kiwkiya«-- 28 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) தத்துவம் – 3  சிவஞான போத ஆராய்ச்சி ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 24+296 = 320 விலை : 400/- மறைமலையம் - 28 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com  jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 352 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000 üyh¡f« : வி. சித்திரா   அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005.  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந்திருக் கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) மறைமலைய மாண்பு நுழைவுரை தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்! முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், `முத்தமிழ் அடிகள் என முழக்கமிட நின்றார்! இருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார். தமிழ் தனித்து இயங்காது என்றும், வடமொழி வழியது என்றும், வடமொழித் துணையின்றி இயங்காது என்றும், உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வடமொழியே என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க, வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ் பரப்பாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர். சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், `தனித்தமிழ் (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் `தனித்தமிழ் என்பதை நிலை நாட்டிய நிறைமலை, மறைமலையடிகளாரே! சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், `தொல் காப்பியக் கடல் எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி, ஐந்தெழுத்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே என்றும், ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? என்றும் - எழுதிப் பரப்பினாராக, ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம் என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்! தொல்காப்பியக் காவல் தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என்றும், மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை பேண வேண்டும் என்பதை, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால், ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்ப தற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது என்னும் பாவாணர், மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப் பாடிப் பரவினார். `தனித் தமிழ்த் தந்தையார் என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார். நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழ் காக்கும் படை என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புகளின் மேம்பாட்டையும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார். பல்துறை ஆற்றல் அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார். மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள் என்கிறார். (பனிமலை - இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்). அடிகளார் நூல்கள் அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப்படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை, 1. மருத்துவம் 2. மறைபொருள் 3. இலக்கியம் 4. இதழ்கள் 5. சங்க இலக்கியம் 6. பாடல் 7. நாடகம் 8. புதினம் 9. கடிதம் 10. கட்டுரை 11. சமயம் 12. தத்துவம் 13. வரலாறு 14. சமூக இயல் என்பன. முதற் குறள் வாத நிராகரணம் என்னும் மறுப்பு நூலே, அடிகளின் முதல் நூலாக வெளிப்படுகின்றது (1898) அந்நூன் மறுப்பு நயமே நாகை அடிகளை - பல்லவபுர அடிகளாக -தனித்தமிழ் அடிகளாக ஆக்க அரும் பெரும் தூண்டல் ஆயிற்றாம். அடிகளார் வரலாறு: கீழ்கடல் சார் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிற்றூர் காடம்பாடி, ஆங்கு வாழ்ந்த அருந்தவப் பெருந்தகையர் சொக்கநாதர் - சின்னம்மையார்! இவ்விணையர் கொடையாய்த் தமிழன்னை செய்த தவப் பேற்றால் பிறந்தவர் வேதாசலம். பிறந்த பெரு மங்கல நாள் கி.பி. 15.07.1876. சொக்கநாதர், சித்தமலம் அறுவித்த சித்தமருத்துவர்; அறிவ மருத்துவம் என்பதும் அது. அத்தொழில் அவர்க்கு வளத்தை வழங்கியது. அதனால் வேதாசலம் குறைவற வாழ்ந்தார். நாகப்பட்டினத்து வெசிலியன் மிசன் பள்ளியில் ஐந்து வகுப்புவரை பயின்றார்; சிறந்த மாணவராக விளங்கினார். ஆறாம் வகுப்பில் சேரும் நிலையில், அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். ஆயினும் அன்னையார் உறுதியால் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு இருந்த முதன்மை தமிழுக்கு இல்லை. கிறித்தவ சமயம் பற்றி அன்றிச் சிவனியம் பற்றி அறிய வாய்ப்பில்லை என்னும் இரண்டு குறைகளையும் இளமையிலேயே உணர்ந்தார். வீட்டிலேயே தமிழ் நூல்களைப் பயின்று முதற் குறையையும், நாகையில் இருந்த இந்துமதாபிமான சங்கம் வழி இரண்டாம் குறையையும் நீக்கினார். பள்ளியிலும் குறையறக் கற்றார். வருவாய்க் குறையால் வாடும் அன்னைக்குச் சுமையாய் இல்லாமல் தனியே பயில்வதே இனியவழி என எண்ணி, நாகையில் புத்தக வணிகராக விளங்கிய நாராயண சாமியார் புலமையாலும் சிறந்து விளங்கியவர். ஆதலால் அவரிடம் தனியே இலக்கிய - இலக்கண - சமய நூல்களைக் கற்றார். நாராயணரின் முன்னை மாணவர் பேரா. மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பதையும் அறிந்தார். ஒன்பதாம் வகுப்பொடு பள்ளிக் கல்வியை நிறுத்தித் தனிக்கல்வியே கற்றார். தொல்காப்பியம், தொகை நூல்கள், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவை, இறையனார் அகப் பொருள் எனக்கற்றார். அடிகளார் இயற்றிய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை முகப்பில், எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தேம் என்றும் வேறுசில நூல்களையும் முழுவதாக ஓதியதையும் கூறி, இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். அவ்வாண்டு கி.பி. 1897. நாகை இந்து மதாபிமான சங்கத்திற்குச் சைவ சித்தாந்த சண்ட மருதம் என்னும் விருது பெற்ற சோமசுந்தர நாயகர் வந்து சொற்பொழிவாற்றினார். அவர் பொழிவில் வந்த கருத்தொன்றனை மறுத்து ஒருவர் எழுத, அதற்கு மறுப்பாக முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புரை எழுதினார். அதனைக்கற்ற நாயகர், மீளப் பொழிவுக்கு வருங்கால் முருக வேளைச் சந்திக்க விரும்பினார். அச்சந்திப்பின் பயனே உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம். நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார். இதுவே அடிகளார்க்குச் சென்னை வாழ்வு அமைய முதல் தூண்டல் ஆயிற்று. அடிகளுக்குப் பதினேழாம் வயதில் (1893) திருமணம் நிகழ்ந்தது. துணைவி தம் மாமன் மகள் சவுந்தர வல்லி என்பார். திருவனந்தபுரம் நாராயணசாமி அவர்களின் முன்னை மாணவராம் பேரா. சுந்தரனார் திருவனந்த புரத்தில் இருந்தார். அவரியற்றிய மனோன்மணிய நாடக நூல் கற்று அதன் அருமை கண்டு, பேராசிரியரைக் காணவிரும்பினார். அதனால் தம் ஆசிரியரோடு திருவனந்தபுரம் சென்று பேராசிரியரோடு உரையாடினார். வேதாசலனார் இளம் பருவத்தையும் மூதறிவையும் அறிந்த சுந்தரனார் வியப்புற்றுத் தகுதிச் சான்று ஒன்று வழங்கினார். சிறிது காலம் திருவனந்த புரத்தில் ஆசிரியப் பணியும் செய்தார். அவ்விடத்தின் பருவநிலை ஒவ்வாமையால் நாகைக்கே திரும்பினார். சென்னை: சோமசுந்தரனார் முன்னே கூறியபடி வேதாசலரைச் சென்னைக்கு அழைத்து அறிஞர் நல்லுசாமி என்பார் நடாத்திய சித்தாந்த தீபிகை என்னும் இதழாசிரியர் ஆக்கினார். பின்னே சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டியிருத்தல் அறிந்த சோமசுந்தரனார் வேதாசலனா ர அக்கல்லூரிப் பேராசிரியராக்க முயன்றார். அதுகால் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர். கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் என்பார். 9.3.1898 இல் வேதாசலனார் பணியேற்றார். அங்குப் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்கல்லூரிக் காலத்தே இளங்கலை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு (1903) பட்டினப்பாலை (1906) என்பவற்றுக்கு ஆராய்ச்சி உரை எழுதினார். அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப்புதுமுறை உரை, தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சி யினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டும் என எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்கிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தார்ஆங்கிலமும் வட மொழியும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும் என்றும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம் என்றும் ஒரு தீர்மானம் ஆட்சிக்குழுவில் கொண்டு வந்தனர். ஒரு பாடம் விருப்பப்பாடம் எனப்பட்ட பின்னர் அதனைக் கற்க வருவார் எவர்? தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறையவே ஆசிரியப் பணியிடமும் குறைய வேண்டுவதாகி, அடிகளார் 31.1. 1911 ஆம் நாளுடன் கல்லூரிப் பணியை முடிக்க வேண்டிய தாயிற்று. மாணவர்: இக்காலத்தில் அடிகளின் மாணவராக இருந்தாருள், தணிகைமணி செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சி, நாவலர் ச.சோ. பாரதி, பேரறிஞர் ச. வையாபுரியார் முதலோர் சிலர். தணிகைமணியின், தேவார திருவாசகச் சொல்லடைவு ஒரு பிறப்பளவில் செய்யக் கூடியதா? நாவலர் ச. சோ. பாரதியாரின் ஆய்வுத் துணிவு எத்தனை கசடுகளை நீக்கியது? வையாபுரியார், கால ஆய்விலும், வடமொழிப் பிடிவாதத்திலும் தம்மைச் சால்பு ஆய்வில் இருந்து விலக்கினாலும், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப்பதிப்பு, பல்கலைக் கழக அகரமுதலிப் பதிப்பு இவற்றைச் செய்த அருமை என்ன? புறத்திரட்டு, களவியல், காரிகை ஆயவற்றின் பதிப்புச் சிறப்பு என்ன? இவர்கள் பணியும் அடிகளாரைத் தழுவுதல் உண்மை தானே! சமரச சன்மார்க்கம் கல்லூரிப் பணியில் இருந்து வீடுபெற்ற அடிகளார், பல்லவபுரத்தை வாழ்விடமாகக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் தோற்றுவித்தார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீகாரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும், சமரச சன்மார்க் கத்தையும் பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவார். அச்சுவாமி கள் வலியுறுத்திய அவ்விரண்டு கொள்கைகளையும் எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்கு கூட்ட வேண்டி அச்சுவாமிகள் இட்ட பெயராலேயே, `சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கலாயிற்று. இந்நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்; பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் ஆவர் என்று பெயரீடு செய்து கொள்கைகளையும் வகுக்கிறார். குடும்பம் 1898இல் அடிகளார் சென்னைக்கு வரும்போது அவர்தம் அன்னையார் சின்னம்மையார், துணைவியார் சவுந்திரம் அம்மை யார், செல்வி சிந்தாமணி, அடிகளார் என்னும் நால்வரைக் கொண்ட குடும்பமாக இருந்தது. 1911இல் பல்லவ புரத்தில் குடிபுகும் போது நீலாம்பிகை, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி என்னும் மக்களும் கொண்ட ஒன்பதின்மர் குடும்பமாக இருந்தது. பல்லவுரம் புகுந்த பின் திரிபுர சுந்தரி பிறக்கப் பதின்மன் குடும்பம் ஆயிற்று. இந்நிலையிலேயே 27.08.1911இல் சைவத் துறவியர்க்குரிய துறவாடை (காவி) கொண்டு சுவாமி வேதாசலம் ஆனார். சுவாமி வேதாசலம் என்பதன் தனித்தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது வெளிப்படை. முன்னேயே அவரை அடிகள் என்றது அவர்தம் மாண்பு கருதியேயாம். மீள்பார்வை நாம் மீள்பார்வை ஒன்றுபார்க்க வேண்டும். அடிகள் 21ஆம் அகவையிலேயே தனித்தமிழ் ஆய்வுத்திறம் கைவரப் பெற்றார். 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களுக்கு ஆய்வுரை வழங்குங்கால் இதிலுள்ள சொற்கள் இத்தனை; இவற்றுள் செந்தமிழ்ச்சொல் இத்தனை; வேற்றுச் சொல் இத்தனை - என அறுதியிடுகிறார். ஆதலால், தனித்தமிழ் என்னும் தோற்றம் 1916 ஆம் ஆண்டில் நீலாம்பிகையார் தூண்டலால் ஏற்பட்டமை என்பது, அகத்தே அமைந்து கிடந்த வித்து, முளை விட்டு வெளிப்பட்ட நிலையாம். அவ் வெளிப்பட்ட நிலையும் உடனே பற்றிப் படரவில்லை! மேலும் சில ஆண்டுகளின் பின்னரேயே சமசர சன்மார்க்க நிலையம், பொதுநிலைக் கழகமாகவும், ஞானசாகரம் அறிவுக் கடலாகவும், சுவாமி வேதாசலம் மறைமலையடிகள் ஆகவும் படிப்படியே கிளர்கின்றனவாம்! ஓர் அரிய அமைப்பு உருவாகும் நிலையும், ஓர் அரிய கண்டு பிடிப்பு உலகவர் அறிய வெளிப்படலும், அவை இயக்கமாகவும் பயனாகவும் ஆகின்ற நிலையும் பற்றிய விளக்கம், அடிகளார் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் அடங்கியுள்ளதாம்! எதிரிடைத் தூண்டல்: மேலும் ஒன்று: ஒரு நேரிடைத் தூண்டலினும் எதிரிடைத் தூண்டல் வலிமை மிக்கது என்பதும், உள்ளத்து உறுதியை வெள்ளப் பெருக்காய் வெளிப்படுத்த வல்லது என்பதும் தெளிவாம். ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டா? என்று கற்றறிந்த தமிழர் ஒருவரே வினாவி நகைத்தல், பெற்ற தாய் மொழிப் பிறவிக்கு உற்ற தகைமை ஆகாது என்பதும், அதனை உணர்ந்த அப்பிறவி பாம்பன் குருபாத அடிகள் போல் சேந்தன் செந்தமிழ் என்ன ஒரு நூலியற்றித் தமிழ் தனித்து இயங்கவல்ல தனி உயர் மொழி என்று நிலைநாட்டியிருப்பின் வழிபடத்தக்க பிறவியாய் அமைந்திருக்கும்! அப்பேறு அதற்கு வாய்க்காமை, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (குறள் 263) என்னும் வள்ளுவர் வாய் மொழிப்படி, தனித்தமிழ்த் தந்தைப் பேறு மறைமலையடிகட்கு வர இருப்பதற்கே நேரிட்ட நேர்ச்சியாம் என்க. இயக்கம் அடிகள் இயக்கம் ஆலமரமெனக் கால்பல கொண்டு அகல அகல விரியத் தனித்தமிழ் இயக்கமாய், உலகத்தமிழ்க் கழகமாய், பாவலரேறு தமிழ்க் களமாய், சேரர் கொற்றமாய், தமிழ்க்காப்புக் கழகமாய், தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாய், தனித்தமிழ் இலக்கியக் கழகமாய், தமிழ் வளர்ச்சிக் கழகமாய், மறைமலையடிகள் மன்றமாய், தமிழ்க்காவல் குழுவாய், இயற்றமிழ்ப் பயிற்றகமாய், பாவாணர் தமிழ் இயக்கமாய் ஆங்காங்கு முகிழ்த்து முனைப்பொடு கடனாற்ற ஏவியதாம். நூலகம் அடிகள் நூற்றொகை, அருமணிக் குவையன்ன நாலாயிரம் நூல்களைக் கொண்டது. எதிரது உணர்ந்து, சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்திற்கு முற்கொடையாக வழங்கியதால், நாலாயிரம் நாற்பதாயிரமாய் மேலும் மேலும் விரிந்து மறைமலையடிகள் நூலகப் பெயரால், பெருமைமிகு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த பெரியவர் சோமு அவர்கள் இல்லமே வாய்க்க உலக வளமாக்கியதாம்! அதன் வழியாகவே அடிகள் தாமே வெளியிட்ட நூல்களும், வெளியிடாமல் கழக வழி வெளிவந்த நூல்களும், அடிகள் காலத்திற்குப் பின் வெளிவந்த நூல்களும் ஆகிய முழுமைத் தொகுதிகளும் கி.பி. 1898 முதல் 1969 வரை முதற்பதிப்பாக வெளிவந்தவை. அவற்றுள் படிகள் கிட்டுதற்கு அரியவையும் உண்டு. அடிகள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப் பட்ட பேற்றால், இன்று வாய்த்த நூல்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வழங்கும் பெருவாய்ப்பைத் தமிழ்மண் பதிப்பகம் பெற்றதாம். வெள்ளச் சேதம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பதிப்பகத்துள் புகுந்து அச்சு அடிக்கப்பட்டதும், அடிக்கப்பட இருந்ததும், கணினிப்படுத்தி வைத்த குறுவட்டுகளும், மூலநூல்களும் என வாரி அள்ளிக் கொண்டு போனமை, களத்துக்கு வந்த கதிர் மணிகள், களஞ்சியத்திற்கு வாராமல் போய, பேரழிவு ஒப்பதாம். ஆதலால், நூல்களை மீளத் தேடவும், கணினிப்படுத்தவும், குறுவட்டு ஆக்கி அச்சிடவும் என மும்மடங்குப் பணியும் பேரிழப்பும் பெருத்த அவலமும் உண்டாக்கிற்றாம். அந்நிலையில், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழியை வாய்மை மொழியாக்கிய துணிவுச் செல்வர் இளவழகனாரும் அவர் குடும்பத்தவரும் ஆவர்! முன்னறிவிப்புத் திட்டப்படி நூலுக்கு ஆர்வமாய்ப் பணம் செலுத்தியோர்க்கும் நூல் காலத்தில் கிட்டா உளைச்சல் இல்லாமல் போகாதே! அவர்களும் அமைந்து தாங்கல், இயற்கை இயங்கியல் வழியதாம். வெளியீடுகள் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மொழி இன மண்வளம் - வளர்ச்சி மீட்டெடுப்பு - என்பவற்றை முன்வைத்துத் தமிழ்ப் போராளி இளவழகனாரால் தொடங்கப்பட்டதால், பேரிழப்புக்காம் எனத் தெளிவாகத் தெரிந்தும், இசைக் கலைக்கு வாய்த்த ஒப்பற்ற களஞ்சியமாய் வாய்த்த - கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டதாம்! முன்னை வந்த முதற்பகுதி பேரிழப்பாக்கியும் அதன் பின்னைப் பகுதிகளையும் அரிதின் முயன்று வெளியிட்டது! மொழிஞாயிறு பாவாணர்; ஈழத்து அறிஞர் ந.சி. கந்தையா; வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா, உரைவேந்தர் ஔவை சு.து; நாவலர் ந.மு.வே; பண்டித வித்துவான் தி.வே. கோபாலர்; சாமி சிதம்பரனார்; மயிலை சீனி. வேங்கட சாமியார்; பேரறிஞர் க. வெள்ளை வாரணனார்; பாவலர் குழந்தையார்; பாவலர் முடியரசனார்; பாவேந்தர், தொல் பொருள் கல்வெட்டு ஆய்ஞர் சதாசிவனார், சாத்தன்குளம் இராகவன் நூல்களையும் எளியேன் நூல்களையும் முழுமை முழுமையாக வெளியிட்டது. தொல்காப்பியம்- பாட்டு - தொகை - காப்பியம் - கீழ்க்கணக்கு - தமிழ்நாட்டு வரலாறு - ஆங்கிலம் வல்ல அறிஞர் இராம நாதனார் நூல்களையும், யாழ்ப்பாண அகராதி முதலாம் அகராதித் தொகுதிகளையும் வெளியிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிதொட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளிவந்த - தமிழுக்கு ஆக்கமாம் நாட் டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை எல்லாம் - ஓரிடத்துப் பெற்று, ஒரு தனித்தமிழ் நூலகம் அமைக்கும் அளவுக்கு அச்சிட்டு வழங்கிய பெருமை இளவழகனார்க்கு உண்டு. அவரே அன்றி அவர் துணையையும் மக்களையும் உறவையும் அன்பையும் நண்பையும் ஒருங்கே இணைத்து, அறிஞர் பெருமக்கள் பலர் அரவணைப்பையும் வாய்ப்பக் கொண்டு வாழும் இயல்பு அவர்க்கு வாய்த்தலால் மட்டுமே, இவ்வாறு செயற்கரிய செய்ய வாய்த்ததாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவரும் அவர். மறைமலைய மாண்பு மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழர் வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்! புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை - 6 625006. மலைக்க வைக்கும் மறைமலையம்! பதிப்புரை மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க -பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்கள் `மொழியின் வழியாகவே மொழிபேசும் மக்கள் முன்னேற முடியும் எனக் கூறுகிறார். உலகம் முழுதும் இவ்வுண்மை உணரப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. பாவாணரை அறிவுலகம் சரியாக அடையாளம் காண்பதற்குக் காரணமானது மறைமலையடிகளார் தந்த பாராட்டு! மறைமலையடிகள் (15.7.1876 - 15.9.1950) தேவநேயப் பாவாணர் (7.2.1902 - 16.1.1981) இருவரும் தனித்தமிழியக்கத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாகப் போற்றப்படுபவர்கள். மறைமலையடிகளார் 1916இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நூற்றாண்டை எட்டியுள்ள மகிழ்வான நேரம் இது! தனித்தமிழியக்க நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் `மறைமலையம் எனும் பெருந்தொகுப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வழி வெளிக்கொணரத் திட்டமிட்டோம். உலகம் முழுதும் பரவி வாழும் உணர்வு குன்றாத தமிழர்கள் தந்த ஊக்குவிப்பு, இந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் எனும் உறுதியை எனக்குத் தந்தது. தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அடிகளாரின் அரிய படைப்புகள் பலவற்றையும் தேடித்தேடி வழங்கி வழிகாட்டினர்; வலிமையூட்டினர். மறைமலையடிகளார் 1898ஆம் ஆண்டிலிருந்து எழுதி வந்துள்ளார். அறிவுக்கடல் (ஞானசாகரம்) இதழை 1902ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்துள்ளார். அவரின் படைப்புகள் பெருவெள்ளமாய் வெளிவந்திருக்கின்றன. அச்சேறாதவை, பெயர் கூடக் கேட்டறியாதவை, பெயர் தெரிந்தும் பார்வைக்குக் கிட்டாதவை - எனப் பலவகையாய்க் கிடைத்தன அடிகளாரின் அரும்படைப்புகள்! அவற்றை `மறைமலையம் எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாக ஒருசேரப் பார்க்கும்போது, தமிழுலகம் வியப்படைவது உறுதி. மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? இப்படிக் கவலையோடு கேட்பார் பாவலரேறு பெருஞ் சித்திரனார் (10.3.1933 - 11.6.1995). அவரின் `தென்மொழி இதழ் 1.8.1959 இலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்புதான், தனித்தமிழ்த் திசை நோக்கி நூற்றுக்கணக்கானோர் நடைபோடத் தொடங்கினர். அதில் நானும் ஒருவன். பெருஞ்சித்திரனாரின் எழுத்து காட்டிய அடையாளத்தால், பாவாணர் நூல்கள் எனும் அறிவுப்புதையல் பலர் கைகளிலும் குடியேறியது. பாவாணர் நூல்கள் வலியுறுத்திப் பேசியதால், மறைமலை யடிகளாரைத் தேடிப்பயிலும் ஆர்வம் தமிழுலகில் புத்துயிர் பெற்றது. ஆரியத்தை எதிர்ப்பதிலும் சமற்கிருதத்தை விலக்கு வதிலுமே தமிழின மேம்பாடும் தமிழ்க் காப்பும் அடங்கியிருக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தமிழர் நெஞ்சங்களில் அரும்ப வைத்தது திராவிடர் இயக்கம்; மலர்ந்து விரியவைத்தது தனித்தமிழ் இயக்கம்! குமுக, அரசியல், பண்பாட்டு மலர்ச்சிக்கு இந்த ஈரியக்கங்களின் பேருழைப்புப் பயன்பட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் உணர்வு கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் தளரத் தொடங்கியது; 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் சரியத் தொடங்கியது. வடமொழி வெள்ளத்தில் தமிழ் இழுத்துச் செல்லப்பட்டு விடாமல் காப்பாற்றியோர் கம்பரும் பவணந்தியும்! பின்வந்தோருக்கு அந்தக் காப்புணர்ச்சி இல்லாமல், அயன் மொழிப் பற்றுக்கு அடிமையானதால் தமிழும் தமிழினமும் பெற்ற இழப்புகள் ஏராளம்! அயன்மொழிச் சேற்றிலிருந்து தமிழை மீட்கும் முயற்சி ஆங்கிலேயர் வருகையையொட்டிப் புத்துயிர் பெற்றது. வள்ளலார், பாம்பன் சாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சுப்பிரமணியசிவா, பரிதிமாற் கலைஞர் முதலிய பலரும் தொடக்க விதைகளாயினர். கோவை அவிநாசியில் பிறந்து விருதுநகரில் வாழ்ந்த விருதை சிவஞானயோகி 19.11.1908 ஆம் நாள் `திருவிடர் கழகம் தொடங்கித் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வேகங்கூட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினராயிருந்தவர் சுவாமி வேதாசலம் (மலைமலையடிகள்). மறைமலையடிகள் எனத் தம் பெயரைக் கொண்டு, 1916இல் அவர் தொடங்கியதே தனித்தமிழ் இயக்கம். `துறைமிகு ஆங்கிலம் மறைவட மொழியொடு தூய்தமிழ்ப் பேரறிஞர் - தனித்தமிழ் தோற்றிய ஓரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதற்கேற்ப, மறைமலை யடிகளார் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் முதலிய பன்மொழியிலும் புலமை மிக்கவர். பன்மொழிப் பேரறிஞரான மறைமலையடிகளார் தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவாக நின்றதால் எதிர்ப்புக்கும் இழப்புக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனாலும் உறுதி குன்றாமல் தமிழுக்கு ஆதரவாய் உழைக்கும் உள்ளத்தோடிருந்தார். அதனால், தமிழர் உள்ளங்களில் இன்றளவும் மாறாப் பெருமையோடு அவர் வீற்றிருக்கின்றார். வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை வையகம் பாவேந்தர் பாரதிதாசன் அவர் மாண்பினைப் பாடி மகிழ்ந்ததும், தம் `குடும்ப விளக்கு நூலினை மறைமலை யடிகளுக்குக் காணிக்கையாக்கி வழங்கியதும், அவரின் உறுதி தளராத உள்ளமும் உழைப்பும் கண்டு போற்றிய நன்றிக் கடன் என்பதில் அய்யமில்லை. சென்னையில் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ்மண் பதிப்பகப் பணிகளைத் தமிழுலகம் அறியும். வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டவல்ல தமிழறிஞர்கள் பலரின் நூல்களை முழுமுழுத் தொகுப்புகளாக வழங்கியிருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் முடிப்பினை (சாதனை)யாகப் போற்றப்படுகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் நூல்களை முழுமையான தொகுப்புகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவை காலம் முழுதும் பயன்படவல்ல கருவி நூல்கள் என்பதை அறிஞர் உலகம் அறியும்! தமது நலத்தை ஒதுக்கி வைத்து, தமிழ் நலத்தைக் காக்க வாழ்ந்த அறிஞர்களின் அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து முழுத் தொகுப்பாக வழங்குவது பெரும்பணி! அதனைத் தமிழ்மண் பதிப்பகம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொகுப்பு நூல்களின் பட்டியலைப் பின்னிணைப்பில் காண்க. தமிழுக்காக உழைக்கும் உணர்வை இளமையில் எம்மிடம் ஏற்படுத்தியோருள் பெரும்புலவர் நக்கீரனாரும் அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலனாரும் குறிப்பிடத்தக்கோர்! எம் நன்றிக்குரியோர்! தனித்தமிழ் ஆர்வம், திராவிடர் இயக்க ஈடுபாடு எனும் இரு சிறகுகளால் எம்மை எழவைத்தவர் பெரும்புலவர் நக்கீரனார்! அவரை எண்ணிக் கண்பனிக்க நன்றி கூறுகிறது எம் நெஞ்சம். காலப்பழமையாலும் பராமரிப்புக் குறைவாலும் அழிய நேர்ந்த தமிழிலக்கியங்கள் அளவற்றவை! அவற்றில் ஒருபகுதியை யாவது மீட்டு நம் கைகளுக்கு வழங்கியோர் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலிய சான்றோர் பெருமக்கள்! தமிழிலக்கியப் பெருஞ்செல்வத்தை மீண்டும் மீண்டும் அச்சாக்கி, அனைவர் கைகளையும் எட்டச் செய்த பெருமை - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே.சா. நூலகம், மணிவாசகர் பதிப்பகம் முதலிய பதிப்பாளர்களுக்கு உரியது. அச்சுத்துறை அறிமுகமான பின்பே, அறிவுத்துறை அனைவருக்கும் பொதுச்சொத்தாகும் வாய்ப்பு வந்தது. எட்டாக் கனியாக ஓலைச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த இலக்கியச் செல்வங்கள், எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பணியைச் செய்த பதிப்பாசிரியர்களும், பதிப்பாளர்களும் நம் நன்றிக் குரியோர்! இரவு பகல் பாராது முதுமையைக் கருதாது உழைக்கும் மனவுரத்தை முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் பணியே எமக்கு வழங்கியது. அரசும், பல்கலைக் கழகங்களும், அறநிறுவனங்களும், சமய பீடங்களும் ,பெரும் இயக்கங்களும், பெரும் செல்வர்களும் செய்ய வேண்டிய பெருந் தமிழ்ப்பணி இது! எளியவர்களால் இயங்கும் தமிழ்மண் பதிப்பகம் பெருந்தமிழ்ப் பணிகளை இன்னல்களுக்கு இடையில் அருமுயற்சியோடு செய்து வருவது, உள்ளவுரம் ஒன்றினால்தான்! வல்லமை சேர்க்கும் வலிமையுண் டாக்கும்! வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்? காக்கும் தமிழைக் காக்கும் உணர்வைப் பாவேந்தர் பாடல் வரிகள் தந்தன. அச்சுக்கு எட்டாமலும் கைக்குக் கிட்டாமலும் இருந்த பேரறிஞர் பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கி திராவிடர் இயக்க அரசுகள் வழங்கின. அதனால், அறிவு பரவலாகும் வாய்ப்புகள் உருவாயின. `சரிவும் இழப்பும் நமக்கு வந்தாலும் தமிழுக்கு வரக்கூடாது என எண்ணி உழைக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழ் நாட்டில் வற்றாமல் வளர்ந்தபடி இருக்கின்றன. திருவிடர் கழகம் (1908) தனித்தமிழ் இயக்கம் (1916) தென்னிந்திய நலஉரிமைக் கழகம் (1916) சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943) தமிழ்ப் பேராயம் (1959) தமிழ்க்காப்புக் கழகம் (1961) தனித்தமிழ்க் கழகம் (1964) உலகத்தமிழ்க் கழகம் (1968) தமிழியக்கம் (1972) தமிழ்ச் சான்றோர் பேரவை (1998) தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும் பாவாணருமே! தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை! அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு `மறைமலையம் என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது. பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம் இது! தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது! அறிவுலகத்தால் `மறைமலையம் வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம். - கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோசா முத்தையா நூலகம் - சென்னை. புலவர் கா. இளமுருகன் - புன்செய் புளியம்பட்டி (மறைமலையடிகள் மன்றம்) மறை. தாயுமானவன் - சென்னை (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: திரு. அ. மதிவாணன் (ஆங்கிலம்) திரு. க. கருப்பையா திரு. புலவர். த. ஆறுமுகம் புலவர். மு. இராசவேலு திரு. இராசுகுமார் திரு. நாக. சொக்கலிங்கம் முனைவர். க. சுப்பிரமணியன் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா செல்வி. அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திருமதி மலர் திருமதி செல்வி திருமதி ஹேமலதா திரு. ஆசம் திருமதி கலைவாணி பிராசசு இந்தியா திருமதி` புகழ்ச்செல்வி கயல்விழி (Process India), நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், க. இளந்திராவிடன், வே. தனசேகரன், கு. மருது, இல. தருமராசன் தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை -1 எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை-5. அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு மற்றும் பிராசசு இந்தியா `மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நிறைந்த நன்றியும் பாராட்டும். சிவஞான போத ஆராய்ச்சி 1958 இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பித்த நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்படுகின்றது. இந்நூலைப் பற்றிய குறிப்புரை... மெய்கண்ட தேவரின் சிவஞானபோதம் மொழி பெயர்ப்பு நூலென்பார் மயக்கங்களைந்து `சிவஞான போதம் மொழிபெயர்ப்பு நூலன்று; அது மெய்கண்டான் முதல் நூலே எனக்கூறும் அடிகளார்,அதனைத் திருக்குறளோடு ஒப்பாய்வு செய்துள்ளார். தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கையறிவினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, வரம்பிலின்ப முடைமை, முடிவிலாற்றலுடைமை என அமையும் `பதியின் இயல்புகளைக் கூறும் அடிகளார். `கலை என்னும் சொல் `கலா என்னும் வடமொழித் திரிபாகும் எனவும் தெரிவித்துள்ளார். அறியாமை அகற்றி, அறிவுடைமையும் அறிவி னுருவும் தோற்றுவித்தலே இறைவனது உலகங்களின் படைப்பு நோக்கமாகும். ஆண் பெண் அமைப்பு முறைமைகளே முழுமுதற் கடவுளின் அறிவு, ஆற்றல் அருள் நலன்களுக்கான நற்சான்றுகளாகும். மற்றும் ஆணவ மலம், மாயை, இருவினை நிகழ்ச்சிகள், வீடுபேற்றின் மெய்ம்மை ஆகிய செய்திகளைச் சிவஞான போதம் மட்டுமே சிறப்புறச் சொல்லுகிறது என்னும் கருத்தினர் அடிகளார். - டாக்டர் நா. செயப்பிரகாசு மறைமலையடிகள் இலக்கியப்படைப்புகள் (பக். 25 பொருளடக்கம் பக்கம் 1. பதி 7 2. பசு 17 3. பாசம் 29 4. விந்து 117 5. நாதம் 127 6. விந்துநாதவடிவுகள் 130 7. விந்துநாதக்குறிகள் 134 8. அம்மை அப்பர் 154 9. அத்துவித இயைபு 178 10. சுத்தமாயா தத்துவங்கள் 192 11. அத்துவாக்கள் 201 பின்னிணைப்பு 219 பாவலர்கள் பார்வையில் மறைமலையடிகள் 279 ஓம் திருச்சிற்றம்பலம் சிவஞான போதத் தொன்மைச் சிறப்பு வேதம் பசுவதன்பால் மெய்யா கமம்நால்வர் ஓதுந் தமிழதனின் உள்ளுறுநெய் -- போதமிகு நெய்யின் உறுசுவையாம் நீள்வெண்ணெய் மெய்கண்டான் செய்ததமிழ் நூலின் திறம். வேதம் : திருக்குறள். ஆகமம் : திருமந்திரம். நெய் : வெண்ணெய் வெண்பாத் தொகை ஐயொருப தேழேழும் ஆங்கமைந்த நாலாறும் ஐயொன்ப தோரெட்டோ டாறாறும் -- துய்யஎட்டோ டெண்பத்து மொன்றுஞ் சிவஞான போதத்தின் மன்னருளும் வெண்பா வகை. மெய்கண்டான் கண்ணுதலுங் கண்டக் கறையுங் கரந்தருளி மண்ணிடையின் மாக்கள் மலமகற்றும்--வெண்ணெய்நல்லூர் மெய்கண்டான் என்றொருகால் மேவுவரால் வேறின்மை கைகண்டார் உள்ளத்தின் கண். திருச்சிற்றம்பலம் உ திருச்சிற்றம்பலம் நூல்நுதலிய பொருள் சைவசித்தாந்த சாத்திரம் பதினான்கனுட் சிறந்ததாயும், சிவஞானசித்தியார் சிவப்பிரகாசம் முதலான வழிநூல் புடைநூல்கட்கு முதனூலாயும், சுவேதவனப்பெருமாள் என்னும் பிள்ளைத் திருநாமம் உடைய ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனாரால் ஞானபாதப் பொருளெல்லாஞ் சுருக்கிப் பன்னிரண்டு சூத்திரங்களிலே அருளிச்செய்யப்பட்டதாயும் உள்ள சிவஞானபோதநூல் உரையிடற்காகா அருமை பெருமை யுடையதாய் விளங்குகின்றது. இது தன்னைத் துறைபோகக் கற்றார் எல்லா நூற்பொருளும் ஒருங்கு ணர்ந்தாராய் மெய்ப் பொருளுறுதிபெற்று முதல்வன் றிருவடிப்பேற்றினைத் தலைப்படுவரென்பது துணிபாக லின், இதனைச் செவ்விதின் ஆராயப்புகுந்து முதற்கண் இந்நூலால் நுவலப்படும் பொருள் இவையென்பது விளங்க விரிப்பாம். மெய், வாய், கண், மூக்குச், செவி என்னும் ஐம்பொறி களானும் நுகரப்படுவனவாகிய ஐம்பெரும்பூதத் தொகுப் பாகும் இவ்வுலகங் காரணகாரிய நிலைகளிரண்டினும் உள்பொருளே யாமென்பதூஉம், இங்ஙனம் உள் பொருளாய் நிலைபெறும் இவ்வுலகத்தின்கட் கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்று அறிந்து வருவனவாகிய உயிர்கள் எண்ணிறந்த னவாய் என்றும் உள்ள அறிவுப் பொருள்களேயாம் என்ப தூஉம், அறிவுப் பொருளான இவ்வுயிர்கள் தம் இயற்கையிலேயே அறியாமை வயப்பட்டுத் தம் இயற்கையறிவு மழுங்கிக் கிடக்கக் காண்கின்றே மாதலால் இவை தம்மை அங்ஙனம் பொதிந்து இவற்றோடு ஒருமித்து நிற்கும் அறியாமை தொன்று தொட்டு உளதா மென்பதூஉம், இவ்வாறு அறியாமை வயப்பட்டு மயங்கும் ஆருயிர்களை அதனினின்றும் விடுவித்து அறிவுறுத் தற் பொருட்டு அவை தமக்குப் பல்வேறு உடம்புகளையும், பல்வேறு உலகங்களையும் படைத்துக் கொடுப்பானான இறைவன் ஒருவன் உளனாமென்பதூஉம், இவ்வாறு அவ்வுயிர்கள் உடம்புகளின் வழியாய் உலகங் களிலிருந்து தம் அறியாமை தேய இன்ப துன்பங்களை நுகரு மிடத்து ஆண்டுத் தோன்றுவது வினையாமென்பதூஉம், இவ்வினை நுகர்ச்சி யானே அறியாமை முற்றுந் தேய்ந்து ஒழிந்தவழி ஆண்டு அவ்வுயிர்கண் மாட்டு முன் சுருங்கிக் கிடந்த இயற்கை யறிவு விரிந்து விளங்க அதன்கண் முதல்வன் றிருவருட்பேரொளி ஒற்றித்து நின்று துளும்புமாகலின் அதுவே வீடுபேறாகு மென்பதூம் பிறவும் இதன்கண் இனிது விளக்கப்படும் அரிய பொருள்களாமென்க. எனவே, இவையெல்லாம் பதி பசு பாசம் என்னும் மூன்று சொற் கண்ணே அடங்கும். 1. பதி இவற்றுட் பதி யென்பது இறைமுதற்பொருள் ஒன்றே யாம்; இது தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கை யறிவினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங் களின் நீங்குதல், பேரருளுடைமை, வரம்பலின்ப முடைமை, முடிவி லாற்றலுடைமை என்னும் எண்பெருங் குணங்களுடைய தாகும். இனி, யிவற்றுள், தன்வயத்தனாதல் என்பது தான் ஒன்றன் வயப்பட்டு நடவாமல் எல்லாந் தன் ஆணைவழி நின்று ஏவல் கேட்ப அதிகாரம் நடாத்துஞ் சுதந்திர முழு முதன்மை யுடைமை. உலகத்தின்கட் சுதந்திர முடையார் அஃதில்லா தாரைத் தம் ஏவல் வழிவைத்து நடத்தக் காண் கின்றேம். தமக்கு அறிவு இன்மையானும் ஆற்றல் போதாமை யானுந் தாமே ஒரு கரும முடிக்க மாட்டாதார், அது முடித்தற் குரிய அறிவும் ஆற்றலுமுடைய பெரியாரைச் சார்ந்தொழுகி அவர் துணையால் அது முடித்துக்கொள்ளுவர். இதனால், தமக்கு ஒரு மாட்டாமை யுள்ள விடத்தே வல்லாரைச் சார்ந்து அவர் சொல்வழி நிற்றலும், அஃதில்லா விடத்துத் தாம் அஃதுடையாரைத் தஞ்சொல்வழி நிறுத்து ஏவலிடுதலும் நன்கறியப்படுதலின், எத்தகைய குறைபாடும் இல்லாத இறை முதற்பொருள் பிறிதொன்றனைச் சார்ந்து நிற்றல் எல்லா வாற்றானுமின்மை பற்றி அதற்குத் தன்வயத்தனாதல் என்னுங் குணம் உண்மை பெற்றாம். இனித் தூயவுடம்பினனாதல் என்பது கூன் குருடு முதலான எண்வகை எச்சங்களும், என்பு தோல் நரம்பு முதலான எழுவகைத் தாதுக்களாற் சமைக்கப்படுதலும், அழுக்குத்திரளல் சீழ்வழிதல் புழுநெளிதல் பவ்வீ நீர் ஒழுகல் நோயான் வருந்துதல் புண்படுதல், இறத்தல், பிறத்தல் முதலான குற்றங்களும் பிறவுமுடைய புள்முதற் றேவரீறாக வுள்ள உயிர்த் தொகுதிகள் பெறும் உடம்புகள் போலாது, சீவர்களறிவினான் இப்பெற்றிப் பட்டதென்றுரைக்கவுமாகாத ஓர் அருமைத் திருமேனி யுடையனாதல். அறியாமை வயப் பட்டு வருந்தும் உயிர்கட்கு இருவினையை ஊட்டி யொழித்தற் பொருட்டு அசுத்தமாகிய மாயையினின்றும் படைத்துக் கொடுக்கப்படுவனவாகலின் சீவர்கள் பெறும் உடம்பு களெல்லாம் அருவருக்கற் பாலன வேயாம். இறைவன் பெறுகின்ற அருமைத் திருமேனியும் சீவர்கள் பெறும் உடம்பு போல்வதொன்றென் றுரைப்பே மாயின், அங்ஙனமாகிய அசுத்த வுடம்பைப் பெறும் இறை வற்கும் எமக்கும் வேறுபாடு இல்லாமையின் அவற்குச் சுதந்திர முண்டென்ற கூற்று இழுக்காம். சுதந்திரமின்றாகவே அவன் பிறர்க்குச் சரீரம் படைத்துக் கொடுத்தலும், அச்சரீரங்கள் வசிப்பதற்கு உலகங்கள் சிருட்டித்து வைத்தலும் இல்லை யென்றாம் என்னையோவெனின்? எம்மைப் போலவே நோய் முதலிய குற்றங்களான் வருந்திப் பிறந்து இறந்தொழியும் ஒருவன் எமக்கு அவற்றை எல்லாஞ் சிருட்டித்துத் தரமாட்டுவா னென்றல் குருடனுக்குக் குருடன் வழிகாட்டினான் என்பது போல நகைபடுதற்கேதுவாமாகலின் என்க. அற்றன்று, சீவர்கள் சரீரம் போல்வதொன்று கொள்ளுமாயினும், இறைவன் அது பற்றித் துடக்குறுவான் அல்லனாகலின், அஃதவற்கு இழுக் காதல் யாங்ஙனமெனின்;--நோயுடம்பு கொள்ளினும் அது பற்றிச் சிறிதுந் துடக்குறாது வேறுநிற்க வல்லனான முதல்வன் தான் ஒரு திப்பிய சரீரங்கொள்ள அறியாது, அங்ஙனம் நோய்ப்பட்டு வருந்துமொரு கரும சரீரம் மேற்கொள்ள வேண்டுதல் என்னையோ வெனக் கூறிமறுக்க. சீவர்கள் வினைப் போக நுகர்தற் பொருட்டு எடுக்குங் கருமசரீரம் அசுத்தமுடைய வாதலும், இறைவன் அச்சீவர்க்கு அறிவு கொளுத்தல் வேண்டுமென்னும் அருட் குறிப்பினானே ஐந்தொழி லியற்று முகத்தாற் றானே ஓர் அருட்டிருவுருவு கொள்ளுதலின் அஃது மங்கல வியற்கைத்தாதலும் அறிவுடை யார்க்குத் தெற்றென விளங்குமாதலின் இறைவற்குத் தூய வுடம்பினனாத லென்னுங் குணம் வேண்டப்பட்டது. இனி இயற்கை யறிவினனாதல் என்பது, பிறரொடு பொருந்திப் பழகுதலானும் ஆன்றோர் நூல் கற்றலானும் ஆசிரியன் அறிவுறுத்தலானும் அறிவுடையராய்ப் போதுகின்ற ஆன்மாக்கள் போலாது அறிவே உருவாய்த் தன்னியல்பிற் பிரகாசித்தலாம். பரமான்மா சீவான்மா இரண்டும் பண்டு தொட்டுத் தொடக்கமும் ஈறுமின்றி நிலைபெறும் அறிவுப் பொருள்களாயினும், அவை அவ்வாறு ஒருங்கு நிலையுறுதல் பற்றியே சமமாவான் செல்லுதலில்லை. பரமான்மா இயற்கை யறிவு விளக்கமுடையதாகும்; சீவான்மா இயற்கை யறிவு மழுக்கமுடையதாகும். பரமான்மா அவ்வாறு இயற்கையே அறிவு விளங்கப் பெறுதல் எற்றாற் பெறுது மெனில்;-- சீவர்கள் முறை முறையே அறிவு விரிதரப் பெறுதலானும், இயற்கை யிலேயே அறியாமை வயப்பட்டு மயங்கு வாரான அவர் தாமே தமக்கு அறிவுறுத்திக் கொண்டு அறிவுடைய ராதல் கூடாமை யானும், அவர்க்கு அறிவு தருதற்குக் கடவுளையன்றிப் பிறி தொரு பொருள் காணப்படாமையானும், அங்ஙனமவர்க்கு அறிவுதருதல் வல்லதான அப்பரம்பொருள் தானியற்கையே அறிவுடைய தாயிருந்தாலல்லது தானது தருதன் மாட்டாமை யானும், அப் பரம்பொருட்கும் அங்ஙனமே அறிவு விளக்குவ தொன்றுண் டென்பது எவ்வாற்றானும் பெறப்படாமை யானும் பரமான்மா இயற்கை யறிவுடைத் தென்பது துணியப் படுமென்க. இனி முற்றுமுணர்தல் என்பது இறைமுதற்பொருள் தன் வியாபகத்தினுட் கிடக்குஞ் சீவர்கள் நிலையினையும் ஏனைப் பொருள் நிலையினையும் ஒருங்குணர்ந்து நிற்றல், சீவர்கட்குரிய சிற்றுணர்ச்சிபோல, முதல்வற்குரிய முற்றுணர்ச்சி காலத் தினால் வரையறுக்கப் படுவதன்று, சீவர்கள் யாம் நேற்று அறிந்தேம், இன்று அறிகின்றேம், நாளை அறிவேம் என்று கூறுவர். நேற்றறிந்தேம் என்ற வழி அதற்கு முன்னை நாள் அறிந்திலம் என்பதும், இன்றறி கின்றேம் என்கின்றவழி நேற்றறிந்தில மென்பதும், நாளை யறிவேம் என்னும் வழி நேற்றுமின்று மறிந்திலமென்பதும் இனிது பெறப்படுமாகலின், காலத்தினால் வரையறுக்கப் படும் அறிவு சிறுவரைத்தாதலும் அது முன் அறியாமை வயப்பட்டு நின்றபடியும் புலனாம். இன்னும் முதல்வற்குரிய வுணர்ச்சி சீவர் களுணர்ச்சி போல இடத்தானும் வரையறுக்கப் படுவதன்று. மாளிகையினை அறிகின்ற சீவர் மலையினை மறத்தலும், மலையினையறிபவர் மாளிகையினை மறத்தலும் கடலை யறிபவர் நிலனை மறத்தலும், நிலனையறி பவர் கடலை மறத்தலுங் காணப் படுதலின் ஓரிடத்தை முனைந்துணருங்கால் மற்றொன்று உணரப் படாமை தெளிவாய் விளங்கும். இது போலவே இறைவனும் ஒவ்வொரு பொருளாய் உணர்வ னெனின், ஒன்றை உணர்ந்து, பிறி தொன்றை மறந்தொழி வனாவனென்றாம். ஆகவே, சிற்றுணர் வினரான மக்களோடு ஒப்பவைத் தெண்ணப்படும் ஆகலின் அஃதிறை வற்குக் குற்றமாதல் காண்க. இதனானே, இறை வற்குரிய முற்றுணர்ச்சி காலத்தானும் இடத்தானும் வரையறுக்கப் படுவதின்றி அவற்றையும் அவற்றினுட்பட்ட எல்லாவற்றையும் ஒருங் குணரும் இயற்கைத்தாமென்க. அம் முற்றுணர்ச்சி புடை பெயர்ந்தறிவதன்று; தன்கண் எல்லாப் பொருள்களும் பளிங்கினுள் விளங்கும் வண்ணம் போலத் தாமே தோன்று மென்றறிக. இன்னும் அளவிறந்த உயிர்த் தொகுதிகளையும் அளவிறந்த அண்டத் தொகுதி களையும் முழுதும் நடைபெறு வித்தற்கு அவற்றினெல்லாந் தான் ஒருமையுற்று நிற்றல் வேண்டுதலின், முதல்வனது சருவவியா பகத்துவம் முற்றுணர் தலாகிய சருவஞ்ஞத் துவத்துள்ளே அடங்கும். யாண்டும் நிறைந்து நின்றாலல்லது ஆங்காங்கு நிலைபெறும் உயிர் வருக்கங்களியல்பும் அவற்றைப் பொதிந் திருக்கும் அறியாமை யினியற்கையும் அறிதலாகா மையின் முற்றுணர்தல் முற்று நிறைதலிரண்டுந் தம்முளியைபு உடையவா மென்க. அற்றன்று, அரசன் தான் ஓரிடத்திருந்தே தன் செங் கோல் நிழற்கீழ் ஒதுங்கும் ஞாலத்தின்கண் நிகழ்வன வற்றை அறிதல் போல, முதல்வனுந் தான் ஓரிடத்து ஏகதேசியா யிருந்தே தன் ஆணைவழி நடைபெறும் எல்லா உலகங்களின் றன்மையும் எல்லா உயிர்களின் றன்மையும் அறிதல் செய்வா னென்று கோடு மெனின்;- அறியாது கூறினாய், அரசன் தான் ஓரிடத்திருந்தே எல்லாம் அறிய மாட்டுவான் அல்லன்; தன்கீழ் அதிகாரிகள் பலப்பலரை ஆண்டாண்டு இருத்தி அவர் முகத்தான் அறிந்து போதருவன். அறியாமை வயப் பட்டு மயங்கும் உயிர்களை யறிவுறுத்துகின்ற இறைவற்கு அங்ஙனம் முறைமுறையே உணர்த்துவார் பிறரின்மையின் அவ்வுவமை ஈண்டைக்குப் பொருந்தாதென விடுக்க. அற்றன்று, அறிவு முதிர்ச்சி பெற்ற உயிர்களை ஆங்காங்குத் தன் கீழ்த் தலைவர் களாக நிறுத்தி அவர் வாயிலாற் பிரபஞ்சசிருட்டி முதலாயின நடாத்தி அறியுமென்று கொள்ளாமோவெனின்;-- தன்கீழ்த் தலைவர்களாக நிறுத்தப்படும் மற்றவர்க்கும் அறிவில்லாத முற்பருவத்திலே அவர் தமக்கு அறிவு கொளுத் தியவாறும், ஏனையுயிர் உலகங்களை யறிந்தவாறும் யாங்ஙனம் என்று கடாவு வார்க்கு விடுக்கு மாறென்னையோ வென்பது. அவ்வாறன்று, ஏகதேசி யாயுள்ள தன் பக்கத்தே அறிவின்றிக் கிடந்த உயிர்களை முதன்முதல் அறிவுறுத்திக் கிடந்த உயிர்களை முதன்முதல் அறிவுறுத்திப் பின்னர் அவர் தம்மாற் பிரபஞ்ச சிருட்டி நடத்துமென்றலே எமது கோட்பாடாம் பிற வெனின்;-- தன்னைப் போலவே ஏகதேசிகளாயிருந்து ஐந்தொழில் நடாத்தும் உயிர்களுக்கும் தனக்கும் வேறு பாடில்லாமையின், அவ்வுயிர்கள் தன்னோடு இணங்காமல் மாறுபட்ட விடத்து அவரைத் தன் வயப்படுத்த மாட்டாமை யுண்டா மாதலால் அவ்வாறு கூறுதல் முதல்வன் இறைமைக் குணத்திற்கு இழுக்காமென்க. அங்ஙனமன்று, முதல்வனுக்கு அளவில்லாத ஆற்றலுண்டென்று கோடுமாகலின் உயிர்கள் முரணியவிடத்து அவர் தம்மை ஒறுத்தடக்கித் தன்னிச்சை வழியே நிறுத்துக் கொள்ள மாட்டுவானெனின்; அதுவும் பொருந்தாது. ஏகதேசியாய் ஓரிடத்தே மாத்திரமிருந்து ஒரு சிலவற்றையே அறிவித்தலும் ஒரு சிலவற்றையே அசை வித்தலுஞ் செய்தற் குரியனான ஒருவனைப் பலவிடங் களினும் நிறைந்து கிடப்பாரான அறிவுடையுயிர்கள் ஒருங்கு சேர்ந்து வென்று அவன் ஆட்சியுரிமையினைக் கொள்ளுதல் எளிதிலே கைகூடற்பால தொன்றாகலானும், சருவவியாபி யாய் யாண்டும் நிறைந்து நின்று எல்லாவுலகங்களையும் அசைவித்தலும் எல்லாவுயிர்களையும் அறிவித்தலுமே அளவிலாற்ற லெனப்படு மல்லது ஒரு காலத்து ஓரிடத்து மாத்திரம் இருக்க மாட்டு வானாய் ஒரு சிலவற்றை மாத்திரம் இயக்குவானை அளவிலாற்றல் உடையனென்றால் ஒருவாற் றானும் பொருந் தலின்மையானும் அவ்வாறு கோடல் யாண்டையதென் றொழிக. இன்னுமிதுபற்றி வருங்கடாவும் அதற்கு விடையுமாய் வரும் விரிவெல்லாம் சிவஞான போத அகலவுரையின்கட் காட்டுவாம், ஈண்டுரைப்பின் விரியும். இவ்வாற்றால் இறைவன் முற்றுணர்ச்சிக்குச் சருவவியாபகத் துவம் இன்றியமையாத அங்கமாதலின், அம் முற்றுணர்ச்சிக் கண் இஃதடங்குதல் கண்டு கொள்க. இனி இயல்பாகவே பாசங்களினீங்குதல் என்பது தன்னியற்கையே பாசங்களின் விடுபட்டு நிற்றல். பாசம், கட்டு என்பன ஒரு பொருட் கிளவிகள். ஆன்மாக்களை இயற்கையிலேயே சிறைசெய்து அவரறிவைக் கட்டி நிற்றலின் அறியா மையிருள் பாசம் என்று பெயர் பெறும். ஒவ்வொரு பொருட்கு முள்ள இயற்கைத் தன்மையை மாற்றுதல் யாரானும் ஆகாது. நீரின்றண்மையும் அனலின் வெம்மையும் யாரானும் மாற்ற முடியா. இயற்கையிலேயே அறிவுருவாய் விளங்கும் முதல் வனைக் கவிந்து பற்றுதற் குரிய தன்மை பாசத்தின் கண் இன்றாய்ச் சீவான்மாவைப் பற்றுதற்கியைந்த அளவான் மாத்திரம் அதன்கண் அவ் வாற்றல் நிலைவதாயிற்று. அஃதப் பொருட் குள்ள இயற்கையாம். பளிங்கில் ஓருருவந் தோன்றுதலும், முருட்டுக் கருங் கல்லில் அது தோன்றாமையும் என்னை யென்று நுணுகி யாராய்வார்க்குப் பொருளியற்கை இனைத்தென்றல் நன்கறியப்படும். இன்னும் இவற்றின் விரிவெல்லாம் முன்னர்ச் சூத்திரவாராய்ச்சியுட் காணப்படும், ஆண்டுக் கண்டு கொள்க. இதனானே, ஒன்றாற் சிறைபடாது அகன்று திவ்விய அருண்மயமாய் விளங்கு மியற்கை முதற்பொருளின் கட் சமவாயமா வுண்டென்று அறிக. இனிப் பேரருளுடைமை என்பது அறிவுப் பொருள் களான உயிர்த் தொகுதிகள் தம்மியற்கையறிவு சுருங்கிப் பேரின்ப நுகர்ச்சிப்பேறு எய்தற்கு உரிமையிலராய் வருந்து தலைக் கண்டு அவர்கட்குப் பாசக்கவிப்பினை விலக்கிப் பேரின்பந் துய்ப்பித்தல் வேண்டுமென்று எழும் இரக்கம் உடைமையாம். இவ்விரக்கம் இல்வழி உயிர்கட்கு அறியாமை நீக்கமும் அறிவுப் பேறும் நிகழா. உலகத்து இரக்கமுடையார் பிறர் நோயானும் வறுமையானுந் துன்புறுவது கண்டவழி மனமிளகி அவர்க்குதவி புரியக் காண்கின்றேம்; அவ்விரக்க மில்லார் பிறர் எங்ஙனமாயினும் எமக்கென்னை என்று வறிது புறம்போகக் காண்டும் அன்றே? ஆகவே, இரக்கமுள் வழியெல்லாம் பிறர்க்கு உதவி புரிதல் ஒருதலையாக நிகழக் காண்டலின், ஐந்தொழிலியற்றி உயிர் கட்குதவி புரியும் இறைவற்கும் அஃதுண்மை பெற்றாம். இரக்கம் இல்வழியும் புகழ் கருதிப் பிறர்க்குதவி புரிதல் காண்டு மாகலின் அந்நியதி ஆண்டு இல்லையாலோ வெனின்;-- சீவர்கள் ஒரு பயன் கருதியும் உதவி புரிதல் அவர் மாட்டு ஒரு குறை உண்மை யினாலே யாம்; தமக்குள்ள அக்குறையினை நிரப்புதற் பொருட்டு அவர் அங்ஙனம் புகழ் வேண்டுகின்றார். எல்லாப் பொருட்கும் முதல்வனாவான் தனக்கொரு குறை பாடும் இன்மையின் அவன் பிறர்பால் ஒன்று வேண்டுவானும் அல்லன். அல்லதூஉம், இவனுக்கு உரிமையின்றாய்ப் பிறராற் றரப்படுவதாம் பெரும் பொருள் ஒன்றுண்டோவெனக் கூறி மறுக்க. இதனான் இறைவன் ஐந்தொழிலியற்றும் உபகாரத் திற்குப் பிறிதொருவாற்றாற் காரணங் கற்பித்தல் பொருந்தா மையின், அதற்கு இரக்கமே காரணமாம் என்பது துணியப்படும். அவ்வருளிரக்கமுஞ் சீவர்கட்குப் போலச் செயற்கையான் விளைவதின்றி இறைவன்மாட்டு இயற்கையிற் பொருந்திக் கிடக்கும் ஓர் அருமைக் குணமாம் என்க. இனி, வரம்பிலின்பமுடைமை என்பது உயிர்கண் மாட்டுச் சிறுபான்மை தோன்றி யழியுஞ் சிற்றின்பம் போலாது நிரம்பிய பேரின்பமே தன்றன்மையாய் உடைமை. கற்கண்டினும் இன்சுவை பயப்பதாய்த் தேன்றதும்பு மாங்கனி ஒன்றை இறுக்கிப் பிழிந்து அதன் இரசத்தை நாவிற் பருகி இறக்கியபின் அதன் இனிமை தோன்றாது. இவ்வாறே வரம்புபட்ட பரிமாணமும் அசுத்தமு முடையவான கன்ம வுடம்பான் நுகரப்படும் இன்பங்களெல்லாம் ஒரு கண மாத்திரையே நிலையுதலு டையனவாம். இறைவனது திப்பிய மங்கள சரீரம் இன்ப வுருவின தாகலின், அது காணினுங் கருதினுங் களிதரும் இயல்பினதென்றே துணியப்படும். எண்ணிறந்தனவாம் எல்லா வுயிர்க்கும் இன்பந் தருதற் கடப்பாடுடைய இறை முதற் பொருள் சிறுகிய இன்பத் ததாயின் அவற்றை எல்லாம் இன்புறுத்துதலாகாமையின் அதற்குப் பேரின்பவுருவுண் டென்பது தானே போதரும் என்க. இனி, முடிவிலாற்றலுடைமை என்பது அறிவித்தா லன்றித் தாமே அறிய மாட்டாத சீவர்களையும், அசைவித்தா லன்றித் தாமே அசைய மாட்டாத பிரபஞ்சங்களையும் ஒருகாலத் தொருங்கே அறிவித்தற்பொருட்டும் அசைவித்தற் பொருட்டும் வேண்டப்படுவதாகிய ஒரு பேராற்றல் உடையனாதல். ஆற்றல் எனினும் சக்தி எனினும் ஒக்கும். இஃது ஒரு பொருட்கண் இயற்கையாய்ப் பிரிவின்றி நிலை பெறுவதொன்றாம். அறிவுப் பொருள் அறிவில் பொருள் ஆகிய அனைத்தும் ஆற்றல் உடையனவேயாம். ஆற்றல் திரண்டமயமே பொருள் என்பது அறியற்பாற்று. ஆன்மாக்க ளுக்கு அறிதற் றொழில் ஓராற்றலாம்; காந்தக் கல்லுக்கு இழுத்தற் றொழில் ஓராற்றலாம். ஆன்மாவின் அறிவை இல்லையாகச் செய்தல் ஒருவாற்றானும் ஏலாததொன்றாம். அவ்வாறே காந்தக் கல்லின் கண் இயற்கையாயுள்ள இழுத்தற்றொழிலைப் பிளவுபடுத்து அழித்தலுங் கடை போவதன்று. ஆன்மாவின்கண் உள்ள அறிவாற்றால் தன்னான் அறியப்படும் பொருள் இல்வழித் தோன்றாது. காந்தத்தின் கண்ணதாகிய ஆற்றல் தன்னான் இழுக்கப்படும் இரும்புத் துண்டு காணாவழித் தோன்றாது. இங்ஙனம் இவ்விருதிறப் பொருட்கண்ணும் நிலை பெறும் ஆற்றல் புலப்படத் தோன்றுதலுந் தோன்றாமையுமாகிய இரு நிலைமையுமுடைத்தாயினும் அஃது அவ்வப் பொருளினின் றும் வேறுபடுதல் இல்லையென்பது திண்ணம். இனி ஆற்றல் என்பது தான் யாதோவெனின்;-- இயக்கமின்றிக் கிடப்ப தொன்றை இயக்குதலும், இயங்குவ தொன்றை மறித்து நிறுத்துதலும் செய்வதொரு வினையாம். இவ்வாற்றலி னுடைய சுருக்க பெருக்கங்கள் அதனான் உய்க்கப்படும் பொருட் பரிமாணம்பற்றி நன்குணரப்படும். சிறியதொன்றை நடத்துவது சிறியவாற்றல் எனவும் பெரியதொன்றை நடத்துவது பெரிய ஆற்றலெனவும் அளந்தறியப்படுதலின், ஈண்டு முடிவிலாற்றல் என்பது தன் பெருக்கம் இனைத் தென்று வரம்பறுத்துணர லாகாத ஆற்றல் என்றபடியாம். சீவர்களறிவினான் அறிந்து அளவிடப்படாத அண்ட கோளங்களையும் அவ்வண்டங்களுள் நிலைபெறும் ஆன்ம கோடிகளையும் வினைப்படுத்து வருகின்ற இறைவ னுடைய ஆற்றல் முடிவறியப்படாத தொன்றாயிற்று. ஓராற்றலின் பெருக்கத்தை அறிதற்கு அது தன்னாற் செலுத்தப்படும் பொருட் பரிமாணவுணர்ச்சி இன்றியமையாத தாகலின், அண்டங்களின் தொகையும் அவற்றின் அளவும் அவற்றின் இயற்கையும் உணர்ந்தன்றி அவற்றை இயக்கும் இறைவன் பேராற்றல் அறியப் படுவதில்லை என்க. இனி ஆற்றலிலக் கணம் இதுவாதல் உணர மாட்டாதார் இல்ல தொரு சூன்யத்தினின்றும் உள்ள தொன்றனைத் தோற்று வித்தலும், உள்ள தொன்றனை இல்லதொரு சூனிய மாகத் திரித்தலுமே முடிவிலாற்றல் ஆம் என்று தமக்குத் தோன்றிய வாறே கூறுப. முக்காலத்தினும் இல்லதான சூனியத்தினின்றும் ஒன்றனைத் தோற்றுவித்தலும், அங்ஙனந் தோற்றுவித்ததனைத் திரும்பப் பாழாக்கலும் ஒருவாற்றானும் முடியாவென்பது பொருளி யல் நூன் முடிபாகலின் அஃது ஒரு சிறிதும் பொருந்தா தென்று மறுக்க. சிருட்டி என்பது மிகச் சூக்குமமாய்க் கிடந்த அணுக்களை இயைத்துத் தூலவுருவாக்கல்; திதி என்பது அங்ஙனஞ் சிருட்டித்ததனை நடைபெறுவித்தல்; சங்கார மென்பது தூலவுருவாய்த் திரண்ட அணுக்களைப் பிரித்து நெகிழ விடுதல்; இங்ஙனமாகலின், இறைவன் நடாத்துந் தொழில் உள்பொருட் கண்ணன்றி இல்பொருட்கண் அன்றென்பது கடைப்பிடிக்க. இன்னும் அதுபற்றியறியற் பாலனவெல்லாம் ஞானசாகர முதற் பதுமத்தில் உள்ளது போகாது இல்லது வாராது என்பதன்கட் காட்டினாம்; ஆண்டுக் கண்டு கொள்க. இவ்வாற்றால் முதல் வனுக்கு எண் குணமுடைமை ஓரிலக்கண மாதல் ஒருவாறு காட்டப் பட்டது. இனிக் கேவலாத்துவிதிகள் எனப்படும் ஒரு சாரார் பிரமப் பொருள் குணமுடைத் தன்றெனக் கூறுவர். உள்ள தொரு பொருளும் அதன்கண் ஒற்றித்துத் தோன்றுங் குணமும் வேறன்மையின், பொருளென்றன் மாத்திரை யானே அது குணமுடைத் தென்பது தானே பெறப் படுமென்க. அற்றன்று, பிரமம் குணமிலதென்றே சாதிப்பா மெனின்;-- அங்ஙனம் குணமின்மையும் பிரமத்திற்கொரு விசேட குணமா மாதலானும் அதனைப் பிரமம் எனப் பதத்தாற் பெயரிட்டு வழங்குதலும் அதற்கொரு குணமாய் முடிந்திடுதலானும் நீ கூறுவது கொண்டே பிரமங் குணமுடைத்தென்பது பெறப்படுமென விடுக்க. அற்றேல், உபநிடத நூல்களில் ஒரோவழிப் பிரமம் நிர்க்குணமெனக் கிளந்து கூறப்பட்டவா றென்னை யெனின்;-- மாயையினு டைய சம்பந்தத்தால் உயிர்கள் மாட்டு உண்டாம் சத்துவம், இராசதம், தாமதம் முதலிய குணங்கள் இறைவன் மாட்டும் உளவாமோ வென்னும் ஐயம் நீக்குதற் பொருட்டுப் பிரமம் நிர்க்குணம் என்னும் வாக்கியவுரை எழுந்ததென உணர்க. பிரமமென்பது இல்லதொரு சூனியமாயின் அது குண முடைத்தன்றெனக் கூறுதல் பொருந்தும், என்னை? ஆகாயத் தாமரை, முயற்கொம்பு என்ற வழி அச்சொற்களாற் குறிக்கப் படும் பொருள்களில்லாமையின் தாமரைத் தன்மையுங் கொம்பின்றன்மையும் ஆண்டு இலவாம்; பிரமம் அவை போற் சூனியப் பொருளென்பது அவர்க்குக் கருத் தன்மையின் பிரமங் குணமில்லதெனக் கூறும் அவருரைக்குப் பொருளில்லை யென்க. பிரமம் உள் பொருளாய்க் குணமுடைத்தாதல் பற்றியன்றே தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் எண் குணத்தான் றாளை வணங்காத் தலை என்று அருளிச் செய்வாராயினர். திருக்குறளின் மேற்பட்ட பிராமணநூல் உலகத்தின்மையின், இவ்வருமைத் திருவாக்கிய வுரையோடு முரணி எவர் யாது கூறினும் அஃதெல்லாம் பிரமாணமாதல் இல்லையென் றொழிக. 2. பசு இனிப் பசுவென்பது ஆன்மா. ஆன்மாக்கள் எண்ணிறந் தனவாம். இதற்குப் பிரமாணம் என்னை யெனின்;-- ஒருவர்க்கு ஓர் இன்பதுன்பம் நிகழுங்காலத்துப் பிறர்க்கும் அது தோன்றா மையானும், நான் இது செய்தேன் பிறர் அது செய்தார் என்னுஞ் சொல் வழக்குக் காணப்படுதலானும் காண்டல ளவையே பிரமாணமென்க. இஃதுணராத ஏகான்மவாதிகள் சூரிய விம்பங் கடங்கள் தோறும் வேறு வேறாய்த் தோன்றுதல் போல ஆன்மா வொன்று தானே சரீரங்கள் தோறும் வெவ்வேறாய்த் தோன்றும் எனவும், கடத்திலுள்ள நீரின் அசைவே விம்பத்திற்கும் ஆவதன்றி விம்பந்தானே அசையாதது போல உடம்பின் கட்டோன்றும் விகாரங்களே உயிர்க்கும் எய்துவதல்லது உயிர் தன்னிலையிலே விகாரப்படுவதின் றெனவுங் கூறுவர். இங்ஙனம் உரைப்பின், உடம்பின்கட் டோன்றும் வினை வேறுபாடுகளன்றி உயிர்க்கென ஒரு வினையின் றென்பது பட்டுத் தேகமே அறிவுடைத்தாய் யாவுஞ் செய்து போதர அதன்கண் நிலை பெறும் ஆன்மா எவ்வகைப் பட்ட உணர்வு முடைத்தன்றாமென்று கொள்ளப் படும்; உணர்வில்லாத தேகம் உணர்வுடைத் தெனவும், உணர்வுடைய வுயிர் உணர்விலதென்றும் அதனால் பெறப் படுதலின் அவர் தேகான்மவாதங் கூறும் உலகாயதராவர். ஆதலின், அவர்கூறும் அவ்வுவமை ஈண்டைக்குச் சிறிதும் பொருந்தாதாகலின், அது கொண்டு அவர் நிறுவப்புகுந்த பொருள் காண்டலளவைக்கு முற்றும் மாறுபாடா மென்றொழிக. அற்றேலஃதாக, இனித் தேகமே, ஆன்மா வெனிற்படும் இழுக்கென்னையெனின்;-- நான் என்னுஞ் சொல்லால் உணர்த்தப்படும் பொருள் உடம்பும் அதன் உறுப்புக்களும் ஆகாமை நன்கறியப்படுத லானும் எல்லாக் கருவிகளும் ஒருங்கியைந்த உடம்பு கிடப்ப உயிர் நீங்கிய வழி அவ்வுடம்பின்கண் அவ்வினை வேறு பாடுகள் தோன்றக் காணாமையானும் தேகமே யான்மாவாதல் யாங்ஙனமென் றொழிக. இன்னும் இது பற்றி எழுங்கடா விடைகளெல்லாம் முன்னர்ச் சூத்திர வாராய்ச்சியுட் காட்டுதும். இனி இவ்வான்மா ஈசுரனைப்போல இயற்கையறிவு டைத்தாயினுந் தன்னைப் பொதிந்த அறியாமையினால் அறிவு விளங்கப் பெறாது கிடக்கும். இதற்குப் பிரமாணம் என்னை யெனின்;--நாடோறும் ஆன்மாக்கள் அயர்ந்துறங்குங் காலத்து அறிவிலராதல் காணப்படுதலின், இதற்குங் காண்டலளவையே பிரமாணமென்க. அற்றன்று, குவிந்து விரியும் இயல்பினை யுடையதாகலின் சுழுத்தியிற் சுருங்கியும் சாக்கிரத்தில் விரிந்தும் ஆன்மவறிவு விளங்குமென ஐக்கவாத சைவர் கூறுவர். சுத்தமாய் என்றும் விளங்கப் பெறுகின்ற அறிவுடையதாயின் அது சுருங்கியும் விரிந்தும் வருவதற்குக் காரணம் வேண்டு மென்றே? இயற்கையிலே விளக்க முடையதாய்ப் பிரகாசிக் கின்ற சூரியன் என்றும் ஒரே பெற்றித்தாய்க் காய்தலும், அங்ஙனம் காயாவழி அஃதங்ஙன மாதற்குக் கரியமுகில் இடை மறைத்தலுங் காண்டு மாகலின், ஆன்மவறிவு அங்ஙனம் இருவகைப்படுதற்கு ஒரு காரணம் இன்றியமையாது வேண்டப்படும். என்னை? காரியம் உள்வழிக் காரணமுண்மை நியமமாகலின் என்க. இங்ஙனம் மறைத்தற் காரணம் பிறிதொருவாற்றாற் பெறப்படாமையின் ஆன்ம வறிவினைத் தடை செய்து அதனோடு உடன் நிற்பது ஓர் அழுக்குண்டென்க. அற்றேல் ஒரு காலத்து ஒருங்குள்ள ஈசுரன் ஆன்மா வென்னும் இருவேறு அறிவுப் பொருள்களுள் ஆன்மாவின்கண் மாத்திரம் அவ்வறியாமை மலம் உடன் நின்றவா றென்னையெனின்;-- அஃது அவ்வப் பொருளியற்கை என்க. நெற்றோன்றுங் காலத்து உமியுந்தவிடும் அதன் உடற்றோன்றுதலும், செம்பின்கட் களிம்பு முன்னே உளதாத லும் போல் ஆன்மாவின் கண் மலமும் இயற்கையே உண் டென்றுணரப்படும். அஃது இயற்கையாகத் தான் எப்படி இருக்கக் கூடுமென வினாவு வார்க்குக் கடவுள் தொன்று தொட்டே அறிவு விளங்கப் பெற்றுச் சருவ வியாபியாய் நிற்றலென்னை எனக் கூறி மறுக்க. அற்றேல், உயிரில் இயல்பாகவுள்ள அவ்வழுக்குக் குணம் போல்வதோ, அன்றி அதன்கண் ஒற்றித்து நிற்கும் ஒரு தனிப் பொருளோ என்றவழிக் குணமாயின் அஃதான் மாவினின்று எக்காலத்தும் பிரியாது, தனிப் பொருளாயின் அஃதொரு காலத்துப் பிரியவமையு மாகலின் அஃதொரு தனிப்பொருளென்றே துணியப்படும். அல்லதூஉம், உயிர்கள் பிறவிகடோறும்அறிவு விகசிக்கப் பெற்றுப் போதுதல் கண்கூடாக வைத்து அறியக் கிடத்தலின், அவர் தமக்கு அஃது பேரின்பந்தருதல் வகையான் நீங்குமென்பது திண்ணமேயாம். இனி ஒரு சாரார் உரைக்குமாறு இறைவன் உயிர்கட்கு அறியாமையினை முன்னே கூட்டி வைத்தானென்றலும் பொருந் தாது. என்னை? அறியாமையினை அங்ஙனம் பொருத்திய அவ்விறைவன்பின் அதனை நீக்கி அறிவு கொளுத்த வேண்டுவ தின்மையின். இறைவன் உயிர்கட்குப் பிறவி கடோறும் அறிவு கொளுத்தி உபகரித்தல் இனிதறியப் படுதலானும், அவர்க்கு நலந்தருதலே தன்றிருவுள்ளக் குறிப்பாகக் கொண்ட அவனது அருட்டன்மைக்கு அங்ஙனம் அறியாமை பொருத்தல் ஓர் இழுக்காமாதலானும் அவருரை அடாதென்றொழிக. அற்றன்று, இந்திரசாலங் காட்டுவான் போல இறைவனும் ஒரு திருவிளை யாடன் மாத்திரையானே சூனியமான அறியாமை யினை ஆன்மாவின்கட் பொருந்தச் செய்வானாதலின் அது வெறுந் தோற்றமேயல்லது உண்மை யன்றெனக் கூறுவா ருரையும் பொருந்தாது. அறியாமை என்பது வெறுஞ் சூனியமேயாயின் அச்சூனியம் ஆன்மாக் கட்குக் கணந்தோறும் பல்வேறுவகைப்பட்ட துன்பங்களை விளைவித்தலாகாமை யானும், உள்ள தொரு பொருளையே பொருந்தச் செய்தலாகு மல்லது இல்லதொன்றனையும் அவ்வாறு இயைவித்தல் யாண்டும் நிகழாமை யானும், எல்லா முதன்மையும் எல்லாக் குணங்களுமுடைய இறைவன் ஒரு காரணமுமின்றி ஒரு திருவிளையாடல் இயற்றினானென் றலும், அத்திருவிளை யாட்டான் ஆன்மாக் கட்குச் சொல்லு தற்கரிய பேர் இடும்பை களை விளைவிப்பா னென்றலும் அவனது இறைமைக் குணத்திற்கு வழுவா மாதலானும் அஃதுரையன் றென்பது தேற்றமாம் என்க. இனி அவ்வறியாமையினை அருட்டிரு வுடையனான இறைவனே ஆன்மாவின்கட் பொருத்துவான் அல்லன்; ஆன்மாவே அதனை விரும்பிஎடுத்துத் தன்கட்பொருத்திக் கொண்டதெனின்; -- சுத்த அறிவாயுள்ள ஆன்மா, சுத்த சொயம்பிரகாசப் பெருவெளியாய் விளங்கும் முழு முதற் கடவுளைப் பற்றுதல் விட்டுத், தன் அறிவுக்கு ஊனம் விளைத்துத் துன்புறுக்கும் அசுத்த ஆணவ மலத்தைப் பற்றிய தென்றல் பொருத்தமில்லாக் கூற்றாம். அல்லதூஉம், ஆன்மாவே முன்னொரு காலத்து அவ்வாணவத்தை விரும்பிப் பற்றிய தாயின், அங்ஙனந் தான் விரும்பிப்பற்றிய அதனை என்றும் விடாது தன்கண்ணே வைத்திருத்தல் வேண்டும். அப்படித்தான் அது வைத்திருக்குமென்றே கொள்வேமெனின்; -- இப்போது ஆன்மாக்கண் மாட்டுப் பிரத்தியக்கமாய் நடைபெற்று வருகின்ற அறியாமை நீக்கமும், அறிவு விளக்கமும், இது கொண்டு அனுமித்தறியற் பாலதாகிய வீடுபேற் றின்பமும் என்றும் உளவாகா தொழிதல் வேண்டும். அதுவேயுமன்றி, அறியாமை யினின்றும் நீங்கவேண்டும் என்னும் விருப்பமும் நம்மனோர் பால் இல்லாதாக வேண்டும். இவையெல்லாம் அங்ஙனம் இருப்பக் காணாமையானும், அறியாமையை நீக்கி அகல ஒழிப்பதற்கு ஆன்மாக்கள் நமக்கு உரிய விழுப்பொரு ளெல்லாங் கொடுத்து முயலக்காண்டு மாகலானும் ஆன்மாவே ஆணவத்தை விரும்பிப் பற்றியதெனல் ஒரு சிறிதும் பொருந் தாதென மறுக்க அற்றன்று, இன்பமல்லாத வற்றை இன்பமாகப் பிறழ உணர்ந்து பற்றிய ஒருவர் அதன் இயற்கை அறிந்த மாத்திரத்தாலே அதனைவிட்டு நீங்க விழைதல் போல, ஆன்மாவும் ஆதிகாலத்தே ஆணவத்தை இன்பந்தருவதெனப் பிறழ உணர்ந்தது பற்றிப், பின் அஃது அவ்வாறல்லாமை கண்டு அதனை ஒழிக்க முயல்கின்றதென உரையாமோவெனின்; -- உரையாம். ஆன்மா அநாதியே சுத்த அறிவுடையதாய் நின்றால், ஆணவமலத்தின் இயல்பை இனிது அறிந்திடு மன்றோ? இன்பந்தரமாட்டாத அவ் வாணவத்தை இன்பந் தருமியல் பிற்றாக வைத்துப் பிறழ உணர்ந்த தென்னை? என்று ஆசங்கிப் பார்க்கு அதனைப் பரிகரித்து உரை கூறல் ஏலாதாகலின், அஃது, அதனைப் பிறழ உணர்ந்து பற்றிய தென்றல் முன்னொடுபின் முரணுற்று அழியுமென்க. ஐயவுணர்ச்சிக்குந் திரிபுணர்ச்சிக்குங் காரணமாய் ஆன்மாவினுட னின்று மறைப்பதூஉம் மலமே யாகலின், ஆன்மா மயக்கத்தான் ஆணவத்தைப் பற்றியதென உரைக்கும் உரையே தன்னை மறுத்து அஃது அதனைப் பற்றியதில்லையென நாட்டும் என்க. அற்றேல், பொற்றிரள் தன்னைக்கண்ட மாந்தரைத் தன்மாட்டு ஈர்த்தல் போல, ஆணவமும் ஆன்மாக்களைத் தன்மாட்டு ஈர்க்கவல்லதாமென்று உரைத்து மெனின்;-- நன்று கூறினாய், ஆணவமோ அறிவில்லாத ஒரு சடப் பொருள், ஆன்மாவோ அறிவுடைய சித்துப்பொருள்; தன் இச்சைவழி இயங்கவல்லதான ஆன்மசித்துப் பொருளை அவ்வாறு இயங்கமாட்டாத ஆணவச்சடப்பொருள் தன்மாட்டீர்க்கு மென்றல் பேதைமையாம். எடுத்துக்காட்டிய உவமையும் பொருத்தமுடைத்தன்றாம். என்னை? உலக வொழுக்கங்கள் பலவற்றினையும் முட்டின்றி நடைபெறுவித்தற்கு ஓர் இன்றியமையாச் சாதனமாய் மக்கட்கு பயன்படுவது பொன் னாம்; பொன் அவ்வாறு பயன்படுதலை ஓர்ந்து மக்கள் அதனைப்பெற விழைகின்றாரல்லது பிறிதில்லை; அப்பொன் அவ்வாறு பயன்படுதலுடைத்தன்றாயின் யாருமே அதனைப் பெறுதற்கு முந்துறார் என்பது திண்ணமாகலின். ஆகவே பொன்றானே மக்களைத் தன்மாட்டு ஈர்க்கும் வலியில தென்பதும், மக்கடாமே அதன் பயனுணர்ந்து அதனைப் பற்றுவரென்பதும் இனிது விளங்கலின், அவ்வுவமை கொண்டு ஆணவமே ஆன்மாவை ஈர்க்கும் எனக் கூறுதல் ஏலாதா மென்க. அற்றன்று,. காந்தம் இருப்பூசியைத் தன்பாலிழுத்தல்போல ஆணவமும் ஆன்மாவைத் தன் பாலிழுக்குமாம் பிறவெனின்; -- அதுவும் பொருந்தாது; காந்தமும் அறிவில்லாத ஒரு சடப் பொருள்; ஒரு சடப் பொருள் ஏனையொரு சடப் பொருளை இழுத்தற்கு எடுத்துக் காட்டப்படுவதாகிய இவ்வுவமையால் ஆணவமாகிய சடப் பொருள் ஆன்மாவாகிய சித்துப்பொருளை இழுக்குமென நிறுவப்புகுதல் அளவை மாறுபாடாமென்க. காந்தமாகிய சடப்பொருள் எறும்பு, புழு முதலான சித்துப் பொருள்களை இழுக்குமாயினன்றே அவ்வுவமை ஈண்டைக்குப் பொருத்தமாம், அஃது இருப்பூசியை யன்றிப் பிறவற்றை இழுக்கவல்ல தல்லாமை போல ஆணவமும் ஆன்மாவை ஈர்க்க வல்லதன்றென்பது அவ்வுவமை கொண்டே நாட்டப்படு மென்றுணர்க. அல்லதூஉம், இருப்பூசியைத் தன்கட் பற்றிய காந்தம் பின் தானே அதனை விட மாட்டாதாய் என்றும் அதனைப் பிடித்தபிடியே கிடக்கும்; ஆணவமும் அதுபோல் ஆன்மாவைப் பற்றியதாயின் பின் அஃது என்றும் அதனைப் பற்றியவாறே கிடக்குமல்லது, தானே அதனை விட மாட்டா தாம். விடமாட்டாதாகவே ஆன்மாவுக்கு என்றும் அறிவு விளங்குதலில்லையாய்ப் போதலோடு முத்தியின்ப மும் அதன் கைவரப் பெறுதலில்லையாம். இது பிரத்தியட்ச விரோத மாயிருத்தலானும், உயிர்கள் அறிவு விளக்கத்தினையும் வீடு பேற்றின்பத் தினையும் அவாவி முயறலே நாடோறுங் காணப்படும் நிகழ்ச்சி யாயிருத்தலானும், அறியாமை சிறிது சிறிதாகத் தேய்ந்து போதல் கற்றறிவுடைய சான்றோரிடத்து அனுபவமாய் வைத்து அறியக் கிடத்த லானும் ஆணவமலம் ஆன்மாவைப் பற்றிய தென்றல் எவ் வாற்றானும் பொருந்து வதன்றென மறுக்க. இவ்வாறு ஆணவமும் ஆன்மாவைப் பற்றாதாக, ஆன்மாவும், ஆணவத்தைப் பற்றாதாக, இறைவனும் அவ்விரண்டனையும் ஒருங்கு பொருத்தானாகவே, பாரிசேட அளவையால் ஆணவமும் ஆன்மாவும் அநாதிதொட்டே ஒன்றாயிருக்கு மென்க. இங்ஙனம் ஆணவத்தோடு ஒன்றாய் நிற்றலிற் பசுவென நூல்களால் நுவலப்படும் ஆன்மாக்களின் உண்மை நிலை யாதோவெனிற் கூறுதும். ஆன்மா அறிவுடைய சேதனப் பொருளென்பது முன்னமே காட்டப்பட்டமை யானும், சேதனப் பொருளெல்லாம் காலத்தானும் இடத்தானும் வரையறுக்கப்படாத இயல்பின வென்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்தமையானும், காலத்தானும் இடத்தானும் வரை யறைப்படாதன வெல்லாம் சருவவியாபக முடையன வென்பது தருக்கநூற் றுணிபாகலானும், ஆன்மாக்க ளெல்லாம் சருவ வியாபகச் சித்துப் பொருள்களென்றே முடிக்கப்படும். ஆன்மா சருவ வியாபகமுடைய சித்துப் பொருளாயின் அது மனித சரீரம் ஒன்றெடுத்தவழி அச் சரீரத்தைவிட்டு அப்பால் அறிவு விளங் காமையும் புழுவுடம்பு பெற்றவழி அவ்வுடம்புக்கு அப்பால் அறிவு விளங்காமையும் என்னையோ வெனின்;-- ஆணவ மலம் ஆன்ம அறிவு வியாபகம் முழுவதையும் மறைத்து நிற்றலின் அவ்வான்மா சரீரங்கடோறும் சிறிது சிறிதே அறிவு விளங்கப்பெறுகின்றதென்க. இதனால், ஆணவ மலம் ஆன்ம அறிவு முழுதினையும் மறைக்குமென்பதும், மாயையிலுற் பத்தியான மனித வுடம்பு, புழுவுடம்புபோல்வன அவ்வறி வினைச் சிறிது விளங்கச் செய்யுமென்பதும் ஈண்டே உணரற் பாலனவாம். நூனமுற்ற கண்ணைக் காணச் செய்தற்குக் கண்ணாடி அவசியமாக வேண்டப்படுதல்போல ஆணவத் தான் மறைப்புண்ட ஆன்ம அறிவை விளங்கச் செய்தற்கு மாயா காரியமான உடம்பு இன்றியமையாது வேண்டப் படுவதேயாம். அற்றேல், இவ்வுடம்பின் மாத்திரத்தால் ஆன்மவறிவு கட்டுப் பட்டு விளங்குமென்றுரை யாமோ வெனின்; -- உரையாம். அல்ல தங்ஙனம் உரைப்பின் வரும் இழுக்கென்னையெனின்; -- அறிவுப் பொருளெல்லாம் காலத்தானும் இடத்தானும் வரையறைப் படாவென்றும், சடப்பொருளே அவற்றால் வரையறைப் படுமென்றும் முன்னே காட்டப்பட்டமையால், ஈண்டு ஆன்ம அறிவு சடரூபமான உடம்பினால் வரையறுக்கப் படுமென்று கூறின், அஃது அங்ஙனம் வரையறுக்கப்படும் சடப்பொருளாய் முடித்து ஆன்மாச் சித்து என்னுஞ் சித்தாந்தத் தோடு முரணும். ஆகையால் அங்ஙனம் முரணாமைப் பொருட்டு யாண்டுஞ் சருவ வியாபியாய் இருக்கும் ஆன்ம அறிவு எவ்விடத்தே உடம்பு தன்னைப் பற்றி விளக்கலூறுகின்ற தோ அவ்விடத்தே தன்னைச் சிறிது விளங்கக் காட்டு மென்றலே தகவுடைத்தாம் என்க. பாசிமூடிய ஒருபெரும் பளிங்குக்கல்லைச் சிறியதொரு கருவி கொண்டு ஓரிடத்திற் பாசி நீக்கிய வழி. அப்பாசி நீக்கிய இட மாத்திரமே கட்புலனாய் மின்னி விளங்குதல்போல, ஆணவத்தால் மறைவுண்ட ஆன்ம வியாபகத்தில் உடம்பினாற் பற்றப்படும் இடம் மாத்திரமே ஈண்டு விளங்கப் பெறுகின்ற தென்று ணர்க. எனவே, சாத்தன் என்னும் ஓருடம்பில் தோன்று கின்ற ஆன்ம அறிவானது அவ்வுடம்பின் மாத்திரையாய் வரம்புபட்டு நில்லாமல் யாண்டும் வியாபித்துள்ள தென்பதே முடி பொருளாம். அற்றாயினும், அவ்வுடம்பிற் றோன்றிய ஆன்மஅறிவு அத் தோன்றுமளவாற் பாசம் நீங்கிய தென்பதும், அவ்வுடம்போடு தொடர்புபட்டு யாண்டும் வியாபிக்கும் அதன் அறிவின் மற்றைப்பாகம் ஆணவத்தான் முற்றும் மறைவு பட்டிருக்கின்ற தென்பதும், இவ்வாற்றால் ஓரான்மவறிவு ஓருடம்பிற் றோன்றுதல் பற்றியே அஃது அவ்வுடம்பினுள் ஏகதேசப்பட்டு நிற்குமெனல் பொருந்தா தென்பதும் உற்றுணரற் பாலனவாம் என்க. அற்றேல், சருமவியாபகமான ஆன்ம அறிவை மறைக்கும் ஆவமலமும் சருவவியாபக முடைத்தென்பது பெறப் படுமாலோ வெனின், -- அவ்வாறு பெறப்படுதல் பற்றி ஈண்டைக் காவதோர் இழுக்கொன்று மில்லையென்க. சடப்பொருள் எல்லாம் காலத்தானும் இடத்தானும் வரை யறுக்கப்படுவன வென்று முற்கூறினமையின் அவற்றிற்குச் சருவ வியாபகஞ் சொல்லுதல் கூடாமை யானும், ஆணவ முஞ் சடப்பொரு ளென்றுமுன்னே காட்டினமையின் அது சருவ வியாபகமுடைத்தென ஈண்டுக் கூறுதல் முன்னொடு பின் மலைவாமாதலானும் அஃது இழுக்கேயாமெனின்; -- சடப்பொருளியல்பு முற்று மறியாது கூறினாய், காலத்தானும் இடத்தானும் வரையறைப் படுஞ் சடப்பொருள் என்றது, சடப்பொருளின் காரியங்களே யாம். ஒரு மட்பாண்டத்துள் முகந்த தண்ணீர் காரியச் சடப்பொருளாகலின் அஃது அப்பாண்டத்தின் அளவாய் வரையறுக்கப் படுவதாயிற்று, மற்ற அத்தண்ணீர் முழுவதும் ஆவியாய்ப் பரிணமித்து மறைந்தவழி, அங்ஙனம் மறைந்த அத் தண்ணீரின் காரணம் முன்போல் வரையப்படாது அருவாய் வியாபகமாய்ப் போம். ஆகவே சடப்பொருள் தானும் காரியப்படாது அருவாய் நின்றதாயின் அது பிறிதொன்றான் அகப்படுத்தப் படாமல் எங்கும் வியாபியாயே நிற்குமென்பது தேற்றமாம். ஆதலால், ஆணவமாகிய சடப்பொருளும் தான் அருவாய்க் காரண நிலையில் நிற்பதொன்றாகலின் அது சருவ வியாபக முடைத்தாய் ஆன்ம அறிவு வியாபக முழுதினையும் மறைத்த படியாகவே நிற்கும் என்க. காரியப்பொருளெல்லாம் அநித்த மென்று நூல்கள் கூறுவதூஉம், அவை காலம் இடம் என்ப வற்றால் வரையறைப்படுதல் பற்றியேயாம். காரணப் பொருள்கள் அவ்வாறு வரையறுக்கப்படாமையின் அவை என்றுமுள்ள நித்தப்பொருள்களா மென்பதூஉம், தத்தங் காரண நிலையில் ஆணவம், காமியம், மாயை என்னும் சடப்பொருள்கள் மூன்றும் நித்தமேயாமென்பதூஉம் ஈண்டுக் கூறியவாற்றால் இனிது விளங்கற் பாலனவேயாம் என்க. அற்றேலஃதாக, இறைவனும் சருவவியாபகப் பொருள், ஆன்மாவும் சருவவியாபகப்பொருள், மலமும் சருவ வியாபகப் பொருள் என்று உரைத்தால் இவை மூன்றும் ஒன்றோ டொன்று மருவி நிற்குமாறுதான் யாங்ஙனமெனின்; -- ஆணவ மலமோ சடப்பொருளாயினும் சூக்குமமான நிலையுடையதாம்; ஆன்மாவோ சித்துப்பொருளாய் அதுவுஞ் சூக்குமமான நிலையில் நிற்பதாம்; கடவுளோ சுத்த சித்துப் பொருளாய் இவை இரண்டினும் மேற்பட்ட சூக்கும நிலை யுடையதாம். ஆகவே, ஆன்மாவும் ஆணவமும் பிரிப்பின்றி ஒன்றோ டொன்று கலப்புற்றவாறாய் வியாபித்து நிற்க அவ்விரண்டினும் கடவுட்பொருள்வியாபித்து நிற்கு மென்க. இங்ஙனம் இவை பிரிவற நிற்கும் வியாபகநிலை சிறிதறிவு விளங்கப்பெறுஞ் சிற்றுயிர்களான நம்மனோரால் முற்றும் அறியவாராதாயினும், மாணாக்கர்க்கு இஃது ஒருவாறாயினும் விளங்கல்வேண்டி ஆன்றோராற் காட்டப் பட்ட ஓருவமையை ஈண்டெடுத்துக் கூறுவாம். கடல் என்பது உவர்நீர் நிற்கும் ஒரு பெருவெளியாம்; இவ்வெளி முழுவதும் நிற்கும் நீர் தூய தனிநீராகவல்லாமல் உப்போடு கலந்தபடியேநிற்பது. கடல்நீர் முழுவதும் உப்பாகவே யிருத்த லால், அக்கடல் நீரும் அதிற் கலந்த உவரும் ஒன்றாய் உடன்நிற்கின்றன. உவரான இக்கடல் நீரெங்கும் கடல் எனப்படும் பெருவெளி வியாபித் திருக்கின்றது. இது போலவே சூக்கும சுத்தசித்தும் பெருவெளி யான சிவமும், கலப்புற்று நிற்கும் ஆன்ம ஆணவங்களில் வியாபித்து நிற்கின்றது. நீரும் உப்பும் ஒருகாலத்துக் கலந்தன வாகாமல் அநாதியாகவே ஒன்றாய் நிற்றல்போல ஆன்மாவும் ஆணவமும் அநாதிதொட்டு ஒன்றாகவே நிற்கின்றன. நீர்: ஆன்மா, உப்பு: ஆணவமலம். கடற்பெரு வெளியில் நீரும், நீரில் உப்பும் இருத்தல் போலச் சிவபெருவெளியில் ஆன் மாவும் ஆன்மாவில் மலமும் இருக்கின்றன. கடற்பெரு வெளியின் வியாபகத்திலே நீர் வியாபித்திருக்கின்றது, சிவப்பெரு வெளியின் வியாபகத்திலே ஆன்மா வியாபித்திருக்கின்றது; நீரின் வியாபகத்திலே உவர் வியாபித் திருக்கின்றது, ஆன்ம வியாபகத்திலே மலம் வியாபித்திருக் கின்றது. சிவம் என்னும் முழுமுதற் பரம்பொருள் ஏனை யிரண்ட னுள்ளும் நிறைந்திருத்தலின் அதுவே வியாபகப் பொரு ளென்றும், ஆன்மா அச்சிவ வியாபகத்தினுள் வியாபித் திருத்தலின் இது வியாப்பியப் பொருள் என்றும், மலமானது ஆன்மாவோடு சமவியாபகமாய் நிற்றலின் இது வியாத்திப் பொருளென்றும் அறிவு நூல்கள் நுவலா நிற்கும். எனவே, சிவமொன்றே ஏனை எல்லா வற்றினையும் ஊடுருவி வியாபிப்பதென்பதும், மற்றைய வெல்லாம் அச்சிவ வெளியின் உள்ளடங்கி வியாபகமாய் நிற்குமென்பதும் ஈண்டு உணரற் பாலனவாம். அற்றேல், சிவவெளியின் உள்ளடங்கி நின்ற ஆன்ம ஆணவங்கள் அவ்வெளியால் வரையறுக்கப் படுமாதலின், அவை அங்ஙனம் வரை யறைக்கப்படும் ஏனைக் காரியப் பொருள்கள்போல அநித்த மாய் முடியுமாலோவெனின்; -- அற்றன்று, ஒன்றனை வரை யறைப்படுத்துகின்ற பிறிதொரு பொருள் தானும் வரையறைப்பட்ட இலக்கணமுடையதாம். ஒரு மட்குடம் தான் வரையறைப்பட்ட காரிய உருவப் பொருளாயிருத்த லின், தன்போற் காரியப் பொருளாய்த் தன்கண் நிரப்பப் பட்ட தண்ணீரை வரையறைப்படுத்துகின்றது. அதுபோற் சிவமும் ஆன்ம ஆணவங்களை வரையறைப்படுத்து மெனின் அச்சிவமும் வரையறைக்கப்பட்ட இலக்கணமுடைத் தாய் அநித்தப்பொரு ளென்று கொள்ளப்படும். சிவம் அங்ஙனம் அநித்தக் காரியப் பொருளாதல் எவ்வாற்றானும் பெறப் படாமையின், அச்சிவ வியாபகத்தால் ஆன்ம ஆணவங்கள் வரையறைப்பட்டு நிற்குமெனல் ஒரு சிறிதும் பெறப் படுவ தில்லையென்க. அற்றன்று, சிவவியாபகம் ஏனை யிரண்டனையும் மேற்கவிந்த வியாபகமாதலின், அவ் வியாபகத்தின் உள்ளடங்கி நின்ற ஆன்ம ஆணவங்கள் அவ்வாற்றால் வரையறைப் படுமாலோவெனின்;- இதுவும் பொருந்தாது. சிவ வியாபகத்திற்கு எல்லையே இல்லை யாகலின் அச்சிவவியாபக முழுவதூஉம் உள்ளடங்கி வியாபிக்கும் ஆன்ம ஆணவ வியாபகங்களுக்கும் எல்லை யில்லை யென்க. சிவவியாபகத்திற்கு எல்லை பெறப்பட்டா லல்லது அச் சிவத்தினுள் வியாபிக்கும் ஆன்ம ஆணவ வியாபகங்கட்குச் சிறிதும் எல்லை பெறப்பட மாட்டா தென்க. இங்ஙனமாதலின், இறைவன், உயிர், மலம் என்னும் மூன்றும் சருவ வியாபகப் பொருளாதல்பற்றி ஈண்டைக் காவதோர் இழுக்கில்லை யென்க. இனி, வியாபக இலக்கணம் இவ்வாறாதலைச் சிறிதா யினும் பகுத்துணரமாட்டாத ஏகான்மவாதியருள் ஒரு சாரார் ஓரிடத்தில் இருபொருள் ஒன்றினொன்று வியாபகமாய் நிற்றல் பிரத்தியக்கத்திலில்லை யென்றும், சருவ வியாபகத்திற்கு ஒரு பொருளேயன்றிப் பின்னும் ஒரு பொருள் இருத்தல் சாலா தென்றும், ஆகவே பிரம்மம் ஒன்றே சருவவியாபகப் பொரு ளாய் உள்ளது. ஏனையவெல்லாம் இல்லாத வெறும் பொய்ப் பொருளாமென்றும் தமக்குத் தோன்றியவாறெல்லாம் சொல்லுவர். இவர் கூறும் இவ்வுரையின் வன்மையைச் சிறிது ஆராய்வாம். ஓரிடத்தில் இருபொருள் ஒன்றினொன்று வியாபகமாய் நிற்றலில்லை என்பது பெரும்பாலும் உருவமாய்க் காணப்படும் காரியப்பொருள்கட்கன்றி ஏனையவற்றிற்கும் அதனை ஏற்றிச்சொல்லுதல் சிறிதும் இயையாது. ஒரு குடம் இருந்த இடத்திற் பிறிதொரு குடமும் இராது. என்னை? குடம் காரிய உருவப்பொருளாகலின், காரிய உருவப்பொருளுள்ளும் கடினமாய் வல்லென்றிருக்குந் திடப் பொருள்களே ஒன்றின் மற்றொன்று வியாபிக்க மாட்டாவாம். அவை நெகிழ்ந்த திரவப்பொருள்களாயின் ஒன்றி னொன்று வியாபகமாய்க் கலந்துநிற்றல் பிரத்தியக்கத்திற் காணப்பட்டதேயாம். பாலும் நீரும் ஒன்றாய்க் கலந்து ஓரிடத்திலிருத்தலும், உப்பும் நீரும் ஒன்றாய்க் கலந்து ஓரிடத்திலிருத்தலும் பிரத்தியக்கமாய் அறியக் கிடப்பவும் இருபொருள் ஓரிடத்திற் கலந்து வியாபியா என்றது பொருளுண்மை அறியாது கூறிய வாறாம். மேலும் வியாபாகம் என்றன் மாத்திரையானே வியாபிக்கும் பொருளும், அதனான் வியாபிக்கப்படும் பொருளும் தாமே பெறப்படுமாகலின், அதற்கு இரு பொருளின் இருப்பு அவசியம் வேண்டற் பாலதேயாமென்க. இவ்வாறன்றி வியாபகத்திற்கு ஒருபொருளே இருத்தல் வேண்டுமெனக் கூறுவாருரை பொருட் பேறிலவா மென்க. எனவே, கடவுள், உயிர், மலம் என்னும் முப்பொருள் களும் வியாபக வியாப்பிய வியாத்தி இயைபுற்றுமருவி நிற்றலின், இவற்றுள் ஏனையிரண்டன் இருப்புப் பற்றிக் கடவுள் வியாபகத்திற்கு வரக்கடவதோர் இழுக்குச் சிறிதுமில்லை யென்பது கடைப் பிடிக்க. இத் துணையும் பசு எனப்படும் சீவான்மாவின் இயல்பு ஒரு சிறிது உணர்த்தப் பட்டது. 