். (அவள் கேட்க) பெண்ணணங்கே, சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லுவதில் காதலர் களுக்குள் என்ன பயன்வரும். ஒருவராவது விட்டுக்கொடுத்தல் வேண்டும். ஆடவர்களுக்குப் பரத்தையர் ஒழுக்கம் பழியுடைய தன்று என்று நன்கு தெரிந்துதான் நான் நடக்கிறேன். என்னை முழு மகனாக்குகின்றாய். கணவன் கட்டுக்கு அடங்கி நடக்க வேண்டிய நீ, அவனை நின் கட்டிற்கு அடிமையாக்க நினைக் கிறாய். மன்னர்களைத் தன்னடிக் கீழ்ப்படுத்தும் என்னை, நீ உன்னடிக் கீழ்ப்படுத்த நினைக்கிறாய். அவையெல்லாம் நடவாத காரியம் என்று உனக்கு இன்னமும் புலனாகவில்லை. கண்ணகி : (பொங்கிப் பொங்கி அழுதவளாய்) நான் மனத்திற் சிறிதும் எண்ணாதவற்றை யெல்லாஞ் சொல்லுகிறீர் கள். உங்கட்கு அடங்கி நடப்பதே என் வாழ்வு. உங்கள் திருவடியின் கீழ்ப்பட்டுக் கிடப்பதே என்னுயிர். நீங்கள் இரண்டு திங்கள் நாலு திங்கள் பிரிந்த நாளெல்லாம் அழுதேன். மெய் வாடினேன். ஆனால் அறிவு கலங்கினேனல்லன். இப்பொழுது சில நாட்களாகவே நீங்கள் என்னை மறந்து, கல் நீருட் கிடப்பதுபோலப் பிறளொரு கணிகை மயக்கத்தில் விழுந்திருக் கின்றீர்கள். அவள் என்னுயிர்க்கு உலை வைக்க வந்தவள். ஒரு பெண்ணிற்குரியானைத் துய்ப்பது கூடாது என்ற அறம் அறியாதவள். பரத்தையிற் பிரிவு என் உணர்ச்சியைக் கெடுக் கின்றது. என்னுயிரைத் தேய்க்கின்றது. ஏன் உங்கள் பரந்த இசைக்கு அவ்வொழுக்கம் வசையைத் தருகின்றது. இசை பரவிய இடமெல்லாம் இசை மறையப் பழியே குடிகொள் கின்றது. “அரசன் எவ்வழி, குடிகளவ்வழி” என்றபடி, நாட்டில் ஆடவரெல்லாம் பரத்தர்களாக உங்கள் வாழ்க்கை வழி காட்டுமேல், என் போன்ற குடும்பப் பெண்கள் அழுத கண்ணீர் காலாகி ஆறாகித் துயர்க்கடலாகக் காண்பீர்கள். விலைமகளிர் மகிழ்ச்சி மதிகண்ட கடல்போற் பொங்குகின்றது. ஆ! என் கணவன் ஒளி மறைய, ஏனைப் பெண்கள் முகம் கண்ணீரால் மறைய, எல்லாவற்றிற்கும் யானே காரணம். நான் மறைவேனாக. காதல் உணர்ச்சி பிறர் காட்ட வருவதில்லை. காதலன் காதல் மாறுமாயின், சாதலுணர்ச்சியும் ஒருமனப் பெண்டிற்கு உயிரகத்தே உள்ளது. மற்றொரு அணங்கினை நீங்கள் விழைவதாயின், யான் ஊட்டும் இன்பம் குறைவென்பதைத் தவிர வேறு பொருள் உண்டோ? காதலர்களுக்கு உள்ள நிறைவே இன்ப நிறைவு. என்னுள்ள முழுதும் காற்றுப்போல் நிறைந்திருக் கின்ற உங்கட்கு இன்பக் குறைவு என்பது எப்படி? பல வுடல்களைத் தழுவுவது இன்ப நிறைவாகுமா? என் துணையே, தன் திருவடி தொழும் என்னைத் தள்ளாதீர்கள். தன்னை மறவா என்னை மறவாதீர்கள். என்னைக் காப்பது உங்கள் ஒரு மனை வாழ்க்கை. (அழுகையோடு காலைக் கட்டிக் கொள்ளுகிறாள்.) பேகன் : பேதையே. இதுவரை என் போக்கை நீ தடைப் படுத்தியதில்லை. நானும் மற்றொருத்தியைக் காதலித்தாலும் முதற் காதலியாகிய நின்னை மறந்தவனல்லன். இதுவரை பேசாத பேச்சுக்களை நீ இன்று பேசினாய். கேளாத அறவுரை களையும் செவிடற்ற என் செவி கேட்டுக் கொண்டிருந்தது. மனைவி அறிவு புகலக்கூடிய இழிநிலைக்கு வந்துவிட்டேன். அறப் பெண்ணாக இருந்த, நீ என்னொழுக்கத்தில் இழுக்குச் சொல்லத் துணிந்த மறப் பெண்டாயினை. நான் பெற்ற புகழ் நானே ஈட்டிய புகழ். அப்புகழை ஊரார் நகைப்பது ஒருபுறம் நிற்கட்டும். நின் அழுகண்ணும், அழுக்குடையும், முடியாக் கூந்தலும், விடியா முகமும் என் புகழைப் பழிக்கவில்லையா? நான் என்ன சொல்லியும் உன் செவிக்கு ஏறவில்லை. என் சொற்கள் நின்னிடத்து மதிப்பிழந்தன. உன் சொற்படியே நான் நடப்பதாக வைத்துக்கொள். மனைவி சொற்கேட்டு அரசன் தன் ஒழுக்கத்தை மாற்றிக் கொண்டான் என்றால் அது பழியா? புகழா? உன்னை நான் வெறுத்தால் செய்ந்நன்றி மறந்த என்னை யாதுஞ் சொல்ல உனக்கு உரிமை உண்டு. இன்னும் இது போல முரண்படப் பின்னிப் பின்னிப் பிதற்றிக்கொண்டிருந்தால் உள்ள அன்புங் குறைந்து தேயும் என்பதை நீ மறந்து பேசுகின்றாய். கண்ணகி : என் முகம் அன்று மதிமுகம். (ஏக்கத்தோடு) இன்று விடியாமுகம் (தரையிற்சாய்ந்துவிடுகின்றாள்.) தோழி : ஏன் என் தலைவியைத், தங்கள் மனைவியை அளவுகடந்து சினந்து பேசுகின்றீர்கள்? அவள் கூறிய சொற்கள் ஒரு சான்றோர் வாயிலிருந்து வந்திருக்குமேல், பெரும் பயனும் புகழுந் தந்திருக்கும். நீங்களும்; ஆம் என்று உடன்பட்டி ருப்பீர்கள். என்னெஞ்சு தேவியையே உள்ளும். என் தேவி நெஞ்சு உம்மையே எண்ணும். உம் நெஞ்சு தேவியையே நினைப்பது எந்நாளோ: அந்நாள் தான் நமக்கும் நாட்டிற்கும் நன்னாள். புகழ்வொடு பழியையும் எடுத்துக் காட்ட வல்ல அஞ்சாநெஞ்சினர் தமிழ்ச் சான்றோர்கள். பொய்யாச் செந்நா படைத்தவர்கள். அவர்தங் கூற்று உம் புகழினின்று காமப் பழியைப் பிரிக்கும் என்ற துணிவு தமிழப் பெண்ணாகிய எனக்கு உண்டு. காட்சி - 3 களம் : நல்லூரில் முல்லை என்னும் பெண் வீடு காலம் : காலை. கூற்று : பேகன், புலவர்கள், முல்லை, தோழி. (வாயில் முன்) கபிலர் : அரசன் பேகனை நாங்கள் பார்க்க வந்திருக் கிறோம். தோழி : எம்பெருமான் நாலாமாடத்தில் இருக்கிறார். பரணர் : (அவள் அழகைப் பார்த்து) இவ்வீட்டிற்கு உடையவள் நீ தானே? தோழி : உடையவளுக்குத் தோழிதான் நான். வேறு வீடு எனக்கில்லாததனாலே, நானும் இவ்வீட்டிற்கு உடையவள் தான். கபிலர் : நல்லது. உடையவள் யார்? தோழி : அரசர் மனைவி முல்லைதான் இவ்வீட்டுத் தலைவி. (நாலா மாடத்தில்) முல்லை : இவ்வீட்டிற்கு உடையவர்கள் நீங்களே. பேகன் : இல்லை. உடைய உனக்குக் கணவன் நான். முல்லை : (தழுவிக் கொண்டு) அப்படியானால் நீங்கள் நாட்டிற்கு உடையவர்கள். பேகன் : ஆம். நாடு என்னுடைமை யல்லது பிறருடைமை ஆகாது. முல்லை: (புன்முறுவலோடு) நாடே தங்களுடைமை யாயின் இவ்வீடு மட்டும் எவ்வாறு விலகி நிற்கும். நானிருப் பதனாலா? பேகன் : ஐயமென்ன? என் முடி உன் திருவடியிற் படுவத னாற்றான். (வாயில் முன்) பரணர் : முல்லையும் உள்ளேதான் இருக்கின்றாளோ? தோழி : அரசரிருக்குடந்தான் அவளிருக்குமிடம். உள்ளங்கையை விட்டுப் புறங்கை பிரியுமா? கபிலர் : புறங்கை புறங்கைதான். புலவர்கள் இருவர் வந்திருக்கிறார்கள் என்று அறிவி. (நாலா மாடத்தில்) பேகன் : என்னுள்ளத்து இருப்பவளும் நீயே. உணர்ச்சிக் கேற்றவளும் நீயே. முல்லை : அதனாலேதான் உங்கள் சிறு பிரிவும் எனக்குப் பெருந் துன்பமாக இருக்கின்றது. பேகன் : இனி முன்போல் பிரியமாட்டேன், பிரிவதில்லை என்ற உறுதியோடுதான் இன்று வந்திருக்கின்றேன். (தோழி அறிவிக்கப் பேகன் வந்து கைகூப்பி இருவரையும் வரவேற்கின்றான். எல்லோரும் அமர்கின்றார்கள்.) பேகன் : என்னை வீட்டிற் காணாமற் தேடி இவண் வந்திருக்கிறீர்கள் போலும். கபிலர் : இதுவும் ஒரு வீடுதானே. பேகன் : உங்களைப் பார்ப்பது இப்பொழுதெல்லாம் அரிதாகிவிட்டது. பரணர் : யாருக்கு அரிது. உனக்கா? எங்கட்கா? இவ்வளவு நாளும் பார்த்தவிடத்திற் பார்த்தோம். புதுமனை புகுந்தாய் என்று நேற்றுத்தான் சொல்லக் கேட்டோம். கபிலர் : நீ தான் அகப்பொருள் இலக்கணத்திற்கு இலக்கியமாகி விட்டாயே. சுருங்கச் சொன்னால், தலைவியும் தோழியும்போல நானும் என் தோழரும் அல்ல குறிப்பிட்டோம் என்று வைத்துக்கொள்ளேன். பேகன்: இது கார்காலமாதலால் போர்த் தொழிலில்லை. இவ்விடத்து இருப்பேன். தவறினால் அவ்விடத்து இருப்பேன். பரணர் : கபிலரே! பேகன் இவ்விடத்து நிலையாக இருப்பதற்குக் காரணம் என்ன தெரியுமோ? இல்லத்திருந்தால், புலவர்கள் அகரவரிசைபோலத் தொடர்ந்து வந்து கொண்டே யிருப்பார்கள். அவர்களுக்கு எவ்வளவு நாள் தான் வழங்கிக் கொண்டிருப்பது. அதுவும் வரிசையறிந்து வழங்கவேண்டும். அவர்களுக்காகவாவது தெரியவேண்டும். வரக்கூடாது என்று சொல்வது வாயுடையார் செயலில்லை. வந்தால் ஒன்றுங் கொடாதிருப்பது கையுடையார் செயலில்லை. ஆளே காணப்படாமல் இருப்பதுதான் அறிவுடையார் செயல். இது நாகரிகமான முறைதானே. என்ன நினைக்கிறீர்? பேகன் : புலவர் பெருமானே! தங்கள் பேச்சு மாடு தடம் விலகியதுபோல இருக்கின்றது. கபிலர் : ஒரு வழிக்கு இரண்டு தடங்களிருந்தால், மாடு விலகத்தானே செய்யும். என் நண்பர் நீ கொடை மடம் உடையவன் என்று உன்னைச் சிறப்பித்திருக்கிறார். ஒருத்திக்கே கணவனாகிய நீ வரையாது இன்று மற்றொருத்திக்குங் கணவனாகத் தன்னையே கொடுத்திருக்கின்றாய். அவர் சொற்படி நடந்துங்கூட, அவர் நின்னை இகழ்கின்றார். மறதி தான் காரணம். பேகன்: அந்தணரே! நீங்கள் பேசுவது வண்டி மாட்டோடு குடஞ்சாய்ந்தது போலன்றோ இருக்கின்றது. என்னை நகை யாடுவதில் உங்கள் தம்முள் போட்டியா? யான் ஏதோ பிழை செய்திருக்கின்றேன். அதனாற்றான் உங்கள் பொய்யாச் செந்நா என் மனம் புண்படப் பேசுகின்றது. பரணர் : தாஞ் செய்த குற்றத்தைத் தாமே அறியவல்லார் இவ்வுலகத்து, மயிலுக்குப் போர்வை அளித்த நின்னைப்போல் அரியர். படியாதார் தமக்கு வந்த ஓலையின் பொருளைப் பிறர் படிக்கக் கேட்டு அறிந்துகொள்வர். அதுபோல மக்களும் தம் ஒழுக்கத்திற் குறைகளைப் பிறர் சொல்லக்கேட்டு, வாழத் திருத்திக் கொள்வர். சொல்லத் திருந்தும் அன்ன பண்பு ஒவ்வொருவர்க்கும் இருந்தாற் போதும். உலகம் வாழும். சொல்லத் திருந்தாக் கயவர் கொல்லத் திருந்துவர். அவரைப் பற்றிப் பேசவேண்டா. பேகன்: புலவரேறே! யான் குற்றமே நிரம்பியவனுமல்லன். குணமே நிறைந்தவனுமல்லன். வாழ்விற் பிழைபாடு இருக்கலாம். அதனைச் சொல்லக் கடமைப்பட்டவர்கள் நீங்கள். இன்றே திருத்திக்கொள்ளக் கடமைப்பட்டவன் நான். எனக்குக் கொடை மடத்தைக் கற்றுக்கொடுத்தவரும் தாங்களே. கொடைமடம் என்னிடத்து உண்டென்று காட்டியவர்களும் தாங்கள் தாமே. அறிவு துணையாகத் தொடக்கத்துச் செய்தவினை பயிற்சி வயத்தான் அஃதின்றியே நடக்க வல்லதுஎன்ப; ஆதலால் உங்கள் அனையார்க்கு இடைவிடாது கொடுத்த பயிற்சிதானே என்னை மடம் உடையவனாகவும் ஆக்கியது. பரணர் : நாங்கள் வந்த காரியத்தைப் பன்னிப் பன்னிப் பேசுவானேன். அரசே! ஒருத்தி; அவள் பரத்தையல்லள்; குலப்பெண். நின்னைத் தன்னிருகண்மகிழக் காண வேண்டு மென்னும் பெரு வேட்கையள். தன் மெய்யை நின் உள்ளம் தீண்ட வேண்டுமென்னும் ஆராவிருப்பினள். வேண்டியது எய்தப் பெறாமையின் கண்ணீரைத் தண்ணீர் போலக் கொட்டிக் கொண்டிருக்கிறாள். தன்னை விழைவார் யாவரா யினும், அவர் விழைவது யாதாயினும், வரையாது, அவரது விழைவு தணிக்கும் பயிற்சி உனக்குக் கை வந்திருப்பதால், யான் சொல்லுமவளுக்கு அருள் செய்வது உனக்கு ஆகாததன்று. இப்பரத்தை நின்பாற் பொருளும் பெற்று இன்பமும் பெறுகின்றாள். இவ்வாணிகம் உலகவியற்கையினின்றும் மாறுபட்டது. அவளோ நின் அருளுக்கு உயிர் ஈவாள். ஆதலால் அருளப் புறப்படுக. இன்றேல், அறங் கடந்தவனாவாய். பேகன் : (அடங்கிய சினத்தவனாய்) என்ன, புலவர் பெருமானா இங்ஙனம் உரைத்தது! குலப் பெண் என்றால் பிறன் மனைவி யன்றோ! பிறன் மனை நயக்க வேண்டுகிறீர்கள். இத்தகைய வேண்டுகோள் தங்கள் பொய்யாத வாயிற் பிறந்தது கண்டு பெரிதும் நாணுகின்றேன். பரணர்: (தாமும் வெகுண்டு) நாணற்க. நீ நயந்த இப்பரத்தையும் பிறன் மனைவி என்பதை அறியாய் போலும். உனக்கு அல்லது உன்னைப் போல்வார்க்கு இவளை விரும்பா தொழியும் அறிவிருந்திருக்குமேல், இந் நங்கையும் ஒரு நம்பியை மணந்து வாழும் குலவரசியாக இருப்பாளே. அதனையுங் கெடுத்தாய். நின்னை வரைந்த மனைவியையுங் கெடுத்தாய். நீயுங் கெட்டாய். புலவர் நா என்றும் யாரையும் புகழும் இயல்புடை யது என்று நினைத்தனையோ? செந்நா என்பதனையும், பகைவரைக் கறுவிய உன் கண் செங்கணாதல் போல, எம் போல்வார் கண்ணும் புகழுடையோன் அறப்பிழை கண்டு செங் கண்ணாகும் என்பதையும் இனியாவதறிந்துகொள். இதுவரை நீ பிழை செய்தாயில்லை. ஆதலால் புலவர் கண் சிவப்பும் உளக் கறுப்பும் காண்டற்குரிய செவ்வியில்லை. இன்றாவது அன்பும் அறிவுங் கலந்த சினம் இதுவென அறிந்து கொள். (சிறிதிடை ஒருவரும் பேசாதிருத்தல்) கபிலர் : பேக, பரணர் பிறன்மனை நயக்கச் சொல்லினா ரென மற்றொரு பிழை செய்தனை. எலும்பில்லா நா எப்படியும் வளையும் என்றாலும், புலமை என்ற நாணிருந்தால், எங்ஙனம் வளைய வேண்டுமோ அங்ஙனந்தான் வளையும். அவர் நின்னைத் தன் மனை நயக்கத்தான் சொன்னார். நின்னருள் வேட்கும் பெண் நின் மனைவி யல்லது பிறளில்லை. பேகன் : ஐய, தன் மனைவியை விரும்புக என்று ஒருவனுக்குச் சொல்லவும் வேண்டுமோ? இப்படி ஓர் அறவுரையை நூலிற் கண்டேனல்லேன், உங்கள்பால் இன்று தான் அப்படியும் ஓர் அறவுரை உண்டென்று கேள்விப் பட்டேன்; எனவே, தன் மனைவியிடத்து இன்பங் காணா மடவர்களும் வையகத்து உண்டென்று சொல்லுங்கள். பரணர்: கபிலரே, பேகன் தன்னை மறந்து பேசுகின்றான். பேகன்: அப்படியானால், என் பெண்டினை யான் வெறுக்கின்றேனென்று நீங்கள் காட்டத்தான் அறிகின்றேன். பரணர்: (வாய்விட்டுச் சிரித்து) அம்ம! மலையை உடைத்து எலியைப் பிடித்தாயிற்று. நண்ப, அவ்வெலி செத்து விட்டதா? உயிருடன் இருக்கின்றதா என்று பாரும். கபிலர் : உயிருடனிருந்தாலுங் கொன்று விடுவதென்று தானே, ஒருவர்க்கிருவராக வரிந்து கட்டிக்கொண்டு வந்திருக் கின்றோம். பேகன் : நீங்கள் உங்களுக்கு மட்டும் விளங்கும்படி பேசிக் கொள்ளுகின்றீர்கள். (தனக்குத்தானே) என் மனைவி எக்குற்றஞ் செய்தாள் நான் அவளை வெறுப்பதற்கு. அவளுள்ளத்து அன்று போலத் தானே இன்றும் நான் வாழ்கின்றேன். இன்பம் இதுவென்று உணரக் கற்பித்த முதல்வியை வெறுக்குஞ் செய்ந் நன்றி கெட்ட மகனோ நான்! (அரிசில் கிழார் வந்து அமர்கின்றார்) பரணர் : (கடுமையாக) பேகன் வரவரக் குழந்தைபோல் ஆகின்றான். அவள் உள்ளத்து நின்னை வைத்திருக்கிறாள் என்பது நீ இங்கு இருப்பதுபோல் உண்மை. நின்னுள்ளத்து அவளை வைத்திருக்கவில்லை என்பதும் நீ அவ்விடத்து இல்லாமல் இருப்பது போலுண்மை. கற்புடைய மனைவியின் உயிரைத் துடிக்கச் செய்வது கணவன் தன் பரத்தை யொழுக்கம் என்பதை நீ உணர்ந்திருத்தல் வேண்டும். ஒன்றுமறியாதவன் போல, ‘என் பெண்டினையான் வெறுக்கின்றேன் என்று நீங்கள் காட்டத்தான் அறிகின்றேன்’ என முழுப் பூசனிக்காயைச் சோற்றுள் மறைக்கின்றாய். மனைவியை வெறுப்பதென்றால், அவளைக் கறியாக்கித் தின்பதென்றா பொருள்? பொதுமக் களையெல்லாந் தன் மக்களாகக் கருதிக் கண்ணுங் கருத்துமாகக் காக்கும் பேகன் பொதுமகளிரை யெல்லாந் தன் மனைவியராக இரவும் பகலுங் காக்கின்றான்; என்னே, அவன் பரந்த காவல்! என்று தான் புலவர்கள் நா இனி ஏசத் தொடங்கும். பகைவரை அவர் நாட்டிற்கூட வாழுமாறு செய்யவிடாத மறப் பேகன் மனைவியர்க்குப் பகைவர்களாகிய பொது மகளிர் வாழுமாறு தன்னுள்ளத்தையுஞ் செய்து கொடுத்தான்; என்னே, அவன் பரந்த உள்ளம்! என்று எல்லாரும் நயம்படப் பேசுவர். கபிலர் : பிறரிடத்துக் காணப்படாத் தனி யாண்மையும், சிறப்புக் கொடையும், பொதுவற்ற புகழும் உடைய நீ எப்படிப் பொதுமகளிர்க்கு உடைமையானாய். இஃதொரு வியப்பிருந்த வாறு காண்க! இருள் ஒளியை விழுங்கக் கண்டோம். பொதுமை தனிமையை அழிக்கக் கண்டோம். பிறன் மனை நயந்த காமுகன் உயிரை அப்பிறன் வெறுப்பதுபோல மனைவி மேயாமற் சினவேலி கோலிப் பொருள் நீர் பாய்ச்சிப் பரத்தைப் பைங்கூழ் வளர்க்கும் புன்செய்யாளனைப் புலவர்கள் முழுவதும் வெறுப்பார்கள் என்று, பேகனே, நின்மனத்துத் தோன்ற வில்லையோ? இல்லை, அவர்கள் வெறுப்பும் ஒரு களையென நினைத்தனையோ? பேகன் : (இடைமறித்து) பொய்யில் புலவரே, தமிழ் நூல்களுக்கும் புலவர் வாய்ச் சொற்களுக்கும் முரணாக என்றும் யான் நடந்தறியேன். என் வாழ்வில் ஒரு குற்றம் இருப்பின், பெற்றோர் நோய் பிள்ளைக்கு வருவாய் ஆதல் போல, அக் குற்றம் தமிழ்த்தாய், புலமைத் தந்தையிடத்திருப் பதாக எண்ணுதல் வேண்டும். எண்ணிப் பிறவி நோய் இனியுந் தொடராதபடி நலப்படுத்த வேண்டும். தலைவனுக்குப் பரத்தை யொழுக்கம் ஒல்காப் புலமைத் தொல்காப்பிய முதலாய புகழ் நூல்களிலெல்லாம் முழுக்க முழுக்கப் பேசப்படு பொரு ளன்றோ? ஐந்திணை ஒழுக்கங்களுள் ஒன்றாய்ப் புணர்ச்சிக்கு ஏணியாகும், தலைவியின் ஊடலுக்குத் தலைவன் பரத்தை யொழுக்கமே அடிப்படையன்றோ? அவ்வொழுக்க மின்றேல், தலைவி ஊடுவதெங்கே? பேரின்பமாய்க் கூடுவதெங்கே? அன்றியும், புறத்துறைப் பழக்கமும், காமம் கணந்தொறும் பூத்துக் காய்த்துக் கனியாகும் மன நலமும் உடைய ஆண்பாற் பிறப்பிற்குப் பலர் கூட்டம் இயற்கை முரணே, சொன்மின். அரிசில் கிழார்: கசடறக் கற்க; கற்றபின் நிற்க என்ற கல்வி முறை இரண்டனுள், பேகன் கற்றபடி நிற்கின்றான் என்பதை யறிந்து நாம் இறும்பூது எய்தல் வேண்டும். (சிரித்துக்கொண்டு) பேகனே, ஆண்பாலர்க்குப் பரத்தையர் கூட்டம் இன்றியமை யாததா? நல்லது, நல்லது. நன்று சொன்னாய். (மற்றவர்களைப் பார்த்து) நமக்கெல்லாம் அப்படி ஒரு கூட்டம் வேண்டுமென்று இதுவரை தெரியாமற் போயிற்றே. இனித் தெரிந்துதான் என் செய்வது. நாமெல்லாம் பல குழந்தையர்க்குத் தந்தையராகியுங் கூட ஆண் பிறவியின் இயற்கை அறியாதவர்களாய் விட்டோம். இளமைப் பேகன் எடுத்துச் சொல்லுகின்றான். கேளுங்கள், கேளுங்கள். பரணர் : (சிரிக்காமல்) பேகன் சொன்னதில் செம்பாகம் உண்மை. பரத்தையர்க்கு ஆண்பாலார் கூட்டம் இன்றியமை யாததுதானே. (எல்லாருஞ் சிரித்தல்). அரிசில் கிழார் : பேகன் சொன்னதில் உருவு மயக்கமே யொழிய உண்மை மயக்கமில்லை. பரணர் : தலைவி ஊடுவதற்குத் தலைவனுக்குப் பரத்தை யொழுக்கம் வேண்டுமென்றால், பரத்தை ஊடுவதற்குத் தலைவன் வேறு எவ்வொழுக்கத்தை மேற்கொள்ளுவான்? (ஆராய்வார்போல் மூக்கிற் சுட்டு விரல் சேர்த்தல்.) அரிசில்கிழார் : இன்னொரு பரத்தையைப் பற்றுவான். பேகன் : (நாணமின்றி) அது செய்யவேண்டு மென்ப தின்று. தலைவன் தலைவியொடு ஒழுகுவது பரத்தைக்கு ஊடலாகும். பரணர் : நல்லவூடலுங் கூடலும். ஊடிய பரத்தை தலைவி யொடு புணர்வதையும் தலைவனுக்குப் பரத்தை யொழுக்க மென்றே நினைப்பாள். தன் கற்புடை மனைவியையும் பரத்தை யென நினைப்பிக்குங் கணவனோ மக்கட்சுட்டு. ஓரின்பமே பேரின்பம் என்பது அவனோ அறிவன். அரிசில்கிழார் : பேக, எனக்கு மற்றொரு ஐயம். மனைவி யின் ஊடல் தீர்க்கக் கணவன் நீயே உயிரென்று சொல்லுவான். பரத்தையின் ஊடல் தீர்க்கும்போதும் அப்படியே சொல்லு வானா அல்லது முரணில்லாமல் நீ என்னுடல் என்று சொல்லு வானா? அப்படித்தான் சொல்லல் வேண்டும். ஆனால் . . . . பின்னும் ஒரு ஐயம். மனைவி உயிராகவும் பரத்தை உடலாகவும் ஆகிவிட்டால், பின்பு இவன் யார்? (பேகன் பேசாதிருத்தல்) கபிலர் : பரத்தை யொழுக்கம் நூல்கள் உடன்பட்ட நெறி என்று பேகன் சொல்லுகின்றான். பேகன் மட்டுமல்லன்; படிப்பவர் பலரும் இப்படியே நினைத்திருப்பர். ஒரு சோற்றால் ஒரு பானைச் சோற்றின் பதம் அறியலாந்தானே. கல்வி கற்கும்போதே கசடறக் கல்லாவிட்டால், வாழ்வு கசடுடைய தாகிவிடும் என்பது தமிழ் நூலோர் துணிபு. இனியாவது, மயக்க முடையார் உண்மை அறியட்டும். பேச, தமிழ் நூல்கள் இரு வகைய. மக்கள் எப்படி எப்படி வாழ்க்கை நடத்துகின்றார்கள் என்பதைப் பலப்படவும் சுவைபடவும் எடுத்துக்காட்டும் முறையுடையது ஒருவகை நூல். இதற்கு இலக்கியம் என்று பெயர். மக்கள் தம் வாழ்வை எப்படி நடத்துதல் வேண்டும் என்று இலக்கியத்தை வடிகட்டித் தெளிவாக வரையறுத்துப் பயனுங்காட்டி, வேண்டுமேல் இடித்துங் கூறி, வழிகாட்டவல்ல கடனுடையது மற்றொரு வகை நூல். இதற்கு அறநூல் என்று பெயர். உள்ளதைச் சொல்லுவது இலக்கியமென்றும், உள்ளதில் நல்லதைக் காட்டுவது அறநூல் என்றுமறிக. ஆடவர்கள் பரத்தை யின்பத்தை நாடியவராகச் சென்றிருக்கும் பழக்கத்தை இலக்கியச் செய்யுட்கள் காட்டிச் செல்லும். அத்துணையொ ழிய, எந்நூலாவது, எத்தனிச் செய்யுளாவது, வரைவில் மகளிரை விரும்பலாம் என்று கூறப் படித்த தமிழ் நாவுண்டா? அன்றிப் பொருட் பெண்டிரைத் தீண்டாமை வேண்டும் என்று கழறாதிருந்த புலவர் நாவுண்டா? மெய் தீண்டற்க; தீண்டின், புகழ்கெடும்; பழி வரும்; அறிவு கெடும்; பொருள் கெடும்; அது வரும் வழி கெடும்; மனிதப்பிறவியே கெடும் என்று சொல்லிச் சொல்லித் தானே நாவும் சிவந்து வளைந்தது. கேட்டுக் கேட்டுத் தானே செவியும் மடங்கித் துளைபட்டது. தமிழ் மக்களின் உயிர்த்தொகையினுஞ் சிறந்த பொய்யில் திருக்குறள் என்ன சொல்லுகின்றது என்று பார்க்கலாம். (தன் மடியிலிருந்து திருக்குறளை எடுத்து விரிக்கிறார். தற்செயலாக வரைவின் மகளிர் என்ற பகுதியே வருகின்றது.) பேகன் : (வாங்கி முதற் குறளைப் படிக்கிறான்.) அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும். பரணர் : முதற் குறள் நல்ல குறள். ‘அன்பின் விழையார்’ நல்ல தொடர். ஆடவன் இவளை விழைவது அன்பாலோ, இல்லை, இல்லை, கடலன்ன காமத்தால். இவளும் அவனை அணைவது அன்பால் இல்லை, பொருளாசையால். இருவர் தம் புணர்ச்சிக்கு வேண்டிய உயிரன்பு முயற்கொம்பு என்றபடி. புலவர்களே, எல்லாருங் கேட்டுக் கொள்ளுங்கள். பேகன் தமிழ் நூற்படி வாழ்க்கை நடத்துபவனாம். அவன் வாழ்விற் பிழை தமிழிற் பிழையாம். இப்படி ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ் மகளும் தமிழ்க் குற்றமே தங்குற்ற மென்று சொல்லத் தொடங்கிவிட்டால், பின்பு என் செய வல்லோம். தமிழினை யாரும் படிக்கக் கூடாது; ஒருவராலும் வளர்க்கப்படாமல் தமிழ் பட்டினி கிடந்து சாகட்டும் என்று பிறமொழி வாயிலாகத் தமிழ் மக்களுக்கு உணர்த்தும்படி பேகனிடம் நாமெல்லாம் வேண்டிக் கொண்டாலென்னையோ? (எல்லாருஞ் சிரித்தல்) பேக, பிள்ளை யிடத்திருக்கும் நோயெல்லாம் பெற்றோர் மூலம் வந்ததென்று நினைக்கின்றாயோ? அல்லது பிள்ளைகளுக்குப் பெற்றோர் வழங்குந் தாயம் நோய் தான் என்று நினைக்கிறாயா? ‘அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி’ யாதலால் நீ பிழைபட நினைப்பது நாட்டிற்குக் கேடு. பேகன் : நான் அப்படித் துணியவில்லை; என்றாலும், மருத்துவர்கள் சிலர் தம் நோயைக் கருப்பையினின்று தொடர்ந்து வருவது என்று கூறுகின்றார்கள் என்பது நீவிரெல்லாம் அறிந்ததுதானே. அதுபோல நலமும் பெற்றோரி டமிருந்து தொடர்ந்து வருவது உண்டு என்பதை நான் நன்கு அறிவேன். பரணர்: அறிந்திருந்துந்தான் அப்படிப் பேசினாய் போலும். தம்மிடமிருந்து தம்மக்கள் கொண்ட நோய் இவையென அறிந்து அவை வளராமல் புறந்தருவது தாய் தந்தையானார் கடன். மக்கட்பேறு எய்துதற்கு முன், தம்மை நோய் வாய்ப் படாதபடி காத்துக்கொள்ளுதல் தாய் தந்தையாவார் கடன்! இக்கடன்களை ஒவ்வொருவரும் அறிவதற்குத் தானே பிறப்பிலே ஒவ்வொருவர்க்குந் தனித்தனிப் பகுத்தறிவு உண்டு. அவ்வறிவைப் பயன்படுத்தா மக்கள் வாழவோ பிறந்தனர்? இல்லை, வாழ்விக்கவோ பிறந்தனர்? அதுவுமில்லை. பலரைச் சாகடித்துத் தாமுஞ் சாக்காடெய்தவன்றோ பிறந்திருக்கின் றனர். அவர் தோன்றலினுந்தோன்றாமை அவர் தமக்கும் உலகந்தனக்கும் நன்று. அரிசில்கிழார் : அவர் பிறாவமை அவர் கைக்குளில்லை. இருவர் கூட்டுறவிற் பிறந்த விழுக்காடன்றோ அவர்! கபிலர் : ஆம், ஆம். ஈருயிர்ப் புணர்ச்சியிற் பிறந்த ஒரு தோன்றல் அவர் (எல்லாருஞ் சிரித்தல்) பரணர் : பேக, தமிழ் மக்கள் வாழ்வுத் தொகுதி தான் தமிழ் மொழியேயொழியத் தமிழ்மொழிக்குத் தனித்தொரு வாழ்வுண்டோ? குணமுண்டோ? குற்றமுண்டோ? தமிழ் மக்கள் கடல் கடந்து சென்றால் தமிழும் பறக்கும். தமிழ் மக்கள் வீட்டுள் கால் முடிக்கி மடிந்து கிடந்தால், தமிழும் அவ்வீட்டுள் அவரொடு முடிங்கி மடியும். ‘வெள்ளத் தனைய மலர் நீட்டம்’ என்றார் தெய்வப் புலவர். அதுபோலத் தமிழர்களின் உள்ளத்தனையது தமிழன் உயர்வுந் தாழ்வும். தமிழ் மொழி ஒரு தனிமகன் உடைமைப் பொருளோ, சொல்க. தமிழிலக்கியம் தமிழர் தம் பொதுவுடைமை. அதன்கண் குணமுங் குற்றமுங் கலந்தே காணப்படும். தமிழ்ப் பொது மக்கள் வாழ்வு அவ்விரண்டுங் கலந்ததாக இருப்பதே அதன் காரணம். அறநூல், என் நண்பர் கபிலர் கூறியாங்குத் தமிழ்ச்சான்றோர் தனியுடைமை. அதன்கண் குணமே காணப்படும். மக்கள் பொதுவாழ்வு தான் மெய்; சான்றோர் தனியறந்தான் உயிர். அம்மெய்யும் இவ்வுயிருஞ் சேர்ந்த உயிர்மெய்தான் தமிழ் என்று பெயர்பெறும். ஆதலால் ஒவ்வொரு தமிழ் மக்களும் மகனும் இலக்கியக் கல்வியும் அற வொழுக்கமும் உடையவ ராதல் வேண்டும். ஒன்று குறையினும் தமிழ் எனும் அடைய டுத்த மகள் மகன் ஆகார். பொதுமையே யுடையவன் சிறவான். தனிமையையுடையவன் வாழ்வான். சிறப்பு வாழ்வு வேண்டு மேல் போதுமையிற்றனிமை வேண்டும். பேக, நீ பொதுமையுடை யாய். ஆனால், யான் என்ற ஒரு தனிப் பொருளுண்மையை நீ மறந்ததனால், தனிமையை இழந்தாய். இரட்டைப் பிள்ளை போலப் பிறப்பிலே பொதுமையும் சிறப்பிலே தனிமையும் இன்றியமையாதன. “பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்ற பொதுத் தனிமொழியைக் கடைப்பிடி. ஆதலால், தமிழுக்குக் குற்றம் தமிழர் தம் வாழ்வால் உளதாவது என்று அறிக. பேகன் : ஆம். பரணர் சொல்வது உண்மை. சினக்குறிப் போடும் வன்கண்மையோடும் பேசினாலும், பரணர் பேச்சிற் காலங் கடந்த உண்மைகள் இருக்கின்றன. ஆனால் நான் தனிமையை இழந்துவிட்டதாகப் பரணர் சொல்லுகின்றார். மற்றவர் வாய்ச்சொல்லுக்குக் காட்டிலும், அவர் தம் வாய்ச் சொல்லுக்கு மனமுவந்து செவிசாய்க்கும் தனித்தன்மையுடைய யான், தனிமையை எப்படி இழந்தவனாவேன்? (எல்லோருஞ் சிரித்தல்) எல்லோருடைய சொல்லும் ஒரு நிகரன என்று ஒப்பக்கருதினால், அவர் சொல்லுவது பொருந்தும். அரிசில்கிழார் : கல்லாத மக்களுக்கு மயக்கம் என்ப தில்லை. ஏனென்றால், அங்கு அறிவில்லை. கற்றவர்களுக்கே மயக்கம் உண்டு. ஏனென்றால் அவர் அறிவு தெளிவில்லை. பேகன் தன்னுள்ளத்தை உள்ளபடி வெளியிடுவதில் ஒப்பற்ற நெஞ்சினன். யாவர் முன்பும் தன் கருத்தைப் பட்டாங்குச் சொல்லும் பண்புடையவன். மயங்குவது யாரொருவர்க்கும் இயல்பு. எத்துணைக் கற்றார்க்கும் ஒன்றைப் பிறிதொன்றாக நினைக்குந் திரிபுணர்ச்சி ஏற்படுவது அத்துணைக் குற்றமென்று பழிக்கப்படாது. ஆனால் தன் மயக்கத்தைப் பின்னும் மறைப்பது மக்கட் பண்பன்று. நெஞ்சைத் திறப்பது நன் மக்களின் பண்பு. மயங்கிய அறிவு தெளிவதற்கும் அத் திறப்பே வேண்டும். அகத்தை மறையாத பண்பிற் சிறந்த நம் பேகன் நட்பிற்கு மிகவும் இனியன். நிற்க, புணர்ச்சியில் இன்பம் பெருக வேண்டுமானால், தலைவி நன்கு ஊடுதல் வேண்டும் என்று பேகன் சொன்னது ஒப்பத்தக்க கருத்து. அவ்வூடல் தோன்றுவதற்குப் பரத்தை யொழுக்கம் வேண்டுமென்று பேகன் சொல்லியதிருக்கின்றதே, அது முற்றும் மாறுபாடு. ஒழுக்க நூலாரும் உடன்படார்; காமநூலாரும் உடன்படார். பரத்தையிற் பிரிவேயன்றித் தூதிற் பிரிவும், வினைவயிற் பிரிவும், ஓதற் பிரிவும் முதலான எவ்வகைப் பிரிவும், பிரிந்து நீட்டிப்பும், பிரிய நினைக்கும் நினைவுமெல் லாம் தலைவி ஊடலுக்குக் காரணங்களாகும். தலைவன் பிரியவே வேண்டுமென்பதில்லை. புறம்போகாது இல்லத்து நிலையாக இருத்தலுங்கூடத் தலைவியை ஊடச் செய்யும். அறிவுக்குப் பொருத்தமான காரணங்காட்டி ஊடுபவள் பெண் தன்மையுடைய மகளாவாளோ? அதுதான் ஊடலின் தன்மையோ? அறிவோடுபட்ட ஊடல் இன்பத்தை மிகுப்பது முண்டோ? காரணமின்றியுங் கற்பித்தும் புணர்ச்சிக்கு முன் எப்படியும் ஊடியே விடும் இயற்கை பெண்ணெனப்படு வளுக்குப் பிறவியிலேயே உண்டு. பெண்ணென்பதற்குக் கல்லா வூடல் ஓர் எடுத்துக் காட்டு. தான்றோன்றித்தனமான அவள் ஊடல் தான் ஆடவனுக்கு இன்பவூற்றாகும். பேக, வெறும் வாயை மெல்லுபவளுக்கு ஒரு பிடி அவல் கிடைத்தால், அவள் வாய் என்படும்! (எல்லாருஞ் சிரித்தல்) அதுபோலவே, காரண மின்றியும் புலக்கும் பெண் ஒரு காரணங் கண்டால் விடுவளோ, சொல்லுக. பரத்தை யொழுக்கமுடையவன் தலைவனாயின், அதனை ஒரு காரணமாகக் கொண்டு ஊடுமத்துணையல்லது, பெண்கள் புலத்தற்குக் காரணம் வேண்டி நிற்பர் என்பதில்லை. கூடுதல் போல ஊடுதலும் இயற்கை. தன் மனைவி கற்பின் திண்மையைப் பிறரை விரும்பச் செய்து உண்மை துணிவான் ஒரு மடவனும் உலகத்தில்லை. தன் மனைவி ஊடுவதற்குத் தன்னிடத்து ஒரு காரணம் உண்டாக்கிக் கொள்ள வேண்டுமே யென்று பரத்தையை நச்சும் பதடியும் உலகத்தில்லை. பரத்தை யொழுக்கம் கழிகாமத்தாலும், அக்காமம் பல நினைவாலும், அந் நினைவு பேதையாலும் எழுவ தல்லது, அதற்கு வேறொரு காரணஞ் சொல்ல அறிகிலேன். பேகன் : என் தீயவொழுக்கம் உங்கள் ஒவ்வொருவரிடமி ருந்தும் அரிய கருத்துக்களை வெளிப்படுத்தியது. ஓ! மறந்து பேசுகின்றேன். அரிசில்கிழார் சொல்லியபடி, அரிய கருத்துக் கள் பிறரிடமிருந்து வெளிவரல் வேண்டு மென்பதற்காக ஒருவன் ஒழுங்கற்ற வழியில் நடக்கக் கூடாதுதான். அரிசில் கிழார் : பேகன் அப்படி நடந்ததாக நான் சொல்லவில்லை. பேகன் : எல்லாம் நன்றாகவே முடிந்தன. உங்கள் பலவுரை களைக் கேட்ட பின்றை எனக்கு ஒருபுத்தெண்ணம் பிறந்திருக் கின்றது. அறநூல் குணமே பேசும்; இலக்கியம் நல்வாழ்வு வாழ்ந்தாரையும் தீய வாழ்வு நடத்தினாரையும் பேசும் என்பது தானே நீங்கள் சொல்லியதன் கருத்து. கபிலர் : அதுவேதான். பேகன் : அப்படியானால், அறநூலின்படி இலக்கியத்து நல் வாழ்வே பேசப்படல் வேண்டும் என்பது என் விருப்பம். அதற்கென் செய்வது? கபிலர் : தமிழ் மக்கள் தீய வாழ்வு நடத்தாதிருந்தாற் போதுமே. நடத்துவதாற்றானே இலக்கியமும் அதனைப் பற்றிப் பேசக் கடமைப்பட்டிருக்கிறது. அதற்கு நீயே வழிகாட்டல் வேண்டும். பேகன் : என்னொருவன் நல்லொழுக்கத்தால் மாத்திரம் அது நிறைவெய்துமா? அரிசில்கிழார்: அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி தானே. பேகன் : ஆம். அஃதொக்கும். அரசன் வழியைக் குடிகளும் பின்பற்றுமாறு செய்வதெப்படி? மற்றவர் கூடாவொழுக்கத்தை அரசன் எங்ஙனம் தடுக்கவல்லவன்? பரணர் : அரசியின் வழியை மற்றவர் தம் மனைவிகளும் பின்பற்றினால் நல்லன வெல்லாம் நடக்கும். பேகன்: தங்கள் கருத்தை மற்றையோரும் அறியுமாறு சொல்லுங்கள். பரணர் : உன்னை இவ்வொழுக்கத்தினின்றுந் தடுத்தாட் கொண்டது யார்? சொல்லிவிடு. பார்ப்போம். பேகன் : இது வேண்டாத கேள்வி. இங்கு வந்திருக்கும் புலவர் பெருமக்கள் தாம். அவருள்ளுஞ் சினக் குறிப்புடைய தாங்களே. பரணர் : நன்று சொன்னாய். உன்னை ஒருமனைப் படுத்திய புகழ் எங்களைச் சாராது. புகழ் வாய்ந்த நீ பெற்ற மனைவியையே சாரும். நின் கற்புடைய மனைவி இறந்த பெண்டி ரெல்லாராலும், தமக்குமுன் இவள் பிறக்கவில்லையேயென்று வருந்தத்தக்கவள். வாழும் பெண்டிர் எல்லாராலும் புகழத் தக்கவள். பிறக்கும் பெண்டிர் எல்லாராலும் தொழத்தக்கவள். “தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சொல்விலாள் பெண்” என்ற தமிழ் மறையின்படி, ஒழுகிய இலக்கியமல்லரோ அவர். தன் கணவர் தானிருக்கவும், பிறளொருத்தியிடம் இன்பத்தை நுகரத் தொடங்கின், புகழ் மறையப் பழி பிறக்கும். அவ்வொழுக் கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவள் பெண்ணாகாள்; பேதையாவாள் என்ற அறிவும் உரிமையும் உடையவள் நின் மனைவி. அவள் நின்னையே நினைக்கும் அறக்கற்புடையவள். நீ பிறளை நினையாதவாறு திருத்த வல்ல மறக்கற்பும் உடையவள். அன்னவள்போல நின்னாட்டு ஒவ்வொரு குடிப்பெண்டும், கணவன் பரத்தையைத் தடுப்பது தன்னுரிமையெனக் கொண்டால், எதுதான் நடவாது! ஒழுக்கக்கேடு விதைக்கும் உழவர்கள் நல்லபடி நடப்பார்கள். பெண்டிர் உரிமை பேணாமையாலன்றோ ஆடவர் ஒழுக்கம் வானத்துப் பறக் கின்றது. (பெருங்குன்றூர்கிழார் வருகின்றார்) பேகன் : கிழாரே, வாருங்கள். வழிநடை வருத்தம் மிகுதி போலும். உடல் முழுதும் வியர்த்திருக்கின்றதே. அரிசில்கிழார் : அவருடல் எப்பொழுதும் வியர்த்துத் தானிருக்கும். உடல்வாகு அப்படி. குன்றூரார் : அரிசிலார் உடல் வியர்ப்பதேயில்லை, காயலான உடம்பு. (எல்லாரும் சிரித்தல்) பேகன் : கார்காலத்து வெயிலில் இவ்வளவு தூரம் நடந்து வந்திருக்கிறீர்களே. குன்றூரார் : என் செய்வது! அரசன் எவ்வழி குடிகள் அவ்வழிதானே. இரவலர் யாது வேண்டினும் அதனையே கொடுப்பவனாக இருத்தலால், உன்னிடம் தேடித் தானே வரல் வேண்டியிருக்கின்றது. பேகன் : (மற்றையோரைப் பார்த்து) இவர்க்கு வேண்டியதைக் கொடுத்துவிட்டு அப்புறம் நாம் தொடர்ந்து பேசுவோம். (ஆம் என்கின்றனர்.) குன்றூரார்: கொடையை நீ கடமையாகக் கொண்டிருப்ப தாற்றானே, இரப்பதை நான் கடமையாகக் கொண்டிருக் கின்றேன். கபிலர் : பொருத்தமான கருத்து. குன்றூரார் : நான் வெயிலிற் களைத்து வந்திருக்கிறேன். மேலும் நடக்க முடியவில்லை. ஓரிடத்திற்குக் குறிப்பிட்ட நேரத்திற் போகல் வேண்டும். ஆதலால், உன் தேர் வேண்டும். பேகன் : நல்லது, தேரை ஓட்டிக்கொண்டு செல்லுங்கள். காளையொடு தேரைத் தாங்களே என்றும் வைத்துக் கொள்ள லாம். ஓட்டுவதற்கு (தோழியைப் பார்த்து) பாகனைக் கூப்பிடு. குன்றூரார் : அதனை ஓட்டுவதற்கு நீயே பாகனாய் வருதல் வேண்டும். (எல்லாருஞ் சிரித்தல்) பேகன் : (எழுந்திருந்து) எங்கே போகல் வேண்டும்? குன்றூரார் : அத்தேர் எங்கிருந்து வந்ததோ அங்கே போகல் வேண்டும். (எல்லாரும் வியத்தல்) பேகன் : அற்கென்ன தடை, அவ்வளவுதானே. குன்றூரார் : (கையைச் சுருக்கிக் காட்டி) இன்னும் இவ்வளவு உண்டு. அவ்விடத்து அழுதுகொண்டிருக்கும் கற்புடை மனைவியின் கண்ணீரைப் பரத்தையை இனித் தீண்டாத நின்கையால் துடைத்தல் வேண்டும். (எல்லாரும் மகிழ்தல்) பரணர் : பொருத்தமான வேண்டுகோள். பேகன் : (சிரித்துக்கொண்டே) வேறென்ன வேண்டும்? குன்றூரார்: நீ அவள் நினைவிற்கு வேறாகாமை வேண்டும். அரிசிலார் : பேணப்படா அவள் கூந்தலை எண்ணெய் தடவி முடித்து மலர் செருகல் வேண்டும். பேகன் : (பரணரையும் கபிலரையும் பார்த்து) உங்கட்கு இம்மாதிரி என்னவும் வேண்டுமோ? பரணர் : மலர் செருகி அம்மணத்தை நீ நுகர்தல் வேண்டும். கபிலர் : இது கார்காலமாதலால், நின் மலையிற் குறிஞ்சி ஒழுக்கம் நிகழ்தல் வேண்டும். பேகன் : ஒன்றையே எல்லாரும் ஒருமுகமாக வேண்டுவ தென முன்னர் ஒன்று கூடிப் பேசியிருக்கிறீர்கள் என்று புலனாகின்றது. கற்றவர்கள் மனவொற்றுமையே எக்காலத்துஞ் சிறந்தது. தனி மகனுக்கும் நாட்டிற்கும் நன்மை பயப்பது. இத்தகைய வேண்டுகோள் பெறுதற்குரிய தனித்தன்மையுடைய என்னைத் தனிமை யிழந்தவனெனப் பரணர் பெருமான் சுட்டினார். நீங்கள் வேண்டும் பொருள்களைச் சீர்தூக்குங்கால், இரவு மடம் உடையவர்கள் என்றே உங்களைப் புகழ்தல் வேண்டும். ஏறிக்கொள்ள வாருங்கள். தேரைப் பூட்டுகிறேன். (பேகன் எழுகின்றான். முடிவு வரை கேட்டுக் கொண்டிருந்த முல்லை ‘பேகன் போய்விடுவான்; இனி மீண்டு தன்னகம் வாரான்’ என அஞ்சுகின்றாள்.) முல்லை : (அழுத கண்ணொடு) புலவர் பெருமக்களே! மனைவி அழுத கண் கண்டு அரசர் பெருமானை அவளொடு சேர்த்து வைக்கிறீர்கள்; ஒக்கும். என் இருகண் அழுகையை நேரிற்கண்டும் என் கணவரைப் பிரித்து வைக்கிறீர்கள்; ஒவ்வாது. புணர்வைப் பிரிவாக்கிப் பிரிவைப் புணர்வாக்குவது உங்கட்கு அடுக்குமோ? அழுதல் அறியாக் கண்ணை அழவைப்பதற்கோ என்மனை புகுந்தீர்கள்? “உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்” என்ற செந்நாப் புலவர் சொல் பிழையோ? அன்றி, நான் வெறுக்குமாறு என் மனை புகுந்து, ஏன் வந்தீர்கள் என்று நினைக்குமாறு என் உயிரொடு பிரியும் உங்கள் செய்கை பிழையோ? யான் என் அன்பிற் சிறந்த பரத்தைத் தாய்க்குப் பிறந்தவள் என்பது உண்மை. அது கிடக்க, தன் தாய் பரத்தை யென்றாலும் யான் ஒரு தந்தைக்குப் பிறந்தவள், காணீர். ஆதலின் நான் பரத்தை என்பது எங்ஙனம் ஒவ்வும்? ஒவ்வாது; ஒவ்வாது. ‘பிறப்பொக்கும் எல்லாவுயர்க்கும்’ என்னும் உலக மொழி எம்போல்வாரை நோக்கி யன்றே எழுந்தது. என்னைப் பிறப்பார் இழிவு கூறல் தமிழுக்கு முரண். புலவர் வாய்க்கு முரண். ஒழுக்கத்திற்கு முரண். என்னுணர்ச்சிக்கு முரண். சிறப்பு வகையில் என் வாழ்க்கையைக் கேண்மின். என் குமரி மொட்டு இவர் கையால் மலர்ந்தது. அம்மலரின் புதுமணம் இவரொரு வர் உள்ளம் உடலொடு நுகர்ந்தது. தாய் பரத்தையாக இருத்த லால் என்னையும் அத் தன்மையள் என்று திருந்தா இவ்வுலகம் சொல்லிவிடுமோ என்று அஞ்சி அஞ்சிப் பிறவிக் குலமகள் தன்னினும் என் நிறையை யான் காக்குங் காப்பு சொல்லிற் கடங்குமோ? குலமகளிரிற் பலர் தன் கொழுநனாகிய தெய்வத் தையும் பிற தெய்வங்களையுந் தொழும் பல தெய்வ வழி பாட்டினர். யான் என்னுயிர்க் கொழுநராகிய ஒரு பொருளே கடவுளெனத் தொழும் ஒரு தெய்ச வழிபாட்டினள். அன்ன தன்மையளாகிய என்னை நீங்கள் எங்ஙனம் பரத்தை என்று கூறத் துணிந்தீர்கள்? ஒவ்வாக் கூற்று; ஒவ்வாக் கூற்று. உண்மை துணியா நீங்கள், எம்பெருமான் தூய ஒழுக்கத்தைப் பரத்தை யொழுக்கமென்று கழறியது முறையோ? முறையன்று, முறையே யன்று. பிறர் அறிவதற்கென்றோ பெண்கள் நிறை காக்கின்றனர்? இல்லை, இல்லை. நிறையுடைமை அவர் தம் நெஞ்சறியும். கணவன் தன் நெஞ்சறியும். பிறர் அறிய மாட்டார்கள். உங்கள் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தபோது என் மனம் நெருப்பால் வெந்து புண்ணாகிக் கொண்டிருந்தது. அவ்வுரை யாடலின் முடிவான என் கணவனார் பிரிவு அப்புண்ணில் துழாவும் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கோலாயிற்று. என் வருத்தம் நீங்களோ அறிய வல்லவர். குன்றூரார் : மகளே! உன் ஒழுக்கத்தையும் உறுதியையும் பாராட்டுகின்றோம். தாயின் போக்கு இழிவென்பதை இளமை யிலேயே பகுத்தறிந்து நன்னெறியுய்ந்த நீ எம் போல்வாரால் தொழத்தக்கவள். பிறப்பிற் குலமகள் ஒருவனை மணந்து வாழ்வதல் குடிமையும் இயற்கையுமாம். உன் அனைய பெண் திலகங்களின் செயல் புலவர் பாராட்டற்குரியது. தான் கெடினும் தன் வழி கெடாதவாறு உலகம் உய்ய, உன்னை வளர்த்த உன் நற்றாயும் பாராட்டற்கு உரியவளே. ஒழுக்கமென் பது அவரவர் தம் செயல் கொண்டு கணிக்கப்படும் ஒரு விழுப் பொருள். ஆதலின், நின் திண்ணிய மனத்திற்கு இழிவு கூறிய எங்களைப் பொறுத்தருள்க. குழந்தாய்! பேகன் உலகமறிய வரைந்துகொண்ட ஒருத்தியுண்டு என்பதை நீயும் அறிந்திருப் பாய். அவனும் அவ்வொரு செல்விக்கே மணவாளனென வரையப்பட்டவன். நீ அவனைக் காதலித்தல் சிறிதும் பரத்தைத் தன்மையில்லை. ஆனால் அவன் நின்னைக் காதலிப்பது அவனுக்கு முற்றும் பரத்தை யொழுக்கமாகும். இனி, அத்துறை யில் ஒழுகுமாறு அவன் மனைவி விடாள். தன் கொழுநன் பரத்தையொழுக்கத்தைத் தடுக்கும் உரிமை மனைவிக்குப் பிறப்புரிமை. ஒரு குமரி மனைவியாகும்போதே அவ்வுரிமை பிறந்து விடுகின்றது. பிறளொருத்திக்குக் கணவனாகிய ஓர் இல்லறத்தானை மனத்தாலுஞ் செயலாலும் கணவனெனப் பின்னும் வரைந்து கொண்டாய். முரண்பட்ட இவ்வாழ்வு கடை போதல் எப்படி? பரணர் : முரண் நிலையையும் அறநிலையையும் அறிந்து (தயக்கத்தொடு) பிறனொருவனை மணஞ்செய்து கொள்ளும் விருப்பம் உனக்கு . . . . . முல்லை : (இடைமறித்து) மேலும் நினைக்காதீர்கள். ஊரறிய உற்றார் அறிய அவர் என்னை வரையாவிட்டாலும் என்னை வரைந்துகொண்டு உலகத்திற்கு அறிவித்தார். அவர் களவொழுக்கம் இப்போது கற்பொழுக்கமாயிற்று. களவின் முதிர்ச்சியே கற்பன்றோ? எம் ஒழுக்கம் தூய அகப்பொருள் இல்லையோ கபிலர் பெருமானே! சொல்லுங்கள். ஆதலால் அவர்க்கு மனைவி யாய எனக்கும் அவர் நும்மொடு வாராதபடியும், நீவிர் அழைத்துச் செல்லாதபடியும் தடுக்கும் உரிமையுண்டு. அவ்வுரிமையைச் செலுத்த நான் அஞ்சுகின்றேன் அல்லள். அதன் பயனாக, என் கணவர் மனம் செய்வது அறியாது கலங்குமே என்பதற்காகவே அஞ்சுகின்றேன். ஒரு நிலத்தை முதலீடு மறுஈடு செய்து கடன் பட்டான் நிலையிலிருக் கும் என் கொழுநர் நலத்திற்காக என்னுரிமையை விடுவது கிடக் கட்டும். உயிரையும்விடத் தயங்குபவளோ இவள்? (பேகன் கண் கலங்குகின்றான்) என் நலம் இழந்தும் அவர் நலம் பேணுவதே இன்று என்னுரிமை. அவரை நீங்கள் நால்வருங் கூடித் தேரேற்றிச் செல்லினும், அவர் உருவம் என் உள்ளத் தேரிடத்து என்றும் ஒய்யாரமாக வீற்றிருக்கும். எனக்கு தனி அறிவுண்டு; நாணம் உண்டு; என்னெஞ்சிற் பிறன் புகான். புகுந்த இவரும் போகார். போக்கவல்லாருமிலர். என் கணவர் முதல் மனைவியோடு வாழ்க. கணவர்கள் தத்தம் மனைவியொடு வாழ வேண்டுமென்று அவர் வழி காட்டுக. அப்படியே உலகம் வாழ்க. யான் அவர் நினைவாகவே . . . .. (திடீரென விழுந்து விடுகின்றாள்.) பேகன் : (கண்ணீருகுத்தவனாய் விழுந்தவளைத் தொட்டுத் தூக்கி எழுந்திருக்கச் செய்கிறான்.) நண்புள்ள புலவர்களே! என் கற்புடைய மனைவி கண்ணகியிடத்துக் கண்ட குணங்கள் முழுதும் இக்குமரிபாலுங் காணப்பெற்றேன். என் சிற்றிடைப் பிரிவும் இந்நங்கைக்கு உயிர்த் துடிப்பாயிருந்ததெனின், என் வாராப் பிரிவு இவள் உயிரை இனி என் செய்யுமோ? பொருளாசையுடைய பெண்ணல்லள் இவள். இயற்கையழகே அழகென யாதோர் அணிகலனும் வேண்டாதவள் என்பதை நீங்கள் காட்சி யளவையானே அறியலாம். இத்தலைவியின் ஒருமைப் பண்புகளே இவள் மனை அகலாவாறு என்னைப் பிணித்தன. மனமாசு, உடல் மறுவில்லா இம்மங்கை நல்லாளைப் பிரிவதெப்படி? கற்பின் கொழுந்தான கண்ண கியை நீ எப்படிப் பிரிந்தனையோ, அப்படியே இவளையும் பிரிக என்று என்னறிவு சொல்லுகின்றது. (முல்லையின்! கண்ணீரைத் தன் விரலால் துடைக்கின்றான்.) இனி, அழாதே! புலவர்கள் என்னைப் பிரிக்கவில்லை. அறம் என்னைப் பிரிக்கின்றது. என் மனத்தின் கலக்கமறிந்து, உரிமையை விடுவதொடு உயிரையும் விடுவேன் என்று நீ சொல்லிய சொற்கள் இவ்வுலகத்து வேறொருவர் வாயிற் பிறந்தறியாக் கற்புடைச் சொற்கள். அத்தகைய முதல்வியாகிய நீ எனக்காக வாழ்க. உன் உள்ளத்து என்னைக் கணவனாக நினைப்பதையே விட்டுவிடல் வேண்டு மென்று நான் கேட்டுக் கொள்வேனாயின், உன்னுயிர்க்கு இறுதி செய்த கூற்றுவன் நானேயாவன். அது தகாத வேண்டுகோள். ஒருவனையே நினைக்கும் உரிமை உனக்கு உண்டு. என்னையே கணவனாக நினைக்கும் நீ தூய வாழ்வு நடத்துவது எனக்குப் பேராறு தலையும் பெருமையையும் தரும். ஆதலால் நான் சொல்லுவதை உளங்கொள். பெண்டிர் குலம் என்றும் தூய்மையுடையது. அக்குலத்தின் தூய்மையைக் கெடுத்துப் பரத்தையர் குலம் என ஒன்றைத் தன் நலத்திற்காக நிறுவியர்கள் கழிகாமுகர்கள். குமரிப்பெண்களைக் காமக்கிழத்தியராக்கித் தம் மனைவியர் கண்ணீர் பரப்பும்படி செய்பவர்கள் ஆடவர்கள். வரைந்த மனைவியர்களைத் துறவியாக்குபவர்கள் ஆடவர்கள். பல கெடுதலுடைய பரத்தை யொழுக்கத்தை வேரோடு அழிக்க முயலுதல் வேண்டும். அந்த ஆள்வினையில் நான் ஈடுபடுவேன். நீயும் நாடு நலம் பெற உன்னாலான தொண்டினைப் பல வழியாற் செய். காதலர்களாக இருந்த நாம் இனி நட்புடையவர்கள்; ஒரு தாய் வயிற்றுப் பிறந்த உறவுடையவர்கள். (முல்லை மெய்ந் நடுங்கி அழுகிறாள். மெய் தொட்டுக் கண்ணீரைத் துடைத்து) காதலாற் பிணிப்புண்ட நாம் இனி அன்பாற் பிணிக்கப்பட் டோம். நான் என்னுள்ளத்தைத் திறந்து சொல்லுகின்றேன். கேள். அழாதே. என் பிரிவு பொறாது நீ உயிர் விட்டால், அதனை உணர்ந்தபொழுதே என்னுயிர் என் மனைவி உயிரோடு