kiwkiya«-- 25 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) சமயம் - 6  திருவாசக விரிவுரை ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 32+368 = 400 விலை : 500/- மறைமலையம் - 25 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 400 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000üyh¡f« : வி. சித்திரா   அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) புகழ் மாலை சிலப்பதிகாரத்தில் `சித்திரமடத்துள் என்னும் கானல் வரியில், `யாழ்கையில் தொழுது வாங்கி எனவரும் பகுதியைக் கேட்ட அடிகளார், யாழ்கையில் தொழுது வாங்கியவர் யார்? கொடுத்தவர் யார்? என வினவினார். வாங்கியவர் மாதவி, கொடுத்தவள் வயந்தமாலை என்றேன். வயந்தமாலை ஏவற்பணிப்பெண்ணாகிய சேடியே அன்றோ! அவளை மாதவி எற்றுக்குத் தொழுதல் வேண்டும்? என வினவினார். வினாவை எதிர்பாராத யான் சிறிது தயங்கினேன். உடனே அடிகளார், மாதவி தொழுதது வயந்தமாலையை அன்று; யாழ்க் கருவியையே மாதவி தொழுதாள். இசைத் தெய்வம் அதன் கண் தங்கி உறைவதாகக் கலையுணர்வு மிக்க மாதவி கருதினாள் என்றார் அடிகள். - ந.ரா. முருகவேள். மறைமலையடிகளும் கா.சு. பிள்ளையும் என் வலக்கையும் இடக்கையும் போன்றவர்கள். - பெரியார் ஈ.வே. இராமசாமி மறைமலைய மாண்பு நுழைவுரை தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்! முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், `முத்தமிழ் அடிகள் என முழக்கமிட நின்றார்! இருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார். தமிழ் தனித்து இயங்காது என்றும், வடமொழி வழியது என்றும், வடமொழித் துணையின்றி இயங்காது என்றும், உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வடமொழியே என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க, வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ்பரப்பாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர். சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், `தனித்தமிழ் (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் `தனித்தமிழ் என்பதை நிலை நாட்டிய நிறைமலை, மறைமலையடிகளாரே! சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், `தொல் காப்பியக் கடல் எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி, ஐந்தெழுத்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே என்றும், ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? என்றும் - எழுதிப் பரப்பினாராக, ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம் என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்! தொல்காப்பியக் காவல் தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என்றும், மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை பேண வேண்டும் என்பதை, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால், ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்பதற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது என்னும் பாவாணர், மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப் பாடிப் பரவினார். `தனித் தமிழ்த் தந்தையார் என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார். நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழ் காக்கும் படை என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புகளின் மேம்பாட்டையும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார். பல்துறை ஆற்றல் அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார். மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள் என்கிறார். (பனிமலை - இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்). அடிகளார் நூல்கள் அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப்படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை, 1. மருத்துவம் 2. மறைபொருள் 3. இலக்கியம் 4. இதழ்கள் 5. சங்க இலக்கியம் 6. பாடல் 7. நாடகம் 8. புதினம் 9. கடிதம் 10. கட்டுரை 11. சமயம் 12. தத்துவம் 13. வரலாறு 14. சமூக இயல் என்பன. முதற் குறள் வாத நிராகரணம் என்னும் மறுப்பு நூலே, அடிகளின் முதல் நூலாக வெளிப்படுகின்றது (1898) அந்நூன் மறுப்பு நயமே நாகை அடிகளை - பல்லவபுர அடிகளாக -தனித்தமிழ் அடிகளாக ஆக்க அரும் பெரும் தூண்டல் ஆயிற்றாம். அடிகளார் வரலாறு: கீழ்கடல் சார் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிற்றூர் காடம்பாடி, ஆங்கு வாழ்ந்த அருந்தவப் பெருந்தகையர் சொக்கநாதர் - சின்னம்மையார்! இவ்விணையர் கொடையாய்த் தமிழன்னை செய்த தவப் பேற்றால் பிறந்தவர் வேதாசலம். பிறந்த பெரு மங்கல நாள் கி.பி. 15.07.1876. சொக்கநாதர், சித்தமலம் அறுவித்த சித்தமருத்துவர்; அறிவ மருத்துவம் என்பதும் அது. அத்தொழில் அவர்க்கு வளத்தை வழங்கியது. அதனால் வேதாசலம் குறைவற வாழ்ந்தார். நாகப்பட்டினத்து வெசிலியன் மிசன் பள்ளியில் ஐந்து வகுப்புவரை பயின்றார்; சிறந்த மாணவராக விளங்கினார். ஆறாம் வகுப்பில் சேரும் நிலையில், அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். ஆயினும் அன்னையார் உறுதியால் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு இருந்த முதன்மை தமிழுக்கு இல்லை. கிறித்தவ சமயம் பற்றி அன்றிச் சிவனியம் பற்றி அறிய வாய்ப்பில்லை என்னும் இரண்டு குறைகளையும் இளமையிலேயே உணர்ந்தார். வீட்டிலேயே தமிழ் நூல்களைப் பயின்று முதற் குறையையும், நாகையில் இருந்த இந்துமதாபிமான சங்கம் வழி இரண்டாம் குறையையும் நீக்கினார். பள்ளியிலும் குறையறக் கற்றார். வருவாய்க் குறையால் வாடும் அன்னைக்குச் சுமையாய் இல்லாமல் தனியே பயில்வதே இனியவழி என எண்ணி, நாகையில் புத்தக வணிகராக விளங்கிய நாராயண சாமியார் புலமையாலும் சிறந்து விளங்கியவர். ஆதலால் அவரிடம் தனியே இலக்கிய - இலக்கண - சமய நூல்களைக் கற்றார். நாராயணரின் முன்னை மாணவர் பேரா. மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பதையும் அறிந்தார். ஒன்பதாம் வகுப்பொடு பள்ளிக் கல்வியை நிறுத்தித் தனிக்கல்வியே கற்றார். தொல்காப்பியம், தொகை நூல்கள், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவை, இறையனார் அகப் பொருள் எனக்கற்றார். அடிகளார் இயற்றிய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை முகப்பில், எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தேம் என்றும் வேறுசில நூல்களையும் முழுவதாக ஓதியதையும் கூறி, இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். அவ்வாண்டு கி.பி. 1897. நாகை இந்து மதாபிமான சங்கத்திற்குச் சைவ சித்தாந்த சண்ட மருதம் என்னும் விருது பெற்ற சோமசுந்தர நாயகர் வந்து சொற்பொழிவாற்றினார். அவர் பொழிவில் வந்த கருத்தொன்றனை மறுத்து ஒருவர் எழுத, அதற்கு மறுப்பாக முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புரை எழுதினார். அதனைக்கற்ற நாயகர், மீளப் பொழிவுக்கு வருங்கால் முருக வேளைச் சந்திக்க விரும்பினார். அச்சந்திப்பின் பயனே உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம். நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார். இதுவே அடிகளார்க்குச் சென்னை வாழ்வு அமைய முதல் தூண்டல் ஆயிற்று. அடிகளுக்குப் பதினேழாம் வயதில் (1893) திருமணம் நிகழ்ந்தது. துணைவி தம் மாமன் மகள் சவுந்தர வல்லி என்பார். திருவனந்தபுரம் நாராயணசாமி அவர்களின் முன்னை மாணவராம் பேரா. சுந்தரனார் திருவனந்த புரத்தில் இருந்தார். அவரியற்றிய மனோன்மணீய நாடக நூல் கற்று அதன் அருமை கண்டு, பேராசிரியரைக் காணவிரும்பினார். அதனால் தம் ஆசிரியரோடு திருவனந்தபுரம் சென்று பேராசிரியரோடு உரையாடினார். வேதாசலனார் இளம் பருவத்தையும் மூதறிவையும் அறிந்த சுந்தரனார் வியப்புற்றுத் தகுதிச் சான்று ஒன்று வழங்கினார். சிறிது காலம் திருவனந்த புரத்தில் ஆசிரியப் பணியும் செய்தார். அவ்விடத்தின் பருவநிலை ஒவ்வாமையால் நாகைக்கே திரும்பினார். சென்னை: சோமசுந்தரனார் முன்னே கூறியபடி வேதாசலரைச் சென்னைக்கு அழைத்து அறிஞர் நல்லுசாமி என்பார் நடாத்திய சித்தாந்த தீபிகை என்னும் இதழாசிரியர் ஆக்கினார். பின்னே சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டியிருத்தல் அறிந்த சோமசுந்தரனார் வேதாசலனா ர அக்கல்லூரிப் பேராசிரியராக்க முயன்றார். அதுகால் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர். கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் என்பார். 9.3.1898 இல் வேதாசலனார் பணியேற்றார். அங்குப் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்கல்லூரிக் காலத்தே இளங்கலை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு (1903) பட்டினப்பாலை (1906) என்பவற்றுக்கு ஆராய்ச்சி உரை எழுதினார். அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப்புதுமுறை உரை, தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சி யினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டும் என எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்கிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தார்ஆங்கிலமும் வட மொழியும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும் என்றும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம் என்றும் ஒரு தீர்மானம் ஆட்சிக்குழுவில் கொண்டு வந்தனர். ஒரு பாடம் விருப்பப்பாடம் எனப்பட்ட பின்னர் அதனைக் கற்க வருவார் எவர்? தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறையவே ஆசிரியப் பணியிடமும் குறைய வேண்டுவதாகி, அடிகளார் 31.1. 1911 ஆம் நாளுடன் கல்லூரிப் பணியை முடிக்க வேண்டிய தாயிற்று. மாணவர்: இக்காலத்தில் அடிகளின் மாணவராக இருந்தாருள், தணிகைமணி செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சி, நாவலர் ச.சோ. பாரதி, பேரறிஞர் ச. வையாபுரியார் முதலோர் சிலர். தணிகைமணியின், தேவார திருவாசகச் சொல்லடைவு ஒரு பிறப்பளவில் செய்யக் கூடியதா? நாவலர் ச. சோ. பாரதியாரின் ஆய்வுத் துணிவு எத்தனை கசடுகளை நீக்கியது? வையாபுரியார், கால ஆய்விலும், வடமொழிப் பிடிவாதத்திலும் தம்மைச் சால்பு ஆய்வில் இருந்து விலக்கினாலும், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப்பதிப்பு, பல்கலைக் கழக அகரமுதலிப் பதிப்பு இவற்றைச் செய்த அருமை என்ன? புறத்திரட்டு, களவியல், காரிகை ஆயவற்றின் பதிப்புச் சிறப்பு என்ன? இவர்கள் பணியும் அடிகளாரைத் தழுவுதல் உண்மை தானே! சமரச சன்மார்க்கம்: கல்லூரிப் பணியில் இருந்து வீடுபெற்ற அடிகளார், பல்லவபுரத்தை வாழ்விடமாகக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் தோற்றுவித்தார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீகாரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும், சமரச சன்மார்க் கத்தையும் பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவார். அச்சுவாமி கள் வலியுறுத்திய அவ்விரண்டு கொள்கைகளையும் எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்கு கூட்ட வேண்டி அச்சுவாமிகள் இட்ட பெயராலேயே, `சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கலாயிற்று. இந்நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்; பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் ஆவர் என்று பெயரீடு செய்து கொள்கைகளையும் வகுக்கிறார். குடும்பம் 1898இல் அடிகளார் சென்னைக்கு வரும்போது அவர்தம் அன்னையார் சின்னம்மையார், துணைவியார் சவுந்திரம் அம்மை யார், செல்வி சிந்தாமணி, அடிகளார் என்னும் நால்வரைக் கொண்ட குடும்பமாக இருந்தது. 1911இல் பல்லவ புரத்தில் குடிபுகும் போது நீலாம்பிகை, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி என்னும் மக்களும் கொண்ட ஒன்பதின்மர் குடும்பமாக இருந்தது. பல்லவுரம் புகுந்த பின் திரிபுர சுந்தரி பிறக்கப் பதின்மன் குடும்பம் ஆயிற்று. இந்நிலையிலேயே 27.08.1911இல் சைவத் துறவியர்க்குரிய துறவாடை (காவி) கொண்டு சுவாமி வேதாசலம் ஆனார். சுவாமி வேதாசலம் என்பதன் தனித்தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது வெளிப்படை. முன்னேயே அவரை அடிகள் என்றது அவர்தம் மாண்பு கருதியேயாம். மீள்பார்வை: நாம் மீள்பார்வை ஒன்றுபார்க்க வேண்டும். அடிகள் 21ஆம் அகவையிலேயே தனித்தமிழ் ஆய்வுத்திறம் கைவரப் பெற்றார். 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களுக்கு ஆய்வுரை வழங்குங்கால் இதிலுள்ள சொற்கள் இத்தனை; இவற்றுள் செந்தமிழ்ச்சொல் இத்தனை; வேற்றுச் சொல் இத்தனை - என அறுதியிடுகிறார். ஆதலால், தனித்தமிழ் என்னும் தோற்றம் 1916 ஆம் ஆண்டில் நீலாம்பிகையார் தூண்டலால் ஏற்பட்டமை என்பது, அகத்தே அமைந்து கிடந்த வித்து, முளை விட்டு வெளிப்பட்ட நிலையாம். அவ் வெளிப்பட்ட நிலையும் உடனே பற்றிப் படரவில்லை! மேலும் சில ஆண்டுகளின் பின்னரேயே சமசர சன்மார்க்க நிலையம், பொதுநிலைக் கழகமாகவும், ஞானசாகரம் அறிவுக் கடலாகவும், சுவாமி வேதாசலம் மறைமலையடிகள் ஆகவும் படிப்படியே கிளர்கின்றனவாம்! ஓர் அரிய அமைப்பு உருவாகும் நிலையும், ஓர் அரிய கண்டு பிடிப்பு உலகவர் அறிய வெளிப்படலும், அவை இயக்கமாகவும் பயனாகவும் ஆகின்ற நிலையும் பற்றிய விளக்கம், அடிகளார் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் அடங்கியுள்ளதாம்! எதிரிடைத் தூண்டல்: மேலும் ஒன்று: ஒரு நேரிடைத் தூண்டலினும் எதிரிடைத் தூண்டல் வலிமை மிக்கது என்பதும், உள்ளத்து உறுதியை வெள்ளப் பெருக்காய் வெளிப்படுத்த வல்லது என்பதும் தெளிவாம். ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டா? என்று கற்றறிந்த தமிழர் ஒருவரே வினாவி நகைத்தல், பெற்ற தாய் மொழிப் பிறவிக்கு உற்ற தகைமை ஆகாது என்பதும், அதனை உணர்ந்த அப்பிறவி பாம்பன் குருபாத அடிகள் போல் சேந்தன் செந்தமிழ் என்ன ஒரு நூலியற்றித் தமிழ் தனித்து இயங்கவல்ல தனி உயர் மொழி என்று நிலைநாட்டியிருப்பின் வழிபடத்தக்க பிறவியாய் அமைந்திருக்கும்! அப்பேறு அதற்கு வாய்க்காமை, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (குறள் 263) என்னும் வள்ளுவர் வாய் மொழிப்படி, தனித்தமிழ்த் தந்தைப் பேறு மறைமலையடிகட்கு வர இருப்பதற்கே நேரிட்ட நேர்ச்சியாம் என்க. இயக்கம் அடிகள் இயக்கம் ஆலமரமெனக் கால்பல கொண்டு அகல அகல விரியத் தனித்தமிழ் இயக்கமாய், உலகத்தமிழ்க் கழகமாய், பாவலரேறு தமிழ்க் களமாய், சேரர் கொற்றமாய், தமிழ்க்காப்புக் கழகமாய், தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாய், தனித்தமிழ் இலக்கியக் கழகமாய், தமிழ் வளர்ச்சிக் கழகமாய், மறைமலையடிகள் மன்றமாய், தமிழ்க்காவல் குழுவாய், இயற்றமிழ்ப் பயிற்றகமாய், பாவாணர் தமிழ் இயக்கமாய் ஆங்காங்கு முகிழ்த்து முனைப்பொடு கடனாற்ற ஏவியதாம். நூலகம் அடிகள் நூற்றொகை, அருமணிக் குவையன்ன நாலாயிரம் நூல்களைக் கொண்டது. எதிரது உணர்ந்து, சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்திற்கு முற்கொடையாக வழங்கியதால், நாலாயிரம் நாற்பதாயிரமாய் மேலும் மேலும் விரிந்து மறைமலையடிகள் நூலகப் பெயரால், பெருமைமிகு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த பெரியவர் சோமு அவர்கள் இல்லமே வாய்க்க உலக வளமாக்கியதாம்! அதன் வழியாகவே அடிகள் தாமே வெளியிட்ட நூல்களும், வெளியிடாமல் கழக வழி வெளிவந்த நூல்களும், அடிகள் காலத்திற்குப் பின் வெளிவந்த நூல்களும் ஆகிய முழுமைத் தொகுதிகளும் கி.பி. 1898 முதல் 1969 வரை முதற்பதிப்பாக வெளிவந்தவை. அவற்றுள் படிகள் கிட்டுதற்கு அரியவையும் உண்டு. அடிகள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப் பட்ட பேற்றால், இன்று வாய்த்த நூல்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வழங்கும் பெருவாய்ப்பைத் தமிழ்மண் பதிப்பகம் பெற்றதாம். வெள்ளச் சேதம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பதிப்பகத்துள் புகுந்து அச்சு அடிக்கப்பட்டதும், அடிக்கப்பட இருந்ததும், கணினிப்படுத்தி வைத்த குறுவட்டுகளும், மூலநூல்களும் என வாரி அள்ளிக் கொண்டு போனமை, களத்துக்கு வந்த கதிர் மணிகள், களஞ்சியத்திற்கு வாராமல் போய, பேரழிவு ஒப்பதாம். ஆதலால், நூல்களை மீளத் தேடவும், கணினிப்படுத்தவும், குறுவட்டு ஆக்கி அச்சிடவும் என மும்மடங்குப் பணியும் பேரிழப்பும் பெருத்த அவலமும் உண்டாக்கிற்றாம். அந்நிலையில், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழியை வாய்மை மொழியாக்கிய துணிவுச் செல்வர் இளவழகனாரும் அவர் குடும்பத்தவரும் ஆவர்! முன்னறிவிப்புத் திட்டப்படி நூலுக்கு ஆர்வமாய்ப் பணம் செலுத்தியோர்க்கும் நூல் காலத்தில் கிட்டா உளைச்சல் இல்லாமல் போகாதே! அவர்களும் அமைந்து தாங்கல், இயற்கை இயங்கியல் வழியதாம். வெளியீடுகள் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மொழி இன மண்வளம் - வளர்ச்சி மீட்டெடுப்பு - என்பவற்றை முன்வைத்துத் தமிழ்ப் போராளி இளவழகனாரால் தொடங்கப்பட்டதால், பேரிழப்புக்காம் எனத் தெளிவாகத் தெரிந்தும், இசைக் கலைக்கு வாய்த்த ஒப்பற்ற களஞ்சியமாய் வாய்த்த - கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டதாம்! முன்னை வந்த முதற்பகுதி பேரிழப்பாக்கியும் அதன் பின்னைப் பகுதிகளையும் அரிதின் முயன்று வெளியிட்டது! மொழிஞாயிறு பாவாணர்; ஈழத்து அறிஞர் ந.சி. கந்தையா; வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா, உரைவேந்தர் ஔவை சு.து; நாவலர் ந.மு.வே; பண்டித வித்துவான் தி.வே. கோபாலர்; சாமி சிதம்பரனார்; மயிலை சீனி. வேங்கட சாமியார்; பேரறிஞர் க. வெள்ளை வாரணனார்; பாவலர் குழந்தையார்; பாவலர் முடியரசனார்; பாவேந்தர், தொல் பொருள் கல்வெட்டு ஆய்ஞர் சதாசிவனார், சாத்தன்குளம் இராகவன் நூல்களையும் எளியேன் நூல்களையும் முழுமை முழுமையாக வெளியிட்டது. தொல்காப்பியம்- பாட்டு - தொகை - காப்பியம் - கீழ்க்கணக்கு - தமிழ்நாட்டு வரலாறு - ஆங்கிலம் வல்ல அறிஞர் இராம நாதனார் நூல்களையும், யாழ்ப்பாண அகராதி முதலாம் அகராதித் தொகுதிகளையும் வெளியிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிதொட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளிவந்த - தமிழுக்கு ஆக்கமாம் நாட் டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை எல்லாம் - ஓரிடத்துப் பெற்று, ஒரு தனித்தமிழ் நூலகம் அமைக்கும் அளவுக்கு அச்சிட்டு வழங்கிய பெருமை இளவழகனார்க்கு உண்டு. அவரே அன்றி அவர் துணையையும் மக்களையும் உறவையும் அன்பையும் நண்பையும் ஒருங்கே இணைத்து, அறிஞர் பெருமக்கள் பலர் அரவணைப்பையும் வாய்ப்பக் கொண்டு வாழும் இயல்பு அவர்க்கு வாய்த்தலால் மட்டுமே, இவ்வாறு செயற்கரிய செய்ய வாய்த்ததாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவரும் அவர். மறைமலைய மாண்பு மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழர் வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்! புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை - 6 625006. மலைக்க வைக்கும் மறைமலையம்! பதிப்புரை மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க -பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்கள் `மொழியின் வழியாகவே மொழிபேசும் மக்கள் முன்னேற முடியும் எனக் கூறுகிறார். உலகம் முழுதும் இவ்வுண்மை உணரப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. பாவாணரை அறிவுலகம் சரியாக அடையாளம் காண்பதற்குக் காரணமானது மறைமலையடிகளார் தந்த பாராட்டு! மறைமலையடிகள் (15.7.1876 - 15.9.1950) தேவநேயப் பாவாணர் (7.2.1902 - 16.1.1981) இருவரும் தனித்தமிழியக்கத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாகப் போற்றப்படுபவர்கள். மறைமலையடிகளார் 1916இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நூற்றாண்டை எட்டியுள்ள மகிழ்வான நேரம் இது! தனித்தமிழியக்க நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் `மறைமலையம் எனும் பெருந்தொகுப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வழி வெளிக்கொணரத் திட்டமிட்டோம். உலகம் முழுதும் பரவி வாழும் உணர்வு குன்றாத தமிழர்கள் தந்த ஊக்குவிப்பு, இந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் எனும் உறுதியை எனக்குத் தந்தது. தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அடிகளாரின் அரிய படைப்புகள் பலவற்றையும் தேடித்தேடி வழங்கி வழிகாட்டினர்; வலிமையூட்டினர். மறைமலையடிகளார் 1898ஆம் ஆண்டிலிருந்து எழுதி வந்துள்ளார். அறிவுக்கடல் (ஞானசாகரம்) இதழை 1902ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்துள்ளார். அவரின் படைப்புகள் பெருவெள்ளமாய் வெளிவந்திருக்கின்றன. அச்சேறாதவை, பெயர் கூடக் கேட்டறியாதவை, பெயர் தெரிந்தும் பார்வைக்குக் கிட்டாதவை - எனப் பலவகையாய்க் கிடைத்தன அடிகளாரின் அரும்படைப்புகள்! அவற்றை `மறைமலையம் எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாக ஒருசேரப் பார்க்கும்போது, தமிழுலகம் வியப்படைவது உறுதி. மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? இப்படிக் கவலையோடு கேட்பார் பாவலரேறு பெருஞ் சித்திரனார் (10.3.1933 - 11.6.1995). அவரின் `தென்மொழி இதழ் 1.8.1959 இலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்புதான், தனித்தமிழ்த் திசை நோக்கி நூற்றுக்கணக்கானோர் நடைபோடத் தொடங்கினர். அதில் நானும் ஒருவன். பெருஞ்சித்திரனாரின் எழுத்து காட்டிய அடையாளத்தால், பாவாணர் நூல்கள் எனும் அறிவுப்புதையல் பலர் கைகளிலும் குடியேறியது. பாவாணர் நூல்கள் வலியுறுத்திப் பேசியதால், மறைமலை யடிகளாரைத் தேடிப்பயிலும் ஆர்வம் தமிழுலகில் புத்துயிர் பெற்றது. ஆரியத்தை எதிர்ப்பதிலும் சமற்கிருதத்தை விலக்கு வதிலுமே தமிழின மேம்பாடும் தமிழ்க் காப்பும் அடங்கியிருக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தமிழர் நெஞ்சங்களில் அரும்ப வைத்தது திராவிடர் இயக்கம்; மலர்ந்து விரியவைத்தது தனித்தமிழ் இயக்கம்! குமுக, அரசியல், பண்பாட்டு மலர்ச்சிக்கு இந்த ஈரியக்கங்களின் பேருழைப்புப் பயன்பட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் உணர்வு கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் தளரத் தொடங்கியது; 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் சரியத் தொடங்கியது. வடமொழி வெள்ளத்தில் தமிழ் இழுத்துச் செல்லப்பட்டு விடாமல் காப்பாற்றியோர் கம்பரும் பவணந்தியும்! பின்வந்தோருக்கு அந்தக் காப்புணர்ச்சி இல்லாமல், அயன் மொழிப் பற்றுக்கு அடிமையானதால் தமிழும் தமிழினமும் பெற்ற இழப்புகள் ஏராளம்! அயன்மொழிச் சேற்றிலிருந்து தமிழை மீட்கும் முயற்சி ஆங்கிலேயர் வருகையையொட்டிப் புத்துயிர் பெற்றது. வள்ளலார், பாம்பன் சாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சுப்பிரமணியசிவா, பரிதிமாற் கலைஞர் முதலிய பலரும் தொடக்க விதைகளாயினர். கோவை அவிநாசியில் பிறந்து விருதுநகரில் வாழ்ந்த விருதை சிவஞானயோகி 19.11.1908 ஆம் நாள் `திருவிடர் கழகம் தொடங்கித் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வேகங்கூட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினராயிருந்தவர் சுவாமி வேதாசலம் (மலைமலையடிகள்). மறைமலையடிகள் எனத் தம் பெயரைக் கொண்டு, 1916இல் அவர் தொடங்கியதே தனித்தமிழ் இயக்கம். `துறைமிகு ஆங்கிலம் மறைவட மொழியொடு தூய்தமிழ்ப் பேரறிஞர் - தனித்தமிழ் தோற்றிய ஓரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதற்கேற்ப, மறைமலை யடிகளார் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் முதலிய பன்மொழியிலும் புலமை மிக்கவர். பன்மொழிப் பேரறிஞரான மறைமலையடிகளார் தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவாக நின்றதால் எதிர்ப்புக்கும் இழப்புக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனாலும் உறுதி குன்றாமல் தமிழுக்கு ஆதரவாய் உழைக்கும் உள்ளத்தோடிருந்தார். அதனால், தமிழர் உள்ளங்களில் இன்றளவும் மாறாப் பெருமையோடு அவர் வீற்றிருக்கின்றார். வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை வையகம் பாவேந்தர் பாரதிதாசன் அவர் மாண்பினைப் பாடி மகிழ்ந்ததும், தம் `குடும்ப விளக்கு நூலினை மறைமலை யடிகளுக்குக் காணிக்கையாக்கி வழங்கியதும், அவரின் உறுதி தளராத உள்ளமும் உழைப்பும் கண்டு போற்றிய நன்றிக் கடன் என்பதில் அய்யமில்லை. சென்னையில் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ்மண் பதிப்பகப் பணிகளைத் தமிழுலகம் அறியும். வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டவல்ல தமிழறிஞர்கள் பலரின் நூல்களை முழுமுழுத் தொகுப்புகளாக வழங்கியிருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் முடிப்பினை (சாதனை)யாகப் போற்றப்படுகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் நூல்களை முழுமையான தொகுப்புகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவை காலம் முழுதும் பயன்படவல்ல கருவி நூல்கள் என்பதை அறிஞர் உலகம் அறியும்! தமது நலத்தை ஒதுக்கி வைத்து, தமிழ் நலத்தைக் காக்க வாழ்ந்த அறிஞர்களின் அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து முழுத் தொகுப்பாக வழங்குவது பெரும்பணி! அதனைத் தமிழ்மண் பதிப்பகம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொகுப்பு நூல்களின் பட்டியலைப் பின்னிணைப்பில் காண்க. தமிழுக்காக உழைக்கும் உணர்வை இளமையில் எம்மிடம் ஏற்படுத்தியோருள் பெரும்புலவர் நக்கீரனாரும் அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலனாரும் குறிப்பிடத்தக்கோர்! எம் நன்றிக்குரியோர்! தனித்தமிழ் ஆர்வம், திராவிடர் இயக்க ஈடுபாடு எனும் இரு சிறகுகளால் எம்மை எழவைத்தவர் பெரும்புலவர் நக்கீரனார்! அவரை எண்ணிக் கண்பனிக்க நன்றி கூறுகிறது எம் நெஞ்சம். காலப்பழமையாலும் பராமரிப்புக் குறைவாலும் அழிய நேர்ந்த தமிழிலக்கியங்கள் அளவற்றவை! அவற்றில் ஒருபகுதியை யாவது மீட்டு நம் கைகளுக்கு வழங்கியோர் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலிய சான்றோர் பெருமக்கள்! தமிழிலக்கியப் பெருஞ்செல்வத்தை மீண்டும் மீண்டும் அச்சாக்கி, அனைவர் கைகளையும் எட்டச் செய்த பெருமை - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே.சா. நூலகம், மணிவாசகர் பதிப்பகம் முதலிய பதிப்பாளர்களுக்கு உரியது. அச்சுத்துறை அறிமுகமான பின்பே, அறிவுத்துறை அனைவருக்கும் பொதுச்சொத்தாகும் வாய்ப்பு வந்தது. எட்டாக் கனியாக ஓலைச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த இலக்கியச் செல்வங்கள், எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பணியைச் செய்த பதிப்பாசிரியர்களும், பதிப்பாளர்களும் நம் நன்றிக் குரியோர்! இரவு பகல் பாராது முதுமையைக் கருதாது உழைக்கும் மனவுரத்தை முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் பணியே எமக்கு வழங்கியது. அரசும், பல்கலைக் கழகங்களும், அறநிறுவனங்களும், சமய பீடங்களும் ,பெரும் இயக்கங்களும், பெரும் செல்வர்களும் செய்ய வேண்டிய பெருந் தமிழ்ப்பணி இது! எளியவர்களால் இயங்கும் தமிழ்மண் பதிப்பகம் பெருந்தமிழ்ப் பணிகளை இன்னல்களுக்கு இடையில் அருமுயற்சியோடு செய்து வருவது, உள்ளவுரம் ஒன்றினால்தான்! வல்லமை சேர்க்கும் வலிமையுண் டாக்கும்! வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்? காக்கும் தமிழைக் காக்கும் உணர்வைப் பாவேந்தர் பாடல் வரிகள் தந்தன. அச்சுக்கு எட்டாமலும் கைக்குக் கிட்டாமலும் இருந்த பேரறிஞர் பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கி திராவிடர் இயக்க அரசுகள் வழங்கின. அதனால், அறிவு பரவலாகும் வாய்ப்புகள் உருவாயின. `சரிவும் இழப்பும் நமக்கு வந்தாலும் தமிழுக்கு வரக்கூடாது என எண்ணி உழைக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழ் நாட்டில் வற்றாமல் வளர்ந்தபடி இருக்கின்றன. திருவிடர் கழகம் (1908) தனித்தமிழ் இயக்கம் (1916) தென்னிந்திய நலஉரிமைக் கழகம் (1916) சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943) தமிழ்ப் பேராயம் (1959) தமிழ்க்காப்புக் கழகம் (1961) தனித்தமிழ்க் கழகம் (1964) உலகத்தமிழ்க் கழகம் (1968) தமிழியக்கம் (1972) தமிழ்ச் சான்றோர் பேரவை (1998) தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும் பாவாணருமே! தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை! அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு `மறைமலையம் என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது. பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம் இது! தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது! அறிவுலகத்தால் `மறைமலையம் வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம். - கோ. இளவழகன் இதுவரை வெளியிட்டுள்ள தமிழ்மண் பதிப்பகத்தின் நூல் தொகுப்புகள் 1. பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 52 நூல்கள் 2. தொல்காப்பியம் - உரைகளுடன் 15 தொகுப்புகள் 3. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் - 30 நூல்கள் 4. கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி -18 தொகுப்புகள் 5. சாமிநாத சர்மா - 31 தொகுப்புகள் 6. ந.சி.க. நூல் திரட்டு - 24 தொகுப்புகள் 7. சாத்தன்குளம் இராகவன் நூற்களஞ்சியம் - 16 நூல்கள் 8. சதாசிவப் பண்டாரத்தார் - 10 நூல்கள் 9. நா.மு.வே.நாட்டார் தமிழ் உரைகள் - 24 தொகுப்புகள் 10. செவ்விலக்கியக் கருவூலம் - 15 தொகுப்புகள் 11. தேவநேயம் - 14 தொகுப்புகள் 12. திரு.வி.க. தமிழ்க்கொடை - 26 தொகுப்புகள் 13. உரைவேந்தர் தமிழ்த்தொகை - 28 தொகுப்புகள் 14. கருணாமிருத சாகரம் - 7 தொகுப்புகள் 15. பாவேந்தம் - கெட்டிஅட்டை - 25 தொகுப்புகள் 16. புலவர் குழந்தை படைப்புகள் - 16 தொகுப்புகள் 17. கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 தொகுப்புகள் 18. நாவலர் சோம சுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் - 5 தொகுப்புகள் 19. முனைவர் இராசமாணிக்கனார் நூல்கள் - 39 நூல்கள் 20. தமிழக வரலாற்று வரிசை - 12 தொகுப்புகள் 21. உவமைவழி அறநெறி விளக்கம் - 3 தொகுப்புகள் 22. முதுமொழிக் களஞ்சியம் - 5 தொகுப்புகள் 23. சாமி சிதம்பரனார் நூற்களஞ்சியம் - 22 தொகுப்புகள் 24. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 தொகுப்புகள் 25. அறிஞர் க. வெள்ளை வாரணனார் நூல் வரிசை - 21 தொகுப்புகள் 26. ஐம்பெருங் காப்பியங்கள் - 5 தொகுப்புகள் 27. பதினெண் கீழ்க்கணக்கு - 3 தொகுப்புகள் 28. நீதி நூல்கள் - 2 தொகுப்புகள் 29. பி. இராமநாதன் - 10 நூல்கள் 30. யாழ்ப்பாண அகராதிகள் - 2 தொகுப்புகள் 31. வெள்ளி விழாத் தமிழ்ப் பேரகராதிகள் - 3 தொகுப்புகள் 32. ந.சி. கந்தையா அகராதிகள் - 2 தொகுப்புகள் 33. முதுமுனைவர் இளங்குமரனார் தமிழ்வளம் - 40 தொகுப்புகள் 34. இளங்குமரனார் அகராதிகள் - 2 தொகுப்புகள் விரைவில் வெளிவர இருக்கும் அறிஞர்களின் நூல்கள் 1. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை 2. வ.சுப. மாணிக்கம் 3. பெரியாரியம் (தந்தை பெரியார்) 4. தமிழர் மருத்துவக் களஞ்சியம் 5. தமிழ் - தமிழ் அகராதி நூலுரை திருவாசகச் சிறப்புப் பாயிரம் வெண்பா. 