3. பாசம் இனிப் பாசம் என்பதனியல்பு சிறிது காட்டுவாம். பாசம் என்னும் இச்சொல் கட்டு என்னும் பொருளை யுணர்த்தும் பச் என்னும் பகுதியடியாகப் பிறந்து சீவான் மாவைக் கட்டி நிற்பது என்னும் பொருட்டாம். இச் சிவ ஞானபோதச் செம்பொரு ணூலின் கண்ணே இப்பாசம் ஆணவம், கன்மம், மாயை என மூன்றாகப் பகுக்கப் பட்டுள்ளது. இவை மூன்றனுள் ஆணவம் என்பது இயற்கையே உயிரோடு பொருந்தி நிற்பதொன்றாகலின், அது சகசமலம் என்றும்; கன்மம், மாயை என்னும் ஏனை இரண்டும் ஆணவமலம் நீங்குமுகத்தால் ஆன்மாக்களைச் செயற்கையாக இடையே வந்து பற்றுவன வாகலின் அவை ஆகந்துகமலம் என்றுஞ் சொல்லப்படும். இனி ஆணவமலத்தினியல்பும், அஃது ஆன்மாக்க ளோடு அநாதியே உடன் நிற்குமாறும் பசு வியல்பு கூறிய வழி ஆண்டு இனிதெடுத்து விளக்கினாம். ஆதலால் அதனை யொழித்து ஒழிந்த ஏனை இருமலங்களையும்பற்றி இங்கு முறையே சுருக்கியுரைப்போம். கன்மம் என்பது வினை அல்லது தொழில். ஒரு பொருளின் அசைவே தொழில் என்றாகும். பொருளசைவு இல்லையானால் அதன் றொழிலும் இல்லையாம். முழுதும் ஆணவமலத்தின் வயப்பட்டுக் கிடந்த காலத்து ஆன்மாவின் இச்சா ஞானக்கிரியைகளுக்குச் சிறிதும் அசைவில்லாமை யான் ஆண்டு ஆன்மாவுக்குக் கன்மம் இல்லை யென்தூஉம். இறைவனது திருவருட் சக்தியான் எடுக்கப்பட்டு மாயை யோடு பொருத்தப்பட்ட வழி ஆன்மாக்கள் தம்மாட்டு அவ் விச்சா ஞானக்கிரி யைகள் சிறிது விளங்கப் பெற்றமையானே ஆண்டுக் கன்ம முண்டாயிற்றென்பதூஉம் இதுகொண்டு அறியற் பாலனவாம். எனவே, ஆன்மாவின்றன்னோடு சகசமாய் உடனிற்பதாகிய ஆணவமல நீக்கத்தின்பொருட்டு அவ்வான்மா வோடு இடையொரு காலத்து மாயாமலங் கூட்டப் படுங்கால் அவற்றின் நடுவே கிளைப்பது கன்ம மென்பது ஈண்டே தெளி வுறுத்தப் பட்டதாயிற்று. அற்றேல், கன்மமலம் அநாதியென் றுரை நிகழ்த்துஞ் சித்தாந்த வாக்கியத்தோடு ஈது முரணு மாலோ வெனின்; - முரணாது. அது, கன்மத்தின் இருப்பு அநாதி யென்று கூறியதே யல்லாமல், அஃது ஆன்மாவின்கட் பற்றியதும் அநாதி யென்று கூறியதாகாது. ஆன்மாவின்கட் கன்மற் தோன்றியது மாத்திரமே ஆதியென்றுரைக்கப் படுமல்லது. உயிரின் கட்டற்கிழமைப் பொருளாக உள்ள அதனிருப்பு அநாதி முறைமைத் தேயா மென்பது தெளிபொருள். ஆகவே, கன்மம் அநாதி யென்னுஞ் சித்தாந்தவுரையோடு ஈண்டுக் கூறியது, சிறிதும் முரணாது அதற்குப் பெரிதும் இணக்க மாவதேயாமென்க. அற்றேலஃதாக, கன்மம் ஆன்மாவின்கட் டற்கிழமைப் பொருளாயின், அஃதெஞ் ஞான்றும் அதனைப் பிரியாதாகல் வேண்டும்; பிரியாதாகவே அஃதான்ம இயற்கைப் பொருளாகு மாகையால் அதனை மலம் என வைத்தோதி அஃது ஆன்மாவைப் பந்தமுறுத்து மெனக் கூறுதல் என்னையெனின் -- உயிர் மலத்தைச் சார்ந்தவழி அம்மலத் தினியல்புற்றும், அது சிவத்தைச் சார்ந்தவழி அச்சிவத்தி னயல்புற்றும் நிற்கும் ஓர் உரிமையுடைத்தாம். உயிரின் அறிவாகிய ஞானமும், அதன் விருப்பாகிய இச்சையும், அதன் றொழிலாகி கிரியையும் ஆணவமலத்தின் வயப்பட்டு நிற்குங்கால் அம் மலத்தினுருவே தமதுருவாய்க்கொண்டு நிற்குமென்பது பெறப்பட்டது. இங்ஙனம் நின்ற நிலையில் அவ் விச்சாஞானக்கிரியைகள் மாயையின் உதவியாற் சிறிது விளங்கப்பெறுமெனின், அவை ஆணவமலத்தின் வயப்பட்டே நிகழாநிற்கும். மலத்தின்வழி நிகழும் அந்நிகழ்ச்சிகள் இவ்வாற்றாற் கன்மமாமென்றும் அவை ஆன்மாவைப் பந்தமுறுத்துமென்றும் அறிவு நூல்கள் கூறுவவாயின. அற்றாயின், மலத்தின்வழி நிகழும் அவை எஞ்ஞான்றும் உயிர்கட்குத் துன்பம் மாத்திரையே தருதல் வேண்டுமல்லது ஓரோவழி இன்பமுந் தருதல் என்னை யெனின்; - ஆன்மாவின்கட் பொருந்தி நிற்பது ஆணவமலம் ஒன்று மாத்திரமன்று; இறைவன் றிருவருட் சத்தியும் அதனோடு உடனிற்பதாம். ஆணவ மலத்தின் வயப்பட்டு மாயையினுதவி யாற் சிறிதே அறிவு விளங்கா நிற்கும் ஆருயிர்கள் பெரிதுந் துன்பமே உழத்தலால், அவை தமக்கு இடையிடையே இன்பமுந் தோற்றுவித்து அயர்வு தீர்த்தற் பொருட்டாக அவற்றோடு உடனிற்கும் திருவருட்சத்தி அவற்றின் வினை நிகழ்ச்சியிற் கலந்து நின்று ஒரோவழி இன்பமும் பயக்கு மாகலின் அக்கன்மங்கள் அங்ஙனம் ஆன்மாவுக்கு இன்பமுந் தருவவாயின. எனவே, ஆன்ம வினை மலத்தைச் சார்ந்து நிகழும் வழித் துன்பமும், திருவருட்சக்தியைச் சார்ந்து நிகழும் வரி இன்பமும் பயக்கும் நீரவாம் என்க. அது கிடக்க; இனிக் கன்மத்துக்கீடாக உயிர்கள் உடம் பெடுக்கும் என்று நூல்களெல்லாம் கூறாநிற்க, உயிர்கள் மாட்டு உடம்பு பொருந்துங்கால் அக்கன்மந் தோன்றுமென்றது யாங்ஙனமெனின்; கன்மத்துக்கீடாக உயிர்கள் உடம்பு எடுக்கு மென உரைப்பின், உடம்பெடுத்த பின்னன்றிக் கன்மத்தை ஈட்டலா காமையின் உடம்பிற்குப் பின்னேதான் கன்ம விளைவாமெனக் கூறுவாரை மறுக்கலாகாமையின் அது பொருந்தாது. அற்றன்று, முதன்முதற் சிருட்டியாரம் பத்திலே அநாதியாயிருந்த கன்மத்துக் கீடாக முதலிலோர் உடம்பு வரப்பின் அவ்வுடம்பிலிருந்தே முகந்தவினைக் கீடாகப் பின் உடம்புகள் தொடர்பாய்வர இங்ஙனம் பிறவித் தோற்றங்கள் நடைபெறு மென்பதே கருத்தாகலின், கன்மத்தான் உடம்பு வருமென்றலே இயை வதாமெனின்; -- அற்றன்று, சிருட்டி யாரம்பத்திற்கு முன் ஆன்மாக்கள் முழுதும் ஆணவமலத்திற் கிடந்து தம் இச்சா ஞானக் கிரியைகள் ஒரு சிறிதும் விளங்கா மலிருந்துழி ஆண்டுக் கன்மமலமு முடனிருந்த தெனக் கூறுதல் எவ்வாற்றானும் பொருத்தமுடைத்தன்றாம். என்னை? ஆன்ம அறிவின் இயக்க மின்றிக் கன்மமுண்டாதல் ஏலாமையினென்க. அல்லதூஉம் முதலிற் கன்மத்தான் உடம்பும், பின்னர் உடம்பாற் கன்மமும் வருமென்றல் ஒன்றனையொன்று பற்றுதல் என்னுங் குற்றமாய் முடிந்திடுமாகலின், அவ்வாறு கூறுதலும் வழுவுடைத்தாம். பின்னை என்னையோ விடுக்குமா றெனின்;--எல்லா அநத்தங் கட்கும் மூலகாரணமான ஆணவ மலத்தைப் போக்குதற் பொருட்டு மாயாதேகம் உயிர்கட்கு வாய்த்ததுணை யானே கன்மந் தோன்றுமென்றலே தேற்ற மாம். அற்றேல், உயிர்கட்கு உடம்பு வந்தபின் வினை தோன்றுமோ, வரும் போதே தோன்றுமோ எனக் கடாயி னார்க்கு கண்ணினொளி ஞாயிற்றி னொளி வரும் முன்னுந் தோன்றாது, வந்த பின்னுந் தோன்றாது. ஞாயிற்றினொளி வரும் போதே கண்ணொளியும் இனிது விளங்கித் தோன்றும்; அதுபோல உயிர்கட்கு உடம்பு வரும் போதே வினையும் உடன்றோன்று மென்க. இனி இவ்வாறன்றி ஆணவம், மாயை போலக் கன்ம மலமும் ஒரு தனி முதலாய் அநாதியாயுள்ளதென் றுரைப்பின் வரும் இழுக்கென்னையெனின்;--கூறுவதும் ஆன்மாவின் அறிவிச்சை தொழில்களை உடன்மறைத்து நின்றதொன்று, அம்மறைப்பினை நீக்கி அதனறிவை விளங்கச் செய்த தொன்று; அவ்வாறு அவற்றை மறைத்தது ஆணவமலம், அம்மறைப்பினை நீக்குதற்குபகாரப்பட்டு நின்றது மாயாமலம்; ஆடையிலேறிய அழுக்கொன்று, அவ்வழுக்கினைக் கழுவிய உவர்மண் ஒன்று. அழுக்கேறிய ஆடையில் உவர் மண்ணைச் சேர்ப்பித்துக் கழிக்கும் வழி ஆடையிற் காணப்பட்ட தொழில்போல, ஆணவம் ஏறிய உயிரில் மாயையைச் சேர்ப்பித்து அவ்வாணவத் தைக் கழிப்பிக்கும் முயற்சியில் உயிரின் மாட்டுக் காணப்படுவது செயற்கையாம். இங்ஙனம் ஆணவம், மாயையென்னும் இவ்விரண்டின் கூட்டுறவாலன்றிக் கன்மமெனத் தனித்தொரு பொருளிருப்பக் காணாமையானும், அதற்குப் பிரமாணமும் இல்லாமையானும், ஆன்மவினையின் வேறாய்க் கன்ம மலமென ஒன்றுண்டென்பது பொருளில் மொழியா மென்க. அற்றாயின், ஏகனனேக னிருள்கரும மாயை யிரண்டாக விவையாறாதியில் என்றோதிய திருவாக்கின் கட் கன்மமும் ஒன்றாகவைத் தோதப்பட்டமையின் அஃது ஒரு தனிப்பொருள் என்று கோடலே மரபாமெனின்; அறியாது கூறினாய், ஆன்மாக் களுக்கு முன்னை வினைத் தொடர்பு தெரிய வொட்டாதபடி மறைத்து நின்று அனுக்கிரகிக்கும் திரோதாயி என்னும் அருட்சத்தியை மலங்களுடன் வைத்து மலம் என உபசரித் தோதினும் அதுபற்றி அது மலமாவான் செல்லாமை போல, ஆன்மாவின் தற்கிழமைப் பொருளான கன்மத்தையும் ஈண்டு ஏனையவற்றோடு உடன் வைத்து எண்ணுதல் பற்றி அஃது ஒரு தனிப் பொருளாதல் சாலாதென்க. அங்ஙனமாயினும் உயிரின்வினை நிகழ்ச்சிகள் ஆணவமலத்தின் வழிப்பட்டு நடைபெறுங்காறும் அம் மலத்தின் றன்மையெய்தி உயிர் களைப் பந்தமுறுத்துமியல்பு பற்றி, அவையும் மலமென வைத்து ஒன்றா யெண்ணப் பட்டன. அவ்வாறாயின், கன்ம மலம் நித்தியமோ அநித்திய மோவெனின்;- ஆணவமலம் உளதாங்காறும் அவ்வாணவத் தின் வழி நிகழும் கன்மமுளதாகு மாதலானும், ஆணவமலம் என்றுமுள்ள நித்தியப் பொரு ளென்பது சைவசித்தாந்த நூல்கட்கெல்லாம் ஒப்ப முடிந்த மையின் அதன் வழிப்பட்ட கன்மமும் அவ்வாறே ஆக வேண்டு மாதலானும் கன்ம மலமும் நித்தியப் பொருளென்பதே ஈண்டுந் தேறப்பட்ட முடிபொருளாம். இனிக் கன்மமலமும், ஆணவமலத்தின் சார்பாற் றோன்றிய உயிரின் வினையேயாமென்பதற்கு, ஒருவன் பாவமான காரியம் செய்தவழி அவன் இதனை யான் என் அறியாமையாற் செய்தேன் என்று சொல்லுதலே சான்றாம். அறியாமை தேயத் தேய அறிவுமிக்கெழுந்து விளங்கு மாகலின் பாவவினைகளும் முறைமுறையே குறையும். அற்றன்று, அறிவுடையாரும் பாவ வினைகள் புரியக் காண்டுமாகலின் அறியாமையே கன்ம மலத்திற் கேதுவா மென்றல் பொருந்தா தாம் பிறவெனின், நன்று சொன்னாய், ஆணவம் ஆன்மாவின் இச்சாஞானக் கிரியை களுள், ஞானத்தை மாத்திரம் சிறிது பற்றுதல் விட்டு அகன்று நிற்குமாயினும்ஏனை இச்சை கிரியைகளை அத்துணை யிலேசில் விட்டு அகன்று நிற்பதில்லை; அதனால் அறிவுடை யோரா யினும் தம் இச்சை ஆணவவயப்பட்டு நிற்றலால் ஓரோ வொருகால் அவரும் பாவமானவற்றைச் செய் கின்றார். நன்று சொன்னீர், ஆணவம், ஆன்ம ஞானத்தைச் சிறிது விட்ட கன்றதும், ஏனைக் கிரியை இச்சைகளை விட்டகலாததும் என்னையெனின்;--அதற்கு இடைவிடாத பழக்கமே காரண மென்க. அறிவுபெற வேண்டுவார் அது தமக்கு வாய்க்குந் தனையும் ஓய்வின்றிப் பல நூனுண் பொருளாராய்தலும், தக்கார்வாய்ப் பல்வகை அறிவுப் பொருள் கேட்டலுஞ் செய்து பழகி வருகின்றாராகலின் அவரறிவைப் பற்றிய ஆணவவலி சிறிது சுருங்குகின்ற தென்றோர்க. அவர்தம் அறிவை அங்ஙன மெல்லாம் பண் படுத்த முயன்றது போலவே, தம் கிரியை இச்சைகளையும் பண்படுத்தி வருவாராயின் அவர்க்கும் அவற்றான்வரும் பாவச் செய்கைகள் அகன்று ஒழியும் அவ்வாறின்றி அவர் அறிவை மாத்திரம் பண்படுத்தி ஏனை இச்சை கிரியைகளை வாளா கிடக்க விட்டமையின் அவை யிரண்டும் ஆணவ வலியில் முற்றும் வசப்பட்டு அவர் தம்மைப் பாவவழிகளிற் றூண்டி நிற்கின்றன. பாவவழியினின்றும் அகலுதற்கு இன்றியமையாச் சாதனமாவது ஆன்மாக்கள் தம்மிச்சா ஞானக் கிரியை மூன்றனையும் பண்படுத்திப் பழக்குத லேயாம். ஒன்றைவிட்டுப் பிறிதொன்றைப் பழக்குதலாற் போதரும் பயன்பெரிதாகா தென்க. ஆகவே அறிவுடையார் பாவஞ் செய்தற்கும் அவர்க்குள்ள ஆணவமலமே காரண மாவதன்றிக் கன்மமலமன் றென்பது இது கொண்டு நுனித் தறியற்பாற்று. அவ்வாறாயின் இனிக் கன்மமலத்திற்கே உரிய விசேட இலக்கணந்தா னென்னையெனின்;--ஆணவமலச் சார்பான் ஆன்மாக்கள் செய்யும் வினைகளின் றொகுப்பே கன்ம மலமென்னும் பெயர்க்குரித்தாவதாம். ஒருதரம் செய் தீட்டிய வினைகள் அவற்றை ஈட்டிய உயிர்கட்குத் தம் பயனை நுகர்விக்கும். இங்ஙனம் ஓருயிர் தனக்குரிய ஆணவகுண முனைப்பாற் றானாகவே ஈட்டும் இவ்வினைத் தொகுதி யையே ஆகாமியம் என்றும், இவ்வினைத் தொகுதி அவ்வுயிரின் பிற்பிறவிக்கு ஏதுவாய் அவ்வுயிரின்கட் சூக்கும வடிவாய்க் கட்டுப்பட்டு நிற்றலையே சஞ்சிதம் என்றும், அக் கட்டுப்பட்டு நின்ற வினைத் தொகுதியிற் பிற்பிறவியிற் பயன்பட்டு நுகரப் பட்டு வருங்கூறே பிராரப்தம் என்றுஞ் சித்தாந்தநூல்கள் இனிது கூறுகின்றன. இவற்றின் இயல்பை இன்னுஞ் சிறிது விளங்க உரைப்பாம். இப் பிறவியின்கண் ஒருவன் மிக்கதோர் அறியாமை யுடையவனாய் வஞ்சம், கோபம், பொறாமை முதலான ஆணவகுணங்களின் வழி நின்று மிகவுந் தீய செயல்களையே தம் ஆயுள் காறும் புரிந்து வந்தான்; இவ்விழி குணங்களிலேயே மிகவும் பழகின மையால் இவன்தன் ஆயுள் எல்லை கழிந்து இறக்குங் காலத்து, இக்குணங்களின் பயனாய்த் தோன்றிய எண்ணத்தி லும் அவ்வெண்ணத்தின் வழித் தோன்றிய இச்சையிலும் அவனறிவு நிலை பெற்று நின்றது. அவன் உயிர் துறந்த பின்னுந் தன்சூக்கும உடம்பில் நின்று, தன் எண்ணத்திற்கும் இச்சைக்கும் ஏற்ற ஒரு பிறவியிற் புகுதவே கருதியிருப்பா னாகலின் அவன் கருத்து முற்றுப் பெறுமாறு எல்லாம் வல்ல இறைவன் அவனது இச்சைக்கேற்ற ஓர் இழிகுலத்தில் அவனைப் பிறப்பித்து விடுவன். அக்குலத்திற் பிறந்து வளரும் போதே அவன் தான் முற்பிறவியிற் றொகுத்த தீய செய்கைகளை அவிழ்த்து விரிய விடுகின்றான். இவ்வுதாரணத்தின் கண் முற்காட்டிய வினைப்பகுப்பைப் பொருத்திப் பார்க்கலுறின், அவற்றின் இயல்பெல்லாம் தெற்றென விளங்கா நிற்கும். மேலைப் பிறவியில் ஆணவ மலத்தின் சார்பினின்று பழகிய தீச்செயல்களே அவனுக்கு ஆகாமிய வினைகளாயின; அங்ஙனமீட்டிய அவ்வினைகள் அவன் அறிவிச்சை தொழில் களிலெல்லாம் ஏறிச் சூக்கும வடிவாய் நின்றனவாகலின் அவையே சஞ்சிதவினைகளாயின; அச் சஞ்சித வினைகளி னின்றும் ஒரு கூறெடுத்து நுகருதற் பொருட்டு இறைவ னருளால் அவன் ஓர் இழிகுலத்திற் பிறந்து அவ்வினைகளைத் துய்த்துவரலே பிராரப்த வினை நுகர்ச்சியாயினதென்று இங்ஙனம் ஒட்டி உணர்ந்து கொள்க. இனி, மாயை யாவது இன்னதென்று ஒரு சிறிது விளக்கு வாம். ஒரு பொருளை நிச்சயித்துணர்வது பஞ்சேந் திரியங்களின் வழித்தாகச் செல்லும் நமது அறிவினாலன்றிப் பிறிதில்லை. கண்ணாற் கண்டுஞ் செவியாற் கேட்டும் நாவாற் சுவைத்தும் மூக்கான் முகர்ந்தும் உடம்பாற் பரிசித்தும் இப்பொருள் இவ்வியல்பிற்று. இஃது இதனின்வேறு என்ன அறிவு கூடிவருகின்றோம். புறத்தே காணப்படுகின்ற பொருள் களெல்லாம் இங்ஙனம் பஞ்சேந்திரியங்களின் வாயிலாக அறிவாற் கவரப்பட்டு வருகின்றன. இப் பஞ்சேந்திரிய வுணர்ச்சிக்கு அகப்படாதது புறத்துப் பொருள்களுள் ஒன்றும் இல்லை. ஆகவே, புறம்பிலுள்ள பொருள்கள் அனைத்தும் ஐந்து கூறாய் அடங்கும். அவை செவிப்புலனாஞ் சத்தத்தைத் தருவனவும், உடம்பிற் புலனாம் பரிசத்தைத் தருவனவும் கட்புலனாம் உருவத்தைத் தருவ னவும், நாப்புலனாற் சுவையைத் தருவனவும், நாசிப் புலனாம் கந்தத்தைத் தருவனவும் ஆகும். சத்தத்தைத் தருவது ஆகாயம், பரிசத்தைத் தருவது வாயு, ரூபத்தைத் தருவது தேயு, சுவையைத் தருவது அப்பு, கந்தத்தைத் தருவது பிருதிவி; பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் இவ்வைந்தின்மேல் ஐம்பொறிகளான் அறியப்படுவதொன்று மில்லை. எனவே, புறத்துத் தோன்றுகின்ற எல்லாப் பொருள் களும் மண், புனல், அனல், கால், விசும்பு என்னும் ஐம்பூதக் கலப்பிற் பிறந்தனவே யாமென்பது இனிது பெறப்படும். புறத்துப் பொருள் ஒவ்வொன்றையும் பகுத்துப் பார்த்தால் அவை யெல்லாம் இவ்வைம்பூதங்களாகப் பிரிந்து போதல் திண்ணம். இதனை ஓர் உதாரணமுகத்தான் விளக்கிக் காட்டுதும் விசித்திர மான ஓர் அரசன் மாளிகையின் அமைப்பைக் கண்டவழிப் பாகுபாட்டுணர்ச்சியில்லாப் பேதை ஆ! இத்துணைப் பெரிய மாளிகை எங்ஙனம் வந்தது! v§‡d« mikªjJ! என்று எண்ணி எண்ணி வியப்புறு வானன்றே? மற்று நுண்ணறிவு டையான் அதனைக் கண்டக்கால் கல்லுஞ் சுண்ணாம்பு மரங்களும் இயைக்குமாறு அறிந்து ஒருவன் இனிது இயைத் தமையினாலன்றே இத்துணைப் பெரிய மாளிகை ஈங்கு வரலாயிற்றென்று அதன் மூலம் அறிந்து இன்புறுவான்? எத்துணைப் பெரிய கட்டிடமேயாயினும் அது கல் சுண்ணம் முதலான சிலவற்றின் றொகுப்பால் அமைந்தவாறு போல, எத்துணைப் பெரிய உலகமேனும், அதன்கண் உள்ள பொருள்கள் எத்துணைப் பெரியவேனும் அவையெல்லாம் இவ்வைம்பூதங்களின் கூட்டுறவாற் றோன்றி யனவேயா மென்பது நுணுகி யாராயவல்லார்க்கெல்லாம் இனிது விளங்கா நிற்கும். அற்றேல், ஐம்பூதங்களான சிலவற்றிலிருந்து அளவு குறித்தறியப்படாது விரிந்து பெரியவாய்க் காணப் படும் இப்பொருள்கள் பலவும் பிறந்தனவென்றால் யாங்ஙனம் பொருந்துமெனிற் கூறுதும். இவ்வைம் பூதங்களுந் தத்தங் காரணநிலையிற் கட்புலனா காமல் அளவு படாது விரிந்து கிடப்பனவாம்; அவை தம்மிற் சிற்சில பகுதிகள் காரியப் பொருள்களாய்த் திரிந்து கட்புலனாய் வருகின்றன. ஆகவே, காணப்படாதது கொண்டே ஐம் பூதங்கள் சில என்றும், காணப்பட்டது கொண்டே பொருள் கள் பலவாய்ப் பெரிய என்றுங் கொள்ளற்க. இஞ்ஞான் றுள்ள பொருள்களினும் பல கோடி மடங்கு பெரியவான வேறு வேறு பொருள்களும் தோன்றுதற்கு வேண்டுமளவும் இவ்வைம் பூதங்களும் உருப்புலனாகாத காரண நிலையில் விரிந்து கிடக்கின்றன. மிகவும் அகன்று ஆழ்ந்ததான ஓர் ஏரியின்கண் உள்ள தண்ணீர் முழுதும் மிகக் கொடியதொரு வேனிற் காலத்தில் வற்றிப் போக நிலன் வறண்டு கிடத்தலைக் கண்டா மன்றே. அந்நீர் முழுதும் எவ்வா றாயிற்றென்று சிறிது ஆராயலுறின், கட்புலனாகாத ஆவி யாக மாறிப் போயின தென்று சிறிதறிவுடையாரும் நன்குணர்வர். பேரளவினதான அந்நீர் அத்துணையும் அங்ஙனம் மாறிச் சென்ற போது, மாறிய ஆவியின் பரப்பு நம்மாற் சிறிதும் உணரலாகாதாயிற்று. பின்னரொருகால், மாறிய ஆவி குளிரால் இறுகித் திரும்பவும் மழைத் துளிகளாக அவ்வேரியின்கண் வீழ்ந்து அதனை நிரப்பிய வழி, நீரினளவு திரும்பவுங் கட்புலனாவதாயிற்று. இதனால் ஆவியாக மாறிய நீரின் நிலையே காரண நிலையென்றும் அவ்வாவி நீராக இறங்கிய நிலையே காரிய நிலையென்றும் இனிது உணராற்பாற்று காரிய நிலை போல ஐம்பூதங்களின் காரண நிலை பொறி யுணர்வால் அளந்தறியப்படாதாயினும், பொருள்கள் திரி படையுந் தன்மையினைப் பகுத்துணரும் நுண்ணறிவினால் அவற்றின் காரணநிலையியல்பு அறிவுடையார்க்குத் தெற்றென விளங்கா நிற்கும். ஐம்பூதங்கள் ஐந்தும் பொறியுணர்வுக்குத் தென்படாத காரண நிலையிற் சூக்கும வடிவாக நிலைபெறும். அவற்றின் சூக்கும வடிவு சத்தத்திற்கு இருப்பிடனான ஆகாயம் போல்வதாகலின், அவற்றுள் ஒவ்வொன்றனையும் குறித்துக் கூறுங்கால் பிருதிவி ஆகாயம், அப்பு ஆகாயம், தேயு ஆகாயம், வாயு ஆகாயம், ஆகாயம் என்று முன் நான்கும் அடை கொடுத்தும் பின் ஒன்றும் அடை கொடாதுங் கூறப்படும். இங்ஙனஞ் சூக்கும வடிவுற்று நிற்கும் ஐம்பூதங்களையும், தூலவடிவுள்ள பூதங்களை வழங்குமாறு போலப் பூதங்கள் என்று பெயர் கூறுதலாகாமையின் அவை தம்மைத் தன் மாத்திரைகள் என்று ஆன்றோர் வழங்குப. இச்சொற்பொருள் மாணாக் கர்க்கு இனிது விளங்காதென்று கருதி, அவற்றைப் பஞ்சபூத ஆகாயங்கள் என்று அங்ஙனம் பெயர் வைத்துக் கூறுவே மாயினேம். சூக்கும வடிவில் நிற்கும் இப் பூதாகாயங்கள் ஐந்தனையும் சத்தம், பரிசம், உருவம், இரசம், கந்தம் என்னும் ஐந்து தன்மாத்திரை களாகப் பண்டைச் சித்தாந்த நூல்கள் உரையா நிற்கும், இனித் தன் மாத்திரைகள் எனக் கூறிய இச் சூக்கும பூதாகாயங்கள் ஐந்தும், தம்மிற்றோன்றிய தூலகாரியப் பூதாகாயங்களை நோக்கச் சூக்குமம் என்று ஓதப்படினும், தம்மினும் மேலாக விளங்கும் சூக்குமப் பொருள்களை நோக்க இவை தாமும் தூலங்களாகவே கொள்ளப்படு மென்றுணர்க. இஃதென்போல வெனின், உறைந்து கற்பாறை போன்றிருக்கும் பனிக்கட்டியை நோக்க அதனினின்று உருகியோடுந் தண்ணீர் சூக்குமம் என்றும் அத் தண்ணீரை நோக்க அதனின்று எழும் நீராவி சூக்குமம் என்றும் இவ்வாறு ஒன்றின் மேல் ஒன்று படிப்படியாய் சூக்குமநிலையிற் கரைந்து போதல் போலவென்க. முதலில் நிலன், நீர், தீ, வளி, வெளி என்னும் பொருள்கள் ஐந்தும் தூலமாய் நிற்கப் பின்னர் அவை கரைந்து அருவாய் ஆகாய வடிவில் நின்ற போது சூக்குமமான தன் மாத்திரைகள் என்று சொல்லப்பட்டன. அதன் பின்னர் அவை பின்னுஞ் சூக்கும மாய்க் கரைந்து தம் அகத்துள்ள ஐவகை வேறுபாடுகளையுங் காட்டாது ஒடுக்கிப் பொதுத் தன்மைப் பட்டு நின்றவழி அவை ஒரு பெயராற் பூதாதி ஆங்காரம் என்று உரைக்கப்படுவவாயின. இப் பூதாதியாங் காரம் என்பது மேற்கூறிய தன் மாத்திரைகள் ஐந்தினும் நுண்மையான சூக்கும நிலையினதாகும். தூல நிலையிற் காணப்படும் இப்புறப் பிரபஞ்சப் பொருள்களான ஐந்தும் இவ்வாறு தத்தஞ் சூக்குமமான பூதாதியாங்காரத்தின் கண் ஒடுங்கி நிற்குமென்று ஓர்ந்து கொள்க. இனிப் இப்புறப்பிரபஞ்சத்தின்கட் சிலகாலம் நிலை பெற்று நின்று இன்ப துன்பங்களை நுகர்ந்துவரும் எண்ணிறந்த உயிர்களின் எண்ணிறந்த உடம்புகளும் அகப் பிரபஞ்சம் என்று வழங்கப்படும். புறப் பிரபஞ்சத்தின் கண் அமைந்த எவ்வகைப் பொருளையும் உயிர்கள் அறியும் வண்ணம், இவ்வுயிர்களுடன் ஒன்றாய் ஒட்டித் தோன்றும் உடம்பினிடத்தே அப் பொருள் களைப் பற்றுதற்கு இயைந்த கருவிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன என்றாலும், இக் கருவிகள் சிலவுடம்புகளிற் குறைந்தும் வேறு சிலவற்றில் ஏறியும் பலதிறப்பட்டுக் காணப்படுகின்றன. ஏற்றக் குறைச்ச லாய் நிகழுங் கருவிகளின் அமைப்பைச் சிறிது உற்று நோக்கு வார்க்கும், உடம்புகளில் உலாவும் உயிர்களின் அறிவு ஆற்றற்கு ஏற்ப அக்கருவிகள் ஏறியுங் குறைந்துந் தோன்றுவ வாயின என்னும் உண்மை இனிது புலப்படா நிற்கும். புல் மரம் முதலியன தொட்டால் அறியும் பரிச வுணர்ச்சி மாத்திரமே உடையன; இப்புல் மரம் முதலிய வுடம்பில் நின்ற உயிர்கள் ஊற்றுணர்வுக்கு மேற்பட்டதனை அறியும் ஆற்றல் இல்லாதன வாகலின், அவற்றின் உணர்ச்சி வலிக்கேற்ப ஓரறிவு மாத்திரையே புலனாதற்குரிய புல் மரம் போன்ற உடம்புகள் அவற்றிற்கு வாய்த்தன; இவ்வுடம்புகளிற் சத்தத்தினையும், உருவத் தினையும், இரசத்தினையும், கந்தத் தினையும் கவருதற் குரிய கருவிகள் இலவாயின. இனி நத்தையுங் கிளிஞ்சிலும் போல்வன பரிசத்தினையும் இரசத் தினையும் மாத்திரமே கவரவல்லன; ஏனைச்சத்தம், உருவம், கந்தங்களை உணரவல்லன அல்ல. இனிக்கரை யானும் எறும்பும் போல்வன பரிசமும், இரசமும், கந்தமும் என்னும் மூன்றும் தெரிதல் வல்லன; ஏனைச் சத்தமும் உருவமும் அறிய மாட்டாதன. இனி நண்டுந் தும்பியும் முதலாயின பரிசம், இரசம், கந்தம், உருவம் என்னும் நான்கும் அறிய வல்லன; ஏனைச் சத்தம் ஒன்று மாத்திரம் உணரமாட்டாதன. இனி விலங்கினங்களும் மானிடத்தில் ஒருசார் பிறப்பும் சத்தம், பரிசம், உருவம், இரசம், கந்தம் என்னும் ஐந்தும் உணரவல்லன; ஏனை மன அறிவு ஒன்று மாத்திரம் வாயாதன. இனி மக்கள் என்று உயர்த்துக் கூறப்படுவோர் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்துணர்வுகளோடு, இவ்வுணர்வுகளைப் பகுத்தும் ஒற்றுமை கொளுத்தியும் காண்கின்ற மனவுணர்வும் ஒருங்குடையராவர். ஆகவே, இம்மக்கட் பிறப்பின்கண் இவ்வுலகத்துப் பொருள் களையெல்லாம் உற்றறிதற்கு இன்றியமையாக் கருவிகள் எல்லாம் வாய்த்தாற் போல, ஏனைத் தாழ்ந்த பிறவிகளில் அங்ஙனம் அவை வாய்த்திலவென்க. இங்ஙனம் இம் மக்களுடம்பின் மாத்திரமே மாயையினின்றுந் தோன்றிய கருவிகள் முற்றும் அமைந்திருத்தலால், இக்கருவிகளின் உற்பத்தி வரிசையின் வழிச்சென்று மாயையினியல்பை உணர்ந்து கோடல் சாலவும் பொருத்தமாவ தொரு முறையாம். அது கிடக்க, புறப்பொருள்கள் அத்துணையும் கவரற் கியைந்த கருவிகள் மக்களுடம்பில் அமைந்திருக்கின்றன. வென்றல் வெறுஞ் சொன் மாத்திரையாகவே யிருத்தலின், அதனைப் பொருள் பெற விளக்கிக் காட்டுகவெனின்; அவ்வாறே காட்டுதும் உலகமுழுதும் புகழோங்கப் பெற்றவரும், அமெரிக்கா தேசத்தில் மனோதத்துவ சாத்திர பண்டிதராய் அமர்ந்திருப்பவருமான உவில்லியம் ஜேம் என்னும் பெரும் புலவர் தாம் அரிய நுண்பொருள் பொதுள எழுதிய மனோதத்துவ மூலப் பொருள்கள் என்ற புத்தகத்தின் முதற்பாகத்தில் மூளையின் வினைநிலை என்னும் இரண்டாம் அத்தியாயத்திலே இவ்வரிய பெரிய விடயத்தினை இனி தெடுத்து விளக்கிக் காட்டினார். அவர் காட்டிய அந்நுண் பொருளாராய்ச்சி முழுதும் ஈண் டெடுத்துக் காட்டலுறின், இவ்வாராய்ச்சியுரை வரம்பின்றி விரியுமாகையால், அவர் முடித்துக் கூறிய பொருள் முடிவுகளிற் சிலவற்றை மாத்திரம் ஈண்டெடுத்துக் காட்டு வாம். தவளை, புறா, குரங்கு, நாய் முதலிய பிராணிகளின் தலையின் உள்ளமைந்த கருவிகளைப் பரிசோதித்துப் பார்த்ததிலிருந்து, மூளையென்னும் அவயவமே உடம்பினை வேண்டியபடியெல்லாம் நடைபெறச் செய்வ தற்கும், உலகத்துப் பொருள்களையெல்லாம் பற்றியுணர்வ தற்கும் வேண்டப்பட்ட எல்லாக் கருவிகளையும் தன்னிடத்தே அதிசூக்குமமாய் அடக்கி வைத்திருக்கின்றதென்றும் அரிய பெரிய உண்மைபுலப்படுவதாயிற்று. தலையைக் கவிந்து கொண்டு அரண்போல் அமைந்திருக்கும் மண்டையோட் டினை மிகவுஞ் சாதுரியமாகக் கழற்றி அப்புறம் வைத்தபின், தலையின் மேலும் முற்பிற் பக்கங்களிலும் பனை நுங்கு போலும் இயல்பினதாகிய மூளை என்னும் விழுமிய அவயவம் காணப்படும். இதுவே, பிராணிகளின் உடம்புக்கு உயிர் நிலையமாய் விளங்குவது. பருத்துயர்ந்து தோன்றும் ஓர் ஆலமரத்திற்கு நிலத்துட் புதைந்திருக்கும் அதன் வேர் உயிர் நிலையாய் நிற்பது போல், உயிர் வாழ் உடம்பிற்கு மூளையே அடிப்படையாயிருக்கின்றது. இம்மூளையின்கண் ஊறிக் கொண்டிருக்கும் அமிழ்தமானது உடம்பெங்கும் பாய்ந்து அதனை வளர்த்து வருகின்றது. இத்துணைச் சிறந்த மூளை யானது உயிர்வாழ் உடம்பினைப் பலவாற்றான் உயிர்ப்பேற்றி நிலைபெறுத்தி வரும் உண்மையைத் தெரிதற் பொருட்டு, அம்மூளையின் முற்பாதி பிற்பாதிப் பக்கங் களிலுள்ள கடுகளவு கடுகளவு ஊனை அறுத்தறுத்து அப்புறப்படுத்தி நோக்கியவழி, உடம்பின்கண் உள்ள ஒவ்வோர் உறுப்புகளும் இயக்கமின்றி நின்று விட்டமை நன்கு தெளியப்படுவதாயிற்று. அம்மூளையின் ஒரு பக்கத்திற் சிறிது ஊனை அறுத்து அகற்றிய போது கண் செவ்வையாக இருந்தும் அது பார்வை இலதாயிற்று. மற்றோர் இடத்தில் ஊனைச் சிதைத்தபின் கட்பார்வையிருந்தும் அது வலப் பக்கத்திலுள்ள பொருள்களைக் காண வலியற்ற தாயிற்று. ஒரு புறாவின் மூளையிற் சிறியதொரு பகுதியைப் பிரித்து எடுத்த பின்னர் அது வாய் முதலிய உறுப்புக்களோடு கூடி உணர்வு குறையாதிருந்தும் இரைமாத்திரம் எடாமல் இருந்தது. ஒரு குரங்கின் மூளையிற் சிறிதூனை அகற்றிப் பார்த்த போது அதற்குக் கட்பார்வை நன்றாயிருந்தும் அத்திப் பழங்களுக்கும் நெட்டித் துண்டுகளுக்கும் வேற்றுமை காண மாட்டாதாயிற்று. இவ்வாறே மூளை களின் பகுதிகளைச் சிறிதுசிறிதாக வேறு படுத்தியக்கால் ஓசையை அறிய மாட்டா தனவும், பரிசத்தை அறிய மாட்டாதனவும், சுவை காண மாட்டாதனவும், வெவ்வேறு நிறங்களைப் பகுத்துக் காண மாட்டாதனவும், கந்தவுணர்வினை இழந்தனவும், வலப்புறம் மரத்துக்கிடந்தனவும், இடப்புறம் மரத்துக் கிடந்தனவும், நினைவிழந்தனவும் ஆகப் பிராணிகள் பற்பலவாற்றால் தத்தம் அறிவுஞ் செயலும் மழுங்கப் பெற்றன. எனவே, புறத்துப் பொருள்களைப் பற்றுதற் கியைந்த கருவிகள் அத்துணையும் உயிர் வருக்கங்களின் மூளையில் அதிசூக்குமமாக அமைக்கப் பட்டிருக்கின்றன என்னும் உண்மை இவை தம்மால் ஐயந்திரி பின்றி நாட்டப் பட்டது காண்க. இனிப் பிராணிகளுக்கேயன்றி மக்களுடம்பினுள்ளும் இப்பெற்றித்தான அமைதியே பின்னும் நுட்பமாய் இயைந் துள்ளது என்பதற்கு, வைத்திய சாலைகளிற் கட்பார்வை குன்றியும் செவிடுபட்டும் கைகால் இயக்கங் குறைந்தும் வயிறு மந்தப்பட்டும் சுவை உணர்வு இழந்தும் மற்றும் பலதிறப்பட்ட நோய்களாற் பிணிக்கப்பட்டும் போந்த பல வேறு நோயாளி களின் மூளைகளைத் திறந்து பரிசோதனை நிகழ்த்திய அங்க சேதன வைத்தியர்கள் கூறும் உரையே தக்க சான்றாம். ஆகவே, அண்டசரீரத்தோடு பொருந்தியுணர்தற் காம் கருவிகள் முற்றும் மனிதனோடினப்பட்ட உயிர்களின் பிண்டசரீரத்தின்கண் இயைக்கப்பட்டுளவென்பது சிறிதும் ஐயுறற் பாலதன்றான மெய்ப் பொருளேயா மென்க. அண்டசரீரப் பகுப்புகளத்தனையும் பூதாதி யாங்காரத் தின்கண் ஒடங்கிச் சூக்குமமாய் நிற்குமாற்றை மேலே இனிது விளக்கிப் போந்தாம். அவ்வாறே இப்பிண்ட சரீரப் பகுப்பு களும் மேற்பட்ட தத்துவங்களிற் சூக்குமமாய் ஒடுங்கு மாற்றைத் தெரித்தற் பொருட்டுக் கருவிக ளெல்லாம் முற்றும் இயைந்த மனிதவுடம்பின் வழித்தாக அதனை ஆராய்ந்து செல்வாம். மனிதவுடம்பிற் கட்புலனுக்கு எதிரே காணப் படும் அவயவங்கள் அறிவை நிகழ்த்துவனவும், தொழிலை நிகழ்த்துவனவும் என இரு கூறாய் நிற்கின்றன. அறிவை மாத்திரம் நிகழ்த்தும் அவயவங்கள் மெய், வாய், கண், மூக்குச், செவி என்பனவாம்; இவற்றுள் மெய்யானது புறப்பொருளின் பரிசத்தை அறிவது, வாயானது புறப் பொருளின் சுவையினை அறிவது, கண்ணானது புறப் பொருள் களின் உருவத்தை அறிவது, மூக்கானது புறப்பொருள்களின் நாற்றத்தை அறிவது, செவியானது புறப்பொருள்களின் ஓசையை அறிவது. இனித் தொழிலை மாத்திரம் நிகழ்த்தும் அவயவங்கள் வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தம் என்பனவாம்; இவற்றுள் வாக்குப் பேசுதலைச் செய்வது, பாதம் இயங்குதலைச் செய்வது, பாணி இடுதல் ஏற்றல்களைச் செய்வது, பாயுரு மலங்கழித்தலைச் செய்வது, உபத்தம் விந்து கழியுமுகத்தால் இன்பத்தினைச் செய்வது. மக்கள் தமது ஊனுடம்பின் புறத்தே அமைந்த கருவிகள் ஞானேந்திரியம் எனப்படும் இவ்வறிவுப்பொறிகள் ஐந்தும், கன்மேந்திரியம் எனப்படும் தொழிற்பொறிகள் ஐந்து மன்றிப் பிறிதியாது மில்லாமை எல்லார்க்கும் இனிது விளங்கக் கிடந்த தேயாம். இங்ஙனம் பகுத்துரைக்கப்பட்ட இவ்விந்திரியங் கள் பத்தும் தந்தந் தூல உருக்குலைந்து சூக்குமமாய்த் திரிபெய்து மிடத்து ஞானேந்திரியம் ஐந்தும் தைசதாங்காரம் எனப்படும் மிக நுண்ணிய தத்துவத்தினும், கன்மேந்திரியம் ஐந்தும் வைகிரி யாங்காரம் எனப்படும் மிக நுண்ணிய தத்துவத்தின், கண்ணும் ஒடுங்கி ஆண்டுத் தத்தஞ் சிறப்பியல்பு களைக் காட்டாது பொதுத் தன்மைப்பட்டு நிற்கு மென்க. இனி உடம்பின்கட் புறக்கருவிகளான இவை பத்தும் உலகத்துப் பொருள்களைப் பற்றி நிற்கும் படி, உயிரின் இச்சைவழி நின்று இவை தம்மை ஏவி உடம்பகத்தே நின்று இயங்கும் உட்கருவியே மனம் எனப்படுவதாம். அகத்தே இயங்கும் இம்மனத்தின் உதவியின்றிப் புறக் கருவிகளான இவை பத்தும் இயங்க மாட்டா. சிவஞானபோதம் என்னுஞ் செம்பொருணூல் நுட்பங்களில் மனம் அழுந்தி நின்று அவற்றைச் சிந்தித்துக் கொண்டிருக்குங்கால், கண் புறத்தே ஒன்றனையுங் காணாது, செவி ஒன்றனையுங் கேளாது, ஏனையிந்திரியங்களும் இவ்வாறே ஒருவகையியக்கமும் இன்றிக் கிடக்கும். அங்ஙனம் அகத்தே ஒன்றிற் பதிந்து நில்லாது மனம் கண்ணோடு சேர்ந்து நிற்குமாயின் கண் ஒன்றனைக் காணும், செவியோடு சேர்ந்து நிற்குமாயின் செவி ஒன்றனைக் கேட்கும், இவ்வாறே ஏனையிந்திரியங்க ளோடும் அது சேர்ந்து நிற்குமாயின் அவையுந் தத்தமக்குரிய தொழில்களிலே முனைந்து நிற்கும். ஆகவே புறக்கரணங்கள் இயங்குதற்கு அகத்துள்ள மனம் என்னுங் கருவியினுதவி இன்றியமையாது வேண்டப்படுவதேயாம். இம்மனம் என்னும் அகக்கருவி புறப்பொருட் குணங்களைப் பற்றுவதும், பற்றிய வற்றைச் சிந்தித்தலுஞ் செய்வதாம். சிந்தித்தலாகிய இம் மனத்தின் செய்கையே சித்தம் என்று ஓதப்படுவதல்லது, சித்தம் என்பது தனித்தொரு கருவியாகாமையின், இது மனம் என்னுங் கருவியின் கூறதாயே அடங்கும். இப்பெற்றித்தான மனம் என்னுங் கருவி, புறத்தே காணப்படும் இந்திரியங்கள் போற் கண் முதலான புலன்களாற் கவரப்படும் பருப் பொருளா காமல், உடம்பின் அகத்தே இயங்கும் அனுபவ நுண் பொருளா யிருத்தலின், அஃது இந்திரியங்கள் பத்தினும் நுண்ணியதாதல் நன்கு பெறப்படும். இவ்வாறு இந்திரியங்களினுஞ் சூக்கும வடிவினதாய் நிற்கும் இம்மனமானது, உயிர்கடோறும் வெவ்வேறாய்ச் சடப் பொருளுமாய் இருத்தலின் இதுவும் அழிந்து போங்காரியப் பொருள் ஆதல் தேற்றமேயாமென்க மனம் உயிர்கடோறும் வேறுவேறாய் நிற்றல் அறியப்பட்ட தொன்றாயினும், நிலனும் புனலும் போல் அது சடப் பொருளாவது தெளியப் படாமையின் அதனைச் சடமென்றும் அதனால் அது காரியம் என்றுங் கூறுதல் யாங்ஙனம் பொருந்தும்? எனிற், கூறுவாம். ஐவகையறிவும் நிகழ்தற்கு இடமான மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் ஒருங்கு பொருத்தப் பெற்றிருக்கும் அவயவம் உடம்புந் தலையுமாகும் என்பதும் இவ்வைம்பொறி யுணர்வுகளுந் தோன்றும் பிறப்பிடமாய்த் தலையினுள்ளே மேலதாய் அமர்ந்திருக்கும் முதலுறுப்பு மூளையே யாகு மென்பதும், ஏனைக் கன்மேந்திரியங்களான கை, வாய், கால், குறி, குதம் முதலியனவும் இம் மூளையின் வயப்பட்டே இயங்கு கின்றன என்பதும், இம்மூளை இல்லையாயின் இவ்விந்திரியங் களுள் ஒன்றும் ஒரு சிறிதும் இயங்காதென்பதும் மேலே விளக்கிப் போந்தாம். அது கொண்டு புறத்தே காணப்பட்ட இந்திரிய இயக்கத்திற்கு அகத்தே ஓர் இன்றியமையாக் கருவியாக அமைக்கப் பட்டிருக்கும் மூளையென்னும் உறுப்பின் சூக்கும சாரமே பண்டைக் காலத்து நூல்களில் மனம் என்னும் பெயரால் வழங்கப்பட்டதென்று உணர்க. நன்று சொன்னீர், தாமே அறிவு கூடி இயங்கா ஐம்பொறிகளுக்கும் ஐவகை யுணர்வினையும் ஊட்டி இயக்கும் மனத்தை அறிவுப் பொரு ளென்று உரையாமல் அறிவில்லாச் சடப் பொருளென்று உரைத்ததன் மேலும், பெற்றூன் பிண்டமான மூளையின் சாரமே அதுவாமெனக் கூறுதல் பொருத்தம் இல்லையாலோ வெனின்; அறியாது கூறினாய், இவ்வூனுடம்பின் அகத்தே இயங்கும் உயிர் ஒன்று மாத்திரமே அறிவுடைப் பொருளாகும்; இதனறிவு இயங்குதற்கு ஏற்றவகையா னெல்லாம் இவ்வுடம்பின் புறத்தும் அகத்தும்அமைத்து வைக்கப்பட்டிருக்கும் அமைவுகள் எல்லாம் பெரியதோர் இறும்பூது பயக்கற்பாலனவேயாயினும், அவையெல்லாம் அறிவில்லாச் சடப்பொருள்களே யாகுமென் பதனை, இறந்த மனிதனுடம்பை முழுதும் அறுத்துப் பரி சோதனை நிகழ்த்தும் அங்கசேதன பண்டிதர்கள் அளந் துரைக்கு மாறு பற்றி உணர்ந்து கோடல் வேண்டும். இங்ஙனம் பிரத்தியக்கமாகச் செய்துகாட்டப்படுந் தேகபரிசோதனையால் உடம்பின் அகப்புறவுறுப்புக்கள் அத்துணையும் அறிவில்லாச் சடப் பொருள்களாதல் ஐயமின்றித் தெளியப்படுதலின் அவற்றின் சாரமுஞ் சடமேயாகப் பெறப்படும் இப் பிரத்தியக்க முறையோடு திறம்பி மனத்தை அறிவுப் பொரு ளெனக் கூறுதல் பெரிதும் வழுவாய் முடியும்; அல்லதூஉம், மனம் அறிவுப் பொருளே யென்றற்குப் பிரமாணம் இன்மையின் அங்ஙனம் கூறுதல் ஒரு சிறிதும் பொருந்தா தென்க. அற்றன்று, அறிவில்லா இந்திரியங்களுக்கு அறிவு காட்டுவது மனமே யாமென்றல் எல்லாருக்கும் ஒப்ப முடிந்தமையின், அங்ஙனங் காட்டும் மனம் அறிவுடைய தேயாம் என்றற்கு வேறு பிரமாணம் வேண்டுவதும் உண்டோவெனின்; இந்திரியங் களுக்கு அறிவு காட்டுவது மனம் என்னுங்கால், ஆண்டு மனமே அறிவுடைத் தென்னாமல் அம்மனத்தினைக் கருவியாக ஊக்கும் உயிரே அறிவுடைப் பொருள் என்று கொள்ளப்படும் என்க. அற்றேல், அறிவுடைப் பொருளாகிய உயிர் தானே இந்திரியங்களை இயக்குவதின்றி, அறிவில்லா மனம் என்னும் ஏனையொரு கருவி வாயிலான் அவற்றை இயக்குதல் எற்றுக்கெனின்; அறிவுப் பொருளான உயிர் ஏனைச் சடப்பொருள்கள் எல்லாவற்றினும் மேலதாஞ் சூக்குமப் பொருளாகலின், அத்துணைச் சூக்குமமான அது தூல சடங்களை நேரே பொருந்தி அறிவு நிகழ்த்தல் ஏலாது. இதனை ஓர் உதாரணத்தின் கண் வைத்து விளக்குதும்: கண்ணானது தன் பார்வைக்கு எட்டாத பருப்பொருள் களைக் காண வேண்டியக் கால், தன்னினும் தூல ஆற்றல் மிக்க தூர திருஷ்டிக் கண்ணாடி யினுதவியால் அவற்றைக் காண்கின்றது; கண்ணின் அறிவு சூக்குமமாகலின் தன்போற் சூக்கும ஆற்றல் உள்ள கண்வழியே அச்சடப்பொருள்களை நேரே காண மாட்டாதாய்க் கண்ணினுந் தூல ஆற்றல் மிக்க பலதிறப்பட்ட கண்ணாடி வழியே அவ்வப்பருப் பொருள் களைக் காண்கின்றது. இவற்றுள் கண்ணறிவு மிக்க சூக்குமம், கண் அதனோடு சிறிது ஒத்த சூக்கும் தூலம், கண்ணாடி கண்ணோடு சிறிது ஒத்த தூலம், கண்ணாடியிற் றோன்றும் பருப்பொருள் கண்ணாடியினுந் தூலம்; இங்ஙனம் படிப்படியே ஒன்றினொன்று தூலமாய் இயையக் கண்ணறிவு தூரத்திலுள்ள பெரிய தூல உலகங்களைக் காணுங் காட்சி நிகழா நிற்கின்றது. இவ்வடைவே உயிரினறிவும் இந்திரியக் காட்சியுள் நிகழுமாறு அறியற் பாற்று. உயிரின் அறிவு மிகவுஞ் சூக்குமமான இயல்பு டையது; இத்துணைச் சூக்குமமான அறிவோடு நேரே இயைந்து நிற்குஞ் சூக்கும சடக்கருவிகள் பலவுள, அவற்றைப் பின்னே விரித் துரைப்பாமாகலின், ஈண்டு மனம் என்னுஞ் சடக்கருவியை மாத்திரம் நேரே உயிரோடு இயை தற்கு உரிய சூக்குமக் கருவி போல் வைத்து மாணாக்கர்க்கு இனிது விளங்கும் வண்ணம் உரை விளக்கிச் செல்வாம். உயிரறிவு மிகச் சூக்குமமாவது, மனம் அதனோடு சிறிது ஒத்த சூக்குமதூலம், மூனை மனத்தின் றன்மையோ டொத்த தூலம், கண் முதலிய இந்திரியங்கள் அம்மூளையோடு சிறிது ஒத்த தூலதரம், இவ்விந்திரியங்களிற் புலனாம் புறப் பொருட் குணங்கள் இவ்விந்திரியங்களோடு சிறிது ஒத்து இவ் விந்திரியங்களினுந் தூலமாவனவாம். இன்னும், ஞாயிற்றி னொளி பளிங் கினுள் விளங்கித் தோன்று மாறு போலக் கருங்கற் சுவர் முதலிய வற்றுள்ளே தோன்ற மாட்டாது; அஃதெதனாலெனின், ஞாயிற்றினொளி சூக்கும வடிவினதா கலால் அது தன்னோ டொருவாற்றால் ஒத்த சூக்குமம் வாய்ந்த பளிங்கினுண் மாத்திரமே விளங்குதற்கு உரிமை யுடைத்தாம்; ஏனைக் கருங்கல் முதலாயின அதனோடு ஒவ்வாத தூலப்பொருளாகலால் அவற்றின்கண் அது சிறிதும் விளங்க மாட்டாதாயிற்று. இங்ஙனமே உயிரின் அறிவொளியும் தன்னோடொரு சிறிது ஒத்த சூக்கும தூலமான மனத்தினூடு விளங்குமாறு போல, மிகவுந் தூலமாய்த் தன்னியல்போடு ஒரு சிறிதும் ஒவ்வாத இந்திரியங்கண்மாட்டு விளங்குவதன்றாம். ஆனது பற்றியே, அவ்விந்திரியங்களை இயக்கிப் புறப்பொருள் களை அறிய வேண்டியக்கால், அவ்விந்திரிய வியல்போடும் உயிர்ப் பொருளான தன்னியல்போடும் ஒத்து இடை நிகர்த்த தாய் நிற்கும் மனம் என்னுங் கருவியினூடு உயிரறிவு நடைபெறு கின்ற தென்று ஓர்க. இங்ஙனம் பகுத்துக் காண்புழி உயிர் ஒன்றைத் தவிர அவ்வுயிரறிவு நிகழ்தற்குக் கருவியாம் அகக்கரண புறக்கரணங்கள் எல்லாம் வெறுஞ் சடங்களேயா மென்பதூஉம், அகக்கருவிகளுள் ஒன்றான மனமும் சடமே யாதல் இனிது பெறப்பட்டமையின் அஃது உடம்பினுள் ளமைந்த ஊன் உறுப்புக்களில் ஒன்றின் சாரமேயாவது திண்ணமா மென்பதூ உம், இந்திரியவுணர்வு களுஞ் செயல்களும் தோன்றி நடைபெறு வதற்கு மூளையென்னும் ஊன்பிண்டமே காரணமாய் நிற்றலல்லது பிறிதியாது மில்லை யென்பது இஞ்ஞான்றை அங்கசேதன பண்டிதர் ஆராய்ச்சியால் இனிது வலியுறுத்தப் படுதலின் அம்மூளையின் சாரமே மனம் என்னுஞ் சடக் கருவியாமென்பதூஉம் இனிது விளங்கா நிற்கும் என்க. இனி மனம் என்னும் இவ்வகக்கருவி ஒருகாலத்தொரு பொருளையன்றி அறிய மாட்டாதாகலின் அஃது அணுரூப மேயாமென்று நியாயநூல் இயற்றிய கோதமனார் கூறினாரா கலின் அவரோடு முரணி அது மிகப் பெரிதாகிய மூளை யென்னும் உறுப்பின் சாரமாமெனக் கிளத்தல் யாங்ஙனம் பொருந்துமெனின்; அணுவடிவான மிகச் சிறிய பொருளை யன்றி வேறு பெரும்பொருளை ஒரு காலத்துணர வல்லதன் றாயின், மனத்தை அங்ஙனம் அணுவுருவிற்றென்று வைத்துரைத் தல் இழுக்காது; மற்று ஒரு காலத்து ஓரிடத்தே வான் முதலான அகன்ற பெரும் பொருள்களையும் அது காணவல்லதாய் நடைபெறக் காண்டலால் அதனை அணுவெனக் கூறுதல் யாண்டையதோவென்க. அற்றன்று, புல் நுனிமேற் றங்கும் பனித்துகளிலே பெரிய பனைவடிவுங் காணப்படுதல்போல, அணு வடிவான மனத்தின்கண் அகன்ற பெரிய பொருள்கள் எல்லாங் காணப்படுதல் வாய்வதேயாமெனின்; அப்புல்லின் நுண்டுளி அப்பனை வடிவு தோன்றுதற்கு ஏற்ற பரிமாணம் உடையதாயிருப் பினல்லது அப் பனைவடிவும் அதன் கட்டோன் றுதல் செல்லாது; ஒளியுடைப் பொருள் தான் சிறிதாயிருப்பினுந் தன்னினும் பல மடங்கு பெரிய பருப்பொருள் வடிவைக் காட்டும் ஆற்றலுடையதாந் தன்மைக்கு எற்ப, அப் புல்லின் நுண்டுளி தன்னினும் பெரிய பனைவடிவைத் தன்கட் காட்டுவதாயிற்று; மற்று அப்பனையினும்பெரிதான மலை வடிவைக் காணல் வேண்டுமாயின், அப்புல்லின் நுண்டுளி அதற்கு இடந்தரா மையின் அதனினும் பன்முறை பெரிதான கண்ணாடியின் கண் அதனைக் காண வேண்டுமன்றே. அதுபோலப் புறத்தே அகன்று பெரியவாய்க் காணப்படும் உலகியற் பொருள்கள் அனைத்தையுங் காணும் ஆற்றல் வாய்ந்த மனம் என்னுங் கருவி அவற்றைக் காண்டற்கியைந்த பரிமாணம் உடையதாகல் இன்றியமையாமையின், அது மிக நுணுகிய அணுவுருவிற் றென்றல் ஒரு சிறிதும் பொருத்த மின்றாம். பனைவடிவைத் தன்கண் விளங்கக் காட்டும் புல்லின் நுண்டுளி கோதமனார் கூறும் அணுவினும் பன்மடங்கு பெரிதாதல் போலவே இப்பெரிய அண்டத்தைத் தன்கட் காட்டும் பிண்டத்தின் கண்ணதாகிய மனமும் அவ்வணுவினும் பன்மடங்கு பெரிதா தல் துணிபொருளேயா மென்க. எனவே, உலகியற் பொருள்கள் அனைத்தையுங் கவரற்கியைந்த மூளையென்னுந் தாதுவின் சாரமே மனம் எனப்படுதற்கண் இழுக்கொன்றும் இல்லையென்று கடைப்பிடிக்க. அற்றேல் அஃதாக, மனம் எனப்படும் இவ்வவயவம் தலையில் மூளையின் கண்ணே அமைந்திருத்தலின் கால் விரல் நுனியிலே மெல்லென ஊரும் பொருளையும் அஃது உணர்ந்திடுமாறு யாங்ஙனமெனின், நன்று வினாயினாய்; உலகத்துப் பொருள்களில் ஒளியும் மின்னொளியும் செல்லும் விரைவினை நினைப்பின் அவை அறிவுக்கும் எட்டாத அதிசய கதியினை உடையவாயிருக்கின்றன. ஒளியானது ஓர் இமை கொட்டும் முன் ஓர் இலக்கத்து எண்பத்து ஆறாயிரம் மைல் தூரஞ் செல்லு கின்றது! மின்னொளியோ வென்றால் இதனினும் விரைவாய் ஒரு நொடிப் பொழுதில் இரண்டிலக் கத்து எண்பத்து எண்ணாயிரம் மைல் தூரம் செல்லுகின்றது! புறத்தே காணப்படும் உலகியற் பொருள்களே இங்ஙனம் பாவித்தற்கும் எட்டாத தூரம் விரைந்து செல்லுமாயின், அகத்தே உயிரின் அறிவொளியால் உந்தப்பட்டுப்போம் உணர்வின் வேகத்தை இவ்வளவிற் றென்று வரையறுத் துரைத்தலும் ஏலுமோ? அற்றாயின், உடம்பின் ஓரிடத்தே தோன்றும் ஓர் உணர்வு மூளையின் கண்ணதாம் மனத்தின் கண் உடனே சென்று விளங்குமாறு அவற்றிடையே கருவியாய் நின்று உதவுவது தான் யாதோ வெனின்; அதுவே நரம்பு எனப்படுவதாம். இந் நரம்பு ஒன்றிரண்டன்றி எண்ணுதற்கும் அகப்படாதவாறு பலப்பல வாய் விரிந்து கிடக்கின்றன. இந் நரம்பின் தொகுதிகள் அத்துணையும் மூளையோடு இயைக்கப்பட்டு உடம்பின் உட்புறப் பக்கங் கள் யாண்டும் நிறைந்திருக்கின்றன. இவ்வாறு இவை உடம்பின் கடையெல்லை முதல் மூளைவரையிற் றொடர் பட்டுக் கிடத்தலின், கால் விரல் நுனியிலே ஊரும் உணர் வானது பாவித்தற்கும் ஏலாத வேகமுடன் மூளையின்கண் மனத்தே சென்று விளங்குகின்ற தென்க. அங்ஙனமாயின், ஓர் எல்லையிற் றோன்றிய வுணர்வை நரம்பின் வழியே கொண்டு போய் மூளையின்கண் மனத்தே உய்ப்பது உயிரினறி வொளியாகுமேல் அவ்வறிவொளி உடம்பில் நிற்குமாறு யாங்ஙன மெனின்; உயிரறிவு உடம்பின் ஓரிடத்தீரிடத்தன்றி அவ்வுடம்பெங்கும் வியாபகமாய் நிற்குமாதலின் அஃது எவ்விடத்தே உணர்வு எழினும் அதனை ஆண்டு நின்றும் உடனே மனத்தின்கட் செலுத்துமென்க. இஃதென்னை? உடம்பெங்கும் வியாபியாய் நிற்கும் உயிர் தானே உணர்வு தோன்றுமிடமெல்லாம் தானும் உடன் நின்று அறியுமென் னாமல், அஃது அதனை மனத்தின்கட் கொண்டு போய் வைத்துப் பின்னர் அறியும் எனல் என் என்று வினாவின்; உயிர் உடம்பெங்கும் வியாபியாய் நிற்பினும் மூளையின் கண்ணதாம் மனத்தின் வாயிலான் அன்றி அறிவு நிகழப் பெறாது. இஃதெற் றாற் பெறுதுமெனின்; பிராணிகளின் மண்டையோட்டைக் கழற்றி மூளையையும் பிரித்தெடுத்து அப்பாற்படுத்தியபின் உயிர் இருந்தும் அப்பிராணிகள் உடம்பின் நாற்பக்கங்களினும் உண்டான உணர்வுகளை அறியும் ஆற்றல் இல்லாதவாயின. இப்பெற்றியெல்லாம் மேலே எடுத்துக் காட்டினாமாகலின் மீண்டும் அவற்றை ஈண்டு விரிக்கிலம். எனவே உடம்பெங்கும் நிறைந்த உயிர் மனத்தின் வாயிலானன்றி அறிவு நிகழப் பெறாதென்னும் உண்மை சிறிதும் ஐயுறற்பாற்றன்றென்பது விளங்காநிற்கும். உயிரினறிவு விளங்குதற்கு ஏற்ற திறத்தால் அமைக்கப்பட்ட சூக்கும சடக்கருவியே மனமாமென்றும், அம்மனம் இருத்தற்கு இடமாக அமைக்கப்பட்ட தூல சடக்கருவியே மூளையாமென்றும் இங்ஙனம் பகுத்தறிந்து கொள்க. இனி இப்பெற்றித் தாம் மனத்தான் இயக்கப்படுவன ஞானேந்திரியங்கள் ஐந்தும் கன்மேந்திரியங்கள் ஐந்துமா மென்பதை மேலே காட்டினாம். ஞானேந்திரியங்கள் ஐந்தும் அறிதற்றொழிலை மாத்திரம் நிகழ்த்துவன. மெய்யானது தன்மேல் வந்து உரைசும்பொருட்டன்மையை மாத்திரம் அறியுமல்லது, தானே புறத்துச் சென்று பரிசவுணர்ச்சி யினைக் கவர மாட்டாது; வாயானது தன் கண் வந்த பண்டங்களின் அறுவகைச் சுவைகளையும் உருசித்தறியும் அல்லாமல் தானே புறத்துச் சென்று அச் சுவைகளை அறிவதன்று; கண்ணானது தன்னெதிரே தோன்றிய பொருள்களின் வடிவத்தையும் நிறத்தையும் அப் பொருள்களினின்று வரும் ஒளியினுதவியாற் கண்டறியுமே யல்லாமல் தானே அப்பொருள்கள் மாட்டுச் சென்று அக் குணங்களைப் பற்றுவதன்று; மூக்கானது முல்லை மான்மதம் முதலியவற்றினின்று வந்த நறுமணத்தைத் தான் கவருமல் லாமல் தானே வலிந்து சென்று அதனைக் கவருந் தன்மைய தன்று; செவியானது புறப் பொருள்களிடத்தே தோன்றிக் கடல் நீரின் அலைபோல ஆகாயத்தின்கட் போதரும் ஓசையைத்தான் இருந்த விடத்திருந்தவாறே ஏற்று அறியுமல்லது தானே அப்பொருள்கண் மாட்டுச் சென்று அவ்வோசையைப் பற்றி அறிவதன்றாம். இங்ஙனம் ஞானேந்திரி யங்கள் ஐந்தும் தாம் இருந்தவிடத் திருந்த வாறே அறிதற் றொழிலை நிகழ்த்தக் காண்டுமாகலின், இவ்வறிதற் றொழிலைத் தம்மாட்டு நிகழ்விக்கும் மனம் என்னுங் கருவியோடு இவை நேரே சென்று இயைதற்குரிய இயல்பு வாய்ந்தனவாகும். இங்ஙனம் இவை மனத்தோடு இயைந்து நிற்குமாப் போல், ஏனைக் கன்மேந்திரியங்கள் ஐந்தும் அதனோடு .இயைந்து நிற்பனவல்ல. என்னை? கையானது இடுதல் ஏற்றலாகிய தொழில்களைச் செய்வதன்றித் தானே அவ்விடுதல் ஏற்றல் களின் முறைகளை அறியவல்ல தன்று; வாயானது பல்வகைச் சொற்களைக் கோவைப்பட மொழியுமேயல்லது அச் சொற்பொரு ணுட்பங்களைத் தானே யுணருந் தன்மைய தன்று; காலானது அங்கு மிங்கும் போதல் வருதல்களைச் செய்யுமே யல்லாமல் அத் தொழில்களின் பயனை இற்றென அறிவதன்று; குறியானது விந்துகழிவு முகத்தால் இன்பத்தினைச் செய்யு மல்லாது அவ்வின்பத்தின் வருவாயும் பயனுமெல் லாம் அறிய வல்லதன்று; குதமானது வெளிவிடற் பாலதாம் மலவழுக்கைப் புறம் படுக்குமேயன்றி அச்செயலின் இயைபெல்லாந் தானே யுணர வல்லதன்றாகலின் என்க. இங்ஙனம் இக் கன்மேந் திரியங்கள் ஐந்தும் வெறுந்தொழின் மாத்திரையே செய்யக் காண்டுமாகலின் இவை ஏனை ஞானேந்திரியங்கள் போல் மனத்தோடு நேரே இயைதற்கு ஏற்றவாகாமை தெள்ளிதிந் பெறப்பட்டது. இவ்வாற்றால், அறிதற் கருவியான மனமும், அதனோடு நேரே சென்றியைந்து அறிதற் றொழிலை நிகழ்த்து வனவான ஞானேந் திரியங்கள் ஐந்தும் ஓரினப் பொருள் களாவதும், ஏனைக் கன்மேந்திரி யங்கள் ஐந்தும் அவற்றின் வேறான வேறோர் இனமாவதும் இனிது பெறப்பட்ட முடிபுகளாம் என்க. இனி இங்ஙனம் இருபகுதிபட்ட இவ்விரு வேறு கருவி களுக்கும் மூலமாய் முதல் நிற்கும் நுண்பொருள் இதுவென ஆராயற்பாற்று. யான் காண்கின்றேன், யான் கேட்கின்றேன், யான் அறிகின்றேன் என்றற் றொடக்கத்து வழக்குகளில் யான் என்னும் உணர்வின் பின்னதாயே காண்டல் கேட்டல் அறிதல் முதலிய உயிர்வினைகள் நிகழக் காண்ட லின், இவ்வறிவு முயற்சி கட்கெல்லாம் முதலாயிருப்பது யான் என்னும் உணர்வேயாம் என்பது பெற்றாம். மற்றுக் காண்டல் கேட்டல் முதலிய உயிரறிவுகள் நிகழ்தற்குக் கண் செவி முதலான புறக்கருவிகளும், இஃது யாதாகற்பாற்றெனச் சிந்தித்தறிதற்கு மனம் என்னுங் கருவியும் இன்றியமையாது வேண்டப்பட்டாற் போல யான் என்றும் உணர்ச்சி நிகழ்தற்கும் ஒரு கருவி இன்றி யமையாது வேண்டப்படும். இதுவே சைவ சித்தாந்தத்தினும் சாங்கியத் தினும் அகங்காரம் என்னுந் தத்துவமாம் என்று கூறப்பட்டது. அகங்காரம் என்னும் இத்தத்துவம் மனம் முதலிய மற்றைத் தத்துவங்களைப் போற் சடக்கருவியென்றாலும், மூளையின் சூக்கும சாரமாகிய மனத்தினும் இது சூக்குமமாய் நிற்ப தொன்றென்று அறிதல் வேண்டும். அஃதெற்றாற் பெறுது மெனின்; யான் அறிகின்றேன் என்னும் வழக்கின்கண் அறிதற்றொழிதற்கு முன்நிற்பது யான் என்னு முணர்வே யென்பது பெறப் பட்டதாகலின் அவ்வறிதற் றொழிற்குக் கருவியான மனத்தினும் யான் என்னும் உணர்விற்குக் கருவியான அகங்கார தத்துவம் சூக்குமமாதல் துணியப்படும் என்க. அஃதென்னை, யான் என்னும் உணர்வினைச் செய்வது நேரே உயிர் என்றுரைத்தலே அமையாதோ அதற்கும் ஒரு கருவி வேண்டுமோவெனின்; நன்று சொன்னாய், மூளையின்கண் ஒருபகுதி சிறிது பழுதுபட்ட விடத்தும் அதனியல்பு சிறிது பிறழ்ந்துபோய விடத்தும் ஒருவனுக்குத் தான் என்னும் உணர்வு நிகழாமை அங்கசேதன பண்டிதர்களால் இனிது வலியுறுத்தப் பட்டிருத்தலானும், அயர்ந்த உறக்கத்தின்கண் உயிர் இருந்தும் அதற்குத் தான் என்னும் உணர்வு நிகழக் காணாமையானும் உயிர்க்குத் தானென்னு முணர்ச்சி தோன்றுதற்கு அகங்காரம் என்னுங் கருவியினுதவி இன்றியமையாது வேண்டற் பாலதேயா மென்று கடைப்பிடிக்க, மனத்தினுஞ் சூக்கும நிலையின தாயுள்ள இவ்வகங்காரம் என்னுஞ் சடக்கருவியோடு ஒன்றுபட்டு நிற்குங்கால் உயிர்க்குத் தான் என்னும் உணர்வு நிகழும்; அவ்வுணர்வு நிகழ்ந்த பின்றை அது மனம் என்னுங் கருவியினைப் பற்றி இந்திரிய வாயிலாற் புறப்பொருட் குணங்களைக் கவர்ந்து அறிவு நிகழ்த்துமென்க. முதற்கண் யான் என்னும் உணர்ச்சி நிகழாக்கால் மனமும் பஞ்சேந்திரியங் களும் ஒரு சிறிதும் இயங்காமை தன்னை மறந்து உறங்குவோன் மாட்டும். சிறிது இயங்கினும் ஒரு குறிப்பின் கட்பட்டுத் தொடர் புற நில்லாமை தன்னை ஓர் அறிவுப்பொருளெனவே நினையாத பித்தன் மாட்டும் வைத்துக் கண்டுகொள்ளப்படும். இவ்வாறு ணருமிடத்துத் தான் என்னும் உணர்வு முன்னும் அதன்பின் மன அறிவும் அதன்பின் ஐம்பொறியுணர்ச்சியும் முறை முறையே ஒன்றன் பினொன்றாய்த் தோன்றி விரியுமாறு இனிது பெறப் படுதலின் இவை மூன்றும் ஒன்றினொன்று தூலமாஞ் சடக் கருவி களாமென்பதூஉம் ஓரினப்பொருள்களா மென்பதூ உம் தெற்றென விளங்கா நிற்கும். இனி, யான் பேசினேன் யான் நடந்தேன் யான் செய்தேன் யான் மலங்கழித்தேன் யான் விந்து விட்டேன் என்றற் றொடக் கத்து உரைவழக்குகளில் வாக்கு பாதம் பாணி பாயுரு உபத்தம் என்னுங் கன்மேந்திரியங்கள் ஐந்தும் யான் என்னும் உணர்வின் வழித்தாக நடைபெறுதல் அறியக்கிடத்தலின், இவை ஐந்திற்கும் முதலாவதூஉம் யான் என்னும் உணர்வுக்கு இடஞ்செய்யும் அகங்கார தத்துவமே யாமென்று உணர்ந்துகோடல் வேண்டும். அற்றேல், இவ்வாறுரைக்கப்பட்ட அகங்கார தத்துவத் தினின்றே மனமும் ஞானேந்திரிய கன்மேந்திரியங்களுந் தோன்றா நிற்ப, மனத்தையும் ஞானேந்திரியங்களையும் ஒன்று சேர்த்து அவை யிரண்டும் ஓரினப் பொருள்களென்றும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் வேறோ ரினப்பொருள்களென்றுங் கூறியதென்னை யெனின்! இவ்வகங்காரத்தத்துவம் தன்னினுஞ் சூக்குமமான குணதத்துவத்தின் சேர்க்கையால் முத்திறப்பட்டு நிகழ்தலின், அம்முத்திற வேறுபாட்டின்கண் வேறுபட்டுத் தோன்றுந் தத்துவங்களும் முக்கூற்றின் கட்பட்ட மூவேறினப் பொருள்களாயின வென்க. அற்றாயின், குணத்தத்துவத்தின் இயல்புணர்ந்தன்றி இப்பெற்றி தேறலாகாமையின் அதனைச் சிறிது விளக்கிக் காட்டுகவெனின் அவ்வாறே காட்டுதும். குணம் என்னும் பெயரைக் கேட்டன்மாத்திரை யானே இத் தத்துவம் உயிர்க்குணத்தைக் குறிப்பது போலுமென மலையற்க. ஆன்மாவின் சங்கற்ப வறிவு விளங்குதற்கு இடஞ் செய்து நின்ற மனோதத்துவம் போலவும், அதன் தான் என்னு முணர்வு தோன்றுதற்கு இடஞ் செய்துநின்ற அகங்கார தத்துவம் போலவும், ஆன்ம குணங்கள் விளங்குதற்கு இ.டஞ் செய்து நின்ற இதுவுங் குணதத்துவமெனப் பெயர்பெற லாயிற்று. இவ்வாற்றால் இக்குணத்தத்துவமும் ஏனையபோல வெறுங் சடக் கருவியேயாமென்பதும் சொல்லாமலே விளங்கும். இவ்வுரைநூலின் மேற்பகுதிகளில் ஆன்ம விலக்கணங் கூறியவழி ஆன்மா ஆணவமலம் எனும் அறியாமை வயப் பட்டு அநாதி தொட்டே நிற்குமாற்றை இனிது விளக்கிப் போந்தாம். இனி அது மலமாகிய மருளைச் சார்ந்தவழி மருளாயே நிற்குமாறும் ஆண்டே பெறக் கிடந்தன. ஆன்மாவின் இயற்கைக் குணங்கள் அநாதி தொட்டே ஆணவமலவயமாய் நிற்றலின். அவ்வாணவத்தை அதனினின் றுங் கழிப்பித்தற் பொருட்டே மாயா தேகமும் மாயா வுலகமும் அதற்கு வந்து வாய்த்தன. இங்ஙனம் ஆன்மாவி னோடு ஒற்றித்து மறைவாய் நிற்கும் ஆணவமல குணங்களை வெளியே தோன்றச் செய்து தொலைப்பிக்கும் பொருட்டுப் பிரகிருதி மாயையிற் றோற்விக் கப்பட்ட சூக்கும தத்துவமே குணதத்துவம் என்னும் பெயர்த் தாம். தம்மி லொருவாற்றா னொத்த பொருள்களே ஒருங்கு இயையற்பாலன என்னும் அளவைநூல் வழக்கிற்கு இணங்க, ஆன்மாவின் கட்டோன் றும் ஆணவமலசடப்பொருட் குணங்களுக்கு ஏற்ப அவற்றோடொத்த பிரகிருதிமாயா சடப்பொருட் குண தத்துவம் அவற்றை வெளிப்படுத்துதற்கு வந்து இயைவ தாயிற்று. இவ்வாறு ஆணவகுணங்களோடியந்து அவற்றை வெளிவரச்செய்தல் பற்றியே பிரகிருதிமாயை யிற்றோன்றி இது குணதத்துவ மெனப்பட்டதன்றி பிறிதில்லை யென்றுணர்க. இனி ஆன்மாவின்கட் பற்றிய ஆணவமலம், மாயை கன்மங்களின் றொடர்பாற் சிறிது சிறிதாத் தேய்வுற்று ஆன்மாவை விட்டு வரும். இவ்வாறு ஆணவ மலவலி தேயத் தேயச், சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடைய உயிரின் மாட்டு முன்னெல்லாம் மறைவாய் நின்ற அருளொளியானது முறை முறையே புலப்பட்டுத் தோன் றும். அது தோன்றத் தோன்ற உயிரின்கட் சாந்தகுணமும் அம்மறையே மிக்கெழுந்து தோன்றும். ஆணவமல முனைப்பால் உயிர் இயக்கமின்றிக் கிடக்கும் நிலையே தாமத மென்றும், அஃது இறைவனருளால் உந்தப்பட்டுச் சிறிதே ஆணவமலக் கவிப்பினின்றும் எழுந்து இயங்கும் நிலையே இராசதமென்றும், பின்னர் அது சிறிதுநேர மாயினும் ஆணவ வயமின்றி அருள் வயமா நிற்கும் நிலையே சத்துவ மென்றும் இவ்வாறு பகுத்துணர்ந்து கொள்க. இவ்வாறு பகுத்துரைக்கப்பட்ட மூவகை நிலைக்கண்ணும் உயிர்க்குணம் புலப்பட்டுத் தோன்றுதற் கிடமாய் நிற்கும் குண தத்துவமும் மூவகை நிலை வேறுபாட்டாற்றானும் மூவகைப் பட்டு அவற்றோடு இயைந்து நிற்கும். உயிர் ஆணவ குண முனைப்பில் அகப்பட்டு மந்தமாய் நிற்கு நிலைக்கு இணங்கியது தாமதகுண தத்துவம்; அஃது அதனிற் சிறிது விலகி முயற்சி யுடைத்தாய் இயங்கு நிலைக்கு இணங்கியது இராசத குண தத்துவம்; அஃது அதனிற் பின்னும் விலகிச் சிறிது அருள் வயமாய் நின்ற நிலைக்கு இணங்கியது சத்துவ குணதத்துவம். உயிரின் அருட்குணம் மிகவுந் தூயதாய்ச் சூக்குமமாய் இருத்தலின் அது விளங்குதற்குக் கருவியாய் இடந்தந்து நிற்கும் சத்துவகுண தத்துவமும் தூயசூக்கும மாகும்; ஏனை இராசத தாமத நிலைகள் உயிர் ஆணவ மலப்பட்ட அசுத்த தூல குண நிலைகளாமாகலின், அவை வெளிவருதற்கு இடந்தந்து நிற்கும் இராசத தாதம குண தத்துவங்களும் தூல வியல்புள்ளனவா மென்க. எனவே, சத்துவ குணம் மிகவுந் தூய சூக்கும தத்துவமா மென்பதூஉம், ஏனை இராசத தாமதங்கள் அதனிற் றாழ்ந்து ஒன்றி னொன்று தூல தத்துவமா மென்பதூ உம் அறியற்பாலன. இனி மேற்பிறவிகளிற் கன்மங்கள் நுகரப்பட்டு உயிர் பக்குவமான அளவிற்கு ஏற்ப, அவ்வுயிர்க்குணங்கள் மூன்றும் ஒன்றினொன்று ஏறியுங் குறைந்தும் நிற்குமாகலின், அங்ஙனம் அவை நிற்குநிலைக்குப் பொருந்தச் சத்துவ முதலான பிரகிருதி தத்துவங்கள் ஏறியுங் குறைந்தும் அமைந்த உடம்புகள் அவ்வுயிர்கட்கு நெறியே வந்து இயையும். இவ்வுண்மை யெல்லாம் பல்வேறு பிறவிகளின் நின்ற பல்வேறுயிர்களின் தன்மைகளை ஆராயவே இனிது விளங்கும். பகுத்தறிவுணர்ச்சி யில்லா உயிர்த் தொகுதிகளுள் ஒன்றினொன்று முரண்பட்ட இயல்புடைய பிறவிகளுக்கு ஆவும் புலியுமாகிய இரண்டுமே அமையுஞ் சான்றாம். தெவிட்டாத் தெள்ளமிழ்தம் அன்ன தீம்பாலைச் சுரந்து ஒழுகுவிக்கும் அமைந்த ஆவின் உயிரானது ஆப்பிறவியில் வருதற்குமுன் பல் பிறவிகளையெடுத்து அவற்றானெல்லாம் தன்கண் ஏறிய ஆணவந் தேயப்பெற்றுச் சிறிதே அருள் வழி நிற்றலின் சாந்த குணம்மிக்கு அச்சாந்த குணத்திற்கு ஏற்ப நகமுங் கூர்ம் பற்களும் இல்லாமற் குளம்புந் தட்டைப் பற்களும் பொருந்திய சத்துவதேகத்தில் வந்து ஆவாய்ப் பிறந்து மக்களுக்குப் பெரிதும் பயன்படலாயிற்று. மற்றுப் புலிப் பிறவியில் வந்த உயிரோ அதுபோல் ஆணவந் தேயப் பெறாததாகலின் அவ்வாணவமிகுதிப் பாட்டிற்கு ஏற்ப இராசததாமத குணங்களைத் தோற்றுவிக்கும் நகமும் கூர்ம் பற்களும் உள்ள உடம்பில் வந்து புலியாய்ப் பிறந்து மக்கட்குப் பயன்படாதாய் அவர்க்குப் பெரிதும் இன்னலி ழைப்பதாயிற் றென்க. ஆவுடம்பின்கண் அமைந்த உறுப்புக் களின் இயல்பையும், புலியுடம்பின்கட் பொருந்திய உறுப்புக் களின் பெற்றியையும் உற்றுணரவல்லார்க்கு அப் பிறவியிற் சத்துவகுணம் மிக்கு ஏனை இராசத தாமதங்கள் குறைந்த மையும், புலிப் பிறவியில் இராசத தாமதம் மிக்குச் சத்துவங் குறைந்தமையும் எளிதிற் புலப்படா நிற்கும். இவ்வாறே இன்னும் தாழ்ந்த உயிர்களுள்ளுஞ் சத்துவம் முதலிய குணங்கள் மூன்றும் ஒன்றினொன்று ஏறியுங் குறைந்து நிற்குமாற்றை நுனித்தறிந்து கொள்க. ஈண்டுரைப்பின் மிக விரியும். இனி மக்கட் பிறவியுள்ளுங் குழவிப்பருவந் தொட்டே அவ்வுயிர்களின் பக்குவத்திற்கு இணங்கச் சத்துவம் முதலிய குணங்கள் மிகுந்துங் குறைந்தும் நிற்றல் அனுபவ நுண்ணறி வாற் கண்டு கொள்ளப்படும். சிறுமகாரில் ஒரு சிலர் நற்குணமும் நல்லறிவு நற்செயலுமுடையராயிருத் தலும், வேறு ஒரு சிலர் சுருசுருப்பும் தீவிர அறிவும் மிகு முயற்சியும் உடையராயிருத்த லும் நாடோறும் நம் அனுபவத்தில் வைத்து விளங்கக் காண்கின்றோம் அல்லே மோ? உயிரின் பக்குவமும் அதற்கேற்ற உடம்பின் அமைவும் ஒருங்கிசைந்து நிற்றலால் ஒருவரியற் கையைப் பிறழ்த்தி அவரை வேறியற்கை பெறச் செய்வது முற்றுங்கூடாத தன்றேனும் அம்முயற்சி மிக முறுகி நடக்க வேண்டுதலின் அஃது அரிதேயாமென்க. இவ்வுண்மை நன்குணர்ந்தன்றே இக்காலத்து மனோ தத்துவ சாத்திரிகளும் மகாரின் பக்குவத்தினையும் மனப் போக்கினையும் நுனித்தறிந்து அவற்றிற்கு எதிரிடையாகாது இணங்கிய முறையிலே வைத்து அவர் தம்மைப் பயிற்றுதல் வேண்டுமென வற்புறுத்து வாராயினர். சத்துவப் பகுதி மிக்க சிறான் ஒருவன் மாட்டுத் தாமத குணங்களை எழுப்ப முயன்றால் அம்முயற்சி எளிதிலே கைகூடவதன்றாம்; தாமத குணப்பகுதி மிக்கு வாய்ந்த ஏனையொரு சிறானைச் சத்துவ குணத்திற் பழக்க முயன்றால் அதுவும் எளிதிற் கைகூடுவ தன்றாம். அதனால், அவ்வவர்பால் மிக்குக் காணப்படுங் குணப்பெற்றி இதுவெனத் தெளியவறிந்து, அதற்கேற்ப ஒழுகி, அவ்வழியே சிறிது சிறிதாக அவர்தம் ஆன்ம குணங்களைத் திரிவுபடச் செய்தால் அவை முறை முறையே திரிபெய்தி அங்ஙனந் தாம் திரிபெய்துதற் கேற்பத் தம்மோ டொருங்கொத்து நிற்கும் சூக்கும சடப்பொருள்களான குண தத்துவங்களையும் தாம் புலனாதற்கு இயைந்த வகையால் திரித்துத் தம்மோடொத்து நிற்கச் செய்யும். இம்முயற்சி மிக அரிய தொன்றேயாயினும் நுண்ணறிவு மிக்க சான்றோர் தீ நெறியிற் செல்லுதற்கு மிகவிழையும் பொல்லாரை அதனி னின்றுந் திருப்பி நன்னெறிக்கண் உய்க்குமாற்றால் அதன் நுட்பம் இனி துணரப்படும். அது நிற்க. இதுகாறும் விளக்கிப் போந்தமை கொண்டு குண தத்துவங்களென்பன ஆன்ம குணங்கள் புலனாதற்பொருட்டு அவைதம்மோடொத்து இயைந்து நிற்குஞ் சூக்கும சடக்கருவிகளே யாமென்று நுணுகியறிந்து கொள்க. இனி இப்பெற்றியவாங் குண தத்துவங்கள் மூன்றனுட் சத்துவம் என்பது உண்மை அல்லது நன்மையெனப் பொருட ருவது. ஆணவம் அகன்ற ஆன்மாவினோ டொற்றித்து விளங்கும் உண்மை நன்பொருளான அருட் குணம் புலப்பட்டுத் தோன்றுதற்குத் தான் இடந்தருதல் பற்றி அவ்வருட் பொருளின் பெயர்களான உண்மை, நன்மை என்பன இது தனக்கு முரியவாகக் கொண்டு சத்துவமென வழங்கப்பட லாயிற்று. இது தூய சூக்குமமாய்ப் பொலியுந் தத்துவமாகலின் இது நான் என்னும் உணர்வினை ஆன்மாவின்கட் டோற்று வித்தற்கு இடமாய் நிற்கும் அகங்கார தத்துவத்தோடு ஒருங்கு சேர்த்து நின்றவழி, அச் சேர்க்கையில், புறப்பொருளறிவினை ஆன்மா வின் கண் நிகழ்விக்கும் கருவிகளான மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் மனம் என்னும் அந்தக்கரணம் ஒன்றும் தோன்றும். இவ்வகங்காரம் இங்ஙனம் சத்துவகுண தத்துவத்தோடு இயைந்த வழித் தைஜஸாகங்காரம் எனப் பெயர் பெறும்; தைஜஸ என்பது ஒளி எனப் பொருள்படும் தேஜ என்னுஞ் சொல்லின் திரிபாகும்; சத்துவகுணம் தூய ஒளிமயமாய் விளங்கும் நுண்பொரு ளாகலின் அதனோடு சேர்ந்து நின்ற அகங்கார தத்துவம் அங்ஙனம் தைஜஸாகங் காரம் எனப் பெயர் பெறலாயிற்று. இச்சொற்றொடர் தமிழில் தைசதாகங் காரமும் இதனிற் பிறக்கும் மனமும் ஞானேந்திரி யங்கள் ஐந்தும் ஓரினப் பொருள்கள் ஆயவாறு யாங்ஙனமெனிற் காட்டுதும். மேற்கூறிய வாற்றால் அறிவு மயமாய்ப் பொலியும் அருளொளிக்கு இடந்தந்து நிற்குஞ் சத்துவ குணத்தோடு ஒன்றுபட்டு நான் என்னும் உணர் வினையும் புலப்படுக்கும் இத்தைசதாகங்காரம் உயிர்க்கு அறிவினை நிகழ்விப்பது என்று கண்டாம். அங்ஙனமே மனமும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் புறப் பொருட் குணங்களைக் கவர்ந்து உயிர்க்கு அறிவினை எழுப்பக் காண்டுமாகலின், இவையும் தைசதாங்காரமும் ஓரினப் பொருள் களாதலும், இம்முக்கூற்றுள் ஏனையிரண்டும் தைசதத்திற் றோன்றி ஒன்றினொன்று பருப் பொருளாய் விரிதலும் ஒரு தலை யாகத் துணியப்படும் என்க. இனி ராஜஸ குணம் என்பது காம விழைவு, முயற்சி எனப் பொருடரும் ரஜ சம்பந்தமான குணம் என்று நுவலப்படும். இவ் ராஜஸ என்னும் பெயருரிச்சொல் தமிழில் இராசதம் எனத் திரிந்து நின்று அக் குணத்திற்கே பெயராய் வழங்கி வருகின்றது. இத் தத்துவத்தின் பொது வியற்கை உயிர்களிடத்து முயற்சி யினை எழுவிப்பதாகும். எனவே, உயிர்க்கு அறிவினை எழுவிப் பது சத்துவம் என்றும், அதற்குத் தொழிலினை எழுவிப்பது இராசதம் என்றும் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும். ஆகவே, தொழிலினைத் தோற்றுவிக்கும் இவ்விராசதகுண தத்துவம் நான் என்னும் உணர்வுக்கு இடமான அகங்கார தத்துவத்திற் கலந்த மாத்திரையானே ஆண்டுப் பலதிறப்பட்ட முயற்சிகள் தோன்றி உயிரை விகாரமுறுத்துதலின் இவ் விராச தாகங்காரம் வைகாரி காகங்காரம் எனவும் வழங்கப்படும். இவ் வைகாரிகாகங்கார தத்துவத்தை உயிர் தலைப்பட்ட போதெல்லாம் அதற்கு நான் என்னும் உணர்வோடு பல திறப்பட்ட முயற்சிகளுந் தோன்றா நிற்கும். அற்றேல், இதற்கும் வாக்கு பாதம் பாணி பாயுரு உபத்தம் என்னும் கன்மேந்திரி யங்கள் ஐந்திற்கும் மேற்கூறாது எஞ்சி நின்ற இயைபே தேனும் உளதோ வெனின்;-- அறிவின்றி வெறுந்தொழின் மாத்திரையே புரியும் இக்கன்மேந்திரியங்கள் உயிரின் மாட்டு வெறுந் தொழிலையே வருவிக்கும் இவ்வைகாரிகாகங்காரத்தினின்றே பிறக்குமென்பது மேற்கூறியவாற்றாற் றானே போதருமென்க. எனவே, இவ்வகங்காரமும் இதனினின்று பிறக்குங் கன்மேந்திரி யங்களும் ஓரினமாய், முன்னையதிற் பின்னைய வைந்துந் தூலமாய் விரியுமென்பதூஉம் பெறப் பட்டவாறறிக. இனித் தாமஸகுணம் என்பது இருள் எனப் பொருள்படும் தம என்னுஞ் சொல்லிற்றோன்றி இருட்டன்மையினையுடைய குணம் என்றாகும். இத்தத்துவம் இப்பெயர் பெற்ற தெதனா லோவெனின்;-ஆன்மாவைப் பொதிந்த மருள் என்னும் ஆணவமலம் இருண்டு சடமாய்க் கிடத்தலின், அதனோடி யைந்து அவ்வாணவ இருட்குணத்தைப் புலப்படக்காட்டும் இதுவும் அப்பெயர் பெற்றுத் தாமஸம் என்றாயது; இச்சொல் தமிழில் தாமதம் என்று திரிந்து வழங்கும். ஆணவமலம் இருட்டன்மையுடையதாதலுடன், அறிவில்லாத சடப் பொருளுமா யிருத்தலின் அதனோடு இயைந்து நிற்கும் இத்தாமதகுண தத்துவமும் இருட்டன்மையோடு பரும்படியான சடப்பொருளுமாய் இருக்கும். சத்துவம் இராசதம் தாதமம் என்னும் முக்குணங்களுள் சத்துவம் ஒளிவடிவான தூய சூக்கும தத்துவமாகும். இராசதம் அதனிற் சிறிது ஒளி குறைந்து இயக்கம் மிக வாய்ந்த தூல தத்துவமாகும், தாமதம் ஒளி சிறிதுமின்றி இருண்டு இயக்கமும் இல்லாதாய் மிகவுந் தூலமாய்க் கிடக்கும் தத்துவமாகும். இவ்வியல்பிற்றான தாமதகுண தத்துவம் நான் என்னும் உணர்வுக்கு இடஞ் செய்யும் அகங்கார தத்துவத்திற் கலந்த மாத்திரையானே ஆண்டு நின்றும் சத்தம் பரிசம் உருவம் இரசம் கந்தம் என்னும் தன் மாத்திரைகள் ஐந்தும் தோன்றா நிற்கும். தன் மாத்திரைகள் என்று ஈண்டு ஓதப்பட்ட இவை, பிருதிவி அட்டித் தேயு வாயு ஆகாயம் என்னும் ஐந்தும் தமது தூல நிலை கரைந்து பின்னுஞ் சூக்குமமாய் நுணுகிய தத்துவங் களேயா மென்ப தூஉம், அவை அங்ஙனம் கரைந்து நுணுகிய சூக்கும நிலையிற் றம் ஐவகை வேறுபாடுங் காட்டி நின்றாற்போல நில்லாது, பின்னுங் கரைந்து நுணுகி அதிசூக்குமமாய் வேறுபாடு காட்டாது பொதுப்பட நிற்குநிலையே பூதாதியாங்காரம் எனப்படு மென்பதூஉம் மேலே இனிது விளக்கிப்போத்தாம். இனி இத்தன் மாத்திரைகள் ஐந்தினின்றும் பிருதிவி அப்புத் தேயு வாயு ஆகாயம் என்னும் ஐந்தும் தூல பூதங்களும் தோன்றும். இங்ஙனம் வரிசைப்பட்ட முக்கூற்றுத் தத்துவங்களிற் பூதாதி யாங்காரம் சூக்குமம், அதனிற்றோன்றிய தன் மாத்திரைகள் அதனிற் சிறிது குறைந்து சூக்குமம், தன் மாத்திரைகளிற் றோன்றிய ஐம்பூதம் அவற்றினுங் குறைந்த தூலங்கள். இனிப் பூதாதியாங்காரத்தினுஞ் சூக்கும மாவது வைகாரி காகங்காரம். வைகாரிகாகங்காரத்தினுஞ் சூக்கும மாவது தைசதாகங்காரம். இன்னும் பஞ்ச பூதங்களினுஞ் சூக்குமமான சத்தம் பரிசம் உருவம் இரசம் கந்தம் என்னும் தன் மாத்திரைகள் ஐந்தினையும், ஞானேந்திரியங்கள் ஐந்திற்கும் விடயமாகும் சத்தம் பரிசம் உருவம் இரசம் கந்தம் என்னும் பூதகுணங்கள் ஐந்தினையும் வேறு வேறென்று அறிதல் வேண்டும். அற்றாயின், சூக்கும பூதங்களாகிய தன் மாத்திரைகள் ஐந்தினையும் பூதகுணங்கள் போல வைத்து அங்ஙனம் சத்தம் பரிசம் உருவம் இரசம் கந்தம் எனப் பெயர் கூறியவா றென்னை யெனின்;--தூல பூதங்கள் ஐந்தும் தம் தூல உருக்குலைந்து கரைந்து சூக்குமமாய்ப் போனவழி, ஆண்டுத் தமதுருவைச் சிறிதுங் காட்ட மாட்டா வாய்த் தங்குணங்கள் மாத்திரையே உய்த்துணர்வார்க்குப் புலப்பட்டுத் தோன்றுமாறு பரவி நிற்றலின் அவ்வாறவை அக்குணங்கட்குரிய பெயராற் கூறப்பட்டன. சேயதாக இன் மணங் கமழும் ஒரு பணவெடை நானத்தை ஒரு பேழையுள் நெடுநாள் வைத்திருப்பின் அந்நானக்கட்டி கரைந்து கட்புலனா காது போகா நிற்கும்; அஃது அங்ஙன மாயினும் அப்பேழை யைத் திறந்த வளவானே மிக இனிய மணம் ஆண்டு நின்றும் எங்குங் கமழ்தலான் அதுதான் சூக்கும வுருவாய் அங்கே நிலை பெறுதலை யார்க்குந் தெரிவுறுத்தல் கண்டாமன்றே; அவ்வாறது தன் உண்மை யைத் தன்னுருவத் தானன்றித் தனது மணமாகிய குணத்தால் புலப்படுத்தின மையின், அக்குணப் பெயரே அப்பொருட்கும் பெயராக வழங்கி வரலாயிற்றென் றோர்க. ஆகவே, தன் மாத்திரைகட்கும் பூதகுணங்கட்கும் பெயரொன்றாயிருத்தல் கொண்டு அவை யிரண்டும் ஒன்றே போலுமெனக் கருதி மயங்கற்க; அவை யிரண்டும் வேறு வேறென்பதே தேற்றமாம் என்க. அது நிற்க. இனித் தாதமகுணக் கலப்பாற் பூதாதியாங்காரமெனப் பெயர் பெற்ற தத்துவத்தினின்று தன் மாத்திரைகளும், அவற்றினின்று ஐம்பூதங்களுந் தோன்றுமென்றது ஒக்கும்; ஆனால், அவ்வைம்பூதங்களும் புறத்தே அண்டத்தின்கட் காணப்பட்டாற் போல, அகத்தே இப் பிண்டத்தின் கண்ணுங் காணப்படுவதில்லையாலோவெனின்;-- அற்றன்று, அவ்வைம் பூதங்களின் வேறாக உடம்பென ஒன்றின்மை யானும், உடம்பின் கூறுகள் அத்துணையும் அவ்வைம்பூத பரிணாமங் களே யாகலானும் உடம்பின்கண் ஐம்பூதங்கள் காணப்படுவ தில்லை யென்றல் யாங்ஙனம்? எனக் கூறி மறுக்க.அற்றேல் அவ்வைம்பூத பரிணாமங்களாம் உடம்பின் கூறுகள் சிலவற்றைச் சிறிதெடுத் துக் காட்டுகவெனின்; அவ்வாறே காட்டுதும்.. பிருதிவியின் கூறாய் உடம்பிற் காணப்படுவன என்பு தசை நரம்பு தோல் பல் நகம் மயிர் முதலியன; அப்புவின் கூறாய்க் காணப்படுவன மச்சை மூளை கோழை வெள்ளை குருதி சிறுநீர் வியர் முதலியன; தேயுவின் கூறாவன உண்ட வற்றை அறப் பண்ணும் அகட்டுத்தீ, நெஞ்சத்தே நிற்கும் வெம்மை, கண்ணில் உள்ள கருமணியழல், பித்தம், நீர் வேட்கை, அச்சம், இணை விழைச்சு முதலியன; வாயுவின் கூறாய் உடம்பில் நிற்பன பிராணன் அபானன் உதானன் வியானன் சமானன் நாகன் கூர்மன் கிரிகரன் தேவதத்தன் தனஞ்சயன் முதலிய பத்தும்; ஆகாயத்தின் கூறாவன மேற்கூறிய பிருதிவி முதலியவற்றின் கூறுகளிற் கலந்திருப் பன; உதாரணமாக, நகம், மயிர் முதலியன அறுக்கப் படுங்கால் நோயுண்டாக்குதல் இன்மையின் அவை பிருதி வியோடு ஆகாயமும் ஒருங்கு சேர்தலாற் றோன்று வன வென்பது பெற்றாம்; இங்ஙனமே ஏனையவும் நுனித்தறிந்து கொள்க. இவையெல்லாம் ஆராய்ச்சி முறையிற் செல்லும் இவ்வுரை நூலின்கண் எடுத்துக்காட்டலுறின் மற்றொன்று விரித்தலா மாகலின் தேகதத்துவ நூல்களிற் கண்டு தெளிக. இத்துணையுங் கூறியவாற்றால், நான் என்னும் உணர்வு தோன்றுதற் கிடஞ்செய்யும் அகங்காரத்தத்துவம் குணதத்து வத்தின் சேர்க்கையால் தான் முத்திறப்பட்டு நின்று மனம் ஒன்று, ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, தன் மாத்திரைகள் ஐந்து, பூதங்கள் ஐந்து ஆகத் தன்கீழ் இருபத் தொரு தத்துவங்களைத் தோற்றுவித்துக் கிடந்த அடை வெல்லாம் இனிது விளங்கா நிற்கும். இனி இவ்வியல்பிற்றாய அகங்காரத்தத்துவம் யாண்டு நின்றுந் தோன்றிய தென்பதனை ஆராயற்பாற்று. நான் என்னும் உணர்வு தோன்றுதற்குமுன் ஆன்மாவின்கண் ஒரு தலையான் நிகழற்பாலது யாதென நுணுகி ஆராயலுறின், அதுவே பகுத்தறிவென்று துணியப்படும். என்னை? அறிவுப் பொருள் அல்லாத மண் முதலிய தத்தவங்களின் வேறாகத் தான் ஓர் அறிவுப்பொருளென்று உயிர் தன்னைப் பகுத்துக் காணி னல்லால் அதற்கு நான் என்னும் உணர்வு நிகழாமை, பகுத்தறிவில்லா விலங்கினங்கள் மாட்டு வைத்துத் தெளிய அறியப்படுதாலாலும், பகுத்தறிவுடைய மக்கட்பரப்பின்கண் மாத்திரமே நான் என்னும் உணர்வு நிகழக்காண்டு மாத லாலும், இவ்வுணர்வுக்குமுன் ஒரு தலையான் நிகழ்வது பகுத்தறிவேயா மென்பதூஉம், அப்பகுத்தறிவின் பின்னதாய் அதன் கட்டோன்றுவதே நான் எனும் உணர்ச்சி யாமன்பதூ உம் அங்கையங்கனிபோல் நிறுவப்படுதலால் என்க. இங்ஙனம் நிறுவப்படவே, உயிர்க்கு நான் என்னும் உணர்வினை எழுப்புதற் கருவியாய் உடன்நின்ற அகங்கார தத்துவத்திற்கு முன், அதற்குப் பகுத்தறிவினை எழுப்புதற் கருவியாய் உடன் வந்தியைவது அதனினுஞ் சூக்கும வியல்பு என்னும் உணர்வினை விளை விக்கும் அகங்கார தத்துவமே பகுத்தறி வினையும் விளைவிக்கு மென்று உரைத்தலாகா தோ வெனின், ஒக்கும்; நானென்னும் உணர்வின் பின்ன தாய்ப் பகுத்தறிவு எழுமா யினன்றே அவ்வாறுரைத்தலாம்? இஃது இதனின் வேறு இஃது இதனை யொப்பது என்று பிரித்தும் ஒற்றுமை கொளுத்தியும் காண்கின்ற பகுத்தறிவு தன்னால் நான் எனும் உணர்வு வலிபெறல் அனுபவத்தான் அறியக்கிடத்தலால் பகுத்தறி வினின்றே நான் எனும் உணர்வு தோன்றுமென்று கடைப் பிடிக்க, ஒருவனைக் கண்டு இவன் புறத்தேயுள்ள பொருள்கள் எல்லாவற்றினும் வேறான இயல்புடையனா யிருக்கின்றான், தன்னுடம்பினும் வேறா யிருக்கின்றானென உயிர்ப் பொருளையும் உயிரல் பொருளை யும் வேறு பிரித்துக் கண்டும், இவ்வியல்பினனான இவனை யானும் ஒத்துளேன் என ஒற்றுமை கொளீஇயும் நான் எனும் உயிருணர்ச்சி உரம் பெறல் காண்க. என்றிவ்வாறு தன்னுணர்ச்சிக்குமுன் பகுத்தறிவு நிகழ்ச்சியுண்மை இனிது பெறப்படவே, அகங்கார தத்துவத் திற்குப் பிறப்பிடமாய் அதற்கு முற்றோன்றி நிற்பது புத்தி தத்துவமேயாதல் திண்ண மாம் என்க. இனி, இப்புத் திதத்துவம் உயிரறிவை எழுப்புவித்தற்கு இன்றியமையா நுண்கருவியே யாயினும், இதுவும் ஏனைய தத்துவங்களைப்போல் வெறுஞ்சடப்பொருளென்றே ஓர்ந்து கொள்க. இது சத்துவகுணம்மிக்கு ஏனை இராசத தாமதங்களை ஒடுக்கி நிற்குந் தூய சூக்கம பொருளாகும். இஃது எற்றாற் பெறுதுமெனின்:- உயிரின் அருட்குணம் விளங்குதற் கிடஞ் செய்து நிற்பது சத்துவமென்று மேல் விளக்கப்பட்டமையின், அவ்வருனொளியோடு அறிவும் ஒருங்குதோன்றுதற் கிடஞ் செய்யும் புத்தித்தத்துவத்தில் சத்துவகுணம் மிகமுனைந்து நிற்குமென்பது பெற்றாம்; இனி இதன்கண் அறிவேயன்றி அறிவு நிகழ்ச்சியும் உண்மையின் ஈண்டு இராசத குண இயக்குமுஞ் சிறிதுண்டு; இனி ஆணவவயமாய் நிற்கும் உயிரோடு ஒற்றித்து நிற்றலின் இத்தத்துவத்தில் அவ்வாணவ குணங்களைஒரோவழி வருவிக்கும் தாமதகுணம் இயக்கமுஞ் சிறிதுண்டு. ஆகவே, இது பகுத்தறிதல் முறையால் இஃது இவ்வியல் பிற்று எனப் பொருட்டுணிவு தோற்றுவித்தலோடு, இன்பதுன்பவயப்பட்டு அவ்வாற்றால் நல்வினை தீவினை சார்தற்குந் தான் இடமாய் நிற்குமென்று முணர்ந்துகொள்க. இனி இப்பெற்றித்தாகிய புத்திதத்துவம் பிறத்தற் கிடனாய் இதனினுஞ் சூக்குமவியல்புவாய்ந்து மேலதாய் நிற்பது குணதத் துவமாகும். இக்குணம் சத்துவம் இராசதம் தாமதம் என முத்திறப்படுமாறும், அவற்றினியல்புகளும் மேலே விளக்கிப் போந்தாம். இக்குண தத்துவம் பலவாய் அறிவில்லாத சடப்பொருளுமாய் இருத்தலின், இதுவும் அநித்தப்பொருளே யாகும். ஆதலால், இக்குண தத்துவம் தன்கண் மூவகை வேறுபாடுங் காட்டாது, பின்னுஞ் சூக்கும மாய்க் கரைந்து பொதுப்பட நின்றவழி, அதுவே பிரகிருதி என்று வழங்கப்படும். எனவே, பிரிகிருதி குண தத்துவத்தின் வேறன்றாயினும், அதனினுஞ் சூக்குமமாய் வேறுபாடு விளக்காது அதற்கு ஆதாரமாய் நிற்பதாகலின் அஃது அதனின் வேறு போல் வைத்து வழங்குதலே சைவசித்தாந்த நூல்கள் மேற்கொண்ட நெறியாம். இதன்கீழ் நின்ற இருபத்து மூன்று தத்துவங்களுக்கும் இன்றியமையாக் காரணப் பொருளாய் இருத்தலின், இது மூலப்பிரகிருதி என்றும் நுவலப்படும்; இச்சொற்றொடர் தமிழில் மூலப் பகுதி எனத் திரிந்து வழங்கும். இம்மூலப்பகுதி இருபத்து நான்காவது தத்துவம், நிலமுதல் மூலப்பகுதி ஈறாகிய இவ்விருபத்து நான்கும் ஆன்மதத்துவம் என்று ஒரு பெயராற் றொகுத்துக் கூறப்படும் என்க. இனி இவை ஆன்ம தத்துவம் என்று ஓதப்பட்ட வாறென்னையெனின்; -- ஆன்மாவுக்கு அதி தெய்வமாகிய தத்துவம் ஆன்ம தத்துவமென உருத்திர னுக்குப் பெயராயிற்று என்று ஆசிரியர் சிவஞானயோகிகள் கூறியதனால் அப்பெயர் சீகண்ட பரமேசுர உருத்திரர் மேற்றாதல் அறியப்படுதலின், அவரதிகாரத்தின் வயப் பட்டுத் தோன்றியும் ஒடுங்கியும் வாரா நின்ற இவ்விருபத்து நான்கும் அவ்விறைவர்க் குரிய பெயரால் அவ்வாறு ஆன்ம தத்துவம் என வழங்கப்பட லாயின வென்க. இனி இவ்வுலகிற் பரந்துபட்டுக் »l.