போகும். மூவுயிரும் ஒக்க நீங்கும் என்பதை நெஞ்சிற் பதித்து அறிவும் அடக்கமும் அன்பும் உடைய நீ ஆறுதல் வேண்டும் என்று சொல்லுவதைத் தவிரப் பிறிது மொழி பேச அறியகில்லேன். அழாதே, தங்கையே. ஆறுதல் அடைந்து வாழ்க. (கண்ணீரைத் துடைத்துவிட்டுக் கண்ணீரோடு வெளி வருகின்றான். புலவர்களும் கலங்குகின்றனர். எல்லாரும் தேரேறிப் பேகன் அரண்மனை செல்லுகின்றனர்.) முல்லை : ஆ! காதல! (என்று அலறிப் பஞ்சணையில் வீழ்கின்றாள்.) காட்சி - 4 களம் : மணற்பரப்பு. காலம் : மாலை, பேகன் பிறந்தநாட் கொண்டாட்டம். கூற்று : பேகன், கண்ணகி, புலவர்கள், குடிமக்கள். பேகன் எழுந்து நின்று முதற்கண் சொற்பொழிவு செய்கின்றான், - உலகமுதல் மக்களே! நட்புடைப் புலவர்களே! யான் பிறந்த நாளை ஒரு விழாவாகச் சிறப்பிக்கும் உங்கள் நன்றிக்கு உழுவலன்பு உடையேன். (கைகூப்புகின்றான்) ஆண்டு தோறும் நடக்கும் இவ்விழாவின்கண், நாட்டின் பெருமையை, மக்கள் வாழ்வை, வளர்ப்பதற்கு ஏற்ற முறைகள் அறிவிக்கப் படுவது தொன்றுதொட்ட நன்மரபாக இருந்து வருகிறது. தொழில், செல்வம், கல்வி, வெற்றி முதலான பெருக்கங்களை நம் தொன்மைத் தமிழகத்துப் பரப்பியது இவ்விழாதான் என்பது வெள்ளிடைமலை. ஆதலின், என் பிறப்பு விழா என் மக்கள் உயர்வு விழா என்று பொருள்படுவதை அறிந்து, யான் உண்மகிழ்கின்றேன். தாயாம் பெண் குலத்திற்குப் பரத்தையர் ஒரு மறுப் போல்வர்; பாலில் நஞ்சு போல்வர்; கண்ணில் பூப்போல்வர்; நெஞ்சில் துளைபோல்வர். பரத்தையர் கூட்டம் ஒரு தனிக் குலமாக வளர்ந்திருப்பது அறிந்தும், அக்குலத்திற்கும் ஒரு குலவொழுக்கம் உண்டெனக் கூறுவது கேட்டும், அக்குலத் தார்க்கு ஒரு தனித் தெரு ஊரகத்து வாய்க்கப்பட்டிருப்பது கண்டும், அறிவுடையாரொடு யானும் நாணமடைகின்றேன். பல காரணங்களால் இந்நாள்வரை மெய்விற்று உடல் வளர்த்த பொருட் பெண்டிர் இனித் தத்தமக்கு எற்ற ஓர் ஆடவனை விரும்பி வரைந்து விருந்தோம்பும் இல்லறம் நடத்துதல் வேண்டும் என்பது உங்கள் அரசு அப்பெண்டிர்களுக்குச் செய்யும் வேண்டுகோளும் விதியுமாம். பரத்தையரில் முத்தோர்கள் குலவொழுக்கங் கெடுமென, வரைவு செய்து கொள்ளப்போம் மகளிர்க்கு இடையூறு செய்யின், உட்பகைவர் போல ஒறுக்கப்படுவர். எவ்வகையான் இடுக்கண் வரினும், அரசு அறியச் செய்யுங்கள். வரைவுக்கு ஆவன அரசு அன்பொடு செய்து தரும் என்று யான் உங்கட்கு உறுதி கூறுவன். ஒருவனுக்கு ஒருத்தி; ஒருத்திக்கு ஒருவன் என்று வரைவு செய்து விலங்குத் தன்மையின்றி மக்கட்சுட்டாக வாழும் இல்லறந்தான் அறிவும் அன்பும் இயைந்த இன்ப வாழ்வு என்பது நம் தமிழ் முன்னோர் வாழ்ந்து கண்ட துணிபு. ஆதலால் என் அறிவுத் தமிழகத்துக் குலமகளிர் விலைமகளிர் என்ற இருபிரிவு இன்றொடு ஒழிகதில். இம் மாலையோடு மறைகதில். ஒழுக்க நெறியான், தமிழ் மகளிர் என்ற ஒரு குலமே நிலவுக; வாழ்க. காலவயத்தால் பரத்தையராயிருந்து, அறிவு வந்து மணஞ் செய்து கொண்ட எம் தமிழ் மகளிரை, அவர் தம் பழைய வழுவிற்காக யாரும் இகழற்க. இகழ்வாரை அரசு எளிதில் விடாது. கோலால் கொடிது ஒறுக்கும் என்று சொல்ல விழைகின்றேன். திருந்திய புதுநல வாழ்வைப் போற்றாதார் எத்துணையும் அறிவுடையரோ, சொன்மின். தமிழ்ப் பெண்மக்களே! பரத்தை யொகுக்கம் நாட்டிற்கும் மக்கள் தம் உடல், அறிவு, ஒழுக்கங்களுக்கும் பகை; ஆதலால், அதனை ஒழிக்க வேண்டுவது செங்கோலரசின் கடன். அத்தீய ஒழுக்கத்தை உடையவர் யார்? அதனை எப்படி ஒழிப்பது? அதனை யார் ஒழிக்கவல்லார்? என்ற வினாக்களை அரசு புலவர் குழுவொடு சேர்ந்து தீர ஆராய்ந்தது. அவ்வாராய்ச்சியின் முடிவை உங்கட்கு அறிவிக்கின்றேன். மனைவியாகிய ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் கணவன் இன்பவகையிற் பிழைபடாமைக் காத்துக் கொள்ளும் உரிமை உண்டு. பிழைப்படும்போது கடிந்துரைத்துக் கொள்ளும் உரிமையும் உண்டு. தமிழ்ப் பெண்கள் தம்மொழுக்கத்தைக் காத்தல் போலத் தங் கணவர் ஒழுக்கத்தையுங் காக்கக் கடன் பூண்டவர் என்பதே அறிஞர் துணிபு. பொதுவொழுக்கமுடைய கொழுநரைக் கழறுவது கற்பு வழுவென இகழப்படுமே யென்று பெண்கள் நினைப்பது பேதைமை. தன் கணவன் தன்னையே நினைக்கும்படியும், பிறரை நினையாதபடியுஞ் செய்யவல்ல ஒருமை ஒழுக்கந்தான் கற்பு எனப்படுவது என்று புலவர் குழு அறுதி காட்டியிருக்கின்றது. ஆதலின் பரத்தனாகக் கணவன் ஒழுகுவதற்கு அவன் தன் மனைவியிடங்கொடுப்பதே காரணம் என்று தெளிவாகும். ஒவ்வொரு தமிழ் மறப்பெண்ணும் மனைவியாகிய தனக்கு முதலுரிமை தன்னைப்போல் கணவனை யுங் கற்புடையவனாக்குவது என்று எண்ணி வாழ்க்கைத் துணையாக இருப்பின், இரு மனவொழுக்கம் இலவம் பஞ்சுபோற் பறவாமல் என் செய்யும்! நாடு தூய்மையாக, வாழ்வு தூய்மையாகக் காதலின்பஞ் சிறக்க, நோயற்ற பிள்ளைகள் பெற்று வாழப் பெண்கள் தம்முரிமை பேணுதல் வேண்டும் என்று யான் தொழுதிரப்பல். போலித் துறவிகளும், கைம்மைப் பெண்டிரும், தாரமிழந்த ஆடவர்களும், நாட்டில் பரத்தை யொழுக்க வித்திற்குத் தாய் தந்தையர்களாவார்கள். அதற்கு ஆவனவற்றை அரசு ஆராய்ந்து கொண்டிருக்கின்றது. தன்னலம் துறந்த ஒருமனத் துறவிகளுக்கும், தெய்வமிழந்த ஒருமைப் பெண்டிர்களுக்கும், உயிர்க்காதலியை இழந்த பெருமை ஆடவர்களுக்கும் என் நாடு அரணம்னையாகும். என் மக்களுக்குத் திண்மையைக் காட்டவல்ல ஒழுக்கத்துச் சான்றோர்களாகிய அவர்களுக்கு யாதானுங் குறைவு வாரா வாறு, அரசு மனமுவந்து ஆவன செய்யக் கடன் பூண்டது. ஆதலின் அரசின் நல்லெண்ணத்தைப் பிழைபட எண்ணல் வேண்டா. “ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்” என்ற உலக நூலின்படி, தமிழகம் வளத்தினும், கல்வியினும், அறிவினுங் காட்டில், காதல் முதலான ஒருமனவொழுக்கத் தினும் வழிகாட்டியாகுக. என் அன்பும் உங்கள் எண்ணமும் சேர்ந்து இச்செயல் உருவாகுக. இந்த நல்லெண்ணத்தின் பிறப்பை, என் ஒருமை மக்களே! என் பிறப்பு விழாவிற் சொல்லல் பொருத்தமேயன்றோ. பேகன் மனைவியும் கோப்பெருந் தேவியுமாகிய கண்ணகி எழுந்திருந்து இரண்டாவதாகச் சொற்பொழிவு செய்கின்றான்: பிறவித் தமிழ் மக்களே! என் கொழுநர் நெடிது வாழ வாழ்த்திய உங்கள் கொழுநர் நீடு வாழ யானும் வாழ்த்துகின்றேன். (எல்லாரும் மகிழ்ந்து கை தட்டுகிறார்கள்) ஒழுக்க நெறியில் குலமகளிர் விலை மகளிர் என்ற இரு பிரிவு நீங்கித் தமிழ் மகளிர் என்ற பிரிவி லொருமை வேண்டுமென்னும் அரசர் வேணவா பெண் குலத்திற்குப் புது நன்மை பயக்கும். இருமனப் பெண்டிர் குலம் என்பதொன்று பரத்தைத் தன்மையைத் தன் கற்பொழுக்கமாகவே துணிதலால், பெண்ணினத்திற்கு வந்த பழி மிகப்பல. கணிகையர் உலகத்தை வாழ்விக்கும் பிள்ளைப் பேற்றையே வெறுப்பவராவர். கருவழிக்கும் மருந்துண்பவராவர். அதனால் தம்முடல் நலங்கெட, அந்நலம் உண்ண வருவார்க்கெல்லாம் இன்பத்திற் குழைத்து நோயை ஊட்டுபவராவர். பின்னர்க் கற்புடை மனைவியும் தம்மாடவரால் நோயுற, பிறக்கும் மக்களும் நோய்வாய்ப்பட்டுப் பிறக்கின்றனர். ஆதலால் பரத்தையர் தம்மையும், தம்மைச் சேர்வாரையும், அவரைச் சேர்ந்தாரையும் கெடுக்கும் தொற்றுநோய்க்கு முதல்விகள். பேரன்பிற்கு வழக்கிலும் செய்யுளிலும் எடுத்துக்காட்டாகுந் தாய்மைத் தன்மையுடைய பெண்டிர் பெருங் கேட்டிற்கு உழத்திகளாக இருப்பது முறையோ? நன்றோ? பொய்யாத் தமிழகம் பொற்ப் பெண்டிர்க்குப் புகலிடம் ஆகலாமா? நினைமின்! உடலை ஒரு பொருளாகக் கருதாத மறத் தமிழகம் உடல் விற்கும் பெண்டிர்க்கு உறைவிடம் ஆகலாமா? எண்ணுமின்! ஆதலால், பரத்தையரானோர் ஒரு காதலனைத் தழுவிக் கற்புடையராதல் கடன். அவர் எம்போல்வாரால் உடன்பிறந்த தங்கையரெனப் புகழவும் பழகவும் படுவர். இதன்கண் யாதும் ஐயமில்லை. அவர் மாற்றம் வரவேற்கத்தக்கது. வழிபடத்தக்கது. பழைய போக்கிற் காக அவர் இகழப்படார் எனத் தமிழ் மகளிர் சார்பாகத் தமிழ்த்தாய் துணையாக நான் துணிந்து கூறுவேன். (எல்லாரும் கைதட்டல்.) என் உடன் பிறப்பே! மனைப் பெண்டிர்கள் யான் இனிச் சொல்லப்புகுங் கருத்தினை நனி செவி சாய்த்துக் கேட்டு உண்மை அறிதல்வேண்டும். திருக்குறள் வழிவழித் தமிழர் தம் நல்லெண்ணங்கள் ஓரிடத்துச் சேர்ந்த தொகுப்பு நூல். அறிவு கெட்டு, வரைவில் மகளிரை விரும்புதல் கூடாது என்று ஆடவர்க்கு ஒழுக்கத்தைக் கற்பிக்கும் அத்திருக்குறள் என்ன சொல்லுகின்றதென்று பார்மின்! இன்பத்தில் மயங்கி, மணந்த மனைவியின் சொல்வழி நடத்தல் கூடாது என்றும் ஆடவர்க்கு அறிவு கற்பிக்கின்றது. இதனால், பெண்களாகிய நாம் அறியவேண்டுவது யாது? பெண்கள் தங் கணவரை இன்பத்தில் மயக்கினாலும், அவர் அறிவைக் கலக்காது விடுதல் வேண்டும். குடும்பங் காக்குஞ் சிறப்பறமுடைய பெண்களுக்கு அகத்துறை அறிவு மிகுதியுண்டு. நாடுகாக்கும் பொதுவறமுடைய ஆண்களுக்குப் புறத்துறை அறிவு இயல்பிற் பெருகும். புகழ் முதலாயவை ஈட்ட விரும்பும் ஆள்வினையுடைய ஆடவர் தம் அறிவைத் தம் அறிவிற்குள் அடக்கியாள நினைக்கும் பெண்டிர் குடும்பக் கூற்றாவர். தாம் நல்கும் இன்பத்திற்குப் பண்ட மாற்றுப்போலத் தமக்கு அவர் அடங்குவதை விரும்புபவராவர். பரத்தையொழுக்கத்திற்கு வழிவிட்டவருமாவர். அறிவைத் தடைசெய்யாது இன்பம் நல்குவர் என்றன்றோ காமுகர் பரத்தையை விரும்புகின்றனர். இன்பத்தை ஊட்டி அறிவைத் தடைப்படுத்தலானன்றோ கணவர் தம் மனைவியை வெறுக்கின்றனர். ‘பெண்வழிச்சேறல்’ என்றுரைத்த வள்ளுவர் வாய்மையை நீங்கள் இப்பொழுது அறிந்திருப்பீர்கள். கணவன் இன்பத்திலுந் துன்பத்திலும் புகழிலும் பழியிலும் செம்பாகம் உடைய கற்புக்கரசிகள் தம் கணவர் அறிவு பெருகுமாறு அவர் வழி நடந்து இன்பம் திளைப்பர் என்று யான் வேண்டுவன். இவ்வாறு நன்முறையில் நடந்துகொண்ட பின்னும் கொழுநர் பரத்தை யொழுக்கத்தை நச்சுவராயின், அரசர் பெருமான் ஒப்புக்கொண்டபடி, தம் உரிமையைச் செலுத்தி அவரை நல்வழிக்கு உய்ப்பதும் கற்புடைப் பெண்டின் கோள் என்பதை நானும் வழிமொழிகின்றேன். புலவர் குழுவின் அவ்வாண்டுத் தலைவராகிய பரணர் எழுந்திருந்து பேசுகின்றார்: பழந்தமிழ் மக்களே! பண்புசால் தேவன் தேவிகளே! தமிழ் மக்களின் அகவாழ்வும் புறவாழ்வும் காலந்தோறும் எப்படி இருக்கின்றன; எப்படி அமைதல் வேண்டுமென்று திறம்படச் சூழ்ந்து புலவர்குழு நாட்டிற்கு வழிகாட்டி வந்திருக்கின்றது என்ற நடப்பினைத் தமிழ் மக்கள் அறிவார்கள். இக் குழுவின் நன்முடிவை அரசர் பெருமானும் அன்புடைத் தமிழ் மக்களும் ஒப்பிவாழும் ஒரு நன்மதிப்பைத் தவிரப் புலவர் குழுவிற்குப் பிறிதொரு தனிப் பெருமையுண்டோ? கணவன்மார் தம் அறங்கடந்த பரத்தை யொழுக்கத்தைத் தடுக்கும் வல்லமையும், தடுக்கும் உரிமையும் அவர் தம் கற்புடை மனையாளுக்கே உண்டு என்று அரசர் வெளியிட்ட உண்மையை, மீண்டும் யான் புலவர் குழூஉவின் ஆணையொடு நினைவூட்டுகின்றேன். உடம்பில் உயிரைப் போகாமல் நிறுத்துவது அரசு விதியால் இயலாதது போலவே, உயிரினுஞ் சிறந்த ஒழுக்கத்தை வாழ்வில் நிறுத்துவதும் அதனால் ஒல்லாது. ஒழுக்கம் அவரவர் தம்மானே காத்துக்கொள்ள வேண்டிய பொருள். ஆதலால், ஆடவர்கள் தாமே நன்னிலையில் நிற்க, மானங்காக்கக் கடன் பூண்டவர்கள். என்றாலும், இன்பங் காரணமான கணவர் தீயவொழுக்கத்தை மனைவியர் காக்க முடியும் என்பது எம்மனோர் துணிபு. வரைவின் மகளிர் இல்லறப் பெண்களாகும்படியும், ஆவன உதவுவதாகவும் மன்னர் பெருமான் சொல்லிய சொற்கள் தமிழகத்தையே புத்தக மாக்குவதற்கேற்ற வழி காட்டுவன. மக்கட்பிறவி பெற்றும் வாழுமாறு அறியாது இதுமனப் பெண்டிராகிய நல்லார்கள் இனி நல்வாழ்வு பெற முந்துக. அவர் வாழ்வு ஞாலத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். பெண்கள் தத்தங் கணவரையே ஆசிரியராகக் கொண்டு உலக அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டுமென்றும், புறத்துச் சென்று அலைந்து மெலிந்த அவர் உடலுக்கேயன்றி நெஞ்சிற்கும் உரங்கொடுத்தல் வேண்டும் என்றும், தன் வழிச் செலுத்துதல் என்னுங் குற்றத்தைச் செய்யக்கூடாது என்றும் கோப்பெருந்தேவி சொல்லிய பொன்மொழிகள், அப்படியே ஒவ்வொருவர் தம் உள்ளத்தும் பதியும் என்று துணிகின்றோம். பரத்தை யொழுக்கம் இன்றியமையாததென்று சிலர் சில காரணங்களை நினைத்துக் கொண்டிருக்கலாம். வாய்விட்டுப் பறையுஞ் சாற்றலாம். அவையெல்லாம் பிழையெனத் தனித்தனி அறியவிரும்புவார் “பொய்யா வாழ்வு” என்று புலவர் குழு வெளியிடும் நூலிற் காண்க. பின்னும் ஐயம் எழுமேல் அக்குழூஉவிற்கு அதனை அறிவித்து அகற்றிக்கொள்க. உங்கள் திருமுன் ஒன்றுமட்டும் செப்புவல். மனைவி கருவுற்ற காலத்து ஆடவன் பரத்தையை விரும்ப வேண்டிய நிலையில் இருக்கின் றான் என்பர். ஒப்புக்கொள்ளத்தக்க காரணம் போலத் தோன்றும். ஆனால் இஃது உண்மையா? ஆடவன் மனைவி கருவுறா முன் அவள்பாற் புணர்ச்சியும், கருவுற்ற பின் பிறள் ஒருத்திபாற் புணர்ச்சியும், இருவரும் ஒரே காலத்துக் கருவுற்றாராயின் - கருவுறார் என்று யார் சொல்லமுடியும் - பின்னும் ஒருத்திபாற் புணர்ச்சியும் இவ்வாறு எப்பொழுதுமே, உயர் திணையின்றிக் கழிகா முகனாய்த் திரிவானாயின், அவன் இளமையில் முதுமையுறானோ? புறத்துச் சென்று சென்று மெலிந்த உடல் வலியால் வீறு பெறுநாள், மனைவி கருவுற்ற நாள் அன்றோ? அன்றியும் அகத்தும் புறத்துங் காம நினைவினானாகவே இருந் தால், வினையிற் கருத்தூன்றி வாகை பெறுநாள் எந்நாளோ? ஆதலால், மனைவி மகப்பெறுங் காலம் ஆடவன் உடலுரமும் நெஞ்சுரமும் பெறுதற்கு வாய்த்த காலம் என்று அறியின், மேற்சொல்லிய எதிர்ப்பு பொய் யென விளங்கா நிற்கும். பரத்தை யொழுக்கத்திற்கு இடங் கொடுக்கும் பழக்க வழக்கங்களை யெல்லாம் அஞ்சாது களையல் வேண்டும் என்று புலவர்குழு, நம் பெருமானையும் தமிழ் முதுமக்களையும் கேட்டுக்கொள்ளுகின்றது. அத்தீய பழக்கங்களுள் சிலவற்றை இவண் காட்டுவன். பெற்றோர்கள் காதலன் காதலி யாவார் மனப் பொருத்தம் அறிந்து வரைவு செய்தல் வேண்டும். தம் மனப் பொருத்தமே தம் பிள்ளைகள் மனப்பொருத்தம் என்று நினைப்பது பேதைமையுள் எல்லாம் பேதைமையாகும். தற்காலத் திருமணத்தில் நாட்பொருத்தம், செல்வப் பொருத்தம், அழகுப் பொருத்தம், இருவகைப் பெற்றோர்தம் தரப்பொருத்தம் என்ற இன்னோரன்னவை முதற் பொருத்த மாகக் கருதப்படுகின்றன. ஒருமன வாழ்வு நடத்திக் கொள்ள வேண்டிய காளையின் குமரி யின் உள்ளங்கள் வரைவு செய்த பின், தாமே பொருந்திக்கொள் ளும் என்ற துணிபே பலரிடத்துக் காணப்படுகின்றது. நாட்டிற்குக் கேடு சூழ்வார் பிள்ளைகளைப் பெற்றோரல்லது வேறு யார்? வலிந்து மணம் புணர்க்கப்பட்ட ஆடவன் வெளிப் படையாகப் பரத்தனாகின்றான். மக்கள் பகுத்தறியாது செய்வன வெல்லாம் விதியென நாட்டிற் கொண்டாடப்படுகின்றன. இங்ஙனம் வரைந்த மகனும் வரைந்த மகளும் வரைவின் மாக்க ளாக ஆக்குவது அறியாப் பழக்கத்தின் கொடுமை காணீர்! நினைத்துப் பார்மின்! நல்வாழ்வு தருவது தானே பழக்க வழக்கத் தின் பயன். தீமை பயக்குமென்றால், வாழ்வை ஒழிப்பதா? பழக்க வழக்கங்களை ஒழிப்பதா? சொன்மின். வரைவிற்கு முதற் பொருத்தம் அழியினும் வாழினும், காதலராவார்தம் உள்ளப் புணர்ச்சியேயாம் பகல் போலத் தெள்ளத் தெளிக எனப் புலவர் குழு ஐயந்திரிபின்றி அறிவிக்கின்றது. இத்தகைய நன்மணமே நடைமுறையில் நடப்பதற்குத் தமிழ் முதுமக்கள் துணைசெய் யின், பரந்து செல்லும் உயர் திணை வண்டுகளுக்கும், மணத்தால் நின்று இழுக்கும் உயர் திணை மலர்களுக்கும் அஃறிணை யொழுக்கத்திற்கு இடமேது? காலமேது? காதலருள் ஒருவர் நோய்வாய்ப்பட மற்றொருவர் பரத்தராதலும், ஒருவர் இறக்க மற்றொருவர் பரத்தராதலும், காதலர் தம்முள் மனவேற்றுமைப்பட்டு இருவரும் பரத்தராத லும் ஆகிய சிக்கல்களுக்கு வழிகளைப் புலவர் குழு ஆராய்ந்து கொண்டிருக்கின்றது. முன்னர்க் கூறியபடி தமிழகம் யாங்கணும் காதலொருமை மணமே நடப்பதாயின், இத்தகைய பரத்த மைக்கு வருங்காலத்து இடமில்லை என்றும்., ஆற்றியிருக்கும் பொறுமைப் பண்பே பின்னுங் காணப்படுமென்றும், அறிஞர்கள் எண்ணுகின்றனர். பருவம் வாய்ந்த ஆடவர் பெண்டிர் ஒவ்வொருவரும் மணஞ் செய்துகொண்டே ஆதல்வேண்டும் என்று விதிப்பது தான் பரத்தை யொழுக்கம் அறவே மறைதற்கு வழியென்று அறிவுடையார் அணுவளவும் நினையார். கட்டாய மணம் பெற்றோர் மணத்தைவிட நாட்டிற்கும் உலகிற்கும் சாலக்கேடு பயக்கும். ஞாலத்திடைப் பிறந்து வாழும் மன்னுயிரெல்லாம் பிள்ளைகளாகப் பேணுந் தாயன்பும் கலங்காது கண்ட அறிவும், நிறை நெஞ்சும் பெற்று, மணவினை மறந்த துறவி, ஆணாகுக, பெண்ணாகுக, அவர் நம்மை உய்விக்க வந்த உயர் பிறப்பா ளர்கள். பரத்தை யொழுக்கத்தின் மருங்கறுக்க முற்படும் தமிழகத்தில் உள்ளத்துறவிகள் பெருகுவர் என்பது புலவர் குழு அறிவுக்கண் கொண்டு காணும் முடிபு. காதல் மணமே தமிழகத்து இனி நிகழவிருத்தலின் காதலி இறப்பக் கணவன் சாதலும், காதலன் இறப்ப மனைவி வீதலும் ஆகிய தடுக்க முடியாத இனிமையும், இன்னாமையும் பொருந்திய சாக்காடு கள் மருட்கையடையும்படி நிகழ்தலுங்கூடும் என்று நாங்கள் எதிர்நோக்குகின்றோம். சாக்காடெய்தாரேல், தாரமிழந்த கணவன் நெஞ்சும், கொழுநன் இழந்த காதலி அகமும், புரை தீர்ந்த நன்மைக்காக, முற்றிய துறவை மேற் கொள்ளுமென்று நாம் தெளிவாக உணரலாம். இருமன வொழுக்கம் அழியும் தொன்மைத் தமிழகத்து ஒருமனத் துறவிகள் பல்குவர் என்பது கண்டு, புலவர் குழு கழிபேருவகை எய்துகின்றது. துறந்தார்க்கு என் நாடு தூய வாழ்விட மாகுக என்று அரசர் பெருமான் அறிவிப்பு, ஆழ்ந்த சிறந்த குறிக்கோளாகும். உயிர்களுக்கு முதலிடமான தமிழகம் வாழ்க, கற்புத் தமிழ் வாழ, அறிவொடு ஒழுக்கம் வாழ, பிறவும் வாழ, வேண்டிய எல்லாம் வாழ, நம் தமிழகத் தேவனும் தேவியும் நீடூழி வாழ்க என்றும், இப்பிறந்த நாட் கொண்டாட்டம் என்றும் வாழ்க என்றும் முழுமுதற் பொருளை நாம் நினைவோமாக. கூடியிருந்த குடி மக்களுள் ஐம்பது அகவையுடைய ஒரு பேரிளம் பெண், மக்கள் சார்பாக நன்றி கூறுகின்றாள்: உடன் பிறப்பாளர்களே! மயிலுக்கு வாழ்வளித்த நம் அரச வள்ளல் இன்று மக்கட் குலத்திற்கே பெருந்தொண்டு செய்திருக்கின்றார். வெள்ளம், ஆம்பல், தாமரை என்னும் எண்ணின் அளவு கடந்த ஆண்டுகள் அவர் தம் தேவியோடு வாழ்க. (கை தட்டல்) பரத்தை யொழுக் கம் இறந்த நாளைச்செய்த மன்னர் பிறந்த நாள் என்றும் வாழ்க. ஒழுக்கத்தைச் செங்கோலாகக் கொண்ட தமிழரசிற்குக் குடிமக்களாகிய நாமும், பெருமிதத்தோடு சொல்லுகின்றேன், நன்கு வாழ்க. (அரசனுந்தேவியுங்கூடக் கைதட்டல்) பகைவரை வெல்லும் அல்லது வெல்விக்கும் போர்களை அடுத்தடுத்துச் செய்வதற்கே படை திரட்டலும், பொருள் திரட்ட வரி விதித்த லும், சூழ்ச்சிகள் செய்தலும், கண்ணுங் கருத்துஞ் செலுத்துதலும், அறிஞர் அறிவையெல் லாம் அவ்வினைக்கே பயன்கொள்ளுத லும், அறிஞர் அறிவை யெல்லாம் அவ்வினைக்கே பயன்கொள் ளுதலும், ஞாலத்துப் பல அரசுகளின் உயிர்க் கொள்கையாக இருந்துவரும் இந்நாளில், நம் தமிழரசர் பெருமானும் பெரு மாட்டியும், ஏனை அரசர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கின்ற னர் என்பதை நான் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. மக்கள் மேற்கொண்ட இல்லற வாழ்வைத் தூய்மைப்படுத்துதல், ஒழுக்கத்திற்கும், அறிவிற்கும், காலத்திற்கும் ஏலாப் பழக்க வழக்கங்களை மாற்றி ஏற்பன கொண்டுவருதல், காலந்தோறும் விளைவைக் கணித்து வரிவிதித்தல், உணவுக் குறைவானும் உழைப்பு மிகுதியானும், உணவு மிகுதியானும் உழைப்புக் குறைவானும், நோய் பிறக்காத படி, குழவி இளமை முதுமைப் பருவங்களுக்கு ஏற்ற உணவு உழைப்புகளை, ஆண் பெண் யாவரும் அறியும்படி செய்தல், தொழிலில்லா மனிதனும், பள்ளியில்லா ஊரும் இல்லை யென்னும்படி பார்வையுடல், உற்றார் இறத்தல் போன்ற இழவானும் மக்கட் பேறில்லாமை போன்ற வறுமையானும் கண் கலங்குவார்க்கு இயற்கை கூறி ஆறுதல் அளித்தல், நல்ல புதுக்கருத்துக்களும், இன்பப் புதுப் பாக்களும் முன்னிற்குமாறு பரப்புதல், மக்களைத் தமக்கும் அஃறிணை உயிர்களுக்கும் தொண்டு செய்யுமாறு வேண்டுதல் என்று இன்னவாறு கடனிறுக்கும் மக்கள் வாழ்வில் நேரடியாகப் பயன்படுபவற்றை ஒருங்கு தொகையாகச் செய்வதற்கே அரசு என்ற ஓர் அமைப்பு அமைந்தது என்பதை நம் அரசனும் அரசியும் உலகிற்குச் செயலால் சொல்லுகின்றனர். செய்கையிற் சொல்லும் அவர்களுக்குக் குடிகளாகிய நாம் என்றும் நன்றியுடையோம். (எல்லாருங் கை தட்டல்.) மக்கட் பிறவியினும் தமிழ்ப் பிறவியே சிறந்தது என்று நாம் பிறந்த பின் அறிந்துகொண்டோம். ஆதலின் இனியும் அப் பிறவியையே விரும்புகின்றோம். அவ்வுணர்வு நம் குருதியில் ஓடுமாறு செய்த மறவர்கள் தமிழ்ப் புலவர்கள் பொய்யாச் செந்நா படைத்தவர்கள். இறப்பும் நிகழ்வுங்கற்ற கல்வியாளர் கள். வருங்காலமும் அறியவல்ல அறிவுடையவர்கள். தமிழ் நாட்டுக் குடும்பங்களெல்லாம் தனித்தனி சென்று, அகநிலை காண விரும்பும் அன்பினர். ஆதலானன்றோ, புலவர் குழுவினை அரசுக்கு நெஞ்சு என்று நம் மன்னரும் ஒப்புக்கொண்டிருக் கின்றார். தமிழகத்தையே ஒரு குடும்பமாகக் கருதும் தமிழ்ப் புலவர் அவை நீடுவாழ்க. வாய்மைப் புலவர்கள் வழி வழி சிறக்க. வெண்பா உரிமை பலதிறத்த; ஒவ்வொன்றும் வேண்டும் அருமை வழக்கி லறிவார் - பெருமை அடைவார்; உலகத் தமைதியுங் காப்பார் படைவார் பகையைப் பழித்து. 5. பிள்ளைத் தூது களம் : மனை. காலம் : மாலை, கா காலம். கூற்று : தலைவி, மகன், தோழி, தலைவன். தலைவி : (சினத்தோடு) ஏடி! என்ன இது. என் கண்ணை நடைவண்டியை மெதுவாகத் தள்ளச் சொல்லிக் கோயிலை வலமாக ஒருபுறம் சுற்றிக் கூட்டிக்கொண்டு விரைந்து வா என்று சொன்னதற்காகவா, ஒரேயடியாகத் தொலைந்தே போய் விட்டாய்? அவன் நடந்துவர நேரமானால் நீ எடுக்கிக்கொண்டு வந்தாலென்ன? இடை ஒடிந்தாவிடும்? பாவம். பிள்ளைக்கு வயிற்றைப் பசிக்காதா? உனக்குப் பசிக்கிற நேரந்தான் என் செல்வனுக்கும் பசி உண்டாகும் என்று எண்ணினாய் போலும். எவ்வளவு காலந்தான் காத்திருக்கின்றது. காம்பினின்றும் பறித்த மாவடுக்கள்போல, முலையிலிருந்து பால் வடிந்துகொண்டே யிருக்கின்றது. கையால் அமுக்கித் தேய்த்தாலும் மீண்டும் பால் பீறிட்டு ஓடி வருகின்றது. பிள்ளைப்பால் இப்படி வீணேயா னால், உனக்கென்னடி வருத்தம். நாளைக்கு நீ தாயான அப்புறந் தெரியும். (மகனை எடுக்கிக்கொண்டு) என் இனிப்பே! வயிற்றைப் பசிக்கிறதா? நடந்தா போய் வந்தாய்? (கால்விரலைப் பற்றி முத்தம் கொடுத்தல்) என்னடி இது? கன்னமெல்லாஞ் செக்கச் செவேலென இருக்கின்றது. பிள்ளையைக் கன்னத்திலே அடித்துவிட்டாயா? நடக்கமாட்டேனென்றால் தூக்கிக் கொண்டு வந்தாலென்ன? பிள்ளை ஒரு சுமையா? (கன்னத்தைத் தொட்டுப் பார்த்து) ஏடி! ஈரமாக இருக்கின்றது. யாரோ பல்லாலே முத்தங்கொடுத்திருக்கிறாற்போலத் தோன்றுகிறது. செந்தமிழினும் இனிய இவன் செவ்விதழை எவளடி சுவைத்தது. என்னடி பெண் பனைபோல் நிற்கின்றாய். தோழி : எல்லா! என்னைச் சினந்து என் செய்வது? இவன் படுசுட்டியாக இருக்கிறான். நான் எடுக்கிறேன் என்றால், மாட்டேன் என்று தலையசைக்கிறான். நீ பாட்டிற்கு நட என்றாலும், தக்கென்று நின்று கொள்ளுகிறான். தானே குடுகுடு வென்று எங்கோ ஓடுகிறான். சிறு பிள்ளைகள் ஆ ஊ என்று விளையாடுவதைக் கண்டால் போதும்; அங்கே போக வேண்டுமென்று நாட்டியக் குதிரைபோல் காலை மாறி மாறி மிதித்து எடுக்கு என்று அழுகையாற் சொல்லுகிறான். நேரமாயிற்று; அம்மா சண்டை பிடிப்பாள் என்று அறிவுக்குப் பொருத்தமாகச் சொன்னால் அவனுக்கு என்ன விளங்கும். அரசனாயினும் குழந்தை அழுகைப்படி கேட்டுத்தானே ஆகவேண்டும்! கட்டிப் பிடித்து வலுவந்தமாக எடுக்கினால் கோழிபோல் காலுதறி, அம்மா அம்மா என்று வீச் வீச்செனக் கதறுகிறான். கையாலே அடிக்கிறான். காலாலும் உதைக்கிறான். நகத்தால் கிள்ளி வைக்கிறான். அடிதடியாளனுக்கு எப்படி யம்மா தெருவில் அஞ்சாமலிருக்க முடியும்? உங்களுக்குப் பயப்படுவதா? உங்கள் குலக்கொழுந்துக்குப் பயப்படுவதா? தலைவி : (தன் மேற் சாய்ந்திருக்க மகனை முன்னே நிறுத்திக் கொண்டு) கண்மணியே! அழுதாயே? உன் அப்பாவை இன்னுங் காணோமே என்று வீட்டிலிருந்து நான் கண்ணீர் வடிக்கின்றது போலே, அம்மாவைக் காணேனேயென்று தெருவிலிருந்து நீ கண்ணீர் வடித்தாயா? (பிள்ளை தலையை ஆட்டுகிறான்.) தோழி : பாருங்கள் அம்மா, பொய்யாகத் தலையை அசைக்கிறான். குழந்தாய், விளையாடப் போக வேண்டுமென்று தானே அழுதாய்? (அதற்கும் தலையசைக்கிறான்). தலைவி : என் முத்து! உன் தலை ஆட்டுக்கல் குழவி போல எப்பக்கமும் உருளுகின்றதே. தமப்பன் குணம் போகுமா? (அப் பொழுது அவன் விரலை வாய்க்குள் வைக்கிறான். விரல்களிற் புது மோதிரங்களைக் கண்டு) ஏடி! நான் கேட்டாற்றான் எதனையுஞ் சொல்லுவாயா? நின் வாயிலென்ன கொழுக்கட் டையா இருக்கின்றது? எப்படி இந்த மோதிரங்கள் இவன் கைக்கு வந்தன? முதலில் இருந்த மோதிரங்கள் எங்கே? நழுவி விழுந்தால் இந்த மோதிரங்களை அணிந்தவர்கள் யார்? (தோழி பதில் சொல்லவில்லை). ஒன்றுக்கும் பேசாமல் ஊமைபோல் இருக்கின்றாயே. செவிடா? அறிவறையா? இவன் தந்தைதான் நான் கேட்பதற்கெல்லாம் ஊமைபோல் இருந்துவிட்டு ஊரைக் கெடுக்கிறார் என்றால், நீ வீட்டைக் கெடுக்கிற ஊமையா? பிள்ளை பேரில் ஒன்றுக்குப் பத்தாகச் சொல்லுகின்றாய். அவன் ஒன்றும் அறியாப்பிள்ளை என்று தானே, நாலுங் கரைகண்ட உன்னைக் கூட்டி போகச் சொன்னது. என்னடி, குமரி, குட்டிச்சுவர்போல் நேரே நிற்கின்றாய். தெருவிலே, இரண்டகமுடைய தந்தையைக் கண்டு அவர் மேல் விழுந்தானா? அவர் தாம் கண்டதற்கு அறிகுறியாகவும், இவ்வூரிலேதான் இருக்கின்றேன் என்பதற்குக் காட்டாகவும், யான் அணிந்துவிட்ட மோதிரங்களைக் கழற்றிக்கொண்டு இதனை அணிந்தாரா? இல்லை; இவனுக்குப் பெண் முறையுடைய பெண்டிர்கள் கேலிக்காக இம் மோதிரங்களைத் தொடுத்துவிட்டார்களா? இல்லை; அப்படியிருக்கமாட்டாது. இவன் தந்தைக்கு கள்ளன்ன பெண்ணலம் ஊட்டும், நிலைத்த இளமையுடைய பெண்டிர்களாகிய என்னொடு பிறவாத் தங்கைமார்கள் தாம் இவற்றைக் கழற்றவும் அணியவும் உரிமை கொண்டாடுபவர்கள். அவர்களுக்கு இல்லாத உரிமை யாருக்கு உண்டு. என்னடி, என்னைப் பேச விட்டுவிட்டு நீ கேட்டுக் கொண்டிருக்கிறாய். நடந்தவற்றையெல்லாம் சொல்லித் தொலை. என் கண்ணு, சொல்ல இன்னுஞ் சில நாளாக வேண்டுமென்று தானே, களிமண்ணு! உன்னைக் கேட்கின்றேன். தோழி: முழுதும் பேசி முடித்த பிறகு, விளங்கிக் கொண்டு பேசு, குறுக்கே பேசாதே என்று முன்னொரு முறை சொல்லி யிருக்கிறீர்களே, அதனாலேதான் தாமதித்திருந்தேன். தலைவி : அது இன்றைக்குத்தான் நினைவுக்கு வந்ததாக்கும். தோழி : அவன்பேரிலே குற்றஞ் சொன்னால் என் பேரிலேதான் இடி விழுகின்றது. நீங்கள் வேண்டுமானாலும், நாளைக்கு இவனையும்கூட அழைத்துக்கொண்டு போதிர். நான் சொல்வது உண்மையா? பொய்யா? என்று வெட்ட வெளிச்சமாகிவிடும். தலைவி : சொன்னால், இப்போதே வெளிச்சமாகிவிடு கின்றது. தோழி : நீங்கள் சொன்னபடியே, கோயிலை வலப்பக்க மாகச் சுற்றிக்கொண்டு போனோம். அங்கே ஒரு வீட்டில் யாரோ யாழ் வாசித்துக் கொண்டிருந்தார்கள். அதனைக் கேட்டவுடன் அப்பக்கம் அடிவைக்க மாட்டே னென்று அழுதான். தலைவி : இசை பாடினால், அழுத பிள்ளை தூங்கிவிடும் என்று கண்டும் கேட்டுமிருக்கின்றோம். என் பொன்னை வாய்விட்டு அழவைத்ததென்றால், அந்த இசை கழுதை ஓசையாக இருக்கலாம். தோழி : பிள்ளை அழுகையைக் கேட்டு யாரோ தெருவில் யாழ் வாசிக்கிறார்களென்று, ஒரு இளைய, அழகிய, சிட்டுக் குருவி போலும் நங்கை பொத்தென எட்டிப் பார்த்துக் குறளடி வைத்து, உருளை படியில் வருவதுபோலக் குடுகுடு வென்று ஓடி வந்தாள். தலைவி : நீ எடுக்கிக் கொண்டாயா? இல்லையா? பிடித்து வைத்த பொம்மைபோல் இருந்திருப்பாய். தோழி : என்ன வியப்பு, என்ன வியப்பு. பாருங்கள் அம்மா. குரங்குக் குட்டிபோல, முன்பின் அறியாத அவள் கழுத்தில் தொத்திக் கொண்டான். உள் அழைத்துப் போய்ச் சருக்கரை கலந்த தின்பண்டங் கொடுத்தாள். அவன் போன பிற்பாடு, நடை பயிலும் வண்டிக்குப் பக்கத்து நான் நின்றது, தெருவிற் போவார் வருவார்க்கெல்லாம் பெருநகை விளைத்தது. பெண்கள் பார்த்தாலும் எனக்குப் பெருநாணமாக இருந்தது. தலைவி : ஏடா, நாவைக் காட்டு. (நாவை நீட்டிச் சுவைக் கிறான்.) உன் தமப்பனார் தாம் எடுப்பார் கைப் பிள்ளையாக, அழைப்பார் விருந்தினராக இருக்கிறார் என்றால், நீயுமா இப்பொழுதிலிருந்தே அப்படி இருத்தல் வேண்டும். என்னைப் போல் உனக்கு ஒரு மனைவி வந்தபின், உன் தந்தையைப்போல் உனக்கொரு குழந்தை பிறந்த பின், அப்புறம் எப்படிப் போனாலும் போ. தோழி : மேலும் போகாமல் இவனைக் கூட்டிக் கொண்டு வீட்டிற்குத் திரும்பிவிடலாமா என்று பார்த்தேன். பொழுது போகவில்லை; வீட்டு வேலை இன்னும் முடியவில்லை; அதற்குள் வந்துவிட்டாயே; இன்னுங் கொஞ்ச தூரம் நடந்து சென்றிருந்தால், காலா தேய்ந்துவிடும் என்று ஒருகால் நீங்கள் சினந்தாலும் சினவுவீர்கள் என்று நினைத்துத் தெருவழியாக மேலும் நடந்தோம். ஒரு பெரிய மனையின் முற்றத்திலே மணல் பரப்பியிருந்தது. சிறார்களும் சிறுமிகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். அவ்விடத்து இவனையும் ஒரு ஆளாக மதித்து விளையாட்டிற் சேர்த்துக் கொண்டார்கள். அவண் விளையாடிய பிள்ளைகளுள் நும் மகனே சிறு தோன்றலாக இருந்தான். ஆதலால், அப்பிள்ளைகளெல்லாம், இவனையே குழவி, குழவி என்று கொண்டாடினர். இவனும் அவர்களுக்கு நடுவே பகைப்படை கண்ட மறவன் போல ஒரு கோலை ஊன்றிக் கொண்டு, தாமரையில் தேன் வடிதல்போல், வாயிலிருந்து அமிழ்தம் தானே வழிய நின்றான். தலைவி : புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? தோழி : அக் காட்சியை நீங்கள் கண்டிருக்க வேண்டும் என்று நான் அப்பொழுது நினைத்தேன். பெற்ற பொழுதை யினும் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள். ஒளியால், பிறந்த குழந்தை போலவும் தோன்றினான். நேர் நின்றபோது குமரன் போலவும் தோன்றினான். வாய் திறந்து சிரித்தபோது கிழவன் போலவும் தோன்றினான். சூழ்ந்த பிள்ளைகள் கைகொட்டியபோது உன் மகன் முகம் முழுதும் மலர்ந்தது; அதனைக் கண்ட என் உவகை முகத்திற்கு, காதலியைக் கண்ட என் உவகை முகத்திற்கு. காதலியைக் கண்ட கட்டழகன் முகமும், பேரனைக் கண்ட பெரியவன் முகமும் ஈடாக மாட்டா. தலைவி: கரும்பின் சாறே! உன் பொக்கை வாய்ச் சிரிப்பில் தோழியும் மயங்கிவிட்டாளே. பிள்ளை மயக்கே பெரிய மயக்கல்லவா! அதுவும் உன்னைக் கண்டு யார்தான் மயங்க மாட்டார்கள். (முத்தமிடுகிறாள்) தோழி : பிள்ளைகள் குழுமி விளையாடுவதை நாலா மாடத்து நின்றும் பார்த்துக் கொண்டிருந்த நீல மலர்ந்தனைய கண்ணையுடைய ஒருத்தி, தன் சிலம்பு கலகலவென்று ஒலிப்ப, ஆடை பரப்ப, விரைந்து வந்து, நானொருத்தி நிற்பதையும், பொருட்படுத்தாமல், உச்சி மோந்து, எச்சில் தழும்புபட முத்தங் கொடுத்து, அரைஞாண் சுற்றிய இடையைத் தன்னிரு கையாலும் தொட்டு, மாலையைத் தூக்குவதுபோல, நின் மகனைத் தூக்கிக் கொண்டாள். ஏந்திய உள்ளங்கையில் அவனைப் படுக்கவைத்துத் தொட்டிலிற் கிடப்பதுபோல் ஆட்டி, இனிச் சுவைக்கும் இடம் இல்லை என்னும்படி வாய் வைத்து முத்தினாள். இவனும் சிறிதும் நாணாமல், அழாமல், அழகாக மகிழ்வாக கெக்கெக்கே என்று மழலை மிழற்றிக் கிடந்தான். நீங்கள் தாலாட்டிய போதுங்கூட அப்படி ஒருநாளும் கிடந்திருக்க மாட்டான். மற்றொரு ஆடவன் பெற்ற பிள்ளையை, விரலால் தொட்டுக் கையால் தூக்கி, வாயாற் கொஞ்சுவதைப் பிறர் கண்ணாற் பார்த்தால் மனத்தால் யாதுதான் நினைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று ஒப்புக்குக்கூட இவளுக்கு ஒரு பிடி நாணம் இல்லையே யென்று, நான் நாணப்பட்டேன் அம்மா. தலைவி : இதற்கென்னடி நாணம் வேண்டி இருக்கின்றது. யார் பாடியதேயாயினும் நயமுடைய பாட்டாயின், அருமை யறிவார் யார் வேண்டுமானாலுஞ் சுவைக்கலாமே. பிறர் இன்புறத்தானே புலவர் பாடல் செய்கிறார். தம் பாடல்களைப் பிறர் நயங்கண்டு சுவைப்பாராயின், புலவர், உள்மகிழ்தல் அல்லது புறம் வேர்ப்பாரோ? அதுபோல யார் பெற்ற பிள்ளையாயிருந்தாலென்ன, பிள்ளையின் மாசற்ற உள்ளத்தை யும் தூசற்ற மேனியையுங் காண்பார், அன்பு காட்டி உச்சி மோப்பதில், பிள்ளைத்தன்மை தானே பெருகும். நீ பார்த்த அந்நங்கை மலடியாக இருக்கலாம். அதனாற்றான் அவளுக்கு அவ்வளவு ஆர்வமும் விரைவும் பிறந்திருக்கின்றன. அதிலும் என் கண்ணன கண்ணைக் கண்டும் முத்தங் கொஞ்சத் திறவாத இதழுடையாரும் உண்டு கொல்! தோழி : (சிரித்த முகத்தவளாய்) நீங்கள் சொல்லுவதெல் லாம் உண்மைதான், அம்மா. எடுக்கிற அம்மங்கையர்க்கரசி இவனைப் பார்த்து, என் பொன்னே, மணியே, புனையா ஓவியமே, செந்தமிழே, தேனே, தெவிட்டாத தெள்ளமுதே என்று ஒரு நாழிகைப் பொழுது அடுக்கிப் புகழ்ந்தாள். இவனும் கேட்டுச் சிரித்துக் கொண்டான். தலைவி : எல்லாம் பிள்ளையில்லாக் குறை. என் மகனைப் பாராட்டிய அந்நல்லாளுக்கு, என் மகன்போல ஒரு இன்பப் பிள்ளை பிறக்கட்டும் (என்று வாழ்த்தி, மகனைப் பார்த்து) கேட்டுச் சிரித்தனையா? கரும்பே! கற்கண்டே! கனியே! உனக்கு அவ்வளவு கேள்வியறிவு இப்பொழுதே வந்துவிட்டதா? (தோழியைப் பார்த்து) பலர் எடுக்கியதினாலேதான் நீ இன்று வர நேரமாயிற்று என்று சொல்லு. அதனாலே ஒன்றுங் குற்றமில்லை. மேலும் என் மகன் திருவிளையாடல்களைச் சொல்லு. பார்க்கக் கொடுத்து வைக்காவிட்டாலும் கேட்கக் கேட்க இன்பமாக இருக்கின்றது. தோழி : ஐயை! நின் மகனைப் பாராட்டுபவர்கள் நாள் தொறும் இனிக் கூடுவார்கள் என்று கருதுகின்றேன். நாளைய முதல் நாங்கள் இருவரும் வருவதற்கு இன்னுங் காலதாமதம் ஆனாலும் ஆகலாம். ஒக்கலில் எடுக்கிய அந்நங்கை மேலுஞ் சொன்னாள். (இழுப்பொலியோடு) தலைவி : என்னடி வளர்த்துகிறாய். உடலே, உள்ளமே, உயிரே என்று சொன்னாளா? என்ன சொன்னாள். தோழி : அதே போலத்தான் சொன்னாள். யாரை? குழந்தையை யில்லை; குழந்தைக்குத் தந்தையை. பன்னாள் என் முகம் பாராது வீட்டிலே தங்கிவிட்ட உன் அப்பாவிடம், வளை நெகிழத் தோள் மெலிய, ஒளி கேடப் பசலை படர, உறக்கமின்றி, உணவின்றி வாடிய ஒருத்தி, நீ உயிரென்று அழைத்த அவள், உடனே வரச்சொன்னாள் என்று நீ தூதாக வீட்டிற்குப் போனதுஞ் சொல்லுவையா? என்று சொல்லித் தன் வாயை இவன் தொப்புளில் வைத்து ஊதினதும், எனக்கு இனிமேற்றான் பல் முளைக்க வேண்டும் என்று காட்டுவான் போலவும், என் அப்பனுக்கு மனைவியர் பலரோ கண்டு கொண்டேன் என்று நனைப்பான் போலவும் சிரித்தான். அச்சிரிப்பிற்குப் பரிசிலாகத் தன் சிறு மோதிரத்தை இவன் விரலிற் செருகி, இவன் மோதிரத்தைக கழற்றி வைத்துக்கொண்டு, நீ என் காதலனிடம் என் துயர் சொல்லும்வரை, இம் மோதிரத்தைப் பிணையாக வைத்துக் கொள்வேன். சொன்ன பிற்பாடு, நாளை இந்தப் பக்கம் புறப்பாடு செய்து வருவை காண், அப்பொழுது முத்தம் தந்து மீண்டும் அணிந்துவிடுவேன் என்று சொல்லி, தன்னை அம்மா, அம்மா என்று சொல்லென்றாள். அப்படியே இவனும் உள்ளந் திறந்து, அம்மாம்மாம்மா என்று இலக்கண வரையறை கடந்து ஒரு முழநீளம் சொன்னான். தலைவி : (பெருமூச்செறிந்து, மிக்க சினத்தோடு, புற முதுகிற் சாய்ந்து தலை வைத்துக் கிடந்த சிறுவனைப் பிடித்திழுத்து) ஏடா, சுட்டிப் பயலே, பட்டி மகனே, மாற்றானே, மடவனே! ஊர்ப் பெண்டெல்லாம் உச்சி மோக்கவா உன்னை வளர்க்கின்றேன். உன் தந்தைக்கு வலிய வந்த பேதையர்களெல் லாம் உனக்குத் தாய் முறையோ? பிறந்து இரண்டு ஆண்டா கியும் தாய்முகங்கூடத் தெரியாத் தடியனே! தாய்ப் பால் குடித்து வளர்ந்த உனக்குக்கூடவா தாய் முகம் இது, பேய்முகம் இது என்று தெரியாமற் போய்விட்டது? எல்லாருடைய வயிற்றிலுமா நீ இருந்து பிறந்தாய்? சிறுபட்டி! நீ பத்து மாதம் குலுங்காமற் பள்ளிகொண்ட வயிறு எது? பெறாத வயிற்றைத் தாயென்னும்போது, பெற்ற வயிறு எரியுதடா! உன்னைப் பெற்றவர் தாம் பலர் உடல் தீண்டி, என்னுள்ளமும் தீண்டுகிறார் என்றால் கள்ளமறியா நீயுமா தொட்டிலிலே கிடக்கும்போது சுவை பழகவேண்டும். (தோழியை வெறித்துப் பார்த்து) நெற் குதிரே! இன்னொ ருவர் இவனைத் தொட்டால், தொட்டவர் கையை நாவாள் கொண்டு கண்டதுண்டமாக வெட்டுவதில்லையா? கண்ணெ ருப்புப் பரக்கப் பொடிபடச் சுடுவதில்லையா? இவன் தந்தையைத்தான் பெண்கள் நான் முந்தி, நீ முந்தி என்று நாணைக் கடலில் முழுக்கித் தொடுகிறார்கள். அவரும் நாணமற்ற பெண்கள், காதற் சுவைக்கு நயமற்ற பெண்கள் என்று எண்ணாது, மாலையொடு தார் மயங்க மகிழ்ச்சிக்கடலில் கரைகாண விரும்பாது நீந்துகின்றார். இவனைத் தொடக் கூடாது என்பது ஈன்றவள் ஆணை என்று உரைத்து, அந்த நங்கைக்கு இடையே விலங்காக நீ நின்றிருந்தால், உன்னை அவள் என்ன செய்துவிடுவாள்? அவளுக்கு நாணமில்லையே என்று வந்து சொல்ல உனக்கு அறிவிருக்கின்றது; தீண்டாதே என்று நல்லது கழற உனக்கு ஆண்மையில்லை. நாலாமாடியி லிருந்து நடந்து வந்தாலென்ன, வானத்திலிருந்து வழுக்கி விழுந்தாலென்ன, அவருக்கு வேண்டுமானால், அக்கண்ணி மெய்யுறவு உடையவளாக இருக்கலாம். என் கண் மகனுக்கும், என் இன்பத்திற் பெரும்பாகம் கவர்ந்த அவளுக்கும் என்ன உறவு இருக்க முடியும்? (அப்பொழுது, கணவன் வெளியிற் சென்றிருந் தவன், வீட்டிற்கு வருகிறான். தன்னைப் பார்த்துவிட்ட தோழியைப் போசாதிருக்கும்படி கைகாட்டி, ஒளிந்து கேட்கின்றான்.) தோழி : அப்படிச் சொல்லுங்கள். உங்கட்கு ஓர் உறவுமில் லாத இளநங்கையா அவள். கெட்டகேடு, நாளைக்கு வரட்டும். என் பிள்ளையைத் தொடட்டும். முத்தங்கொடுக்க வாய் திறக்கட்டும். அவள் பெண்மை சிரிக்க, என் ஆண்மையை யெல்லாங்காட்டி, ஒரு கூடை பேசி விட்டு வருகிறேன். உங்கட்கு உறவில்லாதவள் எனக்கு மட்டுமென்ன, நல்லவளா? தலைவி : வீட்டிலிருப்பவரை வரச் சொல்லென்றாளாக் கும், தன் அமிழ்தம் ஊறும் வாயால். இவன்தான் வார்த்தை பிறவாத வாயனாக இருக்கின்றான் என்று உனக்குத் தெரியுமே. நீ சொல்வதுதானே. ஆரணங்கே! ஆய்மயிலே. நீ சொல்லுமவர் ஊரில் திரிவாரேயன்றி வீட்டில் இரார். வீடுந் துறந்து மறந்த ஒரு புதுத் துறவி அவர் என்று சொல்வதுதானே. எங்கள் இல்லத்து இரவில் ஆக்கிய அடிசில் பழையதாய், மறுநாட் காலையில் வரும் ஓடேந்திகளுக்கு உணவாகும் என்றும், இரவு காய்ச்சிய ஆவின் பால் பிரையூற்றாமையின், காலையில் அங்கணத்துள் கலப்பாகும் என்றும், வருவார் வருவாரென என்றோ மலர்ந்த பாயல் இன்னும் புறங்காட்டி யறியாது என்றும் நம் வருத்தத்தைக் கொட்டுவதுதானே. உன்னுடைய அகத்திலேதான், ஊடலின் பொருட்டு விளையாட்டாக, பானை, தாழி, மூடைகளில் ஒளிந்து மறைந்திருப்பார்; தேடிப் பிடித்து ஒருமுறையாவது வந்து போசச் சொல்லு என்று அவளைக் கேட்டுக்கொள்வது தானே. (மகனைச் சுட்டி) ஏடா, சிறுபட்டி, உன்னை எடுக்கியவள் யார் தெரியுமா? உன் தந்தையை இமைச்சிறகால் அடித்துப் போன பருந்து, தெரிந்துகொள். தன் தொடியாலும் நகத்தாலும், நுந்தை மலையனைய மார்பில், வடுப்பிளவு செய்த பருந்து, தெரிந்துகொள். உன் தந்தை முதுகில் நீ குதிரையேறுங் காலை, இம்மார்பிற்பட்டவை விழுப்புண்களா என்று வினவல் வேண்டும், தெரிந்துகொள். (தந்தை எட்டிப் பார்க்கின்றான்; அதனைப் பையன் கண்டு சிரிக்கிறான்) படுசுட்டி! உன் தந்தை தான் செய்யும் பரத்தமையைச் சிரித்துச் சிரித்து மறைப்பதுபோல, நீயுமா சிரித்துப் பழகுகிறாய். அவர் தாம் உன்னை ஒரு நாட்கூடச் சுமந்ததில்லையே அப்படியிருக்கவும் எங்கிருந்து இம்மயக்கச் சிரிப்பைக் கற்றாய். எங்கே ஒரு கடியல் கொண்டு வா. தோழி : (சிறு குச்சியைக் கொண்டுவந்து கொடுத்து) அடிக்காதீர்கள் அம்மா! சிறு பிள்ளை, அறியாப் பிள்ளை. ஆண் பிள்ளை, எல்லார்க்கும் நல்ல பிள்ளை, கண்ணுப்பிள்ளை, கண்ணிலே பட்டுவிடப் போகின்றது. செங்கை சிவந்துவிடப் போகின்றது. தலைவி : (பொய் வெகுளியொடு, கடியலைக் கையிற் பிடித்துக்கொண்டு) எல்லாவற்றிலுமா தமப்பனைப்போலி ருப்பது. புறத்து எதிர்த்தார் எத்துணையராயினும், எதிர் நின்று வாளெறிந்து, பிணங்களை வானத்திற்கு ஏணிபோற் குவிக்கும் ஆண்மையில் என் கொழுநனைப் போலிரு. என் பிறப்பே! தன்னையே உயிராகக் கொண்டு வாழும் மனைவி அகத்தே தோள் மெலிய, வளை கழலப் பண்ணும் ஆண்மையில் உன் தந்தையைப் போலிராதே. (என்று சொல்லிக் கோலை ஓச்சுகிறாள்.) உற்றாராயினும் நடுவுநிலை தவறாமல் பகலவன் போல் ஒருநிலைப்பட்டு வழக்கறுக்குஞ் செம்மையில் என் கொழுநனைப் போலிரு. என் இன்பமே! தன்னையே தெய்வ மாகத் தொழும் வாழ்க்கைத் துணையின் உடலும் உள்ளமும் பூப்போல் வாடி வழக்குத் தொடர, விட்டுப் பிரியுங் கொடுமை யில் உந்தையைப் போலிராதே. (என்று சொல்லிக் கோலை ஓச்சுகின்றாள்.) இரவலர் கேட்கும் பொருள் யாதாயினும், கேட்குங் காலம் எதுவாயினும், உழைத்தாவது வழங்கும் அருளும், ஈந்தபின் உவகையுங் கொள்ளும் கொடை மத்தில் என் கொழுநனைப் போலிரு. என் காதல் விளைவே! தன்னையே பொருளாகப் போற்றும் ஒருமனப் பெண்ணுக்கு உரிய ஆண்மை நலத்தை ஊரவர் பலர்க்கும் ஊட்டும் கொடை மடத்தில் நுந்தையைப் போலிராதே. (என்று சொல்லி அவளை அம்மா என்று சொன்ன வாயைப் பொத்து என்கிறாள். அதுசமயம் தலைவன் தலைதூக்குகின்றான். பார்த்த குழந்தை அப்பா அப்பா என்று அழுகிறது.) இச் சிறுவனுக்கு எவ்வளவு துணிவிருக்கின்றது. தோழி : உடம்பில் துணி இல்லாதவனுக்கு உள்ளத்திருக் கின்ற துணிவைப் பார்த்துக் கொண்டீர்களா அம்மா! தலைவி : யான் அடிக்கு முன்பே அப்பா அப்பா என்று புலம்புகின்றான். இவன் தந்தையைப் பார்த்து எவ்வளவோ நாளாயின. நீ அப்பா அப்பா என்றாலும் அது அவர் செவிக்கு ஏறாது தம்பி! உன் அப்பா பிறவிச் செவிடு இல்லை. காரியச் செவிடு. தெரிந்துகொள். நாள் முழுதும் பழகிய என் காதற் சொற்களே அவர் செவிக்கு வேப்பங்காய் போல ஆகிவிட்டன என்றால், என் காதற் கனியே! நேற்றுப் பிறந்த உன் ஆஊக்கள் அவர்க்கு வேப்பெண்ணெய் போலத்தானிருக்கும். “குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச் சொற் கேளாதவர்” என்ற இல்லறப் புலவர் மொழியினின்றும் தப்பித்துக் கொள்ளும் அறிவுக் கூர்மை யுடையவர் அல்லரோ நின் தந்தை! எங்கே பல்கால் உன் மழலைச் சொற்கேட்டுவிட்டால், என் தங்கையர் குழலும் யாழும் இனிமையில்லனவாய்ப் போய் விடுமோ என்று நினைத்தன்றே நின் மழலை கேட்க அஞ்சு கின்றனர். வீட்டிற்கு வந்தால், ஒருகால் நின் குழலை மொழி செவியிற் பட்டுவிடுமே என்று மழலை கேளாதவராகத் தம்மைக் காத்துங் கொள்ளுகின்றனர். என் மருந்தே! உன் அப்பா நீ ஆறுபோல் அழுதாலும் வரமாட்டார். நான் ஆறாய் அழுத நீர் வெள்ளந்தானே அன்று கடலாக உருவெடுத்து, இன்று மேகமாய்த் திரிந்து இப்பொழுது நீர்த்துளியை வீசுகின்றது. (ஒளிந்திருந்த தலைவன் வெளிப் படையாக வரவே, குழந்தை அப்பா, அப்பா என்று துடிக் கின்றது. தலைவன் ஏந்திக்கொள்ள வருகையில் மகனும் திடீரெனப் பாய்கிறான்.) தலைவன் : (எடுத்துக்கொண்டு, அழுத கண்ணீரைத் துடைத்து) அப்பா! அழாதே. அம்மா அடித்தாளா? தலைவி : எந்த அம்மா அடித்தாளென்று சொல்லப்பா. தந்தைக்கும் பிள்ளைக்கும் இருக்கின்ற உறவைப் பாருங்கள். அவரைக் கண்டவுடன், மலையிலே சிங்கம் பாய்ந்தாற்போல மார்பிலே பாய்கிறான். அழாதே கண்ணே! உங்கள் அப்பா நீ கண்ணீர் விட்டதற்காகவும் வரவில்லை. யான் இரு கண்ணீர் விடுவதற்கும் வரவில்லை. வானம் நம் வருத்தங்கண்டு கண்ணீர் வடித்தது. அதற்கு இங்கு வந்து ஒண்டிக்கிறார். அது உண்மையா பொய்யா என்று வேண்டுமானால் பார். வானக் கண்ணீர் நின்றதும் வந்த வழியே போய் விடுவார். தலைவன்: (தின் பண்டத்தைப் பிள்ளைக்குக் கொடுத்துத் தின்னச் செய்து) புலிக்குருளையே! உன் பேரில் உன் அம்மா விற்குச் சினமேயில்லை. நேற்றுப் பிறந்த உன்மேல் யார் சினப் பார்! நான் அவளுக்குத் தெய்வமல்லவா? என்னை நேரே வெகுளலாமா? பூசாரி வயிறு நிறைந்தால், சாமி வயிறு நிறைந்தது என்பதுபோல, உன்னைக் கோபித்தால் என்னைக் கோபித்த மாதிரி. பெண்கள் உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் இரண்டகமுடையவர்கள் அல்லர். ஆனால், உற்றவனை நினைத்துக்கொண்டு பெற்றவனைப் பேசும் ஓரகமுடையவர்கள். பிள்ளை பிறக்கப் பிறக்க அது கூடுமல்லது குறையுமா? தலைவி : (புலவி கொண்டு பிள்ளையைப் பார்த்து) என் கிளியே! அவள் தீண்டிய மார்வை விட்டுக் கீழேயிறங்குகின் றாயா? இல்லையா? பெறுவதற்கு முன் உன்னைச் சுமக்க நானும், பெற்ற பின் சுமக்க ஒரு தோழியும் இருக்கும்போது, அவர்மேல் சுமையாக ஏன் கிடக்கிறாய்? என் காதற் கொழுந்தே! பவளத்தை யொக்கும்உ ன் செவ்வாயிலிருந்து, எனக்கு அமிழ்தாகும் எச்சில் அவர் மார்பகலமெல்லாம் நனைக்கும். நனைந்தால், அவளொருத்தி வாளா இராள். பூசிய சாந்தத்தின் சேறெல்லாம் எங்ஙன் அழிந்தது என்று நுந்தையைச் சினவுவாள். பகைவர் பலர் சினந் தணிக்கும் அவர்க்கு, அவளொருத்தி சினம் இரவு முழுதும் தணித்தல் அரிதாய்விடும். மகன் தந்தைக்குச் செய்யும் உதவி இது தானோ! என் உள்ளப்புறமே! என் கையகத்து வா. என் பொன்னான சிறுகை விளையாட்டுப்போல அவர் நெஞ்சகத்துக் கிடக்கின்ற, அவள் தன் பல்வரிசைபோல் கோத்தணிந்த முத்தாரத்தைப் பறிக்கும். முத்தெல்லாம் தனித்தனி உதிர்ந்துவிடும். உதிர்ந்தால், அவளொரு மறப்பெண். உந்தையொடு உன்னையும் என்னையும் சும்மா விடாள். என் காதற் கைகோர்த்த முத்தாரத்தை, நின் மார்பைத் தீண்டி, எவள் சாதற் கை பறித்தது? அவள் கை எங்கே? என்று புலவி நுணுகு வாள். பகைவர் போர் நுணுக்கத்தை யெல்லாம் மாற்றவல்ல நுந்தை அவள் புலவிப் போர் நுணுக்கத்தை மாற்றும் வகையறி யாது கவல்வர். நல்லது செய்யாவிட்டாலும் நுந்தைக்கு அல்லது செய்யாதே. என் வாழ்வுத் துணையே! என் மடிக்கு மறுபடியும் வந்துவிடு. தலைவன் : என் வெற்றி செல்வா! நீ பிறக்கு முன்னே என் முழு அன்பையும் உன் தாயிடத்தே செலுத்தினேன். நீ பிறந்த பிற்பாடும் அப்படி இருத்தல் இயற்கையா? என் அன்பிற் செம்பாகம் நீ கவர்ந்து கொண்டாய். செம்பாகம். . . . . தலைவி: (குறுக்கிட்டு) செம்பாகம் அவள் கவர்ந்து கொண்டாள், எனக்கிருப்பது வெறும் பாகம்தான். தலைவன் : (தன் நீண்ட மாலையை மகன் கழுத்திலுஞ் சேர்த்துப் போட்டுக் கொண்டு) என் விருந்தே! உன் தாய்ப் பாகம் வெறும் பாகமன்று. அவள் கைப்பாகம் இல்லாத உண்டி எனக்குக் கசப்பாகும். அவள் ஆக்கியது எதுவாயினும் அது எனக்கு இனிப்பாகும். உண்ணச் செல்வோம் வா! எங்கள் சிறு பெரும் உட்பகையைப் புன்முறுவல் காட்டிப் பேசாமல் தீர்த்து, எம்மிருவரையும் பேசவைக்கும் காதல் தூதுவனே! கனியாத ஆண் கனியே! அடுதொழிலிற் கை போகிய உன் தாய்க்கு ஒரு முத்தம் கொடு (என்று சொல்லி மாலையை அவள் கழுத் தொடுஞ் சேர்த்துப் போட்டு விடுகின்றான். ஒரு மாலைக்குள் மூவர் முகமும் தோன்றுகின்றன.) தலைவி : என் குடும்ப விளக்கே! எல்லா விளக்கும் விளக்கல்ல; எம்மிருவர் ஓரகத்திற்கு நீயே விளக்கு (என்று ஊடல் தீர்கின்றாள்.) வெண்பா கள்ளந் தொடாத கனியே! வா காதலர்தம் உள்ளந் தொடுக்கும் உவப்பே! வா - பள்ளம் விழுகச் சிரிக்கும் வியப்பே! அமிழ் தம் இழகத் திறவாய் இதழ். பிள்ளைத் தூது கலித்தொகைப் பகுதி (தன் மகனை உலாவக் கூட்டிப்போய்ப் பொழுது கடந்து வந்த தோழியை, பால்பெருகிற்று என்று தாய் கடிந்துரைத்தல்.) ஞாலம் வறந்தீரப் பெய்யக் குணக்கேர்பு காலத்தில் தோன்றிய கொண்மூப்போல் எம்முலை பாலொடு வீங்கத் தவநெடி தாயினை; புத்தெளிர் கோட்டம் வலஞ்செய் திவனொடு புக்க வழியெல்லாங் கூறு. (கலி. 