kiwkiya«-- 27 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) தத்துவம் – 2  சைவ சித்தாந்த ஞானபோதம் ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 24+320 = 344 விலை : 430/- மறைமலையம் - 27 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com  jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 352 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000 üyh¡f« : வி. சித்திரா   அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005.  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந்திருக் கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) மறைமலைய மாண்பு நுழைவுரை தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்! முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், `முத்தமிழ் அடிகள் என முழக்கமிட நின்றார்! இருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார். தமிழ் தனித்து இயங்காது என்றும், வடமொழி வழியது என்றும், வடமொழித் துணையின்றி இயங்காது என்றும், உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வடமொழியே என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க, வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ்பரப்பாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர். சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், `தனித்தமிழ் (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் `தனித்தமிழ் என்பதை நிலை நாட்டிய நிறைமலை, மறைமலையடிகளாரே! சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், `தொல் காப்பியக் கடல் எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி, ஐந்தெழுத்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே என்றும், ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? என்றும் - எழுதிப் பரப்பினாராக, ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம் என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்! தொல்காப்பியக் காவல் தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என்றும், மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை பேண வேண்டும் என்பதை, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால், ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்ப தற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது என்னும் பாவாணர், மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப் பாடிப் பரவினார். `தனித் தமிழ்த் தந்தையார் என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார். நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழ் காக்கும் படை என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புகளின் மேம்பாட்டையும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார். பல்துறை ஆற்றல் அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார். மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள் என்கிறார். (பனிமலை - இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்). அடிகளார் நூல்கள் அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப்படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை, 1. மருத்துவம் 2. மறைபொருள் 3. இலக்கியம் 4. இதழ்கள் 5. சங்க இலக்கியம் 6. பாடல் 7. நாடகம் 8. புதினம் 9. கடிதம் 10. கட்டுரை 11. சமயம் 12. தத்துவம் 13. வரலாறு 14. சமூக இயல் என்பன. முதற் குறள் வாத நிராகரணம் என்னும் மறுப்பு நூலே, அடிகளின் முதல் நூலாக வெளிப்படுகின்றது (1898) அந்நூன் மறுப்பு நயமே நாகை அடிகளை - பல்லவபுர அடிகளாக -தனித்தமிழ் அடிகளாக ஆக்க அரும் பெரும் தூண்டல் ஆயிற்றாம். அடிகளார் வரலாறு: கீழ்கடல் சார் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிற்றூர் காடம்பாடி, ஆங்கு வாழ்ந்த அருந்தவப் பெருந்தகையர் சொக்கநாதர் - சின்னம்மையார்! இவ்விணையர் கொடையாய்த் தமிழன்னை செய்த தவப் பேற்றால் பிறந்தவர் வேதாசலம். பிறந்த பெரு மங்கல நாள் கி.பி. 15.07.1876. சொக்கநாதர், சித்தமலம் அறுவித்த சித்தமருத்துவர்; அறிவ மருத்துவம் என்பதும் அது. அத்தொழில் அவர்க்கு வளத்தை வழங்கியது. அதனால் வேதாசலம் குறைவற வாழ்ந்தார். நாகப்பட்டினத்து வெசிலியன் மிசன் பள்ளியில் ஐந்து வகுப்புவரை பயின்றார்; சிறந்த மாணவராக விளங்கினார். ஆறாம் வகுப்பில் சேரும் நிலையில், அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். ஆயினும் அன்னையார் உறுதியால் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு இருந்த முதன்மை தமிழுக்கு இல்லை. கிறித்தவ சமயம் பற்றி அன்றிச் சிவனியம் பற்றி அறிய வாய்ப்பில்லை என்னும் இரண்டு குறைகளையும் இளமையிலேயே உணர்ந்தார். வீட்டிலேயே தமிழ் நூல்களைப் பயின்று முதற் குறையையும், நாகையில் இருந்த இந்துமதாபிமான சங்கம் வழி இரண்டாம் குறையையும் நீக்கினார். பள்ளியிலும் குறையறக் கற்றார். வருவாய்க் குறையால் வாடும் அன்னைக்குச் சுமையாய் இல்லாமல் தனியே பயில்வதே இனியவழி என எண்ணி, நாகையில் புத்தக வணிகராக விளங்கிய நாராயண சாமியார் புலமையாலும் சிறந்து விளங்கியவர். ஆதலால் அவரிடம் தனியே இலக்கிய - இலக்கண - சமய நூல்களைக் கற்றார். நாராயணரின் முன்னை மாணவர் பேரா. மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பதையும் அறிந்தார். ஒன்பதாம் வகுப்பொடு பள்ளிக் கல்வியை நிறுத்தித் தனிக்கல்வியே கற்றார். தொல்காப்பியம், தொகை நூல்கள், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவை, இறையனார் அகப் பொருள் எனக்கற்றார். அடிகளார் இயற்றிய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை முகப்பில், எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தேம் என்றும் வேறுசில நூல்களையும் முழுவதாக ஓதியதையும் கூறி, இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். அவ்வாண்டு கி.பி. 1897. நாகை இந்து மதாபிமான சங்கத்திற்குச் சைவ சித்தாந்த சண்ட மருதம் என்னும் விருது பெற்ற சோமசுந்தர நாயகர் வந்து சொற்பொழிவாற்றினார். அவர் பொழிவில் வந்த கருத்தொன்றனை மறுத்து ஒருவர் எழுத, அதற்கு மறுப்பாக முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புரை எழுதினார். அதனைக்கற்ற நாயகர், மீளப் பொழிவுக்கு வருங்கால் முருக வேளைச் சந்திக்க விரும்பினார். அச்சந்திப்பின் பயனே உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம். நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார். இதுவே அடிகளார்க்குச் சென்னை வாழ்வு அமைய முதல் தூண்டல் ஆயிற்று. அடிகளுக்குப் பதினேழாம் வயதில் (1893) திருமணம் நிகழ்ந்தது. துணைவி தம் மாமன் மகள் சவுந்தர வல்லி என்பார். திருவனந்தபுரம் நாராயணசாமி அவர்களின் முன்னை மாணவராம் பேரா. சுந்தரனார் திருவனந்த புரத்தில் இருந்தார். அவரியற்றிய மனோன்மணீய நாடக நூல் கற்று அதன் அருமை கண்டு, பேராசிரியரைக் காணவிரும்பினார். அதனால் தம் ஆசிரியரோடு திருவனந்தபுரம் சென்று பேராசிரியரோடு உரையாடினார். வேதாசலனார் இளம் பருவத்தையும் மூதறிவையும் அறிந்த சுந்தரனார் வியப்புற்றுத் தகுதிச் சான்று ஒன்று வழங்கினார். சிறிது காலம் திருவனந்த புரத்தில் ஆசிரியப் பணியும் செய்தார். அவ்விடத்தின் பருவநிலை ஒவ்வாமையால் நாகைக்கே திரும்பினார். சென்னை: சோமசுந்தரனார் முன்னே கூறியபடி வேதாசலரைச் சென்னைக்கு அழைத்து அறிஞர் நல்லுசாமி என்பார் நடாத்திய சித்தாந்த தீபிகை என்னும் இதழாசிரியர் ஆக்கினார். பின்னே சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டியிருத்தல் அறிந்த சோமசுந்தரனார் வேதாசலனா ர அக்கல்லூரிப் பேராசிரியராக்க முயன்றார். அதுகால் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர். கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் என்பார். 9.3.1898 இல் வேதாசலனார் பணியேற்றார். அங்குப் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்கல்லூரிக் காலத்தே இளங்கலை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு (1903) பட்டினப்பாலை (1906) என்பவற்றுக்கு ஆராய்ச்சி உரை எழுதினார். அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப்புதுமுறை உரை, தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சி யினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டும் என எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்கிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தார்ஆங்கிலமும் வட மொழியும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும் என்றும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம் என்றும் ஒரு தீர்மானம் ஆட்சிக்குழுவில் கொண்டு வந்தனர். ஒரு பாடம் விருப்பப்பாடம் எனப்பட்ட பின்னர் அதனைக் கற்க வருவார் எவர்? தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறையவே ஆசிரியப் பணியிடமும் குறைய வேண்டுவதாகி, அடிகளார் 31.1. 1911 ஆம் நாளுடன் கல்லூரிப் பணியை முடிக்க வேண்டிய தாயிற்று. மாணவர்: இக்காலத்தில் அடிகளின் மாணவராக இருந்தாருள், தணிகைமணி செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சி, நாவலர் ச.சோ. பாரதி, பேரறிஞர் ச. வையாபுரியார் முதலோர் சிலர். தணிகைமணியின், தேவார திருவாசகச் சொல்லடைவு ஒரு பிறப்பளவில் செய்யக் கூடியதா? நாவலர் ச. சோ. பாரதியாரின் ஆய்வுத் துணிவு எத்தனை கசடுகளை நீக்கியது? வையாபுரியார், கால ஆய்விலும், வடமொழிப் பிடிவாதத்திலும் தம்மைச் சால்பு ஆய்வில் இருந்து விலக்கினாலும், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப்பதிப்பு, பல்கலைக் கழக அகரமுதலிப் பதிப்பு இவற்றைச் செய்த அருமை என்ன? புறத்திரட்டு, களவியல், காரிகை ஆயவற்றின் பதிப்புச் சிறப்பு என்ன? இவர்கள் பணியும் அடிகளாரைத் தழுவுதல் உண்மை தானே! சமரச சன்மார்க்கம் கல்லூரிப் பணியில் இருந்து வீடுபெற்ற அடிகளார், பல்லவபுரத்தை வாழ்விடமாகக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் தோற்றுவித்தார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீகாரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும், சமரச சன்மார்க் கத்தையும் பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவார். அச்சுவாமி கள் வலியுறுத்திய அவ்விரண்டு கொள்கைகளையும் எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்கு கூட்ட வேண்டி அச்சுவாமிகள் இட்ட பெயராலேயே, `சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கலாயிற்று. இந்நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்; பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் ஆவர் என்று பெயரீடு செய்து கொள்கைகளையும் வகுக்கிறார். குடும்பம் 1898இல் அடிகளார் சென்னைக்கு வரும்போது அவர்தம் அன்னையார் சின்னம்மையார், துணைவியார் சவுந்திரம் அம்மை யார், செல்வி சிந்தாமணி, அடிகளார் என்னும் நால்வரைக் கொண்ட குடும்பமாக இருந்தது. 1911இல் பல்லவ புரத்தில் குடிபுகும் போது நீலாம்பிகை, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி என்னும் மக்களும் கொண்ட ஒன்பதின்மர் குடும்பமாக இருந்தது. பல்லவுரம் புகுந்த பின் திரிபுர சுந்தரி பிறக்கப் பதின்மன் குடும்பம் ஆயிற்று. இந்நிலையிலேயே 27.08.1911இல் சைவத் துறவியர்க்குரிய துறவாடை (காவி) கொண்டு சுவாமி வேதாசலம் ஆனார். சுவாமி வேதாசலம் என்பதன் தனித்தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது வெளிப்படை. முன்னேயே அவரை அடிகள் என்றது அவர்தம் மாண்பு கருதியேயாம். மீள்பார்வை நாம் மீள்பார்வை ஒன்றுபார்க்க வேண்டும். அடிகள் 21ஆம் அகவையிலேயே தனித்தமிழ் ஆய்வுத்திறம் கைவரப் பெற்றார். 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களுக்கு ஆய்வுரை வழங்குங்கால் இதிலுள்ள சொற்கள் இத்தனை; இவற்றுள் செந்தமிழ்ச்சொல் இத்தனை; வேற்றுச் சொல் இத்தனை - என அறுதியிடுகிறார். ஆதலால், தனித்தமிழ் என்னும் தோற்றம் 1916 ஆம் ஆண்டில் நீலாம்பிகையார் தூண்டலால் ஏற்பட்டமை என்பது, அகத்தே அமைந்து கிடந்த வித்து, முளை விட்டு வெளிப்பட்ட நிலையாம். அவ் வெளிப்பட்ட நிலையும் உடனே பற்றிப் படரவில்லை! மேலும் சில ஆண்டுகளின் பின்னரேயே சமசர சன்மார்க்க நிலையம், பொதுநிலைக் கழகமாகவும், ஞானசாகரம் அறிவுக் கடலாகவும், சுவாமி வேதாசலம் மறைமலையடிகள் ஆகவும் படிப்படியே கிளர்கின்றனவாம்! ஓர் அரிய அமைப்பு உருவாகும் நிலையும், ஓர் அரிய கண்டு பிடிப்பு உலகவர் அறிய வெளிப்படலும், அவை இயக்கமாகவும் பயனாகவும் ஆகின்ற நிலையும் பற்றிய விளக்கம், அடிகளார் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் அடங்கியுள்ளதாம்! எதிரிடைத் தூண்டல்: மேலும் ஒன்று: ஒரு நேரிடைத் தூண்டலினும் எதிரிடைத் தூண்டல் வலிமை மிக்கது என்பதும், உள்ளத்து உறுதியை வெள்ளப் பெருக்காய் வெளிப்படுத்த வல்லது என்பதும் தெளிவாம். ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டா? என்று கற்றறிந்த தமிழர் ஒருவரே வினாவி நகைத்தல், பெற்ற தாய் மொழிப் பிறவிக்கு உற்ற தகைமை ஆகாது என்பதும், அதனை உணர்ந்த அப்பிறவி பாம்பன் குருபாத அடிகள் போல் சேந்தன் செந்தமிழ் என்ன ஒரு நூலியற்றித் தமிழ் தனித்து இயங்கவல்ல தனி உயர் மொழி என்று நிலைநாட்டியிருப்பின் வழிபடத்தக்க பிறவியாய் அமைந்திருக்கும்! அப்பேறு அதற்கு வாய்க்காமை, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (குறள் 263) என்னும் வள்ளுவர் வாய் மொழிப்படி, தனித்தமிழ்த் தந்தைப் பேறு மறைமலையடிகட்கு வர இருப்பதற்கே நேரிட்ட நேர்ச்சியாம் என்க. இயக்கம் அடிகள் இயக்கம் ஆலமரமெனக் கால்பல கொண்டு அகல அகல விரியத் தனித்தமிழ் இயக்கமாய், உலகத்தமிழ்க் கழகமாய், பாவலரேறு தமிழ்க் களமாய், சேரர் கொற்றமாய், தமிழ்க்காப்புக் கழகமாய், தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாய், தனித்தமிழ் இலக்கியக் கழகமாய், தமிழ் வளர்ச்சிக் கழகமாய், மறைமலையடிகள் மன்றமாய், தமிழ்க்காவல் குழுவாய், இயற்றமிழ்ப் பயிற்றகமாய், பாவாணர் தமிழ் இயக்கமாய் ஆங்காங்கு முகிழ்த்து முனைப்பொடு கடனாற்ற ஏவியதாம். நூலகம் அடிகள் நூற்றொகை, அருமணிக் குவையன்ன நாலாயிரம் நூல்களைக் கொண்டது. எதிரது உணர்ந்து, சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்திற்கு முற்கொடையாக வழங்கியதால், நாலாயிரம் நாற்பதாயிரமாய் மேலும் மேலும் விரிந்து மறைமலையடிகள் நூலகப் பெயரால், பெருமைமிகு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த பெரியவர் சோமு அவர்கள் இல்லமே வாய்க்க உலக வளமாக்கியதாம்! அதன் வழியாகவே அடிகள் தாமே வெளியிட்ட நூல்களும், வெளியிடாமல் கழக வழி வெளிவந்த நூல்களும், அடிகள் காலத்திற்குப் பின் வெளிவந்த நூல்களும் ஆகிய முழுமைத் தொகுதிகளும் கி.பி. 1898 முதல் 1969 வரை முதற்பதிப்பாக வெளிவந்தவை. அவற்றுள் படிகள் கிட்டுதற்கு அரியவையும் உண்டு. அடிகள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப் பட்ட பேற்றால், இன்று வாய்த்த நூல்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வழங்கும் பெருவாய்ப்பைத் தமிழ்மண் பதிப்பகம் பெற்றதாம். வெள்ளச் சேதம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பதிப்பகத்துள் புகுந்து அச்சு அடிக்கப்பட்டதும், அடிக்கப்பட இருந்ததும், கணினிப்படுத்தி வைத்த குறுவட்டுகளும், மூலநூல்களும் என வாரி அள்ளிக் கொண்டு போனமை, களத்துக்கு வந்த கதிர் மணிகள், களஞ்சியத்திற்கு வாராமல் போய, பேரழிவு ஒப்பதாம். ஆதலால், நூல்களை மீளத் தேடவும், கணினிப்படுத்தவும், குறுவட்டு ஆக்கி அச்சிடவும் என மும்மடங்குப் பணியும் பேரிழப்பும் பெருத்த அவலமும் உண்டாக்கிற்றாம். அந்நிலையில், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழியை வாய்மை மொழியாக்கிய துணிவுச் செல்வர் இளவழகனாரும் அவர் குடும்பத்தவரும் ஆவர்! முன்னறிவிப்புத் திட்டப்படி நூலுக்கு ஆர்வமாய்ப் பணம் செலுத்தியோர்க்கும் நூல் காலத்தில் கிட்டா உளைச்சல் இல்லாமல் போகாதே! அவர்களும் அமைந்து தாங்கல், இயற்கை இயங்கியல் வழியதாம். வெளியீடுகள் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மொழி இன மண்வளம் - வளர்ச்சி மீட்டெடுப்பு - என்பவற்றை முன்வைத்துத் தமிழ்ப் போராளி இளவழகனாரால் தொடங்கப்பட்டதால், பேரிழப்புக்காம் எனத் தெளிவாகத் தெரிந்தும், இசைக் கலைக்கு வாய்த்த ஒப்பற்ற களஞ்சியமாய் வாய்த்த - கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டதாம்! முன்னை வந்த முதற்பகுதி பேரிழப்பாக்கியும் அதன் பின்னைப் பகுதிகளையும் அரிதின் முயன்று வெளியிட்டது! மொழிஞாயிறு பாவாணர்; ஈழத்து அறிஞர் ந.சி. கந்தையா; வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா, உரைவேந்தர் ஔவை சு.து; நாவலர் ந.மு.வே; பண்டித வித்துவான் தி.வே. கோபாலர்; சாமி சிதம்பரனார்; மயிலை சீனி. வேங்கட சாமியார்; பேரறிஞர் க. வெள்ளை வாரணனார்; பாவலர் குழந்தையார்; பாவலர் முடியரசனார்; பாவேந்தர், தொல் பொருள் கல்வெட்டு ஆய்ஞர் சதாசிவனார், சாத்தன்குளம் இராகவன் நூல்களையும் எளியேன் நூல்களையும் முழுமை முழுமையாக வெளியிட்டது. தொல்காப்பியம்- பாட்டு - தொகை - காப்பியம் - கீழ்க்கணக்கு - தமிழ்நாட்டு வரலாறு - ஆங்கிலம் வல்ல அறிஞர் இராம நாதனார் நூல்களையும், யாழ்ப்பாண அகராதி முதலாம் அகராதித் தொகுதிகளையும் வெளியிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிதொட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளிவந்த - தமிழுக்கு ஆக்கமாம் நாட் டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை எல்லாம் - ஓரிடத்துப் பெற்று, ஒரு தனித்தமிழ் நூலகம் அமைக்கும் அளவுக்கு அச்சிட்டு வழங்கிய பெருமை இளவழகனார்க்கு உண்டு. அவரே அன்றி அவர் துணையையும் மக்களையும் உறவையும் அன்பையும் நண்பையும் ஒருங்கே இணைத்து, அறிஞர் பெருமக்கள் பலர் அரவணைப்பையும் வாய்ப்பக் கொண்டு வாழும் இயல்பு அவர்க்கு வாய்த்தலால் மட்டுமே, இவ்வாறு செயற்கரிய செய்ய வாய்த்ததாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவரும் அவர். மறைமலைய மாண்பு மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழர் வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்! புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை - 6 625006. மலைக்க வைக்கும் மறைமலையம்! பதிப்புரை மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க -பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்கள் `மொழியின் வழியாகவே மொழிபேசும் மக்கள் முன்னேற முடியும் எனக் கூறுகிறார். உலகம் முழுதும் இவ்வுண்மை உணரப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. பாவாணரை அறிவுலகம் சரியாக அடையாளம் காண்பதற்குக் காரணமானது மறைமலையடிகளார் தந்த பாராட்டு! மறைமலையடிகள் (15.7.1876 - 15.9.1950) தேவநேயப் பாவாணர் (7.2.1902 - 16.1.1981) இருவரும் தனித்தமிழியக்கத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாகப் போற்றப்படுபவர்கள். மறைமலையடிகளார் 1916இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நூற்றாண்டை எட்டியுள்ள மகிழ்வான நேரம் இது! தனித்தமிழியக்க நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் `மறைமலையம் எனும் பெருந்தொகுப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வழி வெளிக்கொணரத் திட்டமிட்டோம். உலகம் முழுதும் பரவி வாழும் உணர்வு குன்றாத தமிழர்கள் தந்த ஊக்குவிப்பு, இந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் எனும் உறுதியை எனக்குத் தந்தது. தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அடிகளாரின் அரிய படைப்புகள் பலவற்றையும் தேடித்தேடி வழங்கி வழிகாட்டினர்; வலிமையூட்டினர். மறைமலையடிகளார் 1898ஆம் ஆண்டிலிருந்து எழுதி வந்துள்ளார். அறிவுக்கடல் (ஞானசாகரம்) இதழை 1902ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்துள்ளார். அவரின் படைப்புகள் பெருவெள்ளமாய் வெளிவந்திருக்கின்றன. அச்சேறாதவை, பெயர் கூடக் கேட்டறியாதவை, பெயர் தெரிந்தும் பார்வைக்குக் கிட்டாதவை - எனப் பலவகையாய்க் கிடைத்தன அடிகளாரின் அரும்படைப்புகள்! அவற்றை `மறைமலையம் எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாக ஒருசேரப் பார்க்கும்போது, தமிழுலகம் வியப்படைவது உறுதி. மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? இப்படிக் கவலையோடு கேட்பார் பாவலரேறு பெருஞ் சித்திரனார் (10.3.1933 - 11.6.1995). அவரின் `தென்மொழி இதழ் 1.8.1959 இலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்புதான், தனித்தமிழ்த் திசை நோக்கி நூற்றுக்கணக்கானோர் நடைபோடத் தொடங்கினர். அதில் நானும் ஒருவன். பெருஞ்சித்திரனாரின் எழுத்து காட்டிய அடையாளத்தால், பாவாணர் நூல்கள் எனும் அறிவுப்புதையல் பலர் கைகளிலும் குடியேறியது. பாவாணர் நூல்கள் வலியுறுத்திப் பேசியதால், மறைமலை யடிகளாரைத் தேடிப்பயிலும் ஆர்வம் தமிழுலகில் புத்துயிர் பெற்றது. ஆரியத்தை எதிர்ப்பதிலும் சமற்கிருதத்தை விலக்கு வதிலுமே தமிழின மேம்பாடும் தமிழ்க் காப்பும் அடங்கியிருக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தமிழர் நெஞ்சங்களில் அரும்ப வைத்தது திராவிடர் இயக்கம்; மலர்ந்து விரியவைத்தது தனித்தமிழ் இயக்கம்! குமுக, அரசியல், பண்பாட்டு மலர்ச்சிக்கு இந்த ஈரியக்கங்களின் பேருழைப்புப் பயன்பட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் உணர்வு கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் தளரத் தொடங்கியது; 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் சரியத் தொடங்கியது. வடமொழி வெள்ளத்தில் தமிழ் இழுத்துச் செல்லப்பட்டு விடாமல் காப்பாற்றியோர் கம்பரும் பவணந்தியும்! பின்வந்தோருக்கு அந்தக் காப்புணர்ச்சி இல்லாமல், அயன் மொழிப் பற்றுக்கு அடிமையானதால் தமிழும் தமிழினமும் பெற்ற இழப்புகள் ஏராளம்! அயன்மொழிச் சேற்றிலிருந்து தமிழை மீட்கும் முயற்சி ஆங்கிலேயர் வருகையையொட்டிப் புத்துயிர் பெற்றது. வள்ளலார், பாம்பன் சாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சுப்பிரமணியசிவா, பரிதிமாற் கலைஞர் முதலிய பலரும் தொடக்க விதைகளாயினர். கோவை அவிநாசியில் பிறந்து விருதுநகரில் வாழ்ந்த விருதை சிவஞானயோகி 19.11.1908 ஆம் நாள் `திருவிடர் கழகம் தொடங்கித் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வேகங்கூட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினராயிருந்தவர் சுவாமி வேதாசலம் (மலைமலையடிகள்). மறைமலையடிகள் எனத் தம் பெயரைக் கொண்டு, 1916இல் அவர் தொடங்கியதே தனித்தமிழ் இயக்கம். `துறைமிகு ஆங்கிலம் மறைவட மொழியொடு தூய்தமிழ்ப் பேரறிஞர் - தனித்தமிழ் தோற்றிய ஓரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதற்கேற்ப, மறைமலை யடிகளார் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் முதலிய பன்மொழியிலும் புலமை மிக்கவர். பன்மொழிப் பேரறிஞரான மறைமலையடிகளார் தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவாக நின்றதால் எதிர்ப்புக்கும் இழப்புக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனாலும் உறுதி குன்றாமல் தமிழுக்கு ஆதரவாய் உழைக்கும் உள்ளத்தோடிருந்தார். அதனால், தமிழர் உள்ளங்களில் இன்றளவும் மாறாப் பெருமையோடு அவர் வீற்றிருக்கின்றார். வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை வையகம் பாவேந்தர் பாரதிதாசன் அவர் மாண்பினைப் பாடி மகிழ்ந்ததும், தம் `குடும்ப விளக்கு நூலினை மறைமலை யடிகளுக்குக் காணிக்கையாக்கி வழங்கியதும், அவரின் உறுதி தளராத உள்ளமும் உழைப்பும் கண்டு போற்றிய நன்றிக் கடன் என்பதில் அய்யமில்லை. சென்னையில் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ்மண் பதிப்பகப் பணிகளைத் தமிழுலகம் அறியும். வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டவல்ல தமிழறிஞர்கள் பலரின் நூல்களை முழுமுழுத் தொகுப்புகளாக வழங்கியிருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் முடிப்பினை (சாதனை)யாகப் போற்றப்படுகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் நூல்களை முழுமையான தொகுப்புகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவை காலம் முழுதும் பயன்படவல்ல கருவி நூல்கள் என்பதை அறிஞர் உலகம் அறியும்! தமது நலத்தை ஒதுக்கி வைத்து, தமிழ் நலத்தைக் காக்க வாழ்ந்த அறிஞர்களின் அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து முழுத் தொகுப்பாக வழங்குவது பெரும்பணி! அதனைத் தமிழ்மண் பதிப்பகம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொகுப்பு நூல்களின் பட்டியலைப் பின்னிணைப்பில் காண்க. தமிழுக்காக உழைக்கும் உணர்வை இளமையில் எம்மிடம் ஏற்படுத்தியோருள் பெரும்புலவர் நக்கீரனாரும் அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலனாரும் குறிப்பிடத்தக்கோர்! எம் நன்றிக் குரியோர்! தனித்தமிழ் ஆர்வம், திராவிடர் இயக்க ஈடுபாடு எனும் இரு சிறகுகளால் எம்மை எழவைத்தவர் பெரும்புலவர் நக்கீரனார்! அவரை எண்ணிக் கண்பனிக்க நன்றி கூறுகிறது எம் நெஞ்சம். காலப்பழமையாலும் பராமரிப்புக் குறைவாலும் அழிய நேர்ந்த தமிழிலக்கியங்கள் அளவற்றவை! அவற்றில் ஒருபகுதியை யாவது மீட்டு நம் கைகளுக்கு வழங்கியோர் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலிய சான்றோர் பெருமக்கள்! தமிழிலக்கியப் பெருஞ்செல்வத்தை மீண்டும் மீண்டும் அச்சாக்கி, அனைவர் கைகளையும் எட்டச் செய்த பெருமை - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே.சா. நூலகம், மணிவாசகர் பதிப்பகம் முதலிய பதிப்பாளர்களுக்கு உரியது. அச்சுத்துறை அறிமுகமான பின்பே, அறிவுத்துறை அனைவருக்கும் பொதுச்சொத்தாகும் வாய்ப்பு வந்தது. எட்டாக் கனியாக ஓலைச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த இலக்கியச் செல்வங்கள், எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பணியைச் செய்த பதிப்பாசிரியர்களும், பதிப்பாளர்களும் நம் நன்றிக் குரியோர்! இரவு பகல் பாராது முதுமையைக் கருதாது உழைக்கும் மனவுரத்தை முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் பணியே எமக்கு வழங்கியது. அரசும், பல்கலைக் கழகங்களும், அறநிறுவனங்களும், சமய பீடங்களும் ,பெரும் இயக்கங்களும், பெரும் செல்வர்களும் செய்ய வேண்டிய பெருந் தமிழ்ப்பணி இது! எளியவர்களால் இயங்கும் தமிழ்மண் பதிப்பகம் பெருந்தமிழ்ப் பணிகளை இன்னல்களுக்கு இடையில் அருமுயற்சியோடு செய்து வருவது, உள்ளவுரம் ஒன்றினால்தான்! வல்லமை சேர்க்கும் வலிமையுண் டாக்கும்! வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்? காக்கும் தமிழைக் காக்கும் உணர்வைப் பாவேந்தர் பாடல் வரிகள் தந்தன. அச்சுக்கு எட்டாமலும் கைக்குக் கிட்டாமலும் இருந்த பேரறிஞர் பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கி திராவிடர் இயக்க அரசுகள் வழங்கின. அதனால், அறிவு பரவலாகும் வாய்ப்புகள் உருவாயின. `சரிவும் இழப்பும் நமக்கு வந்தாலும் தமிழுக்கு வரக்கூடாது என எண்ணி உழைக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழ் நாட்டில் வற்றாமல் வளர்ந்தபடி இருக்கின்றன. திருவிடர் கழகம் (1908) தனித்தமிழ் இயக்கம் (1916) தென்னிந்திய நலஉரிமைக் கழகம் (1916) சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943) தமிழ்ப் பேராயம் (1959) தமிழ்க்காப்புக் கழகம் (1961) தனித்தமிழ்க் கழகம் (1964) உலகத்தமிழ்க் கழகம் (1968) தமிழியக்கம் (1972) தமிழ்ச் சான்றோர் பேரவை (1998) தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும் பாவாணருமே! தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை! அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு `மறைமலையம் என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது. பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம் இது! தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது! அறிவுலகத்தால் `மறைமலையம் வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம். - கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோசா முத்தையா நூலகம் - சென்னை. புலவர் கா. இளமுருகன் - புன்செய் புளியம்பட்டி (மறைமலையடிகள் மன்றம்) மறை. தாயுமானவன் - சென்னை (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: திரு. அ. மதிவாணன் (ஆங்கிலம்) திரு. க. கருப்பையா திரு. புலவர். த. ஆறுமுகம் புலவர். மு. இராசவேலு திரு. இராசுகுமார் திரு. நாக. சொக்கலிங்கம் முனைவர். க. சுப்பிரமணியன் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா செல்வி. அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: திருமதி கோ. சித்திரா திருமதி மலர் திருமதி செல்வி திருமதி ஹேமலதா திரு. ஆசம் திருமதி கலைவாணி பிராசசு இந்தியா திருமதி` புகழ்ச்செல்வி கயல்விழி (Process India), நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், க. இளந்திராவிடன், வே. தனசேகரன், கு. மருது, இல. தருமராசன் தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை -1 எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை-5. அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு மற்றும் பிராசசு இந்தியா `மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நிறைந்த நன்றியும் பாராட்டும். சைவ சித்தாந்த ஞானபோதம் 2006இல் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்படுகின்றது. இந்நூலைப் பற்றிய குறிப்புரை... அடிகள், 1906 முதல் ஆங்காங்குப் பலநகர் களிலும் சொற்பொழிவாகத் தெளிக்கப்பட்ட சைவ சித்தாந்தத் தேன்துளிகள் அடங்கிய கிண்ணமே இந்நூல் என்கிறார் புலவர் அரசு (மறைமலை யடிகள் 154). சைவசித்தாந்த நுண்பொருள்களை உணர்த் தும் நூல்கள் உயரிய செந்தமிழ்ப் பாக்க ளாகவே இருத்தலால், அறிவுத்துறை முற்றிய புலவர் பெருமக்களுக்கேயன்றி மற்றை யோராற் கற்க இயலாமல் உள்ளன. மற்றுப் பலரும் அறிந்துய்ய எளிய உரைநடையிற் சைவசித்தாந்த நுண் பொருள் தெரிவிக்கும் நூல்களும் இல்லை. இக் குறைபாட்டை நீக்கவே இந்நூல் அடிகளாரால் எழுதப்பட்டதாகும். இதுவும் அறிவுக் கடல் வழியாக நூலுருப் பெற்றதாகும். - இரா. இளங்குமரன் இந்திய இலக்கியச் சிற்பிகள் ஓம் மூன்றாம் பதிப்பின் முகவுரை கற்றவர்முதற் கல்லாதவர் ஈறான எத்திறத்தவர்க்கும் இனிது விளங்கும்பொருட்டுப் பற்பல ஊர்களிலும் பற்பல நகர்களிலும் அவைக்களங்களில் யாம்நிகழ்த்திய சைவ சித்தாந்தச் சொற்பொழிவுகளின் ஒரு தொகுதியே `சைவ சித்தாந்த ஞானபோத முதற்பாகம் என்னும் இந் நூலின்கட் பெரும்பாலும் அடங்கி யிருக்கின்றன. இந்நூலின் முதற்பதிப்பாகக் கருதப்படும் எம்முடைய சொற்பொழிவுகள் சில 1906, 1915ஆம் ஆண்டுகளில் வெளிவந்த எமது ஞானசாகரத்தின் இதழ்களில் வெளிப்போந்தனவாகும், அவை அப்போது முன்பனிக்கால உபந்நியாசங்கள் என்னும் பெயரால் தனிநூலாகவும் வெளிவந்தன. அந்நூலில் அடங்கி யவை ஆறு விரிவான சொற்பொழிவுகளேயாகும், அப்பதிப்பின் படிகள் செலவானபின், 1922ஆம் ஆண்டில் பின்னும் பத்துச் சொற்பொழிவுகள் சேர்க்கப்பெற்று, ஆக மொத்தம் பதினாரு சொற்பொழிவுகள் அடங்கிய இதன் இரண்டாம் பதிப்பு வெளி வரலாயிற்று, அவ்விரண்டாம் பதிப்புப் படிகள் செலவழிந்தபின், இதன் மூன்றாம் பதிப்பை அச்சிடத் துவங்கிப் பல ஆண்டுகள் கழிந் தமையானும், இவற்றிடையே இன்னும் பல சொற்பொழிவு களைச் சேர்க்க வேண்டுவது இன்றியமையாததாய் நேர்ந்தமை யானும், இச் சொற்பொழிவுகளை யெல்லாம்ஒருங்கே சேர்ப்பின் இந்நூல் அறுநூறு பக்கங்களுக்கு மேற் பெருகுமெனக் கண்டமை யானும் ஒன்பது சொற்பொழிவுகள் தொகுத்த இந்நூலின் முதற் பாகத்தை இப்போது வெளியிடலானேம், ஏனைச் சொற்பொழி வுகள் தொகுத்த இரண்டாம்பாகம் இனிப் பதிப்பிட்டு வெளியிடப்படும், எம்முடைய நூல்களிற் சிறுபான்மையாகக் காணப்படும் வடசொற்களையும் முற்றக்களைந்து, தூய தமிழ்ச் சொற்களையே அவ்வவ்விடங்களில் நிரப்பி இப்போது பதிப்பிட்டு வரும் எமது முறைப்படி, இந்நூலின் முற்பதிப்பில் வெளிவந்த விரிவுரை களிலிருந்த வடசொற்களைக் களைந்து ஆங்காங்குத் தூயதமிழ்ச் சொற்களைப் பெய்தும், இப்போது இதன்கட் புதியவாகச் சேர்க்க எடுத்த விரிவுரைகளைத் தூய தனித்தமிழிலேயே எழுதியும் இந்நூலை இயற்றலானேம். ஆனாலும், இத்தமிழ் நாட்டிற் புதியராய்ப் புகுந்த ஆரியர், பௌத்தர், சமணர், மாயாவாத வேதாந்திகள், வைணவர் என்பாரெல்லாந், தமிழ் மக்களை மருட்டுதற் பொருட்டு,அவர் வழங்குந் தமிழ்மொழியிற் றம்முடைய கோட்பாடுகளை வரைந்து வையாமல், அவர் அறியாத வடமொழியில் அவை தம்மை வரைந்து வைத்து,அவைகளைமறைபொருளாகவே பரப்பி வந்தமையால்,அன்னார் செய்த ஏமாற்றத்தினின்றுந் தமிழ் மக்களை விடுவிக்கக் கருதிய பிற்காலத்துத் தமிழ்ப் பெரியார் களும், பண்டைத்தமிழ்ச் சான்றோர் கண்ட முடிந்த வுண்மை களுக்குச் சைவ சித்தாந்தம் என வடமொழியிற் சிறப்புப் பெயர் நிறுவியும், அவ்வுண்மைகளை விளக்குங்காற் பற்பல குறியீடுகளை வடசொற் கொண்டே புதியவாய்ச் சமைத்தும், வடமொழி யிலேயே `சிவாகமங்கள், `சிவபுராணங்கள் இயற்றியுந், தமிழ்ச் சான்றோர் தமது மெய் யறிவாற் றெளிந்த மெய்ப் பொருள்களை இத் தமிழ் நாட்டகத்தே பரவச் செய்யலாயினர். அதனால், அங்ஙனஞ் சிறப்புப் பெயர்களாகவுங் குறியீடுகளாகவும் புகுந்து தமிழ் நூல்களில் நிலைபெற்ற வடசொற்கள் சொற்றொடர் களைச் சடுதியில் மாற்றினால் அவற்றிற் பழகினார்க்கு இந்நூற் பொருள் மயக்கத்தைத் தருமெனக் கருதி, அவையிற்றை மட்டும் மாற்றாது ஆங்காங்கு இருக்கவிட்டேம். ஆனாலும், அவை தமக்கு நேரான தனித்தமிழ்ச் சொற்களையும் இந்நூலின் இறுதியிற் காட்டியிருக்கின்றேம். அங்ஙனங் காட்டப் பட்டிருக்குந் தமிழ்ச்சொற்கள் நன்கு வழங்கி வரலாயினபின், அவ்வடமொழிச் சிறப்புப் பெயர்கள் சொற்கள் சொற் றொடர்களையுங் களைந்துவிடக் கருதியிருக்கின்றேம், இதுகாறும் உதவி செய்த சிவபிரான் இன்னும் அடியேமுக்கு உதவுக! பல்லாவரம் மறைமலையடிகள் பொது நிலைக் கழக நிலையம் திருவள்ளுவர் ஆண்டு 1966 இந்நூலிற் கண்ட வடசொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள் அசுத்த மாயை - தூவா மாயை அத்துவித முத்தி - இரண்டற்ற வீடு அந்தக் கரணான்ம வாதம் - அகக் கருவியே உயிரெனும் வழக்கு அபர ஞானம் - பொதுக்காட்சி அமயம் - நேரம் அவதரம் - நேரம் அவதாரம் - பிறவி அற்புதம் - புதுமை அனுபவம் - நுகர்ச்சி, பழக்கம் ஆகமம் - அறிவு நூல் ஆசாரிய சுவாமிகள் - ஆசிரிய அடிகள் ஆத்திக சமயம் - உண்டெனும் மதம் ஆராதனை - வணக்கம், வழிபாடு இடாநாடி - இடப்பால் நரம்பு இதயக்குகை - நெஞ்சகம் இரசவாதம் - பொன்செய்முறை இராசதம் - மனவெழுச்சி; எழுச்சிப்பாடு உப பிருங்கணம் - வழிநூல் : சார்பு நூல் கணம் - குழாம்: கூட்டம் கண்டம் - நிலப்பிரிவு : பிரிவு கரம் - செய்வது கலைஞானம் - கலையறிவு காருணியம் - அருள் காவியம் - பொருட்டொடர் நிலை சங்கிதை - தொகுதி சச்சிதானந்தம் - உண்மையறி வின்பம் சடம் - அறிவில்லது சத்தி - ஆற்றல் சத்துவம் - நன்மை சமயவாதி - சமயக்கணக்கர் சம்பந்தம் - இயைபு : தொடர்பு சரிதம் - வரலாறு சாதி - இனம் சிங்கம் - அரிமா சித்து - அறிவு சிவாயநம - சிவனே போற்றி சிற்ப வித்தை - கற்றச்சு : கொற்று : கொத்து சீவப் பிரம வாதம் - உயிரே கடவுளெனும் வழக்கு சீவர்கள் - உயிர்கள் சுகம், பாக்கியம், ஆனந்தம் - நலம்: இன்பம் சுழுனை நாடி - நடு நரம்பு சைவ சித்தாந்தம் - சைவத்தின் முடிந்த முடிவு ஞான மார்க்கம் - அறிவு நெறி ஞானம் - நூல் தகரோபாசனை - நெஞ்சக வழிபாடு தரத்திற்கு - தகுதிக்கு :நிலைக்கு தருக்கம் - அளவை தாமதம் - மயல் தாரணை - நினைவொருமை தீர்க்கதரிசி - முக்காலவுணர்வினன் நாடி - நரம்பு : குழாய் நாதம் - ஒலி நாத்திக சமயம் - இல்லெனும்மதம் நிமித்த காரணம் - வினைமுதல் நிரீசுரவாதி - பாழ்ங்கோளன் நிர்க்குணோபாசனை - குணமில்ல தன்வழிபாடு பகுதி - முதனிலை; அடி படம் - ஓவியம் பதி பசு பாசம் - கடவுள் உயிர் மலம் பத்தி மார்க்கம் - அன்பு நெறி பர ஞானம் - அருட் காட்சி பரப்பிரமம் - மிகப்பெரியது பரவ யிந்தவம் - மேல் மாயை பலி பீடம் - படையல் மேடை பாரமார்த்திகம் - உண்மைநிலை பாலன் - குழந்தை பாவனை - ஒப்பு : எண்ணம் : நினைப்பு பாஷியம் - பேருரை பிங்கல நாடி - வலப்பால் நரம்பு பிச்சன் - கிறுக்கன் பிரத்தியாகாரம் - ஐந்தவித்தல் பிரமாணம் - தலைமை: மேற்கோள் பிராணான்மவாதம் - மூச்சேயுயி ரெனும் வழக்கு பிரீதி - உவகை புத்தி - அறிவு பூதம் - முதற்பொருள்: முதல் பெத்தான்மா - கட்டுற்ற உயிர் மடம் - பள்ளி : பாழி மனித - ஆண்மை முத்தான்மா - வீடுற்ற உயிர் முத்திரை - பொறி மூர்த்தி - கடவுள் மைல் (ஆங்கிலம்) - வழியளவு யோகிகள் - தவத்தோர் விக்கிரகம் - பருப்பொருளுரு விஞ்ஞானான்மவாதம் - அறிவே யுயிரெனும் வழக்கு வியவகாரம் - உலக வழக்கு வீரர் - மறவர் வேதாந்தம் - மறைமுடிவு வைத்தியநாதன் - மருத்துவர் தலைவன்  1. சைவ சமய மாட்சி இந்நிலவுலகத்திலே பரந்து விரிந்து கிடக்கும் எண்ணிறந்த மக்கட் பகுப்பினராலும் எண்ணிறந்த வகை யவாக வைத்துக் கைக்கொள்ளப்பட்டு வருஞ்சமயங்கள் அல்லது மதங்கள் எண்ணிறந்தனவாய் இருக்கின்றன. அவைகளுள்ளே நமது சைவ சமயமும் ஒன்றாயிருக்கின்றது. நம்முடைய அனுபவத்திற்கு அகப்பட்ட மதங்களையும் சைவ சமயத்தையும் இரண்டு பக்கத்தே வைத்து நாம் நடுநின்று நிறுத்துப் பார்க்குமளவில் நமது சைவ சமயமே அவ் வெல்லா மதங்களினும் பெருமை மிக்கதாய்க் காணப் படுகின்றது. இனி நமது அனுபவத்தில் வராத வேறு மதங் களில் ஏதேனும் சைவ சமயத்தை ஒத்ததாகவேனும், அல்லது அதனின் மிக்கதாக வேனும் இருத்தலாகாதோ வென்றால், அதனைச் சிறிது ஆராய்ந்து பார்ப்போம். ஏனைய மதங் களில் ஏதேனும் ஒன்று சைவ சமயத்தின்கட் காணப்படும் எல்லாக் கொள்கைகளும் உடையதாய் இருக்குமாயின், அது வேறு பெயரால் வழங்கப்படுமாயினும் கொள்கைகளிற் சிறிதும் வேறுபடா மையால் அதனையுஞ் சைவ சமய மென்றே கோடல் இழுக்காகாது. இனி அப்பிற மதங்களுள் ஏதேனும் ஒன்று சைவ சமயத்தில் இல்லாத அரிய பெரிய கொள்கைகள் உடையதாய் இருத்தலும் ஏலாத தொன்றாம்; என்னையெனின், உலகத் திலுள்ள எல்லா மதங்களும் ஒரே முழுமுதற் அறிவுப் பொருளாகிய கடவுளையும், சிற்றறி வுடைய உயிர்களையும், அறிவில்லாத உலகத்துச் சடப் பொருள்களையும் ஆராயும் முத்திறப்பட்ட ஆராய்ச்சி யில் அடங்குவனவே யல்லாமல், இம்மூன்றில் அடங்காத ஒரு மதம் எங்கும் இல்லை யென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த தேயாம், இவ்வுண்மை கடைப்பிடித்தே. சான்றவ ராய்ந்திடத் தக்க வாம் பொருள் மூன்றுள மறையெலாம் மொழிய நின்றன ஆன்றதோர் தொல்பதி யாருயிர்த் தொகை வான்றிகழ் தளையென வகுப்ப ரன்னவே என்னுந் திருமொழியும் எழுந்தது. கடவுள் உலகம் உயிர் என்னும் இம் முப்பொருள்களையும் பற்றி எழுந்த பல திறப்பட்ட கொள்கைகளும், அக்கொள்கைகள் எல்லா வற்றையும் பற்றிய ஆராய்ச்சிகளும், அவற்றுட் பொருந்துவன இவை பொருந்தாதன இவை என்னும் பகுத்தறிவு நிகழ்ச்சியும், பொருந்துவனவற்றைத் தெளித்துரைத்து உண்மை முடிபு காட்டுஞ் சித்தாந்தமும் ஆகிய இவையெல்லாம் நமது சைவ சமயத்தின் கண்ணே விளங்கிக் கிடத்தலால், எல்லா மதங்களும் நமது சைவ சமயத்தின் கண்ணே அடங்கத், தான் எதினும் அடங்காததாய் வீறி நிற்றலில் சைவ சமயம் ஒன்றே எல்லாவற்றினுஞ் சிறந்த உண்மை மதமாமென்று நாட்டப் படும்; இது பற்றியே தாயுமான சுவாமிகளும், இப்பரிசாஞ் சமயமுமாய் அல்லவாகி யாதுசமயமும் வணங்கும் இயல்பதாகி என்றும், இராசாங்கத்தில் அமர்ந்தது வைதிகசைவ மழகிதந்தோ என்றும், சைவசமயமே சமயம் என்றும் அருளிச் செய்வாராயினர். இனிச் சைவ சமயமே எல்லாச் சமயங்களினும் மேம் பட்ட சிறப்புடைத்தாம் என்பதனை ஒரு சிறிது வகுத்து ஆராய்ந்து பார்ப்போமாக. முதலாகக் கடவுளைப் பற்றி ஆராய்ந்தறிந்த வகையிலும் அம்முழு முதற் பொருளுக்குப் பெயர் வைத்து வழங்கும் முறையிலும் சைவ சமயமே ஏனை எல்லாச் சமயங்களினும் மேம்பட்ட சிறப்புடைத்தாய்ப் பொலிகின்ற தென்பதனை மட்டும் ஈண்டு எடுத்துக் காட்டு வாம். சிற்றறிவுடையனவாய் உலகத்தின்கட் காணப்படும் எல்லா உயிர் வகைகளும் துன்பத்தை விலக்கி இன்பத்தைப் பெறும் முயற்சி ஒன்றிலே மட்டும் கருத்தூன்றி நிற்கின்றன. உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதன்முதல் அனுபவத்திற்கு வருவது துன்பமே யல்லாமல் வேறில்லை; பகுத்தறிவு இல்லாச் சிற்றுயிர்கள் முதற் பேரறிவுடைய மக்கள் ஈறான எல்லா வுயிர்களும் உடம்புகளிற் புகுந்து இந்நிலவுலகத்திற் பிறந்த வுடனே தம் அகத்துள்ள பசித்தீயினால் துன்புறுத்தப் படுதலை நம் கண்ணெதிரே காண்கின்றோம் அல்லேமோ? பின்னர் அப் பசித்தீயானது தாம் உட்கொள்ளும் உணவால் தணிந்தவுடனே மகிழ்ந்து இன்புறுதலையுங் காண்கின்றேம் அல்லேமோ? இதனால் உயிர்களுக்கு முதல் அனுபவமாய் நிற்பது துன்ப மென்றும், அது நீங்கு முகத்தாற் சிறிது நேரம் நிற்கும் பின் அனுபவமாய் வருவது இன்பம் என்றும் இனிது தெளியப் பெறுகின்றேம், பாருங்கள்! நங் கட்புலனுக்கு எட்டாமிகச் சிறிய புழுக்களுள்ளும் இத்துன்ப நீக்கமும் இன்பப் பேறும் எவ்வளவு முயற்சியோடும் எவ்வளவு சுறுசுறுப்போடும் இடையறாது நிகழ்ந்து வருகின்றன! கூரிய ஓர் ஊசிநுனியிற் றங்கி ஒரு சிறு நீர்த்துகளைப் பெருக்கக் கண்ணாடியின் உதவிகொண்டு பார்க்குமிடத்து, அதில் அளவிறந்த புழுக்கள் பலவேறு வகையான வடிவுடை யன வாய் உலவுதலும், அவற்றுள் வலிவாலும் வடிவத்தாலும் பெரியனவாய் உள்ள புழுக்கள் அவற்றாற் சிறிய புழுக்களைப் பிடித்துத் தின்ன மிகவும் பரப்பரப்போடு உலவித் திரிதலும், அங்ஙனம் உலவும் அவற்றுள் ஒன்று ஒன்றை இரையாகப் பிடித்த அளவிலே மற்றொன்றும் அவ்விரையைப் பிடித்தற்கு வந்து அதனோடு சண்டை யிடுதலும், அச்சண்டையிலே வெற்றி பெற்ற புழு தன்னிரையைத் தின்று பசி நீங்கி இன்புற்று நிற்றலும் இங்ஙனமே பசி தீர்ந்து இன்புற்றபின் ஆணும் பெண்ணு மாயுள்ள அவை ஒன்றையொன்று மருவிக் களித்தலும் கண்டு, இங்ஙனங் கண்ணுக்கு எட்டா நிலை யிலுள்ள சிறு புழுக்கள் மாட்டுங் காணப்படும் துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமுமே அறிவினும் நாகரிகத்தினும் மேலவராகக் கருதப் படும் மக்களிடத்தும் அவரினுஞ் சிறந்த தேவர்களிடத்தும் அடுத்தடுத்து நிகழ்வதுங்கண்டு கருதுங் கால் எல்லா உயிர்களும் துன்ப நீக்கத்தையும் இன்பப் பேற்றையுமே அவாவி நிற்கின்றன என்பது புலப்பட வில்லையா? அற்றன்று, அறிவிற் சிறிய விலங்கினங்கள் மட்டுமே துன்ப நீக்கத்தையும் இன்ப ஆக்கத்தையும் விரும்புகின்றன வன்றி, அறிவிற் பெரிய மக்களுந் தேவரும் அவற்றை விரும்பு கின்றிலராய் அறிவு விளக்கத்தையே நாடி நிற்கின்றன ரெனின்; ஒருநாள் முழுதும் மெய் வருந்தப் பாடுபடுகின்ற வர்களும், தமது உழைப்பினாற் பெற்ற பொருளைக் கொண்டு பசிப்பிணியைப் போக்கி இன்புற்றும், காமப்பிணியைப் போக்கத் தம் மனைவியைக் கூடிக் களித்தும் வாழ்ந்து வருகின்றார்கள்; பலவாண்டுகளாகக் கலைஞானங்களை மிக வருந்திக் கற்றுப் பெரும் பொருள் ஈட்டுகின்றவர்களும் தமது பசித்துன்பத்தைப் போக்கித் தம் மனையாளோடு கூடி இன்புற்று வருகின்றார்கள். வேறு இன்னும் எந்தவகையான முயற்சியைச் செய்வர்களைப் பார்த்தாலும், அவர்கள் எல்லாரும் பசி, காமம் என்னும் இவ் இருவகைத் துன்பத்தையும் போக்கி இன்புறும் நோக்கத்திலே உறைத்து நிற்கக் காண் கின்றேமல்லது பிறிதில்லையே. அங்ஙனமன்று, அறிவுடை யார் சிலர் பசி காமம் என்னும் இவ்விரண்டன் பொருட்டாக வன்றி அறிவு நூல்களைக் கற்று அறிவு நிரப்பும் அம் முயற்சியில் மட்டும் உறைத்து நிற்கக் காண்கின்றோமே எனின்; அங்ஙனம் அவர் அறிவு நூற் கல்வியில் முயல் வதூஉம் அந்நூல்களைக் கற்குங் காலத்தும் கற்றறியும் பொருள் நுட்பங்களைத் தேருங்காலத்தும் தம்மகத்தே விளைந்து தம்மை விழுங்கும் பேரின்பப் பேற்றின் பொருட் டாகவே யல்லது வேறில்லையென்பது தெற்றென அறியப் பட்ட உண்மையேயாகும். அற்றேல் அறிவு பெரிதோ மற்று இன்பம் பெரிதோ வெனின்; எல்லா உயிர்களும் இன்பத்தையே நாடி நிற்கும் இயல்புடையன வென்பதை மேலே விளக்கிக் காட்டின மாதலாலும், அறிவு விளக்கத்தின் பயனெல்லாம் இன்பப் பேறாகவே முடியக் காண்கின்றோமாதலாலும் அறிவினும் இன்பமே பெரியதூஉஞ் சிறந்ததூஉமாமென்பது இனிது பெறப்படும். எனவே, இன்பவழிப் பட்டு நிற்பதாகிய பத்தி மார்க்கமே அறிவின் வழிப்பட்டு நிற்பதாகிய ஞான மார்க்கத் தினுஞ் சிறந்ததா மென்பதுஉம் இது கொண்டு முடிக்கப் படும். அவ்வாறாயினும் ஞானமும் பத்தியும் ஒன்றையொன்று பிரிந்திராவாய் ஒன்று காரணமாயும் மற்றொன்று அதன் காரியமாயும், ஒன்று அறிவாயும் மற்றையது அனுபவமாயும் பிணைந்து நிற்குந் தன்மையவாய் விளங்கும். இதனை ஓர் எடுத்துக்காட்டால் விளக்கிக் காட்டுவாம். தேனூறிப் பழுத்துக் குலை குலையாய்த் தொங்குங் கனிகளையுடைய ஒரு தேமா மரத்தின் கீழ் ஒருவன் நாடோறும் இருந்தாலும், அவன் அம்மரத்தின் பழம் மிக்க சுவையுடைய வென்றும் அவற்றை உண்பதனால் பசி நீங்கி நலமுண்டா மென்றும் அறிந்திலனாயின், அவன் அங்கிருந்தே பசியால் துன்புற்று இறப்பான்; இனி வழிச் செல்லும் அறிவுடையான் ஒருவன் அப்பழத்தின் அருமை அறிந்து, வேண்டுமட்டும் அவற்றைப் பறித்துப் பசி தீர உண்டு இன்புற்று வாழ்குவன். இவற்றால் அறியாமை யுள்ளவளவும் அதனை யுடையானுக்குத் துன்பமே நிகழும் என்பதூஉம், அது நீங்கி அறிவு நிகழப் பெறுவானுக்கு அவ்வறிவால் இன்பமே விளையும் என்பதூஉம் உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெள்ள விளங்குகின்றன, வல்லவோ? அங்ஙனம் அறிவால் இன்பம் உண்டாதலை விளக்கிய இவ்வெடுத்துக்காட்டில் தேமாங்கனியின் அருமையை ஒருவன் அறிந்துநின்ற நிலை போல்வதே ஞான மார்க்க மாகும்; அம் மாங்கனியின் அருமையை அறிந்த அளவிலே அதனைச் சுவைத்து மகிழும் இன்பம் பிறவாமல், அதனைப் பறித்துப் பிழிந்து அதன் சாற்றை நாவிலிட்டுச் சுவைத்த பின் மட்டுமே அவ்வின்பந் தோன்றுதல்போல ஞான மார்க்கத் தால் அறியப்பட்ட பொருளை அறிந்த அளவிலே இன்பந் தோன்றாமல் பத்தி மார்க்கத்தால் அனுபவித்துக் காணும் உண்மைக் காட்சியிலேதான் இன்பம் விளையுமா மென்பதும் இனிது புலப்படும். இனி ஒரு பொருளின் அருமையை அறிந் தவன் அதனை அனுபவியாது விடானாகலின், ஞான மார்க்கத்திற் சென்றவன் பத்தி மார்க்கத்திற் செல்லாதிரான் என்பதுந் துணியப்பட்ட பொருளாம். ஆகவே அறிவின் வழிப்பட்டு நின்ற ஞானமார்க்கம் இன்ப வயப்பட்டு நின்ற பத்தி மார்க்கத்தினைப் பயக்குங் காரணமாய் நிற்கப் பத்தி மார்க்கமானது அதன் காரிய அனுபவ நிலையாய் அதனினுஞ் சிறப்புடைத்தாய் விளங்குமென்பது பெறப்பட்டது. இம் முறை சிற்றறிவு சிற்றின்பங்களையுடைய பெத்தான் மாக்களிடத்தும், பேரறிவு பேரின்பங்களை யுடைய முத்தான் மாக்களிடத்தும் பிறழாது காணப் படுவதேயாகும் என்று இவ்வாற்றால் இன்பப் பேறே எல்லா உயிர்களுக்கும் முடிந்த நிலையா யுள்ள தென்பது காட்டப்பட்டது. அங்ஙனமாயின், சிற்றறிவுடைய உயிர்கள் அவாவும் இன்பத்திற்கும், பேரறிவுடைய மக்களும் முனிவரும் அவாவும் இன்பத்திற்கும் வேறுபாடு என்னயெனின்; இன்பம் அறிவின் காரியமாய்த் தோன்றுவதென முன்னரே விளக்கிக் காட்டின மாகலின், அவ்வின்பம் தனக்குக் காரணமாயுள்ள அறிவின் தரத்திற்கு ஏற்பப் பெரிதாயுஞ் சிறிதாயும் நிலை யுளதாயும் நிலையிலதாயும் பல திறப்பட்டுத் தோன்று மென்பதும் அது கொண்டு தெளியப்படும், உயிர்கள் உலகத்துப் பொருள்களின் சேர்க்கையானும், தம்மையொத்த உயிர்களின் சேர்க்கை யானும் இன்பம் எய்தக் காண்கின்றோம். உலகத்துப் பொருள்கள் அறிவில் லாதனவும் நிலையில் லாதனவுமாய்ப் போதலின் அவற்றின் சேர்க்கையாற் பிறக்கும் இன்பமும் நிலையில்லாமல் அழிந்து போதலுடன் தானழிந்தபின் துன்பத்தையும் விளை விக்கின்றது,இனி உயிர்களெல்லாம் சிற்றறிவினவாயும் நிலை யில்லாத உடம்புகளில் மாறி மாறி வருவனவாயும் இருத்தலின் அவற்றின் சேர்க்கையாற்றோன்று மின்பமும் நிலையின்றி அழிதலுடன் பின்னர்த் துன்பத்தையும் வருவிக்கின்றது. என்றும் அழியாது நிலைத்து நிற்கும் பேரின்பத்தையே அடைய வேண்டும் என்னும் நோக்கத்தையுடைய உயிர்கள் அப்பேரின்பத்தைத் தருதற்குரிய பேரறிவுப் பொருளை நாடாமல், மின்னல் போலத் தோன்றித் தோன்றிச் சிற்சில நொடியில் மாய்ந்து போகும் சிற்றின்பத்தைத் தந்து பின் துன்பத்தையே பயக்கும் உலகத்துப் பொருள்களையும் சிற்றுயிர்களையும் நாடுதல் தமக்குள்ள சிறிய மயக்கவறிவின் பான்மையினாலன்றோ? சிற்றறிவால் வருவது சிற்றின்பமும் பேரறிவால் வருவது பேரின்பமும் ஆகும். சிற்றறிவானது தனக்கு எட்டிய சிறு பொருளையே நாடும்; பேரறிவானது எல்லா அறிவும் எல்லா இன்பமும் நிறைந்த பெரும் பொருளையே நாடும். சிற்றறிவால் நாடப்படும் சிறு பொருட் சேர்க்கையாற் சிற்றின்பமும், பேரறிவால் நாடப்படும் பெரும் பொருட் சேர்க்கையாற் பேரின்பமும் வருதல் இயல்பேயன்றோ? விலங்கினங்களின் அறிவு பகுத்துணர்வோடு கூடாமல், உலகத்துப் பொருள் களை மட்டும்அறிவிக்குங் கருவிகளான மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறிகளோடு இயைந்து நிகழ்தலின், அவை தமக்குப் பசி எடுத்த காலத்து இரைதேடித் தின்று பசி நீங்கி இன்புற்றும் உறங்கியும் சிற்சில நேரங்களில் ஆணும் பெண்ணுமாய் மருவியும் அவ்வள வோடு தமது காலத்தைக் கழித்து விடுகின்றன. இங்ஙனம் விலங்கினங் களின் அறிவு புறப்பொருள்களைப் பற்றிய புற அறிவாய் மிகச் சிறிதாய் இருத்தலின் அச்சிற்றறிவால் அவையடையும் இன்பமும் மிகச் சிறிதாய்க் கழிகின்றது. இனி மக்களாய்ப் பிறந்த நம்மனோர்க்குள்ள அறிவு புறத்தேயுள்ள உலகத்துப் பொருள்களை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறி வாயிலாக அறிவதுடன், அங்ஙனம் அறிந்தவற்றைத் தமது அகத்தே கொண்டுபோய் வைத்து இது நல்லது இது தீயது எனவும், இஃது இதனை ஒக்கும் இஃது இதனை ஒவ்வாது வேறாம் எனவும் பகுத்துணர வல்லதாயும் இருத்தலின், விலங்கினங்களின் அறிவைவிட எத்தனையோ மடங்கு பெரிதான இவ்வகப்புற அறிவால் வரும் இன்பமும் அச்சிற்றுயிர்கள் எய்தும் இன்பத்தினும் எத்தனையோ மடங்கு பெரிதாய்த் திகழ்கின்றது. பசி எடுத்த காலத்து மட்டும் இரைதேட முயன்று, பசி ஒழிந்தபின் வாளாது உறங்கிக் கழியும் விலங்குகள் பலவற்றைப் போல் ஆகாமல், அப்பசித் துன்பத்தை நீக்க முயலும் போதும் வருங் காலத்தை நாடி உழைக்கும் மக்கள் அறிவின் மேன்மையைப் பாருங்கள்! விலங்குகளிற் பெரும்பாலன நாளைக்கு என் செய்வேம் என்னுங் கவலை சிறிதுமே இல்லாதனவாம். மக்களோ நாம் முதுமைவந்த காலத்து வருந்தாது இருந்து உண்ணல் வேண்டுமே என்னும் வருங்கால அறிவுடையராய் இளம்பருவத்தே ஆனமட்டும் முயன்று வேண்டும் பொருளைத் தொகுத்துக் கொள்கின்றார்கள்; அதுமட்டுமேயோ, தமக்கு மட்டுமே வேண்டுமென்று பொருள் தொகுத்துக் கொள்ளாமல் தமது இன்பத்திற்கு உதவியாய் நிற்கும் மனைவி மக்கள் பெற்றார் உற்றார் நண்பர் முதலாயினார்க்கு வேண்டுமளவும் பொருள் தொகுத்துக் கொள்கின்றார்கள்; அங்ஙனம் பொருள் தொகுக்குமிடத்தும் பலர்க்கும் பயன் படுங் கைத்தொழில் உழவு வாணிகம் முதலிய முயற்சி களிற் புகுந்து தாம் பயன் பெறுதலல்லாமலும் பிறரையும் பயன் பெறுத்து கின்றார்கள். இவ்வாறு விரிந்த அறிவு கொண்டு தாம் இன்புறுங் காலத்து அதனாற் பிறர்க்கும் இன்பம் விளைதலால் அவ்வின்பத்தைக் கண்டு மக்களாயினார்க்கு மேலுமேலும் இன்பமே விளையா நிற்கும். தாமின் புறுவது உலகின் புறக் கண்டு, காமுறுவர் கற்றறிந் தார் - (குறள் 399) என்ற திரு மொழிப்படி பிறர் அடையும் இன்பத்தைக் கண்டு இங்ஙனந் தாமும் மகிழும் மகிழ்ச்சி விலங்குகளுக்கு உண்டோ சொல்லுமின்! இன்னும் மக்களிற் கற்றவராயுள்ளோர் ஏனைக் கற்றறிவில்லார் எய்தும் இன்பத்தினும் மிகச் சிறந்த இன்பம் எய்துகின்றார். கல்லாத மாந்தருக்கும் கற்றறிவுடைய நல்லாருக்கும் அகத்தும் புறத்தும் அறிவு நிகழுமாயினும், அவ்வறிவு கற்றவரிடத்து நுணுகி விரிந்து பெருகிப் பேரின்பந் தருதல்போலக் கல்லாதவருக்குத் தர மாட்டா தாகும்; இதுபற்றியே தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாய னாரும் கல்லாதான் ஒட்பங்கழியநன் றாயினுங், கொள்ளா ரறிவுடை யார் - (குறள் 404) என்று அருளிச் செய்தனர். பொது அறிவினை யுடையார் மெய், வாய், கண், மூக்கு, செவிகளால் புறப்பொருள்களை ஆய்ந்தறிந்து அறிவு பெருகி மிக்க இன்பம் அடைய மாட்டுவாரல்லர்; விலங்கு களைப் போல் உண்டு உறங்கிக் கலந்து அவ்வளவிலே மகிழ்ந்து ஒழிவர். கல்வியறிவுடை யாரோ உலகத்துப் பொருள்களின் பலவகைத் தோற்றங்களையும் அவற்றின் அரிய அமைவு களையுங் கண்டும், இனிய ஓசைகளையும் இசைப்பாட்டுக் களையுங் கேட்டும், பல வகைப்பட்ட சுவைகளையும் நறுமணத்தையுங் கவர்ந்தும், மெல்லென்ற பொருள்களைத் தொட்டும், இவற்றொடு மனவறிவாற் பல கலைஞான நூல்களை ஓதியுணர்ந்தும் ஏனைப் பொது அறிவுடையார்க்கு எட்டாத ஓர் அரிய இன்பத்தைப் பெறுவர். கல்வியறி வில்லாதவர் மக்களுள் விலங்குகளே யாவர்; இவ்வுண்மையை உணர்த்துவதற் கன்றோ தமிழ் மறையும் விலங்கொடு மக்க ளனையர் இலங்கு நூல், கற்றாரோ டேனை யவர் (குறள் 410) என்று கூறுவதாயிற்று. இனி இத்துணைப் பெரிய கல்வியறிவினை யுடைய வரும் நிலையில்லாத உலகத்துப் பொருள்களையும் நிலை யில்லாத சிற்றுயிர்களையும் அவற்றின் நுட்பங்களையும் முற்ற வுணர்ந்து, அதனாற் பெருகிய சிறப்பறிவாற் சிறப்பாகிய இன்பத்தை அடைகின்றாரென்றாலும், அவரால் ஆராயப் பட்டனவும் நிலையில்லாத சிறு பொருள் களேயாய்ப் போதலின் அவற்றை அறிந்த அக்கற்றோரறிவும் சிறியதாய் அவ்வறிவால் வந்த இன்பமும் சிறியதாய் ஒழிய, அவரைப் பற்றிய அறியாமையும் முற்றும் நீங்காதாய் நிற்க, அவ் வறியாமை வாயிலாக வருந்துன்பமும் அவரைவிட்டு நீங்காமற் பிறவிகடோறும் அவரையும் துன்புறுத்திய படியாகவே தொடர்ந்து வரும். ஆ! கல்வியால் எத்துணை பெரியவராயினும், அவர் உலகத்துப் பொருள்களைப் பற்றியும் தம்மையொத்த சிற்றுயிர்களைப் பற்றியுமே தமதறிவை இயங்க விடுவார்களாயின், அவர் ஏனையோர்க்கு எட்டாத ஒரு சிறந்த இன்பத்தை அடைந்தாலும் அவ்வின் பமுங் கடைசியிற் சிற்றின்பமேயாய் நிலையாது கழியப் பின்னர் அவர் பெருந்துன்ப வயத்தராயே பிறவிகளிற் பட்டு உழலுவர்! இது பற்றியன்றோ செந்நாப்போதாரும் கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன், நற்றாள் தொழாஅ ரெனின் (குறள் - 2) என்று அருளிச் செய்வாராயினர், இனி இக்கற் றோரினும் மேம்பட்ட முனிவரரோ உலகத்துப் பொருள் களின் நிலையாமையினையும் சிற்றுயிர்களின் சிற்றறிவியல்பு களையும் இனிது உணர்ந்து அவற்றின்கட் சிறிதும் பற்றில்லாமல் எல்லாப் பொருள்களினும் பெரிய தாய், உயிர்ப் பொருள் உயிரில் பொருள் என்னும் எல்லா வற்றினும் நுண்ணியதாய், எல்லா அறிவுகளினும் மேலான தூய பேர் அறிவினை யுடையதாய், இங்ஙனம் பேரறிவு டையதாய் இருத்தலின் அவ் வறிவோடு பேரின்பமும் உடன் நிகழப் பெறும் பேரின்ப நிலையமாய், என்றும் நிலை பேறாயுள்ள அழியா முழு முதற் பொருளாய் விளங்கா நின்ற ஒப்புயர் வில்லா ஒரு தனித்தலைமைப் பெருங் கடவுளையே அறியும் பேரறிவு கொண்டு அப்பேரறிவோடு ஒருங்கு நிகழும் பேரின்பப் பாற்கடலிற் றிளைத்துப் பேரின்ப வுருவாய் நிலை திரியாது அமர்ந்திருப்பர். இங்ஙனம் முனிவ ரரால் அடையப் பட்ட இன்பமானது எல்லையற்ற பேரின்பக் கடலாய், எல்லா உயிர்களுங் கடைசியாக எய்து தற்குரிய முடிந்த பதமாய் விளங்கும். என்று இதுகாறுங் கூறியவாற்றாற் புழுமுதல் முனிவரர் ஈறான எல்லா உயிர்களும் துன்ப நீக்கத்தையும் இன்ப ஆக்கத் தையுமே அவாவி முயன்றாலும், அவ்வுயிர்கள் எல்லாம் தத்தமக்கு அறிவு எட்டியவரையிலே உலகத்துப் பொருள் களைப் பற்றியும் தம்மையொத்த சிற்றுயிர்களைப் பற்றியும் எல்லாவற்றிற்கும் மேலான கடவுளைப் பற்றியும் நின்றமை யால், அவ்வுயிர்கள் மாட்டுத் தோன்றிய இன்பமும் பலதிறப் பட்ட தாயிற்று. இனி உலகத்திலுள்ள எல்லா வுயிர்களும்இன்பப் பேற்றினையே முடிந்த பதமாக அவாவுதல் உணர்ந்து, உலகத்திலுள்ள சிறந்த சமயங்கள் எல்லாம் நிலையில்லாத ஏனைச் சிற்றின்பங்களைப் பெறுவதிற் கருத்தூன்றல் ஒழிந்து, நிலையான கடவுளின் பேரின்பத்தைப் பெறுதலென அறிவுறுப்பவாயின. இங்ஙனமே நமது சைவ சமயமும் அறிவுறுத்துதல் சைவ சமயாசாரிய சுவாமிகளான மாணிக்க வாசகப் பெருமான் வைத்தநிதி பெண்டிர் மக்கள்குலங் கல்வியெனும் பித்த வுலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ் சித்த விகாரக் கலக்கந் தெளிவித்த வித்தகத் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ! என்றும், தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்றே னுண்ணாதே நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தோறு மெப்போதும் அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன்சொரியுங் குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ! என்றும் அருளிச் செய்தவாற்றாற் றெளியப்படும். உலகத்திற் சிறந்த ஏனை ஆத்திக சமயங்கள் அறிவுறுப்பது போலவே நமது சைவ சமயமும் இங்ஙனம் அறிவுறுத்திடுமாயின் இதிற் போந்த சிறப்பு என்னையென்று பலர்க்கும் ஐயம் நிகழாமற் போகாது. ஆகவே அதனையும் ஆராய்வோம். எல்லா வுயிர்களும் இன்பப் பேற்றினையே முடிந்த பதமாக வைத்து விரும்புதலாலும், இன்பவுருவாய் விளங்கு தலே கடவுளின் சொரூப இலக்கணமாகிய உண்மை நிலை யாக இருத்தலாலும், அக்கடவுளைக் குறித்துப் பேசுங்காலத்தும் அவரை அழைக்குங் காலத்தும் இன்பம் என்னும் பொருளை தரும் பெயர்களிட்டு வழங்குதலே எல்லாரும் செயற்பால தாகிய பெருங்கடமையாகும். அஃதேன் என்றால், ஒரு பெயரைச் சொல்லும்போது அப்பெயரினாற் குறிக்கப்படும் பொருள் நினைவுக்கு வருதலானும், அப்பொருள் நினைவுக்கு வரவே அந்நினைவின் வயப்பட்ட நம்முயிர் அவ்வண்ண மாகவே நிற்குமாதலானும் என்பது, ஆனந்தம், இன்பம், அன்பு, அருள் என்னுஞ் சொற்களை வழங்குங்கால்,அச் சொற்களாற் சுட்டப்படும் இன்பம் என்பது நம் நினைவில் எழ, நம் உயிர் அவ்வுணர்வின் பாற்பட்டுத் துன்பத்தைவிட்டு இன்பவுருவாயே விளங்கும். ஆகவே, கடவுளை இன்பப் பெயரிட்டு அழைத்தலே மாட்சி உடைத்தாம் என்பது இனிது புலப்படும். இனி உலகத்திற் சிறந்த ஆத்திகமதங்கள் கடவுளை எவ்வெப் பெயர்களால் வழங்கிவருகின்றன, வென்று ஆராயு மிடத்து, அவற்றுள் ஒருசில அவரை எல்லாம் வல்லவர் என்னும் பெயரினாலும், வேறு சில அவரை எங்கும் நிறைந்தவர் என்னும் பெயரினாலும், மற்றுஞ் சில அவரை எல்லாத் தலைமையுமுடையவர் என்னும் பெயரினாலும், ஏனைச் சில அவரை எல்லாங் கடந்தவர் என்னும் பெயரி னாலும், மற்றைச் சில அவரைப் பெரியதிற் பெரியவர் என்னும் பெயரினாலும், இன்னுஞ் சில அவரை ஒளியுரு வினர் என்னும் பெயரினாலும், மற்றும் பல பலவாற்றாலும் வழங்கு கின்றனவே யல்லாமல் அவை அவரை இன்ப வடிவினர் என்னும் பெயரால் வழங்குவதைக் காண்டல் அரிதினும் அரிதாம், அரியாமையிற் கிடந்து துன்பத்திற் சுழலும் சிற்றுயிர்களான நாம் அத்துன்பத்தினின்றும் விலகி என்றும் அழியா அவரது பேரின்பத்தைப் பெறுதல் ஒன்றிலே மட்டுங் கருத்துடையோ மாதலால், நமது கருத்துக்கும் நோக்கத்திற்கும் இணக்கமாய் வேண்டப்படாத அவருடைய மற்றத் தன்மை களைப் பேசி எமக்கு ஆவதென்ன? அவர் எல்லாம் வல்லவ ராதலைப் பேசுதலால் எமக்கு என்? அவர் எங்கும் நிறைந்தவர் என்பதனால் நாம் பெற்றதென்? அவர் எல்லாத் தலைமையு முடையவர் என்றுரைத்தலால் எமக்காவ தென்னை? அவர் எல்லாங் கடந்தவரென்று நினைத்தலால் நாம் எய்துவது யாது? அவர் பெரியதிற் பெரியவர் என்று கூறுதலால் நாம் பெற்ற பேறென்ன? அவர் ஒளியுருவினர் என்றும் மற்றும் பல வியல்பினரென்றும் நினைத்தலால் நமக்கு வருவது யாது? நாம் அவர்பாற் பெற வேண்டுவன துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமுமேயல்லவோ? இங்ஙனங் கூறுதல் கொண்டு நாம் முற்சொல்லிய பெயர்களால் அவரை வழங்கலாகாதென்று கருதினோம் என எண்ணற்க. அங்ஙனம் அவர் தம் வியத்தகும் இயல்புகள் பலவற்றையுங் கூறுதலாற் போந்த இழுக்கு ஒன்று மில்லை என்றாலும், துன்பத்தைப் போக்கி இன்பத்தைத் தரும் இன்பவுருவினர் என்று அவரை வழங்குதலே நாம் கடைத் தேறுவதற்கு வழியாதலால் அப் பெயரிட்டு அழைத் தலே நமக்கு இன்றியமையாத கடமை யாம். இவ்வரிய பெரிய உண்மையை எம்போன்றார்க்கு அறிவுறுத்துதற் பொருட் டாகவே மாணிக்கவாசகப் பெருமான், மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத் தமுதே ஊறிநின் றென்னுள் எழுபரஞ்சோதி உள்ளவா காணவந் தருளாய் தேறலின் றெளிவே சிவபெரு மானே திருப் பெருந் துறையுறை சிவனே ஈறிலாப் பதங்க ளியாவையுங் கடந்த இன்பமே! என்னுடை அன்பே! என்று அருளிச் செய்ததூஉம், இம்முடிபு முழுதும் ஒருங்கு அனுபவித்துணர்ந்த திருமூலயோகிகள், அன்புஞ் சிவமு மிரண்டடென்ப ரறிவிலார் அன்பே சிவமாவ தியாரு மறிகிலார் அன்பே சிவமாவ தியாரு மறிந்தபின் அன்பே சிவமா யமர்ந்திருந் தாரே. என்று அருளிச் செய்ததூஉம் என்க. ஆத்திகமதக் கொள்கைகள் ஒன்றுக்கும் இணங்காத நாத்திக சமயிகளுங்கூட எல்லையற்ற அன்பின் உருவே கடவுள் என்று மொழிந்தால் அதனை உடனே தழுவிக் கொள்வர். அஃதெதனாலெனின், எல்லாம் வல்லுதல் எங்கும் நிறைதல் முதலான அவர் தம்மற்றை இயல்புகள் மக்களாகிய நம்மனோர் அறிவுக்கும் அனுபவத்திற்குஞ் சிறிதும் எட்டாதனவாகலின், அவ்வறிவுக்கும் அனுபவத்திற்கும் வராதன வெல்லாம் பொய்யென்றுரைக்கும் அந்நாத்திக சமயிகளிடத்து அவற்றைச் சொல்லிக் கடவுள் ஒருவர் உண்டென்று நாட்டுதல் ஒருவாற்றானும் ஏலாததொன்றாம்; அங்ஙனங் கூறுதலை விடுத்து நமதறிவுக்குப் புலனாயும் நமதனுபவத்திற்குப் பொருளாயும் விளங்கும் அன்பு அல்லது இன்பத்தின் எல்லையற்ற வடிவே கடவுள் என்று ரைப்பே மாயின், எல்லாவுயிர் கட்கும் அனுபவமா யுள்ள அதனை மறுக்க மாட்டாமையின் அவர் அதற்குடனே இணங்குவர். இங்ஙனங் கடவுள் உண்டென்பார் இல்லை யென்பாரான எத்திறத்தாரானும் மறுக்கலாகாது தழுவப் படும் முடிந்தவுண்மையாயிது விளங்குதலைத் தெற்றென வுணர்ந்தே மாணிக்கவாசகப் பெருமானும் திருமூல நாயனாரும் அங்ஙனங் கடவுளை ஈறிலாப் பதங்களி யாவை யுங் கடந்த இன்பமே என்னுடை அன்பே எனவும் அன்பே சிவமாவது எனவும் முறையே அருளிச் செய்தனர்கள். சைவ சித்தாந்தத்திற்குப் பிரமாண முதனூ லாகிய சிவஞான போதத்தும், அருளுண்டா மீசற் கது சத்தி யன்றே அருளு மவனன்றி யில்லை - அருளின் றவனன்றே யில்லை யருட்கண்ணார் கண்ணுக் கிரவிபோ னிற்குமர னேய்ந்து என்று அருளே கடவுளாதல் வலியுறுத்துச் சொல்லப் பட்டமை காண்மின்கள்! இனி உலகத்தின்கண் உள்ள ஆத்திக சமயங்களுள் ஒன்றேனும் கடவுளை இன்பப் பெயரிட்டு அழைத்திலது என்றது ஒக்கும்; மற்று நமது சைவ சமயம் அவை யெல்லா வற்றினும் மாட்சியுடைத்தாயின், அதன்கட் கடவுளுக்கு இன்பப்பெயரே சிறப்பாக வழங்கல் வேண்டுமாலெனின், அதனை ஒரு சிறிது விளக்குவாம். நமது மதத்திற்குச் சைவம் என்னும் பெயர் வந்தது எதனால் என்று ஆய்ந்து பார்க்குங்கால் நமது கொள்கை சிவ சம்பந்தம் உடையதாதல்பற்றியே அப்பெயர் பெறுவதாயிற் றென்னும் உண்மை விளங்கா நிற்கும்; இதனாலன்றோ சிவனருள் பெற்ற சிற்றம்பல நாடிகள், தெய்வஞ் சிவனே சிவனருள் சமயஞ் சைவஞ் சிவத்தொடு சம்பந்த மென்றான் சைவம் வளர்க்குஞ் சம்பந்த மூர்த்தி என்று அருளிச் செய்வாராயினர். சிவம் என்னுஞ் சொல்லை வடமொழி என்று எடுப்பினும் தமிழ் மொழி ஈன்றெடுப் பினும், அது மங்கலம், சுகம், பாக்கியம், பேரானந்தம் என்னும் இன்பப் பொருளையல்லாமல் வேறு பொருளைத் தரக் காண்கின்றிலேம்; அது வட மொழியில் இங்ஙனம் இன்பப் பொருளையே தருமாறு நைஷத சரிதம், இரத்தி னாவளி, கிராதார்ச்சுனீயம், இரகு வமிசம் முதலான வட மொழி நூல்களில் அஃது அப்பொருளே தந்து வருதலாற் றெளியப் படும்; அது தமிழிற் செந்நிறமென்றும் செவ்விது என்றும் பொருள்படும் சிவ செம் என்னும் பகுதிகளோடு ஒற்றுமைப்பட்டு அவ்வின்பமென்னும் பொருளைத் தருமாறு தமிழ்நூற் பயிற்சியால் நன்குணரப்படும். இங்ஙனம் ஆனந்தம், அன்பு, இன்பம் என்னும் பொருளையன்றி வேறு பொருள் தராத சிவம் என்னுஞ் சொல் இன்பவுருவாயே விளங்கும் முழுமுதற் கடவுளுக்கு முதன்மைப் பெயராக வைத்து நமது சைவ சித்தாந்தத்தில் வழங்கப்பட்டு வரும் அருமை பெருமையை என்னென்று கூறுவேம்! யாம் அறிந்த மட்டில் உலகத்தி லுள்ள வேறெந்த மதத்திலும் இங்ஙனங் கடவுள் இன்பப் பெயரால் அழைக்கப்படுதலைக் கண்டி லேம்! சிவம் என்னும் மொழி சொல்லாலும் பொருளாலும் இன்பம் ஒன்றையே குறித்தல் பற்றியன்றோ அருந் தவச் செல்வரான திருமூலர் அன்பே சிவமாவதியாரும் அறிகிலார் என்று அவ்வாறு தெளிவுறுத்தி அருளிச் செய்தார்! எல்லையற்ற அன்பின்வடிவே சிவமாயிருத்தல் பற்றி யன்றோ அச்சிவத்தோடு இயைபுற்ற நமது சைவ சமயத்திலே எல்லா வுயிர்களிடத்தும் அன்பு பாராட்டி ஓருயிரையுங் கொல்லாது புலான் மறுத்து ஒழுகுவானைச் சைவன் என்று எல்லாரும் அழைக்கின்றார்! வைணவர், புத்தர், கிறித்துவர், மகமதியர் முதலான பிற சமயத்தவர்களிலும் புலால் உண்ணாதவர்கள் `நாங்கள் புலால் தின்கிறதில்லை. சைவ மாகி விட்டோம் என்றன்றோ தம்மைச் சிறப்பித்துச் சொல்லிக் கொள்கின்றார்கள்! இங்ஙனம் உலக வழக்கானும் நூல் வழக்கானுஞ் சைவம் என்பது உயிர்களிடத்துச் செல்லும் அன்பினையும் கடவுளிடத்துச் செல்லும் அன்பினையும் விளக்கி விளங்கும் அருமை பெருமையினையும், இன்ப வுருவாய் ஒளிரும் முழுமுதற் கடவுளை அவ்வின்பப் பொருளையே தரும் சிவம் என்னுஞ் சொல்லாற் பண்டைக் காலந்தொட்டு வழங்கிவரும் விழுப்பத்தினையும் நடுநிலை திறம்பாது ஆய்ந்துணரவல்லவர் எவரேனும் சைவ சமயமே ஏனை எல்லாச் சமயங்களிலும் மாட்சி உடைய தென்று கூற முன் வராதிருப்பரோ? அறிவுடையீர் சொல்லு மின்! நாத்திகர் ஆத்திகர் முதலான எல்லா மதத்தவராலும் தழுவப்பாலதாகிய இவ்வரிய பெரிய கொள்கையினை யுடைய நமது சைவமானது கீழ்ப்பட்ட நிலையிலுள்ள ஒரு சிறு மதமாதலின்றி எல்லா மதங்களையுந் தன்னுள் அடக்கித்தான் அவற்றின் மேலாய் விரிந்து திகழும் நிறைந்த இயல்பினை உடையதென்று சொல்லுவதற்கு அறிவுடை யோர் எவரேனுங் கூசுவரோ? ஐயன்மீர் ஆராய்ந்து சொல்லுமின்! அழியாத பேரின் பத்தைப் பெற வேண்டும் என்னும் விழைவு மிக்க பெரியோ ரெவரேனும் அவ்வின்பப் பொருள்படும் சிவம் என்னுஞ் சொல்லால் நம் ஆண்டவனை அழைக்கக் கூசுவரோ? இன்பத்தை வெறுத்துக் கொடுந் துன்பக்கடலில் அமிழ்ந்தி அறியாமையில் உழலும் உயிர்கள் அவரைச் சிவம் என்னும் பெயரால் அழைக்கக் கூசுவராயின் அஃதவர் தீவினைப் பயனாவதன்றி வேறென்ன? இது குறித்தன்றோ திருமூல நாயனாரும் சிவசிவ வென்கிலர் தீவினை யாளர் சிவசிவ வென்றிடத் தீவினை மாளுஞ் சிவசிவ வென்றிடத் தேவருமாவர் சிவ சிவ வென்னச் சிவகதி தானே என்று அத் தீவினையாளர்க்கு இரங்கி அருளிச் செய்தனர்கள். இன்னும் இச்சிவ என்னும் மொழியின் உயர்வை உணர்த்துதற் பொருட்டாகவே, பொருள் வகையால் வேதங்களுட் சிறந்த எசுர்வேதமானது தனது நெஞ்சமாக விளங்கும் சதருத்திரீய மந்திர நடுவிலே இச்சிவ என்னும்இரண்டெழுத் தொரு மொழியைப் போற்றி வைத்துக் காப்பதாயிற்று. இது நிற்க. இனி உயிர்களுக்குப் பேரின்பத்தை ஊட்டும் அருட் பெருங்கடவுளான நஞ் சிவபெருமான், அவ்வுயிர்களைப் பற்றி வருத்தும் துன்பத்தை முற்றும் ஒழித்தே தனது இன்னருளை வழங்குவனாகலின்,இன்பத்தைத் தருதலோடு துன்பத்தைப் போக்குதலும் அம் முழுமுதற் கடவுளுக்குரிய உதவிச் செய்கையின் இயல்பாம். உயிர்களுக்கு இன்பத்தைத் தந்தருளுங் கடவுள் அவ்வுயிர்களிடத்துத் தொன்று தொட்டே முனைந்து நிற்கும் துன்பத்தை நீக்கி யல்லது அதனைத் தருதலாகாமையான், அங்ஙனந் துன்பத்தைப் போக்கும் அவரது பேருதவிச் செய்கையை மறவாது நினைந்து அவரை அப்பெயரால் அழைத்தலும் நம்மனோர்க்கு இன்றியமையாத கடமையாம். மேலும், அறியாமையில் அகப்பட்டு வருந்தும் நாம் இன்பத்தைப் பெறும் முன் நம்மை இடையறாது வருத்தி வருந் துன்பத்தைப் போக்கிக் கொள்ளவே விருப்ப முற்றிருத்தலால், நமக்கு அவ்வுதவியைச் செய்யும் நம் ஆண்ட வனைத் துன்பத்தை அழிப்பவன் என்று அழைத்தலிலேதான் அவா மிகும். தொழுநோய் கொண்டும் உடல் அழுகி மிக வருந்தும் ஒருவன் முதலில் அந்நோயைத் தீர்க்கும் மருத்து வனையே நாடி நிற்றல் போலவும், ஆற்றின் பெருவெள்ளத் தில் அகப்பட்டு நிலை தடுமாறி அலைப்புண்டு போம் ஒருவன் தன்னை அதனினின்று மெடுத்துக் கரையேற்று வானையே தேடிக்கிடத்தல் போலவும், சுற்றி எரியுந் தீ நடுவே நின்று துடிக்கு மொருவன் தன்னை அத்தீயின்னிறு மீட்பான் உதவியையே விழைந்து அலறுதல் போலவும் ஆணவமல மென்னும் பெரும் பாந்தள் வாயிலகப் பட்டு வருந்தும் மன்னுயிர்களான நாம் நம்மை அதனினின்று விடுவிக்கும் முதல் வன்றன் பேருதவியினையே அவாவி நிற்கின்றேம்; ஆதலால், அன்பர்களே! எல்லாம்வல்ல அம் முதல்வனைத் துன்பந் துடைப்பவன் என்றுஅழைத்தலே நாம்அத்துன்பத்தி னின்று விடுவிக்கப்படுதற்கும், அதனையே விழைந்து நிற்கும் நமது உயிரினியற்கைக்கும் மிக இயைந்த தாகும். இனி இத்துணைச் சிறந்த கடவுளின் உதவிச் செய்கையை இனிது விளக்கி அதனை நமது நினைவில் எழுவிக்கும் பெயர்கள் வேறு மதங்களிற் கடவுளுக்குச் சொல்லப் பட்டிருக்கின்றனவா என்று நாம் ஆராய்ந்து பார்த்தமட்டில், அவைகளில் அவை இருக்கக் கண்டிலேம்; அல்லது அவற்றுள் எதிலேனும் அப்பெயர் இருக்குமாயின் அது நமது சைவ சமயமே என்று பாராட்டி அகமகிழ் தற்குரியேம். மற்று நமது சைவ சமயத்தின் கட் கடவுளைத் துன்பந் துடைப்பவன் என்று குறிக்கும் பெயர்கள் உளவோ எனின்; சிவபெருமானுக் குரிய அருமைத் திருப்பெயர்களிற் பல அப்பொருளையே தருவனவாம் என்று அறிமின்கள்! வடமொழி வேதங்களில் மிகப் பழையதான இருக்கு வேதம் எங்கணும் நஞ்சிவ பெருமானுக்குப் பெயராக எடுத்தாளப்பட்டு வரும் உருத்திரன் என்னும் பெயர் ஒன்றே நாங் கூறுவதன் உண்மையை நாட்டுதற்குப் போதுமான சான்றாகும். உருத்திரன் என்னும் இச்சொல் துன்பத்தை ஓட்டுபவன் என்றும் இருளை அறுப்பவன் என்றும் பொருள் படுமென வேதங்களுக்கு பாஷியம் எழுதின சாயனாசாரியாராலே நன்கு விளக்கப்பட்டிருக்கின்றது. இதனைப் போலவே அரன், வைத்தியநாதன் என்னுஞ் சொற்களும் துன்பத்தை யழிப்பவன் ஆணவநோயைப் போக்குபவன் எனப் பொருடந்து சிவபெருமானுக்கே பெயர்களாக வழங்கி வருகின்றன, இப்பெயர்களுக்கு ஏற்பவே இருக்குவேத மானது, பாட்டுக் களுக்குத் தலைவரும் வேள்விகளுக்குத் தலைவரும் நோய் நீக்கும் மருந்துகளை வைத்திருப் பவருமான உருத்திரரிட மிருந்து அவரது மங்களகரமான பிரீதியை நாடுகின் றோம், என்றும், இரண்டு கால்களும் நான்கு கால்களும் உள்ள எங்கள் பசுக்களுக்கு நலம் உண்டாதற் பொருட்டும், இந்த ஊரிலுள்ள எல்லா உயிர்களும் நன்றாக உணவு ஊட்டப் பட்டு நோயினின்று நீங்கியிருத்தற் பொருட்டும் வீரர்களுக்கு ஆண்டவரும் சுருண்ட சடைமுடியையுடைய வரும் வலியோருமான உருத்திரருக்கு இந்த வழுத்துரைகளைச் சேர்ப்பிக்கின்றோம், என்றும் ஓ உருத்திரரே, யாங்கள் செய்யும் வணக்கங்களாலும் தகுதியற்ற எங்கள் வழுத்துரைகளாலும், வலியோரே எங்கள் தாழ்ந்த வழிபாடுகளாலும் உமக்கு நாங்கள் சினத்தை உண்டாக்காதவர்களா யிருக்க வேண்டும். உம்மிடத்திலுள்ள மருந்துகளால் எங்கள் வீரர்களை எழுப்புவித்தருளும். மருத்துவர் எல்லாரினும் நீரே மிகப்பெரிய மருத்துவரென்று கேள்விப்படுகின்றேன், என்றும், நோயை நீக்கும் உருத்திரர் தம் உருத்திர கணங்களோடும் எம்மிடத்துப் பிரீதியுடைய ராய் இருப்பாராக, என்றும், அடியார்க்கு எளியராயிருக்கின்ற நீர் ஆயிரம் மருந்து களை வைத்திருக்கின்றீர், என்றும் உருத்திர மூர்த்தியை வழி படும் இடங்களினெல்லாம் அவரை எல்லா நோயும் போக்கும் வைத்தியநாத ரென்றே கிளந்தெடுத்துக் கூறுகின்றது, இங்ஙனம் மிகப் பழையதான இருக்கு வேதங் கூறுமாறு போலவே, இதற்குப் பின் எழுந்த வேதங்களும் உபநிடதங் களும், நம்பெருமானை வைத்தியநாத னென்றே வலியுறுத்திக் கூறா நிற்கின்றன. இனி இங்ஙனந் துன்பத்தை நீக்குதலும் இன்பத்தைக் கொடுத்தலுமாகிய உதவிச் செயல்கள் இரண்டும் நம் ஆண்டவனிடத்து ஒருங்கு அமைந்து கிடக்கும் பான்மை யினை உணர்த்துதற் பொருட்டாகவே அவ்விருக்கு வேத மானது பத்தாவது மண்டிலத்தில் உருத்திரன் சிவன் என்னும் இவ்விரண்டு அருமைத் திருப்பெயர்களையும் ஒன்று சேர்த்து ஒரு கடவுள் பெயராகவே கூறுவதாயிற்று. அன்பின் மிக்க எம் அருமை நேசர்களே, புழு முதல் மக்கள் தேவர் ஈறான எல்லாவுயிர்களும் தம்மை இயற்கை யாகவே பிடித்து வருத்தி வருகின்ற அறியாமைத் துன்பத்தை நீக்குவித்துக் கொள்ளல் வேண்டியும், என்றும் அழியாது நிலைபெறும் பேரின்பத்தைப் பெற்றுக் கொள்ளல் வேண்டியும் மிக விரும்பி, அங்ஙனம் அவற்றைத் தமக்குச் செய்து தரவல்ல முழுமுதற் கடவுளை வழிபட்டு வருகின்றார்களாதலின், அவ்வுயிர்களுக்கு அவர் வேண்டியவாறே அவர் துன்பத்தை நீக்கி இன்பத்தைத் தரும் நிலையில் அருள்கனிந்து விளங்கும் ஆண்டவனை அந்நிலைக்குப் பொருந்தவே உருத்திர னென்றும் சிவனென்றும் அழைத்தலும் வழங்கலும் எத்துணைச் சிறந்தனவாயிருக்கின்றன! இதனால், இவ் வுண்மையை முற்றும் உணர்ந்து இவ்வுண்மைக்கு இயையவே ஒழுகும் நமது சைவ சமயமானது, இவ்வுண்மையை உணராத ஏனைச் சமயங்கள் எல்லாவற்றினும் மிக உயர்ந்த மாட்சி யுடைத்தாய்ப் பொலிதல் வெள்ளிடை மலைபோல் விளங்க வில்லையா? உருத்திரன், சிவன் என்னும் இவ்வருமைப் பெயர்களைக் கேட்டவளவிலே இவ்வுண்மைகளை உணரப் பெறாத சிலர் இவை ஒரு மதத்தின் தெய்வத்தைச் சுட்டுதலால் இவை நாம் தழுவற்பாலனவல்ல வென்று விரைந்து கூறுகின்றார்கள்; அந்தோ! இவர்கள் அறியாமை இருந்தவாரென்னை! என்னை! அவர்கள் கூறுமாறு ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு தெய்வமா இருக்கும்! ஒரே கடவுளன்றோ உள்ளவர்? இது, ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்ம்மினே என்று திருமூலரும் ஒன்றென் றிருதெய்வ முண்டன் றிருவுயர் செல்வமெல்லாம் அன்றென் றிருபசித் தோர்முகம் பார்நல் லறமுநட்பும் நன்றென் றிருநடு நீங்காம லேநமக் கிட்டபடி என்றென் றிருமன மேயுனக் கோருப தேசமிதே என்று பட்டினத்தடிகளும் வற்புறுத்தி யருளிச் செய்த வாற்றால் இனிது அறியக் கிடக்கின்றதன்றோ? இங்ஙனம் எல்லா மதங்களுக்கும் ஒரே கடவுளே முதல்வராயிருக்க இவ்வுண்மையை மறந்து, உருத்திரன், சிவன் என்னும் பெயர்கள் ஒரு சமயத் தெய்வத்தையே குறிக்கின்றன வென்று கற்றவராகத் தம்மை நினைத்திருப்போர் சிலர் சொல்வது வியப்பினும் வியப்பே! எப்பொருளையுங் கடந்தவர் என்னும் பொருளைத் தரும் `கடவுள் என்னுஞ் சொல்லையும், ஒளிவடிவினர் என்னும் பொருளைத் தரும் `தெய்வம் என்னுஞ் சொல்லையும், இவை போன்ற வேறு சில சொற்களையும் இறைவனுக்குப் பெயராக வைத்து வழங்கு வதிற் குற்றங் காணாத அக்கற்றவர் சிலர் துன்பத்தை நீக்குபவன் என்னும் பொருளைத் தரும் உருத்திரன் என்னுஞ் சொல்லையும் இன்பவுருவினர் என்னும் பொருளைத் தரும் `சிவன் என்னுஞ் சொல்லையும் அவ்விறைவற்குப் பெயராக வைத்து வழங்கு வதில் மட்டும் மனங்கோணுதல் அவரது அறிவின் கோணலையே தெரி விப்பதாமன்றி மற்றென்னை? அற்றன்று, கடவுள் தெய்வம் முதலான சொற்கள் எல்லாரானும் பொதுப்பட வழங்கப் படும் பெயர்கள்: உருத்திரன் சிவன் என்னுஞ் சொற்கள் சைவர்களெனப் படும் ஒரு சாராரால் மாத்திரம் வழங்கப் படுவன ஆகலின், அவற்றை வழங்காமை பற்றி இழுக் கென்னை யெனின்; உயர்ந்த முழு மாணிக்கம் ஒன்றன் மதிப்பும் ஏற்றமும் அவற்றை அறிந்தார் சிலர்க்கன்றி எல்லார்க்கும் புலப் படாமையின், அம்மாணிக்கத்தை யாம் மதியேம் என்று பேசும் பேதைமாக்கள் சொல்லுக்கும் அக்கற்றவர் சொல்லுக்கும் வேற்றுமை ஏதுங் காண்கிலேம். கொடுநோயால் வருந்தும் ஒருவன் அந்நோய் தீர்க்கும் அரிய மருந்தை வைத்திருக்கும் வல்ல மருத்துவர் வந்தால் நீர் தரும் மருந்தின் றன்மையும் உயர்வும் நும்மனோர் சிலர்க்கன்றி ஏனை எல்லார்க்குந் தெரிந்தன அன்மையின் அதனை யான் உண்ணே னென்று மறுத்து வீணே உயிர் துறக்கும் புன்மைக்கும் அக்கற்றவர் தம் பிறவிப் பயனை இழக்குந் தன்மைக்கும் வேறுபாடு சிறிதுங் காண்கிலேம். எல்லாராலுந் தழுவப் பட்டதனையே யாமுந் தழுவுவேம் என்று சொல்லு தலினும் மிக்க அறியாமை வேறொன் றில்லை. அரிய பெரிய வுண்மைகள் அறிவின் மிக்க சிலர்க்கே விளங்கு மல்லாமல், அவை எல்லார்க்கும் விளங்குவனவல்ல. அவ் வுண்மைகள் எல்லாம் எல்லார்க்கும் ஒரு தன்மையவாய் விளங்கிடுமாயின் நம் மக்கட் பரப்பினருட் காணப்படும் இத்தனை வேறு பாடுகளும், இத்தனைமத வேறுபாடுகளும், நடையுடை பாவனை ஒழுக்க வேறுபாடுகளும், பிறவும் வரக் காரண மிலையே. ஆகையால், என் அருமை நேசர்களே, சிலரால் தழுவப்பட்டன வென்று நல்லவற்றைக்கை விடுதலும், பலராற் கொள்ளப்பட்டன வென்று தீயவற்றைக் கைப் பற்றுதலும் அறிவுடையோர்க்குச் சிறிதும் ஆகாதன வாம். மற்று எவரிடத்தே எது காணப்படினும், எவர் எது சொல்லினும் அவ்வவற்றின் றன்மைகளை ஆராய்ந்து நல்லவற்றைக் கைக்கொண்டு நலமுறுதலே அறிவுடையோர் செயற்பாலதாம் பெருங் கடமையாகும். இதுபற்றியன்றோ நந் தெய்வப்புலவர், எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள் 423) என்று அருளிச் செய்தனர். இங்ஙனம் என்னதாம் சொல்லினுஞ் சொல்லிக் கொள்க. சைவ சமயத்திற் சொல்வன ஒரு சாரனவாயிருத்தலின் யாம் அவற்றைத் தழுவுதற்கு உடன்படே மென்று கூறுவாருள ராயின், அஃதவர் விருப்பம். கடவுளை இன்பப் பெயரிட்டு அழைக்க வேறெந்தச் சமயத்திலுங் காணேம். சைவம் ஒன்றிலே மட்டுந்தான் அது காணப்படுதலின், யாம் அதனைத் தழுவு வதற்கு ஒருப்படேம், அதற்கு மாறாகக் கடவுளைத் துன்ப வுருவினர் என்றுதான் அழைக்க முந்துவேம் என்று அக்கற்றறிவினர் கூறுவராயின் அஃதவர் விருப்பம்,; துன்பத்திற் கிடந்து உழலவே விரும்பும் அவர் தீவினைக்கு நாம் இரங்குதலே செயற்பால மல்லது வேறென் செயவல்லேம்! எல்லாம் வல்லுதல், எங்கும் நிறைதல், எல்லாங்கடத்தல் முதலான கடவுளின் மற்ற இயல்புகள் உயிர்களாகிய நந்தம் அறிவுக்கும் அனுபவத்திற்குஞ் சிறிதும் அணுகாதனவா யிருத்தலாலும், அவர் எல்லா இன்பமும் அன்பும் அருளும் உடையராய் இருத்தல் ஒன்றே நமக்கு நேர் அனுபவமாயிருத்தலாலும், பேரின்பத்தையே அவாவும் நமக்கு அப்பேரின்பத்தை அருளும் இன்பவுருவினரான அவர் நமது ஆணவ மலத் துன்பத்தை முதலிற்றுடைத் தருளும் பேருதவிச் செய்கை யுடையராயிருத்த லாலும் அவர்தம் விளக்கமான அவ்வரும் பெருந்தன்மைகளை வாழ்த்தியும் நினைந்தும் வழுத்தியும் பேறு பெருதற்குரிய நாம் அவற்றை இடையறாது நம் நினைவில் எழுப்புவிக்கும் உருத்திரன் சிவன் என்னும் பெயர்களால் அவரை வழங்கக் கடவேம் என்றும், இங்ஙனம் வழங்கும் அரிய பெரிய வுண்மை சைவ சமயத்திலன்றி வேறெதினுங் காணப் படாமையால் இதுவே ஏனை எல்லாச் சமயங்களினும் மாட்சியுடைத்தென உணரப்பெற்றேம் என்றும் எல்லாரும் உறுதிகொண்டு அகமகிழல் வேண்டும். இது நிற்க, இனி உயிர்களின் துன்பத்தைத் துடைத்து இன்பத்தை அருளும் இன்பவுருவினராய் நிற்குங் கடவுளின் உண்மைத் தன்மை எல்லா மதத்தவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொன்றாயினும், அது சைவ சமயத்திற்கே உரிய உரிமைப் பெரும் பொருளாய் நிலை பெறுமென்பதனை ஒருசிறிது விளக்கிக் காட்டுவாம். உயிர்களுக்கெல்லாம் துன்பத்தைப் போக்கும் முதல்வர் தாம் துன்பமில்லாதவராய் இருப்ப ரென்பதூஉம், துன்ப நீங்கிய வுயிர்கட்குப் பேரின்பத்தை அருளுமவர் தாம் பேரின்ப வுருவினராயே வயங்குவ ரென்பதூஉம் அறிவுடையார்க்கெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் இனிது விளங்கிக் கிடப்பவும் அவற்றைத் தெளியவுணர்ந்து நிலைப்படுத்திக் கொள்ள மாட்டாத மற்றை மதத்தவருள் ஒரு சாரார் தமது கடவுள் தாயின் கருப்பையுட் டங்கித் தங்கிப் பிறந்து பிறந்து பலவகை அவதாரங்கள் எடுக்குமெனவும், அங்ஙனம் அவதாரங்கள் எடுத்து உழலுங் காலத்துத் தாய் தந்தையர் உறவினர் பகைவ ரால் துன்புறுத்தப் பட்டும், மனைவியைப் பறிகொடுத்தும், மக்களை இழந்தும், மாற்றாரோடு போராடியும் ஒருவன் சொல்வழிப்பட்டுத் தனக்குப் பகைவன் அல்லாதவனைக் கொன்று அழிவழக்குப் பேசியும், தன் மனைவியைக் காட்டகத்து ஏவியும், ஒருவன் கைப்படையால் அடிபட்டு இறந்தும் இங்ஙனமெல்லாந் துன்புற்று வருந்தும் எனவுங் கூறுவர்; இங்ஙனங் கூறுமிவர் இன்ப வுருவினராய் விளங்குங் கடவுளை அறிந்தாராவரோ சொல்லுமின்! இனி மற்றை ஒருசாரார் தமது கடவுள் இன்னதென்று சொல்லப்படாதவாறு தன்னிடத்துத் தோன்றிய மாயையாற் கட்டப்பட்டுத் தன்னை மறந்து அறிவில்லாத சிறு சிறு பொருள்களாயும் சிற்றறிவுடைய உயிர்களாயும் மாறிப் பிறப்பிறப்புத் துன்பங்களில் அகப்பட்டு சுழலுமெனக் கூறாநிற்பர். இவ்வாறு கூறுமிவர் ஒரு காலத்தும் நிலை தெரியாது எல்லையற்ற பேரின்ப வுருவினனாயே விளங்கும் முதல்வனைக் கண்டாராவரோ சொல்லுமின்! இங்ஙனமே தமது கடவுளருக்குத் துன்ப நுகர்ச்சியைக் கற்பிக்கும் ஏனை எல்லாச் சமயங்களும் இப்போது நாம் வகுத்துச் சொல்லிய இவ்விரண்டு கூற்றுள்ளே அடங்குமாதலின், அவ்வொவ் வொரு சமயங்களுந் தாந் தாம் தனித்தனியே தமது கடவுளருக்கு ஏற்றிச் சொல்லும் துன்ப நுகர்ச்சியை விரித்துக் கூறாது விடுகின்றேம். இப்புறச்சமயிகள் தங்கடவுளருக்குச் சொல்லும் துன்ப நிகழ்ச்சிகளைக் கொண்டே அவர்களுள் யாரும் எல்லை யற்ற இன்ப வுருவினராய்ப் பொலியும் முழுமுதற் கடவுளின் உண்மைத் தன்மையை உணர்ந்தார் அல்ல ரென்பதூஉம் அவர்களாற் கடவுளராக மயங்கி வணங்கப்படுபவர்கள் ஒரு காலத்து நம்மைப் போற் சிற்றறிவு உடைய உயிர்களாய் இருந்தவர்களே யாவரென்பதூஉம் திண்ணமாய் உணரப் பெறுகின்றேம், ஆகவே, என் அருமை நேசர்களே, நமது சைவ சமயம் ஒன்றே கடவுள் தாம் துன்பமில்லாதவராய் உயிர்களின் துன்பத்தைப் போக்கித் தாம் என்றும் எல்லையற்ற இன்பவுருவினராய் விளங்கி உயிர்களுக்குப் பேரின்பத்தை அருளும் இயல்பின ரென்னும் உண்மையை உணர்ந்த தாயிற்று; இவ் வுண்மை சைவ சமய நூல்களெங்கும் பிறழாமல் வலியுறுத்தப்பட்டிருத்தலையும் சிவபெரு மானுக்குப் பிறப்பு இறப்புத் துன்பங்கள் யாண்டுஞ் சொல்லப் படாமையினையும் எல்லார் பிறப்பு மிறப்புமியற் பாவலர்தஞ் சொல்லாற் றெளிந்தேம்நஞ் சோணேசர் - இல்லிற் பிறந்தகதை யுங்கேளேம் பேருலகில் வாழ்ந்துண் டிறந்தகதை யுங்கேட்டி லேம் என்றும், யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகியாங்கே மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றெத்தெய்வங்கள் வேதனைப் படுமி றக்கும் பிறக்குமேல் வினையுஞ் செய்யும் ஆதலா னிவையி லாதா னறிந்தருள் செய்வ னன்றே என்றும் போந்த அருமைத் திருமொழிகளால் இனி துணர்ந்து களிப்பேமாக. எனவே, கடவுள் இன்பவுருவினர் உயிர்களின் துன்பத்தைத் துடைப்பவர் என்னும் உண்மை சைவ சமயம் ஒன்றானேமட்டுங் காணப்பட்டு அவரை உருத்திர சிவன் என்று அது வழங்கினமையால் நிலை பெறுத்தப்பட்ட தாகலின் நமது சைவ சமயம் ஒன்றே ஏனை எல்லா மதங்களினும் மேலான மாட்சி யுடைத்தா மென்பது எம்மால் ஒரு சிறிது விளக்கப்பட்டது. இன்னும் இதன் மாட்சியை விளக்கும் அரும்பெரும் பொருள்கள் பல விருப்பினும் அவை யெல்லாம் ஈண்டு விளக்கியது கொண்டு இனிதறியப்படு மாகலின் இதனை இவ்வளவோடு நிறுத்து கின்றோம். 2. இந்து சமய உண்மைகள் இப்பரதமா கண்டத்தில் தொன்றுதொட்டு நடை பெற்று வருகின்ற சாருவாகம், பௌத்தம், சமயம், மாயா வாதம், வைணவம், சைவம் என்றற்றொடக்கத்துச் சமயங் களெல்லாம் இந்து சமயங்களென்று பெயர் பெறுகின்றன, இவை தம்மை ஒழிய வேறு `இந்துசமயம் எனத் தனியே வழங்குவது ஒன்று உண்டோ என ஆராய்ச்சி செய்வாருள் ஒரு சாரார் அத்தன்மையது ஒன்றில்லை என முடிவுரை யுரைக்கின் றார்கள், தாமரை, முல்லை, நீலம், சண்பகம் முதலியவற்றின் வேறாகப் பூ வென்பது ஒரு பொருள் இல்லாமை போலவும், குயில், மயில், புறா, அன்னம், கோழி முதலியவற்றின் வேறாகப் பறவை என்பதொன் றில்லாமை போலவும், மான், மரை, ஆ, ஆடு, எருமை, குதிரை முதலியவற்றின் வேறாக விலங்கென்பதொன் றில்லாமை போலவும் முற்குறிக்கப்பட்ட சாருவாகம் முதலிய சமயங்களை ஒழிய வேறு இந்து சமயம் எனப் படுவதொன் றில்லையென்பதே அவர் கருத்தாம். இனி அவருரைக்கும் அவ்வுரை பொருந்துமோ வென்று உண்மையான் ஆழ்ந்து ஆராயுமிடத்து அது பொருந்தா தென்பது புலனாகா நிற்கும். தாமரை, முல்லை முதலியவற்றின் வேறாகப் பூவென்பதொரு பொருளும், குயில் மயில் முதலியவற்றின் வேறாகப் பறவை என்பதொரு பொருளும், மான் மரை முதலியவற்றின் வேறாக விலங்கு என்பதொரு பொருளும் இல்லாமை உண்மையாயின் அவை தம்மைப் பூ, பறவை, விலங்கு என வேறு பொதுப் பெயரான் வழங்குதல் என்னை? தாமரை, முல்லை என்னுஞ் சிறப்புப் பெயரே அமைவதாகவும் அவற்றைத் தாமரைப்பூ, முல்லைப் பூ எனப் பொதுப் பெயருஞ் சேர்த்துக் கூறுதல் என்னை? தாமரை முதலான பொருள் உலகத்தில்லாமலே அழிந்து போயினும், பூவென்னும் பொருள் எல்லாரானும் இனிதறியக் கிடக்குமன்றே? அல்லது வேறுசில புதுப் பூக்கள் தோன்று மாயின் அவையும் பூவெனப் பெயர் பெறுதல் திண்ணமே யன்றோ? இதனாற் பொருள்களின் அருவநிலை, உருவ நிலை என்னும் இரண்டும் இனிது பெறப்படுவனவாம். தாமரை முல்லை முதலான சிறப்புப் பொருளெல்லாம் கட்புலனுக்கு விளங்கித் தோன்றும் உருவுடைப் பொருளா யிருக்கின்றன, பூ வென்னும் பொதுப் பொருளோ அங்ஙனங் கட்புலனுக்கு விளங்குவதன்றாய் மக்கள் மனவறிவாற் கருதி யுணரப்படுவதா யிருக்கின்றது. பல திறப்பட்ட பூக்களையும், பறவைகளையும், விலங்கினங்களையும் மனத்தால் தொகுத் துப் பார்த்து ஆயுமிடத்து அப்பூக்க ளெல்லா வற்றிற்கும் பொதுவான சில தன்மைகளும் அப் பறவைகளெல்லா வற்றிற்கும் பொதுவான சில தன்மைகளும் அவ்விலங்கினங்க ளெல்லாவற்றிற்கும் பொதுவான சில தன்மைகளும் இனித றியப் படுகின்றன வாகலின், அத்தன்மை களாற் றிரண்டை அருவப் பொதுப் பொருளே உருவுடைய அச்சிறப்புப் பொருளுக்கெல்லாம் நிலைக்களனா மென்பது தெளியப் படும், சுண்ணமும் மஞ்சளுங் கூடிய வழிச் செவ் வண்ணம் உண்டாதல் போலப் பூவென்னும் பொதுக் குணப்பொருளில் வேறு சில சேர்ந்து தாமரை முதலான சிறப்புப் பொருள்கள் தோன்றுகின்றன, சிறப்புப் பொருளை யெல்லாம் பகுத்தால் அவை தனித்தனிப் பொதுப் பொருளாய் நிலைபெறும். சிறப்புப் பொருளெல்லாம் அழிவெய்தும்; பொதுப் பொருள் அழிவெய்தமாட்டா, அன்னம்பட்டர் முதலான தருக்க நூலாரும் சாதிப் பொதுத்தன்மை என்றும் உளதா மென்பர். இக்காலத்தியற்கைப் பொருள் நூலாரும் பொருள் களைப் பகுத்துக் கலப்புச் சிறப்புப் பொருளெல்லாம் அழியுமென்றும், கலவாத தனிப்பொருளெல்லாம் என்றும் உளவா மென்றுங் கூறுவர். எனவே சாருவாகம், பௌத்தம் முதலியவற்றின் வேறாய் இவற்றிற்கெல்லாம் பொதுவான விரிந்த இலக்கண முடைத்தாய் விளங்கும் இந்துசமயம் என்பதொன்று தனியே உண்டென்பதூஉம், அங்ஙனம் பொதுவான அதன் கோட்பாடுகள் சில மிகுந்துங் குறைந்தும் வேறு சில உடன் சேர்ந்தும் சாருவாகம் முதலிய மற்று அச்சமயங்ளெல்லாம் தோன்றி நடைபெறுகின்றன வென்பதூஉம் நன்கு பெறப்படும். ஆகையால், இந்து சமயம் என்பது பண்டைக் காலந்தொட்டு நடைபெறுகின்ற உண்மைச் சமயமேயல்லது பிறர் கூறுமாறுபோல் இல்லாத தொன் றன்று, இவ்விந்து சமயத்தின் பிரிவுகளான சாரு வாகம், பௌத்தம், சமணம், மாயாவாதம், வைணவம், சைவம் முதலிய சிறப்புச் சமயங்களெல்லாம் அழிந்தொழியினும், அன்றி வேறு சில சமயங்கள் புதிதே முளைப்பினும், இவற்றிற் கெல்லாம் பொதுவாக விரிந்து இவை தம்மை யெல்லாம் தன்கண் அடக்கிக் கொண்டிருக்கும் இயல்புடையதான இந்து சமயம் என்றும் உள்ளதாயே விளங்கும். இனி இப்பெற்றித்தாகிய இந்துசமயத்தின் கோட்பாடு கள் யாவையோவெனிற்; காணப்பட்ட இவ்வுலகினுக்குக் காணப் படாத முழுமுதற் கடவுள் முதலாய் உள்ள தென்பதும், அஃது அருவமாயும், உருவமாயும் இவை யல்லவாயும் இருக்கு மென்பதும், அஃது என்றும் உளதாய் அறிவாய் இன்பமாய் இருப்பதாகலிற் `சச்சிதா நந்தம் எனப்படும் என்பதும், அஃது அருவமாய் வழுத்தப்படுதலே யன்றியும் எல்லார்க்கும் வணங்குதற்கு எளிதான உருவத் திருமேனியுடன் விக்கிரகத்தின் கண்ணும் வைத்து வழிபடப் படுமென்பதும், அதனை அறிந்து வழிபடுதற்குரிய உயிர்கள் அறிவுடன் என்றுமுள்ள பொருள்களாய் எண்ணிறந்தனவாய் இருக்குமென்பதும், இவ்வுயிர்கள் தொன்றுதொட்டே அறியாமை வயப்பட்டிருக் கின்றனவாகலின் இவைகள் அவ்விறைவனை வழிபடுமாற்றால் தூய்மை எய்தி அவனோடு ஒற்றுமைப்பட்டு இன்ப நுகரு மென்பதும், இவைகள் அறிவு முதிர முதிர ஒரு பிறப்பை விட்டு மற்றொரு பிறவியிற் செல்லுமென்பதும், இங்ஙனம் இவற்றிற்குரிய பிறவிகள் பலவாய் எண்ணிறந்தன வாகுமென்பதும், இவ்வுயிர்கள் முற்பிறவியில் செய்த வினை பிற்பிறவியில் வந்து அவைகளாய் நுகரப்படுமென்பதும், இவ்வுயிர்களுக்கு உடம்பாயும், கருவிகளாயும், இடங்களாயும், நுகர் பொருளாயு மிருந்து பயன்படுகின்ற அறிவில்லாத சடப் பொருள் என்றும் உளதாமென்பதும் இதற்கு உரிய கோட்பாடுகளாம் இக் கோட்பாடுகளனையவும் இவ்விந்திய நாடெங்கும் தழுவப் பட்டு வருகின்றன, இவ்விந்திய நாடு எங்கணுமுள்ள மக்கள் பெரும் பாலார் கடவுள் உண்டென்பதில் இயற்கை யிலேயே நம்பிக்கை யுடைய ராயிருக்கின்றனர், இதனை உருவத்திரு மேனியில் வைத்து வணங்கும் விக்கிரக வழிபாடும் இமய மலையுச்சி முதல் குமரிமுனை வரையிலும் பரந்து காணப்படு கின்றது, அவரவர் நுகரும் இன்ப துன்பங்களுக்கு அவரவரே உரியர் பிறர் உரிய ராகார் என்று நாடோறும் வழங்குஞ் சொற் களைக் கேட்டலால், உயிர்கள் பலர் என்னும் உணர்ச்சியும் இவ்விந்திய நாடெங்கும் பரவிக் கிடக்கின்றது, யான் துன்பப்படுதற்கு என்னுடைய அறியாமையே காரணம் என்று இங்குள்ளார் எல்லாரும் கூறுதலால், உயிர்களுக்கு அறியாமை இயற்கையே உள்ளதென்பதும் இவ்விந்தியா விற்கே உரிய கொள்கையாம் இப்பிறப்பில் யான் அறஞ் செய்தால் மறுமையில் நற்பிறவி யடைவேன், இப்பிறப்பில் யான் மறஞ்செய்தால் மறுமையில் தீப்பிறவியடைவேன் என்று பலருங் கூறுதலால் அடுத்தடுத்துப் பிறவிகள் வரு மென்பதும் இங்குள்ளார்க்கு உடன்பாடா கின்றது, ஒருவன் துன்புறுங் காலத்து இஃது யான் முன் செய்த வினைப்பயன் என்று அடுத்தடுத்து வழங்கக் காண்டலால் இருவினை உண்டென்பதும் மற்றிவர்க்கு உடன்பாடாகின்றது, `உள்ளது போகாது இல்லது வாராது என்னும் பழமொழி நாடோறுங் கேட்கப்படுதலால் இவ்வுலகம் மாயையிற் றோன்றிய தென்பதும், அம்மாயை அறிவில்லாதாய் என்றும் உள்ள உண்மைப் பொருளாமென்பதும் இந்தியர்க்குக் கருத்தா கின்றன, `யான் என் அறியாமை விலகிக் கடவுளின் அருளுக்குத் தகுதி யாவேனோ என்று ஆங்காங்குப் பலருங் கூறுதலால் `வீடுபேறு என்பது அறியாமை நீங்கப் பெற்று முதல்வன் அருளோடு ஒற்றுமைப்படுதலேயா மென்பது இவர் கொள்கை யாகின்றது. நண்பர்காள்! இங்ஙனம் இக்கொள் கைகள் இவ்விந்திய நாடெங்கும் பரவி வழங்குதல் நம்மனுப வத்திற் காணப்படுதலால் இவை தாம் இந்து சமயம் எனப்படுதற்குப் பொருந்துவனவா மென்பது தெற்றென விளங்கும், இனி இந்து சமயப் பிரிவான மேற்கூறிய சமயங்களி லெல்லாம் இக்கொள்கைகள் சில குறைந்தும் வேறு சில கூடியும் வேறு வேறு பெயர் பெற்று நிற்றலைக் காட்டுவாம், காணப்படுவதாய் அறிவில்லாத பருப்பொருளான இவ் வுலகம் உள் பொருளேயாம் என்னும் அதன் கொள்கையை மட்டும் வற்புறுத்திக் கடவுளும் உயிரும் இருவினையும் இல்லை என்று கூறுவதே சாருவாக மதமாம். இது பூதமதி னொன்றுபிரி யப்புல னிறக்கு நீதியினி னிற்பனந டப்பனவு முற்போல் ஓதும்வகை யாகியுறு காரியமு லந்தால் ஆகியவை யாமிதனை யறிவதறி வாமே என்றும், இப்படியன்றிக் கன்ம முயிரிறை வேறுண் டென்று செப்பிடு மவர்க்கு மண்ணோர் செய்திடுங் குற்ற மென்னோ ஒப்பிலா மலடி பெற்ற மகனொரு முயற்கொம் பேறித் தப்பிலா காயப் பூவைப் பறித்தமை சாற்றி னாரே என்று அவர் கூறுமாற்றால் அறியப்படும். அறிவென்பது நான்கு பொருட் கூட்டத்தின் விளைவாய் உண்டாவ தென்னுஞ் சாருவாகர் போலாது சடப் பொருளின் வேறாக அறிவாகிய புத்தி ஒன்றுண்டென்று மட்டுங் கூறிக் கடவுளும் உயிருமில்லை யென்பதே பௌத்த மதமாம். இதில் அறிவும் அறிவில்லாத சடமும் வேறென்னும் இந்துசமயக் கொள்கை வலியுறுக்கப் படுதல் காண்க இனிச் சடப்பொருளும் அதனின் வேறாகிய அறிவும் அவ்வறிவினையுடைய உயிரும், அவ்வுயிரோடியைந்து வரும் இருவினைகளும் உள்ளனவென்று மட்டும் வற்புறுத்திக் கடவுள் இல்லையெனக் கூறுவதே சமண மதமாம். இனி உலகமும் இருவினையும் உயிரும் வியவகாரத்தி லுள்ளன, பாரமார்த்திகத்திற் பரப்பிரமம் ஒன்றேயுள்ளது ஏனையவெல்லாம் பொய்ப் பொருளாம் எனக் கூறுவதே மாயாவாதமாம். இதன்கட் கடவுள் அருவமென்றே வற்புறுத்தப் படுகின்றது, இது இருளிற் பழுதை யரவெனவே யிசையு மிரவி யிருங்கதிர்க ளருளப் பழுதை மெய்யாகி யரவும் பொய்யா மதுபோல மருளிற் சகமுஞ் சத்தாகி மருவித் தோன்று மாசில்லாத் தெருளிற் சித்தே சத்தாகும் பித்தாஞ் செகத்தின் செயலெல்லாம் என்றும் அறிவா யகில காரணமா யனந்தா னந்த மாயருவாய்ச் செறிவா யெங்கு நித்தமாய்த் திகழ்ந்த சத்தாய்ச் சுத்தமதாய்க் குறிதான் குணங்க ளொன்றின்றிக் கூறும் வேதந் தனக்களவாய்ப் பிறியா தனுபூ திகந்தனக்காய் நின்ற தந்தப் பிரமந்தான் என்றும் அவர் கூறுதலால் அறியப்படும். இனி உலகமும் உயிரும் வியவகாரத்திற் போலப் பாரமார்த்திகத்திலும் உள் பொருள்களேயாம் என்றும், ஆனால், இவை வாசுதேவன் வடிவேயாய் விளங்கு மென்றும், அவ்வாசுதேவன் உருவமாகவே யிருப்பானல்லது அருவமாக இருப்பானல்லன் என்றுங் கூறுவதே வைணவ மாம். இது, மாயையா யுயிராய் மாயா காரியமாகி மன்னி மாயையாற் பந்தஞ்செய்து வாங்கிடு மவனா லன்றி மாயைபோ காதென் றெண்ணி மாயனை வணங்கப் பின்னை மாயைபோம் போனான் மாயன் வைகுண்டம் வைப்ப னன்றே என்றவர் கூறுமாற்றால் விளங்கும். இங்ஙனம் இம்மதங்களினெல்லாம் இந்துசமயக் கொள்கைகள் சில பல குறைந்தும் மிகுந்தும் வேறுபட்டும் நிற்றல் இனிதறியப்படும், இனி உலகம் உள்பொருளாதல் சாருவாகத்தானும், அறிவுஞ் சடமும் வேறு வேறாதல் பௌத்தத்தானும், உயிரும் இருவினையும் உளவாதல் சமணத் தானும், கடவுள் அருவநிலையினராய் நிற்றல் மாயாவாதத் தானும், கடவுள் உருவத்திரு மேனியு முடையராதல் வைணவத்தானும் பெறப்படுகின்றன வாகலின் இவை யனைத்தும் இந்துசமயப் பிரிவு களாதற்கு இயைந்தனவே யாம், மற்று இக்கொள்கைகளெல்லாம் தன்கண் முழுதும் அடங்கக் கொண்டு விளங்கும் இந்து சமயந்தான் சிறிதாயினுஞ் சுருங்கும் இயல்பிற்றாதலின்றித் தன்கட் பிரிந்த சமயங்களுமாய் அவற்றின் வேறுமாய் மேற்பட்டுத் தோன்றல் பெரிதும் உற்று நோக்கற்பால தொன்றாம்; இது தன்னிற் பிரிவான மதங்களில் உள்ள குறைகளை யெல்லாம் நிரப்பித்தான் எல்லா நிறைவு முடைத்தாய்ப் பொலிகின்றது. இனி இவ்விந்து சமய நிறை பொருளைச் சிறிது சிறிதே ஆராய்ந்து போய்ப் பின் அவ்விந்து சமயமாவதிதுவென்பது காட்டுவாம். அறிவு சாருவாகர் மதம் பற்றி நிலன், நீர், தீ, வளி எனப்படும் பருப்பொருள் ஒன்று சேர்ந்தவழியே அறிவு தோன்றும் என்பதற்கு இவ்வுடம்பின்கண் உட்கருவி, புறக்கருவி என்னும் உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்த வழி அறிவு தோன்று தலும், அவை வேறு வேறு பிரிந்த வழி அஃது அழிதலுமே சான்றாகலிற் சித்து எனவுஞ் சடம் எனவும் பொருள்களைப் பகுத்தல் கூடாது சடமே சித்தாம் என்று கூறுது மெனின்; உறுப்புகளெல்லாம் ஒன்று கூடிய இவ்வுடம்பு பிணமாய்க் கிடந்தவழி அதன்கண் அவ்வறிவு நிகழக் காணாமையின் அது பொருந்தாது, அற்றன்று, பிணவுடம்பில் உறுப்பின் ஒருமை நோயாற் பிறழ்ந்து போதலின் அதன்கண் அவ்வறிவு நிகழாதாயிற்றெனின்; தாமே ஒன்று கூடி அறிவைத் தோற்று வித்த உறுப்புகள் பின் நோய்வாய்ப்பட்டு அவ்வறிவை யிழந்ததென்றல் யாங்ஙனம் பொருந்தும்? அதுவேயுமன்றி அறிவில்லாப் பொருள்களான அவை தாமே ஒன்று சேரு மாறு யாங்ஙனம்? காந்தம் இரும்பைத் தன் மாட்டு வலித்துக் கொள்ளுதல் போல நான்கு பூதங்களும் ஒன்றை யொன்று வலித்துக் கொண்டு ஒருங்கு கூடின வெனின்; காந்தம் இரும்பை வலித்துக் கொண்டால் பின் தானே அதனை விட மாட்டாது; அதுபோல நான்கு பூதங்களும் ஒன்றையொன்று பற்றிக் கொண்டால் பின் அவை தாமே பிரியமாட்டா; அங்ஙனம் பிரியாவாகவே அக்கூட்டுற விற்றோன்றும் அறிவும் அழியாதாய் என்றும் விளங்கிக் கொண்டிருத்தல் வேண்டும். சிறிய காந்தக்கல்லால் வலித்துக் கொள்ளப்பட்ட இருப்பூசி பின் ஒரு பெரிய காந்தக் கல்லை எதிர்ப்படின் அதனால் இழுக்கப் பட்டு அச்சிறிய கல்லை விடுதல்போல, நாற்பூதக் கூட்டுறவும் வேறொன்றாற் கலைக்கப்பட்டு முற்றோன்றிய அறிவு அழியுமெனின்; அந்நான்கு பூதத் தினைத் தவிரப் பிறிதொன்று உண்டென்பது சாருவாகருக்கு உடம்பா டல்லாமையால் அந்நான்கு பூதக் கூட்டத் தினையுங் கலைக்க வல்லதான பிறிதொன் றுண்டென்றல் அவர்க்குப் பொருந்தாதாகும், அற்றன்று, அந்நான்கு பூதங்களுள் ஒன்று ஒரு காலத்து மிகவலியுடைத்தா யெழுந்து ஏனையவற்றின் கூட்டுறவை அழிக்குமென்று கோடுமாகலிற் பிறிதொன்று வேண்டே மெனின்; முன் அம்மூன்று பூதங்களோடும் ஒன்று சேருங் காலத்து மற்றை அந்நான்காம் பூதத்திற்கு அவ்வலிமை எங்கே போயிற்று? முன் வலி சுருங்கிய பொருளே பின் வலிமிகுதியு முடைத்தா மெனின்; அவ்வாறு முன் சுருங் குதற்கும் பின் அது பெருகு தற்குங் காரணம் என்னை; அஃது அதற்கு இயற்கையா மெனின்; அங்ஙனமுரைப்பின் ஒன்றே இயற்கையாக வேண்டு மல்லது தம்மில் மாறுபட்ட இரு தன்மைகள் ஒரு பொருட்கட் டோன்றுமெனல் சாருவாகர் மதத்திற்கே இழுக்காய் முடியும்; என்னை? இன்று ஒரு சிறிய ஊசியை மட்டும் இழுக்குங் காந்தக்கல் நாளை ஒரு பெரிய இரும்புத் தூணை இழுக்கு மெனல் வேண்டும்; இன்று பதினைந்து மணங்கு சுமக்கும் ஒரு கோல் நாளைப் பதினாயிரம் மணங்கு சுமக்குமெனக் கூறல் வேண்டும்; இன்று பத்தரை மாற்றுரை கண்ட ஒரு பொற்கட்டி நாளை இருபது மாற்றுரை காணுமெனக் கூறல் வேண்டும், அங்ஙனங் கூறிற் சாருவாகர் கூறும் இயற்கை மதம் முற்றும் போலியாய் முடியுமாதலின், கருவிகள் தாமே ஒன்றுகூடி அறிவைத் தோற்றுவிக்கு மென்றலும் பின்னொருகாற் பிரிந்து அதனை அழிக்கு மென்றலும் எவ்வாற்றானும் பொருந்தா. இனிச் சடத்தினியல்பையுஞ் சித்தினியல்பையும் சிறிது ஆராய்ந்து பார்ப்பார்க்கும் அஃதொன்றினொன்று தோன்று மெனல் பொருந்தாமை நன்கு விளங்கும், சடப்பொருளெல்லாம் ஒன்றோடொன்று ஒட்டும், பின் தாமே பிரியமாட்டா, பிறிதொன்று இயக்கினால் இயங்குந்தாமே இயங்கமாட்டா, கருவேலம் பிசினுங் கருங்கற் பொடியும் ஒருங்கு ஒட்டும் பின் பிரியா, காந்தம் இருப்பூசியைத்தானே இழுத்துத் தன்னோ டொட்டுவிக்கும் பின் அதனை விடுதல் செய்யாது, பந்தை எறிந்தால் ஓடும் தானே ஓடமாட்டாது. மற்று அறிவுப் பொருள்களோ தாமேயும் இயங்கும் பிறிதொன்றனையும் இயக்கும், தாமேயும் அறியும் பிறிதொன்றனையும் அறிவிக்கும், சிற்றெறும்பு தானேயும் இயங்குகின்றது தானே இயங்காப் பனைவட்டுச் சிறு துண்டினையும் இழுத்துச் செல்கின்றது; புறாக்கள் தாமேயும் பறக்கின்றன தங்குஞ்சுகள் பறக்கும் படியும் கற்பிக்கின்றன. இவ்வாற்றால் அறிவில்லாச் சடத்தி னியல்பும் அறிவுடைய சித்தினியல்பும் தம்முள் முற்றும் மாறுபட்டுக் கிடத்தலால் அது நாற்பூதக் கூட்டுறவிற் றோன்று மென்றல் ஒருவாற்றானும் பொருந்தாது, ஆகவே அறிவுஞ் சடமும் வேறு வேறென்னும் இந்துசமயக் கொள்கையே பொருந்தமுடத்தாதல் இனிது பெறப்பட்டது; இப்பெற்றி நன்குணர்ந்த அருணந்தி சிவாசாரியரும், அறிவு பூதம தென்னின் வேறு புறத்த றிந்தமை கண்டிலஞ் செறிவு தானுட லத்தெ னிற்சவ மான போதுட றேருமோ குறிகொ ளாதுடல் வாயு வானது கூடி டாமையி னென்னினீ பிறித ராதுயிர் நிற்க ஞானமு றக்க மென்பிற வாததே அறிவு டற்குண மென்னி லானைய தாதி யந்தமெ றும்பதா முறுமு டற்பெரி தான வற்றினு தித்தி டும்பெரி தாகவே சிறுவு டற்செறி ஞான முஞ்சிறி தாயி டும்பரி ணாமமும் பெறுமு டற்சிறி தாவ தென்பெரி தாவ தென்சில பேசிடே என்று அவற்றின் வேறுபாடு நன்கு தெரித்தோதினார். உயிர் இனிப் பௌத்தர் மதம்பற்றி இவ்வுடம்பும் இவ் வுடம்பின் வேறாய் எல்லாவற்றையும் அறிவதாகிய அறிவும் உண்டு எனக் கொள்வதல்லது, இவ்வறிவின் வேறாகிய உயிர் ஒன்றுண் டெனக் கூறல் பொருந்தாதெனின்; அற்றன்று, அறிவென்பது ஐம்பொறிகட்கும் புலப்படுவதன்றாய்த் தனியனுபவ அளவாய் உள்ள தொன்றாம், யானிதனைக் கண்டறிந்தேன், அதனைக் கேட்டறிந்தேன், இதனைச் சுவைத் தறிந்தேன்,அதனை முகந்தறிந்தேன், அதனைத் தொட் டறிந்தேன், மற்றிதனை எண்ணி யறிந்தேன் என்ற வழி யெல்லாம் அறியப்பட்ட பொருளும் அதனை அறிந்த அறிவு நிகழ்ச்சியும் எவ்வகை இயைபுடையன? பொருள் இயைபா? பண்பியைபா? பொருளியைபாயின் இந்நிலவுலகத்தில் நிற்கும் எனக்கும் இதற்கு மிகவுஞ் சேய்த்தாயுள்ள செக்கர் வானத் திற்கும் எங்கே தொடர்புளது? மற்றுப் பண்பியைபு என்று உரைப்பின் அது பொருந்தும், ஞாயிறு வான் வெளியில் ஓரிடத்திருப்ப அதன் ஒளி யாண்டும் விரிதலானும், ஒரு கற்றார் ஓரிடத்திருப்ப அவரது புகழ் யாண்டும் பரவுதலானும் பண்பையுடைய பொருள் ஓரிடத்தே யிருந்ததாயினும் அதன் பண்பு அவ் விடமட்டில் வரையறைப்படாது மேலும் மேலும் விரிந்து செல்லும் இயல்பினதாய்க் காணப்படுகின்றது, செக்கர்வான் விசும்பிற் பெருஞ் சேய்மைக்கண்ணே காணப் படுவதொன்றா யினும் அதன் பண்பான சிவப்பு நிறம் தன்னைச் சூழ விரிந்து நிறைந்திருக்கும் வெளியின் நுண்ணிய அணுக்களை அசைத்து அம்முறையே கண்ணின் மேற்பரப்பிற் சென்று, தாக்க, அங்கேநிறைந்து நிற்கும் அறிவானது அதனைப் பற்றுகின்றது, இனம் இனத்தையே பற்றும் என்னும் வழக்கால் பண்பு வடிவான சிவப்பு நிறத்தை யறிகின்ற அறிவும் பண்பு வடிவாகவே யிருக்க வேண்டுமென்பது துணியப்படும், இங்ஙனந் துணியப்படவே சிவப்பு நிறஞ் செக்கர் வானத்தை விட்டு வேறு தனித்து நில்லாமைபோலப் பண்பு வடிவான அறிவும் தான் றனித்து நில்லாதாய்ப் பிறிதொரு பொருளைப் பற்றியே நிற்கும், அப்பொருள் யாதோவெனின் அதுவே உயிர் என்று பெறப்படும் என்க. இன்னும் இவ்வறிவு உயிர்க்கு ஒரு பண்பாமென்பது `நான் அறிந்தேன் `என் அறிவு என்னும் வழக்கில் நான் என்ப தொரு பொருளும், அதனோ டொற்றுமைப்பட்ட அறிதற் பண்பும் பெறப்படுமாற்றால் இனிது துணியப்படும், `அறிவு பண்பாத லன்றிப் பொருளாயின் அவ்வாறதனை வழங்கு வதற்கு வேறொரு வாற்றானும் ஒரு காரணம் பெறப் படுவ தில்லை என்க. ஆகவே, பௌத்தர் கூறுமாறு அறிவு ஒரு பண்பிப் பொருளாக மாட்டாதென்பதும், அதனை யுடைய உயிர் வேறு தனியே யுள தென்பதும்இனிது பெறப் படுகின்றன. உருவாதி கந்தங்க ளைந்துங் கூடி யொருவன்வே றொருவனிலை யென்றுரைக்கும் புத்தா, உருவாதி யைந்தினையு முணர்பவர்யா ரென்ன வுணரும் விஞ் ஞானமென்றாய் ஞானமுணர்ந் தவரார் உருவாதி பொருள்காட்டித் தனைக்காட்டுஞ் சுடர்போ லுணர்வுபிறி தினையுணர்த்தித் தனையுணர்த்து மென்னின் உருவாதி பொருளினையுஞ் சுடரினையுங் காணு முலோசனம்போ லுணர்வுபொரு ளுணர்பவன்வே றுண்டே என்ற சிவஞானசித்தித் திருவாக்கும் இதனை வலியுறுத்தும், இனி ஏகான்மவாதிகள் மதம்பற்றி அறிவுடைய உயிர் ஒன்றே உடம்புகடோறும் வேறு வேறாய்க் காணப்படுகின்ற தென்றும், குடங்கடோறும் வேறு வேறாய்த் தோன்றும் திங்களின் வடிவு அக்குடங்கள் உடைந்த வழி யில்லையாய்த் திங்கள் ஒன்றுமே நிலைபெறுதல்போல இவ்வுடம்பு களெல்லாம் போயவிடத்து உயிர் ஒன்றாகவேயிருக்கு மென்றுங் கூறுவதே பொருந்து மென்னின்; அற்றன்று, திங்க ளினிடத்துக் காணப் படும் ஒளிவடிவும் வட்டவடிவும் அதன் நிழல்களெல்லா வற்றிலுங் காணப்படுதல்போல ஓருயிரி னிடத்துக் காணப்படும் அறிவுஞ் செயலும் ஏனை உயிர் களிடத்துங் காணப்படுதல் வேண்டும், அங்ஙனமன்றி அவை ஒவ்வொருவரிடத்தொவ் வொருவாறாய்ப் பல திறப்பட்டு நிகழக் காண்டலால் உயிர் ஒன்றே யென்னுமுரை ஒரு சிறிதும் பொருந்தாது, அற்றன்று, நீரின் அசைவாற் றிங்களின் நிழலும் அசைவதுபோற் றோன்றினும் திங்களுக்கு அவ்வசைவு வராமை போல, உடம்பின் வினைகளால் உடம்பினுள்ளிருக்கும் உயிர் துடக்குறுதல்போற் றோன்றி னும் ஒன்றே யாகிய அவ்வுயிர்க்கும் இயற்கையில் அவ் வினைத் துடக்கு இல்லையாமெனின்; ஈண்டு இவ்வுவமை பொருந்தாது, உயிரின் சேர்க்கையின்றி உடம்பு ஒரு வினை செய்ய அவ் வினை உயிரின்கட் பற்றுவதாயினன்றே நீரினசைவையும் அது பற்றுங் திங்களின் நிழலையும் அவ்வா றுவமை கூறலாம்? உயிரின் சேர்க்கையில்லா வுடம்பு சிறிதாயினும் வினையின்றிக் கிடத்தல் பிணவுடம்பின்கண் வைத்து இனிதறி யப்படுதலால், உடம்பினால் உயிர் துடக்கறு மென்றல் யாங்ஙனம் பொருந்தும்? இஃதுண்மையா னுணர்ந்த சைவ சித்தாந்த முதலாசிரியர், அவ்வுடலி னின்றுயிர்ப்ப வைம்பொறிக டாங்கிடப்பச் செவ்விதி னவ்வுடலிற் சென்றடங்கி - அவ்வுடலின் வேறொன்று கொண்டு விளையாடி மீண்டதனை மாறலுட னீயல்லை மற்று கண்டறியு மிவ்வுடலே காட்டொடுங்கக் காணாதே உண்டிவினை யின்றி யுயிர்த்தலாற் - கண்டறியு முள்ளம்வே றுண்டா யொடுங்கா துடனண்ணி லுள்ளதா முண்டிவினை யூண் என்றருளிச் செய்தார். நாலடியாரிலும் நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்த் தெடுக்கிலென் பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங் கூத்தன் புறப்பட்டக் கால் என்றிவ் வுண்மை தெருட்பட்டது காண்க. ஆகவே, உடம் பினைத் தொழிற்படுத்துவது உயிரேயல்லது உயிரினைத் தொழிற்படுத்துவது உடம்பன்றாம், அன்றாக, உயிர்கள் பலவாயும், பல திறப்பட்ட வினை நுகர்ச்சிகளுடையவாயும் இருக்குமென்பது உள்ளங்கை நெல்லிக் கனிபோற் பெறப்படு வதாம், ஆதலால், அவர் கூறும் ஏகான்மவாதம் ஒரு சிறிதும் பொருந்தாது. வினை அற்றேலஃதாக, இனி உயிர்கட்கு வினை உண்டென் பது எவ்வாறு துணியப்படு மெனின்; தாய்வயிற்றிற் கருக் கொண்டு பிறக்கும் மகவு எவ்வகைக் குற்றமுடைய தன்றாகவும், ஒன்று தான்பிறந்த குடும்பத்தால் மிக வறுமைப் பட்டுப் பெருந்துன்ப மெய்துதலும், மற்றொன்று தான் பிறந்த குடும்பத்தால் மிக்க செல்வவளம் பொருந்தி இடையறாதுஇன்பந்துய்த்தலும், ஒன்று நல்லறிவுடைய தாய்ப் பலராற் பாராட்டப்படுதலும், பிறிதொன்று தீயவறி வுடையதாய்ப் பலரால் இகழப்படு தலும், ஒன்று கலை யறிவு நிரம்பிப் பெரிய புலவோனெனப் பாராட்டப்படுதலும், ஏனையொன்று அஃதின்றிப் பெரும் பேதையென இகழப் படுதலும் என்னையென்று சிறிது ஆராய்ந்து பார்ப்பின் இவ்வகையான பல வேறுபாடுகளுக் கெல்லாம் இன்றியமை யாததான காரணம் ஒன்றிருத்தல் வேண்டுமென்பது போதரு மன்றே? அக்காரணந்தான் யாதோ வெனின், அஃதுயிர் களுக்குப் பண்டுதொட்டே அமைந்து கிடந்த வினையே யல்லது பிறிதில்லை யென்க. இவ்வுண்மை யுணர்ந்தே bgÇahU«, பேறிழ வின்ப மோடு பிணிமூப்புச் சாக்கா டென்னும் ஆறுமுன் கருவுட் பட்ட தவ்விதி யனுப வத்தா லேறிடு முன்பு செய்த கன்மமிங் கிவற்றிற் கேது தேறுநீ யினிச்செய் கன்ம மேலுடற் சேருமன்றே என்று அருளிச் செய்தனர் முற்பிறவி பிற்பிறவி இனி இப்பிறவியில் நிகழும் நிகழ்ச்சிகொண்டே உயிர் கட்கு முற்பிறவியும் பிற்பிறவியு முண்டென்பது துணியப் படும். இன்று இந்நூல் தோன்றுதலும் பயிலப்படுதலுமாகிய நிகழ்ச்சி யெல்லாம் இதற்கு முற்பட்ட நாளில் யாம் இதனை இயற்றிய செயல்களின் பயனாம் அல்லவோ? இன்று நடைபெறும்இதன் பயிற்சியெல்லாம் இனிவரும் நாட்களிற் சைவ சித்தாந்தம் மிகவுந் தழைத்தோங்கவும் அதனால் எல்லாரும் பேரறிவும் பேரின்பமு மெய்தவும் பயன்படும் அல்லவோ? இதற்கு முன்நாட்களில் தன்னுடம்பின் கூறு பாடறிந்து அதற்கியைய உண்ணவேண்டும் உணவின் வரை கடந்து வேறு பல புதிய உணாக்களைத் தான் வேண்டிய படியெல்லாம் உண்டான் ஒருவன் அப்போது அதன் பயன் அறியாது பின் பத்துநாட் கழித்து இன்று வயிற்று நோயால் வருந்தும்போது இது முன் வரம்பு கடந்துண்ட வுணவால் வந்ததென் றறியாது இஃது எனக்கு எங்ஙனம் வந்தது? எங்ஙனம் வந்தது? என்றெண்ணி எண்ணித் துயர் உறுகின் றான். பின் மருத்துவனை வருவித்து மருந்து ஊட்டப் பெறுங்கால் அவ்வூட்டப் பெற்ற அந்நேரத்தே யாயினும் அன்றி அந்நாளே யாயினும் நலம் பிறவாவிடினும், அஃதுண்ட பின்னேரத்தேனும் பின்னாளே னும் நோய் தீர்ந்து நலமெய்தல் கண்டாமன்றே? இங்ஙனமே யாம் இப்பிறவியில் இன்பதுன்ப நுகருங்கால் இப்பயன் களைத் தந்த வினைகள் முற்பிறவியில் அமைந்து கிடந்தன வென்ப தனை மறந்தோ மாயினும்,அவை உளவாதல் ஒரு தலையே யாம்.இனி முற்பிறவியிற் செய்த தீவினைகளால் இப்பிறப்பில் எய்துந் துன்பங்களை அறிவொழுக்கத்தானும் அன்பொழுக் கத்தானுந் துடைத்துக் கொண்டால் இனிவரும் பிறவியில் இன்புறுதல் ஒருதலையாமன்றோ? அற்றேலஃதாக, முற்பிறவியில் செய்தவினை இப்போ தொரு சிறிதாயினும் நினைவு கூரக் கூடவில்லையே யெனின்; நன்று சொன்னாய், `நுங்கள் இல்லத்தில் நேற்றிரவு கறித்த கறியுங் குழம்பும் யாவை?, என்று உசாவினால் அவற்றை மறந்து விடைபகரத் தெரியாமல் விழிப்பார் நம்மனோரில் எத்தனை பேர் உளர்! நேற்று நீங்கள் காலைமுதல் மாலை வரையிற் செய்தன வெல்லாம் சொல்லுக வென்றால் அவை சொல்லத் தெரியாது விழிப்பார் எத்தனைபேர் உளர்! அஃதிருக்க, முற்றும் நினைவு கூரக் கூடாவிடினும் முந்நாளிற் செய்த சிலவற்றை யேனும் பின்நாளில் நினைவு கூர்கின் றோமே யெனின்! நீவிர் குழவிப் பருவத்துச் செய்தன ஒரு சிலவேனும் இம்மனிதப் பருவத்துச் செய்தன ஒரு சிலவேனும் இம்மனிதப் பருவத்து நினைக்க மாட்டாமல் முழுதும் மறக்கின்றமையால் `யான் குழவியா யிருந்திலேன் எனக் கூறல் அமையுமோ? காலம் நீள நீள மறதியும் நீளும்; காலத்தினாற் றோன்றும் மாறுதல்கள் கணக்கிறந்தன. இன்றைக்கிருந்த ஒரு பொருளின் நிலை நாளைக்கு அவ்வாறே காணப்படுவ தில்லை, நாளை இருப்பது மற்றை நாள் காணப்படுவதில்லை. ஆ! காலத்தினாற் செய்யப்படும் புதுமைகள் என்னே! v‹nd!ஒருவனைக் குழவிப் பருவத்தில் வைத்துப் பிடித்த படமும்,மனிதப் பருவத்தில் வைத்துப் பிடித்த படமும், முதுமைப் பருவத்திற் பிடித்த படமும் ஒன்று சேர்த்துப் பார்த்தால், அம்மூன்று உருவும் மூன்று வேறு மனிதவுருக் களாய்த் தோன்றுமே யல்லாது ஒன்றாய்த் தோன்றா, ஆ! ஒவ்வொரு நொடியும் மனத்தினுங் குறிப்பிடாத அத்தனை விரைவாய் எத்தனை எத்தனை மாறுதல்கள் நிகழ்கின்றன! இந்நிலவுருண்டையானது ஒரு நொடியிற் பதினெட்டரை மைல் விழுக்காடு ஒருமணி நேரத்தில் ஆயிரத்து நூற்றுப் பத்து மைல் இடம் சுழன்று செல்வதைப் பாருங்கள்! இவ்வளவு விரைவாய்ச் சென்றும் இதன் இயக்கமும் மாறுதலும் நமக்குப் புலப்படுகின்றனவா? இல்லையே. இங்ஙனம் ஒவ்வொரு நொடியும் மனத்தினும் மிக்குச் செல்லும் அத்துணை விரைவுடன் நடைபெறும் மாறுதல் களின் இயல் புணர்ந்தே பௌத்தரிற் கணபங்க வாதிகளென ஒரு சாரார் தோன்றினர். சூறைக் காற்றினிடை யிலகப் பட்ட இலவம் பஞ்சு போல், மிக விரைந்து நிகழும் இம் மாறுதல் களின் இடைக்கிடந் துழலும் நம் உயிர்கள் அவற்றை முறை முறையேமறந்து விடுதல் இயற்கை யேயாம். இங்ஙனம் மறக்கப்படுவது பற்றி ஒரு பொருளினிருப்பு இல்லையென்று மறுக்கப்படுதல் சிறிதும் பொருந் தாதாகலின், இப்பிறப்பிற் கேதுவான முற்பிறவியும் அவற்றிற் செய்த வினைகளும் உண்டென்பது தேற்றமேயாம். இனி இப்பிறவியிற் செய்யப் படும் வினைகள் அளவிறந் தனவாகலின் இவற்றின் பயனைத் துய்த்தொழித் தற்கு மேலும் மேலும் பிறவிகள் இடையறாது தோன்று மென்க. வினைகள் உளவாங்காறும் உடம்பு ஒழியாது; இதுபற்றியே முற்றத் துறந்த பட்டினத்தடிகளும், வினைப்போக மேயொரு தேகங்கண் டாய்வினை தானொழிந்தால் தினைப்போ தளவுநில் லாதுகண் டாய்சிவன் பாதம்நினை நினைப்போரை மேவு நினையாரை நீங்கிந் நெறியினின்றா லுனைப்போ லொருவருண் டோமன மேயெனக் குற்றவரே எனவும், அன்னை யெத்தனை யெத்தனை யன்னையோ வப்ப னெத்தனை யெத்தனை யப்பனோ பின்னை யெத்தனை யெத்தனை பெண்டிரோ பிள்ளை யெத்தனை யெத்தனை பிள்ளையோ முன்ன மெத்தனை யெத்தனை சென்மமோ மூடனாயடி யேனும றிந்திலேன் இன்ன மெத்தனை யெத்தனை சென்மமோ வென்சேய் வேன்கச்சி யேகம்ப நாதனே என்று திருவாய்மலர்ந் தருளினார்கள். இனி இவையெல்லாம் பொருந்துமாயினும், முற்பிறவி உண்டென்பதற்கு மட்டுங் காட்சியளவையின் வைத்துச் சில குறிப்புகள் காட்டல் வேண்டுமெனின்; அவையுஞ் சிறிது காட்டுவாம், தாய் வயிற்றை யகன்று பிறந்த மகவினை எடுத்துப் பாலூட்டப் புகுங்கால் உலகப் பழக்கஞ் சிறிது மறியா அம்மகவு வாய்கூட்டிக் கொங்கையை இழுத்துப் பால் உண்ணல் கண்டாமன்றோ? அஃதங்ஙனமுண்ண எவ்வாறு கற்றது? என்றாராயின் அது முற்பிறவியில் அங்ஙனம் வாய் கூட்டியுண்ட பழக்கத்தால் வந்ததேயாம் என்பது நன்கு புலப்படும். இது வொன்றோ, இன்னும் அம்மகவு மக்கள் முகத்தைப் பார்த்து நகையாடத் தெரியாப் பொழுதே உறங்குங் காலத்துப் பாலொழுகும் வாய்விரித்து நகைப்பதுங் கண்டாமன்றே? அஃது அங்ஙனம் யாரைக் கண்டு நகைக்கின்றது? கனவில் நகைக்கு மென்னின்; நாமெல்லாம் நனவிற் றோன்றியதைக் கனவிற் காண்கின்றோம்; நனவிற் காணப்படாதன கனவிற்றோன்று மாயின் அவை முற்பிறவி யின் றோற்றமா மன்றோ? நனவின் பழக்கம் சிறிது மில்லாத அம்மகவுக்கு நனவுங் கனவும் ஒன்றே யன்றோ! ஆனால், நனவில் வெளி யுலாவுகின்ற அதனறிவு கனவில் உள் உலவா நிற்ப, அவ்வாறுலவுங்கால் முற்பிறவியிற் கூடிய பழக்கங்கள் சில அதற்கு நினைவிற் றோன்ற அங்ஙனம் நகையாடுகின்றது, ஆகலின், குழவிப் பருவத்துயிர்கள்மாட்டுக் காணப்படும் நிகழ்ச்சிகொண்டே முற்பிறவி யுண்டென்பது நாட்டப் படுதல் காண்க. கடவுள் இனி இருவினையே தன்னைச் செய்தோன் அறிவிற் பதிந்து கிடந்து பின்னை அவன் தன்னை நுகர்ந்து ஒழித்தற் பொருட்டு உடம்பினைத் தோற்றுவிக்கும், இதற்கு வேறொரு கடவுள் வேண்டாமெனக் கூறும் சமணர்மதம் பற்றிக் கடவுள் ஒன்றில்லையெனக் கூறினால் வரும் இழுக்கென்னை யெனின்; வினை என்பது தொழிலாகும். வினை தன்னைச் செய்தானை விட்டுப் பிரிந்திராத துண்மையேயாயினும், அவ்வினையே இவ் வுடம்பினைத் தோற்றுவிக்கு மெனல் பொருந்தாது; என்னை? அஃதோர் அறிவில்லாத நிகழ்ச்சி யாகலினென்க. அற்றன்று, வினைதானே உடம்பினைப் படைப்பதன்று, அது தன்னை யுடைய உயிரின் துணை கொண்டு அதனைப் படைக்கு மெனின்; அறிவின்றி வினை வயப்பட்டுக் கிடக் கின்ற ஓருயிர் தானே தன் வினையை நுகர்ந் தொழித்தற் பொருட்டு ஓருடம்பைப் படைக்கு மென்றல் யாங்ஙனம்? அங்ஙனம் படைக்கவல்லதாயின் முன் எடுத்த வுடம்பையே விடாதிருக்க அமையுமன்றோ? இறப்புவருங் காலத்து அவ்வுடம்பை விட வேண்டுமேயென நினைந்து நினைந்து அஃது இரங்குதல் என்னை? இவ்வாறு வினை அறிவில தாகலிற் றானே ஓருடம்பைத் தோற்றுவியா தாகலானும், வினை செய்த உயிர் அறிவின்றி வலியிழந்து கிடத்தலால் அது தானும் அதனைப் படைத்துக் கொள்ள மாட்டாமை யானும்,இவையிரண்டின் வேறாக உடம்பைப் படைக்க வல்லது பிறிதொன்று வேண்டு மென்னும் ஒழிபளவை யாற் கடவுளே அதனைப் படைக்கு மென்பதும், அது தானும் இவ்வுலகுயிர்க்கு முதலாயுளதா மென்பதும் பெறப்படும்; இஃதுணர்ந்த பெரியாரும், அநாதியே லமைவின் றென்னின் மலமாயை கன்ம மணுச்சிவன் அநாதிகன் மமணுக்கள் செய்ய வறிந்து கன்ம முடற்செயா அநாதிகா ரியமா முடற்க ளசேதனம் மணையா வறிந் தநாதியா தியமைக்க வேண்டு மமைப்பி னோடு மநாதியே என்றருளிச் செய்தனர். இனி மாயாவாதி மதம் பற்றிக் கடவுள் ஒன்றே அருவாயுளதென்றும், ஏனை யுருவுடை உலகம் முதலா யினவும் உயிரும் அதன்கட் பொய்யாத் தோன்றுகின்றன வென்றும், உண்மையான் உணர்ந்தவழிக் கடவுள் ஒன்று மட்டுமே பெறப்படுமென்றும் உரையாமோ வெனின்; தோன்றுவ தொருதோற்றம் மெய்யே யாயினும் பொய்யே யாயினும் தோன்றப் பெறுவதனால் அஃதோர் உருவ முடைத்தாதல் வேண்டுமன்றோ? கடவுள் அருவப் பொருளா மென முற்கூறிப் பின் அதன்கண் உருவுடைப் பொரு ளெல்லாம் பொய்யாய்த் தோன்றுமென்றன் முன்னொடு பின் மலைவாமன்றோ! காணப்படுகின்ற இவ்வுலகுயிர்களைக் கொண்டே காணப் படாத கடவுளை யறியவேண்டி யிருத்தலிற் காணப்படுமிவற்றை யெல்லாம் வெறும் பொய்ப் பொருளென்றொழித்தாற்பின் காணப்படாத கடவுளை மட்டும் மெய்ப்பொருளென்று துணிந்து உரைத்ததற்கு வேறொருவாற்றானும் ஒரு காரணம் பெறப்படாமையானும், உலகத்துப் பொருள் அழியாது என்றும் உளதாம் என்னும் இயற்கைப் பொருணூற் கொள்கையோடு அது முரணுத லானும்அங்ஙனங் கூறுதல் பொருந்தாதென்க. இன்னும் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுள் அருவமாக மட்டும் இருக்குமென்றொரு வரையறை கட்டிச் சொன்னால் அஃதுருவமாகின்ற ஆற்றலில்லாததென்று கொள்ளப் படுமாக லானும், அருவமாகிய வெளி உயிர் முதலிய வற்றோடொப்ப ஒன்றெனக் கொள்ளப்படுமல்லது வேறு தனியியல்பு உடைய தாகா தாகலானும் அதுவும் பொருந்தாது. இவ்வுண்மை உலகினிற் பதார்த்த மெல்லா முருவமோ டருவ மாகி நிலவிடு மொன்றொன் றாகா நின்றவந் நிலையே போல அலகிலா வறிவன் றானு மருவமே யென்னி லாய்ந்து குலவிய பதார்த்தத் தொன்றாய்க் கூடுவன் குறித்தி டாயே என்னுந் திருமொழியால் இனிது விளங்கும். மக்கள் உயிரின்நிலை அறிவும் உணர்வும் என இரு திறப்படும், அறிவைப் பார்க்கிலும் உணர்வே சிறந்ததாம், அறிவு உருவத்தைப் பற்றி நிகழும், உணர்வு அஃதின்றியும் நிகழும். உயிரின் அறிவாற் பற்றப்படாத அருவவியலுடைய முழுமுதற் கடவுள் அன்பு என்னும் உணர்வு நிலையாற் பற்றுதற் கெளியனாய் ஒரு உருவத்திருமேனி கொண்டு எழுந்தருளி வந்து அருள் புரிவனாகலின் இறைவற்கு அருவத் திருமேனி மட்டுமுண்டென்றல் இழுக்காம். இது, விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போன் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினான் முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே என்ற தமிழ்மறையானும் ஆத்மாந மரணிம் கருத்வா ப்ரணவஞ் சோத்தராரணிம் த்யாந நிர்மத நாப்யாஸாத் தேவம் பச்யேந்நி கூடவத் திலேஷு தைலம்ததி நீவ ஸர்பி ராபரோத வரணீஷுசாக்நி என்னும் வடமொழி உபநிடத மறையானும் இனிது பெறப் படும். அற்றேற் கடவுள் உண்டென்று இங்ஙனம் ஆராயும் அறிவா லஃதறியப்டுவதில்லை யாயின், இவ்வாராய்ச்சி களெல்லாம் வெறும் போலியாய் முடியும்போலுமெனின்; அற்றன்று, அறிவால் ஆராய்வதெல்லாம் கடவுள் உண்டென்ப தனை உறுதிப்படுத்துதற்கே யன்றி அதன் உண்மை யுணர்தற் கன்று. அழகிற் சிறந்த மடந்தையின் உறுப்பிலக்கணங்களை அறிந்து மகிழ்வது அறிவு நிலையாய்ப் பின் அவளோடு இணங்கி இன்ப நுகர்ந்தறி வழிதல் உணர்வு நிலையாதல் போல இறைவனுண்டென்று மட்டும் ஆராய்ந்தறிதல் அறிவின் பயனென்றும், பின் அவனோடொருமித்துப் பேரின்பத் தழுந்தல் உணர்வின் பயனென்றுந் தேறப்படும். ஆகையால் அறிவுக்கு விளங்காத இறைவன் அன்பாற் கரைந்துருகித் தேம்பும் அன்பர் உணர்வுக்கு விளங்கித் தோன்றி அருள் புரிவனாகலின் அவற்கு உருவமுண்டன்ப தொருதலையாம். இது இல்லா முலைப்பாலுங் கண்ணீரு மேந்திழைபால் நல்லாய் உளவாமானீர் நிழல்போல் - இல்லா அருவாகி நின்றானை யாரறிவார் தானே யுருவாகித் தோன்றானே லுற்று என்னுஞ் சிவஞானபோதத் திருமொழியானும் ருதம் ஸத்ய பரப்ரஹ்ம புருஷம் க்ருஷ்ண பிங்களம் ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் சங்கரம் நீலலோகிதம் என்னும் நரசிம்மதாபினி யுபநிடதத்தானும் பெறப் படுதலுடன் நமோ ஹிரண்ய பாஹவே ஹிரண்யவர்ணாய ஹிரண்யரூபாய ஹிரண்ய பதயேம்பிகாபதயே உமாபதயே பசுபதயே நமோ நம: என்னும் மந்திரம் இறைவற்குப் பொன்வண்ணம் பொற்றோள் முதலியன கூறுதலானும், மண்டல பிராமணமும் இவ்வாறே பஞ்சவக்த்ரம் உமாஸஹாயம் நீலகண்டம் ப்ரசாந்தம் அங்குஷ்டமாத்ர புருஷ: என்று கூறுதலானும், கைவல்யோபநிடதம் நெஞ்சத் தாமரையிற் பெருவிரல் அளவினனாய் ஒளிவிளக்க முடையோனாய் உறையும் முதற் பொருளை வழிபடுமாறு கூறுதற் கெழுந்து ஹ்ருதபுண்டரீகம் விரஜம்: என்று நிட்களோபாசனை சகளோபாசனை யென்னும் அருவ வழிபாடும் உருவ வழிபாடும் உடன்வகுத்துக் கூறுதலானும் தெளிவாகப் பெறப்படும்.இதனால் இறை வர்க்கு உருவ வழிபாடு சொல்லியபாகஞ் சிறிதும் உபநிடதங்களுட் காணப்படா தென்று பிரம சமாஜத்தார் கூறுவதூஉம் போலியாதல் காண்க. இனி வைணவர் கூறுமாறு இறைவனுக்கு உருவமட்டு முண்டென்று கூறாமோவெனிற்; கூறாம்; என்னை? அங்ஙனம் வரையறுத்துக் கூறின் அஃது அருவமாதற்குரிய ஆற்றல் உடையதன்றெனவும், உருவுடைப் பொருள்களான நிலன், நீர், தீ, வளி என்னும் இவற்றுள் ஒன்றாய் ஒழியுமெனவுங் கூறப்படு மாகலினென்க. என்றிங்ஙனங் கூறியவாற்றால் இந்துசமயம் எனப் படுவது இமய முதற் குமரி யீறாக யாண்டும் பொதுவாய்ப் பரவி வழங்கும் பொதுக் கொள்கைளாதலாலும், இக் கொள்கைகளுட் சில சில வெடுத்து வற்புறுத்து அவை தம்மைமட்டுங் கைக்கொண்டுவரும் சாருவாகம், பௌத்தம் முதலிய சமயங்கள் இந்துசமயப் பிரிவாய்ச் சிறியனவாய் அதன்கண் அடங்குதலும், இந்துசமயப் பொதுக் கொள்கை கள் விரிந்த இலக்கண முடையவாய் இவற்றையெல்லாம் தம் அகத்தே யடக்கி விரிதலும், இக் கொள்கைகள் எல்லா வாற்றானும் பொருத்த முடையவாய் விளங்கலும் அறி வுறுத்தப்பட்டன. இனி இவ்விந்துசமயம் எனப்படுவ தியாதென்று உண்மை யான் ஆராயும்வழி அதுவே சைவ சித்தாந்தம் என்னும் வேறு பெயரான் வழங்கப்படுவதென்பது இனிது புலப்படா நிற்கும். சடமாகிய உலகமும் சித்தாகிய அறிவும் வேறு வேறாமென்பதும், அறிவுடைப் பொருள் உயிராமென்பதும் சித்தாந்தத்தின் கொள்கைகளாம்; இதற்கு மேற்கோள்: அசத்தறியாய் கேணி யறிவறிந்த வெல்லாம் அசத்தாகு மெய்கண்டா னாயின் - அசத்தலாய் நீரி லெழுத்தும் நிகழ்கனவும் பேய்த்தேரும் ஓரினவை யின்றாமா றொப்பு இவ்வுயிர் இருவினைகளுட்பட்டுப் பிறப்பிறப்புக்களிற் சுழன்றுகொண்டு இயற்கையே அறியாமையுடைத்தாய் மாயையால் அறிவுவிளங்கப் பெற்று வரும் சித்துப் பொருளா மென்பது அசித்தரு வியாப கம்போல் வியாபக மருவ மின்றாய் வசித்திட வரும்வி யாபி யெனும்வழக் குடைய னாகி நசித்திட ஞானச் செய்தி யநாதியே மறைத்து நிற்கும் பசுத்துவ முடைய னாகிப் பசுவென நிற்கு மான்மா மாயையின் வயிற்றுண் மன்னி வருஞ்செயன் ஞானமிச்சை யேயுமிக் கலாதி மூன்றா லேகதே சத்தி னேய்ந்திங் காயுமுக் குணங்க ளந்தக் கரணங்க ளாதி யெல்லாங் காயபந் தங்களாகிக் கலந்துட னிற்கு மான்மா சூக்கும தேகி யாகித் தூலரூ பத்தின் மன்னிச் சாக்கிர முதலாயுள்ள வவத்தையுட் டங்கியெங்கும் போக்கொடு வரவு மெல்லாம் புரிந்துபுண் ணியங்கள் பாவ மாக்கியும் பலன்க ளெல்லா மருந்தியு நிற்கு மான்மா என்னுஞ் சிவஞான சித்தித் திருமொழிகளான் நன்கு துணியப்படும், இதன்கண்ணே வினைகளும் முற்பிறவி பிற்பிறவிகளு முண்டென்பது இனிது பெறப்படுதல் காண்க இனிக் கடவுள் என்பது சிற்றுயிர்களின் வேறாய் எல்லா அறிவும் எல்லா முதன்மையும் எல்லா ஆற்றலும் எல்லா இன்பமும் ஒருங்குடையதாயிருக்கு மென்பதும், அஃது அருவாய் உருவாய் அருஉருவாய் இவையும் அல்லவாய்த் தோன்றுமென்பதும், அஃது உலகுயிர்களுமாய் அவற்றின் வேறுமாய் அவற்றினுள்ளுமாய் இரண்டற நிற்கும் என்பதும், குறித்ததொன் றாக மாட்டாக் குறைவில னாத லானும் நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும் வெறுப்பொடு விருப்புத் தன்பான் மேவுத லிலாமை யானும், நிறுத்திடு நினைந்த மேனி நின்மல னருளி னாலே அருவமோ வுருவா ரூப மானதோ அன்றி நின்ற உருவமோ உரைக்குங் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னில் அருவமும் உருவாரூப மானது மன்றி நின்ற உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக்குள்ள வாமே உலகெலா மாகிவேறாய் உடனுமாய் ஒளியாய் ஒங்கி அலகிலா வுயிர்கள் கன்மத் தாணையின் அமர்ந்து செல்லத் தலைவனாய் இவற்றின் றன்மை தனக்கெய்த லின்றித் தானே நிலவுசீ ரமலனாகி நின்றனன் நீங்கா தெங்கும் என்னுஞ் சிவஞானசித்தித் திருமொழிகளான் உணர்க. இதுகாறும் கூறியவற்றாற் சைவ சித்தாந்தந் தவிரப் பிறிது எந்தச் சமயமும் இந்து சமயம் என்னும் பெயர்க்கு உரியதாகாமை காண்க. ஓம் நமச்சிவாய நம. 3. சமரச சன்மார்க்கம் எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள் 355) `சமரச சன்மார்க்கம் என்னுஞ் சொற்றொடர் `எல்லாரையும் ஒற்றுமைப்படுத்தும் உண்மை நெறி என்று பொருள் படுவதாகும். எல்லாரும் ஒன்றுபட்டு அளவளாவும் படி செய்யும் சன்மார்க்கமானது அவர் எல்லாருந் தழுவத்தக்க ஒரு பேருண்மையை இனி தெடுத்து விளங்க அறிவுறுத்து வதாகும். `உண்மை என்பது பொருள் களில் என்றும் நிலைபேறாயுள்ள இயற்கையே யாம். உலகத்துப் பொருள்கள் அளவிறந் தனவாய் இருத்த லோடு, அவை ஒவ்வொன்றுந் தத்தமக்கே உரிய சிறப்பியல்பு களும் உடையவாய் இருக்கின்றன. ஒரு பொருளின் உண்மைத் தன்மை மற்றொரு பொருளின் உண்மைத் தன்மையின் வேறாகவே காணப்படுகின்றது. பொன்னின் தன்மை வெள்ளியின் தன்மையின் வேறாகவும் இவை யிரண்டின் தன்மை செம்பின் றன்மையின் வேறாகவும் இருக் கின்றன. மா, புளி, பனை, தென்னை முதலிய மரங்களும் வேறு புற் பூண்டுகளும் தனித்தனி வெவ்வேறு தன்மைகள் உள்ளன வாயிருக்கின்றன. மானும், புலியும், ஆவும், எருமையும், கழுகும், பருந்தும், கிளியுஞ், சிவலும், குயிலும், மயிலும் தனித்தனியே ஒன்றினொன் றொவ்வா இயல்புகள் வாய்ந்தன வாய் இருக்கின்றன. மக்களிலும் ஒருவருடைய குறிகுரல் சாயல் செயல்கள் குறிப்புகள் முதலியனவெல்லாம் மற்றொரு வர் தம் குறி, குரல், சாயல், செயல்கள், குறிப்புகள் முதலியவற்றின் வேறாகவே இருக்கின்றன. ஓரினமான பொருள்களுள்ளும் ஒன்றற் கொன்று வேறான தன்மைகள் உண்டென்பதை ஒரு மானைப் போற் பிறிதொரு மான் இல்லாமையும் ஒரு மகனைப் போல் மற்றொரு மகன் இல்லாமையும் நுணுகி அறிபவர் எவரும் அறிந்து கொள்வர். ஆகவே, எவ்வெப் பொருளை ஆராயப் புகினும் அவ்வப் பொருள்களின் உண்மைத் தன்மையைத் தெரிந்து கொள்வதே மெய்யறிவு மேன்மேல் விளங்கப் பெறுதற்கு வாயிலாம் என்க. இனி உலகத்துப் பொருள்கள் எல்லாம் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளாற் காணப்படுவன வாய் அறிவில்லாத பொருள்களுமாய் இருக்கின்றன. இப்பொருள் கள் ஒவ்வொன்றன் தன்மையையும் அறியப் புகுந்தால், அவற்றின் எல்லை காண்பதற்கு நமக்குக் காலமும் இல்லை, ஆற்றலும் இல்லை, அல்லது அளவிறந்த காலம் உயிரோ டிருக்கும் வகை தெரிந்துகொண்டு, அவை முழுதும் ஒருங்கே உணர்ந்தாலும், அறிவில்லாத அப்பொருள்களின் உணர்ச்சி யால் நாம் அடையும் பயன் என்னை? ஏதும் இல்லையன்றோ? நீண்ட காலம் உயிரோடிருந்து இப் பொருள்களை அறிவே மென்பார்க்கே இவற்றால் ஏதும் பயன் விளைவதில்லை யாயின், சில வாழ்நாளும் பல் பிணியும்உடைய நம்மனோர் இவற்றை அறிவதனால் யாது பெறப்போகின்றார்? `உமி குற்றிக் கை சலித்தது போல அவ்வெறு முயற்சியால் விளைவது பெரு வருத்தமே யல்லாமல் வேறு பயன் சிறிதுமில்லை யென்க. ஆகையால், நமது உலக வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருள்களை மட்டும் நாம் சிறிது நேரம் ஆராய்ந்து, மற்றை நேரங்களையெல்லாம் மிக உயர்ந்ததோர் அரிய பெரிய உண்மையை ஆராய் தலிலேயே பயன்படுத்தி வருதல் வேண்டும். இனி உலகத்துப் பொருள்களுள் எல்லாம் ஒன்றை நோக்க ஒன்று சிறியதாய் இருத்தலால் அவற்றைப் பற்றிய உண்மைகளும் சிறிய உண்மைகளாய் இருக்கின்றன. இப்பொருள்களின் தன்மைகளை அறியுங்கால், இவை பல்வேறு வகைப்பட்டுக் கிடத்தலால், இவற்றை யுள்ளவாறு உணரப்பெறாமல் மக்கள் பெரிதும் பிழைபட்டுப் போகின் றனர், ஒரு தொகுதியாயுள்ள மாங்கனிகளுள் ஒன்றைச் சுவைத்து அதன் இனிமையை அறிந்து மகிழ்ந்தவன், அத் தொகுதியிலுள்ள மற்றக்கனிகளும் அங்ஙனமே யிருக்குமென வாங்கிப் போய் அவற்றைச் சுவைத்துப் பார்க்க அவை யெல்லாம் புளிப்பாயிருக்கக் கண்டு ஏமாந்து வருந்துதலைக் காண்கின்றேம் அல்லேமோ? உலகத்துப் பொருள்களைப் பற்றிய உண்மைகள் ஒன்றி னொன்று இயையாது பெரும் பாலும் வேறு வேறாய் தனித்து நிற்றலால், இவை சிறிய உண்மைகள் என்றும் இவற்றை அறியும் அறிவு சிற்றறிவு என்றும் சொல்லப்படுகின்றன. இனி இச்சிற்றறிவு உள்ள வரையில் உயிர்களுக்குத் துன்பம் விலகாது. பேரின்பத்தை அடையவேண்டுமென்னும் நோக்கம் எல்லா உயிர்களிடத்தும் இருத்தலால், அதனைப் பெறுதற்கு வாயிலான பேரறிவு நிகழ்ச்சி இன்றியமையாது வேண்டற் பாலதாகும். சிற்றுயிர்களான நம்மிடத்துப் பேரறிவு நிகழ வேண்டுமாயின், அது மிகப் பெரியதாகிய ஒர் உண்மையினை அறியும் வகையால் மிகுந்து நிகழுமாறு செய்வித்தல் வேண்டும். உலகத்துப் பொருள்கள் எல்லாம் ஒரு தொடர்பு படாது தனித்தனி வேறுவேறு சிறு பொருள் களாய் இருத்தலோடு அறிவில்லாதனவுமாய்க் காணப்படுத லானும், உயிர்கள் அறிவுடையனவாய்க் காணப்படினும் அவை சிற்றறிவுஞ் சிறு தொழிலும் பிறப்புப் பிணிமூப்புச் சாக்காடுகளும் உடையன வாய்த் துன்பக் கடலுட் கிடந்து உழல்வனவாய் நிலைமாறி வருதலானும்இவற்றை யறியும் அறிவெல்லாம் சிற்றறிவுக ளாகவே முடியும். ஆனதனால், எங்கும் ஒரே தொடர் புடைய முழுமுதற் பெரும் பொருளாய் விளங்குங் கடவுளை அறியும் அறிவே வேறுபாடில்லாத பேரறிவாகுமென்பது துணியப்பட்ட பொருளாம். கடவுள் எல்லையற்ற பெரும் பொருளாதலால் அதனுடைய தன்மை யும் எல்லையற்ற பெருந்தன்மையாகும்; அப் பெருந்தன்மை யின் இயல்பை உள்ளவாறு உணர்தலே ஒரு பேருண்மை யாகும், இந்தப் பேருண்மையை உணர்ந்தவர்களுக்கு, உலகத்துப் பொருள்களைப் பற்றிய சிறிய உண்மைகள் எல்லாம் தரமாகவே விளங்கும். இவ்வுண்மையை உணரும் பேரறிவு வாய்க்கப் பெற்றவர்களுக்கு எவ்வகைத் துன்பமும் வர மாட்டா. இது பற்றியே, இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (குறள் 5) என்றும், பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார் (குறள் 10) என்றும் தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனார் அருளிச் செய்தார். அது நிற்க. அங்ஙனமாயினும், கடவுள் என்று ஒரு பெரும் பொருள் உண்டென்பதற்கு அடையாளம் என்னையெனிற் கூறுவாம். அறிவில்லாத பருப்பொருள்கள் மட்டுமே கண் முதலிய பொறிகளுக்குப்புலனாகும். அறிவில்லாத பொருள் களினும் மிக நுண்ணியவாயிருப்பன பொறிகளுக்குப் புலனாகா; கல்லும் மண்ணுந் தண்ணீரும் நம்முடைய பொறிகளுக்குப் புலனாவது போலக் காற்றும் வெளியும் நமக்குப் புலனாவ தில்லையே. இன்னும் அறிவும் அறிவுடைய உயிரும், அறிவில்லாத நுண் பொருள்களைப் பார்க்கிலும் இறப்ப நுண்ணிய பொருள்களாய் இருத்தலால், அவை நமது பொறியுணர்வுக்குச் சிறிதும் புலப்பட மாட்டா என்பதை நாம் சொல்ல வேண்டுவதில்லை. என்றாலும், அறிவுடைய உயிர்ப் பொருள்களை நாம் தெரிந்து கொள்வதற்கு அறிவில்லாத பருப்பொருள்கள் கருவியாயிருந்து நமக்குப் பேருதவி புரிகின்றன. இந்த உலகமும் இந்த உடம்பும் இல்லையானால் நமக்கேதேனும் அறிவு விளங்குமா? அதனைக் கூர்ந்து நினைத்துப் பாருங்கள்! ஒருவனுடைய உயிரின் இருப்பையும் அதன் தன்மையையும் யாம் எங்ஙனம் உணர்கின்றேம்? அவன் உடம்பிற் காணப்படும் செயல்களையுங் குறிப்புகளையுங் கொண்டன்றோ? ஒருவன் ஒவியம் எழுதுவதில் வல்லவன் என்றும், ஒருவன் நெய்தற்றொழிலில் வல்லவன் என்றும், ஒருவன் கல்வியில் வல்லவன் என்றும் எங்ஙனம் அறிகின்றேம்? ஓவியத்தில் எழுதப்பட்ட வடிவங்களின் அழகைக் கண்டும், நெய்யப்பட்ட ஆடையின் நுட்பத்தைக் கண்டும், எடுத்துச் சொல்லும் சொற்களின் சிறப்பைக் கண்டும் அவ்வவா திறங்களை இனிது தெளிந்து மகிழ்கின்றேம். இங்கே ஒவியமும் ஆடையும் சொற்களும் ஆகிய அறிவில்லாப் பொருள்களின் உதவியால் அறிவுடைய உயிர்களின் மேன்மையை உணரப் பெற்றேம். இங்ஙனமே, எல்லா வற்றிற்கும் நிலைக்களமான பேரறிவுப் பொருளாய் மிக நுண்ணியதாய் விளங்கும் கடவுளினுடைய பேரறி வையும் பேராற்றலையும் இவ்வுலக அமைப்பிற் கண்டு கண்டு மகிழ்ந்து வருகின்றேம், கடவுளை அறிவிக்கும் அடையாளங்கள் அத்தனையும் அறிவில்லாத இவ்வுலகத் துப் பொருள் களிலே நன்கு அமைந்து கிடக்கின்றன. இது பற்றியன்றோ திருவள்ளுவநாயனாரும், அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு (குறள் 1) என்று உலகத்தை அடையாளமாக வைத்து இறைவனுடைய இருப்பை அறிவுறுத்தியதூஉம் என்க. ஆகவே, உலகத்துப் பொருள்களை அறியும் அறிவையே முடிவாக வைத்துக் கொள்ளாமல், அவ்வறிவு எல்லாம் வல்ல இறைவனுடைய திருவருள் நிலையைக் காட்டும் அடையாளங் களாம் என்றுட்கொண்டு இறைவனோடு ஒன்றுபட்டு நிற்றலே மக்கட் பிறவியினாற் பெறும் பெரும்பேறாம். இனி இங்ஙனம் அறியப்பட்ட இறைவன் எல்லா உயிர் களிடத்தும் ஒரே தன்மையான பேரன்புடையனாயிருக்கின்றா னென்பது அவன் செய்துவரும் அரும்பெருஞ் செயல்களால் இனிது விளங்குகின்றது, நாம் உறங்கிக் கிடக்கும்போது எவ்வகையான அறிவுஞ் செயலுந் தோன்றாமல் ஒரு பேரிருளிற் புதைந்து கிடந்ததை விழித்த பின் அறிகின்றேம் அல்லமோ? இவ்வாறே இவ்வுலகமும் உடம்பும்இல்லாமல் இருளிலேயே அழுத்திக் கிடந்தோமாயின், கடவுள் இன்ன தென்றும் உயிர்களாகிய நமது நிலைமை இன்னதென்றும் நமக்குச் சிறிதேனும் புலப்படுமா? புலப்படாதே, நமதறிவு விளங்குவதற்கு உதவியாய் நிற்கும் இவ்வுடம்புடன் கூடி நிற்பதனால் அன்றோ நாம் இவையெல்லாம் அறியப் பெறுகின்றேம்? இவ்வுடம்போடு கூடிய விடத்தும், இவ்வுலகம்இன்றி எங்கும் வெறு வெட்ட வெளியாயிருந்தால் நமக்கேதேனும் அறிவு விளங்குமா? நமது அறிவு விளக்கத் திற்கு இன்றியமையாக் கருவிகளான இவ்வுடம்பையும் உலகத்தையும் வெறும் பொய்ப்பொருள்கள் என்று சொல்வோர் கடவுளின் படைப்புத் தொழிலையே பொய்யென்று இகழ்ந்தவர் ஆவர். ஆதலால் மெய்ப்பொருள்களான இவற்றை உள்ள வாறு உணர உணர இவற்றினிடத்தே கடவுளின் பேரன்பின் அடையாளங்களைப் பிறழாமற் கண்டு வருகின்றோம். இவையனைத்தையும் கடவுள் எதற்காகப் படைத்தார்? நமக்கு அறிவினை எழுப்பி இன்பத்தைக் கொடுத்தற்கன்றோ? இறைவன் எல்லாம் உடையவராகவும், இரக்கம் உள்ளவ ராகவும் இருத்தலால் நம்மிடத்து ஏதேனும் ஒன்றைக் கைம்மாறாகப் பெற்றுக் கொள்ளுங் குறிப்பில்லாமலும், நாம் கேளாமலும் தாமாகவே இவற்றைப் படைத்துக் கொடுக் கிறார் என்பதற்கு ஐயம் ஏதேனும் உண்டோ? நாம் கேளாதிருக்கவும், நம்மிடத்தி னின்றுங் கைம்மாறாகப் பெற்றுக் கொள்வது ஒன்று இல்லாதிருக்கவும் அவர் தாமாகவே இத்தனை பேர் உதவிகளையும் நமக்குச் செய்து வருவதை எண்ணிப் பார்க்குங்கால் அவருடைய அன்புக்கு அளவே இல்லை என்பதுஇனிது பெறப்படுகின்றதன்றோ? அவர் அன்பே உருவாக விளங்குகிறார்; இவ்வுண்மை எல்லாருங் கடைப்பிடித்தற் பொருட்டே, அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும்அறிந்தபின் அன்பே சிவமாய்அமர்ந்திருந் தாரே என்று முழுத்தவம் மிக்க திருமூல நாயனார் திருவாய் மலர்ந்தருளியதும், அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லாற் பிறவாழி நீந்த லரிது (குறள் 8) என்று தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்ததும் என்க. இங்ஙனம் சொல்லுதற்கு எட்டாப் பேர் இரக்கம் வைத்து நன்மையும் நம்மினுந் தாழ்ந்த உயிர்களையும் பாதுகாத்து அறிவு விளக்கி இன்பத்தை ஊட்டிவரும் இறைவனை அறிந்து அவன் அருள்வழிச் சார்ந்து அவன்றன் உண்மை நிலையை அடைந்து இன்பவுருவாய் விளங்க வேண்டுவதுதான் எல்லாருக்கும் நோக்கமாயிருக்கின்றது. ஆனாலும், கடவுளை அடைய வேண்டுமாயின் அக் கடவுளைப் போன்ற தன்மை நம்மிடத்தும் உண்டாக வேண்டும். தீயவரைச் சேர்பவர்கள் அத்தீயவர்கட்குரிய இயல்புகளுடை யவராயிருக்க வேண்டும், நல்லவரைச் சேர்பவர்கள் அந்நல்லவர்கட்குரிய இயல்புகள் உடையவரா யிருக்க வேண்டும். அவ்வவ்வவரோடு ஒத்த இயைபு இல்லை யானால் அவர் தமக்குள் நேசம் உண்டாகமாட்டாது; அது போலவே கடவுளைச் சார வேண்டுவார்க்கு அவரோடு ஒத்த இயல்பு இன்றியமையாது வேண்டற்பாலதாகும். இனிக் கடவுளிடத் துள்ள இயல்பு பேர் இரக்கமும் பேரன்பும் பேரருளுமேயா மென்பது தெளிவாக விளங்குதலால், அவரைச் சார விரும்பும் நாமும் அவரிடத்துள்ள அவ்வுயர்ந்த தன்மைகளை நம்பால் தோற்றுவித்துக் கொள்ளல் வேண்டும். நம்மைப் போன்ற மக்களிடத்து மட்டுமேயன்றி, நம்மினுந் தாழ்ந்த எல்லா உயிர்களிடத்தும் நாம் பேர் இரக்கம் வைத்து ஒழுகுதல் வேண்டும். மற்றோர் உயிர் துன்புறுவதைக் கண்டும், அது நம்மினுந் தாழ்ந்த உயிர்தானே என்று இரக்கங் காட்டாது வன்னெஞ்சம் பூண்டு நடத்தல் மிகப் பொல்லாத தாகும். கடவுளைவிட எத்தனையோ கோடி மடங்கு நாம் தாழ்ந்தவர் களாயிருந்தும், அவர் நம்மைக் கண்டு, ஓ! இவர்கள் நம்மினும் மிகத் தாழ்ந்தவர்கள் நாம்இவர்களைக் கருதற் பாலம் அல்லம் என்று வன்னெஞ்சம் வைத்து வாளா இருக்கின்றனரா? இல்லையே. ஒரு நொடிப்பொழுதேனும் அவர் வாளா இராமல் நமக்கு வேண்டிய நலங்களை யெல்லாம் உதவி நம்மைத் துன்பத்தினின்றும் தூக்கி யெடுத்துக் கொண்டே வருகின்றா ரன்றோ? நம்மால் மிகப் புல்லியவாகக் கருதப்படுகின்ற சிறிய புழுவிற்கும் உடம்பைப் படைத்துக் கொடுத்திருக்கின்றார்; நமக்கும் நம்மினும் மிக்க தேவர்களுக்கும் உடம்புகளைப் படைத்தருளியிருக்கின்றார். அவர் தாம் குறித்த காலம் வரையில் அச்சிற்றுயிர்களை அவ்வுடம்புகளில் வைத்துப் பாதுகாத்து வருகின்றார்; நம்மையும் அங்ஙனமே பாதுகாத்து வருகின்றார்! இனி அக்கால முடிவில் அவ்வுடம்புகளைச் சிதைத்து அழிப்பது போலவே நம்முடம்புகளையும் அழிக்கின்றார். எவன் எந்த வுடம்பைப் படைத்தானோ அவனே அதனை அழித்தற்கும் உரியவன் ஆவான். நாம் ஒரு சிறுபுழுவின் உடம்பைக் கூடப் படைக்க வல்லவர்களாய் இல்லாதபோது, நாம் எந்த உடம்பையேனும் இரக்கமின்றி அழிக்கக் கனவிலும் நினைக்கலாமா? அங்ஙனமாயின் இரக்கமுள்ள கடவுள் மட்டும் தாம் படைத்த ஓருயிரின் உடம்பைப் பின் இரக்கமின்றி அழிக்கலாமோ வெனின்; தன் புதல்வனுக்குத்தான் அமைப்பித்துக் கொடுத்த சட்டை அவனால் அணியப்பட்டுப் பழுதாய்ப் போன பிறகு, அதனைக் களைந்து வேறொரு நல்ல புதிய சட்டை செய்வித்துக் கொடுக்குந் தந்தையைப் போல, நம் பெருமானும் தான் ஓருயிர்க்குப் படைத்து உதவிய உடம்பாகிய சட்டை பழுதாய்ப் போனமை கண்டு வேறொரு நல்ல புதிது கொடுக்கவே அதனை நீக்கினானாகலின் அஃதவன் இரக்க இயல்பின் உயர்வையே புலப்படுத்துகின்றதல்லாமல் அது மாறுபட்ட தெனச் சிறிதும் உணர்த்துகின்றிலது. ஆகவே, நாம் எந்த உயிரின் உடம்பையுஞ் சிதைத்தலும் ஆகாது, சிதைத்து அதன் ஊனை உண்டலும் ஆகாது. அவ்வாறன்றிக் கன்னெஞ்சங் கொண்டு ஓருடம்பை அழித்து அதன் ஊனை உண்பவர்கள், இரக்க இயல்பை இழத்தலோடு, கடவுளுக்கு மாறாய் அவருடைய படைப்பின் நோக்கத்தையுங் கெடுத்த லால், அவர்கள் ஒரு காலத்தும் இறைவனுடைய அருளைப் பெறவே மாட்டார்கள் என்பது திண்ணம்; எக்காலத்தும் அவர்கள் துன்பத் தீக்கடலுட்பட்டுக் கரை காணாது வருந்தித் தவிப்பார்கள். இனி, மக்களாய்ப் பிறந்த நாம் எல்லாம் நம்முள் இடையறாத பேரன்பு பாராட்டி நடத்தல் வேண்டும். கடவுள் எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் உடையவ ராயிருத்தலோடு அவற்றினிடத்தே பேரன்பும் வைத்திருக் கின்றார். நாமும் அதுபோலப் பேரன்பு உடையவர்கள் ஆனாற்றான் கடவுளை அணுக முடியும். பகுத்தறிவில்லா உயிர்களிடத்து இரக்கமாகிய அன்பும், பகுத்தறிவுள்ள மக்களிடத்து எல்லையற்ற அன்பும் வைத்து நடந்தால் நாம் கடவுளின் உண்மைப் புதல்வர்கள் ஆவம். ஒருவன் தன்னுடன் பிறந்தாரினும் தன்னைப் பெரியனாக எண்ணி இறுமாந்து, அவரை இகழ்ந்து, அவர் துன்பங்களைப் பாராது ஒழுகுவனாயின் அவன் தந்தை அவனை விரும்பு வாரா? அதுபோலவே, ஒரே கடவுளின் மக்களாகிய நாமும் நம்முள் அன்பின்றி நம்மையே நாம் பெரியராக எண்ணிப், பிறர் துயர் களையாது இறுமாந்து நடப்பமாயின், நம் முழுமுதற் றந்தையாகிய கடவுளும் நம்மைக் கண்டு பெரிதும் அருவருப் படைவர் என்பது உண்மையேயாம். அன்புக்குப் பகைமை யாவது தன்னையே யுயர்வாக நினைக்கும் இறுமாப்பு ஒன்றேயாம். இறுமாப்பு உடையவனைக் கண்டு எல்லாரும் வெறுப்படைவதை நாம் நாடோறுங் கண்டு வருகின்றோம். இறுமாப்புடையவர்களுக்கு எவரிடத்தும் அன்பில் லாமையையும் நாம் கண்டு வருகின்றோம். எல்லாம் வல்ல இறைவனே தன்னுயர்வைத் தான் சிறிதும் பாராமல், கடைப்பட்டவர்களான நம்மிடத்தும் சிற்றுயிர்களிடத்தும் அன்பும் இரக்கமும் வைத்து உதவிபுரிந்து வருவதை நாம் நன்றாகத் தெரிந்திருந்தும், உயர்வு சிறிதுமில்லாத புல்லர் களான நாம் நம்மை உயர்வாகக் கருதி நம்மனோ ரிடத்து அன்பின்றி நடத்தல் எவ்வளவு பேதைமை! மலமும், செந்நீரும், அழுக்குஞ், சளியும், குடரும், நிணமும் வழியும் புழுப்பாண்டங்களாகிய மக்கள் தம்முள் ஒருவர் தம்மை உயர்வாகவும் பிறரைத் தாழ்வாகவும் நினைந்தொழுகு தலினும் பிறிதோர் அறியாமை உண்டோ சொல்லுமின்! ஒருவரிடத்துத் தகாத செயலும், தாழ்ந்த நடையும் இருக்கக் கண்டால் அவரிடத்து இரக்கவும் அன்பும் மிகுதியும் வைத்து, அவரைத் திருத்தித் தம்மோடொப்ப வைத்து நலம் பாராட்டி அன்பினால் அளவளாவுதலே நாம் செயற் பாலதாம்; அங்ஙனம் செய்தல் ஒன்றே நாம் இறைவன் திருவருளைப் பெறுதற்கு ஏற்ற வழியாகும். பிறர் துன்பத்தால் வருந்துவதைப் பார்த்த விடத்து உடனே அவர் துன்பத்தை நீக்க முயலுவதே நமது கடமையாயிருக்க, அதனைச் சிறிதும் நினையாது தமது நலத்தையே பேணுதல் எவ்வளவு கொடுமை! அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தன்நோய்போற் போற்றாக் கடை (குறள் 315) என்ற திருக்குறளின்படி அங்ஙனங் கொடுமை செய்து நடப்பவர் கற்றவரேயாயினும் அவர் அறிவில்லாக் கயவரேயாதல் உண்மை. வந்த விருந்தினர் பசியோடு புறத்தே வருந்தியிருக்க, அதனை நினையாது அகத்தே தம் பாழ்வயிறு நிரம்பச் சோற்றையிட்டு மகிழ்வோர் மக்கட் பிறப்பின ரென்றும் எண்ணப்படுவரோ? விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று (குறள் 82) என்னுந் தெய்வப் புலவர் திருமொழியால் விருந்தினரைப் புறத்தே வைத்துண்ணுதலினும் அறக்கொடியது வேறில்லை யென்பது தெளிந்தாம் அல்லமோ? பிறப்பளவிலே தம் மனம் போனவாறு உயர்வு தாழ்வுகளைக் கற்பித்துக் கொண்டு ஒருவரோடொருவர் அன்பின்றிப் பகைகொண்டு இறுமாந்து நடத்தல் மக்கட் பிறப்பின் பயனையும் இறைவன் திருவருட் பேற்றையும் இழத்தற்கே வழியாம் என்க. இனி நம்மினுந் தாழ்ந்த கூன், குருடு, சப்பாணி மாட்டாதார் முதலியோரிடத் தெல்லாம் இரக்கமும் அன்புங் காட்டுவதோடு, அன்பின் முதிர்ச்சியான அருளுங் காட்டுதல் வேண்டும்,அவர்களிடத்து ஏதொன்றனையும் எதிர்பாராமல் அவர்கட்கு இன்றியமையாது வேண்டும் எல்லா உதவிகளும் செய்து அவர்களைத் தூயராக்குதல் வேண்டும், அவர்கள் தாம் முற்பிறவிகளிற் செய்த தீவினை பயத்தால் உறுப்புகள் குறைந்தும் வலிவிழந்தும் பிறந்து வருந்துகின்றமையால், அவர்போல் நாமும் நடந்தால் நமக்கும் அவ்வாறே குறைந்த பிறவிகள் வரும் என்பதை ஒவ்வொருவரும் நன்கு நினைந்து பார்த்து, அவரிடத் தெல்லாம் அருள் கனிந்து ஒழுகுதல் வேண்டும். `அவர்களைக் குறைவுள்ள தாழ்ந்த பிறவியினும், என்னைக் குறை வில்லாத உயர்ந்த பிறவி யினும் வைத்தது வினையே யாகையால், யாம் அவர் களுக்கு உதவி செய்யக் கடமைப்பட்டிலேம் என்று உரைப்பவர்கள், தம்மை அவர்கள் நிலைமையில் வைத்துப் பார்த்தால் உடனே தமது எண்ணத்தை மாற்றி விடுவார்கள். தாம் ஒருவர் வீட்டுப் புறந்திண்ணையிற் காதடைத்து நாவறண்டு நெஞ்சுலர்ந்து பசித்துக் களைத்துக் கிடக்கும்படி நேர்ந்த காலத்துத், தம்மை அவ்வீட்டாரேனும் பிறரேனும் ஏனென்று கேளாதும் பாராதும் போவராயின் அங்ஙனம் வினைப்பயனை மேலெடுத்துப் பேசின அவர் ஏதுதான் நினைப்பர்! அவர்கள் கேளாதும் பாராதும் போனதும், தாம் எவராலும் பேணப் படாது வறிதே வருந்திக் கிடந்ததும் எல்லாம் வினைப்பயன் என்று எண்ணிக் கிடப்பரோ? கிடவார் அன்றே. தாம் வினைப்பயனால் வருந்தினாலும், அதனால் விளையும் வருத்தத்தைத் திருவருளுதவி கொண்டு நீக்கும் நல்லோர் துணையை நாடியே இருப்பர். ஒருவர் ஓர் ஆட்டை அறுப்பது கண்டு `அவர் அதனைத் தமது உணவுக்குக் கொள்கின்றார்; அஃது அதன் வினை; நாம் அதனை விலக்கக் கடவம் அல்லம் என்று வாளா இருந்தவர் தம்மை ஒரு புலி பிடிக்க வருங்காலத்துப் பிறர் அதனைக் கண்டு விலக்காது `இப்புலிக்கு இரையாக வேண்டுவது இவர் வினையாதலின், இதனை யாம் விலக்கற் பாலம் அல்லம் என்று கூறிப் போவாராயின், அது கண்டுஅவர் நெஞ்சம் பதையாது வாளா இருக்குமோ? இராதன்றே. ஆகையால், வினையினால் நேரும் தீய செயல்களைத் தமது தூய அறிவினாலும் திருவருட்டுணை யினாலும் முயன்று விலக்க முந்தும் நல்லோர் அருட்டன்மை உண்மைச் சிவ குணமாம் என்று தெளிந்து கொள்ளல் வேண்டும்.