1 அடி 4 நூல். 1. சிவபுராணம் - கலிவெண்பா. அடி 95 2. கீர்த்தித் திரு அகவல் - அகவற்பா அடி 146 (நிலைமண்டிலம்) 3. திரு அண்டப்பகுதி - அகவற்பா 182 (இணைக்குறள்) 4. போற்றித் திரு அகவல் - அகவற்பா 225 (நிலைமண்டலம்) சிறப்புப் பாயிரத் தொடு கூடிய நான்கு பாடல்களும் அடிகள் 652 இவற்றுக்கு உரிய விரிவுரை 364 பக்கங்கள். அடிகளார் ஆய்வுத் திறனையும் உரைகாண் தெளிவையும், சிவனியப் பற்றையும், பரந்து பட்ட புலமையையும், தனித்தமிழ் ஊற்றத்தையும் தடைவிடை மறுப்பையும், ஒருங்கே விளக்கும் விரிவுரை நூல் இஃதாம். உயிரியின் நோக்கு, `துன்ப நீக்கம் இன்ப ஆக்கம். நெறி எனவரும் சிறப்புப் பாயிர வெண்பா உரைக்கண், புணருந்தொறும் பெரும்போகம் என்று அடிகள் திருச்சிற்றம்பலக் கோவையாரில் அருளிச் செய்தாங்கு வீட்டின்பந் துய்க்குந் தோறும் துய்க்குந்தோறும் முடிவு காணப்படாது நீளும் இயல்பிற் றாகலின் அதுபற்றி அதனை நெறி எனக் கூறினார் என்கிறார். பேரின்ப நூலாம் திருவாசகம் இயற்றிய மணிவாசகர், சிற்றின்பப் பேற்றின் நோக்கே பேரின்பப் பேற்று நோக்கு என்பது விளங்கக் கோவையும் வாசகமும் நெறியுறச் செய்தார் என விளக்கந் தந்தமை தொல்லாசான் தொல்காப்பியன் காட்டிய நெறிமுறையதாம். முதல் ஐந்து அடிகளுக்கு மட்டும் முப்பது பக்கம் விரிவுரை வரையும் அடிகள் நோக்கு, இவ்வாறு விரித்து வேண்டுவ கொண்டு காண்பார் கண்டு கொள்க என்று எடுத்துக் காட்டுவது போல்வதாம். இதில் வரும் `கோகழி என்பதைத் திருவாவடுதுறை என்பாரும், வானகம் என்பாருமாக, அடிகள் பொருந்திய வகையால் அருட்பத்தில், திருந்துவார் பொழிசூழ் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீர் இருந்தவா றெண்ணி என்பதை எடுத்துக் காட்டி நிறுவுகிறார். (27) `பிறப்பு அறுத்தல் என்பதற்கு, பிறவியை மரமாக உருவகம் செய்தல் அடிகட்குக் கருத்தாதலை அடைக்கலாப்பத்தில், நின்திருவருளால் என்பிறவியை வேர் அறுப்பவனே என்றும், பெரும் பெருமான் என்பிறவியை வேர் அறுத்துப் பெரும்பிச்சுத் தரும் பெருமான் என்றும் வரும் தொடர்களைக் கொண்டு நிறுவுகிறார். புல்லாகி பூடாய்... மரமாய் என வேருடையவற்றை முற்படச் சுட்டுதல் எண்ணத் தக்கது (26) இப்பாட்டின் பொருளை நிறைவில் திரட்டித்தந்து இது கடவுட் பராய முன்னிலைக் கண் வந்த பாடாண் பாட்டு என நிறைவு செய்கிறார். தொல்காப்பியத்துவரும் `சீர்த்தி முதல் வல்லினம் ககரமாகமாறிக் `கீர்த்தியாயது. தில்லை மூதூர், மன்னுமாமலை மகேந்திரம் கல்லாடம் பஞ்சப்பள்ளி முதலாக ஊரூர்தோறும் இறைவன் அருளிப்பாடுகளை அடுக்கிக் கூறி முடிப்பது கீர்த்தித் திருவகவல் ஆகும். திருவிளையாடற் புராணங்களுக்கு மூலக் கொடையென அமைந்தது இவ்வகவல் என்பது, மதுரைப் பெறுநன் மாநக ரிருந்து குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் ஆங்கது தன்னில் அடியட் காகப் பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும் 44-47 என்பவை கொண்டு தெளியலாம். அண்டப்பகுதி எனத் தொடக்க முறும் மூன்றாம்பாடல் திரு என்னும் அடை சேரப் பெற்றுத் `திருவண்டப்பகுதி எனப் பெயர் பெறுவதாயிற்று அடி அளவான் மிக்கது போற்றித் திருவகவல் ஆயினும் (225) திருவண்டப்பகுதியே செறிவும் விரிவும் மிக்கதாக (182) உரை கொள்கின்றது. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப் பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இல்நுழை கதிரின் துன் அணுப் புரையச் சிறிய வாகப் பெரியோன் 1-6 இப்பதிக்கு, ஒன்றுக் கொன்று மேற்பட்டு நின்ற எழுச்சியினைச் சொல்லுமிடத்து நூற்றொரு கோடியினும் மிகுதிப்படப் பரந்தனவாகிய அண்டப் பகுதிகளின் திரண்ட வடிவின் பெருக்கமும் அளத்தற்கு அரிய தன்மையும் வள்பபாடு உடைய பெரிய தோற்றமும் மனையினுட் புகும் ஞாயிற்றின் கதிரிற் பொருந்திய அணுக்களை ஒப்ப, சிறியனவாகத் தோன்றுமாறு பேரளவினை யுடையோன். எனப் பொருள் காணும் அடிகள், இந் நிலத்தின்மேல் வானில் காணப்படும் ஏனை உலகங்களும் உருண்ட வடிவினவாய் இருத்தலை மேல்புல வானூலார் கண்டவாறே பண்டை நாளில் இருந்த நம் அடிகளும் கண்டறிந்தமை குறிக்கொளற் பாற்று என்கிறார். மேலும், வீட்டின் கூரை முகட்டுச் சிற்றிடுக்கின் வழியே அதன் அகத்துப் புகும் ஞாயிற்றின் கதிரில் விரைந்தாடும் துகள்களைக் கண்டு உவமையாக எடுத்தோதிய வனப்பு சாலவும் வியக்கற்பாலது என்னும் கூறுகிறார். மாயையில் இருந்து உலகம் தோற்றுவிக்கப்பட்டது என்பதுபற்றி விரிய விரிய ஆய்கிறார் அடிகள். பல்வேறு சமய ஆய்வுகளையும் கொண்டு இறைமை இயலை நிலைப் படுத்துகிறார். அற்றை நக்கீரரும் பிற்றைச் சிவஞான முனிவரும் இற்றை அடிகளாராக விளங்குகிறார் என்னும் திரு.வி.க. உரையை மெய்ப்பிக்கிறார். சைவ மதம் என்பது நிலம் நீர் தீ வளி வெளி ஞாயிறு திங்கள் உயிர் என்னும் எண்வகைப் பொருள்களொடும் புணர்ந்து படைப்பு காப்பு அழிப்பு மறைப்பு அருள் என்னும் ஐந்தொழில்களையும் தனக்கொரு விளையாடல்போல் கொண்டு நடத்தி உயிர்களின் துன்பங்களைப் போக்கித் தன்னிற் பிறிதாவது ஒன்று இல்லானாய் விளங்கும் சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது என்று மணிமேகலையுட் கூறப்பட்டதுவே திருவாதவூரடிகளாற் றழுவப்பட்டது என்று மணிவாசகர் சைவக் கொள்கையை இப்பகுதியில் நிறுவுகிறார் (218). போற்றித் திருவகவலில் 90 ஆம் அடி முதல் 225 ஆம் அடிமுடிய அனைத்தும் போற்றியாய் அமைகின்றன. ஆடக மதுரை அரசே போற்றி (90) எனத்தொடங்கி, போற்றி போற்றி சயசய போற்றி (225) என நிறைக்கிறார். முன் தொடக்கப் போற்றியாக, தாயே யாகி வளர்த்தனை போற்றி மெய்தரு வேதியன் ஆகி வினைகெடக் கைதர வல்ல கடவுள் போற்றி என இரண்டை வைத்து இடையீடறப் போற்றுகிறார். மொத்தத்தில் 160 முறை போற்றி இசைக்கிறார். உள்ளப் பெருக்கு வெள்ளப் பெருக்கு ஆகும் போது அதற்குக் கங்கு என்னை, கரையென்ன? இரா. இளங்குமரன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோசா முத்தையா நூலகம் - சென்னை. புலவர் கா. இளமுருகன் - புன்செய் புளியம்பட்டி (மறைமலையடிகள் மன்றம்) மறை. தாயுமானவன் - சென்னை (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: திரு. அ. மதிவாணன் (ஆங்கிலம்) திரு. க. கருப்பையா திரு. புலவர். த. ஆறுமுகம் புலவர். மு. இராசவேலு திரு. இராசுகுமார் திரு. நாக. சொக்கலிங்கம் முனைவர். க. சுப்பிரமணியன் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா செல்வி. அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: âUkâ வி. சித்திரா திருமதி மலர் திருமதி செல்வி திருமதி ஹேமலதா திரு. ஆசம் திருமதி கலைவாணி பிராசசு இந்தியா திருமதி`புகழ்ச்செல்வி கயல்விழி (Process India), நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், க. இளந்திராவிடன், வே. தனசேகரன், கு. மருது, இல. தருமராசன் தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை -1 எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை-5. அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு மற்றும் பிராசசு இந்தியா `மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நிறைந்த நன்றியும் பாராட்டும். திருவாசக விரிவுரை (நான்கு அகவல்கள்) - முதற் பதிப்பு 1940 சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1972இல் பதிப்பித்த நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்படுகின்றது. இந்நூலைப் பற்றிய குறிப்புரை... திருவாசக விரிவுரைக்கு எண்பது நூல்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டி உள்ளார். கற்பார் உள்ளம் உருக்கி, அவரைப் பேரின்பப் பெருங்கடலில் ஆழ்த்தும் திருவாசகத்தின் இறைநிலையைப் பாராட்டும் நூல். ஆரியரான் மறையில் காணப் படாத அதன் பேரழகை உணர்ந்து உணர்த்தும் நூல். திருவாசகத்தின் ஓங்கார உண்மை, அறிவு விளக்கம், இறைவனின் ஐஞ்செயல், ஐந்திறங்கள், வழக்கு வகைகள், திருநீற்று உண்மை ஆகியவற்றை எடுத் தியம்பும் அடிகளாரது கல்வித்திறனுக்கும், அறி வாற்றலுக்கும், சமயப்பற்றுக்கும் கிடைத்த அடையாள மாகவும், மாபெரும் சமயக் கொடையுமாகும். - இரா. இளங்குமரன் இந்திய இலக்கியச் சிற்பிகள் பொருளடக்கம் பக்கம் திருவாசகச் சிறப்புப்பாயிரம் 5 1. சிவபுராணம் 9 2. கீர்த்தித் திருவகவல் 89 3. திருவண்டப் பகுதி 166 4. போற்றித் திருவகவல் 278 உ திருச்சிற்றம்பலம் திருவாசகச் சிறப்புப்பாயிரம் ஆக்கியோன் பெருமையும் நூற்சிறப்பும் உணர்த்துவதாகிய இந்நூற் சிறப்புப் பாயிரம் வருமாறு : நேரிசை வெண்பா தொல்லை யிரும்பிஅறவிச் சூழுந் தளைநீக்கி அல்லல்அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவா சகமென்னுந் தேன். (இதன் பொருள்) எல்லை மருவா - முடிவுபெறாத, நெறி - வீட்டு வழியை அளிக்கும் - தரும், வாதவூர் எங்கோன் - திருவாத வூரிற்றிருஅவதாரம் செய்தருளிய எம் மாணிக்கவாசகப் பெருமான் திருவாய் மலரிற் றோன்றிய, திருவாசகம் என்னுந் தேன் திருவாசகமென்று சொல்லப்படும் தேன், தொல்லை இரும்பிறவி - தொன்றுதொட்டு வரும் பெரும் பிறவியாகிய, குழும்தளை - உயிரைச் சூழ்ந்த கட்டினை, நீக்கி - போக்கி, அல்லல் அறுத்து - துன்பத்திற்கு ஏதுவான அறியாமையை அறுத்து ஆனந்தம் ஆக்கியது - இன்பத்தை வுளைத்தது என்ற வாறு ஏகாரம் தேற்றப் பொருளில் வந்தது அசைநிலை யென்னுமாம். எல்லை மருவா நெறியளிக்கும் என்னுஞ் சொற்றொடர் மாணிக்கவாசகப் பெருமானாகிய ஆக்கியோன் பெருமையை விளக்கி நின்றது. இதனைத் திருவாசகத்திற்குச் சிறப்பாக ஏற்றுவாரும் உளர். அங்ஙனம் ஏற்றின் ஆக்கியோன் பெருமை கூறுஞ் சொற்றொடர் இல்லையாகிச் சிறப்புப்பாயிரஇலக்கணங் குறையுமாதலானும், முதலிரண்டடிகளுந் திருவாசகச் சிறப்பை நன்கு விளக்குதலின் இதனையும் அச்சிறப்பே கூறுவதாக அதன் மேலேற்றுதல் மிகைபடக் கூறுதல் என்னுங் குற்றமாய் முடியுமாதலானும் அது பொருந்தாது. அற்றன்று, நூலினது சிறப்புக் கூறவே அதனை ஆக்கியோன் பெருமை தானே விளங்குமாதலின், அதனை வேறு கூறுதல் வேண்டா வெனின்; ஒரு நூல் கேட்பான் புகுவோர் அதனை ஆக்கியோன் பெருமை உணர்ந்தன்றி அது கேட்டலிற் கருத்து ஊன்றாராகலானும், நக்கீரனார் இளம்பூரணர் முதலான தொல் உரையாசிரிய ரெல்லாம் முதற்கண் ஆக்கியோன் பெருமை கூறல் வேண்டு மென்றே உரைத்தாராகலானும் முதலில் ஆக்கியோன் பெருமை கூறுவேண்டுவது கடமையா மென்க. அற்றேல், எல்லைமருவா நெறியளிக்கும் வாதவூரெங்கோன் என்றன்றோ செய்யுள் தொடங்குற்பாலதாமெனின்; இச்செய்யுட்கு எழுவாயாவது திருவாசகம் ஆதலின் அதற்கு அடைமொழியாய் நிற்கும் எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் என்பதே உரையுள் முன்வைத்து உரைக்கப்படும். இது செய்யுளாகலின் எழுவாய் பின்னும் ஆக்கியதே என்னும் பயனிலை முன்னுமாக முறை பிறழ வைக்கப்பட்டன. தேன் என்பது தூய மலரிற் றோன்றித் தீஞ்சுவையினதாய்த் தன்னை உண்டார்க்கு இன்பந்தந்து அவர்க்குள்ள நோயினையுந் தீர்க்கும் மருந்தாதல் போல, இத்திருவாசகமும் தூய வாதவூரடி களின் திருவாயிற் பிறந்து சொற்சுவை பொருட்சுவை நிரம்பித் தன்னை கற்பார்க்குப் பிறவிப் பிணியையும் அதற்கேதுவான அறியாமையையுந் தொலைத்துப் பேரின்பம் நல்குந் திறத்த தென்று உரைத்துக் கொள்க. உவமையும் பொருளும் இங்ஙனம் பொருந்துமாறு உரைக்க அறியாதார் நெகிழ்ச்சிப் பொருளாகிய தேன் தளையை நீக்குதலும் அல்லலை அறுத்தலுமாகிய வலிய பொருளின் றொழில்களைச் செய்யாநின்றது ஒரு வியப்பெனப் பொருள் கூறி, அவ்வியப்புப் பொருளை ஆக்கியதே என்பதன் ஈற்றில் நின்ற ஏகாரம் உணர்த்தா நின்றதெனவும் உரைத்தார். தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே, ஈற்றசை இவ்வைந் தேகாரம்மேஎன்று ஆசிரியர் தொல்காப்பியனார் ஓதும் ஏகாரப் பொருள் ஐந்தனுள் வியப்புப் பொருள் என்பதொன்று பெறப் படாமையால் அது போலியுரையா மென்க. தேன் நெகிழ்ச்சிப் பொருளாயினும் அது நோய் நீக்குதற்கண் வன் பொருட் செயலினும் மிக்கதாயிருத்தலின் அது தெரித்தற் பொருட்டுத் தளைநீக்கி அறுத்து எனும் வினை கொடுத்தார். மேலும், திருவாசகத் தேன் உலகத்துத் தேன் போலாது, பிற வற்றால் நீக்கலாகாத பிறவிப் பிணியை நீக்கி அறியாமையைத் தொலைக்க வல்லதாகலின் அம்மேம்பாடு புலப்படுதற் பொருட்டு அவ்வினை கொடுத்துக் கூறினாரெனலும் ஆம். அல்லல் ஆகுபெயரால் துன்பத்தைத் தரும் அறியாமை மேலதாயிற்று. இனித் திருவாசகம் என்பது பிறிதொன்றற் கில்லாத அழகினை உடைய வாசகம் என்னும் பொருட்டாம். திரு வென்பது கண்டாரால் விரும்பப்படுந் தன்மைநோக்கம், என்றது அழகு எனப் பேராசிரியர் திருச்சிற்றம்பலக் கோவையாரு ரையுள் உரைத்ததூஉங் காண்க. பிறிதொன்றற்கில்லாத சிறப் பினை யுடையது இத்திருவாசகம் என்பது அதனாற் பெற்றாம். வாசகம் என்பது சொல் என்னும் பொருட்டாதல் மண்டில மே பணியாய் தமியேற் கொருவாசகமே என்னுந் திருச்சிற்றம் பலக்கோவையார் உரையிற் காண்க. திருவாசகம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை; இதனை ஆகுபெயர் என்பாருமுளர்; ஆயினும், உண்மையான் நோக்கு வார்க்கு இஃது அன்மொழித் தொகையே யாவதல்லது ஆகுபெயராகாமை யுணர்க என்று ஆசிரியர் சிவஞான யோகிகள் கூறுதலின் ஈண்டுக் கூறியதே பொருத்தமாமென்க. இனித் திருவாசகம் என்பதில் அடைமொழியாய் நின்ற திருவென்னுஞ் சொல் கண்டாரால் விரும்பப்படுந் தன்மை நோக்கமாகிய அழகினை உணர்த்தவே, பேரின்பப் பேற்றைக் காதலிப்பாரெல்லாராலும் விரும்பப்படும் அழகினை உடைத்து இவ்வாசகம் என்பது பெற்றாம். எல்லாரும் ஒன்றை விரும்புதல் அது பிறிதொன்றற் கில்லாத அழகினை உடைமையினா லேயாம். தன்னைக் கற்பார் உள்ளத்தை உருகச் செய்து அவரை பேரின்பப் பெருக்கின்கண் ஆழ்த்துதற்கட் பிறிது எந்நூலுக்கும் இல்லாத அழகினை இத்திருவாசக நூல் உடைமையால், இதனினும் மேலான அழகினைப் பெற்ற வேறொருநூல் இல்லை யென்பது தேற்றமாம். அன்பு பொதிந்த இதன் செய்யுட்களை ஓதுந்தோறும் நினைக்குந்தோறும் நெஞ்சம் நெக்குருகக் கண்ணீர் பெருக நாவுரை குழற மெய்ம்மயிர் சிலிர்ப்பப் பேரின்ப வெள்ளங் கிளர்ந்து எழுதல் யாவர் மாட்டுங் காணப்படுத லானும், தொடர்புபட்டு நிகழும் இத்தகைய பேரின்ப நிகழ்ச்சி மற்றை நூல்களை ஓதுவார் நினைப்பாரிடத்துக் காணப்படா மையானும் இத்திருவாசகம் ஒன்றே ஏனைநூல்களுக்கில்லாத அழகினை உடைத்தென்பது தெளியப்படும். ஆரியர்க்குள் வழங்கும் நான்மறைகளும் அவரால் மிக உயர்ந்தனவாகக் கருதப்படினும். நடுநிலை திறம்பாத நல்லிசைப் புலவர் ஒருவர் அவ்வாரிய நான்மறைகளையும், இத்தமிழ் மறையினையும் பொருடெரிந்து ஓதிக் காண்பாராயின் இத்திருவாசகம் அந்நான்மறையினுங் காணப்படாத பேரழகினையுடைத்தெனத் தெற்றென உணர்வர். இத்திருவாசகத் தமிழ் மறையினை இடையறாது ஓதி அதன் பொருளை எந்நேரமும் நினைந்து கழிபேரின்பத்திற் றிளைத்திருப்பார்க்கு மலக்கறை தானே தேய்ந்து போக, இறைவன் றிருவருட்பேறு எளிதில் வந்தெய்து மென்க. எல்லை மருவா நெறி அளிக்கும் என்பதற்குப் பிறவி யெல்லையைச் சேராத வீட்டு நெறியைத் தரும் என்று பொருள் கூறுவாருமுளர். இதற்கு இங்ஙனம் பொருளுரைத்துத், தொல்லை யிரும்பிறவிச் சூழுந் தளைநீக்கி என்னும் அடிக்கும் அப்பொருளே யுரைத்தல் சிறப்பன்மையானும், அது கூறியது கூறலா மாகலானும் அது பொருந்தாதென விடுக்க. முடிவு படாத இன்பத்தினையுடைய தாகலின் வீட்டுநெறியை எல்லை மருவா நெறி என்றார். எல்லாவற்றிற்கும் முடிந்த நிலையாயுள்ள வீட்டினை அவ்வியல்பு புலப்படத் துறை எனக் கூறுதலே பொருத்தமாம்; அவ்வாறன்றி நீளச்செல்லும் வழியாக அதனை உருவகப்படுத்திய தென்னை யெனின்; புனர்ந்தாந் புணருந் தொறும் பெரும்போகம் என்று அடிகள் திருச்சிற்றம்பலக் கோவையாரில் அருளிச் செய்தாங்கு, வீட்டின்பந் துய்க்குந்தோறுந் துய்க்குந்தோறும் முடிவு காணப்படாது நீளும் இயல்பிற்றாகலின் அதுபற்றி யதனை நெறி எனக் கூறினார். சிறப்புப்பாயிரம் முற்றும் உ திருச்சிற்றம்பலம் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச்செய்த திருவாசகமும் அதற்கு விரிவுரையும் முதலாவது அகவல் சிவ புராணம் (சிவனது அநாதி முறைமையான பழமை) திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது (குறிப்புரை) சிவ புராணம் என்னுஞ் சொற்றொடர் சிவனது பழமை என்னும் பொருளை உணர்த்தும்: இச்சொற்றொடர்ப் பொருளை இதன்கீழ் நின்ற சிவனது அநாதி முறைமையான பழமை என்று பழைய சான்றோர் எவரோ விரித்துக் கூறிய சொற்றொடர் இனிது விளக்குகின்றது. வடமொழியிற் புராணம் என்னுஞ் சொற் பழைய நிகழ்ச்சி என்று பொருள் படுமாகலின் அப்பொருளில் அஃது இங்கு வைக்கப் படுவதாயிற்று. இனிப் பழைய வரலாறுகளை எடுத்துக் கூறும் நூல்கட்கும் புராணம் என்னுஞ் சொல் வழங்கப்படுதல் காண்க. நமச்சிவாய வாழ்க! நாதன்றாள் வாழ்க! இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் றாள்வாழ்க! கோகழி ஆண்ட குருமணிதன் றாள்வாழ்க! ஆகமம் ஆகிநின் றண்ணிப்பான் றாள்வாழ்க! 5 ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க! (உரை) நமச்சிவாய என்னுஞ் சொற்றொடர் வட மொழியில் நமசிவாய என நின்று சிவனுக்கு வணக்கம் என்னும் பொருளைத் தரும். சிவன் என்னுஞ் சொல் வட மொழியில் சிவ: என நின்று நான்காம் வேற்றுமை உருபாகிய ய என்பதனை ஏற்குங்கால் இடையிலுள்ள சிர்க்கங் கெட வகரம் வாகாரமாக நீண்டு சிவாய என்று ஆய்ச் சிவனுக்கு எனப் பொருள்படும். நம என்பது வணக்கம் எனப் பொருடரு வதொரு வடசொல்; இச்சொல் முதல்நின்று நமச்சிவாய எனப் புணருங்கால் ஈற்றில் நின்ற ஸகரம் வருமொழி முதல்நின்ற சகரத்தோடொப்பத் திரியும்; சிவாயநம: எனப் புணர்ந்து ஈற்றில் நிற்குங்கால் அதன் கடை எழுத்தாகிய ஸகரம் விசர்க்கமாகத் திரியும். இச்சொற்புணர்ச்சிக் கட்படும் இவ்வேறுபாடுகள் வடமொழி இலக்கணங்களுட் கண்டுகொள்க. இனிச் சிவன் என்னுஞ் சொல் எல்லாம் வல்ல ஆண்ட வனை உணர்த்த, நம என அதனோடியைந்த மற்றைச்சொல் அவ்வாண்டவனுக்கு அடிமைத்திறம் பேணும் உயிரினைக் குறிப்பால் அறிவுறுத்தி நிற்கின்றது. என்னை! ஆண்டவனுக்கு வணக்கத்தைச் செலுத்துதற்கு உரியது உயிரேயாமென்பது வெளிப்படையாய் நிற்கவைத்து அஹம் சிவம் நமாமி (நான் சிவனை வணங்குகின்றேன்) என்று உரையாமல், வணங்கும் உயிரை உணர்த்தும் அஹம் (நான்) என்னுஞ் சொல்லையும், அதுகொண்டு முடியும் நமாமி (வணங்குகின்றேன்) என்னுஞ் சொல்லையும் விடுத்து, வறிதேநமச்சிவாய (சிவனுக்கு வணக்கம்) என இரு சொற்களை மட்டும் புணர்த்த ஒரு சொற்றொடரைப் பெருஞ் சிறப்புடைய மந்திர முதல்வனிடத்துப் பேரின்பத்தைப் பெற விரும்பி அவனை அணுகினாற்கு யான் எனது என்னும் இருவகைச் செருக்கும் அற்று அவனது தலைமைக்கீழ் அடங்கி நிற்க வேண்டுவதி ன்றியமையாததாகும். அதுபோல வெனின், ஒரு பொருள் பணிவுடன் ஒழுகி அது பெறுதல்போல என்பது. அவ்வாறன்றி, ஒன்றுமில்லாதார் எல்லாம் உடையார் போற் றம்மைப் பிழைபட பெறாது பெரிதுந் துன்புறுதல் போலப், பேரின்பச் செல்வம் இல்லா வறியரான சிற்றுயிர்கள் அச் செல்வம் முழுதும் உடைய முதல்வனைப் பெரிதாகக் கருதாமற் றம்மைத்தாமே மேலாக நினைந்து செருக்குவராயின் முடிவு படாத் துன்பத்திலேயே கிடந்து உழல்வர். மற்று அச்செருக்கு அறுத்துத் தம்மை ஒரு பொருளாக நினையாமல் தந்தலை வனையே பொருளாக நினைந்து வழிபடுவார்க்குப் பேரின்பப் பேறு வருவது திண்ணமேயாம். எனவே, நான் சிவனை வணங்குகிறேன்என்று மந்திரமொழி வகுத்து வைப்பின், அதன்கண் நான் என்பது முனைத்து நின்று எல்லா ஆற்றலும் எல்லா அறிவும் உடைய முதல்வற்கு முன் தன்னை ஒரு பொருளாகப் பெரிதெண்ணிய குற்றம் உண்டாகி, அதனால் அறியாமையும் உடன் கிளைத்துப் பேரின்பப்பேற்றை அடையாவாறு தடைசெய்தலேயன்றிச் சொல்லுக்கடங்காத் துன்பத்தையுந் தருமாகலின் அங்ஙனஞ் செய்துவைத்தல் வழுவாய் முடியும். அவ்வாறு வழுப்படாமைப் பொருட்டே நான் என்பதனை முற்றும் அடக்கிச் சிவனுக்கு வணக்கம் என்பது போதர நமச்சிவாய என்று மந்திரமொழி வகுத்து வழங்கினாரென்க. இவ்வுண்மை தெரித்தற்பொருட்டே ஆசிரியர் மெய்கண்டதேவநாயனார், நான் அவனென் றெண்ணினர்க்கு நாடுமுளம் உண்டாதல் தான்எனஒன் றின்றியே தானதுவாய் - நானெனஒன் றில்லென்று தானே எனுமவரைத் தன் அடிவைத் தில்லென்று தானாம் இறை என்று சிவஞானபோதத்தின்கண் அருளிச்செய்வா ராயினதூஉ மென்க. இனிச் சிவனுக்கு வணக்கம் என்னும் மந்திரத்தாற் சிவனை வழிபடுமிடத்து உயிர் தான் ஒருமுதல் அன்றாய்ச் சிவனருளில் அடங்கிநிற்குமாறு யாங்ஙனமெனின்; அதனை ஒரு சிறிது விளக்குதும். கண்ணுங் கதிரவனும் ஒளியுடைப் பொருள் கள் என்பது தேற்றம். அவ்வாறாயினும், நம்மனோர் கண்கள் கதிரவன் ஒளியின் உதவியின்றி எதனையுந் தாமாகவே காணமாட்டா; மற்றுக் கதிரவன் ஒளியோ தானேயும், விளங்கிக் கண்ணொளியையும் விளக்குந்தன்மைத்து. கண் ஒரு பொருளைக் காணுமிடத்துக் கதிரவனொளியில் ஒன்றுபட்டு நின்று காணும். அங்ஙனங் கதிரவனொளியில் ஒன்றுபட்டு நிற்குங்காற் றானும் ஒளியுடைத்தாம்; கதிரவனொளியில் ஒன்றியைந்து நில்லாது கண் தன்னைத் தனித்துக் காணுமாயின் அது தன்னையுங் காணாது கதிரொளியையுங் காணாது பிற பொருள் களையுங் காணாது; அதுபோல, உயிருஞ் சிவமுமாகிய இரண்டும் அறிவுடைப் பொருள்களேயாயினும், உயிரின் அறிவு அறிவித்தாலன்றி யறியாது; சிவத்தினறிவோ தானேயும் அறியும்; உயிரினறிவையும் அறிவிக்கும். ஆதலின் உயிர் தன் அறிவை முதல்வனறிவோடு .இயைவித்து அவன் அறிவிக்கு மாறே அறியுமாயின் அது தன்றன்மையினையும் இறைவனியல்பையும் ஏனைப்பொருள்களின்இயல்புகளையும் செவ்வனே உணரப் பெறும். அவ்வாறன்றி, உயிர் தன்னை ஒரு முதலாக நினைந்து முதல்வனறிவை விட்டுப் பிரிந்து தனிநின்றறிய முயலுமாயின், அது தன்னையும் அறியாது, தன் றலைவனையும் அறியாது, ஏனைப் பொருள்களின் உண்மைத் தன்மையும் அறியாது, அறியாமையே மேற்பட்டு நிற்கும். இவ்வுண்மை பிற்காலத்துச் சான்றோராகிய தாயுமானவ சுவாமிகளாலும், அருளால் எவையும் பார்என்றான் அத்தை அறியாதே சுட்டிஎன் அறிவாலே பார்த்தேன் இருளான பொருள்கண்ட தல்லாற் கண்ட என்னையுங் கண்டிலேன் என்னேடி தோழி என நன்கெடுத்துக் காட்டப்பட்டது. எனவே, கதிரொளியிற் கண்ணொளி அடங்கிநின்று விளங்குமாறு போல, உயிரும் இறைவனை வழிபடுங்கால் அவனருளில் அடங்கிநின்று அவ்வருள் வண்ணமாய் விளங்கப்பெறுமென்று கடைப்பிடிக்க. கதிரொளியுங் கண்ணொளியும் ஒருங்கியைந்து பிரிப்பின்றி ஒன்று போல் நிற்பினுங் கதிர் கதிரே, கண் கண்ணே; அதுபோலச் சிவனறிவும் உயிரறிவும் ஒருங்கியைந்து பிரிப்பின்றி நிற்குமாயின், சிவன் சிவனே, உயிர் உயிரே; சிவனருளிற் படிந்து கிடத்தல்பற்றி உயிர் அழிந்துபோமாறில்லை; இஃது உண்மை விளக்கத்திற்போந்த, முத்திதனில் மூன்று முதலு மொழியக்கேள் சுத்தஅநு போகத்தைத் துய்த்தல்அணு - மெத்தவே இன்பங் கொடுத்தல்இறை இத்தைவிளை வித்தல்மலம் அன்புடனே கண்டுகொள்அப் பா என்னும் திருப்பாட்டினாலும் நன்குணரப்படும். ஒரு சாரார் வீடுபேற்றின்பத்தை நுகருங்கால் உயிர் ஒருமுதல் என்றே கூறுதற்கு ஆகாமல் முற்றும் அழிந்து இல்லாமற்போக, எங்கும் இறைவனே நிற்பனென உரைப்ப: அது பொருந்தாது, பேரின்பம் நுகரப்படு பொருளும், உயிர் அதனை நுகருவதும் ஆகலின், உயிர் முதல் கெட்டு அழிந்தவழிப் பேரின்பம் இருந்தும் அவற்றை உண்பான் இல்லாக்கால் அவை பயன்படுதல் இல்லை யானாற்போல வென்க. அதுவுமேயன்றி, உள்பொருளாகிய உயிர் எவ்வாறு அழிந்து எவ்வாறு இல்லையாப்போம் என்று வினாவுவார்க்கு விடையிறுக்கல் ஆகாமையின் வீடுபேற்றின்கண் உயிரில்லை யென்பார் கூற்று யான் மலடி பெற்ற மகன் என்பதனோ டொத்துப் பொருளில் கூற்றாய் ஒழியும் என்க. எனவே, நமச்சிவாய என்னும் மந்திரமொழிக்கண் உயிர் தன்னையொரு பொருளாகக் கருதாமற் சிவனையே பொருளாகக் கருதி இருவகைக் செருக்கும் அற்று அவன் திருவடிக்கீழ் அடங்கி நிற்குமாறு தெரிந்துரைக்கப்பட்டது. இனி, நமச்சிவாய எனும் இம்மந்திரத்திற் சிவன் என்னும் மொழி முழுமுதற் கடவுட்குச் சிறந்த பெயராக வைக்கப்பட்டது என்னை யெனின்; உயிர்களெல்லாம் இன்பப்பேற்றினையே விரும்பிநிற்றலானும், அவை தமக்கு அழியா இன்பத்தினைத் தரவல்ல கடவுள் முடிவுபடாப் பேரின்பத்திற்கு நிலைக்களானா யிருந்தாவல்லது அவை அக்கடவுளைப் பற்றுதற்கு அவாவுற மாட்டா வாகலானும், கடவுளின் இன்ப நிலையை இடையறாது நினைவில் எழுப்பும் பெயர்போல அவர்தம் எல்லையற்ற வல்லமையுனையும் அளவுபடா அறிவினையும் உணர்த்தும் பெயர்கள் உயிர்கட்கு மிகப் பயன்படாமையானும் அன்பு வடிவினன் இன்ப வடிவினன் என்னும் பொருளைத் தரும் சிவன் என்னுஞ் சொல்லே முதல்வனுக்குக் கழிபெருஞ் சிறப்புடைய பெயராக வழங்கப்படுவதாயிற்று. சிவன் என்னும் மொழி இத்துணைச் சிறந்ததாய் இருத்தலினாலன்றே, இருக்கு எசுர் சாமம் எனும் மும்முறையுள் நடுநின்ற எசுர் வேதத்தின் நடுவே விளங்கும் திருவுருத்திரத்தின்கண் நமச்சிவாயச சிவத ராயச என நமச்சிவாய என்னும் ஐந்தெழுத் தருமறையும் சிவ என்னும் ஈரெழுத்தொருமொழியுங் காணப்படுவவாயின. அற்றேல், எசுர் வேதத்தினும் மிகப்பழமையதான இருக்கு வேதத்தில் உருத்திரன் என்னும் மொழியே முழுமுதற் கடவுட்குச் சிறந்த பெயராக அடுத்தடுத்து ஓதப்படுவதல்லாமல், சிவம் எனுஞ் சொல் அதன்கட் காணப்படாமை என்னையெனின்; ருத்ரன் எனுஞ்சொல் ருத் (துன்பம்) எனவும் த்ராவயதி (ஓட்டுகிறான்) எனவும் பகுக்கப் பட்டுத் துன்பத்தை நீக்குபவன் என்று பொருடருதலினாலும், கொள்ளிவட்டமுங் கறங்கும் போல ஓவாது துன்பத்திற் கிடந்துழன்று பெரிதும் வருந்தாநின்ற உயிர்கட்கு முதலில் அவற்றின் துன்பத்தைப் போக்கி யல்லது இன்பத்தைத் தருதல் ஏலாமையினாலும், முதன்மறையாகிய இருக்கின் வாயிலாக முதற்கண் இறைவனை வேண்டலுறும் உயிர்கள் முன்னர்த் தமது துன்பத்தைத் துடைக்கும் பொருட்டே முதல்வனை வழுத்துவராதலினாலும் அவற்றின் துயரைத் தீர்க்கும் நிலையில் நிற்கும் எல்லாம் வல்ல ஆண்டவனை அதற்கேற்ப உருத்திரன் என்று .இருக்குமறை பலகாலும் பரவுவதாயிற்று; தமது துன்பம் நீங்கிய அளவிலே பின்னர் அவ்வுயிர்கள் இன்பப்பேற்றை விரும்பி அவ்விறைவனை தொழுவராதலின், அதற்கேற்ப அதற்கடுத்த இரண்டாம் மறையாகிய எசுர்இன்பத்தைத் தருதற்குரிய நிலையில் இன்ப வுருவாய் நிற்கும் முதல்வனைக் குறிக்குஞ் சிவன் எனுஞ் சொல்லை மிக்கெடுத்துக் கூறுவதாயிற்று. எனவே, முதலாவதான இருக்குமறை துன்பத்தை நீக்கிக் கோடலையே பொருளாகக் கொண்டு அதற்கியைந்த சொல்லால் உருத்திரன் எனவும், இரண்டாவதான எசுர்மறை இன்பப்பேற்றினையே கருத்தாகக் கொண்டு அதற்கு வாய்ப்பான மொழியாற் சிவன் எனவும் வழுத்துரை கூறிய நுட்பம் பெரிதுங் கடைப்பிடித்தல் வேண்டும். இனி, இருக்கு வேதத்தின்கட் சிவன் எனும் மொழி முதற்கடவுட் பெயராய் யாண்டும் வழங்கப்பட வில்லையெனக் கூறுதலும் பொருந்தாது; என்னை? இருக்கு வேதப் பத்தாம் மண்டிலத்தின் தொண்ணூற்றிரண்டாம் பதிகத்தின் ஐந்தாஞ் செய்யுளில் ஏபி : சிவ : வான் ஏவயாவபிர் என்னுஞ் சொற் றொடர்க்கட் சிவன் எனும் மொழி வந்ததாகலின் அவ்வாறு கூறுதல் அடாதென்றொழிக. இனி, நமச்சிவாய வெனும் இம்மந்திரத்தின்கண் முதல் நிற்கும் நம என்னும் மொழி உயிரின் றொழிலாகிய வணக்கத்தை உணர்த்துதலின், அதனை முன்வைத்து, முழுமுதற் கடவுளை யுணர்த்தும் சிவனென்னும் மொழியை அதன்பின் வைத்து உரைக்கும் முறை சிறந்ததாகாமையின் நமச்சிவாய வெனக்கூறும் முறையில் நிற்கும் இம்மந்திரத்தைத் தூல பஞ்சாக்கரமென்றும், அவ்வாறன்றிச் சிவ வென்னும் மொழியை முன் நிறுத்தி, நம வென்னும் மொழியை அதன்பின் நிறுத்திச் சிவாயநம வெனக்கூறும் முறை எல்லாம்வல்ல சிவபிரானை முதல் நினைத்ததற்கு இடஞ்செய்து அதன்பின் உயிரின் வணக்கத்தை அச்சிவத்தின்கீழ் அடக்குதலின் இதனைச் சூக்கும பஞ்சாக்கரம் என்றும் பழைய திருமந்திரநூலின்கண் மா முனிவரான திருமூலநாயனார் அருளிச்செய்வர்; அது, தூல பஞ்சாக்கரம் என்னுந் தலைப்பின் கீழ் அகார முதலாக ஐம்பத்தொன் றாகி உகார முதலாக ஓங்கி யுதித்து மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந் தேறி நகார முதலாகு நந்திதன் நாமமே எனவும், சூக்கும பஞ்சாக்கரம் எனுந் தலைப்பின் கீழ் எளிய வாதுசெய் வாரெங்கள் ஈசனை ஒளியை யுன்னி மருகு மனத்தராய்த் தெளிய ஓதிச் சிவாய நமவெனுங் குளிகை யிட்டுப்பொன் ஆக்குவன் கூட்டையே எனவும் அவ்விருவகை முறையும் விளங்க ஓதியருளிய வாற்றால் அறியப்படும். இச் சூக்கும பஞ்சாக்கரமாகிய சிவாயநம எனும் மந்திரத்திற் சி என்னும் எழுத்துக் கடவு ளையும், வா என்னும் எழுத்து அம் முதற்கடவுளோடு உடனாய் நிற்கும் திருவருளையும், ய என்னும் எழுத்து உயிரையும், ந என்னும் எழுத்து மும்மலங்களையுந் தத்தம் தொழில்களின் ஏவிப் பாகம் வருவித்தற் பொருட்டு அவற்றோடு உடனாய் நின்று உயிரை மறைத்தலாற் றிரோதசத்தி யென்றும் திரோதமல மென்றுங் கூறப்படுவதாகிய சிவ சத்தியையும், ம என்னும் எழுத்து உயிரைக் கட்டி நிற்கும் ஆணவம் மாயை கன்மம் என்னும் மும்மலங்களையும் உணர்த்தும் ஒலிக்குறிகளா மென்று தொல்லாசிரியரான திருமூலர் ஓதுமாறு, சிவன்சத்தி சீவன் செறுமல மாயை அவஞ்சேர்த்த பாச தலமைந் தகலச் சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர அவஞ்சேர்த்த பாசம் அணுககி லாவே எனவும் சிவனருள் ஆய சிவன்றிரு நாமஞ் சிவனருள் ஆன்மாத் திரோ தமல மாயை சிவன்முத லாகச் சிறந்து நிரோதம் பவம தகன்று பரசிவ னாமே எனவும் போந்த திருமந்திரச்செய்யுட்களாய் உணரப்படும்; இவ்விரண்டில் முதற் செய்யுட்கண் உள்ள சிவன் சத்தி சீவன் செறுமல மாயை, அவஞ்சேர்த்த பாச மலமைந் தகல என்னும் இரண்டடிகளிற் சிவன் சிகாரத்தையும்; சத்தி வகாரத்தையும்; சீவன் யகாரத்தையும்; செறுமலம் சினக்கின்ற திரோதமலமாகிய நகாரத்தையும்; மாயை சுத்த மாயை அசுத்த மாயை என்னும் இரண்டும், அவம் சேர்த்த பாசம் கீழ்மைப் படுத்தும் ஆணவங் கன்மம் இரண்டும் மகாரத்தையும் உணர்த்துவனாம்; மலம் ஐந்தகல என்றது மேற்சொல்லிய திரோதம் சுத்த மாயை அசுத்த மாயை ஆணவம் கன்மம் என்னும் ஐந்தையும்; மலங்களோடு உடனாய் நின்று செலுத்துதல் பற்றிச் சிவசத்தியாகிய திரோதமும் மலமென வைக்கப்பட்டது. செறுமலம் சினக்கும் மலம் என்று பொருள்படுமாறு சினமருவு திரோதாயி எனச் சிவப் பிரகாசத் துட் போந்தமையால் நன்கு விளங்கும்; உயிர்களினின்று மலங்களை அகற்றுவான் வேண்டி அவற்றைச் சினந்து ஏவுதலின் சினமருவு திரோதாயி என்று உரைக்கப் பட்டது. மேலிரண்டடிகளுக்கும் இங்ஙனம் பொருளுரைத்தலே ஆசிரியர் திருமூலநாயனார் கருத்தாமென்பது அவர் அதனை அடுத்தோதிய சிவனருளாய சிவன்றிரு நாமஞ், சிவன் அருள் ஆன்மாத் திரோதம் மலமாயை என்னுஞ் செய்யுளால் நன்கு விளங்கும்; இவ்வாறு பொருளுரைக்க அறியாதார் தமக்கு வேண்டியவாறெல்லாம் உரைப்ப. சூக்கும பஞ்சாக்கரம் சிவ என்பதனை முதலாக வைத்து நம என்பதனை இறுதியாக வைத்து யகாரத்தை இடையில் நிறுத்திச் சிவாய நம வென்று ஓதப்படுமென்பதற்குச் சிவனருளாய சிவன்றிருநாமம் என்றும், சிவன் முதலாகச் சிறந்து என்றுங் கூறினமையே சான்றாம். முழுமுதற் கடவுட்கட்கும் முதற்கண் வைத்துப் பலகாலுஞ் சொல்லுதலால் அவ்விரண்டையும் பற்றிய நினைவே அவற்றை ஓதும் உயிரின்கண் மேற்பட்டு நிற்க. மலமாயா கன்மங்களுக்கு அடையாளங்களாகக் கீழ் நிற்கும் நகார மகாரங்களைப் பற்றிய நினைவு கீழ்ப்பட்டுப் போக, உயிரின் அடையாளமான யகாரம் சிகார வகாரங்களைச் சேர்ந்து நிற்றலின் அஃது அவ்வுயிரை வகாரமாகிய அருளிற் படிவிக்க, அஃது அதனை ஈர்த்துக்கொண்டுபோய்ச் சிகாரமாகிய சிவத்தில் ஒன்றுபடுத்து மென்க. இவ்வியல்பு, சிவன்அருள் ஆவி திரோதமல மைந்தும் அவனெழுத் தஞ்சின் அடைவாம் - இவனின்று நம்முதலா ஓதில்அருள் நாடாது, நாடும் அருள் சிம்முதலா ஓதுநீ சென்று எனவும் அண்ணல் முதலா அழகார் எழுத்தைந்தும் எண்ணில் இராப்பகல்அற் றின்பத்தே - நண்ணி அருளா னதுசிவத்தே ஆக்கும் அணுவை இருளா னதுதீர இன்று எனவும் போந்த உண்மை விளக்கச் செய்யுட்களாலும் இனிதுணரப்படும். இனி, அதிசூக்கும பஞ்சாக்கர மென்பது, நம வென்னும் மல வெழுத்துக்களை அறவே விட்டுச் சிவாய சிவ வென்று