82) இளையவர் தழூஉவாடும் எக்கர்வாய் வியன்தெருவின் விளையாட்டிக் கொண்டு வரற்கெனச் சென்றாய்; உளைவிலை, ஊட்டலென் தீம்பால் பெருகும் அளவெல்லாம் நீட்டித்த காரணம் என். (கலி. 83) உறுவளி தூக்கும் உயர்சினை மாவின் நறுவடி யாரிற் றவைபோல் அழியக் கரந்தியான் அரக்கவும் கைநில்லா வீங்கிச் சுரந்தவென் மென்முலைப் பால்பழு தாகநீ நல்வாயிற் போத்தந்த பொழுதினான் எல்லா கடவுட் கடிநகர் தோறும் இவனை வலங்கொளீஇ வாவெனச் சென்றாய்: விலங்கினை ஈர மிலாத இவன்தந்தை பெண்டிருள் யாரிற் றவிர்ந்தனை கூறு. (கலி. 84) (தாய் மகனைப் புகழ்ந்து தலைவனைப் பழித்தல்) 1. கிளர்மணி யார்ப்பார்ப்பச் சாஅய்ச்சாஅய்ச் செல்லும் தளர்நடை காண்டல் இனிதுமற் றின்னாதே; உளமென்னா நுந்தைமாட் டெவ்வம் உழப்பார் வளைநெகிழ்பு யாங்காணுங் கால். 2. காமரு நோக்கினை அத்தத்தா என்னுநின் தேமொழி கேட்டல் இனிதுமற் றின்னாதே; உய்வின்றி நுந்தை நலனுணச் சாஅய்ச்சா அய்மார் எவ்வநோய் யாங்காணுங் கால். 3. திங்கட் குழவி வருகென யான்நின்னை அம்புலி காட்டல் இனிதுமற் றின்னாதே; நல்காது நுந்தை புறமாறப் பட்டவர் அல்குல்வரி யாங்காணுங் கால். (கலி. 80) (பரத்தையொடு கூடிவந்த தலைவனைப் பார்த்து, என் மகனை எடுக்காதே என்று தலைவி கடிந்துரைத்தல்) 1. அணியொடு வந்தீங்கெம் புதல்வனைக் கொள்ளாதி மணிபுரை செவ்வாய்நின் மார்பகலம் நனைப்பதால்; தோய்ந்தாரை யறிகுவேன் யானெனக் கமழும்நின் சாந்தினாற் குறிகொண்டாள் சாய்குவள் அல்லளோ. 2. புல்லலெம் புதல்வனைப் புகலகல் நின்மார்பிற் பல்காழ்முத் தணியாரம் பற்றினன் பரிவானால்; மாணிழை மட நல்லார் முயக்கத்தை நிர்மார்பிற் பூணினாற் குறிகொண்டாள் புலக்குவள் அல்லளோ. 3. கண்டேயெம் புதல்வனைக் கொள்ளாதி நின்சென்னி வண்டிமிர் வகையிணர் வாங்கினன் பரிவானால்; கண்ணியார்க் காட்டுவ திதுவெனக் கமழும்நின் கண்ணியாற் குறிகொண்டாள் காய்குவள் அல்லளோ. (கலி. 79) (தாய் தன் மகனுக்கு அறிவுரை கூறல்) 1. செம்மால் வனப்பெலாம் நுந்தையை யொப்பினும் நுந்தை நிலைப்பாலுள் ஒத்த குறியென்வாய்க் கேட்டொத்தி; கன்றிய தெவ்வர்க் கடந்து களங்கொள்ளும் வென்றிமாட் டொத்தி; பெருமமற் றொவ்வாதி ஒன்றினேம் யாமென் றுணர்ந்தாரை நுந்தைபோல் மென்தோள் நெகிழ விடல். 2. பால்கொள லின்றிப் பகல்போல் முறைக்கொல்காக் கோல்செம்மை யொத்தி; பெருமமற் றொவ்வாதி கால்பொரு பூவிற் கவின்வாட நுந்தைபோற் சால்பாய்ந்தார் சாயவிடல். 3. வீதல் அறியா விழுப்பொருள் நச்சியார்க்கு ஈதல்மாட் டொத்தி; பெருமமற் றொவ்வாதி மாதர்மென் னோக்கின் மகளிரை நுந்தைபோல் நோய்கூர நோக்காய் விடல். (கலி 86) நெல்லிக்கனி முதற் பதிப்பு 1962 இந்நூல் 1969இல் பாரிநிலையம் வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகின்றன. அன்புரை மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையின் வளர்ச்சிக்கு நன்கொடை செய்த தமிழ்கூறும் மலேயா நன்மக்கட்கு முகவுரை மக்களின் தேவைப் பொருள்களுக்கும் அடிப்படை உணர்ச்சிகளுக்கும் இடையே இன்று பூசல்கள் பெருகியிருக் கின்றன. வாழ்வின் புறநலங்களைப் பெருக்கிக்கொள்வதற்காக நிலையான மனித உணர்வுகளைக் குறைக்கவும் திரிக்கவும் அழிக்கவும் முயல்கின்றோம். தேவையின் வேட்கைக்கும் இயல்பான உணர்ச்சிக்கும் புறப்போராட்டம் நடப்பது போலவே, மானிட உணர்ச்சி களுக்குள்ளும் அகப்போராட்டம் நிகழ்கின்றது. பிற உணர்ச்சிகளை மிகையாக வளர்த்து, தலையான இயற்கை உணர்ச்சிகளை நசுக்க முயல்கின்றோம். பிறவிக்கு உரிய உணர்ச்சிகளை, மழையை மண் ஏற்பதுபோல, ஏற்று நல்வழிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் வாழ்வு நெறி; அதுவே உடம்பையும் உள்ளத்தையும் சமுதாயத்தையும் உலகையும் வாழ்விக்கும் நெறி. இந்த உண்மையை நாட்ட எழுந்தது இந்நாடகம். கதிரகம் டாக்டர் வ.சுப.மாணிக்கம் காரைக்குடி-2 1-12-1962 நாடகர் சீரனார் : புடைவை வணிகர் வையை : சீரனார் மனைவி பண்ணன் : மகன் யாழி : மகள் சோலையன் : வேலைக்காரன் எல்லன், கதிரன், முரசன் : பண்ணனின் நண்பர்கள் மலையனார் : தையலர் காவிரி : மலையனார் மனைவி வடிவழகி : மகள் நாவலன் : மகன் மலரி : வேலைக்காரி மின்னொளி, வான்மதி, : வடிவழகியின் நண்பிகள் பண்பரசி நறுங்கொன்றை : ஏழை நங்கை ஓவியன் : மகன் நல்லப்பர் : ஆண் துறவி நல்லம்மை : பெண் துறவி பொன்னம்மை மூக்காயி, : அன்னையர் கழகத்தின் தேனம்மை தலைவியர் பொருளடக்கம் 1. முதலாவது: கன்னியரங்கம் 137 - காட்சி - 1 137 - காட்சி - 2 142 - காட்சி - 3 148 - காட்சி - 4 156 - காட்சி - 5 160 - காட்சி - 6 164 - காட்சி - 7 167 - காட்சி - 8 175 - காட்சி - 9 181 - காட்சி - 10 188 2. இரண்டாவது: அன்னையரங்கம் 198 - காட்சி - 11 198 - காட்சி - 12 205 - காட்சி - 13 211 - காட்சி - 14 221 - காட்சி - 15 229 - காட்சி - 16 234 3. மூன்றாவது மனைவியரங்கம் 241 - காட்சி - 17 241 - காட்சி - 18 249 - காட்சி - 19 255 - காட்சி - 20 262 - காட்சி - 21 267 - காட்சி - 22 277 - காட்சி - 23 280 முதலாவது கன்னியரங்கம் காட்சி: 1 (காலைப்பொழுது செந்தாமரைகள் மலர்ந்திருக்கும் வட்டமான நீர்நிலை. நீர்நிலையின் கரைமேல்) வடிவழகி: (ஒரு தாமரைப் பூவைத் தன் முகத்தோடு அணைத்துக்கொண்டு பாடுகின்றாள்) நீர்வளரும் நிலவிளக்கோ நிலம்வளரும் திருமதியோ! ஏர்வளரும் செங்கரும்போ இடைவளரும் புதுமுகமோ பார்வளரும் செந்தமிழோ பதிவளரும் செங்கோலோ! ஊர்வளரும் ஒற்றுமையோ ஒற்றுமையின் பொற்பரிசோ! மின்னொளி: வடிவு! இன்று ஒரு புதிய மகிழ்ச்சி உன் முகத்தில் தவழ்கின்றதே, மகிழ்ச்சிக்கு ஒரு முகம் போதாதென்று தாமரையையும் உடன் முகமாகக் கொண்டாயோ? பெண்களுக்குப் பெரிய மகிழ்ச்சி வந்துவிட்டால், மலர்களுக்கென்ன, சோலைக்களுக்கே அழிவுதான். நல்ல செய்தி கேள்விப்பட்டேன். எப்போது எங்களுக்கு அழைப்புத் தருவாய். இதோ முல்லைப் பரிசு. (முல்லைப் பூவை மின்னொளி கொடுக்க, வடிவு கூந்தலில் செருகிக் கொள்கின்றாள்.) வான்மதி: மின்னு! நாளும் கூடப்பழகுகின்ற நமக்குமா அழைப்பு? கூட விளையாடும் போது அழைப்பு உண்டா? கூடப் படிக்கும்போது அழைப்பு உண்டா? கூட உண்ணும்போது அழைப்பு உண்டா? கூடப் பிறந்தார்க்கு அழைப்பு உண்டா? மறந்தும் எங்கட்கு அழைப்பு எழுதிவிடாதே, வடிவழகி! அது நட்பழகு இல்லை. பண்பரசி: (துடுக்குடன்) வானி! நீ சொல்வது சரி இல்லை. வடிவு கட்டாயம் எனக்கு அழைப்பிடு. நின் கணவன் பெயர் தெரிய வேண்டும். பெயரை வைத்துப் பாடவேண்டாமா? (மின்னொளியைப் பார்த்து) பார்த்தாயா? கணவன் என்ற சொல்லைக் கேட்டவுடன், வடிவுக்குக் கூந்தல் முழுதும் நாணம். கைத்தாமரை கூட நாணிச் சிறிது குவிந்துவிட்டது. எவ்வளவு வேட்கை ஏறியிருந்தால் இவ்வளவு தலைகுனியும். வடிவழகி: (சிரித்துக்கொண்டு) உங்கட்கென்ன? அழைப்பு யார்க்குமே வராது. வான்மதி: ஓ! ஓ! பெருஞ் சாமர்த்துத்தான். அழைப்பு அடிப்பாயா? அதுவும் அடிக்க மாட்டாயா? பண்பரசி: ஏன் அடிக்க வேண்டும்? வடிவு வீடுதோறும் படியேறிச் சொல்வாள். கொடுக்கும் அழைப்பை விடக்கூறும் அழைப்புச் சிறந்ததில்லையா? வான்மதி: திருமணமே வாழ்க்கையில் பெரிய நிகழ்ச்சி. மிக எளிய குடும்பத்தார்கூட, அழைப்பிதழுக்கு அதிகம் செலவழிக்கிறார்கள். தெரிந்த முகம், தெரிந்த முகத்திற்குத் தெரிந்த முகம், தெரியவேண்டிய முகம் என்று கண்டவர் கேட்டவர்க்கெல்லாம் அழைப்பு நீட்டுகிறார்கள். காதலர்களே திருமணத்திற்கு முன் செய்தித்தாளில் சேர்ந்து தோன்றுகிறார்கள். ஒலி பெருக்கி மூலம் வாருங்கள் வாருங்கள் என்று ஊர்ச்செவிக்கு அறைகின்றார்கள். இதுவல்லவா உலகம்! வடிவு! நீ அழைப்பு ஆயிரம் அடிப்பதிலே புரட்சி செய்யாதே! வடிவழகி: நன்றாகக் கேலி செய்யுங்கள். பின் என்னை யார் செய்வார்கள்? வான்மதி: திருமணத்திற்குப் பின் உன்னைக் கேலி செய்ய ஒருவன் வருவான். கேலி செய்து செய்து கிட்டாத அடிமையாவான். அடிமையினது அசையாக் கல் மார்பை நீ உளிக்கண்ணால் சிதறாது உடைக்கும்போது, நாங்கள் அருகில் இருந்து கேலி செய்யமுடியுமா? அரச மரத்தைக் கூந்தல் வடத்தால் இறுக்கி வளைத்து இழுத்துக் கோடரிக் கண்ணால் வெட்டும்போது, பார்த்து வெட்டு என்று நாங்கள் பக்கத்திலிருந்து கேலி செய்ய முடியுமா? அப்புறம் பிள்ளை குட்டி என்று பேறுகள் பெற்றபின் எங்கள் கேலியைத் திரும்பிக் கேட்கவாவது உனக்கு நேரம் இருக்குமா? தாலி ஏறுமுன் எங்கள் கேலியைக் கேட்டுக்கொள். வடிவழகி: (சிரித்துக்கொண்டு) எனக்குத் தாலி ஏறாது: உங்கள் கேலி ஏறட்டும், நேற்றிருந்த மனம் ஒருவர்க்கு இன்று இருப்பதில்லை. உடன் பழகும் தோழியர்க்குக் கூட, உள்ளம் தெரிவதில்லை. மின்னொளி: உன் உள்ளம் எங்கட்கு நன்றாகத் தெரியுமே. பிறர் செய்வது போல நீ செய்யவே மாட்டாய் வானொலி வழியாகவும் தொலைக்காட்சியாகவும் உன் திருமணத்தை அறிவிப்பாய். பண்பரசி: உன் உள்ளத்தைத் தான் திறந்து சொல்லேன் மணம் உண்டா? அழைப்பு உண்டா? விருந்து உண்டா? என்று தெரிந்து கொள்கின்றோம். வடிவழகி: எதுவும் இல்லை, இல்லை, இல்லை. (அழுகின்றாள்: கைத்தாமரை காலிற் பட்டுக் கசங்கு கின்றது) வான்மதி: திருமணத்திற்குப்பின் எங்களை விட்டுப் பிரிய வேண்டி வருமே என்று அழுகிறாயா? வடிவு! அழாதே. உன் கணவன் எங்கள் வருகையைத் தடுக்கும் சிறுமதி யுடையவராக இருக்கமாட்டார். இடையில் வந்த காதலைவிடப் பிறந்த நாள் தொட்டுவந்த நட்புப் பெரிது என்று நாங்களே அவரிடம் சொல்லுகின்றோம். இதற்காக இப்போதே நீ கண்கலங்காதே. (வான்மதியும் கண் கலங்குகின்றாள். தன் கண்ணையும் வடிவழகியின் கண்ணையும் கைக்குட்டையால் துடைக்கின்றாள். வடிவழகி மேலும் அழுகின்றாள்.) பண்பரசி: ஏன் இவ்வழுகை? எண்ணிய காதல் கைகூட வில்லையா? பெற்றோர் ஒத்துக் கொள்ளவில்லையா? நாள் ஒத்து வரவில்லையா? சொல். எங்களால் இயன்ற உதவியைச் செய்கின்றோம். வடிவழகி: நீங்கள் நான் சொல்வதை நம்பமாட்டீர்கள். வான்மதி: நம்பும்படி சொன்னால் நம்புகின்றோம். வெறுக்கும்படி சொன்னால் வெறுக்கின்றோம். பாம்பிருக்கு, பாம்பிருக்கு நம்புங்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பானே யன்றிப் பெட்டியைத் திறக்க மாட்டான் பாம்புப் பிடாரன். பார்க்க வந்தவர்களுக்கு வேறு வேலையில்லையா? சற்றுநேரம் நின்று பார்ப்பார்கள். போய்விடுவார்கள். அந்த வித்தை யல்லவா நீயும் செய்கிறாய். திருமணத்திற்கு அழைப்பு உண்டா? இல்லையா? (என்று சொல்லி வடிவழகியின் முகத்தை நிமிர்த்துகின்றாள்) வடிவழகி: (கசங்கிய தாமரையைக் கையில் எடுத்துக்கொண்டு அமைதியாக) மணமே இல்லாதபோது அழைப்பு எங்குவரும்! நான் கன்னியாகவே கடைசிவரை வாழத் துணிந்துவிட்டேன். யார்க்கும் காதலியாக வாழவிரும்ப வில்லை. (தோழியர் எல்லோரும் நாங்கள் நம்பவில்லை என்று கத்துதல்) ஆம், நீங்கள் நம்பமாட்டீர்கள். பெற்றோர் நம்பமாட்டார்கள். உலகம் நம்பாது என்பதற்காகத் தன்னம்பிக்கையை விட முடியுமா? மனத்தை நம்பித்தான் யாரும் வாழ வேண்டும். கன்னித் துறவிக்குக் கவலை யில்லை. கணவன் எப்படிப் பட்டவனோ என்று கவலைப்பட வேண்டியதில்லை. குழந்தைகள் கூடப் பிறந்துவிடுவார்களோ என்ற கவலை வேண்டாம். வேற்றோர் இடத்துக்கு அடியெடுத்து வைத்து மாமியின் சொல்லடி பட வேண்டாம். நாத்திகளின் கைச்சாத்துப் படிகளுக்கு ஆளாதல் வேண்டாம். பிறந்த இடத்தையே சிறக்கும் இடமாகவும் இறக்கும் இடமாகவும் கொள்ளத் துணிந்துவிட்டேன். தொண்டு வாழ்வுக்குக் கன்னி வாழ்வே ஏற்றது. பண்பரசி: (பெருஞ்சிரிப்புடன்) மேடைப் பேச்சுக்குச் சிறுவயதில் வரப் பண்ணியதை நம் முன் எடுத்து விடுகின்றாள் வடிவு. இப்பேச்சினால் ஏமாந்து போக மாட்டோம். நாங்க என்ன சொல்வோம் என்று எங்கள் வாயைக் கிளறிப் பார்க்கிறாய். அது பலிக்காது. கன்னியாகவே இருப்போம் என்று உன்னைப்போல் மார்தட்டிச் சொல்லியவர்கள் இன்று பேரப்பிள்ளை களோடு பெருகியிருக்கிறார்கள். இணைப்புறாவைக் காணும்போது மார்பு விம்பிய நின் நெஞ்சமா காதலை மறக்கப் போகின்றது? நீ காதலை மறந்தால் இவ்வுலகத்தில் யாரிடம் காதல் குடியிருக்கும்? இந்த வேடிக்கைகளை யெல்லாம் எங்களிடம் வைத்துக் கொள்ளாதே. உன் திருமணத்துக்கு ஏற்கனவே நான் ஒரு பரிசு வாங்கி வைத்துவிட்டேன். ஆதலால் நீ திருமணஞ் செய்து கொண்டுதான் ஆக வேண்டும். (எல்லோரும் சிரித்தல்) மின்னொளி : (புதிய தாமரைப்பூ ஒன்றைப் பறித்துக்கொண்டு) வடிவின் மணத்தைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவள் மனமே கவலைப்படும். நேற்றிருந்த மனம் ஒருவர்க்கு இன்று இருப்பதில்லை என்று வடிவே கூறுகின்றாள். இன்றிருந்த மனம் ஒருவர்க்கு நாளை இருப்பதில்லை. அதுவும் காதலில் இருப்பதில்லை. அதுவும் காதலனைக் கண்டபோது இருப்பதில்லை. அதுவும் வடிவுக்கு இருப்பதில்லை. வடிவழகி: (சிறு முறுவலோடு) நீங்கள் நம்பமாட்டீர்கள். நம்பும்படி உங்களுக்குச் சொல்லவும் முடியாது. ஏன்? காதலுணர்ச்சி உங்கள் உள்ளத்தில் அவ்வளவு பாய்ந்திருக்கின்றது. நான் கன்னியாக வாழ்ந்தால், என் நண்பிகளாகிய உங்களை உங்கள் காதலர்கள் நம்பமாட்டார்கள் என்று அஞ்சுகிறீர்கள். காதலர்கள் நம்பாவிட்டால் கன்னியராகுங்கள். தொண்டுக்குப் புறப்படுங்கள். வான்மதி: தொண்டுக்கு நாங்கள் புறப்படமாட்டோம் (மணி காட்டியைப் பார்த்து) உன் திருமணத்துக்குப் புறப்படுகின்றோம். (எல்லோரும் பிரிதல்) காட்சி: 2 (பிற்பகல் திரைப்படம் பார்த்துவிட்டு, பண்ணன், எல்லன், கதிரன் மூவரும் ஓர் உண்டிச்சாலையில் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.) பண்ணன்: அதிகப்பசி. படம் நன்றாக இருந்தது. பசி தெரியவில்லை. படமும் நீளப்படம். இன்னும் இரண்டு இட்டிலி சூடாக் கொண்டுவாப்பா. எல்லன்: நல்ல படம்பார்த்துவிட்டு வெறும் இட்டிலி தின்பார்களா? ஏதாவது இனிப்புக் கொண்டுவா தம்பி! கதிரன்: கதை பழங்கதைதான். ஆனால் புது மாதிரியாக எடுத்திருக்கிறார்கள். நடித்திருக்கிறார்கள். பண்ணன்: இத்தகைய படங்களைப் பெண்கள் பார்க்க வேண்டும். பெண்களைப் பெற்றோர்கள் பார்க்க வேண்டும். துறவுப் பெரியார்கள் பார்க்க வேண்டும். எல்லன்: (பீடி குடித்துக்கொண்டு) இன்றுதான் எல்லாரும் திரைப்படம் பார்க்கிறார்களே, குருடர்கள் கூடப் பார்க்கிறார்களே. பண்ணன்: பார்த்தால் போதுமா? காதலின் உறுதியைப் படத்திற் கண்டு பாராட்டுகிறார்கள். தங்கள் வீட்டுப் படியை மிதித்தவுடன், செருப்பைக் கழற்றிவிடுவது போலக் கருத்தை விட்டுவிடுகிறார்கள். கதிரன்: பண்ணா! திரை வாழ்க்கை வேறு. உலக வாழ்க்கை வேறு. ஓவியப் பழத்தை எவனாவது உண்ணப் போவானா? நடிகன் நடிகையின் உறுதிகளைப் பார்த்து வாழ்வில் திட்டம் போடலாமா? கடற்படம் கடலாழத்தைக் காட்டாது. காதல் வாழ்வாக மலர வேண்டுமானால்........... பண்ணன்: உறுதி வேண்டும். கதிரன்: உறுதி ஒருவர்க்கு இருந்தால் போதாது. இருவர்க்கும் வேண்டும். பெற்றோர்க்கு இருந்தால் இன்னும் நல்லது. ஊரார்க்கு இருந்தால் விதையே பழுத்த மாதிரி. எல்லன்: காதலில் உறுதி மாத்திரம் இருந்தால் போதாது. கொஞ்சம் சூழ்ச்சியும் வேண்டும். அறிவோட்டம் வேண்டும். நாகரிகமாக முதலில் நடந்துகொள்ளத் தெரியவேண்டும். காதல் ஒருகால் நீர்போலத் தோன்றும். ஒருகால் பாறை போலத் தோன்றும் பார்த்து நடக்கவேண்டும். (முரசனும் அங்கு வருதல்) முரசன்: என்ன, எல்லாரும் இங்குவந்து கூத்தடிக்கிறீர்கள்? காசு கீசு கையில் அதிகமோ? கதிரன்: இந்தக் காலத்தில் காசுக் கென்னடா, நம்ம கையிலேதான் காசிருக்க வேணுமா? நண்பர்கள் பணப்பையிலே இருக்கிற தாளெல்லாம் நம்ம பணந்தானே காசு எப்படியும் வந்துவிடும். நல்ல படம் வரவேணுமே இன்றைக்கு அழகான, ஆர்வமான, இயல்பான முன்னேற்றத் திரையைப் பார்த்தோம். பார்த்த மகிழ்ச்சியில் பலகாரக் கடைக்குள் நுழைந்தோம். முரசன்: (வெண்சுருட்டு ஊதிக்கொண்டு) நானும் ஒரு நல்ல படந்தான் பார்த்து வந்திருக்கிறேன். பண்ணன்: படம் பார்க்கும்போதாவது நீ யாருடனும் சேர்ந்து போகக்கூடாதா? என்றுமே நீ தன்னைப் பேணியப்பா. முரசன்: அதுதான் பலகாரம் சாப்பிடும்போது சேர்ந்து கொண்டேன். நான் தன்னைப் பேணியாக இருக்கக் கூடாதென்றால், நீ என்னைப் பேணு. எல்லன்: நல்ல படம் பார்த்தால், யாரும் வீட்டுக்குப் போகாமல், உண்டிச் சாலைக்குத்தான் வருவார்கள் போலும். கதிரன்: இந்தக் காலத்தில் வீடு மனிதப்பறவைக்கு ஒரு கூடு வீடு. மனித விலங்குக்கு ஒரு குகை. வீட்டில் என்ன இருக்கிறது? அதனாலேதான் எல்லாரும் வெளியே சென்று சென்று வருகிறார்கள். ஆளுக்கு ஒரு படம் பார்க்கப் போகிறார்கள். நம் வீட்டில் இப்படிக் கதைத்துக் கொண்டு காலாட்டிக்கொண்டு ஊதிக் கொண்டு சில சமயங்களில் ஊற்றிக்கொண்டு கும்மாளம் போட முடியுமா? சரி, முரசா! உன் உள்ளத்தை அலைத்த திரை என்ன? சொல். (நாற்காலி மேல் தட்டி) இப்போதே உன்னையும் ஓசியில் கூட்டிக்கொண்டு மறுபடம் பார்க்கப் போவோம். முரசன்: வீரப்பிறவி என்பது படத்தின் பெயர். மல்லன்: இந்தப் பிறவி நமக்கு எதற்கப்பா! நீ நல்ல படம் என்று சொன்னவுடன், நாலைந்து காதல் விளையாட்டுக்கள் வரும், நெஞ்சைக் கிள்ளும் என்று ஆசைப்பட்டேன். என் ஆசையிலே புகைத்தூளைப் போட்டுவிட்டாயே. நமக்கெல்லாம் உள்ள பிறவி போதும். பண்ணன்: நம் முரசன் `கா என்றால் உடனே காதலி என்று நினைப்பவன் காதற்படமே படம் மற்றவையெல்லாம் சாதற்படம் என்று இகழ்பவன். அவனே இப்படத்தைப் புகழ்கின்றான் என்றால், ஏதோ கொஞ்சம் பார்க்கத் தகுந்த படமாகத்தான் இருக்கும். கதைப்போக்கு என்ன முரசா? முரசன்: காலம் அடுத்த கதை, காலத்திற்கு ஏற்ற கதை. இனி நமக்குக் காதல் போதும். நாட்டுக்காகச் சாதலே வேண்டும். இனி இந்நாட்டில் பிறக்கும் எல்லாரும் வீரப்பிறவி களாகவே பிறக்கவேண்டும். (காலால் தரையை உதைத்துக்கொண்டு) ஏழையும் கோழையும் இந்த மண்ணிற்கு வேண்டாம். கதிரன்: முரசா! கொஞ்சம் இடமறிந்து இனிமையாகப் பேசு. இது போர்க்களம் இல்லை. உணவுச்சாலை; நாங்கள் பகைவர்கள் இல்லை, படம் பார்ப்பக் பணம் கொடுக்கும் நண்பர்கள். கதைக்காது கதையைச் சொல்லு. முரசன்: ஒருவனுக்கும் ஒருத்திக்கும் ஒருநாள் திருமணம் நடந்தது. எல்லன்: என்னப்பா, ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான் என்று பாட்டி சொல்லும் கதைபோல இருக்கிறது. ஒருவனுக்கும் ஒருத்திக்கும்தானே மணம் நடக்கும். மணம் ஒரு நாளில்தானே நடக்கும். முரசன்: குறுக்கே குறுக்கே பேசாதே. வீரப்பிறவியைப் பார்த்த என் நெஞ்சம் யாரிடமவாது வீரத்தை உடனே காட்டி விடவேண்டும் என்று துடிக்கின்றது. இந்த ஈரக்கையை வீரக்கை ஆக்கிவிடாதே. முழுதும் கேளுங்கள் கதை வீரமாக இல்லாவிட்டால், சாப்பிட்ட இந்தக் கையைக் கழுவுவது இல்லை. இது என் வஞ்சினம். பண்ணன்: முரசா! நீ வீரக்கதையைக் கூறும்போது நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம். குறுக்கே குறுக்கே கேட்கத்தான் செய்வோம். முரசன்: மணம் நடந்த இரவில் அவ்விருவரும் இன்பம் நுகர்ந்தனர். மறுநாள் மாலை வரவேற்பு. வாழ்த்துத் தந்திகள் வந்து குவிந்தன. வரவேற்பு நடந்து கொண்டிருக்கும் போது வந்தது ஒரு தந்தி, தந்தி கண்டதும் புறப்படுக, படையிற் சேருக என்று படைத் தளபதி அத்தந்தியில் அழைத்திருந்தார். பாட்டி அழுதாள் தாய் அழுதாள், மாமி அழுதார்கள், பாட்டனும் தந்தையும் மாமனும் அழுதார்கள். உறவினர்கள் எல்லாம் கலங்கினார்கள். மணமகனும் புலம்பினான். வரவேற்பு விழா இழவுபோலத் தோன்றிற்று. பண்ணன்: மணமகள்.... முரசன்: மணமகளும் அழாமல் இல்லை. அழுதாள், பிறர் அழுகைக்கு அழுதாள், ஆவேசம் கொண்டாள். கணவன் கண்ணீரைத் துடைத்தாள். “இப்போது வீட்டுக் கடமையினும் நாட்டுக் கடமை பெரிது. மணந்த அன்றே நாட்டுக் காவலுக்குக் கணவனை விடுக்கும் பெறும் பேறு எனக்குக் கிட்டியது”. என்ற மறவுணர்வோடு மொழிந்தாள் கணவனைப் பார்த்து, அன்ப, எனக்காகக் கலங்காதீர்கள்! பகைவரின் மனைவியரைக் கலங்கச் செய்யுங்கள். நாட்டுப்படை யுடை அணிந்திருந்த போது உங்களைக் காதலித்தேன். வீரக்காதலன் என்று உங்களை விழைந்தேன். தளபதியின் ஆணை மட்டுமன்று காதலியின் ஆணையுங் கூட. இன்றுமாலைப் புகைவண்டியில் ஏறிப் புறப்படுங்கள். வெற்றியோடு திரும்புங்கள். இம் மணமாலை வெற்றி மாலை என்று காதலனுக்கு அணிந்தாள். எல்லன்: (உடல் குலுங்கி மயிர்க் கூச்செறிந்து) கதையை நிறுத்தப்பா! வீரம் தாங்கவில்லை. முரசன்: கணவன் போருக்குச் சென்று மாதங்கள் பத்தாயின. இவளுக்கும் நிறைமாதம் ஆயிற்று. கடுஞ்சூல் வலி ஏற்பட்டது. பெறு வேதனை தாங்காது உயிர் போவதற்கு முன், கணவன் திருவடியை மறுமுறை காணப் பெறுவேனா? என்று ஆசைப்பட்டாள். அஞ்சல் நிலையத்திலிருந்து ஒரு தையஞ்சல் வந்தது. பிரித்துப் பார்த்தாள், கண்டாள் கணவனது வீரச் செருப்புக்களை. வணங்கினாள், மகிழ்ந்தாள், மகிழ்ச்சிப் பெருக்கில் மாண்டு போயினாள். குழந்தை தன்னை அறியாமலே பிறந்துவிட்டது. `வீரப்பிறவி!’ என்று ஊரார்கள் அக்குழந்தையை அழைத்துக் கொண்டாடினர். பண்ணன்: வீரச்செருப்பு என்று பெயர் வைத்திருந்தால் இந்தப் படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். எல்லன்: இது நல்ல படம் மாத்திரம் இல்லை. நாட்டுப்படம். வீரம் வரும் வரை பார்க்கவேண்டிய படம். கேட்ட போதே என் உடல் குலுங்கிவிட்டது. பார்த்தால் பகைவர் உயிரைக் குலுக்கிவிடுவேன். முரசன்: போகும்போது என்னை மறந்து விடாதீர்கள். எனக்கும் என் வாய்க்கும் பணம் கொண்டு வாருங்கள். (எல்லோரும் பாடுகிறார்கள்) 1. யார் தடுத்தாலும் தடுக்கட்டும் யாங்கள் திரைக்குச் செல்வமே ஓங்குந் தமிழைக் கேட்பமே 2. பேர் எடுத்தாலும் எடுக்கட்டும் பெரிய கலையை வளர்ப்பமே உரிய முறையில் வளர்ப்பமே 3. ஊர் விடுத்தாலும் விடுக்கட்டும் ஓரக் கதையை வெறுப்பமே வீரக் கதையை விழைவமே 4. போர் தொடுத்தாலும் தொடுக்கட்டும் புதிய கருவி எடுப்பமே உதிரம் நெடுகக் கொடுப்பமே \5. ஆர் நடித்தாலும் நடிக்கட்டும் ஆடல் பாடல் வேணுமே கூடல் ஊடல் நாணுமே. காட்சி : 3 (கடைக்குச் சென்று வந்து பகலுணவு உண்டபின், சீரனார் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்) வையை: (சாத்துக்குடிப் பழத்தை உரித்துவைத்து) என்னங்க நம் பையன் வடிவு! வடிவு! என்று இரவெல்லாம் சொல்லிப் புரண்டு படுத்துக்கொண் டிருந்தானே. உங்கட்குக் கேட்கலையா? சீரனார்: அவன்தான் திரைப்படம் ஒன்றுவிடாது பார்க்கிறானே. அதிலே வருகிற பெயராக இருக்கும். வையை : இப்படித் தன் பையனைப் பற்றித் தகப்பனாரே சொன்னால், பெண்ணு கட்டுகிறவர்கள் என்ன நினைப்பார்கள்? சீரனார்: பெண்ணு கட்டுகிறவர்களிடத்தில் போய் இப்படி யாராவது சொல்லுவார்களா? அவர்கள் தம் பெண்ணைத் தூக்கிச் சொல்லுகிறமாதிரி. நாம் தம் பிள்ளையை ஏத்திச் சொல்ல மாட்டோமா? சமயம் வந்தால் விடுவோமா? அதெல்லாம் வரும்போது பார்த்துக் கொள்வோம். வையை : இனி எப்போது வருகுது. பையனுக்கு வயது இருபத்திரண்டாச்சு. படிப்பு முடித்து வேலைக்குப் போக இருக்கிறான். சாதகங்களும் கையிலே பத்துக்குமேல் இருக்கு. நமக்கும் கடமை முடிய வேண்டாமா? சீரனார்: (சுளையைத் தின்று கொண்டு) முடியத்தான் வேண்டும். நமக்கும் ஒரே பையன். நன்றாக முடித்து வைத்துவிடவேண்டும். அந்தக் காலமாக இருந்தால் நாமாக ஒன்றைப் பேசிக் கட்டிப் போட்டுவிடலாம். இப்போது காலம் உரிமைக்காலம். நாமாகப் பேசினால், என் திருமணத்தைப் பற்றிப் பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேட்பார்கள். நல்ல பெண் என்றாலும், பெற்றோர்கள் பேசிய பேச்சு என்பதற்காக உதறிவிடுவார்கள். “பெற்ற உரிமைதான் பெற்றோர்க்கு உண்டு. தம் மக்களைப் பெற்றோராக்கும் உரிமை என்ன உண்டு” வம்புபேசுவார்கள். “தந்தை மகனுக்குச் செய்யும் உதவி அவையத்து முந்தியிருப்பச் செயல்” என்றுதானே திருவள்ளுவர் கூறியிருக்கிறார் என்பார்கள். “சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” என்று தானே பொன் முடியார் அருளியிருக்கிறார் என்பார்கள். அதனால் பையன் தனக்குப் பிடித்த இடத்தைச் சொல்லட்டும். மேல் ஆக வேண்டியதை நாம் பார்ப்போம். வையை: பையனாக வந்து சொல்வானா? ஆண்பிள்ளையாக இருந்தாலம் நாணம் இருக்காதா? பருவம் வந்ததும், குழந்தைகள் கேட்டா நாம் பள்ளிக்குப் போகச் சொல்லுகிறோம். அதுபோலக் காளைப் பருவம் வந்தவுடன், நாம் மணம் பேசத்தொடங்க வேண்டியது தான். அப்போது அவன் குறிப்பையும் அறிந்து கொள்வோம். (சிறிது நின்று) வடிவு வடிவு என்று குழறினானே, அடுத்த தெருவிலுள்ள வடிவழகியாக இருக்கலாமோ? சீரனார் : யாரது? தையல் மலையனார் மகளா? மலையர் நல்ல தொழிலாளி. அவர் மனைவி..... வையை : காவிரியும் மிக நல்லவள். தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்க வரும்போது பார்த்திருக்கிறேன். யார் கூடவும் சண்டை பிடிக்கமாட்டாள். சிறுபிள்ளை, கருப்பிணி, கிழவி வந்திருந்தால் முதலில் தண்ணீர் பிடித்துக் கொள்ளுங்கள் என்று வழி விடுவாள். சில சமயங்களில் தானேயுங்கூடப் பிடித்துக் கொடுப்பாள். சீரனார்: காவிரி என்ற பேர் நிரம்பப் பொருத்தம். மலையர் தான் என்ன? நல்ல பண்பர். அவர் தையல் நிலையத்தில் ஐந்தாறு ஆட்கள் வேலை பார்க்கிறார்கள். கூலி கூடக் கேட்பார். துணி கூடக் கேட்கமாட்டார். வெட்டுத் துணியைக்கூடக் கட்டித் தந்துவிடுவார். அவர் தைத்த துணியிலே நெய்த நூல் பிரிந்தாலும் பிரியுமே தவிர, தைத்த நூல் பிரியாது. வையை: வடிவு என்றால் எல்லா வகையிலும் வடிவுதான். சீரனார்: காவிரிக்குப் பிறந்தது கலங்கலாய் இருக்குமா? வையை: சின்னப் பெண், சிரித்தமுகம், குளிர்ந்த பார்வை, படித்த பண்பு, பதமான வாய்.... சீரனார் : .(இடைமறித்து) சுருங்கச் சொன்னால், உன்னைப் போலே. வடிவு மருமகளாக வரவேணுமென்று உனக்கு ஆசை. எனக்கும் ஆசைதான். ஆனாலும் கொஞ்சம் பிடிவாதமான குணம் உண்டு என்று கேள்விப் பட்டிருக்கிறேன். வையை: பெண்ணுக்குப் பெருமை பிடிவாதந்தானே. சீரனார்: (சிரித்துக்கொண்டு) நம் பையனைக் கட்டிக் கொள்ளமாட்டேன் என்று பிடிவாதஞ் செய்தால். வையை: கிடக்கிறாள். சீரனார்: நம் பையனும் ஒரு பிடிவாதி. வடிவைத்தான் மணந்து கொள்வேன் என்றால், சொன்னதையே சொல்வான். (நல்லப்பர் வருதல்) நல்லப்பர்: (தயக்கமாக) ஏதோ இருவரும் குடும்பத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது வந்துவிட்டேன் பேச்சை நிறுத்திவிட்டீர்களே. சீரனார்: நிறுத்தவில்லை, பேச்சுதானே நின்றுவிட்டது. நல்ல சமயத்துக்குத் தாங்கள் வந்திருக்கிறீர்கள் வையை! நம் திருமணங்கூட ஐயாவினால் முடிந்தது என்று தெரியுமா? வையை : (வெற்றிலைத் தட்டைக் கொண்டுவந்து வைத்து) நம் பிள்ளை திருமணங்கூட அவர்களால்தான் முடிய வேண்டும். நல்லப்பர்: (கைத்தடியை ஊன்றிக் கொண்டு) அதற் கென்னம்மா நல்லறங்களில் சிறந்தது இல்லறம். எல்லா அறங்களும் இல்லறத்தால் நடக்கவேண்டும். இல்லறம் இல்லாவிட்டால் உலகம் இல்லறமாகவே போயொழியும். ஒரு குடியாக்குவது ஒரு வாழை வைப்பதற்குச் சமமாகும். உங்கள் மகனுக்கென்ன, பேரனுக்குக் கூட, இந்த உயிர்மாத்திரம் இருந்தால், மணம் பேசி முடிப்பேன் நல்லது. ஒன்று கேள்விப்பட்டேன். அது உண்மையா? சீரனார்: தங்கள் காதுக்கு வந்து எட்டியது பொய்யாகவா இருக்கும்? வையை: அவ்வளவு உண்மையாக இருக்காது என்பதனால் தானே ஐயா கேட்கிறார்கள். நல்லப்பர்: ஆம். சில உண்மைகள் நடந்துவிடக்கூடாது என்று ஆசைப்படுகின்றோம். சில பொய்கள் ஏன் நடந்திருக்கவேண்டும் என்று துடிக்கின்றோம். உலகம் சில சமயங்களில் நம்மைப் பொறுத்து நடக்கின்றது. பல சமயங்களில் உலகத்தைப் பொறுத்து நாம் நடக்க வேண்டியவர்களாகின்றோம். சீரனார்: (துடிப்போடு) தாங்கள் போடும் பீடிகையைப் பார்த்தால், மிகவும் கசப்பான செய்தியைக் கேட்டிருப்பீர்களோ? என்று என் உள்ளம் துடிக்கின்றது. நல்லப்பர்: துடிப்பதற்குப் பெரிய நிகழ்ச்சி ஒன்றும் இல்லை. மிகவும் துடிப்பான செய்தியாக இருந்தால், வழ வழ என்று இழுத்துப் பேசுவேனா? நல்லதாக ஒரு செய்தி பொய்யாகப் பரவி விட்டாலும் குற்றமில்லை. இல்லாத பொல்லாத செய்திகளைத் திரித்துப் பரப்பக் கூடா தல்லவா? அதனால் உண்மையை உரியவர்களிடமே நேரில் கேட்டுக்கொள்ள வேண்டும். அதுதான் திரிபைத் தடுப்பதற்கு வழி. வையை: தாங்கள் சொல்வதைப் பார்த்தால் எங்களைப் பற்றி யாரோ பொய்யாகத் தூற்றுகிறார்கள் என்று படுகிறது. நல்லப்பர்: அப்படி ஒன்றும் மதிக்கத்தக்க பொய் இல்லை. தள்ளத் தக்க பொய்தான். நம் பையன் பண்ணன் திருமணஞ்செய்து கொள்வதில்லை என்று சொல்லிக் கொண்டு திரிகிறானாம். படிக்குங்காலத்து வகுப்பிற்கூட, தாயுமானவர் பாடல்களை ஒளித்து வைத்துப் படித்துக் கொண்டிருந்தானாம். அவன் நோக்கம் அப்படியிருந்தால்.... சீரனார் : (பெருஞ்சிரிப்போடு) எப்படித் திருமணம் பேசுவது என்று நினைக்கிறீர்கள்? உங்கள் காதிற்பட்டது வேறு; எங்கள் காதிற்பட்டது வேறு. பையன் இரவெல்லாம் தாயுமானவர் பாடல்களை உளறவில்லை. காதற் பாட்டுக்களை இசையொடு புலம்புகின்றான். அவன் உடலசைவுகள் உள்ளத் துறவைக் காட்டவில்லை. ஒருத்தியின் உறவையே காட்டுகின்றன. துறவுகொள்பவன் தூங்குவான். காதலுக்கு ஏங்குகின்றவன் எங்ஙனம் தூங்குவான்? நல்லப்பர்: தங்கள் பண்ணன் திரைப்படத்துக்குப் போவதுண்டா? சீரனார்: அப்படிக் கேட்காதீர்கள். படத்துக்குப் போனவன் எப்போதாவது திரும்பி வருவதுண்டா என்று கேள்வியைப் புரட்டிக் கேளுங்கள். இப்போதுகூட அங்குதான் பகற்காட்சி பார்க்கப் போயிருக்கிறான் இரவுக் காட்சியும் பார்த்துத்தான் திரும்புவான். இவனுக்கு எப்படி இவ்வளவு செலவுக்குக் காசு கிடைக்கிறது என்று நினைக்கிறீர்களா? (வையையை சுட்டிக்காட்டி) எல்லாம் தாயாரின் அன்பளிப்பு. வையை: படம் பார்க்கச் செல்வது குற்றமா? அவன் படிக்கிற காலத்துப் பிடித்துத் தள்ளினாற்கூடப் படம் ஓடும் தெருப்பக்கம் போகமாட்டான். இப்போது படம் பார்ப்பதிலே அவனுக்குக் கொஞ்சம் ஆசை வந்திருக்கிறது. வேறு கெட்ட பழக்கம் ஒன்றும் அவனிடத்தில் இல்லை. நல்லப்பர்: தம்பி பண்ணனை எனக்குத் தெரியாதா? இருந்தாலும் பருவ காலத்தில் யார்க்கும் சில மாறுதல்கள் ஏற்படும். அவற்றைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளாமல் எதிர்குதிராக கண்டித்தால், மக்கள் பகைவர்கள் ஆகிவிடுவார்கள். சீரனார்: நீங்கள் வரும்போது பண்ணனது திருமணத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். தாயுமானவர் பாடல்களைப் படிக்கிறான் என்று நீங்கள் சொன்னதும் எனக்குச் சிரிப்பாக இருந்தது. தாயும் தந்தையுமான திரைப்பாடல்களைத்தான் அவன் எப்போதும் படித்துக் கொண்டிருக்கிறான். நல்லப்பர்: புரிந்துவிட்டது. தாயுமானவர் படத்தைக் காதற் புத்தகத்தின் அட்டையாகப் போட்டிருப்பான் போலும். அவ்வளவுக்கு நல்லவன். நாணமுடையவன். எவனொருவன் திரைப்படத்தைப் பாராத நாளெல்லாம் படியாத நாளாகக் கருதுகிறானோ, அவனை இனித்தனியே விடுதல் கூடாது. திருமணம் செய்வித்து துணையோடு படத்துக்குப் போகச் சொல்லுதல் வேண்டும். ஊர்க்கேலியினால் உண்மை தெரிந்து கொண்டேன். நல்லது. இனி ஒரு சேதியைத் தங்களிடம் சொல்லலாம். சீரனார்: நன்றாகச் சொல்லுங்கள். நல்லப்பர்: அடுத்த தெருவிலே.... சீரனார்: தையற்காரர் மலையனார் இருக்கிறார். நல்லப்பர்: நான் சொல்லப் போவதை நீங்கள் சொல்லி விட்டீர்களே? எப்படி? சீரனார்: அடுத்த தெருவிலே மலையர் ஒருவர்தாம் மிக நல்லவர். நீங்கள் சொன்னால் நல்லவரைத்தான் சொல்வீர்கள் என்று தெரியும். வையை: அவர் மனைவி காவிரியும் மிக நல்லவள். நல்லப்பர்: அவர்கட்குப் பிறந்த இருகுழந்தைகளும் மிக நல்லவர்கள். மூத்தது பெண்; வடிவழகி என்றுபெயர். வடிவுக்குத் திருமணம் பேசவேண்டும். பெருந்தன்மை யுடைய குடும்பத்துப் பையனாக இருந்தால் நல்லது பாருங்கள், என்று மலையனார் என்னிடம் சொன்னார். அப்போது உங்கள் குடும்பம் எனக்கு நினைவுக்கு வந்தது. பண்ணனுக்கு வடிவு நல்ல பொருத்தம். பெற்றோர் களுக்குத் தொழிலும் பொருத்தம், பருத்தி புடைவையாகக் காய்த்தது என்பது பழைய பழமொழி. உங்கள் மண வுறக்குப் பின், புடைவை தையலாக வந்தது போல என்பார்கள். காவிரியும் வையையும் கலந்தது போல என்பார்கள். வையை: ஐயாவிடம் உள்ளதைச் சொல்லுங்கள். சீரனார்: நாங்களும் அக்குடும்பத்தில் உறவு கொள்வதை மிகவும் மதிக்கிறோம். எல்லாரும் எங்கட்குப் பிடித்திருக் கிறார்கள். வையை: (மெதுவாக) எங்கள் பையனும் வடிவு! வடிவு! என்று உறக்கத்தில் முணுமுணுக்கிறான். நல்லப்பர்: அப்படியா? பண்ணனுக்கு ஒரு வண்ணம் பார்ப்போம். வடிவுக்கு ஒரு முடிவு காண்போம். வடிவுகூடத் தன் முகக்கண்ணாடிக்குப் பின்புறத்தே பண்ணனுடைய படத்தை ஒட்டி வைத்திருப்பதாகக் கேள்வி. நல்லது தங்கள் பையன் பிறந்தநாளும் நாழிகையும் என்ன?, சீரனார் : எனக்கு நாட்பொருத்தத்தில் நம்பிக்கையில்லை. மனம் பொருந்தினால் மணம் பொருந்தும். நல்லப்பர்: ஆம் இன்னொரு சாராரும் அப்படி நம்ப வேண்டுமல்லவா? (யாழியைப் பார்த்து) எழுதுகோலும் தாளும் கொண்டுவாம்மா! (யாழி அண்ணனது எழுதுகோலைக் கொண்டு வந்து கொடுக்கின்றாள்) நல்லப்பர்: (சீரனாரிடம் எழுதுகோலின் சொருகைக் காட்டி) யாருடைய படம் இங்கு இருக்கிறதென்று தெரிந்து கொண்டீர்களா? உள்ளம் ஏற்கெனவே பொருந்தி விட்டது. மேல் ஆக வேண்டியதைத்தான் இனி நாம் செய்ய வேண்டும். சீர் நகைகள் பற்றி எதுவும் சொல்ல வேண்டுமா? உங்கள் குறிப்பைச் சொல்லுங்கள். வையை: அண்ணா! வடிவு எங்கள் வீட்டுக்கு வரவேண்டும். புது வடிவு பிறக்க வேண்டும். அவ்வளவுதான் என் ஆசை. சீரனார்: எல்லாம் தங்கள் நோக்கம்போல, வரவு செலவு பற்றிப் பேசுவதற்குத் திருமணம் என்ன ஒரு வணிகமா? மணமக்கள் நன்றாக வாழவேண்டும். இதுவே எங்கள் விருப்பம். (நல்லது என்று சொல்லிக்கொண்டு நல்லப்பர் போகின்றார்) சீரனார்: (வையைப் பார்த்து) ஊர்ப்பெண்கள் பேச்சைக் கேட்டால், ஒரு மணங்கூட நடக்காது; திருமணத்துக்குப் பின்னும் நல்ல உறவும் நல்ல மகிழ்ச்சியும் நல்ல உடல்நலமும் இருக்கின்ற முறையில், அடக்கமாகவும் அன்பாகவும் மணத்தை நடத்தவேண்டும். செலவைச் சுருக்கி வாழ்வைப் பெருக்க வேண்டும். உறவினர் களையும் நண்பர் என்று சொல்லத்தக்க சில அன்பர்களையும் அழைத்தாற்போதும். விருந்து விருந்தாக இருக்கவேண்டும். மருந்து உண்ணும்அளவுக்கு விருந்து படைக்கக்கூடாது. ஒரே மகனது திருமணமாக இருந்தாலும், அளவோடு செய்யவேண்டும். மணத்தில் அளவுக்கு மீறி இறைத்துவிட்டு, மணத்துக்குப் பின் வாழ்க்கையில் தொல்லைப்படக் கூடாதல்லவா? யாழி: அப்பா! அண்ணியாக அடுத்த தெருவில் உள்ள வடிவா வரப்போகின்றாள்? எப்போது அண்ணன் திருமணம்? சீரனார் : (சிரித்துக் கொண்டு) நீ ஒருத்திதான் நாத்தி. திருமணம் முடிந்ததும் அண்ணியோடு சண்டை பிடிக்கவேணும் என்ற ஆசையா? யாழி: அந்த ஆசையில்லை. மேலும் கிளைபிடிக்க வேண்டும் என்ற ஆசை. காட்சி - 4 (வீட்டின் சுவர்களில் பல்வேறு தையற் படங்கள் தொங்கு கின்றன. தைப்பதற்கு வந்த துணிகள் கிடக்கின்றன. வெட்டிய பலநிறத் துணுக்குகளும் ஒரு பக்கம் குவிந்து கிடக்கின்றன) மலையனார்: (ஒரு துணியை¹வெட்டிக்கொண்டு) நாம் வளர்த்த அருமை மகள் என்றும் நம் மகளாகவே நம் வீட்டில் இருக்கவிரும்பும்போது, வீட்டை விட்டுப் பிடித்துத் தள்ளமுடியுமா? பருவம் வந்தால் எல்லாம் சரியாய் விடும். காவிரி: (வெட்டிய துணிகளை மடித்துவைத்து) இப்படியே விட்டால் கிழப்பருவத்தான் வரும். காலையில் எழுந்த வுடன் அருட்பாடல்களைப் படிக்கச் சொல்லிப் பழக்கினீர்கள். அவளுக்கே இப்போது அருள் வந்து விட்டது. பூசைக்குப் பூக்கொண்டு வரச்சொன்னீர்கள். என்னாயிற்று? கூந்தலில் பூச்சூடிக் கொள்ளத் தயங்குகின்றாள். இவ்விதம் இருந்தால் உங்கள் மகளை யார் விரும்புவார்கள்? பூசைப்பெட்டி தூக்கும் பெண்மேல் யாருக்குக் காதல் பிறக்கும்? கொண்டை நிறையப் பூ மலர்ந்தால் அல்லவோ கொழுநன் வருவான்? அன்பு நடையைவிட்டுவிட்டு அன்னநடை நடந்தால் அல்லவா ஆடவன் திரும்பிப் பார்ப்பான்? பருவத்துக்குத் தக்கபடி இளம் பெண்களோடு பழக விட்டிருந்தால், திருமணக்கசப்பு இவளுக்கு வந்திருக்குமா? பெரியவர்கள் வாழ்ந்து முரிந்த பழக்கவழக்கங்களை வாழ வேண்டிய பச்சைக்குழந்தைமேல் திணித்தால், கொடி நசுங்கிப்போகும். மலையனார்: (தாழ்ந்த குரலில்) என்ன, காவிரி, இவ்விதம் பேசத் துணிந்துவிட்டாய் நல்ல பாடல்களைப் படிக்கச் சொல்லியதில் என்ன பிழை? நம் பெற்றோர்கள் இளமையில் நமக்கு அருட்பாடல்களைச் சொல்லிக் கொடுத்தார்கள். கெட்டா போய்விட்டோம். மணஞ் செய்துகொண்டு மக்களைப் பெறவில்லையா? வேண்டிய காலத்து வேண்டியது உடனே வராது. நீயுந்தான், இசை நடனம் ஓவியம் தையல் பின்னல் சமையல் எல்லாம் சொல்லிக்கொடுத்தாய். இப்போது வடிவுக்குப் பல கலைகள் தெரியும். கலையரசியாக விளங்குகின்றாள். காவிரி: எல்லாம் தெரிந்தும் என்னாச்சு? வீட்டரசியாக அல்லவா விளங்கவேண்டும். ஒரு பெண்ணுக்குக்கூட மணஞ்செய்ய முடியவில்லை என்று ஊர் துப்பாதா? பெற்ற வயிற்றைக் குற்றஞ் சொல்லாதா? (அழுகின்றாள்.) மலையனார்: (தனக்குள்) தாயுள்ளம் கொதிக்கத்தான் செய்யும். மகளைத் தாயாகப் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். காவிரி! கலங்காதே அருட்பாடல்கள் இல்லறத்துக்கு முரணில்லை. நல்ல இல்லறத்துக்கு வழிகாட்டுவன. உரம் ஊட்டுவன. நன்கு படித்துப பார்த்தால் அவை யெல்லாம் காதற்பாடல்கள், கற்புப் பாடல்கள், சரி, சிறிது சிந்தித்துப்பார். நம் மகளுக்குத் திருமணம் வேப்பங்காய் பாகற்காய் போலக் கசந்துவிட்டதா? வானொலியைத் திருப்பித் திரைப் பாடல்களைக் கேட்கின்றாள். நாளிதழில் வரும் திரைஞரின் வினாவிடைகளைப் படிக்கிறாள். உணவு வெறுப்பில்லை. உடை வெறுப்பில்லை. நடைமாற்ற மில்லை. காவிரி: (அழுகை