இவ்வாறு இரக்கமும் அன்பும் அருளும் எல்லையின்றி மிகப் பெற்றோர் களங்கம் அற்ற தூய உயிர்களாய் இவ்வியல்புகளுக்குத் தூய நிலைக் களனான சிவத்தாற் பற்றப்பட்டு அச் சிவத்தில் அழுந்திச் சிவ வடிவாய் நிலைமாறாமல் நிற்பரென்பது உண்மை. இவ்வாறு இறைவனது உண்மைப் பெருநிலையை இனி துணர்ந்து, அவ்வுணர்ச்சி வலியால் இரக்கமும் அன்பும் அருளும் முதிருமாறு இவ்வுலகத்தின்கண் உள்ள எல்லா வுயிர்களையும்இறைவற் கிருப்பிடமாய்க் கண்டு பழகவே எல்லாரும் துன்பத்தின் நீங்கிப் பேரின்பத்தின் வைகுவர். இதுதான் எத்திறத்தவரும் உடன்பட்டுத் தழுவுதற்குரிய `சமரச சன்மார்க்கம் என்னும் முடிந்த பேருண்மை நெறியாம் என்க. 4. கடவுளுக்கு அருளுருவம் உண்டு அன்பர்கள் சிலர் கடவுளுக்கு உருவம் இல்லை யென்றும், மக்களுக்குரிய கண், கால் முதலிய உறுப்புகளின் வடிவங்களை அவர்க்கேற்றிக் கூறுதல் குற்றமாமென்றும் கூறுகின்றார்கள். ஆயினும் கடவுளின் உண்மை நிலையை நுணுகி ஆராயுங்கால் அவர்க்கும் உருவம் உண்டென்பது புலனாகின்றது. உருவமென்னுஞ் சொல்லைக் கேட்டவள வானே அதனைக் கடவுளுக்குக் கற்பித்தல் வழுவாமென்று நினைத்தலாகாது. உருவம் மூன்று வகைப்படும்; அறிவில் லாத கல், மண், நீர், நெருப்பு முதலியவற்றின்கண் அமை வதூஉம், அறிவோடு கூடிய உயிர்களுக்கு இருப்பிடமான பலவகை உடம்புகளில் அமைவதூஉம், இவற்றிறெல்லாம் மேலதான அறிவின் கண் அமைவதூஉம் என மூன்றாம். அறிவில்லாப் பொருள்களில் அமைந்த உருவமானது அப்பொருள்கள் கலங்கலாய் நின்ற நிலையை விட்டு ஓர் ஒழுங்குபட்ட விடத்தே உளதாவதாம். வடிவு தெரியாமல் நின்ற நீராவியானது குளிரால் இறுகி நீராய் இறங்கும்போது வடிவுடையதாகின்றது. நுண்ணிய அழல் உருவா யிருந்த ஆவியிலிருந்து இந்த நிலவுலகமும் ஞாயிற்று மண்டிலம், திங்கள் மண்டிலம் முதலியனவும் உருவாய்த் திரண்டு தோன்றிய பின்னர்த்தாம் அவை மக்களும் பல்லுயிர்களும் உயிர் வாழ்வதற்கு இடமாய்ப் பயன்படுவவாயின. இங்ஙனமே ஆவியாயிருந்த எல்லாப் பொருள்களும் உருவாய்த் திரண்டு வெளிப்பட்ட பின்னரே அவை பயன் பெரிதுடையவாதல் தேறற்பாற்று. இனி அறிவுடைய உயிர்கட்கு இருப்பிடமான பல திறப்பட்ட உடம்புகளும் ஆவி வடிவில் நின்றக்கால் உயிர் களுக்குப் பயன்படாதனவாய் இருந்தமையும்,அவை ஓர் ஒழுங்குபட்டு உடம்புகளாய்த் தோன்றிய பின்னர் அவ்வுயிர் களுக்குப் பெரிதும் பயன்படுவனவாய் அமைந்தமையும் உணரற்பாலனவாம். ஆறறிவுடைய மேலான மக்கட்பிறவி யெடுத்த நம்மனோர் தத்த முடம்புகளில் இருந்து வாழாராயின் அவரெல்லாம் அறிவு விளங்கப் பெறுவரோ? மக்களுடம்பி லமைந்த கண், செவி முதலான உறுப்புக்கள் எத்துணை வியப்பான உருவ அமைப்போடு பொருந்தி மக்கள் அறிவு விளக்கத்திற்கு உதவியாய் நிற்கின்றன! இவ்வுருவ அமைப்புகளும், உடம்புகளும், இல்லாதொழியின் மக்கள் அறிவு நிலை என்னாம் என்பதனை நாம் எடுத்துச் சொல்லுதலும் வேண்டுமோ? கண் பழுதான குருடனும், காது கேளாத செவிடனும், வாய் பேசாத ஊமனும், கை கால் குறைந்த முடவனும் எவ்வளவோ அறிவு விளக்கத்தை யிழந்து எவ்வளவு துன்புறுகின்றார்கள்! இதனால் உருவ அமைப்புகள் திருத்தமாய் முதிர முதிர மக்கள் அறிவும் முதிரு மென்பதும் புலனாகின்றதன்றோ? இனி அறிவின்கண் அமைந்த உருவத்தின் மேன்மையும் ஒரு சிறிது ஆராய்தல் வேண்டும்.தாயின் கருப்பையிலிருந்து பிறந்த மகவுக்கு உள்ள அறிவின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்! அதன் அறிவு எவ்வளவு மழுக்க மடைந்திருக் கின்றது! அந்த நிலையில் அதற்கும் அறிவில்லாக் கல்லுக்கும் வேறுபாடு மிகச் சிறிதேயாம். கல் ஏதொரு முயற்சியுமில்லாது கிடக்க அம்மகவோ வாய் திறந்து அழுதலும் பால் பருகு தலும் ஆனமுயற்சி உடையதாய் இருத்தலே அது கல்லின் வேறுபட்ட தன்மை உடையதென்று நமக்கு அறிவிக்கின்றது. அக்காலத்தில எதனையும் நினைக்கவாவது, அறியவாவது, உணரவாவது அது வல்லதன்று. அங்ஙன மிருந்த அம்மகவு பசியால் உந்தப்பட்டுப் பால்பருகியும், அப்பாலைத் தரும் அன்னையை அறிந்தும், அதன்பின் தந்தையையும் உலகத்துப் பல பொருள்களையும் படிப்படியே அறிவதாகியும் சிறிது சிறிதாய் அறிவு விளங்கப் பெறுகின்றது, அங்ஙனம் அதன் அறிவு மழுங்கியிருந்த நிலைக்கும் விளங்கி வரும் நிலைக்கும் வேறுபாடு என்னையெனின்;அழுக்குப் படிந்த கண்ணாடியில் ஏதோர் உருவமும் தோன்றாமைபோல மகவின் அறிவில் ஏதோர் உருவமும் தோன்றா திருந்தமையே மழுங்கிய நிலையென்றும், இனி அஃது உலகத்துப் பொருள்களை அறிய அறிய அப்பொருள்களின் வடிவத்தோடு ஒத்த உருவம் அதன் அறிவின்கண் விளைதலின் அதுவே அதன் அறிவு விளங்கும் நிலையென்றும் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும். எனவே, அறிவில் உருவங்கள் தோன்றாதிருந்த வரையில் அவ்வறிவு மழுங்கிக் கிடக்குமென்பதும், அவ்வுருவங்கள் தோன்றத் தோன்ற அவ்வறிவு மிகுதியும் விளக்கமுடையதா மென்பதும் இதுகொண்டு அறியற் பாலனவாம். எவனுடைய அறிவு திருத்தமான உருவங்கள் மிகுதியும் உடைய தாகின்றதோ அதுவே மிகச் சிறந்த அறிவாய்த் திகழ்கின்றது. ஆதலால் அறிவும் ஓர் ஒழுங்குபட்ட உருவமுமடையதாய்த் திகழத் திகழ அதுவும் மிகச் சிறப்பெய்துமாறு உணரற்பாற்று. இங்ஙனமாக அறிவில்லாப் பொருளும், அறிவுள்ள உயிரோடு கூடிய உடம்பும், மக்கள் அறிவும் உருவுடையன ஆக ஆக நிரம்பவுந் திருத்தமுற்றுப் பயன்படுதலும் விளக்க மெய்துதலும் நமது வழக்கத்தில் மறுக்கப்படாத உண்மை யாய் இனிது அறியப்படுதலின், உருவம் பெற்றிருத்தல் குற்றமாமென்று கூறுவது பொருந்தா உரையாம்.அறிவுப் பொருளிலும் அறிவில்லாப் பொருளிலுங் காணப்படும் உருவங்களே குற்றமில்லாதனவாய்ப் பயன்மிக உடையன வாய் விளங்குமாயின் பேரறிவுப் பொருளாய் எல்லாம் வல்லதாய் உள்ள கடவுளிடத்தே காணப்படும் உருவம் குற்றமுடைய தாகுமோ? நன்கு ஆராய்ந்து பார்மின்கள்! இனி அறிவில்லாப் பொருள்களிற் காணப்படும் உருவங்களைக் காட்டினும் அறிவுள்ள உயிரோடு சேர்ந்த உடம்புகளிற் காணப்படும் உருவங்கள் சிறந்தனவாய் இருத்தல் போலவும், உடம்புகளிற் காணப்படும் உருவங்களைக் காட்டினும் உயிர்களின் அறிவிற் காணப்படும் உருவங்கள் மிகச் சிறந்தனவாய் இருத்தல் போலவும் பேரறிவுப் பிழம்பான இறைவனிடத்தே காணப் படும் உருவங்கள் மிக மிகச் சிறந்தனவாய் இருக்கு மென்பதையாம் உரைத்தலும் வேண்டுமோ? அங்ஙனமாயின் உருவுடைப் பொருள்கள் எல்லாம் சில காலத்துள் அழிந்து போதலைக் காண்கின்றோமாதலின் அதுபோல் உருவுடைய கடவுளும் அழியுமென்பது பெறப் படுமே எனின்; அங்ஙனமன்று. அறிவில்லாப் பொருள் களிலுள்ள உருவம் மட்டும் அழிவு பெறுமே யல்லாமல், அறிவின்கண் உள்ள உருவம் ஒரு ஞான்றும் அழிவுறாது. சிற்பவித்தையிற் றேர்ந்த ஓர் அறிஞன் சலைவைக் கல்லிற் செதுக்கித் திரட்டிய ஓர் அழகிய உருவம் அழிந்து போமாயினும், அதற்கு முதலாய் அவன் அறிவில் நின்ற உருவம் ஒரு ஞான்றும் அழிவதில்லை, அவன் தன் அறிவின்கண் அமைந்த அவ்வுருவத்திற்கு இசையச் சலவைக் கல்லின்கண் அது போன்ற எத்தனையோ வடிவங்களை அமைக்க மாட்டுவான். இங்ஙனம் வல்லவனான அவ்வறிஞனின் அறி வுருவம் ஒரு ஞான்றும் அழியாமையை நன்குணர்ந்தவர்கள் கடவுளின் அருளுவம் அழியுமென்று கூற ஒருப்படுவார் களோ? ஆதலாற் கடவுளின் அருளுருவம் ஒரு ஞான்றும் அழியாத தொன்றாகலின் உருவங்களெல்லாம் அழியுமெனப் பொதுப்படக் கூறுதல் ஒருசிறிதும் பொருந்தாத தொன்றாம். இனி உருவுடைய அறிவில்லாப் பொருள்கள் அழிந்து போதல் உருவத்தினால் வந்த குற்றமன்று, அவை பருப்பொருள்களாய் இருத்தலினால் அழிகின்றன என்றும், அவையும் நுணுகிய நிலையை அடைந்த வழி அறியாமல் இருக்குமென்றும் கடைப்பிடித்தல் வேண்டும் அறிவின்கட் காணப்படும் உருவம் என்றும் அழியாமல் ஒரே தன்மையாய் நிற்க, அறிவில் பொருளின்கண் உள்ள உருவமே அழியும் வகையை உற்றுணர வல்லார்க்கு அஃது அவ்வப் பொருளின் தன்மையால் நேர்ந்ததன்றி உருவத்தினால் நேர்ந்ததன் றென்பது தெள்ளிதிற் புலனாம். அறிவு மிக நுணுகிய இயல்பினதாகலின் அதன்கண் உருவம் என்றும் அழியாத இயல்பிற்றாயும், அறிவில் பொருள் பருப்பொருளாதலின் அதன்கண் உருவம் அழியும் இயல்பிற்றாயும் நிற்றல் நுண்ணுணர்வினாரெல் லார்க்கும் விளங்கற் பாலதேயாம். இனி, உலகத்திலுள்ள அறிவிலாப் பொருள்களும், அறிவுடைய உயிர்ப் பொருள்களும் உருவங்களைப் பெற்றது தத்தம் முயற்சியினால் அன்று. என்னையெனின், அறிவில்லாப் பொருள்கள் தாமாகவே ஒர் உருவத்தை அமைத்துக் கொள்ள மாட்டா. அறிவுடைய சிற்றுயிர்களோ தாம் உருவங் களைப் பெறுவதற்கு முன் அறிவு மழுங்கிக் கிடந்தமையால் அவைகளும் உருவங்களைச் செய்து கொள்ளமாட்டா. கலங்கிய நிலையில் ஏதோ ருருவமுமின்றி இருந்த எல்லாப் பொருள்களும் உருவங்களைப் பெறுதற்கு ஒரு பேரறிவின் உதவி இன்றியமையாத தென்பது சிறிது ஆய்ந்துணர வல்லார்க்கும் இனிது விளங்கும். அதனால் அத்தகைய பேரறிவு வாய்ந்த கடவுளொருவர் உண்டென் னும் உண்மை ஐயமின்றித் துணியப் படுவதாகும். இவ் வுலகத்திற் காணப் படும் எல்லா உருவங்களுக்கும் முதல் கடவுளுடைய அறிவின் கண் உண்டென்பதும் இது கொண்டு முடிக்கப்படும். ஓவியக்காரன் வரையும் ஓவியங் களின் உருவங்களுக்கெல்லாம் முதல் அவன் அறிவின்கண் அமைந்திருத்தல் போலவும், சிற்பம் வல்லான் ஒருவன் அமைக்கும் பாவைகள், உருக்கள், கட்டிடங்கள் முதலான வற்றின் வடிவங்கட்கெல்லாம் முதல் அவன் அறிவின்கண் அமைந்துகிடத்தல் போலவும், காவியங்கள், கதைகள், அறிவுநூல்கள் முதலியவற்றிலெல்லாம் உள்ள உண்மை களின் வடிவங்களுக்கு முதல் அவற்றை இயற்றிய புலவனறி வின்கண் விளங்கி நிற்றல் போலவும், இவ்வுலகு உயிர்களிற் காணப்படும் எல்லா வடிவங்களுக்கும் முதல் கடவுள் அறிவின்கண் உண்டென்பது திண்ணமாம். பருப்பொருளிற் காணும் வடிவங்கள் சிலபல காலத் துள் அழிந்துபோதல் போலஅறிவுப் பொருளில் அமைந்த உருவங்கள் அழியாது எஞ்ஞான்றும் நிலைபெற்றிருக்கு மென்பது மேலே காட்டப்பட்டமையின், கடவுள் அறிவின் கண் உள்ள எல்லையற்ற உருவங்கள் அத்தனையும் ஒரு காலும் அழியமாட்டாவென்று கடைப்பிடிக்க பிரெஞ்சு தேயத்திற் புகழ்பெற்று வயங்கிய இயற்கை நூற்புலவர் பாரடக் என்பார் நுண்ணிய பொறிகள் பலவற்றின் உதவி கொண்டு பல்லாண்டுகளாக ஆராய்ந்து கண்ட முடிபுகளும் அறிவுக்கு உருவமுண் டென்பதையும், அஃது ஏனை உருவங் களைப் போல் அழியாது என்றும் நிலை பேறாயுளதா மென்பதையும் இனிது நாட்டுகின்றன. இவைகளை எல்லாம் ஆராய்ந்து பாராமற் கடவுளுக்கு உருவமில்லை யென எளிதில் கூறிவிடுவது அறிவு வளர வேண்டுவார்க்கு முறையாகாது. அது கிடக்க. இனி, உலகத்தின்கட் காணப்படும் எல்லாப் பொருள் களின் வடிவங்களும் - அவை எத்துணை இழிந்தனவாயினும், அன்றி எத்துணை உயர்ந்தன வாயினும், அவை எத்துணைச் சிறியனவாயினும், அன்றி எத்துணைப் பெயரியனவாயினும் - எல்லாம் மக்களாலாவது, ஏனை உயிர்களாலாவது அன்றி அறிவில்லாப் பொருள்களாலாவது தாமாக அமைக்கப் பட்டன வல்லவே! அவையெல்லாம் முழுமுதற் கடவுளின் அறிவால் ஆக்கப்பட்டன வல்லவோ? அவ்வறிவால் ஆக்கப்பட்ட அவ்வடிவங்கள் அத்தனைக்கும் முதலான நுண்ணிய உருவங்கள் அதன் அறிவின்கண் அமைந்து கிடப்பன வல்லவோ? ஒரு கண்ணாடியின் பக்கத்தேயுள்ள பொருள்களின் வடிவங்களோ டொத்த வடிவங்கள் அக்கண்ணாடியின்கண் விளங்கித் தோன்றுதல் போல இறைவனது பேரறிவாகிய பெருங் கண்ணாடியின் எதிரே யுள்ள எல்லாப் பொருள்களின் வடிவங்களையும் ஒத்த அருள் உருவங்கள் அதன்கண் விளங்கித் தோன்றுமல்லவோ? ஆதலால், மக்கள் உலகத்திலுள்ள எந்தப் பொருளைக் கடவுளாக நினைந்து வணங்கினாலும் அவ்வணக்கம் அப்பருப்பொருள் உருவத்தின்கட் செல்லாதாய், அதற்கு முதலான இறைவனதுஅருட்பொருள் உருவத்தின்கட் செல்லுமென்பதும், அங்ஙனஞ் செல்லவே அவர்க்கு அவ்விறைவனருள் கிடைக்குமென்பதும் உறுதியாம். கடவுள் அருளின்கண் எல்லா உருவங்களும் உண்டென்பதற்குக், குறித்ததொன் றாகமாட்டாக் குறைவில னாத லானும் நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமையானும் வெறுப்பொடு விருப்புத் தன்பான் மேவுத லிலாமை யானும் நிறுத்திடும் நினைந்த மேனி நின்மல னருளி னாலே என்னும் சிவஞான சித்தியார்த் திருமொழியே சான்றாம். எந்த வடிவில் வழிபடுவார்க்கும் இறைவனருள் உண்டென்பதற்கு, விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்தே எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாமே என்னும் திருநாவுக்கரசு நாயனார் திருமொழியே சான்றாகும். இனிக் கடவுளுக்கு உருவமில்லை யென்றும், அவர் அருவமாகவே இருப்பாரென்றும், அவர் குணமற்றவ ரென்றும், அதனால் நிர்க்குணோபாசனையே சிறந்த தென்றும் நன்றாய் ஆய்ந்து பாராமற் கூறுஞ் சொற்கள் பொருளற்ற புன்மொழிகளாய் இருக்கின்றன. ஏனெனிற், பேரறிவுப் பொருளாகிய அதற்கு அறிவும், பேரருட் பொருளாகிய அதற்கு அருளும், பேரின்பப் பொருளாகிய அதற்கு இன்பமும், பெருவல்லமைப் பொருளாகிய அதற்கு வல்லமையும் அரிய பெரிய குணங்களாயிருக்க அதனைக் குணமற்ற நிர்க்குணப் பொருள் என்பது எவ்வாறு பொருந்தும்? குணமில்லாத பொருள் எங்கேனும் உண்டா? குணமில்லாதது பொருளாகுமா? என்று இங்ஙனமெல்லாம் சிறிதாயினும் ஆராய்ந்து பார்க்கவல்லார்க்கு நிர்க்குணம் நிர்க்குணோபாசனை முதலிய சொற்களெல்லாம் பொரு ளில்லாத வெற்றாரவார உரைகளேயாம் என்பது தெளிவாக விளங்கும். அங்ஙனமாயின், அறிவு நூல்கள் சிற்சில இடங்களிற் கடவுளை நிர்க்குணர் என்றோதுவது ஏனெனிற், சத்துவம், இராசதம், தாமதம் என்னுந் தூயவல்லாப் பருப்பொருட் குணங்கள் மூன்றும் அவரிடம் இல்லை யென்பதை உணர்த்துதற் பொருட்டாகவே அங்ஙனம் அவை ஒவ்வோரிடங்களிற் கூறுகின்றனவல்லாற் பிறிதில்லை யென்பது சிவஞானபோதமாபாடியத்தில் நன்கு விளக்கப் பட்டிருக்கின்றது. இனிக் கடவுள் பேரறிவுப் பொருளென்பது முடிக்கப் பட்டதனாலும், அவ்வறிவும் உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களின் வடிவங்களையும் உண்டுபண்ணியதொன் றாகையால் அவற்றை உண்டு பண்ணுதற்கு முன்னும் பின்னும் எப்போதும் அவர் அறிவின்கண் அவற்றிற்கு முதலான எல்லா உருவங்களும் உண்டென்பது பெறப்படுதலானும் கடவுள் அருவாய் இருப்பரென்னு முரையும் வெற்றுரையே அல்லது பிறிதன்று. அங்ஙனமாயின் அறிவு நூல்களில் அவர் அருவமென்றும் ஒவ்வோரிடங் களிற் கூறப்படுதல் என்னை யெனின், மக்களுடைய ஊனக் கண்களுக்கு அவருடைய அருளுருவம் புலப்படமாட்டா தாகலின் அவ்வாறு சொல்லப்பட்டதென்க. அருட்கண்ணு டையார்க்கு அவன் அருளுருவம் விளங்கித் தோன்று மென்பதற்குத் திருஞான சம்பந்தப் பெருமான் ஏதும் அறியாக் குழவிப் பருவத்தே அவன்றன் திருவுருவத்தைக் கண்டு பாடியதும், அவனருளே கண்ணாகக் காணினல்லால் இப்படியன் இவ்வுருவன் இவ்வண்ணத்தன் இவனிறைவ னென்றெழுதிக் காட்டொணாதே என்ற திருநாவுக்கரசுகளின் அருமைத் திருமொழியுமே போதிய சான்றாமென்க. என்று இத்துணையுங் கூறியவாற்றால், உருவமானது பெரிதும் பாராட்டற்பாலதேயன்றி இழிக்கப்படத்தக்கதன் றென்பதும், அறிவு விளக்கமெல்லாம் உருவத்தைப் பற்றியே நிகழுமாதலால் அஃது அழியாத உருவ அமைப்புடைய தாகவே நிலைபெறுமென்பதும் உலகின்கட் காணப்படும் எல்லா வடிவங்களின் தோற்றத்திற்கும் நிமித்த காரணமான கடவுளின் எல்லையற்ற அறிவின்கண் எல்லா உருவங்களும் உண்டென்பதும், கடவுள் அருட்குணமுடையராயும் அறிவுருவமுடையராயும் விளங்குவரல்லது நிர்க்குணமாயும், அருவாயும் இருப்பரல்லரென்பதும், எவ்வெவர் எவ்வெவ் உருவிற் கடவுளை வழிபடினும் அவ்வவர்க்கு அவ்வவ் உருவிற்கேற்பக் கடவுள் தமது அருளை வழங்குவரென்பதும் எடுத்துக் காட்டப்பட்டன. 5. சீவகாருணியம் கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரங் கோள்களவு கல்லாமற் கைதவ ரோடிணங் காமற் கனவிலும்பொய் சொல்லாமற் சொற்களைக் கேளாமற் றோகையர் மாயையிலே செல்லாமற் செல்வந் தருவாய் சிதம்பர தேசிகனே `சீவ காருணியம் என்பதுஇரண்டு சொற்களால் ஆகிய ஒரு சொற்றொடராகும்.இதனைப் பிரித்தால் சீவ என்றும் காருணியம் என்றும் இரண்டு சொற்கள் பெறப்படும்.இனிச் சீவர்கள் என்பன யாவையோவென்றால்; தொட்டால் அறியும் ஓர் அறிவு மட்டும் உடைய புல், மரம், செடி, கொடி முதலியனவும், தொட்டால் அறிவதோடு நாவினாற் சுவைக்கும் சுவையுணர்வும் உடைய ஈரறிவு உயிர் களான நத்தை, சங்கு, கிளிஞ்சில் முதலியனவும், தொட் டறிந்து நாவாற் சுவைத்த லொடு மூக்கால் நாற்றத்தை யுணரும் மூவறிவு உயிர்களான கறையான், எறும்பு, ஈசல் முதலியனவும், தொடுதலுஞ் சுவைத்தலும் முகருதலும் என்னும் உணர்வுகளோடு கண்ணாற் காணும் அறிவு முடைய நான்கறிவு உயிர்களான நண்டு, தும்பி, வண்டு, தேனீ முதலியனவும், தொடுதல் சுவைத்தல் முகருதல் காணல் என்னும் நான் குணர்வுகளோடு காதாற் கேட்டுணரும் அறிவும் உடைய ஐயறிவு உயிர்களான விலங்குகள் பறவை கள் காட்டு மிராண்டிகள் முதலியனவும், தொடுதல் சுவைத் தல் முகருதல் காண்டல் கேட்டல் என்னும் ஐந்தறிவுகளோடு நல்லதிது தீயதிது என்று பகுத்துணரும் மனவுணர்வும் உடைய ஆறறிவு உயிர்களான மக்களும் என்று சொல்லப் பட்ட இந்த ஆறு வகையில் அடங்கிய உயிர்கள் அத்தனையு மேயாம். இனிக் `காருணியம் என்பது அருள் அல்லது இரக்கம் என்னும் பொருளைத் தருவதாகும். இவ்விரக்கம் என்னும் உயர்ந்த இயல்பானது இது நல்லது இது தீயது என்று பகுத்துக் காணும் உணர்ச்சி வாய்ந்த மக்களிடத்து மட்டும் காணப்படுகின்றதே யல்லாமல், மக்கள் அல்லாத மற்ற ஐவகை உயிர்களிடத்துங் காணப்படுகின்றிலது, அவ் ஐவகை உயிர் களுள்ளும் மிகவும் கீழ்ப்படியில் உள்ள புல், மரஞ், செடி கொடிகள் முதலான ஓர் அறிவு உயிர்கள் இருந்த இடத்தை விட்டு நகராதனவா யிருத்தலாலும், அவற்றின் செய்கை இன்னதென்று விளங்காமையால் அவற்றின் இயல்பும் இன்னதென்று புலப்படாமையாலும் அவற்றைப் பற்றி நம்மால் ஆராய்ந்து பார்த்தல் முடியாது. இவற்றைத் தவிரமற்ற நகர்ந்து செல்லும் உயிர்களெல்லாம் தம்முடைய பலவகைப்பட்ட செய்கைகளால் தமக்குள்ள பலவகைப்பட்ட தன்மைகளையும் நமக்கு நன்கு வெளிப்படக் காட்டுகின்றன. இவைகள் பசியெடுத்த காலங்களிலெல்லாம் தம்மினுங் கீழ்ப்பட்ட உயிர்களைச் சிறிதும்இரக்கமின்றிக் கொன்று அவற்றின் உடம்பைச் சிதைத்துத் தின்னுகின்றன! கோழி, குருவி, கொக்கு, நாரை முதலிய பறவைகள் தாம் பசியெடுத்த பொழுது பூச்சி, புழு, மீன், முதலான தம்மினுஞ் சிறிய உயிர்களை இரக்கமின்றிக் கொன்று தின்னுகின்றன! நரி, ஓநாய், புலி, கரடி, அரிமா முதலான விலங்கினங்களோ தமக்குப் பசி யுண்டானபோது மான், மரை, ஆடு, மாடு முதலான அமைதியுள்ள உயிர்களைக் கொன்று அவற்றின் ஊனைக் கிழித்துத் தின்பதோடு, மாந்தர்களையுங் கூடச் சிற்சில பொழுதுகளிற் கொலை புரிந்து அவர்கள் உடம்பை உணவாக உண்டு விடுகின்றன! இவ்வலிய பறவைகளும் விலங்குகளுமே யன்றி, மிக மெலிய உயிர்களான தவளை பல்லி, சிலந்தி, புலி முதலியனவும் தம்மினுஞ் சிறிய பூச்சி களைப் பிடித்து தின்னுகின்றன! ஆகவே, இரக்கவியல் யென்பது மக்கள் அல்லாத மற்றை உயிர்க்கூட்டங்களிற் பெரும்பாலும் இல்லையென்னும் உண்மை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் இனிது விளங்குகின்றதன்றோ? இனி இவ்விரக்க மென்பது எந்த உயிர்களிடத்து இல்லையோ அந்த உயிர்கள் எல்லாம் கொடிய வன்னெஞ் சமும் கொலைத் தொழிலும் உடையனவாய் இருக்கின்றன. இரக்கம் எந்த உயிர்களிடத்து இருக்கின்றதோ அந்த உயிர்கள் இனிய மென்னெஞ்சமும் எல்லாரும் விரும்பத்தக்க இனிய செய்கையும் உடையனவாய் இருக்கின்றன.இதனாலே தான் இரக்கம் இல்லா உயிர்களின் தன்மையை விளங்கின்றன்மை என்றும், இரக்கம் உள்ள உயிர்களின் றன்மையைக் கடவுட் டன்மை என்றும் வழங்கி வருகின்றோம்.இனி மக்களின் இயற்கையோ இவ்விரண்டிற்கும் நடு நிற்கும் தன்மை வாய்ந்ததாய் இருக்கின்றது. பசிநோய் தீரும் பொருட்டுக் கொடிய வன்னெஞ்சம் உடையராய்ப் பிற உயிர்களிடத்துச் சிறிதும் இரக்கம் இன்றி அவற்றைக் கொலை செய்து அவற்றின் ஊனைத் தின்பவர்கள் விலங்கின் றன்மையை அடைகின் றார்கள். தமக்குக் கடும்பசி உண்டான காலத்தும் தம்முயிர் போல் மன்னுயிரை எண்ணி அவற்றிற்குச் சிறிதுங் தீங்கு செய்யாமல் தமக்குக் கிடைத்த காய், கனி, கீரை, கிழங்கு, பயறு முதலியவற்றை உணவாகக் கொண்டு எல்லா உயிர் களிடத்தும் இரக்கம் வைத்து ஒழுகுபவர்கள் கடவுட் டன்மையை அடைகின்றார்கள். எல்லா உலகங்களுக்கும் எல்லா உயிர்களுக்குந் தலைவரும் தாய் தந்தையருமாய் விளங்கும் முழுமுதற் கடவுள் அளவிறந்த இரக்கம் உடையவராய் இருக்கின்றார். அங்ஙனம் அளவிறந்த இரக்கம் உடையவரான கடவுளை அடைந்து அவரது பேரின்பத்தை நாம் நுகருதற்கு நாமும் அவர்போல்அளவிறந்த இரக்க இயல்பாகிய கடவுட்டன்மையை அடைதல் வேண்டும். எவர்கள் மென்மையான இனிய இரக்க இயல்பு உடைய வராகின்றார்களோ அவர்களுக்கே எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரிவான் என்பது அருட்பெருஞ் செல்வரான தாயுமான சுவாமிகள், கல்லால் எறிந்துங்கை வில்லால் அடித்துங் கனிமதுரச் சொல்லாற் றுதித்தும்நற் பச்சிலை தூவியுந் தொண்டரினம் எல்லாம் பிழைத்தன அன்பற்ற நான்இனி ஏதுசெய்வேன் கொல்லா விரதியர் நேர்நின்ற முக்கட் குருமணியே. என்னும் செய்யுளிற் கொல்லாவொழுக்கம் உடையவர்க்கே இறைவன் நேர்நின்று அருள் புரிவான் என்று கூறிய வாற்றானும், திருவருட்பிரகாச வள்ளலாரான இராமலிங்க சுவாமிகள், வன்புகலந் தறியாத மனத்தோர் தங்கள் மனங்கலந்து மதிகலந்து வயங்கா நின்ற என்புகலந் தூன்கலந்து புலன்க ளோடும் இந்திரிய மவைகலந்துள் இயங்கு கின்ற அன்புகலந் தறிவுகலந் துயிரைம் பூதம் ஆன்மாவுங் கலந்துகலந் தண்ணித் தூறி இன்புகலந் தருள்கலந்து துளும்பிப் பொங்கி எழுங்கருணைப் பெருக்காறே இன்பத் தேவே. என்னும் அருட்பாவினால் கொலைத் தொழி லில்லாதவர் களின் உடம்பு உயிரெல்லாம் இறைவன் கலந்து நின்று பொலிகுவான் என்று கூறிய வாற்றானும் நன்கு விளங்கும். இன்னும் பேர் இரக்க வியல்பான கொல்லாமை உடையவர்களுக்கு எல்லா நல்லியுல் புகளுந் தாமே வந்து பொருந்து மெனவும், அஃது இல்லாதவர்களுக்கு எல்லாத் தீய தன்மை களும் மேன்மேற் கிளைத்தெழுந்து அவர்களைக் கொடிய விலங்கினங்களாக்கி விடுமெனவும் இனிது விளக்கும் பொருட்டே தம் தாயுமான சுவாமிகள், கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்கும்அக் குணம் ஒன்றும் ஒன்றிலேன்பாற் கோரம்எத் தனைபட்ச பாதம் எத்தனைவன் குணங்க ளெத்தனை கொடியபாழ் கல்லாமை எத்தனை அகந்தைஎத் தனைமனக் கள்ளம் எத்தனை உள்ளசற் காரியஞ் சொல்லிடினும் அறியாமை எத்தனை கதிக்கென் றமைத்த அருளிற் செல்லாமை எத்தனைவிர் தாகோட்டி என்னிலோ செல்வ தெத்தனை முயற்சி சிந்தைஎத் தனைசலனம் இந்த்ரசா லம்போன்ற தேகத்தில் வாஞ்சை முதலா அல்லாமை எத்தனை அமைத்தனை உனக்கடிமை ஆனேன் இவைக்கும் ஆளோ அண்டபகி ரண்டமும் அடங்கஒரு நிறைவாகி ஆனந்த மான பரமே என்றும், கொல்லா விரதம்ஒன்று கொண்டவரே நல்லோர்மற் றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே என்றும் அருளிச் செய்தனர்களாயின் கொல்லாவொழுக்க மாகிய தெய்வத் தன்மையின் மேன்மையையும், கொலை யொழுக்கமாகிய விலங்கின் றன்மையின் தாழ்மையையும் நாம் விரித்துச் சொல்லுதலும் வேண்டுமோ? பாருங்கள், விலங்கின்றமையாகிய கொடுந் தன்மைகள் நம்மிடம் உண்டாகும்போது நாம் விலங்குகளாய் விடுதலோடு, நம்மைச் சேர்ந்தவர்களையும் விலங்குகளாக்கி விடுகின்றோம். நாம் மற்றவர்களிடம் சினங்கொண்டு உரத்துப்பேசினால், அவர்களும் நம்மேற் சினங்கொண்டு உரக்கப் பேசுகிறார்கள்; உடனே அதனை மாற்றி அன்புடன் அமைதியாகப் பேசுவோ மாயின் அவர்களும் உடனே தமது சினத்தை விட்டு அன்புடன் அமைதியாகப் பேசுகின்றார்கள்; இன்னும் தமக்குரியவர்களை இழந்து ஆற்றாமல் வாய்விட்டு அழுபவர்களைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தோ மாயின் நமக்கும் ஆற்றாமையால் அழுகை வருகின்றதன்றோ? உடனே அவர் அவ்வழுகையை நிறுத்தி வேறொரு மகிழ்ச்சி யான தொன்றை நினைந்து சிரிப்பராயின் அவரை அப்போது கண்டு நமக்குஞ் சிரிப்பு வருகின்ற தன்றோ? இங்ஙனமே இரக்கமற்ற கொடிய கொலைத்தொழிலையும், அதனால் வரும் புலால் உண்ணு தலையும் நாம் பழகி வருவோமாயின் இரக்கமற்ற கொடிய விலங்குகளாகிய புலி, கரடி, சிங்கம் முதலியவற்றின் றன்மையை நாம் அடைவதோடு நம்மைச் சேர்ந்தவர்களும் நம்மைப் பார்த்து அக்கொடிய இயல்பை அடையும்படி செய்து விடுவோம். ஒரு குடும்பத்தில் ஒருவர் பிறவுயிரைக் கொன்றதனால் வரும் புலாலைத் தின்று பழகுவராயின்; அவரோடு சேர்ந்த அக்குடும்பத்தாரெல்லாரும் அவரைப் போற்புலாலையுண்டு கெட்டுப்போவர். கலப்பாலிற் குற்றிய ஒரு சிறு பிரைத்துளி யானது அப்பால் முழுவதையுங் கெடுத்துத் தயிராக்குவது போலவும், ஒரு சிறுதேளின் கொடுக்கில் உள்ள கடுகளவு நஞ்சானது ஒருவர் உடம்பில் உள்ள செந்நீரிற் கலந்த அளவானே அஃது அவர் உடம்பு எங்கும் பரவி அவரை மிகவும் வருந்தச் செய்வது போலவும், ஓரிடத்திற் றோன்றிய அழுகற் பிண நாற்றமானது நெடுகப் பரவித் தான் பரவிய இடமெல்லாம் தன் நாற்றமே நாறும்படி செய்வதுபோலவும் தீய பழக்கம் உள்ளோர் சேர்க்கையினால் அவர்களைச் சேர்ந்தவர்கள் பலரும் அவரைப் போல் தீய பழக்கம் உடையவராகின்றார்கள். இதுபற்றியே, கொலையிலான் உதவும் அன்னங் கூறிற்பேர் அமுத மாகும் கொலையுளான் உதவும் அன்னங் கூறிற்பேர் விடம தாகும் புலையர்தம் மனையில் உண்போன் புலையனா மாறு போலக் கொலைஞர் தம்மனையில் உண்போன் கொலைஞனே ஆவனன்றே என்னுந் திருமொழியும் எழுந்தது. இனி நல்ல நிலத்தைச் சேர்ந்த மழைத் தண்ணீரானது பால்போல் இனிதாயிருத்தல் போலவும், பூவோடு கூடிய நார் அப்பூவின் நறுமணத்தைப் பெறுதல்போலவும், பொற் கலத்தில் நிரப்பிய ஆவின்பால் மிகவும் தூய தாய்ச் சுவையுடன் விளங்குதல் போலவும், அருளும் இரக்கமும் வாய்ந்து எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி எதற்குந் தீங்கு செய்யாது புலாலுணவு நீக்கியொழுகும் நல்லார் ஒருவரின் சேர்க்கையால் அவருடன்சேர்ந்தவர் எல்லாரும் அவர் போல்இரக்கம் நிரம்பி நலஞ்சிறந்து ஒழுகுவர்; இது பற்றியன்றோ தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார், நிலத்தியல்பால் நீர்திரிந்த தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு (குறள் 452) மனநலன் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்கு இனநலன் ஏமாப் புடைத்து (குறள் 458) என்றும், அருந்தவ நோன்பிற் றலைசிறந்து நின்ற பட்டி னத்துப் பிள்ளையார், நல்லார் இணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே அல்லாது வேறு நிலையுள தோஅக மும்பொருளும் இல்லாளுஞ் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும் எல்லாம் வெளிமயக் கேஇறை வாகச்சி ஏகம்பனே என்றும் அருளிச் செய்தனர்கள். இங்ஙனம் இரக்கமாகிய அருளறத்தை எவர்கள் மேற் கொண்டு ஒழுகுகிறார்களோ அவர்கள் அவ்வருள் உருவாய் விளங்குவதோடு தம்மைச் சேர்பவர்களையும் அருளுருவம் அடையச் செய்வார்கள். இன்னும்இவ்வருளறத்தைக் கைப்பற்றிக் கொண்டு எவர்கள் மாறாமல் ஒழுகுகிறார்களோ அவர்களிடத்திலே எல்லாம் வல்ல ஆண்டவன் திருவரு ளானது நிறைந்து ததும்பி வழியா நிற்கும்.எவர்கள் அவ் வாண்டவன் திருவருள் விளக்கத்தை அடையப் பெறுகிறார் களோ, அவர்களிடத்தில் நோயுங் கவலையுந் துன்பமும் இறப்புமாகிய இருள்கள் நில்லாமல் மறைந்தொழியும். எவர்கள் இத்துன்ப இருளினின்றும் விடுபடுகின்றார்களோ அவர்கள் எல்லாச் செல்வமும் எல்லா நலமும் எல்லா இன்பமும் ஒருங்கே பெற்று இம்மையில் நெடுங்காலம் இனிது வாழ்ந்து, மறுமையிலும் இறைவன் திருவடிப் பேரின்பத்தில் திளைத்து இறுமாந்திருப்பர். இனி, இரக்கமும் அன்பும் அருளும் உடையவர்களுக்கே இறைவன் அருள்புரிகுவான் என்றும்,அவர்களிடத்து மட்டுமே அவன் விளங்கித் தோன்றுவான் என்றும், அம் மெல்லிய தன்மைகள் இல்லாருக்கு அவன் அருள் வழங்கு தலும் அவர்களிடத்துத் தோன்றுதலும் சிறிதும் இல்லை யென்றுங் கூறியதென்னை யெனின்; இரக்கமே இரக்கத்தை இழுக்கும், அன்பே அன்பைக் கவர்ந்து கொள்ளும், அருளே அருளை விளங்கச் செய்யும்; ஒளி விளக்கம் வாய்ந்த பளிங்குப் பாறையிலே கதிரவன் ஒளி விளங்குமே யன்றி, விளக்கம் இல்லாத கருங்கல்லிலே அவ்வொளி விளங்குமோ சொல் லுங்கள். அன்பும் இரக்கமும் உடையவர்களைக் கண்டால் நமக்கு அன்பு உண்டாகின்றதோ சினமுங் கொடுமையும் கொலைத் தொழிலும் உடையவர்களைக் கண்டால் நமக்கு அன்பு உண்டாகின் றதோ சொல்லுங்கள். அன்புடையவர் களைக் கண்டால் மிகுந்த மனமகிழ்ச்சியும், சினமுங் கொடுமையும் உடையவர்களைக் கண்டால் அச்சமும் அருவருப்பும், கொலைத் தொழில் உடையவர் களைக் கண்டால் நடுக்கமும் திகிலும் அல்லவோ அடைகின்றோம்! நம்மைப் பெற்றவர்களாய் இருந்தாலும், நம்மோடு கூடப் பிறந்தவர்களா யிருந்தாலும், நமக்கு நெருங்கிய உறவினராயிருந்தாலும் எவர் கொடுந்தன்மையுங் கொடுஞ் செய்கையும் உடையரோ அவரைக் காணும் போதெல்லாம் ஐயோ! நாம் எவ்வளவு அருவருப்பும் அச்சமும் நடுக்கமும் அடைகின்றோம்! நமக்கு எந்த வகையிலும் உரியவர்கள் அல்லராயினும் எவரிடத்து இரக்கமும் இனிய செய்கையும் காணப்படுகின்றனவோ ஆ! அவரிடத்து நாம் நம்மை அறியாமலே எவ்வளவோ அன்பும் எவ்வளவோ மகிழ்ச்சியுங் கொள்ளப் பெறுகின்றோம்! இனி இரக்கமும் இனிய செய்கையும் உடையவர்களைக் கண்டால் பூனை, நாய், குருவி, காக்கை முதலிய சிற்றுயிர்களும் அச்சம்இன்றி மகிழ்வோடு அவர்கள் பால் அணுகுகின்றன. அருட்டன்மை உடையவர் களைத் தேள், பாம்பு, புலி, கரடி அரிமா முதலான தீய உயிர்களும் துன்பஞ் செய்வதில்லை யென்றும், அவர்களுக்கு அடங்கி நடந்து விலகிப் போகு மென்றும் நல்லோர் உரைக்கக் கேட்டிருக்கின்றோம். பல வரலாறுகளிலும் கற்றறிந்திருக் கின்றோம். இவ்வாறெல்லாம் மக்கட்பிறப்பினரான நமக்குள் எவர் அன்பும் இரக்கமும் உடையரோ அவரிடத்தே மற்றவர்களும் அன்பும் உருக்கமும் உடையராகின்றனரென்றால், மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்களுங்கூட அவரிடத்து அன்பினால் இழுக்கப்பட்டு அமைந்து நடக்கின்றனவென்றால், எல்லை யற்ற பேரன்பிற்கே ஓர் உறைவிடமாய் உள்ள இறைவன் அவர் களிடத்தில் விளங்கித் தோன்றுவான் என்பதை நாம் எடுத்துச் சொல்லுதலும் வேண்டுமோ? எல்லையற்ற அன்பும் இன்பமுமே இறைவனுக்கு உண்மையான வடிவமா மென்பதையும் அவ் அன்புருவினையும் இன்புருவினையும் இடையறாது நினைந்து தாமும் அன்பும் இன்பமுமாய் இருப்பவர்கள் அவ்விறைவனுருவாய் விளங்குவர் என்பதையும் திருமூல நாயனார் அருளிச் செய்த, அன்புஞ் சிவமும்இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தியாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தியாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே என்னுந் திருமந்திரத் திருமொழியும், மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்த மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத் தமுதே ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி உள்ளவா காணவந் தருளாய் தேறலின் றெளிவே சிவபெரு மானே திருப்பெருந் துறையுறை சிவனே ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடைய யன்பே என்னுந் திருவாசகத் திருப்பாட்டும் நன்கு அறிவுறுத்துகின்றன வல்லவோ? அங்ஙனம் அன்புருவாயும் அருளுருவாயும் இரக்கவுரு வாயும் விளங்காநின்ற நம் ஆண்டவன் தன்போல் அன்பும், அருளும், இரக்கமும் நிரம்பித் திகழாநின்ற உயிர்களிடத்து மட்டுமே குடிகொண்டு தோன்றுவான் என்னும் உண்மை இப்போது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் இனிது விளங்கு கின்றதன்றோ? அன்பினுள் ளான்புறத் தான்உட லாயுளான் முன்பினுள் ளான்முனி வர்க்கும் பிரானவன் அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள் அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே என்னுந் திருமந்திரத் திருப்பாட்டும்இதற்குச் சான்றாம் அன்றோ? இனி இறைவன் இரக்கவும் அன்பும் அருளும் உடையான் என்பதை எதனால் அறிகின்றோம் என்றால், அவன் மிகப் புல்லியவாய சிற்றுயிர்களுக்கும் வியப்பான உடம்புகளைப் படைத்துக் கொடுத்து, அவற்றின் வழியாக அவைகளின் அறியாமையைப் போக்கி,அறிவை விளக்கி, இன்பத்தை ஊட்டி, அவைகளை எண்ணிறந்த பிறவி கடோறும் பாதுகாத்து வரும் பேருதவிச் செய்கையினால் நன்கு அறிகின்றோம். பாருங்கள்! நாம் அறியாமையிற் கட்டுண்டு நமக்கு வேண்டுவது இன்னதுதான் என்று தெரிந்து கேளாமலிருந்த காலத்தும், அவன் நமக்கு வேண்டுவன வற்றையெல்லாம் விரும்பிக் கொடுத்தனன் அல்லனோ? நாம் நம் தாயின் கருப்பையிலே கருவாய்த் தங்கியிருந்த காலத்து நமக்கு வேண்டுவது இதுதான் என்று தெரிந்துகேட்கும் அறிவுடையே மாய் இருந்தனமா? சிறிதும் இல்லையே. அப்பொழுதும் அவன் நமக்கு ஓர் ஒப்பற்ற துணை வனாய் இருந்து மலப்பை சிறுநீர்ப்பைகளால் நெருக்குண்டு இறவாமலும் அகட்டுத் தீயினால் வேகாமலும் நம்மைப் பாதுகாத்து, உணவிற் பிரித்த மிக மெல்லிய பாலை ஊட்டிப் பத்துத் திங்கள் காறும் சிறிது சிறிதாக நம்மை வளரச் செய்து, பின் நிரம்பவும் வியக்கத் தக்கதாக நம்மை இவ்வுலகிற் பிறப்பித்து, அதன் பின்னும் ஓரிமைப் பொழுதும் இடை விடாது பலவகையானும் நம்மைப் பாதுகாத்துவரும் நம்அப்பன் பேருதவிச் செய்கைக்கும் பேரிரக்கத்திற்கும் ஓர் எல்லையுண்டோ! நாம் கேளாதிருக்கவும் நமக்கு இத்தனை யுதவியுஞ் செய்துவரும் நம் ஐயனுக்கு நாம் ஏது கைம்மாறு செய்தோம்! அன்றி ஏவு கைமாறுதான் செய்யமாட்டுவோம்? நமக்கு மட்டுமா நம்மினும் எத்தனையோ கோடி மடங்கு தாழ்ந்த அளவிறந்த சிற்றுயிர்களுக்கும் அவன் எத்தனை வகையான உடம்புகளை அமைத்துக் கொடுத்து அவைகளை யெல்லாம் பதப்படுத்தி வருகின்றான்! ஒருநாளில் நாம் எவ்வளவோ எறும்புகளை, எவ்வளவோ பூச்சிகளை, எவ்வளவோ புழுக்களை அறிந்தும் அறியாமலும் அழித்து விடுகின்றோம். ஆனால் அழித்த அச்சிற்றுயிரின் உடம்பை மறுபடியும் நம்மாற் படைக்க முடியுமா? ஓர் ஈயின் இறக்கை ஒடிந்தாலும் ஓர் எறும்பின் கால் முறிந்தாலும் அவற்றைத் திருத்திச் செப்பனிட நம்மாலாகுமா,? நம்முடைய உடம் பிலுள்ள உறுப்புக்களில் ஏதேனும் ஒன்று பழுதுபட்டால் அதைத் தானும் நாம் ஒழுங்கு செய்து அமைத்துக் கொள்ளக் கூடுமா? இங்ஙனம் நம்மாலும் பிறராலும் சிறிதும் செய்யலாகாத உடம்பின் அமைப்புகளை யெல்லாம் ஒவ்வொரு நொடியுந் தவறாமல் இழைத்துவரும் எம்பெரு மான் அருட்டிறங்களையெல்லாம் பேதையேன் என் ஒரு நாவால் எங்ஙனம் புகழ்வேன், எவ்வாறு விரித்துரைப்பேன்! அருமை மிக்க நேயர்களே! இத்தனை யிரக்கமுமுள்ள எம்பெருமான் அருளைப் பெற வேண்டும் நாம் அவனைப் போல் எல்லாவுயிர்களிடத்தும் இரக்கம் பூண்டு ஒழுங்கினா லன்றி, அவன் நம்மை அணுகமாட்டான். மக்களாயினும் மற்றைச் சிற்றுயிர்களாயினும் எல்லாம் நம் இறைவனுக்கு அருமைப் பிள்ளைகளே யாதலால், ஒரு தாய் வயிற்றிற் பிறந்த மக்களைப் போல் நாம் எவ்வுயிர்களிடத்தும் அன்பு பாராட்டி ஒழுகுதல் வேண்டும். ஒரு தந்தைக்குப் பிறந்தமக்களுள் ஒருவன் வலியவனாயிருந்தால் அவன் தன்னினும் வலி குறைந்த சிறு பிள்ளைகளை அடித்து வருத்தலாமா? அங்ஙனஞ் செய்தால் அவன் தந்தை அவன்மேற் சினந்து அவனை ஒறுப்பான் அல்லனோ? இங்ஙனமே, எல்லாம் வல்ல கடவுளாகிய முதற்பெருந்தந்தைக்கு அருமைப் புதல் வர்களாம் உரிமை வாய்ந்த எல்லா உயிர்களும் தம்முள் நேசமும் அன்பும் இரக்கமும் பூண்டு நடத்தல் இன்றி யமையாத கடமையாம்; இந்தப் பெருங்கடமையை நினையாமல், மக்களாகிய நாம் அறிவினும் உடம்பினும் வலியுடையவர்களாய் இருத்தல் பற்றி, நம்மினும் அறிவும் வலியுங் குறைந்த மெலிய உயிர்களைக் கொலைபுரிந்து அவற்றின் ஊனைத் தின்றால் அதனைக் கண்டு நம் அப்பன் நம்மேற் பெரிதுஞ் சினந்து கொண்டு நம்மைக் கொடுந் துன்பத்துக்கு உள்ளாக்கு வானென்பது திண்ணம்; இது குறித்தே அறிவுக் களஞ்சிய மான திருமூல நாயனார், கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை வல்லிடி காரர் வரிகயிற் றாட்கட்டிச் செல்லிடு நீரென்று தீவாய் நரகிடை நில்லிடு மென்று நிறுத்துவர் தாமே என்றும், பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லாருங் காண இயமன்றன் தூதுவர் செல்லாகப் பற்றிய தீவாய் நரகத்தின் மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே என்றும் திருவாய்மலர்ந் தருளினார். நம்மைப் போலவே நம் முழுமுதற்றந்தைக்கு இனியவாய் நம்மோடொத்த பிறப்பின வாகிய உயிர்களின் உடம்பைச் சிதைத்து அவற்றின் ஊனை உண்பதனால் வரும் தீவினைக்குரிய பயனை நாம் இந்த வுடம்பை விட்டுச் சென்றபின், நம்மை நிரயத்திலே தள்ளி வருத்துவதால் மட்டும் விளைவித்துப் பின் நம்மை விட்டு விடுவான் என்று நினையாதீர்கள்! நாம்இந்த வுடம்போடு கூடியிருக்கும் இந்தப் பிறவியிலேயே பெருவாரிக் காய்ச்சல் அம்மை கக்கற்கழிச்சல் நச்சுக் காய்ச்சல், சூலை, நீரிழிவு, தொழுநோய், வயிற்றுளைச்சல் முதலான எண்ணிறந்த நோய் களையும் வறுமை, கவலை, சண்டை, அரசர்போர், நில அதிர்ச்சி முதலான தீங்குகளையும், பேய் பிடியுண்டல், புலிகோட்படுதல், நச்சுயிர்களால் தீண்டப்படுதல் கிறுக்குப் பிடித்தல் முதலான பொல்லாங்குகளையும் ஏவி நம்மைப் பெரிதுந் துன்புறுத்தி ஒறுப்பான் என்பதற்கு நம் சமயாசிரி யரான சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த, குற்றொருவரைக் கூறைகொண்டு கொலைகள் சூழ்ந்த களவெலாம் செற்றொருவரைச் செய்த தீமைகள் இம்மையேவருந் திண்ணமே மற்றொருவரைப் பற்றிலேன் மறவாதொழி மடநெஞ்சமே புற்றரவுடைப் பெற்றமேறி புறம்பயந் தொழப் போதுமே என்னுந் திருப்பாட்டே சான்றாகும். இன்னுங் கொல்லாதவர்களைக் கொல்லச் சொல்லியும், புலால் தின்னாதவர்களைப் புலால் தின்னச் சொல்லியுங் கட்டாயப் படுத்தினவர்கள் எவர்களோ அவர்களும், மற்றவர்கள் சொல்லுக்காக அஞ்சி ஏழை உயிர்களைக் கொல் பவர்களும், அவற்றின் ஊனைத் தின்பவர்களும் அங்ஙனமே ஆண்டவனால் ஒறுக்கப்படுவாரென்பது, கொன்றி லாரைக் கொலச் சொல்லிக் கூறினார் தின்றி லாரைத் தினச்சொல்லித் தெண்டித்தார் பன்றி யாய்ப்படி யிற்பிறந் தேழ்நர கொன்று வார்அரன் ஆணையி துண்மையே என்றும், கொலையஞ் சாதொரு வற்கஞ்சிக் கொன்றுளோர் சிலர்சொல் லஞ்சிப் புலாலினைத் தின்றுளோர் நிலைய தாய்நர கத்திடை நிற்பரென் றலகில் நூன்மறை ஆகமம் ஓதுமே என்றும் காசிகண்டம் கூறுதலின் ஓர் உயிரைக் கொல்லும் படி ஒருவரை ஏவுவதும் அதன் ஊனைத் தின்னும்படி ஒருவரைக் கட்டாயப்படுத்தவதும் பெருந்தீவினையாய் முடியுமென்று அறிந்து கொள்ளுங்கள். தீங்கற்ற உயிர்களை ஒருவர் கொல்லப் போகையில் அதனை வேண்டாமென்று தடுத்தலும்,அவற்றின் ஊனைத் தின்பவர்களை அது செய்ய லாகாதென்று மறுத்தலும் மிகப் பெரிய நல்வினை யாகு மென்றும் உணர்ந்து கொள்ளுங்கள். எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும்நின் தெய்வ அருட்கருணை செய்வாய் பராபரமே. என்றபடி எல்லா வுயிர்களையும் நம்முயிர்போல் எண்ணி அளவிறந்தஇரக்கத்தோடு நடக்க நாம் இடைவிடாது முயன்று வருவதோடு அம்முயற்சியில் வழுவாதிருக்குமாறும் நாம் இறைவனை வழுத்தி வருதல் வேண்டும். நம் உடம்பில் ஒரு முள்ளுக் குத்தினாலும் ஒரு கத்திவெட்டுப் பட்டாலும் நாம் எவ்வளவு துன்பத்தை அடைகின்றோம்! அத்துன்பம் பொறுக்க மாட்டாமல் எவ்வளவு வாய்விட்டுக் கதறுகின் றோம்! நம்மை ஒரு கொடியவர் கோலால் அடிக்க வரும் போதும், வாளால் வெட்ட வரும்போதும் நாம் எவ்வளவு பதை பதைத்துப் பெருந்திகிலோடு அவருக்குத் தப்பிப் பிழைக்க ஓடுகின்றோம்! இங்ஙனம் ஆடு, மாடு, கோழி, கொக்கு, பன்றி, மீன் முதலான உயிர்களெல்லாம் தம்மை ஒருவர் கொல்ல வரும்போது எவ்வளவு நடுக்கத்தோடு அஞ்சி ஓடுகின்றன! அந்தோ! அவற்றிற் பல எவ்வளவு துன்பத்தோடு வாய்விட்டுக் கதறி அழுகின்றன! அவற்றின் கழுத்தை இரக்கமில்லாக் கொடிய மாக்கள் கத்தி கொண்டு அறுக்கையில் அவைகள் எவ்வளவு துடிதுடிக்கின்றன! எவ்வளவு ஓலமிட்டுக் கூவுகின்றன! ஆ! அவற்றின் துன்பத்தை நினைக்கையில் எம் நெஞ்சம் நீராய் உருகுகின்றதே! அந்தோ! தீவினை! வாயற்ற அவ்வேழை உயிர்களை மடிக்கும் தீவினை எத்தனை பிறவிகள் எடுத்தாலும் விடாது. தாய்மார்களே, உங்களில் எத்தனைபேர் இவ்வேழை உயிர்களைக் கொன்று உங்கள் ஆடவர்களுக்கு அவற்றை உணவாகச் சமைத்து வைக்கின்றீர்கள்! நீங்கள் இக்கொடிய செய்கையைச் செய்யாதுவிட்டால் நீங்கள் அந்நல்வினையால் நம் ஐயன் அருளைப் பெறுவதோடு, நுங்களைச் சேர்ந்த ஆடவர் களுக்கும் நீங்கள் பெரியதொரு நல்வினையையும் பெரு நலத்தையும் தேடிக் கொடுப்பீர்கள்! பெண் மக்களாகிய நும்மாலே தாம் உலகம் சீர்திருந்த வேண்டும். ஆவதும் அழிவதும் எல்லாம் பெண்களாலேதாம். நுங்களில் எத்தனை பேர் அறியாமையிற் கிடந்து, ஊன் தின்னாத நுங்கள் ஆடவர் களையும் நோய் வருமென்று சொல்லி அச்சுறுத்தி ஊன் தின்னச் செய்துவிடுகின்றீர்கள்! ஐயோ! இக்கொடுந் தீவினைக்கு நீங்கள் எப்படித் தப்பிப் பிழைப்பீர்களோ அறியேன்! முன்னெல்லாம் அறியாமை யாற் செய்த பிழையை, அறிவு தெரிந்த இனிமேலாயினும் நினைந்து இரக்கமுற்று, நம்இறைவனாகிய தந்தையிடம் சொல்லி மன்னிப்புக் கேட்டு, இனி எந்த வுயிர்க்குந் தீங்கு செய்யாமல், எல்லா வுயிர்களிடத்தும் அன்பும் இரக்கமும் பூண்டு ஒழுகுதல் வேண்டும். கொல்லா விரதம் குவலயமெல் லாம்ஓங்க எல்லார்க்கும் சொல்லுவதென் இச்சை பராபரமே என்னும் தாயுமான சுவாமிகள் திருமொழிப்படி, கொல்லா வொழுக்கத்தின் மேன்மையை நம்மைச் சேர்ந்தவர்கள் எல்லார்க்கும் நன்றாக எடுத்துச் சொல்லி எல்லாரையும் அன்பும் இரக்கமும் உடையவர்களாகச் செய்து அதனால் கடவுட்டன்மையை நாம் அடைந்து நம் ஐயனுடைய திருவருளைப் பெறுதல் வேண்டும். 6. இரு சைவ விளக்கங்கள் சைவமென்பது யாது? அச்சைவத்தினை விளக்கிய இரண்டு விளக்கங்கள் யாவை? என்று ஆராயப்புகுகின்றமை யின் இதற்கு இத்தலைப்பெயர் புனைந்து வைக்கப்பட்டது. இந்த நிலவுலகத்திலே பிறந்து இருந்து இறந்துபோகின்ற உயிர் களுள்ளே சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து உணர்ச்சிகள் மட்டும் வாய்ப்பப் பெற்று இவ்வைந்துணர்வு களினும் மேம்பட்டுஇவை தம்மை யெல்லாம் நல்ல திது தீயதிது என்று பகுத்தறியும் சிறப்பறிவு பொருந்தப் பெறாத விலங்கினங்களை யொழித்து மிக அரிதிலே கிடைத்த மக்கட் பிறவியினை யுடையவர்களுக்கெல்லாம்இப் பகுத்துணர்வால் இவ்வுலகத்திற் பெறப்படாத ஓரரும் பெரும் பொருள் கையகத்தே இருக்கக் காண்கின்றேம். இப்பருப்பொரு ளுலகத்திற் பருப்பொருண் முயற்சியால் தொகுத்துக் கொள்ளப் படும் பெருங் குவியலான பெரும் பொருளெல்லாம் இப் பருவுடம்பு இப் பருப்பொரு ளுலகத்தில் நடைபெறுங்காறும் ஒருசிலர்க்கு மட்டும் ஒவ்வொரு வகையாற் பயன்பட்டு அழிவெய்தி மறுமையிற் செல்லும் அறிவுருவான உயிர்க்குச் சிறிதும் பயன்படுவதின்றாய் ஒழியும். இது, தெய்வச் சிதம்பர தேவாவுன் சித்தந் திரும்பிவிட்டாற் பொய்வைத்த சொப்பன மாமன்னர் வாழ்வும் புவியுமெங்கே மெய்வைத்த செல்வமெங் கேமண்ட லீகர்தம் மேடையெங்கே கைவைத்த நாடக சாலையெங் கேயிது கண்மயக்கே என்று அகப்புறப் பற்று முற்றும் விட்ட பெருந்தவத் தோரான பட்டினத்தடிகள் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாட்டான் இனிது விளங்கும். இத்தன்மையதான பருப்பொருட் செல்வம் போலாது, உயிரின் அறிவாகிய களஞ்சிய அறையிலே வைத்து பாதுகாக்கப்படுவதாய், அழியுந்தன்மைத்தான உடம்பை மட்டும் வளர்த்தற்கு உதவியாம் பருப்பொருட் செல்வம் போலாது உயிரின் அறிவாகிய உடம்பை வளர்த்தற்கு மிக இயைந்த பொருளாய் விளங்கும் சமய உணர்ச்சியானது நாகரிக மில்லாதார் முதல் நாகரிக முடையார் ஈறான எத்திறத்தவர்க்கும் பொதுமை யின் நிகழக் காண்கின்றோம். இனி இந்தச் சமயம் என்னுஞ் சொல்லாற் பொழுது, அல்லது காலம் என்னும் பொருள் பெறப்படுகின்றது. ஐம்பொறி உணர்வுகளும் ஒரு காலத்து ஒருங்கு சேர்ந்து ஐம்புலன்களையும் ஒருங்கு நுகராமையால், அவ்வைம் பொறிகள் ஒவ்வொன்றன் வாயிலாய்த் தனித்தனியே சென்று அவ்வவற்றை அறிகின்ற உயிரானது அவ்வவற்றை அங்ஙனம் தனித்தனியே அறியும் பல பொழுதுகள் உடையவாகின்றது. இவ்வாறு காலத்தினால் வரையறுக்கப்படுதல் ஓரிடத்தே மட்டும்அறிவு விளங்கும் உயிருக்கன்றி எங்கும் அறிவு விளங்கும் இறைவனுக்கு இல்லையாம். அசைவுடைய பொருள்களுக்கே காலமும் இடமும் உண்டாம். ஒரிடத்து மட்டும் நிற்குமியல்புடைய சாத்தான் என்பான் கங்கைக் கரையிலிருந்தான் என்ற வழி இறந்தகாலமும் காவிரிக் கரையி லிருக்கின்றான் என்னும் வழி நிகழ்காலமும், குமரித் துறையிலிருப்பான் என்புழி எதிர் காலமும் கங்கை, காவிரி, குமரி என்னும் இடங்களும் பெறப்படுகின்றன. இங்ஙனங் கால வேறுபாடுகளும் இடவேறுபாடுகளும் சிற்றறிவும் சிறு தொழிலுமுடைய உயிர்களுக்கே உள்ளன வாதல் தெற்றென விளங்கும். இனி அச்சாத்தன் என்பவன் அவ்வாறு சிற்றறிவும் சிறு தொழிலுமில்லாது எங்கும் உள்ள அறிவுப் பொருள் என்று நினைக்கக் கூடுமாயிற் கங்கை, காவிரி, குமரி முதலான எல்லாஇடங்களிலும் அசைவின்றி ஒரே காலத்துள்ள அவனுக்கு அங்ஙனங் கால வேறுபாடும் இடவேறுபாடும் ஒருவாற்றானும் சொல்லல் ஏலாதென்க. நேற்றும் இன்றும் நாளையும் கங்கை, காவிரி, குமரி என்னும் எல்லா இடங்களிலும் ஒருங்கு இருப்பானை நோக்கி இவன் கங்கைக்கரையிலிருந்தான், காவிரிக்கரையிலிருக் கின்றான், குமரித் துறையிலிருப்பான் என்று வழங்குவோ மாயின் அஃது உண்மைக்கு மாறாய் எல்லாரானும் நகையாடற் பாலதாய் முடியும். எவ்வாறெனின் எங்குமுள்ள விசும்பை நோக்கி இது கங்கைக்கரையிலிருந்தது எனவும் இது காவிரிக்கரை யிருக்கின்றதெனவும், இது குமரித்துறை யிலிருக்கு மெனவுங் கூறுவார் உலகில் இல்லையன்றே! அதுபோல எங்கும் நிறைந்திருக்கின்ற எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளுக்குக் காலமும் இடமும் இல்லை; அவன் காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற் பட்டவனாவன்; அவன் அவற்றின் புறம்பே மட்டும் இருப்பான் அல்லன்; அவற்றின் உள்ளும்புறம்பும் அவற்றின் மேலும் நிறைந்திருப்பன் என்க. இது பற்றியன்றே தாயுமான சுவாமிகள், `அங்கிங்கெனாதபடி யெங்கும் ப்ரகாசமாய் என்று திருவாய் மலர்ந்தருளியதூஉம், அருணந்தியடிகள் உலகினை யிறந்து நின்ற தரனுரு வென்ப தோரார் உலகவ னுருவிற் றோன்றி யொடுங்கிடு மென்று மோரார் உலகினுக் குயிருமாகி யுலகுமாய் நின்ற தோரார் உலகினுள் ஒருவனென்ப ருருவினை யுணரா ரெல்லாம் என்று கட்டளையிட்டருளியதூஉம் என்க. ஈசாவாசியோப நிடதமும்1 ஒன்றாயுள்ள கடவுள் அசையாததாய் மனத்தைக் காட்டினும் விரை வானது; தேவர்களும் அதனை அணைவ தில்லை; முற்றொட்டே அஃது எல்லாவற்றினையுங் கடந்து நிற்பது; அது நிலையா யிருந்தே விரைந்தோடும் இவைகளாற் பற்றப்படாமல் இவற்றைக் கடந்து நின்றது; காற்றானது அதனிடத்திருந்து வினைகளைத் தாங்குகின்றது என்றும் அஃது அசைவது, அஃது அசைவதும் அன்று; அதுசேயது, அஃது அணிமை யிலும் உள்ளது; அஃது இதன் எல்லாவற்றின் உள்ளும் உள்ளது; அஃது இவ் வெல்லாவற்றின் புறம்பும் உள்ளது; என்றும் கூறுகின்றது. ஆகவே, சிறுபான்மை இலக்கணந் தீண்டப் பெறாத கடவுளை யொழித்து அவ் விலக்கணந் தீண்டப் பெறுகின்ற சிற்றுயிர் ஒன்றே கால வேறுபாடு பொழுது வேறுபாடுகள் உடையதென்பது துணியப்படும். இனி ஏகான்மவாதங் கூறுவார் மதம்பற்றிக் குடங் கடோறும் உள்ள நீரின்கட் டோன்றுந் திங்களின் நிழல் அந்நீரின் அசைவாற்றானும் அசைவது போற் றோன்றினும் உண்மையான் நோக்குமிடத்து அவ்வசைவு அதற்கு இல்லாமைபோல உடம்புகடோறுங் காணப்படுகின்ற கடவுளின் றோற்றமாகிய சிற்றுயிர் ஐம்பொறிகளின் இயக்கத் தாற்றானும் அசைவதுபோற் றோன்றினும் அஃதியற்கையில் அங்ஙனம் அசைவதில்லை யென்று உரையாமோவெனின்; அது பொருந்தாது. எம்முடைய உடம்பிலுள்ள மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் அவ்வைம் பொறிகளும் பிறிதொன்றன் உதவியை வேண்டாது தாமே இயங்குவன வாயின் அவை எப்போதும் இயங்கிக் கொண்டே யிருத்தல் வேண்டும்; நனவிலன்றிக் கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்பொடுக்கம் என்னும் கீழ்நிலை நான்கினும் அவை யியக்கமின்றிக் கிடத்தலானும், இனி, நனவிலேயும் அவை இயங்குங் காலத்துஐந்தும் ஒரு காலத்து ஒரு பொருளை அறியமாட்டா என்பதுஅழகியதொரு பொருளை உற்றுக் காணுமிடத்துச் செவியொன்றைக் கேளாமையினும், இனிய ஓர் இசையைக் கேட்டு அறிவு அதன் வழிப்பட்டு நின்றுழிக் கண் ஒன்றைக் காணாமையினும் வைத்து அறியக் கிடத்த லானும் இனி யிப்பொறிகள் ஐந்தினும் பற்றறப் பிரிந்து மனம் ஒன்றை நாடும் வழி அவை இயங்காது வறிது நிற்றலானும் அவ்வைந்துந் தாமே இயங்கக் கடவுளின் றோற்றமாகிய உயிர் அசைவின்றி யிருக்குமென உரைத்தல் ஏலாதென்க. உயிர் மனத்தைப் பற்ற மனம் பொறிகளைப் பற்ற பொறிகள் புலன்களைப் பற்றி நடைபெறுகின்றன என்பதே உண்மை யாம். இஃது அருணந்தியடிகள், அறிவதைம் பொறியே யென்னின் உறக்கத்தி னறியா வாகும் அறிவது மொன்றொன் றாக வொன் றொன்றா யறிவ தென்னின் அறிவுகள் ஒன்றை யொன்றங் கறிந்திடா வைந்தை யுங்கொண் டறிவதொன் றுண்ட தான்மா வைம்பொறி யறிந்தி டாவே என்றருளிச் செய்த சிவஞான சித்தித் திருச்செய்யுளான் நன்கறியப்படும். மேற்கூறியவாற்றால், உயிர் ஐம்பொறிகளோடுடனாய் நின்று புலன்களைப் பற்றும்வழி அஃது ஓசையை யறியும் பொழுதும், ஊற்றினை யறியும் பொழுதும், உருவினை யறியும் பொழுதும், சுவையினை யறியும் பொழுதும், நாற்றத்தை யறியும் பொழுதும் தனித்தனியே உளவாகா நிற்கின்றன. இனி இவ்வைம்பொறி உணர்வு நிகழ்ச்சிகள் ஒருங்கு உள்வழியும் உயிர்கள் ஒரு சிலர்க்கு ஏனைப் பொறி உணர்வுகளினும் நாற்றவுணர்விற் பெருவிருப்புண்டாய்ப் பல திறப்பட்ட நறிய மணங்களை நுகர்தலிலே இன்பஞ் செல்லும் அவர் அம்மனவுணர்வினையே மிகுதியும் பாராட்டிப் பேசுவர். வேறு சிலர்க்குச் சுவை யுணர்விற் பெருவிருப்புண்டாய்த் தித்திப்புப் புளிப்புக் கார்ப்புக் காழ்ப்புக் கைப்பு உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவை மிக்க உணவுகளைப் பல திறத்தாற் சமைத்துச் சுவைத்தலிலே இன்பம் செல்லும்; அவர் அச்சுவை யுணர் வினையே மிகுதியும் பாராட்டிப் பேசுவர். இவ்வாறே சிலர்க்குக் காட்சியுணர்விலும் வேறு சிலர்க்கு ஊற்றுணர் விலும் மற்றுஞ் சிலர்க்கு இசையுணர்விலும் பெருவிருப் புண்டாய் மற்றை யுணர்வுகளை யிழித்துப் பேசுவர். இங்ஙனம் அவரவர் தத்தமக் கியைந்தவற்றை மிகவும் பாராட்டி அவ்வவற்றையே உயர்த்துப் பேசுங் காலங்களும் உணர்வு வேற்றுமையாற் றோன்றும் பொழுது வேறுபாடுகளென்றே தெளியப்படும். இனி எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற திருக்குறளின்படி இவ் வைம்பொறி யுணர்வு களுள்ளும் இயற்கையிலே மிகச் சிறந்த தியாது? என்று நடுவு நிலையால் ஆராய்ந்து பார்க்கப் புகுவானுக்கு ஓசையுணர்வே சிறந்த தென்பது இனிது விளங்கும். உயிரின் சிற்றறிவை விரிவுசெய்து விளக்குதற்கு இன்றி யமையாது வேண்டப்படும் அறிவு நூற் கேள்விகளெல்லாம் செவிக்கருவியினையே துணையாகக் கொண்டு நடைபெறுகின்றன வாகலின் அச்செவிக் கருவியினுள் ளமைந்த ஓசை யுணர்வே ஏனைப் பொறி யுணர்வுகளினெல்லாம் சிறந்த தென்று துணியப்படும். இதுபற்றியே தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரும், செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கு மீயப் படும் (குறள் 412) என்று திருவாய் மலர்ந்தருளினார். அற்றேல், இவ்வைம் பொறியுணர்வின் வழிப்பட்ட உயிரின் பொழுது வேறுபாடுகளை யெல்லாம் சமயங்கள் மதங்கள் என்று வழங்காமை என்னையோ வெனின்; வளத்திடை முற்றத்தோர் மாநில முற்றுங் குளத்தின்மண் கொண்டு குயவன் வனைந்தான் குடமுடைந் தாலவை யோடென்று வைப்பர் உடலுடைந் தாலிறைப் போதும்வை யாரே எனவும், எரியெனக் கென்னும் புழுவோ வெனக்கென்னு மிந்தமண்ணுஞ் சரியெனக் கென்னும் பருந்தோ வெனக் கென்னும் தான்புசிக்க நரியெனக் கென்னும்புன் னாயெனக் கென்னுமிந் நாறுடலைப் பிரியமு டன்வளர்த் தேனித னாலென்ன பேறெனக்கே எனவும், முடிசார்ந்த மன்னரு மற்றுமுள்ளோரு முடிவிலொரு பிடிசாம்பராய் வெந்து எனவும் எழுந்த திருப்பாட்டுக்களின் படியே இன்னநேரத்தில் மாய்வதென்றறியப் படாதவாறு சடுதியிலே மாய்ந்தொழியும் இம்மக்களுடம்போடு அவ்வைம் பொறியான் வரும் இன்ப நுகர்ச்சிகளும் இறந்தொழிதல் காணப்படுதலாலும்,இங்ஙனம் இடை யிடையே யழிந் தொழியும் அவ்வின்ப நுகர்ச்சிகள் சிற்றுயிர்களைக் கடைத் தேற்றுதற்கு ஒருசிறிதும் பயன்படாமையாலும் அவற்றை யெல்லாம் வெறுத்துப் புறத்தே செல்லும் நம் அறிவினை அகமுகமாக உள்ளிழுத்து, நானா ரென்னுள்ளமார் ஞானங்களா ரென்னை யாரறிவார் என்ற அருமைத் திருமொழியின்படி ஆ! நான் யார்? பலப்பல வேறுபாடோடும் பெரிதும் வியப்புறத் தக்கவாறாய் அமைந்திருக்கும் இவ்வுலகங்கள் யாவை? இவற்றிடையில் யான் வந்து பிறந்ததேன்? பிறந்து பலவகைத் துன்பங்ளுக்கு உள்ளாகி மிக வருந்தும்போதும் அவற்றை யிடையிடையே மறந்து நான் எப்போதும் இவ்வுலகத்தில் இருப்பதுபோல் நினைப்பதேன்? என் மனைவி மக்கள் சுற்றத்தார் பிறர் என்னுமிவர்க்கும் எனக்குமுள்ள தொடர்பு என்னை? மற்றையோரிடத்தெல்லாம் யான் அன்புடையனாய் ஒழுகாது என் மனைவி மக்களிடத்தே மட்டும் யான் அளவிறந்த அன்பு பூண்டு ஒழுகுவது என்னை? யான் இறக்குங் காலத்து அவர் அவ்விறப்பினை நீக்குவரா? யான் பிறக்குங் காலத்து அவர் அப்பிறப்பினை நீக்குவரா? யான் துன்புறுங் காலத்து அவர் அத்துன்பத்தைப் போக்குவரா? இவர் களெல்லாம் ஐயோ! எம்மைப் போலவே துன்புறுகின்றார் கள், பிறக்கின்றார்கள், இறக்கின்றார்கள்; சாவார்க்குச் சாவாரும், துன்புறுவார்க்குத் துன்புறுவாரும் துணையாவ தியாங்ஙனம்? ஐயோ! இப்பிறப்பினுந் துன்பத்தினும் எவ்வாறு நீங்குவேன்! இறக்க வேண்டுமே என்பதனை நினைக்குங் காலத்து என்னெஞ்சம் பகீரென்று துணுக்குறுகின்றதே! யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென் கடவேன் என்ற மேலோர் திருமொழி இடையறாது என்னுள்ளத்திற் றோன்றி என்னை வருத்துகின்றதே என்று இவ்வாறெல்லாம் உயிரினறிவானது உள்மடங்கி ஐம்பொறி களின் குறும்பையெல்லாம் ஒடுக்கிக் கொண்டு தனது நிலை யை ஆய்ந்து பார்க்குங் காலந்தான் உயிர்களுக்கு என்றும் மாறாது நிகழும் சமயமாதலின் இங்ஙனம் நினைவு நிகழும் சமயமே சமயம் அல்லது மதம் என்று ஆன்றோரான் வழங்கப்பெற்றது. முன்னே காட்டியபடி எங்ஙனமானால் நமது உணர் வானது ஐம்பொறிகளின் வழிப்பட்டு நடைபெறுங்காலத்து அதுவதுவாய் நின்று புலன்களை நுகர்ந்துதான் மிக விரும்பிய தொன்றனை அதன்மேற் சென்ற பற்றால் உயர்த்துப் பேசுகின்றதோ அங்ஙனமே நமதறிவால் ஆராய்ந்து காணப்படுகின்ற மெய்ப்பொருள் உணர்ச்சிகளுள்ளும் நாம் மிக விரும்பியதொன்றனை நமதுள்ளம் சிறந்தெடுத்துக் கூறா நிற்கின்றது. அறிவு நிரம்பவில்லாது தாழ்ந்த நிலைக் கண்ணராய் நிற்கின்ற உயிர்கள் பொருள்களைப் பிரித்துப் பிரித்து ஆயும்போது அவர்கள் அறிவு மேற்பட்ட பொருள் களிற் செல்லாமையால் மண், புனல், அனல், கால் என்னும் நாற்பொருளே மெய்யென்றும், இந்நாற்பொருட் கூட்டத் திற் றோன்றிய இவ்வுலகமும் உடம்புமே மெய் யென்றும் உட்கோடலால் உலகாயத மதம் தோன்றுவதாயிற்று. இவ்வாறே இவர்க்கு மேற்பட்ட நிலையிற் சென்றாரால் இந்திரியான்ம வாதமும், இவர்க்கு மேற்பட்ட பதத்திற் சென்றாரால் அந்தக் கரணான்ம வாதமும் இவர்க்கும் மேற்பட்டாராற் பிராணான்ம வாதமும், இவர்க்கும் மேற்பட்டாரால் விஞ்ஞானான்ம வாதமும், இவர்க்கும் மேற்பட்டாராற் சீவப்பிரம வாதமுமெனப் பலப்பலவான மதங்களும், பலப்பலவான பொருளாராய்ச்சி களும் பல திறப்பட்டுத் தோன்றின. இவற்றுள் ஒன்றே மெய்ந்நிலையாய்ப் பெறப்படு மாயினும் ஏனையவெல்லாம் பொய்யென்று கழிக்கப் படாமல் அம் மெய்ந்நிலையினைப் பயப்பதற்குரிய படிவழி நிலைகளாய் நிலைபெறுவனவாம். மேலே காட்டியவாறு சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்பொறியுணர்வு களுள் ஓசையுணர்வே ஏனை எல்லாவற்றினும் மிகச் சிறந்ததாயினும் அவை யொவ்வொன்றும் ஏனைய தன் வளர்ச்சிக்கு வாயிலாய்ப் பயன்படுதல்போலவும், மக்கட் பிறவியினுள் குழவிப் பருவம், பிள்ளைப்பருவம், இளமைப் பருவம், முதுமைப்பருவம் என்பனவற்றுள் முதுமைப் பருவமே அறிவு மிகச் சிறந்ததாயினும் அதனை எய்துதற்கு ஏனை மூன்று பருவங்களும் ஒன்றற்கொன்றுதவியாய் இன்றியமையாது வேண்டப்படுதல்போலவும், மெய்ந் நிலைச் சித்தாந்த மாய் முடிக்கப்படும் ஒரு மெய்ச்சமயத் தினைச் சென்றடை தற்குரிய பேரறிவினைப் பயத்தற்கு மிகத் தாழ்ந்த பதத்திலே தோன்றிய சிற்றறிவுச் சமய முதல் எல்லாம் ஒன்றற்கொன் றுதவியாய்ப் பெரிதும் பயன்படுதலு டையவாம். கடவுளும் உயிரும் இல்லையென்று சொல்லும் நாத்திகமத முதற் கொண்டு உயர்ந்த வேதாந்த சித்தாந்த முடிநிலைப் பெரும் பொதுச் சிறப்புண்மைப் பொருளா யுள்ள மெய்ச்சமயங் காறுமுள்ள எல்லா உயிர்கட்கும் இறைவன் றிருவருட்பேறு உண்டென்பது துணிபொருளே யாமென்க. இது தமிழ் மறையுள், விரிவிலா வறிவினார்கள் வேறொரு சமயஞ் செய்தே எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாமே என்று பெறப்பட்டமையானும், தமிழ் ஆகம சித்தாத்தத்துள், அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய் என்று வலியுறுத்தப்பட்டமையானும் இனிது விளங்கும். இனி இப்பெற்றிப்பட்ட மெய்ப்பொரு ளாராய்ச்சிப் படிகளையெல்லாம் கடந்து மேல்நிலைக்கண்ணே சென்றா னுக்குக் கீழ்நிலைக் கண்ணுள்ளனவெல்லாம் பொருளல்லன வாய்த் தோன்றுமாகலின் அதுபற்றி அவன் இகழப்படு வானல்லன், அம்மேனிலைக் கண்ணே நின்று பேரின்பத்தை நுகர்ந்து கொண்டு, சோம்ப ரிருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பது சுத்த வொளியிலே சோம்ப ருணர்வு சுருதி முடிந்திடஞ் சோம்பா கண்டாரச் சுருதிக்கட் டூக்கமே என்றபடி எவ்வகைச் செயலுமில்லாத தூயசோம்பராய்ப் பூதமுங் கரணம் பொறிகளைம் புலனும் பொருந்திய குணங்களோர் மூன்றும் நாதமுங் கடந்த வெளியிலே நீயு நானுமாய் நிற்குநாள் உளதோ வாதமுஞ் சமய பேதமுங் கடந்த மனோலய வின்பசா கரனே ஏதுமொன் றில்லேன் யாதுநின் செயலே யிறைவனே ஏக நாயகனே என்றவாறு எல்லாம் இறைவன் செயலே தன் செயலாய்க் கொண்டாராய் உள்ள மெய்யுணர்வுடையாருக்கு ஏனைய வெல்லாம் வெறும் போலிகளாய் ஒழிதல் பொருத்தமேயாம். அங்ஙனம் அவர்க்குத் தோன்றுதல்பற்றி அவர் மற்றைச் சமயங்களை இகழ்ந்தார் எனத் திரித்துணர்ந்து அவரைப் புறம்பழித்தல் பொருந்தாதாம்.அது நிற்க, இனி இங்ஙனம் மெய்ப்பொரு ளாராய்ச்சியின் பொழுது வேறுபாடுகளாய்த் தோன்றிய பல்வகைச் சமயங் களுள் முதற்கண் ஆராய்தற்பொருட் டெடுத்துக் கொண்ட சைவம் என்பது மிக உயர்ந்ததோர் அறிவினை யுடைய ஒரு சான்றோன் தனது சிற்றறிவுத் தன்மையை விட்டுப் பேரறிவினனாய் நின்று சிவம் என்னும் முழுமுதற் பெரும் பொருளைத் தலைப்பட்டு நின்ற நிலையாம். இது, தெய்வஞ் சிவனே சிவனருள் சமயஞ் சைவஞ் சிவத்தொடு சம்பந்த மென்றான் சைவம் வளர்க்குஞ் சம்பந்த மூர்த்தி என்ற திருச்செய்யுளான் அறியற்பாலதாம். இங்கே சிவம் என்று எடுத்தோதப்பட்ட பொருள், அசுத்த மாயையிற் றோன்றிய சத்துவம், இராசதம், தாமதம் என்னும் முக்குண வழிப்பட்ட மும்மூர்த்திகளுள் ஒன்றன்று. அது, அவதா த்ரிதயாதீதம் துரீயம் ஸத்ய சித்ஸுகம், ப்ரஹ்ம விஷ்ண்வாதி பிஸேவ்யம் ஸர்வேஷாம் ஜநகம், பரம் ஈசாநம் பரமம் வித்யாத்ப்ரேரகம் புத்திஸாக்ஷிணம் என்று போந்த பஞ்சப் பிரமோபநிடத மறையானும், தேவர்கோவறியாத தேவதேவன் என்னுந் திருவாசக மறையானும் அறியற் பாலதாம். இன்னுமிது, சிவனொ டொக்குந் தெய்வம் தேடினுமில்லை என்னுந் திருமந்திரத்தானும் உணரப்படும். சிவம், பிரமம், கந்தழி யென்பன ஒரு பொருட்கிளவிகள், இவற்றுட் கந்தழி என்பதுஆசிரியர் தொல்காப்பியனாராற் சிவம் என்பதனோ டொத்த சொல்லாக வைத்துக் கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றுங் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே என்று திருவாய் மலர்ந்தருளப்பட்டதென. இதற்குரை கண்ட நச்சினார்க்கினியர் கந்தழி என்பது ஒருபற்று மற்று அருவாய்த் தானேயாய்த்தத்துவங்கடந்த பொருள் எனக் கூறி, இதனியல்பை மாணிக்கவாசக சுவாமிகள் உய்த்துணர வைத்து, உற்றவாக்கையி னுறுபொருள் நறுமல ரெழுதரு நாற்றம்போற் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் அப்பொருள் பாராதே பெற்றவாபெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர்சொற் றெளியாமே அத்தனாண்டுதன் னடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே என்றுதிருவாய் மலர்ந்தருளிய அருமைத் திருப்பாட்டினை எடுத்துக்காட்டி `என்று அதனை உண்மையான் உணர்ந்தோர் கூறியவாற்றானுணர்க என்று அடிகளின் மெய்யுணர்வின் பான்மையினையும் கிளந்தெடுத்துரைத்தார். உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியரே திருவாதவூரடிகளை `அதனை உண்மையான் உணர்ந்தோர் எனச் சிறந்தெடுத் துரைத்தமையாற் கந்தழியினியல்பை அத்திருமொழியே இனிது விளக்குவதென்பது பெற்றாம். பொருள்களாவன மண், புனல்2 அனல், கால், விசும்பு என்னும் ஐந்து பருப் பொருள்களும், மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து நுண்ணிய பொருள்களும், கை, கால், வாய், எருவாய், கருவாய் என்னும் ஐந்து தொழிலுறுப்புகளும், மனம், அறிவு, நினைவு, முனைப்பு என்னும் நான்கு அகக்கருவிகளும், காலம் பிறழாநிகழ்ச்சி, கலை, நினைப்பு, விருப்பு, மகன், மாயை என்னும் ஏழு உணர்வு நிகழ்ச்சிப் பொருள்களும், தூய நினைவு, தலைமை, அருள்நிலை, அன்னை, அத்தன் என்னும் ஐந்து சிவ நிலையப் பொருள்களுமான முப்பத் தாறுமாம். இம் முப்பத்தாறு பொருள்களுங் கடந்த பேரறிவுப் பொருள் யாது? அது கந்தழியென்பார் `தத்துவங்கடந்த பொருள் என்றும், உருவுடைப் பொருளெல்லாம் நிலை யிலவாகலிற் படைக்கப்படும் உருவுடைப் பொருளன்று அக்கந்தழியென்பார் `அருவாய் என்றும், இம்முப்பத்தாறு பொருள்களும் அப் பெரும்பொருளையின்றி இயங்க மாட்டாவாகலின் அவற்றுள் நின்று அவற்றை இயக்கியும் தான் தாக்கற்று நிற்குமென்பார் `ஒரு பற்றுமற்று என்றும் நச்சினார்க்கினியர் இனிது விளக்கியருளினார். இவரெடுத்துக் காட்டிய திருவாசகத் திருச் செய்யுள் இக்கந்தழியாம் பெரும்பொரு ளியல்பை விளக்கு மாறு யாங்ஙன மெனின்; `உற்ற வாக்கையின் உறு பொருள் என்பது இறைவன் பொருள்களுள் அருவாய் நிற்றற்கும், `நறுமல ரெழுதரு நாற்றம் என்பது அவன் உயிர்களுள் அருவுருவாய் நிற்றற்கும் உவமைகளாக எழுந்தன. உடம்பினுள்ளிருக்கும் உயிர் தனக்கென ஓர் உருவின்றித் தான் சார்ந்த உடம்பே தனக் குருவாய்க் கொண்டு நிற்கின்றது. அங்ஙனம் நிற்குமிடத்துத் தான் வேறு உயிர் வேறு என்னும் வேற்றுமை தோன்றாவாறு சாத்தா, கொற்றா என உடம்புக்கிட்ட பெயரால் அழைக் கும் வழித் தான் ஏன் என்கின்றது. அங்ஙனம் நிற்பினும் உடம்பு உடம்பே, உயிர் உயிரே; உடம்பு உயிராகாது, உயிர் உடம்பு மாய் அதனின் வேறுமாய் நிற்கும். உடம்பு தானே இயங்காது உயிர் இயக்கினால் இயங்கும், உயிர் தானேயி யங்கும் உடம்பினையும் இயக்கும். இதுபோல் இறைவன் உலகங்களுட் கலந்து நிற்கும் வழித்தான் வேறு உலகம் வேறு - என்னும் வேற்றுமை தோன்றாவாறு ஒருமையுற்று நிற்கும். இவ்வாறு ஒன்றாய் நிற்றல் பற்றியே `விசுவம் பிரஹ்மா என்னும் சொற் றொடரும், உல கேழெனத் திசைபத்தெனத் தானொரு வனுமே, பலவாகி நின்றவா தோணோக்க மாடாமோ என்னுந் தமிழ் மறைச் செய்யுளும் எழுந்தன. இங்ஙனம் ஒன்றாய் நிற்பினும் இறைவன் இறைவனே, உலகம் உலகமே; உலக மிறைவனாகாது, இறைவன் உலகமுமாய் அவற்றின் வேறுமாய் நிற்பன். உலகம் தானே இயங்காது இறைவன் இயக்கினால் இயங்கும்; இறைவன் தானேயும் இயங்குவன் பிறவற்றையும் இயக்குவன். இங்ஙனமெல்லாம் ஒற்றுமை பூண்டு நிற்பினும் அவன் அதனாற் சிறிதும் வேற்றுமைப் படுவானல்லன். அது `நறுமலரெழுதரு நாற்றம்போல் எனும் உவமையால் விளக்கப்பட்டது. மலர் முகையாய் இருந்துழி அதனுள் அருவாய் இருந்த மணம் அது நாள் முதிர்ந்து மலர்ந்த விடத்து அதனுள்ளும் புறம்புமாய்ப் புலப்பட்டு நிறைந்து தான் அம்மலரைப் பற்றிக் கொண்டு நிற்பினும், தான் அம்மலராற் பற்றப்படாது அதனையுங் கடந்து பரம்பித் தன் பரப்பினுள்ளே அம்மலரையும் ஒரு பால்அடக்கிக் கொண்டு வேற்றுமையும் வேற்றுமை யின்மையு மாகிய ஓர் ஒற்றுமை இலக்கணத்தோடு அதிற் சிறிதுந் தாக்கின்றி நிற்றல்போல, இறைவன் ஆணவமல வழிப்பட்டுக் குவிந்து நின்ற உயிரினுள்ளே அருவாய் இருந்து பின் அம்மலத்தடை நீங்கி அது விரிந்தவழி அம்முழுமுதற் பேரறிவு அதன் உள்ளும் புறம்புமாய்ப் புலப்பட்டு விளங்கி, அத்தூயவுயிரை அங்ஙனம் பற்றி நிற்பினும் தான் அதனாற் சிறிதும் பற்றப்படாது அதனையுங் கடந்து பரம்பித் தனது அருள்வெளிப் பரப்பிலே அவ்வுயிரையும் ஒருபால் அடக்கிக் கொண்டு வேறுமாய் ஒன்றுமாய் வேறல்லா வியைபுற்று அதில் சிறிதுந் தாக்கின்றி நிற்கு மென்க. இங்ஙனம் அறிவுப் பொருள் அறிவில் பொருள் என்னும் இருவகை உலகத்தினும் வேற்றுமை யின்றி அருவுருவாய்த் தன்னியல்பிற் சிறிதுந் திரிவின்றித் தானேயாய் நிற்கும் இறைவனியல்பை இவ்வுண்மைத் திருமொழி `உற்ற வாக்கையினுறுபொருள் நறுமலரெழுதரு நாற்றம்போற், பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் என்று இனிது விளக்கினமையும், இவ்வுண்மையினை ஆசிரியர் நச்சினார்க் கினியர் காட்டினமையும் பெரிதும் நினைவு கூரற்பாலனவாம்; இவ்வுண்மை, பூவினிற் கந்தம் பொருந்திய வாறு போல் சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது ஓவியம் போல வுணர்ந்தறி வாளர்க்கு நாவி யணைந்த நடுத்தறி யாமே என்ற திருமொழியானும் விளக்கப்பட்டமை காண்க. இங்ஙனம் கந்தழி, பிரமம் என்னும் சொற்களால் எடுத்தோதப்பட்ட சிவம் என்னும் எப்பொருளுங் கடந்த பெரும்பொருளை ஆராய்ந்த நேரமே சைவ சமயம் என்று உணரற்பாற்று, அற்றேல் அப்பெரும் பொருளை யாதானு மொரு பெயரால் வழங்கியிடாமற் சிவம் என்னுஞ் சிறப்புப் பெயரால் வழங்குவித்தல் என்னை யெனின்; வேதாகம உபநிடத ஷடதரிசன புராணேதிகாசமாகிய எல்லாம் சிவ என்னும் இரண்டழுத்திலே அடங்குகின்றன, யாங்ஙன மெனின், இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்னும் வேதம் நான்கில் அதர்வணம் என்பது முதன் மூன்றின் மந்திரத் தொகுப்பேயாதலால் அஃதவற்றில் அடங்கப் பெறும், ஆகலினாற்றான் அமரநிகண்டுடையார் அம்மூன்ற னையுஞ் சுட்டி வேதங்கள் `த்ரயீ என வழங்கப்படு மென்றனர், அம் மூன்று வேதங்களுள் நடுநின்ற எசுர் தய யஜூரேவசிர என்றமையால், ஏனையிரண்டிற்கும் முகம்போல நிற்குஞ் சிறப்பு வாய்ந்ததாம். இது மந்திர மெனவும் பிராமணம் எனவும்இருவேறு பகுதியினதாய் விளங்கா நிற்கின்றது. இவற்றுள் மந்திரப் பகுதி மறித்தும் ஏழு காண்டங் களாகப் பகுக்கப்பட்டுச் சம்மிதாகாண்டம் என்னும் பெயருடைத்தாய்ச் சிறந்து விளங்குவதாம், இனி இச் சம்மிதாகாண்டம் ஏழினுள்ளும் நடுக்காண்டமே பெரிதுஞ் சிறப்புடைத்து, இனி இந்நடுக்காண்டமும் ஏழு சங்கிதை களாக வகுக்கப்பட்டுள்ளது, இவற்றுள்ளும் நடுநின்ற சங்கிதையுள் திருவுருத்திரத்தின் கண்ணே சதருத்ரியம் விளங்கா நிற்ப, அச் சதருத்ரீயத்தின் இடையிலே விளங்கும் `ekátha’ என்னும் ஐந்தெழுத்துக்களின் நடுவில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் `சிவ என்னும் மொழியால் வேதமும் வேதத்தைச் சார்ந்த கலைகளும் ஒளிர்ந்து கொண்டிருக் கின்றன, ஆகையால், இச் சிவவென்னும் மொழி பிரம மென்னும் மொழியாற் குறிக்கப்படும் பெரும்பொருட்குச் சிறப்புப் பெயராம் என்பது தெளியப்படும், இன்னும் இதனை விரிப்பிற் பெருகுமாதலால் இத்துணையின் அமைந்து, எடுத்த பொருண்மேற் றொடர்ந்து செல்வாம். இவ்வாறு சைவம் என்னும் மெய்ப்பொருளை ஆராய்ந்த நிலை எப்பொருளுங் கடந்த பெரும்பொருட் சிவத்தில் தலைப்பட்டு நிற்குங் கழிபெருஞ் சிறப்புணர்ந்தன்றே தாயுமான சுவாமிகள், சைவசமயமே சமயம் என்று கட்டளையிட்டருளி னார். பிற சான்றோரும் சைவத்தின்மேற் சமயம் வேறிலை என்று கூறினார். மற்றைச் சமயங்களெல்லாம் சைவத் திற்குரிய படிவரிகளாய், நம்மாற் பாராட்டப்படுந் தன்மையவாய் நிற்றலின் அவை சைவசமயிகளான நம்ம னோராற் புறம்பழிக் கற்பாலன வல்லவாம். வேத மென்னும் மரத்தில் இலையும், தளிரும், அரும்பும், மலரும், பிஞ்சும், காயுமாய் மற்றைச் சமயங்களெல்லாம் நிற்ப, வேதாந்தம் என்பது அதன் முடிவிற் பழமாய்ப் பழுத்துத் தானான தன்மையாய் நிற்ப, அதனைப் பிழிந்து எடுத்த சைவ சித்தாந்தம் தானென்னுந் தன்மையாய் நிற்குமென்ப தனைக் குமர குருபர சுவாமிகள் நீயே, வேதமென்னும் பாதவம் வளர்த் தனை என்பதனால் நன்றருளிச் செய்தனர். இங்ஙனம் சைவ சமயத்தினால் அறிவுறுத்தப்படும் சிவம் எல்லாப் பொருளுங் கடந்ததாய் உண்மையறிவின்ப வடிவாய் எல்லா ஆற்றலுமுடையதாய் எல்லாவற்றையு மறிவதாய்ப் பிறப்பிறப்புக்களிற் படாத தூய அருண் மேனியுமுடைய தாய்த் திகழ்வதென்று அறிமின்கள்! இவ்விலக்கணங்க ளெல்லாம் ஒருங்குடைய அப்பெரும் பொருளைச் சிவம் என்றழைக்க நுங்கட்கு விருப்பமில்லை யாயின் நாராயணன் என்றழை மின்கள்! பிரமனென்றழை மின்கள்! புத்தனென் றழைமின்கள்! அருகனென்ற ழைமின்கள்! எப்பெயரிட்டு எவ்வெவ்வாறு அழைப்பினும் அப்பெயரெல்லாம் அவற்குப் பொருந்தும். வெறும் பெயரிலே நுங்கட்குப் போர் நிகழ வேண்டாம். எங்கும் உள்ள கடவுள் ஒருவனே. இது தெருட்டுதற்கே திருமூலரும் பட்டினத்தடிகளும், ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்ம்மினே என்றும், ஒன்றென் றிருதெய்வ முண்டென் றிருவுயர் செல்வமெல்லாம் அன்றென் றிருபசித் தோர்முகம் பார்நல் லறமுநட்பும் நன்றென் றிருநடு நீங்காம லேநமக் கிட்டபடி என்றென் றிருமன மேயுனக் கோருப தேசமிதே என்றும் அருளிச் செய்த உண்மைகளைக் கடைப்பிடித்து ஒழுகுமின்கள்! நம்முடைய நாடு மத ஒற்றுமையின்மையால் நாளுக்குநாள் மழுக்கம் அடைகின்றது, சைவத்தின் முடிபுகள் எல்லாச் சமயங்களுக்கும் பொருத்தமாவனவாம், இதனை நீங்கள் செவ்விதின் மனம் பொருத்தி எல்லாரும் ஒற்றுமை யாய் வாழ்மின்கள்! இத்தன்மையவான மத ஒற்றுமையும் அருள் ஒழுக்கமும் சைவத்தின் சிறப்பான உண்மைகளாம் என்பதனையே சைவ சமயாசிரியருள் முதல்வரான திருஞானசம்பந்தப் பெரு மானும், சைவ சித்தாந்த ஆசிரியருள் முதல்வரான மெய் கண்ட தேவரும் அறிவுறுத்தினர்கள், இரு சைவ விளக்கங் களான இவ் வாசிரியன்மார் இருவருள் ஞான சம்பந்தப் பெருமான் இற்றைக்கு ஆயிரத்து இரு நூற்றைம்பது ஆண்டுகளின் முன்னே சீர்காழி என்னும் ஊரிலே தோன்றியும், மெய்கண்ட தேவர் இற்றைக்கு அறுநூற்றைம் பது ஆண்டுகளின் முன்னே கம்பரை வைத்துப் பாதுகாத்து இராமாவதாரம் பாடுவித்த வெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப பிள்ளை மகளார் மணிவயிற்றிற் றோன்றித் திருவெண்ணெய் நல்லூரில் அமர்ந்தும் சைவத்தின் அரிய பெரிய உண்மைகளை எல்லா மக்களும் உணர்ந்து உய்யும்படி காட்டி நந்தாமணி விளக்கங்களாய்த் திகழ்ந்தனர். ஞாயிறு, திங்கள், தீ என்னும் மூன்று விளக்கங்களும் புறத்தே உலகத்திற் பரவிய இருளை விலக்கி எம்முடைய ஊனக் கண்களை மட்டும் விளக்குகின்றன. மற்று இந்நந் தாமணி விளக்கங்களான ஆசிரியன்மார் இருவருமே எம் அகத்தே பரவிய ஆணவவல்லிருளை ஓட்டி எம் ஞானக் கண்களைத் திறப்பித்துச் சிவபெருமான் திருவருட் பேற்றைப் பெறுவிக்கின்றனர், ஞானசம்பந்தப் பெருமானும் மூன்றாம் ஆண்டிலே சிவனருள் நிரம்பப் பெற்றார். மெய்கண்ட தேவரும் மூன்றாம் ஆண்டிலே சிவனருள் நிரம்பப் பெற்றார், ஞானசம்பந்தர் தம் மூன்றாம் ஆண்டிலேயே வழுத்துரை வடிவான திருப்பதிகங்கள் கட்டளையிட்டுமறைவழியை விளக்கியருளினார். மெய்கண்ட தேவர் தாமும் மூன்றாம் ஆண்டிலே எழுத்தியல் வடிவான சிவஞானபோதங் கட்டளையிட்டு ஆகமவழியை விளக்கி யருளினார். மறைமொழி சூத்திரம் போலப் பொருட் சுருக்க முடைத் தாய்ப் பொதுவுற நிற்பது; ஆகமம் அச்சூத்திரத்திற் குரை போலப் பொருட் பெருக்க முடைத்தாய்ச் சிறந்து நிற்பது. இது, வேதமொடாகமம் என்னுந் திருமந்திரத்தானும் உணரப்படும், அவையிவ்வா றிரண்டாயிருப்பினும் பொருண் முடிபால் ஒன்றேயாமென்பது சைவ பாடியகாரரான நீலகண்டர் வயந்து வேத சிவாகமயோர்ப் பேதம் என்றுரைத்தமையால் விளங்கும். இது போல ஞான சம்பந்தர் திருமொழியான மறையும், மெய்கண்ட தேவர் திருமொழியான சிவஞான போதமும் பொருளறிவுறுக்கு முறையால் இரு திறப்படினும் பொருண்முறையால் ஒன்றே யாமென்பது பெறப்படுமென்க. அது நிற்க, அவ்விருவருங் குழந்தை களாயிருந்த பொழுதிலே தமிழ்மறையுந் தமிழ் ஆகமமும் தோன்றிய முறைமை நனிமறைந்த பொருள்களை உள்ளடக்கி நிற்கின்றது. காம, வெகுளி, மயக்க மென்னும் மும்மல வலியுஞ் சிறிதுந் தோன்றப் பெறாத காலங் குழந்தைப் பருவமேயாம். அப்பருவமொன்றே மிகவுந் தூயவான வேத சிவாகமங்கள் தோன்றுதற்குரிய தாகலின் அப் பருவத்திலே தான் அவர்க்கு அவை தோன்றுவவாயின. இன்னும் அவர்க்கு மூன்றாம் ஆண்டிலே அவை தோன்றின என்பதனால் பதி, பசு, பாசம் என்னும் மூன்றிற் பசுபாசநிலை கழன்று பதி நிலையில் நின்ற பொழுது அப்பதிமொழிகள் தோன்றினவென்றும், அவர் அப்போது சத்துவம், இராசதம், தாமதம் என்னும் மூன்றியல்புகளிற் றாமத இராசதங்களைக் கடந்து தூய சத்துவத்திலே நின்றனரென்றும், தூயது, தூவாதது இரண்டுங் கலந்தது என்னும் மும்மாயையுட் பின்னிரண்டனையுங் கழித்துத் தூயமாயையிலே நின்றன ரென்றும் அறிதல் வேண்டும். இன்னும் ஞானசம்பந்தப் பிள்ளையார்க்கு இறைவன் அம்மையப்பராய் எதிர்தோன்றி அவரை அழுகை தீர்ப்ப அம்மையார் அருமைத் திருமுலைப் பாலைப் பொற் கிண்ணத்திற் பிள்ளையார்க்கு ஊட்டினார் என்பதனால், அம்மையப்பரை ஒருங்கு நினைக்கும் உறைப்பினாலே பாம்பு சுழன்றாப்போலச் சுரித்துக் கொண்டிருக்கின்ற தூயமாயை யென்னுங் குண்டலிசத்தியானது சிவவழலாற் கண்விழித்து நாதத்தின் மேற்கண்ணதான அமிழ்தத்தைச் சென்று பற்ற அப்பொழுது ஒழுகும் அவ்வமிழ்த ஊற்றைப் பருகித் தூய சிவத்திலே சுட்டுணர்வற்ற நிலைகூடி நிற்குமாறு உணர்த்தப் பட்டபடியாம், எதிர்தோன்றிய அம்மையப்பரே உள்ளம் ஒருங்கி நினைக்கும் சக்தி சிவமாம். அவ்வுறைப்பின்கட் டோன்றும் சிவவனலே பொன்னொளியாம்; பொன் தீயின் கூறென்பது அளவைநூற் புலவரான அன்னம் பட்டர்க்கும் உடன்பாடு. அப்பொன்னொளியோடு கூடிய கிண்ணத்தின் வட்டவாய்வடிவே சுழன்றிருக்குங் குண்டலி யாற்றலாம். அக்கிண்ணத்திற் கறந்தூட்டப்பட்ட திரு முலைப்பாலே நாதத்தின் மேற்கண்ணதான திங்கள் மண்டிலத்தினின்றுருகி ஒழுகும் பேரின்ப அமிழ்த ஊற்றாம். அவ்வமிழ்த ஊற்றைப் பருகி ஒருபது நாடியினும் நிறைக்கவே ஒரு பஃதின்னோசை களுங் கேட்குமாதலின் அவ்வொரு பஃதின்னொலி விளக்கமே ஞான சம்பந்தப் பிள்ளையார் அருமைத் திருவாய் மலர்ந்த திருப்பதிகங்களாம். தூவாமாயையிற் றோன்றும் தூவா எழுத்தொலி வடிவான ஏனையோர் மொழிகள் போலாது, ஞானசம்பந்தப் பிள்ளையார் திருமொழிகள் பரவயிந்த வத்தின் கண்ணே தோன்றிய ஓங்கார விளக்கமாகும். இதனை அறிவுறுத்தற் பொருட்டே பிள்ளையார் தம்முடைய முதற்பதிகத்தின் முதலிலே தோடுடைய செவியன் என்று கட்டளையிட்டு முதற்கண்ணே ஓங்காரத்தை நிறுத்தி யருளினார், இவ்வாறே மெய்கண்டதேவர் தம் சிவஞான போதத் திருமொழியுஞ் சுத்தவயிந்தவத்திற் றோன்றிய பரநாத வொலிகளாம். இன்னும் இவற்றின் நுட்பங்களெல்லாம் நல்லாசிரியனை யடைந்து அவனறிவுறுக்கும் அறிவுரை வாயிலான் அறியற்பாலன வாகலின் அவற்றையினி இங்கு விரியாது விடுகின்றாம். இதுகாறுங் கூறியவாற்றால் முதலிற் சைவமென்பது யாது என்று ஆராயப் புகும்வழி அவ்வறிவு ஒழிந்துபோகும் பொருள் போலாது அழியாப் பொருளாய் எல்லா உயிர்கள் மாட்டுந் தொன்றுதொட்டே உள்ளத்திற் பதிந்திருக்குமா மென்பதும், சமயம் என்பது பொழுது, காலம், அவசரம் என்று பொருள் படுவதாகலிற் காலத்தினாலும் இடத்தி னாலும் வரையறுக்கப் படுவதால் சிறுபான்மை அறிவு விளக்கமுடைய உயிருக்கன்றி முற்றறிவு விளக்கமுடைய முதல்வற்கு இல்லையாமென்பதும், உயிரும் இறையும் என இரண்டில்லை முழுமுதற் பொருளே ஐம்பொறி அசைவால் உயிர்போலத் தோன்றுகின்றதென்று கூறும் ஏகான்ம வாதவுரை உயிரின் அறிவியக்கமின்றி ஐம்பொறிகள் இயங்கமாட்டா என்று காட்டப்படுவதனால் மறுக்கப்படு தலின் அது பொருந்தாதாமென்பதும், இங்ஙனம் உயிர் ஐம்பொறிகளின் வாயிலாய்ப் புலன்களை உணரும் காலங்களெல்லாம் அதற்குத் தனித்தனியே ஒவ்வொரு பொழுதுகளாமென்பதும், அங்ஙனம் உணரும் வழியும் உயிர்க்கு யாதானுமொரு பொறிவழிவரும் இன்பத்திலேயே விருப்பம் மிக்குப்படுமென்பதும், அங்ஙனமெல்லாம் மிக்குச் செல்லுகின்ற உயிரின் பொழுது வேறுபாடுகளைச் சமயங் கள் என்று வழங்காமை அவை உடம்போடு உடன் அழித லினாலேயா மென்பதும், உண்முகமாகச் செல்லும் அறிவாராய்ச்சியே சமயவாதற் குரித்தா மென்பதும், அவ்வாறு செய்யப்படும் உண்முக அறிவாராய்ச்சியும் பல திறப்படுகின்றன வென்பதும், அவையே உலகாயதம் முதலிய பெயர்களான் வழங்கப்படலாயின வென்பதும், அவை யொவ்வொன்றுங் பயன்படுதலுடையனவே யல்லது பயனற்றனவாகா வென்பதும், இதுவே முடிநிலையிலுள்ள சைவத்தின் பொதுநிலை உண்மையா மென்பதும், இனி அம்முடிநிலைக்கண் உள்ளார்க்குக் கீழ்நிலைகளினுள்ளன போலியாகத் தோன்றுதல் குற்றமாகாதென்பதும், இனிச் சைவமென்பது சிவத்தைப் பொருளாக உடையதென்பதும், சிவமென்பது தொல்காப்பியர், நச்சினார்க்கினியர், மணி வாசகப் பெருமான் முதலிய பேரறிவாளரால் விளக்கப் பட்ட படி எப்பொருளுங் கடந்த அருவப் பொருளா மென்பதும், இத்தகைய முழுமுதற் பொருளை ஆராய்ந்தறிந்த நிலையே சைவ சமயமா மென்பதும், அம்முழுமுதற் பொருளைச் சிவம் என்று வழங்குதலே பண்டை மறை முதலான தொன்னூற் கருத்தா மென்பதும், இப்பெற்றிய தான அம்முதற் கடவுளுண்மையை ஒரோ ஒருகால் வேறு வேறு பெயரிட்டு வழங்கினும் அதுசைவத்திற்கு இழுக்கா வதில்லை யென்பதும், இங்ஙனம் பொதுநிலை யுண்மையும் அருளறமும் விளக்க வந்த இரண்டு சைவ விளக்கங்கள் திருஞானசம்பந்தப் பெருமானும் மெய்கண்ட தேவருமாவ ரென்பதும், இவர் இருவரும் வியத்தகும் அருட்பிறப்பின ராம் என்பதற்கு அவர் வரலாறுகளிலுள்ள உட்பொருள்களே சான்றாமென்பதும் இதன் கண்ணே தொகுக்கப் பட்டன. அடிக்குறிப்புகள் 1. ஈசாவாசியோப நிடதம் 4, 2. மண் புனல் அனல் கால் விசும்பு என்பவற்றைப் பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாயம் என்றும், மெய் வாய் கண் மூக்குச் செவி என்பவற்றைத் தொக்கு சிங்குவை சட்சு ஆக்கிராணம் சோத்திரம் என்றும், சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பவற்றை ரசம் ரூபம் பரிசம் சத்தம் கந்தம் என்றும், கை கால் வாய் எருவாய் கருவாய் என்பவற்றைப் பாணி பாதம் வாக்கு பாயுரு உபத்தம் என்றும்; மனம் அறிவு நினைவு முனைப்பு என்பவற்றை மன புத்தி சித்தம் அகங்காரம் என்றும், காலம் பிறழா நிகழ்ச்சி கலை நினைப்பு விருப்பு மகன் மாயை என்பவற்றைக் காலம் நியதி கலை வித்தை அராகம் புருடன் மாயை என்றும், தூயநினைவு தலைமை அருள்நிலை அன்னை அத்தன் என்பவற்றைச் சுத்தவித்தை ஈசுரம் சாதாக்கியம் சத்திசிவம் என்றும் வடநூலார் வழங்குப. 7. திருவுருவ வழிபாடு அறிவிலுருவமாகக் காணப்படும் இப்பருப்பொரு ளுலகம் போற் காணப்படுவ துமன்றாய், அறிவிலருவப் பொருள்களாகிய வளியும் வானும்போலுணர்ந்துரைக்கப் படுவதுமன்றாய், அறிவுள்ள உயிர்ப்பொருள்போலறிந் துணரப்படுவதுமன்றாய்க், காண்பதற்கெல்லாம் அப் பாலாய்க் கேட்பதற்கெல்லாம் அப்புறமாய், உரையளவு சென்று முடிவிடங் கடந்ததாய் மனவுணர்வு சென்று பற்றுதற்கு ஏலாதாய், அறிவினுளறிவாய், உயிரினுள் உள்ளு யிராய், எல்லா வுலகங்களும் எல்லா உயிர்களும் தனது அருள் வெளிப்பரப்பின் கண்ணே மடங்கி யடங்கிக் கிடப்ப அவற்றின்மேல் விரிந்து சென்று முடிவிட மறியப் படாத பெரும் பரப்புடையதாய், அறிவும் இன்பமுமாம் வடிவ வுண்மைப் பொருளாய், எல்லா ஆற்றலும் உடையதாய்ப் பேரின்பம் நிரம்பித் ததும்பும் பெருங்கடலாய்ப் பேரருட் களஞ்சியமாய் விளங்கும் முழுமுதற் கடவுளைச் சிறுகிய அறிவுஞ் சிறுகிய தொழிலும் சிறுகி யறிந்த தனையும் மறந்து மறந்தறிதலும்மயங்கி யறிதலுமுடைய சிற்றுயிர்கள் உணர்ந்து வழிபடுதல் கூடாமையால் அருட்பெருங் கடலாகிய அவ்விறைவன் தன்னை யவ்வுயிர்களுணர்ந்து வழி பட்டு உய்யும் பொருட்டு ஒரோரு காலங் களிலோ ரோரிடங்களில் ஓரோ ரன்பர்க்குக் கன்றை நினைந்துவரும் புனிற்றா போலவும், விறகின்கட் பிறந்த தீப்போலவும், மோரின்கட் டிரண்ட வெண்ணெய் போலவும், வித்தின் கட் பிழிந்தெடுத்த எண்ணெய் போலவும் வெளிப்பட்டு அவர்க்கு அருள் செய்த அருட்டிருக் கோலங்களை மெய் யன்புடையராகி மன வொருமைப்பாடு கொண்டு நினைந்து நாவுரை குழறக் கண்ணீருங் கம்பலையுந் தங்குறிப்பின்றியே நிகழ வழிபட்டுச் சிற்றறிவுத்தன்மை விட்டுச் சிவவறிவுத் தன்மை பெற்று நலமுறுதற்கு வாயிலான நன்முறைதான் திருவுருவ வழிபாடாகும். இங்ஙனம் விறகின்கண் மறைந்து கிடந்த தீ அவ் விறகினை ஒன்றோடொன்று தேய்த்துக் கடைந்தவழி அதிற்றோன்றி நின்றவாறு போலவும், பாலின்கண் மறைந்து அளாவி நிறைந்த நெய் அதனைக் காய்ச்சிக் கடைந்தவழி யதன்கண் வெளிப்பட்டு நின்றவாறு போலவும், யாண்டும் பரந்து நிற்கும் இறைவன், உயிரினைக் கீழ்க்கோலாகவும் ஓங்காரவுணர்ச்சியை மேற் கோலாகவுங் கொண்டு அன்பென்னுங் கயிறுகட்டி யிழுத்துக் கடையவே வெளிப்பட்டுத் தோன்றிநின் றருள்புரிவனென்பது பற்றியே, விறகிற் றியினன் பாலிற் படுநெய்போன் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோனட் டுணர்வு கயிற்றினான் முறுக வாங்கிக் கடைய முன்னிற்குமே என்னுந் தேவாரத் திருப்பாட்டும், இந்திரந் துருக வென்மனத் துள்ளே யெழுகின்ற சோதியே யிமையோர் சிரந்தனிற் பொலியுங் கமலச் சேவடியாய் திருப்பெருந் துறையுறை சிவனே நிரந்த வாகாய நீர்நிலந்தீகா லாயவை யல்லையா யாங்கே கரந்த தோருருவே களித்தன னுன்னைக் கண்ணுறக் கண்டுகொண் டின்றே எனவும், சோதியாய்த் தோன்று முருவமே யருவாமொருவனே சொல்லுதற்கரிய வாதியே எனவும் போந்த திருவாசகத் திருமொழியும் நிறுத்திடு நினைத்தமேனி நின்மல னருளினாலே என்னுஞ் சிவஞானசித்தித் திருப்பாட்டும், ஆத்மாநம் அரணிம் க்ருத்வா ப்ரணவஞ் சோத்தராரணிம் ஜ்ஞாநநிர்மத நாப்யா ஸாத் பாசந்தஹதி பண்டித என்னுங் கைவல்லியோபநிடதத் திருமொழியும் வதேஹமரணிம் க்ருத்வா ப்ரணவஞ் சோத்ராரணிம் த்யாநநிர்மத நாப்யா ஸாத் தேவம் பச்யேந் நிகூடவத் திலேஷூ தைலம் ததிநீவ ஸர்பிராப ரோத வரணீஷூ சாக்நி: ஏவ மாத்மாத்ம நிஜாயதே ஸௌஸத்யே நைநம் தபஸா யோது பச்யதி ஸர்வவியாபிந மாத்மாநம் க்ஷீரே ஸர்பி ரிவார்பிதம் என்னுஞ் சுவேதாசுவதரோபநிடதத் திருமொழியும் எழுந்தன. இங்ஙனங் காணவுங் கருதவும் வாராத முழுமுதற் பெருங்கடவுளைக் காணவுங் கருதவும் எளிதாகிய உருவத் திருமேனியிற்கொண்டு வழிபடுந் திருவுருவ வழிபாட்டின் இயல்பு அறியமாட்டாத வேறு சமயத்தார் சிலர், இந்துக்கள் இழிந்ததாகிய விக்கிரகாராதனை செய்து இறைவனுடைய பெருஞ்சினத்துக்கு ஆளாகின்றனர் என்று இழித்துச் சொல்லா நிற்பர். ரோம், கிரீசு, எகிப்து முதலிய நாடுகளி லுள்ளவர்கள் செய்யும் விக்கிரகாராதனை போல்வதன்றி இந்நாவலந்தீவின் கண் உள்ள நன்மக்கள் செய்து போதரும் திருவுருவ வழிபாடு, ஆழ்ந்த கருத்துடையதாய் முதல்வன் ஓரோர் அன்பர் பொருட்டு ஓரொரு காலங்களில் மேற்கொண்டு வந்த அருட்டிருவுருவ வழிபாடாகலின், அது மெய்யன்புடையார் மெய்ம்மையான் வழிபடுதற்குரிய மேம்பாடுடைத்தாம். பிற நாடுகளிலுள்ள மக்கள் இறைவன் அங்ஙனம் திருமேனி கொண்டு அருள்செய்யுந் திருக்கோலங் களை ஒரு காலத்துங் கண்டறியாமையின் அவர் தாந்தாம் அறிந்தவாறே ஒவ்வொரு சித்திரப்பாவைகளை அமைத்துக் கொண்டும். பூனை, பாம்பு, சுண்டெலி, முதலை முதலிய உயிர்களின் வடிவங்களை நிறுத்திக் கொண்டும் வழிபட்டு அவ் அறிவில் உருவப் பொருள்களின்கண் அன்புடையராய் இறைவனை யறிந்து வழிபடுதற்குரிய நல்வினையாளராய் வாழுவாராயினர். அப்பிற நாடுகளினும் ஒவ்வொரு காலங்களில் அபரஞானப் பேறு கைவந்தவர்களாகிய தீர்க்கதரிசிமார் சிலர் தோன்றி ஆங்காங்குள்ள மக்கள் உய்யும் பொருட்டாக நல்லொழுக்க முறைகளையும் அபரஞான வுண்மைகளையும் அறிவுறுத்து வந்தார்களென்பதை அவரவர் தேசசரிதங் களானும் சமய நூல்களானும் அறிந்துள்ளோமாயினும் அத்தீர்க்கதரிசிமாரெல்லாம் இறைவனுடைய திருக்கோலங் களை நேரே கண்டு வழிபடுதற்குரிய நல்வினைப்பெறும் பரஞான முதிர்ச்சியும் உடையராகாமையால், அவர் தமக்கு அவ்விறைவன் வான்முகிலில் மறைந்துநின் றருள் செய்தன னென்றும், அடவிகளிலும் மலைக்குகைகளிலும் தாம் இயங்கிக் கொண்டிருந்த காலங்களில் இறைவன் தம்மோடு உரையாடிய ஞானஒலி கேட்டாரென்றும் அவர் சமய நூல்களிற் சொல்லப்பட்டதன்றி, அவ்விறைவனே யுருவங் கொண்டு அவர் கண்ணெதிரே தோன்றி யருள் செய்தா னென்றும் அவ்வாறு அருள் செய்த முதல்வன் திருவடை யாளங்களிவை என்றுங் குறிப்பிடப்படாமையான் அவரெல்லாம் இறைவன்றன் அருட்கோலங்களைக் கண்டு வழிபடும் முறைமை யறியாராயினர். அங்ஙனம் அறிய மாட்டாத அபரஞான தீர்க்கதரிசிமார் கூறிய அறிவுரை களைக் கடைப்பிடித்தொழுகிய மக்கள் அவர் கூறிய நன்னெறிப் பொருள்களை மனம் பொருந்த அமைத்து அவற்றின் வழிநடந்து, இறைவனை உண்மையான ஒரு திருவுருவத்தின் வைத்து வழிபடும் முறைமை தமக்கு விளங்காமையால் தமக்கு விளங்கியவாறெல்லாம் வேறு புறவுருவங்களை அவ் விறைவன் அருளுருவங்களாகப் பிறழக் கொண்டு அவை தம்மையே வழிபடுகின்றனர், இனி நாவலந் தீவினராகிய நன்மக்களோ இறைவன் ஒவ்வோர் அன்பர் பொருட்டு ஒவ்வொரு காலங்களிற் கொண்ட அருட்கோலங்களாகிய சதாசிவன், மகேசுரன், அம்மை யப்பர், காளி, துர்க்கை, உமை, பிள்ளையார், முருகன், வைரவன் முதலியவற்றையே உண்மையான் வழி படுகின்றனர். அங்ஙனம் வழிபடப்படுவன வாகிய அருட்கோலங்கள் தாமும் மெய்யன்புடையார்க்கன்றி யேனையோர்க்கு எளிவந்து விளங்குவன அல்லவாகலான், அவை வெளிவந்து அருள் செய்யப்பெற்ற மெய்யன்பர் தாங்கண்டவாறே அவ்வருட்கோல அடையாளங்களை அன்புததும்பி வழிய அறிவு வடிவாய் விளங்குந் தம் திருமொழிகளால் வகுத்துக் கூறிய முறைபற்றி மக்க ளெல்லாருந் தாமும் உய்யுநெறி தேடல் வேண்டிக் கல்லி னாலுஞ் செம்பினாலுந் திருவுருவங்கள் அமைத்து அவற்றை மறைபொருள் நுட்பங்களொடு கட்டப்பட்ட திருக்கோயில் களில் எழுந்தருளச் செய்து வழிபாடாற்றி வருகின்றனர். இனி, இவ்வாறு இவர் வழிபடும்போதெல்ம் கல்லினாலுஞ் செம்பினாலும் அமைக்கப்பட்ட பருப் பொருள் வடிவான அத்திருவுருவங்கள், அவ்வடையாளங் களையுடைய அறிவுப்பொருள் வடிவான அருட்கோலங் களை நினைவூட்டி, அவ்வருட்கோல வழிபாட்டின்கண் அவர் அறிவைப் பதியச் செய்து அவருக்கு உறுதி தருதலான் அது திருவுருவ வழிபாடு என்று வழங்கப்படுகின்றது. இனிப் பிறநாடுகளிலுள்ள மக்களுக்கு உருவ வருட்கோலங்கொண்டு இறைவன் அருள் செய்த தில்லையென்பது மேலே இனிதெடுத்து விளக்கிக் காட்டினேமாதலால், அவர் தமக்குத் தோன்றியவாறெல்லாங் கற்பித்துக் கொண்ட பருப்பொருள் வடிவங்கள் தம்மை முதலாகவுடைய அறிவுப் பொருளுருவ வருட்கோலங்களை அவர்க்கு நினைவிலெழுப்பவும் அவரறிவை அவற்றின்கட் பதியுமாறு செய்யவும் மாட்டா தொழியும். ஒழியவே. அவர் கல்லானுஞ் செம்பானுமியற்றிய வடிவங்களிற் செய்யும் வழிபாடெல்லாம் அவ்வடிவங்களைக் கடந்து அறிவுருவ இறைவன் அருட்கோலத்தின்கட் செல்லா வாய் மடங்கி அப்பருப்பொருள் வடிவங்களின் கண்ணேயே செல்லுதலால் அவை விக்கிரகாராதனை என்று வழங்கப் படுகின்றன. இங்ஙனம் இந்நாவலந் தீவினராகிய நன்மக்கள் செய்து போதரும் திருவுருவ வழிபாடாகிய கடவுள் வழிபாடும், புறநாடுகளிலுள்ளவர்களாகிய மக்கள் மேற் கொண் டொழுகும் விக்கிரகாராதனையாகிய விக்கிரக வழிபாடுந் தம்முள் வேறுபாடுடையவாதல் உணராது இரண் டனையும் ஒன்றுபடுத்தி அவ்வாற்றால் நம்மனோர் மேற்கொண்டு செய்யுந் திருவுருவ வழிபாடாகிய நன்முறையை இகழுதல் பொருந்தாது. மேலும், நாவலந் தீவினராகிய நம்மனோர் பகலவனை வழிபடும்போது அவனை ஓருடம்பாகவும், பர்க்கன் என்னும் பெயரோடு கூடிய இறைவனை அவ்வுடம்பினுள் ஓர் உயிராகவுங்கொண்டு தொழுவர். பிறர் அங்ஙனங் கொள்ள அறியாமற் பகலவனையே கடவுளாகக் கொண்டு வணங்குவர். நம்மனோர் நிலவினை வழிபடும் போது அதனை ஓர் உடம்பாகவும், சோமன் என்னும் பெயரோடு கூடிய இறைவனை அதனுட் பரம்பிய முழுமுதற் பொருளாக வுங் கொண்டு வழிபடுவர். பிறரோ நிலவையே கடவுளாகத் துணிந்து தொழுவர். நம்மனோர் இவ்வூனுடம்பின்கண் ஓருயிர் இருப்பதுபோல அவ்வுயிரின் கண்ணும் பசுபதி என்னும் முதல்வன் உளனென்று கொண்டு வணங்குவர். பிறரோ அவ்வுயிரையே கடவுளெனத் துணிந்து வழி படுவர்.இவ்வாறே மண், புனல், அனல், கால், வான் என்னும் ஐம்பெரும் பொருள்களையும் அவ்வைம் பெரும் பொருள் களின் தொகுதியாக விளங்கும் இவ்வுலகினையும் இறை வனுக்கு உடம்புகளாகத் துணிந்து அம்முறையால வற்றை வழிபடும் நன்மக்கள் வழிபாட்டினியல்பு உணராது, அவை தம்மையே கடவுளெனப் பிறழ உணர்ந்து வழிபாடு புரியும் ஏனையோ ரொடுங் கூட்டி அவரை யிகழ்வார் உண்மை யறியாதவ ராவரென் றொழிக. இது பற்றியன்றே ஆங்கில நாட்டிற் புகழ்பெற்று விளங்கிய மாக்மூலர்*1 `ஜர்மானிய தொழிற்சாலைச் சிதர்துண்டுகள் என்னும் முதற் புத்தக முகவுரையில், `நாவலந் தீவினரால் தழுவப் படும் விக்கிர காராதனையும் வேறே, ரோம் முதலிய நாடு களில் தழுவப் படும் விக்கிரகாராதனையும் வேறே, முன்னையதிற் கடவுளின் உடம்புகளாக விக்கிரங்கள் வணங்கப்படுகின்றன. பின்னையதில் விக்கிரகங்களே அவ்வாறு வணங்கப் படுகின்றன; இங்ஙனமாயின் இந்து மக்களை நாங் குறை கூறுதலென்னை? என்னும் பொருள் தருமாறு எழுதுவாரா யினர். இன்னும், அவர் கடைசியாக வெளியிட்ட தமது `இந்தியர் ஆறு தத்துவக் கொள்கைகள் என்னும் புத்தகத்தில் திவ்விய தாதத்தர் என்பவர் எழுதிய ஒன்றை அறிவதற்குச் சொற்களும் பொருள்களும் அடை யாளங்களாக இடர்ப்படுகின்றன: சொல் அடையாளங்கள் செவிணுயர்வுக்குக் கருவியாகின்றன; பொருள்கள் கண்ணறி விற்குக் கருவியாகின்றன. இவையே இவையிரண் டற்கும் வேற்றுமை, சொல் அடையாளங்களாகிய மொழிகளைப் பயன்படுத்தலில் எந்தச் சமயவாதியும் ஐயுறுதற்கு இடம் பெறாதபோது, இறைவனை வழிபடுதற்குக் கருவியாகிய பொருளடையாளங்களை ஐயுறுதல் என்னை? என்பதனை எடுத்துக் காட்டித் தம் துணிபு நிலையிட்டனர். இவ்வாறு உண்மையாக ஆராய்ந்து பார்க்க வல்லார்க்குச் சைவ நன்மக்கள் பண்டைக்காலந் தொட்டுக் கைக்கொண் டொழுகும் நன்முறையாகிய திருவுருவ வழிபாடு ஏனைச் சமயிகள் கொண்டு போற்றும் விக் கிரகாராதனை போல்வதன் றென்பதூஉம் அது பலவேறு வகைப்பட்ட உண்மை நுண் பொருட் பரப்பெல்லாந் தன்னகத்தடங்கக் கொண்டு இறைவனை எளிதிலுணர்ந்து வழிபட்டு உயிர்கள் வீடுபேற் றின்பம் பெறுதற்கு ஏதுவாகிய நிலையா மென்பதூஉம் இனிது விளங்கும். இனி, மேலே காட்டியவாறு ஏனைநாடுகளில் அபர ஞானப்பேறுற்றுத் தோன்றிய தீர்க்கதரிசிகளுக்கு முழு முதற்பெருங் கடவுள் உருவமாகத் தோன்றி அருள் செய்ய வில்லை என்றும், இந்நாவலந் தீவிலுள்ள திருத் தொண்டர் களுக்கு உருவ அருட்கோலங் கொண்டு எழுந்தருளி வந்து அருள் செய்தாரென்றுஞ் சொல்லிய பகுதியில் ஐயம் நிகழாமைப் பொருட்டு அதனை யீண்டெடுத்து விளக்கி ஒருசிறிது வலியுறுப்பாம். இனி, இறைவன் உருவவருட்கோலங் கொண்டு தமக்கு அருள்செய்த முறைமை யினையும், அங்ஙனம் அருள் செய்யும் வழி இறைவன் கொண்ட திருவுருவ அடையாளங் களையுங் கண்டு அறிந்து அன்பு வெள்ளம் தம்மகம் நிறைந்து தளும்பி வழியப் பாட்டுக் களிலமைத்து வழிபட்ட திருத்தொண்டர் வரலாறுகளையும் ஆங்கில மொழியிற் பற்பல நாட்டு வரலாறுகளையும் ஒத்து நோக்கிப் பார்க்குஞ் சிறந்த புலவரும் பிறரும் உண்மையாமெனத் துணிந்து தழுவி யொழுகு கின்றனர். இறைவன் றமக்குச் செய்த அருண்முறையைத் தாமே தம் பாட்டுக்களில் வேறு ஏதொரு குறிப்புமின்றி அவ் விறைவனை வழிபடுதல் ஒன்றே குறித்து அமைத்துப் பாடுதலா லங்ஙனம் அவர் சொல்லுந் தம்முடைய வரலாற்றுக் குறிப்புகளை அப்புலவோர் உண்மையாமெனக் கொண்டு ஒழுகக் கடமைப்பட்டவராயினர். இனி, அவருள் ஒரு சாரார் இங்ஙனம் மெய்யன்புடைய திருத்தொண்டர் தாமே கண்டு கூறும்இறைவன் அருண் முறையைப் பொய்யென்று ஒழித்துவிடுதற்குக் கூடாமையால், அவ்வடியவர் கண்ட அவை யெல்லாம் உருவெளித் தோற்றங்க ளாவனவன்றிக் கடவுள் தாமே எழுந்தருளி வந்து அவர்க்கு அருள் செய்தனவாகாவெனவும் உரைத்து எதிர் வழக்குத் தொடுக்கின்றனர். அவர் சொல்லும் அவ்வுரு வெளித் தோற்றவியல்பை ஓர் எடுத்துக் காட்டின்கண் வைத்து விளக்கிக் காட்டுவாம்.இராமனுடைய வடிவ வழகைக் கண்டு விரும்பி அவனால் துன்புறுத்தப்பட்டுத் திரும்பிப் போகிய சூர்ப்பநகை தன் மூத்தோனாகிய இராவணனைக் கண்டு அவனுக்குச் சீதையின் பேரெழிலை விரித்து உரைப்ப, அதனைக் கேட்டு அவள்பாற் பெரிதும் விழைவு கொண்ட அவ் விராவணனுக்குத் திங்களைப் போற் றெளிந்து விளங்கு சீதையின் முகமும், அம்முகத்திற் குழைச்செவியளவுங் கிழித்துச் செல்லுங்கரிய பெரிய வரிகடை யொழுகு விழிகளும், முல்லை முகைபோற் குமிழ்த்த மூக்கும், பவளத்தை அறுத்துக் கடைந்து திரட்டி வைத்தாற் போலும் செவ்வாயும் அவ்வாயினகத்தே முத்து வரிசைபோல் திகழும் பற்களும், பளிங்குபோல் தெளிவாகிய கன்னங்களும், கரிந்த சுரிந்து நீண்டு கிடக்கும் மயிர்க்கற்றையும் பிற உறுப்புகளும் தன் விழியெதிரே தோன்றக் கண்டு மெய்ம்மறந்த களிப்புடைய னாகித் தன்னருகே நின்ற தங்கையை அழைத்து, `இதோ தோன்றும் இவள் தானோ சீதை என்பாள்? என்று வினாயினானென்றும். அதற்கு அவள், தான் இராமன்மேற் கழிபெருங் காதல் கொண்டிருந் தமையால் தன்னெதிரே தோன்றிய அவ்விராமனது உருவெளித் தோற்றத்தைக் கண்டு `செந்தாமரைக் கண்களும் செங்கனி வாயும் பரந்து திணிந்த மார்பும் முழங்கால் தடவுந் தடக்கை களும் உடைய இவனே அவ் விராமனென்பா னென்று மறுமொழி தந்தாளென்றும் இராமாயணங் கூறாநிற்கும். இவ்வாறு தோன்றிய உருவெளித் தோற்றங்கள் அவ்வவர் காதன் மிகுதியால் தோன்றியனவாகையால் அவை உண்மையாகவே வெளிப்பட்ட அருட்கோலங்களாக மாட்டா; இதுபோலவே, முழுமுதற்பெருங் கடவுளிடத் திற்றமக்கு நிரம்பிய அன்பின் பெருக்கால் அவ்வடியவர்தாம் கண்ட உருவெளித் தோற்றங்களை உண்மையா மெனக் கொண்டு தஞ்செய்யுட்களிற் அமைத்துப் பாடினாராகலான், அவர் கண்ட அத்தோற்றங்கள் இறைவன் கொண்ட அருட்கோலத் திருவுருவங்களாமென்று துணிந்துரைத்தல் யாங்ஙனமெனின், கண்ணுக்கு மட்டுமே தோன்றி ஏனைப் பொறிகளுக்குப் புலனாகாத தோற்றங்களாயின் அவை நீர் கூறுமாறு பொய்யாமொழிந்திடும். அவ்வாறன்றிக் கண் ணினாற் காணப்படும் உருவமும், செவியினாற் கேட்கப்படும் ஓசையும். மூக்கினாற் கவரப்படும் இனிய மணமும். கையினாற் பற்றப்படும் வடிவமுங்கொண்டு பொருள் விளங்கச் சொற் சொல்லுதலும் நகுதலும் இயங்குதலுமுடைய தோற்றங் களாயின், அவை யெல்லாம் நீர் கூறுமாறு உருவெளித் தோற்றங்களாதற்கு ஒருவாற்றானும் ஏலாவாய், இறைவன் அவ்வன்பர்க்கு அருள் செய்தற் பொருட்டுக் கொண்ட அறிவுருவ அருட்கோலங்களேயா மென்பது இனிது துணியப் படும் அற்றன்று, அவ்வடியவர் தமக்குள்ள அளவிறந்த அன்பின் மிகுதியால் தம்மெதிரே தோன்றும் அவ் வுருவெளித் தோற்றங்களை நிற்பன போலவும் நடப்பன போலவும் பேசுவன போலவுஞ் சிரிப்பன போலவும் பிற செய்வன போலவு மெல்லாங் காண்பாராயின ரெனின்; அது கிடக்க, இங்ஙனம் வினா நிகழ்த்தும் நீவிரும் நிற்பீர்போலவும் நடப்பீர்போலவும் பேசுவீர்போலவுஞ் சிரிப்பீர்போலவும் உண்பீர்போலவும் உடுப்பீர்போலவுந் தோன்றுகின்றமை யின், நீவிரும் அங்ஙனம் பொய்யா யொழிந்திடுவீர் போலுமெனக் கடாவுவார்க்கு மறுமொழி கூறலாகாமையான் அவ்வாறு உலக வியற்கையோடு மாறுபட்டு வினாதல் போலியாமென்றொழிக. இனி, இங்ஙனங் காட்டிய அளவை முறைகொண்டு, தமக்கெதிரே தோன்றும் உருவம் ஐம்பொறிகளானும் உணரப்படும் பெற்றியுடையதாயின் அஃது உருவெளித் தோற்ற மாவதின்றி, மெய்ம்மை வடிவுடைய தேவ வடிவமாமென்பது நன்று வலியுறுக்கப்பட்டதாயினும்,இத் தென்றமிழ் நாட்டிலுள்ள திருத்தொண்டர்க்கு வெளிப்பட்ட அக்கோலங்கள் அங்ஙனம் ஐம்பொறியானும் உணரப்படும் அருட்கோலங்களாமென்பது அவ்வடியவர் திருச்செய்யுளி னின்றே எடுத்துக்காட்டி நுமது மேற்கோளை நிறீஇக்கொள்க என்பார் மகிழ்வுறல் வேண்டி அதுவுந் தந்து விளக்குவாம். மதுரை மாநகரிற் பாண்டியன் அவைக்களத்தில் தெய்வப் புலவராய் அமர்ந்திருந்த ஆசிரியர் நக்கீரனார், ஆலவாய்க் கடவுள் எழுதிய 3கொங்குதேர் வாழ்க்கை என்னுஞ் செய்யுட்குக் குற்றஞ் சொல்ல, அக்குற்றத்தைக் களைந்து கொள்ளும் பொருட்டும், அச்செய்யுளின் மெய்ம்மைப்பொருள் அவர்க்கு அறிவுறுத்தும் பொருட்டும் இறைவன் உருவ அருட்கோலம் தழுவி வந்த அவர்க்கு அதனை உணர்த்தியும் அவரதனை உணராமல் தாஞ் சொல்லிய குற்றத்தை நிறுத்தப் புகுந்த வழி, இறைவன் அவரது செருக்கை அடக்கி அவரைத் தூய்மை செய்தருள எழுந்த இரக்கத்தால் தன் நெற்றிக் கண்ணைத் திறந்து விழிப்ப, அதனினின்றுங் கிளர்ந்து தம்மைச் சுடும் அனலைப் பொறுக்கமாட்டாமல், மக்களுருவங் கொண்டு வந்த அப் பெருமானை அறிந்து தம் பிழையைப் பொறுத் தருளும்படி நக்கீரனார் அவ்விறைவனைக் குறையிரந்தி யற்றிய திருவெழுக் கூற்றிருக்கை என்னுஞ் செய்யுளில், சிறியேன் சொன்ன வறிவில் வாசகம் வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும் வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்து கீதம் பாடிய வண்ணல் பாதஞ் சென்னியுட் பரவுவன் பணிந்தே எனவும், அத் `திருவெழுக்கூற்றிருக்கை இறுதி வெண்பாவில், ஆல வாயி லமர்ந்தாய் - தணிந்தென்மேன், மெய்யெரிவு தீரப் பணித்தருளு வேதியனே யையுறவொன் றின்றி யமர்ந்து எனவும், பெருந்தேவபாணியில், புத்தியு நீயே முத்தியு நீயே சொலற்கருந் தன்மைத் தொல்லோய் நீயே, யதனாற் கூட லாலவாய்க் குழக னாவது அறியா தருந்தமிழ் பழித்தன னடியே னீண்டிய சிறப்பி னிணையடிக் கீழ்நின்று வேண்டு மதுவினி வேண்டுவன் விரைந்தே எனவும், அதன் இறுதியிலுள்ள வெண்பாவில், விரைந்தேன்மற் றெம்பெருமான் வேண்டியது வேண்டா திகழ்ந்தேன் பிழைத்தே னடியேன் - விரைந்தென் மேற் சீற்றத்தைத் தீர்த்தருளுந் தேவாதி தேவனே யாற்றவுநீ செய்யு மருள் எனவுந்தாமே தமக்கு உண்மை யறிவிக்கும் பொருட்டு இறைவன் உருவத் திருக்கோலங்கொண்டு வந்தானென்ப தூஊம், அவ்வாறு வந்த இறைவன் அருட்டிறத்தைத் தாமறியாதுபிழை செய்தாரென்பதூஉம், அதன்மேல் இறைவன் விழித்த நெற்றிக்கண் நெருப்புத் தம்மைச் சுடவே அவ்விறைவனைத்தாமறிந்து கொண்டா ரென்பதூஉம் நன்றாக எடுத்து மொழிந்திட்டார். இங்ஙனம் எடுத்து மொழிந்ததூஉம் பிறரை வஞ்சித்தன் முதலிய ஏதுவானன்றி இறைவனை என்பெல்லாம் நெக்கு நெக்குருகி நெஞ்சம் நெகிழ்ந்து கரைய வழிபட்டு அவன் அருளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டேயாமென்பது பொது வறிவுடை யார்க்கும் இனிது விளங்கும். இங்ஙனம் இறைவன் உருவ வருட்கோலந் தழீஇ. வந்து நக்கீரனார்க்கு அருள் செய்த வியத்தகு முறையை எவர்தாம் உருவெளித் தோற்ற மென்றுரைக்க ஒருப்படுவார்? எந்த நிரீசுவராதிதான் இதனை மறுக்கவல்லராவர்? அவ்வாறவர் பொய்யென்று மறுக்க விரும்பினால் இவற்றிற்கெல்லாம் வேறு யாதுதான் வழிசொல்லமாட்டுவார்? இன்னும் ஒன்று காட்டுவாம். உலகமெல்லாம் புகழ்ந்தேத்துஞ் சைவத் திருவாளராகிய மாணிக்கவாசகர் தாம் அமைச்சராயிருந்துழிப் பாண்டியன் தந்த பொருள் கைக்கொண்டு குதிரை கொள்ளும் பொருட்டுச் சென்ற வழியிற்கிட்டிய திருப்பெருந்துறைப் பூங்காவிற் சிவ பெருமான் ஓர் அந்தணர் வடிவங்கொண்டு மாணவர் பலர் புடைசூழவிருந்து தம்மை ஆண்டுகொண்டு அருள் செய்த முறையைத் திருவண்டப் பகுதியில், என்னே ரனையோர் கேட்கவந் தியம்பி யறைகூவி யாட்கொண் டருளி மறையோர் கோலங் காட்டி யருளலும் எனவும், போற்றித் திருவகலில், அருபரத் தொருவ னவனியில் வந்து குருபர னாகி யருளிய பெருமையை எனவும், ஆனந்தாதீதத்தில், ஈறிலாதநீ யெளியையாகிவந் தொளிசெய் மானுடமாக நோக்கியுங் கீறிலாத நெஞ் சுடைய நாயினேன் கடைய னாயினேன் பட்ட கீழ்மையே எனவும், திருவம்மானையில், செங்க ணெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி யெங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமு மாட்கொண்டு தெங்கு திரள் சோலைத் தென்னன் பெருந்துறையா னங்கண னந்தணனா யறைகூவி வீடருளு மங்கருணை வார்கழலே பாடுதுங்கா ணம்மானாய் எனவும், அருட்பத்தில், நீதியே செல்வத் திருப்பெருந் துறையி னிறைமலர்க் குருந்தமே வியசீ ராதியே யடியே னாதரித் தழைத்தால் அதெந்துவே யென்றரு ளாயே எனவும், பிரார்த்தனைப்பத்தில், கலந்து நின்னடி யாரோ டன்று வாளா களித்திருந்தேன் எனவும், பின்பு அவ்விறைவனா ணைவழிநின்று பாண்டிய னிடத்திற் றிரும்பச் சென்று தாம் அங்கிருந்துழிக் குறிப்பிட்ட நாளிற் சிவபெருமான் நரிகளைப் பிடித்துக் குதிரைகளாக்கிக் கொண்டு ஒரு குதிரை மேற்கொண்டு தாமும் பாண்டி நாடு அடைந்து அவ்வரிய அருட்டிருக்கோலங் காட்டி யருள் செய்த அருட்டிறத்தைத் திருவேசறவில், ஒருங்குதிரை யுலவுசடை யுடையானே நரிகளெல்லாம் பெருங்குதிரை யாக்கியவா றன்றேயுன் பேரருளே எனவும், கீர்த்தித் திருவகவலில், அரியொடு பிரமற் களவறி யொண்ணான் நரியைக் குதிரை யாக்கிய நன்மையும் ஆண்டுகொண் டருள வழகுறு திருவடி பாண்டியன் றனக்குப் பரிமா விற்று எனவும், மதுரைப் பெருநன் மாநக ரிருந்து குதிரைச் சேவ கனாகி யகொள்கை எனவும், அரியொடு பிரமற் களவறி யாதவன் பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும் எனவும், திருவம்மானையில், சிந்தனையை வந்துருக்குஞ் சீரார் பெருந்துறையான் பந்தம் பரியப் பரிமேற் கொண் டான்றந்த வந்தமிலா வானந்தம் பாடுதுங்கா ணம்மானாய் எனவும், திருப்பொன்னூசலில், சால வமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான் எனவும், அன்னைப்பத்திற், சட்டையிட்டுக் குதிரைமேல் வந்தாரென்பது தோன்ற, பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேல்கொண்டென் னுள்ளங் கவர்வரா லன்னே யென்னும் எனவும், திருப்பாண்டிப்பதிகத்தில் அங்ஙனங் குதிரை மேல் உருவ வருட்கோலங் கொண்டு வந்த இறைவனார் திருவுருவத்தையே தாம் நினைந்துருகினமை இனிது புலப்படத் தெரிவர நின்றுருக்கிப் பரிமேற்கொண்ட சேவகனா ரொருவரை யன்றியுரு வறியாதென்ற னுள்ளமதே எனவும், பாரின்ப வெள்ளங் கொளப்பரிமேற் கொண்ட பாண்டியனா ரோரின்ப வெள்ளத் துருக் கொண்டு தொண்டரை யுள்ளங் கொண்டார் எனவும், பரவிய வன்பரை யென்புருக் கும்பரம் பாண்டியனார் புரவியின் மேல்வரப் புந்திகொளப்பட்ட பூங்கொடியார் மரவியன் மேல்கொண்டு தம்மையுந் தாமறி யார்மறந்தே எனவும், பின்னர் அடிகளைப் பாண்டியன் வைகையாற்றில் நிறுத்தி நலிந்தவழி இறைவன் அவரை அந்நலிவு தீர்த்தற் பொருட்டு விடுத்த வெள்ளப் பெருக்கினால் வைகை யாற்றின்கரை யுடைந்து நீர் பெருகுதலை அரசனுணர்ந்து அக்கரையை ஊரிலுள்ளார் அனைவருங் கட்டும் பொருட்டு நிலனளந்து கொடுப்ப, அங்ஙனந் தங்கடங் கட்குப் பிரித்துக் கொடுக்கப்பட்ட நிலங்களிற் கரை கோலிக் கொண்டு ஊரிலுள்ளா ரெல்லாரும் முயன்று கொண்டிருக்கையில், உறவினர் யாருமின்றித் தனியாளாய்ப் பிட்டு விற்கும் பொருளைக் கொண்டு தன் வயிறு நிரப்பி அந்நகரில் உறைந்து கொண்டிருந்தவளும், ஆலவாய்க் கடவுளிடத்திற் பெருகிய மெய்யன்புடையளும் முதிர்ந்த ஆண்டினளுமான ஒரு பிட்டுவாணிச்சி தனக்கு அரசனளந்திட்ட கரை நிலத்தைத் தானே திருத்திக் கட்ட மாட்டாமையானும் தனக்காகக் கூலியின்றித் தொழில் செய்வாரைப் பெறாமை யானும் பெரிதும் வருந்தி ஆலவாய்க் கடவுளிடஞ் சென்று அழுது குறையிரப்ப, அவள் குறையினைச் செவிமடுத்த அருளுருவின னான பெருமான் ஓர் ஒட்டனைப் போல் வடிவங்கொண்டு போந்து `அம்மே! TÈ¡F MŸ nt©L nkh? என்ன, அவள் `அப்பா! நான் கூலி கொடுக்கப் பொருள் சிறிதுமில்லாத வறுமையுடையேன்; நாடொறும் பிட்டுவிற்று அதில்வரும் சிறியதோர் ஊதியப் பொருளைக் கொண்டு வயிறு வளர்க்கின்றேன்; தீவினையேன் என் செய்வேன்! என்ன, அவன் `அம்மே! நீ சுடும் பிட்டில் உதிர்ந்து போகும் பாகங்களை யேனும் எனக்குக் கூலியாகக் கொடுக்க ஒருப்படுவையேல் உனக்காகத் தொழில் செய்வேன் என்றுரைப்ப. அம்முதியோள் பெரிதும் அகமகிழ்ந்து `அப்பனே! அவ்வாறே தருவேன், நீ தொழில் செய்துவா என்ன, அவர் அவ்வாறே தொழில் செய்வதுபோல் மாயஞ் செய்து இடையிடையே யவளிடஞ் சென்று அம்மே! எனக்கு நிரம்பவும் பசிக்கின்றது; உதிர்ந்த பிட்டுணவு கொடு என்று கேட்டுப் பெற்றுண்டு பிச்சனைப் போற் கூத்தாடிக் கொண்டு கரைகோலாது நாளைப்போக்க, அன்று மாலையில் அரசன் ஊரார் கரைகோலியதனைக் காணவந்து எல்லார்க்கும் அளந்துவிட்ட நிலந் திருத்தப்பட்டிருத்தலையும் பிட்டு வாணிச்சி பங்கு அங்ஙனந் திருத்தப்படா திருத்தலையுங் கண்டு வெகுண்டு அதனைத் திருத்தவந்த கூலியாளாகிய ஒட்டனைத் தன் கையிலிருந்த பிரம்பாலடித்தலும்,அவ்வடி அடித்தவனாகிய பாண்டியனை யுள்ளிட்டு அசையும் பொருள் அசையாப் பொருளாகிய எல்லாவற்றின் மேலும் உறைப்ப, ஒரு கூடை மண்ணால் அக் கரையைத் திருத்தி ஒட்ட வடிவங் கொண்டு வந்த இறைவன் மறைந்து சென்ற அருட் டிறத்தை நினைந்து நினைந்துருகி அவ்வரசன் பக்கத்தில் அமைச்சராயிருந்து நேரிற்கண்ட மணிவாசகப் பெருமான் தம் கீர்த்தித்திருவகவலில், ஆங்கது தன்னி லடியவட் காகப் பங்காய் மண்சுமந் தருளி பரிசும் எனவும், திருவம்மானையில், மண்சுமந்து கூலிகொண்4 டக்கோவான் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்கா ணம்மானாய் எனவும், திருப்பூவல்லியில், திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு மண்பான்மதுரையிற் பிட்டமுது செய்தருளித் தண்டாலே பாண்டியன் றன்னைப் பணிகொண்ட புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ எனவும், திருக்கழுக்குன்றப் பதிகத்தில் பிட்டுநேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பெரும்பித்தனே சட்டநேர்பட வந்திலாத சழக்கனே னுனைச்சார்ந்திலேன் எனவுந் தாமே தமது திருவாயால் அவ்வருட்பாட்டு முறை யினையும், இறைவன் தம் பொருட்டுத் தாங்கிவந்த உருவ வின்ப வருட்கோல மரபினையும், அவ்வருட்கோலங்கொண்டு வெளிப்பட்ட பெருமான் நிகழ்த்திய திருவிளையாடன் மாட்சியினையும் விதந்து பலமுறை யெடுத்தோதி யருளிய வாறு காண்க. ஐம்புலன்களுக்கும் ஆரநுகர்ச்சியாம் படி திருக்கோலந்தாங்கிக் காணவுங் கருதவும் உரைப்பவும் வாராத தன்பெருமைத்தன்மைகளைத் தன் அன்பர் பொருட்டுக் காணவுங் கருதவும் உரைப்பவுமெல்லாம் எளிவந்தனவாக்கி வெளிவந்த முதல்வன்றன் பேரருட் டிறத்தை அன்பு நிறைந்த தூய உள்ளத்தோடு ஆராயலுறு வார்க்கு அவ்விறைவன் உருவமும் அருவமும் அருவுருவமு மாகிய எல்லா நிலையும் எய்தவல்ல எல்லா ஆற்றலுமுடைய வனாமென்பது நன்கு புலப்படும்.இங்ஙனம் விரிவா யெடுத்துக் காட்டிய உண்மை யருண்மொழிகளையும் அந்த அருண் மொழிகளாற் பெறப்பட்ட உண்மை யருட்கோல வியல்பு களையும் உண்மை வரலாறுகளிற் பழகிய எவர்தாம் தழுவாது ஒழிவர்? அல்லதூஉம். உலக வியற்கைக்கு மாறாக நடப்பன வொன்று மில்லாமையால், 5அற்புதங்கள் அல்லது புதுமைகள் நிகழ்ந்தனவென்று உரைத்தல் வெறும் பொய் யேயா மென்று வாய்ப்பறை யறைந்து திரியும் பிரமசமா சத்தார் இவற்றிற் கெல்லாம் யாது சொல்லவல்லார்? இனி இங்ஙனந் தோன்றும்இறைவன் அருட்கோல வியல்பு உணரமாட்டாது, அவை தம்மை 6எண்ண முதிர்ச்சியா னிகழ்ந்த உருவெளித் தோற்றங்களா மென்பார் தெளிந் துறுதிகூடுமாறு இன்னும் ஒன்று காட்டுவாம்.7 மக்களென்பார் எக்காலத்தும் எவ்விடத்தும் ஒருவரோ டொருவர் உறவு உரிமை பூண்டு வாழும் இயல்பினரேயாம். இவ்வாறு உறவுரிமை கொண்டு வாழுமியல் பினராகிய மக்கள் ஒருவரொருவரோடு அளவளாவி வாழும் முறை யினால் அறிவு முதிர்ச்சியடைந்து உலகிய லறிவும் கடவுளு ணர்ச்சியு முடையராகின்றனர். அவ்வாறன்றி ஒவ்வொரு வரும் பிறவி முதற் கொண்டு அளவளாவுத லின்றித்தாந்தாம் தனித்திருந்து வளர்ந்து வருவராயின் அவரெல்லாம் அறிவு சிறிதுமிலராய் விலங்கினங்களைப் போல் உழன்று திரிவர். இதற்கு எமது குழந்தைப் பருவமே சிறந்த எடுத்துக் காட்டாம். யாம், தாய்வயிற்றையகன்று வெளிப்பட்ட காலத்தில் எம்மறிவு ஒரு சிறிதும் விளங்காது கிடந்தேம். அங்ஙனங் கிடந்த காலத்தில் எம்முடைய உள்ள மானது. உலக வுருவவண்ணங்கள் எதிர் தோன்றாத மாசற்ற பளிங்குபோலவும் இலச்சினையிடப்படாத மெழுக் குருண்டைபோலவும் இருந்தது. மனமென்னுங் கண்ணாடியில் அவை விளங்காது ஒழியவே, அக்கண்ணாடியின் அப்பக்கத்தேயிருந்து அவற்றைக் காணும் உயிரும் அறிவு விளங்கப்பெறாது கிடந்தது. அப்போது இறைவன் எமதுடம்பைப் பல்வகை யுண்டிகளால் வளர்த்து அதன்வழியே கொண்டுபோய் எமக்கு அறிவு விளங்கச் செய்யும் பொருட்டுத்தான் இரக்கத்தான் எம்மகத்தே வைத்த பசித் தீயானது எம்மை வருத்த அதற்காற்றாது யாம் வாய் திறந்து அழ அதனைக் கண்டு அன்புடையளாகிய அன்னை எம்மை எடுத்துப் பாலூட்டினாள். விலங்குகளோ தாம் பிறந்தவுடனே அங்ஙனந்தாயினுதவியும் வேண்டாது தாமே யறிந்து தாய்முலை யுண்ணுகின்றன. இவ்வாறு விலங்குகளைக் காட்டிலும் அறிவு விளங்கப்பெறாது கிடந்த யாம் பயிற்சி வழியால் எம் மனம் சிறிது உலக வுருவத்தைப் பற்ற அதன் புறத்தேயிருந்த எம்மறிவு சிறிது விளங்கி, எமக்கு முலை தருவாள் இவளென்று சிறிது காலமெல்லாம் அறிந்து, அதன்பின் அங்ஙனந் தருவாளுந் தாயென்றறிந்து, அவள் அவ்வாறு தருதலும் பசியெடுத்து யாம் அழுதலாலென்றும் அறிந்து, அதன்பின் யாம் உண்ணுவதும் பால் என்று அவள் பன்முறை யுரைப்பதனாலறிந்து, அதன் பின் எம் அன்னை யையும் எம்மையும் பாதுகாப்பவனெல்லாந் தந்தை யென்பதும் அவள் அறிவிப்ப அறிந்து இவ்வாறு முறை முறையே எம்மறிவு விளங்கப் பெறுவேமாயினேம். இதனால் எமக்கு அறிவு விளங்குவதற்கு ஏதுவாயிருந்த முதன் முயற்சி பசி ஒன்றேயாம் என்பதூஉம் இனிது பெறப்படும்.இனி இங்ஙனம் அறிவு வளருந்தோறும் யாம் புதுவதாக அறிந்தது அறிவாகவும், முதலில் எழுந்த பழையவறிவு எமக்கு அறியாமையாகவுங் காணப்பட்டன. இது பற்றியே, ஆசிரியர் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரும், அறிதோ ரறியாமை கண்டற்றாற் காமஞ் செறிதோறுஞ் சேயிழை மாட்டு (குறள் 1110) என்று திருவாய்மலர்ந்தருளினார். இனி இங்ஙனங் குழவிப்பருவ முதற்கொண்டு முறை முறையாய் எமக்கு அறிவு விளங்கப்பெறுவதே உலக வியற்கை. அவ்வியற்கைக்கு மாறாக யாம் பத்து ஆண்டில் அறிய வேண்டுவனவற்றை முதல் ஆண்டிலேயே ஒருங்கறிந் திடுவோ மாயின், அங்ஙன மறிதலை ஆன்றோர் 8தெய்வத் தன்மை என்று தம்முள் வழங்குவர். மேலும், உலகிய லுணர்ச்சியும், அவ்வுணர்ச்சியில்லாமையாற் பாவனை செய்யும் ஆற்றலும் வாய்க்கப் பெறாத எமது குழவிப் பருவத்தே வியப்புடைத்தாய புதுக்கோலமொன்றைக் கண்டு அதன் உண்மையைப் பொருள் விழுப்பந்தோன்றப் பலவாறு புனைந்து செய்யுட்களானும், சிறந்த மேற்கோளுரைகளானும் விரித்துப் பேசிடுவேமாயின், அதனைப் பொய்யென்றும் பாவனை யென்றும் உருவெளித் தோற்றமென்றும் எவரேனுஞ் சொல்ல ஒருப்படுவரோ? ஒரு காலத்தும் ஓரிடத்தும் ஒருப்படவே மாட்டார், இங்ஙனம் எமது செந்தமிழ் நாட்டில் நிகழ்ந்த அரும்பெரும் புதுமை யொன்றனை எடுத்துக்காட்டி நிறுவி, அவ்வாற்றால் திருவுருவ வழிபாட்டு நன்முறையின் உண்மைத் தன்மை காட்டுவாம். சீர்காழியென்னும் திருநகரிற் சிவபாதவிருதய ரெனும் அந்தணப் பெரியார் ஒருவர் ஏறக்குறைய ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்குமுன் இருந்தார். அக்காலத்திற் சமண சமயிகள் யாண்டும் பெருகி வந்தனர். அச்சமண சமயிகள் கொல்லாமை முதற் சிறந்த அறநெறிகளைப் பிறழா மனவெழுச்சியுடன் கைக்கொண்டு அங்ஙனந் தாங் கைக் கொண்ட அச்சிறந்த அறத்தின் மாட்சியை மக்களெல் லார்க்கும் எடுத்துக் கூறி அவர்க்கெல்லாம் உள்ளக் கவர்ச்சியை எழுப்பி அவ்வாற்றா லவரைத் தம்மதத்திற்குத் திருப்பிக் கொண்டு செல்வாராயினர். இங்ஙனஞ் சில நாளெல்லாஞ் செல்ல அச்சமண சமயம் யாண்டும் பரந்துவிரிவதாயிற்று. தஞ்சமயம் இவ்வாறு எங்கும் பரவவே மற்றைச் சமயங்களைப் பின்பற்றி யொழுகு வோர் தொகை சுருங்குவதாயிற்று. சமணம் பௌத்தம் முதலிய அச்சமயங்களை யொழித்து ஒழிந்தசைவம், வைணவம், பாசுபதம், சாத்தம், கௌமாரம், காணாபத்தியம் முதலிய சமயங்களெல்லாம் தெய்வம் ஒன்றுண்டெனக் கொண்டு வழிபடுவனவாம். சமணம் பௌத்தம் என்பனவோ அறவொழு க்கங்களிற் சிறந்தன சில கைப்பற்றி ஒழுகும் அவ்வளவேயல்லது, அவை தெய்வம் ஒன்று உண்டெனக் கொண்டு வழிபடும் மெய்ச்சமயங் களல்லவாம். மற்று அவை தெய்வமில்லென்று உரைக்கும். பொய்ச் சமயங்களே யாம். ஆங்கிலப் புலவர் சிலர்; கௌதமர் கடவுள் வழிபாட்டைக் குறிப்பிட்டாயினும், கடவுளைக் குறிப்பிட் டாயினும் ஏதும் உரையாமை பற்றி அவரை நாத்திகரெனக் கூறுதலமையாது, அவர் ஆத்திகருமாகலாம் என்று உரைப்ப துண்மையே யாயினும், மொழிநூற் புலவர் மாக்மூலர் பௌத்த சமயங்கள் பலவும் கடவுள் இன்றென நிலையிட் டுரைப்பனவாம் எனக் கூறுதலானும் 9பிராஞ்சு தேயத்துத் தத்துவநூற் புலராகிய பார்த் என்பவர் பௌத்த சமணக் கோட்பாடுகள் ஒரு தலையாகக் கடவுள் இன்றெனக் கூறுவன வாம் எனத் துணிவு தோன்றக் காட்டுதலானும், அரிய பல ஆராய்ச்சி செய்து வடமொழி நூலுரை வரலாறு புதுவதாக எழுதி வெளியிட்ட மாக்டனல் புலவரும் பௌத்தமும் சமணமும் சாங்கிய நூலைப் போலவே கடவுளினிருப்பை மறுக்குங் கோட்பாடுடையவாம் என்று10 அங்ஙனமே துணிபு ஒருப்படுத்தலானும், சிவஞானபோதம், சிவஞான சித்தியார் முதலிய தத்துவ முழுமுதற் றமிழ் நூலுரைகளின் கண்ணும் அவ்வாறே அவர் நாத்திக சமயிகளென்று வைத்து மறுக்கப் படுதலானும் பௌத்தரும் சமணருமாகிய அவ் விருவகைச் சமயிகளும் நாத்திக சமயிகளேயாமென்பது ஒருதலை யென்றுணர்க. இங்ஙனங் கடவுளின்றெனக் கொண்டு ஒழுகுவாராகிய சமண சமயிகள், இறைவனை உண்மையன்பான் வழிபடும் ஏனைச் சமயிகளைக் காண்டொறும்மனஞ் சிறிதும் பொறா ராகி மற்று அவரை யெல்லாந் தஞ்சமயத்தின்கட் படுக்கும் நோக்கம் பெரிதுடைய ராயினார். அந்நோக்கம் முதிரவே கொல்லாமை, பொய்யாமை முதலாகத்தாங் கைக்கொண்டு போந்த சில அறத்தியல் வரம்பு கடந்து, தீய நெறியா னெல்லாம் ஏனைச் சமயிகளை வருத்தத் தொடங்கினார். தன் கட்டளையாற் சட்டதிட்டங்களேற் படுத்தி அவற்றிற் கேற்ப ஒழுகுவார்க்கு நன்மையும் அவற்றிற்கு ஏலாதன செய்தொழுகு வார்க்கு ஒறுத்தலுந் தந்து நெறிப்படுத்து வானாகிய அரசனையில்லாத குடிகள் தாந்தம் விரும்பிய வாறே சில சட்டதிட்டங்களேற்படுத்திக் கோடலும், தமக்கு அவை இணங்காத வேறு காலங்களில் தம்முன்னை ஏற்பாடுகளை மனம் போனவாறு புரட்டி வேறு வேறு இயற்றிக் கொண்டு தம்முட் கலாம் விளைத்தலும் நிகழக் காண்கின்றாம். இதுபோல, இறைவனொருவன் உண்டெனக் கொண்டு அவன் கட்டளையிட்டருளிய நல்வினைகளைச் செய்யின் நன்றாம்.அவன் வேண்டாவென்று விலக்கிய தீவினைகளைச் செய்யின் தீதாம் என்னும்மன வுறைப்பில்லாத பொய்ச்சமயி கள் தாம் ஒரோவொரு காலங்களில் உலகியல் அறநெறி பிறழாது ஒழுக உடன் படுவாராயினும், தமக்கு அவ்வறநெறி களியையாத பிற காலங்களில் தாந்தாம்விரும்பியவாறே முன்னை அறவொழுக்க வரம்பழித்துத் தீவினை செய்யுந் துணிவுடை யாராவர். இங்ஙனமே, சமணசமயிகள் அக் காலத்துத் தம்மோடு ஒருங்கு இருந்த சைவர், வைரவர், பாசுபதர் முதலிய ஆத்திக சமயிகளுக்குப் பெருந்தீது செய்யும் கரவு பலவுடையரானார். திருநாவுக்கரசு நாயனார் சமண சமயந்துறந்துசைவ சமயந் தழுவிய ஞான்று சமண ரொருங்கு கூடித் தம்மரசனால் அவரை நீற்றறையில் இடுவித்தும், கல்லிற் கட்டிக் கடலில் வீழ்த்தியும் யானைக் காலில் இடறுவித்தும், நஞ்சம் உண்பித்தும் புரிந்த தீதுகள் நம்மேற் கோள்களை இனிது நிறுத்துவனவாம் அல்லவோ? அமைதித் தன்மைக்கு ஓர் உறையுளாய் விளங்கிய அப்பரே தாம் சமணராற்பட்ட துன்பங்களைத் தாமே தந்திருப்பதி கங்களில் ஆங்காங்குக் குறிப்பிடுமாறுங் காண்க. இவ்வாறே, அவர்கள் தங்காலத் திருந்த பாண்டியனை யுள்ளிட்ட முடிவேந்தர்களை யெல்லாந் தஞ் சமயங்களிற் றிருப்பி; அவ்வரசரது வலியால் ஏனை ஆத்திக சமயிகள் வழிபடுந் திருக்கோயில்களை அடைப் பித்தும், திருமடங்களில் தீக் கொளுவியும், அவரைக் கண்டால் `கண்டு முட்டு என்றும், அவரைக் குறித்து ஏதேனுங் கேட்டாற் `கேட்டு முட்டு என்று சொல்லியும் பலவாறு இன்னலியற்றி வந்தனர். இங்ஙனஞ் செய்து போந்த சமணர்கள் கொல்லாமை முதற் சிறந்த அறங்களை மேற்கொண்டு ஒழுகினாரெனல் யாங்ஙனம்? ஆகவே, இவ்வாறெல்லாந் தீதுபுரியும் ஒழுகலாறுடையரான சமணர் யாண்டும் பரவி நிரம்புதலும், சைவ சமயிகள் தீயினால் வளைக்கப்பட்டு இடையிற் கிடந்து துடிக்கும் புழுப்போற் பெரியதோர் இடருழவா நின்றார். அக்காலத்திற் சிவபெருமானிடத்து உண்மையன்புடை யரான சிவபாதவிருதயர் என்னும் அச்சைவ அந்தணர் தீயரான சமணரொழியவுஞ் சைவம் யாண்டும் பரந்து ஒளிரவுஞ் செய்யவல்ல தெய்வமாட்சியுடைய மகப்பேறு தமக்குக் கிடைக்குமாறு தவங்கிடந்தார். அவர்க்குச் சில நாட்களிளெல்லாம் ஓராண்மகப்பேறு கிடைத்தது. அவ்வாண் மகவுக்கு மூன்றாம் ஆண்டு செல்கின்ற காலத்திற் சிவபாதவிருதயர் என்றும்போல அச்சீர்காழி நகரிலுள்ள சிவபிரான் கோயிற் றிருக்குளத்தில் தம் நாள் வினைகளை முடித்தற்பொருட்டு வீட்டிலிருந்து புறம்போதுவார், சிறுகுழந்தையாயிருக்கும் அப்பிள்ளையாரும் அழுது கொண்டே பின்றொடர்தலைக் கண்டு பலவாறு அமைவுரை கள் சொல்லி யிருத்தியுங் கேளாமல் வர, வருகவென்று உடன் அழைத்துச் செல்வா ராயினர். சென்று குளக்கரை மருங்கு சேர்ந்து அக்கரையின்மேற் பிள்ளையாரை யிருத்தித், தாம் நீரிலிறங்கி நீர்க்குள் மூழ்கியிருந்து செய்யும் வழிபாட்டைச் செய்வாராயினார். அங்ஙனந் தந்தையார் நீர்க்குள் மூழ்கி நெடுநேர மிருப்பவே, அவரைக் காணப்பெறாத பிள்ளையார் அம்மே! அப்பா! என்று கூவி அழத் தொடங்கி னார் அவ்வழுகையைக் கண்டு மனம் பொறாராகிக் கோயிலினுள் எழுந்தருளி யிருக்குஞ் சிவபிரானும் உமைப் பிராட்டியாரும் பிள்ளை யாரிடம் போந்து அவரழுகை தீர்த்துக் கண்ணீர் துடைத்து, அம்மையார் தங் குமிழ்முலையிற் கொழும்பால் கறந்து அதிற் சிவஞானங் குழைத்துப் பொற்கிண்ணத் தாலூட்டவும், அப்பனார் அவரழுகை தீரத்தடவிஇன்சொற் சொல்லவும் பிள்ளையார் பொற்கிண்ணத்திற் பாலுண்ட வண்ணமாய் மகிழ்ச்சி யுற்றிருந்தார். இதற்குள் நீரில் மூழ்கியிருந்த தந்தையார் ஆண்டுத்தாஞ் செயற் பாலவான வழிபாடுகளை இனிது முடித்துக் கரையேறி வந்துபிள்ளையார் கையிற் பொற் கிண்ணம் வைத்திருத்தலும்அவர் உடம்பெல்லாம் பால் வழிந்திருத்தலுங் கண்டு வெகுண்டு `அடா! நீ யார் தந்த பாலையுண்டாய்? உனக்கு எச்சின் மயங்கப் பாலூட்டி னாரரைக் காட்டுகஎன்று உரப்பிக் கையில் ஒருசிறுகோல் எடுத்துக் கொண்டுகேட்டார்.