ஓதப்படுவதாகும். இஃது அதிசூக்கும பஞ்சாக்கரம் என்னுந் தலைப்பின்கீழ் ஆசிரியர் திருமூலநாயனார், சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி அவாயம் அறவே அடிமைய தாக்கிச் சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை அவாயங் கெடநிற்க ஆனந்தம் ஆமே என்று உரைத்தருளினமையால் அறியப்படும். இதனுள் அவாயங் கெட என்பது அழிவினைச் செய்யும் மல எழுத்துக் களான நகார மகாரங்கள் கெட என்னும் பொருட்டாம். இம் மல எழுத்துக்களை உரைத்தல் ஒழித்து, ஆன்ம எழுத்தாகிய யகாரம் இடை நிற்கச் சிவ வென்னும் மொழியை அதற்கு முன்னும் பின்னும் நிறுத்திச் சிவயசிவ என்று ஓதல்வேண்டு மென்பது தொல்லாசிரியரான திருமூலர் கட்டளையிட்டருளிய வாற்றால் தெற்றெனப் பெறப்படும். இனிப் பிற்றை ஞான்றைச் சித்தாந்த ஆசிரியரான உமாபதி சிவனார், ஆசினவா நாப்பண் அடையா தருளினால் வாசியிடை நிற்கை வழக்கு என்று ஓதியருளியவாறே வகார சிகாரங்களின் நடுவே யகாரத்தை நிறுத்தி வயசி என்று கூறுதலும், மேலெடுத்துக் காட்டிய பண்டையாசிரியர் கிளந்துரைத்த சிவயசிவ என்னும் மந்திரத்தின் இடை நிற்பதே யாகலின் இஃது அதனோடு மாறுகொள்ளாதென்று கடைப்பிடிக்க. இவ்வுண்மை காண மாட்டாதார் சிகார வகாரங்கள் இரண்டனையும் எதிர்நிரல் நிறையாக நிறுத்தி யகாரத்தை நடுவே வைத்து விகடகவி என்றாற்போலச் சிவயசிவ எனக் கூறுதலே அதிசூக்கும பஞ்சாக்கரமா மென்று முன்னையாசிரியர் மேற்கோளுக்கு மாறாகக் கூறுவர். உயிர் அருளுக்குப் புறம்பே நிற்குமாயின் அஃது அதனாற் செலுத்தப்படாமையாற் சிவத்தை அடையாது; ஆகவே ஆன்ம வெழுத்தாகிய யகாரத்தை அருளெழுத்தாகிய வகாரத்திற்குப் புறத்தே வைத்துரைக்கும் முறை பெரும்பயனைத் தருவதன்றாய் ஒழியும். மற்றுச் சிவத்தையே நோக்கி நிற்கும் அருளுக்கும் அவ்வருளோடு ஒன்றுபட்டு நிற்குஞ் சிவத்திற்கும் இடையே உயிர் தன்னை நிறுத்துமாயின், அவ்வாறு தனக்குஞ் சிவத்திற்கும் நடுநின்ற அவ்வுயிரை அருள் சிவத்தில் உந்திப் படிவிக்கும் சிவாய நம என்னுஞ் சூக்கும பஞ்சாக்கர முறையில் மலங்களைக் கீழ்ப்படுத்து அருளைச் சார்ந்து அருள் வண்ணமாய் நின்ற உயிர் பின்னர் அதனூடு சென்று அதனையுந் தாண்டிச் சிவத்தை நோக்கி நிற்கச், சிவத்தைப் பிரிந்துநில்லாத அருள் இடைநின்ற அவ்வுயிரை நெருக்கிச் சிவத்திற் றோய்ப் பித்து மனமொழிகளுக்கு எட்டாப் பேரின்பப் பேற்றினை நல்கும் இவ்வீடுபேற்றின்ப நிலையினையும், இதனைத் தெரிக்கும் அதிசூக்கும பஞ்சாக்கர இயல்பினையும் முற்றும் உணர்ந்த பட்டினத்தடிகள், மாயநட் டோரையும் மாயா மலமெனும் மாதரையும் வீயவிட் டோட்டி வெளியே புறப்பட்டு மெய்யருளாந் தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயைமறந் தேயு மதேநிட்டை என்றான் எழில்கச்சி ஏகம்பனே என்று இவ்வுண்மையைத் தெளிய வுணர்த்தினமை காண்க. இதனுள் மாயநட்டோர் என்றது மறைத்தற் றொழிலாகிய மாயத்தை செய்தே நட்பாய் நின்று உயிருக்கு நலம்புரிந்து வரும் நகாரமாகிய திரோதசத்தியை. மாயாமலம் என்றது பண்டு தொட்டே உயிரின் அறிவு செயல் வேட்கைகளை முழுதும் மறைத்துநிற்கும் அறியாமையும், அதன் சேர்க்கையால் உயிரின் கட்டோன்றும் இருவினைகளும், அவ்விருவினை நுகர்ச்சிக் கிடனாய் உயிரின் அறிவு செயல் வேட்கைகளின் விளக்கத்திற்குக் கருவியாய் உதவும் மாயையும் ஆகிய மகாரத்தை. நகார மகாரமாகிய இவ்விரண்டுந் தஞ் செயலற்றுக்கிடக்க அவற்றைப் போகவிட்டுச் சிவய என்று அருளாகிய தாயுடன் சென்று, பின்னர்ச் சிவயசிவ என்று தந்தையைக் கூடி நிற்குமாறு ஓதற்பாலதாகிய அதிசூக்கும பஞ்சாக்கர வியல்பு இதன்கண் நன்கெடுத்து அறிவுறுக்கப் பட்டமை காண்க. இத்துணை நுணுக்கமான இவ்வைந்தெழுத்துண்மை தெருளமாட்டா தார்க்கும் அதனைத் தெருட்டுதற் பொருட்டன்றே சோமா கந்தமூர்த்தம் திருக்கோயில்களில் வைக்கப்படுவதாயிற்று; அத்திருவுருவத்தின்கட் சிவபிரான் முதலிலும் அருள் வடி வாகிய அம்மை கடையிலும் பரமான்மாவாகிய கந்தர் இடையிலும் இருக்கும் இருப்பு முதலிற் சிகாரமும் கடையில் வகாரமும் இடையில் யகாரமும் நிற்றற்குரிய இவ்வதிசூக்கும பஞ்சாக்கர முறையினைத் தெரித்தல் காண்க. இனித் தொல்லாசிரியரான திருமூலநாயனாரும், அவர்க்குப் பின்னே வந்த சித்தாந்த ஆசிரியரான உமாபதி சிவனாரும் தூலம் சூக்குமம் அதிசூக்குமம் எனப் பஞ்சாக் கரத்தை ஓதும் முறை மூன்றே கூறினாராக, அவ்வுண்மை தேற மாட்டாத சைவரிற் சிலர் மாயாவாத நூற்பயிற்சியான் அறிவு மயங்கி இம்மூன்றன் மேலும் வேறிருமுறையும் உண்டென்று கூறப் புகுந்து இழுக் கினார். அவர் யகாரமாகிய ஆன்மா வகாரமாகிய அருளிலே ஒடுங்கிப்போக வசி எனும் இரண்டெழுத்தளவாய் ஓதப் பெறுவதை மகாகாரண பஞ்சாக்கரமா மென்றும், இஃது அதிசூக்குமபஞ்சாக்கரத் தினும் மேலாவதா மென்றும் உரைப்பர். முத்தியினும் மூன்று முதலும் உண்டென்று பதிபசு பாசங்களை வற்புறுக்குஞ் சைவ சித்தாந்தத்திற்கு அந்நிலையில் ஆன்மாவை அழித்துரைக்கும் மாயாவாதக்கோள் ஒரு சிறிதும் ஏலாமையானும், பெறுவா னாகிய யகாரம் இவ்வழிப் பேரின்பப் பொருளாகிய சிவத்தை உணர்ந்து ஓதப்படும் மகாகாரண பஞ்சாக்கரம் உண்டென்றல் மலடிமைந்தன் முயற்கோடு முதலியனவாக அவர் அடுத்தடுத்து ஆளும் உவமைகள்போல் நகையாடுதற்கு ஏதுவா மாகலானும் அவ்வாறுரைத்தல் தொல்லாசிரியர் மெய்யுரையோடு மாறுபட்டு வழுவாமென்று கடைப்பிடிக்க. மேலும் அவர் அங்ஙனம் வழுப்படக்கூறிய தல்லாமலும் திருமந்திரத்தில் இல்லாத வாசிவா வென்று வாசியை வைத்து என்னும் ஒரு செய்யுளைத் திருமந்திரப் பாட்டாக எடுத்துக்காட்டியும் பிழைபட்டார். இன்னும் இத்துணையின் நில்லாது, வகாரமாகிய அருள் சிகாரமாகிய சிவத்தில் ஒடுங்கிப்போகச் சிகாரமட்டும் எஞ்சித் தனி நின்று விளங்குவதே முத்திபஞ்சாக்கரமா மென்று அதன் மேலும் ஒன்றுகூறித் திருமந்திரத்தின்கண் இல்லாத நாயோட்டு மந்திர நான்மறை வேதம் என்னும் செய்யுளைத் திருமூல நாயனார் அருளிச் செய்த தெனவும் பிழைபட வுரைத்தார். சுத்தமாயை அசுத்தமாயையுட்பட்ட தத்துவங்கட்குத் தோற்ற வொடுக்கங்கள் கூறுதலே சைவ சித்தாந்த மரபாமன்றி, அருளையின்றி நில்லாத சிவத்திற்குஞ் சிவத்தையின்றி நில்லாத அருளுக்குந்தோற்ற வொடுக்கங்கள் கூறுதல் அதற்குச் சிறிதும் மரபாகாமையானும், இஃது, அருளுண்டாம் ஈசற் கதுசத்தி யன்றே அருளும் அவனன்றி யில்லை - அருளின்(று) அவனன்றே யில்லை அருட்கண்ணார் கண்ணுக்(கு) இரவிபோல் நிற்கும்அரன் ஏய்ந்து என்னுஞ் சிவஞானபோதத் திருமொழியும், ......... சத்திதான் மரமுங் காழ்ப்பும், இருமையும் போலமன்னிச் சிவத்தினோ டியைந்து நிற்கும் எனவும் பொன்மைநீ லாதிவன்னம் பொருந்திடப் பளிங்க வற்றின் றன்மையாய் நிற்கு மாபோற் சத்திதன் பேத மெல்லாம் நின்மலன் றானாய்த் தோன்றி நிலைமையொன் றாயே நிற்பன் எனவும் போந்த சிவஞானசித்தித் திருமொழியும் பொன்னிறங் கட்டியினும் பூணினும் நின்றாற்போல் அந்நிறம் அண்ணலும் அம்பிகையும் - செந்நிறத்தள் எந்நிறத்த ளாயிருப்பள் எங்கள் சிவபதியும் அந்நிறத்த னாய்இருப்பன் ஆங்கு என்னும் திருக்களிற்றுப்படியார் திருப்பாட்டும் விளக்கு வது கொண்டு நன்கறியப்படுதலானும் அருள் சிவத்தில் ஒடுங்கிப் போகச் சிவம்மட்டும் எஞ்சித் தனியேநிற்கு மென்றல் பெரிதும் பிழைபாடு உடைத்தாமென்க. எனவே, நமச்சிவாய எனும் பஞ்சாக்கரத்தை ஓதும் முறை தூலம் சூக்குமம் அதிசூக்குமம் என மூன்றேயா மென்பதும், இங்ஙனம் மூவகைப் படுத்துரைத்தலே உத்தியானும் அளவைகளானும் உண்மை நூலானும் ஆராய்ந்து கண்ட முடிபாகிய சைவசித்தாந்தத் திற்கும், தொல்லாசிரியரான திருமூலநாயனார் அருளிச் செய்த திருமந்திரம், சித்தாந்த ஆசிரியரிற் பிற்காலத்தவரான உமாபதி சிவனார் அருளிச் செய்த திருவருட்பயன் முதலான மெய்ந் நூல்கட்கும் இயைவதாமன்றி, இவை மூன்றன் மேலும் வேறிருமுறையு முண்டென்றல் ஒருவாற்றானும் பொருந்தாதா மென்பதும் கடைப்பிடிக்க. அல்லதூஉம், பஞ்சாக்கரம் ஐந்தெழுத்தாய் நிற்கும் மந்திரம் என்பது பிறழாமல் தொல்லா சிரியரான திருமூலநாயனார் ஓதிய தூலம் சூக்குமம் அதி சூக்குமம் எனும் மூவகை முறையினும் அவ்வைந்தெழுத்துக் களே நிலைபேறுற்று நிற்கின்றன. மற்று, மாயாவாதநூல்பற்றி மயங்கி இவற்றின்மேலும், வசி என்னும் ஈரெழுத்தாலாகிய மகாகாரண பஞ்சாக்கரமும், சி என்னும் ஓரெழுத்தாலாகிய முத்தி பஞ்சாக்கரமும் உண்டென்று கூறுவார்க்குப் பஞ்சாக்கரம் என்றதற்கேற்ப ஐந்தெழுத்தில்லாமல் ஈரெழுத்தும் ஓரெழுத்தும் நின்று அம்மந்திரப் பெயர்க்கு மாறுபடும் பிழைபாடு உண்டாத லாலும் அது பொருந்தாதென மறுக்க. இத்திருவாசகத் திருமறையின் முதல் நின்ற இவ்வரும் பெறற் பஞ்சாக்கர மந்திரம் இதற்கும் சைவசித்தாந்தத்திற்கும் ஆரியவேதாமங்கட்கும் உயிர்போற் சிறந்து நிற்றலின் இதன் இயல்பு இத்துணையும் விரிக்கவேண்டிற்று; இன்னும் விரிப்பிற் பெருகும். நமச்சிவாய வாழ்க - நமச்சிவாய வென்னும் திருவைந் தெழுத்து வாழ்வதாக நாதன் தாள் வாழ்க - அத்திருவைந்தெழுத்தைச் சொல்லுங் காற் பிறக்கும் நாத தத்துவத்தின்கண் விளங்குவோன்றன் திருவடி வாழ்க. ஒலியெழுத்துப் புலப்பட்ட வடிவும் புலப்படாத வடிவுமென இருவகை நிலையினை யுடைத்து. புலப்படாத நிலையில் உள்ளது விந்து வென்றும், புலப்பட்ட நிலையில் நிற்பது நாதம் என்றுஞ் சொல்லப்படும். நாதம் எனினும் ஓசையெனினும் ஒக்கும். புலப்படாது அருவாய்கிடந்த விந்து மாயையில் திருவருட்சத்தி தோய்ந்து அதனைக் கலக்கிய அளவானே ஆண்டு நின்றும் ஓர் ஓசையுண்டாக, அவ்வோசை கீழ்நின்ற அசுத்த மாயையை இயக்கி அதனின்று ஒன்றி னொன்று பரியவான பொருள்களையும் இறுதியில் வான் வளி தீ நீர் மண் என்னும் ஐம்பொருள்களாற் றிரண்ட உலகங் களையும் தோற்றுவிக்கும். இது. விந்துவின் மாயை யாகி மாயையின் அவ்வி யத்தம் வந்திடும் விந்துத் தன்பால் வைகரி யாதி மாயை முந்திடும் அராக மாதி முக்குண மாதி மூலம் தந்திடுஞ் சிவன வன்றன் சந்நிதி தன்னின் நின்றே என்னுஞ் சிவஞான சித்தியார் திருப்பாட்டால் உணரப்படும். பிற்காலத்துச் சான்றோரான குமரகுருபர அடிகளும், பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும் நாமநீர் வரைப்பின் நானில வளாகமும் ஏனைய புவனமும் எண்நீங் குயிரும் தானே வகுத்ததுன் தமருகக் கரமே என்று அருளிச் செய்தமை காண்க. இறைவனது திருக் கையிற் காணப்படும் உடுக்கைச் சிறுபறை விந்து தத்துவத்திற்கு அடையாளமாம்; விந்து வட்ட வடிவினதாதல் போல அவ் உடுக்கையின் வாயும் வட்டமாயிருத்தலானும், விந்துவின்கண் நாதம் உண்டாதல் போல அவ்வுடுக்கை வாயினின்றும் ஓசை யுண்டாதலானும் இஃது அதற்கு அறிகுறியாதல் நன்குணரப் படும். திருவாத வூரடிகளும் இத்திருவாசகத்துள் நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும் எனவும், ஞானவாள் ஏந்தும் ஐயர் நாதப்பறை அறைமின் எனவும், வேதமொழியர் வெண்ணீற்றர் செம்மேனியர், நாதப்பறையினர் அன்னே என்னும் எனவும் ஆண்டாண்டு நாததத்துவத்தைப் பறையாக உருவகப்படுத்திக் கூறுதல் காண்க. உலகத்தோற்றத்திற்குக் கருவியான நாதத்தில் திருவருட்சத்தியும் அச்சத்தியோடு உடனாய் நிற்கும் சிவமும் முனைத்து விளங்கும் இயைபுபற்றி இறைவனை ஈண்டு நாதன் என்றார். நாதத்தின்கண்ணும், நாதத்திற் பிரிந்திசைக்கும் வெவ்வேறெகுத்தொலிகளாம். மந்திரங்களினும் இறைவன் முனைத்து விளங்குதலாகிய ஒற்றுமை நயம்பற்றி அவை அவனுக்கு வடிவமாகச் சொல்லப் படுமென்றற்குச் சுத்தமாம் விந்துத் தன்னில் தோன்றி ஆத லானும் சத்திதான் பிரேரித் துப்பின் தான் அதிட்டித்துக் கொண்டே அத்தினாற் புத்தி முத்தி அளித்தலால் அரனுக் கென்றே வைத்ததாம் மந்திரங்கள் வடிவென மறைக ளெல்லாம் என்னுஞ் சிவஞானசித்தித் திருச்செய்யுள் சான்றாதல் காண்க. இனி, நாதன் எனுஞ்சொல் வடமொழியில் இருவேறு வகையாகச் சொல்லப்பட்டு ஒருகால் தலைவன் என்னும் பொருளையும், பிறிதொருகால் ஓசை என்னும் பொருளையுந் தருதலின், அச்சொல் தமிழின் கட் பொதுப்பட நின்று அவ்விரு பொருளினையும் உணர்த்தும். அவ்விரண்டிற் பிற்கூறிய பொருள் பற்றி எல்லா ஓசைகட்கும் முதலான நாதத்தினுள் விளங்குவோன் என்று முன் உரைத்ததுபோல, முற்கூறிய பொருள்பற்றி எல்லாவற்றிற்குந் தலைவன் என்றும் பொருளு ரைத்துக்கொள்க. இச்சொல்லுக்கு இவ்வாறு இருபொருளும் உரைத்தல் அடிகட்குக் கருத்தாதல் நாதப்பறையினர் நான்முகன் மாலுக்கும், நாதர் இந்நாதனார் அன்னே என்னும் என்புழி அவ்விருபொருளும் உடன்றோன்ற அதனை வழங்குதலால் அறியப்படும். இமைப்பொழுதும் என் நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க - கண் இடை ஒருகாற் பொருந்தும் ஒரு சிறுநேரமும் என் நெஞ்சினின்றும் அகலாதவனுடைய திருவடி வாழ்க. ஒருகால் ஒருவற்குக் கண்ணிமை இயல்பாற் பொருந்து நேரமே மிகச்சிறிய காலப்பகுதியாமென்று தொல்லாசிரிய ரெல்லாம் உரைத்தலின் அடிகளும் அதனையே ஈண்டு எடுத்துக் காட்டினார். ஆசிரியர் தொல்காப்பியனாரும் கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை, நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே என்று கூறினார். அன்பால் உருகும் அடியாரது நெஞ்சத் தாமரையில்இறைவன் என்றும் விளங்கியிருத்தலின் இங்ஙனம் அருளிச் செய்தார். தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரும் மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார், நில மிசை நீடுவாழ்வார் என்று அருளினமை காண்க. இங்ஙனமே சைவல்யோபநிடதமும் நெஞ்சத் தாமரையில் அம்மையப்பராய் இனிதெழுந்தருளியிருக்குஞ் சிவ பிரானியல்பை ஹ்ருத் புண்டரீகம் என்னும் மந்திரத்தால் விரித்தோதுமாறு காண்க. என் நெஞ்சின் என்பதில் என் எனுஞ்சொல் ஏழையேனாகிய எனது எனுந் தாழ்மைக்குறிப்புணர நின்றது. எல்லா நெஞ்சினையும் ஒரு பொருட்டாக்கி அதனின்று ஓரிமைப் பொழுதும் அகலாது எழுந்தருளியது ஒரு வியப்பென அவனது அருணிலையை வியந்து கூறியவாறாம். அதனான் இது தற்புகழ்ச்சியன்மை அறிக. இவ்வாறு வருமிடங்கடோறும் இங்ஙனமே தாழ்மைப் பொருள் உரைத்துக் கொள்க. இனி, எண்சாண் உடம்பிற்குச் சிறந்த தலையின் அகத்தை இறைவனுக்கு இருப்பிடமாய் ஓதாது அதற்குக் கீழ்நின்ற நெஞ்சினை அவன் நீங்காது உறையுமிடமாகக் கூறுதல் என்னையெனின்; உட்கொண்ட உணவு இரைப்பையிற் பாலுஞ் சக்கையுமாகப் பிரிபட்டுச், சக்கை கீழே கழிக்கப்பட்டுப் போகப், பால் மேலெழுந்து தாமரைமுகைவடிவாய்க் கீழ் நோக்கித் தொங்கும் நெஞ்சப்பையினுட்புகுந்து இரத்தமாக மாறி ஆண்டு நின்றும் உடம்பின் மேலுங்கீழுமாய்ச் செல்லும் பல்லாயிர நரம்புகளின் வழியோடி உடம்பின்கண் அமைந்த எல்லா உறுப்புக்களையும் வளர்த்து வருதலானும், நெஞ்சப் பையினுள் நிகழும் இந்நிகழ்ச்சிக்கு இன்றியமையாததான மூச்சின் ஓட்டம் இவ்விடத்தின்றி வேறெவ்விடத்தும் நிகழக் காணாமையானும், தலையின் உட்கருவியான மூளை ஒருவன் விழித்திருக்குங்காற் றொழில் புரிவதன்றி அவன் அயர்ந்துறங்குங் காற் றொழிற் படாதாக நெஞ்சினுள் நிகழ்ச்சியோ விழிப்பினும் உறக்கத்தினும் ஓவாது நடைபெறக் காண்டலானும், அறிவு நிகழ்ச்சிக்கு இடமாகிய மூளைபோலாது அறிவினும் மேற்பட்ட அன்பு நிகழ்ச்சிக்கு இடமாவது நெஞ்சம் ஒன்றுமே யாகலானும், அன்பின்கண் மட்டுமே சிவம் ஒன்றுகூடி விளங்குமென்பதற்கு, அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தியாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தியாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே என்னுந் திருமந்திரத் திருப்பாட்டே சான்றா மாகலானும் அவ்வன்பு சுரந்து பொங்குதற்கிடமான நெஞ்சத்தாமரையே இறைவற்குச் சிறந்த இடமாக வைத்து ஓதப்படுவதாயிற்று. இந்நெஞ்சத்தாமரையினுள் ஓவாது நிகழுங் காற்றினோட் டத்தை நடைபெறுவிக்கும் இறைவன்றிருவரு ளியக்கமே திருக்கூத்து என்று நுவலப்படும். மக்களுடன்பின் அகத்தே நெஞ்சத் தாமரையின் அருள் வெளியிலே நடவாநிற்கும் இறைவன் அருட்கூத்தின் இயல்பு, புறத்தே இந்நிலவுடம்பிற்கு நெஞ்சத் தாமரையாக விளங்கா நின்ற தில்லைச்சிற்றம்பலத்தே கட்புலனெதிரேயுங் காணப்படும். அகத்தும் புறத்தும் அருந்தவத் தோரால் அறியப்படும். இத்திருக்கூத்தின்றன்மை தகரவித்தை என்று வட நூல்களுள்ளுங் கூறப்படும். இத்தகர வித்தையின் இயல்பு தைத்திரீயம்நாராயணம் சாந்தோக்யிம் பிருக தாணியகம் முதலான உபநிடதங்களில் இறைவன்என்னும் பொதுப்பெயர் மேற்றாக வைத்து உரைக்கப்படும்; மற்றுக் கைவல்யோபநிடதத்தின் கண்ணோ சிவம் என்னுஞ் சிறப்புப் பெயர்மேற்றாகவைத்து உரைக்கப்படும்; பொதுப் பெயர் சிறப்புப் பெயர் இரண்டானுங் குறிக்கப்படும் பிறப்பிறப்பில்லா முழுமுதற்கடவுள் ஒன்றேயாகலானும், முழுமுதற் கடவுட் டன்மை இறப்புப்பிறப்பு யாண்டுஞ் சொல்லப்படாத சிவபிரான் ஒருவற்கே ஏற்குமன்றி அவை யிரண்டனுட்பட்டுச் சுழலும் உயிர்கட்கு ஏலாமையானும் எல்லா உபநிடதங்களும் சிவபிரான் நெஞ்சத்தாமரையின்கண் இயற்றுந் திருக்கூத்தையே சிறந் தெடுத்துக் கூறலாயின வென்க. இதுபற்றியன்றே, எசுர் சாம அதர்வண மறைகட்குப் பொதுவாயும் இருக்கு மாமறைக்குச் சிறப்பாயும் நிருத்தம் வகுத்தருளிய ஆசிரியர் யாகமுனிவர் அந்தரிட்ச தேவதைகளைக் குறித்து வீட்டு நெறியைக் காட்டும் இடத்தின்கண் தேவதா சார்வபௌடப் பொருளுக்குச் சிவ என்ற சொல்லையே இடுகுறிப் பெயராக்கி அழைப்பாராயினர். அல்லதூஉம், உயிர் உ.டம்பின்கண் நிற்றற்பொருட்டுச் சிவபிரான் நெஞ்சத்தாமரையினுள்ளே அருள்வெளியிற் றிருக்கூத்து இயற்றும் இவ்வியல்பை நுனித்துக் காண்பார்க்கு எல்லாப் பேறுகளும் எளிதில் வருவதுடன் அவருடம்பும் அழிவின்றி நிலைபெறும். இது திருமூலநாயனார் அருளிச் செய்த நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம் நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல் மாசித்தி மாயோகம் வந்துதலைப் பெய்யுந் தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாமே என்னுந் திருப்பாட்டால் நன்குணரப்படும். இனி, இவ்வுள்ளத்தாமரை இறைவன் எழுந்தருளியிருத் தற்குக் கழிபெருஞ்சிறப்புடைய இடமாய் இருத்தலினாலும், இறைவனோடு உடனாய் நின்றன்றி ஒரு சிறிதும் இயங்க மாட்டாத உயிர் அவன் இயக்குமிடத்திருந்தே இயங்குமென்பது பெறப்படுதலினாலும் இவ்வுடம்பகத்து இயங்கும் உயிர்க்கு இருப்பிடமாவதும் இந்நெஞ்சத்தாமரையின் உள்வெளியேயா மென்று கடைப்பிடிக்க. விழிப்பு நிலையில் இறைவன் திருவருட் கூத்தால் உந்தப்பட்டு இயங்கும் உயிர் தலையின்கண் மூளையைக் கருவியாகப் பற்றிக் கொண்டு காணல் கேட்டல் உண்ணல் உறுதல் உயிர்த்தல் முதலான தொழில்களையும் அவை வாயிலாக வரும் அறிவு நினைவுகளையும் உடையதாய் நிற்கும். மற்று உறக்க நிலையில் அது மூளையைப் பற்றுதல் ஒழிந்து நெஞ்சத் தாமரையின் உள்ளே சென்று ஒடுங்கி இறைவன் திருவடிக்கீழ் அமைந்து கிடக்கும். எனவே, நெஞ்சினகமே உயிர் நிலையென்று உணரற்பாற்று. இவ்வுண்மை, இஞ்ஞான்றை உடம்பு நூலார் சில சிற்றுயிர்களின் மண்டையோட்டைக் கழற்றி மூளையை அகற்றிப் பார்த்தபோது அவை சிலநாள் உயிரோடிருந்தமையும், தலையின் உள்ளுறுப்புக்கள் செவ்வனே யிருந்தும் நெஞ்சின் தாமரைப் பையை அகற்றிக்கால் அவை அப்போதே உயிர் துறந்தமையும் கண்டு உயிர் நிற்றற்கிடமாவது நெஞ்சப்பை ஒன்றுமே என முடிபுகட்டி யிருக்குமாற்றால் நன்கு தெளியப்படும் கோகழிஆண்ட குருமணிதன் தாள்வாழ்க - திருப்பெருந் துறையில் எழுந்தருளி அடியேனை ஆட்கொண்டருளிய குரு நாதனான மாணிக்கமணியின் திருவடி வாழ்க. சிவபுராணம் என்னும் இவ்வருமைக் கலிவெண்பாட்டை அடிகள் திருப்பெருந்துறையில் அருளிச்செய்தாராகலின், அதற்கேற்பத் திருபெருந்துறையிற் குருந்தமர நீழலிற் குரு வடிவந்தாங்கி எழுந்தருளித் தம்மை அடிமை கொண்டருளிய சிவபிரான் அருட்டிறம் தமதுளத்து ஏனை எல்லா நினைவு களையும் அடிப்படுத்து மிக்கெழுந்து நிற்குமாறு பற்றி அதனை ஈண்டுத் தொடக்கத்திலேயே எடுத்துரைப்பாராயினர். கோகழி - பெருந்துறை; கோ - தலைமை: பெருமை, கழி - துறை, கோகழி என்பது பெருந்துறை என்று இங்ஙனம் பொருள்படுதலை அறியாதார் இதற்குத் திருவாடுதுறை எனப் பொருளுரைப்பர். திருவாதவூரடிகட்கு இறைவன் குரு வடிவிற்போந்து அருள்புரிந்து திருப்பெருந்துறையிலேயாம் என்பதனை அடிகளே அருட்பத்தில் திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீர் இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட் டென்னுடை எம்பிரான் என்றென் றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால் அலைகட லதனுளே நின்று பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண் போதராய் என்றரு ளாயே என்று அருளிச் செய்தலானும், அடிகள் வரலாற்றினைக் கூறும் புராணங்களும் அங்ஙனமே உரைத்தலானும், திருவாவடுதுறையில் அதுபோற் குருவடிவிற்போந்து இறைவன் அவரை ஆண்டருளினான் என்பது யாண்டுங் கூறப்படா மையானும் அங்ஙனம் பொருளுரைத்தல் பொருந்தாதென்க. தெய்வச் சிறப்பு வாய்ந்த தீர்த்தமாகக் கொண்டப்படும் ஒரு பொய்கை தன்கண் உளதாதல்பற்றியே அவ்விடம் பெருந்துறை என வழங்கப்படலாயிற்றென்பதற்குத் திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந்துறையிற் செழுமலர்க் குருந்தம்மே வியசீர் அருத்தனே என்று அடிகள் ஓதுமாற்றால் இனிது விளங்கலானும், இக்காரணம் கோகழி என்னும் பெயரானும் எளிதிற் புலப் படுதலானும் இதற்கு இவ்வாறு பொருளுரைத்தலே பொருத்த மாமென்று துணிக. குரு - ஞானாசிரியன். மணி ஈண்டு மாணிக்கமணி; இறைவன் திருமேனியின்நிறம் சிவப்பாதன் சிவனெனு நாமந் தனக்கேயுடைய செம்மேனி எம்மான் என்று திருநாவுக் கரசடிகளும் அருளிச் செய்தமை பற்றி உணர்ந்துகொள்க. எல்லா மணியினும் மாணிக்கமணி சிறந்தமையானும் அவற்றை இயைத்துக் குருமணி என்று உருவகப்படுத்தினார். மேலும், மாணிக்கமணி தனக்கு இயற்கையாய் உள்ள அழகிய வொளி யால் இருளை நீக்கி விளக்கத்தினைச் செய்தல்போல இவ்வாசிரி யனும் தனக்கியல்பான அருளொளியால் உயிரைப் பற்றிய அறியாமையை நீக்கி அதனை விளங்கச் செய்வ னென்பதூஉம் இவ்வொப்புமையால் அறியற்பாலதாம். மணி கழுவுதல் எனப் பொருள்படும். மண் என்னும் முதனிலையிற்றோன்றிய தமிழ்ச்சொல்; கழுவுதலாவது சானைக் கல்லிற் றேய்த்து மாசுபோக்கித் தூய்மை செய்தல். ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க - ஆகமப் பொருளாகி நின்று அணுகி அருள்புரிவானது திருவடி வாழ்க. ஆகமம் என்னுஞ் சொல் அடிகள் காலத்திற்கு மிக முற்பட்ட பழைய தமிழ் நூல்களினாதல், ஈச கேன கடப் பிரசிநமுண்டக மாண்டூக்கிய தைத்திரீய சாந்தோக்கிய ஐதரேய கௌஷீதகி பிருகதாரணியக சுவேதாசுவதரம் என்னும் பன்னிரு பழைய உபநிடதங்களினாதல், இவ்வுபநிடதங்கட்கும் மிக முற்பட்ட இருக்கு எசுர் சாமம் அதர்வணம் என்னும் நான்கு வேதங்களினாதல், சாங்கியம் யோகம் வைசேடிகம் நையாயிகம் மீமாஞ்சை வேதாந்தம் என்னும் ஆறு தரிசனங்களினாதல் வழங்கப்படுதலைக் கண்டிலம். அதனால், இச்சொல்லால் உணர்த்தப்படும் பழைய நூல்கள் எவையென்பதும், அவை எத்துணையென்பதும், அடிகள் காலத்து அப்பெயர்களால் உலவினவை எவை என்பதும் இஞ்ஞான்று விளங்கா; ஆயினும், ஆகமம் என்பது வடசொல்; இச்சொல்லின் முதல்நின்ற ஆ என்னும் இடைச்சொல் (உபசர்க்கம்) அண்மைப்பொருளை உணர்த்தும்; கம் என்னும் வினைமுதனிலை (தாது) போதல், போய்ச்சேர்தல் என்னும் பொருளைத் தரும்; ஆகவே, இச் சொல்லின் திரண்டபொருள் அணுகுதல் என்பதேயாம். ஆகமம் முடிந்தபொருளை உணர்த்தலின், அதனைத் துறை போகக் கற்று அதன்வழி நிற்பார்க்கு இறைவன் அணுக்கராய் நின்று அருள் புரிவாரென்பமு இச்சொற்பொருளாற்பெற்றாம். இதுவே இச்சொல்லுக்கு அடிகள்கொண்ட பொருளென்பது அதனை அடுத்துக்கூறிய அண்ணிப்பான் என்னும் மொழியாற் பெறப்படும். அண்ணிப்பான் - அணுகி நிற்பவன். பண்டைக் காலத்தே ஆகமம் என்னும் பெயரால் தமிழ்நாட்டில் வழங்கிய நூல்கள் முடிந்த ஞானத்தினையே வகுத்துக்கூறின வென்ப தற்குப் பிங்கலந்தை நிகண்டிற்போந்த ஆகமம் - ஞானம் என்னுஞ் சூத்திரமே சான்றாம். இனிப் பிங்கலந்தைக்கு முற்பட்ட திவாகரத்தின்கண் ஆகமம் என்னுஞ்சொற் பொதுவான நூலையுணர்த்தும் பெயர்களுள் ஒன்றாக வைத்துச் சொல்லப்பட்டிருக்கின்ற தேயல்லாமல் ஞானத்தை அறிவுறுத்தும் நூற்குச் சிறப்புப் பெயராகக் கூறப்பட்டிலது. அதனால், திவாகரம் எழுதப்பட்ட காலத்தில் ஆகமம் என்னும் ஞானநூல்தோன்றி வழங்கவில்லை யென்பதூஉம், அதற்குப்பிற்றோன்றி பிங்கலந்தையின் காலத்தி லேதான் அப்பெயர் பெற்ற அறிவுநூல்கள் சில தோன்றி நடை பெறலாயின வென்பதூஉம் பெறப்படும். ஆகமத்தொன்றும் நரகும் இரௌரவம் என்று காணப்படும் பிங்கலந்தைச் சூத்திரத்தால் ஆகமங்கள் சில அக்காலத்திருந்தனவென்றும், அவற்றுள் ஒன்று இரௌரவம் எனப் பெயர் பெற்றதென்றும் உணர்ந்துகொள்க. நான்கு வேதங்களையும், ஆறு அங்கங் களையும் பதினெண் புராணங்களையும், பதினெண் உப புராணங்களையும், பதினெட்டுத் தரும நூல்களையும் பெய ரெடுத்தோதி அவற்றின் தொகைகளையுங்கூறிப்போந்த திவாகரத்தின்கண் ஆகமம் என்னுஞ்சொல் ஞான நூல்கட்குச் சிறப்புப்பெயராகக் காணப்படாததோடு அவற்றின் பெயராதல் தொகையாதல் ஒரு சிறிதுங் குறிக்கப்படாமையானும், ஆகமம் என்னுஞ் சொல்லை அறிவு நூல்கட்குச் சிறப்புப்பெயராக எடுத்துரைத்து இரௌரவம் எனும் ஓர் ஆகப்பெயரையுங் குறித்துப்போந்த பிங்கலந்தையும் வேதம் வேதாங்கம் புராணம் உபபுராணம் தருமநூல் என்பவற்றின் பெயரையுந் தொகை யையும் விளங்கக்கூறினாற் போல வழங்கிய காலத்தில் ஆகம நூல் தோன்றவில்லையெனவும், பிங்கலந்தை வழங்கிய காலத் திலும் ஒரு சிலவே எழுதப்பட்டு வழங்கினவெனவும் கடைப் பிடித்துணர்ந்து கொள்க. இன்னும் மேலெடுத்துக்காட்டிய பிங்கலந்தைச் சூத்திரத் தால் ஆகமப் பெயர் வாய்ந்த சில நூல்கள் ஞானப்பகுதி யொன்றனையே உணர்த்தின பரிசு தெற்றெனப்புலப்படுதலால், அக்காலத்திற் கன்மங்களைக் கூறும் பகுதிகள் அவற்றின்கண் இருந்தில வென்பதும், அவை பிற்காலத்தவராற் காலங் கடோறும் எழுதிச் சேர்க்கப்பட்டனவென்பதும் தெளியப்படும். அதுவேயுமன்றி கன்மப்பகுதிகளே பெரும்பான்மையாய் விரிந்து கிடக்கும் இஞ்ஞான்றை ஆகமங்களும், அவை இருபத்தெட்டு என்னுந் தொகையும் பண்டைநாளில் இருந்தில வென்பதுந் தேற்றமாம். அற்றேல், திருமந்திரப் பாயிரத்தின்கண் அஞ்சன மேனி எனப்போந்த செய்யுளில் ஆகமங்கள் இருபத்தெட்டு எனுந் தொகையும், பெற்றநல் லாகமங் காரணங் காமிக, முற்ற நல்வீர முயர்சிந்தம் வாதுளம், மற்றவ வியாமள மாகுங்கா லோத்தரந், துற்றநற் சுப்பிரஞ் சொல்லு மகுடமே என்னுஞ் செய்யுளால் அவற்றுட் சிலவற்றின் பெயரும் எடுத்தோதப்பட்டனவா வெனின்; ஆசிரியர் சேக்கிழார் தாம் அருளிச்செய்த திருத்தொண்டர் புராணத்தில் திருமூலநாயனார் வரலாறு கூறி அவர் திருவாய் மலர்ந்தருளிய திருமந்திர வரலாறு உரைக் கின்றுழி முன்னியவப் பொருண்மாலைத் தமிழ் மூவாயிரஞ் சாத்தி என அது மூவாயிரஞ் செய்யுட்கள் உடையதென அதன்செய்யுட்டொகை குறித்தருளினார். திருமந்திரப் புத்தகங் களின் முதலிலும் ஈற்றிலும் உள்ள மூலன் உரைசெய்த மூவாயிரந்தமிழ் என்னுஞ் செய்யுட்களாலும் திருமூல நாயனார் அருளிச்செய்தவை மூவாயிரஞ் செய்யுட்களே யென்பது துணியப்படும். அஃதங்ஙனமாக இஞ்ஞான்று அச்சிடப்பட்டு லவுந் திருமந்திரப் புத்தகங்களில் மூவாயிரத்துக்கு மேல் நாற்பத்தேழு செய்யுட்கள் மிகுதியாய்க் காணப் படுகின்றன. பிற்காலத்தவர் பண்டை நூல்களின் முதலில் உள்ள பாயிரத்தினும் நூன்முடிவினும் தாம் ஒரு கொள்கையை நாட்டல்வேண்டிச் செய்த செய்யுட்களைக் கொணர்ந்து கோத்து விட்டு நடாத்தல் உண்டாதலின் திருமந்திரச் செய்யுட்கள் மூவாயிரத்துக்கு மேற்பட்ட நாற்பத்தேழு செய்யுட்களிற் பல இந்நூற் சிறப்புப் பாயிரத்தின்கட் பிறரால் எழுதிச் சேர்க்கப்பட்டனவாமென்று அறிதல்வேண்டும். திருமூலநாயனார் வேதாகமப்பொருணிலை களைத் திருமந்திர எட்டாந் தந்திரத்தில் ஐந்தாவதாய் நின்ற ஆறந்தம் உரைக்கும் வழி வேதத்தினந்தமும் மிக்க சித்தாந்தமும் என்னுஞ் செய்யுடொட்டு முப்பத்தைந்து பாக்களால் இனிது விளக்கிப்போதலின், நூல்முதல் நின்ற பாயிரத்தின்கண் வேதச்சிறப்பு ஆகமச் சிறப்பு என மீட்டும் அவற்றைக் கூறுதல் கூறியது கூறல் மிகைபடக் கூறல் என்னுங் குற்றங்கட்கிடனா மாதலால், இவற்றைக்கூறும் பதினாறு செய்யுட்களும் பிற்காலத்தவரால் எழுதிப் பாயிரத்தின்கட் சேர்க்கப்பட்டனவா மென்பது திண்ணம். ஆதலால், ஆகமங்கள் இருபத்தெட்டு என்னுந்தொகையும், அவற்றுட் சிலவற்றின் பெயருந் திருமந்திரச் சிறப்புப் பாயிரத்தின்கட் காணப்படுதல் கொண்டு அவை பண்டைக்காலத்தனவென்று கோடல் ஒருவாற்றானும் பொருந்தாது. அவை பண்டைக்காலத்திருந்தன வாயின் திவாகரம் முதலான தொன்னூலுரைகளில் ஒரு சிறிதும் காணப்படாமை என்னையென மறுக்க. அற்றாயினும், திருமந்திர எட்டாந்தந்திரத்துட் போந்த வேதமோடாகமம் மெய்யாம் இறைவனூல் என்னுஞ் செய்யுளால் ஆகமம் தொன்றுதொட்டதென்பது பெறப்படுமா லெனின்; திருவாதவூரடிகள் காலத்திற்குச் சிறிது முற்பட்ட காலத்தே ஆகமம் எனப் பெயரிய ஞானநூல் உண்டென்பது மட்டும் நமக்கு உடன்பாடாமன்றி அவர்க்கு மிகமுற்பட்ட பண்டை நாளிலும் அஃதுண்டென்பது நமக்கு உடன்பாடன்மை யானும், திருவாதவூரடிகள் காலத்திற்குச் சிறிது பின்னிருந்த வராகக் காணப்படும் திருமூலநாயனார் அருளிய திருமந்திரத் தின்கண் அவ்வாகமம் என்னுஞ் சொற் காணப்படுதல்பற்றி அது மிகப் பழமையதென்பது பெறப்படாமையானும் அங்ஙனம் கூறுதல் பொருந்தாதென்க. இவ்வாறு ஆகமம் வடமொழி நான்மறையை நோக்கக் காலத்தால் மிகப் பிற்பட்டதேயாயினும், அதுதான் அறிவுறுக்கும் ஞானப்பொருண்மாட்சியால் அதனிலுங்கழி பெருஞ்சிறப்புடைத்தாம். என்னை? வேதம் சிவத்தினுங் கீழ்ப்பட்ட பல தெய்வ வழிபாட்டினை மிக்கெடுத்தோதிச் சிவ வழிபாட்டினை ஒரோவிடத்து அரிதாய்க்கூற, ஆகமம் முழுமுதற்கடவுளான சிவத்திற்கு வழிபாடு ஆற்றும் முறை ஒன்றனையே யாண்டும் சிறந்தெடுத்து விளம்புதலானும், பதி பசு பாசங்களின் இயல்பும் அத்துவித இயைபும் கட்டுவீடென்னும் இவற்றின் இலக்கணங்களும் வேதங்களில் இலைமறைகாய் போல் வெளிப்படையாகவன்றி மறைவாய்ச் சுருங்கிப் பல விடங்களிற் பலவாறாய்ச் சிதறிக்கிடத்தல் போலாது ஆகமங் களில் அவை முற்றுந் தொடர்புபட வைத்துச் செவ்வனே ஆராய்ந்து தெளிவுபடுத்தப்படுதலானும் நடுநின்று காண் பார்க்கு வேதத்தினும் ஆகமமே எவ்வாற்றானுஞ் சிறப்புடைத் தாம் என்பது இனிது விளங்குமாதலின் என்க. இதுபற்றியன்றே, வேதம் பொதுவெனவும் ஆகமஞ்சிறப்பெனவும் எதிர்நிரல் நிறையாக வைத்து ஆசிரியர் திருமூலநாயனாரால் வேதமோ டாகமம் மெய்யாம் இறைவனூல் ஓதுஞ் சிறப்பும் பொதுவுமென் றுள்ளன நாத னுரையவை நாடி லிரண்டந்தம் பேதம தென்பர் பெரியோர்க் கபேதமே என்னுந் திருப்பாட்டு அருளிச்செய்யப்பட்டது. முழுமுதற்கடவுளியல்பு ஆகமத்தால் தெள்ளிதின் உணரப்படுமாறுபோல வேதத்தால் உணரப்படாதென்னுங் கருத்து அடிகட்கு உண்மை, வேதம் நான்கும் ஓலமிட்டு உணங்கும் நின்னை எனவும், மறை ஈறு அறியா மறையோனே எனவும், மறையில் ஈறுமுன் தொடரொணாதநீஎனவும், அப்பெருமறையில் ஈறுமுன் தொடரொணாதநீ எனவும், அப்பெருமறைதேடிய அரும்பொருள் எனவும், வேதங்கள் ஐயாவென வோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே எனவும் அவர் இந்நூலுள் ஆண்டாண்டு அருளிச்செய்யுமாற்றால் நன்கு துணியப்படும். இக்கருத்துப் பிற்காலத்துச் சான்றோரான அருணந்தி சிவனார்க்கும் உண்மை மறையினால் அயனால் மாலால் மனத்தினால் வாக்கால் மற்றுங், குறைவிலா அளவினாலுங் கூறொணாதாகிநின்ற, இறைவனார் என்றும், அருளினால் ஆகமத்தே அறியலாம் என்றும் அவர் சிவஞான சித்தியிற் கூறியவாற்றாற் புலப்படும். இறைவனியல்பு மறைகளாற் புலப்படாதாயின், அவற்றை அவ்விறைவன் அருளிச்செய்தான் என்றல் என்னையெனின்; நான்மறைகளினுங் காணப்படும் பதிகங்கள் ஒவ்வொன்றையும் இயற்றிய ஆசிரியன் பெயரும், அவ்வாசிரியரால் அப்பதிகங்களில் வணங்கப்படும் இந்திரன், அங்கி, மித்திரன், வருணன், மருத்துக்கள், அசுவினிகள் முதலிய தெய்வங்களின் பெயரும் அவற்றில் வெளிப்படையாய்க் காணக்கிடத்தலாலும், அப்பதிகங்களிற் சொல்லப்படும் பொருள்கள் மக்கள் தமக்கு இம்மையில் வேண்டும் ஊண் உடை செல்வம் பகைவர் தோல்வி சோமப் பூண்டின்சாறு கன்று காலிவளன் இனியவாழ்க்கை முதலியனவாகவே பெரும்பாலும் இருப்பக்காண்டுமன்றி மக்கட்குத் தெரியாமற் கடவுள் அருளால்மட்டும் அறிந்து மெய்ப்படுத்திக் கொள்ளற்பாலன வாகிய அரும்பெரும் பொருள்கள் எவையுங் காணப்படாமை யாலும், அப்பதிகங்கள் மிகப் பழையகாலத்திருந்த பண்டை மக்களால் இயற்றப்பட்டமையின் பழமையானவற்றை மிக உயர்த்துக் கூறும் மக்களியற்கைபற்றி அவை தொன்று தொட்டுப் பாராட்டப்பட்டு வருதலாலும் அவை அங்ஙனம் முகமனாகக் கடவுளால் அருளிச் செய்யப்பட்டன வென்று வழங்கி வருகின்றன. அஞ்ஞான்றிருந்த மக்கள் தமக்கு மேலான ஒரு துணையை வேண்டி அதனை அறிய முயன்றதில், அவர் தாந்தாம் அறிந்தவாறு தமக்குச் சிறந்ததெனத் தோன்றிய ஒவ்வொன்றைத் தெய்வமெனத் துணிந்து அவற்றை வழுத்தும் உரையாகப் பற்பல பதிகங்கள் பற்பலராய் இயற்றினாராதலின், அந் நான் மறையின் பதிகப் பொருள்கள் ஒன்றோடொன்று மாறுபட்டுக் கிடக்கும், மற்றுப் பின்றைக்காலத்தில் அவரினும் அறிவிற் சிறந்தாராய்த் தோன்றிய ஆசிரியர் வேதநூற்பதிகங்கள் இயற்றிய தொல் லோரின் கருத்துக்களைப் புடைபடவைத்து முற்ற ஆராய்ந்து கொள்ளற் பாலன அல்லாதவற்றைக் கழித்துக் கொள்ளற் பாலனவற்றையுந் தெளிவுபடுத்திப் பொருந்துவன பலகூட்டி விரித்து முடிவுகண்டு ஆகமநூல் இயற்றினார். வேதநூல் மிகப்பழையதாதல்பற்றி முதல்வன் அருளியதெனவும், ஆகம நூல் இம்மை மறுமைக்குரிய முடிந்தபொருள்களை உண்மை யான் ஆராயந்து உறுதிபயக்கும் அறிவுநூலாதல்பற்றி அதுவும் இறைவனருளியதெனவும் முகமனுரையாய்ச் சான்றோர் அவற்றை உயர்த்து வழங்குவாராயினர். வேதநூல் ஆகமநூல் வந்த வரலாறு இத்துணையே. இவ்வாற்றால், வேதநூலிற் புலப்படாத முதல்வனியல்பு ஆகம நூலாற் புலங்கொள விளங்குதலும், அதுபற்றியே அடிகள் ஆகமமாகி நின்று அண்ணிப்பான் என்று அருளிச் செய்தமையுங் கண்டுகொள்க. வேதாகம வரலாறு இவ்வாறன்றி வேறு வேறு கூறுதல் உண்மைக்குமாறாய்ப் பொருந்தாதாமென்க. ஏகன் mnef.