மாறி) வடிவின் நடத்தை உண்மையில் எனக்கும் புரியவில்லை. தைக்க வருகின்ற கச்சுத் துணிகளைப் பார்த்து ஆசைப்படுகின்றாள். தன் வீட்டில் அழகுபடுத்த வேண்டும் என்று காதற் பின்னல்களும் குழந்தை ஓவியங்களும் செய்துவைத்திருக்கின்றாள். தன் குழந்தை விளையாட்டிற்கென்றுகூட, சில புதுப் பொம்மைகளையும் சேர்த்து வைத்திருக்கின்றாள். தொல்காப்பியர் கழகத்தில் ஒரு வாரத்திற்குமுன் சொற்போர் ஒன்று நடந்ததாம். துறவறத்தைக் காட்டிலும் இல்லறமே சிறந்தது என்று நம் மகள் நிறுவி எல்லோரையும் மகிழ்வித்தாளாம். மலையனார் : வடிவின் பேச்சுக்கென்ன? தேனெனப் பாலெனப் பழமெனக் கரும்பெனக் கற்கண்டெனத் தித்திக்கப் பேசும் அவள் சொல்லினிமை நாட்டுக்குப் பயன்பட வேண்டும் என்பது என் ஆசை. (சிந்தனையாக மூக்கில் விரல் வைத்து) அவ்வாறாயின், ஒருவாரத்திற்குள் அவள் மனம் ஏதோ ஒரு காரணத்தால் மாறியிருக்க வேண்டும் உடனே கண்டறிந்தால் திருத்திவிடலாம். உனக்கென்ன படுகிறது? காவிரி: அக்கூட்டத்தில் பண்ணன் என்பவனும் கலந்து கொண்டானாம். மலையனார்: பண்ணனா? அடுத்த தெருவில் வாழும் புடைவை வணிகர் மகன் என்று நினைக்கிறேன். காவிரி: இல்லறத்தைக் காட்டிலும் துறவறமே சிறந்தது என்று வடிவின் கருத்தை மறுத்துப் பேசினானாம்? ஆணித் தரமாக அவன் சொல்லிய சொற்களைக் கேட்ட அவை யோர்கள் மிகவும் கைதட்டினார்களாம்; நடுவர்கள் பண்ணனுக்கு முதற்பரிசும், நம் வடிவுக்கு இரண்டாம் பரிசம் வழங்கினார்களாம். மலையனார்: முதற்பரிசு கிடைக்கவில்லை என்று நம் மகளுக்கு வருத்தமா? நடுவர்கள் முடிவை நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். அடுத்தமுறை முதற்பரிசு கிடைக்கும் என்று வடிவுக்கு ஆறுதல் கூறு. காவிரி: பரிசைப்பற்றிஅவள் கவலைப்படவில்லை. பண்ணன் துறவறம் பற்றிப் பேசியது அவளுக்குப் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. மலையனார்: அவன் துறவறம் பற்றிப் பேசினல் வடிவுக்கென்ன? காவிரி: (சிறிது நிமிர்ந்த பார்வையோடு) உங்களுக்குக் குறிப்புப் படவில்லை. மலையனார்: (சிரித்துக்கொண்டு) பட்டுவிட்டது, பட்டு விட்டது. காதல் நுணுக்கம் பெண்களுக்கு உடனே பட்டுவிடும். ஆண்களுக்குக் கொஞ்சம் நேரமாகித்தான் படும். பண்ணன் துறவு பற்றிப் பேசியதில் எங்கே துறவியாய்ப் போய்விடுவானோ என்று வடிவு கவலைப்படுகின்றாள். மேடைப்பேச்சு கண்சாடைக்கு முன் நிற்குமா? பரிசு கிடைக்கும் என்பதற்காகப் பண்ணன் துறவைப் புகழ்ந்திருக்கின்றான். அவனை நான் பார்த்திருக்கிறேன். அவன் துறவியாகப் போனால் இந்தக் காதைக் குண்டலத்தோடு அறுத்துக் கொள்கின்றேன். மேடையில் எவன் ஒருவன் வீரமாகப் பொழிகிறானோ, அவன் காதலில் அதற்கு நேர்மாறாகத்தான் நடப்பான். உப்பு இனித்தாலும், கடல் வாய்க்காலாகக் குறுகினாலும், பண்ணன் ஒருகாலும் துறவியாகப் போவதில்லை. காவிரி: பண்ணன் துறவியானால் உலகத்தில் நம் மகளை விரும்பும் ஆண்பிள்ளை இல்லையா? மலையனார்: சிறிது நேரத்துக்கு முன் உங்கள் மகள் என்று பிரித்துவைத்துப் பேசினாய். இப்போது நம் மகள் என்று சேர்த்துக்கொள்கிறாய். தாய்ப்பாசம் விடுமா? காவிரி: சரிதான். குடும்பத்திலே ஒவ்வொரு பேச்சும் அளந்து நிறுத்துப் பேசமுடியுமா? அன்பிருக்கா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். காட்சி : 5 (அறையின் ஒரு பக்கத்துச் சிறு நூல்நிலையம். ஐந்நூற்றுக்கு மேலான நூல்கள் இரண்டு அலமாரியில் உள்ளன. அந்துருண்டைகளின் மணம் வீசுகிறது. புலவர் படங்கள் அறையை அழகுசெய்கின்றன. “நூல் பல போற்று” என்ற அறவுரை எழுதப்பட்டுள்ளது) நாவலன்: என்ன, அக்காள்! இவ்வளவு கவலையோடு நீ படிக்கும் நூல் என்ன? வடிவு : “மறைந்துபோன தமிழ் நூல்கள்,” நாவலன் : (வியப்போடு) மறைந்த நூலெல்லாம் கிடைத்து விட்டனவா? வடிவு : இல்லை தம்பி! நூல்கள் போய்விட்டன. நூல்களின் பெயர்களை எப்படியோ கண்டுபிடித்து, பட்டியல் தந்திருக்கிறார்கள். தமிழ்மக்களின் அறியாமையைப் பார்த்தால், இப்பட்டியல் நூலும் மறைந்து போகுமோ என்று கவலைப்படுகின்றேன். நாவலன் : நம் தமிழில் மறைந்துபோன நூல்களே இவ்வளவா? இவையெல்லாம் கிடைத்தால் வாங்குவதற்கு ஆறாயிரம் ரூபாயும் வைப்பதற்கு ஆறு பெரும் பெட்டியும் வேண்டுமே! இவைகளைத் தொலைய விட்டுவிட்டுத் தமிழ்மக்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? வடிவு : தொலைவது தொலையும், நிற்பது நிற்கும் என்று விதி பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாவலன் : இந்தக் குடியரசுக் காலத்திலுமா? வடிவு : மக்களும் பொழுதுபோக்கான நூல்களையே படித்தெறிய விரும்புகிறார்கள். நூல் நிலையங்களும் மக்களின் சுவைக்கேற்ற நூல்களையே வாங்கி வைக்க விரும்புகின்றன. வேர் அழகாக இராது, தளிர் அழகாக இருக்கும்; தூண் அழகாக இராது, மாடம் அழகாக இருக்கும். வேரும் எலும்பும் தூணும் இல்லாவிட்டால், மற்றவற்றிற்கு, அழகு கிடக்க, வாழ்வு உண்டா? நிலையான அடிப்படைகள் பார்வைக்கு அழகாக இரா; வாழ்வுக்கு அழகாக இருக்கும். இன்று வளர்கின்ற போக்கைப் பார்த்தால், மறைந்துபோன தமிழ் நூல்கள் முதற்பாகம், இரண்டாம்பாகம், மூன்றாம் பாகம் என வந்துவிடுமோ? என்று கவலைப்படுகின்றேன். நாவலன் : அக்காள்! இது குடியரசு நாடு, கவலைப்பட வேண்டியதில்லை. அறிவுக்கும் மொழிக்கும் தூண்போன்ற தமிழ்நூல்களும் நூல்நிலையங்களில் கட்டாயம் வாங்கி வைத்தல் வேண்டும் என்று நம் அரசுக்கு எழுதுவோம். எழுதி உணரச் செய்வோம். அரசு கட்டளை பிறப்பிக்கும். வடிவு : தம்பி நீ சொல்வதில் செம்பாகந்தான் பொருந்தும். குடியரசு நாட்டில் அரசும் செய்ய வேண்டும்; மக்களும் செய்ய வேண்டும். திருமணத்தில் பெண்களுக்கு எவ்வளவோ சீர்வரிசை வைக்கிறார்களே; ஏன் நூறு புத்தகங்கள் கொண்ட நூல் வரிசையும் வைக்கக்கூடாது? நல்வாழ்வுக்குப் பெரியவர்களின் எண்ணங்கள் தேவையில்லையா? நாவலன்: (விரைவாக) முதலாவதாக உன் திருமணத்தில் தமிழ்ச்சீர் வைத்து வழிகாட்டுவோம். நீ படித்த நூல்களையும்சேர்த்து வைப்போம். (சிறிது நின்று) யார் கதவைத் தட்டுகிறது? நாவலன்: (கதவைத் திறந்துகொண்டே) வாருங்கள் வாருங்கள்! அக்காள்! நம் தோழர் வருகிறார். (வடிவும் பண்ணனும் கைகூப்பிக் கொள்ளுதல்). வடிவு : (புன்னகை தவழ) எங்கள் வீட்டுக்குத் தாங்கள் வருவது இதுதான் முதல்முறை என்று நினைக்கிறேன். பண்ணன்: இனிமேல் பலமுறை வந்தால் போச்ச. வடிவு : தங்களைப் போன்ற இளஞ்சான்றோர்களின் வருகையால் எங்கள் உள்ளம் குளிர்கின்றது. பண்ணன்: தங்கள் இல்லத்தில் அடி எடுத்து வைக்கும் போது என் உடம்பே €குளிர்ச்சி யடைகின்றது. (வடிவு உள்ளே சென்று இன்னீர் கொண்டுவந்து பண்ணனுக்குக் கொடுத்தல்) பண்ணன்: (குடித்துக்கொண்டே) இப்போது என் உள்ளமும் உயிரும் எல்லாம் குளிர்ச்சி அடைந்துவிட்டது. நாவலன்: எங்கள் வீட்டிற்குள் இருக்கும்போது குளிர்ச்சியாகத்தான் இருக்கும். வெளியே சென்றால் தெரியும் வெயிலின் கொடுமை. பண்ணன்: உங்கள் வீட்டிலேயே இருந்துவிடுகிறேனே எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். வடிவு : நன்றாக இருங்கள். எங்கள் குடும்பத்தில் பிறந்தவர்போலத் தங்களை எங்கள் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்கள். பண்ணன்: முதல் தடவையிலேயே நெடுநேரம் நன்கு கலந்துபேச வாய்ப்புக் கிடைத்ததற்கு மகிழ்ச்சி யடைகிறேன். தாங்கள் கேட்பார் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் சொல்லாற்றல் உடையவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அன்றுதான் என் செவிகள் நேரே கேட்டு மயங்கும் பாக்கியத்தைப் பெற்றன. தங்களை ஒரே மேடையிற் பார்த்து என் கண்களும் ஒளிபெற்றன. வடிவு : (சிறிது நாணத்தோடு) முதற்பரிசு பெற்ற தங்கள் வாயால் பாராட்டப் பெறுவதை ஒரு பரிசாகக் கருதுகிறேன். பண்ணன்: நான் நடுவனாக இருந்தால், உங்கள் சொல் வன்மைக்குத்தான் முதற்பரிசு கொடுத்திருப்பேன். நாவலன்: இப்போது வேண்டுமானால் அப்பரிசை என் தமக்கைக்குக் கொடுத்து விடுங்கள். பண்ணன் : பரிசாகக் கொடுக்க வேண்டிய நூல்தான் அது; “பெண்ணின் பெருமை” வடிவு: துறவறமே சிறந்தது என்று பேசிய தங்களுக்குக் கொடுத்திருக்கிற பரிசு மிகப் பொருத்தமே. அந்த நூல் தங்களிடமே இருக்கட்டும் வாழ்க்கையும் அப்படியே ஆகப்படாதல்லவா? பண்ணன்: தாங்கள் பெற்ற பரிசு நூல்? வடிவு : “சாகுந்தலம்” பண்ணன்: (சிரித்துக்கொண்டு) குறிப்பறிந்து பரிசு நூல் கொடுத்ததுபோல் இருக்கிறது. இல்லம் வாழுந்தலமாக இருக்கவேண்டுமேயன்றிச் சாகுந்தலமாக மாறிவிடக் கூடாது என்பது குறிப்போ? நான் வந்த காரியத்தை மறந்துவிட்டேன். நாவலா! இன்று மாலை காற்பந்து விளையாட்டுப் போரைக் காணச் செல்வோமா? பெருநம்பிகள் கலந்து கொள்கிறார்கள். வடிவு: உங்கள் இருவர்க்கும் முன்னே பழக்கம் உண்டோ? பண்ணன்: விளையாட்டுத் திடலில் நட்பும் உண்டு, பகையும் உண்டு, பெற்றோர்கள் எங்கே? நாவலன்: பூஞ்சோலைப் புடைவைக் கடைக்குச் சென்றிருக்கிறார்கள். பண்ணன்: அது எங்கள் கடைதான். என் பெற்றோரும் தங்கையும்கூட இப்போது கடையில்தான் இருக்கிறார்கள். வடிவு : நாம் இங்கு சந்தித்துப்பேசி மகிழ்வது போல் அங்கு நம் பெற்றோர்களும் கூடி மகிழ்ந்து கொண்டிருப்பார்கள். பண்ணன்: ஆம், பெற்றோர்களின் உறவுபிள்ளைகளின் உறவாக முடியுமல்லவா? நாவல! மாலை விளையாட்டுப் பார்க்க வா. (பண்ணன் போகிறான்) காட்சி : 6 (மலையனாரும் காவிரியும் ஒரு வண்டியில் வந்து கொண்டிருக்கிறார்கள். இரண்டு துணிக்கட்டுக்கள் வண்டியில் இருக்கின்றன.) காவிரி: இப்படிப்பட்ட குடும்பத்தாரை இக்காலத்து எங்கே பார்க்கமுடியும்? எவ்வளவு ஒற்றுமை! முதலாளி மாதிரி இல்லையே. அவரே துணி வகைகளை எடுத்து விரித்துக் காட்டுகிறார். அவர் மனைவியும் முதலாளி மனைவி மாதிரி நடந்து கொள்ளவில்லை. கொஞ்சங்கூடத் செருக்கில்லை. நிறத்துக்கேற்ற துணி, கனத்துக்கேற்ற துணி, பணத்துக்கேற்ற துணி என்று குறிப்பறிந்து பலகைமேல் வையையும் துணியினங்களை அள்ளிப் போடுகிறாள். இவர்கள் கடைக்குச் சென்றால் வெறுங்கையோடு வரமுடியாது போலிருக்கே. வாங்கத் தொடங்கி விட்டால் கடன் வாங்க வேண்டும் போலிருக்கே. என்ன அன்பு, பணிவு, குழைவு! மலையனார்: அதனாலேதான் குடும்பம் செழிக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன் துணிகளைத் தலைமேல் தூக்கி விற்றுக் கொண்டிருந்தார் சீரனார். இன்று தன் முயற்சி யாலும், குடும்பத்தின் அளவான செலவாலும், துணி நிலையம் வைத்திருக்கிறார். விலையுயர்ந்த துணிகள் தங்கள் கடையிலிருந்தாலும், பார்த்தாயா! அவர்கள் இயல்பான துணிகளையே வாங்குகிறார்கள். தொழிலாளி களை எப்படித் தட்டிக் கொடுத்து வேலை வாங்குகிறார். கவனித்தாயா? வருமானத்தில் தொழிலாளிகளுக்கும் இவர் கடையில் பங்கு உண்டாம். துணியில் ஒரு அங்குலம் கூடக்கொடுத்தாலும் கொடுப்பாராம். விலையிலே ஒரு இம்மியுங்கூடக் குறைக்கமாட்டாராம். காவிரி: நட்டத்துக்கா யாரும் கடை வைப்பார்கள்? மலையனார்: நாணயமாக நடந்தால் ஏன் நட்டம் வருகிறது. வாங்குவோர் கூட்டத்தைப் பார்த்தாயா? காவிரி: நாளும் திருவிழாக் கூட்டம்போல் இருக்கின்றது. அந்தச் சிறுபெண் அத்தை அத்தை என்று சொன்ன அன்பைப் பார்த்தீர்களா? என்ன சுறுசுறுப்பு! சிட்டுக்குருவியும் தோற்றுவிடும் போலிருக்கே. அவள் சொன்னதற்காகத்தான் இரண்டு துணிகள் கூட எடுத்தேன். அவள் நடையும், உடையும், எடையும் பார்த்தால்.... மலையனார்: (குறுக்கிட்டு) ஓ! ஓ! நம் பையனுக்கு நல்ல பொருத்தம் என்று உனக்குப் பட்டுவிட்டது. உறவை யெல்லாம் ஒரே குடும்பத்தில் வைத்து, இரண்டு திருமணங் களையும் ஒரே மூச்சில் நடத்தி, ஒரே சமயத்தில் இரண்டு பேரப் பிள்ளைகளுக்கு ஆயாள் ஆகிவிடலாம் என்று ஆசைப்படுகிறாய். (வண்டியிலிருந்து இறங்குகிறார்கள். வடிவும் நாவலனும் துணிமூட்டைகளை வீட்டிற்குள் கொண்டு செல்கிறார்கள்) வடிவு: என்னப்பா! புடைவைக் கடையையே கொண்டு வந்திட்டீர்களே! மலையனார்: நல்லவர்கள் கடைக்குச் சென்றால் சும்மா விடுகிறார்களா? சுமத்தி விடுகிறார்கள். அதுவும் பெண்களிடத்தில் பெண்களே பணிவு காட்டிவிட்டால், சொல்லவா வேண்டும். எல்லாவற்றையும் வாங்கச் சொல்லுவார்கள். காவிரி: உங்கப்பா. எல்லாம் உங்கட்கு வாங்கி வந்திருக்கிறார் என்று நினைத்துவிடாதே. இவை செய்பொருள் விற்பனைக்கு வாங்கி வந்த துணிகள். பெண்களுக்கு எத்தகைய வண்ணம் பிடிக்கும் என்பதற்காகவே, என்னையும் புடைவைக் கடைக்குக் கூட்டிச் சென்றார். வடிவு: என்னை அழைத்துச் சென்றிருந்தால், இளம் பெண் களுக்கு என்ன துணிபிடிக்கும் என்று சொல்லுவேனே. மலையனார்: நீ வராவிட்டாலும் குற்றமில்லை. அம்மா. புடைவை வணிகர் மகள் யாழி கூட இருந்து இக்கால இள நங்கைகளுக்கு எடுப்பான துணிகளை எடுத்துத் தந்தாள். காவிரி: அந்த யாழி, வடிவு! உன் மாதிரியே விளங்குகிறாள். நாவலன்: யாழியின் அண்ணன்கூடச் சற்றுநேரத்திற்கு முன் இங்கே வந்து இருந்து பேசிக் கொண்டிருந்தார். அம்மா! காவிரி: அப்போது நீயும் இருந்தாயா? நாவலன்: இருந்தேன். எனக்கு அவரை முன்னமே தெரியும். பேச்சுத் போட்டியில் பரிசு பெற்றதைப் பற்றி அக்காளும் நானும் அவரும் எல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். மலையனார்: (நாற்காலிமேல் கிடக்கும் புத்தகங்களைப் பார்த்து) இவையெல்லாம் நீ பரிசு பெற்ற நூல்களா? இரண்டாவது பரிசுக்கே இவ்வளவு நூல்கள் கிடைத்திருக்கே. (ஒரு நூலைப் பிரித்துப் பார்த்து) என்னம்மா! இந்நூலில் முதற்பரிசு பண்ணன் என்று எழுதியிருக்கிறது? வடிவு: வந்தவர் வைத்துவிட்டுப் போய்விட்டார் போலும். நாவலன்: கையில் ஏதோ ஒரு நூல் எடுத்துக்கொண்டு போனதாக நினைவிருக்கிறது. வடிவு: ஆம். “மறைந்துபோன தமிழ் நூல்கள்” என்ற நூலை மாற்றி எடுத்துக்கொண்டு போய்விட்டார். மலையனார்: தம்பி! அவர் வீதி அடுத்த வீதிதானே. இதனைக் கொடுத்துவிட்டு, அதனை வாங்கிக் கொண்டு வா. வடிவு: அம்மா சொன்ன யாழியையும் பார்க்கவேண்டும் என்பது என் ஆசை. மலையனார்: தம்பி போகும்போது நீயும் போய் வா. சீரனார் குடும்பம் நட்புக்கு உரிய நல்ல குடும்பம். வழி வழி அவர்கள் உறவும் நல்லது. (“பெண்ணின் பெருமை” என்ற நூலை எடுத்துக் கொண்டு இருவரும் செல்கிறார்கள்.) காட்சி: 7 (காற்றாடி சுற்றிக்கொண்டிருக்கின்றது. குளிர்நீரைச் சிறிது சிறிதாகப் பருகிக்கொண்டு, தனக்குப் பரிசு கிடைத்த கலைக்களஞ்சிய நூல்களைப் புரட்சிக் கொண்டிருக்கின்றான் பண்ணன்) யாழி: (பக்கத்தில் வந்து நின்று கொண்டு) அண்ணா! உன்னைச் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். பண்ணன்: (நிமிர்ந்து பார்த்து) தங்கை! கேள்விகள் பள்ளிக்கூடத்தில் கேட்பார்கள். செய்தித் தாள்களில் கேட்பார்கள். “சில கேள்விகள் கேட்கின்றோம்” என்று மேடையேறிகள் கூறுவார்கள். கேள்வி கேட்கின்ற முறையை நீ வீட்டிலே கொண்டு வந்துவிட்டாயா? அருமைத் தங்கை கேட்கும்போது தடுக்க முடியுமா? யாழி: (மூக்கில் சுட்டுவிரலை வைத்துக்கொண்டு) இவ்வுலகில் நீ விரும்புவது எது? பண்ணன்: (விரைவாக) பசிக்கும்போது உணவை விரும்புவேன்; படிக்கும்போது உணர்ச்சியை விரும்புவேன்; படுக்கும் போது பாயை விரும்புவேன்; பாடும் போது ஆடல் விரும்புவேன்; பார்க்கும்போது திரையை விரும்புவேன்; வேர்க்கும்போது விசிறி விரும்புவேன். யாழி: இதற்கு யாரும் கேள்வி கேட்பார்களா? சரி. நீ மதியாதது எது? பண்ணன்: தவறாகப் புரிந்து கொள்ளமாட்டாயே. முன்பே இது பற்றி ஒரு பாட்டு இருக்கிறது. கேள்! தாய்காட்டும் தாய்மொழிக்கே முதன்மை வேண்டும் தாராத அரசினையாம் மதிப்ப தில்லை. தாய்நாட்டுப் பற்றுக்கே முதன்மை வேண்டும் தடுமாறும் கட்சியையாம் மதிப்ப தில்லை; ஓய்வீட்டும் உழைப்புக்கே முதன்மை வேண்டும் ஊழ்கூறும் சமயத்தை மதிப்ப தில்லை. சேய்கூட்டும் படைப்பெருக்கே முதன்மை வேண்டும் செய்யாத நாட்டினையார் மதிப்பர் ஐயா யாழி: அண்ணா! இது முன்பாட்டு இல்லை. உன் பாட்டு. நீ விரும்பும் நூல் எது? பண்ணன்: வர வரக் கேள்வி பெரிதாக இருக்கிறதே. மொழிக்குத் தொல்காப்பியம். வழிக்குத் திருக்குறள். யாழி : நீ விரும்பும் பண்பு எது? பண்ணன்: யாரையும் மதித்தொழுகுதல். யாழி : நீ வெறுக்கும் பண்பு எது? பண்ணன் : தற்புகழ்ச்சி. என்னை மடக்குவதற்கு இப்படி யெல்லாம் கேட்கின்றாய். நீ தான் கேட்கிறாயோ? யாரும் சொல்லிக் கொடுத்துக் கேட்கின்றாயோ? தெரியவில்லை. நீ ஐந்து கேள்வி கேட்டுவிட்டாய். நான் ஒரே ஒரு கேள்வி கேட்கின்றேன். தங்கை! நீ விரும்புவது எது? யாழி : அண்ணா! நான் கேட்ட முதற் கேள்வியையே என்னிடம் கேட்கிறீர்களே? விடை சொல்லட்டுமா? சொன்னவுடன் ஒத்துக்கொள்ளக்கூடிய விடையைச் சொல்லட்டுமா? பண்ணன்: சொல்லேன்! ஏன் பூச்சாண்டி காட்டுகிறாய். நீ விரும்புவது எது? யாழி: நான் விரும்புவது இந்தியா சீனாவை வெல்லவேண்டும் குடியரசு நிலைக்க வேண்டும். பண்ணன்: இது உன் விருப்பம் மட்டுமா? உலக மக்களின் விருப்பமே இதுதான். சீன மக்கள் கூட இதைத்தான் விரும்புவார்கள். உன் தனி விருப்பம் எது? அதற்கு மறுமொழி கூறு. யாழி : விடையைக் கேட்டவுடன் திடுக்கிட்டு விடக்கூடாது. பண்ணன்: நம் இந்தியா புத்தர் பிறந்த தாய்நாடு: புத்தரின் கொல்லா அறத்தைப் போற்றிய அசோகன் போரைத் துறந்த அருள்நாடு; அன்பிற் சிறந்த அசோக வீரனது ஆண்மையிற் சிறந்த அறவாழியை அரசாழியாகப் பொறித்திருக்கும் உயர் நாடு. (துடிப்போடு) பௌத்தச் சீனர்கள் புத்தரின் தாய்வீட்டையே பகைத்துப் படையெடுத்தார்கள் என்ற செய்தியைக் கேட்ட போதுங் கூடத் திடுக்கிடாத என் செவிகள். தங்கையே! நீ கூறும் எவ்விடைக்கும் திடுக்கிடா. சும்மா சொல்லு. யாழி : அண்ணா! நம்மிருவர்க்கும் திருமணங்கள் ஒரேநாளில் ஒரே குடும்பத்துள் நடக்கவேண்டும். இது என் நெடுநாள் ஆசை. பண்ணன்: (சிரித்துக்கொண்டு) நீ பேராசைக்காரி. ஒரு குடும்பத்தில் நடந்தால் என்ன? வேறொரு குடும்பத்தில் நடந்தால் என்ன? ஒரு நாளில் நடந்தால் என்ன? வேறொரு நாளில் நடந்தால் என்ன?அவரவர்க்கு விருப்பமான முறையில் மணம் கொள்ளவேண்டும். பெண்ணுக்கு முதலில் மணத்தை முடித்து விடுவது பெற்றோர்க்கு நல்லது. நம் நாட்டில் மாப்பிள்ளைப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது, ஏற்பட்டிருப்பது போலச் சமுதாயம் நடிக்கிறது. மண வணிகம் நடத்துகிறது. கலைமகளா னாலும் மருமகள் ஆக வேண்டுமானால் திருமகள் வேண்டும். தீம்பாலைச் சர்க்கரை இன்றிக் குடியார்கள். தீஞ்சுளையைத் தேனின்றித் தின்னார்கள். இது கண்ணகி பிறந்தநாட்டில் பெண்ணின் பெருமை. நீ எனக்கு ஒரே தங்கை. உன் மணத்தை முதலிற் காண ஆசைப்படுகிறேன். யாழி: அண்ணன் இருக்கத் தங்கை மணம் செய்து கொள்வாளா? அண்ணனுக்கு இன்னும் பெண் கிடைக்கவில்லை. ஏதோ ஊனம் என்று ஊர் வாய்கள் பேசுமா இல்லையா? பண்ணன்: இந்தச் சமயத்திலா அப்படிப் பேசிக் கொள்வார்கள்? அப்படி பேசிக்கொள்ளும் நிலை வருமாயின், அந்தச் சமுதாயத்தைப் போற்றுகிறேன். பெண் பிறப்பை ஞாலம் காக்கும் தாய்ப்பிறப்பு எனப்போற்றாமல், பொருள் கொடுத்துத் தள்ள வேண்டிய பேய்ப்பிறப்பு என விலைமதிக்கும் இந்த நாட்டிலா பெண் கிடைக்காது? இது பெண்வள நாடாயிற்றே பழுத்த குருடனும் கொழுத்த பணத்தால் திருமகளின் கொழுநனாக ஆகலாமே. இந்த நாட்டில். யாழி: அண்ணி வந்த பின்தான் திருமணஞ் செய்து கொள்வேன். அதுதான் எனக்குச் சிறப்பு. பண்ணன்: யாருக்கு யார் முன்வருவார்களோ, அப்போது பார்த்துக்கொள்வோம். அது பற்றி நமக்கென்ன கவலை, கவலைப்பட வேண்டியவர்கள் பெற்றோர்கள். (வையை இன்பண்டங்களை ஏந்திக்கொண்டு உள்ளே வருகிறாள்) வையை: உங்களைப் பெற்றோர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? ஒருநாளும் கவலைப்பட வேண்டியது வராது. இந்த இனிப்புக்களைத் தின்னுங்கள். பண்ணன்: அம்மா! எங்கள் இருவருக்கும் ஒரேநாளில் ஒரே குடும்பத்தில் திருமணங்கள் நடத்த வேண்டும் என்பது தங்கையின் ஆசை. வையை: அதுதான், அப்பா, எங்கள் ஆசையும். பண்ணன்: உங்கள் ஆசையைத் தெரிந்து தங்கை ஆசைப்பட்டாளா? தங்கை ஆசையை அறிந்து நீங்கள் ஆசைப்பட்டீர்களா? வையை: உனக்கு அந்த ஆசை இருக்கிறதா, இல்லையா? பண்ணன்: நடக்கக் கூடியதாக இருந்தால் ஆசைப்பட வேண்டும். ஒரு திருமணம் ஒழுங்காக நடப்பதே இந்த நாட்டில் கடினம். இரு திருமணம் ஒருநாளில் நடப்பது அதுவும் ஒரே குடும்பத்தில் நடப்பது எளிதாக எனக்குப் படவில்லை. வையை: நம்பிக்கையில்லாமல் பேசுவது அண்ணனின் வழக்கம். ஒரு குழந்தை பெறமாட்டாமல் உயிர் வாடும் பெண்களும் உண்டு; இரட்டைக் குழந்தைகளை இரட்டைப் பழம்போலப் பெற்று இடுப்பில் ஏந்தித் திரியும் பெண்களும் உண்டு. உலகம் பல விதம். யாழி: நாம் கெட்டதை நினைக்கவில்லை. நல்லதை நினைக்கிறோம். நான் சொன்னபடி இரண்டிரண்டு திருமணங்கள் நடப்பதை அழைப்பிதழில் பார்த்திருக்கிறேன். செய்தித்தாளிலும் படித்திருக்கிறேன். என்னுடைய ஆசை சிற்றாசையே யன்றிப் பேராசையில்லை. (சீரனார் பண்ணனைக் கூப்பிடுகிறார். ஒரு கடிதத்தைப் போட்டு வரும்படி பண்ணனை அஞ்சல் நிலையத்துக்குப் போகச் சொல்லுகிறார். பண்ணன் போய்விடுகிறான்.) சீரனார்: ஏன் வெளியே நிற்கிறீர்கள்? உள்ளே வாருங்கள். யாரைப் பார்க்க வேண்டும்? நாவலன்: திரு.பண்ணன் வீடு இதுதானே. வையை: நீங்கள் காவிரியின் மக்களா? சீரனார்: முகங்காட்டுகிறதே. வாருங்கள், இருங்கள் இரண்டுநாட்களுக்கு முன்புதான் எங்கள் கடையில் உங்கள் பெற்றோர்களைக் கண்டு அளவளாவினோம். இன்று எங்கள் வீட்டில் உங்களை வரவேற்று அளவளாவும் பேறு பெற்றிருக்கிறோம். வையை: (வடிவை நோக்கி) உன்னைப் பார்த்திருக்கிறேன். இது உன் தம்பியா? வடிவு : ஆம். நாவலன் என்று பெயர். யாழி: (குறும்பாக) அப்படியானால், அளவில்லாமல் அதிகம் பேசுவாரோ? காவலன்: அப்படிப் பேசுபவருக்கு வாயாடி என்றல்லவா பெயர்? யாழி: (சட்டென) பொறுத்துக் கொள்ளுங்கள். நாவலன்: குற்றஞ் செய்திருந்தால் அல்லவா பொறுக்க வேண்டும்? பண்ணனார் எங்கே? இரண்டு நாட்களுக்குமுன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது இந்தப் புத்தகத்தை மறதியாக வைத்துவிட்டார். அதனைக் கொடுத்துத் தங்களை யெல்லாம் பார்த்து மகிழலாம் என்று தமக்கையும் நானும் வந்தோம். எங்கள் பெற்றோர்கூடத் தங்கள் வீட்டுக்கு ஒருமுறை வரவேண்டும் என்று சொன்னார்கள். வடிவு: தெருவிலே நம் தந்தையின் காலடியோசை கேட்கிறதே. தாயின் குரல்போல இருக்கிறதே. (எல்லாரும் வேகமாக வெளியே வந்து பார்த்தல். இவர்களைப் பார்த்தவுடன், மலையனாரும் பதற்றம் தணிந்து அப்பாடே என்று பெருமூச்சு விடுதல்) சீரனார்: (மலையனாரைத் தழுவிக்கொண்டு) ஏன் இவ்வளவு விரைவு, பதற்றம், இருங்கள். (யாழி விசிறி கொண்டு வீசுதல்) மலையனார்: பிழைத்தோம். ஒன்றும் நடைபெறவில்லை. அடுத்த தெருவில் சரக்குவண்டி ஒரு பையன்மேல் ஏறிவிட்டது என்று சிலர் சொல்லிக்கொண்டு போனது என் காதில் பட்டது. நம் மக்கள் தானே இப்போது அடுத்த தெருவுக்குச் சென்றார்கள் என்று ஓடோடி வந்தோம். வையை: பொய் மெய் என்று பெற்ற மனம் சிந்திக்குமா? அப்படியொன்றும் நம் குடும்பத்தில் நடந்துவிடாது. காவிரி: உங்கள் வீட்டுக்கு ஒருநாள் வரவேணும் என்று எண்ணியிருந்தோம். திடீரென இவ்வாறு வரும்படி யாச்சு. பழங்கள்கூட வாங்கி வரவில்லை. வையை: பழமா பெரிசு பழக்கந்தான் பெரிசு. பழம் கிடைக்கும். நீங்கள் எல்லோரும் ஒன்றா வரக் கிடைக்க வேணுமே. (யாழி தேநீர் கொண்டுவந்து கொடுத்தல்) மலையனார்: தங்கள் பையன் வெளியே சென்றிருக்கிறாரா? சீரனார்: அஞ்சல் நிலையத்துக்குப்போயிருக்கிறான். நல்லப்பர் என்ற நண்பருக்குக் கருத்தான கடிதம் எழுதினேன். அதனைப் போடுவதற்குச் சென்றிருக்கிறான். மலையனார்: இந்தக் காலத்துக் கருத்தான கடிதத்தை நாமே நேரில் அஞ்சல் நிலையத்துச் சேர்ப்பதுதான் நல்லது. சிலரிடம் கொடுத்தால் போட்டாச்சா என்று வேறு கேட்க வேண்டியிருக்கிறது. கேட்டால் நம்பிக்கை இல்லையா என்று வருத்தப்படுகிறார்கள். ஒருவரிடம் ஒரு கடிதம் கொடுத்து அஞ்சற் பெட்டியில் இடச்சொன்னேன். நான்கு நாள் கழித்து, அவரைப் பார்க்கும்போது, அதனை அன்று அஞ்சலில் சேர்த்திருப்பீர்களே என்று வினவினேன். அவர் சொன்ன மறுமொழி என்ன, தெரியுமா? “நீங்கள் உடனே போடுங்கள் என்றா சொன்னீர்கள் அதனால் இரண்டு நாட் கழித்து என் கடிதத்தைப் போடச் சென்றபோது மறந்துவிடாது உங்கள் கடிதத்தையும் போட்டுவிட்டேன்” என்று இயல்பாகச் சொன்னார். நன்றி என்று கூறி, என் மடமைக்கு நொந்து கொண்டேன். (பண்ணன் வருகிறான்) பண்ணன்: எல்லாரும் வாருங்கள். வணக்கம். சீரனார்: கடிதத்தைச் சேர்த்துவிட்டாயா? பண்ணன்: சேர்ப்பதற்கு முன் எங்களுக்கு ஏதும் கடிதம் உண்டா என்று அஞ்சற்காரரிடம் கேட்டேன். ஒரு கடிதம் தந்தார். அதன் விடுவரியைப் பார்த்தேன். கைக்கடிதத்தின் முகவரி போலவே இருந்தது. அதனால் கேட்டுப் போடுவோம் என்று திரும்பப்கொண்டு வந்துவிட்டேன். (வந்த கடிதத்தைத் தகப்பனாரிடம் கொடுக்கிறான்) மலையனார்: பண்ணனின் அறிவுக்கூர்மையைப் பாராட்டு கிறேன். சீரனார்: நல்லப்பர் இன்னும் ஒரு திங்களில் வருவேன் என்று எழுதியிருக்கிறார். எழுபது வயதாகியும் அவர் கையெழுத்து கண்ணில் ஒத்திக் கொள்ளத் தக்கதாகப் பொலிகிறது. எதனையும் திருந்தச் செய்பவர். வாழ்க்கை முழுதும் ஒழுங்கு உடையவர். தும்பைப் பூப்போல உள்ளும் புறமும் வெள்ளையர். மலையனார்: நல்லப்பர் எங்கள் குடும்பத்துக்கும் மிக வேண்டியவர். அவர் வருகையை நானுந்தான் எதிர்பார்க்கிறேன். காவிரி: வந்த வேகத்தில் தெருக்கதவைக்கூடச் சார்த்த வில்லை. இன்னொருமுறை ஓய்வாக வருகிறோம். பண்ணன்: அத்தை, சற்று பொறுங்கள். எல்லாரும் கூடியிருக்கும் இந்த அரிய காட்சியை நிழற்படம் எடுக்காது விட்டு விடலாமா? (நிழற்படத்தில் பெண்கள் நால்வரும் உட்கார்ந்திருக் கிறார்கள். காவிரிக்குப் பின்னே மலையனாரும், வையைக்குப் பின்னே சீரனாரும், வடிவுக்குப் பின்னே பண்ணனும், யாழிக்குப் பின்னே நாவலனும் நிற்கிறார்கள்.) காட்சி : 8 (சோலையன் சீரனார் வீட்டில் வேலை பார்ப்பவன். அவன் மனைவி மலரி மலையனார். வீட்டில் வேலை பார்ப்பவள். இருவரும் தங்கள் வீட்டிலிருந்து பேசிக்கொள்கிறார்கள்.) மலரி: என்னத்தான்! உறவு பெருகுது போலிருக்கே. உங்களை அங்கே பார்த்தேனே. ஓரமா விழுந்திட்டீர்களே. சோலையன்: எங்கே விழுந்தேன்? ஏதாவது புண்பட்டிருக்கா? உரசியிருக்கா? (உடம்பைத் தடவிப் பார்க்கிறான்) எதையும் வெளிப்படையாகச் சொல்லு. ஒளிவுமறைவு என்பது நம்கிட்ட இருக்காது. மலரி: அப்படி இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் சொல்லி வைக்கிறேன். எங்கய்யா, ஒங்கய்யா, எங்கம்மா. உங்கம்மா, எங்கம்மா பிள்ளைகள், உங்கம்மா பிள்ளைகள் எல்லாரும் இருக்கிற படத்திலே நீங்களும்ஒரு ஓரமா நிக்கிறீர்களே. என்னிடம் சொல்லியிருந்தா. நானும் ஒரு பக்கமா வந்து நிற்பனே. எல்லாரும் இரண்டிரண்டா நிற்கிற படத்திலே நீங்க மாத்திரம் தனியா நிக்கறது நல்லா இல்லே. உங்களுக்குச் சோடி இல்லியா? சோலையன்: (பெருமிதத்தோடு) வாடி என்று சொல்லத்தக்க சோடி நீ இருக்கும்போது எனக்கு என்ன குறை, வா, இரண்டு பேரும் ஒரு படத்திலே இருப்போம். விழுவோம் நடிப்போம். மலரி: அதெல்லாம் இனி மேலே. இப்போ நிக்கிம்போது என்னை ஏன் கூப்பிடலை. சோலையன்: எங்கே நிற்கிறேன்? எந்தப் படத்திலே நிற்கிறேன்? எட்டிப்பார்த்த என்னையும், பாவி! பிடித்துப் போட்டு விட்டானா? நல்லா விழுந்திருக்கேனா? கொண்டு வா, பார்ப்போம். மலரி: உங்க அழகுக்கு ஒண்ணும் குறைவில்லை அதுசரி. அய்யா அம்மா பிள்ளைகள் எல்லாரும் சிரிச்சுக் கொண்டிருக் கிறாங்களே, என்னமும் நடக்கப் போகுதா? சோலையன்: படத்தில் அழுது கொண்டா இருப்பார்கள்? நல்ல காரியங்கள் நடக்கப் போகின்றன என்று இருந்த இருப்பைப் பார்த்தாலே புரியலை. மலரி: எங்க வடிவுக்கும் உங்க பண்ணனுக்கும் முடிச்சு நடக்கப் போகுது. இதுதானே. இதை ஏன் மறைச்சுப் பேசுகிறீங்க. நாளை நடக்கும்போது எல்லாம் தெரிஞ்சுவிடுது. சோலையன்: நடக்கும்போது தெரியட்டும். இப்போது நம்மால் தெரிந்ததாக இருக்கவேண்டாம். வீட்டில் நடப்பதை வேலைக்காரர்கள் சொல்லி விடுகிறார்கள் என்ற பழி நமக்கு வேண்டாம். மேலும் பாரு, எங்கள் பண்ணன் மிகவும் அறிவுடையவன், அழகுடையவன், ஆற்ற லுடையவன். இவனுக்கு மணப்பேச்சு நடக்கிறது என்றால், பெண் பெருக்கம் உடையவர்கள் சும்மா இருப்பார்களா? இவ்வளவு பொருள் தருகிறேன் என்று சொல்லி விடுவார்கள். பெண்ணைச் சோடித்துக் கொண்டுவந்து, பார்க்கும்படி நடமாட விடுவார்கள். பதவி வாங்கிக் கொடுப்போம். அயல் நாட்டிற்குச் சென்று படிக்க வைப்போம். மாப்பிள்ளையை எப்போதும் எங்கள் வீட்டிலேயே வைத்துக்கொள்வோம் என்றெல்லாம் ஆசையூட்டுவார்கள். பேசிய திருமணத்தைக் கலைக்கப் பார்ப்பார்கள். சோதிடனிடம் சொல்லி வைப்பார்கள். பேசியிருக்கும் பெண்ணுக்கு ஒரு வகை ஊனம் என்று பரப்புவார்கள். பெண் வைத்துள்ளவர்கள் எப்படியும் தம் பெண்ணைத் தள்ளவேண்டும் என்று பித்துக் கொண்டவர்கள். ஏன்? இந்த நாட்டில் மாப்பிள்ளைகளுக்கு வேண்டுதல் அதிகம். மலரி: அதனாலேதான் உங்களைப் போன்ற ஆம்பிளை களுக்கெல்லாம் பொண்ணு கிடைச்சுது. எறும்பு இருக்கிற இடத்துக்குச் சீனி வரவேண்டியதாச்சு. சோலையன்: அதென்ன அப்படிக் குறைத்துப் பேசிவிட்டாய். என் ஆண்மை என்ன? (மீசையை முறுக்குகிறான்) என் ஆளையும் தோளையும் காளையும் பாரு’ என் அடியையும் முடியையும் தடியையும் பாரு’ என் ஆசையும் காசையும் மீசையும் பாரு! என் மாலையும் தோலையும் வேலையும் பாரு! என் கண்ணையும் திண்ணையும் பண்ணையும் பாரு! என் நெஞ்சையும் புஞ்சையும் நஞ்சையும் பாரு! என் நெளிவையும் சுளிவையும் தெளிவையும் பாரு! என் படிப்பையும் நடிப்பையும் துடிப்பையும் பாரு! பாரு கண்ணும் பாரு! கூறு பொண்ணு கூறு! என் அழகென்ன? (தோளைக் காட்டுகிறான்) அத்தை மகள் என்று உன்னைத் தாலி கட்டினேன். இல்லாவிட்டால்..... மலரி: இல்லாவிட்டால், சொத்தை மகள் வந்திருப்பாள் இந்தச் சூரனுக்கு. சோலையன்: நமக்குத் திருமணம் நடந்து எவ்வளவோ ஆண்டு ஆச்சு. அதுபற்றி இனி பேசிப் பயனென்ன? ஒரு குழந்தை பிறந்து ஓடியாடுது. இன்னொரு குழந்தையும் உலகத்தைக் காணப்போகுது. (மலரி நாணுகின்றாள்) என்னை மாப்பிள்ளையாகக் கொள்ள வேண்டுமென்று வந்தவர்கள் போனவர்கள் பலர். மலரி: ஓ! ஓ! சோலையன்: உன்னை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அத்தை மகள் தத்தைபோல் இருக்கும்போது வேறு யாரை எனக்கு பிடிக்கும். வந்தவர்களைப் பார்த்து “திருமணத்துக்கு என் வீட்டுப்படி ஏறி வாருங்கள்; திருமணப் பேச்சுக்கு வேறு படி யேறுங்கள்”என்று ஆணி தைத்த பந்து போலக் கூறினேன். அப்புறம் அவர்கள் திரும்பி வரவேயில்லை. மலரி: (கேலியாக) உங்கள் கற்பை மதிக்கிறேன். வேறு என்ன வேண்டும். சோலையன்: நீ என்ன கேலி செய்தாலும் செய். அத்தை மகளுக்கு அந்த உரிமை பிறப்புரிமை. என் ஒழுக்கத்தை மட்டும் கேலியாகப் பேசாதே. ஒரு பிறப்புக்கு ஓருடம்பு ஓருயிர், ஒரு மணம். இதுதான் என் கொள்கை. மலரி: (சிரித்துக்கொண்டு) பிறக்கிற மக்களைப் பற்றிக் கொள்கையில்லையா? சோலையன்: அதிலும் கொள்கையுண்டு. பிறக்கிற வரையிலும் பிறக்கட்டும். மலரி: இந்தக் கேலிப் பேச்சை விடுங்கள். அந்தப் புகைப் படத்தை நீங்கள் பார்க்கவில்லையா? (காட்டுகிறாள்) எங்கள் அய்யா மகன் நாவலன் உங்கள் அய்யா மகள் யாழிக்குப் பின்னே விழுந்திருக்கிறான். அவள் தோளிலே கை போட்ட மாதிரி நிற்கிறானே. சோலையன்: (படத்தை உற்றுபார்த்து) மாதிரி என்ன? மெல்லக் கைபோட்டுக் கொண்டுதான் நிற்கிறான். கூந்தலையும் தொட்டுக் கொண்டு நிற்கிறான். பலே குறும்பன், மாப்பிள்ளை ஆகிவிடுவான். மலரி: அவனுடைய குறும்புச் செயலைத் தெரிந்துகொண்டு அவளும் சிரிக்கிறாள். இப்படியும் படம் எடுப்பார்களா? எல்லாப் பொம்பிளைகளும் குறிச்சியில் உட்கார்ந்திருக் கிறாங்க. எல்லா ஆண்களும் பின்னே தரைமேல் நின்று கொண்டிருக்கிறாங்க. சோலையன்: இக்காலம் பெண்களின் காலம். பின் தங்கிய சமுதாயத்தை முன்னுக்குக்கொண்டு வர வேண்டாமா? மலரி: இரண்டும் நல்ல குடும்பம் என்று ஊரிலே பேரு மணமாக வேண்டிய பொண்ணுகளையும் அரசுகளையும் முன்னே பின்னே ஒட்டிக்கொண்டு நிற்க வைக்கலாமா? இது கலி காலம். சோலையன்: இது கலிகாலம் இல்லை, காதற்காலம் உனக்குக் காலப் போக்கே தெரியவில்லை. இப்போது புகைப்படம் எப்படியெல்லாம் எடுக்கிறார்கள்? நீ பார்த்தால் திடுக்கிட்டுப் போவாய். (ஒரு படத்தைக் காட்டுகிறான்) மலரி: இதிலென்ன தவறு? இவருக்குப் பக்கத்திலே இருப்பது இவர் மனைவி. அவருக்குப் பக்கத்திலே இருப்பது அவர் மனைவி. சோலையன்: அது தான் இல்லை. படத்துக்காக மனைவிகளை மாற்றி உட்கார வைத்திருக்கிறார்கள். இது மேனாட்டுமுறை. மலரி: இந்த முறை நமக்கு வேண்டாம். கீணாட்டு முறைபோதும். மனைவி என்ன மாற்றிக்கிற பண்டமா? சோலையன்: பண்டமாற்று இல்லை. சும்மா படமாற்று. நம் அய்யாக்கள் படத்தைப் பார்த்தாயா? உள்ள முறையிலே தான் எடுத்திருக்கிறார்கள். ஆனாலும்.... மலரி: ஆனாலும் மணமாகாத இளம்பிள்ளைகளைப் பக்கத்திலே வைத்துப் படம் எடுத்திருக்கிறது சரியில்லை என்று உங்களுக்குப் படுதா இல்லையா? சோலையன்: அது சரிதான். ஒரே குடும்பத்தில் இரண்டு பிள்ளைகளுக்கும் மாற்றுத் திருமணம் நடத்திக் கொண்டு விடலாம் என்பது அய்யாக்கள் எண்ணம் போலே படுகிறது. அது சரி என்று என் அறிவுக்குப் படவில்லை. மலரி: நமக்கு அப்படிச் செய்து தானே இந்த வேலைக்கு வந்திருக்கிறோம். வீடு வாசல்களை இழந்து ஊரை விட்டே ஓடிவந்திருக்கிறோம். நான் முழுகாமல் இருக்கிறேன் என்று கேள்விப்பட்டதும், உங்கள் அக்காள் வயிறு பற்றி எரிந்ததே. தன் கணவனிடம் சொல்லிப் பண்ணிக் குட்டிகளைப் போலே பெற்றுக் கொள்வது தானே? யார் வேண்டாம் என்றது? யார் வந்து குறுக்கே நின்றது? சோலையன்: அது கிடக்கட்டும். இரண்டு திருமணம் ஒரே காலத்தில் நடந்தால் நமக்குத்தான் வேலை அதிகம். மலரி: வரும்படியும் அதிகம் கிடைக்குமில்லையா? சோலையன்: (இழுப்பாக) கிடைக்கும், கிடைக்கும். காட்சி: 9 (காலையில் காய்கறிக் கடையில் யாழி காய்கறி பழங்கள் வாங்கிக்கொண்டிருக்கிறாள். நாவலனும் அன்று தற்செயலாகக் காய்கறிக் கடைக்கு வருகிறான். இருவரும் ஒரே மாதிரிப் பைகள் வைத்திருக்கிறார்கள். அவை யாரோ ஒருத்தர் வீட்டுத் திருமணத்தில் கிடைத்த அன்பளிப்புப் பைகள்) நவலன்: (யாழியைப் பார்த்து) வந்த காய்கறிகளை யெல்லாம் வாங்கியாச்சோ? சந்தைக் கடைக்கு அத்தி பூத்தாப் போல இருக்கே. யாழி: மல்லிகை பூத்தாற் போலேதான் நான் வருகிறேன். தாங்கள் வருவதுதான் அத்தி பூத்தாற் போலே. நாவலன்: அதற்கென்ன? இனிமேல் நாள்தோறும் வருகிறேன். எனக்குக் காய்கறி வாங்கிப் பழக்கம் இல்லை. யாழி : அதுதான் பையைப் பார்த்தாலே சொல்லுதே. கறிகாய் வாங்க வந்தீர்களா? யாரும் வாங்குவதைப் பார்க்க வந்தீர்களா? நாவலன்: வாங்குவதைப் பார்த்துக்கொண்டு வாங்க வந்தேன். (என்ன வாங்கவேண்டும் என்பதைக் குறித்துக் கொண்டு வந்த சிட்டையைத் தேடுகிறான்) யாழி: காசுப்பையை வைத்துவிட்டு, ஞாபகமாய்க் காய்கறிப் பையைக் கொண்டு வந்தீர்களோ? பணம் வேணுமானால் கடன் தருகிறேன். நாவலன்: கடன் தரவேண்டாம். காய்கறி வாங்கித் தந்தால் போதும். எழுதிய சிட்டையை வீட்டிலே விட்டுவிட்டேன். யாழி: வீட்டிலே விட்டீர்களா? வீதியிலே விட்டீர்களா? பையைக் காட்டுங்கள். (சிட்டை பைக்குள்ளே கிடக்கிறது) நாவலன்: பெண்களுக்கு அறிவுக்கூர்மை. அழகும்.... யாழி: பாராட்டு வேண்டாம். காய்கறிகள் விற்றுப் போவதற்கு முன்னே வாங்கவேண்டும். நாவலன்: உன் கையினாலே நல்ல காய்கறிகளாக வாங்கித் தா, காசு நான் கொடுக்கிறேன். யாழி: கறிகாயும் வாங்கித் தந்து காசும் கொடுப்பதற்கு நான் ஏமாளியில்லை. எங்கள் வீட்டில் காசுக்கு கணக்குக் கேட்பார்கள். காய்கறி வாங்கித் தருகிறேன், ஆனால் ஒரு விதி. நாவலன்: எத்தனை விதிக்கும் நீ சொன்னால் கட்டுப்படுகிறேன். யாழி: நான் வாங்கித் தந்தேன் என்று சொல்லக்கூடாது. நாவலன்: உப்பிட்டவர்களை உள்ளளவும் நினை என்று சொல்லுவார்கள். நீ என்ன சொல்லுகிறாய், உப்பிடுதற்குக் காய்கறி வாங்கித் தந்தவர்களை உடனே மறக்கச் சொல்லுகிறாய். நான் மறந்தாலும் அந்தக் காய்கறிகளைச் சாப்பிடும்போது என் நா மறக்குமா? (வெண்டைக் காய்களை நாவலன் பொறுக்குகிறான்) யாழி : (கேலியாக) எல்லாரும் பிஞ்சாகப் பார்த்து எடுப்பார்கள். உங்களுக்கு மரந்தான் பிடிக்கும்போலும். நுனியை ஒடித்துப் பார்த்தால் பிஞ்சு என்பது தெரியும். நாவலன்: காயை ஒடித்தால் கடைக்காரன் சினந்துகொள்ள மாட்டானா? யாழி: கடைக்காரனது சிறுவெகுளியைக் கூடத் தாங்கமுடியா விட்டால், பின் யார் சினத்தைத் தாங்கப் போகிறீர்கள்? நாவலன்: கத்திரிப் பிஞ்சு எண்ணெய்க் குழம்பு எனக்குப் பிடிக்கும். ஒரு வீசை வேண்டும். யாழி: ஓராளுக்கு ஒரு வீசையா? உங்களுக்கு வருபவள் எப்படிக் குடும்பம் நடத்தப் போகிறாளோ? (யாழியும் நாவலனும் சேர்ந்து பொறுக்குதல்.) நாவலன்: இந்த உருளைக்கிழங்கு கூழாங்கல் போல இருக்கிறதே. யாழி: கூழாங்கல்லை வறுக்கமுடியுமா? காய்கறி வாங்க வந்தவர்கள் கறிகாயைப் பார்த்து வாங்குவார்களா? அழகைப் பார்த்துக் கொண்டிருப்பார்களா? நாவலன்: வாய்ப்புக் கிடைத்தபோது நழுவ விட்டுவிடக் கூடாது. யாழி: மல்லித் துவையல் தங்கட்குப் பிடிக்குமா? நாவலன்: மல்லியும் பிடிக்கும்; மல்லிகையும் பிடிக்கும். நிரம்ப வாங்கியாச்சு. இவ்வளவையும் தூக்கிக் கொண்டுபோக வெட்கமாக இருக்கிறது. யாழி: ஏன் வெட்கம்? யாரும் காதலி பார்த்து விடுவாளா? நாவலன்: காதலிதான் பார்த்துக் கொண்டிருக்கிறாளே. (யாழியின் மிதிவண்டியில் பைகள் தொங்குகின்றன. இருவரும் நடந்து செல்கின்றனர். வண்டியை ஒரு மரத்தில் சார்த்திவிட்டு, சோலையில் நாவலன் உட்காருகிறான்.) யாழி: நிழலைக் கண்டவுன் உட்கார்ந்து விட்டீர்களே. காய்கறி வாங்கினதில் களைப்பு வந்திருச்சோ? நாவலன்: நானா காய்கறி வாங்கினேன் களைப்பதற்கு. வண்டிக்குக் காற்று இறங்கிப் போச்சு. யாழி: காற்று அடிக்கிற சோலையிலே வண்டியை நிறுத்தினால், காற்று ஏறிவிடுமா? நாவலன்: காற்று ஏறாது; காதல் ஏறும். யாழி: எப்படிக் காற்றுப் போயிருக்கும்? நாவலன்: எப்படி வந்ததோ அப்படிப் போயிருக்கும். யாழி: எல்லாம் முன்னே திட்டமிட்டு வேலை செய்கிறாற் போலத் தெரிகிறது. நாவலன்: இந்தக் காலம் திட்டக் காலந்தானே. (கையை நொடித்து) சிட்டையிலே குறித்த பழங்கள் வாங்க மறந்து விட்டேன். அப்போதே என் அக்காள் சொன்னாள். தம்பி யார் வாயையாவது பார்த்துக் கொண்டிருந்து வெறும் பையோடு திரும்பி வராதே என்று. யாழி: மறுபடி எப்படி நினைவு வந்தது? நாவலன்: யாரால் மறதி வந்ததோ, அவரால் நினைவு வந்தது. யாழி: (இழுப்பாக) வரும், வரும். நாவலன்: (ஏமாற்றமாக) வாழைச்சீப்பு நின் வரிசைப் பற்கள் மாம்பழக்கீற்று நின் மாசில் கன்னம் ஆப்பிள் வண்ணம் நின் அசையும் இதழ்கள் நாவற் கனிகள் நின் நச்சுக் கண்கள் பப்பளிப்பழம் நின் பாவை மேனி ஆரஞ்சுச்சுளை நின் அழகு விரல்கள் பலவின் சுளைகள் நின் பார்வை யழகு சாத்துக்குடிகள் நின் சதுரப் பேச்சு (இரட்டைப் பாட்டு) (யாழியும் நாவலனும் மாறி மாறிப் பாடுகிறார்கள்) யாழி: காதற் கண்கள் கனிகள் ஆகுமா? நாவலன்: கனிகள் ஆகக் கவ்வ வேணுமா? யாழி: கன்னங் கிள்ளித் தின்னல் ஆகுமா? நாவலன்: சதுரப் பேச்சுத் தாகந் தணியுமா? யாழி: தின்னும் போது சின்னம் ஆகுமா? நாவலன்: தாகந் தணிய வேகம் தணியுமா? யாழி: பாவை மேனி பழங்கள் ஆகுமா? நாவலன்: பழங்கள் ஆகப் பறிக்க முடியுமா? யாழி: கோல மார்பு குடிக்கலாகுமா? நாவலன்: குடிக்கும்போது குவளையாகுமா? யாழி : வரிசைப் பற்கள் வயிறு நிரம்புமா? நாவலன்: வயிறு நிரம்ப வாய்கள் ஊறுமா? யாழி: பார்வை யழகு பசியை நீக்குமா? நாவலன்: பசியை நீக்கிப் பசியைக் கெடுக்குமா? யாழி: அழகு விரல்கள் ஆரஞ் சாகுமா? நாவலன்: ஆரஞ் சாகின் சாறஞ் சாகுமா? யாழி: குவளைச் சிரிப்புக் கொடுக்கப் போதுமா? நாவலன்: கொடுத்து மேலும் கொல்லப் போதுமே. யாழி: இலங்கு முத்தம் இலைக்கு நல்லதா? நாவலன்: எடுத்து வைத்தால் எதற்கும் நல்லதே. (பல பூக்களைத் தொடுத்து யாழியின் கூந்தலில் சூடுகிறான் நாவலன். யாழி ஒரு செம்மலரை நாவலன் சட்டைப் பையில் சொருகுகிறாள். இருவரும் பிரிகிறார்கள்) (யாழி வீட்டில்) வையை: என்னம்மா இவ்வளவு நேரம். நாளங்காடியில் காய்கறிகள் வல்லையா? யாழி: மிதி வண்டியில் காற்று இறங்கிப் போச்சு. நடந்து வந்தேன். பண்ணன் : சும்மா நடந்தாலே தங்கைக்கு நேரமாகும். சுமையையும் தூக்கிக்கொண்டு, காற்றுப்போன வண்டியையும் தள்ளிக்கொண்டு, எதிர் காற்றிலே வரநேரந்தானே ஆகும். (நாவலன் வீட்டில்) காவிரி: விருந்து என்று தெரியாதா? காய்கறிகளைப் பார்த்துத்தானே பருப்புவேகப் போட வேண்டும். மேகத்தின் மப்பினால் நேரம் தெரியவில்லையா? வடிவு: தம்பி யாரோடும் பேசிக்கொண்டிருந்திருப்பான். நாவலன்: (திடுக்கிட்டு) அக்கா, நான் யாரோடும் பேசியதை நீ வந்து பார்த்தாயா? கூட வந்து பார்த்தது போலச் சொல்லுகிறாயே. இந்தாப்பாரு, மூன்று நாளைக்கு முன் தைத்த முள் பழமாயிருக்கு. வடிவு: முள் குத்தியிருக்கிறதென்று தம்பி சொல்லியிருந்தால், நான் போயிருப்பேன். நாவலன்: (குறும்பாக) நீ போயிருந்தால், நீ சொன்னபடி, யாரோடும் நான் பேசிக்கொண்டிருக்க முடியுமா? சந்தைக் கடைக்குச் சென்றால் புதிய பழக்கங்கள் வருகின்றன. பச்சைக் காய்கறிகளை வாங்கிப் பழகுவதால், உள்ளம் பசுமை பெறுகிறது, புதுமை அடைகிறது. நாள்தோறும் இனி நானே சந்தைக்குப் போய் வருகிறேன், அம்மா! (யாழி வீட்டில்) வையை: (பையைக் கொட்டிப் பார்த்து) இரண்டு நாளில் வெளியூர் செல்லுகிறோம். கொஞ்சம் காய்கறி வாங்கி வந்தால் போதும் என்று சொல்லிவிட்டுமா, உருளைக் கிழங்கில் ஒரு வீசை, கத்தரிக்காயில் ஒரு வீசை, இன்னும் என்னென்னமோ வளைத்து வாங்கி வந்திருக்கிறாய். மறக்காத உனக்குமா மறதி வந்திருச்சு. காய்கறி வாங்கு வதிலேயே மறதி தொடங்கிவிட்டால், கட்டிக் கொடுத்த பின் எவ்வளவு வருமோ? யாழி: (திடுக்கிட்டு) கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வேணுமானால் குறைச்சலாக வாங்கி வருகிறேன். போகவாம்மா! வையை: வாங்கினது சரி. என்ன செய்வது. போகிற வீட்டுக்கு மிச்சத்தைக் கொண்டு போவோம். யாழி: (தன்னுள்) நல்லவேளை. தப்பித்தேன். காசைக் க™க்குப்பண்ணி எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பிடிபட்டுப் போனாலும் கோகலாம். (நாவலன் வீட்டில்) காவிரி: என்னப்பா விருந்துக்கு இவ்வளவு போதுமா? எழுதித் தந்துவிட்டுமா இப்படி வாங்கி வந்தாய். கல்வி முடித்தும் காய்கறி வாங்கத் தெரியவில்லையே. ஏட்டுப் படிப்பு வீட்டுக்கு உதவவில்லை. உனக்கு வருகிறவளும் காய்கறி வாங்கத் தெரியாதவளாக வந்துவிட்டால், எப்படிக் குடும்பம் நடக்குமோ? நாவலன்: அம்மா! அதுபற்றி நீ கவலைப்பட வேண்டியதில்லை. காய்கறி வாங்கத் தெரிந்தவள்தான் எனக்குக் காதலியாக வருவாள். காசை வேண்டுமானாலும் கணக்குப்பாரு. சிட்டைப்படிதான் எல்லாம் வாங்கினேன். ஆனால் பை..... (விழித்து விழித்துப் பார்க்கிறான்) வடிவு: தம்பி விழிப்பதைப் பார்த்தால், பையை மாற்றி யாரோ கொண்டு போய்விட்டார்கள் போலத் தெரிகிறது. வேண்டுமென்றே தூக்கிக் கொண்டு போனார்களோ? ஒரே மாதிரிப் பையாக இருந்து தெரியாமல் எடுத்துக்கொண்டு போனார்களோ? எப்படியோ கறியும் போச்சு, காசும் போச்சு. நாவலன்: (தன்னுள்) யாழி நல்ல கள்ளி. காதற்குறும்பை முதல்நாளிலே காட்டிவிட்டாள். அவள் மிதிவண்டியிலே போட்டுக்கொண்டு வந்ததற்குக் கூலியாகக் கொண்டு போய்விட்டாள். காற்றைப் பறித்துவிட்டேன். காய்கறியைப் பறித்துக் கொண்டு போய்விட்டாள். காட்சி: 10 (நகர நூல் நிலையம் அதனை அடுத்து ஒரு பூங்கா. மெத்தென்ற புற்றரை மேல் வடிவு அமர்ந்திருத்தல். காலை பத்துமணி) வடிவழகி: (தன் கைகளை உறுதியாக இணைத்துக் கொண்டு) எதனையும் தாங்கும் ஆற்றல் என் நெஞ்சுக்கு வந்து விட்டது. பெற்றோர் எதிர்த்தால் என்ன? உற்றோர் எதிர்த்தால் என்ன? ஊரார் எதிர்த்தாலும் என்ன? உள்ளத்திற்பட்ட ஒன்றை, பதிந்த ஒன்றை, பரவி வளர்ந்த ஒன்றை, ஊழி பெயர்ந்தாலும் உயிரிருக்கும் வரை கடைப்பிடிப்பேன். கற்றவை யெல்லாம் நினைவுண்டா? கண்டவை கேட்டவை யெல்லாம் நினைவுண்டா? எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டிருந்தால், மானிடநெஞ்சம் சாக்கடையாகி விடும். புறச்சுமை தாங்குதற்கு எளிது. எண்ணச்சுமை, அம்மம்ம! உணர்ச்சிக் கொல்லி, உயிரழித்தி. மறக்க வேண்டியவ ற்றைத் தாமே மறப்பது வாழ்வுப் பயிருக்கு உரமாகும். மறப்பு என்னும் வடிகால் இன்றேல் வாழ்வுப் பயிர் அழுகிப் போகும். எவ்வளவோ மறந்தேன், மறந்து கொண்டிருக்கிறேன். கணந்தோறும் மறக்க முயல்கின்றேன். ஒன்றை மறக்க முடியவில்லையே. மறக்க முயலுந்தோறும் அந்த ஒன்றுவளர முயல்கின்றதே. அதன் வளர்ச்சியை இனி நான் தடுப்பதற் கில்லை. எப்படியேனும் தடுப்பது என்று முயன்றால், அது சாவாக முடியும். (உணர்ச்சி மிக்கு) அதனை ஏன் தடுக்க வேண்டும். ஒடுக்கவேண்டும்? அந்த நல்லுணர்ச்சி வளர்க. வாழ்க, பரவுக, பற்றுக என்று என் நெஞ்சக் களத்தை உரிமை யாக்கிவிட்டேன். (நெஞ்சைத் தட்டிக் கொள்கிறாள்) அன்றொருநாள், ஆம், அது உண்மையில் என் வாழ்ககையின் ஒருநாள். நிறைமாதம் உடைய கருப்பிணிக்குச் சிறிது உதவி செய்தேன். அவளும் பிழைத்தாள். ஆண் குழந்தையும் பிறந்தது. நடுத்தெருவில் நின்று ஐயோ! இடுப்புவலி, வலி, வலி என்று அலறியபோது, யார் செவியிலாவது பட்டதா? போவார் வருவார் எல்லாம் வருவார் போவாராக இருந்தார்களே அல்லாமல், அவளுக்கு யார் உதவிசெய்ய முன்வந்தார்கள்? தன் வயிறு, தன் பிள்ளை, தன் வீடு, தன்னலம் என்ற தனிப்பற்றை அத்தெருவிடைக் கண்டேன். இடுப்பு வலியைப் பார்த்த சிலர் ஏளனம் செய்யக்கண்டேன். “கள்ளத்தனத்தை மறைக்கலாம். பிள்ளை வலியை மறைக்க முடியுமா?” என்று தூற்றக் கண்டேன். உயிர்ப்பிறவிகளுள் சிறந்த பிறவியை வயிற்றுப் பண்ணையில் வளர்க்கும் அந் நல்லாள் என் செய்வாள்? தான் இவ்வுலகில் பிறந்ததற்கு வருந்தினாள், மணந்ததற்கு வருந்தினாள். கருவுற்றதற்கு வருந்தினாள். காதலன் அம்மையில் சென்றதற்கு வருந்தினாள். கருவுற்றவள் அம்மைக் கணவனைப் பார்க்கக்கூடாது என்று சமுதாயம் தடுத்ததற்கு வருந்தினாள். இவ் வருத்த மெல்லாம் தொலையுமாறு பிள்ளை முகம் காணலாம் என்று உயிர் பிடித்திருந்தாள். இவள் வாழ்க்கை யாருக்குத் தெரிந்தது? இவள் வலி யாருக்குப் புரிந்தது? மாந்தரெல்லாம் தன்னல மதுக்குடித்தவர் களாகவே, தன்னலக் கிறுக்கர்களாக வளர்கின்றனர், வளர்க்கப் படுகின்றனர் என்பதனை உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கிக்கொண்டேன். புளியமரத்தை உலுப்பியது போல என் உடல் குலுங்கிற்று. ஆலமரம் அசைந்தது போல என் நெஞ்சத் தாமரை ஆடிற்று. (வடிவழகி பாடுகின்றாள்) நல்லாவின் பால்முழுதும் கன்றுக் கில்லை; நறும்பூவின் மணமுழுதும் சோலைக் கில்லை; நெல்லாகும் கதிர்முழுதும் நிலத்துக் கில்லை; நிறைகின்ற நீர்முழுதும் குளத்துக் கில்லை; பல்லாரும் கனிமுழுதும் மரத்துக் கில்லை; பண்ணரம்பின் இசைமுழுதும் யாழுக் கில்லை; எல்லாமே பிறர்க்குழைக்கக் காணு கின்றேன் என்வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும்வேண்டும். தெருவிற் பிறத்த அச்சிறுவன் இன்று தெருவில் சிறுதேரோட்டி விளையாடுகின்றான். என் மகன் என்று அவன் தாய் புகழ்ந்து கூறும்போது, எனக்கு மணமாகி யிருந்தால், எனக்கு ஒரு மகன் இருந்தால், இந்த ஏழையின் முகத்தை நான் ஏறெடுத்துப் பார்த்திருப்பேனா? உதவிசெய்யும் எண்ணம் உதித்திருக்குமா? குடும்ப வேலிக்குள் புகாத குமரியாக இருந்தமையால், தன்னலம் என்னும் தனிவயல் எனக்கு ஏற்படாதிருந்தமையால், சுமந்த ஒரு இளந்தாய் வயிற்றை அணைத்து மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சுமையை மண்மகள்மீது இறக்கி வைத்தேன். அன்று என் நெஞ்சத்தில் ஓர் எண்ணம் - ஒரே எண்ணம் - எப்படியோ ஆழமாகப் பதிந்துவிட்டது. திருமணமாகித் துயருறுவோர் உலகத்துப் பலர். பிள்ளைகள் பெற்றும், பெற்ற பிள்ளைகளைக் காக்கமாட்டாமலும் அல்லற்படுவோர் பலர். கணவனிருந்தும், கணவனை இழந்தும் துன்பம் உழப்போர் பலர். இத்தகைய துன்பக்கூட்டத்தில் மணமாகி நானும் சேரவேண்டுமா? அது அறிவுடைமை ஆகாது. ஏற்கனவே மணமாகித் துன்புறும் இல்லறத் தாயர்களுக்குத் துணையாக உழைக்கவேண்டும். உழைக்க வேண்டுமேல், நான் மணங்கொள்ளாது ஒரு தனி வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற ஓர் எண்ணவித்து என் மனப்பண்ணையில் தோன்றி வளர்ந்துவிட்டது. தொண்டுக்குமரியாக அருட்கன்னியாக வாழும் குறிக்கோளையே தாலியாகப் பூண்டுகொண்டேன். (பண்ணனது உருவம் மனக்கண்ணுக்குத் தோன்றுகிறது) ஆம்; என் உள்ளம் கவர்ந்த காதலன். அவர்தம் திருமேனியைத் தீண்டி வாழவேண்டும் என்ற வேட்கை என் நெஞ்சில் பலகால் ஓடியதுண்டு. அவ்வாசை இப்போதும் நெஞ்சத்தாளில் எந்த ஓரத்திலாவது சோற்றுப் பசைபோல் ஒட்டிக் கொண்டிருக்கும். எனினும் இனிமேல் காதலணுவுக்கு என் குருதியணுவில் இடமில்லை, இடமில்லை. தொண்டணுக்களே என் இரத்தத்தில் குடிகொள்ளும். மூச்செல்லாம் தொண்டு, பேச்செல்லாம் தொண்டு என்று வாழ்க்கை மலர்ந்தபின் காதல் தூசினுக்கு இடமுண்டோ? (திரும்பிப் பார்க்கிறாள். மின்னொளி பின்னே வந்து நிற்கிறாள்.) வடிவு: குறித்தபடி குறித்த இடத்துக்கு வந்துவிட்டாயே. ஏன் வரச் சொன்னேன் தெரியுமா? மின்னொளி: நான் ஆணாக இருந்தால், அழகாக மாற்றம் சொல்லுவேன். வடிவு: நானும் ஆணாக இருந்தால், அத்தகைய மாற்றத்தை அழகாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். ஏன் வரச் சொன்னேன் தெரியுமா? மின்னொளி: தெரியும். வடிவு: எப்படித் தெரியும்? நான் தனியாகப் பேசிக் கொண்டிருந்ததை, பின்னே வந்து நின்று கேட்டுக் கொண்டிருந்திருப்பாய். மின்னொளி: நீ தனியாக யாரோடு பேசிக்கொண்டிருந்தாய்? நான் வருவது தெரிந்து அந்தக் காதலர் போய் விட்டாரோ? வடிவு: உலகத்தில் அப்படி ஒரு காதலர் இருந்தால் அவர் உன் காதலராக இருக்க முடியுமேயன்றி என் காதலராக இருக்கமாட்டார். காதலே இல்லாதபோது காதலர் எப்படி வருவார்? மின்னொளி : நீ வரச் சொன்ன காரணத்தைச் சொல்லட்டுமா? வடிவு: ஏன் பாவை காட்டுகிறாய்? உனக்குக் காரணம் தெரியாது. (சிறிது தாமதித்து) நீயும் நானும் ஒரேநாளில் பிறந்தோம். மின்னொளி: இரட்டைப் பிள்ளைகளைப்போல ஒன்றாய் வளர்ந்தோம். வடிவு: ஒன்றாய்ப் பள்ளி சென்றோம். கல்லூரி புகுந்தோம். பட்டம் பெற்றோம். மின்னொளி: (சிரித்துக்கொண்டு) அதுபோல் நாம் இருவரும் ஒருவனுக்கு இரு பெண்டாகி. ஒரு குழந்தைக்கு இரட்டைத் தாயாகி வாழவேண்டும் என்பதுதானே உன் ஆசை. வடிவு: (சிரித்துக்கொண்டு) இந்தத் தீய ஆசை எனக்கில்லை. இதனைச் சொல்லுதற்கு உன்னை இங்கா அழைக்க வேண்டும்? மின்னொளி: (துடிப்போடு) காதலில் ஏதும்.... வடிவு: (இடைமறித்து) காதல் பற்றிய பேச்சை இல்லை. என்னிடம் வைத்த பேரன்பினால் உன் உள்ளம் சொல் வாய் எல்லாம் ஊசிபட்ட கண்போல் துடிக்கின்றன. மின்னு! அவ்வாறு சிறுமை ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை. அன்றொரு நாள் ஒறு சிறுவனை நான் எடுக்கி வைத்துக்கொண்டிருந்தபோது, `இவன் யார் என்று நீ கேட்டனை. என் மகன் என்று அங்கிருந்த நங்கை கூறினாள். நீ கூடத் திட்டுக்கிட்டாய். மின்னொளி: ஆம். முதலில் திடுக்கிட்டேன். உடனே தெளிந்தேன். அந்நங்கை அன்பால் அங்ஙனம் கூறுவதாகேவ நினைத்தேன். பையன் முகச்சாயல் அவள் சாயலாகவே இருந்தது. வடிவு: நீ திடுக்கிட்டதும் சரி. பின் தெளிந்ததும் சரி, அவள் என் அன்புத் தமக்கை. அவன் என் அன்புக் குழந்தை. நறுங்கொன்றை என்பது அத்தாயின் பெயர் ஓவியன் என்பது சிறுவனின் பெயர். கருப்பிணியாக இருந்த நறுங்கொன்றைக்கு உதவி செய்தேன். என் சிறு உதவியால் அவள் தாயானாள். கரு குழந்தையாயிற்று. மின்னொளி: உன் கன்னித் தொண்டினை வாழ்த்துகிறேன். காதலுக்கு உதவி செய்பவர்கள் உலகத்துப் பலர். கருப்பிணிக்குக் கணவன்கூட உதவான் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். வடிவு: நிகழ்ச்சியைக் கேட்டளவில் உன் மனம் இவ்வளவு துடிக்கிறது, அன்று பெருந்தெருவிடை அந்நங்கையின் கண்ணீர் முகத்தையும் கடுத்து வலிக்கும் வயிற்றையும் ஐயையோ! அம்மம்ம! அப்பப்ப! என்று அலறும் வாயையும் நீ கண்டிருந்தால்.... மின்னொளி: உன்போல் ஓடோடி உதவி செய்திருப்பேன் அதற்குமேல் ஓர் உறுதியும் செய்திருப்பேன். எனக்குக் குடும்பமும் வேண்டாம். கருவும் வேண்டாம். குடும்பமாய்க் கருவுற்றவர்களுக்குச் செவிலியாக இருந்து உதவுவதே என் பிறப்பின் பயன் எனத் துறவு பூண்டிருப்பேன் தளரும் மரத்திற்கு கொளு கொம்புபோல் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருப்பேன். வடிவு: உன் உள்ளமும் என் உள்ளமும் ஒத்திருக்கின்றன. நீ நினைத்தது போலவே நானும் நினைத்தேன். நீ அந்த அவல நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை. அதனால் துறவுகொள்ளவில்லை. நான் பார்த்தேன், பணிவிடை செய்தேன். மணம் வேண்டாம், வேண்டுவது தொண்டு என்று முடிவுக்கு வந்துவிட்டேன். மின்னொளி: வடிவு! நல்லமுடிவு. இதனை உன் பெற்றோர்கள் உடன்படுவார்களா? ஒருவர் வாழ்க்கையின் குறிக்கோள் சுற்றுப்புறத்திற்கு இசைய அமைய வேண்டும். இல்லா விட்டால் சுற்றுப்புறம் சும்மா விடாது. ஒரு நாட்டின் குறிக்கோள்கூடப் பக்கத்து நாடுகளின் போக்கிற்கு இணங்க அமைய வேண்டும். இல்லாவிட்டால் பக்கநாடுகள் திடீரென எரியும் மலைகளாகி விடும். வடிவு: பெற்றோர்க்கு எங்ஙனம் தெரிவிப்பேன்? தாய்க்கு எங்ஙனம் அறிவிப்பேன்? `நான் இவரைக் காதலிக் கின்றேன், அவருக்கே என்னை மணமுடியுங்கள்’என்று அவ்வகையில் சொன்னால் என் பெற்றோர்கள் உடன் படக்கூடும். தொண்டினைக் காதலிக்கிறேன் என்றால், அவர்கள் முகங்கள் தீக்கொழுந்தாகி விடுமே என்று நடுங்குகிறேன். ஆடவன் துறவு கொள்வதை, தொண்டுக்குப் புறப்படுவதை உலகம் எளிதாக ஒத்துக்கொள்கின்றது. கன்னிதுறவு கொள்வதை ஊரும் உலகமும் கண்டு கொண்டிருக்குமா? சிறுமையாகப் பேசினால் தாய் மனம் புகையாதா? புழுங்காதா? என் திருமணத்திற்கு எல்லா ஆயத்தமும் செய்து கொண்டிருக்கிற நிலையில், என் துறவைத்தெரிந்தால், என் பெற்றோர்கள் திடுக்கிட்டு.... மின்னொளி: உயிர்விட்டு விடுவார்கள் என்றுதானே, கவலைப்படு கிறாய். உன் பெற்றோர்கள் பண்பும் அறிவும் அமைதியும் உடையவர்கள். உன்னிடம் உயிரை வைத்திருப்பவர்கள். எங்கே உன் முடிவை ஒத்துக் கொள்ளா விட்டால் நீ உயிரை விட்டுவிடுவாயோ என்று அஞ்சி, நீ சொல்வதற்கெல்லாம் உடன்படுவார்கள். பெற்றோரைப் பற்றி நீ கவலைப்படவேண்டாம். ஆனால் இப்போதே சொல்லிவிடு. சொல்லாவிட்டால் மணவறை பிணவறையாகி விடும் அந்த அளவுக்குப் போகவிட்டு விடாதே. பண்ணன் மிகவும் நாணமும் மானமும் உடையவர். வடிவு: என் பெற்றோர் இதுவரை நல்லவர்கள். என் துறவு கேட்டும் நல்லவர்களாக இருப்பார்களா? அசையாத மலை அசைந்தால் என் ஆகும்? அவர்கள் பொறுமையாக இருந்தாலும் அப்பொறுமை என்னைச் சுடுமே? உலகத்தையும் ஊரையும் எதிர்ப்பது துணிவாகலாம். அறிவாகலாம். உற்றுப்பெற்றுக் கற்றுச் சான்றவள் ஆக்கிய அன்னை அப்பரை எதிர்த்தல் பேதைமையில்லையா (அழுகின்றாள்) மின்னொளி: (அழுகையைத் தன் கையால் துடைத்துப் பாடுகின்றாள்.) (மின்னொளி பாடுகின்றாள்) நீ ஏன் அழுக வேண்டும்? அழுவதை நிறுத்தி மகிழவேண்டும்; அழுவதற்கு உலகத்தில் ஆளில்லையா? அணைப்பதற்கு உலகத்தில் கையில்லையா? படுவதற்கு உலகத்தில் நோயில்லையா? படிப்பதற்கு உலகத்தில் மதிப்பில்லையா? - நீ ஏன் நாட்டுக்குப் பாடுபடும் நல்ல பெண்ணே! வீட்டுக்கு நீ விளைத்த கெடுதல் என்னே பாட்டுக்குப் பொருளாகப் படித்த பெண்ணே கூட்டுக்குள் நீ கிடக்க வேண்டுவ தென்னே! - நீ ஏன் உற்றவர் அழுகையை ஒழிக்க வந்தாய் ஊரவர் வாழ்க்கையை உயர்த்த வந்தாய் கற்றவர் கடமையைக் காட்ட வந்தாய் காந்தியின் நெறிகளைக் காக்க வந்தாய். - நீ ஏன் அழுவார் தம் அழுகையெல்லாம் தொண்டுத் துணியாக துடைக்கத் துறவு வாழ்வு பூணும் நீ ஏன் அழுகவேண்டும். உன்னைப் பெறாதவர்களையெல்லாம் பெற்றோர்களாகக் கருதி, உன்னோடு பிறவாதவர்களை யெல்லாம் தமக்கைகளாகக் கருதி, உன் வீட்டில் உதியாதவர்களையெல்லாம் குழந்தைகளாகக் கருதி, உலகத்தை ஒரு வீடாகப் போற்றும் உன் அன்பு, நிலத்தைக் காட்டிலும் பெரியது, வானைக் காட்டிலும் உயர்ந்தது, கடலைக் காட்டிலும் ஆழமுடையது. துறவை மதியாத உறவு பெற்றோர் உறவாயினும் கிடக்கட்டும். காதலில் வழுவினாய்கொல்? களவொழுக்கம் ஒழுகினாய்கொல்? களவிற் கருவுற்றாய் கொல்? நீ என்ன பிழை செய்தாய்? இல்லறவுணர்ச்சி எளியது. துறவுணர்ச்சி அரியது. அவ்வுணர்ச்சி உனக்கு எளிதாக அமைந்துவிட்டது. உன் துறவு யாருக்கும் தீதன்று காண். நீ ஒரு தொழில் பார்த்து வாழும் துறவி. பிச்சை எடுக்கும் துறவியில்லை. நீ யார்க்கும் சுமையில்லை யாருடைய சுமையையும் தாங்க நிற்கும் சுமைதாங்கி நீ! உன் குறிக்கோள் என் உள்ளத்தையும் கவ்வட்டும். ஒன்றாய்ப் பிறந்து வளர்ந்து படித்துச் சிறந்த நாம் இரட்டைத் துறவியாக வாழ்வோம். வடிவு : உன் சொற்கள் எனக்குத் திருக்குறளாயின. என் துறவு எனக்கு இனியதாயினும், மற்றவர்களுக்குக் கசப்பாகும். இடையூறுகள் பல வரும். என்றும் உற்றதோழியாக இருந்து, தோணிக்குத் துடுப்புப்போல, நீ உதவி செய்யவேண்டும். மின்னொளி: என் உயிர் இருக்கும்வரை நீ உதவி பெறுவாய். ஆனாலும் ஓர் உறுதி எனக்குத் தரவேண்டும். வடிவு: என் உறுதிக்கு உறுதி செய்யும் உறுதியாயின், கேள், தருவேன். மின்னொளி: தொண்டுக்குத் துறவறந்தான் சிறந்தது என்பதில்லை. இல்லறத்தில் அமர்ந்து ஏராளமான குழந்தைகளைப் பெற்றும் பின்னும் உலகத்தொண்டு செய்தவர்களே சாலப் பலர். உன் உள்ளம் தொண்டுக்குத் துறவறத்தை நாடுகின்றது. கன்னியிலேயே துறவு நாடும் உன்னை இல்லறப்படுத்தினால், அந்த இல்லறம் கணவனுக்குத் துறவறம் ஆகிவிடும். நின்பால் இன்பம் நாணாது துன்பம் காண்பான். வடிவு: இல்லறத்தார்க்குத் தொண்டு செய்வதுதான் என் துறவறமாகும். தொண்டுக்கு என் துறவு ஒரு கருவி. என்றும் இல்லறமே பெரிதென நான் மதிப்பவள். துறவு என்னைப் பற்றிக்கொண்டதே யன்றி தான் துறவைப் பற்றவில்லை. பற்றிய துறவைப் பற்றறுக்கும் ஆற்றலும் எனக்கில்லை. மின்னொளி: நன்கு கேள்! துறவுக்கு யார் செய்யும் இடையூறு களும் பெரிதல்ல. புறவிடையூறுகளைப் புறங்காட்டி விடலாம். உடம்போடு வளரும் இளமை யெழுச்சியை எதிர்ப்பது எளிதன்று. எதிர்த்துத் தோற்றவரே மிகப்பலர். அதிலும் பெண்ணுக்குத் துறவு என்பது எளிதேயில்லை. பெண்ணுள்ளம் தாயுள்ளம். தன் வயிற்றில் கருக்கொண்டு சுமந்து ஈன்ற தன் குழந்தை தன் முலைப்பாலைச் செவ்வாய் கொண்டு உண்ணும்போது மகிழும் கண்ணுள்ளம். அம்மா என்று சொல்லிக்கொடுத்து அம்மா என்ற மழலையைத் தன் குழந்தை வாயால் கேட்க விரும்பும் செவியுள்ளம். பிற குழந்தைகள் தத்தம் தாய் முலையைத் தழுவிக் கிடக்கப் பார்க்கும்போது, தன் முலையைத் தழுவிக் கிடக்கத் தன் வயிறு ஒரு குழந்தையைத் தரவேண்டுமே என்று வரங் கிடக்கும் பொறாமையுள்ளம். தாயுள்ளம் ஒரு பெண்ணுக்குத் தடையுள்ளம் அன்று, இயல்புள்ளம் ஆகும். வடிவு! அத்தகைய உள்ளம் உனக்குத் தோன்றுமேல், அதனை ஒளித்து நடக்க முயலாதே. மணமாகி மனைவியாகித்தான் தாயாக வேண்டும். தாயுள்ளத்திற்குக் காதல் உள்ளம் அடிப்படை. காதலுள்ளம் உன் துறவுள்ளத்திற் புகுந்து விடுமேல், வஞ்சகப் போர்வையால் காதற்குழந்தையை மறைக்காதே. இல்லறமாயினும் துறவறமாயினும், கடமையாயினும் தொண்டாயினும், மனத்துக்கண் மாசின்மைவேண்டும். அதுவே வாழ்வறம். ஆதலின் தாயுள்ளம் தோன்றி உனக்குக் காதலுள்ளம் ஏற்படுமேல், உற்ற தோழியென மதிக்கும் என்னை மறுபடியும் இச்சோலைக்கு அழைத்து என்னிடம் கூறுக. இன்று உன் துறவறத்திற்குத் துணையாக நிற்கும் யான் அன்று உன் இல்லறத்திற்கும் துணையாக நிற்பேன், “என்றும் மனம் மாசின்றி வாழ்வேன்” என்ற உறுதியை நீ எனக்கு அருளவேண்டும். வடிவு: குழந்தை ஓவியன் என் துறவுக்குக் காரணமாக இருந்தவன். என்றும் நெஞ்சம் ஒளிக்கும் வஞ்சகியாக வாழமாட்டேன். ஓவியன் மேல் ஆணை. மின்னொளி: தெய்வத்தின்மேல் ஆணையிடுவர், அன்னைமேல் ஆணையிடுவர். தமிழ்மேல் ஆனையிடுவர். நீயோ ஓர் ஏழைப் பிள்ளைமேல் ஆணையிடுகின்றாய். ஓவியன் உன்னை வாழ்விப்பான். (இருவரும் தழுவிக் கொண்டு பிரிகின்றார்கள்) இரண்டாவது அன்னையரங்கம் காட்சி: 11 (மலையனார் வீடு) மலையனார்: (எழுந்துநின்று) வாருங்கள், நல்லப்பரே! இவ்வூரே தங்கள் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அதிலும் நாங்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். ஊரை மறந்து இவ்வளவு நாள் தங்கிவிட்டீர்களே. நல்லப்பர்: (செய்தித்தாளை விரித்துப் பார்த்துக்கொண்டு) உலகத்தில் எவ்வளவோ சிக்கல்கள், ஒரு குடும்பத்தில் எவ்வளவோ சிக்கல்கள், என் நண்பர் வரச்சொல்லி எழுதியிருந்தார் எதற்குத் தெரியுமா? அவருக்கு ஒரே ஒரு பெண். அவளைத் தன் தங்கை மகனுக்குக் கட்டவேண்டும் என்பது அவரது விருப்பம். தன் தம்பி மகனுக்குத்தான் கட்ட வேண்டும் என்பது அவரது மனைவியின் விருப்பம். நண்பருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. வடிவு: இதிலென்ன புரிய வேண்டியிருக்கிறது? பெண் விருப்பத்துக்கு விட்டுவிட்டால் போச்சு. நல்லப்பர்: மகள் மிகவும் கெட்டிக்காரி. பெற்றோர் ஒரு முடிவுக்கு வரட்டும். அம்முடிவு தனக்கு விருப்பம் என்று சொல்லிவிட்டாள். பெற்றோர் ஒற்றுமையில்லாத நிலையில், யாரை மணந்தாலும் வருகின்ற மாப்பிள்ளைக்கு மதிப்பு இருக்காதல்லவா? மலையனார்: இது ஒரு இக்கட்டான நிலைதான். காவிரி: இரண்டு பெண் மக்கள் இருந்தால், அத்தை மகனுக்கு ஒருத்தியையும், அம்மான் மகனுக்கு ஒருத்தியையும் கட்டிக்கொடுத்துச் சும்மா இருக்கலாம். ஒரே பெண்ணாக இருக்கும்போது என்ன செய்வது? நல்லப்பர்: எனக்குச் சட்டென ஒரு வழி தோன்றியது. `திருவுளச் சீட்டுப்போடுவோம். அதனைப் பெண் குழந்தையே எடுக்கட்டும். சீட்டின் முடிவுக்கு இணங்குகின்றீர்களா? என்று பெற்றோர்களைப் பார்த்துக்கேட்டேன். தாய் தந்தையின் விருப்பம் தன் விருப்பம் என்று சொல்லுகிற அருமையுடைய அறிவுக் குழந்தையைச் சோதிக்கலாமா? என்று இடித்துரைத்தேன். எப்படியாவது ஒரு தீர்வு காணவேண்டும் என்று புழுங்கிக்கொண்டிருந்த பெற்றோர்கள் மகிழ்ச்சியோடு திருவுளச் சீட்டுப் போடுவதற்கு ஒத்துக்கொண்டார்கள். வடிவு: (விரைவாக) தங்கை மகனுக்குத்தான் விழுந்திருக்கும். நல்லப்பர்: (நிமிர்ந்து பார்த்து) ஆமாம். உனக்கு எப்படித் தெரியும்? சும்மா சொன்னாயா? வடிவு: நீங்கள் சொல்லிய பெண்ணும் நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். இவ்வளவு விளக்கமும் அவள் எனக்கு எழுதவில்லை. தான் விரும்பிய அத்தை மகனுக்கே திருமணம் நடக்கப்போகிறது என்று நேற்று எழுதி யிருக்கிறாள். மலையனார்: எல்லாம் உங்கள் பெருமைதான். நல்லப்பர்: என் பெருமை என்ன? எல்லாம் அந்தப் பெண்ணின் பெருமையே. தன் காதலைப் பொருட்படுத்தாது. குடும்ப ஒற்றுமையைக் காத்த அந்தச் சிறு நங்கையை மதிக்கின்றேன். வடிவுக்கு வந்த கடிதத்திலிருந்து திருவுளச்சீட்டு அவள் விரும்பிய திருவுளப்படியே விழுந்தது என அறிந்து பெருமகிழ்வு அடைகிறேன். மலையனார்: (வடிவைப் பார்த்து) தம்பி வங்கிக்குப் போயிருக் கிறான். ஒரு ரூபாய்த்தாள் ஐந்நூறுக்கு வேண்டும். நூறு ரூபாய்க்குப் பொடிச் சில்லரை வேண்டும். நீயும் போய் வாங்கி வா (வடிவு சென்று விடுகிறாள்.) மலையனார்: (நல்லப்பரைப் பார்த்து) நம் வடிவுக்குத் திருமணம் செய்யவேண்டும். நல்ல இடம் என்று ஓரிடத்தைப் பார்த்து வைத்திருக்கின்றோம். நல்லப்பர்: எனக்குத்தான் எல்லாக் குடும்பங்களின் நிலையும் தெரியுமே. அந்த இடம் காவிரிக்கும் பிடித்தம்தானே. காவிரி: எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நாவலனுக்கும் கூடப் பொருத்தமான பெண் அந்தக் குடும்பத்தில் இருக்கிறாள். இரண்டு மணத்தையும் சேர்த்து முடித்து விட்டால், கவலைவிட்டது. அப்புறம் நமக்கென்ன? பேரப்பிள்ளைகள் திருமணந்தானே. நல்லப்பர்: இவ்வளவு தூரம் உங்கள் இருவரையும் கவர்ந்த குடும்பம் எது? நீங்கள் சொல்வதைப் பார்த்தால் புடைவைக்கிழார் சீரனார் குடும்பம் என்று படுகிறது. மலையனார்: அதுதான், அதுதான். நல்லப்பர்: மாமானருக்கு மாமனார் பொருத்தம். மாமியாருக்கு மாமியார் பொருத்தம். எல்லாம் பொருத்தந்தான். மலையனார்: இரண்டு மணங்களையும் ஒரேநாளில் முடித்து விடலாம் என்பது காவிரியின் பேராசை. நல்லப்பர்: இதென்ன பேராசை. ஒரேநாளில் இரண்டு பேருக்கும் மாமியாராகி விட வேண்டும் என்று எந்தப் பெண்ணும் ஆசைப்படுவது இயல்புதானே. உங்களுக்கு மாத்திரம் இரண்டு பேருக்கு மாமனாராகி விட வேண்டும் என்ற ஆசை இருக்காதா? இரு மணங்கள் ஒரு குடும்பத்து ஒருநாளில் நடைபெற வேண்டும் என்றால் ஒன்பது நெஞ்சங்கள் ஒரு நெஞ்சமாக வேண்டும். மலையனார்: (காவிரியைப் பார்த்து) ஐயா மிகக் குறிப்பாகச் சொல்லுகிறார். தெரிந்ததா? நாம் இசைந்தாற் போதாது. சீரனாரும் அவர்தேவியும் இசையவேண்டும். அவர் மக்களும் நம் மக்களும் இசையவேண்டும். நல்லப்பர்: எட்டு நெஞ்சங்கள் இசைந்தால் போதாது. ஐயா, போதாது, ஊர் நெஞ்சம் என்ற ஒரு பெரிய நெஞ்சம் இருக்கிறது. அதுவும் ஒத்து வந்தால் மிக நல்லது. இந்த நான்கு மணமக்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டால் நல்லதா? சீரனாரும் வையையும் உங்கள் குடும்பத்தில் உறவுகொள்வதைப் பெருமையாகக் கருதுவார்கள். இத் திருமணங்களை முடித்து வைப்பதில் எனக்கு யாதொரு இடரும் இல்லை. (வடிவைப் பார்க்க மின்னொளி வருகின்றாள். நல்லப்பரை வணங்குகின்றாள்.) மலையனார்: இம்மங்கை நம் வடிவின் தோழி. ஒரே நாளிற்பிறந்து வளர்ந்து உடன் விளையாடிப் படித்தவர்கள் இவளுக்கும் மணப்பேச்சு நடந்து கொண்டிருக்கிறது. இவள் திருமணமும் வடிவின் திருமணமும் ஒரே நாளில் நடந்தாலும் நடக்கலாம். காவிரி: மின்னு உன் தோழிக்குத்தான் தாலி கட்டுவதற்குப் பேசிக்கொண்டிருக்கின்றோம். மின்னொளி: (இதுதான் வடிவின் கருத்தை வெளியிடுதற்கு நல்ல சமயம் என்று நினைத்து) பார்த்துப் பேசுவது நல்லது. காவிரி: யாருக்கு? மின்னொளி: (அமைதியாக) வடிவாகிய என் தோழிக்கு தான். மலையனார்: நீ என்ன சொல்லுகிறாய்? விளங்கச் சொல், அம்மா! நல்லப்பர்: மின்னொளி சொல்லட்டும், காதற்செய்தி மின்னொளிக்குத் தானே தெரியும். மின்னொளி: காதற்செய்தி இல்லை.காதலற்ற செய்தி. (எல்லோரும் திடுக்கிடல்) மலையனார்: மின்னு! நீ ஏன் இப்படி விளையாட்டாகச் சொல்லுகிறாய்? எந்நேரமும் விளையாட்டுத்தானா? மின்னொளி: திருமணம் பேசும் போதா விளையாட்டகச் சொல்லுவேன்? நான் சொல்வது உண்மை. பொய்யோ புனைவோ இல்லை. வடிவழகி கன்னியாகவே வாழ முடிவுசெய்துவிட்டாள்: உறுதிபூண்டு விட்டாள். வடிவே நேற்று என்னைக் கூப்பிட்டுத் தன் குறிக்கோளைக் கூறினாள். உங்களிடம் மனம் நோகாதபடி கூறுமாறு என்னை வேண்டினாள். காவிரி: என் மகளா இப்படிக் கூறினாள்? அப்படிக் கூறியவளா என் வயிற்றிற் பிறந்தாள்? மலையனார்: வடிவின் முகத்தில் யாதொரு குறிப்பும் காணவில்லை. நடையுடையிலும் எவ்வித மாறுபாடும் இல்லை. சொல்லில் எவ்வகை வேறுபாடும் இல்லை. நீ சொல்லும் செய்தி உண்மையானால், உள்ளத்தை மறைத்தொழுகும் வஞ்சகத்தின் வடிவாக என் மகள் மாறிவிட்டாளா? நீ விளையாட்டாகக் கூறவில்லை. ஆனால் அவள் விளையாட்டாகக் கூறியதை நம்பி விட்டாய். மின்னொளி: அவள் சொன்னது விளையாட்டாக இருக்கும் என்றால், எனக்கு அதனைவிட மகிழ்ச்சி இல்லை. அவள் உண்மையாக உரைத்ததை நான் விளையாட்டாக மதித்தால், அதனைவிடப் பேதைமை இல்லை. என் நண்பி துறவு பூண்டது காதலின்மையால் அன்று. இல்லற வெறுப்பினால் அன்று, இன்ப முரிவினால் அன்று. நல்லப்பர்: - (உரத்த குரலில்) பின்னர் எதனால்? மின்னொளி: இரக்கவுணர்வினால், தொண்டின் உணர்ச்சி யால், அருள் உள்ளத்தால். நல்லப்பர்: இச் சின்னஞ் சிறுவயதில் இவ்வளவு பேருணர்ச்சி தோன்றியதேன்? மின்னொளி: அருளுணர்ச்சிக்குச் சிறிய வயது பெரிய வயது என உண்டா? குழந்தைகள் பிறக்கும்போது அருள் வடிவாகவே பிறக்கின்றன. வளர்க்கப்படு முறையில் தன்னலப் பிண்டங்களாக வளருகின்றன. வடிவு என்றும் குழந்தையுள்ளம் உடையவள். அவள் பெற்றோர்கள் குழந்தையுள்ளம் குறையாதபடி அவளைப் போற்றி வளர்த்திருக்கிறார்கள். வடிவின் பெருமை வளர்த்தவர் களின் பெருமை. காவிரி: மின்னு! நீ துணிச்சலோடு பேசிக்கொண்டு போவதைப் பார்த்தால் ..... மின்னொளி: (சிரித்துக் கொண்டு) உங்கள் மகளை நான் கெடுத்துவிட்டேன் என்று சொல்ல நினைக்கிறீர்கள். உண்மையைச் சொல்லப்போனால், உங்கள் மகளால் நான் கெட்டுவிட்டேன். வடிவின் தூய உள்ளத்தையும் தொண்டின் விழைவையும் பார்த்தபின், எனக்குக்கூட இப்போது மணத்தில் ஆசையில்லை. மலையனார்: காவிரி! சற்று பொறு, மின்னொளி! உனக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லு. வடிவின் மனமாற்றத்துக்கு என்ன காரணம். மின்னொளி: ஓராண்டுக்கு முன் ஒரு அரிய துன்பம் நிகழ்ந்தது. காவிரி : யாருக்கு? நம் வடிவுக்கா? மின்னொளி: வடிவுக்கு அருள்தோன்றுமாறு ஒருத்திக்குத் துன்பம் நிகழ்ந்தது. அவள் நிறைமாதம். கணவனும் இறந்தான். உற்றாரும் இல்லை. தெருவில் ஓ வென்று அலறினாள். வலிக்குதே என்று இரைந்தாள். கரு துடிக்குதே என்று கத்தினாள். சமுதாயம் முழுச் செவிடாயிற்று. அறக்குருடாயிற்று. வானும் கொதித்தது. மண்ணும் கொதித்தது. வடிவின் உள்ளமும் கொதித்தது. வடிவு ஓடினாள், நெருங்கினாள். அகச் செல்வமுடைய அந்நங்கையை அணைத்தாள். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். அரைநொடிப் பொழுதில் அந் நங்கை தாயானாள். குழந்தை ஓவென்று அலறியது. இந்நிகழ்ச்சியினால் வடிவின் நெஞ்சம் ஏழைகளின் தஞ்சமாக மாறியது. குடும்பம் வேண்டாக் குமரியாக அவள் வாழத் துணிந்துவிட்டாள். குடும்பம் ஆன பெண்டிர்க்கெல்லாம் தொண்டு செய்யக் கருதி விட்டாள். கருக்கலங்கினாலும் அவள் கருத்துக் கலங்காது. மலை அலைந்தாலும் அவள் எண்ணம் அலையாது. போய்வருகிறேன். (மின்னொளி செல்லுதல். காவிரி அழுதல், மலையனார் கண் கலங்குதல்) நல்லப்பர்: பனிமலையைப் பெற்றெடுத்த பாரதத் தாய்போல, வடிவைப் பெற்றெடுத்த காவிரியே! உனக்கு ஏன் கலக்கம்? உலகத் தாயாக விளங்கும் ஒரு பெண்ணைப் பெற்ற தாய் என்று மகிழ்க. பெற்ற வயிற்றைப் பேணுக! மகளின் துறவுக்காக அவள் உறவை வெறுக்காதீர்கள். சிறந்த மகளாகப் போற்றுங்கள்! நான் இல்லறத்துக்கு அஞ்சித் துறவு பூண்டேன். வடிவு இல்லறங்களை வாழ்விக்கும் துறவுபூண்டாள். துறவியாகிய யானும் தொழத்தக்க நங்கையானாள். (நல்லப்பர் ஆறுதல் கூறிப் போகிறார்) காட்சி:12 (ஆற்றங்கரை, மரங்கள் அடர்ந்த சோலை. கதிரவன் சாய்ந்த பொழுது) பண்ணன்: (மணல் முகட்டில் அமர்ந்து கதிரவனைப் பார்த்துக் கொண்டு, தன் தலைமுடியைக் கையால் மெல்லத் தடவிக்கொண்டு) நெஞ்சே! இன்னும் சில நாள் பொறுத்திரு. காதற்பழம் உன் கைக்கும் வாய்க்கும் கிடைக்கும். இனி யாருடைய இசைவு வேண்டும்? அன்று எடுத்த நிழற்படத்தைப் பார். அது திருமணமானபின் எடுத்த படமாகத் தோன்றவில்லையா? பெண் பெண்தான். மெல்ல நகுவாள், சொல்ல நாணுவாள். ஆனால் காதலும் கள்ளமும் பெண் உள்ளத்தின் பிறவிப் பயிர்கள். புரிய வல்லவனுக்கு அது புரியும். வடிவின் வீட்டுக்கு அன்று ஒருநாள் சென்றபோது, எழுந்துநின்று வரவேற்ற பணிவிலிருந்தே, என்னைக் கணவனாக மதித்துவிட்டாள் என்று, நெஞ்சே! புரிய வில்லையா? அத்தான் என்று அமிழ்தமாகச் சொல்லுவாள், கேட்டு மகிழலாம் என்று (நெஞ்சில் கைவைத்து) எதிர்பார்த்தாய். நீ அத்தை மகனா அம்மான் மகனா? திருமணத்திற்கு முன் அத்தான் என்று அழைப்பதற்கு, நெஞ்சே உனக்குச் சொல்லிவைக்கிறேன். எதனையும் முறையின்றி எதிர்பார்க்காதே. என்னைக் கண்டதும் ஆடையைத் திருத்தி அமைத்து இழுத்து மார்பை ஒழுங்கு செய்து கொண்டாளே. இந்த ஓர் இன்பச் செய்கைக்குத் தமிழ்மொழியில் உள்ள இன்பச் சொற்கள் எல்லாம் திரண்டு ஒரு சொல்லானாலும் ஈடாகுமா? பல சொல்லினும் ஒரு செயல் பெரிது என்பதை வாழ்வில் மறவாதே. தமிழ்நாட்டு உடைக்கே தனிக்கவர்ச்சி உண்டு. தமிழ்ப் பெண்களின் நடைக்கே தனிக்கிளர்ச்சி உண்டு. அகத்திணை கண்டது தமிழினம் அல்லவா?இக்கவர்ச்சியையும் கிளர்ச்சியையும் ஆடை திருத்தும் அவள் அழகிற் கண்டேன். மணமான அன்று அதனை அவளுக்குச் சொல்லுவேன். என் வீட்டிற்கு வந்தாளே. வந்தபோது தன் வீடு போலவே நடந்துகொண்டாள். இவ்வீட்டு மருமகள் என்ற உணர்ச்சி அவளுக்குத் தோன்றிவிட்டதுபோலும். சிதறிக்கிடந்த பொருள் களை அடுக்கிவைத்தாள். கிழிந்த தாள்களைக் குப்பைக் கூடையில் போட்டாள். வந்தவர்க்குத் தண்ணீர் கொண்டு வந்துகொடுத்தாள். (சட்டைப் பையில் இருந்த நிழற்படத்தை கையில் எடுத்து வைத்துக்கொண்டு) சிரிக்கின்றாள் நான் பின்னே நிற்கின்றேன் என்று சிரிக்கின்றாள் நானும் சிரிக்கின்றேன். திருமணத்துக்கு முன் அவள் கூந்தல் மணம் கிடைக்கப் பெற்றேனே என்று சிரிக்கின்றேன். இப்படத்தைப் பார்த்தால் யாரும் சொல்லுவார்கள். நிற்பவன் கணவன் இருப்பவள் மனைவி என்று, படத்தில் அவள் மெய்யைத் தொடுவதற்கு என் விரல்கள் இவ்வளவு போட்டியிடு கின்றனவே. அவள் தன் மலர்மேனி கிடைக்கும்போது, விரல்களுக்குள் போரே உண்டாகி விடுமோ? நிழற்படத்திலுமா கண்கள் நிலம் நோக்கிப் பார்க்கவேண்டும்? நிலம் நோக்கும் இவ்வாட்கண்கள் திருமண முழக்கத்திற்குப்பின் என்னை நேரே நோக்கி என் உயிரைச் சாய்த்துவிடும். போர்க்களத்தில் முதுகு காட்டுகின்றவர்கள் தோற்றவர்கள். காதற்களத்தில் முதுகைப் பார்க்கின்றவர்கள் தோற்றவர்கள். காதற்போரில் தோற்ற ஆடவரின் குழந்தைகளே நாட்டுப் போரில் தோலா வீரர்களாக விளங்குவார்கள். ஆதலின் எதிர்பாராது காதற்படத்தில் பின் நிற்கும் தோல்வியைக் கண்டு மகிழ்கின்றேன். காதலில் நாணத்திற்கும் ஓர் அளவு வேண்டாமா? தன் சீறடிகளின் நகமும் என் நுண் கண்ணுக்குப் படுதல் கூடாதென்று, நல்லடிகளை நிலா தோயும் மெல்லாடையால் மறைத்துவிட்டாளே. இப்போதே இந்த வஞ்சகம் ஆகலாமா? காலடிகள் என் கண்ணுக்குப் புலப்பட்டுவிட்டால் கைதொட்டு வணங்கிவிடுவேன் என்ற அச்சமோ? பலர் இருக்கும்போது என் அறிவுடை நெஞ்சம் அப்படி நடந்து கொள்ளாது. (பையிலிருந்து ஒரு முல்லைப் பூவை எடுத்து) எனக்கு நல்வாழ்வு அளிக்கும் முல்லைப் பூவே உனக்கு நல்வாழ்வு உண்டு. வடிவின் கூந்தற்சோலையில் இருந்த நீ, இப்போது அவள் காதலனின் கைத்தடத்தில் இருக்கிறாய். நிழற்படத்தில் பின்னே நிற்கும்போது என் காதலியின் கருங்கூந்தற் பிடியிலிருந்து உன்னை மெல்லப் பிரித்தெடுத்தேன். பிரிவுக்கு நீ வருந்தி வாடிப்போனாய். வருந்தாதே. மண நாளிரவில் அவள் கூந்தலில் பூ அணியும்போது, மறவாது உன்னையும் சேர்த்து வைக்கிறேன். இன்று நிழலோவியத்தைக் காண்கின்றேன். நாளை உயிரோவியத்தைக் காண்பேன். நுகர்வேன், கலப்பேன். (நிலற்படத்திற்கு முத்தம் இ ஞஙஙஙஙஙஙங,ஙடுகிறான்) எல்லன்: (உரத்த குரலில்) ஏடா! என்ன முத்தம்? தலை நிமிராமல் வெறும் அட்டைக்கு இப்படி யாரும் முத்தமிடு வார்களா? காதற் பைத்தியம்கூடப் பெண் படத்துக்கு முத்தமிடுமேயன்றி, அட்டைத்தாளுக்கு முத்தமிடாதே. பண்ணன் அறிவுடையவன் என்று ஊரில் புகழ்கின்றார்கள். சீ! உன் அறிவு இதுவா? பண்ணன்: நீ எப்போதப்பா இங்கு வந்து சேர்ந்தாய்? இந்த அட்டையில் ஒரு படம் இருந்தது: அது எங்கே? எல்லன்: அது என்ன, தெய்வப்படமா? பண்ணன்: (நாணமின்றி) தெய்வப்படத்துக்கு யாராவது முத்தங் கொடுப்பார்களா? எல்லன்: குழந்தைப் படமா? பண்ணன்: குழந்தை தரும் படம். எல்லன்: ஓ! ஓ! காதலியின் படமா? காதலியைச் சோலைக்கு அழைத்து வந்து முத்தம் கொடுக்காமல், அவள் படத்துக்கு முத்தம் கொடுக்கிறாயே; என்ன, காதலில் தோல்வி அடைந்துவிட்டாயோ? பண்ணன்: முதலில் படத்துக்கு முத்தமிட்டுப் பழகுகிறேன். எல்லன்; இதற்கும் பயிற்சி வேண்டுமோ? நீ மிகவும் பெரிய காதலன். படத்துக்கு முந்திப் படம் இருந்த அட்டையை முத்திப் பழகுகிறாய். பண்ணன்: (சட்டைப் பைக்குள் கைவிட்டு) இதோ பார். என் காதலியின் படம். அட்டைப்பசை நீங்கியதால் காதலி பைக்குள்ளே இருந்துவிட்டாள். எல்லன்: (மாறுபட்ட முகத்தோடு) தன்னைக் காதலிக்காத ஒருத்தியைப் பைக்குள்ளே யாராவது வைத்திருப்பார்களா? அட்டையைக் கிழித்தெறி, படத்தைக் கிழித்தெறி, படமிருந்த சட்டையைக் கிழித்தெறி. பண்ணன்: எல்லா! விளையாடுகிறாயா? வினையஞ் செய்கிறாயா? என் காதலைச் சோதித்துப் பார்க்க நினைக்கிறாய். எல்லன்: எனக்கு ஏனப்பா இந்த வேலை. உண்மையான உண்மையைச் சொல்லுகின்றேன். பொய்யான பொய் என்று நீ நினைத்தால், இன்னும் பத்துப் படங்களைப் பையில் வைத்து முத்து. பண்ணன்: வேறு யாரையும் காதலிக்கிறாளா? இந்த இளம்வயதில் இவ்வளவு சூழ்ச்சியா? எல்லன்: தன்னைத்தானே காதலிக்கிறாள். பண்ணன்: அப்படி ஒரு காதல் உலகில் உண்டா? எல்லன்: இல்லாமல் என்ன? அதுதான் துறவு. கன்னியாகவே இருந்து தொண்டு செய்து புகழடைய விரும்புகின்றா ளாம். உன் படக்காதலி மடக்காதலி. பண்ணன்: நன்றாகத் தொண்டு செய்யட்டும். இந்தச் செய்தி உனக்கு எப்படித் தெரியும்? எல்லன்: வானொலிச் செய்தி போல ஊரே சொல்லுகிறது. உன் காதிற் படவில்லை. பண்ணன்: எங்கள் காதலைக் கெடுக்க யாரோ தவறான செய்தியைப் பரப்புகிறார்கள். எங்களுக்குள் பகைமூட்ட விரும்புகின்றார்கள். நல்ல குடும்பங்கள் இரண்டு மணவுறவு கொள்வது ஊருக்குப் பொறுக்கவில்லை. வடிவு துறவு கொண்டாள் என்று கேட்டவுடன், இவள் இல்லாவிட்டால் எனக்கு இன்னொருத்தி, பேடியான இவள் துறவியானதே சரி என்று வைவேன்; அதனை அவளிடத்துப் போய்ச் சொல்லாம். காதல் முரியும் என்று கயவர் சிலர் எதிர்பார்க்கிறார்கள். உடைவது உறுதி யாகாது; முரிவது காதலாகாது; சுடுவது தண்ணீராகாது; ஒடிவது இரும்பாகாது. எல்லா! ஒன்று கேள். என் வாழ்வும் வீழ்வும் வடிவோடே. வடிவு துறவியானால், பண்ணனும் துறவியாவான். எல்லன்: நண்பன் என்ற முறையில் சொல்லுகிறேன். உன் உறுதியை நான் மதிக்கவில்லை. உறுதி வாழ்வு அளிக்க வேண்டும். வெற்றுறுதி பிடிவாதம் ஆகும். வடிவும் நீயும் எப்போதாவது காதல் பற்றிப் பேசிக் கொண்டதுண்டா? பண்ணன்: காதலில் பேச்சுக்கு இடனில்லை. எல்லன்: நல்லது. பேச்சு வேண்டாம். பேசாமலே உறவு கொண்டதுண்டா? பண்ணன்: அப்படியும் இல்லை. எல்லன்: பின் எந்த அடிப்படையில் காதல் கொண்டாய்? பேச்சில்லாவிட்டாலும் கண்வீச்சாவது உண்டா? பண்ணன்: எதுவுமில்லை. எல்லன்: அப்படியாயின், உன் காதல் ஆதாரமற்ற காதல். ஆதாரம் ஒன்றும் இன்றி உறுதியை இவ்வளவு பலமாக யாராவது கொள்வார்களா? கண்ணாடியின்றி முகத்தை மாத்திரம் நீட்டிக் கொண்டிருப்பார் இலர். கேட்பாரின்றி மேடையேறுவார் இலர். உறுதியை விட்டுவிடு என்று நான் சொல்ல வரவில்லை. உறுதிகொள்வதே தவறு என்று சொல்ல விரும்புகிறேன். பண்ணன்: பிறந்த குறிப்புப் பார்த்து மணஞ் செய்து கொண்ட உனக்குக் காதலுள்ளம் தெரியாது. சரக்கு எங்கிருந்து வந்தது என்று கேட்பது போலக் காதல் பேச்சிற் பிறந்ததா? கண் வீச்சிற் பிறந்ததா? என்று கேள்விகள் போடுகிறாய். வாய்ப் பேச்சுக்கும் கண்காட்சிக்கும் பின் காதல் தோன்றுவதில்லை. காதல் வார்த்தையிலும் பார்வையிலும் இல்லை: காதல் என்பது இரண்டு உள்ளங்களில் ஒரே காலத்தில் தோன்றும் புத்துணர்ச்சி. வீரம் தோளிலும் வாளிலும் உண்டா? அறிவு தாளிலும் கோலிலும் உண்டா? வடிவின் உள்ளம் காதலுள்ளம் என்பதனை என் உள்ளம் அறியும். அவ்வறிவு பொய்யில்லை. நீ நம்பும்படி வெளிப்படை யாகச் சொல்லத்தக்க மெய்யும் இல்லை. எல்லன்: இந்தா வா, பண்ணா! காதலைப் பற்றி அளக்காதே உன் காதல் உள்ளக்காதல் என்று சொல்லுகிறாய். உன் உள்ளக்காதல் உப்புக்குக்கூடப் பயன்படாது. உள்ளச் சாதலாகவே ஆகிவிடும். நீ வடிவைக் காதலிக்கிறாய் என்று இதுவரை ஊருக்குத் தெரியாது காதல் விதையை எடுத்து நடு. அப்படியின்றி வடிவைத்தான் மணப்பேன் என்று உறுதி கொண்டாயானால், உன் உள்ளத் காதல் ஊரறியும் காதலாகிவிடும். இது அழகா? துறவுப் பெண்ணைக் காதலிக்கிறான். துறவைக் கலைத்துக் கெடுக்க நினைக்கிறான் என்ற பழிதான் மிஞ்சும். இது அறிவா? இடித்துரைப்பது நல்ல நண்பன் கடன். அதனால் உனக்குச் சொல்லுகிறேன். துறவியைக் காதலிக்காதே. காதலுக்காகத் துறவு கொள்ளாதே. சோலையில் மலர்கள் பல. உலகில் காதலுக்குப் பெண்கள் பலர். ஒருத்தியை நம்பி உயிரை விடாதே. (சீட்டியடித்துக் கொண்டு செல்கின்றான்) காட்சி -13 (நகரத்தின் நடுவே ஒரு பெரிய மண்டபம். குடும்ப அறங்கள் எழுதிய அட்டைகள் தூண்களில் தொங்குகின்றன. பெண்கள் பல்வேறு தொழில்பார்க்கும் காட்சிப்படங்கள், வீட்டுக் காட்சிகள், சமையலறைக் காட்சிகள், குழந்தைக் காட்சிகள் எல்லாம் பார்வைக்கு உள்ளன. அன்னையர் கழகம் என்று எழுதிய பெருந்துணி தொங்கவிடப்பட்டு உளது. (இரவு மணி எட்டு) பொன்னம்மை: (கைகூப்பி எழுந்து நின்று) அன்பு மடைந்தையர்களே! எழுபது வயதுக் கிழவியாகிய நான் எழில் பூத்த இளநங்கையர்களின் முகங்களைக் காணப் பெரிதும் மகிழ்கின்றேன். கிழவியானாலும், கோலூன்றி நடக்கும் கிழவியாகி விடவில்லை. (கைதட்டல்) நரையும் திரையும் தோன்றிய கிழவியாகி விடவில்லை. (மேலும் கை தட்டல்) வயதானாலும் நான் இளமையாக இருப்பதற்குக் காரணம், போட்டி செய்யாது குடும்பவேலைகளை உழைத்துப் பார்ப்பேன். எனக்கு ஆண் மக்கள் ஐவர்; பெண் மக்கள் அறுவர். பேரப்பிள்ளைகளும் பலர். என் குடும்பமே ஒரு சிற்றூராகும். நாட்டுக்கு இவ்வளவு மக்கட் செல்வங்களைப் படைத்தவள். அவளுக்கு ஒரு சிறப்புக் கொடுப்போம் என்று கருதியோ என்னமோ, அன்னையர் கழகத்தின் முதற்கூட்டத்துக்கு என்னை வரவேற்புத் தலைவியாகத் தேர்ந்தெடுத்திருக் கிறார்கள். (கை தட்டல்) குடும்பம் உயர வேண்டுமென்றால் மடி கூடாது. கூடாது. குழந்தை குட்டிகள் எல்லாரும் மெய்வேலை பார்க்க வேண்டும். குடும்பத்தார் ஒருவரை ஒருவர் குறைகூறிக்கொண்டிருத்தல் ஆகாது. மேல்ஆக வேண்டியதையே சிந்திக்க வேண்டும். நடந்தது சரி, சரி; இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம் என்று தட்டிக் கொடுத்துப் போகவேண்டும். பாற்பானைக்குள் பூனை புகுந்தது போல இன்று குடும்பத்தில் அரசியல் புகுந்துவிட்டது. கணவன் ஒரு கட்சி, மனைவி ஒருகட்சி, மகன் ஒருகட்சி, மகள் ஒரு கட்சியாக மேடை ஏறுகிறார்கள். இதனால் நாடும் சிறவாது, குடியும் சிறவாது. பெண்ணே குடும்பத்தின் அடித்தளம். அவள் வயிறே உலகின் பிறப்பிடம். இன்று பெண்ணுலகமும் புகழாசை கொண்டு தடுமாறுகின்றது ஒரு குடும்பத்தில் கணவனைவிடத் தான் புகழைடைய வேண்டும் என்று மனைவி விழைவதும், மனைவியைவிடத் தன்புகழ் செய்தித்தாளில் அடிக்கடி வரவேண்டும் என்று கணவன் விரும்புவதும் குடிக்கு நலமா? குழந்தைகட்கு நலமா? குடிக்கும் குழந்தைக்கும் நலமில்லாத ஒரு போக்கு நாட்டுக்கு நலமாக இருக்குமா? உலகம் ஓர் அலைகடல், குடும்பம் ஒரு பெரும் புணை; அமைதித் தெப்பம். அதனைப் புகழ்க்குன்றில் தாக்கி ஓட்டை யாக்கிவிடுதல் கூடாது. கடமை என்னும் கரைநோக்கி அப்புணையை அணைத்துக் கட்டுதல் வேண்டும். குடும்பப் படகோட்டி பெண்ணாவாள். இவ்வுண்மைகளை உணர்த்து வதற்கும் உணருவதற்கும் நமக்கு ஒரு கழகம் வேண்டும். இந்நன்னோக்கத்தால் அன்னையர் கழகத்தை இந்நாள் நிறுவியிருக்கிறோம். எல்லாப் பெண்களும் இக்கழகத்தின் உறுப்பினர்கள் ஆவார்கள் என்பது என் நம்பிக்கை. முதற்கூட்டத்திற்குத் திரளாக வந்த உங்களை எல்லாம் வருக வாழ்க என்று வரவேற்கிறேன். நறுங்கொன்றை : (வணக்கத்தோடு எழுந்து நின்று) நல்லறம் மிக்க இல்லற மாதர்களே) தாய்மார்கள் நிறைந்த இம்மண்டபம் தாமரைகள் பூத்த ஒரு பெரும் பொய்கைபோல எனக்குக் காட்சியளிக்கிறது. வீடு காக்கும் இல்லறப் பெண்கள், மெய்யாகச் சொன்னால், நாடுகாக்கும் தாய்ப் படைகள் ஆவார்கள்; இப்படைகளுக்கும் தக்க கல்வி, தக்க பயிற்சி, தக்க உணவு அளிக்கவேண்டும். நாட்டுப் படைக்குள் எவ்வளவு ஒற்றுமை வேண்டுமோ அவ்வளவு ஒற்றுமை வீட்டுப் படைக்குள்ளும் வேண்டும். பொன்னம்மையாரின் வரவேற்புரையைக் கேட்டபோது என் உள்ளம் அழுதது. என் அறிவு துடித்தது. என் உடல் ஒடுங்கிற்று. எனது குடும்பத் தொல்லைகள் என் மனக்கண்முன் தோன்றின. ஒரு சிறு காரணத்தால் எங்கள் பெருங்குடும்பமே பாழாயிற்று. ஊசித் துவாரத்தால் பெரும்பந்தும் உயர்ந்து போகும் தன்மை இழந்து போகுமல்லவா? ஒரு பத்து ரூபாய் பற்றி என் தந்தைக்கும் என் மாமனுக்கும் நடந்த பேச்சு முற்றித் தடியாகி அடியாகி வழக்கமாகி இழவாகி€ முடிந்தது. அம்மை நோயுற்ற என் கணவனைத் தீண்டுவாரில்லை. கருவுற்ற