கேட்டலும், பிள்ளையார் அஞ்சி `எனக்குப் பாலூட்டினார் இதோ! மழவிடை யமர்ந்த பிரானும் பிராட்டியாருமாம் என்று சுட்டித் தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடி பூசியென் னுள்ளங் கவர்கள்வன் ஏடுடைய மலரான் முனை நாட்பணிந் தேத்த வருள்செய்த பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே என்று கட்டளையிட்டருளினார். இவ்வரலாறு பெரியபுராணத்தின்கண் விரிவாக எழுதப்பட்டிருத்தல் கண்டுணர்க. இனி, உலகியலுணர்ச்சியும் பாவனை செய்யும் ஆற்றலும் வாய்ப்பப் பெறாத குழந்தைப் பருவத்தினராகிய ஞான சம்பந்தப்பிள்ளையார்க்கு எதிரே இறைவன் அவர்க்கு அருள் செய்தற்பொருட்டுத்தாங்கி எழுந்தருளிய அருட் கோலம் உருவெளித் தோற்றம்போற் பொய்யாய் ஒழிந்திடு மென்றல் யாங்ஙனம்? அல்லதூஉம், மூன்றாண்டு செல்கின்ற அக்காலத்திற் செந்தமிழ்ச் சுவையும் மெய்ப்பொருள் நுட்பமும் பொதுளத் தோடுடைய செவியன் என்னுந் திருப்பதிகங் கட்டளை யிட்டருளியதுதான் என்னை? சிற்றறிவுஞ் சிறு தொழிலு முடையேமாகிய எங்குழந்தைகள் மூன்றாண்டு செல்கின்ற அக்காலத்திலேதான் மழலை மொழிகள் சில வுரைத்து எம்மையெல்லாம் உவப்பிக்கின்றன; அக்காலத்திலே தான் தளர்ந்து தளர்ந்து நடந்து செல்லு கின்றன; அக் காலத்திலேதான் `அம்மே என்றும், `அப்பா என்றும், `சோச்சி என்றும், `பாச்சி என்றுந் தமக்கு வேண்டும் பொருள்களைச் சுட்டுகின்றன; அக்காலத்திலே தெய்வம் உண்டு என்னும் உணர்ச்சி அவைகட்கு இன்றாம்; அத்தெய்வமுஞ் சிவபெருமானே யாமென்னு முணர்ச்சியு மின்றாம்; அச்சிவபெருமான் திருத்தேவியார் உமை என்னும் உணர்ச்சியுமின்றாம்; அச் சிவன் திருவடையாளங்கள் `தோடு `விடை `கொன்றை முதலியவா மென்னும் ஆராய்ச்சியு மின்றாம்; ஆகலின் இவ்வணுர்ச்சி வேறுபாடெல்லாம் நிகழ்ந்ததற்கு ஓர்இயைபு வேண்டுமெனின்; அற்றன்று, சிவ பாதவிருதயரென்னுந் தந்தையார் சிவபெருமானிடத்து மிக்க அன்புடையா ரென்பது பெறப்படுதலால் அவர் தமது இல்லத்திலே சிவனை வழுத்துகின்ற காலங்களிற் சொல்லுஞ் சொற்களின் பொருள்கள் மிகத் தெளிவாகிய அப்பிள்ளையார் மூளையிற் பதிந்திருந்து பின்னொரு நாட்புறம்போந்தன வென்பார்க்கு, அங்ஙனம் அவ்வுணர்வு மட்டுமே புறம்படுதல் பொருந்து வதா மன்றி அம்மையார் தமக்குப் பொன்வள்ளத்திற் பால் கறந்து ஊட்டினாரென்றலும், அது கண்டு தந்தையார் சிவபாத விருதயர் வெகுண்டு தம்மை வினவியபோது இறை வனையும் இறைவியையுஞ் சுட்டிக் காட்டித் திருப்பதிகங் கட்டளை யிட்டருளினா ரென்றலும் பிறவும் பொருந்து மாறு போதராமையின் அவர் கூற்றுப் போலியாமென்று மறுக்க. அற்றேல் அஃதாக, தோடுடைய என்னும் அத் திருப்பதிகத் திற் பிள்ளையார் தமக்கு இறைவி அங்ஙனம் பொற் கிண்ணத்திற் பால் கறந்தூட்டினாளென்றும், சிவபாத விருதயர் அஃதுணராமற் றம்மை வெகுண்டு வினாவிய போதுஇறைவனையும்இறைவியையுந் தாஞ் சுட்டிக் காட்டினாரென்றும் ஓதிற்றிலராலெனின்; அறியாது கூறினாய், மண்ணினல்ல வண்ணம் என்னுந் திருப்பிரம புரப்பதிகத்தில், போதையார் பொற்கிண்ணத் தடிசில் பொல் லாதெனத் தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன் காதையார் குழையினன் கழுமல வளநகர்ப் பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே என்னுஞ் செய்யுளிற் பிள்ளையார் தாமே தமக்கு இறைவன் செய்த அருட்டிறத்தைக் கிளந்தெடுத்து உரையா நிற்பவும், அதனை ஆராய்ச்சி செய்து உணரமாட்டாது உரைத்தல் இழுக்குரையாமென்க. இனி அச்செய்யுட் பொருள் ஒருசிறிது உரைக்கின்றாம். போதையார் பொற்கிண்ணத்து அடிசில் - இதழ்விரிந்த தாமரை மலரைப் போல் வாயகன்று செவ்வென விளங்கும் பொன் வள்ளத்தில் உமையம்மை கறந்து ஊட்டிய கொழும்பாலுணவை; போதை என்பதில் `ஐ காரம் குறவரையார்க்குங் குளிர்மலை நாட என்னும் திருச்சிற்றம் பலக் கோவையாரிற் போல வந்த சாரியை; ஆர் என்பது செப்புற்ற கொங்கை தோளுற்றொர் தெய்வம் என்னுந் திருக்கோவையார் சிந்தாமணியிற் போல உவமவுருபின் பொருள்பட வந்த உவமச்சொல், மாற்றுயர்ந்த பொன் செவ்வென்று பொலிதலானும் வள்ளம்வாயகன்று வட்டமா யிருத்தலானும் உவமை வண்ணமும் வடிவும் விராய் வந்தது. இவ்வாறே பாண்டிலெடுத்த பஃறாமரை கீழும்பழனங்களே என்று திருக்கோவையாரினும் போந்தது காண்க; நச்சினார்க்கினியரும் பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு என்புழி வண்ணமும் வடிவும் விராய்வந்த வுவமை யென்றுரை யுரைத்திட்டார்; தாதையார் பொல்லாதென முனிவு உற -சிவபாதவிருதயரென்னுந் தந்தையார் இழிந்தாள் ஒருத்தி தந்த எச்சிலாதலின் அது நுகர்தல் தீதாமென் றுரைத்து வெகுள; தான் என்னை ஆண்டவன் - தான் தன் அருட்பெருக்கான் விரும்பி வந்து என்னை ஆண்டு கொண்டவன்; அங்ஙனம் ஆண்டுகொண்ட இறைவன் திருவடை யாளங்கள் யாவையோவெனின்; காதையார் குழையினன் - காதிற்செறிய இடப்பட்ட வெண்டோடு உடையனாம்; அதுவன்றியும், பேதையாளவளொடும் - தான் அறிவுருவின ளாயிருந்தே உலகத்துப் பெண்டிர்க்கெல்லாம் அறியாமை கற்பித்தல் வேண்டுதலின் தானும் அறியாமை யுடையார் போற் றோன்றும் உமையம்மையுடன் பிரிவறக கலந்து; `அறியாமை என்பது பெண்மைத்தன்மை நான்கனுள் ஒன்றாம். அது தானொரு பொருட்டன்மை யறிந்தும் அறியாதது போன்று ஒழுகுதல், ஆசிரியர் நக்கீரனாரும் மடமென்பது கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை என்று உரை கூறினார்; பெருந்தகை - சிற்றறிவுஞ் சிறு தொழிலு முடைய ராகிய உயிர்கள் போலாது அவற்றை யெல்லாந் தன்னகப் படுத்து வரையறையின்றி விரிந்து செல்லும்விரிந்த வுணர்ச்சியும் முழுமுதலாற்றலும் உடைய னாகிய ஏது வினாலே பெருந்தகையாய் விளங்கும் முழுமுதல் வனான சிவபெருமான்; இருந்தது - உயிர்கள் தன்னை வழிபட்டு உய்யும் பொருட்டுத் தானே தன் பெருமைத் தன்மைகளைச் சுருக்கிக் கொண்டு அருளே திருமேனியா வெழுந்தருளியிருந்த திருநகரம்; கழுமல வளநகர் - தன்னை வந்தடைந்த உயிர்களின் மும்மலங் கழுவித் தூய்மை செய்கின்ற ஒரு பெருந்தன்மையாலே `கழுமலம் என்று பெயர் பெற்ற வளவிய நகரமாம்; கழுமலநகர் - சீகாழி; பிள்ளையார் தமக்கு அருள் செய்யும் பொருட்டு இறைவன் தாங்கி வந்த அருட் கோலத்தின்கட் குழையிடப் பட்ட திருச் செவியைச் சுட்டித் தோடுடைய செவியன் என்று பதிகங் கட்டளையிட் டருளியவாறு போலவே, ஈண்டுங் காதையார் குழையினன் என்று குறிப் புரைத் தருளினார், இது கிடக்க. இனி, நீர் கூறிய வழக்குரைகளெல்லாம் ஒக்குமன், சிவபாதவிருதயர் பிள்ளையாரைத் தடாகக்கரையில் இருவித்தாம் நீரிலிழிந்து முழுகியிருந்த அமயத்திற் பிள்ளையார் அவரைக் காணாது அழுதலைக் கண்டு ஆண்டு வந்த கணவனும் மனைவியுமாகிய இருவர் அவர்க்கு இரங்கிப் பாலூட்டிப் போயினாரென்றும், தந்தையார் கரையில் வந்து வெகுண்டு வினாதலை அஞ்சிப் பாலூட்டினார் இவர் என்றுரைப்பிற் பின்னும் வெகுள்வரெனக் கருதித் தமக்குச் சிவபெருமானும் உமையம்மையாரும்அங்ஙனம் பாலூட்டி னாரெனப் பொய்யுரைத்தார் என்றுங் கொள்ளாமோ வெனின்; நன்று கடாயினீர், நல்லது தீயது பகுத்துணர மாட்டாத பிள்ளைப் பருவத்தில் இஃது உரைப்பின் நன்றாம்,மற்று இஃது உரைப்பிற் றீதாம் என்றுணர்ந்து பிறழக் கொண்டு பொய்யுரைத்தா ரென்றால் உலக வியல்பொடு மாறுபடுதலானும், உலக வியற்கையொடு முரணாமைப் பொருட்டுப் பிள்ளையார் நிகழ்த்திய புதுமைகட்கு வேறு விளக்கங் கூறப் புகுந்து வழக்கிடும் நீவிரே அங்ஙனம் உலக வியற்கையொடு முரண்பாடு பெரிதுடையிராய்க் `கொசுகின் கடிக்கஞ்சிப் புலிவாய்ப் பட்டது போற் பெரிதும் இடர்ப்படு வீராதலானும் அவ்வாறு கோடல் ஒரு சிறிதும் பொருத்த முறுவதின்றா மென்பது. அல்லதூஉம் பொதுமக்களாற் பாலுட்டப்பெற்ற பிள்ளையார் அங்ஙனம் ஊட்டப்பெற்ற அந்நேரத்தே பேரறிவும் பேராற்றலும் உடையராய்ப் பிள்ளைப் பருவத்தில் வரற்பாலதன்றாம்மிகச் சிறந்த திருப்பதிகங் கட்டளை யிட்டருளியவாறு யாங்ஙனம்? எனக் கடாவு வார்க்கு நீர் இறுக்குமாறு சிறிதுமின்றாம். அற்றன்று, பிள்ளை யார் அறிவு கூடாச் சிறுபருவத்தினராதலாற் றமக்குப் பாலூட் டிய பொதுமக்களையே அங்ஙனம் அறியாமையாற் சிவ பெருமானென் றுரைத்திட்டாரெனின்; நன்று சொன்னீர், பால்பருகிய அந்நேரத்தே திருஞான சம்பந்தப்பிள்ளையார் விரிவுணர்ச்சியும் முழுமுதலாற்றாலு முடையராய்த் திகழ்ந்து உலகமெல்லாந் தம் ஆணைவழி நிறுத்தவல்ல தெய்வப் பெற்றியாளரான அப்பெருமானார் பொது மக்களையுஞ் சிவபெருமானையும் வேறுபிரித்து அறிய மாட்டாது மயங்கிக் கூறினாரென்றலும் அறியாமை முதிர்ச்சியா யொழிந்திடு மென்க. இனி, இவையெல்லாம் ஒருபுறங் கிடக்க, நீவிரெடுத்துக் காட்டிய தோடுடைய செவியன் என்னுந் திருப்பதிகத்திலும் மண்ணில் நல்ல வண்ணம் என்னுந் திருப்பதிகத்திலும் பிள்ளையார் தாங் குழந்தைப் பருவத்தின ரென்பதுபுலப்படக் கூறாமையான் அப்பிள்ளைப் பருவ வலியுடைய ஏதுப்பற்றி நீவிர் நிறுவப் புகுந்த இறை வனதுஅருட்கோலவியல்பு வலிகுன்றி விடுமாலோ வெனின் அறியாது கூறினீர், பிள்ளையார் அப்பரோடு திருமறைக் காட்டில் எழுந்தருளிய போது மதுரைமாநகரத்திற் சமணருடைய மயக்கவுரையாற் சைவ சமயம் வழீஇச் சமணமதந்த தழீஇய தங்கொழுநரான பாண்டிய அரசனை யுள்ளிட்டுக் குடிமக்களெல்லாரையுந் திரும்பச் சைவராக்குதல் வேண்டி மங்கையர்க்கரசி என்னும் பாண்டி மாதேவியார் பிள்ளையாருக்குத் திருமுகம் விடுத்தார். அதுகண்ட பிள்ளையாருந் தந்திருக் கூட்டத் தோடு மதுரை மாநகர்க்கு எழுந்தருளப் பாண்டியவரசன் அமைச்சராகிய குலச்சிறை என்பார் அவரை எதிர் கொண்டழைத்துச் சென்று பிள்ளையாரைத் திருக்கூட்டத் தோடும் ஒருதிரு மடத்தில் எழுந்தருளி யிருக்கச் செய்தார். இதனையறிந்த சமணக் குருக்களெல்லாருந் தெய்வப் பெற்றியுடைய இப்பிள்ளையாரால் நமது சமணம் அழிந்து படும் எனப் பெரிதும் அஞ்சிப் பிள்ளையாரைத் திருக்கூட்டத் தோடுங் கொலை செய்ய எண்ணினார். அந்தோ! அந்தோ! இது தானோ கொல்லா அறத்தினரான சமணருக்கு அறமாவது! அன்பர்காள்! சிறிது ஆழ்ந்து நினைமின்கள்! இங்ஙனங் கருதிய அக்குருக்கண்மாரெல்லாந் தம்முள் துணிபு ஒருப்பாடு உடையராய்க் கூன்பாண்டிய னிடஞ் சென்று அவனுக்குத் தம்மெண்ணம் புலப்படுத்துக் கரவுரை பலவால் அவனைத் தந்தொழிற்கு இயைவித்துக் கொண்டனர். பின்னர் அன்று இரவு நள்யாமத்திற் பிள்ளையார் திருக்கூட்டத்துடன் பள்ளிகொண்டிருக்கும் அமயங் கண்டு அச்சமணப் படுவர் எரிகொள்ளி கொண்டு மடத்தில் தீக்கொளுவினார். ஐயகோ! மடந் தீப்பற்றி எரியாநிற்க அதனுள்ளிருந்த அடியார் களெல்லாரும் மருண்டெழுந்து ஞான சம்பந்தப் பிள்ளை யாருக்கு இவ்விடரை அறிவித்து அடைக்கலம்புக, இதனை உணர்ந்த பிள்ளையார் சிவடினயார்களுக்குத் தீங்கு இழைக்க முந்துற்றுத் தீக்கொளுவிய சமணப்படுவர் பொருந்தாச் செய்கையைக் குறிப்பானறிந்து இதற்கு வாயிலாயினான் பாண்டிய வரசனேயாமென்பதும்இனிது தெளிந்து, செய்ய னேதிரு வாலவாய் மேவிய ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப் பொய்ய ராமம ணர்கொளு வுஞ்சுடர் பையவே சென்று பாண்டியற் காகவே என்னுந் திருப்பதிகங் கட்டளையிட்டருளி மடத்திற் கொளுவிய தீப்பிழம்பு அத்தனையும் பாண்டியன் உடம்பிற் சென்று பற்றுகவென்று ஏவினார். ஏவுதலும் உருவமாகத் தோன்றிய தீப்பிழம்பு முழுதும் அருவ வெப்பு நோயாய்ப் பாண்டியனைப் பற்றிக் கொண்டது. உடனே பாண்டியன் அந்நோய் பொறுக்கமாட்டா னாய்ச் சமணக் குருமார்களை அழைப்பித்து அவர் தம்மந்திர முறைகளானும் மருந்து முறைகளானும் செய்வித்துக் கொண்டன ஒரு சிறிதும் பயன் றராமைகண்டு மிகவருந்தித் தம்மனையுரிமைக் கிழத்தியாராகிய மங்கையர்க்கரசியாரைத் தன்மாட்டு வருவித்து அவர்க்கு இதனைத் தெரிவித்தான். அரசியாரும் உடன் வருந்தித் தங்குறிப்பு நிறைவேறுங்காலம் இதுவென்று எண்ணித் தங்கொழுநனை நோக்கிப் பிள்ளைப் பருவத்தே உமை திருமுலைப் பாலுண்டு ஞானசம்பந்த வள்ளலாய்த் தந்திருக் கூட்டத்தோடு இந்நகரத்தில் எழுந்தருளி யிருக்கும் பெருமான் இங்கு எழுந்தருளினால் அன்றி இந்நோய் தீராது என்றுரைப்ப, அதனைக் கேட்ட அரசனும் அதற்கு உடன்பட்டுத்தம் அமைச்சரான குலச்சிறையாரைப் பிள்ளை யாரிடம் போக்கினான். அமைச்சரும் நிகழ்ந்த வெல்லாம் பிள்ளையார் திருமுன்பிற் றெரிவித்து அவர் பாண்டிய னிடத்திற்கு எழுந்தருளச் செய்தார். பிள்ளையார் அருமைத் திருவுருவைக் காண்டலும் பாண்டியன் ஆறுதல் பெரிதுடைய னாயினான். இவ்வாறு ஞானசம்பந்தப் பெருமானார் பாண்டிய னருகில் மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் பக்கத்தே எழுந்தருளி யிருக்கும் அளவில் ஆண்டுக் குழுமியிருந்த சமணக்குருமார் பிள்ளையாரைச் சுட்டிப் பலவாறு இகழ்ந்து சொல்லிக் குரைத்திட்டார். பக்கத்தேயிருந்து அதனைக் கண்டு பொறாராகிய மங்கை யர்க்கரசியார் தங்கணவனை நோக்கிக் குழந்தையாயிருக்கும் பெருமானை இவர்இவ்வாறு இகழ்வதோ? என்று வருந்திக் கூற அப்போது ஞானசம்பந்தப் பெருமானார் அரசி யாரைப் பார்த்து, மானினேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள் பானல்வாயொரு பாலனீங்கிவ னென்றுநீ பரிவெய்திடேல் ஆனைமாமலை யாதியாய விடங்களிற்பல வல்லல்சேர் ஈனர்கட்கெளி யேன லேன் றிருவாலவாயர னிற்கவே என்னுந் திருப்பதிகங் கட்டளையிட்டருளினார். இதன் கண் ஞானசம்பந்தப் பிள்ளையார் மங்கையர்க் கரசியாரை நோக்கிப் பால் மணக்கும் நல்வாயையுடைய பாலன் நானென்று அம்மே! நீ வருந்தாதே என்று உரைத்தருளினா ரென்பது பெறப் படுதலால், அவர் பாண்டி நாட்டிற்குச் சென்று சமணரொடு வழக்கிட்ட காலத்திலேயே பாலறாவா யராக இருந்தாரெனல் தெற்றென விளங்கும். இங்ஙனம் பிள்ளையார் மதுரைமா நகரிலிருந்த காலத்தே அவர்க்கு நான்கு அல்லது நாலரை ஆண்டுதான் சென்றதென்பதற்கு அவர் தம்மைப் பால்மணக்கும் நல்வாயர் எனக் கூறுதலே சான்றாம். இனிப், பெரிய புராணத்தின்கண் ஓதப்பட்ட மெய்வரலாறு ஒருசிறிது ஆராய்ந்து செல்வார்க்கும், மதுரைமாநகர்க்குச் செல்லு முன்னரே பிள்ளையார் தெய்வப் பெற்றியுடையராய்ச் சிவபிரான் திருக்கோயில் கடோறுஞ் சென்று திருப்பதிகங் கட்டளையிட் டருளிச் செய்து காலம் ஒன்று அல்லது ஒன்றரையாண்டுகளாகலா மென்பது விளங்கும், ஆகவே பிள்ளையார் சிவபெருமான் றாங்கிவந்த அருட்கோலத்தை நேரே கண்டு அக்கோலத்தால் அருள் செய்யப்பட்ட காலம் அவர்தமக்கு மூன்றாண்டு செல்கின்ற பருவத்திலேயா மென்று பெரியபுராணங் கூறிய உண்மை வரலாறு மேன்மேல் உரங்கொண்டு திகழுமாறு காண்க. இங்ஙனம் அளவை நூற்பொருளொடு படுத்து யாம் இனி தெடுத்துவிளக்கி வரலாற்றின் முடிபொருளாய்ப் பிள்ளையார் தாம் மூன்றாண்டு செல்கின்ற அக்காலத்திலே தான் இறைவனும் இறைவியும் ஒருங் கெழுந்துவந்த அருட்டிருக் கோலத்தை நேரே கண்டு பின் அதனால் அருள் செய்யப் பட்டாரென்பது நன்று பெறப்பட்டதாகலின், அதுபற்றி யாம்நிறுவப்புகுந்த வருட்கோல வியல்பு வலியிழந்ததாய் விடுமென்று நீர் கூறியது போலியுரையேயா மென்று துணிக. இன்னுந் `தோடுடையசெவியன் எனக் கண்ணினாற் காணப்படும் உருவமும், `பால்கறந்தூட்டுக என்னுஞ் செவியினாற் கேட்கப்படும் ஓசையும் மூக்கினாற் கவரப்படும் இனிய பான்மணமும், வாயினாற் சுவைக்கப் படும் பாலும், அம்மையப்பரால் தொடப்பட்ட ஊற்றுணர்வு நிகழ்ச்சிக் குரிய உடம்பும் உடைய அவ்வருட் கோலம் உண்மைப் பேறுடையதா மென்று நன்குணர்ந்து கொள்க. இங்ஙனம் உலக வழக்குணர்வும் அதனாற் பாவனை செய்யும் ஆற்றலும் வாய்ப்பப் பெறாத குழந்தைப் பருவத்திலே ஞானசம்பந்தப் பிள்ளையார் மதிமுகிழ் பிணித்த மாதியல் பாகனை நேரே கண்டு அருள் செய்யப்பட்டுத் திருப்பதிகங் கட்டளையிட் டருளிய வியத்தகு நிகழ்ச்சியை வரலாற்றியல் பிறழாது உண்மையான் ஆழ்ந்தாராயவல்ல எந்தநிரீசுரவாதி தாம் பொய்யென்று மறுக்க முந்திடுவார்? மக்களுக்கு அமைந்த மூளையின் ஆற்றலால் மிக வியப்பான நிகழ்ச்சிகளும் எளிதில் நிகழும் என்று தமக்குத் தோன்றிய வாறெல்லாம் வானக் கோட்டை கட்டி அதன்கண் நின்று பிறரை அறைகூவி யாரவாரஞ் செய்யும் மனநூலார் தாம்இவற்றுக்கெல்லாம் யாது சொல்லவல்லார்? உண்மை வரலாற்று முறையொடு மாறுகோளுறாது நிகழ்ந்த இவ்வியத்தகு நிகழ்ச்சியை அற்புதமே ஒன்றில்லையெனக் கூறும் பிரமசமாசத்தார் தாம் எவ்வாறு கடந்து பேச வல்லார்? இதுநிற்க. இனிப் பிரமசமாசத்தார் உலகவியற்கைக்கு வேறாக அற்புதமென ஒன்று நிகழுமாறில்லையெனக் கிளந்துரை யாடி ஆரவாரஞ் செய்தலின் அவருரைப் பெற்றியையும் ஒருசிறிது ஆராய்ந்து அது போலியாமாறு காட்டிப் பின்னர் எடுத்துக் கொண்ட பொருண்மேற் செல்வாம். பிரமசமாசத்தார் கூறுமாறு: வித்தினின்று முளை கிளம்பி பின் பல ஆண்டுகள் சென்று மரமாதலும், ஒருதாய்க் கருப்பையிற் கருமுதிர்ந்துபத்துத் திங்கள் கழியப் பிறந்து வளர்தலும், வளர்ந்தன ஒரு காலத்து இறந்தொழிதலும், நிலன், நீர், நெருப்பு, காற்று, வான் முதலிய வுலகியற் பொருள்கள் தத்தம்நிலையிற் பிறழாது நின்று இயங்குதலும் பிறவுமாகிய தொழிற்பாடுகளெல்லாம் இயல்பாக வருவன வாம்; இவற்றை இங்ஙனம் வகுத்தமைத்து நெறி பிறழாது நடாத்துகின்ற வனாகிய முழு முதற் கடவுள் அவற்றினியல் பைப் பிறிதொரு காலத்து மறுத்து மாற்றினானென்றல் அவனுடைய இறைமைத் தன்மைக்குப் பொருந் தாமையான், அற்புதங்கள் என்பன உலகவியல்பொடு மாறுபாடு பெரிதுற்று நிகழ்வன வாமென்று ஒரு சார் சமயவாதிகள் கூறுவது பொய்யேயாம் என்பர். இதனை ஆராய்வாம். இனி, வரலாற்றுண்மை யுணர்ச்சி மிகவுடையார்க்கு இங்ஙனம் நடந்த வியத்தகு நிகழ்ச்சிகளைப் பொய்யென்று மறுத்தலாகாமையான், இவை தமக்கு வேறு வழி சொல்லாமல் வாளா தமக்குத் தோன்றியவாறே பொய் யென்றுரைத்தல் முறையாகாது. அல்லதூஉம், இவ்வற்புதங் கடாம் ஒரு காலத்து ஒருதேயத்தில் நிகழ்ந்தனவாகாமல், எக்காலத்தும் எல்லாத்தேயத்தின்கண்ணும் நிகழா நிற்கின் றன, ஏசுநாதர் ஒருசில அப்பங்களையும் மீன் களையும் பெருந்திரளான மக்கட்கு விருந்தளித்தாரெனவும் அத்தி மரத்தை வற்றச் செய்தாரெனவும், இறந்தவனை எழுப்பி னாரெனவும், ஏனைச் சமய நுல்களிலுங் கூறப்படுதல் காண்கின்றோம். இந்நாவலந் தீவில் உண்மை மேலறிவு முதிர்ச்சி கைவந்தவராகிய தூய சான்றோர்கள் தோன்றிப் பல வேறு அற்புதங்கள் நிகழ்த்திய வாறு போலவே ஏனை நாடுகளிலும் உண்மைக் கீழறிவுப் பேறுடையரான தீர்க்கதரிசிமார் தோன்றிப் பலவேறு அற்புதங்கள் நிகழ்த்தக் காண்டலால் இவையனைத்திற்கும் ஒரு வழி சொல்ல அறியாமல் மற்று அவையெல்லாம் வெறும் பொய்யாமென் றுரைப்பார் கூற்று வெறுங்கூற்றாவ தன்றிப் பிறிதென்னை? எம்மறிவுக்குப் பொருந்தவில்லை என்றும் எம்மனு பவத்திற்கு அஃது இயையவில்லை யென்றும் உரைத்து அத்தனை எளிதாக அவற்றைப் பொய்யென் றுரைப்பார் வேறு என்கடவரென்க! இக்காலத்தில் நீராவிப் பொறிகளின் உதவியாலும், மின்வலிப் பொறிகளின் உதவியாலும் வியப்பான பல பொருள்களும், பல தொழிற் கூறுபாடுகளும் செய்யப் படுதல் காண்கின்றாம்.இவையெல்லாம் ஓர் ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னிருந்த எம் முது மக்கள் கனவினுங் கண்டறியார். அவர் காலத்தில் ஒருவர் தோன்றிப் பின்னொரு காலத்தில் நீராவிப் பொறிகளும்மின்வலிப் பொறிகளும் ஏற்பட்டு அருமையான பலவுஞ் செய்யு மென்று உரைத்தக் கால் அதனைக் கேட்ட ஒருசிலர் அது பெரும்புதுமையா யிருக்கு மெனவும், வேறு சிலர் அஃது உலக வியற்கைக்கு மாறாகலின் அவ்வாறு நிகழாது எனவும், வேறு சிலர் எந்தவினையுஞ் செய்கின்றவன் ஆற்றல் பற்றி நிகழ்வதாகலின் பின்னர்ப் பிறக்கும் அறிவு நுட்பவாற்றல் மிக்குடையரான மக்கள் அது செய்தற்கு முரியராவரெனவும் உரைத்துத் தத்தங் கருத்து மொழிந்திடுவார். இனி, அப்பொறிகளின் பயனை நேரே கைக்கொண்டு போதரும் எமக்கெல்லாம்அங்ஙனம் வியப்புணர்வு நிகழ்த லின்றாகலின் அவ்வமைப்புகளெல்லாம் எளியனவாகவே எமக்குக் காணப்படுகின்றன. இவ்வாறே, செம்பைப் பொன்னாக்கும் இரசவாதம் பொய்யாமென்று சொல்லிக் கொண்டிருந்த இயற்கைப் பொருணூலாரும் இப்போது அமெரிக்கா தேயத்தில் ஒருவர் செம்பைப் பொன்னாகத் திரித்து விற்றலைக் கண்டு அதனையும் உண்மையாமென நம்புதற்குத் தலைப்பட்டு விட்டார்கள். மந்திரவொலிகட்கு வடிவமுண்டென்று சைவ சித்தாந்திகள் சொல்வதை மறுத்தார் சிலர், அமெரிக்காவில் ஓரரிய கலைநூல் அறிஞர் ஒலி நுட்பங்கட்கெல்லாம் வடிவுண் டென்பதைக் கண்கூடாகச் செய்து காட்டுதலை யறிந்து அதனையும் நம்பத் தலைப்பட்டுவிட்டார்கள் மின்னோட்டக் கம்பியின்றி மின் செய்தி இயங்கமாட்டா தென்று சொல்லிக் கொண்டிருந்த ஐரோப்பியக் கலைஞர் எல்லாரும், நுண் ணறிவுக் கலைஞர் ஒருவர் புதுவதாகக் கண்டு பிடித்த முறையால் கம்பியின்றியும் மின்னியக்கம் நடை பெறுமென்று கூறி அதனையுந் தழுவிக் கொண்டார்கள். இவ்வாறே இக்காலத்தில் அறிவு நுட்பத்தாற் பேராற்றலுடை யரான நன்மக்கள் பலர் தோன்ற முற்காலத்திற் கனவு காண்டற்கும் அரியவாய்க் கிடந்த அரும்பெருந் தொழில் களை இயற்றுகின்றார். இங்ஙனம் இவர் கண்கூடாகச் செய்து காட்டுஞ் செயற்கரிய செயல்களை யெல்லாம் நேரே கண்டு வைத்துந், தம்முடைய அறிவுக்கும் அனுபவத்திற்கும் எட்ட வில்லையென்று அவற்றை யெல்லாம் பொய்யென்றல் பேதை நீரார் செயலேயா மென்று ஒழிக இனிப், பெரியோர் நிகழ்த்திய புதுமைகள் உலக வியற்கைக்கு மாறுபாடுறுதல் இல்லை யென்பதூஉம் ஒரு சிறிதுகாட்டுவாம். ஞானசம்பந்தப்பிள்ளையார் திருமயிலாப் பூருக்கு எழுந்தருளின காலத்திற், சிவநேயர் என்பார் ஒருவர் வளர்த்த அரியபெண் பாம்பு கடித்திறக்க, அப்பெண்ணின் தந்தையாரான அவர் அவளுடம்பைத் தீயிலிட்டுக் கொளுத்தி என்புகளை யெல்லாம் ஒரு குடத்திற் பெய்து பொதிந்து பிள்ளையார் திருமுன்பே கொண்டுவந்து அவர்க்கு அடியுறை யாக இட்டு, `அருமையாக வளர்க்கப் பட்டபூம்பாவை என்னும் என் மகள் இறந்தாளாயினும் பெருமானுக்கே அடியுறையாகச் செலுத்திவிடல் வேண்டு மென்னுங் கடப்பாட்டால் அவள் என்பைத்திருவடிக்கு உறையாக உய்த்தேன் என்று நெஞ்சங்கரைய மொழிதலும் பிள்ளை யாரும் அவ்வன்பர்க்கு மிக இரங்கி இறைவன் திருக்கோயி லுட் புகுந்து அக்குடத்தையுந் திருமுன்பே இருத்தி, மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தா னொட்டிட்ட பண்பி னுருத்திரப் பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய் என்னுந் திருப்பதிகங் கட்டளையிட்டருளினார். அருளலும், என்பாய்க் கிடந்த அப்பிண்டம் எழுவகை முதலுங்கூடித் திரண்டுருண்டு அழகிய பெண் வடிவாய்க் குடத்தினின்றும் எழுந்தது.இப்புதுமை உலக வியற்கையோடுஇணங்குமாறு காட்டுவாம்.அப்பெண்ணின் உடம்பு அழிந்தது என்பதனாற் பெறப்பட்ட உண்மையாது? என ஒருங்கி ஆராயலுறுவார்க்கு எழுவகைப் பொருள்களாற் கட்டப்பட்டு பருவடிவிற் காணப்பட்ட உடம்பு நுண் அணுக்களாய்ப் பிரிந்து கட்புல னாகாது நுண் வடிவிற்றாய் ஒழிந்தது என்பதேயா மென்றோ? இங்ஙனம் அதனை நுண் அணுக்களாகப் பிரித் தற்கு வினை முதலான ஒருவனுடைய தொழில் இன்றியமை யாததா மன்றோ? அங்ஙனமே, எழுவகைப் பொருள் களையும் ஒருங்கு கூட்டுதற்கும் வினைமுதலாக ஒருவன் வேண்டப்படு மன்றோ? அவ்வினை முதல்தான் எல்லாம்வல்ல முழுமுதற் பெருங்கடவுள் ஒருவனேயாம், எவ்வாறு வனைதற்றொழிற்கு முதலான குயவன் தன் ஆற்றற்கேற்பச் சிறிது சிறிதாக மண்ணைக் கூட்டிக் குடந்திரட்டுகின்றானோ அவ்வாறே எல்லாம்வல்ல முதல்வன் தன்பேராற்றற்கேற்ப அளவிறத்ந உலகங்களையும்அவ்வுலகங்களிற் பலவேறு வகைப்பட்ட உடம்புகளையும் படைத்திட்டு உயிர்களுக்கு இன்பம் நுகர்விக்கின்றான். இங்ஙனஞ் செய்கின்ற இறைவன் எல்லாந் தனக்குரிய முழுமுதலறிவாற்றல் பற்றியே செய்வதல்லது, எம்மைப் போலப் பிறர்வழியனாய் நின்று செய்வானல்லன். அவனுடைய அருளுக்கும் ஆற்றலுக்கும் ஓர் அளவே யில்லை. அவ்வயில்பினனாகிய இறைவன் றிருவருள் பதியப்பெற்ற ஞானசம்பந்தப்பிள்ளையார், பூம்பாவை என்னும் பெண் மகளின் உடம்பு நுண் அணுக்களாப் பிரிந்தழிய அங்ஙனம் அழிந்தவதனைத் திரும்பவும் முன்னைப் பருவுடம்பாம்படி இறைவன் றிருவருள் வலி கொண்டு செய்திட்டார். அற்றேல் ஒரு தாய் அகட்டிற் கருவைப் புகுத்தி அதனைச்சில காலத்திற் புறம்படுத்தி வளர்த்து அழிக்கின்ற இறைவன் றிருவருட் செயல் அச் செயன் முறைதிறம்பி, இடையொரு காலத்து அழிந்ததோர் உருவைப் பெயர்த்தும்வேறு ஒருபுது முறையாற் படைத் திடுதல் பொருந்துமோ வெனின்; அற்றன்று, அழியும் பருவ மன்றாகிய காலத்தே அழிந்து பட்ட அவ்விளம் பெண்ணைப் பெயர்த்துந் தந்தது அருள் செய்ததாகலின் அஃது இழுக்கன்றாம். அல்லதூஉம், தனக்கென அறிவாற் றலுடைய னாகிய முதல்வன் தன்றிரு வடித்தொண்டு பேணும் அன்பர்க் கிரங்கி அவர் வேண்டியவாறே செய்திட்டா னாகலானும், மலவழியராய்க் கிடந்துழலும் எம் பொருட் டாகவே சட்ட திட்டங்களியற்றிய தன்றித்தன்னியல்பில் அறிவுருவாய் விளங்கும் பெருமானுக்குச் சட்ட திட்டங்கள் பிறர் வகுத்துவைத்தல் பொருந்தாதாய் முடியுமாதலானும், சட்டதிட்டங்கட்கு உட்படுவாரெல்லாம் பிறர்வழியராதல் காணக் கிடத்தலால் இறைவனுக்கும்அவை யுண்டெனக் கூறுதல் அவன் முதன்மைக்கு இழுக்காமாதலானும் அவ்வாறு கடாதல் இறைவனொருவனுண்டெனக் கொண்டு வழுத்தும்பிரம சமாசத்தார்க்கு ஒருசிறிதும்இணங்காதென் றொழிக. இதுபற்றியன்றே விதியும்விலக்குங் கடந்தார்க்கு விதியாலொன்றை விதிப்பாரார் என்னுந் திருமொழியும் எழுந்ததென்றுணர்க. இன்னும், இயற்பொருட் கலைஞன்11 ஒருவன் தனக்கிருக்கும் ஆற்றல் பற்றித் தன்மாட்டுள்ள கருவி கொண்டு தண்ணீரை இருவேறு நுண்வளிகளாகப் பிரித்தலும், அங்ஙனம் பிரித்த அவற்றைப் பெயர்த்துந் தான் விரும்பிய வாறே பருவடிவத் தண்ணீராகச் செய்தலுங் காண்கின்றேம். அவ்வாறே இறைவனும் நுண் அணுக்களாகப் பிரித்த அவ்விளம் பெண்ணின் உடம்பைப் பெயர்த்தும் பருவடிவில் முன்னை யுடம்பாகத்தன் முழுமுதலாற்றலாற் செய்திட்டானாகலின் அஃதுலகவியற்கை யொடு முரணிற்று என்றல் யாங்ஙனம்? அவ்வவர் செய்யுந் தொழிற் கூறுபாடுக ளெல்லாம் அவ்வவர் ஆற்றன் மிகுதி பற்றியே சிறப்பனவாம். இயற்பொருட் கலைஞன் தன்னாற்ற லுட்பட்ட தொன்றை அவ்வாறு செய்தானாயின், எல்லாம் வல்ல தன்னாற்றலுக் கேற்ப இறைவன் தானும் அவ்விளம் பெண்ணை அங்ஙனம் எழுப்பினான். பிறந்தோ ரிறத்தலு மிறந்தோர் பிறத்தலும் அறந்தரு சால்பு மறந்தரு துன்பமும் (மணிமேகலை) என்றவாறு போலப் பிறத்தலும் இறத்தலுமியற்கையாவாரா நின்ற இவ்வுலகத்தே, அவ்விளம் பெண்ணை இறக்கச் செய்தும் பின் குடத்தினின்று பிறக்கச் செய்துந் திருவிளை யாடலியற்றிய முதல்வன் உலகவியற்கையொடு முரணிச் செய்தானென்றல் மையாது. அற்றேல் அஃதாக, யாம் உலகவியற்கையொடு முரண் பாடுடைய தென்றது அவ்விளம் பெண்ணை ஒரு தாய்வயிற்றி னின்று பிறப்பியாமல், இடையொரு காலத்துக் குடத்தி னின்றும் எழுப்பியதையேயாமாகலின் அதனை யுணராமல் நீர்மேலே யுரைத்த வழக்குப் புரை படுமாம் பிறவெனின்; நன்று சொன்னாய், அதனை யுணராதேம் அல்லேம், அங்ஙனம் உலகவியற்கையொடு பொருந்தச் செய்தல் வேண்டினானாயின் முதல்வன் அவ்விளம் பெண்ணைத் தாய்க் கருப்பையில் நுழைப்பிக்கக் கடவனென நீ கூறியது ஒக்கும்; இறைவன் அவ்விளம் பெண்ணை வேறு ஓர் உடம்பின் கண் உய்த்தல் வேண்டினானாயின் அவ்வாறே செய்கிற்பன். அங்ஙனமின்றிச் சிவ நேயரென்னும் அன்பர்க்கு மகளாய்ப் பிறந்த அந்த யாக்கையின் கண்ணேயே அவ்வுயிரை அவர் வேண்டுகோட்கு இரங்கிப் புகுத்தல் வேண்டினமையின், அவ்வாறு இடையொரு காலத்து நுண் வடிவாய்ப் போன அவள் யாக்கையைத் திரும்பவும் பருவடிவிற்றாக்கி அருள் செய்தானென்றுணர்க. அவ்வாறு திரும்ப அருள் செயல் வேண்டினானாயினும், சிவநேயர் மனைவியின் கருப்பையிற் புகுத்தி அவ்வாற்றால் அவளைப் பிறப்பித்தலே முதல்வனுக்கு முறையாமாலெனின்; அதனால் அவ்விளம்பெண் மறுபடியுங் கருப்பையிற் கிடந்துழலும் பெருந்துன்பமே போதரலானும், தாய்தந்தை முதலாயினார்க்கும் அதனாற் பேரிடரே விளையுமாதலானும், மணங்கூடும் மங்கைப் பருவங்காறும் வளர்த்தக்காற்பட்ட மேலைத்துன்பங்களெல்லாங் கிளைத்து முன்னைமுயற்சிகள் எல்லாம் பயனின்றிப் போதலானும், பேரிரக்கமுடையனாகிய பெருமான் இத்தனை துன்பங் கட்கும் தன்அன்பரை யுள்ளாக்குதல் அவனுக்கு இரக்கம் இன்றாமென்பதுபட்டு இழுக்காய் முடிதலானும் அவ்வாறு வினாதல் பெரிதும் ஏதமாமென்று மறுக்க. அற்றேலஃதாக, எழுவகைப் பொருள்களையுங் கொண்டு அங்ஙனம் அவள் உடம்பு படைத்திடுதலே முறையாமன்றி, அவற்றுள் ஒன்றாகிய என்பைக் கொண்டு அவள் உடம்பைத் திரட்டி எழுவித்தானென்றல் அமையா தாமெனின்; அறியாது கடாயினாய், `அண்டங்களெல்லாம் அணுவாக அணுக்க ளெல்லாம் அண்டங்களாக ஒரு நொடியில் மாற்றவல்ல னாகிய இறைவன் மாட்டும் அங்ஙனஞ் செய்கைத்திறங் குறைபாடுண்டாக வினாதல் அறியாமை முதிர்ச்சியாவதன்றிப் பிறிதில்லையென விடுக்க. அல்லதூஉம் என்பை யொழித்து ஒழிந்த பொருள்களெல்லாம் நெகிழ்ச்சி யும் மென்மையுமுடையன வாகையால் அவையெல்லாம் நுண்வடிவாய் நின்றன அவற்றைப் பருப்பொருளாகத் திரித்து என்போடு ஒருங்குகூட்டி உடம்பைப் படைத்திட்டானாகலின் ஆண்டும் மாறுபாடில்லை யென்றொழிக. இதுநிற்க. இனி, ஞானசம்பந்தப்பிள்ளையார் மூன்றாம் ஆண்டி லேயே பேரறிவினராய் விளங்கினாரெனல் யாங்ஙனம்? அஃது உலக வியற்கை யன்றாலோவெனின்; அறியாது கடாயினாய் போப் முதலான முன்னை ஆங்கிலப் புலவர் களுங் குழவிப் பருவத்திலேயே புலமை மிகவுடை யராய் விளங்கினா ரென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின் உலகவியற்கை. உலகவியற்கையென நீர் கூறுவன வெல்லாங் குன்றக் கூறல் என்னும் குற்றமுடையதா யொதுங்குமாறு அறியக் கடவீராக. உலகவியற்கைக்கு நீர்வரைந்து சொல்லும் இலக்கணம் பெரும்பான்மை யாய் நிகழ்வதென்றுரைப்பீ ராயின் அப்போது அக்குற்றம்வர மாட்டாது; யாங்கூறும் வழக்குரைகளும் வாய்ப்புடையன வேயா மென்பதூஉம் எளிதிலுமக்கு விளங்கும். இன்னும் உலகவியற்கை யென்பது இறைவன் உயிர்களின் அறிவு முதிர்ச்சிக் கேற்பத் தன் உரிமை அறிவாற்றலால் நிகழ்த்துஞ் செய்கையின்அமைப்பே யாமென யாங்கூறும் இலக்கணத்தை நீர் ஒருசிறிது உளங்கொளப் பொருத்தி யாராயவல்லிராயின் `பெரும் பான்மை யென அடைகொடுத்து இடர்ப்பட்டு நீர் இலக்கணங் கூறுதலும் வேண்டா, அல்லது அவ்வடை கொடுத்து இலக்கணஞ் சொல்லுவீராயினும் அதுவுமெம் வழக்கிற்கு ஒத்து நிற்பதேயன்றி மாறுபாடுறாது. எனவே, ஞானசம்பந்தப் பிள்ளையார் மூன்றாம் ஆண்டிலேயே பேரறிவினராய் உலகை உய்வித்தது உலக வியற்கை யொடு பொருந்துவதே யாமென்றுணர்ந்து கொள்க. இனி, நிரீசுரவாதிகளுள் ஒரு சாரார் ஞான சம்பந்தப் பிள்ளையாரே தாம் நிகழ்த்திய அற்புதங்களைக் குறிப் பிட்டுப் பதிகங்கள் கட்டளையிட்டருளினா ரென்பதற்குச் சான்று என்னையென்று வினாவுவராலெனின்; உலக வழக்கும் ஆன்றோர் வழக்குமே அதற்கு உறுசான்றாம். பிள்ளை யாரோடு ஒருங்கிருந்த திருநாவுக்கரசுகளும், அவர்க்குச் சிலகாலம் பின்னிருந்த சுந்தரமூர்த்திகளும் அவர்க்கு சிலகாலம் பின்னிருந்த நம்பியாண்டார் நம்பி களும், அவர்க்கு சிலகாலம் பின்னிருந்த பெரியபுராண முடைய சேக்கிழாரும் பிள்ளையார் அருமை பெருமை களை மிக விரித்துரைக்கும் வழக்கானும் மரபானும் முன் னெடுத்துக் காட்டிய பதிகங்களும்பிறவும் பிள்ளையார் கட்டளை யிட்டருளி யனவேயாமென்க. அற்றேலஃதாக, அவ்வான்றோர் உரையைத் தான் மெய்யெனக் கொள்ளு தற்குச் சான்று என்னையெனின்; நன்று வினாயினாய். இத்தனை ஐயுற வுடையையாய்த் தெளியமாட்டாது தடை நிகழ்த்துமுனக்கு எத்தனைதான் யாம் உரைப்பினும் மேன்மேலும்தடை நிகழ்த்தி வரம் பிறந்தோடுங் குற்றத்திற்கு இடஞ்செய்வை யாகலான் அவ்வாறெல்லாம் உனக்கு விடையுரையேம். ஆயினும் நினக்கு மெய்யறிவு கொளுத்து தற் பொருட்டு நின்மாட்டுயாமே சில வினாக்கள் நிகழ்த்து கின்றாம்; உய்த்துணர்ந்து கேட்பையாக நீ குழந்தையாயிருந்த பருவத்திலே நின்தாய் இன்ன ளென்று யாங்ஙனம் உணர்ந்தாய்? அவளுரைப்பவன்றோ உணர்ந்தாய். அவள் பாலுண்ணுக என்று சொல்லி நின்னை ஊட்டிய காலத்தினெல்லாம் நீ உணவு கொள்ளும் இப் பொருளை யாங்ஙனம் உணர்ந்தாய்? அவளுரைப்பவே யன்றோ உணர்ந்தாய். இவ்வாறே உலகியற் பொருள்கட் கெல்லாம் பெயரிடுமாறும், அவற்றைத் தெரிந்து பயன் படுத்துமாறு மெல்லாம் யாங்ஙனம் உணர்ந்தாய்? அவளு ரைப்பவேயன்றோ உணர்ந்தாய், அக்காலங்களி லெல்லாம் நின் அன்னை சொல்லியவற்றை அவள் சொல்லிய வாறே நீ நம்பினதன்றி அவள் சொன்ன ஒவ்வொன்றனையும் ஆராய்ச்சி செய்து பின் நீ நம்பியதுண்டோ? இல்லையே, இப்போது தான் என்ன! நீ கலை பயில் கழகஞ் சென்று கல்வி பயிலுங் காலங்களினெல்லாம், ஆசிரியர் சொல்லியவற்றை ஒருங்கே நம்பி, அந் நம்பிக்கையின்மேல் உன்னறிவெனுந் திண்ணிய அரணைக் கட்டுதலன்றி, அவர் கற்பிக்கும் ஒவ்வொன்றிலும்நீ ஐயங்கொண்டு தெளிந்ததுண்டோ? ஆசிரியன் ஒரு பொருளுக்கு நீர் என்றும், ஒன்றுக்கு நில மென்றும், ஒன்றுக்குத் தீ என்றும், பலவாறாகப் பெயரிட்டுக் காட்டினால் அவற்றுக்கு ஏன் அப்பெயர் அமைத்தார் என்று நீ ஆராய்ந்ததுண்டோ? அல்லது அவர் சொல்வது பொருத்தந் தானாவென்று நீ ஐயம்நிகழப் பெற்றதுண்டோ? இவையெல்லாம் ஒரு புறங்கிடக்க. நீ நாடோறும் நண்பர் களோடு கலந்து பழகுங்காலும் அவ்வவர் உரைக்குஞ் சொற்களையும் பொருள்களையும் பொருந்த ஆராய்ச்சி செய்துதான் நம்புகின்றனையோ? ஒருவர் அமெரிக்கா தேயம் என்று இருக்கின்றது என்றுரைத்தால், அப்படி ஒரு தேயத்தை நான் கண்டதில்லாமையால் அது பொய்யென் பையோ? ஒருகாலும் உரையாய். இருந்தவாற்றால், உன்னறிவு முதிர்ச்சியும் ஆராய்ச்சித்திறனுந் தொழிலொருமைப்பாடும் பிறவுமெல்லாம் பிறர் சொல்லின்கண் உனக்கு இயல்பாக வெழுந்த நம்பகம்பற்றியே மெய்யாய் நிகழ்வதல்லது வேறு இன்றாம்.இனி, அங்ஙனம் உனக்கு நிகழ்வதாகிய நம்பக வுணர்ச்சியும் உனக்கு அதனை வருவிக்கின்றவர் மெய்யுரை யியல்பு பற்றியே உரம் பெற்றுத் தோன்றும். அவர் சேய் நாட்டின்கண் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றைத்தாம் நேரே கண்டிருந்ததாக உரைத்திடுவராயின் அதன்கண் நம்பிக்கை மிக உறுதியாக நினக்குத் தோன்றா நிற்கும்; அவர் அதனைத் தாமே நேரிற் காணாமற் கண்டார் ஒருவர் தமக்குரைப்பத் தாங் கேட்டவாறே அதனை நினக்கு மொழிந்திடுவராயின் அதன்கண் நம்பகஞ் சிறிது குன்றித் தோன்றா நிற்கும். இவ்வாறே ஒருவர் ஒருவர்க்கு உரைப்ப வருகின்றன வெல்லாம் முறை முறையே நம்பகங் குறையத் தோன்றா நிற்கும். இனி ஒரு நிகழ்ச்சியைக் கேட்டோர் உரைத்தவாறே அதனைக் கண்டிருந்தோரும் பொருந்த வுரைத்திடுவராயின், அது மெய்ம்மை மிகவுடைத்தாய் உலகத்தின்கட் பரந்த வழக்கமுற்று ஆன்றோராற் பாதுகாக்கப் படும் மெய் வழக்காய் நிலையுதலுறும். இங்ஙனம் பரந்துபட்ட வழக்காய் வரும் மெய்ந் நிகழ்ச்சிகளையே குறிப்பிட்டு ஆங்கில நூலாரும் நாட்டு வரலாறுக ளெழுதுகின்றனர். அவரெழுது கின்ற அவ்வரலாற்று நூல்களின் கண்ணெல்லாம் எந்த நிரீசுர வாதியும் ஐயுறவுகொள்ள இடம்பெறார். சீசர் என்னும் ஓர் அரசர் ஆயிரத்தெழுநூறு ஆண்டுகளின் முன் உரோம நகரத்திற் செங்கோலோச்சினாரென்பது அவர் செதுக்கிய சில கல்வெட்டுக்களால் இனிதுணரப்படு மென்றால் அதன் கண் ஐயுறுவார் யாருமிலர். இதுபற்றி யன்றே அளவை நூலாரும் உரையளவையென வொன்று சிறந்தெடுத்துக் கொள்வாராயினர். இது நிற்க. இனி, இங்ஙனங் காட்டிய வரலாற்று முறைக்கு இணங்கவே, எம் ஞானசம்பந்தப் பெருமானார் தாம் நிகழ்த்திய அரும்பேரற்புதங்களைத் தம் அருமைத்திருப்பதி கங்களிற் கட்டளையிட்டருளுதலும், பிள்ளையாரோ டொருங்கிருந்து அவ்வற்புதங்களை நேரே கண்டிருந்த தோலாநாவின் மேலோராகிய அப்பருந் தம் அன்புருவான பதிகங்களிலவற்றைக் கட்டளையிட்டருளுதலும், இங்ஙனம் மெய்ம்மைகொண்டு நிகழ்ந்த அற்புத நிகழ்ச்சிகள் சுந்தர மூர்த்திகள், பட்டினத்தடிகள், நம்பியாண்டார் நம்பிகள், சேக்கிழார் நாயனார், உமாபதி சிவனார், தாயுமானவர் முதலிய மெய்த்திருவாளரான சான்றோரான் மொழியப் படுதலும், அங்ஙனம்மொழியப்படுதலாற் பரந்துபட்ட உலகியல் வழக்கும் ஆன்றோர் அறநெறி வழக்குமாய்ப் பாதுகாக்கப்படுதலுந் தேர்ந்துணர வல்லை யாயின் மேன்மேல் வரம்பிறந்தோடுந் தடை நிகழ்த்திமலை வாயல்லை. இனி, இங்ஙனங் காட்டிய உரையளவைகளையுங் கடந்து அழிவழக்கு பேசத்துணிதல் உலகத்தாராற் பித்த னென்று எள்ளப்படுதற் கேதுவாமாகலின்,இனி யாமெடுத்துக் கொண்ட திருவுருவ வழிபாட்டினியல் வழாது மேலும் அதனை ஆராய்ந்து செல்வாம். இதுகாறும் யாம் எடுத்து விளக்கியதன் முடி பொருளாய்ப் பெறப்படுவன யாவையோ வெனின், நாவலந் தீவினராகிய நம்மனோர் செய்து போதருந் திருவுருவ வழிபாடு இறைவன் ஒரோவொரு காலத்து ஒரோரன்பர்க்கு அருள்புரிதற் பொருட்டு அருளையே திருமேனியாக் கொண்டு எழுந்தருளி வந்த திருக்கோலக்குறிப்பு இனிது விளங்க அமைத்து நிறுத்திய வழிபாடாய், அவ்வழிபாடு வாயிலாகவே எமதுணர்வை இழுத்துச் சென்று இறைவன் மாட்டுப் பதியவைக்குங் கருவியாமென்பதூஉம் இங்ஙனம் போந்த அருட்கோலத்தை அறிதற்குரிய நல்வினை முகிழ்ப்பு இல்லாத ஏனை நாட்டவர் தத்தமக் கறிவு சென்றவா ரெல்லாங் கல்லானுஞ் செம்பானும் இயற்றி வைத்துக் கொண்டு வழிபடும் அவரது வழிபாடு அவ்விக்கிரகங் கண்மேற் கடந்து சென்று இறைவன் உண்மையருட் கோலத்தின்கண் அவரறிவைப் பதிக்க மாட்டாமையின்அவர் செய்யும் அவ்வழிபாடு விக்கிர காராதனை யென்று வழங்கப்பட்டதா மென்பதூஉம், இங்ஙனம் வேறுபாடு பெரிதுடைய திருவுருவ வழிபாட்டிற்கும் விக்கிரகாராத னைக்கும் இலக்கண முணராது அவை யிரண்டனையும் ஒன்றெனக் கொண்டு அவ்வாற்றான் நம்மனோர் செய்து போதருந் திருவுருவ வழிபாட்டு நன்முறையை ஒரு சாரார் இகழுதல் பொருந் தாதா மென்பதூஉமே யாமென் றுணர்ந்து கொள்க. இனி இறைவனை அங்ஙனம் உருவத் திருமேனியிற் கொண்டு வழிபடுமாறு தானென்னை? அருவ மாகக் கொண்டு வணங்குதலே அமையுமா மென்பார் தடையுமொழிய ஒருசிறிதுகாட்டுதும். இனி வழிபாடு உருவமான கோலத்தின்கட் செயப் படுதல் வேண்டுமெனக் கூறியதென்னை? அருவமாக இறைவனை வழிபடுதலே முறையாமாலெனின், நன்கு கடாயினாய், அவ்விறைவனை அருவமாகத்தான் வழிபடுதல் வேண்டு மென்னுங் கடப்பாடு என்னை என எதிர்கடாவு வார்க்கு நீர் இறுக்குமாறு இன்றாம். அற்றன்று, காலத்தானும் இடத்தானும் வரையறைப்படாதுவிரிந்த அருவப்பொருள் காலத்தானும் இடத்தானும் வரை யறுக்கப்படும் உருவமாக வந்து அருள் செய்யுமென்றல் சாலாதென்பதே எமது கருத்தாமெனின்; நன்றே வினாயினாய், அறிபொருளான உயிரின் கண்ணும் அறிவில் பொருளான உருவருவ வுலகங் களினுமெல்லாம் இறைமுதற் பொருள் ஒருங்கு நிறைந்து அவற்றின் மேலும் விரிந்து செல்லும் பெரும்பரப்பும் முழு முதன்மையு முடையதென்ப தெல்லார்க்கும் ஒப்ப முடிந்தது; முடியவே, பருப்பொருளான குடம் ஆடை முதலிய வற்றினெல்லாம் நிறைந்திருக்கும் அவ்விறை முதற்பொருள் அந்நிறைவு பற்றி ஒருவாற்றால் வரையறுக்கப் படுமென்பது துணி பொருளாம். அற்றேல், அது முழுமுதற்கடவுளின் நிறை விற்கும் இறைமைத்தன்மைக்கும் இழுக்காம் போலுமெனின் அற்றன்று, குடம்முதலிய பொருண்மட்டின் மடங்கி நிறைந்து மேற் செல்லாதாயின் அஃதுஅதற் கிழுக்காம்; அவ்வாறன்றி அவற்றினுள்ளும் புறம்புமெல்லாம் ஒருங்கு நிறைந்து மேல் விரிந்து நிறையும் முதன்மை யுடைமையால் அஃது அதற்கு இழுக்கன்றாம், குடம் முதலிய பருப்பொருள்களில் நிறையுந் துணையே அதுவரையறைப் பொருளென்பது பெறப்படுமாம் பிறவெனின் அஃதமை யாது, வரையறுக்குங் குடம் முதலிய வற்றின் வரம்பின் கண்ணும் அதுநிறைந்து உள்ளும்புறம்புந் தொடர்புற்று நிற்குமாகலின், தொடர்பின்றி யறுத்து வேறாக்கப்படும் பருப்பொருள்போல் அது கொள்ளற் பாலதன்று. இங்ஙனங் குடம் முதலிய பொருள் நிறைவு பற்றியும் அஃதொருவாறு வரையறைப்படுமென்பது காண்டு மாகலின், உருவப் பொருண் மட்டுமே தான் காலத்தானும் இடத்தானும் வரையறைப்படுமென நீ கூறியது பொருந்தாது. அல்லதூஉம், பிறர் மாட்டு நின்று படைக்கப்படும் பருவுடம்பு மேற் கொண்டு கருப்பையிற் புகுந்து பிறக்கும் எம்மனோரைப் போன் முழுமுதற் பெருங்கடவுளும்வினை வழிப்பட்ட உடம்பு தாங்கி வந்து அருளுமென வுரைப்பினன்றே அஃது அவன் இறைமைக்கு இழுக்காம். கட்புலனாகாத பேரொளிப் பிழம்பாய்ப் பேரறி வுருவாய் இன்ப நிலையாய் விளங்குந் தன் அருட்பெருந் தன்மையே தனக்குரிய வடிவமாகத் தான்நினைந்தவாறே, தன்னை நெஞ்சுருகிக் குழைந்து வழுத்தும் உண்மையன்பர்க்கு வெளிப் பட்டு அருளும்முழு முதன்மையுடையான் இறைவன் என்று கோடுமாகலின் அஃது அவற்கு இழுக் காதல் யாண்டையதென் றொழிக. அற்றேலஃதாக, இறைவன் அங்ஙனம் அருட் கோலந்தாங்கி வெளிப்படுங் கால் தன் பரப்பை யெல்லாஞ் சுருக்கிக் கொண்டு போதரு மோ, அல்லது அப்பரப்பின்கண் ஒரோரிடத்திலேயே முனைந்து தோன்றுமோ என ஆயும் வழி, அவன்றன் நிறை வனைத்தையும் ஒருங்கு சுருக்கிக் கொண்டு போதரா நிற்குமெனவுரைத்து மாயின் அக்காலத்து நிறைவின்மை பெறப்படுதலானும், ஒரோரிடத்து முனைந்து தோன்று மெனக் கோடுமாயின் அறிபொருளான இறைமுதற் பொருள். வரையறுக்கப் படாமையின் அஃதோரிடத்துத் தோன்றவே பிறிதோரிடத் தில்லையாமெனக் கொள்ளக் கிடத்தலானும் அவை யிரண்டும் அமையாவென்பது தெற்றென விளங்குதலால் இறைவ னுருவமாகத் தோன்று மென்றல் யாங்ஙனம் நிலை பெறுத்தப்படுமெனின்; நன்று கூறினாய், இறைவன் அருட்கோலந் தாங்கி வெளிப் படுங்கால் தன் பரப்பு முழுமையுஞ் சுருக்கிக் கொண்டு போதருவானல்லன்; கன்று ஈன்ற புனிற்றாவின் புனித வுடம்பெங்கும் நிறைந்த நுண் அமிழ்தந் தீஞ்சுவைப் பாலாய் மடியினின்றும் பொழியுமாறு போலவும் விரிதிரைக் கடலிற் குளிர்மிகும் ஒரோ விடங்கள் பனிக்கட்டிகளாய் உறைந்து கிடக்குமாறு போலவும் யாண்டும் விரிந்த இறைவன் றிரு வருள் மெய்யன்பர் பொருட்டு ஒரோவிடங்களிற் முனைந்து உருவாக, அதன் கண்ணே யிருந்து முதல்வன்அருள் புரிவனென் றுணர்க. இதுபற்றி யன்றே, இல்லா முலைப்பாலுங் கண்ணீரு மேந்திழைபா னல்லா யுளவாமா னீர்நிழல்போ - லில்லா அருவாகி நின்றானை யாரறிவார் தானே யுருவாகித் தோன்றானே லுற்று என்னும் சிவஞான போதத்திருமொழியும் எழுந்ததென் றுணர்க. அற்றேல்,இறைவன் கொள்ளும் உருவத்திரு மேனிக்கும் நம்மனோர் எடுக்கும் பருவுடம்பிற்கும் வேறுபா டென்னை யெனின்; நம்மனோர் உடம்புகளெல்லாம் வினைவழிப்பட்டுப் பிறராற் படைக்கப்படும் வரையறைப் பொருளாய் நிலையுதலின்றி அழிவுபா டெய்துமியல் பினவாம்; இறைவனுடைய திருமேனியோஅருளே வடிவாய் அவன் நினைந்தாங்குத் திரண்டெழூஉந் திருவுருவாம்; இறைவனது அருட்டிருமேனி அவன்றன் பெரும்பரப்பு முழுவதூஉந் தொடர்புற்று ஒருவாற்றாற் சிறிதாதலும் ஒரு வாற்றாற் பெரிதாதலுமுடையதாம். யாங்ஙனமெனின்; நெடுங்கடற் பரப்பி லாங்காங்கு உறைந்த பனித்துண்டங்கள் அக்கடல் நீரோடுஇயைபுடையவாமாறு போல வென்க. இனி அது நம்மனோர் உடம்பு போல்வதன்று மற்று அருட்டிருவுருவாம்என்கின்றீரால், அத்திரு வுருவத்தி னியல்புதா னென்னையோ வெனின்; அவ்வுருவத்தினியல்பு நம்மனோரால் அறியவாராதென்று உணர்க. பருப்பொருள் வடிவாய் விளங்கும்இவ்வுலகத்தினியல்பே யறியமாட்டாத சிற்றறிவினராகிய நாம் மனமொழிகளுக்கு எட்டாது விளங்கும் இறைவன்றன் திருக்கோல வியல்பை யறியுமாறு யாங்ஙனம்? மின்னாற்றல் இன்னது என்று அறிந்துள்ளாம். அதன் உண்மையியல்பு இன்னதென் றறியோம்; விசும் பென்ப தொன்றுண்டென்ப தறிவோம், அதன் உண்மை இன்னதென அறியமாட்டோம்; இரும்பைக் காந்தம் இழுப்பது கண்டு காந்தக்கல்லின் ஆற்றலை யறிவோம், அவ்வாற்றலின் உண்மைத்தன்மை இன்னதென்றறியும் ஆற்றலுடையோ மல்லோம்; இவ்வாறே உருவருவாய் உள்ள மண், புனல், அனல், கால் முதலிய பொருள்களின் உண்மை யின்னதென் றறிய மாட்டாத சிற்றறிவினராகிய நம்மனோர் இறை வனியல்பை உணர்வேமென்றல் குழறு பாடாய் முடியும். ஆழ்கடல் நீரில் ஆழவமுக்கி முகந்தாலும் நாழி நால்நாழி தண்ணீரை முகவாது, நாழித் தண்ணீரையே முகக்கும்; அந்த நாழிபோற் சிறிதான உயிரினுணர்வு கடல் போற் பரந்த இறைவன் இயல்பை யாங்ஙனம் அளந்தறியும்? ஆகலின், உயிரினறிவு விரியுந் துணையே இறைவன் அருட்கோல வியல்பு விளங்குவ தல்லது மேற்சிறிதும் விளங்கா தென்றுணர்க. ஆகவே இறைவன்றன் திருமேனி யியல்பு நம்மனோர்க் கறியவாரா தென்பதூஉம், அங்ஙனமாயினும் அவன் றாங்கும்அருட்டிரு வுருவுபற்றி அவற்கு வரக்கடவ தோர் இழுக்கில்லை யென்பதூஉங் காட்டப்பட்டன. இனி, இறைவனை உருவத்திருமேனியிற் கொண்டு வழிபடுதலினும் அருவமாய்க் கொண்டு வழிபடுதலே சிறந்ததாமென வைத்து ஒரு சாரார் வழக்கிடுகின்ற மையின் அவர் செய்யும் அவ்வழக்கும் போலியாமென்பது காட்டு வாம்; பருப்பொருள் வடிவான விழிகளிரண்டும் பருப் பொருள்களையே காண்பனவன்றி நுண்ணியவானவான் முதலிய பொருள்களைக் காணமாட்டா; இவ்வாறே மெய்வாய் மூக்குச் செவி முதலிய உறுப்புக்களும் பருவடி வான ஊறு சுவை மணம் ஓசை முதலியவற்றையே உணரு மாறல்லது வேறு அறியா. இவ் வைம்பொறிகளின் வழியாகப் பஃறலைப் பட்டுச் செல்லும் மனவுணர்வும் அவ்வைம்பொறி வாயிலாய் அந்த பருப்பொருட்டன்மைகளையே அறிவ தல்லது பிறிதில்லை. இங்ஙனம் பருப்பொருள்களையே அறியு மாற்றலுடைய மனமுதலான பருப்பொருட் கருவிகளுடைய இப் பருவுடம்பி லிருப்பாரான நம்மனோர் ஒருவாற்றானும் இக் கருவிகளால் அறியப்படாத அருவமாகக் கொண்டு இறைவனை வழிபடுமாறு யாங்ஙன மென்றுணர வல்லார்க்கு அவர் சொல்லும் வழக்கு வெறுஞ் சொல்லள வாகவே முடிவதல்லது வேறு பொருட்பேறின்றாம். இனி, `வழிபாடு என்பதுதான் யாது? மன முதலிய பருப்பொருட் கருவிகளெல்லாம் புறப்பொருளிற் சென்று பதிந்து விரியாது மடங்கி இறைவன்றன் அருட்டிருவுருவின் கட் சென்று பதிந்து உயிரை இறைவன் மாட்டு ஒருமையுறுத்து வதாமன்றோ? அறிபொருளான இரண்டு ஒருங்கு சேர்ந்து ஒருமையுறுதற்கு இடை நின்று கூட்டுவிப்பன பருப்பொருட் கருவிகளும்அவற்றை யுடைய உடம்புமல்லவோ? என்னை? இன்ப வடிவான அருட்கோலத்தைக் காண்டலும் அதன் கண்ணே மனவுணர்வு சென்று பற்றும். பற்றுதலும் அக் கோலத்தின்கண் நிறைந்த இறைவன் மாட்டு உயிர் ஒன்றி ஒன்றா மாதலின்.இதனை உலகியற் பொருள்களினும் வைத்துக் காட்டுதும், இங்ஙனம் எல்லாம் வழக்கிடும் நீவிர் நும்முடம்பின்கண் இல்லாதொழியின் ஈண்டு எம்மெதிர் வந்து நின்று எங்ஙனம் அதனை நிகழ்த்துவீர்? நுமது வழக்கை மறுத்து மெய்ப்பொருள் வலியுறுத்துகின்ற யாம் எமது இவ்வுடம்பின்கட் புகுதாவிடின் எங்ஙனம்எம் மேற்கோளை நிறுத்துவேம்? நாமிருவரும் இக்காலத்து ஈண்டிருந்து வழக் கிடுவதெல்லாம் இரு வேறுடம்புகளுடைமை யினாலன்றோ? இங்ஙனம் இருவேறுடம்புகளை நிலைக்களனாக் கொண்டு இரு வேறுயிர்கள் ஒன்று சேரும் வழி இரண்டும் ஒருமையுற்று இன்பமெய்துகின்றன. எழினலங்கனிந்த கொழுவிழி மகளிரும் உலம்பொரு தடந்தோளுறுவலி இளைஞரும் ஒருங்கியைந்து ஒன்று சேரினல்லது இன்ப நுகர்தல் செல்லாமை இனிது விளங்கும்; கன்னலுங் கனிந்த பலாச்சுளையும் மாம்பழமும் வாழையங்கனியும் நறைகமழ் தேனும் ஒருங்கு கலந்த கூட்டுவாய்ப் பெய்துழியல்லது சுவையின்பந் தோன்றாது; நானமும், புழுகுஞ், சாந்தமும் விரைகமழ் மலரும் அருகணையினல்லது மூக்கினாற் பிறக்கும் நறுமணவின்பந் தோன்றாது; தீங்குழலோசையும் யாழிய லோசையுங் கேட்பினல்லது செவியினாற் பிறக்கும் ஓசை யின்பந் தோன்றாது; செழும்பட்டாடையிற் சமைத்த ஐவகை யமளியுறினல்லது மெய்யினாற் பிறக்கும் ஊற்றின்பந் தோன்றாது. ஆகவே, இன்பந் தோன்றுதற்கு இருபொருட் சேர்க்கை இன்றியமையாதாகலானும், அச்சேர்க்கை தானும் இருவகை யுடம்புகளையே நிலைக்களனாக் கொண்டு நிகழ்த லானும்இறைவனை வழிபட்டு அவனை ஒன்றியைந்து இன்பம் நுகர்கின்ற உயிருக்கு ஓருடம்பும் அங்ஙனந் தொழப்படும் முதல்வனுக்கு ஓர் உடம்பும் வேண்டுமென்பது சொல்லாமே யமையும். அங்ஙனமாயினும் உயிருக்கு உண்டான உடம்பு வினைக்கீடாக மாயையிற் றிரட்டப் பட்டதா மென்பதூஉம், இறைவனுக்கு உண்டான உடம்பு இரக்கத்தால் அருளிற் றிரண்டு எழுந்ததா மென்பதூஉங் குறிக்கொண்டு போற்றற் பாலனவா மென்க. இங்ஙனம் இருவகை அறிவுப் பொருள்கள் தம்முள் ஒன்றிணங்குதற்கு இரு வேறுடம்புகள் வேண்டு மென்னும் நுட்பந் தெரித்தற் கன்றே, தமிழிலக்கண வாசிரியர் நிலைமொழியீற்றினின்ற உயிரோடு வரு மொழி முதனின்ற உயிரிணைதற்கு இடையே ஓர் உடம் படுமெய் தோன்றுமென் றுரையா நிற்பர். இங்ஙனம் உண்மை மறைபொருள்களை யெல்லாந் தந்துஇலக்கண நூலுள்ளும் விளங்க வைத்தல் தமிழ் நூலாரிடத்தன்றி ஏனை மொழி நூலாரிடைக் காண்ட லரிது என்பது இதனொடு படுத்து ஈண்டு விதந்துரைத்து அத்தமிழ் மொழி மாட்சி குறிப்பானறி யவைத்தாம். இது நிற்க. இனி, உடம்புகளெல்லாந் தம்மை யுடையானுக்குப் பல்வகைத் துன்பங்களுந் தந்து வேறுபடுத்தக் காண்டலின், அது பற்றி இறைவன் றாங்கிவரும் அருட்டிருவுருவும் அவனை வேறுபடுத்தாதோ வெனின்; படுத்தாது, உடம்புகளுடைய ரான உயிர்களினியல்பு பற்றியே உடம்புகளின் றன்மை யறிவதல்லது, உடம்பினியல்பு பற்றி உயிரை யளந்தறிதல் ஒருசிறிதும் பொருந்தாது, யாங்ஙனமெனிற் கூறுதும், இருநில முழுதுந் தன்னடிப்படுத்துச் செங்கோலோச்சுவானான முடியுடை மன்னன் தன் இரும்பொருள் வைப்பிற் கேற்பவும் வளங்கட்கேற்பவுந் தலைமை செலுத்துமுறைகட்கேற்ப வும்மிக அகன்ற உயர்ந்த வெழுநிலை மாடங்களும் மாளிகை களும் அமைத்து அவற்றின்கண் இருப்பக் காண்கின்றோம்; விலங்கினங்களைச் செகுத்துண்டு மழையினும் வேனிலினும் உழன்று திரிவானான வேட்டுவன் தன்னியல்புக் கேற்ப வைவேய்ந்த புல்லிய குடிலில் ஒதுங்கியிருந்து வாழ்நாட் கழிப்பதூஉங் காண்கின்றோம். உறையுள் கொள்கின்ற அரசன் வேட்டுவன் இயல்பு பற்றியே உறையுள் அமைக்கப் படுதல்போல உடம்புகளைத் தாங்கி வருகின்றவரான இறைவனும் உயிரும் என்னும் இவரியல்பு பற்றியே அவர் தாங்கிவரும் உடம்புகளுங் கருதி அளந்தறியற் பாலனவாம். இறைவன் முற்றறிவும் முழுத்தன்மையும் வரம்பிலாற்றலுந் தன் வழியனாதலும் அருளுறையுளாதலு முடையனாகலின் அவன் றாங்கிவருந் திருக்கோல வியல்பு எம்மனோரா லறியவாராத் தூய்மை பெரிதுடையதாதலும், உயிர் சிற்றறிவுஞ் சிறுதொழிலும் பிறர் வழிப்படுதலும் மலத்தான் மறைக்கப்படுதலும் பிறவுமாகிய குறைபாடுடையனாகலின் அவன் மேலிட்டு வருமுடம்பும் வாலாமை பெரிதுறுவ தாதலும் நன்றுணரக் கிடக்கும். இவ்வுண்மை கடைப் பிடித்தன்றே அருணந்திசிவமும், மாயைதான் மலத்தைப் பற்றி வருவதோர் வடிவ மாகு மாயவா ணவம கன்ற வறிவொடு தொழிலை யார்க்கு நாயக னெல்லா ஞானத் தொழின்முத னண்ண லாலே காயமோ மாயை யன்று காண்பது சத்தி தன்னால் என்று சிவஞான சித்தியாரில் ஓதி யருளியதூஉ மென்க. இங்ஙனமாகலின் உடம்புகள் தாங்கிவரும் ஒப்புமை பற்றியே அவையிரண்டற்குமுள்ள வேற்றுமை யுணராது அவை. தம்மையுடையாரைக் கட்டுறுத்துமெனக் கூறுதல் சிறு மகார் கூறுங் குழறு பாட்டுரையாய் முடியுமென்க. அதுநிற்க. இனி , உருவத் திருமேனியிற் கொண்டு இறை வழிபாடு ஆற்றுகின்ற அறிவுடையோர்க்குத் தாம்அன்பு முதிர்ச்சி யடைந்து இறைவனோடொன்றி யொன்றறக் கலக்கும் அத்துவித முத்திப் பெரும் பேறு வாய்க்குமென்பதுமேற் கூறியவாற்றால் இனிதுவிளங்கும். என்னையோ வெனிற்; குழவிப்பருவந்தொட்டு முதுமைப் பருவங்காறும் உலகியற் புறுப்பொருளோடு மனவுணர்வு ஒற்றுமையுறுகின்ற நெறியானே மக்களெல்லாரும் அறிவு விளக்கமும் நாகரிக வளர்ச்சியு மெய்தி வருகின்றாரென்பதுமேலே விளக்கிப் போந்தாம். ஆதலான், மக்கள் மனவுணர்வு எக்காலத்தும் உலகியற் புறப்பொருளொன்றனைப் பற்றியே நிற்குமல்லது, தானே வேறு பிரிந்து தனித்து நிற்குந் தனி முதலன்றாம். மனவுணர்வு ஒன்றையும் பற்றாவாறு வேறு பிரித்துத்தனியே ஒருவழி நிறுத்துவே மென்பாருரை வெறுஞ் சொல்லளவே யன்றி அஃது அவர் கூறுமாறு அடங்கு மியல்பிற்றன்று என்பது சிறிது கருதிப் பார்ப்பார்க்கும் பொள்ளெனப் புலனாம். இப்பெற்றியுணர்ந்தன்றே காடுங்கரையு மனக் குரங்கு கால்விட்டோட வதன் பிறகே, யோடுந் தொழி லாற் பயனுளதோ என்று தாயுமான சுவாமிகளுந் திருவாய் மலர்ந்தருளினாரென்க. இத்தகைய மனவுணர்வின் பெற்றி தேறாது யாம் அருவமாகக் கொண்டு இறைவனை வழிபட மாட்டுவே மென்பா ரென்கடவரென்க.அவர் இரு விழியினையும் மூடிக்கொண்டு வானத்தை நோக்கி நிற்பா ராயினும் அவர் மனவுணர்வும் அங்ஙனம் நில்லாது; மற்றைத் தேயத்திலிருக்கும் அவர் மனைவியை நாடிச் செல்லும், மைந்தரை நாடிச் செல்லும், நேயரை நாடிச் செல்லும், பொருள் வருவா யெதுவென்றாராயும், புதல்வர்க்குப் பொருள் தொகுக்குமாறு யாங்ஙனமென்று ஆராயும், உயர்ந்த நிலைகள் எமக்கெப்போது கிட்டு மென்னும், மன்னவர் கொண்டாட வாழுமாறெப்படி யென்னும், இன்னும் எத்தனையோ அரும் பெருஞ் செயல்களை யெல்லாம் ஒரு நொடியிற் செய்ய வல்லும்; இத்தகைய மனத்தாலும் அருவமாக இறைவனை வழிபடுதல் எவர்க்கேனுங் கூடுமோ? அன்றி அங்ஙனஞ் சொல்வார் சொற்களை எவர் தாமும் நம்புவார்களோ? அறிவுடையீர் சிறிதாராய்ந்து சொன்மின்! காணப்படும் உலகியற் பொருளின் கண் மனவுணர்வைப் பதித்தன்றே காணப்படாத இறைவனை யறிந்து வழிபட்டு உய்தல் வேண்டும்; இது பற்றியன்றே தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் அகர முதல வெழுத் தெல்லா மாதி, பகவன் முதற்றே யுலகு (குறள் - 1) என்றோதிக் கடவுள் உண்மை தெரிப்பாராயினதூஉ மென்க. நம் மனவுணர்வின் விளக்கமே உலகியற் பொருள்களை ஒன்றனோடொன்று ஒப்பித்து அவ்வழி வளர்ந்துவாரா நிற்கின்றது; நிழலருமை வெயிலிற் சென்றால் தெரியும் என்னும் பழமொழியும் இதனை வற்புறுத்தும். வெயிலையே யறியாதவனுக்கு நிழலின் றன்மை யறிய வாராது. ஒளியை யறியாதவனுக்கு இருளின் றன்மை யறிய வாராது, தீஞ்சுவை யறியாதவனுக்குப் புளிஞ்சுவை யின்னதென்று அறிய வாராது, நறுநாற்ற மறியாதவனுக்குத் தீ நாற்றந் தெரிய வாராது, வாராதாகவே, உலகியற் பொருளுணர்வு சிறிது மின்றி விலங்கினங்களினுந் தாழ்ந்தவராதல் வேண்டும் மக்க ளெல்லாம். மற்று அவரெல்லாம் இன்றியமையா அவ் வொப்புமையுணர்வு பற்றியே அறிவு விளக்கம் பெறக் காண்டலால், மேலும் அவ்வொப் புமை யுணர்வுதானே அவரை மறுமைப் பெரும் பேற்றின் கண் உய்க்க வல்லதாம். ஒப்புமை யுணர்ச்சி இத்துணைப் பெருஞ் சிறப்பினதாதல் பற்றியன்றே அளவை நூலாரும் உவமையை ஏனையளவை களோடு விதந் தெடுத்துக் கொண்டார். இங்ஙனம் உலகியற் பொருள்களைப் பற்றி யன்றி மனவுணர்வு நில்லாமையானும், அம்மன வுணர்வும் ஒப்புமை பற்றியன்றிப் பெருகாமையானும் இறைவனை உருவத் திருமேனியிற் கொண்டு வழிபடும் முறையே உண்மை யாமல்லது ஏனைய வெல்லாம் வெறுஞ் சொல்லளவாகவே முடியுமென்றொழிக. அல்லதூஉம் எல்லாப் பொருள்களிலும் நிறைந்து பரந்த முழுமுதற் பெரும் பொருள் உருவமாகக் கொண்டு வணங்கப்படும் ஒரு பொருளின் கண்ணும் நிறைந்திருக்கும் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையாற் றிருவுருவ வழிபாடு ஆண்டும் பொருத்தமாவதேயன்றி இழுக்காமாறு இல்லை. அற்றேலஃதாக, சொல்லுக்கும் மனத்திற்கும் எட்டாமல் விளங்கும் முழுமுதற் பெருங்கடவுளை அவையிரண்டிற்கும் எளிவந்து விளங்குவதொரு பொருளில் வைத்து வணங்குதல் நிரம்பாதாமெனின்; அறியாது கடாயினாய், சொல்லுக்கும் மனத்திற்கும் எளிவந்து விளங்கும் ஏனை உலகியற் பொருள் போல இறைவனது திருக்கோலத்தையும் பிறழக் கொண்டு அவ் வாற்றால் அது பொருந்தா தென்றல் அறியாமையே யன்றிப் பிறிதில்லை. சொல்லுக்கும் நினைவுக்கும் புலனாம் உலகியற் பொரு ளெல்லாம் இது இதுவென்று சுட்டியறியப் படுதலான் வரையறைப்படும் சிறு பொருள்களே யாம். இறைவனது எங்குமுள்ள முழுமுதன்மை அங்ஙனம் இது வென்று சுட்டியறியப்படுவதன்றாகலானும், அவன் அன்பர்க்கு அருள் வழங்குதற் பொருட்டு மேற் கொண்டு வரும் அருட்கோலம் அவன் பரப்பு முழுவதூஉம் இயை புடைய தாகலானும், அஃது அவைபோல வரை யறைப்படும் வரம்புடைப் பொருளன்று; மற்று வரையறைப் படாது விரிந்த வரம்பில் பொருளே யாம். இவ்வாறாகலின், சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாத அப்பெரும் பொருள் அவை தமக்கு எளிவந்து தோன்றுத லாற் போந்த இழுக்கொன்றுமில்லை யென்றுணர்க, அற்றன்று, சொல் நினைவுகளுக்குப் புலனாம் பொருளெல்லாம் அழியக் காண்டலால் அங்ஙனம் நினைவிற்கு விளங்கித் தோன்றும் அவ்வருட்டிருவுருவம் அழிதல் வேண்டும், அழியவே வேறுபாடின்றி யிருக்கும் இறைவன் வேறுபாடெய்தினா னென்று கொள்ளப்பட்டு மாறு பாடாமெனின்; மாறு பாடில்லை, மனத்தினாற் பற்றப்படும் உலகியற் பொருண் மட்டு ம அங்ஙனம் அழியக் காண்டு மன்றி, அறிபொருளாய் உலகியற் பொருளைக் கடந்து செல்லுங் கடவுட் பொருளும் அங்ஙனம் அழிதல் வேண்டு மென்னும் யாப்புறவு அதனாற் பெறப்படாமையின் அவ்வாறு கூறுதல் அடாதென் றொழிக, மேலும், மனத்திற்குப் புலனாம் அத்துணையே பற்றி உலகியற் பொருளையும் உலகினை யிறந்து நின்ற கடவுட் பொருளையும் ஒன்றென்று கூற ஒருப்படுதல் பெரிதும் ஏதமாமென்று மறுக்க. மன வுணர்வின் கட்டோன்றும் இறைவனது திருக்கோலம் அவன்றன் பரப்பு முழுவதூஉம் இயைபுடையதா மென்ப தற்குப் பிட்டு வாணிச்சி பொருட்டு ஒட்டவடிவங்கொண்டு எழுந்தருளிய பெருமான் றாங்கிய பிரம்படி இயங்குமுயிர் நிலையுயிர் முழுதும் பட்ட வியத்தகு நிகழ்ச்சியே கரிபோக்கி யினிது விளக்கு மென்க; இவ்வரலாற்று மெய்ம்மையில் ஐயுறவுக் கொளயாரும் இடம்பெற மாட்டா ரென்பது மேலே வரலாற்றியல் வழாமையுரைத்து நிறுத்தினாம்; ஆண்டுக் காண்க. அற்றேல், உரை நினைவுக்கு எட்டாதான் என்று அவ்வாறு இறைவனை ஓதியதுதான் என்னை யெனிற் கூறுதும். அறியாமை வழிப்பட்டுத் தன்னறிவு முனைப்பால் இறைவனை யாமறிந்து வழிபட மாட்டுவே மென்று தருக்குவார் மனவுணர்வுக்கு ஒருவாற்றானும் புலனாத லின்றிப் பரந்துபட்ட நிறைவாம் முழுமுதன்மை யுடைய னாகலின் அவ்வாறு சொல்லப்பட்ட தென்க. அருள் வழிப்பட்டுச் சிவவுணர்வு முனைப்பால் அருட்கருவிகளாய்த் திரிந்த மனத்தின்கண் முதல்வன் விளங்கிய வழித் தருக் கறுந்து அசைவின்றி யின்பநுகர்ந்து கிடக்கும் மெய்யடி யார்க்கு அவன்றன் திருக்கோலம் புலனாதல் ஒருதலையேயா மென்றுணர்க. எனவே, உரையுணர்வு கடந்த சிவம் நெக்கு நெக்குக் குழைந்துருகு மெய்யன்பர் திருவுள்ளத்தின்கட் புலனாமாறு பற்றி வரக்கடவதோர் இழுக்கில்லை யென்பதூஉம், இழுக்கின்றாகவே உருவத் திருமேனியிற் கொண்டு வழிபாடியற்றும் அன்பர்க்கு மனவொருமை யுண்டாய் இரண்டற்ற வீடுபேறு வாய்க்கு மென்பதூஉம் பெறக்கிடந்த வாறுணர்க. இது கிடக்க. இனி உலகமியாங்கணும் பரந்துபட்டுக் கிடக்கும் மக்கட் பரப்பில் நாகரிகவுணர்ச்சி மிகப் பெற்றுடையார் முதல் அஃதில்லாமையின் விலங்கினத்தோ டொப்பவைத் தெண்ணப் படும் மாக்களீறாக யார்க்கும் இறைவனுளன் என்னும் உணர்ச்சியும், அவ்வுணர்ச்சியோடு உலகத்தின்கட் காணப்படும் பொருள்கள் வாயிலாக அவனை வழிபடுதல் வேண்டும் என்னும் மனவொருமையும், திருவுருவ வழி பாட்டின் இன்றியமையாமைக் கடப்பாடும் இயற்கையி லேயே அமைந்து கிடக்கு முண்மை அவ்வத்தேயமாக்கள் வரலாறுகளை ஒரு சிறிது உற்று நோக்குவார்க்கும் நன்கு விளங்கும். நாகரிக வுணர்ச்சி யுடையராகாத மாக்களெல்லாம் தமக்குந் தம்மைச் சார்ந்தார்க்கும் அச்சம், துன்பம், நலம் முதலியன நிகழ்தற்கேதுவாகப் புறத்தே தோன்றும் உலகியற் பொருள்களை யெல்லாங் கடவுளாகக் கொண்டு வழிபாடு இயற்றி வருகின்றார். ஆகவே, தமக்கு உறுதுயர் நீக்கி நலம் பயப்பதாக அவர் தாங்கருதிய புறப்பொருளையே இறை வனாக வைத்து வணங்கக் காண்டலாலே, அவர்தங் கருத்து வகையால் அவையும் இறைவன் வழிபாடாய் முடிந்திடுதற்கு ஓரிழுக்கில்லை. நாம் முதல்வரல்லோம் நம்மினும் வல்லதான பிறிதொரு பொருளையே சார்ந்து நிற்கும்அடிமைத்திற முடையோமென்னும் உணர்ச்சி நிகழப் பெற்றுச் செய்யும் வழிபாடெல்லாம் எத்துணை யிழிந்தன வாயினும் அவ்வவர் நிலை வேறுபாட்டால் அவையும் பொருத்த முடையனவே யாம். அதுபற்றி அவை எள்ளற் பாலன வல்ல. மற்று அவ்வுணர்ச்சியின் அருமைப்பாடும் அது முறை முறையே முதிருமாறும் உலக மியாங்கணும் அஃதொன்று தானே வேறு வேறாய் நிகழுமாறும் பிறவும் நன்றாராய்ந்து கோடல் சமயப் பொருட் பொதுமை யுணரும் வேட்கை யுடையரான மெய்யுணர்வுடையார்க்கு இன்றியமை யாத கடமையாம். அதுநிற்க. அறிவு விளங்கப் பெறாது விலங்கினத்தோடு ஒப்ப வைத் தெண்ணப்படும் அத்துணை நாகரிகமற்ற நிலை யிலிருக்கும் மக்கட் பகுப்பினர்மாட்டும் சமய வுணர்ச்சி நிகழ்த்தல் அவர்தம் வரலாற்றால் இனிது விளங்குதலின், அச்சமய வுணர்ச்சிதானும் அவர்க்கு முன்னே நிகழும் அச்சங் காரணமாகத் தோன்றுவதாயிற்று. அவ்வச்சந் தானும் இடி, மழை, மின்னல் முதலான உலகியற் புறப்பொருள் விரைந் தியங்கும் இயக்கத்தானும் நோய், சாக்காடு முதலாகத் தம்மாட்டுத் தோன்றும் பிழைகளானும் அவர்க்குத் தோன்றா நிற்கும்.அவ்வச்சம் நிகழ்ந்தவழி அவர் அவ்வச்சத்தினீங்கி நலம் பெறுமாறு எங்ஙனமென்று ஆராய்வாராயினர். அங்ஙனம் ஆராய்ந்த விடத்து விசும்பின் கண்ணே ஒரா வொரு காலத்து விரைந்தியங்கும் இடி, மழை, மின்னல் முதலிய அவையெல்லாம் மிகவல்லதான மற்றொரு பொருளின் ஏவல் வழிநின்று இயங்குகின்றனவென்றும், அவற்றை அங்ஙனம் இயக்கும் அப்பொருள் வெறு வெளியில் நிலை திரியா தியங்கும் ஞாயிறு திங்களையன்றி வேறு கட் புலனுக்குத் தோன்றாமையின் அவை தாம் வணங்குதற் குரிய முழுமுதற் பொருளாமென்றும் அறிவாராயினர். இம்முறை பற்றியே ஞாயிற்றினை வழிபடுஞ் சௌர மதமும், திங்களை வழிபடுஞ் சந்திரமதமும் உண்டாயின. மழையினுதவியைப் பெரிது வேண்டி நிற்கும் தேயங்களினுள் ளார் மழைக் கடவுளாகிய இந்திரனையும் வணங்கி வந்தார். இங்ஙனம் வானத்தின் கண்ணே அச்சநிகழ்த்தும் அப் பொருள்களை வழிபடுமாறுணர்ந்தபின், இந்நிலவுலகத்தின் கண்ணேயும் அங்ஙனம் அச்சம் நிகழ்த்துஞ் சிற்றுயிர்களை வணங்கத் தலைப்பட்டார். தம்மினத்தாரிற் சிலர் பாம்பு கடித்திறக்கக் கண்டு பாம்பினை வழிபடுவாராயினார். தம்முட் சிலர் தறுகணாளராய்ப் பலரை நலிந்து தலைமை செலுத்திப் பின் இறந்தொழிந்தவழி அவரையுந் தெய்வங்களாகக் கொண்டு பரசினார். தம்முள் வேறு சிலர் நல்லறிவுடைய ராய்ப் பலர்க்கு நல்லன பலவுஞ் செய்து இறந்துபட்ட வழி, அந்நல்லோரை வணங்கா தொழியின் யாது நேருமோவென வெருக் கொண்டு அவரையும் வணங்குவாராயினர். இவ்வா றெல்லாம் அவர் வழிபாடு செய்தற்குக் கருத்தொருப்பட்டு அது செய்யப் புகுதுகையில் தம்மறிவும் உணர்வும் ஒரு வழிப்பட்டு நில்லாதுசிதர்ந்து பல தலைப்படுதலின் அவர் அதன்கண் இடர்ப்பாடு பெரிதடை வாரானார். அவ்விடர்ப் பாடு அவரறிவை நுணுகி விளங்கச் செய்தலின், அவர் தாம் வழிபடக் கருதும் பொருளினுரு வத்தைக் கல், மரம் முதலிய பிற பொருளின்கட் செதுக்கி அவற்றை எதிர்நிறுத்தி அவற்றிற்குத் தம் வழிபடு கடன்களைச் செலுத்தத் துவங்கினார். அங்ஙனம் வழிபடும்போதெல்லாம் அவரறிவு முன்போற் சிதர்ந்து போகாமல் ஒருங்கி அவ்வுருவத்தின் கண்ணே சென்று பதிதலால் அவர் அவ்விக்கிரக வாராதனை யின் நலப்பாடுணர்ந்து அதனைக் குறிக்கொண்டு போற்றத் தலைப்பட்டார். இங்ஙனம், எத்துணை யிறப்ப இழிந்த வகுப்பினராயினும் அவர் மாட்டுந் திருவுருவ வழிபாடு காணப்படுகின்றது. இனிக் கல்வி யறிவான் மிகச் சிறந்த நன்மக்களும், இயற்கை யறிவாற்றன் மிக முதிர்ச்சியடைந்து விளங்கும் பெரியவரும் உருவத் திருமேனியிற் கொண்டு முதல்வனை வழிபடுவார்க்கன்றி ஏனையோர்க்கு அம் முதல்வன்பால் அறிவு ஒருங்கி அன்பு உளதாதல் ஒருசிறிதும் செல்லாதென்னுங் கருத்துடையர். அற்றாயிற், கிறித்தவருள் ஒரு சாராரும், மகமதிய மதத்தாரும் இறைவனை உருவத் திருமேனியிற் கொண்டு வழிபடுதல் பொருந்தாதெனக் கூறுத லென்னை யெனின்; நன்று கடாயினாய், பண்டைக் காலந் தொட்டு வருஞ் சமயிகளெல்லாந் தம்மியற்கை நல்லறிவால் திருவுருவ வழிபாடு செய்து போதரக் காண்டலானும், இக்காலத்து இடையே தோன்றிய ஒரு சில சமயிகளே தஞ்செயற்கையறிவால் தாம் வேண்டியவாறு பொருளில் மொழிந்து திருவுருவ வழிபாட்டை மறுத்த லானும் அது பற்றி ஈண்டைக்காவதோர் இழுக்கில்லை யென்றொழிக. அல்லதூஉம், உருவத் திருமேனியிற் கொண்டு வழி படுதல் பொருந்தாதெனக் கூறும் மற்றவர் தாமும் முதல்வனை யாங்ஙனம் வழிபட மாட்டுவாரென்று நுணுகி நோக்க வல்லார்க்கு அவருரை வஞ்சம் பொதிந்த வழுவுரை யாமென்ப தினிது விளங்கும். திருக்கோயில்களில் அவர் விழி பொத்திக் கொண்டு விசும்பு நோக்கி நிற்ப, அவர் உள்ளம் அவர் வழிப்படாமற் காடுங்கரையும் அலைந்து திரியும்; அல்லதவர் இறைவன் மாட்டு மெய்யன்புடையராயின் அவருள்ளந் தன்கண் அவ்விறைவர்க்கு ஓருருவத்தை எழுப்பி அவரறிவினை அதன்கட் பதித்துவிடும். கண்ணறிவிற்குப் புலனாம் வடிவத்தை வழிபடுதற்கு அவர் உடம்படுகில ராயினும், உள்ள வறிவின்கட் புலனாம் ஓருருவத்தை அவர் யாங்ஙனம் நீக்கவல்லார்? உள்ளவறிவின்கண்ணும் அவ்வுருவம் புலனாகாமல் நீக்கி வைத்து வழிபட வல்லே மென்பாராயின், அவர் செய்யும் அவ்வழிபாடு தம் பெண்டிரை நோக்கிச் செய்யும் வழிபாடாம், தம் புதல்வரை நோக்கிச் செய்யும் வழிபாடாம். தம் நண்பரை நோக்கிச் செய்யும் வழிபாடாம்; மற்றுஞ் சிலரை நோக்கிச் செய்யும் வழிபாடாம்; அவர் அங்ஙனஞ் செய்யும் வழிபாடு இறைவனை நோக்கிச் செய்ததாக மாட்டாது. உயிர்களின் உள்ளவறிவு சார்ந்த பொருளின் வண்ணமாய் வீறி விளங்குதலன்றித் தான் அவற்றின் வேறாய்ப் பிரிந்து விளங்கு மியல்பினதன்று. மனநூற்புலமை கைவந்தோரும் உள்ளத்தி னியற்கை அவ்வாறாதல் இனிது விளங்க விரித்துக் காட்டுவர் . ஐம்பொறிகளுக்குப் புலனா காத பொருள் மனத்தின்கட் புலப்படுமாறில்லை. கட்புல னாய் விளங்கும் ஓருருவத்தைப் பற்றி நின்று நினையா தொழியின், அம்மனம் வேறு பிறவுருவங்களைப் பற்றிக் கொண்டு அவர்க்குக் கடவுளுணர்வு வரவொட்டாமல் தடை செய்தல் ஒருதலை. இப்பெற்றி யெல்லாம் மேலே விரித்துக் காட்டினாம். பின்னும் விரிப்பிற் பெருகுமாதலின் இத்துணையினமைகின்றாம். ஈண்டு காட்டியவாற்றால் இறைவனை உருவத் திருமேனியிற் கொண்டு வழிபடும் முறையேதான் அறிவின் நுட்பத் திற்கும், மக்கள் மனவியற் கைக்கும் மிக இயைந்ததா மென்பது பெறப்படுதலின், அருவமாக இறைவனை வழிபடற்பாற் றென்று வாளாது வழக்கிடுவார் போலி யுரைகள் பொருட் பேறிலவா யொழியு மென்றுணர்க. இனிப் பிரமசமாசத்தாரில் ஒரு சாரார் ஆரிய வேதோப நிடத நூல்களை மேற்கோளாகக் கொண்டு, அவற்றின்கட் டிருவுருவ வழிபாடு சொல்லப்படாமையின் அந்நூல் வழிநின் றொகுழுவார்க்கு விக்கிரகாராதனை செய்தன் முறையாகா தென்று கூறுகின்றார். உலகியற் பொருள்களில் வெள்ளிடை மலைபோல் விளங்கித் தோன்றும் ஞாயிறு திங்கள் தீ முதலியவற்றின் வழிபாடு இருக்குவேதம் எங்கணும் இனிது காணக் கிடத்தலானும், இருக்குவேத விறுதிப் புருடசூத்த மந்திர வுரையின் கண்ணே இறைவனுக்கு உறுப்பின் பாகுபாடுகள் நன்றெடுத்துச் சொல்லப்பட்டமையானும், மிகப் பழைய கேனோபநிடதத்தில் முதல்வன்இயக்கவுருவந் தாங்கித் தோன்றித் தேவர்க்கு அருள் செய்த வரலாறு விரித்துக் காட்டப்படுதலானும், பின்னெழுந்த கைவல்லியம், அதர் வசிகை முதலிய வுபநிடதங்களினும் உமாசகாயம் பரமேசுவரத் திரிலோசனம் நீலகண்டம் முதலிய உருவத் திருவடையாளங்கள் கிளந்தெடுத்து மொழிந்திடப்பட்டமை யானும், புறத்தே தோன்றும் உலகத்திற்கு நெஞ்சத் தாமரை யாக விளங்குந் தில்லையம்பலத்திலே திருக்கூத்தி யற்றும் முதல்வனை வழிபடுமாறு போல அகத்தே இவ்வுடம் பினுள் உள்ளத் தாமரையிலுள்ள அருள்வெளியிலே திருக்கூத்தி யற்றும் இன்பக் கூத்தனையறிந்து வழிபடுமாறு கூறுந் தகரவித்தையினியல்பு சாந்தோக்கிய முதலான பழைய உபநிடதங்களில் வகுத்துக் கூறப்படுதலானும், யோக நூல் செய்த பதஞ்சலி பகவானும் பிரத்தியாகாரந் தாரணை முதலான யோகப் பயிற்சியினெல்லாம்இறைவனைக் குறிகளா னறிந்து வழிபட்டு உள்ளத்தை ஒருமையுறுத்துக வென்று கட்டளை தருதலானும், மக்களின் அளவை யுணர்வைப் பாகுபடுத்துக் கூறிய நியாயம் வைசேடிகம் முதலான நூலுடையார்க்கும் அஃதொப்ப முடிந்தமை யானும், வேதாந்த நூல் செய்த வாதராயண ரெனப்படும் வியாச முனிவரும் தமது பிரமமீமாஞ்சையின் முதலத்தி யாயம் இரண்டாம் பாதம் குஹாம் ப்ரவிஷ்டா வாத்மா நௌஹி தத்தர்ச நாத் என்னும் 11ஆஞ் சூத்திரத்தானே இதயக் குகையின்கண் இறைவனை வழிபடுந் தகரோபாசனை எடுத்து மொழித லானும், வேதோபப் பிருங்கணங் களான பதினெண் புராணங் களினும் சிவ ரகசியம் பாரதம் இராமாயண முதலான இதிகாசங்களினும் முதல்வனருட்குறி நிறுத்த திருக்கோயில் வழிபாடு காணப்படுதலானும், தேவரும் முனிவரும் இறைவனுடைய அருளுருவத் திருமேனியை வழிபட்டு ஆங்காங்கு நிலை நிறுத்திய திருக்கோயில்கள் இந்நாவலந்தீவு யாங்கணும்பரந்து பட்டுக் கிடத்தலானும், அத்திருக்கோயில் வழிபாடு தானும் பிற்காலத்தன்றிப் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னதான பண்டைக் காலந்தொட்டே நடைபெற்று வருதலானும், பார்ப்பனர் நாடொறும் உருச் செய்து போதருங் காயத்ரி மந்திரவுறை யுளிற் பொன்னுருவனான இறைவன் பர்க்க னென்னுந் திருப்பெயரோடு கூடி விளங்க லானும், திருஞான சம்பந்தப் பிள்ளையார் முதலான அருட் குரவரும் முதல்வன தருளுருவத் திருமேனி வழிபாட்டிற் றலை நின்றமை எல்லா ரானும் அறியப்படுதலின் அஃதான்றோர் ஒழுகலாறாய் நிலையுதலானும், பிறவாற்றானும் அங்ஙனங் கூறும் பிரம சமாசத் தாருரை பொய்படு போலியுரையாதல் தெளியப் படுதலின் அவர் ஆரவார வுரைபற்றி மயங்குவார் ஈண்டு யாருமிலர். என்று இதுகாறும் விரித்தவுரையால் இந்நாவலந் தீவின்கணுள்ள நன்மக்கள் இறைவன் தருளுருவத்திரு மேனியிற் செய்த போதரும் வழிபாடு அருளுருவ வழி பாடாவதன்றி விக்கிரகவாராதனையாதல் ஒரு சிறிதுஞ் செல்லாதா மென்பதூஉம், திருவுருவத்தின்கட் செய்யும் வழிபாடுபற்றி இறைவனது முழுமுதற் பரப்பாம்இறைமைத் தன்மைக்கு வரக்கடவதோ ரிழுக்கில்லை யென்பதூஉம், அருவமாக இறைவனை நினைக்க வல்லே மென்பாருரை மக்கள் மனவியற்கைக்குத் தினைத்துணையுமியைதல் செல்லாமையால் அது வெறுஞ் சொல்லளவாகவே முடிவ தல்லது பொருணிறைந்த தாகாதென்பதூஉம், உலகத்தின் கண் நாகரிகமில்லாத மக்களுள்ளும் உருவ வழிபாடே காணக் கிடத்தலின் அவ்வியற்கைக்கு வேறாக மொழிதல் முரண் பாடாமென்பதூஉம், வடமொழி நூல்களினும் அருளுருவ வழிபாடே கூறப்படுதலின் அதனொடு திறம்பி யுரைப் பாருரை வழக்குரையாமென்ப தூஉங் காட்டப்பட்டன வென்க. அடிக்குறிப்புகள் 1. Chips from a German workshop, Vol. 1. 2. Six systems of Indian Philosophy. 3. குறுந்தொகை. 4. `அப்பாண்டிய வரசனாலடிபட்டு என்று பொருளுரைக்க. 5. Miracles. 6. Man is a social being. 7. Divinity; Precocity 8. Origin and Growth of Religion, Page 312. 9. Sanscrit Literature, Page, 395. 10. Chemist 8. சிவலிங்க உண்மை விந்துவும் நாதமும் மேவும்இலிங்கமாம் விந்துவதே பீடம் நாதம் இலிங்கமாம் அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய் வந்த கருவைந்துஞ் செய்யும் அவைஐந்தே. - திருமூலர் திருமந்திரம் சிவலிங்கம் எனப்படுந் திருவுருவ அடையாளத்தின்கண் வைத்து ஆன்றோர் அறிவுறுத்திய அரும்பெரு மெய்ப் பொருள்களை யாம்ஆராயப்புகுதலின், இவ் விரிவுரை `சிவலிங்க உண்மை எனப் பெயர் பெறுவதாயிற்று. `சிவம் என்பது முழுமுதற் கடவுளை யுணர்த்துஞ் சிறப்புப் பெயராகும்; `லிங்கம் என்பது அக்கடவுளின் உண்மைத் தன்மையை அறிவிக்குங் குறி அல்லது அடையாளத்தைக் காட்டுவதாகும். ஊரும் பேரும்இல்லாக் கடவுளுக்குச் `சிவம் என்பதனைச் சிறப்புப் பெயராகக் கூறுதல் என்னை யெனின்; இறைவன் தன் நிலையிலே ஊரும் பேரும் இல்லானாயினும், எல்லா உலகங்களிலும் எல்லாப் பொருள் களிலும், எல்லா உயிர்களிலும் ஊடுருவி நிற்பானான அவன்றன் பெரும் பரப்பினை அறிந்து கொள்ளுதற்கேற்ற பேரறிவு வாயாமல், ஒவ்வோர் இடத்தின் எல்லையிலும் ஒவ்வொரு காலத்தின் எல்லையிலும் இருக்குஞ் சிறுசிறு பருப் பொருள்களையும் அப்பருப்பொருள் களினூடு புலனாகும் உயிர்ப் பொருள் களையுமே அறிதற் கேற்ற சிற்றறிவு வாய்ந்த மக்களாகிய நாம் அம் முதல்வன் இயல்பினை எளிதின் உணர்ந்து, அதனை நம் நினைவில் இடையறாது பதித்து, அவ்வாற்றால் நமதுயிரைத் தூய்தாக்குதற்குக் கருவியாகவே அவன்றன் உண்மைத் தன்மையினை நன்குணர்த்துஞ் `சிவம் என்னுஞ் சொல்லை அவற்குச் சிறந்த பெயராக இட்டு அதனைப் பண்டைக் காலந்தொட்டு ஆன்றோர் வழங்கி வரலானார்கள். இவ் வியல்பினை உணர்த்துதற்கே மாணிக்க வாசகப் பெருமானுந், திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை உருநா மறியஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான் ஒருநாமம் ஓர்உருவம் ஒன்றும் இலாற் காயிரந் திருநாமம் பாடிநாந் தெள்ளேணங் கொட்டாமோ என்று அருளிச் செய்தனர். ஆகவே, இறைவனுக்கு ஒரு பெயரிட்டு வழங்குவது மக்களாகிய நாம் அவனை நினைந்து அவன் வயமாதற் பொருட்டே யல்லாமல்,அவன் அப்பெயருடையனாய் இருப்பது பற்றி யன்றென உணர்தல் வேண்டும். அற்றேல், எல்லாச் சமயத்தவர்க்கும் பொதுவான `கடவுள், `இறைவன், `முதல்வன் முதலான சொற்க ளிருக்க அவற்றால் அவனை வழங்காமல், அவன் சைவ சமயம் ஒன்றற்கே யுரியான்போல் வைத்து அவனைச் `சிவன் என்னும் பெயரால் அழைத்தல் என்னை யெனிற்; `கடவுள் என்னுஞ் சொல் `எப்பொருளையுங் கடந்தோன் என அவன்றன் எட்டா நிலைமையினையும், `இறைவன் எனுஞ் சொல் `எப்பொருளிலுந் தங்குபவன் என அவன்றன் எங்குமுள்ள நிலைமையினையும், `முதல்வன் எனுஞ் சொல் அவன் எதற்கும் முற்பட்டவனாய் நிற்கும் அவன்றன் முதன்மை யினையும் அறிவித்தல் போலச், `சிவன் எனுஞ் சொல்லும் அவன் ஏனை எப்பொருளிலும் இல்லாத பேரின்பத்திற்கு உறையுளாய் உள்ளவனென்பதனை அறிவிப்பதொன்றாம். சிற்றுயிர்களாகிய நாம் அவன்றன் எட்டா நிலைமை யினையும் எங்குமுள்ள நிலைமையினையும் எல்லாவற்றுக்கும் முற்பட்ட முதன்மையினையும் உணர்தலாற் பெறும் பயன் சிறிது மின்றாம். நாம் தொன்று தொட்டு அறியாமையிற் கிடந்து துன்புற்று வருதலின், அறியாமையைக் களைதற்கு அறிவும்,அவ் அறியாமையின் வாயிலாக வருந்துன்பத்தைக் களைதற்கு இன்பமுமே இன்றியமையாது வேண்டி நிற்கின்றோம். நாம் பிறவி யெடுத்ததன் நோக்கமெல்லாம் பேரின்பத்தைப் பெறுதற் பொருட்டாகவேயாம். அப் பேரின்பத்தை முன்னறிவிக்குங் கருவியாகவே இவ்வுலக வாழ்க்கையின் இடையிடையே சிற்றின்ப நுகர்ச்சியானது நடைபெறா நிற்கின்றது. குடங்குடமாகக் கொணர்ந்து நிறைத்திருக்குந் தீம்பாலினையுங் குப்பி குப்பியாக நிரப்பி வைத்திருக்குந் தேனினையுங், குடலை குடலையாகத் தொகுத்துச் சேர்த்திருக்குந் தேமாங்கனியினையுந் தான் வேண்டியவாறு நுகருதற்கேற்ற பரிசாய்த் தானிருக்கும் இல்லத்திலேயே ஒருவன் எளிதாகப் பெற்றிருந்தும், அவற்றின் சுவையினையும் உண்டால் அவை தனது கொடும் பசிதீர்த்துத் தன் உடம் பினைக் கொழுமையாக வளரச் செய்தலையும் உணராத மடவோன் ஒருவன் அவை தனக்குத் தீதுபயப்பதென அஞ்சி அவற்றை உட்கொள்ளானாய்ப் பசித்து வருந்தி யிருப்ப, அவனைக் கண்டு இரங்கிய அருளுடையான் ஓர் அறிஞன் அவன்பாற் போந்து அவற்றின் சுவையினையும் பயனையும் அவனுக்கு எடுத்துக்காட்டி அறிவு தெருட்டி, அவை ஒவ்வொன்றிலுஞ் சிறிது சிறிதெடுத்து அவன் வாயினுட் பெய்து, அவ்வாற்றால் அவன் அவற்றின் இனிமை கண்டு அவை தம்மையுண்டுகளை தீருமாறு செய்தாற் போல, எல்லாம்வல்ல இறைவனுந் தன்பாலுள்ள பேரின்பக் கொழுந்தேறல் வெள்ளத்திற் சிற்றுயிர்களாகிய யாம் படிந்து கிடந்தும் எம்மைப் பொதிந்த ஆணவ வல்லிருளால் அறிவு மாழ்கி அவ் வின்பத்தினியல்பினை உணராது துன்புற்றிருக்க, அது கண்டு எமக்கு இரங்கி இவ்வுடம்பையும் இவ்வுடம்பின்கட் பல வியத்தகு கருவிகளையும் அமைத்து அவ்வாற்றால் யாம் அவ் வின்பத்தின்றன்மையினைச் சிறிது சிறிதே தம் மாட்டுத் தோற்றுவிக்கும் இவ்வுலகத்துப் பல் பண்டங்களையும் நுகர்ந்து நுகர்ந்து, `இப்பருப் பொருள்களினூடே புலனாகி எம் அறிவைத் தன் வயப்படுத்திச் சிறிது நேரத்தில் மறைந்துவிடும் இச் சிற்றின்பமே இத்துணை விழுமிதாயின், எல்லையற்ற நுண்ணறிவுப் பொருளாய் விளங்கும் ஆண்டவன்பால் என்றும் அழியாதாய் விரிந்து விளங்கா நின்ற பேரின்பச் சுவை எத்துணை விழுமிதாம்! என உணர்ந்து அதனையே யாம் நாடுமாறு இவ்வுலகத்துஇன்ப நுகர்ச்சியை அதற்கொரு சிறந்த கருவியாய் அமைத்திருக்கின்றன னென்று உணர்ந்து கொள்ளல் வேண்டும், இப்பேரின்பப் பெருந்தேன் வெள்ளமானது எங்கும் பெருக்கெடுத்துக் கிடந்தும் அதனைச் சிற்றுயிர்கள் தமதறியாமையால் உணராமை கண்டன்றோ, காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டா காரசிவ போகம் எனும்பே ரின்பவெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏகவெளியாய்க் கிடக்குதையோ! இன்புற்றிட நாம்இனியெடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்கே சேர வாருஞ் செகத்தீரே! என்று தாயுமான அடிகளும் நம்மனோரை யெல்லாம் பரிந்தழைப்பாராயினர்! ஆகவே, என்றும்அழியாப் பேரின்பப் பேற்றை எய்துதலில் மக்கட் பிறப்பினரெல்லாரும் இயற்கை யாகவே பெருவிழைவு கொண்டவரென்பது, அவ்வின்பத்தை முன்னறிவித்தற் கருவியாய்த் தோன்றுஞ் சிற்றின்ப நுகர்ச்சியில் அவர்க்கிருக்கும் ஆரா வேட்கையே சான்றாமாகலானும், சிற்றின்ப நுகர்ச்சிக்கு ஏதுவான உலகத்துப் பொருள்களெல்லாம் நிலையுதலின்றி அழிய அச்சிற்றின்பமும் அவற்றோடு உடன் அழிதலின் அழிவிலாப் பேரின்பமானது இவ்வுலகியற் பொருள்களிற் பெறப்படுவ தன்றாய்த் தன்போல் அழிவிலா முதல்வனிடத்து மட்டுமே பெற்று நுகரற்பாலதா மாகலானும்அவ் வின்பத்தையும் அவ்வின்பத்திற்குக் கொள் கலனான முதல்வனையும் இடை யறாது நினைவிற் கொண்டு வருதலே அப்பேரின்பப் பேற்றினுக்குச் சிறந்த வழியாமாக லானும்,அந்நினைவினை அங்ஙனம் எளிதிற் றோற்று விப்பதற்கு அவ் வின்பத்தை உணர்த்துஞ் சொல்லொன்று இன்றியமை யாது வேண்டப்படு மாகலானும் பேரின்ப உறையுளாய்த் திகழாநின்ற முதல்வனுக்குச் `சிவன் என்பதே உறுபெருஞ் சிறப்புப் பெயராக ஆன்றோரால் எடுக்கப்படுவதாயிற்று. `சிவன் எனுஞ் சொல் `இன்பத்தை யுடையவன் எனப் பொருடந்து முழுமுதற் கடவுளின் உண்மைத் தன்மையினை யறிவித்து ஆருயிர்களுக்குப் பெரிது பயன்படுவதொன்றாய் இருத்தலின், அவ் வுயிர்களுக்குப் பயன்படாத எட்டா நிலைமையினை உணர்த்துங் `கடவுள் எனுஞ் சொல்லினுஞ் `சிவன் எனுஞ் சொல்லே சாலச் சிறந்த பெருமாட்சி யுடைத்தா மென்பது. இதனைச் `சைவ சமய மாட்சி என்னும் விரிவுரையில் விரித்து விளக்கியிருக்கின்றே மாகலின், இவ்வளவில் இச் `சிவம் எனுஞ் சொற்சிறப்புக் கூறுதலை நிறுத்தி மேற் செல்வாம். இனி, இங்ஙனம் பேரின்ப நிலையனாய் நிற்கும் இறைவனைச் சிற்றறிவுஞ் சிறுதொழிலும் உடையராகிய மக்கள் தாமாகவே அறியப் புகுந்தால், அவர் அவனைச் சிறிதும்அறியமாட்டுவாரல்லர். அங்ஙனம் அறியப்படாத ஐயனை அறியாதுவிடின் அவர் தாமே தம் அறியாமை யினையுந் துன்பத்தினையும் நீக்கிக் கொண்டு பேரின்பத்தைப் பெற மாட்டுவாரும் அல்லர். ஈன்றணிய குழவி பசியெடுத்த போதெல்லாம் வீறிட்டழுது துன்புறுமேயல்லாது, தன் அன்னையின் முலையைக் கௌவிப் பால் பருகித் தன் கொடும்பசி தீர்த்துக் கொள்ளுதலை அறியாது; மற்று அதன் மாட்டா நிலைமையினை யுணர்ந்த அன்னையே அதன் பசித் துன்பங் கண்டு பொறாளாய் நெஞ்சங் குழைந்து அதனை யெடுத்துத் தன்மார்போடணைத்துத் தன் முலைக் காம்பையும் அதன் வாயினுட் புகுத்தி, அவ்வாற்றால் அம் மதலை ஆண்டு நிறைந்த பாலைப் பருகிப் பசி தீர்ந்து களிக்கச் செய்கின்றாள்.இந் நிகழ்ச்சியைப் போலவே, அறியாமையிற் கிடந்து துன்புறும் இளங்குழவிகளாகிய நாம் எல்லாம்வல்ல இறைவனாகிய அன்னையிடத்துத் தேங்கி நிற்கும் பேரின்ப அமிழ்தத்தை நுகரும் வகையறியாமல் துயருறல் கண்டு எம் ஐயனே எமக்கு மிக இரங்கி எல்லையற்ற தனது அருளுரு வினை யாம் உணர்தற்கு எளிதாம்படி ஓர் எல்லையுள் அடக்கிக் காட்டி எமக்கு அப்பேரின்ப அமிழ்தை ஊட்டும் அருள் நிலையனாய் நிற்கின்றான்.இவ் வுண்மை யினையே மாணிக்கவாசகப் பெருமான், பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை யுருக்கி யுள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. என்று அருளிச் செய்தனர். இவ்வாறு தாயினுஞ் சிறந்த எளிமையனாய் இறைவன் எம்மனோர்ககு அணித்தாய் நின்று அருள் செய்யும் இயல்பினை நம் சைவ சமய ஆசிரியன்மார் தெளியக்கண் டுரைத்தாற்போல, வேறெந்தச் சமய ஆசிரியரும் உரைப்பக் காண்கிலம். இத்தகைய அருட்டன்மை யுடையனல்லனாயிற் கடவுளை நம்மனோர் வாழ்த்துதலும் வணங்குதலும் பயமில வாகும். இறைவன் தன்னியற்கையிலேயே அருட் டன்மை வாய்ந்தவனாய், அவ்வருட்டன்மையால் உந்தப் பட்டே எல்லார்க்கும் அண்ணியனாய்த் தனது பேரின்பத்தை வழங்கு தற்கு முன்னிற்றலினாலேதான், தமது உள்ளத்தே அவ் அருள் முனைப் பினால் உணர்வு எழுப்பப்பட்டு எல்லாரும் இறைவனைப் பண்டுதொட்டே வணங்குதலும் வாழ்த்து தலுஞ் செய்து போதருகின்றார், கடவுளை எட்டா நிலைமைக்கண் வைத்துரைத்தலே சிறந்ததெனக் கொள்ளுங் கொள்கையுடைய ஏனைச் சமயத்தவர்கள், அவன் நமக்கு அணுக்கனாய் வந்து அருள் செய்யும் அருட்பெருந் தன்மையன் என்பதைச் சிறிதும் அறியாதவர்களா யிருக்கின்றா ரென்று உணர்மின்கள்! இறைவன் சிற்றுயிர்களுக்குச் சேயனாயினும் அவர்கட்குத் தனது பேரின்பத்தை வழங்க வேண்டுமென்னும் பேரிரக்கமும் ஒருங்குடையனாகலின் அவன் அவர்கட்கு அண்ணியனுமாய்த்தான் வேண்டிய வறெல்லாம் இயங்கவல்ல னென்பதை உணராத சமயத்தவர் இறைவன்றன் உண்மைத் தன்மையையும் அவன்றன் அளவிலாற்றலையும் உணர்ந்தா ராவரோ சொன்மின்கள்! அற்றாயினும், எல்லாம்வல்ல கடவுள் சிற்றறிவின ராகிய நம்மனோரறிவுக்குப் புலனாகா நிலையிலேயே நிற்கக் காண்டுமன்றி, நம்மனோரறிவுக்குங் காட்சிக்கும் எளிதிற் புலனாவதொரு நிலையில் நிற்றலைக் காண்கிலமாலெனிற், கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அழுவார் போலவுங் கொழுஞ்சுவை நீர்ததும்பு குளக்கரையி லிருந்தும் விடாய்த்து வருந்துங் குருடன் போலவும், நம்மனோர் தமக்கு அண்மையிலே கடவுளைக் கட்புலனாற் காணும் பெரும் பேறுடையராயிருந்தும் அவனைக் காணா தார்போல் ஏக்கமடைந்திருக்கின்றனர்! ஈன்றணிய குழவி வளர்ந்து தன்னிலையைத் தான் உணரும் வரையில் அதனைப் பெற்ற தாய் தந்தையர் அதன் பக்கத்தே யிருந்தே அதற்கு அவ் வுணர்வினை எழச் செய்தாலன்றி, அஃது அவ்வுணர்வு கைகூடப் பெறாதவாறு போல, அறியாமை யிலழுந்தி அறிவின்றிக் கிடக்கும் நம்மனோர்க்கும் நம் ஆண்டவன் அருகே யிருந்து அறிவு துலக்கினாலன்றி நாமும் அறிவு கைகூடப் பெறுதல் ஒருவாற்றானும் இயலாது. குழந்தை வளர்ந்துஅறிவு பெற்ற பின் அப்பிள்ளைக்காயினுந் தாய் தந்தை யருதவி வேண்டப்படுவ தின்றாய் ஒழிகின்றது; தாய் தந்தையருஞ் சில காலத்தில் இல்லையாய் ஒழிகின்றனர்; ஆனால் அறியாமையிற் கிடக்கும் உயிர்களுக்கோ அவை அவ்வாறு அறிவின்றிக் கிடக்கும் அக்காலத்தும், அவை அறிவு பெறும் பிற்காலத்தும், அறிவு பெற்ற மற்றைக் காலத்தும் அவை தம்மை உரிமைப் பொழுதும் பிரியா துடனிருந்து அறிவு தெருட்டி இன்பத்தை யருத்துபவனாய் இறைவன் எஞ்ஞான்றும் அவ்வுயிர்கட்கு அண்ணியனாகவே விளங்கி நிற்கின்றான். அங்ஙனம் நமக்கு எளியனாய் அண்மையில் நிற்கும் ஆண்டவனை ஆராய்ந்து அறியாக் குறை நம்மனோர் பால் உளதேயன்றி, நமக்கு அரியனாய் நிற்குங் குறைபாடு அவன்பாற் சிறிதுமில்லை. அற்றேல், அத்துணை யெளியனாய நம்மனோர்க்கு அருகில் நிற்கும் ஆண்டவனை நாம்அறிந்து கொள்ளுமாறு யாங்ஙன மெனிற் காட்டுதும்; எல்லாம் வல்ல இறை வனியல்பு களை ஆராய்ந்து பார்த்து, அவ்வியல்புகள் அவ்வளவும் நமக்குப் புலனாகும் பொருள்களில் எதன்கண் எவ்விடத்து அமைந்து காணப்படுகின்றன என்பதைத் தெளிய அறிவோ மாயின், அதன்கண் அவ்விடத்து இறைவன் நமக்கு நேர் நிற்றலையும் நாம் தெளிந்து கொள்ளு தல் இயலும். காற்றைக் கண்ணாற் பாராதவன் அஃது எம் முகமாய் வீசுகின்றதென அதனியல்பை ஆராய்ந்து அஃது இயங்கும் இடத்தை யறிதல் காண்டுமன்றே? நறு விய செங் கழுநீர் மலரைக் காணாதவன் அதன் மணம் வந்து கமழும் வழியை யாராய்ந்து கொண்டு சென்று அதனைக் கண்டு மகிழ்தலும்அறிதுமன்றே? இங்ஙனமே கடவுளி யல்புகள் எதன்கண் எவ்விடத்தே புலனாகின்றன வென்று ஆராய்ந் தறிந்தால் அவ்வியல்புகள் வாய்ந்த முதல் வனை நேரே காண்டலும் எளிதில் கைகூடு மென்று தேர்தல் வேண்டும். இனிக், கடவுளோ அளக்கலாகாப் பேரறிவொளி வடிவாய்த் திகழ்பவர்; அவரது அவ்வறிவொளிக்கு முன்னே அறியாமை யென்னும்இருள் இருந்த இடமுந் தெரியாமல் மறைந்துவிடும்.அவர் மிகவுந் தூய்மை யுடையவர்; அவர்பால் உள்ள அத்தூய்மையானது எவ்வெவ்விடங்களிற் புலப்பட்டுத் தோன்றுமோ அவ்வவ் விடங்களிலுள்ள பொருள்களின் அழுக்குங் கறையும் எவ்வளவு மிகுந்திருப்பினும் அவை தம்மையெல்லாம் அஃது எரித்துத் தூய்மை செய்யுமே யல்லாமல், தான் அவ்வழுக்குகளாற் பற்றப்பட்டுத் தன் தூய்மையினை ஒரு சிறிதும் இழவாது. கடவுள் எப்பொருளை யுந் தாமே படைப்பவர், படைத்தவற்றைத் தாமே காப்பவர். காக்கப் பட்டவை வலிதேய்ந்து பழுதுபட்ட வழிஅவற்றைத் தாமாகவே அழிப்பவர்.அழித்தற் றொழிலைச் செய்யுங்காற் கடவுள் கொடியவர் போற் றோன்றினும், அவரே எப் பொருளுயும் படைத்துக் காத்தலால்,அருள் என்னுங் குளிர்ந்த இனிய தன்மையை அவர் என்றுந் தம் அகத்தே யுடையரென்று முணர்தல் வேண்டும். கடவுள் எல்லா உலகங்களிலும் எல்லா உயிர்களிலும் நிறைந்து நிற்குந் தமது பொதுவிலக்கணத்திற் கட்புலனாகா அருவினராயும், அன்பினால் நெக்குநெக்கு உருகுந் தம் அடியவர்க்கு அவர்தம் ஆரா அன்பிற்கு ஆறுதல் பிறப்பித்தற் பொருட்டு அவரை யொப்பதொரு மக்கள் வடிவிற்றோன்றி அருள்புரியும் நீரராகலிற் கட்புலனாகும் உருவினராயும், அத்துணை அன்பு வாயாத நம் போன்ற எனையுயிர்கள் உய்தற் பொருட்டுச் சிறிதும்புலப்படாத அருவுக்குந் தெளியப் புலப்பட்ட உருவுக்கும் இடைப் பட்ட பிழம்பு வடிவில் துலங்குபவராகலின் அருவுருவினராயும் இருப்பர். இனி, இவ்வுலகத்திற் காணப்படும் உயிர்ப் பொருள் ளெல்லாம் ஆண் பெண் என்னும் இரு பெரும் பகுப்பில் அடங்கக் காண்டலின், இவ்வுயிர்களின் தோற்றத்திற்கு முதலாய் நிற்குங்கடவுளும் அப்பனும் அம்மையுமாம் இருதிறமும் ஒருதிறத் தடங்கக் கொண்டு நிற்பர். இனி, உயிரில்லாத ஏனைப் பருப்பொருள் நுண்பொருள்க ளெல்லாஞ் சூடுங் குளிர்ச்சியும் ஆகிய இருவகை யாற்றல் களிலுஞ், சிவப்பும் நீலமும் ஆகிய இருவகை நிறங்களிலும் அடங்கக் காண்டலின் இவை தமக்கு முதல்வரான கடவுளும் வெப்ப தட்பங்களுஞ் செம்மை நீலங்களும் உடையராவர். இனி, இவ்வியல்புகளையுடைய முழுமுதற் கடவுள் எதன்கண் எவ்விடத்தே நமக்கு அணுக்கராய் விளங்கி நிற்கின்றாரென்பதை நாம்அறிந்து கொள்ளல் வேண்டு மாயின், நம்மால் அறியப்படும் உலகத்துப் பொருள்களுள் எதன்கண் எவ்விடத்தே அவர்தம் இயல்புகள் அத் துணையும் புலனாகின்றனவென்பதை நாம் ஆராய்ந்தறிதல் வேண்டும். நம்முடைய அறிவினால் அறியப்படும் பொருள் ளெல்லாம் நிலன், நீர், நெருப்பு, காற்று, விசும்பு என்னும் ஐந்து பெரும் பகுப்பில் அடங்கி நிற்கின்றன. இவற்றுள் அடங்காத உயிர்ப் பொருள்களையும், அவற்றின் தன்மை களையுங் கூட இவ்வைம்பெரும் பொருள்களின் வாயிலாகவும் இவ்வைம் பெரும் பொருட் கலப்பாற் றோன்றும் பல வேறுடம்புகளின் வாயிலாகவுமே அறியப் பெறுகின்றோம். ஆகையால், இவ்வைம்பெரும் பொருள்களில் எதன் கண்ணே கடவுளுக் குரிய தன்மைகள் காணப் படுகின்றனவென்று ஆராய்ந்து பார்ப்போமாக. முதலில் நிலத்தின் றன்மை நீரின் றன்மைகளை ஆராய்வம். கடவுள் ஒளி வடிவினவாய்த் திகழா நிற்க, நிலனும் நீரும் ஒளிவடிவினவாய்த் திகழக்காணேம். கடவுள் என்றுந் தூயராயிருக்க, நிலனும் நீருந் தூய்மை கெட்டு அழுக்குற்று நிற்கவுங் காண்கின்றேம். கடவுள் அருவும் உருவும் அருவுருவும் என்னும் மூன்று தன்மையிலும் நிற்பவ ராக, நிலனும் நீரும் பற்றுதற்கு எளிய உருவாகவே நிற்கின்றன. கடவுள் ஆண்டன்மை பெண்டன்மைகள் ஒருங்குடையரா யிருக்க, நிலம் அத்தன்மைகள் இலவாயும் நீர் பெண்டன்மை யொன்றே யுளதாயும் நிற்பக் காண்டும். கடவுள் வெப்ப தட்பங்களுஞ் செம்மை நீலங்களும் உடையராயிருக்க, நிலந்தன்னியற்கையாகவே அவை தம்மை யுடையதன்றாயும் நீர் தட்பமும் நீலமுமேயுடையதாயுங் காணப்படுகின்றன. இனி, வானுங் காற்றுமென்னும் இரண்டிலாதல் இறைவனுக் குரிய இவ்வியல்புகள் அமைந்து கிடக்கின்றனவோ வென்று உற்று நோக்குவேமாயின், அவையும் ஒளியும் உருவும் வெப்ப தட்பங்களும் பிறவும் இல்லாதனவாயிருக்கின்றன. காற்றின் கட் புலனாகும் வெப்ப தட்பங்கள் தீ, நீர் என்பவற்றின் சேர்க்கை யால் உண்டாவனவே யன்றி,அவை தமக்கு இயற்கையிலேயே உரியன அல்ல. ஐம்பெரும் பொருள்களுள் நாற்பெரும் பொருள்களின் தன்மை இவ்வாறொழியவே, எஞ்சி நின்ற தீயின்றன்மைகளே இனி ஆராயற்பாலனவாகும். எல்லாம் வல்ல இறைவன் அருள் ஒளிவடிவினனாய்த் திகழ்தல்போலவே தீயும் பொருளொளி வடிவினதாய்த் திகழா நிற்கின்றது. இறைவன்றன் அருளொளிக்கு முன் ஆணவ வல்லிருள் இருந்த இடமுந் தெரியாமல் மறைதல் போலவே, தீயொளிக்கு முன்னும் உலகிருள் சுவடு தெரியாமல் மறைந்து போகின்றது. இறைவனிடத்துள்ள தூய தன்மை யானது எத்தகைய அழுக்கையுந் தூய்தாக்கித் தானும் எஞ்ஞான்றுந் தூய இயல்பிற்றாய் விளங்குதல் போலவே, தீயும் எத்துணைப் பெரிய அழுக்கின் குவியலையும் எரித்துத் தூய சாம்பராக்கித் தானும் எந்நாளும் தூயதாகவே விளங்கா நிற்கின்றது. இறைவன் படைத்தல் - காத்தல் - அழித்தல் என்னும் முத்தொழில் களைச் செய்தல் போலவே, கதிரவ னாகிய தீயின் வெம்மையும் எல்லா உயிர்ப் பொருள்களையுந் தோற்று வித்து அவற்றைச் சிலகாலம் வரையிற் காத்து அவற்றின் உடம்புகள் வலி தேய்ந்து பழுதுபட்டவழி அவை தம்மை அழித்து விடுகின்றது .மரஞ்செடி கொடிகளும், மற்றை இயங்கும் உயிர்களும் அவை தம்முட் சிறந்த மக்களுமாகிய எல்லா உயிரின் உடம்புகளிலும் ஓரளவான சூடு இல்லை யாயின் அவை தோன்றவே மாட்டா; இதனா லன்றோ காக்கை கோழி முதலான பறவை இனங்கள் தாம் இட்ட முட்டை களிலிருந்து குஞ்சுகளைத் தோற்றுவிக்கும் பொருட்டு அவற்றின் மேல் அடைகிடந்து அவற்றிற்குச் சூடேற்று கின்றன, அங்ஙனமே, தாயின் கருப்பையில் ஓடுஞ் சூடான செந்நீரால் உருவாக்கப்பட்டு மக்களாகிய நாமும் இந்நில வுலகத்திற் பிறந்தனம்; பிறந்த பின்னும் நமதுடம்பி லுள்ள சூடு தன்னிலையினின்று ஏறாமலும் இறங்காமலும் இருக்கும் வரையில் நாம் அதனாற் பாதுகாக்கப்பட்டு இந்நிலத்தின் மேல் ஓடியாடி யுலவித் திரிகின்றோம்; மற்று, அச்சூடு தன்னிலையில் மிகுந்து செந்நீரைச் சுவறச் செய் தாலும், அல்லது அது குறைந்து அதனை உறையச் செய் தாலும் நமது உயிர் உடம்பில் நிலைக்க மாட்டாதாய் உடனே அதனைப் பிரிந்து போய்விடுகின்றதன்றோ? ஆகவே, தீயின் வெம்மையே எல்லா உயிரின் உடம்பு களுந் தோன்றுதற்குந் தோன்றிச் சில காலம் நிலைபெறுதற்கும் அதன்பின் அழிந்துபடுதற்கும் ஏதுவாய் நிற்கின்றதென்பது கருத்திற் பதிக்கற்பாற்று, இறைவன் அழிக்கு நிலையிற் கொடியன்போற் காணப்படினும், படைத்துக் காக்கும் நிலையில் மிகுந்த அருளுடையனாதல் தெளியப்படுமாறு போலவே, தீயுந் தன் ஆற்றலை மிகுத்துக் காட்டி எல்லா வற்றையும் படுசாம்பராய் எரிக்கும் நிலையிற் கொடியது போற் றோன்றினும், எல்லா உயிருடம்புகளையுந் தோற்று வித்தற் கண்ணுந் தோற்றிய அவைகள் குளிரால் விறைக்கும் வழி அவ்விறைப்பினைத் தனது கதகதப்பால் நீக்கி அவற் றைக் காத்தற் கண்ணும் அது மிக இனிய தொன்றாகவே எல்லா உயிர்களானுங் கருதப்படா நிற்கின்றது. இறைவன் எங்கும் நிறைந்து நிற்கும்நிலையிற் கட்புலனாகா அருவி னனா யிருத்தல் போலவே, தீயும் எல்லாப் பொருள்களிலும் மறைந்து நிறைந்துநிற்கும் நிலையிற் கட்புலனாகா அருவ இயல்பிற்றாய் நிற்கின்றது, இறைவன் தன்னைப் பேரன்பால் நினைந்து குழைந்துருகும் அடியார்க்கு அவர்தங் கண் ணெதிரே எழில்கனிந்த பழுதறும் உருவிற்றோன்றி யருள் செய்தல் போலவே, தீயுந் தன்னை இன்றியமையாது வேண்டிநிற்கும் மக்களின் கண்ணெதிரே சிவந்த ஒளி வடிவினதாய்த் தோன்றா நிற்கின்றது. இறைவன் அருவுக்கும் உருவுக்கும்இடைப்பட்ட பிழம்பு வடிவம் உடையராதல் போலவே, தீயுங் கட்புலனாகா அருவுக்குங் கட்புலனாகும் மக்கள் உருவுக்கும் இடைப்பட்ட தாகிய பிழம்புவடிவம் உடையதா இருக்கின்றது இனி எல்லாம் வல்ல முதல்வன் அப்பனும் அம்மையுமாயும், ஆண்டன்மைக் கேற்ற வன் மையும் பெண்டன்மைக் கேற்ற மென்மையுஞ் சிவப்பு நீலங் களும் உடையனாயுமிருத்தல் போலவே, தீயுந் தன்கட் சூடுங் குளிச்சியுமாம் ஆண்டன்மை பெண்டன்மைகளுஞ் சிவப்பு நீல நிறங்கலும் உடையதாய்த் துலங்காநிற்கின்றது. தீயின்கண் நீரும் அடங்கியிருக்கும் உண்மை, கொழுந்து விட்டெரியுந் தழல் மேல் ஒரு கிண்ணத்தைக் கவிழ்த்துப் பிடித்தால் அதன் விளிம்புகளி லிருந்து நீர்த்துளிகள் சொட்டுமாற்றால் அறியப்படும். எனவே, நம்மறிவால் அறியப்படும் மண், புனல், அனல், வளி, வெளி என்னும் ஐம்பெரும் பொருள்களில் அனற் பிழம்பு ஒன்றுமட்டுமே இறைவன்கட் காணப்படும் எல்லா இயல்புகளுந் தன்கண் அமையப் பெற்றதாய் விளங்கும் உண்மை இப்போது இனிது விளங்குதலால், இறைவன் எல்லாப் பொருள்களிலும் எங்கும் நிறைந்து நிற்பினுந் தன்னியல்போடு ஒருங்கொத்த தீப்பிழம்பின் கண்ணே இயற்கையாகவே முனைத்துத் தோன்றுகின்றா னென்பது உள்ளங்கை நெல்லிக் கனி போல் தெற்றெனப் புலப்படும். ஆதலால், அனற்பிழம்பு ஒன்றுமேஇறைவனது விளங்கிய இருப்புக்கு இசைந்த தூய உடம்பாகு மென்பதுங் கடைப் பிடித்துணரற்பாற்று. இது பற்றியே, திருஞான சம்பந்தப் பெருமான், மங்கையர்க்கரசி வளவர்கோன்பாவை வரிவளைக்கை மடமானி பங்கயச் செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாடோறும்பரவப் பொங்கு அழல்உருவன் பூதநாயகனால் வேதமும் பொருள்களும்அருளி அங்கயற்கண்ணி தன்னொடும்அமர்ந்த ஆலவா யாவதுமிதுவே. என்றும், திருநாவுக்கரசு நாயனார். எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசனது உருவ ருக்கம தாவது உணர்கிலார் என்றுஞ் சுந்தரமூர்த்தி நாயனார் காற்றுத் தீப்புன லாகி நின்றானைக் கடவுளைக் கொடுமால் விடையானை நீற்றுத் தீயுருவாய் நிமிர்ந்தானை என்றும், மாணிக்கவாசகப் பெருமான், சுடர்கின்ற கோலந், தீயேயென மன்னும் என்றும் அருளிச் செய்வாராயினர். இனிச் சிற்றறிவுஞ் சிறு தொழிலுமுடைய நம்மனோர் மனமொழிகளால் எண்ணவுஞ் சொல்லவும் முடியாத முதல்வன், நமது சிறுமையினையுந் தனது பெருமையினையும் உணர்ந்து நம்பாற் பேரிரக்கம்உடையனாய் நாம் தன்னைக் காணவுங் கருதவும் வாழ்த்தவும் வணங்கவும் எளிதாம்படி, இங்ஙனந் தன்னியல்புகளோடு பெரும்பாலும் ஒத்த தீப்பிழம் பின்கண்ணே விளங்கித் தோன்றி நமக்கு அணுக்கனாய் நிற்கின்றனனாகலின் இத்தீப்பிழம்பே எல்லாம் வல்ல சிவனை அறிந்து வழிபடுதற்குச் சிறந்த `இலிங்கம் அல்லது `குறி அல்லது `அடையாளம் ஆமென்றுணர்தல் வேண்டும். இறைவனைக் காட்டும் மெய்க்குறியாய் இருத்தல் பற்றியே தீப்பிழம்பு `சிவ லிங்கம் எனப்படுவதாயிற்று. இதனாலன் றோ உலக மெங்கணுமுள்ள எல்லாவகையான மக்கட் கூட்டத் தாரும் பண்டுதொட்டே இத்தீப்பிழம்பினையும், இத்தீப் பிழம்பினை யொப்ப நீண்டுகுவிந்த கல்வடிவினையும் இறைவன்றன் மெய்யடையாளங்களாக ஆங்காங்கு நிறுத்தி வழிபட்டு வருகின்றாரென்க. அற்றன்று, நீண்டு குவிந்த கல்வடிவே சிவலிங்கமென வழங்கப்படுகின்ற தன்றி அனற்பிழம்பு அவ்வாறு வழங்கப் படுதலைக் கண்டிலமாகலானும், நீண்டு குவிந்த அக்கல் வடிவு ஆண்குறியின் அடையாளமாகவும், அக் கல்லைச் சூழ்ந்த வட்டக்கல் வடிவு பெண்குறியின் அடை யாளமாகவுமே முன்னோராற் கருதப்பட்ட தென்பதற்குச் சத்தியுஞ் சிவமுமாய தன்மையிவ் வுலகமெல்லாம் ஒத்தொவ்வா ஆணும்பெண்ணும் உயர்குண குணியுமாக வைத்தனன் அவளால் வந்த ஆக்கம்இவ் வாழ்க்கையெல்லாம் இத்தையும் அறியார்பீட லிங்கத்தின் இயல்பும் ஓரார். என்னுஞ் சைவ சித்தாந்த நூலாகிய சிவஞானசித்தியாரின் திருப்பாட்டே சான்றா மாகலானும், ஆண் பெண் குறிச் சேர்க்கையினாலேயே இன்பமும் உயிர்களின் தோற்றமும் நிகழக் காண்டலானும் ஆண் பெண்குறிச் சேர்க்கையே தொன்று தொட்டுச் சிவலிங்கவடிவாக வைத்து வணங்கப் படலாயிற்றென்று கோடலே பொருந்துமாம் பிறவெனின்; அறியாது கூறினாய்; இக்கூற்று ஒருவகையில் உண்மை யாமல்லது முழுதும் உண்மையாகாது; யாங்ஙன மெனிற் காட்டுதும்; ஆண் பெண் குறிகள் இன்பத்திற்கும் உயிர்களின் தோற்றத்திற்குங் கருவியாயிருப்பினும், அவை மேலே காட்டிய இறைவனியல்புகளோடு முற்றும் ஒவ்வாமையின் அவை தம்மை இறைவனடையாளமாக வைத்து எல்லா மக்களும் பண்டு தொட்டு வழிபடலாயினா ரென்பது சிறிதும் ஒவ்வாது. மற்றுத், தீ வடிவு ஒன்றுமே இறைவற்குரிய பண்புகளெல்லாம் ஒருங்கே பொருந்தப் பெற்றிருத்தல் காண்டுமாகலானுஞ், சிவலிங்க வடிவினைப் பண்டுதொட்டு வழிபட்டுவரும் பழஞ்சமயத்த வரெல்லாருஞ் சாம்பலாகிய திருநீற்றினைத் தமதுடம்பின்மேற் பூசி வருதலை உற்று நோக்குங்கால் அவரெல்லாந் தீவடிவில் வைத்து இறைவனை வணங்கியபின் அத்தீயினால் நீறாக்கப் பட்டுத் தூயதாய் வெளேலென எஞ்சி நிற்கும் புனிதமாஞ் சாம்பற் பொடி யினைப் பூசி வருதற் காரணம் புலப்படுதலானும், இவ்வாறன்றி அவரெல்லாம் ஆண் பெண் குறிச் சேர்க்கையையே தொழுது வருபவராயிருந்தால் அதனைத் தொழுது முடிந்த பிற் சாம்பற்பூச்சு மேற்கொள்ளுதற்கு ஒரு காரணம் வேறொரு வாற்றானும் பொருந்தப் போதாமை யானும் ஆண் பெண் குறிச் சேர்க்கையே சிவலிங்கமென கரைதல் அடாது. அற்றேல் மேற் காட்டிய சிவஞான சித்திச் செய்யுள் அதனை அவ்வாறோதுதல் என்னையெனிற், கூறுதும். தீப்பிழம்பின் வடிவு எப்போதும் நீண்டு குவிந்து நிற்கவே காணப்படுகின்றது. தீ மிக்கதோராற்றல் வாய்ந்ததாயிருத் தலின் அதனை ஆண்பாலாகக் கூறுதல் அறிஞர்க்கெல்லாம் ஒப்பமுடிந்ததேயாகும். மற்று நீரின் வடிவோ சுழிந்த வட்ட வடிவினதாகவே காணப்படுகின்றது. ஓர் யாற்றின்கட் புனல் பெருகிச் செல்லுங்கால் அதன் இயக்கத்தை உற்று நோக்குமின்! அப்போது அது சுழிந்து சுழிந்து ஏகுதல் நன்கு உணரப்படும். இங்ஙனஞ் சுழிந்தோடும் நீர் மென்பதத்ததாய்த் தண்ணென்று குளிர்ந்திருத்தல் பற்றி அதனைப் பெண் பாலாகக் கூறுதலும் ஆன்றோர்க்கெல்லாம் ஒத்த கருத்தே யாகும். இவ்வாறு ஆண்பாற்றன்மையதாகிய அனல் வரிவடிவின தாயும், பெண்பாற்றன்மையதாகிய நீர் வட்டச் சுழிவடிவினதாயும் அமைந்திருத்தல் போலவே, இவ்வுலகத்தில் ஆண் கூற்றிற் பட்ட உயிர் களெல்லாம் வரிவடிவான குறியுள்ள ஆணுடம்பு கள் உடையனவாயும், பெண் கூற்றிற்பட்ட ஏனையுயிர் களெல்லாம் வட்டவடிவான குறியுள்ள பெண்ணுடம்புகள் உடையனவாயும் அமைக்கப் பட்டு இன்ப வாழ்க்கை நடாத்தா நிற்கின்றன. இனி, உயிரில்லாத பொருள்களும், உயிருடையன போல் இயங்குமாறு அமைக்கப்படுங்கால் வரிவடிவாயும் வட்ட வடிவாயுமே அமைக்கப்பட்டு அவ்விரண்டின் சேர்க்கையால் விரைந்து இயங்குதல், இஞ்ஞான்றை மேல் நாட்டு மக்களால் அமைக்கப்பட்டுலவும் நீராவி வண்டி யிலும் ஏனை வியத்தகு பொறிகளிலும் வைத்துத் தெளிய வுணர்ந்து கொள்ளப்படும். இன்னும், இந்நிலவுலகமும், இந்நிலவுலகத் தினும் பெரியவும் சிறியவுமாகிய எண்ணிறந்த வுலகங்களு மெல்லாம், வான் வெளியிற் சிவலிங்கத்தை யொப்பச் சுழன்று நீண்டு செலும் மிக நுண்ணியதோர் இயக்கத்தாற் றோன்றி நடைபெறாநிற்கின்றன வென்று, இப்பேருண்மையினைப் பல வியத்தகும் ஆராய்ச்சிகளால் நிலையிட் டுரைக்கும் ஆங்கில ஆசிரியரான குரூக்கசு (Crooks) என்பார் உரைக்கும் மெய்ப் பேருரையாலும், எண்ணிறந்த இவ்வுடம்பு களும் எண்ணிறந்த இவ்வுலகங்களு மெல்லாம் இவ்வரிவடிவு வட்டவடிவுகளின் சேர்க்கை யினாலேயே தோற்ற முற்று உலவுதல் ஐயுறவின்றித் தெளியப்படுமென்பது. எனவே, இறைவனும்இறைவியுமாய் ஒருங்கியைந்து இச் சிற்றுலகு பேருலகுகளைப் படைத்துங் காத்தும் அழித்தும் அருள் வழங்குங் கடவுள் நிலையே வரிவடிவிலும் வட்டவடிவிலும் புலனாதல், நெருப்புருவிலும் நீர்வடிவிலும் வைத்து நன்கறியக் கிடத்தலின், யாண்டும் பிறழா அத்தெய்வ அருள் நிலைக்கு அடங்கியே ஆண்குறி பெண்குறி யமைப்புகளும் ஈண்டு உளவாயின வென்பது தெற்றென விளங்கா நிற்கும். இவ்வரிவடிவு வட்டவடிவுகள் ஆண் பெண் உயிருடம்புகளின் மட்டுமே யன்றி, உயிரற்ற அரியபெரிய பொறி (இயந்திர) அமைப்புகளிலும் நன்கு புலனாகி நிற்றல் காண்டுமாகலின்), உயிர்ப்பொருள் உயிரில் பொருள்களாகிய எல்லாவற்றின் தோற்ற இயக்கங்களிலுஞ் சிவலிங்க வுருவே உள்ளும் புறம்புமாய் நிற்கும் உண்மை யினை விளக்குதற்கே சத்தியுஞ் சிவமுமாய என்னும் அவ்வரிய சிவஞான சித்திச் செய்யுள் எழுந்ததென்று கொள்க இவ்வாறல்லது ஆண் பெண் குறிச் சேர்க்கையே. சிவலிங்க மாமென அதன் மெய்ம்மையை ஆய்ந்துணராது அரற்றுவா ருரை அறிவில்லாக் கயவருரை யேயாமென விடுக்க. ஆண் பெண் என்னும் இருகூற்றிற்பட்ட எல்லா அமைப்புகளின் வடிவுக்கும் முதலாய் ஊடுருவி நிற்பது சிவலிங்கவுருவாகு மன்றி அச்சிவலிங்க வுருவுக்கு முதலாய் நிற்பதும் ஆண்பெண் குறிச்சேர்க்கையேயா மென்றல் ஒருவாற்றானும் ஏலாதென்றுணர்க. அற்றேல், தீயுருவு ஆண்வடிவும் நீருருவு பெண் வடிவு மாதல், வடிவளவினன்றித் தன்மையளவிற் கண்டிலமா லெனின்; அறியாது வினாயினாய், எல்லா உயிர்களிலுங் காமவிருப்பு மீதூர்ந்து முனைத்துச் செல்வது, ஆணே யன்றிப் பெண் அல்லாமையானும், அங்ஙனம் அவ் விருப்பு மீதூர்ந்த வழி ஆணுடம்பு அனலாய் நிற்க அதன் ஆண் உறுப்பு விறைத்து அனல் வடிவுபோல் நேர் நின்று புணர்ச்சிக்குக் கருவியாய் நிற்றலானும், மற்றுப் பெண் ணெல்லாந் தாமாகவே பெரும்பாலுங் காமவிருப்பு மீதூரப் பெறுதலின்றி ஆண் விருப்பைக் கண்டவழி அஃது எழப் பெற்று அங்ஙனம் எழப் பெற்றவழியும் ஒரு வரம்பில் அடங்கியே நிகழக்காண்டலானும், அங்ஙனம் நிகழ்வுழிப் பெண்ணுறுப்பு முனைத்தெழ மாட்டாதாய் நீர்வடிவாய் நெகிழ்ந்து ஆணுறுப்பின் நுழைவுக்கு இடந்தந்து குளிர்ந்த தன்மைய தாகவே நிற்குமளவன்றி வேறல்லாமை அறியப் படுதலானும் ஆணுடம்பில் தீ யுருவும் பெண்ணுடம்பில் நீருருவும் விரவி நின்று அவையிரண்டனையும் வடிவானுந் தன்மை யானுந் தங் கூற்றிற் படுத்திருத்தல் நன்கறியப் படுமென்க. அற்றாயின், எரியினை வளர்த்து அதனை வழிபடுதலே செயற்பாலது; பண்டிருந்த தமிழ்ச் சான்றோரும் முத்தீ வேட்டு அதனையே வழிபட்டு வந்தனர்; மற்றை மேல் நாடு கீழ்நாடுகளிலிருந்த அறிஞரும் பிறரும் நெருப்புருவினையே வழிபட்டு வந்தனரென்பதற்கு அவர் சாம்பற் பூசுந் திரு நாளொன்று இன்று காறுங் கொண்டாடி வருதலே சான்றாம். அவ்வாறிருக்க, அதனை விடுத்து உருண்டு நீண்ட குழவிக் கல்வடிவு மண்வடிவில் வைத்துச் சிவபிரானை வணங்கி வருதலும், இயற்கையுண்மைச் சிவக் குறியான தீப்பிழம்பினைச் சிவலிங்கமெனக் கொண்டு அதனை வழிபடுதல் செய்யாது செயற்கையாகச் சிற்றறிவுடைய மக்களாற் செய்யப்படுங் கல்வடிவு மண் வடிவுகளைச் சிவலிங்கமென விதந்து வைத்து அவற்றிற்கு வழிபாடு ஆற்றிவருதலும் பொருந்தாவாம் பிறவெனின்; அறியாது கூறினாய், தீ வடிவு இயற்கைச் சிவலிங்கமே யாயினும், அதனை வழிபடுவார் அதன்பால் அன்புமீதூரப் பெற்றவழி, அதனைச் சென்று தொடுதலும் அணைதலும், அதற்குத் திருமுழுக்குச் செய்தலும், பூமாலை புனைதலுஞ் சாந்தம் அப்புதலும் பிறவுமாகிய அன்பின் செயல்களைச் செய்தல் இயலாது. என்னை? தொட்டால் அது சுடும், நீர் சொரிந்தால் அஃது அணைந்துபோம், மலர்மாலை யணிந்தால் அம்மலர் மாலை கரிந்துபோம், அனற் கொழுந்து பருப்பொருள் அல்லாமையால் அதற்குச் சாந்தங் குழைத்திடுதலும் இயலாது. மற்று, அன்பின் பெருக்கோ அதற்குரியார்பாற் புறத்தே அச்செயல்களைச் செய்தாலன்றிச் சிறிதும் அமைதி பெறாது. தம்மாற் பேரன்பு செய்யப்பட்டவர் சிறு மகாரே யாயினும் அன்றி இளைஞரேயாயினும், அல்லது ஆண்டில் முதிர்ந் தாரே யாயினும் அவரைத் தொடுதற்கும், முத்தம் இடுதற்கும் அல்லது அணைதற்கும், அவரை நீராடச் செய்தற்கும், அவர்க்குப் பூமாலை புனைந்து சாந்தம் பூசுதற்கும், இன்னும் இவை போன்ற பிறவெல்லாஞ் செய்தற்கும் அவர்பால் அன்பு மிகப் பெற்றார் வேட்கை மீதூர்ந்து நிற்றல் காண்டுமன்றே! அங்ஙனம் அவர் போலவே, இறைவனைத் தீவடிவில் வைத்து வழிபடுவாரும் ஆண்ட வன்பாற் கரைகடந்த அன்பு மீதூரப் பெற்றக்கால், அவற்கடையாளமான தீப்பிழம்பிலும் அவ் அன்பின் செயல்களைச் செய்தற்குப் பெரிதுவிழைந்தும், அவற்றிற்கு அஃது இடந்தராமை கண்டு அதனையொப்ப தொரு கல்வடிவே அவற்றிற்கெல்லாம் நன்கு இடமாதல் உணர்ந்தும், அவ்வனற் பிழம்பு வடிவினை யொப்பதாகக் கல்லின்கண் நீண்டு குவிந்த வடிவினைச் சமைத்து, அதனையே சிவலிங்கமாக நிறுத்தி, அதற்குத் தம் அன்பின் அடையாளங்களாகச் செயற்பாலனவெல்லாஞ் செய்து, பண்டுதொட்டு வழிபாடு செய்து வருவாராயின ரென்று ணர்ந்து கொள்க. மேலும், கல்லும் மண்ணுந் தீயைப் போலவே இயற்கை யுண்மைப் பொருள்களாய் இறைவனாற் படைக்கப் பட்டவைகளே யாகையாலும், வான், வளி, தீ, நீர், மண் என்னும் ஐம்பெரும்பொருள்களிலும் அவ்வைம்பொருட் சேர்க்கை யாலாகிய எல்லா வுலகங்களிலும் எல்லா உடம்புகளிலும் பாலுள் நெய்போலப் பழத்திற் சாறு போல இறைவன் பிரிவற நிறைந்து நிற்றல் எல்லாச் சமயத் தார்க்கும் உடம்பாடே யாகையாலும் மக்கள் சிற்றறிவுடைய ரேயாயினும் அவர்களுட் பேரன்பும் பேரறிவும் உடையாரும் உளராகலின் அவர் இறைவன்பால் மிக்கெழுந்த தூய பேரன்பின் வயத்தராகி ஆக்கி வழி பட்ட சிவலிங்கக் கல்வடிவு மண் வடிவுகளை ஏனைச் சிற்றறிவினார் செய்த வைகளோடுஒப்ப வைத்து இகழ்ந்துரைத்தல் பொருந்தா தாகையாலும், மக்களுள்ளும் அறிவுமிக்காரால் வரையப் பட்ட ஓவியங்களையுங் கடைந்து திருத்தப்பட்ட கற்பாவை பொற்பாவைகளையும் பலர்க்குப் பலவகையிற் பயன்றரும் நீராவிப் பொறி மின்னற்பொறி அச்சுப் பொறி பறவைப் பொறி முதலானவைகளையும் மக்களாற் செய்யப்பட்டமை பற்றி இகழ்ந்து பேசாமல் அவை தம்மை யெல்லாம் மிகவுங் கொண்டாடிப் பேசுவாரையே எங்குங் காண்கின்றோ மாகையாலும், மக்கள் தம் அறிவொளியால் அமைப்பன வெல்லாம் இறைவனது அருளொளியோடு ஒருங்கு கூடியே நிற்குமாகலின் அவை தம்மை ஏனை அறிவில்லாப் பொதுமக்கள் செயலில் வைத்து இழித்துக் கைவிடுதல் தம் பிறவிப் பயனை இழப்பதற்கே இடஞ்செய்யுமாகையாலும், மக்களாற் செய்யப்பட்ட தென்னுங் காரணம் ஒன்றே கொண்டு கல் வடிவு மண் வடிவுகளில் ஆக்கிய சிவலிங்கத் தை வழிபடாதொழிதல் எவர்க்கும் நன்றாகாதென்க. தமக்குப் பெரிதும் அன்பரா யுள்ளாரைத் தாமே ஓவியத்தில் வரைந்து பார்த்துந், தம்மால் வரைதல் இயலாவிடிற் பிறரைக் கொண்டு அவரதுருவினை அதன்கண் வரை வித்துப் பார்த்தும் மகிழ்ச்சியிற் பொங்கு வாரை ஆங்காங்குக் காண்டும் அல்லமோ? அங்ஙனமே இறைவன்பால் அன்பு மீதூரப் பெற்றாரும் அவன் இயல் பாகவே முனைத்து விளங்குந் தீயுருவினைக் கல்லிலும் மண்ணிலுந் தாமே யமைத்தும் பிறரைக் கொண்டு அமைப்பித்தும் வழிபட்டு மகிழ்மீக் கூர்கின்றாரென்க. அற்றேல், அனற்பிழம்பில் இயற்கையே முனைத்து விளங்குமாப் போற் கல்வடிவு மண்வடிவுகளிற் கடவுள் முனைத்து விளங்குதல் இல்லாமையால், அப்பருப்பொருள் வடிவுகளில் வைத்துக் கடவுளுக்கு வழிபாடாற்றுதல் பயமின்றாய் முடியும்போலுமெனின்; அற்றன்று கல் மண் வடிவுகளில் இயற்கையே முனைத்து விளங்காத முதல்வனை அவை தம்மில் முனைத்து நின்று அருள் செய்யுமாறு வேண்டுதற் பொருட்டன்றே திருக்குட முழுக்கு என்னும் வினை ஆன்றோரால் நடாத்தப்பட்டு வருகின்றதென்க. இனி, அக்குடமுழுக்கு வினையின் கருத்தினை ஈண்டொரு சிறிது விளக்கிக் காட்டுதும், இறைவன் இயற்கையே முனைத்து விளங்கும் இடனாய் நிற்பதான அனல் வடிவு நம்மனோர் கட்புலனுக்கு மூன்று திறமாய்ப் பிரிந்து விளங்கு கின்றது அவைதாம் பகலவனுந் திங்களுந் தீயுமேயாகும். அம் மூன்றிலுந் தோன்றா நின்ற ஆண்ட வனைப் பண்டை நம் செந்தமிழ்ச் சான்றோர்கள் வழி பாடாற்றிய வகை வருமாறு: தூயதொரு நிலத்தே தீயினுக்கு அடையாளமாக முக்கோண வடிவொன்று கீறி, அதனுள்ளே பகலவனுக்கு அடையாள மாக வட்ட வடிவொன்று வரைந்து, அவ்வட்டத் தினுள்ளே திங்களுக்கு அடையாளமாகப் பிறைவடிவொன்று தீட்டி, அங்ஙனம் அமைக்கப்பட்ட முக்கோண வட்டத்தில் தீ வளர்த்து அத்தீயின் பக்கத்தே கிழக்கு நோக்கிய படியாய் இரண்டு புது மட் குடங்களை நிறீஇ, அவ்விரண்டிலுள்ளே தூயபுனலை நிரப்பி, அக்குடங்களின் வாய்களில் மாவிலைகளுந் தேங்காயும் வைத்து, அவையிற்றுக்கு மலர் மாலையும் பிறவுஞ் சாத்துவர். அதன்பிற் றீயிலே நெய்யைச் சொரிந்து, அது கொழுந்து விட்டு எரியுங்கால், அதன்கண் முனைத்து விளங்கா நின்ற முதல்வனை அதற்கு எதிரே அமைந்துள்ள இரண்டு குடங்களின் நீரிலும் புகுந்து விளங்கி நிற்குமாறு வேண்டுவர். அங்ஙனம் பலகாலும் வேண்டியபின் அக்குடங்கள் இரண்டினையும் எடுத்துக் கல்வடிவு செம்பு வடிவுகளில் அமைப்பித்த சிவலிங்கத் திருவுருவின் மேற்சொரிந்து, அங்ஙனஞ் சொரியுங்கால் அந்நீரில் விளங்கும் இறைவன் அச்சிவலிங்கத்தினுள்ளும் புகுந்து முனைத்து நின்று விளங்கு மாறு வேண்டா நிற்பர். அவ்வாறு செய்து வேண்டியபிற் சிவலிங்கத்தின்கண் இறைவன் முனைத்து நின்று அருள் செய்கின்றான் என்பது நம் பண்டை யாசிரியரது கோட் பாடாகும். அஃதொக்கும்; அவ்வாறு தீயிலிருந்து நீருக்கும் நீரிலிருந்து கல்லுக்குஞ் சென்று சிவபிரான் விளங்க வேண்டுமென்று வேண்டுதல் எற்றுக்கு? கல்லுருவி லிருந்தே விளங்கி அருள் செய்க என்று அஃதொன்றைச் சுட்டியே வேண்டிக் கோடல் போதாதோ? என வினவிற்; கரைகடந்த பேரன்பாற் கண்ணப்பரைப் போல் நெஞ்சம் நெக்கு நெக்குருகி வேண்டுவார்க்கு, எல்லாப் பொருள்களிலும் ஊடுருவி நிற்கும் ஆண்டவன் கல்லிலுஞ் செம்பிலுங் கட்டையிலும் மண்ணிலும் நேரே விளங்கித் தோன்றி அருள் செய்வனென்பது திண்ணமேயாம். ஆனால், அத்துணைப் பேரன்புவாயாத ஏனைப் பொதுமக்கள் எல்லார்க்கும் அவன் அங்ஙனம் எளிதிலே நினைந்த பருப்பொருள் வடிவுகளிற் புலனாய்த் தோன்றி அருள் புரிதல் செல்லாது. அவர் பொருட்டாகவே நுண்ணிய ஒளிப் பொருளான அனற் கொழுந்தின்கண் முனைத்து நிற்கும்முதல்வனை, அவ்வனலுக்கு அடுத்தபடி நுண்மையுடையதுஞ் சிறிதொளி வாய்ந்ததுமான நீரின்கட் புகுமாறு வேண்டி, அதன்பின் ஒளியில்லாத பருப்பொருட் கல்வடிவில் அந்நீரை உகுத்து, அவ்வாற்றால் அவன் அக்கல்வடிவில் முனைப்புற்று நின்று அருள் செய்யுமாறு வேண்டுதல் செய்கின்றாரென்க. இறைவன் இயற்கை யாகவே விளக்கம்இல்லாத கல் மண் செம்பு முதலான பருப்பொருள் வடிவுகளில் முனைத்து நிற்கின்றிலன் என்பதுபற்றியே பட்டினத்தடிகள், சொல்லினுஞ் சொல்லின் முடிவினும் வேதச் சுருதியினும் அல்லினும் மாசற்ற ஆகாயந் தன்னினும் ஆய்ந்துவிட்டோர் இல்லினும் அன்ப ரிடத்தினும் ஈசன் இருக்கும்இடங் கல்லினுஞ் செம்பினு மோஇருப் பான்எங்கள் கண்ணுதலே என்று அருளிச் செய்வாராயினர். அனற் பிழம்பில் இயல்பாக விளங்கித் தோன்றும் ஐயன், அங்ஙனம் விளங்காத ஏனைப் பருப்பொருள்களிலும் விளங்கி நின்று அருள்புரிதல் வேண்டு மென்று நெஞ்சங்குழைந்து வேண்டினால் மட்டுமே, ஆண்டு அவன் முனைத்து நின்று அருள்வன் என்பது பண்டைச் சான்றோர்க் கெல்லாம் ஒத்ததொரு கோட்பாடாகலின், முத்தீவேள்வி வேட்டுக் கல்லிலுஞ் செம்பிலும் இறைவனை விளங்கச் செய்யும் வினை ஏனைப் பொதுமக்கள் எல்லார் பொருட்டும் இன்றியமையாது செய்யப்படுவதா யிற்றென்க. இங்ஙனம் முத்தீ வேட்டு முதல்வனைப் பருப்பொருள் வடிவுகளில் விளங்கி நிற்கச் செய்த வழியும், முதற்கடவுள் உண்மையுணர்ந்து, அவனை யொருவடிவில் வைத்து, வணங்க விழைவு மீதூர்ந்து, பேரன்பிற்கு ஒரு கொள்கலனாகத் திகழும் மெய்யடியார் உள்ளம் நீராய்க் கரைந்து கரைந்துருகி வழிபட்ட கல் மண் செம்பு கட்டை முதலானவைகளில் அவன் எக்காலுந் தோன்றி நின்று அருள் செய்யுமாப் போல் ஏனை அப்பருப்பொருள் வடிவுகளில் அவன் அத்துணை நில்லா னென்பதே தேற்றமாம். அதுபற்றி யன்றே திருஞான சம்பந்தர், திருநாவுக்கரையர், சுந்தர மூர்த்திகள், மாணிக்க வாசகர் முதலான மெய்யாசிரியன்மார் சென்று வழிபட்டுச் செந்தமிழ்ப் பாக்களால் வழுத்திய சிவபிரான் திருக்கோயில் களே சிறந்தனவென்று கற்றார் முதற் கல்லாதார் ஈறான எத்திறத்தாரும் அவற்றைப் பெரிது பாராட்டி வருகின்றார். மெய்யாசிரியன்மார் செந்தமிழ்ப் பாடலின் பொருட் டாகவே, காணவுங் கருதவும்படாத முதல்வனான சிவபிரான் காணவுங் கருதவும் எளிதாகிய சிவலிங்கக் கல்வடிவிலே விளங்கி நின்று அருள் செய்யும் உண்மை வெள்ளிடை விலங்கலென வீறித் தோன்றவும், இவ்வுண்மை யினை மறைத்துத் தமக்குந் தமது ஆரிய மொழிக்கும் உண்மையில் இல்லாத ஒரு தெய்வத் தன்மை கற்பித்துக் கொள்வான் வேண்டி ஆரியரும் அவரது போலியொழுக லாற்றைப் பின் பற்றிய கோயிற் குருக்கண்மாரும், நம் தெய்வ ஆசிரியர் அருளிச் செய்த தேவார திருவாசகச் செந்தமிழ் மாமறைகளாற் சிவபிரானுக்கு வழிபாடு ஆற்றாது, எல்லாப் பொய்ம்மையும் நிறைந்த ஆரிய மொழிச் செய்யுட் களாலேயே வழிபாடு முற்றும் ஆற்றுகின்றார். ஒரு கற்றாவின்பாலைப் பெற வேண்டுவார், அதன் கன்றை அதன்பால் உய்த்து, அஃது உண்ண உண்ணப் பால் சுரந்து ஒழுகாநிற்புழி, அதனைப் பின்னர்த்தாம் கறந்து கைக்கொள்ளுமாப் போல், மெய்யடி யார் சென்று வழிபட்ட திருக்கோயில்களில் உள்ள திருவுருவங்களிலே அவர் பொருட்டுத் தோன்றி நின்று பேரருள் செய்த இறைவன் திருவருளை அவ்வுருவங்களின் வழிநாம் பெறுதலே எளிதிற் கைகூடுவதாகும். ஆகவே, கல் மண் முதலான பருப்பொருள் அடையாளங்களில் இறைவனை விளங்கச் செய்தற் பொருட்டுச் செய்யும் ஏனை எல்லா முறைகளையும்விட, அவன்றன் மெய்யடியார் அவ்வத் திருக்கோயிலின் மேற் பாடிய தேவார திருவாசகச் செந்தமிழ் மாமறைத் திருப்பதிகங்களை அன்பினால் எடுத்தோதி அகங்கரைதலே கழிபெருஞ் சிறப்புடைத்தா மென்க. என்றாலும், நிறைந்த அன்பும் ஆழ்ந்த அறிவுமில்லா ஏனைப் பொதுமக்கள் பொருட்டுத், திருக்கோயில்களிற் சிவலிங்கத் திருவுருவின் எதிரே அடுத்தடுத்து மேற்சொல்லிய வாறு முத்தீவேட்டு, அதன் கட்டோன்றும் முதல்வன் அச்சிவலிங்கத்தினுந் தோன்றி நின்றருள் வழங்குமாறு வேண்டித் திருமுழுக்குச் செய்தல் பெரிதும் நலம் பயப்ப தொன்றேயாமென் றுணர்தல் வேண்டும். இனித், தீப்பிழம்பின் வடிவான சிவலிங்கத்தை அமைத்துத் திருக்கோயில்கள் எடுப்பிக்கும் உண்மை யினையுஞ் சிறிது விளக்கிக் காட்டுவாம். நம் ஐம்புலனுக்கும், அவை வாயிலாக நடைபெறும் நமது மனனுணர்வுக்கும் புலனாகித் தோன்றிநின்ற இவ்வியற்கையமைப்பு உலகும் உடம்பும் என இருகூறாய்க் காணப்படுகின்றது. இவ்விரு கூற்றிற்பட்ட உலகு பெரிதாயும், உடம்பு சிறிதாயும் அமைக்கப்பட்டு நிலவு கின்றன. வடிவத்தாற் பெரிது சிறிதாயிருப்பினும், உலகத்தி லுள்ள அமைப்புகள் உடம்பிலும் உடம்பிலுள்ள அமைப்பு கள் உலகத்திலுங் காணப்படுகின்றன, உலகத்தில் வான், வளி, தீ, நீர், மண் என்னும் ஐம்பெரும் பொருள்கள் இருத்தல் போலவே, உடம்பிலும் வெளியும் மூச்சுஞ், சூடுஞ், செந்நீரும், எலும்பு, தோல், நரம்பு, தசை முதலான மண்ணின் கூறுகளும் அமைந்திருக்கின்றன. உலகில் மலைகளும் மரங்கள் அடர்ந்த காடுகளும் இருத்தல் போலவே, உடம்பில் என்புகளும் மயிர்த் தொகுதிகளும் அமைந்திருக்கின்றன. உலகிற் பொன், வெள்ளி, இரும்பு, ஈயம், கெந்தகம் முதலான முதற்பொருள்கள் ஆங்காங்கு உளவாதல் போலவே, உடம்பிலும் பொன் வெள்ளி இரும்பு ஈயம் கெந்தகம் முதலான முதுற்பொருள்கள் பொருந்தி யுள்ளன. உலகிற் கடல்களும், ஆறுகளும் அமைந்திருத்தல் போலவே, உடம்பில் தீனிப்பை, குண்டிக்காய் முதலான நீர் நிலைகளுங் குருதியோடும் நரம்புக் குழாய்களும் அமைந் திருக்கின்றன. உலகில் ஞாயிறு திங்கள் தீயென்னும் முச் சுடர்கள் காணப்படுதல் போலவே, உடம்பில் வலக்கண், இடக்கண்ணும் புருவத்திற்கு நடுவே நெற்றிக்கண்ணுங் காணப்படுகின்றன. உலகில் அனற்காற்றுங் குளிர்காற்றும் வீசுதல் போலவே, உடம்பின் வலது மூக்கில் அனல்வளியும் இடது மூக்கிற் குளிர்வளியும் வீசுகின்றன. உலகமெங்கும் வான்வெளி பரந்திருத்தல் போலவே, உடம்பெங்கும் வான் வெளி பரந்திருக்கின்றது. இன்னும் இங்ஙனமே உலகத்தின் கண் உள்ள அமைப்புகள் அத்தனையும் உடம்பின் கண்ணுங் காட்டலாம், இருந்தவாற்றால் உலகினைப் பேருலகு என்றும், உடம்பினைச் சிற்றுலகு என்றுங் கூறுதல் இழுக்காது. இனி, எல்லாம் வல்ல கடவுள் இவ் வுலகங்களிலும் இவ்வுடம்புகளிலும் நிறைந்து நின்று இவை தம்மை இயக்கினாலன்றி இவை தாமாகவே இயங்க வல்லன அல்ல; மற்று, உயிர்களோ சிற்றறிவுஞ் சிறுதொழிலும் உடையன வாகையால், இவை மிகப்பெரிய உலகங்களின் உள்ளும் புறம்புமுள்ள இயல்புகளை முற்ற உணரமாட்டாமையொடு, தமதுடம்பின் இயக்கத்தையே நன்கு நடைபெறுத்தவல்ல ஆற்றலும் இல்லாதனவாய்ச் சடுதியிலே மாய்ந்து போகுந் தன்மையவாய் இருத்தலின் இவை அவ்வுலகங்களையும் உடம்புகளையும் இயக்குமென்றலும் ஏலாது. ஏலாதாகவே முழுமுதற்கடவுள் ஒருவனே இவை தம்மையெல்லாம் ஊடுருவி நின்று இயக்குகின்றானென்பது தானே போதரும். அங்ஙனம் அவன் இவ்விரு கூற்றிற்பட்ட உலகுகளை இயக்கு வதும், உயிர்களுக்கு மேன்மேல் அறிவு விளங்கச் செய்து, அவ்வாற்றால் அவைதந் துன்பத்தை அகல்வித்து இன்பத்தை நுகர்வித்தற் பொருட்டேயாகலான், அவன் இவ்வுலகுகளை இயக்குவதொன்றின்மட்டும் அமையாது. இவையிற்றின்கண் இருந்து உயிர்வாழும் எல்லா உயிர்கட்கும் அறிவையும் முறைமுறையே விளங்கச் செய்து வருகின்றான். யாங்ஙனம் அறிவு விளங்கச் செய்திருக்கின்றானெனின்; உயிர்களின் கண்ணறிவை விளக்கி அவ்வாற்றால் அவை தம் மனனுணர்வையும் விளங்கச் செய்கின்றானென்க. இனி, உயிர்களின் கண்ணறிவை, விளக்குதற்கு ஞாயிறு, திங்கள், தீ என்னும் மூன்றிலும், புறத்தே உலகின் கண் ஒளியுருவாய் ஒளிராநின்ற முதல்வன், கண்ணறிவு விளங்கி அவ்வாற்றால் விளங்கப்பெறும் உயிர்களின் உடம்பின் அகத்தே மனனுணர்விலும் அறிவொளியாய்த் துலங்கா நிற்கின்றன னென்று ஓர்ந்து கொள்க. இவ்வாறு இறைவன் புறத்தே உலகின்கண் ஒளிவடிவாய் விளங்கும் வகையினையும், அகத்தே உடம்பின்கண் அறிவொளியாய்த் திகழும் வகையினையும் அறிவுறுத்தி, மக்கள் உள்ளத்தைத் தூய்மை செய்து இறைவன்றன் அருளொளியிற் படிவித்தற் பொருட் டாகவே, அறிவான்மிக்க நம் பண்டைச் சான்றோர்கள், திருக்கோயில்களையும் இருவகையமைப்புகளுட்படுத்து அமைக்கலாயினர். ஆனாலும், உலகினை யொப்ப அமைக்கப்பட்ட திருக்கோயில்களின் கருவறையிலே ஞாயிறாவதுதிங்களாவது வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்தது, நமக்குக் கட்புலனாகும் ஒன்பது மண்டிலங்களில் ஞாயிறுந் திங்க ளுமே ஒளி விளக்கமுடையனவாய் நம்முடம்பையும் உயிரை யும் அறிவையும் வளர்ப்பனவாய் இருத்தலின், அவை யிரண்டும் இறைவன் விளங்கித் தோன்றி உறையுந் திருவுரு வங்களாகக் கருதப்பட்டன. உலகினையொப்ப அமைத்த பழைய திருக்கோயில்கள் ஒரே மதிற்சுற்று மட்டும் வாய்ந்தன. அவற்றின் நடுவே பகலவன் அல்லது நில வோனது திருவுருவம் நிறுத்தப்பட்டிருந்தது. இத்தகைய பகலவன் கோட்டம், நிலவோன் கோட்டம் பண்டை நாளில் இத்தமிழ்நாட்டின் கண் இருந்தமை சிலப்பதிகாரம் என்னும் பழைய தமிழ் நூலால் நன்கறியப்படுகின்றது, இத் தமிழ்நாட்டின் மட்டுமேயன்றி, வட நாட்டின்கண்ணும் பகலவன்றிருக் கோயில்கள் இருந்தமை பவிடிய புராணத்தாலும் பழைய சத்திராபி மன்னர்கள் வழங்கு வித்த நாணயங்களில் ஞாயிற்றின் வடிவம் பொறிக்கப் பட்டிருத்த லானும் புலனாகின்றது; அதுவேயுமன்றிப் பஞ்சாபு தேயத்தின் கண்ணதான முலுத்தானத்தில் மிகச் சிறந்ததொரு பகலவன் கோட்டம் இருந்தமை, இற்றைக்கு ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் இவ்விந்தியநாடு போந்து இங்குள்ள காட்சிகளைக் கண்டெழுதிய சீன அறிஞரான அயூன்தாங்கு கூறும் உரைகளாலுந் தெளியக் கிடக்கின்றது. மிகச் சிறந்த இப்பகலவன் றிருக்கோயில் மகமதிய வேந்தனான அவுரங்கசீபு காலத்திலேதான் சிதைத்து அழிக்கப் பட்டது. இங்ஙனமே நிலவோனை வழி படுஞ் சமயத்தவர் இருந்தமை `சங்கர விஜயத் தினுட் சொல்லப்படுதலின், அதற்குத் திருக் கோயில்கள் வட நாட்டின்கண் இருந்தமை உய்த்தறிப்படும். இனி, இவ்விந்தியதேயத்தின் மட்டுமேயன்றி, இற்றைக்குப் பதினாயிர ஆண்டுகளுக்கு முன்னரே நந்தமிழ் மக்களின் முன்னோர்கள் சென்று குடியேறி வைகிய மேல்பால் நாடுகளான சாலடி, அசுரம், எகுபதி, பாபிலோனியம் முதலானவைகளிலுங்கீழ்பால் நாடுகளான மெகுசிகம், பேரு முதலானவைகளிலும் மிகப் பெரிய சிறந்த பகலவன் கோட்டங்களும் நிலவோன் கோட்டங்களும் இருந்தன. அவைகள் நிலத்தின்கட் புதைந்துபோனமை தெரிந்து, அவைகள் வெள்ளைக்கார அறிஞர்கள் அகழ்ந்து வைத்து, அவையிற்றின் வியத்தக்க மிக அழகிய அமைப்பு களை விரிவாக எழுதி ஓவியம் எடுத்துங் காட்டியிருக் கின்றார்கள். ஆகவே இற்றைக்குப் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னமே மேல்பால், கீழ்பால் நாடுகளிலும் இவ்விந்திய நாடுகளிலும் இருந்த அறிவான் ஆன்ற நாகரிக மக்கள் அனைவரும், இவ் வுலகினை ஒருபுடையொப்ப எழுப்பிய பெரிய பெரிய திருக்கோயில்களிலெல்லாம் பகலவன் றிருவுருவினையும் நிலவோன் றிருவுருவினையுமே நிறுத்தி, அவை தம்மில் முனைத்து விளங்காநின்ற முழுமுதற் கடவுளை வழிபட்டு வந்தமை தெற்றென வுணரப்படுமென்க. இனி, இந்நிலவுலகினிற் சிறந்த இவ்விந்திய நாட்டை இறைவற்கோர் உடம்பாகக் கொண்டு, அவ்வுடம்பினகத்தே இறைவன் விளங்கி நிற்றற்கேற்றசிறந்த இடங்கள் தலையின் உச்சியும், நெற்றியும், புருவநடுவும், மார்பும், நெஞ்சமும், நெஞ்ச நடுவும், மூலமும் என ஏழிடங்கள் உளவாகலின் அவ் வேழிடங்களுந் திருப்பருப்பதம், திருக்கேதாரம், காசி, குருக்கேத்திரம், பிரயாகை, தில்லை, திருவாரூர் ஆமென வகுத்து, அவ் வேழிடங்களிலுந் திருக்கோயில்கள் அமைத்து, அவற்றின்கட் சிவலிங்க உருவினை நிறுத்தி அதன்கண் இறைவனை, நம் பண்டைப் பெரியார்கள் தொன்றுதொட்டு வழிபட்டு வருகின்றார், புறத்தே இவ்விந்திய நாட்டின்கண் ஏழிடங்களிலே வைத்து அங்ஙனம் இறைவனை வழிபட்டு வருதல் போலவே, அவர்கள் தமதுடம்பின் அகத்தேயும் அவ்வேழிடங்களில் இறைவன்றன் ஒளியுருவினை நிறுத்தி, அதன்கட்டமது கருத்தினை ஒரு முகப்படப் பதித்து வழிபாடாற்றி வருதலையும் மேற்கொண்டு நிற்கின்றார். இவ்வுண்மை, சென்னி சீசைலம் பாலவங்கே தாரந் திகழ்தரு புருவமத் தியமே மன்னிய காசி வண்குயத்தானம் வளர்குருக் கேத்திரம் இதயந் துன்னிய புண்ணி யப்பிர யாகை சொல்லும்அவ் விதயத்தின் நடுவண் மின்னிடு தெய்வ சிதம்பரம் மூலா தாரத்தா ரூர்என்பர் மெய்க்கண் என்னுஞ் சூதசங்கிதைச் செய்யுளால் அறியப்படும், இவ் விந்திய நாட்டின் வடக்கைத் தலையாகவுங் குமரிமுனை யுள்ள தெற்கை அடியாகவுங் கொண்டால், இமயமலைக் கண்ண தான திருக்கைலாயத்தை அத்தலையின் உச்சி யாகவும், அம்மலைச்சாரலின் கண்ணதான திருக்கேதா ரத்தை நெற்றியாகவும்; அதற்குக் கீழ்க்கண்ணதான காசியைப் புருவத்தின் நடுவாகவுங் கோடல் பொருந்தும். ஆனாற் காசியின் வடக்கேயுள்ள குருக்கேத்திரத்தை மார் பாகவும், அதற்குத் தெற்கேயுள்ள பிரயாகையை நெஞ்ச மாகக் கோடல் பொருந்துமேனும் பிரயாகைக்குத் தெற்கே நெடுந்தொலை விலுள்ளதான தில்லைச்சிற்றம் பலத்தை அந்நெஞ்சத்தின் நடுவாகவுங் கூறுதல் பொருத்த மாகக் காணப்படவில்லை. மற்றுத் திருவாரூரை மூலத்தின் கண்ண தாகக் கூறுதலோ பொருத்தமுடைத்தேயாம். இங்ஙனம் புறத்தே வடக்கேயுந் தெற்கேயுந் காணப்படும் ஏழு திருக்கோயில்களையும் இவ்விந்திய நாடாகிய உடம்பின் ஏழு முதன்மையான இடங்களில் உளவாக வைத்துக் கூறுதலிற் சிறிது மாறுபாடு உளதேனும், இவை தம்மை மக்களுடம்பின் முதன்மையான ஏழு இடங்களில் உளவாக வைத்துச் செய்யும் அகமுக வழிபாட்டிற் சிறிதும் அத்தகைய மாறுபாடில்லை யென்பது உணரற்பாற்று. யாங்ஙனமெனிற் காட்டுதும். வயிற்றின் அடிக்கீழ் எருவாய், கருவாய் என்னும் இரண்டுக்கும் நடுவே முக்கோண வடிவினதான ஓர் எலும்பினைப் பற்றிக் கொண்டு காணப்படும் இடமே `மூலம் ஆகும் என்று தவநூல்கள் நுவலா நிற்கின்றன. இம் மூலத்தின்கண்ணதான அனல் மிகாதுங் குறை யாதும் இருக்கு மாயின் மக்களுடம்பு எல்லா நலங்களும் உடையதாய் நீண்ட காலம் அழிவின்றி நிலைபெறும்; அவ்வாறின்றி அவ்வனல் தன் நிலையினின்றும் மிகுந்து விடுமாயின் அஃதுடம் பெங்கும் பரவி உடம்பிலோடுஞ் செந்நீரினை உரிஞ்சி உயிரை உடம்பினின்றும் அகற்றும்; அல்லது தன்னிலையிற் குறைந்து விடுமாயின் உடம்பினுள் ளோடுஞ் செந்நீருஞ் சூடு குறைந்து உறைய உயிர் அவ்வுடம்பில் நிலையாதாய் அதனைவிட்டு அகலும். இவ்வாறு மூலத்திலுள்ள சூடு மிகுந்தேனுங் குறைந் திதேனுங் காணப்படும் போதெல்லாம் வெப்பு நோயும் பிற நோய்களும் உடன் காணப்படுகின்றன. இந் நுட்பத்தை நன்குணர்ந்தன்றே மேனாட்டு மருத்துவ ஆசிரியரான லூயி கூன்1 என்பார். வயிற்றின் கீழ்ப்பகுதியைக் குளிர்ந்த நீராற் கழுவும் இயற்கை முறையைக் கண்டு அதனால் எல்லா நோய்களையும் எளிதில் நீக்கிக் கொள்ளும் வழி காட்ட லாயினர். எத்துணைக் கொடிய வெப்பு நோய் கொண்டாருந் தமது வயிற்றினடியைக் குளிர்ந்த நீரினுள் அமிழ்த்தி அதனைச் சிறிது நேரங் கழுவுவராயின், அவ்வெப்புநோய் உடனே தணிந்து போதலை எந்நாளும் எளிதிற் காணலாம். ஆகவே, உடம்பெங்கும் பரவுங் கொடிய காய்ச்சலின் சூடு வயிற்றின் அடி மூலத்தினின்றே மிகுந்து தோன்றி உடம்பெங்கும் பரவும் உண்மைஇது கொண்டு தெற்றென அறியப்படும், இங்ஙனமே மூலத்தின் சூடு குறைய உடம்பெங்குமுள்ள சூடும் உடன் குறையக் குளிர்நோய் காணுங்காலும், வயிற்றினடியை நீருள் அமிழ்த்திக் கழுவு முறையாற் கழுவ, அங்ஙனங் கழுவிய சிறிது நேரத்திலெல்லாம் உடம்பெங்கும் இருக்கவேண்டுஞ் சூடு இருக்கு மளவாய்ப் பரவ, அக்குளிர்நோய் நீங்கி விடுதலுங் கண்கூடாய் அறியக் கிடக்கின்றது. இவ்வாற்றால், மூலத்திலுள்ள அனலே உடம் பினிருப்புக்கும் அழிவுக்கும் ஏதுவாய் நிற்றல் நன்கு விளங்கா நிற்கும். இத்துணைச் சிறந்ததாகிய மூல அனலிலே இறைவனது ஒளிவடிவை அகக் கண்ணால் விளங்கக் கண்டு அதன் கண்ணே நினைவைப் பதித்து உள்ளம் உருக வல்லார்க்கு, அவர் தம் உடம்பும் உயிரும் அவ்வொளியினால் ஊடுருவப் பெற்று அழிவின்றித் திகழும். இஃது, எருவிடும் வாசல் இருவிரன் மேலே கருவிடும் வாசல் இருவிரற் கீழே உருவிடு சோதியை உள்கவல் லார்க்குக் கருவிடு சோதி கலந்து நின்றானே என்னுந் திருமூலர் திருப்பாட்டால் நன்கறியப்படும். அற்றேல் அஃதாக; இவ்வுடம்பினகத்தே வயிற்றி னடியில் மூலவனலும் அதன்கண் இறைவனொளியும் ஒளிரு மாப் போற், புறத்தே திருவாரூரின் கண்ணும் அவை யிரண்டும் ஒளிருதல் கண்டிலம், அதனால் அத் திருக்கோயில் இவ்விந்திய நாடாகிய உடம்பின் மூலத்தே அமைந்துள தென்றல் யாங்ஙனம் பொருந்துமெனின்; அது பொருந்து மாறு காட்டுதும். இவ்விந்திய நாட்டின் இயற்கை யமைப்பை ஓவியத்திற் காண்பார்க்கு, இத்தென் றமிழ் நாடு முக்கோண வடிவினதாய் அமைந்திருத்தல் நன்கு விளங்கும். முக்கோண வடிவு தீயின் வடிவினைக் குறிப்பதோர் அடையாளமாம். என்னை? நெருப்பு எரியுங்கால் அதன் அனற்பிழம்பு அடியில் அகன்று மேலெழுங்காற் குவிந்து முக்கோண வடிவின தாய்த்திகழக் காண்டலின், இத் தென்றமிழ்நாடு முக்கோண வடிவிற்றாய்த் திகழ்தல் கொண்டும், இதனை யடுத்தே இந்நிலவுலகத்தின் சூடு மிகுந்த நரம்பினோட்டம் (Equator) செல்லுதல் கொண்டும், வட நாடுகளெல்லாங் குளிர்மிகுந்தே நிற்க இந்நடு நரம்பினை யடுத்த தென்னாடுகளே வெம்மை மிகுந்தனவாயிருத்தல் கொண்டுந் தென்னாட்டின் கண்ண தான `திருவாரூர் இவ்விந்திய நாட்டுக்கு மூலமான முக் கோண வடிவின்கண் அமைக்கப்பட்டுள தென்னும் ஆன் றோருரை சாலவும் பொருந்துவதேயாம் என்க. இவ்விந்திய நாட்டின் வட பகுதியிற் குளிர்மிகுந்த நரம்பி னோட்டமும், இதன் றென் பகுதியில் அனல் மிகுந்த நரம்பினோட்டமும், இவை யிரண்டுக்கு மிடையே நடு நரம்பினோட்ட மும்அமைந்துள வென்று ஆசிரியர் தெய்வத்திருமூலர், இடைபிங் கலைஇம வானோ டிலங்கை நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை கடவுந் திலைவனங் கைகண்ட மூலம் படர்வொன்றி யென்னும் பரமாம் பரமே என்றருளிச் செய்தமையுங் கருத்திற் பதிக்கற்பாற்று. இச்செய்யுளிற் கூறப்பட்ட `இடைநாடி என்பது குளிர் மிகுந்த தொன்றாய் இமயமலைப் பக்கமாய்ச் செல்லா நிற்கின்றது. `பிங்கலை நாடி என்பது அனல் மிகுந்த தொன்றாய் இலங்கைப் பக்கமாய்ச் செல்லா நிற்கின்றது. இடைபிங்கலை இமவானோடு இலங்கை என்பதில் இடை என்பதனை இமவானோடும், பிங்கலை யென்பதனை இலங்கையோடும் நிரல் நிறையாக இயைத்துப் பொருள் கொள்க; இங்ஙனம் பொருள் கொள்ள அறியாதார், இடை நாடியை இலங்கையோடும், பிங்கலை நாடியை இமவா னோடும் இயைத்துப் பிழைபடுவர். சூடுமிகுந்த பிங்கலை நாடி இலங்கைப் பக்கமாய்ச் செல்லுமென்றலே இஞ் ஞான்றை இயற்கைப் பொருள் நூலுக்கும் பொருத்தமாய்க் காணப்படுகின்ற தல்லாமல், அஃது இமயமலைப் பக்கமாய்ச் செல்லுமென்றல் அதற்குப் பொருத்தமாய் காணப் படாமையும் ஆராய்ந் துணர்தல் வேண்டும். நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை என்பதில் மேரு என்பது பொதுவாக எல்லா மலைக்கும் பெயராகலின் அதனைத் திருவண்ணா மலைக்குப் பெயராகக் கோடலே பொருத்தமாம்; ஏனெனில், இலங்கைக்கும் இமயத்திற்கும் நடுநிற்குஞ் சிறந்த தெய்வமலை அதுவே யாகலானும், அடுத்து ஓதப்பட்ட தில்லைவனம் அத் திருவண்ணா மலைக்கு அணித்தாய் இருப்பதொன்றாக லானும், திருவண்ணா மலை யை நடுநாடியாகிய `சுழுனை யாகக் கொண்டா லல்லாமல் `தில்லையை அச்சுழுனையின் நடுவாகக் கொள்ளுதல் இயையாதாகலானும், இவ்வாறன்றி ஈண்டு `மேரு என்னுஞ் சொல்லாற் குறிக்கப்பட்ட மலை இமயமலைக்கும் அதற்கப்பா லுள்ள சீனதேயத்திற்கும் வடக்கே அப்பெயர் பெற்றுள்ள தொரு மலையெனக் கொள்ளின் அஃது இலங்கைக்கும் இமயத்திற்கும் நடுவணதாதல் செல்லாதாக லானும், செல்லா தாகவே அதன் நடுவிற்றில்லைமன்று உண்டென்றல் பொருந் தாதாலானும் இத்திருமூலரது திருப்பாட்டிற் போந்த `மேரு என்பதற்குத் திருவண்ணாமலை யெனப் பொருளுரைத்தலே பொருந்துவதாமென்று தெரிந்து கொள்க. இனி, இவ்வுடம்பினகத்தே நெஞ்சத்தாமரையில் இறைவன் ஒளிவடிவினனாய் விளங்கும் உண்மையினைச் சிறிது விளக்குவாம். மக்களாய்ப் பிறந்த மன்னுயிர்களும் மற்றைச் சிற்றுயிர்களுந் தமதுடம்பின் புறத்தேயுள்ள மெய், வாய், கண், மூக்குச், செவியென்னும் ஐந்து அறிவுப் பொறி களையும், நா, கை, கால், எருவாய், குறியென்னும் ஐந்து தொழிற் பொறிகளையும் இயக்கவல்லவைகளாயிருக் கின்றனவேயன்றி, உடம்பினகத்தே யுள்ள மூளை, நெஞ்சப்பை, மூச்சுப்பை, தீனிப்பை, மலஞ், சிறுநீர்ப்பை முதலானவைகளை யெல்லாந் தாம் வேண்டிய வாறெல்லாம் இயக்க வல்லவை களாயில்லை. நம் நினைவுக் கேற்றபடி யெல்லாம எவ்வாறு மூளை இயங்குகின்றது? நம்மையறியாமலே நாம் உறங்குவதும், நம்மை யறியாமலே நாம் விழிப்பதும் யாங்ஙனம் நடைபெறு கின்றன? நாம் உள்ளிழுக்குந் தூய காற்றைச் செந்நீரிற் சேர்ப்பித்து அதிலுள்ள நச்சுக்காற்றை வெளிப்படுத்தும் அருஞ் செயலை நெஞ்சப்பைகள் எவ்வாறு செய்கின்றன? நாம் உட்கொள்ளும் உணவை ஏற்குந் தீனிப்பை அதனை நம் முடம்பின் வளர்ச்சிக்கு இன்றியமையாது வேண்டும் பல வேறு சாறுகளாகஎவ்வாறு பிரித்து எவ்வாறு அவற்றை உட்செலுத்துகின்றது? அதனால் அதனினின்றும் பிரித்துக் கீழ்க்கழிக்கப்படுங் கழிவுகளாகிய மலமுஞ் சிறுநீரும் மல நீர்ப்பைகளுக்குப் போதலும் பின்னர் அவற்றினின்று புறம்போக்கப் படுதலும் எங்ஙனம் நிகழ்கின்றன? என்று எவ்வளவுதான் நாம் ஆராய்ந்து பார்த்தாலும் அந்நிகழ்ச்சி கள் நம் அறிவுக்குச் சிறிதும் புலப்படுகின்றில. நமதுடம்பின் அகத்துள்ள பல்வேறு வியத்தகு உறுப்புகளின் இயற்கையுஞ் செயலும் ஒருசிறிதும் அறிய மாட்டாச் சிற்றறிவினேமாகிய யாமே அவற்றைப் படைத்து யாமே அவற்றை இயக்கு கின்றேமென உரைத்தால், அவ்வறிவில்லா உரை அறிவிற் சிறியராயினார்க்கும் நகையினை விளையா தொழியுமோ? மற்று, அறிவிற் பெரியராயினார்க்கோ அஃது எத்துணைப் புல்லிய குருட்டுரையாகக் காணப்படும், ஆகவே, நமதுடம் பின் அகக் கருவி புறக்கருவிகளின் இயற்கையும் இயக்க மும்அறிய மாட்டாப் பேரறியாமை வாய்ந்த நாம் அவற்றை அமைத்தலும் நடத்தலும் ஒருசிறிதுஞ் செய்ய மாட்டாமை யின், நம் அறிவுக்கு எட்டா அவை யிரண் டனையுஞ் செய்ய வல்லவன் இறைவன் ஒருவனே யாவ னென்பதூஉம், அவ்விறைவன் அகம் புறம் என்னும் எல்லா இடங்களிலும் வான்வெளி போல் நிறைந்து நிற்கும் இயல் பினனாகலின் அவனே எல்லா உடம்புகளின் அகத்தேயும் ஊடுருவி நின்று அவ்வுடம்புகளின் அகப்புற உறுப்புகள் அத்தனையும்இயக்கி அவை தம்மை உயிர்களுக்குப் பயன்படுத்துகின்றன னென்பதூஉம் நன்கு முடிக்கப்படும். இங்ஙனமாக இறைவன் உடம்பினகத்துள்ள எல்லா உறுப்புகளிலும் நின்று அவையிற்றை இயக்குகின்றானேனும், அவ்வுறுப்புகளிற் றலைசிறந்ததாகிய நெஞ்சத்தாமரையினுள் நின்றே ஏனையெல்லா உறுப்புகளையும் இயக்குகின்றன னென்பது ஆராய்ச்சியால் இனிது புலனாகின்றது. ஒரு நாழிகை வட்டிலின் (கடிகாரத்தின்) அகத்தும் புறத்துமுள்ள உருள்களும் முட்களும்அதன் முதன்மையான சுழல்வில்லின் விரிவினாலேயே இயக்கப்படுதல் போலவும், ஒருபெருந் தொழிற் சாலையில் இயங்கும் பல்வகைப் பொறிகளும் அதன்கண் முதன்மையாய் மிகுவிரைவுடன் சுழலும் ஒரு பேர் உருவினாலேயே இயக்கப்படுதல் போலவும், ஒரு புகை வண்டித் தொடர் அதனை ஈர்த்துச் செல்லும் ஒரு நீராவி வண்டி யினாலேயே இயக்கப்படுதல் போலவும், மக்களுடம் பின் நெஞ்சத் தாமரையினுள்ளே விளக்கின் சுடர்க்கொழுந் தென அசையும் இறைவனது அருள்ஒளியினசைவினாலேயே இவ்வுடம்பின் உள்ளும் புறம்புமுள்ள எல்லா உறுப்புகளுந் தொடர்பு பட்டு அசையா நிற்கின்றன. இத்துணைச் சிறந்ததாகிய நெஞ்சப்பையி னசைவுக்குச் சிறிது ஊறுபாடு நேருமாயினும்இவ்வுடம்பினசைவு நின்றுவிடும்; அது நிற்கவே, உயிர் உடம்பின்கண் நிலையுதல் இல்லையாய் ஒழிந்துபோம் இது, நெஞ்சடைப்பு நோயால் ஒரு நொடிப் பொழுதில் இறந்து படுவார் மாட்டு வைத்து நன்கறியப்படும் அற்றேல் நமது அறிவி னியக்கத்திற்குத் தலை யின்கண் அமைந்த மூளையே இன்றியமையா உறுப்பாய் விளங்கி நிற்றலின் அதன்கட் புலப்பட்டு நின்றே இறைவன் இவ்வுடம் பினை இயக்குகின்றான் என்னாமோவெனின்; என்னாம்; என்னை? விழித்திருக்கும் நிலையிலன்றி, அயர்ந்த உறக்கத்தில் மூளையிருந்தும் அஃது உயிரின் அறிவு விளக்கத்திற்குத் துணை செய்யாமல் ஓய்ந்து கிடத்தலானும், மற்று நெஞ்சத் தாமரையோ விழிப்பின் மட்டுமேயன்றி உறக்கத்திலும் ஓவாது இயங்குதலானும், நோய் கொண்டார் சிலர்க்கு மூளையை மண்டையினின்றும் பிரித்தெடுத்த வழியுஞ் சில நாழிகை நேரம் அவரதுயிர் அவருடம்பின்கண் நிற்க அவரது நெஞ்சப்பையை அவ்வாறு அவரது உடம்பினின்றும் பிரித்தெடுத்த அந்நொடியே அவரதுயிர் உடம்பைவிட்டு ஏகக்காண்ட லானும், நெஞ்சத்தாமரையின் இயக்கமே இவ்வுடம்பினியக்கத்திற்கும் அதன்கண் உயிர் நிலவுதற்கும் இன்றியமையாததாய் நிகழ்கின்றதென்பதூஉம், அவ்வியக்கம் மக்களறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டா நிலைக்கண் நிகழ்தல் பற்றி அதனை நிகழ்த்துவான் எல்லாம் வல்ல இறைவன் ஒருவனேயாவன் என்பதூஉம் பெறப் படுதலின் என்க. விழிப்பின்கண் மூளையில் முனைத்து நின்ற உயிர் உறக்கத்தின்கண் நெஞ்சப்பையினுட் சென்றடங்கிவிட, அதனை அங்கே சில நாழிகை நேரம்இளைப்பாற அடக்கி வைத்து அவ்விளைப்புத் தீர்ந்தவுடன் அதனை ஆண்டு நின்றும் மேலெழுப்பிவிடும்இறைவனது அருட்பெருஞ் செயல் நெஞ்சத் தாமரையினுள்ளே தான் ஓவாது நடை பெறுகின்றதென ஓர்ந்துகொள்க. இந்நெஞ்சத் தாமரையின் கண் இடைவிடா தொளிரும் இறைவன்றன் றிருவரு ளொளியிலே தமது கருத்தைப் பதித்திருப்பார்க்கு எல்லாப் பெறற்கரும் பேறுகளும் வாய்க்குமென்பது தெரிப்பார் ஆசிரியர் தெய்வத்திருமூலர், நாசிக் கதோமுகம்பன்னிரண் டங்குலம் நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல் மாசித்தி மாயோகம் வந்து தலைப்பெய்யுந் தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாமே. என்று திருமந்திரத்தின் கண்ணும் அருளிச் செய்தாரென்பது. வடமொழியிற் கைவல்யோப நிடதமும், தனிமையான இடத்தே இனிதிருந்து, தூயனாய்க், கழுத்துத் தலை யுடம்புகளை நேரொக்க நிறுத்தி, நிலை களைக் கடந்து ஐம்புலன்களையும் ஒடுக்கி, அன்பினாற் றன் ஆசிரியனை வணங்கி, நெஞ்சத்தாமரையைத் துகளற்ற தூயதாக நினைந்து, அதன் நடுவிலே மாசற்றதாய்த் துயர மில்லாததாய், எண்ணுதற் கரியதாய், வெளிப்படுதலில தாய்ப், பல வடிவினதாய்ச் சிவம் என்னும் பெயரினதாய், உலகங்கள் ஒடுங்குமிடமாய், அழிவில்லாததாய், நான் முகற்குப் பிறப்பிடமாய், அது வெனப்படுவதாய் முதல், நடு, ஈறு இல்லாத தாய், ஒரே பொருளாய், எங்கும் நிறைந்ததாய், அறிவும் இன்பமும் வாய்ந்ததாய், உருவமற்றதாய், இரண் டற்றதாய், உமையொரு கூறதாய், எல்லாவற்றிற்கும் மேலான தலைமையுடையதாய்ச் செல்வத்தின் மிக்கதாய் மூன்று கண்களையுடையதாய், நீலமிடற்றினதாய்ப் பொறு மையிற் சிறந்ததாய், எல்லா வற்றிற்கும் பிறப்பிடமாய், எல்லாவற்றினையுஞ் சான்றாக நோக்குவதாய் இருப்பதனை வழுத்தி, அதனால் முனிவனாகி,இருளின் மேற் போவன் என்று இங்ஙனமே நெஞ்சத்தாமரையுள் வைத்து இறைவனை வழிபடுமாற்றை விரித்துரைத்தமை காண்க. அது பொருந்துமாயினும், உடம்பினகத்தே இறைவன் முனைத்து நின்றாடும் உறுப்புத் தாமரை முகைவடிவாய்த் தொங்கும் நெஞ்சப்பையின் அகமே யாயினாற்போலப் புறத்தே இவ்வுலகினுக்கு அல்லது இவ்விந்திய நாட்டுக்குத் தில்லைச்சிற்றம்பலமே நெஞ்சுத்தாமரையா மென்றல் யாங்ஙனம் பொருந்துமெனின்; அதனையுஞ் சிறிது விளக்குவாம். இந்நிலவுலகின் நடுவே ஊடுருவிச் செல்லும் அனற்கோடு இலங்கைக்குத் தெற்கேயுளதேனும், அதன் பரப்பு அதற்குத் தெற்கேயும்வடக்கேயும் ஆயிரத்தறுநூறு கல்வரையில் உளதென்று இஞ்ஞான்றை நிலநூல் வல்லார் கணக்கெடுத்திருத்தலின், இலங்கைக்கு வடமேற்கிலுள்ள தான தில்லைச் சிற்றம்பலம் அவ்வனற் கோட்டின் பரப்பின் கண்ணே தான் அமைந்திருத்தல் தெள்ளிதின் விளங்கா நிற்கும். உயிர்களதுடம்பின் நடுவே செல்லுஞ் சுழுனை நாடிபோல், இவ்வுலகின் நடுவே அனற்கோடு செல்கின்ற தெனவும், அச்சுழுனை நாடியிற் றொங்கும் நெஞ்சத்தாமரை முகிழ் போல் அவ்வனற்கோட்டின்கட் டில்லைச் சிற்றம்பலம் அமைந்துளதெனவும் திருவாதவூரடிகள் புராணமும் கோயிற் புராணமும்முறையே இவ்வுண்மையினை, இடம்படும் உடம்பின் மூலத்தெழுந்தநற் சுழுனை நாடி உடன்கிளர் ஒளியே யாகி யொளியில் அஞ்செழுத்தும் ஒன்றாய் நெடுங்குழல் ஒசையாகி நிலவும்அவ் வோசைபோய் அங்கு அடங்கிய இடமே யென்றும் ஆடும் அம்பலம தாகும் என்றும், நாடரு நடுவின் நாடி நலங்கிளர் தில்லை நேர்போய்க் கூடும்அங் கதனின் மூலக் குறியுளது அதற்குத் தென்னர் மாடுறு மறைகள் காணா மன்னும்அம் பலமொன்று உண்டு அங்கு ஆடுதும் என்றும் என்றான் என்னை யாளுடைய ஐயன் என்றும், விளக்கிக் காட்டினமை காண்க. இன்னும் இந்நிலவுலக அமைப்பினைக் காட்டும் ஓவியத்தினை ஒரு சிறிது நோக்குவார்க்கும், இந் நிலவுருண்டையின் ஒரு பாதியில் இவ்விந்திய நாடு நடுவே யமைந்திருத்தலும், இத்தென்றமிழ் நாடு அதில் ஒரு தாமரை முகைவடிவாய்த் தொங்கிக் கொண்டிருத்தலும், அத்தாமரை முகையினுள்ளே தில்லைச் சிற்றம்பலந் திகழ்ந்து கொண்டிருத்தலுங் கண் கூடாய்க் காணக்கிடக்கும் என்க. எனவே, நமதுடம் பினகத்தே நெஞ்சத் தாமரையினுள் நுண்ணிய வெளியிலே அஃதாவது சிற்றம்பலத்திலே இறைவனது அருளொளி முனைத்து விளங்கி யியங்கும் இயக்கத்தால் நம்முடம்பு முயிரும் இயக்கப்படுதல் போலவே, இவ்வுலகின் புறத்தேயுந் தாமரை முகிழ்வடிவாய் அமைந்தஇத்தென்றமிழ் நாட்டில் தில்லைச் சிற்றம்பலமாகிய நுண் வெளியிலே இறைவனது அருளொளி யசைவாகிய திருக்கூத்து நடைபெற்று இவ்வுலகினை இயக்கா நிற்கின்ற தென்னு முண்மை நன்கு பெறப்படு மென்க. அஃதொக்கு மாயினும், இந்நிலவுலகின் ஒருபாதியின் கண்ணதான இவ்விந்திய நாட்டின் தில்லைச் சிற்றம்பலத்தே இறைவனது திருவருட் கூத்து நடை பெறுமென்றாற் போல, அதன் மறுபாதிக் கண்ணதான அமெரிக்க தேயத்திலும் அப்பெற்றியதான ஓரிடத்தே இறைவன்றன் அருட்கூத்து நடைபெறுமெனக் கூறுதல் வேண்டும்; மற்று அங்ஙனங் கூறு தற்குச் சான்றில்லை யாலோவெனின்; அற்றன்று; ஆண்டும் இறைவன்றன் அருட்கூத்து நிகழும்இடம் உண்டென்பது காட்டுவாம். வட அமெரிக்காவுக்குந் தென்னமெரிக்காவுக்கும் நடுமையமாகிய மெகுசிகம், பேரு என்னும் பண்டை நாடுகளில் இற்றைக்குச் சிறிதேறக் குறைய ஏழாயிர ஆண்டு கட்கு முன்னமே அமைக்கப்பட்ட மிகப்பெரிய பழைய சிவபிரான் திருக்கோயில்கள் உண்டு. அவைகள் இந்நாளில் இடிந்து காடு மூடிக்கிடப்ப, வெள்ளைக்கார அறிஞர்கள் அக்காடுகளின் உள் நுழைந்து சென்று, அத்திருக்கோயில் களின் மிக வியப்பான அமைப்புகளைக் கண்டு இறும் பூதுற்றவர் களாய், அவற்றின்மேன் மூடிய காடுகளை அழித்து, இடிந்து கிடக்கும் அக்கோயில்களையும் இடி யாமல் அவற்றின்கண் எஞ்சி நிற்கும் பகுதிகளையும் பாதுகாத்துக், காண விரும்புவாரெல்லாரும் அவற்றை வந்து காண்டற்கு வேண்டும் ஒழுங்குகள் எல்லாம் செய்திருக் கின்றார்கள். அக்கோயில்கள், நம்தமிழ் நாட்டில் தில்லை, ஆரூர், கூடல், திருவண்ணாமலை முதலிய நகர்களில் உள்ள