kiwkiya«-- 30 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) சமூக இயல் - 2  பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 32+288 = 320 விலை : 400/- மறைமலையம் - 30 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 320 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000 üyh¡f« : வி. சித்திரா   அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) மறை மறைந்ததே அடிகளார் வாழ்ந்தது முக்கால் நூற்றாண்டே யாயினும், அவரால் தமிழ்நாடு அடைந்த பயன் அளப்பரிது எனக் கூறுதல் மிகையாகாது. அடிகளார் வரன்முறை வழாது மும்மொழிப் புலமை பெற்ற முதுபெரும் புலவர்; சைவ சித்தாந்தத்தின் திட்பநுட்பங்களை நன்கு பயின்று மேனாட்டறிஞரும் மெச்சும் வகையில் ‘Mystic Mina’ என்னும் ஆங்கில வெளியீட்டின் மூலம் எங்கும் பரவச்செய்தவர். அடிகளார் புலமையிற் பழமையும் புதுமையும் பங்கு பெற்றோங்கின. அடிகளார் பயின்ற நூல்கள் கணக்கற்றன என்பதை மறைந்தன ஒழிய இருந்தனவாயொளிரும் நூல்களையுடைய அவர்களது நூற்கருவூலமே இனிது விளக்கும். அடிகளார் நுண்மாண் நுழைபுலப் செல்வராய் - நாவீறுடையராய் - எழுத்தாற்றலில் எவரும் வியக்கத்தக்க எழுத்தாளராய் இலங்கியும், அவர்கள் அவ்வாற்றல்களை அடிமை வாழ்விலீடுபட்டு விபழலுக்கிறைத்த வீணிராக்காமல், உரிமை வீறுடன் தனிமையிலுழைத்துப் பொருள் புகழும் ஈட்டி, வையத்து வாழ்வாங்கு வாழ்ந்த வகை பெரிதும் பாராட்டத்தக்கது. அவ்வகையில் அடிகளார் மாபெருங் கலைவீரர் எனப் போற்றுதற்குரியார். உறங்குவது போலும் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு (குறள் 339) என்னும் உண்மையை உளங்கொண்டு, கழிந்ததற் கிரங்காது, நம்மைப் பிரிந்த நல்லவர் இன்னுயிர் அவர்தம் வழிபடு கடவுளின் மறைமலையரடிகளின் மன்னி வற்றா இன்பம் உற்று விளங்கவென மனங்கொளலன்றி மற்றென்செய வல்லோம்! - வித்துவான் மே.வீ. வேணுகோபால பிள்ளை. (பக். 47) மறைமலைய மாண்பு நுழைவுரை தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்! முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், `முத்தமிழ் அடிகள் என முழக்கமிட நின்றார்! இருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார். தமிழ் தனித்து இயங்காது என்றும், வடமொழி வழியது என்றும், வடமொழித் துணையின்றி இயங்காது என்றும், உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வடமொழியே என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க, வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ்பரப்பாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர். சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், `தனித்தமிழ் (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் `தனித்தமிழ் என்பதை நிலை நாட்டிய நிறைமலை, மறைமலையடிகளாரே! சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், `தொல் காப்பியக் கடல் எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி, ஐந்தெழுத்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே என்றும், ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? என்றும் - எழுதிப் பரப்பினாராக, ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம் என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்! தொல்காப்பியக் காவல் தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என்றும், மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை பேண வேண்டும் என்பதை, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால், ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்ப தற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது என்னும் பாவாணர், மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப் பாடிப் பரவினார். `தனித் தமிழ்த் தந்தையார் என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார். நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழ் காக்கும் படை என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புகளின் மேம்பாட்டையும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார். பல்துறை ஆற்றல் அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார். மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள் என்கிறார். (பனிமலை - இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்). அடிகளார் நூல்கள் அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப்படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை, 1. மருத்துவம் 2. மறைபொருள் 3. இலக்கியம் 4. இதழ்கள் 5. சங்க இலக்கியம் 6. பாடல் 7. நாடகம் 8. புதினம் 9. கடிதம் 10. கட்டுரை 11. சமயம் 12. தத்துவம் 13. வரலாறு 14. சமூக இயல் என்பன. முதற் குறள் வாத நிராகரணம் என்னும் மறுப்பு நூலே, அடிகளின் முதல் நூலாக வெளிப்படுகின்றது (1898) அந்நூன் மறுப்பு நயமே நாகை அடிகளை - பல்லவபுர அடிகளாக -தனித்தமிழ் அடிகளாக ஆக்க அரும் பெரும் தூண்டல் ஆயிற்றாம். அடிகளார் வரலாறு: கீழ்கடல் சார் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிற்றூர் காடம்பாடி, ஆங்கு வாழ்ந்த அருந்தவப் பெருந்தகையர் சொக்கநாதர் - சின்னம்மையார்! இவ்விணையர் கொடையாய்த் தமிழன்னை செய்த தவப் பேற்றால் பிறந்தவர் வேதாசலம். பிறந்த பெரு மங்கல நாள் கி.பி. 15.07.1876. சொக்கநாதர், சித்தமலம் அறுவித்த சித்தமருத்துவர்; அறிவ மருத்துவம் என்பதும் அது. அத்தொழில் அவர்க்கு வளத்தை வழங்கியது. அதனால் வேதாசலம் குறைவற வாழ்ந்தார். நாகப்பட்டினத்து வெசிலியன் மிசன் பள்ளியில் ஐந்து வகுப்புவரை பயின்றார்; சிறந்த மாணவராக விளங்கினார். ஆறாம் வகுப்பில் சேரும் நிலையில், அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். ஆயினும் அன்னையார் உறுதியால் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு இருந்த முதன்மை தமிழுக்கு இல்லை. கிறித்தவ சமயம் பற்றி அன்றிச் சிவனியம் பற்றி அறிய வாய்ப்பில்லை என்னும் இரண்டு குறைகளையும் இளமையிலேயே உணர்ந்தார். வீட்டிலேயே தமிழ் நூல்களைப் பயின்று முதற் குறையையும், நாகையில் இருந்த இந்துமதாபிமான சங்கம் வழி இரண்டாம் குறையையும் நீக்கினார். பள்ளியிலும் குறையறக் கற்றார். வருவாய்க் குறையால் வாடும் அன்னைக்குச் சுமையாய் இல்லாமல் தனியே பயில்வதே இனியவழி என எண்ணி, நாகையில் புத்தக வணிகராக விளங்கிய நாராயண சாமியார் புலமையாலும் சிறந்து விளங்கியவர். ஆதலால் அவரிடம் தனியே இலக்கிய - இலக்கண - சமய நூல்களைக் கற்றார். நாராயணரின் முன்னை மாணவர் பேரா. மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பதையும் அறிந்தார். ஒன்பதாம் வகுப்பொடு பள்ளிக் கல்வியை நிறுத்தித் தனிக்கல்வியே கற்றார். தொல்காப்பியம், தொகை நூல்கள், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவை, இறையனார் அகப் பொருள் எனக்கற்றார். அடிகளார் இயற்றிய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை முகப்பில், எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தேம் என்றும் வேறுசில நூல்களையும் முழுவதாக ஓதியதையும் கூறி, இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். அவ்வாண்டு கி.பி. 1897. நாகை இந்து மதாபிமான சங்கத்திற்குச் சைவ சித்தாந்த சண்ட மருதம் என்னும் விருது பெற்ற சோமசுந்தர நாயகர் வந்து சொற்பொழிவாற்றினார். அவர் பொழிவில் வந்த கருத்தொன்றனை மறுத்து ஒருவர் எழுத, அதற்கு மறுப்பாக முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புரை எழுதினார். அதனைக்கற்ற நாயகர், மீளப் பொழிவுக்கு வருங்கால் முருக வேளைச் சந்திக்க விரும்பினார். அச்சந்திப்பின் பயனே உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம். நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார். இதுவே அடிகளார்க்குச் சென்னை வாழ்வு அமைய முதல் தூண்டல் ஆயிற்று. அடிகளுக்குப் பதினேழாம் வயதில் (1893) திருமணம் நிகழ்ந்தது. துணைவி தம் மாமன் மகள் சவுந்தர வல்லி என்பார். திருவனந்தபுரம் நாராயணசாமி அவர்களின் முன்னை மாணவராம் பேரா. சுந்தரனார் திருவனந்த புரத்தில் இருந்தார். அவரியற்றிய மனோன்மணிய நாடக நூல் கற்று அதன் அருமை கண்டு, பேராசிரியரைக் காணவிரும்பினார். அதனால் தம் ஆசிரியரோடு திருவனந்தபுரம் சென்று பேராசிரியரோடு உரையாடினார். வேதாசலனார் இளம் பருவத்தையும் மூதறிவையும் அறிந்த சுந்தரனார் வியப்புற்றுத் தகுதிச் சான்று ஒன்று வழங்கினார். சிறிது காலம் திருவனந்த புரத்தில் ஆசிரியப் பணியும் செய்தார். அவ்விடத்தின் பருவநிலை ஒவ்வாமையால் நாகைக்கே திரும்பினார். சென்னை: சோமசுந்தரனார் முன்னே கூறியபடி வேதாசலரைச் சென்னைக்கு அழைத்து அறிஞர் நல்லுசாமி என்பார் நடாத்திய சித்தாந்த தீபிகை என்னும் இதழாசிரியர் ஆக்கினார். பின்னே சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டியிருத்தல் அறிந்த சோமசுந்தரனார் வேதாசலனா ர அக்கல்லூரிப் பேராசிரியராக்க முயன்றார். அதுகால் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர். கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் என்பார். 9.3.1898 இல் வேதாசலனார் பணியேற்றார். அங்குப் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்கல்லூரிக் காலத்தே இளங்கலை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு (1903) பட்டினப்பாலை (1906) என்பவற்றுக்கு ஆராய்ச்சி உரை எழுதினார். அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப்புதுமுறை உரை, தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சி யினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டும் என எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்கிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தார்ஆங்கிலமும் வட மொழியும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும் என்றும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம் என்றும் ஒரு தீர்மானம் ஆட்சிக்குழுவில் கொண்டு வந்தனர். ஒரு பாடம் விருப்பப்பாடம் எனப்பட்ட பின்னர் அதனைக் கற்க வருவார் எவர்? தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறையவே ஆசிரியப் பணியிடமும் குறைய வேண்டுவதாகி, அடிகளார் 31.1. 1911 ஆம் நாளுடன் கல்லூரிப் பணியை முடிக்க வேண்டிய தாயிற்று. மாணவர்: இக்காலத்தில் அடிகளின் மாணவராக இருந்தாருள், தணிகைமணி செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சி, நாவலர் ச.சோ. பாரதி, பேரறிஞர் ச. வையாபுரியார் முதலோர் சிலர். தணிகைமணியின், தேவார திருவாசகச் சொல்லடைவு ஒரு பிறப்பளவில் செய்யக் கூடியதா? நாவலர் ச. சோ. பாரதியாரின் ஆய்வுத் துணிவு எத்தனை கசடுகளை நீக்கியது? வையாபுரியார், கால ஆய்விலும், வடமொழிப் பிடிவாதத்திலும் தம்மைச் சால்பு ஆய்வில் இருந்து விலக்கினாலும், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப்பதிப்பு, பல்கலைக் கழக அகரமுதலிப் பதிப்பு இவற்றைச் செய்த அருமை என்ன? புறத்திரட்டு, களவியல் காரிகை ஆயவற்றின் பதிப்புச் சிறப்பு என்ன? இவர்கள் பணியும் அடிகளாரைத் தழுவுதல் உண்மை தானே! சமரச சன்மார்க்கம் கல்லூரிப் பணியில் இருந்து வீடுபெற்ற அடிகளார், பல்லவபுரத்தை வாழ்விடமாகக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் தோற்றுவித்தார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீகாரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும், சமரச சன்மார்க் கத்தையும் பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவார். அச்சுவாமி கள் வலியுறுத்திய அவ்விரண்டு கொள்கைகளையும் எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்கு கூட்ட வேண்டி அச்சுவாமிகள் இட்ட பெயராலேயே, `சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கலாயிற்று. இந்நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்; பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் ஆவர் என்று பெயரீடு செய்து கொள்கைகளையும் வகுக்கிறார். குடும்பம் 1898இல் அடிகளார் சென்னைக்கு வரும்போது அவர்தம் அன்னையார் சின்னம்மையார், துணைவியார் சவுந்திரம் அம்மை யார், செல்வி சிந்தாமணி, அடிகளார் என்னும் நால்வரைக் கொண்ட குடும்பமாக இருந்தது. 1911இல் பல்லவ புரத்தில் குடிபுகும் போது நீலாம்பிகை, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி என்னும் மக்களும் கொண்ட ஒன்பதின்மர் குடும்பமாக இருந்தது. பல்லவுரம் புகுந்த பின் திரிபுர சுந்தரி பிறக்கப் பதின்மன் குடும்பம் ஆயிற்று. இந்நிலையிலேயே 27.08.1911இல் சைவத் துறவியர்க்குரிய துறவாடை (காவி) கொண்டு சுவாமி வேதாசலம் ஆனார். சுவாமி வேதாசலம் என்பதன் தனித்தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது வெளிப்படை. முன்னேயே அவரை அடிகள் என்றது அவர்தம் மாண்பு கருதியேயாம். மீள்பார்வை நாம் மீள்பார்வை ஒன்றுபார்க்க வேண்டும். அடிகள் 21ஆம் அகவையிலேயே தனித்தமிழ் ஆய்வுத்திறம் கைவரப் பெற்றார். 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களுக்கு ஆய்வுரை வழங்குங்கால் இதிலுள்ள சொற்கள் இத்தனை; இவற்றுள் செந்தமிழ்ச்சொல் இத்தனை; வேற்றுச் சொல் இத்தனை - என அறுதியிடுகிறார். ஆதலால், தனித்தமிழ் என்னும் தோற்றம் 1916 ஆம் ஆண்டில் நீலாம்பிகையார் தூண்டலால் ஏற்பட்டமை என்பது, அகத்தே அமைந்து கிடந்த வித்து, முளை விட்டு வெளிப்பட்ட நிலையாம். அவ் வெளிப்பட்ட நிலையும் உடனே பற்றிப் படரவில்லை! மேலும் சில ஆண்டுகளின் பின்னரேயே சமசர சன்மார்க்க நிலையம், பொதுநிலைக் கழகமாகவும், ஞானசாகரம் அறிவுக் கடலாகவும், சுவாமி வேதாசலம் மறைமலையடிகள் ஆகவும் படிப்படியே கிளர்கின்றனவாம்! ஓர் அரிய அமைப்பு உருவாகும் நிலையும், ஓர் அரிய கண்டு பிடிப்பு உலகவர் அறிய வெளிப்படலும், அவை இயக்கமாகவும் பயனாகவும் ஆகின்ற நிலையும் பற்றிய விளக்கம், அடிகளார் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் அடங்கியுள்ளதாம்! எதிரிடைத் தூண்டல்: மேலும் ஒன்று: ஒரு நேரிடைத் தூண்டலினும் எதிரிடைத் தூண்டல் வலிமை மிக்கது என்பதும், உள்ளத்து உறுதியை வெள்ளப் பெருக்காய் வெளிப்படுத்த வல்லது என்பதும் தெளிவாம். ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டா? என்று கற்றறிந்த தமிழர் ஒருவரே வினாவி நகைத்தல், பெற்ற தாய் மொழிப் பிறவிக்கு உற்ற தகைமை ஆகாது என்பதும், அதனை உணர்ந்த அப்பிறவி பாம்பன் குருபாத அடிகள் போல் சேந்தன் செந்தமிழ் என்ன ஒரு நூலியற்றித் தமிழ் தனித்து இயங்கவல்ல தனி உயர் மொழி என்று நிலைநாட்டியிருப்பின் வழிபடத்தக்க பிறவியாய் அமைந்திருக்கும்! அப்பேறு அதற்கு வாய்க்காமை, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (குறள் 263) என்னும் வள்ளுவர் வாய் மொழிப்படி, தனித்தமிழ்த் தந்தைப் பேறு மறைமலையடிகட்கு வர இருப்பதற்கே நேரிட்ட நேர்ச்சியாம் என்க. இயக்கம் அடிகள் இயக்கம் ஆலமரமெனக் கால்பல கொண்டு அகல அகல விரியத் தனித்தமிழ் இயக்கமாய், உலகத்தமிழ்க் கழகமாய், பாவலரேறு தமிழ்க் களமாய், சேரர் கொற்றமாய், தமிழ்க்காப்புக் கழகமாய், தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாய், தனித்தமிழ் இலக்கியக் கழகமாய், தமிழ் வளர்ச்சிக் கழகமாய், மறைமலையடிகள் மன்றமாய், தமிழ்க்காவல் குழுவாய், இயற்றமிழ்ப் பயிற்றகமாய், பாவாணர் தமிழ் இயக்கமாய் ஆங்காங்கு முகிழ்த்து முனைப்பொடு கடனாற்ற ஏவியதாம். நூலகம் அடிகள் நூற்றொகை, அருமணிக் குவையன்ன நாலாயிரம் நூல்களைக் கொண்டது. எதிரது உணர்ந்து, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்கு முற்கொடையாக வழங்கியதால், நாலாயிரம் நாற்பதாயிரமாய் மேலும் மேலும் விரிந்து மறைமலையடிகள் நூலகப் பெயரால், பெருமைமிகு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த பெரியவர் சோமு அவர்கள் இல்லமே வாய்க்க உலக வளமாக்கியதாம்! அதன் வழியாகவே அடிகள் தாமே வெளியிட்ட நூல்களும், வெளியிடாமல் கழக வழி வெளிவந்த நூல்களும், அடிகள் காலத்திற்குப் பின் வெளிவந்த நூல்களும் ஆகிய முழுமைத் தொகுதிகளும் கி.பி. 1898 முதல் 1969 வரை முதற்பதிப்பாக வெளிவந்தவை. அவற்றுள் படிகள் கிட்டுதற்கு அரியவையும் உண்டு. அடிகள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பேற்றால், இன்று வாய்த்த நூல்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வழங்கும் பெருவாய்ப்பைத் தமிழ்மண் பதிப்பகம் பெற்றதாம். வெள்ளச் சேதம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பதிப்பகத்துள் புகுந்து அச்சு அடிக்கப்பட்டதும், அடிக்கப்பட இருந்ததும், கணினிப்படுத்தி வைத்த குறுவட்டுகளும், மூலநூல்களும் என வாரி அள்ளிக் கொண்டு போனமை, களத்துக்கு வந்த கதிர் மணிகள், களஞ்சியத்திற்கு வாராமல் போய, பேரழிவு ஒப்பதாம். ஆதலால், நூல்களை மீளத் தேடவும், கணினிப்படுத்தவும், குறுவட்டு ஆக்கி அச்சிடவும் என மும்மடங்குப் பணியும் பேரிழப்பும் பெருத்த அவலமும் உண்டாக்கிற்றாம். அந்நிலையில், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழியை வாய்மை மொழியாக்கிய துணிவுச் செல்வர் இளவழகனாரும் அவர் குடும்பத்தவரும் ஆவர்! முன்னறிவிப்புத் திட்டப்படி நூலுக்கு ஆர்வமாய்ப் பணம் செலுத்தியோர்க்கும் நூல் காலத்தில் கிட்டா உளைச்சல் இல்லாமல் போகாதே! அவர்களும் அமைந்து தாங்கல், இயற்கை இயங்கியல் வழியதாம். வெளியீடுகள் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மொழி இன மண்வளம் - வளர்ச்சி மீட்டெடுப்பு - என்பவற்றை முன்வைத்துத் தமிழ்ப் போராளி இளவழகனாரால் தொடங்கப்பட்டதால், பேரிழப்புக்காம் எனத் தெளிவாகத் தெரிந்தும், இசைக் கலைக்கு வாய்த்த ஒப்பற்ற களஞ்சியமாய் வாய்த்த - கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டதாம்! முன்னை வந்த முதற்பகுதி பேரிழப்பாக்கியும் அதன் பின்னைப் பகுதிகளையும் அரிதின் முயன்று வெளியிட்டது! மொழிஞாயிறு பாவாணர்; ஈழத்து அறிஞர் ந.சி. கந்தையா; வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா, உரைவேந்தர் ஔவை சு.து; நாவலர் ந.மு.வே; பண்டித வித்துவான் தி.வே. கோபாலர்; சாமி சிதம்பரனார்; மயிலை சீனி. வேங்கட சாமியார்; பேரறிஞர் க. வெள்ளை வாரணனார்; பாவலர் குழந்தையார்; பாவலர் முடியரசனார்; பாவேந்தர், தொல் பொருள் கல்வெட்டு ஆய்ஞர் சதாசிவனார், சாத்தன்குளம் இராகவன் நூல்களையும் எளியேன் நூல்களையும் முழுமை முழுமையாக வெளியிட்டது. தொல்காப்பியம்- பாட்டு - தொகை - காப்பியம் - கீழ்க்கணக்கு - தமிழ்நாட்டு வரலாறு - ஆங்கிலம் வல்ல அறிஞர் இராம நாதனார் நூல்களையும், யாழ்ப்பாண அகராதி முதலாம் அகராதித் தொகுதிகளையும் வெளியிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிதொட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளிவந்த - தமிழுக்கு ஆக்கமாம் நாட் டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை எல்லாம் - ஓரிடத்துப் பெற்று, ஒரு தனித்தமிழ் நூலகம் அமைக்கும் அளவுக்கு அச்சிட்டு வழங்கிய பெருமை இளவழகனார்க்கு உண்டு. அவரே அன்றி அவர் துணையையும் மக்களையும் உறவையும் அன்பையும் நண்பையும் ஒருங்கே இணைத்து, அறிஞர் பெருமக்கள் பலர் அரவணைப்பையும் வாய்ப்பக் கொண்டு வாழும் இயல்பு அவர்க்கு வாய்த்தலால் மட்டுமே, இவ்வாறு செயற்கரிய செய்ய வாய்த்ததாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவரும் அவர். மறைமலைய மாண்பு மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழர் வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்! புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை - 6 625006. மலைக்க வைக்கும் மறைமலையம்! பதிப்புரை மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க -பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்கள் `மொழியின் வழியாகவே மொழிபேசும் மக்கள் முன்னேற முடியும் எனக் கூறுகிறார். உலகம் முழுதும் இவ்வுண்மை உணரப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. பாவாணரை அறிவுலகம் சரியாக அடையாளம் காண்பதற்குக் காரணமானது மறைமலையடிகளார் தந்த பாராட்டு! மறைமலையடிகள் (15.7.1876 - 15.9.1950) தேவநேயப் பாவாணர் (7.2.1902 - 16.1.1981) இருவரும் தனித்தமிழியக்கத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாகப் போற்றப்படுபவர்கள். மறைமலையடிகளார் 1916இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நூற்றாண்டை எட்டியுள்ள மகிழ்வான நேரம் இது! தனித்தமிழியக்க நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் `மறைமலையம் எனும் பெருந்தொகுப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வழி வெளிக்கொணரத் திட்டமிட்டோம். உலகம் முழுதும் பரவி வாழும் உணர்வு குன்றாத தமிழர்கள் தந்த ஊக்குவிப்பு, இந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் எனும் உறுதியை எனக்குத் தந்தது. தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அடிகளாரின் அரிய படைப்புகள் பலவற்றையும் தேடித்தேடி வழங்கி வழிகாட்டினர்; வலிமையூட்டினர். மறைமலையடிகளார் 1898ஆம் ஆண்டிலிருந்து எழுதி வந்துள்ளார். அறிவுக்கடல் (ஞானசாகரம்) இதழை 1902ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்துள்ளார். அவரின் படைப்புகள் பெருவெள்ளமாய் வெளிவந்திருக்கின்றன. அச்சேறாதவை, பெயர் கூடக் கேட்டறியாதவை, பெயர் தெரிந்தும் பார்வைக்குக் கிட்டாதவை - எனப் பலவகையாய்க் கிடைத்தன அடிகளாரின் அரும்படைப்புகள்! அவற்றை `மறைமலையம் எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாக ஒருசேரப் பார்க்கும்போது, தமிழுலகம் வியப்படைவது உறுதி. மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? இப்படிக் கவலையோடு கேட்பார் பாவலரேறு பெருஞ் சித்திரனார் (10.3.1933 - 11.6.1995). அவரின் `தென்மொழி இதழ் 1.8.1959 இலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்புதான், தனித்தமிழ்த் திசை நோக்கி நூற்றுக்கணக்கானோர் நடைபோடத் தொடங்கினர். அதில் நானும் ஒருவன். பெருஞ்சித்திரனாரின் எழுத்து காட்டிய அடையாளத்தால், பாவாணர் நூல்கள் எனும் அறிவுப்புதையல் பலர் கைகளிலும் குடியேறியது. பாவாணர் நூல்கள் வலியுறுத்திப் பேசியதால், மறைமலை யடிகளாரைத் தேடிப்பயிலும் ஆர்வம் தமிழுலகில் புத்துயிர் பெற்றது. ஆரியத்தை எதிர்ப்பதிலும் சமற்கிருதத்தை விலக்கு வதிலுமே தமிழின மேம்பாடும் தமிழ்க் காப்பும் அடங்கியிருக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தமிழர் நெஞ்சங்களில் அரும்ப வைத்தது திராவிடர் இயக்கம்; மலர்ந்து விரியவைத்தது தனித்தமிழ் இயக்கம்! குமுக, அரசியல், பண்பாட்டு மலர்ச்சிக்கு இந்த ஈரியக்கங்களின் பேருழைப்புப் பயன்பட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் உணர்வு கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் தளரத் தொடங்கியது; 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் சரியத் தொடங்கியது. வடமொழி வெள்ளத்தில் தமிழ் இழுத்துச் செல்லப்பட்டு விடாமல் காப்பாற்றியோர் கம்பரும் பவணந்தியும்! பின்வந்தோருக்கு அந்தக் காப்புணர்ச்சி இல்லாமல், அயன் மொழிப் பற்றுக்கு அடிமையானதால் தமிழும் தமிழினமும் பெற்ற இழப்புகள் ஏராளம்! அயன்மொழிச் சேற்றிலிருந்து தமிழை மீட்கும் முயற்சி ஆங்கிலேயர் வருகையையொட்டிப் புத்துயிர் பெற்றது. வள்ளலார், பாம்பன் சாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சுப்பிரமணியசிவா, பரிதிமாற் கலைஞர் முதலிய பலரும் தொடக்க விதைகளாயினர். கோவை அவிநாசியில் பிறந்து விருதுநகரில் வாழ்ந்த விருதை சிவஞானயோகி 19.11.1908 ஆம் நாள் `திருவிடர் கழகம் தொடங்கித் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வேகங்கூட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினராயிருந்தவர் சுவாமி வேதாசலம் (மலைமலையடிகள்). மறைமலையடிகள் எனத் தம் பெயரைக் கொண்டு, 1916இல் அவர் தொடங்கியதே தனித்தமிழ் இயக்கம். `துறைமிகு ஆங்கிலம் மறைவட மொழியொடு தூய்தமிழ்ப் பேரறிஞர் - தனித்தமிழ் தோற்றிய ஓரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதற்கேற்ப, மறைமலை யடிகளார் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் முதலிய பன்மொழியிலும் புலமை மிக்கவர். பன்மொழிப் பேரறிஞரான மறைமலையடிகளார் தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவாக நின்றதால் எதிர்ப்புக்கும் இழப்புக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனாலும் உறுதி குன்றாமல் தமிழுக்கு ஆதரவாய் உழைக்கும் உள்ளத்தோடிருந்தார். அதனால், தமிழர் உள்ளங்களில் இன்றளவும் மாறாப் பெருமையோடு அவர் வீற்றிருக்கின்றார். வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை வையகம் பாவேந்தர் பாரதிதாசன் அவர் மாண்பினைப் பாடி மகிழ்ந்ததும், தம் `குடும்ப விளக்கு நூலினை மறைமலை யடிகளுக்குக் காணிக்கையாக்கி வழங்கியதும், அவரின் உறுதி தளராத உள்ளமும் உழைப்பும் கண்டு போற்றிய நன்றிக் கடன் என்பதில் அய்யமில்லை. சென்னையில் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ்மண் பதிப்பகப் பணிகளைத் தமிழுலகம் அறியும். வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டவல்ல தமிழறிஞர்கள் பலரின் நூல்களை முழுமுழுத் தொகுப்புகளாக வழங்கியிருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் முடிப்பினை (சாதனை)யாகப் போற்றப்படுகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் நூல்களை முழுமையான தொகுப்புகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவை காலம் முழுதும் பயன்படவல்ல கருவி நூல்கள் என்பதை அறிஞர் உலகம் அறியும்! தமது நலத்தை ஒதுக்கி வைத்து, தமிழ் நலத்தைக் காக்க வாழ்ந்த அறிஞர்களின் அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து முழுத் தொகுப்பாக வழங்குவது பெரும்பணி! அதனைத் தமிழ்மண் பதிப்பகம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொகுப்பு நூல்களின் பட்டியலைப் பின்னிணைப்பில் காண்க. தமிழுக்காக உழைக்கும் உணர்வை இளமையில் எம்மிடம் ஏற்படுத்தியோருள் பெரும்புலவர் நக்கீரனாரும் அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலனாரும் குறிப்பிடத்தக்கோர்! எம் நன்றிக்குரியோர்! தனித்தமிழ் ஆர்வம், திராவிடர் இயக்க ஈடுபாடு எனும் இரு சிறகுகளால் எம்மை எழவைத்தவர் பெரும்புலவர் நக்கீரனார்! அவரை எண்ணிக் கண்பனிக்க நன்றி கூறுகிறது எம் நெஞ்சம். காலப்பழமையாலும் பராமரிப்புக் குறைவாலும் அழிய நேர்ந்த தமிழிலக்கியங்கள் அளவற்றவை! அவற்றில் ஒருபகுதியை யாவது மீட்டு நம் கைகளுக்கு வழங்கியோர் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலிய சான்றோர் பெருமக்கள்! தமிழிலக்கியப் பெருஞ்செல்வத்தை மீண்டும் மீண்டும் அச்சாக்கி, அனைவர் கைகளையும் எட்டச் செய்த பெருமை - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே.சா. நூலகம், மணிவாசகர் பதிப்பகம் முதலிய பதிப்பாளர்களுக்கு உரியது. அச்சுத்துறை அறிமுகமான பின்பே, அறிவுத்துறை அனைவருக்கும் பொதுச்சொத்தாகும் வாய்ப்பு வந்தது. எட்டாக் கனியாக ஓலைச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த இலக்கியச் செல்வங்கள், எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பணியைச் செய்த பதிப்பாசிரியர்களும், பதிப்பாளர்களும் நம் நன்றிக் குரியோர்! இரவு பகல் பாராது முதுமையைக் கருதாது உழைக்கும் மனவுரத்தை முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் பணியே எமக்கு வழங்கியது. அரசும், பல்கலைக் கழகங்களும், அறநிறுவனங்களும், சமய பீடங்களும் ,பெரும் இயக்கங்களும், பெரும் செல்வர்களும் செய்ய வேண்டிய பெருந் தமிழ்ப்பணி இது! எளியவர்களால் இயங்கும் தமிழ்மண் பதிப்பகம் பெருந்தமிழ்ப் பணிகளை இன்னல்களுக்கு இடையில் அருமுயற்சியோடு செய்து வருவது, உள்ளவுரம் ஒன்றினால்தான்! வல்லமை சேர்க்கும் வலிமையுண் டாக்கும்! வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்? காக்கும் தமிழைக் காக்கும் உணர்வைப் பாவேந்தர் பாடல் வரிகள் தந்தன. அச்சுக்கு எட்டாமலும் கைக்குக் கிட்டாமலும் இருந்த பேரறிஞர் பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கி திராவிடர் இயக்க அரசுகள் வழங்கின. அதனால், அறிவு பரவலாகும் வாய்ப்புகள் உருவாயின. `சரிவும் இழப்பும் நமக்கு வந்தாலும் தமிழுக்கு வரக்கூடாது என எண்ணி உழைக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழ் நாட்டில் வற்றாமல் வளர்ந்தபடி இருக்கின்றன. திருவிடர் கழகம் (1908) தனித்தமிழ் இயக்கம் (1916) தென்னிந்திய நலஉரிமைக் கழகம் (1916) சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943) தமிழ்ப் பேராயம் (1959) தமிழ்க்காப்புக் கழகம் (1961) தனித்தமிழ்க் கழகம் (1964) உலகத்தமிழ்க் கழகம் (1968) தமிழியக்கம் (1972) தமிழ்ச் சான்றோர் பேரவை (1998) தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும் பாவாணருமே! தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை! அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு `மறைமலையம் என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது. பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம் இது! தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது! அறிவுலகத்தால் `மறைமலையம் வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம். - கோ. இளவழகன் இதுவரை வெளியிட்டுள்ள தமிழ்மண் பதிப்பகத்தின் நூல் தொகுப்புகள் 1. பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 52 நூல்கள் 2. தொல்காப்பியம் - உரைகளுடன் 15 தொகுப்புகள் 3. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் - 30 நூல்கள் 4. கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி -18 தொகுப்புகள் 5. சாமிநாத சர்மா - 31 தொகுப்புகள் 6. ந.சி.க. நூல் திரட்டு - 24 தொகுப்புகள் 7. சாத்தன்குளம் இராகவன் நூற்களஞ்சியம் - 16 நூல்கள் 8. சதாசிவப் பண்டாரத்தார் - 10 நூல்கள் 9. நா.மு.வே.நாட்டார் தமிழ் உரைகள் - 24 தொகுப்புகள் 10. செவ்விலக்கியக் கருவூலம் - 15 தொகுப்புகள் 11. தேவநேயம் - 14 தொகுப்புகள் 12. திரு.வி.க. தமிழ்க்கொடை - 26 தொகுப்புகள் 13. உரைவேந்தர் தமிழ்த்தொகை - 28 தொகுப்புகள் 14. கருணாமிருத சாகரம் - 7 தொகுப்புகள் 15. பாவேந்தம் - கெட்டிஅட்டை - 25 தொகுப்புகள் 16. புலவர் குழந்தை படைப்புகள் - 16 தொகுப்புகள் 17. கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 தொகுப்புகள் 18. நாவலர் சோம சுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் - 5 தொகுப்புகள் 19. முனைவர் இராசமாணிக்கனார் நூல்கள் - 39 நூல்கள் 20. தமிழக வரலாற்று வரிசை - 12 தொகுப்புகள் 21. உவமைவழி அறநெறி விளக்கம் - 3 தொகுப்புகள் 22. முதுமொழிக் களஞ்சியம் - 5 தொகுப்புகள் 23. சாமி சிதம்பரனார் நூற்களஞ்சியம் - 22 தொகுப்புகள் 24. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 தொகுப்புகள் 25. அறிஞர் க. வெள்ளை வாரணனார் நூல் வரிசை - 21 தொகுப்புகள் 26. ஐம்பெருங் காப்பியங்கள் - 5 தொகுப்புகள் 27. பதினெண் கீழ்க்கணக்கு - 3 தொகுப்புகள் 28. நீதி நூல்கள் - 2 தொகுப்புகள் 29. பி. இராமநாதன் - 10 நூல்கள் 30. யாழ்ப்பாண அகராதிகள் - 2 தொகுப்புகள் 31. வெள்ளி விழாத் தமிழ்ப் பேரகராதிகள் - 3 தொகுப்புகள் 32. ந.சி. கந்தையா அகராதிகள் - 2 தொகுப்புகள் 33. முதுமுனைவர் இளங்குமரனார் தமிழ்வளம் - 40 தொகுப்புகள் 34. இளங்குமரனார் அகராதிகள் - 2 தொகுப்புகள் விரைவில் வெளிவர இருக்கும் அறிஞர்களின் நூல்கள் 1. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை 2. வ.சுப. மாணிக்கம் 3. பெரியாரியம் (தந்தை பெரியார்) 4. தமிழர் மருத்துவக் களஞ்சியம் 5. தமிழ் - தமிழ் அகராதி பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம் எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகச் சேர்த்து பொருள்வழிப் பிரித்து, கால நிரலில் ஒரே வீச்சில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோசா முத்தையா நூலகம் - சென்னை. புலவர் கா. இளமுருகன் - புன்செய் புளியம்பட்டி (மறைமலையடிகள் மன்றம்) மறை. தாயுமானவன் - சென்னை (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: திரு. அ. மதிவாணன் (ஆங்கிலம்) திரு. க. கருப்பையா திரு. புலவர். த. ஆறுமுகம் புலவர். மு. இராசவேலு திரு. இராசுகுமார் திரு. நாக. சொக்கலிங்கம் முனைவர். க. சுப்பிரமணியன் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா செல்வி. அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: âUkâ வி. சித்திரா திருமதி மலர் திருமதி செல்வி திருமதி ஹேமலதா திரு. ஆசம் திருமதி கலைவாணி பிராசசு இந்தியா திருமதி`புகழ்ச்செல்வி கயல்விழி (Process India), நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், க. இளந்திராவிடன், வே. தனசேகரன், கு. மருது, இல. தருமராசன் தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை -1 எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை-5. அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு மற்றும் பிராசசு இந்தியா `மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நிறைந்த நன்றியும் பாராட்டும். மறைமலையம் தொகுப்பில் இடம்பெறாத நூல்கள் முதற்குறள் வாத நிராகரணம் (1898), துகளறு போதம் (1898), சித்தாந்த ஞானபோதம் சதமணிக் கோவை குறிப்புரை (1898), வேத சிவாகமப் பிரமாண்யம் (1900), இந்த நான்கு நூல்களும் தமிழகத்தின் பல இடங்களில் தேடியும் எங்கள் கைக்குக் கிடைக்க வில்லை. ஆதலான், மறைமலையம் தொகுப்பில் மேற்கண்ட நூல்கள் இடம் பெறவில்லை. பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் 1968 இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பித்த நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்படுகின்றது. இந்நூலைப் பற்றிய குறிப்புரை... 1929 ஆம் ஆண்டு திருப்பாதிரிப் புலியூரில் நிகழ்ந்த சைவர் மாநாட்டிற்குத் தலைமையேற்று அடிகள் ஆற்றிய உரை இந்நூலாகும். இந்நூற் கருத்தை மறுத்தார் ஒருவரை மறுத்தும் தம்முரை செவ்விய உரையே என்பதை நிலைப்படுத்தியது இந்நூலின் இரண்டாம் பகுதியாயிற்று. சைவத்தின் அடிப்படைக் கொள்கைகளாகிய இறை உயிர்தளை என்பன தொல்காப்பியர் நாள் தொட்டே வழக்கில் உள்ளமையும் இன்பமும் பொருளும் அறனும் என்னும் முப்பொருள் கொள்கைச் சிறப்பும், சீர்திருத்தமென நாம் விரும்புவனவெல்லாம் பண்டே கொண்டிருந்த சிறப்பும் விளக்குவது இந்நூல். - இரா. இளங்குமரனார் இந்திய இலக்கியச் சிறப்பிகள் Preface The first part of the following treatise was read as Presidential Address at the All South India Saiva Con­ference held at Cuddalore, New Town, on the 16th, 17th, 18th, 19th, 20th and 21st 1929. The object of the Con­ference was to revive the study and practice of the oldest principles of the Saiva religion, which, in recent years, have greatly fallen into disuse and disrepute by being mixed up with the Puranic myths and which the modern Self­Respect movement calumniated in the most opprobrious language, without being able to discriminate between the cardinal points of Saivism and the merely adventitious ones. In the conflict of thoughts and ethical sentiments that arose between the Tamilians of the south and the Aryans of the north who came and settled all over the Tamil country from the first century A. D., down to the fifteenth and still later, the religion of the land, that is Saivism. underwent a marked change its outer rim, although in its centre it remained as pure as crystal and as impenetrable as a hard diamond. What is bound and true to its core, what is perfect and complete in itself, requires no change, re­quires no improvement. At the very dawn of Tamilian civilisation, of which we catch a glimpse through the Thol­kappiam the oldest Tamil work extant, we find the views about God, soul, and matter and salvation to have become thoroughly sound and complete. As our knowledge of these facts deepens, as our ideas about their relations expand, we find the conclusions reached by our forefathers about their nature and relations, daily receiving corroborations not only from the modern biological, geological, and other scienitific discoveries, but also from the philosophical view worked out and held by such eminent thinkers as William James, Bergson, Lodge, Ward and others. While preserving the intrinsic nature and excellence of their religious system, the teachers and prophets of the Tamil country have not disdained to take from foreign cults. whatever seemed to have influenced the ordinary people, and whatever might be turned to good account in the light of their own religious thought. In this wise came to by added to the outer surface of the body of Saivism, simple as poetic embellishments remember, only a few Puranic­myths of the northeners at first, but, as time went on, rushed in quite a multitude of them which, instead of adding to the naked beauty of the resplendent form, concealed it and even rendered it ugly in the eyes of- an incautious, indolent, or an ill-intentioned looker-on. Only to the penetrating mental vision of a careful thinker, the intrinsic value of the system came to reveal itself. Others touched only its outer crust of myths, some of them believing them to be actual facts, while some others who had an inkling of reasoning. spirit, turned away from them with disgust. However, one who would like to be benefited by the inestimable knowledge treasured up in the Saiva system of thought, should not render himself liable to, be thus scared away by the Aryan myths that sit at its door. Dr. G. U. Pope who did an invaluable Service to: the world by translating into English the sacred Tamil poems called the Thiruva­chakam of S1, Manickavachakar wisely observes: “paura­nic mythology and legend is dragged in, as simple poetic embellishment designed to please the multitude”* But the religious and philosophical ideas that are developed here in the following pages have nothing to do with such Puranic myths, for they are taken entirely from the ancient Tamil work the Tholkappiam, the only treatise extant that was composed at a time when the Aryan in­fluence did not touch even the fringe of the Tamilian thought, when the creation of Puranic myths did not take place as yet. The age of this unique Tamil work goes back to 3500 B. C. as is shown in my work on S1, Manicka­vachakar. The Aryans were then spreading over the north mid founding colonies in the midst of the Tamils and Kolarians that existed there long before their advent. The Tholkappiam comprises both Tamil grammar and poetics and the latter classifies the ideal activities of the ancient day Tamilians under the three categories, Love Wealh, and Virtue. What to choose from their life for ideal representations in poetry and how to idealize them for which purpose, from the subjects of many a chapter in the third book on poetics. The life of the Tamils thus dwelt on exhibits its gradual emergence from the life of the most primitive kind into that of strikingly civilized one. Still a strong tinge of the primitive characteristics, even in the life of a highly civilized kind, cannot be ex­plained except on the supposition that the Tamils are a people naturally very conservative in their habits and cus­toms and that a large portion of them were then closely adhering to them even while they were adopting the ele­ments of civilisation introduced by the best among them. Of the many interresting subjects treated of, Love and War form the two themes that hold as prominent a place in it, as ,they had held in almost all famous literature of the world. For man was born in love, was bred in love lives in love, and passes at last into love. Care has been, therefore, taken by the author to distinguish this love from lust which is intense selfishness, which takes no thought of others and their happiness, and which is wrongly identified with the former by persons who know no more than what they sensuously feel and enjoy. The union of spirits and not the union of mere corporal matter was regarded as the result of love, by 8t. Tholkappiar and by a host of poets, salOts and sages who followed in his footsteps. Love regenerates both mind and body; it springs from the depth of a pure mind, flows out through the body and enters again into another mind by means of another body and blends the two minds into one. This mortal body serves only as an indispensable instrument for bringing about this intimate union of two pure spirits. When such a superior kind of love springs up from a mind and flows over sweeping before its irresistible and dignified march, all the inferior and harmful kinds of desires and passions, it goes not towards one mind alane, although it runs into one fit­ting centre;: for filling it up with essence, but it gaes into each and all and drenches them in its wholesome element in varying degree according to their deserts. Many a~ are the forms and degrees of love, the highest, the greatest and the sublimest manifestation of it occurs only at the junction of an young man and a woman accomplished in all ideal qualities. In its immeasurable height and depth no other form of it can bear camparision with it. The man becomes the idol of her heart, while the woman occupies his inner sanctuary, at whose altar he will never hesitate to make any sacrifice that may be required of him. Thus the two come to acquire the virtue of leading a life for the other, a virtue, as it grows, makes it possessor identify his or her interests with the interests of the righteous. From this form of the purest spiritual love, arises the necessity of acquiring wealth, not for filling his own wants, not for securing comforts and pleasures for his own self, but for keeping the object of his adoration, the offsprings of their love-union, the kith and kin of his heart, in un­mixed happiness and comfort. As the circle of those, whom he is thus bound by love and not by mere duty to support widens, as the number of those who lie under his protec­tion increases, ambition far wealth, power and distinction also increases, and this exercises his intelligence utmost and calls forth the play of all the innate powers of his mind. There can be no a greater incentive to stimulate the’ intellectual energies af man, and nothing can induce him to display his formidable heroic deeds more, than what offers him a stout resistance to the achievement of his objects. This consideration naturally leads the author to bring in the topic of war, since war is the only perilous kind of resistance and obstacle that a man of the highest responsi­bilities meets with in the path of his ambitious life. And lastly, when success has brought home to his mind, and to the mind of his partner, how full of cares, troubles, and untold miseries this earthly life is, to what great agony both the mind and body of a numberless beings human and animal are subjected by a few who seek their ease, comfort and happiness, the man and the woman, jointly direct their thoughts to the attainment of a bliss unattended by misery. Thus a fresh regeneration of their life commences in the purely spiritual atmosphere in which the aroma of divine love emanates from God, accord­ing to Thalkappiar, the ever resplendent intelligent principle, exhilarates their mind and transmutes their human love into divine. It is remarkable that in emphasizing the importance of turning their mutual human love to the love of God, the married couple is advised by our 81. Tholkappiar to strive after it conjointly. From this it appears that, at the time of Tholkappiar, the life of celibacy and asceticism was quite unknown. Even in the north it came into vogue only after­the rise of Buddhism and Jainism. In the pre-Buddhistic, that is, in the Vedic period, the life of the Aryan house­holder and the Aryan sage was similar to that of the Tamilian, but with this difference that, while in the former mere carnal pleasures reign supreme, in the latter an ideal and chaste love cast around its sweet and mellow light. On all these points I have expatiated to the best of my lights and have shown how the principles of life laid down 5000 years ago by 81. Tholkappiar in his immortal Tamil work Tholkappiam, are in striking and wonderful harmony with the truly physical, moral, intellectual, and religious requirements of advancing ffi:)dern civilisation. It is a great pleasure to me to acknowledge my gratitude to the whole modern Tamil world who, with but one strange exception, appreciated this my humble contribution to modern Tamil literature and spoke and wrote of it in very high terms. To the strange critic also, who is the type of the unprogressive conservative section, I express my grateful feelings for having given me an opportunity to defend my position more strongly than before, in the second and concluding parts. Pallavaram, VEDACHALAM The sacred order of Lover 30th April, 1930. பொருளடக்கம் பக்கம் 1. பண்டை நாகரிக மக்கள் 11 2. நாகரிகம் 14 3. தொல்காப்பியம் 16 4. இன்பமும் பொருளும் அறனும் 18 5. இன்ப நிலை 20 6. இன்பம் அன்பினால் நிகழ்வது: கற்பு 24 7. தமிழ் மாதரின் கற்பு 30 8. இஞ்ஞான்றை மனைவாழ்க்கை 32 9. காரைக்காலம்மையார் மனையறம் 34 10. சுந்தரர் தம் காதலன்பின் வாழ்க்கை 37 11. சாதிவேற்றுமை அன்புக்கு மாறு 40 12. சாதிவேற்றுமை எவர்க்கும் ஆகாது 43 13. செல்வப்பொருள் இயல்பு 46 14. கல்விப் பொருள் மாட்சி 48 15. இஞ்ஞான்றைத் தமிழ்நிலை 53 16. செல்வத்தின் பயன் 56 17. அறம் ஒன்றே 59 18. பண்டைத் தவவாழ்க்கை 64 19. துறவு அறம் ஆகாமை 66 20. முப்பொருள் உண்மை 70 21. உலகின் உண்மை 71 22. உயிரின் உண்மை 72 23. கடவுள் உண்மை 74 தலைமைப் பேருரைமேல் நிகழ்ந்த சில தடைகளுக்கு விடை 1. முகவுரை 77 2. காதலுஞ் சாதியும் 79 3. இலக்கண நூல் 81 4. பண்டை இலக்கியங்களும் இன்பமும் 82 5. அறம் இன்பத்தையே முதலும் ஈறுமாக உடையது 85 6. தொல்காப்பியர் இன்பமே முதலென்றது 88 7. திருவள்ளுவர் கொண்டது தமிழ் முறையன்று 90 8. திருவள்ளுவர் வேறுமுறை கொண்ட காரணம் 92 9. திருவள்ளுவரும் இன்பத்துக்கே முதன்மை தந்தமை 95 10. முயற்சிக்கு ஊழ் காரணமன்று 98 11. அன்பும் இன்பத்தையே நுதலும் 100 12. காமம் என்பது இருபொருளுந் தரும் 104 13. தொல்காப்பியத்திற் சாதி இல்லை 106 14. காரைக்காலம்மையார் மனைவாழ்க்கை 111 15. சுந்தர மூர்த்திகளின் காதற் றிருமணம் 120 16. நாயன்மாருஞ் சாதிவேற்றுமைச் சிதைவும் 130 17. சிவநேய அடியார் நேயங்கட்குச் சாதி தடை 137 18. அப்பர் முதலான சிலரின் துறவு 153 19. பின்னுரை 159 பழந்தமிழ்க் கொள்கையே சைவசமயம் 1. பண்டை நாகரிக மக்கள் இந்நிலவுலகம் எங்கணும் இருந்து உயிர்வாழ்ந்து வருகின்ற பலவேறு மக்கட்கூட்டத்தாரிற், பண்டைக்காலந் தொட்டு நாகரிகம் உடையராய் வாழ்ந்து வருவோர் மிகச் சிலரேயாவர். அச்சிலராவார்; எகுபதியர், பாபிலோனியர், சாலடியர், அசீரியர், யூதர், சீனர், பாரசிகர், ஆரியர், தமிழர், மெக்சிகர், பெரூவியர் என்பவரே யாவர். இவருள் எகுபதியர், பாபிலோனியர், சாலடியர், ஆசீரியர், யூதர் என்னும் ஐம்பெருங்கூட்டத்தாரும் இவ்இந்திய நாட்டுக்குப் புறம்பே மேற்கெல்லையில் உள்ள நாடுகளில் இருந்தோர் ஆவர்; சீனர் பாரசிகர் ஆரியர் என்பார் இவ் இந்திய நாட்டுக்கு வடக்கிலுள்ள மேருமலைப் பக்கத்திலிருந்து தெற்கும் மேற்குங் கிழுக்குஞ் சென்று ஆங்காங்குக் குடிபுகுந்து வைகினோராவர்; தமிழர் என்பார் வடக்கே இமயமலையிலிருந்து தெற்கே கடலில் அமிழ்ந்திப் போன குமரி நாட்டின் எல்லை முடிய இருந்தோர் ஆவர்; மெக்சிகர் பெரூவியர் என்பார் நடு அமெரிக்காவிலும் அதற்குச் சிறிது தெற்கேயுள்ள நாடுகளிலும் இருந்தோர் ஆவர். இப்பலவேறு மக்கட்கூட்டத்தாரின் நாகரிக வாழ்க்கையெல்லாம் இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகட்கு முன்னமே நடைபெற்றன ஆகும். இவர்தம் வாழ்க்கையின் வரலாறுகளை நாம் உள்ளபடி உணரல் வேண்டுமாயின், இவர்கள் பண்டை நாளிலே கட்டிவைத்த குவிந்த கோபுரங்களும், நிலத்தின்கீழ்ப் புதைந்த அரண்மனைகளும், அவற்றின் சுவர்களிலுங் களிமண் பலகைகளிலும் பொறித்துவைத்த அரசர் வரலாறுகளும், அவர்கள் இயற்றிவைத்த நூல்களுமே அதற்குக் கருவியாயிருந்து உதவுகின்றன. இவற்றின் உதவி கொண்டு இப்பண்டை மக்களின் நாகரிக வரலாறுகளை நாம் ஆராய்ந்து பார்க்குங்காற், சீனர் பாரசிகர் ஆரியர் என்னும் மூன்று வகுப்பாரைத் தவிர மற்றையோரின் நாகரிக வாழ்க்கை ஏறக்குறைய ஒத்த நிலையினதாய்க் காணப்படுகின்றது. எகுபதியர், பாபிலோனியர், சாலடியர், அசீரியர், யூதர் என்னும் மேனாட்டு நாகரிக மக்கள் வகுப்பினரில் எகுபதியரின் நாகரிகவாழ்க்கையே, ஏனை எல்லார்தம் நாகரிக வாழ்க்கையினும் மிக்க பழைமையுஞ் சிறப்பும் உடையதாக நுவலப் படுகின்றது. இற்றைக்கு எண்ணாயிர ஆண்டுகட்கு முன்னமே இவ் எகுபதியர் அரசியற் றுறையிலும், ஒப்புரவு வாழ்க்கையிலும், சமய உணர்ச்சியிலும், நாடு நகரங்கள் அமைப்பதிலுந், திருக்கோயில்கள் கட்டுவதிலும், ஏனை நாகரிக மக்களெல்லாருங் கண்டு திகைக்கத்தக்க அத்தனை திறமையும் அறிவும் செல்வமும் படைத்திருந்தனர் என அவர்தம் நாகரிக வரலாற்றினை நன்கு ஆராய்ந்துணர்ந்த ஒர் ஆசிரியர் பிரக்சு பே (Brugsch Bey) பகர்கின்றனர். இங்ஙனம் எண்ணாயிர ஆண்டு கட்கு முன்னமே நாகரிக வாழ்க்கையில் தலைசிறந்து நின்றவராகச் சொல்லப்படுதற்கு ஏற்ற மெய்ச்சான்றுகள் வாய்த்த பண்டை நாகரிக மக்கள் எகுபதியரைத் தவிர வேறெவருமில்லை யென்பதே வரலாற்று நூலாசிரியர்களின் முடிபாயினும், எகுபதி நாட்டில் தெறல்பஃறி (Der - el Bahri) என்னும் ஊரின்கண் உள்ள அஷ்தாப் (Hashto) அரசியின் கோயிற் சுவர்களிற் பொறிக்கப்பட்டிருக்கும் ஓவிய எழுத்துக் கல்வெட்டுக்களில் இவ்எகுபதியர் தென்கடலகத்துக் குமரிநாட்டிலிருந்த பாண்டி (Punt) தேயத்திலிருந்து சென்று நீலயாற்றங்கரைக்கட் குடியேறினர் என்பது விளக்கமாகச் சொல்லப் பட்டிருக்கின்றது.1 இச் சிறந்த பழங் கல்வெட்டுச் சான்று கொண்டும், இங்ஙனமே, சாலடி நாட்டின்கண் அகழ்ந்து கண்ட சாலப்பெரிய அரண்மனைகள் கோயில்களிற் கிடைத்த களிமண் பலகைகளிற் பொறிக்கப்பட்டுள்ள வரலாறு களாற் புலனாகுந் தமிழ்ப்பெயர்கள் கொண்டும், அவற்றோடு உடனகழ்ந்து எடுக்கப்பட்ட தமிழ்நாட்டுத் தேக்குமரத் துண்டங்கள் இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்கு முன் சாலடியரது ஊர் என்னுந் தலைநகரிற் கட்டப்பட்ட அவ்வரண்மனைகளிற் காணப்பட்டமை கொண்டும்,2 இற்றைக்கு மூவாயிர ஆண்டுகளின் முன் இயற்றப்பட்ட விவிலியநூற் பகுதியில் மயிற்றோகை, அகில் முதலான செந்தமிழ்ச் சொற்கள் காணப்படுதல் கொண்டும்3 ஆரிய மொழி இருக்குவேதத்தும் பழந்தமிழ்மொழித் தொல் காப்பியத்துங் காணப்படுங் குறிப்புகள் கொண்டும் நம் பண்டைத் தமிழ் மக்கள் இற்றைக்குப் பத்தாயிர ஆண்டுகளின் முன்னரேயே நாகரிக வாழ்க்கையில் தலைசிறந்து நின்றார் களென்பதும், அத்தமிழ் மக்களின் வழித்தோன்றிச் சாலடி, எகுபதி முதலான மேனாடுகட்குச் சென்று ஆங்காங்குத் தமது நாகரிக வாழ்வினை நாட்டிய தமிழ்வழி மக்களே சாலடியரும் எகுபதியரும் அவர்க்கு இனமான ஏனை மேனாட்டு மக்களும் ஆவரென்பதும் நன்கறியப்படும். இனி, நடு அமெரிக்காவிலுந் தென் அமெரிக்காவிலும் ஏழாயிர ஆண்டு கட்குமுன் உயிர்வாழ்ந்த மக்களுந் தமிழ் நாட்டிலிருந்து சென்றவர்களே என்பதற்கு வேண்டுஞ் சான்றுகள் புலனாய் வருகின்றன.4 இங்ஙனந் தமிழ்நாட்டிலிருந்த மக்களின் வழித்தோன்றல்களாகவோ, அல்லதவரோடும் அவர் தம் வாழ்க்கையோடுந் தொடர்புடையராகவோ காணப்படும் இப்பண்டை மக்களின் நாகரிக வாழ்க்கையின் வரலாறுகள் அத்தனையுஞ் சிறிதேறக்குறைய ஒத்த தன்மையவாய் இருத்தல் பெரிதும் வியக்கற்பால தொன்றாம். அடிக்குறிப்புகள் 1. See. H. Olcott’s Lecture on ‘India : Past, Present. and Future’, and Prof. G. Rawlinson’s Ancient Egypt, P.181. 2. See. z.A. Ragozin’s Vedic India, pp. 305 - 307 3. Dr. Caldwell’s A Comparative Grammar of the Dradivan Languages, pp. 88 - 89 4. See Prof. Konrod Haebler’s article in Harmsworths History of the world, form p. 56 - 75 2. நாகரிகம் நாகரிகமானது அகமும் புறமுள்ள இருதன்மைப் படும். அவற்றுள் அகநாகரிகமானது அன்பு என்னும் நெகிழ்ந்த இயற்கையினை அடிப்படையாகக் கொண்டு நிகழ்வது. மற்றுப், புறநாகரிகமோ செல்வம் என்னும் வன்பொருளினை அடிப்படையாகக் கொண்டு நிகழ்வது. அகத்தே நடைபெறும் அன்பொழுக்கம் மேன்மேல் உரம் பெற்று வளர்தற்குப், புறத்தேயுள்ள செல்வம் உதவிசெய்யும் முறையில் ஒழுகும் மக்களிடத்தே தான், அகநாகரிகமும் புறநாகரிகமும் ஒன்றோடொன்று மாறுகொள்ளாதாய் ஒருங்கொத்து, அம்மக்களுக்கு இம்மை மறுமை இன்பங்களை நிரம்ப ஊட்டி, அவர் தம்மை மங்காநிலையிற் பொங்க வைக்கும். அவ்வாறு அகவொழுக்கமான அன்பு வளர்ச்சிக்குத் துணைபுரியாமல், உயிரினைப் புனிதப்படுத்தும் அன்பு சென்றவழியே தான் செல்லாமல், எல்லா நிலைகளினும் மேம்பட்ட நிலைக்கண் வைகும் அன்புக்குத் தான் அடங்கி நடவாமல், தான் பெருகுதற்கு அன்பினை ஒரு துணையாகப் பயன்படுத்தித், தான் முன்செல்லுஞ் செலவுக்கு அன்பினைப் பின்செல்ல வைத்து, அன்பு நிற்றற்கு உரிய உயர்நிலையில் தன்னை ஏற்றிவைத்துத் தான் நிற்றற்குரிய கீழ்நிலையில் அன்பை இறக்கி வைத்துப், புறநாகரிகப் பொருளாகிய செல்வமானது தன்னை மறந்து கூத்தாடுமாயின், அங்ஙனம் அது கூத்தாடுதற்கு இடங்கொடுக்கும் மக்களிடைய அகநாகரிமும் புறநாகரிகமும் ஒன்றினொன்று முரணி, அவர்தம் இம்மை யின்பங்களையும் பெற வோட்டாமல் அவர்க்குப் பெருந்துன்பங்களை மலைபோற் பெருக்கிச், சில நூற்றாண்டுகளில் அவர்தம்மை இருந்த இடமுந் தெரியாமல் மறையவைக்கும். முன்நிற்கவேண்டிய அன்பு பின்நிற்கவும், பின்நிற்க வேண்டிய செல்வம் முன்நிற்கவும் முறை மாறினமையா லன்றோ தமிழ் மக்களோ டொத்த பழம் பெருஞ் சிறப்பினையுடைய எகுபதியர், பாபிலோனியர், சாலடியர், அசீரியர், ஆரியர், மெக்சிகர், பெரூவியர் முதலான மக்கட்பிரிவினர் அடியோடு மாய்ந்து போயதோடு, அவர் வழங்கிய மொழிகளும், அவர் வகுத்த எழுநிலைமாட நகரங்களும் ஒருங்கே அழிந் தொழிந்தன! அவரெல்லாம் அவ்வாறொழியவுந், தமிழ்மக்கள் மட்டும் அன்று தொட்டு இன்றுகாறும், அவ் வுயர்நிலையினின்று சிறிது சிறிது வழுவினும், முற்றும் அற்றொழியாது, ஏறக்குறையத் தமது பண்டைச் சிறப்பின்கண் நிலைபெற்ற சான்றோர் சிலரையாயினும் இன்னும் உடையராய் உயிர்பிழைத்து நிற்கின்றனர்; அவர் வழங்கிய தமிழ்மொழியும் அம்மொழியில் இயற்றப்பட்ட அரும்பெரு நூல்களும் ஏனைப் பண்டை மொழிகளைப் போல், அம்மொழி நூல்களைப் போல் இறவாது வரவர உயிர்ப்பேறி உலவி வருகின்றன. 3. தொல்காப்பியம் எகுபதியர் சாலடியர் முதலான பண்டை மக்களின் நாகரிக முறைகளை யுணர்தற்கு அரும்பெருஞ் சான்றுகள் கிடைத்தாற்போலத், தமிழ்ப்பழ மக்களின் நாகரிக வரலாறுகளை அத்துணை உறுதியாய் அறிவிக்கும் பழைய மெய்ச்சான்றுகள் கிடைத்திலாமையின் அறியாமைப் பேரிருளிற்கிடந்து துன்புற்ற நாம், மூன்று திங்கள்காறும் ஒளி சிறிதும் இல்லாத் திணியிருளிற்கிடந்து பெரிது வருந்திய இந்நிலவுகத்து வடமுனைக்கண் உள்ள மக்கள் அம் முழுவிருட் காலக்கழிவிற் சுடர்ந்து பேரொளி வீசி வானின்கண் துலங்கும் புத்தப்புதிய ஒரு பெருமின்னொளியினைக் கண்டு மகிழ்வதொப்ப, நம்முன்னோரின் அறிவுப் பெருவெளியில் அறிவொளி வீசித் திகழாநின்ற தொல்காப்பியம்1 என்னும் முழுமுதல் நூலின் காண்டகுதோற்ற விளக்கத்தினைக் கண்டு களிப்பெய்துதற்கு உரியேம் அல்லேமோ! மற்றைப் பண்டை மக்களின் நாகரிக வரலாறுகளை முற்றும் உணர்தற்குக் கருவியாகாமல் அவற்றுள் ஒரு சிலவே யுணர்தற்குக் கருவியாய்க் கிடைத்த அவர் தங் கட்டிடங்களும் அவற்றிற் பொறித்த கல்வெட்டுக்களும் போற் குறைபாடுடையதன்றாய், நம் அருந்தமிழ் மக்களின் பெருந்திரு நாகரிகவரலாறு முற்றுமெடுத்து முடியக்கூறும் முழுமதியாய் ஒளிரும் நம் தொல்காப்பிய நூலின் ஒல்காப் பெருமாட்சியினைக் கண்டு களிக்கும் தவம் உடையேம் அல்லமோ! இற்றைக்கு ஆறாயிர ஆண்டுகட்கு முன்னமே, ஏனை நாகரிக மக்களெல்லாம் பெரும்பாலும் புறநாகரிகச் செல்வ மயக்கிற் கிடந்து தம்மையும் உணராமல் தாம் பிறவி யெடுத்த நோக்கத்தையும் உணராமல் தம்மையும் உலகத்தையும் படைத்த தலைவனையும் அவன்றன் திருவுளக்குறிப்பினையும் உணராமல் வாணாளை வீணாளாய்க் கழித் அஞ்ஞான்று, அப்புறநாகரிக மினுக்கினை அகநாகரிக அன்பொழுக்கப் பேரொளியின் முன்விளக்கமறச் செய்து, நம் முதுமக்களைப் பேரன்பாம் இன்பப் பெருக்கிற் படிவித்து ஒப்புயர்வில்லா மெய்ப்பெருந் தொல்காப்பிய நூற் றெய்வமாட்சியினைக் காண்டொறுங் காண்டொறுங் களிப்பெய்துதற்குரியம் அல்லமோ! இத்துணைச்சிறந்த தொல்காப்பியத் தெய்வ முதல் நூல், புறநாகரிகத்தை அகநாகரிகத்தின்கீழ் அடக்கிச், சாயம் அற்ற செல்வப் பொருளுக்கு அன்பின் எழில் துலங்கு சாயம் ஏற்றி, உயிரற்ற எற்புடம்பு போல்வதாகிய செல்வத்திற்கு அன்பென்னும் உரங்கிளர் உயிர் புகுத்திப், புறநாகரிகத்தை அகநாகரிகத்தின்வழி நடத்தி, நம் பண்டைத் தமிழ் மக்களின் ஒண்டமிழ் கொள்கையினை ஆய்ந்தாய்ந்து விளக்கிய அரும்பெரு வகைமையினை அடைவே சிறிது விளக்கிக் காட்டுவாம். அடிக்குறிப்பு *1. இதன் கால ஆராய்ச்சினை மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் எமது விரிந்த நூலிற் காண்க. 4. இன்பமும் பொருளும் அறனும் இந்நிலவுலக வாழ்க்கையில் மக்களெல்லாரும் அடைதற் குரிய உறுதிப்பொருள்களை இன்பமும் பொருளும் அறனும் என்னும் மூன்றாக வகுத்து அம்மூன்றும் பிரிவின்றிக் கலந்த அன்பினால் ஊடுருவி நிற்றல் வேண்டுமென்பது தெளிவிப்பார், இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் (களவியல் 1) என்று ஆசிரியர் தொல்காப்பியனார் அருளிச் செய்தமை பெரிதும் நினைவிற் பதிக்கற்பாலதாகும். தொல்காப்பியத் தோடொத்த பழைமைவாய்ந்த இருக்கு எசுர் சாமம் முதலிய ஆரிய நூல்களினாதல், அல்லது ஏனைப்பழைய மக்களின் நூல்களினாதல், இன்பமும் பொருளும் அறனும் என்னும் இம் மூன்றும் அன்பின் வழியே அடையப்படுதல் வேண்டுமென நுவலப் படாமையினை உற்றுணர்ந்து பார்ப்பவர்க்கே அம்மூன்றும் அன்பொடு புணர்ந்து அடையப்படுதல் வேண்டுமென வற்புறுத்துரைக்குந் தொல்காப்பியனார் தம் உரைப்பொருண் மேன்மை நன்கு விளங்காநிற்கும். தொல்காப்பியனார் வழிவந்த ஆசிரியன்மாரில் தலைசிறந்தவரான தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார், அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு என்றும், அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப் பண்பும் பயனும் அது என்றும் அருளிச் செய்தமையும், அவர்க்குப்பின் வந்த சைவ சமயாசிரியரும், சைவநாயன்மாரும், அவர் தமக்குப் பின் இற்றைஞான்று வரை இராமலிங்க அடிகள் ஈறாக வந்த சைவப் பெரியாரும் எல்லாம் அன்பொழுக்கத்திற்கே தலைமை தந்தமையும் ஒரு தொடர்புபடுத்து நோக்குவோமாயின், தொன்றுதொட்டு இதுகாறும் நம் தமிழ்மக்களின் வாழ்க்கை யானது அன்பொழுக்கத்தினையே அச்சாணியாய்க் கொண்டு நடைபெறுவதென்பது தெளியப்படும். இதனைச் சைவ சித்தாந்த நூலாகிய திருக்களிற்றுப் படியாரும், அன்பேஎன் அன்பேயென் றன்பால் அழுதரற்றி அன்பே யன்பாக அறிவழியும் - அன்பன்றித் அன்பே தியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமவை சாற்றும் பழமன்றே தான் என இறைவனை நோக்கிச் செய்யும் வழிபாடுகள் அத்தனையும் உண்மை யன்பின் புற நிகழ்ச்சிகளாகச் செயற்பால தனை வற்புறுத்தாநிற்கின்றது. 