என்னைக் கவனிப்பார் இல்லை. குழந்தைச்சுமை தாங்கித் தெருவிடைக் கிடந்தேன். இது விதியின் பயன் என்றும், இது பாவதுமுடையது என்றும் சமய சாத்திரப் பெரியோர்கள் என் காது கேட்கக் கூறிக் கொண்டு சென்றனர். (கேலிச்சிரிப்பு) ஓர் நல்லுயிர் என் ஈருயிரை ஏறிட்டுப் பார்த்தது. என் வயிற்றைக் கருவறையாகவும், வயிற்றுள் வளரும் கருவை இறைவடிவாகவும் பார்த்தது. இரு கையாலும் என்னை வாரி அணைத்து, மருத்துவமனைக்கு அசையாது எடுத்துச் சென்று, செலவையெல்லாம் பொறுத்து, அகத்தில் இருந்த இறையை என் முகத்துக்குக் காட்டியது. அந்த நல்லுயிர்தான் இவர். (என்று வடிவழகியை வணங்கிக் காட்டுகிறாள். எல்லோரும் இரண்டு மணித் துளிவிடாது கை தட்டுதல்) தனக்கென ஒரு நூல் தாங்காது. நூல் தாங்கியவர்களை யெல்லாம் காப்பதற்காகப் பிறந்த தொண்டுப் பிறவி நம் வடிவழகி. அவர் தோற்றிய இக்கழகம் தொண்டுக் கழகம். இக்கழகத்தில் எல்லாப் பெண்களும் சேரலாம். கட்டணம் யாதும் இல்லை. சில குடும்ப வேலைகளாவது நாள்தோறும் பார்க்க வேண்டும் என்ற கண்டிப்பான விதிகள் மட்டும் உண்டு. வடிவழகி: (எழுந்து நின்று கை கூப்ப, கூட்டம் ஆரவாரித்தல்) மதிப்பிற்குரிய தாய்மார்களே! அறங்களுள் இல்லறம் சிறந்தது. செல்வங்களுள் குழந்தை சிறந்தது. ஒற்றுமைகளுள் குடும்ப ஒற்றுமை சிறந்தது. இன்பங்களுள் குடும்ப இன்பம் சிறந்தது. அதுபோல் கழகங்களுள் அன்னையர் கழகம் சிறந்தது என்று நீங்கள் அறிவீர்கள். (கையொலித்தல்) முதற்கூட்டமாயினும் எங்கள் அழைப்பை ஏற்றும், அழைப்பைக் கேட்டும், காலந்தவறாது குழுமியுள்ள உங்களை யெல்லாம் பாராட்டுகிறேன். குடும்பப் பெண்களுக்குக் கடமை வரவர மிகுதி. எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்குச் சென்று விடுகிறார்கள். கணவன்மார்கள் அலுவலகம் சென்று விடுகிறார்கள். அதனால் குடும்பத் தலைவி கூட்டுவது துவைப்பது முதல் எல்லாம் தானே பார்க்கவேண்டியவள் ஆகின்றாள். சில வீடுகளில் பேரப்பிள்ளைகளுக்கும் பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது (சிரித்தல்). இந்நிலையில் சாயுங்காலத்து நம் கழகம் கூடுதற்கியலாது. ஆதலால் பெரும்பாலோர்க்கு ஒத்து வருமுறையில் இரவு எட்டுமணிக்குக் கூட்டத்தை அமைத் துள்ளோம். இரவச்சம் போக்குவரத்துக் குறைவு ஆகிய தொல்லை களால் சிலர் வரமுடியாமலும் போவதுண்டு. இந்தக் கூடடத்திற்கு எண்பது தொண்ணூறு வயதாகிய இல்லறப் பெரியார்கள் பலர் வந்திருப்பது கண்டு பெருமகிழ்வு அடைகின்றேன். நறுங்கொன்றையார் சொல்லியடி, ஓர் இரக்க நிகழ்ச்சி என் வாழ்வை மாற்றிவிட்டது. ஒரு குடும்பத்தார் இன்னொரு குடும்பத்தார்க்கு உதவவேண்டும். ஒரு தாய் மற்றொரு தாய்க்கு உதவ வேண்டும். உதவும் மனப்பான்மை பெண்ணினத்துக்கு வளரவேண்டும். இரக்கமில்லாதவள் அரக்கியாவாள் உதவி செய்யும் உள்ளம் இக்காலத்து வரவரக் குறைந்து வருகிறது. பிறர்க்கு உதவி செய்யமுடியாதபடியும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தொல்லைகள் பெருகி வருகின்றன. குடும்பங்கள் தம்முள் உதவிசெய்து கொள்ளும் வளமான நிலையில் இல்லை. நறுங்கொன்றைக்கு நான் உதவும்போது, உலகம் உதவவில்லையே என்று வருத்தப்படவில்லை. உதவும் நிலையில் உலகம் வளமாக இல்லையே என்றுகண்டுகொண்டேன். குடும்பமாகிவிட்டால், மற்றவர்க்கு உதவிசெய்யும் எண்ணம் திடீரென்று தோன்றாது என்றும் கண்டுகொண்டேன். மணமாகாத இளைஞன் குடும்ப நினைவு என்னும் தடையின்றி ஒரு முகமாகப் போரில் ஈடுபடுவான். அதுபோல் ஒரு குடும்பவேலிக்கு உட்பபடாத கன்னிதான் பல குடும்பங்கட்குத் தன்னலம் கடந்து உதவமுடியும் என்று எனக்குட்பட்டது. ஒழுக்கமுடைய கன்னியாக இருந்து உலகத்தொண்டு செய்வதற்கு என் பிறவியை ஒப்பித்து விட்டேன். இல்லறத்தை நான் வெறுக்கவில்லை. மதிக்கிறேன். இல்லறத்தாரை வெறுக்க வில்லை. மிகவும் போற்றுகிறேன். வெறுப்பதாக இருந்தால் இத்தகைய கழகத்தை விருப்பத்தோடு அமைத்திருப்பேனோ? நான் உங்களை மதிப்பது போல, உங்கட்குத் தொண்டாற்ற வந்த என்னை, மகளாகவும் தங்கையாகவும் நீங்கள் மதிக்கும் ஒரு நன்றியைத்தான் நான் மிகவும் விரும்புகின்றேன். பெண்கள் தங்கள் இல்லற அறிவுகளை ஒருவர்க்கொருவர் பரிமாறிக் கொள்ளுதல் நல்லது. அதற்கு இக்கழகம் ஒரு நல்லிடம். கணவன் மனைவி உறவைச் சிதையாது வளர்த்தல், பெருகிய குழந்தைகளைப் பேணி வளர்த்தல், பழக்க வழக்கங் களை மாற்றி அமைத்தல், சமையல் முறைகளில் காலச் சிக்கனம் செய்தல் குடும்பப் பெண்கள் வருவாய்க்குத் தொழில்கள் செய்தல் முதலான கருத்துக்களை நாம் ஒருசேரக் கூடி ஆராய வேண்டும். நீண்ட வெற்றுச் சொற்பொழிவுகளாக நம் கழகச் செயல்அமைதல் கூடாது. பலவாறு கேள்விகள் கேட்டுப் பிறர் வாழ்விற் கண்டதைத் தெரிந்து கொள்வோமாக. இனி, கேள்விகள் கேட்பார் கேட்கலாம். அவற்றிற்குத் தக்க விடை கூறுவாரும் கூறலாம். (கேள்வி யரங்கம்) ஒருத்தி: இக்கூட்டத்திற்கு ஆடவர்கள் வருவதை இசையலாமா? நம் கருத்தை அவர்கள் நேரடியாகத் தெரிந்து கொள்வது நல்லதில்லையா? (கை தட்டல்) பொன்னம்மை: நல்ல கேள்வி. கேள்வியை வரவேற்கிறேன். ஆடவர்களை வரவேற்க விரும்பவில்லை. நாம் சிறிது இசைந்தாற்போதும், இத்தகைய கூட்டங்கட்கு ஆடவர்கள் படக்காட்சிக்குக்கூடப் போகாமலே திரும்பி விடுவார்கள். ஆண்கள் இருந்தால், நாணுடைப் பெண்கள் தங்கள் கருத்துக்களை மனம்விட்டுச் சொல்வார்களா? கூட்டம் இருக்குமே யன்றிக் கூட்டத்தின் பயன் இராது. ஒருத்தி: ஆண்களும் சமையற் பழகிக்கொண்டால், பெண்டிர்க்கு ஓரளவு விடுதலை கிடைக்குமல்லவா? பொன்னம்மை: ஆண்களும் குழந்தை பெற்றுப் பால் ஊட்டிக் கழிவெடுத்தால், பெண்களுக்கு எவ்வளவு எவ்வளவோ விடுதலையும் கிடைக்கும். ஆண் பெண் என்ற பாகுபாடும் மறைந்துவிடும். (பெருஞ்சிரிப்பு) நறுங்கொன்றை: இக்காலத்து ஆடவர்கள் சமையற் கலையை ஓரளவேனும் தெரிந்து கொள்வது நல்லது; எனினும் சமையலுரிமை பெண்ணைச் சார்ந்தது. பெண் சமையலை மேற்கொண்டாற்றான், செலவு குறையும் உணவு பக்குவமாகும். பாத்திர பண்டங்களும் நெடுநாள் உயிரோடியிருக்கும். தையற்கலையைவிடச் சமையற்கலை நமக்குக் கட்டாயம் தெரியவேண்டும். தாய்மார்கள் பொறுமையோடு பெண் குழந்தைகட்குக் கற்றுக் கொடுக்கவேண்டும. பொன்னம்மை: பிறர் ஆக்கிய சமையலையாவது மனைவி கணவனுக்குப் பரிமாறலாம் அல்லவா? இன்று பெருஞ் செல்வப் பெண்கள் தங்கள் கணவனார்க்கு வேலையாளை விட்டுச் சாப்பாடு போடச் சொல்லுகிறார்கள். இது குடும்பப் பண்பையும் அன்பையும் வளர்க்காது. சோறு ஆக்கிப் படைக்கும் நங்கையே கொழுநனது உள்ளத்தை கொள்ளை கொள்கின்றாள். ஒரு கிழவி; இன்று பெரும் பெண்கள் இருசடை போட்டுக் கொள்வது எனக்குக் கவர்ச்சியாகப்படவில்லை ஒருத்தி: உங்கட்குக் கவர்ச்சியாகப் படாவிட்டால் குற்றமில்லை (சிரித்தல்) ஆடவர்க்குக் கவர்ச்சியாக இருக்கிறதா? இல்லையா? வடிவழகி: எத்தனை சடையும் போட்டுக் கொள்ளலாம். எல்லாம் கூந்தலின் கனத்தைப் பொறுத்தது. ஒரு சடைக்கே கூந்தல் வளம் இல்லாதபோது, பிடிவால் போலக் கூந்தலைப் பின்னிக் கொள்ளுதல் அழகாகத் தோன்றவில்லை. நாட்டுப்புறத்து நங்கையர்கள் இலைக் கொத்துப்போலத் திரண்ட குழலுடையவர்களாக விளங்குகிறார்கள். அவர்களைக் கண்டு நகரப் பெண்கள் பொறாமைப்பட வேண்டும். நறுங்கொன்றை: கூந்தல் குட்டையான நங்கை கொம்பில்லா மாடு போல்வாள். பெண்களுக்கு உள்ள இலக்கியச் சிறப்பெல்லாம் கூந்தல் வளத்தால் வந்தது. இந்நாட்டு இலக்கியம் செழிக்கவேண்டும் என்றால், மடந்தையரின் கூந்தல் நெளிந்து நீண்டு அடர்ந்து நிலந் தொடவேண்டும் அப்போதுதான் ஆடவரின் மனம் தொடும். ஒருத்தி: இனி கூந்தலை வளர்ப்பது முடியாது. மேனாட்டுப் பெண்கள் போலக் கத்தரித்துக் கொண்டால் என்ன? ஒருத்தி: (கேலியாக) மேனாட்டுப் பெண்கள் போலக் கூந்தல் நீளத்தைக்குறைத்துக் கொள்வதாயின்,புடைவை நீளத்தையும் குறைத்துக் கொள்ளவேண்டும். ஒருத்தி: பெண்களுக்கு முடிதிருத்தும் நிலையம் ஏற்படுவதை நாம் தடை செய்ய வேண்டும். செந்நிற மங்கை: மக்களினத்தில் கருப்பு, சிவப்பு, வெளுப்பு, மஞ்சள் என்ற நிறவேற்றுமை கூடாது. எல்லாரும் ஒத்த ஓரினம் என்று பேசுகின்றோம். ஆனால் நடைமுறையில் காண்பதென்ன? வெயில்மிகுதியால் இந்தியத் தோல் கறுப்பாகின்றது. இது நாட்டின் இயற்கை. எனினும் நம்நாட்டுஆடவர்கள் கருநிற மங்கையர்களை மணஞ் செய்யப் பின் வாங்குவதேன்? .இது நாட்டை அவமதிப்பதாகாதா? செந்தோற் பெண்களையே தேடித் திரிதல் பொருந்துமா? ஒருதாய்: தொட்டால் ஒட்டிக்கொள்ளும் கறுப்பண்ண சாமிகள் கூட, பத்தரை மாற்றுப் பசும்பொன் அனைய பாவையர்கள் வேண்டும் என்கிறார்கள். வடிவழகி: வெள்ளைக்கார ஆட்சியின் விளைவு இது. உரிமை பெற்ற நம் ஆட்சியில் வரவர நிறக் காதல் மாறிவிடும் என்று நம்பலாம். பொன்னம்மை: மன்மதனுடைய மனைவிகூட நல்ல கருப்பாயி என்பதனை ஆடவர்கள் அறியவேண்டும். இன்பம் நிறத்திலன்று; இளமையிலும் நாணத்திலும் உள்ளது. ஒருத்தி: இந்நாட்டில் தண்ணீர் பிடிக்கும் குழாய்களை அடைத்துவிட வேண்டும். குளங்களைப் பெருக்க வேண்டும். வடிவழகி: புதிய வீரமான கருத்தாக இருக்கின்றதே. ஒருத்தி: குழாய்களில் வேண்டும் காலத்தெல்லாம் தண்ணீர் வருவதில்லை. வேண்டுமளவு குழாய்களும் இருப்பதில்லை. அதனால் குழாயடியில் வரிசையாகக் குடங்களும் அண்டாக்களும் பானைகளும் சட்டிகளும் பாத்திரக்கடை போலக் குவிந்துவிடுகின்றன. பெண்கள் ஊர் வம்பெல்லாம் பேசிப் போரென்று சொல்லுமளவுக்குச் சொற் குண்டு வீசுகிறார்கள். குழாயடியில் நம் நாட்டின் நாணமும் மானமும் போகின்றன. நல்ல பெண்கள் கூடக் குழாய்க்குச் சென்றால், இலம்பாடிகளாகப் பேச்சில் வளர்ந்து விடுகிறார்கள். குளங்கள் ஊர்க்காவல் வைத்து நன்றாக இருந்தால், பெண்ணுலகத்திற்குப் பெருமையுண்டு. ஒருத்தி: குளமும் வேண்டும், குழாயும் வேண்டும் என்பது என் கருத்து. பொன்னம்மை: சில வீரப்பெண்கள் குழாயையே பிடுங்கிக் கொண்டு போய்விடுகிறார்கள். இயற்கை வழிகளைத் தான் நாடு பொதுவாக நம்பவேண்டும். செயற்கை வழிகள் ஏதோ தொல்லைக் காலத்துத் தேவையாக இருக்கலாம். இப்போது தலைகீழாக இருக்கிறது. தொல்லைக் காலத்துத்தான் குளத்தைப் போய்த் தூர்வை எடுக்கிறார்கள், தோண்டுகிறார்கள். நாற்பது வயதினள்: (பொன்னம்மாவைப் பார்த்து) குடும்பக் கட்டுப்பாடு பற்றித் தங்கள் கருத்து என்ன? பொன்னம்மை: இது பற்றி நானே வரவேற்புரையில் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன். குழந்தைகள் பிறக்கும் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதை நாம் குடும்பக் கட்டுப்பாடு என்று கூறுகின்றோம். குழந்தைகளைக் குறைத்துக் கொள்வதினாலே குடி செழித்துவிடாது, நாட்டின் பொருளியல் செழித்துவிடாது. குழந்தைகள் பிறக்காதபடி உடலைத் திரிபு படுத்திக் கொண்ட பலரின் வாழ்க்கை நலமாக இல்லை. இனிக் குழந்தைஇல்லை என்ற துணிவால், இன்பம் மீதூர்ந்து துன்பம் உறுகின்றனர். குழந்தைகள் பல இருந்தால் அல்லவா கடமைகள் பெருகும்? கவலைகள் வளரும்? காரியங்கள் விரியும்? குழந்தை குறைந்தவர்கள் கடமையெண்ணம் குறைந்து காமவெண்ணம் மிக்கவர்களாக மாறிவிடுகின்றனர். குழந்தைப் பேற்றைக் கொன்ற பின்னும் நிறைந்த இன்பம் துய்க்கலாம். அதில் ஓர் குறைவுமில்லை என்று ஆடவர்களுக்கு ஆசையை ஊட்டுவதால், பெண்ணினத்துக்கு உய்தியில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்! உண்மையில் குடும்பக் கட்டுப்பாடு என்பது இன்பக் கட்டுப்பாடாக விளங்கவேண்டும். நம் பெருநாட்டிற்குக் கோடி கோடி வீரர்கள் என்றும் தேவை. ஒரு பெரும்போர் நடக்குமாயின், ஒருநாளில் பதினாயிரம் படை கொல்லப்படலாம். அப்படைக்கு ஈடாக ஒரு நாளில் பதினாயிரம் குழந்தைகளை ஈனமுடியுமா? நீங்களும் எண்ணிப் பாருங்கள்! ஒருதாய் வேண்டுமென்றே மலடியாவதோ, மலடியாக்கப்படுவதோ முடிவில் பாரதத் தாயை மலடியாக்கிய தாகும் என்று வருங்காலச் சிந்தiயோடு அறிவுறுத்த விரும்புகின்றேன். (ஆம்,ஆம்) ஒருவன் ஒருத்தி என்பது நம் நாகரிகமுறை. நம்அரசியலும் வகுத்த முறை. இக் கற்பு முறையில் குழந்தைகள் மிகப் பல்கி விடுவதில்லை. சிலர் வாழ்க்கையில் குழந்தைகளே தோன்றுவதில்லை. இந்நிலையில் குழந்தைக் கட்டுப்பா டு பணத்தாலும் படிப்பாலும் வலியுறுத்தப்படுமாயின், அது வாழும் நாட்டிற்கு வலிவு தராது. ஆதலால் போர்க் களத்துக்கு வேண்டும் மக்கட்படைகளை உங்களால் முடிந்தவரை குடும்பக்களத்துப் படைத்து அளியுங்கள். மக்கட்படையே நாட்டையும் தற்காக்கும், குடியையும் தற்காக்கும் என்பது என் அதிராக் கருத்து. வடிவழகி: பலர் சிந்தனையைக் கேட்டீர்கள். இங்குக் கேட்டவற்றை உங்கள் கணவன்மாருக்குச் சொல்லி மேலும் சிந்தியுங்கள்! நல்ல சிந்தனைப்படி நடக்க முயலுங்கள்! உங்கள் வாழ்வில் ஏதேனும் சிக்கல் வரும்போது, கழகத்திற்கு எழுத வேண்டுகின்றேன். உங்கள் குறிப்பை மிகவும் மறை பொருளாகப் போற்றுவோம்; பெருமை குறையாது ஆராய்ந்து தக்க நெறி கூறுவோம், ஐயப்பட வேண்டாம். முதியவள்: கல்வி யறிவு ஒழுக்கம் மிக்க நங்கை வடிவழகியார் திருமணம் புகாது நம் பொருட்டுத் தொண்டு செய்ய வந்த துணிவை உங்கள் சார்பாகப் பாராட்டுகின்றேன். (பெருத்த கைதட்டு) அவர் புகழ் மணம் பரவுக, பிறர்க்கென வாழும் பெண்மகவை ஈன்றருளிய பெற்றோர்களை நாம் வணங்குகின்றோம். எனக்கு இப்போது வயது நூறு. ஒரு வடிவழகியின் தொண்டினைக் காணுதற்குத்தான் நான் இவ்வளவு நாள் வாழ்ந்திருக்கிறேன். என் நெடுவாழ்வு இன்று பெரும்பயன் பெற்றது. வடிவு என்னினும் நிறைந்த வாழ்நாள் பெறுக. திருக்குறளின் அதிகாரங்கள் போல நெடிது நோயின்றி வாழ்க. காட்சி: 14 சீரனார்: வாருங்கள், வாருங்கள் இன்று வருவீர்கள் என்று எதிர்பார்த்தோம். வையை! ஐயா வந்திருக்கிறார்கள். (வையை அடுப்படியிலிருந்து வருதல்) வையை: அவர்களுக்குப் பல சோலி. நல்லப்பர்: துறவிக்கு என்ன வேலை? எங்காவது சுற்றித் திரிவதுதானே வேலை. ஆமாம். செய்தியெல்லாம் தெரியுமல்லவா? சீரனார்: உள்ளூரிலிருந்தும் தெரியாமலா இருக்கும்? ஊரெல்லாம் அறிந்த செய்தியாச்சே. பாவம்! பெற்றோர்கள் எப்படிப் பொறுத்துக் கொள்வார்கள்? நல்லப்பர்: பொறுக்காது என்ன செய்வது? பெருஞ்சுமையைத் தலை பொறுக்கின்றது; பெரிய மலையை நிலம் பொறுக் கின்றது! பேருடம்பைச் சிற்றுயிர் பொறுக்கின்றது. பெருங்கவலையாயினும் பெற்றோர் பொறுக்கத்தான் வேண்டும். அறிவுப் பொறுமை வாழ்விற்கு ஆற்றலைத் தரும். சீரனார்: இக்காலத்துப் பிள்ளைகளை ஏதாவது கண்டிக்கப் போனால், ஏன் பெற்றீர்கள் என்று கேட்கிறார்களே? வையை: ஆண்கள் கொள்ளும் பழக்கங்கள் பெண்களையும் பிடித்துக்கொண்டு விடுகின்றன. பெண்கள் சுருட்டுக் குடிக்கிறார்கள். பீடி குடிக்கிறார்கள், பொடி போடு கிறார்கள். ஆண்களைப் போலப் பிள்ளை பெறாது இருக்க வேண்டும் என்று துறவு கொள்கிறார்கள். நல்லப்பர்: வையை சொல்வது மிகவும் பொருத்தம். ஒரு சமுதாயத்தில் ஆண் பெண் இருபாலருமே நல்ல பழக்கமுடையவர்களாக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்திலும் அப்படியே. கெட்ட பழக்கங்களுக்கு மேலும் கெடுக்கும் ஆற்றல் உண்டு. அழுகிய பழம் அடுத்த நல்ல பழத்தை அழுக வைத்துவிடும். சீரனார்: உங்கள் துறவைக் கெட்ட பழக்கம் என்று யார் கூறுவார்கள்? நீங்கள் கூட்டுவித்த குடும்பங்கள் எத்தனை? வாழ்வித்த குடும்பங்கள் எத்தனை? எங்கள் இல்லற நலத்துக்கு உங்கள் போன்ற துறவோர் துணை வேண்டும். நல்லப்பர்: பாருங்கள், என்னால் என்ன செய்யமுடிகிறது? நல்ல குடும்பங்கள் இரண்டுக்கு உறவு செய்துவைத்து விடுவோம் என்று நினைத்தேன். எல்லாம் ஒத்து வந்தது போலத் தோன்றி. குழந்தை கண்ட கனவு போலாயிற்றே. வையை: அதனாலென்ன? நம் பண்ணனுக்கு எத்தனை எத்தனையோ? வடிவு துறவியானால் நமக்கென்ன கவலை. வடிவைவிட நல்ல வடிவுகள் பண்ணன் அடியில் வந்துவிழும். எல்லாம் நன்மைக்கே. நல்லப்பர்: ஆம். வையை! உங்கள் குடும்பத்துக்கோ உங்கள் பையனுக்கோ யாதொரு குறைவும் இல்லை. பண்ண னுக்குத் திருமணம் என்று வாய்விட்டாற் போதும் பறந்து வந்து பிறப்பேடு கேட்பார்கள். என்றாலும் முதலில் எண்ணிய உறவு நடக்கவில்லையே என்று உங்கள் மனத்தில் ஒரு சிறுவருத்தம் இல்லையா? சொல்லுங்கள்! யாழி: (குறுக்கிட்டு) நம் எண்ணம் வலுவுடையதாக இருந்தால், எண்ணியபடி மணம் ஏன் நடவாது என்று கேட்கிறேன். சீரனார்: நம் எண்ணத்தில் என்ன மெலிவு? எண்ணம் பழுத்தும் செயல் பழுக்கவில்லை. நல்லப்பர்: யாழி சொல்லியதைக் கேட்டவுடன் எனக்கு ஒரு எண்ணம் படுகிறது. இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போமே. இளமை வேகமான பருவம். எந்த மாறுதலும் வந்து போகும். காதல் உணர்ச்சி, துறவுணர்ச்சி, தற்கொலை யுணர்ச்சி இவையெல்லாம் இளமைக் காட்டாற்றில் தோன்றும் எண்ணக் குமிழிகள். வடிவுக்குப் பண்ணனிடத்தும், பண்ணனுக்கு வடிவிடத்தும் அன்பு உண்டு. காதல் துறவானது போலத் துறவு நல்ல காதலாகவும் வந்துவிடலாம். பண்ணனும் இப்போது தான் படிப்பு முடித்திருக்கிறான். இரண்டோர் ஆண்டுகள் கடைவேலையில் பழக்கலாமே. வையை: பொறுத்துப் பார்ப்பது குடும்பத்துக்குக் கேவலம். துறவியாகச் சென்ற பெண்ணுக்குக் காத்துக் கொண்டிருக் கிறார்களாம் என்று ஊர் கேலியாகப் பேசும். சோறு திரும்ப அரிசியாகும் என்று யாராவது காத்துக் கொண்டிருப்பார்களா? துறவியாகச் சென்றவள் மனைவியாக வருவாள் என்று நினைப்பது மனைவி யானவள் குமரியாக ஆவாள் என்று நினைப்பதைப் போல இருக்கிறது. நல்லவேளை, திருமணத்துக்கு முன்னே அவள் துறவியாய்ப் போனது. இப்போது அவள் பிறந்த குடும்பத்துக்குத்தான் பெருமைக் குறைவு. நம் பையனுக்கு இந்த மாதத்துக்குள் மணத்தை முடித்துவிட வேண்டும். அல்லது மணம் பேசியாவது முடித்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் வடிவுக்குப் புத்தி வரும். ஊராரும் நம்மை மதிப்பார்கள். யாழி: (குறுக்கிட்டு) எதற்கும் அண்ணனிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடுவது நல்லது. வையை: அண்ணன் என்ன சொல்லப் போகிறான்; அம்மா அப்பா பார்த்துச் செய்வது சரி என்று சொல்லுவான். இதுவரை அப்படித்தான் சொல்லி வருகிறான். கிழித்த கோட்டைத் தாண்டமாட்டான். சீரனார்: யார் கிழிந்த கோட்டை? திருமணச் சேதியிலே அவனவனையும் கோடு கிழித்துக் கொள்ளச் சொன்னால் தான் நல்லது. பழைய காலம்போல நினைத்துக்கொண்டு ஏதாவது ஒரு பெண்ணை மணம் பேசிக்கட்டி, அவனுக்குப் பிடிக்காமல் அவன் துறவு கொண்டால், அது மிகக் கேவலம் இல்லையா? நல்லப்பர்: (யாழியைப் பார்த்து) அண்ணன் போக்கு கெட்டிக்காரத் தங்கைக்குத் தெரியாமலா இருக்கும்? யாழி: தெரிந்துதான் அண்ணனிடம் ஒரு வார்த்தை கேட்டு விடுவது நல்லது என்று அப்போதிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன். சீரனார்: கேட்டால் என்ன சொல்லுவான்? யாழி; மணந்தால் வடிவைத்தான் மணப்பேன்..... சீரனார்: இல்லாவிட்டால்.... வையை : (சினந்து) இல்லாவிட்டால் என்ன செய்வானாம்? யாழி: இல்லாவிட்டால் இருப்பதுபோல இருப்பாராம். சீரனார்: என்னம்மா! நீ சொல்வது விளங்கவில்லையே. யாழி: விளக்கமாக என்ன சொல்வதற்கு இருக்கிறது? உள்ளது போல இருப்பார். நல்லப்பர்: உன் அண்ணனே உனக்கு விளக்கமாகச் சொல்ல வில்லையா? இல்லை. நீதான் விளக்கமாகச் சொல்வதற்குத் தயங்குகிறாயா? தெரிந்ததை வெளிப்படையாகச் சொல். அப்போதுதானே மேல் ஆக வேண்டியதைப் பார்க்கலாம். யாழி: அண்ணன் என்னிடம் தெளிவாக உறுதியாகச் சொல்லி விட்டார். வடிவை மணக்காவிட்டால், இப்போது இருப்பது போல எப்போதும் மணம் செய்து கொள்ளாது இருப்பாராம். (வையை ஓவென அழுதல்) நல்லப்பர்: காதலின் தன்மைதான் புரியவில்லை என்று எண்ணியிருந்தேன். துறவியின் தன்மையும் புரியவில்லை. எது எது கருதியோ துறவியாகி விடுகிறார்கள். காதலுக்காக வீட்டை விட்டுப் போவார்கள், ஓடுவார்கள் என்று அறிந்திருக்கிறோம். இது என்னவென்றால் காதலை விட்டுவிட்டு வீட்டில் இருக்க விரும்புகிறார்கள். காதலுக்குப் பிறர் இடையூறு செய்வார்கள் எனக் கேட்டிருக்கிறோம். இங்கு என்னவென்றால், காதல் கொண்டவர்களே இடையூறு செய்து கொள்கிறார்கள். பிள்ளைகளைப் பெற்றபின் பெற்றோர்கள் துறவியர் ஆதல் உண்டு; இப்போது என்ன பார்க்கிறோம் என்றால், பெற்றோர்கள் நன்கு இல்லறம் நடத்திக் கொண்டிருக் கையில் பிள்ளைகள் துறவடைகிறார்கள். யார் நோவது? யாரை நோவது? வையை: (தனக்கே) பண்ணா! உன்னை என் கண்ணா என்று சொல்லித் தாலாட்டி வளர்த்தேன். வடிவு செய்த கேவலத்தினும் நீ செய்யும் கேவலந்தான் உண்மையில் என் நெஞ்சைக் கொல்லுகிறது, வீரனைப் பெற்றேன், பண்பனைப் பெற்றேன், அறிஞனைப் பெற்றேன், அழகனைப் பெற்றேன், புகழனைப் பெற்றேன் என்று புகழ்ந்தவர்கள் நாக்கெல்லாம் கருநாக்குகள் என்று இப்போதுதான் தெரிகிறது. வீரனைப் பெறவில்லை, பண்பனைப் பெறவில்லை, அறிஞனைப் பெறவில்லை, அழகனைப் பெறவில்லை, புகழனைப் பெறவில்லை, எல்லாவற்றையும் பாழாக்கிய ஒரு துறவனைப் பெற்றேன். (வயிற்றில் அடித்துக்கொள்கிறாள்) ஒரு பெண் தான் காதலித்த ஆடவன் கிடைக்க வேண்டும் என்று தவங்கிடப்பாள். ஒரு பெண்ணுக்காக ஆடவன் தவஞ்செய்வது உண்டா? ஒரு பெண் தன்னைத் துறந்தால், சீயென்று அவளைத் துறப்பானா, அவளுக்காக எல்லாப் பெண்ணையும் துறப்பானா ஆண்பிள்ளை? அதுவும் இவ்வயிற்றிற் பிறந்த ஆண்பிள்ளை? இன்னும் தங்கைக்கு மணம் ஆகவேண்டும். அண்ணன் திடீரெனத் துறவியான ஒரு குடும்பத்தில், தங்கைக்கு யாராவது மணம்பேச முன்வருவார்களா? இவளும் துறயாகக் கூடும் என்று மணம் பேசப் பயப்படுவார்கள் இல்லையா? யாரோ அவனுக்குச் சொல்லியிருக்கலாம். நீயும் துறவியானால், வடிவு அதனைக் கேட்டு மனமாறிவிடுவாள் என்று. குருடனுக்கு விழி வருமென்று யாராவது தன் கண்ணைக் குருடாக்கிக் கொள்வார்களா? சீரனார்: பண்ணனுடைய போக்கைப் பார்க்கும்போது என் மனமே கொதிக்கிறது. தாய் மனமும் வயிறும் புகை வண்டித் தீப்போல் எரியாதா? உறவுக்குப் பிள்ளை பெற்றோம்? துறவுக்கா பிள்ளை பெற்றோம்? நல்லப்பர் எப்படியோ தெரிந்து முன்னே நமக்கு ஒரு எச்சரிக்கை செய்தார். பண்ணன் மணஞ்செய்து கொள்வதில்லை என்று சொல்லிக் கொண்டு திரிகிறதாகக் கேள்விப் பட்டேன் என்று சொன்னார். படம் பாராத நாளெல்லாம் பாழான நாளே என்று திரிகின்ற இவனாவது துறவியாவது எனத் தட்டிக் கழித்தோம். பிள்ளைகளின் போக்கு பெற்றோர்க்குத் தெரிவதில்லை. படங்களில் வரும் மோசமான காதல்களைப் பார்த்துப் பார்த்து அவனுக்குத் துறவறப் பற்று வந்துவிட்டதோ என்னமோ? வையை: நம் யாழி மிகவும் கெட்டிக்காரி. யார் மனத்தையும் மாற்றக்கூடிய வல்லி. (யாழியைப் பார்த்து) அம்மா! அண்ணன் கருத்து உனக்குப் பிடிக்கிறதா? யாழி: நன்றாகப் பிடிக்கிறது. (பெற்றோர்கள் திடுக்கிடல்) ஏன் திடுக்கிடுகிறீர்கள். நான் சொன்னது உங்களுக்கு பிடிக்கவில்லை. அவ்வளவுதானே. அண்ணன் வடிவின் மேல் கொண்டிருக்கிற காதல்வெறும் உடற்காதல் இல்லை. உயிர்க்காதல். வடிவு துறவியாகி விட்டாள் என்று கேட்டவுடன் அண்ணன் உயிர்போன மாதிரி தான். கொஞ்சநேரம் மூச்சுக்கூட நின்றுவிட்டது. இதெல்லாம் உங்கட்குத் தெரியாது. அப்புறம் எப்படியோ மூச்சு வந்தது தன்னாலே. வையை: இதெல்லாம் எங்களிடத்திலே நீ கூடச் சொல்ல வில்லையே. சொல்லியிருந்தால். தம்பி! கவலைப்பட வேண்டாம். அந்த வடிவு மனமாறி விடுவாள். காதல் பொய்க்காது. உயிரையும் உடம்பையும் பேணிக்கொள் என்று நானே சொல்லியிருப்பேனே. நல்லப்பர்: சீரனாரே. பாருங்கள்! அன்பினால் தாயுள்ளம் எப்படிப் பதறுகிறது! அன்பு வாழைத்தண்டு போல எப்போதும் ஈரமாக இருக்கும். யாழி: அம்மா! நீ சொன்னபடியேதான் நான் சொன்னேன். அதற்கு மேலும் ஒன்று உறுதியாகச் சொன்னேன். வையை: அப்படிப்பட்ட நேரத்தில் உறுதியாகத் தான் சொல்ல வேண்டும். யாழி: “அண்ணா! நீ மணமாகா திருப்பதைப் பெற்றோர் பார்த்துக் கொண்டிருந்தாலும் இருப்பார்கள்; உடன்பிறந்த ஒரு தங்கை பார்த்துக் கொண்டிருக்கவே மாட்டாள். அண்ணா! உனக்கு வடிவை மணஞ்செய்து வைப்பேன்! வையா விட்டால் உன் போல நானும் மணஞ்செய்து கொள்ளாது உள்ளது போல இருப்பேன்.” சீரனார்: வையை! பாரு. யாழி எத்தகைய சமர்த்தி. அண்ணன் கவலையை ஒழிப்பதற்காகத் துணிந்து ஒரு பொய்யான உறுதி செய்திருக்கிறாள். யாழி: அப்பா! பொய்யில்லை, அப்பா! மனமாரக் கொடுத்த உறுதி, நீங்கள் பொய்யென்று சொன்னால், அண்ணனுக்கு மறுபடியும் பெருங்கவலை வந்துவிடும். அண்ணன் கேட்டாற்கூட, நீங்களும் அப்படித்தான் சொல்ல வேண்டும். உனக்கு மணஞ்செய்து வைத்த பின்புதான் உன் தங்கைக்கு மணம் நடக்கும் என்று உண்மையாகவே சொல்லுங்கள். நல்லப்பர்: உண்மையில் உங்கள் மகள் மிகவும் கெட்டிக்காரப் பெண். யாழிக்குத் தான் மணஞ்செய்து கொள்ளவேண்டும் என்ற ஆசை நிறைய இருக்கிறது. அதனோடு அண்ணனைத் தன் பிள்ளைக்கு அம்மானாகவும் மாமனாகவும் பார்க்கவேண்டும் என்ற அன்பும் நிறைய இருக்கிறது. இவ்வளவு தங்க மகளைப் பெற்றிருக்கிற உங்களுக்குக் கவலை ஏன் வேண்டும்? எல்லாக் கவலையையும் யாழி சிரிப்பாகத் தாங்கிக் கொள்வாள். யாழி: “வடிவழகி எனக்கு மருமகளாக வந்தால் மகனைப் பெற்ற அன்றையினும் மகிழ்ச்சி அடைவேன்” என்று. அம்மா! நீ முன்னே சொல்லியிருக்கிறாய், நினைவிருக்கிறதா? அதனைக் கேட்டு, “எனக்கு மாத்திரம் மகிழ்ச்சியிருக்காதா” என்று அப்பா! நீங்களும் சொல்லியது நினைவிருக்கிறதா? பெற்றோர் மகிழ்ச்சியை நிறைவேற்றுதல் பிறந்தோர் கடன். “வடிவு என் உயிரின் வடிவு; வடிவின் முகம் என் உள்ளத் தாமரை; வடிவின் உடல் என் வாழ்வின் வீடு” என்று அண்ணன் புலம்புகிறார். வடிவழகியை அண்ணனின் குடியழகி ஆக்குவது தானே உடன் பிறப்பின் கடன். கொந்தளிக்கும் கடலில் குன்றுங் கலங்கியது போலத் தந்தையும் கலங்கிவிட்டார். அம்மா! வடிவழகி தொடங்கியுள்ள அன்னையர் கழகத்தில் ஓர் உறுப்பியாகச் சேர விரும்புகிறேன். உனக்கு மறுப்பில்லையே. நல்லப்பர்: யார் தொடங்கியிருந்தால் நமக்கென்ன? நல்ல கழகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நான்கூட ஒரு பெண்ணாக இருந்தால், இதுவரை சேர்ந்து பணியாற்றி வருவேன்? வையை! நீயும் சேர்; மகளையும் சேரச்சொல். காட்சி : 15 (சோலையன் பசுமாட்டைக் குளிர்ப்பாட்டிப் பொட்டு வைத்து வணங்குகிறான். அம்மா! தாயே! வயிறாரப் புல் மேய்ந்து வா என்று சொல்லுகிறான்) மலரி: என்னங்க! வர வரக் கிழட்டுப் பசு மேலே உங்கட்கு இவ்வளவு பரிவு. சோலையன்: பால் குடுத்த தாய்கிட்டே யாருக்காவது பரிவில்லாமல் இருக்குமா? மலரி: உங்களுக்குப் பசுவா பால் குடுத்தது? பெற்றவள் பால் குடுக்கலியா? சோலையன்: நான் ஆபுத்திரன். எத்தனை முறைகள் சொன்னாலும் உனக்கு மறந்து போகுது. என் தாய்தான் எனக்குக் கொஞ்சப் பால் கொடுத்துவிட்டுச் செத்துப் போனாள் என்று சொல்லியிருக்கிறேனே. சாகும்போது சொன்னாளாம் இந்தப் பசுவைப் பார்த்து, அம்மா! நீ தான் எம் மகனுக்கு தாயின்னு. இந்த அன்னைப் பசுவை ஒரு படம் எடுக்க வேணும் என்று எண்ணியிருக்கிறேன். நாமெல்லாம் அன்னைக்குப் பக்கத்திலே நிற்க வேணும். மலரி: மாட்டுக்குப் பக்கத்திலே நின்றால், மாட்டுப் புத்தி என்று கேலி செய்வாங்க. சோலையன்: இதை மாடு கீடுண்ணு சொல்லாதே. மனிசன் புத்தி மனிசனைக் கொல்லுகிறது. மாட்டுப் புத்தி மனிசனைக் காக்குது. நமக்கெல்லாம் மாட்டுப் புத்திதான் வேண்டும். இந்த அன்னையைப் பற்றி உனக்குத் தெரியாது. என் பாட்டன் பூட்டன் மூட்டன் காலத்திலிருந்தே பால் தந்து வருது. மலரி: அப்ப காமதேனுவா? சோலையன்: காமமாவது தேனாவது. அதை யாரு கண்டது? இதன் தாய் என் அப்பனுக்குப் பால் குடுத்தது. அதன் தாய் அவன் அப்பன் காலத்தில் பால் குடுத்தது. அதுக்குத்தாய் அவனுக்கு அப்பனுக்கும் பால்குடுத்தது. மலரி: அப்ப, உங்க பரம்பரையே ஆபுத்திரர்கள். மாட்டுப் பயல்கள். அதுதான் கோபம் வந்த சமயங்களிலே தலையினாலே முட்டுறீங்க. சோலையன்: இந்தப் பசுவும் ஒரு கிடாரிக்கண்ணு பெற்றிருக்கிறது. அந்தக் கண்ணு உன் பிள்ளைக்குப் பால் குடுக்கும். மலரி: (திடுக்கிட்டு) நான் பால் குடுக்காமல் செத்துப் போவனா? சோலையன்: (பொடி போட்டுத் தும்மிக்கொண்டு) உனக்கு வயது நூறு, எனக்கும் வயது நூறு, நம் பிள்ளைக்கும் வயது நூறு. நீ என்னைக்கும் பிள்ளைக்குப் பால் குடுப்பியா? ஒரு நாளைக்கு நிறுத்திவிடுவாய். அதற்குப்புறம் உனக்கும் தாய் பசுதானே. எதற்குச் சொல்ல வந்தேன்னா. இந்தப் பசுகூடப் பரம்பரையைக் காத்து பால் தருது, அவர்கள்....... மலரி: என்ன, ஏதோ பேச்சை முழுங்கிறீங்களே. சும்மா சொல்லுங்க. எங்கிட்டே சொல்லுறதற்கு என்ன? சோலையன்: உங்கிட்டே சொல்கிறதற்குத்தானே பயமா யிருக்கு. நீ அவர்கள் ஆளாச்சே! மலரி: அப்ப, சொல்ல வேண்டாம். சோலையன்: நீ பெண்டாட்டி யாச்சே. சொல்லாமலும் எப்படி யிருக்கிறது? உங்க வடிவு துறவியாகப் போகுதாம். தெரியுமா? மலரி: துறவுன்னு சொல்கிறதெல்லாம் விளையாட்டுங்க. நீங்க அடிக்கடி அப்படிச் சொல்லி வருகிறீங்க. ஒருமுறையாவது துறவியாப் போனதுண்டா? சோலையன்: ஒருமுறை துறவியாய்ப் போனேனே. போற வழியில் உன்னைக் கண்டு உடனே திரும்பி விட்டேன். மலரி: உங்க பண்ணனைக் கண்டால், எங்க வடிவும் அப்படித் திரும்பி விடுவாங்க. சோலையன்: அப்படித் திரும்புவதாத் தெரியலை. நம் நாட்டை முன்னேற்றும் பெரிய நோக்கதோடு வடிவு துறவுபூண்டிருக்கிறாள். தெரிஞ்சுக்க. மலரி : நாட்டை முன்னேற்றுகிறார்களாம் நாட்டை. அவங்கவங்க காரியத்தைச் செய்தால் நாடு தானே முன்னேறுது. பெண்டாட்டியானால் வாய் உமட்டும், வயிறு பெருகும், நினைத்ததை யெல்லாம் திங்க முடியாது. நினைத்தபடி போகமுடியாது. பிள்ளைகுட்டி பெறுதற்கு அஞ்சி, ஒண்டியாச் சொகுசா உலகத்திலே திரியலாம் என்று துறவு கொள்ளுகிறாங்க. (மலரி பாடுகிறாள்) கிள்ளைபோலப் பொம்பிளை பிள்ளைபெற அஞ்சிறா பிள்ளை பெற அஞ்சிறவ பேடிபோல ஆகிறா; மாடுபோலப் பொம்பிளை கண்ணுபோட அஞ்சிறா; கண்ணு போட அஞ்சிறவ காளைமாடு பார்க்கிறா; வாழைபோலப் பொம்பிளை வயிற்றுவலிக் கஞ்சிறா வயித்துவலிக் கஞ்சிறவ வாய்வலிச்சுத் திரிகிறா; படிச்சுவந்த பொம்பிளை பால்குடுக்க அஞ்சிறா பால்குடுக்க அஞ்சிறவ பட்டுடுத்திப் பாடுறா; அஞ்சியஞ்சித் திரிகிறவ ஆம்பிளையாய் பொறக்கலையே ஆம்பிளைக்குப் பொம்பிளையாய் ஆகிறதிற் குறையிலையே சில ஆண் பிள்ளைகள் மனைவியையும் பிள்ளை குட்டிகளையும் காப்பாற்ற வேணுமே, படிக்க வைக்க வேணுமே. நான் ஓராளாஇருந்தால், சம்பளத்தை யெல்லாம் தானே சாப்பிடலாமே என்று துறவுவேடம் கொள்ளுகிறாங்க. இவர்கள் எல்லாம் காலாடிகள். சோலையன்: அப்படியெல்லாம் ஏளனமாகப் பேசாதே. நாட்டுத் தொண்டு மிகப்பெரிசு. மலரி: வீட்டுத்தொண்டு சின்னமா? வீட்டையும் பெருக்க வேணும், தெருவையும் கூட்ட வேணும். இந்தா, பசு பாருங்க கண்ணும் போட்டுப் பாலும் தருதா இல்லையா? கண்ணு போடாமல் பால் வருமா? சோலையன்: குடும்பமாகிவிட்டால், நம் பிள்ளைக்கு நமக்கு என்று போகுமே தவிர, மற்றவர்களுக்குத் தொண்டு செய்ய மனம் வராது. மலரி: ஏன் மனம் வராது? நீங்க உங்க அய்யா வீட்டுக்கும், நான் எங்க அய்யா வீட்டுக்கும் செய்வதெல்லாம் தொண்டுதானே. சோலையன்: (சிரித்துக்கொண்டு) நாம் செய்வது தொண்டோ? வேலை பார்த்து மாதாமாதம் சம்பளம் வாங்குகிறோம். மலரி: மாதம் முடிந்தவுடன் எங்கே சம்பளம் வாங்குகிறீங்க? வெறுங்கையோடுதானே முதல் நாளன்னைக்கு வீட்டுக்கு வருகிறீங்க. சோலையன்: மாதம் எங்கே முடிய நீ விடுகிறாய். நமக்கு ஒரு மாதம் இருபதுநாள் தானே. இரண்டு திருமணமும் நடக்கும், நல்ல வரும்படி கிடைக்கும் என்று எதிர்பார்த்தாய், எல்லாம் போச்சு. மலரி: ஒண்ணும் போகாதுங்க. ஒருநாள் வடிவம்மா கூடப் பேசிக் கொண்டிருந்தேன். உன் பிள்ளைக்கு என்ன பெயர் என்று கேட்டாள். தங்கம் என்று சொல்லி அழுதேன். பேர்தான் தங்கம், அத் தங்கத்தின் கழுத்திலே காதிலே ஒரு தங்கம் கூடப்போட வக்கில்லை என்று அழுதேன். உடனே அந்த வடிவு “இதற்கு யாராவது அழுவார்களா? என் திருமணத்தன்று ஒரு தங்கச் சங்கிலி பரிசாகத் தருவேன். அதனை அணிந்து உன் பிள்ளையைத் தங்கமாக்கு” என்று சொல்லி, உடனே ரூபாய் ஐந்து தந்து பட்டுப் பாவாடை பிள்ளைக்கு வாங்கிக்க” என்று கூறினாள். அவ்வளவு இரக்கமுடைய அம்மா வடிவம்மா. சோலையன்: அந்த இரக்கத்தினாலேதான் இப்படித் துறவாச்சு தெரியுமா? மலரி: வடிவம்மா ரொம்ப நல்லவங்க, பட்டுப்போல மேனியுடையவங்க. அவங்கமேலே வைச்ச கண்ணை யாருக்கும் வாங்க மனம் வராது. இவங்க துறவியாப் போவது நல்லா இல்லை. நம்ம நாடு சும்மா இராது. ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கும். ஆம்பிளைகளுக்குப் பரவாயில்லை. பொம்பிளைகட்கும், பொறந்த குடிக்கும் நாலுபேர் சொல்வது நல்லா இராது. சோலையன்: பெற்றவங்களுக்கு இல்லாத கவலை அவங்க வீட்டிலே வேலை பார்க்கிற நமக்கென்ன? மலரி: வேலை பார்க்கிற வீடு நல்லா இருக்க வேணும் என்று நினைக்கப்படாதா? அவங்க வீட்டிலே ஒரு பழியின்னா அவங்க வீட்டிலே வேலை பார்க்கிற நமக்கும் பழியில்லையா? நம்ம வீட்டுக்கு ஏதும் வந்தால் அந்த அய்யாக்கள் எவ்வளவு துடிக்கிறாங்க. உங்களுக்கு நெஞ்சுவலி வந்தபோது உடனே அய்யாவே வண்டி எடுத்து வந்து மருத்துவரை நம் வீட்டுக்குக் கூட்டிவர வில்லையா? சும்மா நூறு ரூபாய்க்கு மருந்தும் வாங்கித் தரலையா? இரண்டுமாதம் வேலைசெய்ய வேணாமின்னு சம்பளத்தை முன்னே தரலையா? மாட்டிடத்திலே உங்களுக்கு இருக்கிற நன்றி மனிசரிடத்திலே இருக்கலையே. எப்பவும் செய்ததை மறந்திடக்கூடாது. சோலையன்: செய்ததையும் மறந்திடக்கூடாது. செய்ய வேண்டியதையும் மறந்திடக்கூடாது. வடிவுக்கு விரைவிலே மணம் ஆக வேணும். நம் தங்கத்துக்கும் தங்கம் கிடைக்க வேணும். காட்சி - 16 (மலையனார் வீடு. வடிவும் நாவலனும் ஓரறையில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். வடிவு திரும்பிப் பார்க்கிறாள்) வடிவு: ஏன் தம்பி அழுகிறாய்? நாவலன்: (சினத்தோடு) நீ தான் அழுக வைக்கிறாய். வடிவு: பிறர் அழுகை யெல்லாம் நிறுத்துவதற்கு துறவுபூண்ட நான் உன்னையா அழவைப்பேன்? நாவலன்: உன் துறவால் யார் யார் அழவில்லை. நம் வீட்டு வேலைக்காரிகூட ஓயாமல் அழுகின்றாள். யாரைக் கேட்டுத் துறவு கொண்டாய்? வடிவு: (சினத்தோடு) உறவும் துறவும் யாரைக்கேட்டும் வருவதில்லை. பிறப்பும் இறப்பும் யாரைக்கேட்டும் வருவதில்லை. எனக்குத் தம்பியாக வேண்டுமென்றா நீ பிறந்தாய்? இல்லை, உன்னைத் தம்பியாகக் கொள்ள வேண்டுமென்று முந்திக்கொண்டு நான் அக்காளாகப் பிறந்தேனா? பிறந்தமுறையில் அக்காளும் தம்பியும் ஆக வந்திருக்கிறோம். அவ்வளவுதான். நாவலன்: துறந்தவர்கள் பொறுமையாக இருப்பார்கள். உன்னிடத்துக் கொஞ்சங் கூடப் பொறுமையைக் காணோமே. ஒரு கேள்வி கேட்டதற்குப் பாம்புபோல் கொத்துகிறாய். வடிவு: உலகமாவது மாயை என்று வெறுத்துத் துறந்தவர்கள் உணர்வு செத்து மலைப்பாம்பு போல் கிடப்பார்கள். உலகை வாழ்விக்கத் துறவு பூண்டவர்கள் மான் போல் துள்ளி விழுவார்கள்? நாவலன்: தன் குடியை வாழ்விக்காதவர்களா உலகை வாழ்விக்கப் போகிறார்கள்? வடிவு: வாழ்விப்பார்கள். தன் பசியை ஆற்றாது மற்றவர் பசியை ஆற்றுவார் இல்லையா? தன் குருதியை வடித்து மெலிய வர்க்கும் படைக்கும் அளிப்பாரை நீ அறியாயோ? பிறந்த குடியை வாழ்விப்பது ஆண் கடன். அதற்குத் தானே நீ பிறந்திருக்கிறாய். நீ பெறும் பிள்ளைகள் தாமே பெற்றோர்க்கு வழிப்பிள்ளைகள். பிறந்த வயிறு உனக்கும் எனக்கும் சொந்தம். பிறந்த குடி உனக்கே சொந்தம். எனக்குச் சொந்தமாகும் குடி எது என்று தேடியலைய வேண்டும். பெண்ணாவாள் என்றும் பிறந்த குடும்பத்தைத் துறக்க வேண்டியவள். பெற்றோர் என்னை மணஞ்செய்து துறவாக்குவதற்கு முன், நானே துறவுகொண்டேன். நாவலன்: (தாழ்வாக) என்ன, அக்காள்! இவ்வளவு கடுமையாகவும் கொடுமையாகவும் பேசத் துணிந்துவிட்டாய். வடிவு: துறந்தார்க்கத் துணிவு வேண்டும். தம்பி போல நீ பேசத் தொடங்கவில்லை. நீயும் கடுமையாகப் பேசினாய், நானும் அந்த முறையிலே பேசினேன். துறவு மதிக்கத்தக்க நிலை, தொண்டு மதிக்கத் தக்க செயல் என்பதை நீ அறிந்துகொள். நாவலன்: ஊரார் துறவையும் தொண்டினையும் மதிப்பேன். உன் துறவை..... வடிவு: நீ மதிக்கா விட்டால் போ. தம்பி நாவலன் வாய் புகழ வேண்டும் என்பதற்கு நான் துறவு கொள்ளவில்லையே. நாவலன்: உன் வேகத்தைப் பார்த்து நான்தான் அடங்கி விட்டேன். சிறிது பொறுத்துப் பேசு. அக்காள் துறவியாகி விட்டாள் என்று கேட்டதும், தம்பி மகிழ்ந்து இனிப்பு வாங்கித் தின்பான் என்று நினைத்துக் கொண்டாயா? குமரியானதற்கும் குழந்தை பிறந்ததற்கும் தின்பண்டங்கள் வழங்குவது போல, நீ துறவியானதற்குப் பெற்றோர் தின்பண்டம் செய்து வழங்க வேண்டும் என்று எதிர்பார்க் கிறாயா? நீ சொல்லும் சுடுசொல்லைக் கேட்டால், அன்பையே துறந்துவிட்டாய் என்று படுகிறது. வடிவு: அன்பின் வேலியை அகலமாக்கி இருக்கிறேன். ஆற்றின் கரையைப் பெரிதாக்கி இருக்கிறேன். நாவலன்: பயிரில்லாமல் வேலியை அகலமாக்கி என்ன பயன்? நீரில்லாமல் கரையைப் பெரிதாக்குவதில் என்ன பயன்? வடிவு: என் அன்புக்கு அடித்தளம் குடும்பம். நான் அன்பு செய்ய விரும்பும் இடங்களும் குடும்பங்களே. துறப்பவர்கள் வீட்டைவிட்டு வேற்றிடமோ, வேற்றூரோ செல்வார்கள். நான் அப்படிச் செல்லவில்லை. வீட்டிலிருந்தே தொண்டு செய்வேன். நாவலன்: குடும்பத்தையே மடமாக்கி விட்டாய். துறவு மனப் பான்மையுடைய நீ விட்டைவிட்டுப் போய் விட்டாலும், பெற்றோர் கவலை குறையும். கூட இருந்தே எங்களைக் கொல்லுகிறாய். துறவுக்கோலம் பூண்டிருந் தாயானால், “இன்னும் மகளுக்கு மணஞ்செய்ய வில்லையா?” என்று ஊர் சும்மா கேட்டுக்கொண்டிராது. உள்ள உடை அணிந்து ஊர்ப்பழி தருகின்றாய். பிறப்பும் இறப்பும் யாரையும் கேட்டா வருகிறது என்று கேட்கிறாய். நீ பிறவாதிருந்து விட்டாலும் பெற்றோர் கவலைப் படார். நீ இறந்திருந்தாலும் ஓவென்ற ஒருநாள் அழுகையோடு உன்னை மறந்துவிடாலம். துறந்து, எங்கள் கண்முன் இருந்து, துன்பக் கனலாய் விளங்குகிறாய். பெற்றோர் முகத்தை நீ பார்த்து நாளாயிற்று. தம்பி முகத்தைப் பார்க்கத் தயங்குகிறாய். உன் முகத்தையேனும் கண்ணாடியில் பார். இரவும் பகலும் உன்னோடு இருபதாண்டு பழகியவர்கள் உன் துறவில் மகிழவில்லையென்றால், முன்பின் அறியா ஊர் மகிழும் என்றா எதிர்பார்க்கிறாய்? ஊரின் இயல்பு ஓடும் நீரின் இயல்பு; தெரிந்துகொள். வளர்த்த பெற்றோரின் தொண்டை மதியாது நீ துறந்தாய் என்றால், ஊர் உன் தொண்டை மதிக்காது. தீய்ந்த குமிழ்போல் துறப்பதற்கு நாளாகுமா? பசித்த உயிர்களையெல்லாம் அமுத சுரபியால் பசியாற்றிய ஆபுத்திரன் கதி என்னாயிற்று? ஆபுத்திரா! நலமாக இருக்கிறாயா? என்று கேட்பார்கூட இல்லை. வித்தின்றி விளைவு செய்வேன் என்பதும், வீடின்றி நாடு காப்பேன் என்பதும், காலின்றிக் கலையாடுவேன் என்பதும் நகையாடல்கள். ஒரு பெண் தாயாவது தான் உலகத் தொண்டு அதுதான் நாட்டுத் தொண்டு. அதுவே வீட்டுத் தொண்டு. உன்னை வளரும் பொதிபோற் சுமந்து, வாந்தியெடுத்து, உண்பன தின்பன விலக்கி, உறக்கம்இன்றி, ஐயோ என அலறி, வலி தாங்கிக் கடுஞ்சூல் ஈன்ற அன்னையினும் நின்தொண்டு சிறந்ததோ? ஈன்ற பின்னும் வயிறு கட்டி, வாய் அடக்கி, செங்குருதி மாறிய வெண்பாலை ஊட்டி, நீரெடுத்து, மலமெடுத்து, மருந்துண்டு, பொட்டிட்டுப் பூச்சூட்டி, மொழிசொல்லி நடைபழக்கி உடை உடுத்திப் பள்ளிக்கு அறிவுதேட விடுத்த மெல்லிய அன்னை யினும் உன் தொண்டு என்ன பெரிது? கண்ணாற் காணப்படும் அரியபெரிய பொருள்களினும் கண்ணே சிறந்தது. ஞாலத்திற்கு வளஞ்செய்யும் நல்வயல்களில் வயிறே சிறந்தது. நம்பியர் கைகளும் நங்கையர் வயிறுகளும் நாட்டின் படைப்பள்ளிகள். ஒரு குடும்பத்துக்குத் தான் செய்யவேண்டியதைச் செய்யாமல், பிறர் குடும்பத்துக்குப் பிறர் செய்ய வேண்டியதைச் செய்யப் புறப்படுகிறாய். புகழ்நாட்டம் உடைய தொண்டினும் கடமையே சிறந்தது. கடமையைச் செய்தார்க்கு நன்றி காட்டலே உணர்ச்சிகளுள் சிறந்தது. வடிவு: (அமைதியாக) அறியாது பேசும் தம்பி மின் விளக்குநின்ற நகர்போல உன் உள்ளம் சினப்புயலால் இருளாகிவிட்டது. கேவலம் கடன் கழிப்பது நன்றியாகாது. கடமையையும் தொண்டுணர்வோடு செய்யவேண்டும். பெற்றார்கள், நாம் பிறந்தோம் என்று உணர்வற்றுச் செய்வது உருத்தோடு செய்வதாகுமா? எதனையும் மனம்வைத்து ஈடுபட்டுச் செய்யவேண்டும். ஊர் ஒப்புக்குச் செய்யக்கூடாது. திருமணம் செய்து கொள்ளாமையினால் நான் நன்றி கொன்றவள், திருமணம் செய்து கொள்வதனால் நீ நன்றி கொண்டவன் என்று ஆகிவிடுமா? உன் பெற்றோருக்கு நீ நன்றி செய்வது உன் மனைவியின் பண்பைப் பொறுத்தது. நல்ல கொள்கை கொண்ட தமக்கையையே இவ்வளவு கடுஞ்சொற் கூறும். நீ, மனைவி, பிள்ளை என்று பெருகியபின் பெற்றோரை என்ன செய்வாயோ? நீ கைவிட்டாலும் பெற்றோர்க்கு நான் எப்போதும் பணிவிடை செய்வேன், எனக்கு ஒரு குடும்பம் இல்லாமையால். நீ விரும்பினால், தம்பியாகிய உன் குடும்பச் சுமையையும் தாங்குவேன். திருமணமானபின், பெற்றோர்களுக்குப் பிச்சைப் பாத்திரம் அளிக்கும் ஆடவர்கள் நிறைந்த இந்நாட்டில். நீ பேசும் கடமை எதுவென எனக்குப் புரியவில்லை. மணமான ஆடவன் தன் பெண்டு பிள்ளைகளைத் தன் குடும்பம் எனக் கருதுகிறானேயன்றிப் பெற்றோர்களை எப்படி நினைக்கிறான்? ஈன்ற வாழை போலக் குடும்பத்திலிருந்து வெட்டிவிடுகிறான். நாவலன்: நான் தாங்க வேண்டிய நிலையிலோ, நீ தாங்கவேண்டிய நிலையிலோ, நம் பெற்றோர்கள் இல்லை. அவர்கள் தாங்க வேண்டிய நிலையில்தான் நாம் இருக்கின்றோம். நான் கைவிடுவேன். நீ கை கொடுப்பாய் என்று நம் தாய் தந்தை எதிர்பார்க்க வில்லை. தாங்கள் குடும்பமாகி நம் குடும்பத்தைப் பேணியது போல, நாம் குடும்பமாகித் தங்கள் குடும்பங்களைப் பேண வேண்டும் என்பதே அவர்களின் முதல் ஆசை. பெற்றோரின் இயல்பான ஆசையை நிறைவேற்றாத நீ, கவலை கொடுத்துப் பெற்றோரின் ஆயுளைக் குறைக்கின்ற நீ, தாங்குவையாம். தன்மானம் உடைய பெற்றோர்கள் துறவுமகள் கையால் சோறு வாங்குவார்களாம். வடிவு: தம்பி மறுபடியும் சினமூட்டுகிறாய். துறவு மானக்குறைவா? நாவலன்: உன் சினம் இனங்கொல்லும் சினம். நீ ஊனப் பெண்ணாகப் பிறந்திருந்தால், பிறந்து ஊர்க்குத் தொண்டுசெய்தால், வீட்டுக்கு புகழுண்டு. பாவை விளக்குப் போன்ற, நீ படித்துப் பட்டம் பெற்ற நீ, கலை பயின்ற காரிகையாகிய நீ துறவுபூண்டால், துறவுபூண்டு தொண்டாற்ற வெளியே புறப்பட்டால், புறப்பட்டு பலரோடு பழகினால், உலக