சிவபிரான் திருக்கோயில்களைப் பார்க்கினும் மிகப் பெரியன வாயும், மிக அரிய தொழில் நுட்பம் வாய்ந்தன வாயும், இறைவன் றிருவுருவம் நிறுத்தப்பட்ட கருவறை களின் சுவர்களிற் பொற்றகடுகள் பதித்துமேன் முகடுகளிற் பொன்னோடுகள் வேயப் பட்டனவாயுங் காணப்படு கின்றன, இக்கோயில்களிற் பகலவன் திருவுருவில் வைத்தே அஞ் ஞான்றை மக்கள் சிவபிரானை வணங்கி வந்தனர்; அனற் சுடருக்கு அடையாளமான சிவலிங்கங்களும் அக்கோயில் களில் நிறுத்தப்பட்டிருக் கின்றன; இச்சிவலிங்க வடிவாக நிறுத்தப்பட்டிருக்கும் ஓர் உருவினைக் கண்ட வெள்ளைக்கார அறிஞர் சிலர் அதனைத் தமது மதத்திற்குரிய `சிலுவை யெனவே நினைந்துவிட்டனர். ஆனாற் கிறித்து மதந் தோன்று தற்குப் பல நூற்றாண்டுகளின் முன்னரே நடு அமெரிக்காவின் கண்ணவான நகர்களில் உள்ள பழைய கோயில்களில் நிறுத்தப்பட்ட அத்திருவுரு வினைச் சிலுவை என்றல் ஒரு சிறிதும் இசையாது. நடுவே ஒரு கோட்டு வடிவுஞ் சுற்ற ஒரு வட்ட வடிவம் உடைய ஒர் உருவே தொலைவி லிருந்து நோக்கு வார்க்குச் சிலுவை போற் றோன்றா நிற்கும், இனிச், சிலுவை வடிவுஞ் சிவலிங்க வடிவேயாகுமெனும் உண்மையினை அவ் வெள்ளைக்காரரில் அறிவான் ஆன்ற ஒரு சான்றோரே2 நன்கெடுத்து விளக்கிக் காட்டியிருக்கின்றார். ஆதலாற் பழைய நடு அமெரிக்காவின் திருக்கோயில்களில் நிறுத்தப் பட் டிருக்கும் திருவுருச் சிவலிங்க வுருவே யல்லது சிலுவை யுருவன்றெனக் கடைப்பிடிக்க. அங்ஙனம் இறைவனது ஒளியுருவு நிறுத்தப்பட்டிருக் கும் ஒருகோயிலின் கருவறை முழுதுங் பொற்றகடு பதித்துப் பொன்னொளி வீசுதல்பற்றி அதனை அஞ்ஞான்றிருந்த மக்கள் பொன்னம்பலம் எனத் தமது மொழியில் வழங்கி வந்தமையும் அந்நாட்டின் பண்டை வரலாறு கூறும் நூலால் நன்கறியக் கிடக்கின்றது.3 எனவே, இந்நிலவுலகின் ஒரு பாதியில் நெஞ்சத்தாமரையென விளங்குந் தில்லைப் பொன்னம்பலத்தே இறைவன்றன் அருட்கூத்து நடை பெறுமாறு போலவே, இதன் மறுபாதியில் நெஞ்சத் தாமரை யென வழங்கும் நடு அமெரிக்காவின் ஒரு பழம்பெருந் திருக்கோயிலின் பொன்னம்பலத்தேயும் இறைவன்றன் அருட்கூத்து நடை பெறுகின்றமை தெள்ளிதின் உணரப் படும். நாமிருக்கும் இம் மேலுலகினுக்கு நேர்கீழ்ப் பாதல உலகு அமெரிக்க தேயமேயாகும்; அத்தேயத்தின் நடுவண தான மெகுசிக நகரும் நாம் வணங்குந் தில்லை யம்பலத் திற்குச் சிறிதேறக் குறைய நேர்கீழ்க் கண்ணதாகவே அமைந் திருக்கும் உண்மையினை இந்நிலவுலகின் ஓவியத்தை நோக்கு தலால் எளிதில் அறிந்து கொள்ளலாம். இன்னும் மேலே தில்லையம்பலமுங் கீழே மெகுசிக அம்பலமும் அமைந் திருக்குமிடம் இந்நிலவுலகின் அனல் நடுக்கோட்டை யடுத்தேயிருத்தலானும், அவ்வனல் நடுக்காட்டிலிருந்தே இந்நிலவுலகு மேற்கிலிருந்து கிழக்கு முகமாய்ப் பகலவனைச் சுற்றிச் சுழலுதலானும், இறைவன்றன் அருட்கூத்தாகிய இயக்கம் இவ்விரண்டு அம்பலங்களுக்கும் ஊடாகவே நடைபெறு கின்றதென ஓர்ந்து கொளல் வேண்டும் என்பது. இனிப், பிரயாகையை நெஞ்சமாகக் கோடல் பொருந் தாமையினை மேலே காட்டினாம்; அங்ஙனமே, குருக்கேத் திரத்தை மார்பகக் கோடலும் பொருந்தாமை மேலே காட்டப்பட்டது. ஆகவே, அவ்விரண்டனையும் புறத்தே அவ்வுறுப்புகளாக நினைதலைவிட்டு, இவ்வுடம் பினகத்தே நெஞ்சத்தாமரையைப் பிரயாகையாகவும், நெஞ்சத்திற்குப் புறத்தேயுள்ள மார்பினைக் குருக்கேத்திர மாகவும் நினைந்து கொண்டு, அவையிரண்டனையும் ஒருவாற்றாற் பொருத்திக் கொள்க. இனிக். காசியைப் புருவநடுவின்கண் உளதாக வைத்து வழிபடுதற்குரிய இயைபினைச் சிறிது விளக்குவாம், நமதுடம்பின் நடுவே செல்லுஞ் சுழுனைநாடியின் இடப் புறத்தே இடாநாடியும் வலப்புறத்தே பிங்கல நாடியுஞ் செல்கின்றன. இடாநாடியானது வலக்காற் பெருவிரலி லிருந்து துவங்கி, வயிற்றின்கீழ் மூலத்தே வந்து குறுக்கிட்டு இடப்பக்கத்தே மாறி இடது மூக்கின் கண் வந்து முடிகின்ற தென்றும், பிங்கல நாடியானது இடக்காற் பெருவிரலி லிருந்து துவங்கி மூலத்தே வந்து குறுக்கிட்டு வலப்பக்கத்தே மாறி வலது மூக்கின்கண் வந்து முடிகின்றதென்றும், நடுநிற்குஞ் சுழுனை நாடி எருவாய் கருவாய்க்கிடையே துவங்கிக் கொப்பூழ் மேல்வயிறு, நெஞ்சு, மிடறு, புருவ நடு என்னும் ஐந்திடங்களின் அகங்களையும் ஊடுருவிக் கொண்டு தலையின் உச்சியிற் சென்று முடிகின்றதென்றுந் தவ நூல்கள் நுவலா நிற்கின்றன, இவ்வாறு தலைக்கண் வந்து முடியும் நரப்புக் குழைகள் மூன்றும் புருவத்துக்கு நேரே தலையினகத் துளதாகிய நடுவிடத்தே போந்து ஒருங்கு கூடுதல் போலப் புறத்தே காசிமா நகரின் கண்ணுங் கங்கை யமுனை சரசுவதி என்னும் மூன்றியாறுகளும் போந்து ஒருங்கு கலத்தலிற் காசியைப் புருவ நடுவின்கண் உளதாக வைத்து வணங்கு தல் சாலவும் பொருந்துவதேயாம். பண்டைக் காலத் தோடிய சரச்சுவதி யென்னும் யாறு இக்காலத்தில் நிலத் தினுட் சுவறி இலதாயிற்றேனும் முன்னொருகால் மூன்றி யாறுகளும் ஒருங்குகலந்த இடங் காசிமா நகரேயாகலின், அதனை அதுபற்றிப் புருவ நடுவினதாக வைத்து வழிபாடாற்றுதலில் இழுக்கொன்று மில்லையென்க. இன்னும், புருவத்துக்கு நேராகத் தலையினுள்ளே ஒருகோடு செல்வதாகவுந் தலையுச்சியின் நடுவிருந்து கீழ் நோக்கி ஒரு கோடு அதனுள்ளே செல்வதாகவும் நினைந்து, அவையிரண்டும் ஒன்றையொன்று ஊடறுக்கும் இடமே புருவ நடுவென்றும் நெற்றிக்கண்ணென்றும்,இறைவனும் உயிரும் ஒன்றனோடொன்று பிரிவற விராய் ஒளிரும் நடுநிலையா மென்றும் உணர்ந்து கொள்க. இதனை ஆசிரியர் திருமூலர், கண்நாக்கு மூக்குச் செவி ஞானக் கூட்டத்துட் பண்ணாக்கி நின்ற பழம்பொரு ளொன்றுண்டு அண்ணாக்கி னுள்ளே அகண்ட ஒளிகாட்டிப் புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே என்றும் நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம் பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடஞ் சிற்றம்பல மென்று தேர்ந்துகொண் டேனே என்றும் நன்கு தெருட்டியருளினமை காண்க இனி, இவ்விந்திய நாடாகிய உடம்பிற்கு நெற்றி போல்வது திருக்கேதாரம் என்றும்,அதன் தலையுச்சி போல்வது திருக்கைலாயம் என்றுங் கூறினமை, முன்னை யது இமயமலைச் சாரலிலும் பின்னையது அம்மலைமேலும் உண்மையினாலென்பதை முன்னரே விளக்கிப் போந்தாம், ஆகவே, புறத்தே ஏழிடங்களில் உளவான திருக்கோயில் களிற் சிவபிரா ன் றிருவருள் ஒளி முனைத்து நின்று ஆருயிர் கட்கு அருள் வழங்குமாப் போல், இவ்வுடம்பினகத்தேயும் மூலம், நெஞ்சம், செஞ்சத்தாமரை, மார்பம், புருவநடு, நெற்றி, சென்னி என்னும் ஏழிடங்களிலும் இறைவன்றன் அருளொளி முனைத்து நின்று ஆருயிர்கட் கருள் செய்யும் மறைந்த பேருண்மையினை மனத்தின்கட் பதித்துக் கொள்ளல் வேண்டு மென்பது. இனி, இவ்விந்திய நாட்டைத் தாமும் அங்ஙனமே ஓர் உடம்பாக உருவகப்படுத்தி, அவ்வுடம்பின்கண் முதன்மை யான ஆறிடங்கள் உளவெனவும் அவை மூலம், கொப்பூழ், மேல்வயிறு, நெஞ்சம், மிடறு, புருவ நடு4 என்னும் ஆறுமா மெனவும், அவ்வாறிடங்களிற் புறத்தேயும் அகத்தேயுந் திருவாரூர், திருவானைக்கா, திருவண்ணாமலை, தில்லைச் சிற்றம்பலம், திருக்காளத்தி, காசி என்னும் ஆறு திருக்கோயில்களும் விளங்காநிற்குமெனவும் பரஞ்சோதி முனிவர், திருவளர் ஆரூர் மூலம், திருவானைக் காவே நாபி5 மருவளர் பொழில்சூழ் அண்ணாமலைமணி பூரம் நீவிர் இருவருங் கண்ட மன்றம் இதய மாம் திருக்கா ளத்தி பொருவருங் கண்டம் ஆகும் புருவமத் தியமே காசி என்று தாமியற்றிய திருவிளையாடற் புராணத்திலே கூறாநிற்பர். ஆனால், திருமந்திரம் முதலான பழைய நூல்கள் இங்ஙனங் கூறக் காணேம். என்றாலும்,இக் கூற்றும் பொருத்தமாகவே காணப்படுகின்றது; யாங்ஙனமெனில், `திருவாரூர் என்பது எருவாய் கருவாய்க் கிடையேயுள்ள மூலத்தின் கண்ணதாதலை முன்னரே விளக்கிப் போந்தாம். இனித், `திருவானைக்கா என்பது இறைவன் ஊற்று நீரிலும் விளங்குகின்றா னென்பதனைக் காட்டுதற் பொருட்டு நீர் ஊற்று உள்ளதோரிடத்தில் அமைக்கப்பட்ட தொரு திருக்கோயிலாகும்; இது புறத்தே நீரூற்றுள்ள தோரிடத்தில் அமைக்கப்பட்டாற்போலவே, நமதுடம்பின் அகத்தேயுங் கொப்பூழ்க்கீழ் உள்ள தீனிப்பை எந்நேரமும் நீர்நிறைந்ததாக இருத்தலின் அதன் கண்ணும் இறைவன் அமர்ந்திருக்கும் அத்திருக்கோயில் உண்டென்பது பொருத்த மேயாம். நாம் வாயிலிடுஞ் சோறு, காய், கனி, கிழங்கு, வித்துக், கீரை முதலியன பருப்பொருள் களேயாயினும், அவை வாயிலிடப் பட்ட வளவானே எச்சில் நீருடன் கூட்டிக் குழைத்து நீராக்கிக் கீழே இறக்கப்படுதலானும், அங்ஙனம் எல்லாப் பருப்பொருள் களும் நீராகக் குழைக்கப்பட்டுத் தீனிப்பைக்குச் சென்றா லல்லாமல் அவைசெரியாமற் கக்கப்படுதலானும், ஒரோ வொருகாற் செவ்வனேமெல்லாமல் இறக்கப்பட்ட பண்டங்கள் தீனிப்பையினுட் சென்றவுடனே செரித்தற் பொருட்டு வாயினின்றும் உமிழ்நீர் ஒவாது சுரந்து கீழிறங்கித் தீனிப்பைக்குச் சென்று கொண்டே யிருத்த லானும், அதனொடு பித்தப்பையிலுள்ள பித்த நீரூந் தீனி ப்பையினுள் வந்து சேர்ந்து அவ்வுணவைச் செரிக்கச் செய்தலானும், இவ்விருவகை நீரும் போதாவிடின் விடாய் எடுப்ப மேலும் மேலும் நாம் தீஞ்சுவைத் தெண்ணீர் பருகிக் கொண்டே யிருத்தலானுங் கொப்பூழின் கீழிருக்குந் தீனிப்பை எந்நேரமும் நீர் நிறைந்ததாகவே இருக்குமாகலின் அதனை அகத்துள்ள திருவானைக் காவாகக் கோடல் சாலப் பொருந்துவதே யாம் என்க. இனித், `திருவண்ணாமலை என்பது இறைவன் நெருப் புருவாய்த் தோன்றியதோ ரிடமாதல் பழைய வரலாறுகளால் அறியப்படுவதொன்றாகும். இங்ஙனம்இறைவன் நெருப்புரு வாய் நின்ற இயல்பினை ஆசிரியர் திருமூலரும், பிரமனும் மாலும் பிரானே நான்என்னப் பிரமன் மால் தங்கள் பேதைமை யாலே பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க அரன்அடி தேடி அரற்றுகின் றாரே எனத் திருமந்திரத்தில் (372) அருளிச் செய்திருத்தல் காண்க. நமதுடம்பின் வயிற்றிலுள்ள தீனிப்பை மேற்சொல்லியவாறு நீர் நிறைந்ததா யிருப்பினும் அதன் மேற்பகுதி சூடுடையதாக அமைந்திருக்கின்றது, ஏனென்றால், வெளியே உணவு வெந்து நன்றாய்ப் பதப்படுதற்கு நீரும் நெருப்பும் இன்றி யமையாது வேண்டப் படுதல் போல, உள்ளே இரைப்பையிற் சென்ற உணவும் இன்னும் நன்றாய்க் குழையவெந்து கூழாகிச் செந்நீரிற் கலத்தற்கு நீரொடு நெருப்பும் இன்றி யமையாது வேண்டப்படுகின்றது. அதனாற், றீனிப்பையின் மேற்பகுதி எஞ்ஞான்றும் அனன்று கொண்டேயிருக் கின்றது. ஆகவே புறத்தே நெருப்புருவில் இறைவன் றிரு வண்ணாமலையில் விளங்கித் தோன்றினாற் போலவே, அகத்தே தீனிப்பையின் மேற் பகுதியில் உளதாகிய வெம்மையிலும் விளங்கி நிற்பனென்பதூஉம் பொருத்தமாகவே காணப்படுகின்றது. இனி, இதன்மேலுளதாகிய நெஞ்சத்தாமரையின் கண்ணதாம் வெளியிலே அசையா நிற்கும் ஒரு பெருவிரல் அளவினதான ஒளிப்பிழம்பிலே இறைவன் விளங்கி நின்று இயக்கும் இயக்கத்தையே திருவம்பலக் கூத்து எனத் தவநூல்கள் நுவலுமாறும்,அக்கூத்து நிகழும் இடமே அகத்தும் புறத்துந் திருச்சிற்றம்பலமென வழங்கப்படுமாறும் முன்னமே விளக்கிக் காட்டினாம், இனித், `திருக்காளத்தியென்பது எல்லாம் வல்ல இறைவன் காற்றின்கண் முனைத்துநின்று அதனை இயக்கு மாற்றைக் காட்டுதற்கென்று அமைக்கப்பட்ட திருக்கோயி லாகும், அஃதங்ஙனம் புறத்தே அமைக்கப் பட்டாற் போலவே, நமதுடம்பின் அகத்தும் மிடற்றின் கண்ணே இயங்காநின்ற காற்றினிடத்து இறைவன் விளங்கி நிற்றலின் மிடற்றின் மேற்பகுதியே சிவபிரான் உள்நிற்குந் திருக்காளத்தி யாகும். வெளியேயிருந்து உள்ளும் உள்ளேயிருந்து வெளியும் முறையே யிழுத்து விடப்படும் உயிர்வளியினியக்க மில்லையேல் நமதுடம்பு ஒருசிறிது நேரத்தில் அழிந்துபடுதல் திண்ணமேயாம். ஆகவே, உயிர்வளி இயங்கும் மிடற்றினைத் திருக்காளத்தி யாகக் கூறியதுபொருத்தமுடைத்தேயாம். இனிக், `காசியென்பது கங்கை, யமுனை, சரச்சுவதி என்னும் மூன்றியாறுகளும் ஒருங்கு கூடுமிடத்தே புறத்தில் அமைக்கப்பட்டாற்போல, அகத்தில் இடை, பிங்கலை சுழுனையென்னும் நரம்புக்குழாய்கள் மூன்றும் ஒருங்கு கூடும் இடமாகிய புருவ நடுவில் அக்காசியுளதாதலை முன்னரே விளக்கிக் காட்டினாம். தில்லைக்கு வடக்கேயுளதாகிய திருவண்ணாமலையை அதற்குத் தெற்கே யுளதுபோற் கொண்டு மேல் வயிற்றுளே திருவண்ணாமலையையும் அதற்கு மேல் நெஞ்சத் தாமரையிற் றில்லைச் சிற்றம்பலத்தையும் வைத்துரைத்தது மட்டும் பொருத்தமாகாமை உணரற்பாற்று. இங்ஙனமாகப் புறத்துளதானஇவ் விந்திய நாடென் னும் உடம்பின் முதன்மையான ஏழு அல்லது ஆறிடங்களில் ஏழு அல்லது ஆறு திருக்கோயில்கள் எடுப்பித்து, அவற்றின்கண் நிறுத்திய சிவலிங்க அருட்குறியிலே முதல் வனை வழிபட்டு வருதல்போல, நமதுடம்பின் அகத் துளவான முதன்மையான ஏழு அல்லது ஆறிடங்களில் விளங்காநின்ற இறைவன் றன் ஒளி வடிவினை நினைந்து வழிபாடு ஆற்றுதலும் இன்றியமை யாததாதல் காண்க. இனிப் பிற்றைஞான்றைச் சிவபிரான் றிருக்கோயில்கள் நமதுடம்பின் அமைப்பினையொப்ப வகுக்கப்பட்டவாறும் ஒரு சிறிது விளக்குவாம். மக்களுடம்பினை மேற்கே தலையுங் கிழக்கே காலுமாகக் கிடத்தி வைத்தாலென, இத்திருக் கோயில்களிற் பெரும்பாலனவும் அமைத்து வைக்கப் பட்டி ருக்கின்றன, கிழக்கேயுள்ள கால்கள் இரண்டுங் கோபுரங் களாகும்; அக்கால்களில் இடைவழியே கோபுரங் களின் வாயிலாகும்; அக்காலிரண்டன் ஊடே சென்று எருவாய் கருவாய்க் கிடையே யுள்ள மூலத்திற் சென்று சேர்வதே, கோபுர வாயிலினூடே சென்று மூத்த பிள்ளையாராகிய யானை முகக் கடவுளின் இருக்கையைச் சென்று சேர்வதாகும்; மூலத்தே பாம்பு சுருண்டாற் போல இருக்குங் குண்டலி யுருவினை வணங்குதே, அம் முதலிருக்கையில் ஓங்கார வடிவாய் அமர்ந்திருக்கும் பிள்ளையாரை வணங்குவதாகும்; அம்மூல குண்டலியை யெழுப்பி அதனுடன் சென்று, கொப்பூழ்க்குக் கீழே மிக நுண்ணிய ஒலிகள் மயில் முட்டை யுட் பலநிற நீர்போல் நிற்குங் கீழ் வயிற்றினுட் சேர்ந்து, ஆண்டுள்ள இறைவனை இறைஞ்சுவதே. அப்பிள்ளையார் இருக்கையைக் கடந்து சென்று பன்னிற மயில்மேல் அமர்ந்திருக்கும் முருகப்பிரான் இருக்கையை அடைந்து அவனை வணங்குவதாகும்; அக்கொப்பூழின் கீழ்வயிற்றினை அந்நுண்ணிய ஒளியுடன் கடந்து மேலேறி மேல்வயிற்றுனுட் சென்று ஆண்டுத் தன் இருவகைச் செருக்கினையும் ஒழித்து இறைவன் றிருவருட்கீழ்நிற்றலே, அம்முருகப்பிரா னிருக்கை யைக் கடந்து பலி மேடையின் அடிக்கீழ் விழுந்து வணங்கு வதாகும்; இனி, அம்மேல் வயிற்றினையுங் கடந்து மேலேறி நெஞ்சத்தாமரையிற் சென்று சேர்வதே, பலிமேடையைக் கடந்து எருது வடிவாய் அமர்ந்திருக்கும் நந்தியைச் சேர்வதாகும்; நெஞ்சத்தாமரை முகிழ் இறைவற்கு இருப்பிட மாகலின், அதுபோல் இறைவற்கு ஊர்தியாகிய நந்தியை வணங்கிக் கொண்டு, மிடற்றினூடே செல்வது போல், இறைவன் எழுந்தருளியிருக்குங் கருவறை வாயிலினூடே நுழைந்து, புருவ நடுவிற்கு நேரே தலையின் நடுவணதான சிற்றறையினுட் சென்றடைதல் போல் அக்கருவறை நடுவிற் சேர்ந்து, அத்தலைநடுச் சிற்றறையினுள் விளங்காநின்ற ஒளியுருவிற் சிவபிரானை வழிபடுதல்போல், அக்கோயிற் கருவறையில் அவ்வொளிப் பிழம்பின் அடை யாளமாக நிறுத்தப்பட்டிருக்கும் அருட்குறியை வணங்கி வழிபட்டு நிற்றலாகுமென்க. இங்ஙனந் தவத்தான் மிக்கோர் தம்முடம்பினுள்ளே இறைவனை மூலத்திற் றுவங்கி மேன்மேல் ஏறி வழிபடு முறையில் வைத்து, அவரது தூய தவவுடம்பின் அமைப் பினை யொப்பச் சிவபிரான் றிருக்கோயில்கள் வகுத்து அவற்றினுள்ளே அவர் இறைவனை வழிபடுமாறுந் தெற் றென எவர்க்கும் விளங்குமாறும் ஆன்றோர் விளக்கிக் காட் டினமை காண்க. இனி, உடம்புகளெல்லாம் வெளிப்பார்வைக்கு எழுவகை முதற்பொருள்களால் ஆக்கப்பட்ட பருப்பொருள் போற் றோன்றினும், ஒவ்வோருடம்பும் அகத்தே வெவ்வேறு நான்குடம்புகளோடு ஐவகை யுடையதாகும், வெங்காயம் என்னுங் கிழங்கு வெளிநோக்கில் ஒன்று போற்றோன்றினும், அஃது உரிக்க உரிக்கப் பற்பல தோல்களையுடை தாமாறு போல நம்மனோருடம்பும் அகத்தேயுள்ள வெவ்வேறு நான்குடம்புகளோடு ஐவகையுடையதாய் அமைக்கப் பட்டிருக்கின்றது அவை: உணவுடம்பு, வளியுடம்பு, மனவுடம்பு, அறிவுடம்பு, இன்பவுடம்பு என்பனவாகும் ; இவற்றை வட நூலார் முறையே அன்னமயகோசம், பிராண மயகோசம், மனோமயகோசம் விஞ்ஞானமயகோசம், ஆனந்தமயகோசம் என வழங்காநிற்பர். இவ்வாறு ஒவ்வோ ருடம்பும் ஐந்துடம்புகள் தொக்க தொகையாய் இருத்தலை ஆசிரியர் அருணந்திசிவனாரும் மருவா னந்தம் விஞ்ஞானம் மனோபி ராணன் அன்னமயம் உருவாந் தன்மை உண்டாய்முன் னொன்றுக் கொன்று சூக்குமமாய் வருமாம் அன்ன மயம்பற்றி மாயை முதற்கா ரணமாகும் அருவாய் ஆன்மா ஐங்கோசத் தார்ப்புண் டவற்றி னகம்புறமாம் என்னுஞ் சிவஞான சித்தியார்ச் செய்யுளால் இனிது விளங்க வைத்தருளினார். இவ்வாறு நமதுடம்பு ஒன்றினுள் ஒன்றாக ஐந்துடம்புகளுடன் கூடியதாய் இருத்தல் போல நமதுடம்பை யொப்ப ஆக்கப்பட்ட சிவபிரான் திருக்கோயில்களும் ஐந்து சுற்றுகள் உள்ளனவாக வகுத்து அமைக்கப்பட்டிருக் கின்றன. இனி, நம்முடம்புகள் ஐந்தையும் வேறொரு வாற்றால் மூன்றாகக் கொண்டு பருவுடம்பு, நுண்ணுடம்பு, காரண வுடம்பு எனவும் மெய்ந்நூல்கள் வழங்கு முண்மை, சூக்கும தேகி யாகித் தூலரூ பத்தின் மன்னிச் சாக்கிர முதலா யுள்ள அவத்தையுட் டங்கி யெங்கும் போக்கொடு வரவு மெல்லாம் புரிந்துபுண் ணியங்கள் பாவம் ஆக்கியும் பலன்க ளெல்லாம் அருந்தியும் நிற்கு மான்மா. என்னுஞ் சிவஞானசித்திச் செய்யுளால் அறியக்கிடத்தலிற், பெரும்பான்மையான சிவபிரான் றிருக்கோயில்கள் மூன்று சுற்றுகள் உடையனவாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்ஙனமாக இந்நிலவுலகிற் சிறந்த இவ்விந்திய நாட்டை ஓருடம்பாகக் கருதி, அதனுள் மூலத்திற் றுவங்கித் தலையுச்சி வரையில் உளவாக வைக்கப்பட்ட இடங்களில் இறைவன் திருவுருவினை நிறுத்தி வழிபடுமுறையும், இனி இவ்விந்திய நாட்டினுள்ளுஞ் சிறந்த தென்றமிழ் நாட்டை ஓருடம்பாகக் கருதி அதன்கண்ணும் மூலத்திற் றுவங்கி மிடறுவரையில் உளவாக வைக்கப்பட்ட இடங்களில் இறைவன் றிருவுருவினை நிறீஇ வழிபடுமுறையும், இனி ஒவ்வொரு சிவபிரான் றிருக்கோயிலையும் ஒருதவ முனிவ னுடம்பினோ டொப்பவகுத்து, அம்முனிவன் தனதுடம்பி னகத்தே இறைவனை வழிபடு முறையோ டொப்பப் புறத்தே அத்திருக்கோயிலினுள்ளும் எல்லாருஞ் சென்று இறைவனை வழிபடுமுறையும் ஆகிய இவையெல்லாம், ஆசிரியர் திருமூலர் இற்றைக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன் அருளிச் செய்த திருமந்திர நூலிலாதல், அதற்கும் முந்நூறாண்டுகட்கு முன்னே, அஃதாவது இற்றைக்கு ஆயிரத்து எழுநூறு ஆண்டு கட்கு முன்னே மணிமொழிப் பெருமான் அருளிச் செய்த திருவாசகத் திருக்கோவை யாரிலாதல், அதற்கும் முன்னே, அஃதாவது, இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகட்கு முன்னே இயற்றப்பட்ட பண்டைத் தண்டமிழ் நூல்களிலாதல் ஒருசிறிதுங் காணப் படாமை யால், இம்முறைகளெல்லாம் நம்சைவ சமயா சிரியன்மார் காலத்திற்குப் பன்னெடுங்காலம் பின்னே அஃதாவது நம் சைவ சித்தாந்த முதலாசிரியர் மெய்கண்ட தேவர் காலந் தொட்டே வழங்கி வரலாயின வென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோற் றெள்ளிதின் விளங்கா நிற்கின்றது. அற்றேல், ஆசிரியர் திருமூலர் காலத்தும் அவர்க்கு முற்பட்ட தமிழ்ச்சான்றோர் காலத்தும் வழங்கப்பட்டு வந்த கடவுள் வழிபாட்டு முறைதான் யாதோவெனின்; அப்பழைய முறைனையுஞ் சிறிது விளக்குதும். நம் பண்டைச் செந்தமிழ்த் தாபதர், எல்லா உலகங்களிலும் எல்லா உயிர் களிலும் ஊடுருவி மறைந்து நிறைந்து நிற்கும் எல்லாம் வல்ல இறைவன், சிற்றுயிர்களாகிய நாம்தன்னைக் கண்ணாரக் கண்டு வணங்கியுய்தலை வேண்டிப் பெருகிய அருளால், ஞாயிறு, திங்கள், தீ என்னும் மூன்று ஒளி வடிவுகளில் முனைத்து விளங்கித் தோன்ற, அவ்வியல்பினை விளங்க அறிந்தபின், முதலில் அம்மூன்று ஒளி வடிவுகளில் வைத்தே இறைவனை நேரே வழிபட்டு வரலாயினர். பண்டை மக்களில் அகக்கண் திறக்கப்பெற்றுப் பேரறிவுடையராய் வயங்கிய சான்றோர்களும் அவர்களைச் சூழ்ந்திருந்த அம்மக்களும் மலைகளையே இருப்பிடமாய்க் கொண்டு உயிர் வாழ்ந்தார் களாகலின், அவர்கள் தாமிருந்த மலைகளின் முகடுகள் மேற்சென்று அங்கிருந்தபடியே பகற்காலத்திற் கதிர வனையும் இராக்காலத்தில் நிலவோனையும், நிலவோனும் இல்லாத இராக்காலத்தில் தீயினையும் வணங்கி வரலானார்கள். இது, பாரதப்போர் நிகழ்ந்த காலத்திருந்த வரான முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய மண்டிணிந்த நிலனும் என்னும் பாட்டிற்போந்த மாப்பிணை, அந்தியந் தணர் அருங்கடன் இறுக்கும், முத்தீ விளக்கில், துஞ்சும், பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே (புறம் 2) என்னும் அடிகளால் நன்கறியப்படும், இந்நிலவுலகின்கண் உள்ள எல்லா மலை களைப் பார்க்கிலும் மிக்குயர்ந்ததாகிய இமய மலையின் ஒரு கொடு முடிக்கண் உளதான திருக்கைலாய மலையிற் சிவலிங்க வடிவந்தொன்று தொட்டு வைத்து வணங்கப் படுதலும், அங்ஙனமே இத்தென்றமிழ் நாட்டிலும் மிகப் பழைய காலந்தொட்டே `திருப்பரங்குன்றம், `திருவேங்கடம், `திருக்கழுக்குன்றம், `திருக்கொடிமாடச் செங்குன்றூர் முதலான உயர்ந்த மலைகளின் மீதெல்லாஞ் சிவலிங்கம் வைத்து வழிபாடு செய்யப்படுதலும் இவ்வுண்மை யினை நன்கு விளக்கும். பழைய உபநிடதமாகிய சுவேதாசுவதரமும் (3,5) உருத்திரனே! சிவ வுருவினதாய் அச்சமில்லதாய்த் தூய்மையளிப்பதாய் உள்ள நின்றிருக்கோலத்தோடு, எல்லா அருளும் நிரம்பிய அக்கோலத்தோடு, மலைமீதிருந்தவாறே நலந்தருவோனே! எம்மைக் கடைக்கணித்தருள்க! 5 எனச் சிவ பிரானை விளித்து வழுத்தும்உரை கொண்டும் அவன் மலைமிசை வைத்துப் பண்டை நாளில் வணங்கப்பட்டமை தெள்ளிதிற் புலனாம். பழைய விவிலிய நூலிலும், ஆபிரகாம் என்னும்முனிவர் தம்மகனை இறைவனுக்குப் பலியாக இடுதற் பொருட்டு ஒரு பொருப்பின்மிசைக் கொண்டு சென்று ஆண்டுத் தீ வேட்டமை6 நுவலப்படுதல் கொண்டும் பண்டிருந்த மேன்மக்கள் மலைமேல் தீ வளர்த்து இறைவற்கு வழிபாடு ஆற்றினமை தெளியப்படும். இனி, அத்துணைப் பழைய காலத்திற்குப் பின், மலைமீதுறைந்த மக்களிற் பெரும்பாலார் கீழிறங்கி, ஆற்றோரங்களிலும் ஏரியோரங்களிலும் குடியேறி உயிர் வாழத் துவங்கியபின், தாம் முன்னர் மலைமேற் செய்து போந்த அனல் வழிபாட்டை மரச்செறிவுகளின் கீழ்ச் செய்து வரலாயினர், நாளேற நாளேறப் பகலவனிலும் நிலவோனிலும் இறைவனை வைத்து வணங்கும் வணக் கத்தை மெல்ல மெல்லக் கைந்நெகிழ விட்டுத் தீவடிவில் வைத்து இறைவனை வணங்கும் முறையினையே மிகுதியாய் கடைப்பிடிக்கலா யினர், பகலவனும் நிலவோனும் இறை வற்கு விழுமிய ஒளியுடம்புகளேயாயினும், அவை எட்டாத் தொலைவி லிருத்தலால் அவை தம்மைத்தம் அருகே யிருத்தித், தாம் உட்கொள்ளும் உணவை அவை தமக்கு ஊட்டவுந், தாஞ்சூடும் நறுமலர் மாலைகளை அவை தமக்குச் சூட்டவும், இன்னும் அங்ஙனமே தம் அன்பின் அடையாளங்களாக அவை தமக்குச் செய்ய வேண்டுவன வெல்லாஞ் செய்யவும் இல்லாமையானும், பகலவனும் நிலவோனும் விளங்கா நள்ளிருளிரவில் தீயினொளியே தமக்கின்றியமையாத தொன்றாய்க் காணப்பட்டமையானுந், தீயொன்றே தாம் வேண்டும் போதெல்லாந் தம்மருகே வளர்த்துக் கொள்ளுதற் கியைந்த எளிமையுடைத்தாய், அளக்கலாகாத் தன் அரும் பெருந் தன்மைகளை யொடுக்கித் தன்னைக் குழைந்துருகி நினையும் ஏழையடியார்க்கு எளியனாய்வந் தருள்வழங்கும் இறைவன்றன் அருட்பெருந் தன்மையினைத் தன்னகத்தே விளங்கக்காட்டுந் தகைத்தாய்த் துலங்குதலானும் இடைக் காலத்துச் சான்றோர்கள் இறைவனை நெருப்புருவில் வைத்து வழிபடுதலையே பெரும்பான்மையாய்க் கைப்பற்றி யொழுகலாயினர். அதனால், அவர்கள் குடியேறி வைகிய இடங்களிற் செறிந்த சோலைகள், இளம் மரக்காக்கள், தோட்டங்கள், தோப்புகள், பொழில்களி லெல்லாம் மரங்களின் கீழ்க் குழிகள் அகழ்ந்து அவற்றின் கண் எரியோம்பி இறைவனை வழுத்துதலும் வாழ்த்துதலும் மேற்கொண்டார். இவ்வாறு இவ்விந்திய நாட்டில் வடக்கே இமயமலை முதல் தெற்கே பொதியமலை வரையிலிருந்த தமிழ் மக்களெல்லாம் முத்தீயோம்பி இறைவனை வழிபட்டு வந்த பல நூற்றாண்டுகளுக்குப் பின்னே, இந்திய நாட்டின் எல்லைக்குப் புறம்பே ஆடுமாடு மேய்த்துக் கொண்டும் அவற்றின் ஊனைத் தின்று கொண்டும் வாழ்நாட் கழித்துவந்த ஆரியர், தாம் இருந்த வடபால் இடங்கள் வரவரக் குளிர்மிகுந்து தாம்இருத்தற்கு இசையாத தன்மையவாய் மாறினமையால், அவைகளை விட்டு நீங்கி, இவ்விந்திய நாட்டின் வடமேற் கெல்லைவழியே இதனுட் புகுந்து, வருந்தி வந்தவரை விருந்தேற்கும் இயல்பினரான பண்டைத் தமிழ்மக்களின் உதவியால் ஊனும் உடையும் இருக்கையும் பெற்று, ஆங்காங்குக் குடியேறி வாழலாயினர். அங்ஙனம் வந்துபுகுந்து நிலைத்த ஆரியர், தம்மை வரவேற்ற தமிழ்மக்கள் கல்வியிலும் ஏனைச் செல்வ வளங்களிலும்நிரம்பினவராய் முத்தீவேட்டு வருதலைக் கண்டு அம்முத்தீ வேட்டலின் உண்மையுங் கருத்தும் அறிந்து கொள்ளாமலே, தாமும் அவர்போல் நெருப்பினை வணங் கினால் தமக்கும் அவர் போற் கல்வியுஞ் செல்வமும் உண்டா மெனக் கருதி,அவரினும் மிகுதியாய் அழலோம்பு தலை மேற்கொண்டார். இவ்விந்திய நாட்டிற் புகுமுன்னரே ஆரியமாந்தர் ஆடு மாடு குதிரை முதலான விலங்கினங் களைக் கொன்று அவற்றின் இறைச்சியை நிறையத்தின்று, சோமப்பூண்டில் இறக்கிய ஒருவகையான கள்ளை மிகுதியாய்ப் பருகிவந்த பழக்கமுடையவர்களாதலால், இந்நாட்டுட் புகுந்து வைகிய பின்னும் அப்பழக்கத்தை விடமாட்டாராய்த், தம் ஆரியப் பிரிவினர்க்குத் தலைவராய் இருந்து இறந்துபட்ட `இந்திரன் `வருணன் `மித்திரன் `அரியமான் முதலானவரின் ஆவிகளை வழிபடுதல் நினைந்து, எரி வளர்த்து, ஆடு மாடு குதிரை முதலிய விலங்கு களை வெட்டி அவற்றின் ஊனையுஞ் சோமப் பூண்டின் கள்ளையும் அதன் முன்னே வைத்துப் படைத்துப் பின்னர்த் தாமுந் தம்மினத்தவருமாக அவற்றை யெடுத்தருந்திக் களித்து வந்தனர். உயிர்க்கொலையும், ஊனுணவுங், கட்குடியும் இல்லா மற், காய், கனி, கிழங்கு, வித்துக் கீரை முதலியவைகளையே உணவாகக் கொண்டு, பாலையும் நீரையுமே பருகிப் பிறந்திருக்கும் மக்களையும் பிற சிற்றுயிர்களையும் வணங் காமல், ஒளி வடிவில் முனைத்து விளங்கும் ஒருமுழுமுதற் கடவுளையே அன்பினாற் குழைந்துகுழைந்துருகி வழிபடும் வாழ்க்கையிலேயே பழகிய தமிழ் மேன் மக்களுக்கு அவ்வாரியர் தங் கொலை புலை யொழுக்கம் பெரியதோர் அருவருப்பினைத் தரலாயின. அதனால் அவர்கள், கொலை புலை கட்குடியில்லாமலே எரியோம்பி வழிபடுக என்று அவ்வாரிய மக்கட்கு எவ்வளவோ அறிவுரை பகர்ந்து வற்புறுத்தியும் அவர்கள் அவ்வறிவுரைக்குச் சிறிதுஞ் செவி கொடாராய்த் தாம் வேண்டிய வெறியாட்டு வேள்விகள் அயர்தலையே விடாப்பிடியாய்க் கொண்டனர்! அது மட்டுமோ! அவர்கள்தாஞ் செய்யும் வெறியாட்டு வேள்வி கட்குப் பெரும் பொருளுந், தம் வெறியாட்டு வேள்வி களை அழித்தற்கு முனைந்துநின்ற வலிய தமிழரசர்களைத் தடைசெய்யத் தமக்குத் துணையும் வேண்டி யிருந்தமையால், வலிய தமிழரசர்களிலேயே தமது சூழ்ச்சியிற் சிக்குவாரைத் தெரிந்தெடுத்து,அவரை ஏமாற்றி அவர்பாற் பெரும் பொருள் கவர்ந்தும்,அவரைத்தமது வெறியாட்டு வேள்விக்குத் துணை கொண்டுந் தமது கருத்தை நிறைவேற்றி வரலானார். ïJf©l jÄœ¢ rh‹nwhlj áy®, Ô§f‰w ViH Éy§Ffis¤ JoJo¡f¡ bfh‹W, mt‰¿‹ Cid ïªâu‹ Kjyhd MÉfS¡F¥ gil¡F«ïu¡fk‰w t‹braiy bahÊ¡F§ fU¤âduhŒ,m›thÇa® maU« bt¿ah£L ntŸÉf£F¤ jhK« cl‹gLth® ngh‰ fh£o, KjÈš m›Éy§Ffis cz®É‹¿ bt£L©z tÊ ãw¥ã¤jh®, bt£L©z¥ nghF« Éy§Ffis m¤jÄœ¥ bgÇah® j«Kila f©fshš cW¤J neh¡»íª, j«Kila iffsh‰ á¿Jneu« Ús¤jlÉíª, jkJ Ãidit xUKf¥gL¤â `mit cz®ÉHªJ ïiwtDy»‰F¢ bršf! என்று உரைத்த அளவில், அவை யுணர்விழந்து நிற்ப, அந்நேரத்தில் அவை தம்மை வெட்டி வீழ்த்தற்கு கற்பித்தார். இஞ்ஞான்றும் அறிதுயில் (Hypnotic and Mesmeric sleep) வருவிக்கும் முறையில் நன்கு பழகித் தேர்ச்சி பெற்ற ஆங்கில மருத்துவ ஆசிரியரும் பிறரும், மக்களையும் விலங்குகளையும் அறிதுயிலிற் செலுத்தி அவர்களை உணர்விழக்கச் செய்து அவர்களுக்குச் சிறிதும் நோய்த்துன்ப மில்லாமலே கழலைக் கட்டிகளையும் பிற வற்றையும் அறுத்து நலப்படுத்தி வருகின்றனர்.7 இவ்வருங்கலைப் பயிற்சியில் முற்காலத்தே நன்கு பழகிய நந்தமிழந்தணர்கள், ஆரியர் தம் வெறியாட்டு வேள்விகளிற் கலந்து. அவர்கள் வெட்டும் ஆடு மாடு குதிரை முதலான விலங்குகள் அவர்களால் வெட்டுப்படுதற்குச் சிறிது முன்னரே யுணர்விழந்து வெட்டுப்படுமாறு செய்து, அவை அந் நேரத்தில் அடைய இருந்த பொறுத்தற்கரிய நோய்த் துன்பத்தைப் போக்கி வந்த பேரருட்டிறம் பெரிது! பெரிது! இவ்வாறாக வேள்வியிற் கொல்லப்பட்ட விலங்கினங்கள் உணர்விழந்து நோவின்றி யுயிர் விடுமாறு செய்தமைக்கு இருக்குவேத முதன் மண்டிலத்தின் 142 ஆம் பதிகத்திற் போந்த, நீ தேவர்கள்பாற் செல்கையில் நின் உயிர்வளி நின்னை வருத்தாததாக! கோடரியானது நின் உடம்பை ஊறு படுத்தாத தாக! திறமின்றி விரைந்து வெட்டித் தன்றொழிலிற் பெரிது பிழைபடுங் கொலைஞன் நின்உறுப்புகளைப் பிழைபடப் பிளவானாக! மெய்யாகவே நீ இங்கேஇறந்து படுகின்றிலை! நீ ஏதொரு துன்பமும் அடைகின்றிலை! நீ எளிய இனிய வழியால் தேவர்கள் பாற் செல்கின்றனை! என்னும் உறுதியுரைகளே சான்றாகும். இஞ்ஞான்றும் மக்களையும் பிறவுயிர்களையும் உணர்விழக்கச் செய்யும் அறிதுயில் வல்லார் அடுத்தடுத்துக் கூறி அங்ஙனம் உணர் விழப்பினை (Anaesthesia) வருவிக்கும் உறுதிக் கட்டுரை களோ டொப்ப மேற்காட்டிய பதிகக் கட்டுரைகள் அமைந் திருத்தலுங் கருத்திற் பதிக்கற்பாற்று இவ்வாறாக முன்னிருந்த தமிழ் முனிவர்கள், ஆரியர் செய்து போந்த உயிர்க்கொலை வேள்விகளில் தாமும் உடன்பாடுடையர் போற் கலந்து நின்று அவர் அவ்வேள்விக் களங்களில் வெட்டி வீழ்க்கும் விலங் கினங்களை வெட்டுண்ணுங் கொடுந் துன்பம் அறியாமல் உணர்விழக்கச் செய்து, சில காலமெல்லாம் அவருடைய வேள்விகளையும் நடாத்தி வந்தனர். வந்து மென்! படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன் உடல்சுவை யுண்டார் மனம் (குறள் 253) என்னுந் தெய்வத் திருக்குறள் கூறியாங்கு, ஊன்சுவையிற் பழகிய ஆரியர் தாஞ் செய்துபோந்த உயிர்க்கொலை வேள்வியினைச் சிறிதும் விடாராயினர்! அதுகண்ட தமிழந்தணருந் தமிழரசரும் அவ்வுயிர்க் கொலை வேள்விகள் மேன்மேற் றீவினையையே பெருக்கும் எனவும்; எல்லாம்வல்ல ஆண்டவன் மலத்தால் அறிவு மறைப்புண்ட எல்லாவுயிர்களுக்கும் அம்மலமறைப்பினை நீக்கி அவை தமக்கு அறிவும் இன்பமுந் தருதற் பொருட் டாகவே உடம்புகளைப் பேரருளினாற் படைத்துக் கொடுத்திருக்க, அவனது அருட்டன்மைக்கு மாறாக அவன் படைத்த அவ்வுடம்புகளைச் சிதைத்து அவ்வயிர்களை அறியாமையிலுந் துன்பத்திலும் அமிழ்த்துதல் அவ்வாண்ட வனுக்குத் தணித்தற்கரிய பெருஞ் சீற்றத்தினை மூட்டுவதா மெனவும்; இறைவனது அருளியல்பினையும் அதனைப் பெறுதற்குரிய சிற்றுயிர்களாகிய நாம்இப்போதிருக்கும் மருளியல்பினையும் நன்குணர்ந்து பார்த்து, அருளுக்கு மாறான மருளையெல்லாம் அறவே யொழித்து, எல்லா வுயிர்களிடத்தும் அவனை யொப்ப அருளுடன் ஒழுகி அவன்றன் அருட்பெருந் தன்மையினை ஓவாது நினைந்து நினைந்து கனிந்து கனிந்து உருகுதலால் மட்டுமே அறியாமை தேய்ந்து அருளறிவு நம்பாற் சுடர்ந்தொளிருமெனவும் அதனால் இம்மை மறுமை யிரண்டிலும் இயம்புதற்கரிய இன்பவாழ்க்கையே எல்லா வுயிர்க்கும் வாய்க்குமல்லது துன்பமென்பது சிறிதுந் தலைக்காட்டாதெனவும்; ஆகவே உயிர்க்கொலை வேள்விகளைக் கற்பிக்கும் ஆரிய வேதப் பகுதிகளும் அவற்றிற்கூறிய வாறு செய்யுஞ் சிறு தெய்வ வெறியாட்டுகளுங் கழிபெருந் தீமை பயப்பவாகலின் அவற்றை யருவருத்து விலக்குதலே செயற்பால தெனவும் வற்புறுத்திச் `சாக்கியம், `யோகம் முதலான அறிவு நூல்களும், `ஈச, `கேந, `கடம், `பிரசிநம், `முண்டகம் `மாண்டூக்யம் `தைத்திரீயம் `சாந்தோக்யம் `பிருகதாரண் யகம் `சுவேதா சுவதரம் முதலான உபநிடதங்களும் இயற்றினர். இவற்றுடன் நில்லாமல், எல்லாம்வல்ல முழுமுதற் பொருள் சிவம் ஒன்றேயாதலையும் ஆரியரால் வணங்கப்பட்ட இந்திரன், வருணன், சோமன், பிரமன், விண்டு முதலியோரெல்லாம் பிறந்திறக்குஞ் சிற்றுயிர்களே யாதலையும் பகுத்தறிவு கூடாப் பொதுமக்கட்கு நன்கு தெருட்டுதற் பொருட்டு, அவர் அறிதற்கு எளியவான புராணக் கதைகள் சிலவும் புனைந் துரைப் பொருளாய்ப் படைத்தெழுதலாயினர். இன்னும், இவற்றுடன் அமைதி பெறாமல், உயிர்க் கொலைக்கும் வெறியாட்டுக்கும் இடனாக ஆரியராற் றிரிபு படுத்தப்பட்ட தீவேட்டலையே முற்றும் ஒழிப்பான் வேண்டித், தீ வளர்க்குங் குழிக்கு அறிகுறியாக ஒரு வட்டக்கல் வடிவும், அக்குழியில் வளர்க்கப்படுந் தீயினுக்கு அறிகுறியாகக் குவிந்து நீண்டதொரு கல்வடிவும் வகுத்து அவை யிரண் டனையும் ஒருங்கு பொருத்தி நிறுத்திய சிவலிங்கத்தினெதிரே முன்னே வேள்வியில் வெட்டக் கொணர்ந்த மாட்டினுக்கு அறிகுறியாக ஒரு நந்தியுருவி னையும் அமைத்து, முன்னே அம்மாட்டினை வெட்டிய பலி மேடைக்கு அறிகுறியாக அந்நந்தியுருவின் பக்கத்தே ஒரு பலிபீடத்தினையும் எழுப்பிச் சிவபிரான் றிருக் கோயில்களை ஆங்காங்கு எடுப்பிக்க லாயினர். இவ்வாறு சிவலிங்க அருட்குறியும் அதனெதிரே நந்தியுருவும் அதன் பின்னே பலிபீடமும் அமைத்துத் திருக் கோயில்கள் உண்டாக்கிய பின், முன்னே ஆரியர் செய்து போந்த வெறியாட்டு வேள்வியும் அவற்றின்கண் நடந்த உயிர்க்கொலையும் நினைவில் வராமைப்பொருட்டு, அம் மூன்று குறிகளும் மூன்று மெய்ப் பொருளடையாளங் களாக வகுக்கப்பட்டன வென்று அவை தமக்கு விழுமிய மெய்ப் பொருளுங் கூறலாயினர், இறைவன் றிருவடை யாளமே சிவலிங்கமாமெனவும், இறைவனல்லாத சிற்றுயிரின் அடை யாளமே நந்திவடிவாமெனவும், அவ்வுயிரினாற் கழிக்கப் பட்ட அறியாமையாகிய மலமே பலிபீடமா மெனவும் நன்கு விளக்கிப் பதி, பசு, பாச உண்மையினை அறிவிக்கும் பொருட்டே சிவலிங்கமும் நந்தியும் பலிபீடமும் அமைத்த திருக்கோயில்கள் எடுக்கப்பட்டன வென்று பண்டிருந்த தமிழ்ச் சான்றோர்கள் திருக்கோயிலமைப்பினை மிக வுயர்ந்த மெய்யறிவு முறையிலே வைத்துத் திருப்பிவிட லாயினர், இங்ஙனம் உயர்ந்த முறையில் வைத்துத் திருக் கோயிலமைப்பு விளக்கப்பட்ட உண்மையினை, இற்றைக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன்னிருந்த அருந்தவ மாமுனிவராகிய ஆசிரியர் திருமூலர், ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம் ஆய பசுவும் அடலே றெனநிற்கும் ஆய பலிபீடம் ஆகுநற் பாசம் ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்க்கே (செய்யுள் 2411) என்று தமது திருமந்திர நூலில் அருளிச் செய்தவாற்றால் நன்கறிந்துகொள்க. திருக்கோயிலில் இறைவனைத் தொழுதற்குச் செல்லும் ஒருவர் பலிபீடத்தினருகே சென்றதுந் தமக்குள்ள யான் எனது என்னும் இருவகைச் செருக் கினையும் வெட்டிப் பலியாகச் செலுத்துதற்கு அடையாள மாகவே அவர் அதன் பக்கத்தே நீளக்கிடந்து வணங்கு தலாகும், அங்ஙனம் வணங்கிய அவரது உயிர் அதனால் அவ்விருவகைச் செருக்குந் தீர்ந்து தூயதாகி இறைவனை நோக்கிச் செல்லும் அடையாளமாகவே பசுவின் வடிவின தான நந்தி சிவலிங்கத்தினெதிரே நிறுத்தப்பட்ட தாகும், அந்நந்தியும் அந்நந்தியினெதிரே நிற்குஞ் சிவலிங்கமும் கல்வடிவிற் காணப்படினும், அச்சிவலிங்க வடிவு தூய ஒளி யுருவில் முனைத்து நிற்குஞ் சிவமாமெனவும், அவ்வொளி யுருவில் ஒன்றி இரண்டறக் கலக்குந் தூயவுயிர் அதிற் கரைந்து கலக்குமாறு இதுவாமெனவுங் காட்டுதற் பொருட்டே இறைவனைத் தொழப் போவார் முன்னிலை யிற் கருப்புர வொளிகாட்டும் முறையினைத் தமிழ்ச் சான்றோர் வகுக்க லாயினர். கருப்புரந் தூய வெண்ணிறத் ததா யிருத்தலின், இருவகைப் பற்றும் விட்டு இறைவனோ டொன்றி இரண்டறக் கலக்கப் போந்தூயவுயிர்க்கு அஃது அடையாளமாயிற்று; அக்கருப்புரத்திற் பற்றிய நெருப் பொளி அக்கருப்புரத்தைக் கவர்ந்து கரைத்துத் தனதாக்கும் நிலை, ஒளியுருவினனான இறைவனை அத்தூயவுயிரைப் பற்றித் தனதாக்கும் நிகழ்ச்சிக்கு அடையாளமாயிற்று, இவ்வரும் பேருண்மை முறையினையே தவமாச் செல்வரான தாயுமான அடிகள், தானான தன்மயமே யல்லால் ஒன்றைத் தலையெடுக்க வொட்டாது தலைப்பட் டாங்கே போனாலுங் கர்ப்பூர தீபம் போலப் போயொளிப்ப தல்லாது புலம்வே றின்றாம் ஞானாகா ரத்தினொடு ஞேய மற்ற ஞாதுருவும் நழுவாமல் நழுவி நிற்கும் ஆனாலும் இதன்பெருமை எவர்க்கார் சொல்வார் அதுவானால் அதுவாவர் அதுவே சொல்லும் என்றும், ஒருவனவன் யானைகெடக் குடத்துட் செங்கை ஓட்டுதல்போல் நான்பேதையுப்போ டப்பை மருவவிட்டுங் கர்ப்பூர மதனிற் றீபம் வயங்கவிட்டும் ஐக்கியமுன்னி வருந்திநிற்பேன் அருளுடைய பரமென்றோ அன்று தானே யானுளனென் றும்எனக்கே யாண வாதி பெருகுவினைக் கட்டென்றும் என்னாற் கட்டிப் பேசியதன் றேயருணூல் பேசிற் றன்றே என்றும் ஆகார புவனஞ் சிதம்பர ரகசியத்தில், (22, 29) அருளிச் செய்திருத்தல் கண்டுகொள்க. இங்ஙனமெல்லாம் போந்த திருக்கோயில் மெய்ப் பொருள் விளக்கமுறை ஆசிரியர் திருமூலர் காலத்திற்குச் சிறிது முன்னே துவங்கிப் போந்த தன்றி அதற்கு முற்பட்ட காலத்தே வழங்கிய தன்றென்பது, பண்டைச் செந்தமிழிலக் கியங்களில் அது காணப்படாமையாற் றெற்றெனத் துணியப் படுகின்றது,. மற்றுப், பண்டை நாளில் ஆரியர் செய்து போந்த உயிர்க்கொலை வேள்வியை அடியொடு நிறுத்தித், திருக் கோயில் எடுப்பித்த தொல்லாசிரியர் முத்தீவேட்ட வேள்விக்குழிக்கு அறிகுறியாகவே வட்டக்கல் வடிவும், அதில் வளர்த்த அனற்பிழம்புக்கு அறிகுறியாகவே அது போல் நீண்டு குவிந்ததொரு கல்வடிவும் வகுத்து, அவை யிரண்டையும் பொருத்திய சிவலிங்கத்தினெதிரே, முற் காலத்து ஆரிய வேள்விக்களத்தில் வெட்டுண்ட எருதுக்கு அறிகுறியாகவே எருதுவடிவான நந்தியை நிறுத்தி, அவ் வெருது வெட்டுண்ட பலிமேடைக்கு அறிகுறியாகவே அதனையொத்த பலி பீடத்தை எழுப்பிச் சிவபிரான்றிருக் கோயில் அமைத்தன ரென்க. பண்டை நாளில் மலைகளின் மீதிருந்த தமிழ் முன் னோர்கள் முத்தீவேட்டலைக் கைவிட்டபின் அவற்றின் மேல் எடுப்பித்த திருக்கோயில்களே மிகப்பழையன, அவை: திருப்பரங்குன்றம், திருக்கொடுங்குன்றம், திருக்கழுக் குன்றம், திருக்கொடிமாடச் செங்குன்றம் திருவண்ணா மலை, திருவீங்கோய்மலை, திருநொடித்தான்மலை முதலியன. பின்னர் மலைகளினின்றுங் கீழிறங்கிக் காடுகளில் வைகி வாழ்ந்த ஞான்று அவர்கள் அமைப்பித்த திருக் கோயில்கள், மலைக்கோயில்களுக்கு அடுத்தபடியிற் பழைமையுடையன வாகும், அவை: திருவாலங்காடு, திருமறைக்காடு, திருவெண் காடு, திருச்சாய்க்காடு, திருப்பனங்காடு, திருக்கச்சிநெறிக் காரைக்காடு முதலியன வாகும். அதன்பிற் காடுகளைவிட்டு அகன்று உயிர்வாழ்தற் கினிய இளமரக்காக்களிலும் பொழில்களிலும் புகுந்து உறைந்த ஞான்று அவர்கள் கட்டுவித்த திருக்கோயில்கள், கானகக் கோயில்களுக்கு அடுத்தபடியிற் பழைமை வாய்ந்தன வாகும், அவை: திருக்கடம்பு, திருத்தில்லை, திருவானைக்கா, திருக்குரக்குக்கா, திருக்கோடிகா, திருக் கோலக்கா, திருநெல்லிக்கா, திருவாலம்பொழில் முதலாயின. அதன்பின் உழவுத் தொழிற்கேற்ற வளவிய மருதநிலம் புகுந்து அவர்கள் நிலைபெற்ற நாகரிக வாழ்க்கை யுடையராய பிற்றைஞான்று எடுப்பித்த திருக்கோயில்கள் மேற் காட்டிய கோயில்களுக்குப் பிற்பட்ட பழைமை யுடையனவாகும், அவை; திருவாரூர், திருவிடைமருதூர், திருவொற்றியூர், திருக்கடவூர், திருக்கருவூர், திருநாவ லூர், திருப்புகலூர், திருப்புன்கூர், திருமயிலாப்பூர், திருவான்மியூர் முதலான இன்னும் பலவாகும் இங்ஙனமாக, மலை, காடு, கா, பொழில் முதலான இடங்களை உறைவிடமாய்க் கொண்டு, எல்லாம் வல்ல இறைவனை நெருப்புருவில் வைத்து வணங்கியபோதும், நெருப்புருவைக் கைவிட்டு அதனோடொத்த கல்வடிவு மண்வடிவில் வைத்து இறைவனை வணங்கியபோதும், அவர் அவ்வணக்கத்தைச் செய்தது ஒரு மரத்தின் நீழலிலே யாகும், திருப்புலியூர் என்னுஞ் சிதம்பரத்தில் தில்லை மரத்தின் கீழும், திருவாலவாயிற் கடம்பமரத்தின் கீழும், திருவானைக்காவில் நாவல்மரத்தின் கீழும், திருப்பாதிரிப் புலியூரிற் பாதிரி மரத்தின் கீழும் திருமயிலாப்பூரிற் புன்னைமரத்தின் கீழும், திருவொற்றியூரில் மகிழமரத்தின் கீழும் இன்னும் இவ்வாறே ஒவ்வொரு திருக்கோயிலும் ஒவ்வொரு மரத்தின் கீழும் அமைந்திருத்தலை உற்று நோக்கவல்லார்க்குப் பண்டிருந்த தமிழ் மேன்மக்கள னைவரும் எல்லாம் வல்ல சிவபிரானை மர நிழலில் வைத்தே வழிபாடாற்றி வந்தமை தெற்றென விளங்கா நிற்கும். ஆ! மலைமேலும், நிலத்தின் கீழுங், காடுகளிலுங் காக்களிலும் மரத்தின்கீழ் முத்தீ வளர்த்தும், அத்தீப்பிழம்பிற் கறிகுறியான சிவலிங்கம் நிறுத்தியும் இறைவனை நந்தமிழ் மேன்மக்கள் வழிபட்டு வந்த ஞான்று அவருள்ளம் எத்துணை ஆறுதலுடையதாய், எத்துணை அமைதியுடைய தாய், எத்துணை ஒளிவிளக்கம் அருள் விளக்கம் வாய்ந்த தாய்த் திகழ்ந்திருத்தல் வேண்டும்! அருள் ஒளி வயத்தராய் நின்று அவர் வழிபட்டுவந்த ஒளியுருவும், அதனையொத்த சிவலிங்க வடிவுமே பிறப்பிறப்பில்லா முதல்வனை வழி படுதற் கியைந்த உண்மை வடிவங்களாகும், இறைவற் குண்மையான இவ்வருட் குறி வடிவைவிட்டு, இறைவனுண் மைக்கு மாறான வடிவுகளை அவரவர் தத்தம் மனம்போன வாறெல்லாம் வகுத்து வைத்துக் கொண்டு வழிபடுவராயின், அவர் இருளுலகம் புகுவரென ஈசாவாசியோபநிடதம் (9) புகலுதலாற், சிவலிங்க வடிவினையே எல்லாரும் வழிபட்டு இறைவன்றன் அருளுலகம் புகுவாராக! அடிக்குறிப்புகள் 1. Louis Kuhne; see his “New Science of Healing”. 2. Eliphas Levi’s The Mysteries of Magic. p. 84. 3. Harmsworth History of the world, p. 5867. 4. இவை தம்மை வடநூலார் மூலாதாரம், வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என வழங்குவர். 5. (பாடம்) குய்யம். 6. யாதே ருத்ர சிவாதநு ரகோரா பாபகாசிநீ, தயா நதநுவா சந்தமயா கிரிசந்தாபிசாக சீஹி சுவேதாசுவதரோப நிஷத், 3, 5. 7. படைப்பின்றோற்றும் (Genesis), 22. 8. Read “Mesmerism in India” by James Esdaild, M.D., and “Hypnotism” by Carl Sextus. 9. அம்பலவாணர் திருக்கூத்தின் உண்மை எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும் இயலுண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும் மெய்ப்பொருளாம் சிவம் ஒன்றே என்றறிந்தேன் உனக்கும் விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய் மீட்டும் இப்பொருள்அப் பொருளென்றே இசைப்பதென்னே பொதுவில் இறைவர்செய்யும் நிரதிசய இன்பநடந் தனைநீ பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம் பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே - இராமலிங்க அடிகள் இராமலிங்க அடிகளார் அருளிச் செய்த மேலைத் திருப்பாட்டினை மேற்கோளாக எடுத்துக் கொண்டு அம்பலவாணர் திருக்கூத்தினுண்மையும் ஞானயோகமும் என்னும் எமது விரிவுரையினை நிகழ்த்துவான் புகுகின்றேம், அறிவில்லா எவ்வகைப்பட்ட பொருள்களினகத்தும் புறத்தும், அறிவுடைய எவ்வகையுயிர்களின் அகத்தும் புறத்தும் நிறைந்திருப்பதும்,இயற்கை யுண்மையும்இயற்கை யறிவும் இயற்கை யின்பமும் உடையதாகி ஒவாது இயங்குந் திருக்கூத்தை இயற்றுவதும் ஆன உண்மைப் பொருளாஞ் சிவம் ஒன்றே முழுமுதற் கடவுளாகும் என்பதூஉம், இதனுண்மையை யுணர்ந்து அவ்வாற்றாற்சிவவயமாய் நின்றவர்க்குத்தாம் பேரின்பத்தை யடைந்த அவ்வளவில் மனவமைதி வராது தாம் பெற்ற பெறலரும் பேற்றை அது பெறாத ஏனை மக்களும் பெறும்படி அவர்க்கு அதனை யெடுத்துக் கூறும் அருளிரக்க முண்டாமென்பதூஉம், அங்ஙனஞ் சிவஞானிகளாயினார் கூறும் மெய்யுரையினை ஏற்று நலம்பெறும் நல்வினை வாயாதார் தமக்குள்ள ஆணவ அறியாமை முனைப்பால் அம் மெய்யுரையினை விடுத்து முழுமுதற் கடவுளல்லாத சிற்றுயிர்களையும் உயிரல் பொருள்களையுந் தெய்வமெனத்துணிந்து இதுதான் கடவுள் அதுதான் கடவுள் என இசைத்துத் தம் பிறவிப்பயனை இழப்பரென்பதூஉம், மற்று அங்ஙனம் அறியாமை வயப் பட்டார் போலாது மெய்யுணர்ந்தார் கூறும் மெய்யுரை யினை ஏற்று அதன்வழி நிற்கவல்ல நல்லார்க்கு எவ்வுயிர்க் கும் பொதுவாய் அருள் வெளியிலே ஆடல்புரியும் அம்பல வாணன் இன்பக் கூத்தினை நினைவு ஒருங்கி உணர்ந்து பிறவித் துன்பமறக் காணும் பேரின்பக் காட்சி வாய்த்தலின் அவர்க்கு உயிரினியல்பு, உலகினியல்பு, மலத்தினியல்பு முதலாயினவெல்லாம் பட்டப்பகலிற் கண்ணெதிரே காணப் படும் பொருள்போல் நன்கு புலனாமென்பதூஉம் மேலைத் திருப்பாட்டில் நன்கெடுத்து நுவலப்படுதல் காண்க. இனி, இவைதம்மை முறையே விளங்க விரித்து ஆராய்ந்து காணப்புகுவாம். உலகத்தில் நம்மறிவிற்குப் புலனாகும் பொருள்களெல்லாம் அறிவில் பொருளும் அறிவுடைய உயிர்ப்பொருளும் என்னும்இருபெருங் கூற்றில் வந்தடங்குவன வாகும், இவைதம்முள், அறிவில் பொருள் களென்பன தாமே இயங்கமாட்டாவாய்ப் பிறிதொன்று இயக்கினால் இயங்குந் தன்மையவாகும்,இனி, அறிவுடைய உயிர்களென்பன தாமே அறிவனவாயும் பிறர் அறிவித்தன வற்றை அறிவனவாயும் பிறர்க்கு அறிவிக்கவல்லனவாயும் உயிரற்ற பொருள்களை இயக்கவல்லனவாயுமிருக்கும் எனவே, உயிரில்லாப் பொருளின் றன்மையும் உயிருடைய பொருளின் றன்மையும் வெவ்வேறாய் ஒன்றினொன்று மறுதலைப் பட்டு நிற்றலின்,இவை எக்காலத்தும் எவ்விடத்தும் ஒன்றினொன்று வேறான இயற்கையுடைய வாகவே இருக்கு மல்லாமல், அறிவில் பொருள் அறிவுடைப் பொருளாகவும், அறிவுடைப் பொருள் அறிவில் பொருளாகவும் மாறுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் நிகழ மாட்டாதென்க அற்றேல், மேனாட்டவரில் இயற்கைப் பொருளா ராய்ச்சியிற் சிறந்தாரான `பாடியன் (Bastian) என்பார், அறிவில்லாத பருப்பொருளினின்றே அறிவுடைய உயிர்ப் பொருள் தோன்றுகின்றதெனப் பலமுகத்தானாராய்ந்து கூறியதென்னை யெனின்; அவர் செய்த ஆராய்ச்சி உண்மை யுடையதன்று, ஏனென்றால், அவர் செய்த அவ்வாராய்ச்சி யினைத் திரும்பவும் நுணுகி யாராய்ந்த டிண்டல் (Tyndall) என்னும் பேராசிரியர் தாமாராய்ந்து கண்ட முடிபாக, உயிரில்லாப் பொருளிலிருந்து உயிருடைய பொருள் தோன்றாதென்றும், உயிருள்ள பொருட் சேர்க்கை யிலிருந்தே பிறிதோருயிர் தோன்றுகின்றதென்றும் அறி வுறுத்தி யுறுதி கூறியிருக்கின்றார்1 ஆகவே, அறிவில்லாப் பருப்பொருளி லிருந்து அறிவுடைய நுண்பொருள் தோன்று மென்றல் உண்மை யாராய்ச்சிக்கு ஒவ்வாதென்று உணர்தல் வேண்டும். இனி, ஏகான்மவாதங்கூறும் ஒரு சாரார் சடமென்றுஞ் சித்தென்றும்இரண்டில்லை; சடமே சித்து, சித்தே சடம், பிரமத்தினின்றே நெருப்பிற் புகைபோல மாயையாகிய சடப்பொருளுண்டாம் என்று கூறுவர், அவர் கூற்று மேலே காட்டிய உண்மையாராய்ச்சிக்கு ஒவ்வாமையானும்; நெருப்பிலுண்டாகும் புகை நெருப்பை யணைந்த விறகின் காரியமேயல்லாது நெருப்பின் காரியம் அன்றென்பதற்குக் கனிந்த தணலிற் புகையுண்டாகக் காணாமையே சான்றாமாக லின் இவ் வுவமையின் தன்மையை யுற்றுணராது, இதனைக் கொண்டு தூய அறிவுப் பொருளாகிய பிரமத்தினின்று அறிவில்லாச் சடப்பொருளாகிய மாயை தோன்றுமென்றல் ஒருவாற்றானும் பொருந்தாமையானும் ஏகான்மவாதிகள் கூறும் பொருள் ஏற்கற்பாலதன்று. எனவே, அறிவில்லாப் பொருள்களும் அறிவுடைய உயிர்ப் பொருள்களும் எக் காலத்தும் வெவ்வேறாம் இயல்புடையவாகவே யிருக்கு மென்று கடைப்பிடித்துணர்தல் வேண்டும். இனி, இத் தன்மையவாகிய இரு கூற்றுப் பொருள் களுள், அறிவில்லதாகிய சடப்பொருள் தானே இயங்க மாட்டா தாகலின், அதனை இயக்குதற்கு அறிவுடைய பிறி தொரு பொருளின் சேர்க்கை அதற்கு இன்றியமையாது வேண்டப் படும். அஃதொக்குஞ், சடப்பொருளை இயக்கு தற்கு அறிவுடைய உயிர்ப்பொருள்கள் இருத்தலின் அவையே போதும், அவற்றினும் வேறாகக் கடவுளென்று வேறோ ரறிவுப் பொருள் வேண்டப்படுதல் எற்றுக்கு எனச் சாங்கிய மதத்தார் கூறுபவாலோ வெனின்; அவர் கூற்றும் அடாது; ஏனென்றால், அறிவில்லாப் பொருளின் நிலைகளும், அவற்றின் எல்லை காணப்படாத பரப்புகளும், அப்பரப்பு களில் எல்லையில்லாமல் அடங்கிக் கிடக்கும் எண்ணிறந்த பொருள்களுஞ் சிற்றறிவு சிறு தொழில் களுடைய சிற்றுயிர் களால் எங்ஙன மியக்கப்படக் கூடும்? இந்த நிலவுலகத்தின் ஒருசிறிய விடத்திலிருக்கும் ஒருவன், சில காலிருந்து சில காலத்தின் மாய்ந்து போகின்ற வனாயுந் தான் உயிரோடிருக்குங் காலத்திலும் பலவகை நோய்களாற் பற்றப்பட்டு அந்நோய் தீர்த்தற்குப் பலவகை மருந்துகளாகிய பருப்பொருளுதவியை வேண்டி நிற்பவனாயுந் தான் உயிர் பிழைத்து வாழ்தற்கு அரிசி, பருப்பு, பால், நெய் முதலான பருப்பொருட் பண்டங்களி னுதவியை இன்றியமையாது வேண்டி நிற்பவனாயுந் தன் கண்ணெதிரே அருகிலிருக்கும் இடங்களையும் பொருள்களையு மன்றித்தன் கட்பார்வைக்குப் புறத்தே அருகிலிருக்கும் பொருள்களையுந் தன் கட்பார்வைக் கெட்டாத் தொலைவி லுள்ள பொருள்களையுங் காண மாட்டாதவனாயும், நேரே அருகில் உள்ள பொருள்களுள்ளும் மிகச் சிறியனவா யிருப்பனவற்றைத் தெரிந்து கொள்ள மாட்டாதவனாயும், மிகப் பெரியன வாயிருக்குஞ் சுமைகளையும் பொருள்களையும் பிறருடைய பிற கருவிகளி னுடைய உதவியின்றி அசைக்கமாட்டாதவனாயும் இருத்தலின், இவனது அறிவிற்கும் இவனது ஆற்றலுக்கும் எட்டாத இந்நிலவுலகமாகிய பெரும் பருப்பொருளை இவன் றன்னறிவு கொண்டுந் தன் வலிமை கொண்டும் எங்ஙன மியக்க மாட்டுவான்? பருப்பொருளாகிய இந்நிலவுலகஞ் சிறிது அதிர்ந் தாலும் இதன்கண் உள்ள எரிமலைகள் வெடித்து நெருப்பைக் கக்கினாலும் இதன் கணுள்ள ஆறுங் கடலும் வெள்ளம் பெருகினாலும், இதன்கண் உலவுங் காற்றுச் சூறாவளியாய்ச் சுழன்று அடித்தாலும் மக்களாகிய சிற்றுயிர்களும், இச் சிற்றுயிர்களா லமைக்கப்படும் நாடு நகரங்கள் மாட மாளிகைகளும் பொடிபொடியாய் நொறுங்கிச் சாம்பலாய் வெந்து புழுதியாய்ப் பறந்து அழிந்து போவதை எங்கண்ணெதிரே ஒரோவொரு காலங்களில் ஒரோவோர் இடங்களிற் காண்கின்றே மல்லேமோ? சான்பிரான் சிகோ வென்னும் அமெரிக்காவிலுள்ள மாப்பெரு நகரமும், இத்தாலி தேயத்திலிருந்த மெசீனாப் பட்டினமுஞ் சிறிது காலத்திற்கு முன் சப்பான் தேயத்தில் `டொக்கியோ பட்டினமும் நில அதிர்ச்சியாலும் எரிமலை நெருப்பாலும் அடியோடழிந்து எரிந்து கரிந்த காலத்தில் அங்கங் கிருந்த மக்களெல்லாரும் பட்ட பெருந்துன்பத்தை அறியா தார் யார்? மக்கள் அவை தம்மைத் தடுக்கவல்ல ஆற்றலுடைய ராயிருந்தால் அவ்வழிவுகள் நிகழாமல் தடை செய்திருக்க லாமன்றோ? இங்ஙனம் இந்நிலவுலகத்தின் ஒரோவொரு பகுதிகளில் நிகழும் அழிவு நிகழ்ச்சிகளையே அவை நிகழாமல்தடை செய்யவும், அழிந்து நீரிலமிழ்ந்திப் போன நிலப்பகுதிகளை மீண்டும்மேற் கொணர்ந்து நிலை நிறுத்தவுஞ் சிறிதும் ஆற்றலில்லாத நம்மக்கள் இந்நிலவுலகத்தைத் தாமாகவே ஆக்கவும் அழிக்கவும் நிலை நிறுத்தவும் வல்லர் ஆவர் என்று உரைப்பதினும் புல்லியவுரை வேறுண்டோ சொல்லுமின்! தமதுடம்பு பழுதுபட்ட விடத்து அதனையே ஆக்கிக் கொள்ள மாட்டாத நம்மனோர் எண்ணிறந்த பிறவுயிர் களுக்கு எண்ணிறந்த உடம்புகளைப் படைத்துக் கொடுக்க வல்லராதலும் அவ்வுடம்புகளொடு கூடியிருந்து இவ்வுலகத்து இன்பங்களை அவைநுகருமாறு பல்வேறு பண்டங்களை யமைத்துவைக்க வல்லராதலும் அவ்வுடம்பு களும் அப் பண்டங்களும் இருத்தற்கு இம் மாப்பெருநில வுலகத்தைப் படைக்க வல்லராதலும் யாங்ஙனங் கூடும்? பாருங்கள்! இந்நிலவுலகத்தளவிலேயே ஆற்றல் மிகக் குறைந்தவராய் நிலையின்றி உயிர்வாழும் நம்மனோர், இந்நிலவுலகத்துக்கும் எட்டா நெடும் பெருந் தொலைவிலே இடைவெளியிற் சுழன்று செல்லும் பகலவன் மண்டிலம், திங்கள் மண்டிலம், செவ்வாய் மண்டிலம், புதன் மண்டிலம், வியாழன் மண்டிலம், வெள்ளி மண்டிலம், சனி மண்டிலம் முதலான வெவ்வேறு பேருலகங்களையும் இவற்றிற்கும் .நெடுந் தொலைவிலே இவற்றினும் பல்லாயிர மடங்கு பெரியன வாய்ச் சுழன்று செல்லும் எண்ணிறந்த வான்மீன் மண்டிலங் களையும் எங்ஙனம் படைக்கவும் இயக்கவும் வல்லராவர்? இத்தனை கோடியுலகங்களையுஞ் சிற்றுயிர்களாகிய நாம் படைக்க மாட்டுவேம், இயக்க மாட்டுவேம், அழிக்க மாட்டு வேம் என்று எவரேனுங் கூற முன் வருவராயின் அவரை மைத்துனர் பல்கி மருந்திற் றெளியாத பித்தனென் றெள்ளிச் சிறுமகாரும் நகையாடு வரன்றோ? ஆகவே, சிற்றறிவினரான உயிர்கள் தாமாகவே மாயையை இயக்கி, அதனிலிருந்து தம்முடம்புகளையும் உலகங்களையும் இவ்வுலகத்துப் பல பண்டங்களையும் படைத்துக் கொள்ள மாட்டுவரென்னுஞ் சாங்கியருரை, பிறந்த குழவி தன் தாயினால்எடுத்து அணைக்கப்படாமல் தானாகவே பாலிருக்குமிடந் தேடி அதனைப் பருகுமென்று கூறுவாருரையோ டொத்து நகையாடற் பாலதாய் முடியும், ஆதலால், அறிவில் பொருள்கள் எல்லாவற்றிற்கும் முதற் காரணமாகிய மாயையை இயக்கி அதன்கணிருந்து சிற்றுயிர்க ளெல்லாவற்றிற்கும் அவ்வவற்றின் இயற்கைக்கு இணங்கப் பலவேறு வகையான உடம்புகளையும் அவைகள் நுகருதற்குப் பலவேறு வகையான பண்டங்களையும்அவைகள் இருந்து உயிர்வாழ்தற்குப் பல்வேறு வகையான உலகங்களையும் முன்னறிந்து அமைத்து வைத்தற்கு எல்லா அறிவும் எல்லா ஆற்றலும் எல்லா முதன்மையும் எல்லா இரக்கமும் ஒருங்குடையனாகிய ஒரு முழுமுதற் கடவுள் இன்றியமையாது வேண்டப்படுவனென்பது தெளிந்த முடிபாமென்றுணர்ந்து கொண்மின்கள்! ஆனது பற்றியே, இராமலிங்க அடிகளார் எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் இறைவனாகிய சிவ பிரான் உண்டென்பதனை மேலைத்திருப்பாட்டில் நன் கெடுத்து அறிவுறுத்தருளினார் இனி, அப்பெற்றியனான இறைவன் பொருள்களி னுள்ளும் புறம்பும் இருப்பனென்று கூறியதென்னை? இவ் விரண்டின் புறத்தே உருவுடையனாய் இருந்தே இவை தம்மை இயக்கமாட்டுவான் என்று துவிதவாதிகள் கூறுதல் போலாவது, அற்றன்று இறைவன் பொருள்களிலும் உயிர் களிலும் அருவாய் அவற்றின் அகத்தே மட்டும் இருப்பானல்லது புறத்தே இருப்பானல்லனென அருவ வாதிகள் கூறுமுறை போலாவது நுவலாமல், அவை இரண் டனகத்தும் புறத்தும் இருப்பனென அடிகளார் அருளிச் செய்த தென்னையெனிற் கூறுதும்; கடவுள் உருவமாயே இருப்ப னென்றாவது, அன்றி அருவமாயே இருப்பனென் றாவது சொல்லி, எல்லாம் வல்ல அவனது இறைமைக் குணத்தை ஒரு வரையறைப் படுத்தல் அவன்றன் வரம்பிலாற்றலுக்கு இழுக்காய் முடியுமாதலானும், அவன் உருவ மாயே இருப்பனென்றுரைப்பின் உருவு உடைய உலகத்துப் பொருள்களில் ஒருவனாய் முடிவன் ஆகலானும், அருவ மாயே நிற்பனென் றுரைப்பின் அருவமாகிய வான் வெளி முதலிய பொருள்களில் ஒன்றாக வைத்து எண்ணப் படுவனாகலானும், புறத்தேஇருப்பவனுக்கு அகத்தே செய்ய வேண்டுவனவும், அகத்தே இருப்பவனுக்கு புறத்தே செய்ய வேண்டுவனவும் அறிந்து செய்தல் இயலாமை யானும், பொருள்கள் உயிர்களின் அகத்தும் புறத்தும் இருக்க வல்லவனுக்கே அவ்விரண் டிடத்தும் அவைகட்கு ஆவன அறிந்து செய்தல் இயலு மாகாலானும், எல்லாம் வல்ல இறைவன் அருவாயும் உருவாயும் அகத்தும் புறத்தும் வரை யறையின்றி நிறைந்து நிற்பனென்பதே உண்மை முடிபா மென்று ஓர்ந்து கொள்ளல்வேண்டும், இவ்வுண்மை தேற்று தற்கே ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனார், இல்லா முலைப்பாலுங் கண்ணீரும் ஏந்திழைபால் நல்லாய் உளவாமால் நீர்விழல் போல் - இல்லா அருவாகி நின்றானை யாரறிவார் தானே உருவாகித் தோன்றானேல் உற்று என்றும், அவர்தம் மாணாக்கர் அருணந்தி சிவனார், உலகினிற் பதார்த்த மெல்லாம் உருவமோ டருவ மாகி நிலவிடும் ஒன்றொன் றாகா நின்றஅந் நிலையே போல அலகிலா அறிவன் றானும் அருவமே என்னில் ஆய்ந்து குலவிய பதார்த்தத் தொன்றாய்க் கூடுவன் குறித் திடாயே அருவமோ உருவா ரூப மானதோ அன்றி நின்ற உருவமோ உரைக்குங் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னின் அருவமும் உருவா ரூப மானது மன்றி நின்ற உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக் குள்ள வாமே என்றும், அருளிச் செய்தனர்கள் வடமொழியில் ஈசாவாசி யோபநிடதமும், அவனைக் கண்டு எல்லாம் நடுங்குகின்றன அவனெதற்கும் நடுங்குவதில்லை அவன் எல்லாவற்றிற்குந் தொலைவிலிருக்கின்றான் அவன் எல்லாவற்றிற்கும்அருகிலு மிருக்கின்றான் அவன் எல்லாவற்றின் உள்ளு மிருக்கின்றான் அவன் எல்லாவற்றின் வெளியிலு மிருக்கின்றான் என்று இவ்வுண்மையினையே நன்கெடுத்து மொழிவ தாயிற்று. இனி, இங்ஙனம் பொருள்களின் உள்ளும் புறம்பும் உயிர்களின் உள்ளும் புறம்பும் நிறைந்திருப்பானான இறைவனியல்பு உணர்த்துவான் புகுந்து, அவன் இயற்கை யுண்மையும் இயற்கை யறிவும் இயற்கையின்பமும் வாய்ந் தானாகி யிருப்பனென அடிகள் மொழிந்திட்டார். இறை வனியல்பு இப்பெற்றியதாமெனவே, இறைவனது உதவியை அவாய் நிற்கும் பொருள்களும் உயிர்களும் அங்ஙனம் இயற்கையிலேயே உண்மையும் அறிவும் இன்பமும் வாயாவா யிருக்கு மென்பதும் அறிவித்தாராயிற்று, இனி, இம் மூன்று தன்மைகளின் இலக்கணங்களும், பொருள்களும் உயிர்களும் இவைதம்மை இயற்கையிலேயே யுடையவாகாமையும் இறைவனொருவனே இவைதம்மை இயற்கையே யுடையனா தலும் இறைவனைச் சார்ந்தே உயிர்கள் அவை மூன்றும் நிலையாக எய்தப் பெறுதலும் முறையே விளக்கிச் செல்வாம் முதற்கண் `உண்மை என்பது `என்றும் ஒருபடித்தாய் நிற்கும் மாறாநிலையே யாகும், நமதறிவுக்குப் புலனாகும் பொருள்களுள் ஒன்றாயினும் மாறா நிலையினதாய் ஒரு படித்தாய் நிற்கக் காண்கின்றோமா? இல்லை இல்லை நாம் உயிர்வாழ்தற்கு இடமாயுள்ள இம்மண்ணுலகு எத்தன்மைய தாயிருக்கின்றது? ஒரு காலத்து மேடாயிருந்தது பள்ளமா கின்றது. பள்ளமாயிருந்தது மேடாகின்றது; பண்டைக் காலத்திற் சிறந்த நாகரிகமுடையதாய் விளங்கிய குமரி நாடு இப்போது கடலுள் அமிழ்ந்திக்கிடக்கின்றது; கடலுள் மறைந்து கிடந்த எத்தனையோ நிலப்பகுதிகள் இப்போது கடல் நீருக்கு மேற் பல தீவுகளாய்க் கிளம்பியிருக்கின்றன. எத்தனையோ ஆயிர ஆண்டுகளுக்கு முன் நாகரிகத்திற் சிறந்த மக்களால் எகுப்தி நாட்டில் அமைக்கப்பட்ட பெரியபெரிய நகரங்களும் அந்நகரங் களிலமைக்கப்பட்ட பெரியபெரிய அரண்மனைகளும், பெரிய பெரிய கோயில் களும், அங்ஙனமே சாலடி நாட்டில் `ஊர் என்னுந்தலைநகரில் எடுப்பிக்கப்பட்ட மிகப் பெரிய அரண்மனைகளும், மிகப்பெரிய கோயில்களும், அங்ஙனமே நமது இவ்விந்திய நாட்டின் வடமேற் பகுதியிற் குடியேறிய பண்டைத்தமிழ் மக்களால் தலைநகராக அமைக்கப்பட்ட `அரப்பா என்னும் இடமும் அதன்கண் இருந்த அரண் மனைகள் கோயில்களும் மண்மூடுண்டு, இப்போது மேல் நாட்டு நன்மக்களால் நிலத்தினின்றும் அகழ்ந்தெடுத்துக் காட்டப்படுகின்றன, முன்னொருகால் மேல்நாடு முழுமையுந் தம் செங்கோல் நீழலில் இனிது வைக அரசு செலுத்திய உரோம வேந்தர்க்குத் தலைநகரா யிருந்த பழைய உரோம நகரின் மிக வியக்கத்தக்க மாட மாளிகைகள் அழிந்து பாழாய்க் கிடத்தலை இப்போதுந் திரள் திரளான மக்கள் சென்று பார்த்து வருகின்றனர். இங்ஙனமே இத்தமிழ் நாட்டகத்தும் பழங்காலத்திருந்த தமிழ் வேந்தர் அமைத்த அரண்மனைகளுந் திருக்கோயில் களும் இடிந்துபாழாய்க் கிடத்தல் திருவாரூர், கங்கை கொண்ட சோளேச்சுரம், மகாபலிபுரம், செஞ்சி,வேலூர் முதலிய இடங்களில் இன்றும் எல்லாருஞ் சென்று பார்த்து வருகின்றனர், வைகை முதலிய யாறுகளும் முற்காலத்து ஓடிய வழிமாறி ஓடுகின்றன. மிகப் பழைய நாளில் வடநாட்டில் ஓடிய சரசுவதி என்னும்யாறும் இப்போதுஇல்லாமலே போயிற்று. முன்னில்லாத பல யாறுகள் பின்னர் புதியவாய்த் தோன்றி ஓடா நிற்கின்றன, நாம் உறையும் இந் நில மண்டிலமே வரவரக் குளிர்ந்து வருகின்றதென்றும், இன்னும் பல்லாயிர நூற்றாண்டுகள் கழிந்தபின் மக்களும் பிறவுயிர் களும் உயிர் வாழ்தற்கே இசையாதாய் இதுமாறு மென்றும் நில நூல் வல்லார்கள்பெரிதாராய்ந்து உரைக்கின்றனர், இப்போது நமக்குஇரவில் ஒளியைத்தரும் நிலா மண்டிலமானது பன்னூறாயிர ஆண்டுகளுக்கு முன்உயிர் வாழ்க்கைக்கு இடமாயிருந்து, பின்னர் வரவரக் குளிர்ந்து உயிர் வாழ்தற்கு ஏலாத இயல்பினதாய் மாறியிருக்கின்ற தென வான்நூலாசிரியர்கள் நுவல்கின்றனர். இன்னும் கண்களுக்கு ஆலம்வித்துப் போலவும்மின்மினியொளி போலவுந் தோன்றா நின்ற எத்தனையோ பெரிய பெரிய உலகங்களிற் பற்பல முன்னரே அழிந்துபட்டனவாயும் வேறு பல புதிது தோன்றின வாயும், மற்றும் பல அழிந்தொழியும் நிலைமையில் இருப்பன வாயும் பற்பல மாறுதல்கட்கு உட்பட்டனவாய்ச் செல்கின்றன வென்னும் உண்மை வான்நூல் ஆராய்ச்சியாற் புலனாய்க் கொண்டிருக்கின்றது, நாம் நுகரும் பண்டங்கள் நாம் புழங்கும் ஏனங்கள் முதலாயினவெல்லாம் நாளேற நாளேறத் தமதுகட்டுச் சிதைந்துந் தேய்ந்தும் அழிந்து போதல் போலவும், நமக்கு நெருங்கிய தொடர்புடைய நம்முடம்பும் நாளேற நாளேற நரை திரை மூப்புப் பிணிகள் உடையவாகிக் கட்டுத் தளர்ந்து நம்மைவிட்டு அழிதல்போலவும், இவ்வுலகமும் இவ்வுலகத்தைச் சூழ்ந்த எண்ணிறந்த உலகங்களும் அவற்றின் கண் உள்ள அளவிலாப் பண்டங்களும் ஒரு காற்றோன்றிச் சிலகால் இருந்து பிறிதொருகாற் கட்டுக் குலைந்து காணாமற் போய் விடுகின்றன, ஆகவே, மிகச் சிறியதுமுதல் மிகப் பெரிய தீறான எல்லா வகையான உயிரில்லாப் பொருள்களும் ஒரே நிலையாக இருக்க மாட்டாதனவாய்ச் சிதைந்தொழிந்து போதலால், அவைகளை ஒரே நிலையிலுள்ள உண்மைப் பொருள்களாகக் கூறுதல் இயலாது. இனி, உயிருடைய பொருள்களின் நிலை சிறிது ஆராயற்பாற்று, உயிருடையவைகள் எல்லாம் அறிவுடை யனவாய் இருந்தும், அவற்றின்அறிவு என்றும் ஒரே தன்மைய தாகச் சுருங்குதல் விரிதலின்றி என்றும் ஒரே அளவினதாக, அகவிருளால் இடையிடையே பற்றப்படாத னவாக விளங்கக் கண்டதுண்டோ? நாம்சிறு மகவாயிருந்த ஞான்று நமதறிவு எந்நிலையிலிருந்த தென்பது நமக்கே விளங்கவில்லை, ஆனாலும், எத்தனையோ சிறு மகவுகளை நாம் நம் கண்ணெதிரே கண்டு, அவற்றின் இயல்பை உற்றுநோக்குதல் கொண்டு, அவற்றின் அறிவு ஏதோ ஒரு பேரிருளாற் கவரப்பட்டிருக்கின்றதென்றுந் தாய் தந்தையர் உடன் பிறந்தார் நேயர் ஆசிரியர் முதலான பிற அறிவுடை யுயிர்களின் சேர்க்கையிலிருந்து அம்மகவுகள் சிறிதுசிறிதாக அவ்விருள் நீங்கி அறிவு விளங்கப் பெற்று வருகின்றன வென்றுந் தெரிந்து கொள்கின்றோ மாதலால், நாமுஞ் சிறு குழவிகளாய் இருந்த ஞான்று ஏனைக் குழவிகளைப் போலவே நம்மை இன்னாரென்றும், நம்மைச் சூழ்ந்தவர் இன்னாரென்றும், நம்மைச் சுற்றியுள்ள பண்டங்கள் இன்னவையென்றும் உணரமாட்டாதவர்களாயிருந்தோம் என்பதை ஐயமறத் தெளிந்து கொள்கின்றோம். இது மட்டுமோ நாம் ஆண்டில் முதிர்ந்தவர்களாய்க் கல்விப்பயிற்சியாற், பேரறிஞர் சேர்க்கையால் அறிவு விளங்கப்பெற்ற பின்னும், நமதறிவு ஒருதன்மைத்தாய் விளங்குவதின்றிப் பல்வேறு மாறுதல்களின் வயப்பட்டு, நம்மை இடையிடையே துன்புறுத்தி வரக் காண்கின்றேம் அல்லேமோ? நேற்று அறிந்தவைகளிற் சென்றகிழமையில் அறிந்தவைகளிற், போன திங்களில் அறிந்தவைகளிற், கடந்த ஆண்டு அறிந்தவைகளில் எத்தனை கோடி நினைவுகள் எத்தனைகோடி எண்ணங்கள் நம்மறிவுக்குத் தென் படாமலே மறைந்து போயின! முன்னறிந்தவைகளை இங்ஙனம் நாம் மறந்து மறந்துபோதலால் நமக்கு வரும் இடர்களுக்கு, நம்மாற் பிறர்க்கு வரும்இடர்களுக்கு ஒரு கணக்குண்டோ! முன்னறிந்த வைகளை மறத்தலாற், நிகழ்ந்தவைகளை நிகழ்ந்தபடியே சொல்ல மாட்டாதவர்களாய்ப் பார்த்த பொருள் கேட்ட பொருள் சுவைத்த பொருள் இயல்புகளை அப்பார்த்த கேட்ட சுவைத்த படியே நினைவு கூர்ந்து சொல்லமாட்டாத வர்களாய் பொய்த்துப் பிழைபடுகின்றனம் அல்லமோ? கடந்தவற்றையறியும் அறிவிற்றான் இத்தகைய மாறுதல்கள் நிகழ்கின்றன வென்றாலும், இப்போது நம் கண்ணெதிரே நிகழ்வனவற்றிலாவது நமதறிவு பொய்படு தலின்றி மெய்யாக அறிதல் செய்கின்றதா? அதுவும் இல்லையே! நாம் நேரே காண்கின்ற பொருளையும் ஆராய்ந்து பார்த்தாலன்றி ஐயமறத் தெளியமாட்டாதவர் களாய் இருக்கின்றோம், ஒருதுண்டு செம்பையும் ஒருதுண்டு பொன்னையும் பளிச்சென்று தோன்ற விளக்கிக் கையிற் கொடுத்தால், அவை யிரண்டற்குமுள்ள வேறு பாடு தெரியாமல் எத்தனை பேர் ஏமாந்து போகின்றனர்! தித்திப்பான நாரத்தம்பழங் கொடி முந்திரிப்பழம் முதலியன வாங்குபவரில் எத்தனைபேர் அவற்றை நன்கு ஆய்ந்து பாராமல் வாங்கித்தாம் வாங்கியவை தித்திப்புக்கு மாறான புளிப்புடையவாயிருத்தலைக் கண்டு ஏமாந்து போகின்றனர். மருத்துவரில் எத்தனைபேர் நோயாளிகளின் நோயின் றன்மையை யறியாமல் மாறான மருந்துகளைக் கொடுத்து அவர் கொண்ட நோயை மிகுத்து அவரையுங் கொல்லு கின்றனர்! கணக்கரில் எத்தனைபேர் தவறாகக் கணக்குச் செய்துதாமும் பிழைபட்டுத். தாம் சார்ந்த செல்வரையுங் கெடுத்துவிடுகின்றனர்! சமையற் றொழில் செய்வாரில் எத்தனைபேர் காலமும்இடமும் உணவெடுப்பார் உடல் நிலையும் ஆய்ந்து பாராமல் உணவு சமைத்துக் கொடுத்து, அதனையுண்பார்க்குப் பல கொடு நோய்களை யெல்லாம் வருவித்து விடுகின்றனர்! நூல் எழுதுவாரில் எத்தனைபேர் காலப்போக்கு மக்கள் முன்னேற்றங் கருதிப் பாராமற் பயனற்ற பொருள்களை எழுதி மக்களறிவு வளர்ச்சியைப் பாழ்படுத்து கின்றனர்! அவருள் எத்தனைபேர் தாம் வழங்கும் மொழியைத் திருத்தமாகப் பயிலாமற் சொற்குற்றஞ் சொற்றொடர்க் குற்றம் பொதுள எழுதியும், அயன்மொழிச் சொற்களை அடுத் தடுத்துக் கலந்தும் அதன் தூய வழக்கை மாய வைக்கின்றனர்? இன்னும் இங்ஙனமே நம் மக்களிற் பெரும்பாலார் - அவர் கற்றவராயினுங் கல்லாதவராயினுந், தங்கண்ணெதிரே காண்பனவுஞ் செய்வனவுமெல்லாம் உண்மைக்கு மாறாகப் பிழைபடச் செய்துதாந் துன்புறுவ தொடு பிறரையுந் துன்புறச் செய்கின்றனர்! இவ்வாறு இவர்கள் நிகழ்கால நிகழ்ச்சி களிலேயும் மெய்யொடு திறம்பிப் பொய்படுமறிவின ராயிருக்கக் காண்டலின், இவர்களது அறிவை உண்மை நிலையினதென் றுரைக்க மெய்யறிவு வாய்ந்தார் ஒருப்படுவரோ சொன்மின்கள்! இனி, இங்ஙனங் கடந்த கால நிகழ்ச்சிகளிலும் நிகழ் கால நிகழ்ச்சிகளிலும் அடுத்தடுத்துப் பிழைபடும் அறிவுடைய இவர்கள்,புலனுணர்வு மனனுணர்வுக்கு எட்டாத வருங்கால நிகழ்ச்சிகளை முன்னறிந்து நடத்தல் யாங்ஙனங் கைகூடும்? நாம் நெடுங்காலம் உயிர்வாழ்ந்து இவ்வுலக இன்பங்களைத் துய்ப்போமென்று எண்ணிக் கொண்ட எத்தனை பேர் ஏழையெளியவர்கள் வயிற்றை யொடுக்கிச் சேர்த்த பொருளை அவர் கண்ணீர் சிந்தக் கைப்பற்றிக் கொண்டு வந்த அந்நேரத் திலேயே சடுதியில் உயிர் துறந்து பிணமாய்க் கிடக்கக் கண்டதில்லையா? தமக்கு மேல் வலிமையுடையவர் களில்லை யென்றுஇறுமாந்து வலியற்றவர்களைத் துன்புறுத்தி வந்தவர்கள் தாம் தம்மினும் வலியாரால் வெட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கவில்லையா? எத்தனை செல்வர்கள் எத்தனை அரசர்கள் எத்தனை மறவர்கள் தமது நிலையாமையை உணர்ந்து பாராமையால், நாளைக்கு நமது நிலைமை யெப்படியாமோ என்று ஐயுறவு கொள்ளாமற் பிறர்க்குத் தீங்கிழைத்துப் பின்னர்த்தாம் இருந்த இடமுந் தெரியாமல் இறந்து போகின்றனர், வருங்கால வியல்பை உணர்ந்து பார்க்க மாட்டாத நம்மக்களறிவும் அறிவெனப் படுமா? தன் உடம்பினுள்ளுந் தன்னைச்சுற்றிலும் நிகழப் போவன வற்றையே யறிய மாட்டாதான் ஒருவன், தான் ஒருவனே பல்லாண்டு நீடு வாழ்வன் ஏனையோ ரெல்லாம் நீடுவாழார் என நினைந்து பிறர்க்கு முன் தானேமாய்ந்து ஏமாற்றம் அடைவனாயிற் சிற்றறிவுடைய இம்மகனறிவு உண்மையை யுள்ளபடி யுணரவல்ல உண்மையுடையதாமோ? மக்களின் இச் சிற்றறிவுப் பெற்றி தேற்றுதற் கன்றோ ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனார், அறிந்தும் அறிவதே யாயும்அறியா தறிந்ததையும் விட்டங் கடங்கி - அறிந்த தெதுவறிவும் அன்றாகும் மெய்கண்டான் ஒன்றின் அதுவதுதான் என்னும்அகம் என்று அருளிச் செய்தார், பிற் காலத்தில் தாயுமான அடிகளும், இனியே தெமக்குன் அருள்வருமோ வெனக்கருதி ஏங்குதென் நெஞ்சம் ஐயோ இன்றைக் கிருந்தாரை நாளைக்கிருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லையே என்று அருளிச் செய்தமை காண்மின்கள்! இங்ஙன மெல்லாஞ் செல்கால, நிகழ்கால, வருங்கால நிலைகளை உணரும் உண்மை யறிவு வாயாமையால்,மக்களும் மற்றை யுயிர்களும் இயற்கை யுண்மை நிலையுடைய வாகாமை தெற்றென விளங்காநிற்கும்,. இதுகாறும் ஆராய்ந்தவாற்றால் உயிரில் பொருள் களும் உயிருள் பொருள்களும் இயற்கையிலேயே உண்மை நிலை யுடையவல்லாமைநன்கு பெறப்படுதலால், உயிர்கள் தாமுந்தம்மை ஓர் அறிவுடைப் பொருளென்று தமதுண்மை உணர்தற்குந் தமக்கு உடம்பும்உலகமும் உலகத்துப் பல் பொருள்களுமாகத் திரிபெய்திப் பயன்படும் மாயையென்று ஒரு பொருள் உண்டு என்று அதன் உண்மையினை அவைகள் அறிதற்குங், கடவுள் என்று ஒரு முழுமுதற்பொருள் என்றும் மாறா இயற்கை உண்மையுடையதாய் அவை இரண்டனை யுந் தொடர்பு படுத்துதற்கு வேண்டுமென்பது இன்றியமை யாது பெறப்படும், என்னை? தன்னிலே மாறா உண்மை நிலையில்லா ஒருவன் பிறர்க்கு ஏதொரு நன்மையுஞ் செய்ய மாட்டாமை நமது உலக வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழக்காண்டும் அன்றோ? தன் மனக்கினிய நண்பன் பட்ட கடனை நாளை வந்துதீர்த்து அவனைச் சிறைபுகாமற் காப்பேன் என்று உறுதி சொல்லிப் போன ஒரு செல்வன் தான் சொன்ன மொழியுந் தன் நினைவும் மாறிவிடுவனா யின், அவன் அவற்கு அவ்வுதவியைச் செய்யா தொழிதல் போலவும், வெப்பு நோயால் வருந்து மொருவனுக்கு அந்நோய் தீர்க்க வந்த மருத்துவன் ஒருவன் நாளை விழுமிய தொரு மருந்து கொணர்ந்தூட்டி அதனைத் தீர்ப்பேனெனச் சொல்லிப் போய் மறுநாளில் அங்ஙனமே வந்து செய்யா தொழியின் அவன் அவற்குச் சிறிதும் பயன்படாமை போலவும், ஒரு கொடியனால் துன்புறுத்தப்பட்டு நடுநிலை மன்றத்தில் முறையிட்டான் ஒருவனுக்கு முறை செய்யப் புகுந்த ஒரு நடுவன் தன்கடமையினின்றும் வழீஇத், துன்புறுத்திய கொடியன்பாற் கைக்கூலி வாங்கிக் கொண்டு முறை செய்யாது மாறுவனாயின் அவன் தன்பால் முறை வேண்டினானுக்கு முறை செய்யாது குறை செய்தல் போலவும் இறைவனும் மாறுந்தகையனாயின், அவன் உயிர் களுக்கு ஏதோரு நன்மையுஞ் செய்ய மாட்டாநிலை யினனாய் விடுவன். மற்று, அவன் எண்ணிறந்த வுயிர்களுக்கும் அவ்வவற் றின் அறிவு நிலைக்கேற்ப எண்ணிறந்த உடம்புகளைக் கொடுத்து அவற்றின் அறிவை மேன்மேல் விளங்கச் செய்து வருதலையும், அவற்றின் அறிவு விளக்கத்திற்கு இன்றி யமையாத வெயில் மண்டில, நில மண்டில இயக்கங்களைச் சிறிதும் மாறாமல் நிகழச் செய்து வருதலையும் அவற்றின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத புற்பூண்டுமரஞ் செடி கொடிகளை மாறாமல் விளைவித்து அவை காய், கனி, கிழங்கு, வித்துக், கீரை முதலான பயன்களைத் தொடர் பாகத் தருமாறு உதவி வருதலையும் மழை பெய்யுங் காலத்து மழை பெய்யவும் அதற்குக் கருவியான குளிர்ங்காற்று வேண்டுங் காலத்து அக் குளிர்ங்காற்று வீசவும், மழைக்கு முதலான நீராவி எழுதற்கு வெயில் மிகுங்காலத்து வெயில் மிகுந்து எறிப்பவும் மாறாமற் புரிந்து வருதலையும், இவ்வாற்றால் எல்லாவுயிர்களும் உணவு பெற்று அவற்றை யுட் கொண்ட பின் அகத்திருந்து அவ்வுணவைச் சாறுஞ் சக்கையுமாகப் பிரித்துச் சாற்றைச் செந்நீராக மாற்றி உடம்பெங்கும் ஓடச் செய்துஞ் சக்கையை உடம்பினின்று உடனுக்குடன் கழியச் செய்தும் நம் பெருமான் ஒரு நொடிப் பொழுதும் மடிந்திராதுபேருதவி யாற்றி வருதலையும், அவன் அமைத்த மாறாநிகழ்ச்சிகளுக்கு மாறுபடாமல் நமது வாழ்க்கையினை நாம் செலுத்தத் தெரியாமல் அறியாமை யினாலும் இறுமாப்பினாலும் தீய இன்ப வேட்கையினாலும் நமது உடம்பை நாமே சிதைத்து விட்ட விடத்து அதனை யொழித்துநமக்கு வேறு புதிய உடம்புகளைக் கொடுத்து நம்மை வேறு வேறு புதிய பிறவிகளில் உய்த்து வருதலையும் நாம் நன்காராய்ந்து ஆழ்ந்து நினையுங்கால், எல்லாம் வல்ல நம் ஆண்டவன் ஒருவனே எக்காலத்தும் எவ்விடத்தும் மாறா, உண்மைநிலை யுடையனா யிருக்கின்றன னென்பதூஉம், அவன் ஒருவனே எல்லா உயிர்களிடத்தும் - அவை எத்துணை இழிந்தன வாயினும் எத்துணை உயர்ந்தவனவாயினும், அவற்றின் பாலெல்லாம் மாறா அன்பினனாய் மாறா அருளினனாய் இருக்கின்றன னென்பதூஉம் உள்ளங்கை நெல்லிக்கனிப் போற் றெள்ளத் தெளிய விளங்குகின்றன வல்லவோ? ஆகையால், இயற்கை யுண்மை வாய்ந்தவன் இறைவன் ஒருவனே யல்லாமல் மற்றைய அல்லவென்று மேலைத்திருப்பாட்டில் அடிகளார் அறிவுறுத்தினமை சாலப் பொருத்த முடைத்தாதல் கண்டு கொள்ளப்படும், இனி, இவ் வுலகத்தின்கண் உள்ள சிற்றுயிர்களெல்லாம் ஒரே தன்மைத்தாக மாறாதுவிளங்கும்அறிவு வாய்ந்தவை அல்லவென்பது முன்னரே காட்டப்பட்டமையால் அவ் வுயிர்களெல்லாவற்றிற்கும் வேண்டுவனவெல்லாம்அறிந்து உதவி செய்தற்கு என்றும் ஒரு பெற்றித்தாய் வயங்காநின்ற பேரறிவு வாய்ந்த முதல்வன் ஒருவன் இன்றியமையாது வேண்டப்படுவனென்பது முடிக்கப்படும். எத்தனையோ உயிர்கள் புதிது தோன்றுவனவாயும் எத்தனையோ உயிர்கள் இறந்து படுபவனவாயும்எத்தனையோ உயிர்கள் வேறு பிறவிகளிற் செல்வனவாயும் உயிர்களின் தோற்றக்கேடுகள் இடை யறாது எங்கும்நிகழக் காண்டலின், அவ்வவ்வுயிர் களின் அகத்தும் புறத்துமிருந்து அவ்வவ்வற்றின் தோற்றக் கேடுகளை யறிந்து அவ்வவ்வற்றிற்குப் பிறரெவராலுஞ் செய்ய முடியாத பேருதவியைச் செய்யும் பெருமான் அறிவு, எத்துணைப் பெரியதாய் எத்துணை விழுமிய விளக்கத் தக்கதாய் எத்துணை அருளிரக்கம் வாய்ந்ததாய் எத்துணைச் சிறந்தமாறா நிலையினதாய் மிளிர்வதாகல் வேண்டும்! பசித்து உணவு வேண்டி வந்தார்க்கு உணவு கொடுக்கும் ஒருவன், ஓரிடத்தில் ஒருகாலத்துள்ளார் சிலர்க்கு மட்டுமே உணவு கொடுக்க வல்லனாவன்; தெற்கே குமரியிற் பசித்த பலர்க்கும், இடையே சென்னை வேங்கடம் முதலான ஊர்களிற் பசித்துள்ளார் பலர்க்கும், வடக்கே காசி அவந்தி முதலான ஊர்களிற் பசித்தார் பலர்க்கும் அவன் ஒருவனே ஒரே காலத்தில் உணவளிக்க மாட்டுவனோ? மாட்டானன்றே? ஒன்றை விட்டு ஒன்று மிக அகன்றிருக்கும் அவ்வவ்வூர் களிலுள்ள வறிஞர்க்கெல்லாம் அங்ஙனம்அவன் ஒரே காலத்தில் உணவளிக்க வேண்டின், ஆங்காங்கு உணவமைப் பார் பற்பலரை நிறுவிப் பெரும் பொருள் செலவிட்டு அவர் வாயிலாக அங்ஙனஞ் செய்யலாமேயன்றித்தான் ஒருவ னாகவே யிருந்துஅங்ஙனஞ் செய்யமாட்டுவான் அல்லன்! இங்ஙனமே நோய்கொண்டு வருந்துவார்க்கு நோய் தீர்க்கு மருத்துவனும், ஒருகாலத்து ஓரிடத்துள்ள ஒரு சிலர்க்கு மட்டுமே நோய் தீர்க்கமாட்டுவானன்றி, ஒன்றினொன்று அகன்றிருக்கும் பற்பல ஊரிலுள்ள பற்பலர்க்கும் ஒரே காலத்தில் நோய் நீக்கமாட்டுவனல்லன்; அன்றி அவன் அங்ஙனஞ் செய்யவேண்டிற் பெரும் பொருள் செலவு செய்து மருத்துவர் பற்பலரை ஆங்காங்கு ஏவியே நோய் கொண்டார் பல்லாயிரவர்க்கும் மருந்தூட்டி நோய் தீர்க்கற் பாலன், மற்று, எல்லாம் வல்ல, கடவுளோ ஓரிடத்தன்றி ஓரூரிலன்றி ஓருலகத்தன்றிப் பல்வேறிடங்களிலும் பல்வேறு ஊர்களிலும் பல்வேறு உலகங்களிலும் நிறைந்து ஆற்று மணலிலும் அளவிடப்படாதனவாய் உள்ள உயிர்த் தொகைளில் எத்தனை கோடியுயிர்களை ஒரே காலத்தில் தோற்று விக்கின்றான், எத்தனை கோடி யுயிர்களை ஒரே காலத்திற் காத்து வருகின்றான், எத்தனை கோடியுயிர்களை ஒரே காலத்தில் ஒரு பிறவியினின்று விடுவித்து வேறு பல பிறவிகளில் உய்த்து வருகின்றான், எத்தனை கோடி யுயிர்களை ஒரே காலத்தில் தன் திருவடிப்பேரின்பத்திற் படிவித்துவருகின்றான்! இங்ஙனமாக எல்லாஇடங்களிலும் எல்லாக் காலங் களிலுந் தான் ஒருவனாகவே யிருந்து, எல்லா உயிர்களின் இயல்புகளையும் அறிந்து அவ்வவற்றிற்கேற்ற உதவிகளைத் தான் ஒருவனாகவே செய்துவரும் இறைவன்றன் அறி வாற்றல் எவ்வளவு சிறந்ததாய், எவ்வளவு பேரள வினதாய் இருக்க வேண்டு மென்பதைச் சிறிது எண்ணிப் பாருங்கள்! இத்துணைச் சிறந்தஅவனறிவு, நம்மனோர்க் குள்ள அறிவுபோல் ஆணவ வல்லிருளில் மறைந்து இருந்து, பின் அதனின்றும் விடுபட்டு விளங்குவதாயிருக்கக்கூடுமோ என்பதையும் எண்ணிப் பாருங்கள்! அவனறிவு சிறிது மறைந்திருந்தால் இவ்வுலக மெங்கே, இவ்வுலகத்துள்ள பண்டங்களெங்கே, புற் பூண்டுகள் எங்கே, பல்வகைப் பிறவிகளெங்கே, பல்வகை யுயிர்களெங்கே, ஞாயிறு திங்களெங்கே, எல்லாம் வெறும் பாழாய் வெட்ட வெளியா யிருக்குமல்லவோ? ஆதலால் எல்லாம் வல்ல இறைவனறிவு, நமதறிவு போல் ஆணவ வல்லிருளிற் சிறிதும் மறையாதாய், என்றும் விளங்கின படியாயே யிருக்கும் என்பது சிறிதும் ஐயமின்றித் தெளியற்பாலதாகும், இதுபற்றியே அடிகளார் அவன் இயற்கை யறிவினனாயே யிருப்பன் என்று மேலைத் திருப்பாட்டில் அருளிச் செய்தாரென் றுணர்ந்து கொள்ளல் வேண்டும். இனி, இறைவன் இயற்கையுண்மையினனாயும் இயற்கை யறிவினனாயும்மட்டுமே இருப்பனென்று உரைப் பின், இவ்விரண்டு இலக்கணங்களும் மாயை ஆணவங் களுக்கும், மாயை ஆணவங்களினின்றும் விடுபட்ட உயிர் களுக்கும் முறையே பொருந்துவான் செல்லும், என்னை? உடம்பாயும் உடம்பின் கருவிகளாயும் உலகங்களாயும் உலகத்துப் பொருள்களாயுந் திரிபுறாத மாயையின் பரப்பு இன்னும் எவ்வளவோ பெரிதாய் இருக்கின்றது! இந்நால் வகைக் காரியப் பொருள்களாய்த் திரிந்த மாயையின் பகுதி சிறிதாயும், அங்ஙனந் திரியாத பகுதி பெரிதாயும், உள வென்பது ஆராய்ச்சியால் நன்கு புலனாதலின், திரிபில்லாத அதன் முதற்காரணப் பகுதி இயற்கை யுண்மை நிலை யுடையதாதல் தானே பெறப்படு மன்றோ? இங்ஙனமே, பிறவிக்கு வாராத உயிர்களும் இன்னும் எத்தனையோ கோடிக் கணக்காய் உள்ளனவாகலின் அவை தம்மைப் பற்றியிருக்கும் ஆணவமலமுங் காரியப் படாததாய் இயற்கை யுண்மைநிலை வாய்ந்ததாதலுந் தானே பெறப்படுமன்றோ? இவை போலவே சதா சிவ தத்துவத்தில் வைகுஞ் சதாசிவர் முதலாயினார் இயற்கையிலேயே ஆணவமலப் பற்றுப் பெரிதும் அகன்றவராய், இயல்பாகவே பேரறிவு விளக்கம் வாய்ந்தவராய் இருத்தலின், அன்னார்க்குள்ள அவ்வறிவு இயற்கையே யுண்மை நிலையுடையதாதலுந் தானே பெறப்படும்; பெறப்படவே இறைவன் ஒருவனே இயற்கை யுண்மையினனாயும் இயற்கையறிவினனாயும் விளங்குவ னென்ற சொற் குற்றமுடைத்தாய் முடியுமாம் பிறவெனின்; அற்றன்று, அக்குற்றம் அணுகாமைப் பொருட்டே இயல் உண்மை யறிவு என்றவளவில் அமையாது, இன்பம் என்ப தொன்று கூட்டி, இயல் உண்மை அறிவு இன்பவடிவாகி என்று ஓதி, இறைவன் வரம்பிலின்ப வடிவின னாய் நிற்றல் அவற்குச் சிறந்த இலக்கணமாதல் அடிகள் புலப்பட வைத்தார். அஃதொக்குமா றென்னை? மாயையிற் றிரண்ட பண்டங்களிற் பல இன் சுவையினவாயும், வேறுபல நறுமணத்தின வாயும், மற்றும் பல இன்னோசையினவாயும், இன்னும் பல அழகிய தோற்றத்தினவாயும், பின்னும் பல இனிய மென்மையினவாயும், புகுந்து உயிர்கள் பால் இன்பத்தை விளைக்கக் காண்டலின், மாயையும் இன்ப முடைத்தென்பது போதருமாலோ வெனின் அஃதொவ்வாது; என்னை? மாயையிற் றிரண்ட பண்டங்கள் அறிவுடைய உயிர்கள் மாட்டுஇன்ப துன்பங்களை விளைவித்தற்குக் கருவியா மல்லது, அவைதாமே இன்ப துன்பங்கள் உடையவல்லவா கலின், மாயை அறிவில் பொருளாதல் கண் கூடாக அறியக் கிடத்தலின், அதுதானே தனக்கு இன்ப முண்டென்றாதல் துன்பமுண்டென்றாதல் அறிதல் செய்யாது, கனிந்த பலாச்சுளையைத் தேனோடு கூட்டி யுண்டவனுக்கு அதன் இன்சுவையினால் இன்பம் மீதூரக் காண்டுமேயன்றி, அப்பலாச்சுளையே அவ்வின் சுவை இன்பத்தை எய்தக் காண்டுமில்லையே, ஒரு கூர்ங் கத்தியாற் கை யறுப்புண்ட வனுக்கு அதனால் துன்பம்மீதூரக் காண்டுமே யன்றி, அக்கத்தியே அவன் கையை அறுத்து அதனால் துன்புறக் காண்டுமில்லையே இவ்வாறே இன்ப துன்ப நிகழ்ச்சிகள் அறிவுடைய வுயிர்கள் பாலன்றி, அவை தம்மை அவற்றின் பால் விளைவிக்கும் மாயையின் காரியங்களில் ஒரு சிறிதுங் காண்கிலமாகலின்,மாயை அவற்றிற்குக் கருவியேயா மல்லாமல்,அவை தாமே இன்ப துன்பங்களை உடையவாகா என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த உண்மையே யாம், அஃதொக்குமாயினும், அறிவுடைய உயிர்கள் இன்பம் எய்தக் காண்டலின், அவையும் இன்பமுடைத்தென்பது பெறப் படும்; படவே, இறைவன் ஒருவனே இன்ப முடையவன் என்று உரைத்தது இழுக்காமாலோ வெனின்; இழுக்காகாது; என்னை? உயிர்களெல்லாம் மாயையிற் றிரண்ட பண்டங் களை நுகர்தலானும் அழகு அறிவு அன்புடைய பிறவுயிர் களொடு சேர்தலானுமே இன்புறக் காண்டுமல்லது, அவ்விரண்டன் றொடர்பின்றித் தானே தனித்திருந்து இன்புறும் ஒருசிற்றுயிரை யாண்டுங் கண்டில மாகலின் என்பது இங்ஙனம்பிறிதொன்று இன்புறுத்தினாலன்றி இன்புறல் அறியாத சிற்றுயிர்களை இயற்கையின்பமுடையன வென்றால் இசையாமையின் முழுமுதற் கடவுளொருவனே இயற்கை யின்பமுடைய னென்பது முடிக்கப்படும்; படவே, அவற்குரிய அச்சிறப்பிலக்கணம் பிறிதெதற்கும் உரிமையா வான் சேறல் இல்லையென்று கடைப்பிடித்துணர்ந்து கொள்ளல் வேண்டும். அதுவேயு மன்றிச் சிற்றுயிர்களெல்லாந் துன்புறுத்தும் பொருட் சேர்க்கையால் துன்புற்றும், இன் புறுத்தும் பொருட் சேர்க்கையால் இன்புற்றும் வருதல் போல்இறைவன் எதனாலேனுந் துன்புறுத்தப்படுதலும் பிறிதெதனாலேனும் இன்புறுத்தப்படுதலும் இல்லனாய், எஞ்ஞான்றும் இன்ப வுருவின னாயே நிற்கும் பெற்றியனாகலின், அவற்குரிய அச்சிறப்பிலக்கணம் பிறிதெதற்கும் உரியதாதல் செல்லா தென்று உணர்தல் வேண்டும், இறைவன் இங்ஙனம் இன்ப வுருவினனாயே நிற்குந் தனிப் பேருண்மை அறிவுறுத்து தற்கன்றோ மாணிக்க வாசகப் பெருமான், சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் ஒருவனே சொல்லுதற்கரிய ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்கும் ஆனந்தமாக் கடலே என்றும், ஓரின்பவெள்ளத்து உருக்கொண்டு தொண்டரை யுள்ளங் கொண்டார் என்றும், இங்ஙனமே இராமலிங்க அடிகளார், மகாதேவ மாலையில், தற்போத வொழிவினிடை நிறைந்து பொங்கித் ததும்பிவழிந் தோங்கியெலாந் தானே யாகிச் சிற்போதத் தகம்புறமுங் கோத்துநின்ற சிவானந்தப் பெருக்கேமெய்ச் செல்வத்தேவே என்றும் அருளிச் செய்திருத்தலும் நினைவிற் பதிக்கற் பாற்று அற்றேல், இறைவனோடொத்த அறிவினராக ஓதப் படுஞ் சதாசிவர் முதலாயினார் மாட்டும் இயற்கையின்பம் உளதாகல் வேண்டுமா லெனின்; அற்றன்று, சதாசிவர் முதலியோர்க்குத் தலைமை செலுத்துதலால் உண்டாகுஞ் செருக்காகிய `அதிகாரமலம் ஒன்றுண்டென நூல்கள் ஓதுதலின், அவரது அறிவுஞ் சிறிது குறைபாடுடையதே யாகும்; அஃதுடைய தாகவே, அவ்வறிவைப் பற்றி நிகழும் இன்பமுங் குறைபாடுடை யதாகவே யிருக்கும்,அதனால், அவர்க்குள்ள அக் குறைபாடு நீங்குதற்கும், அவர் எல்லாம் வல்ல முழுமுதற் சிவத்தின் உதவியையே அவாய் நிற்றலின், அவரும்அச் சிவத்தின் றிருவருட்பேரின்பத்தைத் தலைக்கூடி, அதன்கட் படிந்த பின்னரே நிறைந்த அறிவும்நிறைந்த இன்பமும் உடையராவ ரென்பது முடிக்கப்படும்,அங்ஙனம் முடிக்கப்படவே, முப்பத்தாறு பருப்பொருள் நுண்பொருட் படிகளுக்கும், அவ்வப்படிகளில் வைகுவாராய் மும்மல இருமல ஒருமலப் பற்றுடைய மூவகை யாருயிர்த் தொகுதி களின் நிலைகளுக்கும் அப்பாற்பட்ட இயல்பினதாயுள்ள சிவம் ஒன்றே இயற்கை யுண்மையும் இயற்கை யறிவும் இயற்கை யின்பமும் உடையதாய், எல்லாவற்றையுந் தன் அருள் வெளியிலடக்கி அவற்றின் மேலும் எல்லையில்லாத விரிவினதாய் விளங்குமென்பதும் முடிக்கப்படும், அஃதொக்குங், காரியப்படாத மாயையின் பெரும் பகுதிஇயற்கை யுண்மை யுடையதாதல் முன்னரே பெறப் பட்டமையின், அஃது அவ்வாற்றால் இறைவனியல்போடு ஒத்ததாவான் செல்லுமா லெனின்; மாயையின் ஒரு பகுதி வியற்கையுண்மையுடையதாயினும் அதன் மற்றொரு பகுதி இயற்கையுண்மை வாயாதாய்க் காரியப்பட்டு மாறக் காண்டலினாலும், அங்ஙனந் தன்னிலே இருவேறு வகைப்பட்டு நிற்கும் அப்பொருள் ஒரே நிலையின தென்றற்கு இடம் பெறாமையினாலும், இறைவன் அதுபோல் அங்ஙனந் தன்னிலே இருவேறு வகைப்பட்டு ஒருவகையிற் காரியமாய் மாறுதலும் பிறிதொரு வகையிற் காரியமாய் மாறாமல் நிற்றலும் ஆகிய வேறுபாடு உடையனல்லனாகலானும் மாயை இறைவனோடொத்த உண்மை நிலையினதாதல் செல்லா தென்று கடைப்பிடித்தல் வேண்டும், அஃதொக்குமன்னாயினுஞ் சைவ சித்தாந்த நூல்களும் இறைவனுக்கு அருவம் உருவம் என்னும் இருவகை நிலைகளும் உண்டென்றோதுதலின், அவனும் மாயைபோற் காரியப் படுதலுடைய னென்பது பெறப்பட்டு, அங்ஙனம் ஓதும் அது மாயாவாதக் கொள்கையாய் முடியுமாம் பிற வெனின்; அற்றன்று,இறைவன் மாசற்ற தூய அறிவுப் பொருளே யல்லாமல், அறிவில்லா மாயைபோல்வான் அல்லன், அறிவில் பொருள் மட்டுமே ஒருநிலையிலிருந்து பிறிதொரு நிலைக்குத் திரிக்கப்படும்; மற்று அறிவுடைப் பொருளோ அங்ஙனந் திரிக்கப்படுதல் எஞ்ஞான்றும் இல்லை; மண்ணானது குடமாகத் திரிக்கப் படுதல் போல, அம்மண்ணினின்று குடத்தை யுண்டாக்கும் அறிவுடை யனான குயவன் அங்ஙனந் திரிக்கப்படுதல் இலன், இன்னும், மண்ணினின்றும் குடம் முதலிய பாண்டங்களை உண்டாக்கும் முன்னரே,அவை தம்மை யுண்டாக்குங் குயவனது அறிவின்கண் அப்பாண்டங்களின் வடிவங்கள் அமைந்து கிடத்தல் வேண்டும்; அங்ஙனம் அவ்வடிவங்கள் தன் அறிவின்கண் அமையப் பெறாதவன், அப்பாண்டங்களைச் சமைத்தற்குரிய அறிவு வாயாதவனாமாகலின், அவன் அவற்றை ஆக்கமாட்டுவான் அல்லன், ஆகவே, அறிவில்லாத மாயையிலிருந்து இவ்வுலகங் களும் இவ்வுலகத்துப் பொருள்களும் இவ்வுடம்புகளும் இவ் வுடம்புகளில் அமைந்த கருவிகளும் படைக்கப் படுதற்கு முன்னரேயே, இவற்றை யெல்லாம் படைக்கும் இறைவனது பேரறிவின்கண் அப்பொருள்களின் உருவங்கள் அமைந்து கிடத்தல் வேண்டுமென்பது தெளியப்படும், எங்ஙனங் குயவனதுஅறிவின்கண் அமைந்த உருவங்களோடு ஒத்த வடிவுடைய பாண்டங்கள் மண்ணினின்றும்அவனாற் படைக்கப்படுகின்றனவோ, அங்ஙனமே இறைவனது அறிவின்கண் அமைந்த உருவங்களோடொத்த வடிவுடைய உலகமும் உடம்பும்பிறவும் மாயையினின்றும் அவனாற் படைக்கப்படுவனவாகும், எங்ஙனங் குடங்கள் முதலான பாண்டங்களின் வடிவு சிதைந்தழிந்தாலும்அவற்றோ டொத்த அறிவினுருவங்கள் குயவனுள்ளத்தின்கண் அழியா வாய் நின்று அப் பாண்டங்களை மறித்தும்மறித்துந் தோற்று விக்குமோ, அங்ஙனமே இவ்வுலகங்களும்இவ் வுடம்புகளும் பிறவும் வடிவு சிதைந்து அழிந்தாலும் அவற்றோடொத்த அறிவினுருவங்கள் இறைவன் றிருவுள்ளத் தின்கண் அழியாவாய் நின்று அவைதம்மை மீண்டும்மீண்டுந் தோற்று வியா நிற்கும், இது கொண்டு, மாயையின் வடிவு அழிதல் போல, இறைவனது அறிவுருவு அழிவதன்றென்ப தூஉந் தெற்றென விளங்கும். இன்னும், அறிவுடையோன் என்று உயர்த்துச் சொல்லப் படுபவன், தான் உணர்ந்த பொருள்களின் வடிவங் களோ டொத்த உருவங்களைத் தன் அறிவின்கண் ஐயந்திரி பின்றி அமைத்துக் கொண்டவனேயாவ னென்பதூஉம், அறிவில்லாதோன் என்று இழித்துச் சொல்லப் படுபவன் தான் கண்ட எந்தப் பொருளின் வடிவத்தையுந் தன்னுள்ளத் தின்கண் அமைத்துக் கொள்ள மாட்டாதவனேயாவ னென்பதூஉம், இறைவனறிவு இம்மாயையிற் காணப்படும் எல்லா வடிவுகளையும் முன்னரே யறிந்த உருவுகளுடையதா யிருப்பினல்லது இப்பருப்பொருள் வடிவுகள் தாமே தோன்றாவாகலின் இறைவனது பேரறிவு இவையெல்லா வற்றையுந் தன்னகத் தடக்கிய உருவுடைய தாயே திகழு மென்பதூஉம் பிறவுங் கடவுளுக்கு அருளுருவம் உண்டு என்னும் எமது கட்டுரையில் நன்கு விளக்கியிருக்கின்றேம்; அவ்விரிவை அதன்கட் காண்மின்கள்! அஃதொக்கும்; இறைவனறிவு உருவுடையதாயே நிற்குமெனின்,அதனை அருவென்று கூறுதல் என்னை யென்பார்க்கு, உயிர்களும் உயிர்களின் அறிவுங் கண் முதலிய பொறிகளுக்குப் புலனாகாமை பற்றி அருவென்றும், உயிர்களின் அறிவு கட்புலனாகாவிடினும் புறப்பொருள்களில் தான்கருதிய வடிவினை அமைத்தல் கண்டு அதனறிவு அவ்வடிவினோடொத்த உருவுடைய தென்றுங் கொள்ளுதல் போல, இறைவனும் இறைவன்றன்பேர் அறிவும் பொறி களுக்குப் புலனாகாமை பற்றி அருவென்றும், அங்ஙன மாயினும் அவன்றன் பேரறிவு எண்ணுதற்கடங்கா இத்தனை யுலகங்களையும் இவ்வுலகங்களிலுள்ள இத்தனை பண்டங் களையும் இவற்றிலிருந்து இவை தம்மை நுகர்தற்கு எண்ணிறந்த உயிர்களோடு கூடிய இத்தனையுடம்புகளையும் அமைத் திருத்தல் கொண்டு இவற்றின் வடிவுகட்கு முதலான உருவுகள் வாய்ந்த தொன்றாகவேயிருக்குமென்றும் விடுத்தல் வேண்டும், எனவே, அறிவெல்லாம்அழியா வுருவங் களுடைய வாயேயிருக்கு மென்பதூஉம், அன்னவாயினும் அவை ஊனுடம்பில் அமைந்த பொறிகளின் வாயிலாக அறியப் படாமல் மாசற்ற அறிவுக் கண் கொண்டே காணப்படு மென்பதூஉம் நினைவிற் பதிக்கற் பாலனவாகும், திருஞான சம்பந்தர் மூன்றாண்டைச் சிறுமக வாயிருந்த ஞான்று கண்டு பாடிய இறைவனுருவம்,அவர் தந்தையார் கண்களுக்குப் புலனாகாமல் அவர்க்குமட்டும் புலனான தன்மையையுற்று நோக்குங்கால்,அவர் கண்ட இறைவனு ருவம்அறிவுருவமே யல்லாது ஊனுருவம் அன்றென்பதூஉம் அவரதனைக் கண்டதுந் தமது அறிவுக்கண் கொண்டே யல்லாது ஊனக்கண் கொண்டன் றென்பதூஉம் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும், இறைவனுருவம் பெற்றியதாதல் கண்ட அருணந்திசிவனார், மாயை தான் மலத்தைப் பற்றி வருவதோர் வடிவ மாகும் ஆயஆ ணவம் அகன்ற அறிவொடு தொழிலை யார்க்கும் நாயகன் எல்லா ஞானத் தொழின்முதல் நண்ண லாலே காயமோ மாயை யன்று காண்பது சத்தி தன்னால் என்றும், சத்திதன் வடிவேதென்னில் தடையிலா ஞானமாகும் என்றும் அருளிச் செய்வாராயினர். ஆகவே, இறைவனது பேரறிவு நிலையை யுணர்வாராகிய மக்களின் சிற்றறிவுக் கண்ணுக்கே அவன் அருவமாகப் புலனாகாது நிற்பன்; மற்று, அவன் அருளைச் சார்ந்து, அதனால் மாசு தீர்ந்து தூயரான அன்பரின் தூய அறிவுக்கு, அவன்றன் தூய அறிவுருவநிலை முற்றும் புலனானவாறேயாய் விளங்கா நிற்குமென்று உணர்ந்துகொள்ளல் வேண்டும். இனி, மெய்ப்பொருளாஞ் சிவம் ஒன்றே என்றது, மேற்காட்டியவாற்றான் மாறுந் தகையவான பொருள்களும் உயிர்களும்,மாறா நிலையினதான சிவத்தை நோக்க மெய்யல்லாதனவாதல் பெறப்படுதலாற், சிவம் ஒன்றே மெய்ப் பொருளாதல் தெருட்டியவாறு, அற்றேற் சிவமல்லாத பொருள்களெல்லாம் பொய்யென முடிந்து ஏகான்மவாத மாம் பிறவெனின்; அங்ஙனமன்று, நிலை மாறாததே மெய்யென்றும், நிலைமாறுவதே பொய்யென்றும் உலக வழக்கானுஞ் சான்றோர் நூல் வழக்கானும் நன்கறியக் கிடத்தலின், என்றுமில்லாத வெறும் பாழையும் பொய் யையும் ஒன்றென்றல் அடாது. நில்லாதவற்றை நிலையின வென்றுணரும், புல்லறிவு என்னுந் திருக்குறளும் இக் கருத்தே பற்றி யெழுந்ததாகும், அல்லதூஉம், இல்லாத வெறும் பாழைப்பற்றிப் பேசுவாருங் கேட்பாரும் யாண்டு மிலராக லானும், உயிர்களும் பொருள்களுமிருந்தே முப்பொரு ளாராய்ச்சி நிகழவேண்டுமாகலானும்,நிலை மாறுவன உள்பொருள்களே யல்லாமல் இல் பொருள்களாதல் செல்லாமையானும், இதன்கண் ஏகான்ம வாதங் கூறுவாருரை ஒரு சிறிதும் பொருந்தாதென விடுக்க, `சிவம் என்னுஞ் சொல் செம்மை யென்னும் பண்படியாகப் பிறந்து சிவந்த நிறத்தையும், இன்பத்தையும் உணர்த்துஞ் சிறந்ததமிழ்ச் சொல்லாமாகலானும்,இறை வன்றன் அறிவுருச் சிறந்த நிறத்தினதாயும் இன்ப நிலை யினதாயும் இருக்கும் உண்மையினை நமக்கு நினைவுறுத்திக் காணவுங் கருதவும் படாத முதல்வன்றன் அறிவுருவினை நாம் காணவுங் கருதவும் எளியதாம்படி வைத்து நமக்கு நினைவொருமை யினைப் பயப்பிப்பதில் இச்சொற் போலக் கடவுளுக்குரிய வேறெச்சொல்லும் உதவிபுரிவதின்மை யானுஞ், சிவம் என்னும் இச்சொல்லையே கடவுளுக்குச் சிறந்த பெயராக வைத்துப் பண்டைக் காலந்தொட்டு இன்று காறும் ஆன்றோர்கள் வழங்கி வருதலானும், ஈண்டு அடிகளாரும் அச்சொல்லையே சிறந்ததாக எடுத்து அருளிச் செய்வா ராயினர். அடிகளார் பிறாண்டுஞ் சிவம் பிரமமுடியே என்று ஓதுவதூஉங் கருத்திற் பதிக்கற்பாற்று, இனிச், சிவம் ஒன்றே மெய்ப்பொருள் என்று ஆழ்ந் தாராய்ந்து கண்ட தொல்லாசிரியர்களும், அவர் வழி பிழை யாது வந்த அடிகளாருந் தாங்கண்ட அவ்வரும் பேருண்மை யினை, மக்களெல்லாரு முணர்ந்து உய்தல் வேண்டுமென் றெழுந்த பேரிரக்கத்தால் அடுத்தடுத்தெடுத் துணர்த்தி வரவும், அதனைக் கடைப்பிடியாது, பிறந்து பெருந் துன்பங்களிற் பட்டுழன்று இறந்து ஒழிந்த அரசர் களையும் இழிந்த மக்களையுமெல்லாந் தெய்வங்களாக வழிபட்டுப் பிறவியைப் பாழ்படுத்தி இருள் நிரயத்திற்குஞ் செல்லுங் கீழ்மக்களை அது செய்தலாகாதென்று மேலைச் செய்யுளின் பின்னிரண்டடிகளில் தடுத்தருளினார். இனி, மேலைச் செய்யுளின் இறுதிப்பகுதியில், இறைவன் எல்லாவுயிர்களின் அகத்தே நெஞ்சத்தாமரையின் அறிவு வெளியிலும், புறத்தே எண்ணிறந்த வுலகங்கட் கெல்லாங் களைகண்ணாம்அருள் வெளியிலும் பொதுநின்று இன்ப ஆடல் புரியும் இயல்பினை, ஞானாசிரியன் மெய்யுரை வழிநின்று மூச்சையடக்கி, மூலத்திலுள்ள குண்டலியை யெழுப்பி, அதனோடு உணர்வினை ஒருங்கியைத்துக் கொண்டு, நெஞ்சத் தாமரையின் அகத்தே சென்று கண்டு இன்புறும் ஞானயோகப் பயிற்சியுடையார்க்கு, எல்லா அறிவும் எல்லாஇன்பமும் ஒருங்கெழுந்து, பெருகித் தோன்றும் என்றருளிச் செய்து முடித்தமை காண்க! இவ்வுண்மை ஆசிரியர் திருமூலர் அருளிச் செய்த, நாசிக்கு அதோமுகம் பன்னிரண் டங்குலம் நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல் மாசித்தி மாயோகம் வந்து தலைப் பெய்துந் தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாமே என்னுந் திருப்பாட்டானும் நன்கு தெருட்டப்பட்ட தென்க. அடிக்குறிப்பு 1. “Life does not appear without the operation of antecedent life” Fragments of Science by Prof. J. Tyndall, Vol.II. p. 299. சைவசித்தாந்த ஞானபோதம் - முற்றும் - Preface “The Caiva Siddhantha system is the most elaborate, influential, and undoubtedly the most instrinsically valuable of all the religions of India. It is áeculiarly the South Indian, and Tamil religion. *** Caivism is the old prehistoric religion of South India, essentially existing from Pre - Aryan times, and holds sway over the hearts of the Tamil People”. Dr. G.U. Pope in his English translation of the sacred Tamil lyrics, the Thiruvachakam of the great Saiva Saint Manicakavachakar, p. xxiv. The above extract expresses the just estimate arrived at by that great Christian missionary and profound Tamil scholar Dr. G.U. Pope as regards the instrinsic merit and high antiquity of the Saiva Siddhanta the religion and philosophy of the Tamil people. Most of his active period of life Dr. Pope spent in the heart of the Tamil country moving intimately with all classes of the Tamil people and learning at first-hand not only their beliefs, customs and manners but also their ancient classics such as Thirukkural, Purananooru, Silappathikaram, Manimekalai, Palamoli, Naladiyar, Periapuranam, Sivajnanabodham and others. His erudition in Tamil was equal to, and in some respects even exceeded, the erudition of great native scholars. So his impartial estimate of the Saiva Siddhanta, coming as it does from a great western scholar who combined in himself the culture of both west and east, might, by being prefixed to this English Preface of the following work of mine on Saivism, serve well to impress its value and importance on the minds of those learned Indians and Europeans to whom it is a sealed book. For the modern philosophic and religious thought in the east and the west is so strongly coloured either by the atheistic system of the Buddhists or by the pantheistic system of Sankara and his cult, except where the most wholesome teachings of professor William James have pervaded, that almost all lines of inquiry either into the realm of matter or into the realm of spirit, might be said, without exaggeration, to end themselves either in a materialistic monism or in an idealistic monism that is to say, they affirm simply that in the end (the end of what is not clear from what they affirm) there exists nothing but what appears to be a form of energy whether you call it matter or spirit. In whatever way this kind of monism so stubbornly help in the teeth of all human experience, may seem to satisfy certain “tough-minded” people, certain it is that it cannot satisfy the cravings of the “tender - minded” people, as the two types, namely the monists and the pluralist, have been so pertinently called by Prof. James. We who live in the world of both mind and matter, we who acquire all our knowledge and experince by our contact with so many intelligent beings higher and lower, with so many products of matter which minister unto our wants cannot rest content with such a nameless and formless and therefore such an incomprehensible monism, but need a system which would meet our wishes and aspirations in entire harmony with out past and present experiences. While our worldly experience is thus manysided, it has yet a unity that underlies all its variety. In the words of James, “It is both one and many”, and therefore “let us adopt a sort of pluralistic monism”1 Now the Saiva Siddhanta furnishes us with such a pluralistic monism as is evident from the following quotation taken from one of the fourteen authoritative works in Tamil which treat of the Saiva Siddhanta system. According to this system. “There are six entities which have no begninning. The first of these is the Lord (Pathi) Who is One. The second is the aggregate of all Souls (Pasu) with their undeveloped potentialities of thought and act, interpenetrated by a divine but hidden influence. The third is the impurity of Anavam wearing the form of darkness. The fourth is twofold deeds (Vinai). The fifth and sixth are the two kinds of Mayai, the pure and impure the substratum and material of the phenomenal universe.”2 In the following work which comprises nine of my Tamil lectures delivered at different places and on different occasions. I have given to the best of my ability a clear and rational exposition of the views of the Saiva Siddhanta relating to the six entities enumerated above. For the guidance of English - knowing readers I will give here a succinct explanation of the six categories. Saivism is strictly a monotheistic religion holding that only as God which is truth, intelligence, and bliss, which is above births and deaths, which is all love and grace towards all individual souls, which is distinct from both matter and finite selves and yet dwells within them and without and is ever active in bringing the souls out of darkness and setting them in its light and beatitude. It calls God by the name of Sivam, simply because this term specifies the essential quality of God which is pure love, pure bliss. In later times many more gods such as Subramanya, Ganesa, Veerabhadra and others were adopted into its fold but none of the founders of the Saiva religion held any one as God except Siva. In the ten collections of the sacred hymns or Thirumurai sung by St. Thirujnanasambandha, St, Appar, St. Sundarar, St. Manickavachakar and others, there is not a singly hymn sung in praise of any god other than Siva. And in each and every temple of Siva his only true emblem the Sivalinga is set up in central shrine as the pre-eminent object of first worship, while the images of all other gods are quartered around the central sanctuary and offered only subordinate places and ordinary worship. Thus you find that not only do the ancient sacred literature of Saivism but the very construction of its temples and the pre-eminent form of worship daily offered in them to Siva also bear indisputable testimony to the monotheistic character of the Saiva religion. According to Saivism God is as remote and transcendent as he is near and personal. Though his natural is one, it appears to be twofold to the finite conception of the individual minds, just as the sun which appears to our naked eyes like a small bright disc, is in reality, immense in its size and thus seems to present two aspects to our perception and conception. As has been so well pointed out bt Prof. James in the lecture on Philosophy in his epochmaking work: “The varieties of Religious Experience.” “that the transcendentalist reasonings fail to make religion universal,” this incomprehensible and inconceivable aspect of God can never appeal to a devout mind that is thirsting after to obtain atleast a glimpse of his presence and personality. In so far as God is will, intelligence and freedom, he cannot be an unfeeling, unintelligent and impersonal existence. Nowhere is the personal aspect of God which is in vital relation with all living beings is so strongly emphasized as is Saivism. Since he is in and near every vital being and is helping them all to develop their faculties of thought and feeling, life is held in it so sacred that taking it away from a man or a beast is looked upon by it as an unpardonable and sacrilegious crime. Hence the very word Saivism has come to be applied to a vegetarian mode of living also. Now, it is this hankering of the human mind after the living personal relation of God to itself that has prompted it to feel deeply the need of setting up a physical image before its outer eyes as a means of setting up a corresponding mental image before its inner eyes. For all our knowledge of anything consists in bringing into our mind a mental image corresponding to that particular physical thing and storing it up permanently in our memory for after use. Blot that image out of your mind or forget it altoghether and you thereby lose the knowledge of it also once for all. In fact, a man of vast knowledge is distinguished from another man of small knowledge only by his power of forming in his mind as well as of fixing on his memory myriads of distinct mental images corresponding exactly to the forms of physical objects which he was observing attentively and nothing carefully. This psychological law pertaining to the formation and development of the human mind must disclose to us the necessity of keeping before our eyes an image made of clay or wood, stone or any mineral matter for the sake of raising up in our mind a clear image of God corresponding to it. For, is it not utterly impossible for us to conceive of an object that we have not previously seen or heard, touched or smelled or tasted? It is the deep-felt longing of the human mind for a concrete thing to meditate upon that has brought into existence a multitude of temples not only in the Tamil country where its number is comparatively very large but also in other ancient civilized countries such as Egypt, Babylonia, Chaldea in the west, and Mexico and Peru in the east. We cannot close this part of our subject relating to idol-worship better than in the words of Dr. Edward Caird taken from his masterly treatment of “The Evolution of Religion.” His words rus as follows:- “To represent God as a mere object is, as we have seen, to express the divine in an inadequate form, in a form that, at least, cannot be made fully adequate to the idea; for the principle of unity in all objects and subjects cannot be properly represented as one object among others. But, at the same time, it is also true that in some sense the whole is involved in every part of the universe, and therefore any part of it may for a time be taken as a type of the whole. *** When the spiritual cannot yet be separated from the natural, it is of the highest importance that the natural object which represents the spiritual should be, as it were, transfigured by the imagination, so that it may, so far as possible, symbolically take the place of the spiritual.”3 Viewed in this light how significant is the worship paid to Sivalinga in the great temples that burst so magnificently on the sight of the travellers all over the south of India, must become apparent to all who have a right - thinking mind. I cannot pursue the treatment of this topic farther in a short preface like this. For a detailed explanation of the origin and meaning of the Sivalinga- worship the reader is referred to my Tamil lectures on “The Image-worship” and “Sivalinga” and to my English lecture on “The Conception of God as Rudra”. Now, as to the second entity of the Saiva Siddhanta: “The aggregate of all Souls.” From the tiniest and the most simple unicellular organism called protoplasm to the highest and the most complex organism called man there exist from all eternity countless individual souls each having a distinct character of its own and each undergoing different degrees of development in accordance with its nature capacity and effort. All these souls are not the principles created out of nothing according to some religions, nor are they the splintered pieces of God itself according to some other religions, nor do they constitute so many evolved centres of unintelligent matter according to some material sciences, nor could they be pure fictions imagined in the infinite absolute according to some rank idealism. On the other hand they are as eternal as God and not even a single soul could, by any known or unknown power or process, be reduced into nothing nor could any one of them be transmuted into any other of the group. According to the Saiva Siddhanta, and ‘the pluralistic, as according to the Leibnizian view “says Dr. James Ward in his remarkable Gifford Lectures, “all the individuals there are have existed from the first and will continue to exist indefinitely.”4 And the same authority, like the Siddhanta, holds tenaciously to the view that “individuals who have no ‘doubles’, whose like all in all we never shall meet again”,5 In upholding the eternal reality of inidividual souls Dr. F.C.S. Schiller has said even more emphatically as follows: “The ultimate self-existence of spirits, the doctrine that existence are many, spirits uncreated, uncaused, that are and ever have been and can never cease to be, is the only metaphysical ground for asserting the immortality of the individual. And this metaphysical ground we have secured by the preference given to Pluralism over Monism.”6 Now, as regards the third principle the impure and dark Anavam, what the Saiva Siddhanta says is in the words of Dr. F.C.S. Schiller this: “Evil was potentially existent in the world” and “the world was created in order to remedy this pre-existent and precosmic defect.”7 If all had been perfect eternally like God, creation is unnecessary, and it may even be mischievous, like the mischievous actions of some wild boys who take plesure in throwing stones on innocent animals and even on grown-up persons. But such does not seem to be the case since all souls have defects in various grades and degrees which with the help of creation they strive and struggle to remove. This supreme purpose of creation cannot be in the least understood, unless, you recognize the potential existence of the evil principle called Anavam in the Saiva Siddhanta. Of this evil principle Prof. Henry Drummond the great scientist and theologian writes: “There is a natural principle in man lowering him, deadening him, pulling him down by inches to the mere animal plane, blinding reason, searing conscience, paralysing will.”8 So far as my knowledge of various religions and various systems of philosophy goes, I venture to say that I have not come across any other religion or philosophy in which this root-cause of creation, the pre-existence of the evil principle is recognized and explicitly mentioned as in the system of Saiva Siddhanta. Of course, there is a hint of it in the first chapter of the Book of Genesis in the Old Testament as has been so penetratingly pointed out by Dr. F.C.S. Schiller, but it has unfortunately escaped the notice of almost all commentators on the book. Now, let us turn to the fourth category: the twofold deeds good and bad. Every life from amoeba upwards is endowed with intelligence and this enables all organisms from the lowest to the highest to respond to the impressions proceeding from surrounding objects and perform certain functions either in opposition to, or in concurrence with, those impressions. In answering thus to outside calls the lower organisms learn to repeat what is favourable at first to the maintenance of their own life and afterwards to the maintenance of the life of their own offspring. The first act of every living being meets with great resistance offered by both the inside and outside things, that is, by its own body and by the things external to it. All the products of matter do not yield readily to the will of an intelligent being, unless it exercises its intelligence constantly and devises newer and newer means to bend them to its will. In this way it learns that not one act but many acts of which the every succeding one is more intelligently performed than the preceding one, are necessary for achieving the conquest over matter. It is such repeatged actions of living beings that are collectively called Karmas or Vinai in Saivism; or in the language of psychology habits. As we observe the infinite grades of lives, and the infinite degrees of intelligence, we are led to believe that no man who gains an insight into the nature and evolution of individual souls can at a bound conclude that the life of a soul can become perfect in a single birth when even the duration of which varies infinitely from a moment to an age. Further, the actions of living beings acquire moral value only after they ascend to human existence in the scale of life. Therefore it seems most unreasonable to assert that the lower lives will become extinct after they have passed through a single existence and before they have reached the higher stages at which their actions acquire moral worth. Even after reaching the human stage sould do differ so widely among themselves in the amount of intelligence they exhibit that, here too, perfection is not attainable by all in a single birth. And so before attaining to the stage of perfection, it is reasonable to hold with the Saiva Siddhanta that all souls must accumulate habits after habits only by passing through myriads of bodily existences in this world and in others that are distant from ours. As has been put by Dr. James Ward, “At any rate `metempsychosis’ in some form seems an unavoidable corollary of thorough - going pampsychism, so long as we look broadly at the facts of life as a whole.”9 Come we now finally to the fifth and the sixth categories, the pure and the impure Mayai. Modern science has discovered that the world of our experience is ultimately resolvable into protons and electrons. The impure Mayai is the direct material cause of the universe, while the pure: the protons and electrons, constitutes only indirectly so. The reason for this two fold classification of Mayai is this. The souls buried, as it were, in coarse and foul impurities require equally coarse substances to be cleansed of their impurities: whereas the highly developed souls rising above the filth require only the help of finer substances to raise them still higher. For we see plainly before our eyes the mental powers of individual souls developing in different degrees in different souls without any limit being set to them. In proportion to the mental development of souls, matter which serves as its vehicle also becomes rarified in different degrees. In the words of Dr. Schiller, “The spiritualization of Matter is displayed also in its relations to spiritual beings. As in the course of evolution these become more harmonized with the Divine Will, Matter the expression of that Will, becomes more and more harmonized with the desires of spiritual beings.”10 I need then hardly say that the doctrine of Mayai as held by Saivism is in entire harmony with the discoveries of modern science. To all those who seek after an exact knowledge of these six eternal verities, it must be very gratifying to note as above that the recent developments of western philosophy and physical science go every inch to prove the truth and value of all the fundamental doctrines only of the Saiva Siddhanta and not of any other religion or philosophy. Foot notes 1. Pragmatism, p. 13. 2. Taken from Dr. G.U. Pope’s translation of the Thiruvarutpayan; see his Translation of the Thiruvachakam. p. ii. 3. Dr. E. Caird’s “The Evolution of Religion” vol. p. 227. 4. The Realm of Ends. p. 204. 5. The Realm of Ends, p. 18. 6. Riddles or the Sphinx. 2nd edition, p. 403. 7. Ibid. P. 434. 8. Natural law in the Spiritual World, cheap ed., P. 29. 9. The Realm of Ends. p. 213. 