க்F« புறச் சமயப் பொருள்களையெல்லாம் பகுத்துப் பார்க்கும்வழி அவை தம்முள் மூலப்பகுதிக்குமேற் பொருளுண்மை கண்ட தொன்றைக் காண்டல் அரிதினும் அரிதாம். இப்புறச் சமயங்கள் புறப்புறச்சமயமெனவும் அகப்புறச் சமய மெனவும் இருவகை யாம்; அவை உலோகாயதம், மாத்திய மிகம், யோகாசாரம், சௌத்திராந்திகம், வைபாடிகம், ஆருகதம் என்பனவும்; தருக்கம், மீமாஞ்சை, ஏகான்ம வாதம், சாங்கியம், யோகம், பாஞ்ச ராத்திரம் என்பன வுமாம். இவற்றான் ஆராயப்பட்ட தத்துவங்கள் அத் துணையும் பிருதிவிமுதல் மூலப்பகுதி ஈறான வற்றுள் அடங்குவனவேயன்றி அவற்றின்மேற் படாமை அவ்வம் மத நூல்களுட் கண்டுதெளிக. ஈண்டு ரைப்பின் மிகவிரியும், இம்மதங்கள் தத்துவங்களை ஆயு நெறியில் ஒன்றினொன்று குறைந்து நிற்றல் பற்றிப்புறம் என்றும் புறப்புறம் என்றும் வகைப்படுத்து வைக்கப்பட்டன. இவற்றுள் உலோகாயதம் பிருதிவி அப்புத் தேயு வாயு வென்னும் நான்கு பூதங்களை யன்றி வேறு அவற்றிற்கு மேலுள்ள தத்துவங்களை அறியாமையின், அது கடையில் நிறுத்தப்பட்டது; பஞ்ச ராத்திரம் இருபத்து நான்காம் தத்துவமாகிய மூலப்பகுதியினை ஆய்ந்து, அதன் மேலும் உயிரையும் வாசுதேவனையும் ஆய்வான் சேறலால் அவை தம்முள் முதற்கண் நிறுத்தப் பட்டது. இவ்வாறன்றி இவற்றின் முறைக்கு வேறுகாரணங் கூறுவாரு முளர்; அவை பொருந்து மாயிற் கொள்க. இனி அகப்புறச் சமயங்களெனப்படும் பாசுபதம், மாவிரதம், கபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாதசைவம் என்பனவும், அகச்சமயங்களெனப்படும் பாடாண வாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாதசைவம், சிவ சங்கிராந்தவாத சைவம், ஈசுவரவவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் என்பனவும், இச்சமயங்க ளெல்லா வற்றிற்கும் அப்பாற்பட்ட சுத்தாத்து விதசைவ சித்தாந்த முமே மூலப்பகுதிக்கு மேற்பட்ட பன்னிரண்டு சூக்கும தத்துவங்களை ஆராய்ந்தன வாகும். இனி அப்பன்னிரண்டு தத்துவங்களையும் முறையே ஆராய்ந்து செல்வாம். மேலே கூறப்பட்ட மூலப்பகுதி என்பது சாத்துவிகம், இராசதம். தாமதம் என்னும் முக்குணங்களும் விளங்கித் தோன்றாமல் சமத்துவப்பட்டு இயைந்துநின்ற நிலையே யாமென விளக்கிப்போந்தாம். அப்பெற்றிப்பட்ட மூலப் பகுதி தன்கட் டோன்றிய ஏனை இருபத்து மூன்று தத்துவங்களை நோக்கக் தான் சூக்குமம் என்று ஓதப் படினும், தானும் அச்சூக்கும நிலையில் முக்குண வடிவாய் நிற்றலில் பலவுமாய்ச் சடமுமாயிருத்தலால், அது தன்னினும் நுண்ணிய ஒரு காரணப் பொருளை அவாவி நிற்குமென்பது பெற்றாம். இங்ஙனம் இது பின்னுஞ் சூக்குமமாய் நுணுகி ஒடுங்குத் தத்துவம் கலை யென்னும் பெயரால் வழங்கப் படுதல் சைவசித்தாந்த நூல்களுட் கண்டு கொள்க. கலை என்னும் இச்சொல் கலா என்னும் வடமொழித் திரி பாகும்; இஃது ஒரு பொருளின் மிகச் சிறியதொரு கூற்றை யுணர்த்துதல் வடநூல்களிற் காண்க. இத்தத்துவம் மூலப் பிரகிருதியினும் மிகநுணுக்கமாவது பற்றிக் கலை என்னும் பெயரால் வழங்கப்படுவதாயிற்று. அற்றேல், மூலப்பகுதி தன்னினுஞ் சூக்குமமான கலா தத்துவத்தில் ஒடுங்குமென்றல் வாய்வதேயாயினும், அக்கலா தத்துவமென்ப தொன்று உளதாவதைக் கண்டிலமாலெனின்; அறியாது கடாயினாய்; நமதுடம்பாகிய இப்பிண்டத் தினகத்தேயுள்ள பொருள்கள் அத்துணையும், புறத்தே உலகத்தினும் உண்டென்பது உண்மையாகலின், இவ்வுடம்பினுள் அதனுண் மையை விளக்கவே யாண்டும் அதனிருப்பு இனிது புலப்படற் பாலதாமென்க. அறியாமையாற் பற்றப்பட்டுச் சிறிதாயினும் அறிவு விளங்கப்பெறாதுகிடந்த உயிரின் நிலையே சிருட்டியாரம் பத்திற்கு முற்பட்ட அனாதிகேவலம் எனப்படுவதாம். இங்ஙனம் அனாதிகேவலத்தின்பாற்பட்ட உயிர்க்கு அவ்வறி யாமையினை விலக்கி அறிவினை எழுப்புதலே சிருட்டித் தொழில் நடை பெறுதலின் கருத்தாவது பலதிறப்பட்ட உயிர் வளர்ச்சியினை யுற்றுநோக்குதலால் தெளிந்து கொள்ளப் படும். தாயின் கருப்பையினின்றும் வெளிப்பட்ட மகவு ஏதும் அறிவுடைத் தாயிருப்பக் காணாமையால், அஃது அக்கருப்பையுள் இருந்த காலத்தும் அக் கருப்பையுள் வாராமுன்னும் பெரியதோர் அறியாமை வயப்பட்டிருந்த தென்பதே தோற்றமாம். எல்லா வுறுப்புக்களுங் குறையாமல் பொருத்தப்பட்ட இவ்வுடம்போடு கூடிப் பிறந்த பின்னர் அம்மகவு நாள் முதிர முதிரச் சிறிது சிறிதா அறிவு விளங்கப் பெற்றுவருதல் கண்கூடாக் காணக் கிடந்த தன்றே? இங்ஙனங் காணப்படுதலால் இவ்வுடம்போடு கூடியல்லது உயிர்க்கு அறிவு நிகழ மாட்டாதென்பதும், அவ்வாறு உயிர் உடம்போடு கூட்டப் படுதலே சிருட்டியா மென்பதும், அங்ஙனம் உயிரோடு கூட்டப்பட்ட உடம்பு தூல சூக்குமமான பல திறப்பட்ட தத்துவங்களும் ஒருங்குதொக்க தொகையே யாமென்பதும் இனிது முடிக்கப்படும். புறத்தே பலப்பல வகையவாம் பலப்பல பொருள்கள் இருத்தலால் அவை தம்மை யெல்லாம் அறிதற்குக் கருவியாய் அவற்றோ டொத்த பலவகையுறுப்புக்களும் பழுதில்லா இவ்வுடம் பகத்தே அமைவவாயின. காணப் படுவனவற்றைக் கண்ணாற் கண்டும், கேட்கப்படு வனவற்றைச் செவியாற் கேட்டும், முகரப்படுவன வற்றை மூக்கான் முகர்ந்தும், சுவைக்கப் படுவனவற்றை நாவாற் சுவைத்தும், தொடப்படுவனவற்றை மெய்யாற் றொட்டும், சொல்லப்படுவன வற்றை வாயாற் சொல்லியும், இடுதல் ஏற்றல்களைக் கையாற் செய்தும், நடத்தல் ஓடல்களைக் காலாற் செய்தும், கழிக்கப்படுவனவற்றைப் பாயுருவுபத்தங் களாற் கழித்தும், சிந்திக்கப்படு வனவற்றை மனத்தாற் சிந்தித்தும், இவை தம்மை முனைத்து நின்று உணருமுகத்தால் நான் என்னும் உணர்ச்சிபெற்றும், உணர்ந்த வற்றைப் பகுத்தறிந்து துணிந்தும், முக்குணங்கண் மாறிமாறி நிகழப்பெற்றும், இம்முறையே உயிர்கள் தமதியற்கையறிவு விளங்க முன்னிருந்த அறியாமை தேயப்பெறுகின்றன; இவ்வாறு அறிவு விளங்கப்பெறுதற்கு ஓர் இன்றி யமையாக் கருவியான இவ்வுடம்பில் சில அவயங்கள் பழுதுபட்டுக் குறையுமாயின் அவை வாயிலாகப் பெறப்படும் அறிவும் பெறப்படுதல இல்லையாக உயிர் அறியாமையிற் சிக்குண்டு மயங்கும். இது கண்கூடாக எல்லார்க்கும் நிகழும் உண்மையனுபவமாதலின் இதனை மறுக்க யாரும் முந்துறார். உடம்பின்கட் சிற்சில வுறுப்புக்கள் குறைந்தாலும், அறிவுமிக விரியப்பெறாமல் அறியாமைக்கட்பதிந்து மயங்குறும் உயிர் இவ்வுடம்போடு முற்றுமே பொருத்தப்படாதாயின், அறியா மையில் முழுதும் வயப்பட்டு ஒரு சிறிதும் அறிவிலதாய்க் கிடக்குமென்பதை விண்டு சொற்றலும் வேண்டுமோ? இவ்வுண்மை வெள்ளிடை மலைபோல் விளங்கிக் கிடப்ப தாகவும், இதனொடு திறம்பி மாயாகாரியமாகிய இவ்வுடம் போடு கூடாதிருந்தவழி உயிர் முற்றறிவுடைய பிரமசொரூப மாயிருந்ததெனவும் இதனொடு கூடிய பின் எல்லா அறியா மையும், எல்லாத் துன்பமும் பெறுவதாயிற் றெனவும், ஏகான்ம வாதிகள் கூறாநிற்பர். இவ்வுடம்போடு கூடுதற்கு முன் உயிர் கடவுட்டன்மை யுடையதாயிருந்த தென்பதை உடம்போடு கூடியிருந்து சொல்லும் அவ்வேகான் மவாதிகள் யாங்ஙனங் கண்டாரென வினாவுவார்க்கு இறுக்கு மாறின்மையானும், உடம்போடு கூடி நிற்றலால் அறியாமை விளையுமெனின் உடம்பொடு கூடி அறியாமை வயப்பட்ட ஏகான்மவாதி களுரைக்கு முரை யெல்லாம் அறியா மையாய் முடியுமாகலின் உயிர் அநாதியிற் பிரமவுருவாயிருந்த தெனக் கூறும் அவருரையும் அறியாமை யுடைத்தென்று கொள்ளப்படு மாகலானும், உடம்போடு கூடிய பின்னரேதான் உயிர்க்கு அறிவு நிகழ்ச்சி யுண்மை கண்கூடாய்ப் பெறப்பட்ட மெய்யனுபவ மாதலின் இதற்கு மாறாய்க் கூறுவன பொருட் பேறிலவாமா கலானும் உயிர்கள் சிருட்டி யாரம்பத் திற்குமுன் அறியாமை வயப்பட்டிருந்ததெனலே தேற்றப் பொருளாமென்க. இனி இவ்வாறு அநாதிகேவலத்தின்பாற் கிடந்த உயிரை அதனினின்றும் பிரித்து அறிவு கொளுத்துவான் வேண்டி அருட்பொருளான ஆண்டவன் மாயை யினின்றுங் காரியப் படுத்து இவ்வுடம்பை அதனோடு பொருத்தி இவ்வுலகிற் பிறப்பிக்க, அது பிறந்தஞான்று எவ்வியல்பிற்றாயிருந்த தென்பதைச் சிறிது ஆழ்ந்து ஆராய்மின்! அம்மகவு கண்ணி ருந்துங் காண்கின்றிலது, செவியிருந்துங் கேட்கின்றிலது. இங்ஙனமே ஏனை எல்லா வுறுப்புக்களுமிருந்தும் அவை தம்மை ஒரு சிறிதுந் தெரிந்து இயக்குகின்றிலது; எனவே, மூலப் பகுதி முதற் பிருதிவி ஈறான இருபத்து நான்கு தத்துவங்க ளோடு அம்மகவு ஒருங்கு கூடியிருந்தும் அக்குழவிப் பருவத்தே அவற்றாற் பயன் கொள்ள வறியாதிருந்து நாளேற நாளேற அவைதம்மைச் சிறிதுசிறிதா அறிந்து இயக்கு கின்றது. இங்ஙனம், இருபத்து நான்கு குறிப்புகளோடு இயைந்து நின்றும் அவற்றைப் பயன்படுத்த வறியாதிருந்த உயிரை அவ்வறியாமை யினின்றுஞ் சிறிதுசிறிதா விலக்கி அவை தம்மைச் சிறிது சிறிதாப் பற்றுமாறு ஏவி அதன் மாட்டு முயற்சியினை எழுப்புவது யாது? அதுவே கலை என்னுந் தத்துவமாமென்று அறிக. தாயின் கருப்பை யினின்றும் வெளிப்பட்ட மகவு ஏதுமறியாத அப்பொழுதே வாய்திறந்து அழுதலைக் கண்டாமன்றே? முழுதும் அறியாமை வயப்பட்டிருந்த அம் மகவுக்கு வாய் திறந்து அழும் முயற்சி யாங்ஙனம் வந்தது? மூலப்பகுதி முதலான இருபத்து நான்கு தத்துவச் சேர்க்கையால் வந்ததெனின்; அவ்விருபத்துநான்கு தத்துவங்கள் ஒவ் வொன்றும் தனித்தனி வெவ்வேறு தொழில்கள் உடைமை யானும், அத்தொழில்கள் அத்துணையும் நான் என்னும் ஆன்ம வுணர்ச்சியோடு கூடி நிகழ்தல் வாலிபப்பருவத்தும் மனிதப் பருவத்துங் காணப் படுதலானும், பிறந்த குழவியின் மாட்டு நான் என்னும் உணர்ச்சியும் அதன் வழிப்பட்ட அவ்விருபத்து நான்கு தத்துவத் தொழில்களுங் காணப் படாமையானும், கண்பூவா மகவின்மாட்டு நிகழும் அழுகை முயற்சியும் பாலுண் முயற்சியும் இவ்விருபத்துநான்கு தத்துவத்தின் வேறான ஒரு சூக்கும தத்துவத்தின் காரியமா மென்பது பாரிசேட வளவை யால் நன்கு துணியப்படும். அற்றேல் அஃதாக, அவ்விருபத்து நான்கு தத்துவத் தொழில் களும் பிறந்த மகவின்மாட்டு இல்லையாதலைச் சிறிது வகைபெற விளக்கிக் காட்டுக வெனின்; பிறந்தமகவு நல்லது தீயது பகுத்தறிந்து செய்யாமை யால் ஆண்டுக் குணதத்துவம் இயங்க வில்லை யென்பது பெற்றாம்; இன்னதிதுவென்று பொருட்துணிவு காணாமையின் ஆண்டுப் புத்தி தத்துவமும் இயங்க வில்லை யென்பது பெற்றாம், நான் என்னும் உணர்வு நிகழக் காணாமையின் ஆண்டு அகங்கார தத்துவமும் இயங்க வில்லையென்பது பெற்றாம், ஒரு பொருளை நினைவதும் ஐயப் படுவதுஞ் செய்யாமையின் ஆண்டு மனோதத்துவமும் இயங்கவில்லை யென்பது பெற்றாம்; மெய் வாய் கண்மூக்குச் செவி என்னும் ஐந்தறிவுப் பொறிகளும் தொடுதல் சுவையறிதல் காண்டல் மோத்தல் கேட்டல் முதலிய தொழில்களைத் தெரிந்து நிகழ்த்தக் காணாமையால் ஆண்டவை உணர்வோடு இயங்க வில்லை யென்பதும் பெற்றாம்; வாய், கை, கால், குறி, குதம் என்னும் ஐந்து தொழிற்பொறிகளும் பேசுதல் இடுதல் ஏற்றல் நடத்தல் ஓடல் கழித்தல் முதலிய தொழில்களை அறிந்து இயற்றா மையால் ஆண்டவை உணர்வோடு இயங்கவில்லை யென்பதும் பெற்றாம்; இனி மண் புனல் அனல் கால் வெளி முதலியவற்றின் கூறுகளான உறுப்புகள் தம்மாற்றிரண்ட உடம்பில் தத்தமக்குரிய தொழிற் கண்ணே இறைவன் ஆணைவழி நின்று தொழிற் படுதலின்றித் தாமாகவே இயங்கி உயிர்க்கு முயற்சியினை எழுப்புதல் ஒருவாற்றானும் பெறப்படா மையின் ஆண்டு அம்மகவின் அழுகை முயற்சி முதலியன அவ்வைம்பூதபரிணாம வுறுப்புகளால் எழுந்தன வல்ல வென்பதும் பெற்றாம். பெறவே, இவ்விருபத்து நான்கின் வேறாக அம்முயற்சியை அம்மகவின் மாட்டுத் தோற்றுவித்தற்கு வேறொரு நுண்ணிய தத்துவம் இன்றியமையாது வேண்டப் படுவதேயாம். அற்றன்று, குண தத்துவங்கள் மூன்றனுள் இராசதம் உயிர்க்குச் சுருசுருப்பினை விளைப்பது என்று மேற் கூறினமையின், ஆண்டு அதுவே அம்மகவின் மாட்டு அம் முயற்சியினைத் தோற்றுவிக்கு மென்றலே அமையுமாகலின், இவ்விருபத்து நான்கின் வேறான பிறிதொரு தத்துவம் அதற்கு வேண்டுமெனல் மிகையாய் வழுவாமாலெனின்; அறியாது கூறினாய். நான் என்னும் உணர்வும் பகுத்தறிவு முடைய உயிர்கள்மாட்டுத் தோன்றும் சுருசுருப்பே இராசதகுணம் எனப்படுவதன்றி அவை யிரண்டும் நிகழாப்பருவத்தே தோன்றுவது இராசதத்தின் காரியமென்றல் பொருந்தாது; அற்றாயின், அவையிரண்டு மில்லா விலங்கினங் கண் மாட்டு, இராசதம் உண்டென்று மேற்கூறியது முன்னொடு பின் மலையுமாலோவெனின், விலங்கின்கண்மாட்டு நான் எனும் உணர்வும் பகுத்தறிவும் முற்றுமில்லை யென்றல் காட்சி யளவைக்கு மாறாம்; என்னை? இஞ்ஞான்றைப் பிராணிநூல் வல்லார் அவைதமக்கும் அவையிரண்டு முண்டென்பதை நிறுவுதலானும், நாய், குதிரை முதலியவற்றிற்கு அவையுண் டென்பது அனுபவத்தில் நாளுந் தெளியக்கிடத்தலானும் மக்கட் பிறவியில் நிகழும் அத்துணை விலங்கினங்களில் நிகழா வென்பதே கருத்தாகலின் மாக்களிற் காணப்படும் இராசதமும் அவ்விரண்டன் சேர்க்கையோடு நிகழுமென்பதே துணிபொரு ளென்க. இனிச் சத்துவமுந் தாமதமுந் தோன்றாக் குழவிப் பருவத்தே அவற்றோ டினப்பட்ட இராசதமாத்திரந் தோன்று மென்றல், கண்ணுங் காதும் இயங்கா அப்பருவத்தே அவற்றோ டினப்பட்ட வாய்மாத்திரம் பேசுமென்பதனை யொத்துப் பொருந்தாதாய் முடியுமாகலின் அது வழுவாமென மறுக்க. அற்றேலஃதாக, குணதத்துவத்தினின்று புத்தியும் அதனிலிருந்து அகங்காரமுந் தோன்றுமெனக் கூறினமையின், பகுத்தறிவும், நானெனு முணர்வும் தோன்றுதற்கு முற்றொட்டே குண தத்துவம் இயங்குமென்பதூஉம், அஃது இயங்கவே அதன் ஒரு கூறான இராசதம் சுருசுருப்பினை உயிரினிடத்தெழுப்பு மென்பதூ உம் பெறற்பாலனவாமாகலின் அவை இரண்ட னோடுங் கூடியே குணதத்துவம் இயங்குமென்றல் வேண்டா கூறலாமெனின்; நன்று சொன்னாய்; குணத்திலிருந்து புத்தியும், புத்தியிலிருந்து அகங்காரமுந் தோன்றுமென்றதும், அவை ஒடுங்குங்காலும் அம் முறையே ஒடுங்குமென்றதும் அவற்றின் தோற்ற வொடுக்க முறையைத் தெரித்ததேயன்றி. அத்தத்துவங்க ளெல்லாம் முற்றும் அமைந்த இவ்வுடம்பகத்தே அவற்றுள் ஒன்று சிலகாலம் முன்னியங்கும் ஒன்று சில காலம் பின்னியங்கு மெனக் கூறிய தின்று; அவையியங்குங்கால் ஒன்றனையொன்று பற்றிக் கொண்டு எல்லாம் ஒருவரிசைப்படப் படிப்படி இயங்குதலே அனுபவத்திற்றெளியக்கிடந்த வுண்மையாம். ஒரு வரிசையாப் படிப்படியே இயங்குமென் றுரைப்பினும் ஒன்று முன்னும் ஒன்று பின்னும் இயங்குமென்பதே பெறப்படுமா லெனின்; அறியாது கூறினாய், ஒருவரிசை யென்றது உயிரினறிவு ஒரு தத்துவத்தைப் பற்றியக்கால் அதன் கண்ணே நெடுங்காலம் நில்லாது மிக்கு விரைந்து ஏனை எல்லாத் தத்துவங்களையும் இயக்குதலையாகலின், இங்ஙனம் ஒன்றனை ஒன்று அவாவாது முன்னர் நெடுங்காலம் ஒன்றிலும் பின்னர் நெடுங்காலம் ஒன்றிலும் நின்றியங்குவதுபோல் வைத்து ஆண்டு முற்பிற்பாடு கற்பித்தல் ஒருசிறிதும் பொருந்தாதென்றோர்க. இசை வல்லான் ஒருவன் இனிது பாடுதலை ஒருவன் கேட்கச் சென்றவழி ஆண்டு அவன்மாட்டுக் கேட்குஞ் செவியுணர்வும், அதனைப்பற்றி நிற்கும் மனமும், அவ்விசை வேறுபாடுகளைத் துணிந்தின்னதிது வெனும் புத்தியும், அதனை முனைத்துக் கேட்கும் அகங்காரமும், அது தன்னைக் கேட்டதாற் பிறக்குஞ் சத்துவகுணமும் ஒருவரிசைப் பட நிகழல் காண்க. அற்றேல், இவ்வுதாரணத்தின் கண் ஐந்து தத்துவங்கள் மாத்திரையே ஒன்றனையொன்று பற்றி ஒருவரிசைப்பட இயங்குதல் கண்டாமன்றி, ஏனைப் பத்தொன் பதும் நடைபெறக் கண்டிலமாலெனின், அற்றன்று, உயிரின் அறிவு நடைபெறுதற்குக் குணம் புத்தி அகங்காரம் மனம் என்னும் நான்கு அகக்காரணங்களும் இன்றியமையாதன வாகலின், அஃதொரு புறக்காரணத்தைப் பற்றுதற்பொருட்டு இவை நான்கும் படிப்படியே மிக்கு விரைந்து இயங்குவவாயின; இவை நான்கன் சேர்க்கையால் ஏனைப்புறக்காரணங்களுள் எஃது எக்காலத்தியங்கல் வேண்டுமோ அஃது அக்காலத்தி யங்கும்; எனவே, உயிரினறிவு நிகழ்ச்சிக்கு இன்றியமையாத னவாம் இந்நான் சுகக்கருவிகளுமே ஒன்றனையொன்றவாவி ஒருங்கு நிகழுமல்லாமல், இவற்றான் ஏவப்படும் ஏனைப் புறக்கருவிகள் பத்தொன்பதும் ஒருவரிசைப்பட நிகழுமென்பது <.ண்L¡ கூறியதன் கருத்தன்றெனக் கடைப்பிடிக்க. அங்ஙன மாயினும், ஒருவனிடத்துச் சத்துவகுணந் தோன்றுங் கால் ஏனை இராசத தாமதங்கள் உடன் றோன்றாமையானும், உடன் றோன்றுமெனின் அதனைச் சத்துவம் என்றுரைத்தல் அமையா மையானும் ஆண்டு இந்நியதி பெறப்பட்டிலதாலெனின், அற்றன்று, ஒருவன் ஒன்றை அறியுமுன்னுஞ் செய்யும் முன்னும் வாளாவிருத்தலின் ஆண்டுத் தாமதமும், பின்னர் அறிதற்குஞ் செய்தற்கும் மனவெழுச்சி கொளப்பெற்றக்கால் ஆண்டு இராசதமும், அதன் பின்னர் நற்குண நற்செய்கை தோன்றியக் கால் சத்துவமும் ஒன்றனையொன் றவாவி ஒருவரிசைப்பட நிகழக் காண்டலால் ஆண்டும் அந்நியதி பிறழ்ந்த தின்றென்க. என்றிக் கூறியவாற்றால், இராசதம் நிகழுங்கால் அதனோடு இயையுடைய ஏனை அகக்கருவிகளும் ஒன்றன்பின் ஒன்றாய் ஒரு வரிசைப்பட மிக்கு விரைந்து நடைபெறல் வேண்டுமென்ப தூஉம், பிறந்த மகவின்மாட்டக் காணப்படுஞ் சில முதன் முயற்சிகள் இராசத குணஇயக்கமென் றுரைப்பின் அதனைப் பற்றித் தொடர்புற்றுத் தோன்றற் பாலனவாம் பகுத்தறிவும் நான் என்னும் உணர்ச்சியுங் காணப்படுதல் வேண்டு மென்பதூஉம், அங்ஙனம் அவை அம்மகவினிடத்துத் தோன்றக் காணா மையான் அம் முதன் முயற்சி இராசதகுண தத்துவத்தின் காரியமாதலின்றி அதனினும் மற்றை இருபத்துமூன்று தத்துவங்களினும் வேறான மிகநுண்ணிய கலாதத்துவத்தின் காரியமே ஆகற்பால தென்பதூஉம் இனிது பெறப்பட்டன. இவ்வாறு பிறந்த குழவியின் மாட்டுக் காணப்படும் அழல் பால்பருகல் முதலான முதன் முயற்சிகளைத் தோற்றுவித்தற் கருவியானது கலை என்னுந் தத்துவமே யாதல் பெறப்படவே மண்முதன் மூலப்பகுதி யீறான இருபத்துநான்கு தத்துவங் களுட் படாத அம்முயற்சிக்குக் காரணமாம் அது அவ்விருபத்து நான்கின் வேறேயாய் உண்டென்பதுந் தானே பெறப்படும். இனித் தன்கீழ் நின்ற இருபத்து மூன்று தத்துவங்கட்குத் தான் பிறப்பிடமாய் நிற்கும் மூலப்பகுதி பெரிதுஞ் சூக்கும மாவதொரு காரணப் பொருளே யாயினும், அது தன்னினுஞ் சூக்குமமான இக் கலாதத்துவத்தை நோக்கத் தூலமாய் நிற்றலின் அஃது அதனின் காரியமாமென்றல் சிறிதும் மறுக்கப்படாத உண்மையாம். ஆணவமலமென்னும் வல்லிருளின் வாய்ப் பட்டு அறிவிச்சை செயல்கள் முழுதும் இழந்து கிடந்த உயிர்கள், இக்கலை என்னும் நுண்பொருளுதவியால் அவ்விருளினின்றுஞ் சிறிது விலகவே தஞ்செயல் மின்மினி விளக்கம் போலச் சிறிது தோன்றப்பெறும். இங்ஙனம் அண்டபிண்டங்க ளிரண்டினும் மூலப் பிரகிருதி முதல் இருபத்து நான்கு தத்துவங்களும் பிறத்தற்குக் காரண மாயிருக்கும் இக்கலை என்னும் மிக நுணுகிய பொருள் உயிர்கள் எல்லாவற்றின் உடம்புகளினும் அமைந்திருத் தலாற்றான், அவ்வுயிர்கள் தாய்க்கருப்பை யினின்றும் அகன்று இந்நிலத்திற் பிறந்த மாத்திரையானே சுருசுருப்பு டையவாய் வாய்திறந்தழுதலும் பாலுண்டலுஞ் செய்து போதருகின்றன. இனி இம் முயற்சி அடுத்தடுத்து நிகழவே, இதன் வாயிலாகப் பின்னர்ச் சிறிது காலத்து ளெல்லாம், பிறந்த அவ்வுயிர் கண்மாட்டுச் சிறிதறிவு முகிழ்ப்புங் காணப்படுகின்றது. குழவிப்பருவத்தே முகங்காட்டும் அவ்வறிவு யாதோ வெனின், பசிப்பிணியாற்றாது வாய் திறந்து அழும் மகவு பாலூட்டுந் தன்றாய் தன்னருகே வந்து தன்னை யெடுத்தலும் அவ்வழுகை தீர்ந்து பால் பருகுதற்கண் முயற்சி யுடைத்தாதலை உற்றுணர வல்லார்க்கு, அம் முயற்சிக் கட்டோன்றும் அறிவின் பெற்றி இனைத்தென விளங்கா நிற்கும். இனி, உயிர்கண்மாட்டு முதன் முயற்சியினைத் தோற்று விக்குங் கருவி கலையென்னுந் தத்துவமாமேல், அதனை யடுத்து அதன் பின்னதாய்த் தோன்றும் மிகச் சிறிய இவ் வறிவினை எழுப்புதற்கும் ஒரு கருவி வேண்டப்படுமாலோ வெனின், அஃதன்றே வித்தை என்னும் தத்துவமாமென்பது; இஃது, அறி அறிவி எனப் பொருள்படும் வித் என்னுந் தாதுவிற் பிறந்த வித்யா என்னும் வடசொற்றிரிபான வித்தை என்னும் பெயராற் றமிழில் வழங்கப்படுவதாகும். ஆணவ இருளில் அழுந்தி ஏதுமே விளங்கப் பெறாது கிடந்த உயிர்க்கு முயற்சி யினை எழுப்பக் கலை யென்னுங்கருவி வேண்டப்பட்டாற் போலவே, அம்முயற்சியின் வழித்தாக முகிழ்த்த அறிவினைத் தோற்று வித்தற்கும் இவ்வித்தை என்னுந் தத்துவம் இன்றியமையாது வேண்டப்படும். அற்றன்று, மூலப்பகுதியின் குணதத்துவத்திற் றோன்றுவ தென்று மேலே குறிக்கப்பட்ட புத்தி தத்துவமே பிறந்த மகவின் மாட்டு அச் சிற்றறி வினையும் எழுப்புதற்கு வல்லுமாகலின், இதன் பொருட்டு வேறு மொரு கருவியினை அவாவுதல் அமையாதாலெனின்; அறியாது கடாயினாய்; குண தத்துவத்தின் பின்னதாய் அக் குணதத்துவத்திற் றோன்றி இன்னதிதுவெனப் பொருட்டுணிவு பெறுவிக்கும் புத்தி தத்துவம் அக்குணமே புலப்படாத குழவியின் மாட்டு வெளிப் பட்டு நின்று அச் சிற்றறிவினையும் பயப்பிக்கு மென்றல் பொருத்தமில் கூற்றாம். அற்றாயினும், பிறந்த மகவு ஏதுஞ் செயலின்றிக் கிடந்த நிலையே தாமதகுண தத்துவத் தொழிலென்றும், அது பசியால் உந்தப்பட்டு அழுதலும் பால் பருகுதலுமே இராசதகுணத் தொழிலென்றும் பாலுண்டபிற் சிறிது மகிழ்ந்து அமைதியாயிருந்த நிலையே சத்துவத்தின் றொழிலென்றும் உரையாமோவெனின்; உரையாம், என்னை? பிறந்த மகவின்மாட்டு உறங்குதலொன்று, அல்லது அழுது பாலுண்டல் ஒன்று என்னும் இருதிற நிலையேயன்றி, அவ்வாறு முத்திறநிலை காணப்படுதல் இல்லாமையான் என்க. பிறந்த மகவு பெரும் பாலும் ஆணவவிருளிலே அயர்ந்து உறங்குகின்றது; பசியெடுத்த பொழுது மாத்திரமே அழுது பாலுண்கின்றது; பாலுண்டு பசி தணிந்த வளவானே மறித்தும் உறங்குகின்றது; இங்ஙனம் உறங்குதற்கும் அழுது பால் பருகுதற்கும் இடையே மகிழ்ந்து அமைதி பெற்றிருக்கு நிலை பிறந்த சில நாட்கள் காறும் அதன்பாற் காணப் படாமை அனுபவமுடையார்க் கெல்லாம் தெரிந்ததோர் உண்மையே யாம். மகிழ்ந்து அமைதியுற்றிருக்குஞ் சத்துவ நிலை அதன்பால் இல்லாதாகவே, அதனோடு இயை புடைய ஏனை இராசத தாமத நிலைகளும் ஆண்டதன் கண் இல்லையாவது தேற்றப் பொருளேயாம். மற்று அதன்கட் டோன்றிய அழுது பாலுண் முயற்சி கலாதத்துவ இயக்கமே யாதல் மேற் காட்டப் பட்டமையின், எஞ்சி நின்ற உறக்கம் எதன் காரியம் என்பது மாத்திரமே ஈண்டு ஆராயற்பாற்று. பிறக்குமுன் ஆணவத்தின் வயப்பட்டு அறிவிச்சை செயல்கள் ஒருங்கிழந்து கிடந்த உயிரினிலைக்கும், பிறந்த சில நாட்கள் வரையும் அங்ஙனமே அவை விளங்கப் பெறாது உறக்கத்தின் கட் கிடக்கும் மகவின் நிலைக்கும் வேறுபாடு ஒரு சிறிதுங் காணப்படாமையின், உறக்கத்தி லிருக்கும் மகவின் நிலை ஆணவவிருள் நிலையே யல்லாற் றாமதகுண நிலை யன்றென்பது கடைப்பிடிக்க. அல்லதூஉம், நான் எனும் உணர்வோடு கூடி நிகழாது உயிரின்கட் காணப்படும் நிகழ்ச்சிகளை அம் முக்குணகாரிய மென்றல் ஏலாமையும் மேலே இனிது விளக்கிப் போந்தாம். இங்ஙனம் அக் குழவியின் மாட்டு முக்குண நிகழ்ச்சியில்லை யாதல் ஐயுற வின்றி நிறுவப்படவே, அவற்றுட் சத்துவகுண ஏற்றத்தாற் றோன்றி இயங்கும் புத்தி தத்துவ நிகழ்ச்சியும் அதன்கண் இல்லை யென்பது தானே பெறப்படும். பெறப்படவே, பிறந்த மகவின் மாட்டுத் தோன்றுஞ் சிற்றறிவு நிகழ்ச்சிக்குக் காரணம் புத்திதத்துவ மன்றாதல் தெள்ளிதிற் புலப்படும். அற்றேலஃதாக, புத்தி தத்துவமும் உயிரின் அறிவு நிகழ்ச்சிக்குக் காரணம், வித்தியா தத்துவமும் அதனறிவு நிகழ்ச்சிக்குக் காரணம் என்று ஒன்றற்கே இரண்டு காரணங் கொள்ளப்பட்டு வழுவாமாலெனின்; நன்று கூறினாய், இஃது இதனையொப்பது எனவும் இஃது இதனின் வேறு எனவும் ஒற்றுமை வேற்றுமை காணுமுகத்தால் ஒரு பொருட்டன்மை துணிவிக்கும் புத்தி தத்துவ இயல்பும், இங்ஙனமெல்லாம் பரந்தாராயும் வன்மையின்றி அறியாமை யிற் படிந்து கிடக்கும் பிறந்த மகவின்மாட்டுக் கனாவின் றோற்றம் போல ஓர் இழைந்த சிற்றறிவினைப் பயப்பிக்கும் வித்தியா தத்துவத்தின் இயல்பும் தம்மின் வேறு வேறாதல் தெளியக் கிடத்தலால் அவை யிரண்டும் ஒரே தன்மையவாங் காரணங்களாதல் யாண்டைய தெனக் கூறிமறுக்க. அற்றாயினும், புத்தி தத்துவ இயக்கத்தாற் பரந்து திகழும் உயிரின் ஆராய்ச்சியுணர்வுக்கு அடிக்காரண மாய், உயிரின்கண் அறிவினை முதன்முதல் எழுப்புவது இவ் வித்தியா தத்துவத்திற்கே யுரிய சிறப்பியல்பாமென்று ஓர்க. மகப்பிறந்த சின்னாள்காறும் அடுத்தடுத்து நிகழும் முயற்சி யனுபவத்தின் பயனாக அம் மகவு தான் அன்னை கையேறு தலும் அழுகை தீருமாற்றை உற்றாராயுங்கால், ஆண்டதற்குப் பசிப்பிணி தீர்ப்ப திதுவெனத் துணிபறிவு தோன்றுமுண்மை புலப்படுதலின் அது புத்தி தத்துவச் செயலேயாதல் இனிது விளங்குமாலோ வெனின்; அறியாது கடாயினாய், ஆண்டது தன்னகத்தே நிகழ்வது பசிநோய் எனவும், அந்நோய் தீர்க்கு மருந்து பால் எனவும், அப்பாலையூட்டித் தன்னை மகிழ்விப் பாள் தன்னை ஈன்றாளே எனவும் இவ்வாறெல்லாம் அறியு மாயினன்றே அதன்கட் டுணிபறிவு தோன்றிய தென்றும் அதனைத் தோற்றுவித்தது புத்தி தத்துவமென்றும் உரைத்த லாம்? அங்ஙனமெல்லாம் பாகுபடுத்தறியும் அறிவு அதன்பால் இல்லையென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின், அது பொருத்தமாதல் யாண்டையதென்க. அற்றேல், அம் மகவின் மாட்டுத் தோன்றும் அவ்வறிவின் இயல்பு தான் யாதோவெனிற் கூறுதும், பசியெடுத்து அழுந்தோறும் அதன் அன்னை அருகே சென்று பாலூட்டும் நிகழ்ச்சி அடுத்தடுத்து நிகழ்தலின், முன் நிகழ்ந்ததனையும் பின் நிகழ்வதனையும் இசைவிப்பதான நினைவு வடிவாய் நடைபெறுதலே அவ்வறிவின் பெற்றியா மென்க. எல்லா அறிவுகளும் எல்லா உணர்வுகளும் ஒரு தொடர்புபட்டு நிற்றற்கு ஒரு பெரு நிலைக்களனாயுள்ளது நினைவறிவேயாதல் எல்லாரானுந் தெளியப்பட்ட முடிபாதலி னாலும், அந் நினைவறிவைப் பிறப்பிப்பது புத்தி தத்துவச் செயலன்மை சாங்கியத்தானும் சைவ சித்தாந்தத் தானும் இனிதுணரக் கிடத்தலினாலும், அவ்வவ்வறிவுகளையும் உணர்வுகளையும் தோற்றுவித்தற்கு அவ்வற்றோடியைந்த தத்துவக் கருவிகள் வேறு வேறாய் அமைந்தாற் போல இந் நினைவறிவைப் பயத்தற்கும் ஒரு கருவி இன்றியமையாது வேண்டப்படுதலினாலும் இதனை எழுப்புவது வித்தியா தத்துவமே யாதல் தெற்றெனத் துணியப்படும். அற்றேலஃதாக, பிறந்த மகவின்மாட்டுக் காணப்படும் இவ்வித்தியா தத்துவம் அம்மகவு பருவமுதிர்ந்து கட்டிளை யோன் ஆயவழி, தன் செயல் இழந்து அவன் மாட்டு ஒடுங்கி நிற்குமென்று கோடுமோ, அன்றி அஃது ஆண்டுந் தன்றொழில் தோற்றுவிக்குமென்றே கோடுமோவெனின்; நன்று வினாயினாய், பருவ முதிருந்தோறும் அவ்வித்தியா தத்துவத் தொழிலும் உடன் முதிர்ந்து தன்னாற் றோற்று விக்கப்படும் நினைவினைப் பெரிதும் உரம்பெறச் செய்து நிற்கும். உற்று நோக்குங்கால் முன் நிகழ்ந்ததனையும் பின் நிகழ்வதனையும் ஒன்று பிணைய இயைவித்து ஆன்ம அறிவில் நிலைப்பிக்கும் நினைவின் செயல் இல்லையாயின், உயிர்க்கு அறிவென்பதே இல்லையாய் ஒழியும். குழவிப் பருவந் தொட்டே இந்நினைவு, அறிவுகளையும் உணர்வு களையும் ஒரு தொடர்பு படுத்து நிலைப்பித்து வருதலி னாலன்றே, ஒருவன் தன்னை இன்னான் என்றும் தான் இத்துணையறிந்தவன் என்றும் உணரப் பெறுகின்றான். ïª Ãidî vtÅl¤J tÈbfh©L ÉFnkh mt‹ fiyPhd îz®¢áí« E©z¿îŠ rh‹wtdhŒ, vtuhD« ‘ït‹ ngu¿t‹! என்று புகழ்ந்தேத்தப் படுகின்றான். இஃது எவன்பாற் குறைவுபட்டு நிற்குமோ, அவன் பொச்சாப்பு மிக்குக் கற்பவற்றை நினைவு கூர மாட்டானாய் அறியாமையாற் பற்றப்பட்டு எல்லாரானும் இகழப்படுகின்றான். அல்லதூஉம், பித்தன் என்போன் யாவன்? நினைவு திரிபெய்தப் பெற்றவன் அல்லனோ? முன் பின் நிகழ்ந்தவை நினைவினால் ஒரு வரிசைப்பட நிறுத்தப் படாமற் பிறழ்ந்து சிதறிக்கலைய, ஏதும் நினைவின்றி மருண்டு பேதுற்றுக் கலங்குவதே பித்துக் கொண்டோன் இயற்கையாகும்; முன் நாளில் நிகழ்ந்த நிகழ்ச்சியுள் ஓரிறைத் துணையும் பின் நாளில் நினைவு கூரப்பெறாது தன்னையே மறந்து திகைப்பவனை எல்லாரும் பித்தனென்றழைத்தல் காண்டுமாகலின், உயிரின்அறிவு நிகழ்ச்சிக்கும் அதன் வளர்ச்சிக்கும் இந் நினைவு இன்றியமை யாக் காரணமா மென்க. ஆகவே, குழவிப் பருவத்தே இவ் வித்தியா தத்துவத்தான் உந்தப்பட்டு எழுந்த நினைவு, ஏனைப் பிள்ளைப்பருவத்தும் இளம் பருவத்தும் ஆண்மைப் பருவத்தும் முறை முறையே முதிர்ந்து திகழுமாகலான், அந் நினைவினியக் கத்திற்கு ஓர் அருந்துணைக் கருவியான வித்தியா தத்துவத் தொழில் எஞ்ஞான்றும் இவ் வுடம்பின் கண் உளதென்பதே தெளிந்த முடிபாம். அஃதொக்குமாயினும், இந் நினைவு மனமென்னுந் தத்துவத்தின் றொழில் போல வைத்து மனமது தைசதத்தின் வந்தொரு பொருளை முந்தி நினைவதுஞ்செய்தங்கைய நிலைமையின் நிற்கு மாங்கே எனச் சிவஞான சித்தியாரின் கண் ஓதப்பட்டவாறென்னை யெனின்; நன்று கூறினாய், ஆண்டு ஓதப்பட்ட முந்தி நினைவதுஞ்செய்வதாகிய மனத்தின் றொழிலாவது ஐம்பொறி வாயிலாக எதிர்ப் பட்டதொரு புறப்பொருட் குணத்தை முன்னர்ச் சென்று பற்றியறி தலையே யாகலின், முன் நிகழ்ந்ததனையும் பின் நிகழ்வதனையும் இணைவிப்பதான வித்தியா தத்துவத்தின் விளைவாகிய நினைவு அதனின் முற்றும் வேறாவதாமென்று பகுத்துணர்ந்து கொள்க; ஈதுணர்த்துதற் பொருட்டன்றே நினைவதுஞ் செய்து என வாளாவோதாது, முந்தி நினைவதுஞ் செய்து என அடை கொடுத் தோதியதூஉ மென்க. பிறந்த மகவின் மாட்டு ஐம்பொறிகள் இருந்தும் அவை யுணர்வோடு கூடி இயங்காமை தேற்றமாகலானும், ஐம்பொறிகள் உணர்வின்றிக் கிடப்பவே அவ்வுணர்வுக்குக் காரணமாம் மனமும் ஆண்டு இயக்க மின்றிக் கிடக்கு மென்பது பெறப்படுமாகலானும் மனத்தின் றொழி லான பற்றுதல் நினைவு வித்தியா தத்துவத்தொழில் நினை வுக்குக் காரணமாகாமையும் உணர்க; மற்று வித்தியா தத்துவத் தொழில் நினைவான் உந்தப்பட்டே ஏனை மனம் புத்தி முதலான தத்துவங்களும் தொழிற்படு மென்க. இனி, முற்பிற்படும் நிகழ்ச்சிகள் அத்துணையும் நினைக்கும் நினைவு வலிபெற வலிபெற அந்நினைவின் வழித் தாகப் பொருள்களை நுகருதற்குரிய விழைவு உயிர்களிடத்துத் தோன்றா நிற்கும். இவ்வியல்பும் பிறந்த மகவின்பாற் காணப்படும் நிகழ்ச்சிபற்றித் துணியப்படும், கலாதத்துவத்தால் முதன்முதல் முயற்சியுடைத்தாகிய மகவு அழுது பாலுண்ணா நிற்கின்றது; இவ்வழுது பாலுண் முயற்சி பசியெடாதவழித் தோன்றாதாகலின், இப்பசியுங் கலாதத்துவத்தின் செயலேயா மென்பதும் ஈண்டே பெறு தும். இனிப் பசித்தழுது பாலுண்ணுந் தோறும், முன்னும் பலகால் இங்ஙனமே பால் பருகிய நினைவு தொடர்புற்று நிகழ அதனால் அம்மகவு பின்னர்ச் சில நாளிலெல்லாம் பால் பருகுதற்கண் விழைவு மிகுதியுமுடைத் தாய்ப் போதரு கின்றது, பிறந்த சின்னாள் காறும் நினைவும் விழைவுமின்றி அழுது பாலுண் முயற்சி மாத்திரம் உடையதாயிருந்த இளங்குழவி அச்சின்னாளுங் கழிந்த பின்னர்ப் பால் பருகுதற்கண் விழைவு முடைத்தாதலை உற்று நோக்க வல்லார்க்கு, இது தனக்கு முற்றோன்றிய நினைவினடி யாகவே வரலாயிற் றென்னு முண்மை இனிது விளங்கா நிற்கும். தனக்கு முற்றோன்றிய முயற்சிக்கும் நினை விற்கும் அவ் விரண்டனையும் எழுப்புங் கலையும் வித்தையும் துணைக் காரணங்களாய் உயிருடன் விரவிநின்றாற் போல வே, இவ்விழைவுந் தன்னைத் தோற்று வித்தற்கு ஒரு கருவியினை ï.ன்றிaikahJ வேண்டி நிற்கும். அக்கருவி தான் யாதோ வெனின், அதுவே அராகதத்துவம் என்று ரைக்கப் படுவதாகும். இச்சை எனப் பொருள்படுவதாகிய ராக எனும் வடசொல் தமிழில் அகரச்சாரியை முதற் பெற்று அராகம் என வழங்குவ தாயிற்று. பொருணுகர்ச்சிக்கண் உண்டாம் வேட்கையை உயிர்கண்மாட்டு விளைவித்து நிற்றலின் இஃது இப்பெயர் பெறுவதாயிற்று. இவ் வேட்கையை எழுப்புஞ் செயல் ஏனைப் பிரகிருதி தத்துவங் களிடத் தில்லையென்பது மேற் போந்த ஆராய்ச்சியுள் இனிது காணக் கிடந்தமையின், இஃதிவ்வராக தத்துவத் திற்கே உரிய சிறப்பியல்பா மென்று ணர்ந்து கோடல் வேண்டும், இனி இவ்வேட்கையும் பொருட் டன்மைகளை நினைவு கூரும் நினைவறிவின் பின்ன தாயன்றி எழக் காணாமையின், இதனைத் தோற்றுவிக்கும் அராகம் அந்நினைவறிவினைப் பயப்பிக்கும் வித்தியாதத்துவத் தினின்றே பிறக்கு மென்பதூஉம் பெற்றாம். இவ்வாறு அராகம் வித்தையினும், வித்தை கலையினு மாகத் தோன்றித் தொன்றுதொட்டே ஆணவமலத்தான் மறைக்கப்பட்டிருந்த ஆன்மாக்களின் இச்சாஞானக் கிரியை களை அவ்வாணவமலத் தடையினின்றுஞ் சிறிது விலக்கி மேலெழச் செய்து விளக்கும் வகை அறியற்பாற்று. இவ்வாற்றாற் றன்விழைவறிவு செயல்கள் விளங்கப் பெற்ற உயிர் பொருணு கர்ச்சிக்கண் முனைந்து நிற்புழி, ஆங்கது புருடதத்துவமெனப் பெயர் பெறாநிற்கும். அறிவிச்சை செயல்கள் விளங்கப் பெற்ற ஆன்மாவே புருடதத்துவமென் றோதப்படுமாயின், பிரகிருதிக்கு மேல் எண்ணப்பட்ட வித்தியாதத்துவங்கள் ஏழனுள் இதனையும் ஒன்றாக வைத்தெண்ணிய தென்னை யெனின்; கலை வித்தை அராகங் களாற் றொழிலும் அறிவும் வேட்கையுந் தோன்றப் பெற்ற உயிர் மூலப் பகுதி முதலாகக் கீழ் நின்ற ஏனை இருபத்து நான்கு தத்துவங்களோடுங் கூடி நின்று போகநுகருமிடத்து அம்மூலப் பகுதியின்கண் ஒரோ ஒருகாற்றோன்றும் மயக்கவுணர்வான் மயங்கி அறிவில்லாச் சடப்பொருள் போல் நிற்றலும் உண்மையால் அஃதங்ஙனம் புருடதத்துவ மென்றுரைக்கப்படுவதாயிற்று; அத்துணையே யன்றி இப்புருட தத்துவம் ஏனையபோல் வெறுஞ் சடப் பொருளன்று. விழை வறிவு செயல்கள் விளங்கியவழித் தானும் ஓர் அறிவுப் பொருளெனக் காட்டுதலானன்றே அவ்வுயிர் புருட தத்துவ மெனப் படலாயிற்று; அஃதவ்வா றாக, அவற்றை இழந்து அஃதொ ரோவழி மயங்குதலானும் அப்பெயர் பெறலாயிற்றென முன்னேதுவொடு மாறுகோளுறும் வேறோர் ஏதுக்கூறுத லென்னையெனின்; அறிவிச்சை செயல்கள் விளங்குதற் கேதுவாகிய தத்துவங் களே ஒரோவழி அவற்றை மயக்குதலுஞ் செய்து போதரல் அனுபவத்தான் அறியக் கிடத்தலின், அத்தத்துவவியல்பு பற்றி அவற்றோடி யைந்து நிற்கும் ஆன்மாவும் இருவேறியல்பின தாவதைத் தெரித்ததே யன்றி, முற்கூறிய வேதுவொடு பிற் கூறியது மாறுபட வைத்ததன்று. ஓர் அழகிய வாவியிலே பளிங்கு போற்றெளிந்து நிற்கும் நீர் கரைமருங்கே யுள்ள மரஞ்செடி கொடிகளின் வடிவத்தைத் தெளிவுபெறக் காட்டுமாயினும், அந்நீர் காற்றால் அலைக்கப்பட்டு அசையுங்கால் தன்கட் டோன்றும் வடிவங்களைத் தானும் அலைத்து விகார முறுத்தல்போல, ஆன்ம ஞானம் முதலியன விளங்குதற் கேதுவாகிய இக்கருவிகளே ஒரோவழி அவை விளங்காமற் றடை செய்து உயிரைக் கட்டுறுத்துதலும் உடையவாம். இன்னுஞ் செப்புக் கலமொன்றனைத் தேய்த்து ஒளிபெறச் செய்யும் புளி சாம்பற்பொடி முதலியன நீராற் கழுவப்படாமல் அதன் மேலிருக்குமாறு விடப்படின், ஒளிதுலக்கிய அவையே அவ்வொளியினை மலக்குதலுங் காண்டுமன்றே! நெற்றாள் அரிதற்குக் கருவியான மள்ளர் கையிற் றரப்பட்ட அரிவாள் அவர்தம்முட் சினந்து மலைந்த வழி அவர் தம்முடம்பைச் சிதைத்தற்குங் கருவியாதல் கண்டாமன்றே! பைங்கூழை வளர்த்தற்குதவியாகப் பெருகும் நீர் தன் அளவின் மிக்குப் பெருகுமாயின் அதுவே அப்பைங் கூழினை அழித்தலுங் காண்டுமே! ஒளிதருதற்கும் உணாப் பொருள் அடுதற்கும் வாய்த்த தீயே ஊரை எரித்தற்கும் உடம்பைச் சுடுதற்கும் முனைவ துண்மையன்றே! எவ்வுயிரும் உடம்பின் நிலைபெறுதற்கு இன்றி யமையாததான வளி தன்னிலை திரிந்து கடுகி யியங்குமாயின் எவ்வகைப் பொருளையும் நிலைதிரித்துச் சிதைத்தலும் ஓரோவொரு கால் நிகழ்தல் அறிந்தாமே. இருந்தவாற்றால் தம் அறிவிச்சை செயல்களின் விளக்கத்திற்குக் காரணமாம் கலை வித்தை அராகம் என்னுஞ் சூக்கும தத்துவங்களோடு பொருந்திப் பின்னர் அவ்வுயிர்கள் பிரகிருதி தத்துவங்களோடு இயைந்து பொருள்களை நுகரும் வழி அவற்றின் சேர்க்கையால் ஓரோ வழிப் பிறக்கும் மயக்கவுணர்வின் பாற்பட்டு அவை மயங்கு தலும் இயல்பேயாமென்க. ஆதலினாற்றான் உயிராண்மை முனைத்து நிற்றற்கேதுவாகிய புருட தத்துவம் சித்துப் பொருளே யாயினும், அஃதில்லாச் சடப்பொருளே போல் வைத்து வித்தியாதத்துவங்களுள் ஒன்றாக எண்ணப்படுவ தாயிற்று. அஃதங்ஙனமாயினும், இத்தத்துவங்களான் விளங்கிய அறிவுடைய உயிர் பெயர்த்தும் அவற்றான் அவ்வறிவு மயங்குதறான் என்னையோ வெனின் கூறுவாம். உயிர்கள் சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடைய பளிங்குபோல்வன மாம். ஆனதனால் அவை எவ்வெப் பொருள்களைச் சார்ந்து நிற்கின்றன, அவ்வப் பொருட் டன்மைகளைத் தாம் எளிதிலே பற்றிக் கொள்ளா நிற்கும். இனி இவ்வுயிர்களாற் சாரப்படுவன முழுமுதலறிவுப் பொருளாகிய கடவுளும், இருவினைகளும் ஆணவமலமும், மாயையுமேயாம். இவற்றுட் கடவுள் தன்னைச் சாரும் உயிர்களைத் தன்போல் முற்றறிவுடையனவாய் விளங்கச் செய்யும்; இருவினைகள் இன்ப துன்பங்களின் நுகர்ச்சியை அவைகள் மாட்டு விளைவிக்கும்; ஆணவமலம் உயிர்களின் அறிவிச்சை செயல்கள் சிறிதுங் காணப்படாவாறு அவற்றை முழுவதும் மறைத்து நிற்கும்; மாயை உயிர்களின் விழைவறிவு செயல்கள் சிறிது விளங்குமாறு செய்வதோடு ஒரோவழி அவற்றை மயக்குதலுமுடைத்து. இருவினைகளைச் சார்ந்து நிற்குங் காறும் ஆன்மாக்கள் அவற்றோடொத்து இன்ப துன்பங் களிற் பட்டுழலும்; ஆணவமலத்தைச் சார்ந்துநிற்கும் காறும் தம்மியல்பெல்லாம் ஒருங்கே மறைக்கப் பட்டுக் கற்போற் கிடக்கும்; மாயையைச் சார்ந்துநிற்குங் காறும் தஞ்செய லறிவு வேட்கைகள் ஒருபுடை விளங்கப் பெற்று மயங்கும்; எல்லா அறிவுமுடைய கடவுளைச் சார்ந்த வழி அதனியல் போடொத்து முழுதும் தம்மறிவிச்சை செயல்கள் விரிந்து திகழப் பெறுவனவாம். ஆகவே, சிறுபான்மை அறிவிச்சை செயல்களை விளக்கும் மாயாதத்துவங்களைச் சார்ந்து நிற்கும் வரையும் உயிர்கள் சிறுபான்மையே அவை விளங்கப் பெற்று ஏனைப் பெரும்பான்மை மயக்கமுற்றே போதரும். எனவே, பேரறிவினைப் பயப்பிக்கும் கடவுளை அணுகு தற்கே வேட்கையும் முயற்சியும் உடையவாய், மாயா தத்துவங்கள் தமது நோக்கம் முற்றுப் பெறுதற்கு உதவியாக வாய்த்த துணைக்கருவிகளேயல்லாமல் அவை தாமே தமக்குப் பேரறிவினையும் பேரின்பத்தினையும் பயவாவாக லான், உயிர்கள் அவற்றின்கட் சிறிதும் பற்றுவையாதனவாய் ஒழுகல் வேண்டுமென்பதும் தானே போதரும் என்க. உயிர்கள் இங்ஙனம் மாயா தத்துவங்களிற் பற்றுவையாது அவற்றின் பெற்றிகளைப் பகுத்தறிந்தொழுகத் தலைப் படுமாயின் அவை அவற்றான் மயக்கமுறா. இவ்வாறு பகுத்தறிந்தொழுகு நன்முறையை விடுத்து இத்தத்துவங்களையே தமக்கினிய உறுபெரும் பொருளாக நினைந்து அவற்றின்கட் பற்று நனி வைத்து ஒழுகுதலானன்றே. அவை அவற்றி னியற்கையைத் தாமும் பெற்று மயங்கி மயங்கித் திரிதருகின்றன வென்க. அது கிடக்க. .இனிக் கலை வித்தை அராகம் முதலான இத் தத்து வங்கள் மாயையினின்றுந் தோன்றினாற் போலவே காலம் நியதி யென்னும் வேறிருதத்துவங்களும் அதன்கட்டோன்றா நிற்கும். அவ்விரண்டனுட் காலம் என்னுந் தத்துவ இயல் பினை முதலில் ஒரு சிறிது விரித்துரைப்பாம். உலக வொழுக் கத்தின்கட் காலம் என்பது ஞாயிறு திங்கள் முதலான கோள்கள் உடுக்குழாங்கள் என்னும் இவற்றது இயக்கத்தான் அளந்தறிப் படுவதொன்றாய் வழங்கப்பட்டு வருதலல் லாமல், இவ்வியக்கத்தின் வேறாத் தனித்தொரு முதற் பொருளாய் அஃதியாண்டும் எவரானும் அறியப்பட்ட வாறில்லை. இஞ்ஞான்றை மேற்றிசை யறிஞர் இயற்றிக் கொணர்ந்த கடிகாரப் பொறியும், பண்டைக் காலத்துத் தமிழ்மக்கள் இயற்றி வழங்கிய நாழிகை வட்டிலும் கோள்கள் உடுக்கூட்டங்களின் உதவியை அவாவாதும் நாம் காலத்தை அளந்தறிதற்குரிய கருவிகளாம். இவ்வாறு இயற்கைப் பொருள் செயற்கைப் பொருள் என்னும் இவற்றின் இயக்கங் களைக் கருவியாகக் கொண்டு குறித்து ணரப் படுவதன்றி இவற்றின் வேறாகக் காலமென்பது சிறிதும் அறியப்பட்ட தொன்றன்றாம். ஞாயிறு நேற்றுத் தோன்றி மறைந்த காலவெல்லையை இறந்த காலமென்றும், அஃது இற்றைக் காலையிற் றோன்றி நடந்து செல்கின்ற நாளின் பகுதியை நிகழ்காலமென்றும், அது நாளைத் தோன்றி இயங்குவதான பொழுதை வருங்கால மென்றும் அக் காலத்தினை மூன்று கூற்றுட்படுத்து எல்லாரும் வழங்கி வருகின்றனர். இன்னும் இதனை நுனித்துக் காணுங்கால் ஒரு பொருள் ஓரிடத்தை விட்டுப் பிறிதோரிடத்திற்குப் பெயர்ந்து செல்லும் புடை பெயர்ச்சியே இயக்கம் எனவும், இவ்வியக்கத்தின் றொடர்ச்சியே காலம் எனவும் பகுத்தறிந்து கொள்ளல் வேண்டும். ஓர் ஊரினின்றும் ஏனையோர் ஊருக்குட் பாண்டில் ஈர்த்துச் செல்லும் பகட்டின் இயக்கத்தை உற்று நோக்குவார்க்கு, அது புறப்படும் இடம் முதற் போய்ச் சேரும் இடம் வரையிலுள்ள வழியும், அவ்வழியூடு செல்லும் பாண்டிற் பகடும் ஒரு கால அளவினைத் தோற்றுவித்தற்குரிய கருவிகளாந் தன்மை இனிது புலப்படும். அவ்வழி முழுவதனையும் பெருவிரல் அளவுள்ள இடங்களாகப் பகுத்து வைத்துக் கொண்டு, அச்சிறிய இடம் ஒவ்வொன்றனையுந் தொட்டுத்தொட்டு முற்சென்ற பாண்டிற் பகட்டின் இயக்கத்தையும் பகுத்துப் பகுத்துக் காண்டுமாயின், அது தொட்டுக் கழிந்த இடங்கள் வாயிலாக உணரப்படுங் காலவெல்லை இறந்த காலமாய் முடியுமென்பதூஉம், அதனால் இனித் தொடப்படும் இடங்கள் வாயிலாக உணரப்படுங் காலவெல்லை வருங் காலமாகக் கருதப் படுமென்பதூம் தெளிதுமன்றே? இன்னும் இதனை விளக்கிக் காட்டலுறின்; அப்பாண்டிற் பகடு சென்ற வழி பன்னீராயிரம் விரலளவு கொண்டதென வைத்துக் கொள்வம். இப்பன்னீராயிரம் விரலளவுள்ள வழியின் சிறிய சிறிய இடங்களையும் ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு என்றற்றொடக்கத்தனவாக இலக்கங் குறித்து, அவ்வழியே பகட்டால் ஈர்க்கப்படும் பாண்டில் உருள்களின் புறச்சுற்று முழுதும் விரலளவு விரலளவு கொண்ட இடங்களாகப் பகுத்து அங்ஙனமே இலக்கங் குறித்துக் கொள்க. அதன் பின்னர் அப் பகட்டை உந்தி அப் பாண்டிலைச் செல்லவிடுத்துப் பார்ப்பின், உருளின் முதலிலக்கமிட்ட இடமும் வழியின் முதலிலக்கமிட்ட இடமும் தம்மிற் பொருந்தியது ஒருகால வெல்லையாம்; அங்ஙனமே இரண்டு மூன்று நான்கு முதலான அவ்விடங்கள் தம்மிற் சிறிது சிறிது பொருந்திக் கழிந்த அவையெல்லாம் தனித்தனிக் காலவெல்லைகளாம். உருளின் முதலிலக்கமும் வழியின் முதலிலக்கமும் தம்மிற் பொருந்திப் பின் இரண்டாம் இலக்கம் பொருந்துங் கால் முதலிலக்கம் இறந்த காலமாயிற்று; இரண்டும் இரண்டின் பின்னுள்ள இலக்கங் களும் வருங் காலமாம் இவ்வாறே இரண்டிலிருந்து மூன்றும் மூன்றிலிருந்து நான்கும் பொருந்தப் போங்காற் பொருந்திக் கழிந்த இரண்டு மூன்று முதலான இடங்கள் கழிந்த காலத்தினையும் இனிப் பொருந்துமிடங்கள் வருங்காலத்தி னையும் உற்று நோக்குவார் உணர்வின்கட் பயப்பிக்கும் இங்ஙனம் நுணுகி நோக்கவே, கழிந்தன வெல்லாம் இறந்த காலமும் இனி வருவனவெல்லாம் எதிர் காலமும் எனக் காலம் இரண்டாயே அடங்குமென்பதும் பெறப்படும். கால வெல்லையின் மிகச் சிறிய கூற்றினைப் பகுத்துக் காணுங்கால் நிகழ்காலமென வொன்றில்லை யென்னும் உண்மையும் புலனாகா நிற்கும். இது பற்றியே ஆசிரியர் சேனாவரையர் தொழிலாவது பொருளினது புடைபெயர்ச்சி யாகலின் அஃதொரு கணம் நிற்பதல்லது இரண்டு கணம் நில்லாமையின் நிகழ்ச்சியென்பது அதற்கொன்று இல்லை1 என்றுரை கூறினார். அற்றேல், நூல் வழக்கினும் உலக வழக்கினும் நிகழ்காலம் என ஒன்று வழங்கி வருதறான் என்னை யெனின்; அடுத்தடுத்துக் கடுகி திகழும் பொருணிகழ்ச்சிக் கண் முன் நிகழ்ந்ததிது பின்னிகழ்வதிது வெனப் பிரித்தறிதல் ஏலாமையின் ஒரு தொகுதித்தாம் வினை நிகழ்ச்சி பற்றி நிகழ் காலம் என்பதும் ஒன்றுண்டென அவ்வாறு வழங்கி வருகின்றனர். ஆயினும், கால வெல்லையின் சிறுமையை, மிகச் சிறிய இடத்தினும் அதனை விரைவிற் கடந்துபோம் பொருணிகழ்ச்சி யினும் வைத்து நுனித்தறிவார்க்கு நிகழ்காலமென ஒன்று இல்லை யாதல் தேற்றமேயாம். இது கிடக்க. இனி ஈண்டுக் காட்டிய உவமைக்கண் பாண்டிலும் அதனை ஈர்க்கும் பகடும் அவ்வழியே செல்லாமல் வறிதே ஓரிடத்து இருந்தனவாயின், அவற்றின் இயக்கத்தான் அறியக் கிடந்த காலம் என்பதன் இருப்புச் சிறிதும் புலனாகாதன்றே? அற்றன்று, ஞாயிற்றின் இயக்கத்தால் பகற் பொழுதின் கால அளவும், ஏனைக் கோள்களின் இயக்கத்தால் இராப் பொழுதின் காலவளவும், இவ்விரண்டினியக்கந் தெரியப் படாத மழை காலத்தில் நாழிகைவட்டில் முதலான கருவிகளின் இயக்கத்தால் அவ்விருபொழுதுகளின் கால வளவுந் துணியப் படுமாம் பிறவெனின்; நன்று கடாயி னாய், இப்பொருள்கள் எல்லாவற்றின் இயக்கமுமே இல்லா தொழியின் இவை கொண்டு துணியப்படுங் காலம் என்பதன் இருப்பு யாங்ஙனம் பெறப்படுமோ வென்பது, அற்றாயின், காணப்படும் உலகம் வாயிலானன்றே காணப் படாத கடவுளின் இருப்புத் துணியப் படுகின்றது? இனி உலக மின்றாயின் இறைவனிருப்புந் துணியப் படாது கொல்லோ வெனின்; அறியாது கூறினாய்; நேர்முகமாக இறைவனை அறிய மாட்டாதவர்க்கு அவ்வறிவினைப் பயத்தற்கு உலகம் வேண்டப்படுவதன்றி, அதனை ஒரு சிறிதும் அவாவாது நேர் முகமாக வைத்து அறியவல்லார்க்கு அதன் இருப்பு உண்மையான் உணரப் படுமாகலின் அது கடாவன்றென்க. அற்றேற், காலமும் ஒரு தனிப்பொருள் என்பது அதனை நேர் முகமாக வைத்துக் காண வல்லார்க்குத் தோன்றுமெனின், பௌட்கர முதலான சிவாகமங்களிற் காலம் இறப்பு எதிர்வு நிகழ்வு என்று பகுக்கப் படுவதெனக் கூறியதன்றி, அதனை நேர்முகமாகக் கண்டாரைக் கூறிற்றின்மையானும், அஃதொரு தனிப் பொருளெனக் கிளந்து கூறி வலியுறுத் தாமையானும் அவ்வாறு கோடல் பொருந்தா தென்பது. அங்ஙனமாயின், அதனை அசுத்த மாயா தத்துவங்களில் ஒன்றாக வைத்து ஏழு எனத் தொகை கொடுத்தெண்ணிய தென்னை யெனின்; தனிப்பொருளல்லாத கன்மத்தை மும்மலங்களுள் ஒன்றாக வைத்தெண்ணியது போலவும், தத்துவங்களுள் ஒன்றல்லாத புருட தத்துவத் தை அவற்றுள் ஒன்றாக வைத்துரைத்தது போலவும் இதுவும் அங்ஙனம் வைத்தெண்ணப்படுவதாயிற் றென்க. அங்ஙனங் காலம் ஒரு தனிப்பொருளன்றாயின் அஃது இறப்பு எதிர்வு நிகழ்வு என மூன்றாக வகுக்கப்படுமென்றல் மலைவாம் பிறவெனின்; இடத்தின் முற்பிற்பாடு நோக்கிப், பொருணிகழ்ச்சியே அங்ஙனங் காலமென்னுஞ் சொல்லால் முக்கூற்றதாக வழங்கப் பட்டதன்றிப் பொருணிகழ்ச்சியின் வேறாய்க் காலமென்பது பிறிதில்லை யென்க. முன்னே எடுத்துக் காட்டிய உவமையில் ஒன்று இரண்டு முதலான இலக்க மிட்ட இடங்களைக் கடந்து போந்த பகடு பாண்டில் என்னும் பொருள்களின் நிகழ்ச்சி யையே இறந்தகாலமென்றும், அப்பொருள் இனிச் செல்லக் கடவனவாய இடங்களில் நிகழும் நிகழ்ச்சியையே எதிர்கால மென்றும் பகுத்தது காண்க. இங்ஙனமே, கதிரவன் முன்நாள் இயங்கிய நிகழ்ச்சியை நேற்று எனவும், இந்நாள் இயங்குகிற நிகழ்ச்சியை இன்று எனவும், பின்னாள் இயங்கும் நிகழ்ச்சியை நாளை எனவும் வழங்கிவருகின்றாம். இக் கதிரவன் நிகழ்ச்சியின் வேறாக முன்னாள் பின்னாள் எனப் பகுத்துரைக்கப்படுவது பிறிதுண்டோ கூறுமின்! இன்னும் பொருணிகழ்ச்சி யாதென நுணுகி ஆயும் வழிப், பல பொருள்கடம்முள் ஒன்றோடொன்று இயைதற்குரியன ஒருங்கு இயைந்து ஓரிடத்திற் கிடவாது இயங்கும் இயக்கமேயாமென எவரும் உணர்ந்து கொள்வர். ஞாயிற்றின் ஆற்றலால் வலிக்கப் பட்டு இந்நிலமண்டிலம் அதனைச் சூழ்ந்து போதலும், இந்நிலமண்டிலத்தால் ஈர்க்கப் பட்டுத் திங்கள் மண்டிலம் இந்நிலத்தைச் சூழ்ந்து சேறலும் பெரும்பொருணிகழ்ச்சி களாகும். இனி இந்நிலவுலகத் துயிர்கள் தத்தம் அறிவு நிலைக்கேற்ற பல்வேறு உடம்புகளில் இயைந்து இந் நிலத்தைப் பற்றிக்கொண்டு இயங்கும் இயக்கமும், உயிரில் பொருள்களுட் காந்தக்கல்லி னெதிரே இருப்பூசியும் மின்சாரத் தெதிரே ஏனைப் பலபொருள்களும் இயங்கும் இயக்கமும் சிறு பொருணிகழ்ச்சி யெனப்படும். இவ்விரு திறப்பட்ட பொரு ணிகழ்ச்சிகளும் அவ்வப் பொருள்களிலுள்ள ஆற்றல்களின் தோற்ற மேயாகும். இரும்பைக் காணாமுன் தன்ஆற்றல் காட்டாது கிடந்த காந்தம் அதனைக் கண்ட மாத்திரையானே அவ்வாற்றல் காட்டி அதனை ஈர்த்துக் கொள்ளுதல் கண்டா மன்றே. வாய் திறவாது உறங்கிக் கிடந்த மகவு பசியெடுத்த வளவானே வாய் திறந்தழுது பால்பருகும் முயற்சி யுடைத்தாதல் காண்டு மன்றே. பார்த்தபொருளைப் பார்த்தவாறே எழுதிக் காட்டுங் கைவல் ஓவியன் துகிலிகையும் வண்ணங்களும் பெற்றவுடன் சுவர்மேல் எழில் நலங் கனிந்த ஓவியங்கள் தீட்டுதல் காண்டுமன்றே. இங்ஙனமே ஏனைப் பொருள்களினும் அவ்வவற்றின் ஆற்றல் தோன்று மாற்றை உய்த்துணர்ந்து கொள்க. அற்றேலஃதாக, நோக்காது நோக்கி நொடித்தன்றே காலத்திற், றாக்காது நின்றுளத்திற் கண்டு எனச் சிவஞான போதத்தும், ஞாலமேழினையுந் தந்து நிறுத்திப் பின் நாசம் பண்ணுங், காலமே போலக் கொண்ணீ யச்செயல் கடவுட் கண்ணே எனச் சிவஞான சித்தியாரினும்காலம் ஒருதனி முதல் போல வைத்துக் கூறிய கோள்கள் வழுவாம்போலுமெனின்; அறியாது வினாயினாய், மேற் கூறியவாற்றாற் காலமாவது பொருணிகழ்ச்சிகளை வேறோராற்றால் வழங்குதற்கிட்ட குறியீடேயாமன்றிப் பிறிதன்றென்பது நன்கு பெறப்பட லானும், எண்ணிறந்த உயிர்களையும் பொருள்களையு மெல்லாம் இறை வனது வரம்பிலாற்றல் வழிநின்று இயக்கும் மாயாசக்தியாய் பெரும் பொருணிகழ்ச்சியே ஆண்டுக் காலமென ஓதப்பட்ட தென்னும் நுண்பொருள் இன்னோ ரன்னவற்றை மலைவறுத்து ணர வல்லார்க்கெல்லாம் இனிது விளங்கு மாகலானும் அவை வழுவாமாறு யாண்டையதென மறுக்க. இத்துணையுங் கூறிய வாற்றாற் பொருணிகழ்ச்சியின் முற்கழிவே இறந்த கால மெனவும், முற்பிற்பாடு தோன் றாமல் அடுத்தடுத்து விரைவில் நிகழும் அதன் நிகழ்ச்சியே நிகழ்கால மெனவும், பின் நிகழற் பாலதாம் அதன் நிகழ்ச்சியே வருங்கால மெனவும் பகுத்து ணர்ந்து கொள்க. அவ்வவ்விடங்களான் வரையறுக்கப் பட்ட ஏகதேசப் பொருள்கள் மாத்திரமே முற்பிற்படும் நிகழ்ச்சிகள் உடையனவாதல் கண்கூடாகப் பெறக்கிடத்தலின், இவற்றின் நிகழ்ச்சிகளே அங்ஙனம் முக்கூற்றுக் காலவாய் பாடுகள் பற்றி ஓதப்படுவவாயின. இனி இவ்வேகதேசப் பொருள்கள் அனைத்தையும் தன் வியாகபகத்துள் அடக்கி, உயிரில் பொருள்கள் எல்லாவற்றிற்கும் முதலாய், இவைபோல் உயிரின் அகக்கருவி புறக்கருவிகளுக்குப் புலனாதலின்றி யாண்டும் வரம்பின்றி விரிந்து நிற்கும் மாயையாகிய பெரும்பொருளின் நிகழ்ச்சி, அங்ஙனம் இறப்பு எதிர்வு நிகழ்வென மூன்றாக வகுக்கப்படாது பொதுப்பட நிற்கும் இயல்பிற்றாகலின் அதுவே அவ்வாறு பொதுப்பட வைத்துக் காலமென வழங்கப் படுவதாயிற்றென்னும் உண்மை அஃகிய அறிவாற் கண்டு கொள்க. அற்றன்று; உயிர்க்கருவிகளுக்குப் புலனாகாத மாயா சக்தியே அங்ஙனம் பொதுமையிற் காலமென்று பெயர் பெற்ற தென்றுரைக்க வேண்டுவதென்னை? அதுபோற் புலனாகாது நின்று காலமே உலகத்தின்கட் படும் நிகழ்ச்சிகளை உண்டு பண்ணுமென்று உரையாமோ வெனின்; உரையாம், என்னை? காலம் எல்லாம் வல்ல முதல்வன்போல் அறிவுடைப் பொருளன்றாகலானும், அது மாயையிற் றோன்றுவதென்றே ஞானநூல்களெல்லாம் உரைப்பக்காண்டுமல்லால் அஃது அதனின் வேறாய்த் தனித்து நிற்பதென யாண்டும் ஓதப் படாமை யானும், செயலற்றுக் கிடந்த மாயை இறைவன் றிருவருட் சக்தியால் உந்தப்பட்டுச் செயலுடைத் தாய வழியே காலமுள தாயிற்றென் றுரைக்கும் ஞானநூற் கருத்தை உய்த்துணரும் வழி அம்மாயையின் இயக்கமே வழங்குதற் பொருட்டுக் காலம் என வேறொரு பெயரால் மொழியப்படலாயிற் றென்னும் உண்மை இனிது விளங்க லானும், காலம் ஒரு தனிப் பொருளே எனக் கொள்ளினும் அதனியல்பும் மாயையின் நிகழ்ச்சியும் ஒரு சிறிதும் வேறுபடாமையின் அதனை அதனின் வேறென்றலாற் போதரும் பயன் ஒன்றின்மையானும் என்பது. அற்றேல், மாயையின் நிகழ்ச்சி ஒன்றுமே கூறவமையும், அதனின் வேறுபோல் வைத்து அதனை வேறொரு பெயராற் கூற வேண்டுவ தெற்றுக் கெனின்; வாளா கிடந்த மாயைக்கும் முதல்வன் அருட் சக்தியாற் செயலுடைத்தாகிய மாயைக்கும் வேறுபாடு புலனாதல் வேண்டி அங்ஙனங் கூறல்வேண்டிற் றென்க. அற்றன்று, மாயையின் செயல் அம்மாயையின் வேறாகா மையின் அவை வேறுவேறுபோற் கொண்டு இருபெயராற் கூறுதல் பயனின்றி வறிதாமெனின்; நன்று வினாயினாய், ஒருவன் உறக்க நோயாற் பற்றப்பட்டப் பல்லாண்டுகள் செயலின்றிக் கிடந்த நிலைக்கும், பின்னர் அந்நோய் தீர்ந்து செயலுடைய னாய்த் தனக்கும் பிறர்க்கும் பயன்பட்டு ஒழுகிய நிலைக்கும் உள்ள வேறுபாட்டினை நன்குணர வல்லார்க்கே மாயையின் இயக்கத்திற்குக் காலம் என வேறு பெயரிட்டு வழங்கியதன் சிறப்பு விளங்கும், இவ்வுலகங்களுக் கெல்லாம் முதற் காரணப்பொருளாகிய அஃது ஏதும் செயலின்றிக் கிடந்தக்கால் மாயை எனப் பெயர் பெறலாயிற்று; அந்நிலை தீர்ந்து அது செயலுடைத் தாகியவழி அதன் செயல் காலம் எனப் பெயர் பெறலாயிற் றென்று பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும். இவ்வா றன்றிக் காலம் ஏனைய போல் ஒரு தனித்தத்துவம் அன்றென் பது கடைப் பிடிக்க. தனித்தத்துவம் அன்றாயினும், அது மாயையாகிய பெரும் பொருணிகழ்ச்சிக்குப் பெயராய் அப்பொருளினியக்கச் சிறப்பை ஆராய்வார் அறிவின்கட் டோற்றுவித்தலின் அஃது ஏனைய தத்துவங்களுடன் ஒன்று போல் வைத்து எண்ணப் படுவதாயிற் றென்பது. இனி நியதி தத்துவ இயல்பினைச் சிறிது ஆராய்ந் துரைப்போம், இந் நியதி என்னுஞ் சொற் பிறழாமை எனப் பொருள்படும் ஒரு வடமொழியாம். முன் எடுத்துக் காட்டிய காலம் என்னுஞ்சொல் மாயையாகிய பெரும் பொருணி கழ்ச்சிக்குப் பெயராயமைந்தாற்போல, இந் நியதி என்னுஞ் சொல் அப்பெரும்பொருணிகழ்ச்சி பிறழா வியல்பிற்றாத லைத் தெரித்துக் கூறுவதாம். மாயையும் மாயையிற் றோன்றிய எல்லாப் பொருள்களும் பிறழா நிகழ்சசி யுடையனவாதல் அவற்றுள் ஒரு சிலவற்றை ஆராய்ந்து பார்ப்பினும் நன்கு விளங்கும். பொன் என்றும் மஞ்சள் நிறத்ததாகவே திகழும் நீர்மையது; கல் என்றும் வற்கென்ற இயல்பினதாகவே கிடப்பது; நீர் என்றும் நெகிழ்ந்த பதத்தி னையே யுடையது; தீ என்றுஞ் சுடுதலும் ஒளிதருதலுமே வாய்ந்தது; காற்று என்றும் உளருந் தன்மையே பொருந் தியது; வெளி என்றும் புலனாகாத விரிவுடைத்தாய் எல்லாப்பொருளுக்குந் தான் இடனாய் இருப்பது. இன்னும், நமது நிலவுலகம் தன்னிலை வழுவாது என்றும் ஒரு பெற்றித்தாகவே ஞாயிற்று மண்டிலத்தைச் சூழ்ந்து போதலும், அதனால் இராப்பகற் போதுகள் ஒருபடியாக மாறிமாறி வருதலும், இந்நிலமண்டிலத்தைச் சூழ்ந்து மதி மண்டிலஞ் செல்லுங்கால் நிலத்தின் நிழல் தன்மேற் படுதலிற் பதினைந்துநாள் வளர்ந்து நிரம்புவது போன்றும் ஏனைப் பதினைந்துநாள் தேய்ந்து குறைவது போன்றும் அம் முறை பிறழாது காணப்படுதலும், வேனிற் காலத்து வெயிலும் மழை காலத்து மழையும் கூதிர்காலத்துக் குளிரும் மாறாமற் றோன்றுதலும், வித்திலிருந்து முளையும் முளையிலிருந்து பூண்டும் தோன்றி முறை முறையே வளர்தலும், காந்தக் கல்லை யெடுத்து ஊசியின் நேரே ஒக்கப் பிடித்தவழி அஃது அவ்வூசி யினைத் தன் மாட்டு ஈர்த்துக் கொள்ளுதலும், குழவிப்பருவத் துள்ளன இளமைப்பருவத்தையும் இளமைப் பருவத்துள்ளன முதுமைப்பருவத்தையும் எய்தி இறுதியில் எல்லாம் அழிவெய்து தலும், இன்னும் இவைபோல்வன பிறவும் எல்லாம் அவ்வப் பொருள்களிற் காணப்படும் பிறழா நிகழ்ச்சிகளாகலின் இவை யெல்லாம் நியதியெனவே வழங்கப்படும். பொருள்கள் இங்ஙனம் பிறழா நிகழ்ச்சி யுடைய வாதற்குக் காரணம் என்னையெனின்; இயற்கைப் பொருள்கள் எல்லாம் அறிவில்லா தனவாகலின் அவற்றின் உண்மைக் குணங்கள் வெளிப்படுங் கால் அவை ஒருபடி யாகவே தோன்றுமல்லால் வேறொரு படியாகத் தோன்ற மாட்டாவாம். காந்தக்கல் இரும்பை ஈர்க்குங் குணம் உடையது, இஃது அறிவில்லா இயற்கைப் பொரு ளாதலின் ஈது இரும்பைத் தலைப்பட்டு இக் குணத்தை வெளிப் படுக்குங்கால் என்றும் அதனை ஈர்த்தலாகிய ஒரு தொழிலை யே பிறழாமற்செய்யும். இவ்வாறே இயற்கைப் பொருள்கள் எல்லாவற்றையும் அவ்வவற்றிற்குரிய குணங்கள் வழியே இயக்கினால் அவை பிறபொருள்களாற் றடைநேரா வரையும் தாம் இயங்குமாறே என்றும் இயங்குவனவாம். ஒரு பந்தை எடுத்து உருட்டியக்கால் அஃது உருண்டுகொண்டே செல்லாநிற்கின்றது; நிலத்தின் சருச்சரை வடிவத்தில் உராய்தலானும் எங்கும் நிறைந்த காற்றினாற் றடுக்கப்படுத லானும் எங்கும் நிறைந்த காற்றினாற் றடுக்கப்டுதலானும் அது சிறிது நீளச்சென்று நின்று விடுகின்றது; இத்தடை களில்லாவழி அது சிறிதும் நில்லாமல் உருண்டு கொண்டே செல்லு மென்பது திண்ணமன்றோ? காந்தக்கல் இடையிற்றடை நேர்ந்திலதாயின் என்றும் இரும்பைத் தன் மாட்டு ஈர்த்துக் கொண்டு அதனைப் பற்றியபடியே கிடக்கும் நிகழ்ச்சியின்கண் இவ்வுண்மையை வைத்துக் கண்டு கொள்க. எனவே, அறிவில்லா இயற்கைப் பொருளாகிய மாயையினும் மாயையிற் றோன்றிய பொருள்களினுமே நியதி யாகிய பிறழா நிகழ்ச்சி உளதா வதன்றி, ஏனை அறிவுடைய உயிர்ப்பொருள் களிடத்து அந்நியதி காணப்படுதல் இல்லையாம், என்னை? உயிர்கள் தமக்குள்ள அறிவின் வன்மையால் மாறி மாறி நடக்கும் பெற்றிய வாதலானும், இயற்கைப் பொருள்கள் தமக்கு அஃதின்மையால் அவ்வாறு மாறி இயங்கமாட்டா வாகலானும் என்பது. ஒரு கல்லை வீசி யெறிந்தால் அது வீசிய பக்கம் நேரே செல்வ தன்றிப் பிறிதெதுவுஞ் செய்ய மாட்டா தாகும்; அறிவுடைய பறவையோ அங்ஙனம் ஒரு முகமாகவே செல்லாது தன் அறிவின் வன்மையால் தனக்கேற்றபெற்றி மாறி மாறிப் போவதுங் கண்டு கொள்க. இதுபற்றியே இந் நியதி மாயா தத்துவங்களுள் ஒன்றாக வைத்து ஓதப்படுவதாயிற்று: அற்றே லஃதாக, இந் நியதியை ஒரு தனித்தத்துவ மாகக் கொண்டு கூறுதுமோ, அன்றி மாயையின் பிறழா நிகழ்ச்சியே அதுவெனக் கூறுதுமோ வெனக் கடாயினார்க்கு, அதனை ஒரு தனிமுதலென விடுப்பிற் காந்தம் இருப்பூசியை ஈர்த்துக் கோட லாகிய பிறழா நிகழ்ச்சியையும் ஒரு தனிமுதலெனக் கூற வேண்டுதலின் அங்ஙனமுரைத்தல் சிறிதும் ஏலாமையானும், அன்றி அதனை ஒரு தனி முதலே என நிறுவுதற்கு வேறு வாயிலின்மை யானும் அங்ஙனங் கிளத்தல் காண்டல் அளவை மாறு பாடா மெனவும் மற்று அது மாயையின் பிறழா நிகழ்ச்சிக்கே பெயராமெனவும் உணர்ந்துகொள். அற்றாயின், அதனை ஒரு தனித்தத்துவம் போல் வைத்துச் சித்தாந்த நூல்கள் ஓதுமா றென்னை யெனின்; அறியாது விளாயினாய், ஏதும் இயக்க மின்றிக் கிடந்த மாயை இறைவன் றிருவருட் சத்தியான் உந்தப் பட்டு ஒரு புடைபெயர்ச்சி யுடைத்தாய வழி அதனையே காலம் எனவும், அப்புடைப்பெயர்ச்சி பிறழாது நிகழு மாற்றையே நியதி எனவும் அந்நூல்கள் கூறினமை மந்த வுணர்வினார்க்குத் தனித்தத்துவங்கள் கூறினாற்போற் றோன்றுமாயினும், நுண்ணுணர்வு டையார்க்கு அஃது அம்மாயையிற்படும், பன்னிகழ்ச்சி களைப் பாகுபடுத்துரைத்த தெனவே இனிது விளங்கும். உய்த்துணர்வு வேண்டா ஏனைக் கோட்பாடுகள் போலாது, சைவ சித்தாந்தம் அவ்வுணர்ச்சி மிகவுடைய நுண்ணிய பொருள் முடிபாக லின், அதன்கண் வெறுஞ் சொற்பற்றி மயங்காது, கருத்தறிந் துரைத்துக் கோடலே இன்றியமையாது செயற்பாலதாம். அதுகிடக்க. இனி நியதி என்பது அவரவர் செய்த கன்மம் அவரவரே நுகருமாறு நியமிக்குந் தத்துவமாகலின் அதனை மாயையினும் மாயையிற்றோன்றும் பொருள்களினுங் காணப்படும் பிறழா நிகழ்ச்சிக்குப் பெயரென வேறாய் உரைப்பது யாங்ஙனம் பொருந்துமெனின்; அறியாது வினாயினாய், நுணுகி நோக்கு வார்க்கு அவ்வாறுரைத்ததன் கண்ணும் பிறழா நிகழ்ச்சியே காணக்கிடத்தலின் அது பொருந்தாமை யாண்டையதென்க. ஒருவர் ஒருவினையை அடுத்தடுத்துப் பழகினால் அவர் அப்பழக்கத்தின் வயமாய்ப் பின்னர் அதனை விடமாட்டா மையின் அதனான் வரும் பயன்களை நுகர்ந்தே தீர்வர். நல்லாரி னத்திற் சேர்ந்து விழுமிய பொருள்களை ஆராய்ந்துணரும் பழக்கம் ஏறப்பெற்றவர், பின்னர் அப்பழக்கத்தின் நீங்கா ராகலின் அவரதனாற் பேரின்பமாகிய பயனை நுகர்ந்தே தீர்வர். நல்லாரி னத்திற் சேர்ந்து விழுமிய பொருள்களை ஆராய்ந்துணரும் பழக்கம் ஏறப்பெற்றவர், பின்னர் அப் பழக்கத்தினை நீங்காராகலின் அவரதனாற் பேரின்பமாகிய பயனை நுகர்ந்தே தீர்வர். இவ்வாறன்றித் தீயாரினத்திற் சேர்ந்து கட்குடித்தல் சூதாடுதல் ஊனுண்டல் முதலான கொடுந் தொழிலிற் பழகினவர் பின்னரதனை விடாது பற்றுவ ராதலின் அவரதனால் வரும் பயனாகிய கொடுந் துன்பங் களுட்பட்டே யுழலுவர். இங்ஙனம் எவர் எவ் வினையிற் பயிலு கின்றாரோ அவரதனாற் றுடக்குண்டு அதன் பயனை நுகர்தல் பிறழா நிகழ்ச்சியாய் போதரல் எல்லார்க்குந் தெளியக் கிடந்தமையின், இதனையும் நியதி தத்துவம் என்றல் வாய்ப்புடைத்தேயாம் என்க. அற்றேல், முன்னெல்லாம் நியதியென்பது மாயையின் பிறழா நிகழ்ச்சிக்குப் பெயரென்பது சொல்லி வைத்து, ஈண்டு அதனை உயிரின் பிறழா நிகழ்ச்சிக்கும் பெயரா மென வுரைத்தல் முன்னொடுபின் மலையுமாலோவெனின்; நன்று கூறினாய், மலத்திற்கட்டுண்டு நிற்கும் இந்நிலையில் உயிரின் வினை நிகழ்ச்சி அத்துணையும் மாயையின் பொருள் களைப் பற்றிக் கொண்டே நடைபெறுதல் கண்கூடாய் அறியக் கிடத்தலானும், அப் பொருள்கள் உயிர்கண்மாட்டு வேட்கை யினைப் பிறப் பித்துத் தம்மை அவை யிடையறாது பற்றும்படி ஏவி வினையின் கட் பிறழாது சுழற்றுதலானும் நுனித்தறிய வல்லார்க்கு உயிரின் கட்டோன்றும் அப்பிறழா நிகழ்ச்சி முற்றும் உண்மையில் அவற்றைத் தோற்றுவிக்கும் மாயையின் பொருள்களுக்கே உரியவென்பது தெற்றென விளங்கா நிற்கும். கள் சூது ஊன் முதலியவற்றை ஒருவன் இடையறாது அவாவும் வினை நிகழ்ச்சி அக்கள் முதலான பொருள்களையின்றி நடவா மையானும், அதனான் அவ்விடையறா வேட்கைக் காரணம் அப்பொருள்களேயாதல் நன்கு பெறப்படுதலானும், அப் பொருள்களைப் பற்றுதலால் அறிவு மயங்கி மதர்த்தலும் அம் மதர்ப்பினால் மேலும் பல தீவினைகளை யிழைத்துத் துன்புறு தலும் ஆகிய பயன்களை யெல்லாம் அவற்றைச் செய்த உயிர் களே நுகருமாறு அந் நுகர்ச்சிக் கெல்லாம் முற்படு காரணமாய் அமைந்து கிடந்தன. அப் பொருள்களே யாகலானும் அப்பொருள்களே அப்பிறழா நிகழ்ச்சிக்கு உண்மையான் உரியவாதல் தேற்றமேயா மென்பது, ஆதலின் ஈண்டுக் கூறியது முன்னொடுபின் மலை யுதல் சிறிதுமில்லை யென மறுக்க. அற்றாயின், பிறழா வினை நிகழ்ச்சி மாயையினும் மாயை யின் பொருள்களினுமே யுள்ளதென்று கூறுதல் என்னை? அவற்றின் சேர்க்கையால் அஃதுயிரின்மாட்டுந் தோன்றுதல் காண்டுமாலெனின்; அற்றன்று, மாயையின் வினை நிகழ்ச்சி பிறழா இயல்பிற்றாதல்போல, உயிரின் வினை நிகழ்ச்சி எஞ்ஞான்றும் பிறழா வியல்பிற்றாதல் இல்லை; என்னை? அது மாயையைச் சார்ந்து அதன் வண்ணமாய் நின்றாற்போல, அதனைவிட்டுமாறி அருளைச் சார்ந்து அவ்வண்ணமாய் நிற்கவும் வல்லுமாகலினென்க மாயையைச் சார்ந்து நிற்குங் காறும் மாயையின் நிகழ்ச்சியும், இறைவன் அருளைச் சார்ந்து நிற்குங் கால் அவ்வருளின் நிகழ்ச்சியும் உயிரின் கட்டோன்று வனவாம்; அஃதேல் அங்ஙனமாக, பிறழா நிகழ்ச்சியென்பது அறிவில்லா இயற்கைப்பொருட் குணமென்றும், அறிவு டைய உயிர்கட்கு அஃதுரிமைக் குணமாதல் செல்லா தென்றும் முடிக்கப் படுமாயின் பேரறிவுப்பொருளான கடவுள் பிறழா நிகழ்ச்சி யுடைத்தன்று என்பது கொள்ளப் பட்டு அஃதவன் இறைமைக் குணத்திற்கு வழுவாமாலெனின்; அது பொருந்தாது. இறைவனாவான் உயிர்ப்பொருள் உயிரில் பொருள் என்னும் எல்லாவற்றையும் தன்கண் அடக்கித், தான் எல்லாவற்றையுங் கடந்து எல்லையன்றி விரிந்து அசைவற்று நிற்கும் பெரு வியாபகத்தனாகலின், அவன் எவ்வகை நிகழ்ச்சியும் உடையானல்லன; அன்னனாயினும், ஞாயிற்றின் எதிரே வித்தினின்று முளை தோன்றுதலும் பெருக்கக் கண்ணாடியில் தீப்பொறி பறத்தலும் நீர் ஆவியாக மாறுதலும் போலத் தன்னெதிரே உலகமும் உயிர்களும் ஐந்தொழிலிற்பட்டு இயங்கத், தான் எவ்வகை நிகழ்ச்சியும் இலனாய் இவற்றின் கட் டாக்கற்று நிற்கும். அங்ஙனமாயின் ஏதொரு தொழினிகழ்ச்சியு மில்லா வெறுங் கற்போல் இறைவனுங் கொள்ளப்படுமாம் பிறிவெனின்; அற்றன்று, ஒளிவிளங்கும் பளிங்குக்கற்கும் வறுங் கற்கும் வேற்றுமை யறிதியன்றே? மாற்றுயர்ந்த பொன்னுக்கும் இரும்புக்கும், வேற்றுமையறிதி யன்றே? விலைவரம் பில்லா முழுமணிக்கும் ஏனைய பரற்கற்கும் வேற்றுமையறிதியன்றே? உயிரும் அறிவும் இல்லாப் புன்பொருள்கடம்முள்ளும் இத்துணை வேற்றுமை உளதாயின், சிற்றறிவுடைய உயிர்கட்கும் பேரறிவுப் பிழம்பான முதல்வனுக்கும் எத்துணை வேற்றுமை உளதாம்! ஒருவரம்புட்பட்ட பொருள்கள் ஓரிடம் விட்டுப் பிறி தோரிடஞ் செல்லுதற்கு இடைவெளி யுண்டாகலினாலும், வரம்புடைப் பொருள்களைச் சாரும் உயிரும் அவைபோல் ஒரு வரம்பிற் படலால் இவையும் புடை பெயர்ச்சி உடையவாதற்கு இடமுண்டாகலினாலும் இவையனைத்தும் ஒரு தொழில் நிகழ்ச்சிக்குரியவாதலும் அந்நிகழ்ச்சி பிறழாமை நடைபெறு தலும் சாலப் பொருத்தமாம். முதல்வனோ வரம்புடைப் பொருள்களெல்லாவற்றையுந் தன்பா லடக்கித் தான் வரம் பின்றி நிற்குமாதலின், அவன் புடை பெயர்ச்சி சிறிதும் உடையானல்லன்; புடை பெயர்ச்சியிலனாகவே அதுபற்றி வரும் பிறழா நிகழ்ச்சியும் உடையனல்லனாம், அப் பெற்றி யினா யினும் முற்றறிவு விளக்கமுடையனாய் என்றும் ஒரு பெற்றி யாயே நிற்பனாகலின், பிறழா நிகழ்ச்சியிலன் என்றதே கொண்டு அவனை வறுங்கற் போல் நினைத்தல் பெரியதோர் அறியாமை யாமென்பது. அற்றேற், புடை பெயர்ச்சியின்றிப் பேரறிவு மாத்திரையாய் விளங்கும் முதல்வன் எதிரே எல்லாப் பொருளும் ஐந்தொழிற்படுமுறைமை யாங்ஙனமெனின்; நினைவு மாத்திரையாற் செய்வதூஉம் நினைவோடு கருவி வாயிலாற் செய்வதூஉமெனச் செயறான் இருவகைத்தாம். ஒருவன் ஓர் ஓவியம் வனைந்தான் என்றவிடத்து அவ் வனைதற் றொழிலுக்குப் பல வண்ணங்களும் துகிலிகையும் படாமுங் கருவிகளா வேண்டப்பட்டன; இக்கருவிகளின்றி அவன் அதனை நிகழ்த்த மாட்டுவானல்லன். மற்று இறைவனோ, அவ்வோவியக்காரன் போற் கருவியினை அவாவாது படைக்க மாட்டானெனின், அஃதவன் வரம்பிலாற் றலுக்கு இழுக்காய் முடியுமாதலின், அவன் கருவிகடுணையின்றி நினைவு மாத்திரையால் எவற்றையும் படைக்கமாட்டுவா னென்பதே முடிந்த பொருளாம். அவ்வாறாயின் நினைவு ஒரு கருவியை வேண்டாமலே ஒன்றனைச் செய்தல் கண்டில மாலெனின்; ஒருவர் நினைத்த நினைவுகள் பிறரொருவர் உள்ளத்திற் றோன்றுமாறு ஆன்றோர் பலர்க்கு மெய்யனு பவமா யிருந்த லானும் இஞ்ஞான்றை மனநூல்வல்லார் ஆராய்ந்துரைக்கும் உரைகள் நினைவு பிறிதொன்றனைக் கருவியாக நாடாமலே யாவுஞ் செய்ய வல்லுமென இனிது நிறுவுதலானும், நினைவின் செயற்குக் கருவி ஏதும் வேண்டப் படா தென்னு முண்மை சிறிதும் ஐயுறற் பாலதன்றாம். அங்ஙன மாயின், நினைவும் ஒரு தொழிலைச் செய்யு மென்றுரைப்பவே, அதற்கும் புடை பெயர்ச்சி உளதா மெனப்பட்டு, அப்புடை பெயர்ச்சி பற்றி ஏகதேசத் தன்மையும் அவ்வேகதேசத் தன்மைபற்றி வேறுபாடும் வந்தெய்து மாலெனின்; நன்று கடாயினாய், நினைவினியற் கையும் ஏனைச்சடப் பொருளி னியற்கையும் பகுத்துணர மாட்டார்க்கு இங்ஙனந் தோன்று மாயினும், சடப்பொருள் போற் காலத்தானும் இடத்தானும் வரையறுக்கப்படாத நினைவு தூய அறிவு மயமாய் யாண்டும் வியாபித்து நிற்பதாகலின் அதன்றொழிற்குப் புடை பெயர்ச்சியும் அதுபற்றி வரக்கடவதாய வேறுபாடுங் கற்பித்தல் அதனியற்கையைத் தெளிய வுணர வல்லார் பால் இல்லை யாமென்க. ஆகவே, பேரறிவுப்பிழம்பான இறைவன் முன்னி லையில் எல்லாப் பொருளும் இயங்குதலும், அவ் வியக்கம் பற்றி அவன் ஒரு சிறிதும் வேறுபடாமையும் இந்நுட்பம் அறிய வல்லார்க் கெல்லாம் நன்கு விளங்கிக் கிடக்கும். ஆயினும், கரணத் தானன்றிச் செய்யமாட்டாத சிற்றறி வுயிர்களின் செயல் களையும், மற்றைச் சடப் பொருள்களின் தொழிற்பாடு களையுமே கண்டறியும் ஏக தேச அனுபவமுடைய நம்ம னோர்க்கு, வியாபக இயல்பினை யுடைய முதல்வனியல்பு களும் அவன் கரணத்தானன்றி நினைவு மாத்திரையால் அண்ட பேரண்டங்களை யெல்லாந் தோற்று வித்துச் சுழற்றும் பேரற்புத முறைகளும் முற்றும் உணர வாராவென்க; இது பற்றியன்றே எந்தைதானின்ன னென்று மின்னதா மின்ன தாகி, வந்திடா னென்றுஞ் சொல்ல வழக்கொடு மாற்றமின்றே என்னுந் திருவாக்கு மெழுந்தது! இங்ஙன மாகலின், பிறழா நிகழ்ச்சி யின்மை பற்றி இறைவன் பால் வரக்கடவதாம் இழுக்கொன்று மில்லை யெனவும், மற்று அஃது அவற்கு அளக்கலாகாச் சிறப்பேயாமெனவும் கடைப் பிடிக்க. இனி இதுகாறும் எடுத்து விளக்கப்பட்ட முப்பது தத்துவங்களுக்கும் முதலான மாயையினியல்பைச் சிறிது ஆராய்வோம். மேலெடுத்துரைத்த முப்பது தத்துவங்களும் பலவாய்ச் சடமுமாயிருத்தலானும், ஏறுமுறையில் ஒன்றி னொன்று சூக்குமமாயும் இறங்கு முறையில் ஒன்றினொன்று தூலமாயும் இருத்தலானும் இவற்றுள் ஏதேனும் ஒன்று தானே ஏனையவற்றிற்கு முதற்காரணப் பொருளாய் அமைதல் செல்லாது. எவை எவை ஒரு வரம்பிற்பட்ட பரி மாணமு டையன அவையெல்லாம் பலவாய் உருவுடைப் பொருளா யிருக்கும்; இனி எவை எவை பலவாயும் உருவுடைப் பொருளாயுமிருக்கும் அவையெல்லாம் சில காலத்தில் அழிவெய்தித் தத்தம் முதற்காரணத்தின்கண் ஒடுங்கும் என்னும் பிறழாநிகழ்ச்சியாற் றனித்தனி யுருவுடைய வான இத் தத்துவங்கள் முப்பதும் அறிவெய்தித் தமது முதற் காரணமான ஒரு பொருளின்கண் ஒடுங்கி நிற்குமென்பது தேற்றமாம். எனவே, காரியப் பொருள்களெல்லாங் கெட்டுத் தமது முதற்காரணத்தின்கட் சூக்கும வடிவாய் நிற்குமென்ப தூஉம் இதுகொண்டு முடிக்கப்படும். அற்றன்று, கட்புலனாய் நின்ற குடம் என்னுங் காரியப் பொருள் கெட்டவழி அது தன்னோடொற்றித்து நின்ற மண்ணென்னுங் காரணப் பொருளாய் ஒடுங்குமென்றலே வாய்ப்புடைத்தாமன்றி, அம்மண்ணுக்கும் ஒரு காரணம் தேடப்புக்கு அது கந்தம் என்னும் தன்மாத்திரையேயா மென்றும், பின் அக்கந்தத் திற்குங் காரணம் பூதா தியாங்காரம் ஆம் என்றும், புத்தி தத்துவத்திற்குக் காரணம் குணதத்துவம் ஆம் என்றும் இங்ஙனமே ஒவ்வொன்றற்குங் காரணம் தேடுவான் புகுதல் அநவத்திதை என்னுங் குற்றம் ஆமாலோ வெனின்; குற்றம் ஆமாறில்லை, என்னை? ஒன்று காரணமாயும் மற்றொன்று அதன் காரியமாயும் இங்ஙனம் ஒன்றோடொன்று ஒரு வரிசைப்படக் காரணகாரியத் தொடர்புபட்டு நிகழும் முறையில், அம்முறை வழியே இடைப்பட்ட காரணங்களை ஆராய்ந்து சென்று அவற்றிற் கெல்லாம் முடிந்த காரணமாய் நிற்ப தொன்றனைத் தெளிந்து கடைப்பிடித்தல் பொருளா ராய்ந்து உண்மை கடைப்பிடிக்கும் நெறியாமல்லது அஃது அநவத்திதை யென்னுங் குற்றமாதல் செல்லாமையின். எதுபோல வெனின், ஒரு பழத்தின் காரணத்தை ஆராய் தலுறு வானொருவன் அதற்கு முற்காரணம் பசுங்காய் ஆதலும்; அப் பசுங்காயின் காரணம் பிஞ்சாதலும்; பிஞ்சின் காரணம் பூவும், பூவின் காரணம் முகையும், முகையின் காரணம் தழையும், தழையின் காரணம் வளார் கோடுகவடு முதலியனவுமாதலும்; மேலும் இவற்றின் காரணம் பராரையும், பராரையின் காரணம் வேறும் ஆதலும்; இறுதியாய் வேருக்கும் வேரினின்று கிளைத்த மேற்கூறிய உறுப்புகட்கு மெல்லாம் அடிப்பட்ட காரணமாய் நிற்பது வித்து ஆதலும் ஆராய்ந்து முடித்து, வித்தின் மேற் காரணம் பிறிதின்மையின் அதுவே முதற் காரணமாமென்று துணிவானாமதுபோல வென்பது. அற்றாயின், ஐம்பெரும் பூதங்களும் ஐம்பொறிப் புலனாய் நின்ற தமது காரியவுருவங் கெட்டு ஒழிந்தவழி அவை பொறிப் புலனாகாத அணுக்களி னுருவாய் நிற்குமென்று கோடலே உத்திக்கியைவதாமெனின்; அது பொருந்தாது; அணுக்கள் ஒன்றல்லவாய்ப் பலவாயிருத்த லானும், பலவா யிருக்கும் அவை சிறிய சிறிய உருவங்கள் உடையவா யிருக்குமென்பதூஉம் அது கொண்டு முடிக்கப் படுமாகலின் வரம்புபட்ட பரிமாணங்க ளுடைய அவை காரியப் பொருள்களே யாவதல்லது காரணப் பொருள்களா வான் செல்லாமையானும், காரியப் பொருள் களான அவை பின்னும் பல சூக்கும வுருவங்களாய்ப் பிரிந்து அழிவெய்து மென்பதற்கு இஞ்ஞான்றைப் பௌதிகநூல் வல்லார் பரமாணுக்களை மின்னுருக்களாய்ப்* பிளவுபடுத்துப் பிரித்தலே சான்றா மாகலானும் அணுக்கள் ஐம்பூதங் களுக்கும் ஐம்பூதங்களுக்கும் ஐம்பூதமயக்கமான உலகங் களுக்கும் முதற் காரணமாகு மென்றல் சிறிதும் ஏலாது. ஏலாதாகவே அவ்வாறு ரைக்கும் வைசேடிக நூலாருரை கொள்ளற்பாலதன் றென்பதும் தானே விளங்கும். அங்ஙனம் பரமாணுக்கள் காரணம்பொருள்களாதல் பொருந்தாதென்று கோடுமாயினும், நான்கு பூதங்களும் ஆகாயம்போல் அருவாய்க் கரைந்து நிற்கும் சூக்கும நிலையே அவற்றின் காரணமாமென்றல் வாய்ப்புடைத்தா மெனின்; அதுவும் பொருந்தாது; ஆகாயம் ஒளியும் ஓசையும் உலவுதற்கு இடந்தந்து