வாய்களும் ஒழுக்கத் தாள் களும் சும்மா இருக்குமா? இனி, தம்பியாகிய என்னோடன்றி நீ ஓராடவனோடு பேசிக் கொண்டிருப்பதை உலகக் கண்கள் பொறுக்குமா? நீ என்னோடு பேசிக் கொண்டிருந்தாலுங் கூட, தம்பியோடு பேசிக் கொண்டிருக்கிறாய் என்பதை அறியகில்லாப் பேதைகள் கட்டுக்கதைகள் பரப்புமல்லவா? தமக்கையே எவ்வளவு கற்றிருந்தாலும், கலைஞானம் தெரிந்திருந்தாலும், நீ பெண். பெண்ணுலகம் வேறு. பெண்ணைப் பற்றிப் பேசும் உலகம் வேறு. நீ மணங்கொள்வதே இயற்கை. கூந்தலுக்குப் பூங்கொத்துக்களை அணிவதே இயற்கை. பெண்பால் ஆண்பாலை மணந்து பலர்பாலைத் தருவதே தமிழ் இயற்கை. அக்காள் நீ துறவுகொள்ளாதே துறவு கொண்டாலும். இந்நாட்டில் புறம் போந்து தொண்டு செய்யாதே. வடிவு: உன் அறிவுரைகளைக் காட்டிலும். நாவல! உன் உடனன்பை மிகவும் புரிந்துகொண்டேன். அது சரி, தம்பி! ஏன் அழுது கொண்டிருந்தாய்? என்னைக் கண்டதும் ஏதோ மறைத்தாய். (திடீரென்று தம்பியின் சட்டைப் பையைப் பார்க்கிறாள். ஒரு தாள் கிடைக்கிறது. நாவலன் திரும்பப் பறித்துக் கொள்கிறான்) நாவலன்: அக்காள்! நீ மணஞ்செய்து கொண்டால், எனக்கு மணம் உண்டு. நீ துறவுகொண்டால் தலைசென்ற வழி வால் செல்வது போல, நானும் துறுவுகொள்ள வேண்டியது தான். நம் பெற்றோர்களுக்குப் பேரர்கள் இருக்கமாட்டார்கள். வடிவு: மணஞ்செய்து கொண்டால் பேரர்கள் வந்து விடுவார்கள் என்று சொல்ல முடியுமா? பிறப்பை யார் கண்டார்கள்? நாவலன்: நீ சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. மணஞ் செய்து கொள்ளாவிட்டால் பிறப்பை எதிர்பார்க்க முடியுமா? மக்கட் பேற்றுக்கு மணந்தானே வழி. வடிவு: என் துறவால் வருந்தி உயிரோடிருக்கும் பெற்றோர்களை, தம்பி! உன் துறவு கொன்றுவிடும். நீ மணந்து, வீட்டில் உன் மனைவியோடு உரையாடி அளவளாவும் ஒரு புதுவாய்ப்பை எனக்கு நல்குக. உன் குழந்தைகளைக் கட்டி அணைத்து முத்தும் இனிய வாய்ப்பை எனக்கு நல்குக. என் நிலை பார்வைக்குத் துறவாகத் தோன்றினாலும், மணத்தை இழித்துக் கூறும் துறவி நானில்லை. இல்லற நங்கைக்குக் காப்பியம் பாடிய இளங்கோவின் துறவு போன்றது என் துறவு. உன் திருமணத்தை விரைவில் கண்டுகளிக்க விரும்புகின்றேன். இரண்டு திருமணங்கள் நிகழ்ந்தால் பெற்றோர்க்கு எவ்வளவு மகிழ்விருக்குமோ, அவ்வளவு மகிழ்ச்சி உன் ஒரு திருமணத்தில் உண்டாகும்படி செய்ய விரும்புகிறேன். நாவலன்: அக்கா! உன் விருப்பம் உண்மையா? வடிவு: (பெருமிதமாக) உண்மையிலும் உண்மை? நீயும் நானும் உடன்பிறப்பு என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை. நாவலன்: உனக்கு உன் துறவில் அதிக விருப்பம் உண்டா? என் மணத்தில் அதிக விருப்பம் உண்டா? வடிவு: என் துறவுக்கும் உன் மணத்துக்கும் என்ன தொடர்பு? நாவலன் : இதோ பார்! கடிதத் தொடர்பு. வடிவு: (கடிதத்தைப் பிரித்து வாசிக்கிறாள்) என் காதல! அடிபணிவு, என் அண்ணன் திருமணத்தை முடித்து வையுங்கள். நம் திருமணம் உடனே நிகழும். மணிக்காட்டியின் பெரிய முள் இயங்காது சின்ன முள் இயங்குமா? காய் கனியாகாது பூ கனியாகுமா? மலர் மணக்காது அரும்பு மணக்கலாமா? காதலி. (படித்து முடித்தபின்) தம்பி இது கிடந்தெடுத்த கடிதமா? காதற் புத்தகத் திலிருந்து படி எடுத்த கடிதமா? யார் காதலன்? யார் காதலி? நாவலன்: நாவலன், காதலன், காதலி யாழி. வடிவு: ஓ! ஓ! என் துறவைக் கலைக்க முயலும் சூழ்ச்சிக் கடிதம். இனிமேல் பேச்சில்லை. (சட்டென அவ்விடத்தை விட்டுப் போகிறாள் வடிவு) மூன்றாவது மனைவியரங்கம் காட்சி: 17 (அன்னையர் கழகம். இரண்டாவது கூட்டம். இரவு மணி எட்டு) நறுங்கொன்றை: (வணங்கி எழுந்து) பேரறப் பெண்களே! அன்னையர் கழகம் தொடங்கியதைச் செய்தித் தாள்கள் வரவேற்றுத் தலைப்பகுதிகள் எழுதியுள்ளன; நடைமுறைக்கு ஒத்த நல்ல கருத்துக்கள் ஆராயப்பட்டதைப் பாராட்டி எழுதியுள்ளன. இந்தியப் பெருநாட்டில் மக்கட் பெருக்கத்துக்கு யாதொரு தடையும் அரசு உண்டு பண்ணலாகாது என்ற கருத்தைப் பல இதழ்கள் ஒப்பியுள்ளன. மக்களை நிறையப் பெற்றுத் தரும் தாய்மாருக்கும் இரட்டை பெரும் தாய்மாருக்கும் வல்லுணவும் நன்மருந்தும் விலையின்றி அரசு வழங்கவேண்டும் என்று சில கருத்துத் தெரிவித்துள்ளன. (கை தட்டல்) ஒருமாதக் குழந்தை நிலையில் இருக்கும் நம் கழகத்தைப் பாராட்டி ஊக்கிய அன்பர்கட்கெல்லாம் நன்றியம். உலகறியும் நம் பெருங் கழகத்துக்கு வடிவழகியே நிலைத்தலைவியாக இருக்கவேண்டும் (பெருங் கைதட்டல்) என்று எல்லாரும் ஒருமுகமாக விரும்புகின்றோம். (ஆம், ஆம்) நம் விருப்பத்தை வடிவழகியார் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு தலைமைக்கு ஆசைப்பட்டுக் கழகத்தைத் தொடங்கியதாகச் சிலர் தூற்றக் கூடும் என்பது அவர் கருத்து. மேலும் இல்லற மடந்தையர் கழகத்துக்கு இல்லறம் எய்திய பெண்கள் தாம் தலைவராக இருத்தல் வேண்டும் என்பது அவர் தம் விருப்பம். இயல்பான உறுப்பினர் உதவி தமக்கு அளித்தாற் போதும் என்று சொல்லுகிறார். கரும்பு நெஞ்சுடைய வடிவழகியார் குறிக்கோளில் இரும்பு நெஞ்சுடையவர். ஆதலின் வேறு வழியின்றி அவர் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். (மறுபடியும் கேளுங்கள். மறுபடியும் கேளுங்கள் என்று சிலர் ஆரவாரித்தல்) வழக்கம் போல் ஒவ்வொரு கூட்டத்துக்கும் புதிய தலைமையுண்டு. நம் கழகத்தின் இரண்டாவது கூட்டத்துக்குக் காய்கறி வாணிகி மூக்காயி அம்மை தலைமை தாங்குவார். இவர் பத்துப் பெண்ணுக்குத் தாயாவார். இவர்க்கு ஆண் குழந்தை இல்லை என்ற வருத்தம் சிறிதும் இல்லை. எல்லாப் பெண்களையும் நன்கு படிக்க வைத்தார்; காய்கறி வணிகத்துக்கும் பழக்கினார். மூக்காயியாரின் வணிகமுறை போற்றத் தக்கது. பசுமை நிலையிலேயே காய்கறிகளை விற்றுவிடுவார். காய்கறி வாடுவது கண்டால், அவர் மனம் வாடும். காய்கறி அழுகினால் அவர் கண் அழும். விலையை அளவுபடுத்தி விரைவாக விற்பது அவர் தம் வணிக நோக்கம். ஒல்லும் வகையால் அறம் செய்யும் உள்ளம் உடையவர். ஏழை மாணவர்தம் திருக்குறள் விடுதிக்கு நாள்தோறும் பச்சைமிளகாய் சும்மா வழங்குகிறார். தாய்நாட்டின் தற்காப்பு நிதிக்கு ஒரு நாள் வருவாயையும் தாய்மொழியின் தற்காப்பு நிதிக்கு ஒருநாள் வருவாயையும் முன்னறிவோடு உவந்தளிக்கும் பெருமகள் பாராட்டத்தகும் பண்புகள் நிறைந்த மூக்காயி அம்மையாரை இன்று தலைமை யேற்குமாறு நம் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். மூக்காயி: தங்கை தமக்கைமார்களே! கைகூப்புகிறேன். சந்தைக் கடையில் காய்கறி விற்கிற பேச்சுத்தான் எனக்குப் பழக்கம். இவ்வளவு பெருங்கூட்டத்தில் பேசுவது என் வாழ்க்கையில் ஒரு புரட்சி. தலைமை வகித்து ஏதாவது சொல்லவேண்டும் என்று கட்டளையிட்டிருக் கிறார்கள். அது எனக்கு நல்லது. ஏனென்றால் தலைமையாக இருப்பவர்கள் மிகவும் பேச வேண்டியதில்லை. நம் நாட்டில் இதுவரை ஆண்கள் தான் கண்டபடி யெல்லாம் பேசிக் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். “எ;ஙகளுக்கு வாயில்லையா? நாங்களும் சமம் இல்லையா?” என்று இப்போது பெண்களும் ஓயாது பேச முன்வந்து விட்டார்கள். எனக்குத் தெரிந்த மட்டில், இன்று நமது நாட்டில் பெரியவர்கள் சாகும்வரை பேசுகிறார்கள்! சின்னவர்கள் முளைக்கும் போதே பேசுகிறார்கள் ஏசுகிறார்கள். (கைதட்டல்) எங்கும் எப்போது பார்த்தாலும் பேச்சு. வாய் பேசுவது போதாதென்று ஒலிப்பான் வழியாகக் கத்துதல். இப்படி நம் நாகரீகம் வளர்ந்தால், இப்போது பலர் அரைக் குருடாகப் பிறப்பதுபோல, வருங்காலத்தில் பலர் அரைச் செவிடாகப் பிறப்பார்கள். வாயடக்கி என்ற ஒரு கருவி கண்டுபிடிக்கப் பட்டால் உலகிற்கு நல்லது. சிறப்பாக நம்நாட்டிற்கும் நல்லது. சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்வது நல்லது என்று உலகப் பெரியார் வள்ளுவர் கூறியிருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கின்றேன். அது பெரிய உண்மை. அந்தப்படியே தான். நான் வணிகஞ் செய்து வருகிறன். என் கடையில் காய்கறி வாங்கியவர்கள். அடுத்த கடைக்குப் போய்ப்பார்த்து வருகிறேன் என்று சொல்ல மாட்டார்கள். அவ்வளவு நம்பிக்கை. நறுங்கொன்றை சொல்லியபடி, என் செல்வம் எல்லாம் பெண் செல்வந்தான். முதற்பேற்றிலே இரட்டை பிறந்தார்கள். கண்ணகி, மாதவி என்று பெயர் வைத்தேன். அடுத்த பேற்றில் ஆண் இரட்டை பிறக்கும் எனவும், செங்குட்டுவன், இளங்கோ என்று பெயர் வைக்க வேண்டும் எனவும் ஆசையோடு இருந்தேன். மறுபடியும் பெண் இரட்டையே பிறந்தார்கள். காவிரி, வையை என்று பேரிட்டேன். ஆனால் கவலைப்பட்டேன். என் குடும்பம் கும்மியடிக்கும் பெண்களின் கூட்டமாக ஆகி வருகிறதே என்று வருந்தினேன். சிந்தனை செய்தேன். ஆண் குழந்தைகள் பிறந்திருந்தால் எப்படி வளர்ப்போமோ, அப்படி இந்தப் பெண் குழந்தைகளையும் வளர்ப்பது என்று தீர்மானித்தேன். கட்டாயமாக எல்லா மகள்களையும் படிக்கவைத்தேன். காய்கறிக் கடைகளில் பழக்கினேன், சமையல் பழக்கிக் கொடுத்தேன், தையல் பழக்கிக் கொடுத்தேன், கைத்தொழில்கள் பழக்கிக் கொடுத்தேன், ஆசிரியத் தொழில், செவிலித் தொழில் எல்லாவற்றிலும் பயிற்சி அளித்தேன். படிக்க வைத்தால் பெண்மக்கள் ஆண்மக்களைவிட நன்றாகக் கருத்தூன்றிப் படிப்பார்கள். கவலையோடு குடும்பம் நடத்து வார்கள். குடியாதும் புகையாதும் சிக்கனமாக வாழ்வார்கள். இன்று என் பெண் மக்கள் நன்றாக வாழ்கிறார்கள். அம்மக்களை அவர் தம் கணவன்மார்கள் நன்றாக மதிக்கிறார்கள். என் சொந்தத் தெளிவு இதுதான். பெண் பெற்ற தாய்மார்கள் சிறிதும் கவலைப்பட வேண்டாம். பெண் பிறந்த அன்றே இவளுக்கு எப்படி மணஞ் செய்வேன் என்று மனத்தைக் குழப்பவேண்டாம். உங்களுக்குப் பிறந்த ஆண்மக்களைக் காட்டிலும் பெண்மக்களைப் பெரிய படிப்புப் படிக்க வையுங்கள். தொழில் பார்க்கவிடுங்கள். ஒரு பிறப்பில் பெண் பெற்றவர்களுக்கு ஏழு பிறப்பிலும் துன்பம் வராது. வள்ளுவர் சொல்லியது எனக்கு நினைவு வந்துவிட்டது. இதனோடு என் தலைமையுரையை முடித்துக் கொள்கிறேன். நன்றி. வடிவழகி: அன்பு சான்ற அன்னைமார்களே! கை கூப்புகின்றேன். நம் கழகத்தில் உறுப்பினர்கள் வரவரக் கூடி வருகிறார்கள். முதற்கூட்டத்தைக் காட்டிலும் இந்த இரண்டாவது கூட்டத்தில் அன்னையர் பெருவாரியாக வந்திருப்பது மகிழ்வுக்குரியது. இக்கழகத்துக்கு நல்ல எதிர்காலம் உண்டு. இக்கழகம் ஒரு தாய் மரமாய்ப் பல கிளைகளையும் கன்றுகளையும் ஈன்று உதவும் என்று நம்புகின்றேன். அயலூர் களில் இருந்தும் தாய்மார்கள் வந்திருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். நம் கழக நோக்கம் அவர்களைக் கவர்ந்திருக் கின்றது. இன்னும் சில ஆண்டுகளில் நம் கழகம் அயல்நாடு களிலும் பரவினும் வியப்பில்லை. நல்லம்மை என்ற ஒரு துறவி முதியாளும் இன்று நம் கூட்டத்தைக்காண வந்திருக்கின்றார். அவர் நல்ல அறிஞர் எனவும், பெருஞ்செயலர் எனவும், உலக வூழியர் எனவும் அறிகின்றேன். அத்தகைய பெரியாளின் துணையை நாம் கைவிடலாகாது. அவர் நம் மாதர் கழகத்தின் செயலராக இருந்து இல்லறப் பணி புரியவேண்டும் என்று உங்கள் சார்பாக அவரை வேண்டுகின்றேன். (நன்று. நன்று கை தட்டல். நல்லம்மையார் எழுந்து நின்று வணங்கல்) பெருந்தாய்மார்களே! சிலருடைய ஓர் ஐயத்தைத் தெளிவாக்க விரும்புகிறேன். எல்லா நிலைப்பெண்களும் இக்கழகத்திற் சேரலாம். கன்னியர் சேரலாம். கைம்மையர் சேரலாம். எத்தொழிற் பெண்டிர்களும் சேரலாம் கற்றவர் கல்லாதவர் யாரும் சேரலாம். இரப்போர் சேரலாம். துறவியர் சேரலாம். பொதுவாகவும் தெளிவாகவும் கூறப் போந்தால், பெண் பாலார் யாரும் சேரலாம். அன்னையர் கழகம் என்று நாம் பெயர் வைத்திருப்பது இன்னும் மணமாகாத கன்னியர்களை விலக்குதற்கோ, இனிமேல் பிள்ளை என்றிருக்கின்ற மங்கையர்களை விலக்குதற்கோ, பிள்ளைப்பேறில்லா அரிவையர்களை விலக்குதற்கோ இல்லை. அன்னையர் என்பது பெண்களுக்கு உரிய அன்புச் சொல், அருட்சொல், கடமையை உணர்த்தும் அறிவுச்சொல். இன்னும் ஒரு தெளிவு செய்ய விரும்புகிறேன் குலமகளிர், விலை மகளிர் என்ற வேறுபாட்டை நம் கழகம் ஒத்துக் கொள்வதில்லை. ஒழிக்கவே விரும்புகின்றது. (ஆம். ஆம்) நன்மகளிர் சமுதாயக் கேட்டினால் விலைமகளிர் ஆக்கப்படுகின்றனர். இப்போக்கு இனி வரவரக் குறையும். குறையவேண்டும். ஆண்கள் போல் பெருமிதமான தொழில் செய்து பொருளீட்டி வாழ்வு நடத்தும் தற்காப்பு இன்று பெண்களுக்கு ஏற்பட்டுவிட்டது. ஆதலால், எம் மகளிரும் அன்னையர் கழகத்தின் நன்மகளிர், எல்லார் தம் வரவும் நம் கழகத்திற்கு நல்வரவே. நம் கழகத்தின் இத் தனிப்பெரு நோக்கை நாம் உணர்வோமாக, உணர்ந்து ஆக்கம் செய்வோமாக. (கேள்வியரங்கம்) ஒருத்தி: (சில விளம்பரங்களைக் காட்டி) பீடி பிடிப்பதாகவும், சுருட்டுப் புகைப்பதாகவும், மது ஊற்றிக் கொடுப்ப தாகவும் இழிந்த விளம்பரங்களில் பெண் படங்களை ஒருவிதமாகப் போடுகிறார்கள். இதனைக் கண்டித்து ஒரு தீர்மானம் செய்யவேண்டும். ஒருத்தி: வள்ளுவர் கழகம் என்று வைத்துக்கொண்டு சூதாடும் இந்த நாட்டில், காந்தி கழகம் என்று வைத்துக் கொண்டு உறுப்பினர்கள் காயம்பட அடித்துக்கொள்ளும் இந்த நாட்டில், நாம் தீர்மானம் செய்து என்ன பயன்? ஆண்களுக்கும் நாணம் வேண்டும். விளம்பரத்துக்கும் ஒழுக்கம் வேண்டும். (கேண்மின்! கேண்மின்!) பொன்னம்மை: பொருத்தமான விளம்பரங்கட்கு நாணமான முறையில் மெல்லியலார் மேனிகளை வெளியிட்டுக் கொள்வதை நாம் எதிர்க்கவில்லை. வரவேற்கிறோம். ஒருத்தி: அழகுப்போட்டி நடத்துவதை நம் கழகம் உடன்படுகின்றதா? ஒருத்தி: அழகுப் போட்டி பெரும் அல்நாகரிகப் போட்டி, இளமங்கையர்களை ஓரிடத்துக் கண்டுகளிக்க வேண்டும் என்று மயங்கிய ஆண் மடவர்களின் சூழ்ச்சி. இந்திய நாகரிகத்துக்கு அழகுப்போட்டி ஓர் அரிவாள். ஒவ்வொரு பெண்ணும் உரியவர் கண்ணுக்கு அழகியே. ஆடவர்கள் இப்போட்டி நன்று என்று ஆர்வத்தோடு காரணஞ் சொல்வார்கள். பெண் யாரும் இப்போட்டியிற் கலந்து கொள்ளக்கூடாது என்று நம் கழகம் தீர்மானிக்குமா? மூக்காயி: இதற்கு ஒரு எழுத்துத் தீர்மானம் வேண்டுமா? எழுதாத தீர்மானத்துக்குத் தான் ஆற்றல் உண்டு. ஒருத்தி: அழகுப் போட்டியை விட்டுவிட்டு, அன்னைப் போட்டி வைக்கலாம் என்பது என் கருத்து. இதனை நம் அரசு ஏற்குமா? மூக்காயி: ஏற்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதே என் கருத்து. வாழ்க்கைச் செலவை அளவுபடுத்த வேண்டும். மக்கள் வரவைப் பெருக்கவேண்டும். ஒருத்தி: பெண்கள் திரைப்படங்கள் பார்க்கலாமா? செல்லாயி: வீட்டு வேலைகளைப் பார்த்தபின் பார்க்கலாம். ஒருத்தி: இளம் பெண்கள் பார்க்கலாமா? நல்லம்மை: அவர்கள் பார்க்கக்கூடிய படங்களைப் பார்க்கலாம். ஒருத்தி: பெண்கள் படிப்பதால் காதற் கடிதங்கள் எழுதுகிறார்கள்; அதனால் படிக்க வைக்கக்கூடாது என்று சிலர் சொல்லுகிறார்களே. பொன்னம்மை: ஆண்கள் எழுதும் காதற் கடிதங்களைத் தெரிந்து கொள்ளுதற்காகவாவது படிப்பு வேண்டுமில்லையா? ஒருத்தி: நல்ல குடும்பத்துக்கு அடையாளம் என்ன? பெரியம்மை: எல்லோரும் கூடியிருந்து உண்ணுதல். ஒருத்தி: நல்ல மாமியாளுக்கு அடையாளம் என்ன? பெரியம்மை: மருமகளையே வீட்டுக்காரியென மதித்தல். ஒருத்தி: நல்ல நாத்தூணாருக்கு அடையாளம் என்ன? மூக்காயி: தாய் வீட்டுக்கு அடிக்கடி வரமாட்டாள். ஒருத்தி: வளரும் குழந்தைக்கு அடையாளம் என்ன? வடிவழகி: வைத்திருக்கும் சாமான்களை உடைத்துப் பார்த்தல். யாழி: நல்ல காதலனுக்கு அடையாளம் என்ன? வடிவழகி: தன் காதலை வற்புறுத்தாமை. பைங்கிளி: நல்ல கணவன் யார்? பெரியம்மை: மனைவியின் பிடிவாதத்திற்கு எதிர் பேசாதிருத்தல். ஒருத்தி: நல்ல மனைவி யார்? ஒருத்தி: பிறந்த இடத்தைப் போல வந்த இடத்தையும் மதிப்பவள். ஒருத்தி: நல்ல மாப்பிள்ளை யார்? ஒருத்தி: மனைவியின் சீர்ப்பொருளை நம்பலாகாது. மாமியார் வீட்டில் தங்கலாகாது. யாழி: நம் கழகத்தின் சார்பாகக் குழந்தை யரங்கங்கள் நிகழவேண்டும். ஆடரங்கம், அறிவரங்கம், பாட்டரங்கம் என்ற வகையில் நடத்தலாம். வடிவழகி: நல்ல கருத்து, திங்களுக்கு ஒருமுறை நடத்தினால் குழந்தைகளுக்குப் பெரிய ஆர்வம் ஏற்படும். கலந்து கொள்ளுகின்ற எல்லாப் பிள்ளைகளுக்கும் பரிசு கொடுப்போம். நல்லம்மை: அப்படிக் கொடுத்தால்தான் தாய்மார்களுக்கும் ஆர்வம் இருக்கும். ஒருத்தி: குழந்தை அரங்கத்தில் ஆண் குழந்தைகளையும் சேர்த்துக் கொள்ளலாமா? வடிவழகி: எல்லாம் குழந்தைகளே. கூட்டத்துக்கு ஆண் குழந்தைகள் வருவதை நாம் ஏற்றுக்கொள்வது போல அரங்கிற்கும் ஏற்றுக் கொள்ளுவோம். போட்டிகளிலும் வேறுபாடு செய்ய வேண்டியதில்லை. ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் ஒன்றாகவே கலந்து கொள்ளட்டும். நறுங்கொன்றை: குழந்தையின் உள்ளம் தாய்ப்பால் போல் மாசுபடாதது. அதன் அறிவு நெருப்புக் கொழுந்து போன்றது. அதன் மழலை செல்வம் போல் யார் மனத்தையும் மாற்றவல்லது. ஆதலின் குழந்தையரங்குகள் நடத்துவது நம் கழகத்துக்கு நல்வளர்ச்சி. இக்கருத்தினைத் தெரிவித்த நங்கை யாழிக்கு நன்றி. காட்சி : 18 (இளைஞர் சங்கக் கட்டிடம். ஓர் அறையில் பண்ணன் அமர்ந்திருக்கிறான். செய்தித்தாள்கள் முன்னே கிடக்கின்றன.) முரசன்: (உரத்த குரலில்) பண்ணா நீ இளைஞர் சங்கத்துக்குத் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி எங்கள் எல்லோருக்கும்.... பண்ணன்: கவலையா? மகிழ்ச்சியா? முரசன் : கவலையும் இல்லை, மகிழ்ச்சியும் இல்லை. பண்ணன்: அப்படி ஒரு நிலையுண்டா? முரசன்: ஒருமுறை கவலைப்படுகின்றோம்; மறுமுறை மகிழ்ச்சி அடைகின்றோம். கதிரன்: நீயும் துறவியாக நேர்ந்ததே என்று நினைக்கும்போது கவலைப்படுகின்றோம். முரசன்: வாழ்க்கையில் தோல்வி வரும்போது, ஒரு சங்கத்துக்குத் தலைமை கிடைத்ததே என்று மகிழ்ச்சியடைகின்றோம். எல்லன்: இவனுக்கு மாத்திரமா கிடைத்தது? இவன் முன்னாள் காதலி வடிவுக்கும் கிடைத்தது. அதுவும் உள்ளூரிலே கிடைத்தது. முரசன்: வடிவு அன்னையர் கழகம் அமைத்தது போல நீ அப்பர் கழகம் அமைப்பது தானே? பண்ணன்: ஏட்டிக்குப் போட்டியாகத் தெரியும். முரசன்: துறவிகள் சங்கம் ஒன்று தொடங்கேன்? வடிவும் அச்சங்கத்தில் வந்து சேருவாள். எல்லன்: இருவரும் ஒரு சங்கத்துக்கு வந்து சேர்ந்துவிட்டால், அச்சங்கம் குடும்பம் ஆனாலும் ஆகிவிடும். பண்ணன்: துறவும் துறவும் எங்காவது உறவாதல் உண்டா? முரசன்: ஆண் துறவியும் பெண் துறவியும் சந்தித்தால், துறவு துறவாகிவிடும். அது சரி. நீ என்றுமே துறவியாக இருக்கப் போகிறாயா? பண்ணன்: வடிவு துறவியாக இருக்கும்வரை நானும் துறவியாகத்தான் இருக்க வேண்டும். வேறு வழி இல்லை. முரசன்: தன்னுரிமை என்பது உன்னிடம் சிறிதும் இல்லை. காதல் மிக மென்மையான உணர்ச்சி. கொடிபோல் அது எப்படியும் வளைந்து கொடுக்கும். காதலில் நீ வன்மை காட்டாதே. காதல், கீதல், சாதல் எல்லாம் நமக்குப் பிடிக்காது. காதல் என்பது ஊதல் போன்றது. பழத்தைப் பார்த்தால் நா ஊறுகின்றது. பணத்தைப் பார்த்தால் ஆசை பெருகுகின்றது பெண்ணைப் பார்த்தால் காதல் பிறக்கின்றது. இவ்வளவுதான். உள்ளம் ஈயின் கால்போல் இருக்க வேண்டும். பட்டும்படாமலும் இருப்பவன் தான் கெட்டிக்காரன். மனிதனுக்குக் காதல் வேண்டாமென்று நான் சொல்லவில்லை. இவளைத் தான் காதலிப்பேன் என்று உள்ளத்தைப் பறிகொடுத்து விடுவது அடிமைக் காதல். காதலாகக் கிடப்பதைவிட, எவளோ ஒருத்தியை மணஞ்செய்து கொண்டு இல்லறமாக வாழ்வதே ஆடவன் கடமை. திருமணம் இல்லாத ஆடவனும் பேடியும் ஒன்றுதான். தான் பேடியில்லை என்பதை ஒருவன் திருமணஞ்செய்து கொண்டு குழந்தை பெற்றுக்காட்ட வேண்டும். நீ மாத்திரம் ஒரு வார்த்தை சொல். (விரலைச் சுண்டுகிறான்) நாளையே திருமணம். எல்லன்: முரசா! என்ன, பெண் கைக்குள் இருப்பது போல் பேசுகிறாய். முரசன் : கைக்குள் என்ன, இதோ என் பைக்குள் இருக்கிறாள் பார்! (செய்தித்தாளை எடுத்துக் காட்டுகிறான்) “உடனே மணமகன் தேவை, அழகும் பணமும் படிப்பும் உடைய பெண்ணுக்கு” பார்த்தாயா? பண்ணன்: உனக்கு இன்னும் மணமாகவில்லை. நீயே இந்தப் பெண்ணை மணந்துகொள். முரசன்: இதோ பார். மோதிரத்தை. நேற்று எனக்குத் திருமணம் நடந்துவிட்டது. எல்லன்: (வியப்போடு) யார்க்கும் சொல்லவில்லையே! முரசன்: மணப்பெண்ணுக்குச் சொன்னாற் போதாது? கதிரன்: பெற்றோருக்குக் கூடச் சொல்லவில்லையா? முரசன்: நம் திருமணத்தில் பெற்றோர் தலையிடுவதற்கு. என்ன இருக்கிறது? பெற்றோர்கள் திருமணஞ்செய்து கொண்ட போது நாம் தலையிட்டோமா? பண்ணன்: ஓ! ஓ! அறிவுடையோர்கள் உன் கருத்தை மறுக்க வரமாட்டார்கள். முரசன்: “கட்டுடல், பட்டுமேனி, வெட்டு விழி, பட்டப்படிப்பு, மெத்தை வீடு, உறவினர் யாரும் இல்லை. உடனே மணம், தந்தி விடுக்க”என்ற இனிய செய்தியை “மணமகன் தேவை” என்ற தலைப்பில் பார்த்தேன். பார்த்ததும் காதல் பிறந்தது. பதிவு நிலையம் சென்றேன். அவளுக்கு நான் உயிர் எனவும் எனக்கு அவள் உடல் எனவும் பதிவு செய்து கொண்டோம். காலம் மாறிக்கொண்டிருக்கிறது. அதற்கேற்பக் காதலும் மாறிக் கொண்டிருக்க வேண்டும். காதல் ஒரு சேற்று நிலம். மெல்லக் கால் வைத்துப் பார்க்கவேண்டும். இனி அஞ்சல் வழியாகத் தாலி கட்டும் காலம்கூட வந்து விடும். மணமகன் தேவை என்று மணமுரசு கொட்டும் இக்காலத்தில். ஒருவன் ஒருத்திக்காகக் காலமெல்லாம் உயிரைவிட்டுக் கொண்டிருப்பானா? எல்லன்: முரசன் ஏன் பதிவுத் திருமணம் செய்து கொண்டான் தெரியுமா? பிடிக்காத போதும் பதிந்தாற் போச்சு. முரசன்: பதிவு மணத்தின் நயம் அதுதான். எவ்வளவு எளிதாகக் கட்டிக்கொண்டோமோ, அவ்வளவு எளிதாக வெட்டிக்கொள்ளலாம். பண்ணன்: நீ செய்திருப்பது வசதிக் காதல். நான் விரும்புவது வாழ்வுக் காதல். முரசன்: (கேலியாக) அடடா! நீ காதலை எப்போதும் தனியாக விரும்பிக் கொண்டிரு. நான் ஒருத்தியொடு துய்த்துக் கொண்டிருக்கிறேன். நான் காதலிக்கு அடிமைப் படுவதில்லை. காதலி மாறினாலும் என் காதல் மாறாது. எல்லன்: அதுவல்லவோ காதல்! நீ சொல்லுகிறபடி ஒரு பெண்ணும் சொன்னால்.... முரசன்: அப்படிச் சொல்லக்கூடியவளைத்தானே காதலிக்க வேண்டும். தொட்டால் தொடுதல், விட்டால் விடுதல், இத்தகைய துறவுள்ளமே சிறந்த காதல் உள்ளம். (நல்லம்மை வருதல்) பண்ணன்: வாருங்கள், இருங்கள்.... நல்லம்மை : நான் ஒரு பெண் துறவி. முரசன்: அதுதான் பார்த்தாலே தெரியுதே. நல்லம்மை: அன்னையர் கழகத்தின் செயலாளர். பண்ணன்: வடிவழகி தோற்றிய கழகம்தானே அக்கழகம்? முரசன்: துறவிகளையும் அன்னையர் கழகத்தில் சேர்த்துக் கொள்வார்களோ? நல்லம்மை: கழகத்தை அமைத்தவரே ஒரு துறவிதானே. பண்ணன்: நன்றாக நடக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். செய்தித்தாள்களும் பாராட்டி எழுதியிருக்கின்றன. வடிவழகியாரின் படத்தைக்கூட வெளியிட்டிருக்கின்றன. இதோ பாருங்கள். (படத்தைக் காட்டுதல்) கழகத்துக்கு என் வாழ்த்தும் உண்டு. நல்லம்மை: வாழ்த்து மாத்திரம் போதாது. தங்கள் வரவும் வேண்டும். எங்கள் கழகத்தில் குழந்தை அரங்கங்கள் கொண்டாடுகின்றோம். அதன் முதலாண்டு விழாவில் தாங்கள் தலைமை வகித்துப் பரிசுகள் நல்கவேண்டும். எல்லன்: இது தங்கள் சொந்த வேண்டுகோளா? நல்லம்மை: துறவிக்கு என்ன சொந்தம் இருக்கிறது? கழகத்தின் தீர்மானம். கதிரன்: அன்னையர் கழகத்துக்கு ஆண் துறவோனை அழைப்பது பொருத்தமாகப் படவில்லை. பண்ணன்: அன்னையர்கள் அன்பினால் அழைக்கும்போது மறுப்பது ஆண்மையாகாது. உங்கள் வேண்டுகோளை நான் ஏற்கின்றேன். நல்லம்மை: மிக்க மகிழ்ச்சி. எங்கள் கழகம் பேசாமடந்தையர்கள் கழகம் இல்லை. ஆணின்றிப் பெண்ணில்லை; பெண்ணின்றி ஆணில்லை என்பது யாரும் புரிந்து கொள்ளக்கூடிய செய்தி. தொண்டு செய்வோரை யெல்லாம் எங்கள் கழகம் மதிக்கும். பண்ணனார் நன்கு படித்த தொண்டர்; சங்கத் தலைவர்; இவரைவிட எங்கள் முதல் விழாவிற்குத் தலைமை தாங்கத் தக்கவர் வேறு யார் இருக்கிறார்கள்? முரசன்: (சிரித்துக்கொண்டு) நானும் ஒரு தெண்டன்தான். என்னை அழையுங்கள். நல்லம்மை: (கேலியாக) உங்கள் தொண்டைக் கேள்விப்படும் போது அழைக்கிறோம். முரசன்: இன்னும் எத்தனையோ ஆண்டுவிழாக்கள் இருக்கின்றன; தலைவர்கள் வேண்டும்போது அழையுங்கள். எங்கள் இளைஞர் சங்கத்தில் தலைமை தாங்க வல்லவர்கள் பலர் இருக்கிறார்கள். அது சரி ஆண்டுவிழா பார்க்க ஆண்கள் வரலாமா? நல்லம்மை: இளைஞர் சங்க உறுப்பினர் ஒவ்வொருவரையும் தவறாது நாங்கள் அழைக்கின்றோம். சங்கத் தலைவர் தலைமை தாங்கும்போது, அழையாது இருப்போமா? (பண்ணனைப் பார்த்து) நீங்கள் விரைவாக இசைந்ததற்கு நன்றி. இன்னும் ஒரு வேண்டுகோள். பண்ணன்: நீங்கள் அறிவுமுதிர்ந்த துறவாட்டி. நீங்கள் எத்தகைய வேண்டுகோள் செய்தாலும், அது நல்லதாகத் தான் இருக்கும. நல்லம்மை: தங்கள் தலைமையுரையில், அன்னையர் கழகத்தை நிறுவிய வடிவழகியாரின் தொண்டினைப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிட்டாற் போதும். கதிரன்: பெரிய தொண்டினைச் சுருக்கமாகச் சொன்னால் பலருக்கு விளங்காது. நல்லம்மை: எங்கள் கழகத்தில் சுருக்கமாகப் பேசினால் போதும். பண்ணன்: தங்கள் முகச்சாயல் அடிக்கடி பார்த்த மாதிரி இருக்கிறது. நல்லம்மை: இந்த உருவத்திலா பார்த்திருக்கிறீர்கள்? பண்ண: இல்லை, ஆணுருவத்தில்..... நல்லம்மை: இறைவன் சில சமயங்களில் மறந்து முன்படைத்த முகத்தையே மறுபடியும் படைத்துவிடுகிறான். (நல்லம்மை சென்று விடுதல்) காட்சி -19 (மலையனார் வீடு) மலரி: (சூடான காபியைக் கொடுத்து) அம்மா! நான் ஒரு வேலைக்காரி. வடிவு: (மனங்கலங்கி) என்ன, அக்கா! திடீரென இப்படிப்பேசத் தொடங்கிவிட்டாய். நான் பிறப்பதற்கு முன்பே இங்கு வேலைபார்க்க வந்தவள். நீ அம்முறையில் எனக்கு மூத்தவள். மலரி: எப்படியிருந்தாலும் வேலைக்காரி வேலைக்காரிதானே. வடிவு: என் தாய் உன்னை மலரி என்று பெயர் சொல்லி அழைப்பாள். தங்கச்சி என்று தகப்பனார் அன்போடு கூப்பிடுவார். அக்காள் என்று தம்பியும் நானும் கூப்பிடுவோம். அப்படியிருக்க, உன்னை வேலைக்காரி என்று யார் சொல்லத் துணிந்தார்கள்? மலரி: (இடுப்பில் சேலையை வரிந்து கட்டிக்கொண்டு) அப்படி யார் சொன்னாலும் விடுவனா? நான்தான் சொல்லிக்கிறேன். (குடித்த குவளையைக் கையில் வாங்கிக் கொண்டு) அக்காள் தங்கச்சி என்று சொல்வதெல்லாம் உதட்டளவில். (கண்ணீர் விடுகிறாள்.) வடிவு : இதுவரையில் நீ அழ நான் பார்த்ததில்லை. ஏன் இந்த அழுகை? மலரி: இந்த வீட்டில் எல்லோரும் அழுகிறபோது, நான் மட்டும் எவ்வளவு நாளைக்கு அழுகாமல் இருக்கமுடியும்? வடிவு: இந்த வீட்டில் யார் அழுவதையும் நான் பார்க்கவில்லையே. மலரி: நீ பார்க்கவா அழுவார்கள்? நீ கழகத்துக்குப் போனதும், பெற்றோர்கள் அழுது கொண்டிருக்கிறாங்க. அம்மா, அப்பா என்று நீ வந்து கதவைத் தட்டியதும், அழுகையை அடக்கிக்கொண்டு சும்மா இருக்கிறாங்க. வடிவு: பயந்து பயந்து ஏன் கண்ணீர் வடிக்க வேண்டும்? மலரி: ஒரு கழகத்துக்குத் தலைமை தாங்கும் உனக்குத் தெரியாதா? ஏன் மழுப்புகிறாய்? வளர்த்த கிடாரிக்கண்ணு பால் கறக்கா விட்டா, சிரிச்சுக்கிண்ணு இருப்பாங்களோ? வடிவு: கலகலவென்று இருப்பதற்கு என்ன செய்யவேண்டும்? மலரி: அப்படிக் கேளு. பேரப்பிள்ளைங்க இருந்தால்தான் பெற்றவங்க கலகலன்னு இருப்பாங்க. வடிவு: அக்கா! இந்த ஒரு செய்தியை விட்டுவிட்டு, வேறு ஏதாவது சொல்லு. மலரி: எனக்கு வேறு என்ன தெரியும்? இந்தக் காலத்தில் படித்தவங்கள் படித்தவங்களுக்கு இடித்துச் சொல்லப் பயப்படுகிறாங்க. ஒண்ணும் படியாதவங்கதான் துணிஞ்சு படித்தவங்களுக்கு அறிவு புகட்டவேண்டியிருக்கு. வடிவு: காலம் மாறிக்கொண்டு தானே வருகிறது. மலரி: எப்படி மாறுது தெரியுமா? படிச்ச பெண்கள் பிள்ளை பெறுவதைத் தள்ளிப்போட நினைக்கிறாங்க. படித்த ஆண்பிள்ளைகள் காதலோடே நிறுத்திக்க நினைக்கிறாங்க. பெற்றவங்க பிள்ளைங்களுக்கு எதுவும் சொல்ல அஞ்சுறாங்க. பலர் முன்னே புகழ்கிறாங்க, பின்னே இகழ்கிறாங்க. வடிவு: நாலும் பேசுவார்கள். அதனைப் பொருட்படுத்தாமல் தான் தொண்டுசெய்ய வேண்டும். மலரி: அப்படிக் கேட்டுக்கிண்ணு தொண்டு செய்யவேணு மின்னு என்ன வந்திருக்கு. நமக்குச் சொந்த வேலை இல்லியா? என்னவெல்லாம் பேசுறாங்க. அன்னைகள் நிலைபற்றி இந்தச் சின்னவளுக்கு என்ன தெரிஞ்சு போச்சு. அவங்கவங்க குடும்பத்தைக் காப்பாத்த அவங்கவங் களுக்குத் தெரியாதா? தெரியாட்டித் தெரிஞ்சவங்களைக் கேட்டுக்கிறாங்க. இதுக்கு ஒரு கழகமா? இது நாளைக்கிக் கலகமாத்தான் முடியப்போகுது. காவியுடை போட்டுக் கின்னு காட்டிலே மடத்திலே திரிவாளா, இப்படி வண்ணச் சீலை கட்டிக்கிண்ணு ஊரிலே திரிவாளா? இப்படி இப்படி எல்லாம் பேசறாங்க. வடிவு: எல்லாம் பொறுக்க வேண்டியதுதான். மலரி: எதுக்காகப் பொறுக்கணும்? நமக்கிண்ணு சொந்தப் பொறுப்பு இல்லியா? கன்னிப் பிள்ளைகளை யெல்லாம் துறவியாக்கிக் கெடுத்துவிடுவா போலிருக்கே. பொம்பிளைக்கென்ன துறவு தொண்டு வேண்டியிருக்கு. நல்லா இருக்கிற குடும்பத்துக் கெல்லாம் இவளாலே சண்டைவரும் போலிருக்கே. எந்த மருமக இப்போ நம்மை மதிக்கிறா. எட்டுமணிக்குக் கூட்டமின்னு கிளம்புகிறாங்க. இரவெல்லாம் பேசி ஆராய்கிறாங்களாம். அப்புறம் காலையில் எட்டுமணிக்குத்தான் எழுகிருங்க. இப்படி யெல்லாம் கிழவிகட்டைகள் பேசுதுகள். என் காதே துடிக்குது. கேட்டால் அப்பா அம்மா உசிர் வைச்சிருப்பாங்களா? வடிவு: உலகம் பலவிதம். மலரி: வடிவு, நாம் ஊருக்கொப்ப ஒருவிதமா நடந்தால் ஏன் ஊரு பேசுது. இன்னம் என்ன சொல்லுகிறாங்க, நீ பேடியாம், பொம்பிளைஇல்லையாம் அதை மறைக்கத் தான் தொண்டு கிண்டுண்ணு பேசிக்கிண்ணு திரிகிறயாம். இன்னும் சிலபேர் சொல்லுகிறாங்க, நீ துறவு கொண் டிருப்பதும், பண்ணன் அய்யா துறவு, கொண்டிருப்பதும் ஊரை யேய்க்கிறதாக்கும். கள்ளத்தனமாக நடக்கிறதாக்கும். இப்படிப் பேசுகிறாங்க. இவங்க வாயை எல்லாம் அகலமாகக் கிழிச்சு அஞ்சாறு தையல் தச்சிறவேணும். இவங்களைப் பல்கட்டும்படி செய்யவேணும். வடிவு: (கண்கலங்கி) இப்படியுமா பேசுவார்கள்? மலரி: பெரிய பொம்பிளைகள் எப்படி எப்படியெல்லாமோ பேசுவார்கள். அவங்க பேச்சுக்குப் புளியும் புழுவும் வெட்கப்பட வேணும். ஆண் பிள்ளைகளும் சும்மா வாய் வைச்சுக்கிண்ணு இருப்பாங்களா? அவங்களுக்கு இளநடிகைகளும் இளந்துறவிகளும் ஒரே மாதிரிதான். கண்டபடி பேசுவாங்க. அவங்க பேச்சைக்கேட்டா, இந்த மனிசப்பிறப்பே வேண்டாமின்னு தோணும். வடிவு: யார் புகழ்ந்தால் என்ன யார் இகழ்ந்தால் என்ன, யார் வாழ்த்தினால் என்ன, யார் வைதால் என்ன. எனக்குத் திருமணத்திலே ஆசை இல்லை. மலரி: வடிவு! ஆசையில்லைண்ணு சொல்லாதே. ஆசை யில்லாமலா அந்தப் படத்திலே அவருக்கு முன்னாடி உட்கார்ந்திருக்கிறாய். அவரும் பின்னாடித் தொட்டுக் கிண்ணு நிக்கிறாரு. வடிவு: எந்தப் படத்திலே? இல்லாத பொல்லாத பொய்யெல்லாம் சொல்லாதே. அக்கா! (வடிவுக்குப் பின்னே பண்ணன் நிற்கும் நிழற்படத்தைக் காட்டுகிறாள் மலரி. அதனைக் கண்டு வடிவு நாணுகிறாள்) மலரி: (சிரித்துக்கொண்டு) ஆசையில்லாத பெண்ணுக்கு நாணம் வராது. அவரைப் படத்திலே பார்க்கிறபோதே இவ்வளவு ஆசையும் நாணமும் உனக்குப் பொத்துக் கொண்டு ஓடிவருதே. நேரே கண்டா வெட்கத்தாலே தலையும் காலும் ஒண்ணு சேந்தாலும் சேந்திரும். வடிவு: எத்தனையோமுறை அவரைக் கண்டிருக்கின்றேன். எங்கள் குழந்தை விழாவுக்குத் தலைமைவகிக்க நாளைக்கு அவர் வருவார். அப்போதும் அவரைப் பார்க்கத்தான் செய்வேன். மலரி: தங்கை! எத்தனைமுறை கண்டிருந்தால் என்ன! காதலுக்கு ஒரு பார்வையும், கைக்குழந்தைக்கு ஒரு சேர்க்கையும் போதாதா? (வடிவு மேலும் நாணுகிறாள்) வடிவு! உன் மனசு சிறுபிள்ளை முதல் எனக்குத் தெரியும். பத்து விளையாட்டுப் பொம்மைகளை அணைச்சுக்கு வாய். முத்தம் குடுப்பாய். உனக்குக் குடிக்கத்தந்த பாலை உன் மார்பில் தடவிக் கொண்டு அந்தப் பொம்மைப் பிள்ளைகளுக்குப் பால் குடுப்பாய். நானும் உன் அம்மாவும் கிட்ட வந்து பார்ப்போம். உனக்குப் பிள்ளைமேல் இருக்கிற ஆசையைப் பார்த்து, இப்பவே, இவள் மார்பு பால் சுரந்திருமோ என்று பேசிச் கொள்வோம். இன்னிக்கி இல்லா விட்டாலும் நாளைக்கு உனக்குக் குழந்தை ஆசை விடாது. சில பொம்பிளைகளுக்கு ஒரு குழந்தை இரண்டு குழந்தையோடு பிள்ளை ஆசை நீங்கிவிடும். உனக்கு ஒன்பது குழந்தைகள் பொறந்தாலும் ஆசை நீங்காது. உன் ஆசை ஒளிஞ்சு கிடக்குது. எனக்குத் தெரியும். எனக்குப் படிப்பே இல்லை. இருந்தாலும், யார் மனசிலே இருக்கிறதையும் கூர்மையாகக் கண்டு பிடிச்சிருவேன். வடிவு: அக்காள்! நீ சொல்வதெல்லாம் ஒரு புறம் சரியென்று தெரிகிறது. இன்னொரு புறம் பார்த்தால் சரியென்று தெரியவில்லை. குடும்பமானவர்களையும் தான் எவ்வளவோ கெடுதலாகப் பேசுகிறார்கள். பிறர் பேசுவதற்காக, நமக்குப் பிடித்தமான நல்ல கொள்கையை விட்டுவிட முடியுமா? ஒவ்வொருத்தர் சொல்வதற்கும் கொண்ட கொள்கையை விட்டுக்கொண்டே போனால், அறிவிலே குழப்பமும், மனத்திலே குழப்பமும் ஏற்பட்டு, உள்ளதும் கெட்டுப் போகும் அல்லவா? உன் மனமாரச் சொல்லு, துறவு கெட்ட கொள்கையா? தொண்டு செய்வது கெட்ட நடத்தையா? நினைத்தால் நாளைக்கு மணம் செய்து கொண்டுவிடலாம். துறவு என்ற நினைப்பு வருவது பெரிய காரியமில்லையா? எல்லாரும் போகின்ற பொதுநெறியில் செல்லாமல், சிறப்பு நெறியில் செல்ல நினைக்கிறேன். அதிலே முதலிலே சில பழிகள் வரும். அப்புறம் எல்லாம் சரியாகப் போய்விடும். அக்கா என் துறவுக்கு நீ உதவிசெய். (மலரியின் கைகளைப் பிடித்துக் கொள்கிறாள்) மலரி: தங்கை உன் துறவை யாராவது கேலி செய்தால் கேட்டுக்கிண்ணா இருப்பேன்? கைம்மாறு எதற்கு இருக்கு? உங்க வீட்டிலே சோறு தின்ன வாய் சும்மா இருக்குமா? உன் துறவைக் கெடுக்க வேணுமிண்ணு நான் சொல்லலை. தொண்டும் செய்துக்க, மணமும் செய்துக்க என்பதுதான் என் கருத்து. இந்த வயிறு ஆண்பிள்ளைக்குச் சோத்து வயிறு; பெண் பிள்ளைக்குச் சோத்து வயிறா? பிள்ளை வயிறில்லே. இந்த மார்பு ஆண்பிள்ளைக்குச் சும்மா மார்பு; பெண் பிள்ளைக்குச் சுரக்கும் மார்பு. இவ்வளவு பச்சையா சொல்லுகிறேன்னு நினைச் சுக்காதே. எனக்குப் புரிஞ்ச முறையிலே சொல்லுகிறேன். நீ நாளைக்கு ஒரு தாய் பிள்ளைக்குப் பால் கொடுப்பதைப் பார்க்கிறாயிண்ணு வைச்சுக்குவோம். அந்தப் பிள்ளை குடிக்கும்போது மெதுவாகச் சிரிச்சுக்கும். தாயும் கண்ணேண்ணு சொல்லி சிரிச்சுக்குவாள். இதைப் பார்க்கும்போது, உனக்கு எப்படி இருக்கும்? கட்டாயம் குழந்தை வேணுமிண்ணு ஆசை தோணும். அந்த ஆசை தோணாவிட்டால், நீ துறவியாய் இருந்துக்க. அந்த ஆசை வந்திட்டால், உடனே துறவைக் கலைச்சிடு. துறவைக் கலைப்பதைக் கேவலமா நினைச்சுக்காதே. குடும்பமா இருப்பது கேவலமா? உன் மனசுக்குத் தக்கபடி நட. அதை ஒளிச்சுக்காதே. இதுதான், படிக்கா விட்டாலும், எனக்கு தெரிஞ்சது. இதைக் கட்டாயம் நினைச்சுக்கிறாயா? வடிவு: மனம் தூய்மையாக இருக்கவேண்டும் என்று வள்ளுவர் சொல்லுகிறார். அவர் வழி வந்த நீயும் அப்படித்தான் சொல்லுகிறாய். நானும் அப்படித்தான் நடக்கிறேன். இனியும் அப்படித்தான் நடப்பேன். மனம் தூய்மையாக இருப்பதுதானே உண்மையான கொள்கை. மலரி: நினைச்சுக்கும் போது, இன்னொண்ணும் நினைச்சுக்க. வடிவு: சொல்லக்கா, சொல்லு. நீ சொல்வதையெல்லாம் நினைத்துக் கொள்கிறேன். மலரி: உனக்குத் திருமணம் நடக்கும்போது என் தங்கத்துக்குத் தங்கம் தருவதாகச் சொல்லியிருக்கிறாய்; மறந்திடாதே. வடிவு: அப்படி நடக்குமாயின், தங்கம் தந்தாலும் தருவேன்; அரசினரின் தங்கத்தாள் தந்தாலும் தருவேன். மலரி: தங்கத்தாள் தானே தா. வட்டியோடு கிடைக்கும். என் மகளுக்குத் திருமணஞ் செய்யும்போது சீராகக் கொடுக்க உதவும். வடிவு: சரி, உன் விருப்பப்படி தாளே தருகிறேன். காட்சி -¹20 (ஓர் இலக்கியக் கூட்டத்துக்கு நாவலன் மிதிவண்டியிற் செல்லுகிறான்: யாழியும் செல்வதைப் பார்க்கிறான். வண்டியை விரைவாக ஓட்டித் திடுமென யாழியின் பக்கத்தில் இறங்குகிறான்) நாவலன்: (மெல்ல) யாழி! கூட்டத்துக்கு விரைவாக நடக்கிறாயே. யாழி: தங்களைக் கண்டதும் இன்னும் விரைவாக நடக்க வேண்டியிருக்கிறது. நாவலன்: ஏன் மிதிவண்டிக்குப் பின் ஏற்றிக்கொண்டு விடுவேன் என்று நினைக்கிறாயா? யாழி: திருமணத்துக்கு முன் அப்படிச் செய்யும் துணிச்சல் தங்கட்கு வருமா? நாவலன்: என்னைவிட உனக்குத் துணிச்சல் அதிகம். நீ வண்டியை ஓட்டு. நான் பின்னே ஏறிக்கொள்கிறேன். யாழி : இருவர் ஏறிச்சென்றால், ஊர்காப்பாளர்கள் பிடித்துக் கொள்வார்கள். நாவலன் : நாமிருவரும் உயிரொன்று. பிடிக்கமாட்டார்கள். யாழி : உயிரொன்றா இருந்தாலும், தலையிரண்டு. நாவலன் : வா. இருவரும் நடந்து போவோம். யாழி: கொஞ்சம் எட்டி நடந்து வாங்கள். ஊர்க்கண்கள் பார்த்து விடும். நாவலன்: ஊர்க் கண்களுக்கு அஞ்சவில்லை. உன் கண்களுக்குத்தான் அஞ்சுகிறேன். யாழி : அஞ்ச வேண்டாம். கண்களை மூடிக் கொள்கிறேன். நாவலன்: அப்படி ஒவ்வொரு பாகத்தையும் மூடிக்கொள்ள முடியுமா? மூடிக்கொள்வதனால் காதல் ஓடிப் போகாது. மறைக்க மறைக்கக் காதல் கூடிவரும். யாழி: மெல்ல மெல்லப் பேசிக்கொண்டே பூங்காவுக்குக் கடத்தி வந்து விட்டீர்களே. இதுதான் இலக்கியக் கூட்டம் நடைபெறும் இடமோ? நாவலன்: இன்பக்கூட்டம் நடைபெறும் இடம். இதோ பார்! உனக்குப் பிறக்கும் பெண் குழந்தைபோல் மெல்ல அடி வைக்கும் சோடிப் புறாக்கள் சேர்ந்து செல்கின்றன. இதோ பார், கண்ணே! நின் கண்ணிறம் கொண்ட கருங்குயில்கள் மாங்கிளையில் ஒக்க இருந்து உரையாடு கின்றன. நின் நீலப் புடைவையன்ன மயில்கள் தோகையை விரித்தும் போர்த்தியும் களிக்கின்றன. நீ என் மேனி மேல் வீழ்ந்தால், நான் அன்போடு அணைத்துக்கொள்வது போல, முல்லைக்கொடி சுற்றிப் படருகின்ற புன்னை மரத்தைச் சிறிது நிமிர்ந்து காண்? இப்பூங்கா இன்பக் கூட்டங்கள் நிகழும் இடம் என்று இவற்றைப் பார்த்தாலே உனக்குப் படவில்லையா? யாழி : படவில்லை. நாவலன் : இன்னும் சிறிதுநேரம் இருந்தால் பட்டு விடும். யாழி : இந்த இடத்தைப் பார்த்தால், புறாவும், குயிலும், மயிலும், கிளியும், வண்டும், குரங்கும் காதல் செய்யும் இடமாகவே தெரிகிறது. காதல் செய்யும் மக்கள் யாரையும் இங்கு காணவில்லையே. நாவலன் : நாம் மக்கள் இல்லையா? யாழி : பெற்றோர்க்கு மக்கள். அவ்வளவுதான். நாம் காதல் செய்யும் மக்களா? இவ்விடத்தில் இருக்க நான் அஞ்சுகிறேன். குயில் கூவவில்லை; இதோ பாருங்கள். இவர்கள் மறைவாக வந்திருக்கிறார்கள் என்று பெற்றோரைக் கூப்பிடுகின்றது. மயில் களிக்கவில்லை; நம் சேர்க்கையை இம்மானிடர்கள் நாணமின்றிக் காண வந்திருக்கிறார்களே என்று சிறகடித்துப் பதறுகின்றது. வெண் புறாக்கள் மெல்ல நடக்கவில்லை; இக் கொடியவர்கள் எங்கே தம்மைப் பிடித்துக் கொண்டு போய்விடுவார்களோ என்று அஞ்சி அஞ்சி அடிவைக்கின்றன. “மணங் கொள்ளாத ஓர் ஆணும் பெண்ணும் இப்படித் தனியே இருப்பார்களா? சிரித்துப் பேசிக் கொள்வார்களா? என்ன மனித நாகரிகம்” என்று முல்லைக் கொடியாள் தன் காதலனுக்குச் சொல்லிச் சிரிக்கின்றாள். அச்சிரிப்பைக் கேட்ட வண்டு அடுத்த பூங்காவுக்கு இச் செய்தியைச் சொல்லப் பறந்து சென்றிருக்கின்றது. இனி, இவ்விடத்தில் நாம் இருப்பது பெருமையில்லை. தாவிச் சென்றிருக்கின்ற குரங்குகள் தம் இனத்தை யெல்லாம் கூட்டிக்கொண்டு வந்து இச்சோலை எங்கட்கு உரிய இடம் என்று நம்மை ஓடோட விரட்டினாலும் விரட்டலாம். நாவலன்: நானும் தான் அஞ்சுகிறேன். இலக்கியக் கூட்டம் முடிந்து, நம்மைப்போல் காதற்சோடிகள் இங்கு வந்துவிடுவார்களோ? வந்தால் இந்தச் சோடிப் புறாவும், இணைக் குயிலும், அணைமயிலும் அவர்கள் பக்கம் திரும்பி விடுமோ என்று அஞ்சுகிறேன். பெற்றோரை அழைத்துவந்தால் என்ன, ஊராரைக் கூட்டி வந்தால் என்ன, உலகத்தையே திரட்டி வந்தால் என்ன, கள்ளக் காதலர்கள் தாம் அஞ்சுவார்கள். உள்ளக் காதலர்கள் ஏன் அஞ்சவேண்டும்? இந்த முல்லைக் கொடியாளுக்கு விளக்காத பற்கள் தாம் உண்டு; கண்கள் இல்லை. கண்கள் இருந்தால், இந்த நிழற்படத்தைக் காட்டியிருப்பேன். (யாழிக்குப் பின்னே தான் நிற்கும் படத்தைச் சட்டைப் பையிலிருந்து எடுக்கிறான்) யாழி : (திடுக்கிட்டு) நீங்களும் நானும் இருந்து இப்படி ஒரு நிழற்படம் தனியாக எடுத்ததில்லையே. நாவலன்: (பெற்றோர்களுடன் சேர்ந்து எடுத்த நிழற்படத்தைப் பையிலிருந்து எடுத்து) இப்பொதுப் படத்திலிருந்து நம் இருவரையும் தனியாக வைத்துக் கொண்டேன், ஏன்? நாம் தனித்திருக்க வேண்டியவர்கள் இல்லையா? யாழி : உங்கள் அன்பைப் பாராட்டுகிறேன். நாவலன் : என் அறிவையும் பாராட்ட வேண்டும். நம் உறவு கள்ளம் என்று யாராவது கூற முடியுமா? பெற்றோர்கள் இருக்கும் படத்தில் நாம் இருவரும் நெருங்கி இருக்கின்றோம். அப்படி இருக்க விட்டிருப்பதிலிருந்தே, நம் காதலை அவர்கள் புரிந்து கொண்டார்கள். இசைந்தார்கள் என்பது வெளிப்படை. ஊரார் யாராவது அறியாது கூறினால், உடனே இப்படத்தைக் காட்டுவோம். இது கள்ளம் இல்லை, களவு என்று தெரிந்து கொள்வார்கள். யாழி : நெருங்கி இருப்பதனால் காதல் என்றாகி விடுமா? காதலுடையவர்கள்தாம் நெருங்கி இருக்க வேண்டுமா? ஆணும் பெண்ணும் பழகிவிட்டால் காதல் என்றா கருதிக்கொள்வது? அண்ணன் தங்கைமுறை போன்ற அன்புப் பழக்கம் என்றுதான் நல்லவர்கள் எடுத்துக் கொள்வார்கள். நாவலன் : (கலங்கி) என்னை நீ கருதுவது அண்ணன் முறையா? யாழி : (சிரித்து) இல்லை, இல்லை. நீங்கள் அத்தான்முறை. என் வாழ்வுக்கு நீங்கள் ஒருவரே அத்தான். (நாவலன் திடீரென யாழியை அணைத்துக்கொண்டு சிறிதுபொழுது அயர்ந்திருத்தல்) நாவலன் : இவ்வளவு காதல் உள்ளம் ஓடிய நீ ஏன் அப்படிக் கூறினாய்? யாழி : உங்கள் அக்காள் என் அண்ணனை அப்படிக் கருதுகிறாள். உங்கள் அக்காளுக்கு என் அண்ணன் அண்ணனாக இருந்தால், நீங்கள் எனக்கு எப்படி அத்தானாக ஆகமுடியும்? நாவலன் : உன்னை நான் மணந்து கொண்டபின், சட்டப் படிப்புப் படிக்க வைக்கப் போகிறேன். காதல் வழக்கறிஞராக நீ விளங்குவாய். நான் அத்தான் என்பது உறுதி. உன் அண்ணனையும் அத்தானாக ஆக்கிவிடுவேன். யாழி : உங்கள் தமக்கைக்கு அத்தானாக ஆக்க வேண்டும். நாவலன் : உன் உள்ளத்தையும் உன் கடிதத்தின் பொருளையும் இப்போது நன்றாக விளங்கிக் கொண்டேன். இதோ பார்! (வடிவும் பண்™ணும் நிற்கின்ற நிழற்படத்தைக் காட்டுகிறான்) தனித்து எடுத்து வைத்திருக்கின்றேன். என் தமக்கைக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அழுது பார்த்தேன். தமக்கையாயினும் பெண்ணானதால் அடித்துப் பார்க்கவில்லை. யாழி : அடித்துப் பார்க்கவிட்டாலும், நான் சொல்லுகிறபடி