10. Riddles of the Sphinx, p. 298. பொருளடக்கம் பக்கம் மூன்றாம் பதிப்பின் முகவுரை 3 இந்நூலிற் கண்ட வடசொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள் 6 ஆங்கில முன்னுரை 8 1. சைவ சமய மாட்சி 19 2. இந்து சமய உண்மைகள் 44 3. சமரச சன்மார்க்கம் 67 4. கடவுளுக்கு அருளுருவம் உண்டு 79 5. சீவகாருணியம் 87 6. இரு சைவ விளக்கங்கள் 102 7. திருவுருவ வழிபாடு 122 8. சிவலிங்க உண்மை 180 9. அம்பலவாணர் திருக்கூத்தின் உண்மை 239 ஓம் மூன்றாம் பதிப்பின் முகவுரை கற்றவர்முதற் கல்லாதவர் ஈறான எத்திறத்தவர்க்கும் இனிது விளங்கும்பொருட்டுப் பற்பல ஊர்களிலும் பற்பல நகர்களிலும் அவைக்களங்களில் யாம்நிகழ்த்திய சைவ சித்தாந்தச் சொற்பொழிவுகளின் ஒரு தொகுதியே `சைவ சித்தாந்த ஞானபோத முதற்பாகம் என்னும் இந் நூலின்கட் பெரும்பாலும் அடங்கி யிருக்கின்றன. இந்நூலின் முதற்பதிப்பாகக் கருதப்படும் எம்முடைய சொற்பொழிவுகள் சில 1906, 1915ஆம் ஆண்டுகளில் வெளிவந்த எமது ஞானசாகரத்தின் இதழ்களில் வெளிப் போந்தனவாகும், அவை அப்போது முன்பனிக்கால உபந்நியாசங்கள் என்னும் பெயரால் தனிநூலாகவும் வெளிவந்தன. அந்நூலில் அடங்கி யவை ஆறு விரிவான சொற்பொழிவு களேயாகும், அப்பதிப்பின் படிகள் செலவானபின், 1922ஆம் ஆண்டில் பின்னும் பத்துச் சொற்பொழிவுகள் சேர்க்கப்பெற்று, ஆக மொத்தம் பதினாரு சொற்பொழிவுகள் அடங்கிய இதன் இரண்டாம் பதிப்பு வெளி வரலாயிற்று, அவ்விரண்டாம் பதிப்புப் படிகள் செலவழிந்தபின், இதன் மூன்றாம் பதிப்பை அச்சிடத் துவங்கிப் பல ஆண்டுகள் கழிந் தமையானும், இவற்றிடையே இன்னும் பல சொற்பொழிவு களைச் சேர்க்க வேண்டுவது இன்றியமையாததாய் நேர்ந்தமை யானும், இச் சொற்பொழிவுகளை யெல்லாம்ஒருங்கே சேர்ப்பின் இந்நூல் அறுநூறு பக்கங்களுக்கு மேற் பெருகுமெனக் கண்டமை யானும் ஒன்பது சொற்பொழிவுகள் தொகுத்த இந்நூலின் முதற் பாகத்தை இப்போது வெளியிடலானேம், ஏனைச் சொற்பொழி வுகள் தொகுத்த இரண்டாம்பாகம் இனிப் பதிப்பிட்டு வெளியிடப்படும், எம்முடைய நூல்களிற் சிறுபான்மையாகக் காணப்படும் வடசொற்களையும் முற்றக்களைந்து, தூய தமிழ்ச் சொற்களையே அவ்வவ்விடங்களில் நிரப்பி இப்போது பதிப்பிட்டு வரும் எமது முறைப்படி, இந்நூலின் முற்பதிப்பில் வெளிவந்த விரிவுரை களிலிருந்த வடசொற்களைக் களைந்து ஆங்காங்குத் தூயதமிழ்ச் சொற்களைப் பெய்தும், இப்போது இதன்கட் புதியவாகச் சேர்க்க எடுத்த விரிவுரைகளைத் தூய தனித்தமிழிலேயே எழுதியும் இந்நூலை இயற்றலானேம். ஆனாலும், இத்தமிழ் நாட்டிற் புதியராய்ப் புகுந்த ஆரியர், பௌத்தர், சமணர், மாயாவாத வேதாந்திகள், வைணவர் என்பாரெல்லாந், தமிழ் மக்களை மருட்டுதற் பொருட்டு,அவர் வழங்குந் தமிழ்மொழியிற் றம்முடைய கோட்பாடுகளை வரைந்து வையாமல், அவர் அறியாத வடமொழியில் அவை தம்மை வரைந்து வைத்து,அவைகளைமறைபொருளாகவே பரப்பி வந்தமையால்,அன்னார் செய்த ஏமாற்றத்தினின்றுந் தமிழ் மக்களை விடுவிக்கக் கருதிய பிற்காலத்துத் தமிழ்ப் பெரியார் களும், பண்டைத்தமிழ்ச் சான்றோர் கண்ட முடிந்த வுண்மை களுக்குச் சைவ சித்தாந்தம் என வடமொழியிற் சிறப்புப் பெயர் நிறுவியும், அவ்வுண்மைகளை விளக்குங்காற் பற்பல குறியீடுகளை வடசொற் கொண்டே புதியவாய்ச் சமைத்தும், வடமொழி யிலேயே `சிவாகமங்கள், `சிவபுராணங்கள் இயற்றியுந், தமிழ்ச் சான்றோர் தமது மெய் யறிவாற் றெளிந்த மெய்ப் பொருள்களை இத் தமிழ் நாட்டகத்தே பரவச் செய்யலாயினர். அதனால், அங்ஙனஞ் சிறப்புப் பெயர்களாகவுங் குறியீடுகளாகவும் புகுந்து தமிழ் நூல்களில் நிலைபெற்ற வடசொற்கள் சொற்றொடர் களைச் சடுதியில் மாற்றினால் அவற்றிற் பழகினார்க்கு இந்நூற் பொருள் மயக்கத்தைத் தருமெனக் கருதி, அவையிற்றை மட்டும் மாற்றாது ஆங்காங்கு இருக்கவிட்டேம். ஆனாலும், அவை தமக்கு நேரான தனித்தமிழ்ச் சொற்களையும் இந்நூலின் இறுதியிற் காட்டியிருக்கின்றேம். அங்ஙனங் காட்டப் பட்டிருக்குந் தமிழ்ச்சொற்கள் நன்கு வழங்கி வரலாயினபின், அவ்வடமொழிச் சிறப்புப் பெயர்கள் சொற்கள் சொற் றொடர்களையுங் களைந்துவிடக் கருதியிருக்கின்றேம், இதுகாறும் உதவி செய்த சிவபிரான் இன்னும் அடியேமுக்கு உதவுக! பல்லாவரம் மறைமலையடிகள் பொது நிலைக் கழக நிலையம் திருவள்ளுவர் ஆண்டு 1966 இந்நூலிற் கண்ட வடசொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள் அசுத்த மாயை - தூவா மாயை அத்துவித முத்தி - இரண்டற்ற வீடு அந்தக் கரணான்ம வாதம் - அகக் கருவியே உயிரெனும் வழக்கு அபர ஞானம் - பொதுக்காட்சி அமயம் - நேரம் அவதரம் - நேரம் அவதாரம் - பிறவி அற்புதம் - புதுமை அனுபவம் - நுகர்ச்சி, பழக்கம் ஆகமம் - அறிவு நூல் ஆசாரிய சுவாமிகள் - ஆசிரிய அடிகள் ஆத்திக சமயம் - உண்டெனும் மதம் ஆராதனை - வணக்கம், வழிபாடு இடாநாடி - இடப்பால் நரம்பு இதயக்குகை - நெஞ்சகம் இரசவாதம் - பொன்செய்முறை இராசதம் - மனவெழுச்சி; எழுச்சிப்பாடு உப பிருங்கணம் - வழிநூல் : சார்பு நூல் கணம் - குழாம்: கூட்டம் கண்டம் - நிலப்பிரிவு : பிரிவு கரம் - செய்வது கலைஞானம் - கலையறிவு காருணியம் - அருள் காவியம் - பொருட்டொடர் நிலை சங்கிதை - தொகுதி சச்சிதானந்தம் - உண்மையறி வின்பம் சடம் - அறிவில்லது சத்தி - ஆற்றல் சத்துவம் - நன்மை சமயவாதி - சமயக்கணக்கர் சம்பந்தம் - இயைபு : தொடர்பு சரிதம் - வரலாறு சாதி - இனம் சிங்கம் - அரிமா சித்து - அறிவு சிவாயநம - சிவனே போற்றி சிற்ப வித்தை - கற்றச்சு : கொற்று : கொத்து சீவப் பிரம வாதம் - உயிரே கடவுளெனும் வழக்கு சீவர்கள் - உயிர்கள் சுகம், பாக்கியம், ஆனந்தம் - நலம்: இன்பம் சுழுனை நாடி - நடு நரம்பு சைவ சித்தாந்தம் - சைவத்தின் முடிந்த முடிவு ஞான மார்க்கம் - அறிவு நெறி ஞானம் - நூல் தகரோபாசனை - நெஞ்சக வழிபாடு தரத்திற்கு - தகுதிக்கு :நிலைக்கு தருக்கம் - அளவை தாமதம் - மயல் தாரணை - நினைவொருமை தீர்க்கதரிசி - முக்காலவுணர்வினன் நாடி - நரம்பு : குழாய் நாதம் - ஒலி நாத்திக சமயம் - இல்லெனும்மதம் நிமித்த காரணம் - வினைமுதல் நிரீசுரவாதி - பாழ்ங்கோளன் நிர்க்குணோபாசனை - குணமில்ல தன்வழிபாடு பகுதி - முதனிலை; அடி படம் - ஓவியம் பதி பசு பாசம் - கடவுள் உயிர் மலம் பத்தி மார்க்கம் - அன்பு நெறி பர ஞானம் - அருட் காட்சி பரப்பிரமம் - மிகப்பெரியது பரவ யிந்தவம் - மேல் மாயை பலி பீடம் - படையல் மேடை பாரமார்த்திகம் - உண்மைநிலை பாலன் - குழந்தை பாவனை - ஒப்பு : எண்ணம் : நினைப்பு பாஷியம் - பேருரை பிங்கல நாடி - வலப்பால் நரம்பு பிச்சன் - கிறுக்கன் பிரத்தியாகாரம் - ஐந்தவித்தல் பிரமாணம் - தலைமை: மேற்கோள் பிராணான்மவாதம் - மூச்சேயுயி ரெனும் வழக்கு பிரீதி - உவகை புத்தி - அறிவு பூதம் - முதற்பொருள்: முதல் பெத்தான்மா - கட்டுற்ற உயிர் மடம் - பள்ளி : பாழி மனித - ஆண்மை முத்தான்மா - வீடுற்ற உயிர் முத்திரை - பொறி மூர்த்தி - கடவுள் மைல் (ஆங்கிலம்) - வழியளவு யோகிகள் - தவத்தோர் விக்கிரகம் - பருப்பொருளுரு விஞ்ஞானான்மவாதம் - அறிவே யுயிரெனும் வழக்கு வியவகாரம் - உலக வழக்கு வீரர் - மறவர் வேதாந்தம் - மறைமுடிவு வைத்தியநாதன் - மருத்துவர் தலைவன்  1. சைவ சமய மாட்சி இந்நிலவுலகத்திலே பரந்து விரிந்து கிடக்கும் எண்ணிறந்த மக்கட் பகுப்பினராலும் எண்ணிறந்த வகை யவாக வைத்துக் கைக்கொள்ளப்பட்டு வருஞ்சமயங்கள் அல்லது மதங்கள் எண்ணிறந்தனவாய் இருக்கின்றன. அவைகளுள்ளே நமது சைவ சமயமும் ஒன்றாயிருக்கின்றது. நம்முடைய அனுபவத்திற்கு அகப்பட்ட மதங்களையும் சைவ சமயத்தையும் இரண்டு பக்கத்தே வைத்து நாம் நடுநின்று நிறுத்துப் பார்க்குமளவில் நமது சைவ சமயமே அவ் வெல்லா மதங்களினும் பெருமை மிக்கதாய்க் காணப் படுகின்றது. இனி நமது அனுபவத்தில் வராத வேறு மதங் களில் ஏதேனும் சைவ சமயத்தை ஒத்ததாகவேனும், அல்லது அதனின் மிக்கதாக வேனும் இருத்தலாகாதோ வென்றால், அதனைச் சிறிது ஆராய்ந்து பார்ப்போம். ஏனைய மதங் களில் ஏதேனும் ஒன்று சைவ சமயத்தின்கட் காணப்படும் எல்லாக் கொள்கைகளும் உடையதாய் இருக்குமாயின், அது வேறு பெயரால் வழங்கப்படுமாயினும் கொள்கைகளிற் சிறிதும் வேறுபடா மையால் அதனையுஞ் சைவ சமய மென்றே கோடல் இழுக்காகாது. இனி அப்பிற மதங்களுள் ஏதேனும் ஒன்று சைவ சமயத்தில் இல்லாத அரிய பெரிய கொள்கைகள் உடையதாய் இருத்தலும் ஏலாத தொன்றாம்; என்னையெனின், உலகத் திலுள்ள எல்லா மதங்களும் ஒரே முழுமுதற் அறிவுப் பொருளாகிய கடவுளையும், சிற்றறி வுடைய உயிர்களையும், அறிவில்லாத உலகத்துச் சடப் பொருள்களையும் ஆராயும் முத்திறப்பட்ட ஆராய்ச்சி யில் அடங்குவனவே யல்லாமல், இம்மூன்றில் அடங்காத ஒரு மதம் எங்கும் இல்லை யென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த தேயாம், இவ்வுண்மை கடைப்பிடித்தே. சான்றவ ராய்ந்திடத் தக்க வாம் பொருள் மூன்றுள மறையெலாம் மொழிய நின்றன ஆன்றதோர் தொல்பதி யாருயிர்த் தொகை வான்றிகழ் தளையென வகுப்ப ரன்னவே என்னுந் திருமொழியும் எழுந்தது. கடவுள் உலகம் உயிர் என்னும் இம் முப்பொருள்களையும் பற்றி எழுந்த பல திறப்பட்ட கொள்கைகளும், அக்கொள்கைகள் எல்லா வற்றையும் பற்றிய ஆராய்ச்சிகளும், அவற்றுட் பொருந்துவன இவை பொருந்தாதன இவை என்னும் பகுத்தறிவு நிகழ்ச்சியும், பொருந்துவனவற்றைத் தெளித்துரைத்து உண்மை முடிபு காட்டுஞ் சித்தாந்தமும் ஆகிய இவையெல்லாம் நமது சைவ சமயத்தின் கண்ணே விளங்கிக் கிடத்தலால், எல்லா மதங்களும் நமது சைவ சமயத்தின் கண்ணே அடங்கத், தான் எதினும் அடங்காததாய் வீறி நிற்றலில் சைவ சமயம் ஒன்றே எல்லாவற்றினுஞ் சிறந்த உண்மை மதமாமென்று நாட்டப் படும்; இது பற்றியே தாயுமான சுவாமிகளும், இப்பரிசாஞ் சமயமுமாய் அல்லவாகி யாதுசமயமும் வணங்கும் இயல்பதாகி என்றும், இராசாங்கத்தில் அமர்ந்தது வைதிகசைவ மழகிதந்தோ என்றும், சைவசமயமே சமயம் என்றும் அருளிச் செய்வாராயினர். இனிச் சைவ சமயமே எல்லாச் சமயங்களினும் மேம் பட்ட சிறப்புடைத்தாம் என்பதனை ஒரு சிறிது வகுத்து ஆராய்ந்து பார்ப்போமாக. முதலாகக் கடவுளைப் பற்றி ஆராய்ந்தறிந்த வகையிலும் அம்முழு முதற் பொருளுக்குப் பெயர் வைத்து வழங்கும் முறையிலும் சைவ சமயமே ஏனை எல்லாச் சமயங்களினும் மேம்பட்ட சிறப்புடைத்தாய்ப் பொலிகின்ற தென்பதனை மட்டும் ஈண்டு எடுத்துக் காட்டு வாம். சிற்றறிவுடையனவாய் உலகத்தின்கட் காணப்படும் எல்லா உயிர் வகைகளும் துன்பத்தை விலக்கி இன்பத்தைப் பெறும் முயற்சி ஒன்றிலே மட்டும் கருத்தூன்றி நிற்கின்றன. உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதன்முதல் அனுபவத்திற்கு வருவது துன்பமே யல்லாமல் வேறில்லை; பகுத்தறிவு இல்லாச் சிற்றுயிர்கள் முதற் பேரறிவுடைய மக்கள் ஈறான எல்லா வுயிர்களும் உடம்புகளிற் புகுந்து இந்நிலவுலகத்திற் பிறந்த வுடனே தம் அகத்துள்ள பசித்தீயினால் துன்புறுத்தப் படுதலை நம் கண்ணெதிரே காண்கின்றோம் அல்லேமோ? பின்னர் அப் பசித்தீயானது தாம் உட்கொள்ளும் உணவால் தணிந்தவுடனே மகிழ்ந்து இன்புறுதலையுங் காண்கின்றேம் அல்லேமோ? இதனால் உயிர்களுக்கு முதல் அனுபவமாய் நிற்பது துன்ப மென்றும், அது நீங்கு முகத்தாற் சிறிது நேரம் நிற்கும் பின் அனுபவமாய் வருவது இன்பம் என்றும் இனிது தெளியப் பெறுகின்றேம், பாருங்கள்! நங் கட்புலனுக்கு எட்டாமிகச் சிறிய புழுக்களுள்ளும் இத்துன்ப நீக்கமும் இன்பப் பேறும் எவ்வளவு முயற்சியோடும் எவ்வளவு சுறுசுறுப்போடும் இடையறாது நிகழ்ந்து வருகின்றன! கூரிய ஓர் ஊசிநுனியிற் றங்கி ஒரு சிறு நீர்த்துகளைப் பெருக்கக் கண்ணாடியின் உதவிகொண்டு பார்க்குமிடத்து, அதில் அளவிறந்த புழுக்கள் பலவேறு வகையான வடிவுடை யன வாய் உலவுதலும், அவற்றுள் வலிவாலும் வடிவத்தாலும் பெரியனவாய் உள்ள புழுக்கள் அவற்றாற் சிறிய புழுக்களைப் பிடித்துத் தின்ன மிகவும் பரப்பரப்போடு உலவித் திரிதலும், அங்ஙனம் உலவும் அவற்றுள் ஒன்று ஒன்றை இரையாகப் பிடித்த அளவிலே மற்றொன்றும் அவ்விரையைப் பிடித்தற்கு வந்து அதனோடு சண்டை யிடுதலும், அச்சண்டையிலே வெற்றி பெற்ற புழு தன்னிரையைத் தின்று பசி நீங்கி இன்புற்று நிற்றலும் இங்ஙனமே பசி தீர்ந்து இன்புற்றபின் ஆணும் பெண்ணு மாயுள்ள அவை ஒன்றையொன்று மருவிக் களித்தலும் கண்டு, இங்ஙனங் கண்ணுக்கு எட்டா நிலை யிலுள்ள சிறு புழுக்கள் மாட்டுங் காணப்படும் துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமுமே அறிவினும் நாகரிகத்தினும் மேலவராகக் கருதப் படும் மக்களிடத்தும் அவரினுஞ் சிறந்த தேவர்களிடத்தும் அடுத்தடுத்து நிகழ்வதுங்கண்டு கருதுங் கால் எல்லா உயிர்களும் துன்ப நீக்கத்தையும் இன்பப் பேற்றையுமே அவாவி நிற்கின்றன என்பது புலப்பட வில்லையா? அற்றன்று, அறிவிற் சிறிய விலங்கினங்கள் மட்டுமே துன்ப நீக்கத்தையும் இன்ப ஆக்கத்தையும் விரும்புகின்றன வன்றி, அறிவிற் பெரிய மக்களுந் தேவரும் அவற்றை விரும்பு கின்றிலராய் அறிவு விளக்கத்தையே நாடி நிற்கின்றன ரெனின்; ஒருநாள் முழுதும் மெய் வருந்தப் பாடுபடுகின்ற வர்களும், தமது உழைப்பினாற் பெற்ற பொருளைக் கொண்டு பசிப்பிணியைப் போக்கி இன்புற்றும், காமப்பிணியைப் போக்கத் தம் மனைவியைக் கூடிக் களித்தும் வாழ்ந்து வருகின்றார்கள்; பலவாண்டுகளாகக் கலைஞானங்களை மிக வருந்திக் கற்றுப் பெரும் பொருள் ஈட்டுகின்றவர்களும் தமது பசித்துன்பத்தைப் போக்கித் தம் மனையாளோடு கூடி இன்புற்று வருகின்றார்கள். வேறு இன்னும் எந்தவகையான முயற்சியைச் செய்வர்களைப் பார்த்தாலும், அவர்கள் எல்லாரும் பசி, காமம் என்னும் இவ் இருவகைத் துன்பத்தையும் போக்கி இன்புறும் நோக்கத்திலே உறைத்து நிற்கக் காண் கின்றேமல்லது பிறிதில்லையே. அங்ஙனமன்று, அறிவுடை யார் சிலர் பசி காமம் என்னும் இவ்விரண்டன் பொருட்டாக வன்றி அறிவு நூல்களைக் கற்று அறிவு நிரப்பும் அம் முயற்சியில் மட்டும் உறைத்து நிற்கக் காண்கின்றோமே எனின்; அங்ஙனம் அவர் அறிவு நூற் கல்வியில் முயல் வதூஉம் அந்நூல்களைக் கற்குங் காலத்தும் கற்றறியும் பொருள் நுட்பங்களைத் தேருங்காலத்தும் தம்மகத்தே விளைந்து தம்மை விழுங்கும் பேரின்பப் பேற்றின் பொருட் டாகவே யல்லது வேறில்லையென்பது தெற்றென அறியப் பட்ட உண்மையேயாகும். அற்றேல் அறிவு பெரிதோ மற்று இன்பம் பெரிதோ வெனின்; எல்லா உயிர்களும் இன்பத்தையே நாடி நிற்கும் இயல்புடையன வென்பதை மேலே விளக்கிக் காட்டின மாதலாலும், அறிவு விளக்கத்தின் பயனெல்லாம் இன்பப் பேறாகவே முடியக் காண்கின்றோமாதலாலும் அறிவினும் இன்பமே பெரியதூஉஞ் சிறந்ததூஉமாமென்பது இனிது பெறப்படும். எனவே, இன்பவழிப் பட்டு நிற்பதாகிய பத்தி மார்க்கமே அறிவின் வழிப்பட்டு நிற்பதாகிய ஞான மார்க்கத் தினுஞ் சிறந்ததா மென்பதுஉம் இது கொண்டு முடிக்கப் படும். அவ்வாறாயினும் ஞானமும் பத்தியும் ஒன்றையொன்று பிரிந்திராவாய் ஒன்று காரணமாயும் மற்றொன்று அதன் காரியமாயும், ஒன்று அறிவாயும் மற்றையது அனுபவமாயும் பிணைந்து நிற்குந் தன்மையவாய் விளங்கும். இதனை ஓர் எடுத்துக்காட்டால் விளக்கிக் காட்டுவாம். தேனூறிப் பழுத்துக் குலை குலையாய்த் தொங்குங் கனிகளையுடைய ஒரு தேமா மரத்தின் கீழ் ஒருவன் நாடோறும் இருந்தாலும், அவன் அம்மரத்தின் பழம் மிக்க சுவையுடைய வென்றும் அவற்றை உண்பதனால் பசி நீங்கி நலமுண்டா மென்றும் அறிந்திலனாயின், அவன் அங்கிருந்தே பசியால் துன்புற்று இறப்பான்; இனி வழிச் செல்லும் அறிவுடையான் ஒருவன் அப்பழத்தின் அருமை அறிந்து, வேண்டுமட்டும் அவற்றைப் பறித்துப் பசி தீர உண்டு இன்புற்று வாழ்குவன். இவற்றால் அறியாமை யுள்ளவளவும் அதனை யுடையானுக்குத் துன்பமே நிகழும் என்பதூஉம், அது நீங்கி அறிவு நிகழப் பெறுவானுக்கு அவ்வறிவால் இன்பமே விளையும் என்பதூஉம் உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெள்ள விளங்குகின்றன, வல்லவோ? அங்ஙனம் அறிவால் இன்பம் உண்டாதலை விளக்கிய இவ்வெடுத்துக்காட்டில் தேமாங்கனியின் அருமையை ஒருவன் அறிந்துநின்ற நிலை போல்வதே ஞான மார்க்க மாகும்; அம் மாங்கனியின் அருமையை அறிந்த அளவிலே அதனைச் சுவைத்து மகிழும் இன்பம் பிறவாமல், அதனைப் பறித்துப் பிழிந்து அதன் சாற்றை நாவிலிட்டுச் சுவைத்த பின் மட்டுமே அவ்வின்பந் தோன்றுதல்போல ஞான மார்க்கத் தால் அறியப்பட்ட பொருளை அறிந்த அளவிலே இன்பந் தோன்றாமல் பத்தி மார்க்கத்தால் அனுபவித்துக் காணும் உண்மைக் காட்சியிலேதான் இன்பம் விளையுமா மென்பதும் இனிது புலப்படும். இனி ஒரு பொருளின் அருமையை அறிந் தவன் அதனை அனுபவியாது விடானாகலின், ஞான மார்க்கத்திற் சென்றவன் பத்தி மார்க்கத்திற் செல்லாதிரான் என்பதுந் துணியப்பட்ட பொருளாம். ஆகவே அறிவின் வழிப்பட்டு நின்ற ஞானமார்க்கம் இன்ப வயப்பட்டு நின்ற பத்தி மார்க்கத்தினைப் பயக்குங் காரணமாய் நிற்கப் பத்தி மார்க்கமானது அதன் காரிய அனுபவ நிலையாய் அதனினுஞ் சிறப்புடைத்தாய் விளங்குமென்பது பெறப்பட்டது. இம் முறை சிற்றறிவு சிற்றின்பங்களையுடைய பெத்தான் மாக்களிடத்தும், பேரறிவு பேரின்பங்களை யுடைய முத்தான் மாக்களிடத்தும் பிறழாது காணப் படுவதேயாகும் என்று இவ்வாற்றால் இன்பப் பேறே எல்லா உயிர்களுக்கும் முடிந்த நிலையா யுள்ள தென்பது காட்டப்பட்டது. அங்ஙனமாயின், சிற்றறிவுடைய உயிர்கள் அவாவும் இன்பத்திற்கும், பேரறிவுடைய மக்களும் முனிவரும் அவாவும் இன்பத்திற்கும் வேறுபாடு என்னயெனின்; இன்பம் அறிவின் காரியமாய்த் தோன்றுவதென முன்னரே விளக்கிக் காட்டின மாகலின், அவ்வின்பம் தனக்குக் காரணமாயுள்ள அறிவின் தரத்திற்கு ஏற்பப் பெரிதாயுஞ் சிறிதாயும் நிலை யுளதாயும் நிலையிலதாயும் பல திறப்பட்டுத் தோன்று மென்பதும் அது கொண்டு தெளியப்படும், உயிர்கள் உலகத்துப் பொருள்களின் சேர்க்கையானும், தம்மையொத்த உயிர்களின் சேர்க்கை யானும் இன்பம் எய்தக் காண்கின்றோம். உலகத்துப் பொருள்கள் அறிவில் லாதனவும் நிலையில் லாதனவுமாய்ப் போதலின் அவற்றின் சேர்க்கையாற் பிறக்கும் இன்பமும் நிலையில்லாமல் அழிந்து போதலுடன் தானழிந்தபின் துன்பத்தையும் விளை விக்கின்றது,இனி உயிர்களெல்லாம் சிற்றறிவினவாயும் நிலை யில்லாத உடம்புகளில் மாறி மாறி வருவனவாயும் இருத்தலின் அவற்றின் சேர்க்கையாற்றோன்று மின்பமும் நிலையின்றி அழிதலுடன் பின்னர்த் துன்பத்தையும் வருவிக்கின்றது. என்றும் அழியாது நிலைத்து நிற்கும் பேரின்பத்தையே அடைய வேண்டும் என்னும் நோக்கத்தையுடைய உயிர்கள் அப்பேரின்பத்தைத் தருதற்குரிய பேரறிவுப் பொருளை நாடாமல், மின்னல் போலத் தோன்றித் தோன்றிச் சிற்சில நொடியில் மாய்ந்து போகும் சிற்றின்பத்தைத் தந்து பின் துன்பத்தையே பயக்கும் உலகத்துப் பொருள்களையும் சிற்றுயிர்களையும் நாடுதல் தமக்குள்ள சிறிய மயக்கவறிவின் பான்மையினாலன்றோ? சிற்றறிவால் வருவது சிற்றின்பமும் பேரறிவால் வருவது பேரின்பமும் ஆகும். சிற்றறிவானது தனக்கு எட்டிய சிறு பொருளையே நாடும்; பேரறிவானது எல்லா அறிவும் எல்லா இன்பமும் நிறைந்த பெரும் பொருளையே நாடும். சிற்றறிவால் நாடப்படும் சிறு பொருட் சேர்க்கையாற் சிற்றின்பமும், பேரறிவால் நாடப்படும் பெரும் பொருட் சேர்க்கையாற் பேரின்பமும் வருதல் இயல்பேயன்றோ? விலங்கினங்களின் அறிவு பகுத்துணர்வோடு கூடாமல், உலகத்துப் பொருள் களை மட்டும்அறிவிக்குங் கருவிகளான மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறிகளோடு இயைந்து நிகழ்தலின், அவை தமக்குப் பசி எடுத்த காலத்து இரைதேடித் தின்று பசி நீங்கி இன்புற்றும் உறங்கியும் சிற்சில நேரங்களில் ஆணும் பெண்ணுமாய் மருவியும் அவ்வள வோடு தமது காலத்தைக் கழித்து விடுகின்றன. இங்ஙனம் விலங்கினங் களின் அறிவு புறப்பொருள்களைப் பற்றிய புற அறிவாய் மிகச் சிறிதாய் இருத்தலின் அச்சிற்றறிவால் அவையடையும் இன்பமும் மிகச் சிறிதாய்க் கழிகின்றது. இனி மக்களாய்ப் பிறந்த நம்மனோர்க்குள்ள அறிவு புறத்தேயுள்ள உலகத்துப் பொருள்களை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறி வாயிலாக அறிவதுடன், அங்ஙனம் அறிந்தவற்றைத் தமது அகத்தே கொண்டுபோய் வைத்து இது நல்லது இது தீயது எனவும், இஃது இதனை ஒக்கும் இஃது இதனை ஒவ்வாது வேறாம் எனவும் பகுத்துணர வல்லதாயும் இருத்தலின், விலங்கினங்களின் அறிவைவிட எத்தனையோ மடங்கு பெரிதான இவ்வகப்புற அறிவால் வரும் இன்பமும் அச்சிற்றுயிர்கள் எய்தும் இன்பத்தினும் எத்தனையோ மடங்கு பெரிதாய்த் திகழ்கின்றது. பசி எடுத்த காலத்து மட்டும் இரைதேட முயன்று, பசி ஒழிந்தபின் வாளாது உறங்கிக் கழியும் விலங்குகள் பலவற்றைப் போல் ஆகாமல், அப்பசித் துன்பத்தை நீக்க முயலும் போதும் வருங் காலத்தை நாடி உழைக்கும் மக்கள் அறிவின் மேன்மையைப் பாருங்கள்! விலங்குகளிற் பெரும்பாலன நாளைக்கு என் செய்வேம் என்னுங் கவலை சிறிதுமே இல்லாதனவாம். மக்களோ நாம் முதுமைவந்த காலத்து வருந்தாது இருந்து உண்ணல் வேண்டுமே என்னும் வருங்கால அறிவுடையராய் இளம்பருவத்தே ஆனமட்டும் முயன்று வேண்டும் பொருளைத் தொகுத்துக் கொள்கின்றார்கள்; அதுமட்டுமேயோ, தமக்கு மட்டுமே வேண்டுமென்று பொருள் தொகுத்துக் கொள்ளாமல் தமது இன்பத்திற்கு உதவியாய் நிற்கும் மனைவி மக்கள் பெற்றார் உற்றார் நண்பர் முதலாயினார்க்கு வேண்டுமளவும் பொருள் தொகுத்துக் கொள்கின்றார்கள்; அங்ஙனம் பொருள் தொகுக்குமிடத்தும் பலர்க்கும் பயன் படுங் கைத்தொழில் உழவு வாணிகம் முதலிய முயற்சி களிற் புகுந்து தாம் பயன் பெறுதலல்லாமலும் பிறரையும் பயன் பெறுத்து கின்றார்கள். இவ்வாறு விரிந்த அறிவு கொண்டு தாம் இன்புறுங் காலத்து அதனாற் பிறர்க்கும் இன்பம் விளைதலால் அவ்வின்பத்தைக் கண்டு மக்களாயினார்க்கு மேலுமேலும் இன்பமே விளையா நிற்கும். தாமின் புறுவது உலகின் புறக் கண்டு, காமுறுவர் கற்றறிந் தார் - (குறள் 399) என்ற திரு மொழிப்படி பிறர் அடையும் இன்பத்தைக் கண்டு இங்ஙனந் தாமும் மகிழும் மகிழ்ச்சி விலங்குகளுக்கு உண்டோ சொல்லுமின்! இன்னும் மக்களிற் கற்றவராயுள்ளோர் ஏனைக் கற்றறிவில்லார் எய்தும் இன்பத்தினும் மிகச் சிறந்த இன்பம் எய்துகின்றார். கல்லாத மாந்தருக்கும் கற்றறிவுடைய நல்லாருக்கும் அகத்தும் புறத்தும் அறிவு நிகழுமாயினும், அவ்வறிவு கற்றவரிடத்து நுணுகி விரிந்து பெருகிப் பேரின்பந் தருதல்போலக் கல்லாதவருக்குத் தர மாட்டா தாகும்; இதுபற்றியே தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாய னாரும் கல்லாதான் ஒட்பங்கழியநன் றாயினுங், கொள்ளா ரறிவுடை யார் - (குறள் 404) என்று அருளிச் செய்தனர். பொது அறிவினை யுடையார் மெய், வாய், கண், மூக்கு, செவிகளால் புறப்பொருள்களை ஆய்ந்தறிந்து அறிவு பெருகி மிக்க இன்பம் அடைய மாட்டுவாரல்லர்; விலங்கு களைப் போல் உண்டு உறங்கிக் கலந்து அவ்வளவிலே மகிழ்ந்து ஒழிவர். கல்வியறிவுடை யாரோ உலகத்துப் பொருள்களின் பலவகைத் தோற்றங்களையும் அவற்றின் அரிய அமைவு களையுங் கண்டும், இனிய ஓசைகளையும் இசைப்பாட்டுக் களையுங் கேட்டும், பல வகைப்பட்ட சுவைகளையும் நறுமணத்தையுங் கவர்ந்தும், மெல்லென்ற பொருள்களைத் தொட்டும், இவற்றொடு மனவறிவாற் பல கலைஞான நூல்களை ஓதியுணர்ந்தும் ஏனைப் பொது அறிவுடையார்க்கு எட்டாத ஓர் அரிய இன்பத்தைப் பெறுவர். கல்வியறி வில்லாதவர் மக்களுள் விலங்குகளே யாவர்; இவ்வுண்மையை உணர்த்துவதற் கன்றோ தமிழ் மறையும் விலங்கொடு மக்க ளனையர் இலங்கு நூல், கற்றாரோ டேனை யவர் (குறள் 410) என்று கூறுவதாயிற்று. இனி இத்துணைப் பெரிய கல்வியறிவினை யுடைய வரும் நிலையில்லாத உலகத்துப் பொருள்களையும் நிலை யில்லாத சிற்றுயிர்களையும் அவற்றின் நுட்பங்களையும் முற்ற வுணர்ந்து, அதனாற் பெருகிய சிறப்பறிவாற் சிறப்பாகிய இன்பத்தை அடைகின்றா ரென்றாலும், அவரால் ஆராயப் பட்டனவும் நிலையில்லாத சிறு பொருள் களேயாய்ப் போதலின் அவற்றை அறிந்த அக்கற்றோரறிவும் சிறியதாய் அவ்வறிவால் வந்த இன்பமும் சிறியதாய் ஒழிய, அவரைப் பற்றிய அறியாமையும் முற்றும் நீங்காதாய் நிற்க, அவ் வறியாமை வாயிலாக வருந்துன்பமும் அவரைவிட்டு நீங்காமற் பிறவிகடோறும் அவரையும் துன்புறுத்திய படியாகவே தொடர்ந்து வரும். ஆ! கல்வியால் எத்துணை பெரியவராயினும், அவர் உலகத்துப் பொருள்களைப் பற்றியும் தம்மையொத்த சிற்றுயிர்களைப் பற்றியுமே தமதறிவை இயங்க விடுவார்களாயின், அவர் ஏனையோர்க்கு எட்டாத ஒரு சிறந்த இன்பத்தை அடைந்தாலும் அவ்வின் பமுங் கடைசியிற் சிற்றின்பமேயாய் நிலையாது கழியப் பின்னர் அவர் பெருந்துன்ப வயத்தராயே பிறவிகளிற் பட்டு உழலுவர்! இது பற்றியன்றோ செந்நாப்போதாரும் கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன், நற்றாள் தொழாஅ ரெனின் (குறள் - 2) என்று அருளிச் செய்வாராயினர், இனி இக்கற் றோரினும் மேம்பட்ட முனிவரரோ உலகத்துப் பொருள் களின் நிலையாமையினையும் சிற்றுயிர்களின் சிற்றறிவியல்பு களையும் இனிது உணர்ந்து அவற்றின்கட் சிறிதும் பற்றில்லாமல் எல்லாப் பொருள்களினும் பெரிய தாய், உயிர்ப் பொருள் உயிரில் பொருள் என்னும் எல்லா வற்றினும் நுண்ணியதாய், எல்லா அறிவுகளினும் மேலான தூய பேர் அறிவினை யுடையதாய், இங்ஙனம் பேரறிவு டையதாய் இருத்தலின் அவ் வறிவோடு பேரின்பமும் உடன் நிகழப் பெறும் பேரின்ப நிலையமாய், என்றும் நிலை பேறாயுள்ள அழியா முழு முதற் பொருளாய் விளங்கா நின்ற ஒப்புயர் வில்லா ஒரு தனித்தலைமைப் பெருங் கடவுளையே அறியும் பேரறிவு கொண்டு அப்பேரறிவோடு ஒருங்கு நிகழும் பேரின்பப் பாற்கடலிற் றிளைத்துப் பேரின்ப வுருவாய் நிலை திரியாது அமர்ந்திருப்பர். இங்ஙனம் முனிவ ரரால் அடையப் பட்ட இன்பமானது எல்லையற்ற பேரின்பக் கடலாய், எல்லா உயிர்களுங் கடைசியாக எய்து தற்குரிய முடிந்த பதமாய் விளங்கும். என்று இதுகாறுங் கூறியவாற்றாற் புழுமுதல் முனிவரர் ஈறான எல்லா உயிர்களும் துன்ப நீக்கத்தையும் இன்ப ஆக்கத் தையுமே அவாவி முயன்றாலும், அவ்வுயிர்கள் எல்லாம் தத்தமக்கு அறிவு எட்டியவரையிலே உலகத்துப் பொருள் களைப் பற்றியும் தம்மையொத்த சிற்றுயிர்களைப் பற்றியும் எல்லாவற்றிற்கும் மேலான கடவுளைப் பற்றியும் நின்றமை யால், அவ்வுயிர்கள் மாட்டுத் தோன்றிய இன்பமும் பலதிறப் பட்ட தாயிற்று. இனி உலகத்திலுள்ள எல்லா வுயிர்களும்இன்பப் பேற்றினையே முடிந்த பதமாக அவாவுதல் உணர்ந்து, உலகத்திலுள்ள சிறந்த சமயங்கள் எல்லாம் நிலையில்லாத ஏனைச் சிற்றின்பங்களைப் பெறுவதிற் கருத்தூன்றல் ஒழிந்து, நிலையான கடவுளின் பேரின்பத்தைப் பெறுதலென அறிவுறுப்பவாயின. இங்ஙனமே நமது சைவ சமயமும் அறிவுறுத்துதல் சைவ சமயாசாரிய சுவாமிகளான மாணிக்க வாசகப் பெருமான் வைத்தநிதி பெண்டிர் மக்கள்குலங் கல்வியெனும் பித்த வுலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ் சித்த விகாரக் கலக்கந் தெளிவித்த வித்தகத் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ! என்றும், தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்றே னுண்ணாதே நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தோறு மெப்போதும் அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன்சொரியுங் குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ! என்றும் அருளிச் செய்தவாற்றாற் றெளியப்படும். உலகத்திற் சிறந்த ஏனை ஆத்திக சமயங்கள் அறிவுறுப்பது போலவே நமது சைவ சமயமும் இங்ஙனம் அறிவுறுத்திடுமாயின் இதிற் போந்த சிறப்பு என்னையென்று பலர்க்கும் ஐயம் நிகழாமற் போகாது. ஆகவே அதனையும் ஆராய்வோம். எல்லா வுயிர்களும் இன்பப் பேற்றினையே முடிந்த பதமாக வைத்து விரும்புதலாலும், இன்பவுருவாய் விளங்கு தலே கடவுளின் சொரூப இலக்கணமாகிய உண்மை நிலை யாக இருத்தலாலும், அக்கடவுளைக் குறித்துப் பேசுங்காலத்தும் அவரை அழைக்குங் காலத்தும் இன்பம் என்னும் பொருளை தரும் பெயர்களிட்டு வழங்குதலே எல்லாரும் செயற்பால தாகிய பெருங்கடமையாகும். அஃதேன் என்றால், ஒரு பெயரைச் சொல்லும்போது அப்பெயரினாற் குறிக்கப்படும் பொருள் நினைவுக்கு வருதலானும், அப்பொருள் நினைவுக்கு வரவே அந்நினைவின் வயப்பட்ட நம்முயிர் அவ்வண்ண மாகவே நிற்குமாதலானும் என்பது, ஆனந்தம், இன்பம், அன்பு, அருள் என்னுஞ் சொற்களை வழங்குங்கால்,அச் சொற்களாற் சுட்டப்படும் இன்பம் என்பது நம் நினைவில் எழ, நம் உயிர் அவ்வுணர்வின் பாற்பட்டுத் துன்பத்தைவிட்டு இன்பவுருவாயே விளங்கும். ஆகவே, கடவுளை இன்பப் பெயரிட்டு அழைத்தலே மாட்சி உடைத்தாம் என்பது இனிது புலப்படும். இனி உலகத்திற் சிறந்த ஆத்திகமதங்கள் கடவுளை எவ்வெப் பெயர்களால் வழங்கிவருகின்றன, வென்று ஆராயு மிடத்து, அவற்றுள் ஒருசில அவரை எல்லாம் வல்லவர் என்னும் பெயரினாலும், வேறு சில அவரை எங்கும் நிறைந்தவர் என்னும் பெயரினாலும், மற்றுஞ் சில அவரை எல்லாத் தலைமையுமுடையவர் என்னும் பெயரினாலும், ஏனைச் சில அவரை எல்லாங் கடந்தவர் என்னும் பெயரி னாலும், மற்றைச் சில அவரைப் பெரியதிற் பெரியவர் என்னும் பெயரினாலும், இன்னுஞ் சில அவரை ஒளியுரு வினர் என்னும் பெயரினாலும், மற்றும் பல பலவாற்றாலும் வழங்கு கின்றனவே யல்லாமல் அவை அவரை இன்ப வடிவினர் என்னும் பெயரால் வழங்குவதைக் காண்டல் அரிதினும் அரிதாம், அரியாமையிற் கிடந்து துன்பத்திற் சுழலும் சிற்றுயிர்களான நாம் அத்துன்பத்தினின்றும் விலகி என்றும் அழியா அவரது பேரின்பத்தைப் பெறுதல் ஒன்றிலே மட்டுங் கருத்துடையோ மாதலால், நமது கருத்துக்கும் நோக்கத்திற்கும் இணக்கமாய் வேண்டப்படாத அவருடைய மற்றத் தன்மை களைப் பேசி எமக்கு ஆவதென்ன? அவர் எல்லாம் வல்லவ ராதலைப் பேசுதலால் எமக்கு என்? அவர் எங்கும் நிறைந்தவர் என்பதனால் நாம் பெற்றதென்? அவர் எல்லாத் தலைமையு முடையவர் என்றுரைத்தலால் எமக்காவ தென்னை? அவர் எல்லாங் கடந்தவரென்று நினைத்தலால் நாம் எய்துவது யாது? அவர் பெரியதிற் பெரியவர் என்று கூறுதலால் நாம் பெற்ற பேறென்ன? அவர் ஒளியுருவினர் என்றும் மற்றும் பல வியல்பினரென்றும் நினைத்தலால் நமக்கு வருவது யாது? நாம் அவர்பாற் பெற வேண்டுவன துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமுமேயல்லவோ? இங்ஙனங் கூறுதல் கொண்டு நாம் முற்சொல்லிய பெயர்களால் அவரை வழங்கலாகாதென்று கருதினோம் என எண்ணற்க. அங்ஙனம் அவர் தம் வியத்தகும் இயல்புகள் பலவற்றையுங் கூறுதலாற் போந்த இழுக்கு ஒன்று மில்லை என்றாலும், துன்பத்தைப் போக்கி இன்பத்தைத் தரும் இன்பவுருவினர் என்று அவரை வழங்குதலே நாம் கடைத் தேறுவதற்கு வழியாதலால் அப் பெயரிட்டு அழைத் தலே நமக்கு இன்றியமையாத கடமை யாம். இவ்வரிய பெரிய உண்மையை எம்போன்றார்க்கு அறிவுறுத்துதற் பொருட் டாகவே மாணிக்கவாசகப் பெருமான், மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத் தமுதே ஊறிநின் றென்னுள் எழுபரஞ்சோதி உள்ளவா காணவந் தருளாய் தேறலின் றெளிவே சிவபெரு மானே திருப் பெருந் துறையுறை சிவனே ஈறிலாப் பதங்க ளியாவையுங் கடந்த இன்பமே! என்னுடை அன்பே! என்று அருளிச் செய்ததூஉம், இம்முடிபு முழுதும் ஒருங்கு அனுபவித்துணர்ந்த திருமூலயோகிகள், அன்புஞ் சிவமு மிரண்டடென்ப ரறிவிலார் அன்பே சிவமாவ தியாரு மறிகிலார் அன்பே சிவமாவ தியாரு மறிந்தபின் அன்பே சிவமா யமர்ந்திருந் தாரே. என்று அருளிச் செய்ததூஉம் என்க. ஆத்திகமதக் கொள்கைகள் ஒன்றுக்கும் இணங்காத நாத்திக சமயிகளுங்கூட எல்லையற்ற அன்பின் உருவே கடவுள் என்று மொழிந்தால் அதனை உடனே தழுவிக் கொள்வர். அஃதெதனாலெனின், எல்லாம் வல்லுதல் எங்கும் நிறைதல் முதலான அவர் தம்மற்றை இயல்புகள் மக்களாகிய நம்மனோர் அறிவுக்கும் அனுபவத்திற்குஞ் சிறிதும் எட்டாதனவாகலின், அவ்வறிவுக்கும் அனுபவத்திற்கும் வராதன வெல்லாம் பொய்யென்றுரைக்கும் அந்நாத்திக சமயிகளிடத்து அவற்றைச் சொல்லிக் கடவுள் ஒருவர் உண்டென்று நாட்டுதல் ஒருவாற்றானும் ஏலாததொன்றாம்; அங்ஙனங் கூறுதலை விடுத்து நமதறிவுக்குப் புலனாயும் நமதனுபவத்திற்குப் பொருளாயும் விளங்கும் அன்பு அல்லது இன்பத்தின் எல்லையற்ற வடிவே கடவுள் என்று ரைப்பே மாயின், எல்லாவுயிர் கட்கும் அனுபவமா யுள்ள அதனை மறுக்க மாட்டாமையின் அவர் அதற்குடனே இணங்குவர். இங்ஙனங் கடவுள் உண்டென்பார் இல்லை யென்பாரான எத்திறத்தாரானும் மறுக்கலாகாது தழுவப் படும் முடிந்தவுண்மையாயிது விளங்குதலைத் தெற்றென வுணர்ந்தே மாணிக்கவாசகப் பெருமானும் திருமூல நாயனாரும் அங்ஙனங் கடவுளை ஈறிலாப் பதங்களி யாவை யுங் கடந்த இன்பமே என்னுடை அன்பே எனவும் அன்பே சிவமாவது எனவும் முறையே அருளிச் செய்தனர்கள். சைவ சித்தாந்தத்திற்குப் பிரமாண முதனூ லாகிய சிவஞான போதத்தும், அருளுண்டா மீசற் கது சத்தி யன்றே அருளு மவனன்றி யில்லை - அருளின் றவனன்றே யில்லை யருட்கண்ணார் கண்ணுக் கிரவிபோ னிற்குமர னேய்ந்து என்று அருளே கடவுளாதல் வலியுறுத்துச் சொல்லப் பட்டமை காண்மின்கள்! இனி உலகத்தின்கண் உள்ள ஆத்திக சமயங்களுள் ஒன்றேனும் கடவுளை இன்பப் பெயரிட்டு அழைத்திலது என்றது ஒக்கும்; மற்று நமது சைவ சமயம் அவை யெல்லா வற்றினும் மாட்சியுடைத்தாயின், அதன்கட் கடவுளுக்கு இன்பப்பெயரே சிறப்பாக வழங்கல் வேண்டுமாலெனின், அதனை ஒரு சிறிது விளக்குவாம். நமது மதத்திற்குச் சைவம் என்னும் பெயர் வந்தது எதனால் என்று ஆய்ந்து பார்க்குங்கால் நமது கொள்கை சிவ சம்பந்தம் உடையதாதல்பற்றியே அப்பெயர் பெறுவதாயிற் றென்னும் உண்மை விளங்கா நிற்கும்; இதனாலன்றோ சிவனருள் பெற்ற சிற்றம்பல நாடிகள், தெய்வஞ் சிவனே சிவனருள் சமயஞ் சைவஞ் சிவத்தொடு சம்பந்த மென்றான் சைவம் வளர்க்குஞ் சம்பந்த மூர்த்தி என்று அருளிச் செய்வாராயினர். சிவம் என்னுஞ் சொல்லை வடமொழி என்று எடுப்பினும் தமிழ் மொழி ஈன்றெடுப் பினும், அது மங்கலம், சுகம், பாக்கியம், பேரானந்தம் என்னும் இன்பப் பொருளையல்லாமல் வேறு பொருளைத் தரக் காண்கின்றிலேம்; அது வட மொழியில் இங்ஙனம் இன்பப் பொருளையே தருமாறு நைஷத சரிதம், இரத்தி னாவளி, கிராதார்ச்சுனீயம், இரகு வமிசம் முதலான வட மொழி நூல்களில் அஃது அப்பொருளே தந்து வருதலாற் றெளியப் படும்; அது தமிழிற் செந்நிறமென்றும் செவ்விது என்றும் பொருள்படும் சிவ செம் என்னும் பகுதிகளோடு ஒற்றுமைப்பட்டு அவ்வின்பமென்னும் பொருளைத் தருமாறு தமிழ்நூற் பயிற்சியால் நன்குணரப்படும். இங்ஙனம் ஆனந்தம், அன்பு, இன்பம் என்னும் பொருளையன்றி வேறு பொருள் தராத சிவம் என்னுஞ் சொல் இன்பவுருவாயே விளங்கும் முழுமுதற் கடவுளுக்கு முதன்மைப் பெயராக வைத்து நமது சைவ சித்தாந்தத்தில் வழங்கப்பட்டு வரும் அருமை பெருமையை என்னென்று கூறுவேம்! யாம் அறிந்த மட்டில் உலகத்தி லுள்ள வேறெந்த மதத்திலும் இங்ஙனங் கடவுள் இன்பப் பெயரால் அழைக்கப்படுதலைக் கண்டி லேம்! சிவம் என்னும் மொழி சொல்லாலும் பொருளாலும் இன்பம் ஒன்றையே குறித்தல் பற்றியன்றோ அருந் தவச் செல்வரான திருமூலர் அன்பே சிவமாவதியாரும் அறிகிலார் என்று அவ்வாறு தெளிவுறுத்தி அருளிச் செய்தார்! எல்லையற்ற அன்பின்வடிவே சிவமாயிருத்தல் பற்றி யன்றோ அச்சிவத்தோடு இயைபுற்ற நமது சைவ சமயத்திலே எல்லா வுயிர்களிடத்தும் அன்பு பாராட்டி ஓருயிரையுங் கொல்லாது புலான் மறுத்து ஒழுகுவானைச் சைவன் என்று எல்லாரும் அழைக்கின்றார்! வைணவர், புத்தர், கிறித்துவர், மகமதியர் முதலான பிற சமயத்தவர்களிலும் புலால் உண்ணாதவர்கள் `நாங்கள் புலால் தின்கிறதில்லை. சைவ மாகி விட்டோம் என்றன்றோ தம்மைச் சிறப்பித்துச் சொல்லிக் கொள்கின்றார்கள்! இங்ஙனம் உலக வழக்கானும் நூல் வழக்கானுஞ் சைவம் என்பது உயிர்களிடத்துச் செல்லும் அன்பினையும் கடவுளிடத்துச் செல்லும் அன்பினையும் விளக்கி விளங்கும் அருமை பெருமையினையும், இன்ப வுருவாய் ஒளிரும் முழுமுதற் கடவுளை அவ்வின்பப் பொருளையே தரும் சிவம் என்னுஞ் சொல்லாற் பண்டைக் காலந்தொட்டு வழங்கிவரும் விழுப்பத்தினையும் நடுநிலை திறம்பாது ஆய்ந்துணரவல்லவர் எவரேனும் சைவ சமயமே ஏனை எல்லாச் சமயங்களிலும் மாட்சி உடைய தென்று கூற முன் வராதிருப்பரோ? அறிவுடையீர் சொல்லு மின்! நாத்திகர் ஆத்திகர் முதலான எல்லா மதத்தவராலும் தழுவப்பாலதாகிய இவ்வரிய பெரிய கொள்கையினை யுடைய நமது சைவமானது கீழ்ப்பட்ட நிலையிலுள்ள ஒரு சிறு மதமாதலின்றி எல்லா மதங்களையுந் தன்னுள் அடக்கித்தான் அவற்றின் மேலாய் விரிந்து திகழும் நிறைந்த இயல்பினை உடையதென்று சொல்லுவதற்கு அறிவுடை யோர் எவரேனுங் கூசுவரோ? ஐயன்மீர் ஆராய்ந்து சொல்லுமின்! அழியாத பேரின் பத்தைப் பெற வேண்டும் என்னும் விழைவு மிக்க பெரியோ ரெவரேனும் அவ்வின்பப் பொருள்படும் சிவம் என்னுஞ் சொல்லால் நம் ஆண்டவனை அழைக்கக் கூசுவரோ? இன்பத்தை வெறுத்துக் கொடுந் துன்பக்கடலில் அமிழ்ந்தி அறியாமையில் உழலும் உயிர்கள் அவரைச் சிவம் என்னும் பெயரால் அழைக்கக் கூசுவராயின் அஃதவர் தீவினைப் பயனாவதன்றி வேறென்ன? இது குறித்தன்றோ திருமூல நாயனாரும் சிவசிவ வென்கிலர் தீவினை யாளர் சிவசிவ வென்றிடத் தீவினை மாளுஞ் சிவசிவ வென்றிடத் தேவருமாவர் சிவ சிவ வென்னச் சிவகதி தானே என்று அத் தீவினையாளர்க்கு இரங்கி அருளிச் செய்தனர்கள். இன்னும் இச்சிவ என்னும் மொழியின் உயர்வை உணர்த்துதற் பொருட்டாகவே, பொருள் வகையால் வேதங்களுட் சிறந்த எசுர்வேதமானது தனது நெஞ்சமாக விளங்கும் சதருத்திரீய மந்திர நடுவிலே இச்சிவ என்னும்இரண்டெழுத் தொரு மொழியைப் போற்றி வைத்துக் காப்பதாயிற்று. இது நிற்க. இனி உயிர்களுக்குப் பேரின்பத்தை ஊட்டும் அருட் பெருங்கடவுளான நஞ் சிவபெருமான், அவ்வுயிர்களைப் பற்றி வருத்தும் துன்பத்தை முற்றும் ஒழித்தே தனது இன்னருளை வழங்குவனாகலின்,இன்பத்தைத் தருதலோடு துன்பத்தைப் போக்குதலும் அம் முழுமுதற் கடவுளுக்குரிய உதவிச் செய்கையின் இயல்பாம். உயிர்களுக்கு இன்பத்தைத் தந்தருளுங் கடவுள் அவ்வுயிர்களிடத்துத் தொன்று தொட்டே முனைந்து நிற்கும் துன்பத்தை நீக்கி யல்லது அதனைத் தருதலாகாமையான், அங்ஙனந் துன்பத்தைப் போக்கும் அவரது பேருதவிச் செய்கையை மறவாது நினைந்து அவரை அப்பெயரால் அழைத்தலும் நம்மனோர்க்கு இன்றியமையாத கடமையாம். மேலும், அறியாமையில் அகப்பட்டு வருந்தும் நாம் இன்பத்தைப் பெறும் முன் நம்மை இடையறாது வருத்தி வருந் துன்பத்தைப் போக்கிக் கொள்ளவே விருப்ப முற்றிருத்தலால், நமக்கு அவ்வுதவியைச் செய்யும் நம் ஆண்ட வனைத் துன்பத்தை அழிப்பவன் என்று அழைத்தலிலேதான் அவா மிகும். தொழுநோய் கொண்டும் உடல் அழுகி மிக வருந்தும் ஒருவன் முதலில் அந்நோயைத் தீர்க்கும் மருத்து வனையே நாடி நிற்றல் போலவும், ஆற்றின் பெருவெள்ளத் தில் அகப்பட்டு நிலை தடுமாறி அலைப்புண்டு போம் ஒருவன் தன்னை அதனினின்று மெடுத்துக் கரையேற்று வானையே தேடிக்கிடத்தல் போலவும், சுற்றி எரியுந் தீ நடுவே நின்று துடிக்கு மொருவன் தன்னை அத்தீயின்னிறு மீட்பான் உதவியையே விழைந்து அலறுதல் போலவும் ஆணவமல மென்னும் பெரும் பாந்தள் வாயிலகப் பட்டு வருந்தும் மன்னுயிர்களான நாம் நம்மை அதனினின்று விடுவிக்கும் முதல் வன்றன் பேருதவியினையே அவாவி நிற்கின்றேம்; ஆதலால், அன்பர்களே! எல்லாம்வல்ல அம் முதல்வனைத் துன்பந் துடைப்பவன் என்றுஅழைத்தலே நாம்அத்துன்பத்தி னின்று விடுவிக்கப்படுதற்கும், அதனையே விழைந்து நிற்கும் நமது உயிரினியற்கைக்கும் மிக இயைந்த தாகும். இனி இத்துணைச் சிறந்த கடவுளின் உதவிச் செய்கையை இனிது விளக்கி அதனை நமது நினைவில் எழுவிக்கும் பெயர்கள் வேறு மதங்களிற் கடவுளுக்குச் சொல்லப் பட்டிருக்கின்றனவா என்று நாம் ஆராய்ந்து பார்த்தமட்டில், அவைகளில் அவை இருக்கக் கண்டிலேம்; அல்லது அவற்றுள் எதிலேனும் அப்பெயர் இருக்குமாயின் அது நமது சைவ சமயமே என்று பாராட்டி அகமகிழ் தற்குரியேம். மற்று நமது சைவ சமயத்தின் கட் கடவுளைத் துன்பந் துடைப்பவன் என்று குறிக்கும் பெயர்கள் உளவோ எனின்; சிவபெருமானுக் குரிய அருமைத் திருப்பெயர்களிற் பல அப்பொருளையே தருவனவாம் என்று அறிமின்கள்! வடமொழி வேதங்களில் மிகப் பழையதான இருக்கு வேதம் எங்கணும் நஞ்சிவ பெருமானுக்குப் பெயராக எடுத்தாளப்பட்டு வரும் உருத்திரன் என்னும் பெயர் ஒன்றே நாங் கூறுவதன் உண்மையை நாட்டுதற்குப் போதுமான சான்றாகும். உருத்திரன் என்னும் இச்சொல் துன்பத்தை ஓட்டுபவன் என்றும் இருளை அறுப்பவன் என்றும் பொருள் படுமென வேதங்களுக்கு பாஷியம் எழுதின சாயனாசாரியாராலே நன்கு விளக்கப்பட்டிருக்கின்றது. இதனைப் போலவே அரன், வைத்தியநாதன் என்னுஞ் சொற்களும் துன்பத்தை யழிப்பவன் ஆணவநோயைப் போக்குபவன் எனப் பொருடந்து சிவபெருமானுக்கே பெயர்களாக வழங்கி வருகின்றன, இப்பெயர்களுக்கு ஏற்பவே இருக்குவேத மானது, பாட்டுக் களுக்குத் தலைவரும் வேள்விகளுக்குத் தலைவரும் நோய் நீக்கும் மருந்துகளை வைத்திருப் பவருமான உருத்திரரிட மிருந்து அவரது மங்களகரமான பிரீதியை நாடுகின் றோம், என்றும், இரண்டு கால்களும் நான்கு கால்களும் உள்ள எங்கள் பசுக்களுக்கு நலம் உண்டாதற் பொருட்டும், இந்த ஊரிலுள்ள எல்லா உயிர்களும் நன்றாக உணவு ஊட்டப் பட்டு நோயினின்று நீங்கியிருத்தற் பொருட்டும் வீரர்களுக்கு ஆண்டவரும் சுருண்ட சடைமுடியையுடைய வரும் வலியோருமான உருத்திரருக்கு இந்த வழுத்துரைகளைச் சேர்ப்பிக்கின்றோம், என்றும் ஓ உருத்திரரே, யாங்கள் செய்யும் வணக்கங்களாலும் தகுதியற்ற எங்கள் வழுத்துரைகளாலும், வலியோரே எங்கள் தாழ்ந்த வழிபாடுகளாலும் உமக்கு நாங்கள் சினத்தை உண்டாக்காதவர்களா யிருக்க வேண்டும். உம்மிடத்திலுள்ள மருந்துகளால் எங்கள் வீரர்களை எழுப்புவித்தருளும். மருத்துவர் எல்லாரினும் நீரே மிகப்பெரிய மருத்துவரென்று கேள்விப்படுகின்றேன், என்றும், நோயை நீக்கும் உருத்திரர் தம் உருத்திர கணங்களோடும் எம்மிடத்துப் பிரீதியுடைய ராய் இருப்பாராக, என்றும், அடியார்க்கு எளியராயிருக்கின்ற நீர் ஆயிரம் மருந்து களை வைத்திருக்கின்றீர், என்றும் உருத்திர மூர்த்தியை வழி படும் இடங்களினெல்லாம் அவரை எல்லா நோயும் போக்கும் வைத்தியநாத ரென்றே கிளந்தெடுத்துக் கூறுகின்றது, இங்ஙனம் மிகப் பழையதான இருக்கு வேதங் கூறுமாறு போலவே, இதற்குப் பின் எழுந்த வேதங்களும் உபநிடதங் களும், நம்பெருமானை வைத்தியநாத னென்றே வலியுறுத்திக் கூறா நிற்கின்றன. இனி இங்ஙனந் துன்பத்தை நீக்குதலும் இன்பத்தைக் கொடுத்தலுமாகிய உதவிச் செயல்கள் இரண்டும் நம் ஆண்டவனிடத்து ஒருங்கு அமைந்து கிடக்கும் பான்மை யினை உணர்த்துதற் பொருட்டாகவே அவ்விருக்கு வேத மானது பத்தாவது மண்டிலத்தில் உருத்திரன் சிவன் என்னும் இவ்விரண்டு அருமைத் திருப்பெயர்களையும் ஒன்று சேர்த்து ஒரு கடவுள் பெயராகவே கூறுவதாயிற்று. அன்பின் மிக்க எம் அருமை நேசர்களே, புழு முதல் மக்கள் தேவர் ஈறான எல்லாவுயிர்களும் தம்மை இயற்கை யாகவே பிடித்து வருத்தி வருகின்ற அறியாமைத் துன்பத்தை நீக்குவித்துக் கொள்ளல் வேண்டியும், என்றும் அழியாது நிலைபெறும் பேரின்பத்தைப் பெற்றுக் கொள்ளல் வேண்டியும் மிக விரும்பி, அங்ஙனம் அவற்றைத் தமக்குச் செய்து தரவல்ல முழுமுதற் கடவுளை வழிபட்டு வருகின்றார்களாதலின், அவ்வுயிர்களுக்கு அவர் வேண்டியவாறே அவர் துன்பத்தை நீக்கி இன்பத்தைத் தரும் நிலையில் அருள்கனிந்து விளங்கும் ஆண்டவனை அந்நிலைக்குப் பொருந்தவே உருத்திர னென்றும் சிவனென்றும் அழைத்தலும் வழங்கலும் எத்துணைச் சிறந்தனவாயிருக்கின்றன! இதனால், இவ் வுண்மையை முற்றும் உணர்ந்து இவ்வுண்மைக்கு இயையவே ஒழுகும் நமது சைவ சமயமானது, இவ்வுண்மையை உணராத ஏனைச் சமயங்கள் எல்லாவற்றினும் மிக உயர்ந்த மாட்சி யுடைத்தாய்ப் பொலிதல் வெள்ளிடை மலைபோல் விளங்க வில்லையா? உருத்திரன், சிவன் என்னும் இவ்வருமைப் பெயர்களைக் கேட்டவளவிலே இவ்வுண்மைகளை உணரப் பெறாத சிலர் இவை ஒரு மதத்தின் தெய்வத்தைச் சுட்டுதலால் இவை நாம் தழுவற்பாலனவல்ல வென்று விரைந்து கூறுகின்றார்கள்; அந்தோ! இவர்கள் அறியாமை இருந்தவாரென்னை! என்னை! அவர்கள் கூறுமாறு ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு தெய்வமா இருக்கும்! ஒரே கடவுளன்றோ உள்ளவர்? இது, ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்ம்மினே என்று திருமூலரும் ஒன்றென் றிருதெய்வ முண்டன் றிருவுயர் செல்வமெல்லாம் அன்றென் றிருபசித் தோர்முகம் பார்நல் லறமுநட்பும் நன்றென் றிருநடு நீங்காம லேநமக் கிட்டபடி என்றென் றிருமன மேயுனக் கோருப தேசமிதே என்று பட்டினத்தடிகளும் வற்புறுத்தி யருளிச் செய்த வாற்றால் இனிது அறியக் கிடக்கின்றதன்றோ? இங்ஙனம் எல்லா மதங்களுக்கும் ஒரே கடவுளே முதல்வராயிருக்க இவ்வுண்மையை மறந்து, உருத்திரன், சிவன் என்னும் பெயர்கள் ஒரு சமயத் தெய்வத்தையே குறிக்கின்றன வென்று கற்றவராகத் தம்மை நினைத்திருப்போர் சிலர் சொல்வது வியப்பினும் வியப்பே! எப்பொருளையுங் கடந்தவர் என்னும் பொருளைத் தரும் `கடவுள் என்னுஞ் சொல்லையும், ஒளிவடிவினர் என்னும் பொருளைத் தரும் `தெய்வம் என்னுஞ் சொல்லையும், இவை போன்ற வேறு சில சொற்களையும் இறைவனுக்குப் பெயராக வைத்து வழங்கு வதிற் குற்றங் காணாத அக்கற்றவர் சிலர் துன்பத்தை நீக்குபவன் என்னும் பொருளைத் தரும் உருத்திரன் என்னுஞ் சொல்லையும் இன்பவுருவினர் என்னும் பொருளைத் தரும் `சிவன் என்னுஞ் சொல்லையும் அவ்விறைவற்குப் பெயராக வைத்து வழங்கு வதில் மட்டும் மனங்கோணுதல் அவரது அறிவின் கோணலையே தெரி விப்பதாமன்றி மற்றென்னை? அற்றன்று, கடவுள் தெய்வம் முதலான சொற்கள் எல்லாரானும் பொதுப்பட வழங்கப் படும் பெயர்கள்: உருத்திரன் சிவன் என்னுஞ் சொற்கள் சைவர்களெனப் படும் ஒரு சாராரால் மாத்திரம் வழங்கப் படுவன ஆகலின், அவற்றை வழங்காமை பற்றி இழுக் கென்னை யெனின்; உயர்ந்த முழு மாணிக்கம் ஒன்றன் மதிப்பும் ஏற்றமும் அவற்றை அறிந்தார் சிலர்க்கன்றி எல்லார்க்கும் புலப் படாமையின், அம்மாணிக்கத்தை யாம் மதியேம் என்று பேசும் பேதைமாக்கள் சொல்லுக்கும் அக்கற்றவர் சொல்லுக்கும் வேற்றுமை ஏதுங் காண்கிலேம். கொடுநோயால் வருந்தும் ஒருவன் அந்நோய் தீர்க்கும் அரிய மருந்தை வைத்திருக்கும் வல்ல மருத்துவர் வந்தால் நீர் தரும் மருந்தின் றன்மையும் உயர்வும் நும்மனோர் சிலர்க்கன்றி ஏனை எல்லார்க்குந் தெரிந்தன அன்மையின் அதனை யான் உண்ணே னென்று மறுத்து வீணே உயிர் துறக்கும் புன்மைக்கும் அக்கற்றவர் தம் பிறவிப் பயனை இழக்குந் தன்மைக்கும் வேறுபாடு சிறிதுங் காண்கிலேம். எல்லாராலுந் தழுவப் பட்டதனையே யாமுந் தழுவுவேம் என்று சொல்லு தலினும் மிக்க அறியாமை வேறொன் றில்லை. அரிய பெரிய வுண்மைகள் அறிவின் மிக்க சிலர்க்கே விளங்கு மல்லாமல், அவை எல்லார்க்கும் விளங்குவனவல்ல. அவ் வுண்மைகள் எல்லாம் எல்லார்க்கும் ஒரு தன்மையவாய் விளங்கிடுமாயின் நம் மக்கட் பரப்பினருட் காணப்படும் இத்தனை வேறு பாடுகளும், இத்தனைமத வேறுபாடுகளும், நடையுடை பாவனை ஒழுக்க வேறுபாடுகளும், பிறவும் வரக் காரண மிலையே. ஆகையால், என் அருமை நேசர்களே, சிலரால் தழுவப்பட்டன வென்று நல்லவற்றைக்கை விடுதலும், பலராற் கொள்ளப்பட்டன வென்று தீயவற்றைக் கைப் பற்றுதலும் அறிவுடையோர்க்குச் சிறிதும் ஆகாதன வாம். மற்று எவரிடத்தே எது காணப்படினும், எவர் எது சொல்லினும் அவ்வவற்றின் றன்மைகளை ஆராய்ந்து நல்லவற்றைக் கைக்கொண்டு நலமுறுதலே அறிவுடையோர் செயற்பாலதாம் பெருங் கடமையாகும். இதுபற்றியன்றோ நந் தெய்வப்புலவர், எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள் 423) என்று அருளிச் செய்தனர். இங்ஙனம் என்னதாம் சொல்லினுஞ் சொல்லிக் கொள்க. சைவ சமயத்திற் சொல்வன ஒரு சாரனவாயிருத்தலின் யாம் அவற்றைத் தழுவுதற்கு உடன்படே மென்று கூறுவாருள ராயின், அஃதவர் விருப்பம். கடவுளை இன்பப் பெயரிட்டு அழைக்க வேறெந்தச் சமயத்திலுங் காணேம். சைவம் ஒன்றிலே மட்டுந்தான் அது காணப்படுதலின், யாம் அதனைத் தழுவு வதற்கு ஒருப்படேம், அதற்கு மாறாகக் கடவுளைத் துன்ப வுருவினர் என்றுதான் அழைக்க முந்துவேம் என்று அக்கற்றறிவினர் கூறுவராயின் அஃதவர் விருப்பம்,; துன்பத்திற் கிடந்து உழலவே விரும்பும் அவர் தீவினைக்கு நாம் இரங்குதலே செயற்பால மல்லது வேறென் செயவல்லேம்! எல்லாம் வல்லுதல், எங்கும் நிறைதல், எல்லாங்கடத்தல் முதலான கடவுளின் மற்ற இயல்புகள் உயிர்களாகிய நந்தம் அறிவுக்கும் அனுபவத்திற்குஞ் சிறிதும் அணுகாதனவா யிருத்தலாலும், அவர் எல்லா இன்பமும் அன்பும் அருளும் உடையராய் இருத்தல் ஒன்றே நமக்கு நேர் அனுபவமாயிருத்தலாலும், பேரின்பத்தையே அவாவும் நமக்கு அப்பேரின்பத்தை அருளும் இன்பவுருவினரான அவர் நமது ஆணவ மலத் துன்பத்தை முதலிற்றுடைத் தருளும் பேருதவிச் செய்கை யுடையராயிருத்த லாலும் அவர்தம் விளக்கமான அவ்வரும் பெருந்தன்மைகளை வாழ்த்தியும் நினைந்தும் வழுத்தியும் பேறு பெருதற்குரிய நாம் அவற்றை இடையறாது நம் நினைவில் எழுப்புவிக்கும் உருத்திரன் சிவன் என்னும் பெயர்களால் அவரை வழங்கக் கடவேம் என்றும், இங்ஙனம் வழங்கும் அரிய பெரிய வுண்மை சைவ சமயத்திலன்றி வேறெதினுங் காணப் படாமையால் இதுவே ஏனை எல்லாச் சமயங்களினும் மாட்சியுடைத்தென உணரப்பெற்றேம் என்றும் எல்லாரும் உறுதிகொண்டு அகமகிழல் வேண்டும். இது நிற்க, இனி உயிர்களின் துன்பத்தைத் துடைத்து இன்பத்தை அருளும் இன்பவுருவினராய் நிற்குங் கடவுளின் உண்மைத் தன்மை எல்லா மதத்தவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொன்றாயினும், அது சைவ சமயத்திற்கே உரிய உரிமைப் பெரும் பொருளாய் நிலை பெறுமென்பதனை ஒருசிறிது விளக்கிக் காட்டுவாம். உயிர்களுக்கெல்லாம் துன்பத்தைப் போக்கும் முதல்வர் தாம் துன்பமில்லாதவராய் இருப்ப ரென்பதூஉம், துன்ப நீங்கிய வுயிர்கட்குப் பேரின்பத்தை அருளுமவர் தாம் பேரின்ப வுருவினராயே வயங்குவ ரென்பதூஉம் அறிவுடையார்க்கெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் இனிது விளங்கிக் கிடப்பவும் அவற்றைத் தெளியவுணர்ந்து நிலைப்படுத்திக் கொள்ள மாட்டாத மற்றை மதத்தவருள் ஒரு சாரார் தமது கடவுள் தாயின் கருப்பையுட் டங்கித் தங்கிப் பிறந்து பிறந்து பலவகை அவதாரங்கள் எடுக்குமெனவும், அங்ஙனம் அவதாரங்கள் எடுத்து உழலுங் காலத்துத் தாய் தந்தையர் உறவினர் பகைவ ரால் துன்புறுத்தப் பட்டும், மனைவியைப் பறிகொடுத்தும், மக்களை இழந்தும், மாற்றாரோடு போராடியும் ஒருவன் சொல்வழிப்பட்டுத் தனக்குப் பகைவன் அல்லாதவனைக் கொன்று அழிவழக்குப் பேசியும், தன் மனைவியைக் காட்டகத்து ஏவியும், ஒருவன் கைப்படையால் அடிபட்டு இறந்தும் இங்ஙனமெல்லாந் துன்புற்று வருந்தும் எனவுங் கூறுவர்; இங்ஙனங் கூறுமிவர் இன்ப வுருவினராய் விளங்குங் கடவுளை அறிந்தாராவரோ சொல்லுமின்! இனி மற்றை ஒருசாரார் தமது கடவுள் இன்னதென்று சொல்லப்படாதவாறு தன்னிடத்துத் தோன்றிய மாயையாற் கட்டப்பட்டுத் தன்னை மறந்து அறிவில்லாத சிறு சிறு பொருள்களாயும் சிற்றறிவுடைய உயிர்களாயும் மாறிப் பிறப்பிறப்புத் துன்பங்களில் அகப்பட்டு சுழலுமெனக் கூறாநிற்பர். இவ்வாறு கூறுமிவர் ஒரு காலத்தும் நிலை தெரியாது எல்லையற்ற பேரின்ப வுருவினனாயே விளங்கும் முதல்வனைக் கண்டாராவரோ சொல்லுமின்! இங்ஙனமே தமது கடவுளருக்குத் துன்ப நுகர்ச்சியைக் கற்பிக்கும் ஏனை எல்லாச் சமயங்களும் இப்போது நாம் வகுத்துச் சொல்லிய இவ்விரண்டு கூற்றுள்ளே அடங்குமாதலின், அவ்வொவ் வொரு சமயங்களுந் தாந் தாம் தனித்தனியே தமது கடவுளருக்கு ஏற்றிச் சொல்லும் துன்ப நுகர்ச்சியை விரித்துக் கூறாது விடுகின்றேம். இப்புறச்சமயிகள் தங்கடவுளருக்குச் சொல்லும் துன்ப நிகழ்ச்சிகளைக் கொண்டே அவர்களுள் யாரும் எல்லை யற்ற இன்ப வுருவினராய்ப் பொலியும் முழுமுதற் கடவுளின் உண்மைத் தன்மையை உணர்ந்தார் அல்ல ரென்பதூஉம் அவர்களாற் கடவுளராக மயங்கி வணங்கப்படுபவர்கள் ஒரு காலத்து நம்மைப் போற் சிற்றறிவு உடைய உயிர்களாய் இருந்தவர்களே யாவரென்பதூஉம் திண்ணமாய் உணரப் பெறுகின்றேம், ஆகவே, என் அருமை நேசர்களே, நமது சைவ சமயம் ஒன்றே கடவுள் தாம் துன்பமில்லாதவராய் உயிர்களின் துன்பத்தைப் போக்கித் தாம் என்றும் எல்லையற்ற இன்பவுருவினராய் விளங்கி உயிர்களுக்குப் பேரின்பத்தை அருளும் இயல்பின ரென்னும் உண்மையை உணர்ந்த தாயிற்று; இவ் வுண்மை சைவ சமய நூல்களெங்கும் பிறழாமல் வலியுறுத்தப்பட்டிருத்தலையும் சிவபெரு மானுக்குப் பிறப்பு இறப்புத் துன்பங்கள் யாண்டுஞ் சொல்லப் படாமையினையும் எல்லார் பிறப்பு மிறப்புமியற் பாவலர்தஞ் சொல்லாற் றெளிந்தேம்நஞ் சோணேசர் - இல்லிற் பிறந்தகதை யுங்கேளேம் பேருலகில் வாழ்ந்துண் டிறந்தகதை யுங்கேட்டி லேம் என்றும், யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகியாங்கே மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றெத்தெய்வங்கள் வேதனைப் படுமி றக்கும் பிறக்குமேல் வினையுஞ் செய்யும் ஆதலா னிவையி லாதா னறிந்தருள் செய்வ னன்றே என்றும் போந்த அருமைத் திருமொழிகளால் இனி துணர்ந்து களிப்பேமாக. எனவே, கடவுள் இன்பவுருவினர் உயிர்களின் துன்பத்தைத் துடைப்பவர் என்னும் உண்மை சைவ சமயம் ஒன்றானேமட்டுங் காணப்பட்டு அவரை உருத்திர சிவன் என்று அது வழங்கினமையால் நிலை பெறுத்தப்பட்ட தாகலின் நமது சைவ சமயம் ஒன்றே ஏனை எல்லா மதங்களினும் மேலான மாட்சி யுடைத்தா மென்பது எம்மால் ஒரு சிறிது விளக்கப்பட்டது. இன்னும் இதன் மாட்சியை விளக்கும் அரும்பெரும் பொருள்கள் பல விருப்பினும் அவை யெல்லாம் ஈண்டு விளக்கியது கொண்டு இனிதறியப்படு மாகலின் இதனை இவ்வளவோடு நிறுத்து கின்றோம். 2. இந்து சமய உண்மைகள் இப்பரதமா கண்டத்தில் தொன்றுதொட்டு நடை பெற்று வருகின்ற சாருவாகம், பௌத்தம், சமயம், மாயா வாதம், வைணவம், சைவம் என்றற்றொடக்கத்துச் சமயங் களெல்லாம் இந்து சமயங்களென்று பெயர் பெறுகின்றன, இவை தம்மை ஒழிய வேறு `இந்துசமயம் எனத் தனியே வழங்குவது ஒன்று உண்டோ என ஆராய்ச்சி செய்வாருள் ஒரு சாரார் அத்தன்மையது ஒன்றில்லை என முடிவுரை யுரைக்கின் றார்கள், தாமரை, முல்லை, நீலம், சண்பகம் முதலியவற்றின் வேறாகப் பூ வென்பது ஒரு பொருள் இல்லாமை போலவும், குயில், மயில், புறா, அன்னம், கோழி முதலியவற்றின் வேறாகப் பறவை என்பதொன் றில்லாமை போலவும், மான், மரை, ஆ, ஆடு, எருமை, குதிரை முதலியவற்றின் வேறாக விலங்கென்பதொன் றில்லாமை போலவும் முற்குறிக்கப்பட்ட சாருவாகம் முதலிய சமயங்களை ஒழிய வேறு இந்து சமயம் எனப் படுவதொன் றில்லையென்பதே அவர் கருத்தாம். இனி அவருரைக்கும் அவ்வுரை பொருந்துமோ வென்று உண்மையான் ஆழ்ந்து ஆராயுமிடத்து அது பொருந்தா தென்பது புலனாகா நிற்கும். தாமரை, முல்லை முதலியவற்றின் வேறாகப் பூவென்பதொரு பொருளும், குயில் மயில் முதலியவற்றின் வேறாகப் பறவை என்பதொரு பொருளும், மான் மரை முதலியவற்றின் வேறாக விலங்கு என்பதொரு பொருளும் இல்லாமை உண்மையாயின் அவை தம்மைப் பூ, பறவை, விலங்கு என வேறு பொதுப் பெயரான் வழங்குதல் என்னை? தாமரை, முல்லை என்னுஞ் சிறப்புப் பெயரே அமைவதாகவும் அவற்றைத் தாமரைப்பூ, முல்லைப் பூ எனப் பொதுப் பெயருஞ் சேர்த்துக் கூறுதல் என்னை? தாமரை முதலான பொருள் உலகத்தில்லாமலே அழிந்து போயினும், பூவென்னும் பொருள் எல்லாரானும் இனிதறியக் கிடக்குமன்றே? அல்லது வேறுசில புதுப் பூக்கள் தோன்று மாயின் அவையும் பூவெனப் பெயர் பெறுதல் திண்ணமே யன்றோ? இதனாற் பொருள்களின் அருவநிலை, உருவ நிலை என்னும் இரண்டும் இனிது பெறப்படுவனவாம். தாமரை முல்லை முதலான சிறப்புப் பொருளெல்லாம் கட்புலனுக்கு விளங்கித் தோன்றும் உருவுடைப் பொருளா யிருக்கின்றன, பூ வென்னும் பொதுப் பொருளோ அங்ஙனங் கட்புலனுக்கு விளங்குவதன்றாய் மக்கள் மனவறிவாற் கருதி யுணரப்படுவதா யிருக்கின்றது. பல திறப்பட்ட பூக்களையும், பறவைகளையும், விலங்கினங்களையும் மனத்தால் தொகுத் துப் பார்த்து ஆயுமிடத்து அப்பூக்க ளெல்லா வற்றிற்கும் பொதுவான சில தன்மைகளும் அப் பறவைகளெல்லா வற்றிற்கும் பொதுவான சில தன்மைகளும் அவ்விலங்கினங்க ளெல்லாவற்றிற்கும் பொதுவான சில தன்மைகளும் இனித றியப் படுகின்றன வாகலின், அத்தன்மை களாற் றிரண்டை அருவப் பொதுப் பொருளே உருவுடைய அச்சிறப்புப் பொருளுக்கெல்லாம் நிலைக்களனா மென்பது தெளியப் படும், சுண்ணமும் மஞ்சளுங் கூடிய வழிச் செவ் வண்ணம் உண்டாதல் போலப் பூவென்னும் பொதுக் குணப்பொருளில் வேறு சில சேர்ந்து தாமரை முதலான சிறப்புப் பொருள்கள் தோன்றுகின்றன, சிறப்புப் பொருளை யெல்லாம் பகுத்தால் அவை தனித்தனிப் பொதுப் பொருளாய் நிலைபெறும். சிறப்புப் பொருளெல்லாம் அழிவெய்தும்; பொதுப் பொருள் அழிவெய்தமாட்டா, அன்னம்பட்டர் முதலான தருக்க நூலாரும் சாதிப் பொதுத்தன்மை என்றும் உளதா மென்பர். இக்காலத்தியற்கைப் பொருள் நூலாரும் பொருள் களைப் பகுத்துக் கலப்புச் சிறப்புப் பொருளெல்லாம் அழியுமென்றும், கலவாத தனிப்பொருளெல்லாம் என்றும் உளவா மென்றுங் கூறுவர். எனவே சாருவாகம், பௌத்தம் முதலியவற்றின் வேறாய் இவற்றிற்கெல்லாம் பொதுவான விரிந்த இலக்கண முடைத்தாய் விளங்கும் இந்துசமயம் என்பதொன்று தனியே உண்டென்பதூஉம், அங்ஙனம் பொதுவான அதன் கோட்பாடுகள் சில மிகுந்துங் குறைந்தும் வேறு சில உடன் சேர்ந்தும் சாருவாகம் முதலிய மற்று அச்சமயங்ளெல்லாம் தோன்றி நடைபெறுகின்றன வென்பதூஉம் நன்கு பெறப்படும். ஆகையால், இந்து சமயம் என்பது பண்டைக் காலந்தொட்டு நடைபெறுகின்ற உண்மைச் சமயமேயல்லது பிறர் கூறுமாறுபோல் இல்லாத தொன் றன்று, இவ்விந்து சமயத்தின் பிரிவுகளான சாரு வாகம், பௌத்தம், சமணம், மாயாவாதம், வைணவம், சைவம் முதலிய சிறப்புச் சமயங்களெல்லாம் அழிந்தொழியினும், அன்றி வேறு சில சமயங்கள் புதிதே முளைப்பினும், இவற்றிற் கெல்லாம் பொதுவாக விரிந்து இவை தம்மை யெல்லாம் தன்கண் அடக்கிக் கொண்டிருக்கும் இயல்புடையதான இந்து சமயம் என்றும் உள்ளதாயே விளங்கும். இனி இப்பெற்றித்தாகிய இந்துசமயத்தின் கோட்பாடு கள் யாவையோவெனிற்; காணப்பட்ட இவ்வுலகினுக்குக் காணப் படாத முழுமுதற் கடவுள் முதலாய் உள்ள தென்பதும், அஃது அருவமாயும், உருவமாயும் இவை யல்லவாயும் இருக்கு மென்பதும், அஃது என்றும் உளதாய் அறிவாய் இன்பமாய் இருப்பதாகலிற் `சச்சிதா நந்தம் எனப்படும் என்பதும், அஃது அருவமாய் வழுத்தப்படுதலே யன்றியும் எல்லார்க்கும் வணங்குதற்கு எளிதான உருவத் திருமேனியுடன் விக்கிரகத்தின் கண்ணும் வைத்து வழிபடப் படுமென்பதும், அதனை அறிந்து வழிபடுதற்குரிய உயிர்கள் அறிவுடன் என்றுமுள்ள பொருள்களாய் எண்ணிறந்தனவாய் இருக்குமென்பதும், இவ்வுயிர்கள் தொன்றுதொட்டே அறியாமை வயப்பட்டிருக்கின்றன வாகலின் இவைகள் அவ்விறைவனை வழிபடுமாற்றால் தூய்மை எய்தி அவனோடு ஒற்றுமைப்பட்டு இன்ப நுகரு மென்பதும், இவைகள் அறிவு முதிர முதிர ஒரு பிறப்பை விட்டு மற்றொரு பிறவியிற் செல்லுமென்பதும், இங்ஙனம் இவற்றிற்குரிய பிறவிகள் பலவாய் எண்ணிறந்தன வாகுமென்பதும், இவ்வுயிர்கள் முற்பிறவியில் செய்த வினை பிற்பிறவியில் வந்து அவைகளாய் நுகரப்படுமென்பதும், இவ்வுயிர்களுக்கு உடம்பாயும், கருவிகளாயும், இடங்களாயும், நுகர் பொருளாயு மிருந்து பயன்படுகின்ற அறிவில்லாத சடப் பொருள் என்றும் உளதாமென்பதும் இதற்கு உரிய கோட்பாடுகளாம் இக் கோட்பாடுகளனையவும் இவ்விந்திய நாடெங்கும் தழுவப் பட்டு வருகின்றன, இவ்விந்திய நாடு எங்கணுமுள்ள மக்கள் பெரும் பாலார் கடவுள் உண்டென்பதில் இயற்கை யிலேயே நம்பிக்கை யுடைய ராயிருக்கின்றனர், இதனை உருவத்திரு மேனியில் வைத்து வணங்கும் விக்கிரக வழிபாடும் இமய மலையுச்சி முதல் குமரிமுனை வரையிலும் பரந்து காணப்படு கின்றது, அவரவர் நுகரும் இன்ப துன்பங்களுக்கு அவரவரே உரியர் பிறர் உரிய ராகார் என்று நாடோறும் வழங்குஞ் சொற் களைக் கேட்டலால், உயிர்கள் பலர் என்னும் உணர்ச்சியும் இவ்விந்திய நாடெங்கும் பரவிக் கிடக்கின்றது, யான் துன்பப்படுதற்கு என்னுடைய அறியாமையே காரணம் என்று இங்குள்ளார் எல்லாரும் கூறுதலால், உயிர்களுக்கு அறியாமை இயற்கையே உள்ளதென்பதும் இவ்விந்தியா விற்கே உரிய கொள்கையாம் இப்பிறப்பில் யான் அறஞ் செய்தால் மறுமையில் நற்பிறவி யடைவேன், இப்பிறப்பில் யான் மறஞ்செய்தால் மறுமையில் தீப்பிறவியடைவேன் என்று பலருங் கூறுதலால் அடுத்தடுத்துப் பிறவிகள் வரு மென்பதும் இங்குள்ளார்க்கு உடன்பாடா கின்றது, ஒருவன் துன்புறுங் காலத்து இஃது யான் முன் செய்த வினைப்பயன் என்று அடுத்தடுத்து வழங்கக் காண்டலால் இருவினை உண்டென்பதும் மற்றிவர்க்கு உடன்பாடாகின்றது, `உள்ளது போகாது இல்லது வாராது என்னும் பழமொழி நாடோறுங் கேட்கப்படுதலால் இவ்வுலகம் மாயையிற் றோன்றிய தென்பதும், அம்மாயை அறிவில்லாதாய் என்றும் உள்ள உண்மைப் பொருளாமென்பதும் இந்தியர்க்குக் கருத்தா கின்றன, `யான் என் அறியாமை விலகிக் கடவுளின் அருளுக்குத் தகுதி யாவேனோ என்று ஆங்காங்குப் பலருங் கூறுதலால் `வீடுபேறு என்பது அறியாமை நீங்கப் பெற்று முதல்வன் அருளோடு ஒற்றுமைப்படுதலேயா மென்பது இவர் கொள்கை யாகின்றது. நண்பர்காள்! இங்ஙனம் இக்கொள் கைகள் இவ்விந்திய நாடெங்கும் பரவி வழங்குதல் நம்மனுப வத்திற் காணப்படுதலால் இவை தாம் இந்து சமயம் எனப்படுதற்குப் பொருந்துவனவா மென்பது தெற்றென விளங்கும், இனி இந்து சமயப் பிரிவான மேற்கூறிய சமயங்களி லெல்லாம் இக்கொள்கைகள் சில குறைந்தும் வேறு சில கூடியும் வேறு வேறு பெயர் பெற்று நிற்றலைக் காட்டுவாம், காணப்படுவதாய் அறிவில்லாத பருப்பொருளான இவ் வுலகம் உள் பொருளேயாம் என்னும் அதன் கொள்கையை மட்டும் வற்புறுத்திக் கடவுளும் உயிரும் இருவினையும் இல்லை என்று கூறுவதே சாருவாக மதமாம். இது பூதமதி னொன்றுபிரி யப்புல னிறக்கு நீதியினி னிற்பனந டப்பனவு முற்போல் ஓதும்வகை யாகியுறு காரியமு லந்தால் ஆகியவை யாமிதனை யறிவதறி வாமே என்றும், இப்படியன்றிக் கன்ம முயிரிறை வேறுண் டென்று செப்பிடு மவர்க்கு மண்ணோர் செய்திடுங் குற்ற மென்னோ ஒப்பிலா மலடி பெற்ற மகனொரு முயற்கொம் பேறித் தப்பிலா காயப் பூவைப் பறித்தமை சாற்றி னாரே என்று அவர் கூறுமாற்றால் அறியப்படும். அறிவென்பது நான்கு பொருட் கூட்டத்தின் விளைவாய் உண்டாவ தென்னுஞ் சாருவாகர் போலாது சடப் பொருளின் வேறாக அறிவாகிய புத்தி ஒன்றுண்டென்று மட்டுங் கூறிக் கடவுளும் உயிருமில்லை யென்பதே பௌத்த மதமாம். இதில் அறிவும் அறிவில்லாத சடமும் வேறென்னும் இந்துசமயக் கொள்கை வலியுறுக்கப் படுதல் காண்க இனிச் சடப்பொருளும் அதனின் வேறாகிய அறிவும் அவ்வறிவினையுடைய உயிரும், அவ்வுயிரோடியைந்து வரும் இருவினைகளும் உள்ளனவென்று மட்டும் வற்புறுத்திக் கடவுள் இல்லையெனக் கூறுவதே சமண மதமாம். இனி உலகமும் இருவினையும் உயிரும் வியவகாரத்தி லுள்ளன, பாரமார்த்திகத்திற் பரப்பிரமம் ஒன்றேயுள்ளது ஏனையவெல்லாம் பொய்ப் பொருளாம் எனக் கூறுவதே மாயாவாதமாம். இதன்கட் கடவுள் அருவமென்றே வற்புறுத்தப் படுகின்றது, இது இருளிற் பழுதை யரவெனவே யிசையு மிரவி யிருங்கதிர்க ளருளப் பழுதை மெய்யாகி யரவும் பொய்யா மதுபோல மருளிற் சகமுஞ் சத்தாகி மருவித் தோன்று மாசில்லாத் தெருளிற் சித்தே சத்தாகும் பித்தாஞ் செகத்தின் செயலெல்லாம் என்றும் அறிவா யகில காரணமா யனந்தா னந்த மாயருவாய்ச் செறிவா யெங்கு நித்தமாய்த் திகழ்ந்த சத்தாய்ச் சுத்தமதாய்க் குறிதான் குணங்க ளொன்றின்றிக் கூறும் வேதந் தனக்களவாய்ப் பிறியா தனுபூ திகந்தனக்காய் நின்ற தந்தப் பிரமந்தான் என்றும் அவர் கூறுதலால் அறியப்படும். இனி உலகமும் உயிரும் வியவகாரத்திற் போலப் பாரமார்த்திகத்திலும் உள் பொருள்களேயாம் என்றும், ஆனால், இவை வாசுதேவன் வடிவேயாய் விளங்கு மென்றும், அவ்வாசுதேவன் உருவமாகவே யிருப்பானல்லது அருவமாக இருப்பானல்லன் என்றுங் கூறுவதே வைணவ மாம். இது, மாயையா யுயிராய் மாயா காரியமாகி மன்னி மாயையாற் பந்தஞ்செய்து வாங்கிடு மவனா லன்றி மாயைபோ காதென் றெண்ணி மாயனை வணங்கப் பின்னை மாயைபோம் போனான் மாயன் வைகுண்டம் வைப்ப னன்றே என்றவர் கூறுமாற்றால் விளங்கும். இங்ஙனம் இம்மதங்களினெல்லாம் இந்துசமயக் கொள்கைகள் சில பல குறைந்தும் மிகுந்தும் வேறுபட்டும் நிற்றல் இனிதறியப்படும், இனி உலகம் உள்பொருளாதல் சாருவாகத்தானும், அறிவுஞ் சடமும் வேறு வேறாதல் பௌத்தத்தானும், உயிரும் இருவினையும் உளவாதல் சமணத் தானும், கடவுள் அருவநிலையினராய் நிற்றல் மாயாவாதத் தானும், கடவுள் உருவத்திரு மேனியு முடையராதல் வைணவத்தானும் பெறப்படுகின்றன வாகலின் இவை யனைத்தும் இந்துசமயப் பிரிவு களாதற்கு இயைந்தனவே யாம், மற்று இக்கொள்கைகளெல்லாம் தன்கண் முழுதும் அடங்கக் கொண்டு விளங்கும் இந்து சமயந்தான் சிறிதாயினுஞ் சுருங்கும் இயல்பிற்றாதலின்றித் தன்கட் பிரிந்த சமயங்களுமாய் அவற்றின் வேறுமாய் மேற்பட்டுத் தோன்றல் பெரிதும் உற்று நோக்கற்பால தொன்றாம்; இது தன்னிற் பிரிவான மதங்களில் உள்ள குறைகளை யெல்லாம் நிரப்பித்தான் எல்லா நிறைவு முடைத்தாய்ப் பொலிகின்றது. இனி இவ்விந்து சமய நிறை பொருளைச் சிறிது சிறிதே ஆராய்ந்து போய்ப் பின் அவ்விந்து சமயமாவதிதுவென்பது காட்டுவாம். அறிவு சாருவாகர் மதம் பற்றி நிலன், நீர், தீ, வளி எனப்படும் பருப்பொருள் ஒன்று சேர்ந்தவழியே அறிவு தோன்றும் என்பதற்கு இவ்வுடம்பின்கண் உட்கருவி, புறக்கருவி என்னும் உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்த வழி அறிவு தோன்று தலும், அவை வேறு வேறு பிரிந்த வழி அஃது அழிதலுமே சான்றாகலிற் சித்து எனவுஞ் சடம் எனவும் பொருள்களைப் பகுத்தல் கூடாது சடமே சித்தாம் என்று கூறுது மெனின்; உறுப்புகளெல்லாம் ஒன்று கூடிய இவ்வுடம்பு பிணமாய்க் கிடந்தவழி அதன்கண் அவ்வறிவு நிகழக் காணாமையின் அது பொருந்தாது, அற்றன்று, பிணவுடம்பில் உறுப்பின் ஒருமை நோயாற் பிறழ்ந்து போதலின் அதன்கண் அவ்வறிவு நிகழாதாயிற்றெனின்; தாமே ஒன்று கூடி அறிவைத் தோற்று வித்த உறுப்புகள் பின் நோய்வாய்ப்பட்டு அவ்வறிவை யிழந்ததென்றல் யாங்ஙனம் பொருந்தும்? அதுவேயுமன்றி அறிவில்லாப் பொருள்களான அவை தாமே ஒன்று சேரு மாறு யாங்ஙனம்? காந்தம் இரும்பைத் தன் மாட்டு வலித்துக் கொள்ளுதல் போல நான்கு பூதங்களும் ஒன்றை யொன்று வலித்துக் கொண்டு ஒருங்கு கூடின வெனின்; காந்தம் இரும்பை வலித்துக் கொண்டால் பின் தானே அதனை விட மாட்டாது; அதுபோல நான்கு பூதங்களும் ஒன்றையொன்று பற்றிக் கொண்டால் பின் அவை தாமே பிரியமாட்டா; அங்ஙனம் பிரியாவாகவே அக்கூட்டுற விற்றோன்றும் அறிவும் அழியாதாய் என்றும் விளங்கிக் கொண்டிருத்தல் வேண்டும். சிறிய காந்தக்கல்லால் வலித்துக் கொள்ளப்பட்ட இருப்பூசி பின் ஒரு பெரிய காந்தக் கல்லை எதிர்ப்படின் அதனால் இழுக்கப் பட்டு அச்சிறிய கல்லை விடுதல்போல, நாற்பூதக் கூட்டுறவும் வேறொன்றாற் கலைக்கப்பட்டு முற்றோன்றிய அறிவு அழியுமெனின்; அந்நான்கு பூதத் தினைத் தவிரப் பிறிதொன்று உண்டென்பது சாருவாகருக்கு உடம்பா டல்லாமையால் அந்நான்கு பூதக் கூட்டத் தினையுங் கலைக்க வல்லதான பிறிதொன் றுண்டென்றல் அவர்க்குப் பொருந்தாதாகும், அற்றன்று, அந்நான்கு பூதங்களுள் ஒன்று ஒரு காலத்து மிகவலியுடைத்தா யெழுந்து ஏனையவற்றின் கூட்டுறவை அழிக்குமென்று கோடுமாகலிற் பிறிதொன்று வேண்டே மெனின்; முன் அம்மூன்று பூதங்களோடும் ஒன்று சேருங் காலத்து மற்றை அந்நான்காம் பூதத்திற்கு அவ்வலிமை எங்கே போயிற்று? முன் வலி சுருங்கிய பொருளே பின் வலிமிகுதியு முடைத்தா மெனின்; அவ்வாறு முன் சுருங் குதற்கும் பின் அது பெருகு தற்குங் காரணம் என்னை; அஃது அதற்கு இயற்கையா மெனின்; அங்ஙனமுரைப்பின் ஒன்றே இயற்கையாக வேண்டு மல்லது தம்மில் மாறுபட்ட இரு தன்மைகள் ஒரு பொருட்கட் டோன்றுமெனல் சாருவாகர் மதத்திற்கே இழுக்காய் முடியும்; என்னை? இன்று ஒரு சிறிய ஊசியை மட்டும் இழுக்குங் காந்தக்கல் நாளை ஒரு பெரிய இரும்புத் தூணை இழுக்கு மெனல் வேண்டும்; இன்று பதினைந்து மணங்கு சுமக்கும் ஒரு கோல் நாளைப் பதினாயிரம் மணங்கு சுமக்குமெனக் கூறல் வேண்டும்; இன்று பத்தரை மாற்றுரை கண்ட ஒரு பொற்கட்டி நாளை இருபது மாற்றுரை காணுமெனக் கூறல் வேண்டும், அங்ஙனங் கூறிற் சாருவாகர் கூறும் இயற்கை மதம் முற்றும் போலியாய் முடியுமாதலின், கருவிகள் தாமே ஒன்றுகூடி அறிவைத் தோற்றுவிக்கு மென்றலும் பின்னொருகாற் பிரிந்து அதனை அழிக்கு மென்றலும் எவ்வாற்றானும் பொருந்தா. இனிச் சடத்தினியல்பையுஞ் சித்தினியல்பையும் சிறிது ஆராய்ந்து பார்ப்பார்க்கும் அஃதொன்றினொன்று தோன்று மெனல் பொருந்தாமை நன்கு விளங்கும், சடப்பொருளெல்லாம் ஒன்றோடொன்று ஒட்டும், பின் தாமே பிரியமாட்டா, பிறிதொன்று இயக்கினால் இயங்குந்தாமே இயங்கமாட்டா, கருவேலம் பிசினுங் கருங்கற் பொடியும் ஒருங்கு ஒட்டும் பின் பிரியா, காந்தம் இருப்பூசியைத்தானே இழுத்துத் தன்னோ டொட்டுவிக்கும் பின் அதனை விடுதல் செய்யாது, பந்தை எறிந்தால் ஓடும் தானே ஓடமாட்டாது. மற்று அறிவுப் பொருள்களோ தாமேயும் இயங்கும் பிறிதொன்றனையும் இயக்கும், தாமேயும் அறியும் பிறிதொன்றனையும் அறிவிக்கும், சிற்றெறும்பு தானேயும் இயங்குகின்றது தானே இயங்காப் பனைவட்டுச் சிறு துண்டினையும் இழுத்துச் செல்கின்றது; புறாக்கள் தாமேயும் பறக்கின்றன தங்குஞ்சுகள் பறக்கும் படியும் கற்பிக்கின்றன. இவ்வாற்றால் அறிவில்லாச் சடத்தி னியல்பும் அறிவுடைய சித்தினியல்பும் தம்முள் முற்றும் மாறுபட்டுக் கிடத்தலால் அது நாற்பூதக் கூட்டுறவிற் றோன்று மென்றல் ஒருவாற்றானும் பொருந்தாது, ஆகவே அறிவுஞ் சடமும் வேறு வேறென்னும் இந்துசமயக் கொள்கையே பொருந்தமுடத்தாதல் இனிது பெறப்பட்டது; இப்பெற்றி நன்குணர்ந்த அருணந்தி சிவாசாரியரும், அறிவு பூதம தென்னின் வேறு புறத்த றிந்தமை கண்டிலஞ் செறிவு தானுட லத்தெ னிற்சவ மான போதுட றேருமோ குறிகொ ளாதுடல் வாயு வானது கூடி டாமையி னென்னினீ பிறித ராதுயிர் நிற்க ஞானமு றக்க மென்பிற வாததே அறிவு டற்குண மென்னி லானைய தாதி யந்தமெ றும்பதா முறுமு டற்பெரி தான வற்றினு தித்தி டும்பெரி தாகவே சிறுவு டற்செறி ஞான முஞ்சிறி தாயி டும்பரி ணாமமும் பெறுமு டற்சிறி தாவ தென்பெரி தாவ தென்சில பேசிடே என்று அவற்றின் வேறுபாடு நன்கு தெரித்தோதினார். உயிர் இனிப் பௌத்தர் மதம்பற்றி இவ்வுடம்பும் இவ் வுடம்பின் வேறாய் எல்லாவற்றையும் அறிவதாகிய அறிவும் உண்டு எனக் கொள்வதல்லது, இவ்வறிவின் வேறாகிய உயிர் ஒன்றுண் டெனக் கூறல் பொருந்தாதெனின்; அற்றன்று, அறிவென்பது ஐம்பொறிகட்கும் புலப்படுவதன்றாய்த் தனியனுபவ அளவாய் உள்ள தொன்றாம், யானிதனைக் கண்டறிந்தேன், அதனைக் கேட்டறிந்தேன், இதனைச் சுவைத் தறிந்தேன்,அதனை முகந்தறிந்தேன், அதனைத் தொட் டறிந்தேன், மற்றிதனை எண்ணி யறிந்தேன் என்ற வழி யெல்லாம் அறியப்பட்ட பொருளும் அதனை அறிந்த அறிவு நிகழ்ச்சியும் எவ்வகை இயைபுடையன? பொருள் இயைபா? பண்பியைபா? பொருளியைபாயின் இந்நிலவுலகத்தில் நிற்கும் எனக்கும் இதற்கு மிகவுஞ் சேய்த்தாயுள்ள செக்கர் வானத் திற்கும் எங்கே தொடர்புளது? மற்றுப் பண்பியைபு என்று உரைப்பின் அது பொருந்தும், ஞாயிறு வான் வெளியில் ஓரிடத்திருப்ப அதன் ஒளி யாண்டும் விரிதலானும், ஒரு கற்றார் ஓரிடத்திருப்ப அவரது புகழ் யாண்டும் பரவுதலானும் பண்பையுடைய பொருள் ஓரிடத்தே யிருந்ததாயினும் அதன் பண்பு அவ் விடமட்டில் வரையறைப்படாது மேலும் மேலும் விரிந்து செல்லும் இயல்பினதாய்க் காணப்படுகின்றது, செக்கர்வான் விசும்பிற் பெருஞ் சேய்மைக்கண்ணே காணப் படுவதொன்றா யினும் அதன் பண்பான சிவப்பு நிறம் தன்னைச் சூழ விரிந்து நிறைந்திருக்கும் வெளியின் நுண்ணிய அணுக்களை அசைத்து அம்முறையே கண்ணின் மேற்பரப்பிற் சென்று, தாக்க, அங்கேநிறைந்து நிற்கும் அறிவானது அதனைப் பற்றுகின்றது, இனம் இனத்தையே பற்றும் என்னும் வழக்கால் பண்பு வடிவான சிவப்பு நிறத்தை யறிகின்ற அறிவும் பண்பு வடிவாகவே யிருக்க வேண்டுமென்பது துணியப்படும், இங்ஙனந் துணியப்படவே சிவப்பு நிறஞ் செக்கர் வானத்தை விட்டு வேறு தனித்து நில்லாமைபோலப் பண்பு வடிவான அறிவும் தான் றனித்து நில்லாதாய்ப் பிறிதொரு பொருளைப் பற்றியே நிற்கும், அப்பொருள் யாதோவெனின் அதுவே உயிர் என்று பெறப்படும் என்க. இன்னும் இவ்வறிவு உயிர்க்கு ஒரு பண்பாமென்பது `நான் அறிந்தேன் `என் அறிவு என்னும் வழக்கில் நான் என்ப தொரு பொருளும், அதனோ டொற்றுமைப்பட்ட அறிதற் பண்பும் பெறப்படுமாற்றால் இனிது துணியப்படும், `அறிவு பண்பாத லன்றிப் பொருளாயின் அவ்வாறதனை வழங்கு வதற்கு வேறொரு வாற்றானும் ஒரு காரணம் பெறப் படுவ தில்லை என்க. ஆகவே, பௌத்தர் கூறுமாறு அறிவு ஒரு பண்பிப் பொருளாக மாட்டாதென்பதும், அதனை யுடைய உயிர் வேறு தனியே யுள தென்பதும்இனிது பெறப் படுகின்றன. உருவாதி கந்தங்க ளைந்துங் கூடி யொருவன்வே றொருவனிலை யென்றுரைக்கும் புத்தா, உருவாதி யைந்தினையு முணர்பவர்யா ரென்ன வுணரும் விஞ் ஞானமென்றாய் ஞானமுணர்ந் தவரார் உருவாதி பொருள்காட்டித் தனைக்காட்டுஞ் சுடர்போ லுணர்வுபிறி தினையுணர்த்தித் தனையுணர்த்து மென்னின் உருவாதி பொருளினையுஞ் சுடரினையுங் காணு முலோசனம்போ லுணர்வுபொரு ளுணர்பவன்வே றுண்டே என்ற சிவஞானசித்தித் திருவாக்கும் இதனை வலியுறுத்தும், இனி ஏகான்மவாதிகள் மதம்பற்றி அறிவுடைய உயிர் ஒன்றே உடம்புகடோறும் வேறு வேறாய்க் காணப்படுகின்ற தென்றும், குடங்கடோறும் வேறு வேறாய்த் தோன்றும் திங்களின் வடிவு அக்குடங்கள் உடைந்த வழி யில்லையாய்த் திங்கள் ஒன்றுமே நிலைபெறுதல்போல இவ்வுடம்பு களெல்லாம் போயவிடத்து உயிர் ஒன்றாகவேயிருக்கு மென்றுங் கூறுவதே பொருந்து மென்னின்; அற்றன்று, திங்க ளினிடத்துக் காணப் படும் ஒளிவடிவும் வட்டவடிவும் அதன் நிழல்களெல்லா வற்றிலுங் காணப்படுதல்போல ஓருயிரி னிடத்துக் காணப்படும் அறிவுஞ் செயலும் ஏனை உயிர் களிடத்துங் காணப்படுதல் வேண்டும், அங்ஙனமன்றி அவை ஒவ்வொருவரிடத்தொவ் வொருவாறாய்ப் பல திறப்பட்டு நிகழக் காண்டலால் உயிர் ஒன்றே யென்னுமுரை ஒரு சிறிதும் பொருந்தாது, அற்றன்று, நீரின் அசைவாற் றிங்களின் நிழலும் அசைவதுபோற் றோன்றினும் திங்களுக்கு அவ்வசைவு வராமை போல, உடம்பின் வினைகளால் உடம்பினுள்ளிருக்கும் உயிர் துடக்குறுதல்போற் றோன்றி னும் ஒன்றே யாகிய அவ்வுயிர்க்கும் இயற்கையில் அவ் வினைத் துடக்கு இல்லையாமெனின்; ஈண்டு இவ்வுவமை பொருந்தாது, உயிரின் சேர்க்கையின்றி உடம்பு ஒரு வினை செய்ய அவ் வினை உயிரின்கட் பற்றுவதாயினன்றே நீரினசைவையும் அது பற்றுங் திங்களின் நிழலையும் அவ்வா றுவமை கூறலாம்? உயிரின் சேர்க்கையில்லா வுடம்பு சிறிதாயினும் வினையின்றிக் கிடத்தல் பிணவுடம்பின்கண் வைத்து இனிதறி யப்படுதலால், உடம்பினால் உயிர் துடக்கறு மென்றல் யாங்ஙனம் பொருந்தும்? இஃதுண்மையா னுணர்ந்த சைவ சித்தாந்த முதலாசிரியர், அவ்வுடலி னின்றுயிர்ப்ப வைம்பொறிக டாங்கிடப்பச் செவ்விதி னவ்வுடலிற் சென்றடங்கி - அவ்வுடலின் வேறொன்று கொண்டு விளையாடி மீண்டதனை மாறலுட னீயல்லை மற்று கண்டறியு மிவ்வுடலே காட்டொடுங்கக் காணாதே உண்டிவினை யின்றி யுயிர்த்தலாற் - கண்டறியு முள்ளம்வே றுண்டா யொடுங்கா துடனண்ணி லுள்ளதா முண்டிவினை யூண் என்றருளிச் செய்தார். நாலடியாரிலும் நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்த் தெடுக்கிலென் பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங் கூத்தன் புறப்பட்டக் கால் என்றிவ் வுண்மை தெருட்பட்டது காண்க. ஆகவே, உடம் பினைத் தொழிற்படுத்துவது உயிரேயல்லது உயிரினைத் தொழிற்படுத்துவது உடம்பன்றாம், அன்றாக, உயிர்கள் பலவாயும், பல திறப்பட்ட வினை நுகர்ச்சிகளுடையவாயும் இருக்குமென்பது உள்ளங்கை நெல்லிக் கனிபோற் பெறப்படு வதாம், ஆதலால், அவர் கூறும் ஏகான்மவாதம் ஒரு சிறிதும் பொருந்தாது. வினை அற்றேலஃதாக, இனி உயிர்கட்கு வினை உண்டென் பது எவ்வாறு துணியப் படுமெனின்; தாய்வயிற்றிற் கருக் கொண்டு பிறக்கும் மகவு எவ்வகைக் குற்றமுடைய தன்றாகவும், ஒன்று தான்பிறந்த குடும்பத்தால் மிக வறுமைப் பட்டுப் பெருந்துன்ப மெய்துதலும், மற்றொன்று தான் பிறந்த குடும்பத்தால் மிக்க செல்வவளம் பொருந்தி இடையறாதுஇன்பந்துய்த்தலும், ஒன்று நல்லறிவுடைய தாய்ப் பலராற் பாராட்டப்படுதலும், பிறிதொன்று தீயவறி வுடையதாய்ப் பலரால் இகழப்படு தலும், ஒன்று கலை யறிவு நிரம்பிப் பெரிய புலவோனெனப் பாராட்டப்படுதலும், ஏனையொன்று அஃதின்றிப் பெரும் பேதையென இகழப் படுதலும் என்னையென்று சிறிது ஆராய்ந்து பார்ப்பின் இவ்வகையான பல வேறுபாடுகளுக் கெல்லாம் இன்றியமை யாததான காரணம் ஒன்றிருத்தல் வேண்டுமென்பது போதரு மன்றே? அக்காரணந்தான் யாதோ வெனின், அஃதுயிர் களுக்குப் பண்டுதொட்டே அமைந்து கிடந்த வினையே யல்லது பிறிதில்லை யென்க. இவ்வுண்மை யுணர்ந்தே bgÇahU«, பேறிழ வின்ப மோடு பிணிமூப்புச் சாக்கா டென்னும் ஆறுமுன் கருவுட் பட்ட தவ்விதி யனுப வத்தா லேறிடு முன்பு செய்த கன்மமிங் கிவற்றிற் கேது தேறுநீ யினிச்செய் கன்ம மேலுடற் சேருமன்றே என்று அருளிச் செய்தனர் முற்பிறவி பிற்பிறவி இனி இப்பிறவியில் நிகழும் நிகழ்ச்சிகொண்டே உயிர் கட்கு முற்பிறவியும் பிற்பிறவியு முண்டென்பது துணியப் படும். இன்று இந்நூல் தோன்றுதலும் பயிலப்படுதலுமாகிய நிகழ்ச்சி யெல்லாம் இதற்கு முற்பட்ட நாளில் யாம் இதனை இயற்றிய செயல்களின் பயனாம் அல்லவோ? இன்று நடைபெறும்இதன் பயிற்சியெல்லாம் இனிவரும் நாட்களிற் சைவ சித்தாந்தம் மிகவுந் தழைத்தோங்கவும் அதனால் எல்லாரும் பேரறிவும் பேரின்பமு மெய்தவும் பயன்படும் அல்லவோ? இதற்கு முன்நாட்களில் தன்னுடம்பின் கூறு பாடறிந்து அதற்கியைய உண்ணவேண்டும் உணவின் வரை கடந்து வேறு பல புதிய உணாக்களைத் தான் வேண்டிய படியெல்லாம் உண்டான் ஒருவன் அப்போது அதன் பயன் அறியாது பின் பத்துநாட் கழித்து இன்று வயிற்று நோயால் வருந்தும்போது இது முன் வரம்பு கடந்துண்ட வுணவால் வந்ததென் றறியாது இஃது எனக்கு எங்ஙனம் வந்தது? எங்ஙனம் வந்தது? என்றெண்ணி எண்ணித் துயர் உறுகின் றான். பின் மருத்துவனை வருவித்து மருந்து ஊட்டப் பெறுங்கால் அவ்வூட்டப் பெற்ற அந்நேரத்தே யாயினும் அன்றி அந்நாளே யாயினும் நலம் பிறவாவிடினும், அஃதுண்ட பின்னேரத்தேனும் பின்னாளே னும் நோய் தீர்ந்து நலமெய்தல் கண்டாமன்றே? இங்ஙனமே யாம் இப்பிறவியில் இன்பதுன்ப நுகருங்கால் இப்பயன் களைத் தந்த வினைகள் முற்பிறவியில் அமைந்து கிடந்தன வென்ப தனை மறந்தோ மாயினும்,அவை உளவாதல் ஒரு தலையே யாம்.இனி முற்பிறவியிற் செய்த தீவினைகளால் இப்பிறப்பில் எய்துந் துன்பங்களை அறிவொழுக்கத்தானும் அன்பொழுக் கத்தானுந் துடைத்துக் கொண்டால் இனிவரும் பிறவியில் இன்புறுதல் ஒருதலையாமன்றோ? m‰nwy~jhf, K‰ãwÉÆš brŒjÉid ï¥ngh bjhU á¿jhÆD« Ãidî Tu¡ TlÉšiyna baÅ‹; e‹W brh‹dhŒ, `E§fŸ ïšy¤âš ne‰¿uî f¿¤j f¿í§ FH«ò« ahit?, v‹W crhÉdhš mt‰iw kwªJ Éilgfu¤ bjÇahkš ÉÊ¥gh® e«kndhÇš v¤jid ng® cs®! நேற்று நீங்கள் காலைமுதல் மாலை வரையிற் செய்தன வெல்லாம் சொல்லுக வென்றால் அவை சொல்லத் தெரியாது விழிப்பார் எத்தனைபேர் உளர்! அஃதிருக்க, முற்றும் நினைவு கூரக் கூடாவிடினும் முந்நாளிற் செய்த சிலவற்றை யேனும் பின்நாளில் நினைவு கூர்கின் றோமே யெனின்! நீவிர் குழவிப் பருவத்துச் செய்தன ஒரு சிலவேனும் இம்மனிதப் பருவத்துச் செய்தன ஒரு சிலவேனும் இம்மனிதப் பருவத்து நினைக்க மாட்டாமல் முழுதும் மறக்கின்றமையால் `யான் குழவியா யிருந்திலேன் எனக் கூறல் அமையுமோ? காலம் நீள நீள மறதியும் நீளும்; காலத்தினாற் றோன்றும் மாறுதல்கள் கணக்கிறந்தன. இன்றைக்கிருந்த ஒரு பொருளின் நிலை நாளைக்கு அவ்வாறே காணப்படுவ தில்லை, நாளை இருப்பது மற்றை நாள் காணப்படுவதில்லை. ஆ! காலத்தினாற் செய்யப்படும் புதுமைகள் என்னே! v‹nd!ஒருவனைக் குழவிப் பருவத்தில் வைத்துப் பிடித்த படமும்,மனிதப் பருவத்தில் வைத்துப் பிடித்த படமும், முதுமைப் பருவத்திற் பிடித்த படமும் ஒன்று சேர்த்துப் பார்த்தால், அம்மூன்று உருவும் மூன்று வேறு மனிதவுருக் களாய்த் தோன்றுமே யல்லாது ஒன்றாய்த் தோன்றா, ஆ! ஒவ்வொரு நொடியும் மனத்தினுங் குறிப்பிடாத அத்தனை விரைவாய் எத்தனை எத்தனை மாறுதல்கள் நிகழ்கின்றன! இந்நிலவுருண்டையானது ஒரு நொடியிற் பதினெட்டரை மைல் விழுக்காடு ஒருமணி நேரத்தில் ஆயிரத்து நூற்றுப் பத்து மைல் இடம் சுழன்று செல்வதைப் பாருங்கள்! இவ்வளவு விரைவாய்ச் சென்றும் இதன் இயக்கமும் மாறுதலும் நமக்குப் புலப்படுகின்றனவா? இல்லையே. இங்ஙனம் ஒவ்வொரு நொடியும் மனத்தினும் மிக்குச் செல்லும் அத்துணை விரைவுடன் நடைபெறும் மாறுதல் களின் இயல் புணர்ந்தே பௌத்தரிற் கணபங்க வாதிகளென ஒரு சாரார் தோன்றினர். சூறைக் காற்றினிடை யிலகப் பட்ட இலவம் பஞ்சு போல், மிக விரைந்து நிகழும் இம் மாறுதல் களின் இடைக்கிடந் துழலும் நம் உயிர்கள் அவற்றை முறை முறையேமறந்து விடுதல் இயற்கை யேயாம். இங்ஙனம் மறக்கப்படுவது பற்றி ஒரு பொருளினிருப்பு இல்லையென்று மறுக்கப்படுதல் சிறிதும் பொருந் தாதாகலின், இப்பிறப்பிற் கேதுவான முற்பிறவியும் அவற்றிற் செய்த வினைகளும் உண்டென்பது தேற்றமேயாம். இனி இப்பிறவியிற் செய்யப் படும் வினைகள் அளவிறந் தனவாகலின் இவற்றின் பயனைத் துய்த்தொழித் தற்கு மேலும் மேலும் பிறவிகள் இடையறாது தோன்று மென்க. வினைகள் உளவாங்காறும் உடம்பு ஒழியாது; இதுபற்றியே முற்றத் துறந்த பட்டினத்தடிகளும், வினைப்போக மேயொரு தேகங்கண் டாய்வினை தானொழிந்தால் தினைப்போ தளவுநில் லாதுகண் டாய்சிவன் பாதம்நினை நினைப்போரை மேவு நினையாரை நீங்கிந் நெறியினின்றா லுனைப்போ லொருவருண் டோமன மேயெனக் குற்றவரே எனவும், அன்னை யெத்தனை யெத்தனை யன்னையோ வப்ப னெத்தனை யெத்தனை யப்பனோ பின்னை யெத்தனை யெத்தனை பெண்டிரோ பிள்ளை யெத்தனை யெத்தனை பிள்ளையோ முன்ன மெத்தனை யெத்தனை சென்மமோ மூடனாயடி யேனும றிந்திலேன் இன்ன மெத்தனை யெத்தனை சென்மமோ வென்சேய் வேன்கச்சி யேகம்ப நாதனே என்று திருவாய்மலர்ந் தருளினார்கள். இனி இவையெல்லாம் பொருந்துமாயினும், முற்பிறவி உண்டென்பதற்கு மட்டுங் காட்சியளவையின் வைத்துச் சில குறிப்புகள் காட்டல் வேண்டுமெனின்; அவையுஞ் சிறிது காட்டுவாம், தாய் வயிற்றை யகன்று பிறந்த மகவினை எடுத்துப் பாலூட்டப் புகுங்கால் உலகப் பழக்கஞ் சிறிது மறியா அம்மகவு வாய்கூட்டிக் கொங்கையை இழுத்துப் பால் உண்ணல் கண்டாமன்றோ? அஃதங்ஙனமுண்ண எவ்வாறு கற்றது? என்றாராயின் அது முற்பிறவியில் அங்ஙனம் வாய் கூட்டியுண்ட பழக்கத்தால் வந்ததேயாம் என்பது நன்கு புலப்படும். இது வொன்றோ, இன்னும் அம்மகவு மக்கள் முகத்தைப் பார்த்து நகையாடத் தெரியாப் பொழுதே உறங்குங் காலத்துப் பாலொழுகும் வாய்விரித்து நகைப்பதுங் கண்டாமன்றே? அஃது அங்ஙனம் யாரைக் கண்டு நகைக்கின்றது? கனவில் நகைக்கு மென்னின்; நாமெல்லாம் நனவிற் றோன்றியதைக் கனவிற் காண்கின்றோம்; நனவிற் காணப்படாதன கனவிற்றோன்று மாயின் அவை முற்பிறவி யின் றோற்றமா மன்றோ? நனவின் பழக்கம் சிறிது மில்லாத அம்மகவுக்கு நனவுங் கனவும் ஒன்றே யன்றோ! ஆனால், நனவில் வெளி யுலாவுகின்ற அதனறிவு கனவில் உள் உலவா நிற்ப, அவ்வாறுலவுங்கால் முற்பிறவியிற் கூடிய பழக்கங்கள் சில அதற்கு நினைவிற் றோன்ற அங்ஙனம் நகையாடு கின்றது, ஆகலின், குழவிப் பருவத்துயிர்கள்மாட்டுக் காணப்படும் நிகழ்ச்சிகொண்டே முற்பிறவி யுண்டென்பது நாட்டப் படுதல் காண்க. கடவுள் இனி இருவினையே தன்னைச் செய்தோன் அறிவிற் பதிந்து கிடந்து பின்னை அவன் தன்னை நுகர்ந்து ஒழித்தற் பொருட்டு உடம்பினைத் தோற்றுவிக்கும், இதற்கு வேறொரு கடவுள் வேண்டாமெனக் கூறும் சமணர்மதம் பற்றிக் கடவுள் ஒன்றில்லையெனக் கூறினால் வரும் இழுக்கென்னை யெனின்; வினை என்பது தொழிலாகும். வினை தன்னைச் செய்தானை விட்டுப் பிரிந்திராத துண்மையேயாயினும், அவ்வினையே இவ் வுடம்பினைத் தோற்றுவிக்கு மெனல் பொருந்தாது; என்னை? அஃதோர் அறிவில்லாத நிகழ்ச்சி யாகலினென்க. அற்றன்று, வினைதானே உடம்பினைப் படைப்பதன்று, அது தன்னை யுடைய உயிரின் துணை கொண்டு அதனைப் படைக்கு மெனின்; அறிவின்றி வினை வயப்பட்டுக் கிடக் கின்ற ஓருயிர் தானே தன் வினையை நுகர்ந் தொழித்தற் பொருட்டு ஓருடம்பைப் படைக்கு மென்றல் யாங்ஙனம்? அங்ஙனம் படைக்கவல்லதாயின் முன் எடுத்த வுடம்பையே விடாதிருக்க அமையுமன்றோ? இறப்புவருங் காலத்து அவ்வுடம்பை விட வேண்டுமேயென நினைந்து நினைந்து அஃது இரங்குதல் என்னை? இவ்வாறு வினை அறிவில தாகலிற் றானே ஓருடம்பைத் தோற்றுவியா தாகலானும், வினை செய்த உயிர் அறிவின்றி வலியிழந்து கிடத்தலால் அது தானும் அதனைப் படைத்துக் கொள்ள மாட்டாமை யானும்,இவையிரண்டின் வேறாக உடம்பைப் படைக்க வல்லது பிறிதொன்று வேண்டு மென்னும் ஒழிபளவை யாற் கடவுளே அதனைப் படைக்கு மென்பதும், அது தானும் இவ்வுலகுயிர்க்கு முதலாயுளதா மென்பதும் பெறப்படும்; இஃதுணர்ந்த பெரியாரும், அநாதியே லமைவின் றென்னின் மலமாயை கன்ம மணுச்சிவன் அநாதிகன் மமணுக்கள் செய்ய வறிந்து கன்ம முடற்செயா அநாதிகா ரியமா முடற்க ளசேதனம் மணையா வறிந் தநாதியா தியமைக்க வேண்டு மமைப்பி னோடு மநாதியே என்றருளிச் செய்தனர். இனி மாயாவாதி மதம் பற்றிக் கடவுள் ஒன்றே அருவாயுளதென்றும், ஏனை யுருவுடை உலகம் முதலா யினவும் உயிரும் அதன்கட் பொய்யாத் தோன்றுகின்றன வென்றும், உண்மையான் உணர்ந்தவழிக் கடவுள் ஒன்று மட்டுமே பெறப்படுமென்றும் உரையாமோ வெனின்; தோன்றுவ தொருதோற்றம் மெய்யே யாயினும் பொய்யே யாயினும் தோன்றப் பெறுவதனால் அஃதோர் உருவ முடைத்தாதல் வேண்டுமன்றோ? கடவுள் அருவப் பொருளா மென முற்கூறிப் பின் அதன்கண் உருவுடைப் பொரு ளெல்லாம் பொய்யாய்த் தோன்றுமென்றன் முன்னொடு பின் மலைவாமன்றோ! காணப்படுகின்ற இவ்வுலகுயிர்களைக் கொண்டே காணப் படாத கடவுளை யறியவேண்டி யிருத்தலிற் காணப்படுமிவற்றை யெல்லாம் வெறும் பொய்ப் பொருளென்றொழித்தாற்பின் காணப்படாத கடவுளை மட்டும் மெய்ப்பொருளென்று துணிந்து உரைத்ததற்கு வேறொருவாற்றானும் ஒரு காரணம் பெறப்படாமையானும், உலகத்துப் பொருள் அழியாது என்றும் உளதாம் என்னும் இயற்கைப் பொருணூற் கொள்கையோடு அது முரணுத லானும்அங்ஙனங் கூறுதல் பொருந்தாதென்க. இன்னும் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுள் அருவமாக மட்டும் இருக்குமென்றொரு வரையறை கட்டிச் சொன்னால் அஃதுருவமாகின்ற ஆற்றலில்லாததென்று கொள்ளப் படுமாக லானும், அருவமாகிய வெளி உயிர் முதலிய வற்றோடொப்ப ஒன்றெனக் கொள்ளப்படுமல்லது வேறு தனியியல்பு உடைய தாகா தாகலானும் அதுவும் பொருந்தாது. இவ்வுண்மை உலகினிற் பதார்த்த மெல்லா முருவமோ டருவ மாகி நிலவிடு மொன்றொன் றாகா நின்றவந் நிலையே போல அலகிலா வறிவன் றானு மருவமே யென்னி லாய்ந்து குலவிய பதார்த்தத் தொன்றாய்க் கூடுவன் குறித்தி டாயே என்னுந் திருமொழியால் இனிது விளங்கும். மக்கள் உயிரின்நிலை அறிவும் உணர்வும் என இரு திறப்படும், அறிவைப் பார்க்கிலும் உணர்வே சிறந்ததாம், அறிவு உருவத்தைப் பற்றி நிகழும், உணர்வு அஃதின்றியும் நிகழும். உயிரின் அறிவாற் பற்றப்படாத அருவவியலுடைய முழுமுதற் கடவுள் அன்பு என்னும் உணர்வு நிலையாற் பற்றுதற் கெளியனாய் ஒரு உருவத்திருமேனி கொண்டு எழுந்தருளி வந்து அருள் புரிவனாகலின் இறைவற்கு அருவத் திருமேனி மட்டுமுண்டென்றல் இழுக்காம். இது, விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போன் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினான் முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே என்ற தமிழ்மறையானும் ஆத்மாந மரணிம் கருத்வா ப்ரணவஞ் சோத்தராரணிம் த்யாந நிர்மத நாப்யாஸாத் தேவம் பச்யேந்நி கூடவத் திலேஷு தைலம்ததி நீவ ஸர்பி ராபரோத வரணீஷுசாக்நி என்னும் வடமொழி உபநிடத மறையானும் இனிது பெறப் படும். அற்றேற் கடவுள் உண்டென்று இங்ஙனம் ஆராயும் அறிவா லஃதறியப்டுவதில்லை யாயின், இவ்வாராய்ச்சி களெல்லாம் வெறும் போலியாய் முடியும்போலுமெனின்; அற்றன்று, அறிவால் ஆராய்வதெல்லாம் கடவுள் உண்டென்ப தனை உறுதிப்படுத்துதற்கே யன்றி அதன் உண்மை யுணர்தற் கன்று. அழகிற் சிறந்த மடந்தையின் உறுப்பிலக்கணங்களை அறிந்து மகிழ்வது அறிவு நிலையாய்ப் பின் அவளோடு இணங்கி இன்ப நுகர்ந்தறி வழிதல் உணர்வு நிலையாதல் போல இறைவனுண்டென்று மட்டும் ஆராய்ந்தறிதல் அறிவின் பயனென்றும், பின் அவனோடொருமித்துப் பேரின்பத் தழுந்தல் உணர்வின் பயனென்றுந் தேறப்படும். ஆகையால் அறிவுக்கு விளங்காத இறைவன் அன்பாற் கரைந்துருகித் தேம்பும் அன்பர் உணர்வுக்கு விளங்கித் தோன்றி அருள் புரிவனாகலின் அவற்கு உருவமுண்டன்ப தொருதலையாம். இது இல்லா முலைப்பாலுங் கண்ணீரு மேந்திழைபால் நல்லாய் உளவாமானீர் நிழல்போல் - இல்லா அருவாகி நின்றானை யாரறிவார் தானே யுருவாகித் தோன்றானே லுற்று என்னுஞ் சிவஞானபோதத் திருமொழியானும் ருதம் ஸத்ய பரப்ரஹ்ம புருஷம் க்ருஷ்ண பிங்களம் ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் சங்கரம் நீலலோகிதம் என்னும் நரசிம்மதாபினி யுபநிடதத்தானும் பெறப் படுதலுடன் நமோ ஹிரண்ய பாஹவே ஹிரண்யவர்ணாய ஹிரண்யரூபாய ஹிரண்ய பதயேம்பிகாபதயே உமாபதயே பசுபதயே நமோ நம: என்னும் மந்திரம் இறைவற்குப் பொன்வண்ணம் பொற்றோள் முதலியன கூறுதலானும், மண்டல பிராமணமும் இவ்வாறே பஞ்சவக்த்ரம் உமாஸஹாயம் நீலகண்டம் ப்ரசாந்தம் அங்குஷ்டமாத்ர புருஷ: என்று கூறுதலானும், கைவல்யோபநிடதம் நெஞ்சத் தாமரையிற் பெருவிரல் அளவினனாய் ஒளிவிளக்க முடையோனாய் உறையும் முதற் பொருளை வழிபடுமாறு கூறுதற் கெழுந்து ஹ்ருதபுண்டரீகம் விரஜம்: என்று நிட்களோபாசனை சகளோபாசனை யென்னும் அருவ வழிபாடும் உருவ வழிபாடும் உடன்வகுத்துக் கூறுதலானும் தெளிவாகப் பெறப்படும்.இதனால் இறை வர்க்கு உருவ வழிபாடு சொல்லியபாகஞ் சிறிதும் உபநிடதங்களுட் காணப்படா தென்று பிரம சமாஜத்தார் கூறுவதூஉம் போலியாதல் காண்க. இனி வைணவர் கூறுமாறு இறைவனுக்கு உருவமட்டு முண்டென்று கூறாமோவெனிற்; கூறாம்; என்னை? அங்ஙனம் வரையறுத்துக் கூறின் அஃது அருவமாதற்குரிய ஆற்றல் உடையதன்றெனவும், உருவுடைப் பொருள்களான நிலன், நீர், தீ, வளி என்னும் இவற்றுள் ஒன்றாய் ஒழியுமெனவுங் கூறப்படு மாகலினென்க. என்றிங்ஙனங் கூறியவாற்றால் இந்துசமயம் எனப் படுவது இமய முதற் குமரி யீறாக யாண்டும் பொதுவாய்ப் பரவி வழங்கும் பொதுக் கொள்கைளாதலாலும், இக் கொள்கைகளுட் சில சில வெடுத்து வற்புறுத்து அவை தம்மைமட்டுங் கைக்கொண்டுவரும் சாருவாகம், பௌத்தம் முதலிய சமயங்கள் இந்துசமயப் பிரிவாய்ச் சிறியனவாய் அதன்கண் அடங்குதலும், இந்துசமயப் பொதுக் கொள்கை கள் விரிந்த இலக்கண முடையவாய் இவற்றையெல்லாம் தம் அகத்தே யடக்கி விரிதலும், இக் கொள்கைகள் எல்லா வாற்றானும் பொருத்த முடையவாய் விளங்கலும் அறி வுறுத்தப்பட்டன. இனி இவ்விந்துசமயம் எனப்படுவ தியாதென்று உண்மை யான் ஆராயும்வழி அதுவே சைவ சித்தாந்தம் என்னும் வேறு பெயரான் வழங்கப்படுவதென்பது இனிது புலப்படா நிற்கும். சடமாகிய உலகமும் சித்தாகிய அறிவும் வேறு வேறாமென்பதும், அறிவுடைப் பொருள் உயிராமென்பதும் சித்தாந்தத்தின் கொள்கைகளாம்; இதற்கு மேற்கோள்: அசத்தறியாய் கேணி யறிவறிந்த வெல்லாம் அசத்தாகு மெய்கண்டா னாயின் - அசத்தலாய் நீரி லெழுத்தும் நிகழ்கனவும் பேய்த்தேரும் ஓரினவை யின்றாமா றொப்பு இவ்வுயிர் இருவினைகளுட்பட்டுப் பிறப்பிறப்புக்களிற் சுழன்றுகொண்டு இயற்கையே அறியாமையுடைத்தாய் மாயையால் அறிவுவிளங்கப் பெற்று வரும் சித்துப் பொருளா மென்பது அசித்தரு வியாப கம்போல் வியாபக மருவ மின்றாய் வசித்திட வரும்வி யாபி யெனும்வழக் குடைய னாகி நசித்திட ஞானச் செய்தி யநாதியே மறைத்து நிற்கும் பசுத்துவ முடைய னாகிப் பசுவென நிற்கு மான்மா மாயையின் வயிற்றுண் மன்னி வருஞ்செயன் ஞானமிச்சை யேயுமிக் கலாதி மூன்றா லேகதே சத்தி னேய்ந்திங் காயுமுக் குணங்க ளந்தக் கரணங்க ளாதி யெல்லாங் காயபந் தங்களாகிக் கலந்துட னிற்கு மான்மா சூக்கும தேகி யாகித் தூலரூ பத்தின் மன்னிச் சாக்கிர முதலாயுள்ள வவத்தையுட் டங்கியெங்கும் போக்கொடு வரவு மெல்லாம் புரிந்துபுண் ணியங்கள் பாவ மாக்கியும் பலன்க ளெல்லா மருந்தியு நிற்கு மான்மா என்னுஞ் சிவஞான சித்தித் திருமொழிகளான் நன்கு துணியப்படும், இதன்கண்ணே வினைகளும் முற்பிறவி பிற்பிறவிகளு முண்டென்பது இனிது பெறப்படுதல் காண்க இனிக் கடவுள் என்பது சிற்றுயிர்களின் வேறாய் எல்லா அறிவும் எல்லா முதன்மையும் எல்லா ஆற்றலும் எல்லா இன்பமும் ஒருங்குடையதாயிருக்கு மென்பதும், அஃது அருவாய் உருவாய் அருஉருவாய் இவையும் அல்லவாய்த் தோன்றுமென்பதும், அஃது உலகுயிர் களுமாய் அவற்றின் வேறுமாய் அவற்றினுள்ளுமாய் இரண்டற நிற்கும் என்பதும், குறித்ததொன் றாக மாட்டாக் குறைவில னாத லானும் நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும் வெறுப்பொடு விருப்புத் தன்பான் மேவுத லிலாமை யானும், நிறுத்திடு நினைந்த மேனி நின்மல னருளி னாலே அருவமோ வுருவா ரூப மானதோ அன்றி நின்ற உருவமோ உரைக்குங் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னில் அருவமும் உருவாரூப மானது மன்றி நின்ற உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக்குள்ள வாமே உலகெலா மாகிவேறாய் உடனுமாய் ஒளியாய் ஒங்கி அலகிலா வுயிர்கள் கன்மத் தாணையின் அமர்ந்து செல்லத் தலைவனாய் இவற்றின் றன்மை தனக்கெய்த லின்றித் தானே நிலவுசீ ரமலனாகி நின்றனன் நீங்கா தெங்கும் என்னுஞ் சிவஞானசித்தித் திருமொழிகளான் உணர்க. இதுகாறும் கூறியவற்றாற் சைவ சித்தாந்தந் தவிரப் பிறிது எந்தச் சமயமும் இந்து சமயம் என்னும் பெயர்க்கு உரியதாகாமை காண்க. ஓம் நமச்சிவாய நம. 3. சமரச சன்மார்க்கம் எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள் 355) `சமரச சன்மார்க்கம் என்னுஞ் சொற்றொடர் `எல்லாரையும் ஒற்றுமைப்படுத்தும் உண்மை நெறி என்று பொருள் படுவதாகும். எல்லாரும் ஒன்றுபட்டு அளவளாவும் படி செய்யும் சன்மார்க்கமானது அவர் எல்லாருந் தழுவத்தக்க ஒரு பேருண்மையை இனி தெடுத்து விளங்க அறிவுறுத்து வதாகும். `உண்மை என்பது பொருள் களில் என்றும் நிலைபேறாயுள்ள இயற்கையே யாம். உலகத்துப் பொருள்கள் அளவிறந் தனவாய் இருத்த லோடு, அவை ஒவ்வொன்றுந் தத்தமக்கே உரிய சிறப்பியல்பு களும் உடையவாய் இருக்கின்றன. ஒரு பொருளின் உண்மைத் தன்மை மற்றொரு பொருளின் உண்மைத் தன்மையின் வேறாகவே காணப்படுகின்றது. பொன்னின் தன்மை வெள்ளியின் தன்மையின் வேறாகவும் இவை யிரண்டின் தன்மை செம்பின் றன்மையின் வேறாகவும் இருக் கின்றன. மா, புளி, பனை, தென்னை முதலிய மரங்களும் வேறு புற் பூண்டுகளும் தனித்தனி வெவ்வேறு தன்மைகள் உள்ளன வாயிருக்கின்றன. மானும், புலியும், ஆவும், எருமையும், கழுகும், பருந்தும், கிளியுஞ், சிவலும், குயிலும், மயிலும் தனித்தனியே ஒன்றினொன் றொவ்வா இயல்புகள் வாய்ந்தன வாய் இருக்கின்றன. மக்களிலும் ஒருவருடைய குறிகுரல் சாயல் செயல்கள் குறிப்புகள் முதலியனவெல்லாம் மற்றொரு வர் தம் குறி, குரல், சாயல், செயல்கள், குறிப்புகள் முதலியவற்றின் வேறாகவே இருக்கின்றன. ஓரினமான பொருள்களுள்ளும் ஒன்றற் கொன்று வேறான தன்மைகள் உண்டென்பதை ஒரு மானைப் போற் பிறிதொரு மான் இல்லாமையும் ஒரு மகனைப் போல் மற்றொரு மகன் இல்லாமையும் நுணுகி அறிபவர் எவரும் அறிந்து கொள்வர். ஆகவே, எவ்வெப் பொருளை ஆராயப் புகினும் அவ்வப் பொருள்களின் உண்மைத் தன்மையைத் தெரிந்து கொள்வதே மெய்யறிவு மேன்மேல் விளங்கப் பெறுதற்கு வாயிலாம் என்க. இனி உலகத்துப் பொருள்கள் எல்லாம் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளாற் காணப்படுவன வாய் அறிவில்லாத பொருள்களுமாய் இருக்கின்றன. இப்பொருள் கள் ஒவ்வொன்றன் தன்மையையும் அறியப் புகுந்தால், அவற்றின் எல்லை காண்பதற்கு நமக்குக் காலமும் இல்லை, ஆற்றலும் இல்லை, அல்லது அளவிறந்த காலம் உயிரோ டிருக்கும் வகை தெரிந்துகொண்டு, அவை முழுதும் ஒருங்கே உணர்ந்தாலும், அறிவில்லாத அப்பொருள்களின் உணர்ச்சி யால் நாம் அடையும் பயன் என்னை? ஏதும் இல்லையன்றோ? நீண்ட காலம் உயிரோடிருந்து இப் பொருள்களை அறிவே மென்பார்க்கே இவற்றால் ஏதும் பயன் விளைவதில்லை யாயின், சில வாழ்நாளும் பல் பிணியும்உடைய நம்மனோர் இவற்றை அறிவதனால் யாது பெறப்போகின்றார்? `உமி குற்றிக் கை சலித்தது போல அவ்வெறு முயற்சியால் விளைவது பெரு வருத்தமே யல்லாமல் வேறு பயன் சிறிதுமில்லை யென்க. ஆகையால், நமது உலக வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்படும் பொருள்களை மட்டும் நாம் சிறிது நேரம் ஆராய்ந்து, மற்றை நேரங்களையெல்லாம் மிக உயர்ந்ததோர் அரிய பெரிய உண்மையை ஆராய் தலிலேயே பயன்படுத்தி வருதல் வேண்டும். இனி உலகத்துப் பொருள்களுள் எல்லாம் ஒன்றை நோக்க ஒன்று சிறியதாய் இருத்தலால் அவற்றைப் பற்றிய உண்மைகளும் சிறிய உண்மைகளாய் இருக்கின்றன. இப்பொருள்களின் தன்மைகளை அறியுங்கால், இவை பல்வேறு வகைப்பட்டுக் கிடத்தலால், இவற்றை யுள்ளவாறு உணரப்பெறாமல் மக்கள் பெரிதும் பிழைபட்டுப் போகின் றனர், ஒரு தொகுதியாயுள்ள மாங்கனிகளுள் ஒன்றைச் சுவைத்து அதன் இனிமையை அறிந்துமகிழ்ந்தவன், அத் தொகுதியிலுள்ள மற்றக்கனிகளும் அங்ஙனமே யிருக்குமென வாங்கிப் போய் அவற்றைச் சுவைத்துப் பார்க்க அவை யெல்லாம் புளிப்பாயிருக்கக் கண்டு ஏமாந்து வருந்துதலைக் காண்கின்றேம் அல்லேமோ? உலகத்துப் பொருள்களைப் பற்றிய உண்மைகள் ஒன்றி னொன்று இயையாது பெரும் பாலும் வேறு வேறாய் தனித்து நிற்றலால், இவை சிறிய உண்மைகள் என்றும் இவற்றை அறியும் அறிவு சிற்றறிவு என்றும் சொல்லப்படுகின்றன. இனி இச்சிற்றறிவு உள்ள வரையில் உயிர்களுக்குத் துன்பம் விலகாது. பேரின்பத்தை அடையவேண்டுமென்னும் நோக்கம் எல்லா உயிர்களிடத்தும் இருத்தலால், அதனைப் பெறுதற்கு வாயிலான பேரறிவு நிகழ்ச்சி இன்றியமையாது வேண்டற் பாலதாகும். சிற்றுயிர்களான நம்மிடத்துப் பேரறிவு நிகழ வேண்டுமாயின், அது மிகப் பெரியதாகிய ஒர் உண்மையினை அறியும் வகையால் மிகுந்து நிகழுமாறு செய்வித்தல் வேண்டும். உலகத்துப் பொருள்கள் எல்லாம் ஒரு தொடர்பு படாது தனித்தனி வேறுவேறு சிறு பொருள் களாய் இருத்தலோடு அறிவில்லாதனவுமாய்க் காணப்படுத லானும், உயிர்கள் அறிவுடையனவாய்க் காணப்படினும் அவை சிற்றறிவுஞ் சிறு தொழிலும் பிறப்புப் பிணிமூப்புச் சாக்காடுகளும் உடையன வாய்த் துன்பக் கடலுட் கிடந்து உழல்வனவாய் நிலைமாறி வருதலானும்இவற்றை யறியும் அறிவெல்லாம் சிற்றறிவுக ளாகவே முடியும். ஆனதனால், எங்கும் ஒரே தொடர்புடைய முழுமுதற் பெரும் பொருளாய் விளங்குங் கடவுளை அறியும் அறிவே வேறுபாடில்லாத பேரறிவாகுமென்பது துணியப்பட்ட பொருளாம். கடவுள் எல்லையற்ற பெரும் பொருளாதலால் அதனுடைய தன்மை யும் எல்லையற்ற பெருந்தன்மையாகும்; அப் பெருந்தன்மை யின் இயல்பை உள்ளவாறு உணர்தலே ஒரு பேருண்மை யாகும், இந்தப் பேருண்மையை உணர்ந்தவர்களுக்கு, உலகத்துப் பொருள்களைப் பற்றிய சிறிய உண்மைகள் எல்லாம் தரமாகவே விளங்கும். இவ்வுண்மையை உணரும் பேரறிவு வாய்க்கப் பெற்றவர்களுக்கு எவ்வகைத் துன்பமும் வர மாட்டா. இது பற்றியே, இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (குறள் 5) என்றும், பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார் (குறள் 10) என்றும் தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனார் அருளிச் செய்தார். அது நிற்க. அங்ஙனமாயினும், கடவுள் என்று ஒரு பெரும் பொருள் உண்டென்பதற்கு அடையாளம் என்னையெனிற் கூறுவாம். அறிவில்லாத பருப்பொருள்கள் மட்டுமே கண் முதலிய பொறிகளுக்குப்புலனாகும். அறிவில்லாத பொருள் களினும் மிக நுண்ணியவாயிருப்பன பொறிகளுக்குப் புலனாகா; கல்லும் மண்ணுந் தண்ணீரும் நம்முடைய பொறிகளுக்குப் புலனாவது போலக் காற்றும் வெளியும் நமக்குப் புலனாவ தில்லையே. இன்னும் அறிவும் அறிவுடைய உயிரும், அறிவில்லாத நுண் பொருள்களைப் பார்க்கிலும் இறப்ப நுண்ணிய பொருள்களாய் இருத்தலால், அவை நமது பொறியுணர்வுக்குச் சிறிதும் புலப்பட மாட்டா என்பதை நாம் சொல்ல வேண்டுவதில்லை. என்றாலும், அறிவுடைய உயிர்ப் பொருள்களை நாம் தெரிந்து கொள்வதற்கு அறிவில்லாத பருப்பொருள்கள் கருவியாயிருந்து நமக்குப் பேருதவி புரிகின்றன. இந்த உலகமும் இந்த உடம்பும் இல்லையானால் நமக்கேதேனும் அறிவு விளங்குமா? அதனைக் கூர்ந்து நினைத்துப் பாருங்கள்! ஒருவனுடைய உயிரின் இருப்பையும் அதன் தன்மையையும் யாம் எங்ஙனம் உணர்கின்றேம்? அவன் உடம்பிற் காணப்படும் செயல்களையுங் குறிப்புகளையுங் கொண்டன்றோ? ஒருவன் ஒவியம் எழுதுவதில் வல்லவன் என்றும், ஒருவன் நெய்தற்றொழிலில் வல்லவன் என்றும், ஒருவன் கல்வியில் வல்லவன் என்றும் எங்ஙனம் அறிகின்றேம்? ஓவியத்தில் எழுதப்பட்ட வடிவங்களின் அழகைக் கண்டும், நெய்யப்பட்ட ஆடையின் நுட்பத்தைக் கண்டும், எடுத்துச் சொல்லும் சொற்களின் சிறப்பைக் கண்டும் அவ்வவா திறங்களை இனிது தெளிந்து மகிழ்கின்றேம். இங்கே ஒவியமும் ஆடையும் சொற்களும் ஆகிய அறிவில்லாப் பொருள்களின் உதவியால் அறிவுடைய உயிர்களின் மேன்மையை உணரப் பெற்றேம். இங்ஙனமே, எல்லா வற்றிற்கும் நிலைக்களமான பேரறிவுப் பொருளாய் மிக நுண்ணியதாய் விளங்கும் கடவுளினுடைய பேரறி வையும் பேராற்றலையும் இவ்வுலக அமைப்பிற் கண்டு கண்டு மகிழ்ந்து வருகின்றேம், கடவுளை அறிவிக்கும் அடையாளங்கள் அத்தனையும் அறிவில்லாத இவ்வுலகத் துப் பொருள் களிலே நன்கு அமைந்து கிடக்கின்றன. இது பற்றியன்றோ திருவள்ளுவநாயனாரும், அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு (குறள் 1) என்று உலகத்தை அடையாளமாக வைத்து இறைவனுடைய இருப்பை அறிவுறுத்தியதூஉம் என்க. ஆகவே, உலகத்துப் பொருள்களை அறியும் அறிவையே முடிவாக வைத்துக் கொள்ளாமல், அவ்வறிவு எல்லாம் வல்ல இறைவனுடைய திருவருள் நிலையைக் காட்டும் அடையாளங் களாம் என்றுட்கொண்டு இறைவனோடு ஒன்றுபட்டு நிற்றலே மக்கட் பிறவியினாற் பெறும் பெரும்பேறாம். இனி இங்ஙனம் அறியப்பட்ட இறைவன் எல்லா உயிர் களிடத்தும் ஒரே தன்மையான பேரன்புடையனாயிருக்கின்றா னென்பது அவன் செய்துவரும் அரும்பெருஞ் செயல்களால் இனிது விளங்குகின்றது, நாம் உறங்கிக் கிடக்கும்போது எவ்வகையான அறிவுஞ் செயலுந் தோன்றாமல் ஒரு பேரிருளிற் புதைந்து கிடந்ததை விழித்த பின் அறிகின்றேம் அல்லமோ? இவ்வாறே இவ்வுலகமும் உடம்பும்இல்லாமல் இருளிலேயே அழுத்திக் கிடந்தோமாயின், கடவுள் இன்ன தென்றும் உயிர்களாகிய நமது நிலைமை இன்னதென்றும் நமக்குச் சிறிதேனும் புலப்படுமா? புலப்படாதே, நமதறிவு விளங்குவதற்கு உதவியாய் நிற்கும் இவ்வுடம்புடன் கூடி நிற்பதனால் அன்றோ நாம் இவையெல்லாம் அறியப் பெறுகின்றேம்? இவ்வுடம்போடு கூடிய விடத்தும், இவ்வுலகம்இன்றி எங்கும் வெறு வெட்ட வெளியாயிருந்தால் நமக்கேதேனும் அறிவு விளங்குமா? நமது அறிவு விளக்கத் திற்கு இன்றியமையாக் கருவிகளான இவ்வுடம்பையும் உலகத்தையும் வெறும் பொய்ப்பொருள்கள் என்று சொல்வோர் கடவுளின் படைப்புத் தொழிலையே பொய்யென்று இகழ்ந்தவர் ஆவர். ஆதலால் மெய்ப்பொருள்களான இவற்றை உள்ள வாறு உணர உணர இவற்றினிடத்தே கடவுளின் பேரன்பின் அடையாளங்களைப் பிறழாமற் கண்டு வருகின்றோம். இவையனைத்தையும் கடவுள் எதற்காகப் படைத்தார்? நமக்கு அறிவினை எழுப்பி இன்பத்தைக் கொடுத்தற்கன்றோ? இறைவன் எல்லாம் உடையவராகவும், இரக்கம் உள்ளவ ராகவும் இருத்தலால் நம்மிடத்து ஏதேனும் ஒன்றைக் கைம்மாறாகப் பெற்றுக் கொள்ளுங் குறிப்பில்லாமலும், நாம் கேளாமலும் தாமாகவே இவற்றைப் படைத்துக் கொடுக் கிறார் என்பதற்கு ஐயம் ஏதேனும் உண்டோ? நாம் கேளாதிருக்கவும், நம்மிடத்தி னின்றுங் கைம்மாறாகப் பெற்றுக் கொள்வது ஒன்று இல்லாதிருக்கவும் அவர் தாமாகவே இத்தனை பேர் உதவிகளையும் நமக்குச் செய்து வருவதை எண்ணிப் பார்க்குங்கால் அவருடைய அன்புக்கு அளவே இல்லை என்பதுஇனிது பெறப்படுகின்றதன்றோ? அவர் அன்பே உருவாக விளங்குகிறார்; இவ்வுண்மை எல்லாருங் கடைப்பிடித்தற் பொருட்டே, அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும்அறிந்தபின் அன்பே சிவமாய்அமர்ந்திருந் தாரே என்று முழுத்தவம் மிக்க திருமூல நாயனார் திருவாய் மலர்ந்தருளியதும், அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லாற் பிறவாழி நீந்த லரிது (குறள் 8) என்று தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்ததும் என்க. இங்ஙனம் சொல்லுதற்கு எட்டாப் பேர் இரக்கம் வைத்து நன்மையும் நம்மினுந் தாழ்ந்த உயிர்களையும் பாதுகாத்து அறிவு விளக்கி இன்பத்தை ஊட்டிவரும் இறைவனை அறிந்து அவன் அருள்வழிச் சார்ந்து அவன்றன் உண்மை நிலையை அடைந்து இன்பவுருவாய் விளங்க வேண்டுவதுதான் எல்லாருக்கும் நோக்கமாயிருக்கின்றது. ஆனாலும், கடவுளை அடைய வேண்டுமாயின் அக் கடவுளைப் போன்ற தன்மை நம்மிடத்தும் உண்டாக வேண்டும். தீயவரைச் சேர்பவர்கள் அத்தீயவர்கட்குரிய இயல்புகளுடை யவராயிருக்க வேண்டும், நல்லவரைச் சேர்பவர்கள் அந்நல்லவர்கட்குரிய இயல்புகள் உடையவரா யிருக்க வேண்டும். அவ்வவ்வவரோடு ஒத்த இயைபு இல்லை யானால் அவர் தமக்குள் நேசம் உண்டாகமாட்டாது; அது போலவே கடவுளைச் சார வேண்டுவார்க்கு அவரோடு ஒத்த இயல்பு இன்றியமையாது வேண்டற்பாலதாகும். இனிக் கடவுளிடத் துள்ள இயல்பு பேர் இரக்கமும் பேரன்பும் பேரருளுமேயா மென்பது தெளிவாக விளங்குதலால், அவரைச் சார விரும்பும் நாமும் அவரிடத்துள்ள அவ்வுயர்ந்த தன்மைகளை நம்பால் தோற்றுவித்துக் கொள்ளல் வேண்டும். நம்மைப் போன்ற மக்களிடத்து மட்டுமேயன்றி, நம்மினுந் தாழ்ந்த எல்லா உயிர்களிடத்தும் நாம் பேர் இரக்கம் வைத்து ஒழுகுதல் வேண்டும். மற்றோர் உயிர் துன்புறுவதைக் கண்டும், அது நம்மினுந் தாழ்ந்த உயிர்தானே என்று இரக்கங் காட்டாது வன்னெஞ்சம் பூண்டு நடத்தல் மிகப் பொல்லாத தாகும். கடவுளைவிட எத்தனையோ கோடி மடங்கு நாம் தாழ்ந்தவர் களாயிருந்தும், அவர் நம்மைக் கண்டு, ஓ! இவர்கள் நம்மினும் மிகத் தாழ்ந்தவர்கள் நாம்இவர்களைக் கருதற் பாலம் அல்லம் என்று வன்னெஞ்சம் வைத்து வாளா இருக்கின்றனரா? இல்லையே. ஒரு நொடிப்பொழுதேனும் அவர் வாளா இராமல் நமக்கு வேண்டிய நலங்களை யெல்லாம் உதவி நம்மைத் துன்பத்தினின்றும் தூக்கி யெடுத்துக் கொண்டே வருகின்றா ரன்றோ? நம்மால் மிகப் புல்லியவாகக் கருதப்படுகின்ற சிறிய புழுவிற்கும் உடம்பைப் படைத்துக் கொடுத்திருக்கின்றார்; நமக்கும் நம்மினும் மிக்க தேவர்களுக்கும் உடம்புகளைப் படைத்தருளியிருக்கின்றார். அவர் தாம் குறித்த காலம் வரையில் அச்சிற்றுயிர்களை அவ்வுடம்புகளில் வைத்துப் பாதுகாத்து வருகின்றார்; நம்மையும் அங்ஙனமே பாதுகாத்து வருகின்றார்! இனி அக்கால முடிவில் அவ்வுடம்புகளைச் சிதைத்து அழிப்பது போலவே நம்முடம்புகளையும் அழிக்கின்றார். எவன் எந்த வுடம்பைப் படைத்தானோ அவனே அதனை அழித்தற்கும் உரியவன் ஆவான். நாம் ஒரு சிறுபுழுவின் உடம்பைக் கூடப் படைக்க வல்லவர்களாய் இல்லாதபோது, நாம் எந்த உடம்பையேனும் இரக்கமின்றி அழிக்கக் கனவிலும் நினைக்கலாமா? அங்ஙனமாயின் இரக்கமுள்ள கடவுள் மட்டும் தாம் படைத்த ஓருயிரின் உடம்பைப் பின் இரக்கமின்றி அழிக்கலாமோ வெனின்; தன் புதல்வனுக்குத்தான் அமைப்பித்துக் கொடுத்த சட்டை அவனால் அணியப்பட்டுப் பழுதாய்ப் போன பிறகு, அதனைக் களைந்து வேறொரு நல்ல புதிய சட்டை செய்வித்துக் கொடுக்குந் தந்தையைப் போல, நம் பெருமானும் தான் ஓருயிர்க்குப் படைத்து உதவிய உடம்பாகிய சட்டை பழுதாய்ப் போனமை கண்டு வேறொரு நல்ல புதிது கொடுக்கவே அதனை நீக்கினானாகலின் அஃதவன் இரக்க இயல்பின் உயர்வையே புலப்படுத்துகின்றதல்லாமல் அது மாறுபட்ட தெனச் சிறிதும் உணர்த்துகின்றிலது. ஆகவே, நாம் எந்த உயிரின் உடம்பையுஞ் சிதைத்தலும் ஆகாது, சிதைத்து அதன் ஊனை உண்டலும் ஆகாது. அவ்வாறன்றிக் கன்னெஞ்சங் கொண்டு ஓருடம்பை அழித்து அதன் ஊனை உண்பவர்கள், இரக்க இயல்பை இழத்தலோடு, கடவுளுக்கு மாறாய் அவருடைய படைப்பின் நோக்கத்தையுங் கெடுத்த லால், அவர்கள் ஒரு காலத்தும் இறைவனுடைய அருளைப் பெறவே மாட்டார்கள் என்பது திண்ணம்; எக்காலத்தும் அவர்கள் துன்பத் தீக்கடலுட்பட்டுக் கரை காணாது வருந்தித் தவிப்பார்கள். இனி, மக்களாய்ப் பிறந்த நாம் எல்லாம் நம்முள் இடையறாத பேரன்பு பாராட்டி நடத்தல் வேண்டும். கடவுள் எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் உடையவ ராயிருத்தலோடு அவற்றினிடத்தே பேரன்பும் வைத்திருக் கின்றார். நாமும் அதுபோலப் பேரன்பு உடையவர்கள் ஆனாற்றான் கடவுளை அணுக முடியும். பகுத்தறிவில்லா உயிர்களிடத்து இரக்கமாகிய அன்பும், பகுத்தறிவுள்ள மக்களிடத்து எல்லையற்ற அன்பும் வைத்து நடந்தால் நாம் கடவுளின் உண்மைப் புதல்வர்கள் ஆவம். ஒருவன் தன்னுடன் பிறந்தாரினும் தன்னைப் பெரியனாக எண்ணி இறுமாந்து, அவரை இகழ்ந்து, அவர் துன்பங்களைப் பாராது ஒழுகுவனாயின் அவன் தந்தை அவனை விரும்பு வாரா? அதுபோலவே, ஒரே கடவுளின் மக்களாகிய நாமும் நம்முள் அன்பின்றி நம்மையே நாம் பெரியராக எண்ணிப், பிறர் துயர் களையாது இறுமாந்து நடப்பமாயின், நம் முழுமுதற் றந்தையாகிய கடவுளும் நம்மைக் கண்டு பெரிதும் அருவருப் படைவர் என்பது உண்மையேயாம். அன்புக்குப் பகைமை யாவது தன்னையே யுயர்வாக நினைக்கும் இறுமாப்பு ஒன்றேயாம். இறுமாப்பு உடையவனைக் கண்டு எல்லாரும் வெறுப்படைவதை நாம் நாடோறுங் கண்டு வருகின்றோம். இறுமாப்புடையவர்களுக்கு எவரிடத்தும் அன்பில் லாமையையும் நாம் கண்டு வருகின்றோம். எல்லாம் வல்ல இறைவனே தன்னுயர்வைத் தான் சிறிதும் பாராமல், கடைப்பட்டவர்களான நம்மிடத்தும் சிற்றுயிர்களிடத்தும் அன்பும் இரக்கமும் வைத்து உதவிபுரிந்து வருவதை நாம் நன்றாகத் தெரிந்திருந்தும், உயர்வு சிறிதுமில்லாத புல்லர் களான நாம் நம்மை உயர்வாகக் கருதி நம்மனோ ரிடத்து அன்பின்றி நடத்தல் எவ்வளவு பேதைமை! மலமும், செந்நீரும், அழுக்குஞ், சளியும், குடரும், நிணமும் வழியும் புழுப்பாண்டங்களாகிய மக்கள் தம்முள் ஒருவர் தம்மை உயர்வாகவும் பிறரைத் தாழ்வாகவும் நினைந்தொழுகு தலினும் பிறிதோர் அறியாமை உண்டோ சொல்லுமின்! ஒருவரிடத்துத் தகாத செயலும், தாழ்ந்த நடையும் இருக்கக் கண்டால் அவரிடத்து இரக்கவும் அன்பும் மிகுதியும் வைத்து, அவரைத் திருத்தித் தம்மோடொப்ப வைத்து நலம் பாராட்டி அன்பினால் அளவளாவுதலே நாம் செயற் பாலதாம்; அங்ஙனம் செய்தல் ஒன்றே நாம் இறைவன் திருவருளைப் பெறுதற்கு ஏற்ற வழியாகும். பிறர் துன்பத்தால் வருந்துவதைப் பார்த்த விடத்து உடனே அவர் துன்பத்தை நீக்க முயலுவதே நமது கடமையாயிருக்க, அதனைச் சிறிதும் நினையாது தமது நலத்தையே பேணுதல் எவ்வளவு கொடுமை! அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தன்நோய்போற் போற்றாக் கடை (குறள் 315) என்ற திருக்குறளின்படி அங்ஙனங் கொடுமை செய்து நடப்பவர் கற்றவரேயாயினும் அவர் அறிவில்லாக் கயவரேயாதல் உண்மை. வந்த விருந்தினர் பசியோடு புறத்தே வருந்தியிருக்க, அதனை நினையாது அகத்தே தம் பாழ்வயிறு நிரம்பச் சோற்றையிட்டு மகிழ்வோர் மக்கட் பிறப்பின ரென்றும் எண்ணப்படுவரோ? விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று (குறள் 82) என்னுந் தெய்வப் புலவர் திருமொழியால் விருந்தினரைப் புறத்தே வைத்துண்ணுதலினும் அறக்கொடியது வேறில்லை யென்பது தெளிந்தாம் அல்லமோ? பிறப்பளவிலே தம் மனம் போனவாறு உயர்வு தாழ்வுகளைக் கற்பித்துக் கொண்டு ஒருவரோடொருவர் அன்பின்றிப் பகைகொண்டு இறுமாந்து நடத்தல் மக்கட் பிறப்பின் பயனையும் இறைவன் திருவருட் பேற்றையும் இழத்தற்கே வழியாம் என்க. இனி நம்மினுந் தாழ்ந்த கூன், குருடு, சப்பாணி மாட்டாதார் முதலியோரிடத் தெல்லாம் இரக்கமும் அன்புங் காட்டுவதோடு, அன்பின் முதிர்ச்சியான அருளுங் காட்டுதல் வேண்டும்,அவர்களிடத்து ஏதொன்றனையும் எதிர்பாராமல் அவர்கட்கு இன்றியமையாது வேண்டும் எல்லா உதவிகளும் செய்து அவர்களைத் தூயராக்குதல் வேண்டும், அவர்கள் தாம் முற்பிறவிகளிற் செய்த தீவினை பயத்தால் உறுப்புகள் குறைந்தும் வலிவிழந்தும் பிறந்து வருந்துகின்றமையால், அவர்போல் நாமும் நடந்தால் நமக்கும் அவ்வாறே குறைந்த பிறவிகள் வரும் என்பதை ஒவ்வொருவரும் நன்கு நினைந்து பார்த்து, அவரிடத் தெல்லாம் அருள் கனிந்து ஒழுகுதல் வேண்டும். `அவர்களைக் குறைவுள்ள தாழ்ந்த பிறவியினும், என்னைக் குறை வில்லாத உயர்ந்த பிறவி யினும் வைத்தது வினையே யாகையால், யாம் அவர் களுக்கு உதவி செய்யக் கடமைப்பட்டிலேம் என்று உரைப்பவர்கள், தம்மை அவர்கள் நிலைமையில் வைத்துப் பார்த்தால் உடனே தமது எண்ணத்தை மாற்றி விடுவார்கள். தாம் ஒருவர் வீட்டுப் புறந்திண்ணையிற் காதடைத்து நாவறண்டு நெஞ்சுலர்ந்து பசித்துக் களைத்துக் கிடக்கும்படி நேர்ந்த காலத்துத், தம்மை அவ்வீட்டாரேனும் பிறரேனும் ஏனென்று கேளாதும் பாராதும் போவராயின் அங்ஙனம் வினைப்பயனை மேலெடுத்துப் பேசின அவர் ஏதுதான் நினைப்பர்! அவர்கள் கேளாதும் பாராதும் போனதும், தாம் எவராலும் பேணப் படாது வறிதே வருந்திக் கிடந்ததும் எல்லாம் வினைப்பயன் என்று எண்ணிக் கிடப்பரோ? கிடவார் அன்றே. தாம் வினைப்பயனால் வருந்தினாலும், அதனால் விளையும் வருத்தத்தைத் திருவருளுதவி கொண்டு நீக்கும் நல்லோர் துணையை நாடியே இருப்பர். ஒருவர் ஓர் ஆட்டை அறுப்பது கண்டு `அவர் அதனைத் தமது உணவுக்குக் கொள்கின்றார்; அஃது அதன் வினை; நாம் அதனை விலக்கக் கடவம் அல்லம் என்று வாளா இருந்தவர் தம்மை ஒரு புலி பிடிக்க வருங்காலத்துப் பிறர் அதனைக் கண்டு விலக்காது `இப்புலிக்கு இரையாக வேண்டுவது இவர் வினையாதலின், இதனை யாம் விலக்கற் பாலம் அல்லம் என்று கூறிப் போவாராயின், அது கண்டுஅவர் நெஞ்சம் பதையாது வாளா இருக்குமோ? இராதன்றே. ஆகையால், வினையினால் நேரும் தீய செயல்களைத் தமது தூய அறிவினாலும் திருவருட்டுணை யினாலும் முயன்று விலக்க முந்தும் நல்லோர் அருட்டன்மை உண்மைச் சிவ குணமாம் என்று தெளிந்து கொள்ளல் வேண்டும்.இவ்வாறு இரக்கமும் அன்பும் அருளும் எல்லையின்றி மிகப் பெற்றோர் களங்கம் அற்ற தூய உயிர்களாய் இவ்வியல்புகளுக்குத் தூய நிலைக் களனான சிவத்தாற் பற்றப்பட்டு அச் சிவத்தில் அழுந்திச் சிவ வடிவாய் நிலைமாறாமல் நிற்பரென்பது உண்மை. இவ்வாறு இறைவனது உண்மைப் பெருநிலையை இனி துணர்ந்து, அவ்வுணர்ச்சி வலியால் இரக்கமும் அன்பும் அருளும் முதிருமாறு இவ்வுலகத்தின்கண் உள்ள எல்லா வுயிர்களையும்இறைவற் கிருப்பிடமாய்க் கண்டு பழகவே எல்லாரும் துன்பத்தின் நீங்கிப் பேரின்பத்தின் வைகுவர். இதுதான் எத்திறத்தவரும் உடன்பட்டுத் தழுவுதற்குரிய `சமரச சன்மார்க்கம் என்னும் முடிந்த பேருண்மை நெறியாம் என்க. 4. கடவுளுக்கு அருளுருவம் உண்டு அன்பர்கள் சிலர் கடவுளுக்கு உருவம் இல்லை யென்றும், மக்களுக்குரிய கண், கால் முதலிய உறுப்புகளின் வடிவங்களை அவர்க்கேற்றிக் கூறுதல் குற்றமாமென்றும் கூறுகின்றார்கள். ஆயினும் கடவுளின் உண்மை நிலையை நுணுகி ஆராயுங்கால் அவர்க்கும் உருவம் உண்டென்பது புலனாகின்றது. உருவமென்னுஞ் சொல்லைக் கேட்டவள வானே அதனைக் கடவுளுக்குக் கற்பித்தல் வழுவாமென்று நினைத்தலாகாது. உருவம் மூன்று வகைப்படும்; அறிவில் லாத கல், மண், நீர், நெருப்பு முதலியவற்றின்கண் அமை வதூஉம், அறிவோடு கூடிய உயிர்களுக்கு இருப்பிடமான பலவகை உடம்புகளில் அமைவதூஉம், இவற்றிறெல்லாம் மேலதான அறிவின் கண் அமைவதூஉம் என மூன்றாம். அறிவில்லாப் பொருள்களில் அமைந்த உருவமானது அப்பொருள்கள் கலங்கலாய் நின்ற நிலையை விட்டு ஓர் ஒழுங்குபட்ட விடத்தே உளதாவதாம். வடிவு தெரியாமல் நின்ற நீராவியானது குளிரால் இறுகி நீராய் இறங்கும்போது வடிவுடையதாகின்றது. நுண்ணிய அழல் உருவா யிருந்த ஆவியிலிருந்து இந்த நிலவுலகமும் ஞாயிற்று மண்டிலம், திங்கள் மண்டிலம் முதலியனவும் உருவாய்த் திரண்டு தோன்றிய பின்னர்த்தாம் அவை மக்களும் பல்லுயிர்களும் உயிர் வாழ்வதற்கு இடமாய்ப் பயன்படுவவாயின. இங்ஙனமே ஆவியாயிருந்த எல்லாப் பொருள்களும் உருவாய்த் திரண்டு வெளிப்பட்ட பின்னரே அவை பயன் பெரிதுடையவாதல் தேறற்பாற்று. இனி அறிவுடைய உயிர்கட்கு இருப்பிடமான பல திறப்பட்ட உடம்புகளும் ஆவி வடிவில் நின்றக்கால் உயிர் களுக்குப் பயன்படாதனவாய் இருந்தமையும்,அவை ஓர் ஒழுங்குபட்டு உடம்புகளாய்த் தோன்றிய பின்னர் அவ்வுயிர் களுக்குப் பெரிதும் பயன்படுவனவாய் அமைந்தமையும் உணரற்பாலனவாம். ஆறறிவுடைய மேலான மக்கட்பிறவி யெடுத்த நம்மனோர் தத்த முடம்புகளில் இருந்து வாழாராயின் அவரெல்லாம் அறிவு விளங்கப் பெறுவரோ? மக்களுடம்பி லமைந்த கண், செவி முதலான உறுப்புக்கள் எத்துணை வியப்பான உருவ அமைப்போடு பொருந்தி மக்கள் அறிவு விளக்கத்திற்கு உதவியாய் நிற்கின்றன! இவ்வுருவ அமைப்புகளும், உடம்புகளும், இல்லாதொழியின் மக்கள் அறிவு நிலை என்னாம் என்பதனை நாம் எடுத்துச் சொல்லுதலும் வேண்டுமோ? கண் பழுதான குருடனும், காது கேளாத செவிடனும், வாய் பேசாத ஊமனும், கை கால் குறைந்த முடவனும் எவ்வளவோ அறிவு விளக்கத்தை யிழந்து எவ்வளவு துன்புறுகின்றார்கள்! இதனால் உருவ அமைப்புகள் திருத்தமாய் முதிர முதிர மக்கள் அறிவும் முதிரு மென்பதும் புலனாகின்றதன்றோ? இனி அறிவின்கண் அமைந்த உருவத்தின் மேன்மையும் ஒரு சிறிது ஆராய்தல் வேண்டும்.தாயின் கருப்பையிலிருந்து பிறந்த மகவுக்கு உள்ள அறிவின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்! அதன் அறிவு எவ்வளவு மழுக்க மடைந்திருக் கின்றது! அந்த நிலையில் அதற்கும் அறிவில்லாக் கல்லுக்கும் வேறுபாடு மிகச் சிறிதேயாம். கல் ஏதொரு முயற்சியுமில்லாது கிடக்க அம்மகவோ வாய் திறந்து அழுதலும் பால் பருகு தலும் ஆனமுயற்சி உடையதாய் இருத்தலே அது கல்லின் வேறுபட்ட தன்மை உடையதென்று நமக்கு அறிவிக்கின்றது. அக்காலத்தில எதனையும் நினைக்கவாவது, அறியவாவது, உணரவாவது அது வல்லதன்று. அங்ஙன மிருந்த அம்மகவு பசியால் உந்தப்பட்டுப் பால்பருகியும், அப்பாலைத் தரும் அன்னையை அறிந்தும், அதன்பின் தந்தையையும் உலகத்துப் பல பொருள்களையும் படிப்படியே அறிவதாகியும் சிறிது சிறிதாய் அறிவு விளங்கப் பெறுகின்றது, அங்ஙனம் அதன் அறிவு மழுங்கியிருந்த நிலைக்கும் விளங்கி வரும் நிலைக்கும் வேறுபாடு என்னையெனின்;அழுக்குப் படிந்த கண்ணாடியில் ஏதோர் உருவமும் தோன்றாமைபோல மகவின் அறிவில் ஏதோர் உருவமும் தோன்றா திருந்தமையே மழுங்கிய நிலையென்றும், இனி அஃது உலகத்துப் பொருள்களை அறிய அறிய அப்பொருள்களின் வடிவத்தோடு ஒத்த உருவம் அதன் அறிவின்கண் விளைதலின் அதுவே அதன் அறிவு விளங்கும் நிலையென்றும் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும். எனவே, அறிவில் உருவங்கள் தோன்றாதிருந்த வரையில் அவ்வறிவு மழுங்கிக் கிடக்குமென்பதும், அவ்வுருவங்கள் தோன்றத் தோன்ற அவ்வறிவு மிகுதியும் விளக்கமுடையதா மென்பதும் இதுகொண்டு அறியற் பாலனவாம். எவனுடைய அறிவு திருத்தமான உருவங்கள் மிகுதியும் உடைய தாகின்றதோ அதுவே மிகச் சிறந்த அறிவாய்த் திகழ்கின்றது. ஆதலால் அறிவும் ஓர் ஒழுங்குபட்ட உருவமுமடையதாய்த் திகழத் திகழ அதுவும் மிகச் சிறப்பெய்துமாறு உணரற்பாற்று. இங்ஙனமாக அறிவில்லாப் பொருளும், அறிவுள்ள உயிரோடு கூடிய உடம்பும், மக்கள் அறிவும் உருவுடையன ஆக ஆக நிரம்பவுந் திருத்தமுற்றுப் பயன்படுதலும் விளக்க மெய்துதலும் நமது வழக்கத்தில் மறுக்கப்படாத உண்மை யாய் இனிது அறியப்படுதலின், உருவம் பெற்றிருத்தல் குற்றமாமென்று கூறுவது பொருந்தா உரையாம்.அறிவுப் பொருளிலும் அறிவில்லாப் பொருளிலுங் காணப்படும் உருவங்களே குற்றமில்லாதனவாய்ப் பயன்மிக உடையன வாய் விளங்குமாயின் பேரறிவுப் பொருளாய் எல்லாம் வல்லதாய் உள்ள கடவுளிடத்தே காணப்படும் உருவம் குற்றமுடைய தாகுமோ? நன்கு ஆராய்ந்து பார்மின்கள்! இனி அறிவில்லாப் பொருள்களிற் காணப்படும் உருவங்களைக் காட்டினும் அறிவுள்ள உயிரோடு சேர்ந்த உடம்புகளிற் காணப்படும் உருவங்கள் சிறந்தனவாய் இருத்தல் போலவும், உடம்புகளிற் காணப்படும் உருவங்களைக் காட்டினும் உயிர்களின் அறிவிற் காணப்படும் உருவங்கள் மிகச் சிறந்தனவாய் இருத்தல் போலவும் பேரறிவுப் பிழம்பான இறைவனிடத்தே காணப் படும் உருவங்கள் மிக மிகச் சிறந்தனவாய் இருக்கு மென்பதையாம் உரைத்தலும் வேண்டுமோ? அங்ஙனமாயின் உருவுடைப் பொருள்கள் எல்லாம் சில காலத்துள் அழிந்து போதலைக் காண்கின்றோமாதலின் அதுபோல் உருவுடைய கடவுளும் அழியுமென்பது பெறப் படுமே எனின்; அங்ஙனமன்று. அறிவில்லாப் பொருள் களிலுள்ள உருவம் மட்டும் அழிவு பெறுமே யல்லாமல், அறிவின்கண் உள்ள உருவம் ஒரு ஞான்றும் அழிவுறாது. சிற்பவித்தையிற் றேர்ந்த ஓர் அறிஞன் சலைவைக் கல்லிற் செதுக்கித் திரட்டிய ஓர் அழகிய உருவம் அழிந்து போமாயினும், அதற்கு முதலாய் அவன் அறிவில் நின்ற உருவம் ஒரு ஞான்றும் அழிவதில்லை, அவன் தன் அறிவின்கண் அமைந்த அவ்வுருவத்திற்கு இசையச் சலவைக் கல்லின்கண் அது போன்ற எத்தனையோ வடிவங்களை அமைக்க மாட்டுவான். இங்ஙனம் வல்லவனான அவ்வறிஞனின் அறி வுருவம் ஒரு ஞான்றும் அழியாமையை நன்குணர்ந்தவர்கள் கடவுளின் அருளுவம் அழியுமென்று கூற ஒருப்படுவார் களோ? ஆதலாற் கடவுளின் அருளுருவம் ஒரு ஞான்றும் அழியாத தொன்றாகலின் உருவங்களெல்லாம் அழியுமெனப் பொதுப்படக் கூறுதல் ஒருசிறிதும் பொருந்தாத தொன்றாம். இனி உருவுடைய அறிவில்லாப் பொருள்கள் அழிந்து போதல் உருவத்தினால் வந்த குற்றமன்று, அவை பருப்பொருள்களாய் இருத்தலினால் அழிகின்றன என்றும், அவையும் நுணுகிய நிலையை அடைந்த வழி அறியாமல் இருக்குமென்றும் கடைப்பிடித்தல் வேண்டும் அறிவின்கட் காணப்படும் உருவம் என்றும் அழியாமல் ஒரே தன்மையாய் நிற்க, அறிவில் பொருளின்கண் உள்ள உருவமே அழியும் வகையை உற்றுணர வல்லார்க்கு அஃது அவ்வப் பொருளின் தன்மையால் நேர்ந்ததன்றி உருவத்தினால் நேர்ந்ததன் றென்பது தெள்ளிதிற் புலனாம். அறிவு மிக நுணுகிய இயல்பினதாகலின் அதன்கண் உருவம் என்றும் அழியாத இயல்பிற்றாயும், அறிவில் பொருள் பருப்பொருளாதலின் அதன்கண் உருவம் அழியும் இயல்பிற்றாயும் நிற்றல் நுண்ணுணர்வினாரெல் லார்க்கும் விளங்கற் பாலதேயாம். இனி, உலகத்திலுள்ள அறிவிலாப் பொருள்களும், அறிவுடைய உயிர்ப் பொருள்களும் உருவங்களைப் பெற்றது தத்தம் முயற்சியினால் அன்று. என்னையெனின், அறிவில்லாப் பொருள்கள் தாமாகவே ஒர் உருவத்தை அமைத்துக் கொள்ள மாட்டா. அறிவுடைய சிற்றுயிர்களோ தாம் உருவங் களைப் பெறுவதற்கு முன் அறிவு மழுங்கிக் கிடந்தமையால் அவைகளும் உருவங்களைச் செய்து கொள்ளமாட்டா. கலங்கிய நிலையில் ஏதோ ருருவமுமின்றி இருந்த எல்லாப் பொருள்களும் உருவங்களைப் பெறுதற்கு ஒரு பேரறிவின் உதவி இன்றியமையாத தென்பது சிறிது ஆய்ந்துணர வல்லார்க்கும் இனிது விளங்கும். அதனால் அத்தகைய பேரறிவு வாய்ந்த கடவுளொருவர் உண்டென் னும் உண்மை ஐயமின்றித் துணியப் படுவதாகும். இவ் வுலகத்திற் காணப் படும் எல்லா உருவங்களுக்கும் முதல் கடவுளுடைய அறிவின் கண் உண்டென்பதும் இது கொண்டு முடிக்கப்படும். ஓவியக்காரன் வரையும் ஓவியங் களின் உருவங்களுக்கெல்லாம் முதல் அவன் அறிவின்கண் அமைந்திருத்தல் போலவும், சிற்பம் வல்லான் ஒருவன் அமைக்கும் பாவைகள், உருக்கள், கட்டிடங்கள் முதலான வற்றின் வடிவங்கட்கெல்லாம் முதல் அவன் அறிவின்கண் அமைந்துகிடத்தல் போலவும், காவியங்கள், கதைகள், அறிவுநூல்கள் முதலியவற்றிலெல்லாம் உள்ள உண்மை களின் வடிவங்களுக்கு முதல் அவற்றை இயற்றிய புலவனறி வின்கண் விளங்கி நிற்றல் போலவும், இவ்வுலகு உயிர்களிற் காணப்படும் எல்லா வடிவங்களுக்கும் முதல் கடவுள் அறிவின்கண் உண்டென்பது திண்ணமாம். பருப்பொருளிற் காணும் வடிவங்கள் சிலபல காலத் துள் அழிந்துபோதல் போலஅறிவுப் பொருளில் அமைந்த உருவங்கள் அழியாது எஞ்ஞான்றும் நிலைபெற்றிருக்கு மென்பது மேலே காட்டப்பட்டமையின், கடவுள் அறிவின் கண் உள்ள எல்லையற்ற உருவங்கள் அத்தனையும் ஒரு காலும் அழியமாட்டாவென்று கடைப்பிடிக்க பிரெஞ்சு தேயத்திற் புகழ்பெற்று வயங்கிய இயற்கை நூற்புலவர் பாரடக் என்பார் நுண்ணிய பொறிகள் பலவற்றின் உதவி கொண்டு பல்லாண்டுகளாக ஆராய்ந்து கண்ட முடிபுகளும் அறிவுக்கு உருவமுண் டென்பதையும், அஃது ஏனை உருவங் களைப் போல் அழியாது என்றும் நிலை பேறாயுளதா மென்பதையும் இனிது நாட்டுகின்றன. இவைகளை எல்லாம் ஆராய்ந்து பாராமற் கடவுளுக்கு உருவமில்லை யென எளிதில் கூறிவிடுவது அறிவு வளர வேண்டுவார்க்கு முறையாகாது. அது கிடக்க. இனி, உலகத்தின்கட் காணப்படும் எல்லாப் பொருள் களின் வடிவங்களும் - அவை எத்துணை இழிந்தனவாயினும், அன்றி எத்துணை உயர்ந்தன வாயினும், அவை எத்துணைச் சிறியனவாயினும், அன்றி எத்துணைப் பெயரியனவாயினும் - எல்லாம் மக்களாலாவது, ஏனை உயிர்களாலாவது அன்றி அறிவில்லாப் பொருள்களாலாவது தாமாக அமைக்கப் பட்டன வல்லவே! அவையெல்லாம் முழுமுதற் கடவுளின் அறிவால் ஆக்கப்பட்டன வல்லவோ? அவ்வறிவால் ஆக்கப்பட்ட அவ்வடிவங்கள் அத்தனைக்கும் முதலான நுண்ணிய உருவங்கள் அதன் அறிவின்கண் அமைந்து கிடப்பன வல்லவோ? ஒரு கண்ணாடியின் பக்கத்தேயுள்ள பொருள்களின் வடிவங்களோ டொத்த வடிவங்கள் அக்கண்ணாடியின்கண் விளங்கித் தோன்றுதல் போல இறைவனது பேரறிவாகிய பெருங் கண்ணாடியின் எதிரே யுள்ள எல்லாப் பொருள்களின் வடிவங்களையும் ஒத்த அருள் உருவங்கள் அதன்கண் விளங்கித் தோன்றுமல்லவோ? ஆதலால், மக்கள் உலகத்திலுள்ள எந்தப் பொருளைக் கடவுளாக நினைந்து வணங்கினாலும் அவ்வணக்கம் அப்பருப்பொருள் உருவத்தின்கட் செல்லாதாய், அதற்கு முதலான இறைவனதுஅருட்பொருள் உருவத்தின்கட் செல்லுமென்பதும், அங்ஙனஞ் செல்லவே அவர்க்கு அவ்விறைவனருள் கிடைக்குமென்பதும் உறுதியாம். கடவுள் அருளின்கண் எல்லா உருவங்களும் உண்டென்பதற்குக், குறித்ததொன் றாகமாட்டாக் குறைவில னாத லானும் நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமையானும் வெறுப்பொடு விருப்புத் தன்பான் மேவுத லிலாமை யானும் நிறுத்திடும் நினைந்த மேனி நின்மல னருளி னாலே என்னும் சிவஞான சித்தியார்த் திருமொழியே சான்றாம். எந்த வடிவில் வழிபடுவார்க்கும் இறைவனருள் உண்டென்பதற்கு, விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்தே எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாமே என்னும் திருநாவுக்கரசு நாயனார் திருமொழியே சான்றாகும். இனிக் கடவுளுக்கு உருவமில்லை யென்றும், அவர் அருவமாகவே இருப்பாரென்றும், அவர் குணமற்றவ ரென்றும், அதனால் நிர்க்குணோபாசனையே சிறந்த தென்றும் நன்றாய் ஆய்ந்து பாராமற் கூறுஞ் சொற்கள் பொருளற்ற புன்மொழிகளாய் இருக்கின்றன. ஏனெனிற், பேரறிவுப் பொருளாகிய அதற்கு அறிவும், பேரருட் பொருளாகிய அதற்கு அருளும், பேரின்பப் பொருளாகிய அதற்கு இன்பமும், பெருவல்லமைப் பொருளாகிய அதற்கு வல்லமையும் அரிய பெரிய குணங்களாயிருக்க அதனைக் குணமற்ற நிர்க்குணப் பொருள் என்பது எவ்வாறு பொருந்தும்? குணமில்லாத பொருள் எங்கேனும் உண்டா? குணமில்லாதது பொருளாகுமா? என்று இங்ஙனமெல்லாம் சிறிதாயினும் ஆராய்ந்து பார்க்கவல்லார்க்கு நிர்க்குணம் நிர்க்குணோபாசனை முதலிய சொற்களெல்லாம் பொரு ளில்லாத வெற்றாரவார உரைகளேயாம் என்பது தெளிவாக விளங்கும். அங்ஙனமாயின், அறிவு நூல்கள் சிற்சில இடங்களிற் கடவுளை நிர்க்குணர் என்றோதுவது ஏனெனிற், சத்துவம், இராசதம், தாமதம் என்னுந் தூயவல்லாப் பருப்பொருட் குணங்கள் மூன்றும் அவரிடம் இல்லை யென்பதை உணர்த்துதற் பொருட்டாகவே அங்ஙனம் அவை ஒவ்வோரிடங்களிற் கூறுகின்றனவல்லாற் பிறிதில்லை யென்பது சிவஞானபோதமாபாடியத்தில் நன்கு விளக்கப் பட்டிருக்கின்றது. இனிக் கடவுள் பேரறிவுப் பொருளென்பது முடிக்கப் பட்டதனாலும், அவ்வறிவும் உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களின் வடிவங்களையும் உண்டுபண்ணியதொன் றாகையால் அவற்றை உண்டு பண்ணுதற்கு முன்னும் பின்னும் எப்போதும் அவர் அறிவின்கண் அவற்றிற்கு முதலான எல்லா உருவங்களும் உண்டென்பது பெறப்படுதலானும் கடவுள் அருவாய் இருப்பரென்னு முரையும் வெற்றுரையே அல்லது பிறிதன்று. அங்ஙனமாயின் அறிவு நூல்களில் அவர் அருவமென்றும் ஒவ்வோரிடங் களிற் கூறப்படுதல் என்னை யெனின், மக்களுடைய ஊனக் கண்களுக்கு அவருடைய அருளுருவம் புலப்படமாட்டா தாகலின் அவ்வாறு சொல்லப்பட்டதென்க. அருட்கண்ணு டையார்க்கு அவன் அருளுருவம் விளங்கித் தோன்று மென்பதற்குத் திருஞான சம்பந்தப் பெருமான் ஏதும் அறியாக் குழவிப் பருவத்தே அவன்றன் திருவுருவத்தைக் கண்டு பாடியதும், அவனருளே கண்ணாகக் காணினல்லால் இப்படியன் இவ்வுருவன் இவ்வண்ணத்தன் இவனிறைவ னென்றெழுதிக் காட்டொணாதே என்ற திருநாவுக்கரசுகளின் அருமைத் திருமொழியுமே போதிய சான்றாமென்க. என்று இத்துணையுங் கூறியவாற்றால், உருவமானது பெரிதும் பாராட்டற்பாலதேயன்றி இழிக்கப்படத்தக்கதன் றென்பதும், அறிவு விளக்கமெல்லாம் உருவத்தைப் பற்றியே நிகழுமாதலால் அஃது அழியாத உருவ அமைப்புடைய தாகவே நிலைபெறுமென்பதும் உலகின்கட் காணப்படும் எல்லா வடிவங்களின் தோற்றத்திற்கும் நிமித்த காரணமான கடவுளின் எல்லையற்ற அறிவின்கண் எல்லா உருவங்களும் உண்டென்பதும், கடவுள் அருட்குணமுடையராயும் அறிவுருவமுடையராயும் விளங்குவரல்லது நிர்க்குணமாயும், அருவாயும் இருப்பரல்லரென்பதும், எவ்வெவர் எவ்வெவ் உருவிற் கடவுளை வழிபடினும் அவ்வவர்க்கு அவ்வவ் உருவிற்கேற்பக் கடவுள் தமது அருளை வழங்குவரென்பதும் எடுத்துக் காட்டப்பட்டன. 5. சீவகாருணியம் கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரங் கோள்களவு கல்லாமற் கைதவ ரோடிணங் காமற் கனவிலும்பொய் சொல்லாமற் சொற்களைக் கேளாமற் றோகையர் மாயையிலே செல்லாமற் செல்வந் தருவாய் சிதம்பர தேசிகனே `சீவ காருணியம் என்பதுஇரண்டு சொற்களால் ஆகிய ஒரு சொற்றொடராகும்.இதனைப் பிரித்தால் சீவ என்றும் காருணியம் என்றும் இரண்டு சொற்கள் பெறப்படும்.இனிச் சீவர்கள் என்பன யாவையோவென்றால்; தொட்டால் அறியும் ஓர் அறிவு மட்டும் உடைய புல், மரம், செடி, கொடி முதலியனவும், தொட்டால் அறிவதோடு நாவினாற் சுவைக்கும் சுவையுணர்வும் உடைய ஈரறிவு உயிர் களான நத்தை, சங்கு, கிளிஞ்சில் முதலியனவும், தொட் டறிந்து நாவாற் சுவைத்த லொடு மூக்கால் நாற்றத்தை யுணரும் மூவறிவு உயிர்களான கறையான், எறும்பு, ஈசல் முதலியனவும், தொடுதலுஞ் சுவைத்தலும் முகருதலும் என்னும் உணர்வுகளோடு கண்ணாற் காணும் அறிவு முடைய நான்கறிவு உயிர்களான நண்டு, தும்பி, வண்டு, தேனீ முதலியனவும், தொடுதல் சுவைத்தல் முகருதல் காணல் என்னும் நான் குணர்வுகளோடு காதாற் கேட்டுணரும் அறிவும் உடைய ஐயறிவு உயிர்களான விலங்குகள் பறவை கள் காட்டு மிராண்டிகள் முதலியனவும், தொடுதல் சுவைத் தல் முகருதல் காண்டல் கேட்டல் என்னும் ஐந்தறிவுகளோடு நல்லதிது தீயதிது என்று பகுத்துணரும் மனவுணர்வும் உடைய ஆறறிவு உயிர்களான மக்களும் என்று சொல்லப் பட்ட இந்த ஆறு வகையில் அடங்கிய உயிர்கள் அத்தனையு மேயாம். இனிக் `காருணியம் என்பது அருள் அல்லது இரக்கம் என்னும் பொருளைத் தருவதாகும். இவ்விரக்கம் என்னும் உயர்ந்த இயல்பானது இது நல்லது இது தீயது என்று பகுத்துக் காணும் உணர்ச்சி வாய்ந்த மக்களிடத்து மட்டும் காணப்படுகின்றதே யல்லாமல், மக்கள் அல்லாத மற்ற ஐவகை உயிர்களிடத்துங் காணப்படுகின்றிலது, அவ் ஐவகை உயிர் களுள்ளும் மிகவும் கீழ்ப்படியில் உள்ள புல், மரஞ், செடி கொடிகள் முதலான ஓர் அறிவு உயிர்கள் இருந்த இடத்தை விட்டு நகராதனவா யிருத்தலாலும், அவற்றின் செய்கை இன்னதென்று விளங்காமையால் அவற்றின் இயல்பும் இன்னதென்று புலப்படாமையாலும் அவற்றைப் பற்றி நம்மால் ஆராய்ந்து பார்த்தல் முடியாது. இவற்றைத் தவிரமற்ற நகர்ந்து செல்லும் உயிர்களெல்லாம் தம்முடைய பலவகைப்பட்ட செய்கைகளால் தமக்குள்ள பலவகைப்பட்ட தன்மைகளையும் நமக்கு நன்கு வெளிப்படக் காட்டுகின்றன. இவைகள் பசியெடுத்த காலங்களிலெல்லாம் தம்மினுங் கீழ்ப்பட்ட உயிர்களைச் சிறிதும்இரக்கமின்றிக் கொன்று அவற்றின் உடம்பைச் சிதைத்துத் தின்னுகின்றன! கோழி, குருவி, கொக்கு, நாரை முதலிய பறவைகள் தாம் பசியெடுத்த பொழுது பூச்சி, புழு, மீன், முதலான தம்மினுஞ் சிறிய உயிர்களை இரக்கமின்றிக் கொன்று தின்னுகின்றன! நரி, ஓநாய், புலி, கரடி, அரிமா முதலான விலங்கினங்களோ தமக்குப் பசி யுண்டானபோது மான், மரை, ஆடு, மாடு முதலான அமைதியுள்ள உயிர்களைக் கொன்று அவற்றின் ஊனைக் கிழித்துத் தின்பதோடு, மாந்தர்களையுங் கூடச் சிற்சில பொழுதுகளிற் கொலை புரிந்து அவர்கள் உடம்பை உணவாக உண்டு விடுகின்றன! இவ்வலிய பறவைகளும் விலங்குகளுமே யன்றி, மிக மெலிய உயிர்களான தவளை பல்லி, சிலந்தி, புலி முதலியனவும் தம்மினுஞ் சிறிய பூச்சி களைப் பிடித்து தின்னுகின்றன! ஆகவே, இரக்கவியல் யென்பது மக்கள் அல்லாத மற்றை உயிர்க்கூட்டங்களிற் பெரும்பாலும் இல்லையென்னும் உண்மை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் இனிது விளங்குகின்றதன்றோ? இனி இவ்விரக்க மென்பது எந்த உயிர்களிடத்து இல்லையோ அந்த உயிர்கள் எல்லாம் கொடிய வன்னெஞ் சமும் கொலைத் தொழிலும் உடையனவாய் இருக்கின்றன. இரக்கம் எந்த உயிர்களிடத்து இருக்கின்றதோ அந்த உயிர்கள் இனிய மென்னெஞ்சமும் எல்லாரும் விரும்பத்தக்க இனிய செய்கையும் உடையனவாய் இருக்கின்றன.இதனாலே தான் இரக்கம் இல்லா உயிர்களின் தன்மையை விளங்கின்றன்மை என்றும், இரக்கம் உள்ள உயிர்களின் றன்மையைக் கடவுட் டன்மை என்றும் வழங்கி வருகின்றோம்.இனி மக்களின் இயற்கையோ இவ்விரண்டிற்கும் நடு நிற்கும் தன்மை வாய்ந்ததாய் இருக்கின்றது. பசிநோய் தீரும் பொருட்டுக் கொடிய வன்னெஞ்சம் உடையராய்ப் பிற உயிர்களிடத்துச் சிறிதும் இரக்கம் இன்றி அவற்றைக் கொலை செய்து அவற்றின் ஊனைத் தின்பவர்கள் விலங்கின் றன்மையை அடைகின் றார்கள். தமக்குக் கடும்பசி உண்டான காலத்தும் தம்முயிர் போல் மன்னுயிரை எண்ணி அவற்றிற்குச் சிறிதுங் தீங்கு செய்யாமல் தமக்குக் கிடைத்த காய், கனி, கீரை, கிழங்கு, பயறு முதலியவற்றை உணவாகக் கொண்டு எல்லா உயிர் களிடத்தும் இரக்கம் வைத்து ஒழுகுபவர்கள் கடவுட் டன்மையை அடைகின்றார்கள். எல்லா உலகங்களுக்கும் எல்லா உயிர்களுக்குந் தலைவரும் தாய் தந்தையருமாய் விளங்கும் முழுமுதற் கடவுள் அளவிறந்த இரக்கம் உடையவராய் இருக்கின்றார். அங்ஙனம் அளவிறந்த இரக்கம் உடையவரான கடவுளை அடைந்து அவரது பேரின்பத்தை நாம் நுகருதற்கு நாமும் அவர்போல்அளவிறந்த இரக்க இயல்பாகிய கடவுட்டன்மையை அடைதல் வேண்டும். எவர்கள் மென்மையான இனிய இரக்க இயல்பு உடைய வராகின்றார்களோ அவர்களுக்கே எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரிவான் என்பது அருட்பெருஞ் செல்வரான தாயுமான சுவாமிகள், கல்லால் எறிந்துங்கை வில்லால் அடித்துங் கனிமதுரச் சொல்லாற் றுதித்தும்நற் பச்சிலை தூவியுந் தொண்டரினம் எல்லாம் பிழைத்தன அன்பற்ற நான்இனி ஏதுசெய்வேன் கொல்லா விரதியர் நேர்நின்ற முக்கட் குருமணியே. என்னும் செய்யுளிற் கொல்லாவொழுக்கம் உடையவர்க்கே இறைவன் நேர்நின்று அருள்புரிவான் என்று கூறிய வாற்றானும், திருவருட்பிரகாச வள்ளலாரான இராமலிங்க சுவாமிகள், வன்புகலந் தறியாத மனத்தோர் தங்கள் மனங்கலந்து மதிகலந்து வயங்கா நின்ற என்புகலந் தூன்கலந்து புலன்க ளோடும் இந்திரிய மவைகலந்துள் இயங்கு கின்ற அன்புகலந் தறிவுகலந் துயிரைம் பூதம் ஆன்மாவுங் கலந்துகலந் தண்ணித் தூறி இன்புகலந் தருள்கலந்து துளும்பிப் பொங்கி எழுங்கருணைப் பெருக்காறே இன்பத் தேவே. என்னும் அருட்பாவினால் கொலைத் தொழி லில்லாதவர் களின் உடம்பு உயிரெல்லாம் இறைவன் கலந்து நின்று பொலிகுவான் என்று கூறிய வாற்றானும் நன்கு விளங்கும். இன்னும் பேர் இரக்க வியல்பான கொல்லாமை உடையவர்களுக்கு எல்லா நல்லியுல்புகளுந் தாமே வந்து பொருந்து மெனவும், அஃது இல்லாதவர்களுக்கு எல்லாத் தீய தன்மைகளும் மேன்மேற் கிளைத்தெழுந்து அவர்களைக் கொடிய விலங்கினங்களாக்கி விடுமெனவும் இனிது விளக்கும் பொருட்டே தம் தாயுமான சுவாமிகள், கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்கும்அக் குணம் ஒன்றும் ஒன்றிலேன்பாற் கோரம்எத் தனைபட்ச பாதம் எத்தனைவன் குணங்க ளெத்தனை கொடியபாழ் கல்லாமை எத்தனை அகந்தைஎத் தனைமனக் கள்ளம் எத்தனை உள்ளசற் காரியஞ் சொல்லிடினும் அறியாமை எத்தனை கதிக்கென் றமைத்த அருளிற் செல்லாமை எத்தனைவிர் தாகோட்டி என்னிலோ செல்வ தெத்தனை முயற்சி சிந்தைஎத் தனைசலனம் இந்த்ரசா லம்போன்ற தேகத்தில் வாஞ்சை முதலா அல்லாமை எத்தனை அமைத்தனை உனக்கடிமை ஆனேன் இவைக்கும் ஆளோ அண்டபகி ரண்டமும் அடங்கஒரு நிறைவாகி ஆனந்த மான பரமே என்றும், கொல்லா விரதம்ஒன்று கொண்டவரே நல்லோர்மற் றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே என்றும் அருளிச் செய்தனர்களாயின் கொல்லாவொழுக்க மாகிய தெய்வத் தன்மையின் மேன்மையையும், கொலை யொழுக்கமாகிய விலங்கின் றன்மையின் தாழ்மையையும் நாம் விரித்துச் சொல்லுதலும் வேண்டுமோ? பாருங்கள், விலங்கின்றமையாகிய கொடுந் தன்மைகள் நம்மிடம் உண்டாகும்போது நாம் விலங்குகளாய் விடுதலோடு, நம்மைச் சேர்ந்தவர்களையும் விலங்குகளாக்கி விடுகின்றோம். நாம் மற்றவர்களிடம் சினங்கொண்டு உரத்துப்பேசினால், அவர்களும் நம்மேற் சினங்கொண்டு உரக்கப் பேசுகிறார்கள்; உடனே அதனை மாற்றி அன்புடன் அமைதியாகப் பேசுவோ மாயின் அவர்களும் உடனே தமது சினத்தை விட்டு அன்புடன் அமைதியாகப் பேசுகின்றார்கள்; இன்னும் தமக்குரியவர்களை இழந்து ஆற்றாமல் வாய்விட்டு அழுபவர்களைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தோ மாயின் நமக்கும் ஆற்றாமையால் அழுகை வருகின்றதன்றோ? உடனே அவர் அவ்வழுகையை நிறுத்தி வேறொரு மகிழ்ச்சி யான தொன்றை நினைந்து சிரிப்பராயின் அவரை அப்போது கண்டு நமக்குஞ் சிரிப்பு வருகின்ற தன்றோ? இங்ஙனமே இரக்கமற்ற கொடிய கொலைத்தொழிலையும், அதனால் வரும் புலால் உண்ணு தலையும் நாம் பழகி வருவோமாயின் இரக்கமற்ற கொடிய விலங்குகளாகிய புலி, கரடி, சிங்கம் முதலியவற்றின் றன்மையை நாம் அடைவதோடு நம்மைச் சேர்ந்தவர்களும் நம்மைப் பார்த்து அக்கொடிய இயல்பை அடையும்படி செய்து விடுவோம். ஒரு குடும்பத்தில் ஒருவர் பிறவுயிரைக் கொன்றதனால் வரும் புலாலைத் தின்று பழகுவராயின்; அவரோடு சேர்ந்த அக்குடும்பத்தாரெல்லாரும் அவரைப் போற்புலாலையுண்டு கெட்டுப்போவர். கலப்பாலிற் குற்றிய ஒரு சிறு பிரைத்துளி யானது அப்பால் முழுவதையுங் கெடுத்துத் தயிராக்குவது போலவும், ஒரு சிறுதேளின் கொடுக்கில் உள்ள கடுகளவு நஞ்சானது ஒருவர் உடம்பில் உள்ள செந்நீரிற் கலந்த அளவானே அஃது அவர் உடம்பு எங்கும் பரவி அவரை மிகவும் வருந்தச் செய்வது போலவும், ஓரிடத்திற் றோன்றிய அழுகற் பிண நாற்றமானது நெடுகப் பரவித் தான் பரவிய இடமெல்லாம் தன் நாற்றமே நாறும்படி செய்வதுபோலவும் தீய பழக்கம் உள்ளோர் சேர்க்கையினால் அவர்களைச் சேர்ந்தவர்கள் பலரும் அவரைப் போல் தீய பழக்கம் உடையவராகின்றார்கள். இதுபற்றியே, கொலையிலான் உதவும் அன்னங் கூறிற்பேர் அமுத மாகும் கொலையுளான் உதவும் அன்னங் கூறிற்பேர் விடம தாகும் புலையர்தம் மனையில் உண்போன் புலையனா மாறு போலக் கொலைஞர் தம்மனையில் உண்போன் கொலைஞனே ஆவனன்றே என்னுந் திருமொழியும் எழுந்தது. இனி நல்ல நிலத்தைச் சேர்ந்த மழைத் தண்ணீரானது பால்போல் இனிதாயிருத்தல் போலவும், பூவோடு கூடிய நார் அப்பூவின் நறுமணத்தைப் பெறுதல்போலவும், பொற் கலத்தில் நிரப்பிய ஆவின்பால் மிகவும் தூய தாய்ச் சுவையுடன் விளங்குதல் போலவும், அருளும் இரக்கமும் வாய்ந்து எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி எதற்குந் தீங்கு செய்யாது புலாலுணவு நீக்கியொழுகும் நல்லார் ஒருவரின் சேர்க்கையால் அவருடன்சேர்ந்தவர் எல்லாரும் அவர் போல்இரக்கம் நிரம்பி நலஞ்சிறந்து ஒழுகுவர்; இது பற்றியன்றோ தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார், நிலத்தியல்பால் நீர்திரிந்த தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு (குறள் 452) மனநலன் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்கு இனநலன் ஏமாப் புடைத்து (குறள் 458) என்றும், அருந்தவ நோன்பிற் றலைசிறந்து நின்ற பட்டி னத்துப் பிள்ளையார், நல்லார் இணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே அல்லாது வேறு நிலையுள தோஅக மும்பொருளும் இல்லாளுஞ் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும் எல்லாம் வெளிமயக் கேஇறை வாகச்சி ஏகம்பனே என்றும் அருளிச் செய்தனர்கள். இங்ஙனம் இரக்கமாகிய அருளறத்தை எவர்கள் மேற் கொண்டு ஒழுகுகிறார்களோ அவர்கள் அவ்வருள் உருவாய் விளங்குவதோடு தம்மைச் சேர்பவர்களையும் அருளுருவம் அடையச் செய்வார்கள். இன்னும்இவ்வருளறத்தைக் கைப்பற்றிக் கொண்டு எவர்கள் மாறாமல் ஒழுகுகிறார்களோ அவர்களிடத்திலே எல்லாம் வல்ல ஆண்டவன் திருவரு ளானது நிறைந்து ததும்பி வழியா நிற்கும்.எவர்கள் அவ் வாண்டவன் திருவருள் விளக்கத்தை அடையப் பெறுகிறார் களோ, அவர்களிடத்தில் நோயுங் கவலையுந் துன்பமும் இறப்புமாகிய இருள்கள் நில்லாமல் மறைந்தொழியும். எவர்கள் இத்துன்ப இருளினின்றும் விடுபடுகின்றார்களோ அவர்கள் எல்லாச் செல்வமும் எல்லா நலமும் எல்லா இன்பமும் ஒருங்கே பெற்று இம்மையில் நெடுங்காலம் இனிது வாழ்ந்து, மறுமையிலும் இறைவன் திருவடிப் பேரின்பத்தில் திளைத்து இறுமாந்திருப்பர். இனி, இரக்கமும் அன்பும் அருளும் உடையவர்களுக்கே இறைவன் அருள்புரிகுவான் என்றும்,அவர்களிடத்து மட்டுமே அவன் விளங்கித் தோன்றுவான் என்றும், அம் மெல்லிய தன்மைகள் இல்லாருக்கு அவன் அருள் வழங்கு தலும் அவர்களிடத்துத் தோன்றுதலும் சிறிதும் இல்லை யென்றுங் கூறியதென்னை யெனின்; இரக்கமே இரக்கத்தை இழுக்கும், அன்பே அன்பைக் கவர்ந்து கொள்ளும், அருளே அருளை விளங்கச் செய்யும்; ஒளி விளக்கம் வாய்ந்த பளிங்குப் பாறையிலே கதிரவன் ஒளி விளங்குமே யன்றி, விளக்கம் இல்லாத கருங்கல்லிலே அவ்வொளி விளங்குமோ சொல் லுங்கள். அன்பும் இரக்கமும் உடையவர்களைக் கண்டால் நமக்கு அன்பு உண்டாகின்றதோ சினமுங் கொடுமையும் கொலைத் தொழிலும் உடையவர்களைக் கண்டால் நமக்கு அன்பு உண்டாகின் றதோ சொல்லுங்கள். அன்புடையவர் களைக் கண்டால் மிகுந்த மனமகிழ்ச்சியும், சினமுங் கொடுமையும் உடையவர்களைக் கண்டால் அச்சமும் அருவருப்பும், கொலைத் தொழில் உடையவர் களைக் கண்டால் நடுக்கமும் திகிலும் அல்லவோ அடைகின்றோம்! நம்மைப் பெற்றவர்களாய் இருந்தாலும், நம்மோடு கூடப் பிறந்தவர்களா யிருந்தாலும், நமக்கு நெருங்கிய உறவினராயிருந்தாலும் எவர் கொடுந்தன்மையுங் கொடுஞ் செய்கையும் உடையரோ அவரைக் காணும் போதெல்லாம் ஐயோ! நாம் எவ்வளவு அருவருப்பும் அச்சமும் நடுக்கமும் அடைகின்றோம்! நமக்கு எந்த வகையிலும் உரியவர்கள் அல்லராயினும் எவரிடத்து இரக்கமும் இனிய செய்கையும் காணப்படுகின்றனவோ ஆ! அவரிடத்து நாம் நம்மை அறியாமலே எவ்வளவோ அன்பும் எவ்வளவோ மகிழ்ச்சியுங் கொள்ளப் பெறுகின்றோம்! இனி இரக்கமும் இனிய செய்கையும் உடையவர்களைக் கண்டால் பூனை, நாய், குருவி, காக்கை முதலிய சிற்றுயிர்களும் அச்சம்இன்றி மகிழ்வோடு அவர்கள் பால் அணுகுகின்றன. அருட்டன்மை உடையவர் களைத் தேள், பாம்பு, புலி, கரடி அரிமா முதலான தீய உயிர்களும் துன்பஞ் செய்வதில்லை யென்றும், அவர்களுக்கு அடங்கி நடந்து விலகிப் போகு மென்றும் நல்லோர் உரைக்கக் கேட்டிருக்கின்றோம். பல வரலாறுகளிலும் கற்றறிந்திருக் கின்றோம். இவ்வாறெல்லாம் மக்கட்பிறப்பினரான நமக்குள் எவர் அன்பும் இரக்கமும் உடையரோ அவரிடத்தே மற்றவர்களும் அன்பும் உருக்கமும் உடையராகின்றனரென்றால், மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்களுங்கூட அவரிடத்து அன்பினால் இழுக்கப்பட்டு அமைந்து நடக்கின்றனவென்றால், எல்லை யற்ற பேரன்பிற்கே ஓர் உறைவிடமாய் உள்ள இறைவன் அவர் களிடத்தில் விளங்கித் தோன்றுவான் என்பதை நாம் எடுத்துச் சொல்லுதலும் வேண்டுமோ? எல்லையற்ற அன்பும் இன்பமுமே இறைவனுக்கு உண்மையான வடிவமா மென்பதையும் அவ் அன்புருவினையும் இன்புருவினையும் இடையறாது நினைந்து தாமும் அன்பும் இன்பமுமாய் இருப்பவர்கள் அவ்விறைவனுருவாய் விளங்குவர் என்பதையும் திருமூல நாயனார் அருளிச் செய்த, அன்புஞ் சிவமும்இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தியாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தியாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே என்னுந் திருமந்திரத் திருமொழியும், மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்த மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத் தமுதே ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி உள்ளவா காணவந் தருளாய் தேறலின் றெளிவே சிவபெரு மானே திருப்பெருந் துறையுறை சிவனே ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடைய யன்பே என்னுந் திருவாசகத் திருப்பாட்டும் நன்கு அறிவுறுத்துகின்றன வல்லவோ? அங்ஙனம் அன்புருவாயும் அருளுருவாயும் இரக்கவுரு வாயும் விளங்காநின்ற நம் ஆண்டவன் தன்போல் அன்பும், அருளும், இரக்கமும் நிரம்பித் திகழாநின்ற உயிர்களிடத்து மட்டுமே குடிகொண்டு தோன்றுவான் என்னும் உண்மை இப்போது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் இனிது விளங்கு கின்றதன்றோ? அன்பினுள் ளான்புறத் தான்உட லாயுளான் முன்பினுள் ளான்முனி வர்க்கும் பிரானவன் அன்பினுள் ளாகி அமரும் அரும்பொருள் அன்பினுள் ளார்க்கே அணைதுணை யாமே என்னுந் திருமந்திரத் திருப்பாட்டும்இதற்குச் சான்றாம் அன்றோ? இனி இறைவன் இரக்கவும் அன்பும் அருளும் உடையான் என்பதை எதனால் அறிகின்றோம் என்றால், அவன் மிகப் புல்லியவாய சிற்றுயிர்களுக்கும் வியப்பான உடம்புகளைப் படைத்துக் கொடுத்து, அவற்றின் வழியாக அவைகளின் அறியாமையைப் போக்கி,அறிவை விளக்கி, இன்பத்தை ஊட்டி, அவைகளை எண்ணிறந்த பிறவி கடோறும் பாதுகாத்து வரும் பேருதவிச் செய்கையினால் நன்கு அறிகின்றோம். பாருங்கள்! நாம் அறியாமையிற் கட்டுண்டு நமக்கு வேண்டுவது இன்னதுதான் என்று தெரிந்து கேளாமலிருந்த காலத்தும், அவன் நமக்கு வேண்டுவன வற்றையெல்லாம் விரும்பிக் கொடுத்தனன் அல்லனோ? நாம் நம் தாயின் கருப்பையிலே கருவாய்த் தங்கியிருந்த காலத்து நமக்கு வேண்டுவது இதுதான் என்று தெரிந்துகேட்கும் அறிவுடையே மாய் இருந்தனமா? சிறிதும் இல்லையே. அப்பொழுதும் அவன் நமக்கு ஓர் ஒப்பற்ற துணை வனாய் இருந்து மலப்பை சிறுநீர்ப்பைகளால் நெருக்குண்டு இறவாமலும் அகட்டுத் தீயினால் வேகாமலும் நம்மைப் பாதுகாத்து, உணவிற் பிரித்த மிக மெல்லிய பாலை ஊட்டிப் பத்துத் திங்கள் காறும் சிறிது சிறிதாக நம்மை வளரச் செய்து, பின் நிரம்பவும் வியக்கத் தக்கதாக நம்மை இவ்வுலகிற் பிறப்பித்து, அதன் பின்னும் ஓரிமைப் பொழுதும் இடை விடாது பலவகையானும் நம்மைப் பாதுகாத்துவரும் நம்அப்பன் பேருதவிச் செய்கைக்கும் பேரிரக்கத்திற்கும் ஓர் எல்லையுண்டோ! நாம் கேளாதிருக்கவும் நமக்கு இத்தனை யுதவியுஞ் செய்துவரும் நம் ஐயனுக்கு நாம் ஏது கைம்மாறு செய்தோம்! அன்றி ஏவு கைமாறுதான் செய்யமாட்டுவோம்? நமக்கு மட்டுமா நம்மினும் எத்தனையோ கோடி மடங்கு தாழ்ந்த அளவிறந்த சிற்றுயிர்களுக்கும் அவன் எத்தனை வகையான உடம்புகளை அமைத்துக் கொடுத்து அவைகளை யெல்லாம் பதப்படுத்தி வருகின்றான்! ஒருநாளில் நாம் எவ்வளவோ எறும்புகளை, எவ்வளவோ பூச்சிகளை, எவ்வளவோ புழுக்களை அறிந்தும் அறியாமலும் அழித்து விடுகின்றோம். ஆனால் அழித்த அச்சிற்றுயிரின் உடம்பை மறுபடியும் நம்மாற் படைக்க முடியுமா? ஓர் ஈயின் இறக்கை ஒடிந்தாலும் ஓர் எறும்பின் கால் முறிந்தாலும் அவற்றைத் திருத்திச் செப்பனிட நம்மாலாகுமா,? நம்முடைய உடம் பிலுள்ள உறுப்புக்களில் ஏதேனும் ஒன்று பழுதுபட்டால் அதைத் தானும் நாம் ஒழுங்கு செய்து அமைத்துக் கொள்ளக் கூடுமா? இங்ஙனம் நம்மாலும் பிறராலும் சிறிதும் செய்யலாகாத உடம்பின் அமைப்புகளை யெல்லாம் ஒவ்வொரு நொடியுந் தவறாமல் இழைத்துவரும் எம்பெரு மான் அருட்டிறங்களையெல்லாம் பேதையேன் என் ஒரு நாவால் எங்ஙனம் புகழ்வேன், எவ்வாறு விரித்துரைப்பேன்! அருமை மிக்க நேயர்களே! இத்தனை யிரக்கமுமுள்ள எம்பெருமான் அருளைப் பெற வேண்டும் நாம் அவனைப் போல் எல்லாவுயிர்களிடத்தும் இரக்கம் பூண்டு ஒழுங்கினா லன்றி, அவன் நம்மை அணுகமாட்டான். மக்களாயினும் மற்றைச் சிற்றுயிர்களாயினும் எல்லாம் நம் இறைவனுக்கு அருமைப் பிள்ளைகளே யாதலால், ஒரு தாய் வயிற்றிற் பிறந்த மக்களைப் போல் நாம் எவ்வுயிர்களிடத்தும் அன்பு பாராட்டி ஒழுகுதல் வேண்டும். ஒரு தந்தைக்குப் பிறந்தமக்களுள் ஒருவன் வலியவனாயிருந்தால் அவன் தன்னினும் வலி குறைந்த சிறு பிள்ளைகளை அடித்து வருத்தலாமா? அங்ஙனஞ் செய்தால் அவன் தந்தை அவன்மேற் சினந்து அவனை ஒறுப்பான் அல்லனோ? இங்ஙனமே, எல்லாம் வல்ல கடவுளாகிய முதற்பெருந்தந்தைக்கு அருமைப் புதல் வர்களாம் உரிமை வாய்ந்த எல்லா உயிர்களும் தம்முள் நேசமும் அன்பும் இரக்கமும் பூண்டு நடத்தல் இன்றி யமையாத கடமையாம்; இந்தப் பெருங்கடமையை நினையாமல், மக்களாகிய நாம் அறிவினும் உடம்பினும் வலியுடையவர்களாய் இருத்தல் பற்றி, நம்மினும் அறிவும் வலியுங் குறைந்த மெலிய உயிர்களைக் கொலைபுரிந்து அவற்றின் ஊனைத் தின்றால் அதனைக் கண்டு நம் அப்பன் நம்மேற் பெரிதுஞ் சினந்து கொண்டு நம்மைக் கொடுந் துன்பத்துக்கு உள்ளாக்கு வானென்பது திண்ணம்; இது குறித்தே அறிவுக் களஞ்சிய மான திருமூல நாயனார், கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை வல்லிடி காரர் வரிகயிற் றாட்கட்டிச் செல்லிடு நீரென்று தீவாய் நரகிடை நில்லிடு மென்று நிறுத்துவர் தாமே என்றும், பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லாருங் காண இயமன்றன் தூதுவர் செல்லாகப் பற்றிய தீவாய் நரகத்தின் மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே என்றும் திருவாய்மலர்ந் தருளினார். நம்மைப் போலவே நம் முழுமுதற்றந்தைக்கு இனியவாய் நம்மோடொத்த பிறப்பின வாகிய உயிர்களின் உடம்பைச் சிதைத்து அவற்றின் ஊனை உண்பதனால் வரும் தீவினைக்குரிய பயனை நாம் இந்த வுடம்பை விட்டுச் சென்றபின், நம்மை நிரயத்திலே தள்ளி வருத்துவதால் மட்டும் விளைவித்துப் பின் நம்மை விட்டு விடுவான் என்று நினையாதீர்கள்! நாம்இந்த வுடம்போடு கூடியிருக்கும் இந்தப் பிறவியிலேயே பெருவாரிக் காய்ச்சல் அம்மை கக்கற்கழிச்சல் நச்சுக் காய்ச்சல், சூலை, நீரிழிவு, தொழுநோய், வயிற்றுளைச்சல் முதலான எண்ணிறந்த நோய் களையும் வறுமை, கவலை, சண்டை, அரசர்போர், நில அதிர்ச்சி முதலான தீங்குகளையும், பேய் பிடியுண்டல், புலிகோட்படுதல், நச்சுயிர்களால் தீண்டப்படுதல் கிறுக்குப் பிடித்தல் முதலான பொல்லாங்குகளையும் ஏவி நம்மைப் பெரிதுந் துன்புறுத்தி ஒறுப்பான் என்பதற்கு நம் சமயாசிரி யரான சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த, குற்றொருவரைக் கூறைகொண்டு கொலைகள் சூழ்ந்த களவெலாம் செற்றொருவரைச் செய்த தீமைகள் இம்மையேவருந் திண்ணமே மற்றொருவரைப் பற்றிலேன் மறவாதொழி மடநெஞ்சமே புற்றரவுடைப் பெற்றமேறி புறம்பயந் தொழப் போதுமே என்னுந் திருப்பாட்டே சான்றாகும். இன்னுங் கொல்லாதவர்களைக் கொல்லச் சொல்லியும், புலால் தின்னாதவர்களைப் புலால் தின்னச் சொல்லியுங் கட்டாயப் படுத்தினவர்கள் எவர்களோ அவர்களும், மற்றவர்கள் சொல்லுக்காக அஞ்சி ஏழை உயிர்களைக் கொல் பவர்களும், அவற்றின் ஊனைத் தின்பவர்களும் அங்ஙனமே ஆண்டவனால் ஒறுக்கப்படுவாரென்பது, கொன்றி லாரைக் கொலச் சொல்லிக் கூறினார் தின்றி லாரைத் தினச்சொல்லித் தெண்டித்தார் பன்றி யாய்ப்படி யிற்பிறந் தேழ்நர கொன்று வார்அரன் ஆணையி துண்மையே என்றும், கொலையஞ் சாதொரு வற்கஞ்சிக் கொன்றுளோர் சிலர்சொல் லஞ்சிப் புலாலினைத் தின்றுளோர் நிலைய தாய்நர கத்திடை நிற்பரென் றலகில் நூன்மறை ஆகமம் ஓதுமே என்றும் காசிகண்டம் கூறுதலின் ஓர் உயிரைக் கொல்லும் படி ஒருவரை ஏவுவதும் அதன் ஊனைத் தின்னும்படி ஒருவரைக் கட்டாயப்படுத்தவதும் பெருந்தீவினையாய் முடியுமென்று அறிந்து கொள்ளுங்கள். தீங்கற்ற உயிர்களை ஒருவர் கொல்லப் போகையில் அதனை வேண்டாமென்று தடுத்தலும்,அவற்றின் ஊனைத் தின்பவர்களை அது செய்ய லாகாதென்று மறுத்தலும் மிகப் பெரிய நல்வினை யாகு மென்றும் உணர்ந்து கொள்ளுங்கள். எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும்நின் தெய்வ அருட்கருணை செய்வாய் பராபரமே. என்றபடி எல்லா வுயிர்களையும் நம்முயிர்போல் எண்ணி அளவிறந்தஇரக்கத்தோடு நடக்க நாம் இடைவிடாது முயன்று வருவதோடு அம்முயற்சியில் வழுவாதிருக்குமாறும் நாம் இறைவனை வழுத்தி வருதல் வேண்டும். நம் உடம்பில் ஒரு முள்ளுக் குத்தினாலும் ஒரு கத்திவெட்டுப் பட்டாலும் நாம் எவ்வளவு துன்பத்தை அடைகின்றோம்! அத்துன்பம் பொறுக்க மாட்டாமல் எவ்வளவு வாய்விட்டுக் கதறுகின் றோம்! நம்மை ஒரு கொடியவர் கோலால் அடிக்க வரும் போதும், வாளால் வெட்ட வரும்போதும் நாம் எவ்வளவு பதை பதைத்துப் பெருந்திகிலோடு அவருக்குத் தப்பிப் பிழைக்க ஓடுகின்றோம்! இங்ஙனம் ஆடு, மாடு, கோழி, கொக்கு, பன்றி, மீன் முதலான உயிர்களெல்லாம் தம்மை ஒருவர் கொல்ல வரும்போது எவ்வளவு நடுக்கத்தோடு அஞ்சி ஓடுகின்றன! அந்தோ! அவற்றிற் பல எவ்வளவு துன்பத்தோடு வாய்விட்டுக் கதறி அழுகின்றன! அவற்றின் கழுத்தை இரக்கமில்லாக் கொடிய மாக்கள் கத்தி கொண்டு அறுக்கையில் அவைகள் எவ்வளவு துடிதுடிக்கின்றன! எவ்வளவு ஓலமிட்டுக் கூவுகின்றன! ஆ! அவற்றின் துன்பத்தை நினைக்கையில் எம் நெஞ்சம் நீராய் உருகுகின்றதே! அந்தோ! தீவினை! வாயற்ற அவ்வேழை உயிர்களை மடிக்கும் தீவினை எத்தனை பிறவிகள் எடுத்தாலும் விடாது. தாய்மார்களே, உங்களில் எத்தனைபேர் இவ்வேழை உயிர்களைக் கொன்று உங்கள் ஆடவர்களுக்கு அவற்றை உணவாகச் சமைத்து வைக்கின்றீர்கள்! நீங்கள் இக்கொடிய செய்கையைச் செய்யாதுவிட்டால் நீங்கள் அந்நல்வினையால் நம் ஐயன் அருளைப் பெறுவதோடு, நுங்களைச் சேர்ந்த ஆடவர் களுக்கும் நீங்கள் பெரியதொரு நல்வினையையும் பெரு நலத்தையும் தேடிக் கொடுப்பீர்கள்! பெண் மக்களாகிய நும்மாலே தாம் உலகம் சீர்திருந்த வேண்டும். ஆவதும் அழிவதும் எல்லாம் பெண்களாலேதாம். நுங்களில் எத்தனை பேர் அறியாமையிற் கிடந்து, ஊன் தின்னாத நுங்கள் ஆடவர் களையும் நோய் வருமென்று சொல்லி அச்சுறுத்தி ஊன் தின்னச் செய்துவிடுகின்றீர்கள்! ஐயோ! இக்கொடுந் தீவினைக்கு நீங்கள் எப்படித் தப்பிப் பிழைப்பீர்களோ அறியேன்! முன்னெல்லாம் அறியாமை யாற் செய்த பிழையை, அறிவு தெரிந்த இனிமேலாயினும் நினைந்து இரக்கமுற்று, நம்இறைவனாகிய தந்தையிடம் சொல்லி மன்னிப்புக் கேட்டு, இனி எந்த வுயிர்க்குந் தீங்கு செய்யாமல், எல்லா வுயிர்களிடத்தும் அன்பும் இரக்கமும் பூண்டு ஒழுகுதல் வேண்டும். கொல்லா விரதம் குவலயமெல் லாம்ஓங்க எல்லார்க்கும் சொல்லுவதென் இச்சை பராபரமே என்னும் தாயுமான சுவாமிகள் திருமொழிப்படி, கொல்லா வொழுக்கத்தின் மேன்மையை நம்மைச் சேர்ந்தவர்கள் எல்லார்க்கும் நன்றாக எடுத்துச் சொல்லி எல்லாரையும் அன்பும் இரக்கமும் உடையவர்களாகச் செய்து அதனால் கடவுட்டன்மையை நாம் அடைந்து நம் ஐயனுடைய திருவருளைப் பெறுதல் வேண்டும். 