நிற்கும் அணுவுருவே யாமென்று இஞ்ஞான்றைப் பௌதிக நூலார் ஆராய்ந்து முடிவுகட்டி யிருத்தலானும்; அணுவுருக்கள் அழிவெய்து மென்பது மேலே காட்டி நிறுவப்பட்டமையானும்; ஆகாயம் சூக்குமவடிவிற்றாய் நிற்குமுண்மை அவ்வாகாயத்தின் குணமான ஓசை பலவேறு வடிவிற்றாய் நிகழும் முறைபற்றி *வேறோராற்றானும் துணியப் படுதலானும்; ஆகாயம் முதலிய ஐம்பெரும் பூதங்களுங் கரைந்து மறைந்தக்கால் அவை சத்த பரிச ரூபரசகந்தம் என்னும் ஐந்து தன்மாத்திரை வடிவாய் நிற்றலும், அது பின்னுங் கரைந்து தம்மினுஞ் சூக்குமமான பூதாரியாங்காரமாய் நிற்றலும், அது மேலுங் கெட்டுப் புத்திதத்துவமாதலும், அஃதழிவெய்திக் கு தத்துவ மாதலும் அடைவே விளக்கிப் போந்தமாதலானும்; ஆகாயம்போல் அருவாய் நிற்குஞ் சூக்குமநிலையும் அதனினுஞ் சூக்குமமாய் மேற்பட்டு நிற்கும் நிலைகளும் இடைப்பட்ட காரணங்களேயா மல்லது பரம சூக்கும மாய்ப் பகுக்கப் படாது ஒன்றாய் நிற்கும் அடிப்பட்ட காரணம் அல்லவாத லானும் ஆகாயம்போல் நிற்கும் அருவ நிலை பூதபௌதிகங் களுக்கு அடிக்காரணமாதல் ஒருவாற் றானும் இல்லையென்க. அற்றா யினும், ஐம்பூதங்களுந் தமது காரியநிலை கெட்டு அழிந்தக்கால் அவை ஒருவாற்றானும் பகுக்கக்கூடாத அருவச் சூக்குமநிலை மெய்தியிருக்கு மென்றே கோடும்; அதனை விடுத்து அவை பூதாதியாங் காரத்தில் ஒடுங்குமெனவும், அப் பூதாதியாங்காரம் தன்னி னுஞ் சூக்குமமான புத்தி தத்துவத்தில் ஒடுங்குமெனவும் அது குணதத்துவத்தில் ஒடுங்குமெனவும் இங்ஙனமெல்லாம் வறிதே கூறிக் கொண்டு சென்று இறுதியாக மாயையி லொடுங்கு மென்றல் வேண்டா கூறலாமெனின்; அங்ஙன மன்று, ஒரு பருப் பொருள் அழிந்து மாறுங்கால் அஃது இடையிற் பலதிற நிலைகள் யெய்தி ஒன்றினொன்று சூக்குமமாய் இறுதியிற் பரம சூக்குமமாய்ப் போதலே அனுபவத்தின் வைத்து அறியக் கிடத்தலின், அதற்கியை யவே ஐம்பூதங்களுந் தமது காரியநிலை கெட்டு மாறுங்கால் இடையிற் பல சூக்குமதத்துவங்களாய்த் திரிபெய்தி இறுதி யிற் பரமசூக்குமமான மாயையாய் நிற்கு மெனக் கூறப் பட்டது. முதலிற் பளிக்குப் பாறை போற் சிடந்த பனிப் பிண்டமானது வெயிலால் நெகிழ்ந்துருகி நீராதலும், பின்னர் அந்நீர் ஆவியாக மாறுதலும், அவ்வாவி நீர்வளி* உயிர் வளிகளாகப் பிரிவுபட்டு மிகவும் நுணுகிப் போதலு மாகிய நிகழ்ச்சியில் இதனை வைத்துக் கண்டு கொள்க. அற்றேலஃதாக, ஐம்பெரும் பூதங்களும் பரமசூக்கும நிலையை எய்துமுன் நுண்ணிய பல தத்துவங்களாகத் திரிபுறும் எனக்கோடல் பொருந்துமாயினும், வாயுதத்துவத் திற்குமேல் மக்களறிவுக் கெட்டாத ஐந்து தன்மாத்திரை களாகவும் பூதாதியாங்காரம் முதலியனவாகவும் அவை மாறி நிற்குமாற்றை அம்மக்கள் யாங்ஙனங் கண்டாரோ வெனின்; மக்களுடம்பின் அமைப்பிலும், அவ்வமைப்பின் வாயிலாக அவரறிவு நிகழும் முறையிலும் வைத்து அவ் விடைப்பட்ட தத்துவங்களினியல் பெல்லாம் இனிதுணரக் கிடக்கு மென்பதை மேலே தெளிய வெடுத்து விளக்கினா மாகலின் ஆண்டுக் கண்டுகொள்க. அதுவேயுமன்றித் தெளிவுக் காட்சியுடையார் சிலர் இடை நிற்கும் அத்தத் துவங்களின் இருப்பை நேரே கண்டு நன்குணர் வராகலானும், அப் பெற்றிப் பட்டார் இயற்றிய உபநிடதங் களும் ஆகமங்களும் சாங்கியம் வேதாந்தம் முதலிய நூல்களும் அத்தத்துவங் களைக் கிளந்தெடுத்துக் கூறுதலானும் அவற்றின் உண்மை துணியப்படுமென்க. எனவே, ஐம்பெரும் பூதங்களும் தமது காரியநிலைகெட்டு மாறுங்கால் இடையிற் பலதத்துவங் களாகத் திரிபெய்தி இறுதியில் அதிசூக்கும அருவப் பொருளான மாயையாய் நிற்குமென்றலே தேற்றமாம். அங்ஙனமாயினும், பூதபௌதிக உலகங்களுக்கும் அவற்றின் மேனிற்குந் தத்துவங்களுக்கு மெல்லாம் அடிப் பட்ட காரணமாய் நிற்பது பிரகிருதி மாயையேயாமென்று சாங்கிய நூலார் ஓதுபவாகலின், அதற்கு மாறாகப் பிரகிருதி தனக்கு மேலுள்ள கலாதத்துவத்தில் ஒடுங்கு மெனவும், அக்கலை அசுத்த மாயையிலொடுங்கு மெனவும் மேலும் இருசூக்கும தத்துவங்களைக் கற்பித்தல் பொய்க் கற்பனையாமன்றி மெய்யாதல் செல்லா தெனின்; அறியாது கூறினாய், பிரகிருதி யாவது சத்துவம் முதலான முக்குணங்களும் ஏறாதுங் குறை யாதுந் தம்முளொத்து நின்ற நிலையேயென அச்சாங்கிய நூலார் உரைக்குமுரை கொண்டே அஃது ஒன்றாய் நில்லாது முத்திறப்பட்டுப் பலவாய்நிற்கு முண்மை பெறப்படுதலின், மூலப்பகுதி பரமசூக்குமப் பொருளன் றென்பதூஉம், தன் கீழ் நின்ற தத்துவங்களை நோக்கத்தான் சூக்குமமாயினும் அது தானும் ஒரு காரியப் பொருளே யாமென்பதூஉம், தாமே போதரும் என்க. அங்ஙனமது காரியப் பொருளாகவே அஃது அடிப்பட்ட காரணமாய் நில்லாது அழிவுபட்டுத் தன்னினுஞ் சூக்குமமான ஒரு தத்துவத்திற் சென்றொடுங்கு மென்பதுந் தானே முடிக்கப்படும். மூலப்பகுதிக்குக் காரணமாய் நிற்பது கலையென்னுந் தத்துவமாமென்று முன்னரே விளக்கிப் போந்தாம். முக்குணங்களுந் தோன்றாப் பிறந்த மகவின்மாட்டு அழுது பாலுண்முயற்சி நிகழக் காண்டலால் அம்முயற்சியைத் தோற்றுவிக்குங் கருவியாய், முக்குணங்களினுஞ் சூக்குமமா வதாய் உள்ள கலையென்னுந் தத்துவம் இன்றியமையாது வேண்டற்பாலதாமென்பதனையும் ஆண்டே நன்கெடுத்து நிறுவினாம். ஆகலின், மூலப்பகுதிக்குக் காரணமான கலை வெறுங்கற்பனை யாதலின்றி உண்மையாயுள்ள தத்துவமா மென்றே கடைப் பிடிக்க. அற்றேற் கலையென்னுந் தத்துவமே ஏனைத் தத்துவங் களெல்லாவற்றிற்கும் பரமசூக்கும காரணமாதல் அமையும், அதன் மேலும் மாயை யென வேறொன்று கோடல் எற்றுக்கெனிற் கூறுதும். மாயையோ எல்லாத் தத்துவங்கட்கும் மூலகாரணமாய் அருவாய் ஒன்றாய் வியாபகமாய் அழிவின்றி நிற்பது. அம்மாயையின் உப காரத்தைப் பெறுதற்குரிய உயிர்களோ கடல்மணலை அளவிடினும் அளவிடப்படாத னவாய்த் தனித்தனி வெவ் வேறாயுள்ளன. இவ்வுயிர்களும் பண்டு தொட்டே அறியாமை வயப்பட்டுக் கிடத்தலால் இவ்வறியாமை ஒழிதற் பொருட்டும் இவற்றின் அறிவிச்சை செயல்கள் கிளருதற் பொருட்டும் இறைவன் இம்மாயை யனின்றும் முப்பது தத்துவங்களைத் தனித்தனியே காரியப் படுத்து அவற்றை ஒவ்வோருயிர்க்கும், தனித் தனியே இயை விப்பானாயினன். இவ்வாறு உயிர்கடோறுந் தனித்தனியே இயைக்கப்பட்டுள்ள முப்பது தத்துவங்களுட் கலையும் ஒன்றாம். இக்கலை ஒவ்வோருயிரின் மாட்டும் தனித்தனியே பொருந்தி நின்று அவற்றின் அறிவுமுயற்சியை எழுப்பி நிற்பதாகலின் இதுவும் பலவாயுள்ள காரியப் பொருளே யாகும்; இது காரியப் பொருள் அன்றாயின் ஒன்றாயும் வியாபகமாயும் உயிர் கடோறுந் தனித்தனி இயையமாட்டாதாயும் நிற்றல் வேண்டும். அங்ஙனம் அது நில்லாமையானும், அன்றி நிற்கு மென்றே கோடுமாயின் ஆணவமலத்தான் மறைப்புண்டு கிடந்த உயிர் சிறிதறிவும் விளங்கப் பெறாமையாற் றன்னோடியைந்த ஏனை இருபத் தொன்பது தத்துவங் களான இயன்ற அகக்கருவி புறக் கருவிகளைப் பற்றி இயக்க மாட்டாவாய் வெறுங் கற்போற் கிடக்கு மாதலானும் உயிர் அவ்விருபத்தொன்பது தத்துவங் களையும் பற்றுமாறு இடைநின்று அவ்வுயிர்க்கு அறிவை யெழுப்பி அவற்றின் மேற் செல்ல விடுதற்குக் கலையென்னுந் தத்துவம் தனித் தனியே உயிர்கடோறும் வேண்டப்படு மென்பது முடிந்தது. முடியவே, கலை தனித்தனி உயிர்கள்பாற் பொருந்தும் ஏகதேசப் பொருளாவதும் மறுக்கலாகாத உண்மையென்று நாட்டப்படும். இவ்வாற்றாற் கலையென்னுந் தத்துவங் காரியப் பொருளாய் அழிதன் மாலைத்தாதல் இனிது பெறப்படுதலின் அது பரமசூக்குமமென்றும் அதுவே ஏனை எல்லாத் தத்துவங்கட்கும் மூலகாரணமென்றுங் கூறுதல் ஒரு சிறிதும் அடாது. ஆகவே, கலையினும் பரம சூக்குமமாய்க் கலைக்குங் கலையொழிந்த ஏனைத் தத்துவங்கட்கும் முதற் காரணப் பொருளாயுள்ள மாயையென்பதொன்று இன்றி யமையாது வேண்டப்படுமென்பது தானே போதரு மென்க. இனி மாயா தத்துவங்கள் தமது காரியநிலை கெட்டு ஒடுங்கியவழி மாயை யென்பதொன்று உண்டென்று கோடு மாயினும், மீளவும் அவை தோன்றிய பின்னும் தோன்றி யவை காரியரூபமாயே நிற்குங்காலும் மாயையாகிய காரணம் உண்டென்று கோடுமோ இல்லையென்று கோடு மோவெனின்; உண்டென்று கோடுமாயிற் பொன்பணியாக மாறியவழிப் பொன்னென்னுங் காரணப் பொருள் தனித்து நில்லாமற் காரியத்தோடு ஒன்றாயிருக்கக் காண்டலின் அதுபோல மாயையுந் தனித்து நில்லாதாய்த் தன் காரியத் தோடு ஒற்றித்து நிற்குமென்றே கொள்ள வேண்டுதலின் ஆண்டதனை உண்டென்று கோடலாற் போந்தபயன் சிறிதும் இன்றாம்; இனி இல்லையென்றே கோடுமாயின் அதனைக் காரணப் பொருளென்றலாற் போந்தபயனும் ஒன்றுமில்லை; ஆகவே, முப்பது தத்துவங்களும் அழியுங் கால் அவை தாந்தாமே பரமசூக்குமங்களாய் அருவாய் நின்று மீளவுளவாங்கால் முறைமுறையே தூலவுருவங்களாய்த் தோன்று மென்றலே வாய்ப்புடைத்தா மெனின்; அறியாது கூறினாய், பொன்னிற் சில பகுதிகள் சில பல பணிகளாய் மாறியக் கால் பொன் என்பதே உலகத்தில்லையாய்ப் போனதுண்டோ எனக் கடாவுவார்க்கு இறுக்கலாகாமை யானும், உலகத்துப் பொற்றிரள்போலன்றி எல்லையற்ற பெருவியாபகத்ததாய் இம்முப்பது தத்துவங்களும் இவற்றால் அமைந்த எண்ணிறந்த புவனங்களும் மண்டிலங் களுமேயன்றி இன்னும் அளவுக்கு எட்டாத தத்துவங்களும் புவனங்களும் மண்டிலங்களும் தன்கட் டோன்றினாலும் தான் அவற்றாற் சிறிதும் குறையமாட்டாதாய் உள்ள மாயை என்னும் பரமசூக்கும முதற்காரணப் பொருள் என்றும் அழிவின்றி நிற்குமென்பதே துணி பொருளாமென்க. இனி இம் முப்பது தத்துவங்களும் அழிந்தவழி ஒன்று மில்லா வெறும் பாழாய்ப் போகுமென்று மாத்துமிகர் என்பார் கூறுமாறே கூறினாற் போதரும் இழுக்கென்னை யெனின்; நன்று வினாயினாய், காரியப் பொருள்கள் கெட்டாற் சூக்கும காரணங்களாய் நிற்றலே நூல்வழக் கானும் உலக வழக்கானும் ஆராய்ச்சிவகையானும் தெளியக் கிடப்பதல்லால் அவை ஒன்றுமில்லாச் சூனியமாதல் காணப் படாமையானும், இஞ்ஞான்றைப் பௌதிக நூலாரும் எப்பொருளும் இல்லாத சூனியமாதலில்லையென்றும் தூலசூக்கும நிலை வேறுபாடு அடைதலன்றி அவை தாம் இல்பொருளாதல் இல்லை யென்றும் என்றுமுள்ள உள் பொருளே யாகுமென்றும் முடிவு கட்டியிருத்தலானும், அவர்கூற்று மெய்யொடு படாப் பொய்யு ரையேயாகு மென்று கடைப்பிடிக்க. இனி மாயையாவது உள்ளது மன்று இல்லது மன்று இன்னதென்றுரைக்கவாராத இயல்பிற்றென்று உரை யாமோ வெனின்; உரையாம். உள்ளதாயின் அஃதென்றும் உள்ளதாகல் வேண்டும்; இல்லதாயின் என்றும் இல்லதாகல் வேண்டும்; உள்ளதும் இல்லதுமாகிய இரண்டு தன்மை ஒரு பொருட்கு ஒருங்கே உளவாதல் யாண்டும் இல்லாமையின் அவ்வாறுரைத் தலும் ஒருவாற்றானும் உணர்ந்துரைக்க வாராத பொருளைப் பற்றிய ஆராய்ச்சி யாண்டும் நிகழாமையே இயற்கையாக, மாறையைப் பற்றிய ஆராய்ச்சி எச்சமயத்தானும் எந் நூலானும் நிகழ்த்தப்படுதல் கண் கூடாய் அறியக் கிடத்தலின் அதற்கு மாறாக அதனை அநிருவசனமென்றுரைத்தலும் ஒவ்வாவுரை யாமென்க. காரண காரியத் தொடர்பறிய வல்லார்க்குக் காரியப் பொருள்களின் தோற்ற வொடுக்கங்கள் பற்றிக் காரணப் பொருளின் இருப்புப் பொறிப் புலனாகாதாயினும் அனுமான வளவையின் வைத்து அறியக் கிடக்குமாதலின், பொறிப் புலனாகாமை யொன்றே கொண்டு மாயையை இல் பொருளென்றல் அறிவுமதுகை யில்லார் போலிக் கூற்றா மென் றொழிக. நீர் ஆவியாக மாறிக் கட்புலனாகாது போதலும் மாறிய ஆவி குளிரால் இறுகி மறித்தும் நீராய்க் கட்புலப் படுதலும் ஆன அடுத்தடுத்து நிகழும் நிகழ்ச்சியைச் சிறிதறிவு கொண்டு காண்பாரும் நன்குணர்வராதலின், இவ்வுலகங்களுக் கெல்லாம் முதற்காரணப் பொருளான மாயையினிருப்பைப் பேரறிவு டையார் எவரேனும் மறுக்க முந்துவரோ? அது கிடக்க. இனி எப்பொருளுக்குங் காரணம் கடவுளே யென மறைநூல் கிளத்தலின் இவ்வுலகங்களுக் கெல்லாம் முதற் காரணப் பொருள் முதல்வனே யாவனென அதற்கியையக் கூறுதலே சால்புடைத்தாமெனின்; அந்நூற் கருத்தறியாது கூறினாய்; காரணம் இனைத்தெனப் பாகுபடுத்துணர வல்லையாயின் இங்ஙனம் மயங்கியுரைப்பாய் அல்லை. ஆகலிற் காரணத்தின் பாகுபாடும் அவற்றின் இலக்கணமும் ஒரு சிறிது விளங்கக் காட்டுவாம். காரணத்தை நையாயிகரும் பிறரும் பலவகையாற் கூறுபடுத்து வழங்குவராயினும் அவை யெல்லாம் சாங்கியர் கூறுமாறே முதற்காரணம் நிமித்த காரணம் என்னும் இரண்டனுள் அடங்கும். அவற்றுள் முதற்காரணம் என்பது காரியத்தின் வேறன்றாய் அதனோடு பிரிவின்றி ஒன்றாய் நிற்பது; பணியின்கட் பொன்னும் குடத்தின் கண் மண்ணும் முதற் காரணப் பொருள்களாம். இனி நிமித்த காரணம் என்பது முதற் காரணப் பொருளைத் திரிவுபடுத்திக் காரியப் பொருளாக்குவது; இந்நிமித்த காரணம் கருவியெனவுங் கருத்தாவெனவும் பெயர்ந்து மிரண்டாக வகுக்கப்படும்; அவற்றுட் கருவியென்பது முதற் காரணப்பொருள் காரியப்படுந் துணையும் அதனோடு டனாய் நின்று தொழிலியற்றும் அறிவில் காரணமாம், கருத்தாவென்பது அக்கருவியை முதற் காரணத்தோ டியைத்துக் காரியத்தைத் தோற்றுவிக்கும் அறிவுடைக் காரணமாம். பொன் பணியாந்துணையும் உதவியாக வேண்டப்படுங் கருவிகள் பட்டடையுஞ் சுத்தியலுங் குறடும் பிறவுமாகும், மண் குடமாந் துணையும் வேண்டப்படுங் கருவிகள் திரிகையுங் கோலும் பிறவுமாகும். இக்கருவிகள் அறிவில் பொருள்கள்; பொன்னைப் பணியாகவும் மண்ணைக் குடமாகவுந் திரிவுபடுத்துங் கருத்தாக்கள் முறை யே தட்டானும் குயவனும் ஆவர், இக் கருத்தாக்கள் அறிவு டைப் பொருள்கள். முதற்காரணப் பொருளைக் காரியப் பொருளாக்குஞ் செயல் கருவி கருத்தா இரண்டற்கும் ஒத்தலின் அவ்வொப்புமை பற்றி அவ்விரண்டும் நிமித்த காரணம் என்று ஒரு சொல்லான் வழங்கப்பட்டன. ஆகவே, எல்லாக் காரணங்களும் முதற் காரணம் நிமித்த காரணம் என இரண்டாய் அடங்குமாறு நன்கு விளங்கும். இனி எல்லாப் பொருளும் அறிவில்லாச் சடமும் அறிவுடைய சித்துமென இருகூற்றின் கட்படும். காணப் பட்ட இவ்வுலகங்களும் இவ்வுலகத்துப் பொருள்களும் அறிவில்லாச் சடப் பொருள்கள். இச்சடப் பொருள்களோ டியைந்து நின்று சிறிதறிவுடையவாய்ப் போதரும் உயிர்கள் எல்லாம் அறிவுடைய சித்துப் பொருள்கள். இங்ஙனமாய சடசித்துக் களுக்கெல்லாம் காரணம் கடவுளே என வுரைப்பின், அங்ஙனமவன் அவற்றிற்குக் காரணமாதல் முதற்காரண வகையாலோ நிமித்த காரண வகையாலோ என வினாவப்படு மன்றே? அற்றாயின், ஏகான்மவாதி களுள் ஒரு சாராரான பாற்கரியர் மதம் பற்றி உலகுயிர்கட் கெல்லாம் கடவுள் முதற்காரணப் பொருளே யாவரென இறுக்கற்பாற்றெனின்; நன்று சொன்னாய், முதற்காரணப் பொருளுக்கும் அதனினின் றுண்டான காரியப் பொருளுக் கும் பெயரும் வடிவுமொழிய வேறுபாடு சிறிதுமின்றாம், பொன் பணியாக மாறியவிடத்துத் தோடு குழை தொடி வளை என்றற்றொடக்கத்துப் பெயர் வேறுபாடும் அவ்வக் கலன்களுக்கேற்ற வடிவ வேறுபாடுமன்றி அக்கலன்கள் பிறிதெவ்வாற்றானும் அப்பொன்னின் வேறுபாடுறுவன வல்லவாம். இதுபோலக் கடவுளும் முதற்காரணப் பொரு ளெனின் உலகு உயிர் என்னும் பெயர் வேறுபாடும் அவ்வ வற்றிற்கேற்ற வடிவவேறுபாடும் ஒழித்து ஒழிந்த வகையா லெல்லாம் அஃது அவ்வுலகுயிர்களோடு ஒன்றாதல் வேண் டும். எதுபோலவெனின், ஒன்பது மாற்றுள்ள பொன்னிற் செய்த கலன்களும் ஒன்பது மாற்றுள்ளனவாகவே விளங் கும், பத்தரைமாற்றுள்ள பொன்னிற் செய்த கலன்களும் பத்தரை மாற்றுள்ளனவாகவே மிளிரும்; பொன்னிற் செய்த கலன்கள் செம்பாதலும் வெள்ளியிற் செய்த கலன்கள் இரும்பாதலும் யாண்டுமில்லை. இறைவனும் உலகுயிர்களும் ஒன்றேயெனின் அவை மூன்றன்றன்மையும் ஒன்றாதல் கண்டிலம். இறைவனோ வரம் பற்ற அறிவுடைப் பொருள்; உலகமோ ஒரு வரம்பிற் பட்ட அறிவில் பொருள், உயிர் களோ அவையும் ஒரு வரம்பிற்பட்ட சிற்றறிவுப் பொருள் கள். இறைவனோ எஞ்ஞான்றும் ஒரு தன்மையனாய்த் தான் அசைவின்றி நின்றே எல்லாவற்றையும் அசைவித்தும் அறிவித்தும் வயங்கும் எல்லையற்ற ஆற்றலுடையான்; உலகமோ அடுத்தடுத்து மாறுபாடெய்தி அசைக்க அசைந்து செல்வது, உயிர்களோ அவையும் பிறப்பு இறப்பு வட்டங் களில் அடுத்தடுத்துச் சுழன்று மாறி மாறி வருவதுடன் அறிவித்தாலன்றித் தாமாகவே அறியமாட்டாதன. இவ்வாறு முதல் வன்றன்மையும் உலகுயிர்களின் றன்மையும் ஒன்றி னொன்று பெரிதும் முரணி நிற்றலின் அவன் அவற்றிற்கு முதற்காரணப் பொருளாதல் ஒருவாற்றானும் செல்லா தென்க. மற்று அவன் அவற்றின் நிமித்த காரணப் பொருளா தலே பொருத்த முடைத்தாமென்க. எங்கும் நிறைந்த தனது அருள் வெளியிற் கிடக்கும் அவ்வுலகுயிர்களையெல்லாம் இயக்கியும் அறிவித்தும் வருதலிற் றன்வயத்தனாயுள்ள அக்கருத்தாவே தன்னாற் பலவகையாகத் திரிக்கப்படும் முதற்காரணப் பொருளாதல் யாங்ஙனமென்று பகுத்தறிய மாட்டாது அவை இரண்டனையும் ஒன்றெனப் பிறழ்த்தி யுரைக்கும் மடமையிற் பெரியது பிறிதில்லை யென்று கடைப்பிடிக்க. அற்றேலஃதாக, உலகத்திற் கருத்தாவாய் நிற்பாரெல் லாம் காரணகாரியங்களோ டொன்றாய் நில்லாது வேறாகவே நிற்பக் காண்டும்; குடத்தை வனையுங் குயவன் மண்ணினுங் குடத்தினும் வேறாகவே நிற்கின்றான். ஆகவே, நிமித்த காரணப்பொருள் முதற்காரண காரியங்களோடு ஒருங்கியைந்து நிற்க மாட்டா தென்பது பெறப்பட்டு, இறைவனும் நிமித்த காரணப் பொருளாயின் மாயையினும் மாயா காரியவுலகங் களினும் இயைபின்றி வேறாய் நிற்குமெனவும், அங்ஙனம் நிற்பின் அவன் சருவவியாபகன் அல்ல னெனவுங் கொள்ளப் பட்டு வழுவாமா லெனின்; வழுவா மாறில்லை; உலகத்துக் கருத்தரெனப் படுவாரெல்லாம் ஏகதேச வியல்பும் கருவி கடுணையின்றி எதனையுஞ் செய்ய மாட்டாமையும் உடையர்; அதனால் அவர் முதற் காரண காரியப் பொருள்களொடு ஒருங்கியைந்து நின்று செய்ய கில்லார். முதல்வனோ மாயையின் பரப்பெல்லாம் நிறைந்து நின்று அண்ட பேரண் டங்களையும் அவற்றிற் பட்ட உடம்பு களையும் இடைவிடாது தோற்றுவித்து வரும் வரம்பி லாற்றல் உடையனாகலின், அவன் முதற்காரண காரியங் களோடு ஒருங்கியைந்து நிற்பானென்பது தேற்ற மாம். எனவே, உலகின்கட் காணப்படும் நிமித்த காரணப் பொருளினியற்கையை உலகிற்கு முதல்வரான இறைவன் பால் ஏற்றுதல் பெரிதும் பிழை பாடுடையதாமென்றுணர்க. அஃதொக்கு மன்னாயினும், நிமித்த காரணப்பொருள் முதற்காரணப் பொருளோடு ஒருங்கியைந்து நின்று காரியத்தைத் தோற்று விக்குமாறு உலகின்கட் கண்டிலமா லெனின்; அறியாது வினாயினாய், சிலந்திப்பூச்சி தன்னுடம் பிலிருந்து நூல் தோற்று விக்குமாறும், நிலம் தன்கட் கிடந்த வித்தினின்று முளை தோற்று விக்குமாறும் இவ்வுண்மையை இனிது விளக்கும்; சிலந்தி என்னும் உயிரும் அவ்வுயிர் நின்ற உடம்பும் அவ்வுடம்பினின்று போதரும் நூலும் முறையே நிமித்த காரண முதற்காரண காரியங்களாதல் காண்க; சிலந்தி என்னும் உயிர் நிமித்த காரணப் பொருளாய் அதனுடம்பெங்கும் பிரிவின்றி நிறைந்து நிற்றல்போல இறைவனும் மாயையெங்கும் பிரிவறக் கலந்து நிற்குமென்ப தூஉம், அவ்வுயிர் தன்னுடம்பாகிய முதற்காரணச் சடப் பொருளினின்று நூலாகிய காரியத்தைத் தோற்று விக்குமாறு போல முதல்வனும் தான் கலந்து நிற்குந் தன்னுடம் பாகிய மாயையினின்றும் அளவிறந்த அண்ட பிண்டங்களை யெல்லாந்தோற்றுவிக்கு மென்பதூஉம் நுனித்தறிந்து கொள்க. இன்னும் நிலமும் நிலத்தின்கட் கிடந்த வித்தும் அவ்வித்தின் முளையும் முறையே நிமித்த காரண முதற் காரண காரியங்களாகும்; நிலமாகிய நிமித்த காரணத்தின் கண் விதை யென்னும் முதற்காரணப் பொருள் அடங்கி நிற்குமாறு போல முதல்வன் அருள் வியாபகத்திலே மாயை அடங்கி நின்று, நிலத்தினீரத்தால் விதையினின்று முளை கிளம்புதல் மான இறைவனருட் சத்தியின் உந்துதலவால் அம்மாயை தன்னிலிருந்து அண்டபிண்டங்கள் வெளிப்படுக்குமென்க. இவ்வாற்றால் நிமித்த காரணப்பொருள் ஏனைக் காரண காரியங்களோடு இயைந்து நிற்குமாறு தெள்ளிதிற் புலப்படும். இதுபற்றியே முண்டகோப நிடதத்து முதல் அத்தியாயத்து ஏழாம் மந்திரம், சிலந்திப் பூச்சி யானது நூலைத் தோற்று வித்து உள்ளிழுத்துக் கொள்ளு மாறு போலவும், நிலத்தி லிருந்து ஆண்டுகடோறும் புற் பூண்டுகள் முளைக்குமாறு போலவும், உயிரோடுலவும் ஓராண் மகன் தலையிலும் உடம்பிலுமிருந்து உரோமங்கள் தோன்றுமாறு போலவும் அழிவில்லாத இறைவனிலிருந்து உலகம் உண்டாகின்றது என இவ்வுண்மையை இனி தெடுத்து விளக்கா நின்றது. இங்ஙனம் நிமித்த காரணப் பொருள் முதற்காரணப் பொருளோ டொருங்கியைந்து நின்று உலகங்களைத் தோற்றுவிக்கு முறைமையை உணர்த்துதற் கெழுந்த இம் மந்திரத்தின் நுண்பொருள் இதுவாதால் காண மாட்டாத ஏகான்ம வாதியருள் ஒரு சாரார் இவ்வுவமைகள் சித்திலிருந்து சடமும் சடத்தி லிருந்து சித்தும் தோன்று மாற்றைக் காட்டுதற்கு எழுந்தனவென்று தமக்குத் தோன்றியவாறெல்லாங் கூறி இழுக்கினார். சிலந்தியென்னும் உயிரினின்று நூல் தோன்றாமல் அது தன்போற் சடமாகிய அதன் உடம்பினின்று தோன்று தலும், ஓராண்மகன் உயிரிலிருந்து உரோமங்கள் முளையாமல் அவை தம்போற் சடமாகிய அவனது உடம்பினின்று தோன்று தலும், சாகாத விதையினின்று முளை கிளம்பு வதல்லாமல் செத்ததன்கண் அது வரக் காணாமையின் உயிருடைப் பொருளிலிருந்து முளையின் உயிரும் அவ் வுயிரைப் பொதிந்த விதையாகிய உடம்பிலிருந்து முளையாகிய உடம்பு முறை வழுவாது தோன்றுதலும் அவர் நுனித்துக் காண மாட்டுவ ராயின் சித்தினின்று சடமும் சடத்தினின்று சித்துந் தோன்று மெனக் கொள்ளும் தமது கோள் புரைபட்டு வழுவுடைத் தாதலை உணர்ந்து கொள்வர், என்று இத் துணையும் விதந்தொடுத்து விளக்கிய வாற்றான் எப்பொரு ளுக்குங் காரணங் கடவுளே என மறை நூல் கிளக்குமுரை கடவுள் நிமித்தகாரணனெனக் காட்டப் போந்ததேயல்லால் அவன் அவற்றிற் கெல்லாம் முதற்காரணமாவனென உணர்த்துதற்கு அன்றென்பது ஐயமின்றித் தெளியப்படும். இனிச் சித்தினின்று சடந் தோன்றாதென்பது காட்டப் பட்டமையின் முதல்வனிலிருந்து உலகங்காரியப்படாதென்னு முண்மை தழுவற்பாலதேயாம், மற்றுக் குயவனது நினைவின் வன்மையானன்றிக் குடம் என்பதொன்று ஆக்கப் படாமை போல இறைவனது நினைவின் வன்மை யானன்றி உலகமும் ஆக்கப்படாதாம்; ஆகவே, குயவனது நினைவே குடமாயிற் றெனல் வேண்டும், அதுபோல் இறைவனது நினைவாகிய சிற்சத்தியே உலகமாயிற்றெனக் கூறுதல் அமையுமாகலின், உலகத்திற்கு முதற்காரணம் மாயையெனப் பிறிதொன்று கோடல் மிகை யாமாலெனின்? நன்று சொன்னாய், ஒரு குயவன் மண்ணாற் குடத்தை வனையும் முன் அவன் அதனை அதனால் இவ்விவ்வாறு வனையற்பாற்றென்று நினைவில் அமைத்துக் கொள்வன்; அவன் தன் நினைவில் அமைத்த குடத்தின் வடிவிற்கு ஏற்ப மண்ணின் கண் ஒன்றை வனைந் தெடுப்பன், இங்ஙனம் அல்லது மண்ணையின்றி அவன் தனது நினைவையே ஒரு குடமாகத் திரட்டிப் புறத்தே கொடுப்பானல்லன்? அவனது நினைவி லமைந்த குடம் அறிவு மாத்திரையாயுள்ளது? மண்ணிலமைந்த குடமோ சடப்பொருள் வடிவாய் நிற்பது. அறிவு மாத்திரை யாயுள்ள குடத்திற்கு முதற்காரணம் அறிவு; சடப்பொருள் மாத்திரை யாயுள்ள குடத்திற்கு முதற்காரணம் மண். மண்ணும் அறிவும் தம்மியற்கையின் மாறாயிருத்தலால், அவற்றின் காரியமான அறிவுக்குடமும் மட்குடமுந் தம்முள் வேறேயாம் என்க. அற்றாயினும், மட்குடத்தின்றோற்றத்திற்குக் குயவன தறிவின் கண் அமைந்த குடம் நிமித்தக்காரணமாய் வேறு நின்ற தென்றுணர்ந்து கொள்க. இதுபோலவே இறைவனது சிற்சத்திக்கண் அமைந்த உலகின்வடிவும், மாயையின்கண் அமைந்த உலகின் வடிவும் தம்முள் வேறு வேறியல்பினவா மென்ப துணரற்பாற்று. ஏதொரு வடிவும் பயனு மின்றிக் கிடந்த மாயையை உயிர்கட்குப் பல்வேறுடம்பு களாகவும் அவ்வுடம்புகள் உலவுதற்குப் பல்வேறுலகங்க ளாகவும் உருவாக்கி அதனைப் பயனுறுத்துவான் வேண்டி, எல்லாம் வல்ல இறைவன் தனது திருவுள்ளத்தின்கண் அஃது இவ்விவ்வாறு ஆகுக என்று நினைந்தவழி அந்நினைவின்கட் டோன்றிய வடிவியாது அதுவே அவனது சிற்சத்தி வடிவென்றும், அச் சிற்சத்தி வடிவிற்கேற்ப மாயையின்கட் டோற்றிய பஃறிறப்பட்ட வடிவுகள் யாவை அவையே சடப்பொருள் வடிவென்றும் பகுத்துணர்ந்து கொள்ளப் படுமாகலின், சடப்பொருள் வடிவங்களுக்கு முதற்காரணப் பொருளாவது மாயையே யாவதன்றி இறைவனது சிற்சத்தி யாகாமை கடைப்பிடித்தறிக. அங்ஙனமாயினும், மாயையிற் காணப்படும் வடிவங்கள் அத்துணைக்கும் நிமித்த காரண மான அறிவுருங்கள் இறைவன் றிருவுளத்தின்கண் முற் கொண் டமைந்து கிடக்குமென்பது குயவனதறிவின் கட் குடத்தின் வடிவும், ஓவியம்வல்லான தறிவின்கண் ஓவியத் தின் வடிவும் முற்கொண்டு அமைந்தாலன்றி, மண்ணின்கட் குடமும் படத்தின்கண் ஓவியமும் தோன்றா வாறுபோல, முதல்வன் றிருவுளத்தின்கண் மாயையின் வடிவுகள் முற்றும் முற்பட அமைந்தாலன்றி, அம்மாயையில் அவை தோன்று தற்குச் சிறிதும் இடனில்லை யென்று தெற்றென அறிந்து கொள்க. எனவே, சடத்தினுருவுக்கு ஒரு தலையாய் முன்னிற் பது சித்துருவா மென்பதும் இது கொண்டு முடிக்கப்படும். அற்றேல், உருவுடைப்பொருள்களெல்லாம் அழிதன் மாலையவாதல் எல்லாரானுந் தெளியக்கிடந்தமையின், முதல்வனறிவும் உருவுடைத்தாமெனின் அதுபற்றி அவனும் அழியுமியல்பினனாம் என்று கொள்ளப்பட்டு வழுவாமால் எனின்? அற்றன்று; உருவுடைப் பொருள்களெல்லாம் அழியும் இயல்பினவென்பது ஆராய்ந்தறியாதார் உரையாம்? உருவுடைச் சடப்பொருண்மாத்திரமே அழிவதல்லாமல் உருவுடைப் பொருள்களெல்லாம் அழியுமெனல் உண்மை யன்றாம். அல்லதூஉம் பொருள்கள் அழி வெய்துவது உருவு டைமையால் அன்று; அஃது அவ்வவற்றின்கண் உள்ள இயற்கையால் என்று கடைப்பிடிக்க. அன்றியும் அழிவு என்பதுதான் யாது? ஒன்று பருப்பொருளாயிருந்த நிலைமை கெட்டு நுண்பொருளாய் மாறுதலாமன்றே. பருப்பொருள் நுண்பொருளாதலும், நுண்பொருள் மறித்தும் பருப் பொரு ளாதலும் ஆகிய .இருவகை நிலையும் அறிவில்லாச் சடப் பொருளுக்கன்றி அறிவுடைய சித்துக்கு ஒருகாலும் இல்லை யன்றே. அழியுமியற்கை சடத்தின்கண் மாத்திரமே காணப் படுதலால், அச்சடத்தோடு ஒருமித்து நின்ற உருவமும் அஃதழியுங்காலத்து அதனோடு உடனழியும்; எனவே, சடத்தினியற்கையால் உருவழிவு நேர்கின்ற தல்லாமல் உருவினியற்கையாற் சடத்தினழிவு நேர்வதில்லை என்பதூ உம், இங்ஙனம் பெறப்படவே உருவெல்லாம் அழியுமென்று கூறும் உரை பொருந்தாதென்பதூஉம் தெற்றென விளங்கா நிற்கும். இனிச் சடப்பொருள்கடம்முள்ளும் நுண்ணிய பொருட் கண் உள்ளவடிவு எஞ்ஞான்றும் அழியாதாய் நிற்கப், பருப்பொருளாய் இருப்பவற்றுக்கட் டோன்றிய வடிவு மாத்திரமே அழிவுற்று மாறுமென்றும் உணர்ந்து கோடல் வேண்டும். ஒரு கருப்பங்கட்டி திரண்டு திண்ணி தாய் இருக்குங்கால் அது கட்புலனாம் வடிவுடையதாத லோடு நாவினாற் சுவைக்கப்படும் இனிமையும் வாய்ந்த தாயிருக் கின்றது; இஃது இத்திண்ணிய நிலை கெட்டுப் பாகாய் உருகியவழியுங் கட்புலனாவதாய் நாவிற்குத் தீஞ்சுவை பயப்பதாய் நிற்கின்றது; மற்று இஃது முற்றும் ஆவியாய் மாறியக்காற் கட்புலனாம் வடிவும் நாவின் சுவையும் காணப்படா தாகின்றது. அங்ஙனங் காணப்படா தொழியினும், அவ்வாவியைக் கண்ணாடிக் குப்பிகளிற் பிடித்துவைத்துக் குளிரால் இறுகச்செய்துழிப் பெயர்த்தும் அது கட்புலனாம் வடிவும் நாப்புலனாஞ் சுவையும் உடைய தாதல் தெளியப்படும். ஆகவே, பொறிப்புலனாம் வடிவுஞ் சுவையும் அது பருப்பொருளாய் நின்றுழி விளங்கித் தோன்றி நின்று பின்னரது நுண்பொரு ளாய்த் திரிபுற்றவழித் தாமும் நுண்ணிய நிலையெய்தி விளங்காமல் நின்றன வென்பது இது கொண்டு இனிது முடிக்கப்படும். ஆதலாற் பருப் பொருட்கண்ணதான வடிவும் தான் பற்றிய பொருட்டிரிவுக் கேற்ப நுண்ணிய நிலைமை யெய்தி நின்றதேயல்லாமல் முற்றும் இல்லாத வெறும் பாழாய் ஒழிதல் எஞ்ஞான்றும் இல்லையென்க. இக்கூறியவாற்றால் அழிவு என்னுஞ் சொற்கு இல்லாத வெறுஞ் சூனியமாய்ப்போதல் என்று உரைப்பார் உரை பொருளுண்மை யொடு பெரிதும் முரணுதலின் அவருரைக் கோள் உள்ளீடில்லாப் புரையே யாதலும், பருப் பொருள் நுண் பொருளாய்த் திரிபுறுதலே அச்சொற்குப் பொருளாதலும் நன்கு பெறப்படும். இன்னும், பருப்பொருள் நுண்பொருளாய்த் திரிபெய்தியவழியும் அதன்கண் உள்ள வடிவு வெறும்பாழாய் ஒழியாமல் நுண்ணியதாயே நின்று பெயர்த்தும் அது பருப்பொருளாயவழித் தானும் அப் பெற்றிக்கேற்பக் கட்புலனாதல் காண்டலின், இங்ஙனம் இரு திறமாய் வேறுபடாமல் ஒரே நிலையில் நிற்குஞ் சூக்குமப் பொருட்கண் உள்ள வடிவுதானும் அதன் பெற்றிக்கேற்ப மாறாதாய் நுண்ணியதாய் ஒருபடித்தாயே நிற்குமென்பதும் தானே பெறப்படும். இனி, இவ்வாறு சூக்குமமாய் நின்ற சடப்பொருட் கண்ணதான வடிவமே என்றும் ஒருபடித்தாய் நிற்குமெனும் உண்மை மறுக்கப்பட்டதாயின், நுண்பொருட்கெல்லாம் நுண்ணியதாய் எல்லையற்ற பேரறிவுப்பொருளாய்த் திகழும் இறைவற்குள்ள அறிவுருவம் என்றாயினுஞ் சிதைவு படு மெனக் கூறல் உண்மையறிவினார்க்கு எட்டுணையும் இசையு மோ? இறைவனறிவு ஏனைச்சடப் பொருள்போற் பருத்த லும் நுண்ணிதாதலும் இன்றி என்றும் ஒரு பெற்றித்தாயே நிற்கும் நீரதாகலின் அவனதறிவின்கண் ஏய்ந்த வுருவமும் அங்ஙனமே நிற்குமென்றல் பேரறிவினார்க்கு விளங்கா தொழியுமோ? என்று இம்முறையா னெல்லாம் பகுத்துணர வல்லார்க்கு இறைவன தறிவுருவம் அழியா நிலைமைத்தாதல் அங்கையங்கனிபோல் விளங்குமென்க. இஃதொக்குமன்னாயினும், இறைவன தறிவுக்கும் உருவம் உண்டென்றல் எற்றாற் பெறுதுமெனிற்; கூறுதும், நம்மனோர தனுபவத்திற்குப் பொருளாய்க் கிடக்கும். இந்நிலவுலகம் முதலான எண்ணிறந்த உலகங்களும் இவ்வுலகங்களில் அமைந்த பல திறப்பட்ட பண்டங்களும் பல வேறு வகைப்பட்ட உயிர்களுக்கும் நிலையாயுள்ள பல்வேறு டம்புகளும் இப்பருப் பொருணிலைமை எய்துதற்குமுன், எல்லாம் மிகநுணுகிய ஆகாய வடிவில் நின்றனவென்பது எல்லா நூலார்க்கும் உடன்பாடாம். அத்துணை நுணுகிய நிலையிலிருந்த அவை பெரிதும் வியக்கற்பாலவாம். இத் திறத்த பல்வேறு வடிவுடைப் பொருள்களாய் யாங்ஙனம் மாறின வென்று ஆராயலுறு வார்க்கு அறிவில்லாச் சடப் பொருள் களான அவை தாமாகவே அங்ஙனம் பலதிறப் படுதல் ஆகாமையின் அவற்றை அங்ஙன மெல்லாம் ஆக்க வல்ல ஒரு பேரறிவுப் பொருள் இன்றியமை யாது வேண்டப் படும் எனும் உண்மை நன்கு விளங்கா நிற்கும். m‰w‹W, EQ»a ÃiyÆÈUªj mit FËuhš ïW»¥ gyâwkhŒ khWjny mt‰¿‹ ïa‰ifahkhfÈ‹, ïjid¢ brŒj‰F« X® m¿î¥bghUŸ nt©Lbk‹whš rhyh bjÅ‹; e‹W T¿dhŒ., அறிவில்லாச் சடப்பொருட்கு இயற்கையாவது பிறிதொன்றன் சேர்க்கையில்லா வழி யெல்லாம் என்றும் ஒரு படித்தாகவே நிற்குந் தன்மையேயாம். பனிக்கட்டி என்றுங் குளிரும், தீச் சுடும்,காந்தம் பற்றிய இரும்பைப் பற்றிய படியே கிடக்கும்; என்னை? தீயின் சேர்க்கையால் பனித்திரளை நீராய் உருகி ஆவியாக மாறுதலும், நீரின் சேர்க்கையால் தீக்குளிர்ந்து ஆறிப் போதலும், சிறான் ஒருவன் காந்தத்தினின்று இரும் பைப் பிரித்தெடுத்தால் அவை வேறாதலும் கண்கூடாய்க் காண்டு மாதலின் என்க. இங்ஙனமே, ஆகாயவடிவில் நுணுகி நின்ற உலகம் குளிரால் இறுகிப் பருப்பொருளாவதூஉம், பருப் பொருளாய் நின்றது பெயர்த்தும் தீயின் சேர்க்கையால் ஆகாயமாவதூஉம் வெப்பமுந்தட்பமும் மாறிமாறிச் சேர்தலால் என்று உரைக்கலுறுவார்க்கு, இவற்றின் மாறு தலுக்கு இடைப்பட்ட காரணங் களாயுள்ள வெப்பமுந் தட்பமுங்கூடச் சடப்பொருள்களேயாய் முடிதலின், அவையும் ஒருபடியாகவே இயங்கல் வேண்டுமல்லால் தம்மியற்கை மாறி ஒருகால் வெப்பமும் பிறிதொருகாற் றட்பமுமாய் மாறிமாறி மிக்கெழுந்து தோன்றுதல் என்னை யெனக் கடாயவழி இவற்றிற்கெல்லாம் முடிந்த நிமித்த காரணமாய் அறிவுடைப் பொருள் ஒன்று இன்றியமை யாது கூற வேண்டுதலின் அதுவும் அமையாதென மறுக்க. வெப்பத்தின் சேர்க்கையால் நுணுகிய நிலையில் வெப்ப மாயே நின்றது. அங்ஙனமே நில்லாமல் இடையொரு காற் குளிரால் இறுகவேண்டுவ தென்னையென நுனித்துக் காண வல்லார்க்கு அங்ஙனம் அம்மாறுதலைச் செய்தது முதல் வனது திருவுளப்பாங்கேயா மென்பது புலப்படும். ஆதலான், மிக நுண்ணிய மாயை வடிவாய்க் காரண நிலையில் நின்ற இவ்வெண்ணிறந்த வுலகங்களும், இவ் வுலகத்துப் பல் பொருள்களும் அக்காரண நிலையில் நின்று புலப்பட்ட இக்காரிய நிலையிற் பலமாறுதல் களை எய்துமாறு செய்த அம்முதல்வனது பேரறிவு அவற்றை அங்ஙனம் விளை விக்கும் முன் எத்துணை விளக்கம் உடையதாய் இருத்தல் வேண்டும்! ஆகையால், இம்மாயையில் அமைக்கப்படும் அளவற்ற வடிவங்களுக்கும் முதலான அறிவினுருவங்கள் இறைவன் றிருவுளத்தின்கண் அமைந்து நிற்க வேண்டுவது இன்றியமையாத முடிபொருளேயாமென்க. இனி அறிவு விளக்கமாவது அறிவு உருவுடைத்தாய் நிற்றலேயாமென்பதூஉம் ஒரு சிறிது காட்டுதும். பிறந்த போது அறிவு மழுங்கிய நிலையிற் கிடக்கும் மகவு பின்னர் நாட்சென்று வளர வளர ஐம்பொறிகளின் வாயிலாக உலகத்துப் பொருள் களை முறைமுறையே யறிந்து அப் பொருட்டன்மைகளையும் அவற்றின் வடிவங்களையும் மெல்ல மெல்லத் தன் உள்ளத்திற் பாவிக்கவல்லதாய் வளர்ந்து ஆண்மைப்பருவம் எய்தியபோது அறிவு விளக்கமுடைத்தாய்த் திகழ்தல் கண்டாமன்றே! பொருட்டன்மைகளையும் அவற்றின் வடிவங்களையுங் கருத மாட்டா நிலையில் அறிவு விளங்காதிருந்தமையும், அவற்றைக் கருதவல்ல நிலையில் அது விளக்கமுடையதாதலும் தேர்ந்து ணரின் விளங்கிய நிலையில் உலகத்துப் பொருள்களோ டொத்த உணர்வுகளும் உருவங்களும் அறிவின்கண் அமைந் தழியாதிருத்தல் இனிது புலனாம். எனவே, அறியாக்காலத்து உருவிலதாய் நின்ற உயிரின் அறிவு அறியுங் காலத்து உருவுடைத்தாயே விளங்குமென்பதும், உலகத்துப் பொருள் களின் வாயிலாக அறிவினுருவு உயிரின்கட் டோன்றியதாயினும் அஃது ஏனைச்சடப்பொருள் வடிவுபோல் அழியுந்தன்மைத் தன்றாய் என்றும் நிலைபேறாய் நிற்குமென்பதும் ஐய மின்றித் துணியப்படுமென்க. அற்றேல், அஃது அழியாது நிற்றல் எற்றாற் பெறுதுமெனின், வேட்கோவன் தான் வனைந்த குடம் சால் முதலியன எத்துணை முறை உடைந் தழியினும், அவற்றைத் திரும்பத் திரும்ப வனைந்து தருத லானும், அங்ஙனம் வேண்டிய போழ்தெல்லாம் அவற்றைச் செய்து முடித்தற்கு அவனதறிவின் கண் அமைந்த அவற்றின் உருவங்கள் நிலைபெற்று நின்றாலன்றி அது கடை போகாமை யானும் அவனறிவினுருவங்கள் சிதையா நிலைய வாதல் பெற்றாம். பெறவே, நிலைபெற்ற உருவுடைத் தாகிய உயிர்களின் அறிவு என்றும் விளக்கமுடையதாய் நிற்கு மென்பதூஉம் தானே போதருமென்க. இனி இறைவனும் அறிவுடைப் பொருளேயா மென்பது மேலே பெறக் கிடந்தமையானும், அவனதறிவும் ஒரு ஞான்றும் மறைபடுதலின்றி என்றும் விளக்க முடைத் தாதல் சான்றோர்க் கெல்லாம் ஒப்பமுடிந்தமையானும், அவனதறிவும் என்றும் உருவு கொண்டே நிற்குமென்பதுந் தெளிந்த முடிபாம். இறப்பவும் நொய்தாய் ஏதொரு வடிவும் புலப்படக் காட்டாது நின்ற மாயையில் ஆக்கப்படும் பலதிற வடிவங்களையும் இறைவன் றனது திருவுளத்திற் கருதி நின்றமையால் அவன் மாட்டு எல்லா அறிவுருவங்களும் முற்கொண்டமைந்து கிடந்தனவென்று கடைப்பிடிக்க. இனி அறிவுக்கும் உருவம் உண்டென்பது இஞ் ஞான்றை மனநூல்வல்லார் ஆராய்ந்து கண்ட ஓர் உண்மை முடிபுமாய் இலங்கா நிற்கின்றது. பிராஞ்சு நாட்டில் இவ்வாராய்ச்சியில் மிக வல்லுநராய்த் திகழும் பாரதகர்* சேய்மைக்கணிருந்து ஒருவர் நினைக்கும் நினைவுகளையும் அவருளத்தில் நிகழும் உணர்வு நிகழ்ச்சிகளையும் நொய்ய பொறிகளின் உதவியாற் பட மெடுத்துக் காட்டுகின்றார். ஒருவர் நினைத்த நினைவு தான் இசைந்து நின்ற மனவெளி யை இயக்க, அம்மனவெளி தான் பற்றிநின்ற பொருள் வெளியை இயக்க, அப்பொருள்வெளி தன்கண் எழும் அணுவினியக்கத்தால் அவ்வறிஞர் அமைத்த பொறியின் தகட்டைத் தாக்க, மிக நுணுகிய அதிர்ச்சியையும் ஏற்கும் அத்தகட்டில் அந்நினைவோடொத்த வடிவம் பதிகின்றது, தூக்கணங் குருவியை நினைக்கு மொருவன் நினைவு அத்தகட்டில் அக்குருவியினுருவைத் தோற்றுவிக்கின்றது; மெல்லிய முல்லை மலரை நினைக்கும் நினைவு அதன்கண் அம்மலரின் வடிவைத் தோற்றுவிக்கின்றது; இங்ஙனமே எவ்வெவர் எவ்வெப் பொருள்களை நினைக்கின்றனரோ அந்நினைவிற்கேற்ற வடிவுகள் அத்தகட்டின் கட்புலனாய்த் தோன்றுகின்றன. இவ்வாறு புறப் பொருளின்கட் புலனாகும் வடிவுகளைத் தோற்றுவிக்கும் நினைவும் அவ்வடிவுகளோ டொத்த உருவங்கள் உடையதாய் இருந்தால் அல்லது அப்புறப் பொருள்கள் வடிவுடையவாதல் செல்லாமை தேற்றமாம். புறத்தேயுள்ள ஒருபொருளின்கண் ஒரு வடிவு தோன்றும் முன் அதனை அதன் கட் டோற்றுவிக்குங் கருவி யாய் அறிவின் உருவு அகத்தேயுள்ள உயிரின்கண் அமைந்து கிடத்தல் மறுக்கலாகா உண்மையாய் நிலைபெறுதல் காண்க. அற்றேல் அஃதாக இறைவனறிவு பல திறப்பட்ட உருவங்களுடைய தாமென்று கோடுமாயின், வேறு பாட்டின்றி ஒரு பெற்றியனாய் நிற்கும் அவனது இறைமைக் குணத்திற்கு வேறுபாடு வந்தெய்தி வழுவாமாலெனின், அறிவில் பொருள்க ளெல்லாம் அழியுமியல்பின வாகையால், அதுபற்றி அவற்றின் கண் வடிவங்களும் வேறுபாடு உறுவனவாகின்றன; மற்று எல்லாம்வல்ல இறைவனோ அவைபோல் அறியு நீர்மையன் அல்லனாய் என்றும் ஒரு பெற்றியனாய் நிற்பனாகலின் அவனது பேரறிவின்கண் மரீஇய உருவங்களும் என்றும் ஒரு பெற்றிய வாயே நிற்கும்; ஆதலால் அவை வேறுபாடெய்தி அவற்கு வழுவாதல் யாண்டையதென மறுக்க. அஃதொக்கு மாயினும், நம்ம னோரது அறிவின்கட் காணப் படும் பல்வேறு நினைவுருவங் களும் இன்ப துன்பங்களுக் கிடனாய் நம்மை வேறுபாடுறு வித்தல்போல, முதல்வன் மாட்டும் பல்வேறு நினைவுருவங்கள் தோன்று மென்றுரைப் பின் அவையும் அவனை இன்ப துன்பங்களிற் படுத்து வேறுபாடு உறுவிக்குமாலெனின்; நன்று கடாயினாய், நம்மனோரெல்லாம் பண்டு தொட்டே அறியாமை வயப்பட்ட வராய் இருவினை நுகர்ச்சிக்கட் கிடந்துழலுநராகலின், அவ்விருவினை வழித் தோன்றும் அவர்தம் நினை வுருவங்கள் அவரை வேறுபாடுறுத்தா நின்றன; மற்று இறைவனோ என்றுந் தூய அறிவினனாய் விளங்குதலானும், அதனால் இருவினைப் பிணிப்பும் அது பற்றி வரக் கடவ இன்பதுன்பங் களும் அவற்கின்மையானும், உயிர்களைப் பற்றிய அறியாமை யைத் துடைத்து அவை வயிற்றுக்குத் தனது பேரின்பத்தை வழங்குதற் பொருட்டுத் தனது திருவுளத்தெழுந்த பேரிரக்கங்காரணமாக அவை தமக்கு உடம்புகளாகவும் உலகங்க ளாகவும் முதற் பொருண் மாயையைத் திரிபு செய்து படைப்பான் வேண்டிக் கருதிய வாற்றான் அவன்கண் அந் நினைவுருவங்கள் தோன்றின வாதலானும் அவ்வருளறி வுருவங்கள் அவனை வேறு படுக்குமாறு யாங்ஙனமென விடுக்க. இருவினைகளையும் மாறிமாறி நுகருதற்கண் உண்டாம் நினைவுருவங்கள் ஒருவனை வேறுபடுத்துவதல்லால், அன்பு அருள் என்னும் கடவுட் குண எழுச்சிக்கட்டோன்றும் நினைவுருவங்கள் அவனை ஒரு சிறிதும் வேறு படுத்த மாட்டாவாய் அவனை அவை பேரின்பத்த ழுத்துமாறும் அனுபவத்தின்பாற் படுத்தறிந்து கொள்க. இத்துணையுங் கடவுள் மாயையின் வேறான நிமித்த காரணப் பொருளேயாமென்பதனை நிறுவுதற்கண் விரிந்தன. இவ் வாற்றால் மாயை உலகிற்கு முதற்காரணமா மென்பதும், கடவுள் அம்மாயையினின்று உலகங்களைத் தோற்றுவித்தற்கு இன்றியமையாது வேண்டப்படும் நிமித்தகாரணமாய் அதனோடு ஒற்றித்து நிற்குமென்பதும் ஐயுறவின்றி நாட்டப் பட்டனவென்க. அடிக்குறிப்புகள் 1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், வினையியல் 3-ஆம் சூத்திரவுரை 2. Electrons 3. இவ்வெழுத்தெனப்பட்ட ஓசையை அருவென்பர் அறியாதார். அதனை உருவென்றே கோடும். அது செயிப்பச் சேறலானும், செறிப்பவருதலானும், இடை எறியப்படுதலானும், செவிக்கட் சென்று உறுதலானும், இன்ப துன்பத்தை ஆக்குதலானும், உருவும் உருவுங்கூடிப் பிறத்தலானும், தலையும் மிடறும் நெஞ்சுமென்னும் மூன்றிடத்தும் நிலைபெற்றுப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உறப்பிறக்கு மென்றயைனும் உருவேயாம் என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். 4. நீர்வளி - Hydrogen 5. உயிர்வளி - Oxygen 6. Dr. Baraduc. 4. விந்து இவ்வுலகங்களுக்கும் இவ்வுலகங்களிலமைந்த உடம்பு கட்கும் முதற்காரணப் பொருளான மாயையென்பது மிக நுணுகிய தொன்றேயாயினும், அஃது அறிவில்லாத சடப் பொருளேயாம். அறிவில்லாச் சடப்பொருள்கள் எல்லாம் அறிவுடைய சித்துப்பொருள் இயக்கினாலன்றித் தாமாக இயங்குதலும் பிறவற்றை இயக்குதலும் மாட்டதனவாம். இப்பெற்றிப்பட்ட மாயை தானே உலகங்களாகவும் உலகத்துப் பொருள்களாகவுந் திரிபுறுதல் ஏலாமையின், இதனைத் திரிபுறுத்துதற்கு எல்லா அறிவும் ஆற்றலுமுடைய முதல்வ னொருவன் இன்றியமையாது வேண்டப் படுவ னெனுமுண்மை மேலே பலகாலுமெடுத்து வற்புறுத்தப் பட்டது. இனி, இவ்விறைவனது தன்மை, அறிவில்லா மாயையின் நுண்ணிலை மையினும் சிற்றறிவுடைய உயிர் களது நுண்ணிலை மையினும் சால நுண்ணிதாய்ச் சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டா நொய்மைத்தாதலும் ஆங்காங்குக் காட்டப்பட்டது. இனி நுண்ணியவற்றுள் எல்லாம் நுண்ணியதான இறைமுதற் பொருளிலிருந்தே உலகத்தை இயக்குஞ் சக்தி தோன்றுமாறும், அச்சக்தியை நடு நின்று வாங்கி மாயையில் உய்த்தற்கு அச்சக்தியோ டொரு புடையொத்த நொய்ம்மை வாய்ந்த மற்றுமொரு சூக்குமதத்துவம் வேண்டப்படுமாறும் சிறிது காட்டுதும். அறிவில்லாச் சடப் பொருள்கடம்முள்ளும் ஒன்றை அசைக் கும் ஆற்றல் அதனினும் நொய்யதான பிறிதொன்ற னிடத்தி ருந்தே வராநிற்கின்றது. மரமுங் காற்றும் இரண்டும் சடப் பொருள்களேயாயினும், மரம் பருப்பொருள், காற்றோ நுண்பொருள்; மரத்தின்கட் காணப்படும் அசைவு காற்றின் அலைவால் நிகழ்கின்றது. இனி உலகத்தின்கண் இடை யறாது நிகழும் நிகழ்ச்சிகளெல்லாம் மக்கள் அறிவு முயற்சியாற் றோன்றி நடைபெறுகின்றன. உலகத்துப் பொருள்களெல்லாம் சடப் பொருளேயாக, மக்களறிவோ பெரிதும் நுண்ணியதாய் அளக்கலாகா இயற்கைத்தாய் நிற்றல் காண்டுமன்றே? இச்சடப் பொருணிகழ்ச்சி முழுதும் இறப்ப நொய்ய மக்களறிவின் கட்டொன்றி நடைபெறுத லுங் காண்டுமன்றே? இங்ஙனமே எல்லாப் பொருள்களினுங் காணப்படும் அசைவுகளை யெல்லாம் பகுத்தாராயும் வழி அவை நுண்பொருட்கண் உள்ள ஆற்றலினால் உந்தப்பட்டே நிகழ்கின்றன வென்னும் உண்மைதெற்றென விளங்கா நிற்கும். விளங்கவே, எல்லா உலகத்தின் கட் காணப்படும் எல்லா நிகழ்ச்சிகளையுந் தோற்றுவிக்கும் ஆற்றல் அவை யெல்லா வற்றினும் நனி நொய்ய இறைவனிலிருந்தே போதரு மென்பதூஉந் தானே பெறப்படுமென்க. இனி இவ்விறைவன்பாலிருந்து போதரும் ஆற்றலை வாங்கி மாயையில் உய்த்தற்கு இடையே ஒரு தத்துவங் கருவியா வேண்டப்படுமாறு ஆராயற்பாற்று. இறை முதற்பொருள் அளவிடற்கரிய பேராற்றல் வாய்ந்ததாகலின் அதன்பாலிருந்து போதரும் அவ்வாற்றலை நேரே வாங்கிப்பெற்று நிற்றற்குரிய தன்மை மாயையின்கட் சிறிதுமில்லையாம். இவ்வியற்கை சடப்பொருள்கடம் முள்ளுங் காணப்படும். யாங்ஙனமெனின், கடுஞ்சூறைக் காற்று மிகவிரைவோடு வீசுங்கால், அதனெதிர் மரங்களும் மலைகளுங்கூட முனைத்து நிற்கமாட்டாமல் நிலை பெயர்ந்து வீழ்ந்தழிதல் கண்கூடாய் அறியப்பட்ட தொன்றன் றோ? தீயானது தன்னிலையில் மிக்கெழுந் தெரியுங்கால் எத்தகைப் பருப்பொருளும் அதனெதிர் நிற்கமாட்டாது படுசாம்பராய் வெந்தமிழில் காணப்பட்ட தொன்றன்றோ? தீயினும் பருப்பொருளேயாயினும் நிலத்தினும் நுண் பொரு ளான நீர் பெருக்கின் முன் ஏனைப்பொருள்க ளெல்லாம் தந்நிலை குலைந்து வேறாதல் பலகாலுங் காண்டு மன்றோ? ஆனதுபற்றியே, காற்றின் ஆற்றலையும் தீயின் வெம்மை யையும் நீரின் ஓட்டத்தையும் பயன்படுத்துக் கொள்ள விழை குவார் அவற்றின் சக்தியை இடையே ஏற்றற்கிசைந்த பொருள்களின் வாயிலாற் பெற்று அதனைப்பயன்படுத்து வாராயினா ரென்க. சடப்பொருள்களில் நுண்ணிய வாயிருப்பன வற்றின் ஆற்றலை ஏனைப் பருப்பொருள்கள் நேரே ஏற்க மாட்டாவாய் அழிந்து படுமாயின், மிக நுண்ணிய சித்துப் பொருள்கட் கெல்லாம் மேம்பட்டு ஆற்றவும் நொய்யதாய் விளங்கும் முழுமுதற் கடவுளிடத்தி ருந்து உண்டாம் வரம்பற்ற பேராற்றலை அறிவில்லாச் சடப்பொருளான மாயை எங்ஙனம் ஏற்றுத் தாங்க வல்லும்! பெரு நெருப்பைச் சேர்ந்த பருப் பொருள்களெல்லாம் அதனால் எரிக்கப்பட்டு நுண் பொருள் களாய் மாறுதல் போல, அளவற்ற அறிவுப் பெருந்தீயாய் விளங்கும் முதல் வனைச் சார்ந்த மாயையும் அவனாற் பின்னும் நுண்ணி தாய்த்திரிபுறுத்தப் படுமே யல்லாமல், அஃது இறுகி வரவரப் பருப்பொருளாய் இறங்கி உலகங்களையும் உடம்பு களையும் உலகத்துப் பல் பொருள்களையுந் தோற்றுவிக்க மாட்டா தாகும். உலகங்களும் பிறவுந் தோன்றாவாய் ஒழியவே உயிர்களும் அவற்றின்கட் பட்டு அறிவு விளக்கமுறுதலும் இல்லையாய்ப் போம். ஆகவே, எல்லா இரக்கமும் சான்ற தனித்தலைமைப் பெருங்கடவுளான சிவம் தன் ஆற்றலைப் பருப்பொருள் மாயையானது ஏற்று உலகங்களைப் பிறப்பிக்க வல்ல தல்லாமைகண்டு, நுண்ணிலைமையில் ஒருபுடை தன்னை யொத்தும் பருப்பொருணிலைமையில் ஒரு புடை மாயையை ஒத்தும் நின்ற விந்துவைத் தன தாற்றலை ஏற்றுய்த்தற்கியைந்து இடைநிற்குங் கருவியாகப் பற்றி, அதன் வாயிலால் மாயை யினின்று உலகங்களையும் பிறவற்றையும் தோற்றுவிக்கலாயிற் றென்றுணர்க. இறைவன தாற்றலை நேரே பெறுதற் கேலாத மாயை அதனை விந்து வென்னுந் தன்னினும் மேற்பட்ட நுண்பொருள் வழியாற் பெற்றுத் தொழிற் படுமாற்றை, இந்நிலவுலகத்துப் பொருள் களுள்ளும் வைத்து விளக்கிக் காட்டுவாம். இந்நிலவுலக மெல்லாம் பண்டொரு காலத்துப் பனிப்பாறையால் முழுதும் மூடப்பட்டுப் புற்பூண்டுகளும் ஏனையுயிர்களும் உயிர்வாழ்தற்கு ஏற்றதன்றாய் இருந்தது. பின்னர்ச் சிலகாலங் கழித்து இந்நிலத்தின் நடுவேயிருந்த பனிப்பாறை முற்றும் ஞாயிற்றின் வெம்மையாற் கரைந்து நீராய்ப்போக நிலம்புலனாகிப் புற்பூண்டுகளும் ஏனை யுயிர்களும் தன்கட் டோன்றி உயிர்வாழ்தற்கு இடனாயிருந்து பயன்பட்டு வருகின்றது. இவ்வியற்கை நிகழ்ச்சியின் உண்மையை உற்றராயுங் கால் தீயின் வெம்மையே உயிர்கள் உடம்புகளில் உலாய் வாழ்தற்கு இன்றியமையாக் கருவியாதல் புலனாகின்ற தன்றோ? இத்துணை இன்றியமையா நெறிப்பாடுடைய தேனும் தீயின் வெம்மையை நேரே பெற்று உயிர்கள் யாக்கையில் நிலை பெறல் இயலுமோ? இயலாவன்றே. இம்மாட்டாமையால், தீயின் வெம்மையானது இந்நில மண்டிலத்திற்கு நெடுஞ்சேய்மைக் கண்ணே உலவும் ஞாயிற்று மண்டிலத்திற் புலனாய்த் தோன்றி வரவரத் தனது ஆற்றாக் கடுமை தணிந்து இதனை வந்து தொடுங்கால் உயிர்கள் தாங்குதற்கியைந்த அளவினதாகிப் பனிப்பாறையை உருக்கி நீராக்கி, அந்நீரின் வாயிலாக எல்லா உயிர்களையும் தத்தம் உடம்புகளில் நிலைபெறச் செய்து வராநிற்கின்றது. தண்ணீர் நம்மனோர் ஊற்றுணர்வுக்குத் தட்பம் உடையது போற் றோன்றினும், உண்மையில் அது தான் நீராய் நிற்றற் கியைந்த அளவு வெம்மையைத் தன்கட் பொதிந்து வைத்திருக்கின்றது. நீரின்கண் இங்ஙனம் வெப்பம் உண்மை யாங்ஙனம் அறியப்படுமெனின்; இஞ்ஞான்றை இயற்கைப் பொரு ணூலார்1 தாம் அரிதிற் செய்தமைத்த சூடறி கருவியைக்2 கொண்டு நீரின்கணுள்ளள வெம்மை எளிதில் அறியப்படுவ தேயாம்; அச்சூடறி கருவியை ஒரு பனிக்கட்டி மேல் வைத்தால் அக்கருவியின் கீழ்நின்ற இரசம் மேல் எழாது இருந்த நிலையிலி ருத்தலும், அதனைத் தண்ணீரினுட் சிறிது அமிழ்த்தினால் அவ்விரசம் தன்னிலை விட்டு மேலெழுந்து எண்பத்திரண்டு கீற்றுகள் வரையில் ஏறி நிற்றலும் காணுங் கால் பனிக்கட்டியில் இல்லாத சூடு தண்ணீரில் அமைந்து நிற்றல் நன்கு புலனாம். இவ்வாராய்ச்சி கொண்டு தீயின் வெப்பமானது தான் உயிர்கட்குப் பயன்படுமுகத்தால் தன் கடுமை மிகக்குறைந்து தண்ணீரில் ஒருபடித்தாய் நிற்றல் ஐயமின்றி அறிந்து கொள்ளப்படும். இனித் தீயோ மிக நுண்ணியதாயும் அத் தீயினாற் பயன்பெறும் உயிர்களின் உடம்புகளோ பருப் பொருள்களாயும் இருத்தலால், அத் தீயின் ஆற்றலான வெப்பம் அவைகட்கு நேரே பயன் படுவதன்றாக, ஒருவாற்றாற் றீயின் நொய்ம்மையோ டொத்தும் பிறிதொரு வாற்றால் உடல்களின் பருமையோ டொத்தும் நிற்பதான நீரின் வாயிலால் அஃது உயிர்கட்குப் பயன்படுவதாகின்றது. இங்ஙனமே இறை முதற் பொருளின் அளவுக்கடங்கா அறிவொளி வெம்மையானது தனது நொய்ம்மைக்கும் மாயையின் பருமைக்கும் இடை நிகர்த்த தாய் நின்ற விந்துவைப் பற்றிக்கொண்டு அதன் வழியே மாயையை இயக்கா நிற்கின்றதென ஓர்ந்துணர்க. இவ்வாறு முதல்வற்கும் மாயைக்கும் நடுநின்று உதவுவதாகிய நொய்ய பொருளே விந்து என்று சைவசித்தாந்த நூல்களில் வழங்கப்படுவ தாயிற்றென் றுணர்ந்து கொள்க. அற்றேல், முதல்வற்கும் மாயைக்கும் இடையே இங்ஙன மொரு பொருள் உண்டென்பது எற்றாற் பெறுதுமெனின்; கருமுகிற் குழாங்கள் ஒருங்குகூடி வானின்கட்டோன்றுங்கால் அவற்றிடையே இடித்து மின்னொளிதுளங்கல் கண்டாமன்றே? இம்மின்னொளி3 யானது நிலன் நீர் தீ வளி வான் என்னும் ஐம்பூதங்களுள் ஒன்றன்றாதல் இஞ்ஞான்றை இயற்கைப் பொருணூலார்க் கெல்லாம் ஒப்ப முடிந்தது. இஃது இவ்வைம் பூதங்களுள் ஒன்றன்றாகவே இவற்றிற்கு முதலான மாயையில் உண்டானதும் இஃதன்று என்பது பெற்றாம்; என்னை? மாயையின் காரியங்களுள் ஒன்றாகாதது அவற்றின் காரணத்திற் சேர்ந்ததாதல் செல்லாமையான் என்க. தீயினொளியே மின்னொளியாமென் றுரைத்தால் வரும் இழுக்கென்னை யெனின்; தீயினொளி தீயெரியுங்காற் பிறப்பதாம்; மற்றுத் தீயோ உயிர்வளி4 யினுதவியின்றி எரியமாட்டாதாம்; மின் னொளியோ உயிர்வளியினுதவியைச் சிறிதும் அவாவாது விளங்கக் காண்டலின் அது தீயொளியின் வேறாதல் நன்கு துணியப்படும். அற்றன்று, மின்னொளி வானின்கண் மிளிரக் காண்டலின் அது வானென்னுங் காரணத்திற் றோன்றுங் காரியமேயெனின்; அதுவும் அமையாது, என்னை? ஓசையும் ஒளியும் உலவுதற்கு இடந்தந்து நிற்கும் வெறும் வெளியே வானாவதன்றி, அது மின்னொளிக்கு முதற்பொருளா மென்றல் எவ்வாற்றானும் பெறப்படாமையின் என்பது. அற்றாயினும், ஐம்பூதங்களினும் முறை முறையே நுணுகி மேற்செல்லும் தன்மாத்திரை அகங்காரம் புத்தி குணம் கலை முதலாக மேலெடுத்து விதிக்கப்பட்ட மாயாதத்துவங்களுள் ஒன்றாக அம்மின்னொளியினைக் கொள் ளாமோ வெனிற், கொள் ளாமன்றே, என்னை? அத்தத்துவங்களெல்லாம் வெவ்வேறியல் பினவாதல் மேலே காட்டப்பட்டமையானும், அவ்வியல்பு களுள் மின்னொளியின் றன்மை ஒன்றாதல் காணப்படாமை யானும், அச் சூக்கும தத்துவங்களெல்லாம் நம்மனோருடம்பு களில் உயிர்க் கருவியாயிருந்து பயன்படும் அம்மாத்திரையே யல்லாமல் உடம்பின் புறத்தே நின்று வேறு தொழிற்பாடுடைய தாதல் எவ்வாற்றானும் பெறப்படாமை யானும், மின்னொளி யானது அவைபோலன்றி அகத்தும் புறத்தும் ஓவாதியங்கி எல்லாத் தத்துவங்களையுந் தொழிற் படுத்துமாறு இஞ்ஞான்று இயற்கைப் பொருணூலார் செய்யும் அரிய பெரிய ஆராய்ச்சிகள் பலவற்றானும் தெளியப்படு தலானும் என்பது. அல்லதூஉம், மாயையும் மாயையின் காரியப்பொருள் களான அச்சூக்கும தத்துவங்களுங் காரண காரியங்களாய்த் திரிவுபட்டு வருவனவாம். இங்ஙனந் திரிபு படுத்தப்படும் ஒரு பொருள் தானே மற்றொன்றனைத் திரிபுபடுத்தமாட்டாது; அதனை அங்ஙனஞ் செய்தற்குத் தன்னின் வேறான பிறிதொரு பொருள் இன்றியமையாது வேண்டப்படும். பிறிதொன்றனைத் திரிபுபடுத்தும் ஒருபொருள் தானே ஏனையொன்றாகத் திரிவுபடவும் மாட்டாது. பொற்கட்டி பலவகைப் பணி களாகத் திரிபுபடுத்தப்படுவதல்லாமல் தான் பிறிதொரு பொற் கட்டியினைத் திரிவுசெய்யமாட்டாது. அப்பொற் கட்டியினைத் திரிவுசெய்தற்கு அதனின் வேறான பொன் வினைஞன் ஒருவன் வேண்டப்படும். மற்று அதனைத் திரிவுபடுத்தும் பொன் வினைஞனோ தான் அவ்வணிகலன் களாக மாறுதலும் எஞ்ஞான்றுமில்லையாம். இம்முறையால் நோக்கும்வழிக், கலை வித்தை அராகம் முதலிய சூக்கும தத்துவங்களாகக் காரியப் படும் மாயையும், குணம் புத்தி அகங்காரங்களாக மாறும் கலையும், சுவை ஒளி ஊறு ஓசை நாற்றங்களாக மாறும் அகங்காரமும் வான் வளி தீ நீர் நிலங்களாக மாறும் தன்மாத்திரைகளும் தாம் பிறிதொன்றனைக் காரியப்படுத்த வல்லன அல்லவாம்; தம்மைக் காரியப் படுத்துதற்குத் தம்மின் வேறான பிறிதொன்றன் உதவியை அவாவி நிற்பனவாம். மற்று மின்னொளியோ தான் மற்றொன்றாய்க் காரியப்படாததோடு, ஏனை யெல்லாவற்றையுங் காரியப் படுத்து நிற்கும் இயல் பிற்றாய் நடை பெறா நிற்கின்றது. இதனானும், இது மாயையிலும் மாயா தத்துவங் களிலுஞ் சேர்ந்ததாகாமல் அவற்றின் வேறாவதா மென்பது ஐயமின்றித் துணியப்படு மென்க. இங்ஙனந் துணியப் படவே, முதல்வற்கும், மாயைக்கும் இடைநிற்பதொரு நுண் பொருள் உளதென்ப தூஉம், அதுவே மின் னென்றும் விந்து வென்றும் பண்டை யறிவு நூல்களில் வழங்கப்படுவதாயிற் றென்ப தூஉம் பெறப்படும். அற்றேல், தான் காரியப்படாது நின்றே மாயையைத் தான் காரியப்படுத்த வல்லது விந்துவாயின் அஃதொன்றுமே உலகத்தை முத்தொழிற்படுத்த வமையும், இதனின் வேறாக இவற்றைச் செய்தற்கு வேறுமோர் இறைவன் வேண்டப்படுவ தெற்றுக்கெனின்; விந்து தன்கீழ் நின்ற எல்லாப் பொருள் களையும் இயக்க வல்லதொரு நனி நுண்ணிய தத்துவமே யாயினும், அது தானும் அறிவில்லாச் சடப்பொருளே யாகலின், உயிர்கட்கு வேண்டுமா றெல்லாம் அறிந்து அவற்றிற்கேற்ப மாயையைத் திரிக்க மாட்டாதாம். அதனான் அது தன்னையுந் தான் வேண்டுமா றெல்லாம் அறிந்து அவற்றிற்கேற்ப மாயையைத் திரிக்க மாட்டாதாம். அதனான் அது தன்னையுந் தான் வேண்டுமா றெல்லாம் நடத்தி உயிர்கட்குப் பயன்படுமாறு பலவேறுலகங்களையும் பலவேறுடம்புகளையும் மாயையிற் றோற்றுவித்தளித்துத் துடைக்கும் எல்லாவறிவும் எல்லா முதன்மையும் உடைய முழுமுதற் கடவுள் ஒருவன் இன்றியமையாது வேண்டப்படு மென்க. எதுபோலவெனின், நீராவிப் பொறி5 யின்கண் நுண் பொருளான நீராவியானது அப்பொறியின் உருள்களை ஓவாது நன்கு இயக்குமேனும், இயக்குந்தோறுங் குறையும் நீராவியினை இடையிடையே நிறைவு செய்தற்கும், அது தன்னளவின்மிக்கு அப்பொறியினை உடைத்தெறியாமல் அதனை அளவறுத்து விடுதற்கும், அதனான் இயக்கப்படும் அப்பொறியைப் பிறர்க்குப் பயன்படும் வகையானெல்லாம் நடைபெறுவித்தற்கும் அதனை ஓட்டு வானொருவன் இன்றியமையாது வேண்டப்படுதல்போல வென்க. இனி, இவ்விந்துதத்துவம் மாயையைக் காரியப்படுத்து கின்றுழியும், காரியப்படுத்திய உலகங்களையும் பிறவற்றையும் இயக்குகின்றுழியும் பாம்பு மண்டலித்தாற் போலச் சுழன்று சுழன்று இயங்குமென அறிவு நூல்கள் கூறாநிற்கும். இவ்வுண்மை இற்றை ஞான்று வானூலாராய்ச்சி சிறிதுடை யார்க்கும் நன்கு விளங்கற்பாலதேயாம். ஞாயிற்று மண்டிலத் தினை நடுவண் நிறீஇ, நாமுறையும் இந் நிலமண்டிலத்தினையும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது முதலான மண்டிலங்களையும் அதனைச் சூழந்தோடுமாறு வைத்து இடையறாது சுழற்றிவரும் மின்னெனப்படும் விந்து வினியக்கம் சுழன்ற வியல்பிற்றாதல் தெளியப்படுகின்றதன்றோ? கார்த்திகைத் திங்களில் மாவலி சுற்றுஞ் சிறான் தான் சுற்றுவதோடு தன் கைகையும் தன் கையிற் கயிற்றாற் பற்றிய பனந்தூட் பையினையும் சுழற்றுவதுபோல, விந்து தத்துவமுந் தான் சுழன்று இயங்கி ஏனையுலகங்களையுஞ் சுழற்றி இயக்கா நிற்கின்றது. இவ்வாறு விந்துவாற் சுழற்றப்பட்டு இயங்கு தலாற்றான் எல்லா மண்டிலங்களும் சுழலுதற்கு ஏற்றவாம்படி பந்துபோல் உருண்டவடிவினவாய் அமைந்திருக்கின்றன. இனி, இவ்விந்துவினியக்கம் நேர் செல்லாமற் சுழல் சுழலாய் நடைபெற வேண்டுவ தென்னையெனிற்; கூறுதும். எல்லாம் வல்ல முதல்வனுடைய இருப்பு ஓர் எல்லைக்குள் அகப்படாத பரப்பினை உடைத்தாம். அம்முதல்வனோடு ஒற்றித்து நிற்கும் விந்துவும்எல்லையறியப்படாத பரப்பினை உடைத்தாம். நாற்புறத்தும் வரம்பறுக்கப்பட்ட அளவினை யுடைய பொருளாயின் அஃது இங்குமங்குமாய் அசைதல் சாலும். அங்ஙனம் ஒரு வரம்பிற் படாமல் எங்கும் நிறைந்த பொருளாயின், தான் இல்லாத இடம் இன்மையின் அஃது முன்பின்னானுங் கீழ்மேலானும் அசைதற்கு வாயிலில்லை; ஆனதுபற்றியே, கடவுளை அசைவற்ற பொருளென்று அறிவு நூல்கள் கூறுவவாயின. அக்கடவுளோடு ஒருமித்து நிற்கும் விந்துவும் தானில்லாத வெற்றிடம் வேறின்மையின் அதுவும் நாற்புறத்தம் இயங்கமாட்தாம். ஆகவே, அஃது இறைவனது செயன் மதுகையால் உந்தப்பட்டுழித் தனது மையத்தே சுழிந்தியங்குவதாயிற்று. பின்னர் அவ்விந்துவினாற் றாக்கப் பட்ட மாயையினும் அதன் காரியங்களான பிரகிருதி முதற் பூதாகாயத்தினும் அதன் கீழ் நின்ற கால் அனல் நீரினுங்கூட அச்சுழிந்த இயக்கம் நடைபெறா நிற்கின்றது. காற்றுக் கடுகி வீசுங்காற் சுழன்று சுழன்று போதலும், தீ முறுகி எரியுங்காற் சுழன்று சுழன்றெரிதலும், நீர் ஆழ்ந்து பெருகி ஓடுங்காற் சுழிந்து சுழிந்து செல்லுதலும் அவற்றை உற்று நோக்கினார் நன்குணர்ந்திருப்பர். இனி இஞ்ஞான்றை இயற்கைப்பொருணூலார் நுண்ணிய கருவிகளின் வாயிலாற் பூதாகாயத்தை ஆராய்ந்து பார்த்து அப்பூதாகாயத்தின்கட் சுழன்று சுழன்று மேற்செல்லும் ஓரியக்கம் ஓவாது நடைபெறுகின்ற தென்றும், பொற்கம்பி சுழன்றாற் போற் றோன்றும் அவ்வியக்கத்தின் வரம்புகளில் அவ்வாகாயத்தின் இடை நின்ற அணுக்கள் திரட்டப்படுதலும் பிரிக்கப்படுதலுமாய்த் தொழிற்படுகின்றன வென்றும், இவ்வாற்றாற் கட்புலனாகாத வெளியினின்று கட்புலனாம் பொருள்கள் முறைமுறையே ஒன்றினொன்று பரியனவாய்த் தோன்றுகின்றன வென்றும் உரை நிறுவுகின்றார்.6 இதனானும், சுழன்றியங்கும் விந்துவின் இயக்கமே7 எல்லா உலகங்களும் அவ்வுலகத்துப் பொருள்களுந் தோன்றுதற்குத் துணைக் காரணமாதல் தெற்றெனப் புலப்படா நிற்கும். இனி இச்சுழன்ற இயக்கமே விந்துவாவதன்றி, இவ் வியக்கத்தின் வேறாக விந்துவென்றோர் உள்பொருள் உளதாதல் எற்றாற் பெறுதுமெனின்; இயக்கமென்பது தன்னைப் பயக்கும் பொருளின்வேறாய்ப் பிரிந்து நிற்பதன்று இயக்கமும் இயக்கத்தைத் தரும் பொருளுந் தற்கிழமைப்பட நிற்பன வாமாகலின். அப்பொருளின் வேறாக இயக்க முண்டென்றல் பொருந்தாவுரையாம். எனவே இச்சுழன்ற இயக்கத்தைத் தோற்றுவிக்கும் விந்துவென்றொரு பொருளுண்மை தேற்றமேயாம். அற்றன்று, இச்சுழன்ற இயக்கத்தை மாயையின்கட் பயப்பிப்பது இறைவனது ஆற்றலேயாகலின், அதுவே, அதற்குரிமைப் பொருளென் றுரைத்தால் வரும் இழுக்கென்னை யெனின்; அவ்வாற்றல் சொல்லுக்கும் நினைவிற்கும் எட்டாக் கழிபெருங் கதழ்வுடைத்தாதலும், அது தன்னை நேரே ஏற்றுத் தொழிற்படுதற் காந்தன்மை மாயையினிடத்து இன்றாதலும் மேலே காட்டிப் போந்தமையின் அச்சுழன்ற இயக்கத்திற்கு நேரே யுரித்தாவது முதல்வனதாற்றல் ஆமாறில்லை. இன்றாகவே, முதல்வனதாற்றலை ஏற்று அதனை மாயையின் கண் உய்க்கும் விந்துவினிருப்பு ஒரு தலையாகப் பெறற்பால தேயாம். அற்றேல் விந்துவெனப்படும் இம்மின்னை இற்றை ஞான்றை இயற்கைப் பொருணூலார் ஒருவகையான அசை வென்றுரைப்பக் காண்டுமன்றி, அதனை ஒரு பொருளென்று அவர் கொள்ளாமையென்னையெனின்; இற்றை ஞான்றை இயற்கைப் பொருணூலாரிற் பெரும் பாலார் இம்மின்னின் இயல்புகளை முற்ற வறிந்து முடிவு காணாமையின் அதனை ஓர் அசைவென்றே கூறினாராயிநும், மேலும் அவர் அவ் வியல்புகளை முழுதுணரப் பெறுங்கால், அதனை ஒரு பொரு ளென்று கூற ஒருப்பட்டெழுவார் என்பதற்கு, அவருள் இவ்வாராய்ச்சி யில் மிக மேம்பட்டு விளங்கிய அறிஞரிற்சிலர்8 அதனை ஓர் உள்பொருளென்றுரைக்கத் தலைப்பட்டமையே சான்றா மென்க. ஆகவே, சுழன்ற இயக்கத்திற்குக் காரணமாக விந்துவென்னுஞ் சுத்தமாயை ஒன்று உண்மை இனிது துணியற்பாலதேயாம். அடிக்குறிப்புகள் 1. Scholars of Natural Science 2. Thermometer 3. Electric Light 4. Oxygen 5. Steam Engine 6. Prof. William Crookes, M.C. Wolf and some other scientists. 7. Galled by Crookes as protyle. 8. Maxwell, Helmholtz, William Grove, etc. 5. நாதம் இனி இச் சுழிந்த இயக்கத்தைத் தோற்றுவித்தல் பற்றி இவ்விந்துதத்துவம் வட்டவடிவினது புள்ளிவடிவினது என்று நூல்களால் நுவலப்படும். இப்புள்ளியின் அசைவிலி ருந்து ஓசை யுண்டாதலால், அவ்வோசையே நாததத்துவ மென்று வழங்கப்படும். புள்ளியின் அசைவாற் பிறக்கும் நாதம் பாம்பு நெளிந்தாற்போல் நெளி நெளிவாய் நீளச் செல்லுதலின் அது வரிவடிவிற்றென்று சொல்லப்படும். இந் நாத தத்துவமே உலகங்களைப் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களைச் செய்வதாம்; யாங்ஙனமெனிற் காட்டுதும். இந் நாத தத்துவத்தின் உந்தலாற் கீழ் நின்ற அசுத்தமாயையிற் பிறக்கும் முப்பது தத்துவங்களிற் கீழே கடைமுறையில் நின்ற மண் நீர் அனல் கால் வான் என்னும் ஐம் பூதங்களுள் ஒன்றான வானிற் றோன்றும் ஒலி நாத தத்துவத்தினை ஒரு புடையொப்ப தாகலின், இவ்வொலி யினியற்கையை ஒரு சிறிது ஆராயவே, நாததத்துவத்தினி யற்கை தெள்ளிதிற் புலனாம். வானின்கட் கிடக்கும் ஒலி வீணை யாழ் குழல் குரல் முதலிய கருவிகளின் வாயிலால் இந்நிலத்தின்கட் செவிப் புலனாகின்றது. ஒரு வீணையின் கம்பிகளின் மேல் அவ்வீணையின்வில்லை வைத்து இழுத் தால் அதன் கம்பிகள் அசைந்து இனிய ஓசையினைப் புலப் படுத்துகின்றதன்றோ? இங்ஙனம் புலப்படும் ஓசை அருகே யுள்ள மிகமெல்லிய நுண்ணிய பொருள்களின்மேற் பட்டால் அவற்றைப் பலவேறு வடிவங்களாகத் திரிவுபடச் செய் கின்றது; மெல்லிய ஒரு கண்ணாடித் தட்டத்தில் நுண்ணிய பொடிகளைப் பரப்பி அதன் கண் அவ்வீணையினோசை வந்து படுமாறு ஒழுங்கு செய்து வைத்துப் பின்னர் அவ்வீணையை இயக்கினால், அதன் கட்டோன்றுமொலி அப்பொடிகளின் மேற்பட்டு அவற்றைப் பலதிறப்பட்ட வடிவு கொள்ளுமாறு செய்கின்றது. இன்னும், ஒரு கண்ணாடிக் கிண்ணத்தை அரைப்பாகந் தண்ணீர் நிறைத்து, அதன் விளிம்பின் மேல் அவ்வில்லை வைத்திழுக்க அது தன்னளவிற் கேற்ற ஓர் ஒலியைத் தன்கட் பிறப்பிக்கும்; பின்னர் அதே அளவான ஒலியை அவ்வில்லால் அவ்வீணை யிற் றோற்று விக்க, அதே ஒலி அருகு நின்ற அக்கண்ணாடிக் கிண்ணத் தினின்றுந் தானே வருதலை எவரும் வியப்புறக் காணலாம். அவ்வீணையிற் பிறக்கு மொலியின் எதிரொலி யாய் அக்கண்ணாடிக் கிண்ணத்தினும் அவ்வோசை தோன்றுங்கால், அக் கிண்ணத்தின் உள் நின்ற நீர் அலை யுறுதலுங் காணப்படும். மற்று அக்கிண்ணந் தன்கட் பிறப் பிக்கும் ஓசையின் அளவைப் பிறிதொரு பெரிய இசைக் கருவியின்கண் மிகுதிப்படுத்தி இசைப்பித்தால், அவ்விசை அக்கிண்ணந் தாங்கும் அளவினும் மேற்படுதலால் உடனே உடைத்தெறியும். இங்ஙனமாகப் பூதாகாயத்தின் கட்டோன் றும் ஒலியே தான் சாரும் பொருள்களை ஆக்குதலும் நிலைப்பித் தலும் அழித்தலுஞ் செய்து போதருமாறு ஆராய்ந்து காண வல்லார்க்கு, இதனோ டொருவாற்றான் ஒப்பதாயினும் இதனினும் இறப்ப நுண்ணிய நாத தத்துவம் அசுத்தமாயையை முத்தொழிற் படுத்துமியல்பு நன்கு விளங்கும். இன்னும் இந்நாததத்துவத் தினியற்கை, இசையினால் நம்மனோர் மாட்டு நிகழும் நிகழ்ச்சி வேறுபாடுகள் பற்றியும் நன்குணரப்படும். மிக இனிய யாழோசை குழலோசைகளைக் கேட்கும் எவரும் எவ்வுயிரும் உள்ளங் குழைந்து இன்ப வயத்தராய் நிற்றல் காண்டுமன்றோ? மருந்துகளிற் றீராத கொடிய நோய் கொண்டவர்களுள் அமைதியாய் இருந்து இன்னோசைகளை அடுத்தடுத்துக் கேட்டு வருகுவராயின், அவர்க்கிருந்த அந்நோய் தீர்ந்து நலப்படுமாற்றை இஞ்ஞான்றை மனநூல் வல்லார் ஆராய்ந்து நிறுவியிருக்கின்றனர். இம் முறையை நுனித்தறியுங்கால் இனிய வொலி நம்மூளையிற் படிந்து அதன் கண் வந்து தொகும் பலகோடி நரம்புகளையும் இசைவுற அசைத்து இனிதின் இயங்கச் செய்தலால், இவ்விசைவினோடு மறு தலைப்பட்ட நோய் அங்கிருக்க நிலைக்களன் காணாமல் நீங்கி ஏகுகின்றது. இசையேயன்றி இனிமையாய்ப் பேசும் மொழிகளும் ஒருவர்க்கு எவ்வளவு கிளர்ச்சியையும் இன்பத்தையுந் தருகின்றன! இன்னா மொழிகளும் இசைவற்ற வோசைகளும் எவ்வளவு துன்பத் தைத் தருகின்றன! வேய்ங்குழலிசையினைக் கேட்டு மகிழ்ந் தாடிய அரவு நடுக்கந்தரும் இடி முழக்கங்கேட்டு மாழ்கி மடிகின்ற தன்றோ! பீரங்கி வெடி கேட்ட கருக்கொண்ட மாதரார் தமது கருச்சிதைந்து இறத்தலும், மெல்லிய இயற்கை வாய்ந்தோர் நெஞ்சங் கலங்கி உயிர் துறத்தலுங் கண்கூடாய் அறியப்பட்ட உண்மைகள் அல்லவோ! இந்நிகழ்ச்சிகளின் றன்மைகளை உற்றறியுங்கால் நாததத் துவம் எதனையும் ஆக்கவும் நிலை நிறுத்தவும் வல்லதென் பது நன்கு விளங்கு கின்றதன்றோ! அது கிடக்க. 6. விந்துநாதவடிவுகள் இங்ஙனஞ் சுழல் சுழலாய் நீள இயங்கும் விந்து நாத வடிவின் சேர்க்கையையே பாம்பு வடிவாக அறிவு நூல்கள் ஆங்காங்கு கூறா நிற்கும். நீள நெளிந்து செல்லும் பாம்பின் வடிவு போல்வதே நாதவடிவாமென்றும், அப்பாம்பின் படம் போல்வதே விந்துவடிவாமென்றும் மேலே காட்டப்பட்ட தாகலின் இத்தத்துவங்களின் சேர்க்கை வடிவைப் பாம்பாக உருவகப்படுத்திக் கூறுவது சாலவும் பொருத்த முடைத்தேயாம். இனி, எல்லா ஒலிகளுக்கும் முதலான பிரணவ வோசை இவ்விந்து நாதங்களின் சேர்க்கையேயாதலின் அது வரிவடிவில் எழுதப்படுங்கால் ஓகாரவடிவாகவே எழுதப்படு கின்றது. துவங்குமிடத்திற் சுழித்துப் பின்றொடருமிடத்தில் வரிசையாக வளைத்து வரையப்படும் ஓ என்னும் எழுத்திற் சுழியே விந்துவென்றும் வளைந்த வரியே நாதமென்றும் உணரற்பாற்று. இன்னும் இவ் ஓ என்பது சேர்க்கை எழுத்தாகலின், இதன்கட் கலந்து நின்ற அகரமும் உகரமும் ஆகிய தனியெழுத்துக்கள் இரண்டும் அவ்விந்து நாதவடிவே யுடையவாதலும் நுனித் தாராயப்படும். அகரம் பண்டைக் காலத்திற்புள்ளி அல்லது வட்டவடிவாகவே எழுதப்பட்டு வந்த தென்பதற்கு, அவ் அகரம் பிரிந்து நின்ற ஒற்றெழுத்துக்களின் றலையிற் புள்ளியிட்டெ ழுதுதலே சான்றாம். க் முதலான ஒற்றெழுத்துக்கள் அகரத் தோடு கூடிய வழி மேல் நின்ற புள்ளி நீக்கி எழுதப்படுதலும், அவ் அகரத்தைப் பிரிந்து நின்றவழி மேலே புள்ளி வைத்தெழுதப் படுதலும் என்னை யென்று நுணுகி ஆராய லுறுவார்க்கு ஒற்றெழுத்துக்களின் மேனின்ற புள்ளியே அகர வடிவாமென்பது தெற்றெனப் புலப்படும். மக்கள் முதலான இயங்கியற் பொருள் நிலையியற் பொருள்களின் உயிர் போறலின் உயிரெழுத் தென்றும், உயிரின் சேர்க்கை யானன்றித் தனித்தியங்கா மெய் போறலின் மெய்யெழுத் தென்றும் தமிழ் எழுத்துக்கள்அஃகி அகன்ற அறிவுடைய ரான தொல்காப்பியனார் முதலான தொல்லாசிரியரால் வழங்கப்படுவ வாயின. உயிர் உடம்போடு கூடியவழித் தன் உருவு காட்டாது தனதுடம்பின் வடிவையே தனக்கும் வடிவாகப் பெற்றிருத்தல் போல, அகரமும் மெய் எழுத்துக்க ளோடு புணர்ந்த வழித் தனக்குரிய புள்ளி வடிவைக் காட்டாது தான் புணர்ந்து நின்ற மெய்வடிவே காட்டுவ தாயிற்று. அகரமல்லாத ஏனையுயிர்கள் ஒற்றெழுத்துக்க ளோடு கூடியவழி அவற்றிற்குத் தமதுருவைச் சிறிது சிறிது கொடுத்து அம்மெய் வடிவை வேறுபடுத்தக் காண்டலின், ஏனையுயிர் மெய்களின் கண் அங்ஙனம் வேறுபட்டுத் தோன்றும் வடிவுகள் கொண்ட அகரமல்லாத மற்றை யுயிர்களின் வடிவுகள் ஒருவாறு துணியப்படும்; மற்று அகரத்தொடு புணர்ந்த மெய்கள் அங்ஙனம் வடிவுவேறுபடக் காணாமையானும், அகரத்தைப் பிரிந்துழிமாத்திரமே தலைமேற் புள்ளி பெற்று நிற்றலானும் அவ்வொற்றைப் பிரிந்து மேனிற்கும் புள்ளி வடிவே அகரவடிவாமென்பது நன்கு துணியப்படும். பிற்றை நாளில் அப்புள்ளியினையே தலையிற்றந்து பின்னும் வரிவளைவு சேர்த்து அகரத்தை எழுதி வழங்கலாயினார்; வழங்கினும், ஒற்றெழுத்துக்களின் மேல்அதன் பண்டைப் புள்ளி வடிவைத் திரிவு படுத்தாது பொறித்து அதன் வடிவ வுண்மையும் புலப்படுத்தினாரென்க. இவ்வாற்றால் அகரவொலி வட்ட வடிவினதான விந்துவே யாதல் தெளியப்படும். மேலும், அகரவொலியைத் தோற்று விக்கின்றுழி அதனை அங்காந்து கூறும் வாய் வட்டவடி விற்றாதலுங் கண்டறியற் பாற்று. அற்றோல் அஃதாக; நாத தத்துவ மாத்திரையே ஓசை யுடைய தல்லது, அந்நாதத்தின் அசைவிற்குக் காரணமாம் விந்து ஓசையுடைத்தன்றாம்; அற்றாக; அதுவும் ஒலிவடிவிற் றென்றுரைத்தல் யாங்ஙனம் பொருந்துமெனிற்; கூறுதும். விந்து அசைவின்றிக் கிடந்த நிலையில் ஓசையின்றாமாயினும், அஃதிறைவனருளால் உந்தப்பட்டு இயங்குகின்றுழி ஓசை யுடைய தாயே இயங்கும். ஆயினும், அது முறுகிச் சுழலுங்காற் செவிப் புலனாம் ஓசையும் அங்ஙனமின்றி மெல்லென இயங்குங்காற் புலப்படாத ஓசையும் உடைத்தாம். இவ்விரு வேறியல்பும் வாயை வறிதே அங்காத்தற் கண்ணும் அவ்வங்காப்போடு அகரத்தை ஒலிப்பித்தற்கண்ணும் வைத்து அறிந்து கொள்ளப்படும். வாயை வறிதே அங்காத்தலிற் புலப்பட்ட ஓசையின்றாயினும் ஆண்டும் அகரம் புலப்படாது உண்மை மறுக்கப்படாதாம்; என்னை? அங்காத்த லென்பது மேல் வாயும் கீழ்வாயும் பிரிந்தியங்கும் முயற்சியே யாகலானும், ஒரு புடை பெயர்ச்சி நிகழும் வழியெல்லாம் செவிப்புலனாம் ஒலியேனும் செவிப் புலனாகா ஒலியேனும் உண்டென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையானும் என்பது. அற்றேல், ஒலிவடிவாய நாத தத்துவத்திற்கும் அங்ஙனமே ஒலிவடிவிற்றாய் விந்து தத்துவத்திற்கும் வேறு பாடென்னை யெனின்; விந்து புலப்பட்டும் புலப்படாது மிருக்கும் சிறியதோர் ஓசையுடைத்து, நாதமோ தொடர்புபட்டு நிகழும் புலப்பட்ட ஓசையுடைத்தாம். அற்றாகலினன்றே, விந்து வட்டவடிவினதான அகர வடிவாகவும், நாதம் தொடர்பு பட்டு நீண்ட வரிவடிவின தான உகர வடிவாகவும் எழுதப் படுவ வாயினவென்க. விந்து நாதங்களின் சேர்க்கையின்றி ஒலியுலகும் பொருளுலகுந் தோன்றி நிலை பெறாமை போல, இவற்றின் வடிவுகளான சுழியும் வரியும் இன்றி ஏனை எழுத்துக்களின் வரி வடிவும் புலப்பட்டு நில்லாவாம். ஆகவே, உயிரும் மெய்யும் உயிர் மெய்யுமாகிய எல்லா எழுத்துக்களிலும் இச் சுழி வடிவும் வரிவடிவும் உண்மை நுனித்துக் காண்பார்க்குத் தெற்றென விளங்கா நிற்கும். அற்றேல், வரிவடிவின்கண் எல்லா வெழுத்துக்களினும் சுழியும் வரியுங் கலந்து நின்றாற்போல், ஒலி வடிவின் கண்ணும் எல்லாவெழுத்துக்களினும் விந்து நாதங்களான அகார உகாரவொலிகள் கலந்து நிற்றலைக் கண்டிலமா லெனின்; நன்று கடாயினாய், வாயை அங்காவாமல் ஏதோர் எழுத்துங் கூற ஏலாமை மேல் கீழ் இதழ்களை ஒரு சிறிதுந் திறாமலிருந்து ஒருவர் எத்துணை தான் ஓர் எழுத்தைக் கூறமுயலினும் அது கடைபோகா மையின்கண் வைத்து இனிதறியக் கிடத்தலானும், வாயை அங்காந்த மாத்திரையே ஆண்டு அகரவோசை புலப்படா துண்டென்பது மேலே காட்டப்பட்டமை யானும், அங்ஙனம் அங்காந்து கூறு முயற்சிக்கண் வேறோர் எழுத்து ஒலிப்பிக்கப்படினும் அவ்வெழுத்தோசையோடு உடன் ஒற்றித்து அகரவொலியும் விரவி நிற்றல் ஒருதலையாக வேண்டப் படுதலானும் ஆண்டும் நுனித்துக்காணலுறின் எல்லா எழுத்தொலி களிலும் அகர வொலியுண்மை ஐயுற வின்றித் துணியப் படும். அஃதொக்கு மாயினும், உகரவொலியும் அதுபோல் ஏனை எல்லா எழுத்துக்களினுங் கலந்து நிற்றல் யாங்ஙனம் பெறப் படுமோ வெனின்; அங்காந்து கூறு முயற்சிக்கட் சுழன்றிசைத்த அகரவொலி பின்னர் வாயைக் குவித்துக் கூறுதற்கண் நீண்டோடி நிலைபெறுவதே உகரவொலியா மாகலான் அஃது ஊ ஒ ஓ ஓள என்னும் எழுத்தோசைகளிற் புலப்பட்டும், ஏனை உயிர் ஒற்றுக்களின் ஓசைகளில் அகரம்போற் புலப்படாதும் நிற்குமென்றறியற் பாலதாம். அல்ல தூஉம், எல்லா எழுத்தோசை கட்கும் வாய் அங்காப் போடு, அங்காந்த வாயை உடனே மூடாமற் சிறிது நிறுத்து தலும் வேண்டுதலானும், அங்காப்பின் கண் இயல்பாய் ஒலிக்கும் அகரமும், அங்காந்தவாய் மூடாமற் சிறிது இடை நின்று குவிந்த வழி இயல்பால் ஒலிக்கும் உகரமும் பின்னர்ச் செயற்கையாற் பிறக்கும் எல்லா எழுத்தொலிகளினும் விரவி நிற்றல் திண்ணமேயாம். இவ்வாறாக, எல்லாவெழுத்துக் களின் ஒலி வடிவு வரிவடிவுகளினும் விந்து நாதங்களாகிய அகார உகாரங்கள் கலந்து நிற்றல் அறியற்பாற்று. இவை யிங்ஙனம் எல்லாவற்றிற்கும் முதலாதல் பற்றியன்றே, ஏதொன்றெழுதத் தொடங்கும் முன்னும் சுழிந்திருக்கும் பிள்ளையார் சுழி (உ) எனப்படுவதனை முதற்கட்குறிக்கும் வழக்கம் நம்மனோர்பாற் றொன்றுதொட்டு வரலாயிற்று. விந்து நாதங்கள் இவ்விரண் டனுள்ளும் விந்து முதலாய் நிற்றல் தெரித்தற் பொருட்டன்றே ஆசிரியர் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார், அகரமுதல எழுத்தெல் லாம் என்று ஓதுவாரா யினதூஉ மென்க. ஈண்டு எழுத்தெல் லாம் என்றது வரிவடிவு ஒலிவடிவில் நின்ற எல்லா எழுத்துக்களையும் அகப்படுத்தற் பொருட்டு; அகரம் என்றது புலப்பட்டும் புலப்படாதும் நின்ற அகரவொலியி னையும் அகரவடிவினையும் உணர்த்துதற் பொருட்டுப் பொதுப்பட நின்றமையும் உய்த்துணரற் பாலதாம் என்க. 7. விந்துநாதக்குறிகள் இனி, விந்துவெனப்படும் மின்னொளியோடு ஒரு புடையொத்து அதன்றன்மையினை ஒருவாற்றான் நமக்குப் புலப்படக் காட்டுவது தீயேயாகும்; என்னை? மின் வெம்மையும் ஒளியும் உடைத்தாய்ச் சுழன்று இயங்குமாறு போலத் தீயும் சூடும் விளக்கமும் வாய்ந்து சுழன்றெரியக் காண்டலால் என்க. எனவே விந்துநாதக் குறிகளும், அவ்விந்து நாதங்களில் முதல்வன் முனைத்து நின்று விளங்குமாறும் தீப்பிழம்பின்கண் வைத்து அறியப் படும். இவ்வுண்மை தெருட்டுதற் பொருட்டன்றே பொங்கழலு ருவன் பூதநாயகன் எனவும், எரிபெருக்குவர் அவ்வெரி ஈசன துருவருக்கமதாவதுணர் கிலார் எரியலால் உருவ மில்லை விறகிற்றீயினன் எனவும், சிவன்கண்ணா முந்தவே காட்டாக்கிற்றோன்றி காட்டத்தில் அங்கி வேறுண்டல் போல் நின்றங்குள தாமால் எனவும் உண்மை நூல்கள் உரைப்ப வாயின. அற்றேல், மண் புனல் கால் வான் முதலான ஏனைத் தத்துவங்களும் உளவாக, எல்லாப் பொருள்களினும் நிறைந்து நிற்கும் இறைவன் தீயின்கண் மட்டும் முனைத்து விளங்குவ னென்றல் யாங்ஙனமெனிற் கூறுதும் ஒருவாற்றா லேனும் எஃது எதனையொப்பது அஃது அதனோடு ஒருமித்து நிற்கும் என்னும் மாறா உடன் நிகழ்ச்சியால், ஒரோவழி முனைவனியல் போடு ஒத்து நிற்கும் விந்து நாதங்களினும் தீப்பிழம்பினும் அம்முதல்வன் முனைந்து நிற்பனென்பது அறியற்பாற்று. இனி இறைவன் அறிவொளி யுடையவனாதல் போலத் தீயும் ஒளியுடைமையானும், அவன் அவ்வறிவொளியால் உயிரை மறைத்த அறியாமை வல்லிருளைத் துரக்குமாறு போல இதுவுந் தனதொளியாற் கண்ணை மறைத்த காரிருளை நீக்குத லானும், இறைவன் உயிரினைப் பற்றிய வாலாமையினைச் சுட்டெரித்துத் தூய்தாக்குமாறு போலத் தீயும் நிலத்தின்கட் சேருங்குப்பை கூளங்கள் அழுக்குகள் எல்லாவற்றையுங் கொளுத்தி நீறாக்கித் தூய்தாக்குதலானும், அங்ஙனம் முதல்வன் வாலாமையினைத் தூய்தாக்கும் வழி அதனாற் றான்சிறிதும் பற்றப்படாது தான் அதனைத் தூய்மைப் படுத்துமாறுபோலத் தீயும் தன்னால் எரிக்கப்படும் அழுக்குகளாற் பற்றப்படாது தான் அவற்றைச் சுட்டுத் தூய்மை செய்தலானும் இறைவன் படைத்தல் காத்தல் அழித்தலென்னும் முத்தொழில்கள் புரியுமாறுபோலத் தீயின் வெம்மையும் நீரினும் நிலத்தினும் புற்பூண்டுகளினும் உயிர்களின் உடம்புகளினும் ஓரளவுபடப் பரவி நின்று படைத்தல் காத்தல்களையும் தான் அவற்றின் கண் நிற்கவேண்டும் அளவின் மிக்குத் தோன்றியவழி அவற்றை அழித்தற்றொழிலையும் நிகழ்த்துதலானும், இறைவன் வெய்ய னாய்ச் சிவந்த அருள் நிறம் உடையனாதல் போலத் தீயும் வெய் தாய்ச் சிவந்தநிறம் வாய்ந்து நிற்றலானும், இறைவன் நீல அருள் நிறம் வாய்ந்த அருட்சத்தியைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கு மாறு போலத் தீயும் நீலநிறம் பொருந்திய