5. இன்பநிலை இனி, ஆசிரியர் தொல்காப்பியனார் மக்களடைவதற்குரிய உறுதிப் பொருள்கள் மூன்றில் இன்பம் என்பதனை முன்வைத்துக் கூறிய நுட்பம் இன்னதென நாம் ஆராய்ந்தறிதல் வேண்டும். பிறவியெடுக்கும்முன் தம் விழைவு அறிவு செயல்கள் முழுதும் மறைவுண்டு துன்புற்றும், அன்னையின் வயிற்றில் கருவாய்ப் புகுந்து பிறவி யெடுக்கின்ற காலத்து அங்கே மல நீர்ப் பைகளால் நெருக்குண்டு அகட்டுத் தீயினால் வெதும்பிப் பலவாறு துன்புற்றும், பின்னர் அன்னை வயிற்றை யகன்று பிள்ளையாய் பிறந்து பல்வகை நோய்களாலுந் தம்மைச் சூழ உள்ளார் செய்யுங் கொடுமைகளாலும் பெரிது துன்புற்றும் இங்ஙனமாகப் பிறவிக்கு வரும் முன்னேயிருந்து பிறவியெடுத்து இளமைப் பருவத்தை எய்துங்காறும் மக்கள் எல்லாரும் படுங் கொடுந்துன்பத்திற்கு ஓர் அளவேயில்லை. இவ்வாறு துன்பத் திலேயே பழகிவரும் ஏழைமக்களாகிய நாம் இன்பத்தின் இயல்பு இன்னதென ஒரு சிறிதாயினும் பழகி யறிந்திலமாயிற் பேரின்பப்பேற்றை அடைதற்கு நம்பால் விருப்பம் உண்டாகுமோ? உண்டாகாதன்றே; எந்நேரமுந் துன்பத்திலேயே கிடந்துழலும் மக்களில் எத்தனைபேர் இவ்வுலக வாழ்க்கையினை வெறுத்து ஐயோ தம்முயிரைச் சடுதியில் மாய்த்துக்கொள்கின்றனர்! மண்டைவலி வயிற்றுவலி இடுப்புவலி முதலிய கொடு நோய்களால் ஓவாது துன்புற்றுத் துடிதுடிப்போரிற் பற்பலர் தம்முயிரைத் தாமாகவே மாய்த்துக் கொள்ளுதலை அடுத்தடுத்துச் செய்தித் தாள்களால் அறிந்து திகில் கொள்கின்றனர் அல்லமோ! நல்வினை வயத்தாற் சுவையான உணவுகளை யுண்டுங், கண்ணாரப் பல காட்சிகளைக் கண்டும், இனிய இசைகள் அரிய விரிவுரைகள் கேட்டும், அரும்பெரு நூல்கள் கற்று அறிவு தெளிந்தும், நறுமணம் அளைந்தும், இவ்வாறெல்லாம் ஐம்புலன்களின் வாயிலாக வரும் பலதிற இன்பங்களை நுகர்ந்து மகிழ்தலினாற்றான், மக்களுயிர் இளமைப் பருவம் எய்தும் வரையிலாது இந்நிலவுகத்தே நிலவுகின்றது! நாம் பிறவியெடுக்கும் முன்னமே இறைவன் இவ் ஐம்புல இன்பங்களைத் தரும் பல்வகைப் பண்டங்களை இங்கு அமைத்து வைத்திலனாயின், நாம் ஒரு நொடிப் பொழுதாயினும் இங்கே உயிர்வாழ்தல் இயலுமோ? கூர்ந்து பார்மின்கள் அன்பர்களே! இவ்வைம்புல நுகர்ச்சிப்பொருள்களும் வாய்ப்பாக நன்கு அமைக்கப்பட்டிருத்தலினாலேதான் பலகோடிக் கணக்கான பல்வகை மக்கட் பிரிவினர் தம் உயிர்வாழ்க்கையும் இந் நிலவுலகத்தின்கண் ஆங்காங்கு நடைபெறா நிற்கின்றது. இனி ஐம்புல நுகர்ச்சிகளால் வரும் இன்பத்தளவில் மக்களுயிர் அமைதிபெறுங் காலம் எவ்வளவு? பெண்மக்களாயின் மங்கைப்பருவம் எய்தும் வரையிலும், ஆண்மக்களாயின் இளமைப் பருவம் எய்தும் வரையிலுமோ மற்று அப்பருவம் வந்த அளவிலோ, அதுகாறுங் காணக்கிடையா வேறொரு மகிழ்ச்சிக் கிடமாம் வேறொரு புதுதேயத்தைக் கண்டாலொப்பப், புதியதோர் இன்ப உணர்ச்சி வரப்பெற்று அவ்வின்பத்தைப் பெறுதலில் இருவருயிரும் பெருவேட்கையும் பெருமுயற்சியும் உடையவாகின்றன. அதுவரையில் நுகர்ந்துவந்த ஐம்புல இன்பங்களெல்லாம், இப்போது தோன்றாநின்ற இப்புதிய இன்பத்தின்முன் நில்லாவாய், அதனிற் றாழ்ந்தவாய், அதனைப் பெறாதவழி அதனால் ஏக்கமுறுவார்க்குத் துன்பந் தரும் பெற்றியவாய் மாறிவிடக் காண்கின்றோம். இவ்வாறு இளமைப் பருவத்தில் ஆண் பெண் என்னும் இருபாலார்க்குந் தோன்றுவதாகிய இன்ப வுணர்ச்சியானது, அழகு அறிவு நல்லியற்கையினால் உந்தப்பட்டு எழும் அன்பின் வயமாகி ஒருவரை யொருவர் இன்றியமையாராய் ஒருங்கு பொருந்தும் ஆண் பெண் மக்களுக்கு அவ்விழுமிய காதலின்பத்தினை ஊட்டி, அவரது வாழ்க்கையைத் தூய்மை செய்து அதனைப் பெரிதும் பயன்படச் செய்வதாகும். இக்காதலின்ப உணர்ச்சி தோன்றுதற்கு முன்னெல்லாம் பிள்ளைமைப் பருவத்திலுள்ளார் தாந்தாம் பெற்ற ஐம்புல இன்பப் பொருள்களைத் தாந்தாமே நுகர்வதிற் கருத்துடைய ரன்றித், தம்மோ டொத்த மற்றைப் பிள்ளைகட்கு அவற்றை எளிதிற்கொடார்; தாம் நுகர்ந்து மிஞ்சிய மிச்சந் தமக்கு வேண்டாதிருந்தால்மட்டும், அதனை ஏனைச் சிறுவர்க்குக் கொடுக்க ஒரோவொருகால் மனம் ஒருப்படுவர்; என்றாலுந், தாம் நுகர்ந்து கழித்த மிச்சத்தையும் பிறர்க்குக் கொடுக்க மனம் இசையாத சிறாரே உலகிற் பெரும்பாலார். இவ்வாறாகத், தன்னலம் ஒன்றே கருதும் பிள்ளைமைப் பருவந் தாண்டி, இளமைப்பருவம் புகுந்து, காதலின்ப உணர்ச்சி வயத்தராய் ஓராண்மகனும் ஒரு பெண்மகளும் ஒருவர்பா லொருவர் மிக்க அன்பு மீதூரப்பெற்று ஒருங்கு பொருந்திய காலந் தொட்டோ, கணவனாயினான் தன்நலங் கருதுதல் விட்டுத் தன் மனைவியின் நலங் கருதுவானாய், அவட்கு வேண்டும் நுகர் பொருள்களெல்லாந் தொகுத்துக் கொடுக்கும் பொருட்டு முயலும் பல்வகை முயற்சிகளால் உலகத்திற்குப் பெரிதும் பயன்படு கின்றான்; அங்ஙனமே மனைவியாயினாளுந் தன்னைப் பேணுங் கருத்தை விட்டுத் தன் கணவனையே தன்னுயிராகக் கருதி அவனை ஓம்புதலிலுந்; தம் அன்பின் சேர்க்கையாற் பிறக்கும் இன்பக் குழவிகட்குத் தான் வரைந்து வைத்தவைகளை யெல்லாங் கொடுத்து அவரைக் கண்ணுங் கருத்துமாய் போற்றி வளர்த்தலிலும் அருளொழுக்க முடைய அறவோர்க்கு வேண்டுவ கொடுத்தலும் அன்பொழுக்கமுடைய அறவோர்க்கு வேண்டுவ கொடுத்தலும் அந்தணரைக் காத்தலும் துறவினரை ஏற்று அவர்க்குத் தொண்டு புரிதலும் விருந்து வருவாரை ஓம்புதலுமாகிய அறம்புரி வாழ்க்கையிலுந் தலை நின்று இம்மண்ணுலக வாழ்க்கையினை விண்ணுலக வாழ்க்கையெனப் புனிதமாக்கித் தானும் மிகப் பயன் படுகின்றாள். பார்மின்கள் அன்பர்களே! இங்ஙனம் ஆண்பெண் என்னும் இருபாலாருங் காதலின் உணர்ச்சி வயத்தராய் ஒருங்கு இயைந்தமையாலன்றோ, அவர் தாமும் இன்புற்றுப் பிறரையும் இன்புறுத்திப், பிறவிக்கு வராமல் அருவநிலையில் அறியாமை யால் விழுங்கப்பட்டுக் கிடந்த உயிர்கள் உருவநிலையில் தம்பாற் பிள்ளைகளாய்ப் பிறவி யெடுத்து அறிவும் இன்பமும் பெறப் பேருதவிபுரிந்து அவ்வாற்றால் இறைவன்றன் அருட்செயற்கு ஓர் ஒப்பற்ற கருவியாய்ப் பயன்பட்டு வருகின்றனர். இக்காதலின்ப உணர்ச்சியும் அதற்கேற்ற அமைப்பும் மக்கள்பால் இல்லை யாயின், இவ்வுலகம் எங்கே! இவ்வுலகில் நடைபெறும் ஒழுக்கங்கள் எங்கே! யார் எவர்க்கு உறவு! யார் எவர்க்குத் துணை! எல்லாம் வெறும் பாழாய் முடியுமன்றோ? எவ்வாற்றால் ஆராய்ந்து பார்ப்பினும் இக்காதலின்பமானது உடம்புக்கு உயிர்போல்வதாய், இருள்நிறைந்த இரவில் இருளகற்றும் முழுமதி போல்வதாய்ப், புற்பூண்டுகள் முதல் நிலையியற் பொருள்களும் விலங்கு புள் மக்கள் முதல் இயங்கியற் பொருள்களும் அறிவும் முயற்சியும் பெறச் சுடரொளி பரப்பும் ஞாயிறு போல்வதாய், அறியாமையாற் சினத்தாற் பொறாமையால் இறுமாப்பால் ஒருவரோ டொருவர் அளவளாவுதல் இல்லாத மக்களை அளவளாவப் புகுத்தும் இறைவன்றன் அருள்விளக்கம் போல்வதாய் முதன்மை பெற்று வயங்குதல் கண்டனறோ தவத்தான் முற்றுணர்வு வாய்ந்த ஆசிரியர் தொல்காப்பியனார் இன்பமும் பொருளும் அறனும் என இன்பத்தை முதல் நிலைக்கண் வத்து ஓதுவாராயினர். இம்முதலாசிரியர்க்குப் பின்வந்த தமிழாசிரியர்கள், உலகியலொழுக்கத் திற்கு முற்றும் மாறான பௌத்த சமண சமயக் கொள்கைகளாற் சிறிது சிறிது ஈர்ப்புண்டு, சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படூஉந் தோற்றம் போல என அறத்திற்கே முதல்நிலை கூறினாராயினும், திருவள்ளுவ னாரும் அறத்தை முன் வைத்துப் பொருளை அதன் பின் வைத்து இன்பத்தை இறுதிக்கண் வைத்து நூல் செய்தாராயினும், இன்பத்தை நுதலியன்றி அறஞ்செய்வாரையும் பொருள் செய்வாரையும் யாண்டுங் கண்டிலமாகலின், தொல்காப்பிய னார் இன்பத்தை முதல்வைத்த முறையே மக்களியற்கையொடு பொருந்துவதாதல் நன்கு துணியப்படும். தமது காலப்போக்கினை யொட்டித் திருவருள்ளுவனார் அறத்தை முன்வைத்து இன்பத்தை இறுதிக் கண் வைத்து நூலியற்றப்புகுந்தனராயினும், இன்பத்தை வாயிலாகக்கொண்டன்றி அறனும் இல்லறந் துறவறம் என இரண்டாகப் பகுத்து, காதலின்பத்தின் வழிப்படுவதாகிய இல்லறத்தையே முதற்கண் வைத்து நூல் அருளிச் செய்தனர். அவ்வாற்றால் ஆசிரியர் தொல்காப்பியனார் கொண்ட முறையே நன்முறையென்பது திருவள்ளுவனார்க்கும் உடம் பாடாதல் பெறுதும். இஃது அவர் இல்லறவியலின் முதலதிகாரத்தில், அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப் பண்பும் பயனும் அது என அன்பை முன்வைத்து அறனை அதன்பின் வைத்துத் தெளித்தோதியது கொண்டும் இனிது பெறப்படும். 6. இன்பம் அன்பினால் நிகழ்வது : கற்பு இத்துணைச் சிறந்ததாகிய இன்ப வாழ்க்கை அன்பினால் உந்தப்பட்டே நடைபெறல் வேண்டுமென முதல் ஆசிரியர் வலியுறுத்தியவாறு போலவே, தெய்வத் திருவள்ளுவரும், அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத் தின்புற்றார் எய்துஞ் சிறப்பு என்று உடம்பாட்டானும், அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றன் மரந்தளிர்த் தற்று என்று எதிர்மறையானும் அன்பின் இன்றியமையாமையினை விளங்க வைத்தது காண்க. மதுரைக் கடைச்சங்க காலத்துக்கும் முன்னே பண்டைச் செந்தமிழ்க் காலத்திருந்த குன்றம் பூதனார் என்னும் நல்லிசைப் புலமை மலிந்த சான்றோருந் தாம் முருகவேள்மேற் பாடிய இருநிலந் துளங்காமை என்னும் பரிபாடலிலும், நான்மறை விரித்து நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது காதற் காமங் காமத்துச் சிறந்தது என்று காதலின்பத்தின் மாட்சி தெரித்து, அவ்வின்ப நுகர்ச்சி இறைவனது தண்பரங்குன்றத்தின்கண் நிகழுமாற்றின் வைத்து அதனை விரித்துப் பாடினார். பாருங்கள் அன்பர்களே! உலகிய லொழுக்கத்திற்கும் இறைவன் திருவடிப் பேற்றிற்கும் ஆணிவேர்போல் இருப்பதாகிய இவ் இன்பவொழுக்கமானது மெய்யன்பின் வழி நடக்குமாயின் அப்போதுதான் அது காதலின்பம் என உயர்த்துப் பேசப்படுமென்பதும், அஃது அங்ஙனம் அன்பின்வழி நடவாதாயின் இழிந்த காமம் என இழித்துப் பேசப்படுமென்பதும் நம் செந்தமிழ்த் தெய்வ ஆசிரியர் எல்லார்க்கும் ஒத்த முடிபா யிருக்கின்றன. ஏனென்றால் ஓராண்மகனும் ஒரு பெண்மகளுந் தம்மில் ஒருவரை யொருவர் உயிர்போற் கருதி நிரம்பிய அன்பால் ஒழுகினாலன்றிப், பெண்பாலார்க்குக் கற்பொழுக்கம் நிலைபெறாது கற்பொழுக்கம் நிலைபெறதாயின் நன்மக்களைப் பெறுதலும் உளதாகாது; உலகில் ஒருவரோடொருவர் அமைதியாயிருந்து வாழாமற் பகைமையுஞ் சினமுங் கொண்ட அல்லல் உழப்பர்; அதனாற் றெய்வ நம்பிக்கையுந் தெய்வ வணக்கமும் இல்லையாய்ப் போம்; எங்குங் குடியுங் கொலையும் கொடுமையும் மலிந்து மக்கள் வாழ்க்கையானது சின்னபின்னமாய்ச் சிதறிவிடும். இத்தகைய குடிகேடான செயல் ருஷியா முதலான மேனாடுகளிற் பரவி அங்குள்ள மக்களை நினைப்பினுங் கொடிய துன்பத்திற் படுத்துத் தேய்த்துவரும் நிலையினைச் சிறிதாயினும் அழுந்தியறியவல்லார்க்கே, நம் செந்தமிழ்த் தெய்வ ஆசிரியர் வற்புறுத்திச் சொல்லிய காதலின்ப வாழ்க்கையின் விழுப்பம் புலனாகால் நிற்கும். மற்றுக் காதலன்பின்வயமாகி மணங் கூடினார்க்கோ ஒருவரை விட்டுப் பிறரொருவர் மேல் உள்ளஞ் செல்லாதாகலின், அவர்க்குக் கற்பொழுக்கந் தானாகவே நிலைபெறும்; அவர்க்குக் கற்பொழுக்கத்தினைக் கற்பிக்க வேறெவருமே வேண்டப்படார். அவர், தாம் காதல் கொண்ட அன்பரை யன்றிப் பிறரெவரையுங் கருதமாட்டாமையால், தம் கருத்தறியாமல் தம்மைப் பிறரொருவர்க்கு மணம் புகுந்த எவரேனும் முனைகுவராயின், அவர்க்குத் தமதுள்ளக் கருத்தைப் புலப்படுத்தித் தமது கற்பொழுக்கத்தினை நிலைநிறுத்திக் கொள்வர்; அதுவும் வாயாதாயின் தமதுயிரையே துறப்பரன்றித் தமது கற்பிற் சிறிதும் வழுவார்; தம் காதலர் இறந்துபடின் தாமும் உயிர் தாங்கார். இத்தன்மையராகிய பண்டைத் தமிழ் மாதரின் கற்பொழுக்க மாட்சியினைப், பழந்தமிழ் நூல்களிற் போந்த சில பாட்டுக்களை எடுத்துக்காட்டி விளக்குதும்; முதலிற் கலித்தொகை என்னும் அரிய சங்க நூலிற் காணப்படும் ஒரு செய்யுளை இங்கெடுத்துரைப்பாம்: சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில்நாம் ஆடும் மணற்சிற்றில் காலிற் சிதையா அடைச்சிய கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி நோதக்க செய்யுஞ் சிறுபட்டி மேலோர்நாள் அன்னையும் யானும் இருந்தேமா, இல்லிரே! உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற் கன்னை அடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய் உண்ணுநீர் ஊட்டிவா வென்றாள், எனயானும் தன்னை யறியாது சென்றேன் மற்றென்னை வளைமுன்கை பற்றி நலியத், தெருமந்திட்டு அன்னாய் இவனொருவன் செய்ததுகாண் என்றேனா, அன்னை யலறிப் படர்தரத், தன்னையான் உண்ணுநீர் விக்கினான் என்றோனா, அன்னையுந் தன்னைப் புறம்புஅழித்து நீவ, மற்றென்னைக் கடைக்கண்ணாற் கொல்வான்போல் நோக்கி நகைக்கூட்டஞ் செய்தான் அக்கள்வன் மகன். தன்னைப் பிறனொருவனுக்கு மணம் பொருத்தக் கருதித் தன் பெற்றோர் செய்யும் ஏற்பாடுகளைக் கண்டு திகில் கொண்டவளான அழகு மிக்க ஒருகற்புடை மங்கை, தான் ஒருவன் மேற் காதல்கொண்டிருக்குங் குறிப்புத் தன் தோழிக்குப் புலனாம்படி சொல்லுதலை இச்செய்யுள் எடுத்தியம்புகின்றது; இதுகேட்டுத் தன் தலைவியின் காதற் குறிப்பறிந்த தோழி அவடன் பெற்றோர்க்கு அதனை அறிவித்து அவள் காதலித்த இளைஞனுக்கே அவளை மணங்கூட்டுவள். இதனை அறத்தொடு நிற்றல் என்பர் பொருளிலக்கணத்தில், இச்செய்யுட் பொருள் வருமாறு :- விளங்கா நின்ற தொடியணிந்த தோழீ! என்மனத்துள்ளதனைக் கேட்பாயாக! தெருவிலே நாம் மணலாற் சமைத்து விளையாடுஞ் சிறிய வீட்டினைக் காலால் எற்றி அழித்தும், நமது கூந்தலிற் செருகிய பூமாலையை அறுத்தும், வரிந்த நமது பந்தினை எடுத்துக்கொண்டோடியும் நாம் மனம் நோவத்தக்க குறும்புகளைச் செய்யும் அந்தச் சிறு பட்டிப்பையன், முன் ஒரு நாள் நம் அன்னையும் யானும் வீட்டின்கண் இருந்தேமாக, எம்பாற்போந்து, வீட்டில் உள்ளீரே! உண்ணப்படுந் தண்ணீர்க்காக விடாய் கொண்டு வந்தேன் என்று சொல்லிவந்து நின்றனுக்கு, அன்னையானவள் என்னை நோக்கிச் சுடரிழாய்! பொற்றகட்டாற் செய்த கரகத்தால் உண்ணுநீரை முகந்து சென்று வார்த்து அதனை அவன் பருகச்செய்துவா என்று கூறினாள். கூறவே யானும் அவனைப் பட்டிப் பையன் என்று நிலையாமலே அன்னை சொன்னபடியே செய்ய அவன்றன்பாற் சென்றேன்; ஆனால் அவன் வளையல் அணிந்த எனது முன் கையினைப் பிடித்திழுத்து வம்பு செய்யவே, யான் மனம் மருண்டு அன்னாய்! ït‹ xUt‹ brŒjij¥ ghuhŒ! என்று கூவினோனாக, உடனே அன்னை அலறிக் கொண்டு என்பால் வருதலும், சடுதியில் யான் மனந்தெளிந்து இவன் உண்ணுநீரைப் பருகும்போது விக்கிவருந்தினான் என்று அவன் செய்ததனை மறைத்து மொழிந்தேன்; அது கேட்டு அன்னையும் அவன் முதுகைப் பலகாலுந் தடவினாள்; அப்போது என்னைக் கடைக்கண்ணாற் கொல்வான் போல் நோக்கி, மகிழ்ச்சிக்கு ஏதுவான மனத்தைக் கள்வனாகிய அவ்விளைஞன் முன்னமே செய்தனன்; இதனை அறிவாயாக! பார்மின்கள் அறிஞர்களே! கற்பிற் சிறந்த இளைய தமிழ் மங்கை ஒருத்தி தன்னிளமைக் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளில் வைத்துத் தான் ஓர் இளைஞன்மேற் காதல் கொண்டமையினை எவ்வளவு நுட்பமாக, எவ்வளவு திறமையாக, எவ்வளவு மனக்கவர்ச்சியுண்டாகத் தான்கொண்ட அக்காதற் கற்பொழுக்கத்திற்குப் பழுதுவாராமற் கூறுகின்றாள்! தான் ஏதும் அறியாப் பேதைப் பெண்ணாய் இருந்த காலத்திலேயே தன் உள்ளம் ஓரிளைஞன்பால் அன்பிற் பதிந்தமையும், தான் இழைத்த மணல் வீட்டினைக் காலால் எற்றியுந் தன் கூந்தலிற் செருகிய மாலையை அறுத்துந் தான் ஆடும் பந்தினை எடுத்துக் கொண்டோடியும் அவன் தான் வருந்தத்தக்க குறும்புகள் செய்தும், அக்குறும்புகள் அத்தனையுந் தன்பால் வைத்த அன்பினாலேயே அவன் செய்தமையும், அதனால் அக்குறும்புகள் தன்மனம் நோவச்செய்தனபோற் றோன்றினும் உண்மையில் அவை தன்னை நோவச் செய்யாமையும், சிறுபட்டி என அவனைத்தானே சுட்டுஞ் சொல்லே அவன்பால் தனக்குள்ள அன்பின் அறிகுறியாதலும், விடாய் கொண்டு வந்தானெனினும் இளைஞனான ஒருவற்குத் தான் தனியே சென்று விடாய் தணித்தல் நாணுடைய பெண்டன்மைக்கு ஏலாமையின் அன்னையுந் தானும் இருந்தக்கால் அவன் விடாய்த்து வந்தானென்றமையும், அங்ஙனம் அன்னையோடு இருந்தவிடத்தும் அன்னையின் ஏவுதலாலேயே தான் நீரெடுத்து அவன்பாற் சென்றுமையும், அவன் தன்பால் வைத்த காதற்கிழமையால் தன் கையைப் பிடித்து வம்புசெய்யினும் அதற்கு எளிதிலே உடன்பட்டிருத்தல் அச்சமும் நாணமும் இயற்கையே வாய்ந்த தன் பெண்டன்மைக்கு ஏலாமையின் அதற்கிசையாது தன் அன்னையைக் கூவியழைத்தமையும், அன்னை அருகுவந்ததும் அதுபற்றி அவனை அவள் சினவாமைப் பொருட்டு அவன் உண்ணுநீர் விக்கினான் என அவன் செய்த குற்றத்தை அவன்மேலுள்ள காதலால் தான் மறைத்து மொழிந்தமையும், அன்னையும் அவன்றன் எழில் நலங் கண்டு அவன் விக்குதல் பொறாயாய் அவன்றன் முதுகினைத்தடவிக்கொடுத்தா ளென்றமையும், அப்போது தான் செய்ததனை ஒரு குறும்பாக நினைந்து அவன் தன்னைக் கடைக்கண்ணாற் பார்த்துச் சினந்தமையும் எல்ம் அவ் அறிவுடைக் கற்பரசி எத்துணை நயமாகத், தன் உயர்ந்த பெண்டன்மைக்கு எத்துணை இசைவாக, இங்ஙனஞ் சின்னஞ் சிறிய பருவம் முதலே தான்கொண்ட காதற் கற்பொழுக்கம் எத்துணைச் சிறந்ததென்பது புலனாகக் கூறியிருக்கின்றாள் அத்துணை விழுமிய காதற் கற்புடைத் தமிழ் மக்கள் வழி வந்த நம் இவ் வருமையினைக் கனவினும் நனவினும் நினைந்து நினைந்து வியக்கற்பால மல்லமோ! இத்துணைச் சிறந்த பண்டைத் தமிழ்மாதரின் காதற் கற்பொழுக்கத்தை எடுத்துரைக்கும் இத் தமிழ்ச்செய்யுள் வழக்கும் பாராட்டற் பாலதா யிருக்கின்றது. வான்மதி மண்டில ஞாயிற்று மண்டிலங்களினும் மேலுயர்ந்து செல்லுங் கூட கோபுர மாளிகைகளைக் கற்பித்து, நேரிற் சென்று பார்த்தால் ஒரு சில குடிசைகளே யுள்ள ஓர் ஊரில் அக்கட்டிடங்கள் உளவாக மனக்கோட்டை கட்டி, அக்கட்டிடங்களின் மேலடுக்கு களில் உள்ளவராக மாதர்களை இருத்தி அம்மாதரின் முடிமுதல்அடிகாறும் உள்ள ஒவ்வொர் உறுப்புகளையும் பற்பல செய்யுட்களால் அழகு படுத்திப்பாடி, இங்ஙனமே இன்னும் இல்லாத பொய்களை யெல்லாம் ஏராளமாய்ப் புனைந்து கட்டிச் சொல்லும் இக்காலத்தார் செய்யுள்வழக் கெங்கே! உள்ளவாறே எடுத்தியம்பிச், சிந்தும் பிழைபடா தெழுதிய ஓவியம் போல்வதாகிய பழந்தமிழ்ப் புலவரின் செய்யுள் வழக்கெங்கே! இவ்விரண்டிற்கும் உள்ள வேறு பாட்டினைக் கம்பராமாயணச் செய்யுளோடு இக்கலித்தொகைச் செய்யுளைச் சிறிது ஒப்பிட்டு நோக்குவீர்க்களாயின் நன்கறிவீர்கள். அது நிற்க. 7. தமிழ் மாதரின் கற்பு இனிப், பண்டைக் காதற் கற்பொழுக்க மாதர் தங் கணவர் இறந்துபட்ட ஞான்றே, அவர்தம் பிரிவினை ஆற்றாராய் ஏங்கி உயிர்துறந்த நிகழ்ச்சிகளும் பல. இவ்வாறு நிகழ்ந்ததொரு நிகழ்ச்சியினைப் புறப்பொருள் வெண்பாமாலையிற் போந்த, ஓருயிராக உணர்க உடன் கலந்தார்க் கீருயி ரென்பர் இடைதெரியார் - போரில் விடனேந்தும் வேலோற்கும் வெள்வளையி னாட்கும் உடனே உலந்த துயிர் என்னுஞ் செய்யுள் கூறாநிற்கின்றது. ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில் இத்தகைய நிகழ்ச்சிகள் பல நிகழ்ந்தமையால் அவர் அவற்றிற்கு மூதானந்தம் எனப் பெயரிட்டு, அதன் இலக்கணமுங் கூறினார், தன் காதற்கணவன் கோவலனை இழந்த கண்ணகி பட்ட துயரினை நினைப்பிற் கன்னெஞ்சமுங் கரையு மன்றோ? அவள் தன் கணவனைக் கொலை செய்வித்த பாண்டியனுக்கு அறிவு தெருட்டிப் பதினான்காம் நாள் தன்னுயிரினைத் துறந்து தன் கணவனுயிரொடு வானுலகுசென்ற ஆற்றருங் காட்சியினைக் குறவருங் கண்டன ரல்லரோ? இனித், தன்கணவன் பூதப்பாண்டியன் மாய்ந்த ஞான்று அவனைப் பிரிந்த துன்பம் பொறாளாய் அவன்றன் காதன் மனைவி பெருங்கோப்பெண்டு தீப்பாயச் சென்ற வழி, அவ்வாறு செய்தலாகாதென விலக்கிய சான்றோர்க்கு அவள், பல்சான்றீரே! பல்சான்றீரே! செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான்றீரே! அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்ட காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது அடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம் வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய்து அட்ட வேளை வெந்தை வல்சி யாகப் பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ; பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீமம் நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம் பெருந்தோட் கணவன் மாய்ந்தென, அரும்பற வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை நள்ளிரும் பொய்கையுந் தீயும் ஓரற்றே என்று செய்யுளாகவே விடை கூறிய நிகழ்ச்சி நம் தமிழ் நங்கையாரின் காதலன் பின் மாட்சியினை மலைமேல் வைத்த விளக்குப்போல் உலகெங்கும் விளங்கச் செய்கின்றதன்றோ? இவ்வாறாகத் தம் உயிரையும் ஒரு துரும்பாகக் கருதி நந்தம் தமிழ்ப் பெருமாட்டிமார் தம் காதலர் மடிந்த வழித்தாமும் உடன் மடியுமாறு அவரை அவ்வாறு ஏவியது எது அவர் தங் கொழுநர் பால் வைத்த ஒப்புயர்வற்ற காதலன் பன்றோ? எனவே, மாதர்க்குச் சிறந்த கற்பொழுக்கமாவது அவர்தங் காதலன்பின் பயனாய் அவர்பால் இயற்கையில் உளதாவதே யன்றிப், பிறர்க்கு அஞ்சியும் பிறர் கூறம் அறிவுரை கேட்டும் வருவதன்றென்பது புலனாகின்றதன்றோ இங்ஙனம் இயற்கை யொழுக்கமாய் வரற்பாலதாகிய கற்பிற்குக் காதலன்பு ஒன்றுமே சிறந்த ஏதுவாயிருத்லைப் பல படியாலும் மக்களியற்கையில் வைத்து ஆராய்ந்து கண்டமையாலன்றோ ஆசிரியர் தொல்காப்பியனார், இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு, அன்பொடு புணர்ந்த ஐந்திணை என்று ஓதியருளினார், அம்முதலாசிரியர் வழிவந்த திருவள்ளுவர் முதலான சான்றோரும் அங்ஙனமே அஃது அன்பின் வழி நடக்கற்பாற்றென்று பண்டு தொட்டு இன்று காறும் வலியுறுத்தி வந்திருக்கின்றன ரல்லரோ? 8. இஞ்ஞான்றை மனை வாழ்க்கை ஆனால், இப்போது நடைபெறும் மனைவாழ்க்கை எத்தன்மையாய் இருக்கின்து? அஃது உலகிய லொழுக்கத்திற்கு உயிர்போல்வதாகிய காதலன்பின் வழிச்சொல்கின்றதா? இல்லை, இல்லை, சிறிதுமேயில்லை. சாதிவேற்றுமை யென்னும் கொடியதூக்குக்கயிறானது காதலன்பின் கழுத்தை இறுக்கிவிட்டது; காதலன்பிற் சிறந்து மறுவற்றமதிபோல் விளங்கத் தக்கவரான நம் பெண்மணிகளின் கற்பொழுக்கத்தை நிலைகுலைத்து அதனைப் பழிபாவங்களால் மூடிவிட்டது? எந்தப் பெண்மகளாவது தான் காதலித்த இளைஞனை மணங்கூட இடம் பெறுகின்றனளா? எள்ளளவும் இல்லையே, ஏன்? ஒரு சாதிக்குள்ளே தான், ஒருபது வீடுகளே யுள்ள ஓர் இனத்திலே தான் அவள் ஒருவனை மணக்கவேண்டும். அவள் கயல்மீனையொத்த கண்ணழகியா யிருந்தாலென்ன! கண்குருடான ஒருவனைத் தவிர வேறு மணமகன் தன் இனத்திற் கிடைத்திலனாயின் அவள் அவளையேதான் மணந்து தீரல் வேண்டும்! அவள் முத்துக் கோத்தாலொத்த பல்லழகியாய் இருந்தாலென்ன! தன் பாழும் இனத்தில் ஒரு பொக்கை வாய்க்கிழவனைத் தவிர வேறுமணமகன் கிடைத்திலனாயின், அவள் அவனையேதான் மணந்துதீரல் வேண்டும்! அவள் பலகலை கற்றுக் கல்வியறிவிலும் இசை பாடுவதிலும் நுண்ணறிவிலும் சிவநேய அடியார் நேயங்களிலுஞ் சிறந்த கட்டழகியா யிருந்தாலென்ன! இறுமாப்பே குடிகொண்ட தன்சிறுமாக்குடியிற் கல்வியிருந்த மூலையே கண்டறியாதவனும், பாட்டுப்பாட வாயைத் திறந்தால் ஓட்டமாய் வர வண்ணானை வருவிப்பானும், அறிவை ஓட்டிவிட்ட வெறுமூளை யுடையானுங், கறுப்பண்ணன் மதுரைவீரன் மாரியம்மன் முதலான வெறுக்கத்தக்க பேய்கட்கு ஊனுங்கள்ளும்படைத்துக் குடித்து வெறிப்பானுமாகிய ஒருவனைத் தவிர வேறு மணமகன் கிடைத்திலனாயின், அவன் தன் சாதியைவிட்டு வேறு சாதியிற் கலக்கலாகாமையின், அக்கல்லாக் கயவனையே கணவனாய்க் கொள்ளல் வேண்டும்! ஆ! பொருளற்ற இச் சாதிவேற்றுமைக் கொடுமையால் நம் அருமைப் பெண்மணிகள் படுந்துயர் மலையினும் பெரிதோ! அன்றிக் கடலினும் பெரிதோ! அன்றி ஞாலத்தினும் பெரிதோ! இவ்வளவுதான் என்று கூறல் எம் ஒரு நாவால் இயலாது! பல நலங்களாற் சிறந்த ஒர் ஆண்மகனும் அங்ஙனமே தன் சாதியை விட்டுப் பிற சாதியிற் கலத்தல் ஆகாமையால் நலஞ் சிறிதுமில்லா ஒரு போதைப் பெண்ணை மணந்து துன்புற வேண்டியவனா யிருந்தாலும், அவனது நிலை ஒருசிறந்த பெண்ணின் துன்ப நிலைபோல் அத்துணைக் கொடிதன்று. ஏனென்றால், அவன் தான் வேண்டியபடி வேறு மகளிரைக் கூடிக்களித்தாலும், அவனை மிகுதியாய்க் குற்றஞ் சொல்வார் இல்லை. ஆனால், நம் அருமைப் பெண்மக்களின் நிலையோ அத்தகைய தன்றே! அவர்கள் யாரைப்பார்த்தாலுங் குற்றம், யாரொடு பேசினாலும் அதனிலுங் குற்றம், அப்புறஞ்சொல்ல வேண்டுவது யாதுளது? விலங்குகளும் பறவைகளுங் கூடத் தாந் தாம் விரும்பிய துணையையே கூடி இனிது வாழாநிற்க, ஆறறிவுடைய மக்கட் பிறவியிற் பிறந்து அறிவையும் அழகையும் நற்குணத்தையுங் கண்டு பாராட்டிக் காதலன்பு கொள்ளத்தக்க ஆண் பெண் மக்கள் மட்டும் இடையே புகுத்த சாதிவேற்றுமை யென்னுங் கொலைஞனால் வெட்டியழிக்கப்பட்டுக் காதலன்பு என்னும் உயிர் ஓடிப்போன பின், இழிந்த காமப்பிண வாழ்க்கையிற் காலங்கழிக்கும்படி கட்டாயப் படுத்தப்பட்டால், இதனினும் வேறு கொடுங் கொலை உளதோ! கூறுமின்கள் அறிஞர்களே! உலகிய லொழுக்கத்திற்கு அடிப்படையாய் நிற்குங் காதலன்பைக் கீழறுத்துவிட்டால், அதன் மேல் நிற்கும் அவ்வுலகியல் வாழ்க்கை கீழ் விழுந்து நுறுங்கா தொழியுமோ! இங்ஙனம் மக்கள் வாழ்க்கையை வேரிலேயே அறுத்துக் கொலைபுரிவோர், அருளொழுக்கத்தையும் அன்பொழுக்கத்தையுமே வலியுறுத்தும் நம் தெய்வ ஆசிரியரால் வகுக்கப்பட்ட நம் சைவ சமயத்திற்கு உரியராவரோ! சொன்மின்கள் அன்பர்களே! 9. காரைக்காலம்மையார் மனையறம் நம் அருமைச் சைவசமயமானது காதலன்பின் வழி நடக்குந் தூய வாழ்க்கையினையே வேண்டுவதன்றி, அதனைக் கொலை செய்யுஞ் சாதிவேற்றுமை வாழ்க்கையினைச் சிறிதும் வேண்டுவதன் றென்பதற்கு நம் சைவ நாயன்மார் வரலாறுகளே சான்றாதல் சிறிது காட்டுதும். காரைக்கால் அம்மையார் என்னுஞ் சைவப் பெண்மணியாரின் வரலாற்றை முன்னர் ஆராய்வாம். இவர் தெய்வத்தன்மை வாய்ந்த நங்கையாராதலுடன், தமிழ்மொழிக் கடலையும் ஆரப்பருகி அதன்கண் அரியபெரிய செய்யுள் நூல்களுள் இயற்றுந் திறம் வாய்ந்தவர். அழகிலோ கைவல் கம்மியன் திருத்திச் சமைத்த அரும்பெறற்பொற்பாவையை ஒப்பவர். சின்னஞ் சிறு பருவம் முதலே சிவபிரான் திருவடிக்கண்ணுஞ் சிவனடியார் பாலும் மிக்க அன்பு பூண்டவர். இவ்வளவு சிறந்த ஒரு தெய்வமங்கைக்கு ஏற்ற கணவனை அவர் தாமே தெரிந்து காதலித்தல் வேண்டுமன்றிப், பிறர் அவர்க்கேற்ற ஒருவனைத் தெரிய மாட்டுவாரல்லர். அங்ஙன மிருந்தும் அவர்தஞ் சுற்றத்தார் தம் வணிகமரபினான ஒருவனைக் கொணர்ந்து அவர்க்குக் கணவனாக மணம் பொருத்தி விட்டனர். அவ்வாறு மணஞ் செய்விக்கப்பட்ட அவன் அம்மையார் தம் அருமைகளை முன்னரே யறிந்து அவற்றிற்கு ஏற்பக் காதலன்பு பூண்டு நடக்கத் தக்க மாட்சி வாய்ந்தவன் அல்லலென்பது, அவரது தெய்வத் தன்மையை அறிந்த வளவில் அவன் அவரைத் தொடுதற்கு அஞ்சியிருந்து, பின்னர்ச் சிலநாட்களில் அவர் அறியாமே பிரிந்து வேறொரு நாட்டிற்குச் சென்று அங்கே வேறொருத்தியை மணந்து கொண்டிருந்தமையானும், அது தெரிந்த அம்மையாரின் உறவினர் அவரை ஒரு சிவிகையில் ஏற்றிக்கொண்டு அவனிருந்த ஊர்க்குப்போன காலையில் அவன் தன் இரண்டாம் மனைவி மக்களுடன் எதிர்போந்து அம்மையாரை மனைவியாக நிலையாமல் தெய்வமாக நினைந்து அவர்தந் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினமையானும் நன்கு பெறப்படும். அம்மையாரும் அவன்பாற் காதலன்பு நிகழப்பெறாமற் கணவனென்றகடமையை நினைந்து ஒருவாறு அன்புபூண்டொழுகின ரென்பதற்கு. அவன் தன்னை வணங்கி நின்ற காலையில் அவன் பொருட்டுத் தாங்கிய அழகிய உடம்பின் வடிவைத் தசைப் பொதி என வெறுத்துக் கூறி அதனை மாற்றிப் பேய் வடிவு தனக்குத் தருமாறு அவர் இறைவனை வேண்டினமையே சான்றாம்; இஃது ஆசிரியர் சேக்கிழாரடிகள், ஈங்கிவன் குறித்த கொள்கை இதுஇனி இவனுக் காகத் தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி கழித்திங்குன்பால் ஆங்குநரின் தாள்கள் போற்றும் பேய்வடி வடியே னுக்குப் பாங்குற வேண்டு மென்று பரமனைப் பரவி நின்றார் எனக் கூறமாற்றால் தெளிப்படும். காதலன்பு என்பது ஓராவிற்கு இருகோடு தோற்றினாற்போல இருவருயிரும் ஓருயிராய் ஈருடம்பின் நின்று இயையும் பெருகிய தூய அன்பாகும். இஃது ஆசிரியர் நக்கீரனார் இறையனாராகப் பொருளுரையிற் கூறியவாற்றானும், மாணிக்கவாசகப் பெருமான் திருச்சிற்றம்பலக் கோவையாரில், காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர் ஆகத்துள் ஓருயிர் கண்டனம் யாம்இன்றி யாவையுமாம் மேகத் தொருவன் இரும்பொழி லம்பல வன்மலையில் தோகைக்குந் தோன்றற்கும் ஒன்றாய் வருமின்ப துன்பங்களே என்று அருளிச் செய்தமையானும் நன்கறியப்படும். இப்பெற்றித் தாகிய காதலன்பு காரைக்காலம்மையார்க்கும் அவர் தங் கணவனார்க்கும் நிகழப்பெறாமையால், அவர்தஞ் சேர்க்கை வெற்றுடம்பின் சேர்க்கையா யிருந்தே யல்லாமல், அன்பால் உருகி ஒன்றுபட்ட உயிரின் சேர்க்கையாய் இருந்ததின்று. அம்மையாரைப் போலவே அவனுங் கலைத்தமிழ்ப் புலமையில் நிரம்பிச் சிவநேய அடியார் நேயங்களிலும் மிக்கிருந்தன னாயின், அவன் அவர்க்கேற்ற கணவனாக, அவர்தஞ் சேர்க்கை உயிரின் சேர்க்கையேயா யிருந்திருக்கும். அவ்வாறாகாமைக்குக் காரணம் அம்மையாரே தமக்குத் தக்கானொருவனைத் தெரியாதிருக்க, அவர்தஞ் சுற்றத்தார் அவ்விருவரியல்பும் ஆய்ந்தாய்ந்து பாராமல் அவர் தம்மைப் பிணைத்து விட்டமையே யாகும். 10. சுந்தரர்தம் காதலன்பின் வாழ்க்கை இனிக், காதலன்பிற் சிறந்த இன்பவாழ்க்கை இடைநின்ற சுற்றத்தாரின் முயற்சியாற் சிதைவுபட்டுக் காரைக்காலம்மையார்க்கு இனிது வாயாது போனமை போலவே, சுந்தரமூர்த்தி நாயனார்க்குங் காதல் மனைவாழ்க்கை நன்கு வாயாது போயிருக்கும்; ஆனால், எல்லாம் பல்ல இறைவன் அவர்பால் மிக்க இரக்கம்பூண்டு அவர்க்கு அங்ஙனம் நேர வொட்டாமல் தடைசெய்தருளினன். பாருங்கள்! சுந்தர மூர்த்திகளின் சுற்றத்தாரும், அவர்தம் பேரழகு அருந்தமிழ்ப் புலமை சிவநேயம் முதலியவைகளை ஆழ்ந்தாய்ந்து பார்த்து, அவர்தம் தெய்வ மாட்சிக்கு ஒத்த ஒரு மணமகளைத் தெரிந் தெடுத்தவரல்லர்; தமது சைவ அந்நதணமரபில் தாம்வேண்டிய ஒரு பெண்ணைத் தெரிந்து கொண்டு அவர்க்கு அவளை மணம்பொருத்தத் துவங்கினர். அது கண்ட பேரருட் கடலான சிவபிரான் ஓர் அந்தண முதியோனாய் வந்து, அச்சுற்றத்தார் கூட்டிய மணம் நடைபெறாவாறு தடைசெய்து, அவரைத் திருவெண்ணெய் நல்லூர்க்கு ஈர்த்துப் போய் ஆட்கொண் டருளினர். அதன்பிற் சுந்தர மூர்த்திகள் இறைவன்பால் அன்பு மீதூரப்பெற்றுப், பல திருக்கோயில்களை வணங்கிக்கொண்டு, திருவாரூர்க்கு வந்த காலையிற் சிவபிரான் திருக்கோயிலில் ஆடல் பாடல்களாகிய திருத்தொண்டு செய்து கொண்டிருந்த இளநறுங் கன்னித் தெய்வ நங்கையாரான பரவைநாச்சியாரைக் கண்டு உள்ளமும் உயிரும் உருகி யொருங்கே அவர்பாற் பதியப் பெற்றாராய்க் கழிபெருங் காதலன்பு கொண்டு, கற்பகத்தின் பூங்கொம்போ காமன்றன் பெருவாழ்வோ பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ அற்புதமோ சிவனருளோ அறியேனென் றதிசயித்தார் அங்ஙனமே அவரைக் கண்ட பரவை நாச்சியாரும் இதற்கு முன் தாம் கண்டறியாத ஒரு தெய்வக்காதல் கொள்ளப்பெற்று, முன்னேவந் தெதிர்தோன்றும் முருகனோ பெருகொளியாற் றன்னேரில் மாரனோ தார்மார்பின் விஞ்சையனோ மின்னேர்செஞ் சடையண்ணல் மெய்யருள்பெற் றுடையவனோ என்னேஎன் மனந்திரிந்த இவன்யாரோ எனநினைந்தார் பார்மின்கள் அன்பர்களே! இத்தெய்வப் பெருமானும் பெருமாட்டியும் ஒருவரை யொருவர் காதலித்து, அக்காதலன்பின் வயமாய் உணர்வு செல்லுங்காலுஞ் சிவபெருமான் றிருவருளே இவ்வாறு உருவுகொண்டு தோன்றியது போலும் எனக் கருதி வியக்கின்றார்! தெய்வத்தை மறந்து, உயர்ந்த நோக்கங்களை மறந்து இழிந்த ஊனுடம்பின் சேர்க்கையிலேயே நினைவு சென்று காமங் காழ்ப்பேறி நிற்கும் உலகத்து மக்களின் காம உணர்ச்சிக்கும், சிவபிரான் றிருவருளிலேயே நினைவழுந்தி அவ்வருள் விளக்கமாகவே தம் காதலரை நினைக்குஞ் சுந்தரர் பரவையாரின் தெய்வக் காதல் உணர்ச்சிக்கும் எவ்வளவு வேற்றுமை! தம்முள் ஒத்த இயல்பினரான தெய்வக் காதலர் மணவாழ்க்கைக்குச் சுந்தர மூர்த்திகளின் மண வாழ்க்கை யினுஞ் சிறந்ததொன்றனை இவ்வுலகில் வேறெங்கணுங் காண்டலரிது. இங்ஙனமே, இவர் தம் மற்றை மனைவியரான சங்கிலி நாச்சியார்க்கும் இவர்க்கும் உண்டான தொடர்புந் தெய்வக் காதலின்பாற் பட்டதாகும். அற்றேல், ஒருவர் இருவரைக் காதலித்தல் இயலுமோ வெனின்; ஆண்மகற் காயின் அஃதியலும்; என்னை? பெருமையும் உரனும் ஆடூஉமேன என்றும், அச்சமும் நாணும் மடனும் முந்துறத்த நிச்சமும் பெண்பாற் குரியஎன்ப என்றும் ஆசிரியர் தொல்காப்பியார் ஆண்பெண் இயற்கை வெவ்வேறாதலை அறிவுறுத்தலானும், இவ்வியற்கை வேறுபாட்டினை நன்குணர்ந்தே நாகரிக மக்கள் வாழ்க்கையினுள் ஓராண்மகன் மனைவியர் பலரை மணக்கப் பலரும் இசைதல் போல் ஒரு பெண் மகன் ஆண்மக்கள் பலரை மணக்க எரும் இசைவதில்லாமையானும், சுந்தரமூர்த்திகள் இருவரைக் காதலித்தல் ஆண்பா லியற்கைக்கு ஒத்ததேயாம் ஆகலானும் என்பது. மேலுஞ், சுந்தர மூர்த்திகளின் தெய்வத் தன்மைக்கு ஒத்த பெண்பாலார் இருவர் இருப்ப, அப்பெண்பாலார் இருவரின் தெய்வக் காதற்றன்மைக்கு ஒத்த ஆண்பாலார் இருவர் இலராய்ச் சுந்தரமூர்த்திகள் ஒருவரே உளராயின், அவர் காதலாலும் அருளாலும உந்தப்பட்டு இருவரை மணத்தல் வழக்கேயாம். இதுபோன்ற அரிய காதல் நிகழ்ச்சியினை நக்கீரர் மாணிக்கவாசகர் முதலான தொல்லாசிரியரும் உடன்பட்டுத் தழுவுதல் நினைவிற் பதிக்கப்பாற்று. இவ்வாறு இருவருயிரும் உருகி ஒன்றுபட்டு நிற்கும் பேரின் நிலையோ டொப்பதாகலின், அன்புருவாம் இறைவனும் அவர்தம் தெய்வக் காதற் பெருங்கிழமைக்கு ஒத்து உதவியாய் நின்றருளினன். இதனாலன்றோ சுந்தரமூர்த்திகள், பன்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே மற்றாரை யுடையேன் என்றருளிச் செய்வாராயினர். 11. சாதிவேற்றுமை அன்புக்கு மாறு காதலன்பு நிகழுங் காலத்து அது நிகழப் பெறுவார் இருவர் சாதி குல வேற்றுமை சிறிதும் பாராது அவ்வன்பின் வழியராய்ச் சென்று ஒருங்கு சேர்வரென்பதும், சாதி குல வேறுபாடுகளையே பார்த்துக் கொண்டு இறுமாந்திருக்கும் பொதுமக்கள் தூய காதலன்பு நிகழப் பெறுதற்குத் தக்காரைக் கண்டுகொள்ள மாட்டுவாரல்ல ரென்பதும், அருளிரக்கம் வாய்ந்த இறைவனே ஒரோவொருகாற் காதலன்புடையாரை ஒன்று சேர்த்தற் பொருட்டுப் பொதுமக்கள் ஆக்குஞ் சாதிவேற்றுமைக் கட்டுப்பாடுகளை முற்றச் சிதைப்பனென்பதும், சுந்தரமூர்த்திகள் என்னுஞ் சைவ அந்தணர் பெருமான் உருத்திகணிகையர் குலத்திற் பிறந்த பரவை நாச்சியாரையும் வேளாளர் குலத்திற் பிறந்த சங்கிலி நாச்சியாரையுந் தமது காதல் சென்ற வழியே மணந்து கொண்டமையானும், அதற்குமுன் அவர்தஞ் சுற்றத்தார் அவரது தெய்வமாட்சி அறியாதே அவரியல்புக்குத் தகாத ஒருத்தியைத் தமது மரபினின்றும் எடுத்து மணம் பொருத்தப் புக்காலையில் அதனை இறைவனே நேர் நின்று தடைசெய்து, பின்னர் அவரியல்புக்கு முழுதுமொத்த பரவை சங்கிலியாரை மணம் பொருந்தினமையானுந் தெளியப்படுகின்றன வல்லவோ? காதலன்பு கொள்ளத்தக்கார் இருவரைப் பொதுமக்கள் அறிய மாட்டமையும், இறைவனே அவரை யறிந்து ஒன்று சேர்த்தலும் மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்த, சொற்பால் அமிழ்திவள் யான் சுவை யென்னத் துணிந்திங்ஙனே நற்பால் நினைத்தெய்வந் தந்தின்று நான்இவ ளாம்பகுதிப் பொற்புஆ ரறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில்வெற்பிற் கற்பா வியவரை வாய்க்கடிதோட்ட களவகத்தே என்னும் அருமைத் திருக்கோவையார் செய்யுளானும் இனிது புலனாகின்றன வல்லவோ? ஆகவே, சைவசமயத்திற் பிறந்த ஒவ்வொருவருந், தம் சமயாசிரிய ராகிய சுந்தரமூர்த்தி நாயனார் நிலைநிறுத்திக் காட்டிய காதலின்ப வாழ்க்கை உலகில் நின்று நிலவுமாறு தம் ஆண் பெண் மக்களை அத்தகைய உண்மையன்பின் மனைவாழ்க்கையில் அமரச்செய்து, நமது பழந்தமிழ்க் கொள்கையாகிய சைவ சமய நலத்தினை எங்கும் பரப்பி, நம் மக்களைப் பழிபாவங்களுக்கு ஆளாக்காது இளமை தொட்டே அவர்களது உள்ளம் உண்மையன்பில் ஊறி ஒளிரும் வண்ணஞ் செய்தல் மிகவும் இன்றியமை யாததாகும். இனிப், பழந்தமிழ்க் கோட்பாடாகிய சைவசமய உண்மை இவ்வாறிருப்பவும், இதனை அறியமாட்டாராய், ஆரியக் குருக்கள்மார் தமது நலத்தின் பொருட்டுப் புனைந்து கட்டிகொண்ட சாதி வேற்றுமையினைக் குருட்டுப் பிடியாய்ப் பிடித்து, அவ்வவருந் தத்தம் சாதிவரம்பு கடவாது தத்தம் இனத்திலேயே உண்ணல் கலத்தல்களைச் செய்தல் வேண்டுமென்றும், அப்பரும் அப்பூதிகளும் சாதிவேற்றுமை பாராது ஒருங்கிருந்து அளவளாவி உணவு கொண்டதும், சுந்தரமூர்த்திகளும் அங்ஙனமே சாதிவேற்றுமை பாராது காதலன்பின் வழிச்சென்று பரவை சங்கிலியார மணந்து கொண்டதும் அப்பெரியார்க்கு ஒக்கும். மற்று, அவர்போல் உயர்ந்த பேரன்பு நிலையினின்று அன்பில்லா இழிந்த நிலக்கண் நிற்கும் நம்மனோர் சாதிகுல வேற்றுமை கடந்து அவ்வாறு உண்ணல் கலத்தல்களைச் செய்தலாகாதென்றுந் தம்மைக் கொழுத்த சைவரெனக் கூறிப் பெருமை பாராட்டிக் கொள்வார் சிலர் கூறுகின்றனர். இவர்தங் கூற்று நம்மனோரை முன்னேற்றம் அடைய வெட்டாது பழிபாவங்கட் படுக்குந் தீமையுடைத் தாதலையும், பண்டை நல்லாசிரியர் கொள்கைகளெல்லாஞ் சாதிவரம்பைப் சிதைத்தொழிக்கும் பெற்றிய வாதலையுஞ் சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்னும் எமது நூலில் விரித்துக் காட்டி யிருக்கின்றேம். இங்கேயும் இவர் கூற்றுப் பிழை பாடாதலைச் சிறிது காட்டுகின்றேம். உயர்ந்தோராகிய நம் ஆசிரியர் காட்டிய ஓர் ஒழுக்கம் சிறந்த தொன்றாயின், அது பிழைபாடிலதாயின் அவர்வழி நிற்கும் நாம் அவர் காட்டிய அம்முறையே ஒழுகக் கடமைப்பட்டிருக்கின்றோம்; அவ்வாறன்றி அவர்காட்டிய அவ்வொழுக்கஞ் சிறந்த தல்லாதாய்ப் பிழைபடுவ தொன்றாயின் நாம் அதனைப் பின்பற்றி நடத்தல் ஆகாது. அப்பரும் அப்பூதிகளுஞ் சாதிகுல வேறுபாடுகளையே நோக்கிக்கொண்டிருந்தனராயின் அவர்க்குள்ள ஒப்புயர்வில்லாப் பேரன்பு பழுதுபடும்; ஆதலால், உயர்ந்ததாகிய அன்பைநோக்கி இழிந்ததாகிய சாதிவேற்றுமையினை அவர் அப்பாற் படுத்தினர் அங்ஙனமே, சுந்தரமூர்த்திகளுஞ் சாதி வேற்றுமையினைப் பெரிதாக நினைந்திருந்தனராயின், தம்மோடொத்த சிவநேயச் சிறப்பும் பேரறிவும் பேரழகும் வாய்ந்த பரவையார் சங்கிலியார் என்னும் நல்லாரிணக்கத்தை இழந்த விட்டவராகல் வேண்டும்; மற்றுப்புனிதமாகிய அவருள்ளத் தெழுந்த பெருங் காதலன்போ அச்சாதி வேற்றுமையினை நுறுங்கத் தொலைத்துப் பெறற்கரிய அந்நல்லாரிணக்கத்தையே நாடிச் சென்றது. ஏனென்றால், முற்றத் துறந்த பட்டினத்தடிகளும், நல்லா ரிணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே அல்லாது வேறு நிலையுளதோ என்று அருளிச் செய்தன ரல்லரோ? ஒருவர்க்கு உடலும், உயிருமாய் இருக்கத்தக்கார் அவராற் காதலிக்கப்பட்டவரே யல்லாற் பிறரல்லரே. ஏனையோர் இணக்கமெல்லாஞ் சிற்சிலகாலமே நிலைப்பது. தாய்தந்தைய ரிணக்கம், புதல்வரிணக்கம், ஆசிரியரிணக்கம், தோழரிணக்கம், உடன்பிறந்தாரிணக்கம் முதலியன வெல்லாஞ் சிற்சில காலமேநிகழ்வதன்றி, முழுதுந் தொடர்ந்து நிகழா. மற்றுக், காதலன்பிற் சிறந்த கணவனும் மனைவியும் இணங்கும் இணக்கமோ அவர்தம் வாழ் நாளெல்லையளவும் இரவும் பகலும் பிரியாதாய்த் தொடர்ந்து நிகழுந் தன்மையதாம். அதிலும் அவர் அழகிலும் அறிவிலும் அன்பிலுஞ் சிவநேயத்திலும் மிக்கவராயிருந்தால் அவர்தம் இணக்கத்தின் மாட்சியினையும் இன்பத்தினையும் எங்ஙனம் உரைக்கேம்! எவ்வாறு புகழ்வேம்! பார்மின்கள் அன்பர்களே! சுந்தரமூர்த்திகட்கும் அவர்தம் மனைவியர்க்கும் வாய்த்த நேயமாட்சி எம்மால் அளப்பரிதாகலின் அவர் சாதிவேற்றுமை தொலைத்துக் கைக்கொண்ட அந்நேயம் எம்மனோர்க் வழிகாட்டும் மங்காப் பெருவிளக்கமாய் இருக்கற்பால தன்றோ! 12. சாதி வேற்றுமை எவர்க்கும் ஆகாது பெரியோரான அவர்க்காயின் சாதிவேற்றுமை கடத்தல்தகும், சிறியோரான எமக்கோ அது தகாது என்பிரேற், சிறியோரான யாம் பெரியோராதல் எப்படி? பெரியோர் காட்டிய நன் முறையினைப் பின்பற்றி யொழுகினாலன்றோ யாமும் பெரியோராகலாம். அவர் காட்டிய நன்முறையினைப் பின்பற்றாது எந்நேரமுஞ் சாதிச்சண்டையிலேயே செருக்குற்று மாழ்குவமாயின் யாம் பெரியோராதல் எவ்வாறு கைகூடும்? அவர் காட்டிய பேரன்பு முறையினைக்கடைப் பிடியாது எந்நேரமும் அன்புக்கு மாறான வம்பிலேயே நாங்காலங்கழித்தால் நாம் பெரியோராதல் யாங்ஙனம் கைகூடும்? பெரியோர் செய்ததொன்று தகாததென நமக்குத் தோன்று மாயின், அதனை நாம் செய்யாது விடலாம். அப்பரும் அப்பூதியும் பேரன்பால் அளவளாவிச் சாதிவேற்றுமையினைப் பாராது ஒழுகியமுறை உயர்ந்ததா, தாழ்ந்தததா? தாழ்ந்த தென்று கூற எவருமே ஒருப்படாராதலால், உயர்ந்த அந்நன்முறையைப் பின்பற்றி நடத்தலால் நமக்குவரும் இழுக்கென்னை? எல்லா மக்களும் ஒரு தந்தையின் பிள்ளைகளே யாதலால் அவரெல்லாரும் உடன்பிறப்புரிமை பாராட்டி எல்லாவற்றாலும் ஒருங்கு அளவளாவுதலே நன்றென்று ஏசுநாதரும் மகமது நபியுங் கூறிய அறிவுரைகளைக் கேட்டு மேல்நாட்டு மக்களெல்லாரும் ஏதொரு வேறு பாடுமின்றி ஒன்றுபட்டு ஒழுகி உலகிற் சீருஞ் சிறப்பும் எய்தி வருதலைக் கண்கூடாகக் கண்டுவைத்தும், நம் தெய்வ ஆசிரியர்கள் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று முடித்துக்கூறிய அறவுரையினை நாம் கடைப்பிடியாது வாழ்நாள் எல்லையளவுஞ் சாதியிறுமாப்புப் பேச்சையே பேசிக், கூற்றுவனுக்கு இரையாய் ஒழிதல் பிறநாட்டவராற் பெரிதும் இழித்துரைக்கப் படுகின்றதன்றோ? சாதி வேற்றுமையால் நாம் பெற்ற நலம் என்னை? ஒரு சிறு நலமாயினும் இருந்தால் அதனை நாம் கைக்கொள்ளலாம். ஆனால், ஒருவன் தன்னையுயர்ந்த சாதியானாகச் செருக்குடன் உயர்த்துப்பேசிப் பிறனொருவனை இழிந்த சாதியானாக இழித்துரைக்குங்கால், அங்ஙனம் இழிக்கப்பட்டவன் எவ்வளவு மனம் நைகின்றான்! அவன் ஆண்மை யுடையவனா யிருந்தால் தன்னை இழித்துப் பேசினவனைத் தானும் இழித்துப் பேச அதனால் இருவர்க்குள்ளுங் கலாம் விளைகின்றதன்றோ? இவ்வாறு அன்பினைச் சிதைத்து ஒன்றுமையினைப் பாழ்படுத்துஞ் சாதிவேற்றுமை யினை நம் ஆசிரியன்மா ரெல்லாரும் ஒருங்கே யுதைத்துத்தள்ளி அன்பின் வழியராய் நடந்துகாட்டியிருக்கையில், நாம் அவரைப் பின்பற்றாது போவோமாயின், அது நம் ஆசிரியர்க்குச் செய்த பெரும் பிழையாய் நம்மைச் சைவசமயத்திற்குப் புறம்பாக்குமென்று திண்ணமாய் உணர்மின்கள்! அற்றன்று, நம் ஆசிரியர் நடந்துகாட்டிய முறைகளை நாம் அவர் நிலைக்கு ஏதும் வரையிற் பின்பற்றலாகாதென்றுரைப்பீர் களாயின்; நம் ஆசிரியன்மார் அன்புக்கே உயர்வு கொடுத்துச் சாதிவேற்றுமையினைத் தாழ்த்தினால், நாம் அவர்க்கு மாறாய்ச் சாதிக்கு உயர்வு கொடுத்து அன்பைக் கீழ்ப்படுத்தல் வேண்டும்; அவர்கள் பொய்சொல்லாதே புறங்கூறாதே என்றால், நாம் பொய்சொல்லிப் புறங்கூறித் திரிதல் வேண்டும்; அவர்கள் குடியாதே, கொலை செய்யாதே யென்றால், நாம்குடித்துக் கொலைசெய்தல் வேண்டும்; அவர்கள் சிலவத்தை வணங்கு, அடியார்க்குத் தொண்டுசெய் என்றால், நாம்சிவத்தை வணங்காமல் அடியார்க்குத் தீமை செய்தொழுகல் வேண்டும். ஏனென்றாற் கீழ்நிலைக்கண் நிற்கும் நாம் மேல் நிலைக்கண் உள்ளார் சொன்னவைகளையுஞ் செய்தவைகளையும் ஏற்றல் கூடாதென்பது குருட்டுச் சைவர் கொள்கையன்றோ? ஆனால், இக்குருட்டுச் சைவர் கூற்றை நம்மனோர் கேட்டு அதன்படி நடக்கப் புகுவராயின் இந்நாடு காடாய், இந்நாட்டின்கண் உள்ள மக்கள் காட்டின்கண் உள்ள விலங்கின் கூட்டங்களாய் மாறுதல் திண்ணமாகலின், ஏனை நாடுகளிலுள்ள மக்களோடொப்ப நாமுங் கல்வியிலுங் கடவுள் வழிபாட்டிலும் அன்பிலும் ஒற்றுமையிலும் வாழ்க்கை யின்பத்திலும் மேன் மேல் முன்னேற்றம் அடைதலையே பெருநோக்கமாய்க் கொண்ட, நம் செந்தமிழ்த் தொல்லாசிரியராகிய தொல் காப்பியனாரும் அவர்வழி பிழையாது வந்த திருவள்ளுவர் சைவ நாயன்மார் சைவகுரவர் சந்தானகுரவர் முதலான சான்றோருஞ் சொல்லியுஞ் செய்துங் காட்டிய அன்பினை உயிராய்க் கொண்ட இன்ப வாழ்க்கையில் வாழ்தலிலேயே கருத்தூன்றிப் கடவோமாக! 13. செல்வப் பொருள் இயல்பு இன்பமும் பொருளும் அறனும் என்று ஆசிரியர் தொல்காப்பியனார் வகுத்த மூன்றில் முதற்கண் நின்ற இன்பத்தைப்பற்றி இதுகாறும் ஆராய்ந்தோம். இனி, இம்மைக்கண் நிகழும் இன்பவாழ்க்கையானது, வறுமையும் அதனால் வருந் துன்பமும் இன்றி இனிது நடைபெறுதற்கும், இங்ஙனமே மறுமையின்பத்தை வேட்டுச் செய்யப் படுவதாகிய தவவொழுக்கம் பிறருதவியை எதிர்பாராமற் செய்யப்படுதற்குஞ் செல்வப் பொருள் இன்றியமையாது வேண்டப்படுவதெனத் தொல்காப்பியர், மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய முல்லை முதலாச் சொல்லிய முறையாற் பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும் இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே என்று கூறுதலானும், திருவள்ளுவனார், அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க் கிவ்வுலகம் இல்லாகி யாங்கு என்றும், அறன்ஈனும் இன்பமும் ஈனுந் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் என்றுங் கூறுதலானுஞ் செல்வப் பொருள் ஈட்டும் வகையில் நம் ஆசிரியர் கொண்ட கருத்தும் நம்மால் ஆராயற் பாலதாயிருக்கின்றது. செல்வப்பொருள் இங்ஙனம் இம்மை மறுமைப் பேறுகளை அடைவித்தற்கு இன்றியமையாக்கருவியா யிருத்தலானுங், கல்வியறிவு வாயாதவர் கட்கு அதனை ஒழுங்கான நன்முறையில் ஈட்டும்வகையும், ஈட்டிய அப்பொருளை அவ்வாறே நன்முறையிற் செலவு செய்து இம்மை மறுமை யின்பங்களை எய்தும் வகையுஞ் சிறிதுமே விளங்கா. அதுவேயுமன்றி, ஒருகால் ஊழ்வினை வயத்தாற் கல்வி யறிவு வாயாதவர்கட்குச் செல்வம் வரின், அதனைப் பயன்படுத்தும் வழி தெரியாராய், அதனையே தெய்வமாகக்கொண்டு அவர் இம்மை மறுமை நலங்களை ஒருங்கே இழந்துவிட்டுச் சிலநாளில் அப்பொருளை இங்கேயே வைத்துவிட்டு இறந்தொழிதலையும், அவர்க்குப் பின் அப்பொருளைக் கைக்கொள்வோர் குடிக்குங் கூத்திக்குங் கொலைக்குங் கோணவழக்குக்கும் வெறும் பட்டப் பெயர்க்கும் வாரியிறைத்து அதனைச் சிலநாட்களில் அழித்துவிடுதலையுங் கண்ணெதிரே காண்கின்றேம். ஆகவே, நிலையில்லாத செல்வப் பொருளை நன்முறையில் ஈட்டுதலும், அதனை நன்முறையிற் பயன்படுத்தலும் நிலையான சிறந்த கல்விப்பொருளைச் சிறந்தமுறையிற் பெற்றார்க்கன்றி ஏனையோர்க்குக் கைகூடாமை எளிதில் அறியப்படும். 14. கல்விப்பொருள் மாட்சி இவ்வுண்மையை நன்றாகப் பாகுபடுத்துணர்ந்த நம் முன்னோர்கள் பொருளைப்பற்றிப் பேச வருங்கா லெல்லாம், அதனைக் கல்விப்பொருள் செல்வப்பொருள் என இரு கூறாகப் பகுத்து, முதலிற் கல்விப்பொருள் மாட்சியினை வலியுறுத்திப் பேசி, அதன்பிறகே செல்வப் பொருளைப் பற்றிப் பேசாநிற் கின்றனர். இது, நம் முதலாசிரியரான தொல்காப்பியனார் இவ்விருவகைப் பொருளையும் பெறும் பொருட்டு இளைஞர்கள் வேறு நாடு நோக்கிச் செல்லும் பிரிவுகளில் நூல் ஓதுதற்குப் பிரியும் பிரிவை முன்வைத்துப், பொருள்தேடுதற்குப் பிரியும் பிரிவை அதன்பின் வைத்து அகத்திணையிய லிற் பிரிவிலக்கணம் வகுத்துரைத்தமையானும், அவர்வழி வந்த திருவள்ளுவ நாயனாரும் அங்ஙனமே பொருட்பாலிற் கல்வியை முன்வைத்து; அதற்குப் பல அதிகாரங்கள் கடந்துபோய்ச் செல்வத்தைப் பின்வைத் துரைத்தமையானும் நன்கறிகின்றேம். எனவே, ஒருவர்க்கு எஞ்ஞான்றும் அழியாப் பெருஞ் செல்வமாவதுந், தன்னைப் பயின்றாரை எழுபிறப்புந் தொடர்ந்து செல்வதுந், தன்னைத் தொடர்ந்து பயில்வார்க்கு அம்முறையே அவரறிவினை மேலும் மேலும் விளங்கச் செய்வதுந், தன்னைப் பயின்றவரையே கண்ணுடையவராக்கித் தன்னைப் பயிலாதவர் கண்ணைப் புண்ணெனச் செய்வதுங் கல்விச் செல்வமே என்பார், கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை என்றும், ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற் கெழுமையும் ஏமாப் புடைத்து எனவும், தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு எனவும், கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் எனவுந் தெய்வத் திருவள்ளுவரும் ஓதியருளினார். ஆரிய நூலார் பொருளற்ற கர்மங்கட்கும் பிறப்பினாற் சாதிக்கும் உயர்வு சொல்லுதல் போல், நம் ஆசிரியர் எவருஞ் சொல்லாமையும், நம் ஆசிரியர் எல்லாருங் கல்விக்கே உயர்வு சொல்லிக் கல்வி கல்லாமற் சாதிபற்றி உயர்வு தேடுவார்க்கு இழிவு சொல்லுதலும், ஆரிய நூலார் ஒரு சில வகுப்பினரே கல்வி கற்றற்குரியர், ஏனையோர் அதற்குரியரல்லர் என்று சொல்லுதல் போலாது, நம் ஆசிரியன்மாரெல்லாருங் கல்வி கல்லாதவர் எவராயிருப்பினும் அவர் விலங்குகளை யொப்பரென வலியுறுத்தலும்: மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றார் அனைத்திலர் பாடு (திருக்குறள்) என்றும், கல்லாத மூடரைக் காணவும் ஆகாது கல்லாத மூடர்சொற் கேட்கக் கடனன்று கல்லாத மூடர்க்குக் கல்லாரே நல்லராம் கல்லாத மூடர் கருத்தறி யாரே (திருமந்திரம்) என்றும், கல்லார் நெஞ்சின் நில்லான் ஈசன் (சம்பந்தர் தேவாரம்) என்றும், கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக் கற்றார்கள் உற்றோருங் காதலானை (அப்பர் தேவாரம்) விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர் (திருக்குறள்) என்றும் போந்த அவர்தம் அறிவுரைகளால் தெளியப்படுகின்றன அல்லவோ? நம் ஆசிரியன்மாரே யன்றிப் பண்டைநாளில் இருந்த நம் தமிழ் வேந்தர்களுங் கல்விக்குங் கற்றார்க்கும் உயர்வு தந்து வந்தனரே யல்லாமற் சாதி முதலிய பிறிது ஏதும் பற்றி எவர்க்கும் உயர்வு கொடுத்தனரல்ல ரென்பதற்கு, உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே; பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளுஞ் சிறப்பின் பாலால் தாயுமனந் திரியும்; ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோள் வருக என்னாது அவருள் அறிவுடையோன் ஆறு அரசுஞ் செல்லும்; வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே. என்று பாண்டி வேந்தனான ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கல்வியையுங் கற்றாரையும் உயர்த்திச் சாதி யுயர்வினைக் கீழ்ப் படுத்துரைத்தமை ஒருபெருஞ் சான்றாய் விளங்குகின்றதன்றோ? இன்னும், முன்னொருகால் மோசிகீரனார் என்னும் நல்லிசைப் புலவர், சேரமான் தகடூரெறிந்தபெருஞ் சேரலிரும்பொறை என்னும் வேந்தர் பெருமானது அரண்மனைக்குட் சென்றபோது, அங்கே அவ் வேந்தனது முரசு வைக்குங் கட்டில் மிக மெல்லியதாய் அழகிதாயிருக்கக் கண்டு, அதன்கட்படுத்து உறங்கினால் எத்துணை இனிதாயிருக்குமென நினைந்து, அதன்மே மேலறிச் சிறிது படுத்தவர், அதன் மென்மையால் அயர்ந்து உறங்கி விடுவாரானார், அப்போது அங்கு வந்த அவ்வேந்தர் பெருமான், தன் தூயகட்டிலின்மேல் அவர் படுத்துறங்குதலைக் கண்டு சிறிதுஞ் சினங்கொள்ளானாய் அதற்கு மகிழ்ந்தோ டமையாது, அவர் இன்னும் இனிதாய் உறங்கல் வேண்டுமென விரும்பி அருகிருந்த ஒரு கவரி கொண்டு அவர்மேல் மென்காற்றுப்பட நின்று வீசுவானானான்; இதற்குள் விழித்தெழுந்த அப்புலவர் பெருமான் அவ்வரசன்றன் பேரன்பினையும் பெருந்தமைமையினையும் மாசற விசித்த வார்புறு வள்பின் மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை ஒலிநெடும் பீலியொண்பொறி மணித்தார் பொலங்குழை யுழிஙையொடு பொலியச் சூட்டிக் குருதி வேட்கை யுருகெழு முரசம் மண்ணி வாரா அளவை, எண்ணெய் நுரைமுகந் தன்ன மென்பூங் சேக்கை அறியாது ஏறிய என்னைத் தெறுவர இருபாற் படுக்கும்நின் வாள்வாய் ஒழித்ததை அதூஉஞ் சாலும்நற் றமிழ்முழுது அறிதல் அதனொடும் அமையாது அணுகவந்து நின் மதனுடைய முழவுத்தோள் ஓச்சித் தண்ணென வீசி யோயே! வியலிடங் கமழ இவண்இசை யுடையோர்க் கல்லது அவனது உயர்நிலை யுலகத்து உறையுள் இன்மை விளங்கக் கேட்ட மாறுகொல் வலம்படு குரிசில்நீ ஈங்கிது செயலே என்று அவன்றன் தமிழ்மொழி யன்பைப் பெரிது பாராட்டினார். இங்ஙனமே தமிழ் கற்ற சான்றோர்க்கு அக்காலத்திருந்த சேர சோழ பாண்டியர்கள் பல வகைளால் உதவி செய்து அவர்களைச் சிறப்பித்த வரலாறுகளை எடுத்துரைக்கப் புகுந்தால் அதற்கு நேரங்காணாது; ஆயினும் ஒன்றே யொன்று காட்டல்வேண்டும். கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர் பெருமான் பட்டினப்பாலை யென்னுந் அருந்தமிழ்ப் பாட்டொன்றைப் பாடிக்கொண்டு சென்ற போது, அதன் சொற்சுவை பொருட் சுவையினைக் கண்டு வியந்த சோழவேந்தனான கரிகாற்பெருவளத்தான் அவர்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசளித்தான். பாருங்கள் அன்பர்களே! இவ்வாறு கல்விப் பொருளானது செல்வப் பொருளினுஞ் சிறந்ததென்று நம் தெய்வ ஆசிரியரும் அவரது மெய்வழி கடைப்பிடித்து ஒழுகிய வேந்தர்களுஞ் செல்வர்களுங் கருதி அதனையும் அதனைக் கற்றாரையுந் தம் உயிரினுஞ் சிறக்க வைத்துக் கொண்டாடினமையாலன்றோ, தனித்தமிழ் விழுப்பம் மலிந்த இன்று பெறும்பேறு பெற்றோம்! 