நீங்களும் நடித்துப் பாருங்கள். தாடி மீசை வளருங்கள். உங்கள் வீட்டைப் பெரிய மடமாக்குங்கள். நாவலன் : என்னைத் துறவியாக ஆக்கிவிட மாட்டாயே யாழி : காதலி ஏவுகின்றாள். (புன்சிரிப்பாக இருவரும் பிரிகிறார்கள்) காட்சி : 21 (அன்னையர் கழகம், குழந்தையரங்கம்) நறுங்கொன்றை : (ஒலிபரப்பியில்) அன்னைமார்களே! குழந்தைச் செல்வங்களே! நேற்றுக் குழந்தை விளையாட்டரங்கம் நிகழ்ந்தது. ஓடுதல், தாவுதல், நொண்டியடித்தல், இசையிருக்கை, பந்தெறிவு, சிறுதேருருட்டு, சிற்றிலிழைப்பு, வேடப்புனைவு, கிட்டியடிப்பு, பல்லாங்கிச்சு, கீரிக்கோடு, குண்டு விளையாட்டு என்ற பல விளையாட்டுப் போட்டிகள் நம் அன்னையர் கழகத்தின் சார்பாக நடைபெற்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். நூற்றுக்கு மேலான சிறுவர்களும் சிறுமியர்களும் கலந்துகொண்டு எல்லார்க்கும் மகிழ்ச்சியளித்தனர். மாதர் விளையாட்டரங்கமும் நேற்று நிகழக் கண்டீர்கள். ஓட்டம், பந்தாட்டம், பின்னல், ஓவியம், சமையல் குடும்ப மருந்து, குழந்தை வளர்ப்பு, குழந்தை ஒப்பனை முதலான போட்டிகளில் பெரிய பெண்கள் சிலரே கலந்து கொள்ள முன்வந்தனர். அடுப்பு மூட்டும் போட்டியில் யாருமே வெற்றி பெறவில்லை என்றால், பெண்கள் முன்னேற்றத்தைச் சொல்லவும் வேண்டுமா (கை தட்டல்) வருகின்ற ஆண்டில் பெண்டிர் பலர் மாதர் அரங்கத்தில் கலந்துகொள்ள ஆயத்தமாக வேண்டும். எஞ்சியிருக்கும் இரண்டு அரங்கங்கள் இப்போது நடைபெறவிருக்கின்றன. பாட்டரங்கம் என்பதில் குழந்தைகள் தாம் கற்ற பாடல்களைப் பாடுவார்கள். இப்போட்டிக்கென்றே பெற்றோர்கள் புதிய பாடல்களை ஆக்கிக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இத் தமிழ் வளர்ச்சி என்றும் மதிக்கத்தக்கது. பாட்டரங்கம் முடிந்த பிறகு, அறிவரங்கம் நடைபெறும். முன் தெரிவித்தபடி, குழந்தைகளின் மதிநுட்பமும் சொற்சுவையும் இவ்வரங்கத்தில் விளங்கும். கலந்து கொள்கின்ற எல்லா இளம் புலிகட்கும் இளங்குயில்கட்கும் பரிசுகள் உண்டு. ஆதலால் சோர்வில்லாமல் குழந்தைகளைப் போட்டிக்கு வரச் சொல்லுங்கள். பாட்டரங்கம் (இரு சிறுமியர் வருகின்றனர். மாறி மாறிப் பாடுகின்றனர். இசையும் நடிப்பும் கலந்து ஆடுகின்றனர்) பாடு பாடு என்ன பாடு? பாட்டுப்பாடு என்ன பாட்டு? தமிழ்ப் பாட்டு என்ன தமிழ்? சங்கத் தமிழ் என்ன சங்கம்? அன்னைச் சங்கம் என்ன அன்னை? அன்பு அன்னை என்ன அன்பு? உயிரன்பு என்ன உயிர்? மக்களுயிர் என்ன மக்கள்? நாட்டு மக்கள் என்ன நாடு? காந்தி நாடு என்ன காந்தி? உண்மைக் காந்தி என்ன உண்மை? நேர் உண்மை என்ன நேரு? தலைமை நேரு என்ன தலைமை? உலகத் தலைமை என்ன உலகம்? போருலகம் என்ன போர்? களப்போர் என்ன களம்? ஆடுகளம் என்ன ஆடு? விளையாடு (இரண்டு சிறுவர்கள் வருகிறார்கள். ஒருவன் வினா கேட்கிறான். மற்றவன் விடை சொல்லுகிறான். இசைத்தும் நடித்தும் காட்டுகின்றனர்) யாரும் தின்னாத காரம் - சிலப்பதிகாரம் யாரும் குடியாத பால் - முப்பால் யாரும் உடுத்தாத கலை - மணிமேகலை யாரும் தொடுக்காத கோவை - திருக்கோவை யாரும் வெறுக்காத தொகை - கலித்தொகை யாரும் பூணாத நூல் - நன்னூல் யாரும் அடிக்காத மணி - சிந்தாமணி யாரும் கொட்டாத இயம் - தொல்காப்பியம் யாரும் அணியாத அணி - தேம்பாவணி யாரும் நடுங்காத வாடை - நெடுநல்வாடை யாரும் சொல்லாத கதை - பெருங்கதை யாரும் நடக்காத அடி - நாலடி (ஒரு குடும்பத்தைச் சார்ந்த சிறுவனும் சிறுமியும் வருகின்றனர். சிறுவன் இசையோடு பாடச் சிறுமி ஆடுகிறாள்) நடித்தா டம்மா நடித்தாடு நடனச் சிலையே நடித்தாடு; குடித்தா டம்மா குடித்தாடு கொம்புத் தேனே குடித்தாடு; அடித்தா டம்மா அடித்தாடு அள்ளும் சிலம்பே அடித்தாடு; படித்தா டம்மா படித்தாடு பவளக் குறளே படித்தாடு; முடித்தா டம்மா முடித்தாடு முல்லைப் பாட்டே முடித்தாடு; வடித்தா டம்மா வடித்தாடு வளரும் தாயே வடித்தாடு; துடித்தா டம்மா துடித்தாடு துள்ளும் இசையே துடித்தாடு; பிடித்தா டம்மா பிடித்தாடு பிறவிக் கொழுந்தே பிடித்தாடு. (ஒரு குடும்பத்துப் பிறந்த இரண்டு சிறுமியர்கள் பாடி நடிக்கின்றனர்.) குடித்து விiளாடுவோம் பாலைக் குடித்து விளையாடுவோம்; இடித்து விளையாடுவோம் பொடியை இடித்து விளையாடுவோம்; சுற்றி விளையாடுவோம் முருக்குச் சுற்றி விளையாடுவோம்; சுட்டு விளையாடுவோம் தோசை சுட்டு விளையாடுவோம்; ஆட்டி விளையாடுவோம் - மாவை ஆட்டி விளையாடுவோம்; அரைத்து விளையாடுவோம் - துவையல் அரைத்து விளையாடுவோம்; சீவி விளையாடுவோம் - தோலைச் சீவி விளையாடுவோம்; செதுக்கி விளையாடுவோம்; பட்டை செதுக்கி விளையாடுவோம்; உருட்டி விளையாடுவோம் - சீடை உருட்டி விளையாடுவோம்; உடைத்து விளையாடுவோம் - காயை உடைத்து விளையாடுவோம்; வெறுத்து விளையாடுவோம் - அடிமை வெறுத்து விளையாடுவோம் உடுத்து விளையாடுவோம் மானம் உடுத்து விளையாடுவோம்; கொடுத்து விளையாடுவோம் உயிரைக் கொடுத்து விளையாடுவோம். (நான்கு சிறுவர்கள் சிறிய போர்க் கருவிகளைத் தோளில் ஏந்திக் கொண்டும், படைமிதி போட்டுக் கொண்டும் வந்து விறல்படப் பாடுகின்றனர்) பெற்ற தாயைப் போற்றுவோம் பிறந்த நாட்டைப் போற்றுவோம் - சங்கம் சிறந்த மொழியைப் போற்றுவோம்; இமயம் ஏறி ஆடுவோம் எல்லை மீறின் சாடுவோம் - பகைவர் பல்லை வாரிப் பாடுவோம்; யாரும் எங்கள் பலகையிலை யாரும் எங்கள் தொகையிலை - காந்தி நேரும் எங்கள் விலையிலை; பாயும் வேங்கை நிகரிலை தீயும் எங்கள் சினமிலை - பேசி ஓயும் வாழ்க்கை இனியிலை; வடையைத் தின்னும் சின்னக்கை படையைக் கொல்லும் பெரியகை - நாட்டுக் குடையைக் காக்கும் அரியகை; கொஞ்சிப் பேசும் தமிழவாய் கொன்று பேசும் குண்டுவாய் - போரில் வென்று பேசும் வீரவாய். அறிவரங்கம் நறுங்கொன்றை: பாட்டரங்கம் முடிந்தது. கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்களுக்கு வாழ்த்து. கலந்து கொள்ளப் பழக்கிய தாய்மார்களுக்கு நன்றி. இனி அறிவரங்கம் நடைபெறும். தாய்மார்களும் தங்கள் குழந்தைகளோடு உடனிருக்கலாம். இல்லாவிட்டால், குழந்தைகள் ஏதும் சொல்லுதற்கு நாணுவார்கள். நடுவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்து, தாய்மார்களே தங்கள் குழந்தைகளைப் பலவாறு கேட்கலாம். அவர்கள் அறிவுச்சுடரைப் புலப்படுத்தலாம். (ஒரு தாயின் கேள்வியும் மூன்று வயதுக் குழந்தையின் விடையும்) தாய் : மாடு எப்படிக் கத்தும்? குழந்தை : அம்மா அ அ தாய் : நாய் எப்படிக் கத்தும்? குழந்தை : ளொள் ளொள் ளொள் தாய் : பூனை எப்படிக் கத்தும்? குழந்தை : மியா மியா தாய் : கழுதை எப்படிக் கத்தும்? குழந்தை : காஅழ் காஅழ் தாய் : கார் எப்படிக் கத்தும்? குழந்தை : பூம் பூம் பூம் தாய் : மிதி வண்டி எப்படிக் கத்தும்? குழந்தை : கிண் கிண் கிண் தாய் : தோசை எப்படிக் கத்தும்? குழந்தை : சுர் சுர் சுர் தாய் : உலை எப்படிக் கத்தும்? குழந்தை : கும் கும் கும் தாய் : உன் பாட்டி எப்படிக் கத்தும்? குழந்தை : தொண் தொண் தொண் தாய் : நீ எப்படி ...... குழந்தை : (சிரித்துக் கொண்டு) ஓ ஓ ஓ (தாய் அருகிருக்கிறாள். அவள் குழந்தையை, பொன்னம்மாள் வினாவுதல். நான்கு வயதுக் குழந்தை சொல்லுதல். பொன் : உன் அப்பா பேரென்ன? குழந்தை : என்னங்க பொன் : உன் அம்மா பேரென்ன? குழந்தை : என்னடி பொன் : உன் அண்ணன் பேரென்ன? குழந்தை : குரங்கு பொன் : உன் அக்கா பேரென்ன? குழந்தை : ஊமை பொன் : உன் தம்பி பேரென்ன? குழந்தை : மொட்டை பொன் : உன் பாப்பா பேரென்ன? குழந்தை : கண்ணு பொன் : உன் பேரென்ன? குழந்தை : பொன்னி பொன் : என் பேரென்ன? குழந்தை : பாட்டி (நறுங்கொன்றையின் மகன் ஓவியனை வடிவழகி அணைத்துக்கொண்டு வினாவுதல்; நாலு வயதுடைய அவன் மறுமொழிதல்) வடிவு : (தன்னைச் சுட்டி) ஓவியா நான்தானே அம்மா ஓவியன் : நீ அம்மா இல்லை, சும்மா (பக்கத்தில் உள்ளவர்கள் சிரிக்கிறார்கள்) வடிவு : உனக்கு பாப்பா இருக்கா? ஓவியன் : (தன் பொம்மைகளைக் காட்டி) எனக்கு ஏழு பாப்பா இக்கு ஒனக்கு பாப்பா இக்கா? வடிவு : எனக்குப் பாப்பா இல்லை. நீ தான் என் பாப்பா ஓவியன்: நான் அம்மா பாப்பா - (நறுங்கொன்றையைக் காட்டி). உம் பாப்பா இந்தா வயத்திலே இக்கு. (வடிவின் வயிற்றைக் காட்டுகிறான்) (தாய்மார்கள் சிரிக்கிறார்கள்) வடிவு : (ஓவியனைத் தூக்கிக் கொண்டு) நீ சுட்டி ஓவியன் : நான் கெட்டி வடிவு : உனக்கு என்ன வேணும்? ஓவியன் : பொண்ணு வேணும் (எல்லோரும் சிரித்தல்) வடிவு : உன் அப்பா எங்கே? ஓவியன் : அம்மா கூட்டி போயிருக்கு (நறுங்கொன்றை கண் கலங்குதல்) வடிவு : உனக்குப் பாட்டுத் தெரியுமா? ஓவியன் : ஓ! ஓ! கட்டாயம் மிட்டாய் வேணும் கைநிறையத் திங்க வேணும் சிட்டுப்போலே திரிய வேணும் திரிடித் திரிடித் திங்க வேணும் விட்டில் போலே பறக்க வேணும் வீடு தோறும் நுழைய வேணும் விளக்க மாத்துப் பூசை வேணும் ஒழுக்க மாக இருக்க வேணும். (மூன்று வயதுடைய பெண் குழந்தையின் மொழியாற்றல்: அதனொடு செல்லம்மாள் பேசுகிறாள். அக்குழந்தை மறுமொழிகிறது.) செல்லம் : நீ பெண்ணு குழந்தை : நான் கண்ணு செல்லம் : நீ பொன்னி குழந்தை : நான் கன்னி செல்லம் : நீ வீட்டுப் பூனை குழந்தை : நான் காட்டு யானை செல்லம் : நீ மாட்டுப் பிள்ளை குழந்தை : நான் காட்டுக் கிள்ளை செல்லம் : உன் கையிலே என்ன இருக்கு? குழந்தை : என் கையிலே பை இருக்கு செல்லம் : உன் கண்ணிலே என்ன இருக்கு? குழந்தை : என் கண்ணிலே மண்ணிருக்கு செல்லம் : நீ பாடுவாயா? குழந்தை : பாடுவேன், ஆடுவேன், ஓடுவேன், தேடுவேன், நாடுவேன், கூடுவேன். செல்லம் : நீ பேசுவாயா? குழந்தை : பேசுவேன், வீசுவேன், கூசுவேன், ஏசுவேன், ஏகுவேன், ஏறுவேன், ஏவுவேன், கூவுவேன், காவுவேன், தாவுவேன். செல்லம் : ஏதாவது பாட்டுத் தெரியுமா? குழந்தை : ஓ! ஓ! தெரியுமே. நொண்டு வண்டு கண்டேன் கண்டு வண்டி கொண்டேன் கொண்டு தொண்டு தண்டேன் தண்டு மண்டு விண்டேன் (அறிவரங்கம் முடிந்தது) நறுங்கொன்றை : குழந்தைகளின் அறிவு வளர்ச்சியைக் கண்டு மகிழ்ந்தோம். கேட்ட கேள்விகளுக்கு எப்படியோ குழந்தைகள் விடை சொல்லி விடுகின்றன. நன்றாகச் சொன்னாலும் பிழையாகச் சொன்னாலும் பொருளை நாம் பார்க்கவில்லை. குழந்தைகளின் அறிவுச் சுறுசுறுப் பையும், தேன் சொட்டும் மழலைச் சொல்லையும் கேட்டு இன்புறுகின்றோம். ஒரு சிறு பெண் எவ்வளவு எளிமை யாகச் சொற்களை எதுகை மோனைபட அடுக்கிச் சொல்லியதைப் பார்த்தீர்களா? சில அடுக்குகளில் பொருளும் பொருந்தி விடுகின்றது. முலைப் பாலோடு மொழிப்பாலையும் நாம் கலந்தூட்டக் கடமைப்பட்டிருக் கின்றோம். தாய்ப்பால் உடலுக்கு நல்லது. மொழிப்பால் அறிவுக்கு நல்லது. அன்னையர் கழகத்தின் முதலாண்டு விழா, முன்னரே அறிவித்தபடி, இளைஞர் சங்கத் தலைவர் பண்ணனார் தலைமையில் நாளை மாலை நடைபெறும். இஃது ஒரு சிறப்பு விழா. ஆதலால் ஆண்மக்களும் பார்வையாளராக வந்து கலந்து கொள்ளலாம். தாய்மார்கள் குழந்தைகளோடும் கணவன்மார் களோடும் இளைஞர்களோடும் வந்து கூடியிருந்து தலைவிழாவைக் கலைவிழாவாகச் சிறப்பிக்க வேண்டுகின்றோம். வணக்கம். (அரங்கம் கலைந்தது) காட்சி : 22 மின்னொளி : நண்பி நம் கழகத்தின் முதலாண்டுவிழா இன்று மாலை நடப்பதாகச் செய்தித் தாளில் கண்டேன். எனக்கு அழைப்பும் வந்தது. அழைப்பைப் பார்த்தபோதே எல்லாம் சிறப்பாக இருக்கும் என்று தெரிந்து கொண்டேன். வடிவு : நிகழ்ச்சிகள் நல்ல நிகழ்ச்சிகள். மின்னொளி : (வேகமாக) நிகழ்ச்சி மாத்திரமில்லை, தலைமையும் நல்ல தலைமை. பண்ணனார் தலைமைக்கு இசைந்தாரா? அவரை யார் போய் இசைய வைத்தது? அவரைத் தலைமையாகக் கூப்பிடலாம் என்று யார் சொன்னது? வடிவு : நம் கழகச் செயலர் துறவி நல்லம்மையார் தான் கூறினார். அவரே போய் இசையவும் வைத்தார். எதையும் முன்னே நினைந்து நன்றாகச் செய்யும் ஆற்றலுடையவர் அவர். மின்னொளி : (சிந்தனையாக) துறவு புரிந்தது, துறவு கலைந்தது. வடிவு : எதையும் ஐயப்படுவது உன் வழக்கம். மின்னொளி : எதையும் நம்புவது உன் வழக்கம். வடிவு : நம்பினோர் கெடமாட்டார். மின்னொளி : கெடுக்காதவர்களை நம்ப வேண்டும். வடிவு : ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? நான் உன்னை நம்பி என் உள்ளத்தை யெல்லாம் சொல்லி வருகிறேன். நீ கெடுத்து விடுவாயா? உன்னை நம்புவது கெடுதலா? நம்பினோர் கெடுத்தாலும் நலமேயாகும். மின்னொளி : உனக்கு என் வாழ்த்துக்கள். நல்லம்மையார் பெண்தானா? வடிவு : என்ன, அடிப்படையிலே கை வைக்கிறாய்? ஐயம் உடம்பிலே வந்துவிட்டதே. குரலில் பார்த்தால் தெரியவில்லையா? மின்னொளி : ஆண்களுக்குப் பெண் குரலும் உண்டு. வடிவு : முகத்தைப் பார்த்தால் தெரியவில்லையா? மின்னொளி : முக்காடு போட்ட முகமாக அல்லவோ எப்போதும் காட்சியளிக்கிறார். வடிவு : நடையைப் பார்த்தால் கண்டு கொள்ளலாமே. மின்னொளி : அவர் எங்கே நம் முன் நடக்கிறார். வண்டியில் ஏறி வருகிறார்; வண்டியில் ஏறிப்போய் விடுகிறார். நமக்கு முன்னே கழகத்துக்கு வந்து உட்கார்ந்து விடுகிறார்; நமக்குப் பின்னே கழகத்தை விட்டு எழுந்து போகிறார். வடிவு : உனக்குப் பல நாளாக ஐயம்போல் தெரிகிறதே. மின்னொளி : இப்போது ஐயம் இல்லை, தெளிவு. வடிவு : நல்லவேளை, பெண் துறவி என்று தானே தெளிந்தாய். மின்னொளி : பெண்ணுக்கு எவ்வளவு வயதானாலும் கொஞ்சமாவது நாணம் இருக்கும். மலர் வாடினாலும் மணம் போய்விடுமா? வடிவு : வயதான துறவி, அதனாலே நாணம் போயிருக்கும். மின்னொளி : ஓ! ஓ! துறவி யானால் நாணம் துறந்துவிட வேண்டுமோ? துறவியாகிற ஆணுக்குக்கூட நாணம் இருக்குமே. சரி, சரி. அவர் அடிக்கடி ஆடையைச் சரி செய்து கொள்வதை நீ பார்த்திருக்கிறாயா? சேலைகட்டிப் பழக்கம் இல்லாதது போல் தோன்றுகிறது. இடுப்பில் வார் போட்டு இறுக்கியிருக்கிறார். வடிவு : நீ சொல்வதிலி ருந்து அவர் பெண்ணைக் காட்டிலும் மிக்க நாணமுடையவர் என்றுபடுகிறது. அவரை ஐயப்பட்டு நமக்கு ஆவதென்ன? கழகத்தைத் தொண்டு செய்து காக்கிறார்? மின்னொளி : காக்கிறாரா? கலைக்கிறாரா? வடிவு : காக்க வேண்டியதைக் காப்பார்; கலைக்க வேண்டியதைக் கலைப்பார். மின்னொளி : (சிரித்துக் கொண்டு) எல்லாம் செய்வார். இல்லா விட்டால், யாழியொடு அடிக்கடி பேசிக்கொண்டிருப்பாரா? வடிவு : யாழி மேலுமா ஐயம்? (நகையாக) யாழி பெண் தானே? மின்னொளி : பெண்ணுடல், இருந்தாலும் ஆணுள்ளம். வடிவு : நானிருக்கும் வரை கழகத்தை யாரும் கலைக்க முடியாது. மின்னொளி : உன்னையே கலைந்து விட்டால் ...... வடிவு : ஞாயிற்றிலிருந்து கதிரையும், திங்களிலிருந்து நிலவையும், ஊக்கத்திலிருந்து ஆக்கத்தையும், உண்மையிலிருந்து தெய்வத்தையும், திருக்குறளிலிருந்து செயலையும், தமிழ் மொழியிலிருந்து தூய்மையையும், பாரதநாட்டிலிருந்து தமிழகத்தையும் கலைக்க முடியுமாயின், என் உள்ளத்திலிருந்து தூய்மையைக் கலைக்க முடியும். இன்று துறவியாகலாம். நாளை மனைவியாகலாம். அது என் உள்ளம். எக்கேடு கெடினும் கொண்ட போக்கை விடமாட்டேன் என்ற மூர்க்கம் என் உள்ளம் இல்லை. உள்ளம் பொய்வாழ் இல்லமாக ஆதல் கூடா. உள்ளம் பொய்த்தூசி புகும் மனையாக ஆதல் கூடாது. உள்ளம் வஞ்சகத்தின் ஒளிவிடம் ஆதல் கூடாது. யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற என்ற உலகக் குறளே என் உள்ளக் குறிக்கோள். முத்தமிழ்போல, உண்மை வாய்மை மெய்ம்மை என்ற மும்மைகளே என் உள்ளம். இதனை யாரும் கலைக்க முடியாது. இது கலையுமாயின், என் உடம்பும் உயிரும் கலையும். மின்னொளி: வடிவு! அதனைத் தான் நான் உறுதிப்படுத்திக் கொள்ள வந்தேன். இன்றுமாலை கூட்டத்திற்கு வருகிறேன். காட்சி : 23 (அன்னையர் கழகத்தின் முதலாண்டு விழா. கணவன், மனைவி, பல குழந்தைகள் எழுதப்பட்ட ஒரு பெரிய இல்லற ஓவியம் மேடையை அணி செய்கிறது. மின்னொளி : “மங்கலம் என்ப மனைமாட்சி, மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு” என்ற இல்லறக்குறள் பெரிதாக எழுதப்பட்டுள்ளது. ஆடவர்கள் பெண்டிர்கள் குழந்தைகள் எல்லாரும் முன் அமர்ந்துள்ளனர். பண்ணனுடைய பெற்றோர்களும் வடிவழகியின் பெற்றோர்களும் வந்துள்ளனர். நாவலனும் வந்துள்ளான். கழகத் தலைவர் தேனம்மையும் விழாத் தலைவர் பண்ணனாரும் மேடை நடுவண் இரு நாற்காலியில் வீற்றிருக்கின்றனர். வடிவழகி, நல்லம்மை, நறுங்கொன்றை, யாழி முதலியோர் மேடைமேல் ஒரு பக்கத்தே நாற்காலிகளில் அமர்ந்துள்ளனர். பண்ணனது நண்பர்கள் வடிவழகியின் நண்பிகளும் சோலையனும் மலரியும் கூட்டத்துக்கு வந்துள்ளனர்.) (ஒரு சிறுமி இறைவணக்கம் பாடுகின்றாள்) தலைபயில் காதல் ஆனாய்; தனிவளர் கருவும் ஆனாய்; முலைபயில் குழந்தை ஆனாய்; மொழிபயில் குமரி ஆனாய்; நிலைபயில் அன்னை ஆனாய்; நெறிபயில் அப்பன் ஆனாய்; கலைபயில் குடும்பம் ஆன கடவுளைத் தொழுது வாழ்வாம் நறுங்கொன்றை : விழாத் தலைவர் அவர்களே! விருந்தினர்களே! கை கூப்புகின்றேன். (அன்னையர் கழகத்தின் முதலாண்டு விழாவில் ஆயிரக்கணக்கான ஆடவர்களும், ஆயிரக்கணக்கான மாதர்களும், ஆயிரத்துக்கு மேலான அன்புக் குழந்தைகளும் எனக்கு எதிரே அமர்ந்து கூடிக் குழுமியிருக்கக் காணும்போது, உடம்பெல்லாம் உள்ளமாக உவப்படைகின்றேன். ஊர் திரண்டன்ன ஒரு கூட்டமாக இது விளங்குகின்றது. காந்தியடிகளார் வந்தபோது கூடியது மிகப்பெருங் கூட்டம் என்று கேட்டிருக்கிறேன். இன்று அத்தகைய கூட்டணியைக் காண்கின்றேன். எதிர்பார்த்த அளவினும் அவையோர் பெருகி யிருக்கின்றனர். இன்னும் பலர் ஓடோடி வருகின்றனர். தக்க ஏற்பாடு செய்ய இயலாமையைப் பொறுத்துக் கொள்ளுங்கள். கூட்டம் மிகப் பெரியதாயினும், வள்ளல் அழகப்பர் உள்ளம் முழுதும் கொடை குடியிருந்ததுபோல, எங்கும் அமைதி குடியிருக்கக் கண்டுமகிழ்கின்றேன். எங்கள் முதலாண்டு விழாவின் தலைவர் இவண் நடுநாயமாக வீற்றிருக்கும் பண்ணனார். அவர் தம் வாழ்க்கையை அறிந்தவர்கள் அவரைத் திண்ணனார் என்று பாராட்டுவர். (கை தட்டல்) அறிவியலும், தமிழியலும் படித்த நல்லறிஞர். செய்யுள் இயற்ற வல்ல புலவர். தமிழினம் புறத்திணை என்னும் மறத்திணை கண்ட இனம் ஆதலால் தமிழ் மொழியில் யாக்கும் போர்ப்பாடல்களுக்கு ஆற்றல் நெருப்புப்போல் உண்டு சீனப்போர் பற்றிப் பண்ணனார் “பாரதப் பத்து” எனப் பத்துப் பாடல்கள் எழுதினார். அவற்றைச் செய்தித்தாளிற் படித்தும், வானொலியிற் கேட்டும் வீறு கொண்டிருக்கின்றோம். மறப்பண் அமைந்த இத் தமிழ்ப் பாடல்களை இந்திய வீரர்கள் கேட்குந்தோறும் அவர் தம் மறப்புண் ஆறுகின்றன; மறப்புண் ஆறுந்தோறும், மறவுணர்வும் மானவுணர்வும் மீறுகின்றன. இந்திய வெற்றி உள்ளங்கை நெல்லிக்கனி. (பெருத்த ஆரவாரம்) மா.உ.ஆகவும், பா. உ. ஆகவும், (மாநில மன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர்) அமைச்சராகவும், முதலமைச்ச ராகவும் சாலப்புகழ் அடைய வேண்டும் என்று உள்ளங்கள் துடிக்கும் உலகத்தில், நம் தலைமைப் பண்ணனார் படைத் தளவாயாக ஆகாவிட்டாலும், பொருளகத்து முன்னிற்கும் படை மகனாகவாவது ஆக வேண்டும் என்று உள்ளம் துடிக்கின்றார். காதலுக்கு உயிரீயும் இளைஞர்களை நாட்டின் காப்புக்கும் உயிரீய வாருங்கள் என்று அழைக்கின்றார். நம் அழைப்பை ஏற்று, இளைஞர் சங்கத்தின் வீரத்தலைவராகிய பண்ணனார் விழாத்தலைமை தாங்கி அமர்ந்திருக்கிறார். அவர்க்கு நம் வணக்கம், நம் நன்றி. (ஓவியன் பண்ணனார்க்கு மாலையிடுகிறான். அவர் தலைவணங்கி ஏற்றுக்கொள்கின்றார்) அன்னையர் கழகத்தால் நல்ல குடிப்பண்புகள் நாட்டில் பரவி வருகின்றன. கணவனோடு ஒற்றுமை இன்றிப் பிரிந்திருந்த மனைவியர், கழகத்தின் நல்லுரையைக் கேட்டு இப்போது ஒற்றுமையுடையராகித் தாயாகி இருக்கின்றனர். (கை தட்டல்) தந்தை மகன் உறவு, அண்ணன் தம்பி யுறவு, மாமி மருமகள் உறவு எல்லாம் இப்போது நன்முறையில் பெருகி வருகின்றன. ஒருவரையொருவர் புரிந்து மதிக்கவேண்டும். ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுக்க முந்த வேண்டும், சுடுசொல்லை நன்றாகப் பொறுக்க வேண்டும். வெட்டெனப் பேசாதிருக்க வேண்டும், ஒருவரைப் பற்றி ஒருவர் அயலாரிடம் குறை சொல்லாதிருக்க வேண்டும். அயலார் குறைசொல்ல வந்தால் உங்கள் வேலையைப் பாருங்கள் என்று அறைவது போலச் சொல்லவேண்டும். குறைகளைக் காலம் பார்த்து அன்போடு குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்ற குடியறங்களை அன்னையர் கழகம் பெண்ணினத்தார்க்குத் தெளிவாகக் கற்பித்து வருகிறது. இவ்வறங்களை ஆண் மக்களும் உணர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று கழகம் எதிர்பார்க்கின்றது. இத்தகைய குடும்பக் கழகத்தைத் தோற்றுவித்த நல்லாள் யார் என்பதை ஊராரும் உலகத்தாரும் அறிவார்கள். அன்னையர் கழகத்தைப் பெற்றெடுத்த அன்னை ஒரு கன்னி (கை தட்டல்) என்பதை நீங்கள் அறிவீர்கள் (வடிவின் பெற்றோர் கண் கலங்கல்) இல்லற மாதர்களாகிய நாங்கள் வடிவழகியார் மணஞ்செய்து கொண்டு எம்போல ஓர் இல்லறமாதாக வேண்டும் என்று மனமார விரும்புகின்றோம். (கை தட்டல்) ஆனால், அவர் இல்லற நங்கையாகி விட்டால், எங்களுக்கு அல்லும் பகலும் பாடுபடுவார் யார்? என்று நினைக்கும்போது, அவர் கன்னியாக இருப்பதைத் தன்னலங் காரணமாக வரவேற்கின்றோம். வடிவழகியைத் தாய்மார்கள் ஆகிய நாங்கள் மகள் போலவும், தங்கை போலவும் உளமார மதிக்கின்றோம். (நூறு வயதினளாகிய தேனம்மை வடிவழகியை “வாழ்க” என்று சொல்லி மாலை அணிவிக்கின்றாள். அப்பெரியாளின் திருவடியை வடிவழகி வணங்குகின்றாள்.) இன்றைய விழாவில் கழகத்தலைவராக அமர்ந்திருக்கும் பெரியார் தேனம்மையார் நம் பெருமதிப்புக்கும் பெரும் பணிவுக்கும் உரியவர். நாம் அவர் தம் புகழை அறிவோம். அவர் நமது பிறப்பையே அறிவார். (கை தட்டல்) அம்மையாருக்கு வயது நூறு. அவர் இருபதாம் நூற்றாண்டுப் பிசிராந்தையார். கட்டான உடலும், கவலையில்லாத உள்ளமும், நன்று தீதுகாணும் பகுத்தறிவும். வினை செய்யவல்ல இளமையும் உடையவர். முதலாண்டு விழாவில் தலைமை தாங்கும் தேனம்மையார் கழகத்தின் வெள்ளிவிழா பொன்விழாக் களுக்கும் தலைமை தாங்கும் வாழ்வுடையவர் ஆகுக என்று எல்லார்தம் சார்பாகவும் வாழ்த்துகிறேன். (வடிவழகி தேனம்மையாருக்கு மாலை அணிகிறாள்) தேனம்மையார் : விழாவின் தலைவர் அவர்களே! கழகத்தின் அன்னையே! பெருமக்களே! எல்லார்க்கும் என் கை கூப்பு இக்கழகம் பிறந்து ஒரு வயது ஆகின்றது. உண்மையிலே எனக்கு இன்றுதான் வயது நூறாகிறது. நூறாண்டுக் கிழவியை ஓராண்டுக் குழவிக்கு வாழ்த்துக் கூற அழைத்திருக்கிறீர்கள். நன்றாக மனமார வாழ்த்துகின்றேன். அன்னையர் கழகம் உலகத்தில் அன்னையர் இருக்கும் வரை வாழ்க என்று. (கை தட்டல்) எனக்கு ஒரு கவலை இருந்து வந்தது. அது என் குடும்பக் கவலை இல்லை. உலகத்தில் இன்று பல குடும்பங்களில் கணவன் மனைவி மக்கள் பற்றாகவும் ஒற்றுமையாகவும் இல்லையே; விலங்குகள்போல உறவில்லாமல் தற்பேணிகளாகத் திரிய நினைக்கிறார்களே என்ற பல குடும்பக்கவலை என்னை வாட்டுகிறது. அன்னையர் கழகம் குடும்பங்களை ஒற்றுமை செய்யும் அரிய பெரிய தொண்டினை ஆற்றி வருகிறது. ஆதலால் அந்தக் கவலையும் எனக்கு இனி இருக்காது. நங்கை நறுங்கொன்றை வாழ்த்தியது போல, இக்கழகத்தின் வெள்ளி விழா பொன்விழா வைரவிழா திங்கள்விழா ஞாயிற்று விழாக்களையும் காணும் பேறு பெறுவேன் என்று நம்புகின்றேன். (கைதட்டல்) நான் பூவணிகி என்பதை நீங்கள் அறிவீர்கள் “மனைவிக் கழகு மணமலர் அணிதல்” என்பது என் வாழ்க்கையிற் கண்டது. நல்ல பூக்களைக் கூந்தலில் அள்ளி வைத்துக்கொள்ள வேண்டும். கூந்தல் ஒரு சிறுசோலை. போல் பூத்துப்பொலிய வேண்டும். மலரை ஒதுக்குகின்ற மனைவியைக் கணவன் மனம் ஒதுக்கி விடும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்! மலர்ப்பொலிவு இன்பப் பொலிவாகும் என்று குறித்து வைத்துக் கொள்ளுங்கள்! இந்த நாட்டில் மணம் உடைய மலர்களுக்குப் பஞ்சமா? ஏன் மணமில்லாத வெறும்பூக்களைச் சூடி, உங்கள் கூந்தலைக் கெடுக்கிறீர்கள்? பெண்ணின் பெருமையைக் குறைக்கிறீர்கள்? “நன் மகட்கு அழகு நறுமலர் அணிதல்” என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன். விழாக் காலங்களில் தண்ணீர்ப் பந்தல் வைக்கிறார்கள். ஏன்? நீர் இன்றியமையாதது. அதுபோல், இல்லற நங்கைக்கு மலர் இன்றியமையாதது. அதனால் விழாக் காலங்களில் “நறுமலர்ப்பந்தல்” என்று ஓர் அறநிலையம் நான் வைத்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். இங்ஙனம் என்னை வைக்கத் தூண்டியதற்கு ஒரு நிகழ்ச்சி காரணமாகும். விழாக்காலங்களில் பூக்களின் விலைகள் பொற்பூக்களின் விலைபோல் ஏறிவிடுகின்றன. மகளிர் எவ்விலை கொடுத்தும் வாங்குவார்கள் என்ற நம்பிக்கையால், பூ வணிகர்கள் விலையைத் தம் மனம்போல் ஏற்றிவிடுகின்றனர். ஒரு விழாவில் சில பெண்களைக் கண்டேன். கூந்தலில் பூ இல்லையே என்று கேட்டேன். கடைக்காரன் சொன்ன விலைக்குக் கொண்டு வந்த காசு போதவில்லை என்று வருந்திக் கூறினார்கள். உடனே என் பூக்கடைக்கு அழைத்துச் சென்று அவர்கள் குழலில் பூச்சூட்டி மகிழ்ந்தேன். அன்றே “நறுமலர்ப் பந்தல்”ஒன்று அமைத்தேன். இப்பணியை இருபத்தைந்து ஆண்டுகளாகச் செய்து வருகிறேன். வழிவழிச் செய்வதற்கு வேண்டும் பொருளடைவும் வைத்திருக்கிறேன். ஆதலால் ஒரு சீர்திருத்தம் சொல்வதற்கு நான் உரியவள் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்; தவறாக எண்ண மாட்டீர்கள். இந்த நாட்டில் எங்கு பார்த்தாலும் பூச்சொரி விழாக்கள் கோயிலில் நடைபெறுகின்றன. வண்டிக்கணக்கான பூக்களை விலைக்கு வாங்கிக் கடவுள் உருவத்தினைச் சுற்றிப் பூக்குன்று போல் குவிக்கிறார்கள். மறுநாள் குப்பையென அள்ளிக் கொட்டுகிறார்கள். இவர்கள் தெய்வத்தின் உள்ளமும் அறியார், மலரின் பயனும் அறியார். “பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பன் அவர்தமை நாணியே” என்றார் ஒரு பேரன்பர். இம் மலர்களை மலரனைய மெல்லிய மாதர்களுக்கு விலையின்றி வழங்கினால், அம்மாதர்கள் நீண்ட கருங்கூந்தலுக்குள் வைத்துக் கொண்டால், அக்கூந்தல் மணம் வீசினால், குடும்பங்கள் எவ்வளவு சிறக்கும், இன்பங்கள் எவ்வளவு பெருகும், கண்கள் எவ்வளவு உறவாடும் என்று சிறிது எண்ணிப் பாருங்கள்! இனி, விழாத் தலைவர் பண்ணனார் ஆண்டுவிழா உரையாற்றுவார். அவர் உரையை உங்களைப் போல நானும் ஆவலோடு எதிர்பார்த்து வந்திருக்கிறேன். பண்ணன் : (பெருமிதமான குரலில்) கழகத் தலைவி அவர்களே! பெருமக்களே! வணக்கம். இவ்விழாவில் பேசுதற்கு எழுந்து நிற்கும் இப்போது, என் உள்ளத்தில் முன்னும் பின்னும் இல்லாத ஒரு புதிய உணர்ச்சி தோன்றுகின்றது. காரணம் எனக்குப் புரியவில்லை. காதல் நங்கையைக் கைப்பிடிப்பதற்குச் சற்றுமுன் ஆடவனுக்குத் தோன்றும் உணர்ச்சியை என் உணர்ச்சிக்கு ஒருவாறு ஒப்பிடலாம். எனினும் அப் புத்துணர்ச்சியை அடக்கிக் கொண்டு, என் தலைமையுரையை ஆற்ற முயல்கின்றேன். இல்லறம் ஆன மாதர்களும் இல்லறம் ஆக வேண்டும் மங்கையர்களும் இங்குப் பெருந்திரளாகக் கூடியிருக்கிறீர்கள். இல்லறம் ஏற்ற ஆடவர்களும் இல்லறம் ஏற்க வேண்டும் நம்பிகளும் முதலாவதாக இவ்விழாவிற்கு வந்திருக்கிறீர்கள். அன்னையர் கழகத்தில் பெண்டிர்களே உறுப்பினர் ஆகலாம் என்பதும், நடைமுறைக் கூட்டத்துக்குப் பெண்டிர்களே வரலாம் என்பதும் கழகத்தின் நன்முறைகள்; எனினும் அன்னையர் கழகம் ஆடவர்களை மதிக்கும் கழகம் என்பதற்கு. என்னைத் தலைமைக்கு அழைத்ததே ஒரு சான்றாகும். (கை யொலித்தல்) மேலும் விழாவில், அதுவும் ஆண்டுவிழாவில், அதன் மேலும் முதலாண்டு விழாவில், ஆடவனுக்குத் தலைமையளித்த முறையிலிருந்தே அன்னையர் கழகத்தின் அன்புணர்ச்சியை நாம் தெளிவாக விளங்கிக் கொள்கின்றோம். ஒரு சிலர்க்கு இருந்த ஐயப்பாடு இப்போது முற்றும் மறைந்திருக்கும் என்று நம்புகிறேன். இறைவன் படைப்பில் மக்களினமே தலையான இனம்; மக்கட் படைப்பே வளரும் அறிவுப்படைப்பு. ஒவ்வொரு மகனும் ஒவ்வொரு மகளும் இறைவனது பேராற்றலின் உருவங்கள். ஆதலின் மக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் தன்னறிவால், தன் முயற்சியால் தன்னூக்கத்தால் உயரமுடியும்; உலகத்தையும் உயர்த்த முடியும். அதனலான்றோ மக்களுக்கு உயர்திணை என்று தமிழ் பெயரிட்டது. ஒருவரது தனியாற்றலை நாம் அடக்கியாளுதல் கூடாது. அப்படிச் செய்தால் உலகம் அடக்கமாகிவிடும். ஒவ்வொருவரும் தன் தன் ஆற்றலைத் தூய்மையோடு வளர்க்கவேண்டும். செயற்கரிய செய்த தனிப் பெரியவர்களால் அல்லவா உண்மைகள் அவ்வப்போது படுகுழிப்படாது பிழைத்து வருகின்றன. உலகத்துக்கு வாழ்வு அருளிய பெரியார்களை என் கண்ணாற் கண்டிருக்கின்றேன். தனக்குவமை இல்லாத தனிக் காந்தியடிகள் ஞால அரசுகளுக்கு ஒழுக்க நெறியைக் காட்டினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கண்ட வள்ளல் அண்ணாமலையரசர் தமிழிசைச்கு உயிர் கொடுத்தார். தமிழ்ப்பெருமகன் டாக்டர் சாமிநாதர் சங்கத் தமிழைக் காப்பாற்றி யளித்தார். இன்று என் கண்ணாற் காண்கின்றேன், உங்கள் கண்ணாலும் காண்கின்றீர்கள். வடிவழகி என்னும் ஒரு நங்கை இல்லற ஒழுக்கங்களையும் குடும்ப ஒற்றுமையையும் காப்பாற்றுகின்றார். (கை தட்டல்) அன்னைத் தன்மையைப் போற்றும் வடிவழகியார் நம் பெருமதிப்புக்கு உரியவராக விளங்குகின்றார். (கை தட்டல்) இல்லறத்தின் ஏற்றத்தையும் இடையூறுகளையும் உணர்ந்து அன்னையர் கழகம் அமைத்த பெருமைக்கு உரியவராக விளங்குகின்றார். ஒருவர் தோற்றிய கழகமாயினும், அன்னையர் கழகத்தின் கருத்துக்கள் ஞாயிற்றின் கதிர்கள் போல உலகெங்கும் பரவுக! பயன் செய்க! என்று வாழ்த்துகின்றேன். உரமும் வாய்ப்பும் அளித்தால், உலகத்தில் எதுதான் வளராது? யார்தான் வளரார்? இதுகாறும் ஆணினம் பெண்ணினத்தின் அறிவுவளர்ச்சிக்கும் தொண்டின் வளர்ச்சிக்கும் இடங்கொடுக்கவில்லை. இப்போது பெண் பாலார் பல வாய்ப்புக்களைப் பெற்று வருகின்றனர். அரிய உரிய செயல்களை அமைதியோடும் அளந்தும் ஆரவாரம் இன்றியும் செய்கின்றனர். செயல்படும் தீர்மானங்களைப் பக்குவமாகச் செய்கின்றனர். ஆதலின் அரசியலைப் பெண்கள் கையில் ஒப்படைத்து விட்டு. அடுப்பியலைச் சில நாட்களாவது ஆண்கள் பார்த்தால் நல்லது. (கேளுங்கள்! கேளுங்கள்!) முடிவில் அன்னையர் கழகத்தார்க்கு ஓர் அறிவுரை. உங்கள் கழகமும் தொண்டும் தீர்மானங்களும் மிக மிகப் போற்றத் தக்கன. பரவத்தக்கன என்றாலும், ஒருபோதும் தற்பெருமை கொண்டு விடாதீர்கள்; தற்பெருமை ஒருவன் கொண்டாலும், ஒரு கழகம் கொண்டாலும், ஒரு கட்சி கொண்டாலும், ஒரு நாடு கொண்டாலும் அன்று முதல் கேடுதான். தற்பெருமை என்பது அழுகல் வாடை. தற் பெரியானுக்கு உள்ளதும் தோன்றாது. நிகழ்வதும் புலப்படாது. எதிரதும் வெளிப்படாது. என்றும் அறிவோட்டமும், அறிவொளியும், அறிவு நோக்கமும் வேண்டும். அறிவுடை யார்க்குத் தான் ஆவது தோன்றும். ஆதலின் அன்னையர் கழகம் என்றும் அறிவுடைக் கழகமாக வளர்க! வாழ்க. நல்லம்மை: பேரன்பர்களே! பல்வகைப் போட்டிகளில் கலந்தார்க்குப் பண்ணனார் இப்போது பரிசு வழங்குவார். குழந்தைப் போட்டிப் பரிசுகள் முதற்கண் அளிக்கப்படுகின்றன. 1. ஓட்டம் 2. தாவு 3. நொண்டியடி 4. இசையிருக்கை 5. பந்தெறிவு 6. சிறுதேர் உருட்டு 7. சிற்றில் இழைப்பு 8. வேடப்புனைவு 9. கிட்டியடிப்பு 10. பல்லாங்கிச்சு 11. கீரிக்கோடு 12. குண்டாட்டம். 13. பாட்டியல் 14. அறிவியல் கலந்து கொண்ட குழந்தைகள் வந்து வணங்கிப் பரிசுகள் வாங்கிக் கொள்கின்றன.) கன்னிப் பெண்களுக்கென்று சில போட்டிகள் நடத்தினோம். சில பெண்களே கலந்து கொண்டனர். வடிவழகியாரும் இப்போட்டிகளில் கலந்துகொண்டார். (கைதட்டல்) தோற்றுவிட்டார் என்று நினைக்காதீர்கள். பரிசு பெறப் போகின்றார். போட்டிகளையும் வென்றோர்களையும் பரிசுப் பொருள்களையும் படிக்கின்றேன். பரிசுகளை உரியவர்கள் வந்து வாங்கிக் கொள்ளுங்கள். போட்டிகள் வென்றோர் பரிசுகள் 1. ஓட்டம் திரு.வானொலி மணி காட்டி 2. பந்தாட்டம் திரு.சாத்தி பந்தடிப்பிகள் 3. பின்னல் திரு. மணியோசை நூற் கண்டுகள் 4. துவைத்தல் திரு. குந்தவை அழுக்கறுப்பான்கள் 5. சமையல் திரு.வெள்ளி அடுக்குக்கள் 6. குடும்ப மருந்து திரு.அல்லி வெள்ளிப்பெட்டி 7. குழந்தைவளர்ப்பு திரு.மயிலி நூல்கள் 8. குழந்தை ஒப்பனை திரு. வடிவழகி குழந்தைப் பொம்மை (பண்ணனிடம் குழந்தைப் பரிசினை வாங்குவதற்கு வடிவழகி மிகவும் நாணத்தோடு வருகின்றாள். பரிசு வாங்கும்போது இருவர் கைகளும் இணைகின்றன. சிறிது நிமிர்ந்து புன்முறுவலித்துப் பண்ணனைக் கடைக்கணிக்கின்றாள் வடிவு. பண்ணனும் புன்முறுவலோடு எதிர்நோக்குகிறான். இந் நிலையில் யாழி தன் கைக்கருவியால் நிழற்படம் பிடிக்கின்றாள்.) வடிவழகி : (எழுந்து நிற்கும்போது, குழந்தைகள் முதலாக எல்லோரும் பேராரவாரம் செய்தல்) விழாத் தலைவர் அவர்களே! தாய்மார்களே! தந்தைமார்களே! உங்கள் நிறைந்த வரவு அன்னையர் கழகத்திற்கு நல்வர வாகுக, நிலையான வரவாகுக. இக்கழகத்தின் தோற்றத்தையும் பணிகளையும் நீங்கள் செவ்வனே அறிந்திருக்கிறீர்கள். உங்கள் உள்ளத்திலும் உங்கள் பொருளிலும் உங்கள் செயலிலும் இக் கழகத்துக்கு என்றும் இடமளியுங்கள்! அது உங்கட்கு ஒற்றுமை யான நல்வாழ்வை அளிக்கும். தமிழகத்தின் தலைச்சங்கம் போல அன்னையர் கழகம் பல்லாயிரம் ஆண்டு நன்கு வாழ்க என்று வாழ்த்துகின்றேன். இனி நான் கூற இருக்கும், சில தனது கருத்துக்களை நல்ல உள்ளத்தோடு கேட்டு உங்கள் மகளாகிய என்னை வாழ்த்த வேண்டுகிறேன். என் இளமை நெஞ்சம் காதலை அறியாத தில்லை. ஒருநாள் நடுத்தெருவிடை ஒரு கருப்பிணிக்கு உண்டான அவல நிகழ்ச்சியால், தொண்டுணர்ச்சி என் உள்ளத்திற் புகுந்துவிட்டது; காதலுணர்ச்சியை வென்றுவிட்டது; அவ்வளவுதான். வேறு நினைவில்லை. தொண்டு நினைவுக்கு அடிமையானேன் இதுதான் அன்னையர் கழகத்தின் பிறப்புக்குக் காரணம். நான் கன்னியாயினும், அன்னையர் கழகத்தின் அன்னை என்று நறுங்கொன்றையார் எடுத்துரைத்தார். தூய பெருமக்களே! என் நெஞ்சம் திறந்து கூறுகிறேன். அன்னையர் கழகம் எனக்கு அன்னையுணர்ச்சியை ஊட்டிவிட்டது. (வியப்பாகக் கேட்டல்) நாள்தோறும் இல்லற மாதர்களோடு பழகிப் பழகி எனக்கும் இல்லற நங்கையாகும் எண்ணம் தோன்றிவிட்டது. (வடிவின் பெற்றோர் கண்களைத் துடைத்துக் கொள்ளுதல்) குழந்தை யரங்கங்களையும் குழந்தைப் போட்டிகளையும் காணும்போது, இவற்றிற் கலந்து கொள்ள நான் ஏன் சில உயர்திணைச் செல்வங்களைப் பெற்று அளிக்கக்கூடாது? என்ற தாயுணர்வு தோன்றிவிட்டது. மங்கையர்கள் கரும்பளிங்கு போன்ற நெளிகூந்தலைக் கோதி வாரி கொத்துப்பூச் சொருகி மெல்லிய நல்லாடை அணிந்து கணவனாரின் காதற் செருக்கைப் பேசிக் கொள்ளும்போது, என் ஒப்பனை யாருக்கு? வீணுக்கு? என்ற ஏக்கம் உள்ளத்தில் நுழைந்துவிட்டது. தாயர்கள் இலக்கிய இன்பம் போன்ற தங்கள் குழந்தைகளைச் சொந்த மார்பில் அணைக்கும்போது, அந்த அன்புத் தொடர்பைக் கண்கொண்டு காணும் கன்னி மகளுக்கு மணநாட்டமும் மகநாட்டமும் நீருற்றுப்போல எழாதிருக்க முடியுமா? இப் பல வுணர்ச்சிகள் அவ்வப்போது புகுந்தன. மனத்தைச் சிறிது அலைத்தன. பயனில்லை. என் தொண்டுள்ளத்தைக் கலைக்கும் ஆற்றல் இவற்றுக்கு இல்லை. பலமுறை ஆட்டுதற்காகத் தேங்காய் உடைந்து விடுமா? வியப்போடும், மேல் என்ன சொல்லுவேன் என்று கேட்கத் துடிப்போடும் இருக்கும் பெருமக்களே! உள்ளதைச் சொல்லுகின்றேன்; உணர்ந்ததைச் சொல்லுகின்றேன். வாழ்க்கையில் உணர்வு மாறும், மாறவும் வேண்டும். அறிவு மாறும், மாறவும் வேண்டும். ஆனால் உள்ளம் உண்மையிலிருந்து மாறுதல் கூடாது; வஞ்சகத்தின் உறைவிடமாய் நெஞ்சகம் ஆதல்கூடாது. இதுவே என் வாழ்வின் குறிக்கோள். பிற குறிக்கோள்கள் எல்லாம் இத் தூய்மையின் பின் தோன்றல்கள், ஆதலின் உள்ளதைச் சொல்லுகின்றேன். என்றால் ஒளிவுமறைவின்றிச் சொல்லுகிறேன் என்பது கருத்து. எத்துணையோ பலர் குழந்தைகளை அகத்தோடு அகமாக அணைத்தேன். அவற்றுக்குப் புறத்தூய்மை செய்தேன். என் பரந்த நோக்கத்தை தாய்மார்கள் போற்றினர். கன்னிச் செவிலி என்று புகழ்ந்தனர். ஒருநாள் குழந்தையை விளையாட்டாக நீ நாய் என்று கூறினேன். நீ நாய் என்று என்னைத் திருப்பிச் சொல்லிவிட்டு, அந்தக் குழந்தை ஓ என்று அலறிற்று; அம்மா அப்பா என்று கத்திற்று. நான் அடித்துவிட்டதாக அத்தாய் எண்ணிக் கொண்டாள். உள்ளதை நம்ப மறுத்தாள். “வயிற்றில் பசி தவிர வேறு தெரியாத இவளுக்கு என்ன தெரியும்” என்று ஏசத் தொடங்கிவிட்டாள். குழந்தையை நான் பலமாக அடித்ததாகவும், தடம்பட்டு விட்டதாகவும், அழும் குழந்தை வாந்தி எடுத்தாகவும் கட்டிக் கூறத் தொடங்கிவிட்டாள். அணைக்கும் உரிமையுடைய கைக்கு அன்பாக அடிக்கும் உரிமையில்லையா? முத்தும் உரிமையுடைய வாய்க்கு முகங்கடிந்துரைக்கும் உரிமையில்லையா? அறிவூட்டும் ஆசிரியனுக்கு அதட்டிச் சொல்லும் உரிமை யில்லையா? நாற்று நட்டவனுக்குக் களை பறிக்கும் உரிமையில்லையா? உலகியல் உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கிற்று. தன்னுரிமையை விட்டுக் கொடுத்துப் பிறர் நலம் பேணுதல் அறிவாகாது என்று தெளிவாயிற்று. உன் கடமைகளைச் செய்யாது விட்டுவிட்டு, ஊர்க்கடமைகளை மேலிட்டுக் கொள்ளுதலை உள்ளூற உலகம் மதிக்காது என்பது வெளிப்படையாயிற்று. உண்மை போற்றும் பெருமக்களே! அந்த நற்றாயின் சொற்கள் என் அறிவைத் திருப்பிவிட்டன. என் அறிவில் மறைந்திருந்த ஓருணர்ச்சியைத் தீட்டிவிட்டன. நான் மணம் கொள்ளாமையால் என் பெற்றோர்கள் இறப்பனைய கவலை அடைந்திருப்பதும். என் தம்பி தான் மணமின்றித் தனியனாய் இருப்பதும், நான் பிறந்த குடும்பமே வழியின்றிப் போவதும் என் அறிவுப் பலகையில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டேன். (எல்லோரும் இரங்கல்) என் செய்வது? “ஊரார் எல்லாம் அறிந்த தொண்டினை விடுவதா? கொள்கை பிறழ்ந்தாள் என்று ஊர் பழிக்காதா? புகழ் குறையாதா?” என்றெல்லாம் எண்ண அலைகள் எழுந்தன. “மணஞ் செய்து குடும்பமாவது கெடுதலா? ஊர் பழித்தற்கு என்ன இருக்கிறது? எல்லாரும் குடும்பம் குடும்பமாகத் தானே வாழ்கிறார்கள்? குடும்ப வாழ்வு கொடிய வாழ்வா? கொள்கைக்கு மாறா? என்றெல்லாம் எண்ணத் தேற்றங்கள் எழுந்தன (பக்கத்திலிருக்கும் நறுக்கொன்றையின் சிறுவன் ஓவியனை எடுத்துக்கொண்டு) எனக்கு வழி காட்டியானான், நெறிகாட்டியானான். மணங்காட்டியானான் இம் மகன். நேற்று குழந்தையரங்கத்தில் இவன் சொன்னான், “நீ அம்மா இல்லை சும்மா” என்று ஒரு சொற் சொன்னான். அத்தாய் சொல்லிய புதிய வயிற்றுப் பசியை - தாய்ப் பசியை எனக்கு உண்டாக்கி விட்டான். என் வயதுடைய ஒரு நங்கை இதுவரை அம்மாவாகி யிருக்க வேண்டும் என்று சிறுகுழந்தைக்கூடப் பட்ட அறிவு எனக்குப் படவில்லையே என்று கண்கலங்கினேன். நான் முழுதும் நொண்டியாகி விட வேண்டுமென்று இறைவன் எண்ணி யிருப்பானாகில், எனக்கு ஏன் தாயுறுப்புகளைப் படைத்தான்? என்று எண்ணி எண்ணி, என் மடமையை நொந்து கொண்டேன். ஓவியா! உள்ளங்கை நெல்லிக்கனி என்பது உலக வழக்கு. நீயோ உள்ளத்து நெல்லிக்கனியாகி விட்டாய். நெல்லிக்கனியைத் தின்று நீர் குடித்ததுபோல என் வாழ்க்கையைச் சுவையாக்கி விட்டாய். ஓவியன் என்பது உன் தாய் வைத்த பெயர். நெல்லிக்கனி என்பது இனி தாயாகும் நான் வைத்த பெயர். (ஓவியனை நறுங்கொன்றை வாங்கிக் கொள்கிறாள்) இல்லறப் பெருமக்களே! என் நெஞ்சத்திற் பிறந்து வளர்ந்த தொண்டுணர்ச்சி இனியும் வளரும். எனக்கு வாழ்வு தந்த அன்னையர் கழகத்தின் இல்லற வுறுப்பியாக என்றும் இருப்பேன். என் உள்ளம் இப்போது தாயுள்ளம் ஆயிற்று; அது தவறான உள்ளம் இல்லையே. தாயாக வேண்டுமெனின், மனைவியாக வேண்டும்; மனைவியாக வேண்டுமெனின், மணமாக வேண்டும்; மணமாக வேண்டுமெனின் காதலாக வேண்டும்; காதலாக வேண்டு மெனின், தன்போலத் தன்னை காதலிக்கும் அன்பன் வேண்டும். (மிகுந்த துடிப்போடு) என் கண்ணுக்குள் புகுந்த ஒருவர், என் கருத்திற் கலந்த ஒருவர் என் நெஞ்சு நிறைந்த ஒருவர், என் கணவர்.... (அன்புக் கண்ணீர் சொட்ட, தன் கழுத்தில் இட்ட மாலையை ஏந்திப் பண்ணனுக்கு அணிகின்றாள். நாணத்தால் தலைகுனிந்து நிற்கின்றாள். ஆரவாரம் ஊரெங்கும் கேட்கிறது. வடிவின் பெற்றோர்களும் பண்ணன் பெற்றோர்களும் இமைகொட்டாது மகிழ்கின்றனர். பண்ணன் தன் கழுத்து மாலையை வடிவுக்கு அணிகின்றான். மறுபடியும் பெரிய ஆரவாரம்) யாழி: பெருமக்களே! மணமக்களே! (கை தட்டல்) கை கூப்புகிறேன். புதிய ஆண்டுச் செயலி என்ற முறையில் பெருமகிழ்ச்சிச் கிடையே பெருமகிழ்ச்சியோடு நன்றி கூற முன்வந்து நிற்கின்றேன். இவ்விழா வியப்புவிழாவாகத் திகழ்கின்றது. மேலும் வியப்பு நிகழ்ந்தாலும் மருள் அடைவதற்கில்லை. நடந்த நிகழ்ச்சிகளையும் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளையும் பார்க்கும் போது கழக ஆண்டுவிழாவின் அழைப்புக்கள் திருமண அழைப்புக்கள் ஆயின. பண்ணனார்க்கு இட்ட வரவேற்பு மாலையும், வடிவழகியாருக்கு இட்ட நன்றிமாலையும் மணமாலைகள் ஆயின. விழாத் தலைவரும் கழகத்தைத் தோற்றிய தலைவியும் இல்லற வாழ்க்கையின் தலைவனும் தலைவியுமாக ஆயினர். இன்று வடிவழகியார் தன் தலைவரிடம் ஒரு பொம்மை குழந்தையைப் பரிசாகப் பெற்றார். அடுத்த ஆண்டுவிழாவிற்குள் ஓர் புகழ்க் குழந்தையை மடியிற் பெறுவார். (கை தட்டல்) கழகத்தின் செயலாளர் என்ற நிலையில் உங்கள்போல நானும் பேருவகை அடைகின்றேன். எனினும் என் மகிழ்ச்சி இன்னும் பெரிது. கழகத்தைத் தோற்றுவித்த கன்னி இல்லற திலகம் ஆனாள் என்று நீங்கள் மகிழ்கின்றீர்கள். இல்லற திலகம் ஆகும் அக்கன்னி என் அண்ணியானாள் ( கை யொலிப்பு) என்றால், எல்லாரையும் விட என் மகிழ்ச்சி பெரிதாகத்தானே இருக்கும். வடிவழகியார்க்கு நான் செய்யக்கூடிய நன்றி என்ன? அவர் தம்பிக்கு.... (முன்பே கூட வாங்கி வைத்திருந்த ஒரு மாலையை எடுத்துக்கொண்டு முன்வரிசையில் மீசையும் தாடியுமாக இருக்கும் நாவலன் கழுத்தில் அணிந்து வணங்குகின்றாள் யாழி. நாவலன் தன் மாலையில் ஒரு பெரும் பூவை எடுத்து. யாழியின் கூந்தலில் அணிகின்றான். வையையும் காவிரியும் மேடைக்கு வருகிறார்கள்.) வையை : (கையமர்த்தி, கை கூப்பி) ஊர்ப் பெருமக்களே! இருங்கள்! இருங்கள்! நீங்கள் எல்லோரும் எங்கள் விருந்தினர். உணவின்றி மணம் உண்டா? நாளைப்பகல் இவ்விடத்தே விருந்துகள் நடைபெறும். உங்கள் வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களையும் அழைத்துக் கொண்டு வந்து உண்டு மகிழ்ந்து மணமக்கள் நால்வரையும், இரு குடும்பத் தாரையும் வாழ்த்துங்கள். (மணமக்கள் நால்வரும் வணங்குகிறார்கள்) நாடகம் முற்றும்