ன் இறைவன் அடி வாழ்க - ஒருவனாயிருந்தே பல உருவங்களை உடையோனாய் எப்பொருளிலுந் தங்கு வோனது திருவடி வாழ்க. எல்லா உலகங்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் முதல்வனாயிருக்கும் முழுமுதற்கடவுள் ஒன்றேயென்பது எல்லா நூலார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் ஒத்ததுணிபாதலின் ஈண்டு ஏகன் என்றார். இக்கருத்தேபற்றி ஆசிரியர் திருமூலநாயனாரும் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்ம்மினே என்று அருளிச் செய்தனர். தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரும் அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு என்று அருளினமை காண்க. அற்றேல், இறைவன் ஒருவனே என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின் அவனை ஈண்டு ஒன்றென்று கூறுதலாற் போந்த பயன் என்னையெனின்; எழுநிலை மாடம் தேர்முதலான வடிவுகள் பலராற்கூடி யமைக்கப்படுதல்போல, அவற்றினும் பன்மடங்கு பெரியவாய் வியக்கப்படும் அமைப்புடையவான இவ்வெண்ணிறந்த உலகங்களையுந் தோற்றுவித்தற்கு எண்ணிறந்த கடவுளர் வேண்டப்படுவரென அநேகேசுர வாதிகள் கூறுவது பொருந்தாமை காட்டுதற்பொருட்டு ஏகன் என்று வற்புறுத்துரைக்க வேண்டுவதாயிற்று. எழுநிலை மாடம் முதலியன அமைக்கின்றுழியும் அவற்றை அமைப்பார் பலரையுந் தத்தந் தொழில்களின் ஏவி அவை தம்மை முடிப்பித்து அவரெல்லார்க்கும் மேலாய்நிற்கும் ஒரு தலைவன் இன்றி யமையாது வேண்டப்படுமாறுபோல, வியப்புடைய இவ்வெண் ணிறந்த உலகங்களையும் இவ்வுலகங்களுட்பட்ட எண்ணிறந்த உடம்புகளையும் தானே செய்தும் தத்துவங்களின் நின்ற கடவுளரை ஏவிச் செய்வித்தும் இவர்க்கெல்லாம் மேலான தலைவனாய் விளங்கும் முதல்வள் ஒருவனே என்பது காட்டுவார் ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனாரும், ஒன்றலா ஒன்றால் உளதாகி நின்றவா(று) ஒன்றலா ஒன்றில்அவை ஈறாதல் - ஒன்றலா ஈறே முதல்அதனின் ஈறலா ஒன்றுபல வாறே தொழும்பாகும் அங்கு என்று அருளிச் செய்வாராயினர். இங்ஙனம் கடவுள் ஒருவனே என்று வற்புறுத்துரைக்க வேண்டும் இன்றியமையாமை கண்டே அழியும் பொருளையும் உயிரையும் ஆள்பவனான தேவன் ஒருவனே என்றும், எஞ்ஞான்று இருள் இருக்கப் பகலும் இல்லாதாய் இரவு மில்லாதாய்ச் சத்துமில்லாதாய் அசத்துமில்லாதாய் இருந்த தோ, அஞ்ஞான்று சிவன் ஒருவரே இருந்தார் என்றும் சுவேதா சுவதரத்தும், அப்போது அசத்துமில்லை, சத்துமில்லை அஃதொன்று இருந்தது என்று இருக்கு வேதத்தும், இவ்வுலகங் களைத் தமது மேலான திருவருட்சத்தியினால் ஆளுகின்ற உருத்திரர் ஒருவரே என்று அதர்வசிரசினும், எவர் ஒருவரோ அவர் உருத்திரர் என்றுரைக்கப்படுவர் என்று தைத்திரிய ஆரணியகத்தும், ஏனையெல்லாரையும் விடுத்துச் சிவன் ஒருவரே வழிபடற் பாலார் என்று அதர்வசிகையினும் அது நன்கெடுத்து உரைக்கப்பட்டது. இனி அனேகன் என்பது அங்ஙனம் ஒருவனேயென்று வலியுறுத்து உரைக்கப்பட்ட முழுமுதற்கடவுள் பல்வகைச் சமயத்தார்க்கும் அவரவர் நினைந்த வடிவிற்றோன்றி அருள் புரிதற்பொருட்டும், சைவசமயத்தும், தம்மைப் பல்வகை உருவில் வைத்து வழிபடும் அன்பர்க்கு அவரவர் கருதிய வடிவிற் போந்து தம் திருவடிப்பேறு வழங்குதற் பொருட்டும் மேற் கொள்ளும் பல்வேறு உருவினனாதலை உணர்த்துகின்றது. ஒருவன் பல்வேறுருவினை எடுப்பனாயின் அவை தம்மால் அவன் வேறுபடுத்தப்பட்டுக் கடவுள் என்றும் ஒரே தன்மையன் என்னும் இலக்கணத்தோடு முரணுமாலோ வெனின்; அற்றன்று, கடவுள் எடுக்கும் உருவுகள் பிறராற் படைக்கப்படுதல் இன்றி அவனருளில் அவன் வேண்டியவாறு தோன்றவனவாதலால் அவைபற்றி அவன் வேறுபாடுறுதல் ஒரு சிறிதும் இல்லை. நாடக அரங்கு புகுந்து பல கோலம் பூண்டு ஆடுவோன் அக்கோலங் களாற் றன்னியல்பு சிறிதும் மாறாது தான் அவற்றின் வேறா யினாற்போல இறைவனும் அன்பின்மிக்க அடியார்க்கு அருள் செய்தற் பொருட்டு அவர் அவர் நினைந்த உருவுகள் பலவும் எடுப்பானாயினும் அவற்றாற் றன்னியல்பு சிறிதும் பிறழப் பெறுவான் அல்லன்; அஃது, ஒருவனே இராவணாதி பாவக முற்றாற் போலத் தருவன்இவ் வுருவமெல்லாந் தன்மையுந் திரியானாகும் வரும்படி வெல்லாஞ்சத்தி சத்திதான் மரமுங்காழ்ப்பும் இருமையும் போலமன்னிச் சிவத்தினோ டியைந்துநிற்கும் என்னுஞ் சிவஞான சித்தித் திருச் செய்யுளிற் காண்க. இதற்கு இவ்வாறன்றி ஏகான்மவாதங் கூறுவார் கோட் பாடு பற்றி இறைவனையன்றி வேறு பல பொருள்களும் உயிர்களும் உளவெனக் கொள்ளின் அஃதவன் நிறைவிற்கு இழுக்காமாகலின் அவனையன்றி வேறு எவையும் இல்லை, அவன் ஒருவனே காணப்படும் உலகங்களாயும் உலகத்துப் பல பொருள்களாயும் பல் உயிர்களாயும் தோன்றுகின்றான்; அது தெரிப்பான் வேண்டியே அடிகள் கடவுளை ஏகன் என்று கூறிய அளவில் நில்லாது அநேகன் என்றும் உரைப்பாராயினர் எனச் சொல்லுவாரும் உளர். காணப்படும் பொருள்களும் உய்த்துணரப் படும் உயிர்களும் உரு அரு என்றும் அறிவு அறியாமை என்றுஞ் சொல்லப்படும் இரு திறத்துள் அடங்கித் தத்தமக்கேற்ற வரையறையுள்ள அளவுடையனவாய்க், காலங்கடோறுந் தத்தம் நிலைமாறி வரும் இயல்புடையவா யிருக்கின்றன.இப்பொருள்களின் இருப்பும் இவற்றின்கட் காணப்படும் நிகழ்ச்சியும் ஆராய்ந்தறியும் வகையானன்றே இவற்றின் தோற்றத்திற்கும் இயக்கத்திற்கும் முதல்வனான ஒரு செய்வோனை இவை யுடையவென்று துணிகின்றோம்; இப்பொருள்களும் இவற்றின் அசைவுகளும் முதல்வனியல்பின் வேறாக இல்லையாயின் இறைவன் ஒருவன் உளன் என்று நாம் அறிவதெங்ஙனம் கூடும்? ஆராயும் உயிர்களாகிய நாமும் நமதாராய்ச்சிக்குக் கருவியான உலகங்களும் எல்லாம் கடவுளே யாயின், பின்னர்க் கடவுளொருவர்உண்டு என்று கூறுவார் யார்? அங்ஙனம் கூறுதற்குக் கருவியாவன யாவை? என்று பகுத்துக் காண வல்லார்க்கு அவ்வாறு உரைப்பது நகையாடுதற்கே யிடமா மென்பது புலனாம். அல்லதூஉம், அருவாயும் அறிவாயும் தன்னியல்பின் மாறாது எங்குமுள்ள முழுமுதற் கடவுள் உருவாயும் அறியாமை யுடையவாயும் மாறிமாறி வரும் இயல்பினவாயுங் காணப்படும் இவ்வுலகங்களையும் இவ்வுலகத் துப் பல பொருள்களாயும் பிறப்பு இறப்புகளிற் கிடந்துழலுஞ் சிற்றறிவுயிர்களாயும் திரிந்து வருமென்றல் யாங்ஙனம் பொருந்தும்? அதனால், ஏகான்ம வாதக் கோட்பாடு பற்றி யுரைக்கும் உரை ஒரு சிறிதும் ஏலாமை கண்டு கொள்க. அங்ஙனமாயின், அருவாய் நிற்கும் முதல்வன் அன்பர்கள் பொருட்டுப் பல உருவுகள் எடுப்பனெனின், அதுவும் அவன் இயல்புக்கு மாறாய் முடியுமே எனின்; அவனெடுக்கும் உருவு பருப்பொருளாகிய மாயையின் வடிவு போல்வதன்று, அஃது அவன் நினைந்த அளவானே அவனது அறிவின்கட் டோன்றும் அறிவு வடிவமாகும். இது, சத்திதன் வடிவே தென்னிற்றடை யிலா ஞானமாகும் என்னுஞ் சிவஞான சித்தித் திருப்பாட்டி னால் இனிது உணரப்படும். ஈண்டு இன்னும் இதனை விரிப்பிற் பெருகும்; மேலும் இதனை விரித்தற் கியைந்த இடம் நேரும் வழி விரிப்பாம். இறைவன் - எப்பொருளினும் தங்குகின்றவன் என்று பொருளுரைப்பர் அடியார்க்கு நல்லார் (சிலப்பதிகாரம் நடுகாண் காதை 184 ஆம் அடி) இறுத்தல் தங்குதல் என்னும் பொருட்டாதல் மல்லன்மூதூர் மாலைவந்திறுத் தென என்பதனுள்ளுங் காண்க. (சிலப்பதிகாரம் அந்திமாலைச் சிறப்புச் செய்காதை 20) இதுகாறும் உரை கூறப்பட்ட சிவபுராணம் முதல் ஆறு அடிகளுள் முதலடியிற் சிவம் மிக நுண்ணிய விந்து நாத தத்துவங்களில் உலகிற்கு நிமித்த காரணமாய்நின்று விளங்கு மாறும், இரண்டாம் அடியில் உயிர்களின் அறிவு விளக்கத் திற்குக் கருவியாய்த் தரப்பட்ட உடம்பினகத்தே நெஞ்சத் தாமரையினுள் அஃது உயிரோடு உடனாய் நின்று அவ்வியி ரையும் உடம்பையும் ஒருங்கே இயக்குமாறும், மூன்றாம் அடியில் அங்ஙனம் அகத்தே நிற்கும் முதல்வன் புறத்தேயுள்ள கண் முதலான கருவிகளால் அறிவுகூடப் பெற்றுவரும் அவ்வுயிர் கட்குப் புறத்தேயும், நான்காம் அடியில் புறக்கருவியாற் கண்டு அகக் கருவியாகிய அறிவினால் ஆராய்ந்து உணரப்படும்அறிவு நூலுணர்ச்சி கொண்டு அச்சிவம் எளிதின் அறியப்படுமாறும், ஆறாம் அடியில் அங்ஙனம் அறியப்படும் சிவம் எல்லா வுலகுக்கும் ஒருமுழுமுதலேயாய் நிற்பினும் அதன்பால் அன்பு மீதூரப் பெற்றார்க்கு அஃது அவர் நினைந்த வடிவிற்றோன்றி அருள்செய்து எப்பொருளினுந் தங்குந் தன் உண்மைத் தன்மையில் வழாதாய் வயங்குமாறும் அடைவு படுத்து ஓதப்பட்டமை கண்டு கொள்க. வேகங் கெடுத்துஆண்ட வேந்தன்அடி வெல்க பிறப்புஅறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க 10 சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க. வேகங் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க - ஏழை யேனது மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட இறைவனடியே மேம்பட்டுச் சிறப்பதாக. வேகம் என்பது விரைவுப் பொருளை யுணர்த்தும் ஒரு வடசொல்; அஃது இங்கு அவாய் நிலையால் மன வேகத்தை உணர்த்திற்று. இனி, வேகம் என்பதற்கு வெப்பம் என்று பொருள்கொண்டு பிறவிவெப்பம் என்று உரைப்பாரும் உளர். இதனையடுத்த அடியிலும் அப்பொருளே சொல்ல வேண்டுதலின் அது பொருந்தாது. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்றன் - பிறவியாகிய மரத்தை வேரோடும் அறுக்கும் சிவபெருமானுடைய; பெய் கழல்கள் - செறிக்கப்பட்ட வீரகண்டையினையுடைய திருவடிகள்; வெல்க - சிறக்க. பிறவியை மரமாக உருவகஞ்செய்தல் அடிகட்குக் கருத்தா தலை அடைக்கலப்பத்தில் நின்றிருவருளால் என் பிறவியை வேர் அறுப்பவனே என்றும், பெரும்பெருமான் என் பிறவியை வேர் அறுத்துப் பெரும்பிச்சுத் தரும்பெருமான் என்றும் போந்த சொற்றொடர்களால் அறிக. பிஞ்ஞகம் என்பது தலைக்கோலம்; அது பிஞ்ஞகந் தலைக்கோலம் என்னுந் திவாகரத்தான் உணர்க; சிவ பெருமான் திருமுடியும் அம்முடிமேல் அழகிய வெண்பிறையும் குளிர்ந்த கங்கை நீரும் உடையராதல்பற்றிப் பிஞ்ஞகன் எனப்பட்டார். பெய்கழல் - செறிக்கப்பட்ட வீரகண்டை, அஃதாவது வெற்றி பெற்ற வீரர்க்குக் காலிற் பொருத்தப்படுகின்ற வெண் டையம்; பெய்கழல் என்பது வினைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகையாய் வீரகண்டை யணிந்த திருவடிகளை உணர்த்திற்று. பெய்தல் செறித்தலையுணர்த்தல் அளித்தலும் பெய்தலுஞ் செறித்தலாகும் என்னும் பிங்கலந்தையால் அறியப்படும். தேவர்களுள் எவரானும் அழிக்கலாகாத முப்புரங்களை நகைத்து எரித்தமைப்பற்றிச் சிவபெருமான் ஒருவரே வெற்றியிற் சிறந்த வீரரெனவும், வீரர்கட்குத் தலைவர் எனவும் இருக்கு வேதத்தின்கட் பலகாலும் எடுத்துப் புகழ்ந்துரைக்கப்படுகின்றார். அவரது திருவடிக்கண் அணியப்படும் வீரக்கழல் நாத தத்துவத்தின் அடையாளமாம். புறத்தார்க்குச் சேயோன்றன் - அன்பில்லார்க்கு எட்டாத வனான இறைவனுடைய, பூங்கழல்கள் வெல்க - பூப்போல் மெல்லிய அடிகள் சிறக்க, புறத்தார் - அன்பிற்கு வெளியே நிற்கும் வன்னெஞ்சர். அன்புருவாய் விளங்கும் இறைவன் அங்ஙனமே அன்புவடிவாய்த திகழும் அடியார்பாலன்றி, அன்பில்லாத ஏனையோர்பால் விளங்கித் தோன்றாமையின் இங்ஙனம் அருளிச் செய்தார். பூங்கழல் - பொலிவுபெற்ற கழல் என்று உரைப்பினுமாம். கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க - கை கூப்பி வணங்கும் அன்பர்கள் அகத்தே நினைந்து நினைந்து மகிழ்தற்கு ஏதுவான இறைவனுடைய திருவடிகள் சிறப்பனவாக. உள்ளன்பு உடையார்க்குக் கைகுவிதலும் கண்ணீர் வார்தலும் மெய்ம்மயிர் சிலிர்த்தலும் இன்றியமையா அடையாளங்களாய் வெளியே நிகழக்காண்டலினாலும், அவற்றுள்ளும் தம்மால் அன்பு செய்யப்பட்டார் தம்மின் மேலானவராயின் அவரைக் கண்டக்காற் கைகுவிதல் இயற்கையாய் முன்நிகழ்தலினாலும் கரங்குவிதலைச் சிறந் தெடுத்துக் கூறினார். தம் பெருமானை அன்பால் நினைக்கும் அடியார்க்குத்தோன்றும் பெருகிய மகிழ்ச்சி புறத்தே சொல்லால் உரைக்கலாகாமையின் உண்மகிழும் என்றார். சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க - தலை மேற் கைகூப்பும் அன்பரை உயரச் செய்யுட் சீரோனது திருவடி சிறக்க. குவிதல் கைகளின் றொழிலாதலால் அதனைத் தலைக்கேற்றுதல் பொருந்தாமையின் அதனை ஏற்றற்குரிய கை என்னும் ஒரு சொல் வருவித்துத் தலைமேற் கைகூப்புவார் என்று உரைக்கப்பட்டது; கைகுவித்தல்தான் நெஞ்சின் புறத்தே குவித்தலுந் தலை மேற் குவித்தலும் என இருவகை; அவற்றுள் நெஞ்சின்புறத்தே குவித்தல் மேலடியில் கூறினமையின் இவ்வடியிற் றலைமேற் குவித்தலை உய்த்துணர வைத்தாரென்க. சீர் என்பது புகழ் அழகு செல்வம் சீர்மை என்னும் பல பொருள் ஒரு சொல்லாகலின் சீரோன் புகழ் அழகு செல்வம் சீர்மை என்னும் நான்கும் ஒருங்குடையோன் என்க; ஒண்புகழ் அழகு செல்வம் சீர்மை சீரென்றாகும் என்பது திவாகரம். மனவேகந் தவிர்ந்தாலன்றி இறைவனுக்கு அடிமையாதல் செல்லாமையின் அதனை இவ்வைந்தில் முதல்நின்ற அடியினும், இங்ஙனம் அடிமையாயினார்க்குப் பிறவிவேரறுதல் ஒரு தலையாதலின் அதனை இரண்டாம் அடியினும், இவ்வாறு இவைறன் மாட்டு அன்பராயினார்க்கு அல்லாமல் ஏனை யோர்க்கு முதல்வன் சேயனாய் நிற்பனென்பது மூன்றாம் அடியினும், கைகூப்பித் தொழுவார்க்கு அங்ஙனம் தொழும் பொழுதே உண்மகிழ்ச்சி நிறைதலாகிய பெரும்பயன் நான்காம் அடியினும், தலைமேல் கை கூப்பி வணங்கும் அடியாரைப் புகழ் அழகு செல்வம் சீர்மை என்னும் நான்கானும் உயரச் செய்வான் என்பது குறிப்பால் உணர்த்துவார் உடம்பொடு புணர்த்துச் சீரோன் என்று ஐந்தாம் அடியினுங் கூறியருளினார். ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி 15 சீரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி ஆராத இன்பம் அருளும்மலை போற்றி. ஈசன் அடிபோற்றி - தலைவனது திருவடிக்கு வணக்கம்; எந்தை அடிபோற்றி - எம் தந்தையினது திருவடிக்கு வணக்கம், தேசன் அடிபோற்றி - ஒளிவடிவினனது திருவடிக்கு வணக்கம், சிவன் சே அடிபோற்றி - சிவபெருமானது சிவந்த திருவடிக்கு வணக்கம், நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி - அன்பரது அன்பின் கண் விளங்கிநின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம், மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடிபோற்றி - வஞ்சனை பொய் முதலியனவற்றிற்கு இடமான இம்மக்கட் பிறவியை வேரோடு அறுக்கும் அரசனது திருவடிக்கு வணக்கம்; சீர் ஆர் பெரும்துறை நம் தேவன் அடிபோற்றி - அழகு நிறைந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளிய நம் தேவனது திருவடிக்கு வணக்கம், ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி - நுகர்ந்து நிரம்பாத பேரின்பத்தை ஈந்தருளும் மலையை யொப்பவனுக்கு வணக்கம் என்றவாறு. ஈசன் என்னும் வடசொல் எப்பொருளையும் ஆள்வோன் என்னும் பொருட்டு. போற்றுதல் என்னுஞ்சொல் புகழ்தல், வணங்கல் என்னும் பொருள்களை உணர்த்தல் திவாகரம் சொல்லிற் போல இகரவிகுதிபெற்று வினைப்பெயராய் வணக்கம் எனப் பொருள்பட்டது; நம சிவாய என்னும் மந்திரத்தின்கண் உள்ள நம என்னும் வடசொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் போற்றி என்பதேயாகும்; போற்றி என்னும் ஈறுபெற்று இவ்வைந்தடிகளில் நின்ற சொற்றொடர்களும் போற்றித் திருவகவலில் அங்ஙனமே நீளத்தொடர்ந்துவருஞ் சொற்றொடர்களும் ஒப்புயர்வில்லாச் செந்தமிழ் மந்திரங் களாம். திருக்கோயில்களிற் சிவபிரானுக்கு வழிபாடு ஆற்றுங் காலங்களிற்ற இச்செந்தமிழ் மந்திரங்களே கூறற்பாலனவாம். இவை கூறி வழிபாடாற்றின் இவற்றை ஓதுவார்க்கும் அருகிருந்து கேட்பார்க்கும் சிவபெருமான் மாட்டு மெய்யன்பு நிகழும். இவற்றை விடுத்து, ஓதுவார்க்குங் கேட்பார்க்கும் பெரும்பாலும் பொருடெரியாத வடசொற்றொடர்களை மந்திரங்களாக்கிப் புகலுதல் கரும்பிருக்க அதனை விடுத்து வேம்பு நுகர்ந்து எய்த்தலோடு ஒக்கும். செந்தமிழ் மொழியில் பண்டைக் காலந்தொட்டே இங்ஙனம் மந்திர மொழிகள் உண்மையினை ஆய்ந்தறியமாட்டாத சைவரில் ஒரு சாரார் தமிழில் மந்திரங்கள் இல்லை யெனவுஞ் செருக்கிக் கூறுவர். தேசன் என்பது ஒளி எனப் பொருள்படும் தேஜ என்னும் வடமொழியிற் பிறந்தசொல்; கடவுள் அருளொளியுருவினன் ஆகலின் இங்ஙனங் கூறினார். மாயம் வஞ்சனை பொய் யென்னும் பொருள்களைத் தருதல் திவாகரத்தாற் பெறப்படுதலின், அவற்றிற்கு இடமாவது மக்கட்பிறவி ஒன்றேயாதல்பற்றி ஈண்டுப் பிறவி மக்கட் பிறவியென் றுரைக்கப்பட்டது; மக்கட்பிறவி யெடுத்தா ரெல்லாரும் வஞ்சனையும் பொய்யும் உடையராயிருத்தல் எவரும் தோற்றமாட்டாய்ப் போவதே பொய் யென்று பொருள் கொண்டு, வெறும் பொய்யாகிய பிறவி என்று கூறுவாரு முளர்; வெறுந்தோற்றமாயுள்ள பிறவி துன்பத்தைத் தருதலும் அதனை ஒருவர் நீக்குதலும் ஆகாமையினாலும், இப்பிறவியில் நிகழும் நிகழ்ச்சிகள் அத்துணையும் எல்லார்க்கும் மெய்நிகழ்ச்சி களாகவே யிருப்பக்காண்டுமன்றி வேறின்மையானும் அங்ஙனங் கூறுவது அடா தென்றொழிக. திருப்பெருந்துறையில் எழுந்தருளித் தம்மை யாட் கொண்ட ஐயனுருவத்தைக் குறிப்பிடுகின்றாராகலின் நந்தேவன் என்றார். உலகத்தின்கட் டுய்க்கும் இன்பங்களெல்லாம் நுகர்ந்த அளவானே நிறைவினைத் தந்து வெறுப்பினைத் தராநிற்கும்; மற்று முதல்வன் அருளாற் பெறும் இன்பமோ என்றுந் தெவிட்டா இயல்பிற்றால் இருத்தல்பற்றி ஆராத இன்பம் என்றார். இன்பத்தை என்றும் வற்றாது ஒழுகும் அருவி நீராகவும், அஃது அங்ஙனம் அறாது சுரந்தொழுகச்செய்து அதற்கு இடமாய் நிற்கும் இறைவனை மலையாகவும் உருவகஞ்செய்தல் அடிகள் கருத்து; இஃது ஏகதேச உருவகம். சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால் அவன்அரு ளாலே அவன்றாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை 20 முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பனியான் சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் - சிவபிரானாகிய அவன் என் நினைவினுள்ளே நிலைபெற இருந்த அவ்வியல்பினால், அவன் அருளாலே - அவனது திருவருளாலே, அவன் தாள் வணங்கி - அவனுடைய திருவடிகளை வணங்கி, சிந்தை மகிழ - உள்ளம் மகிழ, சிவபுராணம் தன்னை - சிவனது பழைய முறைமையினை, முந்தை வினைமுழுவதும் ஓய - முற் செய்த ஊழ்வினை முற்றுந் தேய்ந்து போக, யான் உரைப்பன் - யான் சொல்லுவேன் என்றவாறு. சிவன் அவன் என்னும் இரு சொல்லில் அவன் என்பது முழுமுதற் கடவுளைச் சுட்டும் பெயரளவாய் நின்றது. ஒன்றோடொன்று ஒவ்வாச் சமயத்தினரெல்லாரும் முழுமுதற் கடவுளைச் சுட்டுமிடத்துப் பொதுப்பட அவன் என்று வழங்குதலின் அப்பொதுப்பெயரைப் பின்னும், அன்புருவாய் விளங்கும் அம்முதல்வனியல்பைச் சிறந்தெடுத்து வழங்கும் சைவசமயத்திற்கே உரிய சிவன் என்னுஞ் சிறப்புப் பெயரை அதன் முன்னும் வைத்துக் கூறினார். இறைவன் தம் நினைவினுள் நினைவாய் முனைத்து விளங்கும் முறைமையினை இடைவிடாது கண்டுகொண்டி ருக்கும் அடியார்கள் அக்காட்சியினை விட்டு வேறொன்றைக் காண்டலும் வேறொன்றைச் செய்தலும் மாட்டாராகலின், அவர் அவனருள் ஏவுமாறு நின்றே ஒன்றனைச் செய்ய மாட்டுவார்; அதனால் அவன் திருவடியை வணங்குஞ் செயலும் அவர்க்கு அவனருள் ஏவுமாறு பற்றியே நிகழப்பெறு மென்பது பற்றி அவனருளாலே அவன்றாள் வணங்கி என்றார். இவ் வுண்மை சிவஞான சித்தியாரிலும், எவ்விடத்தும் இறையடியை யின்றியமைந் தொன்றை யறிந்தியற்றி யிடாவுயிர்கள் ஈசன் றானுஞ் செவ்விதின் உளம்புகுந்து செய்தியெலாம் உணர்ந்து சேட்டிப்பித் தெங்குமாய்ச் செறிந்து நிற்பன் இவ்வுயிர்கள் தோற்றும்போ தவனையின்றித் தோற்றா இவற்றினுக்கம் முதலெழுத்துக் கெல்லாமாற் நிற்கும் இவ்வுயிர்போல் நின்றிடுவன் ஆத லால்நாம் அரனடியை அகன்றுநிற்ப தெங்கே யாமே என்று நன்கெடுத்து விளக்கப்பட்டது. சிவபிரானது பழைய முறையினை நினைந்து அதனை உரைப்பார்க்கு அவர் முற்பிறவிகளிற் றொகுத்த ஊழ்வினைப் பொதி வரவரக் குறைந்து இல்லையாய்ப் போதலின் சிவ புராணந் தன்னை, முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் என்றார். முற்செய்த ஊழ்வினை நினைவைப் பற்றிக்கொண்டு அதன் வாயிலாகவே புறத்தே செயலினும் வெளிப்படா நிற்கும்; மற்று உயிரின் நினைவு ஊழ்வினை ஏறுதற்கு இடங்கொடாமல் சிவபிரானருள் ஏறி நிற்றற்கு இடஞ்செய்து போதருமாயின், அவ்வருளால் உந்தப்பட்டு அந்நினைவு புறத்தே ஒரு செயலினைப் புரியும் வழியும் அஃது ஊழ்வினைப் பயனான செயலினைப் புரியாமல் அருட்பயனான தொன்றனையே புரியும். இவ்வாறு உயிரின் நினைவும் செயலும் நடைபெறுங்கால் ஊழ்வினை வந்து பற்றுதற்குச் சிறிதும் வாயிலின்மையின் அதன் வலி வரவர நுணுகிப் போகும் என்க. Kªij - K‹; ï¥bghU£lhjš “tªjo bghUªâ Kªij É㋔ v‹D« òw¥gh£LiuƉ fh©f.* xa - EQf, mjhtJ j‹tÈnja v‹gJ; “XŒjš MŒjš ÃH¤jš rhmŒ, MÉÆdh‹F« cŸs j‹ EQ¡f«” v‹wh® MáÇa® bjhšfh¥ãadhU«.* கண்ணுதலான் றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளி எண்ணிறந் தெல்லை இலாதானே நின்பெருஞ்சீர் (யாய் 25 பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன். கண்நுதலான் - நெற்றிக் கண்ணுடைய இறைவன், தன் கருணைக் கண் காட்ட வந்து எய்தி - தனது அருட் கண்காட்ட அவன் திரு முன்பு வந்து அடைந்து, எண்ணுதற்கு எட்டா - நினைவிற்கும் எட்டாத, எழில் ஆர் கழல் இறைஞ்சி - எழுச்சி பொருந்திய திருவடிகளை வணங்கி, விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் - வானுலகு அளவும் நிறைந்து மண்ணுலகு அளவும் நிறைந்து இவற்றிற்கு அப்பாலுமாய் நிறைந்தவனே, விளங்கு ஒளியாய் - புலப்பட்டுத் தோன்றும் ஒளிவடிவினனே, எண் இறந்து எல்லை இலாதானே - எண்ணிக்கையின் அளவினையும் கடந்து வரம்பு இன்றி விரிந்தவனே, நின் பெரும் சீர் - நினது பெரும் புகழினை, பொல்லா வினையேன் - தீவினையுடையயான், புகழும் ஆறு ஒன்று அறியேன் - புகழ்ந்து உரைக்கும் வகை ஒன்றனை அறியாதவனாயிருக்கின்றேன் என்றவாறு. நுதற்கண்ணான் என்று நிற்கற்பாலன கண்ணுதலான் என மாறி நின்றன; இங்ஙனம் வருதல் மருவின் றொகுதி மயங்கியன் மொழியும், உரியவையுளவே புணர்நிலைச்சுட்டே என்னுந் தொல்காப்பியப் புணரியற் சூத்திரத்தில் இலக்கணத் தோடு பொருந்திய மரு வென்று அமைக்கப்படும் என்பர் நச்சினார்க்கினியர். இறைவன் அருளையே கண்ணாக உடைய னாதலானும், அது நெற்றிக்கு நேரே புருவத்திடை வெளியி லுளதென்று அறிவு நூல்கள் நுவலுதலானும் கண்ணுதலான் என்பது அவற்குப் பெயராயிற்று. எல்லா மாந்தர்க்கும் புருவத்தின் இடையே மூளையின் அகத்தே நடுவில் இவ்வருட் கண் அமைந்திருக்கின்றனதென இக்காலத்து உடம்பு நூல் வல்லாருங் கூறுவர். ஆசிரியர் திருமூலநாயனாரும், நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம் பற்றுக்குப் பற்றாய்ப் பரம னிருந்திடஞ் சிற்றம் பலமென்று தேர்ந்துகொண் டேனே என்று அருளிச்செய்தமை காண்க. மக்களிடைத் தமைந்த இவ்வருட்கண் அவரைப்பற்றிய மலமாசினால் அவர் அதனாற் பெரும்பயன் பெறுதற்கு ஆகாவாறாய் நிற்க. இயற்கையாகவே மலமாக நீங்கி விளங்கும் முதல்வன் மாட்டு இஃது என்றுந் திறந்தபடியாய்த் திகழா நிற்குமென்று உணர்ந்து கொள்க. இத்தன்மைத்தாகிய அவனது அருட்கண் காட்ட மக்களிடத்தமைந்த அகக்கண்ணும் விளங்கப் பெறும். அதனாலன்றோ அடிகள் தாம் பெரியதோர் அரசச் செல்வத்தினின்றும் விடுபட்டு வந்து, குருந்த மர நீழலில் குருவடிவு கொண்டு வைகிய முதல்வன் றிருவடிகளைத் தாம் வணங்கப் பெற்ற பேற்றினை ஈண்டுக் குறிப்பிடுவராயினர். எழில் என்பதற்குப் பரிமேலழகியார் எழுச்சி என்று பொருளுரைப்பர்(திருக்குறள் 41.7). அழகு என்று பொருளுரைப் பினுமாம். புல்லாகி பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் 30 செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் புல்ஆகி - புல்லாகியும், பூடு ஆய் - பல்வகைப் பூண்டு களாகியும், புழுஆய் - புழுவாகியும், மரம் ஆகி - பலதிற மரங்களாகியும், பல் விருகமாகி - பல மிருகங்களாகியும், பறவையாய் - பல்வகைப் பறவைகளாகியும், பாம்பு ஆகி - பாம்புகளாகியும், கல் ஆய் - கற்பாறைகளின் உள்ளாகியும், மனித ராய் - மக்களாகியும், பேய் ஆய் - பேய்களாகியும், கணங்கள் ஆய் - பூதக் கூட்டங்களாகியும், வல் அசுரர் ஆகி - வலிய அரக்க ராகியும், முனிவர் ஆய் - தவத்தோர் ஆகியும், தேவர் ஆய் - வானவர் ஆகியும், செல்லாநின்ற - படைக்கப்பட்டு வராநின்ற, இத்தாவர சங்கமத்துள் - அசையாப் பொருளும் அசையும் பொருளுமாகிய இவற்றுள், எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் - எம்பெருமானே யான் எல்லாப் பிறவிகளிலும் பிறந்து இளைப் படைந்தேன் என்றவாறு. ஈண்டுக் கூறப்பட்ட உயிர்களின் தோற்றவரிசை செய்யுளாகலின் முன்பின்னாகப் பிறழவைத்தாராயினும், உரையுள் அவை தோன்றும் முறையே வைத்து உரைக்கற்பாற்று. எல்லா உயிர்ப்பொருள்களும் தாம் இருந்த இடத்தைவிட்டுப் பெயராத நிலையியற் பொருள்களாகிய தாவரமும், தாம் இருந்த இடத்தை விட்டுப் பெயரும் இயங்கியற் பொருள்களாகிய சங்கமும் என இருகூற்றுள் அடங்கும். தாவரவகையுள் கல் புல் பூடு மரம் என்னும் நான்கும், சங்கம வகையில் புழு பாம்பு பறவை பல் விருகம் மனிதர் அசுரர் முனிவர் பேய் கணங்கள் தேவர் என்னும் பத்தும் அடங்குவனவாம். தாவர வகையுள் முதல் நின்ற கல் என்பது கற்பாறை அல்லது மலை. இந்நிலவுலகத்திற் புற்பூண்டுகளுந் தோன்றுதற்கு முன் எல்லா உயிர்களும் மலைகளின் அணுக்களிற் புலப்படாது கிடந்து பின் உடம்புகள் பெறுதற்கு ஏற்ற தகுதி வந்த காலத்தே அவற்றினின்றும் முதலிற் புற்களாயும் அதன்பிற் பூண்டுகளாயும் அதன்பின் மரங்களாயும் ஒன்றன் பின் ஒன்றாய்த் தோன்றுவவாயின. இவ்வாறு நிலையிற் பொருள்களாய்ப் பிறந்து அவற்றின்கண் இருந்து அறிவு சிறிது விளங்கிப் பின்னும் மேற்பட்ட அறிவு விளங்குதற்கு ஏற்ற தகுதிப்பாடு வந்தவளவானே அதற்குரிய உயிர்கள் இயங்கியற் பொருள்களில் ஈரறிவுயிர்களான புழுக்களாயும், மூவறிவுயிர் களான சிதல் எறும்புகளாயும், நாலறிவுயிர்களான நண்டு தும்பிகளாயும் ஐந்தறிவுயிர்களான புழுக்களாயும், பாம்பு பறவை பல் விருகங்களாயும், ஆறறிவுடைய மனிதர் அசுரர்களாயும், ஆறறிவின் மேற்பட்ட அறிவுடைய முனிவர் பேய் கணங்கள் தேவர்களாயும் பிறவி எடுக்கும் என்பது உணர்த்தினராயிற்று. உயிர்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்பப் படிப்படியே அவ்வறிவு வளர்ச்சிக்கு இடந்தரும் உயர்ந்த உடம்புகளும் வராநிற்கு மென்பது இதனாற் பெறப்பட்டது. கல் என்பது உயிர்கள் உடம்பெடுத்தற்கு முன் புலப்படாது கிடத்தற்கு இடமாயிருத்தல் பற்றி அதனையும் ஒரு பிறவிபோல் வைத்துக் கூறினார். இதற்கு இவ்வாறன்றி, மலைகள் உயிருடையனவென்றும் அவை பறக்கும் இயல்பினவாயிருந்த மையால் அவற்றின் சிறகை அரிந்து இந்திரன் அவற்றை ஒரு நிலையிலிருக்கவைத்தன னென்றும் கூறுங் கதைபற்றி அவற்றையும் ஒரு பிறவியாக வெடுத்துக் கூறினார் என்பாரும் உளர் உயிரும் அதுபற்றிவரும் உறுப்பு வளர்ச்சியும் மலைகள் உடையனவென்பது இக்காலத்து இயற்கைப் பொருள் நூலாராய்ச்சிகளால் ஒரு சிறிதும் பெறப்படாமையின் அது கொள்ளற்பாலதன் றென்க. மிருகம் என்னும் வடசொல் தமிழில் விருகம் எனத் திரிந்தது. பேய் நுண்ணுடம்பில் நிற்கும் ஒருவகை உயிர். இது கண்டார்க்கு அச்சத்தைத் தருதலின் அப்பெயர் பெற்றது; பேம்-அச்சம். கணம் இதுவும் நுண்ணுடம்பில் நிற்கும் மற்றொரு வகை உயிர்; இதனைப் பாரிடம் என்பர் தமிழ்நூலார். அசுரர் - சுரர்க்குமாறான அரக்கர்; சுரர் - தேவர். தாவரம் - நிற்பன; தாவரம் என்னும் வடசொற்றிரிந்தது. சங்கமம் - அசைவன; ஐங்கமம் என்னும் வடசொற்றி ரிந்தது. மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே. மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் - உண்மையாகவே உன் அழகிய திருவடிகளைக் காணப் பெற்று இன்றைக்கு வீடுபேற்றின்பத்தினை அடைந்தேன்; உய்ய - யான் பிழைக்கும் பொருட்டு, என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா - என் உண்ணத்தினுள்ளே ஓம் என்னும் பிரணவ வுருவாய் நின்ற மெய்யனே, விமலா - மாசற்றவனே, விடைப் பாகா - ஏறு ஊர்ந்தவனே, வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே - ஆரிய மறைகள் தலைவோனே என்று அழைப்பவும் மேல் உயர்ந்தும் கீழ் ஆழ்ந்தும் அவற்றிற்கு எட்டாமல் அகன்று நுண்ணியாய் இருப்பவனே என்றவாறு. ஓங்காரம் என்பது எல்லா எழுத்தொலிகட்கும் முதலாய் அகத்தும் புறத்தும் இயற்கையாய் ஒலிக்கும் ஓசை; ஒருவர் தமது காதைக் கையால் அடைத்து நோக்கும் வழி அதன் அகத்தே அஃது ஓவென்று இரைதலையும் புறத்தே கடலினும் அஃது அங்ஙனமே இசைத்தலையும் காணலாம். செயற்கையாக எழும் ஏனை ஓசைகளையெல்லாம் அடக்கி, உட்குடைவாக எப்பொருளைக் காதில் வைத்துக் கேட்பினும் இவ் ஓகார ஓசை இயற்கையாக ஒலித்தல் கேட்கப்படும். உலகம் எங்கணும் ஓவாது ஒலிக்கும் இவ்வோசையினால் உந்தப்பட்டே உலகங்களும் உலகத்துள்ள பல்வகை யுடம்புகளும் இயங்குகின்றன. இவ் வோசையானது படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களையும் இயற்றவல்ல தொன்றாம் ஓசை இயங்கும் முறையாலும் இயக்கப்படும் முறையாலும் அணுக்களைக் கூட்டுதலும் கூட்டி நிலைப்பித்தலும் கூட்டியவற்றைப் பிரித்தலும் செய்துபோதருதலை இஞ்ஞான்றை இயற்கைப் பொருள் நூலார் ஆராய்ந்து விளக்கியிருத்தலின் இவ் ஓகார வொலி உலகங்களையும் உடம்புகளையுந் தோற்றுவித்தும் நிலைப்பித்தும் அழிப்பித்தும் நடைபெறுதல் மறுக்கப்படாத உண்மையாம். இவ் ஓகார வொலியைப் பகுத்துக் காணுமிடத்து அஃது அ உ ம் என்னும் மூன்றொலிகளாய்ப் பிரியும். இவற்றுள் அகாரவொலி எல்லாச் செயற்கை யொலிகட்கும் முதற்பிறந்து படைத்தற்றொழிதலைப் புரிவதாம்; உகாரவொலி அதன் பின்னே தோன்றிச் சிறிது நேரம் நிற்பதாகலின் அது படைக்கப்பட்ட பொருள்களைத் தத்தங்கால எல்லையளவும் நிலைபெறச் செய்யும்; மகாரவொலி இதழிரண்டும் பொருந்தி முடிவதாகலின் அஃது அங்ஙனம் நிலைபெற்ற பொருள்களை அழிந்து போகச் செய்யும். இவ்வாறு இம் மூன்றொலிகளையும், இம் மூன்றொலிகளாற் செய்யப்படும் முத்தொழில்களையும் அடக்கி நிற்கும் இயற்கை ஓசையாயிருத்தலின் ஓங்காரம் எவற்றினுஞ் சிறப்புடைத்தாம். இனி, இவ் ஓகாரவொலி அசுத்தமாயையிற் பிறக்கும் ஏனை முப்பது தத்துவங்களும் போல்வதன்று. அசுத்தமாயா தத்துவங் களுள் ஒன்று