6. இரு சைவ விளக்கங்கள் சைவமென்பது யாது? அச்சைவத்தினை விளக்கிய இரண்டு விளக்கங்கள் யாவை? என்று ஆராயப்புகுகின்றமை யின் இதற்கு இத்தலைப்பெயர் புனைந்து வைக்கப்பட்டது. இந்த நிலவுலகத்திலே பிறந்து இருந்து இறந்துபோகின்ற உயிர் களுள்ளே சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து உணர்ச்சிகள் மட்டும் வாய்ப்பப் பெற்று இவ்வைந்துணர்வு களினும் மேம்பட்டுஇவை தம்மை யெல்லாம் நல்ல திது தீயதிது என்று பகுத்தறியும் சிறப்பறிவு பொருந்தப் பெறாத விலங்கினங்களை யொழித்து மிக அரிதிலே கிடைத்த மக்கட் பிறவியினை யுடையவர்களுக்கெல்லாம்இப் பகுத்துணர்வால் இவ்வுலகத்திற் பெறப்படாத ஓரரும் பெரும் பொருள் கையகத்தே இருக்கக் காண்கின்றேம். இப்பருப்பொரு ளுலகத்திற் பருப்பொருண் முயற்சியால் தொகுத்துக் கொள்ளப் படும் பெருங் குவியலான பெரும் பொருளெல்லாம் இப் பருவுடம்பு இப் பருப்பொரு ளுலகத்தில் நடைபெறுங்காறும் ஒருசிலர்க்கு மட்டும் ஒவ்வொரு வகையாற் பயன்பட்டு அழிவெய்தி மறுமையிற் செல்லும் அறிவுருவான உயிர்க்குச் சிறிதும் பயன்படுவதின்றாய் ஒழியும். இது, தெய்வச் சிதம்பர தேவாவுன் சித்தந் திரும்பிவிட்டாற் பொய்வைத்த சொப்பன மாமன்னர் வாழ்வும் புவியுமெங்கே மெய்வைத்த செல்வமெங் கேமண்ட லீகர்தம் மேடையெங்கே கைவைத்த நாடக சாலையெங் கேயிது கண்மயக்கே என்று அகப்புறப் பற்று முற்றும் விட்ட பெருந்தவத் தோரான பட்டினத்தடிகள் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாட்டான் இனிது விளங்கும். இத்தன்மையதான பருப்பொருட் செல்வம் போலாது, உயிரின் அறிவாகிய களஞ்சிய அறையிலே வைத்து பாதுகாக்கப்படுவதாய், அழியுந்தன்மைத்தான உடம்பை மட்டும் வளர்த்தற்கு உதவியாம் பருப்பொருட் செல்வம் போலாது உயிரின் அறிவாகிய உடம்பை வளர்த்தற்கு மிக இயைந்த பொருளாய் விளங்கும் சமய உணர்ச்சியானது நாகரிக மில்லாதார் முதல் நாகரிக முடையார் ஈறான எத்திறத்தவர்க்கும் பொதுமை யின் நிகழக் காண்கின்றோம். இனி இந்தச் சமயம் என்னுஞ் சொல்லாற் பொழுது, அல்லது காலம் என்னும் பொருள் பெறப்படுகின்றது. ஐம்பொறி உணர்வுகளும் ஒரு காலத்து ஒருங்கு சேர்ந்து ஐம்புலன்களையும் ஒருங்கு நுகராமையால், அவ்வைம் பொறிகள் ஒவ்வொன்றன் வாயிலாய்த் தனித்தனியே சென்று அவ்வவற்றை அறிகின்ற உயிரானது அவ்வவற்றை அங்ஙனம் தனித்தனியே அறியும் பல பொழுதுகள் உடையவாகின்றது. இவ்வாறு காலத்தினால் வரையறுக்கப்படுதல் ஓரிடத்தே மட்டும்அறிவு விளங்கும் உயிருக்கன்றி எங்கும் அறிவு விளங்கும் இறைவனுக்கு இல்லையாம். அசைவுடைய பொருள்களுக்கே காலமும் இடமும் உண்டாம். ஒரிடத்து மட்டும் நிற்குமியல்புடைய சாத்தான் என்பான் கங்கைக் கரையிலிருந்தான் என்ற வழி இறந்தகாலமும் காவிரிக் கரையி லிருக்கின்றான் என்னும் வழி நிகழ்காலமும், குமரித் துறையிலிருப்பான் என்புழி எதிர் காலமும் கங்கை, காவிரி, குமரி என்னும் இடங்களும் பெறப்படுகின்றன. இங்ஙனங் கால வேறுபாடுகளும் இடவேறுபாடுகளும் சிற்றறிவும் சிறு தொழிலுமுடைய உயிர்களுக்கே உள்ளன வாதல் தெற்றென விளங்கும். இனி அச்சாத்தன் என்பவன் அவ்வாறு சிற்றறிவும் சிறு தொழிலுமில்லாது எங்கும் உள்ள அறிவுப் பொருள் என்று நினைக்கக் கூடுமாயிற் கங்கை, காவிரி, குமரி முதலான எல்லாஇடங்களிலும் அசைவின்றி ஒரே காலத்துள்ள அவனுக்கு அங்ஙனங் கால வேறுபாடும் இடவேறுபாடும் ஒருவாற்றானும் சொல்லல் ஏலாதென்க. நேற்றும் இன்றும் நாளையும் கங்கை, காவிரி, குமரி என்னும் எல்லா இடங்களிலும் ஒருங்கு இருப்பானை நோக்கி இவன் கங்கைக்கரையிலிருந்தான், காவிரிக்கரையிலிருக் கின்றான், குமரித் துறையிலிருப்பான் என்று வழங்குவோ மாயின் அஃது உண்மைக்கு மாறாய் எல்லாரானும் நகையாடற் பாலதாய் முடியும். எவ்வாறெனின் எங்குமுள்ள விசும்பை நோக்கி இது கங்கைக்கரையிலிருந்தது எனவும் இது காவிரிக்கரை யிருக்கின்றதெனவும், இது குமரித்துறை யிலிருக்கு மெனவுங் கூறுவார் உலகில் இல்லையன்றே! அதுபோல எங்கும் நிறைந்திருக்கின்ற எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளுக்குக் காலமும் இடமும் இல்லை; அவன் காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற் பட்டவனாவன்; அவன் அவற்றின் புறம்பே மட்டும் இருப்பான் அல்லன்; அவற்றின் உள்ளும்புறம்பும் அவற்றின் மேலும் நிறைந்திருப்பன் என்க. இது பற்றியன்றே தாயுமான சுவாமிகள், `அங்கிங்கெனாதபடி யெங்கும் ப்ரகாசமாய் என்று திருவாய் மலர்ந்தருளியதூஉம், அருணந்தியடிகள் உலகினை யிறந்து நின்ற தரனுரு வென்ப தோரார் உலகவ னுருவிற் றோன்றி யொடுங்கிடு மென்று மோரார் உலகினுக் குயிருமாகி யுலகுமாய் நின்ற தோரார் உலகினுள் ஒருவனென்ப ருருவினை யுணரா ரெல்லாம் என்று கட்டளையிட்டருளியதூஉம் என்க. ஈசாவாசியோப நிடதமும்1 ஒன்றாயுள்ள கடவுள் அசையாததாய் மனத்தைக் காட்டினும் விரை வானது; தேவர்களும் அதனை அணைவ தில்லை; முற்றொட்டே அஃது எல்லாவற்றினையுங் கடந்து நிற்பது; அது நிலையா யிருந்தே விரைந்தோடும் இவைகளாற் பற்றப்படாமல் இவற்றைக் கடந்து நின்றது; காற்றானது அதனிடத்திருந்து வினைகளைத் தாங்குகின்றது என்றும் அஃது அசைவது, அஃது அசைவதும் அன்று; அதுசேயது, அஃது அணிமை யிலும் உள்ளது; அஃது இதன் எல்லாவற்றின் உள்ளும் உள்ளது; அஃது இவ் வெல்லாவற்றின் புறம்பும் உள்ளது; என்றும் கூறுகின்றது. ஆகவே, சிறுபான்மை இலக்கணந் தீண்டப் பெறாத கடவுளை யொழித்து அவ் விலக்கணந் தீண்டப் பெறுகின்ற சிற்றுயிர் ஒன்றே கால வேறுபாடு பொழுது வேறுபாடுகள் உடையதென்பது துணியப்படும். இனி ஏகான்மவாதங் கூறுவார் மதம்பற்றிக் குடங் கடோறும் உள்ள நீரின்கட் டோன்றுந் திங்களின் நிழல் அந்நீரின் அசைவாற்றானும் அசைவது போற் றோன்றினும் உண்மையான் நோக்குமிடத்து அவ்வசைவு அதற்கு இல்லாமைபோல உடம்புகடோறுங் காணப்படுகின்ற கடவுளின் றோற்றமாகிய சிற்றுயிர் ஐம்பொறிகளின் இயக்கத் தாற்றானும் அசைவதுபோற் றோன்றினும் அஃதியற்கையில் அங்ஙனம் அசைவதில்லை யென்று உரையாமோவெனின்; அது பொருந்தாது. எம்முடைய உடம்பிலுள்ள மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் அவ்வைம் பொறிகளும் பிறிதொன்றன் உதவியை வேண்டாது தாமே இயங்குவன வாயின் அவை எப்போதும் இயங்கிக் கொண்டே யிருத்தல் வேண்டும்; நனவிலன்றிக் கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்பொடுக்கம் என்னும் கீழ்நிலை நான்கினும் அவை யியக்கமின்றிக் கிடத்தலானும், இனி, நனவிலேயும் அவை இயங்குங் காலத்துஐந்தும் ஒரு காலத்து ஒரு பொருளை அறியமாட்டா என்பதுஅழகியதொரு பொருளை உற்றுக் காணுமிடத்துச் செவியொன்றைக் கேளாமையினும், இனிய ஓர் இசையைக் கேட்டு அறிவு அதன் வழிப்பட்டு நின்றுழிக் கண் ஒன்றைக் காணாமையினும் வைத்து அறியக் கிடத்த லானும் இனி யிப்பொறிகள் ஐந்தினும் பற்றறப் பிரிந்து மனம் ஒன்றை நாடும் வழி அவை இயங்காது வறிது நிற்றலானும் அவ்வைந்துந் தாமே இயங்கக் கடவுளின் றோற்றமாகிய உயிர் அசைவின்றி யிருக்குமென உரைத்தல் ஏலாதென்க. உயிர் மனத்தைப் பற்ற மனம் பொறிகளைப் பற்ற பொறிகள் புலன்களைப் பற்றி நடைபெறுகின்றன என்பதே உண்மை யாம். இஃது அருணந்தியடிகள், அறிவதைம் பொறியே யென்னின் உறக்கத்தி னறியா வாகும் அறிவது மொன்றொன் றாக வொன் றொன்றா யறிவ தென்னின் அறிவுகள் ஒன்றை யொன்றங் கறிந்திடா வைந்தை யுங்கொண் டறிவதொன் றுண்ட தான்மா வைம்பொறி யறிந்தி டாவே என்றருளிச் செய்த சிவஞான சித்தித் திருச்செய்யுளான் நன்கறியப்படும். மேற்கூறியவாற்றால், உயிர் ஐம்பொறிகளோடுடனாய் நின்று புலன்களைப் பற்றும்வழி அஃது ஓசையை யறியும் பொழுதும், ஊற்றினை யறியும் பொழுதும், உருவினை யறியும் பொழுதும், சுவையினை யறியும் பொழுதும், நாற்றத்தை யறியும் பொழுதும் தனித்தனியே உளவாகா நிற்கின்றன. இனி இவ்வைம்பொறி உணர்வு நிகழ்ச்சிகள் ஒருங்கு உள்வழியும் உயிர்கள் ஒரு சிலர்க்கு ஏனைப் பொறி உணர்வுகளினும் நாற்றவுணர்விற் பெருவிருப்புண்டாய்ப் பல திறப்பட்ட நறிய மணங்களை நுகர்தலிலே இன்பஞ் செல்லும் அவர் அம்மனவுணர்வினையே மிகுதியும் பாராட்டிப் பேசுவர். வேறு சிலர்க்குச் சுவை யுணர்விற் பெருவிருப்புண்டாய்த் தித்திப்புப் புளிப்புக் கார்ப்புக் காழ்ப்புக் கைப்பு உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவை மிக்க உணவுகளைப் பல திறத்தாற் சமைத்துச் சுவைத்தலிலே இன்பம் செல்லும்; அவர் அச்சுவை யுணர் வினையே மிகுதியும் பாராட்டிப் பேசுவர். இவ்வாறே சிலர்க்குக் காட்சியுணர்விலும் வேறு சிலர்க்கு ஊற்றுணர் விலும் மற்றுஞ் சிலர்க்கு இசையுணர்விலும் பெருவிருப் புண்டாய் மற்றை யுணர்வுகளை யிழித்துப் பேசுவர். இங்ஙனம் அவரவர் தத்தமக் கியைந்தவற்றை மிகவும் பாராட்டி அவ்வவற்றையே உயர்த்துப் பேசுங் காலங்களும் உணர்வு வேற்றுமையாற் றோன்றும் பொழுது வேறுபாடுகளென்றே தெளியப்படும். இனி எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற திருக்குறளின்படி இவ் வைம்பொறி யுணர்வு களுள்ளும் இயற்கையிலே மிகச் சிறந்த தியாது? என்று நடுவு நிலையால் ஆராய்ந்து பார்க்கப் புகுவானுக்கு ஓசையுணர்வே சிறந்த தென்பது இனிது விளங்கும். உயிரின் சிற்றறிவை விரிவுசெய்து விளக்குதற்கு இன்றி யமையாது வேண்டப்படும் அறிவு நூற் கேள்விகளெல்லாம் செவிக்கருவியினையே துணையாகக் கொண்டு நடைபெறுகின்றன வாகலின் அச்செவிக் கருவியினுள் ளமைந்த ஓசை யுணர்வே ஏனைப் பொறி யுணர்வுகளினெல்லாம் சிறந்த தென்று துணியப்படும். இதுபற்றியே தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரும், செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கு மீயப் படும் (குறள் 412) என்று திருவாய் மலர்ந்தருளினார். அற்றேல், இவ்வைம் பொறியுணர்வின் வழிப்பட்ட உயிரின் பொழுது வேறுபாடுகளை யெல்லாம் சமயங்கள் மதங்கள் என்று வழங்காமை என்னையோ வெனின்; வளத்திடை முற்றத்தோர் மாநில முற்றுங் குளத்தின்மண் கொண்டு குயவன் வனைந்தான் குடமுடைந் தாலவை யோடென்று வைப்பர் உடலுடைந் தாலிறைப் போதும்வை யாரே எனவும், எரியெனக் கென்னும் புழுவோ வெனக்கென்னு மிந்தமண்ணுஞ் சரியெனக் கென்னும் பருந்தோ வெனக் கென்னும் தான்புசிக்க நரியெனக் கென்னும்புன் னாயெனக் கென்னுமிந் நாறுடலைப் பிரியமு டன்வளர்த் தேனித னாலென்ன பேறெனக்கே எனவும், முடிசார்ந்த மன்னரு மற்றுமுள்ளோரு முடிவிலொரு பிடிசாம்பராய் வெந்து எனவும் எழுந்த திருப்பாட்டுக்களின் படியே இன்னநேரத்தில் மாய்வதென்றறியப் படாதவாறு சடுதியிலே மாய்ந்தொழியும் இம்மக்களுடம்போடு அவ்வைம் பொறியான் வரும் இன்ப நுகர்ச்சிகளும் இறந்தொழிதல் காணப்படுதலாலும்,இங்ஙனம் இடை யிடையே யழிந் தொழியும் அவ்வின்ப நுகர்ச்சிகள் சிற்றுயிர்களைக் கடைத் தேற்றுதற்கு ஒருசிறிதும் பயன்படாமையாலும் அவற்றை யெல்லாம் வெறுத்துப் புறத்தே செல்லும் நம் அறிவினை அகமுகமாக உள்ளிழுத்து, நானா ரென்னுள்ளமார் ஞானங்களா ரென்னை யாரறிவார் என்ற அருமைத் திருமொழியின்படி ஆ! நான் யார்? பலப்பல வேறுபாடோடும் பெரிதும் வியப்புறத் தக்கவாறாய் அமைந்திருக்கும் இவ்வுலகங்கள் யாவை? இவற்றிடையில் யான் வந்து பிறந்ததேன்? பிறந்து பலவகைத் துன்பங்ளுக்கு உள்ளாகி மிக வருந்தும்போதும் அவற்றை யிடையிடையே மறந்து நான் எப்போதும் இவ்வுலகத்தில் இருப்பதுபோல் நினைப்பதேன்? என் மனைவி மக்கள் சுற்றத்தார் பிறர் என்னுமிவர்க்கும் எனக்குமுள்ள தொடர்பு என்னை? மற்றையோரிடத்தெல்லாம் யான் அன்புடையனாய் ஒழுகாது என் மனைவி மக்களிடத்தே மட்டும் யான் அளவிறந்த அன்பு பூண்டு ஒழுகுவது என்னை? யான் இறக்குங் காலத்து அவர் அவ்விறப்பினை நீக்குவரா? யான் பிறக்குங் காலத்து அவர் அப்பிறப்பினை நீக்குவரா? யான் துன்புறுங் காலத்து அவர் அத்துன்பத்தைப் போக்குவரா? இவர் களெல்லாம் ஐயோ! எம்மைப் போலவே துன்புறுகின்றார் கள், பிறக்கின்றார்கள், இறக்கின்றார்கள்; சாவார்க்குச் சாவாரும், துன்புறுவார்க்குத் துன்புறுவாரும் துணையாவ தியாங்ஙனம்? ஐயோ! இப்பிறப்பினுந் துன்பத்தினும் எவ்வாறு நீங்குவேன்! இறக்க வேண்டுமே என்பதனை நினைக்குங் காலத்து என்னெஞ்சம் பகீரென்று துணுக்குறுகின்றதே! யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென் கடவேன் என்ற மேலோர் திருமொழி இடையறாது என்னுள்ளத்திற் றோன்றி என்னை வருத்துகின்றதே என்று இவ்வாறெல்லாம் உயிரினறிவானது உள்மடங்கி ஐம்பொறி களின் குறும்பையெல்லாம் ஒடுக்கிக் கொண்டு தனது நிலை யை ஆய்ந்து பார்க்குங் காலந்தான் உயிர்களுக்கு என்றும் மாறாது நிகழும் சமயமாதலின் இங்ஙனம் நினைவு நிகழும் சமயமே சமயம் அல்லது மதம் என்று ஆன்றோரான் வழங்கப்பெற்றது. முன்னே காட்டியபடி எங்ஙனமானால் நமது உணர் வானது ஐம்பொறிகளின் வழிப்பட்டு நடைபெறுங்காலத்து அதுவதுவாய் நின்று புலன்களை நுகர்ந்துதான் மிக விரும்பிய தொன்றனை அதன்மேற் சென்ற பற்றால் உயர்த்துப் பேசுகின்றதோ அங்ஙனமே நமதறிவால் ஆராய்ந்து காணப்படுகின்ற மெய்ப்பொருள் உணர்ச்சிகளுள்ளும் நாம் மிக விரும்பியதொன்றனை நமதுள்ளம் சிறந்தெடுத்துக் கூறா நிற்கின்றது. அறிவு நிரம்பவில்லாது தாழ்ந்த நிலைக் கண்ணராய் நிற்கின்ற உயிர்கள் பொருள்களைப் பிரித்துப் பிரித்து ஆயும்போது அவர்கள் அறிவு மேற்பட்ட பொருள் களிற் செல்லாமையால் மண், புனல், அனல், கால் என்னும் நாற்பொருளே மெய்யென்றும், இந்நாற்பொருட் கூட்டத் திற் றோன்றிய இவ்வுலகமும் உடம்புமே மெய் யென்றும் உட்கோடலால் உலகாயத மதம் தோன்றுவதாயிற்று. இவ்வாறே இவர்க்கு மேற்பட்ட நிலையிற் சென்றாரால் இந்திரியான்ம வாதமும், இவர்க்கு மேற்பட்ட பதத்திற் சென்றாரால் அந்தக் கரணான்ம வாதமும் இவர்க்கும் மேற்பட்டாராற் பிராணான்ம வாதமும், இவர்க்கும் மேற்பட்டாரால் விஞ்ஞானான்ம வாதமும், இவர்க்கும் மேற்பட்டாராற் சீவப்பிரம வாதமுமெனப் பலப்பலவான மதங்களும், பலப்பலவான பொருளாராய்ச்சி களும் பல திறப்பட்டுத் தோன்றின. இவற்றுள் ஒன்றே மெய்ந்நிலையாய்ப் பெறப்படு மாயினும் ஏனையவெல்லாம் பொய்யென்று கழிக்கப் படாமல் அம் மெய்ந்நிலையினைப் பயப்பதற்குரிய படிவழி நிலைகளாய் நிலைபெறுவனவாம். மேலே காட்டியவாறு சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்பொறியுணர்வு களுள் ஓசையுணர்வே ஏனை எல்லாவற்றினும் மிகச் சிறந்ததாயினும் அவை யொவ்வொன்றும் ஏனைய தன் வளர்ச்சிக்கு வாயிலாய்ப் பயன்படுதல்போலவும், மக்கட் பிறவியினுள் குழவிப் பருவம், பிள்ளைப்பருவம், இளமைப் பருவம், முதுமைப்பருவம் என்பனவற்றுள் முதுமைப் பருவமே அறிவு மிகச் சிறந்ததாயினும் அதனை எய்துதற்கு ஏனை மூன்று பருவங்களும் ஒன்றற்கொன்றுதவியாய் இன்றியமையாது வேண்டப்படுதல்போலவும், மெய்ந் நிலைச் சித்தாந்த மாய் முடிக்கப்படும் ஒரு மெய்ச்சமயத் தினைச் சென்றடை தற்குரிய பேரறிவினைப் பயத்தற்கு மிகத் தாழ்ந்த பதத்திலே தோன்றிய சிற்றறிவுச் சமய முதல் எல்லாம் ஒன்றற்கொன் றுதவியாய்ப் பெரிதும் பயன்படுதலு டையவாம். கடவுளும் உயிரும் இல்லையென்று சொல்லும் நாத்திகமத முதற் கொண்டு உயர்ந்த வேதாந்த சித்தாந்த முடிநிலைப் பெரும் பொதுச் சிறப்புண்மைப் பொருளா யுள்ள மெய்ச்சமயங் காறுமுள்ள எல்லா உயிர்கட்கும் இறைவன் றிருவருட்பேறு உண்டென்பது துணிபொருளே யாமென்க. இது தமிழ் மறையுள், விரிவிலா வறிவினார்கள் வேறொரு சமயஞ் செய்தே எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாமே என்று பெறப்பட்டமையானும், தமிழ் ஆகம சித்தாத்தத்துள், அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய் என்று வலியுறுத்தப்பட்டமையானும் இனிது விளங்கும். இனி இப்பெற்றிப்பட்ட மெய்ப்பொரு ளாராய்ச்சிப் படிகளையெல்லாம் கடந்து மேல்நிலைக்கண்ணே சென்றா னுக்குக் கீழ்நிலைக் கண்ணுள்ளனவெல்லாம் பொருளல்லன வாய்த் தோன்றுமாகலின் அதுபற்றி அவன் இகழப்படு வானல்லன், அம்மேனிலைக் கண்ணே நின்று பேரின்பத்தை நுகர்ந்து கொண்டு, சோம்ப ரிருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பது சுத்த வொளியிலே சோம்ப ருணர்வு சுருதி முடிந்திடஞ் சோம்பா கண்டாரச் சுருதிக்கட் டூக்கமே என்றபடி எவ்வகைச் செயலுமில்லாத தூயசோம்பராய்ப் பூதமுங் கரணம் பொறிகளைம் புலனும் பொருந்திய குணங்களோர் மூன்றும் நாதமுங் கடந்த வெளியிலே நீயு நானுமாய் நிற்குநாள் உளதோ வாதமுஞ் சமய பேதமுங் கடந்த மனோலய வின்பசா கரனே ஏதுமொன் றில்லேன் யாதுநின் செயலே யிறைவனே ஏக நாயகனே என்றவாறு எல்லாம் இறைவன் செயலே தன் செயலாய்க் கொண்டாராய் உள்ள மெய்யுணர்வுடையாருக்கு ஏனைய வெல்லாம் வெறும் போலிகளாய் ஒழிதல் பொருத்தமேயாம். அங்ஙனம் அவர்க்குத் தோன்றுதல்பற்றி அவர் மற்றைச் சமயங்களை இகழ்ந்தார் எனத் திரித்துணர்ந்து அவரைப் புறம்பழித்தல் பொருந்தாதாம்.அது நிற்க, இனி இங்ஙனம் மெய்ப்பொரு ளாராய்ச்சியின் பொழுது வேறுபாடுகளாய்த் தோன்றிய பல்வகைச் சமயங் களுள் முதற்கண் ஆராய்தற்பொருட் டெடுத்துக் கொண்ட சைவம் என்பது மிக உயர்ந்ததோர் அறிவினை யுடைய ஒரு சான்றோன் தனது சிற்றறிவுத் தன்மையை விட்டுப் பேரறிவினனாய் நின்று சிவம் என்னும் முழுமுதற் பெரும் பொருளைத் தலைப்பட்டு நின்ற நிலையாம். இது, தெய்வஞ் சிவனே சிவனருள் சமயஞ் சைவஞ் சிவத்தொடு சம்பந்த மென்றான் சைவம் வளர்க்குஞ் சம்பந்த மூர்த்தி என்ற திருச்செய்யுளான் அறியற்பாலதாம். இங்கே சிவம் என்று எடுத்தோதப்பட்ட பொருள், அசுத்த மாயையிற் றோன்றிய சத்துவம், இராசதம், தாமதம் என்னும் முக்குண வழிப்பட்ட மும்மூர்த்திகளுள் ஒன்றன்று. அது, அவதா த்ரிதயாதீதம் துரீயம் ஸத்ய சித்ஸுகம், ப்ரஹ்ம விஷ்ண்வாதி பிஸேவ்யம் ஸர்வேஷாம் ஜநகம், பரம் ஈசாநம் பரமம் வித்யாத்ப்ரேரகம் புத்திஸாக்ஷிணம் என்று போந்த பஞ்சப் பிரமோபநிடத மறையானும், தேவர்கோவறியாத தேவதேவன் என்னுந் திருவாசக மறையானும் அறியற் பாலதாம். இன்னுமிது, சிவனொ டொக்குந் தெய்வம் தேடினுமில்லை என்னுந் திருமந்திரத்தானும் உணரப்படும். சிவம், பிரமம், கந்தழி யென்பன ஒரு பொருட்கிளவிகள், இவற்றுட் கந்தழி என்பதுஆசிரியர் தொல்காப்பியனாராற் சிவம் என்பதனோ டொத்த சொல்லாக வைத்துக் கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றுங் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே என்று திருவாய் மலர்ந்தருளப்பட்டதென. இதற்குரை கண்ட நச்சினார்க்கினியர் கந்தழி என்பது ஒருபற்று மற்று அருவாய்த் தானேயாய்த்தத்துவங்கடந்த பொருள் எனக் கூறி, இதனியல்பை மாணிக்கவாசக சுவாமிகள் உய்த்துணர வைத்து, உற்றவாக்கையி னுறுபொருள் நறுமல ரெழுதரு நாற்றம்போற் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் அப்பொருள் பாராதே பெற்றவாபெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர்சொற் றெளியாமே அத்தனாண்டுதன் னடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே என்றுதிருவாய் மலர்ந்தருளிய அருமைத் திருப்பாட்டினை எடுத்துக்காட்டி `என்று அதனை உண்மையான் உணர்ந்தோர் கூறியவாற்றானுணர்க என்று அடிகளின் மெய்யுணர்வின் பான்மையினையும் கிளந்தெடுத்துரைத்தார். உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியரே திருவாதவூரடிகளை `அதனை உண்மையான் உணர்ந்தோர் எனச் சிறந்தெடுத் துரைத்தமையாற் கந்தழியினியல்பை அத்திருமொழியே இனிது விளக்குவதென்பது பெற்றாம். பொருள்களாவன மண், புனல்2 அனல், கால், விசும்பு என்னும் ஐந்து பருப் பொருள்களும், மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து நுண்ணிய பொருள்களும், கை, கால், வாய், எருவாய், கருவாய் என்னும் ஐந்து தொழிலுறுப்புகளும், மனம், அறிவு, நினைவு, முனைப்பு என்னும் நான்கு அகக்கருவிகளும், காலம் பிறழாநிகழ்ச்சி, கலை, நினைப்பு, விருப்பு, மகன், மாயை என்னும் ஏழு உணர்வு நிகழ்ச்சிப் பொருள்களும், தூய நினைவு, தலைமை, அருள்நிலை, அன்னை, அத்தன் என்னும் ஐந்து சிவ நிலையப் பொருள்களுமான முப்பத் தாறுமாம். இம் முப்பத்தாறு பொருள்களுங் கடந்த பேரறிவுப் பொருள் யாது? அது கந்தழியென்பார் `தத்துவங்கடந்த பொருள் என்றும், உருவுடைப் பொருளெல்லாம் நிலை யிலவாகலிற் படைக்கப்படும் உருவுடைப் பொருளன்று அக்கந்தழியென்பார் `அருவாய் என்றும், இம்முப்பத்தாறு பொருள்களும் அப் பெரும்பொருளையின்றி இயங்க மாட்டாவாகலின் அவற்றுள் நின்று அவற்றை இயக்கியும் தான் தாக்கற்று நிற்குமென்பார் `ஒரு பற்றுமற்று என்றும் நச்சினார்க்கினியர் இனிது விளக்கியருளினார். இவரெடுத்துக் காட்டிய திருவாசகத் திருச் செய்யுள் இக்கந்தழியாம் பெரும்பொரு ளியல்பை விளக்கு மாறு யாங்ஙன மெனின்; `உற்ற வாக்கையின் உறு பொருள் என்பது இறைவன் பொருள்களுள் அருவாய் நிற்றற்கும், `நறுமல ரெழுதரு நாற்றம் என்பது அவன் உயிர்களுள் அருவுருவாய் நிற்றற்கும் உவமைகளாக எழுந்தன. உடம்பினுள்ளிருக்கும் உயிர் தனக்கென ஓர் உருவின்றித் தான் சார்ந்த உடம்பே தனக் குருவாய்க் கொண்டு நிற்கின்றது. அங்ஙனம் நிற்குமிடத்துத் தான் வேறு உயிர் வேறு என்னும் வேற்றுமை தோன்றாவாறு சாத்தா, கொற்றா என உடம்புக்கிட்ட பெயரால் அழைக் கும் வழித் தான் ஏன் என்கின்றது. அங்ஙனம் நிற்பினும் உடம்பு உடம்பே, உயிர் உயிரே; உடம்பு உயிராகாது, உயிர் உடம்பு மாய் அதனின் வேறுமாய் நிற்கும். உடம்பு தானே இயங்காது உயிர் இயக்கினால் இயங்கும், உயிர் தானேயி யங்கும் உடம்பினையும் இயக்கும். இதுபோல் இறைவன் உலகங்களுட் கலந்து நிற்கும் வழித்தான் வேறு உலகம் வேறு - என்னும் வேற்றுமை தோன்றாவாறு ஒருமையுற்று நிற்கும். இவ்வாறு ஒன்றாய் நிற்றல் பற்றியே `விசுவம் பிரஹ்மா என்னும் சொற் றொடரும், உல கேழெனத் திசைபத்தெனத் தானொரு வனுமே, பலவாகி நின்றவா தோணோக்க மாடாமோ என்னுந் தமிழ் மறைச் செய்யுளும் எழுந்தன. இங்ஙனம் ஒன்றாய் நிற்பினும் இறைவன் இறைவனே, உலகம் உலகமே; உலக மிறைவனாகாது, இறைவன் உலகமுமாய் அவற்றின் வேறுமாய் நிற்பன். உலகம் தானே இயங்காது இறைவன் இயக்கினால் இயங்கும்; இறைவன் தானேயும் இயங்குவன் பிறவற்றையும் இயக்குவன். இங்ஙனமெல்லாம் ஒற்றுமை பூண்டு நிற்பினும் அவன் அதனாற் சிறிதும் வேற்றுமைப் படுவானல்லன். அது `நறுமலரெழுதரு நாற்றம்போல் எனும் உவமையால் விளக்கப்பட்டது. மலர் முகையாய் இருந்துழி அதனுள் அருவாய் இருந்த மணம் அது நாள் முதிர்ந்து மலர்ந்த விடத்து அதனுள்ளும் புறம்புமாய்ப் புலப்பட்டு நிறைந்து தான் அம்மலரைப் பற்றிக் கொண்டு நிற்பினும், தான் அம்மலராற் பற்றப்படாது அதனையுங் கடந்து பரம்பித் தன் பரப்பினுள்ளே அம்மலரையும் ஒரு பால்அடக்கிக் கொண்டு வேற்றுமையும் வேற்றுமை யின்மையு மாகிய ஓர் ஒற்றுமை இலக்கணத்தோடு அதிற் சிறிதுந் தாக்கின்றி நிற்றல்போல, இறைவன் ஆணவமல வழிப்பட்டுக் குவிந்து நின்ற உயிரினுள்ளே அருவாய் இருந்து பின் அம்மலத்தடை நீங்கி அது விரிந்தவழி அம்முழுமுதற் பேரறிவு அதன் உள்ளும் புறம்புமாய்ப் புலப்பட்டு விளங்கி, அத்தூயவுயிரை அங்ஙனம் பற்றி நிற்பினும் தான் அதனாற் சிறிதும் பற்றப்படாது அதனையுங் கடந்து பரம்பித் தனது அருள்வெளிப் பரப்பிலே அவ்வுயிரையும் ஒருபால் அடக்கிக் கொண்டு வேறுமாய் ஒன்றுமாய் வேறல்லா வியைபுற்று அதில் சிறிதுந் தாக்கின்றி நிற்கு மென்க. இங்ஙனம் அறிவுப் பொருள் அறிவில் பொருள் என்னும் இருவகை உலகத்தினும் வேற்றுமை யின்றி அருவுருவாய்த் தன்னியல்பிற் சிறிதுந் திரிவின்றித் தானேயாய் நிற்கும் இறைவனியல்பை இவ்வுண்மைத் திருமொழி `உற்ற வாக்கையினுறுபொருள் நறுமலரெழுதரு நாற்றம்போற், பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் என்று இனிது விளக்கினமையும், இவ்வுண்மையினை ஆசிரியர் நச்சினார்க் கினியர் காட்டினமையும் பெரிதும் நினைவு கூரற்பாலனவாம்; இவ்வுண்மை, பூவினிற் கந்தம் பொருந்திய வாறு போல் சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது ஓவியம் போல வுணர்ந்தறி வாளர்க்கு நாவி யணைந்த நடுத்தறி யாமே என்ற திருமொழியானும் விளக்கப்பட்டமை காண்க. இங்ஙனம் கந்தழி, பிரமம் என்னும் சொற்களால் எடுத்தோதப்பட்ட சிவம் என்னும் எப்பொருளுங் கடந்த பெரும்பொருளை ஆராய்ந்த நேரமே சைவ சமயம் என்று உணரற்பாற்று, அற்றேல் அப்பெரும் பொருளை யாதானு மொரு பெயரால் வழங்கியிடாமற் சிவம் என்னுஞ் சிறப்புப் பெயரால் வழங்குவித்தல் என்னை யெனின்; வேதாகம உபநிடத ஷடதரிசன புராணேதிகாசமாகிய எல்லாம் சிவ என்னும் இரண்டழுத்திலே அடங்குகின்றன, யாங்ஙன மெனின், இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்னும் வேதம் நான்கில் அதர்வணம் என்பது முதன் மூன்றின் மந்திரத் தொகுப்பேயாதலால் அஃதவற்றில் அடங்கப் பெறும், ஆகலினாற்றான் அமரநிகண்டுடையார் அம்மூன்ற னையுஞ் சுட்டி வேதங்கள் `த்ரயீ என வழங்கப்படு மென்றனர், அம் மூன்று வேதங்களுள் நடுநின்ற எசுர் தய யஜூரேவசிர என்றமையால், ஏனையிரண்டிற்கும் முகம்போல நிற்குஞ் சிறப்பு வாய்ந்ததாம். இது மந்திர மெனவும் பிராமணம் எனவும்இருவேறு பகுதியினதாய் விளங்கா நிற்கின்றது. இவற்றுள் மந்திரப் பகுதி மறித்தும் ஏழு காண்டங் களாகப் பகுக்கப்பட்டுச் சம்மிதாகாண்டம் என்னும் பெயருடைத்தாய்ச் சிறந்து விளங்குவதாம், இனி இச் சம்மிதாகாண்டம் ஏழினுள்ளும் நடுக்காண்டமே பெரிதுஞ் சிறப்புடைத்து, இனி இந்நடுக்காண்டமும் ஏழு சங்கிதை களாக வகுக்கப்பட்டுள்ளது, இவற்றுள்ளும் நடுநின்ற சங்கிதையுள் திருவுருத்திரத்தின் கண்ணே சதருத்ரியம் விளங்கா நிற்ப, அச் சதருத்ரீயத்தின் இடையிலே விளங்கும் `ekátha’ என்னும் ஐந்தெழுத்துக்களின் நடுவில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் `சிவ என்னும் மொழியால் வேதமும் வேதத்தைச் சார்ந்த கலைகளும் ஒளிர்ந்து கொண்டிருக் கின்றன, ஆகையால், இச் சிவவென்னும் மொழி பிரம மென்னும் மொழியாற் குறிக்கப்படும் பெரும்பொருட்குச் சிறப்புப் பெயராம் என்பது தெளியப்படும், இன்னும் இதனை விரிப்பிற் பெருகுமாதலால் இத்துணையின் அமைந்து, எடுத்த பொருண்மேற் றொடர்ந்து செல்வாம். இவ்வாறு சைவம் என்னும் மெய்ப்பொருளை ஆராய்ந்த நிலை எப்பொருளுங் கடந்த பெரும்பொருட் சிவத்தில் தலைப்பட்டு நிற்குங் கழிபெருஞ் சிறப்புணர்ந்தன்றே தாயுமான சுவாமிகள், சைவசமயமே சமயம் என்று கட்டளையிட்டருளி னார். பிற சான்றோரும் சைவத்தின்மேற் சமயம் வேறிலை என்று கூறினார். மற்றைச் சமயங்களெல்லாம் சைவத் திற்குரிய படிவரிகளாய், நம்மாற் பாராட்டப்படுந் தன்மையவாய் நிற்றலின் அவை சைவசமயிகளான நம்ம னோராற் புறம்பழிக் கற்பாலன வல்லவாம். வேத மென்னும் மரத்தில் இலையும், தளிரும், அரும்பும், மலரும், பிஞ்சும், காயுமாய் மற்றைச் சமயங்களெல்லாம் நிற்ப, வேதாந்தம் என்பது அதன் முடிவிற் பழமாய்ப் பழுத்துத் தானான தன்மையாய் நிற்ப, அதனைப் பிழிந்து எடுத்த சைவ சித்தாந்தம் தானென்னுந் தன்மையாய் நிற்குமென்ப தனைக் குமர குருபர சுவாமிகள் நீயே, வேதமென்னும் பாதவம் வளர்த் தனை என்பதனால் நன்றருளிச் செய்தனர். இங்ஙனம் சைவ சமயத்தினால் அறிவுறுத்தப்படும் சிவம் எல்லாப் பொருளுங் கடந்ததாய் உண்மையறிவின்ப வடிவாய் எல்லா ஆற்றலுமுடையதாய் எல்லாவற்றையு மறிவதாய்ப் பிறப்பிறப்புக்களிற் படாத தூய அருண் மேனியுமுடைய தாய்த் திகழ்வதென்று அறிமின்கள்! இவ்விலக்கணங்க ளெல்லாம் ஒருங்குடைய அப்பெரும் பொருளைச் சிவம் என்றழைக்க நுங்கட்கு விருப்பமில்லை யாயின் நாராயணன் என்றழை மின்கள்! பிரமனென்றழை மின்கள்! புத்தனென் றழைமின்கள்! அருகனென்ற ழைமின்கள்! எப்பெயரிட்டு எவ்வெவ்வாறு அழைப்பினும் அப்பெயரெல்லாம் அவற்குப் பொருந்தும். வெறும் பெயரிலே நுங்கட்குப் போர் நிகழ வேண்டாம். எங்கும் உள்ள கடவுள் ஒருவனே. இது தெருட்டுதற்கே திருமூலரும் பட்டினத்தடிகளும், ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்ம்மினே என்றும், ஒன்றென் றிருதெய்வ முண்டென் றிருவுயர் செல்வமெல்லாம் அன்றென் றிருபசித் தோர்முகம் பார்நல் லறமுநட்பும் நன்றென் றிருநடு நீங்காம லேநமக் கிட்டபடி என்றென் றிருமன மேயுனக் கோருப தேசமிதே என்றும் அருளிச் செய்த உண்மைகளைக் கடைப்பிடித்து ஒழுகுமின்கள்! நம்முடைய நாடு மத ஒற்றுமையின்மையால் நாளுக்குநாள் மழுக்கம் அடைகின்றது, சைவத்தின் முடிபுகள் எல்லாச் சமயங்களுக்கும் பொருத்தமாவனவாம், இதனை நீங்கள் செவ்விதின் மனம் பொருத்தி எல்லாரும் ஒற்றுமை யாய் வாழ்மின்கள்! இத்தன்மையவான மத ஒற்றுமையும் அருள் ஒழுக்கமும் சைவத்தின் சிறப்பான உண்மைகளாம் என்பதனையே சைவ சமயாசிரியருள் முதல்வரான திருஞானசம்பந்தப் பெரு மானும், சைவ சித்தாந்த ஆசிரியருள் முதல்வரான மெய் கண்ட தேவரும் அறிவுறுத்தினர்கள், இரு சைவ விளக்கங் களான இவ் வாசிரியன்மார் இருவருள் ஞான சம்பந்தப் பெருமான் இற்றைக்கு ஆயிரத்து இரு நூற்றைம்பது ஆண்டுகளின் முன்னே சீர்காழி என்னும் ஊரிலே தோன்றியும், மெய்கண்ட தேவர் இற்றைக்கு அறுநூற்றைம் பது ஆண்டுகளின் முன்னே கம்பரை வைத்துப் பாதுகாத்து இராமாவதாரம் பாடுவித்த வெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப பிள்ளை மகளார் மணிவயிற்றிற் றோன்றித் திருவெண்ணெய் நல்லூரில் அமர்ந்தும் சைவத்தின் அரிய பெரிய உண்மைகளை எல்லா மக்களும் உணர்ந்து உய்யும்படி காட்டி நந்தாமணி விளக்கங்களாய்த் திகழ்ந்தனர். ஞாயிறு, திங்கள், தீ என்னும் மூன்று விளக்கங்களும் புறத்தே உலகத்திற் பரவிய இருளை விலக்கி எம்முடைய ஊனக் கண்களை மட்டும் விளக்குகின்றன. மற்று இந்நந் தாமணி விளக்கங்களான ஆசிரியன்மார் இருவருமே எம் அகத்தே பரவிய ஆணவவல்லிருளை ஓட்டி எம் ஞானக் கண்களைத் திறப்பித்துச் சிவபெருமான் திருவருட் பேற்றைப் பெறுவிக்கின்றனர், ஞானசம்பந்தப் பெருமானும் மூன்றாம் ஆண்டிலே சிவனருள் நிரம்பப் பெற்றார். மெய்கண்ட தேவரும் மூன்றாம் ஆண்டிலே சிவனருள் நிரம்பப் பெற்றார், ஞானசம்பந்தர் தம் மூன்றாம் ஆண்டிலேயே வழுத்துரை வடிவான திருப்பதிகங்கள் கட்டளையிட்டுமறைவழியை விளக்கியருளினார். மெய்கண்ட தேவர் தாமும் மூன்றாம் ஆண்டிலே எழுத்தியல் வடிவான சிவஞானபோதங் கட்டளையிட்டு ஆகமவழியை விளக்கி யருளினார். மறைமொழி சூத்திரம் போலப் பொருட் சுருக்க முடைத் தாய்ப் பொதுவுற நிற்பது; ஆகமம் அச்சூத்திரத்திற் குரை போலப் பொருட் பெருக்க முடைத்தாய்ச் சிறந்து நிற்பது. இது, வேதமொடாகமம் என்னுந் திருமந்திரத்தானும் உணரப்படும், அவையிவ்வா றிரண்டாயிருப்பினும் பொருண் முடிபால் ஒன்றேயாமென்பது சைவ பாடியகாரரான நீலகண்டர் வயந்து வேத சிவாகமயோர்ப் பேதம் என்றுரைத்தமையால் விளங்கும். இது போல ஞான சம்பந்தர் திருமொழியான மறையும், மெய்கண்ட தேவர் திருமொழியான சிவஞான போதமும் பொருளறிவுறுக்கு முறையால் இரு திறப்படினும் பொருண்முறையால் ஒன்றே யாமென்பது பெறப்படுமென்க. அது நிற்க, அவ்விருவருங் குழந்தை களாயிருந்த பொழுதிலே தமிழ்மறையுந் தமிழ் ஆகமமும் தோன்றிய முறைமை நனிமறைந்த பொருள்களை உள்ளடக்கி நிற்கின்றது. காம, வெகுளி, மயக்க மென்னும் மும்மல வலியுஞ் சிறிதுந் தோன்றப் பெறாத காலங் குழந்தைப் பருவமேயாம். அப்பருவமொன்றே மிகவுந் தூயவான வேத சிவாகமங்கள் தோன்றுதற்குரிய தாகலின் அப் பருவத்திலே தான் அவர்க்கு அவை தோன்றுவவாயின. இன்னும் அவர்க்கு மூன்றாம் ஆண்டிலே அவை தோன்றின என்பதனால் பதி, பசு, பாசம் என்னும் மூன்றிற் பசுபாசநிலை கழன்று பதி நிலையில் நின்ற பொழுது அப்பதிமொழிகள் தோன்றினவென்றும், அவர் அப்போது சத்துவம், இராசதம், தாமதம் என்னும் மூன்றியல்புகளிற் றாமத இராசதங்களைக் கடந்து தூய சத்துவத்திலே நின்றனரென்றும், தூயது, தூவாதது இரண்டுங் கலந்தது என்னும் மும்மாயையுட் பின்னிரண்டனையுங் கழித்துத் தூயமாயையிலே நின்றன ரென்றும் அறிதல் வேண்டும். இன்னும் ஞானசம்பந்தப் பிள்ளையார்க்கு இறைவன் அம்மையப்பராய் எதிர்தோன்றி அவரை அழுகை தீர்ப்ப அம்மையார் அருமைத் திருமுலைப் பாலைப் பொற் கிண்ணத்திற் பிள்ளையார்க்கு ஊட்டினார் என்பதனால், அம்மையப்பரை ஒருங்கு நினைக்கும் உறைப்பினாலே பாம்பு சுழன்றாப்போலச் சுரித்துக் கொண்டிருக்கின்ற தூயமாயை யென்னுங் குண்டலிசத்தியானது சிவவழலாற் கண்விழித்து நாதத்தின் மேற்கண்ணதான அமிழ்தத்தைச் சென்று பற்ற அப்பொழுது ஒழுகும் அவ்வமிழ்த ஊற்றைப் பருகித் தூய சிவத்திலே சுட்டுணர்வற்ற நிலைகூடி நிற்குமாறு உணர்த்தப் பட்டபடியாம், எதிர்தோன்றிய அம்மையப்பரே உள்ளம் ஒருங்கி நினைக்கும் சக்தி சிவமாம். அவ்வுறைப்பின்கட் டோன்றும் சிவவனலே பொன்னொளியாம்; பொன் தீயின் கூறென்பது அளவைநூற் புலவரான அன்னம் பட்டர்க்கும் உடன்பாடு. அப்பொன்னொளியோடு கூடிய கிண்ணத்தின் வட்டவாய்வடிவே சுழன்றிருக்குங் குண்டலி யாற்றலாம். அக்கிண்ணத்திற் கறந்தூட்டப்பட்ட திரு முலைப்பாலே நாதத்தின் மேற்கண்ணதான திங்கள் மண்டிலத்தினின்றுருகி ஒழுகும் பேரின்ப அமிழ்த ஊற்றாம். அவ்வமிழ்த ஊற்றைப் பருகி ஒருபது நாடியினும் நிறைக்கவே ஒரு பஃதின்னோசை களுங் கேட்குமாதலின் அவ்வொரு பஃதின்னொலி விளக்கமே ஞான சம்பந்தப் பிள்ளையார் அருமைத் திருவாய் மலர்ந்த திருப்பதிகங்களாம். தூவாமாயையிற் றோன்றும் தூவா எழுத்தொலி வடிவான ஏனையோர் மொழிகள் போலாது, ஞானசம்பந்தப் பிள்ளையார் திருமொழிகள் பரவயிந்த வத்தின் கண்ணே தோன்றிய ஓங்கார விளக்கமாகும். இதனை அறிவுறுத்தற் பொருட்டே பிள்ளையார் தம்முடைய முதற்பதிகத்தின் முதலிலே தோடுடைய செவியன் என்று கட்டளையிட்டு முதற்கண்ணே ஓங்காரத்தை நிறுத்தி யருளினார், இவ்வாறே மெய்கண்டதேவர் தம் சிவஞான போதத் திருமொழியுஞ் சுத்தவயிந்தவத்திற் றோன்றிய பரநாத வொலிகளாம். இன்னும் இவற்றின் நுட்பங்களெல்லாம் நல்லாசிரியனை யடைந்து அவனறிவுறுக்கும் அறிவுரை வாயிலான் அறியற்பாலன வாகலின் அவற்றையினி இங்கு விரியாது விடுகின்றாம். இதுகாறுங் கூறியவாற்றால் முதலிற் சைவமென்பது யாது என்று ஆராயப் புகும்வழி அவ்வறிவு ஒழிந்துபோகும் பொருள் போலாது அழியாப் பொருளாய் எல்லா உயிர்கள் மாட்டுந் தொன்றுதொட்டே உள்ளத்திற் பதிந்திருக்குமா மென்பதும், சமயம் என்பது பொழுது, காலம், அவசரம் என்று பொருள் படுவதாகலிற் காலத்தினாலும் இடத்தி னாலும் வரையறுக்கப் படுவதால் சிறுபான்மை அறிவு விளக்கமுடைய உயிருக்கன்றி முற்றறிவு விளக்கமுடைய முதல்வற்கு இல்லையாமென்பதும், உயிரும் இறையும் என இரண்டில்லை முழுமுதற் பொருளே ஐம்பொறி அசைவால் உயிர்போலத் தோன்றுகின்றதென்று கூறும் ஏகான்ம வாதவுரை உயிரின் அறிவியக்கமின்றி ஐம்பொறிகள் இயங்கமாட்டா என்று காட்டப்படுவதனால் மறுக்கப்படு தலின் அது பொருந்தாதாமென்பதும், இங்ஙனம் உயிர் ஐம்பொறிகளின் வாயிலாய்ப் புலன்களை உணரும் காலங்களெல்லாம் அதற்குத் தனித்தனியே ஒவ்வொரு பொழுதுகளாமென்பதும், அங்ஙனம் உணரும் வழியும் உயிர்க்கு யாதானுமொரு பொறிவழிவரும் இன்பத்திலேயே விருப்பம் மிக்குப்படுமென்பதும், அங்ஙனமெல்லாம் மிக்குச் செல்லுகின்ற உயிரின் பொழுது வேறுபாடுகளைச் சமயங் கள் என்று வழங்காமை அவை உடம்போடு உடன் அழித லினாலேயா மென்பதும், உண்முகமாகச் செல்லும் அறிவாராய்ச்சியே சமயவாதற் குரித்தா மென்பதும், அவ்வாறு செய்யப்படும் உண்முக அறிவாராய்ச்சியும் பல திறப்படுகின்றன வென்பதும், அவையே உலகாயதம் முதலிய பெயர்களான் வழங்கப்படலாயின வென்பதும், அவை யொவ்வொன்றுங் பயன்படுதலுடையனவே யல்லது பயனற்றனவாகா வென்பதும், இதுவே முடிநிலையிலுள்ள சைவத்தின் பொதுநிலை உண்மையா மென்பதும், இனி அம்முடிநிலைக்கண் உள்ளார்க்குக் கீழ்நிலைகளினுள்ளன போலியாகத் தோன்றுதல் குற்றமாகாதென்பதும், இனிச் சைவமென்பது சிவத்தைப் பொருளாக உடையதென்பதும், சிவமென்பது தொல்காப்பியர், நச்சினார்க்கினியர், மணி வாசகப் பெருமான் முதலிய பேரறிவாளரால் விளக்கப் பட்ட படி எப்பொருளுங் கடந்த அருவப் பொருளா மென்பதும், இத்தகைய முழுமுதற் பொருளை ஆராய்ந்தறிந்த நிலையே சைவ சமயமா மென்பதும், அம்முழுமுதற் பொருளைச் சிவம் என்று வழங்குதலே பண்டை மறை முதலான தொன்னூற் கருத்தா மென்பதும், இப்பெற்றிய தான அம்முதற் கடவுளுண்மையை ஒரோ ஒருகால் வேறு வேறு பெயரிட்டு வழங்கினும் அதுசைவத்திற்கு இழுக்கா வதில்லை யென்பதும், இங்ஙனம் பொதுநிலை யுண்மையும் அருளறமும் விளக்க வந்த இரண்டு சைவ விளக்கங்கள் திருஞானசம்பந்தப் பெருமானும் மெய்கண்ட தேவருமாவ ரென்பதும், இவர் இருவரும் வியத்தகும் அருட்பிறப்பின ராம் என்பதற்கு அவர் வரலாறுகளிலுள்ள உட்பொருள்களே சான்றாமென்பதும் இதன் கண்ணே தொகுக்கப் பட்டன. அடிக்குறிப்புகள் 1. ஈசாவாசியோப நிடதம் 4, 2. மண் புனல் அனல் கால் விசும்பு என்பவற்றைப் பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாயம் என்றும், மெய் வாய் கண் மூக்குச் செவி என்பவற்றைத் தொக்கு சிங்குவை சட்சு ஆக்கிராணம் சோத்திரம் என்றும், சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பவற்றை ரசம் ரூபம் பரிசம் சத்தம் கந்தம் என்றும், கை கால் வாய் எருவாய் கருவாய் என்பவற்றைப் பாணி பாதம் வாக்கு பாயுரு உபத்தம் என்றும்; மனம் அறிவு நினைவு முனைப்பு என்பவற்றை மன புத்தி சித்தம் அகங்காரம் என்றும், காலம் பிறழா நிகழ்ச்சி கலை நினைப்பு விருப்பு மகன் மாயை என்பவற்றைக் காலம் நியதி கலை வித்தை அராகம் புருடன் மாயை என்றும், தூயநினைவு தலைமை அருள்நிலை அன்னை அத்தன் என்பவற்றைச் சுத்தவித்தை ஈசுரம் சாதாக்கியம் சத்திசிவம் என்றும் வடநூலார் வழங்குப. 7. திருவுருவ வழிபாடு அறிவிலுருவமாகக் காணப்படும் இப்பருப்பொரு ளுலகம் போற் காணப்படுவது மன்றாய், அறிவிலருவப் பொருள்களாகிய வளியும் வானும்போலுணர்ந்துரைக்கப் படுவது மன்றாய், அறிவுள்ள உயிர்ப்பொருள்போலறிந் துணரப்படுவதுமன்றாய்க், காண்பதற் கெல்லாம் அப்பாலாய்க் கேட்பதற்கெல்லாம் அப்புறமாய், உரையளவு சென்று முடிவிடங் கடந்ததாய் மனவுணர்வு சென்று பற்றுதற்கு ஏலாதாய், அறிவினுளறிவாய், உயிரினுள் உள்ளு யிராய், எல்லா வுலகங்களும் எல்லா உயிர்களும் தனது அருள் வெளிப்பரப்பின் கண்ணே மடங்கி யடங்கிக் கிடப்ப அவற்றின்மேல் விரிந்து சென்று முடிவிட மறியப் படாத பெரும் பரப்புடையதாய், அறிவும் இன்பமுமாம் வடிவ வுண்மைப் பொருளாய், எல்லா ஆற்றலும் உடையதாய்ப் பேரின்பம் நிரம்பித் ததும்பும் பெருங்கடலாய்ப் பேரருட் களஞ்சியமாய் விளங்கும் முழுமுதற் கடவுளைச் சிறுகிய அறிவுஞ் சிறுகிய தொழிலும் சிறுகி யறிந்த தனையும் மறந்து மறந்தறிதலும்மயங்கி யறிதலுமுடைய சிற்றுயிர்கள் உணர்ந்து வழிபடுதல் கூடாமையால் அருட்பெருங் கடலாகிய அவ்விறைவன் தன்னை யவ்வுயிர்களுணர்ந்து வழி பட்டு உய்யும் பொருட்டு ஒரோரு காலங் களிலோ ரோரிடங்களில் ஓரோ ரன்பர்க்குக் கன்றை நினைந்துவரும் புனிற்றா போலவும், விறகின்கட் பிறந்த தீப்போலவும், மோரின்கட் டிரண்ட வெண்ணெய் போலவும், வித்தின் கட் பிழிந்தெடுத்த எண்ணெய் போலவும் வெளிப்பட்டு அவர்க்கு அருள் செய்த அருட்டிருக் கோலங்களை மெய் யன்புடையராகி மன வொருமைப் பாடு கொண்டு நினைந்து நாவுரை குழறக் கண்ணீருங் கம்பலையுந் தங்குறிப்பின்றியே நிகழ வழிபட்டுச் சிற்றறிவுத்தன்மை விட்டுச் சிவவறிவுத் தன்மை பெற்று நலமுறுதற்கு வாயிலான நன்முறைதான் திருவுருவ வழிபாடாகும். இங்ஙனம் விறகின்கண் மறைந்து கிடந்த தீ அவ் விறகினை ஒன்றோடொன்று தேய்த்துக் கடைந்தவழி அதிற்றோன்றி நின்றவாறு போலவும், பாலின்கண் மறைந்து அளாவி நிறைந்த நெய் அதனைக் காய்ச்சிக் கடைந்தவழி யதன்கண் வெளிப்பட்டு நின்றவாறு போலவும், யாண்டும் பரந்து நிற்கும் இறைவன், உயிரினைக் கீழ்க்கோலாகவும் ஓங்காரவுணர்ச்சியை மேற் கோலாகவுங் கொண்டு அன்பென்னுங் கயிறுகட்டி யிழுத்துக் கடையவே வெளிப்பட்டுத் தோன்றிநின் றருள்புரிவனென்பது பற்றியே, விறகிற் றியினன் பாலிற் படுநெய்போன் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோனட் டுணர்வு கயிற்றினான் முறுக வாங்கிக் கடைய முன்னிற்குமே என்னுந் தேவாரத் திருப்பாட்டும், இந்திரந் துருக வென்மனத் துள்ளே யெழுகின்ற சோதியே யிமையோர் சிரந்தனிற் பொலியுங் கமலச் சேவடியாய் திருப்பெருந் துறையுறை சிவனே நிரந்த வாகாய நீர்நிலந்தீகா லாயவை யல்லையா யாங்கே கரந்த தோருருவே களித்தன னுன்னைக் கண்ணுறக் கண்டுகொண் டின்றே எனவும், சோதியாய்த் தோன்று முருவமே யருவாமொருவனே சொல்லுதற்கரிய வாதியே எனவும் போந்த திருவாசகத் திருமொழியும் நிறுத்திடு நினைத்தமேனி நின்மல னருளினாலே என்னுஞ் சிவஞானசித்தித் திருப்பாட்டும், ஆத்மாநம் அரணிம் க்ருத்வா ப்ரணவஞ் சோத்தராரணிம் ஜ்ஞாநநிர்மத நாப்யா ஸாத் பாசந்தஹதி பண்டித என்னுங் கைவல்லியோபநிடதத் திருமொழியும் வதேஹமரணிம் க்ருத்வா ப்ரணவஞ் சோத்ராரணிம் த்யாநநிர்மத நாப்யா ஸாத் தேவம் பச்யேந் நிகூடவத் திலேஷூ தைலம் ததிநீவ ஸர்பிராப ரோத வரணீஷூ சாக்நி: ஏவ மாத்மாத்ம நிஜாயதே ஸௌஸத்யே நைநம் தபஸா யோது பச்யதி ஸர்வவியாபிந மாத்மாநம் க்ஷீரே ஸர்பி ரிவார்பிதம் என்னுஞ் சுவேதாசுவதரோபநிடதத் திருமொழியும் எழுந்தன. இங்ஙனங் காணவுங் கருதவும் வாராத முழுமுதற் பெருங்கடவுளைக் காணவுங் கருதவும் எளிதாகிய உருவத் திருமேனியிற்கொண்டு வழிபடுந் திருவுருவ வழிபாட்டின் இயல்பு அறியமாட்டாத வேறு சமயத்தார் சிலர், இந்துக்கள் இழிந்ததாகிய விக்கிரகாராதனை செய்து இறைவனுடைய பெருஞ்சினத்துக்கு ஆளாகின்றனர் என்று இழித்துச் சொல்லா நிற்பர். ரோம், கிரீசு, எகிப்து முதலிய நாடுகளி லுள்ளவர்கள் செய்யும் விக்கிரகாராதனை போல்வதன்றி இந்நாவலந்தீவின் கண் உள்ள நன்மக்கள் செய்து போதரும் திருவுருவ வழிபாடு, ஆழ்ந்த கருத்துடையதாய் முதல்வன் ஓரோர் அன்பர் பொருட்டு ஓரொரு காலங்களில் மேற்கொண்டு வந்த அருட்டிருவுருவ வழிபாடாகலின், அது மெய்யன்புடையார் மெய்ம்மையான் வழிபடுதற்குரிய மேம்பாடுடைத்தாம். பிற நாடுகளிலுள்ள மக்கள் இறைவன் அங்ஙனம் திருமேனி கொண்டு அருள்செய்யுந் திருக்கோலங் களை ஒரு காலத்துங் கண்டறியாமையின் அவர் தாந்தாம் அறிந்தவாறே ஒவ்வொரு சித்திரப்பாவைகளை அமைத்துக் கொண்டும். பூனை, பாம்பு, சுண்டெலி, முதலை முதலிய உயிர்களின் வடிவங்களை நிறுத்திக் கொண்டும் வழிபட்டு அவ் அறிவில் உருவப் பொருள்களின்கண் அன்புடையராய் இறைவனை யறிந்து வழிபடுதற்குரிய நல்வினையாளராய் வாழுவாராயினர். அப்பிற நாடுகளினும் ஒவ்வொரு காலங்களில் அபரஞானப் பேறு கைவந்தவர்களாகிய தீர்க்கதரிசிமார் சிலர் தோன்றி ஆங்காங்குள்ள மக்கள் உய்யும் பொருட்டாக நல்லொழுக்க முறைகளையும் அபரஞான வுண்மைகளையும் அறிவுறுத்து வந்தார்களென்பதை அவரவர் தேசசரிதங் களானும் சமய நூல்களானும் அறிந்துள்ளோமாயினும் அத்தீர்க்கதரிசிமாரெல்லாம் இறைவனுடைய திருக்கோலங் களை நேரே கண்டு வழிபடுதற்குரிய நல்வினைப்பெறும் பரஞான முதிர்ச்சியும் உடையராகாமையால், அவர் தமக்கு அவ்விறைவன் வான்முகிலில் மறைந்துநின் றருள் செய்தன னென்றும், அடவிகளிலும் மலைக்குகைகளிலும் தாம் இயங்கிக் கொண்டிருந்த காலங்களில் இறைவன் தம்மோடு உரையாடிய ஞானஒலி கேட்டாரென்றும் அவர் சமய நூல்களிற் சொல்லப்பட்டதன்றி, அவ்விறைவனே யுருவங் கொண்டு அவர் கண்ணெதிரே தோன்றி யருள் செய்தா னென்றும் அவ்வாறு அருள் செய்த முதல்வன் திருவடை யாளங்களிவை என்றுங் குறிப்பிடப்படாமையான் அவரெல்லாம் இறைவன்றன் அருட்கோலங்களைக் கண்டு வழிபடும் முறைமை யறியாராயினர். அங்ஙனம் அறிய மாட்டாத அபரஞான தீர்க்கதரிசிமார் கூறிய அறிவுரை களைக் கடைப்பிடித்தொழுகிய மக்கள் அவர் கூறிய நன்னெறிப் பொருள்களை மனம் பொருந்த அமைத்து அவற்றின் வழிநடந்து, இறைவனை உண்மையான ஒரு திருவுருவத்தின் வைத்து வழிபடும் முறைமை தமக்கு விளங்காமையால் தமக்கு விளங்கியவாறெல்லாம் வேறு புறவுருவங்களை அவ் விறைவன் அருளுருவங்களாகப் பிறழக் கொண்டு அவை தம்மையே வழிபடுகின்றனர், இனி நாவலந் தீவினராகிய நன்மக்களோ இறைவன் ஒவ்வோர் அன்பர் பொருட்டு ஒவ்வொரு காலங்களிற் கொண்ட அருட்கோலங்களாகிய சதாசிவன், மகேசுரன், அம்மை யப்பர், காளி, துர்க்கை, உமை, பிள்ளையார், முருகன், வைரவன் முதலியவற்றையே உண்மையான் வழி படுகின்றனர். அங்ஙனம் வழிபடப்படுவன வாகிய அருட்கோலங்கள் தாமும் மெய்யன்புடையார்க்கன்றி யேனையோர்க்கு எளிவந்து விளங்குவன அல்லவாகலான், அவை வெளிவந்து அருள் செய்யப்பெற்ற மெய்யன்பர் தாங்கண்டவாறே அவ்வருட்கோல அடையாளங்களை அன்புததும்பி வழிய அறிவு வடிவாய் விளங்குந் தம் திருமொழிகளால் வகுத்துக் கூறிய முறைபற்றி மக்க ளெல்லாருந் தாமும் உய்யுநெறி தேடல் வேண்டிக் கல்லி னாலுஞ் செம்பினாலுந் திருவுருவங்கள் அமைத்து அவற்றை மறைபொருள் நுட்பங்களொடு கட்டப்பட்ட திருக்கோயில் களில் எழுந்தருளச் செய்து வழிபாடாற்றி வருகின்றனர். இனி, இவ்வாறு இவர் வழிபடும்போதெல்ம் கல்லினாலுஞ் செம்பினாலும் அமைக்கப் பட்ட பருப் பொருள் வடிவான அத்திருவுருவங்கள், அவ்வடையாளங் களையுடைய அறிவுப்பொருள் வடிவான அருட்கோலங் களை நினைவூட்டி, அவ்வருட்கோல வழிபாட்டின்கண் அவர் அறிவைப் பதியச் செய்து அவருக்கு உறுதி தருதலான் அது திருவுருவ வழிபாடு என்று வழங்கப்படுகின்றது. இனிப் பிறநாடுகளிலுள்ள மக்களுக்கு உருவ வருட்கோலங்கொண்டு இறைவன் அருள் செய்த தில்லையென்பது மேலே இனிதெடுத்து விளக்கிக் காட்டினேமாதலால், அவர் தமக்குத் தோன்றியவாறெல்லாங் கற்பித்துக் கொண்ட பருப்பொருள் வடிவங்கள் தம்மை முதலாகவுடைய அறிவுப் பொருளுருவ வருட்கோலங்களை அவர்க்கு நினைவிலெழுப்பவும் அவரறிவை அவற்றின்கட் பதியுமாறு செய்யவும் மாட்டா தொழியும். ஒழியவே. அவர் கல்லானுஞ் செம்பானுமியற்றிய வடிவங்களிற் செய்யும் வழிபாடெல்லாம் அவ்வடிவங்களைக் கடந்து அறிவுருவ இறைவன் அருட்கோலத்தின்கட் செல்லா வாய் மடங்கி அப்பருப்பொருள் வடிவங்களின் கண்ணேயே செல்லுதலால் அவை விக்கிரகாராதனை என்று வழங்கப் படுகின்றன. இங்ஙனம் இந்நாவலந் தீவினராகிய நன்மக்கள் செய்து போதரும் திருவுருவ வழிபாடாகிய கடவுள் வழிபாடும், புறநாடுகளிலுள்ளவர்களாகிய மக்கள் மேற் கொண் டொழுகும் விக்கிரகாராதனையாகிய விக்கிரக வழிபாடுந் தம்முள் வேறுபாடுடையவாதல் உணராது இரண் டனையும் ஒன்றுபடுத்தி அவ்வாற்றால் நம்மனோர் மேற்கொண்டு செய்யுந் திருவுருவ வழிபாடாகிய நன்முறையை இகழுதல் பொருந்தாது. மேலும், நாவலந் தீவினராகிய நம்மனோர் பகலவனை வழிபடும்போது அவனை ஓருடம்பாகவும், பர்க்கன் என்னும் பெயரோடு கூடிய இறைவனை அவ்வுடம்பினுள் ஓர் உயிராகவுங்கொண்டு தொழுவர். பிறர் அங்ஙனங் கொள்ள அறியாமற் பகலவனையே கடவுளாகக் கொண்டு வணங்குவர். நம்மனோர் நிலவினை வழிபடும் போது அதனை ஓர் உடம்பாகவும், சோமன் என்னும் பெயரோடு கூடிய இறைவனை அதனுட் பரம்பிய முழுமுதற் பொருளாக வுங் கொண்டு வழிபடுவர். பிறரோ நிலவையே கடவுளாகத் துணிந்து தொழுவர். நம்மனோர் இவ்வூனுடம்பின்கண் ஓருயிர் இருப்பதுபோல அவ்வுயிரின் கண்ணும் பசுபதி என்னும் முதல்வன் உளனென்று கொண்டு வணங்குவர். பிறரோ அவ்வுயிரையே கடவுளெனத் துணிந்து வழி படுவர்.இவ்வாறே மண், புனல், அனல், கால், வான் என்னும் ஐம்பெரும் பொருள்களையும் அவ்வைம் பெரும் பொருள் களின் தொகுதியாக விளங்கும் இவ்வுலகினையும் இறை வனுக்கு உடம்புகளாகத் துணிந்து அம்முறையால வற்றை வழிபடும் நன்மக்கள் வழிபாட்டினியல்பு உணராது, அவை தம்மையே கடவுளெனப் பிறழ உணர்ந்து வழிபாடு புரியும் ஏனையோ ரொடுங் கூட்டி அவரை யிகழ்வார் உண்மை யறியாதவ ராவரென் றொழிக. இது பற்றியன்றே ஆங்கில நாட்டிற் புகழ்பெற்று விளங்கிய மாக்மூலர்*1 `ஜர்மானிய தொழிற்சாலைச் சிதர்துண்டுகள் என்னும் முதற் புத்தக முகவுரையில், `நாவலந் தீவினரால் தழுவப் படும் விக்கிர காராதனையும் வேறே, ரோம் முதலிய நாடு களில் தழுவப் படும் விக்கிரகாராதனையும் வேறே, முன்னையதிற் கடவுளின் உடம்புகளாக விக்கிரங்கள் வணங்கப்படுகின்றன. பின்னையதில் விக்கிரகங்களே அவ்வாறு வணங்கப் படுகின்றன; இங்ஙனமாயின் இந்து மக்களை நாங் குறை கூறுதலென்னை? என்னும் பொருள் தருமாறு எழுதுவாரா யினர். இன்னும், அவர் கடைசியாக வெளியிட்ட தமது `இந்தியர் ஆறு தத்துவக் கொள்கைகள் என்னும் புத்தகத்தில் திவ்விய தாதத்தர் என்பவர் எழுதிய ஒன்றை அறிவதற்குச் சொற்களும் பொருள்களும் அடை யாளங்களாக இடர்ப்படுகின்றன: சொல் அடையாளங்கள் செவிணுயர்வுக்குக் கருவியாகின்றன; பொருள்கள் கண்ணறி விற்குக் கருவியாகின்றன. இவையே இவையிரண் டற்கும் வேற்றுமை, சொல் அடையாளங்களாகிய மொழிகளைப் பயன்படுத்தலில் எந்தச் சமயவாதியும் ஐயுறுதற்கு இடம் பெறாதபோது, இறைவனை வழிபடுதற்குக் கருவியாகிய பொருளடையாளங்களை ஐயுறுதல் என்னை? என்பதனை எடுத்துக் காட்டித் தம் துணிபு நிலையிட்டனர். இவ்வாறு உண்மையாக ஆராய்ந்து பார்க்க வல்லார்க்குச் சைவ நன்மக்கள் பண்டைக்காலந் தொட்டுக் கைக்கொண் டொழுகும் நன்முறையாகிய திருவுருவ வழிபாடு ஏனைச் சமயிகள் கொண்டு போற்றும் விக்கிரகாராதனை போல்வதன் றென்பதூஉம் அது பலவேறு வகைப்பட்ட உண்மை நுண் பொருட் பரப்பெல்லாந் தன்னகத்தடங்கக் கொண்டு இறைவனை எளிதிலுணர்ந்து வழிபட்டு உயிர்கள் வீடுபேற் றின்பம் பெறுதற்கு ஏதுவாகிய நிலையா மென்பதூஉம் இனிது விளங்கும். இனி, மேலே காட்டியவாறு ஏனைநாடுகளில் அபர ஞானப்பேறுற்றுத் தோன்றிய தீர்க்கதரிசிகளுக்கு முழு முதற்பெருங் கடவுள் உருவமாகத் தோன்றி அருள் செய்ய வில்லை என்றும், இந்நாவலந் தீவிலுள்ள திருத் தொண்டர் களுக்கு உருவ அருட்கோலங் கொண்டு எழுந்தருளி வந்து அருள் செய்தாரென்றுஞ் சொல்லிய பகுதியில் ஐயம் நிகழாமைப் பொருட்டு அதனை யீண்டெடுத்து விளக்கி ஒருசிறிது வலியுறுப்பாம். இனி, இறைவன் உருவவருட்கோலங் கொண்டு தமக்கு அருள்செய்த முறைமையினையும், அங்ஙனம் அருள் செய்யும் வழி இறைவன் கொண்ட திருவுருவ அடையாளங்களையுங் கண்டு அறிந்து அன்பு வெள்ளம் தம்மகம் நிறைந்து தளும்பி வழியப் பாட்டுக்களிலமைத்து வழிபட்ட திருத்தொண்டர் வரலாறுகளையும் ஆங்கில மொழியிற் பற்பல நாட்டு வரலாறுகளையும் ஒத்து நோக்கிப் பார்க்குஞ் சிறந்த புலவரும் பிறரும் உண்மையாமெனத் துணிந்து தழுவி யொழுகு கின்றனர். இறைவன் றமக்குச் செய்த அருண்முறையைத் தாமே தம் பாட்டுக்களில் வேறு ஏதொரு குறிப்புமின்றி அவ் விறைவனை வழிபடுதல் ஒன்றே குறித்து அமைத்துப் பாடுதலா லங்ஙனம் அவர் சொல்லுந் தம்முடைய வரலாற்றுக் குறிப்புகளை அப்புலவோர் உண்மையாமெனக் கொண்டு ஒழுகக் கடமைப்பட்டவராயினர். இனி, அவருள் ஒரு சாரார் இங்ஙனம் மெய்யன்புடைய திருத்தொண்டர் தாமே கண்டு கூறும்இறைவன் அருண் முறையைப் பொய்யென்று ஒழித்துவிடுதற்குக் கூடாமையால், அவ்வடியவர் கண்ட அவை யெல்லாம் உருவெளித் தோற்றங்க ளாவனவன்றிக் கடவுள் தாமே எழுந்தருளி வந்து அவர்க்கு அருள் செய்தனவாகாவெனவும் உரைத்து எதிர் வழக்குத் தொடுக்கின்றனர். அவர் சொல்லும் அவ்வுரு வெளித் தோற்றவியல்பை ஓர் எடுத்துக் காட்டின்கண் வைத்து விளக்கிக் காட்டுவாம்.இராமனுடைய வடிவ வழகைக் கண்டு விரும்பி அவனால் துன்புறுத்தப்பட்டுத் திரும்பிப் போகிய சூர்ப்பநகை தன் மூத்தோனாகிய இராவணனைக் கண்டு அவனுக்குச் சீதையின் பேரெழிலை விரித்து உரைப்ப, அதனைக் கேட்டு அவள்பாற் பெரிதும் விழைவு கொண்ட அவ் விராவணனுக்குத் திங்களைப் போற் றெளிந்து விளங்கு சீதையின் முகமும், அம்முகத்திற் குழைச்செவியளவுங் கிழித்துச் செல்லுங்கரிய பெரிய வரிகடை யொழுகு விழிகளும், முல்லை முகைபோற் குமிழ்த்த மூக்கும், பவளத்தை அறுத்துக் கடைந்து திரட்டி வைத்தாற் போலும் செவ்வாயும் அவ்வாயினகத்தே முத்து வரிசைபோல் திகழும் பற்களும், பளிங்குபோல் தெளிவாகிய கன்னங்களும், கரிந்த சுரிந்து நீண்டு கிடக்கும் மயிர்க்கற்றையும் பிற உறுப்புகளும் தன் விழியெதிரே தோன்றக் கண்டு மெய்ம்மறந்த களிப்புடைய னாகித் தன்னருகே நின்ற தங்கையை அழைத்து, `இதோ தோன்றும் இவள் தானோ சீதை என்பாள்? என்று வினாயினானென்றும். அதற்கு அவள், தான் இராமன்மேற் கழிபெருங் காதல் கொண்டிருந் தமையால் தன்னெதிரே தோன்றிய அவ்விராமனது உருவெளித் தோற்றத்தைக் கண்டு `செந்தாமரைக் கண்களும் செங்கனி வாயும் பரந்து திணிந்த மார்பும் முழங்கால் தடவுந் தடக்கை களும் உடைய இவனே அவ் விராமனென்பா னென்று மறுமொழி தந்தாளென்றும் இராமாயணங் கூறாநிற்கும். இவ்வாறு தோன்றிய உருவெளித் தோற்றங்கள் அவ்வவர் காதன் மிகுதியால் தோன்றியனவாகையால் அவை உண்மையாகவே வெளிப்பட்ட அருட்கோலங்களாக மாட்டா; இதுபோலவே, முழுமுதற்பெருங் கடவுளிடத் திற்றமக்கு நிரம்பிய அன்பின் பெருக்கால் அவ்வடியவர்தாம் கண்ட உருவெளித் தோற்றங்களை உண்மையா மெனக் கொண்டு தஞ்செய்யுட்களிற் அமைத்துப் பாடினாராகலான், அவர் கண்ட அத்தோற்றங்கள் இறைவன் கொண்ட அருட்கோலத் திருவுருவங்களாமென்று துணிந்துரைத்தல் யாங்ஙனமெனின், கண்ணுக்கு மட்டுமே தோன்றி ஏனைப் பொறிகளுக்குப் புலனாகாத தோற்றங்களாயின் அவை நீர் கூறுமாறு பொய்யாமொழிந்திடும். அவ்வாறன்றிக் கண் ணினாற் காணப்படும் உருவமும், செவியினாற் கேட்கப்படும் ஓசையும். மூக்கினாற் கவரப்படும் இனிய மணமும். கையினாற் பற்றப்படும் வடிவமுங்கொண்டு பொருள் விளங்கச் சொற் சொல்லுதலும் நகுதலும் இயங்குதலுமுடைய தோற்றங் களாயின், அவை யெல்லாம் நீர் கூறுமாறு உருவெளித் தோற்றங்களாதற்கு ஒருவாற்றானும் ஏலாவாய், இறைவன் அவ்வன்பர்க்கு அருள் செய்தற் பொருட்டுக் கொண்ட அறிவுருவ அருட்கோலங்களேயா மென்பது இனிது துணியப் படும் அற்றன்று, அவ்வடியவர் தமக்குள்ள அளவிறந்த அன்பின் மிகுதியால் தம்மெதிரே தோன்றும் அவ் வுருவெளித் தோற்றங்களை நிற்பன போலவும் நடப்பன போலவும் பேசுவன போலவுஞ் சிரிப்பன போலவும் பிற செய்வன போலவு மெல்லாங் காண்பாராயின ரெனின்; அது கிடக்க, இங்ஙனம் வினா நிகழ்த்தும் நீவிரும் நிற்பீர்போலவும் நடப்பீர்போலவும் பேசுவீர்போலவுஞ் சிரிப்பீர்போலவும் உண்பீர்போலவும் உடுப்பீர்போலவுந் தோன்றுகின்றமை யின், நீவிரும் அங்ஙனம் பொய்யா யொழிந்திடுவீர் போலுமெனக் கடாவுவார்க்கு மறுமொழி கூறலாகாமையான் அவ்வாறு உலக வியற்கையோடு மாறுபட்டு வினாதல் போலியாமென்றொழிக. இனி, இங்ஙனங் காட்டிய அளவை முறைகொண்டு, தமக்கெதிரே தோன்றும் உருவம் ஐம்பொறிகளானும் உணரப்படும் பெற்றியுடையதாயின் அஃது உருவெளித் தோற்ற மாவதின்றி, மெய்ம்மை வடிவுடைய தேவ வடிவமாமென்பது நன்று வலியுறுக்கப்பட்டதாயினும்,இத் தென்றமிழ் நாட்டிலுள்ள திருத்தொண்டர்க்கு வெளிப்பட்ட அக்கோலங்கள் அங்ஙனம் ஐம்பொறியானும் உணரப்படும் அருட்கோலங்களாமென்பது அவ்வடியவர் திருச்செய்யுளி னின்றே எடுத்துக்காட்டி நுமது மேற்கோளை நிறீஇக்கொள்க என்பார் மகிழ்வுறல் வேண்டி அதுவுந் தந்து விளக்குவாம். மதுரை மாநகரிற் பாண்டியன் அவைக்களத்தில் தெய்வப் புலவராய் அமர்ந்திருந்த ஆசிரியர் நக்கீரனார், ஆலவாய்க் கடவுள் எழுதிய 3கொங்குதேர் வாழ்க்கை என்னுஞ் செய்யுட்குக் குற்றஞ் சொல்ல, அக்குற்றத்தைக் களைந்து கொள்ளும் பொருட்டும், அச்செய்யுளின் மெய்ம்மைப்பொருள் அவர்க்கு அறிவுறுத்தும் பொருட்டும் இறைவன் உருவ அருட்கோலம் தழுவி வந்த அவர்க்கு அதனை உணர்த்தியும் அவரதனை உணராமல் தாஞ் சொல்லிய குற்றத்தை நிறுத்தப் புகுந்த வழி, இறைவன் அவரது செருக்கை அடக்கி அவரைத் தூய்மை செய்தருள எழுந்த இரக்கத்தால் தன் நெற்றிக் கண்ணைத் திறந்து விழிப்ப, அதனினின்றுங் கிளர்ந்து தம்மைச் சுடும் அனலைப் பொறுக்கமாட்டாமல், மக்களுருவங் கொண்டு வந்த அப் பெருமானை அறிந்து தம் பிழையைப் பொறுத் தருளும்படி நக்கீரனார் அவ்விறைவனைக் குறையிரந்தி யற்றிய திருவெழுக் கூற்றிருக்கை என்னுஞ் செய்யுளில், சிறியேன் சொன்ன வறிவில் வாசகம் வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும் வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்து கீதம் பாடிய வண்ணல் பாதஞ் சென்னியுட் பரவுவன் பணிந்தே எனவும், அத் `திருவெழுக்கூற்றிருக்கை இறுதி வெண்பாவில், ஆல வாயி லமர்ந்தாய் - தணிந்தென்மேன், மெய்யெரிவு தீரப் பணித்தருளு வேதியனே யையுறவொன் றின்றி யமர்ந்து எனவும், பெருந்தேவபாணியில், புத்தியு நீயே முத்தியு நீயே சொலற்கருந் தன்மைத் தொல்லோய் நீயே, யதனாற் கூட லாலவாய்க் குழக னாவது அறியா தருந்தமிழ் பழித்தன னடியே னீண்டிய சிறப்பி னிணையடிக் கீழ்நின்று வேண்டு மதுவினி வேண்டுவன் விரைந்தே எனவும், அதன் இறுதியிலுள்ள வெண்பாவில், விரைந்தேன்மற் றெம்பெருமான் வேண்டியது வேண்டா திகழ்ந்தேன் பிழைத்தே னடியேன் - விரைந்தென் மேற் சீற்றத்தைத் தீர்த்தருளுந் தேவாதி தேவனே யாற்றவுநீ செய்யு மருள் எனவுந்தாமே தமக்கு உண்மை யறிவிக்கும் பொருட்டு இறைவன் உருவத் திருக்கோலங்கொண்டு வந்தானென்ப தூஊம், அவ்வாறு வந்த இறைவன் அருட்டிறத்தைத் தாமறியாதுபிழை செய்தாரென்பதூஉம், அதன்மேல் இறைவன் விழித்த நெற்றிக்கண் நெருப்புத் தம்மைச் சுடவே அவ்விறைவனைத்தாமறிந்து கொண்டா ரென்பதூஉம் நன்றாக எடுத்து மொழிந்திட்டார். இங்ஙனம் எடுத்து மொழிந்ததூஉம் பிறரை வஞ்சித்தன் முதலிய ஏதுவானன்றி இறைவனை என்பெல்லாம் நெக்கு நெக்குருகி நெஞ்சம் நெகிழ்ந்து கரைய வழிபட்டு அவன் அருளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டேயாமென்பது பொது வறிவுடை யார்க்கும் இனிது விளங்கும். இங்ஙனம் இறைவன் உருவ வருட்கோலந் தழீஇ. வந்து நக்கீரனார்க்கு அருள் செய்த வியத்தகு முறையை எவர்தாம் உருவெளித் தோற்ற மென்றுரைக்க ஒருப்படுவார்? எந்த நிரீசுவராதிதான் இதனை மறுக்கவல்லராவர்? அவ்வாறவர் பொய்யென்று மறுக்க விரும்பினால் இவற்றிற்கெல்லாம் வேறு யாதுதான் வழிசொல்லமாட்டுவார்? இன்னும் ஒன்று காட்டுவாம். உலகமெல்லாம் புகழ்ந்தேத்துஞ் சைவத் திருவாளராகிய மாணிக்கவாசகர் தாம் அமைச்சராயிருந்துழிப் பாண்டியன் தந்த பொருள் கைக்கொண்டு குதிரை கொள்ளும் பொருட்டுச் சென்ற வழியிற்கிட்டிய திருப்பெருந்துறைப் பூங்காவிற் சிவ பெருமான் ஓர் அந்தணர் வடிவங்கொண்டு மாணவர் பலர் புடைசூழவிருந்து தம்மை ஆண்டுகொண்டு அருள் செய்த முறையைத் திருவண்டப் பகுதியில், என்னே ரனையோர் கேட்கவந் தியம்பி யறைகூவி யாட்கொண் டருளி மறையோர் கோலங் காட்டி யருளலும் எனவும், போற்றித் திருவகலில், அருபரத் தொருவ னவனியில் வந்து குருபர னாகி யருளிய பெருமையை எனவும், ஆனந்தாதீதத்தில், ஈறிலாதநீ யெளியையாகிவந் தொளிசெய் மானுடமாக நோக்கியுங் கீறிலாத நெஞ் சுடைய நாயினேன் கடைய னாயினேன் பட்ட கீழ்மையே எனவும், திருவம்மானையில், செங்க ணெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி யெங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமு மாட்கொண்டு தெங்கு திரள் சோலைத் தென்னன் பெருந்துறையா னங்கண னந்தணனா யறைகூவி வீடருளு மங்கருணை வார்கழலே பாடுதுங்கா ணம்மானாய் எனவும், அருட்பத்தில், நீதியே செல்வத் திருப்பெருந் துறையி னிறைமலர்க் குருந்தமே வியசீ ராதியே யடியே னாதரித் தழைத்தால் அதெந்துவே யென்றரு ளாயே எனவும், பிரார்த்தனைப்பத்தில், கலந்து நின்னடி யாரோ டன்று வாளா களித்திருந்தேன் எனவும், பின்பு அவ்விறைவனா ணைவழிநின்று பாண்டிய னிடத்திற் றிரும்பச் சென்று தாம் அங்கிருந்துழிக் குறிப்பிட்ட நாளிற் சிவபெருமான் நரிகளைப் பிடித்துக் குதிரைகளாக்கிக் கொண்டு ஒரு குதிரை மேற்கொண்டு தாமும் பாண்டி நாடு அடைந்து அவ்வரிய அருட்டிருக்கோலங் காட்டி யருள் செய்த அருட்டிறத்தைத் திருவேசறவில், ஒருங்குதிரை யுலவுசடை யுடையானே நரிகளெல்லாம் பெருங்குதிரை யாக்கியவா றன்றேயுன் பேரருளே எனவும், கீர்த்தித் திருவகவலில், அரியொடு பிரமற் களவறி யொண்ணான் நரியைக் குதிரை யாக்கிய நன்மையும் ஆண்டுகொண் டருள வழகுறு திருவடி பாண்டியன் றனக்குப் பரிமா விற்று எனவும், மதுரைப் பெருநன் மாநக ரிருந்து குதிரைச் சேவ கனாகி யகொள்கை எனவும், அரியொடு பிரமற் களவறி யாதவன் பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும் எனவும், திருவம்மானையில், சிந்தனையை வந்துருக்குஞ் சீரார் பெருந்துறையான் பந்தம் பரியப் பரிமேற் கொண் டான்றந்த வந்தமிலா வானந்தம் பாடுதுங்கா ணம்மானாய் எனவும், திருப்பொன்னூசலில், சால வமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான் எனவும், அன்னைப்பத்திற், சட்டையிட்டுக் குதிரைமேல் வந்தாரென்பது தோன்ற, பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேல்கொண்டென் னுள்ளங் கவர்வரா லன்னே யென்னும் எனவும், திருப்பாண்டிப்பதிகத்தில் அங்ஙனங் குதிரை மேல் உருவ வருட்கோலங் கொண்டு வந்த இறைவனார் திருவுருவத்தையே தாம் நினைந்துருகினமை இனிது புலப்படத் தெரிவர நின்றுருக்கிப் பரிமேற்கொண்ட சேவகனா ரொருவரை யன்றியுரு வறியாதென்ற னுள்ளமதே எனவும், பாரின்ப வெள்ளங் கொளப்பரிமேற் கொண்ட பாண்டியனா ரோரின்ப வெள்ளத் துருக் கொண்டு தொண்டரை யுள்ளங் கொண்டார் எனவும், பரவிய வன்பரை யென்புருக் கும்பரம் பாண்டியனார் புரவியின் மேல்வரப் புந்திகொளப்பட்ட பூங்கொடியார் மரவியன் மேல்கொண்டு தம்மையுந் தாமறி யார்மறந்தே எனவும், பின்னர் அடிகளைப் பாண்டியன் வைகையாற்றில் நிறுத்தி நலிந்தவழி இறைவன் அவரை அந்நலிவு தீர்த்தற் பொருட்டு விடுத்த வெள்ளப் பெருக்கினால் வைகை யாற்றின்கரை யுடைந்து நீர் பெருகுதலை அரசனுணர்ந்து அக்கரையை ஊரிலுள்ளார் அனைவருங் கட்டும் பொருட்டு நிலனளந்து கொடுப்ப, அங்ஙனந் தங்கடங் கட்குப் பிரித்துக் கொடுக்கப்பட்ட நிலங்களிற் கரை கோலிக் கொண்டு ஊரிலுள்ளா ரெல்லாரும் முயன்று கொண்டிருக்கையில், உறவினர் யாருமின்றித் தனியாளாய்ப் பிட்டு விற்கும் பொருளைக் கொண்டு தன் வயிறு நிரப்பி அந்நகரில் உறைந்து கொண்டிருந்தவளும், ஆலவாய்க் கடவுளிடத்திற் பெருகிய மெய்யன்புடையளும் முதிர்ந்த ஆண்டினளுமான ஒரு பிட்டுவாணிச்சி தனக்கு அரசனளந்திட்ட கரை நிலத்தைத் தானே திருத்திக் கட்ட மாட்டாமையானும் தனக்காகக் கூலியின்றித் தொழில் செய்வாரைப் பெறாமை யானும் பெரிதும் வருந்தி ஆலவாய்க் கடவுளிடஞ் சென்று அழுது குறையிரப்ப, அவள் குறையினைச் செவிமடுத்த அருளுருவின னான பெருமான் ஓர் ஒட்டனைப் போல் வடிவங்கொண்டு போந்து `அம்மே! TÈ¡F MŸ nt©L nkh? என்ன, அவள் `அப்பா! நான் கூலி கொடுக்கப் பொருள் சிறிதுமில்லாத வறுமையுடையேன்; நாடொறும் பிட்டுவிற்று அதில்வரும் சிறியதோர் ஊதியப் பொருளைக் கொண்டு வயிறு வளர்க்கின்றேன்; தீவினையேன் என் செய்வேன்! என்ன, அவன் `அம்மே! நீ சுடும் பிட்டில் உதிர்ந்து போகும் பாகங்களை யேனும் எனக்குக் கூலியாகக் கொடுக்க ஒருப்படுவையேல் உனக்காகத் தொழில் செய்வேன் என்றுரைப்ப. அம்முதியோள் பெரிதும் அகமகிழ்ந்து `அப்பனே! அவ்வாறே தருவேன், நீ தொழில் செய்துவா என்ன, அவர் அவ்வாறே தொழில் செய்வதுபோல் மாயஞ் செய்து இடையிடையே யவளிடஞ் சென்று அம்மே! எனக்கு நிரம்பவும் பசிக்கின்றது; உதிர்ந்த பிட்டுணவு கொடு என்று கேட்டுப் பெற்றுண்டு பிச்சனைப் போற் கூத்தாடிக் கொண்டு கரைகோலாது நாளைப்போக்க, அன்று மாலையில் அரசன் ஊரார் கரைகோலியதனைக் காணவந்து எல்லார்க்கும் அளந்துவிட்ட நிலந் திருத்தப்பட்டிருத்தலையும் பிட்டு வாணிச்சி பங்கு அங்ஙனந் திருத்தப்படா திருத்தலையுங் கண்டு வெகுண்டு அதனைத் திருத்தவந்த கூலியாளாகிய ஒட்டனைத் தன் கையிலிருந்த பிரம்பாலடித்தலும்,அவ்வடி அடித்தவனாகிய பாண்டியனை யுள்ளிட்டு அசையும் பொருள் அசையாப் பொருளாகிய எல்லாவற்றின் மேலும் உறைப்ப, ஒரு கூடை மண்ணால் அக் கரையைத் திருத்தி ஒட்ட வடிவங் கொண்டு வந்த இறைவன் மறைந்து சென்ற அருட் டிறத்தை நினைந்து நினைந்துருகி அவ்வரசன் பக்கத்தில் அமைச்சராயிருந்து நேரிற்கண்ட மணிவாசகப் பெருமான் தம் கீர்த்தித்திருவகவலில், ஆங்கது தன்னி லடியவட் காகப் பங்காய் மண்சுமந் தருளி பரிசும் எனவும், திருவம்மானையில், மண்சுமந்து கூலிகொண்4 டக்கோவான் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்கா ணம்மானாய் எனவும், திருப்பூவல்லியில், திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு மண்பான்மதுரையிற் பிட்டமுது செய்தருளித் தண்டாலே பாண்டியன் றன்னைப் பணிகொண்ட புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ எனவும், திருக்கழுக்குன்றப் பதிகத்தில் பிட்டுநேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பெரும்பித்தனே சட்டநேர்பட வந்திலாத சழக்கனே னுனைச்சார்ந்திலேன் எனவுந் தாமே தமது திருவாயால் அவ்வருட்பாட்டு முறை யினையும், இறைவன் தம் பொருட்டுத் தாங்கிவந்த உருவ வின்ப வருட்கோல மரபினையும், அவ்வருட்கோலங்கொண்டு வெளிப்பட்ட பெருமான் நிகழ்த்திய திருவிளையாடன் மாட்சியினையும் விதந்து பலமுறை யெடுத்தோதி யருளிய வாறு காண்க. ஐம்புலன்களுக்கும் ஆரநுகர்ச்சியாம் படி திருக்கோலந்தாங்கிக் காணவுங் கருதவும் உரைப்பவும் வாராத தன்பெருமைத்தன்மைகளைத் தன் அன்பர் பொருட்டுக் காணவுங் கருதவும் உரைப்பவுமெல்லாம் எளிவந்தனவாக்கி வெளிவந்த முதல்வன்றன் பேரருட் டிறத்தை அன்பு நிறைந்த தூய உள்ளத்தோடு ஆராயலுறு வார்க்கு அவ்விறைவன் உருவமும் அருவமும் அருவுருவமு மாகிய எல்லா நிலையும் எய்தவல்ல எல்லா ஆற்றலுமுடைய வனாமென்பது நன்கு புலப்படும்.இங்ஙனம் விரிவா யெடுத்துக் காட்டிய உண்மை யருண்மொழிகளையும் அந்த அருண் மொழிகளாற் பெறப்பட்ட உண்மை யருட்கோல வியல்பு களையும் உண்மை வரலாறுகளிற் பழகிய எவர்தாம் தழுவாது ஒழிவர்? அல்லதூஉம். உலக வியற்கைக்கு மாறாக நடப்பன வொன்று மில்லாமையால், 5அற்புதங்கள் அல்லது புதுமைகள் நிகழ்ந்தனவென்று உரைத்தல் வெறும் பொய் யேயா மென்று வாய்ப்பறை யறைந்து திரியும் பிரமசமா சத்தார் இவற்றிற் கெல்லாம் யாது சொல்லவல்லார்? இனி இங்ஙனந் தோன்றும்இறைவன் அருட்கோல வியல்பு உணரமாட்டாது, அவை தம்மை 6எண்ண முதிர்ச்சியா னிகழ்ந்த உருவெளித் தோற்றங்களா மென்பார் தெளிந் துறுதிகூடுமாறு இன்னும் ஒன்று காட்டுவாம்.7 மக்களென்பார் எக்காலத்தும் எவ்விடத்தும் ஒருவரோ டொருவர் உறவு உரிமை பூண்டு வாழும் இயல்பினரேயாம். இவ்வாறு உறவுரிமை கொண்டு வாழுமியல் பினராகிய மக்கள் ஒருவரொருவரோடு அளவளாவி வாழும் முறை யினால் அறிவு முதிர்ச்சியடைந்து உலகிய லறிவும் கடவுளு ணர்ச்சியு முடையராகின்றனர். அவ்வாறன்றி ஒவ்வொரு வரும் பிறவி முதற் கொண்டு அளவளாவுத லின்றித்தாந்தாம் தனித்திருந்து வளர்ந்து வருவராயின் அவரெல்லாம் அறிவு சிறிதுமிலராய் விலங்கினங்களைப் போல் உழன்று திரிவர். இதற்கு எமது குழந்தைப் பருவமே சிறந்த எடுத்துக் காட்டாம். யாம், தாய்வயிற்றையகன்று வெளிப்பட்ட காலத்தில் எம்மறிவு ஒரு சிறிதும் விளங்காது கிடந்தேம். அங்ஙனங் கிடந்த காலத்தில் எம்முடைய உள்ள மானது. உலக வுருவவண்ணங்கள் எதிர் தோன்றாத மாசற்ற பளிங்குபோலவும் இலச்சினையிடப்படாத மெழுக் குருண்டைபோலவும் இருந்தது. மனமென்னுங் கண்ணாடியில் அவை விளங்காது ஒழியவே, அக்கண்ணாடியின் அப்பக்கத்தேயிருந்து அவற்றைக் காணும் உயிரும் அறிவு விளங்கப்பெறாது கிடந்தது. அப்போது இறைவன் எமதுடம்பைப் பல்வகை யுண்டிகளால் வளர்த்து அதன்வழியே கொண்டுபோய் எமக்கு அறிவு விளங்கச் செய்யும் பொருட்டுத்தான் இரக்கத்தான் எம்மகத்தே வைத்த பசித் தீயானது எம்மை வருத்த அதற்காற்றாது யாம் வாய் திறந்து அழ அதனைக் கண்டு அன்புடையளாகிய அன்னை எம்மை எடுத்துப் பாலூட்டினாள். விலங்குகளோ தாம் பிறந்தவுடனே அங்ஙனந்தாயினுதவியும் வேண்டாது தாமே யறிந்து தாய்முலை யுண்ணுகின்றன. இவ்வாறு விலங்குகளைக் காட்டிலும் அறிவு விளங்கப்பெறாது கிடந்த யாம் பயிற்சி வழியால் எம் மனம் சிறிது உலக வுருவத்தைப் பற்ற அதன் புறத்தேயிருந்த எம்மறிவு சிறிது விளங்கி, எமக்கு முலை தருவாள் இவளென்று சிறிது காலமெல்லாம் அறிந்து, அதன்பின் அங்ஙனந் தருவாளுந் தாயென்றறிந்து, அவள் அவ்வாறு தருதலும் பசியெடுத்து யாம் அழுதலாலென்றும் அறிந்து, அதன்பின் யாம் உண்ணுவதும் பால் என்று அவள் பன்முறை யுரைப்பதனாலறிந்து, அதன் பின் எம் அன்னை யையும் எம்மையும் பாதுகாப்பவனெல்லாந் தந்தை யென்பதும் அவள் அறிவிப்ப அறிந்து இவ்வாறு முறை முறையே எம்மறிவு விளங்கப் பெறுவேமாயினேம். இதனால் எமக்கு அறிவு விளங்குவதற்கு ஏதுவாயிருந்த முதன் முயற்சி பசி ஒன்றேயாம் என்பதூஉம் இனிது பெறப்படும்.இனி இங்ஙனம் அறிவு வளருந்தோறும் யாம் புதுவதாக அறிந்தது அறிவாகவும், முதலில் எழுந்த பழையவறிவு எமக்கு அறியாமையாகவுங் காணப்பட்டன. இது பற்றியே, ஆசிரியர் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரும், அறிதோ ரறியாமை கண்டற்றாற் காமஞ் செறிதோறுஞ் சேயிழை மாட்டு (குறள் 1110) என்று திருவாய்மலர்ந்தருளினார். இனி இங்ஙனங் குழவிப்பருவ முதற்கொண்டு முறை முறையாய் எமக்கு அறிவு விளங்கப்பெறுவதே உலக வியற்கை. அவ்வியற்கைக்கு மாறாக யாம் பத்து ஆண்டில் அறிய வேண்டுவனவற்றை முதல் ஆண்டிலேயே ஒருங்கறிந் திடுவோ மாயின், அங்ஙன மறிதலை ஆன்றோர் 8தெய்வத் தன்மை என்று தம்முள் வழங்குவர். மேலும், உலகிய லுணர்ச்சியும், அவ்வுணர்ச்சியில்லாமையாற் பாவனை செய்யும் ஆற்றலும் வாய்க்கப் பெறாத எமது குழவிப் பருவத்தே வியப்புடைத்தாய புதுக்கோலமொன்றைக் கண்டு அதன் உண்மையைப் பொருள் விழுப்பந்தோன்றப் பலவாறு புனைந்து செய்யுட்களானும், சிறந்த மேற்கோளுரைகளானும் விரித்துப் பேசிடுவேமாயின், அதனைப் பொய்யென்றும் பாவனை யென்றும் உருவெளித் தோற்றமென்றும் எவரேனுஞ் சொல்ல ஒருப்படுவரோ? ஒரு காலத்தும் ஓரிடத்தும் ஒருப்படவே மாட்டார், இங்ஙனம் எமது செந்தமிழ் நாட்டில் நிகழ்ந்த அரும்பெரும் புதுமை யொன்றனை எடுத்துக்காட்டி நிறுவி, அவ்வாற்றால் திருவுருவ வழிபாட்டு நன்முறையின் உண்மைத் தன்மை காட்டுவாம். சீர்காழியென்னும் திருநகரிற் சிவபாதவிருதய ரெனும் அந்தணப் பெரியார் ஒருவர் ஏறக்குறைய ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்குமுன் இருந்தார். அக்காலத்திற் சமண சமயிகள் யாண்டும் பெருகி வந்தனர். அச்சமண சமயிகள் கொல்லாமை முதற் சிறந்த அறநெறிகளைப் பிறழா மனவெழுச்சியுடன் கைக்கொண்டு அங்ஙனந் தாங் கைக் கொண்ட அச்சிறந்த அறத்தின் மாட்சியை மக்களெல் லார்க்கும் எடுத்துக் கூறி அவர்க்கெல்லாம் உள்ளக் கவர்ச்சியை எழுப்பி அவ்வாற்றா லவரைத் தம்மதத்திற்குத் திருப்பிக் கொண்டு செல்வாராயினர். இங்ஙனஞ் சில நாளெல்லாஞ் செல்ல அச்சமண சமயம் யாண்டும் பரந்துவிரிவதாயிற்று. தஞ்சமயம் இவ்வாறு எங்கும் பரவவே மற்றைச் சமயங்களைப் பின்பற்றி யொழுகு வோர் தொகை சுருங்குவதாயிற்று. சமணம் பௌத்தம் முதலிய அச்சமயங்களை யொழித்து ஒழிந்தசைவம், வைணவம், பாசுபதம், சாத்தம், கௌமாரம், காணாபத்தியம் முதலிய சமயங்களெல்லாம் தெய்வம் ஒன்றுண்டெனக் கொண்டு வழிபடுவனவாம். சமணம் பௌத்தம் என்பனவோ அறவொழு க்கங்களிற் சிறந்தன சில கைப்பற்றி ஒழுகும் அவ்வளவேயல்லது, அவை தெய்வம் ஒன்று உண்டெனக் கொண்டு வழிபடும் மெய்ச்சமயங் களல்லவாம். மற்று அவை தெய்வமில்லென்று உரைக்கும். பொய்ச் சமயங்களே யாம். ஆங்கிலப் புலவர் சிலர்; கௌதமர் கடவுள் வழிபாட்டைக் குறிப்பிட்டாயினும், கடவுளைக் குறிப்பிட் டாயினும் ஏதும் உரையாமை பற்றி அவரை நாத்திகரெனக் கூறுதலமையாது, அவர் ஆத்திகருமாகலாம் என்று உரைப்ப துண்மையே யாயினும், மொழிநூற் புலவர் மாக்மூலர் பௌத்த சமயங்கள் பலவும் கடவுள் இன்றென நிலையிட் டுரைப்பனவாம் எனக் கூறுதலானும் 9பிராஞ்சு தேயத்துத் தத்துவநூற் புலராகிய பார்த் என்பவர் பௌத்த சமணக் கோட்பாடுகள் ஒரு தலையாகக் கடவுள் இன்றெனக் கூறுவன வாம் எனத் துணிவு தோன்றக் காட்டுதலானும், அரிய பல ஆராய்ச்சி செய்து வடமொழி நூலுரை வரலாறு புதுவதாக எழுதி வெளியிட்ட மாக்டனல் புலவரும் பௌத்தமும் சமணமும் சாங்கிய நூலைப் போலவே கடவுளினிருப்பை மறுக்குங் கோட்பாடுடையவாம் என்று10 அங்ஙனமே துணிபு ஒருப்படுத்தலானும், சிவஞானபோதம், சிவஞான சித்தியார் முதலிய தத்துவ முழுமுதற் றமிழ் நூலுரைகளின் கண்ணும் அவ்வாறே அவர் நாத்திக சமயிகளென்று வைத்து மறுக்கப் படுதலானும் பௌத்தரும் சமணருமாகிய அவ் விருவகைச் சமயிகளும் நாத்திக சமயிகளேயாமென்பது ஒருதலை யென்றுணர்க. இங்ஙனங் கடவுளின்றெனக் கொண்டு ஒழுகுவாராகிய சமண சமயிகள், இறைவனை உண்மையன்பான் வழிபடும் ஏனைச் சமயிகளைக் காண்டொறும்மனஞ் சிறிதும் பொறா ராகி மற்று அவரை யெல்லாந் தஞ்சமயத்தின்கட் படுக்கும் நோக்கம் பெரிதுடைய ராயினார். அந்நோக்கம் முதிரவே கொல்லாமை, பொய்யாமை முதலாகத்தாங் கைக்கொண்டு போந்த சில அறத்தியல் வரம்பு கடந்து, தீய நெறியா னெல்லாம் ஏனைச் சமயிகளை வருத்தத் தொடங்கினார். தன் கட்டளையாற் சட்டதிட்டங்களேற் படுத்தி அவற்றிற் கேற்ப ஒழுகுவார்க்கு நன்மையும் அவற்றிற்கு ஏலாதன செய்தொழுகு வார்க்கு ஒறுத்தலுந் தந்து நெறிப்படுத்து வானாகிய அரசனையில்லாத குடிகள் தாந்தம் விரும்பிய வாறே சில சட்டதிட்டங்களேற்படுத்திக் கோடலும், தமக்கு அவை இணங்காத வேறு காலங்களில் தம்முன்னை ஏற்பாடுகளை மனம் போனவாறு புரட்டி வேறு வேறு இயற்றிக் கொண்டு தம்முட் கலாம் விளைத்தலும் நிகழக் காண்கின்றாம். இதுபோல, இறைவனொருவன் உண்டெனக் கொண்டு அவன் கட்டளையிட்டருளிய நல்வினைகளைச் செய்யின் நன்றாம்.அவன் வேண்டாவென்று விலக்கிய தீவினைகளைச் செய்யின் தீதாம் என்னும்மன வுறைப்பில்லாத பொய்ச்சமயி கள் தாம் ஒரோவொரு காலங்களில் உலகியல் அறநெறி பிறழாது ஒழுக உடன் படுவாராயினும், தமக்கு அவ்வறநெறி களியையாத பிற காலங்களில் தாந்தாம்விரும்பியவாறே முன்னை அறவொழுக்க வரம்பழித்துத் தீவினை செய்யுந் துணிவுடை யாராவர். இங்ஙனமே, சமணசமயிகள் அக் காலத்துத் தம்மோடு ஒருங்கு இருந்த சைவர், வைரவர், பாசுபதர் முதலிய ஆத்திக சமயிகளுக்குப் பெருந்தீது செய்யும் கரவு பலவுடையரானார். திருநாவுக்கரசு நாயனார் சமண சமயந்துறந்துசைவ சமயந் தழுவிய ஞான்று சமண ரொருங்கு கூடித் தம்மரசனால் அவரை நீற்றறையில் இடுவித்தும், கல்லிற் கட்டிக் கடலில் வீழ்த்தியும் யானைக் காலில் இடறுவித்தும், நஞ்சம் உண்பித்தும் புரிந்த தீதுகள் நம்மேற் கோள்களை இனிது நிறுத்துவனவாம் அல்லவோ? அமைதித் தன்மைக்கு ஓர் உறையுளாய் விளங்கிய அப்பரே தாம் சமணராற்பட்ட துன்பங்களைத் தாமே தந்திருப்பதி கங்களில் ஆங்காங்குக் குறிப்பிடுமாறுங் காண்க. இவ்வாறே, அவர்கள் தங்காலத் திருந்த பாண்டியனை யுள்ளிட்ட முடிவேந்தர்களை யெல்லாந் தஞ் சமயங்களிற் றிருப்பி; அவ்வரசரது வலியால் ஏனை ஆத்திக சமயிகள் வழிபடுந் திருக்கோயில்களை அடைப் பித்தும், திருமடங்களில் தீக் கொளுவியும், அவரைக் கண்டால் `கண்டு முட்டு என்றும், அவரைக் குறித்து ஏதேனுங் கேட்டாற் `கேட்டு முட்டு என்று சொல்லியும் பலவாறு இன்னலியற்றி வந்தனர். இங்ஙனஞ் செய்து போந்த சமணர்கள் கொல்லாமை முதற் சிறந்த அறங்களை மேற்கொண்டு ஒழுகினாரெனல் யாங்ஙனம்? ஆகவே, இவ்வாறெல்லாந் தீதுபுரியும் ஒழுகலாறுடையரான சமணர் யாண்டும் பரவி நிரம்புதலும், சைவ சமயிகள் தீயினால் வளைக்கப்பட்டு இடையிற் கிடந்து துடிக்கும் புழுப்போற் பெரியதோர் இடருழவா நின்றார். அக்காலத்திற் சிவபெருமானிடத்து உண்மையன்புடை யரான சிவபாதவிருதயர் என்னும் அச்சைவ அந்தணர் தீயரான சமணரொழியவுஞ் சைவம் யாண்டும் பரந்து ஒளிரவுஞ் செய்யவல்ல தெய்வமாட்சியுடைய மகப்பேறு தமக்குக் கிடைக்குமாறு தவங்கிடந்தார். அவர்க்குச் சில நாட்களிளெல்லாம் ஓராண்மகப்பேறு கிடைத்தது. அவ்வாண் மகவுக்கு மூன்றாம் ஆண்டு செல்கின்ற காலத்திற் சிவபாதவிருதயர் என்றும்போல அச்சீர்காழி நகரிலுள்ள சிவபிரான் கோயிற் றிருக்குளத்தில் தம் நாள் வினைகளை முடித்தற்பொருட்டு வீட்டிலிருந்து புறம்போதுவார், சிறுகுழந்தையாயிருக்கும் அப்பிள்ளையாரும் அழுது கொண்டே பின்றொடர்தலைக் கண்டு பலவாறு அமைவுரை கள் சொல்லி யிருத்தியுங் கேளாமல் வர, வருகவென்று உடன் அழைத்துச் செல்வா ராயினர். சென்று குளக்கரை மருங்கு சேர்ந்து அக்கரையின்மேற் பிள்ளையாரை யிருத்தித், தாம் நீரிலிறங்கி நீர்க்குள் மூழ்கியிருந்து செய்யும் வழிபாட்டைச் செய்வாராயினார். அங்ஙனந் தந்தையார் நீர்க்குள் மூழ்கி நெடுநேர மிருப்பவே, அவரைக் காணப்பெறாத பிள்ளையார் அம்மே! அப்பா! என்று கூவி அழத் தொடங்கி னார் அவ்வழுகையைக் கண்டு மனம் பொறாராகிக் கோயிலினுள் எழுந்தருளி யிருக்குஞ் சிவபிரானும் உமைப் பிராட்டியாரும் பிள்ளை யாரிடம் போந்து அவரழுகை தீர்த்துக் கண்ணீர் துடைத்து, அம்மையார் தங் குமிழ்முலையிற் கொழும்பால் கறந்து அதிற் சிவஞானங் குழைத்துப் பொற்கிண்ணத் தாலூட்டவும், அப்பனார் அவரழுகை தீரத்தடவிஇன்சொற் சொல்லவும் பிள்ளையார் பொற்கிண்ணத்திற் பாலுண்ட வண்ணமாய் மகிழ்ச்சி யுற்றிருந்தார். இதற்குள் நீரில் மூழ்கியிருந்த தந்தையார் ஆண்டுத்தாஞ் செயற் பாலவான வழிபாடுகளை இனிது முடித்துக் கரையேறி வந்துபிள்ளையார் கையிற் பொற் கிண்ணம் வைத்திருத்தலும்அவர் உடம்பெல்லாம் பால் வழிந்திருத்தலுங் கண்டு வெகுண்டு `அடா! நீ யார் தந்த பாலையுண்டாய்? உனக்கு எச்சின் மயங்கப் பாலூட்டி னாரரைக் காட்டுகஎன்று உரப்பிக் கையில் ஒருசிறுகோல் எடுத்துக் கொண்டுகேட்டார்.கேட்டலும், பிள்ளையார் அஞ்சி `எனக்குப் பாலூட்டினார் இதோ! மழவிடை யமர்ந்த பிரானும் பிராட்டியாருமாம் என்று சுட்டித் தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடி பூசியென் னுள்ளங் கவர்கள்வன் ஏடுடைய மலரான் முனை நாட்பணிந் தேத்த வருள்செய்த பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே என்று கட்டளையிட்டருளினார். இவ்வரலாறு பெரியபுராணத்தின்கண் விரிவாக எழுதப்பட்டிருத்தல் கண்டுணர்க. இனி, உலகியலுணர்ச்சியும் பாவனை செய்யும் ஆற்றலும் வாய்ப்பப் பெறாத குழந்தைப் பருவத்தினராகிய ஞானசம்பந்தப்பிள்ளையார்க்கு எதிரே இறைவன் அவர்க்கு அருள் செய்தற் பொருட்டுத்தாங்கி எழுந்தருளிய அருட் கோலம் உருவெளித் தோற்றம்போற் பொய்யாய் ஒழிந்திடு மென்றல் யாங்ஙனம்? அல்லதூஉம், மூன்றாண்டு செல்கின்ற அக்காலத்திற் செந்தமிழ்ச் சுவையும் மெய்ப்பொருள் நுட்பமும் பொதுளத் தோடுடைய செவியன் என்னுந் திருப்பதிகங் கட்டளை யிட்டருளியதுதான் என்னை? சிற்றறிவுஞ் சிறு தொழிலு முடையேமாகிய எங்குழந்தைகள் மூன்றாண்டு செல்கின்ற அக்காலத்திலேதான் மழலை மொழிகள் சில வுரைத்து எம்மையெல்லாம் உவப்பிக்கின்றன; அக்காலத்திலே தான் தளர்ந்து தளர்ந்து நடந்து செல்லு கின்றன; அக் காலத்திலேதான் `அம்மே என்றும், `அப்பா என்றும், `சோச்சி என்றும், `பாச்சி என்றுந் தமக்கு வேண்டும் பொருள்களைச் சுட்டுகின்றன; அக்காலத்திலே தெய்வம் உண்டு என்னும் உணர்ச்சி அவைகட்கு இன்றாம்; அத்தெய்வமுஞ் சிவபெருமானே யாமென்னு முணர்ச்சியு மின்றாம்; அச்சிவபெருமான் திருத்தேவியார் உமை என்னும் உணர்ச்சியுமின்றாம்; அச் சிவன் திருவடையாளங்கள் `தோடு `விடை `கொன்றை முதலியவா மென்னும் ஆராய்ச்சியு மின்றாம்; ஆகலின் இவ்வணுர்ச்சி வேறுபாடெல்லாம் நிகழ்ந்ததற்கு ஓர்இயைபு வேண்டுமெனின்; அற்றன்று, சிவ பாதவிருதயரென்னுந் தந்தையார் சிவபெருமானிடத்து மிக்க அன்புடையா ரென்பது பெறப்படுதலால் அவர் தமது இல்லத்திலே சிவனை வழுத்துகின்ற காலங்களிற் சொல்லுஞ் சொற்களின் பொருள்கள் மிகத் தெளிவாகிய அப்பிள்ளையார் மூளையிற் பதிந்திருந்து பின்னொரு நாட்புறம்போந்தன வென்பார்க்கு, அங்ஙனம் அவ்வுணர்வு மட்டுமே புறம்படுதல் பொருந்து வதா மன்றி அம்மையார் தமக்குப் பொன்வள்ளத்திற் பால் கறந்து ஊட்டினாரென்றலும், அது கண்டு தந்தையார் சிவபாத விருதயர் வெகுண்டு தம்மை வினவியபோது இறை வனையும் இறைவியையுஞ் சுட்டிக் காட்டித் திருப்பதிகங் கட்டளை யிட்டருளினா ரென்றலும் பிறவும் பொருந்து மாறு போதராமையின் அவர் கூற்றுப் போலியாமென்று மறுக்க. அற்றேல் அஃதாக, தோடுடைய என்னும் அத் திருப்பதிகத் திற் பிள்ளையார் தமக்கு இறைவி அங்ஙனம் பொற் கிண்ணத்திற் பால் கறந்தூட்டினாளென்றும், சிவபாத விருதயர் அஃதுணராமற் றம்மை வெகுண்டு வினாவிய போதுஇறைவனையும்இறைவியையுந் தாஞ் சுட்டிக் காட்டினாரென்றும் ஓதிற்றிலராலெனின்; அறியாது கூறினாய், மண்ணினல்ல வண்ணம் என்னுந் திருப்பிரம புரப்பதிகத்தில், போதையார் பொற்கிண்ணத் தடிசில் பொல் லாதெனத் தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன் காதையார் குழையினன் கழுமல வளநகர்ப் பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே என்னுஞ் செய்யுளிற் பிள்ளையார் தாமே தமக்கு இறைவன் செய்த அருட்டிறத்தைக் கிளந்தெடுத்து உரையா நிற்பவும், அதனை ஆராய்ச்சி செய்து உணரமாட்டாது உரைத்தல் இழுக்குரையாமென்க. இனி அச்செய்யுட் பொருள் ஒருசிறிது உரைக்கின்றாம். போதையார் பொற்கிண்ணத்து அடிசில் - இதழ்விரிந்த தாமரை மலரைப் போல் வாயகன்று செவ்வென விளங்கும் பொன் வள்ளத்தில் உமையம்மை கறந்து ஊட்டிய கொழும்பாலுணவை; போதை என்பதில் `ஐ காரம் குறவரையார்க்குங் குளிர்மலை நாட என்னும் திருச்சிற்றம் பலக் கோவையாரிற் போல வந்த சாரியை; ஆர் என்பது செப்புற்ற கொங்கை தோளுற்றொர் தெய்வம் என்னுந் திருக்கோவையார் சிந்தாமணியிற் போல உவமவுருபின் பொருள்பட வந்த உவமச்சொல், மாற்றுயர்ந்த பொன் செவ்வென்று பொலிதலானும் வள்ளம்வாயகன்று வட்டமா யிருத்தலானும் உவமை வண்ணமும் வடிவும் விராய் வந்தது. இவ்வாறே பாண்டிலெடுத்த பஃறாமரை கீழும்பழனங்களே என்று திருக்கோவையாரினும் போந்தது காண்க; நச்சினார்க்கினியரும் பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு என்புழி வண்ணமும் வடிவும் விராய்வந்த வுவமை யென்றுரை யுரைத்திட்டார்; தாதையார் பொல்லாதென முனிவு உற -சிவபாதவிருதயரென்னுந் தந்தையார் இழிந்தாள் ஒருத்தி தந்த எச்சிலாதலின் அது நுகர்தல் தீதாமென் றுரைத்து வெகுள; தான் என்னை ஆண்டவன் - தான் தன் அருட்பெருக்கான் விரும்பி வந்து என்னை ஆண்டு கொண்டவன்; அங்ஙனம் ஆண்டுகொண்ட இறைவன் திருவடை யாளங்கள் யாவையோவெனின்; காதையார் குழையினன் - காதிற்செறிய இடப்பட்ட வெண்டோடு உடையனாம்; அதுவன்றியும், பேதையாளவளொடும் - தான் அறிவுருவின ளாயிருந்தே உலகத்துப் பெண்டிர்க்கெல்லாம் அறியாமை கற்பித்தல் வேண்டுதலின் தானும் அறியாமை யுடையார் போற் றோன்றும் உமையம்மையுடன் பிரிவறக கலந்து; `அறியாமை என்பது பெண்மைத்தன்மை நான்கனுள் ஒன்றாம். அது தானொரு பொருட்டன்மை யறிந்தும் அறியாதது போன்று ஒழுகுதல், ஆசிரியர் நக்கீரனாரும் மடமென்பது கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை என்று உரை கூறினார்; பெருந்தகை - சிற்றறிவுஞ் சிறு தொழிலு முடைய ராகிய உயிர்கள் போலாது அவற்றை யெல்லாந் தன்னகப் படுத்து வரையறையின்றி விரிந்து செல்லும்விரிந்த வுணர்ச்சியும் முழுமுதலாற்றலும் உடைய னாகிய ஏது வினாலே பெருந்தகையாய் விளங்கும் முழுமுதல் வனான சிவபெருமான்; இருந்தது - உயிர்கள் தன்னை வழிபட்டு உய்யும் பொருட்டுத் தானே தன் பெருமைத் தன்மைகளைச் சுருக்கிக் கொண்டு அருளே திருமேனியா வெழுந்தருளியிருந்த திருநகரம்; கழுமல வளநகர் - தன்னை வந்தடைந்த உயிர்களின் மும்மலங் கழுவித் தூய்மை செய்கின்ற ஒரு பெருந்தன்மையாலே `கழுமலம் என்று பெயர் பெற்ற வளவிய நகரமாம்; கழுமலநகர் - சீகாழி; பிள்ளையார் தமக்கு அருள் செய்யும் பொருட்டு இறைவன் தாங்கி வந்த அருட் கோலத்தின்கட் குழையிடப் பட்ட திருச் செவியைச் சுட்டித் தோடுடைய செவியன் என்று பதிகங் கட்டளையிட் டருளியவாறு போலவே, ஈண்டுங் காதையார் குழையினன் என்று குறிப் புரைத் தருளினார், இது கிடக்க. இனி, நீர் கூறிய வழக்குரைகளெல்லாம் ஒக்குமன், சிவபாதவிருதயர் பிள்ளையாரைத் தடாகக்கரையில் இருவித்தாம் நீரிலிழிந்து முழுகியிருந்த அமயத்திற் பிள்ளையார் அவரைக் காணாது அழுதலைக் கண்டு ஆண்டு வந்த கணவனும் மனைவியுமாகிய இருவர் அவர்க்கு இரங்கிப் பாலூட்டிப் போயினாரென்றும், தந்தையார் கரையில் வந்து வெகுண்டு வினாதலை அஞ்சிப் பாலூட்டினார் இவர் என்றுரைப்பிற் பின்னும் வெகுள்வரெனக் கருதித் தமக்குச் சிவபெருமானும் உமையம்மையாரும்அங்ஙனம் பாலூட்டி னாரெனப் பொய்யுரைத்தார் என்றுங் கொள்ளாமோ வெனின்; நன்று கடாயினீர், நல்லது தீயது பகுத்துணர மாட்டாத பிள்ளைப் பருவத்தில் இஃது உரைப்பின் நன்றாம்,மற்று இஃது உரைப்பிற் றீதாம் என்றுணர்ந்து பிறழக் கொண்டு பொய்யுரைத்தா ரென்றால் உலக வியல்பொடு மாறுபடுதலானும், உலக வியற்கையொடு முரணாமைப் பொருட்டுப் பிள்ளையார் நிகழ்த்திய புதுமைகட்கு வேறு விளக்கங் கூறப் புகுந்து வழக்கிடும் நீவிரே அங்ஙனம் உலக வியற்கையொடு முரண்பாடு பெரிதுடையிராய்க் `கொசுகின் கடிக்கஞ்சிப் புலிவாய்ப் பட்டது போற் பெரிதும் இடர்ப்படு வீராதலானும் அவ்வாறு கோடல் ஒரு சிறிதும் பொருத்த முறுவதின்றா மென்பது. அல்லதூஉம் பொதுமக்களாற் பாலுட்டப்பெற்ற பிள்ளையார் அங்ஙனம் ஊட்டப்பெற்ற அந்நேரத்தே பேரறிவும் பேராற்றலும் உடையராய்ப் பிள்ளைப் பருவத்தில் வரற்பாலதன்றாம்மிகச் சிறந்த திருப்பதிகங் கட்டளை யிட்டருளியவாறு யாங்ஙனம்? எனக் கடாவு வார்க்கு நீர் இறுக்குமாறு சிறிதுமின்றாம். அற்றன்று, பிள்ளை யார் அறிவு கூடாச் சிறுபருவத்தினராதலாற் றமக்குப் பாலூட் டிய பொதுமக்களையே அங்ஙனம் அறியாமையாற் சிவ பெருமானென் றுரைத்திட்டாரெனின்; நன்று சொன்னீர், பால்பருகிய அந்நேரத்தே திருஞான சம்பந்தப்பிள்ளையார் விரிவுணர்ச்சியும் முழுமுதலாற்றாலு முடையராய்த் திகழ்ந்து உலகமெல்லாந் தம் ஆணைவழி நிறுத்தவல்ல தெய்வப் பெற்றியாளரான அப்பெருமானார் பொது மக்களையுஞ் சிவபெருமானையும் வேறுபிரித்து அறிய மாட்டாது மயங்கிக் கூறினாரென்றலும் அறியாமை முதிர்ச்சியா யொழிந்திடு மென்க. இனி, இவையெல்லாம் ஒருபுறங் கிடக்க, நீவிரெடுத்துக் காட்டிய தோடுடைய செவியன் என்னுந் திருப்பதிகத்திலும் மண்ணில் நல்ல வண்ணம் என்னுந் திருப்பதிகத்திலும் பிள்ளையார் தாங் குழந்தைப் பருவத்தின ரென்பதுபுலப்படக் கூறாமையான் அப்பிள்ளைப் பருவ வலியுடைய ஏதுப்பற்றி நீவிர் நிறுவப் புகுந்த இறை வனதுஅருட்கோலவியல்பு வலிகுன்றி விடுமாலோ வெனின் அறியாது கூறினீர், பிள்ளையார் அப்பரோடு திருமறைக் காட்டில் எழுந்தருளிய போது மதுரைமாநகரத்திற் சமணருடைய மயக்கவுரையாற் சைவ சமயம் வழீஇச் சமணமதந்த தழீஇய தங்கொழுநரான பாண்டிய அரசனை யுள்ளிட்டுக் குடிமக்களெல்லாரையுந் திரும்பச் சைவராக்குதல் வேண்டி மங்கையர்க்கரசி என்னும் பாண்டி மாதேவியார் பிள்ளையாருக்குத் திருமுகம் விடுத்தார். அதுகண்ட பிள்ளையாருந் தந்திருக் கூட்டத் தோடு மதுரை மாநகர்க்கு எழுந்தருளப் பாண்டியவரசன் அமைச்சராகிய குலச்சிறை என்பார் அவரை எதிர் கொண்டழைத்துச் சென்று பிள்ளையாரைத் திருக்கூட்டத் தோடும் ஒருதிரு மடத்தில் எழுந்தருளி யிருக்கச் செய்தார். இதனையறிந்த சமணக் குருக்களெல்லாருந் தெய்வப் பெற்றியுடைய இப்பிள்ளையாரால் நமது சமணம் அழிந்து படும் எனப் பெரிதும் அஞ்சிப் பிள்ளையாரைத் திருக்கூட்டத் தோடுங் கொலை செய்ய எண்ணினார். அந்தோ! அந்தோ! இது தானோ கொல்லா அறத்தினரான சமணருக்கு அறமாவது! அன்பர்காள்! சிறிது ஆழ்ந்து நினைமின்கள்! இங்ஙனங் கருதிய அக்குருக்கண்மாரெல்லாந் தம்முள் துணிபு ஒருப்பாடு உடையராய்க் கூன்பாண்டிய னிடஞ் சென்று அவனுக்குத் தம்மெண்ணம் புலப்படுத்துக் கரவுரை பலவால் அவனைத் தந்தொழிற்கு இயைவித்துக் கொண்டனர். பின்னர் அன்று இரவு நள்யாமத்திற் பிள்ளையார் திருக்கூட்டத்துடன் பள்ளிகொண்டிருக்கும் அமயங் கண்டு அச்சமணப் படுவர் எரிகொள்ளி கொண்டு மடத்தில் தீக்கொளுவினார். ஐயகோ! மடந் தீப்பற்றி எரியாநிற்க அதனுள்ளிருந்த அடியார் களெல்லாரும் மருண்டெழுந்து ஞான சம்பந்தப் பிள்ளை யாருக்கு இவ்விடரை அறிவித்து அடைக்கலம்புக, இதனை உணர்ந்த பிள்ளையார் சிவடினயார்களுக்குத் தீங்கு இழைக்க முந்துற்றுத் தீக்கொளுவிய சமணப்படுவர் பொருந்தாச் செய்கையைக் குறிப் பானறிந்து இதற்கு வாயிலாயினான் பாண்டிய வரசனேயாமென்பதும்இனிது தெளிந்து, செய்ய னேதிரு வாலவாய் மேவிய ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப் பொய்ய ராமம ணர்கொளு வுஞ்சுடர் பையவே சென்று பாண்டியற் காகவே என்னுந் திருப்பதிகங் கட்டளையிட்டருளி மடத்திற் கொளுவிய தீப்பிழம்பு அத்தனையும் பாண்டியன் உடம்பிற் சென்று பற்றுகவென்று ஏவினார். ஏவுதலும் உருவமாகத் தோன்றிய தீப்பிழம்பு முழுதும் அருவ வெப்பு நோயாய்ப் பாண்டியனைப் பற்றிக் கொண்டது. உடனே பாண்டியன் அந்நோய் பொறுக்கமாட்டா னாய்ச் சமணக் குருமார்களை அழைப்பித்து அவர் தம்மந்திர முறைகளானும் மருந்து முறைகளானும் செய்வித்துக் கொண்டன ஒரு சிறிதும் பயன் றராமைகண்டு மிகவருந்தித் தம்மனையுரிமைக் கிழத்தியாராகிய மங்கையர்க்கரசியாரைத் தன்மாட்டு வருவித்து அவர்க்கு இதனைத் தெரிவித்தான். அரசியாரும் உடன் வருந்தித் தங்குறிப்பு நிறைவேறுங்காலம் இதுவென்று எண்ணித் தங்கொழுநனை நோக்கிப் பிள்ளைப் பருவத்தே உமை திருமுலைப் பாலுண்டு ஞானசம்பந்த வள்ளலாய்த் தந்திருக் கூட்டத்தோடு இந்நகரத்தில் எழுந்தருளி யிருக்கும் பெருமான் இங்கு எழுந்தருளினால் அன்றி இந்நோய் தீராது என்றுரைப்ப, அதனைக் கேட்ட அரசனும் அதற்கு உடன்பட்டுத்தம் அமைச்சரான குலச்சிறையாரைப் பிள்ளை யாரிடம் போக்கினான். அமைச்சரும் நிகழ்ந்த வெல்லாம் பிள்ளையார் திருமுன்பிற் றெரிவித்து அவர் பாண்டிய னிடத்திற்கு எழுந்தருளச் செய்தார். பிள்ளையார் அருமைத் திருவுருவைக் காண்டலும் பாண்டியன் ஆறுதல் பெரிதுடைய னாயினான். இவ்வாறு ஞானசம்பந்தப் பெருமானார் பாண்டிய னருகில் மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் பக்கத்தே எழுந்தருளி யிருக்கும் அளவில் ஆண்டுக் குழுமியிருந்த சமணக்குருமார் பிள்ளையாரைச் சுட்டிப் பலவாறு இகழ்ந்து சொல்லிக் குரைத்திட்டார். பக்கத்தேயிருந்து அதனைக் கண்டு பொறாராகிய மங்கை யர்க்கரசியார் தங்கணவனை நோக்கிக் குழந்தையாயிருக்கும் பெருமானை இவர்இவ்வாறு இகழ்வதோ? என்று வருந்திக் கூற அப்போது ஞானசம்பந்தப் பெருமானார் அரசி யாரைப் பார்த்து, மானினேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள் பானல்வாயொரு பாலனீங்கிவ னென்றுநீ பரிவெய்திடேல் ஆனைமாமலை யாதியாய விடங்களிற்பல வல்லல்சேர் ஈனர்கட்கெளி யேன லேன் றிருவாலவாயர னிற்கவே என்னுந் திருப்பதிகங் கட்டளையிட்டருளினார். இதன் கண் ஞானசம்பந்தப் பிள்ளையார் மங்கையர்க் கரசியாரை நோக்கிப் பால் மணக்கும் நல்வாயையுடைய பாலன் நானென்று அம்மே! நீ வருந்தாதே என்று உரைத்தருளினா ரென்பது பெறப் படுதலால், அவர் பாண்டி நாட்டிற்குச் சென்று சமணரொடு வழக்கிட்ட காலத்திலேயே பாலறாவா யராக இருந்தாரெனல் தெற்றென விளங்கும். இங்ஙனம் பிள்ளையார் மதுரைமா நகரிலிருந்த காலத்தே அவர்க்கு நான்கு அல்லது நாலரை ஆண்டுதான் சென்றதென்பதற்கு அவர் தம்மைப் பால்மணக்கும் நல்வாயர் எனக் கூறுதலே சான்றாம். இனிப், பெரிய புராணத்தின்கண் ஓதப்பட்ட மெய்வரலாறு ஒருசிறிது ஆராய்ந்து செல்வார்க்கும், மதுரைமாநகர்க்குச் செல்லு முன்னரே பிள்ளையார் தெய்வப் பெற்றியுடையராய்ச் சிவபிரான் திருக்கோயில் கடோறுஞ் சென்று திருப்பதிகங் கட்டளையிட் டருளிச் செய்து காலம் ஒன்று அல்லது ஒன்றரையாண்டுகளாகலா மென்பது விளங்கும், ஆகவே பிள்ளையார் சிவபெருமான் றாங்கிவந்த அருட்கோலத்தை நேரே கண்டு அக்கோலத்தால் அருள் செய்யப்பட்ட காலம் அவர்தமக்கு மூன்றாண்டு செல்கின்ற பருவத்திலேயா மென்று பெரியபுராணங் கூறிய உண்மை வரலாறு மேன்மேல் உரங்கொண்டு திகழுமாறு காண்க. இங்ஙனம் அளவை நூற்பொருளொடு படுத்து யாம் இனி தெடுத்துவிளக்கி வரலாற்றின் முடிபொருளாய்ப் பிள்ளையார் தாம் மூன்றாண்டு செல்கின்ற அக்காலத்திலே தான் இறைவனும் இறைவியும் ஒருங் கெழுந்துவந்த அருட்டிருக் கோலத்தை நேரே கண்டு பின் அதனால் அருள் செய்யப் பட்டாரென்பது நன்று பெறப்பட்டதாகலின், அதுபற்றி யாம்நிறுவப்புகுந்த வருட்கோல வியல்பு வலியிழந்ததாய் விடுமென்று நீர் கூறியது போலியுரையேயா மென்று துணிக. இன்னுந் `தோடுடையசெவியன் எனக் கண்ணினாற் காணப்படும் உருவமும், `பால்கறந்தூட்டுக என்னுஞ் செவியினாற் கேட்கப்படும் ஓசையும் மூக்கினாற் கவரப்படும் இனிய பான்மணமும், வாயினாற் சுவைக்கப் படும் பாலும், அம்மையப்பரால் தொடப்பட்ட ஊற்றுணர்வு நிகழ்ச்சிக் குரிய உடம்பும் உடைய அவ்வருட் கோலம் உண்மைப் பேறுடையதா மென்று நன்குணர்ந்து கொள்க. இங்ஙனம் உலக வழக்குணர்வும் அதனாற் பாவனை செய்யும் ஆற்றலும் வாய்ப்பப் பெறாத குழந்தைப் பருவத்திலே ஞானசம்பந்தப் பிள்ளையார் மதிமுகிழ் பிணித்த மாதியல் பாகனை நேரே கண்டு அருள் செய்யப்பட்டுத் திருப்பதிகங் கட்டளையிட் டருளிய வியத்தகு நிகழ்ச்சியை வரலாற்றியல் பிறழாது உண்மையான் ஆழ்ந்தாராயவல்ல எந்தநிரீசுரவாதி தாம் பொய்யென்று மறுக்க முந்திடுவார்? மக்களுக்கு அமைந்த மூளையின் ஆற்றலால் மிக வியப்பான நிகழ்ச்சிகளும் எளிதில் நிகழும் என்று தமக்குத் தோன்றிய வாறெல்லாம் வானக் கோட்டை கட்டி அதன்கண் நின்று பிறரை அறைகூவி யாரவாரஞ் செய்யும் மனநூலார் தாம்இவற்றுக்கெல்லாம் யாது சொல்லவல்லார்? உண்மை வரலாற்று முறையொடு மாறுகோளுறாது நிகழ்ந்த இவ்வியத்தகு நிகழ்ச்சியை அற்புதமே ஒன்றில்லையெனக் கூறும் பிரமசமாசத்தார் தாம் எவ்வாறு கடந்து பேச வல்லார்? இதுநிற்க. இனிப் பிரமசமாசத்தார் உலகவியற்கைக்கு வேறாக அற்புதமென ஒன்று நிகழுமாறில்லையெனக் கிளந்துரை யாடி ஆரவாரஞ் செய்தலின் அவருரைப் பெற்றியையும் ஒருசிறிது ஆராய்ந்து அது போலியாமாறு காட்டிப் பின்னர் எடுத்துக் கொண்ட பொருண்மேற் செல்வாம். பிரமசமாசத்தார் கூறுமாறு: வித்தினின்று முளை கிளம்பி பின் பல ஆண்டுகள் சென்று மரமாதலும், ஒருதாய்க் கருப்பையிற் கருமுதிர்ந்துபத்துத் திங்கள் கழியப் பிறந்து வளர்தலும், வளர்ந்தன ஒரு காலத்து இறந்தொழிதலும், நிலன், நீர், நெருப்பு, காற்று, வான் முதலிய வுலகியற் பொருள்கள் தத்தம்நிலையிற் பிறழாது நின்று இயங்குதலும் பிறவுமாகிய தொழிற்பாடுகளெல்லாம் இயல்பாக வருவன வாம்; இவற்றை இங்ஙனம் வகுத்தமைத்து நெறி பிறழாது நடாத்துகின்ற வனாகிய முழு முதற் கடவுள் அவற்றினியல் பைப் பிறிதொரு காலத்து மறுத்து மாற்றினானென்றல் அவனுடைய இறைமைத் தன்மைக்குப் பொருந் தாமையான், அற்புதங்கள் என்பன உலகவியல்பொடு மாறுபாடு பெரிதுற்று நிகழ்வன வாமென்று ஒரு சார் சமயவாதிகள் கூறுவது பொய்யேயாம் என்பர். இதனை ஆராய்வாம். இனி, வரலாற்றுண்மை யுணர்ச்சி மிகவுடையார்க்கு இங்ஙனம் நடந்த வியத்தகு நிகழ்ச்சிகளைப் பொய்யென்று மறுத்தலாகாமையான், இவை தமக்கு வேறு வழி சொல்லாமல் வாளா தமக்குத் தோன்றியவாறே பொய் யென்றுரைத்தல் முறையாகாது. அல்லதூஉம், இவ்வற்புதங் கடாம் ஒரு காலத்து ஒருதேயத்தில் நிகழ்ந்தனவாகாமல், எக்காலத்தும் எல்லாத்தேயத்தின்கண்ணும் நிகழா நிற்கின் றன, ஏசுநாதர் ஒருசில அப்பங்களையும் மீன் களையும் பெருந்திரளான மக்கட்கு விருந்தளித்தாரெனவும் அத்தி மரத்தை வற்றச் செய்தாரெனவும், இறந்தவனை எழுப்பி னாரெனவும், ஏனைச் சமய நுல்களிலுங் கூறப்படுதல் காண்கின்றோம். இந்நாவலந் தீவில் உண்மை மேலறிவு முதிர்ச்சி கைவந்தவராகிய தூய சான்றோர்கள் தோன்றிப் பல வேறு அற்புதங்கள் நிகழ்த்திய வாறு போலவே ஏனை நாடுகளிலும் உண்மைக் கீழறிவுப் பேறுடையரான தீர்க்கதரிசிமார் தோன்றிப் பலவேறு அற்புதங்கள் நிகழ்த்தக் காண்டலால் இவையனைத்திற்கும் ஒரு வழி சொல்ல அறியாமல் மற்று அவையெல்லாம் வெறும் பொய்யாமென் றுரைப்பார் கூற்று வெறுங்கூற்றாவ தன்றிப் பிறிதென்னை? எம்மறிவுக்குப் பொருந்தவில்லை என்றும் எம்மனு பவத்திற்கு அஃது இயையவில்லை யென்றும் உரைத்து அத்தனை எளிதாக அவற்றைப் பொய்யென் றுரைப்பார் வேறு என்கடவரென்க! இக்காலத்தில் நீராவிப் பொறிகளின் உதவியாலும், மின்வலிப் பொறிகளின் உதவியாலும் வியப்பான பல பொருள்களும், பல தொழிற் கூறுபாடுகளும் செய்யப் படுதல் காண்கின்றாம்.இவையெல்லாம் ஓர் ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னிருந்த எம் முது மக்கள் கனவினுங் கண்டறியார். அவர் காலத்தில் ஒருவர் தோன்றிப் பின்னொரு காலத்தில் நீராவிப் பொறிகளும்மின்வலிப் பொறிகளும் ஏற்பட்டு அருமையான பலவுஞ் செய்யு மென்று உரைத்தக் கால் அதனைக் கேட்ட ஒருசிலர் அது பெரும்புதுமையா யிருக்கு மெனவும், வேறு சிலர் அஃது உலக வியற்கைக்கு மாறாகலின் அவ்வாறு நிகழாது எனவும், வேறு சிலர் எந்தவினையுஞ் செய்கின்றவன் ஆற்றல் பற்றி நிகழ்வதாகலின் பின்னர்ப் பிறக்கும் அறிவு நுட்பவாற்றல் மிக்குடையரான மக்கள் அது செய்தற்கு முரியராவரெனவும் உரைத்துத் தத்தங் கருத்து மொழிந்திடுவார். இனி, அப்பொறிகளின் பயனை நேரே கைக்கொண்டு போதரும் எமக்கெல்லாம்அங்ஙனம் வியப்புணர்வு நிகழ்த லின்றாகலின் அவ்வமைப்புகளெல்லாம் எளியனவாகவே எமக்குக் காணப்படுகின்றன. இவ்வாறே, செம்பைப் பொன்னாக்கும் இரசவாதம் பொய்யாமென்று சொல்லிக் கொண்டிருந்த இயற்கைப் பொருணூலாரும் இப்போது அமெரிக்கா தேயத்தில் ஒருவர் செம்பைப் பொன்னாகத் திரித்து விற்றலைக் கண்டு அதனையும் உண்மையாமென நம்புதற்குத் தலைப்பட்டு விட்டார்கள். மந்திரவொலிகட்கு வடிவமுண்டென்று சைவ சித்தாந்திகள் சொல்வதை மறுத்தார் சிலர், அமெரிக்காவில் ஓரரிய கலைநூல் அறிஞர் ஒலி நுட்பங்கட்கெல்லாம் வடிவுண் டென்பதைக் கண்கூடாகச் செய்து காட்டுதலை யறிந்து அதனையும் நம்பத் தலைப்பட்டுவிட்டார்கள் மின்னோட்டக் கம்பியின்றி மின் செய்தி இயங்கமாட்டா தென்று சொல்லிக் கொண்டிருந்த ஐரோப்பியக் கலைஞர் எல்லாரும், நுண் ணறிவுக் கலைஞர் ஒருவர் புதுவதாகக் கண்டு பிடித்த முறையால் கம்பியின்றியும் மின்னியக்கம் நடை பெறுமென்று கூறி அதனையுந் தழுவிக் கொண்டார்கள். இவ்வாறே இக்காலத்தில் அறிவு நுட்பத்தாற் பேராற்றலுடை யரான நன்மக்கள் பலர் தோன்ற முற்காலத்திற் கனவு காண்டற்கும் அரியவாய்க் கிடந்த அரும்பெருந் தொழில் களை இயற்றுகின்றார். இங்ஙனம் இவர் கண்கூடாகச் செய்து காட்டுஞ் செயற்கரிய செயல்களை யெல்லாம் நேரே கண்டு வைத்துந், தம்முடைய அறிவுக்கும் அனுபவத்திற்கும் எட்ட வில்லையென்று அவற்றை யெல்லாம் பொய்யென்றல் பேதை நீரார் செயலேயா மென்று ஒழிக இனிப், பெரியோர் நிகழ்த்திய புதுமைகள் உலக வியற்கைக்கு மாறுபாடுறுதல் இல்லை யென்பதூஉம் ஒரு சிறிதுகாட்டுவாம். ஞானசம்பந்தப்பிள்ளையார் திருமயிலாப் பூருக்கு எழுந்தருளின காலத்திற், சிவநேயர் என்பார் ஒருவர் வளர்த்த அரியபெண் பாம்பு கடித்திறக்க, அப்பெண்ணின் தந்தையாரான அவர் அவளுடம்பைத் தீயிலிட்டுக் கொளுத்தி என்புகளை யெல்லாம் ஒரு குடத்திற் பெய்து பொதிந்து பிள்ளையார் திருமுன்பே கொண்டுவந்து அவர்க்கு அடியுறை யாக இட்டு, `அருமையாக வளர்க்கப் பட்டபூம்பாவை என்னும் என் மகள் இறந்தாளாயினும் பெருமானுக்கே அடியுறையாகச் செலுத்திவிடல் வேண்டு மென்னுங் கடப்பாட்டால் அவள் என்பைத்திருவடிக்கு உறையாக உய்த்தேன் என்று நெஞ்சங்கரைய மொழிதலும் பிள்ளை யாரும் அவ்வன்பர்க்கு மிக இரங்கி இறைவன் திருக்கோயி லுட் புகுந்து அக்குடத்தையுந் திருமுன்பே இருத்தி, மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தா னொட்டிட்ட பண்பி னுருத்திரப் பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய் என்னுந் திருப்பதிகங் கட்டளையிட்டருளினார். அருளலும், என்பாய்க் கிடந்த அப்பிண்டம் எழுவகை முதலுங்கூடித் திரண்டுருண்டு அழகிய பெண் வடிவாய்க் குடத்தினின்றும் எழுந்தது.இப்புதுமை உலக வியற்கையோடுஇணங்குமாறு காட்டுவாம்.அப்பெண்ணின் உடம்பு அழிந்தது என்பதனாற் பெறப்பட்ட உண்மையாது? என ஒருங்கி ஆராயலுறுவார்க்கு எழுவகைப் பொருள்களாற் கட்டப்பட்டு பருவடிவிற் காணப்பட்ட உடம்பு நுண் அணுக்களாய்ப் பிரிந்து கட்புல னாகாது நுண் வடிவிற்றாய் ஒழிந்தது என்பதேயா மென்றோ? இங்ஙனம் அதனை நுண் அணுக்களாகப் பிரித் தற்கு வினை முதலான ஒருவனுடைய தொழில் இன்றியமை யாததா மன்றோ? அங்ஙனமே, எழுவகைப் பொருள் களையும் ஒருங்கு கூட்டுதற்கும் வினைமுதலாக ஒருவன் வேண்டப்படு மன்றோ? அவ்வினை முதல்தான் எல்லாம்வல்ல முழுமுதற் பெருங்கடவுள் ஒருவனேயாம், எவ்வாறு வனைதற்றொழிற்கு முதலான குயவன் தன் ஆற்றற்கேற்பச் சிறிது சிறிதாக மண்ணைக் கூட்டிக் குடந்திரட்டுகின்றானோ அவ்வாறே எல்லாம்வல்ல முதல்வன் தன்பேராற்றற்கேற்ப அளவிறத்ந உலகங்களையும்அவ்வுலகங்களிற் பலவேறு வகைப்பட்ட உடம்புகளையும் படைத்திட்டு உயிர்களுக்கு இன்பம் நுகர்விக்கின்றான். இங்ஙனஞ் செய்கின்ற இறைவன் எல்லாந் தனக்குரிய முழுமுதலறிவாற்றல் பற்றியே செய்வதல்லது, எம்மைப் போலப் பிறர்வழியனாய் நின்று செய்வானல்லன். அவனுடைய அருளுக்கும் ஆற்றலுக்கும் ஓர் அளவே யில்லை. அவ்வயில்பினனாகிய இறைவன் றிருவருள் பதியப்பெற்ற ஞானசம்பந்தப்பிள்ளையார், பூம்பாவை என்னும் பெண் மகளின் உடம்பு நுண் அணுக்களாப் பிரிந்தழிய அங்ஙனம் அழிந்தவதனைத் திரும்பவும் முன்னைப் பருவுடம்பாம்படி இறைவன் றிருவருள் வலி கொண்டு செய்திட்டார். அற்றேல் ஒரு தாய் அகட்டிற் கருவைப் புகுத்தி அதனைச்சில காலத்திற் புறம்படுத்தி வளர்த்து அழிக்கின்ற இறைவன் றிருவருட் செயல் அச் செயன் முறைதிறம்பி, இடையொரு காலத்து அழிந்ததோர் உருவைப் பெயர்த்தும்வேறு ஒருபுது முறையாற் படைத் திடுதல் பொருந்துமோ வெனின்; அற்றன்று, அழியும் பருவ மன்றாகிய காலத்தே அழிந்து பட்ட அவ்விளம் பெண்ணைப் பெயர்த்துந் தந்தது அருள் செய்ததாகலின் அஃது இழுக்கன்றாம். அல்லதூஉம், தனக்கென அறிவாற் றலுடைய னாகிய முதல்வன் தன்றிரு வடித்தொண்டு பேணும் அன்பர்க் கிரங்கி அவர் வேண்டியவாறே செய்திட்டா னாகலானும், மலவழியராய்க் கிடந்துழலும் எம் பொருட் டாகவே சட்ட திட்டங்களியற்றிய தன்றித்தன்னியல்பில் அறிவுருவாய் விளங்கும் பெருமானுக்குச் சட்ட திட்டங்கள் பிறர் வகுத்துவைத்தல் பொருந்தாதாய் முடியுமாதலானும், சட்டதிட்டங்கட்கு உட்படுவாரெல்லாம் பிறர்வழியராதல் காணக் கிடத்தலால் இறைவனுக்கும்அவை யுண்டெனக் கூறுதல் அவன் முதன்மைக்கு இழுக்காமாதலானும் அவ்வாறு கடாதல் இறைவனொருவனுண்டெனக் கொண்டு வழுத்தும்பிரம சமாசத்தார்க்கு ஒருசிறிதும்இணங்காதென் றொழிக. இதுபற்றியன்றே விதியும்விலக்குங் கடந்தார்க்கு விதியாலொன்றை விதிப்பாரார் என்னுந் திருமொழியும் எழுந்ததென்றுணர்க. இன்னும், இயற்பொருட் கலைஞன்11 ஒருவன் தனக்கிருக்கும் ஆற்றல் பற்றித் தன்மாட்டுள்ள கருவி கொண்டு தண்ணீரை இருவேறு நுண்வளிகளாகப் பிரித்தலும், அங்ஙனம் பிரித்த அவற்றைப் பெயர்த்துந் தான் விரும்பிய வாறே பருவடிவத் தண்ணீராகச் செய்தலுங் காண்கின்றேம். அவ்வாறே இறைவனும் நுண் அணுக்களாகப் பிரித்த அவ்விளம் பெண்ணின் உடம்பைப் பெயர்த்தும் பருவடிவில் முன்னை யுடம்பாகத்தன் முழுமுதலாற்றலாற் செய்திட்டானாகலின் அஃதுலகவியற்கை யொடு முரணிற்று என்றல் யாங்ஙனம்? அவ்வவர் செய்யுந் தொழிற் கூறுபாடுக ளெல்லாம் அவ்வவர் ஆற்றன் மிகுதி பற்றியே சிறப்பனவாம். இயற்பொருட் கலைஞன் தன்னாற்ற லுட்பட்ட தொன்றை அவ்வாறு செய்தானாயின், எல்லாம் வல்ல தன்னாற்றலுக் கேற்ப இறைவன் தானும் அவ்விளம் பெண்ணை அங்ஙனம் எழுப்பினான். பிறந்தோ ரிறத்தலு மிறந்தோர் பிறத்தலும் அறந்தரு சால்பு மறந்தரு துன்பமும் (மணிமேகலை) என்றவாறு போலப் பிறத்தலும் இறத்தலுமியற்கையாவாரா நின்ற இவ்வுலகத்தே, அவ்விளம் பெண்ணை இறக்கச் செய்தும் பின் குடத்தினின்று பிறக்கச் செய்துந் திருவிளை யாடலியற்றிய முதல்வன் உலகவியற்கையொடு முரணிச் செய்தானென்றல் மையாது. அற்றேல் அஃதாக, யாம் உலகவியற்கையொடு முரண் பாடுடைய தென்றது அவ்விளம் பெண்ணை ஒரு தாய்வயிற்றி னின்று பிறப்பியாமல், இடையொரு காலத்துக் குடத்தி னின்றும் எழுப்பியதையேயாமாகலின் அதனை யுணராமல் நீர்மேலே யுரைத்த வழக்குப் புரை படுமாம் பிறவெனின்; நன்று சொன்னாய், அதனை யுணராதேம் அல்லேம், அங்ஙனம் உலகவியற்கையொடு பொருந்தச் செய்தல் வேண்டினானாயின் முதல்வன் அவ்விளம் பெண்ணைத் தாய்க் கருப்பையில் நுழைப்பிக்கக் கடவனென நீ கூறியது ஒக்கும்; இறைவன் அவ்விளம் பெண்ணை வேறு ஓர் உடம்பின் கண் உய்த்தல் வேண்டினானாயின் அவ்வாறே செய்கிற்பன். அங்ஙனமின்றிச் சிவ நேயரென்னும் அன்பர்க்கு மகளாய்ப் பிறந்த அந்த யாக்கையின் கண்ணேயே அவ்வுயிரை அவர் வேண்டுகோட்கு இரங்கிப் புகுத்தல் வேண்டினமையின், அவ்வாறு இடையொரு காலத்து நுண் வடிவாய்ப் போன அவள் யாக்கையைத் திரும்பவும் பருவடிவிற்றாக்கி அருள் செய்தானென்றுணர்க. அவ்வாறு திரும்ப அருள் செயல் வேண்டினானாயினும், சிவநேயர் மனைவியின் கருப்பையிற் புகுத்தி அவ்வாற்றால் அவளைப் பிறப்பித்தலே முதல்வனுக்கு முறையாமாலெனின்; அதனால் அவ்விளம்பெண் மறுபடியுங் கருப்பையிற் கிடந்துழலும் பெருந்துன்பமே போதரலானும், தாய்தந்தை முதலாயினார்க்கும் அதனாற் பேரிடரே விளையுமாதலானும், மணங்கூடும் மங்கைப் பருவங்காறும் வளர்த்தக்காற்பட்ட மேலைத்துன்பங்களெல்லாங் கிளைத்து முன்னைமுயற்சிகள் எல்லாம் பயனின்றிப் போதலானும், பேரிரக்கமுடையனாகிய பெருமான் இத்தனை துன்பங் கட்கும் தன்அன்பரை யுள்ளாக்குதல் அவனுக்கு இரக்கம் இன்றாமென்பதுபட்டு இழுக்காய் முடிதலானும் அவ்வாறு வினாதல் பெரிதும் ஏதமாமென்று மறுக்க. அற்றேலஃதாக, எழுவகைப் பொருள்களையுங் கொண்டு அங்ஙனம் அவள் உடம்பு படைத்திடுதலே முறையாமன்றி, அவற்றுள் ஒன்றாகிய என்பைக் கொண்டு அவள் உடம்பைத் திரட்டி எழுவித்தானென்றல் அமையா தாமெனின்; அறியாது கடாயினாய், `அண்டங்களெல்லாம் அணுவாக அணுக்க ளெல்லாம் அண்டங்களாக ஒரு நொடியில் மாற்றவல்ல னாகிய இறைவன் மாட்டும் அங்ஙனஞ் செய்கைத்திறங் குறைபாடுண்டாக வினாதல் அறியாமை முதிர்ச்சியாவதன்றிப் பிறிதில்லையென விடுக்க. அல்லதூஉம் என்பை யொழித்து ஒழிந்த பொருள்களெல்லாம் நெகிழ்ச்சி யும் மென்மையுமுடையன வாகையால் அவையெல்லாம் நுண்வடிவாய் நின்றன அவற்றைப் பருப்பொருளாகத் திரித்து என்போடு ஒருங்குகூட்டி உடம்பைப் படைத்திட்டானாகலின் ஆண்டும் மாறுபாடில்லை யென்றொழிக. இதுநிற்க. இனி, ஞானசம்பந்தப்பிள்ளையார் மூன்றாம் ஆண்டி லேயே பேரறிவினராய் விளங்கினாரெனல் யாங்ஙனம்? அஃது உலக வியற்கை யன்றாலோவெனின்; அறியாது கடாயினாய் போப் முதலான முன்னை ஆங்கிலப் புலவர் களுங் குழவிப் பருவத்திலேயே புலமை மிகவுடை யராய் விளங்கினா ரென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின் உலகவியற்கை. உலகவியற்கையென நீர் கூறுவன வெல்லாங் குன்றக் கூறல் என்னும் குற்றமுடையதா யொதுங்குமாறு அறியக் கடவீராக. உலகவியற்கைக்கு நீர்வரைந்து சொல்லும் இலக்கணம் பெரும்பான்மை யாய் நிகழ்வதென்றுரைப்பீ ராயின் அப்போது அக்குற்றம்வர மாட்டாது; யாங்கூறும் வழக்குரைகளும் வாய்ப்புடையன வேயா மென்பதூஉம் எளிதிலுமக்கு விளங்கும். இன்னும் உலகவியற்கை யென்பது இறைவன் உயிர்களின் அறிவு முதிர்ச்சிக் கேற்பத் தன் உரிமை அறிவாற்றலால் நிகழ்த்துஞ் செய்கையின்அமைப்பே யாமென யாங்கூறும் இலக்கணத்தை நீர் ஒருசிறிது உளங்கொளப் பொருத்தி யாராயவல்லிராயின் `பெரும் பான்மை யென அடைகொடுத்து இடர்ப்பட்டு நீர் இலக்கணங் கூறுதலும் வேண்டா, அல்லது அவ்வடை கொடுத்து இலக்கணஞ் சொல்லுவீராயினும் அதுவுமெம் வழக்கிற்கு ஒத்து நிற்பதேயன்றி மாறுபாடுறாது. எனவே, ஞானசம்பந்தப்பிள்ளையார் மூன்றாம் ஆண்டிலேயே பேரறிவினராய் உலகை உய்வித்தது உலக வியற்கையொடு பொருந்துவதே யாமென்றுணர்ந்து கொள்க. இனி, நிரீசுரவாதிகளுள் ஒரு சாரார் ஞான சம்பந்தப் பிள்ளையாரே தாம் நிகழ்த்திய அற்புதங்களைக் குறிப்பிட்டுப் பதிகங்கள் கட்டளையிட்டருளினா ரென்பதற்குச் சான்று என்னையென்று வினாவுவராலெனின்; உலக வழக்கும் ஆன்றோர் வழக்குமே அதற்கு உறுசான்றாம். பிள்ளை யாரோடு ஒருங்கிருந்த திருநாவுக்கரசுகளும், அவர்க்குச் சிலகாலம் பின்னிருந்த சுந்தரமூர்த்திகளும் அவர்க்கு சிலகாலம் பின்னிருந்த நம்பியாண்டார் நம்பி களும், அவர்க்கு சிலகாலம் பின்னிருந்த பெரியபுராண முடைய சேக்கிழாரும் பிள்ளையார் அருமை பெருமை களை மிக விரித்துரைக்கும் வழக்கானும் மரபானும் முன் னெடுத்துக் காட்டிய பதிகங்களும்பிறவும் பிள்ளையார் கட்டளை யிட்டருளி யனவேயாமென்க. அற்றேலஃதாக, அவ்வான்றோர் உரையைத் தான் மெய்யெனக் கொள்ளு தற்குச் சான்று என்னையெனின்; நன்று வினாயினாய். இத்தனை ஐயுற வுடையையாய்த் தெளியமாட்டாது தடை நிகழ்த்துமுனக்கு எத்தனைதான் யாம் உரைப்பினும் மேன்மேலும்தடை நிகழ்த்தி வரம் பிறந்தோடுங் குற்றத்திற்கு இடஞ்செய்வை யாகலான் அவ்வாறெல்லாம் உனக்கு விடையுரையேம். ஆயினும் நினக்கு மெய்யறிவு கொளுத்து தற் பொருட்டு நின்மாட்டுயாமே சில வினாக்கள் நிகழ்த்து கின்றாம்; உய்த்துணர்ந்து கேட்பையாக நீ குழந்தையாயிருந்த பருவத்திலே நின்தாய் இன்ன ளென்று யாங்ஙனம் உணர்ந்தாய்? அவளுரைப்பவன்றோ உணர்ந்தாய். அவள் பாலுண்ணுக என்று சொல்லி நின்னை ஊட்டிய காலத்தினெல்லாம் நீ உணவு கொள்ளும் இப் பொருளை யாங்ஙனம் உணர்ந்தாய்? அவளுரைப்பவே யன்றோ உணர்ந்தாய். இவ்வாறே உலகியற் பொருள்கட் கெல்லாம் பெயரிடுமாறும், அவற்றைத் தெரிந்து பயன் படுத்துமாறு மெல்லாம் யாங்ஙனம் உணர்ந்தாய்? அவளு ரைப்பவேயன்றோ உணர்ந்தாய், அக்காலங்களி லெல்லாம் நின் அன்னை சொல்லியவற்றை அவள் சொல்லிய வாறே நீ நம்பினதன்றி அவள் சொன்ன ஒவ்வொன்றனையும் ஆராய்ச்சி செய்து பின் நீ நம்பியதுண்டோ? இல்லையே, இப்போது தான் என்ன! நீ கலை பயில் கழகஞ் சென்று கல்வி பயிலுங் காலங்களினெல்லாம், ஆசிரியர் சொல்லியவற்றை ஒருங்கே நம்பி, அந் நம்பிக்கையின்மேல் உன்னறிவெனுந் திண்ணிய அரணைக் கட்டுதலன்றி, அவர் கற்பிக்கும் ஒவ்வொன்றிலும்நீ ஐயங்கொண்டு தெளிந்ததுண்டோ? ஆசிரியன் ஒரு பொருளுக்கு நீர் என்றும், ஒன்றுக்கு நில மென்றும், ஒன்றுக்குத் தீ என்றும், பலவாறாகப் பெயரிட்டுக் காட்டினால் அவற்றுக்கு ஏன் அப்பெயர் அமைத்தார் என்று நீ ஆராய்ந்ததுண்டோ? அல்லது அவர் சொல்வது பொருத்தந்தானாவென்று நீ ஐயம்நிகழப் பெற்றதுண்டோ? இவையெல்லாம் ஒரு புறங்கிடக்க. நீ நாடோறும் நண்பர் களோடு கலந்து பழகுங்காலும் அவ்வவர் உரைக்குஞ் சொற்களையும் பொருள்களையும் பொருந்த ஆராய்ச்சி செய்துதான் நம்புகின்றனையோ? ஒருவர் அமெரிக்கா தேயம் என்று இருக்கின்றது என்றுரைத்தால், அப்படி ஒரு தேயத்தை நான் கண்டதில்லாமையால் அது பொய்யென் பையோ? ஒருகாலும் உரையாய். இருந்தவாற்றால், உன்னறிவு முதிர்ச்சியும் ஆராய்ச்சித்திறனுந் தொழிலொருமைப்பாடும் பிறவுமெல்லாம் பிறர் சொல்லின்கண் உனக்கு இயல்பாக வெழுந்த நம்பகம்பற்றியே மெய்யாய் நிகழ்வதல்லது வேறு இன்றாம்.இனி, அங்ஙனம் உனக்கு நிகழ்வதாகிய நம்பக வுணர்ச்சியும் உனக்கு அதனை வருவிக்கின்றவர் மெய்யுரை யியல்பு பற்றியே உரம் பெற்றுத் தோன்றும். அவர் சேய் நாட்டின்கண் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றைத்தாம் நேரே கண்டிருந்ததாக உரைத்திடுவராயின் அதன்கண் நம்பிக்கை மிக உறுதியாக நினக்குத் தோன்றா நிற்கும்; அவர் அதனைத் தாமே நேரிற் காணாமற் கண்டார் ஒருவர் தமக்குரைப்பத் தாங் கேட்டவாறே அதனை நினக்கு மொழிந்திடுவராயின் அதன்கண் நம்பகஞ் சிறிது குன்றித் தோன்றா நிற்கும். இவ்வாறே ஒருவர் ஒருவர்க்கு உரைப்ப வருகின்றன வெல்லாம் முறை முறையே நம்பகங் குறையத் தோன்றா நிற்கும். இனி ஒரு நிகழ்ச்சியைக் கேட்டோர் உரைத்தவாறே அதனைக் கண்டிருந்தோரும் பொருந்த வுரைத்திடுவராயின், அது மெய்ம்மை மிகவுடைத்தாய் உலகத்தின்கட் பரந்த வழக்கமுற்று ஆன்றோராற் பாதுகாக்கப் படும் மெய் வழக்காய் நிலையுதலுறும். இங்ஙனம் பரந்துபட்ட வழக்காய் வரும் மெய்ந் நிகழ்ச்சிகளையே குறிப்பிட்டு ஆங்கில நூலாரும் நாட்டு வரலாறுக ளெழுதுகின்றனர். அவரெழுது கின்ற அவ்வரலாற்று நூல்களின் கண்ணெல்லாம் எந்த நிரீசுர வாதியும் ஐயுறவுகொள்ள இடம்பெறார். சீசர் என்னும் ஓர் அரசர் ஆயிரத்தெழுநூறு ஆண்டுகளின் முன் உரோம நகரத்திற் செங்கோலோச்சினாரென்பது அவர் செதுக்கிய சில கல்வெட்டுக்களால் இனிதுணரப்படு மென்றால் அதன் கண் ஐயுறுவார் யாருமிலர். இதுபற்றி யன்றே அளவை நூலாரும் உரையளவையென வொன்று சிறந்தெடுத்துக் கொள்வாராயினர். இது நிற்க. இனி, இங்ஙனங் காட்டிய வரலாற்று முறைக்கு இணங்கவே, எம் ஞானசம்பந்தப்பெருமானார் தாம் நிகழ்த்திய அரும்பேரற்புதங்களைத் தம் அருமைத்திருப்பதி கங்களிற் கட்டளையிட்டருளுதலும், பிள்ளையாரோ டொருங்கிருந்து அவ்வற்புதங்களை நேரே கண்டிருந்த தோலாநாவின் மேலோராகிய அப்பருந் தம் அன்புருவான பதிகங்களிலவற்றைக் கட்டளையிட்டருளுதலும், இங்ஙனம் மெய்ம்மைகொண்டு நிகழ்ந்த அற்புத நிகழ்ச்சிகள் சுந்தர மூர்த்திகள், பட்டினத்தடிகள், நம்பியாண்டார் நம்பிகள், சேக்கிழார் நாயனார், உமாபதி சிவனார், தாயுமானவர் முதலிய மெய்த்திருவாளரான சான்றோரான் மொழியப் படுதலும், அங்ஙனம்மொழியப்படுதலாற் பரந்துபட்ட உலகியல் வழக்கும் ஆன்றோர் அறநெறி வழக்குமாய்ப் பாதுகாக்கப்படுதலுந் தேர்ந்துணர வல்லை யாயின் மேன்மேல் வரம்பிறந்தோடுந் தடை நிகழ்த்திமலை வாயல்லை. இனி, இங்ஙனங் காட்டிய உரையளவைகளையுங் கடந்து அழிவழக்கு பேசத்துணிதல் உலகத்தாராற் பித்த னென்று எள்ளப்படுதற் கேதுவாமாகலின்,இனி யாமெடுத்துக் கொண்ட திருவுருவ வழிபாட்டினியல் வழாது மேலும் அதனை ஆராய்ந்து செல்வாம். இதுகாறும் யாம் எடுத்து விளக்கியதன் முடி பொருளாய்ப் பெறப்படுவன யாவையோ வெனின், நாவலந் தீவினராகிய நம்மனோர் செய்து போதருந் திருவுருவ வழிபாடு இறைவன் ஒரோவொரு காலத்து ஒரோரன்பர்க்கு அருள்புரிதற் பொருட்டு அருளையே திருமேனியாக் கொண்டு எழுந்தருளி வந்த திருக்கோலக்குறிப்பு இனிது விளங்க அமைத்து நிறுத்திய வழிபாடாய், அவ்வழிபாடு வாயிலாகவே எமதுணர்வை இழுத்துச் சென்று இறைவன் மாட்டுப் பதியவைக்குங் கருவியாமென்பதூஉம் இங்ஙனம் போந்த அருட்கோலத்தை அறிதற்குரிய நல்வினை முகிழ்ப்பு இல்லாத ஏனை நாட்டவர் தத்தமக் கறிவு சென்றவா ரெல்லாங் கல்லானுஞ் செம்பானும் இயற்றி வைத்துக் கொண்டு வழிபடும் அவரது வழிபாடு அவ்விக்கிரகங் கண்மேற் கடந்து சென்று இறைவன் உண்மையருட் கோலத்தின்கண் அவரறிவைப் பதிக்க மாட்டாமையின்அவர் செய்யும் அவ்வழிபாடு விக்கிர காராதனை யென்று வழங்கப்பட்டதா மென்பதூஉம், இங்ஙனம் வேறுபாடு பெரிதுடைய திருவுருவ வழிபாட்டிற்கும் விக்கிரகாராத னைக்கும் இலக்கண முணராது அவை யிரண்டனையும் ஒன்றெனக் கொண்டு அவ்வாற்றான் நம்மனோர் செய்து போதருந் திருவுருவ வழிபாட்டு நன்முறையை ஒரு சாரார் இகழுதல் பொருந் தாதா மென்பதூஉமே யாமென் றுணர்ந்து கொள்க. இனி இறைவனை அங்ஙனம் உருவத் திருமேனியிற் கொண்டு வழிபடுமாறு தானென்னை? அருவ மாகக் கொண்டு வணங்குதலே அமையுமா மென்பார் தடையுமொழிய ஒருசிறிதுகாட்டுதும். இனி வழிபாடு உருவமான கோலத்தின்கட் செயப் படுதல் வேண்டுமெனக் கூறியதென்னை? அருவமாக இறைவனை வழிபடுதலே முறையாமாலெனின், நன்கு கடாயினாய், அவ்விறைவனை அருவமாகத்தான் வழிபடுதல் வேண்டு மென்னுங் கடப்பாடு என்னை என எதிர்கடாவு வார்க்கு நீர் இறுக்குமாறு இன்றாம். அற்றன்று, காலத்தானும் இடத்தானும் வரையறைப்படாதுவிரிந்த அருவப்பொருள் காலத்தானும் இடத்தானும் வரை யறுக்கப்படும் உருவமாக வந்து அருள் செய்யுமென்றல் சாலாதென்பதே எமது கருத்தாமெனின்; நன்றே வினாயினாய், அறிபொருளான உயிரின் கண்ணும் அறிவில் பொருளான உருவருவ வுலகங் களினுமெல்லாம் இறைமுதற் பொருள் ஒருங்கு நிறைந்து அவற்றின் மேலும் விரிந்து செல்லும் பெரும்பரப்பும் முழு முதன்மையு முடையதென்ப தெல்லார்க்கும் ஒப்ப முடிந்தது; முடியவே, பருப்பொருளான குடம் ஆடை முதலிய வற்றினெல்லாம் நிறைந்திருக்கும் அவ்விறை முதற்பொருள் அந்நிறைவு பற்றி ஒருவாற்றால் வரையறுக்கப் படுமென்பது துணி பொருளாம். அற்றேல், அது முழுமுதற்கடவுளின் நிறை விற்கும் இறைமைத்தன்மைக்கும் இழுக்காம் போலுமெனின் அற்றன்று, குடம்முதலிய பொருண்மட்டின் மடங்கி நிறைந்து மேற் செல்லாதாயின் அஃதுஅதற் கிழுக்காம்; அவ்வாறன்றி அவற்றினுள்ளும் புறம்புமெல்லாம் ஒருங்கு நிறைந்து மேல் விரிந்து நிறையும் முதன்மை யுடைமையால் அஃது அதற்கு இழுக்கன்றாம், குடம் முதலிய பருப்பொருள்களில் நிறையுந் துணையே அதுவரையறைப் பொருளென்பது பெறப்படுமாம் பிறவெனின் அஃதமை யாது, வரையறுக்குங் குடம் முதலிய வற்றின் வரம்பின் கண்ணும் அதுநிறைந்து உள்ளும்புறம்புந் தொடர்புற்று நிற்குமாகலின், தொடர்பின்றி யறுத்து வேறாக்கப்படும் பருப்பொருள்போல் அது கொள்ளற் பாலதன்று. இங்ஙனங் குடம் முதலிய பொருள் நிறைவு பற்றியும் அஃதொருவாறு வரையறைப்படுமென்பது காண்டு மாகலின், உருவப் பொருண் மட்டுமே தான் காலத்தானும் இடத்தானும் வரையறைப்படுமென நீ கூறியது பொருந்தாது. அல்லதூஉம், பிறர் மாட்டு நின்று படைக்கப்படும் பருவுடம்பு மேற் கொண்டு கருப்பையிற் புகுந்து பிறக்கும் எம்மனோரைப் போன் முழுமுதற் பெருங்கடவுளும்வினை வழிப்பட்ட உடம்பு தாங்கி வந்து அருளுமென வுரைப்பினன்றே அஃது அவன் இறைமைக்கு இழுக்காம். கட்புலனாகாத பேரொளிப் பிழம்பாய்ப் பேரறி வுருவாய் இன்ப நிலையாய் விளங்குந் தன் அருட்பெருந் தன்மையே தனக்குரிய வடிவமாகத் தான்நினைந்தவாறே, தன்னை நெஞ்சுருகிக் குழைந்து வழுத்தும் உண்மையன்பர்க்கு வெளிப் பட்டு அருளும்முழு முதன்மையுடையான் இறைவன் என்று கோடுமாகலின் அஃது அவற்கு இழுக் காதல் யாண்டையதென் றொழிக. அற்றேலஃதாக, இறைவன் அங்ஙனம் அருட் கோலந்தாங்கி வெளிப்படுங் கால் தன் பரப்பை யெல்லாஞ் சுருக்கிக் கொண்டு போதரு மோ, அல்லது அப்பரப்பின்கண் ஒரோரிடத்திலேயே முனைந்து தோன்றுமோ என ஆயும் வழி, அவன்றன் நிறை வனைத்தையும் ஒருங்கு சுருக்கிக் கொண்டு போதரா நிற்குமெனவுரைத்து மாயின் அக்காலத்து நிறைவின்மை பெறப்படுதலானும், ஒரோரிடத்து முனைந்து தோன்று மெனக் கோடுமாயின் அறிபொருளான இறைமுதற் பொருள். வரையறுக்கப் படாமையின் அஃதோரிடத்துத் தோன்றவே பிறிதோரிடத் தில்லையாமெனக் கொள்ளக் கிடத்தலானும் அவை யிரண்டும் அமையாவென்பது தெற்றென விளங்குதலால் இறைவ னுருவமாகத் தோன்று மென்றல் யாங்ஙனம் நிலை பெறுத்தப்படுமெனின்; நன்று கூறினாய், இறைவன் அருட்கோலந் தாங்கி வெளிப் படுங்கால் தன் பரப்பு முழுமையுஞ் சுருக்கிக் கொண்டு போதருவானல்லன்; கன்று ஈன்ற புனிற்றாவின் புனித வுடம்பெங்கும் நிறைந்த நுண் அமிழ்தந் தீஞ்சுவைப் பாலாய் மடியினின்றும் பொழியுமாறு போலவும் விரிதிரைக் கடலிற் குளிர்மிகும் ஒரோ விடங்கள் பனிக்கட்டிகளாய் உறைந்து கிடக்குமாறு போலவும் யாண்டும் விரிந்த இறைவன் றிரு வருள் மெய்யன்பர் பொருட்டு ஒரோவிடங்களிற் முனைந்து உருவாக, அதன் கண்ணே யிருந்து முதல்வன்அருள் புரிவனென் றுணர்க. இதுபற்றி யன்றே, இல்லா முலைப்பாலுங் கண்ணீரு மேந்திழைபா னல்லா யுளவாமா னீர்நிழல்போ - லில்லா அருவாகி நின்றானை யாரறிவார் தானே யுருவாகித் தோன்றானே லுற்று என்னும் சிவஞான போதத்திருமொழியும் எழுந்ததென் றுணர்க. அற்றேல்,இறைவன் கொள்ளும் உருவத்திரு மேனிக்கும் நம்மனோர் எடுக்கும் பருவுடம்பிற்கும் வேறுபா டென்னை யெனின்; நம்மனோர் உடம்புகளெல்லாம் வினைவழிப்பட்டுப் பிறராற் படைக்கப்படும்வரையறைப் பொருளாய் நிலையுதலின்றி அழிவுபா டெய்துமியல் பினவாம்; இறைவனுடைய திருமேனியோஅருளே வடிவாய் அவன் நினைந்தாங்குத் திரண்டெழூஉந் திருவுருவாம்; இறைவனது அருட்டிருமேனி அவன்றன் பெரும்பரப்பு முழுவதூஉந் தொடர்புற்று ஒருவாற்றாற் சிறிதாதலும் ஒரு வாற்றாற் பெரிதாதலுமுடையதாம். யாங்ஙனமெனின்; நெடுங்கடற் பரப்பி லாங்காங்கு உறைந்த பனித்துண்டங்கள் அக்கடல் நீரோடுஇயைபுடையவாமாறு போல வென்க. இனி அது நம்மனோர் உடம்பு போல்வதன்று மற்று அருட்டிருவுருவாம்என்கின்றீரால், அத்திரு வுருவத்தி னியல்புதா னென்னையோ வெனின்; அவ்வுருவத்தினியல்பு நம்மனோரால் அறியவாராதென்று உணர்க. பருப்பொருள் வடிவாய் விளங்கும்இவ்வுலகத்தினியல்பே யறியமாட்டாத சிற்றறிவினராகிய நாம் மனமொழிகளுக்கு எட்டாது விளங்கும் இறைவன்றன் திருக்கோல வியல்பை யறியுமாறு யாங்ஙனம்? மின்னாற்றல் இன்னது என்று அறிந்துள்ளாம். அதன் உண்மையியல்பு இன்னதென் றறியோம்; விசும் பென்ப தொன்றுண்டென்ப தறிவோம், அதன் உண்மை இன்னதென அறியமாட்டோம்; இரும்பைக் காந்தம் இழுப்பது கண்டு காந்தக்கல்லின் ஆற்றலை யறிவோம், அவ்வாற்றலின் உண்மைத்தன்மை இன்னதென்றறியும் ஆற்றலுடையோ மல்லோம்; இவ்வாறே உருவருவாய் உள்ள மண், புனல், அனல், கால் முதலிய பொருள்களின் உண்மை யின்னதென் றறிய மாட்டாத சிற்றறிவினராகிய நம்மனோர் இறை வனியல்பை உணர்வேமென்றல் குழறு பாடாய் முடியும். ஆழ்கடல் நீரில் ஆழவமுக்கி முகந்தாலும் நாழி நால்நாழி தண்ணீரை முகவாது, நாழித் தண்ணீரையே முகக்கும்; அந்த நாழிபோற் சிறிதான உயிரினுணர்வு கடல் போற் பரந்த இறைவன் இயல்பை யாங்ஙனம் அளந்தறியும்? ஆகலின், உயிரினறிவு விரியுந் துணையே இறைவன் அருட்கோல வியல்பு விளங்குவ தல்லது மேற்சிறிதும் விளங்கா தென்றுணர்க. ஆகவே இறைவன்றன் திருமேனி யியல்பு நம்மனோர்க் கறியவாரா தென்பதூஉம், அங்ஙனமாயினும் அவன் றாங்கும்அருட்டிரு வுருவுபற்றி அவற்கு வரக்கடவ தோர் இழுக்கில்லை யென்பதூஉங் காட்டப்பட்டன. இனி, இறைவனை உருவத்திருமேனியிற் கொண்டு வழிபடுதலினும் அருவமாய்க் கொண்டு வழிபடுதலே சிறந்ததாமென வைத்து ஒரு சாரார் வழக்கிடுகின்ற மையின் அவர் செய்யும் அவ்வழக்கும் போலியாமென்பது காட்டு வாம்; பருப்பொருள் வடிவான விழிகளிரண்டும் பருப் பொருள்களையே காண்பனவன்றி நுண்ணியவானவான் முதலிய பொருள்களைக் காணமாட்டா; இவ்வாறே மெய்வாய் மூக்குச் செவி முதலிய உறுப்புக்களும் பருவடி வான ஊறு சுவை மணம் ஓசை முதலியவற்றையே உணரு மாறல்லது வேறு அறியா. இவ் வைம்பொறிகளின் வழியாகப் பஃறலைப் பட்டுச் செல்லும் மனவுணர்வும் அவ்வைம்பொறி வாயிலாய் அந்த பருப்பொருட்டன்மைகளையே அறிவ தல்லது பிறிதில்லை. இங்ஙனம் பருப்பொருள்களையே அறியு மாற்றலுடைய மனமுதலான பருப்பொருட் கருவிகளுடைய இப் பருவுடம்பி லிருப்பாரான நம்மனோர் ஒருவாற்றானும் இக் கருவிகளால் அறியப்படாத அருவமாகக் கொண்டு இறைவனை வழிபடுமாறு யாங்ஙன மென்றுணர வல்லார்க்கு அவர் சொல்லும் வழக்கு வெறுஞ் சொல்லள வாகவே முடிவதல்லது வேறு பொருட்பேறின்றாம். இனி, `வழிபாடு என்பதுதான் யாது? மன முதலிய பருப்பொருட் கருவிகளெல்லாம் புறப்பொருளிற் சென்று பதிந்து விரியாது மடங்கி இறைவன்றன் அருட்டிருவுருவின் கட் சென்று பதிந்து உயிரை இறைவன் மாட்டு ஒருமையுறுத்து வதாமன்றோ? அறிபொருளான இரண்டு ஒருங்கு சேர்ந்து ஒருமையுறுதற்கு இடை நின்று கூட்டுவிப்பன பருப்பொருட் கருவிகளும்அவற்றை யுடைய உடம்புமல்லவோ? என்னை? இன்ப வடிவான அருட்கோலத்தைக் காண்டலும் அதன் கண்ணே மனவுணர்வு சென்று பற்றும். பற்றுதலும் அக் கோலத்தின்கண் நிறைந்த இறைவன் மாட்டு உயிர் ஒன்றி ஒன்றா மாதலின்.இதனை உலகியற் பொருள்களினும் வைத்துக் காட்டுதும், இங்ஙனம் எல்லாம் வழக்கிடும் நீவிர் நும்முடம்பின்கண் இல்லாதொழியின் ஈண்டு எம்மெதிர் வந்து நின்று எங்ஙனம் அதனை நிகழ்த்துவீர்? நுமது வழக்கை மறுத்து மெய்ப்பொருள் வலியுறுத்துகின்ற யாம் எமது இவ்வுடம்பின்கட் புகுதாவிடின் எங்ஙனம்எம் மேற்கோளை நிறுத்துவேம்? நாமிருவரும் இக்காலத்து ஈண்டிருந்து வழக் கிடுவதெல்லாம் இரு வேறுடம்புகளுடைமை யினாலன்றோ? இங்ஙனம் இருவேறுடம்புகளை நிலைக்களனாக் கொண்டு இரு வேறுயிர்கள் ஒன்று சேரும் வழி இரண்டும் ஒருமையுற்று இன்பமெய்துகின்றன. எழினலங்கனிந்த கொழுவிழி மகளிரும் உலம்பொரு தடந்தோளுறுவலி இளைஞரும் ஒருங்கியைந்து ஒன்று சேரினல்லது இன்ப நுகர்தல் செல்லாமை இனிது விளங்கும்; கன்னலுங் கனிந்த பலாச்சுளையும் மாம்பழமும் வாழையங்கனியும் நறைகமழ் தேனும் ஒருங்கு கலந்த கூட்டுவாய்ப் பெய்துழியல்லது சுவையின்பந் தோன்றாது; நானமும், புழுகுஞ், சாந்தமும் விரைகமழ் மலரும் அருகணையினல்லது மூக்கினாற் பிறக்கும் நறுமணவின்பந் தோன்றாது; தீங்குழலோசையும் யாழிய லோசையுங் கேட்பினல்லது செவியினாற் பிறக்கும் ஓசை யின்பந் தோன்றாது; செழும்பட்டாடையிற் சமைத்த ஐவகை யமளியுறினல்லது மெய்யினாற் பிறக்கும் ஊற்றின்பந் தோன்றாது. ஆகவே, இன்பந் தோன்றுதற்கு இருபொருட் சேர்க்கை இன்றியமையாதாகலானும், அச்சேர்க்கை தானும் இருவகை யுடம்புகளையே நிலைக்களனாக் கொண்டு நிகழ்த லானும்இறைவனை வழிபட்டு அவனை ஒன்றியைந்து இன்பம் நுகர்கின்ற உயிருக்கு ஓருடம்பும் அங்ஙனந் தொழப்படும் முதல்வனுக்கு ஓர் உடம்பும் வேண்டுமென்பது சொல்லாமே யமையும். அங்ஙனமாயினும் உயிருக்கு உண்டான உடம்பு வினைக்கீடாக மாயையிற் றிரட்டப் பட்டதா மென்பதூஉம், இறைவனுக்கு உண்டான உடம்பு இரக்கத்தால் அருளிற் றிரண்டு எழுந்ததா மென்பதூஉங் குறிக்கொண்டு போற்றற் பாலனவா மென்க. இங்ஙனம் இருவகை அறிவுப் பொருள்கள் தம்முள் ஒன்றிணங்குதற்கு இரு வேறுடம்புகள் வேண்டு மென்னும் நுட்பந் தெரித்தற் கன்றே, தமிழிலக்கண வாசிரியர் நிலைமொழியீற்றினின்ற உயிரோடு வரு மொழி முதனின்ற உயிரிணைதற்கு இடையே ஓர் உடம் படுமெய் தோன்றுமென் றுரையா நிற்பர். இங்ஙனம் உண்மை மறைபொருள்களை யெல்லாந் தந்துஇலக்கண நூலுள்ளும் விளங்க வைத்தல் தமிழ் நூலாரிடத்தன்றி ஏனை மொழி நூலாரிடைக் காண்ட லரிது என்பது இதனொடு படுத்து ஈண்டு விதந்துரைத்து அத்தமிழ் மொழி மாட்சி குறிப்பானறி யவைத்தாம். இது நிற்க. இனி, உடம்புகளெல்லாந் தம்மை யுடையானுக்குப் பல்வகைத் துன்பங்களுந் தந்து வேறுபடுத்தக் காண்டலின், அது பற்றி இறைவன் றாங்கிவரும் அருட்டிருவுருவும் அவனை வேறுபடுத்தாதோ வெனின்; படுத்தாது, உடம்புகளுடைய ரான உயிர்களினியல்பு பற்றியே உடம்புகளின் றன்மை யறிவதல்லது, உடம்பினியல்பு பற்றி உயிரை யளந்தறிதல் ஒருசிறிதும் பொருந்தாது, யாங்ஙனமெனிற் கூறுதும், இருநில முழுதுந் தன்னடிப்படுத்துச் செங்கோலோச்சுவானான முடியுடை மன்னன் தன் இரும்பொருள் வைப்பிற் கேற்பவும் வளங்கட்கேற்பவுந் தலைமை செலுத்துமுறைகட்கேற்ப வும்மிக அகன்ற உயர்ந்த வெழுநிலை மாடங்களும் மாளிகை களும் அமைத்து அவற்றின்கண் இருப்பக் காண்கின்றோம்; விலங்கினங்களைச் செகுத்துண்டு மழையினும் வேனிலினும் உழன்று திரிவானான வேட்டுவன் தன்னியல்புக் கேற்ப வைவேய்ந்த புல்லிய குடிலில் ஒதுங்கியிருந்து வாழ்நாட் கழிப்பதூஉங் காண்கின்றோம். உறையுள் கொள்கின்ற அரசன் வேட்டுவன் இயல்பு பற்றியே உறையுள் அமைக்கப் படுதல்போல உடம்புகளைத் தாங்கி வருகின்றவரான இறைவனும் உயிரும் என்னும் இவரியல்பு பற்றியே அவர் தாங்கிவரும் உடம்புகளுங் கருதி அளந்தறியற் பாலனவாம். இறைவன் முற்றறிவும் முழுத்தன்மையும் வரம்பிலாற்றலுந் தன் வழியனாதலும் அருளுறையுளாதலு முடையனாகலின் அவன் றாங்கிவருந் திருக்கோல வியல்பு எம்மனோரா லறியவாராத் தூய்மை பெரிதுடையதாதலும், உயிர் சிற்றறிவுஞ் சிறுதொழிலும் பிறர் வழிப்படுதலும் மலத்தான் மறைக்கப்படுதலும் பிறவுமாகிய குறைபாடுடையனாகலின் அவன் மேலிட்டு வருமுடம்பும் வாலாமை பெரிதுறுவ தாதலும் நன்றுணரக் கிடக்கும். இவ்வுண்மை கடைப் பிடித்தன்றே அருணந்திசிவமும், மாயைதான் மலத்தைப் பற்றி வருவதோர் வடிவ மாகு மாயவா ணவம கன்ற வறிவொடு தொழிலை யார்க்கு நாயக னெல்லா ஞானத் தொழின்முத னண்ண லாலே காயமோ மாயை யன்று காண்பது சத்தி தன்னால் என்று சிவஞான சித்தியாரில் ஓதி யருளியதூஉ மென்க. இங்ஙனமாகலின் உடம்புகள் தாங்கிவரும் ஒப்புமை பற்றியே அவையிரண்டற்குமுள்ள வேற்றுமை யுணராது அவை. தம்மையுடையாரைக் கட்டுறுத்துமெனக் கூறுதல் சிறு மகார் கூறுங் குழறு பாட்டுரையாய் முடியுமென்க. அதுநிற்க. இனி , உருவத் திருமேனியிற் கொண்டு இறை வழிபாடு ஆற்றுகின்ற அறிவுடையோர்க்குத் தாம்அன்பு முதிர்ச்சி யடைந்து இறைவனோடொன்றி யொன்றறக் கலக்கும் அத்துவித முத்திப் பெரும் பேறு வாய்க்குமென்பதுமேற் கூறியவாற்றால் இனிதுவிளங்கும். என்னையோ வெனிற்; குழவிப்பருவந்தொட்டு முதுமைப் பருவங்காறும் உலகியற் புறுப்பொருளோடு மனவுணர்வு ஒற்றுமையுறுகின்ற நெறியானே மக்களெல்லாரும் அறிவு விளக்கமும் நாகரிக வளர்ச்சியு மெய்தி வருகின்றாரென்பதுமேலே விளக்கிப் போந்தாம். ஆதலான், மக்கள் மனவுணர்வு எக்காலத்தும் உலகியற் புறப்பொருளொன்றனைப் பற்றியே நிற்குமல்லது, தானே வேறு பிரிந்து தனித்து நிற்குந் தனி முதலன்றாம். மனவுணர்வு ஒன்றையும் பற்றாவாறு வேறு பிரித்துத்தனியே ஒருவழி நிறுத்துவே மென்பாருரை வெறுஞ் சொல்லளவே யன்றி அஃது அவர் கூறுமாறு அடங்கு மியல்பிற்றன்று என்பது சிறிது கருதிப் பார்ப்பார்க்கும் பொள்ளெனப் புலனாம். இப்பெற்றியுணர்ந்தன்றே காடுங்கரையு மனக் குரங்கு கால்விட்டோட வதன் பிறகே, யோடுந் தொழி லாற் பயனுளதோ என்று தாயுமான சுவாமிகளுந் திருவாய் மலர்ந்தருளினாரென்க. இத்தகைய மனவுணர்வின் பெற்றி தேறாது யாம் அருவமாகக் கொண்டு இறைவனை வழிபட மாட்டுவே மென்பா ரென்கடவரென்க.