15. இஞ்ஞான்றைத் தமிழ் நிலை மற்று, இக்காலத் துள்ளவர்களோ அழிவில் பெருஞ் செல்வமாகிய தமிழ்க் கல்வியைப் பாராட்டாதும், தமிழ் கற்றவர்களைப் பாதுகாவாதும், தமது செல்வத்தையே தெய்வமாகக் கருதி அதனை மேன்மேற் பெருக்குதற்கும். தம்முடம்போடு அழிந்து மாய்வனவாகிய அரசியல் நிலைகளும் போலிப் பட்டங்களும் அடைதற்கும், தமது நினைவை அல்லும் பகலும் ஈடுபடுத்தி அதன்கண் மட்டுமே முயற்சி யுடையராய் முனைந்து நிற்கின்றனர்! இதனால் தமிழ்க் கல்வி வளஞ்சுருங்கி வருவதோடு, தமிழ் கற்ற அறிஞர்களுந் தமது வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்வருவாய் இன்றி மிடிப்பட்டுத் துன்புறுகின்றனர்! நம் தமிழ் நாட்டவர்கள் தமது தாய் மொழியை நிரம்பக் கற்றுத் தேர்ச்சி பெறுதற்கு இடனின்றித் தத்தளிக்கையில், நம் செல்வர்கள் அயல்நாட்டு மொழியாகிய ஆங்கிலத்தின் பயிற்சி மிகுதற்கும், ஆங்கிலக் கல்விச்சாலைகள், வடமொழிக் கல்லூரிகள், இந்தி மொழிக் கல்லூரிகள் நாட்டுதற்கும் பொருள் உதவி செய்கின்றனர். தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை வாங்கத், தம்பி கும்பகோணத்திற் கோதானஞ் செய்கின்றான் என்னும் பழமொழியோ டொப்ப, நம் தாய் மொழிப் பயிற்சி சிறிதுஞ் செவ்வனே நடைபெறா இந்நாளில், அரசினர் உதவியால் ஆங்கிலமொழிப் பயிற்சி எங்கும் பரவிக்கிடக்கும் இந்நாளில், இறந்துபட்ட வடமொழி யினையும் வடநாட்டவர் வழங்கும் இந்தி மொழியினையும் பயில்கவென்று கூக்குரலிடுவார் தொகை பெருகும் இந்நாளில் வங்காளம் தெலுங்கு மலையாளம் முதலான மொழிகட்கு உரியோர் புகழத்தக்க முறையில் தத்தம் மொழிப்பயிற்சியினைப் பெருகச்செய்தற் பொருட்டு அவ்வம்மொழிகளிற் பல்கலைக் கழகங்கள் திறப்பித்துவரும் இந்நாளில், நம் தமிழ்நாட்டுத் செல்வர்கமட்டும் நம் தமிழ்நாட்டவர் முன்னேற்றத்திற்கு இன்றியமையாததான தமிழ்மொழிப் பயிற்சிக்குச் செலவிடாமற் பிறமொழிப் பயிற்சிக்குச் செலவிடுதல் ஐயகோ! கொடிது! கொடிது! நம் தமிழ் நாட்டு மக்களின் பேருழைப்பினைக் கண்டு பெரும் பொருள் தொகுத்து வைத்திருக்குஞ் செல்வர்கள், அம்மக்களின் உதவிக்குக் கைமாறாகவாவது அவர்க்குரிய தமிழ்மொழிப் பயிற்சியினைப் பெருகச் செய்ய வேண்டியவர்களா யிருக்க, அரசினராற் றாம் பெறும் வரிசைகள் குறித்து அவர்கள் அதனை அயல் மொழிப் பயிற்சிக்குச் செலவழித்தல் நன்றி மறந்த குற்றமாமன்றோ? அயல்மொழிப் பயிற்சியினை எவ்வளவுதான் இங்கே பரவ வைத்தாலும், அதன் உதவி கொண்டு நந் தமிழ்மக்களைச் சிறிதும் முன்னேற்றல் இயலாது. நம் தமிழ்மக்களைச் சிறிதும் முன்னேற்றுதல் அவர் தந் தாய்மொழியாகிய தமிழ் ஒன்றினாலேதான் கைகூடும் என்பதை நந் தமிழ்நாட்டுச் செல்வர்கள் கருத்திற் பதிக்கக் கடவராக! மேலும், நந் தமிழ்நாட்டுக்கு ஆறாயிர நாழிகை வழி விலகிக்கிடக்கும் மேல்நாட்டிலுள்ள கிறித்தவக் குருமார்கள் இந்நாட்டுக்கு வந்து, நூறாயிரக் கணக்காகத் தம் நாட்டு மக்கள் தந்த பொருளைச் செலவிட்டு, இங்குள்ள நாடுநகரங்களிலுஞ் சேரிகளிலும் பல்லாயிரக்கணக்கான கல்விச் சாலைகள் திறப்பித்தும் மாதாகோவில்கள் கட்டுவித்தும் இந்நாட்டவர் எல்லார்க்கும் ஏதொரு வேற்றுமையும் இன்றிக் கல்வி கற்பித்துங் கடவுள் உணர்ச்சி யுண்டாக்கியும் பேருதவி புரிந்துவராநிற்க, நம் நாட்டு ஏழை மக்கள் ஒரு நாளுக்கு ஒருவேளை நல்லுணவு மின்றிப் பட்டினியும் பசியுமாய்க் கிடந்து நெற்றித் தண்ணீர் நிலத்தில்விழப் பாடுபட்டுத்தேடிக் கொடுக்கும் பெரும் பொருளைப் பேழை பேழையாய் வைத்திருக்குஞ் செல்வர்கள் தமது பெருமைக்கும் தமது நலத்திற்கும் தம் மனைவி மக்களின் ஆடை அணிகலங்கட்கும் தம் வேடிக்கை விளையாட்டு கட்குமாகத் தமது பெரும்பொருளைச் செலவு செய்துகொண்டு தமக்கு அப்பொருளைச் சேர்த்துக் கொடுக்கும் ஏழைகளிற் பெரும் பாலாரைத் தீண்டாதவரென ஒதுக்கி வைத்தும், அவர்க்கு நல்லுணவும் நல்வெள்ளாடையுங் கூடக் கொடாதும், அவர் வணங்குதற்குத் தம் கோயில்களில் உள் வருதல்கூடத் தகாதென விலக்கியும், அவர் தம் மக்களோடு ஒப்ப இருந்து கல்வி பயிலுதலும் ஆகாதென அவரைத் துரத்தியும் அவ்வேழை மக்கட்குப் பெருங் கொடுமை செய்துவரல் தெய்வத்திற்கு அடுக்குமா? ஏழை யழுத கண்ணீர் கூரியவாள் ஒக்கும் என்னும் பழமொழிப்படி, நம் ஏழைமக்கள் படுந் துயரமானது, அத்துயத்திற்கு ஏதுவாய் நிற்குஞ் செல்வர்களையுங் குருமார்களையுஞ் சுவடறத் தேய்த்து மாய்க்குங் காலம் இறைவனது சினத்தால் விரைந்து அணுகுகின்றதென்று ஓர்மின்கள்! ஓர்ந்து, எல்லா மக்களுக்குங் கல்விப் பயிற்சி இன்றியமையாத தெனவும், அக் கல்வியாகிய விளக்கைக் கொண்டு எல்லாம்வல்ல சிவபிரான்றன் பேரின்ப வெள்ளத்தைத் தெரிந்து சென்று அவ்வின்பத்தை நுகர வம்மின்களெனவும் நம் சைவசமய ஆசிரியர்கள் இடைவிடாது அறிவுறுத்தி வந்த அருட்பான்மையினைக் கடைப்பிடியாக எடுத்துக்காட்டி மக்களெல்லாரையும் அழைத்த, காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டா காரசிவ போகம் எனும்பே ரின்பவெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏக உருவாய்க் கிடக்குதையோ இன்புற் றிடநாம் இனியெடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாருஞ் செகத்தீரே என்னுந் தாயுமான அடிகளின் பழந் தமிழ்ச் சைவக் கோட்பாட்டைக் கடைப்பிடித்து உண்மைச் சைவராகிய நாம் நம்மவரெல்லார்க்கும் நம் அருந்தமிழ்க் தெய்வக் கல்வியைப் புகட்ட முன் நிற்போமாக. 16. செல்வத்தின் பயன் இனி, நம் தெய்வ ஆசிரியர் தொல்காப்பியனார் பொருளைக் கல்விப்பொருள் செல்வப்பொருளென இரண்டாகப் பகுத்து, என்றும் அழியாததாய் மக்களுயிரின் அறிவை விளக்கி அவ்வுயிரைப் பிறவிகடோறுந் தொடர்ந்து செல்லும் விழுப்பம் உடைமைபற்றிக் கல்வியை முதல் நிலைக்கண் வைத்துங் கல்விபோல் அழியாச் சிறப்புடைய தன்றாயினும் அக்கல்வியைப் பயன்படுத்தற்கும் உலகியல் ஒழுக்கம் நடைபெறுவித்தற்கும் இன்றியமையாததாதல் பற்றிச் செல்வத்தை அதன் பின்நிலைக்கண் வைத்தும் அவ்விரண்டும் அன்பினால் உந்தப்பட்டு மேலு மேலும் அவ் அன்பினை வளர்த்துப் பரவச் செய்தற்கே கருவியாதல் வேண்டுமென இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு, அன்பொடு புணர்ந்த ஐந்திணை என்னுஞ் சூத்திரத்தில் ஆணை தந்திருக்கின்றார். ஆகவே, கல்வியானது அறிவை விளங்குங் கருவியாதலோடு எல்லா உயிர்களினகத்துந் தொகுத்து வைக்கப்பட்டிருக்கும் அன்பு என்னுந் தேனைப் புறத்தே ஒழுகச்செய்து, உலகத்தை அத் தேன்பெருக்கிற் படிவித்து இன்புறச்செய்தல் வேண்டும் என்னுஞ், செல்வமானது அக்கல்விக்குத் துணையாய் அதனையும் அன்பையும் வளரச் செய்தற்குக் கருவியாதல் வேண்டு மென்றும் நாம் தெளியப் பெறுகின்றனம்; அன்பர்களே! ஆனால், இஞ்ஞான்றுள்ள மக்களிற் கல்வி கற்பாருஞ் செல்வந் தொகுப்பாருங் கல்வி கற்பது அறிவினை விளக்கி அன்பினை வளர்த்தற்பொருட்டேயாமென்றுஞ், செல்வம் தொகுப்பது தமக்குமட்டுமேயன்றிக் கல்விக்குங்கற்றார்க்கும் வறியார்க்கும் அறத்திற்கும் பயன்படுத்தற்பொருட்டேயாம் மென்றும் உணர்கின்றா ரில்லை; கல்வி கற்பது பெரும் பொருள் தொகுப்பதற்கே என்று பிழையாக நினைக்கின்றார்கள்; ஆசிரியர் தொல்காப்பியனாரும் அவர்வழி வந்த திருவள்ளுவர் முதலிய சான்றோருமோ, அன்பு வளர்ச்சிக்கும் அறிவு வளர்ச்சிக்குமே கல்விகற்றல் வேண்டுமென மொழியாநின்றார். நம் ஆசிரியர் அறிவுரையைத் தழுவாத நம்மக்களோ பொருளீட்டுதல் ஒன்றன் பொருட்டாகவே கல்வி கற்றலும் அதனைப் பயன்படுத்தலுஞ் செய்துவருதலால் விளையுந் தீமைகள் அளவில்லாதனவாய்ப் பெருகுகின்றன! பொருட்பேறு ஒன்றையே கருதுவோர் பிறர் நலங் கருதுவரோ! தம்மினும் ஏழைகளாய் இருப்பவர் பொருள்களையும் கவர்ந்து கொள்ளவன்றோ சூழ்ச்சி செய்கின்றனர்! இரவில் திருடுந் திருடர்க்கும், வழிமறித்துக் கொள்ளையடிக்கும் வழிப்பறிகாரர்க்குங், கல்வியை உதவியாய்கொண்டு உயர்நிலைகளாகிய மாறுகோலம் பூண்டு கைக்கூலி வாங்கும் பகற்கொள்ளைக்காரர்க்கும் வேறு பாடுண்டோ சொன்மின்கள்! இங்ஙனமே செல்வப் பொருளைக் கொண்டு மேலும் மேலுஞ் செல்வத்தைத் திரட்டிச் சேர்ப்பவர்கள் எத்தனையோ ஏழைக்குடும்பங்களைப் பாழாக்கிச் செல்வர்களாகின்றார்கள்! ஆங்கிலம் வடமொழி முதலானவைகளை எவ்வளவு கற்றாலும் என்ன பயன்! அன்புக்கும் அறிவுக்கும் பயன்படுத்தற் பாலவான கல்வியையுஞ் செல்வத்தையும் மேலுந் திரண்ட செல்வத்தை மேன்மேற் பெருக்குதற்குப் பயன்படுத்தலால் எத்தனை கொலைகள்! எத்தனை அழிவழக்குகள்! எத்தனை புனை சுருட்டுகள்! எத்தனை கொடும் பொய்கள்! நாடோறும் நாழிகைதோறும் அடுத்தடுத்து நிகழாநிற்கின்றன! இவ்வளவு தீங்குகுள் செய்து ஈட்டிய பொருளை ஈட்டியவனாவது நிலையாக இருந்து நுகர்கின்றனனா? அதுவும் இல்லையே! பருநோய் கொண்டு நீள வருந்தியோ, நுண்ணோய் கொண்டு சடுதியிற் செத்தோ, தாய் அலறத், தந்தை யலற, மனைவி யலற மக்கள் அலற எங்கோ மாயமாய் மறைந்துபோய் விடுகின்றனனே! அவன் அவ்வளவு பிறரைத் துன்புறுத்தித் தொகுத்த பொருளில் ஓர் எள்ளளவாவது கூடச்சென்றதா? இல்லையோ! அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுகமெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு கைத்தலை மேல்வைத் தழுமைந்தருஞ் சுடுகாடுமட்டேபற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே என்ற பட்டினத்தடிகள் பொன்பொழிகள் உண்மை நாடோறும் நம் கண்ணெதிரே நிகழ்ந்து வருகையிற், கல்விகற்றவர் நிலையில்லாத பொருளின் பொருட்டே அதனைப் பயன் படுத்தலுஞ், செல்வமுடையவர் மேலுஞ் செல்வம் பெறுதலையே கருதிப் பிறர்பொருளைப் பலவழியாற் கவர்தலும் எவ்வளவு கொடுமை! எவ்வளவு பேதைமை! ஒருவன் உலகமெல்லாம் பெற்றாலுந் தன் உயிரை இழந்து விடுவனாயின் யாது பயன் என்ற ஏசுமுனிவருரையின் உண்மையை நினைந்து பார்மின்கள்! இப் பிறவியிற் கற்றதும் பொருள் ஈட்டியதும் போலவே ஒவ்வொரு பிறவியிலுஞ் சென்று கற்றலும் பொருள் ஈட்டலுஞ் செய்யவேண்டியரான மக்கள் அவ்விரண்டையும் அடுத்தடுத்துச் செய்தவில் அலுப்புறல் வேண்டாமோ! அவ்விருவகைப் பொருளாலும் அன்பையும் அறிவையும் வளர்த்துப் பிறவியைத் தூய்மை செய்து இறைவனது திருவடிப் பேரின்பத்தைப் பெறாமல் இப் பிறவிவட்டத்தில் ஓயாது கிடந்து சுழலுதாலாற் பயனென்ன! ஆகவே, கல்விகற்றலும் அதனைக் கற்பித்தலும் அதனைப் பயன்படுத்தலும் அன்பு அறிவுகளை வளர்த்தற்குக் கருவியாக முதலிற் பயன்படுத்தி, அதன்பின் தமது வாழ்க்கையின் நலத்திற்குப் பொருள் தேடுதலில் அதனைப் பயன்படுத்துவதே அறிவுடைமையா மென்பதூஉம், அங்ஙனமே செல்வத்தைத் தேடுதலும் அதனைத் தேடுவித்தலும் அதனைப் பயன் படுத்தலுமாகிய முயற்சி களெல்லாங் கல்வியையுங் கற்றார் தொகையையும் பெருக்கி அன்பினை எங்கும் பரவச் செய்தற்கு முதலிற் பயன்படுத்தி, அதன்பின் தமது வாழ்க்கை நலத்திற்குப் பயன்படுத்துவதே அன்புடைமையா மென்பதூஉம் நம் பழந்தமிழ்ச் சைவக் கோட்பாடாதல் பெறப்பட்டது. 17. அறம் ஒன்றே இனி, ஆசிரியர் தொல்காப்பியனார் மூன்றாவதாக நிறுத்திய அறம் என்னும் முடிந்த பொருளைப் பற்றி ஆராய்ந்து அவ்வளவில் இவ்விரிவுரையை முடிப்பாம். இன்பமும் பொருளும் அன்பினையே முதலும் ஈறுமாய்க் கொண்டு தேடப்படுதலும் நுகரப்படுதலும் பயன்படுதலும் வேண்டுமென ஆசிரியர் வற்புறுத்தினாற் போலவே, அறமும் அன்பினையே முதலும் ஈறுமாய்க்கொண்டு ஈட்டப்படுதலும் நுகரப்படுதலுஞ் செயப்படுதலும் வேண்டுமென அவர் வலியுறுத்துகின்றமை மேலெடுத்துக் காட்டிய இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு, அன்பொடு புணர்ந்த ஐந்திணை என்பதனால் நன்கு விளங்காநிற்கும். எனவே, உண்மை யன்பு இன்றி, வெறும் பட்டப்பெயரை நச்சியும் உலகத்தார் தம்மை மீக்கூறுதலை விழைந்தும் ஆற்றும் அறம் நன்மை பயவாமை அறியப்படும். இவர் அறஞ்செய்வதிற் சிறந்தாரென்று அரசினருங் குடிமக்களும் புகழ்ந்து பேசுதலையே நோக்கிநிற்பர், தாம் குறித்த அறத்தைத் தமது கைப்பொருளாலன்றிப் பிறரது பொருளாற் செய்தற்கும் பின்வாங்கார். ‘ï›ntiHk¡fË‹ bghUis mt® f©Ù® áªj¥ ãL§»¥, ãw®bk¢r mwŠ brŒjyhš ahJga‹? என்று அவர் உணரமாட்டாராதலால், அன்பின்றிச் செய்வாரது அறங் கடைத் தேங்காயைத் திருடி வழிப்பிள்ளையார்க்கு உடைப்பதனையே ஒப்பதாய் முடியும். மற்று எல்லா உயிர்களிடத்தும், எல்லா மக்களிடத்தும் நெகிழ்ந்த அன்புடையவர்களோ எவ்வுயிர்க்கும் எவர்க்குந் தீங்குநேராத முறையிற் பெயர் புகழ்களை வேண்டாது அறஞ்செய்வராகலின், அவர் செய்யும் அறமே தமக்கும் பிறர்க்கும் உண்மையிற் பயன்படுவதுடைத்தாம். ஆகவே, அன்பு ஒன்றனையே உயிராகக் கொண்டே நடைபெறும் அறத்தை எடுத்து வற்புறுத்தும் நம் தெய்வ ஆசிரியர், தமது விழுமிய கோட்பாட்டிற்கு மாறுபாடின்றி அவ்வறத்தை ஒன்றாகவே கூறினாரல்லது அதனை இல்லறம், துறவறம் என இரண்டாகப் பகுத்துத், தாம் இயற்றி யருளிய தொல்காப்பியத் தெய்வ முழுமுதல் நூலின் கண் யாண்டும் ஓதிற்றிலர். இம்மை யின்பம் விழைந்து தாம் காதலன்பு பாராட்டிய மனைவி மக்களோ விழைந்து தாம் காதலன்பு பாராட்டிய மனைவி மக்களோ டொருங்கிருந்து நடாத்திய அன்பு வாழ்க்கையும், மறுமையின்பம் விழைந்து மனைவிமக்கள் தமக்குத் தொண்டு செய்ய இம்மைமுயற்சியை விட்டு இறைவன் றிருவருளிற்றமது உணர்வினைத் தோய்வித்திருக்குந் தவ வாழ்க்கையும் ஓர் அறத்தினுள்ளேளே அமைந்த இருவகை நிலைகளாகு மல்லாமல், அவ்விரண்டும் ஒன்றோடொன்று மாறுபட்டனவாகா என்பதே நம் முதலாசிரியர் தொல்காப்பிய னார்க்குக் கருத்தாதல், காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே என்று அவர் அருளிச் செய்த கற்பியற் சூத்திரத்தால் தெற்றென விளங்காநிற்கும். இதன் பொருள் என்னையோவென்றாற், காதலன்பால் துய்த்த காமவின்பம் நிறைந்து கடைக்கொண்ட வாழ்நாள் எல்லையின் நடுக்காலத்தே தமக்குக் காவலாய் அமைந்த தம் புதல்வரொடு கூடியிருந்துந், தாம் அதுகாறுஞ் செய்து போந்த அறத்தை இனித் தாம் செய்யலாகாமையின் தமக்காக அவற்றத்தைச் செய்யுஞ் சுற்றத்தாருடன் அமர்ந்துங், குடும்பத் தலைமகனுந் தலைமகளுஞ் சிறந்ததாகிய தவத்தில் தமதுணர்வினைப் பயிலச்செய்தல் தாம் அதுகாறுஞ் செய்து போந்த காதல் மனைவாழ்க்கையின் பயனாகும் என்பதே அதுவாம். எனவே, காதலன்பிற் சிறந்த கணவனும் மனைவியும் ஒருவரை யொருவர் பிரியாதிருந்ததே தவஞ் செயற்பாலரென்பதூஉம் அப்போது அவர்தம் புதல்வராயினார் அவரது தவவாழ்க்கைக்கு வேண்டுவனவெல்லாந் தேடிக்கொடுத்து அவர்க்குத் துணையாக நிற்கற்பால ரென்பதூஉம், அவர்க்குச் சுற்றத்தவராயுள்ளார் அவர் தவவாழ்க்கையில் அமர்ந்த காலந் தொட்டுச் செய்யாது விட்ட அறங்களை யெல்லாஞ் செய்து கொண்டிருக்கற் பாலரென்பதூஉம் நன்கு பெறப்படுகின்றன அல்லவோ? பாருங்கள் அன்பர்களே! நம் முதலாசிரியர் எடுத்துக்கூறிய நம் தமிழ்முதுமக்களின் மனைவாழ்க்கையும் அதன் முடிவில் நோற்கப்படுவதாகிய அவர் தந் தவவாழ்க்கையும் எவ்வளவு சிறந்தனவாய், இறைவன் வகுத்த அன்பொழுக்கத்திற்குச் சிறிதும் மாறுபடாதனவாய் விளங்கி நிற்கின்றன! பௌத்த சமய சமயங்களும் அவற்றைப் பின்பற்றி எழுந்த ஆரிய மிருதி நூல்களுந் தவவாழ்க்கையைத் துறவுநெறியின்பாற்படுத்து, மனைவி மக்கள் சுற்றம் முதலிய தொடர்புகளை யெல்லாம் முற்ற அறுத்தபின் தவஞ்செயற் பாற்றென்று வலியுறுத்தாநிற்க, நம் செந்தமிழ்த் தனிமுதல் நூலாகிய தொல்காப்பியமோ கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் பிரியாது நின்றே மக்களுஞ் சுற்றமுந் தமது தவத்திற்கு உதவியாய் நிற்பத் தவத்தினை முயலற்பாலர் என அறிவுறுத்துகின்றது. இவ்விருவேறு அறிவுரைகளில் எது சிறந்ததென்பதைச் சிறிது ஆராய்ந்து பார்மின்கள். ஒருவன் தன்வாழ்நாளில் நீண்டகாலம் வரையில் அன்பு பாராட்டி வந்த தன் மனைவி மக்களை அன்பின்றிப் பிரிந்து, பிறரிடும் அறச்சோற்றிற்காக ஊர்ஊர் திரிந்து, ஐயம் ஏற்றுண்டு மரத்தினடியிலும் புறந்திண்ணையிலும் யருந்திக் கிடந்து நோயிலுந் துன்பத்திலு உழல்வதாகிய வடநாட்டினர்தம் துறவுவாழ்க்கை நல்லதோ! தம் உடம்பையும் உயிரையும் அன்பினால் இன்புற வளர்த்த தன் மனைவியையும் அவள்பாற் றோன்றிய அன்புடை மக்களையும் பிரியாதிருந்து, அவர் தனக்கு ஏதுங் குறையில்லாது தொண்டு செய்யத் தானுந் தன்மனையாளுந் தவத்தின் அமர்வதாகிய தென்னாட்டினர்தந் தவவாழ்க்கை நல்லதோ! பசி நேர்ந்தபோது உணவும் பெறுதல் அரிதாதலின் தன்னுடம்பே தனக்குஞ் சுமையாகத், தாம் வருந்தித் தேடிய உணவிலிருந்து பிறர் தனக்கு உணவளிக்க வேண்டியிருத்தலிற் பிறர்க்குஞ் சுமையாகத், தன் மனைவி மக்களை மிடியிலுந் துன்பத்திலும் உழலவிட்டுத் தானும் உழலுந் துறவுநிலை நல்லதோ! தான் தேடிய பொருள்கொண்டு தன்புதல்வரும் பெருக்கிய செல்வத்தால் ஊணும் உடையும் பிறநலங்களும் பெற்றுத் தானுந் தன் மனைவியுந் துன்பின்றி நோற்குந் தவநிலை நல்லதோ! நீண்ட நாள் தன்னோடு அன்பினால் உயிர்வாழ்ந்தார் தன்னைப் பிரிந்தமையால் தனித்துயர் உழக்கத் தான் மட்டும் மறுமை யின்பம் நாடிப் புகுவதாகிய துறவு நிலை நல்லதோ! அன்றித் தன்னொடு நீள அன்புற்று உயிர்வாழ்ந்தார் தாமுந் தன்னைப் போலவே திருவருளின்பத்தை நாடித் தன்னோடுடனிருந்து நோற்பதாகிய தவநிலை நல்லதோ! என்று பகுத்து நடுநின்று ஆராய்வார்க்கு, வடவர் மேற்கொண்ட துறவு வாழ்க்கையினுந் தமிழர் மேற்கொண்ட தவவாழ்க்கையே பலவாற்றானுஞ் சிறந்ததென்பது இனிது புலனாம். மேலும், மனைவிமக்களையெல்லாம் அன்பின்றிப் பிரிந்து தவமுயற்சியில் நிற்பதாகிய துறவுநிலை, காண்பவர்க்கு வெருட்சியினை விளைவிப்பதன்றி, அந்நிலையில் நிற்பார்க்குக் சிறிதும் நலந்தருவதன்று. ஏனென்றால், ஊனாற் சமைந்த இவ்வுடம்பு உள்ளவரையில், அதற்கு உணவு இடுதல் வேண்டும்; உணவினால் உடம்பு தன்னிலையில் நிற்கும் வரையில் ஆண்டில் முதிர்ந்தார்க்கும் புணர்ச்சிவேட்கை யுண்டாதலை யாண்டுங் காண்கின்றேம். பலவாற்றாற் பட்டினி கிடந்து உடம்பை வாட்டிய குசேலமுனிவருந் தம்மனையாளைக்கூடி இருபத்தேழு பிள்ளைகளைப் பெற்றனரென்றால், உலக வாழ்க்கையைத் துவரத்துறந்து பெருந்தவத்தில் வைகிய விசுவாமித்திர முனிவரும் மேனகை என்னும் அரம்பை மாதைப் பன்னிரண்டு ஆண்டுகள் கூடிக்கிடந்து சகுந்தலையைப் பெற்றனரென்றால், அவர்போல் அத்தனைக் கடுந்துறவில் நிற்கமாட்டாத எளிய மக்கள், மனைவி மக்களை முற்றத்துறந்து முழுத்தவ வாழ்க்கையில் இழுக்கின்றி நிற்கமாட்டுவரோ சொல்லுங்கள்! முழுத்துறவினை வலியுறுத்திவந்த கௌதம சாக்கியர் காலத்திலேயே அவரால் துறவு புகுந்த பிட்சுக்களும் பிட்சுணிகளுந் தத்தம் நிலை குலைந்து காம இன்பத்திற் கிடந்துழன்றன ரெனவும், உரோமாபுரியில் அங்ஙனமே துறவுநிலையிலிருந்த கத்தோலிக் கிறித்துவக் குருமார்களுங் கன்னிகளுந் தம் நிலைவழுவி ஒழுகினரெனவும் பண்டை நிகழ்ச்சிகளை நூல்களின் வாயிலாக நன்கறிவதோடு, இஞ்ஞான்றுள்ள துறவு மடங்கள் பெரும்பாலானவற்றிலும் அத்தகைய சீர்கேடான நிகழ்ச்சிகள் தொடர்பாக நடைபெற்று வருதலையும் உணர்ந்து வருகின்றனம் அல்லமோ? இத்தனைச் சீர்கேடும், இழுக்கிய நடையும் எதனால் வந்தன? உலக இயற்கையும் மக்களியற்கையும் இவற்றை வகுத்த இறைவன் திருவுளக் குறிப்பும் நன்குணர்ந்த நம் பேராசிரியராகிய தொல்காப்பியார் அறிவுறுத்திய தவநிலையினைத் தழுவாமல், உலக இயற்கைக்கும் மக்களியற்கைக்கும் இவற்றைத் தோற்றுவித்த ஆண்டவன் திருவருட் குறிப்புக்கும் மாறானதொரு துறவு நிலையைப் பௌத்த சமண மதங்கள் கூறியபடி நம்மனோர் தழுவிய நடக்கப் புகுந்தமையாலன்றோ? மனைவாழ்க்கையில் இருந்தக்கால் தாம் செய்து போந்த முப்பத்திரண்டு அறங்களையும் தம் உரிமைச் சுற்றத்தார் செய்து போதருமாறு ஒழுங்குசெய்து வைத்துத், தம்புதல்வர் தமக்கு வேண்டியவைகளைச் செய்துவர, உலகநன்மையையுந் தமது நன்மையையும் நாடி இறைவனை உளங்n குழைந்துருகி வழுத்துவதாகிய தவநிலையைக் கணவனும் மனைவியும் ஒருங்கிருந்து செயற்பாலரென நம் பேராசியர் தொல்காப்பியனார் உரைத்த படி நம்மனோர் செய்துவந்தனராயின் மேற்சொன்ன தீமைகள் வாராவன்றே. 18. பண்டைத் தவவாழ்க்கை இனி, ஆசிரியர் தொல்காப்பியனார் காட்டிய தவநெறியிலேயே வடநாடு தென்னாடுகளிற் பண்டைக்காலத்திருந்த முனிவர்கள் எல்லாரும் நிலைநின்றனர் என்பதற்கு, வட நாட்டு முனிவராகிய மரீசி, அத்தரி, அங்கீரசர், புலகர், கிரது, புலத்தியர், வசிட்டர் முதலியோரெல்லாந் தத்தம் மனைவி மாரோடிருந்து தவஞ் செய்தமையுந் தமிழ்நாட்டிலிருந்த பாலைக் கௌதமனார், திருவள்ளுவனார், சுந்தரர் முதலாயினரும் பெரியபுராணத்துச் சொல்லப்பட்ட சைவ நாயன்மார் பலருந் தத்தம் மனைவியரோடுமிருந்தே தவமியற்றிச் சிவபிரான் திருவடிப் பேரின்பத்தை எய்தினமையுமே சான்றாம். இது குறித்தன்றோ தெய்வத் திருவள்ளுவனாரும், அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று என்னுந் திருக்குறளால் அறவாழ்க்கை எனப்படுவது இல்வாழ்க்கையேயா மென்றும், அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற் போஓய்ப் பெறுவ தெவன் என்னுந் திருக்குறளால் துறவுநிலை புகுதல் பயன் இன்றா மென்றுந் தொல்லாசிரியர் வழியே கடைப்பிடித்து ஓதியதோடு, துறவு என்பது நெஞ்சினாற்றுறத்தலே யாமெனவும் யாம் செய்தேன் என இறுமாந்துரைக்கும் அகப்பற்றும், எனது பொருள் எனச் சொல்லும் புறப்பற்றும் ஒருங்கறுதலே யாமெனவும் வற்புறுத்துவாராய், நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல் என்றும், யான்எனது என்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும் என்றும் அருளிச் செய்வாராயினர். 19. துறவு அறம் ஆகாமை மேலும், இல்வாழ்க்கை யொன்றுமே அறனென வைத்துச் சொல்லப் படுதற்கு உரித்தாவ தன்றித், துறவு வாழ்க்கை அறம் எனப்படுதற்கு உரிமை யுடைத்தன்று; ஏனெனிற் பிறவுயிரின் துயர்களைவதூஉம், மக்கள் பிறரின் துன்பந் துடைப்பதூஉம் ஆகிய செயலை உண்மையாற் செய்வாரது நல்வினையே அறம் எனப்படும்; இவ்வாறு செய்யப்படும் அறம் பழைய நாளில் முப்பத்திரண்டு வகையாகச் செய்யப்பட்டு வந்த தென்பது, ஆதுலர்க்குச் சாலை, ஓதுவார்க்கு உணவு அறுசமயத் தோர்க்கு உண்டி, ஆவிற்கு வாயுறை சிறைச்சோறு, ஐயந், தின்பண்டம், மகச்சோறு மகப்பெறுவித்தல், மகவளர்த்தல், மகப்பால் அறவைப் பிணஞ்சுடல், அறவைத் தூரியம், வண்ணார், நாவிதர், வதுவையாற்றல், நோய் மருந்து, கண்ணாடி, காதோலை, கண்மருந்து தலைக்கெண்ணெய், பெண்போகஞ், சுண்ணம், பிறர்துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தர், மடந், தடம், கா, ஆவுரிஞ்சு நடுதறி, ஏறுவிடுத்தல், விலைகொடுத்துக் கொலையுயிர் மீட்டல் விலக்குணா இச்செயல் முப்பத்திரண்டற மென்ப என்னும் பழைய திவாகரநிகண்டால் தெளியப்படும் இங்ஙனமாக முப்பத் திரண்டு அறங்களைச் செய்யும் நிலை இல்லற வாழ்க்கைக்கு வாய்வதே யன்றித் துறவுக்கு வாயாது; ஆகவே, துறவினை அறம் என்னுஞ் சொல்லொடு புணர்த்துத் துறவறம் என வழங்குதலுஞ் சாலாது; அதனாலன்றோ தெய்வத் தொல்காப்பியர் துறவறம் என்னுஞ் சொற்றொடரைத் தமது விழுமிய முழுமுதல்நூலுள் யாண்டுமே வழங்காராயினர். மற்றுத் திருவள்ளுவரோ தமது கால வழக்கினைத் தழீஇத் துறவறம் என்பதொன்று கூறினாராயினும், அவ்வியலில் இம்முப்பத்திரண்டறங்களுள் ஏதொன்றும் எடுத்துரையாது, புலாலுண்ணாமை, கள்ளாமை, வெகுளாமை, இன்னாசெய்யாமை, கொல்லாமை, பொய்யாமை, முதலாகச் செய்வதில்லாச் செயல்களை அறங்களாக எதிர்மறை முகத்தாற் கூறியருளினார். எனவே, அவர்கூறும் வகையிலிருந்துந் துறவினை அறம் எனச் சொல்லுதற்கு ஏதும் இடம் இல்லாமை நன்கு விளங்குகின்ற தன்றோ? அதுவேயுமின்றி, அவர் மனைவி மக்களைத் துறந்து தனியிருந்து நோற்பதே தவம் என்று திருக்குறளில் ஓரிடத்தாயினுங் கூறாமையினை உற்றுநோக்கும்வழி, ஆசிரியர் தொல்காப்பியனார் மொழிந்த வாறே மனைவியுந் தானுமாயிருந்து அகப்பற்றுப் புறப்பற்று இன்றித் தூய அன்பின் வழிநின்று நோற்பதாகிய பண்டைத் தவநிலையே அவர்க்கும் உடம்பாடென்பது உய்த்துணரக் கிடக்கின்றது. இதுகாறும் அறம் என்பதைப்பற்றி ஆராய்ந்த அளவில், அஃது இல்லறம் ஒன்றற்கே உரித்தாய்க், காதலன் பின்வழி நிகழும் மனைவாழ்க்கையின் நடுவெல்லையில் நோற்கப்படுவதாகிய தவநிலையினையுந் தன்கண் அடக்கி நிற்கும் என்பதூஉம், முபபத்திரண்டு வகையாகச் செய்யப்படும் அறங்களுள் ஏதுஞ் செய்யப்படுவதின்றி எதிர்மறை வகையாற் செயலின்றி நினைவளவில் நிற்பனவாகிய கொல்லாமை பொய்யாமை கள்ளாமை முதலியவற்றால் நிலைப்படுவதாகிய தவநிலையினைத் துறவறம் என்றல் ஆசிரியர் தொல்காப்பிய னார்க்கு உடன்பா டன்றென்பதூஉம், இப்பேராசிரியர் அறிவுறுத்திய அறத்தின் வழியொழுகியே திருவள்ளுவரும் நம் சைவ சமயச் சான்றோர்களும் இறைவன் திருவருட்பேற்றினை எய்தின ரென்பதூஉம் பௌத்த சமணமத வழிநிகழும் இஞ்ஞான்றைப் போலித் துறவொழுக்கம் பல்பெருந் தீங்கு கட்கும் இடனாய் நிற்றலின் அதனை யொழித்து மனை வாழ்க்கையின்பாற் பட்ட தவநிலையில் நின்று தமக்கும் பிறர்க்கும் பயன்பெற்றொழுகிச் சிவபிரான் திருவடிக்குரிய ராதலே நம் சைவசமயப் பெரியார் தங் கோட்பாடா மென்பதூஉம் பெறப்பட்டன. இனி, உலக முயற்சியை விட்டுத் தவநிலைக்கண் நிற்றல் நம்மனோர் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத கடமையாம். ஏனென்றால், இவ்வுலகியல் வாழ்க்கை நீடு நிற்பதன்றாய்ச் சடுதியில் எதிர்பாராதே மறைந்தொழிவதாகலானும், இனி நாம் சொல்லும் மறுமை யுலகத்திற்கு இங்கே துணைவராயிருந்த மனைவி மக்கள் சுற்றத்தார் நண்பர் என்னும் எவரும் நம்மோடு உடன்வந்து துணையாய் நிற்க மாட்டுவார் அல்லராகலானும், இம்மைக்கண் நம்மை இவ்வுடம்பில் வருவித்து வைத்துப் பலவகையின்பங்களையும் நமக்கு ஊட்டி அதன்பின் நம்மை அவ்வுடம்பினின்றும் பிரித்து வேறோர் உலகத்தில் வேறோர் உடம்பிற் புகுத்துவானாகிய இறைவன் ஒருவனே இங்கும் அங்கும் எங்குந் துணையாக நிற்பனாகலானும், இப்பிறவியில் நாம் நுகர்ந்த இன்பங்கள் எல்லாம் இன்பம் இத்தன்மைய தென்று நமக்கு உணர்த்தும் அவ்வளவுக்கே பயன்படுவனவன்றி வேறு துன்பக் கலப்பில்லாமல் நீள இருந்து நம்மை மகிழ்விக்க மாட்டாவாகலானும், நிலைபேறில்லாப் பொருள்கள் நிலை பேறில்லாச் சிற்றின்பத்தையே தரக்காண்டலால் நிலையான இன்பத்தைப் பெறவேண்டுவார் எல்லாரும் நிலை மாறுதலன்றி ஒரு தன்மையனாய் விளங்கும் இறைவன்பாலன்றிப் பேரின்பத்தை நுகர்தல் ஏலாமையானும் நம் ஆசிரியன்மார், பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானும் நில்லா உலகம் புல்லிய நெறித்தே (தொல்காப்பியர்) என்றும், ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப் பெற்ற பேருஞ் சதமல்ல பெண்டீர் சதமல்ல பிள்ளைகளுஞ் சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே யாருஞ் சதமல்ல நின்றாள் சதங்கச்சி யேகம்பனே (பட்டினத்தடிகள்) என்றும், தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்றேன் உண்ணாதே நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தோறும் எப்போதும் அனைத்தெலும்பு உள்நெக ஆனந்தத் தேன்சொரியுங் குனிப்புடை யானுக்கே சென்றூதாய், கோத்தும்பீ. (மாணிக்கவாசகர்) என்றும் அருளிச் செய்து எல்லா வுணர்வுகளும் நமக்கு வாய்த் திருக்கும் இவ் வரிய மக்கட் பிறவியிலே நாம் ஏமாந்து இறந்தொழியாமல், நமக்கு ஒப்பற்ற துணைவனாயிருக்கும் இறைவனை இறுகப் பற்றும்படி நம்பால் வைத்த இரக்கத்தால் நமக்கு அறிவு தெருட்டி யிருக்கின்றார். இவர் தம் அருளுரைகளைக் கேளாமல், நான் என்று ஒரு பொருளில்லை, என்னின் வேறான உயிர்களும் இல்லை, இறைவன் உண்டென்பதும் பொய், வருவதும் போவதும் நிற்பது மாய உலக நிகழ்ச்சிகளெல்லாம் இயற்கையே என்று பாழ்ங்கொள்கைகளை வாய்க்கு வந்தபடி பேசி நம்மனோர் இவ் வரியவாணாளை வீணாளாக்குவார்களாயின், உண்மைக்கு மாறுபேசி இறைவனைத் துணையாகப் பற்றாமையின், இறந்தொழிந்தபின், அடங்கா நாவினராகிய அவர்கள் துணையின்றி இருளுலகத்திற் சென்று பெருந்துன்பம் உழப்பர்கள்; இது திருவள்ளுவ நாயனார், அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்றமையாலும் உணரப்படும். கடவுளை நம்பாதவர்கள், கடவுளின் பெருந்துணையை நாடாதவர்கள், இறந்தபின் இருளுலகத்திற் சென்று துன்புறுகின்றார்கள் என்பதனை, அகக்கண் திறக்கப் பெற்று மறுமை யுலகங்களின் நிகழ்ச்சிகளைக் காணவல்ல ஆங்கில ஆசிரியரான டெயிண்டன் மோச (Stainton Moses, M.S.) என்பவர் தக்கார் பலர் முன்னிலையில் ஆராய்ந்து காட்டிய மெய்யுரைகளால் இனிது விளக்கி யிருக்கின்றார். 20. முப்பொருள் உண்மை ஆகவே, உலகத்தியல்பையும், உயிர்களி னியல்பையும், இறைவனி யல்பையும் உள்ளவாறே யுணரும் மெய்யுணர்வு வாய்த்தாலன்றி, இவற்றை யாராய்ந்து பார்த்தற்கு ஏற்ற பகுத்துணர்வு வாய்ந்த மக்கள் தவத்தைச் செவ்வனே செய்து வீடுபேற்றை எய்துதல் இயலாது; இப்பிறவித் துன்பத்தை நீக்குதலும் ஆகாது. இதனாலன்றோ திருவள்ளுவர், ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து என்றும், பொருள்அல் லவற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு என்றும் அருளிச் செய்தார். ஆதலால், நம் முதலாசிரியராகிய தொல்காப்பியனாரும், அவர் காலந்தொட்டு வந்த நம் ஆசிரியர் மற்றையோரும் அம்மூன்று பொருள்களையும் ஆராய்ந்து கண்ட முடிபுகளை ஒரு சிறிது எடுத்துக்காட்டி அவ்வளவில் இவ் விரிவுரையை முடிப்பாம். 21. உலகின் உண்மை முதலில் இவ்வுலகத்தினியல்பு இன்னதென்பது ஆராயற் பாற்று, நம் முதலாசிரியர் தொல்காப்பியனார், நிலந்தீ நீர்வளி விசும்போடு ஐந்துங் கலந்த மயக்கம் உலக மாதலின் (மரபியல்) என்றும் கூறுதலின், நிலமும் நீருந் தீயுங் காற்றும் வானும் என்னும் ஐம்பெரும் பொருள்களின் கலவையே உலகம் என்பது பெற்றாம். பிற்காலத்திற் பௌத்தரில் ஒருசாரார் முன் நேரத்தில் நின்ற பொருள் பின் நேரத்தில் இல்லையாம். எனவும், மற்றும் ஒருசாரார் முயற்கொம்பும் ஆகாயத் தாமரையும் போல் அஃது இல்பொருட் டோற்றமாம் எனவும், மாயாவாத வேதாந்தத்தார் அது பிரமப் பொருளிற் றோன்றும், இல்பொருண் மாயையாமெனவும் உலகத்தின் இயல்பைப்பற்றிக் கூறுங் கொள்கைகள் உண்மைக்கு மாறான கொள்கைகளாயிருத்தல் போலாது, ஐம்பெருமெய்ப்பொருள்களின் கலவையே உலகமாம் எனக் கூறுந் தொல்காப்பியனாரது கோட்பாடு நாடோறும் உலகியலிற் பயிலும் நமது அறிவுக்கு எவ்வளவு பொருத்தமாயிருக்கின்றது! உலகத்துப் பொருள்களெல்லாம் அடுத்தடுத்து உருமாறி வருவனவே யல்லாமல் அவை இல்லாத வெறும் பாழாதல் எஞ்ஞான்றும் இல்லையெனப் பல வியத்தகு ஆராய்ச்சிகளால் ஆராய்ந்துரைக்கும் இஞ்ஞான்றை இயற்கைப் பொருணுலார் தம் மெய்யுரையும் இற்றைக்கு ஐயாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னிருந்த தொல்காப்பியனா ருண்மையுரையும், ஒருங்கொத்து நிற்றல் பெரிதும் வியக்கற்பால தன்றோ? சைவசித்தாந்த முதல் நூல் ஆசிரியரான மெய்கண்டதேவர் உள்ளதே தோற்ற உயிர் அணையும் என்று தொல்காப்பியனார் கருத்தையே யொட்டிக் கூறுதலும் நினைவிற் பதிக்கற்பாற்று. 22. உயிரின் உண்மை இனி, இவ்வுலகத்துள்ள உயிர்களையெல்லாம் ஓரறி வுடையன, ஈரறிவுடையன, மூவறிவுடையன, நாலறிவுடையன, ஐயறிவுடையன, ஆறறிவுடையன என்று அறுவகையாகப் பகுத்து, ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனனே நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுமாற்றாற், சிற்றறிவுடைய உயிர்கள் தீவினைக்கு ஏதுவான மலத்தால் மறைப்புண்டு கிடந்து, இறைவனாற் பிறவிக்கு வருங்கால் முதலில் தொடுத லுணர்வே தோன்றுதற்கு இடந்தரும் புல்லும் மரனுமாய்ப் பிறந்தும், அதன்பிற் சிறிதறிவு விளங்கித் தொடுதலுணர்வுஞ் சுவையுணர்வும் விளங்குதற் கேற்ற நத்தை கிளிஞ்சில் முதலியனவாய்ப் பிறந்தும், அதன் பிற் சிறிதறிவு மிகுந்து அவ்விரண்டொடு மூக்குணர்வுந் தோன்றுதற்கேற்ற கறையான் எறும்பு முதலியனவாய்ப் பிறந்தும், அதன்பின் மேலும் அறிவு மிக்கு அம்மூன்றொடு கண்ணறிவுந் தோன்றற் கேற்ற நண்டு தும்பி முதலியன வாய்ப் பிறந்தும், அதன்பின் இன்னும் அறிவு மிகுந்து அவற்றொடு செவியறிவும் புலனாதற்கேற்ற விலங்குகளும் மாக்களுமாய்ப் பிறந்தும், அதன்பின் அறிவு விளக்கம் மிக விரிதலின் அவ்வைந்துடன் மனவறிவும் விளங்குதற்கேற்ற ஆறறிவுடைய மக்களாய்ப் பிறந்தும் இங்ஙனம் மலந்தேயும் நிலைக்குத் தகச் சிற்றுயிர்கள் முறைமுறையே அறிவிலும் பிறவியிலும் மேலேறி வருதல் தெளியப்படும். இங்ஙனமே மாணிக்கவாசகப் பெருமானும், புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்தினைத்தேன் எம்பெருமான் என்று கூறுதல் காண்க. எனவே மலந்தேயும் அளவுக் கேற்ப உயிர்கள் மேன்மேற் பிறவியிற் சேரு மென்பதும், அதனால் ஓருயிர்க்குப் பல பிறவிகள் உளவா மென்பதும், பிறவிகடோறும் ஈட்டப்படும் வினைகளே மேன்மேற் பிறவிகளை எடுத்தற்கு ஏதுவாமென்பதும் ஆசிரியர் தொல்காப்பினாருக்குக் கருத்தாதல் போலவே, திருவள்ளுவனார்க்குஞ் சைவசமயாசிரியர், சந்தானசிரியர்க்குங் கருத்தாதல் காணப்படும். பிறவிகள் பல உளவாதலும் உயிர்கள் அப்பிறவிகளில் மாறிமாறிச் செல்லுதலும், அப்பிறவிக்கு ஏதுவான இருவினைகளும், அவ்வினைக் கேதுவான ஆணவ மலமும் பழைய ஆரிய நூலாகிய இருக்கு வேதத்திற் காணப்படாமையின், இக்கோட் பாடுகளெல்லாம் நம் பண்டைத் தமிழ்மக்கள் இறைவன் திருவரு ளுதவிகொண்டு தாமாகவே கண்டறிந்தன வாகுமென்பதை யுணர்ந்து அத் தமிழ் ஆசிரியர் வழிவந்த நாம் பெரிதும் மகிழக்கட வோமாக. 23. கடவுள் உண்மை இவ்வாறு பிறவிகடோறுஞ் சிறிது சிறிதாய் அறிவு விளங்கப் பெறுஞ் சிற்றுயிர்கள் போலாது இயல்பாகவே விளங்கப் பெறும் பேரறிவுடையனாகிய இறைவன் ஒருவன், இவ்வுயிர்கள் வேறாய் உளன் என்பதூஉம், அவன் அவ்வாறு இயல்பாகவே விளங்கிய அறிவினனாய் நிற்பது உயிர்களின் வினைக்கு ஏதுவாகிய மலத்தாற் பற்றப் படானாய் அவன் பெருந்தூய்மையும் நுட்பமும் உடையனாய் இருத்தலே காரணமாய் என்பதூஉம் தெற்றென விளங்க ஆசிரியர் தொல்காப்பியனார், வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூ லாகும் என்று அருளிச் செய்தமை பெரிதும் நினைவிற் பதிக்கற்பாற்று. சிற்றுயிர்களும் இறைவனும் ஒன்றே என்றும், அற்றன்று சிற்றுயிர்கள் பொய் இறைவனே மெய்யென்றும், அதுவு மன்று இறைவன் ஒருவனே குடங்கடோறுங் காணப்படுந் திங்களின் சாயல்போல் உடம்புக டோறும் உயிர்களாய்க் காணப்படுகின்றனன் என்றும், அதுவும் பொருந்தாது நெருப்பினின்று பொறிகள் தெறித்தாற் போல் இறைவனிலிருந்தே சிற்றுயிர்கள் உண்டாயின வென்றும், அதுவும் பொருத்தமின்றி ஒன்றுமில்லா வெறும் பாழே உயிரும் இறைவனுமாமென்றும், பிற்காலத்தாரிற் சமயத்தார் பற்பலரும் இறைவனியல்பையும் உயிரின் இயல்பையும் உலகவழக்கோடும் ஆன்றோர் வழக்கோடும் ஒட்டிய வரையறுத்துணர மாட்டாது பெரிது மயங்கிக் கூக்குரலிட்டுத் தம்மிலே கலாம் விளைத்து நிற்ப, இற்றைக்கு ஐயாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னரேயே உயிரின் தன்மையும் இறைவன் தன்மையும் இத்துணைப் பொருத்தமாக வரையறுத்து நமக்கு அறிவுவிளக்கிய ஆசிரியர் தொல்காப்பியனார் தம் அஃகியகன்ற அறிவின் திறத்தை எங்ஙனம் புகழவல்லேம்! நமக்கு அவற்றை நன்கு விளங்க வைத்து அவர் நமக்குச் செய்யாமற் செய்த பேருதவிக்கு எங்ஙனம் அவர்க்கு நன்றி செலுத்த வல்லேம்! தொல்காப்பியனார் கூறியவாறே திருவள்ளுவரும் இறைவனை வாலறிவன் அஃதாவது விளங்கிய அல்லது தூய அறிவினன் என்று கூறுதலும் நினைவு கூரற்பாற்று. இனி, இச்சூத்திரத்தில் இறைவன் மக்களுக்கு மெய்யுணர்வு தோற்றுவித்தற்பொருட்டு அவர்மேற்சென்ற அருளிரக்கத்தால் முதல்நூல் அருளிச் செய்தானென்று ஆசிரியர் உரைத்தலால் இறைவன் பேரிரக்க முடையன் என்பதூஉம், அவன் முற்காலத்தே தெய்வத் தமிழ்மொழியின் கண் முதல் நூல் அருளிச் செய்தா னென்பதூஉம் இனிது பெறப்படும். இங்ஙனம் இறைவன் தமிழ்மொழி யில் முதல் நூல் அருளிச் செய்தமையாலன்றோ மற்றை மக்கட் பிரிவினரெல்லாம் முப்பொருளுண்மை அறியாராய் மயங்கிநிற்பத் தமிழ் மக்கள் மட்டும் பண்டுதொட்டு இன்று காறும் அவ்வுண்மைகளைத் தெளிய அறிந்து தலைசிறந்து நிற்கின்றார். இங்ஙனம் பண்டைநாளில் இறைவன் தமிழின்கண் முதல்நூல் அருளிச் செய்து அறம் பொருள் இன்ப வீட்டின் இயல்புகளை விளக்கினமை, அருந்தவர்க்கு ஆலின்கீழ் அறமுதலா நான்கினையும் இருந்தவர்க்கு அருளுமது எனக்கறிய இயம்பேடீ அருந்தவர்க்கு அறமுதல்நான்கு அன்றருளிச் செய்திலனேற் றிருந்தவர்க்கு உலகியற்கை தெரியாகாண் சாழலோ என்று மாணிக்கவாசகப் பெருமானும், ஏனைச் சைவ சமயாசிரியருங் கூறுமாற்றாற் செவ்வனே புலனாம். அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கனையும் உணர்த்துதல் பற்றி இறைவன் அருளிச் செய்த தமிழ்நூல் நான்மறையெனவும் வழங்கப்படலாயிற்று. இனி, இத்துணை இரக்கமுடையனாகிய இறைவன் சிற்றுயிர்களாகிய நமக்கு அணுக்கனாய் நின்று நாம் செய்யும் வழிபாடுகளை ஏன்று கொள்ளும் உண்மை, கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே என்னுஞ் சூத்திரத்தால் நம் தெய்வ முதலாசிரியர் தொல்காப்பியனார் நன்கு விளக்கியிருக்கின்றார். அதன் நுட்பமும், இறைவன் ஒருவனே முருகன், பிள்ளையார், திருமால், சிவபிரான் என நிற்றலும், இவைபற்றி எழுந்த புராணகதைகளுட் பொருந்துவன பொருந்தாதனவும் மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் எமது விரிந்த நூலிலும், இப்போது யாம் வெளியிட்டிருக்கும் கடவுளுக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா என்னும் எமது நூலிலுங் கண்டுகொள்க. அவையெல்லாம் இப்போது விரிக்கிற் பெருகும். இதுகாறும் விளக்கியதுகொண்டு, பல்லாயிர ஆண்டுகட்கு முன்னமே நம் முதலாசிரியர் தொல்காப்பியனார் அறிவுறுத்திய விழுமிய கொள்கைகளே நம் சைவசமயக்கோட்பாடுகளாக இன்று காறும் நிலவி வருதல் தெற்றென விளங்கா நிற்கும். ஓம் சிவம். தலைமைப் பேருரைமேல் நிகழ்ந்த சில தடைகளுக்கு விடை 1. முகவுரை திருப்பாதிரிப்புலியூரிற் கூடிய சைவர் மாநாட்டில்யாம் அவைத்தலைவராயிருந்து நிகழ்த்திய தலைமைப் பேருரைக்கட் போந்த சில கருத்துக்களுக்கு மறுப்பாகத் தலைமைப் பேருரை யாராய்ச்சி என்னும் ஒரு கட்டுரை திரு. பொ. முத்தையா பிள்ளை என்பவரால் எழுதப்பட்டுச், சித்தாந்தம் என்னும் திங்கள் தாளிலும் சிவநேசன், என்னும் கிழமைத் தாளிலும் வெளிப்படுத்தப்பட்டது. பழந்தமிழ் நூல்களிலுந், தமிழ்ச்சைவ நூல்களிலும் ஆழ்ந்து நிறைந்த கல்விகேள்விக ளுடையார் எமது தலைமைப் பேருரை யினையும் அதன்மேலெழுந்த மறுப்பினையும் நடுநின்று ஒத்து நோக்குவார்களாயின், அவர்கட்கு நமது தலைமைப் பேருரையின் பொருள்கள் ஆசிரியர் தொல்காப்பியனார் முதல்வந்த நம்பண்டைத் செந்தமிழ்ச் சான்றோர்களாற் கைக்கொள்ளப்பட்டு, நம் தமிழ்நாட்டவரை அன்பிலும் ஒற்றுமையிலும் இன்புற்று வாழச் செய்து வழங்கியவைக ளாதலும், அதற்கு மறுப்பாய் எழுந்த பொருள்கள் பண்டிருந்த நம் தமிழ்நாட்டவரால் ஒரு சிறிதுங் கைக் கொள்ளப்படாமற், பின்வந்து குடியேறிய ஆரியர் தம்மைப் பலவகையாலும் உயர்த்தி நம் தமிழ் மக்களைப் பலவகையாலுந் தாழ்த்தி அவர்தம் வாழ்க்கையினைச் சீர்குலைத்தற் பொருட்டுக் கட்டிய சாதி வேற்றுமையும் புராணப் பொய்யுரையும் என்னும் மயக்கில் வீழ்ந்து தமக்கென அறிவிலரான போலிச்சைவரும் அவர்வழி நிற்பாருங் கைக்கொண்டு, மேலும் மேலும் நந் தமிழ்நாட்டைப் பாழ்படுத்துவனவாதலும் நன்கு விளங்காநிற்கும். அவ்வாறு ஆழ்ந்து நிரம்பிய கல்வியில்லாதார், குறுகிய நோக்கத் தாலுஞ் சாதிச் செருக்காலும் எழுதப்பட்ட அம்மறுப்பின் பொய் பொருள் கண்டு மயங்காமைப்பொருட்டு, அம் மறுப்பின்கட் போந்தவற்றை ஈண்டெடுத்துக் காட்டி அவை தீயவாதலை விளக்குவாம். 2. காதலுஞ் சாதியும் காதலன்புடையார்க்கு அக்காதல் அன்பின்வழியே மனஞ் செல்லுமல்லாமல், மனத்தின் வழியே காதல் செல்லாமை ஆன்றோர் செய்யுள் வழக்கினுள்ளும் உலக வழக்கினுள்ளும் வைத்துச் செவ்வனே அறியக்கிடந்த தொன்றாம். காதலென்பது ஒருவர் ஒருவரை இன்றியமையாராய் விழைந்து நிற்கும் பெருவேட்கையாய், எல்லா உணர்வினையும் நீக்கித் தானேயாய் நாண்வழிக் காசுபோலவும் நீர்வழி மிதவைபோலவும் பான்மை வழியோடி இருவரையும் புணர்விக்கும் திறத்தை தென்பது ஆசிரியர் தெய்வப் புலமை நக்கீரனார் இறையனராகப் பொருளுரையில் விளக்கியவாற்றால் நன்கு விளங்கும். இவ்வுண்மை எமது தலைமைப் பேருரையில் எடுத்துக் காட்டப்பட்ட பரிபாடற் செய்யுளிற் போந்த காதற் காமம் காமத்திற் சிறந்தது என்பதனாலும் நன்கு புலனாம். இவையெல்லாம் நல்லாசிரியரை அடுத்து உணரும் பேறு வாயாத மறுப்புரைகாரர், மனஞ் சென்றவாறு சென்று துய்ப்பதே காதலின்பமெனக் கரைந்தார். மனஞ் சென்றவாறெல்லாஞ் சென்று துய்ப்பது இழிந்த காம இன்பமே யாமென்பதும், அவ்விழிந்த காமத்தினையே ஆன்றோர் களெல்லாரும் வழுவெனக் கொண்டாரென்பதும் அம் மறுப்புரைக்காரர் உணரார் கொல்லோ! விழுப்பமுந் தூய்மையும் வாய்ந்த காதலன்பின் வயப்பட்டார் இருவர் தம் முன் ஒருவரை யொருவர் உயிர்போல் நினைந்துருகி ஒழுகுந் தன்மை யராதலின் அவர்மனம் அவர்தங் காதலன்பின் கீழடங்கிநின்று பிறர்பாற் செல்லாதாகலின் காதலன் புடையார்க்கு அவர்தம் மனம் அடங்காதோடிக் காமத் துறையிற் படிதல் சிறிதுமே இல்லையென்று அவர் உணர்வாராக. மற்றுக், காமவேட்கை யுடையார்க்கோ அவரது மனம் அவர்வழி அடங்கி நில்லாது பலரையும் நச்சி நச்சிக் காமத்துறையில் வீழ்ந்து மாழ்கு மாதலின், மனத்தின் வழிச் செல்வது காமமேயன்றிக் காதலன்றென்பது இனியாயினும் அவர் பண்டைத் தமிழ் நூல்களைப் பயின்று உணர்வாராக! இனிக், காதலன் பின் நுகர்ச்சிக்கு வகுப்பு வேற்றுமை பெரிதுந் தடைசெய்வது என்னும் உண்மையை இவர் ஏளனஞ்செய்கின்றார். இவர் இகழ்ந்துரையாத வெறுங்காம நுகர்ச்சியிலாவது வகுப்பு வேற்றுமை தடைசெய்து நிற்கின்றதா? என்பதைச் சிறிது உற்றுநோக்குதல் வேண்டும். தம்மை அழுத்தந்திருத்தம் வாய்ந்த சைவரெனக் கருதிக்கொள்வாரில் எத்தனையோபேர் தஞ் சாதி வரம்பு கடந்து மறைவிலே குறத்திகளை மருவுகின்றன ரென்றும், புலைச்சிகளின் தோள்களை மருவிக் களிக்கின்றன ரென்றும், பரத்தையர் வீடே குடியாய்க் கிடக்கின்றன ரென்றும், பலர் பலகாற் சொல்லக் கேள்வியுற்றிருக்கின்றேம். இவர் புகழ்ந்து பேசும் இழிந்த காம நுகர்ச்சியே மீறிச் சொல்லுமாறு ஏவ, உயர்ந்த தெய்வக் காதலன்பின் வயப்பட்டார் சாதி வரம்பைத் துகளாக்கித் தாங்கொண்ட புனித ஒழுக்கத்தில் நிற்குமாறு அஃது அவரைச் செலுத்துதலாற் போதரும் இழுக்கென்ன? இத்தூயவொழுக்கம் நம் பண்டைத் தமிழ்மக்கட்கு உயிர்போற் சிறந்த விழுமிய ஒழுக்கமாதலின், இதனை உண்மை யறிவுடைய ரெவருஞ் சிறிதுங் குறைகூறா ரென்க. 3. இலக்கண நூல் தொல்காப்பியர் அருளிச் செய்தது இலக்கண நூலாதலின், அவர் பொருளை அகம் புறம் என வகுத்து அகப்பொருளின்பாற் பட்ட இன்பத்தை முதற்கண்வைத்து, அறம்பொருள்களை அதன்பின் வைத்தாரல்லது, இன்பத்துக்கு முதன்மை கொடுக்க வேண்டும் என்பது பற்றி அதனை முதற்கண் வைத்தாரல்லர்; என்று அம் மறுப்புரைகாரர் கூறித், தொல்காப்பியர் இன்பத்துக்கே முதன்மை கொடுத்தா ரென்னும் எமதுரையை மறுக்கின்றனர். தொல்காப்பியம் இலக்கணநூலாதலின் அதன்கட் கூறிய முறை கொள்ளற்பால தன்றென்பதே இவரது கருத்தாகின்றது. இலக்கண நூலின் இலக்கணம் இன்னதென்று உணர்ந்தனராயின் இவர் இங்ஙனங் கூறி இழுக்கார். இலக்கண நூல்களெல்லாம் இலக்கிய நூல்களின் சொற்பொருளியல்புகளை நன்காய்ந்து, அவை தம்மையே முறைப்படுத்தி உரைக்கும் தன்மையவாமென்பது இலக்கியங் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பலின் என்னும் நன்னூற் சூத்திரத்தினை அறிந்த சிறுமகாரும் உணர்வர். இதுதானு முணராது இலக்கணமுறை இலக்கியமுறையின் வேறாவது எனக்கொண்ட அம்மறுப்புரைகாரரின் தமிழறிவு சால அழகிது! இலக்கியப் பொருளியல்புகளை முறைப்படுத்திச் சொல்லி விளக்குவதே இலக்கண மென்பது தமிழ்நூல் வடநூல் இயற்றிய ஆசிரியரெல்லார்க்கும் ஒப்ப முடிந்த தாகலின், தெய்வத் தொல்காப்பியனார் வகுத்துவிளக்கிய அகப்பொருள், புறப்பொருள் இலக்கணங்கள் அத்தனையும், அவர்காலத்தும் அவருக்கு முன்னிருந்த சான்றோர் காலத்தும் இயற்றப்பட்ட நூல்களின் பொருளமைதிகளேயாதல் தெற்றென விளங்கா நிற்கும். 4. பண்டை இலக்கியங்களும் இன்பமும் இனிப், பண்டைச் செந்தமிழ்ச் சான்றோர் இயற்றிய இலக்கிய நூல்கள் தாமும், அஞ்ஞான்றை உலகியல் நிகழ்ச்சிகளை உள்ளவாறே எடுத்துக் கூறுந் தன்மைய வன்றி, உலகியலொழுக்கத்துக்கு மாறாவன சிறிதுங் கூறுவன அல்ல இஞ்ஞான்று ஆரியர்தம் பொய்வழக்கின்பாற் பட்டு உலகியல் வழக்கோ டொவ்வாத பலவற்றைப் பொய்யாகப் புனைந்து கட்டிச் சொல்லுந் தமிழ்ப்புலவர் போலாது, பண்டிருந்த தமிழ் நல்லிசைப்ப்புலவர்கள் பட்டது பட்டாங்கு மொழியும் பொய்யா நாவினர் என்பது பேராசிரியர் தொல்காப்பிய மரபியலிற் கூறியவுரையானும், பண்டைத் தமிழிலக்கியங்களை ஒரு சிறிது உற்றுநோக்குதலானும் இனிது உணரலாம். பண்டைக் காலத்துத் தமிழிலக்கியங்களிற் பெரும்பாலான இன்பத்தின் மேற்றான அகப் பொருளினையே மிகவிரித்து உரைத்தலும், இன்பத்தின் வழிப்படூஉம் ஏனை அறம்பொருள்களின் மேற்றான புறப்பொருளினைச் சுருக்கியே பாடுதலும், நன்குணர வல்லார்க்கே பண்டைத் தமிழாசிரியர் எல்லாரும் இன்பத்துக்கே முதன்மை கொடுத்தமை நன்கு புலனாம். பழைய சான்றோர் செய்யுட்களைத் தொகுத்த எட்டுத்தொகையுள் நற்றிணை நானூறு சொய்யுட்களும், குறுந்தொகை நானூறு செய்யுட்களும், ஐங்குறுநூறு ஐந்நூறு செய்யுட்களும், கலித்தொகை நூற்றைம்பது செய்யுட்களும் அகநானூறு நானூறு செய்யுட் களும், பத்துப்பாட்டில் முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை என்னும் நான்கு பெரும்பாட்டுக்களும், பதினெண் கீழ்க்கணக்கில், கார் நாற்பது ஐந்திணை ஐம்பது ஐந்திணை எழுபது திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள் காமத்துப்பால் இருநூற்றைம்பது நாலடியார் காமத்துப்பால் முப்பது செய்யுட்களும் ஆகமொத்தம் இரண்டாயிரத்து நானூற்றுத் தொண்ணுற்று நான்கு அருந்தமிழ்ச் செய்யுட்களும் அகப்பொருளின் பாலதாகிய இன்பத்தையே நுதலுகின்றன. இனி, எட்டுத்தொகையிற் பதிற்றுப்பத்து நூறுசெய்யுட்களும் பரிபாடல் எழுபது செய்யுட்களும், புறநானூறு நானூறு செய்யுட்களும், பத்துப்பாட்டில் ஆறு செய்யுட்களும், பதினெண்கீழ்க்கணக்கில் நாலடியார் முந்நூற்றெழுபது செய்யுட்களும், நான்மணிக்கடிகை நூறு செய்யுட்களும் இனியவை நாற்பது நாற்பது செய்யுட்களும் இன்னாநாற்பது நாற்பது செய்யுட்களும் களவழி நாற்பது நாற்பது செய்யுட்களும், திருக்குறள் ஆயிரத்து எண்பது செய்யுட்களும் திரிகடும் நூறும், ஆசாரக்கோவை நூறும், பழமொழி நானூறும், சிறுபஞ்ச மூலம் நூறும், முதுமொழிக் காஞ்சி ஒன்றும் ஏலாதி நூறும், ஆகமொத்தம் மூவாயிரத்து நாற்பத்தேழு செய்யுட்களும் புறப்பொருளின் பாலவாகிய அறம் பொருள்களை நுதலுகின்றன. இவ்விரண்டையும் நுதலும் மூவாயிரத்து நாற்பத்தேழு செய்யுட்களையும் இருகூறாகப் பகுத்தாற், சிறிதேறக்குறைய அறத்துக்கு ஆயிரத்து ஐந்நூற்று இருபத்து மூன்றும், பொருளுக்கு ஆயிரத்து ஐந்நூற்று இருபத்து மூன்று செய்யுட்களுமே வருகின்றன. இன்பத்தை நூதலுஞ் செய்யுட்கள் மட்டும் இரண்டாயிரத்து நானூற்றுத் தொண்ணுற்று நான்கென்பது மேலேகாட்டப்பட்டமையால், இன்பத்தை நுதலுஞ் செய்யுட்கள் ஏனை அறம் பொருள்களைத் தனித்தனியே நுதலுஞ் செய்யுட்களினுஞ் சிறிதேறக்குறைய ஆயிரஞ் செய்யுட்கள் மிகுந்திருத்தல் காணப்படும்; இதுவேயு மன்றி, அறம் பொருள்களை நுதலும் பாட்டுக்களுள்ளும் இன்பத்தைக் கூறும் பகுதிகளும் ஆங்காங்கு விராய் வந்திருக்கின்றன. இவ்வாறாகப் பழந்தமிழ் இலக்கிய நூல்கள் யாங்கணும் பெரும்பான்மையாக எடுத்துப்பேசப்படுவது இன்பமேயாய் இருத்தலினாலும், ஏனை அறம் பொருள்களைச் சுட்டுவன அவற்றில் மிகக் குறைந்தனவாயிருத்தலினாலும் அவ் விலக்கியங்களின் வழியே இலக்கண நூல் செய்த ஆசிரியர் தொல்காப்பியனாரும், அவற்றொரு மாறுகொள்ளாமைப் பொருட்டு இன்பத்தை முதற்கண்ணும், ஏனைப் பொருள் அறங்களை அதன்பின்னுமாக வைத்து, இன்பமும் பொருளும் அறமும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் என்று சூத்திரஞ் செய்தருளினார். எனவே, ஒருகாரணமும் பற்றாது தாம் எடுத்துக் கொண்ட அகப்பொருளுக்கேற்ப ஆசிரியர் தொல்காப்பியனார் இன்பத்தை முதற்கண் வைத்தாரல்லது, உறுதிப் பொருள்களில் இன்பமே முதல் நிற்கவேண்டு மென்பது அவர்க்குக் கருத்தன்று என்ற அம்மறுப்புரைகாரர் கூற்றும் பொருத்தமில் போலிக்கூற்று மென்க. பண்டைத் தமிழிலக்கியங்கள் எல்லாம் உறுதிப் பொருள்களில் முதல் நிற்றற்குரிய இன்பத்தின் விழுப்பம் உணர்ந்தே அதனை ஏனையவற்றினும் பார்க்க உயர்த் தெடுத்துப் பேசுவஆயின. அந்நுணுக்கம் உணர்ந்தே தொல்காப்பியனாரும் அகப்பொரு ளொழுக்கமாகிய இன்பத்தினை முன்வைத்து, ஏனைப் புறப்பொருள் ஒழுக்கங்களை அதன்பின் வைப்பாராயினார். 5. அறம் இன்பத்தையே முதலும் ஈறுமாகு உடையது இனி, அம்மறுப்புரைக்காரர், அறமே முதல் நிற்கற்பாலது. இன்பம் அந்நீரதன்று என்றதூஉம் பொருந்தாமை காட்டுதும். ஒரு புல்நுனிமேல் நிற்கும் நீர்த்துளியிற் பெருக்கக் கண்ணாடியின் உதவிகொண்டு காணப்படுஞ் சிற்றுயிர்கள் முதல் மக்கள் ஈறான எல்லா உயிர்கள் மாட்டும் இன்ப உணர்ச்சியும், இன்பத்தைப் பெறும் வேட்கையும், அதற்கேற்ற முயற்சியும் ஒரு தினைத்தனையும் பிழையாமற் காணப்படுகின்றன. அதுபோல் அறத்தைப் பற்றிய உணர்ச்சியும், அதனைப் பெறும் வேட்கையும், அதற்காம் முயற்சியும் அங்ஙன மெல்லா உயிர்களிடத்துங், காணப்படாமல், ஆறறிவுடைய மக்களுள்ளும் பிற உயிர்கள் பால் அன்பு நிகழப்பெற்ற ஒருசிலர் மாட்டே காணப்படுகின்றன. இவ்வாற்றால் இன்ப உணர்ச்சியினும் அறவுணர்ச்சி மிகச்சிறுகிய நிலையில் உளதாதலாலும், அதுவும் பிற உயிரின் இன்பத்தைத் தம்முயிரினின்பத்தோ டொப்பக் கருதினார்பாலன்றி உளதாகாமையுந் தேர்ந்து காணவல்லார்க்கு இன்ப உணர்ச்சி யின் வாயிலாகவே அறவுணர்ச்சி விளைவதன்றி, அறவுணர்ச்சி வாயிலாக இன்ப உணர்ச்சி விளையமை இனிது விளங்கா நிற்கும். இது பற்றியன்றோ தெய்வத் திருமூலரும், நான்பெற்ற. இன்பம் பெறுகஇவ் வையகம் என்று அருளிச் செய்தார். ஒருவன் தான்பெற்ற இன்பத்தை இவ்வையகத்துள்ள எல்லா உயிர்களும் பெறுதல் வேண்டுமென விழைந்து, அதற்கேற்ப முயலும் முயற்சியே அறம் எனப்படும். பிறவுயிரின் இன்பத்தைக் கருதாது செய்யும் முயற்சிகளெல்லாம் அறத்துக்கு மாறான மறமெனப்படும். பிறர்க்கு வறுமையால் வந்த துன்பத்தை நீக்குதற்பொருட்டுப் பொருளுடையார் அவர்க்குப் பொருளீந்து செய்யும் அறம் எத்துணை இன்பம் பயக்கின்றது. இதுபற்றி யன்றோ தெய்வப்புலமைத் திருவள்ளுவரும், ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்துஇழக்கும் வன்க ணவர் என்று அருளிச் செய்தார். தமக்கும் பிறர்க்கும் நிகழும் இன்பம் இனைத்தென்பது உணர்ந்த இன்ப உணர்ச்சி உடையார்க்கன்றி, ஏனையோர்க்கு அறநினைவு சிறிதும் உளதாகாது. இவ்வுண்மை அறிவுடையார்க்கெல்லாம் இனிது விளங்கிக் கிடப்பவும், இது தானும் உணரமாட்டாது இன்பத்தினும் அறத்திற்கே முதன்மைசொல்லிப் புகுந்த மறுப்புரைக்காரர் உரை தொல்லாசிரியர் நூல்வழக்கிற்கும் ஏனை உலகியல் வழக்கிற்கும் மாறுகொண்டு போலியுரையாய் ஒழிந்தமை காண்க. எல்லா உயிர்க்கும் பொதுவான இன்ப உணர்ச்சியின் வாயிலாகவே அவ்வுயிர்கட்கு முயற்சி யுண்டாகநிற்கின்றது. அம்முயற்சியினாற் பின்னும் பின்னும் பிறவி வளர்ச்சி உரம்பெற்றுப் பிறவிக்கு வாராமல் அறியாமையில் அமிழ்ந்திக்கிடக்கும் உயிர்கள் பிறவிக்கு வந்து அறிவு கூடுகின்றன. இன்பமும் அறிவும் இவ்வாற்றாற் பெருகப் பெருக அறநினைவும் அறஞ் செய்யும் முயற்சியும் மக்கள்பால் முறை முறையே தலைப்படுகின்றன. அம்முறையினைக் கூர்ந்து பார்க்கும் வழி, இன்பத்தினால் முயற்சியும், அம்முயற்சியாற் பொருளும், அப்பொருளால் அறமும், அவ்வறத்தால் முடிவிற் பேரின்பமும் ஒன்றினொன்று உளவாய் வருகின்றன என்பதும், எல்லா அறிவும் முயற்சியும் இன்பத்தினின்றே தோன்றி இன்பத்தின் கண்ணே சென்று முடிகின்றன என்பதும் நன்கு தெளியக் கிடத்தலின், முற்றுணர்வு வாய்ந்த ஆசிரியர் தொல்காப்பியனார் இன்பத்தை முன்வைத்துப் பொருளை அதன்பின் வைத்து அறத்தை அதன்பின் வைத்துச் சூத்திரஞ் செய்தமுறையே உலக வழக்கொடும், நூல்வழக்கொடும் முழுதொத்து என்றும் அசையா வைரமலைபோல் திகழ்ந்து நிற்பதாம் என்க. பண்டைத்தமிழ் ஆசிரியர்களே யன்றித் தமிழகத்துக்குப் புறத்தேயுள்ள நாடுகளில் உயிர் வாழ்ந்த பண்டை நாகரிக மக்களுள் வழங்கிய பலவேறு மொழி இலக்கிய நூல்களுள்ளும் இன்பமும் பொருளுமே முன்வைக்கப்பட்டு அறம் அவற்றின் பின்னதாக நிறுத்தப்பட்டிருத்தலும் நினைவிற் பதிக்கற்பாற்று. 6. தொல்காப்பியர் இன்பமே முதலென்றது இனி, உறுதிப்பொருள்களுள் இன்பமே முதன்மை யானதென்று தொல்காப்பியனார் கூறவில்லை என்று அம்மறுப்புரைக்காரர் துணிந்து சொல்லுதலை உற்றாராயுங் கால் அவர் செந்தமிழ் மொழிக்கு நந்தா மணிவிளக்காந் தொல்காப்பியத்தை ஒரு சிறிதாயினும் நல்லாசிரியரை யடுத்து நன்கு ஆராய்ந்து பயின்றவரல்ல ரென்பது புலனாகா நிற்கும். ஆசிரியர் தொல்காப்பியனாரே பொருளதிகாரத்துப் பொருளியலில் இருபத்தொன்பதாஞ் சூத்திரமாக நிறுத்திய, எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும் என்பது இன்பத்தையே ஏனைப் பொருள் அறங்களினும் முதன்மைபெற்றதாக வைத்துக் கூறாநிற்கவும் அதனை அறியாது கூறிய அவருரையே அவர் தொல்காப்பியம் உணராமையினை நன்கெடுத்துக்காட்டா நிற்கின்றது. அச் சூத்திரத்துக்குப் போந்த மேவற்றாகுமென்றார் என்பது ஆணும் பெண்ணுமாய்ப் போக நுகர்ந்து வருதலின் ஒருவனும் ஒருத்தியுமே இன்ப நுகர்ந்தாரெனப்படாது, அவ்வின்பம் எல்லா உயிர்க்கும் பொது வென்பதூஉம் அவை இருபாலாய்ப் புணர்ச்சி நிகழுமென்ப தூஉங் கூறியதாயிற்று. அறனும் பொருளும் எல்லா உயிர்க்கும் நிகழா, மக்கட்கே சிறந்துவரு மென்றாராயிற்று என்னும் பழைய உரையாசிரியர் உரைப்பகுதியையேனும் அவர் உணர்ந்திருந்தனராயின், எல்லா உயிர்க்கும் இன்பம் ஒன்றுமே உரித்தாவதென்பதூஉம், ஏனைப் பொருளறங்கள் மக்கள் பால் மட்டும் உண்டாவனவாய இன்பத்தையே முதலும் முடிவுமாய்க் கொண்டு நிகழுமென்பதூஉம், அதுபற்றியே தொல்காப்பியனார் இன்பத்தை முன்னும் பொருளறங்களை அதன்பின்னுமாக வைத்துக் கூறினாரல்லது ஒரு காரணமும் பற்றாது அங்ஙனங் கூறினாரல்ல ரென்பதூஉம் விளங்க அறிந்திருப்பர். இவை யெல்லாம் ஒரு சிறிது முணராது தொல்காப்பியனார் கருத்தை முற்றும் அறிந்தார்போன்று துணிபுரை நிகழ்த்திய அம்மறுப்புரைகாரர்தந் துணிபு, கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும் என்னும் அருமைத் திருக்குறளுக்கு இலக்காய்த் தமிழ்வல்ல சான்றோரால் நகையாடற் பாலதாய் முடிந்தமை காண்க. என்று இத்துணையுங் கூறியவற்றால் ஆசிரியர் தொல்காப்பிய னார் இன்பத்தை முன்னும் ஏனைப் பொருளறங்களை அதன்பின்னும் வைத்துக் கூறிய முறையே அடிப்பட்ட சான்றோர்தம் நூல் வழக்கிற்கும் ஏனையுலக வழக்கிற்கும் பொருந்து வதாமென்பதூஉம், இம்முறையோடு திறம்பிப் புதிது புகுந்த பௌத்த சமண் சமயங்களின் பொருந்தா வழக்கேபற்றிப் பிற்காலத்தார் அறத்தை முன்னும் ஏனைப் பொருளின்பங்களைப் பின்னும் வைத்த தலைதடுமாற்ற முறை அவ்விருவகை மெய்வழக்கோடும் ஒவ்வாதாமென்பதூஉம் இனிது பெறக்கிடந்தமை காண்க. 7. திருவள்ளுவர் கொண்டது தமிழ்முறையன்று இனி, ஆசிரியர் திருவள்ளுவனார் அறம் பொருள் இன்பமென வைத்து நூல் செய்த முறை தமிழ்முறை யன்றாய்ப் பௌத்த சமண சமயத்தவர்களாகிய வடநூலார் தாமே புதிது வகுத்த முறையே யாதலை மேலே காட்னாம். இங்ஙனந் திருவள்ளுவர் கொண்ட முறை தமிழ்நுல் வழக்கன்றென்பதற்குத் திருக்குறளுக் குரைகண்ட பரிமேலழகியார் காமத்துப்பால் முகத்தில் இவர் பொருட்பாகு பாட்டினை அறம் பொருள் இன்பமென வடநூல் வழக்குப்பற்றி ஓதுதலான் என்று உரை உரைத்தமையே சான்றாம். பண்டுதொட்டு வந்த தமிழ்நூன் முறையெல்லாம் இன்பத்தை முன்னும் பொருளறங்களைப் பின்னும் வைத்தலேயாம் என்பதனை மேலே விரித்துக் காட்டினாம். ஈண்டுப் பின்னுஞ் சிறிது அதனையே காட்டுதல் இன்றியமையாதாகின்றது. பழைய பரிபாடலிற் செவ்வேற்மேற் பாடப்பட்டிருக்கும் ஒன்பதாம் பாட்டினை இயற்றியருளினவரான ஆசிரியர் குன்றம்பூதனார் அப்பாட்டின்கண் வடமொழி நான் மறைவல்ல புலவரை நோக்கித் தமிழது சிறப்பு அறிவுறுத்து கின்றுழித், தமிழுக்கே உரித்தான காதலின்ப ஒழுக்கத்தினையும் அவ்வொழுக்கத்தினையுடைமையால் வள்ளி நாச்சியார் சிறந்தமையும், அவ்வகத்தமிழை ஆராய்ந்தமை யால் முருகப்பிரான் சிறந்தமையும் நன்கெடுத்து விரித்து ஓதுவார்க்குங் கேட்பார்க்குந் தமிழ்ச்சுவை புலனாமாறு விளக்குதல் காண்க. இங்ஙனமே பத்துப்பாட்டின்கண் ஒன்றாகிய குறிஞ்சிப்படை இயற்றிய நல்லிசைப் புலமை மலிந்த சான்றோருந், தங்காலத்திருந்த பேரறிஞர்களாற் புலனழுக்கற்ற அந்தணாளன் எனவும், பொய்யா நாவிற் கபிலன் எனவும் புகழ்ந்து பாராட்டப்பெற்றவரும் ஆன ஆசிரியர் கபிலர் தமிழ்நலம் அறியாத ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ்நலம் அறிவித்தற்பொருட்டுத் தாம் பாடிய குறிஞ்சிப்பாட்டின்கண், இக்காதலின்ப அகப்பொரு ளொழுக்கத்தினையே விரித்தெடுத்துப் பெரிதுஞ் சுவை துளும்பப் பாடியிருத்தல் காண்க. இன்னும் இதனை விரிப்பிற் பெருகும். இங்ஙனமெல்லாந் தமிழ்நாட்டின்கணிருந்த அடிப்பட்ட சான்றோரெல்லாருந் தமிழுக்குச் சிறந்தது இன்ப வொழுக்க மென்றே ஒருமுகமாய் நின்று கட்டுரைத்துச் செல்லுதலின், அவர்க்குப் பிற்காலத்தே நூல்செய்த திருவள்ளுவனார் கொண்டமுறை பரிமேலழகியார் காட்டிய வாறு தமிழ்முறை யன்றென்பது தெற்றென விளங்காநிற்கும். 8. திருவள்ளுவர் வேறுமுறை கொண்ட காரணம் அற்றேல் தமிழ்மக்கள் பொருட்டுத் தமிழ்நூல் இயற்றப் புகுந்த திருவள்ளுவனார், அத்தமிழ் முறையொடு திறம்பி வடநூன் முறையைக் கைப்பற்றிய தென்னையெனிற் கூறுதும். இத்தென்றமிழ் நாட்டுப் பழைய வரலாறுகளை நன்காராய்ந் துணர்வார்க்குத் திருவள்ளுவனார் இருந்த கி.பி.