மந்றொன்றாய்த் திரியும். பொன் பணியாகவும் மண் குடமாகவும் திரியுமாறுபோல ஓகாரவொலி வேறொரு பருப் பொருளாகத் திரிதலைக் கண்டிலம் ஆகலானும், அஃதெப்போதும் நுண்பொருளாய் ஏனை அசுத்தமாய தத்துவங்களைத் திரிபுபடுத்துங் காரணமேயா மென்பது பெற்றாம். அல்லதூஉம், தானொன்றாய்த் திரிவது வேறொன்றனைத் திரிபுபடுத்தும் நுண்ணிய காரணப் பொருளாய் நில்லாது; என்னை? தான் ஒன்றாய்த் திரியுங்கால் தன்னை அங்ஙனம் திரித்தற்கு மற்றொரு நுண்பொருளின் உதவியை அவாவி நிற்குமாகலின் என்க. அற்றேல், ஓகாரவொலி இடைவெளியில் இயங்கக் காண்டலானும், ஓசையெல்லாம் விசும்பிற்குரிய ஒரு பண்பென்று நூல்கள் கூறுதலானும் இதனை விசும்பினின்று பிறப்பதென்று கூறுதலே பொருத்தமாமெனின்; அற்றன்று, எழுத்துக்களோடு கூடிப் பொருளை அறிவுறுக்கும் ஒலியும், எழுத்துக்களோடு விரவாமலும் பொருளை அறிவி யாமலும் நிகழும் ஒலியும் என ஓசைதான் இரு வகைத்து. அவற்றுள், எழுத்துக்களோடு விரவிப் பொருளறிவுறுக்கும் ஒலிகளே விந்து தத்துவத்திற்கு உரியன வென்றும், எழுத்துக் களோடு விரவாத வெற்றொலியே விசும்பிற்கு உரியதென்றும் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும். எழுத்துக்களோடு விரவாத ஒலிகள் யாவையோவெனின், பல்லி முற்கந் தெரிக்கும் ஒலியும் இதழை மடித்துவிடும் சீழ்க்கை யொலியும் போல்வன வெல்லாம் எழுத்தியல் நிரம்பா ஒலிகளா மென்று உணர்ந்து கொள்க. எழுத்துக்களான் ஆக்கப்பட்டுப் பொருள் அறிவு றுக்கும் ஒலிகளோ விந்துமாயையிற் பிறப்பனவாமென்றும், எழுத்தோடுகூடா ஏனை ஒலிகள் அசுத்தமாயா காரியமான பூதா காயத்திற் றோன்றுவனவா மென்றும் பௌட்கராகமமும் இவற்றின் வேற்றுமையினை நன்கு தெரிந்தோதும். இனி, இவ்வெழுத்தொலிகள் விந்து தத்துவத்தின் கட் பிறப்பனவென்றல் யாங்ஙனம், விந்து பொறிகளுக்குப் புலனாகாத மிக நுண்ணிய பொருளன்றோ வெனின்; அற்றன்று விந்து காரியப்படாமல் வெறுமுதலாய் நிற்குங்கான்மட்டும் நம்மனோர்க்குச் சிறிதும் புலப்படாதநிலையில் நிற்குமே யல்லாமல், அஃது உயிர்கட்குப் பயன்படுமாறு காரியப்படுத்தப் படுங்கால் நமக்குப் புலப்படும்படியாகவே நடைபெறும். இனி அது நமக்குப் புலப்படுமாறு இரண்டேயாம்; அவை ஒளிவடிவும் ஒலி வடிவும் ஆகும். விந்துவின் ஒளிவடிவு மின்னலிற்றோன்றிக் கட்புலனாய் வரும், அதன் ஒலி வடிவு எழுத்தொலிகளிற் றோன்றிச் செவிப்புலனாய் வரும். விந்துவின் ஒளியும் ஒலியும் பூதாகாயத்தை ஒரு பற்றுக்கோடாகக் கொண்டு அதன்பாற் றோன்றுதல்பற்றி அவை யிரண்டும் பூதாகாயத்தின் பண்புகள் என்று உரைத்தல் அமையாது. மின்னொளி சில கம்பிகளையும், வேறுசில பருப் பொருள்களையும் பற்றிக் கொண்டு விளங்கினும், அஃது அப்பருப் பொருள்களின் வேறாயினாற் போல, அதன் ஒளியும் ஒலியும் பூதாகாயத்தை ஒருவாயிலாகக் கொண்டு தோன்றினும் அஃது அவற்றின் வேறேயாமென்பது துணியப்படும். படவே, ஒளியாகிய மின்னும் ஒலியாகிய எழுத்தும் காரியப் பொருள்களாயிருத்தலின் அவை தமக்கு முதலான ஒரு காரணத்தை அவாவியே நிற்கும்; அக்காரணந் தான் யாதோ வெனின் அதுவே விந்துவென்று முடிக்கப்படும். இவ்வாற்றால் விந்து காரண நிலையில் மிக நுண்ணிதாய் நம்மனோர்க்குப் புலப்படாதாயினும் அது தன் காரிய நிலையில் மின்னாயும் எழுத்தாயும் புலப்பட்டே நிற்குமென்று உணர்ந்துகொள்க. இனி, இறைவனது சக்தி அளவிடப்படாத நுண்மையும் ஆற்றலும் வாய்ந்ததாகலின் அஃது இவ்வுலகங்களுக்கு முதலான அசுத்தமாயை நேரே சென்றியைந்து இயக்குமாயின் இஃது அதன் வேகத்தைத் தாங்க மாட்டாமையின் இவ்வுலகங்கள் தோன்றாவாம். அதுபற்றி அச்சக்தி நுண்பொருளியல்பில் ஒருவாற்றால் தன்னோடொத்தும், பருப்பொருளியல்பில் ஒருவாற்றால் அசுத்தமாயையோடொத்தும் நடுநிகர்த்ததாய் நிற்கும் சுத்தமாயை யெனப்படும் விந்து சக்தியோடுதான் நேரே இயைந்து நின்று தனது வேகத்தை அதன்வாயிலால் அசுத்தமாயை தாங்குமளவாக வைத்துத் தணிவுபடுத்திப், பின்னர் அவ்வசுத்தமாயையை இயக்கி இவ்வுலகங்களையும் இங்வவுலகத்துப் பல்பொருள்களையுந் தோற்றுவியாநிற்கும். எனவே, சிவசக்தி நேரேசென்று இயைந்து நிற்குமிடம் விந்துவென்பது பெற்றாம். இனிச் சிவச்சக்தியால் உந்தப்பட்ட விந்துமாயை சொல் லொணா இயக்கம் உடைத்தாய்ச் சுழல அதன்கணின்றும் ஒரு நாதம் உண்டாம்; அந்நாதம் அசுத்தமாயையின் அணுக்களைத் திரட்டி உலகங்களைப் படைக்கும் சிவசக்தியால் இயக்கப்பட்ட விந்து சுழிந்து இயங்குங்கால் வட்டவடிவும், அவ்வட்ட வடிவினின்று தோன்றும் நாதம் வரிவடிவும் உடையவாம். இவ்விந்து நாதங்களின் சேர்க்கையே கட்புலனாக இட்டு எழுதப்படும் வரி வடிவில் ஓ எனவும், பிள்ளையார்சுழி (உ) எனவும், வழிபடுங்குறியாக நிறுத்தப்படுங்காற் சிவலிங்கம் எனவும், ஒலி எழுத்தாகச் சொல்லப்படுங்கால் ஓங்காரம் பிரணவம் எனவும் தொன்றுதொட்டு ஆன்றோரால் வழங்கப்பட்டு வருகின்றது. விந்துநாதச் சேர்க்கையான ஓங்காரத்திற் றனது சத்தியோ டொன்றாய் நிற்குஞ் சிவம் ஆண்டு முனைத்து விளங்குதலாகிய இவ்வுண்மை தெரித்தற் பொருட்டன்றே திருமூலநாயனார் ஓமெனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி ஓமெனும் ஓங்காரத் துள்ளே உருவரு ஓமெனும் ஓங்காரத் துள்ளே பலபேதம் ஓமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே என்று அருளிச் செய்தார். மாண்டூக்கிய உபநிடதமும் இந்த அழியாத பொருள் ஓங்காரத்தில் இருக்கின்றது; இதுவே எல்லாம்; இதனுடைய விளக்கமே இது; இறந்த காலத்தும் நிகழ்காலத்தும் எதிர்காலத்தும் உள்ள இவையெல்லாம் ஓங்காரமே; முக்காலங்களையும் கடந்து நிற்கும் அதுவுங்கூட ஓங்காரமே என்று பகருவதாயிற்று. இம் மண்டூக்கியோப நிடதத்திற்குக் கௌடபாதர் எழுதிய காரிகையும் எல்லா உயிர்களின் நெஞ்சத்திலும் ஈசுவரன் ஓங்காரமாய் நிற்கின்றார் எனப் புகலுகின்றது. கடவல்லியுபநிடதமும் எல்லா மறைகளும் எந்தமொழியைக் கூறுகின்றனவோ, தபங்களெல்லாம் எந்தச் சொல்லைக் கிளிக்கின்றனவோ, பிரமசரியத் தொழுகுவோர் எந்தச் சொல்லை விழைகின்றனரோ அந்தச் சொல்லைச் சுருக்கமாக ஓம் என்று உனக்குச் சொல்லுகின்றேன் என்கின்றது. இனி, வேதாந்த சூத்திரத்திற்குச் சங்கராசாரியர்க்கும் முன்னே பாடியவுரை வகுத்தருளிய நீலகண்ட சிவாசாரியர் ஓங்காரத்தின் பிரிவெழுத்துக்களாகிய அகார உகார மகாரம் எனும் மூன்றில் முதல்நின்ற அகாரம் இருக்குவேத முதன் மந்திரமாகிய அக்நிமீளே என்பதன் முதலிலும், இடை நின்ற உகாரம் எசுர்வேதத்தின் இடையிலுள்ள யோநி சமுத்திரோபந்து என்பதன் நடுவிலும், கடைநின்ற மகாரம் சாமவேதத்தின் கடையிலுள்ள சமாநம்வரம் என்பதன் ஈற்றிலும் நின்று மறைகளெல்லாம் ஓமென்னும் மொழியின் பொருளேயாமென்பதனை அறிவுறுத்தின என்று உரைப்பர். இனித் தமிழ்மறைகளுள்ளும், எல்லாம் ஓதாதுணர்ந்த திருஞான சம்பந்தப் பெருமான் அருளிச்செய்த முதன் மறையின் முதற் பதிகத்தின் முதலில் தோடு என்பதன்கண் தகர வொற்றின் மேல் ஓவென்னும் எழுத்தும், பன்னிரண்டாந் திருமுறையாகிய திருத்தொண்டர் புராணத்து இறுதிக்கண் உலகெலாம் என்பதன் ஈற்றில் மகரவொற்றும் நின்று தமிழ்ப் பன்னிரு திருமுறைகளும் ஓங்காரத்தின் பாலவென்பதனை இனிதுணர்த்துதலும் குறிக்கொளற்பாற்று. தோடு என்பதன் கண் ஓகாரம் தகரவொற்றின் மேனிற்றல், ஓம் தத்ஸவிதுர் என்னுங் காயத்திரி மந்திரத்தின்கண் உணர்த்துகின்றதென ஓரியைபுமின்றித் தமக்குத் தோன்றியவாறே கூறுவாருமுளர். முருகப் பெருமானே போல் தெய்வ அருண் மகவாய்த்தோன்றி ஆரியநான்மறைகளாலுங் காணப்படாத இறைவனையும் இறைவியையும் நேரே கண்டு தமிழ்ச்செழும் பாடல்களை அருள்பொருள்வளந் துறுமத் தேன் பெருக்பெடுத்தாற்போற் பொழிந்தருளிய திருஞானசம்பந்தப் பிள்ளையார் தாம் திருவருள் நெறியினை மக்கட்கு எடுத்துக் காட்டுதற்கு ஓர் ஒப்பற்ற கருவியாயிருந்த தமிழ்மொழி இழுமென் ஓசை வாய்ந்தது அன்பருள்ளத்தை எளிதிலே குழைந்துருகச் செய்து இறைவன் திருவடிக்கட் படுக்கும் பான்மைவாய்ந்து தூய ஓங்காரவடிவமாய் நிகழுதல் கண்டு, அதனை எல்லார்க்கும் உணர்த்துவான் வேண்டி அத்தமிழ் என்னும் சொல்லின் முதல் நின்ற தகரத்தின்மேல் அவ் ஓகாரத்தை இயல்பாகவே இயைந்து நின்ற தோடு என்னுந் யிட்டருளினாரென்றே யாங்கோடும் ஓங்காரம் ஆரியம் தமிழ் முதலான எல்லாமொழிகட்கும் பொதுவாயிருப்பவும் அதனைத் தமிழுக்கே உரியதென வரைந்து கூறுதல் யாங்ஙனமெனின்; ஓம் என்னும் ஒலியில் இனிய மெல்லோசையே நிறைந்திருத்தலும் வல்லோசை யில்லாமையும் சிறுமகாரும் உணர்வர்; உலகம் யாங்கணும் உள்ள மொழிகளின் ஓசை முறைகளை ஒரு சிறிது ஆய்ந்து காண்பார்க்கும் தமிழல்லாத மற்ற மொழிகளெல்லாம் உரத்த ஓசைகளும் கனைக்கும் ஒலிகளும் நிரம்பி இன்னிசையிற் பழகிய செவி யுடையார்க்கு வெறுப்பினைத் தோற்றுவித்தலும், தமிழ்மொழி அத்தகைய உரத்த ஓசைகளுங் கனைக்கு யொலிகளே நிறைந்து எல்லார்க்கும் இன்பம் பயக்கும் நீரதாய் ஓங்கார உருவின தாயிருத்தலும் தெற்றென விளங்கும். அல்லதூஉம், ஓங்காரம் தமிழிற்குரிய ஓ வடிவினதாக ஏனை மொழிகளில் எழுதப் படுதலானும், ஓசையைக் குறிக்கும் ஓசை ஒலி என்னுந் தமிழ்ச் சொற்களின் முதலில் ஓகாரம் நிற்றல்போல ஏனைமொழிகளில் ஓசையைக் குறிக்குஞ் சொற்களில் அங்ஙனம் ஓகாரம் நிற்பக் காணாமையானும், ஓசையைக் கவரும் மக்களின் செவியின் வடிவை உற்றுநோக்கிப் பண்டைத் தமிழர் கண்டறிந்தா ரென்பது புலப்படாமையானும், காத்தல் என்னும் பொருள் ஓம் என்பதற்கு உண்டென்பது வடமொழியிற் கூறப்படினும் காத்தலெனப் பொருள்படும் ஓம்பு என்னும் முதனிலை தமிழின் கட் காணப்படுதல்போல வடமொழியிற் காணப்படா மையானும் ஓங்காரம் தமிழிற்கே பண்டுதொட்ட உரிமையுடைய தென்பது பெற்றாம். இங்ஙனம் அது தமிழிற்கு உரிமை யுடைத்தாதல் தெரித்தற்பொருட்டே திருஞானசம்பந்தப் பிள்ளையார் தமிழ் என்னும் பெயரின் முதலெழுத்தாகிய தகரத்தின்மேல் ஓகாரம் இயைப்பெற்ற தோடு என்னுஞ் சொல்லை முதற்கட்பெய்துரைத்தருளு வாராயினரென்னு கடைப்பிடிக்க. இனிப் புறத்தே காணப்படும் ஓங்காரஒலியில் இறைவன் விளங்கித் தோன்றி நின்று இவ்வுலகங்களை யெல்லாம் படைத்து இயக்குமாறுபோலவே, அகத்தே இவ்வுடம்பி னுள்ளும் அவன் அதன்கண் முனைத்துநின்று அதன் அகக்கருவி புறக்கருவிகளை இயக்கி அதனுள்வாழும் உயிர்க்குப் பெரிய தோர் உதவியைச் செய்துவருகின்றானென்பதும் அறியற்பாற்று. யாங்ஙனமெனிற் காட்டுதும். நமதுடம்பின் அகத்துள்ள சிறந்த உறுப்புகள் அத்துணையும் ஓகாரவடிவினவாய் இருத்தலை உடம்புநூல் வல்லார் எழுதிக்காட்டிய படங்களாற் கண்டு தெளியலாம். அவற்றுள் நமதுடம்பின் வளர்ச்சிக்கும் நிலை பேற்றிற்கும் இன்றியமையாக் கருவியான நெஞ்சப்பையின் வடிவமானத் தாமரை முகையை யொத்து ஓங்காரவடிவமாய் அமைந்திருக்கின்றது; இந்நெஞ்சப் பையினுள்ளே காணப்படும் மின்னொளியானது தன்னுட் கலந்து விளங்கும் இறைவனது திருமேனியாகும். இங்ஙனம் நெஞ்சப் பையிற் காணப்படும் அமைதியினையே உருவகப்படுத்தித் தில்லை சிற்றம் பலத்தே திருக்கூத்தியற்றும் முதல்வனாக வைத்து அறிவு நூல்கள் கூறாநிற்கும். நெஞ்சப் பையின் நடுவசையும் மின் னொளி இறைவனாகவும், அதன் அசைவு அவனது திருக் கூத்தாகவும், அங்குள்ள முதலெழுத்தின் ஒலி அவனது திரு வடியில் ஒலிக்கும் சிலம்பின் ஒலியாகவும் நெஞ்சப்பையின் சுற்றுவடிவு அவனைச் சூழ்ந்து விளங்கும் சுடரொளியாகவுங் கருதற்பாற்று. இவ்வியல்பு, ஓங்கார மேநற் றிருவாசி யுற்றதனில் நீங்கா எழுத்தே நிறைசுடராம் - ஆங்காரம் அற்றார் அறிவர்அணி அம்பலத்தான் ஆடல்இது பெற்றார் பிறப்பற்றார் பின் என்னும் உண்மை விளக்கச் செய்யுளானும் திருச்சிலம் போசை ஒலிவழியே சென்று நிருத்தனைக் கும்பிடென் றுந்தீபற நேர்பட அங்கேநின்றுந்தீபற என்னும் திருவுந்தியார் செய்யுளானும் இனிதறியப்படும், இனி, இந்நெஞ்சப்பையேயன்றி, நமதறிவு விளக்கத்திற்கு நிலைக் களனாய் நிற்கும் தலையினுள் மூளையும், உண்டவுணவை ஏற்று உடம்புக்கு வேண்டும் பாலை அதனினின்று பிரித்துக் கொடுக்கும் தீனிப்பையும், தீனிப்பையினின்று பிரித்துக் கழிக்கப்பட்ட சக்கையை வாங்கி வெளிப்படுத்தும் மலக்குடரும், சிறுநீர்ப் பையும் எல்லாம் ஓகாரவடிவாய் அமைத்திருத்தலும் கருப்பையுள் வளருங் கருவும் முதுமைப் பருவம் வந்தபின் மக்களுடம்பிற் காணப்படும் கூன்வடிவம் அங்ஙனமே ஓகாரவடிவிற் காணப்படுதலும் உற்றறியற்பாலனவாம். அற்றேல், ஓங்காரத் உந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும் நீங்கா வகாரமும் நீள்கண்டத் தாயிடும் பாங்கார் நகாரம் பயினெற்றி யுற்றிடும் வீங்காகும் விந்துவும் நாதாமேல் ஆகுமே என்னுந் திருமந்திரத் திருப்பாட்டோடு, ஈண்டுஅடிகள் கூறிய உய்யவென்னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா என்பது முரணுமாலெனின்; அற்றன்று, உடம்பின் தலை அடை கடை என்னும் மூன்றிடங்களினும் உள்ள மூளை நெஞ்சப்பை மலக்குடர் என்னும் மூன்றுறுப்புக்களும் ஓங்கார வடிவில் இருந்தாலும், இடையில் உள்ள நெஞ்சப்பை தலை குவிந்து அடி சிறிதுநீண்ட வட்டமாக இருத்தலின் அவ்வடிவு விந்துத் தத்துவம் மேற்பட்ட ஓங்காரமாயும், தலையின்கண் உள்ள மூளை முன்நெற்றியிலிருந்து கவிந்துபோய்ப் பிடரிலிருந்து மிக நுண்டு நிற்றலின் அது நாத தத்துவம் மேற்பட்ட ஓங்காரமாயும் நிற்க, உந்தியின் கீழ் உள்ள மலக்குடர் மட்டும் வரிவடிவில் எழுதப்படும் ஓவென்னும் வெழுத்தைப்போல் விந்து நாதங்கள் ஒத்துப் புலப்பட்ட வடிவுடைய ஓங்கார மாதல் கண்டு, உந்திக் கீழுள்ள ஓங்காரம் வரிவடிவில் எழுதப்படும் எழுத்துப் போல்வதாய் நம்மனோரால் எளிதில் அறியக் கிடத்தலானும், மல நீக்கத்தின் பொருட்டு முதற்கண் நினைக்கற்பால தாயிருத்தலானும் அதனை விதந்து அங்ஙனங் கூறினாராயினும், கீழ்நின்ற அதனை நினைந்து அவ்வாற்றான் அதனோடு மேலெழுந்து நெஞ்சத்தின் கண் விந்து வடிவாய்த் திகழும் ஓங்காரத்தைக் கண்டு மகிழு நிலையினையும், ஒமென் றெழுப்பித்தன் உத்தம நந்தியை நாமென் றெழுப்பி நடுவெழு தீபத்தை ஆமென் றெழுப்பியவ் வாறறி வார்கள் மாமன்று கண்டு மகிழ்நதிருந் தாரே என்று வேறோதுதலின் திருமூலநாயனார்க்கு நெஞ்சத் தாமரைக்கண் ஓங்காரம் உளதென்று கோடல் உடன்பாடேயா மென்க. இனி உள்ளம் என்பதற்கு நெஞ்சம் என்னும் பொருளேயன்றி, அறிவு நிகழ்ச்சிக்கிடமான தலையினுறுப்பு என்றும் பொருள்கொள்ளக் கிடக்குமாதலால் அவ்வுறுப்பி னுள் ஓங்காரமாய் நின்ற எனவும் பொருளுரைத்துக் கொள்க. விமலம் என்பது வடசொல்; இதன் முதல் நின்ற வி என்னும் உபசர்க்கம் (இடைச்சொல்) அன்மைப் பொருளை யுணர்த்தும். மலம், மாசு, அழுக்கு என்பன ஒரு பொருட் சொற்கள். விடைப்பாகா - எருதிற்கு உரியவனே, எருதின்மேல் வருவோனே, தூய வெள்ளெருது மலம் அற்ற தூய உயிர்களுக்கு அடையாளமாகும். தூய உயிர்க்குத் தலைவனாய் அவற்றோடு உடனாய் நின்று இன்பத்தை ஊட்டுதல் முதல்வற்கு இயல்பாதல் பற்றி அவன் எருதினை ஊர்பவன், விடையேறி, விடைப்பாகன் என்று கூறப்படுவன். இனி எல்லா உயிர்கட்குமே தலைவனாதல் பற்றி அவன் விடைப்பாகன் என்று கூறப் பட்டான் எனினும் ஆம். இருக்கு வேதத்துள்ளும் இறைவன் பிரஜாபதி என்று அடுத்தடுத்துக் கூறப்படுதல் காண்க; ப்ரஜா என்னும் வடசொல் படைக்கப்பட்ட உயிர்கள் என்னும் பொருளை உணர்த்தலி னாலும், அவ்விருக்கு வேதம் பிறி தோரிடத்து இரு கால் நாற்காற் பசுக்களுக்கு அதிபதி என்று ஓதலினாலும், பசுவென்னுஞ் சொல்லும் பாசத்தினாற் கட்டப்பட்ட எல்லா உயிர்களையும் உணர்த்தலினாலும் முதல்வன் பசுபதி எனவும், விடைப்பாகன் எனவும் சைவசமய நூல்களில் வழங்கப்படுகின்றன னென்க. வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணி யனே என ஆரிய நான்மறைகளால் இறைவனியல்பு முற்ற அறியப் படாமையின் இங்ஙனம் அருளிச் செய்தார். அவற்றால் அவன் அங்ஙனம் அறியப்படாமைக்குக் காரணம் மேலே விளக்கிப் போந்தாம்; ஆண்டு காண்க. வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யாயின வெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே 40 அஞ்ஞானந் தன்னை அகல்விக்கு நல்லறிவே. வெய்யாய் - வெம்மையுடையோனே, விந்து தத்துவத்தின் வாயிலாய் தீயின்கண் முனைத்துத் தோன்றும் இறைவனியல்பு வெப்பம் உடையாதிருத்தலின் இங்ஙனம் கூறினார். தணியாய் - குளிர்ச்சி யுடையோனே, நாததத்துவத்தின் வாயிலாய் நீரின்கண் முனைத்துத் தோன்றுஞ் சிவசத்தியின் இயல்பு தட்பம் உடையதா யிருத்தலின் இங்ஙனம் அருளினார். தண், தட்பம் - குளிர்ச்சி. இயமானன் ஆம் விமலா - வேள்வி வேட்போன் உள் விளங்கும் தூயோனே. யஜமாந : என்னும் வடசொல் வேள்வி இயற்றும் அல்லது இயற்றுவிக்கும் தலைவனை உணர்த்துவது. தலைமைபற்றி வேள்வி வேட்போன்மாட்டு இறைவன் விளங்குவான் என்று கூறினமையால், அவனைப்போன்ற எல்லா உயிர்களுள்ளும் முதல்வன் இருப்பான் என்பது தானே பெறப்படும்; என்னை? ஒரு பெயர்ப் பொதுச்சொல் உள்பொரு ளொழியத் தெரிபுவேறு கிளத்தல் தலைமையும் பன்மையும் உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும் என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாராகலின் (தொல்காப்பியம் சொல்லதிகாரம் 49ஆம் சூத்திரம்) பிற மரங்களும் உளவேனுங் கழுகந் தோட்டம் என்று தலைமை பற்றிக் கழுகின் மேல் வைத்து வழங்குதல்போல என்க. எல்லா உயிரினுள்ளும் இறைவன் விளங்குதல் பற்றி அடிகள் இங்ஙனங் கூறிய கருத்தறியாது, முதல்வனே உயிர்களாயினான் என்னும் ஏகான்ம வாதத்திற்கு இதனை எடுத்துக் காட்டுவாரும் உளர். எல்லா முதன்மையும் ஆற்றலு முடைய இறைவன் அவையில்லா உயிர்களாதல் உருவாற் றானும் பொருந்தாமையானும், அறிவாய் உள்ள ஈசனும் அறியாமையோடு கூடிய அநீசனுமான இருவரும் பிறவாதவர் என்று சுவேதா சுவதரோபநிடதம் சீவான்ட பரமான்ம வேறுபாடு நன்கு தெரித்தோதலானும், உயிரினும் உயிரில் பொருளினும் இறைவன் புணர்ந்து நிற்பனே யல்லாமல் தானே அவைகளாய்த் திரியா னென்பது புலப்பட நிலன் நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன், புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான் என்று அடிகள் பிறாண்டுங் கிளந்து கூறுதலானும் அவ்வாறு ஏகான்ம வாதம் ஏற்றுவார் உரை ஒரு சிறிதும் பொருந்தாதென்க. பொய் ஆயின எல்லாம் போய் அகலவந்து அருளி - பொய்யான நினைவுஞ் சொல்லும் செயலும் எல்லாம் போய் நீங்கக் குருவடிவில் வந்து அருள்செய்து, மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே - உண்மையறிவாகி ஒளி பிறழுகின்ற உண்மை ஒளியே. பொய் என்பது பொந்து எனப் பொருள்படும்; அதாவது வெளியே ஒருபொருள் போற் றோன்றி உள்ளே வெறும் புரையாய் இருப்பது; இங்ஙனமே ஒருவர் நினைவுஞ் சொல்லுஞ் செயலும் ஆராய்ந்து காண்பார்க்கு உள்ளீடு இல்லாதனவாய்ப் புலப்படு மாயின் அவை பொய்யென்று சொல்லப்படும். உள்ளீடு இல்லாப்புரை பயன்படாமை போலப் பொய்யான நினைவு சொற் செயல்களும் பயன்படாமையேயன்றித் தீவினையையும் பயப்பனவாம். இனிப் பரிமேலழகியார் தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார் கருத்துப் பற்றி நன்மை பயவாத நிகழாதது கூறலும், தீங்கு பயக்கும் நிகழ்ந்தது கூறலும் பொய்ம்மை என உரைப்பர் (திருக்குறள் - வாய்மை - 2) நன்மை பயவாதது உண்மையே யாயினும் பயன்படாமையின் அஃது உள்ளீடு இல்லாததேயாம்; நன்மை பயப்பது உண்மை யன்றாயினும் அது பயன்படுதலின் அஃது உள்ளீடு உடையதே எயாம். நாயனார் (புறநானூறு - 4) பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த, நன்மை பயக்கு மெனின் என்பதிற் புரையென்னுஞ் சொல்லையும் உடம்பொடு புணர்த்து ஓதினாராகலின், பொய்யென்பது பயன்படுதலாகிய உள்ளீடு இல்லாத புரையேயாமென்று உணர்ந்து கொள்க. புரை, பொய், புழை, பொந்து என்பன உட்டொளையினை யுணர்த்தும் ஒரு பொருட் பெயர்கள். அறியாமை வழிப்பட்ட உயிர்களின் நினைவு சொற் செயல்கள் வீடுபேற் றுறுதிப்பயனைத் தராமற் பொய்படுதலின், அவ்வறியாமையினை முற்றுந்துறந்து அவற்றை வீடுபேற்றின்கட் செலுத்தும் உண்மை யறிவொளியாய்த் தோன்றி இறைவன் தமக்கு அருள் வழங்கிய பான்மையினைக் கூறினார். மிளிர்தல் - பிறழ்தல்; மிகுந்த ஒளி விளங்குங்கால் அது பிறழ்வதுபோற் றோன்றலின் அங்ஙனம் உரைத்தார். சுடர் ஒளியினை யுணர்த்தல் தெறுசுடரொண்கதிர் ஞாயிறு என்பதன்* உரையிற் காண்க. எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப்பெருமானே - எவ்வகையான அறிவும் இல்லாத அடியேனுக்கு இன்பத்தைத் தந்தருளி பெருமானே. ஞானம் பாசஞானம் பசுஞானம் பதிஞானம் என மூன்று வகைப்படும். இவற்றுட் பாசஞானமாவது ஆணவம் மாயை கன்மம் என்னும் இவற்றின் ïU.ப்ò« இயல்புகளும் அறிவது; பசுஞானமாவது உயிர் அம்மும்மலங்களோடு ஒன்றாய் நிற்குந் தன் இயல்பும், அவற்றின் வேறாய் நிற்கவல்ல தனது இயற்கையும் அறிவது; பதிஞானமாவது இறைவனிருப்பும் இயல்பும் உணர்ந்து அவன் திருவடியோடு தலைக்கூடிநிற்கு மாற்றினை அறிவது இனி இவற்றிற்குச் சிவஞான சித்தியாரில், வேதசாத் திரமிருதி புராணகலை ஞானம் விரும்பசபை வைகரியா தித்திறங்கண் மேலா நாதமுடி வானவெல் லாம்பாச ஞானம் நணுகியான் மாஇவைகீழ் நாட லாலே காதலினால் நான்பிரம மென்னு ஞானங் கருதுபசு ஞானம்இவ னுடலிற் கட்டுண் டோதியுணர்ந் தொன்றொன்றா உணர்ந்திடலாற் பசுவாம் ஒன்றாகச் சிவன்இயல்பின் உணர்ந்திடுவன் காணே என்று ஓதியவாறே கொள்ளலும் ஒன்று. எ ஞானம் எஞ்ஞானம் என்றாயின. அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே - அறியாமையை மாயை கன்மங்களால் அகலச்செய்யும் நன்மைபயக்கும் அறிவாய் இருப்பவனே. ந ஞானம் என்னும் வடசொற்கள் புணருங்கால் நகரத்தின் மேல் நின்ற அகரம் நிற்க ஒற்றுக்கெட்டு அகரத்தின்முன் ஞகர வொற்று மிக்கு அஞ்ஞானம் என்று ஆயின; முதல் நின்ற நகர இடைச்சொல் மறுதலைப்பொருளை உணர்த்தலின், இஃது அறிவுக்கு மறுதலையான அறியாமையை உணர்த்தும். இனி இதற்கு இன்மைப் பொருள் கொண்டு அறிவு இல்லாமையே அறியாமையாம்; அறியாமை ஒருபொருளன்று எனக் கூறு வாரும் உளர். அறியாமை இல்பொருளாயின் அஃது அறிவை மறைக்குந் தன்மையுஞ் செயலும் இல்லாதாகல் வேண்டும்; மற்று அஃது எல்லா உயிர்களின் அறிவு செயல் வேட்கைகளை மறைக்குந் தன்மையுந் தொழிலும் உடையதாதல் கண்கூடாய் அறியக் கிடத்தலின் அஃதோர் உள்பொருளையா மென்று அறிக அஞ்ஞானம். அவித்தை ஆணவம் அறியாமை என்பன ஒரு பொருட் சொற்கள். இனி அஞ்ஞானந்தன்மை அகற்றும் என்னாமல் அகல் விக்கும் என்றமையால், உயிர்களைப் பற்றிய அறியாமைக் கறையை இறைவன் நீக்குகின்றுழி மாயையைக் காரியப்படுத்தி உடம்பையுங் கருவிகளையும் உலகங்களையும் நுகர்ச்சிப் பொருள்களையுங் கொடுத்து, அவை தம்மால் இருவினைகளை யெழுப்பி இவ்விரண்டாலும் அதனை நீக்குவானென்பது பெற்றாம். நல் அறிவு - நன்மையைத் தரும் அறிவு. வால் அறிவன் என்று திருவள்ளுவ நாயனார் ஓதுதலின், *இறைவனறிவுக்கு நன்மையாவது இயல்பாகவே தூயதாய் நிற்றலென் றுரைத்தலுமாம். ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருடருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பில் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே 45 மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான். ஆக்கம் அளவு இறுதி இல்லாய் - ஆக்கப்படுதலும் ஒருகால வரையில் நிற்றலும் முடிவும் இல்லாதோனே, அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் - எல்லா உலகங்களையும் நீ படைப்பாய் காப்பாய் அழிப்பாய் முடிவில் உயிர்கட்கு அருளையுந் தருவாய், என்னைப் போக்குவாய் - என்னைப் பல்வகைப் பிறவிகளிற் செலுத்துவாய், என்னை நின்தொழும்பில் புகுவிப்பாய் - என்னை நினது திருத்தொண்டிற் புகும்படி நின் அருளாற் செய்வாய், நாற்றத்தின் நேரியாய் - பூவின் மணம் போல் அன்பர் உள்ளத்தில் இசைந் திருப்பவனே, சேயாய் - அன்பரல்லாதார்க்கு எட்ட இருப்பவ னே, நணியாய் - அன்பராயினார்க்குக் கிட்ட இருப்பவனே, மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே - சொல்லுக்கும் நினைவுக்கும் அப்பாற்பட்டு நின்ற மறைபொருளாயுள்ளவனே, கறந்தபால் கன்னலொடு நெய் கலந்தாற்போல - கறந்த பாலிலே சருக்கரையுந் தேனுங் கலந்தாற்போல, சிறந்த அடியார் சிந்தனையுந் தேன் ஊறி நின்று - சிறந்த அடியவர் உள்ளத்திலே தேன்போல் இனிமை ஊறி நிலைபெறத் தங்கி, பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் - எடுத்த பிறவியைத் தொலைக்கும் எங்கள் பெருமானே என்றவாறு. ஆக்கம் அளவு இறுதி இல்லாய் என்றது படைப்பு நிலை இறுதி என்னும் முத்தொழில்களிற் பட்டுச் சுழலும் உயிர்களுக் கும் உலகங்களுக்கும் முதல்வனாய் அம்முத்தொழில்களைச் செய்பவன் தனக்குமேல் ஒரு முதல்வன் இன்மையாலும், முத்தொழிலிற் படுதற்கு ஏதுவான இருவினைகளும் அறியா மையும் தன்பால் இன்மையாலும் தான் அங்ஙனம் முத்தொழி லிற்படுவான் அல்லன் என்பதனை உணர்த்திற்று. உலகத்திற் பல்வகைச் சமயத்தாரும், படைக்கப்பட்டுப் பிறந்து சிலகாலம் இருந்து இறந்துபோன உயிர்கள் சிலவற்றை, அவ்வவற்றிற் காணப்பட்ட பேரறிவுச் செயல் பேராண்மைச் செயல்களைக் கண்டு மயங்கித் தெய்வங்களாக வணங்கி வருகின்றனர். முத்தொழிலிற் பட்டு மறைந்து போன அச்சிற்றுயிர்கள் பிறவற்றின் பொருட்டு அம்முத்தொழில்களைச் செய்ய மாட்டுவன அல்ல. அம்முத்தொழில்களிற் றான் படாமல் அவற்றிற்கு முதல்வனாய் நின்று எல்லா உயிர்களையும் ஈடேற்றும் இரக்கத்தால் அவற்றைச் செய்வோனே முழுமுதற் கடவுள் என்பது தெரிவித்தாராயிற்று. ஆக்கம் - ஆக்கப்பட்டது; அளவு, அங்ஙனம் ஆக்கப் பட்டது நடைபெறும் கால அளவு; இறுதி - முடிவு. ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் என்பதன்கண் இறைவன் செய்யும் ஐந்தொழில்களில் நான்கி னைக் கூறினமையால், இவற்றின் இடையே நிகழும் மறைத்தல் என்னுந் தொழிலும் உய்த்துணரப்படும், இவற்றுள் ஆக்கல் என்பது அறியாமையிற் கட்டுண்டு கிடந்த உயிர்க்கு உடம்பைக் கொடுத்து இருவினைகளை எழச்செய்து அவ்வாற்றால் அறிவைத் தோற்றுவித்தல்; காத்தல் என்பது எடுத்த உடம்பில் நின்று இருவினைப் பயன்களை நுகரும் முகத்தால் அறிவுவளர அறியாமை தேயச்செய்தல்; அழித்தல் என்பது இருவினை நுகர்ச்சிக்கண் உடம்பு மெலிந்து உயிர் அலுத்துப்போக மீட்டும் படைத்தற்கு முன் சிலகாலம் வரையில் இளைப்பாறச் செய்தல்; மறைத்தல் என்பது பிறவிகடோறுந் தொடர்புபட்டுவரும் இருவினை நுகர்ச்சிகளை அடுத்தடுத்து மறக்கச் செய்து மேலும் மேலும் அவற்றை நுகருதற்கண் அவாவினை எழுப்புதல்; அருளல், என்பது இருவினைப்பயனும் நுகர்ந்தொழித்து அறிவு கிளர்ந்து அறியாமை வலி அடங்கியபின் தனது திருவடிப் பேரின்பத்தை வழங்குதல் உயிர்கள் பொருட்டு இறைவன் செய்யும் ஐந்தொழில்களின் தன்மை இவ்வாறாதல், ஏற்றஇவை அரனருளின் திருவிளையாட்டாக இயம்புவர்கள் அணுக்கள்இடர்க் கடல்நின்று மெடுத்தே ஊற்றமிக அருள்புரிதல் ஏது வாக உரைசெய்வர் ஒடுக்கம்இளைப் பொழித்தல் மற்றைத் தோற்றமல பாகம்வரக் காத்தல் பாகந் துய்ப்பித்தல் திரோதாயி நிறுத்த லாகும் போற்றலரும் அருள்அருளே யன்றி மற்றுப் புகன்றவையும் அருளொழியப் புகலொ ணாதே என்னுஞ் சிவப்பிரகாசத் திருவிருத்தத்தால் அறியப் படும். அற்றேல், சிவஞானபோதத்தும், வடமொழியில் வேதாந்த சூத்திரத்தும் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் தொழிலின் மூன்றே சொல்லப்பட்டதல்லால், மறைத்தல் அருளல் என்னும் இரண்டுங் கூட்டி ஐந்தொழில் சொல்லப் படாமை என்னை யெனின்; படைத்தல் முதலாகிய மூன்றும் இறைவன் செய்தல் அம்முகத்தால் உயிர்கட்குத் தனது பேரின் பத்தை அருளுதற் பொருட்டே யாகலானும், அம்முத் தொழில்கள் நிகழும்வழி உயிர்கள் தாம் முன் நுகர்ந்த இன்ப துன்பங்களை இடை யிடையே மறந்தாலன்றி மேலும் அவற்றை நுகருதற்கான மன வெழுச்சி செல்லாமையின் ஆண்டு அம் மறதியினைப் பயத்தற்கு மறைத்தற் றொழிலும் இன்றியமையாது வேண்டப்படுமா கலானும் அடங்குமென்று சிவஞானமுனிவர் அருளிச்செய்த மையானும்* முத்தொழில் கூறவே ஏனை இரண்டு தொழிலுந் தாமே பெறப்படும் என்க. தொழும்பு, தொண்டு, அடிமை என்னுஞ் சொற்கள் ஒரே பொருளை யுணர்த்தல் திவாகரம் பிங்கலந்தைகளான் அறிக. ஏனையோர் உள்ளங்களிற் புலப்படாதுநிற்கும் இறைவன் அன்பருள்ளத்திற் பூவின்கண் எழும் நறுமணம்போல் விளங்கி இசைந்திருத்தலின் நாற்றத்தின நேரியாய் என்றார்; அடிகள் பின்னும் உற்றவாக்கையில் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம்போற், பற்றாலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் என்று கூறுதலுங் காண்க. இனி இங்ஙனமன்றி ஆற்றத்தின் நேரியாய் என்று பாடம் ஓதுவாரும் உளர். அது சிறவாமை அவர் அதற்குக் கூறும் செம்மையாகிய நெறியை யுடையவனே என்னும் பொருளால் அறிந்துகொள்க. சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாதது மறைபொருளே யாதலின் அவனை மறையோன் என்றார்; இனி மறையோன் என்பதற்கு வேதியன் என்றுரைப்பாரும் உளர்; அது பொருந்து மேற் கொள்க. கன்னல் - சருக்கரை* * - திவாகரம் நெய் இங்கே தேன்நெய் என்னும் பொருட்டாம்; இச் சொற்கு இப்பொருள் உண்மை நீல் நெய்தாழ்கோதை அவர் விலக்க நில்லாது என்னும் பரிபாடல்* (* - 11ஆம் பாடல் 124ஆம் அடி) அடிக்குப் பரிமேலழகியார் கூறிய உரையால் அறியப்படும். நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த 50 மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் றன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல்போர்த் தெங்கும் புழு அழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை 55 மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்தஅன் பாகிக் கசிந்துள் உருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி 60 நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே. நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் - நிறங்கள் ஓர் ஐந்து உடையவனே, விண்ணோர்கள் ஏத்த மறைந்து இருந்தாய் - வானுலகத்து வாழும் தேவர்கள் போற்றவும் அவர்க்கு வெளிப் படாமல் மறைந்திருந்தனை, எம்பெருமான் - எம்பெருமானே, வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை - கொடுவினையேனது அறிவு மறையும்படி மூடின மாய இருளை, அறம் பாவம் என்னும் அருங் கயிற்றால் கட்டி - நல்வினை தீவினை என்னும் அரிய கயிற்றாற் பிணித்து, புறம்தோல் போர்த்து - வெளியே தோலைப் போர்வையாக இட்டு, எங்கும் புழு அழுக்கு மூடி - எங்குமுள்ள புழுக்களும் அழுக்குகளும் தெரியாமல் மறைத்து, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை - மலம் வடியும் ஒன்பது வாயில்களையுடைய குடிசையை, மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய - கலங்கும்படி புலன்கள் ஐந்தும் மாயத்தைச் செய்ய, விலங்கு மனத்தால் - எதிர் நின்று தடுக்கும் மனத்தினால், விமலா - மாசற்றவனே, உனக்குக் கலந்த அன்பு ஆகிக் கசிந்து உள் உருகும் நலம்தான் இலாத சிறியேற்கு நல்கி - உன்னிடத்துக் கலந்த அன்புவளர நெகிழ்ந்து உள்ளே உருகும் நன்மை சிறிதும் இல்லாத சிறியேனுக்குக் கொடுத்து, நிலம் தன்மேல் வந்து அருளி நீள் கழல்கள் காட்டி - இந்நிலத்தின் மேலும் குருவடிவில் வந்தருள்செய்து பெருமைமிக்கதிருவடி களையும் காட்டி, நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயின் சிறந்த தயாவான தத்துவனே - நாயினும் இழிவாய்க் கிடந்த அடியேனுக்குத் தாயினுஞ் சிறந்த அருள்வடிவான மெய்யனே என்றவாறு. நிறங்கள் ஓர் ஐந்துடையாய், என்றது இறைவன் மண் புனல் அனல் கால் வான் என்னும் ஐம்பெரும் பொருள்களினும் இரண்டறக் கலந்து நிற்றலால் அவற்றிற்குரிய ஐவகை நிறங்களும் இறைவற்கு உரியனவாகச் சொல்லியவாறாம்; மண்ணின் நிறம் பொன்மை, புனலின் நிறம் வெண்மை, அனலின் நிறம் செம்மை, காலின் நிறம் கருமை, வானின் நிறம் புகைமை; இங்ஙனம் இவ்வைந்தும் ஐவகை நிறம் உடையவாதல். மண் புனல் அனல் கால் வான்பால் வடிவுநாற் கோண மாகுந் தண்பிறை மூன்று கோணந் தகுமறு கோணம் வட்டம் வண்பொன்மை வெண்மைசெம்மை கறுப்பொடு தூமவன்னம் எண்டரும் எழுத்துத் தானும் லவரய வவ்வு மாமே என்னுஞ் சிவஞானசித்தியார் திருவிருத்தத்தான் உணர்க. வெண்மை என்பது எல்லா நிறங்களும் ஒன்று சேர்ந்ததே யாகலின் நீருக்கு உண்மையாக வுள்ளது