தண் நீரினைத் தன்னுள் அடக்கிவைத்திருத்தலானும், இறைவன் அருவம் உருவம் இரண்டற்கும் பொதுவான அருவுருவம் உடையனாதல் போலத் தீயும் அருவம் உருவம் இரண்டற்கும் பொதுமை யாய் நிற்கும் பிழம்பு வடிவு உடையதாய் நிற்றலானும் இறைவன் உலகுயிரெல்லாம் ஒருங்கு நிறைந்து நிற்றலும் அன்பர்க்கு அருள்புரிதற் பொருட்டு ஒரோ விடத்து முனைத்து விளங்கித் தோன்றுதலும் உடையனாதல் போலத் தீயும் எல்லாப் பொருள்களினும் ஊடுருவி நிற்றலும் உயிர்கட்குப் பயன்படு முகத்தால் ஒரோவயின் விளங்கித் தோன்றுதலும் உடைத்தாக லானும், அகத்தே உயிர்களின் அறிவை விளக்குதற்கு இறைவன தொளி இன்றியமையாது வேண்டப்படுதல்போலப் புறத்தே கண்ணறிவை விளக்குதற்குத் தீயினொளி இன்றியமையாது வேண்டப்படுதலானும் தீ ஒருவாற்றால் இறைவனியல்போடு ஒப்புடையுடைத்தென்பது அறியப்படும். இவ்வொப்புமையால் இது தன்மாட்டு முதல்வன் முனைத்து விளங்குதற்கு இடமாம் பெற்றியுடைத்தானாற் போல, இவ்வொப்புமையில்லா ஏனை நிலன் நீர் கால்வான் முதலான பொருள்கள் அவன் முனைத்துத் தோன்றுதற்கு வாயிலாக மாட்டாவென்க. கட்புலனாகாக் கடவுளைக் கட்புலனெதிரே விளங்கக் கண்டு வழிபடுதற்கு ஈது இடைநின்றுஉதவி புரிதலானன்றே, இருக்கு வேதம் முழுவதூஉம் இடையிடையே அங்கி வழிபாடு மிகுத்தோதப் பட்டதோடு அவ்விருக்கு வேதப் பத்து மண்டிலங்களிலும் முதல் நின்ற ஏழு மண்டிலங் கடோறும் முதற்கண் அங்கியங்கடவுள் வழிபாடு சிறந் தெடுத்து வைக்கப்பட்டு அங்கிக்கண் விளங்கும் உருத்திரன் ஒருவனே அவ்வேதத்தான் அறிவுறுக்கப்பட்ட முழு முதற் கடவுளென்பது தெற்றெனப் புலப்படுதல் வேண்டி அவ்வேதத் தின் இறுதிக்கண்நின்ற பத்தாம் மண்டில முதலினும் முடிவினும் அவ் அங்கியங்கடவுள் வழிபாடே விதந்தெடுத் துரைக்கப்பட்டது. அங்கி எனப்படும் தீ இட மாயும், அத்தீயின் கண் நிறைந்து முனைத்து விளங்கும் முதல்வன் அவ்விடத்தின் கண் உள்ள பொருளாயும் பிரிவற நிற்கும் இயைபு கொண்டு, ஓர் இடத்தின் பெயர் அவ்விடத்து நிகழ் பொருளுக்கும் இடத்துநிகழ் பொருளின் பெயர் அதுநின்ற இடத்திற்குமாக ஏற்றி வழங்கப்படும் இலக்கண வழக்குப் பற்றி, அங்கியின் பெயர் அதன்கண் முனைத்து விளங்கும் உருத்தி ரற்கும் உருத்திரன் பெயர் தான் நிற்றற்கிடமான அங்கிக்கும் ஒரோவழி வழங்கப்படுதல் அவ்விருக்கு வேத மந்திரங் களினும், அவற்றிற்கு வரையப் பட்ட உரைகளினுந் தெளிவுறக் காண்க. இருக்குவேத முதன் மண்டிலத்தின் இருபத்தேழாம் பதிகத்தின் பத்தாவது மந்திரத்திலும், இரண்டாம் மண்டிலத்தின் இரண்டாம் பதிகத்தின் ஐந்தாவது மந்திரத்திலும், நான்காம் மண்டிலத்தின் மூன்றாம் பதிகத்தின் முதல் மந்திரத்திலும் உருத்திரன் எனும் பெயர் அங்கியங் கடவுட்கு வழங்கப் பட்டமையும், முதன் மண்டிலத்து நாற்பத்து மூன்றாம் பதிகத்தில் உருத்திரன் வேள்விகட்குத் தலைவன் என்றும், நூற்றுப்பதினைந்தாம் பதிகத்தில் வேள்விகளை முடித்து வைப்பவன் என்றும், சிவனெனு நாமந்தனக்கே யுடைய செம்மேனி யெம்மான் என்று தேவாரத்தில் ஓதப்பட்ட வாறே மேற்குறித்த இருக்கு வேதப் பதிகங்கள் இரண்டிலும் அப்பெருமான் சிவந்த நிறத்தினன் என்றும் உரைக்கப் பட்டமையும் முதல்வற்கும் தீப்பிழம்பிற்கும் உள்ள இயை பினை நிலைபெற நாட்டும். இனி இயற்கை அனற் பிழம்பு வடிவாய்த் திகழும் ஞாயிற்று மண்டிலம் இறைவனது அருளுருவ விளக்கத்திற்கு இடமாயிருத்தலினாலன்றே அஞ்ஞாயிற்று மண்டிலத்தினை நோக்கிச் செய்யும் வழிபாடு இருக்கு மாமறையின்கண் ஆண்டாண்டுக் கூறப்பட்டதோடு, அஞ்ஞாயிற்றினைக் காலை நண்பகல் மாலையெனும் முப்பொழுதினுந் தொழுங் கால் எடுத்துரைக்குங் காயத்திரி மந்திரமும் அம்மறையின் மூன்றாம் மண்டிலத்து இறுதிப்பதிகத்தின்கண்ணும் வலியுறுத்து வைக்கப் படுவதாயிற்று. இக் காயத்திரி மந்திரத்தின் நடுநின்ற பர்க்கன் என்னும் பெயர் அஞ் ஞாயிற்று மண்டிலத்தினுள் நின்று அதற்கு உயிராய் விளங்கும் இறைவனைக் குறித்தலும், அங்ஙனம் அப் பெயராற் சுட்டப்படும் முதல்வன் சிவபிரானே என்பதற்கு அமர நிகண்டில் அப்பெயர் சிவபிரானுக்கே உரிய சிறப்புப் பெயர் களுள் ஒன்றாக வைத்துக் கூறப்பட்டிருத்தலும், இவ்வுண்மை யெல்லாம் முற்றுமுணர்ந்த தோலாநாவின் மேலோரான திருநாவுக்கரசு அடிகள் அருக்கன் பாதம் வணங்கு வரந்தியில், அருக்கனாவான் அரனுருவல்லனோ என்று அருளிச் செய்திருத்தலும் எல்லாம் வல்ல இறைவன் எல்லாவுயிர்களுந் தனதருளுருவைக் கட்புலனெதிரே கண்டு வழிபட்டு உய்வான் வேண்டி வைத்த பேரிரக்கத்தால் தனது அவ்வுருவை நேரே காட்டுதற்குத் தக்கவாயிலாய் அமைந்த அனல்வடிவின்கண் முனைத்து விளங்குவானாயினன் என்னும் உண்மையை நன்கு நிறுவுமென்க. இனிப் பண்டைக்காலந்தொட்டு இந் நிலவுலகம் யாங்கணும் உள்ள மக்களெல்லாரும் ஞாயிற்றினுந் தீப்பிழம்பி னுமே இறைவனை நேரே கண்டு வழிபட்டு வரலாயின ரென்பதும் அறியற்பாற்று. பல்லாயிர ஆண்டுகட்கு முன்னரே நாகரிக வாழ்க்கையிற் சிறந்து விளங்கிய எகுபதியர்1 ஞாயிற்றினை வழிபட்டு வந்தமை அவர் தம்முடைய கோயிற் சுவர்களில் பொறித்து வைத்த கல்வெட்டுகளால் நன்கு புலப்படுகின்றது; இச்செந்தமிழ்நாட்டின்கண் திருவாரூர் தில்லை திருவண்ணாமலை மதுரை திருநெல்வேலி முதலான ஊர்களில் அமைக்கப்பட்டிருக்கும் பெரிய பெரிய சிவ பெருமான் கோயில்களைக் காட்டினும் சாலப்பெரிய கோயில்கள் எகுபதி நாட்டில் எத்தனையோ ஆயிர ஆண்டு கட்கு முன்னரே ஆங்காங்கு அமைக்கப்பட்டிருந் தமையும், இஞ்ஞான்று பழுதுபட்டுக் கிடக்கும் அவற்றை இன்றும் நேரே காணும் முகத்தாற் றெளியலாம்; அக் கோயிற் சுவர்களிற் செதுக்கி வைத்திருக்கும் கல்வெட்டுகள் ஒன்றில் இங்ஙனங் குறிக்கப்பட்டிருக்கின்றனது; உலகிற்கு முதலான கடவுள் விசும்பின்கண் விளங்கும் ஒளியிலே இருக்கின்றார்; அவருடைய அடையாளங்கள் நிலத்திலே இருக்கின்றன; நாடோறும் அவைகளுக்குத்தான் வழிபாடு ஆற்றப் படுகின்றது. எல்லாத் தேவர்களும் பகலவனையே தமக்குத் தலைவனாக வழிபடுகின்றனர்; அவன் உள் பொருள்கள் எல்லாவற்றிலும் தன்னை விளங்கக் காட்டுகின்றான்; மலை யிலிருந்து அருவி வரையில் ஒவ்வொன்றிலும் பெயருடைய வனாயிருக்கின்றான். எல்லாப் பொருள்களிலும் நிலை பெற்றிருப்பது கதிர்க் கடவுளே. இம் முதற்கடவுள் பண்டு தொட்டேயிருக்கின்றான். அவன் எல்லாத் தேவர்கட்கும் பெரியோன் மிகப் பழைய இக் கல்வெட்டினால் எகுபதியர் உலகிற்கு முதல்வனான கடவுளை வானின்கண் விளங்கும் பேரொளிப் பிழம்பான ஞாயிற்று மண்டிலத்தின்கட் கண்டு வழிபட்டு வந்தவரென்பது இனிது விளங்குகின்றதன்றே. இனி, எகுபதியரைப் போலவே பண்டைக் காலத்தில் நாகரிகத்திற் சிறந்தவராய் வயங்கிய பாபிலோனியர்2 தமது நாட்டின் கட் பற்பல இடங்களினும் திங்களுக்கும் ஞாயிற்றி னுக்கும் கோயில்கள் எழுப்புவித்து அவற்றின் கண் அவை தம்மை வணங்கி வந்தனர். ஊர் என்று பெயர் பெற்ற இடம் திங்களங் கடவுளை வழிப்படுத்துச் சிறந்த நகரமாக அவர்களாற் கொண்டாடப்பட்டு வந்தது. பாபிலோனியர்க்கு அணிமையில் உயிர் வாழ்ந்த சாலடியர் என்னும் மிகப் பழைய நாகரிக மாந்தர் அப்பாபிலோனியரோடொப்பத் திங்களங் கடவுட் கும் பகலவனுக்குந் தவப் பெரிய கோயில்கள் அமைப்பித்து அவை தம்மை வணங்கி வந்ததோடு, தீக்கடவுட்குஞ் சிறந்த கோயில்கள் ஆங்காங்கு கட்டுவித்து அவற்றின்கண் அதற்கு வழிபாடு ஆற்றிவந்தனர்; அங்ஙனம் வழிபடுங்கால் அவர் அக் கடவுட்கு வழுத்துரையாகக் கூறிய மொழிகள் பின் வருமாறு காணப் படுகின்றன; அவர்களால் வானின்கட் பின்றொடரப் பட்டுத் தலைவனாய் முதற்பிறந்த தீக்கடவுள் தனக்கொரு தந்தையை அறியான். ஓ தீக்கடவுளே, எல்லா வற்றிற்கும் மேலோனே, முதற் றோன்றினோனே, எல்லாம் வல்ல தலைவனே, அணுவென்பவர் கட்டளைகளால் ஏவப் பட்டவனே, தன்னிடத்து அன்பு செலுத்துமவர்களைத் தீக் கடவுள் தன்னோடொப்ப அரியணை மீதேற்றுகின்றான். இவ்வழுத்துரையிற் சுட்டப்பட்ட அணு வென்னுங் கடவுளே அத்தீப்பிழம்பின்கண் முனைத்துத் தோன்றும், முழுமுதற் பொருளாகிய சிவபிரான் என்பதும் உய்த்துணரற்பாற்று. ஞாயிற்றினுக்குப் பகல் என்னுங் சொல்லும், மாந்தர் வாழும் இடத்திற்கு ஊர் என்னுஞ் சொல்லும், அணுவிற்கு அணுவாய் விளங்குங் கடவுட்கு அணு வென்னுங் சொல்லும் இன்னும் இவை போல்வன பிறவும் பாபிலோனியர் அசீரியர் சாலடியர்3 என்னும் பண்டைக்கால நாகரிக மாந்தர்க்குள் வழங்கி வந்தமையை உய்த்து நோக்குங் கால், குமரிநாட்டின் கண் உறைந்த நம் பண்டைத் தமிழ் முது மக்களில் ஒரு சாரார் அந்நாடு கடல் கொள்ளப்பட்ட ஞான்று ஆண்டு நின்றும் போய்ப் பாபிலோனியா சாலடி முதலான நாடுகளில் குடியேறினார் என்பதூஉம் புலனாகா நிற்கும். அஃதல்லா மலும், சாலடியர் வணங்கிய மற்றொரு கடவுட் பெயரான முரு என்னுஞ் சொல்லும் தமிழ்க் கடவுளான முருகன் என்பதனோடு ஒற்றுமையுடைத்தாய்க் காணப் படுதலும் உற்றுணரற் பாலதாம். அல்லதூஉம், பகலவனை வழிபட்டு வந்த ஏதுவானே அந்நாடு பாபிலோனியா என்று பெயர் பெற லானதும் அது பண்டைத் தமிழர் உறைந்த நாடென் பதனைப் புலப்படுத்தும், அது நிற்க. இனி, மேலே காட்டிய பாபிலோனியர் அசீரியர் சாலடியரைப் போலவே அவரோடு ஒரு காலத்தினராய் நாகரிகத்தில் முதிர்ந்த பினீசியரும்4 பகலவனை ஒரு கால் அமைதியான வடிவத்தோடும், பின்னொருகாற் கொடிய தீக் கடவுள் வடிவத்தோடும் வைத்து வழிபாடாற்றி வந்தனர். அவனது திருவுருவ அடையாளங்களாக நேர் நீண்டு தலை குவிந்த கற்களை மலை முகடுகளின்மேல் நிறுத்தி அங்கு அவற்றை வணங்கி வந்தனர். நேர் நீண்டு தலைகுவிந்த வடிவுள்ள கற்களையே இவ்விந்திய நாட்டின்கட் சிவலிங்கம் என வழங்கி வருகின்றனர். சிவம் என்பது முழுமுதற் கடவுள்; இலிங்கம் என்பது அடையாளம் அல்லது குறி, எனவே அச் சொற் றொடரும் முழுமுதற் கடவுளின் அடையாளமாக நாட்டப் பட்ட கல்லினையே உணர்த்துவ தாகின்றதெனக் கடைப்பிடிக்க. இவ்வுண்மை வரலாறு கொண்டு, பண்டைத் தமிழ் மக்களின் முன்னோர் தாம் இந்திய நாட்டுக்குப் புறம்பே சேய்மைக் கண்ணுள்ள நாடுகளிற் பல்லாயிர ஆண்டுகட்குமுன் உறைந்த ஞான்றும் முழுமுதற் கடவுளின் திருவுருவ அடையாளமாகிய சிவ லிங்கத்தினையே உயர்ந்த மலைக் குவடுகளின் மேல் வைத்துத் தொழுது வந்தவாறு போலவே அவர் வழிப் போந்த பின்னோரான தமிழ் மக்களும் இற்றை ஞான்றும் அத் திருவடையாளத்தைத் திருக்காளத்தி திருச்சிராப்பள்ளி திருப்பரங்குன்றம் திருத்தணிகை முதலான மலை முடிகளி னும் மலைகளில்லா ஏனையிடங்களில் நிலத்தின் கண்ணும் நிறுத்தி வழிபட்டு வருகின்றார் என்பது தெற்றென உணரப் படும், இனிச் செயற்கையாகச் செய்து நிறுத்திய கல்வடிவி னும், இயற்கையாக விளங்கும் தீவடிவே இறைவற்குச் சிறந்த அடையாளமா மென்பது எவர்க்கும் ஒப்ப முடிந்த மையின், பினீசியர் என்னும் அப்பண்டைக் கால நாகரிக மக்கள் தயர்5 என்னுந் தமது புகழோங்கிய நகரத்தில் மிகப் பழைதாய் உள்ள கோயிலின்கண் நடுவண் அமைக்கப்பட்ட வேள்வி மேடை அல்லது யாக வேதிகை மேல் முழுமுதற் கடவுள் அடையாளமாக இரவும், பகலும் ஓவாது தீ எரியவிட்டு வழிபாடு செய்து வந்தனர். இவர்கள் பகலவனுக்குச் சாலப் பழைய பெயராய் வழங்கிப் போந்த எல் என்னுஞ் சொல் செந்தமிழ்ப் பழஞ்சொல்லாதலும் கருத்தில் பதித்தல் வேண்டும். எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளை இவர்கள் எல்எலியன் என்னும் பெயர் வைத்து வழங்கிய பான்மையினை நுனித்தாராயும் வழிக் கட்புலனாய் விளங்கும் பகலவனொளி யில் அறிவுப் புலனான அறிவொளி யாய்த் திகழும் முதல்வன் இயற்கையாகவே முனைத்துத் தோன்றுவான் என்னுங் கருத்தினராய் அவரதனை வழிபட்டு வரலானா ரென்பது பெறப்படும். புறம்பே காணும் ஒளி வடிவான ஞாயிற்றை எல் என்று வழங்கினாற் போல அகத்தே காணும் அறிவொளி வடிவான முதல்வனையும் அவர் எலியன் என்று வழங்கிய நுட்பம் பெரிதும் பாராட்டற் பால தொன்றாம், எல் என்னும் மொழி ஒளியினை உணர்த்து மாறு, இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகட்கு முற்பட்ட தொல் காப்பி யத்தின் கட் சொல்லதிகாரத்தில் எல்லே இலக்கம் என்று உரைக்கப் பட்ட மையாற் கண்டு கொள்க. இலக்கம் இலங்கும் ஒளி என்னும் பொருட்டாகலின் அப் பொரு டோன்ற இறைவன், எலியன் என்று வழங்கப்பட்டான். மகமது முனிவர்க்கு முன்னிருந்த அராபியர் என்னும் மக்கள் தாம் முதற்கடவுட்குப் பெயராக வழங்கிய அல்லா என்னுஞ் சொல்லும் இவ் எல் என்னுஞ் சொல்லின் திரிபேயாம் என்று இதனுண்மையை ஆராய்ந்து கண்ட புலவர்6 கூறா நிற்கின்றனர். அல்லதூஉம், அலரி என்னும் ஒரு பழந் தமிழ்ச் சொல்பகலவன் மேற்றாதல் திவாகரம் முதலான பண்டைத் தமிழ் நூல்களுள்ளுங் காணப்படும். அதனானும், அல் என்னும் முதனிலைப் பெயர் ஞாயிற்றின் மேற்றாதல் துணியப்படுதலின், அல்லா என்னும் அம்மொழி ஞாயிற்றினுள் விளங்கும் முதல்வற்குப் பெயராய் அதனினின்று பிறந்ததென்று நேரே கோடலும் ஒன்று. அராபியர் பினீசியரி ருந்த நாட்டை அடுத்துள்ள தேயத்தில் உறைந்தவராய் அவர் தம் நாகரிக நலங்களை ஏற்று உயிர் வாழ்ந்தவராய்ப் போந்தமையின் இவரும் அவர் கடவுட்கிட்ட பெயரையே சிறந்ததாகக் கொண்டு தாமும் வழங்கினா ரென்று கடைப்பிடித்தல் வேண்டும். மகமது சமயத்தார்க்குக் கழிபெருஞ் சிறப்புடைய திருக்கோயில் அமைந்த மெக்கா நகரத்தில் தமக்கு முன்னிருந்தோரால் வழிபாடு செய்யப் பட்ட சிறுதெய்வ அடையாளங்களான கல்வடிவங்களை யெல்லாம் தகர்த்தெறியும்படி மகமது முனிவர் அறிவுறுத்தி அங்ஙனமே செய்து வந்தாராயினும், மெக்கா நகரின் நடுவணுள்ள திருக்கோயிலிற் பண்டு தொட்டு முழுமுதற் கடவுளின் திருவடையாளமாக நிறுத்தப்பட்டிருந்த குவிந்த கருங்கல் வடிவத்தை மட்டும் அங்ஙனந் தகர்க்க உரையாமல் அதனை அங்ஙனமே யிருக்க வைத்து அதன்கண் அன் போடும் வழிபாடு புரிந்து வரலானார். அதனான், முழுமுதற் கடவுட்கு மாறான சிறுதெய்வ வடிவங்களைத் தொழுதல் சிறிதுமாகா தென்பதூஉம், ஒரு தனிமுதற் கடவுட்கு அடை யாளமாக நிறுத்திய குவிந்த கல்வடிவினை வணங்கல் ஒரு வாற்றானுங் குற்றமாகாமற் பெரிதும் வாய்ப்புடைத்தேயா மென்பதூஉம் அவர்க்குக் கருத்தாதல் பெற்றாம். அதனா னன்றே இன்று காறும் அம் மெக்கா நகரத்துத் திருக் கோயிலின்கட் சிவலிங்க வடிவமே போல்வதொரு திரு வுருவம் வைத்துப் பெரிதும் போற்றி வழிபடப்பட்டு வரா நிற்கின்றது. இவ்வரலாறுகள் கொண்டு பினீசியரும் அவரையடுத் துறைந்த அராபியரும் சிவலிங்க வடிவத்தினையே பண்டைக்காலந் தொட்டு வைத்து வணங்கி வருமாறு நன்கு புலப்படும். இனிப் பாபிலோனியர் அசீரியர் சாலடியர் பினீசியர் முதலான நாகரிகமாந்தர்க்கும் பிற்பட்ட காலத்தே மேற்றிசை யில் நாகரிக வாழ்க்கையிற் சிறந்தவராய் விளங்கிய கிரேக்கர்7 களும் பகலவனையே வழிபட்டு வந்தனர். பின்னர்ச் சிறிதுகாலங் கழித்து அவர் அப் பகலவனுள் விளங்குங் கடவுளைச் சிய8 என்னும் பெயராற் பெரிதும் பாராட்டி இறைஞ்சி வந்தமை ஆராயற்பாற்று. அவர்கள் முழுமுதற்கடவுட்குச் சிறப்புடைப் பெயராகக் கொண்டு வழங்கிய சிய என்னுஞ் சொல் சிவம் என்று தமிழ்நாட்டார் ஞாயிற்றினுள் விளங்கும் முதல்வற்கு வழங்கி வருஞ் சொல்லோடு பெரிதும் ஒப்புமையுடைத்தாய் நிற்றலை உய்த்துணர வல்லார்க்கு அவர் இறைஞ்சிவந்த தெய்வமும் நம்மனோர் இறைஞ்சி வருந் தெய்வமும் ஒன்றேயா மென்னும் உண்மை புலனாகா நிற்கும். சிய என்னும் அம்முதற் பெருங் கடவுளை ஒலிம்ப என்னும் மலை முகட்டின் மேல் வைத்து அவர் வணங்கிப் போந்தமையும், சிவபிரானைப் போலவே அக்கடவுளுஞ் சடை முடியுடைய ராயும் முத்தலை வேல் ஏந்திய கையினராயும் சொல்லப் படுதலும் யாங்கூறு வதனைஇனிது நிறுவு மென்க. அவர்கள் முதல்வனை வழிபடுங் காலங்களி லெல்லாம் வேள்வித் தெற்றிமேல் தீ வளர்த்து அதன் வாயிலாகவே தமது வணக்கத்தை இறைவற்கு ஏற்பித்து வந்தமையும் அறியற் பாற்று. அவர்கள் அமைத்த கோயில்களின் வடிவமும் இத் தென்றமிழ் நாட்டிலுள்ள கோயில் வடிவத்தைப் பெரி தொத்து நிற்றலும் கருத்திற் பதித்தல் வேண்டும். வரிசை வரிசையாகக் கற்றூண்கள் நிறுத்தி அமைத்த அவர்கடம் கோயிலுள் கிணறுகுளங்களும் கோயிலின் வெளியே ஒரு பலிபீடமும் (வேள்வி மேடையும்) உள்ளே திருவுருவங் களின் எதிரே ஒரு பலிபீடமுமாக இரண்டு தெற்றிகள் தமிழ்நாட்டுத் திருக்கோயில் களின் உள்ளவாறே அமைத் திருந்தனர். தெலுப்பி என்னும் நகரத்தின்கண் அப்பாலோ9என்னும் பகலவனுக்குச் சமைத்த மாப்பெருங் கோயிலில் மூலத்தானத்தே, கருவறையிலே நிறுத்தப்பட்ட அக் கடவுளின் றிருவுருவத்திற்கு முன்னே எழுப்பிய வேள்வித் தெற்றி மேல் ஓவாது தீ எரிந்து கொண்டிருக்க வைத்து வழிபாடு ஆற்றிவந்தனர். இவ்வாற்றால், நாகரிக வாழ்க்கை யிற் சிறந்த கிரேக்கர் பண்டைக் காலத்திற் செய்து போந்த கடவுள் வழிபாடும் அனற்பிழம்பின் வாயிலாகவே செய்யப் பட்டதெனும் உண்மை தெற்றென விளங்கா நிற்கும். இனிக் கிரேக்கருக்கு அடுத்த நிலையில் அவரைப் பின் பற்றி அவர் போல் நாகரிக வாழ்க்கையின் மிக்கு வயங்கிய உரோமர்10 தொழுது போந்த ஜூபிதர்11 இடி மழை புயல் முதலிய னவாக வானின்கண் நிகழும் நிகழ்ச்சிகட்கெல்லாம் தலைவரென்றும், உயிர் வாழ்வோர் உயிர் துறந்தோராகிய எல்லார்க்கும் அவரே இறைவரென்றும், வலக்கையில் இடியும் இடக் கையிற் செங்கோலும் ஏந்தி நடுவுநிலை பிறழாமற் பகைமேற் செல்வோர்க்கு வெற்றியைத் தந்து எல்லா மக்களையும் பாதுகாப்பவரென்றும் சொல்லப்படு கின்றனர். இவர்க்குப் பெயராய் வழங்கிய ஜூபிதர் என்னுஞ் சொல் தேவபிதிர் என்னும் வடசொற்களின் திரபேயா மெனவும், ஒளிவடிவின னெனப் பொருடரும் தேவன் எனுஞ்சொல்லும் தந்தையெனப் பொருடரும் பிதிர் என்னுஞ் சொல்லும் ஒருங்கியைந்து ஒளிவடிவினனான தந்தை என முதற் பெருங்கடவுட்குப் பெயராய் அமைந்தனவென்று இவ்வாராய்ச்சி வல்ல கற்றோர் நுவலுதலின், உரோமர் கபிதோலின்12 என்னும் மலைமுகட்டின் மேல் எழில்பெற அமைத்த திருக்கோயிலில் வைத்து வணங்கிய அக்கடவுளும் ஒளிவடிவினனாய்க் கையில் அனல் ஏந்தி அடியார்க்கு வலந்தந்து அனைவோரையும் புரக்குஞ் சிவ பிரானேயா மென்பது நன்கு பெறப்படும். இருக்கு வேதத்தின் கண் இடிமழை புயற்காற்று முதலிய வான் நிகழ்ச்சிகட் கெல்லாம் தலைவரும், மிளிரும் ஒளிவடிவினரும், இருகால் நாற்கால் உயிர்கட்கெல்லாம் முதல்வரும், கையில் இடியெனப் படும் அனலை ஏந்திப் பகைவரைத் துரந்து தன்றிருவடிகளைக் களைகணா அடைந்தார்க்குப் பேரின்பம் நல்குபவரும் உருத்திரரே என முதன் மண்டிலத்தின் நாற்பத்து மூன்று நூற்றுப்பதினான்காம் பதிகங்களினும் இரண்டாம் மண்டி லத்தின் முப்பத்து மூன்றாம் பதிகத்தினும் ஏழாம் மண்டிலத் தின் நாற்பத்தாறாம் பதிகத்தினும் ஓதப்பட்டமை காண்க. ஒளிக்கடவுளாகிய ஜுபிதருக்கு வெண்மை நிறம் வாய்ந்த உயிர்கள் விருப்ப மாயினாற் போலவே, சிவபெரு மானுக்கும் வெண்ணிறமுடைய எருது உரித்தாதல் காண்க. உரோமர் தங்கோயில்களிற் பலிபீடங்கள் என்னும் வேள்வித் தெற்றி கள் அமைத்து அவற்றின்கண் எரிவளர்த்து அதன் வாயி லாகத் தங்கடவுளர்க்கு அவியூட்டி வந்தனர். இவ் வரலாற் றின் மெய்ம்மை கொண்டு உரோமரும் ஒளிவழியாகவே முதல்வனை வணங்கிவந்தன ரென்பது நன்கறியப்படும். இனி இதுகாறுங் கூறிப் போந்த பழைய நாகரிக மாந்தர் போற் பண்டை நாகரிக வாழ்விற் சிறந்தவராகாவிடினும், இஞ்ஞான்று இந்நிலவுலகமியாங்கணும் அறிவினும் நாகரிக வாழ்வினும் தலைசிறந்து நிற்கும் ஆங்கிலர் யர்மானியர் என்னும் இருதிறத்தார்க்கும் முன்னோரான மக்கள் செய்து போந்த தெய்வ வழிபாடும் தமிழ் மக்கள் செய்து போதரும் வழிபாட் டோடு ஒப்புமையுடைத்தாதலும் ஒரு சிறிது ஆராய்ந்துணரல் இன்றியமையாததாகின்றது. ஆங்கில யர் மானியர்க்கு முன்னோர்கள் தீயூதோனியர்13 எனப்படுவர். இவர்கள் ஓடன்14 எனப் பெயரிய கடவுளை இறைஞ்சி வந்தனர். இக்கடவுட் பெயர் எல்லாம் வல்லவர் எங்கும் நிறைந்தவர் என்னும் பொருள்களை உணர்த்தா நிற்கும். இக்கடவுள் எல்லார்க்கும் எல்லாப் பொருள்கட்கும் அழகை அளிப்பவ ரென்றும், பாட்டையும் வெற்றியையும் நில வளத்தையும் அருளையும் வழங்குபவ ரென்றும், எல்லாத் தேவர்க்குந் தாயான ஒரு பெண் டெய்வத்தைத் தமது பக்கத்தே வைத்திருப்பவ ரென்றும், ஒருவகை வேலேந்திய கையினராயும் ஞாயிற்றினைக் கண்ணாக வுடையராயு முள்ளவரென்றும் சொல்லப் படுகின்றனர். ஓடன் என்னுங் கடவுட்கு அடுத்த நிலையில் வைத்து அவர்களால் வழுத்தப்படும் தோர்15 என்னுந் தெய்வம் இடி மழை மின்னல் முதலியவற்றை ஆள்வதாய்ச் சினம் மிக்கதாய்த், தீயோரை ஒறுப்பதாய்த் திகழ்வதென்று பேணப்படுகின்றது. இங்ஙனம் இருவேறு வகைப்படுத்து ஓதப்பட்ட இரு தெய்வங்களும் உண்மையான் நோக்கும் வழி இரண்டாகாமல் ஒரே முதற் கடவுளின் அனுக்கிரகரூபம் எனும் அறக் கோலத்தினையும், நிக்கிரகரூபமெனும் மறக்கோலத் தினையும் புலங்கொளக் காட்டி ஒன்றேயாமென்பதூஉம் இனிது உணரக் கிடக்கும். இங்ஙனமே சைவசித்தாந்தத்துள்ளும் ஒரு முழுமுதற் கடவுளே மங்கலமான அனுக்கிரகரூபத்திற் சிவன் எனவும், பயங்கரமான நிக்கிரக ரூபத்தில் உருத்திரன் எனவும் இரு வேறுவகைப்படுத்து உரைக்கப்படுதல் தேவார திருவாசக மெய்கண்ட நூல்களினும் இருக்கு முதலான நான் மறை களினுங் காணப்படும். தீயூ தோனியர் பண்டை நாளில் வழி பட்ட ஓடன் தோர் என்னும் இரு கடவுளரும் நம்மனோர் வழிபடும் சிவன் உருத்திரன் என்னும் இரு தெய்வங்களோடு ஒப்புமையுடைத்தாதல் மேற் காட்டிய வரலாற்றால் நன்கு விளங்கும். மேலும், சிவபெருமான் உமையம்மையை ஒரு கூற்றில் உடையராதல் போல ஓடன் என்னுங் கடவுளும் ஒரு பெண் டெய்வத்தைத் தனது ஒருமருங்கில் வைத்திருக்கும் ஒப்புமையும் அறியற்பாற்று. இனி இத் தெய்வங்களை அவர்கள் காடுகளிலுந் தோப்புகளிலும் வைத்து வணங்கி வந்தனர். அவ்வாறு வழிபடுங்கால் முழுமுதுற் கடவுளின் குறியாக ஒரு பெரிய மரத்தூணைத் திறந்த வெளியிலே நிறுத்தி அதனெதிரிற் பலிபீடம் அமைத்துத் தீ வளர்த்து வழிபாடாற்றி வந்தன ரென்பதூஉம் அவர்தம் பழைய வரலாறுகளாற்,16 புலனாகா நிற்கின்றது. இங்ஙனமே நம்ம னோரும் திறந்த வெளியாகிய அம்பலத்தே இறைவனருட் குறியாய்த் தூண்வடிவான ஒரு தறியை நிறுத்தி அதனெதிரே ஒரு பலிபீடம் எழுப்பி வழிபட்டுப் போந்தாரென்பதற்கும், நம்மனோரும் காடுகளிலுந் தோப்பு களினும் இத்தகைய வாம் அம்பலங்களில் இறைவனைப் பண்டுதொட்டுத் தொழுது போந்தார் என்பதற்கும் திருமறைக்காடு திருவாலங்காடு தில்லைவனம் கடம்பவனம் திருவா னைக்கா என்னும் திருக்கோயிற் பெயர்களும் தில்லையம்பலம், வெள்ளியம்பலம் முதலான உறுசான்றா மென்க. தூண் வடிவு தறி வடிவு கற்குழவி வடிவு குவிந்த புற்றின் வடிவு முதலியன வெல்லாம் சிவலிங்க மேயாதலும் உணரற்பாற்று. இனி, உலகம் யாங்கணும் இஞ்ஞான்று பரவி விளங்கு கின்ற கிறித்துவ சமயத்தார்க்குச் சிறந்த வேதமாய்ப் பேணப் படுகின்ற பைபிள் என்னும்நூலைக் கொண்டு அச்சமயத் தார்க்கு முன்னோர் கைக்கொண்டிருந்த பழைய கொள்கை களும் ஈண்டொரு சிறிது ஆராய்ந்தறியற் பாலனவாய் இருக்கின்றன.. கிறித்துவ மறையின் முதற் புத்தகத்தில் எல்லாம்வல்ல முழுமுதற் கடவுட்கு எலோகிம்17 எனும் பெயரே நனி சிறந்ததாய்ச் சாலப் பழையதாய் எடுத்தாளப் பட்டிருக் கின்றது. இப்பெயர் எல என்னுஞ் சொல்லிலிருந்து வந்ததெனக் கிறித்துவ வேத ஆராய்ச்சி வல்ல புலவோர் உரை கூறுகின்றார். அல்லதூஉம், மோசே என்னும் அடிய வர்க்கெதிரே கடவுள் தோன்றி, யான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோப் புக்கும் எதிரே காட்சி தந்தபோது எல்சடை என்னும் பெயராற் றோன்றினேன் என்று அருளிச் செய்த சொற்றொடரில் எல் என்னும் பெயரே நன்கு காணக்கிடக்கின்றது. மேலெடுத்துக் காட்டிய பினீசியர் சாலடியர் பாபிலோனியர் கொள்கை வரலாறுகளில் முதற் பெருங்கடவுள் எல் எலியன் என்று வழங்கப்பட்ட பான்மை யினை இனிது விளக்கியிருக்கின்றேம். அவரோடொப்பக் கிறித்துவ சமயத்தார்க்கு முன்னோரும் முதல்வனை எல் என்றும், ஏலோகிம் என்றும், எல்சடை என்றும், ஓரோ விடங்களில் எல் எலியன் என்றும் வழங்கி வந்தமையினை உற்று நோக்குங்கால், அவருங் கடவுளை ஒளிவடிவினன் என்றே கருதி வழிபட்டமை புலனாகா நிற்கும். அதனால் அவர்களும் ஒளியுடைப் பொருள்களான பகலவன் தீ முதலியவற்றின் வாயிலாகவே கடவுளை வழிபட்டு வந்தா ராகல் வேண்டு மென்பது பெறப்படும். இதற்குச் சான்றாகப் பிறிதொன்றுங் காட்டுவாம். ஆபிரகாம் என்னும் அடியவர் மகப்பேறு வேண்டி இறைவனைத் தொழுது அறிதுயிலில் அமர்ந்திருந்த போது அவர்க்கு முன்னே ஆண்டவன் தழல்வடிவாகத் தோன்றினான் என்பதூஉம், மற்றொருகாற் சினை18 என்னும் மலைமுடிமேல் இறைவனது அருண் முகிலானது ஆறுநாள் வரையிற் கவிந்திருந்து ஏழாம் நாளில் தோன்றிய போது இறைவனது அவ்வருட்டோற்றக் காட்சி அம்மலைக் குவட்டின்மேல் விழுங்கும் அனல் வடிவாய் இசரவேல் மக்களின் கண்களுக்குப் புலப்படலாயிற்று என்பதூஉம் கிறித்துவ மறையின் கண் விளக்கமுறச் சொல்லப் பட்டிருத்தலின் இஞ்ஞான்றைக் கிறித்துவ சமயத் தவரின் முன்னோர் முழுமுதற் கடவுளின் றிருவுருவை அனல் வடிவாகவே கண்டு தொழுதனரென்னும் உண்மை மறுக்கப் படாது நாட்டப் படுமென்க. ஈண்டுக் காட்டிய இவ்வர லாற்றில் முதற் பெருங் கடவுட்குச் சிறப்புடைப் பெயராகச் சொல்லப் பட்ட எல்சடை என்னும் பெயரிற் கண்ட சடை என்னுஞ் சொல்லுஞ் சிவபெருமாற்குச் சிறந்த பெயராகத் தமிழ் நாட்டில் வழங்குஞ் சடையன் என்னுஞ் சொல்லும் ஒன்றாயிருத்தல் பெரிதும் நினைவுகூரற்பால தாகும், மேலும் யாக்கோப்பு என்னும் அடியவர் இறை வனருளை நேரே பெற்று, அவனைத் தொழுகுறியாக ஒரு குவிந்த கல்லினை நிறுத்தி அதன் மேல் எண்ணெயைச் சொரிந்து அதனைப் பீத்தெல்19 அல்லது முதல்வன் இருக்கு மிடம் (கோயில்) என்று பெயரிட்டு வழிபாடாற்றி வந்தமை யும், ஆன்20 என்னும் ஊரிலிருந்த பகலவன் கோயிலின்கண் ஆன்கன்றினை (நந்தியை) இசரவேல் மரபினர் வணங்கி வந்தமையும், பலி யீடங்களின் மேற் குன்றாத்தீ வேட்டு வழிபட்டமையும், இசரவேல் மரபினரின் குருமார்கள் ஒளிவடிவின் அடையாளமான குவிந்த மணிக் கற்களை மார்பிற் கட்டிக் கொண்டிருந்தமையும் (சிவலிங்க தாரணம்) ஆராய்ந்து பார்க்கும் நடுநிலையாள ரெல்லாம் கிறித்துவ சமயத்தினர் தம் முன்னோர் செய்து போந்த முதற்கடவுள் வழிபாடும் தமிழ் நாட்டினர் செய்து போதருஞ் சிவவழிபாடும் ஒன்றே யாமென்று உணராமற் போவரோ! அது நிற்க. இனி, நாம் உறையும் ஆசியாக் கண்டத்தினும், நமது கண்டத்திற்கு அயலிலுள்ள ஐரோப்பாக் கண்டத்தினுமுள்ள நாகரிக மக்கட்கும் பன்னெடுங் காலமாய்த் தெரியாதிருந்து நானூற்றிருபத்தெட் டாண்டுகளுக்கு முன் கொலம்பசு என்பவராற் கண்டறியப்பட்ட அமெரிக்காக் கண்டத்தில் மெக்சிகோ21 என்னும் நகரத்திலும் பெரு22 என்னும் நகரத்திலும் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னரே நாகரிக வாழ்க்கையிற் சிறந்து வயங்கிய மக்கள் அந்நகரங்களிற் பகலவனையும் திங்களையும் தீக்கடவுளையும் வைத்து வழிபாடாற்றிய மிகப் பெரிய அழகான பழங்கோயில்கள் இஞ்ஞான்றும் அந்நகரங்களிற் பழுதுபட்ட நிலைமையில் நிற்கின்றன. பொன்னால் அணிபெற ஒப்பனை செய்து எழில் கிளர ஐந்தடுக்குயரம் மேலேழுப்பிச் சாலப் பெரியனவாய் அமைக்கப்பட்ட அக்கோயில்களின் உருவ அமைப்பினைக் கண்டு அவற்றைப் போய்ப் பார்க்கும் ஆங்கில நன்மக்களும் பிறரும் பெரிதும் வியப்படை கின்றனர். ஆசியா ஐரோப்பாக் கண்டங்களில் உயிர் வாழ்ந்த பண்டைக்கால நாகரிக மாந்தர்களோடு தொடர்பில்லாமல், அமெரிக்காக் கண்டத் திற்றனியிருந்து, வாழ்க்கை செலுத்திய அப் பழைய நாள் மாந்தரின் வரலாறுகள் அவற்றைக் கற்பார்க்கு இறும்பூது பயவாமற் போகா. அங்ஙனம் எவரும் வியக்கத் தக்கவாறாய்த் தனித்திருந்த அவர்கள் முழுமுதற் கடவுளைப் பகலவன் திங்கள் தீ என்னும் ஒளியுடைப் பொருள்களில் நேர் முகமாய்க் கண்டு வழிபட்டுப் போந்தமையினை அறி வொருங்கி உணருங்கால் இறைவனை ஒளிவடிவில் விளங்கக் கண்டு தொழும் வழிபாடே உண்மை வழிபாடாமென்பது ஐயுறவின்றித் துணியப்படும். அப்பழைய நாள் மக்கள் அங்ஙனம் பல்லாயிர ஆண்டுகட்கு முன் அமைத்த அவ் வெழில்கெழு பழங் கோயில்களிற் பெரிய பலிபீடங்களும் கல்லினாற் சமைத்த திருவுருவங்களுங் காணப்படுகின்றன. அக்கோயில்களின் வடிவங்கள் தமிழ் நாட்டிலுள்ள சிவ பெருமான் திருக் கோயில்களின் அமைப்பைப் பெரிதும் ஒத்திருத்தல் சாலவும் வியக்கற் பாலதொன்றா மென்க. இங்ஙனம் இதுகாறும் எடுத்துக் காட்டிய பண்டை நாள் நாகரிகமாந்தர் வரலாறுகளால், அறிவொளி வடிவான முழுமுதற் கடவுளை நேரே கண்டு வழிபடுதற்குச் சிறந்த வாயில் களாய் நிற்பன ஞாயிறு திங்கள் தீ என்னும் ஒளியுடைப் பொருள்கள் மூன்றுமேயாமென்பதூஉம் அவ் வொளியுடைப் பொருள்கள் மூன்றுங் கட்புலனாற் காணும் அவ்வளவுக்கே இடந்தருவதல்லது அன்பின் மேலிட்டாற் றொடுதற்குத் தழுவுதற்கும் முத்தமிடுதற்கும் பூச்சாந்தம் ஆடையணிகலன் முதலியவற்றால் ஒப்பித்துக் கண்டு களிப்புறுதற்கும் இடந் தாராமையால் அங்ஙனமெல்லாஞ் செய்து இன்புறுதற்கு ஏற்ற கல் பளிங்கு செம்பு முதலிய வற்றால் அவ்வொளி வடிவின் அடையாளமாகச் செய்து திரண்டு நீண்டு தலை குவிந்த திருவுருவங்களை வைத்து வழிபாடாற்றுதல் சாலச்சிறந்த முறையாமென்பதூஉந் தெற்றென உணரப்படும். அஃதொக்கு மாயினும், திரண்டு நீண்டு தலைகவிந்த கல்வடிவமே, இறைவன் நேர்நின்று விளங்கும் வாயிலான ஒளியின் அடையாளமாதல் எற்றாற் பெறுதுமெனின்; கட்புலனாய் எரியுந் தீயின் வடிவோ டொப்பச் செய்து நாட்டப்படுதலின், அக்கல் வடிவு ஒளிவடிவின் குறியேயாதல் தேற்றமாம். ஒரு குழியிலிருந்து எரியுந் தீப்பிழம்பு சுற்றிலுந் திரண்டு நீண்டு குவிந்து நிற்றல் எவரும் அறிந்ததேயாம்; அங்ஙனமே அதன் அடையாள மாகக் கல்லிற் செய்து வைக்கப்படும் சிவலிங்க அருட்குறியும் சுற்றிலுந் திரண்டு நீண்டு தலைகுவிந்திருத்தல் கண்டு கொள்க. இலிங்கக் கல் தீப்பிழம் பிற்கும், அதன் அடியிற் பொருத்தப்பட்டிருக்கும் வட்ட வடிவமான பீடம் அத்தீப் பிழம்பு எரிந்து நிற்குங் குண்டத்திற்கும் அடையாளங்களாம், அனற் பிழம்பின் அடையாளமாக நாட்டப்படும் அருட் குறி கங்கை பொருநை முதலான யாற்றின் அடிப்படைகளினும் மலைகள் மலை முழைஞ்சு களினும் இயற்கையாகவே திரண்டு நீண்டு குவிந்த வடிவினவாகக் கிடக்குங் கற்களாகிய சுயம்புலிங்கங்களும், அவ்வாறின்றிச் செயற்கையாக அவ் வடிவினவாகச் செய்தமைக் கப்படுங் கற்களாகிய செயற்கை லிங்கங்களும் என இரு பகுப்பில் அடங்கும். இனி இக் கல்வடிவுகளேயன்றிக் குவிந்து நீண்ட புற்கூறுவடிகள் சிற்சிலவும் சுயம்புலிங்கங்கள் என்ற வகுப்பில் வைத்து ஆங்காங்கு வணங்கப்பட்டு வருகின்றன; இங்ஙனமே ஆவின் செவி வடிவான குறிகளும் வழிபாடாற்றப்படுகின்றன. எவையே யானும் அவை அனற்பிழம்பின் வடிவை ஒருபுடை யொத்திருக்குமாயின், அவைதம்மை அருட்குறியாக நிறுத்தித் தொழுதல் வாய்ப்புடைத்தேயாம். இனி, உருண்டு நீண்டு குவிந்த இயற்கைக் கல்வடிவும் அதுபோற் செய்தமைக்கப்படும் செயற்கைக் கல் வடிவுமே இறைவற்கு உண்மையடையாளங்களாமாகலின் அவை தம்மை வழிபடுதலே முறையாம், இவற்றின் வேறாக அனற் பிழம்பை அவற்கு உண்மையடையாளமாகக் கொண்டு வழி படுதல் பொருந்தாதென ஆராயாது கூறுவாருமுளர். திரண்டு நீண்டு குவிந்த கல் வடிவுதான் முதல்வற்கு அடையாள மென்ப தென்னை? வட்டம் நாற்கோணம் முக்கோணம் முதலான வேறு வேறு வடிவுகளுடைய கற்களை முதல்வன டையாளங்களாய்க் கோடல் ஆகாதோ? என்று வினாவு வார்க்கு அவர் விடை கூறமாட்டாது இடர்ப்படுவராதலின் அவர் உண்மை ஆராயும் மதுகையின்றிக் கூறுவன சிறிதும் பொருந்தா. கட்புலனாகா இறைவன் அருள் விளக்கத்தை ஒருவாற்றானாயினும் நம்மனோர் உணர்தற்கு வாயிலாய் நங் கட்புலன் எதிரே இயற்கை விளக்கமுடைத்தாய்த் தோன்று வது அனற்பிழம்பு ஒன்றுமே யென்பது மேலே காட்டினா மாகலின் அஃதொன் றுமே இறைவன் முனைத்துத் தோன்றி உயிர்கட்கு எளிவந்து அருள் செய்தற்கு இடமாம். இங்ஙனம் அருள்ஒளி வாய்ந்த முதல்வன் தோன்றுதற்குரிய ஒளிப் பொருளான அனற்பிழம்பு திரண்டு நீண்டு குவிந்து மிளிர் தலின் அதனோடொப்பதாக நிறுத்திய கல்லும் அவ்வடிவே யுடையதாக எடுத்து நிறுத்தப் படுவதாயிற்று. இவ்வள வேயன்றிக், கல் அனல்போல் இயற்கை யொளியுடைய தன்மையாலும், மாணிக்கம் பளிங்கு முதலான விளக்க முடைய கற்கள் உளவேனும் அவை தீப்பிழம்புபோல் நுண்ணிய வியல்பு உடையவாதலின்றிப் பருப்பொருள்களா யிருத்தலாலும் கற்களாற் செய்த வடிவங்கள் ஏனைச் சமயத் தாராற் றகர்ந்து அழிக்கப்படுதல் போல அனற்பிழம்பு அழிக்கப்படாமை யாலும் இறைவனருள் விளக்கத்திற்கு வாயிலாய் அவனைக் கட்புலனெதிரே கண்டு வழிபடுதற் குரிய இயற்கை அடையாள மாய் நிற்பது தீப்பிழம்பு ஒன்றுமே யாமென்று கடைப்பிடிக்க. அல்லதூஉம், கல்லாற் றிரட்டி யமைத்த திருவுருவங்கள் நிறுத்திய திருக்கோயில்கள் எத்துணைச் சிறந்தனவேயாயினும் அவை உள்ளே விளக் கொளி யின்றி இருளடைந்து கிடக்கு மாயின் அவற்றின் உட் செல்ல எவரேனும் விரும்புவரோ? அத்திருவுருவங்களின் இரு புடையினும் முன்பின்னும் நிரல் நிரலாகத் திருவிளக்கு கள் சுடர்ந்து ஒளிருமாயினன்றே அவை காண்டற்கும் வழி பாடாற்று தற்கும் இசைந்தனவாகின்றன! இதுவேயுமன்றித் திருக்கோயில்கள் அமைத்து அவற்றின்கட் கல்லாற்செய்த திருவுருவங்களை நிறுத்துகின்றுழிப் பண்டைக் காலந் தொட்டு ஆன்றோர் வழக்காய்ச் செயப்படுஞ் செயன் முறைகளின் பொருளை உற்று ஆராயின் தீப்பிழம்பு வடிவே இறைவற்கு உண்மை யடையாளமாதல் தெற்றெனப் புலப் படும். கல்முதலான பருப்பொருள் வடிவங்கள் இறைவனது இயற்கை அருள் விளக்கத்திற்கு இடமாக வயங்கும் தீவடிவி னின்றும் அவனருளொளியை இரந்து பெற்று அப்பருப் பொருள் வடிவங்களில் ஏற்றுதற் பொருட்டு அவ்வடிவங் களின் எதிரே வேள்விக்குண்டம் அகழ்ந்து அதனகத்தே தீ வளர்க்கின்றனர். தீயின்கண் உள்ள விளக்கம் மிக நுண்ணிய தாகலின் அது தன்னியல்போடு பெரிதும் முரணி நிற்கும் பரிய கல்வடிவிற் பாயாது; ஆகவே, ஒரு வாற்றாற் றீயினியல்போ டொத்தும் பிறிதொருவாற்றாற் கல்லினியல்போடு ஒத்தும் இரண்டிற்கும் நடு நிகர்த்ததாய் உள்ள ஒரு பொருள் அவ்விளக்கத்தைத் தீயினின்றும் ஏற்றுக் கல்லின்கண் உய்த் தற்கு இன்றியமையாது வேண்டப் படுகின்றது. அப்பெற்றித் தாம் பொருள் யாதோ வெனின் அது தண்நீரே யாம்; யாங்ஙனமெனில், நீர் கல்லினும் நெகிழ்ந்ததாய் இருத்தலின் அஃது அந்நுண்மையால் ஒரு புடை அனற் பிழம்பை ஒக்கும், இனித் தீயினும் நீர் தடிப்புடைய தாயிருத்தலின் அஃது அவ்வாற்றால் ஒருபுடை கல்லை யொப்பதாய் இருத்தலால் என்க. இவ்வியல்பிற்றாதல் பற்றித் தண்ணீரைப் புதிய மட்கலங்களில் நிரப்பி அவற்றை வேள்விக்குண்டத்து எரியும் தீயின் எதிரே வைத்துத், தீயின்கண் இயற்கையாய் விளங்கும் முதல்வன் ஒளியை எளியேங்கள் பொருட்டு இந்நீரின்கட் புகுந்தருள்க என்று தக்கார் பலர் ஒருங்கு குழுமி வரையறுத்த சின்னாள்காறும் இடையறாது வேண்டுவர்; அங்ஙனம் வேண்டிய பின்னர் அவர் வேண்டு கோளுக்கு எளிவந்து முதல்வனொளி அந்நீரிற் புகும்; அதன் பின்னர் அம்மட் கலங்களின் நீரை எடுத்து எளியேங்கள் பொருட்டு ஐயனே இத்திருவுருவத்தின் கட் புகுந்து எழுந்தருளி அடியேங் கட்கு என்றும் அணுக்கராய் விளங்கியிருந்து அருள் வழங்கல் வேண்டும் என இரந்து வேண்டி அந்நீரை அத்திரு வுருவத்தின் முடிமேற் பெய்வர். இங்ஙனஞ் செயற்பாலன முற்றும் செய்து முடித்த பின்றான் கல்லாலமைக்கப்பட்ட அத்திருவுருவம் வழிபடுதற்கு ஏற்புடைத்தாகக் கொள்ளப்பட்டு வழிபாடாற்றப் படுகின்றது. அனற் பிழம்பின் கண் விளங்கும் முதல்வ னொளியை அதனினுஞ் சிறிது பரிய நீரின்கண் இறங்கவும் அதன்பின் அதனை நீரினும் பரிய கல்வடிவின்கண் இறங் கவும் பலகால் வேண்டுதலையே மந்திரஜபம் என்றும், இங்ஙனஞ் செய்யுஞ் செயன்முறைகளையே அட்டபந்தன கும்பாபிஷேகம் என்றுங் கூறுவர். இம்முறைகளை நுண்ணி தாக ஆய்ந்தாராய வல்லார்க்கெல்லாம், அனற்பிழம்பு ஒன்றுமே இறைவனியற்கை யருள்விளக்கக் குறியா மென்பதூஉம், அக்குறியினோ டொப்பவே பருப் பொரு ளான கல் மரம் மண் செம்பு முதலியவற்றிற் றிருவுருவங்கள் அமைத்து வழிபாடாற்றப்படுகின்றன வென்பதூஉம் இனிதுணரக் கிடக்கும். இத்துணையுங் கூறியவாற்றால் தீப்பிழம்பின்கண் இறைவன் விளங்குதல் கண்டே தீயும் தீ வடிவாய் ஒளி வடிவாய் உள்ள ஞாயிறு திங்கள் முதலியனவும் பண்டைக்காலந்தொட்டு எல்லா நாடுகளிலும் இருந்த எல்லா மக்களானும் வணங்கப் பட்டு வந்தனவெனவுறும் இனித் தீயை அணுகி ஒப்பனை செய்து வழிபட இயலாமையின் அங்ஙனம் வழிபடுதற்குப் பேரன்பு உடையரானோர் தீப்பிழம்போடொத்துத் திரண்டு நீண்டு குவிந்த கல்வடிவினையும், தீயெரியுங் குழியை நிகர்த்த வட்டக் கல்லினையும் அமைத்து அவ்விரண்டையும் ஒன்றாகப் பொருத்திக் கடவுளின் அடையாளம் என்னும் பொருளைத் தரும் சிவலிங்கம் என்னும் பெயரையும் வைத்து அதனை வழிபட்டு வரலாயினார் எனவும் அறிந்து கொள் ளல் வேண்டும். இன்னும் கல் முதலானவற்றில் அமைக்கப் பட்ட சிவலிங்கத் திருவுருவத்திற்கு மூலம் வேள்விக் குண்டத்திற் கிளர்ந்தெரியும் தீப்பிழம்பும், அத் தீப்பிழம் பாகிய திருவுருவத்திற்கு மூலம் விந்துநாதவுருவங்களும் ஆமென்றும் அறிதல் வேண்டும். இவ்விந்து நாதங்கள் ஒலிவடிவில் ஓ என்னும் ஓசையாகவும், வரி வடிவில் ஓ என்னும் எழுத்தாகவும் பிள்ளை யார் சுழியாகவும் நிற்கும். இனி எல்லாம்வல்ல முதல்வன் விந்து நாதங்களில் நேரே இயைந்து விளங்குதலே யன்றி, நம்மனோர் பொருட்டு அவற்றின் வாயிலாக இவ் வுலகத்திற் காணப்படும் ஞாயிறு திங்கள் தீ என்னும் ஒளியுடைப் பொருள்களினும், தீ வடிவோடொப்பச் செய்து நாட்டப்படும் சிவலிங்கம் முதலான திருவுருவங்களினும் விளங்கித் தோன்றி நின்று நம்மனோர் செய்யும் வழிபாடுகளை ஏற்று அருள் புரிவன் என்க. அடிக்குறிப்புகள் 1. Egyptians 2. Babylonians 3. Chaldaeans 4. Phoenicians 5. Tyre, the famous city of Phoenicians 6. Mohammedanism by Mr. G.T. Bettany, M.A., B.Sc., 7. Greeks 8. Zeus 9. Apollo’s Temple at Delphi 10. Romans 11. Jupiter 12. Capitoline Hill 13. Teutons 14. Woden 15. Thor 16. Frankish Annals 17. Elohim 18. Mount Sinai 19. Bethel 20. On or Heliopolis 21. Mexico 22. Peru 8. அம்மை அப்பர் இனிச் சிவபெருமான் திருக்கோயில்களிற் சிவலிங்க வடிவமேயல்லாமல், மக்கள் உருப்போல ஆண்பெண் வடிவாய் அமைந்த அம்மையப்பர் திருவுருவமுங் காணப் படுதல் என்னை? உலகங்களுக்கெல்லாம் ஒரு முதல்வரான கடவுள் மக்களைப் போல அங்ஙனம் ஆண் பெண் வடிவா யிருத்தல் அமையுமோ? மேலும் முதற்கடவுள் ஆண்பெண் வடிவினா ராயிருத்தலை எவருங் கண்டிலரா லெனின் நன்று சொன்னாய் மூவாண்டிலே திருஞான சம்பந்தப் பிள்ளை யார் அம்மை யப்பராய் எழுந் திருளித் தமக்கு அருள் புரிந்த சிவபெருமான் திருவுருவத்தைத் தெளியக் கண்டு அதனைப் பாடியிருக்கின் றாராகலின், எவரும் அதனைக் கண்டில ரெனக் கூறுதல் அடாது. இனி அவர்போல் அத்திருவுரு வத்தைக் காணும் பேற்றினை உடையரல்லாத நம்போல்வார் அதன் பெற்றி தேர்தற் பொருட்டு அதன் வரலாறு ஈண்டு ஒரு சிறிது விளக்குதும், நம்மனோர் ஊற்றுணர்வுக்கும் கண்ணுணர்வுக்கும் புலனாகும் பொருட்பண்புகளை நன்கா ராய்ந்து பார்ப்பின் அவை யெல்லாம் இரண்டாய்ப் பிரிந்து இருகூற்றிலே அடங்கும்; ஊற்றுணர்வுக்குப் புலனாவன வன்மை மென்மை: சூடு குளிர்ச்சி என்னும் இரு பகுப்பிலும், கண்ணுணர்வுக்குப் புலனாவன ஆண்மை பெண்மை: சிவப்பு நீலம் என்னும் இருபகுப்பிலும் அடங்கக் காண்கின்றோம். இவ்விரு வேறுணர்வுக்கும் புலனாகும் இந் நான்கு இரட்டை களையும் மறித்தும் ஆராய்ந்து பகுப்பின் மறித்தும் இவை இருகூற்றில் அடங்கும்; வன்மைசூடு ஆண்மை சிவப்பு என்பன ஒரு பகுதியாயும், மென்மை குளிர்ச்சி பெண்மை நீலம் என்பன மற்றொரு பகுதியாயும் நிற்கும், இவ்விரு கூற்றிற்பட்ட பண்புகளையும் புறத்தே காணப்படும் இருவகைப் பொருள்களிற் றெளியக் காணலாம். அவை தீயும் நீருமாம். தீ வன்மையும் சூடும் ஆண்மையும் சிவப்பு நிறமும் உடையதாய்த் திகழும்; நீர் மென்மையும் குளிர்ச்சியும் பெண்மையும் நீல நிறமாய் உடையதாய் ஒழுகும். இவ்விருவகை இயல்பும் உயிர்ப் பொருள்களிடத்தும் காணப் படும். புன் முதல் மக்கள் தேவர் ஈறான எல்லா உயிர்களும் ஆண் பெண் என்னும் இருவகைப் பிறவியில் அடங்கி நிற்கின்றன; ஆண் எனப்படுவனவெல்லாம் வல் இயல்பு வாய்ந்தனவாயிருத்தலும் பெண் எனப்படுவன வெல்லாம் மெல்இயல்பு பொருந்தினவாயிருத்தலும் எங்குங் காணப் படும். ஆண்பெண் என்னும் பகுப்பு ஊர்ந்து செல்லும் உயிர்களிலும் மக்களிலுங் காண்கின்றமல்லது நிலை பெயராத புற்பூண்டுகளிற் காண்கிலமாலெனின்; புற் பூண்டு களிலும் ஆண்பெண் பிறவியுண்டென்றற்கு ஆண்பனை பெண்பனை யென்னும் வழக்கே சான்றாகலானும், இஞ்ஞான்றைப் பயிர்நூல்1 வல்லார் புற்பூண்டு மரஞ் செடி கொடி முதலிய எல்லாவற்றிலும் ஆண் பெண் என்னும் பகுப்பு உண்டென்று நன்காராய்ந்து காட்டு தலானும், ஆண் பயிர்களிலுள்ள கருவானது வண்டுகளான் எடுக்கப்பட்டுப் பெண் பயிர்களின் கருவறையிற் சேர்க்கப்பட்டா லன்றி அவை பயன்றராமை கண் கூடாய் எவரும் அறியக் கிடத்த லானும் நிலையியற் பொருள் இயங்கியற் பொருளாகிய எல்லா உயிர்ப் பொருள்களினும் ஆண் பெண் என்னும் பகுப் புண்மை ஒரு தலையாமென்க. உயிருள்ளனவற்றில் ஆண் பிறவி யெல்லாம் வன்றன்மையும் பெண்பிறவியெல்லாம் மென்றன்மையும் உடையனவாய் இருத்தல் கொண்டு, உயிரில்லாத வற்றுள்ளும் வன்றன்மை யுடையதனை ஆண் என்றும், மென்றன் மையுடையதனைப் பெண் என்றும் வழங்குவர். தீ வலியதன்மை யுள்ளதாயிருத்தலின் அதனை ஆண் என்று கூறுதலும், நீர் மெல்லிய தன்மை யுளதாயிருத்த லின் அதனைப் பெண் என்று கூறுதலும் எவர்க்கும் உடம் பாடாம். தீ வெம்மையால் வன்றன்மையுள்ள தென்று கொள்ளப்படவே, அதனோடு ஒருங்கியைந்து நிற்கும் விந்து தத்துவமும், அவ்விந்து தத்துவத்தோ டொருங்கியைந்து நிற்கும் முதல்வனும் ஆண் வடிவுடைய அப்பனென்று கொள்ளப்படும். நீர் தண்மையால் மென்றன்மையுள்ள தென்று கொள்ளப்படவே, அதனோடு ஒருங்கியைந்து நிற்கும் நாததத்துவமும், அந்நாததத்துவத்தோடு ஒருங்கி யைந்து நிற்கும் முதல்வியும் பெண்வடிவுடைய அம்மை யென்று கொள்ளப் படும். இனி உலகத்தின்கட் காணப்படும் நிறங்களுக்கெல்லாம் முதலாவன சிவப்பு, நீலம் என்னும் இரண்டுமேயாம்; இவ்விரண்டுந் தம்முள் ஏறியுங் குறைந்தும் பலவாறு கலத்தலால் வேறுபல நிறங்களும் தோன்றுகின்றன வென்று இஞ்ஞான்றை இயற்கைப் பொருள் நூலாருங்2 கூறா நிற்பர். வெப்பமும் வன்றன்மையும் உடைய தீயின்கட் சிவப்புநிறமும், தட்பமும், மென்றன்மையும் உடைய நீரின் கண் நீல நிறமும் கண் கூடாய்க் காணப்படுதலால், ஆண் வடிவிற் காணப்படும் முதல்வனுக்குச் சிவப்பு நிறம் வாய்ந்த திருமேனியும், பெண் வடிவிற் காணப்படும் முதல்விக்கு நீலநிறம் வாய்ந்த திருமேனியும் உளவாதல் துணியப்படும். இதுபற்றியே தமிழ் மறையுள்ளும் பொங்கழல் உருவன் பூதநாயகன் எனவும், சிவனெனுநாமந் தனக்கேயுடைய செம் மேனி எம்மான் எனவும், பொன்னார் மேனியன் எனவும், செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே எனவும், முதல்வன் சிவந்த மேனியனாக வைத்துப் பரவப்படுவானா யினன்; இனி இறைவியின் திருமேனி நிறம் நீலமாதல் பைங் குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால், அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால், தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்த லினால், எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த, பொங்குமடுவில் என்னுந் திருவாசகத் திருமொழியும் நீலமேனி வாலிழைபாகத், தொருவன் என்னும் ஐங்குறு நூற்றுக் கடவுள் வாழ்த்துச் செய்யுளும் இனிது விளக்கும் என்க. அற்றேல், மேல் விந்துநாத இயல்புகளை விளக்கிய வழி விந்து வட்டவடிவிற்றென்றும் நாதம் வரிவடிவிற்றென்றுங் கூறப்பட்டமையானும்; விந்துவும் நாதமும் மேவும் இலிங்க மாம், விந்துவ தேபீடம் நாதம் இலிங்கமாம் எனவும் சத்திநற் பீடந் தகுநல்ல ஆன்மா, சத்திநற் கண்டந் தகுவித்தை தானாம், சத்திநல் லிங்கந் தகுஞ்சிவ தத்துவம், சத்திநல் லான்மா சதாசிவந்தானே எனவும் போந்த திருமந்திரத் திருப்பாட்டு களானும், சத்தியுஞ் சிவமுமாய தன்மையிவ் வுலகமெல்லாம், ஒத்தொவ்வா ஆணும் பெண்ணும் உயர்குண குணியுமாகி, வைத்தனன் அவளால் வந்த ஆக்கம் இவ் வாழ்க்கை யெல்லாம், இத்தையும் அறியார் பீட லிங்கத்தின் இயல்பும் ஓரார் என்னுஞ் சிவஞான சித்தித்திருப் பாட்டானும் வட்ட வடிவுடைய விந்து சத்தி தத்துவமென்றும் வரி வடிவுடைய நாதம் சிவதத்துவமென்றும் அங்ஙனமே பெறப் பட்டமையானும் விந்துவைப் பெண் எனவும் நாதத்தை ஆண் எனவுங் கூறல் வேண்டும்; மற்று அதற்கு மாறாக விந்துவை ஆணென்றும் நாதத்தைப் பெண்ணென்றும் ஈண்டுக் கூறிய தென்னை யெனின்; சத்தி சிவங்கள் தமக்குள் வேற்றுமையின்றிப் பண்பும் பண்பியும் போல் தற்கிழமைப் பட நிற்றலாற் சத்தி ஒரு காற் சிவமாயும், சிவம் ஒருகாற் சத்தியாயும் நிற்கும்; இவ்வுண்மை, சத்திதான் நாத மாதி தானாகுஞ் சிவமும் அந்தச் சத்திதான் ஆதி யாகுந் தரும்வடி வான வெல்லாஞ் சத்தியுஞ் சிவமு மாகுஞ் சத்திதான் சத்த னுக்கோர் சத்தியாஞ் சத்தன் வேண்டிற் றெல்லாமாஞ் சத்தி தானே. என்றும், சிவஞ்சத்தி தன்னை யீன்றுஞ் சத்திதான் சிவத்தை யீன்று முவந்திரு வரும்பு ணர்ந்திங் குலகுயிர் எல்லாம் ஈன்றும் பவன்பிரம சாரி யாகும் பான்மொழி கன்னி யாகுந் தவந்தரு ஞானத் தோர்க்கித் தன்மைதான் தெரியு மன்றே, என்றும் சிவஞானசித்தியாரிற் கூறப்பட்டமையாற் றெளியப் படும், தொழிற்படுங்கால் விந்து வட்டமாயும் நாதம் வரியாயும் நடத்தலால் அவ்வடிவு வேற்றுமை கருதி அவை பெண் ணென்றும் ஆணென்றும் சொல்லப்படும்; மற்று அவற்றின் இயற்கையை உற்று ஆராயுங்கால் விந்து வெம்மை யுஞ் செந்நிறமும் உடையதாய்க் காணப்படுதலின் அவ்வாற் றான் அஃது ஆண் எனவும் நாதம் தண்மையும் நீலநிறமும் உடைய தாய்க் காணப்படுதலின் அவ்வாற்றான் அஃது பெண்ணெனவும் வைத்து உரைக்கப்பட்டன. ஆதலின் அது முன்னதனோடு மாறுகோள் அன்மை உணர்க. பிரிவின்றி நிற்றலாற் சிவத்தின்றன்மை சத்தியினுஞ் சத்தியின்றன்மை சிவத்தினும் விரவித் தோன்றா நிற்கும். ஞாயிற்றின் ஒளியொன்றே தன்னில் நிற்குங்காற் செந்நிறமும் வெப்பமும் உடைத்தாய் விந்து தத்துவத்தின்பாற் படுதலும், அது திங்கண் மண்டிலத்தில் வீசுங்கால் ஆண்டு ஒரு சிறு நீலநிறமும் தட்பமும் உடைத்தாய் நாததத்துவத்தின்பாற் படுதலும் நேரேயுங் கண்டு கொள்க. இஞ்ஞான்றை இயற்கைப் பொருணூலாரும் மின்னொன்றே இயங்கும் வகையால் உடன்பாடாயும்3 எதிர்மறையாயும்4 இருதிறப் பட்டு ஒன்று வெய்யதாயும் ஒன்று தண்ணியதாயுங் காணப் படும் என்று விளங்க உரைப்பர். இனி, நங் கட்புலனுக்கு எதிரே விளங்கும் திக்கொழுந் தின் கண் இவ் ஆண்பெண் வடிவ இயல் நன்கு தெளியப்படும். தீ வெய்யதாயும் செந்நிறத்ததாயும் ஒளிருதலின் அஃது ஆண் வடிவாதல் தேற்றமேயாம்; மற்று அதன் கட்டண்ணிய நீலப் பெண்வடிவு காணுமாறு யாங்ஙனமெனின்; தீக்கொழுந்தின் அகத்தை உற்றுக் காண்பார்க்கு ஆண்டு நீலநிறமுள்ள தொன்றும் உடன் கலந்து நிற்றல் புலனாகும்; நீலநிறமுடைய அவ் அகப்பகுதி தண்ணிய நீரின் பகுதியோயாம் என்று துணிதற் பொருட்டு ஒருசிறு பளிங்குக் கிண்ணத்தை அவ்வனற் கொழுந்தின்மேற் கவிழ்த்துப் பிடித்தால் சில நேரத்தில் அக் கிண்ணத்தின் விளிம்பிலிருந்து நீர்த்துளி சிந்து வதைக் கண்டு கொள்ளலாம். ஆகவே, தீயினுள் நீர் விரவியுள தென்பது மறுக்கப்படாத உண்மையேயாமென்க. இவ்வாறு அனற் பிழம்பின் ஒளியில் நீல நிறமும் விரவித் தண்ணீரும் ஆண்டு உண்டென்றற்கு ஓர் அறிகுறியாய் நிற்றலால், தீவடிவு ஆண்பெண் வடிவு ஒருங்குகலந்து காணப்படும் ஓர் ஒப்பற்ற அடையாளமாய்த் தன்கண் முனைத்து விளங்கும் முதல்வன் இயல்பைத் தெற்றெனப் புலப்படுத்துவ தொன்றாம் என்க. இதனிலிருந்தே, செந்நிறம் ஒளிரும் ஆண்வடிவு வாய்ந்த சிவபெருமானையும், அப்பெருமானுக்கு இடப் புறத்தே நீலநிறம் மிளிரும் பெண்வடிவு வாய்ந்த உமையம்மை யாரையும் பிரிவற வைத்து வழிபடும் ஒழுகலாறு பண்டு தொட்டு நடைபெற்று வருகின்றது. இவ்வாறு தீவடிவின்கண் முதல்வனியல்பை அறிந்து சிவபிரானையும் உமையம்மையாரையும் ஒருங்கு வைத்து வழிபடும் முறை அறியப்பட்டாற்போலவே, தீமண்டில மாகிய ஞாயிற்றிலிருந்து சிவபிரானியல்பை வானின்கட் கண்டு வழிபடுமாறும் முன்னையோரால் அறியப்பட்ட தென்பதூஉம் ஒருசிறிது காட்டுவாம். ஒளிசிறந்த ஞாயிறு மேற்றிசையிற் சாயுங்கால் மேல் பாலுள்ள விசும்பிட னெல்லாம் செவ்வொளி படர்ந்து பொலிய, அவ்வொளியிற் றோய்ந்த முகிற்படலங் களும் செக்கச் செவேலென்று வயங்க, அப் படலங்களி னிடையே தோன்றும் நகு வெண்பிறையும், அப்போழ்து சுடரொளி வீசி அத்திசையிற் சாய்ந்து நிற்கும் ஞாயிறும் சிவபிரான்றிரு வுருவத்தை விளங்கக் காட்டுதல் காண்க. இம் மாலைக்காலத் தோற்றத் தில் செவ்வொளி கிளரச் சாய்ந்து திகழும் ஞாயிறு சிவபெருமான் றிருமுகத்தினையும், அவ்வொளியிற் றோய்ந்த சிவந்த முகிற்படலம் அப்பெருமானது செக்கர்ச் சடையினையும், அம்முகிற் படலத்திடையே விளங்கும் இளவெண் பிறை அவனது செஞ்சடையில் வைகும் வெண்பிறை யினையும் நிகர்த்துக் கட்புலனாகாக் கடவுளைக் கட்புல னெதிரே காட்டுவவாயின. மாலைக்காலத்திற் றோன்றும் இச் சிவபிரான்றிரு வுருவத்தோடு ஒன்றுபட்டுத் துலங்கும் நீலவானமே உமையம்மையாரின் திருவுருவத்தினை ஒப்ப தாம் என்க. விடியற் காலையிற் கீழ்த்திசையிற்றோன்றும் ஞாயிறு வெய்யதன்றாய் நீலநிறமுடைய கடலினருகே எழுதலால் அஃது அம்மையின் றிருவுவாக வைத்துப் பண்டை யோரால் தொழப் படுவதாயிற்று. காலை ஞாயிற்றி னுக்கு வழங்கும் சாவித்திரி எனும்பெயர் உமையம்மையாரின் பெயர்களுள் ஒன்றாகவும் சாவித்ர: எனும் பெயர் சிவ பெருமான் பெயர்களுள் ஒன்றாகவும் வைத்து வட நூல் களுள் வழங்கப்படுதலை ஆராய்ந்து காணவல்லார்க்குக் காலைமாலையிற் காணப்படும் ஞாயிற்றின் வடிவிலிருந்தே அம்மையப்பரான உமாமகேசுரரை வழிபடும் ஒழுகலாறு போதரலாயிற்றென்னும் வாய்மை நன்கு விளங்கும். ஈண்டுப் பிறிதோர் உண்மையும் எடுத்துரைக்கற்பாற்று. விடியல் ஞாயிறு கடலருகே தோன்றி யாண்டும் பேரொளி பரப்புதலால் அது விஷ்ணுவென்றும் இருக்கு வேதத்தில் பகரப்படுவதாயிற்று. காலை ஞாயிறு வெம்மையின்றிக் கடற்பக்கத்தே தோன்றுதல்பற்றிப் பெண்பாலாகக் கூறப்படுத லின், அஞ்ஞாயிற்றின் பெயரிலிருந்து பிற்றை ஞான்று ஒரு தனித்தெய்வமாகக் கொண்டாடப்படும் விஷ்ணுவும் பெண் பாற்குரிய இயல்பும் கரியநிறமுடையராகவும், உமையம்மை யாரோடுடன்பிறந்தாராகவும் புராணங்களிற் புனைந் துரைக்கப் படுகின்றார். இப்புனைந்துரைளை விடுத்து அவற்றின் உண்மை காணப் புகுவார்க்குக் குளிர்ந்த காலைப் பொழுதிற்றோன்றும் ஞாயிற்றின் தெய்வதமே அம்மை யெனவும் விண்டுவெனவும் வைத்து வழிபாடாற்றப்பட்ட தென்பதூஉம், வெவ்விய மாலைக் காலத்தில் மேல்கடல் புகும் ஞாயிற்றின் தெய்வதமே உருத்திர மூர்த்தியாகிய அப்பனெனத் தொழப்பட்ட தென்பதூஉம் இனிது விளங்கா நிற்கும். விஷ்ணு வெனப் பெயரிய ஞாயிறு செல்லும் வழியாக லின் வானம் விஷ்ணுபாதம் என்று நூலான் நுவலப்படும். பாதம் எனினும் வழியெனினும் ஒக்கும். ஞாயிறு காலை நண்பகல் மாலை என்னும் முப்பொழுதினும் வானிடத்தை மூன்று கூறாக அளந்து செல்லுதலின் இதனை விண்டு மூவடியான் விசும்பினை அளந்தான் என்று புராண நூல்கள் புனைந்துரைக்கும். இதுவேயுமன்றி நிலத்தின் கண் உள்ள கடல் நீரும்பிறவும் ஞாயிற்றின் வெம்மையால் ஆவியாகமாறி விசும்பின்கட் டங்குதலையே கங்கைநீர் விஷ்ணு பாதத்திற் றங்குகின்றது எனவும் விசும்பின் கண் உலவும் முகிற் படலத்தில் அந்நீர் இருத்தலையே விஷ்ணு பாதத்தில் உள்ள நீரை உருத்திரர் தமது சடைமுடியில் ஏற்றார் எனவும் உண்மையைத் திரித்து உரைப்பர். முகிற்படலம் உருத்திர மூர்த்தியின் சடைமுடியாகக் கொள்ளப்படுதலை மேலே விளக்கினாமாகலின் அதனிற்றங்கு நீரைச் சடை முடியில் வைகுங் கங்கையாக உரைத்தலும், விஷ்ணுபாதம் என்பது வானமேயாகலின் அதனில் உலாவும் நீராவியை விண்டுவின் அடியில் வைகுங் கங்கையாகக் கூறுதலும், வானில் உலவும் நீராவியே முகிற்படலமாகலின் விண்டு பாதகங்கையை உருத்திரர் சடைமேலேற்றா ரென்று கூறுதலும் உண்மையை மறைத்துரைக்கும் புனைந்துரைகளே யாகலின் இவற்றின் மெய்ம்மை தேறாது சைவசமயத்தை இகழ்ந்து செருக்கும் அறிவிலார் திறம் பெரிதும் இரங்கற்பால தொன்றாம். விஷ்ணு வென்பது எங்கும் நிறைந்த ஒளியினையுடைய ஞாயிற்றினுக்குப் பெயராதல் பண்டை இருக்கு மறையால் நன்கு தெளியப் படுதலின், அவ்வுண்மையோராது அதனை ஒரு தனித் தெய்வ மாகக் கொண்டு அதற்கு இறப்புப் பிறப்புகள் கற்பித்ததனோடு அமையாது அதனைச் சிவத்தினுள் மேற்பட்டதாகவும் பொருந்தா வழக்குத் தொடுத்து வெற்றாரவாரம் புரிவார் புன்மை பெரிதும் நகையாடி விடுக்கற்பாலதாமன்றி மற்றென்னை! அது கிடக்க. அற்றேல், வன்றன்மை மென்றன்மை இரண்டும் முழு முதற் கடவுள் மாட்டுக் காணப்படுதல் கொண்டு அவரை ஆண்பெண் வடிவுடையராகக் கூறுதல் பொருந்துமாயினும், மக்கள்பாற் காணப்படும் ஆண்பெண் வடிவ வேற்றுமை யினை அவர்க் கேற்றுதல் வழுவாமாலெனின்; அற்றன்று, மக்களுக்குள்ள அவ்வடிவ வேறுபாடு குற்றமுடைத் தாயினன்றே அதனைப் போல்வ தொன்றுஇறைவற்குக் கற்பித்தல் வழுவுடைத்தாம்; மற்று மக்களுடம்பின்கண் விரும்பற்பாலது பெரிதும், வெறுக்கற் பாலது சிறிதுமாயிருத் தலின் வெறுப்புணர்வினைப் பயக்கும் வாலாமை முழுதும் நீங்கிய தூயமக்கள் உடம்பு ஒன்று உளதாயின் அதனை இழித்துப் பேச எவரேனும் முந்துவரோ? நரை திரை மூப்புப் பிணி முதலான குற்றங்கள் சிறிதுமின்றித், தீயநாற்றம் வீசும் கழிவுகளும், தீய தன்மைகளும் அற்றுப் பேரழகும் பெரு நலனும் பேரொளியும் அமைந்த தூய ஓர் ஆண்மகனை யேனும் அல்லதொரு பெண்மகளையேனும் காண்டல் கூடுமாயின் அத்தூயவடிவத்தை எவரேனும் பழித்துப் பேசுவரோ! இத்துணைத் தூய்மையும் அழகும் நலனும் வாயாரேனும், ஏனை மக்களினுஞ் சிறந்தாராய்த் திகழுஞ் சிற்சிலரைக் காணினும் அவரைக் காண்பாரெல்லாம் அவர் பால் அன்பும் அடக்கமும் வியப்பும் வணக்கமும் அச்சமும் உடையராய் ஒழுகுதலைக் காண்கின்றேம் அல்லேமோ! மக்கள் வடிவு வாலாமையுடைமை பற்றியே சிறிது இழிக்கப் படுமேனும், மற்று அதன்கட் காணப்படும் அமைவும் அழகும் நலனும் பற்றி அஃது எத்திறத்தவரானும் வியந்து புகழப்படும் பெற்றியதாகவே விளங்கா நிற்கின்றது. மக்கள் வடிவினையும் அதனையொத்த வேறு உருவங்களையும் ஆராய்ந்து பாராமல் அளவிறப்ப இகழ்வார் சிலர் உள ரேனும், அவரும் தம்மால் அன்பு பாராட்டப் பட்டார் இறந்து பட்டவிடத்து அவரது வடிவத்தைக் காணப் பெறாமையாற் பெரிதும் ஆற்றாமையுடையராய்த் தம்மை மறந்து கண்ணீர் வடித்து அழுதலென்னை! உருவத்தை இகழ் வோர் தமதுடம்பினை மாய்த்தற்குப் பெரிதும் அஞ்சுவ தென்னை! தமதுடம்பு புழுநெளிந்து புண் அழுகி யோசனை நாறுங், கழிமுடை நாற்றத்ததாய் நோயால் நைகின்றுழியும் அதனை அவர் விடுத்தற்கு மனமிலராய் நெட்டுயிர்ப் பெறிதலென்னை! உருவத்தை இகழ்ந்து அதன்பால் அன்பு பாராட்ட மனங்கூசுவோர் உருவமில்லாத வெறுவெளியில் அன்புவைத்து மனம் மகிழக் கண்டதுண்டோ! என்று உணர்ந்து பார்ப்பின் உருவத்தாலன்றி மக்கள் இம்மை மறுமைப் பேற்றினையடைதல் செல்லாதென்பது விளங்கும். எனவே, உருவமாய் அமைதலிற், குற்றம் சிறிதுமில்லை யென்பதூஉம், உருவமாய்வரும் பொருள்களிற் காணப்படும் வாலாமை பற்றி உருவத்திற்குக் குற்றம் ஏற்றுதல் அடா தென்பதூஉம், உலகின்கட் காணப்படும் எல்லா வடிவங் களிலும் மக்களுடம்பின் வடிவே மிகச் சிறந்ததாயும் அழகின் மிக்கதாயும் இருத்தலின் அதனோ டொத்ததாக வைத்து இறைவனுருவத்தை வழிபடுதல் சாலவும் விழுமிய முறையே யாமல்லது ஒருவாற்றானும் இழிக்கப் படுவதன் றென்ப தூஉம் பெறப்படும். அற்றேல், மக்களுடம்பிற் காணப்படுங் கழிவுகளும் வாலாமையும் இறைவன் உருவத் திற்கும் உண்டாங்கொல்லோவெனின்; இறைவனுடம்பில் வாலா மை சிறிதுந் தீண்டப்பெறாதென்று கடைப்பிடிக்க, நம்ம னோருள்ளும் அழகானும் நலத்தானும் சிறந்தாராய், ஏனை யோரினும் பார்க்கக் கழிவுகளும் வாலாமையுங் குறைந்தா ராய், நறுமணங்கமழும் தூயஉடம்புடைய ஆடவர் சிலரும் மகளிர் சிலரும் ஆண்டாண்டு உளராதலைக் கண்டுங் கேட்டும் இருக்கின்றேம். இருவினைப் பயத்தால் அசுத்த மாயையிற் றிரட்டப்பட்ட நம்மனோர் உடம்புகளுள்ளும் இத்துணை ஏற்றத் தாழ்வுகள் காண்குவமாயின், இருவினைக் கட்டு நீங்கிச் சுத்தமாயையிற் றிரண்ட விந்துநாத ஒளி உடம்புகளில் வைகும் அநந்தேசுவரர், மகேசுவரர், சதாசிவர் முதலான கடவுளரின் திருவுருவ மாட்சியினையும் அதன் றூய தன்மையினையும் நாம் வரையறுத்துச் சொல்லல் இயலுமோ! இறைவன்றிருவுருவம் சதாசிவர் முதலான கடவுளர்க்குரிய உருவங்களை ஒரு புடையொத்து, அவற்றி னுங் கழிபெருஞ் சிறப்பிற்றாகிய தூய்மையுடைய தொன்றா கலின் அஃது ஒருவாற்றான் நம்மனோர்க்குள்ள ஆண்பெண் வடிவு போறல்பற்றி இதனையொத்த வாலாமையுடைய தாதல் யாங்ஙனமென மறுக்க. இனி, இறைவன் சத்தி சிவம் முதலான தூயதத்துவங் களிற் றிருமேனிகொண் டருளுவதும், சதாசிவர் மகேசுவரர் அநந்தே சுவரர் முதலானோர் திருவுருவங்களை இடமாகக் கொண்டு நின்றருளுவதும், ஞாயிறு திங்கள் தீ முதலான ஒளியுடைப் பொருள்களில் விளங்கி நின்றருளுவதும் காணவுங் கருதவும் படாததன் னியல்பை நம்மனோர் காணவுங் கருதவுமாம்படி வைத்து வழிபட்டு உய்தற் பொருட்டே யாமாகலின் இத் தத்துவத் திருமேனிகளெல் லாம் முதல்வற்குத் தடத் தலக்கணம் என்னும் பொது வியல்பேயாகும். இனி இப்பொதுவியல்பின் வேறாகிய சொரூபலக்க ணம் என்னும் சிறப்பியல்பால் முதல்வற்கே உரிய வேறு திரு வுருவமும் உண்டென்பதூஉம், அது சுத்தம் அசுத்தம் என்னுந் தத்துவங்களிற் சிறிதுந் தோயாது தனித்து நிற்குமென்பதூஉம் ஈண்டு ஒரு சிறிது ஆராய்ந்துரைத்தல் வேண்டும். அறிவுப் பொருளும் அறிவில் பொருளும் எனப் பொருள்களெல்லாம் இரு கூற்றிலே அடங்கும். அறிவுப் பொருளே அறிவில் பொருளாய்த் திரியு மென்று கூறுவாரும், அறிவில் பொருளி லிருந்தே அறிவுப் பொருள் உண்டாமென்று கூறுவாரும், முதற்கண் ஆற்றல்5 ஒன்றுமே நிற்க அது பின்னொருகால் அறிவுப் பொருளாயும் அறிவில் பொருளாயும் காணப்படுவ தாயிற்றென்று கூறுவாருமாய்ச்சிற்சிலர் ஆங்காங்கு உளரேனும் இவர் கூறுவன வெல்லாம் கண்கூடாய் நிகழும் நிகழ்ச்சிகட்கு ஒரு சிறிதும் பொருந்தி வராமையானும், இவ்விரு கூற்றுப் பொருளுண்மையைக் கடைமுறையாய்ப் பிழைபடாமல் ஆராய்ந்து கண்ட இயற்கைப் பொருணூற் புலவர்6 ஒருவர் அறிவில் பொருளி லிருந்து அறிவுப் பொருள் தோன்றா தெனவும், இரண்டும் இருவேறு பொருள்களே யெனவும் முடிபுகட்டி யிருத்த லானும் அவை இரண்டும் தனித்தனி வேறு வேறு பொருள் களேயாமென்று கடைப் பிடிக்க. இனி எங்கெல்லாம் வடிவு திரண்ட பொருள் உண்டோ அங்கெல்லாம் அவ்வடிவினை அதன்கட் டோற்றுவிக்கும் ஓர் அறிவுப் பொருள் அதற்குக் காரணமாய் வேறு உண்டென்ப தும் துணியப்படும். அழகியதோர் உருவமைந்த அரண் மனையைக் கண்டால் அவ்வமைப்பினை அங்குவருவித்த அறிவுடையான் ஒருவன் உண்டெனவும், அரும்பொருள் நிறைந்த ஒரு நூலைக் கண்டால் அந்நூலை ஆக்கிய ஒரு புலவன் உண்டெனவும், அழகிதாய் நெய்த ஒரு பட்டாடையைக் கண்டால் அதனை நெய்தோன் ஒருவன் உண்டெனவும், சுவை பட ஆக்கிய ஓர் உணவுப் பொருளைக் கண்டால் அதனை அவ்வாறு சமைத்த அடுதற்றொழிலாளன் ஒருவன் உண்டெனவும் நாம் தெளிதல் போல உருவவமைப்பிற் காணப்படும் எல்லாப் பொருள் கட்கும் அவ்வமைப்பினைத் தந்தோன் ஒருவன் உண்டென் றல் தேற்றமேயாம். இவ்வுலகமும் இவ்வுலகத்துப் பல் பொருள்களும் தாந்தாம் ஏற்றற்குரிய உருவங்களைப் பெறு தற்கு முன் ஏதோர் உருவுமின்றிக் கலைந்த நிலையிலிருந்தன. இவை அனைத்தும் அறிவில்லாப் பொருள்களாதலால் தாந் தாமே தத்தமக்குரிய உருவங்களைப் படைத்துக் கொள்ள மாட்டா. அறிவோடு கூடி நிற்கும் உயிர் ஒன்றனை ஓர் ஒழுங்குபெறச் செய்யக் காண்கின்றோமே யல்லாமல், அறிவிழந்து அயர்ந்துறங்கும் உயிர் ஒன்றனைச் செய்யக் கண்டதுண்டோ? அற்றேல், அறிவில்லா நீராவியும் மின்னும் மக்களால் இயற்றலாகா அரும்பெருந் தொழில்களெல்லாம் புரியக் காண்டுமேயெனின்; அறியாது வினாவினாய், நீராவி யினையும் மின்னினையும் பிறப்பிக்கும் இடம் அறிந்து பிறப்பித்து, அவற்றைக் குழல்களின் வாயிலாகவும் கம்பி களின் வாயிலாகவும் செலுத்தும் வகை யறிந்து வாய்ப்பாகச் செலுத்தித் தொழிற்படுத்தும் அறிவுடையோர் ஏவலின் வழி நின்றே அவையும் அங்ஙனம் இயங்குதலும் இயக்குதலும் வல்லனவாய்ப் போதரக் காண்டலின் ஆண்டும் அறிவின் சேர்கையுளதாதல் தேற்றமேயாம் என்க. இவ்வுலகங்களும் இவ்வுலகத்துப் பல்பொருள்களுந் தோன்றுதற்கு இடமாய் உள்ள முதற்பொருள் மாயை யென்று சொல்லப்படும். மா என்னுஞ்சொல் உலகத்திலுள்ள எல்லா மொழிகளிலும் பெற்றதாயை உணர்த்துதலின், அறிவில் பொருள்கள் எல்லாம் பிறத்தற்கு இடமான முதற்பொருள் மாயை என்று சொல்லப்படுவதாயிற்று. மாயை எனினும் தாயகம் எனினும் ஒக்கும். மாயை என்பதற்குப் பொய்ப்பொருள் எனவும் வெறுந்தோற்றமா யுள்ளதெனவும் பொருள் கூறு வாரும் உளர்; இப்பொருள் கள் பிற்காலத்து நூல்களிலன்றிப் பண்டை உபநிடதங்களிற் காணப்படாமையாலும், இவ்வுலகங்கள் தோன்றுதற்கு உண்மைப் பிறப்பிடமான பிரகிருதியே மாயை யென்று சுவேதாசுவதரோபநிடதத்து வழங்கக் காண்டலானும் இதற்கு இல்லாத வெறும் பொய்யென்று பொருளுரைத்தல் ஒருவாற்றானும் ஒவ்வாதென்க. அற்றேல், இதற்குப் பொய் என்னும் பொருள்தான் யாங்ஙனம் போந்ததெனின்; மாயையிற் பிறந்த இவ்வுலகத்துப் பொருள்கள் அடுத்தடுத்து நிலைமாறி மறைந்து போதலானும், மறைந்து போகும் அவற்றின்றன்மை பொதுவாக எல்லாரானும் அறிய வரா மையானும் மக்கள் தமதறியாமையான் அவை மறையுந் தன்மை பற்றி அவற்றைப் பொய்யென்று வழங்கத் தலைப் பட்டார். மற்று நுண்ணறிவு யுடையோரோ மறைத்துந் தோன்றியும் மாறிமாறி வரும் எல்லாப் பொருள்களும் இருவகை நிலையினும் உள் பொருளாகவே இருப்பதல் லாமல் இல்லாத வெறும் பொய்ப் பொருள்களாதல் எஞ்ஞான்றும் இல்லையென உறுதி கட்டியிருக்கின்றா ராகலின் மாயை என்னும் மொழிக்குப் பொய்ப்பொரு ளென்று பொருள்படுத்தல் உண்மையில் ஒரு சிறிதும் இயையாது. உள்பொருளாகிய மாயை இவ்வுலகங்களும் பொருள் களுந் தன் கட் பிறப்பதற்கு முன் வடிவில்லா அருவ நிலையில் வெறு வெளியாயிருக்க, இது தானே தன்னினின்றும் இவற்றைத் தோற்றுவித்துக் கொள்ளும் அறிவும் ஆற்றலும் இல்லாததாய்க் கிடக்க, எல்லா அறிவும் எல்லா ஆற்றலும் உடைய இறைவன் இதனிலிருந்து இவ்வுலகங்களையும் பொருள்களையும் ஓர் ஒழுங்குபெறத் திரட்டித் தோற்றுவித்து இவற்றை இயக்கி வருவானாயினன். கடன் மணல் போற் பலவான உலகங் களையும் அவ்வுலகத்துப் பொருள்களையும் உருவு கொளப் படைக்கும் பேரறிவுப் பொருளான இறைவன் ஒருவன் இல்லையாயின் இறும்பூது பயக்கும் இத்துணை உலகங்களும் பொருள்களும் உடம்புகளும் தாமாகவே தோன்றமாட்டா. உருவுகொண்டு தோன்றிய இப் பொருள் களைக் காணும் முகத்தாலன்றோ, இவ்வுருவங்களை வகுத்த முதல்வனது பேரறிவுச் செயலை விளங்கக் காண்கின்றோம். இவையில்லை யாயின் இறைவனை யறிதல் செல்லுமோ! ஆதலாற், பொருள்கள் உருவுகொள்ளாத நிலையில் ஏதொரு பயனும் உடையவாகா; அவை உருவு கொண்ட நிலையிற் பயன்பெரிது உடையவாதலோடு கடவுளியல்பினையும் புலப்படக் காட்டா நிற்கும். ஆகவே, பொருள்கள் உருப்பெற்று நிற்குநிலையே பெரிதும் நலம் பயப்பதாய்ப் பாராட்டப்படு வதாதலும், அது தன்னோடு உடனாய் நிற்கும் அறிவின் மாட்சியை நன்கு அறிவுறுத்தலும் மறுக்கப்படாத உண்மைகளாம். இனி, ஓர் அறிவில் பொருளினிடத்து ஓர் உருவந் தோன்றுங்கால், அவ்வுருவினை அதன்கட் டோற்றுவிக்கும் அறிவினிடத்தும் அதனோடொத்ததோர் உருவம் தோன்றா நிற்கும். ஒரு பொற்கட்டியில் அழகிய ஒரு பெண்மகளின் வடிவத்தைச் செதுக்கி இழைக்கப்புகும் பொற்கொல்லன் ஒருவன் அதனைச் செய்யும்முன் அவ்வடிவினைத் தனது அறிவின்கட்டோற்றுவித்துக் கொள்வான்; அவ்வாறு தன் அறிவின்கட் டெளிவாய் அமைத்துக் கொண்ட அழகிய உருவத் தினுக்குப் பொருந்தவே அப்பொற்கட்டியினும் அதனைப் பிறப்பிக்க வல்லனாவன். இங்ஙனம் புறத்தே ஒரு பொருளில் ஒரு வடிவத்தைத் தோற்றுவித்தற்கு முன்னெல் லாம் அகத்தே அதனோடொப்பதாகிய உருவத்தினை அறிவின்கண் அமைத்துக் கோடல் இன்றியமையாததாய் நிகழ்கின்றது. இவ்வாறன்றி வேறொருவாற்றல் எவரும் எதனையும் செய்தல் ஏலாது. எதனைச் செய்வதாயிருந் தாலும் அதனை முற்படத் தமதறிவின்கண் ஆராய்ந்த மைத்துக் கொள்வதனாலேயே உலகியல் நடைபெறுகின்ற தென்று ஓர்ந்துணர்க. எனவே, புறத்தேயுள்ள பொருள்களிற் றோன்றும் வடிவங்களுக் கெல்லாம் அகத்தே அறிவின் கண் அமையும் உருவங்களே முதலாதல் திண்ணம். இவ்வாறு கூறுதல் கொண்டு, அகத்தே யுள்ள அறிவின் உருவங்களே புறத்தேயும் வடிவங்களாய்த் தோன்றுகின்றனவேயல்லாமல், இவற்றின் வேறாகப் புறப் பொருள்களும் அவற்றின் வடிவங்களும் தனியே உண்மையில் இல்லாதன வென்று மாயாவாதி மதம்பற்றிக் கொள்ளற்க. ஒருவன் எத்துணை தான் அறுசுவையுண்டியின் வகைகளும், அவற்றை நறுமணங் கமழச் சமைக்குமாறும், சமைத்திட்ட தனைத் தான் தீஞ்சுவையோடு உண்டு மகிழுமாறும் தெளிவாய் உள்ளத்தில் நினைந்து அவற்றின் உருவங்களை அமைத்துக் கொள்ளினும் அவற்றால் அவன் பசித்துன்பம் தினைத் துணையும் அகலாது; அவன் நினைத்த படியாகவே புறத்தே யுள்ள காய்கறி அரிசி பருப்பு நெய் முதலியவற்றைத் தொகுத்து, அவற்றைத் தீஞ் சுவைப்பட ஆக்கியுண்டால் மட்டுமே பசித்துன்பம் நீங்கி இன்புறுவான். இது போலவே, அகத்தே நினைக்குமாறெல்லாம், புறத்தே அந் நினைவின்வேறாய்த் தனித்திருக்கும் பொருள்களைத் திரட்டித் துய்க்குமாறறிந்து செய்தாலன்றி, அப்பொருணுகர்ச்சியும் அதனால் வரும் இன்பமும் தாமே வரா. ஆதலால், நினைவின் உருவங்களே புறத்தே பொருள்களும் பொருள்வடிவங்களுமாமென்றல் மெய்வழக்காகாதென்றும் அகத்தே அறிவினுருவங்கள் உளவாமாறு போலவே புறத்தே பொருள் வடிவங்கள் தனித் துளவாமென்றுங் கடைப்பிடிக்க. இனி, அகத்தே நினைவின்கண் அமையும் உருவிற்கு ஏற்பவே புறத்தே அதனோடியைந்து நிற்கும் பொருட் கண்ணும் வடிவம் அமையும் என்பது பிறிதொருவாற் றானுங் காணப்படும். சினங் கொள்ளுதலையே என்றும் பழக்கமாய் உடைய ஒருவனது நினைவு சினத்தின் வழிப்பட்ட உருவமுடையதாக ஆக, அவனோடியைந்து நிற்கும் அவனது உடம்பும் முகமும் அந்நினைவுக்கேற்றதொரு கொடிய வடிவத்தினை யுடைய தாகும். மற்று எஞ்ஞான்றும் உளம் மகிழ்ந்திருத்தலையே ஒழுகலாறாயுடைய பிறனொருவனது நினைவு அம்மகிழ்ச்சி வழிப்பட்ட உருவத்தினை எய்த எய்த, அவனோடொன்றாய் நிற்கும் அவன்றன் உடம்பும் முகமும் அந்நினைவோடொத்ததோர் இனிய வடிவத்தினை யுடைய தாகும், இங்ஙனமே துன்பப்படுபவன் உறுப்புகள் அத் துன்பத்திற்கேற்ற வடிவினைப் பெறுதலும், இன்பத்திற் றிளைப்பவன் உறுப்புகள் அவ்வின்பத்திற்கிசைந்த வடி வினைப் பெறுதலும், கல்வியறிவிற் சிறந்தோன் வடிவம் அக் கல்விக்கு தக்க அமைப்பினை அடைதலும், செல்வத்தின் மிக்கோன் உடம்பு அதற்கேற்ற சீரினைப் பொருந் தலும் தெற்றென விளங்கா நிற்கும். இவ்வாறு அகத்து நினைவின் நிகழும் நிகழ்ச்சிக்கிணங்கப் புறத்துப்பொருளின் வடிவு அமைவுறு மாற்றைப் பல்காலும் ஆராய்ந்து காண வல்லார்க்கு உயிரின் அறிவு நினைவுகளுக்கும் உருவம் உண்டென்பதூஉம், அவற்றோடியைந்து நிற்கும் அறிவில் பொருள்களும் அவ் வுருவத் தினையொத்த வடிவினைத் தங்கட்பெறு மென்பதூ உம், உயிர்ப்பொருளும் போலவே உயிரல்லப் பொருளும் வேறு வேறிய்ல்பனவாயிருத்தல் அவற்றின் உருவங்களும் வடிவங்களும் வேறுவேறியல் பினவா மென்பதூஉம் நன்கு விளங்கிக் கிடக்குமென்க. இவ்வுண்மையை மேல்புல அறிஞர் ஒருவர்7 ஆராய்ந்து நிறுவுமாறும் உற்றுநோக்கற்பாற்று. அவ் அறிஞர் தாம் பலகால் முயன்று நுண்ணுணர்வாற் றெரிந்தமைத்த அரியதொரு பொறியினெதிரே8 ஒருவர் நின்று அதனுள் வைத்த நிழலுருத் தட்டத்தில்9 தமது கையை மெல்லெனவைத்துக் கருத்தை ஒருவழி நிறுத்தி ஒன்றை நினைக்க அந்நினைக்கப் பட்ட பொருளின் வடிவு உடனே அத்தட்டத்திற் பதிந்து தோன்றியது. இங்ஙனம் எடுக்கப்பட்ட நிழலுருக்கள் பல வற்றை உற்று நோக்கினார். பலரும் அவற்றுட் சில தெளி வின்றிக் கலங்கிக் காணப்பட்டன வென்றும், வேறுசில திருத்தமாகவுந் தெளிவாகவும் அமைந்திருந்தன வென்றுங் கூறா நின்றார். இவ்வாறிரு வேறு வகை வகையாய் அவை காணப்படுதற்கு ஏதுவென்னை யென்று ஆய்ந்து நோக்கிய வழி, அவற்றை நினைத்த ஒருவர் நினைவு ஒரு காலத் தொன்றில் உறைத்து நில்லாது கலங்கினமையும், மற்றை யொருவர் நினைவு அக்காலத்து அப்பொருளில் உறைத்துத் தெளிவாய் நின்றமையுமே அவ்வாறவை வேறுபட்டுத் தோன்றுதற்கு இடஞ்செய்தன வென்னு முண்மை புலப்பட லாயிற்று. இன்னும், அப்பொறியின் அண்மையிலிருந்து நினைப்பவர் நினைவின் உருவையேயன்றி மிகவுஞ் சேய்த் தாய்ப் பல்லாயிர நாழிகை வழி கடந்த இடங்களிலிருந்து நினைப்பவர் நினைவின் உருவையும் அங்ஙனமே பட மெடுத்துக் காட்டலாம் என்று அம்மேல்புல அறிஞர் உறுதி யுரை கூறுகின்றார். அகத்தே தோன்றும் நினைவின் உருவைப் போல்வது புறத்தேயுள்ள பொருட் கண்ணும் உண்டாம் முறையைத் திட்பமாய்க் கட்புலனெதிரே தேற்றிக் காட்டும் இவ் அறிஞர் ஆராய்ச்சி யின் விழுப்பத்தை உணர்ந்தபின் இவ் வுண்மையை ஐயுறுதற்குச் சிறிதும் இடனின் றாம் என்க. எனவே, புறத்தே காணப்படும் அறிவில் பொருள் கட்கு வடிவம் உளதாதல்போலவே, அகத்தே நிகழும் உயிரின் அறிவுக்கும் உருவம் உண்டென்பதூ உம், அவ்வறிவினுருவம் தன்னோடொத்ததொரு வடிவினை அறிவில் பொருட்கண் விளைவிக்கு மென்பதூஉம் இனிது பெறப்படுதல் காண்க. அற்றேல், அறிவினுருவம் முன்நிகழ்வதெனவும் அறிவில் பொருளின்வடிவம் பின் நிகழ்வதெனவும் உரைத்தல் வேண்டும்; அவ்வாறுரைப்பிற் பிறந்த புனிற்றிளங்குழவி மாட்டும் அறிவுருவம் உண்டென்றுரைத்தல் வேண்டும்; மற்ற அஃது அவ்வுருவம் உடைத்தாகலின்றி முழுதும் அறியாமையாற் கவரப்பட்டுக் கிடத்தலைக் காண்டுமாக லானும், பின்னர் அது நாளேற நாளேற வளர்ந்து புறப் பொருள்வடிவங்களை அறியும் முகத்தால் அறிவு உருவம் பெறலே முறையாகப் போதரலானும் அறிவில் பொருட்கண் உள்ள வடிவமே முதலாதல் தெளியப் படுமாலெனின், நன்று கூறினாய்.. சிற்றுயிர்களின் அறிவு மட்டுமே முதற்கண் அறியாமையான் மறைக்கப்பட்டிருந்து பின்னர் அறிவில் பொருட்சேர்க்கையால் அது நீங்கி அறிவுருவம் பெறு மென்றல் ஒரு முறையான் ஒக்கும்; - மற்று எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளறிவும் அங்ஙனம் புறப்பொருட் சேர்க்கை யால் அறிவுருவம் பெறுமென்றல் ஒவ்வாதாகலின், முன்னைப் பழம்பொருட்கு முன்னைப்பழம்பொரு ளாம் முதல்வன் அறிவு என்றும் உருவுகொண்டு விளங்கியபடியாயே நிற்கும் என்று ஓர்க. அற்றன்று, இவ்வுலகம் வடிவற்ற நிலையிலிருந்து பின்னரொருகால் வடிவுற்றதனை நேரே கண்டார் சிலரேனும் இருப்பினன்றோ, அவ்வடிவினை அதன்கட் பிறப்பித்த பேரறிவாளன் ஒருவன் உண்டென்பது துணியப்படும்; அவ்வாறதனைக் கண்டார் எவருமின்மை யின், உலகம் இஞ்ஞான்றுள்ள படியே என்றும் வடிவுடைத் தாய் இயங்குமென்று உரையாமோ வெனின்; அறியாது கூறினாய், இந்நிலமாவது யாது? மண்ணும் புனலும் அவற்றின் கூறுகளும் ஆகிய உறுப்புக்கள் ஒருங்குதொக்க தொகையே யாகலின், இவ்வுறுப்புக்களின் பெற்றியை ஆராயவே இவ்வுறுப்புகளாற் றிரண்டதிரளையின் பெற்றியுந் தானே புலப்படும். இந் நிலத்தின் கட் காணப்படும் எத்தகைய கட்டுப் பொருளேனும் எத்தகைய நெகிழ்ச்சிப் பொருளேனும் அவையெல்லாம் மிகவெய்ய அனலொடு சேர்ந்தவழித் தம் வடிவுகெட்டு ஐம்பொறிகட்கும் புலனாக மல் மறைந்து போதல் காண்டுமன்றே, அங்ஙனங் கரைந்து மறைந்தவற்றை அறிவுடையானொருவன் ஆக்குமாற றிந்து முயன்றவழி அவைபெயர்த்துந் தம் பழைய வடிவு கூடிப் புலப்படுதலுங் காண்டுமன்றே. இவ்வாறு உறுப்புப்பொருள் களில் நேரே கண்டறியப்படுந் தோற்ற வொடுக்கங்கள், அவ்வுறுப்புகளின் தொகையாகிய இந்நிலவுலகத்துக்கும் உளவாதல் ஆராய்ச்சி வல்ல அறிஞர்க்கெல்லாம் ஒப்பமுடிந்த மையின், இவ்வுலகம் என்றும் வடிவுடைத்தாயே இயங்கு மென்றும், அதற்கு வடிவினைக் கற்பித்த முதல்வனில்லை யென்றுங் கூறும் உரை அடாதென்க. ஆகலான், அது வடி வின்றி நின்றதொரு காலம் உண்டெனவும், அப்போததற்கு வடிவினைக் கூட்டி அதனைத் தோற்றுவித்த ஒரு முதல்வன் உண்டெனவும் துணிக. துணியப்படவே, அறிவில்லாத பொருட்கண் வடிவந் தோன்று தற்கு முன்னரே பேரறிவுப் பொருளாய் அதனை ஊடுருவி நின்ற முதல்வன் அறிவு உருவவிளக்கமுடைத்தாய் நிற்கு மென்பதூஉம் துணியப் படும். இதுகொண்டு இறைவன் உலகங்களைப் படைத்த நோக்க மாவது, பண்டுதொட்டே அறியாமையிற் கட்டுண்டு கிடந்த சிற்றுயிர்களான நம்ம னோர்க்கு அவ்வறியாமையை நீக்கித் தனது அறிவினுருவம் போல்வதனை நம்மறிவினுந் தோற்று வித்தல் வேண்டி, அங்ஙனஞ்செய்வது நேரே இசையாமையின் அது செய்தற்கு இசைந்த இடைப்பட்ட தொரு கருவியாக மாயையை இயக்கி, அதன்கண் அவ்வுருவி னோடொத்த வடிவினைப் புலப்படுத்தி, அவ்வடிவினை அறியுமாற்றான் நம்மனோர் அறிவுக்கும் அதனையொப்ப தோர் உருவு கிளர, அம்முறையால் நாம் இறைவனாகிய தன்னை ஒருபுடை யொத்து இன்புற்றிருத்த லேயாம் என்பது தெளியப்படும். இவ்வியல்பினை ஓர் உவமை யினும் வைத்து விளக்குவாம். ஓவியம் வரைதலிற் கைதேர்ந்தான் ஒரு நுண்ணறிவினன் தன் அறிவின்கட் பல காலும் முயன்று முயன்று விளக்கிய ஓர் அரும் பெறருலுருவினை யொப்ப தொன்று புறத்தே ஒரு நூற் படாத்தினும் புலப்படுதல்வேண்டிப் பலவகை நிறங்களால் அதனைக் குழைத்தெழுதிவைப்ப, அவ்வோவியம் வல்லானைப் போல் தானுந் தேர்ச்சிபெற விழையும் ஏனையொருவன் அவ்வோவியத்தின்கண் எழில் கனிந்து துலங்கும் அவ்வடிவ அமைப்பின் நுண்ணிய கூறுபாடு களையும் நிறங்களின் விளக்கத்தையும் அந்நிறங்கள் ஒள்றோ டொன்று கலந்து இழைந்துருவாமாற்றினையும் பன்னாளும் பன் முறையுங் கூர்ந்துணர்ந்து கற்றுப், பின்னர் அதனை யொப்ப தோர் உருவினைத் தன்னறிவினும் விளங்கக் கண்டு அவ்வோவியம் வல்லானை ஒருபுடை ஒப்பனாவ னென்பது, இங்ஙனமே சிற்றுயிர்களும் மாயையிற் றீட்டப்பட்ட இறைவனது அறிவுருவப் போலியைக் கண்டு தாமும் அவ்வறி ருவப் பேறு உடையராய் வயங்குவரென்க. என்று