அவர் இரு விழியினையும் மூடிக்கொண்டு வானத்தை நோக்கி நிற்பா ராயினும் அவர் மனவுணர்வும் அங்ஙனம் நில்லாது; மற்றைத் தேயத்திலிருக்கும் அவர் மனைவியை நாடிச் செல்லும், மைந்தரை நாடிச் செல்லும், நேயரை நாடிச் செல்லும், பொருள் வருவா யெதுவென்றாராயும், புதல்வர்க்குப் பொருள் தொகுக்குமாறு யாங்ஙனமென்று ஆராயும், உயர்ந்த நிலைகள் எமக்கெப்போது கிட்டு மென்னும், மன்னவர் கொண்டாட வாழுமாறெப்படி யென்னும், இன்னும் எத்தனையோ அரும் பெருஞ் செயல்களை யெல்லாம் ஒரு நொடியிற் செய்ய வல்லும்; இத்தகைய மனத்தாலும் அருவமாக இறைவனை வழிபடுதல் எவர்க்கேனுங் கூடுமோ? அன்றி அங்ஙனஞ் சொல்வார் சொற்களை எவர் தாமும் நம்புவார்களோ? அறிவுடையீர் சிறிதாராய்ந்து சொன்மின்! காணப்படும் உலகியற் பொருளின் கண் மனவுணர்வைப் பதித்தன்றே காணப்படாத இறைவனை யறிந்து வழிபட்டு உய்தல் வேண்டும்; இது பற்றியன்றே தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் அகர முதல வெழுத் தெல்லா மாதி, பகவன் முதற்றே யுலகு (குறள் - 1) என்றோதிக் கடவுள் உண்மை தெரிப்பாராயினதூஉ மென்க. நம் மனவுணர்வின் விளக்கமே உலகியற் பொருள்களை ஒன்றனோடொன்று ஒப்பித்து அவ்வழி வளர்ந்துவாரா நிற்கின்றது; நிழலருமை வெயிலிற் சென்றால் தெரியும் என்னும் பழமொழியும் இதனை வற்புறுத்தும். வெயிலையே யறியாதவனுக்கு நிழலின் றன்மை யறிய வாராது. ஒளியை யறியாதவனுக்கு இருளின் றன்மை யறிய வாராது, தீஞ்சுவை யறியாதவனுக்குப் புளிஞ்சுவை யின்னதென்று அறிய வாராது, நறுநாற்ற மறியாதவனுக்குத் தீ நாற்றந் தெரிய வாராது, வாராதாகவே, உலகியற் பொருளுணர்வு சிறிது மின்றி விலங்கினங்களினுந் தாழ்ந்தவராதல் வேண்டும் மக்க ளெல்லாம். மற்று அவரெல்லாம் இன்றியமையா அவ் வொப்புமையுணர்வு பற்றியே அறிவு விளக்கம் பெறக் காண்டலால், மேலும் அவ்வொப் புமை யுணர்வுதானே அவரை மறுமைப் பெரும் பேற்றின் கண் உய்க்க வல்லதாம். ஒப்புமை யுணர்ச்சி இத்துணைப் பெருஞ் சிறப்பினதாதல் பற்றியன்றே அளவை நூலாரும் உவமையை ஏனையளவை களோடு விதந் தெடுத்துக் கொண்டார். இங்ஙனம் உலகியற் பொருள்களைப் பற்றி யன்றி மனவுணர்வு நில்லாமையானும், அம்மன வுணர்வும் ஒப்புமை பற்றியன்றிப் பெருகாமையானும் இறைவனை உருவத் திருமேனியிற் கொண்டு வழிபடும் முறையே உண்மை யாமல்லது ஏனைய வெல்லாம் வெறுஞ் சொல்லளவாகவே முடியுமென்றொழிக. அல்லதூஉம் எல்லாப் பொருள்களிலும் நிறைந்து பரந்த முழுமுதற் பெரும் பொருள் உருவமாகக் கொண்டு வணங்கப்படும் ஒரு பொருளின் கண்ணும் நிறைந்திருக்கும் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையாற் றிருவுருவ வழிபாடு ஆண்டும் பொருத்தமாவதேயன்றி இழுக்காமாறு இல்லை. அற்றேலஃதாக, சொல்லுக்கும் மனத்திற்கும் எட்டாமல் விளங்கும் முழுமுதற் பெருங்கடவுளை அவையிரண்டிற்கும் எளிவந்து விளங்குவதொரு பொருளில் வைத்து வணங்குதல் நிரம்பாதாமெனின்; அறியாது கடாயினாய், சொல்லுக்கும் மனத்திற்கும் எளிவந்து விளங்கும் ஏனை உலகியற் பொருள் போல இறைவனது திருக்கோலத்தையும் பிறழக் கொண்டு அவ் வாற்றால் அது பொருந்தா தென்றல் அறியாமையே யன்றிப் பிறிதில்லை. சொல்லுக்கும் நினைவுக்கும் புலனாம் உலகியற் பொரு ளெல்லாம் இது இதுவென்று சுட்டியறியப் படுதலான் வரையறைப்படும் சிறு பொருள்களே யாம். இறைவனது எங்குமுள்ள முழுமுதன்மை அங்ஙனம் இது வென்று சுட்டியறியப்படுவதன்றாகலானும், அவன் அன்பர்க்கு அருள் வழங்குதற் பொருட்டு மேற் கொண்டு வரும் அருட்கோலம் அவன் பரப்பு முழுவதூஉம் இயை புடைய தாகலானும், அஃது அவைபோல வரை யறைப்படும் வரம்புடைப் பொருளன்று; மற்று வரையறைப் படாது விரிந்த வரம்பில் பொருளே யாம். இவ்வாறாகலின், சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாத அப்பெரும் பொருள் அவை தமக்கு எளிவந்து தோன்றுத லாற் போந்த இழுக்கொன்றுமில்லை யென்றுணர்க, அற்றன்று, சொல் நினைவுகளுக்குப் புலனாம் பொருளெல்லாம் அழியக் காண்டலால் அங்ஙனம் நினைவிற்கு விளங்கித் தோன்றும் அவ்வருட்டிருவுருவம் அழிதல் வேண்டும், அழியவே வேறுபாடின்றி யிருக்கும் இறைவன் வேறுபாடெய்தினா னென்று கொள்ளப்பட்டு மாறு பாடாமெனின்; மாறு பாடில்லை, மனத்தினாற் பற்றப்படும் உலகியற் பொருண் மட்டு ம அங்ஙனம் அழியக் காண்டு மன்றி, அறிபொருளாய் உலகியற் பொருளைக் கடந்து செல்லுங் கடவுட் பொருளும் அங்ஙனம் அழிதல் வேண்டு மென்னும் யாப்புறவு அதனாற் பெறப்படாமையின் அவ்வாறு கூறுதல் அடாதென் றொழிக, மேலும், மனத்திற்குப் புலனாம் அத்துணையே பற்றி உலகியற் பொருளையும் உலகினை யிறந்து நின்ற கடவுட் பொருளையும் ஒன்றென்று கூற ஒருப்படுதல் பெரிதும் ஏதமாமென்று மறுக்க. மன வுணர்வின் கட்டோன்றும் இறைவனது திருக்கோலம் அவன்றன் பரப்பு முழுவதூஉம் இயைபுடையதா மென்ப தற்குப் பிட்டு வாணிச்சி பொருட்டு ஒட்டவடிவங்கொண்டு எழுந்தருளிய பெருமான் றாங்கிய பிரம்படி இயங்குமுயிர் நிலையுயிர் முழுதும் பட்ட வியத்தகு நிகழ்ச்சியே கரிபோக்கி யினிது விளக்கு மென்க; இவ்வரலாற்று மெய்ம்மையில் ஐயுறவுக் கொளயாரும் இடம்பெற மாட்டா ரென்பது மேலே வரலாற்றியல் வழாமையுரைத்து நிறுத்தினாம்; ஆண்டுக் காண்க. அற்றேல், உரை நினைவுக்கு எட்டாதான் என்று அவ்வாறு இறைவனை ஓதியதுதான் என்னை யெனிற் கூறுதும். அறியாமை வழிப்பட்டுத் தன்னறிவு முனைப்பால் இறைவனை யாமறிந்து வழிபட மாட்டுவே மென்று தருக்குவார் மனவுணர்வுக்கு ஒருவாற்றானும் புலனாத லின்றிப் பரந்துபட்ட நிறைவாம் முழுமுதன்மை யுடைய னாகலின் அவ்வாறு சொல்லப்பட்ட தென்க. அருள் வழிப்பட்டுச் சிவவுணர்வு முனைப்பால் அருட்கருவிகளாய்த் திரிந்த மனத்தின்கண் முதல்வன் விளங்கிய வழித் தருக் கறுந்து அசைவின்றி யின்பநுகர்ந்து கிடக்கும் மெய்யடி யார்க்கு அவன்றன் திருக்கோலம் புலனாதல் ஒருதலையேயா மென்றுணர்க. எனவே, உரையுணர்வு கடந்த சிவம் நெக்கு நெக்குக் குழைந்துருகு மெய்யன்பர் திருவுள்ளத்தின்கட் புலனாமாறு பற்றி வரக்கடவதோர் இழுக்கில்லை யென்பதூஉம், இழுக்கின்றாகவே உருவத் திருமேனியிற் கொண்டு வழிபாடியற்றும் அன்பர்க்கு மனவொருமை யுண்டாய் இரண்டற்ற வீடுபேறு வாய்க்கு மென்பதூஉம் பெறக்கிடந்த வாறுணர்க. இது கிடக்க. இனி உலகமியாங்கணும் பரந்துபட்டுக் கிடக்கும் மக்கட் பரப்பில் நாகரிகவுணர்ச்சி மிகப் பெற்றுடையார் முதல் அஃதில்லாமையின் விலங்கினத்தோ டொப்பவைத் தெண்ணப்படும் மாக்களீறாக யார்க்கும் இறைவனுளன் என்னும் உணர்ச்சியும், அவ்வுணர்ச்சியோடு உலகத்தின்கட் காணப்படும் பொருள்கள் வாயிலாக அவனை வழிபடுதல் வேண்டும் என்னும் மனவொருமையும், திருவுருவ வழி பாட்டின் இன்றியமையாமைக் கடப்பாடும் இயற்கையி லேயே அமைந்து கிடக்கு முண்மை அவ்வத்தேயமாக்கள் வரலாறுகளை ஒரு சிறிது உற்று நோக்குவார்க்கும் நன்கு விளங்கும். நாகரிக வுணர்ச்சி யுடையராகாத மாக்களெல்லாம் தமக்குந் தம்மைச் சார்ந்தார்க்கும் அச்சம், துன்பம், நலம் முதலியன நிகழ்தற்கேதுவாகப் புறத்தே தோன்றும் உலகியற் பொருள்களை யெல்லாங் கடவுளாகக் கொண்டு வழிபாடு இயற்றி வருகின்றார். ஆகவே, தமக்கு உறுதுயர் நீக்கி நலம் பயப்பதாக அவர் தாங்கருதிய புறப்பொருளையே இறை வனாக வைத்து வணங்கக் காண்டலாலே, அவர்தங் கருத்து வகையால் அவையும் இறைவன் வழிபாடாய் முடிந்திடுதற்கு ஓரிழுக்கில்லை. நாம் முதல்வரல்லோம் நம்மினும் வல்லதான பிறிதொரு பொருளையே சார்ந்து நிற்கும்அடிமைத்திற முடையோமென்னும் உணர்ச்சி நிகழப் பெற்றுச் செய்யும் வழிபாடெல்லாம் எத்துணை யிழிந்தன வாயினும் அவ்வவர் நிலை வேறுபாட்டால் அவையும் பொருத்த முடையனவே யாம். அதுபற்றி அவை எள்ளற் பாலன வல்ல. மற்று அவ்வுணர்ச்சியின் அருமைப்பாடும் அது முறை முறையே முதிருமாறும் உலக மியாங்கணும் அஃதொன்று தானே வேறு வேறாய் நிகழுமாறும் பிறவும் நன்றாராய்ந்து கோடல் சமயப் பொருட் பொதுமை யுணரும் வேட்கை யுடையரான மெய்யுணர்வுடையார்க்கு இன்றியமை யாத கடமையாம். அதுநிற்க. அறிவு விளங்கப் பெறாது விலங்கினத்தோடு ஒப்ப வைத் தெண்ணப்படும் அத்துணை நாகரிகமற்ற நிலை யிலிருக்கும் மக்கட் பகுப்பினர்மாட்டும் சமய வுணர்ச்சி நிகழ்த்தல் அவர்தம் வரலாற்றால் இனிது விளங்குதலின், அச்சமய வுணர்ச்சிதானும் அவர்க்கு முன்னே நிகழும் அச்சங் காரணமாகத் தோன்றுவதாயிற்று. அவ்வச்சந் தானும் இடி, மழை, மின்னல் முதலான உலகியற் புறப்பொருள் விரைந் தியங்கும் இயக்கத்தானும் நோய், சாக்காடு முதலாகத் தம்மாட்டுத் தோன்றும் பிழைகளானும் அவர்க்குத் தோன்றா நிற்கும்.அவ்வச்சம் நிகழ்ந்தவழி அவர் அவ்வச்சத்தினீங்கி நலம் பெறுமாறு எங்ஙனமென்று ஆராய்வாராயினர். அங்ஙனம் ஆராய்ந்த விடத்து விசும்பின் கண்ணே ஒரா வொரு காலத்து விரைந்தியங்கும் இடி, மழை, மின்னல் முதலிய அவையெல்லாம் மிகவல்லதான மற்றொரு பொருளின் ஏவல் வழிநின்று இயங்குகின்றனவென்றும், அவற்றை அங்ஙனம் இயக்கும் அப்பொருள் வெறு வெளியில் நிலை திரியா தியங்கும் ஞாயிறு திங்களையன்றி வேறு கட் புலனுக்குத் தோன்றாமையின் அவை தாம் வணங்குதற் குரிய முழுமுதற் பொருளாமென்றும் அறிவாராயினர். இம்முறை பற்றியே ஞாயிற்றினை வழிபடுஞ் சௌர மதமும், திங்களை வழிபடுஞ் சந்திரமதமும் உண்டாயின. மழையினுதவியைப் பெரிது வேண்டி நிற்கும் தேயங்களினுள் ளார் மழைக் கடவுளாகிய இந்திரனையும் வணங்கி வந்தார். இங்ஙனம் வானத்தின் கண்ணே அச்சநிகழ்த்தும் அப் பொருள்களை வழிபடுமாறுணர்ந்தபின், இந்நிலவுலகத்தின் கண்ணேயும் அங்ஙனம் அச்சம் நிகழ்த்துஞ் சிற்றுயிர்களை வணங்கத் தலைப்பட்டார். தம்மினத்தாரிற் சிலர் பாம்பு கடித்திறக்கக் கண்டு பாம்பினை வழிபடுவாராயினார். தம்முட் சிலர் தறுகணாளராய்ப் பலரை நலிந்து தலைமை செலுத்திப் பின் இறந்தொழிந்தவழி அவரையுந் தெய்வங்களாகக் கொண்டு பரசினார். தம்முள் வேறு சிலர் நல்லறிவுடைய ராய்ப் பலர்க்கு நல்லன பலவுஞ் செய்து இறந்துபட்ட வழி, அந்நல்லோரை வணங்கா தொழியின் யாது நேருமோவென வெருக் கொண்டு அவரையும் வணங்குவாராயினர். இவ்வா றெல்லாம் அவர் வழிபாடு செய்தற்குக் கருத்தொருப்பட்டு அது செய்யப் புகுதுகையில் தம்மறிவும் உணர்வும் ஒரு வழிப்பட்டு நில்லாதுசிதர்ந்து பல தலைப்படுதலின் அவர் அதன்கண் இடர்ப்பாடு பெரிதடை வாரானார். அவ்விடர்ப் பாடு அவரறிவை நுணுகி விளங்கச் செய்தலின், அவர் தாம் வழிபடக் கருதும் பொருளினுரு வத்தைக் கல், மரம் முதலிய பிற பொருளின்கட் செதுக்கி அவற்றை எதிர்நிறுத்தி அவற்றிற்குத் தம் வழிபடு கடன்களைச் செலுத்தத் துவங்கினார். அங்ஙனம் வழிபடும்போதெல்லாம் அவரறிவு முன்போற் சிதர்ந்து போகாமல் ஒருங்கி அவ்வுருவத்தின் கண்ணே சென்று பதிதலால் அவர் அவ்விக்கிரக வாராதனை யின் நலப்பாடுணர்ந்து அதனைக் குறிக்கொண்டு போற்றத் தலைப்பட்டார். இங்ஙனம், எத்துணை யிறப்ப இழிந்த வகுப்பினராயினும் அவர் மாட்டுந் திருவுருவ வழிபாடு காணப்படுகின்றது. இனிக் கல்வி யறிவான் மிகச் சிறந்த நன்மக்களும், இயற்கை யறிவாற்றன் மிக முதிர்ச்சியடைந்து விளங்கும் பெரியவரும் உருவத் திருமேனியிற் கொண்டு முதல்வனை வழிபடுவார்க்கன்றி ஏனையோர்க்கு அம் முதல்வன்பால் அறிவு ஒருங்கி அன்பு உளதாதல் ஒருசிறிதும் செல்லாதென்னுங் கருத்துடையர். அற்றாயிற், கிறித்தவருள் ஒரு சாராரும், மகமதிய மதத்தாரும் இறைவனை உருவத் திருமேனியிற் கொண்டு வழிபடுதல் பொருந்தாதெனக் கூறுத லென்னை யெனின்; நன்று கடாயினாய், பண்டைக் காலந் தொட்டு வருஞ் சமயிகளெல்லாந் தம்மியற்கை நல்லறிவால் திருவுருவ வழிபாடு செய்து போதரக் காண்டலானும், இக்காலத்து இடையே தோன்றிய ஒரு சில சமயிகளே தஞ்செயற்கையறிவால் தாம் வேண்டியவாறு பொருளில் மொழிந்து திருவுருவ வழிபாட்டை மறுத்த லானும் அது பற்றி ஈண்டைக்காவதோர் இழுக்கில்லை யென்றொழிக. அல்லதூஉம், உருவத் திருமேனியிற் கொண்டு வழி படுதல் பொருந்தாதெனக் கூறும் மற்றவர் தாமும் முதல்வனை யாங்ஙனம் வழிபட மாட்டுவாரென்று நுணுகி நோக்க வல்லார்க்கு அவருரை வஞ்சம் பொதிந்த வழுவுரை யாமென்ப தினிது விளங்கும். திருக்கோயில்களில் அவர் விழி பொத்திக் கொண்டு விசும்பு நோக்கி நிற்ப, அவர் உள்ளம் அவர் வழிப்படாமற் காடுங்கரையும் அலைந்து திரியும்; அல்லதவர் இறைவன் மாட்டு மெய்யன்புடையராயின் அவருள்ளந் தன்கண் அவ்விறைவர்க்கு ஓருருவத்தை எழுப்பி அவரறிவினை அதன்கட் பதித்துவிடும். கண்ணறிவிற்குப் புலனாம் வடிவத்தை வழிபடுதற்கு அவர் உடம்படுகில ராயினும், உள்ள வறிவின்கட் புலனாம் ஓருருவத்தை அவர் யாங்ஙனம் நீக்கவல்லார்? உள்ளவறிவின்கண்ணும் அவ்வுருவம் புலனாகாமல் நீக்கி வைத்து வழிபட வல்லே மென்பாராயின், அவர் செய்யும் அவ்வழிபாடு தம் பெண்டிரை நோக்கிச் செய்யும் வழிபாடாம், தம் புதல்வரை நோக்கிச் செய்யும் வழிபாடாம். தம் நண்பரை நோக்கிச் செய்யும் வழிபாடாம்; மற்றுஞ் சிலரை நோக்கிச் செய்யும் வழிபாடாம்; அவர் அங்ஙனஞ் செய்யும் வழிபாடு இறைவனை நோக்கிச் செய்ததாக மாட்டாது. உயிர்களின் உள்ளவறிவு சார்ந்த பொருளின் வண்ணமாய் வீறி விளங்குதலன்றித் தான் அவற்றின் வேறாய்ப் பிரிந்து விளங்கு மியல்பினதன்று. மனநூற்புலமை கைவந்தோரும் உள்ளத்தி னியற்கை அவ்வாறாதல் இனிது விளங்க விரித்துக் காட்டுவர் . ஐம்பொறிகளுக்குப் புலனா காத பொருள் மனத்தின்கட் புலப்படுமாறில்லை. கட்புல னாய் விளங்கும் ஓருருவத்தைப் பற்றி நின்று நினையா தொழியின், அம்மனம் வேறு பிறவுருவங்களைப் பற்றிக் கொண்டு அவர்க்குக் கடவுளுணர்வு வரவொட்டாமல் தடை செய்தல் ஒருதலை. இப்பெற்றி யெல்லாம் மேலே விரித்துக் காட்டினாம். பின்னும் விரிப்பிற் பெருகுமாதலின் இத்துணையினமைகின்றாம். ஈண்டு காட்டியவாற்றால் இறைவனை உருவத் திருமேனியிற் கொண்டு வழிபடும் முறையேதான் அறிவின் நுட்பத் திற்கும், மக்கள் மனவியற் கைக்கும் மிக இயைந்ததா மென்பது பெறப்படுதலின், அருவமாக இறைவனை வழிபடற்பாற் றென்று வாளாது வழக்கிடுவார் போலி யுரைகள் பொருட் பேறிலவா யொழியு மென்றுணர்க. இனிப் பிரமசமாசத்தாரில் ஒரு சாரார் ஆரிய வேதோப நிடத நூல்களை மேற்கோளாகக் கொண்டு, அவற்றின்கட் டிருவுருவ வழிபாடு சொல்லப்படாமையின் அந்நூல் வழிநின் றொகுழுவார்க்கு விக்கிரகாராதனை செய்தன் முறையாகா தென்று கூறுகின்றார். உலகியற் பொருள்களில் வெள்ளிடை மலைபோல் விளங்கித் தோன்றும் ஞாயிறு திங்கள் தீ முதலியவற்றின் வழிபாடு இருக்குவேதம் எங்கணும் இனிது காணக் கிடத்தலானும், இருக்குவேத விறுதிப் புருடசூத்த மந்திர வுரையின் கண்ணே இறைவனுக்கு உறுப்பின் பாகுபாடுகள் நன்றெடுத்துச் சொல்லப்பட்டமையானும், மிகப் பழைய கேனோபநிடதத்தில் முதல்வன்இயக்கவுருவந் தாங்கித் தோன்றித் தேவர்க்கு அருள் செய்த வரலாறு விரித்துக் காட்டப்படுதலானும், பின்னெழுந்த கைவல்லியம், அதர் வசிகை முதலிய வுபநிடதங்களினும் உமாசகாயம் பரமேசுவரத் திரிலோசனம் நீலகண்டம் முதலிய உருவத் திருவடையாளங்கள் கிளந்தெடுத்து மொழிந்திடப்பட்டமை யானும், புறத்தே தோன்றும் உலகத்திற்கு நெஞ்சத் தாமரை யாக விளங்குந் தில்லையம்பலத்திலே திருக்கூத்தி யற்றும் முதல்வனை வழிபடுமாறு போல அகத்தே இவ்வுடம் பினுள் உள்ளத் தாமரையிலுள்ள அருள்வெளியிலே திருக்கூத்தி யற்றும் இன்பக் கூத்தனையறிந்து வழிபடுமாறு கூறுந் தகரவித்தையினியல்பு சாந்தோக்கிய முதலான பழைய உபநிடதங்களில் வகுத்துக் கூறப்படுதலானும், யோக நூல் செய்த பதஞ்சலி பகவானும் பிரத்தியாகாரந் தாரணை முதலான யோகப் பயிற்சியினெல்லாம்இறைவனைக் குறிகளா னறிந்து வழிபட்டு உள்ளத்தை ஒருமையுறுத்துக வென்று கட்டளை தருதலானும், மக்களின் அளவை யுணர்வைப் பாகுபடுத்துக் கூறிய நியாயம் வைசேடிகம் முதலான நூலுடையார்க்கும் அஃதொப்ப முடிந்தமை யானும், வேதாந்த நூல் செய்த வாதராயண ரெனப்படும் வியாச முனிவரும் தமது பிரமமீமாஞ்சையின் முதலத்தி யாயம் இரண்டாம் பாதம் குஹாம் ப்ரவிஷ்டா வாத்மா நௌஹி தத்தர்ச நாத் என்னும் 11ஆஞ் சூத்திரத்தானே இதயக் குகையின்கண் இறைவனை வழிபடுந் தகரோபாசனை எடுத்து மொழித லானும், வேதோபப் பிருங்கணங் களான பதினெண் புராணங் களினும் சிவ ரகசியம் பாரதம் இராமாயண முதலான இதிகாசங்களினும் முதல்வனருட்குறி நிறுத்த திருக்கோயில் வழிபாடு காணப்படுதலானும், தேவரும் முனிவரும் இறைவனுடைய அருளுருவத் திருமேனியை வழிபட்டு ஆங்காங்கு நிலை நிறுத்திய திருக்கோயில்கள் இந்நாவலந்தீவு யாங்கணும்பரந்து பட்டுக் கிடத்தலானும், அத்திருக்கோயில் வழிபாடு தானும் பிற்காலத்தன்றிப் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னதான பண்டைக் காலந்தொட்டே நடைபெற்று வருதலானும், பார்ப்பனர் நாடொறும் உருச் செய்து போதருங் காயத்ரி மந்திரவுறை யுளிற் பொன்னுருவனான இறைவன் பர்க்க னென்னுந் திருப்பெயரோடு கூடி விளங்க லானும், திருஞான சம்பந்தப் பிள்ளையார் முதலான அருட் குரவரும் முதல்வன தருளுருவத் திருமேனி வழிபாட்டிற் றலைநின்றமை எல்லா ரானும் அறியப்படுதலின் அஃதான்றோர் ஒழுகலாறாய் நிலையுதலானும், பிறவாற்றானும் அங்ஙனங் கூறும் பிரம சமாசத் தாருரை பொய்படு போலியுரையாதல் தெளியப் படுதலின் அவர் ஆரவார வுரைபற்றி மயங்குவார் ஈண்டு யாருமிலர். என்று இதுகாறும் விரித்தவுரையால் இந்நாவலந் தீவின்கணுள்ள நன்மக்கள் இறைவன் தருளுருவத்திரு மேனியிற் செய்த போதரும் வழிபாடு அருளுருவ வழி பாடாவதன்றி விக்கிரகவாராதனையாதல் ஒரு சிறிதுஞ் செல்லாதா மென்பதூஉம், திருவுருவத்தின்கட் செய்யும் வழிபாடுபற்றி இறைவனது முழுமுதற் பரப்பாம்இறைமைத் தன்மைக்கு வரக்கடவதோ ரிழுக்கில்லை யென்பதூஉம், அருவமாக இறைவனை நினைக்க வல்லே மென்பாருரை மக்கள் மனவியற்கைக்குத் தினைத்துணையுமியைதல் செல்லாமையால் அது வெறுஞ் சொல்லளவாகவே முடிவ தல்லது பொருணிறைந்த தாகாதென்பதூஉம், உலகத்தின் கண் நாகரிகமில்லாத மக்களுள்ளும் உருவ வழிபாடே காணக் கிடத்தலின் அவ்வியற்கைக்கு வேறாக மொழிதல் முரண் பாடாமென்பதூஉம், வடமொழி நூல்களினும் அருளுருவ வழிபாடே கூறப்படுதலின் அதனொடு திறம்பி யுரைப் பாருரை வழக்குரையாமென்ப தூஉங் காட்டப்பட்டன வென்க. அடிக்குறிப்புகள் 1. Chips from a German workshop, Vol. 1. 2. Six systems of Indian Philosophy. 3. குறுந்தொகை. 4. `அப்பாண்டிய வரசனாலடிபட்டு என்று பொருளுரைக்க. 5. Miracles. 6. Man is a social being. 7. Divinity; Precocity 8. Origin and Growth of Religion, Page 312. 9. Sanscrit Literature, Page, 395. 10. Chemist 8. சிவலிங்க உண்மை விந்துவும் நாதமும் மேவும்இலிங்கமாம் விந்துவதே பீடம் நாதம் இலிங்கமாம் அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய் வந்த கருவைந்துஞ் செய்யும் அவைஐந்தே. - திருமூலர் திருமந்திரம் சிவலிங்கம் எனப்படுந் திருவுருவ அடையாளத்தின்கண் வைத்து ஆன்றோர் அறிவுறுத்திய அரும்பெரு மெய்ப் பொருள்களை யாம்ஆராயப்புகுதலின், இவ் விரிவுரை `சிவலிங்க உண்மை எனப் பெயர் பெறுவதாயிற்று. `சிவம் என்பது முழுமுதற் கடவுளை யுணர்த்துஞ் சிறப்புப் பெயராகும்; `லிங்கம் என்பது அக்கடவுளின் உண்மைத் தன்மையை அறிவிக்குங் குறி அல்லது அடையாளத்தைக் காட்டுவதாகும். ஊரும் பேரும்இல்லாக் கடவுளுக்குச் `சிவம் என்பதனைச் சிறப்புப் பெயராகக் கூறுதல் என்னை யெனின்; இறைவன் தன் நிலையிலே ஊரும் பேரும் இல்லானாயினும், எல்லா உலகங்களிலும் எல்லாப் பொருள் களிலும், எல்லா உயிர்களிலும் ஊடுருவி நிற்பானான அவன்றன் பெரும் பரப்பினை அறிந்து கொள்ளுதற்கேற்ற பேரறிவு வாயாமல், ஒவ்வோர் இடத்தின் எல்லையிலும் ஒவ்வொரு காலத்தின் எல்லையிலும் இருக்குஞ் சிறுசிறு பருப் பொருள்களையும் அப்பருப்பொருள்களினூடு புல னாகும் உயிர்ப் பொருள் களையுமே அறிதற் கேற்ற சிற்றறிவு வாய்ந்த மக்களாகிய நாம் அம் முதல்வன் இயல்பினை எளிதின் உணர்ந்து, அதனை நம் நினைவில் இடையறாது பதித்து, அவ்வாற்றால் நமதுயிரைத் தூய்தாக்குதற்குக் கருவியாகவே அவன்றன் உண்மைத் தன்மையினை நன்குணர்த்துஞ் `சிவம் என்னுஞ் சொல்லை அவற்குச் சிறந்த பெயராக இட்டு அதனைப் பண்டைக் காலந்தொட்டு ஆன்றோர் வழங்கி வரலானார்கள். இவ் வியல்பினை உணர்த்துதற்கே மாணிக்க வாசகப் பெருமானுந், திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை உருநா மறியஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான் ஒருநாமம் ஓர்உருவம் ஒன்றும் இலாற் காயிரந் திருநாமம் பாடிநாந் தெள்ளேணங் கொட்டாமோ என்று அருளிச் செய்தனர். ஆகவே, இறைவனுக்கு ஒரு பெயரிட்டு வழங்குவது மக்களாகிய நாம் அவனை நினைந்து அவன் வயமாதற் பொருட்டே யல்லாமல்,அவன் அப்பெயருடையனாய் இருப்பது பற்றி யன்றென உணர்தல் வேண்டும். அற்றேல், எல்லாச் சமயத்தவர்க்கும் பொதுவான `கடவுள், `இறைவன், `முதல்வன் முதலான சொற்க ளிருக்க அவற்றால் அவனை வழங்காமல், அவன் சைவ சமயம் ஒன்றற்கே யுரியான்போல் வைத்து அவனைச் `சிவன் என்னும் பெயரால் அழைத்தல் என்னை யெனிற்; `கடவுள் என்னுஞ் சொல் `எப்பொருளையுங் கடந்தோன் என அவன்றன் எட்டா நிலைமையினையும், `இறைவன் எனுஞ் சொல் `எப்பொருளிலுந் தங்குபவன் என அவன்றன் எங்குமுள்ள நிலைமையினையும், `முதல்வன் எனுஞ் சொல் அவன் எதற்கும் முற்பட்டவனாய் நிற்கும் அவன்றன் முதன்மை யினையும் அறிவித்தல் போலச், `சிவன் எனுஞ் சொல்லும் அவன் ஏனை எப்பொருளிலும் இல்லாத பேரின்பத்திற்கு உறையுளாய் உள்ளவனென்பதனை அறிவிப்பதொன்றாம். சிற்றுயிர்களாகிய நாம் அவன்றன் எட்டா நிலைமை யினையும் எங்குமுள்ள நிலைமையினையும் எல்லாவற்றுக்கும் முற்பட்ட முதன்மையினையும் உணர்தலாற் பெறும் பயன் சிறிது மின்றாம். நாம் தொன்று தொட்டு அறியாமையிற் கிடந்து துன்புற்று வருதலின், அறியாமையைக் களைதற்கு அறிவும்,அவ் அறியாமையின் வாயிலாக வருந்துன்பத்தைக் களைதற்கு இன்பமுமே இன்றியமையாது வேண்டி நிற்கின்றோம். நாம் பிறவி யெடுத்ததன் நோக்கமெல்லாம் பேரின்பத்தைப் பெறுதற் பொருட்டாகவேயாம். அப் பேரின்பத்தை முன்னறிவிக்குங் கருவியாகவே இவ்வுலக வாழ்க்கையின் இடையிடையே சிற்றின்ப நுகர்ச்சியானது நடைபெறா நிற்கின்றது. குடங்குடமாகக் கொணர்ந்து நிறைத்திருக்குந் தீம்பாலினையுங் குப்பி குப்பியாக நிரப்பி வைத்திருக்குந் தேனினையுங், குடலை குடலையாகத் தொகுத்துச் சேர்த்திருக்குந் தேமாங்கனியினையுந் தான் வேண்டியவாறு நுகருதற்கேற்ற பரிசாய்த் தானிருக்கும் இல்லத்திலேயே ஒருவன் எளிதாகப் பெற்றிருந்தும், அவற்றின் சுவையினையும் உண்டால் அவை தனது கொடும் பசிதீர்த்துத் தன் உடம் பினைக் கொழுமையாக வளரச் செய்தலையும் உணராத மடவோன் ஒருவன் அவை தனக்குத் தீதுபயப்பதென அஞ்சி அவற்றை உட்கொள்ளானாய்ப் பசித்து வருந்தி யிருப்ப, அவனைக் கண்டு இரங்கிய அருளுடையான் ஓர் அறிஞன் அவன்பாற் போந்து அவற்றின் சுவையினையும் பயனையும் அவனுக்கு எடுத்துக்காட்டி அறிவு தெருட்டி, அவை ஒவ்வொன்றிலுஞ் சிறிது சிறிதெடுத்து அவன் வாயினுட் பெய்து, அவ்வாற்றால் அவன் அவற்றின் இனிமை கண்டு அவை தம்மையுண்டுகளை தீருமாறு செய்தாற் போல, எல்லாம்வல்ல இறைவனுந் தன்பாலுள்ள பேரின்பக் கொழுந்தேறல் வெள்ளத்திற் சிற்றுயிர்களாகிய யாம் படிந்து கிடந்தும் எம்மைப் பொதிந்த ஆணவ வல்லிருளால் அறிவு மாழ்கி அவ் வின்பத்தினியல்பினை உணராது துன்புற்றிருக்க, அது கண்டு எமக்கு இரங்கி இவ்வுடம்பையும் இவ்வுடம்பின்கட் பல வியத்தகு கருவிகளையும் அமைத்து அவ்வாற்றால் யாம் அவ் வின்பத்தின்றன்மையினைச் சிறிது சிறிதே தம் மாட்டுத் தோற்றுவிக்கும் இவ்வுலகத்துப் பல் பண்டங்களையும் நுகர்ந்து நுகர்ந்து, `இப்பருப் பொருள்களினூடே புலனாகி எம் அறிவைத் தன் வயப்படுத்திச் சிறிது நேரத்தில் மறைந்துவிடும் இச் சிற்றின்பமே இத்துணை விழுமிதாயின், எல்லையற்ற நுண்ணறிவுப் பொருளாய் விளங்கும் ஆண்டவன்பால் என்றும் அழியாதாய் விரிந்து விளங்கா நின்ற பேரின்பச் சுவை எத்துணை விழுமிதாம்! என உணர்ந்து அதனையே யாம் நாடுமாறு இவ்வுலகத்துஇன்ப நுகர்ச்சியை அதற்கொரு சிறந்த கருவியாய் அமைத்திருக்கின்றன னென்று உணர்ந்து கொள்ளல் வேண்டும், இப்பேரின்பப் பெருந்தேன் வெள்ளமானது எங்கும் பெருக்கெடுத்துக் கிடந்தும் அதனைச் சிற்றுயிர்கள் தமதறியாமையால் உணராமை கண்டன்றோ, காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டா காரசிவ போகம் எனும்பே ரின்பவெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏகவெளியாய்க் கிடக்குதையோ! இன்புற்றிட நாம்இனியெடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்கே சேர வாருஞ் செகத்தீரே! என்று தாயுமான அடிகளும் நம்மனோரை யெல்லாம் பரிந்தழைப்பாராயினர்! ஆகவே, என்றும்அழியாப் பேரின்பப் பேற்றை எய்துதலில் மக்கட் பிறப்பினரெல்லாரும் இயற்கையாகவே பெருவிழைவு கொண்டவரென்பது, அவ்வின்பத்தை முன்னறிவித்தற் கருவியாய்த் தோன்றுஞ் சிற்றின்ப நுகர்ச்சியில் அவர்க்கிருக்கும் ஆரா வேட்கையே சான்றாமாகலானும், சிற்றின்ப நுகர்ச்சிக்கு ஏதுவான உலகத்துப் பொருள்களெல்லாம் நிலையுதலின்றி அழிய அச்சிற்றின்பமும் அவற்றோடு உடன் அழிதலின் அழிவிலாப் பேரின்பமானது இவ்வுலகியற் பொருள்களிற் பெறப்படுவ தன்றாய்த் தன்போல் அழிவிலா முதல்வனிடத்து மட்டுமே பெற்று நுகரற்பாலதா மாகலானும்அவ் வின்பத்தையும் அவ்வின்பத்திற்குக் கொள் கலனான முதல்வனையும் இடை யறாது நினைவிற் கொண்டு வருதலே அப்பேரின்பப் பேற்றினுக்குச் சிறந்த வழியாமாக லானும்,அந்நினைவினை அங்ஙனம் எளிதிற் றோற்று விப்பதற்கு அவ் வின்பத்தை உணர்த்துஞ் சொல்லொன்று இன்றியமை யாது வேண்டப்படு மாகலானும் பேரின்ப உறையுளாய்த் திகழாநின்ற முதல்வனுக்குச் `சிவன் என்பதே உறுபெருஞ் சிறப்புப் பெயராக ஆன்றோரால் எடுக்கப்படுவதாயிற்று. `சிவன் எனுஞ் சொல் `இன்பத்தை யுடையவன் எனப் பொருடந்து முழுமுதற் கடவுளின் உண்மைத் தன்மையினை யறிவித்து ஆருயிர்களுக்குப் பெரிது பயன்படுவதொன்றாய் இருத்தலின், அவ் வுயிர்களுக்குப் பயன்படாத எட்டா நிலைமையினை உணர்த்துங் `கடவுள் எனுஞ் சொல்லினுஞ் `சிவன் எனுஞ் சொல்லே சாலச் சிறந்த பெருமாட்சி யுடைத்தா மென்பது. இதனைச் `சைவ சமய மாட்சி என்னும் விரிவுரையில் விரித்து விளக்கியிருக்கின்றே மாகலின், இவ்வளவில் இச் `சிவம் எனுஞ் சொற்சிறப்புக் கூறுதலை நிறுத்தி மேற் செல்வாம். இனி, இங்ஙனம் பேரின்ப நிலையனாய் நிற்கும் இறைவனைச் சிற்றறிவுஞ் சிறுதொழிலும் உடையராகிய மக்கள் தாமாகவே அறியப் புகுந்தால், அவர் அவனைச் சிறிதும்அறியமாட்டுவாரல்லர். அங்ஙனம் அறியப்படாத ஐயனை அறியாதுவிடின் அவர் தாமே தம் அறியாமை யினையுந் துன்பத்தினையும் நீக்கிக் கொண்டு பேரின்பத்தைப் பெற மாட்டுவாரும் அல்லர். ஈன்றணிய குழவி பசியெடுத்த போதெல்லாம் வீறிட்டழுது துன்புறுமேயல்லாது, தன் அன்னையின் முலையைக் கௌவிப் பால் பருகித் தன் கொடும்பசி தீர்த்துக் கொள்ளுதலை அறியாது; மற்று அதன் மாட்டா நிலைமையினை யுணர்ந்த அன்னையே அதன் பசித் துன்பங் கண்டு பொறாளாய் நெஞ்சங் குழைந்து அதனை யெடுத்துத் தன்மார்போடணைத்துத் தன் முலைக் காம்பையும் அதன் வாயினுட் புகுத்தி, அவ்வாற்றால் அம் மதலை ஆண்டு நிறைந்த பாலைப் பருகிப் பசி தீர்ந்து களிக்கச் செய்கின்றாள்.இந் நிகழ்ச்சியைப் போலவே, அறியாமையிற் கிடந்து துன்புறும் இளங்குழவிகளாகிய நாம் எல்லாம்வல்ல இறைவனாகிய அன்னையிடத்துத் தேங்கி நிற்கும் பேரின்ப அமிழ்தத்தை நுகரும் வகையறியாமல் துயருறல் கண்டு எம் ஐயனே எமக்கு மிக இரங்கி எல்லையற்ற தனது அருளுரு வினை யாம் உணர்தற்கு எளிதாம்படி ஓர் எல்லையுள் அடக்கிக் காட்டி எமக்கு அப்பேரின்ப அமிழ்தை ஊட்டும் அருள் நிலையனாய் நிற்கின்றான்.இவ் வுண்மை யினையே மாணிக்கவாசகப் பெருமான், பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை யுருக்கி யுள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. என்று அருளிச் செய்தனர். இவ்வாறு தாயினுஞ் சிறந்த எளிமையனாய் இறைவன் எம்மனோர்ககு அணித்தாய் நின்று அருள் செய்யும் இயல்பினை நம் சைவ சமய ஆசிரியன்மார் தெளியக்கண் டுரைத்தாற்போல, வேறெந்தச் சமய ஆசிரியரும் உரைப்பக் காண்கிலம். இத்தகைய அருட்டன்மை யுடையனல்லனாயிற் கடவுளை நம்மனோர் வாழ்த்துதலும் வணங்குதலும் பயமில வாகும். இறைவன் தன்னியற்கையிலேயே அருட் டன்மை வாய்ந்தவனாய், அவ்வருட்டன்மையால் உந்தப் பட்டே எல்லார்க்கும் அண்ணியனாய்த் தனது பேரின்பத்தை வழங்கு தற்கு முன்னிற்றலினாலேதான், தமது உள்ளத்தே அவ் அருள் முனைப்பினால் உணர்வு எழுப்பப்பட்டு எல்லாரும் இறைவனைப் பண்டுதொட்டே வணங்குதலும் வாழ்த்து தலுஞ் செய்து போதருகின்றார், கடவுளை எட்டா நிலைமைக்கண் வைத்துரைத்தலே சிறந்ததெனக் கொள்ளுங் கொள்கையுடைய ஏனைச் சமயத்தவர்கள், அவன் நமக்கு அணுக்கனாய் வந்து அருள் செய்யும் அருட்பெருந் தன்மையன் என்பதைச் சிறிதும்அறியாதவர்களா யிருக்கின்றா ரென்று உணர்மின்கள்! இறைவன் சிற்றுயிர்களுக்குச் சேயனாயினும் அவர்கட்குத் தனது பேரின்பத்தை வழங்க வேண்டுமென்னும் பேரிரக்கமும் ஒருங்குடையனாகலின் அவன் அவர்கட்கு அண்ணியனுமாய்த்தான் வேண்டிய வறெல்லாம் இயங்கவல்ல னென்பதை உணராத சமயத்தவர் இறைவன்றன் உண்மைத் தன்மையையும் அவன்றன் அளவிலாற்றலையும் உணர்ந்தா ராவரோ சொன்மின்கள்! அற்றாயினும், எல்லாம்வல்ல கடவுள் சிற்றறிவின ராகிய நம்மனோரறிவுக்குப் புலனாகா நிலையிலேயே நிற்கக் காண்டுமன்றி, நம்மனோரறிவுக்குங் காட்சிக்கும் எளிதிற் புலனாவதொரு நிலையில் நிற்றலைக் காண்கிலமாலெனிற், கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அழுவார் போலவுங் கொழுஞ்சுவை நீர்ததும்பு குளக்கரையி லிருந்தும் விடாய்த்து வருந்துங் குருடன் போலவும், நம்மனோர் தமக்கு அண்மையிலே கடவுளைக் கட்புலனாற் காணும் பெரும் பேறுடையராயிருந்தும் அவனைக் காணா தார்போல் ஏக்கமடைந்திருக்கின்றனர்! ஈன்றணிய குழவி வளர்ந்து தன்னிலையைத் தான் உணரும் வரையில் அதனைப் பெற்ற தாய் தந்தையர் அதன் பக்கத்தே யிருந்தே அதற்கு அவ் வுணர்வினை எழச் செய்தாலன்றி, அஃது அவ்வுணர்வு கைகூடப் பெறாதவாறு போல, அறியாமை யிலழுந்தி அறிவின்றிக் கிடக்கும் நம்மனோர்க்கும் நம் ஆண்டவன் அருகே யிருந்து அறிவு துலக்கினாலன்றி நாமும் அறிவு கைகூடப் பெறுதல் ஒருவாற்றானும் இயலாது. குழந்தை வளர்ந்துஅறிவு பெற்ற பின் அப்பிள்ளைக்காயினுந் தாய் தந்தை யருதவி வேண்டப்படுவ தின்றாய் ஒழிகின்றது; தாய் தந்தையருஞ் சில காலத்தில் இல்லையாய் ஒழிகின்றனர்; ஆனால் அறியாமையிற் கிடக்கும் உயிர்களுக்கோ அவை அவ்வாறு அறிவின்றிக் கிடக்கும் அக்காலத்தும், அவை அறிவு பெறும் பிற்காலத்தும், அறிவு பெற்ற மற்றைக் காலத்தும் அவை தம்மை உரிமைப் பொழுதும் பிரியா துடனிருந்து அறிவு தெருட்டி இன்பத்தை யருத்துபவனாய் இறைவன் எஞ்ஞான்றும் அவ்வுயிர்கட்கு அண்ணியனாகவே விளங்கி நிற்கின்றான். அங்ஙனம் நமக்கு எளியனாய் அண்மையில் நிற்கும் ஆண்டவனை ஆராய்ந்து அறியாக் குறை நம்மனோர் பால் உளதேயன்றி, நமக்கு அரியனாய் நிற்குங் குறைபாடு அவன்பாற் சிறிதுமில்லை. அற்றேல், அத்துணை யெளியனாய நம்மனோர்க்கு அருகில் நிற்கும் ஆண்டவனை நாம்அறிந்து கொள்ளுமாறு யாங்ஙன மெனிற் காட்டுதும்; எல்லாம் வல்ல இறை வனியல்பு களை ஆராய்ந்து பார்த்து, அவ்வியல்புகள் அவ்வளவும் நமக்குப் புலனாகும் பொருள்களில் எதன்கண் எவ்விடத்து அமைந்து காணப்படுகின்றன என்பதைத் தெளிய அறிவோ மாயின், அதன்கண் அவ்விடத்து இறைவன் நமக்கு நேர் நிற்றலையும் நாம் தெளிந்து கொள்ளு தல் இயலும். காற்றைக் கண்ணாற் பாராதவன் அஃது எம் முகமாய் வீசுகின்றதென அதனியல்பை ஆராய்ந்து அஃது இயங்கும் இடத்தை யறிதல் காண்டுமன்றே? நறு விய செங் கழுநீர் மலரைக் காணாதவன் அதன் மணம் வந்து கமழும் வழியை யாராய்ந்து கொண்டு சென்று அதனைக் கண்டு மகிழ்தலும்அறிதுமன்றே? இங்ஙனமே கடவுளி யல்புகள் எதன்கண் எவ்விடத்தே புலனாகின்றன வென்று ஆராய்ந் தறிந்தால் அவ்வியல்புகள் வாய்ந்த முதல் வனை நேரே காண்டலும் எளிதில் கைகூடு மென்று தேர்தல் வேண்டும். இனிக், கடவுளோ அளக்கலாகாப் பேரறிவொளி வடிவாய்த் திகழ்பவர்; அவரது அவ்வறிவொளிக்கு முன்னே அறியாமை யென்னும்இருள் இருந்த இடமுந் தெரியாமல் மறைந்துவிடும்.அவர் மிகவுந் தூய்மை யுடையவர்; அவர்பால் உள்ள அத்தூய்மையானது எவ்வெவ்விடங்களிற் புலப்பட்டுத் தோன்றுமோ அவ்வவ் விடங்களிலுள்ள பொருள்களின் அழுக்குங் கறையும் எவ்வளவு மிகுந்திருப்பினும் அவை தம்மையெல்லாம் அஃது எரித்துத் தூய்மை செய்யுமே யல்லாமல், தான் அவ்வழுக்குகளாற் பற்றப்பட்டுத் தன் தூய்மையினை ஒரு சிறிதும் இழவாது. கடவுள் எப்பொருளை யுந் தாமே படைப்பவர், படைத்தவற்றைத் தாமே காப்பவர். காக்கப் பட்டவை வலிதேய்ந்து பழுதுபட்ட வழிஅவற்றைத் தாமாகவே அழிப்பவர்.அழித்தற் றொழிலைச் செய்யுங்காற் கடவுள் கொடியவர் போற் றோன்றினும், அவரே எப் பொருளுயும் படைத்துக் காத்தலால்,அருள் என்னுங் குளிர்ந்த இனிய தன்மையை அவர் என்றுந் தம் அகத்தே யுடையரென்று முணர்தல் வேண்டும். கடவுள் எல்லா உலகங்களிலும் எல்லா உயிர்களிலும் நிறைந்து நிற்குந் தமது பொதுவிலக்கணத்திற் கட்புலனாகா அருவினராயும், அன்பினால் நெக்குநெக்கு உருகுந் தம் அடியவர்க்கு அவர்தம் ஆரா அன்பிற்கு ஆறுதல் பிறப்பித்தற் பொருட்டு அவரை யொப்பதொரு மக்கள் வடிவிற்றோன்றி அருள்புரியும் நீரராகலிற் கட்புலனாகும் உருவினராயும், அத்துணை அன்பு வாயாத நம் போன்ற எனையுயிர்கள் உய்தற் பொருட்டுச் சிறிதும்புலப்படாத அருவுக்குந் தெளியப் புலப்பட்ட உருவுக்கும் இடைப் பட்ட பிழம்பு வடிவில் துலங்குபவராகலின் அருவுருவினராயும் இருப்பர். இனி, இவ்வுலகத்திற் காணப்படும் உயிர்ப் பொருள் ளெல்லாம் ஆண் பெண் என்னும் இரு பெரும் பகுப்பில் அடங்கக் காண்டலின், இவ்வுயிர்களின் தோற்றத்திற்கு முதலாய் நிற்குங்கடவுளும் அப்பனும் அம்மையுமாம் இருதிறமும் ஒருதிறத் தடங்கக் கொண்டு நிற்பர். இனி, உயிரில்லாத ஏனைப் பருப்பொருள் நுண்பொருள்க ளெல்லாஞ் சூடுங் குளிர்ச்சியும் ஆகிய இருவகை யாற்றல் களிலுஞ், சிவப்பும் நீலமும் ஆகிய இருவகை நிறங்களிலும் அடங்கக் காண்டலின் இவை தமக்கு முதல்வரான கடவுளும் வெப்ப தட்பங்களுஞ் செம்மை நீலங்களும் உடையராவர். இனி, இவ்வியல்புகளையுடைய முழுமுதற் கடவுள் எதன்கண் எவ்விடத்தே நமக்கு அணுக்கராய் விளங்கி நிற்கின்றாரென்பதை நாம்அறிந்து கொள்ளல் வேண்டு மாயின், நம்மால் அறியப்படும் உலகத்துப் பொருள்களுள் எதன்கண் எவ்விடத்தே அவர்தம் இயல்புகள் அத் துணையும் புலனாகின்றனவென்பதை நாம் ஆராய்ந்தறிதல் வேண்டும். நம்முடைய அறிவினால் அறியப்படும் பொருள் ளெல்லாம் நிலன், நீர், நெருப்பு, காற்று, விசும்பு என்னும் ஐந்து பெரும் பகுப்பில் அடங்கி நிற்கின்றன. இவற்றுள் அடங்காத உயிர்ப் பொருள்களையும், அவற்றின் தன்மை களையுங் கூட இவ்வைம்பெரும் பொருள்களின் வாயிலாகவும் இவ்வைம் பெரும் பொருட் கலப்பாற் றோன்றும் பல வேறுடம்புகளின் வாயிலாகவுமே அறியப் பெறுகின்றோம். ஆகையால், இவ்வைம்பெரும் பொருள்களில் எதன் கண்ணே கடவுளுக் குரிய தன்மைகள் காணப் படுகின்றனவென்று ஆராய்ந்து பார்ப்போமாக. முதலில் நிலத்தின் றன்மை நீரின் றன்மைகளை ஆராய்வம். கடவுள் ஒளி வடிவினவாய்த் திகழா நிற்க, நிலனும் நீரும் ஒளிவடிவினவாய்த் திகழக்காணேம். கடவுள் என்றுந் தூயராயிருக்க, நிலனும் நீருந் தூய்மை கெட்டு அழுக்குற்று நிற்கவுங் காண்கின்றேம். கடவுள் அருவும் உருவும் அருவுருவும் என்னும் மூன்று தன்மையிலும் நிற்பவ ராக, நிலனும் நீரும் பற்றுதற்கு எளிய உருவாகவே நிற்கின்றன. கடவுள் ஆண்டன்மை பெண்டன்மைகள் ஒருங்குடையரா யிருக்க, நிலம் அத்தன்மைகள் இலவாயும் நீர் பெண்டன்மை யொன்றே யுளதாயும் நிற்பக் காண்டும். கடவுள் வெப்ப தட்பங்களுஞ் செம்மை நீலங்களும் உடையராயிருக்க, நிலந்தன்னியற்கையாகவே அவை தம்மை யுடையதன்றாயும் நீர் தட்பமும் நீலமுமேயுடையதாயுங் காணப்படுகின்றன. இனி, வானுங் காற்றுமென்னும் இரண்டிலாதல் இறைவனுக் குரிய இவ்வியல்புகள் அமைந்து கிடக்கின்றனவோ வென்று உற்று நோக்குவேமாயின், அவையும் ஒளியும் உருவும் வெப்ப தட்பங்களும் பிறவும் இல்லாதனவாயிருக்கின்றன. காற்றின் கட் புலனாகும் வெப்ப தட்பங்கள் தீ, நீர் என்பவற்றின் சேர்க்கை யால் உண்டாவனவே யன்றி,அவை தமக்கு இயற்கையிலேயே உரியன அல்ல. ஐம்பெரும் பொருள்களுள் நாற்பெரும் பொருள்களின் தன்மை இவ்வாறொழியவே, எஞ்சி நின்ற தீயின்றன்மைகளே இனி ஆராயற்பாலனவாகும். எல்லாம் வல்ல இறைவன் அருள் ஒளிவடிவினனாய்த் திகழ்தல்போலவே தீயும் பொருளொளி வடிவினதாய்த் திகழா நிற்கின்றது. இறைவன்றன் அருளொளிக்கு முன் ஆணவ வல்லிருள் இருந்த இடமுந் தெரியாமல் மறைதல் போலவே, தீயொளிக்கு முன்னும் உலகிருள் சுவடு தெரியாமல் மறைந்து போகின்றது. இறைவனிடத்துள்ள தூய தன்மை யானது எத்தகைய அழுக்கையுந் தூய்தாக்கித் தானும் எஞ்ஞான்றுந் தூய இயல்பிற்றாய் விளங்குதல் போலவே, தீயும் எத்துணைப் பெரிய அழுக்கின் குவியலையும் எரித்துத் தூய சாம்பராக்கித் தானும் எந்நாளும் தூயதாகவே விளங்கா நிற்கின்றது. இறைவன் படைத்தல் - காத்தல் - அழித்தல் என்னும் முத்தொழில் களைச் செய்தல் போலவே, கதிரவ னாகிய தீயின் வெம்மையும் எல்லா உயிர்ப் பொருள்களையுந் தோற்று வித்து அவற்றைச் சிலகாலம் வரையிற் காத்து அவற்றின் உடம்புகள் வலி தேய்ந்து பழுதுபட்டவழி அவை தம்மை அழித்து விடுகின்றது .மரஞ்செடி கொடிகளும், மற்றை இயங்கும் உயிர்களும் அவை தம்முட் சிறந்த மக்களுமாகிய எல்லா உயிரின் உடம்புகளிலும் ஓரளவான சூடு இல்லை யாயின் அவை தோன்றவே மாட்டா; இதனா லன்றோ காக்கை கோழி முதலான பறவை இனங்கள் தாம் இட்ட முட்டை களிலிருந்து குஞ்சுகளைத் தோற்றுவிக்கும் பொருட்டு அவற்றின் மேல் அடைகிடந்து அவற்றிற்குச் சூடேற்று கின்றன, அங்ஙனமே, தாயின் கருப்பையில் ஓடுஞ் சூடான செந்நீரால் உருவாக்கப்பட்டு மக்களாகிய நாமும் இந்நில வுலகத்திற் பிறந்தனம்; பிறந்த பின்னும் நமதுடம்பி லுள்ள சூடு தன்னிலையினின்று ஏறாமலும் இறங்காமலும் இருக்கும் வரையில் நாம் அதனாற் பாதுகாக்கப்பட்டு இந்நிலத்தின் மேல் ஓடியாடி யுலவித் திரிகின்றோம்; மற்று, அச்சூடு தன்னிலையில் மிகுந்து செந்நீரைச் சுவறச் செய் தாலும், அல்லது அது குறைந்து அதனை உறையச் செய் தாலும் நமது உயிர் உடம்பில் நிலைக்க மாட்டாதாய் உடனே அதனைப் பிரிந்து போய்விடுகின்றதன்றோ? ஆகவே, தீயின் வெம்மையே எல்லா உயிரின் உடம்பு களுந் தோன்றுதற்குந் தோன்றிச் சில காலம் நிலைபெறுதற்கும் அதன்பின் அழிந்துபடுதற்கும் ஏதுவாய் நிற்கின்றதென்பது கருத்திற் பதிக்கற்பாற்று, இறைவன் அழிக்கு நிலையிற் கொடியன்போற் காணப்படினும், படைத்துக் காக்கும் நிலையில் மிகுந்த அருளுடையனாதல் தெளியப்படுமாறு போலவே, தீயுந் தன் ஆற்றலை மிகுத்துக் காட்டி எல்லா வற்றையும் படுசாம்பராய் எரிக்கும் நிலையிற் கொடியது போற் றோன்றினும், எல்லா உயிருடம்புகளையுந் தோற்று வித்தற் கண்ணுந் தோற்றிய அவைகள் குளிரால் விறைக்கும் வழி அவ்விறைப்பினைத் தனது கதகதப்பால் நீக்கி அவற் றைக் காத்தற் கண்ணும் அது மிக இனிய தொன்றாகவே எல்லா உயிர்களானுங் கருதப்படா நிற்கின்றது. இறைவன் எங்கும் நிறைந்து நிற்கும்நிலையிற் கட்புலனாகா அருவி னனா யிருத்தல் போலவே, தீயும் எல்லாப் பொருள்களிலும் மறைந்து நிறைந்துநிற்கும் நிலையிற் கட்புலனாகா அருவ இயல்பிற்றாய் நிற்கின்றது, இறைவன் தன்னைப் பேரன்பால் நினைந்து குழைந்துருகும் அடியார்க்கு அவர்தங் கண் ணெதிரே எழில்கனிந்த பழுதறும் உருவிற்றோன்றி யருள் செய்தல் போலவே, தீயுந் தன்னை இன்றியமையாது வேண்டிநிற்கும் மக்களின் கண்ணெதிரே சிவந்த ஒளி வடிவினதாய்த் தோன்றா நிற்கின்றது. இறைவன் அருவுக்கும் உருவுக்கும்இடைப்பட்ட பிழம்பு வடிவம் உடையராதல் போலவே, தீயுங் கட்புலனாகா அருவுக்குங் கட்புலனாகும் மக்கள் உருவுக்கும் இடைப்பட்ட தாகிய பிழம்புவடிவம் உடையதா இருக்கின்றது இனி எல்லாம் வல்ல முதல்வன் அப்பனும் அம்மையுமாயும், ஆண்டன்மைக் கேற்ற வன் மையும் பெண்டன்மைக் கேற்ற மென்மையுஞ் சிவப்பு நீலங் களும் உடையனாயுமிருத்தல் போலவே, தீயுந் தன்கட் சூடுங் குளிச்சியுமாம் ஆண்டன்மை பெண்டன்மைகளுஞ் சிவப்பு நீல நிறங்கலும் உடையதாய்த் துலங்காநிற்கின்றது. தீயின்கண் நீரும் அடங்கியிருக்கும் உண்மை, கொழுந்து விட்டெரியுந் தழல் மேல் ஒரு கிண்ணத்தைக் கவிழ்த்துப் பிடித்தால் அதன் விளிம்புகளி லிருந்து நீர்த்துளிகள் சொட்டுமாற்றால் அறியப்படும். எனவே, நம்மறிவால் அறியப்படும் மண், புனல், அனல், வளி, வெளி என்னும் ஐம்பெரும் பொருள்களில் அனற் பிழம்பு ஒன்றுமட்டுமே இறைவன்கட் காணப்படும் எல்லா இயல்புகளுந் தன்கண் அமையப் பெற்றதாய் விளங்கும் உண்மை இப்போது இனிது விளங்குதலால், இறைவன் எல்லாப் பொருள்களிலும் எங்கும் நிறைந்து நிற்பினுந் தன்னியல்போடு ஒருங்கொத்த தீப்பிழம்பின் கண்ணே இயற்கையாகவே முனைத்துத் தோன்றுகின்றா னென்பது உள்ளங்கை நெல்லிக் கனி போல் தெற்றெனப் புலப்படும். ஆதலால், அனற்பிழம்பு ஒன்றுமேஇறைவனது விளங்கிய இருப்புக்கு இசைந்த தூய உடம்பாகு மென்பதுங் கடைப் பிடித்துணரற்பாற்று. இது பற்றியே, திருஞான சம்பந்தப் பெருமான், மங்கையர்க்கரசி வளவர்கோன்பாவை வரிவளைக்கை மடமானி பங்கயச் செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாடோறும்பரவப் பொங்கு அழல்உருவன் பூதநாயகனால் வேதமும் பொருள்களும்அருளி அங்கயற்கண்ணி தன்னொடும்அமர்ந்த ஆலவா யாவதுமிதுவே. என்றும், திருநாவுக்கரசு நாயனார். எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசனது உருவ ருக்கம தாவது உணர்கிலார் என்றுஞ் சுந்தரமூர்த்தி நாயனார் காற்றுத் தீப்புன லாகி நின்றானைக் கடவுளைக் கொடுமால் விடையானை நீற்றுத் தீயுருவாய் நிமிர்ந்தானை என்றும், மாணிக்கவாசகப் பெருமான், சுடர்கின்ற கோலந், தீயேயென மன்னும் என்றும் அருளிச் செய்வாராயினர். இனிச் சிற்றறிவுஞ் சிறு தொழிலுமுடைய நம்மனோர் மனமொழிகளால் எண்ணவுஞ் சொல்லவும் முடியாத முதல்வன், நமது சிறுமையினையுந் தனது பெருமையினையும் உணர்ந்து நம்பாற் பேரிரக்கம்உடையனாய் நாம் தன்னைக் காணவுங் கருதவும் வாழ்த்தவும் வணங்கவும் எளிதாம்படி, இங்ஙனந் தன்னியல்புகளோடு பெரும்பாலும் ஒத்த தீப்பிழம் பின்கண்ணே விளங்கித் தோன்றி நமக்கு அணுக்கனாய் நிற்கின்றனனாகலின் இத்தீப்பிழம்பே எல்லாம் வல்ல சிவனை அறிந்து வழிபடுதற்குச் சிறந்த `இலிங்கம் அல்லது `குறி அல்லது `அடையாளம் ஆமென்றுணர்தல் வேண்டும். இறைவனைக் காட்டும் மெய்க்குறியாய் இருத்தல் பற்றியே தீப்பிழம்பு `சிவ லிங்கம் எனப்படுவதாயிற்று. இதனாலன் றோ உலக மெங்கணுமுள்ள எல்லாவகையான மக்கட் கூட்டத் தாரும் பண்டுதொட்டே இத்தீப்பிழம்பினையும், இத்தீப் பிழம்பினை யொப்ப நீண்டுகுவிந்த கல்வடிவினையும் இறைவன்றன் மெய்யடையாளங்களாக ஆங்காங்கு நிறுத்தி வழிபட்டு வருகின்றாரென்க. அற்றன்று, நீண்டு குவிந்த கல்வடிவே சிவலிங்கமென வழங்கப்படுகின்ற தன்றி அனற்பிழம்பு அவ்வாறு வழங்கப் படுதலைக் கண்டிலமாகலானும், நீண்டு குவிந்த அக்கல் வடிவு ஆண்குறியின் அடையாளமாகவும், அக் கல்லைச் சூழ்ந்த வட்டக்கல் வடிவு பெண்குறியின் அடை யாளமாகவுமே முன்னோராற் கருதப்பட்ட தென்பதற்குச் சத்தியுஞ் சிவமுமாய தன்மையிவ் வுலகமெல்லாம் ஒத்தொவ்வா ஆணும்பெண்ணும் உயர்குண குணியுமாக வைத்தனன் அவளால் வந்த ஆக்கம்இவ் வாழ்க்கையெல்லாம் இத்தையும் அறியார்பீட லிங்கத்தின் இயல்பும் ஓரார். என்னுஞ் சைவ சித்தாந்த நூலாகிய சிவஞானசித்தியாரின் திருப்பாட்டே சான்றா மாகலானும், ஆண் பெண் குறிச் சேர்க்கையினாலேயே இன்பமும் உயிர்களின் தோற்றமும் நிகழக் காண்டலானும் ஆண் பெண்குறிச் சேர்க்கையே தொன்று தொட்டுச் சிவலிங்கவடிவாக வைத்து வணங்கப் படலாயிற்றென்று கோடலே பொருந்துமாம் பிறவெனின்; அறியாது கூறினாய்; இக்கூற்று ஒருவகையில் உண்மை யாமல்லது முழுதும் உண்மையாகாது; யாங்ஙன மெனிற் காட்டுதும்; ஆண் பெண் குறிகள் இன்பத்திற்கும் உயிர்களின் தோற்றத்திற்குங் கருவியாயிருப்பினும், அவை மேலே காட்டிய இறைவனியல்புகளோடு முற்றும் ஒவ்வாமையின் அவை தம்மை இறைவனடையாளமாக வைத்து எல்லா மக்களும் பண்டு தொட்டு வழிபடலாயினா ரென்பது சிறிதும் ஒவ்வாது. மற்றுத், தீ வடிவு ஒன்றுமே இறைவற்குரிய பண்புகளெல்லாம் ஒருங்கே பொருந்தப் பெற்றிருத்தல் காண்டுமாகலானுஞ், சிவலிங்க வடிவினைப் பண்டுதொட்டு வழிபட்டுவரும் பழஞ்சமயத்த வரெல்லாருஞ் சாம்பலாகிய திருநீற்றினைத் தமதுடம்பின்மேற் பூசி வருதலை உற்று நோக்குங்கால் அவரெல்லாந் தீவடிவில் வைத்து இறைவனை வணங்கியபின் அத்தீயினால் நீறாக்கப் பட்டுத் தூயதாய் வெளேலென எஞ்சி நிற்கும் புனிதமாஞ் சாம்பற் பொடி யினைப் பூசி வருதற் காரணம் புலப்படுதலானும், இவ்வாறன்றி அவரெல்லாம் ஆண் பெண் குறிச் சேர்க்கையையே தொழுது வருபவராயிருந்தால் அதனைத் தொழுது முடிந்த பிற் சாம்பற்பூச்சு மேற்கொள்ளுதற்கு ஒரு காரணம் வேறொரு வாற்றானும் பொருந்தப் போதாமை யானும் ஆண் பெண் குறிச் சேர்க்கையே சிவலிங்கமென கரைதல் அடாது. அற்றேல் மேற் காட்டிய சிவஞான சித்திச் செய்யுள் அதனை அவ்வாறோதுதல் என்னையெனிற், கூறுதும். தீப்பிழம்பின் வடிவு எப்போதும் நீண்டு குவிந்து நிற்கவே காணப்படுகின்றது. தீ மிக்கதோராற்றல் வாய்ந்ததாயிருத் தலின் அதனை ஆண்பாலாகக் கூறுதல் அறிஞர்க்கெல்லாம் ஒப்பமுடிந்ததேயாகும். மற்று நீரின் வடிவோ சுழிந்த வட்ட வடிவினதாகவே காணப்படுகின்றது. ஓர் யாற்றின்கட் புனல் பெருகிச் செல்லுங்கால் அதன் இயக்கத்தை உற்று நோக்குமின்! அப்போது அது சுழிந்து சுழிந்து ஏகுதல் நன்கு உணரப்படும். இங்ஙனஞ் சுழிந்தோடும் நீர் மென்பதத்ததாய்த் தண்ணென்று குளிர்ந்திருத்தல் பற்றி அதனைப் பெண் பாலாகக் கூறுதலும் ஆன்றோர்க்கெல்லாம் ஒத்த கருத்தே யாகும். இவ்வாறு ஆண்பாற்றன்மையதாகிய அனல் வரிவடிவின தாயும், பெண்பாற்றன்மையதாகிய நீர் வட்டச் சுழிவடிவினதாயும் அமைந்திருத்தல் போலவே, இவ்வுலகத்தில் ஆண் கூற்றிற் பட்ட உயிர்களெல்லாம் வரிவடிவான குறியுள்ள ஆணுடம்பு கள் உடையனவாயும், பெண் கூற்றிற்பட்ட ஏனையுயிர் களெல்லாம் வட்டவடிவான குறியுள்ள பெண்ணுடம்புகள் உடையனவாயும் அமைக்கப் பட்டு இன்ப வாழ்க்கை நடாத்தா நிற்கின்றன. இனி, உயிரில்லாத பொருள்களும், உயிருடையன போல் இயங்குமாறு அமைக்கப்படுங்கால் வரிவடிவாயும் வட்ட வடிவாயுமே அமைக்கப்பட்டு அவ்விரண்டின் சேர்க்கையால் விரைந்து இயங்குதல், இஞ்ஞான்றை மேல் நாட்டு மக்களால் அமைக்கப்பட்டுலவும் நீராவி வண்டி யிலும் ஏனை வியத்தகு பொறிகளிலும் வைத்துத் தெளிய வுணர்ந்து கொள்ளப்படும். இன்னும், இந்நிலவுலகமும், இந்நிலவுலகத் தினும் பெரியவும் சிறியவுமாகிய எண்ணிறந்த வுலகங்களு மெல்லாம், வான் வெளியிற் சிவலிங்கத்தை யொப்பச் சுழன்று நீண்டு செலும் மிக நுண்ணியதோர் இயக்கத்தாற் றோன்றி நடைபெறாநிற்கின்றன வென்று, இப்பேருண்மையினைப் பல வியத்தகும் ஆராய்ச்சிகளால் நிலையிட் டுரைக்கும் ஆங்கில ஆசிரியரான குரூக்கசு (Crooks) என்பார் உரைக்கும் மெய்ப் பேருரையாலும், எண்ணிறந்த இவ்வுடம்பு களும் எண்ணிறந்த இவ்வுலகங்களு மெல்லாம் இவ்வரிவடிவு வட்டவடிவுகளின் சேர்க்கை யினாலேயே தோற்ற முற்று உலவுதல் ஐயுறவின்றித் தெளியப்படுமென்பது. எனவே, இறைவனும்இறைவியுமாய் ஒருங்கியைந்து இச் சிற்றுலகு பேருலகுகளைப் படைத்துங் காத்தும் அழித்தும் அருள் வழங்குங் கடவுள் நிலையே வரிவடிவிலும் வட்டவடிவிலும் புலனாதல், நெருப்புருவிலும் நீர்வடிவிலும் வைத்து நன்கறியக் கிடத்தலின், யாண்டும் பிறழா அத்தெய்வ அருள் நிலைக்கு அடங்கியே ஆண்குறி பெண்குறி யமைப்புகளும் ஈண்டு உளவாயின வென்பது தெற்றென விளங்கா நிற்கும். இவ்வரிவடிவு வட்டவடிவுகள் ஆண் பெண் உயிருடம்புகளின் மட்டுமே யன்றி, உயிரற்ற அரியபெரிய பொறி (இயந்திர) அமைப்புகளிலும் நன்கு புலனாகி நிற்றல் காண்டுமாகலின்), உயிர்ப்பொருள் உயிரில் பொருள்களாகிய எல்லாவற்றின் தோற்ற இயக்கங்களிலுஞ் சிவலிங்க வுருவே உள்ளும் புறம்புமாய் நிற்கும் உண்மை யினை விளக்குதற்கே சத்தியுஞ் சிவமுமாய என்னும் அவ்வரிய சிவஞான சித்திச் செய்யுள் எழுந்ததென்று கொள்க இவ்வாறல்லது ஆண் பெண் குறிச் சேர்க்கையே. சிவலிங்க மாமென அதன் மெய்ம்மையை ஆய்ந்துணராது அரற்றுவா ருரை அறிவில்லாக் கயவருரை யேயாமென விடுக்க. ஆண் பெண் என்னும் இருகூற்றிற்பட்ட எல்லா அமைப்புகளின் வடிவுக்கும் முதலாய் ஊடுருவி நிற்பது சிவலிங்கவுருவாகு மன்றி அச்சிவலிங்க வுருவுக்கு முதலாய் நிற்பதும் ஆண்பெண் குறிச்சேர்க்கையேயா மென்றல் ஒருவாற்றானும் ஏலாதென்றுணர்க. அற்றேல், தீயுருவு ஆண்வடிவும் நீருருவு பெண் வடிவு மாதல், வடிவளவினன்றித் தன்மையளவிற் கண்டிலமா லெனின்; அறியாது வினாயினாய், எல்லா உயிர்களிலுங் காமவிருப்பு மீதூர்ந்து முனைத்துச் செல்வது, ஆணே யன்றிப் பெண் அல்லாமையானும், அங்ஙனம் அவ் விருப்பு மீதூர்ந்த வழி ஆணுடம்பு அனலாய் நிற்க அதன் ஆண் உறுப்பு விறைத்து அனல் வடிவுபோல் நேர் நின்று புணர்ச்சிக்குக் கருவியாய் நிற்றலானும், மற்றுப் பெண் ணெல்லாந் தாமாகவே பெரும்பாலுங் காமவிருப்பு மீதூரப் பெறுதலின்றி ஆண் விருப்பைக் கண்டவழி அஃது எழப் பெற்று அங்ஙனம் எழப் பெற்றவழியும் ஒரு வரம்பில் அடங்கியே நிகழக்காண்டலானும், அங்ஙனம் நிகழ்வுழிப் பெண்ணுறுப்பு முனைத்தெழ மாட்டாதாய் நீர்வடிவாய் நெகிழ்ந்து ஆணுறுப்பின் நுழைவுக்கு இடந்தந்து குளிர்ந்த தன்மைய தாகவே நிற்குமளவன்றி வேறல்லாமை அறியப் படுதலானும் ஆணுடம்பில் தீ யுருவும் பெண்ணுடம்பில் நீருருவும் விரவி நின்று அவையிரண்டனையும் வடிவானுந் தன்மை யானுந் தங் கூற்றிற் படுத்திருத்தல் நன்கறியப் படுமென்க. அற்றாயின், எரியினை வளர்த்து அதனை வழிபடுதலே செயற்பாலது; பண்டிருந்த தமிழ்ச் சான்றோரும் முத்தீ வேட்டு அதனையே வழிபட்டு வந்தனர்; மற்றை மேல் நாடு கீழ்நாடுகளிலிருந்த அறிஞரும் பிறரும் நெருப்புருவினையே வழிபட்டு வந்தனரென்பதற்கு அவர் சாம்பற் பூசுந் திரு நாளொன்று இன்று காறுங் கொண்டாடி வருதலே சான்றாம். அவ்வாறிருக்க, அதனை விடுத்து உருண்டு நீண்ட குழவிக் கல்வடிவு மண்வடிவில் வைத்துச் சிவபிரானை வணங்கி வருதலும், இயற்கையுண்மைச் சிவக் குறியான தீப்பிழம்பினைச் சிவலிங்கமெனக் கொண்டு அதனை வழிபடுதல் செய்யாது செயற்கையாகச் சிற்றறிவுடைய மக்களாற் செய்யப்படுங் கல்வடிவு மண் வடிவுகளைச் சிவலிங்கமென விதந்து வைத்து அவற்றிற்கு வழிபாடு ஆற்றிவருதலும் பொருந்தாவாம் பிறவெனின்; அறியாது கூறினாய், தீ வடிவு இயற்கைச் சிவலிங்கமே யாயினும், அதனை வழிபடுவார் அதன்பால் அன்புமீதூரப் பெற்றவழி, அதனைச் சென்று தொடுதலும் அணைதலும், அதற்குத் திருமுழுக்குச் செய்தலும், பூமாலை புனைதலுஞ் சாந்தம் அப்புதலும் பிறவுமாகிய அன்பின் செயல்களைச் செய்தல் இயலாது. என்னை? தொட்டால் அது சுடும், நீர் சொரிந்தால் அஃது அணைந்துபோம், மலர்மாலை யணிந்தால் அம்மலர் மாலை கரிந்துபோம், அனற் கொழுந்து பருப்பொருள் அல்லாமையால் அதற்குச் சாந்தங் குழைத்திடுதலும் இயலாது. மற்று, அன்பின் பெருக்கோ அதற்குரியார்பாற் புறத்தே அச்செயல்களைச் செய்தாலன்றிச் சிறிதும் அமைதி பெறாது. தம்மாற் பேரன்பு செய்யப்பட்டவர் சிறு மகாரே யாயினும் அன்றி இளைஞரேயாயினும், அல்லது ஆண்டில் முதிர்ந் தாரே யாயினும் அவரைத் தொடுதற்கும், முத்தம் இடுதற்கும் அல்லது அணைதற்கும், அவரை நீராடச் செய்தற்கும், அவர்க்குப் பூமாலை புனைந்து சாந்தம் பூசுதற்கும், இன்னும் இவை போன்ற பிறவெல்லாஞ் செய்தற்கும் அவர்பால் அன்பு மிகப் பெற்றார் வேட்கை மீதூர்ந்து நிற்றல் காண்டுமன்றே! அங்ஙனம் அவர் போலவே, இறைவனைத் தீவடிவில் வைத்து வழிபடுவாரும் ஆண்ட வன்பாற் கரைகடந்த அன்பு மீதூரப் பெற்றக்கால், அவற்கடையாளமான தீப்பிழம்பிலும் அவ் அன்பின் செயல்களைச் செய்தற்குப் பெரிதுவிழைந்தும், அவற்றிற்கு அஃது இடந்தராமை கண்டு அதனையொப்ப தொரு கல்வடிவே அவற்றிற்கெல்லாம் நன்கு இடமாதல் உணர்ந்தும், அவ்வனற் பிழம்பு வடிவினை யொப்பதாகக் கல்லின்கண் நீண்டு குவிந்த வடிவினைச் சமைத்து, அதனையே சிவலிங்கமாக நிறுத்தி, அதற்குத் தம் அன்பின் அடையாளங்களாகச் செயற்பாலனவெல்லாஞ் செய்து, பண்டுதொட்டு வழிபாடு செய்து வருவாராயின ரென்று ணர்ந்து கொள்க. மேலும், கல்லும் மண்ணுந் தீயைப் போலவே இயற்கை யுண்மைப் பொருள்களாய் இறைவனாற் படைக்கப் பட்டவைகளே யாகையாலும், வான், வளி, தீ, நீர், மண் என்னும் ஐம்பெரும்பொருள்களிலும் அவ்வைம்பொருட் சேர்க்கை யாலாகிய எல்லா வுலகங்களிலும் எல்லா உடம்புகளிலும் பாலுள் நெய்போலப் பழத்திற் சாறு போல இறைவன் பிரிவற நிறைந்து நிற்றல் எல்லாச் சமயத் தார்க்கும் உடம்பாடே யாகையாலும் மக்கள் சிற்றறிவுடைய ரேயாயினும் அவர்களுட் பேரன்பும் பேரறிவும் உடையாரும் உளராகலின் அவர் இறைவன்பால் மிக்கெழுந்த தூய பேரன்பின் வயத்தராகி ஆக்கி வழி பட்ட சிவலிங்கக் கல்வடிவு மண் வடிவுகளை ஏனைச் சிற்றறிவினார் செய்த வைகளோடுஒப்ப வைத்து இகழ்ந்துரைத்தல் பொருந்தா தாகையாலும், மக்களுள்ளும் அறிவுமிக்காரால் வரையப் பட்ட ஓவியங்களையுங் கடைந்து திருத்தப்பட்ட கற்பாவை பொற்பாவைகளையும் பலர்க்குப் பலவகையிற் பயன்றரும் நீராவிப் பொறி மின்னற்பொறி அச்சுப் பொறி பறவைப் பொறி முதலானவைகளையும் மக்களாற் செய்யப்பட்டமை பற்றி இகழ்ந்து பேசாமல் அவை தம்மை யெல்லாம் மிகவுங் கொண்டாடிப் பேசுவாரையே எங்குங் காண்கின்றோ மாகையாலும், மக்கள் தம் அறிவொளியால் அமைப்பன வெல்லாம் இறைவனது அருளொளியோடு ஒருங்கு கூடியே நிற்குமாகலின் அவை தம்மை ஏனை அறிவில்லாப் பொதுமக்கள் செயலில் வைத்து இழித்துக் கைவிடுதல் தம் பிறவிப் பயனை இழப்பதற்கே இடஞ்செய்யுமாகையாலும், மக்களாற் செய்யப்பட்ட தென்னுங் காரணம் ஒன்றே கொண்டு கல் வடிவு மண் வடிவுகளில் ஆக்கிய சிவலிங்கத் தை வழிபடாதொழிதல் எவர்க்கும் நன்றாகாதென்க. தமக்குப் பெரிதும் அன்பரா யுள்ளாரைத் தாமே ஓவியத்தில் வரைந்து பார்த்துந், தம்மால் வரைதல் இயலாவிடிற் பிறரைக் கொண்டு அவரதுருவினை அதன்கண் வரை வித்துப் பார்த்தும் மகிழ்ச்சியிற் பொங்கு வாரை ஆங்காங்குக் காண்டும் அல்லமோ? அங்ஙனமே இறைவன்பால் அன்பு மீதூரப் பெற்றாரும் அவன் இயல் பாகவே முனைத்து விளங்குந் தீயுருவினைக் கல்லிலும் மண்ணிலுந் தாமே யமைத்தும் பிறரைக் கொண்டு அமைப்பித்தும் வழிபட்டு மகிழ்மீக் கூர்கின்றாரென்க. அற்றேல், அனற்பிழம்பில் இயற்கையே முனைத்து விளங்குமாப் போற் கல்வடிவு மண்வடிவுகளிற் கடவுள் முனைத்து விளங்குதல் இல்லாமையால், அப்பருப்பொருள் வடிவுகளில் வைத்துக் கடவுளுக்கு வழிபாடாற்றுதல் பயமின்றாய் முடியும்போலுமெனின்; அற்றன்று கல் மண் வடிவுகளில் இயற்கையே முனைத்து விளங்காத முதல்வனை அவை தம்மில் முனைத்து நின்று அருள் செய்யுமாறு வேண்டுதற் பொருட்டன்றே திருக்குட முழுக்கு என்னும் வினை ஆன்றோரால் நடாத்தப்பட்டு வருகின்றதென்க. இனி, அக்குடமுழுக்கு வினையின் கருத்தினை ஈண்டொரு சிறிது விளக்கிக் காட்டுதும், இறைவன் இயற்கையே முனைத்து விளங்கும் இடனாய் நிற்பதான அனல் வடிவு நம்மனோர் கட்புலனுக்கு மூன்று திறமாய்ப் பிரிந்து விளங்கு கின்றது அவைதாம் பகலவனுந் திங்களுந் தீயுமேயாகும். அம் மூன்றிலுந் தோன்றா நின்ற ஆண்ட வனைப் பண்டை நம் செந்தமிழ்ச் சான்றோர்கள் வழி பாடாற்றிய வகை வருமாறு: தூயதொரு நிலத்தே தீயினுக்கு அடையாளமாக முக்கோண வடிவொன்று கீறி, அதனுள்ளே பகலவனுக்கு அடையாள மாக வட்ட வடிவொன்று வரைந்து, அவ்வட்டத் தினுள்ளே திங்களுக்கு அடையாளமாகப் பிறைவடிவொன்று தீட்டி, அங்ஙனம் அமைக்கப்பட்ட முக்கோண வட்டத்தில் தீ வளர்த்து அத்தீயின் பக்கத்தே கிழக்கு நோக்கிய படியாய் இரண்டு புது மட் குடங்களை நிறீஇ, அவ்விரண்டிலுள்ளே தூயபுனலை நிரப்பி, அக்குடங்களின் வாய்களில் மாவிலைகளுந் தேங்காயும் வைத்து, அவையிற்றுக்கு மலர் மாலையும் பிறவுஞ் சாத்துவர். அதன்பிற் றீயிலே நெய்யைச் சொரிந்து, அது கொழுந்து விட்டு எரியுங்கால், அதன்கண் முனைத்து விளங்கா நின்ற முதல்வனை அதற்கு எதிரே அமைந்துள்ள இரண்டு குடங்களின் நீரிலும் புகுந்து விளங்கி நிற்குமாறு வேண்டுவர். அங்ஙனம் பலகாலும் வேண்டியபின் அக்குடங்கள் இரண்டினையும் எடுத்துக் கல்வடிவு செம்பு வடிவுகளில் அமைப்பித்த சிவலிங்கத் திருவுருவின் மேற்சொரிந்து, அங்ஙனஞ் சொரியுங்கால் அந்நீரில் விளங்கும் இறைவன் அச்சிவலிங்கத்தினுள்ளும் புகுந்து முனைத்து நின்று விளங்கு மாறு வேண்டா நிற்பர். அவ்வாறு செய்து வேண்டியபிற் சிவலிங்கத்தின்கண் இறைவன் முனைத்து நின்று அருள் செய்கின்றான் என்பது நம் பண்டை யாசிரியரது கோட் பாடாகும். அஃதொக்கும்; அவ்வாறு தீயிலிருந்து நீருக்கும் நீரிலிருந்து கல்லுக்குஞ் சென்று சிவபிரான் விளங்க வேண்டுமென்று வேண்டுதல் எற்றுக்கு? கல்லுருவி லிருந்தே விளங்கி அருள் செய்க என்று அஃதொன்றைச் சுட்டியே வேண்டிக் கோடல் போதாதோ? என வினவிற்; கரைகடந்த பேரன்பாற் கண்ணப்பரைப் போல் நெஞ்சம் நெக்கு நெக்குருகி வேண்டுவார்க்கு, எல்லாப் பொருள்களிலும் ஊடுருவி நிற்கும் ஆண்டவன் கல்லிலுஞ் செம்பிலுங் கட்டையிலும் மண்ணிலும் நேரே விளங்கித் தோன்றி அருள் செய்வனென்பது திண்ணமேயாம். ஆனால், அத்துணைப் பேரன்புவாயாத ஏனைப் பொதுமக்கள் எல்லார்க்கும் அவன் அங்ஙனம் எளிதிலே நினைந்த பருப்பொருள் வடிவுகளிற் புலனாய்த் தோன்றி அருள் புரிதல் செல்லாது. அவர் பொருட்டாகவே நுண்ணிய ஒளிப் பொருளான அனற் கொழுந்தின்கண் முனைத்து நிற்கும்முதல்வனை, அவ்வனலுக்கு அடுத்தபடி நுண்மையுடையதுஞ் சிறிதொளி வாய்ந்ததுமான நீரின்கட் புகுமாறு வேண்டி, அதன்பின் ஒளியில்லாத பருப்பொருட் கல்வடிவில் அந்நீரை உகுத்து, அவ்வாற்றால் அவன் அக்கல்வடிவில் முனைப்புற்று நின்று அருள் செய்யுமாறு வேண்டுதல் செய்கின்றாரென்க. இறைவன் இயற்கை யாகவே விளக்கம்இல்லாத கல் மண் செம்பு முதலான பருப்பொருள் வடிவுகளில் முனைத்து நிற்கின்றிலன் என்பதுபற்றியே பட்டினத்தடிகள், சொல்லினுஞ் சொல்லின் முடிவினும் வேதச் சுருதியினும் அல்லினும் மாசற்ற ஆகாயந் தன்னினும் ஆய்ந்துவிட்டோர் இல்லினும் அன்ப ரிடத்தினும் ஈசன் இருக்கும்இடங் கல்லினுஞ் செம்பினு மோஇருப் பான்எங்கள் கண்ணுதலே என்று அருளிச் செய்வாராயினர். அனற் பிழம்பில் இயல்பாக விளங்கித் தோன்றும் ஐயன், அங்ஙனம் விளங்காத ஏனைப் பருப்பொருள்களிலும் விளங்கி நின்று அருள்புரிதல் வேண்டு மென்று நெஞ்சங்குழைந்து வேண்டினால் மட்டுமே, ஆண்டு அவன் முனைத்து நின்று அருள்வன் என்பது பண்டைச் சான்றோர்க் கெல்லாம் ஒத்ததொரு கோட்பாடாகலின், முத்தீவேள்வி வேட்டுக் கல்லிலுஞ் செம்பிலும் இறைவனை விளங்கச் செய்யும் வினை ஏனைப் பொதுமக்கள் எல்லார் பொருட்டும் இன்றியமையாது செய்யப்படுவதா யிற்றென்க. இங்ஙனம் முத்தீ வேட்டு முதல்வனைப் பருப்பொருள் வடிவுகளில் விளங்கி நிற்கச் செய்த வழியும், முதற்கடவுள் உண்மையுணர்ந்து, அவனை யொருவடிவில் வைத்து, வணங்க விழைவு மீதூர்ந்து, பேரன்பிற்கு ஒரு கொள்கலனாகத் திகழும் மெய்யடியார் உள்ளம் நீராய்க் கரைந்து கரைந்துருகி வழிபட்ட கல் மண் செம்பு கட்டை முதலானவைகளில் அவன் எக்காலுந் தோன்றி நின்று அருள் செய்யுமாப் போல் ஏனை அப்பருப்பொருள் வடிவுகளில் அவன் அத்துணை நில்லா னென்பதே தேற்றமாம். அதுபற்றி யன்றே திருஞான சம்பந்தர், திருநாவுக்கரையர், சுந்தர மூர்த்திகள், மாணிக்க வாசகர் முதலான மெய்யாசிரியன்மார் சென்று வழிபட்டுச் செந்தமிழ்ப் பாக்களால் வழுத்திய சிவபிரான் திருக்கோயில் களே சிறந்தனவென்று கற்றார் முதற் கல்லாதார் ஈறான எத்திறத்தாரும் அவற்றைப் பெரிது பாராட்டி வருகின்றார். மெய்யாசிரியன்மார் செந்தமிழ்ப் பாடலின் பொருட் டாகவே, காணவுங் கருதவும்படாத முதல்வனான சிவபிரான் காணவுங் கருதவும் எளிதாகிய சிவலிங்கக் கல்வடிவிலே விளங்கி நின்று அருள் செய்யும் உண்மை வெள்ளிடை விலங்கலென வீறித் தோன்றவும், இவ்வுண்மை யினை மறைத்துத் தமக்குந் தமது ஆரிய மொழிக்கும் உண்மையில் இல்லாத ஒரு தெய்வத் தன்மை கற்பித்துக் கொள்வான் வேண்டி ஆரியரும் அவரது போலியொழுக லாற்றைப் பின் பற்றிய கோயிற் குருக்கண்மாரும், நம் தெய்வ ஆசிரியர் அருளிச் செய்த தேவார திருவாசகச் செந்தமிழ் மாமறைகளாற் சிவபிரானுக்கு வழிபாடு ஆற்றாது, எல்லாப் பொய்ம்மையும் நிறைந்த ஆரிய மொழிச் செய்யுட் களாலேயே வழிபாடு முற்றும் ஆற்றுகின்றார். ஒரு கற்றாவின்பாலைப் பெற வேண்டுவார், அதன் கன்றை அதன்பால் உய்த்து, அஃது உண்ண உண்ணப் பால் சுரந்து ஒழுகாநிற்புழி, அதனைப் பின்னர்த்தாம் கறந்து கைக்கொள்ளுமாப் போல், மெய்யடி யார் சென்று வழிபட்ட திருக்கோயில்களில் உள்ள திருவுருவங்களிலே அவர் பொருட்டுத் தோன்றி நின்று பேரருள் செய்த இறைவன் திருவருளை அவ்வுருவங்களின் வழிநாம் பெறுதலே எளிதிற் கைகூடுவதாகும். ஆகவே, கல் மண் முதலான பருப்பொருள் அடையாளங்களில் இறைவனை விளங்கச் செய்தற் பொருட்டுச் செய்யும் ஏனை எல்லா முறைகளையும்விட, அவன்றன் மெய்யடியார் அவ்வத் திருக்கோயிலின் மேற் பாடிய தேவார திருவாசகச் செந்தமிழ் மாமறைத் திருப்பதிகங்களை அன்பினால் எடுத்தோதி அகங்கரைதலே கழிபெருஞ் சிறப்புடைத்தா மென்க. என்றாலும், நிறைந்த அன்பும் ஆழ்ந்த அறிவுமில்லா ஏனைப் பொதுமக்கள் பொருட்டுத், திருக்கோயில்களிற் சிவலிங்கத் திருவுருவின் எதிரே அடுத்தடுத்து மேற்சொல்லிய வாறு முத்தீவேட்டு, அதன் கட்டோன்றும் முதல்வன் அச்சிவலிங்கத்தினுந் தோன்றி நின்றருள் வழங்குமாறு வேண்டித் திருமுழுக்குச் செய்தல் பெரிதும் நலம் பயப்ப தொன்றேயாமென் றுணர்தல் வேண்டும். இனித், தீப்பிழம்பின் வடிவான சிவலிங்கத்தை அமைத்துத் திருக்கோயில்கள் எடுப்பிக்கும் உண்மை யினையுஞ் சிறிது விளக்கிக் காட்டுவாம். நம் ஐம்புலனுக்கும், அவை வாயிலாக நடைபெறும் நமது மனனுணர்வுக்கும் புலனாகித் தோன்றிநின்ற இவ்வியற்கையமைப்பு உலகும் உடம்பும் என இருகூறாய்க் காணப்படுகின்றது. இவ்விரு கூற்றிற்பட்ட உலகு பெரிதாயும், உடம்பு சிறிதாயும் அமைக்கப்பட்டு நிலவு கின்றன. வடிவத்தாற் பெரிது சிறிதாயிருப்பினும், உலகத்தி லுள்ள அமைப்புகள் உடம்பிலும் உடம்பிலுள்ள அமைப்பு கள் உலகத்திலுங் காணப்படுகின்றன, உலகத்தில் வான், வளி, தீ, நீர், மண் என்னும் ஐம்பெரும் பொருள்கள் இருத்தல் போலவே, உடம்பிலும் வெளியும் மூச்சுஞ், சூடுஞ், செந்நீரும், எலும்பு, தோல், நரம்பு, தசை முதலான மண்ணின் கூறுகளும் அமைந்திருக்கின்றன. உலகில் மலைகளும் மரங்கள் அடர்ந்த காடுகளும் இருத்தல் போலவே, உடம்பில் என்புகளும் மயிர்த் தொகுதிகளும் அமைந்திருக்கின்றன. உலகிற் பொன், வெள்ளி, இரும்பு, ஈயம், கெந்தகம் முதலான முதற்பொருள்கள் ஆங்காங்கு உளவாதல் போலவே, உடம்பிலும் பொன் வெள்ளி இரும்பு ஈயம் கெந்தகம் முதலான முதுற்பொருள்கள் பொருந்தி யுள்ளன. உலகிற் கடல்களும், ஆறுகளும் அமைந்திருத்தல் போலவே, உடம்பில் தீனிப்பை, குண்டிக்காய் முதலான நீர் நிலைகளுங் குருதியோடும் நரம்புக் குழாய்களும் அமைந் திருக்கின்றன. உலகில் ஞாயிறு திங்கள் தீயென்னும் முச் சுடர்கள் காணப்படுதல் போலவே, உடம்பில் வலக்கண், இடக்கண்ணும் புருவத்திற்கு நடுவே நெற்றிக்கண்ணுங் காணப்படுகின்றன. உலகில் அனற்காற்றுங் குளிர்காற்றும் வீசுதல் போலவே, உடம்பின் வலது மூக்கில் அனல்வளியும் இடது மூக்கிற் குளிர்வளியும் வீசுகின்றன. உலகமெங்கும் வான்வெளி பரந்திருத்தல் போலவே, உடம்பெங்கும் வான் வெளி பரந்திருக்கின்றது. இன்னும் இங்ஙனமே உலகத்தின் கண் உள்ள அமைப்புகள் அத்தனையும் உடம்பின் கண்ணுங் காட்டலாம், இருந்தவாற்றால் உலகினைப் பேருலகு என்றும், உடம்பினைச் சிற்றுலகு என்றுங் கூறுதல் இழுக்காது. இனி, எல்லாம் வல்ல கடவுள் இவ் வுலகங்களிலும் இவ்வுடம்புகளிலும் நிறைந்து நின்று இவை தம்மை இயக்கினாலன்றி இவை தாமாகவே இயங்க வல்லன அல்ல; மற்று, உயிர்களோ சிற்றறிவுஞ் சிறுதொழிலும் உடையன வாகையால், இவை மிகப்பெரிய உலகங்களின் உள்ளும் புறம்புமுள்ள இயல்புகளை முற்ற உணரமாட்டாமையொடு, தமதுடம்பின் இயக்கத்தையே நன்கு நடைபெறுத்தவல்ல ஆற்றலும் இல்லாதனவாய்ச் சடுதியிலே மாய்ந்து போகுந் தன்மையவாய் இருத்தலின் இவை அவ்வுலகங்களையும் உடம்புகளையும் இயக்குமென்றலும் ஏலாது. ஏலாதாகவே முழுமுதற்கடவுள் ஒருவனே இவை தம்மையெல்லாம் ஊடுருவி நின்று இயக்குகின்றானென்பது தானே போதரும். அங்ஙனம் அவன் இவ்விரு கூற்றிற்பட்ட உலகுகளை இயக்கு வதும், உயிர்களுக்கு மேன்மேல் அறிவு விளங்கச் செய்து, அவ்வாற்றால் அவைதந் துன்பத்தை அகல்வித்து இன்பத்தை நுகர்வித்தற் பொருட்டேயாகலான், அவன் இவ்வுலகுகளை இயக்குவதொன்றின்மட்டும் அமையாது. இவையிற்றின்கண் இருந்து உயிர்வாழும் எல்லா உயிர்கட்கும் அறிவையும் முறைமுறையே விளங்கச் செய்து வருகின்றான். யாங்ஙனம் அறிவு விளங்கச் செய்திருக்கின்றானெனின்; உயிர்களின் கண்ணறிவை விளக்கி அவ்வாற்றால் அவை தம் மனனுணர்வையும் விளங்கச் செய்கின்றானென்க. இனி, உயிர்களின் கண்ணறிவை, விளக்குதற்கு ஞாயிறு, திங்கள், தீ என்னும் மூன்றிலும், புறத்தே உலகின் கண் ஒளியுருவாய் ஒளிராநின்ற முதல்வன், கண்ணறிவு விளங்கி அவ்வாற்றால் விளங்கப்பெறும் உயிர்களின் உடம்பின் அகத்தே மனனுணர்விலும் அறிவொளியாய்த் துலங்கா நிற்கின்றன னென்று ஓர்ந்து கொள்க. இவ்வாறு இறைவன் புறத்தே உலகின்கண் ஒளிவடிவாய் விளங்கும் வகையினையும், அகத்தே உடம்பின்கண் அறிவொளியாய்த் திகழும் வகையினையும் அறிவுறுத்தி, மக்கள் உள்ளத்தைத் தூய்மை செய்து இறைவன்றன் அருளொளியிற் படிவித்தற் பொருட் டாகவே, அறிவான்மிக்க நம் பண்டைச் சான்றோர்கள், திருக்கோயில்களையும் இருவகையமைப்புகளுட்படுத்து அமைக்கலாயினர். ஆனாலும், உலகினை யொப்ப அமைக்கப்பட்ட திருக்கோயில்களின் கருவறையிலே ஞாயிறாவதுதிங்களாவது வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்தது, நமக்குக் கட்புலனாகும் ஒன்பது மண்டிலங்களில் ஞாயிறுந் திங்க ளுமே ஒளி விளக்கமுடையனவாய் நம்முடம்பையும் உயிரை யும் அறிவையும் வளர்ப்பனவாய் இருத்தலின், அவை யிரண்டும் இறைவன் விளங்கித் தோன்றி உறையுந் திருவுரு வங்களாகக் கருதப்பட்டன. உலகினையொப்ப அமைத்த பழைய திருக்கோயில்கள் ஒரே மதிற்சுற்று மட்டும் வாய்ந்தன. அவற்றின் நடுவே பகலவன் அல்லது நில வோனது திருவுருவம் நிறுத்தப்பட்டிருந்தது. இத்தகைய பகலவன் கோட்டம், நிலவோன் கோட்டம் பண்டை நாளில் இத்தமிழ்நாட்டின் கண் இருந்தமை சிலப்பதிகாரம் என்னும் பழைய தமிழ் நூலால் நன்கறியப்படுகின்றது, இத் தமிழ்நாட்டின் மட்டுமேயன்றி, வட நாட்டின்கண்ணும் பகலவன்றிருக் கோயில்கள் இருந்தமை பவிடிய புராணத்தாலும் பழைய சத்திராபி மன்னர்கள் வழங்கு வித்த நாணயங்களில் ஞாயிற்றின் வடிவம் பொறிக்கப் பட்டிருத்த லானும் புலனாகின்றது; அதுவேயுமன்றிப் பஞ்சாபு தேயத்தின் கண்ணதான முலுத்தானத்தில் மிகச் சிறந்ததொரு பகலவன் கோட்டம் இருந்தமை, இற்றைக்கு ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் இவ்விந்தியநாடு போந்து இங்குள்ள காட்சிகளைக் கண்டெழுதிய சீன அறிஞரான அயூன்தாங்கு கூறும் உரைகளாலுந் தெளியக் கிடக்கின்றது. மிகச் சிறந்த இப்பகலவன் றிருக்கோயில் மகமதிய வேந்தனான அவுரங்கசீபு காலத்திலேதான் சிதைத்து அழிக்கப் பட்டது. இங்ஙனமே நிலவோனை வழி படுஞ் சமயத்தவர் இருந்தமை `சங்கர விஜயத் தினுட் சொல்லப்படுதலின், அதற்குத் திருக் கோயில்கள் வட நாட்டின்கண் இருந்தமை உய்த்தறிப்படும். இனி, இவ்விந்தியதேயத்தின் மட்டுமேயன்றி, இற்றைக்குப் பதினாயிர ஆண்டுகளுக்கு முன்னரே நந்தமிழ் மக்களின் முன்னோர்கள் சென்று குடியேறி வைகிய மேல்பால் நாடுகளான சாலடி, அசுரம், எகுபதி, பாபிலோனியம் முதலானவைகளிலுங்கீழ்பால் நாடுகளான மெகுசிகம், பேரு முதலானவைகளிலும் மிகப் பெரிய சிறந்த பகலவன் கோட்டங்களும் நிலவோன் கோட்டங்களும் இருந்தன. அவைகள் நிலத்தின்கட் புதைந்துபோனமை தெரிந்து, அவைகள் வெள்ளைக்கார அறிஞர்கள் அகழ்ந்து வைத்து, அவையிற்றின் வியத்தக்க மிக அழகிய அமைப்பு களை விரிவாக எழுதி ஓவியம் எடுத்துங் காட்டியிருக் கின்றார்கள். ஆகவே இற்றைக்குப் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னமே மேல்பால், கீழ்பால் நாடுகளிலும் இவ்விந்திய நாடுகளிலும் இருந்த அறிவான் ஆன்ற நாகரிக மக்கள் அனைவரும், இவ் வுலகினை ஒருபுடையொப்ப எழுப்பிய பெரிய பெரிய திருக்கோயில்களிலெல்லாம் பகலவன் றிருவுருவினையும் நிலவோன் றிருவுருவினையுமே நிறுத்தி, அவை தம்மில் முனைத்து விளங்காநின்ற முழுமுதற் கடவுளை வழிபட்டு வந்தமை தெற்றென வுணரப்படுமென்க. இனி, இந்நிலவுலகினிற் சிறந்த இவ்விந்திய நாட்டை இறைவற்கோர் உடம்பாகக் கொண்டு, அவ்வுடம்பினகத்தே இறைவன் விளங்கி நிற்றற்கேற்றசிறந்த இடங்கள் தலையின் உச்சியும், நெற்றியும், புருவநடுவும், மார்பும், நெஞ்சமும், நெஞ்ச நடுவும், மூலமும் என ஏழிடங்கள் உளவாகலின் அவ் வேழிடங்களுந் திருப்பருப்பதம், திருக்கேதாரம், காசி, குருக்கேத்திரம், பிரயாகை, தில்லை, திருவாரூர் ஆமென வகுத்து, அவ் வேழிடங்களிலுந் திருக்கோயில்கள் அமைத்து, அவற்றின்கட் சிவலிங்க உருவினை நிறுத்தி அதன்கண் இறைவனை, நம் பண்டைப் பெரியார்கள் தொன்றுதொட்டு வழிபட்டு வருகின்றார், புறத்தே இவ்விந்திய நாட்டின்கண் ஏழிடங்களிலே வைத்து அங்ஙனம் இறைவனை வழிபட்டு வருதல் போலவே, அவர்கள் தமதுடம்பின் அகத்தேயும் அவ்வேழிடங்களில் இறைவன்றன் ஒளியுருவினை நிறுத்தி, அதன்கட்டமது கருத்தினை ஒரு முகப்படப் பதித்து வழிபாடாற்றி வருதலையும் மேற்கொண்டு நிற்கின்றார். இவ்வுண்மை, சென்னி சீசைலம் பாலவங்கே தாரந் திகழ்தரு புருவமத் தியமே மன்னிய காசி வண்குயத்தானம் வளர்குருக் கேத்திரம் இதயந் துன்னிய புண்ணி யப்பிர யாகை சொல்லும்அவ் விதயத்தின் நடுவண் மின்னிடு தெய்வ சிதம்பரம் மூலா தாரத்தா ரூர்என்பர் மெய்க்கண் என்னுஞ் சூதசங்கிதைச் செய்யுளால் அறியப்படும், இவ் விந்திய நாட்டின் வடக்கைத் தலையாகவுங் குமரிமுனை யுள்ள தெற்கை அடியாகவுங் கொண்டால், இமயமலைக் கண்ண தான திருக்கைலாயத்தை அத்தலையின் உச்சி யாகவும், அம்மலைச்சாரலின் கண்ணதான திருக்கேதா ரத்தை நெற்றியாகவும்; அதற்குக் கீழ்க்கண்ணதான காசியைப் புருவத்தின் நடுவாகவுங் கோடல் பொருந்தும். ஆனாற் காசியின் வடக்கேயுள்ள குருக்கேத்திரத்தை மார் பாகவும், அதற்குத் தெற்கேயுள்ள பிரயாகையை நெஞ்ச மாகக் கோடல் பொருந்துமேனும் பிரயாகைக்குத் தெற்கே நெடுந்தொலை விலுள்ளதான தில்லைச்சிற்றம் பலத்தை அந்நெஞ்சத்தின் நடுவாகவுங் கூறுதல் பொருத்தமாகக் காணப்படவில்லை. மற்றுத் திருவாரூரை மூலத்தின் கண்ணதாகக் கூறுதலோ பொருத்தமுடைத்தேயாம். இங்ஙனம் புறத்தே வடக்கேயுந் தெற்கேயுந் காணப்படும் ஏழு திருக்கோயில்களையும் இவ்விந்திய நாடாகிய உடம்பின் ஏழு முதன்மையான இடங்களில் உளவாக வைத்துக் கூறுதலிற் சிறிது மாறுபாடு உளதேனும், இவை தம்மை மக்களுடம்பின் முதன்மையான ஏழு இடங்களில் உளவாக வைத்துச் செய்யும் அகமுக வழிபாட்டிற் சிறிதும் அத்தகைய மாறுபாடில்லை யென்பது உணரற்பாற்று. யாங்ஙனமெனிற் காட்டுதும். வயிற்றின் அடிக்கீழ் எருவாய், கருவாய் என்னும் இரண்டுக்கும் நடுவே முக்கோண வடிவினதான ஓர் எலும்பினைப் பற்றிக் கொண்டு காணப்படும் இடமே `மூலம் ஆகும் என்று தவநூல்கள் நுவலா நிற்கின்றன. இம் மூலத்தின்கண்ணதான அனல் மிகாதுங் குறை யாதும் இருக்கு மாயின் மக்களுடம்பு எல்லா நலங்களும் உடையதாய் நீண்ட காலம் அழிவின்றி நிலைபெறும்; அவ்வாறின்றி அவ்வனல் தன் நிலையினின்றும் மிகுந்து விடுமாயின் அஃதுடம் பெங்கும் பரவி உடம்பிலோடுஞ் செந்நீரினை உரிஞ்சி உயிரை உடம்பினின்றும் அகற்றும்; அல்லது தன்னிலையிற் குறைந்து விடுமாயின் உடம்பினுள் ளோடுஞ் செந்நீருஞ் சூடு குறைந்து உறைய உயிர் அவ்வுடம்பில் நிலையாதாய் அதனைவிட்டு அகலும். இவ்வாறு மூலத்திலுள்ள சூடு மிகுந்தேனுங் குறைந் திதேனுங் காணப்படும் போதெல்லாம் வெப்பு நோயும் பிற நோய்களும் உடன் காணப்படுகின்றன. இந் நுட்பத்தை நன்குணர்ந்தன்றே மேனாட்டு மருத்துவ ஆசிரியரான லூயி கூன்1 என்பார். வயிற்றின் கீழ்ப்பகுதியைக் குளிர்ந்த நீராற் கழுவும் இயற்கை முறையைக் கண்டு அதனால் எல்லா நோய்களையும் எளிதில் நீக்கிக் கொள்ளும் வழி காட்ட லாயினர். எத்துணைக் கொடிய வெப்பு நோய் கொண்டாருந் தமது வயிற்றினடியைக் குளிர்ந்த நீரினுள் அமிழ்த்தி அதனைச் சிறிது நேரங் கழுவுவராயின், அவ்வெப்புநோய் உடனே தணிந்து போதலை எந்நாளும் எளிதிற் காணலாம். ஆகவே, உடம்பெங்கும் பரவுங் கொடிய காய்ச்சலின் சூடு வயிற்றின் அடி மூலத்தினின்றே மிகுந்து தோன்றி உடம்பெங்கும் பரவும் உண்மைஇது கொண்டு தெற்றென அறியப்படும், இங்ஙனமே மூலத்தின் சூடு குறைய உடம்பெங்குமுள்ள சூடும் உடன் குறையக் குளிர்நோய் காணுங்காலும், வயிற்றினடியை நீருள் அமிழ்த்திக் கழுவு முறையாற் கழுவ, அங்ஙனங் கழுவிய சிறிது நேரத்திலெல்லாம் உடம்பெங்கும் இருக்கவேண்டுஞ் சூடு இருக்குமளவாய்ப் பரவ, அக்குளிர்நோய் நீங்கி விடுதலுங் கண்கூடாய் அறியக் கிடக்கின்றது. இவ்வாற்றால், மூலத்திலுள்ள அனலே உடம் பினிருப்புக்கும் அழிவுக்கும் ஏதுவாய் நிற்றல் நன்கு விளங்கா நிற்கும். இத்துணைச் சிறந்ததாகிய மூல அனலிலே இறைவனது ஒளிவடிவை அகக் கண்ணால் விளங்கக் கண்டு அதன் கண்ணே நினைவைப் பதித்து உள்ளம் உருக வல்லார்க்கு, அவர் தம் உடம்பும் உயிரும் அவ்வொளியினால் ஊடுருவப் பெற்று அழிவின்றித் திகழும். இஃது, எருவிடும் வாசல் இருவிரன் மேலே கருவிடும் வாசல் இருவிரற் கீழே உருவிடு சோதியை உள்கவல் லார்க்குக் கருவிடு சோதி கலந்து நின்றானே என்னுந் திருமூலர் திருப்பாட்டால் நன்கறியப்படும். அற்றேல் அஃதாக; இவ்வுடம்பினகத்தே வயிற்றி னடியில் மூலவனலும் அதன்கண் இறைவனொளியும் ஒளிரு மாப் போற், புறத்தே திருவாரூரின் கண்ணும் அவை யிரண்டும் ஒளிருதல் கண்டிலம், அதனால் அத் திருக்கோயில் இவ்விந்திய நாடாகிய உடம்பின் மூலத்தே அமைந்துள தென்றல் யாங்ஙனம் பொருந்துமெனின்; அது பொருந்து மாறு காட்டுதும். இவ்விந்திய நாட்டின் இயற்கை யமைப்பை ஓவியத்திற் காண்பார்க்கு, இத்தென் றமிழ் நாடு முக்கோண வடிவினதாய் அமைந்திருத்தல் நன்கு விளங்கும். முக்கோண வடிவு தீயின் வடிவினைக் குறிப்பதோர் அடையாளமாம். என்னை? நெருப்பு எரியுங்கால் அதன் அனற்பிழம்பு அடியில் அகன்று மேலெழுங்காற் குவிந்து முக்கோண வடிவின தாய்த்திகழக் காண்டலின், இத் தென்றமிழ்நாடு முக்கோண வடிவிற்றாய்த் திகழ்தல் கொண்டும், இதனை யடுத்தே இந்நிலவுலகத்தின் சூடு மிகுந்த நரம்பினோட்டம் (Equator) செல்லுதல் கொண்டும், வட நாடுகளெல்லாங் குளிர்மிகுந்தே நிற்க இந்நடு நரம்பினை யடுத்த தென்னாடுகளே வெம்மை மிகுந்தனவாயிருத்தல் கொண்டுந் தென்னாட்டின் கண்ண தான `திருவாரூர் இவ்விந்திய நாட்டுக்கு மூலமான முக் கோண வடிவின்கண் அமைக்கப்பட்டுள தென்னும் ஆன் றோருரை சாலவும் பொருந்துவதேயாம் என்க. இவ்விந்திய நாட்டின் வட பகுதியிற் குளிர்மிகுந்த நரம்பி னோட்டமும், இதன் றென் பகுதியில் அனல் மிகுந்த நரம்பினோட்டமும், இவை யிரண்டுக்கு மிடையே நடு நரம்பினோட்ட மும்அமைந்துள வென்று ஆசிரியர் தெய்வத்திருமூலர், இடைபிங் கலைஇம வானோ டிலங்கை நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை கடவுந் திலைவனங் கைகண்ட மூலம் படர்வொன்றி யென்னும் பரமாம் பரமே என்றருளிச் செய்தமையுங் கருத்திற் பதிக்கற்பாற்று. இச்செய்யுளிற் கூறப்பட்ட `இடைநாடி என்பது குளிர் மிகுந்த தொன்றாய் இமயமலைப் பக்கமாய்ச் செல்லா நிற்கின்றது. `பிங்கலை நாடி என்பது அனல் மிகுந்த தொன்றாய் இலங்கைப் பக்கமாய்ச் செல்லா நிற்கின்றது. இடைபிங்கலை இமவானோடு இலங்கை என்பதில் இடை என்பதனை இமவானோடும், பிங்கலை யென்பதனை இலங்கையோடும் நிரல் நிறையாக இயைத்துப் பொருள் கொள்க; இங்ஙனம் பொருள் கொள்ள அறியாதார், இடை நாடியை இலங்கையோடும், பிங்கலை நாடியை இமவா னோடும் இயைத்துப் பிழைபடுவர். சூடுமிகுந்த பிங்கலை நாடி இலங்கைப் பக்கமாய்ச் செல்லுமென்றலே இஞ் ஞான்றை இயற்கைப் பொருள் நூலுக்கும் பொருத்தமாய்க் காணப்படுகின்ற தல்லாமல், அஃது இமயமலைப் பக்கமாய்ச் செல்லுமென்றல் அதற்குப் பொருத்தமாய் காணப் படாமையும் ஆராய்ந் துணர்தல் வேண்டும். நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை என்பதில் மேரு என்பது பொதுவாக எல்லா மலைக்கும் பெயராகலின் அதனைத் திருவண்ணா மலைக்குப் பெயராகக் கோடலே பொருத்தமாம்; ஏனெனில், இலங்கைக்கும் இமயத்திற்கும் நடுநிற்குஞ் சிறந்த தெய்வமலை அதுவே யாகலானும், அடுத்து ஓதப்பட்ட தில்லைவனம் அத் திருவண்ணா மலைக்கு அணித்தாய் இருப்பதொன்றாக லானும், திருவண்ணா மலை யை நடுநாடியாகிய `சுழுனை யாகக் கொண்டா லல்லாமல் `தில்லையை அச்சுழுனையின் நடுவாகக் கொள்ளுதல் இயையாதாகலானும், இவ்வாறன்றி ஈண்டு `மேரு என்னுஞ் சொல்லாற் குறிக்கப்பட்ட மலை இமயமலைக்கும் அதற்கப்பா லுள்ள சீனதேயத்திற்கும் வடக்கே அப்பெயர் பெற்றுள்ள தொரு மலையெனக் கொள்ளின் அஃது இலங்கைக்கும் இமயத்திற்கும் நடுவணதாதல் செல்லாதாக லானும், செல்லா தாகவே அதன் நடுவிற்றில்லைமன்று உண்டென்றல் பொருந் தாதாலானும் இத்திருமூலரது திருப்பாட்டிற் போந்த `மேரு என்பதற்குத் திருவண்ணாமலை யெனப் பொருளுரைத்தலே பொருந்துவதாமென்று தெரிந்து கொள்க. இனி, இவ்வுடம்பினகத்தே நெஞ்சத்தாமரையில் இறைவன் ஒளிவடிவினனாய் விளங்கும் உண்மையினைச் சிறிது விளக்குவாம். மக்களாய்ப் பிறந்த மன்னுயிர்களும் மற்றைச் சிற்றுயிர்களுந் தமதுடம்பின் புறத்தேயுள்ள மெய், வாய், கண், மூக்குச், செவியென்னும் ஐந்து அறிவுப் பொறி களையும், நா, கை, கால், எருவாய், குறியென்னும் ஐந்து தொழிற் பொறிகளையும் இயக்கவல்லவைகளாயிருக் கின்றனவேயன்றி, உடம்பினகத்தே யுள்ள மூளை, நெஞ்சப்பை, மூச்சுப்பை, தீனிப்பை, மலஞ், சிறுநீர்ப்பை முதலானவைகளை யெல்லாந் தாம் வேண்டிய வாறெல்லாம் இயக்க வல்லவை களாயில்லை. நம் நினைவுக் கேற்றபடி யெல்லாம எவ்வாறு மூளை இயங்குகின்றது? நம்மையறியாமலே நாம் உறங்குவதும், நம்மை யறியாமலே நாம் விழிப்பதும் யாங்ஙனம் நடைபெறு கின்றன? நாம் உள்ளிழுக்குந் தூய காற்றைச் செந்நீரிற் சேர்ப்பித்து அதிலுள்ள நச்சுக்காற்றை வெளிப்படுத்தும் அருஞ் செயலை நெஞ்சப்பைகள் எவ்வாறு செய்கின்றன? நாம் உட்கொள்ளும் உணவை ஏற்குந் தீனிப்பை அதனை நம் முடம்பின் வளர்ச்சிக்கு இன்றியமையாது வேண்டும் பல வேறு சாறுகளாகஎவ்வாறு பிரித்து எவ்வாறு அவற்றை உட்செலுத்துகின்றது? அதனால் அதனினின்றும் பிரித்துக் கீழ்க்கழிக்கப்படுங் கழிவுகளாகிய மலமுஞ் சிறுநீரும் மல நீர்ப்பைகளுக்குப் போதலும் பின்னர் அவற்றினின்று புறம்போக்கப்படுதலும் எங்ஙனம் நிகழ்கின்றன? என்று எவ்வளவுதான் நாம் ஆராய்ந்து பார்த்தாலும் அந்நிகழ்ச்சி கள் நம் அறிவுக்குச் சிறிதும் புலப்படுகின்றில. நமதுடம்பின் அகத்துள்ள பல்வேறு வியத்தகு உறுப்புகளின் இயற்கையுஞ் செயலும் ஒருசிறிதும் அறிய மாட்டாச் சிற்றறிவினேமாகிய யாமே அவற்றைப் படைத்து யாமே அவற்றை இயக்கு கின்றேமென உரைத்தால், அவ்வறிவில்லா உரை அறிவிற் சிறியராயினார்க்கும் நகையினை விளையா தொழியுமோ? மற்று, அறிவிற் பெரியராயினார்க்கோ அஃது எத்துணைப் புல்லிய குருட்டுரையாகக் காணப்படும், ஆகவே, நமதுடம் பின் அகக் கருவி புறக்கருவிகளின் இயற்கையும் இயக்க மும்அறிய மாட்டாப் பேரறியாமை வாய்ந்த நாம் அவற்றை அமைத்தலும் நடத்தலும் ஒருசிறிதுஞ் செய்ய மாட்டாமை யின், நம் அறிவுக்கு எட்டா அவை யிரண் டனையுஞ் செய்ய வல்லவன் இறைவன் ஒருவனே யாவ னென்பதூஉம், அவ்விறைவன் அகம் புறம் என்னும் எல்லா இடங்களிலும் வான்வெளி போல் நிறைந்து நிற்கும் இயல் பினனாகலின் அவனே எல்லா உடம்புகளின் அகத்தேயும் ஊடுருவி நின்று அவ்வுடம்புகளின் அகப்புற உறுப்புகள் அத்தனையும்இயக்கி அவை தம்மை உயிர்களுக்குப் பயன்படுத்துகின்றன னென்பதூஉம் நன்கு முடிக்கப்படும். இங்ஙனமாக இறைவன் உடம்பினகத்துள்ள எல்லா உறுப்புகளிலும் நின்று அவையிற்றை இயக்குகின்றானேனும், அவ்வுறுப்புகளிற் றலைசிறந்ததாகிய நெஞ்சத்தாமரையினுள் நின்றே ஏனையெல்லா உறுப்புகளையும் இயக்குகின்றன னென்பது ஆராய்ச்சியால் இனிது புலனாகின்றது. ஒரு நாழிகை வட்டிலின் (கடிகாரத்தின்) அகத்தும் புறத்துமுள்ள உருள்களும் முட்களும்அதன் முதன்மையான சுழல்வில்லின் விரிவினாலேயே இயக்கப்படுதல் போலவும், ஒருபெருந் தொழிற் சாலையில் இயங்கும் பல்வகைப் பொறிகளும் அதன்கண் முதன்மையாய் மிகுவிரைவுடன் சுழலும் ஒரு பேர் உருவினாலேயே இயக்கப்படுதல் போலவும், ஒரு புகை வண்டித் தொடர் அதனை ஈர்த்துச் செல்லும் ஒரு நீராவி வண்டி யினாலேயே இயக்கப்படுதல் போலவும், மக்களுடம் பின் நெஞ்சத் தாமரையினுள்ளே விளக்கின் சுடர்க்கொழுந் தென அசையும் இறைவனது அருள்ஒளியினசைவினாலேயே இவ்வுடம்பின் உள்ளும் புறம்புமுள்ள எல்லா உறுப்புகளுந் தொடர்பு பட்டு அசையா நிற்கின்றன. இத்துணைச் சிறந்ததாகிய நெஞ்சப்பையி னசைவுக்குச் சிறிது ஊறுபாடு நேருமாயினும்இவ்வுடம்பினசைவு நின்றுவிடும்; அது நிற்கவே, உயிர் உடம்பின்கண் நிலையுதல் இல்லையாய் ஒழிந்துபோம் இது, நெஞ்சடைப்பு நோயால் ஒரு நொடிப் பொழுதில் இறந்து படுவார் மாட்டு வைத்து நன்கறியப்படும் அற்றேல் நமது அறிவி னியக்கத்திற்குத் தலை யின்கண் அமைந்த மூளையே இன்றியமையா உறுப்பாய் விளங்கி நிற்றலின் அதன்கட் புலப்பட்டு நின்றே இறைவன் இவ்வுடம் பினை இயக்குகின்றான் என்னாமோவெனின்; என்னாம்; என்னை? விழித்திருக்கும் நிலையிலன்றி, அயர்ந்த உறக்கத்தில் மூளையிருந்தும் அஃது உயிரின் அறிவு விளக்கத்திற்குத் துணை செய்யாமல் ஓய்ந்து கிடத்தலானும், மற்று நெஞ்சத் தாமரையோ விழிப்பின் மட்டுமேயன்றி உறக்கத்திலும் ஓவாது இயங்குதலானும், நோய் கொண்டார் சிலர்க்கு மூளையை மண்டையினின்றும் பிரித்தெடுத்த வழியுஞ் சில நாழிகை நேரம் அவரதுயிர் அவருடம்பின்கண் நிற்க அவரது நெஞ்சப்பையை அவ்வாறு அவரது உடம்பினின்றும் பிரித்தெடுத்த அந்நொடியே அவரதுயிர் உடம்பைவிட்டு ஏகக்காண்ட லானும், நெஞ்சத்தாமரையின் இயக்கமே இவ்வுடம்பினியக்கத்திற்கும் அதன்கண் உயிர் நிலவுதற்கும் இன்றியமையாததாய் நிகழ்கின்றதென்பதூஉம், அவ்வியக்கம் மக்களறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டா நிலைக்கண் நிகழ்தல் பற்றி அதனை நிகழ்த்துவான் எல்லாம் வல்ல இறைவன் ஒருவனேயாவன் என்பதூஉம் பெறப் படுதலின் என்க. விழிப்பின்கண் மூளையில் முனைத்து நின்ற உயிர் உறக்கத்தின்கண் நெஞ்சப்பையினுட் சென்றடங்கிவிட, அதனை அங்கே சில நாழிகை நேரம்இளைப்பாற அடக்கி வைத்து அவ்விளைப்புத் தீர்ந்தவுடன் அதனை ஆண்டு நின்றும் மேலெழுப்பிவிடும்இறைவனது அருட்பெருஞ் செயல் நெஞ்சத் தாமரையினுள்ளே தான் ஓவாது நடை பெறுகின்றதென ஓர்ந்துகொள்க. இந்நெஞ்சத் தாமரையின் கண் இடைவிடா தொளிரும் இறைவன்றன் றிருவரு ளொளியிலே தமது கருத்தைப் பதித்திருப்பார்க்கு எல்லாப் பெறற்கரும் பேறுகளும் வாய்க்குமென்பது தெரிப்பார் ஆசிரியர் தெய்வத்திருமூலர், நாசிக் கதோமுகம்பன்னிரண் டங்குலம் நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல் மாசித்தி மாயோகம் வந்து தலைப்பெய்யுந் தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாமே. என்று திருமந்திரத்தின் கண்ணும் அருளிச் செய்தாரென்பது. வடமொழியிற் கைவல்யோப நிடதமும், தனிமையான இடத்தே இனிதிருந்து, தூயனாய்க், கழுத்துத் தலை யுடம்புகளை நேரொக்க நிறுத்தி, நிலை களைக் கடந்து ஐம்புலன்களையும் ஒடுக்கி, அன்பினாற் றன் ஆசிரியனை வணங்கி, நெஞ்சத்தாமரையைத் துகளற்ற தூயதாக நினைந்து, அதன் நடுவிலே மாசற்றதாய்த் துயர மில்லாததாய், எண்ணுதற் கரியதாய், வெளிப்படுதலில தாய்ப், பல வடிவினதாய்ச் சிவம் என்னும் பெயரினதாய், உலகங்கள் ஒடுங்குமிடமாய், அழிவில்லாததாய், நான் முகற்குப் பிறப்பிடமாய், அது வெனப்படுவதாய் முதல், நடு, ஈறு இல்லாத தாய், ஒரே பொருளாய், எங்கும் நிறைந்ததாய், அறிவும் இன்பமும் வாய்ந்ததாய், உருவமற்றதாய், இரண் டற்றதாய், உமையொரு கூறதாய், எல்லாவற்றிற்கும் மேலான தலைமையுடையதாய்ச் செல்வத்தின் மிக்கதாய் மூன்று கண்களையுடையதாய், நீலமிடற்றினதாய்ப் பொறு மையிற் சிறந்ததாய், எல்லா வற்றிற்கும் பிறப்பிடமாய், எல்லாவற்றினையுஞ் சான்றாக நோக்குவதாய் இருப்பதனை வழுத்தி, அதனால் முனிவனாகி,இருளின் மேற் போவன் என்று இங்ஙனமே நெஞ்சத்தாமரையுள் வைத்து இறைவனை வழிபடுமாற்றை விரித்துரைத்தமை காண்க. அது பொருந்துமாயினும், உடம்பினகத்தே இறைவன் முனைத்து நின்றாடும் உறுப்புத் தாமரை முகைவடிவாய்த் தொங்கும் நெஞ்சப்பையின் அகமே யாயினாற்போலப் புறத்தே இவ்வுலகினுக்கு அல்லது இவ்விந்திய நாட்டுக்குத் தில்லைச்சிற்றம்பலமே நெஞ்சுத்தாமரையா மென்றல் யாங்ஙனம் பொருந்துமெனின்; அதனையுஞ் சிறிது விளக்குவாம். இந்நிலவுலகின் நடுவே ஊடுருவிச் செல்லும் அனற்கோடு இலங்கைக்குத் தெற்கேயுளதேனும், அதன் பரப்பு அதற்குத் தெற்கேயும்வடக்கேயும் ஆயிரத்தறுநூறு கல்வரையில் உளதென்று இஞ்ஞான்றை நிலநூல் வல்லார் கணக்கெடுத்திருத்தலின், இலங்கைக்கு வடமேற்கிலுள்ள தான தில்லைச் சிற்றம்பலம் அவ்வனற் கோட்டின் பரப்பின் கண்ணே தான் அமைந்திருத்தல் தெள்ளிதின் விளங்கா நிற்கும். உயிர்களதுடம்பின் நடுவே செல்லுஞ் சுழுனை நாடிபோல், இவ்வுலகின் நடுவே அனற்கோடு செல்கின்ற தெனவும், அச்சுழுனை நாடியிற் றொங்கும் நெஞ்சத்தாமரை முகிழ் போல் அவ்வனற்கோட்டின்கட் டில்லைச் சிற்றம்பலம் அமைந்துளதெனவும் திருவாதவூரடிகள் புராணமும் கோயிற் புராணமும்முறையே இவ்வுண்மையினை, இடம்படும் உடம்பின் மூலத்தெழுந்தநற் சுழுனை நாடி உடன்கிளர் ஒளியே யாகி யொளியில் அஞ்செழுத்தும் ஒன்றாய் நெடுங்குழல் ஒசையாகி நிலவும்அவ் வோசைபோய் அங்கு அடங்கிய இடமே யென்றும் ஆடும் அம்பலம தாகும் என்றும், நாடரு நடுவின் நாடி நலங்கிளர் தில்லை நேர்போய்க் கூடும்அங் கதனின் மூலக் குறியுளது அதற்குத் தென்னர் மாடுறு மறைகள் காணா மன்னும்அம் பலமொன்று உண்டு அங்கு ஆடுதும் என்றும் என்றான் என்னை யாளுடைய ஐயன் என்றும், விளக்கிக் காட்டினமை காண்க. இன்னும் இந்நிலவுலக அமைப்பினைக் காட்டும் ஓவியத்தினை ஒரு சிறிது நோக்குவார்க்கும், இந் நிலவுருண்டையின் ஒரு பாதியில் இவ்விந்திய நாடு நடுவே யமைந்திருத்தலும், இத்தென்றமிழ் நாடு அதில் ஒரு தாமரை முகைவடிவாய்த் தொங்கிக் கொண்டிருத்தலும், அத்தாமரை முகையினுள்ளே தில்லைச் சிற்றம்பலந் திகழ்ந்து கொண்டிருத்தலுங் கண் கூடாய்க் காணக்கிடக்கும் என்க. எனவே, நமதுடம் பினகத்தே நெஞ்சத் தாமரையினுள் நுண்ணிய வெளியிலே அஃதாவது சிற்றம்பலத்திலே இறைவனது அருளொளி முனைத்து விளங்கி யியங்கும் இயக்கத்தால் நம்முடம்பு முயிரும் இயக்கப்படுதல் போலவே, இவ்வுலகின் புறத்தேயுந் தாமரை முகிழ்வடிவாய் அமைந்தஇத்தென்றமிழ் நாட்டில் தில்லைச் சிற்றம்பலமாகிய நுண் வெளியிலே இறைவனது அருளொளி யசைவாகிய திருக்கூத்து நடைபெற்று இவ்வுலகினை இயக்கா நிற்கின்ற தென்னு முண்மை நன்கு பெறப்படு மென்க. அஃதொக்கு மாயினும், இந்நிலவுலகின் ஒருபாதியின் கண்ணதான இவ்விந்திய நாட்டின் தில்லைச் சிற்றம்பலத்தே இறைவனது திருவருட் கூத்து நடை பெறுமென்றாற் போல, அதன் மறுபாதிக் கண்ணதான அமெரிக்க தேயத்திலும் அப்பெற்றியதான ஓரிடத்தே இறைவன்றன் அருட்கூத்து நடைபெறுமெனக் கூறுதல் வேண்டும்; மற்று அங்ஙனங் கூறு தற்குச் சான்றில்லை யாலோவெனின்; அற்றன்று; ஆண்டும் இறைவன்றன் அருட்கூத்து நிகழும்இடம் உண்டென்பது காட்டுவாம். வட அமெரிக்காவுக்குந் தென்னமெரிக்காவுக்கும் நடுமையமாகிய மெகுசிகம், பேரு என்னும் பண்டை நாடுகளில் இற்றைக்குச் சிறிதேறக் குறைய ஏழாயிர ஆண்டு கட்கு முன்னமே அமைக்கப்பட்ட மிகப்பெரிய பழைய சிவபிரான் திருக்கோயில்கள் உண்டு. அவைகள் இந்நாளில் இடிந்து காடு மூடிக்கிடப்ப, வெள்ளைக்கார அறிஞர்கள் அக்காடுகளின் உள் நுழைந்து சென்று, அத்திருக்கோயில் களின் மிக வியப்பான அமைப்புகளைக் கண்டு இறும் பூதுற்றவர் களாய், அவற்றின்மேன் மூடிய காடுகளை அழித்து, இடிந்து கிடக்கும் அக்கோயில்களையும் இடி யாமல் அவற்றின்கண் எஞ்சி நிற்கும் பகுதிகளையும் பாதுகாத்துக், காண விரும்புவாரெல்லாரும் அவற்றை வந்து காண்டற்கு வேண்டும் ஒழுங்குகள் எல்லாம் செய்திருக் கின்றார்கள். அக்கோயில்கள், நம்தமிழ் நாட்டில் தில்லை, ஆரூர், கூடல், திருவண்ணாமலை முதலிய நகர்களில் உள்ள சிவபிரான் திருக்கோயில்களைப் பார்க்கினும் மிகப் பெரியன வாயும், மிக அரிய தொழில் நுட்பம் வாய்ந்தன வாயும், இறைவன் றிருவுருவம் நிறுத்தப்பட்ட கருவறை களின் சுவர்களிற் பொற்றகடுகள் பதித்துமேன் முகடுகளிற் பொன்னோடுகள் வேயப் பட்டனவாயுங் காணப்படு கின்றன, இக்கோயில்களிற் பகலவன் திருவுருவில் வைத்தே அஞ் ஞான்றை மக்கள் சிவபிரானை வணங்கி வந்தனர்; அனற் சுடருக்கு அடையாளமான சிவலிங்கங்களும் அக்கோயில் களில் நிறுத்தப்பட்டிருக் கின்றன; இச்சிவலிங்க வடிவாக நிறுத்தப்பட்டிருக்கும் ஓர் உருவினைக் கண்ட வெள்ளைக்கார அறிஞர் சிலர் அதனைத் தமது மதத்திற்குரிய `சிலுவை யெனவே நினைந்துவிட்டனர். ஆனாற் கிறித்து மதந் தோன்று தற்குப் பல நூற்றாண்டுகளின் முன்னரே நடு அமெரிக்காவின் கண்ணவான நகர்களில் உள்ள பழைய கோயில்களில் நிறுத்தப்பட்ட அத்திருவுரு வினைச் சிலுவை என்றல் ஒரு சிறிதும் இசையாது. நடுவே ஒரு கோட்டு வடிவுஞ் சுற்ற ஒரு வட்ட வடிவம் உடைய ஒர் உருவே தொலைவி லிருந்து நோக்கு வார்க்குச் சிலுவை போற் றோன்றா நிற்கும், இனிச், சிலுவை வடிவுஞ் சிவலிங்க வடிவேயாகுமெனும் உண்மையினை அவ் வெள்ளைக்காரரில் அறிவான் ஆன்ற ஒரு சான்றோரே2 நன்கெடுத்து விளக்கிக் காட்டியிருக்கின்றார். ஆதலாற் பழைய நடு அமெரிக்காவின் திருக்கோயில்களில் நிறுத்தப் பட் டிருக்கும் திருவுருச் சிவலிங்க வுருவே யல்லது சிலுவை யுருவன்றெனக் கடைப்பிடிக்க. அங்ஙனம் இறைவனது ஒளியுருவு நிறுத்தப்பட்டிருக் கும் ஒருகோயிலின் கருவறை முழுதுங் பொற்றகடு பதித்துப் பொன்னொளி வீசுதல்பற்றி அதனை அஞ்ஞான்றிருந்த மக்கள் பொன்னம்பலம் எனத் தமது மொழியில் வழங்கி வந்தமையும் அந்நாட்டின் பண்டை வரலாறு கூறும் நூலால் நன்கறியக் கிடக்கின்றது.3 எனவே, இந்நிலவுலகின் ஒரு பாதியில் நெஞ்சத்தாமரையென விளங்குந் தில்லைப் பொன்னம்பலத்தே இறைவன்றன் அருட்கூத்து நடை பெறுமாறு போலவே, இதன் மறுபாதியில் நெஞ்சத் தாமரை யென வழங்கும் நடு அமெரிக்காவின் ஒரு பழம்பெருந் திருக்கோயிலின் பொன்னம்பலத்தேயும் இறைவன்றன் அருட்கூத்து நடை பெறுகின்றமை தெள்ளிதின் உணரப் படும். நாமிருக்கும் இம் மேலுலகினுக்கு நேர்கீழ்ப் பாதல உலகு அமெரிக்க தேயமேயாகும்; அத்தேயத்தின் நடுவண தான மெகுசிக நகரும் நாம் வணங்குந் தில்லை யம்பலத் திற்குச் சிறிதேறக் குறைய நேர்கீழ்க் கண்ணதாகவே அமைந் திருக்கும் உண்மையினை இந்நிலவுலகின் ஓவியத்தை நோக்கு தலால் எளிதில் அறிந்து கொள்ளலாம். இன்னும் மேலே தில்லையம்பலமுங் கீழே மெகுசிக அம்பலமும் அமைந் திருக்குமிடம் இந்நிலவுலகின் அனல் நடுக்கோட்டை யடுத்தேயிருத்தலானும், அவ்வனல் நடுக்காட்டிலிருந்தே இந்நிலவுலகு மேற்கிலிருந்து கிழக்கு முகமாய்ப் பகலவனைச் சுற்றிச் சுழலுதலானும், இறைவன்றன் அருட்கூத்தாகிய இயக்கம் இவ்விரண்டு அம்பலங்களுக்கும் ஊடாகவே நடைபெறுகின்றதென ஓர்ந்து கொளல் வேண்டும் என்பது. இனிப், பிரயாகையை நெஞ்சமாகக் கோடல் பொருந் தாமையினை மேலே காட்டினாம்; அங்ஙனமே, குருக்கேத் திரத்தை மார்பகக் கோடலும் பொருந்தாமை மேலே காட்டப்பட்டது. ஆகவே, அவ்விரண்டனையும் புறத்தே அவ்வுறுப்புகளாக நினைதலைவிட்டு, இவ்வுடம் பினகத்தே நெஞ்சத்தாமரையைப் பிரயாகையாகவும், நெஞ்சத்திற்குப் புறத்தேயுள்ள மார்பினைக் குருக்கேத்திர மாகவும் நினைந்து கொண்டு, அவையிரண்டனையும் ஒருவாற்றாற் பொருத்திக் கொள்க. இனிக். காசியைப் புருவநடுவின்கண் உளதாக வைத்து வழிபடுதற்குரிய இயைபினைச் சிறிது விளக்குவாம், நமதுடம்பின் நடுவே செல்லுஞ் சுழுனைநாடியின் இடப் புறத்தே இடாநாடியும் வலப்புறத்தே பிங்கல நாடியுஞ் செல்கின்றன. இடாநாடியானது வலக்காற் பெருவிரலி லிருந்து துவங்கி, வயிற்றின்கீழ் மூலத்தே வந்து குறுக்கிட்டு இடப்பக்கத்தே மாறி இடது மூக்கின் கண் வந்து முடிகின்ற தென்றும், பிங்கல நாடியானது இடக்காற் பெருவிரலி லிருந்து துவங்கி மூலத்தே வந்து குறுக்கிட்டு வலப்பக்கத்தே மாறி வலது மூக்கின்கண் வந்து முடிகின்றதென்றும், நடுநிற்குஞ் சுழுனை நாடி எருவாய் கருவாய்க்கிடையே துவங்கிக் கொப்பூழ் மேல்வயிறு, நெஞ்சு, மிடறு, புருவ நடு என்னும் ஐந்திடங்களின் அகங்களையும் ஊடுருவிக் கொண்டு தலையின் உச்சியிற் சென்று முடிகின்றதென்றுந் தவ நூல்கள் நுவலா நிற்கின்றன, இவ்வாறு தலைக்கண் வந்து முடியும் நரப்புக் குழைகள் மூன்றும் புருவத்துக்கு நேரே தலையினகத் துளதாகிய நடுவிடத்தே போந்து ஒருங்கு கூடுதல் போலப் புறத்தே காசிமா நகரின் கண்ணுங் கங்கை யமுனை சரசுவதி என்னும் மூன்றியாறுகளும் போந்து ஒருங்கு கலத்தலிற் காசியைப் புருவ நடுவின்கண் உளதாக வைத்து வணங்கு தல் சாலவும் பொருந்துவதேயாம். பண்டைக் காலத் தோடிய சரச்சுவதி யென்னும் யாறு இக்காலத்தில் நிலத் தினுட் சுவறி இலதாயிற்றேனும் முன்னொருகால் மூன்றி யாறுகளும் ஒருங்குகலந்த இடங் காசிமா நகரேயாகலின், அதனை அதுபற்றிப் புருவ நடுவினதாக வைத்து வழிபாடாற்றுதலில் இழுக்கொன்று மில்லையென்க. இன்னும், புருவத்துக்கு நேராகத் தலையினுள்ளே ஒருகோடு செல்வதாகவுந் தலையுச்சியின் நடுவிருந்து கீழ் நோக்கி ஒரு கோடு அதனுள்ளே செல்வதாகவும் நினைந்து, அவையிரண்டும் ஒன்றையொன்று ஊடறுக்கும் இடமே புருவ நடுவென்றும் நெற்றிக்கண்ணென்றும்,இறைவனும் உயிரும் ஒன்றனோடொன்று பிரிவற விராய் ஒளிரும் நடுநிலையா மென்றும் உணர்ந்து கொள்க. இதனை ஆசிரியர் திருமூலர், கண்நாக்கு மூக்குச் செவி ஞானக் கூட்டத்துட் பண்ணாக்கி நின்ற பழம்பொரு ளொன்றுண்டு அண்ணாக்கி னுள்ளே அகண்ட ஒளிகாட்டிப் புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே என்றும் நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம் பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடஞ் சிற்றம்பல மென்று தேர்ந்துகொண் டேனே என்றும் நன்கு தெருட்டியருளினமை காண்க இனி, இவ்விந்திய நாடாகிய உடம்பிற்கு நெற்றி போல்வது திருக்கேதாரம் என்றும்,அதன் தலையுச்சி போல்வது திருக்கைலாயம் என்றுங் கூறினமை, முன்னை யது இமயமலைச் சாரலிலும் பின்னையது அம்மலைமேலும் உண்மையினாலென்பதை முன்னரே விளக்கிப் போந்தாம், ஆகவே, புறத்தே ஏழிடங்களில் உளவான திருக்கோயில் களிற் சிவபிரா ன் றிருவருள் ஒளி முனைத்து நின்று ஆருயிர் கட்கு அருள் வழங்குமாப் போல், இவ்வுடம்பினகத்தேயும் மூலம், நெஞ்சம், செஞ்சத்தாமரை, மார்பம், புருவநடு, நெற்றி, சென்னி என்னும் ஏழிடங்களிலும் இறைவன்றன் அருளொளி முனைத்து நின்று ஆருயிர்கட் கருள் செய்யும் மறைந்த பேருண்மையினை மனத்தின்கட் பதித்துக் கொள்ளல் வேண்டு மென்பது. இனி, இவ்விந்திய நாட்டைத் தாமும் அங்ஙனமே ஓர் உடம்பாக உருவகப்படுத்தி, அவ்வுடம்பின்கண் முதன்மை யான ஆறிடங்கள் உளவெனவும் அவை மூலம், கொப்பூழ், மேல்வயிறு, நெஞ்சம், மிடறு, புருவ நடு4 என்னும் ஆறுமா மெனவும், அவ்வாறிடங்களிற் புறத்தேயும் அகத்தேயுந் திருவாரூர், திருவானைக்கா, திருவண்ணாமலை, தில்லைச் சிற்றம்பலம், திருக்காளத்தி, காசி என்னும் ஆறு திருக்கோயில்களும் விளங்காநிற்குமெனவும் பரஞ்சோதி முனிவர், திருவளர் ஆரூர் மூலம், திருவானைக் காவே நாபி5 மருவளர் பொழில்சூழ் அண்ணாமலைமணி பூரம் நீவிர் இருவருங் கண்ட மன்றம் இதய மாம் திருக்கா ளத்தி பொருவருங் கண்டம் ஆகும் புருவமத் தியமே காசி என்று தாமியற்றிய திருவிளையாடற் புராணத்திலே கூறாநிற்பர். ஆனால், திருமந்திரம் முதலான பழைய நூல்கள் இங்ஙனங் கூறக் காணேம். என்றாலும்,இக் கூற்றும் பொருத்தமாகவே காணப்படுகின்றது; யாங்ஙனமெனில், `திருவாரூர் என்பது எருவாய் கருவாய்க் கிடையேயுள்ள மூலத்தின் கண்ணதாதலை முன்னரே விளக்கிப் போந்தாம். இனித், `திருவானைக்கா என்பது இறைவன் ஊற்று நீரிலும் விளங்குகின்றா னென்பதனைக் காட்டுதற் பொருட்டு நீர் ஊற்று உள்ளதோரிடத்தில் அமைக்கப்பட்ட தொரு திருக்கோயிலாகும்; இது புறத்தே நீரூற்றுள்ள தோரிடத்தில் அமைக்கப்பட்டாற்போலவே, நமதுடம்பின் அகத்தேயுங் கொப்பூழ்க்கீழ் உள்ள தீனிப்பை எந்நேரமும் நீர்நிறைந்ததாக இருத்தலின் அதன் கண்ணும் இறைவன் அமர்ந்திருக்கும் அத்திருக்கோயில் உண்டென்பது பொருத்த மேயாம். நாம் வாயிலிடுஞ் சோறு, காய், கனி, கிழங்கு, வித்துக், கீரை முதலியன பருப்பொருள் களேயாயினும், அவை வாயிலிடப் பட்ட வளவானே எச்சில் நீருடன் கூட்டிக் குழைத்து நீராக்கிக் கீழே இறக்கப்படுதலானும், அங்ஙனம் எல்லாப் பருப்பொருள் களும் நீராகக் குழைக்கப்பட்டுத் தீனிப்பைக்குச் சென்றா லல்லாமல் அவைசெரியாமற் கக்கப்படுதலானும், ஒரோ வொருகாற் செவ்வனேமெல்லாமல் இறக்கப்பட்ட பண்டங்கள் தீனிப்பையினுட் சென்றவுடனே செரித்தற் பொருட்டு வாயினின்றும் உமிழ்நீர் ஒவாது சுரந்து கீழிறங்கித் தீனிப்பைக்குச் சென்று கொண்டே யிருத்த லானும், அதனொடு பித்தப்பையிலுள்ள பித்த நீரூந் தீனி ப்பையினுள் வந்து சேர்ந்து அவ்வுணவைச் செரிக்கச் செய்தலானும், இவ்விருவகை நீரும் போதாவிடின் விடாய் எடுப்ப மேலும் மேலும் நாம் தீஞ்சுவைத் தெண்ணீர் பருகிக் கொண்டே யிருத்தலானுங் கொப்பூழின் கீழிருக்குந் தீனிப்பை எந்நேரமும் நீர் நிறைந்ததாகவே இருக்குமாகலின் அதனை அகத்துள்ள திருவானைக் காவாகக் கோடல் சாலப் பொருந்துவதே யாம் என்க. இனித், `திருவண்ணாமலை என்பது இறைவன் நெருப் புருவாய்த் தோன்றியதோ ரிடமாதல் பழைய வரலாறுகளால் அறியப்படுவதொன்றாகும். இங்ஙனம்இறைவன் நெருப்புரு வாய் நின்ற இயல்பினை ஆசிரியர் திருமூலரும், பிரமனும் மாலும் பிரானே நான்என்னப் பிரமன் மால் தங்கள் பேதைமை யாலே பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க அரன்அடி தேடி அரற்றுகின் றாரே எனத் திருமந்திரத்தில் (372) அருளிச் செய்திருத்தல் காண்க. நமதுடம்பின் வயிற்றிலுள்ள தீனிப்பை மேற்சொல்லியவாறு நீர் நிறைந்ததா யிருப்பினும் அதன் மேற்பகுதி சூடுடையதாக அமைந்திருக்கின்றது, ஏனென்றால், வெளியே உணவு வெந்து நன்றாய்ப் பதப்படுதற்கு நீரும் நெருப்பும் இன்றி யமையாது வேண்டப் படுதல் போல, உள்ளே இரைப்பையிற் சென்ற உணவும் இன்னும் நன்றாய்க் குழையவெந்து கூழாகிச் செந்நீரிற் கலத்தற்கு நீரொடு நெருப்பும் இன்றி யமையாது வேண்டப்படுகின்றது. அதனாற், றீனிப்பையின் மேற்பகுதி எஞ்ஞான்றும் அனன்று கொண்டேயிருக் கின்றது. ஆகவே புறத்தே நெருப்புருவில் இறைவன் றிரு வண்ணாமலையில் விளங்கித் தோன்றினாற் போலவே, அகத்தே தீனிப்பையின் மேற் பகுதியில் உளதாகிய வெம்மையிலும் விளங்கி நிற்பனென்பதூஉம் பொருத்தமாகவே காணப்படுகின்றது. இனி, இதன்மேலுளதாகிய நெஞ்சத்தாமரையின் கண்ணதாம் வெளியிலே அசையா நிற்கும் ஒரு பெருவிரல் அளவினதான ஒளிப்பிழம்பிலே இறைவன் விளங்கி நின்று இயக்கும் இயக்கத்தையே திருவம்பலக் கூத்து எனத் தவநூல்கள் நுவலுமாறும்,அக்கூத்து நிகழும் இடமே அகத்தும் புறத்துந் திருச்சிற்றம்பலமென வழங்கப்படுமாறும் முன்னமே விளக்கிக் காட்டினாம், இனித், `திருக்காளத்தியென்பது எல்லாம் வல்ல இறைவன் காற்றின்கண் முனைத்துநின்று அதனை இயக்கு மாற்றைக் காட்டுதற்கென்று அமைக்கப்பட்ட திருக்கோயி லாகும், அஃதங்ஙனம் புறத்தே அமைக்கப் பட்டாற் போலவே, நமதுடம்பின் அகத்தும் மிடற்றின் கண்ணே இயங்காநின்ற காற்றினிடத்து இறைவன் விளங்கி நிற்றலின் மிடற்றின் மேற்பகுதியே சிவபிரான் உள்நிற்குந் திருக்காளத்தி யாகும். வெளியேயிருந்து உள்ளும் உள்ளேயிருந்து வெளியும் முறையே யிழுத்து விடப்படும் உயிர்வளியினியக்க மில்லையேல் நமதுடம்பு ஒருசிறிது நேரத்தில் அழிந்துபடுதல் திண்ணமேயாம். ஆகவே, உயிர்வளி இயங்கும் மிடற்றினைத் திருக்காளத்தி யாகக் கூறியதுபொருத்தமுடைத்தேயாம். இனிக், `காசியென்பது கங்கை, யமுனை, சரச்சுவதி என்னும் மூன்றியாறுகளும் ஒருங்கு கூடுமிடத்தே புறத்தில் அமைக்கப்பட்டாற்போல, அகத்தில் இடை, பிங்கலை சுழுனையென்னும் நரம்புக்குழாய்கள் மூன்றும் ஒருங்கு கூடும் இடமாகிய புருவ நடுவில் அக்காசியுளதாதலை முன்னரே விளக்கிக் காட்டினாம். தில்லைக்கு வடக்கேயுளதாகிய திருவண்ணாமலையை அதற்குத் தெற்கே யுளதுபோற் கொண்டு மேல் வயிற்றுளே திருவண்ணாமலையையும் அதற்கு மேல் நெஞ்சத் தாமரையிற் றில்லைச் சிற்றம்பலத்தையும் வைத்துரைத்தது மட்டும் பொருத்தமாகாமை உணரற்பாற்று. இங்ஙனமாகப் புறத்துளதானஇவ் விந்திய நாடென் னும் உடம்பின் முதன்மையான ஏழு அல்லது ஆறிடங்களில் ஏழு அல்லது ஆறு திருக்கோயில்கள் எடுப்பித்து, அவற்றின்கண் நிறுத்திய சிவலிங்க அருட்குறியிலே முதல் வனை வழிபட்டு வருதல்போல, நமதுடம்பின் அகத் துளவான முதன்மையான ஏழு அல்லது ஆறிடங்களில் விளங்காநின்ற இறைவன் றன் ஒளி வடிவினை நினைந்து வழிபாடு ஆற்றுதலும் இன்றியமை யாததாதல் காண்க. இனிப் பிற்றைஞான்றைச் சிவபிரான் றிருக்கோயில்கள் நமதுடம்பின் அமைப்பினையொப்ப வகுக்கப்பட்டவாறும் ஒரு சிறிது விளக்குவாம். மக்களுடம்பினை மேற்கே தலையுங் கிழக்கே காலுமாகக் கிடத்தி வைத்தாலென, இத்திருக் கோயில்களிற் பெரும்பாலனவும் அமைத்து வைக்கப் பட்டி ருக்கின்றன, கிழக்கேயுள்ள கால்கள் இரண்டுங் கோபுரங் களாகும்; அக்கால்களில் இடைவழியே கோபுரங் களின் வாயிலாகும்; அக்காலிரண்டன் ஊடே சென்று எருவாய் கருவாய்க் கிடையே யுள்ள மூலத்திற் சென்று சேர்வதே, கோபுர வாயிலினூடே சென்று மூத்த பிள்ளையாராகிய யானை முகக் கடவுளின் இருக்கையைச் சென்று சேர்வதாகும்; மூலத்தே பாம்பு சுருண்டாற் போல இருக்குங் குண்டலி யுருவினை வணங்குதே, அம் முதலிருக்கையில் ஓங்கார வடிவாய் அமர்ந்திருக்கும் பிள்ளையாரை வணங்குவதாகும்; அம்மூல குண்டலியை யெழுப்பி அதனுடன் சென்று, கொப்பூழ்க்குக் கீழே மிக நுண்ணிய ஒலிகள் மயில் முட்டை யுட் பலநிற நீர்போல் நிற்குங் கீழ் வயிற்றினுட் சேர்ந்து, ஆண்டுள்ள இறைவனை இறைஞ்சுவதே. அப்பிள்ளையார் இருக்கையைக் கடந்து சென்று பன்னிற மயில்மேல் அமர்ந்திருக்கும் முருகப்பிரான் இருக்கையை அடைந்து அவனை வணங்குவதாகும்; அக்கொப்பூழின் கீழ்வயிற்றினை அந்நுண்ணிய ஒளியுடன் கடந்து மேலேறி மேல்வயிற்றுனுட் சென்று ஆண்டுத் தன் இருவகைச் செருக்கினையும் ஒழித்து இறைவன் றிருவருட்கீழ்நிற்றலே, அம்முருகப்பிரா னிருக்கை யைக் கடந்து பலி மேடையின் அடிக்கீழ் விழுந்து வணங்கு வதாகும்; இனி, அம்மேல் வயிற்றினையுங் கடந்து மேலேறி நெஞ்சத்தாமரையிற் சென்று சேர்வதே, பலிமேடையைக் கடந்து எருது வடிவாய் அமர்ந்திருக்கும் நந்தியைச் சேர்வதாகும்; நெஞ்சத்தாமரை முகிழ் இறைவற்கு இருப்பிட மாகலின், அதுபோல் இறைவற்கு ஊர்தியாகிய நந்தியை வணங்கிக் கொண்டு, மிடற்றினூடே செல்வது போல், இறைவன் எழுந்தருளியிருக்குங் கருவறை வாயிலினூடே நுழைந்து, புருவ நடுவிற்கு நேரே தலையின் நடுவணதான சிற்றறையினுட் சென்றடைதல் போல் அக்கருவறை நடுவிற் சேர்ந்து, அத்தலைநடுச் சிற்றறையினுள் விளங்காநின்ற ஒளியுருவிற் சிவபிரானை வழிபடுதல்போல், அக்கோயிற் கருவறையில் அவ்வொளிப் பிழம்பின் அடை யாளமாக நிறுத்தப்பட்டிருக்கும் அருட்குறியை வணங்கி வழிபட்டு நிற்றலாகுமென்க. இங்ஙனந் தவத்தான் மிக்கோர் தம்முடம்பினுள்ளே இறைவனை மூலத்திற் றுவங்கி மேன்மேல் ஏறி வழிபடு முறையில் வைத்து, அவரது தூய தவவுடம்பின் அமைப் பினை யொப்பச் சிவபிரான் றிருக்கோயில்கள் வகுத்து அவற்றினுள்ளே அவர் இறைவனை வழிபடுமாறுந் தெற் றென எவர்க்கும் விளங்குமாறும் ஆன்றோர் விளக்கிக் காட் டினமை காண்க. இனி, உடம்புகளெல்லாம் வெளிப்பார்வைக்கு எழுவகை முதற்பொருள்களால் ஆக்கப்பட்ட பருப்பொருள் போற் றோன்றினும், ஒவ்வோருடம்பும் அகத்தே வெவ்வேறு நான்குடம்புகளோடு ஐவகை யுடையதாகும், வெங்காயம் என்னுங் கிழங்கு வெளிநோக்கில் ஒன்று போற்றோன்றினும், அஃது உரிக்க உரிக்கப் பற்பல தோல்களையுடை தாமாறு போல நம்மனோருடம்பும் அகத்தேயுள்ள வெவ்வேறு நான்குடம்புகளோடு ஐவகையுடையதாய் அமைக்கப் பட்டிருக்கின்றது அவை: உணவுடம்பு, வளியுடம்பு, மனவுடம்பு, அறிவுடம்பு, இன்பவுடம்பு என்பனவாகும் ; இவற்றை வட நூலார் முறையே அன்னமயகோசம், பிராண மயகோசம், மனோமயகோசம் விஞ்ஞானமயகோசம், ஆனந்தமயகோசம் என வழங்காநிற்பர். இவ்வாறு ஒவ்வோ ருடம்பும் ஐந்துடம்புகள் தொக்க தொகையாய் இருத்தலை ஆசிரியர் அருணந்திசிவனாரும் மருவா னந்தம் விஞ்ஞானம் மனோபி ராணன் அன்னமயம் உருவாந் தன்மை உண்டாய்முன் னொன்றுக் கொன்று சூக்குமமாய் வருமாம் அன்ன மயம்பற்றி மாயை முதற்கா ரணமாகும் அருவாய் ஆன்மா ஐங்கோசத் தார்ப்புண் டவற்றி னகம்புறமாம் என்னுஞ் சிவஞான சித்தியார்ச் செய்யுளால் இனிது விளங்க வைத்தருளினார். இவ்வாறு நமதுடம்பு ஒன்றினுள் ஒன்றாக ஐந்துடம்புகளுடன் கூடியதாய் இருத்தல் போல நமதுடம்பை யொப்ப ஆக்கப்பட்ட சிவபிரான் திருக்கோயில்களும் ஐந்து சுற்றுகள் உள்ளனவாக வகுத்து அமைக்கப்பட்டிருக் கின்றன. இனி, நம்முடம்புகள் ஐந்தையும் வேறொரு வாற்றால் மூன்றாகக் கொண்டு பருவுடம்பு, நுண்ணுடம்பு, காரண வுடம்பு எனவும் மெய்ந்நூல்கள் வழங்கு முண்மை, சூக்கும தேகி யாகித் தூலரூ பத்தின் மன்னிச் சாக்கிர முதலா யுள்ள அவத்தையுட் டங்கி யெங்கும் போக்கொடு வரவு மெல்லாம் புரிந்துபுண் ணியங்கள் பாவம் ஆக்கியும் பலன்க ளெல்லாம் அருந்தியும் நிற்கு மான்மா. என்னுஞ் சிவஞானசித்திச் செய்யுளால் அறியக்கிடத்தலிற், பெரும்பான்மையான சிவபிரான் றிருக்கோயில்கள் மூன்று சுற்றுகள் உடையனவாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்ஙனமாக இந்நிலவுலகிற் சிறந்த இவ்விந்திய நாட்டை ஓருடம்பாகக் கருதி, அதனுள் மூலத்திற் றுவங்கித் தலையுச்சி வரையில் உளவாக வைக்கப்பட்ட இடங்களில் இறைவன் திருவுருவினை நிறுத்தி வழிபடுமுறையும், இனி இவ்விந்திய நாட்டினுள்ளுஞ் சிறந்த தென்றமிழ் நாட்டை ஓருடம்பாகக் கருதி அதன்கண்ணும் மூலத்திற் றுவங்கி மிடறுவரையில் உளவாக வைக்கப்பட்ட இடங்களில் இறைவன் றிருவுருவினை நிறீஇ வழிபடுமுறையும், இனி ஒவ்வொரு சிவபிரான் றிருக்கோயிலையும் ஒருதவ முனிவ னுடம்பினோ டொப்பவகுத்து, அம்முனிவன் தனதுடம்பி னகத்தே இறைவனை வழிபடு முறையோ டொப்பப் புறத்தே அத்திருக்கோயிலினுள்ளும் எல்லாருஞ் சென்று இறைவனை வழிபடுமுறையும் ஆகிய இவையெல்லாம், ஆசிரியர் திருமூலர் இற்றைக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன் அருளிச் செய்த திருமந்திர நூலிலாதல், அதற்கும் முந்நூறாண்டுகட்கு முன்னே, அஃதாவது இற்றைக்கு ஆயிரத்து எழுநூறு ஆண்டு கட்கு முன்னே மணிமொழிப் பெருமான் அருளிச் செய்த திருவாசகத் திருக்கோவை யாரிலாதல், அதற்கும் முன்னே, அஃதாவது, இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகட்கு முன்னே இயற்றப்பட்ட பண்டைத் தண்டமிழ் நூல்களிலாதல் ஒருசிறிதுங் காணப் படாமை யால், இம்முறைகளெல்லாம் நம்சைவ சமயா சிரியன்மார் காலத்திற்குப் பன்னெடுங்காலம் பின்னே அஃதாவது நம் சைவ சித்தாந்த முதலாசிரியர் மெய்கண்ட தேவர் காலந் தொட்டே வழங்கி வரலாயின வென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோற் றெள்ளிதின் விளங்கா நிற்கின்றது. அற்றேல், ஆசிரியர் திருமூலர் காலத்தும் அவர்க்கு முற்பட்ட தமிழ்ச்சான்றோர் காலத்தும் வழங்கப்பட்டு வந்த கடவுள் வழிபாட்டு முறைதான் யாதோவெனின்; அப்பழைய முறைனையுஞ் சிறிது விளக்குதும். நம் பண்டைச் செந்தமிழ்த் தாபதர், எல்லா உலகங்களிலும் எல்லா உயிர் களிலும் ஊடுருவி மறைந்து நிறைந்து நிற்கும் எல்லாம் வல்ல இறைவன், சிற்றுயிர்களாகிய நாம்தன்னைக் கண்ணாரக் கண்டு வணங்கியுய்தலை வேண்டிப் பெருகிய அருளால், ஞாயிறு, திங்கள், தீ என்னும் மூன்று ஒளி வடிவுகளில் முனைத்து விளங்கித் தோன்ற, அவ்வியல்பினை விளங்க அறிந்தபின், முதலில் அம்மூன்று ஒளி வடிவுகளில் வைத்தே இறைவனை நேரே வழிபட்டு வரலாயினர். பண்டை மக்களில் அகக்கண் திறக்கப்பெற்றுப் பேரறிவுடையராய் வயங்கிய சான்றோர்களும் அவர்களைச் சூழ்ந்திருந்த அம்மக்களும் மலைகளையே இருப்பிடமாய்க் கொண்டு உயிர் வாழ்ந்தார் களாகலின், அவர்கள் தாமிருந்த மலைகளின் முகடுகள் மேற்சென்று அங்கிருந்தபடியே பகற்காலத்திற் கதிர வனையும் இராக்காலத்தில் நிலவோனையும், நிலவோனும் இல்லாத இராக்காலத்தில் தீயினையும் வணங்கி வரலானார்கள். இது, பாரதப்போர் நிகழ்ந்த காலத்திருந்த வரான முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய மண்டிணிந்த நிலனும் என்னும் பாட்டிற்போந்த மாப்பிணை, அந்தியந் தணர் அருங்கடன் இறுக்கும், முத்தீ விளக்கில், துஞ்சும், பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே (புறம் 2) என்னும் அடிகளால் நன்கறியப்படும், இந்நிலவுலகின்கண் உள்ள எல்லா மலை களைப் பார்க்கிலும் மிக்குயர்ந்ததாகிய இமய மலையின் ஒரு கொடு முடிக்கண் உளதான திருக்கைலாய மலையிற் சிவலிங்க வடிவந்தொன்று தொட்டு வைத்து வணங்கப் படுதலும், அங்ஙனமே இத்தென்றமிழ் நாட்டிலும் மிகப் பழைய காலந்தொட்டே `திருப்பரங்குன்றம், `திருவேங்கடம், `திருக்கழுக்குன்றம், `திருக்கொடிமாடச் செங்குன்றூர் முதலான உயர்ந்த மலைகளின் மீதெல்லாஞ் சிவலிங்கம் வைத்து வழிபாடு செய்யப்படுதலும் இவ்வுண்மை யினை நன்கு விளக்கும். பழைய உபநிடதமாகிய சுவேதாசுவதரமும் (3,5) உருத்திரனே! சிவ வுருவினதாய் அச்சமில்லதாய்த் தூய்மையளிப்பதாய் உள்ள நின்றிருக்கோலத்தோடு, எல்லா அருளும் நிரம்பிய அக்கோலத்தோடு, மலைமீதிருந்தவாறே நலந்தருவோனே! எம்மைக் கடைக்கணித்தருள்க! 5 எனச் சிவ பிரானை விளித்து வழுத்தும்உரை கொண்டும் அவன் மலைமிசை வைத்துப் பண்டை நாளில் வணங்கப்பட்டமை தெள்ளிதிற் புலனாம். பழைய விவிலிய நூலிலும், ஆபிரகாம் என்னும்முனிவர் தம்மகனை இறைவனுக்குப் பலியாக இடுதற் பொருட்டு ஒரு பொருப்பின்மிசைக் கொண்டு சென்று ஆண்டுத் தீ வேட்டமை6 நுவலப்படுதல் கொண்டும் பண்டிருந்த மேன்மக்கள் மலைமேல் தீ வளர்த்து இறைவற்கு வழிபாடு ஆற்றினமை தெளியப்படும். இனி, அத்துணைப் பழைய காலத்திற்குப் பின், மலைமீதுறைந்த மக்களிற் பெரும்பாலார் கீழிறங்கி, ஆற்றோரங்களிலும் ஏரியோரங்களிலும் குடியேறி உயிர் வாழத் துவங்கியபின், தாம் முன்னர் மலைமேற் செய்து போந்த அனல் வழிபாட்டை மரச்செறிவுகளின் கீழ்ச் செய்து வரலாயினர், நாளேற நாளேறப் பகலவனிலும் நிலவோனிலும் இறைவனை வைத்து வணங்கும் வணக் கத்தை மெல்ல மெல்லக் கைந்நெகிழ விட்டுத் தீவடிவில் வைத்து இறைவனை வணங்கும் முறையினையே மிகுதியாய் கடைப்பிடிக்கலா யினர், பகலவனும் நிலவோனும் இறை வற்கு விழுமிய ஒளியுடம்புகளேயாயினும், அவை எட்டாத் தொலைவி லிருத்தலால் அவை தம்மைத்தம் அருகே யிருத்தித், தாம் உட்கொள்ளும் உணவை அவை தமக்கு ஊட்டவுந், தாஞ்சூடும் நறுமலர் மாலைகளை அவை தமக்குச் சூட்டவும், இன்னும் அங்ஙனமே தம் அன்பின் அடையாளங்களாக அவை தமக்குச் செய்ய வேண்டுவன வெல்லாஞ் செய்யவும் இல்லாமையானும், பகலவனும் நிலவோனும் விளங்கா நள்ளிருளிரவில் தீயினொளியே தமக்கின்றியமையாத தொன்றாய்க் காணப்பட்டமையானுந், தீயொன்றே தாம் வேண்டும் போதெல்லாந் தம்மருகே வளர்த்துக் கொள்ளுதற் கியைந்த எளிமையுடைத்தாய், அளக்கலாகாத் தன் அரும் பெருந் தன்மைகளை யொடுக்கித் தன்னைக் குழைந்துருகி நினையும் ஏழையடியார்க்கு எளியனாய்வந் தருள்வழங்கும் இறைவன்றன் அருட்பெருந் தன்மையினைத் தன்னகத்தே விளங்கக்காட்டுந் தகைத்தாய்த் துலங்குதலானும் இடைக் காலத்துச் சான்றோர்கள் இறைவனை நெருப்புருவில் வைத்து வழிபடுதலையே பெரும்பான்மையாய்க் கைப்பற்றி யொழுகலாயினர். அதனால், அவர்கள் குடியேறி வைகிய இடங்களிற் செறிந்த சோலைகள், இளம் மரக்காக்கள், தோட்டங்கள், தோப்புகள், பொழில்களி லெல்லாம் மரங்களின் கீழ்க் குழிகள் அகழ்ந்து அவற்றின் கண் எரியோம்பி இறைவனை வழுத்துதலும் வாழ்த்துதலும் மேற்கொண்டார். இவ்வாறு இவ்விந்திய நாட்டில் வடக்கே இமயமலை முதல் தெற்கே பொதியமலை வரையிலிருந்த தமிழ் மக்களெல்லாம் முத்தீயோம்பி இறைவனை வழிபட்டு வந்த பல நூற்றாண்டுகளுக்குப் பின்னே, இந்திய நாட்டின் எல்லைக்குப் புறம்பே ஆடுமாடு மேய்த்துக் கொண்டும் அவற்றின் ஊனைத் தின்று கொண்டும் வாழ்நாட் கழித்துவந்த ஆரியர், தாம் இருந்த வடபால் இடங்கள் வரவரக் குளிர்மிகுந்து தாம்இருத்தற்கு இசையாத தன்மையவாய் மாறினமையால், அவைகளை விட்டு நீங்கி, இவ்விந்திய நாட்டின் வடமேற் கெல்லைவழியே இதனுட் புகுந்து, வருந்தி வந்தவரை விருந்தேற்கும் இயல்பினரான பண்டைத் தமிழ்மக்களின் உதவியால் ஊனும் உடையும் இருக்கையும் பெற்று, ஆங்காங்குக் குடியேறி வாழலாயினர். அங்ஙனம் வந்துபுகுந்து நிலைத்த ஆரியர், தம்மை வரவேற்ற தமிழ்மக்கள் கல்வியிலும் ஏனைச் செல்வ வளங்களிலும்நிரம்பினவராய் முத்தீவேட்டு வருதலைக் கண்டு அம்முத்தீ வேட்டலின் உண்மையுங் கருத்தும் அறிந்து கொள்ளாமலே, தாமும் அவர்போல் நெருப்பினை வணங் கினால் தமக்கும் அவர் போற் கல்வியுஞ் செல்வமும் உண்டா மெனக் கருதி,அவரினும் மிகுதியாய் அழலோம்பு தலை மேற்கொண்டார். இவ்விந்திய நாட்டிற் புகுமுன்னரே ஆரியமாந்தர் ஆடு மாடு குதிரை முதலான விலங்கினங் களைக் கொன்று அவற்றின் இறைச்சியை நிறையத்தின்று, சோமப்பூண்டில் இறக்கிய ஒருவகையான கள்ளை மிகுதியாய்ப் பருகிவந்த பழக்கமுடையவர்களாதலால், இந்நாட்டுட் புகுந்து வைகிய பின்னும் அப்பழக்கத்தை விடமாட்டாராய்த், தம் ஆரியப் பிரிவினர்க்குத் தலைவராய் இருந்து இறந்துபட்ட `இந்திரன் `வருணன் `மித்திரன் `அரியமான் முதலானவரின் ஆவிகளை வழிபடுதல் நினைந்து, எரி வளர்த்து, ஆடு மாடு குதிரை முதலிய விலங்கு களை வெட்டி அவற்றின் ஊனையுஞ் சோமப் பூண்டின் கள்ளையும் அதன் முன்னே வைத்துப் படைத்துப் பின்னர்த் தாமுந் தம்மினத்தவருமாக அவற்றை யெடுத்தருந்திக் களித்து வந்தனர். உயிர்க்கொலையும், ஊனுணவுங், கட்குடியும் இல்லா மற், காய், கனி, கிழங்கு, வித்துக் கீரை முதலியவைகளையே உணவாகக் கொண்டு, பாலையும் நீரையுமே பருகிப் பிறந்திருக்கும் மக்களையும் பிற சிற்றுயிர்களையும் வணங் காமல், ஒளி வடிவில் முனைத்து விளங்கும் ஒருமுழுமுதற் கடவுளையே அன்பினாற் குழைந்துகுழைந்துருகி வழிபடும் வாழ்க்கையிலேயே பழகிய தமிழ் மேன் மக்களுக்கு அவ்வாரியர் தங் கொலை புலை யொழுக்கம் பெரியதோர் அருவருப்பினைத் தரலாயின. அதனால் அவர்கள், கொலை புலை கட்குடியில்லாமலே எரியோம்பி வழிபடுக என்று அவ்வாரிய மக்கட்கு எவ்வளவோ அறிவுரை பகர்ந்து வற்புறுத்தியும் அவர்கள் அவ்வறிவுரைக்குச் சிறிதுஞ் செவி கொடாராய்த் தாம் வேண்டிய வெறியாட்டு வேள்விகள் அயர்தலையே விடாப்பிடியாய்க் கொண்டனர்! அது மட்டுமோ! அவர்கள்தாஞ் செய்யும் வெறியாட்டு வேள்வி கட்குப் பெரும் பொருளுந், தம் வெறியாட்டு வேள்வி களை அழித்தற்கு முனைந்துநின்ற வலிய தமிழரசர்களைத் தடைசெய்யத் தமக்குத் துணையும் வேண்டி யிருந்தமையால், வலிய தமிழரசர்களிலேயே தமது சூழ்ச்சியிற் சிக்குவாரைத் தெரிந்தெடுத்து,அவரை ஏமாற்றி அவர்பாற் பெரும் பொருள் கவர்ந்தும்,அவரைத்தமது வெறியாட்டு வேள்விக்குத் துணை கொண்டுந் தமது கருத்தை நிறைவேற்றி வரலானார். ïJf©l jÄœ¢ rh‹nwhlj áy®, Ô§f‰w ViH Éy§Ffis¤ JoJo¡f¡ bfh‹W, mt‰¿‹ Cid ïªâu‹ Kjyhd MÉfS¡F¥ gil¡F«ïu¡fk‰w t‹braiy bahÊ¡F§ fU¤âduhŒ,m›thÇa® maU« bt¿ah£L ntŸÉf£F¤ jhK« cl‹gLth® ngh‰ fh£o, KjÈš m›Éy§Ffis cz®É‹¿ bt£L©z tÊ ãw¥ã¤jh®, bt£L©z¥ nghF« Éy§Ffis m¤jÄœ¥ bgÇah® j«Kila f©fshš cW¤J neh¡»íª, j«Kila iffsh‰ á¿Jneu« Ús¤jlÉíª, jkJ Ãidit xUKf¥gL¤â `mit cz®ÉHªJ ïiwtDy»‰F¢ bršf! என்று உரைத்த அளவில், அவை யுணர்விழந்து நிற்ப, அந்நேரத்தில் அவை தம்மை வெட்டி வீழ்த்தற்கு கற்பித்தார். இஞ்ஞான்றும் அறிதுயில் (Hypnotic and Mesmeric sleep) வருவிக்கும் முறையில் நன்கு பழகித் தேர்ச்சி பெற்ற ஆங்கில மருத்துவ ஆசிரியரும் பிறரும், மக்களையும் விலங்குகளையும் அறிதுயிலிற் செலுத்தி அவர்களை உணர்விழக்கச் செய்து அவர்களுக்குச் சிறிதும் நோய்த்துன்ப மில்லாமலே கழலைக் கட்டிகளையும் பிற வற்றையும் அறுத்து நலப்படுத்தி வருகின்றனர்.7 இவ்வருங்கலைப் பயிற்சியில் முற்காலத்தே நன்கு பழகிய நந்தமிழந்தணர்கள், ஆரியர் தம் வெறியாட்டு வேள்விகளிற் கலந்து. அவர்கள் வெட்டும் ஆடு மாடு குதிரை முதலான விலங்குகள் அவர்களால் வெட்டுப்படுதற்குச் சிறிது முன்னரே யுணர்விழந்து வெட்டுப்படுமாறு செய்து, அவை அந் நேரத்தில் அடைய இருந்த பொறுத்தற்கரிய நோய்த் துன்பத்தைப் போக்கி வந்த பேரருட்டிறம் பெரிது! பெரிது! இவ்வாறாக வேள்வியிற் கொல்லப்பட்ட விலங்கினங்கள் உணர்விழந்து நோவின்றி யுயிர் விடுமாறு செய்தமைக்கு இருக்குவேத முதன் மண்டிலத்தின் 142 ஆம் பதிகத்திற் போந்த, நீ தேவர்கள்பாற் செல்கையில் நின் உயிர்வளி நின்னை வருத்தாததாக! கோடரியானது நின் உடம்பை ஊறு படுத்தாத தாக! திறமின்றி விரைந்து வெட்டித் தன்றொழிலிற் பெரிது பிழைபடுங் கொலைஞன் நின்உறுப்புகளைப் பிழைபடப் பிளவானாக! மெய்யாகவே நீ இங்கேஇறந்து படுகின்றிலை! நீ ஏதொரு துன்பமும் அடைகின்றிலை! நீ எளிய இனிய வழியால் தேவர்கள் பாற் செல்கின்றனை! என்னும் உறுதியுரைகளே சான்றாகும். இஞ்ஞான்றும் மக்களையும் பிறவுயிர்களையும் உணர்விழக்கச் செய்யும் அறிதுயில் வல்லார் அடுத்தடுத்துக் கூறி அங்ஙனம் உணர் விழப்பினை (Anaesthesia) வருவிக்கும் உறுதிக் கட்டுரை களோ டொப்ப மேற்காட்டிய பதிகக் கட்டுரைகள் அமைந் திருத்தலுங் கருத்திற் பதிக்கற்பாற்று இவ்வாறாக முன்னிருந்த தமிழ் முனிவர்கள், ஆரியர் செய்து போந்த உயிர்க்கொலை வேள்விகளில் தாமும் உடன்பாடுடையர் போற் கலந்து நின்று அவர் அவ்வேள்விக் களங்களில் வெட்டி வீழ்க்கும் விலங் கினங்களை வெட்டுண்ணுங் கொடுந் துன்பம் அறியாமல் உணர்விழக்கச் செய்து, சில காலமெல்லாம் அவருடைய வேள்விகளையும் நடாத்தி வந்தனர். வந்து மென்! படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன் உடல்சுவை யுண்டார் மனம் (குறள் 253) என்னுந் தெய்வத் திருக்குறள் கூறியாங்கு, ஊன்சுவையிற் பழகிய ஆரியர் தாஞ் செய்துபோந்த உயிர்க்கொலை வேள்வியினைச் சிறிதும் விடாராயினர்! அதுகண்ட தமிழந்தணருந் தமிழரசரும் அவ்வுயிர்க் கொலை வேள்விகள் மேன்மேற் றீவினையையே பெருக்கும் எனவும்; எல்லாம்வல்ல ஆண்டவன் மலத்தால் அறிவு மறைப்புண்ட எல்லாவுயிர்களுக்கும் அம்மலமறைப்பினை நீக்கி அவை தமக்கு அறிவும் இன்பமுந் தருதற் பொருட் டாகவே உடம்புகளைப் பேரருளினாற் படைத்துக் கொடுத்திருக்க, அவனது அருட்டன்மைக்கு மாறாக அவன் படைத்த அவ்வுடம்புகளைச் சிதைத்து அவ்வயிர்களை அறியாமையிலுந் துன்பத்திலும் அமிழ்த்துதல் அவ்வாண்ட வனுக்குத் தணித்தற்கரிய பெருஞ் சீற்றத்தினை மூட்டுவதா மெனவும்; இறைவனது அருளியல்பினையும் அதனைப் பெறுதற்குரிய சிற்றுயிர்களாகிய நாம்இப்போதிருக்கும் மருளியல்பினையும் நன்குணர்ந்து பார்த்து, அருளுக்கு மாறான மருளையெல்லாம் அறவே யொழித்து, எல்லா வுயிர்களிடத்தும் அவனை யொப்ப அருளுடன் ஒழுகி அவன்றன் அருட்பெருந் தன்மையினை ஓவாது நினைந்து நினைந்து கனிந்து கனிந்து உருகுதலால் மட்டுமே அறியாமை தேய்ந்து அருளறிவு நம்பாற் சுடர்ந்தொளிருமெனவும் அதனால் இம்மை மறுமை யிரண்டிலும் இயம்புதற்கரிய இன்பவாழ்க்கையே எல்லா வுயிர்க்கும் வாய்க்குமல்லது துன்பமென்பது சிறிதுந் தலைக்காட்டாதெனவும்; ஆகவே உயிர்க்கொலை வேள்விகளைக் கற்பிக்கும் ஆரிய வேதப் பகுதிகளும் அவற்றிற்கூறிய வாறு செய்யுஞ் சிறு தெய்வ வெறியாட்டுகளுங் கழிபெருந் தீமை பயப்பவாகலின் அவற்றை யருவருத்து விலக்குதலே செயற்பால தெனவும் வற்புறுத்திச் `சாக்கியம், `யோகம் முதலான அறிவு நூல்களும், `ஈச, `கேந, `கடம், `பிரசிநம், `முண்டகம் `மாண்டூக்யம் `தைத்திரீயம் `சாந்தோக்யம் `பிருகதாரண் யகம் `சுவேதா சுவதரம் முதலான உபநிடதங்களும் இயற்றினர். இவற்றுடன் நில்லாமல், எல்லாம்வல்ல முழுமுதற் பொருள் சிவம் ஒன்றேயாதலையும் ஆரியரால் வணங்கப்பட்ட இந்திரன், வருணன், சோமன், பிரமன், விண்டு முதலியோரெல்லாம் பிறந்திறக்குஞ் சிற்றுயிர்களே யாதலையும் பகுத்தறிவு கூடாப் பொதுமக்கட்கு நன்கு தெருட்டுதற் பொருட்டு, அவர் அறிதற்கு எளியவான புராணக் கதைகள் சிலவும் புனைந் துரைப் பொருளாய்ப் படைத்தெழுதலாயினர். இன்னும், இவற்றுடன் அமைதி பெறாமல், உயிர்க் கொலைக்கும் வெறியாட்டுக்கும் இடனாக ஆரியராற் றிரிபு படுத்தப்பட்ட தீவேட்டலையே முற்றும் ஒழிப்பான் வேண்டித், தீ வளர்க்குங் குழிக்கு அறிகுறியாக ஒரு வட்டக்கல் வடிவும், அக்குழியில் வளர்க்கப்படுந் தீயினுக்கு அறிகுறியாகக் குவிந்து நீண்டதொரு கல்வடிவும் வகுத்து அவை யிரண் டனையும் ஒருங்கு பொருத்தி நிறுத்திய சிவலிங்கத்தினெதிரே முன்னே வேள்வியில் வெட்டக் கொணர்ந்த மாட்டினுக்கு அறிகுறியாக ஒரு நந்தியுருவி னையும் அமைத்து, முன்னே அம்மாட்டினை வெட்டிய பலி மேடைக்கு அறிகுறியாக அந்நந்தியுருவின் பக்கத்தே ஒரு பலிபீடத்தினையும் எழுப்பிச் சிவபிரான் றிருக் கோயில்களை ஆங்காங்கு எடுப்பிக்க லாயினர். இவ்வாறு சிவலிங்க அருட்குறியும் அதனெதிரே நந்தியுருவும் அதன் பின்னே பலிபீடமும் அமைத்துத் திருக் கோயில்கள் உண்டாக்கிய பின், முன்னே ஆரியர் செய்து போந்த வெறியாட்டு வேள்வியும் அவற்றின்கண் நடந்த உயிர்க்கொலையும் நினைவில் வராமைப்பொருட்டு, அம் மூன்று குறிகளும் மூன்று மெய்ப் பொருளடையாளங் களாக வகுக்கப்பட்டன வென்று அவை தமக்கு விழுமிய மெய்ப் பொருளுங் கூறலாயினர், இறைவன் றிருவடை யாளமே சிவலிங்கமாமெனவும், இறைவனல்லாத சிற்றுயிரின் அடை யாளமே நந்திவடிவாமெனவும், அவ்வுயிரினாற் கழிக்கப் பட்ட அறியாமையாகிய மலமே பலிபீடமா மெனவும் நன்கு விளக்கிப் பதி, பசு, பாச உண்மையினை அறிவிக்கும் பொருட்டே சிவலிங்கமும் நந்தியும் பலிபீடமும் அமைத்த திருக்கோயில்கள் எடுக்கப்பட்டன வென்று பண்டிருந்த தமிழ்ச் சான்றோர்கள் திருக்கோயிலமைப்பினை மிக வுயர்ந்த மெய்யறிவு முறையிலே வைத்துத் திருப்பிவிட லாயினர், இங்ஙனம் உயர்ந்த முறையில் வைத்துத் திருக் கோயிலமைப்பு விளக்கப்பட்ட உண்மையினை, இற்றைக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன்னிருந்த அருந்தவ மாமுனிவராகிய ஆசிரியர் திருமூலர், ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம் ஆய பசுவும் அடலே றெனநிற்கும் ஆய பலிபீடம் ஆகுநற் பாசம் ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்க்கே (செய்யுள் 2411) என்று தமது திருமந்திர நூலில் அருளிச் செய்தவாற்றால் நன்கறிந்துகொள்க. திருக்கோயிலில் இறைவனைத் தொழுதற்குச் செல்லும் ஒருவர் பலிபீடத்தினருகே சென்றதுந் தமக்குள்ள யான் எனது என்னும் இருவகைச் செருக் கினையும் வெட்டிப் பலியாகச் செலுத்துதற்கு அடையாள மாகவே அவர் அதன் பக்கத்தே நீளக்கிடந்து வணங்கு தலாகும், அங்ஙனம் வணங்கிய அவரது உயிர் அதனால் அவ்விருவகைச் செருக்குந் தீர்ந்து தூயதாகி இறைவனை நோக்கிச் செல்லும் அடையாளமாகவே பசுவின் வடிவின தான நந்தி சிவலிங்கத்தினெதிரே நிறுத்தப்பட்ட தாகும், அந்நந்தியும் அந்நந்தியினெதிரே நிற்குஞ் சிவலிங்கமும் கல்வடிவிற் காணப்படினும், அச்சிவலிங்க வடிவு தூய ஒளி யுருவில் முனைத்து நிற்குஞ் சிவமாமெனவும், அவ்வொளி யுருவில் ஒன்றி இரண்டறக் கலக்குந் தூயவுயிர் அதிற் கரைந்து கலக்குமாறு இதுவாமெனவுங் காட்டுதற் பொருட்டே இறைவனைத் தொழப் போவார் முன்னிலை யிற் கருப்புர வொளிகாட்டும் முறையினைத் தமிழ்ச் சான்றோர் வகுக்க லாயினர். கருப்புரந் தூய வெண்ணிறத் ததா யிருத்தலின், இருவகைப் பற்றும் விட்டு இறைவனோ டொன்றி இரண்டறக் கலக்கப் போந்தூயவுயிர்க்கு அஃது அடையாளமாயிற்று; அக்கருப்புரத்திற் பற்றிய நெருப் பொளி அக்கருப்புரத்தைக் கவர்ந்து கரைத்துத் தனதாக்கும் நிலை, ஒளியுருவினனான இறைவனை அத்தூயவுயிரைப் பற்றித் தனதாக்கும் நிகழ்ச்சிக்கு அடையாளமாயிற்று, இவ்வரும் பேருண்மை முறையினையே தவமாச் செல்வரான தாயுமான அடிகள், தானான தன்மயமே யல்லால் ஒன்றைத் தலையெடுக்க வொட்டாது தலைப்பட் டாங்கே போனாலுங் கர்ப்பூர தீபம் போலப் போயொளிப்ப தல்லாது புலம்வே றின்றாம் ஞானாகா ரத்தினொடு ஞேய மற்ற ஞாதுருவும் நழுவாமல் நழுவி நிற்கும் ஆனாலும் இதன்பெருமை எவர்க்கார் சொல்வார் அதுவானால் அதுவாவர் அதுவே சொல்லும் என்றும், ஒருவனவன் யானைகெடக் குடத்துட் செங்கை ஓட்டுதல்போல் நான்பேதையுப்போ டப்பை மருவவிட்டுங் கர்ப்பூர மதனிற் றீபம் வயங்கவிட்டும் ஐக்கியமுன்னி வருந்திநிற்பேன் அருளுடைய பரமென்றோ அன்று தானே யானுளனென் றும்எனக்கே யாண வாதி பெருகுவினைக் கட்டென்றும் என்னாற் கட்டிப் பேசியதன் றேயருணூல் பேசிற் றன்றே என்றும் ஆகார புவனஞ் சிதம்பர ரகசியத்தில், (22, 29) அருளிச் செய்திருத்தல் கண்டுகொள்க. இங்ஙனமெல்லாம் போந்த திருக்கோயில் மெய்ப் பொருள் விளக்கமுறை ஆசிரியர் திருமூலர் காலத்திற்குச் சிறிது முன்னே துவங்கிப் போந்த தன்றி அதற்கு முற்பட்ட காலத்தே வழங்கிய தன்றென்பது, பண்டைச் செந்தமிழிலக் கியங்களில் அது காணப்படாமையாற் றெற்றெனத் துணியப் படுகின்றது,. மற்றுப், பண்டை நாளில் ஆரியர் செய்து போந்த உயிர்க்கொலை வேள்வியை அடியொடு நிறுத்தித், திருக் கோயில் எடுப்பித்த தொல்லாசிரியர் முத்தீவேட்ட வேள்விக்குழிக்கு அறிகுறியாகவே வட்டக்கல் வடிவும், அதில் வளர்த்த அனற்பிழம்புக்கு அறிகுறியாகவே அது போல் நீண்டு குவிந்ததொரு கல்வடிவும் வகுத்து, அவை யிரண்டையும் பொருத்திய சிவலிங்கத்தினெதிரே, முற் காலத்து ஆரிய வேள்விக்களத்தில் வெட்டுண்ட எருதுக்கு அறிகுறியாகவே எருதுவடிவான நந்தியை நிறுத்தி, அவ் வெருது வெட்டுண்ட பலிமேடைக்கு அறிகுறியாகவே அதனையொத்த பலி பீடத்தை எழுப்பிச் சிவபிரான்றிருக் கோயில் அமைத்தன ரென்க. பண்டை நாளில் மலைகளின் மீதிருந்த தமிழ் முன் னோர்கள் முத்தீவேட்டலைக் கைவிட்டபின் அவற்றின் மேல் எடுப்பித்த திருக்கோயில்களே மிகப்பழையன, அவை: திருப்பரங்குன்றம், திருக்கொடுங்குன்றம், திருக்கழுக் குன்றம், திருக்கொடிமாடச் செங்குன்றம் திருவண்ணா மலை, திருவீங்கோய்மலை, திருநொடித்தான்மலை முதலியன. பின்னர் மலைகளினின்றுங் கீழிறங்கிக் காடுகளில் வைகி வாழ்ந்த ஞான்று அவர்கள் அமைப்பித்த திருக் கோயில்கள், மலைக்கோயில்களுக்கு அடுத்தபடியிற் பழைமையுடையன வாகும், அவை: திருவாலங்காடு, திருமறைக்காடு, திருவெண் காடு, திருச்சாய்க்காடு, திருப்பனங்காடு, திருக்கச்சிநெறிக் காரைக்காடு முதலியன வாகும். அதன்பிற் காடுகளைவிட்டு அகன்று உயிர்வாழ்தற் கினிய இளமரக்காக்களிலும் பொழில்களிலும் புகுந்து உறைந்த ஞான்று அவர்கள் கட்டுவித்த திருக்கோயில்கள், கானகக் கோயில்களுக்கு அடுத்தபடியிற் பழைமை வாய்ந்தன வாகும், அவை: திருக்கடம்பு, திருத்தில்லை, திருவானைக்கா, திருக்குரக்குக்கா, திருக்கோடிகா, திருக் கோலக்கா, திருநெல்லிக்கா, திருவாலம்பொழில் முதலாயின. அதன்பின் உழவுத் தொழிற்கேற்ற வளவிய மருதநிலம் புகுந்து அவர்கள் நிலைபெற்ற நாகரிக வாழ்க்கை யுடையராய பிற்றைஞான்று எடுப்பித்த திருக்கோயில்கள் மேற் காட்டிய கோயில்களுக்குப் பிற்பட்ட பழைமை யுடையனவாகும், அவை; திருவாரூர், திருவிடைமருதூர், திருவொற்றியூர், திருக்கடவூர், திருக்கருவூர், திருநாவ லூர், திருப்புகலூர், திருப்புன்கூர், திருமயிலாப்பூர், திருவான்மியூர் முதலான இன்னும் பலவாகும் இங்ஙனமாக, மலை, காடு, கா, பொழில் முதலான இடங்களை உறைவிடமாய்க் கொண்டு, எல்லாம் வல்ல இறைவனை நெருப்புருவில் வைத்து வணங்கியபோதும், நெருப்புருவைக் கைவிட்டு அதனோடொத்த கல்வடிவு மண்வடிவில் வைத்து இறைவனை வணங்கியபோதும், அவர் அவ்வணக்கத்தைச் செய்தது ஒரு மரத்தின் நீழலிலே யாகும், திருப்புலியூர் என்னுஞ் சிதம்பரத்தில் தில்லை மரத்தின் கீழும், திருவாலவாயிற் கடம்பமரத்தின் கீழும், திருவானைக்காவில் நாவல்மரத்தின் கீழும், திருப்பாதிரிப் புலியூரிற் பாதிரி மரத்தின் கீழும் திருமயிலாப்பூரிற் புன்னைமரத்தின் கீழும், திருவொற்றியூரில் மகிழமரத்தின் கீழும் இன்னும் இவ்வாறே ஒவ்வொரு திருக்கோயிலும் ஒவ்வொரு மரத்தின் கீழும் அமைந்திருத்தலை உற்று நோக்கவல்லார்க்குப் பண்டிருந்த தமிழ் மேன்மக்கள னைவரும் எல்லாம் வல்ல சிவபிரானை மர நிழலில் வைத்தே வழிபாடாற்றி வந்தமை தெற்றென விளங்கா நிற்கும். ஆ! மலைமேலும், நிலத்தின் கீழுங், காடுகளிலுங் காக்களிலும் மரத்தின்கீழ் முத்தீ வளர்த்தும், அத்தீப்பிழம்பிற் கறிகுறியான சிவலிங்கம் நிறுத்தியும் இறைவனை நந்தமிழ் மேன்மக்கள் வழிபட்டு வந்த ஞான்று அவருள்ளம் எத்துணை ஆறுதலுடையதாய், எத்துணை அமைதியுடைய தாய், எத்துணை ஒளிவிளக்கம் அருள் விளக்கம் வாய்ந்த தாய்த் திகழ்ந்திருத்தல் வேண்டும்! அருள் ஒளி வயத்தராய் நின்று அவர் வழிபட்டுவந்த ஒளியுருவும், அதனையொத்த சிவலிங்க வடிவுமே பிறப்பிறப்பில்லா முதல்வனை வழி படுதற் கியைந்த உண்மை வடிவங்களாகும், இறைவற் குண்மையான இவ்வருட் குறி வடிவைவிட்டு, இறைவனுண் மைக்கு மாறான வடிவுகளை அவரவர் தத்தம் மனம்போன வாறெல்லாம் வகுத்து வைத்துக் கொண்டு வழிபடுவராயின், அவர் இருளுலகம் புகுவரென ஈசாவாசியோபநிடதம் (9) புகலுதலாற், சிவலிங்க வடிவினையே எல்லாரும் வழிபட்டு இறைவன்றன் அருளுலகம் புகுவாராக! அடிக்குறிப்புகள் 1. Louis Kuhne; see his “New Science of Healing”. 2. Eliphas Levi’s The Mysteries of Magic. p. 84. 3. Harmsworth History of the world, p. 5867. 4. இவை தம்மை வடநூலார் மூலாதாரம், வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என வழங்குவர். 5. (பாடம்) குய்யம். 6. யாதே ருத்ர சிவாதநு ரகோரா பாபகாசிநீ, தயா நதநுவா சந்தமயா கிரிசந்தாபிசாக சீஹி சுவேதாசுவதரோப நிஷத், 3, 5. 7. படைப்பின்றோற்றும் (Genesis), 22. 8. Read “Mesmerism in India” by James Esdaild, M.D., and “Hypnotism” by Carl Sextus. 9. அம்பலவாணர் திருக்கூத்தின் உண்மை எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும் இயலுண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும் மெய்ப்பொருளாம் சிவம் ஒன்றே என்றறிந்தேன் உனக்கும் விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய் மீட்டும் இப்பொருள்அப் பொருளென்றே இசைப்பதென்னே பொதுவில் இறைவர்செய்யும் நிரதிசய இன்பநடந் தனைநீ பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம் பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே - இராமலிங்க அடிகள் இராமலிங்க அடிகளார் அருளிச் செய்த மேலைத் திருப்பாட்டினை மேற்கோளாக எடுத்துக் கொண்டு அம்பலவாணர் திருக்கூத்தினுண்மையும் ஞானயோகமும் என்னும் எமது விரிவுரையினை நிகழ்த்துவான் புகுகின்றேம், அறிவில்லா எவ்வகைப்பட்ட பொருள்களினகத்தும் புறத்தும், அறிவுடைய எவ்வகையுயிர்களின் அகத்தும் புறத்தும் நிறைந்திருப்பதும்,இயற்கை யுண்மையும்இயற்கை யறிவும் இயற்கை யின்பமும் உடையதாகி ஒவாது இயங்குந் திருக்கூத்தை இயற்றுவதும் ஆன உண்மைப் பொருளாஞ் சிவம் ஒன்றே முழுமுதற் கடவுளாகும் என்பதூஉம், இதனுண்மையை யுணர்ந்து அவ்வாற்றாற்சிவவயமாய் நின்றவர்க்குத்தாம் பேரின்பத்தை யடைந்த அவ்வளவில் மனவமைதி வராது தாம் பெற்ற பெறலரும் பேற்றை அது பெறாத ஏனை மக்களும் பெறும்படி அவர்க்கு அதனை யெடுத்துக் கூறும் அருளிரக்க முண்டாமென்பதூஉம், அங்ஙனஞ் சிவஞானிகளாயினார் கூறும் மெய்யுரையினை ஏற்று நலம்பெறும் நல்வினை வாயாதார் தமக்குள்ள ஆணவ அறியாமை முனைப்பால் அம் மெய்யுரையினை விடுத்து முழுமுதற் கடவுளல்லாத சிற்றுயிர்களையும் உயிரல் பொருள்களையுந் தெய்வமெனத்துணிந்து இதுதான் கடவுள் அதுதான் கடவுள் என இசைத்துத் தம் பிறவிப்பயனை இழப்பரென்பதூஉம், மற்று அங்ஙனம் அறியாமை வயப் பட்டார் போலாது மெய்யுணர்ந்தார் கூறும் மெய்யுரை யினை ஏற்று அதன்வழி நிற்கவல்ல நல்லார்க்கு எவ்வுயிர்க் கும் பொதுவாய் அருள் வெளியிலே ஆடல்புரியும் அம்பல வாணன் இன்பக் கூத்தினை நினைவு ஒருங்கி உணர்ந்து பிறவித் துன்பமறக் காணும் பேரின்பக் காட்சி வாய்த்தலின் அவர்க்கு உயிரினியல்பு, உலகினியல்பு, மலத்தினியல்பு முதலாயினவெல்லாம் பட்டப்பகலிற் கண்ணெதிரே காணப் படும் பொருள்போல் நன்கு புலனாமென்பதூஉம் மேலைத் திருப்பாட்டில் நன்கெடுத்து நுவலப்படுதல் காண்க. இனி, இவைதம்மை முறையே விளங்க விரித்து ஆராய்ந்து காணப்புகுவாம். உலகத்தில் நம்மறிவிற்குப் புலனாகும் பொருள்களெல்லாம் அறிவில் பொருளும் அறிவுடைய உயிர்ப்பொருளும் என்னும்இருபெருங் கூற்றில் வந்தடங்குவன வாகும், இவைதம்முள், அறிவில் பொருள் களென்பன தாமே இயங்கமாட்டாவாய்ப் பிறிதொன்று இயக்கினால் இயங்குந் தன்மையவாகும்,இனி, அறிவுடைய உயிர்களென்பன தாமே அறிவனவாயும் பிறர் அறிவித்தன வற்றை அறிவனவாயும் பிறர்க்கு அறிவிக்கவல்லனவாயும் உயிரற்ற பொருள்களை இயக்கவல்லனவாயுமிருக்கும் எனவே, உயிரில்லாப் பொருளின் றன்மையும் உயிருடைய பொருளின் றன்மையும் வெவ்வேறாய் ஒன்றினொன்று மறுதலைப் பட்டு நிற்றலின்,இவை எக்காலத்தும் எவ்விடத்தும் ஒன்றினொன்று வேறான இயற்கையுடைய வாகவே இருக்கு மல்லாமல், அறிவில் பொருள் அறிவுடைப் பொருளாகவும், அறிவுடைப் பொருள் அறிவில் பொருளாகவும் மாறுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் நிகழ மாட்டாதென்க அற்றேல், மேனாட்டவரில் இயற்கைப் பொருளா ராய்ச்சியிற் சிறந்தாரான `பாடியன் (Bastian) என்பார், அறிவில்லாத பருப்பொருளினின்றே அறிவுடைய உயிர்ப் பொருள் தோன்றுகின்றதெனப் பலமுகத்தானாராய்ந்து கூறியதென்னை யெனின்; அவர் செய்த ஆராய்ச்சி உண்மை யுடையதன்று, ஏனென்றால், அவர் செய்த அவ்வாராய்ச்சி யினைத் திரும்பவும் நுணுகி யாராய்ந்த டிண்டல் (Tyndall) என்னும் பேராசிரியர் தாமாராய்ந்து கண்ட முடிபாக, உயிரில்லாப் பொருளிலிருந்து உயிருடைய பொருள் தோன்றாதென்றும், உயிருள்ள பொருட் சேர்க்கை யிலிருந்தே பிறிதோருயிர் தோன்றுகின்றதென்றும் அறி வுறுத்தி யுறுதி கூறியிருக்கின்றார்1 ஆகவே, அறிவில்லாப் பருப்பொருளி லிருந்து அறிவுடைய நுண்பொருள் தோன்று மென்றல் உண்மை யாராய்ச்சிக்கு ஒவ்வாதென்று உணர்தல் வேண்டும். இனி, ஏகான்மவாதங்கூறும் ஒரு சாரார் சடமென்றுஞ் சித்தென்றும்இரண்டில்லை; சடமே சித்து, சித்தே சடம், பிரமத்தினின்றே நெருப்பிற் புகைபோல மாயையாகிய சடப்பொருளுண்டாம் என்று கூறுவர், அவர் கூற்று மேலே காட்டிய உண்மையாராய்ச்சிக்கு ஒவ்வாமையானும்; நெருப்பிலுண்டாகும் புகை நெருப்பை யணைந்த விறகின் காரியமேயல்லாது நெருப்பின் காரியம் அன்றென்பதற்குக் கனிந்த தணலிற் புகையுண்டாகக் காணாமையே சான்றாமாக லின் இவ் வுவமையின் தன்மையை யுற்றுணராது, இதனைக் கொண்டு தூய அறிவுப் பொருளாகிய பிரமத்தினின்று அறிவில்லாச் சடப்பொருளாகிய மாயை தோன்றுமென்றல் ஒருவாற்றானும் பொருந்தாமையானும் ஏகான்மவாதிகள் கூறும் பொருள் ஏற்கற்பாலதன்று. எனவே, அறிவில்லாப் பொருள்களும் அறிவுடைய உயிர்ப் பொருள்களும் எக் காலத்தும் வெவ்வேறாம் இயல்புடையவாகவே யிருக்கு மென்று கடைப்பிடித்துணர்தல் வேண்டும். இனி, இத் தன்மையவாகிய இரு கூற்றுப் பொருள் களுள், அறிவில்லதாகிய சடப்பொருள் தானே இயங்க மாட்டா தாகலின், அதனை இயக்குதற்கு அறிவுடைய பிறி தொரு பொருளின் சேர்க்கை அதற்கு இன்றியமையாது வேண்டப் படும். அஃதொக்குஞ், சடப்பொருளை இயக்கு தற்கு அறிவுடைய உயிர்ப்பொருள்கள் இருத்தலின் அவையே போதும், அவற்றினும் வேறாகக் கடவுளென்று வேறோ ரறிவுப் பொருள் வேண்டப்படுதல் எற்றுக்கு எனச் சாங்கிய மதத்தார் கூறுபவாலோ வெனின்; அவர் கூற்றும் அடாது; ஏனென்றால், அறிவில்லாப் பொருளின் நிலைகளும், அவற்றின் எல்லை காணப்படாத பரப்புகளும், அப்பரப்பு களில் எல்லையில்லாமல் அடங்கிக் கிடக்கும் எண்ணிறந்த பொருள்களுஞ் சிற்றறிவு சிறு தொழில் களுடைய சிற்றுயிர் களால் எங்ஙன மியக்கப்படக் கூடும்? இந்த நிலவுலகத்தின் ஒருசிறிய விடத்திலிருக்கும் ஒருவன், சில காலிருந்து சில காலத்தின் மாய்ந்து போகின்ற வனாயுந் தான் உயிரோடிருக்குங் காலத்திலும் பலவகை நோய்களாற் பற்றப்பட்டு அந்நோய் தீர்த்தற்குப் பலவகை மருந்துகளாகிய பருப்பொருளுதவியை வேண்டி நிற்பவனாயுந் தான் உயிர் பிழைத்து வாழ்தற்கு அரிசி, பருப்பு, பால், நெய் முதலான பருப்பொருட் பண்டங்களி னுதவியை இன்றியமையாது வேண்டி நிற்பவனாயுந் தன் கண்ணெதிரே அருகிலிருக்கும் இடங்களையும் பொருள்களையு மன்றித்தன் கட்பார்வைக்குப் புறத்தே அருகிலிருக்கும் பொருள்களையுந் தன் கட்பார்வைக் கெட்டாத் தொலைவி லுள்ள பொருள்களையுங் காண மாட்டாதவனாயும், நேரே அருகில் உள்ள பொருள்களுள்ளும் மிகச் சிறியனவா யிருப்பனவற்றைத் தெரிந்து கொள்ள மாட்டாதவனாயும், மிகப் பெரியன வாயிருக்குஞ் சுமைகளையும் பொருள்களையும் பிறருடைய பிற கருவிகளி னுடைய உதவியின்றி அசைக்கமாட்டாதவனாயும் இருத்தலின், இவனது அறிவிற்கும் இவனது ஆற்றலுக்கும் எட்டாத இந்நிலவுலகமாகிய பெரும் பருப்பொருளை இவன் றன்னறிவு கொண்டுந் தன் வலிமை கொண்டும் எங்ஙன மியக்க மாட்டுவான்? பருப்பொருளாகிய இந்நிலவுலகஞ் சிறிது அதிர்ந் தாலும் இதன்கண் உள்ள எரிமலைகள் வெடித்து நெருப்பைக் கக்கினாலும் இதன் கணுள்ள ஆறுங் கடலும் வெள்ளம் பெருகினாலும், இதன்கண் உலவுங் காற்றுச் சூறாவளியாய்ச் சுழன்று அடித்தாலும் மக்களாகிய சிற்றுயிர்களும், இச் சிற்றுயிர்களா லமைக்கப்படும் நாடு நகரங்கள் மாட மாளிகைகளும் பொடிபொடியாய் நொறுங்கிச் சாம்பலாய் வெந்து புழுதியாய்ப் பறந்து அழிந்து போவதை எங்கண்ணெதிரே ஒரோவொரு காலங்களில் ஒரோவோர் இடங்களிற் காண்கின்றே மல்லேமோ? சான்பிரான் சிகோ வென்னும் அமெரிக்காவிலுள்ள மாப்பெரு நகரமும், இத்தாலி தேயத்திலிருந்த மெசீனாப் பட்டினமுஞ் சிறிது காலத்திற்கு முன் சப்பான் தேயத்தில் `டொக்கியோ பட்டினமும் நில அதிர்ச்சியாலும் எரிமலை நெருப்பாலும் அடியோடழிந்து எரிந்து கரிந்த காலத்தில் அங்கங் கிருந்த மக்களெல்லாரும் பட்ட பெருந்துன்பத்தை அறியா தார் யார்? மக்கள் அவை தம்மைத் தடுக்கவல்ல ஆற்றலுடைய ராயிருந்தால் அவ்வழிவுகள் நிகழாமல் தடை செய்திருக்க லாமன்றோ? இங்ஙனம் இந்நிலவுலகத்தின் ஒரோவொரு பகுதிகளில் நிகழும் அழிவு நிகழ்ச்சிகளையே அவை நிகழாமல்தடை செய்யவும், அழிந்து நீரிலமிழ்ந்திப் போன நிலப்பகுதிகளை மீண்டும்மேற் கொணர்ந்து நிலை நிறுத்தவுஞ் சிறிதும் ஆற்றலில்லாத நம்மக்கள் இந்நிலவுலகத்தைத் தாமாகவே ஆக்கவும் அழிக்கவும் நிலை நிறுத்தவும் வல்லர் ஆவர் என்று உரைப்பதினும் புல்லியவுரை வேறுண்டோ சொல்லுமின்! தமதுடம்பு பழுதுபட்ட விடத்து அதனையே ஆக்கிக் கொள்ள மாட்டாத நம்மனோர் எண்ணிறந்த பிறவுயிர் களுக்கு எண்ணிறந்த உடம்புகளைப் படைத்துக் கொடுக்க வல்லராதலும் அவ்வுடம்புகளொடு கூடியிருந்து இவ்வுலகத்து இன்பங்களை அவைநுகருமாறு பல்வேறு பண்டங்களை யமைத்துவைக்க வல்லராதலும் அவ்வுடம்பு களும் அப் பண்டங்களும் இருத்தற்கு இம் மாப்பெருநில வுலகத்தைப் படைக்க வல்லராதலும் யாங்ஙனங் கூடும்? பாருங்கள்! இந்நிலவுலகத்தளவிலேயே ஆற்றல் மிகக் குறைந்தவராய் நிலையின்றி உயிர்வாழும் நம்மனோர், இந்நிலவுலகத்துக்கும் எட்டா நெடும் பெருந் தொலைவிலே இடைவெளியிற் சுழன்று செல்லும் பகலவன் மண்டிலம், திங்கள் மண்டிலம், செவ்வாய் மண்டிலம், புதன் மண்டிலம், வியாழன் மண்டிலம், வெள்ளி மண்டிலம், சனி மண்டிலம் முதலான வெவ்வேறு பேருலகங்களையும் இவற்றிற்கும் .