நீலநிறமேயாம். இனி நிறங்கள் ஓர் ஐந்துடையாய் என்பதற்கு வித்தை யோடீசர் சாதாக்கியஞ் சத்தி சிவங்கள் ஐந்துஞ் சுத்த தத்துவஞ் சிவன்றன் சுதந்திர வடிவமாகும் என்று சிவஞான சித்தியாரிற் கூறப்பட்டவாறு சுத்தவித்தை ஈசுரம் சாதாக்கியம் சத்தி சிவம் என்னுஞ் சுத்த தத்துவங்கள் ஐந்தினும் இறைவன் விளங்கி நிற்றலால் அவ்வுயல்புபற்றி அவன் ஐவகை வடிவினனாக வைத்து ஓதப்பட்டான் என்று கூறுதலும் ஒன்று. விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் என்றது தேவர்கள் தமக்குள்ள சில சித்திகளாற் றம்மை முதல்வராகக் கருதிச் செருக்குதலான் அவர்க்கு இறைவன் புலனாகாது நின்று அவர் செருக்கை அறுப்பனென்று கூறியவாறாம். தேவர்கள் உதவியைச் சிறிதும் வேண்டாது இறைவன் திரிபுரங்களை எளிதிலே நகைத்து எரித்து தொலைத் திருக்கவும், அவர் அதனை உணராமல் தாந் தாமும் அவ்வெற்றி க்கு உரியராகக் கருதித் தம்முள் இறுமாந்தமையும், அது தெரிந்து முதல்வன் இயக்க வடிவங்கொண்டு அவர்கள் எதிரில் எழுந்தருளி அவர்களான் அறியப்படாது மறைந்தருளினமையும் கேநோபநிடத்தின்கண் விளக்கமாகச் சொல்லப்பட்டிருத்தல் காண்க. இன்னுந் தேவர்கள் அவனை அறிவோம் என்று ஓடியும் அவர்களாற் பற்றப்படாது அவன் அவர்களைக் கடந்து போயினான் என்னும் ஈசாவாசியோபநிடதவுரையும் இதனோடு ஒத்துநோக்கற்பாலதாம். வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை என்பதில் மாய இருள் என்பது வஞ்சனையைச் செய்யும் மாயையை உணர்த்திற்று. உடம்புக்கும் உலகங்களுக்கு மெல்லாம் முதற் பொருளாவது மாயை என்று சொல்லப்படும் மா என்னுஞ் சொல் உலகத்தின்கட் பரந்து வழங்கும் எல்லா மொழிகளினும் ஈன்றாளை உணர்த்தக் காண்கின்றோம். இது சிறுமகார் வாயில் இயற்கையாய்ப் பிறக்குங்கால் அம்மா என்று ஒலிக்கும். மக்களைப் பிறப்பிக்குந் தாய் மா எனப் பட்டாற்போல, உலகங்களையும் உடம்புகளையும் தன்கட் டோற்றுவிக்கும் முதற் பொருளும் மாயை எனப்பட்டது. இம் மா என்னுஞ் சொல்லுக்குப் பிறப்பித்தல் என்னும் பொருளேயன்றி இறப்பித்தல் என்னும் பொருளும் உண்டு. எது தன்னிடத்து நின்றும் ஒன்றனைத் தோற்றுவிக்கின்றதோ, அதுவே அதனைத் தன்கண் ஒடுக்கிக் கொள்வதற்கும் இடமாய் நிற்கின்றது. மண்ணினின்றுந் தோன்றிய குடம் உடைந்தவழி அம் மண்ணாய்ப் போதல் போல வென்க. மா என்பதோடு ய் என்னும் ஓரெழுத்துச் சேர்ந்து மாய் என நிற்பின் அஃது இறத்தல் என்னும் பொருளைக் காட்டும். இம் மாய் என்னும் முதனிலையிற் றோன்றி எப் பொருளும் மாய்ந்து ஒடுங்குதற்கு இடமாதலின் மாயை எனப்பட்டதென்று உரைத்தலுமாம். இனி மா என்னும் உரிச்சொல் கருமை என்னும் பொருளை யுணர்த்த லின் கரிய இருளைப்போற் பொருளுண்மை தெரியாமல் மறைக்கும் வஞ்சனை பொய் மயக்கம் முதலான பொருள்களை யுணர்த்தும் மாயம் என்னுஞ் சொல் இவ்வுரிச்சொல் முதனிலையினின்று பிறந்த தொன்றாம். அன்னை என்னும் பொருளை யுணர்த்தும் மா என்னுஞ் சொல்லும், கருமை என்னும் பொருளை யுணர்த்தும் மா என்னுஞ் சொல்லும் வடிவால் ஒத்திருத்தலின், அவ் வொப்புமை பற்றி மாயம் மாயை என்னுஞ் சொற்களுக்கு வஞ்சனை பொய் மயக்கம் என்னும் பொருள்களும் வழங்கி வரலாயின. அங்ஙன மாயினும், உலகங்களுக்கும் உடம்புகளுக்கும் பிறப்பிடமாகிய பொருளை யுணர்த்தும் மாயை என்னுஞ் சொல்லும், வஞ்சனை பொய் மயக்கம் என்னும் பொருள்களைத் தரும் மாயை மாயம் என்னுஞ் சொற்களும் வேறுவே றென்றே உணர்ந்துகொள்க. இவ்வேறு பாடு அறியாதார் மாயை என்னும் சொல் பொய் என்னும் பொருளை யுணர்த்தலின், உலகு உடம்புகளுக்கு முதற் பொருளான மாயையும் பொய்யென்று உணரற்பாற் றென்பர். முதற் பொருண் மாயை பொய்யாமென்பது வேத உபநிடதங் களில் யாண்டும் பெறப்படாமையானும், உலகுடம்புகளுக்கு முதலான அது பழைய மறைகளினும் மறை முடிவுகளினும் பிரகிருதி என்றே வழங்கிவந்ததாகச், சுவேதாசுவதர உபநிடதத்தின் கண்மட்டும் அப்பிரகிருதி ஒரோவிடத்து மாயை எனக் கூறப்படுதலானும், இச்சொல், தாயகம் எனப் பொருள்பட்டு எல்லா மொழிகளுக்கும் பொதுவான மா என்பதிலிருந்து பிறத்தலானும், தனித்தமிழ் மொழியாய்க் கருமை எனப் பொருள்படும் மா என்னும் உரிச்சொல்லின் அடியாகப் பிறந்த மாயம் மாயை என்னுஞ் சொற்களோடு இதனையும் வடிவொப்புமைபற்றி ஒன்றாய் வழங்கல் ஏலாது. அற்றேல், வஞ்சனை பொய் என்னும் பொருள்களில் மாயம் மாயை என்னுஞ் சொற்கள் வடமொழி யுள்ளும் வழங்கக் காண்டு மாலெனின்; வடமொழியுள் வழங்குதல்கொண்டே அவற்றை வடசொல் என்றல் அமையாது; வடசொற்கள் பல தமிழுள் வழங்குதல் பற்றி அவற்றைத் தமிழ்ச்சொல்லென் றுரைத்தல் ஆகாமை போலத் தமிழ்ச் சொற்கள் பல வடமொழியிற் காணப்படுதல் பற்றி அவற்றை வடசொல் லென்றலும் பொருந்தாது. அற்றாயின் மாயம் மாயை என்னுஞ் சொற் தமிழேயாம் என்பது எற்றாற் பெறுதுமெனின், அவை கருமை எனப் பொருள்படும் மா என்னுந் தமிழ் உரிச்சொல்லி னடியாகப் பிறத்தலானும் அப்பொருள்படும் மா என்னும் முதனிலை வடமொழியிற் காணப்படாமையானும் அவை தமிழ்ச் சொல்லே யாதல் தேற்றமாம். அஃதொக்கு மாயினும், எல்லா மொழிக்கும் பொதுவாகிய மாயை என்பதற்குப் பிறப்பகம் என்னும் பொருளோடு, இறப்பகம் என்னுந் தமிழுக்குரிய பொருளும் கூறியவாறென்னை யெனின்; மாயை எனுஞ் சொல் எல்லா மொழிக்கும் பொதுவென்று கூறுகின்றுழியே அது தமிழுக்கும் உரியதென்பது பெறப் படுதலானும், அங்ஙனம் உரியதாகவே மாய் என்னும் முதனிலைப்பற்றி அதற்கு இறப்பகம் என்று பொருளுரைத் தலும் பொருந்துமாகலானும் அவ்வாறு கூறினா மென்க. எனவே, அறிவில் பொருள்களின் தோற்ற வொடுக்கங்கட்கு இடமாவது மாயை யென்பது பெற்றாம். இனி, மாயையை ஈண்டு அடிகள் இருள் என்ற தென்னை? இருள்போல் நின்று உயிர்களின் அறிவு செயல் வேட்கைகளை மறைப்பது ஆணவமலமன்றோ வெனின்; ஆணவம் இருள்போல் மறைத்தலும், மாயை ஒளிபோல் விளக்குதலும் உடைய வென்பது உண்மையேயாயினும், ஆணவம் உயிர்களின் மட்டுமேயன்றி மாயையினும் ஊடுருவி நிற்றலால், மாயை அவ்வாணவத்தின் சேர்க்கையால் ஒரோவழி உயிர்களை மறைத்தலும் மயக்குதலுஞ் செய்யுமியல்பிற்றாய் நிற்கும். இது நித்தமாய் அருவாய் ஏக நிலையதாய் உலகத் திற்கோர் வித்துமாய் அசித்தாய் எங்கும் வியாபியாய் விமல னுக்கோர் சத்தியாய்ப் புவன போகந் தனுகர ணமுமு யிர்க்காய் வைத்ததோர் மலமாய் மாயை மயக்குமுஞ் செய்யு மன்றே என்னுஞ் சிவஞானசித்திச் செய்யுளிற்போந்த வைத்த தோர் மலமாய் மாயை மயக்கமுஞ் செய்யுமன்றே என்பதனால் நன்கு விளங்கும், அஃதேல் ஆணவம் உயிர்களின் அறிவு செயல் வேட்கைகளைத் தாம் மறைப்பக் காண்டுமன்றி, மாயையையும் அங்ஙனம் மறைப்பக் கண்டிலாலெனின், மாயையின் காரியப் பொருள்களான செம்பு இரும்பு முதலியவற்றிற் களிம்புந் துருவுமாயும், கரிவளியில் முடைநாற்றமாயும், உயிர்களின் ஊனிலும் மறஞ்செடி கொடிகளின் தசையிலும் அழுகல் நாற்றமாயும் புலப்படுவது ஆவணவமலத்தின் செயலேயாம். இவ்வாறு மலத்தின் செயல் மாயையில் ஆங்காங்குக் காணப் படுதலாற்றான் அஃது ஒரோவிடத்து அருவருக்கற்பாலதா யிருப்பதன்றி, அதன்செயல் முதுனைத்து நிகழாத இடங்களில் அம்மாயை தூயதாய் விரும்பத்தக்கதாகவேயிருக்கு மென்க. அற்றேல், மலத்தின் செயல் முனையாத மாயாகாரியப் பொருள்கள் யாவையோ வெனின்; முத்துப் பவளம் நீலம் பச்சை மாணிக்கம் வைடூரியம் வைரம் கோமேதகம் புருடராகம் என்னும் ஒன்பது மணிகளும், பொன் வெள்ளி முதலியனவும், சலவை பளிங்கு முதலான கற்களும் இவற்றோ டொத்தனவும் மலத்தின் செயலில்லாத தூய பொருள்களாம் என்க. எனவே, மலத்தின் சேர்க்கையானும் செயலானும் மாயை ஒரொவொரு கால் பழிக்கத் தகுவதாகின்றதேயாயினும் அது தன்னியல்பில் தூயதாய், அதனால் இறைவற்கு ஒரு சத்தியாய், உயிர்களை மலத்தினின்றும் விடுவித்தற்கு இன்றியமையாக் கருவியாய், விரும்பத்தக்கதாய்த் திகழ்வதொன்றே கடைப்பிடிக்க. இதுபற்றி யன்றே, சைவ சித்தாந்த முதலாசிரியரான மெய்கண்டதேவ நாயனார், மாயா மனுவிளக்கா மற்றுள்ளங் காணாதேல் ஆயாதாம் ஒன்றை அதுவதுவாய் - வீயாத போற் வன்னிதனைத் தன்னுள் மறைத்தொன்றாங் காட்டம் றன்னைமல மன்றனைத றான் என்று அருளிச் செய்வாராயினர். அற்றாயினும், ஆணவமலத்தின் சேர்க்கையால் அறிவை மறைத்தலும் அருவருக்கற்பாலதாம் வாலாமையும் ஒரோவொருகால் அஃது உடையதாதல்பற்றி, ஈண்டுத் திருவாதவூரடிகள் மாயை யினையும் மாயா காரியமாகிய உடம்பினையும் உடம்பின் அகக் கருவி புறக்கருவிகளையும் இழித்துப் பேசுவாராயினர். ஆயினுந், தீயோன் ஒருவனால் ஏவப்பட்டுத் தீது செய்யும் பிறனொருவனை இகழ்ந்து கூறுங் கூற்றெல்லாம் கரவின்றி அது செய்வானை விட்டுக் கரவினால் அதன்கண் ஏவினானையே சென்றடைதல் போல, மாயா காரியமான உடம்பையும் உலகத்துப் பொருள் களையும் பழித்துப் பேசும் மொழிகளெல்லாம் உண்மையில் அவற்றின் வாலாமைக்குக் காரணமான ஆணவமலத்தன் மேலவாகவே செல்லும். இனி, நல்வினை தீவினைகளைச் செய்தற்கும் அவற்றின் பயன்களை நுகர்தற்கும் அம்முகத்தால் ஆணவமலத்தின் வலி சுருங்குதற்குமே இவ்வுடம்பு வந்தமையால், இவ்வுடம்பின் றோற்றத்திற்கு ஏதுவாவன அறம் பாவம் என்று தெரிப்பார், அறம் பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டி என்று அருளிச் செய்தார். அறம் அறு என்னும் முதனிலையிற் றோன்றி அறியாமை யினையும் அது காரணமாகச் செய்யும் தீவினையினையும் அறுப்பதென்னும் பொருட்டாம். உயிர்களின் உடம்பிலுள்ள ஊன் அவ்வளவும் உயிர்த் துகள்களால் அமைக்கப்பட்டிருத்தலானும், அத்துகள்களி னின்று கழிக்கப்படும் கழிவுகள் அத்துணையும் அழுக்கு களாயிருத்தலானும் எங்கும் புழுவழுக்கு மூடி என்றார். மலஞ் சோரும் ஒன்பது வாயிற் குடிலை என்பதிற் சோரும் என்னுஞ் சொல் வடியும் என்று பொருள்படுதலை அயறு சோரும் இருஞ் சென்னிய* (* புறநானூறு - 22) என்பதன் உரையிற் காண்க. ஒன்பது வாயில் என்பன : செவிவாயில் இரண்டு, கண் இரண்டு, மூக்கின் புழை இரண்டு, வாய் ஒன்று, கருவிடும் வாயில் ஒன்று, எருவிடும் வாயில் ஒன்று. மலங்குதல் கலங்குதல் என்னும் பொருட்டாதல் பிங்கலந்தையிற் காண்க. ‘Éy§F«’ v‹gj‰F ‘vâÇš ËW jL¡F«’ v‹W bghUSiu¥g® òweh}‰Wiufhu®.* (* புறநானூறு -230) கடை - இழிவு; கடையரே கல்லாதவர்* என்புழிப் பரிமேலழகியார் கடையர் இழிந்தார் என்று பொருளு ரைத்தார். மாய இருளைக் கயிற்றாற் கட்டித் தோல் போர்த்துப் புழு அழுக்கு மூடிச் செய்த குடிலைச் சிறியேற்கு நல்கி என இயைக்க; இங்ஙனம் இயைக்குங்கால் செய்த என்னும் ஒரு சொல் வருவிக்கப்படும். இறைவன் உயிர்கட்கு உடம்பைத் தந்தது ஆணவமலத்தின் சேர்க்கையை ஒழித்தற் பொருட்டேயாம். இக் கருத்தறியாது உடம்பையும் அதன்கண் அமைந்த ஐம்புல இன்பங்களையுமே பெரிதெண்ணி நடந்தால், உடம்பு மலம் வடியும் வாலாமை யுடைமையாலும் ஐம்புல நுகர்ச்சிகள் இன்பந்தருவன போற்றோன்றினும் அவ்வின்பம் நிலையுதலின்றி விரைவில் மறைந்து போகப் பின்னர்த் துன்பத்தையும் வருவித்தலானும் அவை பயன்படாதவழி இழிக்கற் பாலனவே யென்பது ஈண்டுத் தெளிவித்தாராயிற்று. ‘njtß® jªj cl«gh»a fUÉia¥ ga‹gL¤Jkh w¿ahJ m¡fUÉÆ‹ tÊ¢br‹W ka§F ntD¡F m«ka¡fª Ô®¤j‰ bghU£L ïªÃy¤â‹ nk‰ FUtoɉ nghªJ flîsuhD§ fh©l‰fÇa âUto fis¡ fh£o monaid M©lUËa njtß® nguU£ ow« ïUªjhthbw‹id! என்பது இவ்வடிகளின் கருத்தாகக் கொள்க. மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே 65 நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே 70 இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாம் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்த நடுவாகி அல்லானே ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே 75 கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்கும்எங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற 80 தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்றான உண்ணா ரமுதே உடையானே. மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே - களங்கம் இல்லாத ஒளிவிரிந்த மலரின் ஒளியே, தேசனே - குருவே, தேன் ஆர் அமுதே - இனிமை நிறைந்த அமுதமே, சிவ புரனே - கைலை நாட்டிற்கு உரியவனே, பாசம் ஆம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே - மும்மலப் பிடிப்பை அறுத்து என் அறிவை வளர்க்கும் மேலோனே, நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே - அன்போடு அருளுஞ் செய்து நெஞ்சிலிருந்த பொய் கெட அந்நெஞ்சை விட்டு அகலாது நிலையாய் நின்ற பேர் அருள் வெள்ளம் நிறைந்த பெரிய யாறே, ஆரா அமுதே - தெவிட்டாத அமிழ் தமே, அளவு இலாப் பெம்மானே - அளவுபடாத இயல்பினை யுடைய பெருமானே, ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே - ஆராயாதவர் உள்ளத்தின்கண் வெளிப்படாது மறையும் அறிவொளி வடிவினனே, நீராய் உருக்கி என் ஆர் உயிராய் நின்றானே - நீராக என் நெஞ்சை உருகச்செய்து எனது அரிய உயிராய் நின்றவனே, இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே - இன்பமும் துன்பமுமாகிய இரண்டும் இல்லாத வனே அவை யிரண்டும் உள்ளவனே, அன்பருக்கு அன்பனே - அன்பராயினார்க்கு அன்பனாய் உள்ளவனே, யாவையுமாய் அல்லையும் ஆம் சோதியனே - எல்லாப் பொருள்களுமாய் அவையல்லாத வேறுமாய் நிற்கும் சுடரொளியானே, துன் இருளே - செறிந்த இருளாய் இருப்பவனே, தோன்றாப் பெருமை யனே - புலனாகாத பெருமையுடையவனே, ஆதியனே - எல்லா வற்றிற்கும் முதலாய் இருப்பவனே, அந்தம் நடு ஆகி அல்லானே - முடிவும் நடுவும் ஆகி அவை அல்லாதவனுமா யிருப்பவனே - ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே - வலிய இழுத்து என்னை அடிமை கொண்ட எம் தந்தையாகிய பெருமானே, கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின் நோக்கு அரிய நோக்கே - கூரிய மெய்யறிவினால் உளங்கொண்டு உணர்வாருடைய கருத்தினாலும் நோக்குதற்கு அரிய நோக்கமே, நுணுக்கு அரிய நுண் உணர்வே - கூரிதாய் உணர்தற்கும் அரிய நுண்ணிய உணர்வே, போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே - இறத்தலும் பிறத்தலும் பொருந்தியிருத்தலும் இல்லாத தூயோனே, காக்கும் எம் காவலனே - எவற்றையுங் காக்கும் எம் அரசனே, காண்பு அரிய பேர் ஒளியே - காண்டற்கு அரிய பெரிய ஒளியே, ஆற்று இன்ப வெள்ளமே - நல்லாற்றிற் பெருகும் இன்பப் பெருக்கே, அத்தா - அப்பனே, மிக்காய் - எல்லாவற்றினும் மேலோனே, நின்ற தோற்றச் சுடர் ஒளியாய் - நிலைபெற நின்ற தோற்றத்தினை யுடைய சுடரும் ஒளியாயும், சொல்லாத நுண் உணர்வாய் - சொல்லுதற் கேலாத நுண்ணிய உணர்வாயும், மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறுவூ ஆம் தேற்றனே - மாறுபாட்டினையுடைய இந் நிலவுலகத்தின்கண் வேறுவேறாய் வந்து அறிவாய் விளங்கும் தெளிவினனே, தேற்றத் தெளிவே - தெளிவினிற் றெளிவே, என் நினைவினுள்ளே ஊற்றாய்ச் சுரக்கும் உண்டற்கினிய அரிய அமிழ்தே, உடையானே - எப்பொருளையும் எவ்வுயிரையும் உடையவனே என்றவாறு. நிறஞ் சிறந்த இதழ்கள் விரியும் மலரின் ஒளி காண்டற்கு மிக இனிதாயிருத்தலின் மலர்ச்சுடரே என்றருளிச் செய்தார்; மாசற்ற சோதிவிரியும் மலர் ஒன்று உளதாயின் அதனொளியை இறைவனொளியோ டொப்பித்த லமையும் என்பது கருத்து. தேசன் என்பது குரு வெனப் பொருள்படும் ஒரு வடசொல்; இவ் வடசொல்லுக்கு நாட்டையுடையவன் அல்லது அரசன் என்னும் பொருளும் உண்டு. தேன் இனிமைப் பொருட்டாதல் திவாகரத்தான் உணர்க. இச்சொல் தேம் எனவும் நிற்கும். அமுது அம்ருத என்னும் வடசொற் சிதைவு; இறப்பில் லாமைக்கு ஏதுவாவதொரு மருந்து. சிவபுரம் திருக்கைலாயம்; வடநாட்டிலுள்ள காசிக்கும் இப்பெயர் உண்டு. பாசம் பச் என்னும் முதனிலையிற் பிறந்து கட்டுதற்குக் கருவியாகிய கயிற்றினை உணர்த்தும். புறத்தே யாடு மாடு முதலிய உயிர்களைக் கட்டுங் கயிறு போல அகத்தே உயிர்களைக் கட்டி நிற்கும் அறியாமையும் பாசம் என்று சொல்லப்படும் மிகப் பழையதான இருக்குவேதத்தில் இச்சொல் அறியாமையைச் செய்யும் மலத்திற்குப் பெயராய்ப் பலகாலும் எடுத்து வழங்கப்படுதலின், சைவசித்தாந்த நூல்களுள்ளும் இச்சொல்லே அவ்வறியாமை மலத்தைக் குறித்தற்குச் சிறந்த பெயராகப் பண்டு தொட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இச்சொல் இத்துணைப் பழமையாதலை உணராத ஏகான்ம வாதிகளும் பிறரும் இதனை விடுத்து அதற்கு வேறு வேறு பெயரிட்டு வழங்குவர். இனி, உயிர்களைக் கட்டுறுத்துதற்கண் இருவினைகளும் மாயையும் ஒரோவழி ஆணவமலத்தை ஒத்தலின், அதுபற்றி அவையும் பாசம் என்று பொதுப்பட வழங்கப்படும். இதற்குப், பசுப்பல கோடி பிரமன் முதலாய்ப் பசுக்களைக் கட்டிய பாசமூன் றுண்டு பசுத்தன்மை நீக்கியப் பாச மறுத்தாற் பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே என்னுந் திருமந்திரத் திருப்பாட்டும் பாசம் ஆனவை பற்றறுத் துயர்ந்ததன் பரம்பெருங் கருணையால் ஆசைதீர்த்தடியார் அடிக்கூட்டிய அற்புதம் அறியேனே v‹W ï¤ âUthrf¤â‰ nghªj âU¥gh£LŠ rh‹whjš fh©f., பாரிக்கும் வளர்க்கும் எனப் பொருள்படுதல் பகலென் னும், பண்பின்மை பாரிக்கும் நோய்* (*திருக்குறள்-86-1)என்பதற்குப் பரிமேலழகியார் கூறிய வுரையிற் காண்க. மும்மலப் பிணிப்பை முறை முறையே விடுவிக்கு முகத்தால் உயிர்கட்கு அறிவு வளரச் செய்தலின் இங்ஙனங் கூறினார். ஆரியன் மேலோனெனப் பொருள்படும் ஒரு வடசொல். ‘ner«’ - m‹ò.* (* பிங்கலந்தை) ஈண்டுக் கூறிய அன்பு அருள் என்பவற்றின் இலக்கணங்களைப் புறநானூற்றுரை யாசிரியர் அன்பாவது தன்னாற் புரக்கப்படுவார் மேல் உளதாகிய காதல் எனவும், அருளாவது ஒன்றின் துயர் கண்டாற் காரணம் இன்றித் தோன்றும் இரக்கம் எனவுங்* (* புறநானூறு 5) கூறமாற்றான் உணர்க. பரிமேலழகியாரும் தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார் மேற்செல்வதாய் அருள் தொடர்புபற்றிச் சொல்லும் அன்பு முதிர்ந்துழி உளதாவ தாகலின் என்று கூறுவர். *தன் திருவடிகளையே பற்றுக் கோடாகக் கொண்ட தன் அடியவர்க்கு அத்தொடர்பு பற்றி இறைவன் அன்புடைய னாதலின் நேசம் புரிந்து என்றும், அவர் இறைவற்கு அடிமைத் திறம் பேணும் வகையறியாது மலத்துள் அழுந்திக் கிடந்த காலத்தும் அவர் மேற்றொடர்பு பற்றாத இரக்கங் கொண்டு அவர் மலத்தால் வருந்தும் துயர் தீர்த்தற் பொருட்டு அவர்க்குப் பேருதவிபுரிந்து வருதலின் அருள்புரிந்து என்றும் அருளிச்செய்தார். பெயராது எனுஞ் சொல் பேராது எனத் திரிந்தது; பேரா இடும்பைத் தரும் என்பதும்* காண்க. அளவுபடாத அறிவும் ஆற்றலும் பரப்பும் உடைய னாதலின் அளவிலாப் பெம்மான் என்றார். பெருமான் என்னுஞ் சொல் பெம்மான் என்றாயிற்று. தம்மியல்பும் தம்மையுடைய தலைவனியல்பும் ஆராய்ந்து பாராதவர் உள்ளம் அறியாமையிற் பற்றப்பட்டு மிகுதியும் இருண்டுக் கிடக்கு மாதலின், எங்கும் உள்ள இறைவன் இருண்ட அவருள்ளத்தும் இருப்பனாயினும் ஆண்டு விறகின் கண் மறைந்திருக்குந் தீப்போல் இருப்பனாயினும் ஆண்டு விறகின்கண் மறைந்திருக்குந் தீப்போல் இருப்பனாகலின் ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே என்று அருளிச் செய்தார். ஓர்த்தல் ஆராய்தல் எனப் பொருள்படுதலை ஓர்த் துள்ளம் உள்ளது உணரின்* (திருக்குறள் 76 - 7) என்புழிக் காண்க. அதன் எதிர்மறை ஓராமை. இறைவன் எஞ்ஞான்றும் இன்பவுருவினனாய் நிற்றலி னாலும், ஏனை உலகத்துப் பொருள்களானாதல் உயிர்களா னாதல் அவன் அடைவதோர் இன்பம் வேறின்மையினாலும் இன்பமேயாய் நிற்கும் அவன்மாட்டுத் துன்பமும் உடன் நிற்றற்கு இடம் இன்றாகலினாலும் இன்பமுந் துன்பமும் இல்லானே என்று அருளிச் செய்தார். இனித் தன் திருவடியினைத் தலைக்கூடிய அடியார்க்கு உலகத்தாலும் உலகத்துப் பொருள்களாலும் உயிர்களாலும் வரும் இன்ப துன்பங்களை யெல்லாம் அவரைத் தானாக்கிக் கொண்டிருக்கும் முதல்வனே ஏன்றுகொள் னாகலின் இன்பமுந் துன்பமும் உள்ளானே என்றருளிச் செய்தார். இவ்வுண்மை, இவனுலகில் இதம்அகிதஞ் செய்த எல்லாம் இதம்அகிதம் இவனுக்குச் செய்தார்பால் இசையும் அவன்இவனாய் நின்றமுறை ஏகன் ஆகி அரன்பணியின் நின்றிடவும் அகலுங் குற்றம் சிவனும்இவன் செய்தியெலாம் என்செய்தி யென்றுஞ் செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும், பவம்அகல உடனாகி ஏன்றுகொள்வன் பரிவாற் பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே என்னுஞ் சிவஞானசித்தித் திருப்பாட்டிற் றெளிவுறுத்தப் பட்டமை காண்க. இவ்வாறு அடியார்க்கு வரும் இன்ப துன்பங்களைத் தான் ஏன்றுகொள்ளும் இத்துணையேயன்றி, மற்றுத் தனக்கு இவை எஞ்ஞான்றும் இல்லான் இறைவனென்று ஓர்ந்து கொள்க. தனக்கென இன்பதுன்பங்கள் இல்லாதான் இவற்றைத் தான் ஏன்று கொள்ளுதல் தான் அன்பருக்கு அன்பனாய் இருக்குமதனால் என்று உணர்த்துவார் அன்பருக் கன்பனே என மேலதனை அடுக்கவைத் தோதினார். இனி, அறிவில் பொருள்களெல்லாம் இறைவன் அசைவித் தாலன்றி அசையாமையானும், அறிவுப் பொருள்களான உயிர்கள் பண்டு தொட்டே ஆணவத்தான் அறிவுமறைப்புண்டு கிடத்தலின் அவை அவனால் உடம்புங் கருவிகளும் உலகங் களும் இன்பதுன்ப நுகர்ச்சியும் பெற்றாலன்றி அறிவு விளங்கப் பெறாமையானும் அவை இரண்டனையும் அசைவித்தற் பொருட்டும் அறிவித்தற் பொருட்டும் அவன் அவற்றோடு உடனாய் நிற்றல்பற்றி யாவையுமாய் என்றும், அங்ஙனம் அவற்றோடு உடனாய் நிற்பினும் முதல்வனியல்பு அவ்விரண்ட னியல்பின் மேற்பட்டதாய் வேறாய் நிற்றலின் அது தெரிப்பான் வேண்டி அல்லையுமாம் என்றும் அருளிச் செய்தார். உலகத்தின்கட் காணப்படும் எல்லா ஒளிகளும் இறைவன் றிருவுருவின் விளக்கமாதலின் சோதியனே என்றார். இது நாயகன் கண்நயப்பால் நாயகி புதைப்ப எங்கும் பாய்இரு ளாகிமூடப் பரிந்துல கினுக்கு நெற்றித் தூயநேத் திரத்தினாலே சுடரொளி கொடுத்த பண்பின் தேயம்ஆர் ஒளிகள் எல்லாம் சிவன்உருத் தேசதென்னார் என்னும் சிவஞானசித்தித் திருச்செய்யுளால் நன்கு விளங்கும். இனி, எல்லா உயிர்களையும் மறைக்கும் ஆணவ வல்லிரு ளாற்றான் மறைக்கப்படாது தான் அதனுள்ளும் மறைந்து நிறைந்திருத்தலின் துன் இருளே என்றார்; துன் இருள் - செறிந்த இருள்; துன்னல் குறுகலுஞ் செறிவுஞ் சொல்லும் என்பது திவாகரம். இறைவன்றன் பெருமைத் தன்மைகளை எத்துணை காலமிருந்து அறியப்புகினும் அவை வரையறையின்றியே விரிந்து போதலின் அவை புலனாகா என்பார் தோன்றாப் பெருமையனே என்றார். எப்பொருட்கும் முதலாயிருத்தலின் ஆதியன் என்றோ தப் படுதலால் அவன் நடுவும் ஈறும் உடையனாம் என்பது பெறப் படினும் உண்மையில் அவை யுடையனல்லன் என்பது உணர்த்துவார் அந்தம் நடுவாகி யல்லானே என்றார். அற்றேல், அவன் நடுவும் ஈறுமாய் நிற்றல் எப்போதெனின், தன் அன்பர்க்கு அருள் செய்தற்பொருட்டு எடுக்கும் உருவங்கள் ஒரோவொரு காற்றோன்றி மறைந்து போதலின் அவன் அப்பொழுது மட்டுமே அவ்வியல்புடையனா மென்க; மற்றுத் தன் உண்மை நிலையில் அவை யுடையனல்லனாம் என்றே துணிக. அவ்வாறுரைப்பினும் தோற்றக் கேடுகள் இலனாகிய முதல்வற்கு அவையிரண்டும் ஒரோவொருகால் உளவாமெனப்பட்டு இழுக்காமாலெனின், மலமறைப்பு முழுதும் நீங்கி எத்துணைதான் பேரறிவுடையராய் நிற்பினும் அடியாருங்கூட அவன்றன் வியத்தகுசெயலின் பரப்பெல்லாம் உணரமாட்டுவா ரல்லர்; அல்லராகவே அவன் றன் உருவங்கள் வருமாறும் போமாறு மெல்லாம் யாங்ஙனம் அறிய வல்லார்! இவரறிவுக்கு அவனுருவங்கள் தோன்றுதலும் மறைதலும் போற் காணப்படினும் தன்னிலையில் அவை அங்ஙனம் மாறுவனவல்ல. இதனை நம்மனோ ரறிவுக்குப் புலனாம் ஒரு நிகழ்ச்சியினும் வைத்துக் காட்டுவாம். ஞாயிற்று மண்டிலம் நாம் உறையும் இந்நிலவுலகத்தைச் சூழச்சென்று பகலிரவுகளை விளைப்பது போற் காணப்படினும், உண்மையான் ஆராயும்வழி இந்நிலவுல கமே ஞாயிற்றினைச் சுற்றிச்சென்று அம்மாறுதல் களைத் தோற்றுவிக்கின்றன; ஞாயிறு தன்னிலை யிற் றனது பேரொளி விளக்கத்திற்கு ஏதொரு வேறுபாடும் இல்லாதிருப்பவும் அஃதுடையதுபோற் றோன்றல் நமது சிறுமையானன்றிப் பிறிதன்று; அதுபோல், முதல்வனும் நம்ம னோர்க்கு அவ் வேறுபாடுகள் உடையன்போற் காணப்படுதல் கொண்டு அவன் அவை உண்மையிலுடையனென்றல் பெரிதும் பிழைபாடு உடைத்தாம். வியத்தகும் இவ்வியல்பினனாம் இறைவனதுண்மை தெரித்தற்கன்றோ திருஞானசம்பந்தப் பிள்ளையார், ஆட்பா லவர்க்கருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகில்அள வில்லை கிளைக்க வேண்டா கோட்பா லனவும் வினையுங் குறுகாமை எந்தை தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க தக்கார் என்று திருவாய் மலர்ந்தருளினார். இங்ஙனமே சிவஞான சித்தியாரிலும், பந்தமும் வீடு மாய பதபதார்த் தங்கள் அல்லான் அந்தமும் ஆதி யில்லான் அளப்பிலன் ஆத லானே எந்தைதான் இன்ன னென்றும் இன்னதாம் இன்ன தாகி வந்திடான் என்றுஞ் சொல்ல வழக்கொடு மாற்ற மின்றே என்று போந்தமை காண்க. கூர்த்த மெய்ஞ்ஞானத்தாற் கொண்டுணர்வார் தங் கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே என்ற தென்னை? மெய்யறிவுடை யார்க்கும் இறைவன் அறியப்படாலெனின் பின்னை அவன் உளன் என்று பெறப் படுதல் எற்றாலெனின்; கூர்த்த மெய்யறிவுடையார் இறைவ னோடு ஒன்றாய் நிற்கப் பெறுதலானும், தான் செய்வன வெல்லாம் அவன் செயல் வழியே நடைபெறுதலானும் அவர் அவனை வேறாய்ப் பிரிந்து நின்று அவனைச் சுட்டி உணர்வார் அல்லர். இது குடம் இது படம் என்று சுட்டி உணர்வார் நம்மனோர், இறைவன் அவைபோல் அங்ஙனம் சுட்டி யுணரப் படாமையானும், உணரும் உணர்வின் உள்ளிருந்து அவன் காட்டுதலானும் அவன் அவர்தம் உயிரினுக் குயிராய் விளங்க அறியப்படுவானல்லது கட்டுணர்வுக்குப் புலனாகான் என்பது தெரித்தற்கு அவ்வா றோதினார். இஃது யாங்ஙனம் எனின், புறப்பொருள்களின் வேறாய் நின்று அவற்றைக் காணுங் கண்தான் அவற்றைக் காணுமாறு தன்னுள் நின்று தன்னை ஏவும் உள்ளத்தைக் காணாது. அதுபோலத் தனக்கு வேறாயுள்ள வற்றை அறியும் உயிர் தன்னையறியாது, தன்னுள் நின்று ஏவும் முதல்வனையும் அறியாது, மற்றுத் தன் நினைவினளவாய்த் தன்னையுந் தன்றலைவனையும் உணரப்பெறும். இவ்வியல்பு, காட்டிய கண்ணே தனைக்காணா கண்ணுக்குக் கட்டாய உள்ளத்தைக் கண்காணா - காட்டிய உள்ளம் தனைக்காணா உள்ளத்தின் கண்ணாய கள்வன்றான் உள்ளத்திற் காண் என்னுஞ் சிவஞானபோதத் திருவெண்பாவால் நன்கு விளக்கப்பட்டமை காண்க. அற்றேற், கட்டுணர்வாய் அன்றி நினைவினளவாய் உணரும் உணர்ச்சி தெளிவுடைத்தாமோ வெனின்; கட்டுணர்ச்சி அறிவில்லாத பருப்பொருள்களின் சிற்றளவினையும் அவற்றின் றன்மைகளுள் ஒரோ வொன்ற னையும் அறியும். அங்ஙனம் அறியும் வழியும் அவற்றின் உண்மையை உணராமற் பிழைபடுதலும் உடைத்து. மற்று நினைவளவாய் உணரும் உணர்ச்சியோ நினைக்கும் உயிராகிய தன்னை முற்றும் தெளிய அறிவதோடு, தன்னுள் நின்று இயக்கும் பேரறிவுப் பொருளான முதல்வ னியல்பையும் உணரவல்லதாகும். அதனால் நினைவளவாயுணரு முணர்ச்சியே சிறந்த தென்று கடைப்பிடிக்க. எனவே, மெய்யறிவு முதிர்ச்சி யுடையார்க்கும் இறைவன் பிரித்தறிய வாராமல் அவரறிவோடு ஒற்றித்து நின்றே நினைவினளவாய் அறியப்படு மென்பது அறிவித்தாராயிற்று. நுணுக்குதல் - கூரிதாக்குதல்; இப்பொருட்டாதல் பொய்யாதின்றிப் புலமை நுணுக்கி நீ என்பதன் உரையிலுங் காண்க*. (* சீவகசிந்தாமணி) புணர்வு உடம்போடும் உலகத்துப் பொருள்களோடுங் கூடி நின்று இருவினைகளை விளைத்து நுகர்தல். பல வேறு தன்மைகளையுடைய இந்நிலத்தின்கண் பல வேறு தன்மைகள் உடையரான மக்கள் தத்தம் அறிவுக் கெட்டிய மட்டும் பல வேறு தன்மைகள் உடைய தெய்வங்களைப் படைத்திட்டுக்கொண்டு வழிபட்டுப், பின்னர்த் தம் அறிவு வளருந் தோறும் தாம் முன்னே வழிபட்டது தெய்வம் அன்றெனக் கைவிட்டு, அதனின் மிக்க தொன்றனை வைத்து வழிபாடாற்றிப்/ பின்னர் அதனையுங் கைவிட்டு அதனிற் சிறந்த வேறொன்றனைத் தழுவி, இறுதியாக எல்லாவற்றையுங் கழித்து, அறிவாய் எஞ்சி நின்ற முழுமுதற் கடவுளைத் தெளிந்து வழிபட்டு வீடுபேற்றின்பந் தலைக்கூடுவராகலின் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந் தேற்றனே என்றருளிச் செய்தார். மாற்றம் மாறு என்னும் முதனிலையிற் பிறந்து மாறுபாட்டினை உணர்த்தும். தேற்றன் தெளிவினையுடை யோன், தெளியப்பட்டவன் என்று இருபொருளும் உரைத்துக் கொள்க. தேற்றத் தெளிவு தெளிந்தார்க்கு உயிர்க்குயிராய் நின்று நுகரப்படும் தெளிவு வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப 85 ஆற்றேன்எம் ஐயா அரனேயோ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளின் நட்டம் பயின்றாடும் நாதனே 90 தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி அறுப்பானே யோவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் 95 பல்லோரும் ஏத்தப் பணிந்து. வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப ஆற்றேன் - வேறு வேறு திரிவுபாடுகளையுடைய தசையாலான உடம்பி னுள்ளே கிடக்கப்பொறேன், எம் ஐயா - எம் தலைவனே, அரனே- சிவபெருமானே, ஓ என்று என்று - ஓவென்று அலறிக் கூறி, போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய் ஆனார் - வணங்கிப் புகழ்ந்தபடியாய் இருந்து உள்ளீடு இல்லாத நினைவு சொற் செயல்களெல்லாம் கெட்டு மெய்ந்நினைவு சொற் செயல்கள் உடையராயினார், மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே - திரும்பவும் இவ்வுலகின்கண் வந்து இரு வினைக்கு ஏதுவான பிறவியைக் கூடாமல், கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே - வஞ்சித்துக் கொள்ளுதலைச் செய்யும் ஐம்புல அவாக்களுக்கும் இருப்பிடமான சிறிய மனையாகிய இவ்வுடம்பின் கட்டை அழிக்க வல்லவனே, நள் இருளின் நட்டம் பயின்று ஆடும் நாதனே - நடு இருளிலே திருக் கூத்தினைப் பலகாலும் ஆடும் தலைவனே, தில்லையுள் கூத்தனே - தில்லை மாநகரின்கட் கூத்து இயற்றுவோனே, தென்பாண்டி நாட்டானே - தெற்கேயுள்ள பாண்டிநாட்டை யுடையவனே, அல்லல் பிறவி அறுப்பானே - துன்பத்திற்கிடமான பிறவி வேரை அறுப்பவனே, ஓ என்று - ஓ என்று அரற்றி, சொல்லற்கு அரியானை - சொல்லிப் பாராட்டுதற்கு ஆகாத அருமைப்பாடு உடையவனை, சொல்லி - இயன்றமட்டும் பாராட்டி, திருஅடிக் கீழ்ச் சொல்லிய - அவன் திருவடிக்கீழ் நின்று சொல்லிய, பாட்டின் பொருள் அறிந்து சொல்லுவார் - செய்யுட் பொருளை உள்ளுணர்ந்து சொல்ல வல்லவர், சிவபுரத்திற் செல்வர் - சிவ நகரின்கட் செல்வார்கள், பல்லோரும் ஏத்தப் பணிந்து சிவன் அடிக்கீழ் உள்ளார் - பலரும் வழுத்தாநிற்கத் தாம் பணிவுடை யராய்ச் சிவபிரான் திருவடியின் கீழ் இன்புற்று இருப்பர் என்றவாறு. வேறு விகாரம் - வேறாகிய விகாரம்; இருபெயரொட்டுப் பண்புத் தொகைக்கண் வல்லெழுத்துமிக்கு வேற்று விகாரம் என முடிதல் அல்லது கிளப்பின் எல்லா மொழியுஞ் சொல்லிய பண்பின் இயற்கையாகும் என்பதிற் சொல்லிய என்பதனால் முடிக்கப்படும் என்பர் உரையாசிரியர் இளம்பூரணர்* (* தொல்காப்பியம் எழுத்து 425) பலவகைத் திரிவுபாடுகளாவன; நரைதிரை மூப்புப் பிணி சாக்காடு என்பன. விடக்கு தசை யெனப் பொருள்படுதல் வீழ்ந்தார் விடக்கு உணிய என்பதன் உரையிற்* (* புறப்பொருள் வெண்பா மாலை வெட்சி 10) காண்க. இறைவன் திருவடியைத் தலைக்கூடினார்க்கு இவ்வூனு டம்பு ஒரு பொறையாயும் சிறைக்களம் போன்றும் இருத்தலின் வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப, ஆற்றேன் என்றருளிச் செய்தார். அரன் தீவினைகளை அரிப்பவன்; இச்சொல் தமிழ் வடமொழி இரண்டற்கும் பொது. புகழ்ந்திருந்து புகழ்ந்து இருந்து என இரண்டு சொல்லாகப் பிரித்துப் புகழ்ந்தபடியாய் இருந்து என உரைக்க; புகழ்ந்திருந்து என ஒரு சொல்லாக வைத்துப் புகழ்ந்து எனப் பொருளுரைத்தலுமாம். பொய்யுணர்வாவது பொருள் அல்லாதனவற்றைப் பொருளென்று உணரும் மயக்க உணர்ச்சி. அது மறு பிறப்பும் இரு வினைப்பயனும் கடவுளும் இல்லை எனவும், மற்று மித்தன்மையவுஞ் சொல்லும் மயக்க நூல் வழக்குகளை மெய்ந் நூல் வழக்கெனத் துணிதல் என்று பரிமேலழகியார் அதனை விளக்கியவாற்றான் அறியப்படும். ஆசிரியர் திருவள்ளுவ நாயனார், பொருள்அல் லவற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு என்று அருளிச்செய்தார்*(* திருக்குறள் மெய்யுணர்தல் 1) இதற்கு மறுதலையான மெய்யுணர்வு இன்னதென்பதனை அவரே மெய்யுணர்தல் என்னும் அதிகாரத்தில் நன்கு விளக்கி யருளினமை கொண்டு தெளிந்து கொள்ளப்படும். அவ்வதிகாரத்துட்போந்த, பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு என்னுந் திருவெண்பாவால் வீட்டிற்கு நிமித்த காரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய்யுணர்வாவது என்று உணர்ந்து கொள்க. மெய்ப் பொருளைக் காணபது மெய்யுணர்வு; அம்மெய்ப்பொருள்தான் தோற்றக் கேடுகள் இன்மையின் நித்தமாய், நோன்மை யாற் றன்னை யொன்றுங் கலத்தல் இன்மையிற் றூய்தாய்த், தான் எல்லாவற்றையுங் கலந்து நிற்கின்ற முதற்பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத் தாவது*. (* பரிமேலழகியார் உரை திருக்குறள் மெய்யுணர்தல் 8) அப்பெற்றித்தாகிய மெய்ப் பொருளை இடைவிடாது பாவிப்பவர் அம் மெய்ப் பொருடா னாய் விளங்குவராதலின் மெய்யானார் எனவும், அங்ஙனம் அம்மெய்ப் பொருளைக் கண்டார் மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் ஆதலின் மீட்டிங்குவந்து வினைப் பிறவிசாராமே எனவும் அடிகள் அருளிச் செய்வாராயினர். ஈண்டுக் காட்டிய வாற்றால் திருவாதவூரடிகள் கருத்தும் திருவள்ளுவநாயனார் கருத்தும் ஒத்த தன்மையவாதலும் கடைப்பிடித் துணரல் வேண்டும். கள்ளம் என்பது வஞ்சித்துக்கொள்ளுதல். மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளில் நிற்கும் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐந்துணர்வுகளும் ஐம்புலங்களாம். ஈண்டு அவ்வைம்புலங்களும் அவற்றின்வழித் தோன்றுகின்ற ஐந்து அவாக்கள் மேலாயின. இவ்வைம்புல நுகர்ச்சிக்குரிய பொருள்கள் தம்பாலின்றிப் பிறர்பால் உளவாகக்கண்டு அவற்றை நேரே கொள்ளுதற்குரிய நெறியாற் கொள்ளாது அவரை வஞ்சித்துக் கொள்ளுமாறு அவற்றின்பாற் செல்லும் அவா ஒருவரை ஏவுதலின் கள்ளப்புலம் என்றார். உடம்பு உளதாங்காறும் பண்டைப் பயிற்சியால் துறக்கப்பட்ட புலன்கள் மேலும் ஒரோவழி நினைவு செல்லுதலின் இவ்வுடம்பாகிய கட்டு நீக்கற்பால தென்பதூஉம், இது வராமை நீக்க வல்லவன் முதல்வன் ஒருவனே என்பதூஉம் அறிவுறுத்துவார் கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே என்று கூறினார். குரம்பை - சிறியமனை. இப்பொருட்டாதல் குறியிறைக் குரம்பை* (* புறநானூறு 129) என்பதன் உரையிற் காண்க. சிறியமனை போல்வ தாகிய உடம்பிற்கானது உவமையாகு பெயர். குரம்பைக்கட்டு என்னுந் தொகைநிலைத் தொடர் குரம்பையது கட்டு என ஆறாம் வேற்றுமைப் பொருளினாதல், குரம்பையாகிய கட்டு எனப் பண்புத்தொகைப் பொருளினாதல் மயங்கும். ïÅ¡ ‘Fu«ig f£lÊ¡f tšyhnd’ v‹gJ ghlkha‹ Fu«igia¡ f£nlhLmÊ¡f tšyhnd v‹W bghUSiu¡f; <©L x‰W Äfhik “bkšbyG¤J ÄFtÊ” v‹DŠ N¤âu¤âš ‘m‹d ãwî«,’ v‹gjdhš mik¡f¥gL«.