இங்ஙனம் ஆராய்ந்து காண்புழி, மாயையில் வடிவுதோன்றுதற்கு முற் கொண்டே இறை வனறிவின்கண் அதற்கு முதலாகிய உருவம் அமைந்து கிடக்குமென்பது நன்கு பெறப்படும். அதுகிடக்க. அற்றாயின், மாயையின் வடிவுக்கு முதலாய் அதனை யொப்பதோர் உருவே இறைவனறிவின்கண் உளதாயின், மாயையின் மேற்பட்ட தன்மை அவனறிவின்கண் இல்லை யென்று கொள்ளப்படுமாலெனின், அது பொருந்தாது, அவன் மாயையினும் ஏனை யுயிர்களினும் மேற்பட்ட அளவிலா வியத்தகும் இயல்புகள் உடையனாகலின். மாயை அவனியல்பு கட்கு இயையுமாறெல்லாம் நிற்க வல்லதன்று; அது தன் அளவிற்கு ஏற்றபெற்றியே அவன்றன், அறிவுருத்தி னோடு ஒப்பதொரு வடிவினைப் பெறாநிற்கும். மாயையிற் புலனாம் வடிவுகளைக் கொண்டன்றி அவன்றன் அளக்க லாகாத் தன்மைகளை நேரே கண்டுணரும் பேராற்றல் நம்ம னோர்க் கின்மையின், நஞ்சிற்றறிவு கொண்டு இறைவனது அறிவின் பரப்பு முழுதும் அளந்து முடிவு கட்டப் புகுதல் பெரியதோர் இழுக்காய் முடியும். ஆகையால், மாயையின் வழியறிந்த அவனியல்பு அவ்வறிவளவின் அடங்காது மேலு மேலும் விரிந்து செல்லுமென்று கடைப்பிடிக்க. அல்லா மலும், மாயையின் வாயிலால் உணரற் பாலனவாய அவன்றன் இயல்புகளே இன்னும் எத்துணையோ கோடிகளாய் பல்கிக் கிடக்க. அவற்றுள் ஒரு சிறு தினையளவுதானும் ஆய்ந்தறிய மாட்டாத நம்மனோர் அம்மாயையினும் மேற்கடந்து செல்லும் அவன்றன் அறிவின் பரப்பினை ஆராயப் புகுதல் சிறுமகார் தஞ் சிறு காலாற் பெருங்கடலின் ஆழத்தையும் தஞ்சிறுகையால் அதன் பரப்பினையும் அளந்தறியப் புகுதலையே ஒக்கும். புற்பூண்டு மரஞ்செடி கொடிகளில் எத் துணையோ ஆயிரக் கணக்கான அமைப்பின் வகைகள் இருக் கின்றன. அவை யெல்லாம் நன்காராய்ந்து அவ்வமைப்பு களினால் அறிவுறுக் கப்படும் இறைவனறிவின் றிறத்தை அறிந்தனமா? ஈரறிவு முதல் ஐயறிவுகாறுமுள்ள புழுக்கள் பூச்சிகள் பறவைகள் விலங்குகள் முதலியவற்றில் எத்துணை யோ எத்துணையோ வகையான அமைப்பு வேறுபாடுகள் உள்ளன, அவையெல்லாம் முழு தாராய்ந்து அவற்றின் கண்ணெல்லாம் விளங்கித் தோன்றும் ஐயனறிவின் பெற்றி யைத் தெளிந்துணர்ந்தனமா? இவற்றி னெல்லாஞ் சிறந்த மக்கள் உடம்பின் அமைப்புகளினுங் கணக்கிறந்த வேறு பாடுகள் காணப்படுகின்றன; அவை யெல்லாம் ஒருங்கே தெரிந்து அவனறிவின் ஆற்றலைக் கண்டனமா? இனி இவை யொழிய, இந்நிலத்தின் உள்ளும், நிலத்தின் மேல் நம்மைச் சூழ்ந்துள்ள நீரினும் காற்றினும், இடைவெளியினும் நம்பொறிகளுக்குப் புலனாகாமல் அமைந்து கிடக்கும் பல்வகைப்பொருள்களின் கூறுபாடுகளெல்லாம் ஆராய்ந்து அவனறிவை வியந்தனமா? இனி நந்தலைக்குமேல் வானின் கட் காணப்படும் வான்மீன்கள் கோள்கள் முதலிய வற்றின் இயல்புகளையும் ஆண்டவற்றின்கண் உள்ள அமைப்பு களையும் தேர்ந்து அவனறிவினாற்றலை எள்ளளவேனும் உணர்ந்து மகிழ்ந்தனமா? சிறிதும் இல்லையன்றே. இங்ஙனம் மாயையின் பரப்பும், அதன்கண் அமைந்த பலகோடி பொருள் களின் இயல்புகளும் அமைப்புகளுமே நம்மனோர் அறிவான் அளந்தறிதற்கு இயலாதனவாக, நந்தஞ் சிற்றறிவு கொண்டு இறைவனறிவை அளக்கப் புகுதல் எத்துணைப் பேதைமை யாம்! அதனால், மாயையின் மேற்பட்ட தன்மை அவனறிவின் கண் இல்லையென்றல் ஒருவாற்றானும் இயையாதென மறுக்க. இனி, மாயையிற் காணப்படும் எல்லா வடிவங்கட்கும் முதலாய் அவற்றோடொருபுடை யொப்பனவாய உருவங் கள் இறைவனறிவின்கண் உண்டென்பது மேலே காட்டப் பட்ட மையின், உயிர்களின் உடம்புகட்கு முதலாம் உருவும் இறைவனறிவின்கண் முற்கொண்டமைந்து கிடக்குமென் பதும் சொல்லாமலே விளங்கும். இவ்வுலகத்துயிர் களின் உடம்புகளையெல்லாம் பகுத்துப் பார்ப்புழி அவை ஆண் பெண் என்னும் இருகூற்றிலே சென்று அடங்குதலும் மேலே காட்டப் பட்டது. ஆகவே, இவ்வாண் பெண் வடிவுகட்கு முதலான ஆண் பெண்ணுருவுகள் முதல்வனறிவின் கண்ணும் முதல்வியறிவின் கண்ணும் முற்கொண்டே யுளவாதல் தெற்றெனப் பெறப்படும். பெறப்படவே, இறைவன் ஆணுருவிற் கொத்த இயல்பின னாயும், இறைவி பெண்ணுரு விற் கொத்த இயல்பினளாயும் அறிவுருவில் நிற்பரென்ப தூஉம் தானே போதரும் என்க. அற்றேலஃதாக, இறைவன் ஒருபொருளாயும் இறைவி அப்பொருட்டன்மையாயும் நிற்பரென நூல்கள் கூறாநிற்க, ஈண்டு அவ்விருவரையும் இரு முதற் பொருள்போல் வைத்துக் கூறுதல் என்னையெனின்; ஓருயிரே ஆண்டன்மை பெண் டன்மை இரண்டும் ஒருங்கு உடையவாதல் யாண்டுங் காணப் படாமையானும், இறைவி இறைவனை வழிபட்டா ளெனவும் இறைவன் இறைவியை மணந்தானெனவும் அவர் தம்மைத் தனித்தனி இருமுதற் பொருள்களாக வைத்துரைக் கும் பழைய வரலாறுகளெல்லாம், அவரிருவரையும் பொரு ளும் அதன் பண்புமாமெனக் கொள்வுழிப் பொருளிலவாய்ப் பொய்படு மாதலானும், எண்ணிறந்த உயிர்கட்கு எண்ணி றந்த உடம்புகள் படைக்கப்படும் அவ்வப் பொழுதே அவற் றுட் பலப்பல சிதைக்கப்படுதலை உற்று நோக்கும்வழி அவற் றைப் படைக்கும் வினைமுதலேயுடனே அவற்றுட் பல வற்றை அழித்தல் செல்லாமையின் ஒன்றாற்படைக்கப்பட்ட வற்றை மற்றொன்று அழிக்குமெனலே பொருத்தமாத லானும், உலகத்துக் காணப்படும் உடம்பின் றோற்ற மெல்லாம் பெண்ணுடம் பினின்றே போதரக்காண்டலானும் படைத்தற்றொழிலை நிகழ்த்தும் இறைவியும் அழித்தற் றொழிலை நிகழ்த்தும் இறைவனும் வெவ்வேறு வினை முதல்களே யாகுமல்லாமல் அவர் பண்பும் பண்பியுமாதல் ஏலாதென விடுக்க. அங்ஙனம் அவர் தனித்தனி வினைமுதல் களேயாயினும் இறைவன் மேல்விரிந்த நிறைவாயும் இறைவி அவனுள் அடங்கி விரிந்த நிறைவாயும் ஒன்றெனப் படுதற்கும் இரண்டெனப் படுதற்கும் ஆகாமல் ஒருவரோடொருவர் நனிவிரவிப் பண்பும் பண்பியும் போற் பகுக்கப்படாது என்றும் ஒருமையுற்று நிற்றல் பற்றி அவர் தம்மைப் பண்பும் பண்பியுமென்று நூல்கள் கூறியதல்லது அவர் உண்மையிலே அவ்வியல்பினராவ ரென்பது அவை தமக்குக் கருத்தன்றாம் என்க. அற்றேல், இறைவன் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிற்கும் உரியனாகவைத்து நூல்கள் ஓதுமாறென்னையெனின், அழித்தற் றொழிலினும் மிக்க வலியுடையது பிறிதொன்று இல்லாமையானும் அவ் வழித்தற்றொழிலைச் செய்யும் முதல்வன் அதனை ஒரோ வழிச் செய்யாது விட்டுவைப்பினல்லது படைத்தல் காத்தல் என்னுந் தொழில்கள் நடைபெறமாட்டாமையானும். அதனால் இறைவன் ஆணைவழி நின்றே இறைவி படைத்தல் காத்தல் களைச் செய்வளென்பது போதரலானும் இறை வனே முத் தொழிற்குங் காரணனாமென்று உணர்ந்து கொள்க. அவ்வாறு ரைப்பின் இறைவியை ஏவிப் படைத்தல் காத்தல்களைச் செய்யும் அம்மட்டேயல்லது இறைவன் தானே அவற்றைச் செய்ய மாட்டுவான் அல்லன் போலு மென ஐயுறக்கிடக்கு மாலெனின், எவற்றினும் மிக்கதாகிய ஓர் அருந்தொழிலைச் செய்ய வல்லா னொருவன் அதனிற் றாழ்ந்தனவாய ஏனைத் தொழில்களை ஏனையோரைக் கொண்டு முடித்தல் பற்றி அவன் அவற்றைச் செய்யமாட்டு வானல்லனென்றல் பொருந்தாது; என்னை? செங்கோ லோச்சும் ஆற்றலும் அறிவும் உடையானோர் அரசன் தானே செய்தற்குரிய சில வினை களைத் தனக்கென வரைந்து வைத்து, அவற்றினுந் தாழ்ந்த பிறவற்றை ஏனைப்பிறர்மேல் வைத்து நடாத்துதல்பற்றி அவ்வரசன் அப்பிறதொழில்களை நடாத்தும் வலியிலான் என்று கோடல் பொருந்தாமையின் அப்பிறவற்றையுந் தானே மேற்கொண்டு நடத்துதற்குரிய அமயம் நேர்ந்துழி, அவன் அவற்றையும் நடத்தக் காண்டு மன்றே. மற்று அவனேவிய பிறதொழில்களைப் புரிவார் அவற்கேயுரிய செங்கோலோச்சுந் திறத்தினைத் தாம் மேற்கொண்டு செய்ய மாட்டாராதலுங் காண்டு மன்றே. இன்னுங் கல்வியறிவுமிக்கான் ஒருமேலோன் தான் கல்வித் துறையிற் செயற்பாலனவாம் அருஞ்செயல் களிலேயே கருத்து ஒன்றி நிற்பினும், அமயம் நேர்ந்தக்கால் தன்னிற் றாழ்ந்தோர் செய்யுஞ் செயல்களையும் அவரினுஞ் சிறக்கச் செய்து முடிக்கமாட்டுவானாதலும், அவனிற் றாழ்ந்தோ ராயினார். அங்ஙனமே அமயம் வந்தக்கால் அக் கலை வல்லான்செயலைத் தாம் ஒருசிறிதும் மேற்கொண்டு நடத்த மாட்டாராய் இடர்ப்படுதலும் தெளியக் காண்டு மாகலின் ஆற்றலும் அறிவும் மிக்கான் தனக்கேயுரிய தொன்றிற் றான் முனைத்து நிற்பினும் அவன் ஏனையோர் செய்யுஞ் செயல் களையும் வேண்டியக்கால் தான் மேற்கொண்டுநடத்த மாட்டு வானென்றே கடைப்பிடிக்க. இங்ஙனமாகலின், அழித்தற் றொழிலினையே தனக்குச் சிறப்பாய் உடைய முதல்வன் தான் வேண்டியக்காற் படைத்தல் காத்தல் களையும் இயற்றும் மதுகையுடையானென்றே தெளிந்து கொள்க. ஏனைப் படைத்தல் காத்தல்களைச் செய்யும் நான்முகன் திருமால் முதலான ஏனையோரெல்லாம் அழித்தற்றொழிலினைச் செய்ய மாட்டுவா ரல்லரென்ப தூஉம் இது கொண்டு முடிக்கப்படும். அஃதொக்குமாயினும், இறைவனோடொப்ப நிற்கும் முதல்வி அவனொடொப்ப அழித்தற்றொழி லினைச் செய்யமாட்டு வாளல்லளென வுரைப்பின், அஃது அவளிறை மைக்கு இழுக்காய் முடியங் கொலெனின், முடியாது; இறை வனோ டொன்றாய் விரவி நிற்கும் இறைவி அவற்குரிய முதன்மையும் உரிமையு மெல்லாம் தானும் பெற்றுடையளா கலின் தன் கொழுநன் ஆணை வழி நின்று ஒரோ ஒரு கால் அழித்தற் றொழிலுஞ் செய்யமாட்டுவா ளென்றே உணர்ந்து கொள்க. என்றாலும், எல்லா உயிர் களையும் படைத்துக் காத்தற் கேற்ற மெல்லிய அறமுதன்மையும் அருண் முதன்மையுமே தனக்கு இயற்கை யாவுடைய அவட்கு அழித்தற்றொழில் சிறப்பா காதென்க. ஓருயிர் கருவினுளிருந்து படைக்கப் படுஞான்றே அக் கருவைச் சிதைத்து அதனை அதனினின்றும் அகற்றும் அழித்தற்றொழில் அருண்மறம் உடைய முதல்வற்கே சிறப்பா மென்க. அவ்வாறு கூறவேண்டுவ தென்னை? படைத்தலைச் செய்யும் முதல்வியே அக்கருவினை உடனே யழித்தலுஞ் செய்வளென்றுரைத்தால் வரும் இழுக்கென்னை? எனின், படைக்குமவனே யுடனேயதனை அழித்தலுஞ் செய்வ ளெனின், அங்ஙனம் படைத்த தனை உடனே அழித்தலினும் அதனை முற்கொண்டு படையா திருத்தலே அவட்குச் சால்பா மாகலின் அஃது அவளிறை மைக்கு இழுக்காய் முடியும். அற்றேல், இறைவியாற் படைக்கப் பட்ட கரு முதிராமுன்னரே அதனை அழித்தல் இறைவற்குச் சால்பன்றாய் முடியுமா வெனின், அற்றன்று, அக்கருவினுட் புக்க உயிரின் வினையள வறிந்து அதனை யதனுள் ஓர் இமைப்பொழுது நிலைப்பித்துப் பின்னர் அதனை அதனினின்றும் அகற்றிப் பிறவிப்படியின்மே லேற்றும் முதல்வன் செயல் ஆழ்ந்தாராய வல்லார்க்குச் சால்புடைய தாயே தோன்றுமல்லது பிறிதில்லை யென்க. அற்றேல், முன்னேரத்திற் படைத்துப் பின்னேரத்தில் அழித்தல் முதல்விக்குஞ் சால்பேயாம்; சால்பாக முதல்வியின் வேறாக முதல்வனொருவன் உளனெனக் கோடல் மிகையா மாலெனின், முதல்வனியல்பும் முதல்வியியல்பும் ஆராயாது கூறினாய், அறிவு அருள் என்னும் இரண்டில் அறிவினும் அருள் மேற்பட்டு நிற்கும் இயற்கை முதல்விக்கும், அருளினும் அறிவுமேற்பட்டு நிற்கும் இயற்கை முதல்வற்கும் உண்டென்று பகுத்தறிந்து கொள்க. முதல்வி தனக்குள்ள பேரருட் பெருக்கால், எண்ணிறந்த எல்லா உயிர்களும் பிறவிக்கட் சென்று அறிவும் அன்பும் பெறல் வேண்டி, அவை தமக்குப் பலதிறப்பட்ட உடம்பு களை ஓவாது படைத்துக்கொடுக்குந் தொழிற்கண்ணே முனைத்து நிற்பாளாக, முதல்வனோ அங்ஙனம் படைக்கப்பட்ட உடம்புகளில் நிற்கும் உயிர்கள் அவற்றில் நிற்றற்குரிய கால எல்லையறிந்து அவற்றை யுடனுக்குடன் அவ்வுடம்புகளி னின்றும் மாற்றி யருளுவ னென்க. இவ்வாறு உலகின்கட் காணப்படும் இருவேறு தொழிற்கும் இருவேறு முதல்வர் இன்றியமையாது வேண்டப் படுதலின் அம்மையப்பரிருவரும் வெறுங் குண குணிப் பொருள்களா காமல், தனித்தனிக் குணங்களுடைய .இருவேறு முதற்பொருள் களாவரென்றே கடைப்பிடிக்க. இதுவே, சிவஞானபோதம் முதலிய முடிந்த நூல்களின் உண்மைக் கருத்தாதலுந் தெளிந்து கொள்க. அற்றேற், சிவஞானபோதம் இக்கருத்துடைய தாதலைச் சிறிது விளக்கிக் காட்டுகவெனின் அவ்வாறே காட்டுதும். அடிக்குறிப்புகள் 1. Botany 2. Physics 3. Positive Electricity 4. Negative Electricity 5. Force 6. Prof. John Tyndall on spontaneous Generation 7. Dr. Baraduc 8. Biometre. 9. Photographic plate 9. அத்துவித இயைபு சிவஞானபோதம் இரண்டாஞ் சூத்திரத்திற் கூறப்படும் அத்துவித இலக்கணம் இன்னதென்றாராயவே முதல்வனும் முதல்வியும் பிரிப்பின்றி விரவிநிற்கும் இயல்பு நன்கு விளங்கு மாகலின், அதனை ஈண்டொருசிறிது ஆராய்ந்துரைப்பாம். இறைவன் இறைவியோடும், cÆ®fnshL.ம், உலகத்தோடும் வேறறக் கூடி நிற்கும் நிலையே அத்துவித இயைபாம். அத்துவிதம் என்பது அத்வைதம் என்னும் வட சொற்றிரி பாகும். அச்சொல் ந த்வைதம் என்னும் இருசொற் புணர்ச்சியாலாயது. இவ்விரு சொல்லில் முன் நின்ற நகரம் அன்மை என்னும் பொருளையும், பின் நின்ற த்தைவதம் இருமை என்னும் பொருளையும் தராநிற்கும்; இரண்டுஞ் சேர்ந்து இருமைஅன்மை என்னும் பொருளையுணர்த்தும். இருபொருள் தனித்தனி வேறு நிற்குமாயின் அவை தம்மை இரண்டென்று உரைத்தல் வேண்டும்; அவை அங்ஙனம் நில்லாமல் ஒன்றோடொன்று கலந்து நிற்குமாயின் அவற்றை இரண்டென் றுரைத்தலுமாகாது, ஒன்றென்றுரைத்தலு மாகாது. உயிரும் உடம்பும் பிரிந்து நிற்புழி அவை தம்மை இரண்டென்று கூறுதல் பொருத்தமாம்; மற்று அவை ஒருங்குகூடி நிற்புழி அவற்றை ஒன்றெனவாதல் இரண் டெனவாதல் கூறுதல் ஒவ்வாதாம். இங்ஙனமே, இறைவன் ஏனையெல்லாப் பொருள்களையும் விட்டுத் தனித்து நிற்கு மாயின் அவனை ஒரு பொருளாயும் ஏனையவற்றையெல் லாம் ஒருங்கு தொகுத்து அத்தொகையை மற்றொரு பொருளாயும் உரைத்தல் ஏற்புடைத்தாம். மற்று இறைவனோ அவ்வாறு தனித்துநிற்பான் அல்லனாய்ப் பாலுள் நெய் போன்றும் பழத்துட் சுவை போன்றும் எல்லாப் பொருள்களினும் வேற்றுமையின்றிக் கலந்து நிறைந்திருப்பனாகலின், அவனையும் அவனோடு ஒன்றுகூடி நிற்கும் பொருள் களையும் ஒன்றென வாதல் இரண்டெனவாத லுரைத்தல் அமையாது. அங்ஙனம் அவனும் அவையும் வேறின்றி விரவி நிற்றலைத் தெரிக்கல் வேண்டின், அதனை இரு தன்மை அன்மை என்றேதான் கூறல்வேண்டும். இருதன்மை அல்லாத புணர்ப்பினையே ஆரியமறைகள் அத்வைதம் என்னுஞ் சொல்லால் வழங்கா நிற்கும். இவ்வாறு இறைவன் ஏனைப்பொருள்களோடுடன் கலந்து நிற்கும் அத்துவிதஇயைபு அவ்வப்பொருட்டன்மை யாற் சிறிது சிறிது வேறுபாடுடைய தென்பதூஉம் பகுத்துணர்தல் வேண்டும். இறைவற்கும் இறைவிக்கும் உளதாம் அத்துவித இயைபு ஏனைஇயைபுகள் எல்லாவற்றினுங் கழிபெருஞ் செறிவுடைத்தாம். அத்துணைச் செறிவுடைத்தாதல் பற்றியே, ஒருபண்புக்கும் அதனையுடைய பண்பிக்கும் உளதாம் தற்கிழமை இயைபினை அதற்கு உவமையாக எடுத்துக் காட்டுப.. உவமையாக எடுத்துக் காட்டிய பண்பும் பண்பியும் பற்றி அறிவு மயங்கிய ஒரு சாரார் இறைவன் ஒரு பொருளும் இறைவி அப்பொருட் பண்புமாம் என அவ்விரண்டன் இயல்பு தேராது பிழைபடக் கூறுவர். அவ்வா றுரைப்பிற் பண்புக்கும் பண்பிக்கும் உளதாம் தொடர்பினையும் அத்துவிதம் என வுரைத்தல் வேண்டும்; அத்தற்கிழமை யியைபினை அத்துவிதம் என வுரைப்பிற் பண்பும் பண்பியும் ஒருவாற்றானும் வேறல்லவாய் ஒன்றேயா மாகலின், அத்துவிதம் எனுஞ் சொல்லுக்கு இருமை யன்மை எனும் பொருள்போய், மாயாவதிகள் கூறும் ஒன்றென்னும் பொருளே கொள்ளப் பட்டு, முன்னையோர் கூறிய மறை மொழித் தொடர்ப் பொருள்களெல்லாம் பிழை பாடாய் முடியும்; ஆதலால், தனித்தனிப் பண்பிகளாம் .இருபொருட் கலவையே அத்து விதம் எனப்படுதற்கு ஏற்பதா மன்றிப், பண்புக்கும் பண்பிக்கும் உள்ள இயைபு அப்பெயர் பெறுதற்குச் சிறதும் ஏலாது. ஏலாதாகவே, மறைமொழிகள் சிவம் அத்வைதம் என்று ரைத்தது சிவம் என்னும் முழுமுதற் பொருள் தன்போன் முதற் பொருளாகிய சத்தியோடு நனிவிரவி வேற்றுமையின்றி நிற்கும் அத்துவித இயைபினைத் தெரித்தற் பொருட்டேயாம் என்க. இறைவற்கும் இறைவிக்கும் உளதாங்கழிபெருஞ் சிறப்பிற் றாகிய இவ்வத்துவித இயைபு ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனாரால், பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும் எண்ணுஞ் சுவையும்போல் எங்குமாம் -- அண்ணல்தாள் அத்துவிதம் ஆதல் அருமறைகள் ஒன்றென்னா தத்துவிதம் என்றையும் ஆங்கு என்று இனிது விளக்கப்பட்டமையும் காண்க. இச் செய்யுட்கண் அண்ணல் என்பது இறைவனையும் தாள் என்பது அவனோ டிரண்டறக்கலந்து நிற்கும் இறைவியையும் உணர்த்தும். அவ்விருவர்க்குமுள்ள இயைபு பண்புக்கும் பண்பிக்குமுள்ள இயைபுபோல அத்துணை நெருக்க முடைத் தென்பது தெரிப்பார் பண்ணுக்கும் அதன் ஓசைக்கும் பழத்துக்கும் அதன் சுவைக்கும் உள்ள பண்புத்தற்கிழமை யியைபினை ஈண்டுவமை யாக எடுத்துக்காட்டினார். அங்ஙனங் காட்டியது கொண்டு, பண்ணும் ஓசையும் பழமுஞ் சுவையும் பண்பியும்அதன் பண்புமாய் ஒன்றாதல்போல, இறைவனும் இறைவியும் பண்பியும் அதனின் வேறன்றாம் பண்புமாய் ஒருவரேயாவர் போலுமென மாணாக்கன் ஐயுறாமைப் பொருட்டும், அவ்விருவரும் இருமுதற் பொருள்களேயாய் ஒருவரை விட்டு ஒருவர் பிரிதலின்றி எஞ்ஞான்றும் விரவிச் செறிந்தபடியாய் நிற்பரென்பதனை வலியுறுத்துதற்பொருட்டும் அண்ணல் தாள் அத்துவிதமாதல் என்று ஓதியவளவின் அமையாது அருமறைகள் ஒன்று என்னாது, அத்துவிதம் என்று அறையும் ஆங்கு என மேலும் அதனைத் தெளிவு படுத்தி ஓதியருளினா ரென்க. அதுவேயுமன்றி, வடமொழியில் வேதாந்த சூத்திரத் திற்கு உரை வகுத்த உரைகாரரெல்லாம் அத்வைதம் என்னுஞ் சொற்கு ஒன்றெனவே பொருள்கொண்டு மறை மொழிகள் முன்னொடு பின் பெரிதும் முரணிப் பிழைபடுமாறு பொருளுரைத்து இழுக்கினாராக, ஆசிரியர் மெய்கண்டதேவ நாயனார் ஒருவரே அத்துவிதம் என்ற சொல்லுக்கு அந்நிய நாத்தி அல்லது வேறு அன்மை என்னும் மெய்ப்பொருள் கண்டு மறைமொழிகள் ஒன்றோடொன்று மலையாவாறு பொருடந்து இணங்கக் கொளீஇயினா ரென்பதூஉம், அக் காரணம் பற்றியே அவர் அத்துவித மெய்கண்டநாதன் என ஆன்றோராற் பாராட்டி அழைக்கப் படுவாராயினாரென்பதூஉம் அறியற் பாலன. இவ்வாற்றல் இறைவனும் இறைவியும் பொருட்டன்மை யால் வேறாயுங் கலப்பினால் ஒன்றாயுஞ் செறிந்து நிற்கும் இருமுதற் பொருள் களாதலும் இனிது பெறப்பட்டமை காண்க. பண்பிக்கும் அதன் பண்புக்கும் உளதாம் இயைபுபோல இறைவன் இறைவியோடு அத்துணை நெருக்கமுறப் பிணைந்திருத்தலால், அவனைக் குறிக்குமிடங்களினெல் லாம் மறை மொழிகள் அத்துவிதச் சொற்றலைப் பெய்து ஓதா நின்றன. எனவே, மிகச்செறிந்த அத்துவித இயைபு இறைவற்கும் இறைவிக்கும் உளதாதல்போல, ஏனைப் பொருள்கட்கும் இறைவற்கும் உளதாமாறில்லையென்று ஓர்ந்து கொள்க. இனி, இறைவற்கும் ஏனையுயிர்கட்கும் உளதாகிய அத்துவித இயைபு மேலே காட்டிய இயைபினுக்கு அடுத்த நிலையில் வைத்து உரைக்கற்பாலதாம் செறிவு உடைத்தாம். இவ்வியைபுதானும் இறைவியின் வாயிலால் இறைவற்கு உளதா வதன்றி நேரே உளதாவதன்று. இது தெரித்தற் பொருட்டே ஆசிரியர் மெய்கண்டதேவர் எங்கும்ஆம் அண்ணல் தாள் என்று அடைகொடுத்தோதினார். இங்ஙனம் உயிர்களோடு இரண்டறக்கலந்து நிற்கும் வழியும் வீடுபெற்ற தூயஉயிர்களிற் செறிந்து நிற்குமாறு போல, மலக்கட்டுடைய ஏனையுயிர்களிற் செறிந்து நிற்பான் அல்லனென்பதூஉம் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும். தூய உயிர்களில் இறைவன் நனி விரவி நிற்றலினாலன்றே, அவன் உலகெங்கு மாய் ஊடுருவி நிற்றல் போல அவர்தாமும் அவ்வாறு நிற்றலை உணர்ந் துரைப்பா ராயினர், வாமதேவ முனிவன் யானே உலகெல்லாமாயினேன் என்றதூஉம், கண்ணன் முதல்வனது விரிந்த வுருவத்தைத் தான் காட்டியதூஉம் அவர் மாசு நீங்கி இறைவனோடு இரண்டறச் செறிந்து கூடினமை யாலேயாம். இதனையும் ஆசிரியர் மெய்கண்ட தேவர் பிரிப்பதன்றித், தானே உலகாம் தமியேன் உளம்புகுதல் யானே உலகு என்பன் இன்று என இனிது விளக்கி யருளினமை காண்க. ஏனைத் தூயவல்லா உயிர்களிலும் இறைவன் நிறைந்து நிற்பனேனும் அந்நிறைவு மேலை இரண்டும் போல் மிக்க செறிவுடைத்தன்று. இவ்வுலகத்து வாழ்வாருள்ளும் இருவர்க்கு உளதாம் நெருக்கமெல்லாம் ஒருவர் மற்றொருவரின் அறிவின் றிறத்தை யறிந்து அவர்பால் நெகிழாத பேரன்பு பாராட்டு தலானன்றே நிகழப்பெறுகின்றன. அறிவும் அன்பும் இல்லாக் கால் அவர் தமக்குள் நெருங்கிய உறவு டையராதலும் இல்லை யாதல் காண்டுமன்றே. ஆதலால், இறைவன் தம்முள் நிறைந் திருப்பனேனும் தூயவல்லா உயிர்கள் அறியாமையாற் கவரப் பட்டுத் தம்மோடு உடனாய் நிற்கும் முதல்வனை ஒருசிறிதும் உணராமையின் ஆண்டு அவர் தமக்குள் நெருங்கிய உறவின்றாம், அதனால், இறைவன் மாசுமூடிய உயிர்களில் நிறைந்து நிற்கும் அத்துவித இயைபு மேற்கிளந்த இரண்டியை பினும் செறிவு நெகிழ்ந்த பதத்தினதாம் என்று தெளிக. இனிக், கட்டுற்ற உயிர்களினுந் தாழ்ந்தனவாகிய மலம் மாயையெனும் இரண்டினும் நிறைந்து நிற்கும் இறைவனியைபு மேலெடுத்துக்கூறிய மூன்றியைபுகளினும் குறைந்த செறிவினை யுடைத்தாம். என்னை? இவையிரண்டும் அறிவில்லாத பருப் பொருள்களாகலின் என்பது அற்றாயினும், மலம் இருளின் இயல்பும் மாயை ஒளியின் இயல்பும் உடையவாகலின் மலத்தில் நிற்கும் இறைவனியைபு மிகக் குறைந்த செறிவினதாதலுடன் விளக்கமில்லதூஉமாம்; மாயையில் நிற்கும் இறைவன் இயைபோ விளக்கமுடையதாகலின் மலத்தினூங்கு மாயை யிலேயுள்ள இயைபு சிறிது செறிவுடைத்தாமென்க. அற்றேல், இவ்வாறு அவ்வப்பொருளின் றன்மைக்கேற்ப இறைவனது அத்துவித இயைபு செறிவு குறைந்தும் ஏறியும் நிற்குமென்று ரைப்பின், அஃது அவற்கு வேறுபாட்டினைப் பயக்குமா லெனின், அறியாது கூறினாய், பளிங்கின்கண் விளங்கும் ஞாயிற்றின் ஒளி கருங்கல்லில் விளங்காமை பற்றி அவ்வொளிக்கு ஒரு குற்றமும் வராமைபோல, ஏனைத் தூயவுயிர்களினும் மாயையினும் ஏறியுங் குறைந்தும் விளங்கியும், மலத்தின்கட் சிறிதும் விளங்காமை நின்றும் இறை வனிருத்தல் பற்றி அவற்கோர் இழுக்கும் இன்றெனவுணர்க. அற்றேலஃதாக, ஏனையெல்லாவற்றினும் இறைவற்கு இறைவிமாட்டுளதாகிய அத்துவித இயைபே மிக்க செறி வினையுடைத்தாயது எற்றாலெனின்; தன்போன் முதன்மை யுடைய அறிவுப் பொருள் இறைவியையன்றி இறைவற்குப் பிறிதொன்று இன்மையானும், இன்ப வடிவினளாய் நிற்கும் அவள் முதல்வன்பால் எல்லையற்ற காதற்கிழமை யுடையளா கலானும், அவ்விருவருந் தம்மைத்தாமே ஒப்பரல்லது அவர்க்கு ஒப்பாவது பிறிதொன்றின்மையானும் அவர் தமக்குள் அத்துணைச் செறிந்த அத்துவித இயைபு காணப் படுதல் இயற்கையேயாம் என்க. இது பற்றியன்றே பேரின்ப மான பிரமக் கிழத்தியோடு, ஓரின்பத்துள்ளான் எனவும், நாடனைத்து நங்கையினாற் செய்தளிக்கும் நாயகனும் பொன்னிறங் கட்டியினும் பூணினும் நின்றாற் போல், அந்நிறம் அண்ணலும் அம்பிகையும், செந்நிறத்தள், எந் நிறத்தாளா யிருப்பள் எங்கள் சிவபதியும் அந்நிறத்தனாய் இருப்பன் ஆங்கு எனவும் உண்மைத் திருமொழிகள் எழுந்தன. இங்ஙனம் இறைவற்குரிய அத்துவித இயைபு ஒருமுறையால் நோக்குமிடத்து மூவகைத்தாதலும் பிறி தொரு முறையால் நோக்குமிடத்து ஐவகைத்தாதலும் அறியற்பாலன. இறைவியோடும், உயிர்களோடும், மலமாயை களோடும் இயைந்து நிற்கும் முத்திற இயைபே, உயிர்கள் தூயனவும் தூயவல்லாதனவும் என இருதிறப்படுதலின் அவற்றிற்கேற்ப அவற்றில் நிற்கும் இறைவனது நிலையும் இருதிறப்பட, அங்ஙனமே மலத்தினும் மாயையினும் நிற்கும் நிலையும் இருதிறப்பட ஆக இம்முறையால் ஐவகைப் பாகு பாடுடைய தாயிற்று. இவற்றுள் இறைவியோடு நனிசெறிந்து நிற்கும் அத்துவித இயைபு பண்ணையும் ஓசையும் என்னுந் திருவெண்பாவினும், தூய உயிர்களோடு விரவி நிற்கும் அத்துவித இயைபு அரக்கொடு சேர்த்தி என்னுந் திருவெண்பாவினும், கட்டுற்ற உயிர்களோடு கலந்து நிற்கும் அத்துவித இயைபு ஒன்றென்ற தொன்றே காண் என்னுந் திருவெண்பாவினும், ஏனை மலமாயைகளோடு அவன் ஒட்டி நிற்கும் அத்துவித இயைபு கட்டு முறுப்பும் என்னுந் திருவெண்பாவினுமாக ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனார் விளக்கியருளுமாறு காண்க. அற்றேலஃதாக இறைவன் ஒருவன் உளன் என்றலே பொருத்தமாகக் காணப்படுகின்றதன்றி, அவனின் வேறாய் அவனோடொன்றாய் விரவி நிற்கும் பெண்டன்மை யினளான இறைவியும் உண்டென்றல் பொருத்தமாய்க் காணப்படுகின்றி லதாலெனின், அற்றன்று, இறைவனுக்கு அணுக்கராய் இறைவனோடு ஒருபுடையொத்த அறிவாற் றல்கள் வாய்ந்து மலசத்தி மட்டும் இயற்கையே சிறிதுடைய சதாசிவர் மகேசரும் அவருக்குத் துணைவரான மனோன் மணி மகேசை முதலிய சக்திகளும், இயற்கையே மல கன்மங்களாகிய இரண்டன் பற்று மட்டுஞ் சிறிதுடையராய் ஏனைவகையாலெல்லாம் இறைவனை ஒருபுடையொத்தவ ரான சீகண்டருத்திரரும் அவர்க்குத் துணைவியான உமையும் உளரெனக் கொள்ளுஞ் சைவ சித்தாந்த நுட்பங் கடைப்பிடித்துணர வல்லார்க்கு, இறைவனோ டொத்த இயல்பினளான இறைவியும் உடன்கலந்திருப்ப ளென்னு முண்மை பொருத்தமுடைத்தாதல் நன்கு விளங்கும், அல்லதூஉம், ஒன்றற்கொன்று மறுதலையான இரு தன்மை கள் ஒரு பொருட்கண் உளதாதல் எவ்வாற்றானும் இயலா தெனக் கொண்ட சைவசித்தாந்த வழக்கினை நுணுகிக் காணலுறின், ஆண்மை பெண்மை என ஒன்றினொன்று மறுதலைப்பட்ட இருதன்மைகள் இறைவனாகிய ஒரு பொருளினிடத்தே உளவெனக் கோடல் ஆகாமை தெற்றென விளங்கா நிற்கும். அதுவேயுமன்றி, உலகத்தின்கண் உள்ள எல்லாச் சமயத்தவருங் கடவுளை ஆண் பாலாகவுந் தந்தையாகவும் வைத்து வழங்கக் காண்டலின், பெண் பாலாகவும் உலகிற்கெல்லாம் அன்னை யாகவும் உள்ள இறைவியொருத்தியும் ஆண்டு அவனோடுடன் விராய் உளள் என்பதூஉந் தானே பெறப்படும், இறைவனைப் போலவே தனி முதலான இறைவி ஒருத்தியும் உண்மையி னாலன்றே அவ்விறைவியை மட்டும் வேறு பிரித்து வைத்து வழிபடுஞ் சாத்தம் என்னுஞ் சமயமும் பண்டு தொட்டே காணப்பட்டு வருகின்றது. இறைவி ஒரு தனி முதற்பொருள் ஆகாமல் இறைவற்கு ஒரு குணமேயாதல் உண்மையாயின், குணமுங் குணியும் ஒன்றேயெனக் கொண்ட சைவசித்தாந் தத்திற்கு அக்குணத்தை ஒரு பொருளாக்கி அதற்குப் பெண்மை முதலான வேறுபல குணங்களை ஏற்றியுரைத்தல் பெரிய தொரு மாறுபாடாய் முடியும், மேலும், சுத்தமாயையின் முடிந்த நிலைக்கண் அமைந்தவான சத்தி சிவதத்துவங்கள், சத்தியுஞ் சிவமுமாய இருமுழுமுதற் பொருள்கள் தம்மாட்டு விரவி நின்று முனைத்து விளங்குதலால் அங்ஙனம் பெயர் பெறலாயின வென்பதை ஆராய்ந்து காணலுறின், அவ் விரண்டனையும் இயக்கும் இரு முழுமுதற்பொருள்கள் உண்மை தேற்றமாம். அல்லதூஉம், உலகத்துக் காணப்படும் உயிர்களெல்லாம் ஆண் பெண் என்னும் இருபகுப்பாய் அடங்கக் காண்டலின், இவர் தமக்கு முதலாம் முழு முதற்பொருளும் இரண்டெனவே முடிக்கப்படுமென்பது. அற்றன்று, ஆண் பெண் என்னுங் குறிகளும் அவ்வ வற்றிற் கேற்ற பண்புகளும் பருவடிவினவாகிய உடம்பு கட்கே உளவா வனவன்றி, இறப்பநுண்ணிய உயிர்கட்கும் அவை உளவா மென்றல் பொருந்தாதாலெனின்; நன்று சொன்னாய், உலகத்தின்கட் காணப்படும் பருப் பொருள் அமைவு களெல்லாம் அவற்றை யாக்குவோர் இயல்பு களுக்கும் நினைவு கட்கும் ஏற்பவே அமைகின்றன வல்லாமற் பிறிதில்லை. உயிரின் நினைவைவிட்டும் இயல்பை விட்டும் ஆக்கப்படும் பொருளை யாண்டுங் கண்டிலேம். மிகச்சிறியது முதல் மிகப்பெரிய தீறான எல்லா அமைப்பு களும் அவற்றை அமைத்தவர் அமைப் பித்தவர் நினைவு களையும் இயல்புகளையும் தெற்றெனப் புலப்படுத்து கின்றன. தில்லை மன்றின்கட் காணப்படும் அமைப்புகளையும், பேரூர்க் கூத்தன் மண்டபத்தில் வகுக்கப் பட்ட உருக்களின் கூறுபாடுகளையும், மதுரைத் திருமலை நாயகன் அரண்மனை யிலியற்றப்பட்டிருக்கும் ஓங்கிய கட்டமைப்பு களையுங் காண்பா ரெல்லாம் அவற்றை ஆக்கிய உயிர்களின் தன்மைகளையுங் கருத்துகளையும் விளங்க உணர் கின்றா ரல்லரோ? மலையமான் நாட்டிலிருந்து போதரும் திறஞ் சிறந்த யானைமருப்பின் உருக்களையும், எருமையூரிலிருந்து சாந்தமரத்துண்டுகளிற் செதுக்கிவரும் பலதிற நுண்ணிய வடிவு களையும், மேனாட்டின் கண் உள்ள வெண்ணிற மக்களால் அரிதின் அமைக்கப்பட்டு வருஞ் சலவைக்கல் வடிவங்களையும் ஓவிய உருவங்களையும் மகிழ்ந்து வியந்து காண்பாரெல்லாம் அவற்றை இயற்றிய உயிர்களின் அறிவின் திறத்தையும் அரும்பெருந்தன்மையையும் அறிந்து திகைக் கின்றனரல்லரோ? இன்னும் உலகின்கண் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளும் அவற்றை நிகழ்த்துவோர் இயல்பை யும் நினைவையும் ஒட்டியே நடைபெறு மாற்றினை நுனித்துக் காண்பார் எவரும் இனிதுணர்வர். கண்கூடாய் நேரே யறியப்படும் இப்பிறழா முறை பற்றி, ஆண்பெண் உடம்புகளிற் காணப்படும் அமைவு களும் அவ்வவ்வுடம்புகளிலிருக்கும் உயிர்களின் இயல்பு களுக்கும் நினைவுகளுக்கும் இசையவே போதரலாயின வென்பது முடிக்கப்படும். கட்புலனாகா வாயினும், ஒரு சார் உயிர்கள் ஆண்டன்மையும் பிறிதொருசார் உயிர்கள் பெண்டன்மையும் இயல்பாக வுடைமையினாலன்றே அவ்வ வற்றின் தன்மைகளுக்கேற்ற உடம்புகள் இறைவனால் வகுத்துக் கொடுக்கப்படுவன வாயின. காரியத்தின்கட் புலப்பட்டுத் தோன்றும் வேறு பாடுகள் அத்துணையும் அதன் காரணத்தின் கட் புலப்படாத நுண்ணிய நிலையில் உளவாம் எனச் சற்காரியவாதங் கூறுஞ் சைவசித்தாந்த இயல்பினை நுணுகி ஆராய வல்லார்க்கு, உடம்பின் கட்புலனாம் வேறுபாடுகள் அத் துணைக்குங் காரணமான இயல்புகள் உயிரின்கண் உளவாதல் நன்கு விளங்காநிற்கும். இவ்வா றெல்லாம் பகுத்தாராய்ந்து காண மாட்டாதார், அவ்வவ்வுயிர் கள் செய்யும் நல்வினை தீவினை கட்கீடாக உடம்புகள் வருமெனவும், நல்வினை செய்த உயிர்கள் ஆண் உடம்பும் தீவினை செய்த உயிர்கள் பெண் உடம்பும் எடுக்கு மெனவும், இவ்வாறு தத்தம் வினைக் கீடாக உடம்பெடுக்கும் அவ்வளவே யன்றி உயிர்களுள் ஒருசாரன ஆண்மைத் தன்மையும் பின்னை யொருசாரன பெண்மைத் தன்மையும் இயற்கையேயுடையவா மென்றல் பொருந்தா தெனவுங் கூறுவாரும் உளர். ஆணவமலத் துண்மை கொள்ளாமல், வினையின் உண்மை ஒன்றுமே யுடம்பட்டு, அவ் வினையும் பண்டேயுளதாய் இருதிறப்பட்டு உயிர்கட்கு உடம்புகளைத் தோற்றுவிக்கும் என்னுங் கொள்கை யினரான புத்தர் சமணரே இங்ஙனங் கூறுதற் குரியாரன்றி, ஆணவ மலத்துண்மை கொண்ட சைவ சித்தாந்திகள் இவ்வாறுரைத்தற்கு இடம்பெற மாட்டார் என்க. எல்லாத் துன்பங் கட்குங் காரணமாய்ப் பண்டு தொட்டே உயிர்களின் அறிவு செயல் வேட்கைகளை மறைத்துக் கொண்டு செம்பிற் களிம்புபோல அவ்வுயிர் களோடு உடனாய் விரவி நிற்கும் ஆணவமல நீக்கத்தின் பொருட்டே உயிர்கட்கு முதல்முதல் உடம்புகள் வந்தனவன்றி வினையால் வந்தனவல்ல; என்னை? வினைகளென்பன இறைவன் பொருத்திய உடம்பின் சேர்க்கையாற் சிறிதறிவு விளங்கிய உயிர்கள் தம்மைப்பற்றி நிற்கும் ஆணவவயமாய் நின்று செய்யுந் தொழில்களே யாகு மென்பதை மேலே வினையினியல்பு உரைத்தவழி நன்கு விளக்கிக் காட்டின மாதலானும், உடம்பெடுத்த பின்னன்றி வினைகள் உளவாதல் பெறப்படா மையின் வினைகள் பண்டேயுளவாய் உடம்புகளைத் தோற்றுவிக்குமென்றல் ஒரு சிறிதும் பொருந்தா தாகலானும் என்பது. இவ்வாற்றால் வினைக்கு முன்னே உடம்புகள் உயிர்கட்கு உளவாயினமை ஐயுறவின்றித் துணியப்படும். வினைகளைத் தோற்றுவித்தற்கும், தோற்று வித்த வினைப்பயன்களை நுகர்தற்கும் உடம்புகள் கருவியாய் நின்று உதவுதலைக் கண்கூடாய் நாடோறுங் கண்டு வருகின்றேமாகலின், இவ்வுடம்புகள் வரும் முன்னரே நல்வினை தீவினைகள் பண்டே உளவா மெனவும், அவை தமக்கிசைந்த ஆணுடம்பு பெண்ணுடம்புகளைத் தோற்று விக்குமெனவுங் கூறுதல் ஒரு சிறிதும் அடாது. அல்லதூஉம், நல்வினையால் ஆணுடம்பும் தீவினையாற் பெண்ணுடம்பும் வருமென்றல் காட்சி யளவைக்கு மாறாயிருக்கின்றது. ஆண்உடம்பு நல் வினையால் வந்ததாயின் அது நரைதிரை மூப்புப் பிணி சாக்காடு முதலான குற்றங்கள் இலவாதல் வேண்டும்; பெண்ணுடம்பைப் போலவே ஆணுடம்பும் அக்குற்றங்கள் உடையனவாய் அழிந்து படுதலைக் காண்கின்றோமாதலின் ஆணுடம்பு மட்டுமே நல்வினையால் வந்ததென்றல் மாறு கோளுரையாம். அற்றன்று, திங்க டோறும் புறக்கழிவாகிய வாலாமையுடைமையும், கருக் கொள்ளுதல் அதனைப் பத்துத் திங்கள் சுமந்து வருந்தல் அதனை யீனுங்காற் பெருந் துயருழத்தல் பின்னரதனை வளர்க்குங்காற் பெரிதுங் துன்புறல் முதலான குற்றங்கள் உடைமையும் பெண்ணுடம் பிற்கு இயல்பாக உளவாதல் போல ஆணுடம்பிற்கில்லா மையின் இது நல்வினையால் வந்தமை தேற்றமாமெனின்; அற்றன்று, மலம் சிறுநீர் சளி பீளை வியர்வு உயிர்ப்பு முதலான கழிவுகள் இருவகை யுடம்பினிடத்தும் பொது வாகக் காணப்படுவது போலப், புறக்கழிவு வாலாமையும் சிறப்பாகப் பெண்ணுடம்பி னிடத்தே காணப்படுவதாயிற்று. ஆணுடம்பிற் காணாத இவ்வாலாமை பெண்ணுடம்பிற் றிங்கடோறுங் காணப் படுதல் கொண்டே, அஃது ஆணுடம் பினுந் தூய்மை யுடைத்தாம் என்பது துணியப்படும்; என்னை? உடம்பின் கட் பலநெறியால் இடையறாது வந்து சேரும் நச்சு நீர்களெல்லாம் பெண்ணுடம் பிற் றிங்கடோறும் புறம்படுதற்கு வாயில் உண்டானாற் போல ஆணுடம்பிற்கு அஃது இன்மையின் அந்நச்சுநீர்கள் அவ்வுடம்பிற் சுவறி எந்த நோயினையும் எளிதில் வருவித்தற்குப் பெரிதும் இடஞ் செய்து நிற்கின்றன; அந்நச்சு நீர்கள் பெண்ணுடம்பில் அவ்வப்போது கழிந்து விடுகின்றமையின் அவ்வுடம்பின்கண் நோய்கள் எளிதில் ஏறுவதில்லை. பெண்ணுடம்பை நோய்கள் எளிதிற் பற்றாமையும், ஆணு டம்பை அவை எளிதிற் பற்றுமாறும் நாடோறும் நிகழும் நிகழ்ச்சியில் வைத்துக் கண்டு கொள்க. இவ்வாற்றால் ஆணு டம்பினும் பெண்ணு டம்பே தூயதாதல் நன்கு தெளியப்படும். இனிக் கருக்கொள்ளல் கருச்சுமத்தல் முதலியவற்றைக் குற்றமாகவும் இழிவாகவும் நினைத்தலினும் பெரியதொரு பிழைபாடு வேறின்றாம். ஆணவ மறைப்பிற் கிடந்து சொலற்கருந் துன்பத்தை உழக்கும் உயிர்கள் அது நீங்குமாறு பிறவியைத் தரும் இறைவன்றன் கைம்மாறில்லாப் பேரிரக்கச் செயலுக்கு உதவியாய் நிற்கும் பெண்ணுடம்பினும் மேன்மை மிக்கது பிறிதொன்றில்லை. தான் சிறிது நேரந் துன்புறு மாயினும், ஆணவத்தாற் பிணிப்புண்டு அளவிறந்த துன்பத்தை எய்தும் உயிர்கள் அதுநீங்கிப் பிறவியெடுத்து அறிவும் இன்பமும் பெறுமாறு உதவி புரியும் பெண்ணுடம் பைப் பாவவுடம்பெனக் கூறுதலினும் பெரியதொரு பாவம் வேறில்லை. மேலும், பெண்மக்களாவார் அறிவில் வளர வளரத் துன்பம் இல்லாமலே கருவுயிர்க்கும் வழிதுறை களைத் தெரிந்து தமக்கும்தாம் பெறும் மக்கட்கும் மிகுந்த நலன்களை வருவித்துக் கொள்வர். அறியாமையிலுள்ள இந்நிலையினுங்கூடக் கருவுயிர்க்குங்காற் பட்ட துன்ப மெல்லாம் தாம் ஈன்ற பச்சைப் பசுங் குழவியின் எழில் துளும்பும் இன்முகங் காண்டலினும் அதன் ஆம்பற் செவ்வாற் முத்தங் கொள்ளுதலினும் யாழினுங் குழலினும் இனிய அதன் மழலை மொழிகளைக் கேட்டலினும் அறவே மறந்து அவர் இம்மைக்கண்ணே பேரின்பந் தலைப் படுகின்றனர். இவ்வின்பமெல்லாம் ஆண் மக்களாவார் காணப்பெறுவரோ? அல்லும் பகலும் பொருள் தேடும் முயற்சியில் அலைப்புண்டு, அம் முயற்சியிற் றமக்கு மாறாய் நிற்கும் பகைவராற் றுன்புறுத்தப்பட்டுக், கவலையும் பொறாமையும் தம்முள்ளத்தை ஈர்ந்து தின்ன இறக்குந் துணையும் ஓவாத பேரிடர்க்கு உள்ளாவதன்றோ ஆண்பிறவி யெடுத்தாரின் நிலைமை யாயிருக்கின்றது! அஃதொன்றோ, அவர்தம் மனஞ்சென்றவா றெல்லாம் வழுவி யொழுகி நீரிழிவு, என்புருக்கி, குளிர் காய்ச்சல், கரியநாற்றப்படை, தொழுநோய் முதலான கொடிய நோய்களால் எளிதிற் பற்றப்பட்டுப் புழுத்தழுகி சாதலையுங் கண்கூடாய்க் காண்கின்றேமாகலின், ஆணுடம்பு துன்பம் அற்ற பிறவி யென்றும் அது நல்வினையால் வருவதென்றும் ஆராயாது கூறும் உரை ஆன்றோராற் கொள்ளற்பாலதன்றா மென்க. ஆண் பாலார் பெண்பாலார் என்னும் இரு திறத்தாரிலும் நோயும் பழுதான உறுப்பும் முடை நாற்றமும் இன்றி, அழகின் பொலிவும் திருந்திய உறுப்பும் நறுமணமும் தூய ஒளியும் வாய்ந்த இனிய யாக்கையைப் பெறுதலே நல் வினையா மெனவும், அவற்றிக்கு மாறான அருவருப்புடைய வுடம்பைப் பெறுதலே தீவினையாமெனவும் ஆராயந்து உணர்தலே எவ்வாற்றானும் பொருத்தமுடைத்தாம். பெண் மக்களும் அறிவானும் நல்லியற்கையானும் அழகானுஞ் சிறந்தாரை முற்றத்துறந்தோரும் ஏனையோரும் மிக உயர்த்துப் பாராட்டு தலைக் காண்கின்றேமாகலானும், இதற்குப் பெருங்கோப் பெண்டு ஔவையார் கண்ணகியார் காரைக் காலம்மையார் திலகவதியார் மங்கையர்க்கரசியார் பூம்பாவை யார் பரவையார் சங்கிலியார் முதலான பெரு மாட்டிமார்களே சான்றாகலானும் பிறவியளவில் இஃது யர்ந்தது. இது தாழ்ந்ததெனக் கூறுதல் ஒருவாற்றானும் ஏலா வுரை யாமென்க. அற்றேற், பட்டினத் தடிகள் தாயுமானார் முதலான சான்றோர் மாதரை மிக இகழ்ந்துரைத்துப் பாடிய தென்னையெனின், அறிவும் ஒருநிலைநின்ற அன்பும் இலராய்ப் பொருள் பறித்தலிலேயே வேட்கை மீதூர்ந்து அவ்வேட்கை நிரம்புமாறு ஆடவரைத் தம்மாட்டு வஞ்சித்து ஈர்த்து அவர் நலங்களை முற்றச் சிதைக்கும் பொருட் பெண்டிரையும் அவரோ டொத்தாரையும் அங்ஙனம் அவர் இகழ்ந்து பாடியதல்லால் ஏனை நல்லாரை அவ்வாறு செய்திலரென்று கடைப் பிடிக்க. இனிப் பொருட் பெண்டி ரேயன்றி அவர் போற் பலதலையாற் கவர்த்த நெஞ்ச முடைய ராய் ஒழுகும் ஆண்மக்களும் அங்ஙனமே இழிக்கற் பாலரா மென்க. இத்துணையுங் காட்டியவாற்றால், ஆண் பெண் என்னும் உடம்பின் வேறுபாடு வினையால் வந்ததாகாமல், அவ் வுடம்பைப் பற்றும் உயிர்களே அங்ஙனம் இயற்கையாய் ஆண்மை பெண்மை என்னும் இருவகைத் தன்மை யுடைய வாயிருத்தலால் வந்ததாமென்பது முடிக்கப்படும் என்பது. இவ்வாறுலகத்துக் காணப்படும் உயிர்களிலேயே ஆண் பெண் என்னும் இருவேறியற்கை உளதாதல் போல, இவை தமக்கெல்லாம் முதல்வரான இறைவனிலும் இறைவி யிலும் அவ்விருவேறியற்கையும் உளவென்பது தேற்றமாம். இஃது யாங்ஙனம்! ஆணும் பெண்ணும் அல்லாக் கடவுளை அவை யிரண்டும் உடையதாகக் கூறுதல் வழுவாமல் எனின்; நன்று வினாவினாய், ஆணும் பெண்ணும் அல்லாமல் அலியாக மட்டும் கடவுள் நிற்குமென்றல் வழுவன்று போலும்! உலகத்துயிர்களுள்ளும் ஆணும் பெண்ணு மல்லாமல் அலியாயும் பேடியாயும் நிற்பார் பயன்படுதலின் மையின் அவரை எல்லாரும் இழிந்துரைப்பவே காண்டும்; இங்ஙனம் இழித்து ரைக்கப்படும் அலித்தன்மை கடவுட்கு உண்டென் றலால் அதற்குப் போந்த பெருமை என்னையோ வெனக் கூறிமறுக்க. அல்லதூஉம், உலகின்மேலும் உயிர்கண் மேலும் வைத்தன்றி முழுமுதற் கடவுணிலை வேறொரு வாற்றானும் நம்மனோரால் அறியப்படாமையின், நம்ம னோர் தங்காட்சி கருதல் என்னும் அளவைகட்குப் புலனாம் ஆண்மை பெண்மை களும் கடவுட்கும் உண்டென்பது துணிதும்; அங்ஙனமே அலித்தன்மையும் கடவுட்குண் டெனத் துணிதற்கு ஒரு கருவி காணாமையின் அதனை ஏலாமென விடுக்க. அற்றன்று. ஆண்மை பெண்மையின் வேறான அலித் தன்மையும் பேடித் தன்மையும் ஒரோவழி உயிர்கண் மாட்டுக் காண்கின்றோமா லெனின், அறியாது வினாயினாய், ஆண்டன்மைக்குரிய உறுப்புக்களிற் சில குறைந்ததை அலி எனவும் பெண்டன்மைக் குரிய உறுப்புக்களிற் சில குறைந்ததைப் பேடி எனவும் வழங்குபவாகலின் அலி பேடி என்பன ஆண் பெண் என்னும் இரண்டின் வேறான இயல்புடையன வென்று கொள்ளற்க. இஃதென் போல வோவெனின், மக்கள் யாக்கைக்குரிய உறுப்புகளிற் கை கால் குறைந்த முடவரையும், கண்ணில்லாக் குருடரையும், காதில்லாச் செவிடரையும், வாயில்லா ஊமை யரையும் மிகக்குறுகிய குறளரையும் அம்மக்களின் வேறாந் தன்மை உடையரெனக் கோடல் யாண்டும் இல்லையானாற் போல வென்பது. வினையால் யாக்கைக்கு வரும் நோய் போலப், பழவினைப் பயத்தால் உறுப்புகளிற் குறைபாடுடையராய் அலி பேடி கூன் குருடு ஊம் செவிடு என்றற்றொடக்கத் தனவாகப் பிறப்பின் எச்சங்களாய்ப் பிறப்பவரும் ஆண்மை பெண்மை என்னும் இருகூற்றிலடங்கு வரன்றி இவ்விரண்டின் வேறான மூன்றாவ தொரு தன்மையில் அடங்குவாரெனக் கோடல் ஒரு சிறிதும் பொருந்தாதென்க. இங்ஙனமெல்லாம் ஆராய்ந்து காண்கின் றுழிக் கடவுள்நிலை ஆண்மை பெண்மை என்னும் இருதிறமாய் ஒன்றளாய் நிற்குமெனலே பொருத்தமும் உண்மையுமாமென்க. 10. சுத்தமாயா தத்துவங்கள் இங்ஙனமாகப் பண்பும் பண்பியும்போல் ஒருங்கு விராய் நிற்கும் அம்மையும் அப்பனும் சிவஞானபோதம் முதலான சைவசித்தாந்த நூல்களும் சத்தி சிவம் என்னும் பெயர்களால் வழங்கப்படுவர். உலகங்களைத் தோற்று விக்கும் ஆற்றல் முதன்முதல் அம்மையின் வாயிலாகவே புலப்படுதலின், அவ்வாற்றலைப் பிறப்பிக்கும் அவள் சத்தி எனப்பட்டாள். ஒரு தொழிலின் பெயர் அத்தொழிலை யுடைய பொருட்கும் பெயராய் வழங்குதல் வற்றல் உண்டான் இஃதோர் ஏறு இஃதொரு குத்து என்றற் றொடக்கத்து வழக்குகளிற் காணப்படுதலிற் சத்தி என்னுந் தொழிற் பெயர் அதனை யுடைய அம்மைக்கும் பெயராயிற்று. இதனை யுணராதார் ஆற்றல் ஒரு பொருட்குணமாகலிற் சத்தியும் சிவத்திற்கு ஒரு குணமாமென உரைந்தார். அங்ஙனமுரைப்பிற், குணத்திற் குங்குணத்தையுடைய பொருட்கும் எவ்வாற்றானும் வேற்றுமை யின்மையிற் பொன் மைநீலாதி வன்னம் பொருந்திடப் பளிங்க வற்றின், றன்மையாய் நிற்கு மாபோற் சத்திதன் பேதமெல்லாம், நின்மலன் றனாத்தோன்றி நிலைமையொன் றாயே நிற்பன், முன்னருட் சத்தி தன்பால் முகிழ்க்குந்தான் முளையா னன்றே அரனுடையதாகிப், புத்திமுத்திகளை யெல்லாம் புரிந்தவன் நினைந்த வாறாம் வரும்வடி வெல்லாஞ் சத்தி சத்திதான் மரமுங் காழ்ப்பும், இருமையும் போல மன்னிச் சிவத்தினோ டியைந்து நிற்கும் சத்தியுஞ் சிவமுமாய தன்மை என்றற் யொடக்கத்துத் திருமொழிகள் அவை யிரண்டனையும் இரண்டாகவே வைத்தோதுதல் பொருட் பேறிலவாய் ஒழியு மென்க. ஆதலாற், சத்தியுஞ் சிவமும் பொருளால் இரண்டாயுங் கலப்பால் ஒன்றாயு நிற்கு மென்பதே தேற்றமாம். இனி, ஆணும் பெண்ணுமாய் ஒருங்கு விராய் நிற்கும் அம்மையப்பர் உலகங்களைத் தோற்றுவிப்பான் வேண்டி, துண்மையிலுந் தூய்மையிலுந் தம்மோடு ஒருபுடை யொத்து நிற்குஞ் சுத்த மாயையிற் றோய்ந்து அதனை இயக்கியவழி அஃது இருபாற்றாய் விந்துநாதம் எனப் பெயர் பெற்றியங்கு தலை மேலே விளக்கிப்போந்தாம். இவ்விந்து நாதங்கள் சத்தி சிவங்களோடு நனிவிரவி நின்று அவர்தம் ஆற்றல்களைத் தங்கீழுள்ள தத்துவங்களில் உய்த்தலின், இவையுஞ் சத்திசிவம் எனப்பெயர் பெறாநிற்கும். இவ்வா றிடத்தின்நின்ற பொருட் பெயர் அவ்விடத்திற்கானது ஓர் ஆகுபெயர். அற்றேற் சத்தி சிவ தத்துவங்கட்கும் அவற்றுள் விரவி நிற்குஞ் சத்தி சிவங்கட்குத் தம்முள் வேற்றுமை யெனின்; சத்திசிவங்கள் அறிவுடைய சித்துப் பொருள்கள் என்றும், சத்திசிவ தத்துவங்கள் அறிவில்லாச் சடப்பொருள்கள் என்றும் பகுத்துணர்ந்து கொள்க; இது ஞானமேயானபோது சிவன் எனவும், சத்திதன் வடிவே தென்னிற் றடையிலா ஞான மாகும் எனவும் போந்த திருமொழிகளானும் உணரப்படும். அஃதங்ஙனமாகுக, சத்திசிவங்களிரண்டுமே ஞானவுருவாயின் அவ்விரண்டனையும் வேறு வேறு பெயரான் வழங்குதல் என்னை? ஒரு பெயரே யமையாதோவெனின்; அற்றன்று, சிவம் எஞ்ஞான்றும் அறிவுருவாயே நிற்பதல்லது ஒரு தொழிலை யுடைத்தாவதன்று; சத்தியோ அறிவாய் நிற்றலோடு தொழிலும் உடைத்தாவது. இறைவன் சுத்தமாயையை இயக்கு மிடத்துந் தன் சத்தியின் வாயிலாகவே அதனைச் செய்வானல்லது தானாகவே அதனைச் செய்வான் அல்லன்; இது தெரித்தற்கே முன்னருட் சத்தி தன்பால் முகிழ்க்குந் தான் முளையானன்றே என்பதூஉம் எழுந்தது. எல்லாத் தத்துவங்களும் ஒடுங்கி நிற்றற்கிடமாகிய விந்துமாயையில் இறைவனும் அறிவு மாத்திரையனாய் ஒடுங்கி நிற்றலின் ஆண்டவன் இலய சிவனெனப் பெயர் பெறுவ னென்று அறிவு நூல்கள் கூறா நிற்கும். விந்துமாயை ஒன்றே அறிவு மாத்திரையனாய சிவனுக்கிருப்பிடமாய் ஒடுங்கிநின்ற வழிச் சிவதத்துவமெனவும், அவன் கருத்துக் கிசைந்து தன்கட்டொழிலினைத் தோற்றி அவனோடு இரண்டறச் செறிந்துநிற்குஞ் சத்தியாற் கலக்குண்டு தானுந் தொழிலு டைத்தாகிய அதன் பாகம் சத்திதத்துவ மெனவும் இருவகைப் படுத் தோதப்படுவ தாயிற்று. இவ்விரு தத்துவங் களும் நேரே சத்தி சிவங்கட் கிருப்பிடமாகப் பெறப்படுதலின் இவற்றின் கட்சென்று வைகுவன மலம் நீங்கி வீடுபெற்ற உயிர்களே யாம்; ஏனை ஆணவ மலத்துடக்குச் சிறிதுடைய சதாசிவர் மகேசுரர் முதலாயினோரும் இவ்விரு தத்துவங் களினும் வைகுதற்குரிமை இலராகலின், அவரெல்லாம் இவ்விரண் டின் கீழ்நின்ற தத்துவங்களின் பாலராய் வைகுவ ரென்று தெரிந்துணர்ந்து கொள்க. இனிச் சத்தியின் தொழில் எத்துணைநிகழும் அத் துணைக்கும் ஒத்த அறிவோடு சிவம் அதனோ டியைந்து நிற்குமாயின் அந்நிலையில் அது சதாசிவம் எனப்படுவ தாகும். இங்ஙனம் இறைவன் சதாசிவமாய் நிற்கு நிலைக் கேற்ப, அவனோ டியைந்து நிற்குஞ் சத்திசிவ தத்துவங்களுந் தம்முள் ஒத்து நிற்குமாகலின் அவை யிரண்டன் இயைபும் அந்நிலையிற் சாதாக்கிய தத்ததுவ மெனப் பெயர் பெறாநிற்கும். இச் சாதாக்கிய தத்துவத்தில் இயற்கையே ஆணவமலக்கட்டு ஒன்று மட்டும் உடையரான சதாசிவர் இருப்பர். விஞ்ஞான கலரில் மிக உயர்ந்தோராம் உயிர்கள் சதாசிவராவரென்றுணர்க. சாதாக்கிய தத்துவத் திற் சதாசிவரெனப் பெயர் பெற்று நிற்கும் இறைவற்கும் முழுமுதற் கடவுட்கும் ஒருவாற்றானும் வேற்றுமை இல்லை. ஆனால் ஆண்டு ஒருமலக்கட்டுடையராய்ச் சதாசிவரென அப்பெயரே பெற்று வைகும் விஞ்ஞான கலர்க்கும் இயற்கையே தூயராய் நிற்கும் இறைவற்கும் வேற்றுமை பெரிதாகலிற், சதாசிவ ரெனும் பெயரொப்புமையே பற்றி அவ்விருவரும் ஒருவரே போலுமென மயங்கற்க. விஞ்ஞான கலரில் மலங்கழலும் பதத்திற் றக்கோரா யுள்ளார்க்கு முதல்வன் அருள்புரிந்து அவரைச் சாதாக்கிய தத்துவத்திலிருந்து ஆட்சிசெலுத்து மாறு இருத்துவன். அவ்வாறங் கிருந்து ஆட்சிநடாத்துஞ் சதாசிவர் அதன்கண்ணும் விருப்பிலராய் அதனை உவர்த்து விட்டபின் இறைவன் திருவடியைத் தலைக்கூடி வீடு பேறெய்துவ ரென்க. இனி, இவ்வாறு சத்தியை ஏவி அதனாற் சுத்த மாயையைக் கலக்கி, அறிவுந்தொழிலும் ஒத்துநின்ற சத்திசிவங்களாகிய தமது நிலைக்கு ஏற்பத் தோற்றுவித்த சாதாக்கிய தத்துவத்தின் பின்னர்ச், சத்தியின் றொழில் உலகங்களைத் தோற்று வித்தற் கண் மேன்மேன் மிக்குச்சென்று, தொழிலின்றி வைகுஞ் சிவத்தி னுங் கிளர்ச்சியுற்று நிற்றலின், இங்ஙனந் தொழிலின் முறுகி நிற்குஞ் சத்தியோடு இரண்டறக்கலந்து தோன்றுஞ் சிவமும் இந் நிலையில் ஈசுவரன் எனப் பெயர்பெற்று நிற்பன் என்ப. ஈசுவரன் எனினும் தலைவன் எனினும் ஒக்கும். இங்ஙனம் நிற்குந் தலைவற் கேற்பச் சுத்த மாயையில் இவராற் கலக்குண்ட பகுதியும் இவற்கு ஒத்துத் தோன்றுமாகலின், அங்ஙனந் தோன்றுஞ் சுத்த மாயாதத்துவமும் ஈசுவர தத்துவமெனப் பெயர் பெறுமென்று ரைப்ப. இவ்வீசுவர தத்துவத்திற் றலைவன் எனப் பெயர்பெற்று நிற்கும் இறைவற்கும்,. இதற்குமேற் சத்திசிவம் என்னுந் தத்துவங்களில் நிற்கும் இறைவற்கும் எவ்வாற்றானும் வேற்றுமை இல்லையென்று ஓர்க. கீழுள்ள எல்லாத் தத்துவங்களையும் ஒடுக்கிக்கொண்டு சத்திசிவதத்துவங்களில் நிற்கும் முதல்வன் அவ்வாற்றால் ஒடுக்கச் சிவன் எனவும், அறிவுந்தொழிலும் ஒக்கநின்று சுத்த மாயையைக் கலக்கி அதன்கண் அந்நிலைக்கு ஏற்ற சாதாக்கிய தத்துவத்தைப் பிறப்பித்து மேலும் பல தத்துவங்கள் அதன்கட் பிறக்குமாறு அதனை ஏவுநிலையில் அதன்கண் நிற்கும் முதல்வன் ஏவற்சிவன் எனவும் பெயர் பெற்றாற்போல், இவ்வீசவரத்தத்துவத்தில் அவ்வேவுதற் றொழிற்குத் தலைவனாய் அதனை மேன்மேல் நடை பெறுத்து நிலையில் நிற்கும் முதல்வனும் தலைமைச் சிவன் எனப் பெயர்பெற்று நிற்பனென்க. ஒடுக்கச் சிவனை இலயசிவன் சத்தன் நிட்களன் எனவும், ஏவற்சிவனைப் போகசிவன் உத்தி யுத்தன் சகளநிட்களன் சதாசிவன் எனவும், தலைமைச் வினை அதிகாரசிவன் பிரவிருத்தன் சகளன் ஈசுவரன் எனவும் வடமொழிக்கண் ஆகமநூலார் பெயர் வழங்குவர். இவ்வீசுவரதத்துவத்திற் றலைவனாய் நிற்கும் இறைவனால் இதன்கண் இருத்தப்படும் உயிர்களும் பலர் உளர். இயற்கையே மலவலி குறைந்த விஞ்ஞான கலரில் தலைமை நடாத்தும் விருப்பம் மீதூரப்பெற்ற மலப்பற்று மட்டுமுடை யோர் இதன்கண் இறைவனருளால் .இருப்ப ரெனவும், அவர் அநந்ததேவர் முதல் எண்மராவரெனவும் அறிவு நூல்கள் பகராநிற்கும். இவரெல்லாம் முதல்வனாகிய சிவபிரான் ஏவல்வழி நின்று தாமுந் தலைமை நடாத்திப், பின்னர் அதன்கண் உவர்ப்புடையராயதும் அவனருளாற் சாதாக்கிய தத்துவத்தின் கண் மேலுயர்த்தப்பட்டு ஆண்டிருந்தவாறே இறைவனடியைத் தலைக் கூடிவீடுபே றெய்துவரென்க. இவ்வீசுவர தத்துவமும், இதற்கு மேலுள்ள ஏனைமூன்று தத்துவங்களும் நுண்ணிய இயல்புடையன வாய், மேன்மேற் செல்லச் செல்ல ஒன்றி னொன்று ஏற்ற மான நுண்மை யுடையன வாய் இருப்பனவாகும். இத் தத்துவங்களில் வைகும் உயிர்களும் அவ்வவற்றிற்கேற்றபடி முதலிரண்டில் மலக்கட்டு முற்றும் நீங்கி வீடுபெற்ற தூய உயிர்களாயும், மூன்றாவதிற் சிறிதுள்ள மலத்தடையும் நீங்குந்தரத்தில் உள்ளாராயும், நான்காவதில் அதிகார மலப்பற்று ஒன்றேயுடையராயும், அளவு படாத ஒளியும் அறிவும் வாய்ந்தாராயும், தாந்தாம் விரும்பிய இன்பங்களை வியக்கற் பாலதாம் எல்லையற்ற அழகொளி வீசுங் கடவுண் மாதரரோடு நுகரும் நுகர்ச்சிப் பேற்றினைச் சிவபிரான் றிருவருளாற் பெற்றாராயும் வைகுவரெனப் பௌட்கராக மங் கூறாநிற்கும். எனவே, இத் தத்துவங்கள் நான்கும், இவற்றின்கண் வைகும் உயிர்களும் மிகநுண்ணிய சூக்கும நிலையினவென்பது உணரற்பாற்று. இனி, மேற்கூறிய ஈசுரம் சாதாக்கியம் என்னும் இருதத்துவங்களினும் வைகும் மகேசுரர் சதாசிவர் என்னும் விஞ்ஞான கலர் மலமறைப்புப் பெரிதுமில்லாதவராகையால் அவர் பொருட்டு அத்தத்துவங்களைத் தோற்றுவிப்பான் வேண்டிச் சத்தியினை ஏவித் தொழில் செய்வித்த முதல்வன், அவரினும் அறிவிற் சிறிது குறைந்தாராயுள்ள மகாமந்திரர் கள் உருத்திரர்களென்னும் இவர்க்கு அறிவினைப் பெரிதும் விளங்கச் செய்தற்பொருட்டச் சிவமாகிய தன்னறிவினை மேற்படக் காட்டித் தன் சத்தியின் றொழிலைக் குறைத்து நின்றநிலையில் உருத்திரன் எனப் பெயர் கூறப்படுவன் என்க. இவற்கேற்ப இவனோடொத்து நிற்குஞ் சுத்தமாயா தத்துவமுஞ் சுத்தவித்தை எனப் பெயர் பெறா நிற்கும். ஈண்டு உருத்திரன் என்று ஓதப்பட்டோன் மாசங் காரத்தைச் செய்யும் முழுமுதற் கடவுளாகிய சிவ பிரானே யல்லது, இச் சுத்தவித்தியா தத்துவத்தின்கண் அவனால் நிறுத்தப்பட்ட அதிகார மலப்பற்றுடைய உருத்திரரும், இதன்கீழுள்ள அசுத்த மாயையின் நடுவண் வைகுவாரான சீகண்டருத்திரரும், பிரகிருதியிற் குண தத்துவத்தி லிருப்பாரான உருத்திரரும் அல்லரென்பது கடைப்பிடிக்க. உருத்திரன் என்னும் பெயரொப்புமையே பற்றிச் சுத்தவித்தையினும் பிருகிருதியினும் அப்பெயரோடு வைகும் பிரளயாகல சகலருத்திரரும் முழுமுதற் கடவுளும் ஒருவரேயாதல் செல்லாமை இதனாற்றெற்றென விளங்கா நிற்கும். ஈசுரம் சாதாக்கியம் என்னும் மேலிருதத்துவங்களும் ஒன்றினொன்று நுண்ணியதாயிருத்தலிற் சூக்கும தத்துவங்க ளென்றும், இச் சுத்தவித்தை அவ்விரண்டனையும் நோக்கப் பருவடிவிற்றாமாகலின் இதனைத் தூலதத்துவமென்றும், இவ்வாற்றால் இவற்றுக்கேற்ப இவற்றின் கண் இருப்பாரான உயிர்களும், ஏனையிரண்டினும் வைகுஞ் சதாசிவர் மகேசுரரைக் காட்டினும் அதிகார மலப்பற்று மிகுதியுமு டைய ரென்றும் உணர்ந்துகொள்க. இவற்றுண் மேன்மேற் றத்துவங் களிலுள்ளோர் தமது அதிகாரமலப்பற்றும் விட்டு வீடுபேறெய்திய வளவானே, கீழ்க்கீழ்த் தத்துவங்களி லுள்ளோரும் மேன் மேலுயர்த்தப்பட்டு, அம்மேற்றத் துவங்களி லிருந்தவாறே முற்றுந் தூயராய்ச் சிவபிரான் திருவடியைத் தலைக்கூடி வீடுபேறெய்துவரென அறிவு நூல்கள் கூறுகின் றன. சாதாக்கியம், ஈசுரம், சுத்தவித்தை என்னும் இம்மூன்று சுத்த மாயா தத்துவங்களினும் இருப்பாரான சதாசிவர் மகேசுரர் மகா மந்திரர் உருத்திரரென்னும் இவர்க்கெல்லாம் ஆணவமலத் தொடர்பு சிறுதுளதேயன்றி, ஏனை அசுத்த மாயை பிரகிருதி மாயையில் இருப்பாரான பிரளயாகலர் சகலர்க்குப்போலக் கன்மம் மாயை என்னும் வேறிரண்டன் றொடர்பில்லாமையால் அவர் வினை வழியின்றியே தமக் குரிய தொழில்களை நடாத்திக் கொண்டு இன்ப நுகர்ந்திருப்பர். தந்தொழில் நடாத்துதலும் இன்ப நுகர்தலும் வினையால் உளவான வாகலின் ஆண்ட வர்க்கு வினையின்றியே அவை நிகழு மென்றல் யாங்ஙனம் பொருந்து மெனின்; அற்றன்று, ஆணவமலப்பற்றுப் பெரும் பாலும் நீங்கித் தூயராய் நிற்கும் அவர்க்கு, அப்பற்றின் மிகுதி யால் உளவாம் இருவினைகளும், அவற்றின் பயன்நுகர்ச்சி களும் உண்டென்றல் ஏலாமை யானென்பது. அற்றேல், அவர் நடாத்துந் தொழிற்கும் இன்ப நுகர்ச்சிக்கும் ஏதுவாவது என்னையெனின்; ஆண்டு அவர்பாற் செறிந்து நிற்குஞ் சிவபிரான் றிருவருளே அவரை அவ்வாறேவி அவற்றை அவர் மாட்டு விளைத்தற்கு முதலாய் நிற்கு மென்றோர்ந்து கொள்க. அதுவேயுமன்றி, மலமாசுதீர்ந்து இறைவன் ஏவல்வழி நின்று அவனருளிற் றோய்ந்திருப்பாரான அவர்க்குத் தூய அறிவு விளக்கம் உண்டாகலானும், இவ்வறிவு விளக்கத்தாற் செய்யுஞ் செயல்களும் நுகரும் இன்ப நுகர்ச்சிகளும் வினையின் வழியவாதல் செல்லாமை யானும் அவர்க்கு வினையன்றியே யாவும் நிகழுதல் தேற்றமாமென்க. அற்றாயினும், உடம்பும். உடம்பின் அகத்தும் புறத்துமுள்ள கருவிகளும், இவ்வுடம் போடுகூடி இயங்கும் நிலமும், அதன்கண் உள்ள நுகர் பொருள்களும் வாய்ப்பினன்றித் தொழில் நிகழ்ச்சியும் இன்ப நுகர்ச்சியும் உளவாதல் ஏலாமையின், மாயையின் தொடர் பில்லாத விஞ்ஞான கலர்க்கு அவையிரண்டும் உளவென்றல் யாங்ஙனம் பொருந்துமெனின்; நன்று வினாயினாய், அசுத்த மாயை பிரகிருதிமாயையிற் கிடப்பபாரான நம்மனோர்க்குப் போலத் தூயவல்லா உடம்புங் கருவிகளும் நிலமும் நுகர் பொருளும் விஞ்ஞான கலர்க்கில்லை யென்றதே யன்றிச் சாலவுந் தூயவாய உடம்புங் கருவிகளும் நிலமும் நுகர் பொருள்களும் அவர்க்கில்லையென்று ஆகமங்கள் கூறாமை யாலும், பெரிதுந் தூயவாய அவை சுத்த மாயையின் கண்ணே உளவாய் எல்லையற்ற கழிபேரின்பத் தினை அவர்க்குப் பயக்கு நீரவாய்த துலங்குமெனவே அவ்வறிவு நூல்கள் யாப்புறுத் தோது தலானும் தூய்தல்லா மாயையின் பயிற்சியே பற்றி அங்ஙனம் வினாவுதல் பொருந்தாதென் றொழிக. ஆணவ மலக்கட்டுச் சாலப் பெரிதுடையரானமை பற்றி நம்மனோ ரெல்லாம் அந்நிலைக் கேற்ப அசுத்த மாயையின்கண் இருத்தப்பட்டு அதன்கட் டிரட்டப்பட்ட உடம்புங் கருவிகளும் நிலமும் நுகர் பொருள்களும் பெற்றாற்போலவே, அதன்கட்டு நீங்கித் தூயரான விஞ்ஞான கலரும் தந்நிலைக்கேற்பச் சுத்த மாயையின்கண் இறைவனரு ளால் நிலனும் நுகர்பொருள்களும் பெறலாயினாரென்க. வாலாமாயையில் வாழ்குநரான நம்மனோர்க்குள்ளும் அறிவினேற்றமும் அகம்புறந்தூய்மையும் உடையராகப் பெற்றார்க்கு அவர்தந் தகவுக்கேற்ற ஒள்ளிய உடம்புங் கூர்த்த கருவிகளும் அழகிய மாளிகைகளும் இனிய நுகர் பொருள் களும் இறைவனருளால் வாய்த்தலும், அறிவுந் தூய்மையும் இல்லார்க்கு அவர் தகுத்திக்கொத்த உவர்ப்புடம்பும் மழுங்கிய கருவிகளும் அழுக்கிடங்களும் அருவருப்பான பொருள்களும் அல்லாது வேறுயர்ந்தன வாயாமையும் பகுத்துக் காண மாட்டுவார்க்கு, இவ்வுலகத்தினும் உயர்ந்தன வாகிய மேலுலகங்களிலும் இப்பெற்றிப்பட்ட வேறு பாடுகள் உண்மை மறுக்கப்படாதென்பது தெற்றென விளங்கும். அற்றேலஃதாக, மும்மலக்கட்டுடைய சகலர் நம்ம னோரி னுந் தூயரான பிரளயாகலரும், இருமலக்கட்டுடைய பிரளயா கலரினுந் தூயரான விஞ்ஞான கலரும் உளரென்பது எற்றாற் பெறுதுமெனின், அறிவு நிகழ்ச்சியில் ஏற்றக் குறைபாடுடையன வாக நம்மனோர் கண்ணெதிரே காணப் படும் பல்வேறுயிர் களின் இருப்பே நமக்கு மேலும் அவ்வகை வேறுபாடுடைய உயிர்களுண்மையை நன்கு அறிவுறுத்தும். புன்முதலிய ஓரறிவுயிர் தொடங்கி மக்களென் னும் ஆறறிவுயிர் ஈறாக நேரே காணப்படும் பலதிறப்பட்ட உயிர்களும் அங்ஙனங் குறுகியும் விரிந்தும் நிகழா நின்ற பல்வேறுவகை அறிவு நிகழ்ச்சிகள் உடையனவாய் ஒரே காலத்திற் காணப்படுதலை உற்றுநோக்க வல்லார்க்கு. அவற்றுட்பல அங்ஙனம் விரிந்த அறிவு நிகழ்ச்சி யுடையன வாய் மேன்மேற் பிறவிகளில் நிற்றற்கும் மற்றும்பல சுருங்கியஅறிவு நிகழ்ச்சியுடையனவாய்க் கீழ்க்கீழ்ப் பிறவி களில் நிற்றற்கும் அவை தம்மைப் பொதிந்த ஆணவமலம் எல்லாவுயிர்களையும் ஒரேவாறாகப் பற்றாமற் பலவற்றைச் செறியப்பற்றியும் ஏனைப்பலவற்றை நெகிழப் பற்றியும் இயற்கையிலேயே பலபடியாக அவை தம்மை மறைத்திருத் தலே காரணமாமென்பது நன்கு புலனாம். அவ்வாறன்றி அஃது எல்லாவுயிர்களையும் ஒரு தன்மைப் படவே மறைத்து நிற்குமென்று கோடுமெனிற் பல்லுயிர்கள் ஓரறிவே யுடையன வாயும், ஏனைப்பல ஈரறிவே யுடையனவாயும் மற்றும் பல மூவறிவே யுடையனவாயும், பின்னும் பல நாலறிவே யுடையனவாயும், இன்னும் பல ஐந்தறிவே யுடையன வாயும் மேலும் பல ஆறறிவே யுடையனவாயும் இருத்தலும், இவ்வாறு ஓரறிவு முதலாகவுடைய உயிர்வகைகளுள்ளும் பல வேறு வகையான இனங்களும் அவற்றுக்கேற்ற உடம்புளும் அவ்வுடம்புகளில் அமைந்த உறுப்புகளும் அவை வாயிலாகத் தோன்றும் அறிவு நிகழ்ச்சிகளும் எண்ணிறந்த வேறு பாடுகளுடனும் ஏற்றக்குறைவு களுடனுங் காணப்படுதலும். எல்லைகாண்டலரிய இவ்வேறுபாடு களுக்கு இசையவே இவ்வுயிர்கடமக் கெல்லையற்ற இன்பத்துன்ப நுகர்ச்சி வேறுபாடுகள் உளவாதலும் என்னை யென்று வினாவுவார்க்கு அங்ஙனங் கொள்வார் இறுக்கலா காமையின். ஆணவம் ஒரு தன்மைப்பட உயிர்களை மறைக்கு மென்று அவ்வாறு கோடல் பொருந்தா தென்றொழிக. இங்ஙனமாக ஆணவமலம் பல்வகை உயிர்களைப் பல்வேறு வகையாகப் பற்றியிருத்தல் கண்கூடாகத் தெளியக் கிடத்த லின்; இதுகொண்டு, நம்மனோரினுங் குறைந்த ஆணவமலக் கட்டும் அதற்கேற்பக் குறைந்த இருவினைத் தொடர்புடைய பிரளயாகலரும், அவரினுஞ் சாலக் குறைந்த ஆணவப்பற்று உடைய விஞ்ஞானகலரும் அவரவர்க்கேற்ற மேன்மேலு லகங்களில் வைகி, இறைவன் திருவுளக்குறிப்பின் வழிநின்று ஐந்தொழில் நடாத்தி அவ்வாற்றான் முற்றுந்தூய ராய் இறைவன் திருவடியைத் தலைக்கூடுவரென்பதூஉந் தெளியப் படுமென்க. இவ்வாறு, சுத்தவித்தை ஈசுரம் சாதாக் கியம் சத்திசிவம் என்னுஞ் சுத்தமாயா தத்துவங்கள் ஐந்தின் இயல்பும், அவற்றிலிருப்பாரான உயிர்களின் தன்மையும் உணர்ந்து கொள்க. இதுகாறும் விளக்கியவாற்றான் ஆன்ம தத்துவம் இருபத்துநான்கும், வித்தியா தத்துவம் ஏழும், சிவ தத்துவம் ஐந்தும் ஆக முப்பத்தாறு தத்துவங்களினியல்பும் தெளிந்து கொள்க. 11. அத்துவாக்கள் இனி, மந்திரம் பதம் வர்ணம் தத்துவம் புவனம் கலை என்னும் ஆறத்துவாக்களுள் வைத்து இம் முப்பத்தாறு தத்துவங்களையும் வகுத்தடக்கிக் காட்டுபவாகலின், அதுவும் ஒரு சிறிது விளக்கிக் காட்டுவாம். உலகுதான் ஓசை வடிவிற்றாய் நிற்பதூஉம், பொருள் வடிவிற்றாய் நிற்பதூஉமென இருபகுதித் தாம். மந்திரம், பதம், வர்ணம் என்னும் மூன்றத்துவாக்களும் ஓசையுலகினும், தத்துவம், புவனம், கலை என்னும் ஏனை மூன்றத்துவாக்களும் பொருளுலகினும் அடங்கும். இனி, அத்துவா என்பது அத்வந் என்னும் உட சொற்றிரி பாகும்; அத்துவா எனினும் வழி எனினும் ஒக்கும். மந்திரம் பதம் முதலிய ஆறும் வழியெனப் பெயர் பெற்றவா றென்னை யெனின்; ஓசைவடிவும் பொருள்வடிவுமாய் நிற்கும் இவை யாறும் உயிர்களுக்குச் சிறிய பெரிய கருவிகளாய் உடன் நின்று அவை தூயவாதற்கு உதவுதலோடு, தூயவாம் அவ்வுயிர் கள் அவற்றின் வழியே மேன்மேற் சென்று இறைவன் றிருவடியைத் தலைக் கூடுதற்கும் இடந்தந்து நிற்றலின் அவை அவ்வாறு வழி எனப் பெயர் பெறலாயின. இவையாறும் சிறுவடிவினவாய் ஒன்று அளாய் நிற்குங்காற் பிண்டம் எனவும், மற்றுப் பெரு வடிவினவாய் விரிந்து நிற்கும்வழி, அண்டம் எனவும் வழங்கப்படும். புன்முதன் மக்கள் தேவர் ஈறான உயிர்களின் உடம்புகளே பிண்டமாம் எனவும், இந்நிலமண்டிலம் ஞாயிற்று மண்டிலம் முதலிய உலகங்களே அண்டமாம் எனவும் அறிதல் வேண்டும். இனி, ஓசைவடிவான மந்திரம், பதம், வர்ணம் என்னும் மூன்றத்துவாக்களுள் மந்திரம் என்பது மக்கட்கு நினைவினை எழுப்பும் ஒரு சொற்றொடர். வடமொழியில் மந் என்னும் முதனிலைக்கு நினைத்தல் என்பதே பொருளாகலின், மந்திரம் என்பது நினைத்தற் கருவியாகிய சொற்றொடர்க் குப் பெயரா யிற்று. அற்றேல், நம்மனோர் நினைவுகளைத் தோற்றுவிக்குஞ் சொற்றொடர்களெல்லாம் மந்திரம் எனப் பெயர் பெறாமையும், இறைவனையும் இறைவனது வழி பாட்டையும் நினைவி லெழுப்புஞ் சொற்றொடர்களே அப்பெயர் பெறுதலும் என்னையெனின்; இறைவனல்லாத ஏனைப் பொருள்களும் உயிர்களும் மக்களுக்குயிர்க் குறுதி தருவன அல்லாமையால், அவற்றை நினைவின்கண் எழுப் புஞ் சொற்றொடர்களும் அப்பெரும்பயன் றராவாய் வறிதாவனவே யாம்; மற்று எல்லாம்வல்ல முதல்வனொரு வனே உயிர்களில் எறிய மலக் கறை கழூஉவி அவை தமக்குத் தனது திருவடிப் பேரின்பத்தை நல்கவல்லனாகலின் அவனையும் அவன்றன் விழுமிய தன்மைகளையும் ஓவாது நினைவிற் றோற்றுவிக்குஞ் சொற்றொடர்கள் மட்டுமே அவ்வாறு மந்திரங்கள் எனச் சிறந்தெடுத்து ஆன்றோரான் வைக்கப்பட்டன. இவ்வாறு மந்திரங்கள் வீடுபேற்றிற்கு ஒருவழியவாதல் பெறப்பட்டமை யின் அவை ஓர் அத்து வாவாதல் வாய்வதேயாம் என்க. ஓம் சிவனே போற்றி என்றற் றொடக்கத்துச் சொற்றொடர்க ளெல்லாம் மந்திரங் களாதல் கடைப்பிடித் தறிந்து கொள்க. இன்னோரன்ன சொற் றொடர்களில் நினைவை இருத்தி அவற்றை இடைவிடாது பயிலப்பயில, அங்ஙனம் பயில்வார் இறைவன் றிருவருட் பேற்றிற்குரியராதல் திண்ண மென்க. இறை வனையும், அவன்றன் அரும்பெருந் தன்மைகளையும் நினை விற் றோற்றுவிக்குஞ் சொற்றொடர்கள் எம்மொழியில் உள வேனும், அவை தம்மைப் பயில்வாரைப் புனிதராக்கி இறைவன் றிருவடிக்கண் உய்த்தல் ஒருதலையாகலின் இவை ஒரு மொழிக்கே, அன்றி ஒருசார் மக்களுக்கே உரியவென்று கொள்ளற்க. எல்லா மொழிகளுள்ளும், எல்லா நாட்டினுள் ளும், எல்லா மக்களுள்ளும் இறைவன்றிருவருளைப் பெற்ற அடியார் உளராகலின், எம்மொழியிலும் எந்நாட்டிலும், எம் மக்களிலும் வீடு பேற்றினை எய்துதற்குரிய வழியும் அதன்கட் செல்வாரும் உண்மை திண்ணமாமென்க. கடவுள் எங்கும் உளனாய் எல்லார்க்கும் அருடருபவனாயிருத்தலை யுணராது, தமது சிற்றறிவையே பேரறிவாகத் திரிபுறக் கொண்டு செருக்கிமயங்கும் புல்லறிவினார் சிலர் வடசொன் முதலான ஓரோவொரு மொழிக்கண் மட்டுமே மந்திரங்கள் உளவெனவும், அவை தம்மைப் பயிலும் ஒரு பகுதியார் மட்டுமே வீடுபேய்துவரெனவுந் தருக்கிமொழிவர்; அவர் கூற்று இறைவன தருட்டன்மையை யுள்ளவாறுணராது குழறும் பொய்க் கூற்றாதல் மெய்யறிவு டையார்க்கெல்லாம் இனிது விளங்கு மாதலின், அது கொள்ளற் பாலதன்றென விடுக்க. இனி, மந்திராத்துவாவான ஒவ்வொரு சொற்றொ டரும் பல பதங்களால் ஆக்கப்படுதலின், அம்மந்திரங்கட் கெல்லாங் காரணம் பதங்கள் அல்லது சொற்களேயா மென்பது தானே போதரும், இவ்வாறு சொற்றொடர்களை ஆக்குஞ் சொற்களின் தொகுதியே பதாத்துவா எனப் பெயர் பெற்றது. ஓம் சிவமே போற்றி என மேற் காட்டிய மந்திரத்தில் ஓம் சிவம் ஏ போற்றி என்னும் நான்கு சொற்களும் பதங்களாம். இங்ஙனம் ஒவ்வொரு மொழிக் கண்ணுமுள்ள சொற்கள் எண்ணிறந்தன வாமென்க. இனி, ஒவ்வொரு பதமும் ஒன்றல்லது பல எழுத்துக் களால் ஆக்கப்படுதலின் இவ்வெழுத்துகளே வர்ணாத்துவா எனப்பட்டன. வர்ணம் என்னும் வடசொல் எழுத்து என்னும் பொருட்டு மேற்குறிப்பிட்ட மந்திரத்தில் ஓ முதலாகிய எட்டெழுத்துக்கள் இருத்தல் காண்க. இம் மந்திரம் பதம் வர்ணம் முதலிய மூன்றும் எழுத் தோசைகளேயாதலின், இவை வைகிரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை என்னும் நால்வகை வாக்குகளுள் அடங்குவன வாம். இவற்றுள், வைகரிவாக்காவது தன் நின்று பேசுவான் செவிக்கும் முன்நின்று கேட்பான் செவிக்கும் நன்கு புலனாவதாய்ப், பேசுவான் நினைந்த பொருளைக் கேட்பானுக்கு அறிவுறுத்துப் புறத்தே விளங்கித் தோன்றுவது. மத்திமை வாக்காவது புறத்துள்ளார் செவிக்குப் புலனாகாத மெல்லோசையாய், ஒருவனது மிடற்றின்கண் மட்டுமே நிகழ்ந்து, அவற்குப் பல்வேறு ணர்வுகளைப் பயக்கும் நீரது. பைசந்திவாக்காவது, இனிப் பிறப்பதாகிய மயிலின் தோகையிற் காணப்படும் ஐவகை நிறங்களும் அதன் முட்டைக்குள் நீரில் நுண்ணிய வடிவில் அடங்கி நிற்றல்போல, மிடற்றின்கண் வேறு வேறு பிரிந்து நின்ற எழுத்துக்களெல்லாம் நுண்ணிய வடிவில் நினைவின் கண் அடங்கிப் பல்வேறுணர்வுகளைப் பயவாது, பொது வுணர்வு மட்டுமே நிகழ்தற்குக் கருவியாய் நிற்பது. சூக்குமை வாக்காவது தன்காரியமாய்த் தோன்றும் பைசந்தி மத்திமை வைகரி என்னும் மூன்று மட்டும் அழிவெய்தத், தான் அழியாதாய் அகத்தே அறிவு ஒளி ஓசையாய் விளங்கா நிற்பது. வைகரிவாக்கைச் செவியோசை எனவும், மத்திமை வாக்கை மிடற்றோசை எனவும், பைசந்திவாக்கை நினை வோசை எனவும் சூக்கும வாக்கை நுண்ணோசை எனவுந் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்க. மந்திரம் பதம் வர்ணம் என்னும் மூன்றத்துவாக்களும், இவை பிறத்தற் கிடமாகிய நால்வகை வாக்குகளும் ஓசை வடிவிற்றாகிய சொல்லுலகம் எனப் பெயர் பெறும். இவ் வெழுத்தோசைகளெல்லாம் பிறத்தற்கு முதற் காரணப் பொருளாவது விந்துவென்னுஞ் சுத்த மாயையாம் என்பதனை மேல் விந்து நாதங்களைப் பற்றி ஆராய்ந்தவழி இனிது விளக்கிக் காட்டினாம். ஐம்பெரும் பொருள்களுள் இறுதிக்கண்ணின்ற வான்வெளியே ஓசைக்கு முதற் காரணமாம் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததொன்றாக. அதனை விடுத்து விந்துவே அதற்கு முதற்காரணமாமென்றல் யாங்ஙனமெனிற் கூறுதும். மண், புனல் அனல் கால் என்னும் ஏனை நாற்பெரும் பொருள்களுக்கும் இடங்கொடுத்து அவற்றையெல்லாம் ஊடுருவி நிறைந்துநிற்கும் அத் துணையே வான்வெளி உடையதல்லது, அதுதான் இயங்கி ஏனையவற்றை இயக்குந் தொழிற்பாடு உடைத்தன்று, தொழிற்பாடு இலதாகவே, அத்தொழிற்பாட்டின்கட் டோன்றும் எழுத்தோசையும் உடைத் தன்று. காற்றுச் சுழன்று வீசுமிடத்தும், முகில் ஒன்றோடொன்று உரைசுமிடத்தும், தீ முறுகி எரியுமிடத்தும், நீர் விரைந்த செல்லுமிடத்தும், ஓசையுண்டாதலைச் செவிப்புலனால் அறிகின்றோம். இவ்வியக்கம் இல்லாமல் அவையெல்லாம் வறிதே இருக்குங்கால் அவை அவ்வோசை உடைய ஆகா மையும் இனிது அறியப்பட்டவாறேயாம். நிலம் முதல் நாதம் ஈறாகிய எல்லாத் தத்துவங்களும் விந்துவின் இயக்கத்தான் மட்டுமே தோற்றமுற்றெழுந்து இயங்குகின்றன என்பதை மேல் இனிதெடுத்து விளக்கினாமாகலின், விந்து ஒன்றுமே எல்லாவற்றிற்கும் முதலான தொழிற்பாடு உடைத் தாம். அஃது உடைத்தாகவே, விந்து ஒன்றுமே எல்லா ஓசைகட்கும் முதற் காரணமாம் என்க. அற்றன்று, விந்துவும் அறிவில் பொருளேயாகலான் அதுவுந் தானாகவே இயங்கமாட்டாது. அஃது இயக்க முடைத்தாவதூஉம் இறைவனோடு ஒற்றித்து நிற்கும் இறைவி யால் இயக்கப்பட்ட வழியேயாம். அதனால், இறைவியே எல்லா ஓசைகட்கும் முதற்காரணமா மென்று ரைத்தல் வேண்டும்; அங்ஙனம் உரைப்பின், அறிவுருவின ளாய இறைவியுந் தொழிற் பாடு உடையளாம் என்று உரைக்க வேண்டுதலின், தொழிற் பாடுடைய ஏனை அறிவில் பொருள் போல வரையறைப்பட்டு இறைவியும் வேறுபாடுறுவள் போலுமென்று கொள்ளப் படுமாலோ வெனின்; நன்று கடாயினாய், மலத்தாற் கவரப்பட்டு மாயையிற் றுவக்குறும் நம்மனோர் சிற்றறிவுகள் நடை பெறும் முறையே பற்றித், தூயளாய் எல்லையற்ற அறிவின ளாகிய இறைவியினியக்கத்தை அளந்தறியப் புகுதல் பொருந் தாது. எல்லாப் பொருள்களின் உள்ளும் புறம்புமாய் எல்லை யற்று விரிந்து நிற்கும் அறிவுரு வினளாய இறைவி ஏனை வரையறைப் பொருள் போலத் தானும் இயங்கிப் பிறி தொன்றனையும் இயக்குவள் என்றல் பொருந்தாது. இடத் தானுங் காலத்தானும் வரையறுக்கப்படும் பருப்பொருள் நுண்பொருள்களே ஓரிடத்தை விட்டுப் பிறிதோரிடத் திற்குப் பெயர்ந்து செல்வ தன்றி, அவற்றான் வரையறுக்கப் படாத விரிந்த அறிவுப்பொருள் அவ்வாறு வெல்வதின்று. அதனால், இறைவி தான் இயங்காமல் நின்றே விந்து மாயையை இயக்குவள் என்க. அஃது யாங்ஙனம்? தானும் இயங்கிப் பிறிதொன்றனையும் இயக்கும் முறையே எருது ஊருஞ் சகடை முதலியவற்றிற் கண்டனமாலெனின், அது பெரும்பாலும் ஒக்குமாயினும், சிறுபான்மை தான் இயங்காது நின்றே பிறிதொன்றனை இயக்குமாறும் உண்டென்பது இருந்தாங் கிருந்து இருப்பூசியை இழுக்குங் காந்தக் கல்லின்கண் வைத்துக் காணப்படும், அல்லதூஉம், நமதுடம்பினுள்ளிருக்கும் உயிர் தான் அசைவில்லதாய் இருந்தே அவ்வுடம்பின் அகத்தும் புறத்தும் உள்ள உறுப்புக்களை இயக்குந்தன்மையும் நம்மனோர் ஒவ்வொரு வரும் அறிந்ததொன்றேயாம். ஆகவே, எல்லாம் வல்ல இறைவி தான் அறிவுருவினளாய் அசையா திருந்தே, தன்னோடு ஒன்றியைந்து நிற்கும் விந்துமாயையை அசைத்து இயங்கச் செய்வளாகலின், அவள் அதுபற்றி வேறுபாடு சிறிதும் உறுவள் அல்லளென்க. இனி, அவள்தான் சிறிதும் அசை விலளாகலின், அசைவினாற் பிறக்கும் எழுத் தோசைகட் கெல்லாம் அவள் காரண மாதலுஞ் செல்லாது. எனவே, இறைவியால் உந்தப் பட்டுத் தானும் இயங்கிப் பிறபொருள் களையும் இயக்கும் விந்து வொன்றுமே எல்லா எழுத்தோசை கட்கும் முதற்காரண மாதல் பெறப்பட்டது. அற்றன்று, இடைவெளியிலுள்ள அணுக்கள் ஒன்றை ஒன்று மோதுதலால் ஓசை உண்டாகின்றதென இஞ் ஞான்றை இயற்கைப்பொரு ணூலாரும் ஆராய்ந்துரைக் கின்றமையின், வான்வெளியே எல்லா எழுத்தோசைகளும் பிறத்தற்கிடமா மெனின்; நன்று கூறினாய்! எல்லாவுறுப்புக்க ளோடுங் கூடிய ஒருவன் ஓரிடத்திருந்து வாயைத் திறந்து கூறிய ஒரு சொல் இடைவெளியில் நின்ற அணுக்களை அசைத்து அவ்வாற்றாற் சிறிது எட்டநின்ற வேறொருவன் செவிக்கட்சென்று படுவதல் லாமல், எவரும் பேசாமலி லுருந்துழி அங்ஙனம் எழுத்தோ சைகள் இடைவெளியிற் றோன்றக் காணாமையின், எழுத் தோசைகட்குக் காரணம் இடைவெளியே யாமென்றல் பொருந்தாது. அவ்வாறு கோடலாகாது; புறத்தேயுள்ள இடை வெளியே பேசுவான் அகத்தும் உளதாகலின், அவனுள் நின்று எழூஉம் அவ் வோசைகள் இடைவெளியைக் காரணமாய்க் கொண்டு போதரும் என்பதே எமது கருத்தாமாலெனின்; உடம்பினுட் கருவிகளும் அவற்றை இயக்கும் உயிர்க்கிழவனும் வாளா திருந்துழி அகத்துநின்ற இடைவெளி அவ்வெழுத் தோசை களைத் தோற்றுவிக்குமோவெனக் கடாயினார்க்கு இறுக்கு மாறு இன்மையின், இடைவெளியே எழுத்தோசைகட் கெல்லாங் காரணமாமென்றல் ஒருவாற்றானும் பெறப்படா தென்க. அற்றேல், அகத்தும் புறத்துமுள்ள உடம்பினுறுப்புக் களும் அவற்றை இயக்கும் உயிர்க்கிழவனது முயற்சியுமே எழுத்தோசை கட்கெல்லாங் காரணமாதல் கண்கூடாய் அறியக்கிடத்தலின், அவற்றைவிடுத்து, அங்ஙனம் அறியப் படாத விந்து என்பதே அவற்றின் காரணமாமென்றல் யாங்ஙனமெனின்; உடம்பும் விந்துவினியக்கத்தினாலேயே படைக்கப்பட்டு, அஃது அசைக்கவே அசைந்து வருகின்றமை யின், விந்துவினின்று ஓர் எழுத் தோசை பிறக்குங்கால் வாயினுறுப்புக்களுள் அதற்கு ஏற்பன இயங்கி அதனைப் புலப்படுத்துகின்ற தென்க. அற்றன்று, உயிர்க் கிழவனது முயற்சியால் அவன் நினைந்த எழுத்தோசைக்கு ஏற்ப அவன் வாயுறுப்புக்கள் அசைந்து அதனைப் புலப்படுத்துகின்ற தென்றுரைத்தலே பொருத்தமுடைத்தா லெனின்; அஃதொவ்வாது, உயிர்க்கிழவன் உடம்பின் அகத்தே நின்றானேனும் ஆண்டுள்ள மிக வியப்பான உறுப்புக்களின் இயல்புகளையும் அவை தம்மை இயக்கு மாற்றினையும் ஒரு சிறிதும் உணரா னென்பதற்கு, நம்மனோரில் எவரை அருகழைத்து நீர் எங்ஙனங் கண் விழித்துப் பார்க்கின்றீர்? Ú® gh®¤j‰F¡ fUÉahd EkJ ÉÊ E«KŸns v›thW mikªâU¡»‹wJ? என்று வினவினால் அவர் அதற்கு விடைபகரத் தெரியாமற் றிகைத்தலே சான்றாம். அதனால், உயிர்க்கிழவன் ஒன்றைச் சொல்ல நினைந்தவளவானே அவனோடு உடன் கலந்து நிற்கும் இறைவியின் அருளாற்றல் தன்னோடு ஒற்றித்துள்ள விந்து மாயையென்னும் மின்னை இயக்கி உதவ அம்மின் நரம்புகளின் வழியே கடிது ஓடி வாயினுறுப்புக்களை இயக்கித் தன்கட் பிறக்கும் எழுத்தோசை களைப் புலப் படுத்துகின்றதென ஓர்ந்து கொள்க. உயிர்க்கிழவன் வேண்டியதோரியக் கத்தினை அகப்புற உறுப்புக்களில் ஓடிச் சென்று அவற்றின்கண் விளைக்கும் ஆற்றல் மின்னாற்ற லோடு ஒத்ததாயிருக்கின்றதென இஞ்ஞான்றை மனநூலாருங்1 கூறுதல் காண்க. அற்றேல், வாயுறுப்புக்களின் இயக்கமே அவ்வெழுத் தோசை கட்கெல்லாங் காரணமா மென்று உரைத்துமெனின்; அது பொருந்தாது; வாயினுறுப்புக்கள் அவ்வெழுத்தோசை களைப் புலப்படுத்துதற்குரிய துணைக் கருவிகளேயல்லது அவற்றிற் சுவை முதற் கருவியாகா. குடத்திற்கு மண் முதற்கருவியும், திகிரியுங்கோலுந் துணைக் கருவியும், குயவன் வினைமுதலுமாய்க் காணக் கிடத்தல் போல, எழுத்தோசை கட்கும் விந்து முதற்கருவியும், வாயினுறுப்புக்கள் துணைக் கருவியும், உயிர்க்கிழவனுந் திருவருளாற்றலும் வினை முதற் கருவியும் ஆம் என உணர்ந்து கொள்க. உண்ணின்று எழூஉம் ஓசையாகிய முதற்கருவி, வாயுறுப்புக்களின் பல்வேறு வகை இயக்கத்தாற் பலவேறு வகை எழுத்தோசைகளாய்ப் பிரிவு பட்டுத் தோன்றா நிற்கின்றன வென்றுணர்ந்துகொள்க. அற்றாயின், வான் வெளியே ஓசையினை ஒரு பண்பாக வுடைத்து என்று நூல்கள் ஓதுமாறென்னையெனின்; ஓசைதான் இருவகைப் படும், எழுத்தோசையுங் குறிப்போசை யும் என இவற்றுள் எழுத்தோசை தான் விந்துவை முதற் கருவியாய்க் கொண்டு வாயுறுப்புக்களாகிய துணைக் கருவியாற் றோன்றிப் பொருள் அறிவுறுப்பது; மற்றுக் குறிப்போசை யோ வான் வெளியை முதற்கருவியாய்க் கொண்டு மண் புனல் அனல் கால் என்னும் ஏனை நாற் பொருள் இயக்கத்தாற் றோன்றிப் பொருளறி வியாதாய் நிகழ்வது; மண்ணின் கட்டோன்றுங் குறிப் போசை கடகட நெடநெட முதலியன; புனலின் கட்டோன்றுங் குறிப்போசை களகள சலசல முதலியன; அனலின்கட் டோன்றுவன சடசட சரசர என்பன; காலின் கட்டோன்றுவன கஃறு சுஃறு என்பன வாம். இந்நாற் பொருளியக்கமின்றி இக்குறிப்போசை தானும் வான் வெளிக்கட் டோன்றமாட்டாது. இது வான்வெளியை முதற் கருவியாய்க் கொண்டு நிற்பினும், தான் றோன்றுதற்குக் காற்றினியக்கம் இல்வழி இவ்வோசை பிறர் செவிக்குப் புலனாகாது. ஒரு கண்ணாடிக் குடத்தினுள்ளே ஒரு மணியைத் தொங்கவிட்டு, அக் குடத்தின் வாயிற் காலுரிஞ்சு பொறி யைப்2 பொருத்தி வைத்து, வெளிக்காற்று உள் நுழையாமல் உட் காற்றை வெளியே உறிஞ்சி வாங்கிய பின் உள் உள்ள அம் மணியை மின்னோட்டக் கம்பியால் இயக்க, அஃதியங்குவது கட்புலனாகு மேனும் அதன் ஓசை செவிப் புலனாகாது. இனிப் பெயர்த்தும் புறக்காற்றை அதனகத்தே செல்லவிடுத்து அம் மணியை இயக்கினால், அதன் ஓசை உடனே செவிப் புலனாகாநிற்கும். இவ்வாற்றாற், காலினியக்கமே வானின் கண் ஓசையைப் புலப்படுத்தற்கு இன்றியமையாத் துணைக் கருவியாதல் துணியப்படும். அற்றேல், வான்வெளி தான் இயக்க முடைத்தாதல் காணப் படாமை யானும் காற்றினியக்கத்தான் மட்டுமே ஓசை யுண்டாதல் துணியப் பட்டமையானும், காற்றொன்றுமே குறிப்போசைக்கு முதற் கருவியாதலோடு அதன் புலப் பாட்டிற்குத் துணைக்கருவியு மாம் என்று கோடும், இதனின் வேறாக வான்வெளியே அதற்கு முதற்கருவியாமென்று கோடற்குச் சான்று வேறுகண்டில மாலெனின்; அற்றன்று, வளி உளருங்கால் மெய்க்கட் சென்றுபட்டு ஊற்றுணர் வினைப் பயத்தலும், இடிமுழக்கம் முதலான வல்லோசை தோன்றிய வழியும் அது செவிக்கட் சென்றுற்றுப் புலனாதலே யன்றி மெய்க்கட்பட்டு உற்றுணர் வினைப் பயவாமையும் என்னை என நுணுகிக் காணலுறின் ஊற்று ணர்வுக்கு ஏதுவாகி அணுக் களினும், ஓசையுணர்வுக்கு ஏது வாகிய அணுக்கள்இறப்ப நுண்ணிய வாதல் நன்கு புலனா நிற்கும். ஆகவே, ஊற்றுணர் விற்கு முதலான வளியினும், ஓசையுணர்விற்கு முதலான வான்வெளி கழிபெரு நுண்மைத் தாதலும் பெறப்படும். இரு வேறுவகை நிகழ்ச்சி களுள் ஒன்று மற்றொன்றின் நுண்ணிய தாதல் நேரே புலனாதலின், இவ்விருவேறு நிகழ்ச்சிகளுக்கு முதற் கருவியாம் பொருள்களும் இருவேறுவகையவாதல் தானே பெறப்படு மாகலின், வான்வெளியுண்மைக்குச் சான்று இல்லையென அவ்வாறு கடாதல் பொருந்தாதென்றொழிக. என்றித்துணையுங் கூறியவாற்றாற் குறிப்போசைக்கு முதற் கருவியாவது வான் வெளியாமென்றும், எழுத் தோசைக்கு முதற்கருவியாவது விந்து மாயையே யாமென் றும் பகுத்து ணர்ந்து கொள்க. என்றிது காறும் ஓசை வடிவினவாகிய மந்திரம் பதம் வர்ணம் என்னும் மூன்று அத்துவாக்களின் இயல்புகளும் விளக்கப்பட்டன. இனித் தத்துவம் புவனம் கலை என்னும் ஏனை மூன்றத்துவாக்களின் இயல்புகளும் ஒருசிறிது விளக்கிக் காட்டுவாம். இம்மூன்றும், மேலெடுத்துக் காட்டிய சொற் களாற் குறிக்கப்படும் பொருட்டொகுதியா யிருத்தலின், இவை பொருள் உலகம் என வழங்கப்படும். இவற்றுள், தத்து வாத்துவா வென்பது மேற்கூறிப்போந்த முப்பத்தாறு தத்துவங் களுமாகும். இம் முப்பத்தாறுள் சுத்தவித்தை, ஈசுரம், சாதாக்கியம், சத்தி, சிவம் என்னும் ஐந்துஞ் சுத்த தத்துவங் களாகும். இவை சுத்தாத்துவா எனவுஞ் சொல்லப் படும். இஃது ஆணவ மலச் சேர்க்கை மிகச் சிறிதே உடைய தாயும், வாலா மாயை வாலாவினையென்னும் இவற்றின் றொடர்பு அறவே இலதாயும், மாயையும் வினையும் இல்லாத விஞ்ஞான கலர்க்கும் பிரளய கலரில் உயர்ந்தோராகிய சீகருண்டருத்திரர் முதலியோர்க்கும் மந்திரம் பதம் வர்ணம் புவனம் தத்துவம் உடம்பு நுகர்ச்சி நுகர்ச்சிக் கருவிகளாயும் பயன்படுவதாகும். இதன்கண் வைகும் உயிர்கள் பெரிதுந் தூயவாதலானும், இதன் தத்துவங்கள் ஐந்தும் நேரே சிவபிரான் றிருவருளாற்றலாற் செலுத்தப்படும் நுண்மையுந் தூய்மையும் உடைய வாதலானும் இஃது அவ்வாறு சுத்தாத்துவாவென்று சொல்லப்பட்டது. இனி, இதன்கீழ் அசுத்தமாயையிற் றோன்றிய காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன் என்னும் ஆறும் இவற்றைத் தோற்றும் மாயை ஒன்றும் ஆக ஏழு தத்துவங் களும் ஆணவம் வினை என்னும் இருமலப்பற்றுடைய பிரள யாகலர்க்கு இருப்பிடமாய் அவர்க்கு உடம்பாயுங் கருவி களாயும் நுகர்பொருள்களாயும் பயன்படுதலாலும், இவற்றின் கீழ் நிற்கும் பிரகிருதிமாயையிலுள்ள வாலாமை யின் அளவு இவற்றின்கண் இன்மையாலும், ஆணவ மலத்தால் மறைப்புண்ட உயிர்களின் விழைவறிவு செயல் களை இவற்றுள் ஒன்றாகிய கலையென்னுந் தத்துவம் அம்மறைப் பினைச் சிறிது நீக்கி விளங்கச் செய்தலாலும் இவை ஒருவாற்றால் தூய்மையும் ஒருவாற்றால் தூய்மை யின்மையும் உடையவாதல் பற்றி இவை சுத்தாசுத்த தத்துவம் எனவும் மிச்சிராத்துவாவெனவும் வழங்கப்படும். அசுத்த மாயையினின்று இத் தத்துவங்களைத் தோற்றுவிக்குங்கால், இறைவியினாற்றல் நேரே அசுத்த மாயையிற் றோயாத கழிபெருந் தூய்மைத் தாதலின், அது, ஈசுரதத்துவத்திலிருப்பாரான அனந்த தேவநாயனார்பாற் பதிந்து நின்று அவரை ஊக்க, அவர் அசுத்த மாயையைக் கலக்கி அதன்கணின்று காலம் நியதி கலை வித்தை அராகம் புருடன் என்னும் ஆறு தத்துவங்களையும் தோற்றுவிப்பரென்க. இவ்வசுத்த மாயா தத்துவங்களில் இருப்பாரான பிரளயகலர்க்கு ஆணவம் வினை என்னும் இருமலங்களோடு, மாயையின் றொடர்புங் கூறப்பட்டதாகலின், இவர்க்கு மாயை இல்லையென்றல் மாறுகோளுரை போலுமெனின்; அவர்க்கு மாயை இல்லை யென்றது சுத்தமும் அசுத்தமும் விரவின இம் மிச்சிர தத்துவங்களை அன்று; மற்றுச் சாத்துவிகம் இராசதம் தாமதம் என்னும் முக்குணங்களான் மாறிமாறி உயிர்களின் அறிவை மயக்குவதாய், அசுத்த மாயா தத்துவங்களின்கீழ் உளதாகிய பிரகிருதி மாயையையே யாமென் றுணர்ந்து கொள்க. பிரகிருதிக்கு மேலுள்ள தத்துவங்களில் வைகுவா ரான பிரளயா கலர்க்கு முக்குண மயக்கம் இன்மையின், அவரறிவு தூயதாய் விளங்குதலானும், அது தூயதாகவே அது பற்றி நிகழும் வினைகளுந் தூயவாய் நிகழ்தலானும், அவ்வினை தூயவாகவே அவரைப் பற்றிய ஆணவமல வலியுஞ் சுருங்குதலானும், அவர் பிரகிருதி மாயையின் கீழிருக்கும் ஏனைச் சகலரைப் போல் மும்மலவலி மிக்கு டையரல்லராய், இறைவன் றிருவருளை நாடி மேன்மேற் செல்லுங் கழிபெருஞ் சிறப்புடையரா மென்று கடைப் பிடிக்க. இனி, அசுத்தமாயையின் கீழ்ப் பிரகிருதியிற் றோன்றி குணம் முதல் நிலம் ஈறாகிய இருபத்துநான்கு தத்துவங்களும் அசுத்த தத்துவங்களென்றும் அசுத்தாத் துவாவென்றுஞ் சொல்லப்படும். இவையிற்றின்கண் உழல்வாரான உயிர்கள் ஆணவம் வினை மாயை யென்னும் மும்மலப்பற்று மிகுதியும் உடையராய் முக்குணங்களான் மயங்குஞ் சகலர் என்றுரைக் கப்படுவர். வாலாமை பெரிதுடைய சகலர்க்கு ஏற்ற இருப்பிடமும் உடம்புங் கருவிகளும் நுகர்பொருள்களு மாகப் பயன்படுதலின் இவை அசுத்தாத்துவாவென்று வழங்கப் பட்டன. பிரளயா கலரில் உயர்ந்தோரான சீகண்ட ருத்திரர் கலாதத்துவத்தைக் கலக்கி அதன்கணின்று பிரகிருதி மாயையைத் தோற்றுவிப்பர். அப்பிரகிருதி மாயையினின்று சாத்துவிகம் இராசதந்தாமதம் என்னும் மூன்று குணங்கள் தோன்ற, அத்தத்துவங்கண் மூன்றிலுந் திருமால் நான்முகன் காலருத்திரன் என்னும் மூவரும் சீகண்டருத்திரரின் திருவரு ளாணை வழிநின்று ஏனை இருபத்து மூன்று தத்துவங் களையுந் தோற்றுவித்துப் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களைப் புரிவர். இவ்வாற்றாற், குண தத்துவத்தி லிருப்பாரான காலருத்திரர்க்கும், இவர்க்கு மேற் றலைவராய்ச் சுத்த வித்தையில் வைகிக் கலாதத்துவத்தில் முத்தொழில் புரிவாரான சீகண்டருத்திரர்க்கும், இவர்க்கு மேற் றலைவராய் ஈசுரம் சாதாக்கியம் என்னுந் தத்துவங் களில் வைகுவாரான அனந்தர் சதாசிவர்க்கும் வேறுபாடு பெரிதாதல் காண்க. இனி, இம் முப்பத்தாறு தத்துவங்களும் மூவகைப் பாகு பாடுடையவாய் மூவேறு முதற்பொருள்களின்றுந் தோன்றினவென்றல் என்னை? அவை யனையவும் ஒரு மாயையினின்றே தோன்றினவென்றலாற் படும் இழுக் கென்னையெனின்; பொருள்களை உள்ளவாறு ஆராய்ந்து அவற்றின் றன்மை களுக்கேற்ப அவற்றைப் பாகுபாடு செய்து தொகுத்தலும், அவ்வவற்றிற்கு முதலாவன இவை யென்று தேர்ந்துணர்தலுமே மெய்யறிவாம்; அவற்றை யங்ஙனம் உணராது தமக்குத் தோன்றிய வாறெல்லாம் பிழைபடக் கூறுதலே மயக்கவறிவும் அறியாமையும் ஆம். மயக்கவறிவும் அறியாமையும் உளவாங்காறும் பிறவி தூய்தாகாமையின், இவை தம்மைக் களைந்து மெய்யறிவு பெறுதற்கு முயறலினும் விழுமியது பிறிதில்லையாகலின் மாயை மூன்றா தற்குக் காரணம் மேற்காட்டிய வாற்றால் நன்கு விளங்கு மாயினும், அதனுணர்ச்சி இன்றியமையாச் சிறிப்பிற்றாதல் பற்றி மேலுஞ் சிறிது விளக்குவாம். வைர மணியும் அடுப்புக் கரியும் ஓரியல்பினவேயாமென இஞ் ஞான்றை இயற்கைப் பொருணூலார் கூறுவர். வைர மணியை நெருப்பில் இட்டால் அது கரியாதல் கண்டு அவர் அங்ஙனங் கூறா நிற்பர். என்றாலும், நெருப்பிலிடுதற்குமுன் அதன் ஒளிவிளக்கத்தையும் அழகையுங் காண்பார் எவரும் அதனை வெறுங்கரியென்று கூறுதற்கு ஒருப்படார். அஃது எற்றாலெனின், கரியின்கண் உள்ள தன்மையும் அம்மணியின் கண் உள்ள தன்மையும் பெரிதும் மாறுபட்டு நிற்றலா லேயாம். இனிக் கரியின்கண் இல்லாத அவிரொளி, வைர மணியில் வரலான தெங்ஙனமென வினவு வார்க்குக் கரியும் வைரமணியும் ஒரே தன்மையவாயினும், வைர மணியிற் றீயின் சேர்க்கை உளதானமையின் அஃது அத்துணை ஒளியுடைத்தாயிற்றெனின்; தீயின் ஒளிவிளக்கத் திற்கு உயிர்வளியின்3 சேர்க்கை இன்றியமையாது வேண்டப் படுதலானும், வைர மணியில் உயிர்வளி இல்லையென்பது இயற்கைப் பொருணூலார்க்கும் உடம்பாடாகலானும், வைர மணியினொளி தீயின் கூறென்றல் செல்லாது. மற்று, அவ்வொளி விந்துவாகிய மின்னின் கூறு அம்மணியின்கண் விரவுதலானே தோன்றியெதொன்றாம். இனி, அவ்வாறு அதன்கட் காணப்படும் மின்னொளி நிறுத்து எடையறியப்படா மையானும், அது பிறிதொரு பொருளாய்த் திரிவுபடா மையானும் அஃதென்றும் நுண்ணியதாய் நிற்கும் முதற் பொருளேயாவதல்லது காரியப் பொருளாமாறில்லை. இத்துணை விளக்கமுடைத்தாய் அம்மணியின்கண் விரவி நிற்கும் அதுதான் விந்துமாயை யென்றறியற்பாற்று. பிறிதொன்றன் உதவியை அவாவாது தன்னியற்கையிலேயே ஒளி விளக்கமுடைத்தாய்த் திகழும் அவ்விந்து பெரிதுந் தூய்தாதலும், அதுபோல் ஒளி விளக்கமின்றிக் கரிதாய் கிடக்குங் கரி தூய்தாகாமையும் நேரே கண்கூடாய் அறியப் படுதலின் ஒன்று சுத்த மாயையாம் என்றும், ஏனையது அசுத்தமாயையின் காரியமா மென்றும் பகுத்துணர்தல் வேண்டும்.