முதல் நூற்றாண்டிற் பௌத்த சமண் மதங்கள் வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற் குடிபுகுந்தமை நன்கறியக் கிடக்கும் இதற்குத் திருவள்ளுவர் காலத்தை யடுத்துச் செய்யப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் பௌத்த சமண் காப்பியங்களே ஒரு பெருஞ் சான்றாம். அவ்வாறு குடிபுகுந்த அச்சமயிகள் இருபாலாரும், உலகியலொழுக்கத்தை ஆழ்ந்தாராய்ந்தறிந்த சான்றோர்தம் நூல்வழக்கை நுணுகி யாராயும் அறிவுமதுமை யின்றி இன்பத்தினை இழித்துப் பேசி, அவ்வாற்றால் ஏனை மக்களினுந் தாமுயர்ந்தார் போற் காட்டி, அங்ஙனங் காட்டுந் தமது கரவொழுக்கம் நிலைபெறுதற்பொருட்டு அறத்துக்கே உயர்வு சொல்வாராய், இந்நாட்டவரைப் பெரியதொரு பொய்ம்மயக்கிற் படுப்பாராயினர். இவ்வாறு இன்பத்தை இகழ்ந்து அறத்தை உய்த்துப்பேசி ஆரவாரஞ் செய்யும் பௌத்த சமண் குருக்களின் உரைகளைக் கேட்ட தமிழ்ப் பொது மக்கள், அவர் இகழ்ந்து பேசிய இன்ப வொழுக்கத்தைத் தாமும் ஏனை மக்களும் விடமாட்டாமை நன்குணர்ந்தும், அறவுரை கூறும் அவர் தம்மினும் உயர்ந்தார்போலுமென மயங்கிக், கரவொழுக்கத்தில் நிற்கும் அக்குருக்கண்மாரையும், அவர்தஞ் சொற் செயல்களையும் மிக உயர்த்துப் பேசுவாராயினர். இவ்வாற்றாற் பௌத்த சமண் கோட்பாடுகள் உண்மையில் மக்களியற்கைக்கும், அவர்தம் உலகியல் ஒழுக்கத்திற்கும் ஒரு சிறிதும் பயன்படாவாயிருந்தும், போலியாக எங்கும் பரவி வரலாயின. இதுகண்ட தமிழ்ச் சான்றோர்கள் அப்புறச்சமயக் கோட்பாடுகள் மக்கட்குப் பயன்படாமையின் உள்ளீடில்லா வெறும் பதர்களாதல் தெரிந்து, உண்மை உலகியல் ஒழுக்கத்திற்கு ஏற்ற அறத்தின் கூறுபாடுகளைத் தமிழ்த் தொல்லாசிரியர் கொண்ட உண்மைப் பயன்றரு முறையில் இன்பத்தொடு படுத்து விளக்குவான் புகுந்தனர். அங்ஙனம் புகுந்தாருள் தலைநின்றவரான திருவள்ளுவனார், தங்காலத்துத் தம்மோடுடனிருக்கும் மக்கள், பௌத்த சமண்மயக்குரையிற் சிக்கி அறத்திற்கே உயர்வு சொல்லுதல் கண்டு அவர் வழியே சென்று அவரைத் திருத்துவாராய், அறத்தை முன் வைத்து நூல்செய்வாராயினர். அங்ஙனம் நூல் செய்கின்றுழிப், பெரும்பாலும் இம்மையையே நோக்கின இல்லறமும், பெரும்பாலும் மறுமையையே நோக்கின துறவறமும் என அறத்தை இரண்டாக வகுத்து, அவ்விருவகை யறமும் பொருளை இன்றியமையாத கருவியாக அவாவுதல்பற்றிப், பொருளை அதன்பின் வைத்து அவ்வாறு பொருள் துணையாக அவ்விருவகை அறத்தானும் அடையப்படும் இன்பமும், இம்மைக்கண் நுகரப்பட்டு இல்லறத்துக் கேதுவாய் நிற்கும் காதலின்பமுந், துறவறத்தின் பயனாய் மறுமைக்கண் நுகரப்படுந் திருவருள் இன்பமு மென இரண்டாதல் தெரித்து, இன்பத்தினை இறுதிக்கண்ணும் வைத்து நூல் யாப்பாராயினர். ஆகவே, இறுதிக்கண் அவர் நிறுத்திய இன்பத்துப்பால் காமவின்பத்தினையே நுதலுவதென்று அம்மறுப்புரைகாரர் கூறியது பொருத்தமில் கூற்றாதல் காண்க. இறுதிக்கண் நின்ற இன்பத்துப்பால் இல்லறத்தின் பாலதான காதலின்ப மொன்றனைமட்டுமே உணர்த்துவதன்று. ஆழ்ந்து நோக்கு வார்க்கு, அது துறவறத்தின் பாலதான திருவருளின்பத் தையும் ஒருங்கு உணர்த்துவதே யாகும். இங்ஙனமே தமிழ் நூல்களிற் கூறப்படும் அகப்பொருட் காதலொழுக்கமெல்லாம் இம்மையின்ப மொன்றனையே உணர்த்தாமல், திருவருளின் பத்தையும் உடனெடுத்து ஓதுவதென்பதற்குச், சைவசமய ஆசிரியரில் முதல்வரான மாணிக்க வாசகப்பெருமான் திருச்சிற்றம்பலக்கோவையார் அருளிச்செய்தமையும், ஏனை அப்பர், சம்பந்தர், சுந்தரர் முதலான நம் சமயகுரவர்களுந் தாமருளிச் செய்த திருப்பதிகங்களில் ஆங்காங்கே தலைவன் தலைவி முறையில் வைத்து இறைவனைப் பாடியிருத்தலும், சைவசித்தாந்த நூல்களில் ஒன்றான திருவுந்தியார், பெற்றசிற் றின்பமே பேரின்ப மாயங்கே முற்ற வரும்பரிசு உந்தீபற முளையாது மாயைஎன்று உந்தீபற என்று உரைத்தலுமே சான்றாம். அகப்பொருட் காதல் ஒழுக்கத்தினைக் கூறுந் திருச்சிற்றம்பலக்கோவையார் இவ்வாழ்ந்த திருவருளின்பக் கருத்தும் உணர்த்தும் பெற்றியது என்பதற்குச் சிவஞானி ஒருவர் இயற்றின திருக்கோவையார் உண்மை என்னும் நூலுஞ் சான்று பகரும். எனவே, திருவள்ளுவனார் தமதருமைத் திருக்குறள் நூலின் இறுதிக்கண் நிறுத்திய இன்பத்துப்பால், அவர் தாம் வகுத்த இல்லறந் துறவறம் இரண்டிற்கும் பொதுவான இன்பத்தையே உணர்த்துங் கருத்துடையதன்றி, இல்லற நுகர்ச்சி யொன்றற்கே உரிய காதலின்பத்தினை மட்டும் உணர்த்துவதன்றென்பது கடைப்பிடிக்க, இவ்வாற்றால், இல்லாளொடு கூடியிருந்து நுகரும் இன்பமே காமத்துப்பாலிற் சொல்லப்பட்டதென்னும் அம்மறுப்புரைகாரர் கூற்று உள்ளீடில்லாப் போலியாய் ஒழிந்தமை கண்டுக்கொள்க. 9. திருவள்ளுவரும் இன்பத்துக்கே முதன்மை தந்தமை இனிப், பௌத்தசமண் சமயக் குருக்கண்மார் இல்லறத்தை இகழ்ந்து துறவறத்தையே பெரிது கொண்டாடா நிற்பர். இல்லறத்தின் வழிச்சொல்லாத துறவு, நிலைபேறின்றிச் சீர்குலையும் என்பதற்கு அத்துறவியார் தங்காமக் கரவொழுக்கமே சான்றாம். இவ்வுண்மை கண்டு தெய்வத் திருவள்ளுவர் அவர்தங் கொள்கையை மறுத்தற் பொருட்டே இன்பத்தின் வழித்தாகிய இல்லறத்தை முன்வைத்து நூல்செய்ததூஉம், அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன் என்றும் இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான் முயல்வாரு ளெல்லாந் தலை என்றும், ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை நோற்பாரி னோன்மை யுடைத்து என்றும், அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும் பிறன்பழிப்ப தில்லாயி னன்று என்றும், வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும் என்றும் அவர் இல்லறத்தைத் தமிழ்ச் சான்றோர் வழக்குப் பற்றித் துறவறத்தினும் மிக்கெடுத்துக் கூறியதூஉம் மென்க. இனி, இன்பத்தின் வழித்தாகிய இல்லத்தைத் தெய்வத் திருவள்ளுவனார் முன்வைத்து நூல்யாத்தமையின், அவர் இன்பத்துக்கே முதன்மை கொடுத்தார் என்று எமது தலைமைப் பேருரையிற் கூறினாமன்றி, இல்லாளொடு கூடிநுகரும் இன்பமும் அவர் இல்லற இயலிற் கூறினாரென மொழிந்திலேம். இவ்வாறாகவும், இன்ப நுகர்ச்சிக்கு அவர் முதன்மை தந்தார் என யாம் மொழிந்தேம் எனப்பிழைபடக்கொண்டு, அம்மறுப் புரைகாரர் தமக்குத் தோன்றியவாறெல்லா மெழுதினார். இன்பமும் இன்பநுகர்ச்சியும் வேறாதலை உணர்ந்திருந்தன ராயின் அங்ஙனம் பிழைபடஉரையார். மனையாளைப் புணர்ந்து நுகரும் இன்பங் காமத்தின்பாற்படும். அவளைப் புணராத காலங்களில் அவடன் அருங்குணங்களொடு பழகுதலானும், அவடன் அறிவுச் செயல்களைக் காண்டலானும், அவடன் அறிவுமொழிகளைக் கேட்டலானும், எல்லா வகையினும் அவன் தன்னோடு ஒத்து ஒழுகுதலை வியத்தலானும், அவடன் எல்லா நலங்களை நோக்குதலானுங் கணவற்கு ஓவாது விளையு மின்பங்ககாதலின்பத்தின்பாற் படும். இங்ஙனம் தன்கொழுநன்றன் அருமைப்பாடுகளை உணருந் தொறும் நினையுந்தொறும் மனைவிக்குங் கழிபெருங் காதலின்பம் ஓவாது விளையாநிற்கும். இவ்வாறு காதலின்ப நிகழ்ச்சி அவர் தமக்குள் உண்டாயினலன்றி அவர் தமக்குள் அன்புடையராய் ஒழுகுதல் இயலாது; அன்புடையராய் ஒழுகினாலன்றி அவர் ஒருமித்துநின்று, அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும் துறவோர்க் கெதிர்தலுந் தொல்லோர் சிறப்பின் விருந்துஎதிர் கோடலும் (சிலப்பதிகாரம்) ஆகிய இல்லறத்தை இனிது நடாத்துதலும் ஒரு சிறிதும் இயலாது. ஆகவே, இன்பத்தின் வழித்தாகவே அல்லது இன்பத்தை நுதலியே இல்லறம் நடைபெறுதல் ஐயுறவின்றித் தெளியப்படும். இவ்வியல்பினை, ஆசிரியர் திருவள்ளுவ நாயனாரே காதலின்பத்தின் விளைவான அன்பை முன்வைத்து அறத்தைப் பின்வைத்து, அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது என்று கூறி நன்கு விளக்கியருளினார். அவர் கருத்தறிந்த உரைகாரர் பரிமேலழகியாரும் இல்லாட்குங் கணவற்கும் நெஞ் சொன்றாகாவழி இல்லறங் கடைபோகாமையின், அன்புடைமை பண்பாயிற்று. அறனுடைமை பயனாயிற்று என்று உரை கூறியதூஉம் உற்றுநோக்கற்பாலதாம். இவ்வியல்பெல்லாம் நூல்வழக்கானேயன்றி உலகியல் வழக்கனும் எளிதில் உணரக்கிடப்பவும், இவைதாமும் உணர மாட்டாது, அறமே முதற்கண் வைக்கப்பட்டுதென அம்மறுப்புரைக்காரர் கூறியது இருவகை வழக்கிற்கும் மாறுகோளாம் என்க. எனவே, காதலின்பத்தினை அடிப்படையாய்க் கொண்டெழுந்த இல்லறத்தைத் தெய்வத் திருவள்ளுவர் முன்வைத்து நூல் யாத்தது, அவர் பண்டைச் செந்தமிழ் நல்லாசிரியர் நிறுத்திய மெய்வழக்கிற்கு மாறாகாமைப் பொருட்டேயா மென்பதூஉம், தங்காலத்துப் புதிது புகுந்த பௌத்தசமண் சமய வழக்குப்பற்றி அறத்தை முதல் நிறுத்தினும் அவ்வறத்திற்கு அடிப்படையான இன்பத்துக்கு முதன்மை கொடுத்தலே அவர்தம் உண்மைக் கருத்தாமென்பதூஉம், இப்பெற்றி யெல்லாம் நன்காய்ந்து பாராது அம்மறுப்புரைகாரர் கூறிய கூற்றுத் திருவள்ளுவனார் கருத்தொரு முரணிப் பிழைபடுவதாம் என்பதூஉந் தேற்றமாதல் காண்க. 10. முயற்சிக்கு ஊழ் காரணம் அன்று இனி, இன்பத்தை நுதலியே பொருள் ஈட்டுதலும் அறஞ் செய்தலும் நிகழ்கின்றன என்னும் எமது கோட்பாட்டுக்கு முதலில் இணங்கிப் பேசியவர், அம்மட்டில் அமையாது இன்பத்தை நுதலி மக்கள் செய்யும் அவ்விருவகை முயற்சியும் முட்டுப்படுதற்குக் காரணம் பழவினையே என்கின்றார். எல்லா உயிர்களும், அவ்வுயிர்களிற் சிறந்த மக்களுஞ் செய்யும் முயற்சி யெல்லாம் இன்பத்தை நுதலியே நடைபெறுதல் மறுப்புரை காரரையுள்ளிட்ட எல்லார்க்கும் ஒப்பமுடிந்ததாகலின், அவ்வுண்மையினையே யாம் எடுதது விளக்கின மன்றி, மக்கள் செய்யும் முயற்சி பழவினையால் முட்டுப்பட்டு வறிதாதலையேனும், அன்றி நிறைவேறுதலையேனும் எடுத்துப் பேசினேமல்லேம். அங்ஙனமாகவும், அவர் எடுத்தபொருளை விட்டு அதற்கியைபில்லாத தொன்றனை எடுத்துரைத்தல் மேற்கோள்மலை வென்னுந் தோல்வி (நிக்கிரகதான) முறையாதலை உணர்ந்திலர் போலும்! இன்பத்துக்கு முதன்மை சொல்லும் எமது மேற்கோளை (பிரதிஞ்ஞை) மறுக்கப் புகுந்தவர் அதனை மறுத்து அறத்துக்கு முதன்மை சொல்லுந் தமது மேற்கோளை நாட்டல் வேண்டுமே யல்லாமல், அதனை விடுத்துப் பழவினைக்கு இடையே முதன்மை சொல்லப் புகுதல், மறுப்பெழுதும் முறை இன்னதென்றே அறியதார்தங் குழறுபடையாம். அறம் முதலியவற்றிற்குக் காரணம் பழவினையேயாயிற், பின்னர் அறத்தைப் பொருளின்பங்களுக்குக் காரணமென்றல் முன்னொடுபின் முரணுமன்றோ? மேலும், பழவினைக்கே முதன்மை சொல்லுவார் மீமாஞ்சகரேயன்றிச் சைவசித்தாந்திகளல்லர். மக்கள் தமது நன்முயற்சியால் ஊழையும் புறங்காண்பர் என்பதே சைவ சித்தாந்திகள் கோட்பாடு; என்னை? மக்கள் தமக்கென ஓர் அறிவுஞ் செயலும் இலராயின், அவர் செய்யும் முயற்சியெல்லாம் ஊழ்வினை யொன்றினாலேயே யாவன வாயின் அவர் அறிவுஞ் செயலு மில்லாக் கல்லும் மண்ணும்போல், அறிவில் (அசேதனப்) பொருள்களாவராதலின் என்க. அதுவேயுமன்றி, ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் அறத்துப்பாலின் ஈற்றில் ஊழ்வலியை மிகுத்துக் கூறினாராயினும், அவ்வூழின்வலி, மக்களின் விழுமிய அறிவுமுயற்சியின் முன்னே நில்லாதொழியு மென்று தெருட்டிப், பின்னின்ற பொருட்பாலில், ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் என்று முடித்துக் கூறதலாற் பழவினைக்கு முதன்மை கூறுதல் நாயனார்க்கும் உடன்பா டல்லாமை நன்கு பெறுதுமன்றோ! மலத்தினால் மறைவுண்டு கிடந்த உயிர்கள் இறைவன் திருவருளால் மாயையிற் றிரட்டப்பட்ட உடம்பினைக் கருவியாகப் பெற்று, அம்மலமாசு சிறிது நீங்கி அறிவும் முயற்சியும் உடையனவாய் முனைந்து நிற்கும் வழி, அவை இன்பத்தை அவாவியே நிற்கும் அல்லது அறத்தினை அவாவி நில்லா என்பதூஉம், முதன்முதற் பிறவிக்குவரும் ஓரறிவுயிர்கட்குப் பழவினை சிறிதுமின்மையின் அவற்றின் முயற்சிக்குப் பழவினை காரணமாகாது இன்பமே தலைக்காரணமாய் நிற்கு மென்பதூஉம், அதனாற் பழவினைக்கு முதன்மை கூறுதல் சைவசித்தாந்தத்துக்குச் சிறிதும் அடாதென்பதூஉம், யாண்டும் உயிர்கள் கீழ்க்கீழ்ப் பிறவிகளிற் செய்த முயற்சிகளின் பழக்கந் துணையாக மேன்மேற் பிறவிகளில் மேலுமேலும் அறிவுமுயற்சி யுடையனவாய்ச் செல்லுதலின் இன்பத்தா லுந்தப்பட்ட அறிவு முயற்சியே பிறவியி னேற்றத்திற்குக் காரணமாமென்பதூஉம், இதுவே சைவசித்தாந்தத்துக்கும் அதனை அகத்தடக்கி நூல்செய்த திருவள்ளுவனார்க்குங் கருத்தா மல்லது இதற்கு மாறாக அறத்திற்கு முதன்மை சொல்லுதலும் அதனைவிட்டுப் பழவினைக்கு முதன்மைசொல்லுதலும் அவர்க்குச் சிறிதுங் கருத்தான்றாமென்பதூஉம், அம் மறுப்புரைக்காரர் உணரக் கடவாராக. சிறப்பீனுஞ் செல்வமுமீனும் என்னுந் திருக்குறள் அறஞ்செய்தலால் வரும் பயன் உணர்த்துவதேயன்றி, இன்பத்தினும் பார்க்க அறமே சிறந்ததென் அறத்திற்கு முதன்மை சொல்லாமையின் அதனை எடுத்துக்காட்டுதலால் அம்மறுப்புரைக்காரர் கருத்து நிரம்புமாறில்லை யென்றும் ஓர்க. 11. அன்பும் இன்பத்தையே நுதலும் இனி, இன்பமே முதலென்பதற்குத் திருவள்ளுவர் அருளிச்செய்த அன்பு மறனும் உடைத்தாயின் என்னுந் திருக்குறளை யாம் எடுத்துக்காட்டியது பொருத்தமில்லை என்றும், அஃது அன்புக்கே முதன்மை சொல்லுகின்றதென்றும் மறுப்புரைக்காரர் கூறியதனைச் சிறிது ஆராய்வாம். கணவனும் மனைவியும் ஒருவரோ டொருவர் அன்பு பூண்டொழுகுதல் எதனால் என்று உலகியலறிவு சிறிதுடையாரை வினாவினும், அவர் அவர்க்கு விடைதருவர். தாம் நுகருங் காதலின்பத்தினைக் குறிக்கொண்டே அவர் தமக்குள் அன்புடையராய் ஒழுகுதல் இனிது விளங்கிக்கிடப்பவும், இது தானும் உணராது மறுப்பெழுதப் புகுந்தார்க்கு நல்லறிவு கொளுத்தும் வாயில் எது? மேலும் மாயோன் மேய காடுறை யுலகமும் என்னுந் தொல்காப்பிய அகத்திணை இயற்சூத்திரத்தில் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் புணர்தலின்றி இல்லறம் நிகழாமையின் என்று கூறிய அரிய உரையையேனுந், திருவள்ளுவனார் இன்பத்துப் பாலிற் கூறிய ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பங் கூடி முயங்கப் பெறின் என்னும் அருமைத் திருக்குறளையேனும் அறிந்திருந்தனராயின் அம்மறுப்புரைக்காரர் இவ்வாறெல்லாங் கூறி இழுக்குறார். எனவே, அன்பு என்னும் முளை, காதலின்பமென்னும் வித்தினின்றும் உளதாகக் காண்டலின் இன்பங்காரணமும் அன்பு அதன் காரியமுமாய் நிற்பதாமென்றும், காதலர்க்குள் நிகழும் அன்பினைக் கூறவே அதற்கு முதலான இன்பமுந் தானே போதருமென்றும் உணர்ந்து கொள்க. அற்றேற், கணவனும் மனைவியு மல்லாத பிறசேர்க்கை யிலும் அன்பு நிகழக் கொண்டு மாதலின், ஆண்டெல்லாங் காதலின்ப முண்டென்பது யாங்ஙனம் பெறப்படுமெனிற் கூறுதும்; எமது சைவசித்தாந்த நூலாகிய சிவஞான சிந்தியார் உலகத்து மக்கள் மாட்டு நிகழும் அன்பின் சேர்க்கைகளை யெல்லாம் நால்வகைப்படுத்துச், சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திரமார்க்கம் தாசமார்க்கம் என்று கூறி, இந்நால்வேறு வகையில் நிகழும் அன்பும் இறைவன் பால் அடியார்க்கு அவரவர் தரத்திற் கேற்ப நிகழுமென வலியுறுத்திற்று. இது கொண்டு அன்பின் தொடர்பும் அதற்குக் காரணமாவதும் ஆராயற்பாலன. கீழ்ப்படியின் முதலில் தாசமார்க்கம் நிற்பது; அஃது ஒருதலைவனுக்கும் அவனுக்கு ஏவல் செய்யும் அடியானுக்கும் இடைநிகழும் அன்பின் தொடர்பைக் காட்டும். ஏவலாளில்லையேல் தானே செய்து முடிக்கவேண்டுந் தொழில்களை ஒருதலைவன் மேற்கொள் வனாயின் அவன் எவ்வளவு துண்புற்று வருந்துவன்! அவ்வாறின்றித், தன் சொல்லுங்குறிப்புங் கடவாத நல்ல ஓர் ஏவலன் தன் தலைவன் இடர்ப்படுதற்குரிய தொழில்களைத் தான் நன்கு செய்து முடிப்பனாயின், அதனால் அத்தலைவன் இன்புற்றுத் தன் ஏவலனும் இன்புற்றிருக்குமாறு அவற்கு ஊண்உடை உறையுள் முதலிய நலங்களெல்லாம் நல்கக் காண்டுமல்லமோ? இவ்வாற்றால் ஒரு தலைவனாவான் தனக்கோர் இன்பத்தை நாடியும், ஏவலனாவான் அவற்குப் பணிபுரியமாற்றால் தனக்கு வரும் இன்பத்தை நாடியும் ஒருவரோடொருவர் தொடர் புடையராய் வாழ்கின்றனரேயல்லால், அவ்விருவரும் இன்பத்தை நாடாது தொடர்புறக் காண்கிலேம். ஆகவே, அவர் தமக்குள் நிகழும் அன்பின் தொடர்புக்கும் இன்பமே காரணமென்பது பெற்றாம். இத்தொடர்பின்கண் தலைவன் உயர்ந்தோனும் ஏவலன் தாழ்ந்தோனுமாய் இருத்தலின் ஏவலன் தலைவனை அணுகாது அகன்றொழுகும் நிலையினானாவன். இவ்வாற்றால் இவர்தஞ் சேர்க்கை கீழ்ப்படிக்கண் நிறுத்தப்பட்டது. இனித் தாசமார்க்கத்திற்கு மேலான இரண்டாம்டடியில் நிற்பது சற்புத்திரமார்க்கம் ஆகும். இஃது ஒருதலைவற்கும் அவன்றன் புதல்வற்கும் இடைநிகழும் அன்பினை உணர்த்து வது. தன் தலைவன்பால் அடியவனுக்கில்லாத உரிமை அவன்றன் புதல்வற்கு உளதாவதால், முன்னை நிலையிலும் இந்நிலையில் நிற்பார்க்கு நெருங்கிய தொடர்பும் அதுபற்றிவரும் உரிமையும் அவ்வுரிமையால் நிகழும் மிக்க அன்பும் உண்டாதலைக் காண்கின்றோம். என்றாலுந், தன் தந்தையோடு கூடிநுகரும் இன்பம் புதல்வற் கின்மையின் இஃது இரண்டாம் படிக்கண்ணே வைக்கப்பட்டது. என்றாலும், புதல்வனால் தந்தைக்கு இன்பமுந், தந்தையின் உதவியாற் புதல்வற்கின்பமும் நிகழக்காண்டலின் இவரது சேர்க்கையும் இன்பமென்னுங் பொன் நாணினாலேயே பிணைக்கப்பட்டு விளங்குகின்றதென ஓர்மின்! இனி, இதற்குமேல் மூன்றாம்படிக்கண் நிற்பது சகமார்க்கம் என்று நுவலப்படும். ஒருதலைவன்பால் அவனடியவனுக்கு அன்புடனே கூட மிக்க அச்சமும் நிகழும்; புதல்வற்கோ தன் தந்தையினிடத்து மிக்க அன்பு உண்டாயினுந், தந்தையின் ஒழுகலாறுகள் எல்லாவற்றுள்ளுந் தலையிடுதற்கு உரிமையில்லானாய் அச்சத்தால் அவனைச் சிறிது அகன்றொழுகுங் கடமைப்பாடேயுடையன். மற்று, நெருங்கிய கெழுதகைமை வாய்ந்த தோழர் இருவர்க்குள் நிகழும் பேரன்போ அச்சம் சிறிதுமே கலக்கப் பெறாத விழுப்பம் வாய்ந்தது; ஒருவருள்ள நிகழ்ச்சிகளெல்லாம் ஒருவரறிந்து நலந்தீங் கிரண்டிலும் நழுவாத கேண்மையுடையராய் நிற்கச்செய்வது. கீழ்ச்சென்ற ஏனை இருபடிகளில் நிற்பாரினும் நெஞ்சம் ஒத்த நேயர்மாட்டு நிகழும் அன்பும் இன்பமுஞ் சாலப்பெரியவாகலின், இவரது சேர்க்கை ஏனையிருவரது சேர்க்கையினுஞ் சிறந்ததாக மூன்றாம் படிக்கண்ணே இருத்தப்பட்டது. நெஞ்சு ஒன்றாகாவழித் துன்பமும், அவை ஒன்றாயவழிக் கழிபேரின்பமும் விளைதலால், தோழர்தம் சேர்க்கையும் இன்பத்தையே நிலைக்களனாய்க் கொண்டு நிற்றல் எளிதிற் புலனாம். இனி, இதற்குமேல் நாலாம்படிக்கண் இறுதியாய் நிற்பது சன்மார்க்கம் என்று உயர்த்துச் சொல்லப்படுவதாகும். இஃது ஒருதலைவன்பால் அவனோடு உயிரும் உடம்பும் ஒன்றான அவன்றன் காதலிக்கு உளதாகுங் காதலன் பின் சேர்க்கையேயாகும். இதற்குக் கீழ்ப்படியில் நின்ற தோழரது சேர்க்கை மிகச் சிறந்ததேயாயினும், அஃது அவர்தம் உள்ளத்தளவாய் நிற்பதே யன்றி, அவர் தம் உடம்பையும் பற்றி நிற்பதன்று. மற்றுக், காதலன்பின் வயப்பட்ட தலைவன்றலைவியர் சேர்க்கையோ அவர்தம் உள்ளத்தையே யன்றி உடம்பையும் ஒருங்கு பிணித்து, அன்பின் சேர்க்கைகள் எல்லாவற்றிற்கும் முடிந்த நிலையாய்த் திகழ்வதாகும். இங்ஙனம் நிகழும் இம்முடிந்த சேர்க்கைக்கண், உண்டாம் இன்பப்பெருக்கின் நிலை அந்நிலைக்கண் வைகும் அவ்விருவர்க்கல்லாமல் வேறெவர்க்குந் தினைத்தனையும் புலனாகாது; இஃது உணர்த்துதற்கன்றே, தெய்வப்புலமைத் திருவள்ளுவர், தாம்வீழ்வார் மென்றோட் டுயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு என்றருளிச் செய்ததூஉம், மாணிக்கவாசகப் பெருமான், உணர்ந்தார்க் குணர்வரி யோன்தில்லைச் சிற்றம் பலத்தொருத்தன், குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச் செவ் வாய்இன் கொடியிடைதோள், புணர்ந்தாற் புணருந் தொறும்பெரும் போகம் என்றருளிச் செய்ததூஉமென் றுணர்ந்துகொள்க. இவ்வாறெல்லாம் இவ்வுலகத்து நடைபெறாநிற்கும் இந்நால்வகைச் சேர்க்கைகளும் நன்களந்து காணவல்லார்க்கு, அவையெல்லாம் அன்பினையும் அதற்கு வித்தான இன்பத்தினையுமே உயிராய்க்கொண்டு நிற்றல் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெள்ளிதிற் புலனாம். எனவே, அன்புக்கு முதன்மை சொல்லும் இடங்களிலெல்லாம் அதற்கு முதலான இன்பமும் உடன்விராய் நிற்குமென்றும், அது குறித்தே மாணிக்கவாசகப்பெருமானும் இறைவனை இன்பமே என்னுடை அன்பே என அவ்விரண்டையும் ஒருங்கு புணர்த்தோதினாரென்றும் உணர்ந்து, அம்மறுப்புரைகாரரின்பிழைபாட்டினைத் தெரிந்துகொள்க. 12. காமம் என்பது இருபொருளுந் தரும் இனி, யாம் காதலின்பம் உயர்ந்ததெனவுங் காமவின்பந் தாழ்ந்ததெனவுங் கூறியதனை அம்மறுப்புரைக்காரர் பிழையெனப் புகன்று, காமம் என்பது உயர்ந்த இன்பத்தினையே யுணர்த்துமெனக் கிளந்ததனைச் சிறிது ஆராய்வாம். காமம் என்னுஞ் சொற் பொதுவாய் ஓர் ஆண்மகற்கும் ஒரு பெண்மகட்கும் இடைநிகழும் உடம்பின் சேர்க்கையால் உண்டாம் இன்பத்தினை உணர்த்து மன்றி, யாண்டும் அஃது உயர்ந்த இன்பத்தினையே உணர்த்துவதன்று. அங்ஙனமின்றி மறுப்புரைக்காரர் கூறுமாறு அஃது உயர்ந்த இன்பத்தினையே யுணர்த்துவதொன்றாயிற் காதற்காமங் காமத்திற் சிறந்தது என யாம் மேலெடுத்துக்காட்டிய பரிபாடற் பழஞ்சான்றோர்தம் மெய்ம்மொழிக்கு யாங்ஙனம் பொருளுரைப்பர்? காமம் என்னுஞ் சொல்லே உயர்ந்த வின்பத்தினை யுணர்த்துமாயின் ஆசிரியர் குன்றம் பூதனார் காதற்காமம் என அதற்கு வேறு அடைமொழீ கொடுத்ததுங், காதற்காமமே காமவின்பத்திற் சிறந்த தென்றதும் என்னை? மக்கள் பாற் பொதுமையில் நிகழும் காம வின்பங்கள் பலவற்றுட், பாதலன்பின் விளைவான காமமே சிறந்ததென அவர் உரைக்குமாற்றாற், காமம் என்னுஞ் சொல் உயர்ந்த காமத்திற்கும் இழிந்த காமத்திற்கும் பொதுவாய் நின்று புணர்ச்சி யின்பத்தினை யுணர்த்துமென்பது புலப்பட வில்லையோ? ஆசிரியர் நக்கீரனார் இறையனாரகப் பெருளுரை யிற் களவு கொலை காமம் இணைவிழைச்சு என்பனவன்றோ சமயத்தாரானும் உலகத்தாரானுங் கடியப்பட்டன? அவற்றுள் ஒன்றன்றாலோ இது? எனின்; அற்றன்று, களவு எனுஞ் சொற்கேட்டுக் களவு தீதென்பதூஉங், காமம் என்னுஞ் சொற்கேட்டுக் காமத் தீதென்பதூஉம் அன்று; மற்றவை நல்லவாமாறும் உண்டு என்றுரைத்த மெய்யுரையாற், காமம் என்னுஞ் சொல் இழிந்த இன்பத்தின் மேற்றாயும் உயர்ந்த இன்பத்தின் மேற்றாயும் வருதல் தெளியப்படுகின்றதன்றோ? அற்றேல், ஆசிரியர் தொல்காப்பியனார் அதனை உயர்ந்த வின்பத்தின் மேற்றாகவே வைத்துரைத்த தென்னையெனின்; அச்சொல் உயர்ந்த வின்பத்தினையும் உணர்த்துதற்கு உரிமை யுடைத்தென்பது மேலே நக்கீரனார் கூறியவுரையாற் றுணியக்கிடத்தலின், அன்பினைந்திணை யொழுக்கத்தைக் கூறுந் தமது மேற்கோளுக்கு இசைய ஆசிரியர் அச்சொல்லைக் காதலின்பத்தின்பாற் படுத்துச் சூத்திரஞ் செய்தருளினார். ஒரு நூலுள் வரும் ஒரு சொல்லுக்குப் பொருடுணியும்வழி, அந்நூல் யாத்த ஆசிரியன் கருத்தறிந்து அதற்குப் பொருள்கொள்ளல் வேண்டுமேயல்லாது, தமக்குத் தோன்றியவாறெல்லாம் அதற்குப் பொருளுரைப்பது சிறிதும் முறையாகாதென்க. இனி, ஆசிரியர் திருவள்ளுவனாரோ காமம் என்னுஞ் சொல்லுக்கு உயர்பொருள் இழிபொருள் இரண்டுங்கொண்டிருக்க, அதனை ஆராய்ந்து பாராத அம்மறுப்புரைக் காரர் அச்சொல்லுக்கு அவர் உயர்பொருளே கொண்டா ரெனப் பிழைபடக் கூறினார். திருவள்ளுவனார், காமத்துப் பாலில் மட்டும் அதற் குயர்வுபொருள் கொண்டு, துறவறவியல் மெய்யுணர்தல் அதிகாரத்திற் காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமங் கெடக்கெடு நோய் என அதற்கு இழிவுபொருள் கொண்டார். ஆகவே, யாம் மெய்யன்பின்வழி நிகழும் உயர்ந்த காமவின்பத்தைக் காதல் என்றதும், அம்மெய்யன் பின்வழி நிகழாது வெற்றுடம்பின் சேர்க்கையளவாய் நிகழ்வதனை இழிந்த காமம் என்றதுங் தொல்லாசிரியர் வழக்கோடு ஒருங்கொத்த முடிபாகலின், இஃதுணராது காமம் என்னுஞ் சொல் உயர்ந்த வின்பத்தினையே யுணர்த்து மென்ற அம்மறுப்புரைக்காரர் கூற்று உள்ளீடில்லா வெறும் பதடியாய் ஒழிந்ததென்றறிந்துகொள்க. 13. தொல்காப்பியத்திற் சாதி இல்லை இனித், தொல்காப்பியத்தில் தொழில் வேற்றுமையே சொல்லப்பட்டதன்றிச், சாதிவேற்றுமை சொல்லப்பட வில்லையென்ற எமது மேற்கோளை, அம்மறுப்புரைக்காரர் மறுத்த பகுதி சிறிது ஆராயற்பாற்று. மக்கள் வாழ்க்கையானது, அவர் தம்முள் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு தொழிலை மேற்கொண்டு அவ்வாற்றால் ஒருவொருக்கொருவர் உதவியாய்நிற்ப. நடைபெறுவதாகும். ஒருவரே தமக்கு வேண்டும் பொருள்களையெல்லாந் தம்முடைய முயற்சியினாலேயே தேடிக்கொள்ளுதல் இயலாது. பசித் வேளைக்குக் காயோ கனியோ பச்சிலையோ உண்டு, தழைகளை உடுத்துக், குகைகளிலும் மரப்பொந்துகளிலும் இருந்து உயிர் வாழும் மாக்களுங்கூடத் தம்முள் ஒருவருதவியை ஏனையோர் வேண்டி நிற்கின்றார். ஏதொரு முயற்சியுஞ் செய்ய அறியாத சிறு குழவிப்பருவத்தும், முயற்சி அவிந்த முதுமைப்பருவத்தும் மக்கள் பிறருதவியைப் பெறாமற் பிழைத்தல் இயலாதன்றே? முயற்சியும் ஆற்றலும் உடைய இளம்பருவத்தினருங் கூட இடையிடையே வரும் நோயானும் பிற துன்பங்களானுந் தம் முயற்சியும் வலிவும் இழந்து பிறருதவியை அவாவியபடியாய்க் கிடத்தலையுங் காண்டு மன்றோ? நாகரிகமில்லா மக்கள்ளுள்ளேயே ஒருவருதவியை ஒருவர் நாடாது உயிர்வாழ்தல் இயலாதாயின், அறிவும் இன்பமும் முறைமுறையே மிகும் நாகரிக வாழ்க்கையில் உள்ளவர்க்கு ஒருவருதவியை யொருவர் அவாவாது காலங்கழித்தல் இயலுமோ? உழவும் நெசவும் வாணிகமும் அரசும் போரும் ஓதலும் இறைவற்கு வழிபாடு ஆற்றலும் பிறவுமாகிய தொழில்களை யெல்லாம் மக்கள் ஒவ்வொருவருந் தாந்தாமே செய்வதென்றால், அதற்கு அறிவும் ஆற்றலும் போதாமையோடு வாழ்நாளுங் காணாது. ஆகவே, ஒவ்வொரு தொழிலையுஞ் சிறப்பாகச் செய்தற்கு ஒவ்வொரு தொகுப்பினர், இப்பாரதநாட்டிலே மட்டுமன்றி நாகரிகத்திற் சிறந்த ஏனை அயல் நாடுகளிலும் இன்றியமையாது இயற்கையாகவே பண்டுதொட்டு வகுக்கப்படுவாராயினர். இங்ஙனமாகப் பரந்து பல்வேறு வகைப்பட்டு நிகழுந் தொழில்களைச் செய்யும் மக்கள் எல்லாம் பதினெண் வகுப்பினராகத் தமிழ்நாட்டின்கட் பிரிக்கப் பட்டனர். மற்று, ஆரியர் வந்து குடியேறிய வடநாட்டிலோ எல்லாத் தொழில்களுங் கைத்தொழிலும் உழவுவாணிகமும் அரசும் ஓதுதலும் என நால்வகையுள் அடக்கப்பட்டு, அவற்றைச் செய்வார் முறையே சூத்திரரும் வைசியரும் க்ஷத்தியரும் பிராமணரும் என நால்வகுப்பாகப் பிரிக்கப்பட்டனர். இவ்வாறு தென்னாடு வடநாடுகளிற் றொழில் வேறுபாடுபற்றிப் பண்டைநாளில் தனித்தனி வகுக்கப்பட்ட மக்கட்கூட்டத்தாருட் டொழில்வேற்றுமை ஒன்றேயிருந்த தல்லாமல், அக்கூட்டத்தார் ஒருவரோடொருவர் அளவளாய் உண்ணல் கலத்தல்களைச் செய்தலில் ஏதொரு வேறுபாடும் இருந்ததில்லை. இனி, இத் தொழில் வேற்றுமையிலிருந்து, காலஞ் செல்லச் செல்லச் சில தொழில்கள் உயர்வாகவும் ஏனைச் சில தொழில்கள் தாழ்வாகவுங் கருதப்படலான காலந் தொட்டு, அவ்வக்கூட்டத்தார் தத்தம்மிலன்றிப் பிறரோடு உண்ணல் கலத்தல்களைச் செய்ய மறுத்தமையிற் சாதி வேற்றுமை உளதாயிற்று. ஒழுக்கத்தால் உயர்குணத்தால் நல்லறிவால் மெய்யன்பாலன்றி, வெறும் பிறப்பளவால் தம்மை யுயர்த்தி ஏனையோரைத் தாழ்த்திப் பேசுஞ் சாதியிறுமாப்புப் பெரும்பாலும் இத்தமிழ் நாட்டின் கண்ணேதான் உண்டாயிற்று. இத்துணைக் கொடிய சாதி வேற்றுமை வடநாட்டின்கண் இல்லாமை அங்குச் சென்றார் யாவரும் நன்குணர்வர். இங்ஙன மெல்லாம் முன்னில்லாத சாதி வேற்றுமை பின்னுண்டான வரலாறுகளை, அரிய பெரிய நூன்மேற்கோள்களுடன் சாதிவேற்றுமையும் போலிச் சைவரும் என்னும் நூலில் விரித்து விளக்கியிருக்கின்றேம். அவற்றிற் கெல்லாம் விடைதரமாட்டாத அம்மறுப்புரைக்காரர் ஒவ்வொரு கூட்டத்தார்க்குரிய ஒவ்வொரு தொழில் வரையறையினை நுவலுஞ் சில தொல்காப்பியச் சூத்திரங்களை எடுத்துக்காட்டி, அவ்வாற்றால் தொல்காப்பியத் திலேயே சாதிவேற்றுமை சொல்லப்பட்டிருக்கின்றதென எளிதாகச் சொல்லிவிட்டார். இவர்தம் அறிவின் திறத்தை என்னென்பேம்! தொல் காப்பியத்திற் சாதிவேற்றுமை கூறப்பட்டதென நாட்டப் புகுந்தவர், ஒரு வகுப்பினர் மற்றொரு வகுப்பினரோடு உண்ணல் கலத்தல்களைச் செய்யவில்லை யென்றாதல், அன்றிச் செய்யலாகாதென்றாதல் நுவலும் அல்லது கட்டளை தருஞ் சூத்திரங்களிருந்தால், அவற்றையன்றோ எடுத்துக்காட்டல வேண்டும்? அவ்வாறு செய்தற்கு அந்நூலிற் சிறிதும் இடன்இம்மையால், அது செய்யமாட்டாராய் அவ்வவர்க்குரிய தொழில் வேறுபாடுகளை மொழியுஞ் சூத்திரங்களையே சாதிவேற்றுமையும் மொழி வனவாகப் பிழைபடக்கருதி அவைதம்மையே எடுத்துக்காட்டி இழுக்கினார். நன்று, தொல்காப்பியத்திற் சாதிவேற்றுமை நுவலுஞ் சூத்திரங்கள் இல்லாதது உண்மையேயாயினுந், தொழிலால் வேறுபட்ட கூட்டத்தார் பலர் தமக்குள் உண்ணல் கலத்தல்கள் நிகழ்ந்தமையாவது அதன்கட் சொல்லப்பட்டுளதோவெனின்! உளது. குறிஞ்சிநிலத்தில் வைகும் வேட்டுவமகளிரை மருதநிலத் தலைவர்களான வேளாளர்கள் மணந்து கொண்டமையும், அவர்களோடு ஒருங்கிருந்து அவர்கள் அட்டுப்படைத்த உணவினை அமிழ்தினுஞ் சிறந்தாகப் பாராட்டி அருந்தின மையுந், தொல்காப்பியத்துக் களவியல், 19 ஆஞ் சூத்திரத்தில், புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப் பகா அ விருந்தின் பகுதிக் கண்ணும் என்றும், வேளாண் எதிரும் விருந்தின் கண்ணும் என்றும், 23 ஆஞ் சூத்திரத்தில், வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தும் என்றும், கற்பியல், 5 ஆஞ் சூத்திரத்தல், சொல்லென, ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது வானோர் அமுதம் புரையுமால் எமக்கென அடிசிலும் பூவுந் தொடுதற் கண்ணும் என்றும் போந்த அருளுரைகளால் விளக்கமாக அறியப் படுகின்றன வல்லவோ? இங்ஙனம் அவ்வந்நிலத்துத் தொழிலால் வேறுபட்ட மக்கள் அதுபற்றித் தம்முள் உண்ணல் கலத்தல்களினும் வேறுபடாமல் ஒருங்கு அளவளாய் வாழ்ந்தமையினைத் தெற்றென எடுத்துரைக்கும் தெய்வத் தொல்காப்பிய நூற்கருதினை எள்ளளவும் உணர்ந்து பாராத அம்மறுப்புரைக்காரர், அதனைத் தமது சாதியிறுமாப்புரக்குத் துணையாகக்கொண்டது, பெரிய கருங்கல்லைப் புணையாகப் கொண்டு அரிய கடலை நீந்தப் புக்கோன் புன்செயலாய் முடிந்தமை காண்க. அற்றாயினுந், தொழில்வேற்றுமை கூறியது கொண்டே சாதிவேற்றுமை உய்த்துணரக் கிடக்குமென்றும் ஆகாதோ வெனின்; ஆகாது, பண்டைநாளிலிருந்த மக்களுள் ஒரு குடும்பத் தாரிலேயே பலர் பற்பல தொழில்களைச் செய்தனரென்பதும், அவ்வாறு பலவேறு தொழில்களைச் செய்யினும் அதுபற்றித் தம்முள் வேறுபடாது ஒன்றாகவே யிருந்தன ரென்பதும் இருக்குவேத ஒன்பதாம் மண்டிலத்தின்கட் போந்த ( ) யான் பாடல்களைச் செய்கின்றேன்; என் தந்தையோ ஒரு மருத்துவன்! என் தாயோ திரிகையில் தானியங்களை அரைக்கின்றாள்; செல்வத்தைப் பெறும், பொருட்டாகப் பலவேறு சூழ்ச்சிகளால் ஆக்களைப் போல யாம் வேண்டிய தொழில்களை மேற்கொள்கின்றோம் என ஓர் ஆரியக்குடிப்பிறந்தான் இயற்றிய செய்யுளால் நன்கு தெளியப்படுகின்றமை காண்க. இஞ்ஞான்றும் பார்ப்பனர் என்றுஞ் சைவவேளாளர் என்றுந் தம்மை யுயர்த்துப் பேசிக்கொள்வாரிலேயே ஒருபாலார் நூல் ஓது கின்றார். ஓதுவிக்கின்றார், ஒருபாலார் திருக்கோயில்களில் தொண்டுபுரிகின்றார், ஒருபாலார் உழவுசெய்கின்றார் செய்விக்கின்றார் ஒருபாலார் ஊருர் சென்றும் ஓருரி லிருந்தும் பண்டங்கள் கொண்டு விற்கின்றார், ஒரு பாலார் உணவுப் பண்டங்கள் செய்துவிற்கின்றார், ஒரு பாலார் இசைபாடிப் பிழைக்கின்றார், ஒருபாலார் நாடகம் ஆடிக் காலங்கழிக்கின்றார், ஒருபாலார் அரசின்கீழ்ப் பல துறைகளில் அமர்ந்து ஊழியஞ்செய்கின்றார், ஒருபாலார் மருத்துவத் தொழில் புரிகின்றார், ஒருபாலார் மன்றங்களில் வழக்காடுகின்றார், இன்னும் இங்ஙனமே அவர்செய்யுந் தொழில்கள் எத்தனையோ பல; அவ்வாறெல்லாம் அவர்கள் பற்பல தொழில்களைச் செய்தும், தம்முள் ஏதும் வேற்றுமையின்றி உண்ணல் கலத்தல்களைச் செய்யக் காண்டுமன்றோ? ஆகவே, தொழில்வேற்றுமை கூறியது கொண்டே சாதிவேற்றுமை உய்த்தறியப் படுமென்றல் பொருந்தாதென விடுக்க. 14. காரைக்காலம்மையார் மனைவாழ்க்கை இனிக், காரைக்காலம்மையார் தங்காதற்கருத்தறிந்து, அவர்தஞ் சுற்றத்தார் அவர்க்கேற்ற மணமகனைத் தெரிந்தெடுத்து, மணஞ்செய்வியாது, தமது சாதிக்கட்டுப்பாட்டிற் பிணிப்புண்டு, அவர்க்கு ஏலாத ஒருவனைக் கணவனாகப் பொருத்தினமையால் அவரது வாழ்க்கை காதலன் பின்பாற் பட்டு ஒருவழிச் செல்லாதாயிற்று என யாம் மொழிந்ததனை மறுப்பான் புகுந்த அம்மறுப்புரைக்காரர், மகளிர்தாமே கணவனைத் தெரிந்து கொள்ளும் முறை, வேசிகளிடத்தும் அவரையொத்த வகுப்பாரிடத்துமின்றி, ஏனையுயர்ந்த சாதியாரிடத்துப் பண்டும் இன்றும் நிகழவில்லை யென்கின்றார். ஆசிரியர் தொல்காப்பியனார், ஆரியர் நாட்டு எண்வகை மணங்களுட் சிறந்த காந்தர்வமணத்தோடு ஒப்பதான காதன்மணமே பண்டைத் தமிழ்மக்களுள் நடைபெற்ற விழுப்ப முடையதெனக் கொண்டு, அதனையே சிறந்தெடுத்து, இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக் கூட்டங் காணுங் காலை மறையோர்தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்லியாழ்த் துணைமையோர் இயல்பே (களவியல் 1) என்றருளிச் செய்தனர். இச்சூத்திரத்திற்கு உரைகண்ட நச்சினார்க்கினியரும் இவ்விழுமிய மணமே வேதத்திற்கும் உடம்பாடென்பது காட்டுவாராய், வழக்கு நாடி என்றலின் இஃதுலகிய லெனப்படும்; உலகத்துமன்றலாவது குரவர் கொடுப்பதற்கு முன்னர் ஒருவற்கும் ஒருத்திக்குங் கண்ணும் மனமுந் தம்முள் இயைவதேயென வேதமுங் கூறிற்றாதலின். என்று உரையுங் கூறினார். கூறவே, பண்டைத் தமிழ்மக்கள் மட்டுமே யன்றி ஆரியமக்களுள்ளும் இளைய ஆடவரும் மகளிருந் தம்மில் ஒருவரை யொருவர் காதலித்தே மணங் கூடினாரென்னும் உண்மை இனிது விளங்கா நிற்கும். ஆசிரியர் தொல்காப்பியனார் வழிவந்த பண்டைத் தமிழ்ச்சான்றோரில் திருவள்ளுவர், நக்கீரர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்திகள் முதலான எல்லாத் தெய்வ ஆசிரியர்களுங் காதன்மணத்தை விதந்தெடுத்து அருளிச் செய்திருக்க, காதன்மணம் பண்டைக் காலத் துயர்ந்தோரில் நடக்கவில்லையென்று படுபொய் யுரைத்ததோடு அமையாது, அங்ஙனங் காதன்மணஞ் செய்த பண்டையுயர்ந்தோரையும், அம்மணத்தினை விதந் தெடுத்து நூல்யாத்த தெய்வ ஆசிரியரையுமெல்லாம் வேசி மக்கள் வகுப்பின்பாற் படுத்த அம்மறுப்புரைகாரர் அத் தமிழ் மேன்மக்கள் மரபில்வந்த ஒருத்தி வயிற்றிற் பிறந்தவரோ அல்லரோ அறிகிலம். ஒருகால் அவர் தம்மை ஆரிய வகுப்பின்கண் ஒருத்திபாற் பிறந்தவராகக் கருதியிருக்கலாமெனில், ஆரிய வேதமுங் காதன்மணத்தையே விழுமிதெனக் கொண்டு மொழிதலின், ஆரிய வேதநூ லாசிரியரும் அவர்காலத்து ஆரிய மக்களும் எல்லாங் காதன் மணஞ் செய்தே வாழ்ந்தமை புலனாம்; அவ்வாறு காதன் மணஞ்செய்த ஆரியரும் அம்மறுப்புரைக்காரர் கூற்றின்படி வேசிமக்களேயாய் முடிதலின், அவர் ஆரியப்பெண் ஒருத்தி வயிற்றிலும் பிறந்தவரல்லர் போலும்! இப்பரத நாட்டின்கட் பண்டுதொட்டு வாழ்ந்துவருந் தமிழர் ஆரியரெல்லாரும் வேசிமக்களாக இவரதுரையாற் பெறப்படுதலின், இவர் இவ்விருவேறு இனத்தவரல்லாத வேறெவ்வினத்தவள் வயிற்றிற் பிறந்தாரென்பதை அதனை ஆராயவிரும்புவாரே நிலையிடற்பாலார். அதுகிடக்க. இனிப், பண்டைநாளின் கணிருந்த உயர்ந்த மக்கள் எவருங் காதன் மணஞ் செய்யவில்லை என்று படுபொய் மொழிந்த அம் மறுப்புரைகாரர், அப்பொய்யுரையைப் பள்ளிக்கூடத்துச் சிறுவர் பாற் சென்று உரைப்பராயின், அவர் உடனே இவர்தம் பொய்யுரையின் புன்மையினை நன்கெடுத்துக்காட்டி, இவர் இறுமாப்பினை அடக்கிவிடுவர். ஏனெனின், உயர்குலத்தவ னாகிய துஷ்யந்தமன்னனுங் கண்ணுவமுனிவர் வளர்த்த சகுந்தலையுந் தாமாகவே காதலித்து மணந்து கொண்ட வரலாற்றினை அறிந்திலிரோ! என்றும், விழுமியோனான நளனை எழில் மிகும் அரசியான தமயந்தி பெரிதுங் காதலித்துத் தானாகவே மாலைசூட்டி அவனை மணந்து கொண்ட வரலாற்றினை உணர்ந்திலிரோ! என்றும், கற்பரசியாகிய சாவித்திரி சத்தியவானைக் கானகத்தே கண்டு அவன்மேற் கழிபெருங் காதல் கொண்டு அவனை மணந்த வரலாற்றினைத் தெரியீரோ! என்றும் அவர் கடாவி இவரது சாதிச் செருக்கினை எளிதிலே களைந்தொழிப்பர். இம்மேலோர்களை யெல்லாஞ் சிறிதும் வாய்கூசாது வேசிமக்களென்னும் வகுப்பிற் சேர்த்துரைத்த மறுப்புரைகாரர் புல்லுரையினை மேற்காட்டிய விழுமிய காதன் மண வரலாறுகள் வாளாய் நின்று ஈருமல்லவோ! அதுநிற்க. இனி, அம்மறுப்புரைகாரர் இஞ்ஞான்று காதன் மணம் புரிவாரையும் வேசிமக்களென்ற வகுப்பிற் சேர்த்துக் கூறிய தமது தலைகொழுத்த உரையினை, இஞ்ஞான்று கல்வியறிவு ஒழுக்கங்களானும் உயர்ந்த பதவிகளானும் மேல்நிலைக்கண்ணின்று காதன்மணம் புரிந்து வரும் மேன் மக்கள் பாற் சென்று உரைப்பராயின், அவர், நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும் என்னுந் தெய்வத் திருக்குறளின்படி, நலமில்லாப் பொய்யுரை பகர்ந்து எம்மை இழித்துப் பேசும் நீரே நும்பிறப்பின் கண் ஐயப்படுதற் குரியீரன்றி யாமல்ம் என அவர் இவரது உரைக்கொழுப்பினை யுருகச் செய்வ ரன்றோ! இனி, ஆசிரியர் சேக்கிழார் உயர்ந்த வகுப்பார்பாற் காதன்மணம் நிகழ்ந்ததெனக் கூறிற்றில ரென்றார், உயர்ந்த ஆதி சைவ அந்தண வகுப்பில் வந்த சுந்தரமூர்த்தி நாயனார்க்கும் பரவை நாச்சியார்க்கும் வேளாள வகுப்பிற் பிறந்த சங்கலிநாச்சியார்க்கும் காதன் மணம் நிகழ்ந்த தனை ஆசிரியர் சேக்கிழார் தாம் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண முற் பிற்பகுதிகளில் நன்கெடுத்து உரையாநிறக், அவர் அதனை உரைத்திலரென்ற அம்மறுப் புரைகாரர் தங் கொடிய பொய்யுரைக்கு அறக்கடவுளும் அஞ்சுமென்க. இனிக், காரைக்காலம்மையார்க்கு அவர்தஞ் சுற்றத்தாரால் மணம் பொருத்தப்பட்ட கணவன், அவர்தந் தகுதிக்கு ஒத்தவனல்லன் என்ற எமதுரையை மறுப்பான் புகுந்த அம்மறுப்புரைகாரர், கல்வியிலுஞ் சிவநேயத்திலும் அடியார் வழிபாட்டிலும் அவன் அம்மையார்க்கு முழுதும் ஒத்தவன் என்பதனையன்றோ நாட்டல்வேண்டும்? அவர் அவ்வாறு செய்தலை விடுத்துத் தமது கூற்றின் முரணை அறுக்குஞ் சேக்கிழார் செய்யுட்களையே எடுத்துக்காட்டி நெகிழ்ந்து போதலுடன் அவன் அம்மையார்க்குத் தக்கான் அல்லனெனச் சேக்கிர் கூறினரா? என்று வினாவுதலுஞ் செய்கின்றார். அம்மையார்க்கும் அவர்தங் கணவற்கும் உள்ள தொடர்பினை ஆசிரியர் சேக்கிழார் கூறிச்செல்லும் முறையின்படி அதனையுணருஞ் சிறுமகாரும், அவன் அவர்க்குத் தக்க கணவனல்ல னென்பதை நன்கறிவர். அச்சிறுமகார்க் குள்ள உணர்ச்சி தானும் இன்றி, அம் மறுப்புரைகாரர் வினாவுவராயின் அவர்க்கு அறிவுகொளுத்துதற்குரியார் அச்சிறுமகாரே யாவர். ஆசிரியர் சேக்கிழாரோ தாம் கூறிச் செல்லும் முறையில் அவர் அவர்க்குத் தக்க கணவனல்லன் என்னு முண்மையினை இனிது விளங்க வைத்தாற்போல், அவன் அவர்க்குத் தக்கானென்பதனை யாண்டேனுங் கூறியிருக் கின்றனரா? அல்லது அம்மை யாராவது அக்கணவன்பாற் காதலன்பு பூண்ட ஒழுகினாரென விளம்பினரா? சிறிது மில்லையே. அவன் அம்மையாரொடு தனி மனைக்கண் வைகியவழிச் செல்வத்தைப் பெருக்கினா னென்றன்றோ மொழிந்தனர். அவன் அம்மையார் மேற்காதல் கொண்டு ஒழுகினான் என்றுரையாமல், தகைப்பில் பெருங் காதலினால் தங்குமனை வளம்பெருக்கி, மிகப்புரியுங் கொள்கையினில் மேம்படுதல் மேவினாள் என அவன் பொருள்மேற் காதல் வைத்து அதனைப் பெருக்குதலிற் கருத் தூன்றினான் எனக் கூறுதலை உற்று நோக்குங்கால், அவன் பொருண்மேற் காதல்கொண்டாற் போல் அம்மையார் மேற் காதல்கொண்டிலன் என்பது சிறிது அறிவுடையார்க்கும் விளங்கற்பாற்றாம். அவன் பொருள்மேற் காதல்கொண்டு முனைந்து நிற்க, அம்மை யாரோ சிவபிரான் திருவடிக்கட் காதல் பெருக வைகினார் என்பது போதரப், பூங்குழலார் அவர்தாமும் பொருவிடையார் திருவடிக்கீழ் ஓங்கியஅன் புறுகாதல் ஒழிவின்றி மிகப்பெருகப் பாங்கில்வரும் மனையறத்தின் பண்புவழா மையிற்பயில்வார் என்று ஆசிரியர் கூறுதலை ஆழ்ந்து ஆராய்வார்க்கு அம்மையார் தமக்குத் தக்கவ னல்லாத அக்கணவனொடு காதலால் வைகாது கடமைக்காகவே வைகி மனையறத்தைச் செவ்விதின் நடாத்திக் கொண்டு சிவபிரான் திருவடிக்கண் மட்டுமே காதலிற் பெருகினார் என்பது உணரக்கிடக்கு மன்றோ? இன்னும், அம்மையார் சிவனடியார்க்குத் தொண்டு செய்வதில் உறைத்து நின்றமை புலனாக, நம்பரடி யார்அணைந்தால் நல்லதிரு வழுதுஅளித்தும் செம்பொன்னும் நவமணியும் செழுந்துகிலு முதலான தம்பரிவி னாலவார்க்குத் தகுதியின்வேண் டுவனகொடுத்தும் உம்பர்பிரான் திருவடிக்கீழ் உணர்வுமிக்க ஒழுகுநாள் என்று ஆசிரியர் சேக்கிழார் அம்மையார் திருத்தொண்டினை நன்கெடுத்து விளம்பினாற் போல, அவர்தம் கணவனும் அவரோடொத்து நின்று அடியார்க்குத் திருத்தொண்டு செய்தனனென யாண்டேனுங் கூறியுள்ளரோ! எட்டுணையுமில்லையே. அதுவேயுமன்றித், தான் விடுத்த மாங்கனிகள் இரண்டுள் ஒன்றை அம்மையார் அடியார்க்கு இட்டனராக, அதனை அறியாதே முன் ஒன்றனை அயின்று, பின்னுமொன்று வேண்டியபோது அம்மையார் தாமதனை அடியார்க்கிட்ட வரலாற்றை அவன்பால் உரையாமல் அஞ்சினார் என்பதனை ஆராய்ந்து பார்க்குங்கால், அவன் அடியார்க்கு வேண்டுவ கொடுத்தலிற் சிறிதும் விருப்பிலான் என்பது துணியப்படுகின்ற தன்றோ? அதன்பின்னர்; அவர் இறைவனருளாற் பெற்ற மாங்கனியை அவனுக்கு இட அதன் அமுதினுமிக்க சுவையை வியந்து அது வந்த வரலாற்றை அவன் வினா வியபோதும், அம்மையார் நடுக்கமுற்று அஃது இறைவனருளாற் கிடைத்த உண்மையினைத் தெரிவித்தபோதும் அவன் அம்மையாரின் சிவநேயப் பேரருள் நிலையினை அறிந்திலன் என்று ஆசிரியர் சேக்கிழாரே ஈசனருள் எனக்கேட்ட இல் இறைவன் அது தெளியான் என்று கூறுமாற்றானும், அவன் அம்மையாரின் உண்மை நிலையை உணர்ந்தவனவல்ல னென்பதூஉம் அவனுள்ளமும் அவர்உள்ளமும் ஒருவழியே ஒன்று பட்டு நின்றன அல்ல என்பதூஉம், அதனால் அவன் அவர்க்கேற்ற கணவனல்ல னென்பதூஉம் இனிது விளங்குகின்ற அல்லவோ? அதன்பின்னர், அம்மையார் கூறிய உண்மையை ஆராய்வான் வேண்டி மற்றுமொரு மாங்கனி அவன் வருவித்துத் தருமாறு வேண்டியபடியே அவர் இறைவன்பாற் பெற்ற மற்றுமொரு கனியையுங் கொணர்ந்து அவன் கையிற்கொடுக்க, அஃது உடனே மறைந்து போயிற்று. அங்ஙனம் மறைந்ததைக் கண்ட பின்னும் அவன் அம்மையாரின் தெய்வமாட்சியினையும் அவர்க்குச் சிவபிரான் அருள்செய்த மாட்சி யினையும் உணர்ந்து காணமாட்டானாய் அவர்பால் மேலும் மேலும் பேரன்பு கொள்ளமாட்டானாய், அவரை ஒரு தெய்வமாகவே கருதி அஞ்சி அவரை அணுகாதிருந்து, பின்னர் அவர்க்குத் தெரிவியாமலே அவரை விட்டு அகன்று வேறோரூர்க்குப் போய் வேறொரு மாதினை மணந்து கொண்டான் இவை தம்மை ஆசிரியர் சேக்கிழாரே, வணிகனுந் தன்கைப் புக்க மாங்கனி பின்னைக் காணான் தணிவரும் பயமேற் கொள்ள உள்ளமுந் தடுமா றெய்தி அணிகுழ லவரை வேறோர் அணங்கெனக் கருதி நீங்கும் துணிவு கொண்டு எவர்க்குஞ் சொல்லான் தொடர்வின்றி ஒழுகு நாளில் எனவும், விடுவதே எண்ணமாக மேவிய முயற்சி செய்வான் எனவும், சலந்தரு கடவுட் போற்றித் தலைமையாம் நாய்கன் றானும் நலந்தரு நாளி லேறி நளிர்திரைக் கடன்மேற் போனான் எனவும், கடன்மிசை வங்கமோட்டிக் கருதிய தேயந்தன்னில் அடைவுறச் சென்று சேர்ந்து எனவும், மெய்ப்புகழ் விளங்கு மவ்வூர் விரும்பவோர் வணிகன் பெற்ற செப்பருங் கன்னி தன்னைத் திருமலி வதுவை செய்தான் எனவும் உரைத்தல் காண்க. மேலெடுத்துக் காட்டிய மூன்றாஞ் செய்யுளில் அவன் அம்மையாரை விட்டுக் கடன்மேற்சென்ற காலையில் வருணனை வணங்கிச் சென்றான் என்று சேக்கிழார் கூறியிருத்தல்கொண்டு, அவன் சிவபிரானை வணங்குதலிலுங் கருத்து ஒருப்படுதல் இலன் என்பது நன்கு புலனாகின்றது அவன் உண்மையிற் சிவபிராற்கு அடியவனாயிருந்தால் அங்ஙனங் கடற்சிறு தெய்வத்தை வணங்கானன்றோ? மேலும், அவன் சிவபிரானிடத்தாவது சிவபிரானடியவரிடத்தாவது தினைத்தனை யன்புதானும் உடையனென்பது ஆசிரியரால் எங்கேனுங் குறிக்கப்பட்டடுளதா? சிறிதுமில்லையே. இங்ஙன மெல்லாம் ஆசிரியர் சேக்கிழார் கூறியிருக்கும் வரலாற்றுக் குறிப்புகளைப் பல படியானும் ஆய்ந்து பார்க்கும் வழிக், காரைக்காலம்மையார்க்குத் தக்க கணவன் அவனல்லனென்பது சிறு மகார்க்கும் எளிதின் விளங்காநிற்கும். இவையெல்லாம் ஒரு சிறிதாயினும் ஆராய்ந்து பார்க்கும் அறிவு மதுகை இல்லாத அம்மறுப்புரைகாரர் ஏதொரு சான்றுங்காட்டாது, அவன் அவருக்குத் தக்க கணவனே என அழிவழக்குப் பேசியது கண்டு அறிவுடையார் அவர் கூற்றை எள்ளி நகையாடி விடுப்பதன்றி வேறு என் செயற்பாலார்! இனித், தன்னை வணங்குதற்குரிய மனையாளாகிய அம்மையாரைக் கணவனாகிய தான் வணங்கியது அவரிடத்துக் கண்ட தெய்வத்தன்மை பற்றியேயாதலின், அது கொண்டு அவனை அவர்க்குத் தக்கானல்லன் என்றல் அமையாது என அம்மறுப்புரைகாரர் எமது மேற்கோளை மறுத்தார். தெய்வத் தன்மை கண்டபின் அவன் அவரை அன்பினால் வணங்கினனா அச்சத்தால் வணங்கினனா என்று ஆராய்ந்து பார்த்தனராயின், அங்ஙனம் போலி மறுப்பு எழுத முன்வந்திரார். அவன் வணங்கியது அன்பினால் நிகழ்ந்ததாயின் அத்தகைய அன்பு அவன்பால் முன்னரே தோன்றியிருத்தல்வேண்டும். முன்னரே அன்பினாற் பற்றப்பட்டிருந்தானாயின், அவ்வன்பின் பெருக்கால் அவர்தந் திருத்தொண்டின் அரிய மாட்சியினை உணர்ந்திருந்தனனாயின், அம்மையாரை ஓரிமைப்பொழுதாயினும் பிரிந்திருக்க உளம் ஒருப்படுவனோ? அவரோடு ஒருங்கிருந்து அவர் செய்து போதருஞ் சிவநேயத் திருத்தொண்டிற்குத் தானுமுதவியாய் உடனிருந்து அதனைச் சிறக்கச் செய்து தானும் மகிழ்ந்து அவரையும் பெரிது மகிழ்விப்பனன்றோ? அன்புடையார் செயல் இதுவாயிருக்க, அவனோ அவ்வன்புக்கு மாறாய் அம்மையாரைக் காளியோ, கூளியோ, பேயோ, பூதமோ எனப் பிழையாக நினைந்து உள நடுநடுங்கி அவரைவிட்டு அவர் அறியாமே அகன்று, சேய்மைக் கண்ணதான பிறிதொரு நாட்டிற் சென்று குடியேறினான் என்பதனால் அவன் அம்மையாரின் உண்மைநிலை தெரிந்து அவர்பால் அன்பு பூண்டு ஒழுகினவன் அல்லனென்பதூஉம், அம்மையாரை அவர்தஞ் சுற்றத்தார் வலியக் கொண்டு போய் அவன்பாற் சேர்ப்பித்த ஞான்றும் அவன் தன்இரண்டாம் மனைவிமக்களோடு எதிர்போந்து, அவரை வணங்கியது. அவர் தனக்குந் தன்குடும்பத்தார்கும் ஏதேனுந் தீங்கு இழைத்து விடுவாரோ என்னும் அச்சத்தாலன்றி அன்பினாற் செய்ததன்றாதலின், அவன் அவரை வணங்கிய வணக்கம் அவர்க்குத் தக்கான் ஒருவனாற் செய்யப்பட்டதாகாதென்பதூஉம் இனிது பெறக்கிடந்தமை காண்க. ஆகவே, அம்மறுப்புரைகாரர் அவன் உளப்பான்மையினைப் பகுத்துணர்ந்து பாராது, அவனை அவர்க்குத் தக்கானென்றது பொருத்தமில் போலியுரையாமென்க. இனிச், சுந்தரமூர்த்தி நாயனார்க்கு அவர்தஞ் சுற்றத்தார் கூட்டிவைத்த மணத்தை இறைவன் தடுத்தருளியவாறுபோல, அம்மையார்க்கு நிகழ்ந்த திருமணத்தையும் அவன் தடுத்திலாமை அவர்பால் அவற்கு அருளிரக்கம் இன்மையாற் போலும்! என்று அம்மறுப்புரைகாரர் மற்றொன்று சொல்லிக் குறிப்பால் எம்மை ஏளனஞ் செய்திட்டார். இறைவன் அடியார்க்கு அருள் செய்யும் முறைகள் பல பெற்றியவாய் நம்மனோர்க்கு முரண்பாடுடையபோற் காணப்படும். அவற்றுக்கெல்லாங் காரணங்க ளென்னையென இறைவனையே கேட்டல் வேண்டுமன்றி, ஏனைமக்களைக்கேட்டால் அவை ஒரு சிறிதும் புலனாகா. மாணிக்கவாசகர் கொணர்ந்த பாண்டியன் பொருளையெல்லாங் கவர்ந்து நரிகளைப் பரிகளாகவும் பரிசுகளை நரிகளாகவும் மாறச்செய்து அருள் செய்ததும், திருஞானசம்பதர்க்கே திருமுலைப்பால் ஊட்டி அருள் செய்தததும், இயற்பகைநாயனார் மனைவியை அவர்பாற் பெற்றுச்சென்று அருள் செய்ததும், மெய்ப்பொருள் நாயனாரை அவர்க்குப் பகைவனாயினான் கையினாற் கொலைசெய்வித்து அருள்செய்ததும், சிறுத்தொண்ட நாயனார் பிள்ளையை அறுத்துக் கறிசமைக்கச் செய்து அருளியதும், குங்குலியக்கலையார்க்குக் கடைசியில் ஏராளமான செல்வத்தைக் கொடுத்து அருள் செய்ததும், இளையான்குடிமாறரை வாழ்நாண் முற்றும் வறுமையிலேயே வைத்து அருள்செய்ததும், இன்னும் இவைபோல ஒன்றினொன்று மாறான அருள் நிகழ்ச்சிகளை இறைவன் செய்ததும் என்னை? யென்று அவற்றுக்கெல்லாம் இறைவன் திருவுளக்கருத்தினை ஆராயப்புகுந்தால், அது நம்மனோர்க்கு விளங்கற்பாலதன்று. ஆதலால், இதனையோர் ஏதுவாய்க் கொண்டு அம்மறுப்புரைகாரர் எம்மை ஏளனஞ் செய்யப்புக்கது அவர்க்கே ஏளனமாய் முடிந்தமை காண்க. 15. சுந்தரமூர்த்திகளின் காதற் திருமணம் இனிச், சுந்தரமூர்த்தி நாயனார் பரவை சங்கிலியாரை மணந்ததற்குக் காரணம், அவர் தமது முற்பிறவியிற் றிருக்கைலையி லிருந்தஞான்று செய்த குற்றமேயாகுமென அம்மறுப்புரைகாரர், பிற்காலத்தே பொய்யாகப் புனைந்து கட்டிப் பெரிய புராணத்தே பார்ப்பனர் சேர்த்துவிட்ட ஒரு கதையினை எடுத்துக்காட்டுகின்றார்.வேறு தக்க காரணங் காட்டலியலாது ஒரு பொய்க்கதையினைத் தமக்குத் துணையாகக் கொண்ட இவரது செயல், நீரிலமிழ்வோன் ஒருவன் பெரிதுந் தத்தளித்துச் சிறியதொரு துரும்பினைத் தனக்குத் துணையாக விரைந்துபற்றிய தனையே ஒப்பதாயிருக்கின்றது! இவர் தமது சாதியிறுமாப்புக் கொள்கைக்கு இத்தகைய பொய்க்காரணமன்றி, வேறெது காட்டவல்லார்! அது நிற்க. இவரெடுத்துக் காட்டிய பொய்க்கதையினைக் கூறுந் திருமலைச்சருக்கம் ஆசிரியர் சேக்கிழாராற் செய்யப் படாமற் பிற்காலத்துப் பார்ப்பனரொருவாற் புனைந்து கட்டிப் பெரிய புராணத்தின்கட் சேர்க்கப்பட்டதாகும் என்னும் உண்மையினை எமது ஞானசாகரப் பத்துப் பதினோராம் பதும இதழ்களின் புல்லிமேல் வெளிவந்த சேக்கிழாரும் பெரிய புராணமும் என்னும் ஆராய்ச்சியுரையில் விரித்து விளக்கி யிருக்கின்றாம். அவ்வளவும் ஈண்டெழுதுதல் வேண்டாமையிற் சில குறிப்புகள் மட்டுமே காட்டுவாம்: திருக்கைலையிலிருந்த ஆலாலசுந்தரர் இறைவற்குப் பூக்கொய்வான் வேண்டி ஆண்டுள்ள பூங்காவிற் புக்கவழி, அங்கு முன்னரே இறைவிக்கு மலர்வேண்டி வந்திருந்த கமலினி, அனிந்திதை என்னும் நங்கையரைக் கண்டு காமுற்றுக் குற்றஞ் செய்தனரென்றார். இதனைக் கூறுகின்றுழிச், சிவபிரான் றிருவருளால் ஆலாலசுந்தரர் மனம் அந்நங்கையர்மாட்டும், அந்நங்கையர் மனம் ஆலாலசுந்தரர் மாட்டும் பதிந்தன என்று முதலிற் சொல்லிப், பின்னர்ப் பெருமானுக்கு மலர் எடுக்குங்கால் அங்ஙனம் அவர் காமுற்ற குற்றத்திற்காகவே நிலவுலகத்திற் பிறக்குமாறு இறைவனால் ஏவப்பட்டார் என முன்னொடுபின் முரண உரை நிகழ்த்தினார். சிவபிரான் றிருவருளால் உந்தப்பட்டே அங்ஙனஞ் சுந்தரரும் அம்மாதரிருவரும் ஒருவரை யொருவர் காதலித்தனராயின், அஃது அவர்க்குக் குற்றமாதல் யாங்ஙனம்? அக்குற்றத்தைச் செய்யுமாறு ஏவிய இறைவற்கன்றோ அது குற்றமாம்? தானே அவரை ஏவிக் குற்றமானதொன்றைச் செய்வித்தபின், அவரை அதற்காக ஒறுத்தல் இறைவற்கேயன்றோ அதனினும் பெரியதொரு குற்றமாம்? ‘எய்தானிருக்க அம்பை நோவதெவன்? மேலும், ஆணுடம்புக்கு ஏற்ற அமைப்புகளும் பெண்ணுடம்புக்கு ஏற்ற அமைப்புகளும் இறைவன் அத்துணைவியப்பாக வகுத்தமைத்தது எதன்பொருட்டு? அவ்விரு பாலாரும் ஒருவரையொருவர் மருவி இன்பம் நுகர்தற்பொருட்டும், பிறவிக்கு வரற்பாலனவான உயிர்களைப் பிறவியில் வருவித்தற் பொருட்டுமன்றோ? ஆணும் பெண்ணுமாய் மருவுதற்கேற்ற இடம் இந்நிலவுகமேயாயின், அராக தத்துவத்தின்கண்ணதான திருக்கைலை யில் ஆண் பெண் அமைப்புகளை இறைவன் வகுப்பானேன்? மேலுள்ள அவ்வத் தத்துவ வுலகங்களில் வைகும் உயிர்களெல்லாம் ஆணும் பெண்ணுமாயிருந்தே இன்ப நுகராநிற்பரெனப் பௌட்கராகமம் புகலாநிற்க. ஆலாலசுந்தரருங் கமலினி அனிந்திதையரும் ஒருவர்மேலொருவர் மையல்கொண்டதுமட்டுங் குற்றமாமெனக் கூறல் யாங்ஙனம் பொருந்தும்? இறைவன் உயிர்களை ஆணுடம்பு பெண்ணுடம்புகளிற் புகுத்தியது அவ்வாற்றால் அவர் இன்பநுகர்ந்து செல்லுதற்பொருட்டேயாமெனச் சைவசித்தாந்த வழிநூலாகிய சிவஞான சித்தியார், சத்தியுஞ் சிவமு மாய தன்மையிவ் வுலக மெல்லாம் ஒத்தொவ்வா ஆணும் பெண்ணும் உணர்குண குணியு மாகி வைத்தனன் அவளால் வந்த ஆக்கம்இவ் வாழ்க்கை யெல்லாம் இத்தையும் அறியார் பீட லிங்கத்தின் இயல்பும் ஓரார் என்று வலியுறுத்து நுவலுகையில், மணங்கூடாத ஆலாலசுந்தரரும் அங்ஙனமே மணங்கூடாக் கன்னியரான அவ்விருவரும் ஒருவரையொருவர் காதலித்தது குற்றமாமோ? அவா வறுத்த உயிர்கள் சென்று வைகுதற்கிடமான வீட்டுலகு திருக்கைலாய மாகலின், ஆண்டுள்ளார் ஒருவரையொருவர் அவாவுதல் குற்றமன்றோவெனின்; அவாவறுத்து வீட்டுலகு சேர்ந்தார்க்கும் ஆண்டு மீள அவா வுண்டாமென்றல் யாங்ஙனம் கூடும்? மேலுங், காதலின்ப நுகர்ந்து அவ்வாற்றால் அவாவறுத்தற்பொருட்டாக இறைவன் சேர்த்துவைத்த ஆண்பெண் சேர்க்கை, காதலின்பம் நுகர்ந்தொழித்து அவர் அவிந்து இறைவன் திருவடியைத் தலைக்கூடினார்க்கும் மீண்டும் உளதாவதாயின், இறைவனைச் சேர்ந்து பெற்றபயன் என்னை? என்று இவ்வாறெல்லாம் நிகழுந் தடைகளால் திருக்கைலையிற் சுந்தரர் காதலித்த கதை வெறும் பொய்யாதல் நன்கு பெறப்படும் என்க. அதுவேயுமன்றி, இம்மண்ணுலகத்துள்ளார் தஞ்சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாத நுண்பெரு மேல்நிலைக்கண்ணதான அராகதத்துவ வுலகத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் அக்கதையினை, இம்மண்ணுலகத்திருந்த சேக்கிழார் அறிந்ததெவ்வாறு? இந் நிலவுலகத்து நிகழ்ந்த நாயன்மார் வரலாறுகளைச் சேக்கிழார் நன்காராய்ந்து கண்டு உரைத் தாரன்றி, இதற்கு எட்டாத் தொலைவில் உள்ள மேலுலகங் களில் நிகழ்ச்சிகளையும் யாண்டேனுங் கூறப்புகுந்தாரல்லர்; நாயன்மார் முற்பிறவி வரலாறுகளையேனும் யாண்டாயினுங் குறிப்பாலேனுங் கூறினரோவெனிற் சிறிதுங் கூறிற்றிலர். அப்பர், சம்பந்தர், கண்ணப்பர், சிறுத்தொண்டர் முதலான எவர்க்கும் முற்பிறவி வரலாறுகள் சொல்லாதசேக்கிழார் சுந்தரர்க்குமட்டும் அது கூறினாறென்றல் ஒக்குமோ? சம்பந்தரைச் சுப்பிரமணியரவதாரம் என்றுங், கண்ணப்பரை அருச்சுன னவதாரம் என்றுஞ் சிறுத்தொண்டரைக் கர்ணன் அவதாரம் என்றும் வழங்கும் பொய்க்கதைகளைச் சேக்கிழார் சிறிதேனுந் தழுவினரா? இல்லையே. அவ்வாறிருக்கச் சுந்தரர்தம் முற்பிறவி வரலாறு தெரிப்பதாகக் கிளக்கும் இப்பொய்க்கதையினை மட்டும் அவர் நம்பிக் கூறினாரென்று அறிவுடையோர் சொல்ல முற்படுவரோ? இருந்தவாற்றால், இக்கதையின் பொய்ம்மைத் தன்மையினை நடுநின்று நன்கு ஆராய்ந்து பார்க்கும் அறிஞர்கள், சிவ அந்தணர்குலத்திற்றோன்றியருளின சுந்தரர் தமது மரபினர் அல்லாத பரவை சங்கிலியாரை மணந்தது குற்றமாமென எந்நேரமும் தமது சாதியுயர்வினையே நினைந்திருந்தவரான ஒரு பார்ப்பனரால்தமது சாதிக்குக் குறைவு வந்துவிடலாகாதெனுங் கருத்தால், அப்பொய்க்கதை கட்டிச் சேர்க்கப்பட்டதென்பதைத் தெற்றென உணர்ந்துகொள்வர். கைலையிற் செய்த குற்றத்திற்காகச் சுந்தரர் இந்நிலவுகத்திலுங் தமது சாதிவரம்பு கடந்து குற்றமாவது செய்து ஒறுக்கப் பட்டாரென்று ஒரு காரணங் காட்டி, அவ்வாற்றால் தமது சாதிவரம்பைக் காத்துக்கொள்ளப் பெரிதும் அவாவுற்று அப்பார்ப்பனர் அப்பொய்க்கதையினைப் புனைந்து செருகினமை வேறுமோருண்மையாலும் புலனாகாநிற்கின்றது; என்னை? முதலில் ஒரு குற்றைத்தைச் செய்தவர் பின்னும் அக்குற்றத்தினையே செய்குவராயின், அது முன்செய்த குற்றத்திற்குக் கழுவாயாகுதல் செல்லாமையின் என்பது. சுந்தரர் கைலையில் அம்மாதர் மேற் காமுற்றது குற்றமாயின், அது தீர்தற்கு அவர் அம்மண்ணுலகிற் காம நினைவற்றுத் தவத்திலன்றோ இடையறாது அமர்தல் வேண்டும்; அவ்வாறின்றி அவர் மீண்டும் அம் மாதர் மேல் மையல் கொண்டு இன்ப நுகர்ந்திருத்தல் கைலையிற் காமுற்ற குற்றத்திற்குக் கழுவாயாகுமோ? அற்றன்று, இறைவன் திருக்கைலையைச் சார்ந்தார்க்கு மாதரைக் காமுறுதல் குற்றமாகலின், அக் குற்றத்திற்காகவே அவர் அத் தெய்வவுலகினின்று இம் மக்களுலகிற்குக் கீழ் நூக்கப்பட்டார்; அஃது அவர்க்குக் கழுவாயாமெனின்; இறைவனடி சேர்ந்தார்க்குங் காமவிருப்பு நிகழுமாயின, இறைவனடியைச் சேர்தலில் இன்பமில்லை யென்பது பெறப்பட்டு அது, தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி என்றும், தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்றேன் உண்ணாதே நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தோறும் எப்போதும் அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன்சொரியுங் குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ என்றும் போந்த அருமைத் திருமொழிகட்கெல்லாம் மாறாம். அற்றன்று, ஆலாலசுந்தரர் ஆண்டு இறைவன் திருவடிப்பேறு எய்தியவரல்லர்; இறைவன் திருவுலகு சேர்ந்து ஆண்டு அவனை வழிபட்டமரும் அத்துணைப்பேறே வாய்ந்தவராவரெனின்; இம்மை யுலகத்து வழிபாடுபோ லன்றி, இறைவன்றன் உண்மையுருவினை நேரே கண்டு வழிபடும் அம்மை யுலக வழிபாடும் சுந்தரர் தங் கருத்தைத் தன்மாட்டு ஈர்க்கும் வலியிலதாயின், அதனாற் போதரும் பயன் என்னையோ வென்று வினா நிகழுமன்றே? அதனாலும், அக்கதை உண்மையன்றென்பது தெற்றென விளங்காநிற்கும். அதுவேயு மன்றி, மேன்மேலுள்ள நுண்ணிய தத்துவவுலகு களில் உள்ளாரும் ஆணும் பெண்ணுமா யிருந்தே கழிபேரின்பம் நுகர்வரென்று பௌட்கராகமங் கூறுதலை மேலெடுத்துக் காட்டின மாதலாற், சுந்தரர் அத் தேவ கன்னியரைக் காதலித்தது இறைவன் திருவுளக் குறிப்புக்கு மாறாகா தென்பதூஉம் போ தரும்; அதனாலும் அக்காதலைக் குற்றமென நுவலும் அக்கதை பொய்யென்பதே தேற்றமாம். மேலுந், திருக்கைலையிற் செய்த குற்றத்திற்காக இறைவன் அம் மூவரையும் ஒரேகுலத்திற் பிறப்பியாது, கந்தரரைச் சிவ அந்தண உயர்குலத்திலும், பரவை சங்கிலியாரை அதனிற் றாழ்ந்த பிற குலத்திலும், பிறப்பித்துப் பின்னர் அவரை ஒருங்குகூட்டி, நீர் உயர்த்துக்கூறுஞ் சாதிவேற்றுமைக் கட்டுப்பாட்டினைச் சிதைத்தது, மக்கள் தம் இறுமாப்பால் வகுத்த சாதிக் கட்டுப்பாட்டில் நும் மிறைவற்கே விருப்பு இல்லை யோலும்! என்று கடாவுவார்க்கு அம்மறுப்புரைகாரர் இறுக்கு மாறறியாது விழிக்கு நீர ராவராகலின், அவர் கூறும் அக்கதையே அவர் கொண்ட சாதிச் செருக்கினைத் தொலைக்கும் பெற்றியதாதலுங் காண்க. இதனால், யானும் அறியேன் அவளும் பொய் சொல்லாள் என்னும் பழமொழிப் பொருள் அம்மறுப்புரைகாரர் உரைகொண்டே புலனாகின்ற தன்றோ? இங்ஙனமெல்லாம் ஆராய்ந்துபார்க்கவல்லார் எவர்க்கும், சிவ அந்தணராகிய சுந்தரர் தம் மரபின ரல்லாத பரவை சங்கிலியாரை மணந்தது குற்றமாமென நாட்டுதற்கு விழைந்த ஒரு பார்ப்பனரால் அக் கதை பொய்யாகப் புனைந்து, சேக்கிழார் அருளிச் செய்த திருத்தொண்டர் புராணத் திடையே சேர்க்கப்பட்ட வுண்மை வெள்ளிடை மலைபோல் விளங்கா நிற்கும். ï›thwhf, முன் இல்லாத கதைகள் பின்வருவோராற் புதிது புதிதாகப் புனைந்துகட்டிச் சேர்க்கப்படுதல் உண்டென்பதற்கு, ஆறுமுகம் நாவலர் வரைந்த பெரியபுராணவசனத்தில் ‘இறைவன்’ திருக்கலையில் ஒரு நாட் கண்ணாடியை யெடுத்து அதன்கட்டனது திருவுருவை நோக்க அது சுடர்விடு பேரழகாய் அதன்கட் பொலிந்துதோன்றக் கண்டு ‘சுந்தரமே வா! என்று அழைக்க, அஃது ஆலாலசுந்தரராய்க் கண்ணாடியை விட்டுக் குதித்து நின்றது என்னும் ஒரு பொய்க்கதை சேக்கிழார் பெரிய புராணத்தில் இல்லாதிருந்தும் புதிதாக எழுதிச் சேர்க்கப்பட் டிருத்தலே சான்றாம். இங்ஙனமே சமணர் கழுவேறிய கதைக்குத் தேவாரப்பதிகங்களில் ஏதொரு குறிப்புங் காணப்படாதிருந்தும், அஃது எவ்வாறோ பெரியபுராணத்தில் வந்து நுழைந்துவிட்டது. மாணிக்கவாசகரொடு வழக்கிட்டுத் தோற்ற பௌத்தர்களைச் செக்கிலிட்டு அரைத்த கதை, பெரும்பற்றப்புலியூர் நம்பி யருளிய திருவிளையாடற்புராணத்தில் இல்லாதிருந்தும், அதற்குப் பன்னூறாண்டு கழித்துப் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணத்தில் வந்து சேர்ந்துவிட்டது. இன்னும் இவ்வாறே முன் நூல்களில் இல்லாத பல பின்நூல்களிற் சேர்க்கப்பட் டிருக்கின்றன. அவையெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது மிக விரியும். ஆதலால், ஒரு புராணத்திற் சொல்லப்பட்டிருப்பது கொண்டு, ஒரு கதையின் பொய்ம்மை மெய்ம்யினை நன்காய்ந்து பாராது அதனை அவ்வாறே நம்புதல் வழுவாமென்க. எனவே, சுந்தரமூர்த்தி நாயனார் பரவை சங்கிலியாரை மணந்த காதன்மண வரலாறு, தொன்றுதொட்டு வரும் பண்டைச் செந்தமிழச்சான்றோர் வகுத்த காதன் மணமுறையோடு ஒருங்கொத்து நிற்றலானும், அம்மணத்தைக் கூட்டுவித்தற்கு இறைவனே முன்நின்றானென ஆசிரியர் சேக்கிழார் ஆண்டாண்டு நன்கெடுத்துக் கூறுதலானும் அது குற்றமாதல் ஒருவாற்றானுஞ் செல்லாதென்றும், அதனைக் குற்றமாக நினைந்து அதற்கொரு போக்கு விடுதற்பொருட்டுப் பின்வந்த பார்ப்பனர் பொய்யாகக் கட்டிச் சேர்த்த திருமலைச்சருக்கக் கதை சேக்கிழார் செய்த தன்றென்றுங் கடைப்பிடித்துணர்ந்து கொள்க. இங்ஙனம் முழுப்பொய்யாகிய ஒரு கதையினைத் தமது சாதி யிறுமாப்பினாற் புனைந்துகாட்டிப் பெரியபுராணத்தின் முதலிலே சேர்த்துவிட்ட பார்ப்பனர்தம் பொய்யுரைக்கும், பார்ப்பனராற் சூத்திரத் சாதியினராக வைத்து எள்ளப்படும் அம்மறுப்புரைகாரர் தமது சூத்திரச் சாதியினுள்ளேயே தம்மினத்தவர்க்குந் தமக்கும் உயர்வுதேடிக் கொள்ளுதற் பொருட்டு அக்கதையினை உண்மையாய்க்கொண்டு எழுதிவிட்ட போலி மறுப்புரைக்கும் வேற்றுமை காண்கிலம். அப் பொய்க்கதையை எடுத்துக்கொண்டு அவர் நிகழ்த்திய போலி மறுப்புரைகள் அத்தனையும், முயற்கொம்பு இரண்டு முழமா நான்கு முழமா என்று வழக்கிட்டார் வழக்குரைக்கும், ஒப்பிலா மலடி பெற்ற மகன் ஒரு முயற்கொம் பேறித், தப்பில் ஆகாயப்பூவைப் பறித்தமை சாற்றினா ருரைக்கும் தோழமையாக வைத்து அறிஞரால் நகையாடி விடற்பாலனவா மென்க. இன்னும், அம் மறுப்புரைகாரர் ஆலாலசுந்தரரைப் பற்றி யெழுதியவற்றில் முன்னொடுபின் முரணாவன பல. அவற்றுட் சில இங்கே காட்டுதும். நிலத்திற்போய்ப் பிறந்து இன்பம் நுகருமாறு சுந்தரரை இறைவன் ஏவியவழித், தம்மை இறைவனே வந்து தடுத்தாட்கொள்ளுமாறு அவர் வேண்டினாரென்று அக் கதையினை அவர் எடுத்துக் காட்டினார். தாம் வன்மைகள் பேசி இறைவனை வேண்டாதிருக்கையிலும் இறைவனே வலிய வந்து ஆட்கொண்டமை பற்றியே சுந்தரர் வன்றொண்டர் எனப் பெயர் பெற்றார். அவ்வாறன்றித், தாம் வேண்டியதற் கிணங்கியே இறைவன் வந்து ஆட்கொண்ட துண்மையாயின், சுந்தரர்க்கு வன்றொண்டர் எனும் பெயர் வழங்குதல் ஒக்குமோ? வன்மைகள் பேசினமையின் வன்றொண்டர் எனப் பட்டாரெனின், வன்மைகள் பேசினது தாம் அவற்கு ஆளாதலிற் கருத்தின்றி யிருக்க, இறைவனே வலியவந்து அவரை ஆட்கொண்டமை நன்கு விளங்குதலின், திருக்கைலையில் அவர் வேண்டியதற் கிணங்கியே இறைவன் போந்து அவரைத் தடுத்தாட்கொண்டனன் என்னும் அக்கதை பொய்யேயாதல் திண்ணம். அற்றன்று, திருக்கைலையில் தாம் இறைவனை வேண்டியதனை மறந்து சுந்தரர் திருமணப்பந்தலில் வன்மைகள் பேசினமைபற்றியே வன்றொண்டர் எனப்பட்டாரெனின்; இறைவனுக்கு அணுங்கராய்த் திருக்கைலையில் தொண்டு செய்து கொண்டிருந்து இறைவனருளால் மண்ணின்மேற் சுந்தரர் பிறந்தது உண்மையாயின், முற்பிறவியிலே திருக்கைலையில் தாம் இறைவனை வேண்டிக் கொண்டதனை மறந்து வன்மைகள் பேசுதல் கூடுமோ? இம் மண்ணின் மேற் பிறந்த பொதுமக்களுள்ளேயே சிறுகுழந்தைகளா யிருப்பார் சிலர் தமது முற்பிறவி வரலாறுகளை யுணர்ந்து உரைத்தல், வடநாட்டின் கண் உள்ள இராமகாளி முதலான சிறு குழந்தைகள் மாட்டு இன்றுங் கண்கூடாய்க் காணப்படுவதா யிருக்கச், சிவபிரானுக்கு அணுக்கரா யிருத்தற்குரிய அத்துணைப் பெருந்தவம் வாய்ந்த சுந்தரர் தமது முற்பிறவி வரலாற்றினை மறந்து போயினாரெனக் கூறுதல் ஒக்குமோ! அக் கதையிற் சொல்லப் பட்ட திருக்கைலை நிகழ்ச்சிகளைச் சுந்தரரே மறந்துபோயின ரென்றாற், பின்னர் இம் மண்ணுலகத்துள்ள அம்மறுப்புரைகாரரும் அவரையொத்த ஏனைச் சிற்றறிவினரான மக்களும் அந் நிகழ்ச்சிகளை அறிந்ததெப்படி? வானுலகத்திற்கும் மண்ணுலகத்திற்குந் தபாற்கொண்டு செல்லுஞ் சேவகனாக நாரதனை யுண்டாக்கிக் கதைகள் கட்டிவிட்ட பார்ப்பனரும் அவர்வழிப்பட்டாருங், கைகலையின் நிகழ்ச்சிகளை மறுப்புரைகாரர் போல்வார்க்கு வந்து அறிவிக்க மற்றொரு நாரதனைக் கதைகட்டிச் சொல்ல மறந்துவிட்டமை பெரிதும் இரங்கத்தக்கதே! இப்போது ஐரோப்பிய நன்மக்களால் ஆராய்ந்து கண்டு நிறுவப்பட்டிருக்குங் கம்பியில்லாத் தபால் வாயிலாகவாவது அம்மறுப்புரைகாரரும் அவர்தந் தோழருந் திருக்கைலைக்குத் செய்தியனுப்பி, அங்கு நிகழ்ந்த சுந்தரர் கதை நிகழ்ச்சிகள் உண்மைதாமாவென்று தெரிந்து உலகிற்கு வெளியிடுவாராக! அவை ஆயிர ஆண்டுகட்குமுன் நிகழ்ந்தனவாகையால் இப்போது அவைகளைச் சிவபிரான் மறந்துபோயிருப்பர் என்று சிவபிரானுக்கும் அம் மறுப்புரைகாரர் மறதிக் குற்றத்தை ஏற்றமாட்டாரென்று நம்புகின்றேம். இனித், திருக்கைலையில் நிகழ்ந்தனவாக அக்கதை கூறும் நிகழ்ச்சிகள் உண்மையாயின், அங்கிருந்தும் இம்மண்ணுல கிற்குப் போந்தவராக நுவலப்படுஞ் சுந்தரரன்றோ அந் நிகழ்ச்சிகளை நினைந்து மொழியற்பாலார்? சுந்தரமூர்த்தி நாயானார் இறைவனை நேரே காணும் பெருந்தவமுடையராய், இறைவனருளாற் செயற்கரும் புதுமைகள் பல செய்த பெரியாராகலின், அவர் தம்முடைய முற்பிறவி வரலாறுகளை யுணர்ந்தவராகவே யிருப்பரன்றி, அவற்றை மறந்தவராக இரார். அவர் அருளிச்செய்த திருப்பதிகங்களில் அவர்தம் வரலாற்றுக் குறிப்புகள் பல காணப்படுகின்றன; ஆனால், திருக்கைலையில் அவர் மாதரைக் காமுற்று அதன் பயனாக மண்ணுலகிற் பிறந்தனரெனக் கூறும் அக் கதைக் குறிப்போ ஓரெட்டுணை யாயினும் அத்திருப்பதிகங்களிற் காணப்படுகின்றிலது. இனி, அவர் அம்மாதரைக் காதலித்தது திருவருட் செயலென்றும், எத்துணைப் பெரியாரும் பிழைசெய்யின் ஒறுக்கப்படுவரென்பதனை இறைவன் உலகத்தார்க்கு அறிவிப்பவே அவரை இம் மண்ணின்மேற் பிறப்பித்து ஒறுத்தனன் என்றும் அம்மறுப்புரைகாரர் கரைந்தார். இவர் தம் சைவநூலுணர்ச்சியின் திறனை என்னென்பேம்! தன்னை யணுகித் தூயராய் நிற்கும் ஒருவரைத் தூயவல்லாதன செய்யுமாறு தானே ஏவிப், பின் தானே அவரை ஒறுப்பதுதானா இறைவன் அருட்செயல்! தூயராயினாரையும் பிழைபடுத்துவதே இறைவன்றன் அருட்செயலாயின், தூயராகி இறைவனைச் சார்தலாற் பயயென்னை? சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன் என்று சைவசித்தாந்த நூல் ஓதுதலின், அதற்கு மாறாகத் தன்னைச்சார்ந்த சுந்தரரைப் பிழையிற் படுப்பித்து ஒறுத்தவன் சைவசித்தாந்தக் கடவுளான சிவபிரான் ஆவனோ? மற்றுத், தூய்தாய் நின்ற நிலையிழந்து மாயையில் அகப்பட்டுப் பிரமமே சீவனாயிற்று எனப் புகலும் மாயாவாதப் பற்றுடைய அம் மறுப்புரைகாரரை யொத்தார்க்கே அக் கதை மெய்யாகக் காணப்படுமன்றிப், பிழைபடுமாறு உயிரை ஏவுவது ஆணவமலம், அம் மலத்தின் சேர்க்கையினின்றும் உயிரை யெடுப்பித்துப் பின்னர் அது பிழைபடாவாறு தன் திருவருட் பெருக்கிற படிவித்துப் பெயராய் பேரின்பம் நுகர்விப்பது சிவம் என்னுஞ் சைவசித்தாந்த உணர்ச்சியுடைய எம்மனோர்க்கு அக்கதை ஒரு சிறிதும் மெய்ம்மையுடைய தாகக் காணப்படா தென்றொழிக. மேலும், தூயராய்த் தன்னடி சேர்ந்தாரைப் பிழைபடுத்து ஒறுக்குங் கடவுள் உலகத்தார்க்கு அறிவிப்பதொன்றும் உண்டுகொலோவென அம் மறுப்புரைகார ருரையினை அறிவுடையார் நகையாடி விடுப்பரென்க. 16. நாயன்மாருஞ் சாதிவேற்றுமைச் சிதைவும் இனி, அன்பினால் அளவளாவும் பெரியார் சாதிவேற்றுமையினைக் கைக்கொள்ளாமையும், இறுமாப்பும் அறியாமையும் உடைய இழிந்த மக்களே அதனை விடாப்பிடியாய்க் கைக்கொண்டு பலவாற்றால் அல்லலுழத்தலும் யாம் எமது தலைமைப் பேருரையில் நன்கு விளக்கி, வேளாளராகிய அப்பரும் பார்ப்பனராகிய அப்பூதிகளும் சாதிவேற்றுமை யினைச் சிறிதும் நினையாது ஒருங்கு அளவயளாவிய உண்மை நிகழ்ச்சியினையும் எடுத்துக் காட்டினேம். மற்றுச், சாதி வேற்றுமையானது அறிவுடையாராலும் அன்பராலுங் கைக்கொள்ளப்பட்ட சிறந்த முறையாகும் என நாட்டப் புகுந்த அம்மறுப்புரைகாரரோ, அவ்வாறு செய்தற்கு எந்த அறிவுநூலிலும் ஆன்றோர் நடையிலுஞ் சான்று காணாமையிற் பெரிதும் இடர்ப்பட்டுத், தாமும் ஒரு மறுப்பெழுதி விட்டதாகத் தம்மை யொத்தர் குழுவிற் சொல்லித் தமக்கு ஒரு பொய்ப்பெருமை தேடிக்கொள்ளுதலையே