* (* தொல்காப்பியம் எழுத்து 157) நள் இருள் நடு இருள். இப்பொருட்டாதல் நள்ளிருட் கண் வந்தார் நமர் என்பதன்* (* புறப்பொருள் வெண்பா மாலை வெட்சி 6) உரையிற் காண்க. இனிச், செறிந்த இருள் என்று பொருளுரைப்பினுமாம்; நளியென் கிளவி செறிவுமாகும் என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார்* (* புறநானூறு 34) நளி என்னுஞ் சொல்லின் முதனிலை நள். நட்டம் - கூத்து. திவாகரத்துட் காண்க. பயின்று ஆடும் - பலகாலம் பழகி ஆடும். பலகாலும் ஒரு செயலைச் செய்தல் பயிலலாகு மென்பது வேண்டுமொழி பயிற்றி* (* தொல்காப்பியம் உரியியல் 25) என்பதற்கு உரைகார் கூறிய பொருளான் அறியப்படும். எத்தனையோ கோடி ஆண்டுகளாக இறைவனோடுதலிற் பயின்றாடும் என்றார். எல்லா உயிர்களும் உணர்வுஞ்செயலும் அற்று அறியாமை வல்லிருளில் அழுந்திக்கிடக்கும் அக்காலத்தும் இறைவன் தான் சிறிதும் வாளா இருத்தலின்றி அவற்றின் பொருட்டுத் தான் ஓவாது ஆடுதலின் நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே என்றார். இங்ஙனம் அவன் ஆடுதல் எற்றிற் கோ வெனின், ஆணவ இருளிற் கிடந்த உயிர்களை எழுப்பிப் பிறவிவட்டத்தில் உய்த்தற்பொருட்டும், பிறிவிவட்டத்திற் சுழலும் உயிர்களும் இடையிடையே அயர்வு தீர்தற் பொருட்டு அவற்றை நாடோறும் உறக்கத்தின்கண் அவ்விருளிற் செலுத்திச் சிறிதுநேரஞ் சென்ற துணையானே எழுப்பிவிடுதற் பொருட்டும், அவை அவ்விருளில் அயர்ந்துறங்குங்காலும் அவையிருந்து அறிவுபெறுதற்கு இடமான உடம்புகளைச் செவ்வனே இயக்குதற்பொருட்டும், சிற்றறிவும் சிறு தொழிலு முடைய உயிர்களால் ஆக்கவும் நடத்தவும் மாட்டாத எண்ணிறந்த உலகங்களையெல்லாம் ஆக்கி நடத்துதற் பொருட்டும் அங்ஙனந் திருக்கூத்து இயற்றுகின்றானென்று உணர்க. புறத்தே உலகத்திலும் அகத்தே உடம்பினிடத்தும் இறைவன் இங்ஙனந் திருக்கூத்து இயற்றும் இயல்பு நமது உடம்பின்கண் நிகழும் நிகழ்ச்சிபற்றித் துணியப்படும். எல்லா உயிர்களும் விழித்திருக்கையில் தலையின்கண் உள்ள மூளை யைப் பற்றிக்கொண்டு ஐம்புல உணர்வுகளும் அவற்றின் வழி வரும் பகுத்துணர்வும் உடையனவாய்ப் போதருகின்றன; மற்று, உறக்கம்வந்து கூடுமிடத்தோ மூளையைவிட்டுக் கீழ் இறங்கி நெஞ்சத்தாமரையின் அகத்தேசென்று ஒடுங்கிக்கிடக்கின்றன. உயிரின் உணர்வால் இயக்கப்படும் எல்லாக்கருவிகளும் உயிரின் உணர்வும் ஒடுங்கி எல்லாம் இருண்டு கிடக்கும் அக்காலத்தும் நமதுடம்பினுள் ஓவாது இயங்குவது யாதென்று உற்றாராயு மிடத்து நெஞ்சப்பை ஒன்றுமே யென்பது தெற்றெனப் புலப்படும். நெஞ்சத்தாமரையினகத்து நடைபெறும் இவ் வியக்கம் நின்று போமாயின் உறங்கச்சென்ற உயிர் திரும்ப விழியாது. இனி உயிர் விழித்திருக்குங் காலத்திலேயுங்கூட இந் நெஞ்சப்பையினி யக்கம் நின்றுபோமாயின் உயிர் உடம்பின்கண் நில்லாது. இங்ஙனம் விழிப்பு உறக்கம் என்னும் இருவகை நிலையினும் உயிரின் செயலாகவன்றி வேறு தனித்து நடைபெற்று உயிரை உடம்பின்கண் நிலைபெறுத்திவரும் இந்நெஞ்சப்பை யின் இயக்கம் உயிரின் மேற்பட்ட இறைவனது ஆற்றலால் உந்தப்பட்டு வருகின்ற தென்பது இனிது விளங்கு கின்றதன்றே. உயிர் உணர்வுஞ் செயலும் ஒருங்கிழந்து துயிலும் நள்ளிருளில் இறைவன் நெஞ்சத்தாமரை நடுநின்று திருக்கூத்தி யற்றும் இவ்வுண்மையினைத் தெளித்துக் காட்டுதற் பொருட்டே தில்லைக் கோயிலில் நள்ளிரவில் அம்பலக் கூத்தனுக்கு வழிபாடு ஆற்றப்படுகின்றது. இந்நிலவுலகத்திற்கு நெஞ்சத்தாமரையாய் வயங்குவது தில்லைக் கோயிலென்று மேயாகலான், அதன் வெளியிலே ஐயனியற்றும் அருட்கூத்து ஓவாது நடைபெறா நிற்கும். ஏனைக் கோயில்கள் உடம்பின்கண் உள்ள ஏனை உறுப்புகள் போல வேறு வேறிடங்களில் அமைக்கப்பட்டிருந்த தலால், நள்ளிரவில் அவற்றினுள்ளிருக்குந் திருவுருவங்களுக்கு வழிபாடு ஆற்றப்படுவதில்லை. இங்ஙனம் நள்ளிருளில் ஆடும் இறைவன் திருக்கூத்தி னியல்பு தில்லைக்கண் நேரே காணப்படும் என்பார். தில்லையுட் கூத்தனே என்றார். இறைவன் தமிழின் பொருட்டம் தமிழுணர்ந்த அன்பர் பொருட்டும் பல்வகைத் திருவிளையாடல்களும் இயற்றுதற்கு இடமாயதுபற்றித் தென்பாண்டி நாட்டானே என்று கூறினார். பிறாண்டும் பாண்டிநாடே பழம்பதியாகவும் என்பர். இச்சிவபுராணத்து முதற்பத்தடிகளின் அடைவு மேலே காட்டினாமாகலின் ஏனையடிகளின் இயைபு ஈண்டுக் காட்டுகின்றோம். முதல் பத்தடிகளால் இறைவன் றிருவடிகட்கு வாழ்த்தும் வெற்றியும் கூறிய அடிகள் ஈசனடிபோற்றி என்பது முதல் மலைபோற்றி என்பது ஈறாக வணக்கங் கூறினார். அதன்பிற் சிவன் அவன் என்பது முதல் உரைப்பனியான் என்பதீறாக வருபொரு ளுரைத்தார். நூன்முகத் துரைக்கப்படுவதாகிய மங்கலவாழ்த்து வாழ்த்தும் வணக்கமும் வருபொருளுரைத் தலுமென மூவகைப்படுமாதலின்* (வாழ்த்து வணக்கம் வருபொருளிவற்றினொன் றேற்புடைத்தாகி முன் வரவியன்று என்பது தண்டியலங்காரம்) இந்நூலுக்கு மங்கல வாழ்த்துப் போல் நிற்பனவாகிய இவ்விருபஃதடிகளானும் அவற்றை முறையே கூறினார். அற்றேல், வாழ்த்திற்கும் வணக்கத் திற்கும் இடையே வெற்றியொன்று கூறினாராலெனின், வெற்றித்திறம் படக் கூறுதலும் வாழ்த்தேயாகலின் அது வேறன்றென்க. மங்கலவாழ்த்தின்பிற் கூறப்படுவதாகிய அவையடக்கம் கண்ணுதலான் என்பது துவங்கி நின்பெருஞ் சீர் பொல்லா வினையேன் புகழுமாறொன்றறியேன் என்பதனாற் கூறினார். அதன்பிற் புல்லாகி என்பது துவங்கி எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் என்பது ஈறாக உயிர்கள் ஓரறிவு நிகழ்தற்கு இடமான உடம்பிலிருந்து ஆறறிவு விளக்கத்திற்கு இடஞ்செய்யும் உடம்புகள் வரையிற் புகுந்து புகுந்து மேல் வருமாறு விளங்கக் கூறினார். உடம்புகள் இங்ஙனம் ஒன்றினொன்று சிறந்த அமைப்புடையவாய் வரும் இயல்பினை இஞ்ஞான்றை உடம்புநூல் வல்லார் தெளிய ஆராய்ந்து ஓதினும் பண்டைக்காலத்தில் இதனை நம் திருவாதவூரடிகள் போல் விளங்கக் கண்டு கூறினார் உரையாசிரியர். அதுவேயுமன்றி, உயிர்களின் அறிவு விளங்குந் தரத்திற்கு ஏற்ப உடம்புகளும் மேன்மேற் சிறந்த அமைப்பு டையனவாய் வரு மென்பது அடிகள் கருத்தாக, இக்கருத் தறியாத இஞ்ஞான்றை உடம்புநூலார் உயிரின் அறிவு வளர்ச்சி யினை அறவே விடுத்து உடம்புகள் மேன்மேற் சிறந்த அமைப்பு டையவாய் வருதலையே பெரிதும் ஆராய்ந் துரைத்து, நெல்லை விட்டு உமிக்குற்றிக் கைசலிப்பாரோ டொப்பராயினார். அதுகிடக்க. அதன்பின், மெய்யே யுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என்பதனால் பிறவிகளில் உழன்று தூயராயி னார்க்கு இறைவன் தன் திருவடிப்பேறு நல்கி ஆண்டு கொள்ளுமாறும், உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா என்பதனால் அங்ஙனம் அவன் திருவடி தலைக் கூடுவார்க்கு அவன் தமதகத்தே ஓங்காரவுருவாய் நிற்கக் காணு மாறும், வேதங்கள் ஐயாவெனவோங்கி என்பதனால் இவ்வாறு தூயராயினார்ககல்லது ஆரிய நான்மறைகளாலும் அவன் அறியப்படாதவாறுங் கூறினார். அதன்பின் வெய்யாய் என்பது துவங்கி நல்லறிவே என்பதீறாக இறைவன்வெம்மை மண்மை மெய்யொளி இன்பம் அறிவு என்னும் இயல்புகள் உடையனாதல் கூறினார். இவை தூயரானார்க்கு மட்டுமே விளங்குதலின் மேலதனோடு இயைபுடையவாயின. அதன்பின் ஆக்கம் என்பது துவங்கி பிறந்த பிறப்பறுக் கும் எங்கள் பெருமான் என்பது ஈறாக இறைவன் ஐந்தொழிலி யற்றி உயிர்களைத் தூய்மைசெய்து அவர்க்குப் பேரின்பம் நல்கி அவர்க்குப் பிறவியறுக்குமாறு கூறினார். மேற்சொன்ன இயல்புகளுடைய முதல்வன் அவ்வியல்புகளை உயிர்களினும் விளைவித்தல் வேண்டி இங்ஙனஞ் செய்தல் கூறினாராகலின் இவை முன்னையவற்றோடு இயைபுடையவாயின. அதன்பின் நிறங்களோர் ஐந்துடையாய் என்பது முதல் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே என்பதீறாக இறைவன் உயிர்களைப் பற்றிய இருளைத் தொலைத்தற் பொருட்டு ஐந்தொழிலியற்றிச் செய்யும் பேருதவியை நினையாமல், அவன் றந்த உடம்பினைத் தீமை செய்தற்கு வாயிலாக்கி அவர் அவனை மறந்து நிற்குமிடத்தும் அவன் அவர்மாட்டு வைத்த இரக்கத் தால் வலிய வந்து ஆட்கொண்டருளும் பேரருட்டிறத்தைக் கூறினார். அதன்பின் மாசற்ற சோதி என்பதுமுதல் உடையானே என்பதீறாக அத்துணை அருட்களஞ்சியமான ஐயனை அவன் எல்லாமாயும் அல்லவாயும் நிற்கும் பல பண்புகளையும் எடுத்துரைத்து வழுத்துமாறு கூறினார். இனி வேற்றுவிகார விடக்குடம்பு என்பது முதல் பல்லோரும் ஏத்தப்பணிந்து என்பதீறாக அவனால் அடிமை கொள்ளப்பட்டு அவனை வழுத்தி அவனோடு ஒன்றுகூடப் பெற்றார்க்கு, இனி யிவ்வடம்பாற் பெறக்கடவது வேறின்மை யானும் கரை யிகந்த அவனது இன்பவெள்ளத்திற் றிளைத்தற்கு இஃதொரு தடையா யிருத்தலானும் இவ்வூனுடம்பை அவனரு ளால் விட வேண்டுமென்பதும், விழிப்பினும் உறக்கத்தினும் அவன் இவ்வுடம்பின் நெஞ்சத்தாமரைக்கண் நின்று ஓவாது இயக்கி உயிரை உடம்பின்கண் நிலைபெறச் செய்துவருதலின் அவனே இவ்வுயிரையும் உடம்பையும் வேறுபடுக்கற்பாலன் என்பதும், பின் நான்கடிளால் இத்திருவாசகச் செந்தமிழ்ப் பாடல்களின் பொருளுணர்ந்து சொல்வார்க்குச் சிவனடிக்கீழ் வைகும் பெரும் பயன் வருமென்பதுங் கூறினார். இது கடவுட்பராய முன்னிலைக்கண் வந்த பாடாண் பாட்டு. ஒருபொருள் நுதலிய வெள்ளடி இயலாற் றரிபின்றி வருவது கலிவெண் பாட்டே என்றார் ஆசிரியர் தொல்காப்பியனா ராகலின் (தொல் காப்பியம் செய்யுளியல் 154) இஃது அவ்வாறு வந்த கலிவெண் பாட்டு. இரண்டாவது அகவல் கீர்த்தித் திருவகவல் (சிவனது திருவருட்புகழ்ச்சி முறைமை) தில்லையில் அருளிச்செய்யப்பட்டது சிவபெருமான் காணவுங் கருதவும் படாத தனது இயற்கை யைத், தன்னை ஓவாது நினைந்துருகும் அன்பர்க்குக் காணவுங் கருதவும்ஆம்படி வைத்தற்பொருட்டு எழுந்த பேரருட்டிறத்தால் ஆங்காங்கு அம்மெய்யடியார்க்குத் தனது அருட்திருவுருவு காட்டி அவரை ஆண்டருளின் அருட் பான்மையைப் புகழ்ந்து இத் திருவகவலில் திருவாதவூரடிகள் அருளிச்செய்கின்றாரா கலின், இது கீர்த்தித் திருவகவல் என்னும் பெயர்த்தாயிற்று. தில்லை மூதூர் ஆடிய திருவடி பல்லுயிர் எல்லாம் பயின்றனன் ஆகி எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி மண்ணும் விண்ணும் வானோர் உலகும் 5 துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் என்னுடை இருளை ஏறத் துறந்தும் அடியார் உள்ளத்து அன்புமீ தூரக் குடியாக் கொண்ட கொள்கையுஞ் சிறப்பும் தில்லைமூதூர் - தில்லையென்னும் பழைய ஊரின்கண். ஆடிய திருஅடி - நடம் இயற்றிய அழகிய அடியால், பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி - பலவேறு உயிர்கள் எல்லா வற்றினுள்ளும் இடைவிடாது ஆடுவானாகி, எண் இல் பல்குணம் எழில்பெற விளங்கி - அளவு குறிக்கப்படுதல் இல்லாத தன் பல குணங்களும் எழுச்சிபெற விளங்கி, மண்ணும் விண்ணும் வானோர் உலகம் - நிலவுலகத்திலும் வானுலகத்திலும் தேவர்கள் உறையும் ஏனை உலகங்களிலும், துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் - செறிந்த கல்விப்பொருளைத் தோற்று வித்தும் பின்னர் அதனை அழித்தும், என்னுடை இருளை ஏறத் துரந்தும் - என்னுடைய அறிவைப்பற்றிய அறியாமையிருளை முற்றும் எறிந்தும், அடியார் உள்ளத்து அன்பு மீதூர - அடியவர் உள்ளத்தில் அன்பு நெருங்க, குடியாக்கொண்ட கொள்கையும் சிறப்பும் - குடியிருப்பாகக் கொண்ட விரதமும் தலைமையும் என்றவாறு. மூதூர் - முதுமைஊர், பழமையாகிய ஊர், தில்லைமாநகர் இந்நிலவுலகத்திற்கு நெஞ்சத்தாமரை போன்றிருத்தலின் உயிர்களினகத்தேயுள்ள நெஞ்சத்தின்கண் இறைவன் ஓவாது நடமியற்றுமாறு போல இதன் கண்ணும் பண்டுதொட்டுத் திருக்கூத்து இயற்றுதலின் இதனைப் பழையஊர் என்றார். இனி உயிர்களின் அகத்தே இயற்றுந் திருக்கூத்து முந்தியதோ அன்றிப் புறத்தே தில்லையம்பலத்தில் இயற்றுந் திருக்கூத்து முந்தியதொவென்று ஆராய்ந்து பார்ப்புழி உயிர்கள் உடம்பினுட்புகாது இருளிற் கிடந்த அக்காலத்தும் தில்லையம்பலக்கூத்து நிகழ்தலானும், உயிர்கள் உடம்பை விட்டு விட்டுப் போக ஆண்டு நடைபெறுந் திருக்கூத்து இடையறவு படுதல் போலாது தில்லைக்கண்ட நிகழுங்கூத்து எஞ்ஞான்றும் ஒரு பெற்றித்தாய் நடைபெறுதலானும் ஆண்டு ஆடிய திருவடி யினாலேயே பின்னர் உடம்பினுட்புகும் உயிர்கள்பொருட்டு அவற்றின் நெஞ்சத்தாமரைக் கண்ணதான வெளியிலே அதனை இடைவிடாது இயற்றுவான் என்பது தெரிப்பார் தில்லை மூதூர் ஆடிய திருவடி, பல்லுயிரெல்லாம் பயின்றனனாகி என்றருளிச் செய்தார். பயிலுதல் - இடைவிடாது ஒன்றனைச் செய்தல்; தில்லைச் சிற்றம்பலத்துப் பயில்கின்ற கூத்தன் என்பதற்குத் தில்லைச் சிற்றம்பலத்தின்கண் இடைவிடாதாடுகின்ற கூத்தையுடையான் என்று பேராசிரியருரை கூறுதல் காண்க. (திருச்சிற்றம்பலக் கோவையார் 18) பல் குணங்களாவன; தன்வயத்தனாதல், தூய வுடம்பின னாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல் பாகவே பாசங்களி னீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்ற லுடைமை, வரம்பிலின்பமுடைமை எனவினவ* (திருக்குறள் 1,9) என்று பரிமேலழகியார் காட்டிய எண் குணங்களும். எட்டு வான்குணத் தீசனெம் மான்றனை என்று திருநாவுக்கரசு நாயனாரும் இரும்புயர்ந்த மூவிலைய சூலத் தினானை இறையவனை மறையவனை யெண் குணத்தினானை என்று சுந்தரமூர்த்தி நாயனாரும் அருளிச்செய்தமை காண்க. இக்குணங்களி னிருப்பு ஒருவாற்றான் அறியப்படுவதல்லது அவற்றின் பரப்பும் எல்லையும் எவரானும் அறியப்படாமையின் எண்ணிர் பலகுணம் என்றார். உயிர்களை உடம்புகளிற்புகுத்தி உலகங்களில் நடைபெறவிட்டு அவற்றிற்கு அறிவை எழச்செய்த பின்னன்றே அவை இறைவற்கு எண் குணம் உண்மையை அறிவவாயின. மற்று அவ்வுயிர்கள் பிறவிக்கு வாராமல் ஆணவ விருளிலேயே அழுந்திக் கிடந்தன வாயின் இறைவற்கு அக்குணங்கள் உளவாதலை அறிவார் யார்! முதல்வன் உயிர்கள் பொருட்டு இயற்றும் ஐந்தொழின்முகத்தான் அவை அறிவு விளங்கி அவன் குணங்களின் விளக்கத்தை அறிதல்பற்றிப் பல்லுயிரெல்லாம் பயின்றனனாகி என்பதன் பின் எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி என்று அருளிச்செய்தார். விண் என்பது நிலவுலகத்திற்கு நேரே மேல் உள்ள இந்திரன் நாடு; இந்திரன் மழைக்கடவுளாதலின் மேகமண்டிலமே இந்திரனா டென்று புனைந்துரைக்கப்படுகிறது. வானோர் உலகு என்பன நான்முகன் திருமால் உருத்திரர் சீகண்டருத்திரர் அநந்தர் சதாசிவர் முதலான கடவுளர் உலகங்கள். மண்ணும் விண்ணும் வானோருலகும் உள்ளாரிற் சதாசிவர் அநந்தர் முதலாயினார்க்கு உள்நின்றும், சீகண்ட ருத்திரர்க்கு நேர்நின்றும், திருமால் முதல் மண்ணுலகிலுள்ள மக்களீறான மற்றையோர்க்கெல்லாம் குருவடிவில் நின்றும் இறைவன் ஒருவனே எல்லார்க்குங் கல்வியறிவினைத் தோற்றுவிப்பானென்பது, நன்னெறிவிஞ் ஞானகலர் நாடுமலம் ஒன்றினையும் அந்நிலையே உண்ணின் றறுத்தருளிப் - பின்னன்பு மேவா விளங்கும் பிரளயா கலருக்குத் தேவாய் மலகன்மந் தீர்த்தருளிப் - பூவலயந் தன்னின்று நீங்காச் சகலர்க் கவர்போல முன்னின்று மும்மலந்தீர்த் தாட்கொள்கை - அன்னவனுக் காதிகுண மாதலினால் என்னும் போற்றிப் பஃறொடைத் (60-63) திருமொழியால் இனிது விளக்கப்பட்டமை கண்டுகொள்க. பற்று அறாத உயிர்களை மீண்டும் மீண்டும் மலத்தில் ஒடுக்குமித்தும், பற்று அற்ற உயிர்களைத் தன்திருவடிக்கட் கூட்டுமிடத்தும் தோற்றிய கல்விப்பொருள் அத்துணையும் அழித்தலின் துன்னிய கல்வி தோற்றியும் என்பதனோ டமையாது, அழித்தும் என்றுங் கூறினார். ஏறத்துரந்தும் - முற்றும் எறிந்தும்; எறிதலாவது உயிரைப் பற்றிய ஆணவத்தைப் பறித்து அப்பால் வீசுதல். துரந்தும் என்பது இப்பொருட்டாதல் வளி துரந்தக் கண்ணும் என்பதன் உரையிற் காண்க* (புறப்பொருள் வெண்பா மாலை 9, 12) மீதூர - நெருங்க; அன்பு நெருங்குதலாவது மிகுதியாய் எழுந்துதா னிருக்குமிடம் போதாமை நெரிதல். இப்பொருட் டாதல் இடங்கழி நெருங்குதல் மீதூர லாகும் என்னும் பிங்கலந்தைச் சூத்திரத்திற் காண்க. கொள்கை விரதம் எனப் பொருள்படுதலை ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை என்பதன்* (புறநானூறு 26) உரையிற்காண்க. இனிக் “கொள்கையி னிருந்த” என்பதற்குத் ‘தியானத்தோடிருந்த’ எனவும் ‘துன்பம் உறாதிருந்த’ எனவும் பொருளுரைப்பர் அடியார்க்கு நல்லார்*.(சிலப்பதிகாரம் 14,15) சிறப்பு - தலைமை; இப்பொருட்டா தலை “உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்” என்பதன் உரையிற் காண்க.* (புறநானூறு 72) மன்னு மாமலை மகேந்திர மதனிற் 10 சொன்ன ஆகமந் தோற்றுவித் தருளியும் மன்னு மாமலை மகேந்திரம் அதனில் - நிலைபெற்ற பெரிய மலையாகிய மகேந்திரத்திலிருந்து, சொன்ன ஆகமம் - முன்னொருகால் உமைப்பிராட்டியார்க்குச் சொல்லிய ஆகம நூல்களை, தோற்றுவித்தருளியும் - மீண்டும் வெளிப்படுத் தருளியும் என்றவாறு. மகேந்திரமதனிற் றோற்றுவித் தருளியும் என்று இயைக்க பண்டொருகால் இறைவன் மலையரையன் பாவைக்கு ஆகமம் என்னும் அறிவு நூற்பொருள்களை எடுத்து அறிவுறுப்ப, அவள் அவற்றைக் கருத்தூன்றாது, கேட்டனளாக, இறைவன் அது கண்டு பெரிதும் வெகுண்டு நீ நம்மை யகன்று வலைஞர்க்கு மகளாய்ப் பிறந்திடுதி என்று சபித்துரைத்தான். அன்னையை ஐயன் இங்ஙனஞ் சபித்துக் கூறக்கேட்ட மூத்த பிள்ளையார் பெருஞ் சீற்றமுடையராய்ப் போந்து இறைவன் திருக்கை யிலிருந்த அவ்வாகம நூல்களைப் பற்றிப் பிடுங்கிக் கடன்மீ தெறிந்திட்டார். இளைய பிள்ளையாரும் அங்ஙனமே கடுஞ்சின முடையராய்ப் போந்து அவ்வாகமங்களிற் சிலவற்றைப் பறித்தெடுத்துக் கிழித்தெறிந்திட்டார். இவையெல்லாங் கண்ட இறைவன் சினந்து இளைய பிள்ளையாரை நோக்கி நீ நம் கையிலுள்ள நூலை வாங்கிக் கிழித்தெறிந்தமையால் மதுரை வாணிகனுக்கு ஒரு மூங்கைப் பிள்ளையாய்ப் பிறத்தி எனவும், அதன்பின் நந்தி தேவரை நோக்கி நீ இவ்விருவரையும் உள்ளே புகவிடுத்தமையாற் கடலிற் சுறவுமீனாய்ப் பிறந்து அங்கெறியப் பட்ட ஆகம நூல்களைச் சுமந்து உலவுதி எனவும் சாபவுரை கூறினானாகச் சாபம் ஏற்ற அம்மூவரும் நடுங்கி இறைவனை இறைஞ்சி அச்சாபவிடுதி வேண்டிக் குரையிரப்பத், தானே நிலமிசைவந்து எல்லாருங் காண அம்மையைத் திருமணஞ் செய்து நந்தியை ஆட்கொள்ள இசைந்தருளினன். பின்னர் அம்மை வலைஞர் கோனுக்குத் திருமகளாய்ப் பிறக்க, நந்தி கொடிய சுறாவாய்க் கடலிற் றோன்றி வலை வீசுவார்க்கு அத்தொழில் நடவாவாறு துன்புற்று உலாவுவதாயிற்று. அம்மை மங்கைப்பருவத்தினள் ஆனதுணை யானே, கடலில் அடங்காதுலவுங் கொடுஞ் சுறரைப் பிடித்துத் தருவாற்கு என் மகளை மணஞ்செய்து கொடுப்பல் என்று வலைஞர்கோன் ஓர் உறுதிச்சொற் பிறப்பித்தான். மறஞ் சிறந்தார் பலர் அச் சுறவினைப் பிடிக்க முயன்றும் ஆகாமே சிலநாட்கள் கழியா நிற்பக் கடைமுறையாய் இறைவனே கண்ணுமனமுங் கவரும் ஓர் இளவலைஞனாய் தோன்றி அச்சுறவைப் பிடித்து அம்மையை வதுவை அயர்ந்தன னென்று பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவுளையாடற்புராணங் கூறா நிற்கும்.* (பெரும்பற்றப் புலியூர் நம்பி இயற்றிய திருவிளையாடல் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடலினும் பழமையுடையததாலினாலும் பெரும்பான்மையும் வரலாற் றுண்மை வழுவாது கூறுதலினாலும் அதனையே மேற் கோளாகக் கொள்வேமாயினேம்) இவ்வாறு கடலினின்றும் மீட்ட ஆகமநூற் பொருளை இறைவன் மகேந்திர மலை யிலிருந்து மறித்தும் அறிவுறுத்தருளினானென அடிகள் பின்னுங் கூறுவர்; பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவுத்தர கோசமங்கையிலிருந்து அதனைத் திரும்பவும் அறிவுறுத் தருளினானெனக் கூறுவர்; இவ்விரண்டினுள் அடிகள் கூறுவதே கொள்ளற்பாலதென்க. மகேந்திரமாமலை வடக்கே கஞ்சநாட்டில் பிருகாம் பூருக்குத் தென்மேற்கில் முப்பத்திரண்டு நாழிகை வழி கழித்திருக்கின்றது; அங்கே சிவபிரான் திருக்கோயில்கள் பல பழுதுபட்டுக் கிடக்கின்றன. கல்லா டத்துக் கலந்தினி தருளி நல்லா ளோடு நயப்புற வெய்தியும். கல்லாடத்து - கல்லாடம் என்னும் ஊரில், கலந்து இனிது அருளி - திருவுருவிற்கலந்து இனிது எழுந்தருளி, நல்லாளோடு - உமைப்பிராட்டியாரோடு, நயப்புறவு - இன்பம், எய்தியும் அடைந்தும் என்றவாறு. கல்லாடம் ஒரு சிவதலம். நயப்புறவு இன்பம் எனப் பொருள்படும் நயம் என்னுஞ் சொல்லிற் றோன்றியது. பஞ்சப் பள்ளியிற் பான்மொழி தன்னொடும் எஞ்சா தீண்டும் இன்னருள் விளைத்தும். பஞ்சப்பள்ளியில் - பஞ்சப்பள்ளி யென்னும் ஊரில், பால் மொழி தன்னொடும் - பால்போ லினிய சொற்களையுடைய உமையவளோடும், எஞ்சாது ஈண்டும் - குறையாது நிறையும், இன்அருள்விளைத்தும் - இனிய அருளை விளைத்தும் என்றவாறு. ஈண்டும் நிறைத லெனப் பொருள்படுதலை ஈண்டிய கேள்வியவர் என்பதற்குப் பரிமேலழகியார் கூறிய வுரையிற் காண்க,*(திருக்குறள் 417) 15 கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் விராவு கொங்கை நற்றடம் படிந்தும் கிராத வேடமொடு - வேடகோலத்துடன், கிஞ்சுக வாயவள் - முருக்குமலர் போற் சிவந்த வாயினையுடைய உமையாளின், விராவு கொங்கை நல்தடம் படிந்தும் - ஒன்றோடொன்று கலந்த முலைகளாகிய நல்ல குளத்தில் தோய்ந்தும் என்றவாறு. இஃது அருச்சுனன் தவங்கிடந்தஞான்று அவன்பொருட்டு மேற் கொண்டதென மாபாரதங் கூறும். கிராதன் வேட்டுவன் எனப் பொருள்படும் ஒரு வடசொல். கிஞ்சுகம் முள்முருக்கம் பூவினை யுணர்த்தும் ஒரு வடசொல். விரவுதல் - கலத்தல்; பன்மணிக் குவையொடும் விரைஇ என்றார் புறத்திலும்* (புறநானூறு 152) தடம் - பெருமை; ஈண்டுப் பெரியகுளம் என்னும் பொருளில் வந்தது. தடவுங் கயவு நளியும் பெருமை என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். (தொல்காப்பியம் உரியியல் 22) படிதல் - தோய்தல், குளித்தல். இப்பொருட்டாதல் பிங்கலந்தையிற் காண்க. கொங்கை வருடுதலாற் பிறக்கும் இன்பத்தினைக் குளமாக உருவகப்படுத்தினார் என்க. கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும் மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும் மற்றவை தம்மை மகேந்திரத் திருந் 20 துற்றஐம் முகங்க ளாற்பணித் தருளியும்; கேவேடர் ஆகி - வலைஞர் ஆகி, கெளிறது படுத்தும் - கெளிற்று மீனை வீழ்த்தியும், மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் - பெரிய விருப்பத்தினைத் தருவனவாகிய ஆகம நூலை அதன்பால் நின்று மீட்டும் வாங்கியும், மற்று அவை தம்மை - அங்ஙனம் வாங்கிய ஆகம நூல்களை, மகேந்திரத்து இருந்து - மகேந்திரமலையிலிருந்து, உற்ற ஐம்முகங்களால் பணித்தருளியும் - பொருந்தியதன் ஐந்து முகங்களாற் சொல்லியருளியும் என்றவாறு. வலைஞன் எனப் பொருடருவதாகிய கேவர்த்த என்னும் வடசொல் கேவேடர் எனத் திரிந்தது. இறைவன் வலைஞனாய்ச் சென்று படுத்தது சுறவுமீனென்று திருவிளை யாடற்புராணங் கூறுமாயினும், அடிகள் அதனைக் கெளிற்றுமீனென்று கூறுதலின் அடிகள் கூற்றே கொள்ளற் பாலதாம் என்க. படுத்தல் - வீழ்த்தல். எறிந்து களம்படுத்த எண்புழி இப்பொருட்டாதல் காண்க. (புறநானூறு 19) ‘nt£L’ ÉU¥g« vd¥ bghUŸgLjiy “ca®ªj nt£l¤ Ja®ªâándh®¡F” v‹gjDiuƉ fh©f.* (புறநானூறு 214)உண்மையறிவு பெறவேண்டினார்க்கு அதனை விளக்கித் தன்பால் அவர்க்கு விருப்பம் மேன்மேல் எழச் செய்தலின் ஆகம நூலுக்கு இங்ஙனம் அடைகொடுத் தோதினார். இறைவற்கு ஐம்முகங்கள் இவை என்பது சத்தியோ சாதம் வாமம் அகோரம், தற்புருடம் ஈசானமென ஈசர்க் கைம்முகம் என்னுந் திவாகர சூத்திரத்திற் காண்க. இறைவற்கு ஐம்முகங்கள் உண்டென்னுங் கொள்கை மிகப் பழமையுடையதென்பது ஈசாந ஸர்வவித்யாநாம்* (தைத்திரீய ஆரணியகம் - 10,21,39) எனவும், தத்புருஷாய வித்மஹே* (10,20,38) எனவும், அகோரேப்ய:* (10,19,37) எனவும், வாமதே வாயநம:* (10,18,39) எனவும், ஸத்யோ ஜாதம் ப்ரபத்யாமி* (10,17,35) எனவும் போந்த தைத்திரீய ஆரணியக மறைமொழிகளால் நன்கு தெளியப்படும். இவற்றுள், ஈசானம் என்பது சிறுமகாரின் முகம் போல்வதாய்த் தூய பளிங்கின் ஒளியை யுடைத்தாய் எக்காலும் வடகிழக்கை நோக்கியபடியாய் உச்சிமேல் இருப்பது; இவ் ஈசான முகத்தின் கீழ், இளைஞர்க்குரிய முகம்போல்வதாய்க் கோங்கம்பூவின் நிறம்வாய்ந்து கிழக்கு நோக்கி விளங்குவது தற்புருடம் என்னும் முகமாம்; கண்டாரை அச்சுறுத்தும் இயல்பினதாய்க் கீழ்நாலும் தாடியும் புறந்தோன்றும் எயிறும் உடைத்தாய்க் கறுத்து முதியோர் முகம் போன்று வலத்தோண் மேல் தெற்கு நோக்கிய படியாய் இருப்பது அகோர முகமாம்; மாதர் முகம்போல்வதாய் வெட்சிப்பூவின் நிறம் வாய்ந்து இடத்தோண்மேல் மிளிருவது வாமதேவ முகமாம்; பிடரிமேல் நின்று அரசர் முகத்தை ஒத்துப் பால்போற் றிகழுவது சத்தியோ சாதம் என்னும் முகமாம். இவ்வாறு சிவதருமோத்ரம் கூறுதலை, உச்சிமுகம் ஈசானம் ஒளிதெளியப் பளிங்கே உத்தரபூ ருவதிசையை நோக்கியுறும் உகந்தே, நிச்சயித்த முகத்தின்கீழ்ப் பூர்வதிசை நோக்கி நிகழுமுகந் தற்புருடம் கோங்கலர்போல் நிறமே, அச்சுறுத்தும் அகோரமுகம் அறக்கரிது கராளம் அவிழ்தாடி வலத்தோளில் தென்னோக்கி அமரும், செச்சைநிறத் தெரிவைமுகம் இடத்தோண்மேல் வாமம் சிறுபுறத்தின் முகஞ்சத்தி யோசாதந் திகழ்வால் என்னும் அதன் செய்யுளாற் காண்க. இனிச் சதாசிவரூபம் என்னும் நூல் கன்ம சாதாக்கியமாகிய தற்புருடமுகம் கிழக்கு நோக்குவதென்றும், கர்த்தருசாதாக்கியமாகிய அகோர முகம் தெற்கு நோக்குவதென்றும், மூர்த்திசாதாக்கியமாகிய சத்தியோ சாதமுகம் வடக்கு நோக்குவதென்றும், அமூர்த்தி சாதாக்கிய மாகிய வாம தேவமுகம் மேற்கு நோக்குவதென்றும், சிவசாதாக்கியமாகிய ஈசானமென்னும் ஊர்த்துவமுகம் நான்கு திக்கும் நோக்குவதென்றும் கூறுதலை, இந்தத் தியான எழிற்றிரு மேனியில் ஐந்து சாதாக்கியம் அடையும்படி அவர்க்மை கீழ்தென் வடமேற் றிசைமிசை நோக்கிய முகங்கள் நுவலருந் தொழிற் சாதாக்கியம் ஐந்தென் றுரைக்கத் தகுமே அம்முகம் ஐந்துஞ் சகளம தாம்பொழு திண்ணம் ஈசா னாதி எனப்படும் என்னும் அதன் சூத்திரத்தால் உணர்க. நந்தம் பாடியில் நான்மறை யோனாய் அந்தமில் ஆரிய னாய்அமர்ந் தருளியும்; நந்தம்பாடியில் - நந்தம்பாடி என்னும் ஊரில், நால்மறை யோனாய் - நான்கு வேதங்களையும் உணர்ந்தோனாய், அந்தம் இல் ஆரியனாய் அமர்ந்தருளியும் - ஈறில்லாத ஆசிரியனாய் வீற்றிருந்தருளியும் என்றவாறு. நந்தம்பாடி ஒரு சிவதலம்; நம்தம்பாடி எனப் பிரித்து நமது ஊர் என்று பொருளுரைத்தலும் ஒன்று. நான்மறையோன் என்பதற்கு நான்கு வேதங்களுக்கும் பொருளாய் உள்ளவன் எனப் பொருளுரைப்பினும் ஆம். அந்தம் ஈறு எனப் பொருள்படும் ஒரு வடசொல். ஆரியன் ஆசிரியன், மேலோன் எனப் பொருள்படும் ஒரு வடசொல். வேறுவே றுருவும் வேறுவே றியற்கையும் நூறுநூ றாயிரம் இயல்பின தாகி 25 ஏறுடை ஈசன்இப் புவனியை யுய்யக் கூறுடை மங்கையுந் தானும்வந் தருளிக் குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச் சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்; வேறு வேறு உருவும் - வெவ்வேறு திருவுருவங்களும், வேறு வேறு இயற்கையும் - வெவ்வேறு தன்மைகளும், நூறு நூறாயிரம் இயல்பினது ஆகி - நூறு இலட்சம் இயற்கையை உடையனவாக, ஏறு உடை ஈசன் - எருதினை ஊர்தியாக உடைய சிவபெருமான், இப்புவனியைஉய்ய - இந்நில வுலகத்திலுள் ளாரைப் பிழைப்பித்தல் வேண்டி, கூறு உடை மங்கையும் தானும் வந்து அருளி - தன்னை ஒரு கூறாக உடைய உமையும் தானுமாய் ஒருங்கு போந்தருளி, குதிரையைக் கொண்டு குடநாடு அதன் மிசை - குதிரைகளைச் செலுத்திக்கொண்டு சென்று மேல் நாட்டின் மீது, சதுர்படச் சாத்தாய்த் தான் எழுந்தருளியும் - திறமை யுண்டாக வணிகர் குழுவோடு சேர்ந்து தான் எழுந் தருளியும் என்றவாறு. இறைவன் தன்னை வழிபடும் அன்பர் வேண்டிய வாறெல்லாம் உருவங்கள் மேற்கொண்டு அவர்க்கு அருள் செய்வானாகலின் அவனெடுக்கும் உருவங்களுக்கும் அவ் வுருவங்களுக்குரிய இயல்புகளுக்கும் ஓர் அள வில்லை யென்று உணர்த்துவார் அவை தம்மை நூறு நூறாயிரம் இயல்பி னதாகி என்றருளிச் செய்தார். அங்ஙனம் வேறு வேறாய் எடுக்கும் உருவங்களிற் சிலவும் அவை பற்றி வரும் இயற்கைகளிற் சிலவும் அடிகள் இவ்வகவலில் முன்னும் பின்னும் கூறுகின்றா ராகலின், இவ் அடி இரண்டும் அவற்றிடையே நின்று அவன்றன் அளவிலாற்றலை விளக்குதற்கு அமர்ந்தன வென்க. எஞ்ஞான்றும் இறைவன் அன்பர் பொருட்டாகவே இங்ஙனம் பலவேறு உருவங்களும் இயற்கைகளும் உடையனாவதல்லது, தன் பொருட்டு இவற்றுள் ஏதும் உடையனல்லன. இஃது, உருமேனி தரித்துக் கொண்ட தென்றலும் உருவிறந்த அருமேனி யதுவுங் கண்டோம் அருவுரு வானபோது திருமேனி யுபயம் பெற்றோம் செப்பிய மூன்றும் நந்தங் கருமேனி கழிக்கவந்த கருணையின் வடிவு காணே என்னுஞ் சிவஞானசித்தித் திருச் செய்யுளானும் உணர்ந்து கொள்ளப்படும். வேறு வேறுருவும் நூறு நூறாயிரம் இயல்பினதாகி எனவும் வேறு வேறியற்கையும் நூறு நூறாயிரம் இயல்பின தாகி எனவும் தனித்தனி சென்றியைதலின் இயல்பினவாகி என்று பன்மை வாய்ப்பாட்டால் ஓதாமல் இயல்பினதாகி என்று ஒருமை வாய்பாட்டாற் கூறினார். உரு, இயற்கை என்னுஞ் சொற்கள் பன்மையீறு இல்லாதனவாகலின் அவ்வாறு ஒருமைவினை ஏற்றற்குரியவாமென்க; இன்னோரன்ன வெல்லாம், ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி பன்மைக் காகும் இடனுமா ருண்டே* (* தொல்காப்பியம் சொல் 461) என்பதனான் அமைக்கப்படும். இனி வினை எஞ்சு கிளவியும் வேறு பல் குறிய* (தொல்காப்பியம் சொல் 457) என்பதனால் இயல்பினதாகி என்பதை இயல்பினதாக என்று திரிக்க. புவனி இட வாகுபெயராய் மக்களை உணர்த்திற்று. உய்விப்ப என நிற்கற்பாலது பிறைவினைப் பொருளை