நெடுந் தொலைவிலே இவற்றினும் பல்லாயிர மடங்கு பெரியன வாய்ச் சுழன்று செல்லும் எண்ணிறந்த வான்மீன் மண்டிலங் களையும் எங்ஙனம் படைக்கவும் இயக்கவும் வல்லராவர்? இத்தனை கோடியுலகங்களையுஞ் சிற்றுயிர்களாகிய நாம் படைக்க மாட்டுவேம், இயக்க மாட்டுவேம், அழிக்க மாட்டு வேம் என்று எவரேனுங் கூற முன் வருவராயின் அவரை மைத்துனர் பல்கி மருந்திற் றெளியாத பித்தனென் றெள்ளிச் சிறுமகாரும் நகையாடு வரன்றோ? ஆகவே, சிற்றறிவினரான உயிர்கள் தாமாகவே மாயையை இயக்கி, அதனிலிருந்து தம்முடம்புகளையும் உலகங்களையும் இவ்வுலகத்துப் பல பண்டங்களையும் படைத்துக் கொள்ள மாட்டுவரென்னுஞ் சாங்கியருரை, பிறந்த குழவி தன் தாயினால்எடுத்து அணைக்கப்படாமல் தானாகவே பாலிருக்குமிடந் தேடி அதனைப் பருகுமென்று கூறுவாருரையோ டொத்து நகையாடற் பாலதாய் முடியும், ஆதலால், அறிவில் பொருள்கள் எல்லாவற்றிற்கும் முதற் காரணமாகிய மாயையை இயக்கி அதன்கணிருந்து சிற்றுயிர்க ளெல்லாவற்றிற்கும் அவ்வவற்றின் இயற்கைக்கு இணங்கப் பலவேறு வகையான உடம்புகளையும் அவைகள் நுகருதற்குப் பலவேறு வகையான பண்டங்களையும்அவைகள் இருந்து உயிர்வாழ்தற்குப் பல்வேறு வகையான உலகங்களையும் முன்னறிந்து அமைத்து வைத்தற்கு எல்லா அறிவும் எல்லா ஆற்றலும் எல்லா முதன்மையும் எல்லா இரக்கமும் ஒருங்குடையனாகிய ஒரு முழுமுதற் கடவுள் இன்றியமையாது வேண்டப்படுவனென்பது தெளிந்த முடிபாமென்றுணர்ந்து கொண்மின்கள்! ஆனது பற்றியே, இராமலிங்க அடிகளார் எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் இறைவனாகிய சிவ பிரான் உண்டென்பதனை மேலைத்திருப்பாட்டில் நன் கெடுத்து அறிவுறுத்தருளினார் இனி, அப்பெற்றியனான இறைவன் பொருள்களி னுள்ளும் புறம்பும் இருப்பனென்று கூறியதென்னை? இவ் விரண்டின் புறத்தே உருவுடையனாய் இருந்தே இவை தம்மை இயக்கமாட்டுவான் என்று துவிதவாதிகள் கூறுதல் போலாவது, அற்றன்று இறைவன் பொருள்களிலும் உயிர் களிலும் அருவாய் அவற்றின் அகத்தே மட்டும் இருப்பானல்லது புறத்தே இருப்பானல்லனென அருவ வாதிகள் கூறுமுறை போலாவது நுவலாமல், அவை இரண் டனகத்தும் புறத்தும் இருப்பனென அடிகளார் அருளிச் செய்த தென்னையெனிற் கூறுதும்; கடவுள் உருவமாயே இருப்ப னென்றாவது, அன்றி அருவமாயே இருப்பனென் றாவது சொல்லி, எல்லாம் வல்ல அவனது இறைமைக் குணத்தை ஒரு வரையறைப் படுத்தல் அவன்றன் வரம்பிலாற்றலுக்கு இழுக்காய் முடியுமாதலானும், அவன் உருவ மாயே இருப்பனென்றுரைப்பின் உருவு உடைய உலகத்துப் பொருள்களில் ஒருவனாய் முடிவன் ஆகலானும், அருவ மாயே நிற்பனென் றுரைப்பின் அருவமாகிய வான் வெளி முதலிய பொருள்களில் ஒன்றாக வைத்து எண்ணப் படுவனாகலானும், புறத்தேஇருப்பவனுக்கு அகத்தே செய்ய வேண்டுவனவும், அகத்தே இருப்பவனுக்கு புறத்தே செய்ய வேண்டுவனவும் அறிந்து செய்தல் இயலாமை யானும், பொருள்கள் உயிர்களின் அகத்தும் புறத்தும் இருக்க வல்லவனுக்கே அவ்விரண் டிடத்தும் அவைகட்கு ஆவன அறிந்து செய்தல் இயலு மாகாலானும், எல்லாம் வல்ல இறைவன் அருவாயும் உருவாயும் அகத்தும் புறத்தும் வரை யறையின்றி நிறைந்து நிற்பனென்பதே உண்மை முடிபா மென்று ஓர்ந்து கொள்ளல்வேண்டும், இவ்வுண்மை தேற்று தற்கே ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனார், இல்லா Kiy¥ghY§ f©ÙU« VªâiHghš நல்லாய் உளவாமால் நீர்விழல் போல் - இல்லா அருவாகி நின்றானை யாரறிவார் தானே உருவாகித் தோன்றானேல் உற்று என்றும், அவர்தம் மாணாக்கர் அருணந்தி சிவனார், உலகினிற் பதார்த்த மெல்லாம் உருவமோ டருவ மாகி நிலவிடும் ஒன்றொன் றாகா நின்றஅந் நிலையே போல அலகிலா அறிவன் றானும் அருவமே என்னில் ஆய்ந்து குலவிய பதார்த்தத் தொன்றாய்க் கூடுவன் குறித் திடாயே அருவமோ உருவா ரூப மானதோ அன்றி நின்ற உருவமோ உரைக்குங் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னின் அருவமும் உருவா ரூப மானது மன்றி நின்ற உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக் குள்ள வாமே என்றும், அருளிச் செய்தனர்கள் வடமொழியில் ஈசாவாசி யோபநிடதமும், அவனைக் கண்டு எல்லாம் நடுங்குகின்றன அவனெதற்கும் நடுங்குவதில்லை அவன் எல்லாவற்றிற்குந் தொலைவிலிருக்கின்றான் அவன் எல்லாவற்றிற்கும்அருகிலு மிருக்கின்றான் அவன் எல்லாவற்றின் உள்ளு மிருக்கின்றான் அவன் எல்லாவற்றின் வெளியிலு மிருக்கின்றான் என்று இவ்வுண்மையினையே நன்கெடுத்து மொழிவ தாயிற்று. இனி, இங்ஙனம் பொருள்களின் உள்ளும் புறம்பும் உயிர்களின் உள்ளும் புறம்பும் நிறைந்திருப்பானான இறைவனியல்பு உணர்த்துவான் புகுந்து, அவன் இயற்கை யுண்மையும் இயற்கை யறிவும் இயற்கையின்பமும் வாய்ந் தானாகி யிருப்பனென அடிகள் மொழிந்திட்டார். இறை வனியல்பு இப்பெற்றியதாமெனவே, இறைவனது உதவியை அவாய் நிற்கும் பொருள்களும் உயிர்களும் அங்ஙனம் இயற்கையிலேயே உண்மையும் அறிவும் இன்பமும் வாயாவா யிருக்கு மென்பதும் அறிவித்தாராயிற்று, இனி, இம் மூன்று தன்மைகளின் இலக்கணங்களும், பொருள்களும் உயிர்களும் இவைதம்மை இயற்கையிலேயே யுடையவாகாமையும் இறைவனொருவனே இவைதம்மை இயற்கையே யுடையனா தலும் இறைவனைச் சார்ந்தே உயிர்கள் அவை மூன்றும் நிலையாக எய்தப் பெறுதலும் முறையே விளக்கிச் செல்வாம் முதற்கண் `உண்மை என்பது `என்றும் ஒருபடித்தாய் நிற்கும் மாறாநிலையே யாகும், நமதறிவுக்குப் புலனாகும் பொருள்களுள் ஒன்றாயினும் மாறா நிலையினதாய் ஒரு படித்தாய் நிற்கக் காண்கின்றோமா? இல்லை இல்லை நாம் உயிர்வாழ்தற்கு இடமாயுள்ள இம்மண்ணுலகு எத்தன்மைய தாயிருக்கின்றது? ஒரு காலத்து மேடாயிருந்தது பள்ளமா கின்றது. பள்ளமாயிருந்தது மேடாகின்றது; பண்டைக் காலத்திற் சிறந்த நாகரிகமுடையதாய் விளங்கிய குமரி நாடு இப்போது கடலுள் அமிழ்ந்திக்கிடக்கின்றது; கடலுள் மறைந்து கிடந்த எத்தனையோ நிலப்பகுதிகள் இப்போது கடல் நீருக்கு மேற் பல தீவுகளாய்க் கிளம்பியிருக்கின்றன. எத்தனையோ ஆயிர ஆண்டுகளுக்கு முன் நாகரிகத்திற் சிறந்த மக்களால் எகுப்தி நாட்டில் அமைக்கப்பட்ட பெரியபெரிய நகரங்களும் அந்நகரங் களிலமைக்கப்பட்ட பெரியபெரிய அரண்மனைகளும், பெரிய பெரிய கோயில் களும், அங்ஙனமே சாலடி நாட்டில் `ஊர் என்னுந்தலைநகரில் எடுப்பிக்கப்பட்ட மிகப் பெரிய அரண்மனைகளும், மிகப்பெரிய கோயில்களும், அங்ஙனமே நமது இவ்விந்திய நாட்டின் வடமேற் பகுதியிற் குடியேறிய பண்டைத்தமிழ் மக்களால் தலைநகராக அமைக்கப்பட்ட `அரப்பா என்னும் இடமும் அதன்கண் இருந்த அரண் மனைகள் கோயில்களும் மண்மூடுண்டு, இப்போது மேல் நாட்டு நன்மக்களால் நிலத்தினின்றும் அகழ்ந்தெடுத்துக் காட்டப்படுகின்றன, முன்னொருகால் மேல்நாடு முழுமையுந் தம் செங்கோல் நீழலில் இனிது வைக அரசு செலுத்திய உரோம வேந்தர்க்குத் தலைநகரா யிருந்த பழைய உரோம நகரின் மிக வியக்கத்தக்க மாட மாளிகைகள் அழிந்து பாழாய்க் கிடத்தலை இப்போதுந் திரள் திரளான மக்கள் சென்று பார்த்து வருகின்றனர். இங்ஙனமே இத்தமிழ் நாட்டகத்தும் பழங்காலத்திருந்த தமிழ் வேந்தர் அமைத்தஅரண்மனைகளுந் திருக்கோயில் களும் இடிந்துபாழாய்க் கிடத்தல் திருவாரூர், கங்கை கொண்ட சோளேச்சுரம், மகாபலிபுரம், செஞ்சி,வேலூர் முதலிய இடங்களில் இன்றும் எல்லாருஞ் சென்று பார்த்து வருகின்றனர், வைகை முதலிய யாறுகளும் முற்காலத்து ஓடிய வழிமாறி ஓடுகின்றன. மிகப் பழைய நாளில் வடநாட்டில் ஓடிய சரசுவதி என்னும்யாறும் இப்போதுஇல்லாமலே போயிற்று. முன்னில்லாத பல யாறுகள் பின்னர் புதியவாய்த் தோன்றி ஓடா நிற்கின்றன, நாம் உறையும் இந் நில மண்டிலமே வரவரக் குளிர்ந்து வருகின்றதென்றும், இன்னும் பல்லாயிர நூற்றாண்டுகள் கழிந்தபின் மக்களும் பிறவுயிர் களும் உயிர் வாழ்தற்கே இசையாதாய் இதுமாறு மென்றும் நில நூல் வல்லார்கள்பெரிதாராய்ந்து உரைக்கின்றனர், இப்போது நமக்குஇரவில் ஒளியைத்தரும் நிலா மண்டிலமானது பன்னூறாயிர ஆண்டுகளுக்கு முன்உயிர் வாழ்க்கைக்கு இடமாயிருந்து, பின்னர் வரவரக் குளிர்ந்து உயிர் வாழ்தற்கு ஏலாத இயல்பினதாய் மாறியிருக்கின்ற தென வான்நூலாசிரியர்கள் நுவல்கின்றனர். இன்னும் கண்களுக்கு ஆலம்வித்துப் போலவும்மின்மினியொளி போலவுந் தோன்றா நின்ற எத்தனையோ பெரிய பெரிய உலகங்களிற் பற்பல முன்னரே அழிந்துபட்டனவாயும் வேறு பல புதிது தோன்றின வாயும், மற்றும் பல அழிந்தொழியும் நிலைமையில் இருப்பன வாயும் பற்பல மாறுதல்கட்கு உட்பட்டனவாய்ச் செல்கின்றன வென்னும் உண்மை வான்நூல் ஆராய்ச்சியாற் புலனாய்க் கொண்டிருக்கின்றது, நாம் நுகரும் பண்டங்கள் நாம் புழங்கும் ஏனங்கள் முதலாயினவெல்லாம் நாளேற நாளேறத் தமதுகட்டுச் சிதைந்துந் தேய்ந்தும் அழிந்து போதல் போலவும், நமக்கு நெருங்கிய தொடர்புடைய நம்முடம்பும் நாளேற நாளேற நரை திரை மூப்புப் பிணிகள் உடையவாகிக் கட்டுத் தளர்ந்து நம்மைவிட்டு அழிதல்போலவும், இவ்வுலகமும் இவ்வுலகத்தைச் சூழ்ந்த எண்ணிறந்த உலகங்களும் அவற்றின் கண் உள்ள அளவிலாப் பண்டங்களும் ஒரு காற்றோன்றிச் சிலகால் இருந்து பிறிதொருகாற் கட்டுக் குலைந்து காணாமற் போய் விடுகின்றன, ஆகவே, மிகச் சிறியதுமுதல் மிகப் பெரிய தீறான எல்லா வகையான உயிரில்லாப் பொருள்களும் ஒரே நிலையாக இருக்க மாட்டாதனவாய்ச் சிதைந்தொழிந்து போதலால், அவைகளை ஒரே நிலையிலுள்ள உண்மைப் பொருள்களாகக் கூறுதல் இயலாது. இனி, உயிருடைய பொருள்களின் நிலை சிறிது ஆராயற்பாற்று, உயிருடையவைகள் எல்லாம் அறிவுடை யனவாய் இருந்தும், அவற்றின்அறிவு என்றும் ஒரே தன்மைய தாகச் சுருங்குதல் விரிதலின்றி என்றும் ஒரே அளவினதாக, அகவிருளால் இடையிடையே பற்றப்படாத னவாக விளங்கக் கண்டதுண்டோ? நாம்சிறு மகவாயிருந்த ஞான்று நமதறிவு எந்நிலையிலிருந்த தென்பது நமக்கே விளங்கவில்லை, ஆனாலும், எத்தனையோ சிறு மகவுகளை நாம் நம் கண்ணெதிரே கண்டு, அவற்றின் இயல்பை உற்றுநோக்குதல் கொண்டு, அவற்றின் அறிவு ஏதோ ஒரு பேரிருளாற் கவரப்பட்டிருக்கின்றதென்றுந் தாய் தந்தையர் உடன் பிறந்தார் நேயர் ஆசிரியர் முதலான பிற அறிவுடை யுயிர்களின் சேர்க்கையிலிருந்து அம்மகவுகள் சிறிதுசிறிதாக அவ்விருள் நீங்கி அறிவு விளங்கப் பெற்று வருகின்றன வென்றுந் தெரிந்து கொள்கின்றோ மாதலால், நாமுஞ் சிறு குழவிகளாய் இருந்த ஞான்று ஏனைக் குழவிகளைப் போலவே நம்மை இன்னாரென்றும், நம்மைச் சூழ்ந்தவர் இன்னாரென்றும், நம்மைச் சுற்றியுள்ள பண்டங்கள் இன்னவையென்றும் உணரமாட்டாதவர்களாயிருந்தோம் என்பதை ஐயமறத் தெளிந்து கொள்கின்றோம். இது மட்டுமோ நாம் ஆண்டில் முதிர்ந்தவர்களாய்க் கல்விப்பயிற்சியாற், பேரறிஞர் சேர்க்கையால் அறிவு விளங்கப்பெற்ற பின்னும், நமதறிவு ஒருதன்மைத்தாய் விளங்குவதின்றிப் பல்வேறு மாறுதல்களின் வயப்பட்டு, நம்மை இடையிடையே துன்புறுத்தி வரக் காண்கின்றேம் அல்லேமோ? நேற்று அறிந்தவைகளிற் சென்றகிழமையில் அறிந்தவைகளிற், போன திங்களில் அறிந்தவைகளிற், கடந்த ஆண்டு அறிந்தவைகளில் எத்தனை கோடி நினைவுகள் எத்தனைகோடி எண்ணங்கள் நம்மறிவுக்குத் தென் படாமலே மறைந்து போயின! முன்னறிந்தவைகளை இங்ஙனம் நாம் மறந்து மறந்துபோதலால் நமக்கு வரும் இடர்களுக்கு, நம்மாற் பிறர்க்கு வரும்இடர்களுக்கு ஒரு கணக்குண்டோ! முன்னறிந்த வைகளை மறத்தலாற், நிகழ்ந்தவைகளை நிகழ்ந்தபடியே சொல்ல மாட்டாதவர்களாய்ப் பார்த்த பொருள் கேட்ட பொருள் சுவைத்த பொருள் இயல்புகளை அப்பார்த்த கேட்ட சுவைத்த படியே நினைவு கூர்ந்து சொல்லமாட்டாத வர்களாய் பொய்த்துப் பிழைபடுகின்றனம் அல்லமோ? கடந்தவற்றையறியும் அறிவிற்றான் இத்தகைய மாறுதல்கள் நிகழ்கின்றன வென்றாலும், இப்போது நம் கண்ணெதிரே நிகழ்வனவற்றிலாவது நமதறிவு பொய்படு தலின்றி மெய்யாக அறிதல் செய்கின்றதா? அதுவும் இல்லையே! நாம் நேரே காண்கின்ற பொருளையும் ஆராய்ந்து பார்த்தாலன்றி ஐயமறத் தெளியமாட்டாதவர் களாய் இருக்கின்றோம், ஒருதுண்டு செம்பையும் ஒருதுண்டு பொன்னையும் பளிச்சென்று தோன்ற விளக்கிக் கையிற் கொடுத்தால், அவை யிரண்டற்குமுள்ள வேறு பாடு தெரியாமல் எத்தனை பேர் ஏமாந்து போகின்றனர்! தித்திப்பான நாரத்தம்பழங் கொடி முந்திரிப்பழம் முதலியன வாங்குபவரில் எத்தனைபேர் அவற்றை நன்கு ஆய்ந்து பாராமல் வாங்கித்தாம் வாங்கியவை தித்திப்புக்கு மாறான புளிப்புடையவாயிருத்தலைக் கண்டு ஏமாந்து போகின்றனர். மருத்துவரில் எத்தனைபேர் நோயாளிகளின் நோயின் றன்மையை யறியாமல் மாறான மருந்துகளைக் கொடுத்து அவர் கொண்ட நோயை மிகுத்து அவரையுங் கொல்லு கின்றனர்! கணக்கரில் எத்தனைபேர் தவறாகக் கணக்குச் செய்துதாமும் பிழைபட்டுத். தாம் சார்ந்த செல்வரையுங் கெடுத்துவிடுகின்றனர்! சமையற் றொழில் செய்வாரில் எத்தனைபேர் காலமும்இடமும் உணவெடுப்பார் உடல் நிலையும் ஆய்ந்து பாராமல் உணவு சமைத்துக் கொடுத்து, அதனையுண்பார்க்குப் பல கொடு நோய்களை யெல்லாம் வருவித்து விடுகின்றனர்! நூல் எழுதுவாரில் எத்தனைபேர் காலப்போக்கு மக்கள் முன்னேற்றங் கருதிப் பாராமற் பயனற்ற பொருள்களை எழுதி மக்களறிவு வளர்ச்சியைப் பாழ்படுத்து கின்றனர்! அவருள் எத்தனைபேர் தாம் வழங்கும் மொழியைத் திருத்தமாகப் பயிலாமற் சொற்குற்றஞ் சொற்றொடர்க் குற்றம் பொதுள எழுதியும், அயன்மொழிச் சொற்களை அடுத் தடுத்துக் கலந்தும் அதன் தூய வழக்கை மாய வைக்கின்றனர்? இன்னும் இங்ஙனமே நம் மக்களிற் பெரும்பாலார் - அவர் கற்றவராயினுங் கல்லாதவராயினுந், தங்கண்ணெதிரே காண்பனவுஞ் செய்வனவுமெல்லாம் உண்மைக்கு மாறாகப் பிழைபடச் செய்துதாந் துன்புறுவ தொடு பிறரையுந் துன்புறச் செய்கின்றனர்! இவ்வாறு இவர்கள் நிகழ்கால நிகழ்ச்சி களிலேயும் மெய்யொடு திறம்பிப் பொய்படுமறிவின ராயிருக்கக் காண்டலின், இவர்களது அறிவை உண்மை நிலையினதென் றுரைக்க மெய்யறிவு வாய்ந்தார் ஒருப்படுவரோ சொன்மின்கள்! இனி, இங்ஙனங் கடந்த கால நிகழ்ச்சிகளிலும் நிகழ் கால நிகழ்ச்சிகளிலும் அடுத்தடுத்துப் பிழைபடும் அறிவுடைய இவர்கள்,புலனுணர்வு மனனுணர்வுக்கு எட்டாத வருங்கால நிகழ்ச்சிகளை முன்னறிந்து நடத்தல் யாங்ஙனங் கைகூடும்? நாம் நெடுங்காலம் உயிர்வாழ்ந்து இவ்வுலக இன்பங்களைத் துய்ப்போமென்று எண்ணிக் கொண்ட எத்தனை பேர் ஏழையெளியவர்கள் வயிற்றை யொடுக்கிச் சேர்த்த பொருளை அவர் கண்ணீர் சிந்தக் கைப்பற்றிக் கொண்டு வந்த அந்நேரத் திலேயே சடுதியில் உயிர் துறந்து பிணமாய்க் கிடக்கக் கண்டதில்லையா? தமக்கு மேல் வலிமையுடையவர் களில்லை யென்றுஇறுமாந்து வலியற்றவர்களைத் துன்புறுத்தி வந்தவர்கள் தாம் தம்மினும் வலியாரால் வெட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கவில்லையா? எத்தனை செல்வர்கள் எத்தனை அரசர்கள் எத்தனை மறவர்கள் தமது நிலையாமையை உணர்ந்து பாராமையால், நாளைக்கு நமது நிலைமை யெப்படியாமோ என்று ஐயுறவு கொள்ளாமற் பிறர்க்குத் தீங்கிழைத்துப் பின்னர்த்தாம் இருந்த இடமுந் தெரியாமல் இறந்து போகின்றனர், வருங்கால வியல்பை உணர்ந்து பார்க்க மாட்டாத நம்மக்களறிவும் அறிவெனப் படுமா? தன் உடம்பினுள்ளுந் தன்னைச்சுற்றிலும் நிகழப் போவன வற்றையே யறிய மாட்டாதான் ஒருவன், தான் ஒருவனே பல்லாண்டு நீடு வாழ்வன் ஏனையோ ரெல்லாம் நீடுவாழார் என நினைந்து பிறர்க்கு முன் தானேமாய்ந்து ஏமாற்றம் அடைவனாயிற் சிற்றறிவுடைய இம்மகனறிவு உண்மையை யுள்ளபடி யுணரவல்ல உண்மையுடையதாமோ? மக்களின் இச் சிற்றறிவுப் பெற்றி தேற்றுதற் கன்றோ ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனார், அறிந்தும் அறிவதே யாயும்அறியா தறிந்ததையும் விட்டங் கடங்கி - அறிந்த தெதுவறிவும் அன்றாகும் மெய்கண்டான் ஒன்றின் அதுவதுதான் என்னும்அகம் என்று அருளிச் செய்தார், பிற் காலத்தில் தாயுமான அடிகளும், இனியே தெமக்குன் அருள்வருமோ வெனக்கருதி ஏங்குதென் நெஞ்சம் ஐயோ இன்றைக் கிருந்தாரை நாளைக்கிருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லையே என்று அருளிச் செய்தமை காண்மின்கள்! இங்ஙன மெல்லாஞ் செல்கால, நிகழ்கால, வருங்கால நிலைகளை உணரும் உண்மை யறிவு வாயாமையால்,மக்களும் மற்றை யுயிர்களும் இயற்கை யுண்மை நிலையுடைய வாகாமை தெற்றென விளங்காநிற்கும்,. இதுகாறும் ஆராய்ந்தவாற்றால் உயிரில் பொருள் களும் உயிருள் பொருள்களும் இயற்கையிலேயே உண்மை நிலை யுடையவல்லாமைநன்கு பெறப்படுதலால், உயிர்கள் தாமுந்தம்மை ஓர் அறிவுடைப் பொருளென்று தமதுண்மை உணர்தற்குந் தமக்கு உடம்பும்உலகமும் உலகத்துப் பல் பொருள்களுமாகத் திரிபெய்திப் பயன்படும் மாயையென்று ஒரு பொருள் உண்டு என்று அதன் உண்மையினை அவைகள் அறிதற்குங், கடவுள் என்று ஒரு முழுமுதற்பொருள் என்றும் மாறா இயற்கை உண்மையுடையதாய் அவை இரண்டனை யுந் தொடர்பு படுத்துதற்கு வேண்டுமென்பது இன்றியமை யாது பெறப்படும், என்னை? தன்னிலே மாறா உண்மை நிலையில்லா ஒருவன் பிறர்க்கு ஏதொரு நன்மையுஞ் செய்ய மாட்டாமை நமது உலக வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழக்காண்டும் அன்றோ? தன் மனக்கினிய நண்பன் பட்ட கடனை நாளை வந்துதீர்த்து அவனைச் சிறைபுகாமற் காப்பேன் என்று உறுதி சொல்லிப் போன ஒரு செல்வன் தான் சொன்ன மொழியுந் தன் நினைவும் மாறிவிடுவனா யின், அவன் அவற்கு அவ்வுதவியைச் செய்யா தொழிதல் போலவும், வெப்பு நோயால் வருந்து மொருவனுக்கு அந்நோய் தீர்க்க வந்த மருத்துவன் ஒருவன் நாளை விழுமிய தொரு மருந்து கொணர்ந்தூட்டி அதனைத் தீர்ப்பேனெனச் சொல்லிப் போய் மறுநாளில் அங்ஙனமே வந்து செய்யா தொழியின் அவன் அவற்குச் சிறிதும் பயன்படாமை போலவும், ஒரு கொடியனால் துன்புறுத்தப்பட்டு நடுநிலை மன்றத்தில் முறையிட்டான் ஒருவனுக்கு முறை செய்யப் புகுந்த ஒரு நடுவன் தன்கடமையினின்றும் வழீஇத், துன்புறுத்திய கொடியன்பாற் கைக்கூலி வாங்கிக் கொண்டு முறை செய்யாது மாறுவனாயின் அவன் தன்பால் முறை வேண்டினானுக்கு முறை செய்யாது குறை செய்தல் போலவும் இறைவனும் மாறுந்தகையனாயின், அவன் உயிர் களுக்கு ஏதோரு நன்மையுஞ் செய்ய மாட்டாநிலை யினனாய் விடுவன். மற்று, அவன் எண்ணிறந்த வுயிர்களுக்கும் அவ்வவற் றின் அறிவு நிலைக்கேற்ப எண்ணிறந்த உடம்புகளைக் கொடுத்து அவற்றின் அறிவை மேன்மேல் விளங்கச் செய்து வருதலையும், அவற்றின் அறிவு விளக்கத்திற்கு இன்றி யமையாத வெயில் மண்டில, நில மண்டில இயக்கங்களைச் சிறிதும் மாறாமல் நிகழச் செய்து வருதலையும் அவற்றின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத புற்பூண்டுமரஞ் செடி கொடிகளை மாறாமல் விளைவித்து அவை காய், கனி, கிழங்கு, வித்துக், கீரை முதலான பயன்களைத் தொடர் பாகத் தருமாறு உதவி வருதலையும் மழை பெய்யுங் காலத்து மழை பெய்யவும் அதற்குக் கருவியான குளிர்ங்காற்று வேண்டுங் காலத்து அக் குளிர்ங்காற்று வீசவும், மழைக்கு முதலான நீராவி எழுதற்கு வெயில் மிகுங்காலத்து வெயில் மிகுந்து எறிப்பவும் மாறாமற் புரிந்து வருதலையும், இவ்வாற்றால் எல்லாவுயிர்களும் உணவு பெற்று அவற்றை யுட் கொண்ட பின் அகத்திருந்து அவ்வுணவைச் சாறுஞ் சக்கையுமாகப் பிரித்துச் சாற்றைச் செந்நீராக மாற்றி உடம்பெங்கும் ஓடச் செய்துஞ் சக்கையை உடம்பினின்று உடனுக்குடன் கழியச் செய்தும் நம் பெருமான் ஒரு நொடிப் பொழுதும் மடிந்திராதுபேருதவி யாற்றி வருதலையும், அவன் அமைத்த மாறாநிகழ்ச்சிகளுக்கு மாறுபடாமல் நமது வாழ்க்கையினை நாம் செலுத்தத் தெரியாமல் அறியாமை யினாலும் இறுமாப்பினாலும் தீய இன்ப வேட்கையினாலும் நமது உடம்பை நாமே சிதைத்து விட்ட விடத்து அதனை யொழித்துநமக்கு வேறு புதிய உடம்புகளைக் கொடுத்து நம்மை வேறு வேறு புதிய பிறவிகளில் உய்த்து வருதலையும் நாம் நன்காராய்ந்து ஆழ்ந்து நினையுங்கால், எல்லாம் வல்ல நம் ஆண்டவன் ஒருவனே எக்காலத்தும் எவ்விடத்தும் மாறா, உண்மைநிலை யுடையனா யிருக்கின்றன னென்பதூஉம், அவன் ஒருவனே எல்லா உயிர்களிடத்தும் - அவை எத்துணை இழிந்தன வாயினும் எத்துணை உயர்ந்தவனவாயினும், அவற்றின் பாலெல்லாம் மாறா அன்பினனாய் மாறா அருளினனாய் இருக்கின்றன னென்பதூஉம் உள்ளங்கை நெல்லிக்கனிப் போற் றெள்ளத் தெளிய விளங்குகின்றன வல்லவோ? ஆகையால், இயற்கை யுண்மை வாய்ந்தவன் இறைவன் ஒருவனே யல்லாமல் மற்றைய அல்லவென்று மேலைத்திருப்பாட்டில் அடிகளார் அறிவுறுத்தினமை சாலப் பொருத்த முடைத்தாதல் கண்டு கொள்ளப்படும், இனி, இவ் வுலகத்தின்கண் உள்ள சிற்றுயிர்களெல்லாம் ஒரே தன்மைத்தாக மாறாதுவிளங்கும்அறிவு வாய்ந்தவை அல்லவென்பது முன்னரே காட்டப்பட்டமையால் அவ் வுயிர்களெல்லாவற்றிற்கும் வேண்டுவனவெல்லாம்அறிந்து உதவி செய்தற்கு என்றும் ஒரு பெற்றித்தாய் வயங்காநின்ற பேரறிவு வாய்ந்த முதல்வன் ஒருவன் இன்றியமையாது வேண்டப்படுவனென்பது முடிக்கப்படும். எத்தனையோ உயிர்கள் புதிது தோன்றுவனவாயும் எத்தனையோ உயிர்கள் இறந்து படுபவனவாயும்எத்தனையோ உயிர்கள் வேறு பிறவிகளிற் செல்வனவாயும் உயிர்களின் தோற்றக்கேடுகள் இடை யறாது எங்கும்நிகழக் காண்டலின், அவ்வவ்வுயிர் களின் அகத்தும் புறத்துமிருந்து அவ்வவ்வற்றின் தோற்றக் கேடுகளை யறிந்து அவ்வவ்வற்றிற்குப் பிறரெவராலுஞ் செய்ய முடியாத பேருதவியைச் செய்யும் பெருமான் அறிவு, எத்துணைப் பெரியதாய் எத்துணை விழுமிய விளக்கத் தக்கதாய் எத்துணை அருளிரக்கம் வாய்ந்ததாய் எத்துணைச் சிறந்தமாறா நிலையினதாய் மிளிர்வதாகல் வேண்டும்! பசித்து உணவு வேண்டி வந்தார்க்கு உணவு கொடுக்கும் ஒருவன், ஓரிடத்தில் ஒருகாலத்துள்ளார் சிலர்க்கு மட்டுமே உணவு கொடுக்க வல்லனாவன்; தெற்கே குமரியிற் பசித்த பலர்க்கும், இடையே சென்னை வேங்கடம் முதலான ஊர்களிற் பசித்துள்ளார் பலர்க்கும், வடக்கே காசி அவந்தி முதலான ஊர்களிற் பசித்தார் பலர்க்கும் அவன் ஒருவனே ஒரே காலத்தில் உணவளிக்க மாட்டுவனோ? மாட்டானன்றே? ஒன்றை விட்டு ஒன்று மிக அகன்றிருக்கும் அவ்வவ்வூர் களிலுள்ள வறிஞர்க்கெல்லாம் அங்ஙனம்அவன் ஒரே காலத்தில் உணவளிக்க வேண்டின், ஆங்காங்கு உணவமைப் பார் பற்பலரை நிறுவிப் பெரும் பொருள் செலவிட்டு அவர் வாயிலாக அங்ஙனஞ் செய்யலாமேயன்றித்தான் ஒருவ னாகவே யிருந்துஅங்ஙனஞ் செய்யமாட்டுவான் அல்லன்! இங்ஙனமே நோய்கொண்டு வருந்துவார்க்கு நோய் தீர்க்கு மருத்துவனும், ஒருகாலத்து ஓரிடத்துள்ள ஒரு சிலர்க்கு மட்டுமே நோய் தீர்க்கமாட்டுவானன்றி, ஒன்றினொன்று அகன்றிருக்கும் பற்பல ஊரிலுள்ள பற்பலர்க்கும் ஒரே காலத்தில் நோய் நீக்கமாட்டுவனல்லன்; அன்றி அவன் அங்ஙனஞ் செய்யவேண்டிற் பெரும் பொருள் செலவு செய்து மருத்துவர் பற்பலரை ஆங்காங்கு ஏவியே நோய் கொண்டார் பல்லாயிரவர்க்கும் மருந்தூட்டி நோய் தீர்க்கற் பாலன், மற்று, எல்லாம் வல்ல, கடவுளோ ஓரிடத்தன்றி ஓரூரிலன்றி ஓருலகத்தன்றிப் பல்வேறிடங்களிலும் பல்வேறு ஊர்களிலும் பல்வேறு உலகங்களிலும் நிறைந்து ஆற்று மணலிலும் அளவிடப்படாதனவாய் உள்ள உயிர்த் தொகைளில் எத்தனை கோடியுயிர்களை ஒரே காலத்தில் தோற்று விக்கின்றான், எத்தனை கோடி யுயிர்களை ஒரே காலத்திற் காத்து வருகின்றான், எத்தனை கோடியுயிர்களை ஒரே காலத்தில் ஒரு பிறவியினின்று விடுவித்து வேறு பல பிறவிகளில் உய்த்து வருகின்றான், எத்தனை கோடி யுயிர்களை ஒரே காலத்தில் தன் திருவடிப்பேரின்பத்திற் படிவித்துவருகின்றான்! இங்ஙனமாக எல்லாஇடங்களிலும் எல்லாக் காலங் களிலுந் தான் ஒருவனாகவே யிருந்து, எல்லா உயிர்களின் இயல்புகளையும் அறிந்து அவ்வவற்றிற்கேற்ற உதவிகளைத் தான் ஒருவனாகவே செய்துவரும் இறைவன்றன் அறி வாற்றல் எவ்வளவு சிறந்ததாய், எவ்வளவு பேரள வினதாய் இருக்க வேண்டு மென்பதைச் சிறிது எண்ணிப் பாருங்கள்! இத்துணைச் சிறந்தஅவனறிவு, நம்மனோர்க் குள்ள அறிவுபோல் ஆணவ வல்லிருளில் மறைந்து இருந்து, பின் அதனின்றும் விடுபட்டு விளங்குவதாயிருக்கக்கூடுமோ என்பதையும் எண்ணிப் பாருங்கள்! அவனறிவு சிறிது மறைந்திருந்தால் இவ்வுலக மெங்கே, இவ்வுலகத்துள்ள பண்டங்களெங்கே, புற் பூண்டுகள் எங்கே, பல்வகைப் பிறவிகளெங்கே, பல்வகை யுயிர்களெங்கே, ஞாயிறு திங்களெங்கே, எல்லாம் வெறும் பாழாய் வெட்ட வெளியா யிருக்குமல்லவோ? ஆதலால் எல்லாம் வல்ல இறைவனறிவு, நமதறிவு போல் ஆணவ வல்லிருளிற் சிறிதும் மறையாதாய், என்றும் விளங்கின படியாயே யிருக்கும் என்பது சிறிதும் ஐயமின்றித் தெளியற்பாலதாகும், இதுபற்றியே அடிகளார் அவன் இயற்கை யறிவினனாயே யிருப்பன் என்று மேலைத் திருப்பாட்டில் அருளிச் செய்தாரென் றுணர்ந்து கொள்ளல் வேண்டும். இனி, இறைவன் இயற்கையுண்மையினனாயும் இயற்கை யறிவினனாயும்மட்டுமே இருப்பனென்று உரைப் பின், இவ்விரண்டு இலக்கணங்களும் மாயை ஆணவங் களுக்கும், மாயை ஆணவங்களினின்றும் விடுபட்ட உயிர் களுக்கும் முறையே பொருந்துவான் செல்லும், என்னை? உடம்பாயும் உடம்பின் கருவிகளாயும் உலகங்களாயும் உலகத்துப் பொருள்களாயுந் திரிபுறாத மாயையின் பரப்பு இன்னும் எவ்வளவோ பெரிதாய் இருக்கின்றது! இந்நால் வகைக் காரியப் பொருள்களாய்த் திரிந்த மாயையின் பகுதி சிறிதாயும், அங்ஙனந் திரியாத பகுதி பெரிதாயும், உள வென்பது ஆராய்ச்சியால் நன்கு புலனாதலின், திரிபில்லாத அதன் முதற்காரணப் பகுதி இயற்கை யுண்மை நிலை யுடையதாதல் தானே பெறப்படு மன்றோ? இங்ஙனமே, பிறவிக்கு வாராத உயிர்களும் இன்னும் எத்தனையோ கோடிக் கணக்காய் உள்ளனவாகலின் அவை தம்மைப் பற்றியிருக்கும் ஆணவமலமுங் காரியப் படாததாய் இயற்கை யுண்மைநிலை வாய்ந்ததாதலுந் தானே பெறப்படுமன்றோ? இவை போலவே சதா சிவ தத்துவத்தில் வைகுஞ் சதாசிவர் முதலாயினார் இயற்கையிலேயே ஆணவமலப் பற்றுப் பெரிதும் அகன்றவராய், இயல்பாகவே பேரறிவு விளக்கம் வாய்ந்தவராய் இருத்தலின், அன்னார்க்குள்ள அவ்வறிவு இயற்கையே யுண்மை நிலையுடையதாதலுந் தானே பெறப்படும்; பெறப்படவே இறைவன் ஒருவனே இயற்கை யுண்மையினனாயும் இயற்கையறிவினனாயும் விளங்குவ னென்ற சொற் குற்றமுடைத்தாய் முடியுமாம் பிறவெனின்; அற்றன்று, அக்குற்றம் அணுகாமைப் பொருட்டே இயல் உண்மை யறிவு என்றவளவில் அமையாது, இன்பம் என்ப தொன்று கூட்டி, இயல் உண்மை அறிவு இன்பவடிவாகி என்று ஓதி, இறைவன் வரம்பிலின்ப வடிவின னாய் நிற்றல் அவற்குச் சிறந்த இலக்கணமாதல் அடிகள் புலப்பட வைத்தார். அஃதொக்குமா றென்னை? மாயையிற் றிரண்ட பண்டங்களிற் பல இன் சுவையினவாயும், வேறுபல நறுமணத்தின வாயும், மற்றும் பல இன்னோசையினவாயும், இன்னும் பல அழகிய தோற்றத்தினவாயும், பின்னும் பல இனிய மென்மையினவாயும், புகுந்து உயிர்கள் பால் இன்பத்தை விளைக்கக் காண்டலின், மாயையும் இன்ப முடைத்தென்பது போதருமாலோ வெனின் அஃதொவ்வாது; என்னை? மாயையிற் றிரண்ட பண்டங்கள் அறிவுடைய உயிர்கள் மாட்டுஇன்ப துன்பங்களை விளைவித்தற்குக் கருவியா மல்லது, அவைதாமே இன்ப துன்பங்கள் உடையவல்லவா கலின், மாயை அறிவில் பொருளாதல் கண் கூடாக அறியக் கிடத்தலின், அதுதானே தனக்கு இன்ப முண்டென்றாதல் துன்பமுண்டென்றாதல் அறிதல் செய்யாது, கனிந்த பலாச்சுளையைத் தேனோடு கூட்டி யுண்டவனுக்கு அதன் இன்சுவையினால் இன்பம் மீதூரக் காண்டுமேயன்றி, அப்பலாச்சுளையே அவ்வின் சுவை இன்பத்தை எய்தக் காண்டுமில்லையே, ஒரு கூர்ங் கத்தியாற் கை யறுப்புண்ட வனுக்கு அதனால் துன்பம்மீதூரக் காண்டுமே யன்றி, அக்கத்தியே அவன் கையை அறுத்து அதனால் துன்புறக் காண்டுமில்லையே இவ்வாறே இன்ப துன்ப நிகழ்ச்சிகள் அறிவுடைய வுயிர்கள் பாலன்றி, அவை தம்மை அவற்றின் பால் விளைவிக்கும் மாயையின் காரியங்களில் ஒரு சிறிதுங் காண்கிலமாகலின்,மாயை அவற்றிற்குக் கருவியேயா மல்லாமல்,அவை தாமே இன்ப துன்பங்களை உடையவாகா என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த உண்மையே யாம், அஃதொக்குமாயினும், அறிவுடைய உயிர்கள் இன்பம் எய்தக் காண்டலின், அவையும் இன்பமுடைத்தென்பது பெறப் படும்; படவே, இறைவன் ஒருவனே இன்ப முடையவன் என்று உரைத்தது இழுக்காமாலோ வெனின்; இழுக்காகாது; என்னை? உயிர்களெல்லாம் மாயையிற் றிரண்ட பண்டங் களை நுகர்தலானும் அழகு அறிவு அன்புடைய பிறவுயிர் களொடு சேர்தலானுமே இன்புறக் காண்டுமல்லது, அவ்விரண்டன் றொடர்பின்றித் தானே தனித்திருந்து இன்புறும் ஒருசிற்றுயிரை யாண்டுங் கண்டில மாகலின் என்பது இங்ஙனம்பிறிதொன்று இன்புறுத்தினாலன்றி இன்புறல் அறியாத சிற்றுயிர்களை இயற்கையின்பமுடையன வென்றால் இசையாமையின் முழுமுதற் கடவுளொருவனே இயற்கை யின்பமுடைய னென்பது முடிக்கப்படும்; படவே, அவற்குரிய அச்சிறப்பிலக்கணம் பிறிதெதற்கும் உரிமையா வான் சேறல் இல்லையென்று கடைப்பிடித்துணர்ந்து கொள்ளல் வேண்டும். அதுவேயு மன்றிச் சிற்றுயிர்களெல்லாந் துன்புறுத்தும் பொருட் சேர்க்கையால் துன்புற்றும், இன் புறுத்தும் பொருட் சேர்க்கையால் இன்புற்றும் வருதல் போல்இறைவன் எதனாலேனுந் துன்புறுத்தப்படுதலும் பிறிதெதனாலேனும் இன்புறுத்தப்படுதலும் இல்லனாய், எஞ்ஞான்றும் இன்ப வுருவின னாயே நிற்கும் பெற்றியனாகலின், அவற்குரிய அச்சிறப்பிலக்கணம் பிறிதெதற்கும் உரியதாதல் செல்லா தென்று உணர்தல் வேண்டும், இறைவன் இங்ஙனம் இன்ப வுருவினனாயே நிற்குந் தனிப் பேருண்மை அறிவுறுத்து தற்கன்றோ மாணிக்க வாசகப் பெருமான், சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் ஒருவனே சொல்லுதற்கரிய ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்கும் ஆனந்தமாக் கடலே என்றும், ஓரின்பவெள்ளத்து உருக்கொண்டு தொண்டரை யுள்ளங் கொண்டார் என்றும், இங்ஙனமே இராமலிங்க அடிகளார், மகாதேவ மாலையில், தற்போத வொழிவினிடை நிறைந்து பொங்கித் ததும்பிவழிந் தோங்கியெலாந் தானே யாகிச் சிற்போதத் தகம்புறமுங் கோத்துநின்ற சிவானந்தப் பெருக்கேமெய்ச் செல்வத்தேவே என்றும் அருளிச் செய்திருத்தலும் நினைவிற் பதிக்கற் பாற்று அற்றேல், இறைவனோடொத்த அறிவினராக ஓதப் படுஞ் சதாசிவர் முதலாயினார் மாட்டும் இயற்கையின்பம் உளதாகல் வேண்டுமா லெனின்; அற்றன்று, சதாசிவர் முதலியோர்க்குத் தலைமை செலுத்துதலால் உண்டாகுஞ் செருக்காகிய `அதிகாரமலம் ஒன்றுண்டென நூல்கள் ஓதுதலின், அவரது அறிவுஞ் சிறிது குறைபாடுடையதே யாகும்; அஃதுடைய தாகவே, அவ்வறிவைப் பற்றி நிகழும் இன்பமுங் குறைபாடுடை யதாகவே யிருக்கும்,அதனால், அவர்க்குள்ள அக் குறைபாடு நீங்குதற்கும், அவர் எல்லாம் வல்ல முழுமுதற் சிவத்தின் உதவியையே அவாய் நிற்றலின், அவரும்அச் சிவத்தின் றிருவருட்பேரின்பத்தைத் தலைக்கூடி, அதன்கட் படிந்த பின்னரே நிறைந்த அறிவும்நிறைந்த இன்பமும் உடையராவ ரென்பது முடிக்கப்படும்,அங்ஙனம் முடிக்கப்படவே, முப்பத்தாறு பருப்பொருள் நுண்பொருட் படிகளுக்கும், அவ்வப்படிகளில் வைகுவாராய் மும்மல இருமல ஒருமலப் பற்றுடைய மூவகை யாருயிர்த் தொகுதி களின் நிலைகளுக்கும் அப்பாற்பட்ட இயல்பினதாயுள்ள சிவம் ஒன்றே இயற்கை யுண்மையும் இயற்கை யறிவும் இயற்கை யின்பமும் உடையதாய், எல்லாவற்றையுந் தன் அருள் வெளியிலடக்கி அவற்றின் மேலும் எல்லையில்லாத விரிவினதாய் விளங்குமென்பதும் முடிக்கப்படும், அஃதொக்குங், காரியப்படாத மாயையின் பெரும் பகுதிஇயற்கை யுண்மை யுடையதாதல் முன்னரே பெறப் பட்டமையின், அஃது அவ்வாற்றால் இறைவனியல்போடு ஒத்ததாவான் செல்லுமா லெனின்; மாயையின் ஒரு பகுதி வியற்கையுண்மையுடையதாயினும் அதன் மற்றொரு பகுதி இயற்கையுண்மை வாயாதாய்க் காரியப்பட்டு மாறக் காண்டலினாலும், அங்ஙனந் தன்னிலே இருவேறு வகைப்பட்டு நிற்கும் அப்பொருள் ஒரே நிலையின தென்றற்கு இடம் பெறாமையினாலும், இறைவன் அதுபோல் அங்ஙனந் தன்னிலே இருவேறு வகைப்பட்டு ஒருவகையிற் காரியமாய் மாறுதலும் பிறிதொரு வகையிற் காரியமாய் மாறாமல் நிற்றலும் ஆகிய வேறுபாடு உடையனல்லனாகலானும் மாயை இறைவனோடொத்த உண்மை நிலையினதாதல் செல்லா தென்று கடைப்பிடித்தல் வேண்டும், அஃதொக்குமன்னாயினுஞ் சைவ சித்தாந்த நூல்களும் இறைவனுக்கு அருவம் உருவம் என்னும் இருவகை நிலைகளும் உண்டென்றோதுதலின், அவனும் மாயைபோற் காரியப் படுதலுடைய னென்பது பெறப்பட்டு, அங்ஙனம் ஓதும் அது மாயாவாதக் கொள்கையாய் முடியுமாம் பிற வெனின்; அற்றன்று,இறைவன் மாசற்ற தூய அறிவுப் பொருளே யல்லாமல், அறிவில்லா மாயைபோல்வான் அல்லன், அறிவில் பொருள் மட்டுமே ஒருநிலையிலிருந்து பிறிதொரு நிலைக்குத் திரிக்கப்படும்; மற்று அறிவுடைப் பொருளோ அங்ஙனந் திரிக்கப்படுதல் எஞ்ஞான்றும் இல்லை; மண்ணானது குடமாகத் திரிக்கப் படுதல் போல, அம்மண்ணினின்று குடத்தை யுண்டாக்கும் அறிவுடை யனான குயவன் அங்ஙனந் திரிக்கப்படுதல் இலன், இன்னும், மண்ணினின்றும் குடம் முதலிய பாண்டங்களை உண்டாக்கும் முன்னரே,அவை தம்மை யுண்டாக்குங் குயவனது அறிவின்கண் அப்பாண்டங்களின் வடிவங்கள் அமைந்து கிடத்தல் வேண்டும்; அங்ஙனம் அவ்வடிவங்கள் தன் அறிவின்கண் அமையப் பெறாதவன், அப்பாண்டங்களைச் சமைத்தற்குரிய அறிவு வாயாதவனாமாகலின், அவன் அவற்றை ஆக்கமாட்டுவான் அல்லன், ஆகவே, அறிவில்லாத மாயையிலிருந்து இவ்வுலகங் களும் இவ்வுலகத்துப் பொருள்களும் இவ்வுடம்புகளும் இவ் வுடம்புகளில் அமைந்த கருவிகளும் படைக்கப் படுதற்கு முன்னரேயே, இவற்றை யெல்லாம் படைக்கும் இறைவனது பேரறிவின்கண் அப்பொருள்களின் உருவங்கள் அமைந்து கிடத்தல் வேண்டுமென்பது தெளியப்படும், எங்ஙனங் குயவனதுஅறிவின்கண் அமைந்த உருவங்களோடு ஒத்த வடிவுடைய பாண்டங்கள் மண்ணினின்றும்அவனாற் படைக்கப்படுகின்றனவோ, அங்ஙனமே இறைவனது அறிவின்கண் அமைந்த உருவங்களோடொத்த வடிவுடைய உலகமும் உடம்பும்பிறவும் மாயையினின்றும் அவனாற் படைக்கப்படுவனவாகும், எங்ஙனங் குடங்கள் முதலான பாண்டங்களின் வடிவு சிதைந்தழிந்தாலும்அவற்றோ டொத்த அறிவினுருவங்கள் குயவனுள்ளத்தின்கண் அழியா வாய் நின்று அப் பாண்டங்களை மறித்தும்மறித்துந் தோற்று விக்குமோ, அங்ஙனமே இவ்வுலகங்களும்இவ் வுடம்புகளும் பிறவும் வடிவு சிதைந்து அழிந்தாலும் அவற்றோடொத்த அறிவினுருவங்கள் இறைவன் றிருவுள்ளத் தின்கண் அழியாவாய் நின்று அவைதம்மை மீண்டும்மீண்டுந் தோற்று வியா நிற்கும், இது கொண்டு, மாயையின் வடிவு அழிதல் போல, இறைவனது அறிவுருவு அழிவதன்றென்ப தூஉந் தெற்றென விளங்கும். இன்னும், அறிவுடையோன் என்று உயர்த்துச் சொல்லப் படுபவன், தான் உணர்ந்த பொருள்களின் வடிவங் களோ டொத்த உருவங்களைத் தன் அறிவின்கண் ஐயந்திரி பின்றி அமைத்துக் கொண்டவனேயாவ னென்பதூஉம், அறிவில்லாதோன் என்று இழித்துச் சொல்லப் படுபவன் தான் கண்ட எந்தப் பொருளின் வடிவத்தையுந் தன்னுள்ளத் தின்கண் அமைத்துக் கொள்ள மாட்டாதவனேயாவ னென்பதூஉம், இறைவனறிவு இம்மாயையிற் காணப்படும் எல்லா வடிவுகளையும் முன்னரே யறிந்த உருவுகளுடையதா யிருப்பினல்லது இப்பருப்பொருள் வடிவுகள் தாமே தோன்றாவாகலின் இறைவனது பேரறிவு இவையெல்லா வற்றையுந் தன்னகத் தடக்கிய உருவுடைய தாயே திகழு மென்பதூஉம் பிறவுங் கடவுளுக்கு அருளுருவம் உண்டு என்னும் எமது கட்டுரையில் நன்கு விளக்கியிருக்கின்றேம்; அவ்விரிவை அதன்கட் காண்மின்கள்! அஃதொக்கும்; இறைவனறிவு உருவுடையதாயே நிற்குமெனின்,அதனை அருவென்று கூறுதல் என்னை யென்பார்க்கு, உயிர்களும் உயிர்களின் அறிவுங் கண் முதலிய பொறிகளுக்குப் புலனாகாமை பற்றி அருவென்றும், உயிர்களின் அறிவு கட்புலனாகாவிடினும் புறப்பொருள்களில் தான்கருதிய வடிவினை அமைத்தல் கண்டு அதனறிவு அவ்வடிவினோடொத்த உருவுடைய தென்றுங் கொள்ளுதல் போல, இறைவனும் இறைவன்றன்பேர் அறிவும் பொறி களுக்குப் புலனாகாமை பற்றி அருவென்றும், அங்ஙன மாயினும் அவன்றன் பேரறிவு எண்ணுதற்கடங்கா இத்தனை யுலகங்களையும் இவ்வுலகங்களிலுள்ள இத்தனை பண்டங் களையும் இவற்றிலிருந்து இவை தம்மை நுகர்தற்கு எண்ணிறந்த உயிர்களோடு கூடிய இத்தனையுடம்புகளையும் அமைத் திருத்தல் கொண்டு இவற்றின் வடிவுகட்கு முதலான உருவுகள் வாய்ந்த தொன்றாகவேயிருக்குமென்றும் விடுத்தல் வேண்டும், எனவே, அறிவெல்லாம்அழியா வுருவங் களுடைய வாயேயிருக்கு மென்பதூஉம், அன்னவாயினும் அவை ஊனுடம்பில் அமைந்த பொறிகளின் வாயிலாக அறியப் படாமல் மாசற்ற அறிவுக் கண் கொண்டே காணப்படு மென்பதூஉம் நினைவிற் பதிக்கற் பாலனவாகும், திருஞான சம்பந்தர் மூன்றாண்டைச் சிறுமக வாயிருந்த ஞான்று கண்டு பாடிய இறைவனுருவம்,அவர் தந்தையார் கண்களுக்குப் புலனாகாமல் அவர்க்குமட்டும் புலனான தன்மையையுற்று நோக்குங்கால்,அவர் கண்ட இறைவனு ருவம்அறிவுருவமே யல்லாது ஊனுருவம் அன்றென்பதூஉம் அவரதனைக் கண்டதுந் தமது அறிவுக்கண் கொண்டே யல்லாது ஊனக்கண் கொண்டன் றென்பதூஉம் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும், இறைவனுருவம் பெற்றியதாதல் கண்ட அருணந்திசிவனார், மாயை தான் மலத்தைப் பற்றி வருவதோர் வடிவ மாகும் ஆயஆ ணவம் அகன்ற அறிவொடு தொழிலை யார்க்கும் நாயகன் எல்லா ஞானத் தொழின்முதல் நண்ண லாலே காயமோ மாயை யன்று காண்பது சத்தி தன்னால் என்றும், சத்திதன் வடிவேதென்னில் தடையிலா ஞானமாகும் என்றும் அருளிச் செய்வாராயினர். ஆகவே, இறைவனது பேரறிவு நிலையை யுணர்வாராகிய மக்களின் சிற்றறிவுக் கண்ணுக்கே அவன் அருவமாகப் புலனாகாது நிற்பன்; மற்று, அவன் அருளைச் சார்ந்து, அதனால் மாசு தீர்ந்து தூயரான அன்பரின் தூய அறிவுக்கு, அவன்றன் தூய அறிவுருவநிலை முற்றும் புலனானவாறேயாய் விளங்கா நிற்குமென்று உணர்ந்துகொள்ளல் வேண்டும். இனி, மெய்ப்பொருளாஞ் சிவம் ஒன்றே என்றது, மேற்காட்டியவாற்றான் மாறுந் தகையவான பொருள்களும் உயிர்களும்,மாறா நிலையினதான சிவத்தை நோக்க மெய்யல்லாதனவாதல் பெறப்படுதலாற், சிவம் ஒன்றே மெய்ப் பொருளாதல் தெருட்டியவாறு, அற்றேற் சிவமல்லாத பொருள்களெல்லாம் பொய்யென முடிந்து ஏகான்மவாத மாம் பிறவெனின்; அங்ஙனமன்று, நிலை மாறாததே மெய்யென்றும், நிலைமாறுவதே பொய்யென்றும் உலக வழக்கானுஞ் சான்றோர் நூல் வழக்கானும் நன்கறியக் கிடத்தலின், என்றுமில்லாத வெறும் பாழையும் பொய் யையும் ஒன்றென்றல் அடாது. நில்லாதவற்றை நிலையின வென்றுணரும், புல்லறிவு என்னுந் திருக்குறளும் இக் கருத்தே பற்றி யெழுந்ததாகும், அல்லதூஉம், இல்லாத வெறும் பாழைப்பற்றிப் பேசுவாருங் கேட்பாரும் யாண்டு மிலராக லானும், உயிர்களும் பொருள்களுமிருந்தே முப்பொரு ளாராய்ச்சி நிகழவேண்டுமாகலானும்,நிலை மாறுவன உள்பொருள்களே யல்லாமல் இல் பொருள்களாதல் செல்லாமையானும், இதன்கண் ஏகான்ம வாதங் கூறுவாருரை ஒரு சிறிதும் பொருந்தாதென விடுக்க, `சிவம் என்னுஞ் சொல் செம்மை யென்னும் பண்படியாகப் பிறந்து சிவந்த நிறத்தையும், இன்பத்தையும் உணர்த்துஞ் சிறந்ததமிழ்ச் சொல்லாமாகலானும்,இறை வன்றன் அறிவுருச் சிறந்த நிறத்தினதாயும் இன்ப நிலை யினதாயும் இருக்கும் உண்மையினை நமக்கு நினைவுறுத்திக் காணவுங் கருதவும் படாத முதல்வன்றன் அறிவுருவினை நாம் காணவுங் கருதவும் எளியதாம்படி வைத்து நமக்கு நினைவொருமை யினைப் பயப்பிப்பதில் இச்சொற் போலக் கடவுளுக்குரிய வேறெச்சொல்லும் உதவிபுரிவதின்மை யானுஞ், சிவம் என்னும் இச்சொல்லையே கடவுளுக்குச் சிறந்த பெயராக வைத்துப் பண்டைக் காலந்தொட்டு இன்று காறும் ஆன்றோர்கள் வழங்கி வருதலானும், ஈண்டு அடிகளாரும் அச்சொல்லையே சிறந்ததாக எடுத்து அருளிச் செய்வா ராயினர். அடிகளார் பிறாண்டுஞ் சிவம் பிரமமுடியே என்று ஓதுவதூஉங் கருத்திற் பதிக்கற்பாற்று, இனிச், சிவம் ஒன்றே மெய்ப்பொருள் என்று ஆழ்ந் தாராய்ந்து கண்ட தொல்லாசிரியர்களும், அவர் வழி பிழை யாது வந்த அடிகளாருந் தாங்கண்ட அவ்வரும் பேருண்மை யினை, மக்களெல்லாரு முணர்ந்து உய்தல் வேண்டுமென் றெழுந்த பேரிரக்கத்தால் அடுத்தடுத்தெடுத் துணர்த்தி வரவும், அதனைக் கடைப்பிடியாது, பிறந்து பெருந் துன்பங்களிற் பட்டுழன்று இறந்து ஒழிந்த அரசர் களையும் இழிந்த மக்களையுமெல்லாந் தெய்வங்களாக வழிபட்டுப் பிறவியைப் பாழ்படுத்தி இருள் நிரயத்திற்குஞ் செல்லுங் கீழ்மக்களை அது செய்தலாகாதென்று மேலைச் செய்யுளின் பின்னிரண்டடிகளில் தடுத்தருளினார். இனி, மேலைச் செய்யுளின் இறுதிப்பகுதியில், இறைவன் எல்லாவுயிர்களின் அகத்தே நெஞ்சத்தாமரையின் அறிவு வெளியிலும், புறத்தே எண்ணிறந்த வுலகங்கட் கெல்லாங் களைகண்ணாம்அருள் வெளியிலும் பொதுநின்று இன்ப ஆடல் புரியும் இயல்பினை, ஞானாசிரியன் மெய்யுரை வழிநின்று மூச்சையடக்கி, மூலத்திலுள்ள குண்டலியை யெழுப்பி, அதனோடு உணர்வினை ஒருங்கியைத்துக் கொண்டு, நெஞ்சத் தாமரையின் அகத்தே சென்று கண்டு இன்புறும் ஞானயோகப் பயிற்சியுடையார்க்கு, எல்லா அறிவும் எல்லாஇன்பமும் ஒருங்கெழுந்து, பெருகித் தோன்றும் என்றருளிச் செய்து முடித்தமை காண்க! இவ்வுண்மை ஆசிரியர் திருமூலர் அருளிச் செய்த, நாசிக்கு அதோமுகம் பன்னிரண் டங்குலம் நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல் மாசித்தி மாயோகம் வந்து தலைப் பெய்துந் தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாமே என்னுந் திருப்பாட்டானும் நன்கு தெருட்டப்பட்ட தென்க. அடிக்குறிப்பு 1. “Life does not appear without the operation of antecedent life” Fragments of Science by Prof. J. Tyndall, Vol.II. p. 299. சைவசித்தாந்த ஞானபோதம் - முற்றும் - வேதாந்த சித்தாந்தம் 1907 இல் மெமோரியல் அச்சியந்திரச் சாலையில் வெளியிட்ட நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்படுகின்றது. வேதாந்த சித்தாந்தம் ஆரணமார்க்கத் தாகமவாசி யற்புதமாய் நடந்தருளுங் காரணமுணர்த்துங் கையுநின் மெய்யுங் கண்கண் மூன்றுடைய வென்கண்ணே பூரணவறிவிற் கண்டிலமதனாற்போற்றியிப் புந்தியோடிருந்து தாரணியுள்ள மட்டுமே வணங்கத் தமியனேன் வேண்டிடத்தகுமே சீவான்மாக்கள் உய்யும்பொருட்டுத் தனுகரண புவன போகங்களைப் படைத்துக் கொடுத்தருளிய சிவபெருமான் அவர் அறிவை இனிது விளங்கச் செய்யும் பொருட்டு, ருஷிபுங்கவரையுஞ் சீகண்ட பரமேசுரரையும் அதிட்டித்து வெளியிட்டருளிய பிரமாண நூல்கள் வேதமும் சிவாகமங் களுமாம். அதிபரிபக்குவ முடையார்க்கு இன்றியமையாது வேண்டப்படும் முடிபொருளை யுணர்த்தும் வேதத்தின் ஞானகாண்டப் பகுதியே வேதாந்த மெனவும், அதிதீவிர பரிபக்குவமுடையார்க்கு அங்ஙனமே முதன்மையாகப் பெறக் கிடந்த சிவப் பேற்றை உணர்த்தும் சிவாகமப் பகுதியே சித்தாந்தம் எனவும் அறிவுடையோரால் வழங்கப்பட்டு வருகின்றன. இனி இவ்வேதாந்த சித்தாந்தம் இரண்டும் சுத்த அனுபவ சாதிரங்களாகும். வெறும் வாசாகயிங்கரியமாக விவரிக்கப்படு கின்ற தர்க்கம் மீமாம்ஸம் முதலிய சாதிரங் களைப்போலாது, சுத்த ஞான மயமாய்ச் சுத்த ஆனந்த மயமாய்ச் சுத்த அருள் மயமாய் அருவாய் விளங்கும் பரப் பிரமமான சிவத்தை வாக்கு மனங் கடந்து நின்றனுபவிக்கும் முடிந்த நிலையை அறிவிக்கும் ஞானசாதிரங்களான இவை விசேஷ அறிவோ டிருந்து விசாரிக்கற் பாலனவாம். இந்த மெய்யனுபவ வுண்மை, அத்துவிதவத்துவைச் சொப்ரகாசத்தனியை யருமறை கண்முரசறையவே அறிவினுக்க றிவாகியானந்த மயமானவா தியையநா தியேக தத்துவசொரூபத்தை மதசம்மதம் பெறாச்சாலம் பரகிதமான சாசுவதபுட்கலநி ராலம்பவாலம்பசாந்த பதவ்யோம நிலையை நித்தநிர்மலசகி தநிஷ்ப்ரபஞ்சப் பொருளை நிர்விஷயசுத்தமான நிர்விகாரத்தைத்தடத்த மாய்நின்றொளிர்நிரஞ்சன நிராமயத்தைச் சித்தமறியாதபடி சித்தத்தினின் றிலகுதிவ்யதேசோ மயத்தைச் சிற்பரவெளிக்குள்வளர் தற்பரமதான பரதேவதையை யஞ்சலிசெய்வாம் என்ற அருமைத் திருவாக்கால் வலியுறுத்தப்பட்டமை காண்க. இவ்விரண்டும் அதி விசிட்ட பக்குவமுடையார்க்குப் பயன்படு முகத்தால் எழுந்த முதல் நூல்களாம். அற்றேல், இவை இரண்டு நூல்களாய்க் கொள்ளப்படுவதென்னை? ஒன்றே அமையுமாலோ வெனின்; விசிட்ட பக்குவத்திலும் தீவிர பக்குவம், தீவிரதரபக்குவம் என இருவகைப் பாகு பாடு உளதாகலின் அப்பாகுபாட்டிற்கேற்ப வேதாந்தமுஞ் சித்தாந்த முமென இரண்டெழுந்தன. தீவிர பக்குவ முடை யார்க்கு வேதாந்தமும் தீவிரதரபக்குவமுடையார்க்குச் சித்தாந்தமும் பயன்படுதலுடையவாம். மந்ததரம், மந்தம், தீவிரம் என்னும் பக்குவமுடைய மூவர் பொருட்டு வேதம் கன்மகாண்டம், உபாசனாகாண்டம், ஞானகாண்டம் எனப் பகுக்கப்பட்டுக் கிடந்த வாறுபோல, தீவிரம் தீவிரதரம் என்னும் விசிட்ட பக்குவ முடையார் பொருட்டும் வேதாந்தம் சித்தாந்தம் என்னும் பாகுபாடு பிறந்த தென்க. மந்ததர பக்குவமுடையார் அறிவு மிக மழுங்கி மலினமேறிக் கிடத்தலால் அவர்க்குச் சிறிதறிவு விளங்கும் வண்ணம் சோதிட்டோமம் அசுவமேதம் அஜமேதம் முதலிய யாக கன்மங்களை வகுத்தெடுத்துக் கூறிய வேதத்தின் கன்ம காண்டப்பகுதி அவ்வகையால் அவரறிவைச் சிறிது முறுகு வித்து மந்தபக்குவமாக்கி உபாசனா காண்டப் பகுதிக்கு அதிகாரமுடையராக்கி விடுத்தொழியும். பின்னர் உபாசனா காண்டப் பகுதி மந்த பக்குவமுடையார்க்கு மேலும் அறிவு விளங்குதற் பொருட்டு ஒன்றினொன் றேற்றமுடைய பல வேறு வகைப்பட்ட தேவோ பாசனைகளை விதந் தெடுத்துக் கூறி அவ்வகையால் அவரறிவை முதிரச்செய்து ஞான காண்டப் பகுதியினைப் பயிலுதற்குரிய தீவிர பக்குவ முடையராக்கி விடுத்தொழியும். இனி ஞானகாண்டப் பகுதியும் தீவிரபக்குவ முடையானுக்கு வேண்டற் பாலதாய் நின்று அவனறிவை விரிவு செய்யும் ஜகத்ஜீவ பரங்களினியல் புணர்த்திச் சீவன் தன்னைச் சிவனாய்க் காணுமாறு வலியுறுத்தி அவ்வாற்றால் அவனறிவை வரம்பின்றி முதிரச் செய்து தீவிரதரபக்குவ முடையனாக்கிச் சிவாகமங்களைப் பயின்றனுட்டித்தற்கு அதிகாரியாக்கி விடுத்தொழியும். இனிச் சுத்த சிவத்தையேயுணர்த்தும் சிவாகம ஞானப்பகுதி தீவிரதர பக்குவ முடையான் கருவிகரணங்க ளெல்லாங் கழன்று சிவனருளிற்றோய்ந்து சிவனாயே நிற்குமாறுணர்த்தி முடிந்த சித்தாந்தமாய் நிற்ப தொன்றாம். வேதத்திற் கன்ம காண்ட உபாசனாகாண்டப் பகுதிகள் அதன் ஞான காண்டத்திற் பக்குவ முடையாரைச்செலுத்தும் அம் மாத்திரைக்கே பயன் படுமல்லது, அந்த ஞானகாண்டப் பொருளோடு ஒற்றுமை யுற்று நிற்பன வல்லவாம். இனி வேதத்தின் ஞானகாண்டப் பொருளோ அவைபோலாது, சிவாகம ஞானகாண்டப் பொருளோடு முழு தொத்து நிற்கும் அந்தரங்க உரிமை உடைத்தாம். ஆகையால், வேதாந்தமான உபநிடதங்கள் பொதுவென்றும் சித்தாந்த மான சிவாகமங்கள் சிறப்பென்றும் மகா யோகிகளான திருமூலரால் வேதமொ டாகமம் மெய்யா மிறைவனூல் ஓதும் பொதுவுஞ் சிறப்புமென் றுள்ளன நாத னுரையிவை நாடிலிரண் டந்தம் பேதம தென்னிற் பெரியோர்க் கபேதமே என்று அவை அவ்வாறு அருளிச் செய்யப்பட்டன. எனவே, வேதாந்தமும் சித்தாந்தமும் பரிபாகிகள் பேதத்தால் இரண்டாகச் சொல்லப்பட்டனவே யன்றி, அவை யிரண்டுந் தம்முட் சிறிதும் முரணாவென்பது இனிது பெறப்படும் என்க. அற்றேல், இனி வேதாந்தமாவது யாதெனின்:- அனாதி சீவனைம் மலமற்றப் பாலாய் அனாதி யடக்கித் தனைக்கண் டரனாய்த் தனாதி மலங்கெடத் தத்துவா தீதம் வினாவுநீர் பாலாதால் வேதாந்த வுண்மையே என்ற அருட் டிருவாக்கால் வேதாந்த மிது வென்பது தெள்ளிதி லுணர்த்தப்பட்டது. இதன் பொருள்: அனாதி யாயுள்ள ஆன்மாக்கள் ஐந்து மலபந்தங்களுமறுத்து அவற் றிற்கும் அப்பாற்பட்ட சிவனையே ஆதாரமாய்க் கொண்டு, அனாதியாயுள்ள ஆணவ வலியைஅடக்கித் தன்னை அரனுருவாய்க் கண்டு, அங்ஙனங் காணப் பெறுமாற்றால் தன்னைப் பொதிந்த மலம் தானே வலிகெட்டொழியத் தத்துவங்களின் புறம்பே பாலோடளாய நீர்போலச் சிவசத்தியோ டியைந்து நிற்றலே நீ கேட்ட வேதாந்த உண்மையாம். `அனாதி சீவன் என்றமையால் பிரமமே ஒரு காலத்து மாயை யாற் பற்றப்பட்டுச் சீவனாயிற் றென்னும் மாயாவாதம் வேதாந்த மாகாமை பெறப்பட்டது. அங்ஙனம் அனாதியா யுள்ள சீவனும் ஒன்றல்ல பலவுள்ளன என்று ஆசிரியர், பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப் பசுக்களைக் கட்டிய பாச மூன்றுண்டு பசுத்தன்மை நீக்கியப் பாச மறுத்தாற் பசுக்க டலைவனைப் பற்றி விடாவே என்று வேறிடத்தும் ஓதியவாற்றால் ஆன்மா ஒன்றே யென்னும் ஏகான்ம வாதமும் மறுக்கப்பட்டது. இனி அனாதி சிவரூபமாகிய ஆன்மா என்னும் ஏதோ ஒரு விடுதிப்பாட்டுத் திருமந்திரத்தி லுள்ளதாகப் பிறழ உணர்ந்து, சிவமே ஏதோ காரணத்தால் மலத்தாற் பற்றப்பட்டுச் சீவனாயிற்று என்று ஆன்றோருரை வழக்கோடும் அனுபவ வழக்கோடும் முரணிக் கூறினாருமுளர். அப்போலிப் பாட்டுத் திருமந் திரத்திருவாக்கன்றாகலானும், பிரமாணமன்றாய் யாரோ கட்டிவிட்ட அதுகொண்டு ஏனையனுபவ சாத்திரங் களுக்கெல்லாம் பொருந்தாவாறாய்ப் புதிதொன்று உரைத்தல் இழுக்காமாகலானும் அவருரைக் கூற்றுப் பொருந்தாதென மறுக்க. ஐம்மலம் என்றமையால் ஆணவம், கன்மம், சுத்தமாயை அசுத்தமாயை, திரோதாயி என்னும் ஐந்து மலங்களுண் டென்பதும், அனாதி யடக்கி என்றமையால் அவை யைந்தும் அநாதி நித்தியமா மென்பதும் வலியுறுத்தப் பட்டன. இதனால் `மலம் சூனியமென்னும் மாயாவாதம் மறுக்கப்பட்டதூஉங் காண்க. இன்னும் ஆணவமின்று, கன்மமும் மாயையுமே உள்ளன வென்பாரும், சுத்தமாயை அசுத்தமாயை யென இருவேறு மாயைகளில்லை சுத்த மாயையே அசுத்த மாயையா மென்பாரும் மறுக்கப்பட்டனர். அப்பாலாய் என்றது இறைவன் ஆன்மாக்களோடும் ஐந்து மலங்களோடும் அனாதி தொட்டே ஒற்றித்து நிற்பினும், அவனியல்பு சேதனம், அசேதனம் என்னும் இவ்விரு பொரு ளியல்புக்கும் அப்பாற்பட்ட தொன்றென்பது அறிவித்தது. ஆன்மாக்கள் மலத்தான் மறைக்கப்பட்ட சேதன ரூபிகள். இறைவனோ அங்ஙனம் அதனாற் பற்றப்படாது அனாதியே சொயம்பிரகாச விளக்காய்ப் பொலியும் சேதன ரூபியாம், மலங்களோ அசுத்தமான அசேதன ரூபமாம். இறைவனோ சுத்தமான சேதன ரூபியாய் நிற்கும். இங்ஙனம் சேதனா சேதனப் பிரபஞ்சங்களை யெல்லாங் கடந்து நிற்கும் இயல்புடைய னாதல் பற்றி யன்றே, அளவையெலாங் கடந்து மனங்கடந்து மற்றைய றிவையெலாங் கடந்து கடந்தமலயோக ருளவையெலாங்கடந்து பதங்கடந்து மேலையொன்று கடந்திரண்டு கடந்துணரச் சூழ்ந்த களவையெலாங் கடந்தண்டபிண்ட மெல்லாங் கடந்து நிறைவான சுகக்கடலேயன்பர் வளவையெலாமிருள கற்றுமொளியே மோனவாழ்வேயென் னுயிர்க்குயிராய்வதியுந்தேவே என்னுந் திருவாக்கு மெழுந்தது. இனித் அனாதி யடக்கி என்றது தொன்று தொட்டுத் தன்னுடனாய் நின்று தன்னறிவை மறைத்துத் தன்னை ஏகதேசப்படுத்தி வந்த ஆணவமல வலியை உயிர்தா னிறைவனை ஆதரவாய்க்கொண்ட வாற்றால் ஒடுக்கிக் கொள்ளும் என் றுணர்த்திய தென்க. இனி தனைக் கண்டரனாய் என்றது அங்ஙனம் இறைவனை ஆதரவாய்க்கொண்டு ஆணவமல வலியை ஒடுக்கிநின்ற ஆன்மாவானது பின் அவ்வியல்பினின்று சிறிதும் பிறழாமைப்பொருட்டு அவ்விறைவனது அருளு ருவைத் தன்னுருவாய்க் கண்டு நிற்குமென அறிவித்தது. இதனால் ஆன்மாத் தன்னைப்பந்தித்த மலசேட்டை ஒடுக்குதலே வேதாந்த முடிபா மென்க. இறைவனியல்பு தானே யாய் நிற்குந் தகைமையது; ஆன்மாவி னியல்பு தான்சார்ந்த பொருள் வயமாய் நிற்குந் தகைமையது. பளிங்கானது தன்னைச் சார்ந்த வண்ணங்களைத் தன்கட் பிரதிபலனமாய்க் கொண்டு தான் அவ்வண்ணமே தன்னுருவாய்க் கொண்டு நிற்குமாறுபோல, ஆணவம் மாயை கன்மங்களைச் சார்ந்து நின்ற வழித் தன் குணங் குறி செய்கைக ளெல்லாம் அவற்றியல்பாய் நிற்கும். மன்னவ குமாரன் ஒருவன் தன் குழந்தைப் பருவத்திலேயே வேடர் களால் அபகரிக்கப்பட்டுக் காட்டிலே அவரோடு உடன் வளர்ந்து அவர்க்குள்ள குணங்குறி செய்கைகளெல்லாம் தன் மாட்டுத் தோன்றத் தான் மன்னவ குமாரன் என்பதைச் சிறிது முணராமல் இருந்தான். பின்னர் அவன் தந்தையான வேந்தன் அவனைத் தலைப்பட்டு நீ வேடர் மகன் அல்லை, என் மகனாவை என்றுணர்த்திய வழி அவன் தன் பெருமையை யுணர்ந்து தன் தந்தையின் அரசுரிமைச் செல்வமெல்லாம் பெற்றுக் களித்தான். இதுபோலவே, பஞ்சமலக்கொத்தின் வயப்பட்டு உழன்ற ஆன்மாக்களை இறைவன் குருவுருவாய் வெளிப்பட்டு நின்று அனுக்கிரகித்து அவற்றைத் தன்னுருவாக்கிக் கொள்வன். இவ்வுண்மை, மன்னவன் றன்மகன்வேட ரிடத்தேதங்கி வளர்ந்த வனையறியாது மயங்கிநிற்பப் பின்னவனுமென்மகனீ யென்றவரிற் பிரித்துப் பெருமையொடுந் தானாகப்பேணுமாபோற் றுன்னியவைம்புல வேடர் சுழலிற்பட்டுத் துணைவனையு மறியாது துயருந்தொல்லுயிரை மன்னுமருட் குருவாகி வந்தவரினீக்கி மலமகற்றித் தானாக்கி மலரடிக்கீழ்வைப்பன் என்ற சிவஞான சித்தித் திருவாக்கானுணர்த்தப்பட்டது. ஸ்ரீமந். மாணிக்கவாசகப்பெருமானும், வினையிலேகிடந்தேனைப்புகுந்து நின்றுபோது நான்வினைக்கேட னென்பாய்போல இனையனானென் றுன்னையறிவித் தென்னையாட் கொண்டெம் பிரானானாய்க்கிரும்பின் பாவை அனையநான்பாடேனின்றா டேனந்தோ அலறிடே னுலறி டேனாவிசோரேன் முனைவனே முறையோ நானானவாறு முடிவறியேன் முதலந்த மாயினானே என்றருளிய அருமைத் திருவாக்கை நினைக்க நினைக்க என் நெஞ்சம் நெகிழுகின்றது. தாயுமானச் செல்வரும், வந்தெனுடல் பொருளாவி மூன்றுந்தன் கைவசமென வேயத்து வாமார்க்கநோக்கி, யைந்துபுலனைம்பூதங் கரண மாதியடுத்தகுணமத் தனையுமல்லையல்லை, யிந்தவுடலறி வறியாமையு நீயல்லையா தொன்று பற்றின தனியல்பாய்நின்று, பந்தமறும்பளிங்கனையசித்து நீயுன் பக்குவங்கண்ட றிவிக்கும்பான்மை யேம்யாம் என்றருளிய திருவாக்கும் இதனோ டொப்பிட்டுணரற் பாலதாம் என்க. எனவே, காலைப் போதிலெல்லாம் தன்னருகே யிருந்த வண்ணங் களைப் பிரதிபலித்த பளிங்கானது, சூரியன் உச்சியிலேறிய நண்பகற் பொழுதில் அவ்வண்ணங்களைப் பிரதி பலித்த லொழிந்து, அச்சூரியனொளி மாத்திரமே தன் கண் விளங்கக் கொண்டு பெரும் பிரகாசமாய் நின்றவாறு போல, ஐந்துமலக் கொத்தின் வயப்பட்டுப் பெத்த தசையில் அவற்றின் சொரூப மாய் நின்ற ஆன்மாவானது, முத்தி தசையில் அவற்றினின்று முழுவதுங் கழன்று சிவசூரிய சந்நிதானத்தினின்று அச்சிவசூரிய அருளொளிவயமாயே நிற்கு மென்றுணர்க. இனித் தனாதிமலங்கெட என்றது மேற் சொன்ன வாறு ஆன்மாத்தானவனாய் நிற்பவே தன் வலிமடங்கி நின்ற ஆணவ மலமானது பின் தலை யெடாமலே யொழியுமென் றறிவித்தது. ஆன்மா முத்தி யடைந்த பின் அதனைப் பந்தித்த ஆணவ முதலிய மலங்கள் சூனியமாமோவெனின்; - அங்ஙனங் கூறுதல் சற்காரிய வாதங் கொண்ட சைவசித்தாந்தத்திற்கு ஏலாமையின், எல்லாப் பொருளுக்குந் தாரகமாய் நின்ற இறைவனே ஆண்டு ஆணவ மலத்திற்குங்களை கணா யிருப்பனென்க. அற்றேல், அதனால் அவன் துடக்குறுவனோ வெனின்; - துடக்குறுவானுமல்லன். ஒருவன் வயிற்றகத்தே கிடந்த புழுக்களுக்கு உண்டாகுங் குணங் குறி வேறுபாடுகள் அவனைச் சென்று தாக்காமைபோல ஆணவவலி யிறை வனைத் துடக்கமாட்டா தென்க; இஃது உன்னுதரத்தேகிடந்த கீடமுறுவதெல்லா முன்னுடைய தென்னாநீ யுற்றனையோ - மன்னுயிர்க ளவ்வகையே காணிங் கழிவதுவு மாவதுவுஞ் செவ்வகையே நின்ற சிவன்பால் என்னுந் திருக்களிற்றுப்படி யாரினுங்காண்க. இனித் தத்துவாதீதம் வினாவு நீர் பாலாதல் வேதாந்த வுண்மையே என்றது தத்துவங்களுக்கு அப்பாற் பட்டதாய்த் தானவனாய் நிற்கும் நிலையை உணர்த்தியது. நீர் பாலோடு கூடிய வழி அப்பாலி னுருவாய்த் தன்னுருவு சிறிதுங் காட்டாமல் அப்பாலோ டொருமைப்பட்டு நிற்றல் போல உயிர் முதல்வ னருளோடு ஒருமைப்பட்டுத் தானது வாய் நின்ற வழித் தனக்கென வேறோ ருருவின்றி அவ்வரு ளுருவே தன்னுருவாய் வயங்கத் தானொரு பொருளுண் டென்பதூஉம் அறியப்படா வாறு நிற்கும் என்க. எனவே, சீவன் தன்னைப் பொதிந்த ஆணவ மல வலியை அடக்கித் தன்னைத் தத்துவங்களின் வேறாய்க் கண்டு சிவனே தானாய் நிற்றலே வேதாந்த முடிபா மென்பது சிவானந் தானுபவ சிரேட்ட குரு மணியான திருமூலர் திருவாக்கால் இனிது பெறக் கிடக்கின்றது. உபநிடதங்களின் முடிபாய் வலியுறுத்து உரைக்கப்பட்ட `அகம்ப்ரஹ் மாமி `தத்துவமஸி என்றற் றொடக்கத்து மகா வாக்கியங்களும் இதனையே வற்புறுத்துகின்றன. இன்னு மிதனை. அதுவிதுவென்று மவனானே யென்று மதுநீயே யாகின்றா யென்றும் - அதுவானே னென்றுந் தமை யுணர்ந்தா ரெல்லா மிரண்டாக வொன்றாகச் சொல்வரோ வுற்று என்னுந் திருக்களிற்றுப் படியார் திருவாக்காற் காண்க. இங்ஙனம் மகா வாக்கியங்களாற் சிவோகம் பாவனை உணர்த்திய உபநிடத முடிபையே வேதாந்த மென்று மெய்ப்பொருளறிந்தார் உரையாநிற்ப, இம்மெய்ப்பொரு ளறியமாட்டாத பொய்ப்பொருளுடைய ஒருசாரார் இம்மா வாக்கிய மெய்ப்பொருளைப் பிறழ வைத்து `நான் அவனானேன் என்றமையானே பிரமம் என்றும் நான் என்றும் இரண்டு பொருளில்லை, அப்பிரமமே நான், கட்புலனாய்த் தோன்றும் இவ்வுலகமும் மற்றையவும் இல்லாத சூனியப் பொருள்களே யாமென்று தாமறிந்த வாறெல்லாம் போய்ப் போலி வேதாந்த மொன்றுகட்டினார். இவர் கூறும் இப்போலி வேதாந்தம் வேதாகம புராணேதிகாச சிஷ்டாசார முழுவதற்கும் முற்றும் விருத்தமாமென்பதனை யாமுணர்த்தல் அவசிய மன்றாயினும் ஒருசிறிது காட்டுதும். சுவேதாசுவ தரோப நிடதத்து. என்னும் மந்திரத்தால் பரமான்மா சீவான்மா இரண்டி னிருப்பும், என்னும் மந்திரத்தால் அவ்விருவகைச் சைதன்னிய இருப் போடு சீவான்மாக்கள் அனந்தமுள்ளன வென்பதும், என்னும் மந்திரத்தாற்சத்துவ இராசத தாமதகுண வரூப மானமாயை என்று முள்ள தென்பதும் வலியுறுத்தப் பட்டமை காண்க. இன்னும் பிருகதாருணியத்தில் என்னும் மந்திரமானது இங்கு முன் ஏதொரு பொருளு மிருந்ததில்லை; ஈதுண்மையே சுருக்கு மியல்பு டைய மிருத்யுவால் விழுங்கப்பட்டிருந்தது. என்று சிருஷ்டி யாரம்பத்திற்கு முன் ஆன்மா ஆணவ சையோக முற்றுக் கிடந்த அனாதி நிலையை இனிது விளக்கிற்று. இதில் `இங்குமுன் ஏதொரு பொருளு மிருந்ததில்லை. என்றது அனாதியில் தூலகாரியமாக விளங்கும் இப் பிரபஞ்சம் இருந்ததில்லையென அறிவிப்பதாயிற்று. அப்போது ஆன்மாவின் வியாபக ஞானத்தைச் சுருக்குமியல் புடைய ஆணவம் அதனை விழுங்கி யிருந்தது. அவ்வாணவம் ஆன்ம அறிவை இறக்கச்செய்யும் அல்லது விளங்க வொட்டாது செய்யும் இயல்புடைத்தாதல் பற்றி `ம்ருத்யு என்னும் பெயராற் சொல்லப்பட்டது. இன்னும் இவ்வாறே உபநிடதங்களில் ஆண்டாண்டு இவ்வுண்மைகளை இனிது நிறுவி விளக்கிய மந்திரங்களை எடுத்துக் காட்டலுறின் இவ்வுபந்நியாசம் மிக விரியுமென வஞ்சி விடுக்கின்றாம். ஆகையால், போலி வேதாந்திகள் சொல்லும் பொருளுக்குப் பிரமாணம் உபநிடதங்களில் பெறப்படாமையால், அவர் கொள்கை வேதாந்த பாகியம் என ஒழித்து மேலே செல்வாம் என்க. இனிச் சித்தாந்தமாவது என்னையோவெனின்; அதனையும் மெய்ப்பொருட் குரவரான திருமூலர், நித்தம் பரனோ டுயிருற்று நீண்மனஞ் சத்த முதலைந்துந் தத்துவந் தானீங்கிச் சுத்த மசுத்தந் தொடரா வகைநினைந் தத்தன் பரன்பா லடைதல் சித்தாந்தமே என்றருளிய திருவாக்காற் றுணியலாம். `மனம், சித்தம் புத்தி, அகங்காரம் முதலிய அந்தக் கரணங்களும் சத்தப் பரிச ரூபரஸ கந்தம் முதலிய தன் மாத்திரைகளும் மூலப் பிரகிருதியி லுண்டான ஏனைத் தத்துவங்களும் சுத்த மாயை அசுத்த மாயை முதலியனவு மெல்லாம் பற்றறக் கழித்து ஆணவ வலியை ஒடுக்கி ஒழிப்பதற் கேதுவான மேற்சொல்லிய சோகம் பாவனை வழி நின்று நித்தப் பொருளான சிவபெருமானுட னிரண்டறக் கலந்து ஒன்றா யொழிதலே சித்தாந்தமாகும் என்பது இதன்கண் வலியுறுக்கப்பட்டமை காண்க. இச்செய்யுளில் `நினைந்து என்றது மேற்செய்யுளிற் கூறிய சோகம் பாவனையேயாம். இதனால், சித்தாந்தம் என்பது வேதாந்தத்திற்கும் அப்பாற் சென்ற முடிபாம். வேதாந்தம், சிவோகம், பாவனை வரையிற் சென்றது. சித்தாந்தம் அதற்கு மேலும் போய் நின்றது. சிவோகம் பாவனை வலியுறுத்தும் மாவாக்கிய உபநிடத முடிபால் அச்சிவோகம் பாவனையுள்ளும் ஆன்மாவில் நான் என்னும் உணர்வு நின்ற தென்பது தெற்றெனப் புலப்படும். நான் என்னும் உணர்வு மிடைநிகழச் சிவகோம்பாவனை செய்து நின்ற விடமே வேதாந்தமாம். அவ்வுணர்வுங் கெட்டுச் சிவமாய் நின்ற விடமே சித்தாந்தமாம். இவ்வியல்பை இன்னும் விளக்கமாக வைத்துத் திருமூலயோகிகள் தானான வேதாந்தந் தானென்னுஞ் சித்தாந்த மானா துரியத் தணுவன் றனைக்கண்டு தேனார் பராபரஞ் சேர்சிவ யோகமா யானா மலமற் றருஞ்சித்தி யாதலே என்றருளிச் செய்த பெருங்கருணைத் திறத்தை யாதெனமொழிவேம்! தானானவேதாந்தம் என்பதனால் சிவவுணர்வும் தன்னுணர்வும் ஒருங்குபட்டு நின்ற சிவோகம் பாவனாநிலை அறிவிக்கப்பட்டதாயிற்று. தான் என்னுஞ் சித்தாந்தம் என்பதனால் தன்னுணர்வின்றிச் சிவ வுணர்வு மாத்திரமாய் நின்றநிலை அறிவிக்கப்பட்டதாயிற்று. ஸ்ரீமந். மாணிக்கவாசக சுவாமிகள் அடைந்த முத்தியே முடிவான தென்று நூல்வழக்கானும் ஆன்றோர் வழக்கானும் துணியப் பட்டுக் கிடத்தலின் அப்பெருமான் இச்சித்தாந்த நுண்முடிபு தேற்றிய அவமாய தேவரவகதியி லழுந்தாமே பவமாயங் காத்தென்னை யாண்டுகொண்ட பரஞ்சோதி நவமாய செஞ்சுடர் நல்குதலு நாமொழிந்து சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ வான்கெட்டு மாருதமாய்ந் தழனீர் மண்கெடினுந் தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக் கூன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டெ னுள்ளமும்போய் நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ இன்றெனக்கருளி யிருள்கடிந் துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின்றன்மை நினைப்பற நினைந்தே னீயலாற்பிறிது மற்றின்மை சென்றுசென் றணுவாய்த் தேய்ந்து தேய்ந் தொன்றாந் திருப்பெருந்துறையுறை சிவனே ஒன்றுநீயல்லை யன்றியொன்றில்லை யாருன்னை யறியகிற்பாரே என்ற சித்தாந்த அருட் செம்பாடல்கள் திருமூலர் திருவாக்கோ டொற்றுமை யுறுதல் காண்க. இனி இவ்வேதாந்த சித்தாந்த மென்னும் இரண்டனுள் ஒன்று ஏனையொன்றற்கு உபகாரமாய் நிற்றலால் இவை யிரண்டும் மெய்ப்பொருள் நந்தாமணி விளக்காய்த் திகழும் சிவஞானபோதத்து ஒருங்குணர்த்தப்பட்டன. அவனே தானேயாகிய வந்நெறி யேகனாகி யிறைபணி நிற்க மலமாயை தன்னொடு வல்வினையின்றே என்னும் பத்தாஞ் சூத்திரம் வேதாந்தப் பொருளான சிவோகம் பாவனை உணர்த்துவதாம். வேதாந்தத்தின் பயன் பாசக்ஷயம் பண்ணுதலே யாமென்பது மேலே விரித்துக் காட்டப் பட்டமையின், பதினோராஞ் சூத்திரத்தி லுணர்த்தப்படும் சித்தாந்த முத்தி முடிவுக்கு முன்னதாகப் பாசக்ஷயம் பண்ணுதற் கண் நிகழும் வேதாந்த வழியை ஆசிரியர் மெய்கண்டதேவர் பத்தாஞ் சூத்திரத் தோதியருளினார் என்க. பின்னர்க், காணுங் கண்ணுக்குக் காட்டு முளம்போற் காண வுள்ளத்தைக் கண்டு காட்டலி னயரா வன்பி னான்கழல் செலுமே என்னும் பதினோராஞ் சூத்திரத்தில் சித்தாந்த முத்திமுடிபு நிலையிட்டருளினார் என்க. இங்ஙனம் வேதாந்தமுஞ் சித்தாந்தமும் ஒன்றுக் கொன்றணுக்கமாய் நிற்றலினாலன்றே, வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்றவித்தகச்சித் தர்கணமே வேதாந்த சித்தாந்தமே பிறவாவீடென்றான் ஓதாமல் வேதமுணர்ந்தோன் ஓரும்வேதாந்த மென்னுச் சியிற்பழுத்த ஆராவின்பவருங்கனிபிழிந்து சாரங்கொண்ட சைவசித்தாந்தத் தேனமுதருந்தினர்சிலரே என்றற் றொடக்கத்துத் திருவாக்குக ளெழுந்தன. இனி, இங்ஙனம் வேதாந்த சித்தாந்தம் என்னும் இரண்டனுள் வேதாந்தம் சித்தாந்தத்திற்கு வழியாய் நிற்றல் பற்றியன்றே பிரதமத்தில் எடுத்துக் கொண்ட திருவாக்கில் `ஆரணம் மார்க்கமாம் என்றும், `ஆகமம் அம்மார்க்கத்திற் செல்லுங் குதிரையா மென்றும் சொல்லப்பட்டன. வேதாந்த முடிபான `சோகம் பாவனை தலைப்படுதலின்றிச் சித்தாந்தத் துட்புகுதல் ஒருவாற்றானுங் கூடாமையின், அச்சோகம் பாவனை வழியே செல்லுவதாகிய சித்தாந்த முத்தியினைக் குதிரை யென்றுவமித்தது பெரிதும் பொருத்த முடைத்தாதல் காண்க. இன்னும் தாயுமானச் செல்வனார் தாமுணர்த்தப் புகுந்த வேதாந்த சித்தாந்த முடிபு பொள்ளெனப் புலப்படுதற் பொருட்டுப் `பூரண அறிவிற் கண்டிலம் என்றும் `அதனால் போற்றி யிப்புந்தி யோடிருந்து தாரணியுள்ள மட்டுமே வணங்க என்றும்அறிவுறுத்தருளினார். இவற்றுட் `பூரண வறிவிற் கண்டிலம் என்பது சித்தாந்த முடிபையும், மற்றையது வேதாந்த முடிபையும் இனிது அறிவுறுக்கின்றன. சிவனது அருட்பரிபூரணம் உயிராற் பெறப்பட்ட விடத்து உயிர்க்கொரு செயலுமின்றி ஆன்ம வியற்கை யெல்லாம் முழுதுங் கெட்டுச் சிவமே யெங்குமாய் நிற்கு மாகலின் ஆண்டு ஞாதுருஞான ஞேயப் பாகுபாடு சிறிதுங் காணப்படுவதில்லை யென்றார். பிறாண்டும் ஆசிரியர் அச் சித்தாந்த முத்தியி னியல்பு விளங்கத் தெரிப்பான் வேண்டித், தானான தன்மயமேயல்லா லொன்றைத் தலையெடுக்க வொட்டாதுதலைப்பட்டாங்கே போனாலுங் கர்ப்பூர தீபம்போலப் போயொளிப்பதல்லாது புலம்வேறின்றாம் ஞானாகாரத்தினொடு ஞேயமற்ற ஞாதுருவு நழுவாமனழுவி நிற்கும் ஆனாலு மிதன் பெருமை யெவர்க்கார் சொல்வா ரதுவானா லதுவாவரதுவே சொல்லும் அதுவென்றா லெதுவெனவொன் றடுக்குஞ் சங்கையாதலினா லதுவெனலு மறவேவிட்டு மதுவுண்ட வண்டெனவுஞ் சனகனாதி மன்னவர்கள் சுகர் முதலோர் வாழ்ந்தாரென்றும் பதியிந்த நிலையெனவு மென்னையாண்டபடிக்கு நிருவிகற்பத்தாற் பரமானந்தக் கதி கண்டு கொள்ளவு நின்னருள் கூரிந்தக் கதியன்றி யுறங்கேன்மேற் கருமம்பாரேன் என்றருளிச்செய்த திருவாக்குகளின் அருமை பெருமையை என்னென்பேம்! அதனாற் போற்றி யிப் புந்தியோடிருந்து தாரணி யுள்ளமட்டுமே வணங்க என்றது சீவன் முத்தர் தம்மருமைச்சரீரத் தோடிருக்குங் காறும் `நான் என்னும் உணர்வு இடையிடை நிகழச் சிவோகம் பாவனை செய்திருக்குமாறு வகுத்துணர்த்தியது. `இப்புந்தி என்பது `நான் என்னும் உணர்வை, இவ்வுட லொழிந்தபின் இச்சிவோகம் பாவனையினின்று முறுகிய அவர் `கர்ப்பூர தீபம் போலச் சிவனருளாய்க் கரைந்து போவர் என்க. அற்றேல், ஆதமா முத்தியில் இல்லாத சூனியப் பொருளாயொழியும் போலுமெனின் - அற்றன்று. ஆணவ மல சம்பந்த முற்றிருக்குங்காறும் `பசு வென்னும் பெயர் பெற்ற உயிரானது அதன் சம்பந்த மறுத்துச் சிவசம்பந்த முற்றுச் சிவமாய் நின்றவழி அதனை அப்பெயரிட்டு வழங்கலாகா தென்றதே யன்றிப்பொருளுண்மை ஆண்டும் மறுக்கப்படா தவாறேயா மென்க. இம்முடிந்த வுண்மை. கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை வல்லாளனாய் வந்து வனப்பெய்தி யிருக்கும்வண்ணம் பல்லோருங் காண வென்றன் பசுபாச மறுத்தானை எல்லோரு மிறைஞ்சு தில்லை யம்பலத்தே கண்டேனே என்னும் ஸ்ரீமந். மாணிக்கவாசக சுவாமிகள் திருவாக்கிற் காண்க. ஆயினும் அவாங்மனகோசரமான அந்த முத்தி நிலையைப்பற்றித் தாயுமான சுவாமிகளே ஆனாலு மிதன் பெருமை யெவர்க்கார் சொல்வார் என்று சொல்லக் கூடாமையைத் தெரிவித்தருளினர்களாயின் ஒன்றுக்கும் பற்றாத சிறியேன் எங்ஙனம் அதனை உரைக்க வல்லேன்? அம்முத்தி நிலையை அதனை உண்மையா னுணர்ந்த சித்தாந்தச் செல்வர், முத்திதனின் மூன்று முதலு மொழியக்கேள் சுத்த வனுபோகத்தைத் துய்த்தலணு - மெத்தவே இன்பங் கொடுத்தலிறை யித்தைவிளைவித்தன் மலம் அன்புடனே கண்டு கொளப்பா என்றருளிய திருவாக்கான் உணர்ந்துகொள்க. இனி, ஆரண மார்க்கத் தாகமவாசி என்னுந் திருவாக்கிற் சோகம் பாவனை செய்தற்கு இன்றியமையாத மெய்ப்பொருள் முறையும் உபதேசிக்கப்பட்டிருக்கின்றது. அது பக்குவமுடைய சீடனியல்பறிந்து மெய்க் குருவால் உணர்த்தற்பாலதன்றி, வேறொரு வாற்றானும் வெளியிடற் பாலதன்றாகலானும், வெளியிடிற் பெரியோர் சாபம்வந் தெய்துமாகலானும் அதனைப் பற்றிச் சிறிது முரையாது விடுக்கின்றாம். வேதாந்த சித்தாந்தம் - முற்றும் - சைவ சமயப் பாதுகாப்பு காகம், உறவு கலந்துண்ணக்கண்டீர்! அகண்டாகாரசிவ போகம் எனும்பேரின்ப வெள்ளம் பொங்கித்ததும்பிப் பூரணமாய் ஏக உருவாய்க் கிடக்குதையோ! இன்புற்றிட நாம் இனி எடுத்த தேகம் விழும்முன் புசிப்பதற்குச் சேரவாரும்! - செகத்தீரே! - தாயுமான சுவாமிகள் `சைவசமயம் என்பது `சிவத்தை ஆராய்ந்து அறிந்த பொழுது அல்லது கொள்கை என்று பொருள்படும்; இந்தக் கொள்கையைப் பாதுகாத்துக் கொள்ளுதலே சைவ சமயப் பாதுகாப்பு ஆகும். உலகத்திலே அளவிறந்த கொள்கைகள் இருந்தாலும், அவையெல்லாவற்றுள்ளுங் கடவுளைப்பற்றிய கொள்கையே சமயம் என்று பெரும்பான்மையும் எல்லாராலுங் கைக்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்கள் நிலையில்லாத வாழ்க்கை உடையராய் இருத்தலாலும், நோயுந் துன்பமுங் கவலையும் அடுத்தடுத்து வந்து அவரை வருத்துதலாலுந், தமக்குத் துணையாக நினைத்த மக்களுந் தம்மைப்போலவே நோய் முதலியவற்றால் வருந்தி நிலையின்றி மறைந்து போதலாலும் அவர் தம்மினுந் தம்மைப் போன்ற எல்லா உயிர்களினும் மேற்பட்டு உயர்ந்த ஒரு பேரறிவுப் பொருளான கடவுளின் துணையை நாடினவராய் இருக்கின்றார். கடவுள் இல்லையென்று வலியுறுத்திப் பேசிவந்தவர்களுங் கூடப் பெருந்துன்பங்கள் வந்து தம்மை மூடிக்கொண்ட காலத்தில் தாம் கொண்ட கொள்கையைப் பிசகென உணர்ந்து கடவுளை நம்பத் தலைப்பட்டிருக்கின்றார்கள். கடவுளிடத்தில் நம்பிக்கை யில்லாத அருகரும், பௌத்தருங் கூடத் தமக்கு மேற்பட்ட துணையை நாடினவர்களாய்த் தம் சமய குரவரையே கடவுளாக எண்ணி வழிபட்டு வருகின்றனர். தம்மையே கடவுளாக நினைப்பவர்களுங் கூடத் தமது கொள்கையை உண்மைப் படுத்திக் கொள்ள முடியாமை கண்டு ஏதாவதொன்றைத் தமக்கு மேற்பட்டதாக வைத்து வணங்கி வருகின்றார்கள். இங்ஙனமாக ஒன்றோடொன்று மாறுபட்ட கொள்கை உடையவர்களெல்லாருங் கடைசியாகக் கைக் கொண்டது `தமக்கு மேற்பட்ட ஒரு பேரறிவுப் பொருள் வணக்கமே ஆகும். இம் முடிந்த கொள்கையில் எல்லாச் சமயிகளும் உடன்பாடு உடையவராய் இருக்கின்றனர். இனி, மக்கள் எல்லாரும் இங்ஙனந் தம்மின் மேற்பட்ட ஒரு பேரறிவுப் பொருளின் உதவியை விரும்பி நிற்றல் எதன் பொருட்டு என்று ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்குங்கால், அவர் தமது துன்பத்தை நீக்கிக்கொள்ளுதற்கும் இன்பத்தைப் பெறுதற்குமேயாம் என்னும் உண்மை புலனாகும். மக்கள் மட்டுமே யல்லர், மக்களினுந் தாழ்ந்த எல்லா உயிர்களுங் கூடத் தமது துன்பத்தைப் போக்கி இன்பத்தை ஆக்கிக் கொள்ளவே முயன்று நிற்கின்றன. இங்ஙனம் நம் கண்ணெதிரே காணப்படுகின்ற இவ் வுண்மையைக்கொண்டு, எல்லா உயிர்களும் இப்போது துன்பக் கயிற்றாற் கட்டப் பட்டிருக்கின்றன வென்றும், இத் துனபக்கயிற்றை அறுக்கவும் இன்பவெள்ளத்தைப் பெருக்கவுந் தம்மால் ஆகாமையின், துன்பத்தினின்றுந் தம்மை விடுவித்து இன்பத்தை ஊட்ட வல்ல முழுமுதற்கடவுளின் உதவியைப் பெறுதற்கு அவை பெரிதும் விரும்பி நிற்கின்றன வென்றும் நாம் தெளிவாக அறிந்து கொள்கின்றனம் அல்லமோ? இன்னும் இறப்பு பிறப்பு, நோய், மூப்புக், கவலை, இழப்பு முதலான பலதிறப்பட்ட வடிவங்களிற் றோன்றுந் துன்பங்கள் அத்தனையும் எல்லா உயிர்களையும் வருத்தி வரக்காண்கின்றோ மாதலால், இத் துன்பங்கள் உடையோர் வேறுவகையில் எவ்வளவு உயர்ந் தோராயினும் உயிர்களே யல்லாமற் கடவுளாகமாட்டார். இவ்வுயிர்களை இத் துன்பத்தினின்றும் மீட்டு, இவற்றிற்கு இன்பத்தைத் தருங் கடவுள் ஒருவரே எவ்வகைத் துன்பமும் இல்லாதவர், எல்லா இன்பமும் ஒருங்கே உடையவர். இதுவே கடவுளுக்கு உண்மையான தன்மையென்பதை எல்லாச் சமயிகளும் உடன் பட்டு உரைப்பார்களாயினுஞ், சைவ சமயத்தில் மட்டும் அவ்வுண்மை முன்னுக்குப்பின் மாறில்லாமற் காணப்படு கின்றது; மற்றைச்சமயத்தவர்களோ இறப்புப் பிறப்பு முதலான மேற்கூறிய துன்பங்களிற் கிடந்து உழன்ற வர்களை, அவரவரிடத்துள்ள சிற்சில சிறந்த தன்மைகளைக் கண்டும் வலிய செய்கைகளைக் கண்டும் முழுமுதற் கடவுளாகத் துணிந்து வணங்கி வருகின்றனர். நாடக அரங்கத்தில் அரசகோலந் தாங்கிவந்து ஆடுவோன் உண்மையில் அரசன் ஆகாமைபோல, இறைவனருளாற் சிற்சில உயர் நலச் செய்கைகளைப் பெற்றவர்கள் அவற்றால் அவ்விறைவனைப் போற் கருதப்படினும் அவர் உண்மையில் அவ்விறைவனாக மாட்டார். சைவசமயிகள் வணங்கி வருவது, இன்ப வடிவான கடவுளே யல்லாமற் பிற உயிர்களுள் ஒன்றும் அன்றென்பதற்கு அடையாளம் என்னென்றால், அன்பு அல்லது இன்பம் என்று பொருள்படுஞ் சிவம் என்னுஞ் சொல்லையே முழுமுதற் கடவுளுக்குச் சிறப்புப் பெயராக வைத்து வழங்குவதும், அச் சிவத்திற்கு இறப்புப் பிறப்பு முதலான எவ்வகைத்துன்பமும் சிவபுராணங்களிற் காணப் படாமையுமேயாம். இவ்வுண்மையை வலியுறுத்தும் பொருட்டே, யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்; மற்று அத்தெய்வங்கள் வேதனைப்படும் இறக்கும் பிறக்கும் மேல்வினையுஞ் செய்யும்; ஆதலால் இவையிலாதான்அறிந்தருள் செய்வனன்றே என்பது சிவஞானசித்தியாரிலும் அருளிச் செய்யப்பட்டது. இங்ஙனம் இன்பவடிவாக விளங்கும் முதல்வனையே வணங்குஞ் சைவசமயிகள் எவ்வுயிர்க்கும் இன்பத்தையே செய்யக் கடமைப்பட்டவர்களா யிருத்தலால், இன்பத்திற்கு மாறான துன்பத்தைத் தருங் கொலைத்தொழிலை எவ்வுயிர் களிடத்துஞ் செய்யாதவர்களாயும், அக் கொலைத் தொழி லால் வரும் ஊனைத் தின்னாதவர்களாயுஞ் சீவகாருணிய ஒழுக்கத்தில் தலைசிறந்து நிற்கின்றார்கள். சீவகாருணிய ஒழுக்கம் மற்றைச் சமயத்தவராலுங் கைக்கொள்ளப்படினும், அது சைவசமயி களுக்கே பழமைக்காலந் தொட்டுச் சிறந்த உரிமையாகி வருகின்றது. மற்றைச் சமயத்தவருந் தம்மிற் புலால் தின்னாத ஒருவரைப்பார்த்து `அவர் சைவராகி விட்டார் என்று சைவப்பெயராற் கூறுதலின், சீவகாருணிய வொழுக்கஞ் சைவசமயிகளுக்கே சிறப்புரிமைப் பொருளாய் விளங்குகின்றது. இனி, இங்ஙனமெல்லாம் பலவகையாலும் உயர்ந்த சைவசமயத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிகள் என்னென்றால், சைவசமயத்திற் பிறக்குந் தவம் பெற்றவர்கள் முதலில் தம்மால் வணங்கப்பட்டு வரும் முழுமுதற் கடவுளான சிவத்தின் இயல்புகளை அறிந்தோரிடத் தும் நூல்களிடத்துங் கேட்டும் படித்தும் நன்கு அறிந்துகொள்ளுதல் வேண்டும். பெண்பாலாரே பிள்ளைகளின் நல்லறிவு வளர்ச்சிக்கும் நல்லொழுக்கத்திற்குங் காரணராக இருத்தலால், பெண் மக்களுக்குச் சைவசமய நூல்களையும் நல்லொழுக்கங் களையும் அறிந்தோர் வாயிலாகக் கற்பித்து வருதல் வேண்டும். ஆண்பிள்ளைகள் மற்றக் கல்வியோடு சைவசமய உணர்ச்சியும் பெற்றுவரும்படி கல்விச்சாலைகள் ஆங்காங்கு திறப்பித்து, அதனைச் செவ்வையாகப் புகட்டி வருதல் வேண்டும். தேவார திருவாசகங்களுக்குப் பொருள் தெரிந்து கொள்வதோடு, இனிய குரலில் அவற்றை இசையுடன் ஓதுதற்கும் ஒவ்வொரு வரும் பழகிக்கொள்ளுதல் வேண்டும். இனி, ஓர் உயிரைக் கொலை செய்யாமையுங், கொன்று அதன் ஊனைத் தின்னாமையுஞ் சைவசமயத்திற்குச் சிறந்த அறமாய் இருத்தலால், எல்லாருஞ் சீவகாருணிய வொழுக் கத்தைக் கைப்பற்றி யொழுகும்படி எவ்வெவ் வகையால் முயற்சிசெய்தல் வேண்டுமோ அங்ஙனமெல்லாஞ் செய்து அதனை எங்கும் பரவச் செய்தல் சைவர்க்கு இன்றியமையாத கடமையா யிருக்னிறது. இனித், தமிழ்மொழியின் அமைப்பும் அதன் இயற்கை யுஞ் சைவசமய உண்மையோடு மிகவும் ஒன்றுபட்டிருத்த லால், அதனை எல்லாரும் நன்றாகக் கற்று வேறுமொழிக் கலப்பில்லாமற் செவ்வையாகப் பேசவும் எழுதவும் அதிற் புதிய புதிய நல்லநூல்கள் இயற்றவும் பழகிக் கொள்ளுதல் வேண்டும். தமிழ் அல்லாத மற்றமொழிகளில் வருத்தப்பட்டுச் சொல்லுஞ் சொற்களுஞ், சினந் துன்பம் வந்தாற் பிறக்கும் உரத்த ஓசைகளும் இளைத்த ஒலிகளும் நிரம்பிக் கிடத்தலால் அவையெல்லாஞ் செயற்கை மொழிக ளென்றுந், தமிழில் வருத்தமின்றி இயல்பாற் பிறக்குஞ் சொற்களே நிறைந்து சினத்தாற் பிறக்கும் வெடுவெடுப் போசையுந் துனபத்தாற் பிறக்கும் இளைப்பொலியும் இன்றி, எல்லாம் இனிய குணத்திற் பிறக்கும் மெல்லோசை களாய் இருத்தலின், தமிழ் இன்பவடிவாய் விளங்குஞ் சிவத்தோடு ஒத்த இன்பம் வாய்ந்த தெய்வ மொழியாம் என்றுஞ் சைவசமயிகள் இவ் வுண்மையைக் கருத்திற் பதியவைத்து அதனை வளரச் செய்தற்கான எல்லா முயற்சிகளையுங் குறைவறச் செய்தல் வேண்டும். நம் செந்தமிழ் மக்களில் நூறாயிரம்பேர்க்கு இரண்டு மூன்று பேரே சிறிது படித்தவர்களா யிருக்கின்றார்கள்; மற்றவர்கள் எல்லாருங் கல்வியறிவு இல்லாதவர்களாயும், அறியாமைச் சேற்றிற் புதைந்து கிடப்பவர்களாயும் இருக்கின் றார்கள். உலகத்தில் இவ் விந்தியநாட்டைத் தவிர மற்றைப் பெரும்பாகங்களில் இருப்பவர்க ளெல்லாருங் கல்வியிலும் ஞானத்திலும் உழவிலுங் கைத்தொழிலிலும் வாணிகத்திலும் நாளுக்குநாள் மேம்பட்டுவர, நமது நாட்டிலுள்ளவர்களோ- அவர்களிலுந் தமிழர்கள், இவற்றில் மிகவுந் தாழ்ந்த நிலைமை யிலிருக்கின்றார்கள்! இவர்களை இனிக் கல்விச் சாலைகளுக்கு அனுப்பிக் கல்விகற்பித்தல் இயலா தாகலின், ஊர்கள்தோறும் நகரங்கள்தோறுங் கழகங்கள் வைப்பித்து அவற்றின் வாயிலாகத் தமிழுஞ் சைவமும் உணர்ந்த அறிஞரைப் பல இடங்கட்கும் அனுப்பித், தமிழ் நூற் பொருள்களையும் சைவநூற்பொருள்களையும் விளக்கமாக அறிவுறுத்திவருதல் இப்போது உடனே செயற்பாலதான நன் முயற்சியாகும். தமிழ்கற்றோர் தொகை மிகவுஞ் சுருங்கிப் போதலால், `தமிழ் அறிஞர்க்குப் பொருள் ஏன் வேண்டும்? என்று ஏளனமாய் உரையாமல், அவர்க்கு ஏராளமாய்ப் பொருளுதவி செய்து, கல்வியில் எல்லை யின்றிக் கற்று அதனைப் பிறர்க்கும் பயன்படுத்தும்படி அவருக்கு மனக் கிளர்ச்சியினை விளைவித்தல் வேண்டும். இனிச் சிவபிரான் கோயில்களில் நிறுத்தப்பட்டிருக்குந் திருவுருவங்கள், இறைவனுக்கு என்றும் உரிய அருளுரு வத்தையும், அன்பர்க்கு அருள்செய்யும்பொருட்டு முதல்வன் ஓரொருகாற்கொண்ட திருவுருவத்தோற்றங்களையும் அன்பர்க்கு நினைவில் எழுப்புதற் பொருட்டு அமைத்த வடிவங்களேயாகும். இவ்வடிவங்களை வணங்கச் செல்லும் அன்பர்கள் இவற்றைக் கண்டவுடன் ஐயன் அருள் உருவங் களை நினைந்தவராகி அகங்குழைந்து உருகுவர். ஆண்ட வனதருளுருவத்திற்குச் செய்யும் எண்ணத்துடன் தம் அன்பினாற் பூவும் நீரும் இட்டு ஆடையணிகலன்கள் சாத்தி அவ்வடிவங் களை வணங்குதலும் அவ் அன்பிற்கு அடையாள மாகும். இறைவனருளைப்பெறுதற்கு ஞானமும், அதன்வழித் தோன்றும் பேரன்புமே வாயில்களாதலாலும், இக்காலத்தில் மக்களிற் பல்வகைக் கூட்டத்தாரும் அறிவைப் பெருகச் செய்து, அறிவாலும் அன்பாலும் ஆண்டவனை அடைதற்கு மிக முயன்று வருதலாலுஞ் சைவசமயிகளான அறிஞரும் ஞானநெறியிற்றமது கருத்தை மிகுதியாய்ச் செல்லவிடுதல் வேண்டுமே யல்லாமல், வெறுங் கர்மநெறியிற் புகுந்து ஒப்பனைகளின் பொருட்டுந் திருவிழாக்களின் பொருட்டும் ஆயிரக்கணக்காகவும் இலட்சக் கணக்காகவும் போட்டி போட்டுக் கொண்டு பொருள்களைச் செலவழித்துச் செருக்கடையலாகாது. எல்லா உலகங்களையும் எல்லாப் பொருள்களையும் உடைய பெருஞ்செல்வரான நம் ஆண்டவனுக்கு ஏழை மக்கள் நல்ல அல்லா வழிகளில் ஈட்டிய பொருளைத் திரள்திரளாகக் கொடுத்தாலும், அவன் அதனைக்கண்டு ஏமாறித் தனது அருளைக் கொடுத்து விடுவான் அல்லன். நம் ஐயனுக்கு வேண்டுவன அன்பும் அன்பொழுக்க முமேயாகும். அதுபற்றியன்றோ திருநாவுக் கரசு நாயனாரும், நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன் பொக்கம் மிக்கவர் பூவும் நீருங்கண்டு நக்கு நிற்பன் அவர்தமை நாணியே என்று அருளிச் செய்தனர். ஆதலால், திருக்கோயில்களுக்குச் செய்யுஞ் செலவை இயன்றமட்டுஞ் சிறுகவே செய்து, மிச்சப் பெரும் பொருளைச் சிவஞான வளர்ச்சிக்குஞ், சிவஞானிகட்கும், பழுது பட்ட கோயில்கள் சத்திரங்கள் குளங்கள் சோலைகள் பாட்டைகள் முதலியவற்றின் திருப்பணி கட்குஞ் செலவு செய்து சைவர்கள் எல்லாருஞ் சிவபெருமான் திருவருளைப் பெறுவார்களாக! சைவ சமய பாதுகாப்பு - முற்றும் - பிரசண்ட மாருதம் 1898-இல் சித்தாந்த ஞான போத விளம்பரத்தில் கண்டுள்ளபடி இந்நூல் வெளிவந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பிரசண்ட மாருதம் திருநெல்வேலிச் சாணாரைக் குறித்துக் கால்டுவெல் பிஷப்பு அவர்கள் எழுதிய உண்மை வாசகத்தால் சற்குண ரென்பவர், மயங்கி, கலங்கி, தியங்கி இன்னது செய்யலாம் இன்னது தவிர்க்கலாம் என்பதைச் சிறிதும் உற்று நோக்காது மண்ணுலக கற்பகவிருக்ஷங்களாகிய பனைகளிலே காலை யிலும் மாலையிலும் ஏறியிறங்குந் திருநெல்வேலிச் சாணார மூர்த்திகளுள் அநேகரை, அவ்வாறு ஏறி யிறங்கி வருத்த முறாது.... தூத்துக்குடி, நாசரேத், பாளையங் கோட்டை, மெய்ஞ்ஞானபுரம், சாயர்புரம், நல்லூர் முதலிய தானங்களிலே தாபிக்கப்பட்ட தமிழ், இங்கிலீஷ் வித்தியா சாலைகளிலே படித்தும், பனைமரங்களில் ஏறியிறங்கும் போதெல்லாம் கால்களிலே இட்டுக்கொள்ளும் தளைகளை விடுத்து..... நாற்காலி முதலிய ஆசனங்களிலே வீற்றிருந்து புதகங்கள் படிக்கவும் காகிதங்கள் எழுதவும், வாசிக்கவும் செய்தும் இடுப்பிலே இறுக்கிப் பூட்டப்பட்ட சுண் ணாம்புப் பெட்டியையும் கள்ளுக் குடுவையையும் விடுவித்து அவ்விடுப்புகளிலே தரிப்பதற்கு உயர்ந்த விலை யுள்ள நல்ல வதிரங்களை உடுக்கக் கொடுத்து சோனை யிருளையும் ஓட்ட வல்ல பிரகாசமாகிய (கோதுடை) பாரமாகிய கத்திகளைப் பாளை சீவும் போதும், நுங்கு சீவும் போதும் கைகளிலும் மற்றைக் காலங்களிலே பின் கச்சைகளுள்ளும் வைத்தலைத் தவிர்த்துக் காகிதங்கள் வெட்டவும் பேனா திருத்தவும், திருத்தியபின் சட்டையிலே வைக்கத் தகுந்த மிக்க மிருதுவாகிய பாரமற்ற பேனாக் கத்திகளை எடுத்தும் ஏறியிறங்குங் காலங்களிலெல்லாம் பனைமர மட்டைகளும் பனஞ் சிலாம்புகளும், நெஞ்சு களையும் கால்களையும் உரோஞ்சி வருத்தா வண்ணம் பூட்டப் படுகின்ற தோற்பரிசை களையெல்லாம் நீக்கி வெயிற்சூடு பனிமழைக் குளிர் முதலியன ஊடறுத்துப் புகுந்து வருத்தவொட்டாத கருப்புச் சட்டை கம்பளிச்சட்டை களைக் கொடுத்தும் சதா அழுக்குக்கும் பேனுக்கும் புழுதிக்கும் உறைவிட மாயிருந்த ஆலுசடைத் தலைகளை யெல்லாம் கத்தரித்துச் செவ்வை செய்து ஐரோப்பிய நாகரீகத்திலே தோற்றுவித்தும் கரிப்பு களினும், கரிந்து இருண்ட கால் முதலிய உறுப்புகளை யெல்லாம் சௌக் காரம் முதலியவைகளால் உரோமம் வெண்மையாகும் வண்ணஞ் செய்தும், கால்களிலே போடப்பட்ட பனை யோலை, பனைமட்டைப் பாதரக்ஷை களை விடுவித்து உயர்ந்த தோற் செருப்புகளையும்...... பிரகாசிக்கின்றது. உண்டுடுத்துக் களித்து வண்டியேறத்தக்க நாகரீகத் திலே கொண்டுவந்தும், கரிச்சட்டிகளும் கரிப்பானைகளும் சுண் ணாம்புப் பெட்டிகளும் ஏறுபெட்டிகளும் தளைகளும் வடவா முகாக்கினியில் இட்டாலும் வேவாத மிக்க அழுக்கேறிய வதிரங்களுமேயன்றிப் பிறிதொன்றுங் கிடைக்கப் பெறாத சாண் குச்சுகளில் அநேகத்தை வெள்ளிய பித்தளைப் பாத்திரம் வெண்கலப்பாத்திரம் செப்புப் பாத்திரம் தேக்கம் பெட்டி, பலாப்பெட்டி தோதகத்திப் பெட்டி பீரோமேசை கட்டில் பெஞ்சு சிவப்புச்சட்டை கருஞ்சட்டை கம்பளிச் சட்டை முதலிய வைகளால் நிறைந்த பெரும் வீடுகளாக அமைக்கச்செய்தும், சிலர் சிறிதும் சிந்தியாதும் அஞ்சாதும் தங்கள் நாடான் நாடார் என்ற பெயரை மாற்றிப் பிள்ளைப் பட்டந்தரிக்க ஏதுவாக்கியும், தங்கள் மனைவிகளுக்குப் பெருந்தாலிகளைக் கட்டாது மற்றைத் தம்மின் உயர்ந்த ஜாதியார் போலச் சிறந்த சிறிய தாலிகளைக் கட்டச் செய்தும் மற்றை ஆபரணங்களையும் முன் கூறியவாறு மாற்றச் செய்தும், வேடர் சொற்களிலும் கடிய அறு, இறு. கறவு மிரிசன் முதலிய பேச்சுக்களை விடுத்து நல்ல நாகரீக மான வார்த்தைகளினாலே பேச வைத்தும் வந்த பாதிரி மார்களுள் ஒருவராகிய அந்தக் கால்டுவெல் பிஷப்பை யாவர் வையினும் வையாதே நிந்திக்கினும் நிந்தியாதே என்ற தனது ஆண்டவ ராகிய கிறிது நாதர் சொல்லிய வாக்கை மறந்தும், எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்ற திருவாக்கையும் மறந்து சாமுவேல் சற்குணர் பீயே கால்வெல் பிஷப்பும் திருநெல் வேலிச் சாணாரும் எனப் பெயரிட்டுத் தாம் வெளிப்படுத்திய புதகத்திலே பிஷப்பையும் வேதவவையையும், நிந்தித்த நிந்தையையுங் கண்ட கேட்ட யாவரும் பாதிரிமாரிடத்தி லிருந்து இனிமையாகப் பணத்தை வாங்கி உண்டுவிட்டு அவர்மீது பத்திரபாணத்தை மீளச் செலுத்திய செய்ந்நன்றி கொன்றவர் சற்குணரே எனத் தூற்றாது விடார் களன்றோ? திருநெல்வேலிச் சாணாரைக் குறித்துப் பிஷப்பவர்கள் எழுதியவவை யெல்லாந் தாமெழுதிய ஓர் புதக வாயிலாக மறுத்துவிட்டேனென்று தனது பந்துக்கள் சிநேகிதர் முதலாயின வரோடு புகழ்ந்து மகிழ்ந்து செருக்குற்றுத் திரியும் சற்குணரது போலி நியாயங்களனைத்தையும் நியாய வச்சிர தண்டங் கொண்டு புடைத்துத் தகர்ந்தெறிந்து விடுவாம். பிஷப்புத் திருநெல்வேலியை விடுவித்துத் தமது தேசத்துக்குப் போகு முன்னரேதானே சற்குணர் தாமெழுதி வெளிப்படுத் தாது அவர் போயபின்னரெழுதி வெளிப்படுத்தினமை பிஷப்பு இங்கிருந்த போது வெளிப்படுத்திவிட்டால், அவர் ஓர்போது தாம் வெகு பணம் செலவிட்டுத் தொடங்கிய பிரயாணத்தை உடனே நிறுத்திவிட்டு அப்புதகத்துக்கு மறுப்பெழுதி விட்டால், தான் சிறிது காலமாயினும் தனது பெண்டு பிள்ளைகள் பந்து சிநேகர்களோடு தான் பொய்ப் புழுகுகளைப் பொறிந்து பொறித்த போலிப் புதகத்தைக் குறித்து மகிழும் மகிழ்ச்சி யொழிந்துவிடுமே யென்ற பயத்தி னாலேயோ, பிறிது காரணத்தினாலயோ தெரிந்திலது. நெடுங்காலமாகத் திருநெல்வேலி முதலிய இடங்களிலே யிருந்து தமிழ்ப்படிப்பி னாலுந் தமிழ்ச் சகவாசத்தாலுந் தமது அநுபவத்தினாலும் அநேக விஷயங்களை யறிந்து அநேக புதகங்களை ஆங்கிலேய பாஷையிலே வெளிப்படுத்தினவ ராகிய கால்டுவெல் பிஷப்பவர்கள் திருநெல் வேலிச் சாணாரைக்குறித்தெழுதிய புத கத்துக்குச் சற்குணர் மறுப்பெழுதத் தொடங்கினமை சிங்கத் தைப் பூனைக் குட்டியும், கீரியைச் சர்ப்பமும், சூரியனை மின் மினியும், எதிரத் துணிந்தமை போலாகுமன்றோ? பிஷப்புத் தாம் அச்சிட்ட அப் புத கத்தினாலேயே அவர் தமக்கு மதிப் பில்லை யெனவும் பிறர் தமக்குத் திருப்தியில்லை யெனவும் சற்குணர் சாற்றுகின்றார். இது முக்காலத்தினும் பொருந்தாது. என்னை? பிஷப்பு சாணா ரைப்பற்றி யெழுதியவை களெல்லாம் சுருதிக்கும் யுக்திக்கும் அநுபவத்துக்கும் ஒத்திருக்கின்றனவென்று எவ்வெவ ரும் அங்கீகாரஞ் செய்கின்றமையினால் பிஷப்புக்கு அதிக மதிப்பும் பிறர் தமக்கு அதிக ஆநந்தத்தையும் விளைவிக்க விளைவிக்கச், சற்குணர் வஞ்சித்தெழுதிய போலிப்புதகம் சாதிர யுக்தி அநுபவங்களுக்குச் சிறிதாயினும் ஒவ்வாது கற்பனா வாசகங்கள் அடங்கியவென எவரும் சொல்லு கின்ற மையால் அந்தச் சற்குணர் எழுதியவைகள் துர்க்குண முடையன வென்று சொல்லவே, அவர் தமக்கு நிந்தையும் பிறர் தமக்கு நகைப்பையும் விளைவிக்கின்றன என்பதை அவர் தமது நெஞ்சிலே தட்டிக் கேட்டால் அது உண்மை பேசும்! பேசும்! பிஷப்பு தாம் எழுதிய புதகத்துக்குத் திருநெல்வேலிச் சாணாரெனப் பெயரிடுவது அடாதெனவும், அவர் அப்புதகம் எழுதியபோது இடையன் குடியிலே இருந்தா ரெனவும், இவர் சென்னபட்டணத்துக்குப் போக்குவரவு செய்த போது திருநெல் வேலிப் பெரிய தெருப்பாதையே யன்றித் திருநெல்வேலியின் வடக்குமறியார் மேற்குமறியார் எனவும், திருநெல்வேலிக்கு வடக்கிலுள்ள சாணார் வியாபாரம் நடாத்தும் யூகத்திலே எந்தச் சாதியாரிலும் உயர்வொப்பிலாதவரெனவும் பிஷப்பு சாணா ரைக் குறித்து மூடர் படிப்பில்லாதவர் என எழுதியவை பொய் எனவும், அவர் அப்புதகத்தைப் பிரசுரஞ்செய்தற்கு இருபத் தேழு வருஷங்களுக்கு முன்னேதானே சிவகாசியிலிருந்து கவர்ன் மெண்டு உத்தியோகதர் ஒருவர் சாணார் வியாபாரத் தினாலும் கீர்த்தியினாலும் நாடாள்கள் என்று சொல்லப் படுகின்றார்கள் எனவும், திருநெல்வேலியின் ஒருகாற் பங்கு தானும் இல்லாத அதன், தென்கிழக்கு மூலையிலிருக்கும் சாணார் நிலைமையை மாத்திரம் அறிந்துவிட்டு, அந்தப் பிஷப்பு அறியாமையும் துர்ப்போதனையும் மேற்கொண்டு விரைவில் இங்கிலாந்துக்குப் போய்ப் பொய் புகுத்திய புதகத்தை வரைந்து வெளியிட்டனர் எனவும் சொல்லிச் சற்குணர் உறுமுகின்றார். இந்தியாவிலே பிறந்தவர்கள் இங்கிலாந்தையாயினும் அமெரிக்காவையாயினும் சீனாவையாயினும் மலாக்காவை யாயினும் நேரே போய்ப்பாராது அவர்கள் தாந்தாமிருந்த இடங்களிலிருந்து அவ்வத்தேச சரித்திரங்களைக் குறித்துத் தாங்கள் வைத்திருக்கும் புதக வாயிலாக அறிந்த அறிவும் புதகங்கள் மாத்திரத்தால் அறியக்கூடாதவைகளைப் படித் தவர்வாய்க் கேட்டல்வாயிலாக அறிந்த அறிவும், அவ்வாறு, இந்தியா இலங்கை முதலிய தேசங்களை நேரே அடைந்து பாராவிடினும் அவ்வத்தேச சமாச்சாரங்களை எல்லாம் பிறந்த இடமாகிய லண்டனிலிருந்தே வந்து அவ்வவை களுக்கு இசையச் சட்டங்கள் ஏற்படுத்திப் பரிபாலனஞ் செய்யும் இராணிய வர்கள் முதலாயினோர் அறிந்த அறிவும், பொய்யாகு மன்றோ? இவ்வாறு, ஒவ்வொருவனும் தன் தன் வீட்டிலே இருந்து பிறவீடுகளிலே நடக்கும் சங்கதிகளையும் தன்தன் தேசங்களிலும் பிறவிடங்களிலும் சம்பவிக்கும் சமாசாரங் களையும் அறிந்த அறிவும் பொய்யாகுமன்றோ? பனை, தென்னைமரம், மலை முதலியவற்றில் ஏறினாலும் அடைய வொண்ணாத சூரிய சந்திர கிரக நக்ஷத்திராதி களுடைய தூரங்களையும் மற்றை விபரங் களையும் தூரதரிசி யந்திரம் முதலிய கருவிகளினாலே கணக்குப்பூட்டி அறிவைப் புகட்டும் வான சாதிரங்களால் அறிந்த அறிவும் பொய்யாகு மன்றோ? பூமியின் உட்பாகத்திலே வெகுதூரத்தின்கண் மண்ணடுக்கு வகைகளையும் கல்லடுக்கு வகைகளையும் பிறவற்றையும் கூறும் பூமி விவரண சாதி ரத்தால் அறிந்த அறிவும் பொய்யாகு மன்றோ? கத்தி யினாலே நேரேநின்று பிரித்தறிய இயலாத காற்றைப் பிராணவாயு உப்பு வாயுக்களாகப் பிரிக்கும் இரசவாத யந்திரங்களும் உளவாம் என அறிந்த அறிவும் பொய்யாகு மன்றோ? இவ்வண்ணம் நேரேபோய்ப் பார்த்து அறியாத பொருள்களும் சமாசாரங் களும் பொய்யென்று சொல்ல நேரிடுமன்றோ? இவற்றை யோசியாது இடையன் குடியிலி ருந்து திருநெல்வேலி யிலுள்ள சாணாரைக்குறித்து இழி வாகப் பிஷப்பு எழுதினமை அப்பிஷப்பின் மௌட்டிகத் தனமென்று சாதிக்க முயன்ற சற்குணரை நோக்கி, நீரும் இக்காலத்திலே இருந்து உமது கண்ணும் காலும் எட்ட வொண்ணாத முற் காலத்திலே இருந்த க்ஷத்திரியர்தான் சாணாரென்றும், சாணார்தான் க்ஷத்திரிய ரென்றும் எழுதத்துணிவதற்கு நேரே நின்று பார்த்தீரோ என்ற வினாவினால் அவருடைய வாயை அடக்கி விடுவேம். இங்ஙனம் பார்த்தறியாது எழுதியவைகளை அநுபோகத்தி னாலும், யுக்தியினாலும், சாதிரத்தினாலும் ஒத்தவைகளை எழுதக் கூடாதென்னும் வீண் வழக்கை விளைத்து, யூகத்தினாலே சாணாரச் சாதியை வென்ற சாதியார் இல்லை யென்று பொரிமாவை மெய்ச்சினாளாம் பொக்கு வாய்ச்சி என்ற பழமொழிப்படி தம்மைத் தாமே புழுகிக் கொள்ளுகின்ற சற்குணர் யூகம், மயூகம்! மயூகம்!! இடையன்குடியிலிருந்து பிஷப்புத் திருநெல்வேலி வழியாகச் சென்னபட்டணத்துக்கு ஓர் முறையாயினும் ஓர் காலத்திலாயினும் போகாவிடினும் அவர் இடையன் குடியி லிருந்து திருநெல்வேலிச் சாணாரைப்பற்றி எழுதுவதற்கு அவருக்கு வன்மையில்லாமற் போவதற்குக் காரணம் என்னை? திருநெல்வேலிச் சாணாரைப்பற்றி எழுதுவதற்குத் திருநெல் வேலி வந்திருந்துதான் சாணாரைப்பார்த்து அறியவேண்டியது என்னை? இடையன் குடியிலும் பிறவிடங் களிலுமிருந்து திருநெல்வேலிச் சாணாரை நெடுங்காலம் அநுபோகத்தினாலே நீடிய வயதோடு இருந்து அறிந்து அக்காலத்திலே அவ்வூர்ச் சாணாரைக்குறித்து அவர் வெளிப்படுத்திய புதகத்தை இப்போது பிரவேசப் பரீஷை, பீயே பரீக்ஷைகளுக்குரிய பாடங்களை நெட்டுருச் செய்து படித்தலிலே தங்கால முழுமை யும் போக்கி அற்ப அறிவோடு அற்ப அநுபவத்தை மாத்திரம் உடைய இவரா இங்ஙனம் கண்டிக்க முயன்றார்? பிஷப்பு ஐரோப்பாவை விடுத்து இந்தியாவில் இறங்கிய நாண்முதலாகப், பதினான்கு வருஷம் நித்திரையின்றி இராமசுவாமிக்கு துணை யாக விழித்துக் கொண்டிருந்த இலக்குமணப் பெருமாளைப் போல, இந்தச்சற்குணரும் ஐம்பது வருஷகாலமாக அந்தப் பிஷப்பைப் பிரியாது இருந்தாலன்றி, பிஷப்புத் திருநெல் வேலியின் வடக்கு மேற்கு அறியாதவரென்று சொல்லத் துணி யார். இங்ஙனம் வடக்கு மேற்கு அறியாதவரென்று கோபிக்கின்ற சற்குணர், பிஷப்பை இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என்னும் முக்காலங்களிலும் பிரியாதவர் என்பதும், இந்தச் சற்குணர் பிறப்பதற்கு முன்னே பிஷப்பு வந்திருந்தார் ஆதலினால் கிறிதுநாதர் பூமிக்கு வருவதற்கு முன்னும், குமாரனாகிய தாம் பிதாவாகிய யேகோவாவோடு இருந்தார் என்று பைபிள் புதகம் சொல்வது போல, இந்தச் சற்குணரும் தாம் பிறத்தற்கு முன் தொட்டுத் தமது பிதாவாக உபசரிக்கப்படும் பிஷப்போடு இருந்தாரெனவும் பெறப்படும். பெறப்படவே, இதைக் கேட்கிற சிறு பிள்ளைகளும் நகையாடாது விடார்களன்றோ? ஓர் பொருளை ஓர் இடத்தில் ஒருவன் மற்றொரு வனுக்கு இருந்த தாகச் சொன்னால் கேட்டவன் அதை அவ்விட முழுமையுந் தானும் பிறருமாக நன்றாகப் பரிக்ஷித்துப் பார்த்த பின்னன்றோ அப்பொருள் அவ்விடத்தில் இல்லை யென்று சாதிக்கலாம். அதை விடுத்து ஒரே முறையிலே இல்லை யென்று சாதிப்பது எங்ஙனம்? திருநெல்வேலியின் வடபகுதியினுள்ள சாணார் வியா பாரம் நடாத்தும் உபாயத்திலே ஓர் சாதியாரும் தமக்குச் சமமில்லாதவர் என்றும் இவர் புழுகுகின்றார். இதையும் இப்போது இவரே சொல்லக்கேட்டோம். சாதியார் என்றது இவர் எவரையோ? எந்தெந்தத் தேசங்களிலும் எந்தெந்தச் சாதியாருள்ளும் வியாபார முதலிய எவ்வெத் தொழிலிலும் யூகமுடையவர் உளர் என்று, பத்திரிகைகளும், புதகங்களும் பெரியவர்களும் சொல்லக்கேட்டும், பின் தமது பொய்ந் நிறைந்த வாயைப் பிளப்பது யாது காரணத்தினாலோ அறியேம். கோடா கோடி செல்வர்கள் அகண்ட ஐசுவரியத்தி னாலும் வியாபாரத்தினாலும் தேக்கெறிந்து சிறந்து விளங்கிக் கொண்டிருப்பவும், இதைக்கேட்டாயினும் அறியாது, அரசனை யடைந்திடா ரெனில் எவ்வெவ ராக்கமும் இனிது போலுமால் (இராசா வினது பெரிய செல்வத்தை ஒருவன் போய்ப் பாராதிருந்தால் அவன் தனது செல்வந்தான் எல்லோர் செல்வத்திலும் இனியது போலும் எனக் கருதுவான்) என்ற வாக்கியத்தினாலே தனது சாணா ரச்சாதியே எல்லாச் சாதியாரினும் வியாபார நடாத்து தலிற் சிறந்தது என்று புழுகிய பொய்வாசகம் பொடிபட்டு ஒழியும். சாதிரப் பிரகாரம் வியாபாரத்திலே பொய்யு மெய்யும் உண்டு என்பதைச் சாதாரணமாக எவரும் ஒத்துக்கொள்வர். மற்றச் சாதியார் எல்லாரும் பொய் பேசுதல் பாவம் என்பதை நினைந்து தாம் வாங்கிய பொருளை வாங்கியபடியே ஏறக்குறைய விற்றுத் தங்கள் வயிற்றை வளர்ப்பாராகவும், இந்தச் சாணார் அறிவு நூற் பயிற்சி இல்லாதவராக, இதுபற்றித் தீத்தொழிலுக்கு அஞ்சாராக, இதுபற்றிப் பழிபாவங்களுக்கு அஞ்சும் மற்றைச் சாதியாரிலும் இவர்கள் வியாபாரத்தைப் பெருக்க வல்லவர் என்ற கருத்து வகையினாலே தாம் ஓர் பொது வியாபார யூகத்திறமை யுடையவர் என்று சற்குணர் கூறினர் போலும். அங்ஙனமாயின், அவர் சொல்லியது ஒக்கும்! ஒக்கும்!! சிவகாசி வாசியாகிய கவர்ன்மெண்டு உத்தியோகதர் ஒருவர் சாணார் வியாபாரத் தினாலும் கீர்த்தியினாலும் சிறந்தவர் ஆதலினால் நாடாள்கள் என்று சொல்லப்படுகின் றார்கள் என்று எழுதியிருக்கிறார் என்கிறார். தங்களை வாழ வைத்தவரும் உண்மையுரைத்த தமது குருவுமாகிய பிஷப்பினும் பெயர் சுட்டப்படாத ஒரு கவர்ன்மெண்டு உத்தியோகதர், உயர்ந்தவர் என்று கொண்டனரோ? தாமும் கவர்ன்மெண்டு உத்தியோகதர், அவரும் கவர்ன்மெண்டு உத்தியோகதர் என்ற உரிமைப்பாடு பற்றி பிஷப்பினும் உத்தியோகதன் நம்பப்படத்தக்கவன் என்று கொண்டனரோ? யானே கவர்ன் மெண்டிலேயே உயர்ந்த உத்தியோகம் பெற்றுக் கொண்டேன். இனிப் பாதிரிமா ரிடத்திலே யான் போக வேண்டிய ஆவசியகம் எனக்கு இல்லையே. மற்றையச் சாணாரை எல்லாம் பாதிரிமார் என் பொருட்டு வைதாற்றான் என்னை? செய்ந்நன்றி கொன்ற படுபாவிகள் இச்சாணார் என்று தூற்றினாற்றான் என்னை? நாமும் நமதுபெண்டுபிள்ளைகளும் இசையோடு வாழ்ந்தாற் போதும் என்ற சுவாபிமானத்தினாலே பிஷப்பைப் பார்க்கிலும் உத்தியோகதன் சொல்லியது உறுதி என்று வரைந்து விடுவோம் என்று வாயில் வந்தன சாற்றிப் புலம்பினரோ? நாடாள்கள் என்றமையினாலே வியாபாரத் தினாலும் கீர்த்தி யினாலும் ஓங்கினவர் என்று எந்த நூலிலே கண்டார்? இவருக்குச் சான்றாக வந்த சான்றார் பெயர்தான் என்னை? வெளியிட்டா லாகாதோ? வெளியிட்டால் அவரது சான்றாண்மை வெட்டவெளியாமென்று பயந்தோ? சற்குணர் நாடாள்கள் என்பதற்கு நாட்டையாளுபவர் என வியாக்கி யானஞ் செய்கின்றார். அது பொருந்தாது. பின் அர்த்தம் யாது எனில், சொல்வேம், நாடாள்கள் என்பது, நாடு ஆள்கள் எனப் பிரிந்து ஆராயுஞ் சனங்கள் எனப் பொருள் கொள்ளும். பொருள்படவே, சாணார் பதநீர் இறக்குங் காலங் களையும், நுங்கு சீவுங்காலங்களையும், பனங்காய் அறுத்து வீழ்த்துங் காலங்களையும் கள்ளு இறக்குங் காலங்களையும் பதநீர் காய்ச்சிப் பதம்பார்க்குங் காலங் களையும், மற்றைப் பனைப் பிரயோசனங்களையும் எல்லாம் பெற்று அநுபவிக்குங் காலங் களையுந் தவற விடாது ஆராய்தலாகிய நாடுதலிலே வல்லவர்களாதலி னால் இவர்கள் நாடாள் களெனச் சுருதி யுக்தி அநுபவங் களுக்கு ஒப்பச்சொல்லப் படுவாரென்று வியாக்கி யானஞ் செய்வதே நீதியாகும். சாணார் என்பதையும் சாணார், சான்றாரென்னுஞ், சொல்லின் திரிபு என்று சொல்வதற்குப் பிரமாணமில்லை. அவ்வாறு சாணார் தான் சான்றாரென்றாலும், சான்றார் சான்றவரென்றாலும், சான்றார் சான்றோரென்றாலும் இம் மொழிகள் நேரே க்ஷத்திரியச் சாதியைக் குறிப்பதற்கு யாதொரு இலக்கியப் பிரமாணமு மில்லை. சாணார் நாடாரென்று சொல்லப்படுகின்றமையினாலே இதற்கு அர்த்தம் யாது என்பீராயின், நாடாரென்பது பணத்தினா லாயினும் உத்தி யோகத்தினாலாயினுஞ் சிறந்த சாணா ருக்கு மாத்திரம் உபசார மாய்ச் சொல்லப் படுதலினால் இச்சாணார் தங்கள் முன்னோர் கள்போல் இராது, பனைப் பிரயோ சனத்தை மிகுதியும் விடுத் தாராதலினால் நாடாரென்று சொல்லப்படலாம். மற்றுள்ள சாதி யாரிலும் இச்சாணார் நகரத்தை விடுத்துப் பனைகள் மிகுந்து செழித்து வளரும் நாடுகளைத் தேடி யங்கேவசிக்கு மியல்பு டையா ராதலின் நாட்டிலுள்ளாரென்று பொருள் பெற்று நாட்டா ரென்றாயிற்றெனவும் பொருள் கொள்ளலு மொன்று. நாடாள்களென்பதற்கும் இப்படியே நாட்டிலுள்ளா ரென்று அர்த்தம் முடித்தல் கூடுமோவெனில், அது நாட்டாட் களென்று வந்தாலன்றி அங்ஙனம் பொருள் கொள்ள இலக்கணம் இடங்கொடாது. இனி நாட்டை ஆண்டவர் என்று சற்குணர் கூறியபடி சாணாருக்குச் சொல்லலா மோவெனில், அதுவும் நாட்டார் என்று வந்தாலன்றிக் கூடாது. நாட்டை ஆண்டவர் ஆதலினாற்றான் நாடாள் களென்று வந்தது என்று சற்குணர் கூறியபடி சொன்னால், அவ்விலக்கணம் அதிவியாப்தியென்னுங் குற்றத்தைப் பொருந்துகின்றது. இராஜாக்கள், கோனார், தேவர் முதலிய ஜாதிகள் பலர்க்கும் வரம்பின்றி யோடுமாதலினென்று அறிக. கம்மாளர், பிராமணர்க்குரிய ஆசாரிப்பட்டத்தினால் உபசாரமாக யழைக்கப் படுதல்போலச் சாணாரும் நாடான் நாடாரென்று சொல்லப் படுகிறார்கள். சாணார் க்ஷத்திரிய ரென்பதற்குச் சற்குணர் சாதித்த நியாயங்களை முன்னரே சாதிப்பாம். திவாகரம், நிகண்டு என்னுமிரண்டினும் மக்கட் பெயர்த் தொகுதியிலே சூத்திரங்களும் பாட்டுக்களும் சாதி முறைப்படி பாடப்பட்டன வென்றும் திவாகரத்திலே (32)-ம் சூத்திரத்திற்கும் நிகண்டின் (25)ம் பாட்டிற்கு முன்னே பார்த்தால் எட்டாஞ் சூத்திரம் ஐந்தாம் ஆறாம் பாட்டுக்களும் பார்ப்பாரென்ற பெயரினாலே பிராமணரைக் குறித்தன எனவும், (32)ம் சூத்திரமும் (25)ம் பாட்டும் வைசியரைக் குறித்தன எனவும், எனவே க்ஷத்திரியர் பெயர், பிராம ணரைக் குறித்த செய்யுள் களுக்கும் வைசியரைக் குறித்த செய்யுள்களுக்கும், இடையிலேயே வரவேண்டும் எனவும், தமிழருள்ளே க்ஷத்திரியரென்ற ஜாதி இல்லாமையினாலே அந்த க்ஷத்திரியரைக் கருதிய சூத்திரங் களும் பாட்டுக்களும் இவைகள் தாமென்று எளிதில் நிச்சயித்தறிதல் கூடாது எனவும், ஆதலின், தொல்காப்பியத் திலே அந்தணர் திறத்தும் சான்றோர் திறத்தும் என்றது பிராமணரிடத்தும் சான்றோரிடத்தும் எனப்பொருள் படுகின்றமையாலும், சிந்தாமணியிலே நச்சினார்க்கினியர் பார்ப்பார் சான்றோ ருள் ளிட்டாருங் கூடிச் சீவகனைப் பெயரிட்டார் என உரைசெய்தமையானுந், தஞ்சை வாணன் கோவையிலே அந்தணரையுஞ் சான்றோரையு முன்னிட்டு வரைந்து என்று சொல்லப் பட்டமையாலும், பார்ப்பாரென்னும் பட்டப்பெயர் பிராமணருக்கு எப்படி வழங்குகின்றதோ அது போலச் சான்றோர் (கல்விமான்கள்) என்பதும், க்ஷத்திரி யருக்கே வழங்கப்படுகின்றது எனவும், எல்லோரும் பார்ப்பாராயிருந்தாலும் பார்ப்பாரென்றது பிராமணருக்கே சொல்வது போல, எல்லோரும் படித்தோ ரென்று பொருள்படுகின்ற சான்றோர் என்பதும் க்ஷத்திரி யருக்கே சொல்வதெனவும், பிராமணருக்கு ஞானக்கண் எப்படி ஆவசியகமோ அப்படியே க்ஷத்திரியருக்குக் கல்வி ஆவசி யகம் எனவும், இதுபற்றியே திருக்குறளிலே கல்வி அரசி யலுள் வைக்கப்பட்டதெனவும், அப்படியே பழ மொழி யிலும் நாலடியாரிலும் சொல்லப் பட்டது எனவும், மூன்று மூன்றான் என்பதை மூணு மூணான் என்றும், தோன்று தோன்றார் என்பதை தோணு தோணா ரென்றும் வழங்குவனபோலச் சான்றாரென்பது சாணா ரென வழங்குகின்றது எனவும், சான்றார் சான்றவர், சான்றோர் என்னும் சொற்கள் (மிகு) எனப்பொருள் கொள்ளப் படுகின்ற (சாலு) என்னும் பகுதியில் நின்று பிறந்தன எனவும், பிறக்கவே, சான்றவர் சான்றோர் சான்றாரென்பன ஒரு பொருள் கொண்ட மொழிகளா மெனவும், மேலே சுட்டிய நியாயங் களினாலே திவாகரத் திலே அறிவுடையோரை உணர்த்திவரும் சான்றோர் முதலிய பெயரும், நிகண்டிலே அறிஞரை உணர்த்திவரும் சான்றவர் என்ற பெயரும், க்ஷத்திரியரையே குறித்தன எனவும் அதனாலே சாணாரே க்ஷத்திரியரெனவும் சொல்லு கின்றார். இன்னும் நிகண்டு, திவாகரங்களிலே கள் விற்போருக்குப் பெயரிருக்கவும் கள்ளிறக்கு வோருக்குப் பெயர் காணப்படாமையினாலே, பறையர், துரும்பர், நளவர், பள்ளர், புறதவண்ணார் என்பவருக்கு நிகண் டிலே பேர் காணப்படாமைபோலச், சாணாருக்கும் பெயர் சுட்டப்படாதிருத்தலை ஆராயாது புலிக்குப் பசுத் தோலிட்டு மூடிப் பசுக்கூட்டங் களுள்ளே ஓட்டியவாறு போலச் சாணார் என்னுஞ் சொல்லைச் சான்றார் சான்றவர், சான்றோர் என்னும் பெயர்த்தோலுக் குள்ளே புகட்டி, மறையவர் பெயருக்கடுக்க மாட்டி, க்ஷத்திரியர் பெயராகிய அரசன் பெயருக்குமேலே நீட்டி, அரசனுக்குரிய தொழில்களொன்றையுங் காட்டாத பெயர் களாகிய அறிஞர் பெயர்களோடு கூட்டிப் பூட்டி, யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (குறள் 127) என்னும் ஆன்றோர் வாக்கியத்தையும் படியாது நரிவால்கொண்டு கிணறு ஆழம்பார்க்கத் துணிந்தமை போலத், தமது அற்பத் தமிழறிவுகொண்டு எல்லாவற்றையும் அறிந்தவர்போல நடித்துத் தமது அறியாமையைக் காட்டி இருக்கின்றார் என்பதை யாவரும் ஒத்துக்கொள்ளும் வண்ணம் சொல்வேம். முதலாவது, சற்குணர் சான்றார் என்றது நிகண்டு திவாகரங்களிலே க்ஷத்திரியரை யுணர்த்திவரக் காட்டுவாரா? இரண்டாவது, நிகண்டு திவாகரங்களிலே காணப் படாத சொற்கள் அகராதியிலே காணப்படுமாதலின், றட்லர் அகராதி உவின் லோ அகராதி, பெல்சி அகராதி, பெர்சிவல் அகராதி, சதுரகராதி முதலியவை களிலே சான்றாரென்பது க்ஷத்திரி யருக்குப் பெயராகக் காட்டுவாரா? மூன்றாவது, அகத்தியம், தொல்காப்பியம், நன்னூல், தொன்னூல் விளக்கம், இலக்கணக்கொத்து, நேமிநாதம், பிரயோக விவேகம், இலக்கண விளக்கம், வீரசோழியம், முத்துவீரிய முதலிய இலக்கணங்களிலே சான்றார் என்பது க்ஷத்திரியருக்குப் பெயராகக் காண்பிப்பாரா? நான்காவது, திருவள்ளுவர், திருக்கோவையார், மஹா பாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி முதலிய உயர்ந்த எந்த இலக்கியங்களிலாயினும் சிவ புராணம் விஷ்ணுபுராணம் பிரமபுராணம் ஆக்கினேய புராணம் முதலிய புராணங்களிலாயினும் சான்றோர் என்றது க்ஷத்திரி யருக்குப் பெயராகக் காட்டுவாரா? அவர் அங்ஙனம் பிரமாணங் காட்டு வாராயினன்றோ இவர் தொல்காப்பியத் தினும் சிந்தா மணியினும் கம்ப ராமாயத்தினும் தமக்குச் சார்வாக எடுத்துக் கொண்ட சான்றார் என்றதை க்ஷத்திரியரென அங்கீகாரஞ் செய்வேம். அங்ஙனம் அவர் காட்டாமையினால் அவரெடுப்பு அடிபட்டு ஒழிந்து போயிற்று. உண்டு என்ற மொழி தன்மையொருமை வினை முற்றாகும் போதும், இறந்தகால வினையெச்சமாகும் போதும், முறையே உண்-டு எனவும், உண்-ட்-உ எனவும், அஃறினை யொன்றன் பாற் படர்க்கைக் குறிப்பு வினை முற்றாகும்போது, உள்(மை)-டு எனவும் பிரிந்து வெவ்வேறு பொருள் கொள்ளுமாறு போலச், சான்றார் என்ற மொழியும், சாறு-(கள்) - ஆர் எனப்பிரிந்து, நெடிலோ டுயிர்த் தொடர்க் குற்றுகரங்களுட் டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே என்ற சூத்திர விதிப்படி சாற் றார் என வந்து மெலித்தல் விகாரம் எய்திச் சான்றாரென் றாயிற்று. இது சற்குணராலே எடுத்துச்சொல்லப்பட்ட டாக்டர் உவின்லோவுக்கும் உடன்பாடாகும். உவின்லோ அவ்வாறு சான்றாரென்றதை சாறு என்னும் பகுதியில் நின்றுந் தோற்று வித்ததற்கு ஆதாரமில்லையெனச் சற்குணர் கூறுகின்றார். இங்ஙனமாயின் இவர் அகத்தியர் சொல்லி யவைகளுக்கும் ஆதாரமில்லை என்பார். நக்கீரர் சொல்லிய வைகளுக்கும் ஆதாரமில்லை என்பார். இங்ஙனம் இச் சற்குணர் தமக்குச் சார்பாக எழுதாதவர்களெல்லாரிலும் பாய்வார் போலும். இது நீதியன்று. உவின்லோ என்பவர் தமது பெயரினாலே அவ்வகராதியைப் பிரசுரஞ் செய்து விட்டாராயினும், அவர் எந்த பண்டித சிரோமணிகளுடைய சகாயத்தினாலே எழுதி யிருக்கிறார் என்பது, அப்புதக முகவுரையைச் சற்குணர் தலைகுனிந்து, கண் திறந்து பார்த்தால் இனிது புலப்படும். சான்றார் என்றதைச் சாதிப் பெயராகக் கொண்டு (சாலு) என்னும் பகுதியினின்றும் தோற்றுவித்துச் சற்குணர், சாணார் படித்தவர்களென்று சொல்வாராயின், எந்தக் காலத்திலே, எந்த இடத்திலே எந்தச் சாணான் ஓர் நியாய சாதிரம் இயற்றினான்? எந்தச் சாணான் வைசேஷிக சாதிரம் செய்தான்? எந்தச் சாணான் சாங்கிய சாதிரம் பொறித்தான்? எந்தச் சாணான் யோக சாதிரம் தீட்டினான்? எந்தச் சாணான் மீமாம்ச சாதிரம் வரைந்தான்? எந்தச் சாணான் வேதாந்த சாதிரம் வெளிப்படுத்தினான்? எந்தச்சாணானுக்குச் சிக்ஷை நூல் தெரியும்? எந்தச் சாணானுக்குக் கற்பநூல் தெரியும்? எந்தச் சாணானுக்கு வியாகரணநூல் தெரியும்? எந்தச் சாணானுக்கு நிருத்த நூல் தெரியும்? எந்தச் சாணானுக்குச் சந்தோவிசிதி நூல் தெரியும்? எந்தச் சாணானுக்குச் சோதிடநூல் தெரியும்? அவரெல்லாம் நமது ஊனக் கண்ணுக்காயினும், ஞானக் கண்ணுக்காயினும், புலப்பட வில்லையே! பாவக்கலியுக சுவிசேஷத்தாலோ? அறிகிலேம். இவற்றையெல்லாம் நாடார் நன்றாக நாடினால், பனையிலிருந்து மிருதுவாகக் கள்ளிறக்குவது போல இவர் சான்றாரென்ற சாதிப்பெயரையும் சாலுப் பகுதி யினின்றும் இறக்காது காற்றுப் பகுதியினின்றும் இறக்குவார். சற்குணருக்குச் சாணாரை யெல்லாம் க்ஷத்திரிய ராக்கப் பேராசை யுண்டாயின், சாணாரெல்லோரையும் பனையேறிக் கள்ளிறக்கா திருக்குமாறு ஓர் புதகம் முதற்கண்ணே பிரகடனஞ் செய்வாராக. இந்த இலக்கணத்தைச் சாணாருக்கு நாடிக்கொண்ட பின்னர் இடித்துலராயின், மற்றைச் சிறப்பு க்ஷத்திரிய இலக்கணங்கள்...... ஒருவர் என்றது க்ஷத்திரியரெனப் பொறித்துவிட்டனரே யன்றி நிகண்டிலே அரசன் பெயரிலேயே பூமியைக் காப்பவன், நரருக்குத் தலைவன் எல்லோருக்குந் தலைவன் என்பவைகளின் கருத்தையடக்கிப் பார்த்திபன், நரபதி, நிருபன் என்ற சிறப்புச் சொற்கள் காணப் பட்ட வழியும், அரசனுக்குரிய சிறப்பு தர்மம் ஒன்றுமில்லாத அறிஞர் பெயரை க்ஷத்திரியரெனவும், க்ஷத்திரியரே சான்றவர் எனவும், அதுவே சாணார் எனவும் ஓர் பொய்மொழியைக் கற்பித்துக் கழுதை யைக் குதிரையாக்கத் துணிந்த தென்னாலு ராமனைப் போலவும், அம்பட்டனைப் பிராமணனாக்க முயன்ற மூட சிரோமணி யாகிய ஓரரசனைப் போலவும் மிக்க வருத்த மடைகின்றாரே ஐயோ பாவம்! பாவம்!! இவர்தான் பட்டப்பகலை இரவென்று சொல்லும் பாதகருக்கு உதாரண மாக...... அயோத்தியிலே சூரிய குலத்திலே க்ஷத்திரிய வம்சத் தாராகிய இராமசுவாமி, இராவணனாலே கவர்ந்து கொண்டு போகப்பெற்ற தம் மனைவியாகிய தேவியை இலங்காபுரிக்குப் போகும்போது தென்இந்தியாவுக்கு பதுங்கப் பார்க்கிறார்....... பனைகள், தமக்குக் கவிந்து, குடிப்போர்க்குக் கள்ளுக் கொடுக்குமோ? கொடுக்க மாட்டாவே, பின் புலாலுண்பவர் இல்லையாயின், புலால் கவர்ந்து விற்பவரும் இல்லையாம் என்ற நியாயத்தினாலே, கள்ளுக் குடிப்பரில்லை யாயின், கள்ளிறக்குவோரும் இல்லையே! இதுபற்றியே, நாவலரவர்கள் கள்ளுக்குடிப்போர் முதலாயினோருக்குத் தண்டனை கூறினார். கூறினாராயினு மகானு பாவ ராகிய இராமரைச் சேர்ந்த விசேஷத்தினாலே குரங்குகளும் க்ஷத்திரிய ரெனப் படலாம். குரங்குகளுக்கு வதிர மில்லா மையாலும், மலைகளில் வசித்த வேடர்களுக்கும் வதிர மில்லாமை யாலும், குரங்குகளுக்கும் க்ஷௌரமில்லாமையாலும், வேடர் களுக்கும் ஷௌர மில்லா மையாலும், குரங்குகளுக்கும் மரம் ஏறும் வழக்கம் உண்மையானதும், வேடர்களுக்கும் மரங்களி லேறும் வழக்கம் உண்மையானும், குரங்குகளுக்குங் காய் கனிகள் உணவாமா தலினாலும், வேடர்களுக்குங் காய் கனி கள் உணவாமாத லினாலும், குரங்குகளுள்ளும் வாலின்மை யுளவாமாத லினாலும், வேடர்களுக்கும் வாலின்மை யுளவா மாதலி னாலும், வில்லியம் சொல்லிய பிரகாரம் (Indian Wisdom Vide 312 P.) இராமரோடு வந்த வேடர்கள் குரங்குகளாக உவமிக்க பட்டன ராதலினாலும், வருண மரபின்படி வேடரை யடுத்துச் சான்றாரெனப்படும் சாணார் வருகின்றமையாலும், இந்தச் சாணாரே அவரின் வேறின்றித் தோன்றிய க்ஷத்திரிய ரென்று சொல்லலா மெனிலும், அதையுஞ் சாணார் ஆனந்தத் தோடு அங்கீ காரஞ்செய்யா ரெனத் தோன்று கிறது. சற்குணர் வடநூலாகிய சமகிருத உணர்ச்சியின்றித் திவாகரம், நிகண்டு என்கிற இரண்டையும் ஆதரவாகப் பற்றி ஏறி அறிஞரைச் சான்றாரெனவும், அவரே க்ஷத்திரிய ரெனவும் கொண்டு, உயர்ந்து பறந்தமை, ஆற்றின் பிரவா கத்திலே உயர்ந்த மணற் கோட்டை யொன்றைக் கட்டி, அதன் சிகரத்தில் ஏறி, மேகமண்டலத்தை எட்டிப்பிடித்து விட்டேனென்று எண்ணிக் கொண்டு மௌட்டிகன் ஒருவன் தூங்க, உடனே ஆற்றுப் பாய்ச்ச லினாலே கோட்டை அடியும் விண்டு, முடியும் விண்டு உடைந்து ஒழிந்தமை போல அழிந்துவிடுமன்றோ. திவாகரத்தின் முறைப்படியே நிகண்டு பாடப்பட்டுள்ளது. வடமொழி அமரகோஷமும் பிரம வர்க்கம், க்ஷத்திரியவர்க்கம், வைசிய வர்க்கம், சூத்திர வர்க்கம் என நான்கு வர்க்கங்களாகவே பிரிக்கப்பட்டு, அவ்வவ் வருணங்களோடும், வருணத்துக்குரிய தொழி லோடும், முறைப்படி காணப்படுமாறுபோல, நிகண்டும் மறையவர் பெயர் முதல் சூத்திரர் பெயர் இறுதியாக அவ்வவருக்குரிய தொழிலோடும் காணப்படும். அமரத்திலே, பிரமவர்க் கத்திலே, பிராமணர் (மறையவர்) பெயரும், வித்துவான் (கலைஞன்) பெயரும், வேதாத்தியயனஞ் செய்வோர் (ஒத்துரைப்போர்) பெயரும், சிஷியன் (சீடன்) பெயரும், ஆசாரியன் (ஆசாரியன்) பெயரும், உபாத்தி யாயன் (உபாத்தி யாயன்) பெயரும், சபையின் (திரண் டோரின்) பெயரும் பிறவும் காணப்படுமாறு போல, நிகண்டினும் காணப்படுகின்றன. பின்னர் அமரத்திலே, க்ஷத்திரிய வர்க்கத்திலே, க்ஷத்திரியன் (அரசன்) பெயரும், மந்திரி (அமைச்சன்) பெயரும், மற்றை அரச அங்கங்களின் பெயரும், காணப்படுமாறுபோல, நிகண்டினும் காணப்படு கின்றமையாலும், க்ஷத்திரியருக் குரிய பெயராயினும், தொழி லாயினும், அங்கங்களாயினும், மறையவர் பெயருக்கும் அரசன் பெயருக்கும், இடையிலே காணப்படாமையானும், அரசன் பெயருக்கு அடுத்த க்ஷத்திரிய வம்சத்தைச் சார்ந்த மஹா பாரதத்திலே கூறப்படும் வீட்டுமன் பெயர், குருகுல வேந்தர் பெயர், தருமன் பெயர், துரியோதனன் பெயர், கண்ணன் பெயர், வீமன் பெயர், அர்ச்சுனன் பெயர், முதலாயின காணப்படுகின்ற மையானும், நிகண்டிலே தோற்றும் அரசன் பெயர்களாகிய பூபாலன், நரபதி, பார்த்திபன் முதலியன க்ஷத்திரியர் பெயராக வடமொழி நிகண்டிலே காணப்படுகின்றமையானும், வட மொழி அபி தான கோஷத்திலே காணப்படும் இராஜன், வாகுசன், க்ஷத்திரியன், விராட்டு, இராட்டு பார்த்திபன், பூபன், மகீபன் முதலிய பெயர்கள் தென்மொழி நிகண்டு அகராதி முதலிய கோஷங்களிலே அரசன் பெயர்களாகக் காணப் பட்டமை யானும், அறிஞர் பெயர் ஆனது மறையவரைச் சார்ந்த துரோணாசாரியன் (ஓர் பிராமணர்) பெயருக்கும், ஆசாரியன், மாணாக்கன், சீடன் என்னும் இவர்களின் பெயருக்கு முன்னும் காணப்படுகின்றமையானும், இவை யெல்லாம் காரணம்பற்றிச் செல்லினும், பிராமணருக்குரிய வைகளாம் என்பது அற்ப சமகிருத உணர்ச்சி உடையார் வாயிலாக, வடமொழி அமரத்தையும், தென்மொழி நிகண் டையும் ஒத்துப்பார்த்தால் வெட்டவெளிபோல விளங்கு மாதலினாலும், சற்குணர் சாணாரை க்ஷத்திரியராக்கத் துணிந் தமை, நீர்க்குமிழிக்குப் பூண்கட்ட முயன்றமை போல நிஷ்பல மாகிவிட்டது. பாதிரியார் குருட்டுத் தமிழறிவின ராலே செலுத்தப்பட்டுப் பொய் முடைகிறார் என்கின்ற இந்தச் சற்குணர், குருட்டுச் சமகிருத உணர்ச்சி யுடைய பிராமண ராலே தாமும் உந்தப்பட்டாரோ தெரிந்திலது. யாம் இங்கே சொல்லியதைக்கேட்டு அறிந்தா யினும் வாயடங்குவாராக. சாணார் க்ஷத்திரியரென்று உபதேசித்த பார்ப்பான், நம்மைப் போல உண்மை வெளிப் படுத்தாது சான்றார், க்ஷத்திரிய ரென்று சற்குணர் எழுதி அவமான மடையட்டும் நமக்கென்ன வென்று தமது வாயினுள்ளே மொறுமொறுத்துக் கொண்டு போய் விட்டனரோ? இப்படி அப்பிராமணர் கருத்து உள தாயின், அவர் கருத்து விசேஷமாகத் தமது வயிறு வளர்த்த லினிடத்திருந்திருக்கலாம். ஓர் போது சற்குணர் மீது கொண்ட கோபத்தினாலே அப்பிராமணர் உண்மை உரைத்திலரோ? அப்பிராமணர் வடமொழி தென்மொழி இரண்டும் அறியாரோ? உண்மை நமக்குத் தெரிந்திலது. அப்பிராமண ராயினும், சற்குண ருடைய கனங் கொண்ட சிநேகராயினும், பிரபுக்க ளாயினும், சாணான் - சான்றான், சான்றான் - சான்றவன், சான்றவன் - க்ஷத்திரியன், எனவே, சாணான் க்ஷத்திரியனென்று தாபிப்பார்களா? தாபிப்பா ராயின், அவர்கள் கடிதங்களும் சாற்றுக் கவிகளும் கொடுத்து அவர் புதகக்தோடே அச்சிடுவியாது விட்ட மைக்குக் காரணம் என்னை? தாபிப்ப வருக்கு யாமெல்லாம் வந்தனம் சாற்றுவேமே. அவர்க்கெல்லாம் சமயம் வாய்த்தி லதோ? ஐயையோ; இவரெல்லாம் பின்னே நின்று நற்குண முடைய சற்குணரை முந்தி உந்தினார்களே. பாவம்! பாவம்!! அவர் என் செய்வார்! சாணார் க்ஷத்திரிய ரென்று சற்குணர் சாதித்து எழுதிய புதகத்தை ஓர் ஐரோப்பிய ராயினும் சுதேசிகளாயினும் அங்கீகாரஞ் செய்யார். இனி, தொல்காப்பியம், சீவகசிந்தாமணி, கம்பராமா யணம், தஞ்சைவாணன்கோவை முதலிய நூல்களிலே சான் றோர் என்றமொழி ஜாதி நோக்காது கல்வி அறிவொழுக்கங் களை யுடையவரை உணர்த்தி நின்றது. முன்னரே பிராமணர் என்று சொல்லிவிட்டுப் பின்னர் சான்றோர் என்றது யாரை யெனின் முன்னர்க்கூறிய பிராமணர் சாதாரணமாகச் சுபகருமங்களுக்கு ஆவசியமாக வேண்டப்படும் பிராமணரையும் பின்னர்க் கூறிய சான்றோர் சுபக்கருமங் களுக்குப் பெருமை பாலிக்கும்படி வந்த பிறரையும் என அறிக. இங்ஙனம் பொருள் சொல்வதை விடுத்து, அந்தணர் சான்றோர் என்றதற்குப், பிராமணரும் சான்றாரும் என்றாவது, சாணாரும் என்றாவது ஒருவர் சபையிலிருந்து வாய் பிளப்பாராயின், அவர் உடனே திருவடி தீக்ஷை பெறாதிருக்கமாட்டார். இதற்குச் சற்குணர் மேலே கூறிய பிரகாரம், சுருதிக்கும், யுக்திக்கும் அநுபவத்திற்கும் ஒருவனுக்கும் ஓரிடத்தினும் ஓர் காலத்திலாயினும் ஒவ்வாத வீண்குதர்க்கப் போலி நியாயங் களைக் கொண்டு, பார்ப்பார் பெயரை அடுத்து வந்த கலைஞர் பெயரிலே சாணாரைச் சேர்த்து க்ஷத்திரியராக்கு வாராயில், நாவிதரும் தங்களுக்கு நிகண்டு திவாகரங்களிலே இட்ட பெயர்கள் போதாவென்று, தங்களுக்கு வழக்கமாக வழங்கும் பண்டிதர் பெயரோடு தோன்றிப் பண்டிதர் பெயர் நிகண்டிலே அறிஞருக்குச் சான்றவரென்ற பெயர் உள்ள தெனவும், உளதாகவே, சற்குணர் முன் சாதித்த போலி நியாயங்களினாலே, சான்றவர் க்ஷத்திரியர் என்று தாபிக்கப்பட நாவித பண்டி தரும் தாங்களும் க்ஷத்திரிய ரென்று தாபிக்கப்பின்னிடார். க்ஷத்திரியர்தான் சாணார் என்று சற்குணர் சொல்ல, நாவி தரையும் சாணாரென்று சொல்ல நேரிடுமன்றோ. கோனா ரென்னும் பெயரினாலே வழங்கப்படுகின்ற இடையரும், தமிழ் அகராதி கொண்டு, தாமும் க்ஷத்திரியரென்பார். சற்குணர் சாதித்தபடி, க்ஷத்திரியர் சாணாரெனப்படுவார், ஆகவே, இடை யரும், சாணாராவார், இராஜாக்கள் சாதியாரும் அவ்வாறு க்ஷத்திரியராவார்; சற்குணர் சாணாரை க்ஷத்திரியரென்பார்; அப்போது நாவிதரும், இடையரும், இராஜாக்கள் முதலிய சாதிகளும், சற்குணராலே இவ்வாறு இழித்துக் கூறப்பட்டு அவ்வவருக்கிடையிலே பெருங்கலகம் விளையுமன்றோ. இவற்றை எல்லாம் யான் வருவித்துக்கூறினேனென்று ஒருவரும் மனவருத்தமடைதல் வேண்டாம். இந்தச் சற்குணர் இவ்வாறு ஆக்கவல்லாரென்பதை அவர் எழுதிய புதகத்தின் (27)-ம் பக்கத்தை உடனே திறந்து பாருங்கள். அவர் சேர சோழ பாண் டிய இராஜாக்களை எல்லாம் வாய் கூசாமலும், நெஞ்சந்திடுக் கிடாமலும், சிறிதும் வெட்கமில்லாமலும், சாணாரென்று சொல்லியிருக்கின்றார். இவர் இந்தப் புத கத்தை அவ்வரசர்கள் பரிபாலனஞ்செய்த காலத்திலே இவ்வாறு பிரசுரஞ்செய்து விடுவாராயின், அவர் வெளிப் படுத்திய இரண்டு தினங்களுள்ளே இந்திரப்பட்டம் சூட்டப் பட்டிருப்பார். சாணான் காசு என்பதினாலே, சாணார் முன்னரே அரச ராகியும் அதனாலே க்ஷத்திரியர் எனவும் சற்குணர் தாபிக்கத் துணிவார்போலும். அங்ஙனமாயின் கொட்டி யாரத்தில் அம்பட்டன் மட்டக்களப்புக்குப் போனாலும் அங்கும் சிரைப்புத் தொழில்தான் என்ற லோகவார்த்தை போல இந்தச் சாணார் எந்த இடத்திலிருந்தாலும் எந்தக் காலத்திலிருந் தாலும், இவர்கள் இந்தச் சாணார் தொழிலையே மேற் கொண்டிருந்தார் என்பது, முறுக்குத்தடித்தண்டம், கள்ளுக் குடுவைக் கமண்டலம் முதலிய சந்நியாச வேஷத் தோடும் இப்போதுபோல அப்போதும் சாணாரமூர்த்தித் திருக் கோலத்தோடு அந்தக் காசிலேயே பிரசன்ன மாயிருந் தாராமாதலின், அவர் அரசராய் வீற்றிருந்து உலக பரி பாலனஞ் செய்தாரென்பது ஊமை கண்ட கனவு போலாகி விடும். இங்ஙனம் பிஷப்பினும் புத்தியுடையவர் சற்குண ரென்று முந்தி வந்து, முன்னும், பின்னும் யோசியாது எழுதிய சற்குணர் புத்தி, சாண் புத்தியாய் முடிவுற்றதென்பதை யாரும் மறுக்க மாட்டார். அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவராகிய ஏனாதி நாயனார் சான்றாரெனவும், அந்தச் சான்றார் வில்வித்தை பயிற்றும் தொழிலுடையவரெனவும், அவரது பந்துக்களும் அப்படியே வில்வித்தை அறிந்தவரெனவும் காட்டுவதற்குப் பெரியபுராணச் செய்யுளொன்றைச் சற்குணர் வரைந்த பின்னர், கருக்குவாட்பட்டைச் சான்றாரெனத் தங்க ளுள்ளே வேறு சாதியார் சிலருண்டெனவும், சாற்றுகின்றார். ஏனாதி நாயனார் சான்றாரென்றும், அவருக்கும் அவர் பந்துக் களுக்கும் வாட் படை பயிற்றுந்தொழிலுண் டென்றும், வில் வித்தை க்ஷத்திரியத் தொழிலாதலினால், ஏனாதி நாயனார் க்ஷத்திரியரெனவும், எனவே, சான்றார் க்ஷத்திரிய ரெனவும் சொல்லத் துணிகின்றனர். அப்படி யானால் இவராலே புகழ்ந்து பாராட்டப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் பிரசுரஞ்செய்த திருத்தொண்டர் பெரிய புராணத்தின் முதற்கணுள்ள திருத்தொண்டர் வருண மரபு என்றதைச் சற்குணர் சிறிதும் வருத்தமுறாது எடுத்து வாசிப் பாராயின், அவ்வருணத்திலே, முதலிலே ஆதி சைவரையும், அவருக்குப் பின்னே பிராமணரையும், அவருக்குப்பின்னே மாமாத்தியப் பிராமணரையும் அவருக்குப் பின்னே க்ஷத்திரி யரையும், அவருக்குப்பின்னே குறுநில மன்னரையும், அவருக்குப்பின்னே வைசியரையும், அவருக்குப் பின்னே வேளாளரையும், அவருக்குப் பின்னே இடையரையும், அவருக்குப் பின்னே குயவரையும், அவருக்குப் பின்னே பாணரையும், அவருக்குப் பின்னே வேட ரையும், அவருக்குப் பின்னே சான்றாரையும், அவருக்குப் பின்னே கலியாரையும், அவருக்குப் பின்னே ஏகாலியரையும், அவருக்குப் பின்னே புலையரையும் வைத்த முறையினாலே சாதி முறைமை நன்றாக விளங்கும். அவ்வருணமரபிலே க்ஷத்திரியர் சேரமான் பெருமாணாயனார், புகழ்ச்சோழ நாயனார், நெடுமாற நாயனார், இடங்கழி நாயனார், மங்கையர்க் கரசியார், கோச்செங்கட்சோழ நாயனார் என அறுவராம். சான்றார் - ஏனாதிநாயனார் என ஒருவராம். ஏனாதிநாயனார் வாட்படை பயிற்றினமையாலே சற்குணர் கூறியபடி க்ஷத்திரியராயின், பின் இவரை க்ஷத்திரியரோடு சேரா தொழிதற்குக் காரணம் என்னை? அப்போது அந்தச் சற்குணர் உடனிருந்திலரோ? மறந்தனரோ? பிறந்திலரோ? அறியேம்! அறியேம்!! க்ஷத்திரிய வம்சத்திலே சொல்லப்பட்ட மேற்கூறிய அரசர்கள் சேர சோழ பாண்டிய இராஜாக்களாத லினாலே, அவர்களைச் சாணாரென்று சற்குணர் சாதித்த நியாயங்கள் புற வாழியிலொடுங்கிப் போயின. சாணாரில் கருக்குவாட்பட்டைச் சான்றார் இருக்கின்றார் என்கிறார். அவர் அங்ஙனம் கூறப் படாது கருக்கு மட்டைச் சான்றாரெனவும், கருப்புக்கட்டிச் சான்றாரெனவும், கருப் பட்டிச் சான்றாரெனவும், பலரும் பலவாறு பிதற்று கின்றார். இவைகளுக்கெல்லாம் மறுப்பெழுதுவது ஆவசிய கமில்லை. க்ஷத்திரியருக்குள்ள ஒழுக்கங்கள் சாணாருக்கு இலக்கண மாக இப்போதும் உள என்று சற்குணர் சாற்றுகின்றார். 1-வது சாணார் மாடு தின்பதில்லை 2-வது கள்ளுண்பதில்லை 3-வது புநர்விவாகஞ் செய்வதில்லை. 4-வது ஆடை ஆபரணதாரண விதிகளுண்மை. என்னும் நான்கும் சாணாரது க்ஷத்திரிய ஒழுக்கங்களாம் ஓர் பொருளுக்கு இலக்கணஞ் சொல்லத் துணியின் அதற்கு அவ் வியாப்தி, அதிவியாப்தி, அகம்பவம் என்னும் முக்குற்றங் களி லொன்றாயினும் பொருந்தாதிருத்தல் வேண்டும். அதிவி யாப்தியாவது - இலக்கியமில்லாததன் கண்ணுமிருப்பது. ஆவிற்கு கோடுடமை இலக்கண மாமெனில், கோடு, எருமை, ஆடு முதலியவற்றுக்குமிருத்தலால், அவ்விலக் கணம் பொருந்தாது. ஈண்டுச் சற்குணர் சாதித்த நான்கு விதிகளும் அதிவியாப்திக் குற்றத்து ளடங்கினவாம். மாடுண் ணாது விடுதலும், கள்ளுண் ணாது விடுதலும், புநர்விவாகஞ் செய்யாது விடுதல் முதலியனவும், சாணாருக்குள் மாத்திர மன்றிப், பிராமணர் முதலாயுள்ள மற்றைச் சாதியாரா யிருந்தாலும் முடியாதே! என்று கோபத்தோடு பிடுங்கி எறிந்துவிட்டுச், சாணாரெல்லாம் சபை கூடி ஒத்த கருத் தோடு நூலுக்குப் பதிலாகச் சாப்பாட்டுக்குச் சாப்பாடும் சௌக்கியத்துக்குக் சௌக்கியமும் என்றபடி எளிதிலே அற்றுப் போகாவண்ணம் வாரோடு கூடிய சதுரத்தோலைக் கழுத்திலும் நெஞ்சிலும் இட்டுக்கொண்ட னரோ? இவற்றை யோசியாது சாணார் க்ஷத்திரியரென்று ஓர் படித்த பிராமணர் சொன்னார் என்கிறாரே, அந்தப் பிராமண ரைப் பத்திரிகை வாயிலாக வெளிப்படுத்தி முன்னே பிடர் பிடித்து உந்துவாராயில், அவர் எங்கேயிருந்தாலும் தேடிப் பின் குடுமியிலே பிடித்து நியாயங் கேளாமல் விடமாட்டேம் என்பதைச் சற்குணர் சிந்தை செய்வாராக. சத்திரியருக்கு அங்கங்களாக மந்திரியும், நாடும், அரணும், பொருளும், படையும், நட்பும், வேண்டப்படு மன்றோ. சாணா ருக்கு இந்த ஆறு அங்கங்களும் பாறு அங்கங்களாய் விட்டனவோ? இவற்றையுங் காணோமே. சரித்திரப் புதக முதலியவைகளில் ஓரிடத்திலும் சாணார் க்ஷத்திரியரெனக் கண்டு மிலேம்; கேட்டுமிலேம்; கண்டனம் இன்றுயாங் கலியின் வண்ணமே. ஓர் வைக்கோற் புரியைப் பெட்டிக்குள்ளே வைத் துப் பாம்பென்று சாதித்துச் சிறுபிள்ளைகளை மெருட்டு தல்போல, இந்தச் சற்குணரும் ஓர் புதகப் பெட்டிக்குள்ளே சாணாரப்பாம்பு க்ஷத்திரியப் பாம்பாகி யொன்று இருக்கிற தென்று, அதற்கு மேலே சாமுவேல் சற்குணர் பீ.யே. என்று முத்திரையிட்டு வெளியிட்டு, இங்கிலிஷ் அறியாத மூடச் சாணாரையும் பிறரையும் மெருட்டப் பார்க்கிறார். இந்தக் காலம் பட்டப்பகல் நேரம். ஒருவரும் ஏமாத்தப்படமாட்டார். பாதிரியார் பரிமேலழகர் பிராமணரென்று சொல்லியது உண்மையன்றென்று சொல்லிவிட்டுச், சற்குணர் சாணாரை க்ஷத்திரியராக்க முயன்றனர்; இவ்விருவரில் எவர் சொல்லியது மெய்யென்பதை உலகம் நிச்சயிக்கட்டும். கால்டுவெல் பிஷப்பு இந்தியாவிலுள்ளவருள்ளே சாணார் சிறிதும் புத்தியில்லாதவர் என்று எழுதியிருந் தாராகவும், வேறோர் பாதிரி மற்றைச் சாதியாரிலும் சாணார் புத்திசாலிகள் என்று சொன்னாரெனவும், சற்குணர் சாற்றுகின்றார். இவ் விருவர் வாசகங்களிலுள்ளே எது வாதவமென்று ஆராயுங் கால், கால்டுவெல் பிஷப்பு பெயர் சொல்லப்பட்டிருக்கவும், மற்றைப் பாதிரியார் பெயர் சொல்லப்படாமையானும், கால்டுவெல் பிஷப்பு எழுதியதே ருசுக் கொடுத்தற்கு அதிக பலம் கொண்டது. அது அநு போகத்தினாலும் நன்றாக விளங்கும். இந்தச் சற்குணர் (சாணார்) தாமெழுதிய புதகத்தினாலே, தமது நூலா ராய்ச்சியிலே கட்டை அறிவுடையவர் என்பதும் தானே தெளிவாகின்றது. இந்த பீ.ஏ. பட்டம் பெற்றவரே இவ்வளவு சுழுகிலே சாணாரை க்ஷத்திரியராக்கும் தன்மையிலே தமது மௌட்டியத்தை வெளிப்படுத்து வாராயின், தண்டாபூபிக நியாயத்தினாலே மற்றைச் சாணாரும் இத்துணையரென்பது நிச்சயிக்கப்பட்டது. இங்ஙனம் இடையன்குடிச் சாணாரை நோக்கிவிட்டு மற்றைத் திருநெல்வேலிச் சாணாரையும் அவ்வாறு பிஷப்புத் தண்டாபூபிக நியாயத்தால் நிச்சயித் தனர் போலும். இதனால் சற்குணர் பிஷப்பு சொல்லியவற்றை வெள்ளைப்பொய் கறுத்தப்பொய் என்று நிந்தித்தமை அடாது. பாதிரியாருக்குத் தேகம் எப்படி வெண்மையோ, அப்படியே மனமும் வெண்மை பொருந்தித் திருநெல்வேலி யிலுள்ள சாணார் இழிந்த சாதியார் என்றும், அவர்கள் சூத்திரருக்கும் புலையருக்கும் இடையிலுள்ள சாதியா ரென்றும் கூறினார். அவர் சொல்லியபடியே பெரிய புராணத்துத் திருத்தொண்டர் வருண மரபிலும் சொல்லப் பட்டிருக்கின்றது. பாதிரியார் மெய்யராகவே, சற்குணரே தமது தேகம் போல இருள் மனம் பூண்டு பொய் கூறினார் என்பது அறியத்தக்கது. பிஷப்பு திருநெல்வேலிச் சாணாரைக் குறித்துப் புதகத்தை எழுதினமையினாலே திருநெல்வேலிக் கிறிது சபைக்குப் பெருங்கேடு விளைந்தது போலவும், பாதிரி மாருக்கும் சாணாருக்கும் விசுவாசக் குறைவும் பகையும் நிகழ்கின்றன எனவும், ஆதலின் ஓர் அளவற்ற கெடுதியைப் பிஷப்பு சாணா ருக்குச் செய்தனராகவும் கூறுகின்றார். பிஷப்பு சாணார் எளிய நிலைமையைப்பற்றி வெளிப்படுத் தினமைக்குக் காரணத்தைச் சிறிது ஆராய்வாம். பாதிரிமார் ஐரோப்பா முதலிய கண்டங் களிலிருந்து அநேகாயிரம் மைலுக்கு அப்புறத்துள்ள இந்த இந்தியாவிலேயிருந்து தங்கள் சுவிசேஷப் பிரசங்கத்தின் பொருட்டுத் தம் தேசத் திலுள்ள அநேக ஏழைகளிடத்திலிருந்து பலவாறாகவும், சிறிது சிறிதாகவும், வாங்கியரூபாவை இங்கே செலவிடும் விஷயத்திலே, மிகச் சாக்கிரதையாக இருக்கும் படிக்குத் தமக்குப்பின் வருகிற பாதிரிமாருக்கும், மற்றைத் தேசத் துப் பாதிரிமாருக்கும் தமது ஐரோப்பிய சபையாருக்கும் உண்மை அறியும்படிக்கு எழுதிவிட்டார். எங்ஙனமெனில், இங்கே கிறிது மதத்திலே பிரவேசிக்க எளியராயினோர் சாணார் பறையர் முதலாயினோர். பிரவேசிக்க அரிய ராயினோர் சூத்திரர் முதலாயினோர். இராப்பகல் பனையிலே தூங்குமியல்புடைய சாணார் தம் தொழில் மிகப் பிராயாசை யுடையதெனவும், பனை யிலிருந்து ஓர் போது தற்செயலாய் விழுந்துவிடினும் துன்மரணம் அடைய வேண்டுமெனவும், கிறிதுமதப் பிரவேசஞ் செய்து விட்டால், நம்மை நிந்திக்கும் கிறிதவராகிய சூத்திரர் முதலானாரோடு உடனிருந்து சம்பாஷிக்கும்போது, அவர்கள் தமது சபையொழுங்குப் பிரகாரம் யாதும் விரோதமாகப் பேச இடமிராதெனவும் கருதி கிறிதுமதப் பிரவேசஞ் செய்வாரெனவும், இதைஅறிந்த மற்றைச் சாணாரும் நல்ல போசனம் புசிக்கலாம், அழகுடைய வரை விவாகஞ் செய்யலாம், வண்டியேறலாம், என்ற இவை போன்ற பிற நியாயங்களை ஆலோசித்து, விரைவிலே சபையிலே சேர்வார். இப்படிச் சேர்ந்தவருக்கும் அதிகச் சம்பளம் முதலியன கொடுத்தால் அநேக சாணார் ஒருங்கு திரண்டு சபையிலே சேர்ந்து விடுவார். இங்ஙனம் பண நட்டத்தினாலே சுவிசேஷம் பிற இடங்களிலே பரவுதற்கு ஏதுவிராது. பாதிரி மாருக்கு எல்லாரையும் கிறிதுவ மதத்திலே வருத்துவது அவர் கருத்தாமாயினும், இந்தியா தேசம் சாதியபிமான முடையது; அதைப் பரிசுத்தாவி வந்தாலும் மாற்றமுடியாதாதலின், சாணாரை யெல்லாம் ஒருங்கு திரட்டி சேர்த்துவிட்டால் சாணா ரச் சபையென்று கிறிது சபையை நிந்திப்பார். நிந்திக்கவே வேறு உயர்ந்த சாதியார் ஒருவரும் இச் சபையிலே சேர விரும்பார். இது நீதியன்று. இன்னும் ஒருவர் மலிந்த பண்டத்தை வாங்குவதினும் அரிய பண்டத்தை உயர்ந்த விலை கொடுத்து வாங்கிவைத்தால் தமக்கு ஓர் மகிழ்வும், அதைக்கண்ட பிறருக்கும் விருப்புண்டு என்றதை யுட்கொண்டும், தமிழ்த் தெரியாமல் உடனே ஐரோப்பாவில் இருந்து வந்த பாதிரிமார் தமது கருத்துக்கு ஒப்ப வழுவாதிருக்கும்படிக்கும், இப் புதகத்தை வரைந்தார் போலும். இது எல்லோருக்கும் ஒப்ப முடிந்த பக்ஷமாகும். சாணார் க்ஷத்திரியராயின், அச்க்ஷத்திரியருக்குப் போலச் சாணாருக்குப் பூணூலெங்கே? வேத மோதுதல் எங்கே? தானஞ் செய்தல் எங்கே? யாகஞ்செய்தல் எங்கே? மந்திரிமார் எங்கே? கோட்டை எங்கே? செங்கோல் எங்கே? சேனாதிபதி எங்கே? அத்தியக்ஷன் எங்கே? கிராமாதிகாரி எங்கே? சேவகன் எங்கே? யுத்தவீரர் எங்கே? தூதர் எங்கே? சாம பேத தான தண்ட உபாயங்கள் எங்கே? இரத கஜ துரகபதாதி என்னும் சதுரங்க சேனைகள் எங்கே? சிங்காதனம் எங்கே? குடை எங்கே? கொடி எங்கே? கவசம் எங்கே? வில்லெங்கே? நாணெங்கே? அம்பெங்கே? அம்புக் கூடெங்கே? இருப்புலக்கை எங்கே? பரிசை எங்கே? வாளெங்கே? ஈட்டி எங்கே? இவை எல்லாம் அரூபமாக மறைந்து நிற்கின்றனவோ? க்ஷத்திரியர் சாணார் எனின், சாணாருக்குப்போல க்ஷத்திரி யருக்குப் பனையோலை செருப்பு, பனைமட்டைச் செருப்பு உண்டா? வெகு தூரத்திற்கு வீசும் துர்க்கந்த நாற்றம் உண்டா? பனைகள் உண்டா? கள்ளுக் குடுவை யுண்டா? பனையேறு வதுண்டா? சுண்ணாம்புப் பெட்டி யுண்டா? பனையால் விழுவ துண்டா? தளை காலுக்கே யன்றித் தலைக்கும் இடுவதுண்டா? நண்டு, நத்தை, கருவாடு உண்பதுண்டா? தொள்ளைக் காது விடுவதுண்டா? மரம் உரோஞ்சாது விடுவதற்கு நெஞ்சுத் தோலுண்டா? சௌசஞ் செய்யாது விடுவதுண்டா? அறு, இறு, கறவு, ஓம்பிரிசன், யெம்பிரிசன், அவிய, இவிய என்று சிங்காரப் பேச்சுப் பேசிப் பழகுவதுண்டா? சற்குணரே! நீர் க்ஷத்திரியரைப் பார்த்திருப்பீர் போலும். உண்மை பேசும்! பேசும்!! கோபித்து உறுமாதேயும். பிராமணர் சூத்திரர் முதலிய உயர்ந்த சாதியா ரெல்லாம் தாமே பிராமணர் எனவும் தாமே சூத்திரர் எனவும் புதக வாயிலாகவும் பத்திரிகை வாயிலாகவும் வெளிப்படுத் தாது தாமே எந்த விடத்தினும் எந்தக் காலத்தினும் உயர் குலத்தா ரென்று சொல்லப்படத்தக்க .இயல்பை அடைந்திருப்பதாகவும், இந்தச் சற்குணர் ஓர் புதகம் சாணார்தாம் க்ஷத்திரியரென்று வெளிப்படுத்துதல் வாயிலாக, இவர்கள் எவ்விடத்தினும் எக்காலத்தினும் சாணார்தான் என்பதை அப்புதகம் தானே பிரசங்கிக்கும் என்பது யாவரும் முன்னரே முக்கியமாக அறியத்தக்கது. குப்பையிலிட்டாலும் மாணிக்கம் மாணிக்கமே உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாமோ!? சற்குணர் தயை செய்து முன் சொல்லியவைகள் நியாயமோ அன்றோ என்பதைப் பலரோடும் ஆராய்ந்து ஒவ்வொன்றுக்கும் கண்டனம் எழுதுவாராக. யாமும் பதிலெழுத மிகச் சாக்கிரதையாய் இருக்கிறோம். வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க சொல்லே ருழவர் பகை. (குறள் 872) பிரசண்ட மாருதம் - முற்றும் - மறைமலையம் (பொருள்வழி பிரிக்கப்பட்டு - காலநிரல் செய்யப்பட்டவை) மருத்துவம்: 1. பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் 1921 2. மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை 1, 2 1933 மறைபொருளியல்: 3. மரணத்தின் பின் மனிதர் நிலை 1911 4. யோக நித்திரை அல்லது அறிதுயில் 1922 5. மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி 1927 6. தொலைவிலுணர்தல் 1935 இலக்கியம்: 7. சாகுந்தல நாடகம் 1907 8. சாகுந்தல நாடக ஆராய்ச்சி 1934 இதழ்கள்: 9. ஞானசாகரம் 1902 சங்க இலக்கிய ஆய்வு: 10. முதற் குறள் வாத நிராகணம் 1898 11. முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை 1903 12. பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை 1906 13. முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவர் 1936 14. திருக்குறள் ஆராய்ச்சி 1951 பாடல்: 15. மறைமலையடிகள் பாமணிக்கோவை 1977 16. முனிமொழிப் பிரகாசிகை 1899 நாடகம்: 17. அம்பிகாபதி அமராபதி 1954 புதினம்: 18. குமுதவல்லி நாகநாட்டரசி 1911 19. கோகிலாம்பாள் கடிதங்கள் 1921 கடிதம்: 20. மறைமலையடிகளார் கடிதங்கள் 1957 கட்டுரை: 21. சிந்தனைக் கட்டுரைகள் 1908 22. அறிவுரைக் கொத்து 1921 23. சிறுவர்க்கான செந்தமிழ் 1934 24. இளைஞர்க்கான இன்றமிழ் 1957 25. அறிவுரைக்கோவை 1971 26. உரைமணிக் கோவை 1972 27. கருத்தோவியம் 1976 சமயம்: 28. திருவொற்றியூர் முருகர் மும்மணிக்கோவை 1900 29. சோமசுந்தரக் காஞ்சியும், காஞ்சியாக்கமும் 1901 30. கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா 1929 31. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 1930 32. மாணிக்கவாசகர் மாட்சி 1935 33. திருவாசக விரிவுரை 1940 34. மாணிக்கவாசகர் வரலாறு 1952 35. சோமசுந்தர நாயகர் வரலாறு 1957 தத்துவம்: 36. சித்தாந்த ஞானபோதம்- சதமணிக் கோவை 1898 37. துகளறு போதம் உரை 1898 38. வேதாந்த மத விசாரம் 1899 39. வேத சிவாகமப் பிரமாண்யம் 1900 40. சைவசித்தாந்த ஞானபோதம் 1906 41. சிவஞான போத ஆராய்ச்சி 1958 வரலாறு: 42. இந்தி பொது மொழியா? 1937 சமூக இயல்: 43. பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் 1906 44. சாதிவேற்றுமையும் போலிச்சைவரும் 1923 45. வேளாளர் நாகரிகம் 1923 46. பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் 1938 47.தமிழர் மதம் 1941 மறை மலையடிகள் நாட்குறிப்புகள் 1988 பொது நிலைக் கழக உரை விவேகாமிர்தம் பிரசண்ட மாருதம் வேதாந்த சித்தாந்தம் சைவ சமயப் பாதுகாப்பு ஆங்கில நூல்கள்: 48.Oriental Mystic Myna bi Monthly 1908 49.Ocean of Wisdom’ bi Monthly 1935 50.The Tamilian and Aryan Forms of Marriage 1936 51.Ancient and Modern Tamil poets 1937 52.Can Hindi be the Lingu franca of India? 1969 53.Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge 1940 54.The Concemption of God Rudhra