குறியாய்க் கொண்டு, அப்பரும் அப்பூதிகளும் அளவளாவிய நிகழ்ச்சிக்கு ஒரு போக்குக் காட்டத் தலைப்பட்டார். அப்பரை அப்பூதியடிகள் குருவாய்க்கொண்டன ராகலின், அவர் ஏவியபடியே அப்பூதி அவரோடு உடனிருந்து உணவு கொண்டனர். அவரை அவர் அங்ஙனங் குருவாய்க் கொள்ளாராயின், அப்பர் அவரை அங்ஙனம் ஏவுதலுந் தம்மைக் குருவாகக் கொள்ளுமாறு அவரை வலுகட்டாயஞ் செய்தலும் இழிபிறப்பாளராகிய அவர்க்குத் தகாஎன்றும் அம் மறுப்புரைகாரர் கூவினார். இவர் கூவிய இப்பொருளில் மொழியாற், சாதி வேற்றுமையானது அறிஞர்க்கு உடம்பாடுதா னென்பது சிறிதாயினும் பெறப்படுகின்றதா என்பதை ஆன்றோர்கள் ஆய்ந்து பார்க்கப்படவர். அறிஞரால் அன்பராற் சாதிவேற்றுமை கருதப்படவில்லை யென்பதற்கு, அப்பர் அப்பூதிகளின் அளவளாவுதலை யாம் எடுத்துக்காட்டினேமாக, அதனை மறுப்பான் புகுந்தவர், சாதி வேற்றுமையினையே பெரிது பாராட்டி, அறிஞர்கள் தம்முள் அளவளாவுதலை யொழிந்தார் என்றன்றோ நாட்டுதல் வேண்டும்; அதனை விடுத்து எடுத்த பொருளுக்கு இயைபில்லாதவைகளை யெழுதி ஏமாற்றப் பார்ப்பது முறையாகுமா? வழக்குமுறை இன்னதென்றே யறியமாட்டாத இவர், தம்மைத் தருக்க முணர்ந்தாராகக் காட்டு தற்பொருட்டுத் தருக்க நூற் சொற்களையுங் குறியீடுகளையும் எடுத்தாளுதல், அந்நூலுணர்ச்சியில்லாரை மருட்டுதற் பொருட்டே யன்றி வேறென்னை? அதுகிடக்க. இவர் கூறியது கொண்டே சாதிவேற்றுமை ஆன்றோர் தமக்கு உடம் பாடாகாமை காட்டுதும். இவர் கூற்றின்படி அப்பராகிய வேளாளர் இழிகுலத்தினர்; அப்பூதியடிகளாகிய பார்ப்பனரோ உயர்குலத்தினர். அப்பூதியார் தம் சாதி வரம்பு கடந்து, தம்மிற்றாழ்ந்த அப்பரைக் குருவாகக் கொள்ளலாமோ? அவர் தம்மை அங்ஙனங் கொண்டாலும், இழிகுலத்தவராகிய அப்பர் தாம் அவரைத் தமக்கு மாணாக்கராக ஏற்றுக்கொள்ளலாமோ? அன்றி ஏற்றுக்கொண்டாலுந் தம்மோடு உடனிருந்து உண்ணுகவென்று அவரை ஏவலாமோ? அவர் தாம் ஏவினாலும், உயர்குலத்தவராகிய அப்பூதி அதற்கு இசையலாமோ? அன்பிலும் அறிவிலும் நற்குண நற்செய்கை களிலும் பார்க்கச் சாதியே யுயர்ந்ததென்று கூவித் திரியும் அம் மறுப்புரைகாரர் கொள்கை உண்மையாயின், அக்கொள்கை யினை ஆன்றோராயினார் கைக்கொண்டொழுகியது மெய்ம்மையாயின், அப்பரும் அப்பூதிகளும் ஒருங்கு அளவளாவியது அவர் தமக்கே குற்றமாதலோடு உலகத்தார்க்கும் ஆகாததொன்றாய் முடிக்கப்படுதல் வேண்டுமன்றோ? மற்று, அவ்விருவர்தஞ் சேர்க்கையோ அங்ஙனங் குற்றமாவதொன்றாய் ஆகாமல் அவர்க்கு நன்றாயினாற் போல, உலகத்தார்க்கும் நன்றாகவே காணப்படுகின்றது. ஆகவே, பிறப்பளவிற் கொள்ளுஞ் சாதியுயர்வு இழிவுகள், அன்பும் அறிவும் நற்குண நற்செய்கையும் இல்லாமற் சோற்றுப் பேச்சும் வீணான கொள்ளல்கொடுத்தற் பேச்சுமே பேசிப் பிறவியைப் பாழ்படுத்திச் செருக்காநின்ற இழிந்த மக்கட்கே யுரியவாகுமல்லால், அறிவு அன்பு உயர்குணவொழுக்கங்களாற் சிறந்தார்க்குச் சிறிதும் உரிய வாகாவென்பது வைரத்தூண் போல் நாட்டப்படுகின்றமை காண்க. இனிப், பரவையார் சங்கிலியார் என்னுஞ் சிவநேய மாதரார் அறிஞரென்ற வகையிலும், ஏனை மாதர்க்கெல்லாந் திலகமாய் நிற்கும் வகையிலும் நல்லார் என்று பெயர் பெறுதற்கு உரிமையுடையராதல் கண்டு, நல்லாரிணக்கம் எனப் பட்டினத்தடிகள் மொழிந்தாங்கு, அவர் தம் இணக்கஞ் சுந்தரமூர்த்திகட்கு மிக விழுமிய தொன்றாதலை எடுத்து விளக்கினேம். இதனை மறுப்பாண்புக்க அம்மறுப்புரைகாரர், பரவை சங்கிலியார் அடியார் கூட்டத்துள் வைத்து யாண்டுஞ் சொல்லப்படாமையின் அவரை நல்லார் என்றுரைத்தல் ஆகாது; மற்று அச் சொல்லுக்கு மாதர் எனப் பொருள் கோடலே பொருத்தமாம். மாதரார் சேர்க்கை நிலையில்லாதது என்று பட்டினத்தடிகள் அச்செய்யுளிலேயே மொழியக் காண்டலால், நல்லார் என்பதற்குப் பரவை சங்கிலியாராம் மாதரைப் பொருளாகக் கூறுதல் வாயாதெனக் கிளந்தார். இவர் கூறம் இச்சொற்களால் மாதர்க்கு அடியராம் உரிமை இல்லை யென்பதே இவர்தங் கருத்தாகின்றது. ஆணவமலத்துள் அழுந்தி அறிவும் இன்பமுமின்றிக்கிடந்த உயிர்கட்கு அறிவையும் இன்பத்தையும் வருவித்து, அவை தம்மைத் தன் திருவரு ளின்பத்திற் றோய்வித்தற் பொருட்டாகவே எல்லாம்வல்ல இறைவன் ஆண் பெண்ணுடம்புகளை யமைத்து, அவை தம்முள் உயிர்களைப் புகுத்தி, அவ்வாற்றால் அவை அறிவும் இன்பமும் பெற்று ஆணவக்கட்டு நீங்கித் தன்னைச் சாருமாறு செய்விக்கின்றன னென்பதும், அவ்வாறு ஆண்டவ னால் வகுக்கப்பட்ட ஆண்பெண் பிறவிகள் இரண்டுஞ் சிறந்தனவாகுமேயல்லாமல் அவற்றுள் ஆண் உயர்ந்தது பெண் தாழ்ந்தது எனப் பௌத்தர் சமணர் மாயாவாத வேதாந்திகள் சொல்லுமுறை பொருத்தமில்லா வழுக்குரையேயாமென்பதும் சைவ சித்தாந்த அருட்செல்வர்களின் கோட்பாடாகும்; இது, சத்தியுஞ் சிவமும் ஆய தன்மை இவ்வுலக மெல்லாம் ஒத்தொவ்வா ஆணும் பெண்ணும் உயர்குண குணியு மாக வைத்தனன் அவளால் வந்த ஆக்கம்இவ் வாழ்க்கை யெல்லாம் இத்தையும் அறியார் பீட லிங்கத்தின் இயல்பும் ஓரார் என்னுஞ் சிவஞானசித்தியார்த் திருச் செய்யுளால் நன்கு விளங்கும். இங்ஙனம் இருவகைப் பிறவி அருமையுந் தேற்றுஞ் சைவசித்தாந்த உண்மை தேறாது, அம் மறுப்புரைகாரர் பெண் பிறவியையும் அவ்வாற்றால் இறைவன்றன் படைப்பினுயர்வையும் இழித்துரைக்கப் புக்கது, அவர் தமது வாழ்நாளெல்லாம் பழகிய மாயாவாதப் பொய்வழக்கினைச் சைவநூற் போர்வையுள் மறைந்துநின்று நாட்டி விடும் நோக்கங்கொண்டேயாம். இவர் எத்துணைதான் சைவவுண்மையினைத் திரித்து மறைக்க முயலினும், அது வைக்கோற் போரினால் மறைவுண்டு நில்லாத கொழுந்தீப் போல், இவர்தஞ் சொற்பொருட் குவியலை நீறாக்கி மேற்கிளர்ந்து மிளிருமென்க. அது நிற்க. மாதரார் தம்முள் அடியராதற்குத் தக்க தகுதியுடை யாரில்லையென்று இவர் துணிந்துரைத்த பீறலுரை, சைவநூல் உணர்ச்சியில்லாப் போலிச் சைவர்பாற் செல்லுமேயன்றி, அவ்வுணர்ச்சி சிறிது வாய்ந்த சிறார்மாட்டுஞ் செல்லாது. இத்தமிழுலகமெல்லாஞ் சிவமணங் கமழ்வித்தற்குத் தோன்றிய திருஞானசம்பந்தச் செந்தமிழ்ப் பைந்தாமரை மலர் முகிழைப் பாண்டிநாட்டுக்கு வருவித்து அதன் பெருகு மணத்தாற் சமண்முடை நீக்கி, அம் மலரினின்றும் பொழிந்த தமிழ்த்தேனிற் படிந்து நின்றவர் யார்? மங்கையர்க்கரசியாராம் பங்கயச் செல்வி யார் அல்லரோ! ஒரு முழுமுதற்கடவுள் உண்மை தேற்றும் அருமைச் சைவசமயந்தன்னை யகன்று பாழ்ங்கோள் பகருஞ் சமண்பாழி புகுந்த தன் இளவலை மீண்டுஞ் சைவம் புகுமாறு இறைவனை வேண்டி இத் தமிழ்நாட்டை வாழ்வித்த அலகில் பெரும்புகழார் யார்? திலகவதியாராம் நலமிகு நங்கையாரல்லரோ! நம்பரடியார் திருத்தொண்டை இம்பருலகில் நன்கு விளக்கித் தேவர்க்கரியோன் திருவருட் பேற்றை மாங்கனி யதனொடுந் தேங்கப்பெற்று, நெற்றிக் கண்ணன் கொற்றப் புகழைப் பைந்தமிழ்ப்பாவிற் சிறந்தப் பொழிந்த செல்வியார் யார்? சீரைக்கொண்ட காரைக்காற் பாவையாரல்லரோ! இங்ஙனமே, பிறைச்சடைப் பெருமான் பேரருள் மாந்திய அருகாச் சிறப்பிற் பரவையாருங் கொங்கலர் கூந்தற் சங்கிலியாரும் மகிழ்க்கீழிருந்த மாதொரு கூறனை மற்றவனருளால் தெற்றென வுணர்ந்துங், காதலர் பொருட்டுத் தூதனாய்க்கொண்டும், எத்திறத்தார்க்கும் எங்குங்கிட்டா மெய்த்தவமுடைய மெல்லியலாராகலின் அவரினுஞ் சிறந்த அடியாரும் அவரினுஞ் சிறந்த நல்லாருஞ் சுந்தரமூர்த்திகட்கு வேறுளர் கொல்லோ! இவ்வாறு நாச்சியா ரிருவருஞ் சிவபிரான் திருவடிக்கட் பெருகிய பேரன்புடையராதல் தேற்றுதற்கன்றோ, சுந்தரமூர்த்தி நாயனார், பன்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே மற்றாரை யுடையேன் என்றருளிச் செய்தார். மாதருள் இழிந்தாரையன்றி உயர்ந் தாரைக் கண்டும் அறியாத தீவினையாளரே, பரவை சங்கிலி யாரை ஏனை மாதரோடு ஒப்பவைத் துரையாநிற்பர். ஆகவே, அம்மறுப்புரகாரதும் அவரோ டொத்தாரும் பரவை சங்கிலி யாரை அடியாரல்லரென இகழ்ந்துரைக்குமுரை, ஆன்றோர் கருதிப் பாராத பொருள் இல் புல்லுரையா மென்று ஒதுக்குதலே செயற்பாலதென்க. இனிப், பண்டைத் தமிழாசிரியர் அறத்தை இல்லறந் துறவறம் என இருவேறுவகைப்படுத் துரைத்திலரெனவுந், துறவென்பது மனமாசு நீங்கி இறைவன் திருவடிக்கட் பதிந்த மெய்யன்பராய் எல்லா உயிர்கட்கும் இனியராய் நன்று செய்தொழுகும் ஒழுக்கமேயாம் எனவும், இவ்வொழுக்கம் மனைவி மக்கள் முதலான அன்புடையார் குழுவிலிருந்தே செய்யப் பட்டதன்றி அவரை அறத்துறந்து செய்யப்பட்டதின்றெனவும், இதற்குப் பெரிய புராணத்தின்கட் சொல்லப்பட்ட அடியார் பெரும்பாலாரின் வரலாறுகளே சான்றாமெனவும், மனைவி மக்கள் முதலான அன்புடையார் தம்மையெல்லாம் அல்லற்பட விட்டுத் தாம் தனியே சென்று துன்புறும் போலித்துறவு பௌத்த சமண் மதங்கள் இத்தென்றமிழ்நாட்டிற் புகுந்த காலந்தொட்டு அவரைப் பார்த்து இங்குள்ள ஒரு சிலராற் கைப்பற்றப்பட்ட தல்லது இங்கிருந்த சான்றோர்க்கு அது முழுதும் உடம்பாடன் றெனவும் யாம் எமது தலைமைப்பேருரையிற் பண்டைப் பனுவல் மேற்கோள்களுடன் விரித்துரைத்தேம். அவற்றிற் கெல்லாம் மாறுசொல்லமாட்டாத அம்மறுப்புரைகாரர், பட்டினத்தடிகள் இல்லத்தொடர்பு நீங்கிச் செயப்படுவதாகிய துறவினையே மேலதாய்க் கொண்டார் எனக் கரைந்தார். பட்டினத்தடிகள் பௌத்தசமண் கோட்பாடு இங்கே புகுந்த பின்னிருந்து, அவர்போற் றாமுந் துறவு புகுந்தவராகலின் அவர் அப்புறத்துறவினை ஒரோ விடங்களில் மேலதாய் மிகுத்துக் கூறினார். ஆனாலும், அங்ஙனந் துறவு புகுந்தபின் தாம் அதனாற்பட்ட துன்பங்களை நினைந்து பார்த்து, இல்லத்துறவு புகுந்தவனிலும் அகத்துறவு புகுந்தவனே கழிபெருஞ் சிறப்புடையன் என்பது தேற்றி, அறந்தான் இயற்றும் அவனிலுங் கோடி அதிகம் இல்லந் துறந்தான், அவனிற் சதகோடி உள்ளத் துறவுடையோன் என்று அருளிச் செய்தமையும், பற்றற்றவர் உலகத்தவர் போற் காணப்படுதல் பற்றி அவரை வழிபடுதல் விடேன் மின் என்பது தேற்றுவாராய், வேர்த்தாற் குளித்துப் பசித்தாற் புசித்து விழிதுயின்று பார்த்தால் உலகத் தவர்போ லிருப்பர்பற் றற்றவரே என்று அவர் அருளிச் செய்தமையும் நினைவிற் பதிக்கற்பாற்று. ஓராசிரியர் கருத்தை முற்றும் ஆய்ந்துபாராது, அவர் ஒரோ விடத்து மொழிந்த சிலவற்றையே அவர்தங் கருத்துறுதியாகக் கோடலினும் பெரியதொரு பிழைபாடாவது பிறிதில்லை. எத்துணைச் சிறந்த ஆசிரியர்க்கும் நாட் செல்லச்செல்ல ஒழுகலாறுகள் வேறுபடுதலின் அவர்தம் உணர்வும் அறிவுங் கூடவே வேறுபடும்; அவர் தமது வாழ்நாள் எல்லையில் அவ்வக்காலங்கடோறும் இயற்றிப் போந்த நூல்களையும் உரைகளையும் நன்காய்ந்து பார்க்கும் அறிவு மதுகை யுடையார்க்கு அவ்வாசிரியர் தம் ஒழுகலாறுகளும் அவை வாயிலாக அவரெய்திய உணர்வு வேறுபாடுகளும் நன்கு புலனாம். ஆகவே, ஓராசிரியர் ஒருகாற் சொன்ன ஒரு கருத்தை, அவர் முழுதுந் துணிந்த கருத்தாகக் கோடல் ஆய்ந்துணரும் அறிஞர்க்குச் சிறிதும் ஆகாது; மற்று அவ்வாசிரியர் அவ்வக் காலங்களில் வெளியிட்ட கருத்துக்களை யெல்லாம் புடைபடவைத்து அளந்து நோக்கி, அவை தம்முள் அவர் முடிவாகக் கண்ட கருத்து இது, அங்ஙனங் காணாததிது வெனத் துணிதலே உண்மை யுணர்வினார்க்குக் கடமையாகும். காலங்கடோறும் மக்கட்கு ஒழுகலாறுகள் வேறுபடுதலும், அவ்வாற்றால் அவர்தங் கருத்துக்களும் வேறுபடுதலுந் தெய்வப்புலமைத் திருவள்ளுவனார், அறிதோறு அறியாமை கண்டற்றால் என்று கூறினமையாலுஞ் செவ்வனே விளங்கும் ஆகவே, பட்டினத்தடிகள் ஒருகாலத்துச் சொன்ன ஒரு கருத்தையே உறுதியெனக் கொண்டு, பிற்காலத்தில் அவர் அதனின் வேறாய்க்கண்ட வேறொரு முடிந்த கருத்தைக் கைக்கொளா தொழிதல் அறிஞர்பால் நிகழாது. முதலிற்றாம் மொழிந்த புறத்துறவினும், உள்ளந் தூயராய் நிற்கும் அகத்துறவே நூறுகோடி மடங்கு சிறந்ததாகுமென அவர் பின்னே வலியுறுத்தி மொழிந்தமையால்; அவ்வாறவர் பின்மொழிந்ததே அவர் தங் கருத்துறுதி யாகுமென்று கடைப்பிடிக்க. இங்ஙனங் கூறவே, உள்ளந்தூயரான சுந்தரமூர்த்தி நாயனார்க்கு, அவர்போல் உள்ளந் தூயரான பரவை சங்கிலியாரது கேண்மையே நல்லாரிணக்கம் ஆவதன்றி, அவரைத் துறந்து ஏனைப் பிறரொடுமட்டுங் கேண்மை பாராட்டுதல் அஃதாகாதென்றுணர்க. நம் தொல்லாசிரியர் துறவு என்பதற்குக் கொண்ட இம் மேதகுபொருளின் மாட்சி யுணராது, உலகத்தவரை ஏமாற்றிப் பழிபாவங்களிற் படும் மாயாவாதப் பகட்டுப் புறத்துறவினைப் பாராட்டும் அம்மறுப்புரைகாரர் சுந்தரமூர்த்தி நாயனாரையும் அவர் பரவை சங்கிலியார்பால் வைத்த காதற் கெழுதகை நேயத்தினையும் இகழாது மற்று என்செயமாட்டுவார்! அது கிடக்க. 17. சிவநேய அடியார் நேயங்கட்குச் சாதி தடை இனி, அப்பர் சுந்தரர் முதலான நம் சமயாசிரியன்மார் நடந்துகாட்டியபடி, நாமுஞ் சாதிவேற்றுமைகளைப் பாராது, சிவநேய அடியார் நேயங்களில் மிக்காருடன் உண்ணல் கலத்தல்களைச் செய்து உண்மையன்பினால் ஊடுருவப் பெற்றாலன்றிச், சாதிவேற்றுமைச் செருக்கினாற் சிறியராய் நிற்கும் நாம் அதனை யகன்று அன்பினாற் பெரியராய் நிற்கும் பேரின்ப நிலையினை எய்துதல் இயலாது என்று யாம் எமது தலைமைப் பேருரையில் மொழிந்திட்டேம். இதனை மறுப்பான் புகுந்த அம்மறுப்புரைகாரர் உண்மையாகவே எமது கொள்கை யினை மறுக்க வேண்டினால், சாதிவேற்றுமையினைச் சிதைத்த அப்பர் சுந்தரர் பெரியராகார், ஆகையால் அவர்போல் நடப்பது சாதியிற்பெரிய நமக்குச் சிறுமையே தருமல்லது பெருமை தராது; நாம் நமது சாதியுயர் வினையே விடாப்பிடியாய்ப் பாராட்டிக், கல்வியுஞ் சிவநேய அடியார் நேயமும் உடையராயினும் ஏனை யெல்லாரையுங் கீழ்மக்களாகவே நடத்தி, அவரோடு உண்ணல் கலத்தல்களைச் செய்யாது அவரை யகன்று இறுமாந்தொழுகுதலே நாம் பெரியராதற்குத் தக்க வழியாகும் என்றன்றோ மறுத்தெழுதல் வேண்டும்? அவ்வாறு செய்தால் உலகந்தம்மைப் பெரிது புறம்பழிக்கு மென்பதை நன்கு கண்ட அம் மறுப்புரைகாரர், இயைபில்லாதவைகளை யெழுதி மருட்டுகின்றார். இவரது மருட்டுரை சாதி வெறிபிடித்தார்பாலன்றி, உண்மையன்பு வாய்ந்தார்பாற் சொல்லாது. ஆயினும், அவர் உரைக்கும் போலியுரையின் பெற்றிமையினை ஒரு சிறிது விளக்கிக் காட்டுவாம். அப்பர் சுந்தரர் சாதிக்கட்டைச் சிதைத்து முறையே திருவமுது கொண்டதுந் திருமணஞ் செய்ததும் அவர் பெரியரான பிற் செய்த செயல்களாதலால், அவர்போற் பெரிய ராகாத நாம் அச்செயல்களைச் செய்தலாகாது என்றும், மற்று நாம் பெரியராதற்குச் சிவபிரானையுஞ் சிவனடியாரையும் ஓவாது வழிபடுதலே செயல்வேண்டும் என்றும் அம் மறுப்புரைகாரர் கரைந்தார். அன்பரோடு உடனிருந் துணவு கொண்டும் மணம்புரிந்தும் அளவளாவுதல் பெரியரானபிற் செயற்பாலன வென்று கூறும் அவருரை கொண்டே, பெரியராகாமற் சிறியராய்ச் செருக்குற்று நிற்குங் காலங்களிற் சாதியுயர்வு தாழ்வு பேசிக்கொண்டு அன்பரோடு அளவளாவுதலின்றி இறுமாந்தொழுகுதலே செயல்வேண்டு மென்பது அவர்தங் கருத்தாதல் பெறப்படுகின்றது. இக்கருத்து அவரை யறியாமலே அவர்தம் போலி யுரையில் நன்கு புலப்பட்டு நிற்க, அக் கருத்துக்கு மாறாய் அதனை மறைத்துச், சிவபிரானையுஞ் சிவனடியாரையும் இடையறாது அன்பினால் வழிபட்டுப் பெரியராகல் வேண்டுமென்று மொழிந்து தம்மை நல்லவராக்கிக் கொள்ளப் பார்க்கின்றார். சிவபிரானுக்கு அன்புள்ளார் எல்லா உயிர்களிடத்தும் எல்லா மக்களிடத்தும் அன்பு பாராட்டுந் தன்மையராவர்; சிவனடியார்க்கு உண்மையன்புள்ளார், திருநீறுஞ் சிவமணியு மாகிய புறஅடையாளங்கள் மட்டுமே உடையாரைக் காணினும் அவர் தம்பிறப்பு வரலாறுகளைத் தினைத்தனையும் ஆராயாது அவர்பாற் கரையிகந்த அன்புமீதூரப் பெறுவர். இதற்குப், பெரியபுராணத்துப் போந்த நாயன்மார் வரலாறுகளே போதிய சான்றாம். சைவசமயாசிரியருஞ் சிவ அந்தண குலத்திற் பிறந்தருளியவருமான சுந்தரமூர்த்தி நாயனாரே, தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டதத்துக் குயவனார்க்கு அடியேன் என்று அந்தணர் குலத்து அடியாரையுங் குயவர் குலத்து அடியாரையும் ஏதொரு வேற்றுமையுங் காணாது ஒருங்கு வைத்து வணக்கங் கூறினமையும் நினைவிற் பதிக்கற்பாற்றாம். இங்ஙனஞ் சிவனடியார்பால் உண்மையன்பு பூண்டு ஒழுகுவாரெவருஞ் சாதி யுயர்வுதாழ்வு சிறிதும் பாராது அவர்க்கு அடியராய்த் தொண்டு செய்து ஒழுகினமையே நூல்வழக்கானும் உலகவழக்கானும் நன்கறியக் கிடக்கின்றது; நாம் பெரியராதற்கு இங்ஙனம் அம் மறுப்புரைகாரர் சொல்லும் நெறிதனிலேயுங்கூடச் சாதிவரம்பைச் சிதைத்து அன்பினால் தொண்டு செய்து ஒழுகும் விழுமிய ஒழுக்கமே புலனாகி நிற்கின்றதன்றோ? ஆகவே, யானும் அறியேன் அவளும் பொய் சொல்லாள் என்னும் பழமொழிக்கு அம் மறுப்புரைகாரர் இலக்கியமாய் நிற்கின்றார் கண்டீர்! இங்ஙனந் தாம் கொண்ட கோட்பாட்டுக்குத் தாமே மாறாய்நின்று, ஆன்றோர் கைக்கொண்ட உண்மை யன்பொழுக்கத்தைத் தம்மை யறியாமலே தம் வாயிற் புலப்படுத்திவிடுதலில் அம்மறுப்புரைகாரர் ரன்றி வேறு ஏவர் வல்லார்! இனி, அப்பர் சுந்தரர் பெரியரான பிற் செய்த செயல்கள் குற்றமுடையவாயினன்றோ நாம் அவற்றைப்போற் செய்தலாகாது? மற்று, அவை அன்பினையே குறிக்கொண்டு, அன்புக்கு மாறான சாதிக்கட்டைத் தொலைத்த பெருஞ் சிறப்புடையவாகலின், நாமும் அவர் செய்த அச்செயல்கள் போற் செய்து அன்பரொடு அளவளாவுதலாற் போதரும் இழுக்கென்ன? இழுக்கில்லாத விழுமிய அந்நடைகளைத் தமது போலிப் புல்லறிவின் முனைப்பால்,அவர் இகழ்ந்துரைத்தால் அவ்வளவில் அவை இழிந்தவாய் விடுமோ? சாதிக்கட்டைச் சிதைத்து உண்மையன்பால் அறிவால் உய்ந்த மேலோர்பால் உயரும் உடலுமாய்க் கலந்து ஒழுகுதலாற் போதரும் பொல்லாங்கு இன்னதெனக் காட்டாமல், வீணே அம் மேலோர் தம் ஒழுக்கத்தைப் பழித்துப் பேசிவிடுதலால் அது பொல்லாங் குடையதாய் விடுமோ? ஞாயிற்றின் பேரொளியினைக் கண்டு குரைக்குங் குக்கல், அவ்வாற்றால் அஞ்ஞாயிற்றின் பெருமையினைக் குறைக்கவல்லதாமோ? ஆதலால் அறிவு அன்பு ஒழுக்கஞ் சிவநேயம் அடியார் நேயங்களிற் சிறந்தார் எக்குடிப் பிறப்பினும் ஏவரேயாயினும் அவரோடு அன்பினால் ஒருங்கு அளவளாவி வாழ்தலே உயர்ந்த நடையாகுமன்றி, அந் நலங்கள் சிறிதுங் கல்லா ஒருவன் குலநம் பேசுதல், நெல்லினுட் பிறந்த பதராகுதல் திண்ணமாதலால் அவனை யொத்தார்பால் உடன்கூடி வாழ்தல் உயர்ந்த நடை யாகாமல் இழுக்குப்படு மென்க. எனவே, நாம் பெரியராகல் வேண்டுமாயின், பெரியரான அப்பர் சுந்தரர் முதலான நம ஆசிரியன்மார் நடந்துகாட்டியபடியே சிவநேயம் மிக்கு அடியார்பால் ஏதும் வேற்றுமை காணாது அன்பினால் அளவளாவுதலே செயல் வேண்டுமன்றி, ஏனைச் சிறியார் செய்யுஞ் சாதிவேற்றுமைக் கட்டிற கிடந்து நம்மையும் நம்மைச் சார்ந்தாரையும் அல்லற் கடலுட் படுப்பித்துப் பிறவித்துன்பத்தைப் பெருக்கலாகாதென் றுணர்ந்து கொள்க. இனி, அபபர் சுந்தரர் சாதிச்செருக்கை மாய்த்து முறையே சிவநேயம் மிக்காருடனிருந்து உணவுகொண்டதும், அவரைத் திருமணம் புரிந்ததுந் திருவருளால் உந்தப் பட்டுச் செய்த செயல்களாதலால், நான் என்னும் முனைப்புடைய நம் போல்வார் அவர்போற் செய்தலாகாது என்று அம் மறுப்புரகாரர் அடுத்தடுத்துக் கூவுகின்றார். திருவருளியக்கத்தால் அடியார் பால் நிகழுஞ் செயல்கள் இவை, தமது அறிவியக்கத்தால் அவர்பால் நிகழுஞ் செயல்கள் இவை என்று பகுத்துக் காணாமல், அடியார் செய்யுஞ் செயல்களெல்லாவற்றையுமே திருவருட் செயல் திருவருட்செயல் என்று கூவும் அவர், எல்லா மக்களையும் பிறப்பளவில் வேற்றுமை தோன்றாது படைத்திருக்கும் அத்திருவருட் கருத்துக்கு மாறாக இவர் பிறப்பளவில் உயர்ந்தவர் இவர் பிறப்பளவில் தாழ்ந்தவர் என்று அருளின்றிக் கரைந்து அல்லற்படுவது பெரிதும் இரங்கற் பாலதேயாம், அப்பர் சுந்தரர் முதலான நம் ஆசிரியன்மார் தமக்கென ஓரறிவுந் தமக்கென ஒரு செயலுமின்றித், தாம் உண்டதும் மணந்ததுந் திருப்பதிகம் பாடினதுந் திருக்கோயில்கட்கு நடந்து சென்றதும் இறைவன்மாட்டு அன்பால் உருகினதும் அடியார்பால் நெஞ்சம் நெகிழ்ந்ததும் அவரோடு உரையாடினதும் பிறவுமெல்லாந் தஞ் செயலாகாமல் இறைவன் செயலேயாயின், அவரெல்லாம் உயிரும் உணர்வும் இல்லாவறிய இயந்திரங்கள் (பொறிகள்) ஆய் முடிவரல்லரோ? அவரை யெல்லாந் தனித்தனியே வைத்து அப்பர் சுந்தரர் என்றற் றொடக்கத்துப் பெயர்களால் தனித்தனியே வாழ்த்துதலும் வணங்குதலு மெல்லாம் நம் மாட்டுப் பொருளில் வறுஞ் செயல்களாய் முடியுமல்லவோ? அவர் இறைவனைப் பாடினதும் அவர் இறைவனை வணங்கனிதும் அவர்தஞ் செயலாகாமல் இறைவன் செயலேயாயின், இறைவனே தன்னைத்தானே பாடிக் கொண்டான், இறைவனே தன்னைத்தானே வணங்கிக் கொண்டான் என்று முடிக்கப்பட்டு, அவை இறைவற்குத் தன்னைப் பற்றுதல் என்னுங் குற்றத்தைச் சுமத்து மல்லவோ? உயிரென ஒன்றில்லை, எல்லாம் பிரமமேயெனக் கூறும் அம் மறுப்புரைகாரர் போல்வாரான மாயாவாதிகட்காயின் அவ்வாறு கூறுதல் பொருந்தும்; மற்றுப், பதிபசு பாசம் எனப்பகர் மூன்றிற் பதியினைப் போற்பசு பாசம் அநாதி (திருமூலர்) என்றும், அதுவென்னும் ஒன்றுஅன்று அதுவன்றி வேறே அதுவென்று அறி அறிவும் உண்டே (மெய்கண்டதேவர்) என்றும் போந்த எம் ஆசிரியர் அருளுரைவழி பிழையாது நின்று, இறைவனைப் போலவே உயிர்கௌல்லாந் தமக்கென விழைவு அறிவு செயல்கள் (இச்சா ஞானக் கிரியைகள்) உடையவா மெனவும், ஆயினும் அவை மலத்தினால் மறைக்கப்பட்டு நிற்குமெனவுந், தம்மைப் பொதிந்த மலமாசு இறைவன்றன் றிருவருளுதவியால் நீங்க நீங்க அவ்வுயிர்கள் தமக்கியற்கையாவுள்ள அவ்விழைவு அறிவு செயல்கள் இனிது விளங்கப்பெறுமெனவும், மலத்தை நீக்குதற்கு உதவிசெய்யும் அவ்வளவே இறைவன் செயல் அவ்வுதவியைப் பெற்று மலப் பிணிப்பை அவிழ்த்துச் சிவபிரானிடத்துஞ் சிவநேயம் வாய்ந்தவரிடத்தும் விழைவுகொண்ட அவரருளையும் அன்பையும் பெறுதற்கான வழிவகைகளை அறிதலும் அதற்கேற்ற முயற்சிகளைச் செய்து நடத்தலுமெல்லாம் புனிதராவா ரெல்லார்க்கும் மெய்யுரிமையாமெனவும் வற்புறுத்து நுவலுஞ் சைவவித்தாந்த உண்மை நெறி பேணும் எம்மனேர்க்காயின் அங்ஙன முரைத்தல் எட்டுணையுஞ் சாலாதென்க. அற்றேல், நம்மாட்டு நிகபம் இறைவன் செயலுக்கும் நஞ்செயலுக்கும் வேற்றுமை என்னையெனிற், காட்டுதும். பசித்தும் உணவுபெறாமையால் அயர்ந்துறங்கும் மகவினை எழுப்பிப் பால் ஊட்டும் அன்னையின் செயல் போல்வது முதல்வன்றன் அருட்செயல்; அங்ஙனம் எழுப்பி அன்னை தரும் பாலினைப் பருகும் மகவின்செயல் போல்வது நம் போன்ற உயிர்களின் செயல்; இன்னும் அன்னையின் திருக்கொங்கை களிற் பாலமிழ்தினை அமைத்துவைப்பது இறைவன் செயல்; மற்றுப், பால்சுரக்கும் நேரமும் மகவின் பசியும் அறிந்து அப்பாலினைத் தன் மகவுக்கு ஊட்டுவது அன்னையின் செயல். இங்ஙனமே, கண் கால் முதலான மிக வியக்கத்தக்க உறுப்புகளொடு கூடிய இவ்வுடம்பை நமக்கு அமைத்துக் கொடுத்து இறைவன் செயல்; இவ்வரிய வுடம்பைப் பெற்ற நாம் அதனைப் பழுதுபடாமற் பாதுகாத்து அதன் துணையால் நம் அறிவையும் அன்பையும் இன்பத்தையும், வளர்த்து இறைவன் றிருவடிப் பேற்றினை எய்துதல் நம் செயல். இவ்வாறு பகுத்து ஆராய்ந்து காணவல்லார்க்கே, இறைவன் நம்பொருட்டுச் செய்யும் படைத்தற்றொழிலைச் சிற்றறிவுடைய நம்மனோர் ஓர் அணுத்துணையுஞ் செய்ய மாட்டுவா ரல்லரென்பதூஉம், அப் படைத்தற்றொழிலைப் பயன்படுத்தித் தம்மறிவையும் அன்பையும் வளர்த்து அம்முகத்தால் தமது ஆணவச் செருக்கை அகற்றிக்கொள்ளாத உயிர்களை இறைவன் தனது திருவருளின்பத்திற் படுப்பித்துக் கொள்ள னென்பதூஉம் நன்கு விளங்கும். ஆகவே, குலச்செருக்கு குடிச்செருக்கு செல்வச் செருக்கு கல்விச்செருக்கு முதலான ஆணவக்கறை சிறிதுமின்றி, அன்பினால் அகங்குழைந்துரகி அப்பாரும் அப்பூதிகளும் உடனிருந்து திருவமுதுகொண்டு அளவளாவியதுஞ், சுந்தரரும் பரவை சங்கிலியாரும் காதற்கெழுதகைமையில் விஞ்சி உடலும் உயிருமெல்லாம் ஒன்றாய்ப் பேரன்பினுருவாய் நின்றதும் பிறவுமெல்லாம் அப் பெரியார் தம் அறிவுமுயற்சி அன்பு முயற்சிகளால் நிகழ்ந்தனவே யாகுமல்லால், அவையெல்லாம் இறைவன்செயல்க ளாகாவென்று கடைப்பிடித் துணர்ந்து கொள்க. இவ்வாறன்றி, உயிர்களின் செயல்களை இறைவன் மேலேற்றிக்கூறுதல், கழுவாய் இல்லதொரு பெருங்குற்றமாம் என்பதனையும் உணராது, எல்லாம் இறைவன் செயல், எல்லாந் திருவருட்செயல் என்று சொல்லி விட்டமையானே தாம் ஞானக்கடலைக் கரைகண்டவரென நம்பிப், பொதுமக்கள் தம்மைப் பாராட்டுவரென்று தமக்கு அவ்வாற்றால் ஒரு பொய்ப் புகழை உண்டாக்கிக் கொள்ளுதலையே விழைந்து, சிவபிரான்றன் இறைமைத் தன்மைக்கும் அடியார் தம் மெய்யன்பின் திறனுக்கும் ஆகாத இழுக்குரைகளை எழுதித் தமது மாயாவாதக் கோட்பாட்டைச் சைவசித்தாந்தம்போற் காட்டும் நாடகவன்மையில் அம்மறுப்புரைகாரர்க்கு நிகராவார் எவருமே யில்லை யென்க. அற்றேல், நஞ்செய லற்றிந்த நாமற்ற பின்நாதன் றஞ்செயல் தானேயென் றுந்தீபற எனப் போந்த அருளுரையால் மெய்யடிமை பூண்டார்பால் இறைவன் செயலன்றி, அவர்தஞ் செயல் சிறிதுஞ் தோன்றாதென்பது பெறப்படுகின்றதாலே வெனின்; அற்றன்று பொறி புலன் கருவிகளின் வழி அறிவும் முயற்சியும் நிகழாது, அவை யெல்லாங் கடந்து இறைவன் திருவருளிற் யோய்ந்து பாலருடன் உன்மத்தர் பசாசர்குண மருவித் தம்மையும் உலகத்தையும் மறந்து நிற்குஞ் சீவன்முத்தர் நிலையினைக் கூறும் அவ் வருளுரையினை, உலகத்துயிர்களை ஈடேற்றுதற் பொருட்டுத் தோன்றி அவ்வுயிர்கள்பால் அருளும் அன்பும் பூண்டு ஒழுகி, அவர்க்கு இறைவன்றன் அருட்செயல் மாட்சிகளைக் காட்டுவாரான நம் ஆசிரியர்க்கும் ஏனைச் சிவனடியார்க்கும் ஏற்றுதல் பொருந்தாதென்றுணர்க. சீவன்முத்தர்நிலை அந்நிலையை அடைந்தார்க்கன்றி ஏனையோர்க்குப் பயன்படாது; சிவனடியார் நிலையோ அவர் தமக்கே யன்றி உலகத்துள்ள எல்லா வுயிர்க்கும் பயன்படுவ துடைத்து, அற்றேற், சிவனடியார் தம்முட் சீவன்முத்தராய் நின்றார் இல்லையோவெனின்; அற்றன்று, கண்ணப்பர், பெருமிழலைக் குறும்பர் முதலானவர் தம்மையும் உலகத்தையும் மறந்து இறைவன் திருவருட் பெருக்கிலேயே முழுதுந் தோய்ந்து நின்ற சீவன்முத்தரே யாவர்? மற்று, நம் சமயாசிரியன்மாருந், திருமூலர் காரைக்காலம்மையார் முதலான ஏனை நாயன்மார் பலருந் தாம் இறைவன் றிருவருளிற் றோய்ந்து நின்றதோடு அமையாது, உலகத்தாரையும் அந் நிலைக்குச் செலுத்தும் பேர் அருட்டிறம் வாய்ந்தவராகலான், அவர்பால் இறைவன் செயலே யன்றி அவர்தம் அருட்செயலும் ஒருங்கு விரவி நிற்கலாயிற்று. ஆகவே, இறைவனுக்கு அடிமைத்திறம் பேணுஞ் சான்றோ ருள்ளும் இவ்விருவேறு நிலைகள் கட்புலனாய்த் தோன்றக் காண்டலின், அவருள் ஒரு நிலையில் நின்றார்க்குரிய தன்மை யினை வேறொரு நிலையில் நின்றார்க்கு ஏற்றிக் கூறுதல் பகுத்தறிவில்லாதார் செயலேயாமென்று ஓர்க. ஆகவே, அப்பரும் அப்பூதிகளும் ஒருங்கிருந்து திருவமுது கொண்டதுஞ், சுந்தரர் பரவை சங்கிலியாரை மணந்ததுந் திருவருட் செயல்களேயன்றி, அவர் தஞ் செயல்கள் அல்ல வென்ற அம் மறுப்புரைகாரருரை பொருளில் புல்லுரையே யாமென்று தெளிக. இனி, அன்பே உயர்ந்ததாகலின் அதனைக் கைக்கொள்க, சாதிவேற்றுமை தாழ்ந்ததாகலின் அதனைக் கொள்ளற்க என்று நம் ஆசிரியர் அறிவுறுத்தினராயின், அவ்வறிவுரையினை ஏற்று நடத்தல் வாய்வதாகும், மற்று அவர் நடந்த நடைகளைப் பார்த்து அவ்வாறு நடத்தல் வாயாது என்பதுபட அம் மறுப்புரைகாரர் தெளிவின்றிச் சில வரைந்தார். இவர் சொற்கள் நமக்கு இறும்பூதினை விளைத்தன, நம்மாசிரியன்மா ரெல்லாம் அன்பினையே யுயர்த்திச் சாதியினை இழித்துப் பேசியிருப்ப, முழுப் பூசனிக்காயைச் சோற்றில் மறைப்பதோடு ஒப்ப, அவர்கள் அங்ஙனம் அறிவுரை கூறவில்லையென்று அம் மறுப்புரைகாரர் கூறியது எவரை ஏமாற்றுதற்கோ! நம் ஆசிரியன்மார் அங்ஙனம் கூறிய அறிவுரைகளை யெல்லாம் சாதிவேற்றுமையும் போலிச் சைவரும் என்னும் எமது நூலில் நன்கெடுத்துக்காட்டியிருக்கின்றேம். அவற்றைக் காணாதார், சாத்திரம் பலபேசுஞ் சழக்கர்காள் கோத்திரமுந் குலமுங் கொண்டு என் செய்வீர் என்றும், எவரேனுந் தாமாக இலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டால் உள்கி உவராதே அவரவரைக் கண்ட போதே உகந்தடிமைத் திறம் நினைந்து என்றும் போந்த திருநாவுக்கரசு நாயனார் திருமொழிகளையும், நல்ல குலமென்றுந் தீய குலமென்றுஞ் சொல்லள வல்லாற் பொருளில்லைத் - தொல்சிறப்பின் ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி ஆள்வினை என்றிவற்றான் ஆகுங்குலம் என்றும், சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கி லுள்ள படி என்றும் போந்த சான்றோர் திருமொழிகளையுங் கருத்தில் இருத்தி, எவரும் அம்மறுப்புரைகாரர் சொல்லில் ஏமாறாதிருக்கக்டவாராக! இனிச், சிவஞானசித்தியார் தவஞ்செய் சாதி என்று கூறுகின்றதே யன்றிப் பிறப்பளவிற் சாதியென்று யாண்டுங் கூறாமையாற், பிறப்பளவிற் சாதிவேற்றுமை பாராட்டும் அம்மறுப்புரைகாரர் அதனை யெடுத்துக் காட்டியது, தமது கொள்கையினை அது வேரோடு அறுக்கும் ஞானவாள் என்பதை அறியாமையாற் போலும்! இங்ஙனமே தெய்வத் திருவள்ளுவர் அருளிச் செய்த, மேலிருந்தும் மேல அல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர் என்னும் அருமைத் திருக்குறள், தம்மைப் பிறப்பளவில் உயர்ந்த வராகச் சொல்லிக்கொள்வராது குலத்திற் பிறந்தவராயினும், உயர்ந்த குணச்செயல்கள் இல்லாதவர் உயர்ந்த குலத்தவர் ஆகார்; பிறரால் இழிந்த குலத்தவராக ஒதுக்கப்பட்ட வகுப்பிற் பிறந்தவராயினும், உயர்ந்த குணச்செயல்கள் உடையவர்கள் கீழ்மக்களாக மாட்டார் என்று எளிதிற் பொருள் தந்து, அம்மறுப்புரைகாரர் பிறப்பளவிற்கொண்ட சாதிப் பதர்க்கொள்கையினை எரித்துச் சாம்பராக்குங் கொழுந் தீயா யிருந்தும், அதனை இவர் கையிலெடுத்தது எத்துணைப் பேதைமை! குலங்குடி சாதி என்னுஞ் சொற்களை ஆன்றோர் நூல்களிற் கண்டுவிட்டால், உடனே அம்மறுப்புரைகாரர், சாதி வேற்றுமை நம் தொல்லாசிரியர் நூல்களிற் சொல்லப்படு கின்றது, அஃதவர்க்கு உடம்பாடு என்று சொல்லப் பதறு கின்றார். ஆனால், நம் ஆசிரியன்மாரோ அன்பு அறிவு அருளொழுக்கம சிவநேய அடியார் நேயங்களின் மிக்காரை யெல்லாம் ஓரினப்படுததி உயர்ந்த சாதியாராகவும், அந்நலங்கள் இல்லாதாரை அவரின் வேறுபடுத்துத் தாழ்ந்த சாதியாராகவுங் கொண்டிருக்கின்றார்; அங்ஙனம் எம்மாசிரியர் குணத்தாற் செயலாற் கொண்ட சாதி வேற்றுமை எமக்கும் உடம்பாடேயாம்; ஆனாற் குணத்தையுஞ் செயலையும் பாராமற் பிறப்பளவிற் சாதிவேற்றுமை பாராட்டும் அம்மறுப்புரைகாரரின் தீய சாதிவேற்றுமைதான் எமக்குடம் பாடாகாதது. அருச்சுனற்குக் கீதைநூல் செவி அறிவுறுத்திய கண்ணனும் அவரவர் குணத்தாலுஞ் செயலாலுஞ் சாதி வகுத்தேன் என்று கூறுதலுங் காண்க. உண்மை இவ்வாறாகலிற், பிறப்பளவில் உயர்வு சொல்லிக்கொள்ளும் அம் மறுப்புரைகாரர், பார்ப்பனர் என்றுஞ் சைவ வேளாளர் என்றுந் தம்மையுயர்த்துப் பேசிக் கொள்ளுங் கூட்டத்தாரில் எத்தனை பேர் குணத்தாலுஞ் செய்கையாலும் உயர்ந்தவர்! என்று நடுவுநிலைதவறாது நின்று எண்ணிப் பார்ப்பாராயின், ஆயிரவரில் ஐவர்தாமும் நல்லவராக இராமையை அவரே நன்குணர்ந்து கொள்வர். இனிச், சிவயோக நிலையில் ஈடுபட்டு நின்று தம்மையும் உலகத்தையும் மறந்து சிவமேயானாரைப்பற்றிப் பேசுதலால் ஈண்டைக்குப் பொருத்தமாவது ஏதும் இன்மையின், அன்னாரைக் குறித்து வறிதே விரித்தெழுதி வழுக்குதலில் அம்மறுப்புரைகாரர் தமக்கு நிகராவார் எவருமேயில்லை; ஆகவே, அவ்வளவில் அவன் மகிழ்க என்னும் நயமே பற்றி அவர் தமது திறனைத் தாமே மெச்சிக்கொண்டு மகிழ்ந்துகிடக்க விடுவேமாக. இனித், தமிழ்நாட்டவரிற் பெரும்பாலரைத் தீண்டாதவர் என ஒதுக்கிவைக்குஞ் சாதிச் செருக்கர்கள், அத்தீண்டாதவர்பால் எல்லாவகையான உதவிகளையும் பெற்றுக்கொண்டு, மூன்று நான்கு வேளை கொழுக்க விலாப்புடைக்கத் தின்று உயிர்வாழ்ந்து வருபவராய்த், தமக்கு அவ்வுதவிகளைச் செய்யும் அவ்வேழை யெளிவர்களுக்கு ஒருவேளை நல்லுணவுகூடக் கொடாமல் அவர்கள், பட்டினியும் பசியுமாய்க்கிடந்து துன்புறச் செய்வதுடன், அவர்கள் கடவுளை வணங்குதற்குக் கோயில் களினுள்ளே வருதலும் ஆகாதென்று கொடுமை செய்வதுந் தெய்வத்துக்கு அடுக்குமா என்று யாம் எழுதிய பகுதியைக் கண்டு அம்மறுப்புரைகாரர் வயிறெரிந்து பட்டுப் போகின்றார். ஏனென்றால் இவரும் இவரோ டொத்தாரும் உயர்ந்த சாதியாராம்; மற்றையோர் தீண்டத்தகாத இழிந்த சாதியாராம்; ஆதலால் அவரோடிருந்து கடவுளை வணங்கினால் தமக்கு நரகம் வந்துவிடுமாம். என்னே இவர்தம் பேதைமை! என்னே இவர்தஞ் சாதி யிறுமாப்பு! தம்மைப் போலவே கடவுளாற் படைக்கப்பட்ட மக்களை இவ்வளவு குறைத்துப் பேசும் இவர் எவ்வளவு ஈரமற்ற வன்னெஞ்சராய் இருக்கின்றார்! கடவுளின் வியக்கத்தக்க படைப்பாய், அக்கடவுளின் பிள்ளைகளாய் இருக்கும் மக்களில் ஒரு பெரும் பகுதியாரை இழித்துப் பேசும் இவர் உண்மையாகவே கடவுளிடத்து அன்புடையவராயிருத்தல் கூடுமோ! தாம் அவர்களோடு உண்ணல் கலத்தல்களைச் செய்யாதொழியினும், அவர்களைக் கோயில்களினுள்ளே வணங்கவும் விடாமை எத்துணைப் பெரிய வன்கண்மை! இத்தகைய வன்கண்ணர் இருக்கும் வரையில் மக்களுள் ஒற்றுமையும் அன்பும் உண்டாகா; இத்தமிழ்நாடு, ஒன்றொடொன்று பகைத்துப் போரிட்டு மாயும் மறவிலங்குகள் உள்ள காடாகவே சீரழியும்! இத்தகைய கொடியரால் மக்கள் ஒற்றுமையின்றிப் பல வேறு வேறு சிறு சிறு வகுப்பினராய்ச் சிதர்ந்தமையா லன்றோ, இந்நாட்டவர் வலிவிழந்து, துருக்கர் முதலான அயல்நாட்டு மக்களின் படையெடுப்பின்கீழ் அகப்பட்டு நசுங்கிக் கணக்கின்றி மாய்ந்தனர்! இந்நாட்டவர் ஒற்றுமையும் வலிவும் உடைய வராயிருந்தால், அவ்வயல்நாட்டவர் இங்கே தலைக்காட்டலுங் கூடுமோ! இறைவனருளால் ஆங்கில அரசு இந் நாட்டின் கண் நிலைப்பட்டகாலந் தொட்டன்றோ, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட வகுப்பினர் சிறிது சிறிதாக ஏனையோர்க்குள்ள உரிமைகளைப் போல்வன தாமும் பெற்று மேலேறி வருகின்றனர். இம்முறையாக மட்டும் இந்நாட்டில் இது காறும் நிலைபெறா திருந்தால், மறுப்புரைகாரரை யொத்தக் வன்கண்ணரால் இந்நாட்டவர் இன்னுஞ் சீர்குலைந்து, இந்நாடு முற்றுமே பாழடைந்து போயிருக்கும். முன்னேவந்திருக்க அரசரால் இந்நாட்டவரடைந்த துன்பவரலாறுகளை நன்கறிந்தவர்க்கே யாம் கூறும் இவ்வுண்மை புலப்படும். இந் நாட்டவரிற் சாதிவெறி பிடித்த வகுப்பார் சிலர் நடுவுநிலை சிறிதுமின்றித், தம்மிற் றாழ்ந்தவராகத் தம்மாற் கருதப்பட்ட ஏழை யெளிய மக்கட்குச் செய்த தீமைகட்கு ஓரளவேயில்லை. அவ் வெளியமக்கள் உண்ணச் சோறும் உடுக்கக் கூறையுமின்றி, அதனால் உடல் வலிவிழந்து, கல்வியுணர்ச்சி யில்லாமையால் அறிவுவலிவு மிழந்து நிலை கலங்கி நின்றமையா லன்றோ, அவர்கள் இந் நாட்டின்மேற் படையெடுத்து வந்த துருக்கர் மதத்தை நூறாயிரக்கணக்காய்த் தழுவித் தாமுந் துருக்கராயினர். துருக்கருக்குப் பின்வந்த போர்த்துக்கேசியர், உலாந்தாக்காரர் இந் நாட்டின்கட் பரவச் செய்த கத்தோலிக் கிறித்தவ மதத்தைத் தழுவினவர்களும் எண்ணிறந்தவர்களாவர். இங்ஙனம் இவ்விந்தியநாட்டு மக்களில் மூன்றிலொரு கூறார் அயல் நாட்டவர் மதங்களைத் தழுவி, அவ்வாற்றால் பல நலங்களை அடைந்தனர், இப்போதுஞ் சாதி வெறிபிடித்த மறுப்புரைகாரர் போல்வார் செய்யுங் கொடுமைகட்கு அஞ்சியும், இந்துமதத்தின் பெயரால் இன்னவர் செய்யும் அறிவற்ற நடுவுநிலையற்ற செயல்களைக் கண்டு அருவருத்தும் ஒவ்வொருநாளும் அயல்மதம் புகுவார் தொகை பெருகியே வருகின்றது. இவ்வாறு நிகழும் நிகழ்ச்சிகளை வரலாற்று நூல்களால் அறிந்து கொள்ளும் ஆங்கில உணர்ச்சி வாயாத சாதிச் செருக்கர்கள், திருநெல்வேலி நாட்டையும் மலையாள நாட்டையும் போய்க் காண்பர் களாயின், அந்நாடுகளில் முறையே கிறித்துவர் தொகையும் மாப்பிளைத் துருக்கர் தொகையும் மிகுந்திருத்தற்குக் காரணம், மற்றை நாடுகளைவிட அந் நாடுகளிற் சாதிவெறி பிடித்தார் கூட்டம் மிகுதியாயிருப்பதுவேதான் என்பதனை நன்கறிந்துகொள்வார்கள். அதுகிடக்க. இனித், திருக்கோயில்களினுள்ளே தீண்டாதவர்களை விடாமை ஏன் என்றால், அவர்கள் மாட்டிறைச்சியுண்டு, கட்குடித்து, ஆண் பெண்கள் வரைதுறையின்றி ஒருவரை யொருவர் மருவிக் களித்துத், துப்புரவின்றி முடைநாற்றம் வீச உலவுதலாலேதான் என்று சாதி வெறியர்கள் கூறுகின்றார்கள். ஆனால், தீண்டாதவர்கள் மட்டுந் தாம் இங்ஙனம் நடப்பவர்களா என்று உற்றுநோக்கினால், அவர்கள் நிகழ்த்துந் தடை பொருந்தாப் புல்லுரையேயாதல் நன்கு விளங்கும். இப்போது திருக்கோயில்களின் உட்செல்வார் எல்லாரும் புலாலுங் கள்ளும் மறுத்து, ஒருவனையே மருவும் ஒருத்தியும் ஒருத்தியையே மருவும் ஒருவனுந் தாமாவென்று ஆராய்ந்து பார்மின்கள்! பார்ப்பனர் சைவர் என்று பெயர்கொண்டாரில் எத்தனையோ பெயர், தீண்டாதவர்க்கு வறுமையால் உண்ணக் கிடையாத எத்தனையோ வகையான விலங்கின் இறைச்சி களையும் எத்தனையோ வகையான சாராயங்களையுந் தாம் உட்கொள்கின்றார்கள் என்பது நாடெங்கும் பேச்சாய்க் கிடக்கின்றது! இவர்களுள் எத்ததையோ பெயர் குறத்தி புலைச்சி முதலான தம்மால் விலக்கப்பட்ட மகளிரையுங் கூடிக் களிக்கின்றனரென்னுஞ் சொல்லும் ஊரெங்கும் உலாவு கின்றது! இவர்களெல்லாங் கடவுளிடத்து அன்புடையார் போற் றம்மைப் பிறர் மெச்சிக் கொள்ளும் பொருட்டுக் கோயிலினுள்ளே ஆடம்பரத்தோடு செல்லவில்லையா! பார்ப்பனர், சைவரிற் பலர் மறைவிலாவது ஊனுஞ் சாராயமும் உட்கொள்கின்றார்கள். இவ்விரு வகுப்பின ரல்லாத ஏனை வகுப்பினர் எல்லாருமோ வெளிப் படையாக ஆட்டிறைச்சி கோழியிழைச்சி முட்டை மீன்முதலான எத்தனையோ வகையான ஊனை உண்பவர்களாயிருக்கின்றார்கள்; இவர்களில் எத்தனையோ பலர் கள்ளுஞ் சாராயமும் வெளிப்படையாக அருந்துபவராயுங் காணப்படுகின்றனர். இவர்கள் எல்லாருங் காணக் கண்ட கண்ட மகளிரொடு கைகோத்து உலவுதலைக் காணாதவர் யார்? இவர்கள் திருவிழாக் காலங்களிலும் மற்றை நாட்களிலும் வேசியரையும் பிற மகளிரையும் அழைத்துக் கொண்டு திருக்கோயில்களினுள் வரவில்லையா? அதுவேயுமன்றி, ஒவ்வொரு கோயிலிலுங் கோயிலுக்கென்று விடப்பட்ட பரத்தையர்கள் எத்தனைபேர்! இவர்களெல்லாந் தனித்தனியே ஒருவனைப்பற்றி ஓரகத்திருப்பவர்களா? இல்லையே; பொருள் தருவார் எவராயிருப்பினும் அவர்தோள் மருவிக் களிப்பவரல்லரோ! இன்னும் இவரே யன்றித் தமிழ்நாடல்லாத பிறநாடுகளிலிருந்து வந்து திருக்கோயில்களினுட் சென்று வணங்குவார் தொகைக்கு ஒரு கணக்குண்டோ? இவர்களில் இன்னார் தீண்டத்தக்க சாதியார், மற்று இன்னார் தீண்டத்தகாத சாதியாரென்று பகுத்துக் கண்டவ ருண்டோ? இன்னுந் தமிழ்நாட்டிலேயுங் கூட ஓர் ஊரில் தீண்டாதவர் என்று சொல்லப்படும் மக்கள், பிறிதோர் ஊரிலுள்ள திருக்கோயிலினுட் சென்றுவணங்கி வருதலும் மறைவாகநிகழ்ந்து வருதலை அறியாதார் யார்? வெறுந் தோற்றத்தளவில் இவர் உயர்ந்த சாதியார், இவர் தாழ்ந்த சாதியார் என்று பகுத்தறிதற்குரிய அடையாளங்களை, எல்லாரையும் படைத்த இறைவன் எந்த மக்களுடம்பிலும் படைத்துவையாதிருக்க, அவன் திருவுளக்கருத்துக்கு முற்றும் மாறாய், ஒருவர் தம்மை யுயர்ந்தவராகவும் மற்றையொருவரைத் தாழ்ந்தவராகவுந் தமது இறுமாப்பினாற் கருதி க்கொண்டு, தம்மாற் றாழ்த்தப்பட்டவர்க்கு அளவிறந்த கொடுமைகளைத் தொடர்பாகச் செய்து வருவது, அங்ஙனஞ் செய்வார் தம்மை வேரோடு அழிக்குங் கருவியாய் வலிவேறி வருதலை அம் மறுப்புரைகாரர் அறியார் கொல்லோ! இனித், தீண்டாதவர்பால் முடைநாற்றம் வீசுகின்றதெனக் கூவுவோர், அவர் செய்யுங் கடுமையான தொழில்களையும், அத்தொழில் மிகுதியாலுங், குளித்து முழுகித் துப்புரவா யிருக்கத்தக்க வசதிகளைச் சாதிக்கிறுக்கர்கள் அவர்கட்குத் தராமையாலும், வறுமையால் நல்ல ஆடை உடுக்கவும் நல்ல வீடுகளில் இருக்கவும் இயலமையாலும் அவர்கள் அங்ஙனம் அழுக்கேறி முடைநாற்றம் வீசப்பெறுகின்றார்களென்பதை அறியாததென்னையோ! அவர் செய்து தருந்தொழில்களி னுதவியாற் செல்வமுடையராகித் துப்புரவான ஆடைகளும் அகன்ற பெரிய இல்லங்களும் பெற்றுக் கொழிக்குஞ் சாதிக் கிறுக்கர்களைப் போல் அவ் வேழையெளியவர்களும் இனிது வாழப்பெற்றால் அவர்கள் பால் அந் நாற்றங் காணப்படுமா? விலக்கப்பட்ட வகுப்பாரிலிருந்து கிறித்துவ மகமதிய மதங்களுட் புகுந்து நிலையுயரப் பெற்றவர்க்குள் இத்தகைய முடைநாற்றங் காணப்படுகின்றதா? சிறிதும் இல்லையே! சாதிக்கிறுக்கர்கள் தாம் பயன்படுத்துங் கிணறுகள் குளங்கள் முதலான நீர்நிலைகளில், அவ்வேழை யெளியவர்களை ஒரு குடங்கை நீரும் எடுக்கவிடாமையாலன்றோ, தம்மைப்போல் அவர்களுந் தக்க இடங்களில் இல்லங்கள் மைத்துக்கொள்ள இசையாமையாலன்றோ ஐயோ! அவர்கள் எல்லாரும் அங்ஙனம் இரங்கத்தக்க நிலையிலிருந்து இன்னலுறு கின்றார்கள்! இங்ஙனம் அவ்வேழை யெளியவர்கள் அருவருக்கப் படும் நிலையிலிருத்தற்குக் காரணர் சாதி வெறிபிடித்தவர்களே யாதலால், அவ்விரங்கத்தக்க பயன்படுமக்களை அங்ஙனம் இழித்துரைத்தலினும் பெரியதொரு வன்கண்மை பிறிதில்லை யென்க. இனித், தம்மை உயர்ந்த சாதியாராகக் கருதுஞ் சாதிக்செருக்கர்களாவது முடைநாற்றமின்றி நறுமணங்கமழப் பெறுகின்றார்களாவென்று சிறிது கூர்ந்து பார்மின்கள்! காரமும் புளிப்பும் மிகுந்த உணவுகளை உட்கொள்ளலாலும், வெற்றிலை புகையிலை முதலான தீநாற்ற மயக்கப் பொருள்களைக் குழையக் குழைய மெல்லுதலாலும், புகைச் சுருட்டுப் பிடித்தலாலும், மூக்குத்தூள் செலுத்துதலாலும், இன்னும் இவைபோன்ற அருவருப்பான செயல்களைச் செய்தலாலும், மலக்குடலைத் துப்புரவாக வைத்துக் கொள்ளாமையாலும் பார்ப்பனர் சைவரில் எத்தனையோ பெயர் முடைநாற்றம் உடையவர்களா யிருக்கின்றார்கள்! இவர்கள் கிட்ட வரின் இவர்களின் வாயிலிருந்தும் உடம்பிலிருந்தும் வரும் முடைநாற்றம் பொறுக்கக் கூடியதாயில்லை. அதுவேயுமன்றி, இவர்கள் நோய் கொண்டும் புண்கொண்டும் புழுத்துக் கிடக்கையிலாவது இவர் பிறப்பளவில் தம்மை உயர்ந்த சாதியாராகப் பேசிக்கொண்டது பெரும் பிழையென உணரக் கடவராக! விலக்கப்பட்ட சாதியார் பெரும்பாலும் நோயின்றி வலியயாக்கை யுடையவர்களாய் எல்லார்க்கும் பயன்படுவாராய் நீண்டகாலம் உயிர்வாழ்தலையுந், தம்மை உயர்ந்த சாதியாராகக் கருதிக்கொள்ளும் பார்ப்பனர் சைவர் முதலான ஏனை வகுப்பினரிற் பெரும்பாலார் எலும்புருக்கி ஈளை யானைக்கால் பித்தபாண்டு கொறுக்குப்புண் முதலான கொடுநோய் கொண்டு வலிவிழந்த வுடலினராய் எவர்க்கும் பயன்படாராய் விரைந்து மாய்தலையும் ஒப்பிட்டுக் காணுங்காற், பிறப்பளவிற் பார்ப்பினும் விலக்கப்பட்ட வகுப்பாரே ஏனைப் பார்ப்பனர் சைவர் முதலாயினாரை விடத் தூய யாக்கை யுடையராயிருத்தல் புலனாகா நிற்கின்றது. இவ் வியல்புகளையெல்லாம் ஆராய்ந்து பாராமல், உயர்ந்த அம் மக்களைத் தீண்டத்தகாத முடைநாற்றம் முடையரென்பது எவ்வளவு பேதைமை! அது கிடக்க. இனி, அம்மறுப்புரைகாரர் தீண்டாதவரைக் கோயிலுனுள் விடலாகா தென்பதற்குத், திருநாளைப் போவாரென்னும் நந்தனார் வரலாற்றினை ஏன் மேற்கொள்ளலாகாதென்று எம்மை வினாவுகின்றார். மறுப்புரைகாரரைப் போலவே சாதிவெறி பிடித்த கோயிற் குருக்கண்மார் அந்நாளிலும் இருந்தமையின், நந்தனாரைக் கோயிலினுள் விடாதே தடுத்தனர். எல்லாம்வல்ல இறைவனோ, அக்குருக்கண்மார் இழிந்தாராதலும் நந்தனார் உயர்ந்தாராதலுந் தேற்றுதற் பொருட்டு, நந்தனாரைத் தீயிற் குளிப்பித்துக் கோயிலினுட் புகுவித்தான். தீயிற் குளித்தும் பழுது படாத தெய்வயாக்கை யுடைய நந்தனார் பெருமைக்குக், தீயிற் படிற் படுசாம்பராய் வெந்தொழியுங் கொழுத்த வுடலினையுடைய அக் குருக் கண்மார் சிறுமைக்கும் உள்ள வேற்றுமை இதனால் நன்கு புலனாகின்றதன்றோ? குருக்கண்மார் நந்தனாரைக் கோயிலினுள் விடாது தடுத்தாற்போல, இறைவனும் அவரைத் தடுத்தனனா? இல்லையே; எப்படியாவது அவரை அதனுட் புகுவித்தற்கன்றோ வழிசெய்தான். அங்ஙனம் இறைவன் அவற்குக் காட்டிய அருள் நிகழ்ச்சியினை மேற்கோளா யெடுத்துத், தீண்டாதவ ரெனச் சாதிக்கிறுக்கர்கள் இழித்துப்பேசும் நன்மக்களைக் கோயிலினுள் விடுவதற்குப் பரிந்து பேசுவதே சான்றோர்க்குக் கடனாயிருக்க, அதற்கு மாறாய் அம்மறுப்புரைகாரர் தம்போற் சாதிவெறி பிடித்த அக்குருக்கண்மார் அவரிடத்துக் காட்டிய மருள் நிகழ்ச்சியினை மேற்கோளாயெடுக்க வேண்டுமெனக் கரைந்தார். என்னே இவர்தந் தீவினை யிருந்தவாறு! இவரைப்போலவே, மற்றை மக்களை இழிந்தவராகக் கருதி, அவர் கூட்டத்திற் சென்று வந்த தமக்குத் தீட்டுண்டாயிற் றெனக் கருதிய நமிநந்தியடிகள் என்னும் பார்ப்பன அடியார்க்குச், சிவபிரான் அவர்கொண்ட அக் கருத்துப் பழுதாதல் காட்டி நல்லறிவு கொளுத்திய வரலாற்றினைப் பெரிய புராணத்தின்கட் பார்த்திருந்தனராயின், அம்மறுப்புரைகாரர் இவ்வாறெல்லாஞ் சாதிவெறி கொண்டு அலறார். அதுவும் பாராத அவர்தந் தீவினைக்கு யாம் இரங்குதலேயன்றி வேறு என்செய்வம்! 18. அப்பர் முதலான சிலரின் துறவு இனிப், பௌத்த சமண்மதங்கள் தமிழநாட்டிற் புகுந்து வைகிய பின்னர்த் தான், மனைவி மக்களைத் துறந்து போய் ஐயம் ஏற்றுண்டு பிழைக்கும் புறத்துறவு இந்நாட்டிலுள்ள சிலரால் மேற்கொள்ளப் படுவதாயிற்று என்றேம். மற்று, அம் மறுப்புரைகாரரோ, அப்பர் மாணிக்கவாசகர் பட்டினத்தார் கொண்ட துறவு, வேதத்தைத் சார்ந்த மிருதிநூல் வழியதே யன்றிப், பௌத்த சமண் வழியதன்று என்று ஏதொருசான்றுங் காட்டாது கூறினார். இருக்கு எசுர் முதலான வேதகாலத்துப் பழக்க வழக்கங்களும் அவ்வேதங்கட்குப் பன்னூறாண்டு பிற்பட்டு வந்த மிருதிநூற் கால பழக்க வழக்கங்களும் வேறு வேறாயிருத்தலை மறுப்புரைகாரர் சிறிதும் ஆராய்ந் துணர்ந்தவர் அல்லரென்பது, அவர் உரைக்கும் இப்போலி மறுப்புரையால் நன்கு புலனாகின்றது. இந்நூல் இன்னகாலத் தெழுந்தது, அக்காலத்து நிலை இன்னது, அக்கால இயல்புக்கும் அக் காலத்தில் உண்டான நூலியல்புக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை யின்னவையென்று உணரும் வரலாற்றுநூலுணர்ச்சி (historical knowledge) மறுப்புரைகாரர் சிறிதும் உடையரல் லாமையால், வேதத்தோடு இயைபில்லாத மிருதியை அதனோடு இயைபு படுத்தித் துணிபுரை கிளந்தார். அறியாமைக்கு உள்ள துணிபுதான் என்னே! இருக்குவேதத்தில் நுவலப்படும் முனிவரெல்லாரும் மனைவி மக்கள் முதலானாருடன் செல்வ வளத்தோடிருந்து இனிதுவாழும் மனைவாழ்க்கையினையே தாம் வழிபடு கடவுளர்பால் வேண்டக் கண்ட தல்லால், அவருள் ஒருவராயினும் அன்னாரைத் துறந்துறையும் வாழ்க்கையினை வேண்டக் காணேம். மற்றுப், பிற்காலத்தெழுந்த மிருதிநூல்களோ, துறவு மனைவி மக்களொடு கானகத்திருந்து மேற்கொள்ளப்படும் வானப்பிரத்தமும், அவரை அறந்துறந்து ஐயம் ஏற்றுண்டு திரியுஞ் சந்நியாசமும் என இருவகைப்படுமென்றுரைக்கின்றன. பிற கூறப்படுஞ் சந்நியாசம் வேதநூல்களிற் சொல்லப்பட்டிருந்தால், அதனை மறுப்புரைகாரர் எடுத்துக்காட்டுதலன்றோ செயல்வேண்டும்? அவ்வாறு காட்டுதற்கு அங்கு ஏதும் இடம் இன்மையின் அதனைவாளா கூறி யொழிந்தார். சான்றேதுங் காட்டாத இவரது போலி மறுப்புரை கொண்டே, மிருதிகாலத்துக்கு முன்னிருந்த முனிவரர்க்கு, மனைவி மக்களை அறத்துறந்து செல்லும் புறத்துறவு உடம்பாடாகாமை பெற்றாம். பௌத்த சமண்மதங்கள் தோன்றுதற்குமுன் இத்தகைய புறத்துற வினை எவரும் மேற்கொண்டில ரென்பது கருத்திற் பதிக்கற்பாற்று. வடமொழியில் மிகச் சிறந்த முனிவரரான யாக்கியவற்கியருங் காத்தியாயினி மைத்திரேயி என்னும் மனைவியார் இருவரை மணந்து, அவரோடொருங்கிருந்து துறவு நடாத்தினமை மறுப்புரைகாரர் அறியாமை இரங்கற் பாலதாகும். தமிழ்நாட்டின்கண்ணே தொல்லாசிரியரான தொல்காப்பியனாரும் மனைவி மக்களோ டிருந்து தவம் புரியந் துறவு வாழ்க்கையினையே விதந்து அருளிச்செய்தமையினையும் முன்னரே விளக்கிப் போந்தாம். இனி, விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு என்னுந் திருக்குறளைத் தமது போலிக்கொள்கைக்கு ஒரு துணையாக எடுத்துக்காட்டிய அம் மறுப்புரைகாரர், ஆசிரியர் திருவள்ளுவர் தம் மனைவியாரோடிருந்து தவமியற்றிய உண்மை நிகழ்ச்சியினை மறந்துவிட்ட தென்னையோ? காதலிற் சிறந்த இல்லாளைத் துறந்துறைதலே துறவு என்பது அவர்தங் கருத்தாயின், தாம் அறிவுறுத்திய அறவுரைக்குத் தாமே மாறாக நடப்பரா? ஆதலால், விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் என்று அவர்அருளிச் செய்த திருக்குறட் கருத்து, மறுப்புரைகாரர் தாம் வேண்டியவாறு ஏற்றிக்கூறிய அப் புன்பொருள் பயப்பதன்று. பின்னை என்னையோ அதன் கருத்தெனிற்; கூறுதும். அகலியை என்னுந் தம் மனைவியோடிருந்து தவம் புரிந்த கௌதம முனிவரைச் சுட்டி, ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி என்று அவரருளிச்செய்த திருக்குறளால் ஆசிரியர் கருத்து இன்னதென்பது நன்கு புலனாகா நிற்கும். தன் வழி நில்லாது, தாம் செல்லும் வழியே தன்னை ஈர்த்துச் சென்று பழிபாவங்களுட் படுப்பிக்கும் ஐம்புல அவாக்களே ஒருவனுக்குத் தீதுபயந்து அவன்றன் பிறவிகளைப் பெருக்குவதாகும். துள்ளியோடும் புள்ளிமான் ஒன்றைக் கண்டு அதன் அழகை வியந்து இன்புறுவது குற்றமாகாது; அதனழகை வியந்தின்புற்ற அவ்வளவில் அமையாது அதனைக் கொன்று அதன் தசையை வதக்கித் தின்னவேண்டுமென்றெழும் அவாவே தீதுடைத்தாம். இங்ஙனம் ஒரு வறியவன் தனக்கு ஒரு நாட் கிடைத்த நல்லுணவைச் சுவைத்துண்டு இன்புற்றிருத்தல் குற்றமாகாது; அந் நல்லுணவைப்போலவே எந்நாளும் இன்சுவை யுணவு பெறவேண்டுமெனப் பேரவாக்கொண்டு, அதற்கேற்ற நன்முயற்சியுமின்றித், திருட்டுத் தொழிலால் அதனைப் பெற முயல்வதே தீதுடைத்தாம். இங்ஙனமே, தன் நிலையினையும் பிறர் நிலையினையும் மறந்து, எல்லா இன்பத்திற்கும் மேலான பேரின்பத்தைத் தரவல்லவனான இறைவனையும் மறந்து, தன் உள்ளத்தான் வேட்கப்பட்ட பொருள் நுகர்ச்சியிலேயே ஒருவற்குக் கருத்து ஈடுபட்டு நிற்குமாயின், அஃது அவற்கும் பிறர்க்குந் தீது பயப்பதாகவே முடியும். அவ்வாறின்றித் தான் நுகரும் பொருள் நுகர்ச்சி யெல்லாந் தன்னையும் பிறரையும் இன்பத்தில் வளரச்செய்து, இறைவன் திருவடிப் பேரின்பத்தில் உய்க்கும் வழியேயாம் என்னும் உணர்ச்சிவலியுடையானுக்கு, ஐம்புல நுகர்ச்சி நன்மை பயப்பதேயன்றித் தீமை பயவாது. ஐம்புல நுகர்ச்சிகளும் அவை தமக்குரிய பொருள்களுந் தீமையே தருவனவாயின் அவற்றை இறைவன் நமக்குப் படைத்துக் கொடானன்றோ? உழவுதொழில் செய்யும் ஒருவன் தன் மகனுக்கு ஒர் அரிவாளைக் கொடுப்பது, அதனை அவன் நெற்றாள் அரிதற்குப் பயன்படுத்துவானென்னுங் கருத்துப் பற்றியேயன்றி, அதுகொண்டு அவன் மக்கள் பலரையுங் கடைசியிற் றன்னையும் வெட்டி வீழ்த்திவிட வேண்டுமென்னுங் கருத்துப்பற்றியன்றே. அதுபோலவே, ஐம்புல நுகர்ச்சிகளை இறைவன் நமக்குத் தந்ததும், அவற்றை நாம் நல்வழியில் துய்த்தல் வேண்டுமென்னும் கருத்துப்பற்றியே யன்றி, அவற்றைத் துய்த்தலாகாது, அல்லது அவற்றைத் தீயவழியிற் செலுத்துதல் வேண்டுமென்னுங் கருத்துப்பற்றியன்று. இவ்வுண்மையினையே தெய்வத் திருமூலரும், ஐந்தும் அடக்குஅடக் கென்பர் அறிவிலார் ஐந்தும் அடக்கும் அமரரும் அங்கில்லை ஐந்தும் அடக்கில் அசேதனமா மென்றிட்டு ஐந்தும் அடக்கா அறிவறிந் தேனே என்றருளிச் செய்தார். ஆகவே, அகலியையை மணந்து அவளோடு இன்பந் துய்த்தபடியாகவே தவவொழுக்கத்தில் உறைத்துநின்ற கௌதம முனிவரை ஐந்தவித்தான் என்று ஆசிரியர் திருவள்ளுவர் உயர்த்து மொழிந்தது, அம் முனிவர் ஐம்புல நுகர்ச்சி வழியே தன்னுள்ளத்தைச் செல்லவிடாது, தன் வழியே அவற்றின் நுகர்ச்சியை அமைத்துவைத்த ஆற்றல்பற்றியேயா மென்பதனை அம் மறுப்புரைகாரர் இனியேனுந் தெளிந்துகொள்ளக் கடவராக! இனித், திருநாவுக்கரசுகள் தமதிளமைக்காலத்திற் சமண் நூல்களைக் கற்றுஞ் சமண் முனிவர்களோடு பழகியும் அவர் கைக்கொண்ட துறவொழுக்கமே சிறந்ததெனக் கருதியன்றோ, சிவநேயத்திற் சிறந்த தம் தமக்கையார் திலகவதியாரையும் ஏனைத் தமது இல்லத் தொடர்பினையும் விட்டுச் சென்று, பாழ்ங்கொள்கை (நாத்திகம்) பேசுஞ் சமண்மதம் புகுந்து தம் வாழ்நாளிற் பெரும்பகுதியை வறிதாக்கினார்? இதனை, அரசுகளே தாம் அருளிச் செய்த ஈன்றாளுமாய் எனக் கெந்தையுமாய் என்னுந் திருப்பாதிரிப்புலியூர்த் திருப்பதிகத்தில், திருந்தா அமணர்தந் தீநெறிப் பட்டுத் திகைத்துமுத்தி தருந்தா ளிணைக்கே சரணம் புகுந்தேன் வரையெடுத்த பொருந்த அரக்கன் உடல்நெரித் தாய்பா திரிப்புலியூர் இருந்தாய் அடியேன் இனிப்பிற வாமல்வந் தேன்றுகொள்ளே என்னும் இறுதிச் செய்யுளிற் குறிப்பிட் டிருத்தல் காண்க. அரசுகள் தமது முதுமைக்காலத்தே மீண்டுஞ் சைவசமயம் புகுந்து சிவபிரான் திருவடிக்கு ஆளான பின்னர், இளமைக்காலத்தே தாம் துறவு புகுந்தது பிசகென்றும், சைவசமயச்சான்றோர் இறைவன் திருவுளப்பாங்கறிந்து வகுத்தபடியே மனைவியோடிருந்து இன்பந் துய்த்துக்கொண்டே தவவொழுக்கத்தில் நிற்றலே சிறந்த தென்றும் உணர்ந்தன்றோ, வென்றிலேன் புலன்களைந்தும் என்னும் பொதுத் திருப்பதிகத்தின்கண், விளைவறி விலாமை யாலே வேதனைக் குழியில் ஆழ்ந்து களைகணும் இல்லேன் எந்தாய், காமரங் கற்று மில்லேன், தளையவிழ் கோதை நல்லார் தங்களோடு இன்பம் எய்த இளைஞனும் அல்லேன் எந்தாய், என்செய்வான் தோன்றினேனே என்று அருளிச்செய்தார். இவ்வாறாக, அப்பர் முதலில் மேற்கொண்ட துறவு சமண்மதவழித்தாதல் தெள்ளிதிற் புலப்படுவதாகவும், அஃது அவ்வழித் தன்றென்று கரைந்த அம் மறுப்புரைகாரருரை பெரும் புளுகுரையாதல் தேர்ந்துகொள்க. இனி, மாணிக்கவாசகரோ அப்பரைப்போற் சமண் சமயமாதல் பௌத்த சமயமாதல் சிறந்ததெனக்கொண்டு அவ்விரண்டில் ஒன்றிற் றுறவு புகுந்தவரல்லர். அவர் தெய்வம் ஒன்று உண்டு எனத் துணிந்த காலத்தில் ஒன்றினொன்று மாறுபட்ட பல சமயக்கொள்கைகளால் உளளங்கலங்கி, ஒன்றிலுந் துணிவு பிறவாது நின்றார்! அப்போது சடுதியில் இறைவனே குருவடிவிற்போந்து அவரைத் தன்வயப்படுத்திக்கொண்டான். இஃது, அவரே அருளிச் செய்த போற்றித் திருவகலில், தெய்வம் என்பதோர் சித்தமுண் டாகி முனிவி லாததோர் பொருது கருதலும் ஆறுகோடி மாயா சத்திகள் வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின; ஆத்த மானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்; சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள் பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும், விரத மேபரமாகவே தியருஞ் சரத மாகவே சாத்திரங் காட்டினர்; சமய வாதிகள் தத்தம் மதங்களில் அமைவ தாக அரற்றி மலைந்தனர்; மிண்டிய மாயா வாதம் என்னுஞ் சண்ட மாருதஞ் சுழித்தடித்து ஆஅர்ந்து உலோகா யாதெனனும் ணட்டிறற் பாம்பின் கலாபே தத்த கடுவிடம் எய்தி அதிற்பெரு மாயை எனைப்பல சூழவும், மற்றோர் தெய்வங் கனவிலும் நினையாது அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபர னாகி யருளிய பெருமையைச் சிறுமையென் றிகழாதே எனக் கூறுமாற்றால் தெற்றென விளங்கா நிற்கும். இறைவனால் அங்ஙனம் ஆட்கொள்ளப் பெற்ற பின்னுஞ் சிவபெருமான் திருவடிக்கண் மெய்யன்புடையரான அவர் தம் மனைவியாரும் புதல்வியும் அவர் தம்முடனேயே யிருக்கப் பெற்றார் என்னும் உண்மையினை எமது மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலில் நக்குவிளக்கி யிருக்கின்றேம். எனவே மாணிக்கவாசகர் தம் அருமை மனைவியாரையும் மகளாரையும் விட்டுத் துறவு புகுந்தவரல்ல ரென்பது நன்கு பெறப்படுதலால், அம் மறுப்புரைகாரர் அவரை மிருதிவழித்தான துறவு புகுந்தவர் என்றுரைத்தது பொருந்தாப் பொய்யுரையாதல் கண்டுகொள்க. இனிப், பட்டினத்தடிகள் புகுந்த துறவு பண்டைச் சைவசமயச் சான்றோர்க்கு உடம்பாடாகாததொன் றென்பதும், அதனை அவரே பின்னருணர்ந்து அகத்துறவினையே மேல தாய்க் கூறினரென்பதும் முன்னரே விளக்கிப் போந்தாம். இவ்வளவில் அம் மறுப்புரைகாரர் நிகழ்த்திய தடைகள் அவ்வளவுக்கும் விடைகள் தரப்பட்டன. இது கிடக்க. 19. பின்னுரை மேலெழுதிய எம்முடைய விடைகளை, அம் மறுப்புரை காரர் நிகழ்த்திய தடைகளோடு உடன்வைத்து நடுநின்று காணவல்ல மெய்யறிவினார்க்கு, எமதுரையின் மெய்ம்மையும் அவருரையின் பொய்ம்மையுந் தாமே புலனாம். அவர் தாமும் நடுவுநின்று நோக்குவராயின் எமதுரையே மெய்யாதல் காண்பர். ஆனால், தமதுரைப் பிழையைத் தாம் ஒப்புக் கொண்டால் உலகந் தம்மைப் பாராட்டாதெனக் கருதிச், சென்ற ஐப்பசி 19 இலும் 29 இலும் வெளிவந்த சிவநேசன் இதழில் எமதுரையை வெற்றுரை யெனப் பழித்து உள்ளீடழிந்த பதர்மொழிகளையே நிறைத்திருக்கின்றார். அவர் நிகழ்த்திய தடைகளெல்லாவற்றிற்கும் விடைகள் எமது ஞானசாகர இதழில் யாம் முறையாக எழுதி வருதலையும் பாராது, சித்தாந்த இதழிற் பலரும் எழுதுங் கட்டுரை கட்கிடையே முழுதும் வெளியிடுவியாமல் ஒரு சிறிதே வெளியிடுவித்த எமது விடையுரையின் முதற் பகுதியை மட்டும் பார்த்துவிட்டுத், தாம் நிகழ்த்திய தடைகள் எல்லாவற்றிற்கும் யாம் விடையெழுதிற்றிலே மென ஆராயாது கூறி மகிழ்ந்தார். இனி, அவர் மீண்டுங் கூறிய தடைகட்கு விடைகளைச் சுருக்கிக்கூறி அவ்வளவில் இதனை முடிப்பாம். காதலன்பு கொண்டார்க்கு அக் காதலன்பின் வழியே மனஞ் செல்லுமென்ற எமதுரையை மறுப்பான் புகுந்த அம்மறுப்புரைகாரர், விரும்பத்தக்க தொன்றனை மனமானது முதலிற்பற்றிய பின்னரேதான் காதல் நிகழும், அதன்பிற் காதல் சென்ற வழியே மனஞ் செல்லுமென ஒன்றனையொன்று பற்றுதல் என்னுங் குற்றம் (அந்நோய்யாசிரயதோஷம்) பட மொழிந்தார்; என்னை? மனத்தின்பிற் காதலுங், காதலின் பின் மனமுஞ் செல்லுமென்றல் அக்குற்றமுடையதாகலி னென்பது. மனம் முன்னரொரு பொருளைப் பற்றினாலன்றி உணர்வு உண்டாகாமை யுண்மையேயாகலின், மற்று அக்குற்றம் படாமை யுரைக்குமாறு யாங்ஙனமெனிற், காட்டுதும், மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம்பொறிகளின் வாயிலானன்றி மனம் புறத்தே ஒரு பொருளைப் பற்றாது; ஆகவே, அப் பொறி யுணர்வுகளைப்பற்றி நின்று மனம் ஒரு பொருளைப் பற்றுகின்றுழி, அஃது அப் பொறியுணர்வி னளவாயே நிற்குமல்லது, அவற்றின் வேறாய் நின்று தான்கண்ட பொருட்குணங்களை ஆராயாது; இது குறித்தே, உற்றறி தலாகிய ஓரறிவுமுதல், சுவை ஒளி ஓசை நாற்றம் ஈறாக ஐந்தறிவு உடைய சிற்றுயிர்கட்கு ஆசிரியர் தொல்காப்பியனார் மனவுணர்வு கூறிற்றிலர். ஏனை மக்களாவார், அவ் வைந்தறிவுகளோடு இஃது இதனை ஒப்பது, இஃது இதனின் வேறாவது, இது நல்லது, இது தீயது என ஆராய்ந்தறிவு மறிவும் உடன் உடையராகலின் அவரைச் சுட்டி மக்கடாமே யாறறி வுயிரே என்று அவர் அருளிச்செய்தார். அற்றேல் ஐம்பொறியை ஆண்டு அங்கு அரசாய் உளம்நிற்ப என்று ஆசிரியர் மெய்கண்டதேவர் கூறியது, ஆசிரியர் தொல்காப்பியனா ருரையொடு மாறுகொள்ளாதோ வெனிற், கொள்ளாது; பொறியுணர்வின் வேறாய் நில்லாது, பொறியுணர் விளைவாயே நிற்பது மனத்தின் பொதுவியல்பு ஆகும்; மற்றுப், பொறிகளின் வாயிலாய் அறிந்த பொருட்பண்புகளைத் தான் தனிநின்று ஆராயுமாயின் அது தான் மனத்திற்குச் சிறப்பியல்பு ஆகும்; மக்களல்லாத சிற்றுயிர்களில் மனவுணர்வு தனித்துநில்லாது பொறிகளினளவாயே நிற்றலின் அவை மனவுணர்வு இல்லாதனவென்று கொள்ளப்பட்டன; மற்று, மக்களில் அது பொறியுணர்வுகளின் வேறாயும் நின்று ஆராய்ந்தறியுஞ் சிறப்பியல்பும் உடைமைபற்றி, அவர் மனவுணர்வும் உடையரெனப்பட்டார். ஆகவே, சிறப்பியல்பு காட்டாமற் பொறியளவாய் நிற்கும் மனவுணர்வைச் சிற்றுயிர்கட்குத் தொல்காப்பியனார் கூறாமை பெரிதும் பொருத்தமாவதேயாம். என்றாலும், மனத்தின் சேர்க்கையின்றிப் பொறியுணர்வுகள் நிகழழமையின், மக்கட்கும் ஏனைச் சிற்றுயிர்கட்கும் மனவுணர்வு உண்டென்பது தேற்றமேயாம். இவ்வாறு மனத்தினியல்பைக் காணவல்லார்க்குத், தொல்காப்பியனாருரையும் மெய் கண்ட தேவருரையுந் தம்முள் முரணாமை எளிதின் விளங்கும். அது நிற்க. பொறியுணர்வுகளோடொன்றாய் நிற்கும் மனத்தின் வழிச் சென்று கண்ட கண்ட பொருள்களை யெல்லாம் விழையும் இயற்கையதே காமவிருப்பம்; அங்ஙனம் கண்டவற்றில்லாம் அவாச் செல்லாது மனத்தின் பொது வியல்பையடக்கி, மிகச் சிறந்ததொரு பொருளிடத்தேமட்டும் நினைவு அழுந்தி அன்பு மீதூரப்பெறுவதே காதல்விருப்பமாகும். எனவே, புலனுணர்வு களின்பாற் பொதுமையின் நிற்கும் மனத்தின் வழிச்செல்வது உயிரின் காமவிருப்பமேயாமென்பதும், அங்ஙனம் வரைதுறையின்றி ஓடற்பாலதாகிய உயிரின் விருப்பத்தைத் தடைசெய்து விழுமியதொரு பொருளினிடத்தே மட்டும் உறைத்து நிற்குமாறு செய்வதே காதல் விருப்பமாமென்பதும் இனிது பெறப்படுதலிற், காதல் மனத்தின்வழியதன்றென்னும் எமதுரையே பொருத்தமாதல் கண்டுகொள்க. காதற்றோற்றததிற்குப் பொறியுணர்வாய்நிற்கும் மனம் வாயிலாதல் கொண்டு, காதலை அம்மனத்தின்வயமாய் அடக்குதலினும் அறிவின்மை யாவது பிறிதில்லை; விறகிலிருந்து தோன்றுந் தீ அவ் விறகின் வலிக்கு அடங்கியதென்பா ருரையோடு ஒன்றாகவைத்து அம் மறுப்புரைகாரருரை நகையாடி விடுக்கற்பாலதாமென்றொழிக. இனிப், பண்டைக்காலத்துத் தண்டமிழ்ச்சான்றோ ரெல்லாரும் இன்பத்துக்கே முதன்மை தந்தியற்றிய பொய்யாச் செந்தமிழ்ச் செய்யுள் வழக்கின் மிகுதியை யாம் எடுத்துக் காட்டியிருக்கப், பொய்ந்நூல்களாகிய புராணங்களின் விரிவையும் மெய்ந்நூலாகிய