இதனாற் சுத்தமாயை அசுத்தமாயை யிரண்டும் வெவ்றோமென்று கூறிய அறிவுநூற்பொருள் சாலப் பொருத்த முடைத்தாதல் காண்க. இவ்வாறு பொருளும், அப்பொருட் டன்மையும் இருவேறு வகையவாய் நிற்றலின் அவ்வப் பொருளைச் சாரும் உயிர்களும் அவ்வவற்றின் இயல்புக்கேற்ற பெற்றியாய் அறிவு விளங்கு மாறுந் தானே போதரும், சுத்த மாயையைச் சாரும் உயிர் தூய அறிவினதாய் விளங்கும், அசுத்த மாயையைச் சாரும் உயிர் இடையிடையே மயங்கும் தூய்தல்லா அறிவினதாய் நிற்கும். அற்றேல், மாயா தனுவிளக்கா மற்றுள்ளங் காணாதேல், ஆயாதாம் ஒன்றை என்று ஆசிரியர் மெய் கண்ட தேவர் ஓதுகின்றமையின், மாயை உயிர்க்கு அறிவை விளக்கும் நீரதல்லது, அதனை மயக்கும் நீரதன்றென்பது பெறப்படுதலால், மாயை முழுதுந் தூய்தென்றே கொள்வ தல்லது, அதனைச் சுத்தம் அசுத்தம் என இருவேறு வகைப் படுத்துரைத்தல் முதனூலொடு முரணுமாம் பிறவெனின்; அற்றன்று, ஆணவம் உயிர்களின் விழைவறிவு செயல்களை மறைப்பது, மாயை அவற்றை விளக்குவது என்று ஆசிரியன் கூறியதே பொருள்; மாயை ஒரோவழி உயிர்களின் விழைவறிவு செயல்களை மயக்குமென்றது தனதியற்கையால் அன்று; அது தன்கண் ஆணவமலம் செறிந்து விரவப்பெற்ற பகுதியால் அவ்வாறு அவற்றை மயக்குமென்றலின் அஃது ஆசிரியன் கூற்றொடு முரணாதென்க. என்னை? மயக்குதல், மறைத்தலாகிய தொழில்கள் ஆணவத்திற்கும் அதன் ஆற்றல் விரவிய பொரு ளுக்குமே யாண்டும் ஓதப்படுதலின். எனவே, ஆணவத்தின் ஆற்றல் மிக்கேறிய பொருட்பகுதியே அசுத்த மாயை எனவும், அதன்வலி குறைந்தொடுங்கிய பொருட் பகுதியே சுத்தமாயை எனவும் வரையறுத்துணர்ந்து கொள்க. அற்றாயின், மாயையின் ஒருகூறு ஆணவமலம் மிகுந்திருத் தற்கும்; பிறிதொருகூறு அது குறைந்திருத்தற்குங் காரணம் என்னையெனின்; இறைவன் றிருவருளொளியோடு அணுக்க மாய் நிற்கும் மாயையின் கூறு அவ்வாற்றால் தூயதாயிருக்கு மெனவும், அங்ஙனம் அணுக்கமாய் நில்லாத அதன்கூறு தூய்தன்றியிருக்குமெனவும் அறிதல் வேண்டும். அற்றேல், மாயை எங்கணும் ஊடுருவி நிற்கும் முதல்வனருள் அதன் ஒரு கூற்றில் அணுக்கமாயும் பிறிதொரு கூற்றில் அவ்வாறன்றியும் நிற்குமென்றல் இழுக்காமாலெனின்; நன்று கூறினாய், இறைவனருள் முனைக்குமிடத்தே அணுக்க மாயும், முனையா விடத்தே அவ்வாறன்றியும் நிற்குமாகலின், அது பற்றி அவனதெல்லையற்ற அருள்நிறைவுக்கு வரக்கடவ தோர் இழுக்கில்லை. அஃதொக்குமாயினும், இறைவனருள் ஓரிடத்து முனைக்குமென்றதன் கருத்து யாதெனின்; அஃது, உயிர்களின் பொருட்டு நுண்ணியவுருவில் நின்ற மாயை யிலிருந்து அதன் காரியங்களைத் தோற்றுவிக்கக் கருதின மையே முனைப்பு என்பதற்குக் கருத்தாவதாம். அற்றேல், மாயையின் பரப்பு முழுவதும் ஊடுருவி நிற்கும் .இறைவி அங்ஙனங் கருது வளாயின் அக்கருத்து அம்மாயை எங்கும் முனைக்குமாகலின், அஃது அதன் ஒரு கூற்றின்மட்டுமே முனைக்கு மென்றல் யாங்ஙனமெனின், மாயையின் பரப்பினுள் இறைவியின் அருளோடு முதற் சேர்க்கை யாயிருக்கும் நுண்ணிய முதற்பரப்பு அவவ்வாற்றால் தான் என்றும் நுண்ணிய ஒளியுருவிற்றாய்த் தன்கண் ஆணவ மலத்தின் வலி ஏறுதற்கு இடங்கொடாமலே நிற்கும்; மற்று அம்முதற் சேர்க்கையின் பின் நிற்கும் அம்மாயையின் ஏனைப்பகுதியெல்லாம் அங்ஙனம் நேரே அருளால் ஊடுருவப்படாமையின், அவை தங்கண் ஆணவவலி பெருகி நிற்றற்கு இடஞ்செய்து தாமும் அதன் சேர்க்கையால் அசுத்தமாமென்பது. இதனாலன்றே கீழுள்ள மாயையைவிட அதன்கட் டோன்றிய ஆறு தத்துவங்கள் அசுத்தம் மிகவு டைய ஆனதூஉம், அவற்றைவிடப் பிரகிருதி மாயையும், அதனைவிட அதன்கீழுள்ள இருபத்துமூன்று தத்துவங்களும் அசுத்தம் மிகப்பெரிதுடைய ஆனதூஉம் என்க. எனவே மாயை தன்னியல் பில் உயிர்களின் அறிவை விளக்கும் நீரதன்றி மயக்கு நீரதன் றென்ப தூஉம், அவ்வாறாயினும் அஃது ஒரோவழி அதனை மயங்கச் செய்வது அதன்கீழுள்ள தத்துவங்களில் ஆணவ மலத்தின் வலிமிகுந்திருத்த லினா லேயா மென்பதூஉம், அதனால் இது முதனூல் ஆசிரியன் கருத்தொடுமாறு கொள்ளா தென்பதூஉம் இனிது பெறப் படுமென்க. இவ்வுண்மை தெரித்தற்கன்றே சிவஞான முனிவரும் அஞ்ஞானங் காட்டுதல் மாயை கன்மங்கட்கு ஆணவமலச் சார்வானாகிய செயற்கை, ஆணவ மலத்திற் கஃது இயற்கை என்று சிவஞான போத பாடியத்தின் கண்ணும்,4 மாயை மயக்கமுஞ் செய்யு மன்றே** என்று வழி நூலாசிரியர் கூறிய பகுதிக்கு இத்தன்மைத் தாகிய மாயை ஆணவமலம்போல மயக்கமே செய்யுமென்னுஞ் சைவருள் ஒரு சாராரை மறுத்தற்பொருட்டு மயக்குமுஞ் செய்யு மென்றுங் கூறினார் .................. மயக்கமும் என்னும் உம்மை அது தன் இயல்பன்மை உணர நின்றது என்று அதன் உரைக்கண்ணும் விரித்துச் கூறுவாராயினர். அதுவே யுமன்றி அவர் விந்துவின் மாயையாகி என்னுந் திருச் செய்யுளுக்கு உரை உரைக்கின்றுழி மலகன்மங்களோடு விரவாது முதற் காரணமாய் நிற்பது சுத்தமாயையென்றும், அஃதேனை யிரண்டனையும் வியாபித்து மேலாய் நிற்ப அவ்விந்துவின் கீழாயடங்கி மலகன்மங்களோடு விரவி முதற்காரணமாவது அசுத்தமாயை யென்றும், அவ்வசுத்த மாயையது தூலபரிணாமமாய்த் தோன்றுவது பிரகிருதி மாயையென்றும் கூறப்படும் என்றுரை கூறியதூஉங் கருத்திற் பதிக்கற்பாற்று. இவ்வாறு ஆணவமல வலிமிகுந்துள்ள காரியப் பொருள்களின் கூட்டுறவு எந்த உயிரின்கண் உள்ளது அந்த உயிரின் அறிவு ஒருகால் விளங்கிப் பிறிதொருகால் மயங்கி இம்முறையே மாறி மாறி நிகழா நிற்கும்,. இவற்றுள் அவ்வுயிரின் அறிவு விளக்கம் அதனோடு கூடியுள்ள மாயையின் காரியப் பொருளானும், அதன் அறிவு மயக்கம் அப்பொருளோடு உடன்விரவி நிற்கும் ஆணவ மலத்தானும் வருவனவாகும். அஃதொக்குமாயினும், ஆணவமலம் உயிர்களின் விழைவறிவு செயல்களை மறைத்து உடனாய் நிற்குமென அறிவுநூல்கள் உரைப்பக் காண்டுமன்றி, அது மாயையிலும் உடன்விரவி நிற்குமென அவை உரைப்பக் கண்டிலாமெனின்; நன்று சொன்னாய், ஆணவத்தின் செயல் உயிர்களின் விளங்கித் தோன்றுமாப்போல் ஏனை மாயை மாயேயங்களில் ஆராய்ச்சி யானன்றி விளங்கித் தோன்றாமை யானும், அங்ஙனம் அதன் இருப்பை ஆராய்வதூஉம் அதன் மறைப்பினின்று சிறிது விலகிய உயிரேயாகலானும், விழிப்பின்கண் இடையிடையே நிகழும் மறதியும் உறக்கத்தின் கண் முழுதுமாய் நிற்கும் அறியாமையுமே ஆணவத்தின் செயல்களாதல் எவர்க்கும் நேரே யறியக் கிடத்தலானும் ஆணவம் உயிர்களைப் பற்றியிருக்கும் நிலையே நூல்களால் நுவலப்பட்டது; ஏனை மாயை மாயேயங்களில் அஃது ஊடுருவி நிற்கும் நிலை அது பற்றி யாராய்வார் உணர்ந்துகோடல் எளிதாகலின், அது நூல்களான் நுவலப்பட்டது. எனவே, இற்றைக்கு 200-ஆண்டுகட்கு முன்னிருந்த மெய்கண்டதேவர்க்கும், இற்றைக்கு ஆயிர ஆண்டுகட்கு முன்னிருந்த சேந்தனார்க்கும் இடைப்பட்டதொரு காலத்தே தென்கடவூர் உய்யவந்ததேவ நாயனாரும், அவர் தம் ஆசிரியர் திருவிசலூர் உய்யவந்ததேவ நாயனாரும் இருந்தாராகற்பாலார். அக்காலந்தான் யாதோவெனினி; சேக்கிழார் பெருமான் அரிவாட்டாய நாயனார் புரணத்திற், காட்டிய நெறியின் உள்ளந் தண்டறக் கழுத்தி னோடே ஊட்டியும் அரியா நின்றார் உறுபிறப் பரிவாரொத்தார். எனக் கூறிய செய்யுட்கணுள்ள ஊட்டியரிதல் என்னுஞ் சொற்றொடரைத் திருக்களிற்றுப்படியாரில் ஊட்டியறுத் தவற்கே ஊட்டியறுத்தவரை என உய்ய வந்ததேவ நாயனார் எடுத்தாண்டிருத்தலின் இவரும் இவராசிரி யருஞ் சேக்கிழார்க்குச் சிறிது பின்னே யிருந்தமை திண்ணமா மென்க. இவ்வாற்றால், திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார் என்னுஞ் சைவசித்தாந்த நூல்கள் இரண்டனையும் அருளிச் செய்த உய்யவந்ததேவ நாயனார் இருவரும் இற்றைக்கு 750 ஆண்டுகட்கு முன்னே இருந்தாரெனக் கோடல் இழுக்காது. இங்ஙனம் இவ்விருவரும் மெய்கண்ட தேவர்க்கு முன்னிருந்து, அவர் சிவஞானபோதம் இயற்றுதற்கு முன்னரே திருவுந்தி யார், திருக்களிற்றுப் படியார் என்னும் நூல்களை ஆக்கியிருத் தல் கண்டு போலுஞ், சித்தாந்த நூல்கள் பதினான்கனையுந் தொகுத்துக் கூறும், உந்தி களிறு உயர்போதஞ் சித்தியார் பிந்திருபா உண்மை பிரகாசம்--வந்த அருட் பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு உண்மைநெறி சங்கற்ப முற்று. என்னும் பழையவொரு வெண்பாச் செய்யுள், முதலிலே திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்றும் நூல் களையும், அவற்றின்பின் சிவஞானபோத முதலான ஏனைப் பன்னிரண்டு நூல்களையும் அடைவே வைத் தோதுவதாயிற்று. என்றிதுகாறும் ஆராய்ந்துரைத்த வாற்றால், திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்னும் இரண்டு நூல்களுமே, சைவசித்தாந்த நூல்கள் பதினான் கனுள் மிகப் பழையனவாய் நிற்றல் தெளியப்படுமென்பது. அடிக்குறிப்புகள் 1. See Professor James Sully’s Human Mind Vol.1, Page 43. 2. காலுரிஞ்சு பொறி - Air Pump 3. Oxygen 4. 12 - ஆஞ் சூத்திரம், முதலதிகரண உரை 5. சிவஞானசித்தியார் 2-ஆஞ் சூத்திரம் 53-வது செய்யுள். பின்னிணைப்பு1 சைவ சித்தாந்த நூல்கள் 1. திருவுந்தியார் சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கு. அப்பதினான்கில் திருவுந்தியார் என்னும் நூலை அருளிச்செய்தவர் உய்யவந்த தேவநாயனாரென்பது. அத்திருவுந்தியாரின் இறுதிக்கண் உள்ள, வையம் முழுதும் மலக்கயங் கண்டிடும் உய்யவந்தா னுரை. என்னுஞ் செய்யுளாலும், இவர் இருந்தவூர் திருவிசலூர் என்பது, இவர் தமக்கு மாணாக்கருந் திருக்களற்றுப்படியார் என்னும் நூலை அருளிச்செய்தவருமான தென்கடவூர் உய்யவந்ததேவ நாயனார் தாம் அருளிச்செய்த அத் திருக்களிற்றுப்படியார் 96ஆஞ் செய்யுளில் திருவிசலூர் ஆளுஞ் சிவயோகி இன்றென் வருவிசையை மாற்றினான் வந்து. என அருளிச்செய்திருக்கும் வரலாற்றுக் குறிப்பினாலும் நன்கு புலனாம். திருவுந்தியார் அருளிச்செய்த ஆசிரியர் பெயரும் உய்ய வந்ததேவ நாயனார் என்பதே யாகுமென இங்ஙனந் தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருக்கவுஞ், சிவஞான போத வசனாலங்காரதீப நூல் இயற்றிவர் அவர் பெயரை ஆளவந்த தேவ நாயனார் என மாற்றிப் பிழை பட வரைந்திட்டார். ஆசிரியர் மாணாக்கர் இருவர்க்கும் உய்யத்தேவ நாயனார் எனப் பெயரிருத்தல் கண்டு, ஆசிரியர் பெயரை அங்ஙனம் மாற்றி அவர் பிழைசெய்தார் போலும்! 2. திருக்களிற்றுப்படியார் இனித், திருக்களிற்றுப்படியார் என்னும் நூலை ஆக்கி யருளினவர் பெயரும் உய்யவந்ததேவ நாயனார் என்பதே யாதலும், ஆயினும் இவர் இருந்தவூர் தென்கடவூர் எனப் பிறிதொன்றாதலும் இந்நூலுக்குரைசெய்த சிவப்பிரகாச ரைக் கூறுஞ், சேடன் படிபுரக்குந் தென்கடவூர் உய்யவந்தான் பாடுங் களிற்றுப் படிதனக்கு -- நீடிமையோர் தேடுபுகழ்ச் செஞ்சொற் சிவப்பிரகா சன்றிருந்த நாடியுரை செய்தான் நயந்து. என்னும் உரைப்பாயிரச் செய்யுளானே தெற்றெனப் பெறப்படுதல் காண்க. திருக்களிற்றுப்பாடியார் இயற்றிய உய்யவந்ததேவ நாயனார், தாம் இயற்றிய இந்நூலின் வெண்பாக்களில், திருவுந்தியாரிலுள்ள செய்யுட்களை எடுத்து இடையிடையே பிணைத்து நூலருளிச் செய்திருத்தலை உற்று நோக்குங்கால், இவர்தமக்கு மெய்ப்பொருள் அறிவுறுத்திய ஆசிரியன்றன் மெய்ம்மொழிகளைத் தமது நூலுட் பொன்னேபோற் பொதிந்துவைக்கும் விழைவு பெரிதுடையராயிருந்த குறிப்புப் புலனாகாதொழியாது. ஆகவே, திருவுந்தியார் அருளிச்செய்த திருவிசலூர் உய்யவந்ததேவ நாயனாரே, திருக்களிற்றுப்படியார் ஆக்கிய தென்கடவூர் உய்யவந்ததேவ நாயனார்க்கு ஆசிரிய ராதல் நன்கு துணியப்படும். இதற்கு மாறாக, இவ்வாசிரியர் இருவர்க்கும் இடையே திருவிசலூர் ஆளுடையதேவ நாயனார் அல்லது ஆளவந்ததேவ நாயனார் என்பவர் ஒருவர் இருந்தாரெனவும், அவரே தாம் முதல் உய்யவந்ததேவ நாயனார்பாற் கேட்டறிந்த மெய்ப்பொருளை இரண்டாம் உய்யவந்ததேவ நாயனார்க்கு அறிவுறுத்தருளினா ரெனவுஞ் சிலர் கட்டிவைத்த கதைக்குயாம் சான்றேதுங் காண்கிலம். 3. இவ்விருநூல்களின் காலம் இனித், திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்னும் இவ்விரு நூல்களின் ஆசிரியர்கள் சிவஞான போதம் இயற்றியருளின ஆசிரியர் மெய்கண்டதேவர்க்கும், அவர் மாணாக்கர் அருணந்திசிவனார்க்கும், அவர் வழிவந்த உமாபதி சிவனார் முதலாயினார்க்கும் முற்பட்டவராதல் ஆராய்ச்சியாற் புலனாகின்றது. மெய்கண்டதேவர் மாணாக்கர் களும், அம்மெய் கண்டதேவர் வழிப்போந்த ஏனையாசிரியன் மாரெல்லாருந் தம் நூல்களுள் மெய்கண்டதேவரைக் குறித்துச்சொல்லி, அவரைப் போற்றுங் கடப்பாடு மேற் கொண்டவராகவே காணப் படுகின்றனர், அது பண்டைமறை வண்டரற்றப் பசுந்தேன் ஞானம் பரிந்தொழுகச் சிவகந்தம் பரந்து நாறக் கண்டவிரு தயகமல முகைக ளெல்லாங் கண்டிறப்பக் காசினிமேல் வந்தவருட் கதிரோன் விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய் மேவு மெய்க்கண்ட தேவன்மிகு சைவ நாதன் புண்டரிக மலர்தாழச் சிரத்தே வாழும் பொற்பாத மெப்போதும் போற்றல் செய்வாம் என்று சிவஞானசித்தியார் பரபக்கத்தும், என்னையிப் பவத்திற் சேரா வகையெடுத் தென்சித் தத்தே தன்னைவைத் தருளினாலே தாளினை தலைமேற் சூட்டு மின்னமர் பொழில்சூழ் வெண்ணெய் மேவிவாழ் மெய்கண் டான்நூல் சென்னியிற் கொண்டு சைவத் திறத்தினைத் தெரிக்க லுற்றாம் என்று அதன் சுபக்கத்தும் ஆசிரியர் அருணந்திசிவனார் கூறுமாற்றானும், மெய்கண்ட தேவர்க்கு மற்றொரு மாணவ ரான திருவதிகை மனவாசகங்கடத்தார் தாம் அருளிச்செய்த உண்மை விளக்கம் என்னும் நூன்முகத்திற், பொய்காட்டிப் பொய்யகற்றிப் போதானந் தப்பொருளா மெய்காட்டு மெய்கண்டாய் விண்ணப்பம் - பொய்காட்டா மெய்யா திருவெண்ணெய் வித்தகா சுத்தவினா வையாநீ தான்கேட் டருள். என்று நுவலுமாற்றானும், அருணந்திசிவனார் மாணவர் மரபில் வந்தவரான உமாபதிசிவனார் தாம் இயற்றியருளிய சிவப்பிரகாசம் என்னும் நூலின் பாயிரத்திற் றாம்வந்த ஆசிரியர் மரபு கூறுவான் புகுந்து, தேவர்பிரான் வளர்கயிலைக் காவல் பூண்ட திருநந்தி யவர்கணத்தோர் செல்வர் பாரிற் பாவியசத் தியஞான தரிசனிக ளடிசேர் பரஞ்சோதி மாமுனிகள் பதியா வெண்ணெய் மேவியசீர் மெய்கண்ட திறலார் மாறா விரவுபுக ழருணந்தி விறலார் செல்வத் தாவிலருள் மறைஞான சம்பந்த ரிவரிச் சந்தானத் தெமையாளுந் தன்மை யோரே. எனப் பகருமாற்றானும், இவ்வாசிரியர் மரபில் உமாபதி சிவனார்க்குப் பின்னேபோந்த சீகாழிப் சிற்றம்பலநாடிகளுந் தாம் அருளிச்செய்த துகளறுபோதம் என்னும் நூன் முகத்திற், பதிபசு பாசக் தெரிந்தந்தப் பாச விதிவிழியை வென்றதனின் வேறாங் -- கதிவழங்கு மெய்கண்டான் சந்தான மேவிற் சிவானந்தங் கைகண்டார் காணார் கரு எனத் தாம் மெய்கண்ட தேவர் மரபில் வந்தமை தெளியப் புகலுமாற்றானும் நன்கு விளங்காநிற்கும். எனவே, மெய்கண்ட தேவர் மரபில் வந்தாரெல்லாருந் தாம் அம்மரபில் வந்த வரலாற்றினை ஐயுறுதற் கிடனின்றித் தெற்றெனக் கிளந்து சொற்றாமைபோலத், திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார் என்னும் நூல்களை ஆக்கிய ஆசிரியரிருவரும் அம் மெய்கண்ட மரபினைச் சுட்டிக் குறிப்பாலேனும் வெளிப் படையாலேனும் ஏதும் உரைப்பக் காணாமையின், அவரிரு வரும் மெய்கண்ட தேவநாயனார்க்கு முன்னிருத்தோராதல் நன்கு துணியப்படும். அற்றேல், உய்யவந்ததேவர் எனப் பெயரிய அவ்வாசிரியர் இருவரும் மெய்கண்ட தேவர்க்கு எத்துணை காலம் முற்பட்டவ ரெனிற், காட்டுதும். இரண்டாம் உய்ய வந்ததேவர் தாம் அருளிச்செய்த திருக்களிற்றுப்படியாரில், மோகம் அறுத்திடில்நாம் முத்தி கொடுப்பதென ஆகமங்கள் சொன்ன அவர்தம்மைத் -- தோகையர்பாற் றூதாகப் போகவிடும் வன்றொண்டன் றொண்டுதனை ஏதாகச் சொல்வே னியான். எனப்போந்த செய்யுளிற் சுந்தரமூர்த்தி நாயனாரைக் கூறியிருத்தலின், இவர் சுந்தரமூர்த்தி நாயனார்க்குப் பின்னர் ஒருகாலத்தேயிருந்தவரென்பது இனிது விளங்கற் பாலதேயாம். இனிச், சுந்தரமூர்த்தி நாயனார்க்குப் பின்னும் மெய்கண்ட தேவர்க்கு முன்னுஞ் சென்ற காலத்தில் எதன் கண்ணே உய்யவந்ததேவநாயனார் இருந்தா ரென்பதூஉஞ் சிறிது ஆராய்ந்து காட்டுவாம். திருக்களிற்றுப்படியாரின் செய்யு ளாகிய, அவிழ்ந்த துணியில் அவிழ்ந்த அவிழை அவிழ்ந்த மனத்தால் அவிழ்க்க - அவிழ்ந்தசடை வேந்தனார்க் கின்னமுத மாயிற்றே மெய்யன்பிற் சேர்ந்தனார் செய்த செயல். என்பதன்கட், சேந்தனார் என்னும் அடியவர் தாம் வழக்கமாய்ச் சிவனடியார்க்கு அளித்துவந்த சோற்றுணா அளிக்கப் பொருளில்லாமல் ஒருகால் மிக்க வறுமை எய்தி வருந்திய வழியுந், தாஞ் செய்துபோந்த அவ்வறத்தின் வழுவா ராய்த், தங்கையிற் கிடைத்த சிறுகாசு கொண்டு களியுணவு சமைத்து, அதனைப் படைத்தற்குச் சிவனடியாரைத் தேடச், சிவபிரானே ஓர் அடியவர் வடிவிற்போந்து அக் களியமு தினைப் பெற்றுண்டு மறைந்ததாகிய நிகழ்ச்சியினைக் குறித் திருத்தலால் இவர் சேர்ந்தனார் காலத்திற்குப் பிற்பட்டவராதல் பெறப்படும். இனி, இங்ஙனம் இவராற் குறிப்பிடப்பட்ட சேந்தனார் என்னும் அடியவர் பட்டினத்தடிகளுக்கு மாணாக்க ரென்பது, அடிகள் துறவு பூண்டபின், அவரது பெரும் பொருளைக் கவர்தற்பொருட்டு அஞ்ஞான் றிருந்த அரசன், அடிகளின் பொருளைக் காத்துநின்ற சேந்தனாரைச் சிறையிலிட்டு வருத்தாநிற்பச், சேந்தனாரின் மனைவியாரும் மகனாரும் அக் கொடுமையினைப் பட்டினத்தடிகள்பாற் சென்று தெரிவித்து முறையிட, அடிகள், மத்தளை தயிருண் டானும்மலர்மிசை மன்னி னானும் நித்தலுந் தேடிக் காணா நிமலனே அமல மூர்த்தி செய்த்தளை கயல்பாய் நாங்கூர் சேந்தனை வேந்த னிட்ட கைத்தளை நீக்கிஎன்முன் காட்டுவெண் காட்டு ளானே. என்னுஞ் செய்யுளால் இறைவனை வேண்டிப் பாடச் சேந்தனார் உடனே சிறையினின்றும் விடுவிக்கப்பட்டு அடிகள் பால் உய்க்கப்பட்டனர் என வழங்கும் வரலாற்றி னாற் றெளியக் கிடக்கின்றது. இச்சேந்தனார் அருளிச் செய்த திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்னுமிரண்டும், பட்டினத்தடிகள் அருளிச் செய்த திருக்கழுமல மும்மணிக் கோவை, திருவிடைமருதூர் மும்மணிக் கோவை திருவேகம்ப முடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருபது என்னும் நான்குஞ் சைவத் திருமுறைகள் பதினொன்றில், முறையே ஒன்பதாந் திரு முறை, பதினோராந் திருமுறைகளில் நம்பி யாண்டார் நம்பி என்பவராற் கோக்கப்பட்டிருத்தலின், பட்டினத் தடிகளும் அவர் தம் மாணக்கராகக் கருதப்படுஞ் சேந்தனாரும் நம்பியாண்டார் நம்பிகளுக்கு முன்னிருந்த வராதல் துணியப் படும். நம்பி யாண்டார் நம்பிகள் காலம் இவற்றைக்கு எண்ணூற்றைம்பது ஆண்டுகட்கு முற்பட்ட தாகலின், அவர்க்கு முன்னி ருந்த பட்டினத்தடிகளும் அவர்தம் மாணவரான சேந்தனாருஞ் சிறிதேறக்குறைய ஆயிர ஆண்டுகட்கு முன்னே யிருந்தவ ராதல் தானே போதகரும். என்றாலும், பட்டினத்தடிகள் இருந்த காலஞ் சுந்தரமூர்த்திகள் காலத்திற்கும் பிற்பட்ட தென்பது, திருவிடை மருதூர் மும்மணிக் கோவையில் (28) வித்தகப் பாடல் முகத்திற் தடியருந் திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளையும். என்று பட்டினத்தடிகளே கூறுமாற்றால் விளங்கும். இனி, உய்யவந்ததேவநாயனார்க்குப் பின்னே யிருந்த மெய்கண்டதேவர் காலமுஞ் சிறிது ஆராயற்பாற்று. மெய்கண்ட தேவர் மரபில் நாலாமவராய்த் தோன்றிய உமாபதி சிவனார் தாம் அருளிச்செய்த சங்கற்ப நிராகரணத்தில், ஏழஞ் சிருநூ றெடுத்த வாயிரம் வாழுநற் சகன மருவா நிற்ப. எனச் சாலிவாகன ஆண்டு 1235 இல் தில்லைப் பொன்னம் பலத்தை யடுத்ததொரு மண்டபத்தே குழுமிய பல்சமய ஆசிரியர் ஒருவரையொருவர் மறுத்துக்கூறிய கோள்களை யெல்லா மெடுத்தியம்பி அவற்றின் பொய்ம்மை தேற்றுதற்கே இந்நூல் இயற்றலாயிற்று என இந்நூல் வரலறு கூறு முகத்தால் இந்நூலியற்றிய காலமும், இந்நூற்பாயிரத்தே நன்கெடுத்து மொழிதலால், இவர் தாம் இருந்த காலம் இற்றைக்கு 623 ஆண்டு களுக்கு முன்னென்பது இனிது விளங்கா நிற்கும். இனி, உமாபதிசிவனார்க்குமுன், அவர்தம் ஆசிரியர் மறைஞான சம்பந்தரும், அவர்க்குமுன் அவர்தம் ஆசிரியர் அருணந்திசிவனாரும், அவர்க்குமுன் அவர் நம்மாசிரியர் மெய் கண்டதேவரும் இருந்தாரென்பதனால், உமாபதி சிவனார்க்கும் மெய்கண்ட தேவர்க்கும் இடையே குறைந்தபடி 80 ஆண்டு களாதல் சென்றனவாகக் கோடல் வேண்டும். அங்ஙனங் கொள்ளவே, மெய்கண்டதேவர் இற்றைக்கு 700 - ஆண்டுகட்கு முன்னிருந்தாரென்பது முடிக்கப்படும். இதுவே அவரிருந்த காலமென்பதற்குத், திருவண்ணாமலைக் கோயிலில் மெய்கண்ட தேவராற் பொறிப்பிக்கப் பட்ட ஒரு கல்வெட்டின் காலஞ் சாலிவாகன ஆண்டு கசருச- என்று காணப்பட் டிருப்பதும் ஒரு சிறந்த சான்றாகும்2 என்க. எனவே, இற்றைக்கு 700 - ஆண்டுகட்கு முன்னிருந்த மெய்கண்ட தேவர்க்கும், இற்றைக்கு ஆயிர ஆண்டுகட்கு முன்னிருந்த சேந்தனார்க்கும் இடைப்பட்டதொரு காலத்தே தென்கடவூர் உய்யவந்ததேவ நாயனாரும், அவர் தம் ஆசிரியர் திருவிசலூர் உய்யவந்ததேவ நாயனாரும் இருந்தாராகற் பாலார். அக்காலந்தான் யாதோவெனின்; சேக்கிழார் பெருமான் அரிவாட்டாய நாயனார் புரணத்திற், காட்டிய நெறியின் உள்ளந் தண்டறக் கழுத்தினோடே ஊட்டியும் அரியா நின்றார் உறுபிறப் பரிவா ரொத்தார். எனக் கூறிய செய்யுட்கண்ணுள்ள ஊட்டியரிதல் என்னுஞ் சொற்றொடரைத் திருக்களிற்றுப்படியாரில் (19), ஊட்டிய றுத்தவற்கே ஊட்டியறுத்தவரை என உய்யவந்த தேவ நாயனார் எடுத்தாண்டிருத்தலின் இவரும் இவராசிரியருஞ் சேக்கிழார்க்குச் சிறிது பின்னே யிருந்தமை திண்ணமா மென்க. இவ்வாற்றால், திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார் என்னுஞ் சைவசித்தாந்த நூல்கள் இரண்டனையும் அருளிச் செய்த உய்யவந்ததேவ நாயனார் இருவரும் இற்றைக்கு எரு0 ஆண்டுகட்கு முன்னே இருந்தாரெனக் கோடல் இழுக்காது. இங்ஙனம் இவ்விருவரும் மெய்கண்ட தேவர்க்கு முன்னிருந்து, அவர் சிவஞானபோதம் இயற்று தற்கு முன்னரே திருவுந்தி யார், திருக்களிற்றுப்படியார் என்னும் நூல்களை ஆக்கி யிருத்தல் கண்டு போலுஞ், சித்தாந்த நூல்கள் பதினான்கனையுந் தொகுத்துக் கூறும், உந்தி களிறு உயர்போதஞ் சித்தியார் பிந்திருபா உண்மை பிரகாசம் -- வந்த அருட் பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு உண்மைநெறி சங்கற்ப முற்று. என்னும் பழையவொரு வெண்பாச் செய்யுள், முதலிலே திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்னும் நூல் களையும், அவற்றின்பின் சிவஞான சித்தியார் முதலான ஏனைப் பன்னிரண்டு நூல்களையும் அடைவே வைத்தோதுவ தாயிற்று. என்றிதுகாறும் ஆராய்ந்துரைத்த வாற்றால், திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்னும் இரண்டு நூல்களுமே, சைவசித்தாந்த நூல்கள் பதினான்கனுள் மிகப் பழையனவாய் நிற்றல் தெளியப் படுமென்பது. 4. சிவஞானபோதம் இனிச், சைவசித்தாந்த நூல்களில் மேற்கிளந்த திருவுந்தி யார், திருக்களிற்றுப்படியார் என்னும் இரு நூல்களும், பிறவித் துன்பத்தை நீக்கி உயிர்கள் இறைவன்றிருவடியைத் தலைக்கூடிப் பேரின்பப்பேற்றினை அடைதல் வேண்டு மெனவும், அங்ஙனம் அவை அதனை அடைதற்குரிய தவமுயற்சி இத்தகையதால் வேண்டுமெனவும் வற்புறுத்தி, அதனை அடைந்தார் நிலை இவ்வியல்பிற்றாமென விளக்குந் திறத்த வாகும். மற்று, இவையிரண்டற்கும் பின்னெழுத்த சிவஞான போதமோ, காணப்பட்ட இவ்வுலகினைக் கொண்டு காணப் படாத கடவுளொன் றுண்டெனவும், அதுதான் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களைப் புரிவதா மெனவும், அழித்தற்றொழிலை இயற்றுவதே ஏனையிரண்டு தொழில்களையும் இயற்ற வல்லதாமெனவும், அம்முழு முதல றிவுப் பொருடான் உலகுயிர்களிற் பிரிவற நிறைந்துநின்று அம்முத்தொழில்களை உயிர்களின் அறிவு விளக்க இன்பப் பேற்றின் பொருட்டு நிகழ்த்தாநிற்கு மெனவும், உடலின் வேறாக உயிர் என்பதொரு பொருள் உண்டெனவும், அவ்வுயிர் தானும் ஒன்றாகாமற் பலவாய்ப் பலவேறு தன்மைகள் வாய்ந்தனவாய் என்றுந் தம்முதல் அழியாமல் இருக்கு மெனவும், அவ்வுயிர் களெல்லாந் தொன்றுதொட்டே ஆணவம் எனப்படும் ஓரிருளால் தம் விழை வறிவு செயல்கள் மறைக்கப்பட்டு நிற்றலின் அவ்விருள் நீக்கத்தின் பொருட்டு இறைவனாற் படைத்துக் கொடுக்கப்பட்ட இப் பல்வேறுடம்புகளைக் கருவியாய்க் கொண்டே அவ்விழை வறிவு செயல்கள் விளங்கப் பெற்று வருகின்றனவெனவும், உயிரின் சேர்க்iயா லன்றி ஐம்பொறி யுணர்வுகள் இயங்காமைபோல இறைவன் சேர்க்கையாலன்றி உயிர்கட்கு விழைவறிவு செயல்கள் விளங்கா வெனவும், மக்கள் தமது சிற்றறிவாற் சுட்டியறிவன வெல்லாம் ‘,அசத்து’ என்னும் பெயர்க்குரியனவாயும் மனமொழிகளுக்கு எட்டா நிலையில் இறைவனதருள் வயமாய் நின்று உணரப்படும் ஒரு முழு முதற்பொருள் ‘சிவசத்து’ என்னும் பெயர்க்குரிய தாயும் நிற்குமெனவும்., அங்ஙனஞ் சத்தாகிய சிவத்தினெதிரே அசத்தாகிய பொருள் கள் விளங்கமாட்டா வாகலிற் சத்தாய் அவற்றுள் நிறைந்து நிற்குஞ் சிவம் அவையிற்றைத் தன்னின் வேறாய்க் காணாது, அசத்தாம் பொருள்கட்கு உணர்வு இன்மையின் அவை தாமுஞ் சிவத்தைக் காணாது, மற்று அசத்தையுஞ் சத்தையுங் காண்டற்கியைந்த சத்தாந் தன்மையும் அசத்தாந் தன்மையுந் தன்கண் ஒருங்குடைய உயிர்களே (ஆன்மாக்களே) அவ்விரண்டனையும் உணருந் தன்மைய வாகலின் அதுபற்றி அவை சதசத்து என்று வழங்கப்படு மெனவும், அவ்வியல்பு களெல்லாம் அறியமாட்டாது ஐம்புல அவாக்களால் ஈர்ப்புண்டு தானோர் அறிவுப் பொருளென் பதூஉம் உணராது மயங்கி வருந்தும் உயிர்களுக்கு அவ்வுயிர் களுள் உயிராய் மறைந்துநின்று அருள்புரிந்து வரும் முதல்வனே இரக்கமிகுதியாற் குருவடிவிற்போந்து அவ்வியல்புகளை யுணர்த்த அதனான் மெய்யுணர்வு தோன்றப் பெற்று அவ்வுயிர் கள் இறைவன் றிருவடியினை ஒருங்கு தலைக் கூடுமெனவும், அறிவில் பொருள்களிற் பழகிய பழக்கத்தாற் றோன்றிய அறி வாலும் உயிர்கள் தமக்கெனவுள்ள சுட்டறிவாலும் இறைவனை அறிதல் செல்லாமையால் இறைவனது அருளறிவு ஒன்று கொண்டே அவை இறைவனை யுணர்ந்து அவ்வுணர்ச்சி பின்னர் அறியாமை யாற் பற்றப் படாமைப் பொருட்டு ஓம்சிவம் எனும் ஐந்தெழுத்தை இடையறாது நினைவிற் பதித்தல் வேண்டு மெனவும், இறைவன் உயிர்களிற் பிரிவின்றி நிற்றல்போல உயிர்களும் இறைவனை விட்டுப் பிறிதொன்றனை நினையாத நிலையில் உறைத்து நிற்குமாயின் ஆணவம் மாயை வினை யென்னும் மும்மலங் களால் அவை தீண்டப் பெறாவெனவும், பொருள்களைக் காணுங் கண்களுக்கு அவற் றோடுட னாய் நின்று தானுங் கண்டு அவை அவையிற்றைக் காணுமாணுஞ் செய்யும் உயிர்போல இறைவனும் உயிர்களோடுடனாய் நின்று அவை மல மாயை வினை களைக் காணுமாறு செய்து தானும் அவற்றைக் காண்பனா கலின் இங்ஙனந் தன்னோ டுடனாய் நின்று காட்டிக் காணும் இறைவன்றன் அருளுதவியினை நினைந்து நினைந் துருகும் உயிர் அவன்றிரு வடியில் ஒன்றி ஒன்றறக் கலத்தல் ஒருதலையாமெனவும், இறைவன் றிருவடிப் போதுகளை உயிர்கள் சேர வொட்டாது தடை செய்யும் மலமாயை வினைகளை மேற்காட்டிய முறையிற் கடைப்பிடியாய் நின்று பழகுமாற்றாற் சுவடறக் கழுவிச் சிவநேய முடையாருடன் கொண்ட இடையறாச் சேர்க்கையால் அவை மீண்டுந் தம்மைப் பற்றாமற் செய்து சிவம் விளங்கித் தோன்றுஞ் சிவனடியார் வடிவினையுந் திருக்கோயில்களையுஞ் சிவமே யெனக் கருதி வழிபடுதல் இன்றியமையாததா மெனவும் இனிது விளங்குந் தனிப்பெருமாட்சி வாய்ந்ததாகும். கடவுள் உயிர் மலம் மாயை வினை வீடுபேறு என்னும் ஆறன் இயல்புகளை அளவையியல் வழா ஆராய்ச்சி முறையில் வைத்து நன்கு விளக்குந் தனி முதல் நூல் சிவஞான போதத்தைத் தவிர வேறேதும் எங்கும் எந்த மொழியிலும் இல்லை. உலகத்துள்ள நூல்களிற் சில, கடவுளியல்புகளிற் சிலவற்றை மட்டுமே எடுத்தியம்பும்; அச் சிலவற்றுள்ளும் ஒன்று மற்றொன் றனோடு ஒவ்வாமல் இகலும்; அதனால் அந்நூலறிவுகொண்டு இறைவன்றன் உண்மையியல்புகளை யுள்ளவாறுணர்ந்து அவனை நினைத்தலும் வாழ்த்தலும் வணங்கலும் இயலாதொழிகின்றன. வேறு சில நூல்கள் உயிரினியல்புகளை அளந்தறியப் புகுந்து அவற்றின் உண்மை காணமாட்டாமல் அங்ஙனமே ஒன்றனோ டொன்று மாறுபடுங் கொள்கைகளை விரித்து வெறியவாயின; அவை தம்மால் உயிரின் உண்மை யுணர்தலும் இயலா தொழிகின்றது. இனி, உயிர்கள் பிறவிகளெடுத் துழலுங் காரணத்தை வேறெந்தநூலுங் கண்டதில்லை; அதனால் ஆணவ மலத்தைப் பற்றிய ஆராய்ச்சி சிவஞானபோதத்திற் றவிர உலகத்தின் கணுள்ள நூல்கள் வேறெதன் கண்ணுங் காணப் படுகின்றிலது. இனி, இவ்வுலகத்திற்கும், இதன்கணுள்ள பொருள்கள் உடம்புகட்கும் முதற்கருவியாய் நிற்கும் மாயையென்னும் முதற்பொருளின் றன்மையினை உள்ளவாறுணர்ந்துரைக்கும் நூலுஞ் சிவஞானபோதத்தைத் தவிர வேறெதனையும் யாண் டுங் கண்டிலேம். இம் மாயையின் வழியே உயிர்கள் மாட்டு நிகழும் இருவினை நிகழ்ச்சிகளை முன்பின் முரணுறாமல் ஆராய்ந்து தெற்றெனத் தெரிக்கும் நூலும் இதனையொழிய வேறெதனையுங் காணேம். இனி, இவையேயன்றி, உயிர்கள் எய்துதற்குரிய முடிந்த நிலையான வீடுபேற்றின் மெய்ம்மையினை விளங்கத் தேற்றும் விழுமிய நூலுஞ் சிவஞானபோதமே யல்லால் வேறேதும் எங்கும் எம்மொழியிலும் இல்லை. இவ்வாறாக, மக்களுயிர்க் குறுதிபயக்கும் இவ்வறு வகைப் பொருளாராய்ச்சியும் ஒன்றன்பின் ஒன்றாக முறைப் பட வைத்து, மெய்ம்மையுணரும் வேட்கைமிக்க நுண்ணு ணர்வினாரெல் லாருங் கழிபேருவகை துளும்பித் தெரிந் தேற்க இவ்விழுமிய சிவஞானபோத நூல் உண்மையான் ஆராயந்து விளக்கும் வகைகளெல்லாம் பின்னே தொடர்ந்து வரும் விரிவுரையிற் காணப்படும். இத்துணை ஆராய்ச்சி களையுந் தன்னகத்தே கொண்ட இந்நூல் மிகப் பெரியதோர் அளவினதாய் இருக்க வேண்டுமென இதனைக் கண்டறியா தார் நினைப்பர். ஆனால், இதன் மிகச் சுருங்கிய அளவினைக் கண்டாரோ, ஆ! இத்துணை அரும்பெரும் பொருளும் ஒருங்குதெரிக்கும் இச் சீரிய நூல் அளவில் எத்துணைச் சிறியதாயிருக்கின்றதென எண்ணி யெண்ணி வியப்புறா நிற்பர்! ஏனெனில், இந்நூல் பன்னிரண்டு சூத்திரங்களால் அமைத்திருக் கின்றது இப் பன்னிரண்டு சூத்திரங்களும் நாற்பதடிகளே யுடையன; இந்நாற்பதடிகளிலும் இரு நூற்றுப் பதினாறு சொற்களேயுள்ளன. இனி, இப்பன்னி ரண்டு சூத்திரப் பொருளை விளக்கும் வெண்பாக்களோ எண்பதே யாகும்; இவ்வெண்பது வெண்பாக்களும் முந்நூற்றிரு பதடிகளினால் ஆக்கப்பட்டிருக்கின்றன. ஆகத், தொண்ணூற் றிரண்டு பாக்களிலே, அல்லது முந்நூற்றறு பதடிகளிலே கடவுள் உயிர் மலம் மாயை வினை வீடுபேறு என்னும் அறுவகைப் பொருள் களின் ஆராய்ச்சிகள் அத் துணையும் அடக்கி, அங்ஙனம் அடக்கியவாற்றாற் பொருள் மயங்குதற்குச் சிறிதும் இடனின்றி, அவற்றை அங்கையங் கனியெனத் தெளிய விளக்கி, அவை யிற்றின் உண்மையை முடித்துக் காட்டுவதென்றால், ஆ! அஃது ஒப்புயர்வில்லாத் தெய்வஅருள் நிரம்பப் பெற்றார்க்கன்றி ஏனையோர்க்கு எளிதின் வாய்க்குமோ? இத்துணைச் சுருங்கிய நூலிலே பரந்து விரிந்தாழ்ந்த பொருட் பரப்பத் துணையுஞ் செறிந்து துலங்கக் கண்டால், அஃதெவர்க் குத் தான் வியப் பினை விளைவியாது! பண்டைச் செந்தமிழ் நூல்களிலே அறம்பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்களின் றன்மைகள் அவ்வளவுந் தெரிந்தெடுத்துக் குயிற்றிய மணிக்கலன் என வயங்குந் தனிப் பெருமாட்சி வாய்ந்த நூல் திருக்குறள் ஒன்றேயாம். பின்றைச் செந்தமிழ் நூல்களில் அவ்வுறுதிப் பொருள்களை எய்து தற்குரிய உயிர்களினியல்பும், அவை அவையிற்றைப் பெற வொட்டாது தடைசெய்யும் ஆணவ மலத்தின் இயல்பும், உயிர்கட்கு அறிவையும் முயற்சியையும் எழுப்புதற் பயத்தவாம் மாயை வினைகளின் இயல்பும், உயிர்களுக்கு மாயையைக் கூட்டி அவ்வாற்றாலல் அறிவு முயற்சிகளைத் தோற்றுவித்துத் தனது பேரின்பத்தை நுகர்விப்பானான முதல்வன் இயல்பும், வீடு பேற்றின் றன்மையும் வினாவிடை யுள்ளுறுத்து விளக்கித் திட்ப நுட்பஞ் செறிந்து, திருக்குறளினும் பார்க்கப் பன்மடங்கு சிறந்த மாட்சிமிக்கதாய் நிலவுவது சிவஞானபோதம் ஒன்றேயாம். திருக்குறள் பெரும்பாலும் மக்கள் ஒழுகலாறு களையே விரித் துரைப்பது; கடவுள் உயிர் மலம் மாயை வினைகளையும் வீடு பேற்றையும் ஆராய்ச்சி முறையானன்றி இயற்கை முறையான் வைத்துச் சுருக்கி நுவல்வது. திருக்குறட் பயிற்சிகொண்டு இறைவனிருப்பும் இறைவன் பொதுவியல்பு களும் உணர லாகு மேயன்றி, அவன் றன்னை நினைந்துருக அவாவும் அன்பர் பொருட்டு இன்றியமையாது மேற் கெள்ளும் அருளுவச் சிறப்பியல்பினை உணர்தல் இயலாது; அங்ங னமே, அதனால் ஏனை உயிர்களின் சிறப்பியல்புகளும், மல மாயை வினை வீடுபேறுகளின் உண்மைத் தன்மைகளும் வெள்ளிடை விலங்கலென விளங்கவறிந் துறுதி கூடுதல் இயலாது. மற்றுச் சிவஞானபோத நூலிலோ இவ்வியல்புகள் முற்றுமெடுத்துத் தெளித்து விளக்கப்பட்டிருக்கின்றன; திருக்குறளினும் மிகப் பெரிய ஆராய்ச்சிகளை அகத்தடக்கிய இவ்வறிவுப் பெருநூல், அதனினும் அளவிற் பெரிய தொன்றாக இருக்கற்பால தெனினும், இஃது அதனில் ஏழிலொரு கூறுக்குங் குறைவான அளவினதாயிருத்தலே பெரியதோர் இறும்பூதினைப் பயவா நிற்கின்றது. திருக் குறள் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட் பாக்கள் அல்லது இரண்டாயிரத்து அறு நூற்றறுபதடிகளால் ஆக்கப்பட்ட தொன்றாகும்; மற்றுச், சிவஞானபோதமோ தொண்ணூற்றி ரண்டு பாக்கள் அல்லது முந்நூற்றறு பதடி களான் மட்டுமே அமைக்கப்பட்ட தொரு தனிச்சிறப்பு வாய்ந்த தாகும். சிவஞான போதத்தைப் போற் சொற்சுருங்கிய தொரு நூலும், அங்ஙனஞ் சுருங்கிய எல்லையிலே மிக விரிந்தாழ்ந்த பொருட்பரப்பெல்லாம் அகத்தடக்கிய தொருநூலும் இந் நிலவுலகத்துள்ள எந்த மொழியிலும் இல்லையென்பது திண்ணம். இன்னுஞ் சொற்சுருங்க நூலியற்றுதல் அரிதே யாயினும், அங்ஙனம் இயற்றும் நூலிற் றான்கூறக் கருதிய அரும்பொரு ளெல்லாம் ஒருங்குசெறித்து அவற்றை நன்கினிது விளங்க வைத்தல் எவர்க்கும் அரிதரிது. வட மொழியிற் சொற்சுருங்க அமைக்கப்பட்ட சாங்கியம் யோகம், வைசேடிகம், நையா யிகம், மீமாஞ்சை, வேதாந்தம் முதலான நூல்கள் பலவுள, என்றாலும், அந்நூற்பொருள்கள் அந்நூற் சூத்திரயாப்புகளால் நன்கு விளங்குதலில்லை. அதனால் அவையிற்றுக்கு உரைகாணப் புகும் ஆசிரியர் தம்முள் ஒருவரோடெருவர் மிக இகலியிடும் பூசலுக்கும் ஓர் அளவேயில்லை. அங்ஙனஞ் சூத்திரப்பொரு டுணிதற்குப் பெரும்பாலும் இடனும் வாயிலும் இன்றிச் சொற்சுருங்க இயற்றப்பட்ட வடமொழி நூல்களை யொப்பன தமிழ் மொழியில் ஒருசில தாமும் இல்லை. தமிழ் இலக்கண இலக்கிய அறிவு வாய்ந்தா ரெவருந் திருக்குறள், சிவஞான போதம் என்னும் நூல்களுக்கு உரையுதவியல்லாமலே பொரு டெரிந்து கோடல் இயலும். மற்று, மேற்கூறிய வடமொழிச் சுருக்க நூல்களோ, தம்மையியற்றிய ஆசிரியரே தம்மாணாக் கர்க்குத் தம் பொருள் அறிவுறுக்க, அம் மாணாக்கர் அப்பொருளைத் தம் மாணாக்கர்க்கு அறிவுறுக்க இங்ஙனமாக அவ் வாசிரியர் தம் மாணாக்கர் வழியில் வந்தார் வகுத்த உரையுள வாயின், தம் பொருளை உள்ளவாறறிவிக்குமே யன்றி, அங்ஙனம் அவ்வாசியரிய மாணாக்க மரபில் வாராதார்க்குத் தம் உண்மைப் பொருளைப் புலப்படுத்துஞ் சொல்லாற்றல் வாயாதனவாய்த் தம்மைப் பயில்வாரெவர்க்கும் பெரிய தொரு மறுக்கத்தினை விளைவிப்பனவாய் இருக்கின்றன. இத்தகைய இடர்ப்பாடு செந்தமிழ் நூல்களிற் காணப்படா தென்பதற்குத் திருக்குறளுஞ் சிவஞானபோதமுமே உறுபெருஞ் சான்றாம். சீரிய நூல்களில், திருக்குறள், சிவஞானபோதம் என்னும் இவ்விரண்டுமே தாங்கருதிய பொருளைத் தம்மின் வேறானவோர் உரையுதவி வேண்டாது தக்கார்க்குத் தெற்றெனப் புலப்படுக்குஞ் சுருக்க நூல்களாய்த் தலைசிறந்து நிற்கின்றன. சுருங்கியவடிவிலுந் திருக்குறள் ஒரு கண்ணாடியை யொப்பது; சிவஞான போதமோ ஒரு புன்னுனிமேல் நிற்கும் ஒரு பனித்திவலையை யொப்பது; கண்ணாடியும் பனித் திவலையுந்தாம் வடிவிற் சிறியனவாய் இருந்தே தம்மிற் பெரிய பலவடிவங் களைத் தம்மகத்தே கொண்டு அவை தம்மை விளங்கக் காட்டு மாயினும் பனித் திவலைஅளவின் மிகச் சிறியது. கண்ணாடி யோ பனித்திவலையினும் பன்மடங்கு பெரியது; அதுபோற் றிருக்குறளுஞ் சிவஞானபோதத்தினும் பன்மடங்கு பெரிய தொரு சுருக்க நூலாகும். எனவே, அறம் பொருள் இன்பம் வீடென்னும் உறுதிப் பொருட் பரப்பெல்லாம் ஒருங்கு செறித்துத் திருக்குறள் யாத்த தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரது அறிவாற்ற லினுங், கடவுள் உயிர் மும்மலம் வீடுபேறு என்னும் அறிதற்கரிய நுண்பொருட் பரப் பெல்லாம் ஆராய்ந்து தன்னகத்தடக்கித் தெளிக்குஞ் சிவஞானபோதத்தை யாத்த ஆசிரியர் மெய் கண்டதேவ நாயனாரது தெய்வ அருளறிவின் ஆற்றல் பன் மடங்கு சிறந்த தொன்றாய் வீறிவிளங்கல் நடுநின் றாராய் வார்க்கெல்லாம் நன்கு விளங்கற் பாலதேயாம். திருக்குறண் மாட்சியினை வியந்து, தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்-மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி. என்று பண்டை நல்லிசைப் புலவரான கபிலர் பாடிய பாயிரவுரை, திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளைவிட, மெய்கண்டதேவர் இயற்றிய சிவஞானபோதத்திற்கே சாலப் பொருந்துவதா மென்க. சிவஞானபோதம் என்னுஞ் சைவசித்தாந்த முதல் நூலுக்கு ஆசிரியரான மெய்கண்டதேவர் பிறந்தருளிய இடந் திருவெண்ணெய் நல்லூரென்பது, இவர்தம் முதன் மாணவ ரான அருணந்திதேவர், உயர்சிவ ஞான போதம் உரைத்தோன் பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன் பொய்கண் டகன்ற மெய்கண்ட தேவன். எனச் சிவஞானபோதச் சிறப்புப் பாயிரத்தின்கட் குறித்த வாற்றானுந், தமது சிவஞானசித்திப் பரபக்கப் பாயிரத்தில், விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய் மேவு மெய்கண்ட தேவன்மிகு சைவ நாதன் எனவுஞ், சிவஞானசித்திச் சுபக்கப்பாயிரத்தில், என்னையிப் பவத்திற் சேரா வகையெடுத் தென்சித் தத்தே தன்னைவைத் தருளி னாலே தாளிணை தலைமேற் சூட்டும் மின்னமர் பொழில்சூழ் வெண்ணெய் மேவிவாழ் மெய்கண் டான்நூல் சென்னியிற் கொண்டு சைவத் திறத்தினைத் தெரிக்க லுற்றாம். எனவும் ஓதியவாற்றானுந், தாம் அருளிச் செய்த மற்றொரு சித்தாந்த நூலாகிய இருபா இருபஃது என்பதன் இரண்டாஞ் செய்யுளில், கண்ணகன் ஞாலத்துக் கதிரவன் றானென வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ! என விளங்கவெடுத்துக் கூறுதலானும் நன்கு பெறப்படும். இனி, மெய்கண்டதேவர்க்கு அவர்தம் தாய் தந்தையரால் இடப்பட்ட பெயர் சுவேதவனப் பெருமான் என்பதேயாம். இஃது அவர் மாணாக்கர் அருணந்திதேவர் சிவ ஞானபோதப் பாயிரத்தில் வெண்ணெய்ச் சுவேதவனன் என்று ஓதுதலோடு, இருபா இருபஃது 16-ஆஞ் செய்யுளில், திருவெண்ணெய் நல்லூர்ச் சுவேதவனத்தான். உருவென்ன வந்தெடுத்தான் உற்று, என்று அருளிச் செய்திருத்தலானும் நன்கறியப்படும். இவர்க்குச் சுவேதவனப்பெருமான் எனப் பெயர் போந்த காரணம் பின்வருமாறு கூறுப: விருத்தாசலம் என்னுந் திருமுதுகுன்றத்திற்குத் தென் மேற்கே பதினொருகல் தொலைவில் திருப்பெண்ணாகடம் என்னும் ஓர் ஊர் உளது. இதற்குப் பழைய நாளில் திருக் கடந்தை என்னும் பெயரும், இதன்கண் உள்ள சிவபிரான் திருக் கோயிலுக்குத் திருத்தூங்கானை மாடம் என்னும் பெயரும் வழங்கினமை, திருஞான சம்பந்தப் பெருமானுந் திருநாவுக்கரசு நாயனாரும் இங்குள்ள சிவபிரான்மேற் பாடி யிருக்குந் தேவாரத் திருப்பதிகங்களால் இனிதறியப்படும். இவ்வூரில் வேளாளர் மரபிற் பிறந்த அச்சுதகளப்பாளர் என்னுஞ் சிவனடியார் ஒருவர் இருந்தனர். இவர், திருவெண் ணெய்நல்லூர்ச் சடையப்ப பிள்ளையின் உடன் பிறந்தாளை மணம் புரிந்து இல்லற வொழுக்கத்தை இயல் வழாது நடத்தி வந்தனரெனச் சிலர் கூறுவர். இவ்வாறு இவர் தம் அருமை மனைவியாருடன் கூடி நெடுநாள் வாழ்ந்து வந்தும், இவர்க்கு மகப்பேறிலதாயிற்று. அது கண்டு இவர், மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கல நன்மக்கட் பேறு. என்று தெய்வத் திருவள்ளுவர் அருளியபடி நமக்கு மகப்பேறு வாய்ப்பினன்றோ நாம் மேற்கொண்ட இல்லறம், நல்லறமாம் என மனங்கவன்று, தங்குலகுருவாகிய அருணந்தி சிவாசாரி யாரை யடைந்து தங்குறையினைத் தெரிவித்தனர். அவர், உடனே திருஞானசம்பந்தப் பெரு மான் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகத் திருமுறை யினைக் கொணர்வித்துச் சிவபிரானையுந் திருஞான சம்பந்தரையும் வழிபட்டு, அதன்கட் பட்டுக்கயிறிட்டுப் பிரித்துப் பார்க்கப், பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும் வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே. என்னுந் திருவெண்காட்டுத் திருப்பதிகப் பாட்டுக் கட் புலனாயிற்று. அதுகண்டு அச்சுதகளப்பாளரும் அருணந்தி யாரும் மகிழ்மீக்கூர்ந்தனர். அதன்பின் அருணந்தியார் அத் திருப்பாட்டின் பொருளை உற்று நோக்கித், திருவெண் காட்டுத் திருக்கோயிலின் கண்ணவான மூன்று திருக்குளங்களில் மூழ்கியெழுந்து, சிவபிரானையும் அம்மையையும் வணங்கி வழிபடுவாரை விட்டு எல்லாத் தீவினைகளும் நீங்கும் எனவும், அவரைக் கொடிய பேய்களும் பீடியாவாய் அகலும் எனவும், அவர்க்குப் பிள்ளைப்பேறும் அவர் உள்ளத்திற் பெற விழைந்த வரங்களெல்லாமுங் கிடைக்குமெனவும், அவை அங்ஙனம் ஆகுமோ ஆகாவோவென ஐயமுறுதலும் வேண்டா வெனவும் இப்பாட்டின்கண் ஆசிரியர் தெளித்துக் கூறி யிருத்தலால், இதன்கட் சொல்லப்பட்டபடியே, நீவிர் நும் மனைவியாருடன் திருவெண்காடு சென்று, திருக் கோயிற் குளங்கள் மூன்றிலும் நீராடி யெழுந்து அம்மை யப்பரை வழிபட்டு வம்மின்கண்! நுமக்குப் பிள்ளைப்பேறு உண்டாதல் திண்ணம், என வற்புறுத்திச் சொல்லினர். அவ்வாறே செய்வேமெனக் கூறி, அவரை வணங்கி விடைபெற்றுத் தம்மூர் சென்ற அச்சுத களப்பாளர் சில நாளிற் றம்மனைவியாருடன் திருவெண் காடு அடைந்தனர். திருவெண்காடு, சீகாழிக்குத் தென் கிழக்கே ஏழுகல் தொலைவிலுள்ளது. தம்மாசிரியர் கற்பித்த படியே அச்சுதகளப் பளரும் அவர்தம் மனைவியாரும் அவ்வூரில் வைகி, அங்குள்ள திருக்குளங்கள் மூன்றிலும் நாடோறும் முறைப்படி நீராடி, ஆண்டுத் திருக்கோயில் கொண்டெழுந் தருளியிருக்கும் அம்மையப்பரை அன்பினால் உளங் குழைந் துருகி வணங்கி வழிபட்டு வராநிற்ப, அவர்தம் மனைவியார் கருக்கொண்டார். இறைவன் தமக்குச் செய்த அருட்டிறத்தை நினைந்து வியந்து பலகாலும் வணங்கி, அங்கிருந்தும் புறப்பட்டுத் தமதூர்க்குச் செல்லாமல், தம்மனைவியாரின் தாய் வீட்டுக்கே அவரை அழைத்துச் செல்லும்பொருட்டு, அச்சுதகளப்பாளர் மனைவி யாருடன் திருவெண்ணெய் நல்லூரே போய்ச் சேர்ந்தனர். தலைப் பிள்ளைப் பேற்றிற்குத் தாய்வீடு செல்வதே தமிழ்நாட்டு மகளிர்க்குள் வழக்க மாயிருத்தலின், அச்சுதகளப்பாளரும் அவ் வழக்கப்படியே தம் மனைவியாரை அவர்தந் தாய் வீட்டிற்கு அழைத்தே கினாரென்க. சிலர் கருதுமாறு, மிகப் பெருஞ்செல்வரோன திருவெண் ணெய் நல்லூர்ச் சடையப்பப் பிள்ளை, அச்சுத களப்பாளரின் மனைவியோடு உடன்பிறந்தவரானால், இவ்விருவரும் அவரது இல்லத்தில் எத்துணை வளத்துடன் இருந்தவராகல் வேண்டு மென்பதை யாங் கூறல் வேண்டா. அம்மையார் பத்தாந் திங்களில் ஓர் அழகிய ஆண்மகவை ஈன்றனர். திருவெண் காட்டிறைவர் திருவருளால் அம்மகவு பிறந்தமைபற்றி, அதற்குத் திருவெண்காடன் அல்லது சுவேதவனன் என்று பெயர் அமைத்தார்கள். வெண்காடன் என்பது தமிழ்ப்பெயர்; சுவேதவனன் என்பது அதற்கு நேரான வடமொழிப்பெயர். வெண்மையைச் சுவேதம் என்றுங், காட்டைவனம் என்றும் வடவர் வழங்குவர். மெய்கண்ட தேவர்க்குச் சுவேதவனன் என்னும் பெயர் போந்த காரணம் இங்ஙனமாதல் கண்டு கொள்க. சுவேதவனப் பெருமான் எல்லாச் செல்வ வளங் களோடுந் திருவெண்ணெய் நல்லூரின்கண் உள்ள தந்தாய் மாமன் இல்லத்திலேயே வளர்ந்து வரலானார். எளிய நிலையிலுள்ள தாய் தந்தை தமையன்மாருந் தமதில்லத்தில் மகப் பேற்றிற் கென்று வருவிக்கப்பட்ட மகளை, மகப்பேறு எய்தியபின்னும் இரண்டோர் ஆண்டுகள் கழியும் வரையிற், கணவன் வீட்டுக்கு விடாமை தமிழ் மக்கட்குட் சிறந்த தொரு வழக்கமாய்க் காணப்படுகின்றது. எளிய மக்களுக் குள்ளேயே இவ்வழக்கம் இத்துணை வேரூன்றி நிற்கு மானால் எல்லாச் செல்வங்களும் ஒருங்குடையார்பால் இவ் வொழுகலாறு இன்னும் எத்துணை மிகுதியாய் ஆழ்ந்து நிலைபெற்று நிற்றல் வேண்டும்! ஆகவே, சுவேதவனப் பெருமான் திருவெண்ணெய் நல்லூரிற் றந் தாய்மாமனது மாளிகையிலேயே தம் அன்னையாருடன் இனிதிருந்து வளரலானார் என்பதில் ஏதொருமாறுபாடும் இல்லை யென்க. இங்ஙனம் இவர்தம் அன்னையார் இவரைக் கருக் கொண்டவுடனே திருவெண்ணெய் நல்லூரிலுள்ள அவர் தந் தாய் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுபோய் விடப்பட்ட மையும், அவர் அங்கே கருவுயிர்த்தபின் அவர் தம் மகவுடன் கணவன்மனைக்குச் செலுத்தப்படாமல் தாய் வீட்டிலேயே நெடுநாள் இருந்தமையும் அதனாற் சுவேதவனப் பெருமான் திருவெண்ணெய் நல்லூரிற் றந் தாய்மாமன் இல்லத்திலேயே வளர்ந்து வந்தமையும், பண்டு தொட்டுப் போதருந் தமிழர் தம் ஒழுகலாறாயிருப்பவும், இதனை யறியாதார், சுவேத வனப் பெருமான் திருவெண்காட்டுத் திருக்குளத்தின் படிக் கரையிற் கண்டெடுக்கப்பட்ட பிள்ளையென்றும், அங்ஙனங் கண்டெடுக் கப்பட்ட பிள்ளையாதல் பற்றி எவரோ பெற்றுக் கிடத்திப் போன பிள்ளையை அச்சுத களப்பாளர் வளர்க்கின்றார்! என ஊரவர் பழிகூறா நின்றன ரென்றும், அப்பழிக் கஞ்சித் தமதில்லத்திற்கு வந்த தம் மைத்துனர் பால் அம்மக வினைத்தந்து அதனை வளர்த்துக் கொள்ளுமாறு அச்சதகளப் பாளர் விடுத்தனரென்றுந் தமக்குத் தோன்றியவாறெல்லாம் ஒருவர் வரைந்து விட்டனர்.3 அங்ஙனம் எடுப்புப்பிள்ளை எடுத்து வளர்க்குங் கருத்து டையரானால், அச்சுதகளப்பாளர் பெருஞ் செல்வராதலால், தமது வேளாள மரபிலேயே அழகிய ஒருமகவைப் பலரறியப் பெற்றுப், பழிச் சொல்லுக்கிடனின்றி அதனைத் தம்முடன் வைத்தே வளர்த்து மகிழ்ந்திருத்தல் கூடும். இங்ஙனஞ் செய்தலைவிடுத்துத் தங் குரவர்பாற் சென்று தேவாரத்திற் கயிறு செருகிப் பார்த்ததும், அதன்கட் டோன்றிய பேய டையா பிரிவெய்தும் பிள்ளையினோடுள்ள நினை, வாயினவே வரம் பெறுவர் என்னுந் திருஞானசம்பந்தர் திருபதிகப் பாட்டைக் கண்டுகளித்துத் திருவெண்காட்டிற்குத் தம் மனைவியுடன் ஏகி அதிற் சொல்லப்பட்டவாறே இறைவனை வழிபட்டதும் வீணாய் ஒழியும்; மேலும், அத் திருப்பாட்டின் பொருளை நம்பி வரங்கிடந்த அச்சுத களப்பாளர்க்கு அதிற் சொல்லப்பட்ட வாறே மகப்பேறு வாய்த்திலதாயின், அப் பாட்டின் பொருளில் நம்பிக்கை அறுதலோடு, திரு வெண் காட்டிறைவன்பாலும் அன்பு மிகாதன்றே? அத்துணைத் தவங்கிடந்துந் தம் மனைவியார் மகப்பெறுதல் இல்லையா யொழியக், கண்டெடுத்த வேறோர் அகதிப் பிள்ளைக்குத் திருவெண்காடன் அல்லது சுவேத வனன் எனப் பெயர் புனைதலிலும் அவர்க்குக் கருத்துச் செல்லாதன்றே? மற்று, அவர் தம் மகனுக்குச் சுவேதவனன் எனப் பெயர் சூட்டிய அன்பின் உறைப்பினை உற்றாராயுங் கால், அவர், தாங் கயிறிட்டுக் கண்ட தேவாரப் திருப்பதி கப்படியே மனைவியுடன் திருவெண்காடு சென்று, தவங் கிடந்து, அது புகன்றவண்ணமே திருவெண்காட்டிறைவர் திருவருளால் அவர் தம் மனைவி வயிறு வாய்த்துச் சிறந்த ஓர் ஆண் மகவு ஈன்றமை நோக்கி, இறைவன் பால் அளவுகடந்த அன்பு மீதூர்ந்தே சுவேதவனன் என அதற்குப் பெயரிட்டா ரென்பது நன்கு துணியப்படுமென்க. அற்றேல், அவரைக் கண்டெடுத்த பிள்ளையென்று அங்ஙனம் ஒருவர் வரைந்த தென்னையெனின்; தவத்தாற் பெரிய சான்றோர் தாயின் கருப்பையிற் றங்கி ஏனைப் பொதுமக்களைப் போற் பிறந்தாரெனக் கூறுதலைக் குற்றமென அவர் கருதினாராகலின் அங்ஙனம் வரைந் திட்டார். அவர்போல்வார், சைவ சமயாசிரியரும் அவரோ டொத்த மாட்சியுடைய சந்தான குரவருந்தாயின் கருப் பையிற் றங்கிப் பெண்குறி வாயிலாப் பிறந்தாரெனக் கூற ஒருப்படாமல், அவரெல்லாம் இறைவன ருளால் அன்னை வயிற்றினின்று பிறவாமல் திடீரென ஓரிடத்திற் குழந்தை யாய்க் கிடந்தா ரெனக் கூறுதலையே சிறந்ததாகக் கருதி அங்ஙனமே வரைந்து விட்டிருக்கின்றார். இவ்வாறு கூறுதல் உயர்ந்த எண்ணம் பற்றித் தோன்றிய தொன்றே யாயினும் அஃதிறைவன் நிகழ்த்தும் படைத்தற்றொழிலின் விழுப்பமும் நுட்பமும் உணராக் குறுகிய அறிவின் பான்மை யால் உண்டாயதாகலின், அதனை விரிந்த மெய்யறிவினார் ஏற்றுக் கொள்ளாரென்க. இவ்வுலகத்தில் உயிர்கள் தோன்றிய காலந்தொட்டு, அவையிற்றின் உடம்பு களை ஆண் பெண் சேர்க்கையினாலேயே இறைவன் தோற்று வித்து வருதல் காணப்படுதலின், தாயின் கருப்பையி னின்று மகவினைப் பிறப்பித்தலே இறைவன் அமைக்கும் அமைப்பாகு மன்றி, அதற்கு மாறாவதொரு தோற்றம், அவன்றன் அமைப் பாதல் செல்லா மையின், அஃது யாண்டந் தோன்றாதென்பதே திண்ணம். இந் நிலவுலகின்கண்ணே பற்பல தேயங்களில் ஆங்காங்குக் குழுமியிருக்கும் மக்கட் குழுவினரில் எண்ணிறந்த சான்றோர்கள் தோன்றியிருக்கின்றனர்; அவரெல்லாந் தாயின் கருப்பை யினின்றே பிறந்தாரல்லது பிறிதொரு வகையிற் றோன்றினா ரென்பது பெறப்படாமை யால், இறைவன் வகுத்த இவ்வகுப்புக்கு மாறக் பேசுதலே வழுக்குடைத்தாம். தாய் வயிற்றினின்று உயர்ந்த அறிவின ரைத் தோற்றுவித்தல் குற்றமெனக் கண்டானாயின், இறைவன் அவர்களை அவ்வாறு பிறப்பியா னன்றே. எத்தனையோ சான்றோர்கள் தம் அன்னையின் கருப்பையிற் றங்கிப் பிறந்ததைப் பறிப்பதை நங் கண்ணெதிலே இஞ்ஞான்றுங் கண்டோமே காண்கின்றோமே. இறைவன் பலகோடி யாண்டுகளாகச் செய்து போதரும் இப்படைத்தற் றொழிலுக்கு மாறாக எக்காலத்திலாயினும் எவ்விடத்திலா யினும் ஒருவர் வேறொருவாற்றல் தோன்றியதை எவரேனும் மெய்பித்துக் காட்டல் முடியுமா? முடியாதே. அங்ஙன மிருக்க, இறைவன் நிகழ்த்தும் படைப்புக்கு மாறாக ஒருவர் தோன்றினாரென ஒருவர் ஒரு கதை எழுதினாரானால், அது வெறும் பொய்க் கதையே யாகுமல்லது, உண்மையுரைப்ப தாகாதென்க. மேலும், ஒரு பெரியார், தந் தாய் தந்தையரின் சேர்க்கையால் தாய் வயிற்றினின்றும் பிறந்ததைக் குறை வென நினைந்து, அவரை அங்ஙனம் பிறந்தாரெனக் கூறாமல், அவர் தெய்வத்தினருளால் திடீரென ஒரு சிறுமக வாய்க் குளக்கரையிற் கிடந்தாரெனக் கரைந்தால், உலகத்தார் அங்ஙனம் ஒரு நிகழ்ச்சியினை யாண்டும் எக்காலத்துங் கண்டதின்மையின், அக் கட்டுக்கதை யினை நம்பாமை யோடு, எவரோ களவிற் பெற்ற பிள்ளையை அங்கே கிடத்திப் போயினாரெனவே நுவல்வதுஞ் செய்வர். ஆகவே, தாய் வயிற்றினின்று பிறக்கும் இயற்கை நிகழ்ச்சியினைக் குற்ற மென நினைத்து, அதனை மறைக்க ஒருவர் பொய்யுரை யினைப் புனைந்து கட்டிவிட்டால், எவளோ இழிந்த குலத்தின ளான ஒரு கைம்மை களவிற் புணர்ந்து பெற்ற மகவை அங்ஙனங் கிடத்திப் போயினாளென அதனினுங் குற்றமாயதொரு பழிச்சொல்லே பரவா நிற்கும். இதற்குச் சான்று மெய்கண்ட தேவரைக் கண்டெடுத்த பிள்ளையெனக் கதை கட்டி விட்டவர் வரைந்த கதையிலேயே வந்து விட்டது; கண்டெடுத்த பிள்ளை யென்ற அளவிலே, எவளோ பழுதுடையாள் பெற்றுப் போகட்ட பிள்ளையை வளர்க் கின்றார். என ஊரவர் பழிகூறத் துவங்கியதாக ஒரு பொய்யு ரையும் அவரே கூட்டிச் சொல்ல வேண்டுவதானமையும் அவரெழுதியதிற் காண்க. இன்னும், ஒரு பெரியார் தாய் வயிற்றிற் பிறவாமற் றிடீரென ஒரு சிறுமகவாய் ஒரு திருக்கோயிற் குளக்கரையிற் றோன்றினாரெனக் கிளக்கும் பொய்யுரையானது, இறைவன் எண்ணில் கோடி காலமாய் நடாத்திவரும் இயற்கைப் படைப்பு நிகழ்ச்சிக்கு முழுமாறாவதுடன், பண்டைப் பெரியாரான மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசகர், சுந்தரமூர்த்தி நாயனார் முதலான சைவ சமய குரவரின் மெய் வரலாற்றோடும் மாறு கொண்டொழி கின்றது. சமயாசிரி யரில் முதல்வரான மாணிக்கவாசகரே தாம் தாய் வயிற்றி னின்றும் பிறந்த வரலாற்றினைச் தாம் அருளிச்செய்த திருவாசகத்தின் போற்றித் திருவகவலில் மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும் ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும் இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும் மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் ஈரிடு திங்களிற் பேரிருள் பிழைத்தும் அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும் ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும் எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும் ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் தக்க தசமதி தாயொடு தான்படுந் துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும் ஆண்டுக டோறும் அடைந்தஅக் காலை. என நன்கெடுத்துக் கூறியிருக்கின்றார். அத்துணைச் சிறந்த முதலாசிரியரே தாந் தாய் வயிற்றிற் கருவாய்த் தங்கிப் பிறந்ததனை விரித்தெடுத் துரைத்திருக்கையில், அவரது பிறப்பினை அதற்கு மாறாகக் கூறுதல் பொருந்துமோ உரைமின்? இனி, மாணிக்கவாசகரைப் போலவே திருஞான சம்பந்தருந் தாய்வயிற்றில் கருவாய்த் தங்கிப் பிறந்தமை, பெருத்தெழும்அன் பாற்பெரிய நாச்சியா ருடன்புகலித் திருத்தோணி வீற்றிருந்தார் சேவடிக்கீழ் வழிபட்டுக் கருத்துமுடிந் திடப்பரவுங் காதலியார் மணிவயிற்றில் உருத்தெரிய வரும்பெரும்பே றுலகுய்ய உளதாக என்று சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தில் அருளிச் செய்திருத்தலால் அறியப்படும். அங்ஙனமே, திருநாவுக் கரையருஞ் சுந்தரமூர்த்திகளுந் தத்தந் தாய் வயிற்றிற் றங்கிப் பிறந்தமை அவ்வவர் வரலாற்றின் துவக்கத்திற் சேக்கிழாராற் கூறப்பட்டிருக் கின்றது. கடவுளைத் தாமே நேரே கண்டு அவரை ஏனை யோர்க்குங் காட்டிய தெய்வ ஆசிரியர்களே தாய் வயிற்றிற் றங்கிப் பிறந்து வளர்ந்து இறைவனரு ளொளியைப் பெற்று அதனைப் பெறுதற்குரியார் எல்லாரும் பெற்றுத் திகழச் செய்தனரென நம்முன்னாசிரியர் கூறியது, இறைவன் எல்லா உயிர்களையும் பிறவிக்குக் கொணரும் இயற்கை நிகழ்ச்சியொடு முழுதொத்து நிற்க, அதற்கு மாறாக அவரெல்லாந் தாய் வயிற்றி னின்று பிறவாமலே இடை வெளியிற் றோன்றினா ரெனப் புகல்வது பொருந்துமாறு யாங்ஙனம்? அல்லதூஉம், அவரெல்லாந் தாய் வயிற்றி னின்றும் பிறப்பது குற்றமாயிற், பின்னர் அவர் நம்போல் ஊனுடம்பு உடையராதலுங் குற்றமாய் முடியும்; அதுவுங் குற்றமாயிற் பின்னர் அவர் நம்போற் பிறவி யெடுத்தா ரென்பதுங் குற்றமாகவே முடியும். ஆதலால், ஊனுடம்பு டையவர்களெல்லாரும் ஊனுடம்புடைய தாய் வயிற்றி லிருந்தன்றி வேறு வகையிற் பிறத்தலும், நம்மனோ ரிடையில் உலவுதலும் யாண்டுங் காணப்படாமையின், ஒரு பெரியார் தாய்வயிற்றி லிருந்தன்றி இடைவெளியிற் றோன்றினாரெனக் கரைவது, இறைவன் எண்ணிறந்த காலமாகச் செய்துவரும் படைப்பி னியற்கைக்கு முழு மாறாவதுடன், மேலே காட்டியாங்குப் பல்வகைப் பழிச் சொற்கள் பரவுதற்குங் காரணமாம். எனவே, அங்ஙனங் கூறும் வரலாறு பொய்வரலா றாகுமென விடுக்க. இனி, அச்சுதகளப்பாளரின் மனைவியார் தம் மணி வயிற்றினின்றுந் தோன்றிய அவ்வாண்மகவு அழகிய வடிவுடைத்தாய்ச், சுவேதவனப் பெருமான் என்னும் பெயருடன் தாய் தந்தையராலும் அவர்தம் உறவினராலும் பேணி வளர்க்கப்பட்டுப், பிறைக்கொழுந்து வளர்வதென வளர்ந்து வரலாயிற்று. வளருந்தோறும் அப்பிள்ளையின் அறிவுஞ் செயலுங் கண்டாரெல்லாம் வியக்கும்படி சிறந்து தோன்றலாயின. தானிருக்கும் இடத்திலுந் தன்இல்லத்தைச் சூழ்ந்த இடங்களிலும் உள்ள ஒவ்வொரு பொருளையும் அவ்வப் பொருளின் இயற்கைகளையும் உற்றுநோக்கி, அவற்றின் உண்மைகளைத் தம் பெற்றோரிடத்தும் மற்றோரி டத்தும் உசாவி அறிவதில் அது வேட்கை மிகுதியும் உடைய தாயிருந்தது. அண்டை அயல் வீட்டுப் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுங்காலும், மற்றைப் பிள்ளைகளைப் போற் கலாம் விளைத்துக் குறும்பு செய்வதிற் சிறிதும் மனஞ் செல்லாமல் மணலிற் பாடம் எழுதுதல் போலவும் மணலைச் சிவலிங்க வடிவாகக் குவித்து அதற்கு இலையும் பூவுந் தூவி வணங்குதல் போலவுஞ் செய்து விளையாட்ட யர்ந்தது. தன்னோடொத்த பிள்ளைகளை யெல்லாந் தன் கீழ் வைத்துத் தான் அவர்க்குப் பாடங் கற்பிக்கு நிலையிலிருந்து ஏதேதோ சொல்வதைக் கண்டாருங் கேட்டாரும் ஈது ஏதோ ஒரு தெய்வக் குழந்தையாக இருக்க வேண்டும்! என வியந்து பேசினர். இவ்வாறாகத் தன் பெற்றார்க்கும் பிறர்க்கும் அளவிறந்த வியப்பினையும் மகிழ்ச்சி யினையும் பயந்து, இரண்டாண்டுகள் வளர்ந்து மூன்றாம் ஆண்டு துவங்கும் போது, ஒருநாள் நம் சுவேதவனப் பெருமான் வழக்கம் போலத் தனதில்லத்தையடுத்த இளமரக்காவில் மணலைக் குவித்து அதன்மேற் பூவும் இலையும் இட்டு அதனை வணங்கிய நிலையில் இருந்தனன். அந்நேரத்தில் அவ்விளமரக் காவில் இளைப்பாறுதற் பொருட்டு வந்த ஒரு துறவியார், அப் பிள்ளையின் நிலையைக் கண்டு பெரிதும் வியந்து நெஞ்சம் நெகிழ்ந்து அதன்பால் அணுகி அதனை உற்று நோக்க. அஃது எல்லாம்வல்ல அறிவாசிரியனாதற் குரிய தகுதி வாய்ந்திருத்தல் கண்டு, அதன் றலைமெற் றமது வலக்கையை வைத்துத், தம்பால் நிறைந்த சிவத்தின் அருளொளியைத் தமது கட்புலன் வழியே அப்பிள்ளையின் அறிவிற் பாய்ச்சி அதனைக் கிளர்ந்தெழச் செய்தார். பகலவன் மணியில் அவனது கதிரொளி பாய்ந்த வளவானே அது தீயினைக் காலுதல் போலவும், நிலாமணி முற்றத்தே நிலவொளி தோய்ந்த வளவானே அது நீரினைத் துளித்தல் போலவும், இயற்கையில் மாசற்ற பளிங்கிலே விளக் கொளி படின் அது சுடர்ந்து திகழ்தல் போலவுந் தூய அறிவு வாய்ந்த அப்பிள்ளையின் உயிரின்கண் அம்முனிவரின் சிவ வொளி ஊடுருவிப் பாய்ந்தவுடனே, அது சொல்லுதற்கரிய பேரறிவு விளக்கமுடையதாய்த் துலங்கலாயிற்று. அது கண்ட அம் முனிவர் பிரானார் தாம் தம் ஆசிரியன்பாற் பெற்ற மெய்ப் பொருளியல்புகளையும், உயிர் மாசு தீர்ந்து சிவத்தின் அருளிற் படிந்து சிவமாயிருக்கும் நிலைகளையும், அவற்றை எய்துதற்கான முடிந்த முறைகளையும் அப்பிள்ளையார்க்கு இனிதறிவுறுத்தி, இவ்வுண்மைகளை எங்கும் பரவச் செய்து எல்லாரையுஞ் சிவநெறிக்கட் செலுத்திடுக! எனக் கட்டளை தந்து போயினரென்பது. இங்ஙனம் நம் மெய்கண்ட பெருமானுக்கு மெய்ப் பொருள் அறிவுறுத்திச் சென்ற முனிவர் பெயர் இன்ன தென்பது, மெய்கண்டார் அருளிச்செய்த சிவஞான போதத் திற்குப் பாயிரமாக வைக்கப்பட்ட மலர்தலை யுலகின் மாயிரு டுமிய என்னுஞ் செய்யுளிற் குறிக்கப்பட வில்லை; அதன்கட் சொல்லப் பட்ட வரலாறு: நந்தியம் பெருமான் முனிவர் கூட்டத்திற்கு அருளிச் செய்த சிவஞான போதத்தை ஒரு நூலாகச் செய்துதவியவன் திருவெண் ணெய்நல்லூரிற் றோன்றிச் சுவேதவனன் என்னும் பிள்ளைத் திருப்பெயர் பூண்ட மெய்கண்டதேவன் என்னும் அத்து ஐணயேயாம்; அது, மயர்வற நந்தி முனிகணத் தளித்த உயர்சிவ ஞான போதம் உரைத்தோன் பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன் பொய்கண் டகன்ற மெய்கண்ட தேவன். என்னும் அப்பாயிரச் செய்யுளின் இடைநின்ற பகுதியால் இனிது விளங்காநிற்கின்றது. சிவஞானபோதத்திற்கு அப் பாயிரச் செய்யுள் இயற்றினவர் மெய்கண்டதேவர்க்கு முதன் மாணாக்கரான அருணந்தி தேவரென்பது, சிவஞான போதத்திற்கு முதலுரையாசிரிய ராகிய பாண்டிப் பெரு மாளாற் குறித்துரைக்கப்பட் டிருக்கின்றது. மற்று அருணந்தி தேவரோ தாம் இயற்றிய சிவஞான சித்தியாரின் நூற் பொருள் வந்த வரலாறு தெரிக்கும் நூற்சிறப்புப் பாயிரச் செய்யுளாகிய போத மிகுத்தோர் தொகுத்த பேதை மைக்கே என்னுஞ் செய்யுளில், இறைவன் அருள் நந்திதனக் கியம்ப நந்தி கோதிலருட் சனற்குமா ரற்குக் கூறக் குவலயத்தின் அவ்வழியெங் குருநாதன் கொண்டு தீதகல எமக்களித்த ஞான நூலைத் தேர்ந்துரைப்பன் சிவஞான சித்தி யென்றே. என நுவலும் பகுதியில், இறைவன் நந்தியம் பெருமானுக்கு அருளிச் செய்த சிவஞான போதச் செம்பொருளை நந்தி தேவர் தம் மாணாக்கர் சனற்குமார முனிவர்க்கு அறிவுறுத்த, அச் சனற்குமாரர் தம் மாணாக்கரான மெய்கண்ட தேவர்க்கு அதனை அறிவுறுத்த, மெய்கண்டதேவர் தம் மாணாக்கராகிய தமக்கு அதனை ஒரு நூலாகச் செய்து கொடுக்க, அதற்கு வழி நூலாகச் சிவஞானசித்தி எனப் பெயர் தந்து இந்நூலை இயற்றலாயினேன் எனப் பகர்ந்திருக்கின்றனர். சிவஞானபோதப் பாயிரச் செய்யுளில் நுவலப்படாத இறைவன் அருள் நந்தி தனக்கியம்பியதும், நந்தி கோதில் அருட் சனற்குமாரர்க்குக் கூறி யதும் புதியவாக அருணந்தியார் பாயிரச் செய்யுளிற் காணப்படுகின்றன; ஆகவே, இவையிரண்டுஞ் சிவஞா னபோதம் மெய்கண்ட தேவரால் இயற்றப்பட்ட காலத்தில் வழங்கவில்லை யென்ப தூஉம், மற்று இவை அருணந்தி தேவராலோ அல்லதவர் காலத்திருந்த ஏனைப் பிறராலோ புதியவாய்க் கட்டிச் சேர்க்கப்பட்டன வாமென்பதூஉம், மெய்கண்ட தேவர்க்குச் சிவஞான போதப்பொருள் அறி வுறுத்திய ஆசிரியர் பெயர் சிவஞான போதப் பாயிரச் செய்யுளிற் குறிக்கப்படா திருக் கவும் அவரது பெயர் சனற்குமாரர் என அருணந்தியார் புகன்றது அவரை வடநாட்டு முனிவர ராக்குதற் பொருட் டுச் செய்த புனைந்துரை யேயா மென்பதூஉம் மெய்ச் சான்றுகளின் வழியே நடுநின்று ஆராய்வாரெவர்க்குந் தெற்றென விளங்கற்பாலன வேயாம். அற்றேல், அருணந்தியார் சிவஞான போதத்திற்குத் தாம் உரைத்த பாயிரச் செய்யுளில் இறைவன் நந்திதேவர்க்குச் சிவஞானபோதப் பொருளை அறிவுறுத்தினானெனவும், கூறாமல், தாமியற்றிய சிவஞானசித்திப் பாயிரச் செய்யுளின் மட்டும் அவ்வாறு கூறியதென்னை யெனின்; இதற்கு இரு வகையில் விடை கூறலாம். பாண்டிப்பெருமாள் குறிப்பித் தவாறு, சிவஞான போதத்திற்குப் பாயிரச் செய்யுள் உரைத்தவர் அருணந்தியாரேயாயின், அவர் அங்ஙனம் அதன்கட் கூறியதற்கு முரணாகத் தமது சிவஞானசித்திப் பாயிரச் செய்யுளில் வேறு கூறார்; அதனாற், சிவஞான போதத்திற்குப் பாயிரம் உரைத்தார் அருணந்தியாராதல் கூடாது. பாண்டிப்பெருமாள் இருந்த காலம் மெய்கண்ட தேவர்க்குச் சிறிதேறக்குறைய நூறாண்டுகள் கழிந்த பின்னர்த்தென்பது, அவர் சிவஞானபோதத்திற்கு எழுதிய உரையில், உமாபதிசிவனார் இயற்றிய சிவப்பிரகாச நூற் செய்யுட்களை ஆங்காங்கு மேற்கோளாக எடுத்துக் காட்டி யிருத்தல் கொண்டு துணியப்படும்4. சந்தான குரவர் நால்வரில் இறுதிக்கண் நின்ற உமாபதி சிவனார்க்கும் பிற்பட்டிருந்த பாண்டிப்பெருமான், சிவஞானபோதப் பாயிரச்செய்யுள் இயற்றினார் அருணந்தி தேவரே என்பதனை யாங்ஙனங் கண்டனரோ அறிகிலம். மெய்கண்ட தேவர்க்கு முதன் மாணவர் அருணந்தியாராதல் கொண்டு, அவரே அந் நூலுக்குப் பாயிரமுரைத்தாரெனக் கருதினர் போலும்! மற்றுச், சிவஞான முனிவர் தாம் சிவஞான போதத்திற் குரைத்த உரையுட், சிவஞான போதப் பாயிரச் செய்யுள் இயற்றினார் அருணந்தி தேவர் எனக் கிளவாமையின், அப் பாயிரச் செய்யுள் கூறினார் அருணந்திதேவரே என்னும் பாண்டிப் பெருமாள் கூற்று ஐயுறற்பால தொன்றா யிருக்கின்றது. இனிச், சிவஞானபோதப் பாயிரச் செய்யுள் கூறினவர் உண்மையை உள்ளவாறு நுவலும் உளப்பான்மையுடைய ராகக் காணப்படுகின்றார். அருணந்தியாரோ உண்மையை ஓரோ விடங்களில் மறைத்து வடமொழியாளர் புனைந்து கட்டிய புனைவுபொருளின் வழிச் செல்பவராகவுங் காணப் படுகின்றார். பொருளுண்மை யுணர்வதில் மிகுந்த வேட்கை யும் ஆராய்ச்சி யறிவும் நடுவுநிலைமையும் வாய்ந்தார்க்குச் சைவசித்தாந்தக் கோட்பாடுகள் இயற்கையில் விளங்கற் பாலனவேயாம். சைவசித்தாந்த நூல்களையும் அவற்றின் கொள்கைகளையுஞ் சிறிதுமே அறியாத மேல்நாட்டா சிரியர்களில் எத்தனையோ பேர் சைவசித்தாந்தத்தோடு ஒத்த கோட்பாடுகளை விளக்கி யெழுதியிருக்கின்றனர், விளக்கி யெழுதிவருகின்றனர். அவர்க் கெல்லாம் இறைவன் நேரே தோன்றி அவை தம்மை அறிவுறுத் தினான் என்னுங் கதை வழங்கக் கண்டிலம். இக் காலத்தில் நம் நாட்டவரறியாத, கனவினுங் கண்டிராத எத்தனையோ புதுமைகளை யெல்லாம் மேனாட்டறிஞர்கள் நாளும் நாளுங் கண்டறிந்து வெளியிட்டு வருகின்றனர். முதலில் நீராவியின் ஆற்றலைக் கண்டு, அதனைப் பயன் படுத்தி இந்நிலவுலகம் எங்கணும் புகைவண்டித் தொடரையும் இன்னும் எத்தனையோ வகையான பொறிகளையும் மேனாட்டறிஞர் களே இயக்கி மக்களுக்கு அளவிறந்த நன்மைகளை விளைத்து வருகின் றார்கள். இன்னும் இங்ஙனமே நீராற்றல் மின்னாற்றல் முதலா னவைகளையும் புதிய புதியவாய்க் கண்டறிந்து மேனாட் டறிஞர்களே அவையிற்றை உலகிற்குப் பயன்படுத்தி வருகின்றார்கள், அம்மறைந்த ஆற்றல்களிலெல்லாந்த தினைத்தனையாயினும் இறைவன் நம் நாட்டவர்க்கு அறிவுறுத்தின துண்டோ? இல்லையே, இன்னோரன்ன மறைபொருணுட்பங்களையெல்லாம் மக்களுள் அறிவும் முயற்சியும் ஆராய்ச்சியும் உடையார் தாமே கண்டறிந்து பயன்படுத்தத் தக்கவராயிருக்கும் போது, இவற்றினும் பலபடியால் எளிதில் அறிதற்கு இசைந்தனவான சைவ சித்தாந்தக் கொள்கைகளை மட்டும் மாந்தர் அறியா திருப்ப, இறைவனே அவருட் சிலர்க்கு நேரே போந்து அவை தம்மை அறிவுறுத்தினானெனக் கிளக்குமுரை யாங்ஙனம் பொருந் தும்? ஒவ்வொரு பொருளின் இயல்புகளையும் மக்கள் தமதறிவை உய்த்து ஆய்ந்துதெளிந்து உறுதி கூட வேண்டு மென்பதே இறைவன் திருவுளக் குறிப்பாகுமன்றி, அவர் தமதறிவை ஊக்காது மட்டிகளாய் மடிந்து கிடப்ப அவர்க்கு அவையிற்றை அவனே வலிந்துவந் துணர்த்துதல் அவன்றன் திருவுளக் குறிப்பாகாது. அதனாற், சிவஞானபோதத்திற்குப் பாயிரச் செய்யுள் உரைத்த ஆசிரியர், இறைவனே சிவஞானப் போதப் பொருளை நந்தியெம்பெருமானுக்கு அருளிச் செய்தா னெனப் பொருந்தாவுரை கூறிற்றிலர். மற்று, அருணந்தியாரோ வடமொழியாளர் மதத்தின்பாலராய் இறைவனே அதனை நந்தியெம் பெருமானுக்கு அருளிச் செய்தானென வொரு பொருந்தாவுரை புனைந்து விட்டார். இன்னுஞ், சிவஞான போதப் பொருளை நந்திதேவர்பாற் கேட்ட ஒரு முனிவர் மெய்கண்டதேவர்க்கு அதனை அறிவிக்க, மெய்கண்டதேவர் தமது கூர்த்த அறிவால் அதனைப் பலவாற் றானும் ஆராய்ந்து தெளித்து ஒரு நூலாக இயற்றினாரெனக் கூறுஞ் சிவஞான போதப் பாயிர வுரைகாரர் கூற்றே பட்டது பட்டாங்கு கிளக்கும் பெற்றியின தாய்த் துலங்கா நிற்கின்றது. மெய்கண்டதேவர்க்கு அதனை அறிவுறுத்திப் போன முனிவர் பெயர் மெய்கண்ட தேவர்க்கே தெரியாமையாற் போலும் அவர் அதனைத் தமது நூலுள் யாண்டுங் குறிப்பிட்டிலர். மற்று, அருணந்தியார் உமாபதி