சிவஞானபோதத்தின் சுருக்கத்தையும் எமதுரைக்கு உவமையாக எடுத்துக்காட்டி எம்மை இகழ்கின்றார். பண்டைச் செந்தமிழ்நூல்கள் வட மொழிப் புராணங்களைப் போற் பொய்ந்நூல்களாயிருப்பினன்றோ, அவற்றை அவர் அவற்றிற்கு உவமையாக எடுத்துக்காட்டலாம். பொய்ப் பொருள் ஒன்றுமே விரவாத முழுமணித் தொகுதியாகிய பண்டைச் செந்தமிழ் இலக்கியங்களைப், புராணப் பொய்க் குப்பைகளோடு ஒப்புமைப்படுத்திய அம்மறுப்புரை காரரின் பொய்யறிவின் பெற்றிமைக்கு அறிவுடையார் இரங்குதலே செயற்பாலார். பொய்யறிவினார்க்கு மெய்யும் பொய்யாகக் காணப்படுமென்பதற்கு அம் மறுப்புரைகாரர் ஓரிலக்கியமாதல் காண்மின் இனித், தொல்காப்பியநூல் தனக்கு முற்பட்ட இலக்கிய நூல்களின் அமைதியைப் பார்த்துச் செய்யப்பட்ட தொரு பழைய நூலாகலின், தொல்காப்பியத்தில் இன்பமும் பொருளும் அறனும் என்று வைத்துச் சொல்லப்பட்ட முறை, ஆசிரியர் தொல்காப்பியனார்க்கும் முற்பட்ட தனிச் செந்தமிழ்ச்சான்றோர் கொண்ட முறையேயாகும். ஆகவே, தொல்காப்பி யனார் கொண்ட முறையே, செந்தமிழச்சான்றோர் வழிபேணும் எம்மனோர் பேணுதற்குரித்தாவது. தொல்காப்பியனார்க்குப் பின்வந்த நூல்களில் ஆரியமொழிக் கலப்பும் பௌத்த சமண்கோட் கலப்புங் காணப்படுதலின், அவை யெல்லாந் தொல்காப்பியம் போல் எமக்குத் தலை சிறந்த மேற்கோள்கள் ஆகா; தொல்காப்பியத்தொடு மாறுகொளா இடங்களில் மட்டுமே ஏனைப் பின்நூல்களில் வந்தவை எம்மாற் றழுவற்பாலன; மற்றுத் தொல்காப்பியத்தொடு மாறுபடு மிடங்களில்லாந், தொல்காப்பியமே தழுவற்பாலதன்றி ஏனைய அல்லவென்று துணிக; என்னை? தொல் காப்பியத்தோடு எதிர்நிற்கவல்லது ஏதுமேயில்லையாகலின். தெய்வத்தி ருவள்ளுவருந் தொல்காப்பியத்தொடு மாறுபடாமைப் பொருட்டன்றோ, தமக்கும் பிறர்க்கும் இன்பத்தைத் தரும் இல்லறத்தை முன்வைத்து, அவ்வில்லறத்தோடொத்த துறவறத்தை அதன்பின் வைத்ததூஉம், நூலிறுதியிலுங் காதலின்பத்தையே மிகுத்துக்கூறியதூஉம் என்க. இன்பம் பொருள் அறம் என்னும் முறையைத் தொல்காப்பியத்தினின்றும் யாம் எடுத்துக் காட்டியிருக்க, ஒரு நூலிலிருந்தாயினும் யாம் அம் முறையை எடுத்துக்காட்டவில்லையென்ற அம்மறுப்புரைகாரர் பொய்ந்நாவினை அறக்கடவுளே ஒறுக்கற்பாலதென்க. இனி, அம்மறுப்புரைகாரர் அறத்தை முன்வைத்துச் சொல்லுந் தேவாரதிருவாசகச் செந்தமிழ்மாமறைச் செய்யுட்கள் சிலவற்றை எடுத்துக்காட்டி, அவ்வருள் நூல்களில் அறமே முன்வைத்துரைக்கப் பட்டமையின் அதுவே முதன்மை யுடைத்தென்றார். அற்றேல் தேவாரதிருவாசகங்கள் தோற்றுதற்குப் பல்லாயிர ஆண்டுகட்குமுன்னே தோன்றி அறுதியில் தமிழின் உறுதிப்பொருட் பரப்பெல்லாம் ஒருங்கு கண்ட தொல்காப்பியம் அருள் நூலன்றோ? தொல் காப்பியத்தில் இன்பமே முதல்வைத்து மொழியப்பட்டிருத்த லானும், மக்கள் இம்மையிற் றுய்ப்பதும், மறுமை யிற் சிவபிரான்திருவருளிற் கலந்து துய்ப்பதும் இன்பமே யன்றி அறம் அன்று ஆகலானும், அறம் எனப்படுவதும் ஏனையுயிர்க்குந் தன்னுயிர்க்கும் இன்பத்தைச் செய்யுஞ் செயலேயாகலானும், அவ்வாற்றால் அறமும் பொருளுங் கூட இன்பத்துள் அடங்குதலானும், தொல்லாசிரியரான தொல்காப்பியனார் இன்பத்துக்கு முதன்மை தந்து அதனை முதற்கண் நிறுத்தினமையே சாலப் பொருந்துவதாமென்க. பௌத்த சமண் கொள்கைகள் மிகப்பரவி, அவ்வாற்றால் அறத்தை முன்வைத்துரைக்கு முறை மிக்குவழங்கிய காலங்களில் திருவாசக தேவாரங்கள் தோன்றினவாகலின், அவற்றுள்ளும் அம்முறை புகலாயிற்றென் றறிந்து கொள்க. அறஞ்செய்தலாற் பிறர்க்குந் தமக்கும் இன்பம் விளைதல அறியவல்லவர் மக்களேயன்றி ஏனைச்சிற்றுயிர்கள் அல்ல. சிற்றுயிர்களெல்லாந் தம்மளவில் இன்பம் நுகர்வன; மக்களோ பிறர்க்கும் நன்றாற்றிப் பெரிதும் இன்பம் எய்துவர். இங்ஙனம் எய்தும் இன்பம் மக்கட்கே சிறந்தமையின், அதுவே முதன்மையுடைத்தென்பது இதுபற்றியன்றே தெய்வத் திருவள்ளுவரும் அறத்தான் வருதே இன்பம் என்றருளிச்செய்தார். இப்பெற்றித்தாகிய இன்பத்தை விட்டு, அறம் என்பது தனிநில்லாமையின், அஃது இன்பத்திற்குப் பின்னாவதேயன்றி முன்னாம் முதன்மையுடையத்தன்றென உணர்ந்து கொள்க. இனி, பௌத்த சமண் கோட்பாடுகள் இங்கே மிகவும் பரவி, அறம் அல்லாதவைகள் அறம் எனக் கொள்ளப்பட்டமையின்; இன்பத்தின்வழித்தாகிய அறம் இன்னதென வுணர்த்துதற்குத் திருவள்ளுவர் அறத்தை முன்னெடுத்து, அச்சொல்லால் தனக்கும் பிறர்க்கும் இன்பத்தை விளைத்தற் கேதுவாகிய இல்லறத்தை முதற்கண் நிறுத்தி வலியுறுத்தார். மற்று, அம்மறுப்புரைகாரரோ, தொல்காப்பியனார் காலத்து மக்கட்கு அறவுணர்ச்சியின்றி, இன்பவுணர்ச்சியே மிக்கிருந் தமையின் அவர் அதனை முதலிற் கூறினாரென்று ஏன் கூறுதலாகாதென்று வினவுகின்றார். சான்றில்லாமல் ஒன்றைத் தானாகவே படைத்து மொழிதல், பொய்கூறுவார்க்கன்றி மெய்ம்மையுடையார்க்கு ஏலாது. மேலும், இன்பவுணர்ச்சியே தலைக்கொண்ட தொல்காப்பியார் காலத்து நன்மக்கட்கு, இன்பத்தைச் செய்யும் அறவொழுக்கமே உளதாகுமன்றித் துன்பத்தைச் செய்யும் மறவொழுக்கம் உளதாகாதென்று அம்மறுப்புரைகாரர் அறியக் கடவராக! இனித், திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் வேதத் தொடர்புடையதாகுமென்ற அம்மறுப்புரைகாரர் எந்த வேதத்தோடு தொடர்புடைய தென்பதனை விளக்கினாரில்லை. இப்போது வேதம் என வழங்கும் இருக்கு எசுர் சாமம் அதர்வம் என்பவற்றோரு தொடர்புடையதென்பது அவர் கருத்தாயின், அவ்வாரிய நூல்களிலுள்ள பொருள்களையுந் திருக்குறளி லுள்ள பொருள்களையும் எடுத்துக்காட்டி அவ்விரண்டிற்கும் உள்ள பொருளொற்றுமையினை அவர் விளக்கியிருத்தல் வேண்டும்; அவ்வாறவர் செய்திலாமையின் அவர்கூற்று உள்ளீடில்லா வெறும்பதரேயாம். திருக்குறள், இருக்கு முதலான ஆரிய நூற்றொடர்பு உடையதன் றென்பதனை வேளாளர் நாகரிகம் முதலான எம்முடைய நூல்களில் நன்கு விளக்கியிருக்கின்றேம்; ஆண்டதனைக் காண்க. இனி, ஆரியத்திற்குக் குறைசொல்லலும், வேதாகமக்கருத்துக்கு வேறான தனித்த ஒரு நூலுண்டென்பதுந் தீவினையாளர்செயல் என்று கூறி மறுப்புரைகாரர் இகழ்ச்சியுரைகளை வாரியிறைத்துத், தமது தோல்வியைப் பிறிதொன்று சொல்லி மறைக்கின்றார். இவர் வேதாகமம் எனக் கொண்டவை யாவை? இருக்கு எசுர் சாமம் அதர்வம் என்றுங், காமிகங் காரணம் யோகஜம் சிந்தியம் என்றும் வழங்கும் வடமொழி நூல்கள் தாமா? இந்நூல்களை வேதம் என்றும் ஆகமம் என்றும் வழங்கியவர்கள் யாவர்? அவர் காலம் யாது? அவ்வாரிய நூல்களிற் சொல்லப்பட்ட பொருள்கள் யாவை? அவைகளைத் தழுவித் தமிழில் நூல்கள் இயற்றினார் யார்? அவர்களிருந்த காலம் என்னை? நான்கு வேதங்களும் ஒரே காலத்தனவா? வெவ்வேறு காலத்தனவா? இருபத்தொட்டாகமங்களும் அங்ஙனமே ஒரு காலத்தனவா? வெவ்வேறு காலத்தனவா அருணந்தி சிவாசாரியார் வேதநூல் என்றுஞ் சைவ நூலென்றுங் குறிப்பிட்டவை மேற்சொன்ன ஆரியநூல்கள் தாம் என்பதற்குச் சான்றென்னை? அருணந்தியார் காலம் யாது? மறுப்புரைகாரர் கொண்ட ஆகமங்கள் அருணந்தியார் காலத்திற்கு முன்னிருந்தவையென்பதற்குச் சான்றென்னை? இருக்கு முதலிய வடநூல்களிற் பிரகிருதிக்கு மேற்பட்ட பன்னிரண்டு தத்துவங்கள் கூறப்பட்டிருக்கின்றனவா? திருநீறும் உருத்திராக்கமுஞ் சிவபிரான் திருக்கோயில்களும் இருக்கு எசுர் முதலிய நூல்களிற் சொல்லப் பட்டிருக்கின்றனவா? என்றற்றொடக்கத்து வினாக்களுக்கு விடையாக ஆராய்ந்து நிறுவற்பாலனவற்றை மெய்ச்சான்றுகளுடன் நிறுவினாலன்றி, அம்மறுப்புரைகாரர் பொறாமையுஞ் செருக்குஞ் சினமுங்கொண்டு எமக்கு மாறாய் வடநூல் கட்கு ஏற்றஞ் சொல்லும் உரை, சிறுமகார் காலம் விளைத்து ஏசும் உரையாகவே ஒதுக்கற்பாலதென்க. இருக்கு முதலான ஆரிய நூல்களிற் கொலை குடி சூது வரையிறந்தகாமம் பொய் முதலான கொடுந்தீயொழுக்க உரைகளே நிரம்பியிருத்தலையுந், திருக்குறள் முதலான தெய்வச்செந்தமிழ் நூல்களில் அவற்றை மறுத்த நல்லொழுக்க அறிவுரைகளே நிரம்பியிருத்தலையும் அம்மறுப்புரைகாரர்ஆராய்ந்து கண்டனராயின் இங்ஙனமெல்லாம் எம்மேற் சினங்கொண்டு கூவார். அவ்விருவகை நூல்கட்கு முள்ள வேறுபாடுகளை அந்நூல்களிற் கண்டறிய மட்டாத அவர், மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் எமது நூலிலாயினுங் கண்டறிந்து தெளியக்கடவராக! மேற்சொன்ன ஆரியநூல் களிலுள்ள குறைகளை எடுத்துக்காட்டுதலுந், தமிழ்நூல்களிலுள்ள நலங்களை எடுத்து விரித்தலுங் குற்றமாகுமா? களிம்பேறிய செம்பைச் செம்பென்றுங், களிம்பில்லாச் சுடர்விரி பசும் பொன்னைப் பொன்னென்றுங் கூறுதல் குற்றமாகுமா? செங்கல்லைச் செங்கலென்றுஞ், செஞ்சுடர் எறிக்குஞ் செம்மணியைச் செம்மணியென்றுங் கூறுதல் குறையாகுமா? உயிரை மாய்க்கும் பாம்பின் நஞ்சை நஞ்சென்றும், உயிரைவளர்க்குந் தீம்பாலமிழ்தை அமிழ்தென்றும் மொழிதல் பழிப்பாகுமா? இவைதம்மையெல்லாம் ஆராய்ந்து பாராது, தீய நஞ்சையுந் தீம்பாலையும் ஒன்றாகப் பாராட்டல் வேண்டு மெனபாரோடொத்துத், தீதுநிறைந்த ஆரிய நூல்களையும், நலன்நிறைந்த தமிழ்நூல்களையும் ஒருங்கு பாராட்டல் வேண்டுமென்னும் அம்மறுப்புரைகாரர், தாம் வேலைபார்க்கும் இடத்தில் தாம் பெறும் வெள்ளிக்காசுகளுக்கு மாறாக, ஓட்டுச்சல்லிகளைப் பெற்று மகிழ்ந்திருப்பரா? பகுத்தறிவில்லாத இவருரை சிறுமகாரானும் எள்ளி நகையாடற் பாலதாமென்றுணர்க. தீதுநிறைந்த ஆரியநூல்களின் குறைகளைத்தாம் எடுத்துக்காட்டினமேயன்றி, நலன் நிறைந்த பன்னிரண்டு பழைய ஆரிய உபநிடத மறைகளை அவ்வாறு செய்தனமா? அவ்வுபநிடதங்களை யாம் பாராட்டிப் பேசியிருத்தலை இவர்அறியாராயின், அவ்வறியாமைக்கும் யாம் என்செய்வேம் என்க. இனிக், காதலின்பத்தின் வழியானன்றி இல்லறம் இனிது நடவாமை, காதன் மடவாளுங் காதலனும் மாறின்றித் தீதில் ஒருகருமஞ் செய்பவே என்னும் ஆன்றோர் திருமொழியால் நன்கு விளங்கா நிற்கவுந், திருவள்ளுவர் இல்லறவியலிற் காதலின்பங் கூறிற்றிலர் என்று மறித்தும் மறித்தும் அரற்றுகின்றார் அம்மறுப்புரை காரர்; தெய்வந் தொழா அள் கொழுநற் றொழுதெழுவா ளாகிய மனைவிக்குக் காதலன்பு வாய்ப்பினன்றி, அவள் அவனை ஒருபொருட்டாக வையாளென்பதை அறியமாட்டாத அவர்க்கு அறிவுதெருட்டும் வாயிலில்லை யென்றுவிடுக்க. தருக்க முறையும் ஆராய்ச்சிமுறையும் நன்கறியமாட்டாத அம்மறுப்புரை காரர் நிகழ்த்திய தடைகள் அவ்வளவும் பிழைபாடுடையனவென்பது, தமிழ் ஆரியம் ஆங்கிலம் என்னும் மொழிநூல்களில் உண்மை யாராய்ச்சி செய்தார்க்கு வெள்ளிடை மலைபோல் விளங்குமாதலின், மறுப்புரைகாரர் கண்டறிந்த தோல்வித் தானங்கள் அத்தனையும் அவர்க்கே உரிமையுடையன வென்பது பொள்ளெனப் புலனாம். அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும் மிகைமக்க ளான்மதிக்கற் பால - நயமுணராக் கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும் வையார் வடித்தநூ லார் பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் - முற்றும் - மறைமலையடிகளார் நாட்குறிப்புகள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1968ல் பதிப்பித்த நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்படுகிறது. மறைமலையடிகளார் நாட்குறிப்புகள் சான்றாகச் சிலவும் அடிகள் உள்ளகமும் 5.1.1898 சித்தியாரின் ஆறாம் சூத்திரம் மனப்பாடம் செய்தேன். 7.1.1898 பகவத் கீதையைத் தமிழ்ப் பாடல் வடிவில் மொழி பெயர்க்கத் தொடங்கினேன். 12.1.1898 பொங்கல் விழாவைச் சிறப்புக் கொண்டாடினேன். 23.2.1898 குலாம் காதிறு நாவலரின் சகோதரர்க்குச் சிலப்பதிகாரப் பாடம் நடத்தினேன். குறிப்பு (குலாம் காதிறு நாவலர் மதுரை நான்காம் தமிழ்ச் சங்க மான்மியம் இயற்றியவர்) 4.3.1898 இன்று நல்லநாள் இல்லை ஆதலால் கிறித்தவக் கல்லூரிப் பொறுப்பு ஏற்கவில்லை. 24.4.1894 தமிழ்ச் சைவ சித்தாந்த சபை தொடங்குவபது குறித்துக் கலந்து பேசினோம். குறிப்பு (கலந்து பேசியவர்கள்: சூரிய நாராயண சாத்திரியார், அனவரத விநாயகர், பாலசுந்தரர்) 7.1.1899 குர் ஆனில் கூறப்பட்டிருக்கும் இசுலாமியமதக் கருத்துகளை இந்துத்தானி முன்சி வாயிலாக அறிந்து கொண்டேன். 13.1.1899 கி.பி. 986 இல் வைணவப் பெரியார் இராமாநுச ஆச்சாரியார் பிறந்தார். 3.3.1900 இராம கிருஷ்ணர் வரலாற்று நூலை இன்று முழுவதும் படித்தேன். 30.8.1900 பேராசிரியர் மாக்சு மூலரின் ஊடிஅயீயசயவஎந யீடைடிபல படித்தேன். 3.1.2.1900 வேதாக மோக்த சைவ சித்தாந்த சமையைத் தொடங்கு வதற்குரிய அறிக்கையைத் தயாரித்தேன். 25.3.1901 உபநிடதங்கள் வாடகை நூலகத்திருந்து பெற்றேன். 22.12.1901 விவேகானந்தரின் பக்தியோகம் கர்ம யோகம் ஆத்மா ஆகிய நூல்களை வாங்கினேன். 3.2.1903 சிவனடியார் கூட்டச் சைவப் பிரசாரகரமாக இருக்க இணங்கினேன். 24.6.1903 சைவ சமயமே சமயம் என்று உரையாற்றினேன். 5.5.1905 பாலகங்காதர திலகரின் வேதம் பற்றி நூலைப் படிக்கத் தொடங்கினேன். 13.5.1905 விவேகானந்தரின் ஞானயோகம் வாங்கிப் பயின்றேன். நுண்ணியவையாகவும் அருமையாகவும் இருந்தன. 2.12.1905 ஈசோப நிடதத்திற்குத் தமிழ் விளக்கவுரை எழுதி முடித்தேன். 15.4.1906 இவ்வாண்டில் நான் செய்த அருஞ் செயல், சைவ சித்தாந்த மாநாட்டைக் கூட்டியதே யாம். 22.12.1906 பிராணாயாமம் பற்றிய உரையை எழுதினேன். 27.1.1907 தவத்திரு. இராசானந்த சுவாமிகள் எனக்கு நிட்டை அருளினார். 27.11.1907 சிவஞான போதத்திற்கு விரிவுரை எழுதத் தத்துவ நூல்கள் பல வாங்கி வருகிறேன். 10.8.1909 ஈசனும் உமையுமே கடவுள் என்ற கருத்தில் நம்பிக்கை இழந்து விட்டேன். கடவுளிடம் வேண்டுவன் மூலம் மாற்றப்பட முடியாத நிலைபேறுடைய விதி பேரண்டத்தில் உள்ளது. மேன்மை பெற்ற ஆன்மாக்களான கடவுளரால் மனிதர்க்கு ஏதேனும் செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அனைத்து நம் முயற்சியையே சார்ந்துளது. 14.1.1910 வேதாந்த சூத்திரங்களுக்குரிய நீல கண்ட பாடியத்தைக் கற்கத் தொடங்கினேன். மொழி பெயர்ப்பாளர் செந்திநாத அய்யர்க்குத் தமிழ்ச் சைவர் கடப்பாடு உடையர். 6.8.1910 விவேகானந்தரின் கர்ம யோகம் என்னும் அருமையான நூலைப்படித்தேன். இரண்டொரு கருத்துகளைத் தவிர விவேகானந்தரின் பொழிவுகள் நெஞ்சை உருக்கும் தன்மையவாய்ச் சைவ சித்தாந்தக் கருத்துகளுடன் ஒத்துள்ளன. 31.1.1911 மார்ச்சு 31 உடன் பணிக்காலம் முடியும் என்ற செய்தி துறவறம் பெறலாம் என்ற எண்ண முடையவனாக இருப்பினும் சிறிது கலக்கத்தைத் தந்தது. 24.2.1911 சமரச சன்மார்க்க நிலையம் ஏற்படுத்தினேன். 25.6.1911 திருக்கழுக் குன்றம் பூசாரிகள் சொல்வது போல் கழுகுகள் காசியில் இருந்து வரவில்லை. அருகில் இருக்கும் குன்றுகளில் இருந்தே வருகின்றன. அவை பழக்கப் படுத்தப்பட்டவை என்று எண்ணுகிறேன். 27.8.1911 துறவிக்குரிய துவராடை புனைந்தேன். 2.2.21912 இராமலிங்க அடிகள் வடலூர் சபையில் சன்மார்க்கம் பற்றிப் பேசினேன். அடிகள் ஏற்படுத்திய முறைகளை மீறி சடங்குகளை வேண்டுமென்றே சில வைதிகர்கள் தந்நலத்துக்காக நுழைத்தனர் என்று கடிந்து பேசினேன். 26.3.1912 விவேக பாநுவில் என்னை மறைமுகமாகக் கண்டித்து எழுதிய ஒருவருக்கு மறுமொழியாகச் சாதி வேறுபாடு களைச் சாடிக் கட்டுரை எழுதி வருகிறேன். சாதி முறையை அழித்து மனிதரிடைய சமன்மை கொண்டுவர வேண்டும் என்பதே என் விழைவு என் எளிய முயற்சிகளுக்கு ஈசன் அருளட்டும். 3.4.1912 போலிச் சைவரும் சாதி வேறுபாடும் என்னும் கட்டுரை எழுதி முடித்தேன். 24.1.1913 மேட்டுக் குப்பம் சென்றேன். இராமலிங்க அடிகள் முன்னாளில் அமர்ந்த புனித அரங்குக்குச் சென்றதும் உளம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகிற்று. என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். 16.4.1913 கல்கத்தாவில் சாங்கியமும் சித்தாந்தமும் என்னும் பொருள்பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றினேன். 29.3.1914 வடமொழியில் உபநிடதங்களைக் கற்கத் தொடங்கினேன். இசாவசியத்தைத் தமிழில் மொழி பெயர்க்கத் தொடங்கினேன். 13.9.1917 திராவிடன் இதழின் நேற்றைய பதிப்பில் சிறுதேவைதைகட்கு உயிர்ப்பலியிடலாமா என்னும் என் கட்டுரை வெளிவந்தது. 3.4.1918 வெளிவந்தது (ஐரோப்பியப் போர்ப் பேரழிவுத் தீவிரம் நோக்க) கிறித்துவின் சமயம் முழுத் தோல்வி அடைந்துள்ளது. 14.12.1921 யாழ்ப்பாணத்தில் கைம்பெண்களுக்கு எளிதில் திருமணம் நடக்கிறது. அவர்கள் திருமண முறிவு பெற்று மறுமணம் செய்து கொள்ளலாம். இது ஒரு நல்லமுறை. பெண்கள் விடுதலையாய் உள்ளனர். 27.4.1926 கல்வியும் சமயப்பற்றும் தூய்மையும் உடைய பஞ்சம நண்பர் சிலர் என்னைக் காண வந்தனர். இரவு 8.30 வரை பேசிக் கொண்டிருந்தோம். 25.7.1926 200 சம்பளம் என்று பேரகராதிக் குழுவுக்கு அழைக்க இறையடிச் சேவையை விட்டு மனிதர்க்குப் பணிபுரிதல் இயலாது என்று மறுத்தேன். 10.8.1926 தமிழ்ப்பல்கலைக் கழகம் நிறுவக் கருதிய அக்குழுச் செயலர்க்கு, அவ்வாறு நிறுவுவதன் தேவை இன்மையை வலியுறுத்தி எழுதினேன். 8.12.1926 திராவிட ஆய்வுமைய இயக்குநர் பணிக்கு அழைப்பது அறிந்தேன். இறைப் பணிக்கு என்னை ஆட்படுத்திக் கொண்ட பின்னர் அவ் வேலைக்கு விண்ணப்பிக்க மாட்டேன். பதிவாளதே அப்பொறுப்பை அளித்தால் ஏற்றுக் கொள்வேன் என்று கா.சு. பிள்ளைக்குப் பதில் விடுத்தேன். 2.9.1927 மயிலாப்பூர் சிவன் கோயிலில் என் மகளின் திருமணம் நடந்தது. சாதி வேறுபாடு பாராட்டாமல் அனைவர்க்கும் விருந்திடப்பட்டது. 5.6.1928 திரு. இராமசாமி நாயக்கரும் அவர்தம் கட்சியினரும் செய்துவரும் கடவுள் மறுப்புப் பிரசாரத்தைத் தடுப்பது குறித்து நானும் திரு.வி.க.வும் கலந்து பேசினோம். 22.7.1928 இராயப்பேட்டை பால. பக்த சனசபையில் `ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்னும் பொருள் பற்றிப் பேசுகையில் இராமசாமி நாயக்கரின் கடவுள் மறுப்புக் கோட்பாடுகளையும் அவர்தம் சுயமரியாதை இயக்கத்தின் குறும்புகளையும் வன்மையாகக் கடிந்து கூறினேன். 4.1.1932 சாதியில் உழலும் இந்திய மக்களுக்காகக் காந்தியடிகள் அடிக்கடி நிறை செல்வதும் தியாகம் பல புரிவதும் தேவையில்லை. மூடநம்பிக்கை, பார்ப்பன வழிபாடு முதலானவற்றில் உழன்று சிதறுண்டு கிடக்கும் இந்திய மக்களுக்குத் தன்னாட்சிக்குரிய தகுதி இல்லை. 5.12.1947 சேர்ந்து வாழ விருப்பமில்லாமல் இந்துக்களும் இசுலாமியர்களும் வடநாட்டிலே ஒருவர் ஒருவரைக் கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இந்தியர்க்கு நல்லறிவையும் அன்புணர்வையும் ஈசன் என்றே அருள்வானோ? இந்நாட்குறிப்புகளால் அடிகளால் பற்றிய உள்ளகக் குறிப்புகள் பல அறியக் கிடக்கின்றமை தெளிவாம் 1. அடிகளாரின் ஓய்வு ஒழிவு இலாப் படிப்பும், நூலாக்கமும் புலப்படும். 2. தாம் சைவப்பற்றினர் எனினும் பல்வகைச் சமயங்களைப் பற்றியும் தெளிந்திருக்க வேண்டும். அதனையும் தக்கார் வழியே கேட்டுப் பெறவும் வேண்டும். 3. எந்நூல் கற்றாலும் அந்நூற்பயன் தமிழ் மக்களுக்குக் கிட்டும் வகையில் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பரப்புதல் வேண்டும். 4. ஓர் ஆய்வாளிக்கு உண்மை காண்பதிலும் ஒருமைப்பாடு கொள்வதிலும் அழுந்திய நாட்டம் இருக்க வேண்டும். 5. தம் சமயத்தவர், தம் நட்புக்குரியவர் என்பவற்றுக்காகத் தம் பொதுக் கருத்தைப் புதைத்து விடக்கூடாது. 6. அரசு செய்ய வேண்டிய கட்டாயமான மொழி இனப் பணிகளை எத்தனிக் குழுவிலும் தொடர்ந்து செய்தற்கு இயலாது. அத்தகைய தோற்றம் வாணவேடிக்கைபோல் பளிச்சிட்டே அமைந்துவிடும். 7. பொது நிலை, மகளிர்நலம், பிறப்பொப்பு, இறைமைநாட்டம், சீர்திருத்தம் என்பன மக்கள் முயற்சியாலும், கல்வி அறிவு வளர்ச்சியாலும் ஏற்படுவனவேயாம். 8. இறையே எல்லாமும் செய்யும் என்னும் நோக்கு ஐயுறத் தக்கது. அதனைக் கடந்த இயற்கை ஆற்றல் வழியதே உலகியல் இயக்கம் 9. கண்மூடித்தனமும் கட்டுமானப் போலிமையும் ஒழியாமல் மக்களுக்கு முன்னேற்றம் வரப் போவதில்லை. அந்நிலை வரும்வரை எடுக்கும் முயற்சிகள் வீண்பட்டனவே. 10. அவர் அறுத்த நிலையே துறவு. அதற்குக் கோலம் கொள்வதும் கூடுவதே. என்பவை முதலியவை இக்கடிதக் குறிப்புகளால் அறியப்படுவனவாம் -இரா. இளங்குமரன். மறைமலையடிகளார் நாட்குறிப்புகள் 1898 3-1-1898 முதற்குறள்வாத நிராகரணம் ஏறத்தாழ 20 பக்கம் எழுதினேன். 4-1-1898 அறுவகைமரபிற் பார்ப்பனப் பக்கம் என்னும் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரத்தை மனப்பாடம் செய்தேன். 5-1-1898 ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரிடமிருந்து அஞ்ச லட்டை வந்தது ... சித்தியாரின் ஆறாம் சூத்திரம் மனப்பாடம் செய்தேன். 6-1-1898 முதற்குறள்வாத நிராகரணம், இன்று எழுதி முடித்தேன்; அதனையும் முதற்குறள்வாத த்தையும், சூனிய வாதி மறுப்பு என்னும் துண்டறிக்கைகையும் பரங்கிமலைச் செயல்பாட்டுப் பொறியாளர் அலுவலகத்தில் எழுத்தராயிருக் கும் திரு. மகாதேவப் பிள்ளைக்கு அனுப்பி வைத்தேன். சித்தியாரின் ஏழாம் சூத்திரத்தை மனப்பாடம் செய்யத் தொடங்கினேன். 7-1-1898... பகவத் கீதையைத் தமிழ்ப்பாடல் வடிவில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன் : இன்று மூன்று பாடல் எழுதினேன் ... 8-1-1898 சென்னை அரசாங்க மொழிபெயர்ப்பாளர் தண்டலம் பாலசுந்தர முதலியார் அவர்களுக்கு அஞ்சலட்டை விடுத்தேன். 12-1-1898 பொங்கல் விழாவைச் சிறப்புறக் கொண்டாடி னேன்.... 15-1-1898 திரு. வி.கோ. சூரியநாராயண சாதிரி பி.ஏ.அவர்களுக்கும் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்களுக்கும் இன்று மாலை அஞ்சலட்டை விடுத்தேன். 16-1-1898 என் புரவலர் திரு. பெ. சுந்தரம்பிள்ளை யவர்கள் எழுதிய திருஞானசம்பந்தர் காலம் முதல் ஐந்து பக்கம் படித்தேன். எளியேன் என்னைக் காண வீரப்ப செட்டியா ரவர்கள் இன்று மாலை வந்தார். 25-1-1898 திருவாவடுதுறை மடத்துக்குச் செல்லுமாறு ஆணையிட்டு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்கள் எழுதிய மடல் வந்தது .... 26-1-1898 திருவாடுதுறை தம்பிரான் அவர்களைப் பற்றிய செய்யுள் ஒன்றை இன்று காலை இயற்றினேன்.... மாலையில் வீரப்ப செட்டியாரவர்களைக் காணச் சென்றேன். அவர் என்னைச் சுப்பராய முதலியாரிடம் அழைத்துச் சென்று திருவாவடுதுறை தம்பிரான் அவர்கட்கு ஒரு மடல் பெற்றுத் தந்தார். 27-1-1898 இன்று காலை 10 மணியளவில் திருவாவடுதுறை நோக்கிச் சென்றேன். பொன்னம்பலம் செட்டியாரவர்கள் அனைத்து வசதிகளையும் செய்தார். 28-1-1898 பண்டார சந்நிதியவர்களைக் காண பொன்னம் பலம் செட்டியாரவர்கள் என்னை அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்களைச் சந்திக்க இயலவில்லை. கடந்த திங்கட் கிழமையன்று என் மனைவி ஈன்றெடுத்த மகவு இன்றிரவு இறந்தது. 29-1-1898 7.00 மணியளவில் பண்டார சந்நிதியவர்களைக் கண்டோம். எந்தத் துறையில் எனக்குப் புலமை உண்டு என அவர்கள் வினவினர். தமிழில் மட்டுமே எனக்குப் புலமை உண்டென விடையிறுத்து, நான் கற்ற தமிழ் நூல்களை எடுத்துரைத்தேன்.... 30-1-1898 பண்டார சந்நிதியவர்கள் இன்று மாலை எனக்குச் சால்வை போர்த்தினார்... 1-2-1898 சென்னைக் கிறித்தவக் கல்லூரித் தமிழப் பண்டிதர் சூரியநாராயண சாதிரியவர்களிடமிருந்து அஞ்சலட்டை வந்தது. 3-2-1898 திருவாவடுதுறைக்கு நான் சென்றமை அறிந்து மகிழ்ந்தும், சென்னை கிறித்தவக் கல்லூரிப் பண்டிதர் வேலை எனக்குக் கிடைக்கும் என்று வாழ்த்தியும் தண்டலம் பாலசுந்தர முதலியாரவர்கள் விடுத்த மடல் வரப்பெற்றேன். 4-2-1898 ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்களைப் பற்றிப் பாடல் புனைந்தேன். 5-2-1898 என்னருமை நண்பர் சூரியநாராயண சாதிரி யவர்கள் எழுதிய தற்காப்பு நியமம் படித்தேன். 6-2-1898 இன்றிரவு தொல்காப்பியம் புறத்திணையியல் மனப்பாடம் செய்து முடித்தேன். 7-2-1898 குலாம் காதிறு நாவலரின் சகோதரர் என்னைக் காண வந்தார். அவருடன் கடற்கரை சென்றேன். 12-2-1898 கலெக்டருக்கு மனு எழுதுவதற்காக எளியனான என்னைக் காண வீரப்ப செட்டியார் வந்தார். 16-2-1898 மேலாளர் தாமசைக் காண வெசுலியன் மிஷன் கல்லூரி எழுத்தர் என்னை அழைத்துச் சென்றார். என்னைத் தமிழ்பண்டிதராகப் பொறுப்பேற்க வேண்டினார்; இணங்கி னேன். 17-2-1898 வெசுலியன் மிஷன் கல்லூரிக்குச் சென்று திரு. சுமித்துக்கு இலக்கணம் கற்பித்தேன்.... 21-2-1898 திரு. சுமித்துக்குத் தமிழ் பயிற்றுவித்தேன். 23-2-1898 குலாம் காதிறு நாவலரின் சகோதரர்க்குச் சிலப்பதிகாரப் பாடம் நடத்திக்கொண்டிருக்கையில் திரு. மருதையா பிள்ளையவர்களும் மகாதேவப் பிள்ளை யவர்களும் என்னைக் காண வந்தனர். 25-2-1898 மார்ச்சு 4ஆம் நாளன்று கிறித்தவக் கல்லூரித் துணைத் தமிழ்ப் பண்டிதர் பொறுப்பை ஏற்பேன் என்று அரங்கைய செட்டியாரவர்களுக்கு மடல் விடுத்தேன். 3-3-1898 4மணி தொடர்வண்டியில் சென்னைக்குப் புறப்பட்டேன். 4-3-1898 இன்று காலை சென்னை வந்தடைந்ததும் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்கள் இல்லம் சென்றேன். இன்று நல்ல நாள் இல்லையாதலால் கிறித்தவக் கல்லூரியில் பொறுப்பேற்க வில்லை... மாலையில் சூரியநாராயண சாதிரியவர்களைக் காணச் சென்றேன். 9-3-1898 11 மணிக்குச் சென்னைக் கிறித்தவக் கல்லூரிக்குச் சென்றேன்... பாடம் நடத்தினேன்.... 16-3-1898 என் மனைவியும், திரு. சபாபதிப் பிள்ளையும் அவர்தம் மனைவியும் நாகப்பட்டினத்திலிருந்து வந்தனர். ஸ்ரீ அருணாசலம் கோயிலுக்குரிய வீட்டில், மாலைக்குள் எல்லாப் பொருள்களையும் என் மனைவி எடுத்து வைத்தாள். கிறித்தவக் கல்லூரியிலிருந்து 3.30 மணிக்குத் திரும்பினேன். 22-3-1898 தொண்டை மண்டல மேல்நிலைப் பள்ளித் தமிழ்ப் பண்டிதர் சிவப்பிரகாச ஐயர் நன்னூல் விருத்தி யுரையும் சீவக சிந்தாமணியும் பாடம் கேட்க வந்தார். 30-3-1898 சிவாசல நான்மணிமாலையைத் தருவதற்கென ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்கள் இல்லம் சென்றேன். 1-4-1898 திரு. சூரியநாராயண சாதிரி சிவாசல நான்மணி மாலைக்குச் சாற்றுக்கவி அளித்தார். 5-4-1898 முதற்குறள் வாத நிராகரணத்தின் மெய்ப்புப் படிகளுடன் ஒரு கடிதத்தையும் ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்கள் கொடுத் தனுப்பினார். 11-4-1898 ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்களைக் காணச் சென்றேன். வினாவிடை ஒன்றைச் சரிபார்ப்பதில் மாலைவரை நேரம் சென்றது. 15-4-1898 இன்று மாலை சி.என். அச்சகம் சென்று முதற்குறள்வாத நிராகரணம் அச்சடித்த முழுப்படியைப் பெற்று வந்தேன். 16-4-1898 திரு. சூரியநாராய சாதிரியைக் கண்டேன். நெடுநேரம் உரையாடினோம். எனது முதற் குறள்வாத நிராகரணம் படித்து மிக மகிழ்ந்தார். 24-4-1898 இன்று விடியற்காலை திரு. சூரியநாராயண சாதிரியவர்களைக் கண்டு, அவரையும் திரு. அனவரத விநாயகம் பிள்ளையவர்களையும் திரு. பாலசுந்தர முதலியாரின் இல்லத்துக்கு அழைத்துச் சென்றேன். தமிழ்ச் சைவ சித்தாந்த சபை ஒன்றைத் தொடங்குவது குறித்து நெடுநேரம் கலந்து பேசினோம். மாலையில் ஸ்ரீலஸ்ரீ சோம சுந்தர நாயகரவர்கள் இல்லத்தில் கோழிக்கோடு தினகரன் திரு. அரங்கசாமி நாயரைக் கண்டேன். 2-5-1898 சம்பளம் ரூ. 25 பெற்றுக் கொண்டேன். 15-5-1898 ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்களைக் காணச் சென்றேன். தமக்குப் பதிலாக என்னைச் சொற்பொழிவாற்று மாறு அவர் கூறினார். 10-6-1898 வீட்டுப் பொருளனைத்தையும் 11, சீனு முதலித்தெரு இல்லத்துக்கு மாற்றினேன். 2-7-1898 (எனக்கு உடல்நிலை சரியில்லாமையால்) திரு. சூரிய நாராயண சாதிரியவர்கள் என்னைக் காண வந்தார். தம் தமிழ் ஆசிரியர் திரு. சபாபதி முதலியார் இறந்துவிட்ட துயரச் செய்தியை அறிவித்தார். 19-7-1898 ஞானபோதினிக்குக் கட்டுரை தருமாறு சூரியநாராயண சாதிரியவர்கள் என்னைக் கேட்டார். தொண்ணூறு - தொள்ளாயிரம் குறித்து எழுதுவதாக ஒப்புக் கொண்டேன். 27-7-1898 ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் ஒன்றே என வலியுறுத்திக் கட்டுரை வரைந்தேன். சூரிய நாராயண சாதிரியவர்களால் இதனை மறுக்க இயலவில்லை. 4-8-1898 பண்டிதர் உ. வே. சாமிநாத ஐயர் பதிப்பித்த மணிமேகலை இன்று வெளிவந்தது. 5-8-1898 கும்பகோணம் கல்லூரித் தமிழ்ப் பண்டிதர் திரு. உ.வே. சாமிநாத ஐயரவர்களுக்கு மடல் விடுத்தேன். 8-8-1898 பிரும்மஸ்ரீ சாமிநாத ஐயரிடமிருந்து கடிதம் வந்தது. மணிமேகலைப் படியை நான் பெற்றுக் கொள்ளற் பொருட்டு அதனுடன் திரு. முருகேச முதலியார்க்குச் சிறு கடிதம் இருந்தது. அவ்வாறே அவரிடமிருந்து நூலைப் பெற்றுக் கொண்டேன். 10-8-1898 குறுந்தொகை முழுமையும் படியெடுத்து விட்டு ஓலைச்சுவடியைச் சூரியநாராயண சாதிரியவர்களுக்குத் திருப்பித் தந்தேன். 27-8-1898 விருதுப்பட்டி சிவஞானயோகிகளின் நூலுக்குப் பன்னிரண்டு பாக்கள் சிறப்புப் பாயிரம் எழுதினேன். என் குரு ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்களின் பெயரில் சிறப்புப் பாயிரமாக ஆசிரியப்பா ஒன்றை அதே நூலுக்கென எழுதினேன். 16-9-1898 பிரும்மஸ்ரீ சாமிநாத ஐயரவர்களிடமிருந்து மடல் வந்தது. சூரியநாராயண சாதிரியவர்களிடமிருந்து மணி மேகலைப் படியைப் பெற்றுத் தண்டலம் பாலசுந்தர முதலி யாருக்குத் தருமாறு என்னைக் கேட்டுக் கொண்டிருந்தார். 18-9-1898 இன்று காலை மாவட்ட முன்சீப் நல்லசாமிப் பிள்ளை வந்தார். அவர் என்னைக் காண விழைவதாக பாலசுந்தர முதலியாரவர்கள் சொன்னார். 3-10-1898 கடந்த வார நீலலோசனி இதழ் வந்தது. இன்று மாலை சம்பளம் பெற்றேன். கிறித்துவக் கல்லூரி இதழுக்குரிய கையொப்பமாக ரூ.2/- மறைத்திரு கின்னரிடம் (Skinner) கொடுத்தேன். மிச்சத் தொகை ரூ 1-8-0 அடுத்த திங்கள் தருவதாகச் சொன்னேன். 19-10-1898 சித்தாந்த ஞானபோதம் இதழுக்கென நித்திலமணி, மாயாவாதி மதக்குழப்பம் என்ற என் கட்டுரை களைத் திரு. நாராயணசாமி நாயகர் பெற்றுச் சென்றார். 27-10-1898 இந்த மாத ஞானபோதினி வந்தது. சித்தாந்த தீபிகையில் வெளியான சித்தியாரின் தருக்கப் பகுதிக்குரிய என் உரையைக் கண்டித்து இராமநாதபுரம் சாமிநாத பிள்ளை எழுதியிருந்தார். 20-10-1898 திராவிட கலா போதினி சங்கத்தில் இல் வாழ்க்கை எனும் பொருள் பற்றி நடந்த கூட்டத்திற்குத் தலைமை ஏற்றேன். 17-11-1898 கலிங்கத்துப் பரணி படியைச் சூரிய நாராயண சாதிரியவர்கள் கொடுத்தனர். 25-11-1898 சித்தாந்த தீபிகை புத்துரை விளக்கம், வேற்றுமை மயக்கம் என்ற என் கட்டுரைகள் வெளிவந்த ஞானபோதினியைச் சூரிய நாராயண சாதிரியவர்கள் கொடுத்தார், 5-12-1898 ‘k¡ä‹ ifna£’il¥ go¥gj‰bfd murh§f¤ jÄœbkhÊ bga®¥ghs® mYtyf« br‹ nw‹.* 6-12-1898 இன்று கல்லூரிக்குச் சென்று கால்டுவெல்லின் திராவிட மொழி ஒப்பிலக்கணம் படித்தேன். 8-12-1898 ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்கள் என்னைக் காண வந்தனர். சித்தாந்த ஞானபோதத்துக்கென தலையங் கமும், தாயுமானவரின் முதல் பாட்டுக்கு உரையும் எழுதிக் கொடுத்தேன். 1899 6-1-1899 இன்று பிற்பகல் தெலுங்கு எழுத்துக்களைக் கற்றுக் கொள்ளும் நல் வாய்ப்புக் கிட்டியது. எழுத்துக் கூட்டிப் படிக்கத் தொடங்கினேன். 7-1-1899 இந்துதானி முன்ஷியுடன் நெடுநேரம் உரையாடினேன். குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் இசுலாமிய மதக் கருத்துகளை அவர் வாயிலாக அறிந்து கொண்டேன். 13-1-1899 கி.பி. 986 இல் வைணவப் பெரியார் இராமநுச ஆசாரியார் பிறந்தார். பொங்கல் விழாவைச் சிறப்புறக் கொண்டாடினோம். 22-1-1899 மில்டனைப் பற்றிய மெக்காலேயின் கட்டுரை யைப் படித்தேன். 12-2-1899 ஜே.எம். நல்லசாமி பிள்ளையவர்களின் சகோதரர் நாகரத்தினம் பிள்ளையவர்களுடன் உரையாடினேன். 13-2-1899 என்னிடம் பாடம் கேட்பதற்கென இன்று முதல் நாகரத்தினம் பிள்ளையவர்கள் வரத் தொடங்கினார். 14-2-1899 வேதாரணியப் புராணத்துக்குப் பாடல் வடிவில் முன்னுரை எழுதி, நாளை சூளைக்கு வந்து சந்திக்குமாறு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்கள் கூறினர். 18-2-1899 (அரசாங்க) தமிழ் மொழிபெயர்ப்பாளர் பொறுப்பு திரு. அரங்காச்சாரியவர்களுக்கு அளிக்கப்பட்ட தென்று அறிந்தேன். 19-2-1899 திரு அனவரதவிநாயகம் பிள்ளை (சேக்பியரின்) Tempest with notes எனும் நூலைக் கொடுத்தார். பிரதாப முதலியார் சரித்திரத்தை அவர்க்குப் படிக்கக் கொடுத்தேன். 10-3-1899 திருச்சிராப்பள்ளி எ.பி.ஜி. கல்லூரியில் வேலை வாய்ப்பு உள்ளதென அறிந்து விண்ணப்பம் விடுத்தேன். 16-3-1899 எனது தமிழ் நாவலின் முதல் அத்தியாயத்தைப் படியெடுத்தேன். அதை வெளியிடுவதற்குரிய இதழ் வெளிவந்து விட்டதால் பயனில்லாமல் போயிற்று. 19-3-1899 இருசமய விளக்கத் தெளிவின் திருத்தப்படியை எழுதினேன். ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்களுக்குப் படித்துக் காட்டியதும் அவர்கள் விளக்கவுரை அளித்தனர். 23-3-1899 இன்று திரு. கோபாலாசாரியார் வரவில்லையாத லால் ஆறு வகுப்பு எடுத்தேன். 30-3-1899 ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்களின் வண்டிக்காரன் அருத்தாபத்திப் பிரமாணத்தின் மெய்ப்புப் படிகளைக் கொணர்ந்தான். நான் திருத்திக் கொடுத்தேன். 3-4-1899 என் தமிழ் நாவலை அச்சிடுவதுபற்றி என் தமிழ்ப் புரவலர் த. பாலசுந்தர முதலியாரவர்களுடன் பேசினேன்; மெய்ப்புப்படிகளைத் திருத்தித் தருவதாக ஒப்புக் கொண்டார். 23-4-1899 திரு. ஜே.எம். நல்லசாமிப் பிள்ளையவர்களுடன் நெடுநேரம் உரையாடினேன். 6-5-1899 ‘Some Sovereigns of Travancore’ எனும் நூலை அனவரதவிநாயகம் பிள்ளையவர்கள் பெற்றுச் சென்றார். 3-6-1899 தாம்சன் அண்டு கம்பெனிக்குச் சென்று 11 அணாவுக்கு ஜியார்ஜ் ரேனால்டு எழுதிய இரண்டு நாவல்கள் வாங்கினேன். பின்னர், பூரணலிங்கம் பிள்ளையவர்களுடன் நெடுநேரம் உரையாடினேன். 29-6-1899 பூரணலிங்கம் பிள்ளையவர்கள் அனுப்பி வைத்த நித்திலமணி என்னுடம் நாடகக் காப்பியக் கதைச் சுருக்கத்தின் மெய்ப்புப் படிகளைத் திருத்தினேன். 3-7-1899 ஆக்சுபோர்டில் உள்ள மறை டாக்டர் ஜி.யு.போப் விடுத்த மடல் கிடைக்கப் பெற்றேன். 9-7-1899 மறை. ஜி.யு. போப் அவர்கட்குக் கடிதம் எழுதி விடுத்தேன். 18-8-1899 கல்லூரியின் திராவிட பாஷா சங்கத்தில் தலைமையேற்றேன். 31-8-1899 திருச்சி புனித சூசைக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பண்டிதர் வேலை வாய்ப்பு உள்ளதென்று சீனிவாசா சாரியார் தெரிவித்தார். 2-9-1899 புனித சூசைக் கல்லூரி முதல்வர்க்கு விண்ணப்பம் விடுத்தேன். 29-9-1899 கோமளீசுரன்பேட்டை கலியாணசுந்தர முதலியாரவர்களுக்குக் கடிதம் விடுத்தேன். 27-10-1899 கிறித்துவக் கல்லூரியின் திராவிட இலக்கியச் சங்கத்தில் என் தலைமையில் அனவரதவிநாயகம் பிள்ளை யவர்கள் பெரும் உரையாசிரியர் நச்சினார்க்கினியரைப் பற்றிய தமது ஆய்வின் சுருக்கத்தைப் படித்தார். 3-11-1899 நானும் அனவரதவிநாயகம் பிள்ளையவர்களும் சென்று அருணாசலக் கவிராயரைக் கண்டோம். 4-12-1899 தண்டலம் பாலசுந்தர முதலியாரவர்களைக் காணச் சென்றேன். நான் படிப்பதற்கென திராவிட பிரகாசிகை யைக் கொடுத்தார். 24-12-1899 நல்லசாமிப் பிள்ளையவர்கள் சென்னை வந்ததும் என்னைக் காண விரும்பினார். அவ்வாறே அவரைக் காணச் சென்றேன். 1900 2-1-1900 அசலாம்பிகை அம்மாள் என்னும் பெண்பாற் புலவரை இன்று பிற்பகல் அனவரதவிநாயகம் பிள்ளையவர் களுடன் காணச் சென்றேன். 8-1-1900 பிற்பகல் அசலாம்பிகை அம்மாளைக் காணச் சென்றேன். 21-1-1900 திரு. இராசாராமுக்கு இரவல் கொடுத்துள்ள நூல்களாவன: நைடதம், பரமபதபங்க வினாவிடை. திரு, வேங்கடகண்ணன் பெற்றுக் சென்ற நூல்கள்: திருவிளையாடல் வசனம், கலாவதி, ரூபாவதி. 31-1-1900 முனிமொழியைப் பற்றி திரு. சபாபதி நாவலர் எழுதியவற்றை மறுத்து நான் எழுதிய முனிமொழிப் பிரகா சிகை எனும் துண்டறிக்கையைச் சூரியநாராயண சாதிரி யவர்கள் பாராட்டினர். 2-2-1900 எனது திருவொற்றியூர் மும்மணிக் கோவையின் பதினாறாவது அகவலைச் சிறிது எழுதினேன். 7-2-1900 பேராசிரியர் லாடின் (Lodd) பொழிவுகளைக் கேட்க சீட்டும் அறிக்கையும் திரு. கின்னர் கொடுத்தார். இன்று விடியற்காலை 3:11 முதல் 3:14 வரை சிறு நில அதிர்வு ஏற்பட்டது. 8-2-1900 பேராசிரியர் லாடின் உரையைக் கேட்டேன்; சாரமற்று இருந்தது. 11-2-1900 ஞானபோதினிக்கென நக்கீரனார் தெய்வப் புலமைமாட்சி கட்டுரை எழுதினேன். 18-2-1900 பிற்பகல் பாலசுந்தர முதலியாரவர்கள் கடிதம் கொடுத்தார்; அதனை மறை. லாசர பாதிரியாரிடம் எடுத்துச் சென்றேன். குறளிலும் இராமாயணத்திலும் கேள்வி கேட்டார். அவற்றுக்குத் தக்க விடை அளித்ததால் எ. பி.ஜி. கல்லூரி முதல்வர்க்கு என்னை வலுவாகப் பரிந்துரைத்தார். 19-2-1900 பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களும் த. பாலசுந்தர முதலியாரவர்களும் அளித்த சான்றிதழ் களையும், லாசர பாதிரியார் கொடுத்த கடிதத்தையும் இணைத்து எ.பி.ஜி. கல்லூரி முதல்வர்க்கு விண்ணப்பம் விடுத்தேன். சூரியநாராயண சாதிரியவர்கள் தமது வேம்பத்தூரார் திருவிளையாடல் கைப்படியை எனக்குக் கொடுத்தார். 21-2-1900 தமது கல்லூரியில் காலி இடம் இல்லை யென்றும், இருப்பினும் என் விண்ணப்பத்தைப் பதிந்து விட்ட தாகவும் திருச்சிராப்பள்ளி எ.பி.ஜி. கல்லூரியிலிருந்து எர்பர்டு சுமித் கடிதம் எழுதியிருந்தார். 25-2-1900 திரு. சீனிவாசகம் பிள்ளையும் திரு. வேங்கட கண்ணனும் என்னைக் காண வந்தனர். நெடுநேரம் உரை யாடினேன். பிரித்தானிய அரசையும் அதன் அரசியையும் வாழ்த்தி திரு. அனந்தராம பாகவதர் நடத்தவிருக்கும் கச்சேரிக்கு என்னைப் பாடல் எழுத வேண்டினர். 26-2-1900 அவ்வாறே பாடல்கள் இயற்றினேன். 3-3-1900 மாக்சு மூலரின் இராமகிருஷ்ணர் வாழ்க்கை வரலாற்று நூலை இன்று முழுவதும் படித்தேன். 12-3-1900 விடியற்காலை த. பாலசுந்தர முதலியார வர்களைச் காணச் சென்றேன். நக்கீரரைப் பற்றிக் கட்டுரை அனுப்ப வேண்டி கனகசபை பிள்ளைக்குக் கடிதம் எழுதுமாறு அவரைக் கேட்டேன். 16-4-1900 அருங்காட்சியகம் சென்றேன். ஆனால் மதரா ரிவியு கிடைக்கவில்லை. எனவே காட்சியகத்தைச் சுற்றி அங்குள்ள பொருள்களைக் கண்டு மகிழ்ந்தேன். 18-4-1900 இன்று விடியற்காலை ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்களைக் கண்டு சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கட்கு ஓர் அறிமுகக் கடிதம் பெற்று, அவரைக் கண்டேன். அன்புடன் பேசினார். அகநானூற்றுப் பணிக்கு என் உதவியை அளிக்க முன் வந்தேன். 20-4-1900 பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களின் பத்துப் பாட்டைப் பற்றிய கட்டுரையைச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி மலரிலிருந்து படித்தேன். 22-4-1900 சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கட்கு அஞ்சலட்டை விடுத்தேன். 23-4-1900 மாக்சு மூலரின் ‘India: what it can teach us’ எனும் நூலைச் சூரிய நாராயண சாதிரியவர்கள் ரூ.2-3-0 விலைக்கு எனக்கென வாங்கி வந்தார். 17-5-1900 எழுத்தரிடம் சென்று ரூ.28-10-0 சம்பளம் பெற்றேன். இத் திங்கள் தொடங்கி எனக்குச் சம்பளம் ரூ.30/- 3-7-1900 எனது திருவொற்றியூர் மும்மணிக்கோவையின் இருபத்தெட்டாவது செய்யுளின் ஒரு பகுதி எழுதினேன். 6-7-1900 சென்டிரல் புத்தகக் கடைக்குச் சென்று மாக்சு மூலரின் ‘Three Lectures on the Science of Language’ எனும் நூலைப் பெற்றுத் தருமாறு அதன் மேலாளரிடம் வேண்டினேன். 26-8-1900 முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் திருவிடைமருதூர்க் கலம்பகம் பற்றி இன்று மாலை உரையாற்றினேன். 30-8-1900 பேராசிரியர் மாக்சு மூலரின் ‘Comparative Philology’ படித்தேன். 2-9-1900 ‘Introduction to the Science of Language’ இரு தொகுதிகளை அனவரதவிநாயகம் பிள்ளையவர்கள் படிக்கக் கொடுத்தார். 8-9-1900 இந்து தியாலாஜிகல் உயர்நிலைப் பள்ளியில் வாழ்க்கை வரலாற்று நூல்களைப் பற்றிய திரு. செல்வ ராசாவின் அருமையான பொழிவு கேட்டேன். 5-10-1900 சூரியநாராயண சாதிரியவர்களின் நாடக இயல் சூத்திரங்களைத் திருத்தினேன். 17-10-1900 பேரா. மாக்சு மூலருக்கு நான் எழுதிய கடிதத்தை அஞ்சலில் விடுத்தேன். 19-10-1900 மாலையில் பச்சையப்பன் (கல்லூரிக்குச்) சென்று செல்வகேசவராய முதலியாரவர்களைக் கண்டேன்; திராவிடப் பிரகாசிகையைத் திருப்பித் தருமாறு வேண்டினேன். 30-10-1900 நேற்று பேரா. மாக்சு மூலர் மறைந்தார் எனும் துயரச் செய்தி கேட்டு வருத்தமும் வியப்பும் அடைந்தேன். 2-11-1900 ஜியார்ஜ் டபிள்யூ எம். ரேனால்டுசின் ‘Necromancer’ நூலைத் திரு வேங்கடகண்ணன் எனக்குப் பரிசளித்தார். 5-11-1900 எனது மும்மணிக் கோவையின் மெய்ப்புப் படிகளை சி.என். அச்சகம் சென்று படித்தேன். 17-11-1900 ஜி.யு.போப் அவர்களின் திருவாசக மொழிப் பெயர்ப்பைக் கண்டேன். 3-12-1900 வேதாகமோக்த சைவ சித்தாந்த சபையைத் தொடங்குவதற்குரிய அறிக்கையைத் தயாரித்தேன். 1901 7-1-1901 மும்மணிக் கோவையில் சேர்ப்பதற்கென ஆங்கிலத்தில் ஒரு பாடல் (Sonnet) புனைந்தேன். 21-1-1901 நம் தாய்நாட்டின் மேதகு இறை விக்டோரியா அரசி இறந்து விட்டார் என்ற துயரச் செய்தியை இதழ்களிலிருந்து அறிந்தேன். 27-1-1901 தமிழில் ஓர் இரங்கற்பா எழுதி அதனை ஆங்கிலத்திலும் பெயர்த்து என்னை அனுப்புமாறு திரு. நல்லசாமிப் பிள்ளையவர்கள் பாலசுந்தர முதலியார்க்கு மடல் விடுத்திருந்தார். 6-2-1901 (அலெக்சாண்டர்) போப், கார்லைல் ஆகியோரைப் பற்றிய நூல்களை வாங்கினேன். 18-2-1901 கும்பகோணம் தமிழ்ப் பண்டிதர் சாமிநாத ஐயர்க்கு மும்மணிக் கோவையை நூலஞ்சலில் விடுத்தேன்; அஞ்சலட்டையும் விடுத்தேன். 22-2-1901 (ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர) நாயகர் மறைந்தார். 23-2-1901 என் மனைவியுடன் சூளை சென்றேன்... உடல் எடுக்கப்படும் முன்னர், அழுது கொண்டே ஓர் உரையாற்றி னேன். 25-2-1901 சாமிநாம ஐயரிடமிருந்து மடல் வரப்பெற்றேன். 27-2-1901 சிங்காரவேலு முதலியாரவர்களிடமிருந்து மடல் வரப் பெற்றேன்; உடனே பதில் விடுத்தேன். 6-3-1901 மறைந்த ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரவர்களைப் பற்றிப் பாடல்கள் புனைந்து கொண்டிருந்தேன். 7-3-1901 நல்லசாமிப் பிள்ளையவர்கள் சில வரிகளை எழுதியனுப்பி அவற்றைப் பாடலாக்கித் தருமாறு மடல் விடுத்தார். உடனே அவற்றைப் பாடலாக்கி விடுத்தேன். 10-3-1901 ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்களின் காரியத்துக்குக் குடும்பத்துடன் சென்றேன். ஆயிரக்கணக்கானோர் குழுமி இருந்தனர். அவர்தம் பெருமை உரைத்துக் கற்றோர் பலர் செய்யுள் பாடினர். இறுதியில் என் பாடல்களைப் பாடிக் காட்டினேன். நாயகரவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்புவது குறித்துச் சிற்றுரையாற்றினேன். 12-3-1901 தம்மால் சென்னைக்கு வர இயலவில்லை என்று அறிவித்த சிங்காரவேலு முதலியாரவர்களின் தொலைவரி ஞாயிறன்று கிடைத்தது. 14-3-1901 (சோமசுந்தரக்) காஞ்சியின் 2 படிகளைக் கும்ப கோணம் கல்லூரி சாமிநாத ஐயரவர்களுக்கு அனுப்பினேன்; மறைந்த ஸ்ரீலஸ்ரீநாயகரவர்களைப் பற்றி மேலும் சில பாடலை அனுப்புமாறு கேட்டேன். 18-3-1901 எங்கள் கல்லூரியின் திராவிட மொழிச் சங்கக் கூட்டத்தில் தலைமையேற்று, தமிழின் தனித்தியங்கும் தன்மை (The Independence of the Tamil Language) எனும் பொருள் பற்றி உரையாற்றினேன். 20-3-1901 The Light of Asia நூலை வாங்கினேன். 25-3-1901 உபநிடதங்கள் வாடகை நூலகத்திலிருந்து பெற்றேன். 15-4-1901 தொண்டை மண்டல (பள்ளியில்) சிறு கூட்டம் நடத்தினோம். மறைந்த ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்கள் நினைவு நிதியத்துக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. 19-4-1901 Sir Monier Williams யின் ‘Religious Thought and Life in India’ நூலை நூலகத்திலிருந்து எடுத்தேன். 27-4-1901 Native Students Union ஆதரவில் நடந்த கூட்டத்தில் முதற் குறளின் அடிப்படையில் கடவுளைப் பற்றி உரையாற்றினேன். 29-4-1901 எனது சோமசுந்தரக் காஞ்சிக்கு Tamil Representative’ இல் யாரோ மறுப்பு எழுதியிருப்பதாக அறிந்தேன். 9-5-1901... சோமசுந்தரக் காஞ்சியாபாசத்துக்கு ஒரு மறுப்புரை எழுதி, வெளியிடுவதற்கென சூரிய நாராயண சாதிரியவர்களிடம் கொடுத்தேன். 15-5-1901 ... பேரா. மாக்சு மூலரின் ‘Six Systems of Hindu Philosophy’ வாங்கினேன். 25-5-1901... எனது சோமசுந்தரக் காஞ்சியாக்கம் வெளிவந்த Tamil Representative இதழ் கிடைத்தது. 3-7-1901... லார்டு டெனிசனின் கவிதைகள், மில்ட்டனைப் பற்றிய அடிசனின் திறனாய்வுக் கட்டுரைகள், எட்மண்டு பென்சரின் கவிதைகள், கதே பற்றிக் கார்லைலின் கட்டுரை ஆகியவற்றை வாங்கினேன். 8-7-1901... இன்று முதல் என் மகளைச் சர்ச் மிசன் பெண்கள் பள்ளிக்கு அனுப்பினேன். 11-7-1901... பர்க்கு வின் ‘The Sublime and Beautiful’ வாங்கினேன். 29-7-1901... கிரேயின் Ode on Eaton college மொழி பெயர்ப்பை ஞானபோதினியில் வெளியிடுவதற்கென சூரிய நாராயண சாதிரியவர்களிடம் கொடுத்தேன். 25-8-1901 சோமசுந்தரக் காஞ்சியாக்கத்தை மறுமுறை எழுதத் தொடங்கினேன். 15-10-1901 சிவ பப வைபவம் 10 படிகள் தூத்துக்குடி சிவஞான பிரகாச சபைக்கு அனுப்பினேன். 5-11-1901... பாபு விபின் சந்திர பாலரின் இராம் மோகன் இராயைப் பற்றிய பொழிவுக் கூட்டத்துக்குச் சென்றேன். 13-11-1901... பண்டித சவரிராயப் பிள்ளையவர்களிட மிருந்து மடல் பெற்றேன்... 18-11-1901 ... நெல்லையப்ப கவிராயரவர்கட்கு நூலஞ்சலில் சில நூல்கள் விடுத்தேன்... 27-11-1901... ஸ்ரீமத் சபாபதி நாவலரவர்களிடமிருந்து மடல் வரப் பெற்றேன்.... 3-12-1901 ... ஸ்ரீமத் சபாபதி நாவலரவர்கள் எழுதிய நூல்களனைத்தையும் அஞ்சலில் வரப்பெற்றேன். 12-12-1901... தமிழின் தோற்றத்தைக் குறித்தொரு கட்டுரை வரைந்தேன். 17-12-1901... தமிழ்ச் சொற்களின் தோற்றம் பற்றிக் கட்டுரை எழுதினேன். 22-12-1901... விவேகானந்தரின், பக்தியோகம், கருமயோகம், ஆத்மா ஆகிய நூல்களை வாங்கினேன். 1902 2-1-1902... இன்று காலை சி.என். அச்சகம் சென்று ஞானசாகரம் இதழுக்கான அறிக்கை அச்சிடக் கொடுத்தேன். 6-1-1902... மயிலாப்பூர் சென்று சபாபதி நாவலரவர்களைக் கண்டேன். தமிழிலும் சைவ சித்தாந்தத்திலும் எனக்கிருக்கும் நுண்ணிய புலமையை வியந்தார். 8-1-1902... திரு. இரத்தினவேலு முதலியாருடன் காவல் துறை ஆணையாளர் அலுவலகம் சென்று ஞானசாகர இதழுக்கு ஆசிரியன் என்று அறிவித்தேன்... 31-1-1902 (i) பாண்டித்துரைத் தேவர் (ii) ஜே.எம். நல்ல சாமிப்பிள்ளை... ஆகியோர்க்கு மடல்களும் இதழ்களும் அனுப்பப்பட்டன. 13-2-1902... இன்று பிற்பகல் 2:00 மணிக்கு என் மனைவி பெண் மகவு ஈன்றாள். 10-3-1902... ஆர்பத்நாட் கம்பெனிக்குச் சென்று ரூ.800 வைப்பில் சேர்த்தேன். 16-3-1902... நானும் திரு. மோகன் முதலியாரும் சேர்ந்து என் நூலகத்திலுள்ள நாயகரவர்களின் நூல்கள், துண்டறிக்கைகள் ஆகியவற்றின் பட்டியல் அணியம் செய்தோம். 18-3-1902... நூலகத்திலிருந்து Muir’s Sanscrit Texts vol. I எடுத்து வந்தேன். 3-5-1902 யாழ்ப்பாணம் ஸ்ரீமத் கனகசபாபதி அய்யர்க்கு மடல் விடுத்தேன்... 18-9-1902 ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்களின் ஓரே மகன் சிவபாதம் இன்று மாலை 4:00 மணிக்கு உயிர் நீத்தார். 26-9-1902... 7, இருளப்பன் தெரு, பிளாக் டவுன் புது வீட்டுக்கு மாறினோம். 10-12-1902... 7, இருளப்பன் தெரு வீட்டிலிருந்து, முத்தி யாலுப்பேட்டை, 197 இலிங்கிச் செட்டி தெரு வீட்டுக்கு மாறினோம். 26-12-1902 திராவிடத் தமிழர் தொல்பொருள் ஆய்வுச் சங்கத்துக்கு நான் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றேன். 1903 3-1-1903 தமிழ்க் கழகத்துக்குரிய விதிமுறைகள் வகுக்கப்பெற்றன. 11-1-1903 கந்தசாமிக் கவிராயரிடமிருந்து கடிதம் வந்தது. 16-1-1903 .... மதுரையிலிருந்து செந்தமிழ் வந்தது. 22-1-1993 பேரா. சூலியன் வின்சனுக்கு மடல் விடுத்தேன். 2-2-1903... சிவனடியார் திருக்கூட்டத்தின் செயலாளர் என்னைச் சைவப்பிரசாரகராக இருக்குமாறு வேண்டினார்; இணங்கினேன். 26-2-1903 டப்ளின் (Dublin) பல்கலைக்கழகத்தின் செயலாளர்க்கு மடல் விடுத்தேன். 27-2-1903 மதரா மெயில் நாளேட்டுக்கு ஒரு கட்டுரை விடுத்தேன்... 7-3-1903 பரிமேலழகரைப் பற்றிக் கட்டுரை வரைந்தேன் 9-3-1903 இலண்டன் மெட்ரிகுலேசன் தேர்வுக்குப் படிக்கத் தொடங்கினேன். 18-3-1903.... ரூ. 11க்கு Dutts Civilization of India நூல் வாங்கினேன். 6-6-1903 குலாம் காதிறு நாவலரவர்களும் பிச்சை இப்ராகிம் புலவரவர்களும் என்னைக் காண வந்தனர். 14-6-1903 புறச்சமயத்தவர்க்கிருளாய் முதல் இரண்டடி களைப் பற்றி அருமையான உரையாற்றினேன்.... 24-6-1903 திருவடிக்குச் சென்று சைவசமயமே சமயம் என்று உரையாற்றினேன். 29-6-1903 எனது சொற்பொழிவைப் பற்றி டாண்டர்டு இந்து ஆகிய இதழ்களுக்குச் செய்தி விடுத்தோம். 13-7-1903 என்னுடைய கட்டுரைகளிலிருந்து சில பகுதிகளை எடுத்துத் தம் கட்டுரைகளில் கையாண்டதை ஒப்புக்கொள்ளு மாறு வி.கோ. சூரியநாராயண சாதிரியவர் களுக்குப் பதிவஞ் சலில் மடல் விடுத்தேன் 22-7-1903... என் உயிரைக் காப்பீடு செய்துகொண்டேன்; என் அகவை 27; உயரம் 5 அடி 6 அங்குலம்; முதுகில் ஒரு மச்சம்; என் பெயர் இராமசாமி சொக்கநாத வேதாசலம் பிள்ளை.... 24-7-1903..... பெரும்புலவர் ஸ்ரீமத் சபாபதி நாவலரவர்கள் இறற்தார் என்று அறிந்தேன். 1-8-1903.... யாழ்ப்பாணம் நா. கதிரைவேலுப் பிள்ளை என்னைக் காண வந்தார்; எம் கல்லூரியில் அவர்க்கு இடம் தேடித் தருமாறு வேண்டினார். அவரை அன்புடன் வரவேற் றேன். அவர்மீது எவ்வகையான வெறுப்பும் எனக்கில்லை என்றுரைத்தேன். என்னால் இயன்றதைச் செய்வேன் என்று உறுதியளித்தேன். 15-8-1903 மாணிக்கவாசகர் காலத்தைத் திரு. பீட்டர் எனக்காக ஆங்கிலத்தில் பெயர்த்தளித்தார்... 31-8-1903 திரு. வி.எம். சடகோபராமாநுசாசாரியாரின் சொற்பொழிவு கேட்டேன்; அதிலிருந்த பொருந்தாத கருத்து களை மறுத்தேன். 1-9-1903 சுதேசமித்திரன் ஆசிரியர்க்கு ஒரு கட்டுரை அனுப்பினேன். 3-9-1903 சில பகுதிகள் நீக்கப்பட்டு என் கட்டுரை சுதேசமித்திரனி ல் வெளிவந்தமை கண்டு மனநிறைவெய்தி னேன். 12-9-1903... முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரையின் முதற் படிவ மெய்ப்புத் திருத்திக் கொடுத்தேன். 20-9-1903 அப்பாவு செட்டியாரவர்களுடனும் பிறருடனும் சிந்தாதிரிப்பேட்டை கூட்டத்துக்குச் சென்றேன்; அருட்பாவைப் பற்றிய வழக்கமான விவாதம் நடைபெற வில்லை; கதிரைவேலுப் பிள்ளை மட்டுமே ஏதேதோ குற்றஞ் சொல்லிக் கொண்டிருந்தார். 27-9-1903... அரங்கசாமி நாயகரவர்கள், அனவரத விநாயகம் பிள்ளையவர்கள் ஆகியோரோடு சிந்தாதிரிப் பேட்டை கூட்டத்துக்குச் சென்றேன்; ஆனால் விவாதத்தை நடத்துவதற்கு, கதிரைவேலுப் பிள்ளை வரவில்லை. அதனால் நான் உரையாற்றினேன். 4-10-1903..... சிந்தாதிரிப்பேட்டை சென்று ஒன்பது மணிக்குத் திரும்பினேன். 5-10-1903 மாலையில் திருவல்லிக்கேணி வெசுலியன் மிசன் உயர்நிலைப் பள்ளி சென்று உரையாற்றினேன். 15-10-1903 (i) பேராசிரியர் சூலியன் வின்சன், பாரிசு (ii) ஜி.யு. போப், ஆக்சுபோர்டு (iii) டபிள்யூ. ஆர். பிரேசர், இலண்டன் ஆகியோர்க்கு முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரையும் மடல் களும் விடுத்தேன். 18-10-1903 வேணுகோபால சுவாமி மைய அரங்கத்தில் பெருங்கூட்டம் குழுமியிருந்தது; அருட்பாவைப் பற்றி நல்லுரை ஆற்றினேன். தோல்விக்கு அஞ்சி, கதிரைவேலுப் பிள்ளை வரவில்லை. 26-10-1903 சென்ற 18ஆம் நாள் ஞாயிறன்று நடந்த கூட்டத்தைப் பற்றிச் சுதேசமித்திரனுக்குச் செய்தி விடுக்கப் பட்டது. 2-11-1903 இன்று மாலை சூரியநாராயண சாதிரியவர்கள் மறைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் குறிக்கிறேன். 3-11-1903 சாதிரியவர்களின் மறைவை ஒட்டி உயர்நிலை வகுப்புகள் மூடப்பட்டன. இன்று முழுவதும் துயரத்துடன் இருந்தேன். இறப்பு எனும் வடிவத்தில் இயற்கையின் பேராற்றலை உணர்ந்து, அந்தச் சிந்தனையிலேயே ஆழ்ந்தேன். 1904 - 19051 4-5-1904 கல்லூரியில் எனக்குத் தலைமைப் பண்டிதர் பதவி கிடைத்தது ... 23-5-1904 இராமலிங்கம் அவர்களும் நானும் கடைசி மெயிலைப் பிடித்து மதுரை அடைந்தோம். தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் எம்மை அழைத்துப் போக வந்திருந்தார்.... ஸ்ரீமான் பாண்டித்துரைத் தேவரவர்களைக் காணச் சென்றோம். 6-6-1904 மீண்டும் இராமநாதபுரம் வந்தோம். பாண்டித் துரை சாமியவர்களைக் காணச் சென்றேன். அங்கு இரா. இராகவையங்காரவர்களைக் கண்டேன். 6-7-1904 ஞானசாகரம் ஒரு மாத விளம்பரத்துக்கென சுதேசமித்திர னுக்கு மூன்றரை உரூபா கொடுத்தேன். 13-7-1904 பேரா. சூலியன் வின்சனுக்கென நன்னூல் விருத்தியுரை வாங்கினேன். 24-8-1904 திருக்குறளாராய்ச்சி எழுதுவதில் ஈடுபட்டிருந் தேன். 2-9-1904... இரவிவர்மா படங்கள் உரூ. 1-13 அணாவுக்கு வாங்கினேன்... பயனற்ற கல்லூரி வேலையில் வெறுப்பே ஏற்படுகின்றது. 16-9-1904 கதிரைவேலுப் பிள்ளையவர்கள்மீது கொண்டு வந்த அவதூறு வழக்கில் சான்று கூறுவதற்கு வழக்கு மன்றத் துக்குச் சென்றேன். 17-9-1904.... செந்தமிழ் கிடைத்தது. திருக்குறட் பெயர்க் காரணம் எனும் என் கட்டுரையின் பகுதி ஒன்று அதில் வெளிவந்திருந்தது. 20-10-1904 ஞானசாகரம் ஆறாவது இதழ் வெளி வந்தது. 28-1-1905 கடந்த சனிக்கிழமையன்று (21 ஆம் நாள்) 242, தம்பு செட்டித் தெரு மேல்மாடிக்குக் குடிபுகுந்தோம். 12-2-1905.... அட்டாவதானம் கலியாண சுந்தர முதலியார் என்னைக் காண வந்தார். 1905 - 1906 29-4-1905 Y.M.H.A. வில் கர்னல் ஆல்காட்டின் உரையைக் கேட்கச் சென்றேன். 3-5-1905 (பாலகங்காதார திலகரின்) Arctic Home in the Vedas படிக்கத் தொடங்கினேன். 5.5.1905 நாளை மாலை 5.30 மணிக்கு நடக்கவிருக்கும் மரக்கறியுண்போர் சங்கத்தில் உரையாற்ற இணங்கினேன். 13-5-1905 ஆரியர், தமிழர் ஆகியோரின் வரலாற்றைப் பற்றிய ஆங்கில நூல் பல படித்தேன். சுவாமி விவேகானந்தரின் ஞானயோகம் வாங்கி இரண்டு உரை படித்தேன். அவை நுண்ணியனவாகவும் அருமையாகவும் இருந்தன. 14-5-1905 அட்டாவதானம் கலியாணசுந்தர முதலியார் கேட்டுக்கொண்டதற்கிணங்க மெய்கண்டார் வரலாற்றை வெளியிட்டேன். பழந்தமிழரும் ஆரியரும் கட்டுரையைத் தொடர்ந்து எழுதி வருகிறேன். 25-5-1905 (மதுரைத் தமிழ்ச் சங்க) இரண்டாவது கூட்டம் நடந்தது; கனகசபைப் பிள்ளை தலைமை தாங்கினார். மு. இராகவையங்கார் வேளிர் பற்றிக் கட்டுரை படித்தார். பழந் தமிழரும் ஆரியரும் பற்றி நான் உரையாற்றினேன். 28-5-1905 விடியற்காலை தூத்துக்குடி அடைந்தோம். 29-5-1905... சிதம்பரம் பிள்ளையவர்களின் இல்லத்தில் சுவாமி வள்ளிநாயகம் அவர்களுடன் இரவுணவு உண்டோம். 30-5-1905... பகலுணவும் இரவுணவும் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் வீட்டில்.... 25-6-1905... திரு. இரத்தினசபாபதி, திரு. உருத்திர கோடி, திரு. ஞானரத்தினம் ஆகியோர் வீட்டுக்கு வந்தனர்; கடற்கரை சென்றோம். சென்னையில் தமிழ்ச்சங்கம் தொடங்குவது பற்றிக் கலந்து பேசினோம். 1-9-1905 இன்று நல்ல நாள் ஆகையால் 134, செங்கழுநீர்ப் பிள்ளையார் கோவில் தெரு, மண்ணடி வீட்டுக்குக் குடி பெயர்ந்தோம்... 4-9-1905 திருவருட்பிரகாச சபைக்குச் சென்று தலைமை யுரை ஆற்றினேன். 10-9-1905... சிவனடியார் திருக்கூட்ட அரங்குக்குச் சென்று சிவனடியார் சிறப்புக் குறித்து உரையாற்றினேன். அதன் முடிவில்/ கதிரைவேலுப் பிள்ளையின் ஏற்பாட்டில் ஒருவர் என்னைப் பற்றித் தவறாகப் பேசினார். கூட்டத்திலிருந்தோர் அவரைக் கண்டித்தனர். என் நிலையை விளக்கிப் பேசினேன். 25-9-1905 புனித சூசைக் கல்லூரியின் மறைந்த தமிழ்ப் பண்டிதர் அமிர்தம் பிள்ளையவர்களின் தமிழ் விடு தூதுக்கு ஆராய்ச்சி முன்னுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். 30-9-1905 சென்னையில் ஒரு சைவசித்தாந்த சபையை ஏற்படுத்துவது குறித்து என் வீட்டில் ஒரு சிறு கூட்டம் நடத்தப்பட்டது. 17-10-1905 சுதேசிய இயக்கத்தைப் பற்றி நான் புனைந்த பாடல்களைப் பெற்றுக் கொள்ள இராமசேட அய்யரவர் களும் பிறரும் வந்தனர்; அவற்றின் எளிமையை வியந்தனர். 18-10-1905 சுதேசிய இயக்கத்தைப் பற்றிய பாடல்கள் கணபதி கம்பெனியால் அச்சிடப்பெற்று மாலைக் கூட்டத்தில் தரப்பட்டன. 30-10-1905 LeadbeaterÆ‹ clairvoyance படித்து முடித்தேன். GoatesÆ‹ How to Mesmerise படிக்கத் தொடங்கினேன். 27-11-1905... MyerÆ‹ Human perrsonality and its Survival after Death நூலை வாங்கினேன். 2-12-1905 ஈசோபநிடதத்துக்குத் தமிழ் விளக்கவுரை எழுதி முடித்தேன். 12-12-1905 தியோசபி அலுவலகத்திலிருந்து Dod’s Six Lectures on Mesmerism வாங்கினேன்... 1906 25-1-1906.....1905ஆம்ஆண்டுக்குரியமாண்புமிகு கோகலேயின் காங்கிர மாநாட்டு அறிக்கையைப் படித்தேன். 173-1906 காளிதாசரின் சாகுந்தல நாடகத்தின் இரண் டாவது அங்கத்தை மொழி பெயர்த்தேன்.... 12-4-1906.... இவ்வாண்டில் நான் செய்த அருஞ்செயல் சைவசித்தாந்த மாநாட்டைக் கூட்டியதேயாகும்.... 19-4-1906...... இந்தியாவின் பாதுகாவலர் சுரேந்திரநாத் பானர்ஜி அவர்களை வங்காள அரசு அநியாயமாகத் தண்டித் ததைக் கண்டிக்கும் வகையில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் அச்சிட்டு விநியோகிப்பதற்கென சுரேந்திர நாதரைப் பற்றி ஆங்கிலத்தில் பாடல் (Sonnet) புனைந்தேன். ஆங்கில அரசாங்கம் தன்னிச்சைப்படி அதிகாரம் செய்து வருகிறது.... 20-4-1906 அப் பாடலைப் பெற்றுக் கொள்வதற்கென இராமசேட அய்யரவர்கள் வந்தார். 27-5-1906 பட்டினப்பாலை விளக்கவுரை எழுதி முடித்தேன். 29-5-1906....(kJiu¤ தமிழ்ச்) சங்க ஆண்டு கூட்டத்துக்குச் சென்றேன். கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய உ.வே. சாமிநாத ஐயரவர்கள் இரண்டு மணிநேரம் ஏதேதோ பேசினார்... 4.30 மணிக்குத் தொடங்கிய கூட்டம் 10 மணிக்கே முடிந்தது. ஒருவரையொருவர் புகழ்ந்துகொள்வது பொறுக்க முடியாத தாகவுள்ளது. இதேபோல் தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டில் சங்கம் மறைந்துவிடும். 4-6-1906....âUPhdr«gªjiu¥ பற்றி அரியதோர் உரையாற்றினேன்... பொறாமை மிக்க இருவர் என்னைப் பற்றித் தவறாகப் பேசினர். அவர்க்குத் தக்க விடை யிருத்தேன்... 4-7-1906... 14 அணாவுக்கு 24 சுதேசி மெழுகுவர்த்தி கொண்ட ஒரு கட்டு வாங்கினேன். 1-8-1906 திருவனந்தபுரம் மகாராஜாகல்லூரி முதல்வர்க்கு ஒருவிண்ணப்பம்விடுத்தன்... 27-10-1906 Harry GazeÆ‹ How to live forever படித்து வருகிறேன். 4-11-1906 Victor SegnoÉ‹ How to live 100 years படித்து முடித்தேன். 8-12-1906... நூல்கள் வாங்குவதற்கு நான் ஏராளமாகப் பணம் செலவழிப்பதால் என் மனைவி முகம் கொடுத்துப் பேசவில்லை. நான் என் செய்வது? புதிய நூல்கள் வாங்கு வதில் எனக்குள்ள வேட்கை அளப்பரிது! 22-12-1906.... பிராணாயாமம் பற்றிய உரையை எழுதிக் கொண்டிருக்கிறேன். ....* 1907 27-1-1907 (தவத்திரு இராசானந்த சுவாமிகள்) எனக்கு நிட்டை அருளினார். 5-2-1907 ... Randallï‹ Psychology எனும் அருமையான நூலைப் படித்து வருகிறேன். 30-4-1907 ... விபின் சந்திர பாலர் (சென்னை) வந்தார். அவருடன் மாணவர் பலர் ஊர்வலமாகச் சென்றனர். 1-5-1907... திருவல்லிக்கேணி கடற்கரைக்குச் சென்று, புதிய இயக்கத்தைப் பற்றி பாபு விபின் சந்திரபாலர் ஆற்றிய உரையைக் கேட்டேன். அலைகளின் இரைச்சலோடு அவர் தம் வெண்கலக் குரல் போட்டியிட்டது. ஏறத்தாழ 5,000 பேர் குழுமி இருந்தனர். 2-5-1907... கல்கத்தா காங்கிர நடவடிக்கைகள் பற்றிய நூலை வாங்கினேன். 3-5-1907 ... திருவல்லிக்கேணி கடற்கரை சென்று சுதேசி இயக்கத்தைப் பற்றி பாபு விபின் சந்திர பாலரின் அருமையான ஆங்கிலப் பொழிவைக் கேட்டேன். இரவு பத்து மணிக்குத் திரும்பினேன். 21-6-1907 பேராசிரியர் மானின் (Mann) Central School of Psychology அஞ்சல்வழிக் கல்வியில் பயிலத் தொடங்கினேன். 12-8-1907 சம்பந்த முதலியாரவர்களின் தலைமையில் கல்லூரித் தமிழ்ச் சங்கக் கூட்டம் நடந்தேறியது. கம்பனைப் பற்றியும், கம்பராமாயணத்தைப் பற்றியும் கோபாலாசாரியார் பேசினார். வரம்பில்லாமல் புகழ்ந்தார். இப் புகழ் கம்பனுக்கு உரியதன்று... 1-9-1907 என் வகுப்புத் தோழன் பாலசுப்பிரமணியனுக்கு விவேகானந்தரின் இராச, பக்தி, கரும, யோக நூல்களையும், பாலரின் உரைகளடங்கிய நூலையும் படிக்கக் கொடுத்தேன். 27-10-1907 கிழக்கும் மேற்கும் பற்றி எழுதினேன். 27-11-1907 Herbert Spencerï‹ Principles of Psychology/ W. Morrisï‹ Earthly Paradise ஆகியன வாங்கினேன்... சிவஞான போதத்துக்கு விரிவான உரை எழுதுவதற்கென தத்துவ நூல்கள் பல வாங்கி வருகிறேன். தமிழில் ஒரு பெருங் காவியம் எழுதுவதற்கென, கவிதை-திறனாய்வு நூல்களை வாங்கிவருகிறேன். 1-12-1907... திருமதி அன்னி பெசன்ட்டின் தலைமையுரை கேட்பதற்கென அடையாறு சென்றேன். 25 நிமிடம் தாமதமாகச் சென்றதால் 5 நிமிடம் மட்டுமே கேட்க முடிந்தது. பொழிவு நன்றாயில்லை என்று அறிந்தேன். 5-12-1907 சிதம்பரத்தில சைவ சித்தாந்த மாநாட்டைக் கூட்டுவதற்கென ஈசன் அருளால் பெரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்... 12-12-1907 The Evolution of Cosmos எழுதினேன். 14-12-1907 சைவ சித்தாந்த மாநாட்டுக்குத் தலைமை யேற்கத் தாம் இணங்குவதாக பாண்டித்துரை அவர்களிட மிருந்து தொலை வரி வந்தது. 1908 11-3-1908... இன்று நல்ல நாளாகையால் 68, அரண் மனைக்காரத் தெரு மேல்மாடி வீட்டுக்குக் குடிபெயர்ந் தோம். 13-4-1908 அடிசனின் Vision of Marraton மொழி பெயர்க்கத் தொடங்கினேன். 8-5-1908 அடிசனின் Vision of Marraton தமிழில் பெயர்த்து முடித்த பின்னர் அவர் எழுதிய Picture Gallery எனும் மற்றொரு கட்டுரையைப் பெயர்க்கத் தொடங்கினேன். 19-5-1908... குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரையை எழுதிக் கொண்டு வருகிறேன். 25-6-1908 t§fhs bkhÊ¥ ghlyhd ‘tªnj khju¤ ij’¤ jÄÊš bga®¤nj‹.* 6-7-1908 அடுத்த திங்கள் இறுதியில் நான் தொடங்க விருக்கும் ‘The Oriental Mystic Myna’ எனும் ஆங்கில இதழுக்குக் கட்டுரைகள் அனுப்புமாறு என் நண்பர்களுக்கு மடல் விடுத்தேன். என் முயற்சி வெற்றி பெற இறைவன் அருளட்டும்! என் தாய்மொழி தமிழுக்கும், என் சமயத்துக்கும் தமிழ் மொழி வாயிலாகக் கடந்த பத்தாண்டுகளாக நான் ஆற்றி வந்த பணிகள், படிக்கும் தமிழ் மக்கள் இல்லாமையால் பயனற்றுப் போயின. 23-7-1908 இந்தியாவின் பெருந்தலைவர் பால கங்காதர திலகர் அரச நிந்தனை புரிந்தார் எனும் போலிக் குற்றச்சாட்டின் பேரில் அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டார் என்ற துயரச் செய்தி அறிந்தேன். இந்தப் பெரும் தேசபக்தர் நம்மை விட்டுப் பிரிவதை எண்ணித் துயருற்றோம். ஓ, பாரதத்தாயே! நின் மைந்தர் இத்துணை அல்லலுற வேண்டுமோ! 26-8-1908 இன்று பிற்பகல் இரத்தினசபாபதி முதலியாரவர் களுடன் காவல்துறை ஆணையாளர் அலுவலகம் சென்று என் ஆங்கில இதழுக்கு அறிவிப்புச் செய்தேன்... 1-9-1908 விவேகானந்தர் அச்சகத்திலிருந்து Oriental Mystic Myna 300 படிகள் பெற்று வந்தேன். 27-9-1908 எனது ஆங்கில இதழுக்கென The Milk Sea Myth எழுதத் தொடங்கினேன். 8-10-1908 ... என் அருமை நண்பர் தண்டலம் பாலசுந்தர முதலியார் ரங்கூனில் மறைந்தார் எனும் துயரச் செய்தி அறிந்தேன். 3-12-1908 The Universal Religion எனும் ஆங்கில உரையை எழுதத் தொடங்கினேன். 1909 7-1-1909 ... டாக்டர் ஆனந்த கே. குமாரசாமிக்கு மடல் விடுத்தேன். 29-3-1909... சம்பந்த முதலியாரவர்களைக் கண்டேன். சுதேச மொழிகளை (vernaculars) (பாடத்திட்டத்திலிருந்து) விலக்குவதைக் கண்டித்து ஒரு பெரிய பொதுக் கூட்டத்தைக் கூட்டுமாறு அவரைக் கேட்டேன். 18-7-1909 ... பிற்பகல் அடையாறு சென்று டாக்டர் ஆனந்த குமாரசாமியைக் கண்டு உரையாடினேன். 25-7-1909 ஆசிரியர் குழுவில் எனக்கு வேலை தர முடியுமா என்று வினவி இதழாசிரியர் இருவர்க்கு எழுதினேன். 10-8-1909 ஈசனும் உமையுமே கடவுள் என்ற கருத்தில் நம்பிக்கை இழந்துவிட்டேன். கடவுளரிடம் வேண்டுவதன் மூலம் மாற்றப்பட முடியாத நிலைபேறுடைய விதி பேரண்டத் தில் உள்ளது. மேன்மைபெற்ற ஆன்மாக்களான கடவுளரால் மனிதர்க்கு ஏதேனும் செய்ய முடியும் என்று எனக்குத் தோன்ற வில்லை. அனைத்தும் நம் முயற்சிகளையே சார்ந்துள்ளன. 27-8-1909 பகவத் கீதையும் சமூக முன்னேற்றமும் எனும் பொருள்பற்றி வரும் ஞாயிறு, 29ஆம் நாள் பரங்கிமலை சரசுவதி இலக்கியக் கழகத்தில் உரையாற்ற ஒப்புக் கொண்டேன். 29-12-1909 திருச்சியில் சைவ சித்தாந்த மாநாடு தொடங்கிற்று. 1910 14-1-1910 வேதாந்த சூத்திரங்களுக்குரிய நீலகண்ட பாடியத்தைக் கற்கத் தொடங்கினேன். நீலகண்ட பாடியத்தின் ஒரே நல்ல தமிழ்ப் பெயர்ப்பு இதுவே. மொழிபெயர்ப்பாளர் செந்திநாத அய்யர்க்குத் தமிழ்ச் சைவர் கடப்பாடுடையர். 9-2-1910 தமிழ்த் தட்டச்சுப் பொறியை உருவாக்கியுள்ள ஜே.வி. சுந்தரம் அய்யர் அழைப்புக்கிணங்க அவர்தம் இல்லம் சென்றேன். அப் பொறியைக் கண்டேன். மனநிறைவளிக்கும் முறையில் இருந்தது. அவர் கேட்டுக் கொண்டபடி ஒரு நற்சான்று அளித்தேன். 10-7-1910 சென்னைத் தமிழ்ச் சங்கச் செயற்குழுக் கூட்டத் துக்குச் சென்றேன். 21-7-1910 என் மனைவியுடன் திருவல்லிக்கேணிக் கடற்கரை யிலுள்ள மீன் காட்சியகத்துக்குச் சென்றேன். இறைவனின் படைப்பிலுள்ள வியப்புகளை விளம்பல் அரிது!... 6-8-1910 சுவாமி விவேகானந்தரின் கர்ம யோகம் எனும் அருமையான நூலைப் படித்தேன். இரண்டொரு கருத்துக் களைத் தவிர விவேகானந்தரின் பொழிவுகள் நெஞ்சை யுருக்கும் தன்மையனவாய், சைவ சித்தாந்தக் கருத்துகளுடன் ஒத்துள்ளன. 16-9-1910 மாலையில் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று பழந்தமிழர் நாகரிகம் பற்றிப் பேசினேன். 25-9-1910 பல்லாவரம் இருப்புப்பாதை அருகே வீடு கட்டுவதற்குரிய மனையைத் தேர்ந்தெடுக்க நானும் அண்ணாமலையும் ஞானசம்பந்தனும் திருநாவுக்கரசும் சென்றோம். 30-10-1910.. விருதை சிவஞான யோகிகள் இல்லம் வந்தார். 19-11-1910... (கல்லூரி) வேலை அடுத்த ஆண்டுடன் முடிவதால், புதுச்சேரிக்குக் குடிபெயர்வது தோதுப்படுமா என்றறிய என் அன்னையையும், மனைவியையும் அங்கு அனுப்பி வைத்தேன். 3-12-1910 பிற்பகல் பல்லாவரம் சென்று ரூ.90க்கு ஒரு மனை வாங்க ஏற்பாடு செய்தேன். 1911 31-1-1911 மார்ச்சுத் திங்கள் 31 ஆம் நாளுடன் என் பணிக்காலம் முடியும் என்ற செய்தி அறிந்து திடுக்கிட்டேன். பல்கலைக்கழக விதிமுறைப்படி இவ்வாறு நடக்கும் என்று அறிவேனாயினும், துறவறம் பெறலாம் என்ற எண்ண முடையவனாக இருப்பினும் இச்செய்தி சிறிது கலக்கத் தைத் தந்தது. 18-2-1911 இன்று விடியற்காலை பிரஞ்சுக்காரன் ஒருவன் ஓட்டிய வானவூர்தியை நாங்கள் அனைவரும் கண்டோம். மனிதரின் இக்கண்டுபிடிப்பை எண்ணி வியந்தேன். 15-3-1911 ... சிவஞான போத ஆராய்ச்சியை அச்சுக்குக் கொடுத்தேன். 22-4-1911 ... சமரச சன்மார்க்க நிலையம் ஏற்படுத்தினேன். 30-4-1911 பல்லாவர வீட்டுக்குக் குடிபெயரும் பொருட்டு ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினேன். 12-5-1911 கோகிலாம்பாள் கடிதங்கள் எழுதத் தொடங்கி னேன். 30-5-1911 டவுடனின் ஷெல்லி வாழ்க்கை வரலாற்று நூலைப் படித்து வருகிறேன். ஷெல்லி அருமையான கவிஞன்; அவனுடைய வாழ்க்கை என் வாழ்க்கையுடன் பெரும் பான்மை ஒத்து வருகின்றது. 8-6-1911 என் மகள் சிந்தாமணியின் திருமணம் ஈசன் அருளால் இன்று காலை 8:30 மணியிலிருந்து 10:30 வரை நடந்தேறியது... 25-6-1911 செங்கற்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் சென்று ஈசன் பரமேசுவரரை வழிபட்டோம். பண்டாரத்தின் கையிலிருந்து இரு கழுகுகள் உணவருந்துவதைக் கண்டோம்... அந்தப் பூசாரிகள் சொல்வது போல் அவை காசியிலிருந்து வரவில்லை. அருகிலிருக்கும் குன்றுகளிலிருந்தே வருகின்றன. அவை பழக்கப்படுத்தப்பட்டவை என்று எண்ணுகிறேன். 5-8-1911 அவர் விரும்பினால் சித்தாந்த தீபிகைக்கு (Light of Truth) ஆசிரியப் பொறுப்பேற்பேன் என்று ஜே.எம். நல்லசாமிப் பிள்ளைக்குப் பதில் விடுத்தேன். 27-8-1911... துறவிக்குரிய துவராடை புனைந்தேன். 8-9-1911 சுவாமி உருத்திரகோடீசுவரரும் நானும் காவல் துறை ஆணையாளர் ராவ்சாகிபு சரவண பவானந்தம் பிள்ளை யவர்களைக் கண்டு நெடுநேரம் உரையாடினோம். இப்பண் பாளர் என்னோடு இனிமையாகப் பழகினார். இவர்க்குத் தமிழில் தேர்ந்த புலமையும் ஆர்வமும் உள்ளன. தம்முடைய அரிச்சந்திரன் நூலை அன்புடன் அளித்தார். 3-10-1911 மலைபடுகடாம் ஆராய்ச்சியுரை எழுதி வருகிறேன். 7-12-1911 மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய பாண்டித் துரையவர்கள் மறைந்தார் எனும் துயரச் செய்தி அறிந்தேன். 11-12-1911 சில நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தில்லியில் நடக்கவிருக்கும், இந்தியப் பேரரசர் ஜார்ஜின் முடிசூட்டு விழாவை வாழ்த்திப் பதிகம் புனைந்தேன். 12-12-1911 பல்லாவரத்தில் முடிசூட்டு விழா ஊர்வலத்தில் கலந்து கொண்டேன். 29-12-1911 சூளையில் சைவசித்தாந்த மாநாடு; முடிவு வரை கலந்து கொண்டேன். அசலாம்பிகை அம்மையார் என்னோடு அன்புடன் பேசினார். அவருடைய உரை நன்றாக இல்லை என்றாலும், அவரைப் போல் சாதனை புரிந்த பெண்கள் வெகு சிலரே ஆவர். 1912 22-1-1912 வேலூர். என் தலைமையில் ஒரு சைவ சித்தாந்த சபை உள்ளூரில் தொடங்கப் பெற்றது. 1-2-1912 பிற்பகல் ஒரு மணியளவில் வடலூர் வந்தடைந் தேன்... இராமலிங்க அடிகள் கட்டிய பெருங் கோயிலைக் கண்டதும் மலைப்பும் வியப்பும் கலந்த உணர்வு ஏற்பட்டது. 2-2-1912 இராமலிங்க அடிகள் சபையில் சன்மார்க்கம் பற்றிப் பேசினேன். அடிகள் ஏற்படுத்திய முறைகளை மாற்றி சடங்குகளை வேண்டுமென்றே சில வைதீகர்கள் தந் நலத்துக்காக நுழைத்துள்ளனர் என்று கடிந்து பேசினேன். 29-2-1912 மூட்டைப்பூச்சி, கொசுத் தொல்லையினாலும், சாக்கடை நாற்றத்தினாலும் சென்னையில் நேற்றிரவு உறங்கவே இயலவில்லை. 26-3-1912 விவேகபாநுவில் என்னை மறைமுகமாகக் கண்டித்து எழுதிய ஒருவருக்கு மறுமொழியாகச் சாதிவேறு பாடுகளைச் சாடி, கட்டுரை எழுதி வருகிறேன். சாதிமுறையை அழித்து, மனிதரிடைய சமன்மை கொண்டுவரவேண்டும் என்பதே என் விழைவு. என் எளிய முயற்சிகட்கு ஈசன் அருளட்டும்! 3-4-1912 போலிச் சைவரும் சாதி வேறுபாடும் எனும் கட்டுரை எழுதி முடித்தேன். 2-6-1912 ‘The Elevating of Depressed Classes’ எனும் ஆங்கிலப் பொழிவு எழுதினேன். 20-7-1912 புனலூர்... காவல்துறையினர் என்னைக் கண் காணித்து வந்தனர். நான் சமயச் சொற்பொழிவாளன் மட்டுமே--காவலர். என்னைக் கண்காணித்தல் மடமை. பிரித்தானிய அரசு தொடர்ந்து ஆட்சிபுரிவதையே நான் விரும்புகிறேன். 17-10-1912 பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் என்னைக் காண வந்தார். நற்றிணையை அவர்தம் உரையுடன் வெளியிடு வதற்கென, சென்னை நண்பர்களைக் கண்டேன். 27-10-1912 ... கடிதத் தொடர்பு கொள்வதிலேயே பெரும் பகுதி நேரம் கழிந்து கொண்டிருக்கிறது. 1913 24-1-1913... மேட்டுக்குப்பம் சென்றேன். இராமலிங்க அடிகள் முன்னாளில் அமர்ந்த புனித அரங்குக்குச் சென்றதும் உளம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகிற்று; என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டேன். 9-2-1913 மகாஜன சபை அரங்கில் இன்று மாலை திராவிட நாகரிகம் பற்றிய எனது இரண்டாவது பொழிவு நிகழ்ந்தது. 3-3-1913 இலக்கணத்தில் தமக்குள்ள ஐயங்களைத் தெளிவு படுத்திக் கொள்வதற்கென, திரு. மணி. திருநாவுக்கரசு முற்பகல் வந்தார். 7-3-1913 பூரியில் நடக்கவிருக்கும் அனைத்திந்திய சமய மாநாட்டுக்கு அதன் சார்பாக நான் செல்ல வேண்டுமென்று தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையிலிருந்து தொலைவரி வந்தது. 13-3-1913 பூரி மாநாட்டுக்கென சாங்கியமும் சித்தாந்தமும் எனும் பொழிவை எழுதிக் கொண்டிருக்கிறேன். 21-3-1913 ... கல்கத்தா மெயிலில் புறப்பட்டேன். 30-3-1913...óÇ வந்தடைந்தேன். 5-4-1913 கல்கத்தாவில் ... உலகெலாம்....... எனும் பெரியபுராணப் பாடலை ஆங்கிலத்தில் பெயர்த்தேன். 16-4-1913 கல்கத்தாவில் ‘rhங்கியமும்சித்jhªதமும் எனும்bgருள் பற்றிஆ§கிலத்âல்உரையா‰றினேன். 7-5-1913 கல்கத்தாவிலிருந்து புறப்பட்டேன். 9-5-1913 காசிக்கு வந்தேன். 11-7-1913 சென்னைக்கு வந்து சேர்ந்தேன். 13-7-1913 இந்தியன் ரிவியு இதழுக்குக் கையொப்ப மிட்டேன். 19-7-1913 இராயப்பேட்டை சித்தாந்த சபையைச் சார்ந்த திரு. சச்சிதானந்தமும் திரு. (வி.) கலியாண சுந்தரமும் அவர்தம் தமையனும், திரு. நமசிவாயமும், திரு. கோவிந்த ராச முதலியாரும் என்னைக் காணவந்தனர். 20-7-1913 மயிலாப்பூர் இரானடே அரங்கில் எனது வடநாட்டுப் பயணத்தைப் பற்றிய கூட்டத்துக்கு இராயப் பேட்டை சங்கம் ஏற்பாடு செய்திருந்தது... அன்புள்ளம் கொண்ட இளஞ்சைவர் பண்டித கலியாணசுந்தரம் வீட்டில் இன்றிரவு தங்கினேன். 25-7-1913 தமிழ் மூலிகைகளுக்கு ஆங்கில-இலத்தீன் பெயர்களை எழுதினேன். 6-8-1913 நாகை சொ. தண்டபாணி என்னைக் காண வந்தார். 22-9-1913 இராயப்பேட்டை திருவாளர் திரு. வி. கலியாண சுந்தர முதலியார் என்னைக் காண வந்தார். 17-12-1913 போட் மெயிலில் இன்று மாலை தூத்துக் குடிக்குப் புறப்பட்டேன். திருவாளர் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் உடன் வருகிறார். 20-12-1913 தூத்துக்குடி சைவ மாநாடு. 1914 29-3-1914 வடமொழியில் உபநிடதங்களைக் கற்கத் தொடங்கினேன். இசாவசியத்தைத் தமிழில் பெயர்க்கத் தொடங்கினேன். 30-3-1914 இரவில் திருவாளர் திரு.வி. கலியாண சுந்தர முதலியார் வந்தார்; நெடுநேரம் உரையாடினோம். 16-4-1914 பவணந்தி முனிவரைப் பற்றிய என் கருத்துரை வைசியமித்திரனில் வெளிவந்தது. 4-5-1914 பொள்ளாச்சியில் தாசில்தார் நெல்லையப்ப பிள்ளை தம் இல்லத்துக்கு அழைத்தார்; இணங்கினேன். இவர்க்குச் சைவ சித்தாந்தம் தெரியும் என்றாலும் பிரும்ம ஞான சபையில் (Theosophical Society) அதிக ஆர்வம் கொண்டு, வீணாக அதனை நம்பி வருகிறார். 16-5-1914.... 24 ஆண்டுக்கு முன்னர் நான் தொடங்கிய (நாகை) இந்துமதாபிமான சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்துக்குத் தலைமையேற்க இணங்கினேன். 23-6-1914 வேதாந்த சூத்திரங்கட்கு நீலகண்டர், சங்கரர், இராமாநுசர், மாதவர், பாலதேவர் ஆகியோரின் உரைகளை ஒப்புநோக்கி எழுதி வருகிறேன். 7-8-1914 அவர் மீது அவதூறு செய்தேன் என்று சோம சுந்தர பாரதியார் வாயிலாக மகிபாலன்பட்டி கதிரேசன் செட்டியார் பதிவு அஞ்சலில் அறிவிப்பு அனுப்பியிருந்தார். உண்மையில் அவர்தாம் என்னை அவதூறு செய்தார். ஈசன் அவரைத் தண்டிக் கட்டும் என்று விட்டுத் தள்ளினேன். அவரை அமைதிப் படுத்துமாறு என் முன்னாள் மாணவர் பாரதியார்க்கு மடல் விடுத்தேன். 17-8-1914 கதிரேசன் செட்டியாரிடம் மன்னிப்புக் கேட்கு மாறு ச.சோ. பாரதியார் மடல் எழுதினார். இஃது அநியாய மென்பதால் நான் ஒப்புக் கொள்ளவில்லை. 19-8-1914 கோட்டை மன்னார் சித்தி விநாயகப்பதிகம் எழுதி முடித்தேன். 23-9-1914 நேற்று எம்டன் கப்பல் சென்னை நகரைத் தாக்கிற்று என்றறிந்தேன். 24-9-1914 தூத்துக்குடி விரைவு வண்டியில் மதுரை யிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டேன். உடன் பயணம் செய் பவர் ஒருவரிடமிருந்து Madras Times நாளேடு வாங்கி ஜெர்மனிய கப்பல் எம்டன் சென்னையை வெடிகுண்டு கொண்டு தாக்கியதைப் பற்றிய செய்திகளைப் படித்தேன். அமைதியான சென்னைக்குத் தொல்லை விளைக்கும் ஜெர்மனியர் எத்துணைக் கொடியர்; காட்டுமிராண்டிகள். 12-10-1914 பெல்ஜிய நாட்டின் கோட்டை எனத் தகும் ஆண்ட்வர்ப்பை ஜெர்மனியர் கொடூரமாகத் தாக்கி அதனைக் கைப்பற்றினர் எனும் துயரச் செய்தி அறிந்தேன். போரால் உண்டாகும் தீமைகளை ஈசன் என்றே தீர்ப்பான்.........? 1915 3-1-1915 கந்தசாமிக் கவிராயர் என் மேல் கொண்டு வந்த மானநட்ட வழக்கு தொடர்பாகச் சோமசுந்தரம் பிள்ளை யவர்களுடன் கலந்து பேச திருநெல்வேலி வந்தேன்... தேவாரப் பாடல்களை இசைத்தட்டில் கேட்டு மகிழ்ந்தேன். 7-1-1915 விருதுப்பட்டி.... இவ்வூர் நாடார் சமூகத்தினர் வளர்ந்து வருகின்றனர். கல்வியில் அவர்கள் காட்டும் ஆர்வம் பாராட்டுக்குரியது. ஆனால் அவர்களுக்கு வேளாளர் உரிய மதிப்பு அளிப்பதில்லை. இது வருத்தக்குரியது. 15-1-1915 11ஆம் நாள் காலை 7.30 மணிக்குச் சோழ வந்தான் அ. சண்முகம் பிள்ளை (அரசஞ் சண்முகனார்) மறைந்தார் எனும் துயரச் செய்தி அறிந்தேன். தமிழுலகம் பெரும் புலவரை இழந்துவிட்டது; அதனை ஈடு செய்தல் அரிது. 21-3-1915 சைவ சமய மாட்சி மெய்ப்புப் பார்த்தேன். 31-8-1915... கந்தசாமிக் கவிராயரால் என்மேல் கொண்டு வரப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணை தூத்துக்குடி முன்சீபு வழக்கு மன்றத்தில் தொடங்கிற்று. 30-9-1915...vd¡F உதவிபுரிவதாக வாக்களித்துக் காவல்துறைத் துணை ஆணையாளர் ச. பவானந்தம் பிள்ளை மடல் விடுத்தார். 4-10-1915 சென்னைக்குச் சென்று திரு. சரவண பவானந்தம் பிள்ளையவர்களைக் கண்டேன். தாம் பதிப்பிக்கவிருக்கும் தொல்காப்பியப் பொருளதிகாரம், இறையனார் அகப்பொருள் ஆகியவற்றுக்கு மெய்ப்பு gh®ப்பதற்குஇம்khjம்ரூ.30-cம்mL¤j மாதம் ரூ, 40உம் தர ஒப்புக் கொண்டார். 13-11-1915... கந்தசாமிக் கவிராயரும் அவர்தம் வக்கீல் சோ. பாரதியாரும் சாட்சியங்களுடன் வந்தனர். மகாம கோபாத்யாயர் உ. வே. சாமிநாத அய்யரும், மு. இராசு வையங்காரும் எனக்கெதிராகப் பல சொன்னார்கள்.... 18-11-1915 என் வக்கீல் விசுவநாத சாதிரி மு. இராக வையங்காரைக் குறுக்குக் கேள்விகள் கேட்டார். வக்கீலின் திறமையைக் கண்ட உ. வே. சாமிநாத அய்யர் சமரசம் செய்ய முன்வந்தார்... சமரசம் ஆயிற்று. 26-12-1915.... ரேனால்டின் அருமையான புதினம் Leila -it குமுதவல்லி என்னும் தமிழ்ப் புதினமாக மொழியாக்கம் செய்து வருகிறேன். 1916 2-1-1916 தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கும் திரு. வேதியப் பிள்ளையுடன் என்னைக் காண விரும்புவதாகத் திரு. வ.உ. சிதம்பரம் பிள்ளை அஞ்சலட்டை விடுத்தார். வரும் திங்கள் அல்லது புதன் கிழமையில் என்னைச் சந்திக்கலாம் என்று விடையிறுத்தேன். 5-1-1916 திரு.வ.உ. சிதம்பரம் பிள்ளையும், திரு. வேதியப் பிள்ளையும் என்னைக் காண வந்தனர். மே திங்களில் தென்னாப் பிரிக்காவில் நடக்கவிருக்கும் இந்து மாநாட்டுக்கு என்னைத் தலைமையேற்குமாறு திரு. வேதியப் பிள்ளை வேண்டினார். அரைமனத்துடன் ஒப்புக் கொண்டேன். 19-1-1916 என் மகள் நீலாம்பாளின் திருமணம் தொடர்பாக வ. திருவரங்கம் அவர்கட்கு மடல் விடுத்தேன்.... 24-1-1916.... இலக்கியம், தத்துவம் முதலானவற்றைப் பற்றித் திரு. ச. பவானந்தம் பிள்ளையுடன் நெடுநேரம் உரையாடினேன். 9-3-1916 ச. பவானந்தம் பிள்ளையவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவர் பதிப்பிக்கும் இறையனார் அகப்பொருளுரைக்கு ஆங்கில முன்னுரை எழுதி வருகிறேன்.... 26-3-1916... பண்டிதை கிருட்டிணவேணி அம்மாளும், அவர்தம் பெற்றோரும் ஆசிரியரும் என்னைக் காண வந்தனர். 29-3-1916... இராயப்பேட்டை திருவாளர் திரு.வி. கலியாண சுந்தர முதலியார் தம்முடைய தமிழ்ப் புலமைக்குச் சான்றிதழ் விரைவாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதி விடுத்தேன்... தமிழ்ப் பண்டிதர் வேலைக்கு முயன்று வருகின்றார்.... 22-4-1916 ... பண்டித சவரிராயப் பிள்ளையவர்களிட மிருந்து Tamilian Antiquary இதழ்கள் சில வந்தன.... அச்சகம் ஒன்று தொடங்குவது குறித்துத் திருவாளர் திரு. வி. உலகநாத முதலியாரவர்களுடன்* கலந்துரையாடினேன்: எல்லா வகை யான உதவியும் செய்வதாக வாக்களித்தார். 30-4-1916 பயாகோப் பார்ப்பதற்கென என் பிள்ளை களையும் என்னையும் தண்டபாணி அழைத்துச் சென்றார். மாலை 6.15க்குத் தொடங்கிய காட்சி 9.00 வரை தொடர்ந்தது ..... 5-8-1916 ... பிற்பகல் திருவாளர் திரு.வி. கலியாண சுந்தர முதலியாரும், திரு. நடேச முதலியாரும் வந்தனர்... தம் பெண் மகவு இறந்துவிட்டதென்று திரு.வி.க. கூறினார்; மனம் வருந்தினோம். 6-8-1916 இராயப்பேட்டை சென்று திருவாளர் திரு. வி. கலியாணசுந்தர முதலியாரின் மனைவிக்கு ஆறுதல் கூறினோம்.... 21-8-1916 தமிழ் மொழியையும் சமயத்தையும் பரப்பு வதற்குச் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிப் பவானந்தம் பிள்ளையவர்களுடன் நெடுநேரம் உரையாடினேன்... 30-8-1916 .... மகாபாரதப் போர் நடந்த காலத்தை அறுதியிட்டுக் கூறுவதற்கெனப் பல நூல்களைப் படித்து வருகிறேன். பாலகங்காதர திலகர் தம்முடைய ‘Article Home in the Vedas’ நூலில் குறிப்பிடும் காலமே பொருத்தமானது என்றெனக்குத் தோன்றுகிறது... 1917 17-1-1917.... திரு. சச்சிதானந்தம் பிள்ளை வந்தார். எனது சிவஞானபோத ஆராய்ச்சியுரையை ஆங்கிலத்தில் பெயர்த்துத் தர ஒப்புக்கொண்டார். 28-2-1917.... பாளையங்கோட்டை .இளைஞர் சிலர் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். பாளையங் கோட்டை சிவன் கோயிலில் நான் பேசுவேன் என்று துண்டறிக் கைகள் பரப்பப்படுகின்றன. என் அருமை வ. திருவரங்கத்தின் இளவல் வ. சுப்பையா இதில் முன்னிற்கின்றார்.... 2-3-1917 வ. சுப்பையாவின் அழைப்புக்கிணங்க அவர் தம் இல்லம் போந்து உணவருந்தினேன்.... 17-3-1917 மதுரை... அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரிய ராக இருக்கும் என் மாணவர் திரு. சோமசுந்தரம் பிள்ளை வந்தார். நேற்று நான் ஆற்றிய உரையைச் சுருக்கமாக ஆங்கிலத்தில் எழுதி, பார்ப்பனரல்லாதாரின் இதழான ஜடிசுக்கு அனுப்பி வைத்தார்.... 4-4-1917.... தம் மாமனார் ஆபிரகாம் பண்டிதரின் தமிழிசை பற்றிய நூலைக் குறித்து என் கருத்தை அறிய தஞ்சை ஞான சிகாமணி வந்தார். தமிழில் என் கருத்தை எழுதித் தந்தேன். 30-4-1917 உடன்பிறந்தார் ஒற்றுமை எனும் துண்டறிக் கையை எழுதி முடித்து அச்சுக்குக் கொடுத்தேன். 5-5-1917... போர் காரணமாக நூல்களின் விலை மிகுந்து விட்டது. 23-5-1917 கொழும்பு வந்தடைந்தேன்.... கொழும்பு சமரச சன்மார்க்க சங்கத்தினரும், என்னருமை வ. திருவரங்கமும் அன்புடன் வரவேற்றனர்... 25-5-1917... யாழ் தமிழர் பலர் என்னைக் காண வந்தனர். அவர்களுட் சிலர் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் என் மாணவராக இருந்தோர் ஆவர்.... 3-6-1917... யாழ்ப்பாணத் தமிழ்ப் பண்டிதர்கள் சிலர், பொறாமை காரணமாக என்மேல் மாசு கற்பிக்க முயல் கின்றனர்; மனிதரின் பொதுநலம் கருதாமல் தந்நலம் மிக்கோராகவும் குறுகிய மனப்பான்மையினராகவும் உள்ளனர். இடைக்காலச் சிற்றிலக்கியத்தில் மட்டுமே இவர்கட்குப் புலமை உண்டு. 21-6-1917 எனது பெரியபுராண உரை விளம்பரத்துக்கு வந்த மறுப்பைக் கண்டித்து நான் சொல்லியவற்றை திரு. கனகராயர் எழுதிக் கொண்டார்... 10-7-1917 திரு. ஜெயதிலகா பௌத்த கோயில் சிலவற்றுக்கு என்னை அழைத்துச் சென்றார். பாலி, வடமொழிகளில் மாணவர் சிலர் படித்துக்கொண்டிருந்தனர். மலைப்பை உண்டாக்கும் அழகிய பௌத்த சிலைகள் அங்கிருந்தன. சுவரோ வியங்கள் சிறப்பாக இருந்தன. மன அமைதி தரும் சூழல் நிலவியது. இத்தகைய கோயில்கள் சைவர்க்கும் வேண்டும் என்பதென் விழைவு,,, 14-7-1917.... சிவஞானபோதத்தின் தோற்றம் பற்றி ஆங்கிலத்தில் எழுதி முடித்தேன். தம் பெயரில் வெளியிடுவதற் கெனத் திரு. கனகராயர் அதனைப் படியெடுத்துச் சென்றார். 5-9-1917 இசைத் தமிழைப் பற்றிய தமது பெருநூலை இராவ்சாகிபு ஆபிரகாம் பண்டிதர் அனுப்பி வைத்தார்... 13-9-1917... தமிழ்ப் பார்ப்பனரல்லாதாரின் நலனைக் காக்கும் பொருட்டுப் புதிதாகத் தொடங்கப் பெற்றிருக்கும் திராவிடன் இதழின் நேற்றைய பதிப்பில் சிறுதேவதைகட்கு உயிர்ப் பலியிடலாமா எனும் என் கட்டுரை வெளிவந்தது. 14-9-1917 கொழும்புச் சிறையில் இருக்கும் சங்கர நாராயணப் பிள்ளை என்பாரின் உருக்கமான வேண்டுதலுக் கிணங்க ஞான சாகரம் ஏழாம் தொகுதியை இலவசமாக பதிவஞ்சலில் விடுத்தேன். இறைவன் திருவருளால் என் எழுத்துக்களை அம் மனிதன் படித்து, சமுதாயத்துக்கு பயன் படும் வகையில் திருந்தட்டும்... 25-9-1917... திராவிடனின் நேற்றைய இதழில் என் உடன் பிறந்தார் ஒற்றுமை வெளிவந்தது.... 14-11-1917.... துணை ஆட்சித்தலைவர் (Deputy Collector) கேட்டுக் கொண்டபடி இன்று பிற்பகல் போர் நிதியக் கூட்டத்தில் கலந்துகொண்டு, அரசாங்கத்துக்கு நாமனை வரும் உதவ வேண்டியதன் தேவையை வலியுறுத்தி பேசினேன். 21-11-1917.... என் மாணவர் திரு. வையாபுரிப் பிள்ளை பல சுவடிகளுடன் ஒப்புநோக்கித் தம் கலித்தொகை நூலில் செய்த திருத்தங்களை என் படியிலும் குறித்துக் கொண்டேன். 23-11-1917... திரு. வையாபுரிப் பிள்ளையின் கலித் தொகையைத் திருநெல்வேலி சி. வீரவாகு பிள்ளைக்குப் பதிவு நூலஞ்சலில் விடுத்தேன்.... 1918 10-1-1918... அரசாங்கத்துக்கு இலங்கையாரின் விண்ணப் பத்தை மொழிபெயர்த்து முடித்தேன். எளிய, அழகிய, தூய்மையான தமிழில் அதனை அமைக்கப் பெருமுயற்சி எடுத்துள்ளேன். இனிய, மிகத் தூய்மையான தமிழில் எழுதுவது எனக்குப் பெரும் இன்பத்தை அளிக்கின்றது. 17-1-1918... அருள்திரு கலியாணசுந்தர யதீந்தரர் என்னைக் காண வந்தார். 18-1-1918.... ஞானசாகரம் எட்டாம் தொகுதிக்குத் கையொப்பதாரரின் புதிய பட்டியலை அணியம் செய்தேன். இன்றுவரை 150 பேர் மட்டுமே கையொப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். சைவ சித்தாந்தத்தையும் தமிழ் மொழி யையும் பரப்புவதற்கென ஓராயிரம் கையொப்பதாரரை யேனும் ஈசன் அருளட்டும். 12-3-1918.... தமிழைச் செம்மொழியாக (Classical Language) ஏற்றுக் கொள்ளல் வேண்டும் என்று அரசாங் கத்துக்கு விண்ணப்பம் விடுப்பதற்கென பச்சையப்பன் கல்லூரி யில் 15-ஆம் நாள் நடக்கவிருக்கும் கூட்டத்தில் என்னை உரை யாற்றுமாறு திரு. கா. சுப்பிரமணியபிள்ளை,எம்..V., எம்.எல். வேண்டினார். 17-3-1918 சென்னை நகரம் மிக மோசமானதாக ஆகி விட்டது. கொசுக்கடியும், சாக்கடை நாற்றமும் வெள்ளிக் கிழமையன்று என்னை உறங்கவிடவில்லை... 20-3-1918 .... வியாபாரக் கூட்டுறவு எனும் துண்டறிக்கையை எழுதத் தொடங்கினேன்.... 3-4-1918... கடந்த 31/2ஆண்டகஐரப்பாவில்நடந்துவரும் பேரழிவுமிக்க போர் சென்றபத்து நாளில்மேலும்தீவிர மடைந்துள்ளதுஎன்று அறிந்nதன்.கிறித்துவின்சமயம் முழுத் தோல்வியடைந்துள்ளது! 18-4-1918.... தமிழ்த்தாய் எனும் துண்டறிக்கை எழுதி முடித்தேன். 20-4-1918 ... பிற்பகலில் திரு. சேதுப் பிள்ளை என்னைக் காண வந்தார். இணையமுடியாத வகையில் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்திருக்கும் தமிழ் மக்களுக்குப் புத்துயிர் அளிப்பது எங்ஙனம் என்பது பற்றி நெடுநேரம் உரையாடினோம்... 31-7-1918... தம்மைக் காண வருமாறு திரு ஆபிரகாம் பண்டிதர் அறிவித்தார். அவர் ஏன் என்னை வந்து சந்திக்கக் கூடாது? அவர் செல்வராயிருக்கலாம்; நான் அறிவுச் செல்வம் மிகவுடையேன். எனவே அவரைச் சென்று காண மறுத்தேன்.... 24-8-1918 ... பலர் என்னைக் காண வந்தனர். சாதி வேற்றுமை பாராட்டாமல், கீழ்நிலை மக்களுக்கும் கல்வி புகட்டி, அவர்களை மேல் சாதியினர் எனும் நிலைக்குக் கொண்டுவர வேண்டியதன் தேவை, முதன்மை ஆகியனபற்றி நெடுநேரம் பேசினேன். 28-8-1918 (குலசேகரப்பட்டினம்)... என் முன்னாள் மாணவர் திரு. அறம்வளர்த்த நாத பிள்ளையின் மேற்பார்வையில் நடக்கும் இடைநிலைப் பள்ளிக்குச் சென்றேன். பிள்ளைகட்குக் கற்பிக்கும் முறை பாராட்டத் தக்கதாக உள்ளது... 2-9-1918... தமிழைச் செம்மொழியாக ஏற்க வேண்டும் என்ற சைவ மாநாட்டுத் தீர்மானத்துக்குக் கையொப்பமிட்டு சென்னையின் மேதகு ஆளுநர்க்கு அனுப்பி வைத்தேன். 3-9-1918... தேவகலைஞன் ஷெல்லியின் ‘Rosalind and Helen’ எனும் துயரக் கவிதையைப் படித்து முடித்தேன். அஃது என் மனத்தைத் தொட்டது; கவிஞனின் உணர்வுகள் என் உள்ளத்திலும் தோன்றின.எனக்கு ஏற்பட்டாற் போன்ற அதே துயர உணர்வுகளை ஷெல்லியும் வெளியிட்டான் போலும். என் அநுபவங்களை விவரித்து இத்தகைய பாடல் ஒன்று எழுத எண்ணியுள்ளேன். 6-9-1918 குலசேகரப்பட்டினம். புறாக்களும், கிளிகளும், குயில்களும், சப்பாத்திக் கள்ளிச் செடிகளும் பனை மரங்களும் ஏராளமாக உள்ளன. நகரம் முழுவதும் கடற்கரை மணல் பரந்துள்ளது. ஒரு காலத்தில் இந்நகரம் கடலடியில் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. 26-9-1918 பாளையங்கோட்டை திராவிட இளைஞர் கழகத்தில் பழந்தமிழர் நாகரிகம் பற்றிப் பேசினேன்.... 4-10-1918 என் மூத்த மகள் சிந்தாமணி மகப்பேற்றுக் காலத்தில் மறைந்தாள். 6-10-1918 எங்கும் கடுமையான பஞ்சம் நிலவுகிறது. புதுவகையான காய்ச்சல் கண்டு பலர் இறந்து வருகின்றனர்; மனித இனத்தை எம்பெருமான் காக்க! 28-10-1918 எங்கும் உணவுப் பற்றாக் குறையாக உள்ளது; இப் பகுதியில் மழையே இல்லை; காய்ச்சல் பலரைக் கொண்டு செல்கின்றது. 29-10-1918 திருநெல்வேலி சைவர்கள் மிக நல்லவர்கள். தமிழ், சித்தாந்த அறிஞர்களிடம் அவர்களுக்கு இயல்பாகவே மதிப்பு இருக்கிறது. 29-12-1918 அட்டாவதானம் கலியாணசுந்தர யதீந்தரர் நேற்றிரவு மறைந்தார் எனும் துயரச் செய்தி அறிந்தேன். 1919 27-1-1919 இறைவன் அருளால் ரேனால்டின் புகழ் பெற்ற ஆங்கிலப் புதினம் LeilaÉ‹ இரண்டாம் பகுதியை மொழி பெயர்த்து முடித்தேன். இது கடினமான வேலையாக இருந்த போதும் என் அருமைத் தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் முகமாக இவ்வுயரிய நூலைப் பெயர்த்தேன். இந்நூலை முழுமையாகப் பெயர்க்க வேண்டும் என்ற அவா எனக்குள்ளது. 29-1-1919 கொழும்பு சர்.பி. அருணாசலம், வோர்ட்சு வர்த்தின் Education of Nature எனும் கவிதையைத் தமிழில் பெயர்த்து, அதனைத் திருத்தித் தருமாறு எனக்கு விடுத் திருந்தார். மொழி பெயர்ப்பு நன்றாக இல்லாமை கண்டு நானே அதனை மீண்டும் பெயர்த்து அவர்க்கு அனுப்பினேன். 28-2-1919 மூன்றாம் பதிப்புக்குரிய முறையில் எனது முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரையைத் திருத்தத் தொடங் கினேன். 3-3-1919 குன்னூர் சிவத்யானந்தரிடமிருந்து Social Reform Advocate இரண்டாம் தொகுதி வரப்பெற்றேன். நடைமுறை சமூகச் சீர்திருத்தம் பற்றிய அவர் கட்டுரையைப் படித்தேன்; அவர் தம் கருத்துகள் எனக்கு ஏற்புடையனவாக இருக்கக் கண்டேன். சைவர், அசைவர் என்ற பிரிவைத் தவிர வேறு பிரிவுகள் கூடா என்று நானும் எண்ணுகிறேன்; மரக்கறி உண்போரின் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டும். 19-3-1919 என் இளமைக் காலப் பாடல் திருவொற்றி முருகன் மும்மணிக் கோவைக்கு உரையெழுதும் திரு. முத்து சாமிப் பிள்ளைக்கு, அப் பாடலில் பயின்றுவரும் சில சொற்கள், வாக்கியங்கள் ஆகியவற்றைத் தெளிவுபடுத்த இணங்கி அவர்க்கு மடல் விடுத்தேன்... தமிழில் பிறமொழிக் கலப்பு எனும் கட்டுரை எழுதத் தொடங்கினேன். 20-4-1919 tl ïªâahÉÈUªJ âL¡»L« brŒâ.* இந்திய அரசாங்கம் தேவையில்லாமல் மக்களை ஒடுக்கியும், அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்றும் வன் முறையைத் தூண்டுகிறது. 25-4-1919 வடஇந்தியா பெருந்தொல்லையில் அகப்பட் டுள்ளது. பூனை, நாய்களைப்போல் மக்களை அரசாங்கம் கொன்று வருகிறது. எல்லாம்வல்ல ஈசன் இத் தொல்லை களிலிருந்து நம்மை விடுவித்து, அமைதியும் பொதுநலச் சிந்தனையும் அருளட்டும். 30-4-1919 திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை, எம்.ஏ. எம்.எல்,. என்னைக் காண வந்தார். சிவஞான சுவாமிகள் குரு பூசை நிமித்தம் விக்கிரமசிங்கபுரம் சென்று உரையாற்ற வேண்டினார்; நான் இணங்கவில்லை. 25-6-1919 கனகசபையின் 1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், லாசரசின் தமிழ்ப் பழமொழிகள் ஆகியவற்றைத் திருவரங்கம் அவர்கள் எனக்கென வாங்கி வந்தார். 10-11-1919 தமிழ் ஒலியியலைப் பற்றி எழுதுவதற்கென கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணமும், சீனிவாச அய்யங்காரின் தமிழ் ஆய்வுகளும் படித்து வருகின் றேன். 11-11-1919 சீனிவாச அய்யங்காரின் ‘Tamil Studies’ நூலில் தமிழ் எழுத்தைப் பற்றிய பிரிவைப் படித்தேன்; அவர்தம் கருத்துகள் என் கருத்துகளுடன் ஒத்துப் போகின்றன. 1920 3-1-1920 காஞ்சி நாகலிங்க முதலியாரவர்கள் என்னைக் காண வந்தார்; தாம் தொடங்கவிருக்கும் செங்குந்தர் எனும் இதழுக்குத் தலையங்கம் எழுதுமாறு வேண்டினார்; நான் இணங்கினேன். 15-1-1920 தமிழ் ஒலியியல் பற்றி மாணிக்க நாய்க்கரவர்கள் நாளை பேசவிருக்கும் கூட்டத்துக்கு என்னைத் தலைமையேற்க வேண்டி, திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை, எம்.ஏ, எம்.எல், அவர்களின் மடலுடன் திரு. இராமசாமி இன்று விடியற்காலை வந்தார். நான் இணங்கினேன். 16-1-1920 மாநிலக் கல்லூரிக்குச் சென்று, தொல்காப்பியத் திலிருந்து தாம் புதிதாகக் கண்டுபிடித்துள்ள தமிழ் ஒலியியல் முறை பற்றிய மாணிக்க நாய்க்கரவர்களின் சொற்பொழிவுக் கூட்டத்துக்குத் தலைமையேற்றேன். அவர் ஒரு பேரறிஞர். அவர்தம் உரை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்தது. 17-1-1920 நேற்றைய கூட்டத்தில் நான் தூய தமிழில் பேசினேன். பின்னர் மாணிக்க நாய்க்கரவர்களுடன் நெடுநேரம் உரையாடினேன். என் ஒத்துழைப்புக் கிடைக்குமாயின் அறிவுலகத்தைத் தம்வயப்படுத்திவிட முடியும் என்று அவர் கூறினார். 17-2-1920 Bombay Humanitarian Leage வெளியிடும் The Indian Humanitarian சனவரி இதழில் Man in Nature’s Kingdom எனும் என் கட்டுரை, என் ஒளிப்படத்துடன் வெளிவந்தது. 8-4-1920 மதுரைநாயகம் பிள்ளை மறைந்தார் எனும் செய்தியை அவர்தம் மைந்தரின் மடல் வாயிலாக அறிந்தேன். அவர் என் இளமைக் கால நண்பர்; என் சிந்தனையை உருவாக் கியதோடு ஒழுக்க நெறியிலும் சைவ சித்தாந்த வழியிலும் என்னை ஆற்றுப்படுத்தினார். 7-6-1920 என் கடைசி மகளை அவர்தம் பள்ளியில் சேர்த்துக் கொள்ள இயலுமா என வினவி சுப்புலட்சுமி அவர் கட்கு மடல் விடுத்தேன். 11-7-1920 தம் இந்து விடுதியில் என் மகளைச் சேர்த்துக் கொள்ள இணங்கி சுப்புலட்சுமி அம்மாள் எழுதிய கடிதம் வரப் பெற்றேன். 12-7-1920 திருவல்லிக்கேணி கடற்கரைக்கு அருகே இருக்கும் ஐசுஅவுசு சென்று சுப்புலட்சுமி அம்மாளைக் கண்டேன். என் மகளைச் சேர்த்துக் கொள்வது பற்றி இந்துப் பெண்கள் பள்ளிக் கண்காணிப்பாளரிடம் பேசுவதாகக் கூறினார். 23-8-1920 தம் தந்தையார் ஜே.எம். நல்லசாமிப் பிள்ளை மறைந்த செய்தியை அறிவித்த அவர்தம் மைந்தர் ஜே.என். இராமநாதனுக்கு இரங்கற் கடிதம் விடுத்தேன். 1-9-1920 திருவல்லிக்கேணி அரசாங்கப் பெண்கள் பள்ளியில் நீலாவைச் சேர்த்தேன். நீலா தங்கியிருக்கும் இந்து விடுதிக்குக் கிட்டிணவேணி அம்மாள் கண்காணிப்பாளராக அமர்த்தப்பட்டமை எங்கள் நல்லூழ் என்றே சொல்ல வேண்டும். நீலாவின் நலத்தில் சுப்புலட்சுமி அம்மாள் சிறப்பு அக்கறை காட்டினார். திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர்களுடன் நெடுநேரம் உரையாடினேன். 5-12-1920 ஆனந்த போதினி உரிமையாளர் திரு. முனுசாமி முதலியார் முற்பகலில் என்னைக் காண வந்தார். 8-12-1920 தம் மாகாணத்தில் மகாத்மா காந்தி அவர்கள் ஒரு இந்துப் பல்கலைக்கழகம் அமைத்திருக்கிறார். அவர் தம் பெரு முயற்சி வெற்றி பெறுவதாக! 1921 8-1-1921 சென்ற நாக்பூர் காங்கிர மாநாட்டில் திரு. விசயராகவாச்சாரியார் ஆற்றிய தலைமையுரையைப் படித்தேன். அருமையான அவ்வுரை, ஒத்துழையாமை பற்றி நான் கொண்டுள்ள கருத்துகளை எதிரொலிக்கிறது. திரு. காந்தியின் பல கருத்துகள் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதவை. 10-1-1921 டர்பன் திரு. சி. விருத்தாசலம் பிள்ளைக்கு என் நூல்களை அனுப்பி வைத்தேன். 11-1-1921 காங்கிர மாநாட்டு உரைகளைப் படித்தேன். 26-1-1921 அகலிகை வெண்பா வரப்பெற்றமை குறித்துத் திரு. வெ.ப. சுப்பிரமணிய முதலியார்க்கு மடல் விடுத்தேன். 11-2-1921 வட இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கம் வலுவாக உள்ளது. கல்கத்தா மாணவர் பெரும்பாலானோர் கல்லூரிகளை விட்டு வெளியேறி விட்டனர். மகாத்மா காந்தியும், திரு. சி.ஆர் தாசும் அருமையான வேலை செய்து வருகின்றனர். திரு. சி.ஆர். தாசு பெருந் தியாகம் செய்துள்ளார். ஈசன் இருவர்க்கும் அருளட்டும்! தென்னாடு செயலற்று உள்ளது. 12-4-1921 திராவிடனுக்கு மீண்டும் ஆசிரியராக அமர்த்தப் பட்டதை வாழ்த்தி திரு. பக்தவத்சலம் அவர்கட்கு மடல் விடுத்தேன். 22-5-1921 ஞானசாகரம் 9ஆம் தொகுதியின் கடைசி மூன்று இதழுக்குள் முடித்துவிட வேண்டுமென்று கோகிலாம்பாள் கடிதங்களை நாளும் எழுதி வருகிறேன். 22-6-1921 அரசாங்கம் தானாக முன்வந்து அழைத்தால் இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர் பொறுப்பை ஏற்றுக் கொள்வேன் என்று கொழும்பு வேலுப் பிள்ளையவர் கட்கு மடல் விடுத்தேன். 28-6-1921 திருக்கழுக்குன்றம் ... வழக்கம் போல் இரண்டு கழுகுகள் வந்தன. பண்டாரம் அவற்றுக்கு உணவளித்தார். பின்னர்அவை பறந்து சென்றன. இத்தனை ஆண்டுகளாக இதே கழுகுகள் நாளும் வருவதென்பது இறையருளேயாம்! 5-7-1921 யாழ்ப்பாணம் கனகராயரிடமிருந்து ஊக்கந் தரும் கடிதம் வந்தது. 13-9-1921 மலபார், சென்னை, வட மாகாணங்கள் ஆகிய இடங்களில் நிலவும் குழப்ப நிலை எனக்குத் துன்பத்தைத் தருகின்றது. gŠrk®¡F«, ãw rhâ ïªJ¡fS¡F« ïilna Ãyî« gifikí«, kygh® kh¥ãŸiskhÇ‹ Ó‰wK« tUªj‰FÇad.* ஈசன் அருளட்டும்! 24-12-1921 கீரிமலை, யாழ்ப்பாணம்... யாழ்ப்பாணத்தைச் சுற்றியுள்ள சிற்றூர்கள் அருமையாக உள்ளன. வீடுகள் அருகருகே உள்ளன. ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும், முழுக் குடும்பத்தைப் புரக்கும் அளவுக்குத் தென்னை, பனை மரங்கள் உள்ளன. ஏழைகள் மிகக் குறைவு. அனைவரும் நல்ல உழைப் பாளிகள். தூய, அழகிய தமிழை அவர்கள் பேசினாலும், ஒலிப்பு முறை நன்றாயில்லாமல், தெளிவற்றதாக உள்ளது. கைம்பெண் களுக்கு எளிதில் திருமணம் நடக்கிறது. கணவனுக்கும் மனைவிக்குமுள்ள உறவு நெகிழ்ந்து காணக் கிடக்கின்றது. அவர்கள் திருமணமுறிவு பெற்று மறுமணம் செய்து கொள்ளலாம். இது ஒரு நல்லமுறை. பெண்கள் விடுதலையாய் உள்ளனர். 26-12-1921 பண்டித நவநீதகிருட்டிண பாரதி தமது தமிழ்ப் பாடல்களைக் காட்டி, அவற்றுக்குச் சாற்றுக்கவி தருமாறு வேண்டினார். அவை கடினமான செய்யுளாக இருக்கின்றன வேயன்றி, கலையழகு சிறிதும் இல்லை. எனவே, சாற்றுக்கவி எழுதித் தர மறுத்தேன். 1923 5-1-1923 என் நூல்களை அச்சிடுவதற்கு உதவியாக டாக்டர் (ஆனந்த) குமாரசாமி அவர்கள் ரூ.100உம், திரு. சி. அரியநாயகம் ரூ.200உம் சில நாளுக்கு முன்னர் அனுப்பினர். என் ஆழ்ந்த நன்றியை வெளியிட்டு அவர்கட்கு மடல் விடுத்தேன். 12-1-1923 என்னுடைய மனிதவசியம் நூலில் உள்ள வடமொழிச் சொற்களை நீக்கித் தூய தமிழ்ச் சொற்களைப் பெய்தேன். 2-2-1923 ஒரு புதுநூலை வாங்கும் போது இறைவன் அருளைப் பெற்றாற்போன்ற சொல்லொணா இன்பம் அடைகின்றேன். 20-2-1923 மெய்கண்டான் எனும் திங்களிதழில், எனது திருவாசகவுரையை ஆதரித்தும், என் கருத்துகளைக் கண்டிக் காமல் தனிப்பட்ட முறையில் என்னை வசைபாடிய ஒருவரைக் கண்டித்தும் என் நண்பரொருவர் எழுதியுள்ளார். ஈசன் அவர்க்கு அருளட்டும்! 21-3-1923 பெரியபுராண இடைச் செருகல்களைப் பற்றிய என் கட்டுரைக்கு வந்த கண்டனத்துக்கு மறுப்பு எழுதி வருகிறேன். 23-4-1923 என் மகள் நீலா எழுதிய தனித்தமிழ்ப் பாது காப்பு எனும் கட்டுரையைத் திராவிடனுக்கு விடுத்தேன். 1-7-1923 மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் தொடர்ந்து எழுதி வருகிறேன். 7-7-1923 யாழ்ப்பாணம் தேசாபிமானி இதழுக்குச் சமயங் களுங்-கொல்லாமையும் புலாலுண்ணாமையும் எனும் கட்டுரை அனுப்பி வைத்தேன். 6-8-1923 ntshs® N¤âunuba‹W«, jhK« j« rhâ ÆdUnk itáa® v‹W« vGâa ‘jditáa CÊaÅ’‹ MáÇa® T‰iw kW¤J ‘ntshs® ah®? எனும் கட்டுரை எழுதி வருகிறேன். 26-8-1923 வேளாளரைப் பற்றிய என் கட்டுரையின் ஒரு பகுதி நேற்றைய திராவிடனில் வெளிவந்தது. 13-9-1923 கண்டனம் ஒன்றுக்கு மறுப்பு எழுதி வருகிறேன். இவ்வகைத் தொல்லை என் வேலைக்குத் தடையாகவுள்ளது. 21-10-1923 தேவாரப் பாடல்களை இசைத்தட்டில் கேட்டு மகிழ்ந்தோம். 6-12-1923 செந்தமிழ்ச் செல்வியில் திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை எழுதியுள்ள திருநான்மறை விளக்கம் கட்டுரை படித்தேன்; அவர்தம் கருத்துகள் என்றன் கருத்துகளுடன் ஒத்துப் போகின்றன. 1924 2-1-1924 Gilbert Slaterï‹ ‘The Dravidian Element in Indian Culture’ எனும் புதிய நூலைப் படித்து வருகிறேன். சென்ற 22 ஆண்டாக நான் சொல்லிவரும் கருத்துகளை நூலாசிரியர் எதிரொலிக்கிறார். 5-1-1924 தமிழ் நடை பற்றிய தமிழகம் இதழ்த் துணை யாசிரியரின் தவறான கோட்பாட்டை மறுத்து நீலாவுக்காகக் கட்டுரை எழுதி வருகிறேன். 12-1-1924 நேற்றைய திராவிடன் இதழ் வாயிலாக, என் புரவலர் கொழும்பு சர்.பி. அருணாசலம் அவர்கள் மறைந்த செய்தி அறிந்தேன். இச் செய்தி திடீரென வந்து என்னைத் தாக்கிற்று. நெகிழ்ந்த மனத்தோடும் நீர் பெருகும் கண்களோடும் இக் குறிப்பை எழுதுகின்றேன். தமிழாய்ந்த புரவலரையும், உண்மை நண்பரையும் நான் இழந்தேன். 14-1-1924 வேளிர் வரலாறு படித்து முடித்தேன். பல வரலாற்றுச் செய்திகள் நிரம்பியுள்ளதெனினும், கருதுகோள் களும் முடிவுகளும் பொருளில்லாமலும் சான்றுகளின்றியும் உள்ளன. 22-1-1924 சோழப் பெருமன்னன் கரிகாலனின் காலத்தை உறுதி செய்வதற்கென இன்று முழுவதும் ஆய்ந்து கொண்டிருந் தேன். 20 ஆண்டுக்கு முன் நான் எழுதிய திருக்குறள் ஆராய்ச்சி யுரையில் குறித்தவாறே கி.மு. முதல் நூற்றாண் டென்று முடிவு செய்தேன். ஈசன் அருளால், என் இளமை யிலிருந்து செய்துவரும் இலக்கிய எழுத்துகளில் பிழை நேராமல் இருந்து வருகின்றது. அடிப்படைச் செய்திகள் எவற்றிலும் மாற்றம் செய்யவேண்டிய தேவை ஏற்படவில்லை என்பதுடன் காலம் செல்லச் செல்லப் புதிய உண்மைகள் அவற்றுக்கு வலிமையே சேர்க்கின்றன. 5-2-1924 இந்து இதழில், தமிழர் சமயத்தைப் பழித்து எழுதிய திரு.வி.வி. இரமணனின் கட்டுரைகளைத் திரு. கா. சுப்பிர மணியப் பிள்ளை அனுப்பி வைத்தார். 3-3-1924 இன்றைய திராவிடன் இதழில் வேளாளர் யாவர் நூலுக்கு நன்மதிப்புரை வெளிவந்தது. 22-3-1924 திராவிடனின் தலைமை ஆசிரியர் திரு. ஏ. சண்முகம் பிள்ளை 3:00 மணிக்கு வந்தார். 5:00 மணி வரை உரையாடிக் கொண்டிருந்தோம். 13-4-1924 சட்டக் கல்லூரிப் பேராசிரியர் திரு. பாலகிருட்டிணப் பிள்ளை என்னைக் காணவந்தார். ஆங்கிலக் கவிஞர், உரைவாணர் சிலருடைய படைப்புகளின் தமிழாக்கமான பருந்தும் நிழலும் எனும் நூலை என் மதிப்புரைக்காகக் கொடுத்தார். 4-6-1924 செந்தமிழ் 15ஆம் தொகுதியின் மூன்றாம் சங்கம் பற்றிய சங்கர அய்யரின் கருத்தாழமிக்க கட்டுரையையும் டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்காரின் ‘Some Contributions of South India to Indian Culture’ நூலையும் படித்து வருகிறேன். 5-6-1924 சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசி ரியர் டாக்டர் எ. கிருஷ்ணசாமி அய்யங்காருக்கு ஒரு நெடு மடல் பதிலாக விடுத்தேன்; பார்ப்பனரைப் பற்றி சைவ சமயக் குரவரின் எண்ணங்களையும் அவர்தம் சிந்தனை, செயல் ஆகியன பற்றியும், சைவ வைணவம் ஆகியவற்றுக்கிடையே யான அடிப்படை வேறுபாடுகளையும் விளக்கி அவருக்கு எழுதினேன். 6-6-1924 டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் கேட்டுக் கொண்டபடி மாணிக்கவாசகர் வரலாறு என்ற எனது புதிய நூலையும் சைவசித்தாந்த ஞானபோதம் நூலையும் என் மகன் திருநாவுக்கரசு மூலமாக அனுப்பி வைத்தேன். 4-7-1924 எனது மாணிக்கவாசகர் வரலாறு நூலை படித்து மகிழ்ந்த தாகவும், அதற்கு ஒரு முன்னுரையைத் தாம் எழுதக்கூடும் என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் மடல் விடுத்திருந்தார். அவ்வாறு அவர் எழுதவிருக்கும் முன்னு ரையில், தனித்தமிழை வளர்த்து, வளப்படுத்துவதன் தேவையை வலியுறுத்தி எழுதுமாறு வேண்டி அவர்க்கு பதில் விடுத்தேன். 24-7-1924 துயரச் செய்தி. தென்னிந்தியா முழுவதையும் வெள்ளம் அடித்துச் சென்று விட்டது. 19-8-1924 இரவீந்தரர் தம் கவிதைகளை இசை நயத்துடன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருப்பது படிப்பதற்கு மிக இனிமையாக இருக்கின்றது. cŸsl¡f¤ijÉl mt®j« M§»y eilna Ritahf ïU¡»‹wJ.* 3-9-1924 இரண்டாம் வரகுண பாண்டியனின் கல்வெட் டைப் படிப்பதற்கென கன்னிமாரா நூலகம் சென்றேன். 24-9-1924 தூத்துக்குடி செகவீரபாண்டியனார் கேட்டுக் கொண்டபடி அவர்தம் திருக்குறட் குமரேச வெண்பா வுக்குக் கருத்துரை எழுதி விடுத்தேன். 10-10-1924 பாம்பன் சுவாமிகளின் நாலாயிரப் பிரபந்த விசாரம் படித்து வருகிறேன். என் குரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரின் வழியில் நுணுகி ஆராய்ந்து, இந் நூல் எழுதப் பட்டுள்ளது. 15-10-1924 கீழைத்தேய மாநாட்டுக்கென The Conception of God as Rudra எனும் பொழிவு எழுதத் தொடங்கினேன். பேச்சுக்குரிய பொருளாக இதனை எடுத்துக் கொள்வதற்கு டாக்டர் எ. கிருஷ்ணசாமி அய்யங்கார் இணங்கினார். 23-12-1924 கீழைத்தேய மாநாட்டில் என் கட்டுரைக்காகப் பொன்னாடை போர்த்தப்படும் என்று அறிவிக்கும் திரு. சாதிரியின் கடிதம் மிகத் தாமதமாக வந்தது. 27-12-1924 அனைந்திந்திய கீழைத்தேய மாநாட்டுக்கு என்னை அழைக்காதிருந்தமைக்குக் காரணம் கூறிய பின்னரே அவரைச் சென்று காணமுடியும் என்று டாக்டர் எ. கிருஷ்ணசாமி அய்யங்காருக்குப் பதில் விடுத்தேன். 1925 3-1-1925 எனக்கு அழைப்பிதழ் வராமைக்கான காரணத்தை விளக்கி டாக்டர் எ. கிருஷ்ணசாமி அய்யங்கார் மடல் எழுதியிருந்தார். 5-1-1925 விசையுந்தில் மயிலாப்பூர் சென்றேன். டாக்டர் எ. கிருஷ்ணசாமி அய்யங்கார் என்னை வரவேற்றார். கடவுளின் தாயும் தந்தையுமான நிலை, சிவலிங்கம் ஆகியன பற்றி நெடு நேரம் உரையாடினோம். என் வாதத்தில் உள்ள வன்மையை அவர் ஏற்றுக் கொண்டார். அனைத்திந்திய கீழைத்தேய மாநாட்டினர் வழங்கிய பொன்னாடையை அவர் என்னிடம் ஒப்படைத்தார். 18-1-1925 இலங்கையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் தேர்வுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளதால், சிந்தனைக் கட்டுரைகள் நூலை இரண்டாம் பதிப்புக்கெனத் திருத்தத் தொடங்கினேன். 19-3-1925 இறைவன் அருளால் நீலாவின் தனித் தமிழ்க் கட்டுரைகள் நூலின் முதற்படிவம் 1000 படி அச்சாயின. 23-4-1925 தமிழில் வடமொழி கலத்தல் ஆகாது எனும் நீலாவின் கட்டுரையைத் திராவிடன், தமிழ்நாடு இதழ்கட்கு அனுப்பினேன். 25-4-1925 தமிழ்நாடு வார இதழில் நீலாவின் கட்டுரையை வெளியிடுவதன் தொடர்பில், டாக்டர் பி. வரதராசுலு நாயுடுவைக் காண என் மூன்றாம் மகன் சென்றான்; எம் கட்டுரைகட்கு ஊதியம் வழங்க அவர் இணங்கினார். 26-4-1925 நேற்றைய திராவிடனில் நீலாவின் கட்டுரை வெளி வந்தது. ஆனால், அச்சுப் பிழைகள் மிகுதி. எனவே, அதன் ஆசிரியர் கண்ணப்பர்க்கு மடல் விடுத்தேன். 30-4-1925 பார்ப்பனரல்லாதாரின் பெருந்தலைவர் சர். பி. தியாகராய செட்டியார் நேற்று உயிர் துறந்தார் எனும் செய்தியை ஆழ்ந்த வருத்தத் தோடும் துயரோடும் பதிவு செய்கின்றேன். 5-5-1925 பார்ப்பனரல்லாதாரின் தன்னலமில்லாப் பெருந்தலைவர் சர்.பி. தியாகராய செட்டியார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் மருத்துவகுலச் சங்கத்தின் சார்பில் பண்டிதர் ஆனந்தம் அவர்கள் இல்லத்தில் நேற்று நடந்தது. தலைமையேற்க நான் அழைக்கப்பட்டேன். அப்பெரு மகனைப் பற்றி 15 மணித்துளி உரையாற்றினேன். 17-6-1925 எங்கள் கட்டுரைகட்கு ரூ.5/- வழங்கப்படு மென்றும் பதிப்புரிமை எங்களிடமே இருக்கும் என்றும் அறிவித்துத் தமிழ்நாடு துணையாசிரியர் சொக்க லிங்கம் கடிதம் எழுதியிருந்தார். 7-9-1925 தமிழ்நாடு அலுவலகத்திலிருந்து திரு. சொக்க லிங்கம் பிள்ளையும், திரு. தண்டபாணி பிள்ளையும் என்னைக் காண வந்தனர். 1926 3-1-1926 திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் நிகழ்ந்த உலகச் சமய மாநாட்டில் கலந்து கொண்டு ‘The Soul’s Emancipation’ எனும் கட்டுரை படித்தேன். 5-1-1926 திராவிடனில் மெய்ப்புத் திருத்துநராக என் மகன் திருநாவுக்கரசு சேர்த்துக் கொள்ளப்பட்டான். 20-1-1926 தமிழ் இலக்கியத்தைப் பற்றியும், அதனைப் பயில வேண்டியதன் முதன்மையையும் வலியுறுத்தி என் கருத்தைத் தமிழ்ப் பல்கலைக் கழகக் குழுவின் துணைச் செயலாளர்க்கு மடல் விடுத்தேன். 10-2-1926 மேதகு அரசரின் அரசாங்கத்திடமிருந்து தமிழ்ப் பேரகராதியின் முதலிரு தொகுதி அன்பளிப்பாக வரப் பெற்றேன். எங்கள் சிற்றூரின் மேல் வானூர்தி ஒன்று பறந்து சென்றது. 16-2-1926 என் மகள் படிக்கும் வித்யோதயா பள்ளியின் ஆண்டு விழாவுக்குச் சென்றோம். விழா நன்கமைந்தது என்ற போதும் பிள்ளைகள் அனைவரும் ஐரோப்பிய முறையில் வளர்க்கப்பட்டுள்ளதால் நம் முறையில் அவர்கள் ஒழுகு வதில்லை. அவர்தம் அயல்நாட்டுப் படிப்பும் நாகரிகமும் எனக்குப் பிடிக்கவில்லை. நான் எதிர்பார்த்தபடியே, கூட்டத் தலைவர் திரு.தி.இ. மாயர் இவ்வகைக் கல்வியைக் கண்டித்தார்; குடும்பத்தை நன்கு பேணுதற்கு உரிய கல்வியையே பெண் மக்களுக்கு வழங்கல் வேண்டும் என்றார். 9-3-1926 இரவீந்தரநாத தாகூரின் சித்ரா எனும் அருமையான நாடகத்தைப் படித்தேன்! என் மனத்தைத் தொட்டது. என் படைப்பாற்றலை இந்நூல் தட்டி எழுப்பி யுள்ளது. ஆதிமந்தியைக் கதைத்தலைவியாகக் கொண்டு தமிழில் இத்தகையதொரு நாடகம் எழுத எண்ணியுள்ளேன். 27-4-1926 கல்வியும் சமயப்பற்றும் தூய்மையும் உடைய பஞ்சம நண்பர் சிலர் என்னைக் காண வந்தனர். இரவு 8.30 மணி வரை பேசிக் கொண்டிருந்தோம். 14-5-1926 ஞானசாகரம் 13ஆம் தொகுதிக்கு வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியாரிடமிருந்து கையொப்பக் கட்டணம் ரூ.4 வந்தது. 16-5-1926 இன்று பிற்பகல் திரு. வி. கலியாணசுந்தர முதலியாரவர்களும் அவர்தம் நண்பரொருவரும் என்னைக் காண வந்தனர். 1-7-1926 கரந்தைப் பண்டிதர் வேங்கடாசலம் பிள்ளைக்கு மடல் விடுத்தேன். 22-7-1926 பிற்பகலில் திரு. சுரேந்திரநாத ஆரியா என்னைப் புரசைவாக்கத்திலுள்ள தமது படிப்பறைக்கு அழைத்துச் சென்றார். அங்குச் சைவ சித்தாந்தம் குறித்து நெடுவுரை ஆற்றினேன். 25-7-1926 ரூ.200 மாதச் சம்பளத்துக்குத் தமிழ்ப் பேரகராதியின் ஆசிரியர் குழுவில் என்னைப் பணியாற்றுமாறு பண்டிதர் கோவிந்தராச முதலியாரும் பண்டிதர் கண்ணையா நாயுடுவும் வேண்டினர். இறையடிச் சேவையை விட்டு மனிதர்க்குப் பணிபுரிதல் இயலாதென்று மறுத்தேன். 10-8-1926 தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவுவதைப் பற்றி என் கருத்தறிய விரும்பிய தமிழ்ப் பல்கலைக்கழகக் குழுவின் செயலா ளர்க்கு, அவ்வாறு நிறுவுவதன் தேவையின்மையை வலியுறுத்தி எழுதினேன். 28-8-1926 ‘No Need for a Tamil University’ எனும் கட்டுரையை மதரா மெயில், இந்து, ஜடி ஆகிய இதழாசிரியருக்கு அனுப்பி வைத்தேன். 28-8-1926 ‘fÈfhy¡ bfhLikfŸ v›btit? எனும் என் கட்டுரையைக் கந்தரோடை கந்தையாப் பிள்ளைக்கு அனுப்பி வைத்தேன். 20-9-1926 என் மாணவர் (நாரண.) துரைக்கண்ணன் பிற்பகல் என்னைக் காண வந்தார். 26-9-1926 செல்வ நிலையினராக இல்லாதிருப்பினும் தமிழார்வம் மிக்கவராயிருக்கும் மாணவர் கிருஷ்ணாம் பேட்டை துரைக்கண்ணனும் இன்று பாடங் கேட்க வந்தார். 23/24-10-1926 பாலூர் மணவழகு மாணவர் மன்றக் கூட்டம் சீத்தனஞ்சேரியில் நடப்பதாக இருந்தது. ஆனால், அழைப் பிதழின்படி பாலூரிலேயே கூட்டம் நடத்தல் வேண்டும் என்று என் மாணவர் பண்டிதமணி. திருநாவுக்கரசு வலியுறுத்தினார். இதைப் பற்றித் திரு. வையாபுரிக்கும் திரு. மணி. திருநாவுக் கரசுக்கும் இடையே சிக்கல் எழுந்தது. முதலில் சீத்தனஞ்சேரி கோயிலில் ஒரு மணி நேரம் உரையாற்றினேன். பின்னர், பாலூர் சென்றேன். அங்கே கிராம முன்சீபின் தோப்பில் திரு. இராமசாமி முதலியாரின் தலைமையில் நீதிக் கட்சிக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. இருப்பினும் என்னை அன்புடன் வரவேற்றனர். பின்னர் மணவழகு மாணவர் சங்கக் கூட்டம் என் தலைமையில் நடந்தது. திரு. பி. கண்ணப்ப முதலியார் பேசினார். 8-12-1926 திராவிட ஆய்வு மைய இயக்குநர் (Director of the Board of Dravidian Studies) பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வேனா என்று திரு. வ. சுப்பையா பிள்ளை வாயிலாக திரு. கா. சுப்பிரமணிய பிள்ளை வினவினார். இறைப் பணிக்கு என்னை ஆட்படுத்திக் கொண்ட பிறகு அவ்வேலைக்கு விண்ணப்பிக்க மாட்டேன் என்றும், பதிவாளரே அப் பொறுப்பை எனக்கு அளித்தால் ஏற்றுக் கொள்வேன் என்றும் பதில் விடுத்தேன். 1927 3-1-1927 வேப்பேரி சென்று திரு. பவானந்தம் பிள்ளையைக் கண்டேன். அன்புடன் பேசினார். சில காலத்துக்கு முன்னர் நான் திருத்திக் கொடுத்த தொல்காப்பியப் பதிப்பின் பிற பகுதிகள் மூன்றையும் கொடுத்தார். 28-1-1927 மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் நூலின் ஒரு பகுதியான தொல்காப்பியர் காலத்தைச் செந்தமிழ்ச் செல்வியில் வெளியிடற்கு அதன் வெளியீட்டாளர் திரு. வ. சுப்பையா பிள்ளையவர்கட்கு அனுமதியளித்தேன். 13-2-1927 இன்று முழுவதும் திரு. பா.வே. மாணிக்க நாய்க்கரின் Betwixt Ourselves in the Madras Zoo, எனும் நூலுக்கு ஆங்கில மதிப்புரை எழுதிக் கொண்டிருந்தேன். 17-2-1927 பேரூர் சாந்தலிங்க சாமிகள் மடத்தின் சத்வித்ய சன்மார்க்க சங்கத்தின் மாநாடு தலைமையேற்றேன். திருச்சி அ.மு. சரவண முதலியார் இனிமையான தமிழில் மாணிக்க வாசகரைப் பற்றிப் பேசினார். இவ்வறிஞரின் பேச்சு என் மனத்தைத் தொட்டது. பின்னர், தி. சச்சிதானந்தம் பிள்ளை யவர்கள் பேசினார். சில செய்திகளைத் தெளிவுபடுத்திப் பேசி, மாநாட்டை முடித்து வைத்தேன். 27-3-1927 தாம் மீண்டும் தொடங்கவிருக்கும் கலா சிந்தாமணி இதழுக்கு மயிலாப்பூர் மாணிக்கவேலு முதலியார் என்னிடம் கட்டுரை கேட்டார். தமிழ் நாடு பொங்கல் சிறப்பிதழில் வெளியான மக்கள் கடமை கட்டுரையை மறு வெளியீடு செய்ய அனுமதியளித்தேன். 22-7-1927 காலையில் தஞ்சை சந்திப்பு வந்தடைந்தேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் உமாமகேசுவரன் பிள்ளையும் செயலாளர் வேங்கடாசலம் பிள்ளையும் என்னை வரவேற்றனர். 24-7-1927 கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழா.. தலைமை யேற்பு... பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரை யாசிரியர் பற்றிச் சொற்பொழிவாற்றினார்... சிலப்பதிகாரக் கதை மாந்தரைப் பற்றித் தெளிவுபட விளக்கிக் கூறி விழாவை முடித்து வைத்தேன்... திருவள்ளுவரும் பரிமேலழகரும் குறித்து நுணுக்கமான பொழிவைப் பண்டிதர் கதிரேசஞ் செட்டியார் ஆற்றினார். தமிழில் வடமொழிச் சொற்களைக் கலப்பது பற்றிய அவர்தம் கருத்துகளை வன்மை யாகக் கடிந்து பேசினேன். இடையிடை அவர் குறுக்கிட்டுப் பேசியதால் சினங்கொண்டு மேலும் கடுமையாகப் பேசினேன். பின்னர்க் கதிரரேசஞ் செட்டியாரவர்கள் தம் குற்றம் உணர்ந்து என்னிடம் மன்னிப்பு வேண்டினார். 5-8-1927 மாலையில் திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை வந்தார். என் மகள் நீலா-திரு. திருவரங்கம் ஆகியோர் திருமணம் பற்றிப் பேசி முடித்தோம். 2-9-1927 மயிலாப்பூர் சிவன் கோயிலில் என் மகளின் திருமணம் நடந்தது. புகழ்மிக்க நண்பர் பலர் மணமக்களை வாழ்த்தினர். சாதி வேறுபாடு பாராட்டாமல் அனைவர்க்கும் விருந்திடப்பட்டது. 14-10-1927 திருச்சி சந்திப்பு வந்தடைந்தேன். சைவ சித்தாந்த சபை உறுப்பினர்களும் பண்டிதர் அ.மு. சரவண முதலியாரும் என்னை வரவேற்றனர். பண்டிதர் வேங்கடசாமி நாட்டாரும் பிறரும் என்னைக் காண வந்தனர். 30-12-1927 ஆர்வமிக்க தமிழ் மாணவர்கள் திரு. ஜீவானந்தமும் திரு. கும்பலிங்கமும் என்னைக் காண வந்தனர். காந்தியின் நடைமுறைப்படுத்த இயலாக் கோட்பாடுகளைப் பற்றியும், பார்ப்பனரின் கைப்பாவை யாக அவர் இருப்பதால் தமிழர்க்கு அவரால் ஏற்படும் ஊறு பற்றியும் நெடுநேரம் பேசினேன். 1928 15-1-1928 கொழும்பு விவேகானந்தன் ஆசிரியரின் ஆரிய வேதங்களைப் பற்றிய கட்டுரைக்குரிய மறுப்பு எழுதினேன். 19-2-1928 திரு. வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள் என்னைக் காண வந்தார். 2-3-1928 குமரன் ஆசிரியர் திரு. முருகப்ப செட்டியாரும் லோகோபகாரி ஆசிரியர் திரு. நெல்லையப்ப பிள்ளையும் பிற்பகல் என்னைக் காண வந்தனர். 30-4-1928 பண்டிதர் சதாசிவ பண்டாரத்தார் பிற்பகல் என்னைக் காண வந்தார். நெடுநேரம் உரையாடிக் கொண்டிருந் தோம். 27-5-1928 திரு. வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள் வந்தார். திரு. இராமசாமி நாய்க்கரும் அவர்தம் கட்சியி னரும் சைவ சமயத்துக்கும், சைவசமயக் குரவர்க்கும் எதிரான செயல்களில் ஈடுபடுவது குறித்து நெடுநேரம் உரையாடி னோம். இவற்றை எதிர்த்துத் தென்னகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் என் சொற்பொழிவுகட்கு ஏற்பாடு செய்யுமாறு அவரை வேண்டினேன். அவர் ஒப்புக் கொண்டார். 5-6-1928 திரு. வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள் வந்தார். திரு. இராமசாமி நாய்க்கரும் அவர்தம் கட்சியினரும் செய்து வரும் கடவுள் மறுப்புப் பிரசாரத்தைத் தடுப்பது குறித்துக் கலந்துரையாடினோம். கூட்டம் போட்டு அவர்தம் வாதத்தின் ஆழமின்மையை வெளிப்படுத்தலாம் என்று நான் கூறினேன். 16-6-1928 திரு.வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள், அவர்தம் அண்ணன், தமிழ்நாடு ஆசிரியர் திரு. சொக்கலிங்கம் பிள்ளை, உடன் ஒருவர் என நால்வர் நேற்றுப் பிற்பகல் வந்தனர். திரு. இராமசாமி நாய்க்கர் நடத்தி வரும் நாத்திகச் சீரழிவு இயக்கத்தைத் திட்டமிட்டு எதிர்த்து முறியடிப்பது பற்றி என்னுடன் கலந்து பேசினர். 27-6-1928 இராமசாமி நாய்க்கரின் சுயமரியாதை இயக்கமும் பிற வைணவரும் சைவ சமயத்துக்கெதிராகச் செய்துவரும் குறும்புகளைக் கண்டித்துக் கட்டுரை எழுதினேன். 29-6-1928 கோடம்பாக்கம் சானகிராமப் பிள்ளையும் அவர்தம் நண்பரொருவரும் என்னைக் காண வந்தனர்; இராமசாமி நாய்க்கர் தொடங்கியிருக்கும் சுயமரியாதை இயக்கம் பற்றி என் கருத்தை உசாவினர். அவ்வியக்கம் குறும்புத்தனமானது என்றும், விரைவிலேயே அழிந்து விடும் என்றும் கூறினேன். பிற்பகல் திரு. வி. உலகநாத முதலியாரவர்கள் நான் சொல்லியபடி வந்தார். வைணவரின் குறும்புச் செயலே சுயமரியாதை இயக்கமாகும் என்ற கருத்துடைய எனது கட்டுரையை அவரிடம் கொடுத்தேன். தமது கிழமையிதழில் இதனை வெளியிட இயலாது என்றும் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பது குறித்துத் தம் தம்பியிடம் கலந்து முடிவெடுக்கலாம் என்றும் கூறி அக்கட்டுரையை எடுத்துச் சென்றார். 5-7-1928 சுயமரியாதை இயக்கத்தின் குறும்புத்தனம் பற்றிய என் கட்டுரையைத் திரு. வி. உலகநாத முதலியாரவர்கள் திருப்பிக் கொடுத்தார். இவ்வியக்கத்தின் தலைவர் எனப்படு பவரும் அவர்தம் தோழர்களும் சைவ சமயத்தையும் குரவரையும் அவதூறு செய்கின்ற கொடுமையைத் தடுக்க வேண்டும் என எந்தச் சைவரும் எண்ணுவதில்லை. சைவரின் மெத்தனத்தை என்னென்பது! 16-7-1928 சைவ சமயமும் சுயமரியாதை இயக்கமும் துண்டறிக்கையைத் தொடர்ந்து எழுதினேன். திரு. வி. கலியாண சுந்தர முதலியாரவர்கள் வந்தார்; அண்மையில் தாம் தெற்கு மாவட்டங்களில் மேற்கொண்ட பிரச்சார பயணத்தில் செய்த சைவசமயப் பணி பற்றி என்னோடு பேசினார். 22-7-1928 இராயப்பேட்டை ஸ்ரீ பாலசுப்பிரமணிய பக்த ஜன சபை ஆண்டு விழாத் தலைமையேற்று, ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் எனும் பொருள் பற்றிப் பேசுகையில் திரு. இராமசாமி நாய்க்கரின் கடவுள் மறுப்புக் கோட்பாடு களையும், அவர்தம் சுயமரியாதை இயக்கத்தின் குறும்பு களையும் வன்மையாகக் கடிந்து கூறினேன். 