சிவனார் முதலான பின்னாசிரியரோ தத்தம் ஆசிரியர் பெயரை நன்கறிந்தமையால், அவ்விருவருந் தாந்தாம் இயற்றிய நூல்களுள் தத்தம் ஆசிரியர் பெயரைக் கிளந்தெடுத்தோதினர். இன்னும், மெய்கண்ட தேவரோ தம்மாசிரியர் இன்னாரெனத் தாம் வகுத்த சிவஞான போத நூலுள் யாண்டும் எடுத்தோதா மையின், அந்நூலுக்குச் சிறப்புப் பாயிரங் கூறினாரும், மெய்கண்ட தேவர்க் கதனை யுணர்த்தி னார் இன்னாரெனக் கிளவாராய் வாளா நந்தி முனி கணத் தளித்த உயர்சிவஞான போத முரைத்தோன் என வாய்மையே கூறினார். பட்டாங்கு கிளந்த இம் மெய்யுரைக்கு மாறாக அருணந்தியார் சிவஞான போதப் பொருளை மெய்கண்ட தேவர்க் குணர்த்தினவர் சனற் குமாரர் எனக் கூறியது, தமிழாசிரியராகிய மெய்கண்ட தேவர் கூர்ந்துகண்ட மெய்ப்பொருளை வடமொழி யாளர்க்கு உரிமை யாக்குதற் பொருட்டுச் செய்த சூழ்ச்சிப் புனைவுரையேயாம்; அதனால், அருணந்தியாருரை கொள்ளற்பாற் றன்றென விடுக்க. இனி, அருணந்தியார் தமக்கு முதல் நூலாகிய சிவஞான போதத்தையும், அதற்கு வழி நூலாகத் தாம் இயற்றிய சிவஞான சித்தியையுந், தம் மாணாக்கர் மறை ஞான சம்பந்தருக்கு அறிவுறுத்தருளினர். இம் மறை ஞான சம்பந்தரை, இவர் தம் மாணவரான உமாபதி சிவனார் தாம் இயற்றிய வினா வெண்பா என்னும் நூலில் மருதச் சம்பந்தர், கடந்தைச் சம்பந்தர் எனப் பலகால் ஓதுதலின், இவர் பிறந்து வளர்ந்த ஊர்கள் திருமருதூருந் திருக்கடந் தையும் என்பது புலனாம். இம் மறைஞானசம்பந்தர் தவவொழுக்கத்திலேயே முழுதும் உறைத்து நின்றமையால், இவர் நூல் ஏதும் இயற்றிற்றிலர். ஆயினுந், தாம் உணர்ந்த சிவஞானபோதம் சிவஞானத்தியார் என்னும் நூல்களைத் தம் மாணவரான உமாபதி சிவனார்க்கு அறிவுறுத்தருளினர். இனி, அவையிற்றைப் பயின்று தெளிந்த உமாபதி சிவனார், அவை யிரண்டற்குஞ் சார்பு நூலாகச் சிவப் பிரகாசம் எனப் பெயரிய அறிவு நூலை இயற்றியருளினார். இவர் இந்நூலை இயற்றுகின்ற காலத்திற், சிவஞான போத நூல் வந்த வரலாற் றினுக்கு இன்னும் இரு வட நாட்டு முனிவர்கள் காரணராகப் புனைந்து கட்டிச் சொல்லப் படுவாராயினர். அது, சிவப் பிரகாசப் பாயிரத்திற் போந்த, தேவர்பிரான் வளர்கயிலைக் காவல் பூண்ட திருநந்தி அவர்கணத்தோர் வெல்வர் பாரிற் பாவியசத் தியஞான தரிசனிகள் அடிசேர் பரஞ்சோதி மாமுனிகள் பதியா வெண்ணெய் மேவியசீர் மெய்கண்ட திறலார் மாறா விரவுபுகழ் அருணந்தி விறலார் செல்வத் தாவிலருள் மறைஞான சம்பந்தர் இவர்இச் சந்தானத் தெமையாளுந் தன்மை யாரே, என்னுஞ் செய்யுளால் நன்கறியப்படும். இதன் கண் நந்திதேவர் முதலாசிரியரும், நந்தி தேவரின் மாணவரான முனிவரில் ஒருவர் இரண்டாம் ஆசிரியரும், அவர்க்குப்பின் சத்தியஞான தரிசனிகள் என்பார் மூன்றாம் ஆசிரியரும், அவர்க்குப்பின் பரஞ்சோதி மாமுனிகள் நாலாம் ஆசிரியரும், அவர்க்குப் பின் மெய் கண்டதேவர் ஐந்தாம் ஆசிரியருமாக நுவலப் பட்டமை காண்க. மேலே காட்டியவாறு, நந்திதேவர் முனிவர் கூட்டத் திற்கு அருளிச் செய்த சிவஞானபோதப் பொருளை அம் முனிவரில் ஒருவர் மெய்கண்டதேவர்க்கு அறிவுறுத்த, மெய்கண்ட தேவர் அதனை ஒரு செம் பொருணூலாக இயற்றியருளினார் என்னும் அவ்வளவே சிவஞானபோதப் பாயிரச் செய்யுள் உரையா நிற்பச், சிவஞான சித்திப் பாயிரச் செய்யுளோ இறைவன் அதனை நந்தியெம்பெருமானுக்கு அறிவுறுத்த, நந்தியெம் பெருமான் அதனைச் சனற் குமாரர்க்கு அறிவுறுத்த, மெய்கண்டதேவர் அதனை ஒரு நூல் வடிவிற் செய்தருளினா ரெனப் புகலா நின்றது. எனவே, மெய்கண்ட தேவர் காலத்தில் வழங்காத இரண்டு செய்திகள் புதியவாகச் சிவஞானசித்தியார் காலத்தே உண்டாய் விட்டமை தெளியக் கிடக்கின்றது. இனி, சிவப்பிரகாசர் காலத்திலோ, நந்தி முனிவர் குழாத்துக்கு அருளிச் செய்த சிவஞானபோதப் பொருளை அக்குழாத்துள் ஒருவர் சத்தியஞானதரிசனிகளுக்கு அருளிச் செய்ய, அவர் பரஞ்சோதி முனிகளுக்கு அருளிச் செய்ய, அவர் மெய்கண்ட தேவர்க்கு அருளிச் செய்ய, மெய்கண்டதேவர் அதனை ஒரு நூலாகச் செய்தருளினா ரென முன் இல்லாத வேறிரண்டு குறிப்புகள் பதியவாய்ப் கிளைத்துவிட்டன. சிவஞான போதப் பாயிரத்தில் நுவலப் படாத இறைவனையுஞ் சனற் குமாரரையும் அருணந்தியார் யாங்ஙனங் கண்டனரோ அதற்குச் சான்றேதுங் கண்டிலம். இன்னுஞ், சிவஞானசித்திப் பாயிரத்திற் காணப்படாத சத்தியஞான தரிசனிகளையும் பரஞ்சோதி முனிவரையும் உமாபதிசிவனார் யாங்ஙனங் கண்டனரோ அதற்குஞ் சான்றேதுங் காண்கிலம். இனிச், சிவஞான போத நூலாசிரியராகிய மெய்கண்ட தேவரோ, தாம் இயற்றிய அந்நூற்பொருளை, இறைவன் நந்திதேவர்க்கு இயம்பின னெனவாதால், நந்திதேவர் அதனை முனிவர் குழுவிற்கு அறிவுறுத்தன ரெனவாதல் தமது சிவஞான போத நூலுள் ஓரிடத்தாயினுங் குறிப்பிட்டிலர். அவர் குறிப்பிட்டவெல்லாம்: அந்தம் ஆதி என்மனார் புலவர் என முதற் சூத்திரத்திறுதியிலும், இரண்டுவகையின் இசைக்குமன் உலகே என ஆறாஞ் சூத்திரத்திறுதியிலும் மொழிந்தவை களேயாம். தாம் முடித்துக்கூறும் இச்சைவசித்தாந்தப் பொருள்கள் தமக்கு முன்னிருந்த ஆசிரியர்களாற் கூறப்பட்டன வாகும் என்பதே அச்சொற்றொடர்ப் பொருளாதல் தெற்றென விளங்கா நிற்கும். இதனால் மெய்கண்டதேவர் தமது சிவஞானபோத நூலுட் பலவாற்றானும் ஆராய்ந்து முடித்த முடிபுகள், தமக்கு முன் இமயம் முதற் பொதியம் ஈறாக விரிந்த தமிழ் நாட்டகத்திருந்த சான்றோர்கள் ஆராய்ந்து கண்ட முடிவுகளேயாதலை விளங்கத் தெரித்தாராயினர். ஆகவே, தமிழ்ச்சான்றோர் கடவுள் உயிர் மலம் என்னும் முப்பொருட் டன்மைகளைத் தீர ஆராய்ந்து தெளித்த உண்மைகளையே, மெய்கண்டதேவர் பின்னும் ஆராய்ந்து முறைப்படுத்தித் தந்நூலிற் பொதிந்து வைத்தாரென்பது நன்கு துணியப்படும். துணியப்படவே, `மெய்கண்டதேவர் அருளிச் செய்த சிவஞானபோதச் செம்பொருணூல் முதலிலிருந்து முடிவு வரையில் தூய தமிழ் நூலேயாதலுந் தானே பெறப்படும். இது முழுதுந் தாமே ஆக்கிய நூலாதல் பற்றியன்றே மெய்கண்ட தேவர். தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் எம்மை யுடைமை எமையிகழார்--தம்மை யுணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற் புணராமை கேளாம் புறன். என அதற்கு அவையடக்கச் செய்யுளுந் தாமே கூறியுள்ளார். மற்று, இது தம்மால் ஆக்கப்படாமற் பன்னிரண்டு சூத்திர வடிவாய் முன்னமே தமிழில் யாக்கப் பட்டிருக்கத் தாம் அதனையெடுத்து, ஒவ்வொரு சூத்திரப் பொருளையும் பல அதிகரணங்களாக வகுத்து, ஒவ்வோர் அதிகரணத்தும் உரைநடையில் வார்த்திகப் பொழிப்புஞ் செய்யுள் நடையில் எடுத்துக்காட்டு வெண்பாக்களும் ஆகிய இவை மட்டுமே சேர்த்து, அதனைப் பெருக்கி ஒரு நூலாக்கி வைத்தனராயின், தம்முடைய வல்லாச் சூத்திரப்பொருளை அங்ஙனந் தம்முடைய வாக்கி அதற்கு அவர் அவையடக்கமுங் கூறுதல் ஆகாதன்றே? தாஞ்செய் நூலாயினன்றே அதன்கட் போந்த பிழைகளைப் பொறுக்கும்படி வேண்டி அவையத்தார்க்குத் தாம் அடங்கிக் கூறுதல் அமையும். இருந்தவாற்றாற், சிவஞான போத நூற்பா பன்னிரண்டும் முன்னமே தமிழில் ஆக்கி வைக்கப்பட்டிருந்த தெனச் சான்றேதுமின்றிக் கரைவார் கூற்றுச் சிறிதும் பொருந்தாதென்க. இனிச், சிவஞானபோதத்திற்கு முதன்முதல் உரை யெழுதிய பாண்டிப்பெருமாள் முதல், அவர்க்குப்பின் உரை வகுத்த சிவஞான முனிவர் ஈறாக வந்த உரைகாரரெல்லாரும், வட மொழி இரௌரவாகமத் திறுதியிற் பாச விமோசனப் படலத்தின்கட் பன்னிரு சூத்திர வடிவினதாய் இருந்த வடமொழிச் சிவஞானபோதத்தையே மெய்கண்டதேவர் தமிழில் மொழிபெயர்த்து, வார்த்திகப் பொழிப்பும் எடுத்துக் காட்டு வெண்பாக்களுந் தாம் புதியவாக இயற்றிச் சேர்த்திட்டா ரெனக் கூறுவதே பற்றி, இந்நூல் வரலாற்றி னை நடுநின்று ஆராய்ந்து காண மாட்டாத தமிழ்ப்புலவர் சிலர் சிவஞான போதத்தை மொழிபெயர்ப்பு நூலென்றே நம்பிச் சொல்வதிற் பழகி விட்டார். சிவஞான போதம் மெய்கண்ட தேவரால் முதன் முதற் செய்யப்பட்ட தமிழ் நூலாகுமே யன்றி, அது வட மொழியினின்றும் - மொழிபெயர்த்துச் செய்யப் பட்ட மொழி பெயர்ப்பு நூலாகாது என்பதனை இற்றைக்கு நாற்பதாண்டு களுக்கு முன்னமே சித்தாந்த தீபிகை என்னும் உண்மை விளக்கத் திங்கள் வெளியீட்டின்கண்யாம் அந்நாளிற் சிவஞான சித்தியார் அளவையியலுக்கு வரைந்து வெளியிடு வித்த உரையின்கண் முதன்முதல் எடுத்துக் காட்டினேம். அதற்குப் பின், எமது ஞான சாகரம் என்னும் அறிவுக்கடல் வெளியீட்டின் மூன்றாம் மலரிலுஞ் சிவஞானபோதம் என்னுந் தலைப்பின்கீழ் அது மொழிபெயர்ப்பு நூலாத லின்றித் தமிழிலேயே ஆக்கப்பட்ட நூலாதற்கு வலிய சான்றுகள் பலவுமெடுத்துக் காட்டி விளக்கினோம். அதன் பின்னும், எமது மாணிக்கவாசகர் காலம் என்னும் பெரு நூலிற் சிவஞான போதம் மெய்கண்ட தேவரால் முதன்முதற் றமிழில் இயற்றப் பட்ட அறிவு நூலாதலும், வடமொழிச் சிவஞானபோதமே, தமிழ்ச் சிவஞானபோதத்தைப் பார்த்துச் செய்த மொழி பெயர்ப்பு நூலாதலும் நன்கு விளங்கப் பல சிறந்த சான்றுகள் காட்டி நிறுவினாம். இங்கும் அதுபற்றி இன்னுஞ் சில கூறுதும். மெய்கண்டதேவர் தமது சிவஞானபோதத்தை வடமொழி யிலிருந்து மொழி பெயர்த்துச் செய்தனராயின், அதற்குத் தாம் அசையடக்கங் கூறியிரார். அற்றன்று, தாஞ்செய்த மொழி பெயர்ப்புக்கே அவையடக்கங் கூறினா ரெனிற், கம்பருங் கச்சியப்பரும் முறையே இராமாயணமுங் கந்தபுராணமும் வடமொழியைப் பார்த்துத் தாஞ் செய்தமை கிளந்து தாஞ்செய் மொழிபெயர்ப்பிற் காணப்படுங் குறைகளைப் பொறுக்குமாறு அவையத்தாரை வேண்டி னாற் போல, மெய்கண்டதேவரும் வடநூலிருந்து தமது நூலை மொழிபெயர்த்துச் செய்தன ராயின் அதனைக் கிளந்து கூறியிருப்பர். மற்று அவர் அவ்வாறு குறிப்பா லாயினும் வெளிப்படையாலாயினும் ஒருசிறிதுங் கூறா மையின் அவர்செய்த சிவஞானபோத நூலை மொழி பெயர்ப்பு நூலென்று நுவலுதற்கு அதனுள் அகச்சான்று ஏதுமில்லை யென்பது கருத்திற் பதிக்கற்பாற்று. இனிப், புறச்சான்றாயினும் உளதோவெனின், அதுவும் இல்லையென்பது காட்டுவாம். சிவஞானபோதத்திற்குப் பாயிரச்செய்யுள் எழுதிச் சேர்க்கப்பட்ட காலம், அந்நூலா சிரி யரான மெய்கண்டதேவர் சிவபிரான் றிருவடி நீழல் எய்தியதற்குப் பிற்பட்டதாகும் என்பது ஆராய்ச்சியாற் புலனா கின்றது. அப்பாயிரச் செய்யுள் இயற்றினார் இன்னாரென்பது விளங்காவிடினும், அவர் மெய்கண்ட தேவரின் ஆசிரியரை நந்திதேவரின் மாணவரில் ஒருவராக உரைத்தல் கொண்டு, அந்நூற் சிறப்புக்கு அவர் நந்திதேவரின் றொடர்பை நாட்டல் வேண்டினாரென்பது மட்டுந் தெற் றென விளங்கா நிற்கின்றது. எனவே, தென்னாட்டின்கட் செய்யப்பட்ட சிறந்த தமிழ்நூற் பொருள்கள், வடநாட்டின் கண் இருந்த முனிவரிலிருந்து வந்தன வெனக் கூறுதலை ஒரு பெருமையாக் கொண்டவர் அப்பாயிரம் ஆக்கியோ ரென்பதூஉம், அதனால் மெய்கண்ட தேவர்க்குப் பின்னர்த் தான் வடநாட்டு முனிவர்க்கே எல்லா ஏற்றமுஞ் சொல்லும் ஒரு பிழைபாடான கொள்கை இந்நாட்டின்கட் பரவத் துவங்கலாயின தென்பதூஉம் அதனிலிருந்து உய்த் துணரக் கிடக்கின்றன. இத்தகைய பிழைபாடு அப்போதுதான் பரவத் துவங்கியதன்றி அஃது இன்னும் வேர் ஊன்றாமையால், அப்பாயிரம் உரைத்தவர், சிவஞானபோதம் நந்திதேவர் வழியில் மெய்கண்ட தேவர்க்கு வந்ததென மொழிந்தனரே யல்லால், அது நந்திதேவரால் வடமொழியிற் செய்யப் பட்டிருப்ப அதனை மெய்கண்டதேவர் தமிழில் மொழி பெயர்த்துச் செய்தாரெனப் பின்னும் ஒரு பொய் கூறத் துணிந்திலர். அன்றி அவர் துணிந்து அப்பொய் கூறினுந், தமிழ் வல்லார் தொகை மலிந்த அந்நாளில் வடமொழிச் சிவஞான போதத்தைப் பல இடங்களிலிருந்துஞ் சுவடி களாக வருவித்துக் காட்டுக என்று அறிஞர் பலருங் கேட்ப ராகலானும், முயற் கொம்புபோல் இல்லாத தான வட மொழிச் சிவஞான போதத்தை அவர் அங்ஙனம் பலஊர் களிலிருந்தும் பல ஏடுகளாக வருவித்துக் காட்டல் இயலாதா கலானும் என்பது. எனவே, சிவஞானபோதத்திற்குப் பாயிரச் செய்யுள் பாடியவர், அத்தகையதோர் அரியநூல் அஞ்ஞான்று வடமொழியில் இல்லாமையானும், மெய் கண்ட தேவர் தமது அளப்பரு மதியால் ஆராய்ந்து அரும்பொருட் பரப்பெல்லாம் அடக்கிச் செய்த அந்நூலை மொழிபெயர்ப்பு நூலென்று பொய்யுரை கூறத்துணியாராய், அதுகூறத் துணியாராயினும் அது வடநாட்டு முனிவர் வழியில் வந்ததெனக் கூறுவதில் மட்டும் வேட்கை பெரி துடையராய் நந்தி முனிகணத் தளித்த உயர் சிவஞான போதம் என்னும் அவ்வளவே கூறிப்போயி னார். இவ் வாற்றாற், சிவஞான போதப் பாயிரச் செய்யுளிலுஞ் சிவஞானபோதம் மொழி பெயர்ப்பு நூலென்றற்கு ஏதொரு குறிப்புங் காணப்படாமை கண்டுகொள்க. அற்றன்று, நந்திமுனிகணத்தளித்த சிவஞான போதம் என்று கூறப்பட்டதுகொண்டே, நந்திதேவர் அருளிச்செய்த சிவஞானபோதம் வடமொழியில் இயற்றப்பட்ட தொன் றாகல் வேண்டுமென்பது பெறப்படும். என்னை? நந்திதேவர் வழங்கியது வடமொழியே யல்லது தமிழ்மொழி அன்றா கலான் எனின்; நந்திதேவர் வடமொழியேயன்றித் தமிழ் வழங்கவில்லை யென்பது யாங்ஙனங் கண்டீர்? வடமொழிப் புராணங்கள் உரைப்பக் கண்டா மெனின், வடமொழியார் அவர் வடமொழி பேசினர் என்ப; தமிழ்மொழியார் அவர் தமிழ் பேசின ரென்ப; உண்மை காண்பவர் அவர் வழங்கியது தமிழே யன்றி வடமொழி அன்றென முடிவு கூறுவர். ஏனெனில், அதனை ஒருசிறிது விளக்குதும். வடமொழி வழங்கிய ஆரியர் இவ்விந்திய நாட்டுட்புகு முன்னரே, இதன் வடக்கேயுள்ள பனி (இமய) மலை தொடுத்துத் தெற்கேயுள்ள குமரிவரையிலுங், கிழக்கே வங்க நாட்டிலிருந்து மேற்கே பெலுசித்தானம் வரையிலும் பேசப்பட்ட மொழி தமிழேயாகும். இது தமிழ் வழங்கிய மாந்தரைத் தயுக்கள் என்றழைத்து அவருடன் போ ராடிய பண்டை ஆரியர் பாடிய இருக்கு வேதப்பாட்டுகளால் நன்கு புலனாகின்றது. இதன் விரிவை மாணிக்கவாசகர் காலம் பண்டைத்தமிழர் ஆரியர், முற்கால பிற்காலத் தமிழ்ப்பு லவர், வேளாளர் நாகரிகம் முதலான எம்முடைய பிறநூல்களிற் கண்டு கொள்க. இன்னும், இவ்விந்திய தேயத்தின் வடமேற் கெல் லைக்குள் உள்ள பஞ்சாப்பு மாகாணத்தின்கண் இருக்கும் அரப்பா, மொகிஞ்சதரோ என்னும் இரண்டு இடங்களில் முன்னொரு கால் நாகரிகத்தில் தலைசிறந்து விளங்கிய இரண்டு பெரிய நகரங்கள் அழிந்துபட்ட குறிகள் தோன்றக் கண்டு, நம் ஆங்கில அரசின் பழமையாராய்ச்சிக் கழகத்தார் அவ் விடங்களை அகழ்ந்து பார்க்க, அங்கிருந்த நகரங்களின் சிறந்த கட்டிடங் களும், அவற்றின்கண் இருந்த பண்டங்கள் கலங்கள் கோயில்கள் அக்கோயில்களிலிருந்த பல சிவலிங்க வடிவங்கள் அக்கோயிற் சுவர்களிற் பொறிக்கப்பட்ட ஓவிய எழுத்துக்கள் முதலிய பலவும் புலப்படலாயின. இவை யவ்ளவும் ஐயாயிர ஆண்டுகளுக்குமுன் உயிர் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு உரியவை களென்றும்; அத் தமிழ் மக்கள், இரும்பைப் பயன்படுத்தத் தெரிந்த மக்களின் பழங் காலத்திற்கும் முன்னே செம்பையும் வெண்கலத்தையுமே பயன்படுத்தத் தெரிந்த அத்துணைப் பழைய காலத்தே யிருந்தவ ரென்றும்; அப் பண்டைத் தமிழ் மக்கள் வணங்கிய சிவலிங்க வடிவங்கள் அவ்விடங்களில் ஏராளமாய்ப் புதைக்கப்பட்டிருந்த தனை உற்றுநோக்குங்கால் அவர்க் குரிய சைவ சமயமானது உலகத்தின்கண் மிகத்தொன்று தொட்ட காலத்தே யிருந்து இன்றுகாறும் அழியாது நிலவுந் தனிப்பெருஞ் சிறப்புவாய்ந்தது என்னும் உண்மை நன்கு விளங்கா நிற்கின்ற தென்றும் அக்கழகத் தலைவரான சர்ஜான் மார்ஷல் என்னும் ஆங்கிலத்துரை மகனார் நுண்ணிதின் ஆராய்ந்து விளக்கி யெழுதியிருக்கின்றார்.5 மறுக்கல் ஏலாத மெய்ச்சான்றுகள் கொண்டு இவ்வாங்கிலத் துரைமகனார் நடுநின்று நுவலும் மெய்யுரையாற் சைவ சமயமும் அதனைத் தழுவிய தமிழ் மக்களும், இவ்விந்திய நாட்டுக்குப் புறம்பே யிருந்து ஆரியர் இதனுள் வந்து நுழைதற்கு முன்னரேயே, இதன் மேற்கெல்லை வரையிற் பரவியிருந்தது மன்றி, அப் பழந்தமிழ் மக்கள் அப் பண்டை நாளிலேயே நாடுநகரங்கள் வகுத்துஞ் சிவலிங்க வடிவங்கள் நிறுவிய சிவபிரான் றிருக் கோயில்கள் பற்பல அமைத்தும், நாகரிகத்தில் மிகச் சிறந்தாராய்த் திகழ்ந்தன ரென்னும் வாய்மையும் நன்கு புலனாகின்ற தன்றோ? இன்னும், இற்றைக்கு எண்பத்துமூன்று ஆண்டுகளுக்கு முன்னமே, தமிழையுந் தமிழோடினமான ஏனைப் பதின் மூன்று மொழிகளையும் ஆழ்ந்து மிகநுண்ணிதாய் ஆராய்ந்து முடிபுகண்ட கால்டுவெல் என்னும் ஆங்கில ஆசிரியர், இவ்விந்திய நாடுகளிற் கோண்டர் என்பார் பேசும் மொழியும், ஒரிசா நாட்டையடுத்த மலை நாடுகளிற் கொண்டர் என்பார் வழங்கும் மொழியும், வங்காள தேயத்தில் ராஜமால் மலைகளில் உறையும் மாலர் என்பார் பேசும் மொழியும், சூடியா நாகபுரத் திலும் அதனையடுத்த நாடுகளிலும் உள்ள ஓராஓனர் என்பார் வழங்கும் மொழியும் இவ்விந்திய நாட்டின் வடமேற்கே யுள்ள பெலு சித்தானத்தில் உயிர் வாழும் பிராகுவியர் என்பார் பேசும் மொழியும், இமயமலைச் சாரலிலும் பிற வடநாடு களிலும் வழங்கும் பல்வேறு மொழிகளும் பண்டைத் தமிழ் மொழியின் றிரிபுகளாய் இருத்தல்கண்டு, மிகப்பழைய காலத்தே இவ்விந்தியதேயம் முழுவதூஉம் பரவியிருந்தவர்கள் தமிழ் மக்களே யாவரென்றும், அவர் வழங்கியவை தமிழுந் தமிழின் றிரிபான மொழிகளுமே யாகுமென்றும் முடித்துச் சொல்லியிருக்கின்றார். 6 இன்னும், அப்பழங்காலத்தே மேல்நாடு சென்று நாகரிகத்தைப் பரவச்செய்த சுமேரியர், பாபிலோனியர் முதலான மக்கட்குழுவினருந் தமிழ்மக்களே யாவரென்றும், இவர்கள் ஆரியர் வருதற்கு முன்னமே பஞ்சாப்பு சிந்து பெலுசித்தான மாகாணங்களைத் தமக்கு உறைவிடமாய்க் கொண்டிருந்து அங்கிருந்து ம்ல்நாடுகளுக்குக் காலினுங் கலத்தினுஞ் சென்று வாணிகம் நடாத்தியும் அவருள் ஓரோ வொரு கூட்டத்தார் அந்நாடுகளிற் பற்பல இடங்களிற் குடியாக வைகியும் வாழ்ந்து வந்தனரென்றும், அங்ஙனம் அவர்கள் மேனாட்ட வருடன் வாணிகம் நடாத்தியஞான்று தாங் கொண்டுசென்ற தமிழ் ஓவிய எழுத்துக்களேபின்னர்ப் பாபிலோனிய தேயத்தில் முளையெழுத்துக்களின் வடிவத்தை (Cuneiform shape) எய்தினவென்றும் ஹால் (Dr. H.R. Hall) என்னும் ஆசிரியர் தமக்கு முன்னமே பரந்தாழ்ந்து ஆராய்ந்து வரைந்திருத்தலை மார்ஷல் துரை மகனாரே தமது நூலுள் நன்கெடுத்துக் காட்டியிருக்கின்றார். இன்னும் இங்ஙனமே இஞ்ஞான்றை ஆராய்ச்சியாளர் பலரும் நடுநின்றாய்ந்துரைக்கும் உரையெல்லாம், ஆரியர் இவ்விந்திய நாட்டுட் புகுமுன்னர்த் தமிழ் மக்களே இவ்விந்திய தேயம் முழுதும் இதனையடுத்துள்ள பெலு சித்தானத்தும் நிறைந்திருந்து நாகரிகத்தில் மிக்கு விளங்கினரென்னும் உண்மையினை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெள்ள விளக்குகின்றன. இத்துணைச் சிறந்த பண்டைத் தமிழ்மக்கள் பாற் றோன்றிய சான்றோர்களே, கடவுள் உயிர் மலம் என்னும் முப் பொருட் டன்மைகளையும் உள்ளவாறாராய்ந் துணர்ந்து, அவை தம்மை உலகமெங்கணும் பரவச் செய்து வந்தனரென்பது, பழந்தமிழ் முனிவராகிய திருமூலர், தமிழ்மண் டலம்ஐந்துந் தாவிய ஞானம் உழிழ்வது போல உலகந் திரிவார் அவிழும் மணமும் எம்ஆதி யறிவுந் தமிழ்மண் டலம்ஐந்துந் தத்துவம் ஆமே (1646) என்றும் சதாசிவந் தத்துவம் முத்தமிழ்வேதம் (86) என்றுந் தமது திருமந்திர மெய்ந்நூலின்கண் விளம்பிய வாற்றாலுந் தெற்றென விளங்காநிற்கும். இவையல்லாமலும், பண்டையாரியர் இறந்து பட்டதும் முன்னோர்க்கு உயிர்க்கொலை வேள்விகள் வேட்டுஊனுங் கள்ளும் அருந்தி வெறியாட்டு அயர்வதி லேயே முனைத்து நின்றனரன்றி ஊனுங் கள்ளும் மறுத்த அருள் ஒழுக்கத்தில் உளம் ஒருங்கி நின்று, இறைவனியல்பும் உயிர்களினியல்பும் உயிர்களைப் பிணித்த மும்மலவியல்பும் ஆழ்ந்தறிந்து, தம்மைத் தூய்மை செய்து இறைவன் றிருவடிக்கட் கனிந்துருகும் மெய்யன்பினராய் நின்றவர் அல்லர். இருக்கு எசுர் சாமம் அதர்வம் முதலான நான்கு வேதங்களிலும் ஆரியராற் பாடப்பட்ட பதிகங்களில் ஆரியர் வணங்கிய சிறுதெய்வ வணக்கமும் வெறியாட்டு வேள்வி யுமல்லால், வேறு சிறந்த பொருளைச் சிறிதுங் காண்டல் இயலாது; மற்று, அவர்களுக்கு மெய்யறிவுச் சுடர்கொளீஇ அவர்களைத் திருத்துதற் பொருட்டுப், பண்டைத் தமிழ்ச்சான்றோர் சிலர் அவ்வேதங் களின் இடையிடையே யியற்றிச் சேர்த்திருக்குஞ் சிற்சில பதிகங்களின் மட்டுமே இறைமுதற் பொருளாகிய உருத்திரரின் வணக்கமும் மற்றுஞ் சில உயர்ந்த கருத்துகளுங் காணப் படுகின்றன. இதனால், வேதகால ஆரியர் ஒரு தெய்வ வணக்கமும் அருளொழுக்க மும் மெய்யுணர்வும் ஒருசிறிதும் உணராப் பேதை மாக்க ளாதல் தெளியப்படும். இப்பெற்றியரான இவர் பானின்றுஞ் சிவஞானபோதச் செம்பொருள் போந்த தெனக் கூறுவாரு ரையினும் மடமை மிக்கது பிறிதில்லையென்க. இனி, வேதகாலத்திற்குப்பின், வெறியாட்டு வேள்விகள் வேட்கும் வகையினை வறிதே விரித்துச் சதபதபிராமணம், ஐதரேயபிராமணம் முதலான பிராமணங்கள் இயற்றப் பட்ட காலத்திருந்த ஆரியரும், ஊனுங் கள்ளும் விடாராய், ஆண் மக்களையுங் கொலை செய்து அவரது இறைச்சி யினையும் அயின்ற வன்னெஞ்சக் கொடியராகக் காணப் படுதலால், அவர் பானின்றுஞ் சிவஞானபோதச் செம் பொணூல் போந்த தெனக் கரைவாரினுங் கயவர் பிறர் இலர். இனி, வேதகால பிராமணகாலங்கட்குப் பிற்பட்ட உப நிடத காலத்திருந்த ஆரிய முனிவர்களோ, தமிழ்ச் சான்றோரின் அறவுரைகேட்டுப் பழைய வெறியாட்டு வேள்விகளை அறவே கைவிட்டவர்கள்; அவ்வேள்வி களையும் அவற்றிற் போந்த சிறுதெய்வ வணக்கத்தையும் அவ்வணக்கவுரை மலிந்த அவ்வேத நூல் பிராமண நூல் களையும் மிகவே பழிப்பவர்கள். இது முண்டகோபநிடதத் தின் கட்கண்டுகொள்க. மேலும், இவ்வுப நிடத காலத்து ஆரிய முனிவர்கள், அஜாதசத்துரு, ஜனகன், அசுவபதி கைகேயன் முதலான மெய்யுணர்வுமிக்க தமிழ் வேந்தர் களால் மெய்யுணர்வு தெருட்டப்பட்ட வரலாறுகள் பிருக தாரணியம், கௌஷீதகி, சாந்தோக்கியம் முதலான பழைய உபநிடதங்களில் நன் கெடுத்துக் கூறப்பட்டிருத்தலால், உபநிடத காலத்தாரியரி னின்று சிவஞானபோதச் செம் பொருள் போந்த தெனக் கிளத்தலும் இயலாதென்க. அற்றேல், உபநிடத காலத்தாரியர் சிவஞான போதச் செம்பொருள் காணமாட்டதவரேயாயினும், அவர்க்கு மெய்யறிவு தெருட்டிய தமிழ்வேந்தர் பெருமக்களே தாம் அறிந்த வடமொழியிற் சிவஞான போதத்தை யியற்றி வைத்தனராக, அதனை வடக்கிருந்து கொணர்ந்த ஒரு தமிழ் முனிவரே அதனை மெய்கண்டதேவர்க்கு அறிவுறுத்துச் செல்லப் பின்னரதனை மெய்கண்டதேவர் தமிழ் மொழியில் மொழிபெயர்த்தாரென உரையாமோ வெனின்; உரையா மன்றே; என்னை? அங்ஙனம் உரைத்தற்கு மெய்கண்ட தேவரருளிச் செய்த சிவஞானபோத நூலிலாதல், அதன் முகத்து வைக்கப்பட்ட சிறப்புப்பாயிரச் செய்யுளிலாதல், ஏதொரு சான்றுங் காணாமையினென்பது, இது முன்னுங் காட்டினாம். என்றிதுகாறுங் காட்டியவாற்றால், நந்தி முனி கணத்தளித்த உயர் சிவஞான போதம் என்ற மாத்திரை யானே, அது வடமொழியில் இயற்றப்பட்டதோர் அறிவு நூலாகத்தான் இருத்தல் வேண்டும் என்றும், வட நாட்டில் அஞ்ஞான்றிருந்த மாந்தரனைவரும் வடமொழி பேசிய ஆரியரேயாவர் என்றுங் கரைவாருரை பொருந்தாமை இனிது விளங்கா நிற்கும். அந்நாளில் வட நாடெங்கணு மிருந்தவர் தமிழ் மக்களே யாவரென்றதூஉம், அவர் அப் பழங்காலத்தும் வழங்கியது தமிழ் மொழியே யாமென்ப தூஉம் ஆராய்ச்சி வல்ல நடுநிலையாளர் இஞ்ஞான்று ஆய்ந்து நிறுவியிருக்கும் அரும் பேருண்மை களேயாமென்று கடைப்பிடிக்க. சிவஞானபோதத்தின்கட் காணப்படுங் குறிப்புகள் கொண்டு அந்நூல் மெய்கண்ட தேவராலேயே முதன் முதல் தமிழில் இயற்றப்பட்ட வகையினை மேல் எடுத்து விளக்கினாம். தங்காலத்துக்கு முன்னிருந்த வடமொழி தென்மொழி அறிவு நூற் பொருள்கள் பெரும்பாலன ஒரு துறைப்பட்டு நில்லாவாய் முன்னொடுபின் பெரிது முரணி அளவை முறைபிறழ்ந்து, கடவுள் இல்லையெனக் கரைவனவுங், கடவுள் அல்லாத வற்றைக் கடவுள் எனக் கட்டிக் சொல்வனவும், உயிர் என்று ஒரு முதல் இல்லை உணர்வு களின் தொகுதியே அதுவாமெனக் கிளப்பனவும், உணர்வு கள் அழிய உயிர் இலவாமேனும் உயிரினாற் செய்யப்பட்ட வினைகளே ஓர் உருவு கொண்டு மறித்து மறித்தும் உயிர்களைத் தோற்றுவித்துப் பிறவிகளில் உய்க்குமென நுவல்வனவும், உலகமும் உலகத்திற்கு முதலான மாயையும் இல்பொருள்களே யாமெனப் பகர்வனவும், உயிர்களுக்கு உலகியற் பொருள்களும் அவற்றிற்கு முதலான மாயையுமே அறியாமையினைத் தருவனவாமெனக் கூறுவனவும், அறியாமை யென்பது ஒளியின் எதிர் மறையான இருள் போல் அறிவின் எதிர் மறையாவதல்லது அஃதோர் உள் பொருளாகாதென உரைப்பனவும், இம்மையில் நுகருமின் பத்தைத் தவிர மறுமைக்கட் பெறும் இன்பமொன்றில்லை யெனக்கிளப்பனவும், இப் பிறவியொழிந்தால் இனிப் பிறவியொன்றில்லையென இசைப்பனவும், ஈகை அறம் தவம் திருவுருவ வழிபாடு முதலியன வெல்லாம் மடவோர்க் குரியவென இயம்புவனவும் ஆகி மக்கட்குத் திரிபுணர்ச்சி யினைப் பயந்து, அவரது பிறவியினைப் பாழாக்கு வனவாய் இருத்தல் கண்டே, ஆசிரியர் மெய்கண்ட தேவர் அவர்மேல் வைத்த பேரிரக்கத்தால், அந் நூற்பொருள்களின் இகல றுத்து, முப்பொருள் உண்மைகளை அளவை நூன் முறையில் முன்பின் றொடர்புபட வைத்துத் தெள்ளித் தெளித்துச் சிவஞானபோதச் செம்பொருணூலைச் செந் தமிழ்த் தெய்வ மொழிக்கண்ணே இயற்றியருளினாரென்று கடைப் பிடித்து ணர்ந்து கொள்க. இவ்வாறு மெய்கண்டதேவ நாயனாரால் இயற்றி வைக்கப்பட்ட சிவஞானபோதத்தின் ஒப்புயர்வில்லாத் தனிப்பெருஞ் சிறப்பைக் கண்ட வடமொழிப்பற்றுடைய எவரோ ஒருவர், அதன்கண் உள்ள சூத்திரங்கள் பன்னி ரண்டை மட்டும் வடமொழியில் மொழிபெயர்த்து வைத் திட்டார். அங்ஙனம் வடமொழியில் மொழிபெயர்த்து வைப்பினுந், தாம் மொழிபெயர்த்த சூத்திரங்கள் பன்னி ரண்டுஞ் சிவஞான போதத்தின்கண் உள்ள வாய்மையினை மறையாது விளம்பி விடல் வேண்டித் தாம் மொழி பெயர்த்த பன்னிரண்டாஞ் சூத்திரத்திறுதியில், இங்ஙனமாகச் சிவ ஞானபோதத்திற் சைவதித்தாந்தப் பொருண் முடிபை அறிந்து கொள்க7 என்று அம் மொழிபெயர்ப்புக்காரர் உண்மையைத் திறந்துஞ் சொல்லிவிட்டார். மெய்கண்ட தேவர் அருளிச் செய்த பன்னிரண்டாஞ் சூத்திரம், ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே எனக் கூறிமுடிக்க, வடமொழிப் பன்னிரண்டாஞ் சூத்திரமோ அதற்கு மேலும், இங்ஙனமாகச் சிவஞான போதத்திற் சைவ சித்தாந்தப் பொருண்முடிபை அறிந்து கொள்க என வேறொன்று சேர்த்துக் கூறி முடிக்கின்றது; இப் பெற்றியினை உற்று நோக்குங்கால், அவ் வடமொழிச் சூத்திரங்கள் பன்னிரண்டுந் தமிழ்ச் சிவஞான போதச் சூத்திரங்கள் பன்னிரண்டன் மொழி பெயர்ப்பாதல் பொள்ளெனப் புலனா நிற்கும். என்றிதுகாறும் ஆராய்ந்துரைத்தவாற்றால், தமது பிள்ளைமைக் காலத்திலேயே தம் ஆசிரியன்பாற் சைவ சித்தாந்த முடி பொருளுணர்ந்த மெய்கண்ட தேவர், தாங் கண்ட அம் முடிபொருளுக்கு மாறாக வடமொழி தென் மொழிப் போலிச் சமயநூல்கள் முப்பொருட் டன்மைகளை முன்னொடு பின் மாறு கோளுறப் புரட்டிக் கூறுதல் கண்டு, உலகத்திற்கு மெய்ப்பொருள் தேற்றுவானெழுந்த அருட் பெருக்காற் சிவஞானபோத நூலை இயற்றியருளினா ரல்லது, அத்தகைய தொரு நூல் வட மொழியி லிருப்பக் கண்டு அதனைத் தமிழில் மொழி பெயர்த்துச் செய்தா ரல்லரென்பது நன்கு பெறப்படுதல் காண்க. இனி, மெய்கண்ட தேவர் சிவஞானபோதம் அருளிச் செய்தற்கு முன், அப் பெயர் கொண்ட நூல் ஒன்று வட மொழியிலாதல் தென்மொழியிலாதல் இருந்ததென்பதற்குச் சான்று ஏதுமில்லாமையுங் கருத்திற் பதிக்கற்பாற்று. மாணிக்க வாசகர்க்கு இறைவன் அறிவுறுத்தியது சிவஞான போதமே யென்று பரஞ்சோதி முனிவர் தாமியற்றிய திருவிளையாடற் புராணத்துங், கடவுண் மாமுனிவர் தாமியற்றிய திருவாதவூரர் புராணத்துங், கூறினாரேனும், இவ்விருவர்க்கும் பல நூற்றாண் டுகள் முற்பட்டிருந்த பெரும்பற்றப்புலியூர் நம்பி அங்ஙனம் இறைவன் மாணிக்க வாசகர்க் குணர்த்தியது சிவஞான போதம் எனக் கூறாமை யானும், இறைவனவர்க் கறிவுறுத்திய தெல்லாம் ஐந்தெழுத் துண்மையேயெனக் கூறுதலானும் பிற்காலத் திருந்த அவ்விரு வரையுங் கொள்ளற் பாலனவல்ல. அவ்விருவரும் மெய் கண்ட தேவ நாயனார்க்குப் பல நூற்றாண்டுகள் பின்னே யிருந்து அவரருளிச் செய்த சிவஞானபோத நூலைப் பயின்ற வராகலின், அவர் அந் நூற்குத் தாங் கருதியவாறு ஓர் ஏற்றங் கற்பித்தற் பொருட்டே, அது சிவபிரான் கையிலிருந்த தென்றும் அதனையே இறைவன் திருவாதவூரர்க்கு அறிவுறுத்தருளினா னென்றும் நிகழாத தொன்றை நிகழ்ந்த தாக வைத்துப் படைத்து மொழிந்திட்டார். ஆனால், இற்றைக்கு எழுநூறு ஆண்டுகட்கு முன்னிருந்த பெரும்பற்றப் புலியூர் நம்பியோ பெயரளவாக வேனுஞ் சிவஞானபோத நூலைத் தமது திருவிளையாடலில் யாண்டுங் குறிப்பிடா மையின், மெய்கண்ட தேவர்க்குமுன் சிவஞான போத நூலைத் தமது திருவிளை யாடலில் யாண்டுங் குறிப்பிடா மையின், மெய்கண்ட தேவர்க்குமுன் சிவஞான போதம் எனப் பெயரிய நூல் ஏதும் இருந்திலாமை தேற்றமேயா மென்க. எனவே, சிவஞானபோதம் எனும் நூலை முதன் முதல் அருளிச் செய்தவர் மெய்கண்ட தேவரே யல்லாமல் வேறெவரும் அல்லரென்பது துணிபொருளாகப் பெறப் படுதல் காண்க. இங்ஙனமாகச் சிவஞானபோதம் என்னுஞ் செம்பொரு ணூலை முதன்முதல் இயற்றியருளிய மெய்கண்டதேவர் பிள்ளைமைப் பருவத்திலேயே எல்லாம்வல்ல அறிவு நூலாசிரி யராய்த் திகழ்தல் உணர்ந்த அறிஞர் பலரும் அவரையணுகி வணங்கித், தாங்கேட்டுத் தெளிய விழைந்த அறிவு நூற் பொருள்கள் பலவும் அவர்பால் உசாவி ஆராயலாயினர். அதனால் மெய்கண்டதேவரின் பொன்றாப் புகழ் இத் தென்றமிழ் நாடெங்கணும் பரவி ஒளிரலாயிற்று. இவ்வாறு நிகழ்கையில், மெய்கண்டதேவர் பிறந் தருளிய குடும்பத்திற்குக் குருவும், வடமொழிக்கண் உள்ள சிவாகமங்க ளெல்லாம் ஒருங்கே ஆராய்ந்து தெளிந்து வல்லராய் விளங்கிய காரணத்தாற் சகலாகம பண்டிதர் எனச் சிறப்புப்பெயர் வாய்ந்தவருந் திருவெண்ணெய் நல்லூர்க்கு அணித்தான திருத்துறையூரில் வாழ்ந்தவருமான அருணந்தி சிவாசாரியார் என்னுந் திருக்கோயில் அந்தணர் சிவாகம முடிபொருளான சைவசித்தாந்தப் பொருள்களைத் தம் மாணாக்கர்க்குச் செவியறிவுறுத்தி வந்தனர். அங்ஙனம் அவர்பாற் சைவ சித்தாந்தப் பொருளுணர்ச்சி பெற்றுவரும் அவர் தம் மாணவரிற் பலர் திருவெண்ணெய் நல்லூரிற் பிள்ளைமைப் பருவத்தின ராயிருக்கும் மெய்கண்ட தேவர் சைவசித்தாந்தப் பொருள் விளக்கஞ் செய்துவருதலைக் கேள்வியுற்றுப் பெரிதும் வியப் பெய்தி, அப்பிள்ளையாரை அணுகி அவர் தந் திருவடிகளைத் தொழுது, அவர் அறிவுறுக்கும் மெய்ப்பொரு ளுரைகளைச் செவியாராப் பருகி, இதற்குமுன் தாம் அறியாமலும் ஐயுற்றுந் தியங்கிய பொருட்டன்மைகளை அறிந்தும் ஐயந்தெளிந்தும் மெய்யு ணர்வின் பத்திற் றிளைத்த வண்ணமாய்ப் பிள்ளை யாரைப் பிரியாமல் இருந்து மேன்மேன் மெய்யறிவு பெற்று வரலானார். இவ்வாற்றால் தம் மாணவர் குழாம் நாளுக்கு நாட் குறைந்துவர, அதனைக் கண்ட அருணந்தியார் அதற்குக் காரணம் என்னென்று எஞ்சிய தம் மாணவரை வினாவ, அவர் அம்மற்றை மாணவரெல்லாம் மெய்கண்டதேவர் பாற் சென்று மெய்யுணர்வு பெற்றுவருஞ் செய்தியினை எடுத்தி யம்பினார். அது கேட்ட அருணந்தியார், பிள்ளைமைப் பருவத்தினரான மெய்கண்டார் அறிவு நூற்பொருள் விளக்கஞ் செய்கின்றார் என்னுஞ் செய்தியில் ஐயமும் வியப்பும் தமதுள்ளத்தை ஒருபுறங் கதுவத், தம் மாணவர் பலர் தம்பான் மெய்ப்பொருள் கேட்டு வருதலை விடுத்து மெய்கண்டார்பால் அதனைக் கேட்கப் போயினார் என்னுஞ் செய்தியில் அழுக்காறுஞ் சினமுந் தமதுள்ளத்தை மற்றொரு புறங் கதுவத், தாமே அச் செய்தியின் மெய்ம்மையினை நேரிற் கண்டறிதற் பொருட்டு ஒருநாள் திருவெண்ணெய் நல்லூர்க்கு ஏகி, மெய்கண்டதேவர்பாற் சென்றனர். அருணந்தியார் வந்த நேரத்தில், மெய்கண்டதேவர் தம்மெதிரே குழுமியிருந்த மாணவர்க்கு ஆணவமலத்தின் இயல்புஞ் செயலும் எடுத்து விரித்து விளக்கிக் கொண்டிருந் தனர். அருணந்தியாரின் வருகையைக் காண்டலும், அங்கிருந் தாரில் முன்னே அருணந்தியார்க்கு மாணவ ராயிருந்தார் பலரும் எழுந்து அவரை வணங்கினர். அருணந் தியார் உடனே அவர்களை நோக்கி, இப்போது எதனைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? என வினவ, அவர்களுள் ஒருவர், ஆணவமலத்தின் இயல்பையுஞ் செயலையும் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கின்றோம் என்று பணிவுடன் விடை கூறினார். அவ்வளவில் அருணந் தியார் அவர்களுடன் உரையாடுதலை விடுத்து, மெய்கண்ட தேவரையே செருக்குடன் எதிர் நோந்கி, ஆணவமலத்தின் உண்மை நிலை யாது? என்று தலையசைப் புடன் வினவினர். அதற்கு, மெய்கண்டதேவர் ஏதும் விடை பகராமல், நீர் இங்ஙனம் இறுமாந்து நின்று வினவும் இந்நிலையே ஆணவமலத்தின் உண்மை நிலையாகும், என்று குறிப்பால் உணர்த்துவார், தம்முடைய அழகிய அருட் கண்களால் அருணந்தியாரை ஏறெடுத்துப்பார்த்துப், பின் அப்பார்வை யினை அவரது முடியிலிருந்து அடிவரையிற் செலுத்தி வாளாதிருந்தனர். அருணந்தியார் சைவ சித்தாந்த நுண் பொருளுணர்ச்சி நன்கு கைவரப்பெற்று, அதன் முடிந்த நிலையை மெய்க்குரவன்பாற் பெறுந்தகுதி வாய்ந்த பெரியா ராயிருந்தமையின், தாம் நின்ற ஆணவநிலையைத் தமக்குத் திருநோக்கக் குறிப்பினாலேயே உணர்த்திய மெய் கண்டாரின் மெய்யாசிரிய நிலையை உடனே நன்குணர்ந்து, உளம் நெக்குநெக்குருகக் கண்களில் நீர் ஆறாய்ப்பருக அன்பினால் அவர்தந் திருவடிகளில் வீழ்ந்து, ஏழையேஞ் செய் தவத்தால் எம்மை யாட்கொள்ள எழுந்தருளிய சிவஞானச் செல்வமே! எளியேன் ஆணவத்தால் மயங்கிச் செய்த பெரும்பிழையைப் பொறுத்தருளி, அடியேற்கு முடிந்த அழியாப் பெருநிலையை அறிவுறுத்தருளி, அடியேனைத் தேவரீர் திருவடித்தொண்டுக்கு ஆளாக்கி யருள் செயல் வேண்டும் என அழுதுரைத்தார். அன்பினால் அகங்கரைந்துருகிய அருணந்தியார் முடிமீது, மெய் கண்டார் தம் திருக்கையினை வைத்து அருள்செய்து, அவர்தஞ் செவியினுள் முடிந்த சிவமறையினை ஓதி அவரைத் தமக்கு மாணவராக ஏற்றருளினார். அதன்பின் மெய்கண்டார் தாம் அருளிச்செய்த நூலை அருணந்தியார்க்கு அளித்து அதன்பொருண் முற்றும் அவர்க்குத் தெளித்தெடுத்தறிவுறுத்தி, இச் சிவஞானபோத நூலுக்கு ஒரு வழிநூல் செய்திடுக! என்று கட்டளையுந் தந்தருளினார். அருணந்தியார் அக் கட்டளையினைத் தம் முடிமேல் ஏற்றுச், சிவஞானபோதத்திற்கு விரிந்த ஓருரை போலச் சிவஞானசித்தியார் எனப் பெயரிய சிறந்த வழி நூலை இயற்றி அந்நூற் பொருளைத் தம்மாணவர் பலர்க்கும் நன்கறிவுறுத்தி, அதனையுந் தம்மாசிரியர் அருளிச்செய்த சிவஞானபோதமுதல் நூலையும் இத்தமிழகம் எங்கும் வழங்கச் செய்தனர். இனி, அருணந்தியாரின் மாணவருள் மறைஞான சம்பந்தர் என்னும் பெரியார் தவஞ்செய்தலிலேயே முழுதும் ஈடுபட்டிருந்தமையின் தாம் ஏதும் நூல் செய்தில ரேனுந், தில்லைவாழ் அந்தணருள் ஒருவரான உமாபதி சிவனார் என்பவர் வடநூல் தென்னூற் கரைகண்டு சிவபிரான் றிருவடிக் கண்ணும் மெய்யன்புடையராய் முடிந்த நிலை பெறுதற்கேற்ற தகுதி வாய்ந்திருத்தல் நோக்கி அவரை ஆட்கொண்டருளிய பின், அவர்க்குச் சிவஞான போதஞ் சிவஞானசித்தி என்னும் இரு நூல்களையும் வழங்கி, அவற்றிற்குச் சார்பு நூல் ஒன்று இயற்றுக! என்று கட்டளை தந்தனராக, அதனைத் தமது முடி மிசை ஏற்ற உமாபதிசிவனார் அங்ஙனமே அதற்குச் சார்பு நூலாகச் சிவப்பிரகாசம் எனப் பெயரிய செம்பொருணூலை இயற்றி யருளினார். இவ்வரலாற்றினை முன்னும் எடுத்துக் காட்டினாம். இனி, அருணந்தியார், சிவஞானசித்தி என்னும் நூலைச் சுபக்கம் பரபக்கம் என இருவகைப்படுத்து விரித் தருளிச் செய்ததன் மேலுந், தாந்தங் குரவனை வினாவிய வினாக்களும் அவற்றிற்குத் தங்குரவன் .இறுத்த விடைகளும் அடக்கி இருபா இருபஃது என்னும் ஓர் அரிய சித்தாந்த நூலையும் இயற்றியருளினர். இனி, மெய்கண்டதேவர் தம்மாணவர் நாற்பத்தொன் பதின்மரில், மனவாசகங் கடந்தார் என்னும் பெரியார் உண்மை விளக்கம் எனப் பெயரிய ஓர் அரிய நூலை இயற்றியருளினர். இனிச், சார்பு நூலாகிய சிவப்பிரகாசம் செய்த உமாபதி சிவனார் திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்பநிராகரணம் எனப் பெயரிய வேறேழ் அரும் பெறல் நூல்களையும் இயற்றி யருளினர். இங்ஙனமாக, மெய்கண்டதேவர்க்குமுன் உய்ய வந்ததேவ நாயனார் இருவரும் அருளிச்செய்த திருவுந்தி யார், திருக் களிற்றுப்படியார் என்னும் இரு நூல்களுடன் மெய்கண்ட தேவரும் அவர்தம் மாணவரும், அவர்தம் மாணவரின் மாணவரும் அருளிச்செய்த நூல்கள் பன்னி ரண்டுஞ் சேர்த்துச், சைவ சித்தாந்த நூல்கள் பதினான் கென்று சென்ற அறுநூறாண்டுகளாக வழங்கி வருகின்றனர். முழுமுதற்கடவுள் உண்மை ஆசிரியர் மெய்கண்டதேவ நாயனரால் அறிவா ராய்ச்சிப் பொருளெல்லாம் நன்கினிது விளங்கப் பன்னி ரண்டு சூத்திரங்களிலே செறித்து அருளிச் செய்யப்பட்ட சிவஞான போதநூல் உரையிடற்காகா அருமை பெருமை யுடைத்தாய்த் திகழும் வாய்மை முன்னமே காட்டப்பட்டது. இது தன்னைத் துறை போகக் கற்றாராய்ந்து தெளிந்தார் எல்லா நூற்பொருளும் ஒருங்குணர்ந்தாராய் மெய்ப் பொருளுறுதி கூடி முதல்வன் றிருவடிப் பேற்றினைத் தலைப்படுவரென்பது துணிபாமாகலின், இதன் சூத்திரப் பொருளை முறையே ஆராயப் புகுந்து, முதற்கண் முதற் சூத்திரத் தான் ஆராய்ந்து நிறுவப்படும் முழுமுதற் கடவுளுண்மையினை எடுதது விளக்குவாம்: அவனென்றும் அவளென்றும் அதுவென்றுஞ் சுட்டி யுரைக்கப்படும் அவ்வமைப்புகள் ஒருகாற் றோன்றிச் சிலகால் நிலவிப் பின்னொரு கால் அழிதலாகிய மூன்று தொழில்களின் வாய்பட்டனவாய் நடைபெறக் காண்டலின், அவ்வமைப்புகள் தாமாகவே தோன்றியனவாகாமற், பிறிதோர் அறிவுப் பொரு ளாற் றோற்றுவிக்கப்பட்ட உள் பொருள்களேயாம்; அவை சிலகாற் சென்றபின் அழிந்து மறையினும் அவற்றின்கண் உள்ள வாலாமை நீங்காமையின், அது நீங்குங்காறும் அவை மீளமீளத் தோன்றா நிற்கும்; தோற்றுவித்த அவ்வமைப்புகளை அழிக்கும் எல்லாம்வல்ல அறிவுப்பொருளே அவ் வமைப்பு களுக்கு முன்னுமுள்ள முதற்பொருளாகுமென்று அறியற் பாற்று என்பதே முதற்சூத்திரப் பொருளாகும். இதன்கட், சுட்டியறியத்தக்க அமைப்புகளை ஆராயு முகத் தானன்றிச் சுட்டியாராய்தற்கு இயலாத பொருளு ணர்ச்சி கொண்டு முழுமுதற் கடவுளிருப்பினைத் துணிதல் செல்லா தென்பது முதற்கண் அறிவுறுத்தப்படுகின்றது. மெய், வாய், கண், மூக்குச் செவியென்னும் ஐம்பொறிகளின் வாயிலாக நாம் உணரும் பொருள்கள் அத்தனையுஞ் சிற்றளவு வாய்ந்த சிறுபொருள்களே யல்லாமற் பேரளவு வாய்ந்த பெரும் பொருள்கள் அல்ல. ஒன்றையொன்று நோக்கச் சிறுமை பெருமையுடையனவாக வழங்கப்படினும், நம்புலன்களால் அறியப்படும் பொருள்களெல்லாம் நம்மாற் சுட்டியறிப்படுஞ் சிறுமையுடையனவேயாம். நம் புலன்களாற் கவரப்படாத சாலப் பெரியபொருளின் அமைப்பு நம்மால் ஒரு சிறிதும் அறியப்படா தென்றுணர்தல் வேண்டும். இம் மண்ணுலகிற் றோன்றும் பொருள்கள் அத்துணையும் நம்முடம்பின் உறுப்புகளாற் றொடப்படுவனவாயும், அவற்றுட் சில பல நாவாற் சுவைக்கப்படு வனவாயும். மற்றுஞ் சில மூக்கால் மோக்கப்டு வனவாயும் இன்னும் பல கண்ணாற் காணப்படுவனவாயும் இருக்கின்றன. இவற்றுள்ளும், நாவாலும் மூக்காலும் நுகரப் படுவன அளவில் மிகச் சிறியனவேயாம்; உடம்பினுறுப்புகளாற் றொடப்படுவனவோ சிறியனவும் பெரியனவுமாயிருப்பினும், ஒருகாலத் தோரிடத்து ஓர் உறுப்பாற்றொடப்படுவது ஒரு பொருளின் மிகச் சிறுபகுதியேயாம்; என்றுணர்தல் வேண்டும். ஒரு பெருமலை அளவிற் பெரியதேயாயினும், அதனை நங் கைகள் தொட்டுணரக்கூடியவேயாயினும், ஒரே காலத்தில் அவை அம் மலையின் பேரளவினையெல்லாந் தொட்டுணர வல்லன அல்ல, அதன் மிகச் சிறிய ஒரு பகுதியினையே அவைதொட்டுணரவல்லன வாகும். அங்ஙனமே, நங் கண்களானவை சிறியவும் பெரியவுமாய் பலபொருள் களையும் பார்க்கவல்லனவேனும், ஒரு காலத்தோரிடத் திருந்து அவை உற்றுப்பார்க்க இயைந்த ஒரு பொருட்பகுதி ஓர் ஊசி நுனியின் அளவினதேயாம்; பரந்த நோக்கமாய்ப் பெரும்பொருள் களைப் பார்ப்பினும், அப்பார்வைதானும் அப்பொருட் பரப்பெல்லாம் ஒருங்கே கவரவல்லதன்று; நங் கட் பார்வைக்குக் கடலின் ஒரு பெரும் பரப்புப் புலனாவ தேயா யினும் அக் கடலின் முழுப் பரப்பும் முடிந்த வெல்லையும் அது தனக்குப் புலனாவதில்லை யன்றோ? ஆகவே சுட்டியறியப் படும் பொருள்கள் அத் துணையுஞ் சிற்றளவினவேயா மென்பதூஉம், பொது நோக் காய்ப் பரந்தறியப்படும் மலை கடல் நிலம் முதலியன தாமுஞ் சுட்டியறியப் படுங்காற் பகுக்கப்படுஞ் சிறுசிறு கூறுகளை யுடையனவேயா மென்பதூஉந் தெற்றெனப் பெறப்படுதல் காண்க. இனிச் சுட்டியறிதற்கு ஒருவாற்றானும் இயலாத வான்வெளியினியல்புஞ் செயலும் நம்மனோர் உணர்வுக்குத் தினைத்தனையும் புலனாகாமையின், அதனை யொழித்து, அவன் அவள் அதுவெனச் சுட்டியறியப்படும் பொருளு ணர்வு கொண்டே முழுமுதற் கடவுளின் இருப்புஞ் செயலும் இலக்க ணமுந் தேர்ந்துணரப்படும் என்று ஆசிரியர் மெய் கண்ட தேவநாயனார் கூறிய நுட்பம் பெரிதுங் கருத்திற் பதிக்கற் பாலதாகும். என்னை? மக்களறிவாற் சுட்டி யுணரப்படுஞ் சிறுசிறு கூறுகளின் தொகுதியாய் அமைந்த இப் பொருள் களெல்லாம் அங்ஙனஞ் சிறுசிறு கூறுக ளாகய்ப் பகுக்கப்படு தற்குங் கூட்டப்படுதற்கும், அப் பகுத்தற் றொழிலையுங் கூட்டற் றொழிலையும் இடையறாது புரியும் ஓரறிவுப்பொருளின் செயலை இன்றியமையாது அவாவி நிற்றலான் என்க. இனி, மக்களாற் சுட்டியறியப்படும் பொருள்களுள்ளும் உயிருள்ளனவும் உயிரில்லனவும் என இரு வேறு பகுப்புகள் காணப்படுகின்றன. உயிரில்லாத கல் மண் நீர் முதலான பொருள்களை ஆராய்தல் கொண்டு கடவுளின் இருப்பையுஞ் செயலையும் ஐயமின்றித் தெளிதல் இயலாமையின், அவற்றின் றொகுதியான இந் நிலவுலகினை முற்கூறுத லொழிந்து, உயிருடைய ஆண் பெண்ணமைப்பினை ஆசிரியர் முதற்கட் கூறிய திறம் பெரிதும் வியக்கற்பாலதா யிருக்கின்றது. என்னை? உயிரில்லாத கல் மண் முதலிய வற்றின் அமைப்பு, அவற்றின் அணுக்கள் ஒன்றை யொன்றீர்த்துக் கூடுங் கூட்டத்தானும் இயற்கையே நிகழவும் பெறும். அங்ஙனமே அவ்வணுக்கள் நாட் செல்லச் செல்லத் தம் ஈர்க்கும் ஆற்றலிழந்து, ஒன்றையொன்று விட்டுப் பிரிதலால் அவ்வமைப்பு அழியவும் பெறும்; ஆகவே, அணுக்களின் இயற்கைத் தன்மையால் நிகழும் இக்கூடல் பிரிதல்களாகிய இருவகைத் தொழில் களையும் நிகழ்த்துதற்கு இறைவனொருவன் வேண்டுமென்று ரைப்பது மிகுதியாய் முடியுமாகலின் என்பது. மற்று உயிருள்ள ஆண் பெண்ண மைப்போ, அங்ஙனம் அணுக்களின் அமைப்புப்போல் ஒரு படித்தாய் நிகழாமல் இருவேறு வகைத்தாய் நிகழ்தலானும்; உயிரற்ற பொருள்களின் அமைப்புக்கும் அழிவுக்கும் ஏதொரு நோக்கமும் பயனும் புலனாகாதிருக்க, உயிருள்ள பொருள்களின் ஒவ்வோர் உறுப்பின் அமைவுக்கும் அழிவுக்கும் நோக்கமும் பயனும் இனிது விளங்கிக் கிடத்தலானும்; உயிர்ப்பொருளைச் சார்ந்து அவற்றிற்குப் பயன்படுமுகத்தால் உயிரில் பொருளின் அமைப்புக்கு ஒரு காரணந் தோன்றக் காண்டுமன்றி, அவற்றைச் சாராதவழி அவற்றின் அமைப்புக்கு வேறொரு தனிக் காரணங் காண்டல் இயலாமையானும் அவ்வாண் பெண்ணமைப்பே முழு முதற் கடவுளின் இருப் பையும் அறிவையும் ஆற்றலையும் அருளையும் நனிவிளங்கக் காட்டுந் தகைத்தாமென்று கடைப்பிடிக்க. இனி, ஆண்பெண்ணமைப்பிற் பட்ட உயிர்களுக்குப் பயன்படு முகத்தால் உயிரற்ற கல் மண் முதலிய பொருள் களும் அவற்றின் தொகுதியான உலகமுந் தோற்று விக்கப்பட்ட நோக்கம் நன்கு புலனாதலின் உயிருடைய ஆண் பெண்ணமைப்பைச் சார உயிரில்லா உலகவமைப்பினை வைத்து அதனை அது வென்னுஞ் சுட்டுப்பெயரால் ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனார் குறித்தருளினார் என்க. உலகமும் உலகத்துப் பொருள்களும் ஆண்பெண்ண மைப்பிற்பட்ட உயிர்கட்குப் பயன்படுமாற்றினைச் சிறிது விளக்கு கவெனின்; விளக்குதும், ஆண்பெண் சேர்க்கையாற் புதிது பிறந்தமகவு பாலையின்றி உயிர் வாழ்தலும் வளர்தலும் இல்லையன்றே; அங்ஙனம் அதற்கு இன்றியமையாத பால் உணவுதாயின் உடம்பிற் சுரந்தொழுகி அம்மகவினை வளர்த்தற்குப் பயன்படுதல் காண்க. பின்னைக் குழவிப் பருவங் கடந்தபின் பாலுடன் சோறும் வாழை நாரத்தை முதலிய வற்றின் கனிகளும் பிள்ளைகள் செழித்து வளர்தற்குப் பயன்படுகின்றன. அதன்பிற், காளைப்பருவம் நடைபெறுங் கால் உண்டற்குக் கோதுமை கம்பு சோளம் கேழ்வரகு முதலான வித்துகளும் பருகுதற்கு நீரும் மோத்தற்கு முல்லை மருவு மருக்கொழுந்து சந்தனம் முதலான நறுமணப் பொருள்களுங், கண்டு மகிழ்தற்கு ஆறுங் குளனுங் காவும் மலையுமாகிய இயற்கைப் பொருள் களுங், கண்ணொளியினை விளக்குதற்குக் கதிரவனுந் திங்களு மாகிய ஒளிப் பிழம்புகளும், அடுதல் சுடுதல் காய்தல் முதலிய தொழில்களைப் புரிதற்கு நெருப்பும், உயிர்த்தற்கும் வெம்மை தீர்த்தற்குங் காற்றும், இனிது உறங்குதற்குப் பஞ்சணைகளும், வீடு சமைத்தற்கு மரங்களும், மண்ணும், வீட்டிற் புழங்குதற்குக் கல் மண் ஈயம் இரும்பு செம்பு பித்தளை முதலியவற்றால் அமைத்த ஏனங்களும், பல்கலை பயின்று அறிவினை வளர்த் தற்கு ஏட்டுச் சுவடிகளும், உழுதற்கும் ஊர்தற்கும் எருதுகள் குதிரைகளும், உடுத்தற்கும் போர்த்தற்கும் பஞ்சாடை பட்டாடைகளுங் கம்பளிப் போர்வைகளும், அழகிதாக ஒப்பனை செய்துகொள்ளுதற்கு வெள்ளிக்கலன் பொற்கலன் மணிக்கலன்களும், இன்பம் நுகர்தற்கும் மக்களைப் பெறுதற்கும் ஏற்ற படியாக அமைந்த ஆண் பெண் உடம்புகளும் பெரிதும் பயன்படுதல் காண்க. இத்தனைப் பொருள்களோடுமிருந்து மக்களும் ஏனைப் பல்லுயிர் வகைகளும் நன்கினிது வாழ்தற்கு இன்றி யமையா இடமாக இந்நிலவுலகம் பயன்படுதலும் அறிந்து கொள்க. இங்ஙனம் அதுவென்று ஈற்றில் வைக்கப்பட்ட சுட்டுச் சொல் உயிரில்லாப் பொருள்களான கல் மண முதலியவற்றின் றொகுதியா யமைந்த உலகினை நன்கு ணர்த்தா நிற்பவும், இத்தமிழ்ச் சிவஞானபோத முதல் நூலை வடமொழிக்கண் மொழிபெயர்த்து வைத்த எவரோ ஒருவர், ஆசிரியர் மெய்கண்டதேவ நாயனாரின் நுண்ணிய கருத்தினை உணர்ந்து கொள்ளமாட்டாமல், அது வென்னுஞ் சொல்லாற் சுட்டப் பட்டது அலியேயோ (நபும்ஸக) மெனப் பிழைபடக்கொண்டு த்ரீபும்நபும் ஸகா தித்வா எனச் சூத்திரஞ் செய்திட்டார். அவர் செய்த பிழையினை ஆராய்ந்து கண்டறியாமற், சிவஞான போதத்திற்குப் பேருரை சிற்றுரை வகுத்த சிவஞான முனிவரும் அது வென்னுஞ் சொல்லுக்குத் தமது பேருரைக்கண் அலி என்றே பொருளுரைத்தார். அங்ஙனம் அவன் அவள் அது வென்னும் மூன்று சொற்களும் அறிவுலகினையே (சித்துப் பிரபஞ்சத்தினையே) உணர்த்துமாயின், அறிவில்லா வுலகினை (சடப்பிரபஞ்சத் தினை) உணர்த்துதற்குச் சூத்திரத்தின் கண் வேறு சொல் இன்மையானும், அஃதில்லையாகவே அதன்கண் நிகழுந் தோற்றம் நிலை இறுதி என்னும் முத்தொழில்களும் இறைவ னொருவனை வேண்டாமலே நடைபெறுமெனப்பட்டு முழுமுதற்கடவுளுண்மையினை நாட்டவெழுந்த ஆசிரியன் கருத்துக்கு முழுமாறாய் முடிதலானும், இந்நூலை வடமொழிக் கண் மொழிபெயர்த்தவரும் அவரைப் பின்பற்றிய சிவஞான முனிவரும்மெய்கண்டான் சித்தாந்தம் நுணுகியுணராராய் இழுக்கினாரென்றுணர்ந்து கொள்க. தமது பேருரைக்கண் அது என்பதற்கு அலி எனப் பொருளுரைத்த சிவஞான முனிவரே அதற்குப் பிற்காலத்தே தாம் வரைந்த சிற்றுரைக்கண் அவ்வாறு அதற்குப் பொருள்கூறக் காணாமையின் அதற்கு அலியெனப் பொருள் கோடல் பொருந்தாமையினைப் பின்னர் அவருந் தெளியக் கண்டாரென்பது நன்கு புலனாகின்றது. மேலுங், கல் மண் முதலியவற்றின் தொகுதியான உயிரில்லுலகத்தின்கண் அதன் இருப்பினையும் அதன் பகுதிகளிற் சில அழிதலினையும் நாங் காண்கின்றனமே யன்றி, மற்று அதன் றோற்றத்தினை நாங் கண்டதில் லாமையின், இவ்வுயிரில் லுலகத்தில் வைத்து இறைவனால் நடத்தப்படுந் தோற்றம் நிலை இறுதி என்னும் முத் தொழில் களையும் நம்மனோர் முழுதும் உணர்தல் இயலாமை கண்டு கொள்க. எனவே, உயிரில்லுலகத்தின் தோற்றத்தை அறிய மாட்டாத நம்மனோர், அது கொண்டு அறியற்பாலதான இறைவனிருப்பி னையும் அறியமாட்டுவாரல்லர் என்பது. மற்று, ஆண் பெண் பிறப்பினையும் இருப்பினையும் இறப்பினையுமோ நம்மனோர் எல்லாரும் எக்காலத்துந் தங் கண்ணெதிரே கண்டு வருகின்றமையின், இவ்வுயர் திணை யமைப்பின்மேல் வைத்து இறைவனுண்மையினை நாட்டு தலே சாலச் சிறந்த அறிவின் முறையாமென்க. அற்றேல், ஆண் பெண் அல்லாத அலி பேடி முதலிய பிறவிகளைக் கூறாமை ஒரு குறைபாடாய் முடியாதோ வெனின்; முடியாது. இறைவனது படைப்பில் ஏதொரு குறைபாடும் நிகழாது. உயர்திணைப் படைப்பில் ஆண்பெண் என்னும் இருபகுப்பேயன்றி, அலி பேடி என வேறொருபகுப்புச் சிறிதுமே இல்லை. தாய் தந்தையர் பிழைபாடாக நடத்தலால் ஆணுறுப்புக் குறைந்ததே அலியென்றும், பெண்ணுறுப்புக் குறைந்ததே பேடியென்றும் உணரற்பாற்று. ஆகவே, உயிருடைய உயர்திணைப்பிறப்பாகிய ஆண் பெண் என்னும் இருவேறு அமைப்பிலிருந்தும், அவ்விரண்டுக்கும் பயன்படு முகத்தான் தனது படைப்பின் நோக்கத்தைத் தெரிவிக்கும் உயிரற்ற அஃறிணைப் பிறப்பாகிய இவ்வுலகத்திலிருந்தும் முழுமுதற் கடவுளுண்மையினைத் தெளிவுற நிறுவுதலே ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனார் தந்திருவுளக் கருத்தா மென்று கடைப்பிடிக்க. அதுவேயுமன்றி, அவனவளது எனுஞ் சொற்றொடரிற் போந்த அது என்ப தனாற் சுட்டப் பட்டது அலியேயாயின், ஆசிரியர் மெய் கண்டதேவரே அச்சொற்றொடர்க்கு வரைந்த தமது வார்த்திகப் பொழிப்பின் கண் அலி யென அதனைக் கிளந்தெடுத்து ரைத்திருப்பர். மற்று, அவர் அவ்வாறுரையாது, உளதாய், ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம் உடைத்தென்றது என ஒன்று என்றே கூறினமையால், அவர்க்கது கருத்தன் றென்பது தெற்றென விளங்கா நிற்கின்றது. ஈண்டு ஒன்றென் னுஞ் சொல்லாற் குறிக்கப்பட்டது, உயிரில்லாவுலக மேயாம். இதனை நன்கு கண்டே, சிவஞானபோதத்திற்கு ஒரு விரிவுரை போற் சிவஞான சித்தி என்னும் வழிநூல் செய்த அருணந்தி சிவனாரும், இம்முதற் சூத்திரப் பொருளை விளக்கி, ஒருவனோ டொருத்தி யொன்றென் னுறுரைத்திடும் உலக மெல்லாம் வருமுறை வந்து நின்று போவது மாத லாலே என ஓதினார்; இதன்கண்ணும் அலி என்னுங் குறிப்பு ஒரு சிறிதுங் காணப்படாமை நினைவிற் பதிக்கற்பாற்று. அது நிற்க. முத்தொழில் நிகழ்ச்சி இனி, முதன்முதல் ஆண்பெண் பிறவி எப்போதுண் டாயின? அவற்றை முதலிற் கண்டவர் யாவர்? என்னும் வினாக்களுக்கு விடை கூறுதல் எவராலும் இயலாது. முதன்முதற் றோன்றிய ஆண்பெண் தோற்றம் எவராலும் அறியப்படாவிடினும், அதன் வழிவழித் தொடர்ந்து வரும் ஆண்பெண் தோற்றத்தினை அறியாதார் எவரேனும் உளரோ? இலரன்றே. ஆண் பெண் சேர்க்கையின் வழியே ஆண் பெண் பிறவிகள் வாழையடி வாழையாய் மறித்து மறித்துந் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. ஆகவே, ஆண் பெண்யிர்களின் தோற்றம் எவரானுங் கண்கூடா யறியப்பட்ட தொன்றாகவே தொடர்ந்து நிகழா நிற்கின்ற தென்றோர்ந்துகொள்க. இத்தகைய பிறவித்தோற்றம் இறைவனாலன்றி வேறெவராலும் வேறெத னாலும் உண்டா காமை யுணர்தல் வேண்டும். இனித்,தோன்றிய இவ்வுயிர்ப் பிறவிகள் சில பல ஆண்டுகள் நிலையாய் நின்றுயிர் வாழ்ந்து வருதலும் எவர்க்குந் தெரிந்ததோர் உண்மை நிகழ்ச்சியேயாம். மக்கள் எல்லாருந் தாம் என்றும் நிலையாயிருப்பதாகவே நினைந்து வருதலாற்றான் அவர்க்கு உயிர் வாழ்க்கை இனிது நடை பெறா நிற்கின்றது; இவ்வெண்ணம் அங்ஙனம் அவர்களுள் ளத்தில் வேரூன்றி நில்லாவிட்டால், நாளைக்கு நாம் இருப்பது உறுதியில்லையே யென்று அவர்கள் நினைத்து விடுவார்களானால், அவர்கள் முயற்சியவிந்து விரைவில் மாண்டுபோவரல்லரோ? நீண்ட வாழ்க்கையே, உயிர்கட்கு அறிவையும் இன்பத்தையும் வழங்கக் குறித்த இறைவன் றிருவுளக்குறிப்புக்கு ஒத்ததாகையால், அதனை நிலையாக நினைக்கும் எண்ணமும் மக்களுள்ளத்தில் ஆழப்பதிந்து நிற்குமாறு இறைவன் ஏவுகின்றனனென் றோர்ந்துகொள்க. ஆகவே, நிலையும் வாழ்க்கையைப் பற்றிய எண்ணமும், அவவெண்ணத்திற்கேற்ப நூறாண்டுகள் வாழ்ந் திருக்கும் வகையும் இறைவன் றிருவருளினாலேயே நிலை பேறுற்று நடத்தல் நன்கு விளங்காநிற்கும். மக்கள் ஒழுங்கான முறையில் ஒழுகிவருவராயின், நூறாண்டுகளும் அவற்றிற்கு மேலும் உயிர்வாழ்ந்திருத்தல் கூடுமென்பது எமது மக்கள் நூறாண்டுயிர் வாழ்க்கை என்னும் நூலில் விரித்து விளக்கப் பட்டிருக்கின்றது. இனி, உயிர்கள் மேற்கொண்டிருக்கும் பலதிறப்பட்ட உடம்புகளும் என்பு தோல் நரம்பு தசை முதலான பருப் பொருள் களால் ஆக்கப்பட்டிருத்தலால், அவை நாளேற நாளேறத் தேய்ந்து பழுதுற்றுப்போகின்றன; பழுதுற்ற அவ்வுடம்பி லிருந்து அவையிற்றை இயக்க மாட்டாத உயிர்கள் அவை தம்மைக் கீழ்வீழ்த்தி வானூடு சென்று, வேறு புதிய வுடம்புகளின் உட்புகுகின்றன. இஃது எதுபோல வெனின், ஒருவன் தான் மேற்கொண்ட சட்டை மிகக் கிழிந்து தன்னாற் பயன்படுத்தக் கூடாத நிலையை யடைந்த பின் அதனைக் களைந்தெறிந்து அவன் வேறொரு நல்ல புதுச்சட்டையை மேற்கொள்வது போல வென்க. இன்னும் பாம்புகள் ஓராண்டிற் பல காலுந் தம்முடம் பின் மேற் றோலைச் சட்டைபோல் உரித்துவிடுதலும் இவ்வுண் மையினை விளக்கும் ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனமாக, ஓரறிவு முதல் ஆறறிவுகாறுமுள்ள உயிர்கள் அத்தனையும் எடுக்கும் எண்ணில் பல்கோடியுடம்புகளுடன் சிறிது காலத் திற்குப் பின் அழிந்துபோதலை நங் கண்ணெதிரே காண் கின்றமாகலின், அவை அங்ஙனம் அழிந்தொழியுமாறு அழித்தற்றொழிலை ஓவாது நடத்தும் ஒரு முதல்வன் உளனென்பது தேற்றமேயா மென்க. நன்று சொன்னீர். அணுக்கள் கூடுங்கூட்டமும், அது சிறிது காலம் நிலையும் இருப்பும், பின்னர் அது குலைந்துண்டாம் அழிவும் ஒரு வினைமுதலை நாடாமல் இயல்பாகவே நிகழக் காண்டுமன்றி வேறில்லாமையின், இம்முத்தொழில் நிகழ்ச்சிக்கும் முதல்வன் ஒருவன் வேண்டு மென்றுரைப்பது மிகையேயா மெனின்; அற்றன்று. அணுக்கள் கூடுங்கூட்டம் நீரின் தட்ப ஆற்றலாலும், அவை பிரிந்தொழியும் அழிவு தீயின் வெப்ப ஆற்றலாலும் நிகழ் கின்றனவென்றே இயற்கைப் பொருள் நூலாரும் இயம்பு தலானும், இவ்விருவகை யாற்றலும் முழுமுதற் கடவுளி டத்தில் இரண்டற விரவி நிற்கும் அம்மைக்கும் அப்பற்கும் உரியவாகுமென்று சித்தாந்த நூல்வல்ல ஆசிரியர் நுவலு தலானும், ஒன்று சேரும் ஆற்றலும் அதற்கு மறுதலை யான வேறு பிரியும் ஆற்றலும் அறிவில்லா அணுக்கள் பால் உளவென்றல் பெரியதொரு மாறுகோ ளுரையா மென்க. கூடுதல் பிரிதல் கூட்டல் பிரித்தல் என்னுந் தன்வினை பிறவினைகள் அறிவுடைய உயிர்கள்பாலன்றி, அறிவில்லா அணுக்கள் பால் உளவாகா வென்பது காண்டலளவை யானும் ஆராயச்சி யானும் இனிது விளங்குதலாற், கூட்டும் அம்மையும் பிரிக்கும் அப்பனும் ஒருங்கு விரவிய முழுமுதற் கடவுள் அம்முத்தொழில் நிகழ்ச்சிக்கும் இன்றியமையாத காரணமாய் வேண்டப்படும் என்க. முத்தொழில் நிகழ்ச்சிக்கடனாவது உள்பொருளேயாம் இனித் தோற்றம் நிலை இறுதி என்னும் முத் தொழிலும் உள்பொருளாகிய மாயையில் நிகழ்வனவே யல்லாமல், இல்பொருளில் நிகழ்வன அல்ல. குதிரைக்குக் கொம்பும், ஆமைக்கு மயிரும், வானின் கட்டாமரைமலரும் என்ற மில்லாப் பொருள்களாதலை அறியாதார் யார்? குதிரைக்கு நேற்று இரண்டு கொம்புகள் முளைத்தன; இன்று அவை அதன் தலைமேல் நீண்டு காணப்படுகின்றன; நாளை அவை விழுந்து போம் என்று எவரேனுஞ் சொல்வராயின் அவரது சொல்லை எவரேனும் நம்புவரோ? அங்ஙனமே, மற்றொருவர் ஆமை யோட்டில் முளைத்த மயிர்கொண்டு ஒரு கம்பளம் நெய்து கொண்டு வந்திருக்கின்றோம் எனப் புகல்வராயின் அவரது சொல்லை எவரேனும் நம்புவரோ? இன்னும், ஒருவர் வானத் திடைவெளியில் மலர்ந்த தாமரை மலர் சில கொண்டு வந்திருக் கின்றோம், அவற்றைக் கொண்டு இறைவற்கு வழிபாடு ஆற்றுக எனக் கூறுவராயின் அவரது சொல்லை மெய்யென நம்புவார் எவரேனும் உளரோ? இவைபோலவே, மாயை யென்பது இல்லாத பழம்பொருள் என்றும், அதன்கணின்று இவ்வுலகம் வெறுந்தோற்றமாத்திரையாய்க் காணப்படுகின்றது என்றும் கூறும் புத்தர் மாயாவாத மதத்தவருரை பொருளற்ற புல்லுரையாமென்க. அல்லதூஉம், ஒரு பொருளப்பற்றிய உணர்ச்சியும் நினைவும் அப்பொருளைக் கண்டவர்க்கன்றி, அல்லது கண்டு அதனை விளக்கிக்கூறக் கேட்டவர்க்கன்றி வேறொருவர்க்குச் சிறிதும் உளவாகா. கொம்பும், மயிருந் தாமரை மலரும் ஆடு, மாடு, கவரிமான், மடு, குளம் முதலான உள்பொருள்களில் இருத்தலைக் காண்பவர்க் கல்லால், ஏனை யோர்க்கு அவற்றைப்பற்றிய உணர்வும் நினைவுந் தோன்று தலைக் கண்டிலமன்றோ? மாயை யென்பது இல்பொருளாயின், அதன்கணிருந்துண்டாம் இவ்வுலகமும் இல்பொருளேயாயின், மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம்புலன்களுக்கும் அது புலனாதல் இயலாதன்றோ? ஐம்பொறிகளுக்கும் புலனாக ததை உணர்தலும் நினைதலும் யாங்ஙனம் கைகூடும்? ஐம்பொறி களால் உணரப்படுவனவெல்லாம் வெறும் பொய்யே யெனின், ஐம்பொறிகளும் அவற்றின் வழிச்செல்லும் மனனும் மனத்தை இயக்கும் உயிருமெல்லாம் வெறும் பொய்யேயாய் ஒழிதல் வேண்டும். உயிர் பொய்யாய் ஒழிந்தவழி, உயிர் தன்னாற் காணப்படும் உலகினமைப்பைக் கொண்டு காணப்படாத கடவுளையறியும் அறிவும் பொய் யாய் ஒழியக் கடவுளும் பொய்யாகவே ஒழிதல் வேண்டும். இவ்வாறு எல்லாம் பொய்யாய் ஒழியவே, உயிர்கள் தமது நிலையையுந் தம்மொடு தொடர்புடைய பிறவுயர்களின் நிலையையும் உணர்தலும், உணர்ந்து ஒழுகுதலும், அவ்வாற்றால் விளையும் நல்வினை தீவினைகளும், அவற்றின் பயன்களும், அவற்றை நுகர்தற்குரிய இம்மை மறுமையுலகங்களும், அவற்றிற்கேற்ப வரும் பிறவிகளும், அவற்றைத் தருவதான முழுமுதற்கடவுளும், இவைகளை ஆராயும் நூல்களுந், தவமுயற்சியும் பிறவு மெல்லாம் பொய்யாகவே ஒழிதல் வேண்டும். புத்தரும் மாயாவதிகளும் ஒரு தினைத்தனைச் சான்று தானும் இன்றிச், செருக்கித் தாமாகவே படைத்திட்டுக கொண்டுரைக்கும் இப்பொய்யுரைக்கு இசையத் தமக்கு வேண்டுவனவற்றையெல்லாம் பொய்யாகக் கருதியொழுகு கின்றனரோ வென்றாற், சிறிதும் இல்லையே. அடிக்குறிப்புகள் 1. அடிகளார் தம்முடைய உயரிய அறிவுக்கடல் என்னும் திங்கள் வெளியீட்டில் அவ்வப்போது வரைந்து வெளிப்போந்த சிவஙானபோத ஆராய்ச்சி என்னும் சிறந்த கட்டுரையினைப் பின்னர்த் தன்நூல் வடிவாகச் செப்பனிட்டெழுதி அரைகுறையாக உள்ளது இப்பின்னிணைப்பு 3. இங்ஙனஞ் செய்தார், சிவஞானபோதத்தைப் பாண்டிப் பெருமாள் விருத்தியுரையுடன் பதிப்பிட்ட திரு. சண்முகசுந்தர முதலியாராவர். 4. See Sir John Marshall’s “Mohenjo-daro and the Indus Civilization,” Vol. 1. 5. See “Dr. Caldwell’s Comparative Grammar of the Dravidian Languages” 1st edition, 1856 page, 72. 6. ஏவம் வித்யாச் சிவஞானபோதே சைவார்த்த நிர்ணயம் சிவஞானபோத ஆராய்ச்சி - முற்றும் - பாவலர்கள் பார்வையில் மறைமலையடிகள் மறைமலையடிகளைப் போற்றிடுவோம் (எடுப்பு) மறைமலை யடிகளைப் போற்றிடுவோம் - அவர் வழங்கிய உணர்ச்சியை ஏற்றிடுவோம்!-மறைமலை (தொடுப்பு) நிறைகுடம் எனும்புகழ் அறிவாளர்--அவர் நிகரிலாத் தனித்தமிழ் நெறியாளர்--மறைமலை (முடிப்பு) செந்தமிழ் இயக்கத் தந்தையவர்--என்றும் சிவநெறி மறவாச் சிந்தையினர்; சிந்தனைக் களஞ்சியம் எனநூல்கள்--பல தீட்டிய செழுந்தமிழ் முனிவரவர்--மறைமலை சாகுந்தலந்தனைத் தமிழாக்கி--அவர் சாகாப் புகழினை ஏந்தியவர் பாகும் தேனும் இணங்கிவரத்--தமிழ்ப் பண்குரல் விரிவுரை வழங்கியவர்--மறைமலை ஆயிரம் ஆயிரம் நூல்களையே -- நன்கு ஆய்ந்தவர் அவரோர் நூலகமே தூயவர் பெயரால் நூலகமும்--நன்கு துலங்கும் பெருமை சென்னையிலே--மறைமலை முத்துமுத் தாம்அவர் கையெழுத்து; மிக முதிர்ந்த வயிரம் அவர்கருத்து, முத்தமிழ் அறிவுக் கடல்எனவே--பல முத்து மொழிகளை வழங்கியவர்--மறைமலை எதிலும் ஒழுங்குமுறைகாட்டி--அவர், இலங்கிய புலமை வழிகாட்டி பொதுநிலைக் கழகம் தலைக்கூட்டி--பெரும் புலவரைப் போற்றிய மேதையவர்--மறைமலை. - கலைமாமணி புத்தனேரி. ரா. சுப்பிரமணியம் (மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-33-34) வாய்மை ஈதே! நற்பேரும் புகழுமிகு மறைமலையார் தம்முடைய நலமே சான்ற சொற்போரின் பேராற்றல் துணிவுமிகு பேராண்மை தூய நல்ல முற்போக்குப் பெருங்கொள்கை முறைதிறம்பா ஆராய்ச்சி எல்லாம் முன்னின் மற்றவர்க்கு நிகரான மாபுலவர் எவருமிலர் வாய்மை ஈதே! பழமைமிகு தமிழ்நெறியைப் பகுத்தறிவும் அறிவியலும் பரந்து யர்ந்த விழுமியநற் பெரும்போக்கும் விரிந்தமனப் பான்மையுமே, மேவு வித்துச் செழுமியநல் அடிப்படையில் சிறந்தநல்ல அமைப்போடும் செழிக்கச் செய்தார் தொழுதகைய பெரும்புலவர் தூயதமிழ் மறைமலையார் சொல்வ தென்னே! - திரு. ந. இரா. முருகவேள் (மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-34) முற்றிய புலமையாளர் நம்மொழிப் புலமை யெல்லாம் நடுத்தெருப் புலமை யாகும் செம்மொழி பேசி வந்த திருமறை மலையார் பெற்ற மும்மொழிப் புலமை யன்றோ முற்றிய புலமை அன்னார் தும்மலும் கல்வித் தும்மல் தூக்கமும் கல்வித் தூக்கம் - பாவலர். சுரதா (மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-35) இவர் இல்லையேல் காவலேது? தமிழ்மட்டும் படித்தவர்கள் தமிழைச் சொன்னார் சமற்கிருதக் காரர்களோ தம்மைச் சொன்னார் அமைதிறிநை மறைமலையார் இரண்டுங் கற்று ஆம் உண்மை தமிழ்க்கடலே உயர்ந்த தென்றார் உமிமூடி இருந்தாலே நெல்தான் என்றே உரைத்தவர்க்குப் பதரென்ன என்று சொன்னார் இமை இன்றேல் விழிகட்குக் காவல் ஏது? இவர்இலையேல் அன்றக்குக் காவல் ஏது? - பாவலர் கா. வேழ வேந்தன் (மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-35) சிறப்பெல்லாம் கொண்டார் பேச்சாளர்; பனித்தமிழின் பெருமை தீட்டும் புதுநடைசால் எழுத்தாளர்; பிறர்தி ணிப்பின் பாய்ச்சலினைத் தகர்க்கின்ற மறவர்; இன்பப் பைங்கதைகள் சொல்கின்ற நல்ல அன்னை; மூச்சாகும் தனித்தமிழின் தந்தை; பாக்கள் முழுச்சுவையாய் வழங்கியஓர் வள்ளல்; காழ்ப்புக் காய்ச்சலினை நலமாக்கும் மருந்துக் காரர்; கரைகண்ட மும்மொழியின் அருமைச் சித்தர்; மறைமலைபோல் உயர்ந்திருந்தார்; ஆனால் ஒன்றி, மாந்தர்தம் கைக்(கு) எட்டும் முறையி ருந்தார்; நிறைமலை யாய் வாழ்பரப்பில் மேன்மை கண்டார்; நெடுவிலங்கு உறைபாங்கு கொண்டா ரில்லை; இறைஅடிகள் எனுமாறு சிறப்புப் பெற்றார்; இஞ்ஞால நன்மைகளைக் குறைக்க வில்லை; முறைபெயரில் நூலகமும், நகரும், பாலம் பின்தோன்றச் சிறப்பெல்லாம் கொண்டார் வாழி - புலவர் நா. இராசகோபாலன் (மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-35-36) கதிரவன் போல வாழ்க! செந்தமிழின் தனிமாண்பைத் திசைக ளெட்டும் செஞ்சுடர்போல் பரப்பியிருட் பகையை வென்று சிந்தையொளி நல்குதிரு வாசகத்தின் செழும்பொருளைச் சித்தாந்த சைவத்தோடு முந்தியதொல் லறிவாளர் போற்றத் தந்த முத்தமிழ்மா முனிவன்செந் தமிழ்த்தாய் வாழ வந்தமறை மலையடிகள் பன்னூ லாசான் மரபொடுமாண் புகழ்ஓங்கிக் கதிர்போல் வாழி. - தலைவர் : கரந்தைத் தமிழ்ச் சங்கம் (மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-36) வாய்மை காத்த மறைமலை வாழ்வியல் அறிந்த மேதை; மனத்தினில் பட்ட உண்மை தாழ்வுயர் வெண்ணம் இன்றிச் சாற்றிய மேன்மையாளன் மாழ்குறும் மனித மேன் மறையினும் மறையா சீர்த்தி வாழ்வினைப் பெற்ற மன்னன் மறைமலை அடிகள் அன்றோ? - புலவர் பண்ணை சண்முகம் தமிழக மறுமலர்ச்சியின் தந்தை சுதந்திரன் வெளியீடு மறைமலையே வாழி! வருக தமிழன்னை மாண்பார் அருளே உருவாகி வந்த ஒருவ -- பெருவாழ்க்கை உற்ற தொருகுடியில் ஓங்குமில் வாழ்வெல்லாம் பெற்றும் அவைதுறந்த பெம்மானே -- மற்றுலகில் இல்லை கலைகளிவன் ஏய்ந்தகல் லாதவென வல்லாரும் போற்றுகலை மாமணியே--எல்லையறு செந்தமிழிற் பல்வகையாய்ச் சேர்துறைகள் எவ்வெவற்றும் முந்து பெரும்புலமை முற்றியோய் வந்த உரையார் வடநூலில் ஓங்காங்கி லத்தில் வரையாப் பெரும்புலமை வாய்ந்தோய்--வரைநின் எழுத்தின் தனிச்சீரை எவ்வழியுந் தேர்ந்து வழுத்தாதார் யாரிந்த மண்ணில்--பழுத்துமிகு மெல்லினிமை சான்றுமணம் வீசுங் கனியினையும் வெல்லும் உரைநடையை வேண்டாரார்--மல்கு பெருநூல் எதற்கும் பிறழா துரைக்கும் பொருளின் வளமெவரே போற்றார்--தெருளார்ந்த மேலைப் புலத்தோரும் மெச்ச வியற்றும்நின் நூலின் பெருஞ்சீர் நுவலாரார்--சாலப் பெருகும் அவைக்கண்ணின் பேருரைகள் கேட்டே உருகி நிறைமகிழ்தம் உள்ளம் மருவினராய் வானின் அமிழ்தே மலையத்தென் காலேநல் தேனருவி யேஎன்னச் செப்பாரார்--மேனிலைசேர் கல்லூரி போற்றுங் கணக்காயர் ஆகியநாள் சொல்லின் திறனோர்ந்து சொல்லாரார்--பல்வளஞ்சேர் முல்லையொடு பாலையினில் முற்றியநின் ஆய்வுரையை நல்லிசையோர் தம்முள் நயவாரார்--தொல்லடிகள் மாணிக்க வாசகனார் வாழ்க்கைவிரி நூல்கண்டு நாணிக்கண் கூசாத நண்ணாரார்--ஆணிப்பொன் அன்ன சிறப்பினவாய் ஆக்குநூல் ஆக்கமெலாம் எண்ணித் துணிதற் கியலாகித்--துன்னும் நினதுரை நூலாகும் நீள்கடலை நீந்திப் புனைவதற் கார்வல்லார் புவியில்--இணையில்லாச் சைவத் துறையின் தகுசீர் அவையெல்லாம் எவ்வெவர்க்கும் ஊட்டும் இணையிலாய்-- இவ்வுலகில் செல்வர்யாம் என்னச் செருக்கும் சிலவரைப் புல்லுதுக ளாக்கொள் பொற்போனே--பல்வழியில் தம்மை மதியாரைத் தாமதியா நன்மானம் இம்மை எவர்க்கும்முன் ஏய்ந்தோனே--செம்மையெலாம் தங்குங் கரந்தைத் தமிழ்ச்சங்கத்(து) எந்நாளும் பொங்குந் தனியன்பு பூண்டோனே--திங்கள் நிறைநிலையே யென்ன நிலவிப்பல் லூழி மறைமலையே வாழி மகிழ்ந்து. - கரந்தைக் கவியரசு அரங்க வேங்கடாசலம் பிள்ளை (மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-38-39) மறைமலையார் புகழ்வாழி அறிவினொரு கடலெனவே அனைவருளம் மகிழ்ந்தேத்த செறிவினொடும் அகற்சிநுட்பம் சேர்ந்தமைந்த புலமையினார் நெறியுறவே தனித்தமிழை நேர்நின்று காத்தளித்தார் மறிவில்லாத் தமிழ்ச்சான்றோர் மறைமலையார் புகழ்வாழி. - டாக்டர் மு. வரதராசனார் (மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-39) வெளியிடல் கடனே மறைமலை அடிகள் த்மிழ்மொழிக் குழைத்த மாண்பினை மகிழ்வுடன் நினைந்து துறைதொறும் தமிழர் தமிழ்மொழி பேணித் தொன்மையின் செம்மையை உணர்ந்து நிறைபொறை நேர்மை நெறிமுறை நீதி நீர்மையும் சீர்மையும் மருவிக் கறைபடி யாமல் வரும்படி மலரைக் கருதிநேர் வளியிடல் கடனே. - புலவர் செகவீரபாண்டியனார் (மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-39) தமிழ்ப் பண்பு மறைமலையைக் கலைக்கடலை மதிக்கொழுந்தை அக்கொழுந்தின் வனப்பை வைப்பை முறைதிறம்பாச் சிவப்பணியை முகநூல்கள் பலவிளைத்த முகத்தை அன்பின் உறையுளைநற் றமிழ்ப்பண்பை உணர்ச்சியினை ஊக்கத்தை ஊதி யத்தைக் குறைவின்றி யினிப்பெறுநாள் கூடுங்கொல் அறிவுடையீர் கூறு வீரே! - வித்துவான் மு. அருணாச்சலம் பிள்ளை (மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-39-40) கலைகளெல்லாம் அறிந்த தெய்வம் ஏராணத்தில் இலக்கணத்தில் இலக்கியத்தில் சான்றோர்தம் இனிய பாவில் காரணத்தை நுதலிவரும் சித்தாந்த முதலான கலைகள் தம்மில் ஆரணத்தைத் தலையாக்கொள் ஆரியத்தில் சங்கதமத்தில் ஆங்கிலத்தில் சீரணைத்த கலைகளெல்லாம் அறிந்த தெய்வம் நீயன்றித் தெரியக் காணேம். - புலவர் வீ. உலகவூழியனார் (மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-40) தன்னேரில்லா மலை உலைவின்றித் தமிழ்மொழிக்கே உழைத்தா ரென்றோம் உண்மையிது; ஊக்கமுடன் தமிழின் ஆக்கம் கலையென்றே தன்வாழ்நாள் கழித்த அண்ணல் கண்டதிலை தமிழ்நாட்டில் தன்னே நில்லா மலையென்றோம்; மாகடல்மா ணிக்க மென்றோம் மஞ்சுதமிது வளம்பெறவே வாழ்ந்தா ரென்றோம் இலையிந்த உலகெங்கும் இவர்போல் சிந்தித் தியற்றிடம் நூல் வல்லார்க ளென்றோ மின்றே. - முத்தமிழ் மணி (மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-40) மறைமலையடிகள் நாவலர் நாட்டார் வண்புகழ் பண்டித மணியார் துறைகலை போய் சுப்பிர மணியத் தோன்றலார், ஞானியா ரடிகள் முறைபுகழ் அறிஞர் பாரதியார், நடன மூதறி ஞர் திரு.வி.க. பிறபிற பெரியோர் புலமையும் தொண்டும் பெரிதுணர்ந் தவரடி பணிவோம்! தனித்தமிது இயக்கத் தந்தை! சைவசித் தாந்தச் சான்றோர்! முனைத்தநற் கொள்கை வீரர்! மும்பொழிப் புலமை வேந்தர்! மனித்தருள் தெய்வம் போன்ற மறைமலையடிகளார் தம் ஏனைப்பல சிறப்பும் போற்றி இனிதவர் நெறிநின் றுய்வாம்! - ந.ரா. முருகவேள். மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-147) மறைமலையடிகளார் மாப்புகழ் வாழ்க! தெய்வமாய் எண்ணும் தேவர்கட் கெல்லாம் தேவனாம் சிவபெரு மானை மெய்ம்மயிர் முகிழ்ப்ப உளத்திடை நிறுவி மேன்மையாம் சைவசித் தாந்தம் கைவரப் பெற்றுக் கற்றவர் வியப்பக் களிப்புற விரித்துரை யாற்றிப் பொய்வழக் கான புறமதங் கடிந்த புண்ணியர் மறைமலை யடிகள். (1) ஊனினை உருக்கும் வாசகம் தனக்கோர் ஒப்பிலா உரைதரு நூலும் தேனினும் இனிய வாசகர் காலம் தெரிந்திடும் ஆய்வுரை நூலும் வானினும் உயர்ந்த வளநிறை கருத்து வாய்த்தபன் னூல்களும் எழுதி ஆனின்நற் பாலின் சுவையும் கைப்பெய்த அளித்தவர் மறைமலை யடிகள். (2) கடல்வளை புவியில் காலங்காண் பொணாத கனிதமிழ் மொழியினில் எழுந்த சுடரொளிச் சங்க நூல்முதல் பலவும் தூய்மையாய் அச்சினில் ஏற்றிக் கெடலரு மரபில் தமிழினை வளர்த்த கீர்த்தியர் பலருளர்; எனினும் வடமொழி கலவாத தனித்தமிழ்ப் பற்றை வளர்த்தவர் மறைமலை யடிகள். (3) நலமலி தமிழின் நடையிடைச் செய்யுள் நடைதரு நூல்களே பலவாம்; புலமலி வில்லா எளியரும் உணரப் புத்துரை நடைசெய்தும் என்றே நயமிலா நடையில் நூல்பல எழுதி நற்றமிழ் குலைத்தனர்; ஆனால் உயர்தனிச் செம்மை உரைநடை எழுதி உதவினர் மறைமலை யடிகள். (4) ஆங்கிலம் நல்ல அருந்தமிழ் மற்றும் ஆரியம் ஆயபன் மொழியில் ஓங்கிய புலமை வாய்ந் ததோ டன்றி ஓதிய அம்மொழி நூல்கள் பாங்குறத் திரட்டிப் பாதுகாத் தவற்றைப் பயன்பட வைத்தனர் எங்கள் தேங்கிய புகழால் திசைஎலாம் பரவும் செம்மலாம் மறைமலை யடிகள் (5) தென்றமிழ் மொழியுட் செறிந்திடு நயமாம் தெள்ளிய அருவிபாய் மலையாய் நன்னராம் சைவ சித்தாந்த முடிபாம் நலங்கிளர் முடிகொளும் மலையாய் மன்னிய குரிசில் மறைமலை யடிகள் மாப்புகழ் வாழிவா ழியவே. (6) மறைமலை யடிகள் வரைந்தநூல் தம்மை மாண்புற அச்சினிற் பதித்தும் துறைபல வாகத் தொகுத்துஅவர் அளித்த தூயநூ லுடன்பிற நூலும் குறைவறக் கூட்டி நூலகம் எடுத்தும் குன்றனார் நூற்றாண்டு விழவும் நிறைவுற நடாத்தும் தாமரைச் செல்வர் சுப்பையாப் பிள்ளைவா ழியவே. (7) - பேரா. கு. சுந்தரமூர்த்தி திருப்பனந்தாள் நிலைத்தது நிறைதமிழ் கரவியல் நெஞ்சக் கனலிடைச் சுட்டுக் கனித்தமிழைப் பரவிய மாந்தர் பதைப்புற, தேர்ந்தோர் பவளமணி விரவிய கோவை விலக்குதல் பேல வியன்றமிழுள் அரவியற் சொல்லாம் அயற்சொற் களைந்தார் அடிகளாரே! (1) அடிகளார் பன்மொழி ஆய்ந்து பயின்றே, அயலவர்சொற் பிடிகளால் எம்மொழிப் பீடும் சிதையும் பிழைமனத்துக் குடிகளால் மாண்பு குலையும் அரசியற் கூத்தெனவே, இடிகளால் குன்றா இயக்கம் வகுத்தே இயக்கினரே! (2) இயக்கம் உணரா இனத்தார் கொடுத்த இடரொதுக்கி மயக்கந்தெளிய மருந்தாய் விளங்கி மறைமலையார் வியக்கும் பகைவர் விலகி மறைய வெருட்டியதால் பயக்கும் அழியாப் பயன்றான் தமிழின் பரப்பளவே! (3) பரப்பை அளந்து பகர வியலாப் படர்விசும்பை வரப்புக் கட்டி வளைப்பேன் என்னும் வழக்குரைஞர் கரப்பை - அவர் தங் கயமைக் கருத்தைத் கருவழித்தே, இரப்பை பிறமொழி ஏற்பை - முழுதும் இகழ்ந்தனரே! (4) இகழ்ந்து தமிழை இழிமொழி யென்ற இருண்மதியர் அகழ்ந்தாய்ந் துரைத்த அறிஞர் அடிகளார் அடிவருடிப் புகழ்ந்தார், பல்லோர் புறமோடிப் போனார், பொலபொலென நிகழ்ந்தது வெற்றி நிலைத்தது நந்தாய் நிறைதமிழே! (5) - தரங்கை - பன்னீர்செல்வன் (மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-26-27) மறைமலையம் (பொருள்வழி பிரிக்கப்பட்டு - காலநிரல் செய்யப்பட்டவை) மருத்துவம்: 1. பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் 1921 2. மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை 1, 2 1933 மறைபொருளியல்: 3. மரணத்தின் பின் மனிதர் நிலை 1911 4. யோக நித்திரை அல்லது அறிதுயில் 1922 5. மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி 1927 6. தொலைவிலுணர்தல் 1935 இலக்கியம்: 7. சாகுந்தல நாடகம் 1907 8. சாகுந்தல நாடக ஆராய்ச்சி 1934 இதழ்கள்: 9. ஞானசாகரம் 1902 சங்க இலக்கிய ஆய்வு: 10. முதற் குறள் வாத நிராகணம் 1898 11. முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை 1903 12. பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை 1906 13. முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவர் 1936 14. திருக்குறள் ஆராய்ச்சி 1951 பாடல்: 15. மறைமலையடிகள் பாமணிக்கோவை 1977 16. முனிமொழிப் பிரகாசிகை 1899 நாடகம்: 17. அம்பிகாபதி அமராபதி 1954 புதினம்: 18. குமுதவல்லி நாகநாட்டரசி 1911 19. கோகிலாம்பாள் கடிதங்கள் 1921 கடிதம்: 20. மறைமலையடிகளார் கடிதங்கள் 1957 கட்டுரை: 21. சிந்தனைக் கட்டுரைகள் 1908 22. அறிவுரைக் கொத்து 1921 23. சிறுவர்க்கான செந்தமிழ் 1934 24. இளைஞர்க்கான இன்றமிழ் 1957 25. அறிவுரைக்கோவை 1971 26. உரைமணிக் கோவை 1972 27. கருத்தோவியம் 1976 சமயம்: 28. திருவொற்றியூர் முருகர் மும்மணிக்கோவை 1900 29. சோமசுந்தரக் காஞ்சியும், காஞ்சியாக்கமும் 1901 30. கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா 1929 31. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 1930 32. மாணிக்கவாசகர் மாட்சி 1935 33. திருவாசக விரிவுரை 1940 34. மாணிக்கவாசகர் வரலாறு 1952 35. சோமசுந்தர நாயகர் வரலாறு 1957 தத்துவம்: 36. சித்தாந்த ஞானபோதம்- சதமணிக் கோவை 1898 37. துகளறு போதம் உரை 1898 38. வேதாந்த மத விசாரம் 1899 39. வேத சிவாகமப் பிரமாண்யம் 1900 40. சைவசித்தாந்த ஞானபோதம் 1906 41. சிவஞான போத ஆராய்ச்சி 1958 வரலாறு: 42. இந்தி பொது மொழியா? 1937 சமூக இயல்: 43. பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் 1906 44. சாதிவேற்றுமையும் போலிச்சைவரும் 1923 45. வேளாளர் நாகரிகம் 1923 46. பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் 1938 47. தமிழர் மதம் 1941 மறை மலையடிகள் நாட்குறிப்புகள் 1988 பொது நிலைக் கழக உரை விவேகாமிர்தம் பிரசண்ட மாருதம் வேதாந்த சித்தாந்தம் சைவ சமயப் பாதுகாப்பு ஆங்கில நூல்கள்: 48. Oriental Mystic Myna bi Monthly 1908 49. Ocean of Wisdom’ bi Monthly 1935 50. The Tamilian and Aryan Forms of Marriage 1936 51. Ancient and Modern Tamil poets 1937 52. Can Hindi be the Lingu franca of India? 1937 53. Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge 1940 54. The Concemption of God Rudhra