23-7-1928 நேற்றுக் கூட்டத்தில் நான் உரையாற்றுகையில் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த தண்டபாணி பிள்ளை என்பார் கேள்விகள் கேட்டுக் குறுக்கிட்டார். திருஞானசம்பந்த சுவாமிகள் சமணரைக் கொடுமைப்படுத்தினார் என்று சொல்வதற்குரிய சான்று ஒரு துளியும் இல்லை என்று சொல்லி அவர் கேள்விகட்குத் தக்க விடை அளித்தேன். என் விடைகள் தண்ட பாணிப் பிள்ளைக்கும் கூடியிருந்தோர்க்கும் நிறைவு தந்தன. பொழிவு முடிந்ததும் எனக்கு நன்றி தெரிவித்து விட்டு அவர் சென்றார். 24-7-1928 நேற்றுப் பல்லாவரத்துக்குத் திரும்புகையில் எழும்பூர் சென்று திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளையைக் கண்டோம்; நீதிக் கட்சி குறித்து எச்சரித்தோம். அக்கட்சியில் நம்பிக்கை வைப்பதை விடுத்து, வழக்குரைஞராகப் பணியாற்று மாறு வெளிப்படையாகக் கூறினோம். 4-8-1928 திரு. சாமி. சிதம்பரனார் தொகுக்கும் உடைநடைக் கோவையில் பேய்களும் ஆவேசங்களும் சமரச சன் மார்க்கம் ஆகிய கட்டுரைகளைச் சேர்க்க அவர்க்கு அனுமதியளித்தேன். 10-8-1928 எனது சைவமும் சுயமரியாதை இயக்கமும் கட்டுரை லோகோபகாரி, சிவநேசன் ஆகிய கிழமையிதழில் வெளிவந்தது. 20-8-1928 என் மாணவர் நா. துரைக்கண்ணன் தமிழ் நாட்டில் எழுதிய கட்டுரையைத் துண்டு வெளியீடாக அச்சிட்டு, சுயமரியாதை இயக்கத்துக்கு எதிராகத் திருநெல்வேலி அன்பர்கள் பரப்பி வருகின்றனர். 24-8-1928 மாலையில் திரு. வி. கலியாணசுந்தர முதலியார வர்களும், திரு. பாலசுந்தர முதலியாரும், திருச்சி (கி.ஆ.பெ) விசுவநாத பிள்ளையும் என்னை ஈ.வே. இராமசாமி நாய்க்க ரோடு சமரசம் செய்து வைக்க வந்தனர்; நட்புப் பாங்குடன் நாய்க்கர்க்கு என்னைக் கடிதம் எழுதித் தர வேண்டினர். அவ்வாறே கடிமமெழுதித் திரு விசுவநாதப் பிள்ளையிடம் கொடுத்தேன். 26-8-1928 திரு. ஈ.வே. இராமசாமி நாயக்கர்க்கு நான் எழுதிய கடிதத்தைத் திராவிடன் ஆசிரியர் வெளியிட்டு விட்டதைப் பற்றி உசாவ திரு. வ. சுப்பையா பிள்ளை வந்தார். 6-9-1928 தவறான முறையில் என்னுடைய கடிதத்தைத் திராவிடனில் அதன் ஆசிரியர் வெளியிட்டமைக்கு மன்னிப்புக் கோரி திரு. ஈ.வே. இராமசாமி நாய்க்கர் எழுதி இருந்த குடியரசு இதழை என் மருகர் திரு. வ. திருவரங்கம் பிள்ளை கொண்டு வந்தார். 10-9-1928 இறைவன் அருளால் நான் எழுதிய மிக முக்கியமான நூல் மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் கடைசிப் படிவம் இன்று அச்சாயிற்று. 24-11-1928 புதிதாகத் தொடங்கப்பெற்ற ஆங்கிலக் கிழமை இதழ் ‘Revolt’ வரப் பெற்றமைக்குத் âU.ஈ.nt. இராமசாமி நாய்க்கர்க்கு மடல் விடுத்தேன். 7-12-1928 ‘Revolt’ இதழுக்கென ‘The story of Ramayana’ கட்டுரை எழுதத் தொடங்கினேன். 1929 6-1-1929 மாயவரம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் தம் தலைமையின் கீழ் உரையாற்றிய என் மகன் திருநாவுக்கரசுவின் பேச்சாற்றலைத் திரு. வி. கலியாண சுந்தர முதலியாரவர்கள் வியந்தார். 1-2-1929 மறைந்த நண்பர் திரு. வி. கோ. சூரியநாராயண சாதிரியின் மகன் வந்தார். தம் தந்தையாரைப் பற்றித் தாம் எழுதவிருக்கும் வரலாற்று நூலில் இணைப்பதற்கென என் நினைவுக் குறிப்புகளை எழுதித் தருமாறு வேண்டினார். நான் இணங்கினேன். 13-3-1929 என் பழைய மாணவர், திருநெல்வேலி டி.கே. áj«guehj KjÈah®, ã.V., பி.எல், எம்.எல்.சி. என்னைக் காண வந்தார். 14-3-1929 அடுப்பெரிக்கும் விறகுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. பக்கிங்காம் கால்வாய் செப்பனிடப்பட்டு வருவதால் விறகு சுமந்துவரும் படகுகள் செல்ல முடியவில்லை. 9-3-1929 திருவையாறு வடமொழிக் கல்லூரியிலிருந்து பண்டிதர் உலகநாதப் பிள்ளை மடல் விடுத்தார். என் மகன் திருநாவுக்கரசு படிப்பில் ஆர்வம் செலுத்தாமல், திரு. வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள் சொற்பொழி வாற்றும் இடங்களுக்கெல்லாம் சென்று தானும் உரையாற்று வதோடு, கட்சித் தொடர்பான உரையாடல்கள், சிக்கல்களிலும் ஈடுபடுகிறான் என்று அவர் எழுதியிருந்தார். அக் கடிதத்தை என் மனைவிக்குப் படித்துக் காட்டி மனம் வருந்தினேன். 26-3-1929 சைவ சித்தாந்த மகாசமாஜச் செயலாளர் பாலசுப்பிரமணிய முதலியாரவர்களும் திரு. வி. கலியாணசுந்தர முதலியாரவர்களும் திருநெல்வேலிச் சைவ மாநாட்டுக்கு என்னை அழைத்தனர். வர இயலாது என்று சொன்னமையால், நான் செய்ய விரும்பும் சீர்திருத்தங்களை எழுதித் தருமாறு வேண்டினர்; இணங்கினேன். 17-5-1929 திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீலஸ்ரீ ஞானியார் சுவாமிகள் மடத்தில் தென்னிந்திய சைவர் மாநாடு கூடிற்று. தலைமையேற்றேன். 30-5-1929 பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் மறைந்தார் எனும் துயரச் செய்தி அறிந்தேன். 5-9-1929 மாலையில் என் மாணவர் நா. துரைக்கண்ணன் வந்தார்; சிவஞானபோதமும் சிலப்பதிகாரமும் பாடங்கேட்கத் தொடங்கினார். 1930 14-2-1930 மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் நூலுக்குரிய முன்னுரை ஆறாம் படிவம் அச்சாகி முடிந்து விட்டது. ஆங்கில வாசகர்க்கென ஆங்கிலத்தில் ஓர் அறிமுக வுரை எழுதிவிட்டால் வேலை முடிந்து விடும். 21-2-1930 திருப்பாதிரிப்புலியூர் தென்னிந்திய சைவ மாநாட்டில் நான் ஆற்றிய தலைமையுரையைக் கண்டித்த திரு. பி. முத்தையா பிள்ளைக்குத் திரு. நா. துரைக்கண்ணன் எழுதிய மறுப்பு நேற்று கிடைத்தது. அதனை மேற்பார்த்துச் சில திருத்தம் செய்தேன். 8-5-1930 அண்மையில் நடந்த சேலம் சேவாப்பேட்டை பைந்தமிழ்க் கழக மாநாட்டின் சிறப்பு என்னவென்றால், என் கருத்துப்படி ஒவ்வொரு சொற்பொழிவாளர்க்கும் பயணச் செலவுக்கும் உணவுச் செலவுக்கும் மேலாக உரூ.10 வழங்கப் பட்டது. ஒவ்வொரு மன்றமும் இவ்வாறு செய்தால் தமிழாய் வுக்கு ஊக்கம் கிடைக்கும். 25-5-1930 என் மாணவர் துரைக்கண்ணன் தாம் எழுதிய மனோகரி எனும் தமிழ்ப்புதினத்துக்கு முன்னுரை வேண்டு மென்று கேட்டார். அந்நூலிலுள்ள இலக்கண, மரபுப் பிழை களையும், தேவையில்லாமல் சேர்க்கப்பட்ட வடமொழிச் சொற் களையும், சுட்டிக்காட்டி இப்பிழைகள் இல்லாமல் எழுதினால் அவர்தம் அடுத்த நூலுக்கு முன்னுரை தருவேன் என்று கூறினேன். அவர் மீண்டும் வற்புறுத்தினார்; அடுத்த முறை வரச் சொன்னேன். 23-7-1930 கோவில்பட்டியிலுள்ள விருதை சிவஞான யோகிகள் எழுதிய கோயில்புரி புராணத்தை வாழ்த்தி அவர்க்கு மடல் விடுத்தேன். 25-9-1930 சைமன் ஆணைக்குழு அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்ப்பது குறித்து வருவாய்த்துறை ஆய்வாளர் என்னுடன் கலந்து பேசினார். அதற்குரிய செலவை அரசாங்கம் ஏற்றுக் கொண்டால் அவ் வேலையைச் செய்வேன் என்று கூறினேன். 14-11-1930 திருவாசகத்தை அகவற்பா வடிவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். 1931 12-2-1931 மறைந்த நண்பர் சுன்னாகம் குமாரசாமிப் புலவரின் மகனும், இலயோலா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியருமான திரு. முத்துக் குமாரசாமி தம் கல்லூரித் தமிழ்ச் சங்க ஆண்டு விழாவுக்குத் தலைமையேற்குமாறு வேண்டினார்; இணங்கினேன். 24-2-1931 காந்தி கட்சியினர் நடத்தி வரும் மறியல் போராட்டம் சென்னையில் தீவிரமடைந்துள்ளது. அவர் களுக்கும் காவலர்க்கும் இடையிலான சண்டை அச்சந்தரும் வகையிலுள்ளது. காந்தியின் திட்டம் எனக்கு உடன் பாடில்லை. 7-4-1931 தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆண்டு விழாவை என் தலைமையில் நடத்து வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 10-4-1931 ஓய்வுபெற்ற தாசில்தாரும் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் கௌரவத் தலைவருமான திரு. மா.வே. நெல்லையப்ப பிள்ளை விருந்துக்கு அழைத்தார். நானும் திரு. திருவரங்கமும் சிந்துபூந்துறையிலுள்ள அவர்தம் அருமையான வீட்டுக்குச் சென்று விருந்துண்டோம். நல்ல பேச்சாளரும், தமிழறிஞரும், அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கல்லூரி விரிவுரையாளருமான திரு. ரா.பி.சேதுப் பிள்ளையும் எங்களுடன் விருந்துண்டார். 23-5-1931 நுரையீரல் நோயினால் என் மாணவர் மணி திருநாவுக்கரசு மறைந்தார் எனும் துயரச் செய்தி அறிந்தேன்; நானும் என் மனைவியும் அழுதோம். 28-5-1931.... மறைந்த மாணவர் மணி திருநாவுக்கரசைப் பற்றிய குறிப்புகளுண்டா என்றறிய 20 ஆண்டுக்கு முன்னர் எழுதிய என் நாட்குறிப்பேடுகளைத் தேடினேன். குறிப்பெதுவும் கிடைக்கவில்லை... 7-7-1931 என் கடைசி மகன் பம்பாயிலிருந்து திரும்பினான். காந்தி இயக்கம் முழு வீச்சிலிருக்கிறது என்றும், கடைகள் அனைத்தும் மூடியிருக்கின்றன என்றும், அவன் கூறினான். 16-7-1931 திரு. சுரேந்திரநாத் ஆரியா என்னைக் காண வந்தார். இறைவன் நடராசனைப் பற்றித் தாம் எழுதிய நூலை எனக்குக் கொடுத்தார். 23-7-1931 திரு. சுரேந்திரநாத் ஆரியா எழுதிய நடராச தரிசனம் சிறு நூலைப் படித்தேன். வடசொற்கள் ஏராளமாகக் கலந்து, பிழைமிக்க நடையில் எழுதப்பெற்றிருக்கும் இந்நூற்கு அவர் கேட்டுக் கொண்டபடி நன்மதிப்புரை எழுதித் தருவது எப்படி? என்று தெரியவில்லை. 23-10-1931 பெரும் அறிவியல் அறிஞர் எடிசன் சில நாளுக்கு முன்னர் மறைந்தார் எனும் துயரச் செய்தி அறிந்தேன். அரியதொரு மேதையை உலகு இழந்து விட்டது. 11-12-1931 இன்று முழுவதும் மேசை இழுப்பறைகளைத் தூய்மைப் படுத்தினேன்; பழைய மடல்களைக் கிழித்தெறிந்தேன்.. நூல்களையும் 33 ஆண்டு நாட்குறிப்பேடுகளையும் ஒழுங்குற அடுக்கி வைத்தேன். 1932 1-1-1932 Him that giveth gold and true bliss, Him that uniteth enjoyment and riches, Him that removeth all my sins, Him whoes real nature eludes under standing, My Father that came easily, The Dweller in Aroor beautiful with swan-living fields, can I forget?” (பொன்னும் மெய்ப்பொருளும்). 4-1-1932 பிற அரசியல் தலைவர்களுடன் மகாத்மா காந்தி இன்று கைது செய்யப்பட்டார் எனும் துயரச் செய்தி அறிந் தேன். சாதியில் உழலும் இந்திய மக்களுக்காகக் காந்திய வர்கள் அடிக்கடி சிறை செல்வதும் தியாகம் பல புரிவதும் தேவையில்லை. மூட நம்பிக்கை, பார்ப்பனவழிபாடு முதலான வற்றில் உழன்று, சிதறுண்டு கிடக்கும் இந்திய மக்களுக்குத் தன்னாட்சிக் குரிய தகுதியில்லை. எங்கும் கலகம் ஏற்பட் டுள்ளது. கொடுமையான அடக்குமுறைகளை அரசாங்கம் கைக்கொண்டு உள்ளது. நம் மக்களுக்கும் அரசாங்கத் துக்கும் நல்லறிவூட்டி மீண்டும் அமைதி தழைக்க ஈசன் அருள் புரிவானாக! 11-1-1932 காங்கிரசுக்காரரையும் தொண்டரையும் அரசாங்கம் கொடுமைப்படுத்தும் செய்திகளை நாளேடுகளில் படித்தும் கேள்வி மூலமாக அறிந்தும் மனவேதனை அடைகி றேன். 14-1-1932 திரு அரங்கசாமி என்னைக் காண வந்தார். அரசாங்கத்துக்கெதிரான அரசியற் கிளர்ச்சியின் பயனின்மை குறித்து நெடுநேரம் உரையாடினோம்... 15-1-1932 சைனா பசாருக்கருகே மறியல் செய்த காங்கிரசுத் தொண்டர் ஒருவரைக் காவலர் கொன்றனர் எனும் துயரச் செய்தி அறிந்தேன். 1-3-1932 கைவல்ய சுவாமிகள் என்னைக் காணவந்தார். சமயம், சீர்திருத்தம் ஆகியன பற்றி நெடுநேரம் உரையாடி னோம். என் கருத்துகளை அவர் ஏற்றுக் கொண்டார். 3-3-1932 கழகத்தின் இதழான செந்தமிழ்ச் செல்விக்கு ஒவ்வொரு திங்களும் கட்டுரை எழுத இயலுமா என்று வினவி என் மாப்பிள்ளை கடிதம் எழுதியிருந்தார். 7-3-1932 20ஆம் தேதிக்குப் பிறகு, என் மூன்றாம் மகன் காங்கிரசின் சட்ட மறுப்பு இயக்கத்தில் சேர விருப்பதாக என் மாணவர் வீரையன் மடல் எழுதினார். இயக்கத்தில் சேராமல் நேராக வீடு வந்து சேருமாறு நானும் என் மனைவியும் எம் மகனுக்கு கடுமையாகக் கடிதம் எழுதினோம். 18-6-1932 என் கடைசி மகள் திரிபுரசுந்தரிக்கும் என்னருமை மாணவர் குஞ்சிதபாதத்துக்கும் திருமணம் நடந்தது. 25-9-1932 இன்று பிற்பகல் திரு. வி. கலியாண சுந்தர முதலியாரவர்கள் வந்தார். அவர் முன்னிலையில் என் மூன்றா வது மகன் என் விருப்பாவணத்தைப் படித்துக் காட்டினான். 25-10-1932 திருவண்ணாமலை இரமணர் ஆசிரமத் திலிருந்து சுவாமி கிருஷ்ணானந்தர் வந்தார். இரமண மகரிஷி என் நூல்களைப் படிப்பார் என்றும், அவற்றைப் பாராட்டியும் என்னைப் புகழ்ந்தும் பல கூறுவார் என்றும் அவர் கூறினார். 1933 25-1-1933 இறைவன் அருளால் என் இரண்டாவது பெரு நூலான மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை எழுதி முடித்தேன். 3-2-1933 Niy 1909ïš bjhl§»a ‘k¡fŸ üwh©L cÆ® thœjš v¥go? பல தடைகளுக்குப் பிறகு இப்போதே எழுதி முடிக்க இயன்றது. இறைவன் அருளை என்னென்பது! 22-3-1933 என் மாணவர் இளவழகன் வந்தார். தாம் தொடங்கவிருக்கும் முல்லைக்கொடி இருவார இதழுக்கு என்னைக் கட்டுரை எழுதுமாறு வேண்டினார். 20-5-1933 தமது தமிழ்ப் புலமைக்குச் சான்றிதழ் பெறுவதற் கெனத் திரு தெ.பொ. மீனாட்சி சுந்தரம்பிள்ளை, அவர் களும், அவருடன் திரு. அண்ணாமலையும் வந்தனர். நெடுநேரம் உரையாடினோம். சான்றிதழ் தருவதற்கு இணங்கி னேன். 29-5-1933 திரு. தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளைக் கென சான்றிதழ் எழுதினேன். உடன் ஒரு கடிதமும் எழுதினேன். 18-6-1933 திரு. தெ. பொ. மீனாட்சிசுந்தரம்பிள்ளை வந்தார். சான்றிதழ் கொடுத்தமைக்கு நன்றி கூறினார். தாம் எழுதிய வள்ளுவரும் மகளிரும் எனும் நன்னூலைக் கொடுத்தார். 10-9-1933 தமக்குத் திருமணம் நடக்கவிருக்கும் செய்தியை என் மாணவர் நா. துரைக்கண்ணன் தெரிவித்தார். 16-10-1933 தமது பட்டினத்துப் பிள்ளையார் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்கு என்னை முகவுரை எழுது மாறு வேண்டி சுவிட்சர்லாந்திலிருந்து திரு. சு. ஆரியா விடுத்த கடிதம் வரப்பெற்றேன். 18-10-1933 ஆரியாவின் நூலுக்கு முகவுரை எழுதி வருகிறேன். 1934 5-1-1934 நானே ஆசிரியனாகவும், அச்சடிப்போனா கவும், வெளியீட்டாளனாகவும், மெய்ப்புத் திருத்துவோ னாகவும், எழுத்தராகவும், பணியாளனாகவும் வேலை செய்ய வேண்டியிருப்பதால், உண்டு, உறங்கி, ஓய்வெடுப்ப தற்கும் கூட எனக்கு நேரம் இருப்பதில்லை. 9-4-1934 வரும் சூன் திங்கள் இடையில் நான் தொடங்க விருக்கும் ‘Ocean of Wisdom’ இதழுக்குரிய அறிவிப்பை எழுதி, அச்சுக்குக் கொடுத்தேன். 11-6-1934 திருநெல்வேலி என் தலைமையில் சென்னை மாகாணத் தமிழறிஞர் மாநாடு கூடியது, 14-6-1934 நீலா அணியம் செய்த வடசொற்றமிழ் அகர வரிசையைப் படித்துத் திருத்தினேன். 22-6-1934 சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டுச் செயலாளர் பண்டிதர் இ.மு. சுப்பிரமணியப் பிள்ளை யவர்கள் என்னைக் காணவந்தார். 24-6-1934 பெருந்தமிழ் மருத்துவர் பிச்சாண்டிப் பிள்ளை என்னைக் காண வந்தார். 11-9-1934 தமிழர் பெரும்பாலோர் பொய்யராகவும் நேர்மையற்றோராகவும் உள்ளனர். தமிழ் கற்றுக் கொள்வ திலோ தமிழ் நூல்களை வாங்குவதிலோ அவர்களுக்கு நாட்டம் இல்லை. என்னுடைய நாற்பதாண்டுப் பணியின் மூலமாக அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலருக்கு மேல் வேறு யார் மீதும் என்னால் பாதிப்பு ஏற்படுத்த இயலவில்லை. 17-9-1934 தொகுதி 1 முதல் தொகுதி 6 பகுதி 1 வரை தமிழ்ப் பேரகராதி வரப் பெற்றமையை அறிவித்துத் திரு. ச. வையாபுரிப் பிள்ளைக்கு மடல் விடுத்தேன். 1935 1-1-1935 நான் தொடங்கவிருக்கும் ஆங்கில இதழுக்குரிய தலையங்கக் குறிப்பை எழுதலானேன். 8-2-1935 மிகுந்த முயற்சிகள் எடுத்துப் பழந்தமிழ் இலக்கியங் களைப் பதிப்பித்த தமிழறிஞர் உ.வே. சாமிநாத அய்யரின் எண்பதாமாண்டுப் பிறந்தநாற் விழா மார்ச்சு 6இல் நிகழ வுள்ளது. அவ்விழாவில் என்னைப் பங்கேற்க திரு. கே.வி. கிருட்டிணசாமி அய்யர் அழைப்பு விடுத்தார். 22-4-1935 சுந்தர ஓதுவா மூர்த்திகள் மாலையில் வந்தார். தம் தேவாரப் பாடல்களையும் சிறுத்தொண்டர் கதையையும் இசைத்தட்டில் இசைத்தும், திருவாசகத்தைப் பாடிக் காட்டியும் இரவு 1 மணி வரை எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 18-5-1935 எனது 18ஆம் அகவையில் குறள் முழுவதும் மனப்பாடம் செய்தேன். இப்போது 40 ஆண்டுகள் கழித்து அவற்றில் பாதிக்கு மேல் நினைவிலிருக்கின்றன. 7-6-1935 தமிழில் ஜடி இதழ் கொண்டுவரவிருப்பதை வாழ்த்தி, ஜடி அச்சகக் சிறப்புச் செயலாளர்க்குக் கடிதம் விடுத்தேன். 22-6-1935 ஞானியார் சுவாமிகள் எம் இல்லம் வந்தார். உரிய முறையில் அவரை வரவேற்றோம். நகர் முழுவதும் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றோம். அப்பர் சுவாமிகளைப் பற்றி அவர் உரையாற்றினார். 28-6-1935 சென்னைப் பல்கலைக்கழக இடைநிலைத் தேர்வுக்குரிய பாடப்புத்தகங்களிலிருந்து என் அறிவுரைக் கொத்து நூலை விளக்க வேண்டும் என்று எழுதிவரும் தினமணி, சுதேசமித்திரன் போன்ற ஏடுகட்கு எதிராக எனக்கு ஆதரவு நல்குமுறையில் நேற்றைய விடுதலை இதழ், தலையங்கம் வரைந்தது. 9-8-1935 கோவை சி.கே. சுப்பிரமணிய முதலியாரவர் கட்குச் சிந்தனைக் கட்டுரைகள் நூலையும் ஒரு மடலையும் விடுத்தேன். 20-8-1935 எனக்கு அனுப்பிவைக்கப்பட்ட நூல்களுக்கென திரு. ஈ.வே. இராமசாமி நாய்க்கர்க்கு விடுத்த ரூ. 3-10-10 பணவிடை திரும்ப வந்தது. அந்நூல்கள் அன்பளிப்பாக அனுப்பப்பட்டன வென்று அவர் மடல் எழுதினார். 25-8-1935 (கே.பி) சுந்தராம்பாளின் பக்த நந்தனார் திரைப்படக் காட்சியைப் பார்ப்பதற்கென என் மனைவி, மகள், வீட்டுப் பணிப்பெண் ஆகியோரை அனுப்பி வைத்தேன். 1-9-1935 இறைவன் அருளால் தொலைவிலுணர்தல் இன்று எழுதி முடித்தேன். பல தடைகள் ஏற்பட்டமையால் இந் நூலை எழுதுவதற்கு ஏறத்தாழ 25 ஆண்டாயின. 21-9-1935 மயிலை வேங்கடசாமியவர்களும், அவர் தம் நாட்டுக்கோட்டை நண்பர் இருவரும் மாலையில் என்னைக் காண வந்தனர். நெடுநேரம் உரையாடினோம். 3-11-1935 ஊழியன் இதழிலிருந்து திரு. பழநியாண்டி குருக்களும், திரு.இ. சிவமும் என்னைக் காண வந்தனர்; பொங்கல் சிறப்பிதழுக்குக் கட்டுரை தருமாறு வேண்டினர். 1936 13-1-1936 வரும் சூலைத் திங்களில் எனது அறுபதாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுவதற்குரிய ஏற்பாடுகளை முடிவு செய்தற்கென அமைச்சர் பி.டி. ராசன் தலைமையில் பச்சையப்பன் கல்லூரியில் கூட்டம் நடத்தப்பட்டது என்று அறிந்தேன். 21-1-1936 அரசர், மாமன்னர் ஐந்தாம் ஜார்ஜ் நேற்றிரவு மறைந்தார் எனும் துயரச் செய்தியறிந்தேன். 10-2-1936 கெயிட்டி திரையரங்கு சென்று பக்த நந்தனார் பார்த்தேன், சுந்தராம்பாளின் அருமையான நடிப்பு, சமய உணர்வு மிக்கதாய் உளத்தை நெகிழ்த்தி விழுமிய நிலையை அடையச் செய்தது. 13-2-1936 சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த அண்ணல் தங்கோ என்ற கவிஞரும் அவர்தம் நண்பரும் நேற்று என்னைக் காண வந்தனர். தமிழின் சிறப்பைப் பற்றிய அவர்தம் அருமை யான பாடல்களை அவர் படித்துக் காட்டினார். எனது தமிழ் இதழில் அவற்றுக்கு மதிப்புரை வரைவேன் என்றேன். நெடு நேரம் உரையாடினோம். 15-3-1936.... 13ஆம் நாளன்று, தமது அறுபதாவது அகவையில் பண்டிதர் கா. நமச்சிவாய முதலியார் மறைந்தார் என்றறிந்தேன். ஈகைப் பண்புமிக்கவர் எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் ஆன்மா அமைதி பெறட்டும்! 15-4-1936 ‘Ocean of Wisdom’ நான்கு இதழ்களுடன் ஒரு கடிதமும் நாகர்கோயில் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பி. சிதம் பரம் பிள்ளையவர்கட்கு விடுத்தேன். தமது திராவிடரும் ஆரியரும் நூலில் என்னைப் பற்றி இவர் விதந்து போற்றி எழுதியுள்ளார். 20-4-1936 ஆங்கிலம் படித்த இளைஞர் ஏராளமானோர் வேலையின்றி இருக்கின்றனர். பல்கலைக்கழகப் படிப்பால் இவர்கட்கு ஒரு பயனும் இல்லை. வேலை வாய்ப்புப் பெறுவ தற்கென்று அனைவரும் ஏன் கல்வி பயில வேண்டும். வேளாண்மை, வணிகம், தொழில்துறை போன்றவற்றில் இவர்கள் ஏன் இறங்கக் கூடாது? 28-5-1936 திரு. வையாபுரிப் பிள்ளையின் பரிந்துரை மூலமாகத் தமிழ்ப் பேரகராதியின் கடைசி மூன்று பகுதிகளை அரசாங்க அச்சகக் கண்காணிப்பாளரிடமிருந்து வரப் பெற்றேன். 3-7-1936 தண்டபாணி தேசிகர் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் பட்டினத்தார் திரைப்படம் சென்று பார்த்தோம். 14-7-1936 என் முன்னாள் மாணவரும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்கு தலைவருமான திரு. சோம சுந்தர பாரதியாரிடமிருந்து அன்பான கடிதம் வரப் பெற்றேன். 5-9-1936 எனது பழைய நாட்குறிப்பேடுகளைப் புரட்டிப் பார்த்து, என் ஆசிரியர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் குறிப்பெடுத்தேன். 13-9-1936 திரு. மயிலை வேங்கடசாமி வந்தார். என் நூலகத்திலுள்ள நூல்களையும், என் நூல்களையும் படித்தார். இடையிடையே இலக்கியம் பற்றிப் பேசினோம். 12-12-1936 எட்டாம் எட்வர்டு அரசர் தம் காதலிக்காக அரியணையைத் துறந்தார் என்று அறிந்தேன். அரசரின் காதல் உண்மையானதாக நீடித்து நிற்குமாயின், அவர்தம் அளப்பரிய தியாகம் மேன்மை பெற்றதாய் என்றென்றும் நிலைத்து நிற்கும். 1937 2-1-1937 Ocean of Wisdom 2ஆம் தொகுதிக்குரிய கையொப்பக் கட்டணமாக வெ. ப. சுப்பிரமணிய முதலியாரிட மிருந்து ரூ. 3-4-0 பணவிடை பெற்றேன். 9-1-1937 Why Hindi should not be made the common language of India எழுதத் தொடங்கினேன். 21-1-1937 மாலையில் திரு. சீனி. வேங்கடசாமி வந்தார். அறிவுரைக் கொத்து வாங்கினார். தமது கிறிதவமுந் தமிழும் நூலுக்கு ஞானசாகரத்தில் மதிப்புரை எழுத வேண்டி னார். 12-7-1937 பண்டித மு. கதிரேசன் செட்டியாரவர் களும், தெ.பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களும், அண்ணாமலை முதலியாரவர்களும் என்னைக் காண வந்தனர். 5-9-1937 திரு. சோமசுந்தர பாரதியார் என்னைக் காண வந்தார். திருவள்ளுவரும் தொல்காப்பிய ஆராய்ச்சியும் நூலை எனக்குக் கொடுத்தார். 4-10-1937 சென்னை கோகலே அரங்கத்தில் நடந்த இந்தி எதிர்ப்புக் கூட்டத்திற்குத் தலைமையேற்றுத் தனித் தமிழில் உரையாற்றினேன். 5-10-1937 நேற்றிரவு 11 மணிக்கே வீடு திரும்ப முடிந்தது. திரு. சோமசுந்தர பாரதியார் உட்பட பதின்மர் எனக்குப் பிறகு உரையாற்றினர். நான் முடிவுரை கூறினேன். 21-11-1937 வெ. ப. சுப்பிரமணிய முதலியாரவர்களின் குறிப்புரையுடன் கூடிய ஆரணிய காண்ட சாரம், கிட்கிந்தா காண்ட சாரம் வரப்பெற்றேள். 1938 1-1-1938 என் ஆசிரியர் சோமசுந்தர நாயகரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வருகிறேன். 26-2-1938 கெயிட்டி திரையரங்கு சென்று அம்பிகாபதி பார்த்தோம். இறுதிப் பகுதி மட்டும் துயரமிக்கதாய் நன்றாக இருந்தது. இடைப் பகுதிகள் தேவையற்றனவாய் மோசமாக இருந்தன. 15-3-1938 விநோத ரசமஞ்சரியும், பலதுறைக்கோவையும் வாங்கினேன். 24-4-1938 ஆறுமுக நாவலரைப் பற்றிய என் பாராட்டுரை வெளிவந்திருக்கும் நாவலர் நினைவு மலர் படியை யாழ்ப் பாணம் பண்டிதர் கே.பி. இரத்தினம் எனக்குக் கொடுத்தார். 3-6-1938 மாலையில் என் மகன் மாணிக்கம் மகிழுந்து அழைத்து வந்தான். கோடம்பாக்கம் சென்றோம். வழியில் சி.டி. நாயகம் அவர்கள் வீடு சென்றோம். தென்னிந்தியப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக ஆக்குவதைக் கண்டித்துக் கடந்த 34 நாளாக உண்ணாநோன்பிருக்கும் திரு. செகதீசனைக் கண்டோம். எலுமிச்சம் பழச்சாறு மட்டுமே சிறிது உண்டு வருவதால் அவர் உடல் வலுவிழந்து காணப் பட்டார்; பிறர் உதவியுடனே கொஞ்சம் நடக்க இயன்றது. முதன்மை அமைச்சர் இராசகோபாலாச்சாரியின் வீட்டுக் கெதிரே இரவும் பகலும் 4 நாளாக உண்ணா நோன்பிருக்கும் திரு.பொன்னுசாமியையும் கண்டோம். உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் தமிழரின் உணர்வுகளைத் தன்னேரில்லாத தியாகத்தின் வாயிலாக இவ்விளைஞர் இருவரும் தட்டி எழுப்பியுள்ளனர். 4-6-1938 சைதாப்பேட்டை இந்தி எதிர்ப்பு மாநாடு நேற்று மாலை என் தலைமையில் வெற்றியுடன் நடந்தேறியது. சண்முகா னந்த சுவாமியும், அருணகிரி சுவாமியும், தெலுங்குப் புலவர் அனுமந்தராவும் எனக்குப்பின் பேசினர். கூட்டம் முடிந்ததும் சுவாமிகள் இருவரும் இராசகோபாலாச்சாரியின் வீட்டுக்கு முன்பு மறியல் செய்யப் புறப்பட்டனர். 21-6-1938 என் மூன்றாவது மகன் திருநாவுக்கரசு, மூன்று திங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபடப்போவதாகஅறிந்தேன். 57 நாளாக உண்ணாநோன் பிருந்து தமிழுக்காக உயிர் துறக்கப்போகிறார் திரு. செகதீசன். இறைவன் அவர்க்கு அருளட்டும்! 26-6-1938 தமிழ் வாழ்க, இந்தி ஒழிக என்று முழக்க மிட்டுக் கொண்டு ஏராளமான மக்கள் கடற்கரைக் கூட்டத் துக்குச் செல்வதறிந்து மகிழ்கிறேன். 9-8-1938 தமிழ்த் தாயைக் காக்கும்பொருட்டு இந்தித் திணிப்பை எதிர்த்துப் பேசிய என் மகன் திருநாவுக்கரசுக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. தமிழுக்குத் தீங்கிழைப்போர்க்கு உருத்திரன் தக்க தண்டனை வழங்கட்டும். 11-9-1938 திருவல்லிக்கேணிக் கடற்கரையில் என் தலைமை யின்கீழ் இந்தி எதிர்ப்புப் பொதுக் கூட்டம் நடத்தப் பெற்றது. ஓர் இலட்சத்துக்கும் மேலான கூட்டம் குழுமியிருந்தது. ஒலி பெருக்கி மூலமாக அனைவரும் கேட்குமாறு ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது. 10-10-1938 இராவ்சாகிபு வெ.ப. சுப்பிரமணிய முதலியாரின் அகலிகை வெண்பா அன்பளிப்பாக வரப் பெற்றேன். 15-11-1938 சைதாப்பேட்டை துணை மாஜிடிரேட்டிடம் சென்றேன். 21ஆம் தேதியன்று கோவை நீதி மன்றத்தில் குடி அரசு ஆசிரியர் திரு. ஈ.வே. கிருட்டிணசாமி நாய்க்கருக்கும் விடுதலை ஆசிரியர் திரு. முத்துசாமிப் பிள்ளைக்கும் சான்று கூற வேண்டும் என்றார். 25-12-1938 பண்டித கோவிந்தராச முதலியார் எழுதிய அம்பிகாபதி நாடகம் வரப்பெற்றேன். படித்தேன். கலைத் தன்மை சிறிதும் இல்லை. கதை மாந்தரைக் கையாண்ட பாங்கும் நன்றாக இல்லை. வரலாற்றுக் கதை என்றாலும் அதில் செய்யப் பட்டுள்ள மாற்றங்கள் சுவையையும் ஆர்வத்தையும் ஊட்டு வனவாக இல்லை. அம்பிகாபதியைப் பற்றி ஒரு புது நாடகம் நானே எழுத எண்ணியுள்ளேன். 26-12-1938 சுயமரியாதை பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் தலைவர் திரு. ஈ.வே. இராமசாமிப் பெரி யாரை வாழ்த்தி நான் எழுதிய கடிதம் அவர்தம் வார ஏடான குடிஅரசு வில் வெளியாயிற்று. 1939 15-3-1939 என் அருமை நண்பர் தவத்திரு விருதை சிவஞான யோகிகள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர் தம் மனைவியார் இலக்குமி அம்மையார்க்கு மடல் விடுத்தேன். 29-3-1939 திரு. கனகராயருடன் பாரகன் திரையரங்கு சென்று இராமலிங்க சுவாமிகள் திரைப்படம் பார்த்தேன். நெஞ்சை உருக்கும் இனிய காட்சி. இராமலிங்கராக நடித்தவரும் சிறுவர் இருவரும் அருமையாக நடித்தனர். தமிழ்ப் பாடல்களை இனிய தமிழ்ப் பண்களில் இசைக்காமல் இந்துத்தானி பாணியில் பாடியமையே படத்தில் உள்ள குறைபாடு. 29-6-1939 என்னிடமிருந்து விநாயகப் புராணச் செய்யுள் நூலைப் பெற்றுச் செல்வதற்கெனத் திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை வீட்டுக்கு வந்தார். 16-7-1939 தமிழ்த் திருமண மாநாட்டு அமைப்பாளர்கள் என்னை கோகலே அரங்கத்துக்கு அழைத்துச் சென்றனர். வரவேற்புக் குழுத் தலைவர் கா. சுப்பிரமணியப் பிள்ளையவர் களும், சோ. பாரதியாரவர்களும் என்னைப் புகழ்ந்து சில சொல்லி, கூட்டத் தலைமை ஏற்க வேண்டினர். தமிழ், ஆரிய திருமண முறைகளைப் பற்றி ஒன்றரை மணி நேரம் உரையாற்றி னேன். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர்க் கூட்டம் முடிந்தது. 23-7-1939 இன்றைய Sunday Observer இதழில் ‘The Tamilian and Aryan Thought’ எனும் என் கட்டுரையும் தமிழ்த் திருமண மாநாட்டுத் தலைமையுரையும் வெளிவந்தன. 29-8-1939 ஈ.வே. இராமசாமி நாயக்கரவர்களைப் பற்றித் திரு. சாமி. சிதம்பரனார் எழுதிய வரலாற்று நூலுக்கு என் முன்னுரை வேண்டி சுயமரியாதை இயக்கத்தினரான திரு. குரு சாமி என்னைக் காண வந்தார். இதைப் பற்றிச் சிந்தித்து முடிவெடுப்பதாகக் கூறினேன். 7-11-1939 என் மகன் மறை. திருநாவுக்கரசு எழுதிய இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? எனும் சிறு நூல் வரப் பெற்றேன். நன்றாக எழுதப்பட்டுள்ளது. 28-12-1939 அனைத்திந்திய தமிழ்ச் சமய மாநாடு தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கென சுவாமி சண்முகா னந்தா, சுவாமி அருணகிரி, திரு.வி. கலியாணசுந்தர முதலியார், பண்டிதர் இராசமாணிக்கம் பிள்ளை, சண்முகம் முதலியார் ஆகியோர் வந்தனர். 1940 2-1-1940 மாலையில் திரு. வேலாயுதம் வந்தார். டாக்டர் சி.ஆர். ரெட்டியின் மணிவிழாவில் கலந்து கொண்டு உரை யாற்றுமாறு வேண்டினார். 18-5-1940 திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை, தமது தமிழர் சமயம் நூலைக் கொடுத்தனுப்பினார். 18-10-1940 நாளை மாநாட்டில் கொண்டுவரவிருக்கும் தீர்மானங்களைப் பற்றிப் பேச சுவாமி அருணகிரி, சுவாமி சண்முகானந்தா, திரு. வி. கலியாணசுந்த முதலியார், திருச்சி விசுவநாதம் ஆகியோர் வந்திருந்தனர். 19-10-1940 அனைத்திந்திய தமிழ்ச் சமய மாநாடு பச்சை யப்பன் கல்லூரியில் நடைபெற்றது. உமாமகேசுவரன் பிள்ளை யவர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்கள். திரு, சோம சுந்தர பாரதியார் தமிழ்க் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றி னார். முன்னாள் அமைச்சர் திரு. முத்தையா பிள்ளை தலைமைப் பொறுப்புக்கு என் பெயரை முன்மொழிந்தார். திரு. வி. கலியாணசுந்தர முதலியாரவர்களும், செட்டி நாடு குமாரசாமி ராஜா அவர்களும் என்னைப் பாராட்டிப் பேசி வழி மொழிந் தனர். பின்னர் நான் நெடுவுரையாற்றினேன். 20-10-1940 இன்றைக்கும் மாநாடு நடந்தது. நான் தலைமை ஏற்றேன். ஆனால் தீர்மானங்களை நிறைவேற்றத் தொடங்கிய போது சுயமரியாதை இயக்கத்தினர் குறுக்கிட்டுக் குழப்பம் விளைவித்தனர். 1941 8-1-1941 வெட் எண்டு திரையரங்கு சென்று தாம ஆல்வா எடிசனைப் பற்றிய ஆங்கிலப் படம் பார்த்தேன். தமிழ்த் திரைப்படங்களைப் போல் ஆங்கிலத் திரைப்படங்கள் எனக்கு இன்பம் பயப்பதில்லை. ஏனெனில் அவற்றில் உரை யாடல்கள் தெளிவாக இருப்பதில்லை; பாடல்களும் இருப்ப தில்லை. 29-1-1941 தேவார இசையறிஞர் திரு. தண்டபாணி தேசி கர்க்கு இசைத் தொடர்பான சொற்கள் சிலவற்றுக்கு உரிய தமிழ்ச் சொற்கள் தேவை என்று துரைவேலு கேட்டார். அவற்றுக்கு உரிய சொற்களைக் கூறினேன். 4-3-1941 பல்லாவரத்தில் ஏராளமாக ஏற்படுத்தப்பட்டுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து நாளும் நாற்றம் எடுக்கின்றது. காற்றும் மாசுபடுத்தப்பட்டு, மூச்சிழுப்பதே சிக்கலாகி விட்டது. 14-5-1941 கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் த.வே. உமாமகேசுவரன் பிள்ளையவர்கள் வட இந்தியாவில் இத் திங்கள் 9அம் நாள் மறைந்த செய்தியறிந்து என் ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டு அதன் செயலாளர் நீ. கந்தசாமிப் பிள்ளையவர்கட்கு மடல் விடுத்தேன். 23-6-1941 எனது ‘Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge’ நூலைத் திரு. சக்கரைச் செட்டியார் அவர்கட்கு அனுப்பி வைத்தேன். 29-11-1941 புதுவை அரவிந்த ஆசிரமத்திலுள்ள திரு. ப. கோதண்டராமனுக்கு ஞானசாகரம் 19ஆம் தொகுதி 1-6 இதழ்களும் அஞ்சலட்டையும் விடுத்தேன். 18-12-1941 உணவுப் பொருள், விறகு ஆகியவற்றின் விலை மிகவும் உயர்ந்து விட்டதால் இப்பகுதியிலுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் உழைக்கும் ஏழை மக்கள் வேலை நிறுத்தம் செய்து விட்டுக் கடைத் தெருவைச் சூறையாடி யுள்ளனர். ஏழை மக்களுக்கு ஐரோப்பிய முதலாளிகள் உதவிசெய்யப் கூடாது என்று தடுத்த அதிகாரிகள் நையப் புடைக்கப்பட்டனர். இறைவன் ஏழை மக்கட்கு அருள் புரிந்து அனைவர்க்கும் அமைதி வழங்கட்டும்! 19427 13-1-1942 பவானந்தர் கழகத்துப் பண்டிதர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையவர்களிடமிருந்து தொல்காப்பியம்- சொல்லதிகாரம் நச்சினார்க்கினியம்- வரப்பெற்றேன். 24-1-1942 ஜப்பானியர்க்கு அஞ்சி, சென்னை வாழ் மக்கள் தம் இருப்பிடங்களை விட்டு வேறிடங்கட்குப் பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். 13-3-1942 கல்லூரியில் என் மாணவர், தற்போதைய சென்னை மாநகராட்சியின் மேயர் திரு. சக்கரைச் செட்டியார்க்குப் பரிந்துரைக் கடிதம் தருமாறு துரைவேலு கேட்டார். 16-6-1942 மதுரை ... மாலையில் அமெரிக்கன் கல்லூரிப் பண்டிதர் கார்மேகக் கோனாரவர்கள் வந்தார். அவர்தம் கருத்துகளும் என்றன் கருத்துகளும் ஒத்திருக்கக் கண்டேன். 30-8-1942 இந்தியாவில் போர் ஆயத்தங்கள் பொது மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளன. உணவுப் பொருள்களின் விலை மிகவும் உயர்ந்து விட்டது. ஈசன் நம்மைக் காக்கட்டும்! 1-9-1942 மேதகு சென்னை ஆளுநரின் தலைமையில் விக்டோரியா பொதுக் கூட்டத்தில் வரும் 6 ஆம் நாள் நடை பெறவிருக்கும் தேசிய வழிபாட்டுக் கூட்டத்துக்கு ஆளுநரின் சார்பில் என்னை அழைப்பதற்கென திரு. ஆல்பட்டு யேசுதாசு வந்தார். 4-9-1942 மணிப்பொறிகளை ஒரு மணிநேரம் குறைத்து வைக்குமாறு அரசாங்கம் ஆணையிட்டுள்ளது. 6-9-1942 விக்டோரியா பொதுக் கூடத்திற்குச் சென்றேன். இராவ்சாகிபு யேசுதாசன் என்னை வரவேற்று, மேதகு ஆளுநர் அர்தர் ஓப் (Arthur Hope) அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர், நேய நாடுகள் வெற்றி பெற வேண்டி, தேசிய வழிபாட்டுக் கூட்டம் தொடங்கிற்று. ஆளுநர் தொடக்க வுரைக்குப் பிறகு வழிபாட்டைத் தொடங்குமாறு என்னை வேண்டினர். வழிபாட்டை ஆங்கிலத்தில் நடத்தினேன். அப் பெருங் கூட்டத்தில் பல சமயத்தவரும் கலந்து கொண்டனர். 3-10-1942 தண்டபாணி தேசிகரின் பக்த நந்தனார் திரைப்படம் பார்த்தேன். சுந்தராம்பாளின் நந்தனார் படத்தைப் போல் இது அத்துணைச் சிறப்பாக இல்லை. 24-10-1942 ரூபாய்க்கு 2 படி 7 ஆழாக்கு என்ற அளவில் ஆறு ரூபாய்க்கு அரிசி வாங்கினேன். அரிசியும் பிற உணவு தானியங்களும் மிக அதிகமான விலைக்கு விற்கின்றன.. ஏழை மக்கள் எப்படி உயிர் வாழ்கின்றனர் என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்பாக உள்ளது. 31-10-1942 பெரிய புராண இடைச் செருகல்களைப் பற்றித் தம் ஐயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கென பண்டிதர் மா. இராசமாணிக்கம் பிள்ளை என்னைக் காண வந்தார். 1943 3-1-1943 செப்புக் காசுகள் கிடைப்பதே அரிதாகி விட்டது. பேராசைமிக்க வணிகர்கள் அவற்றைச் சேர்த்து வைத்து, போர்க் கருவிகளையும் குண்டுகளையும் செய்வதற்கென விற்று விடுகின் றனர். இவை கிடைக்கப் பெறாமையினால் ஏழைமக்கள் அல்ல லுறுகின்றனர். 23-4-1943 அம்பிகாபதி என்னும் நாடகத்தை எழுதி வருகிறேன். 16-9-1943 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளையின் தலைமையில், தமிழ், தமிழரின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய சீர் குலைந்த நிலை பற்றி விரிவாக உரையாற்றினேன். 26-10-1943 திரு. தேவநேயப் பாவாணரும், திரு. இராச மாணிக்கம் பிள்ளையும் வந்தனர். அடுத்த ஞாயிறு சென்னை யில் கூடவிருக்கும் தனித்தமிழ் மாநாட்டின் தொடக்க விழாவுக்கு என்னைத் தலைமையேற்க வேண்டினர். நான் இணங்கினேன். 1944 15-2-1944 காஞ்சி நாகலிங்க முனிவர் என்னைக் காண வந்தார். தமது எண்பதாண்டு விழாவை ஒட்டி என்னை வாழ்த்துரை எழுதித் தர வேண்டினார். 3-3-1944 உடல்நலமின்மையால் சில காலமாக எழுதாது நிறுத்தி வைத்திருந்த அம்பிகாபதி அமராவதி மீண்டும் எழுதத் தொடங்கினேன். இந்நூலை விரைவில் முடித்து, கோவலன் கண்ணகி முதலான நூல்களை எழுத ஈசன் அருள் புரிவானாக! 10-3-1944 சுவாமி சிவானந்த சரசுவதி என்னைக் காண வந்தார். 21-4-1944 திரு. இராசமாணிக்கம் பிள்ளை தம் நண்பர் இருவருடன் வந்து, தமது பல்லவர் வரலாறு நூலை எனக்குக் கொடுத்து விட்டுச் சென்றார். 30-4-1944 என் மகள் நீலாவின் கணவர் திரு. வ. திருவரங்கம் 28ஆம் நாளன்று மறைந்தார் என்னும் செய்தி வரப்பெற்றேன். 12-8-1944 இராவ்சாகிபு கு. கோதண்டபாணி பிள்ளை என்னைக் காண வந்தார். அவர் கேட்டுக் கொண்டபடி, அவர்தம் நெடுநல்வாடை உரையையும், குறட்பாக்களையும் எவ்வெவ் வகையில் செழுமைப்படுத்தலாம் என்று சில கருத்துகளைக் கூறினேன். 22-8-1944 Liberator இதழின் உதவி ஆசிரியர் திரு. (கா.) அப்பாத்துரைப் பிள்ளை என்னைக் காண வந்தார். 1945-468 17-2-1945 தொல்காப்பியப் பதிப்பாசிரியர் சி.வை. தாமோதரம் பிள்ளையைப் பற்றிப் பாராட்டுரை எழுதி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த திரு. என். சிவபாதசுந்தரனுக்கு அனுப்பி வைத்தேன். 18-3-1945 திரு. பாரதிதாசனின் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டக் குழுவுக்கு என்னைத் தலைமையேற்குமாறு திரு. கா. அப்பாதுரைப் பிள்ளையும் அவருடன் வந்த அவர்தம் நண்பரும் வேண்டினர். நான் இணங்கவில்லை. 11-4-1945 முல்லைப் பதிப்பகம் திரு. முத்தையா தம் நண்பர்களுடன் என்னைக் காண வந்தார். என் நூல்களை வாங்கினார். பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம் நூலைக் கொடுத்து, எனது கருத்தை எழுதி விடுக்குமாறு வலியுறுத்திக் கூறினார். 13-4-1945 பாரதிதாசனின் நூலைப் பற்றி என் கருத்தை வெளியிட்டுத் திரு. முத்தையாவுக்கு மடல் விடுத்தேன். 27-4-1945 என் பேரப்பிள்ளைகள் வள்ளி, முருகன், நம்பி (ஆருரன்) ஆகியோர் தம் விடுமுறை நாள்களைக் கழிப்பதற் கென இன்று வந்தனர். 6-5-1945 கோபி செட்டிப்பாளையம் தமிழ்ச் சங்கக் கூட்டத்தின் இரண்டாம் நாள் வேத உபநிடத சாரம் எனும் பொருள் பற்றி நான் உரையாற்றினேன். என் உரை தொடங்கு வதற்கு முன்னர், திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளையின் மறைவு குறித்து இரங்கல் உரைகளைச் சங்க உறுப்பினர் சிலர் ஆற்றினர். இந்தப் பெரும் தமிழறிஞர் மறைந்ததால் தமிழ் கூறும் நல்லுலகுக்கு ஏற்பட்ட இழப்பைப் பற்றி நான் பேசினேன். 7-5-1945 மூன்றாம் நாள் கூட்டம். சேலம் நகராட்சிக் கல்லூரித் தமிழ்ப் பண்டிதர் திரு. தேவநேயப் பாவாணர் சில தமிழ்ச் சொற்களின் பிறப்பு குறித்து ஆழமான உரையாற்றினார். அவர்தம் உரையில் பொதிந்திருந்த ஆழ்ந்த அறிவும் நகைச் சுவையும் கேட்போரைப் பிணித்தன. 4-7-1945 தம் தமையனார் திரு. வி. உலகநாத முதலியா ரவர்கள் மறைந்தார் என்ற துயரச் செய்தியைத் திரு.வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள் சொல்லியனுப்பினார். 12-7-1945 குடவாசல் காவிரி நீர் பாயும் வளமான வயல்களிலெங்கும் நெற்பயிர் விளைந்து நிற்கின்றது. இருப்பினும் வெய்யிலைத் தாங்க முடியவில்லை. உழைப்பாளர் கடுமையாக உழைத்தாலும் ஆண்டைகள் அவர்கட்கு உரிய வற்றைத் தருவதில்லை. அவர்கள் நன்றாக உண்பதும் உடுத்துவதும் இல்லை. கூரை வேய்ந்த குடிசைகளே எங்கும் நிறைந்துள்ளன. 19-7-1945 மறைத்திரு. அருள் தங்கையாவும் மறைத்திரு. சவரிமுத்துவும் முற்பகல் வந்தனர். சைவ சித்தாந்தம் பற்றி நெடு நேரம் உரையாடினோம். 23-10-1945 தமிழ் இந்தியா நூலை எழுதிய திரு. ந.சி. கந்தையாப் பிள்ளை என்னைக் காண வந்தார். தாம் அண்மை யில் எழுதிய நமது நாடு எனும் நூலைக் கொடுத்து, என் கருத்தை அறிய விரும்பினார். நெடுநேரம் உரையாடினோம். 6-11-1945 என் மகள் நீலா நேற்று மறைந்தாள் என்ற துயர்மிகு செய்தியைக் கழகத்திலிருந்து திரு. நாயுடு கொண்டு வந்தார். அழுதேன். 28-1-1946 பிற்பகல் காரைக்குடி இராய. சொக்கலிங்கம் தம் நண்பர்களுடனும், திரு. வி. கலியாணசுந்தர முதலியார வர்களுடனும் என்னைக் காண வந்தார். நெடுநேரம் உரையாடினோம். 25-2-1946 ஒன்றுக்கும் உதவாத பங்கீட்டு அரிசி வழங்கல் தொடர்பாகச் சென்னை முதல் பரங்கிமலை வரையான இருப்புப்பாதை நெடுகவும் தொழிலாளர் பெருங் குழப்பம் விளைவித்தனர். 19-3-1946 இன்றைக்கும் பங்கீட்டு அரிசி கிடைக்கவில்லை. ஆனால், இறைவன் அருளால் எம் வீட்டுப் பணிப்பெண்ணின் தந்தை ரூ.2-8 அணாவுக்கு 4 படி புழுங்கல் அரிசி வாங்கி வந்தார். 30-3-1946 திரு. கா. அப்பாத்துரைப் பிள்ளையும், திரு. மா. இராசமாணிக்கம் பிள்ளையும் என்னைக் காண வந்தனர். திரு. இராசமாணிக்கம் பிள்ளையைச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு சர். ஏ. இராசாமி முதலியார்க்குப் பரிந்துரைக் கடிதம் கேட்டனர். கொடுத்தேன். தம்முடைய சேக்கிழார், சங்க காலப் புலவர்கள் ஆகிய நூல்களை அவர்கள் கொடுத்தனர். 19-4-1946 பண்டிதர் தேவநேயப் பாவாணர் வந்தார். தம் தமிழ்ப் புலமைக்குச் சான்றிதழ் வழங்குமாறு வேண்டினார். கொடுக்க இணங்கினேன். தம்முடைய நூல்களான திராவிடத் தாய், கட்டுரை வரைவியல், சுட்டு விளக்கம் ஆகியன எனக்குக் கொடுத்தார். 1946-19499 8-10-1946 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மௌனச் சாமியார் என்பார் வீட்டுக்கு வந்தார். 9-10-1946 மௌனச்சாமியார் தமக்கு ஓர் ஆறிமுகக் கடிதம் தருமாறு கேட்டார். அவர்க்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல புலமை உண்டென்பதால் அவ்வாறே கொடுத்தேன். 15-1-1947 பண்டிதர் கண்ணப்ப முதலியாரை அழைத்துக் கொண்டு திரு. மா. இராசமாணிக்கம் பிள்ளை வந்தார். மூன்று தொகுதிகளாகத் தமிழில் தாம் எழுதிய சோழர் வரலாற்று நூலை எனக்களித்தார். 9-2-1947 தமது நூல் வெளியீட்டாளர் மே. சக்கரவர்த்தி நயினாரை அழைத்துக் கொண்டு பண்டிதர் நவாலியூர் கந்தையா என்னைக் காண வந்தார். jh« vGâa ‘jÄH® ah®?, தமிழர் சமயம் யாது எனும் நூல்களைஎனக்கு வழங்கினார். 22-7-1947 தமிழ் மொழியைப் பற்றிப் பொருளில் லாமல் ஏதேதோ சொல்லியுள்ள திரு. காந்திக்கு ஒரு மறுப்புக் கட்டுரை எழுதத் தொடங்கினேன். 15-8-1947 இப்பகுதிவாழ் மக்களும் விடுதலை நாளைச் சிறப்புறக் கொண்டாடினர். 16-9-1947 அச்சறைகளையும் பிற அச்சகப் பொருள் களையும் சென்னை தினத்தந்தி மேலாளர்க்கு விற்று விட்டேன். 22-9-1947 பண்டிதர் மா. இராசமாணிக்கம் பிள்ளை வந்தார். தாம் வெளியிடவிருக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் நூலின் கையெழுத்துப் படியைக் கொடுத்து என்னை முன்னுரை எழுதித் தருமாறு வேண்டினார். ஒரு வாரத்தில் எழுதித் தருவதற்கு இணங்கினேன். 30-11-1947 பொன்னி இதழின் ஆசிரியரும் திரு. சொக்க லிங்கமும் என்னைக் காண வந்தனர். 15-12-1947 கடந்த மூன்று நாளாகப் பங்கீட்டு அரிசி எங்கட்குக் கிடைக்கவில்லை. மக்கள் பட்டினியால் வாடு கின்றனர். சேர்ந்து வாழ விரும்பாமல் இந்துக்களும் இசுலாமி யரும் வடநாட்டிலே ஒருவர் ஒருவரைக் கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இந்தியர்க்கு நல்லறிவையும் அன்புணர்வையும் ஈசன் அருள்வானோ? 31-1-1948 நேற்று மாலையில் திரு. காந்தியை மராத்திய இளைஞன் ஒருவன் சுட்டுக் கொன்றான் என்ற துயரச் செய்தி யை அறிந்தேன். இக்கொடுஞ்செயலின் விளைவு எப்படியிருக்கு மோ? எங்கும் விடுமுறையே. முற்பகலுக்குப் பிறகு மின்சாரத் தொடர்வண்டி ஓடவில்லை. காந்தியின் ஆன்மாவுக்கும் மக்கள் அனைவர்க்கும் ஈசன் அமைதி வழங்கட்டும்! 28-2-1948 திரு. கா. அப்பாதுரைப் பிள்ளை வந்தார். நான் முன்னுரை வழங்குவதற்கெனத் தாம் எழுதிய ‘India’s Language Problem’ எனும் நூலைக் கொடுத்துச் சென்றார். அதனைப் படித்துத் திருத்தங்களைச் செய்து வருகிறேன். 11-5-1948 திரு. மயிலை. சீனி. வேங்கடசாமி வந்தார். என் உடல் நலம் சரியில்லாததால் அவர்தம் நூலைப் படித்து முன்னுரை தர முடியாத நிலையிலிருக்கின்றேன் என்று சொல்லி எழுவகைத் தாண்டவம் நூலைத் திருப்பிக் கொடுத்தேன். 17-7-1948 இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்குச் சென்றேன். பெரியார் இராமசாமி நாய்க்கரவர்களும், திரு. வி. கலியாண சுந்தர முதலியாரவர்களும் வேறு சில பெரி யோரும் என்னைத் தலைமையேற்க வேண்டினர். என் மகள் திரிபுரசுந்தரி தன் கணவனையும், மகன் நம்பியையும் அழைத்துக் கொண்டு மாநாட்டுக்கு வந்தாள். 31-7-1948 திரு. சோமசுந்தர பாரதியாரின் எழுபதாம் ஆண்டுப் பிறந்த நாளை ஒட்டி அவரை வாழ்த்தி மடல் விடுத்தேன். 5-11-1948 திரு. ஈ.வே. இராமசாமியைப் பற்றி ஒரு பாராட்டுரை எழுதி புதுவை ஞாயிறு நூற் பதிப்பகத்துக்கு விடுத்தேன். 22-12-1948 கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியாரவர்களுக்குப் பரிந்துரைக் கடிதம் பெற வேண்டி பண்டிதர் இராசமாணிக்கம் பிள்ளை வந்தார். எழுதிக் கொடுத்தேன். 25-12-1948 .... டி.கே.எ. சகோதரர்கள் நாடகக் கம்பெனியாரை என் மாணவர் நாரண. துரைக்கண்ணன் அழைத்து வந்தார். 5-2-1949 பகவத் கீதையை அருமையாகச் செந்தமிழில் மொழிபெயர்த்த கொழும்புப் புலவர் பாண்டியர்க்கு வாழ்த் துரைக் கடிதம் விடுத்தேன். 16-4-1949 பிரம்பூர் பாரக் திரையரங்கில் வேலைக் காரி பார்த்தோம். முற்பகுதியை விடப் பிற்பகுதியே நன்றாயிருந்தது. 1-7-1949 டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார், பண்டிதர் இராசமாணிக்கம் பிள்ளை, திரு. தேவநேயன் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்க்கு பதில் விடுத்தேன். 4-7-1949 சைவ சித்தாந்தத்தைப் பற்றிக் கட்டுரை எழுத இணங்கி, கலைக்களஞ்சியத்தின் தலைமை ஆசிரியர்க்குக் கடிதம் விடுத்தேன். 1949-195010 23-11-1949 வால்டாக்சு சாலையிலுள்ள அரங்குக்குச் சென்று டி.கே.எ. சகோதரர்கள் நடத்தும் சேரன் செங்குட் டுவன் நாடகம் பார்த்தேன். கண்ணகி வரலாற்றின் இறுதிப் பகுதி இதல் சேர்க்கப்படவில்லையாதலால் நாடகம் சுவையாக அமையவில்லை. 20-1-1950 திருக்குறளுக்கு உரையெழுதத் தொடங்கினேன். முற்றிலும் குறட்பாக்களாலான வாழ்க்கைக் குறள் எனும் நூலையும் எழுதத் தொடங்கினேன். இவ்விரண்டு பணி களையும் முடிக்க இறைவன் அருளட்டும்! 14-2-1950 என் ஒளிப்படம் கொண்ட அச்சுக் கட்டையை (block) அனுப்பி வைக்குமாறு தமிழ் நாடு இதழாசிரியர் கி.ஆ.பெ. விசுவநாதம் மடல் விடுத்திருந்தார். 18-3-1950 கெயிட்டி திரையரங்கு சென்று பொன்முடி பார்த்தேன். அருமையாக இருந்தது. 4-8-1950 பெரியார் ஈ.வே. இராமசாமி நாய்க்கர், ஆடல ரசுவுடன் என்னைக் காண வந்தார். ஒரு மணி நேரம் உரை யாடினோம். அடிக்குறிப்புகள் *tªnj மாதரம் 1. கோயில்தொறும் கோயில்தொறும் அருட்கோலங் கொண்டிருக்கும் தாய்துர்க்கே தமியேம்நின் படிவமன்றே பரவுவதே; பாய்படைகள் பதின்கரத்தும் பற்றுகின்ற தாய்துர்க்கே சேயிதழ்த்தா மரைநிழல்வாழ் திருமகளும் நீயன்றே; மேயகலை விழுப்பொருள்கள் விளக்குமின்னும் நீயானால் சேயேம்நின் திருவடிகள் வாழ்த்துவதும் சிறப்பாமே; (1) அன்னாய் வாழி, யரும் பொன்னாள் வாழி, ஒப்பில் மின்னாள் வாழி. கனி நீரும்வாழி, வந்தே மாதரதரம்; களங்கமிலா தினிதாகி வளம்பெறுநன் னனகைதுலங்க விளங்குபசுங் கதிர்முகம்எங் களைகணாம் அன்னாய், நின் இளங்குமுத வாய்முகமெம் இன்னுணவாம் அன்னாய் வந்தே மாதரம் (2) (மறைமலையடிகளார் பாமணிக்கோவை) 2. திரு. வி. க. வின் தமையனார் 3. ஜாலியன் வாலா பாக் - பஞ்சாப் படுகொலையைப் பற்றிய குறிப்பு இது. 4. 1921 ஆம் ஆண்டு சூன் முதல் நவம்பர் வரை சென்னை பின்னி ஆலைகளில் நடந்த வரலாற்றுப் புகழ்மிக்க வேலை நிறுத்தம் பற்றிய குறிப்பு இது. 6. தம்முடைய கீதாஞ்சலி நூற்பிரதியின் இறுதியில் அடிகளார் 22.8.1931 எனும் நாளிட்டு எழுதியுள்ள வருமாறு : மாணிக்க வாசகரின் நெஞ்சுருக்கும் பாடல் ஊற்றில் ஆழ்ந்த நமக்குக் கீதாஞ்சலிப் பாடல்கள் சுவையற்று இருக்கின்றன. 7. 1942 ஆம் ஆண்டுக்குரிய குறிப்புகள் கழகத்தின் திருக்குறள் நாட்குறிப்பேட்டில் எழுதப் பெற்றுள்ளன. 8. 5.2.1945 தொடங்கி 7.9.1946 வரையான குறிப்புகள் ஒரே நாட்குறிப்பேட்டில் உள்ளன. 9. 9.9.1946 முதல் 6.11.1949 வரையான குறிப்புகள் இந்நாட்குறிப்பேட்டில் உள்ளன. 10. இந்நாட்குறிப்பேட்டில் 7.11.1949 முதல் 14.8.1950 வரையான குறிப்புகள் உள்ளன. அடிகளார் 15.9.1950 ஆம் நாள் உலக வாழ்வை நீத்தார். மறைமலையடிகளார் நாட்குறிப்புகள் (1898 - 1950) - முற்றும் - பின்னிணைப்பு மறைமலையடிகளார் மணிமொழிகள் தொல்காப்பியர் கழகம் 1. மறைமலையடிகள் வரலாற்று மாண்பு அடிகள் சோழ நாட்டிலே நாகைக்கு அருகிலே காடம்பாடி என்னும் ஊரிலே சைவ வேளாண் மரபில் தோன்றிக் கல்வி, அறிவு ஒழுக்கங்களில் தலைசிறந்து சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பணியாற்றித் திகழ்ந்து மனைவி, மக்களைப் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து துறவு பூண்டு, சென்னைப் பல்லாவரத்தில் பொதுநிலைக் கழக (சமரச சன்மார்க்கத்) தலைவராய் வீற்றிருந்தவர். செந்தமிழும் சிவநெறியும் செழிக்கத் தம்பேரறிவால் அடிப்படையிட்டவர். தனித்தமிழிலே தேனும் பாலுங் கலந்தது போன்ற தீஞ் சொற்சுவை மிக்க இனிய உயரிய உரைநடை எழுதுவதிலும் சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போலச் சொன்மழை பொழிவதிலும் இவர்க்கு ஒப்பாவர் எவருமிலர், குயிலோசை போன்ற குரலினிமை வாய்க்கப் பெற்றவர். ஆங்கிலம், வடமொழிப் புலமை மிக்க அடிகள் தம் அரிய ஆராய்ச்சித் திறனால் தனித்தமிழில் பல்துறை நூல்கள் நாற்பது வெளியிட்டார். அருமையான ஆங்கில நூல்கள் மூன்றாம். பெற்றோர்: சொக்கநாதர் - சின்னம்மை. திருக் கழுக்குன்றச்சிவபெருமான் வேதாசலம் பெயர் பெற்றார் அடிகள். வரன்முறை வழாது, அடிகளார், தமிழர் நல் வாழ்வு பெற வாழ்ந்து காட்டிய அறிஞர். தம் காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர் பலருடனும் தமிழ் நிறுவனங்களுடனும் சைவ சித்தாந்த சபைகளுடனும் தொடர்பு கொண்டு உரையாடியும் உரையாற்றியும் உணர்வூட்டினார். அடிகளிடம் தமிழ் பயின்றவர்களில் உயர் நிலை உற்றோர் பலர். அடிகளின் இன்னுயிர் 15-9-50 அன்று பிரிந்தது. அறிவுக்கடல் என்னும் இதழை நடாத்தி, அரிய நூலகத்தை நிறுவி, வாழ்ந்த அடிகள் நம் நெஞ்சங்களில் என்றும் இடம் பெறுவர். 2. தமிழ்க் கடல் மறைமலையடிகள் தமிழர் நல்வாழ்விற்காக ஆய்ந்து கடைப்பிடித்த அடிப்படைக் கொள்கைகள் தமிழ் மொழியே வடமொழியினும், உலக மொழிகளினும் மாண்புடையது. தமிழ்மொழிதான் இலக்கண வரம்புடைய செம்மையுடையது. உலகில் மக்கள் முதன் முதலில் தோன்றிய காலத்தில் பேசப்பட்ட மொழி தமிழே. பிறப்பால் உயர்வு தாழ்வு கூறுவது தவறு எனச் சுட்டிக் காட்டிச் சாதி ஒழிப்பு தீண்டாமை ஒழிப்பு முதலிய சீர்திருத்தங் களைப் போற்றியது. சாதி வேறுபாடு, சமய வேறுபாடு இன வேறுபாடு கருதாமல் பழக வேண்டுமென அறிவுறுத்தியது. தனித்தமிழ் இயக்கங் கண்டு திருக்கோயில்களிலும், இல்லச் சடங்குகளிலும் தமிழ் மந்திரங்களை ஓத வேண்டும் என்றது. தமிழர் நாகரிகம் பிற நாகரிகங்களினும் முந்தியதும் மேம்பட்டதும் ஆகும். தமிழர்களைச் சூத்திரர்கள் எனக் கூறியதைக் கண்டித்து ஒழித்தது. தமிழ்ப் புலவர்களின் மதிப்பை உயர்த்தியது. போலி நூல்கள் எழுதிப் பொருளீட்டாது, அரிய தனித் தமிழ் நூல்கள் (40) வெளியிட்டது. - வ. சுப்பையா 3. தனித் தமிழ் தமிழரனைவரும் பண்டுபோல் தமக்கும் தம் இல்லங்களுக்கும், தம் ஊர்களுக்கும் பிறவற்றிற்கும் எல்லாம் தூய தமிழ்ப் பெயர்களையே அமைத்தல் வேண்டுமன்றி வடமொழி முதலான வேற்றுமொழிச் சொற்களைப் பெயர்களாக அமைத்தல் ஆகாது. தமிழ்மொழி கற்கும் தமிழ் இளைஞர் ஒவ்வொருவரும், அவர் தமக்குத் தமிழ் கற்பிக்குந் தமிழாசிரியர் ஒவ்வொருவரும் வடமொழி முதலான பிறமொழிச் சொற்களைத் தமிழின்கண் வந்து நுழையாதபடி அறவே விலக்கி, இப்போது வழங்காமற் பழைய தமிழில் வழங்கிய சொற்களையே மீண்டும் எடுத்து வழங்கித் தமிழை வளம்படுத்திக் காக்கக் கடவராக. திருக்குறளின் காலத்தும் அதற்கு முற்பட்ட காலத்தும், இயற்றப் பட்ட பழைய செந்தமிழ் நூல்களைப் பார்த்தால் தமிழின் சொல்வளம், பொருள்வளம் நன்கு விளங்கும். இவ்வளவு சிறந்த தமிழ் மொழியைப் பேசிய பழைய தமிழ் மக்கள் எவ்வளவு சிறந்த நாகரிகம் வாய்ந்தவர்களாயும், பிற மொழியாளர்களுக்கும், அவர்களுடைய சொற்களுக்கும் அடிமைப்படாத எவ்வளவு தனிப்பெருஞ் சிறப்பு உடையவர்களாயும் இருந்திருக்க வேண்டும். மற்றை மொழியின் உதவியை வேண்டாது தனித்து இயங்க வல்ல சொல்வளமும் பொருட் செழுமையுமுடைய நம் செந்தமிழ் மொழியை அதற்கே உரிய சொற்களால் வழங்காமல் அயல்மொழிச் சொற்களை இடையிடையே நுழைத்து அதன் அழகையும் வலிமையையும் சிதைத்தல் பெரியதொரு குற்றமாமென உணரலானேம்; இன்றியமையாது வேண்டப் பட்டாலன்றித் தமிழில் பிற சொற்களைப் புகுத்தல் நிரம்பவும் பிழைபாடுடைத்து. 4. தமிழ் - தமிழர் தமிழர்க்குள்ள பெருமை யெல்லாம் அவர் தொன்று தொட்டுத் தூய்தாக வழங்கி வருந் தமிழ் மொழியினையே சார்ந்திருக்கின்றது. திருவள்ளுவர் பிறப்பதற்கு முன் ஒரு நானூறு ஆண்டும், அவர் பிறந்த பின் ஒரு நூறு ஆண்டும் சேர்ந்து முடிந்த ஓர் ஐந் நூறாண்டும் தமிழ்மொழி மறுவற்ற மதிபோற் கலைநிரம்பி விளங்கிய காலமாகும். இக்காலத்திலே சிறந்த புலவர் பலர் தோன்றிப் பலவகையான அரிய பெரிய செந்தமிழ் நூல்கள் இயற்றினர். தமிழுக்குப் புறம்பான மொழிகளை ஆராய்ந்து சொல் கிறேன். தமிழுக்குள்ள சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை. நமது இனிய செந்தமிழை மறப்பதும், பயிற்சி செய்யாமல் விட்டிருப்பதும் நமது உயிரையே நாம் அழிப்பதாய் முடியும். தமிழ் நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்களைக் குறைக்க வேண்டுமென்றும், அயல் மொழிகளிலுள்ள ஒலிகளைத் தமிழிற் சேர்த்துக் கொள்ள வேண்டு மென்றும், அப்போதுதான் தமிழ் வளர்ச்சியடையு மென்றும் கூறுவர் சிலர். நல்லது; தமிழ்ச் சொற்களிலுந் தமிழ் ஒலியினாலுந் தெரிவிக்கக் கூடாதவை இருப்பினன்றோ அயல்மொழிச் சொற்களையும் ஒலிகளையுஞ் சேர்த்தல் வேண்டும்? உலகத்தில் உள்ள எல்லாப் பொருள் களையும், எல்லா அறிவு இயல்களையும் தமிழ்ச் சொற்கள், தமிழ் ஒலிகள் கொண்டே செவ்வையாகத் தெரிவிக்கலாம் என்பது யாம் எல்லாத் துறைகளிலும் புகுந்து எழுதியிருக்கும் நூல்களைச் சிறிது பார்த்தாலுந் தெரிந்து கொள்ளலாம். 5. தொல்காப்பியர், திருவள்ளுவர் தொல்காப்பியர் எல்லாவற்றையும் அறிந்தவர். ஆனால், அவரை அறியாதவர்கள் தமிழ் நாட்டிலே அதிகம். இது தமிழர் களுக்கு ஒரு மானக்கேடு. தம்மிடம் களஞ்சியம் இருக்க, கருவூலம் இருக்கப் பிறரிடம் பிச்சை கேட்கும் இரவலர்களாகத் தமிழர் இருப்பது பெரிதும் வருந்துதற்குரியது. செந்தமிழ் மொழிக்கொரு நந்தாமணி விளக்காய்த் தோன்றித் தன்கட் சுடர்ந்தொளிரும் அறிவுப் பேரொளியைத் தான் பிறந்த தமிழ் நாட்டவர்க்கு மட்டுமேயன்றி, இந்நிலவுலகின் பிற பகுதிகளிலுள்ள பிறநாட்டு மாந்தர்க்கும் வேற்றுமை யின்றி வீசி, எல்லாரையும் ஒரே முழு முதற் கடவுளாம் ஒப்பற்ற தந்தைக்கு உரிமை மகாராய் வைத்து, அவரறிய வேண்டும் அரும்பொருள் முற்றும் ஒருங்கே அறிவுறுத்துந் தெய்வத் திருக்குறள் என்னும் நூலை அருளிச் செய்த பெரியார். மாறுபட்ட அறு சமயத்தோரும் தழுவிக் கொள்ளத் தக்க வகையில் வள்ளுவனார் முப்பாலை மொழிந்திட்டார். அன்றியும் பலவகைப்பட்ட சாதியாரும், நாட்டினரும், காலத்தினரும், பிறரும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் அந்நூல் செய்யப் பட்டிருந்தவை யினாலேயே அதனை எப்பாவலரும் தழுவிக் கொள்வாராயி னர். கிறித்து பிறப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார். ஆண்டைத் தவிர அவர் பிறந்த நாளும் திங்களும் அதற்குச் சான்றுங் கிடைக்கவில்லை. 1977 ஆண்டுகளுக்கு முன் (இன்றைக்கு 2007) திருவள்ளுவர் பிறந்தார் என்பது மட்டும் உறுதி. (கி.பி. 1976 + 31 = 2007) 6. சமயம், கோயில், வழிபாடு இப்போது தமிழ்நாட்டிலுள்ள தமிழ் மக்களிற் பெரும்பாலார் எல்லாம் வல்ல ஒரு தெய்வத்தை வணங்காமல், இறந்து போன மக்களின் ஆவிகளையும் பல பேய்களையும் இவை போன்ற வேறு சில சிறு தெய்வங்களையும் வணங்கி அவற்றுக்காகப் பல கோடிக்கணக்கான கோழிகளையும் ஆடுகளையும் வெட்டிப் பலியிடுகின்றார்கள். இக்கொடிய செயலை அவர்கள் அறவே விடுமாறு செய்து, சிவம் அல்லது திருமால் என்னும் ஒரு தெய்வத்தையே வணங்கும்படிச் செய்தல் வேண்டும். முற்காலத்தில் தமிழர்கள் திருக்கோயிலில் உள்ள திருவுருவங்களைத் தாமே தொட்டு நீராட்டிப் பூவிட்டு அகில் புகைத்துச் சூடங் கொளுத்தி வழிபட்டு வந்தார்கள். இஞ் ஞான்றும் வடநாட்டிலுள்ளவர்கள் அங்குள்ள திருக்கோயில் களில் தாமே திருவுருவங்களைத் தொட்டு வழிபாடு ஆற்றுதலை நேரே பார்க்கலாம். கோயில்களில் வழிபாடாற்றுங் குருக்கள்மார் தமிழ் மொழி யிற் பயிற்சி யுடையராயும், சைவ சித்தாந்தம் நன்குணர்ந்தவ ராயும், தேவார திருவாசகம் ஓதுபவராயும் இருக்கும்படி ஏற்பாடு செய்தல் வேண்டும். திருக்கோயில்களிற் சிவபிரானுக்கு வழிபாடு ஆற்றும் காலங்களில், இச் செந்தமிழ் மந்திரங்களே கூறற்பாலனவாம். இவை கூறி வழிபாடு ஆற்றின், இவற்றை ஓதுவார்க்கும், அருகிலிருந்து கேட்பார்க்கும் சிவபிரான்மாட்டு மெய்யன்பு நிகழும். இவற்றை விடுத்து ஓதுவோர்க்கும் கேட்போர்க்கும் பெரும்பாலும் பொருள் தெரியாத பிறமொழிச் சொற்றொடர் களை மந்திரங்கள் ஆக்கிப் புகலுதல் கரும்பிருக்க அதனை விடுத்து வேம்பு நுகர்ந்து எய்த்தலோடு ஒக்கும். 7. சீர்திருத்தம் பலப்பல புராணக் கதைகளுள் கடவுளிலக்கணத்துக்குப் பொருந்துவனவும் அதற்குப் பொருந்தாதனவும் இருக்கின்றன. அவைகளை யெல்லா` ம் செவ்வையாக ஆராய்ந்து பார்த்துப் பொருத்தமானவைகளை விளக்கி எழுதிப் பொருந்தாதவைகளை விலக்கி விடுவதற்கு உரிய சீர்திருத்தம் முதன்மை யாகச் செயற்பாலதாகும். பொருத்தமில்லாத வகையாய் மணம் பூட்டப்பட்டுப் பாம்பும் கீரியும் போல் ஒருவரை யொவருர் பகைத்துப் பேரல்லலிற் பட்டு உழலும் கணவனையும் மனைவியையும் அக்கூட்டுறவினின்றும் வேறு பிரித்து மறுபடியும் அவர்களை இயைபானவரோடு மணம் புணர்த்துதல் வேண்டும். முப்பதாண்டுகட்கு உட்பட்ட பெண்கள் கணவனை இழந்து விடுவார்களானால், அவர்களைத் திரும்ப மணஞ் செய்து கொடுத்தல் வேண்டும். ஆண்மக்களில் நாற்பதாண்டுக்கு மேற்பட்டவர்கள் இளம்பெண்களை மணஞ் செய்தல் ஆகாது. அப்படிச் செய்ய முந்துகின்றவர்களை எல்லாவகையானும் தடை செய்தல் வேண்டும். நாற்பதாண்டுக்கு மேற்பட்ட ஆண்பாலார் மணஞ்செய்து கொள்ள வேண்டு வார்களானால் தம் ஆண்டுக்கு ஏறக்குறைய ஒத்த கைம்பெண்களையே அவர்கள் மணஞ் செய்து கொள்ளும்படி தூண்டுதல் வேண்டும். தமிழ் நாட்டிலுள்ள மக்கள் ஊன் தின்பவரும் ஊன் தின்னாத சைவரும் என்னும் இரு பெரும் பிரிவில் நின்றாற் போதும். சைவரிலேயே பல வகுப்புகளும், அங்ஙனமே ஊன் தின்பவர்களிற் பலப் பல வகுப்புகளும் இருத்தல் பொருளற்ற வேற்றுமையாய் ஓயாத சாதிச் சண்டைகளை உண்டாக்குவதாய் இருக்கின்றது. பொருளற்ற இவ்வேறுபாடுகளை முற்றும் ஒழிப்பதற்கும் எல்லாரும் பெருமுயற்சி செய்தல் வேண்டும். 8. பொது உள்ளத்தைத் தூயதாக வைத்து எந்நேரமும் நன்னினைவு களிலேயே அஃது ஊறி உரம் பெறுமாறு பழக்கவே, அதனால் உந்தப்படும் உடம்பும் தூயதாக உரமேறி நீண்டகாலம் உயிர்க்கு உறையுளாய் உலவும். தமிழ் மக்களிற் பெரும்பாலார் ஒருவர்பாலுள்ள குற்றங்களை மற்றவர் எடுத்துப் பேசுபவராய்ப் பகைமையையும் மனவருத்தத் தையும் பரவச் செய்து வருகின்றார்கள். இத்தீய பழக்கத்தை ஒழித்தால் அன்றித் தமிழ் மக்கள் முன்னேற்றமடைவது சிறிதும் முடியாது. ஒருவர்பாலுள்ள குற்றங்களை மறைத்து அவர் பாலுள்ள நலன்களை எடுத்துப் பேசுவதற்கே எல்லாரும் விடாப் பிடியாய்ப் பழகுதல் வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் தங்களால் இயன்ற உதவியை மற்றவர்களுக்கு மனமாரச் செய்து, அவர்களை மேன்மேலும் உயர்த்திவிடுதல் வேண்டும். தாம் செய்யும் உதவிக்குக் கைம்மாறாவதொன்றை எதிர்பார்த்தல் ஆகாது. அப்போது தான் நம்முடைய மக்கள் உண்மையான முன்னேற்றத்தை அடைவார்கள். காசையே பெரிதாக எண்ணி வயிறு கழுவி மாண்டு போகும் ஆட்களில் யான் ஒருவன் அல்லன். தமது வாழ்க்கைச் செலவிற்கும், மணச் சடங்கு பிணச் சடங்கு கட்கும் கடன் வாங்கியாகிலும் மிகுதியாகச் செலவழிக் கின்றார்கள். அவையெல்லாம் பெருஞ் செலவாக அவர் களுக்குத் தோன்றவில்லை. எப்போதோ அருமையாக வாங்கும் இரண்டொரு நூலுக்காகுஞ் செலவையே பெரிதாக நினைக் கிறார்கள். இப்படி யிருந்தால் நம் தமிழ்நாடு எக் காலத்தில் முன்னேற்ற மடையுமோ தெரியவில்லை. - முற்றும் -