யுணர்த்தும் வி எனும் ஈறுதொக உய்ய என நின்றது; குடி பொன்றிக் குற்றமு மாங்கே தரும்* (தொல்காப்பியச் சூத்திர விருத்தி) என்புழிப்போல. மதுரைமாநகர் திருப்பெருந்துறைக்கு நேர்மேற்கே யிருத்தலால் அது குடநாடென்று சொல்லப்படுவதாயிற்று. திருப்பெருந்துறையிலிருந்து மதுரைமாநகர்க்கு இறைவன் குதிரைத் திரள் கொண்டு போந்தமைபற்றி இங்ஙனங் கூறினார். சதுர் என்பது திறமைப்பொருளை யுணர்த்தும் சதுர என்னும் வடசொற் சிதைவு. சாத்து வணிகர் கூட்டம் என்று பொருள்படுதலைக் கழுதைச் சாத்து என்னும் பெரும்பாணாற்றுப் படைச் சொற்றொடர்க்குக் கழுதையிலே மிளகெடுத்துக்கொண்டு போகின்ற திரள் என்று நச்சினார்க்கினியர் கூறும் உரையிற் காண்க; சாத்தொடுபோந்து* (சிலப்பதிகாரம் 11, 190) என்பதற்கு அடியார்க்கு நல்லாரும் வாணிகச் சாத்தொடு போந்மு என்று பொருளு ரைப்பர். இறைவன் வணிகர் திரளோடு போந்தமையினை, அழகினுக் கழகார் மேனி ஆலவாய் அமுத வாயான் பழுதில்சாத் தவர்கள் சூழப் பல்பெருஞ் சிறப்பிற் றோன்றிப் பொழிலுக கனைத்துங் காணப் புரவிநூற் கியைய மிக்க செழியன்முன் குதிரை யிட்ட திருவிளை யாடல் கேண்மின் என்று பெரும்பெற்றப்புலியூர் நம்பி திருவிளையாடற் புராணங் கூறுமாற்றாற் காண்க. வேலம் புத்தூர் விட்டே றருளிக் 30 கோலம் பொலிவு காட்டிய கொள்ககையும் வேலம்புத்தூர் - வேலம்புத்தூரிலே, விட்டேறு அருளி - வேற் படையினைக் கொடுத்தருளி, கோலப் பொலிவு காட்டிய கொள்கையும் - தனது திருக்கோலச் சிறப்பினைக் காட்டிய கோட்பாடும் என்றவாறு. என்றது இறைவன் உக்கிரகுமாரற்கு வேற்படை நல்கிய திருவிளையாட்டினைக் குறித்தது. இது பெரும்பற்றப்புலியூர் நம்பி இயற்றிய திருவிளையாடற் புராணத்துட் காண்க. இங்ஙனம் வேற்படை கொடுத்த இடமாதல் பற்றியே அவ்வூர் வேலம்புத்தூர் என்று பெயர்பெற லாயிற்றென்று உணர்ந்து கொள்க. விட்டேறு என்னுஞ் சொல் வேற்படையினை உணர்த்துதல் சக்தி எஃகம் உடம்பிடி குந்தம், விட்டேறு அரணம் ஞாங்கத் அயில்வேல் என்னுந் திவாகரத்தாற் காண்க. இதற்கு இவ்வாறு பொருளுரைக்க. அறியாதார் விட்டேறு அருளி என்னுஞ் சொற்றொடரை ஏறுவிட்டு அருளி என மாற்றி எருதுவிடுத் தருளியும் எனப் பொருள் கூறுவர். இறைவன் ஏறுவிடுத்தருளினா னென்பது புராணங் களுட் காணாமையின் அவ்வுரை கொள்ளாமென்பது. கோலம் பொலிவு ஆறாம்வேற்றுமைக்கண் மகரங் கெட்டுக் கோலப்பொலிவு என நிற்கற்பாலது (தொல்காப்பியம் எழுத்து 310) எதுகை நோக்கி மெலிக்கும் வழி மெலித்த லாயிற்று (புறநானூறு 1). பொலிவு சிறப்புப் பொருட்டாதல், தாழ்சடைப் பொலிந்த அருநதவத் தோற்கே (தொல்காப்பியம் சொல் 403) என்பத னுரையிற் காண்க. தர்ப்பணம் அதனிற் சாந்தம் புத்தூர் விற்பொரு வேடற் கீந்த விளைவும் சாந்தம்புத்தூர் - சாந்தம்புத்தூர் என்னும் திருப்பதியில், வில் பொரு வேடற்கு - வில்லாற் போர்த் தொழிலைச் செய்யும் வேடன் ஒருவனுக்கு, தர்ப்பணம் அதனில் - கண்ணாடியின் கண்ணே தோன்றி, ஈந்த விளைவும் - அவன் வேண்டிய தொன்றை வழங்கிய ஆக்கமும் என்றவாறு. இது, வலந்தரும் வாளுங் கணையும் வேடற்கு வழங்கியது போலும். தர்ப்பணம் கண்ணாடியினை யுணர்த்தும் ஒரு வட சொல். விளைவு ஆக்கம் எனப் பொருள்படுதலை வேண்டிய பொருளின் விளைவு நன்கறிதற்கு என்பத னுரையிற் காண்க. (புறப்பொருள் வெண்பா மாலை 1 4) மொக்கணி அருளிய முழுத்தழன் மேனி சொக்க தாகக் காட்டிய தொன்மையும்: மொக்கணி - கொள்ளுள்ள பையை, அருளிய - குதிரை வாயிற் கட்டும் பொருட்டு, முழுத்தழல் மேனி - முழுமை யாகிய நெருப்பை யொத்த திருமேனியை, சொக்கதாக - அழகாக, காட்டிய தொன்மையும் - பாண்டியற்குக் காட்டிய பழைய தன்மையும் என்றவாறு. என்றது இறைவன் பாண்டியற்குக் குதிரை கொண்டுவந்த ஞான்று, தான் இவர்ந்துவந்த குதிரைக்குத் தீனி ஊட்டும் பொருட்டுக் கொள் முதலியன வேவுவித்து இட்ட பையைத் தானே எடுத்து அதன்வாயிற் கட்டுவானாய் அனற்பிழம்பை யொத்த தன் அருட்டிருமேனியைப் பாண்டியன் காணுமாறு காட்டிய அருட்பான்மையைக் கூறியது. மொக்கணி கொள் முதலியன இட்ட பை. கழுவிய பயறுங் கொள்ளுங் கடலையுந் துவரையோடு, முழுவதுஞ் சிறக்க விட்டே மொக்கணி முட்டக்கட்டி (குதிரை நரியான திருவிளையாடல் 6) என்றார் பெரும்பற்றப் புலியூர் நம்பியும். அருளிய என்பது செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் அருளும் பொருட்டு என்று பொருளாம். முழுத்தழல் அனற்பிழம்பு. சொக்கு - அழகு; இப்பொருட்டாதல் பிங்கலந்தையிற் காண்க. இனி, ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இலா முதல்வற்கு முழுத்தழல் போலும் மேனி உளதாக அடிகள் ஆண்டாண்டு ஓதுதல் என்னையெனின்; மக்களாகிய சிற்றுயிர்களாற் காணவுங் கருதவும் படாத இயல்பினனாகிய இறைவன் அவர்மாட்டு வைத்த பேரிரக்கத்தால் தன்னை அவர் ஒருவாற்றா னாயினுந் தெளியக் கண்டு வழிபட்டு உய்தற்பொருட்டுத், தான் அவர் கட்புலனெதிரே தன்னை விளங்கக் காட்டுதற்கு வாயிலாய் நிற்பது அனற்பிழம்பு ஒன்றுமேயாம். மண் புனல் அனல் வளி விசும்பு என்னும் ஐம்பெரும் பொருள்களுள் அனலினையே தான் விளங்குதற்கு வாயிலாக அவன் கொண்டவா றென்னை யெனின்; அனல் ஒன்றுமே இறைவனியல்பை ஒருபுடை யொப்பதாம். யாங்ஙனமெனின், இறைவன் அருளொளியுடைய னாய் உயிர்களின் அகத்தே யுள்ள ஆணவ வல்லிருளைத் துரக்குமாறு போல, அனலும் ஒளியுடைப் பொருளாய் உயிர் கட்குப் புறத்தேயுள்ள பாயிருளைப் பருகுதலானும்; இறைவன் தான் என்றுந் தூயனாய் இருந்தே தூயவல்லா ஏனைப் பொருள்களை யெல்லாந் தூய்மை செய்தல் போல, அனலும் தான் என்றுந் தூயதாயிருந்தே தன்பாற் சார்ந்த தூயவல்லா எல்லாப் பொருள்களையும் எரித்துச் சாம்பராக்கித் தூய்மை செய்த லானும்; இறைவன் ஆக்கல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்கள் புரியுமாறு போல, அனலும் உடம்புகளைப் படைத்தற்கு வேண்டுமளவு வெம்மையைத் தந்து படைத்தும், படைக்கப்பட்ட அவை நிற்கவேண்டுங் கால எல்லையளவும் தனது வெம்மை மிகாதுங் குறையாதும் உலாவ வைத்து அவற்றைக் காத்தும், அவற்றின் காலவெல்லை கழிந்த துணையானே தனது வெம்மையை மிகுத்தேனுங் குறைத்தேனும் அவற்றை அழித்தும் முத்தொழில் புரியக்காண்டலானும்; இறைவன் அருவாயும் உருவாயுமிருந்து உயிர்களாற் பற்றப் படாமைபோல, அனல் விறகினுள் அருவாய் மறைந்திருந்தும் முறுகக் கடைந்தவழி அவ்விறகின்கட் புலனாய் உருவுகொளத் தோன்றியும் எவரானும் எதனாலும் பற்றப்படாத இயற்பிற்றாய் நிற்றலானும், இறைவன் எல்லாவுலகங்களினும் எல்லாப் பொருள்களினும் எல்லா உயிர்களினும் விரவி நிற்றல்போல, அனலும் எல்லா உலகங்களினும் எல்லாப் பொருள்களினும் எல்லா உயிர்களினும் ஊடுருவி நிற்றலானும் அனல் ஒருவாற் றான் இறைவனியல்போடு ஒப்புடை யுடைத்தாதல் கண்டு கொள்க. இஃதல்லாத ஏனை நான்கு பொருள்களில் வளியும் விசும்பும் ஒருவாற்றானும் கட்புலனாகாத அருவப்பொருள் களாய்த் தம்மியற்கையில் ஒளிவிளக்கமிலாதனவா இருத்த லானும், மண்ணும் புனலும் கட்புலனாம் உருவுடையவேனும் தம் இயற்கையில் அங்ஙனமே ஒளிவிளக்கம் வாயாதனவாய்த் தூயவல்லாப் புன்பொருட் சேர்க்கையால் தாமுந் தூய்மை கெட்டுப் போவனவாய்ப் பருப்பொருள்களாய் உயிர்களாற் பற்றப்படுவனவாய் இருத்தலானும் அவை நான்கும் இறை வனியல்போடு ஒரு சிறிதும் ஒவ்வாமையின் அவை அவனது விளக்கத்திற்கு வாயிலாக மாட்டாவாயின வென்க. முதல்வன் அனற் பிழம்பினையே ஓர் ஒப்பற்ற வாயிலாக் கொண்டு விளங்கித் தோன்றி ஆருயிர்கட்கு அருள்புரிதல் கண்டன்றே இருக்குவேதம் முழுவதூஉம் அனற் கடவுள் வழிபாடு மிகுத் தொடுத்தோதுவதாயிற்று. அவ்விருக்கு வேதத்தின் முதல் ஏழுமண்டிலங்களினும் மண்டிலங்கடோறும் முதற்கண் அனற்கடவுள் வழிபடு விதந்தெடுத்து ஓதப் பட்டதூஉம், அனற்பிழம்பின்கண் விளங்கித் தோன்றும் உருத்திரன் ஒருவனே அவ்வேதத்தான் அறிவுறுக்கப்பட்ட முழுமுதற் கடவுள் என்பது தெற்றெனப் புலப்படல் வேண்டி அவ்வேதத்தின் இறுதிக்கண் நின்ற பத்தாம் மண்டிலத்தின் முதலினும் ஈற்றினும் அவ்வனற் கடவுள் வழிபாடு விதந் தெடுத்துரைத்து முடிக்கப்பட்டதூஉம் இவ்வுண்மையினை நிலைபெற நாட்டும் என்க. இவ்வாறு அனற்பிழம்பின்கண் விளங்கித் தோன்றிநின்று அருள் வழங்கும் முழுமுதற் கடவுளும், அக்கடவுள் விளங்குதற்கு வாயிலான அனலும் உருத்திரப் பெயரால் வழங்கப்படுதலை அதன் முதன் மண்டிலத்து நாற்பத்து மூன்று நூற்றுப் பதினைந்தாம் பதிகங்களினும், இருபத்தேழாம் பதிகத்தின் பத்தாம் மந்திரத்தும் இரண்டாம் மண்டிலத்தின் இரண்டாம் பதிகத்தின் ஐந்தாம் மந்திரத்தும் நான்காம் மண்டிலத்தின் மூன்றாம் பதிகத்தின் முதல் மந்திரத்தும் முறையே கண்டு கொள்க. இவ்வரிய பெரிய உண்மை, எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசன துருவ ருக்கம் தாவ துணர்கிலார் அரியயற் கரியானை அயர்த்துப் போய் நரிவி ருத்தம தாகுவர் நாடரே என்னுந் திருநாவுக்கரசு அடிகளின் தேவாரத் திருமொழியால் நன்குணரப்படும். சிவபிரான் இங்ஙனம் அனல் வடிவினராய் விளங்குதல் கண்டே சாந்தோக்கிய உபநிடதமும் பொற்றாடியுடனும் பொற் குஞ்சியுடனும் நகம முதலாக முழுதும் பொன் வண்ணமாய் ஞாயிற்றினால் மலர்ந்த இரண்டு செந்தாமரை போலும் விழிகளும் உடையர் இந்த ஞாயிற்றின் இடையேயுள்ள இரண்ணியபுருடர் என்று கூறாநிற்கும். இனித் தைத்திரீய ஆரணியகமும் பொற்றோள் உடையார்க்குப், பொன்னிறம் வாய்ந்தார்க்குப், பொன்உரு வுடையார்க்கு வணக்கம் என்று கூறிற்று. இவ்வாறே, பொன்னேர் தருமேனியனே புரியும் மின்னேர் சடையாய் விரைகா விரியின் நன்னீர் வயல்நா கேச்சர நகரின் மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே என்று திருஞான சம்பந்தப் பெருமானும், விண்ணுலகின் மேலார்கண் மேலான்றன்னை மேலாடு புரமூன்றும் பொடிசெய்தானைப் பண்ணிலவு பைம்பொழில்சூழ் பழனத்தானைப் பசும்பொன்னின் நிறத்தானைப் பால்நீற்றானை உண்ணிலவு சடைக்கற்றைக் கங்கையாளைக் கரந்துமையோ டுடனாகி யிருந்தான்றன்னைத் தென்ணிலவு தென்கூடற் றிருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றே னானே என்று திருநாவுக்கரசு நாயனாரும், பொன்செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்க சைத்தீர் முன்செய்த மூவெயிலும் எரித்தீர் முது குன்றமர்ந்தீர் மின்செய்த நுண்ணிடை யாள்பரவை யிவடன்மு கப்பே என்செய்த வாறடிகேள் அடியே நிட்டளங் கெடவே என்று சுந்தரமூர்த்திநாயனாரும் அருளிச் செய்தமை காண்க. அனற் பிழம்பின் நிறம் பொன்வண்ணமாகலின் அதனுள் முனைத்து விளங்குஞ் சிவபிரானும் அவ்வண்ணம் உடையராக வழுத்தப்படுவாராயினர். இன்னும், ஞாயிற்று மண்டிலம் எஞ்ஞான்றும் மாறா இயற்கையனற்பிழம்பு வடிவாய்த் திகழ்வ தொன்றாகலின், இறைவன் எக்காலும் அதன்கண் விளங்கிய படியா யிருப்பரென்பது பற்றியே, காயத்திரி மந்திர வழிபாடு மிகச் சிறந்ததாக வைத்துப் போற்றப்படுகின்றது. இருக்குவேத மூன்றாம் மண்டிலத்தின் இறுதிப்பதிகத்தின் கண்ணதான அக்காயத்திரி மந்திரம் வருமாறு: ஓம்தத்ஸவிதுர்வரேண்யம் பர்க்கோ தேவயதீமஹி தியோயோந: ப்ரசோதயாத் இது கழிபெருஞ் சிறப்பிற்றாகிய மந்திரமாய் யாவரானுங் கைக்கொள்ளப்படுதலின் இதன் சொற்பொருளும் பிறவும் ஈண்டு ஒரு சிறிது உரைக்கின்றோம்: ய:- எது, ந: - நம்முடைய, திய:- அறிவினை, பிரசோதயாத் - உந்துகின்றதோ, தத் - அந்த, ஸவிது:- ஞாயிற்றின்கண் விளங்கும், வரேண்யம் - வணங்கற்பாலரான, பர்க்க:- பர்க்கனென்னும் சிவபிரானுடைய, தேவய - அருளொளியினை, தீமஹி - நாம் நினைக்கின்றோம் என்றவாறு. மக்களறிவினை இயக்குவதாகிய செயல் ஞாயிற்றின் மேலும் ஞாயிற்றினு விளங்கும் சிவபிரான் மேலும் செல்லற் பாலதாம். ஞாயிறு புறத்தேயுள்ள ஒளிவடிவினது சிவபிரான் அதன் அகத்தேயுள்ள அருளொளி வடிவினர்; மக்கட்குப் புறஅறிவு விளங்குவதற்கு வாயிலாய் நிற்பது கண், அக அறிவு விளங்குதற்கு வாயிலாவது உள்ளம். இனிக் கண்ணறிவை விளக்குதற்கு ஞாயிற்றினொளி இன்றியமையாது வேண்டப் பட்டாற்போல, உயிரின் உள்ளறிவை விளக்குதற்கும் இறை வனது அருளொளி இன்றியமையாது வேண்டப்பட்டது. உயிரும் உடம்பும் பிரிவின்றி நிற்றல்போல, அவ்விரண்டனையும் ஒருங்கே விளக்கும் அகப்புற வொளிகளும் பிரிவின்றி நிற்றற்பொருட்டுச் சிவமும் ஞாயிறும் உடங்கியைந்து நிற்ப வாயின. இவ்வாறு நின்று புறத்தே கண்ணறிவினையும் அகத்தே உயிரறிவினையும் ஒரு காலத்து ஒருங்கு விளக்கும் ஞாயிறு சிவம் என்னும் இவ்விரண்டின் வழிபாடும் இக்காயத்திரி மந்திரத்தின் கண் ஒன்றாய் வைத்துரைக்கப்பட்டது. இனி, உயிர் இல்வழி உடம்பு பயன் இன்றானாற் போல, இறைவனது அருளொளி இல்வழி ஞாயிறும் பயனுடைத் தன்றாம். எனவே, ஞாயிற்றின் விளக்கத்திற்கும் ஏதுவாய் அதனைப் பயன் படுத்துவதூஉம் அதன்உள் ஒளிரும் சிவவொளி யேயா மென்பது பெறப்படும். இவ்வுண்மை தேறமாட்டாதார் காயத்திரி மந்திரம் வெறும் பகலவன் வழிபாடே நுதலுவதெனக் கூறி அதனை முப்பொழுதும் பொருளறியாது உருவேற்றிப் பயன்பெறாது கழிவர்; இப்பெற்றிப் பட்டார்க்கு இரங்கிய யன்றோ, அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் அருக்கண் ஆவான் அரன்உரு அல்லனோ இருக்கு நான்மறை ஈசனை யேதொழுங் கருத்தி னைஅறி யார்கன் மனவரே என்று திருநாவுக்கரசு அடிகளும் அருளிச் செய்தனர். அற்றேல், இக்காயத்திரி மந்திரம் சிவபிரான் மேற்றாதல் எற்றாற் பெறுதுமெனின்; பர்க்கன் என்னும் பெயராற் பெறுதும்; பர்க்கன் என்னும் பெயர் சிவபிரான் ஒருவர்க்கே உரியதாதல் அமர நிகண்டினுட் காண்க. இனி, மைத்திராயணீயோபநிடதமும் இக்காயத்திரி மந்திரப் பொருளை விரித்துரைத்து இதனைச் சிவபிரான் மேற்றாகவே வைத்து நிறீஇ விளக்குமாறுங் கடைப்பிடிக்க. பர்க இதி ருத்ரோ ப்ரம்ம வாதிந: என்று அவ்வுபநிடதம் முடித்துக் கூறுமாற்றால் பர்க்கன் உருத்திரனே எனத் தெளிவுறுத்தியது. மேலும், அது பர்க்கன் என்னுஞ் சொல்லுக்குப் பொருள் விரித்துரைக்குமாறும் நினைவுகூரற் பாலதாம். அச்சொல்லின் முதல் நின்ற ப என்னும் எழுத்து ஒளியினை உணர்த்துவதாகலின் ஞாயிற்று மண்டிலத்தின் நடுவணும் கண்ணின் கருவிழியிலும் விளங்குவோன் பர்க்கனாகிய சிவபெருமானே என்பது பெறப்படும்; இனி ஒளியினைக் கொண்டு அதனைத் தரும் பொருள் அறியப்படுதலால், ப என்னும் எழுத்து ஒளியினையும் க என்னும் எழுத்து அவ்வொளியினைத் தரும் சிவபிரானையுங் குறிக்கு மென்பது பெறப்படும்; இனிப், பர்க்கன் எனுஞ் சொற் பர்ச்சனம் செய்வது அல்லது வெதுப்புவது என்னும் பொருளையுந் தருதலால் அவ்வாற்றால் அஃது எவற்றையும் அழிப்பது அல்லது மலபரிபாகம் வருவிப்பது அல்லது அகத்தே உயிர்வளியி லியங்கி உயிர்கள் உண்ட உணவைப் பதப்படுத் துவது என்னுந் தொழில்களைப் புரிவோன் அவன் என்பதும் பெறப்படும்; இவையேயன்றி, ப என்னும் எழுத்து விளங்கச் செய்தல் எனவும், ர் என்னும் எழுத்து விரும்பச் செய்தல் எனவும், க என்னும் எழுத்து இடமாயுள்ளதெனவும் பொருடருதலின் தாமாகவே விளங்க மாட்டாத எல்லா உலகங்களையும் அவ்வுலகத்துப் பொருள்களையுந் தனக்கியற்கையாகவேயுள்ள ஒளியால் விளங்கச் செய்வோனும், அறியாமையாற் பற்றப்பட்டு ஒன்றினும் விருப்பின்றிக் கிடந்த உயிர்கட்குப் பொருள்கண் மாட்டு விருப்பினை ஏவி அறியாமையை அகற்றுவோனும், உயிர்கள் அழிப்புக்காலத்தில் ஒடுங்கிப் படைப்புக் காலத்தில் மீளத் தோன்றிப் பின்னர்த் தத்தங் கால எல்லையளவும் நிற்றற்கு நிலைக்களமாவோனும் பர்க்கனாகிய சிவபிரானே என்பது அறியற்பாற்று என்றும் அவ்வுபநிடதம் அறிவுறுத்துவதாயிற்று. இருக்குமா மறையின்கட் போந்த காயத்திரிமா மந்திரப் பொருள் சாமவேத முடிபாகிய மைத்திராயணீயோப நிடதத்தாலேயே ஐந்திரிபின்றி இங்ஙனம் இனிது விளங்கப் பட்டுச் சிவபிரான் மேற்றாகவைத்து அறுதி கட்டப்பட்டமை யால், இம் மறை மொழியோடு முரணி இதற்கு வேறு வேறு பொருளுரைக்கப் புகுவார் புன்செயல் ஒரு சிறிதும் பயன்படாதென வுணர்க. இங்ஙனம் உயிர்கட்குச் சேய்த்தாய் வானின்கண் இயற்கை யொளிப்பிழம்பாய்த் திகழும் ஞாயிற்று மண்டிலத்தினும், அவற்றிற்கு அணித்தாய் நிலத்தின்கட் செயற்கையாக வேட்கப்படும் வேள்வித் தீப்பிழம்பினும் சிவபிரான் முனைத்து விளங்குதல் பற்றியே அவனை முழுத்தழல் மேனிய னாக வைத்து ஈண்டு அடிகள் அருளிச் செய்வாராயினர், அற்றேல் அஃதாக, கட்புலனாய் விளங்கும் தீப்பிழம்பின் கட் செந்நிறம் அல்லது பொன்னிறம் உண்மையினைத் தெளிக் காண்டும்; கட்புலனாகாமுதல்வற்கும் அந்நிறம் உண்டென்பது எற்றாற் பெறுதுமெனின்; அதனையும் ஒரு சிறிது விளக்கிக் காட்டுதும்; அறிவில்லாப் பருப் பொருள்கள் அத்துணையும் உருவும் நிறனும் உடையவாய்ப் புலப்படத் தோன்றுதற்குமுன் அவை நனி நுண்ணியநிலையில் அவ்விரண்டும் புலனாகாமல் நின்றன. அவை அவ்விரண்டும் உடையவாய்ப் புலப்பட்டுத் தோன்றுமாறு அவை தம்மைத் திரிபுபடுத்துவான் ஒரு முதல்வன் இல்வழி அவை தாமாகவே தோன்றமாட்டா. ஆதலால், எல்லா அறிவும் எல்லா ஆற்றலும் ஒருங்குடைய முதல்வன் அவற்றைத் தோற்றுவிக்கின்றுழி இஃது இவ்வா றாகுக என்று தன் நினைவாற் கற்பிக்க, அந்நினைவின்படி இவ்வுலகமும் இவ்வுலகத்துப் பல் பொருள்களும் பல்வேறு ருவும் நிறனும் உடையவாயின. எனவே ஒவ்வொரு பொருளும் ஒவ்வோர் அமைப்பினைப் பெறும்முன் அவ்வமைப்பினை அதன்கட் டோற்றுவிக்கும் இறைவனது நினைவின்கண் அவ்வமைப்போடு ஒத்ததோர் உருவும் நிறனும் முற்கொண்டு அடைந்து கிடந்தனவாதல் துணியப்படும். யாங்ஙனமெனின், அழகிய ஒரு மாளிகையினை அமைக்கலுறுவான் ஒருவன் முற்கொண்டு தன் நினைவின்கண் அதனை இவ்விவ்வாறு அமைக்கற்பாற்றென்று வகுத்து அங்ஙனம் வகுத்துக் கொண்ட நினைவி னுருவுக்குப் பொருந்த அதனை அமைக்குமாறு போலவும், ஓவியம் எழுதுதலில் வல்லான் ஒருவன் ஒரு வடிவினை வரைதற்குமுன் தன் நினைவினுள் அவ்வடிவினைத் தெளிவுடுத்திப் பின்னர் அதற்கேற்ப ஒன்றனைப் புறத்தே வரையுமாறு போலவும் என்பது. ஆகவே, புறத்தேயுள்ள பொருள்கட்கு வடிவும் நிறனும் உளவாதல்போல அகத்தேயுள்ள உயிரின் நினைவிற்கும் உருவும் நிறனும் உளவாமென்பது பெற்றாம். பெற்றாமாயினும், பொருள்கட்குள்ள வடிவு நிறங்களின் இயல்பும், அறிவிற்குள்ள உருவு நிறங்களின் இயல்பும் வேறுவேறாமென்று உணர்ந்து கொள்க. என்னை? பொருள்களின் வடிவு நிறங்கள் அப்பொருள்கள் அழியுங்கால் அவற்றோடு உடன் அழியும்; மற்று உயிரோ என்றும் அழியாது நிலைபேறாய் நிற்பதொன் றாகலின் அதன் நினைவின்கட் காணப்படும் உருவு நிறங்களும் அதனோடொன்றாய் என்றும் நிலைபேறாய் நிற்குமென்க. இனி, அறிவுடைய உயிர்களுள் எல்லாம் மிக்கதாய்ப் பேரறிவுக் களஞ்சியமாய் விளங்குவது இறைமுதற்பொருள் ஒன்றேயா மென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததாகலின், அதன் நினைவின்கண் எல்லா உருவும் நிறனும் நிலைபேறாய் உளவா மென்பதூஉம், அவற்றிற் கேற்பவே மாயையிற் றிரண்டெழும் பொருள்கள் அத்துணையும் வடிவும் நிறனும் பெறுவனவா மென்பதூஉம், அங்ஙனமாயினும் முதல்வனது அறிவின்கட் காணப்படும் அவற்றினியல்பும் மாயையிற் காணப்படும் பிறவற்றி னியல்பும் தம்முள் வேறு வேறா மென்பதூஉம் பகுத்துணர்ந்து கொள்க. இது கொண்டு, அனற்பிழம்பிற்குச் செந்நிறம் அல்லது பொன்னிறம் உளதாதல் போல இறைவனது அறிவுருவிற்குஞ் செந்நிறம் அல்லது பொன்னிறம் உளதாதல் தேற்றமாம் என்க. இதுகொண்டு, அனற்பிழம்பிற்குச் செந்நிறம் அல்லது பொன்னிறம் உளதாதல்போல இறைவனது அறிவுருவிற்குஞ் செந்நிறம் அல்லது பொன்னிறம் உளதாதல் தேற்றமாம் என்க. அறிவுக்கும் உருவம் உண்டென்பது இஞ்ஞான்றை இயற்கைப் பொரு ணூலார் செய்துபோதரும் ஆராய்ச்சிகளானும், சத்திதன் வடிவே தென்னிற் றடையிலா ஞான மாகும் உய்த்திடும் இச்சை செய்தி இறைஞானத் துளவோ வென்னின் எத்திற ஞான முள்ள தத்திறம் இச்சை செய்தி வைத்தலான் மறப்பில் ஞானால் மருவிடுங் கிரியையெல்லாம் என்னுஞ் சிவஞானசித்தித் திருப்பாட்டானும் அறிந்து கொள்க. இன்னும் இதன் விரிவைச் சிவஞான போத ஆராய்ச்சியுள் யாம் உரைத்தது கொண்டு கண்டு கொள்க. 33 அரியொடு பிரமற் களவறி ஒண்ணான் நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும், ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி பாண்டி யன்றனக் குப்பரி மாவிற் றீண்டு கனகம் இசையப் பெறாஅ தாண்டான் எங்கோன் அருள்வழி இருப்பத் தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் - திருமாலு டனேகூட நான்முகனாலும் அளவு அறியப் பொருந்தாதவன், நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும் - நரிகளைக் குதிரை களாக்கிய நலமும், ஆண்டு கொண்டருள அழகுறு திருவடி என்னுஞ் சொற்றொடரை அழகு உறு திருவடி ஆண்டு கொண்டு அருள என மாற்றி அழகு பொருந்திய திருவடியால் அடிமை கொண்டு அருளும் பொருட்டு எனப் பொருளுரைக்க. பாண்டியன் தனக்குப் பரிமா விற்று - பாண்டிய மன்னனுக்குக் குதிரைகளை விற்று, ஈண்டு கனகம் இசையப் பெறாது - அதற்காக அவன் தந்த திரண்ட பொன்னைப் பெறுதற்கு உடன்பாடுறாமல், ஆண்டான் எங்கோன் அருள்வழி இருப்ப - என்னையும் அடிமை கொண்டவனாகிய எம் அரசனது அருள் நெறியையே யான் நாடியிருக்குமாறு, தூண்டுசோதி தோற்றிய தொன்மையும் - செலுத்தும் ஒளி வடிவினை அடியனேன் கண்ணெதிரே தோன்றச் செய்த பழைய தன்மையும் என்றவாறு. அரியொடு பிரமற்கு அளவறி யொண்ணான் என்றது தேவர்களுள் மிக்க திருமாலும் நான்முகனுந் தாந்தாமே பெரியரெனத் தம்முட் கருதித் தருக்குதலான் அவரறிவுக்கும் எட்டாமல் அப்பாற்பட்டவன் இறைவன் என்பதனை உணர்த்திய படியாம். இக்கருத்தினை யுட்கொண்டே ஈசாவாசி யோப நிடதமும் தேவர்கள் அவனை அறிவோமென விரைந் தோடியும், அவன் அவர்கட்கு வேறாய் அவர்களை மேற்கடந்து போயினான் என்று கூறுவதாயிற்று. யான் எனது என்னுஞ் செருக்கு அற்றவர்கட்கே இறைவன் றிருவடியைத் தலைக்கூடுதல் பொருந்தும் என்பதற்கு, யான்என தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும் எனவும், (திருக்குறள் 346) ஓங்கார மேநற் றிருவாசி யுற்றதனின் நீங்கா எழுத்தே நிறைசுடராம் - ஆங்காரம் அற்றார் அறிவர்அணி அம்பலத்தான் ஆடல்இது பெற்றார் பிறப்பற்றார் பின் எனவும்* (உண்மை விளக்கம் 35) போந்த திருவெண்பாக்களே சான்றாம். பிரமற்கு - பிரமனால்; உருபு மயக்கம். ஒன்றான் என்பது ஒண்ணான் எனத் திரிந்தது. இறைவன் குதிரைச் சேவகனாய்க் குதிரையூர்ந்து வந்த பொழுது தேவரானுங் காண்டற்கரிய அவனுடைய திருவடிகள் தாமும் பாண்டியனும் கண்டுகளித்தற்கு எளியவாய் வந்த அருட்பான்மையினை வியந்து ஆண்டு கொண்டருள அழகுறு திருவடி என்றெடுத்தோதினார். ஈண்டு கனகம் - திரண்ட கொன்; ஈண்டு எனுஞ்சொல் இப்பொருட்டாதலை ஈண்டிய, மழையென மருளும் பஃறோல் என்பதன் (புறநானூறு 17) உரையிற் காண்க, இறைவன் குதிரைகளைக் கொண்டு பாண்டியன்பாற் சென்றது பொன் பெறுதற் பொருட்டாகவன்றி, அடிகளை ஆண்டு கொள்ளுதல் பொருட்டாகவேயா மென்பது தெரிப்பார் ஈண்டு கனகம் இசையப் பெறாது, ஆண்டான் என்றருளிச் செய்தார். எல்லா உலகங்களையும் அவ்வுலகத்துப் பொருள்களையும் தனக்கே மெய்யுரிமையாகவுடைய முதல்வதற்குப் பாண்டியன் றருவதொரு பொருளு முண்டோ! ஆகவே, தன் அடியவரைக் காத்தல் வேண்டிக் குதிரை விற்றல் தலைக்கீடாக இறைவன் தோன்றினா னென்பது. பாண்டியன் தான்தந்த பொற்றிரளுக்கு ஈடாகக் குதிரை கொண்ர்வித்தல் வேண்டுமெனவும், அங்ஙனஞ் செய்யா தொழியின் தான் றந்த பொற்றிரளைத் திரும்பச் செலுத்துதல் வேண்டுமெனவும் வலியுறுத்தி அருளின்றி அடிகளை அளவின்றியே வருந்தாநிற்க. இறைவனோ அடிகள் பட்ட கடனைத் தீர்ப்பான் வேண்டி எவர்க்கும் அரிய தன்றிருவுருவை எல்லாருங் காணுமாறு காட்டிக் குதிரைமேற் கொண்டுபோந்து அவரை அத்துன்பத்தினின்றும் மீட்டுக் காத்தருளினானாகலின் எந்நிலையினுங் காத்தாட் கொள்ளும் அவ் ஐயன் அருள் நெறியே எக்காலும் விரும்பற்பாலதென்று உணர்த்துவார் எங்கோன் அருள்வழி இருப்ப எனவும், அவ்வருணெறியை விரும்புமாறு தூண்டுவதும் அவனருளே என்றுணர்த்துவார் தூண்டு சோதி எனவும் அருளிச் செய்தார். தூண்டுதல் - செலுத்துதல். இதற்கு இப்பொருள் உளதாதலைப் பிங்கலந்தையுட் காண்க. அந்தணன் ஆகி ஆண்டுகொண் டருளி இந்திர ஞாலங் காட்டிய இயல்பும் அந்தணன் ஆகி - ஒரு பார்ப்பன வடிவினனாகத் தோன்றி, ஆண்டு கொண்டு அருளி - என்னை அடிமையாகக் கொண்டு அருள் செய்து, இந்திரஞாலம் காட்டிய இயல்பும் - மாய வித்தை காட்டிய தன்மையும் என்றவாறு. அந்தணர் என்பது அழகிய தட்பத்தினையுடையாரென ஏதுப் பெயராகலின், அஃது அவ் அருளுடையார் மேல் அன்றிச் செல்லாது என்று பரிமேலழகியார் உரை கூறுதலின் (திருக்குறள் 30) கால்வழி கால் வழியாய் அருளொழுக்கத்திற் றலைசிறந்து நிற்கும் பார்ப்பனர்க்கும் அந்தணர் என்னுஞ் சொல் உரித்தாயிற்று. இறைவன் ஓர் அந்தணன் வடிவிற்றோன்றிக் குருந்த மரத்தின்கீழ் வைகித் திருவாதவூரடிகளை ஆண்டு கொண்ட அருள் செய்தானென்பதனை முன்னே எனை யாண்ட, பார்ப்பானே எம்பரமா என்று (புணர்ச்சிப் பத்து) அடிகள் பிறாண்டுங் கூறுதலாற் கண்டு கொள்க. இந்திர ஜாலம் என்னும் வடசொற்றொடர் இந்திர ஞாலம் என மருவிற்று. வட மொழியில் ஜாலம் என்னுஞ் சொல் வலை என்னும் பொருளை உணர்த்துவதாகலின், இச் சொற்றொடர் இந்திரன் விரித்த வலை அல்லது இந்திரன் செய்த தந்திரங்கள் எனப் பொருள்படுவதாம். இந்திரன் தனக்கு மாறான அசுரரை அழிக்கும் பொருட்டுச் செய்த விரகுகள் மிகச் சிறந்தவாதல்பற்றி, அவை போன்ற மாய விச்சைகளும் செயற் கரிய செயல்களும் இந்திர ஞாலம் என்று வழங்கப்படுவவாயின. இறைவன் குருந்தின் கீழ்ப் பன்மாணவர் படைசூழ மக்கள் வடிவிற் றோன்றித் தம்மை அடிமைகொண்ட பின் மறைந் தருளின பான்மை அடிகட்குப் பெருமாயமாய்த் தோன்றினமை பற்றி அதனை இந்திரஜால மென்றுரைத்தருளினார். இதுவே அடிகட்குக் கருத்தாதல் அந்தமில் பெருமை அழலுருக் கரந்து, சுந்தரவேடத் தொருமுதல் உருவு கொண் டிந்திரஞாலம் போலவந்தருளி என்று இத்திருவகவலிற் பின்னருங் கூறுமாற்றாற் பெறப்படும். மதுரைப் பெறுநன் மாநக ரிருந்து 45 குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும், ஆங்கது தன்னில் அடியவட் காகப் பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும் மதுரைப் பெருநல்மா நகர் இருந்து - மதுரையாகிய பெரிய நல்ல சிறந்த நகரத்திலிருந்து, குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் - குதிரை ஆள் ஆகிய கோட்பாடும், ஆங்கு அது தன்னில் அடியவட்கு ஆக - குதிரையாள் ஆனதுபோலவே அம் மதுரை மாநகரில் அடியவளான பிட்டு வாணிச்சி பொருட்டாக, பாங்காய் மண்சுமந்து அருளிய பரிசும் - உரிமையாய் மண்ணைச் சுமந்தருளிய பண்பும் என்றவாறு. சேவகன் என்பது ஏவலாள் எனப் பொருள்படும் ஒரு வடசொல். ஆங்கு வினையுவமத்தின்கண் வந்தது (தொல்காப்பியம் உவமயியல் 11) இது குதிரைச் சேவகன் ஆகி என்பதனை அவாவிநின்றமையின் அச்சொற் றொடரை வருவித்துக் குதிரைச்சேவகன் ஆகியாங்கு என்று உரைக்க. இஃது இங்ஙனம் பொருள்படுதலை அறியாதார் ஆங்கு என்பதற்கும் மதுரை என்றுரைத்து அதுதன்னில் என்பதற்கும் மதுரையென் றுரைத்தார். பாங்கு - உரிமை. இப்பொருட்டாதல் திவாகரத்துட் காண்க. பிட்டுவாணிச்சிக்கு உறவு உரிமையுடைய ஆள்போல் வந்தமையால் இங்ஙனம் கூறினார். உத்தர கோச மங்கையுள் இருந்து யீவத்தக வேடங் காட்டிய இயல்பும் உத்தரகோச மங்கையுள் இருந்து - உத்தரகோச மங்கை யென்னும் ஊரிலிருந்து, வித்தக வேடம் - ஞானவுருவான கோலத்தை, காட்டிய இயல்பும் - காட்டிய தன்மையும் என்றவாறு. உத்தரகோச மங்கையில் அருந்தவம் ஆற்றிய அறுபத்து நான்கு முனிவரர் தமக்கு இறைவனே திருவுருக் கொண்டு எழுந்தருளி மெய்யறிவு கொளுத்தல் வேண்டுமென்று பெரிதுங் குறையிரப்ப, அவரது வேண்டுகோளுக்கு ஒருப்பட்டு ஐயனும் தனது திருவுருவினைக் காட்டி அவர் தமக்கு மெய்ப்பொருள் அறிவுறுத்தான் எனப் பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவிளை யாடற் புராணங் கூறாநிற்கும்*(வலை வீசின திருவிளையாடல் 22) வித்தகம் வித் என்னும் முதனிலையிற் பிறந்து ஞானம் என்னும் பொருளை யுணர்த்தும் ஒரு வடசொல்; இச் சொல்லுக்குப் புகழ்மிக்க என்னும் பொருளும் உண்டு. உத்தரகோசமங்கை என்பது உயர்ந்த ஆகமநூல்களை வெளியிட்ட இடமாதல் பற்றி அப்பெயர்பெற்ற தென்பர். (வலை வீசின திருவிளையாடல் 23) உத்தர - உயர்ந்த, கோசம் - நூல். 50 பூவணம் அதனிற் பொலிந்திருந் தருளித் தூவண மேனி காட்டிய தொன்மையும்; பூவணம் அதனில் - பூவணம் என்னுந் திருப்பதியில், பொலிந்திருந்து அருளி - விளங்கியிருந்தருளி, தூவணமேனி - தூய அழகினையுடைய திருவுருவினை,காட்டிய தொன்மையும் - காட்டிய பழமையும் என்றவாறு. என்றது, பொன்னனையாள் என்னும் ஒரு பெண்மணி சிவபெருமானிடத்தும் அவனடியாரிடத்தும் அளவுபடாத மெய்யன்புடையளாய், நாடோறும் எதிர்ப்படுந் தொண்டர்க்கு அறுசுவையுணவு ஊட்டி ஒழுகி வருங்காற், சிவபெருமான் றிருவுருவினைப் பொன்னாற் சமைத்து வைத்து வழிபாடாற்று தற்கு மிக்க விழைவுடையளானாள்; தன்னிடத்துள்ள பொருள் திருத்தொண்டர் வழிபாட்டிற்கன்றித், தான் கருதிய திருவடை யாளம் அமைத்தற்குப் போதராமை கண்டு பெரிதும் வருந்திய உள்ளத்தளாய் இருப்ப, அஃதுணர்ந்து அவள் குறையினைத் தீர்ப்பான் வேண்டி இறைவனே ஒரு சித்தர் வடிவில் அவள்பாற் போந்து, அவள் இல்லத்தின் கணிருந்த இருப்பு முட்டுகளை யெல்லாம் ஒருங்கு தொகுப்பித்து, அவையெல்லாம் பொன் னாகுமாறு மருந்துபூசிக் கொடுத்து மறைந்தருள, அந்நங்கை இறைவனே தன் பொருட்டு எழுந்தருளிய பேரருட்டிறத்தை நினைந்து நைந்துருகிப் பின்னர் இறைவன் பணித்தவாறே அவற்றைத் தழலிற்பெய்து பொன்னாக்கியெடுத்துக், கைவல் பொற்கொல்லரால் அழகியதோர் இறைவனுருச் சமைப்பித்து அதனை வழிபட்டு உய்ந்த வரலாற்றினைக் கூறியவாறாம். இது மதுரைக்குக் கிழக்கே பன்னிரண்டு நாழிகை வழிகழிந்துள்ள திருப்பூவணம் என்னுந் திருப்பதியின் கண் நிகழ்ந்ததென்று பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவிளையாடற் புராணங் கூறா நிற்கும். (பொன்னனையாளுக்கு அருள்புரிந்த திருவிளையாடல்) பொலிதல் விளங்குதல் எனப் பொருள்படுதலைச் சேணிற்பொலி செம்பொன் மாளிகை (திருச்சிற்றம்பலக் கோவையார் 23) என்பதற்குப் பேராசிரியர் கூறிய உரையிற் காண்க. வண்ணம் வணம் என்று ஆயது தொகுக்கும்வழித் தொகுத்தல் வண்ணம் - அழகு எனப் பொருள்படுதல் பிங்கலந் தையிற் காண்க. மேனி - உடம்பு; பிங்கலந்தை. வாத ஊரினில் வந்தினி தருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும் வாத ஊரினில் - திருவாதவூரின்கண்ணே, வந்து இனிது அருளி - வந்து இனிதாக அருள் செய்து, பாதச் சிலம்பு ஒலி காட்டிய பண்பும் - திருவடியில் இட்ட சிலம்பின் ஓசையைக் காட்டிய தன்மையும் என்றவாறு. என்றது: குறிப்பிட்ட நாளிலே குதிரை வரும் வரும் என்று பாண்டியவரசன் எதிர்நோக்கியும் வராமை கண்டு திருவாத வூரடிகளை அவன் வெகுண்டுரைக்க அவர் அதற்கு ஆற்றாது இறைவனைக் குறையிரந்து பாட, இறைவனும் நரிகளை யெல்லாம் பரிகளாக உருவுதிரித்துக் கொண்டு தானும் ஒரு புரவிமீ தூர்ந்து வருவான், முற்கொண்டு திருவாதவூரின் கண் வந்து வழி நோக்கிய அடிகட்கு அவ்வூரின்கட் டனது திருவடிச் சிலம்பொலியினைத் தோற்றுவித்தருளிய பான்மையை எடுத்துரைத்தவாறாம். இந்நிகழ்ச்சியும் பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவிளையாடலிற் கண்டு கொள்க. (நரி குதிரையான திருவிளையாடல் 14) திருவார் பெருந்துறைச் செல்வன் ஆகிக் 55 கருவார் சோதியிற் கரந்த கள்ளமும்; திருஆர் பெருந்துறை - அழகு நிறைந்த பெருந்துறையில், செல்வன்ஆகி - ஆசிரியனாகத் தோன்றி, கருஆர் சோதியில் - எப்பொருட்கும் முதலாய் நிறைந்த பேர்ஒளியில், கரந்த கள்ளமும் - மறைந்த வஞ்சமும் என்றவாறு. இறைவன் எல்லாம்வல்ல ஞானாசிரியனாய்த் திருப்பெருந் துறையில் எழுந்தருளித் தமக்கு மெய்ப்பொருள் அறிவுறுத்திய பின் பேரொளிப் பிழம்பில் மறைந்தமையினை ஈண்டுக் கூறினார். இதனை ஞானோபதேசஞ் செய்த திருவிளையாடல் 54ஆம் செய்யுளிற் காண்க. (பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவிளையாடற் புராணம்) மெய்பொருளுணர்ச்சியாகிய கல்வி கேடில் விழுச்செல்வ மாகலின் (திருக்குறள் 400) அதனையுடைய ஞானாசிரியனைச் செல்வன் என்றார். இனி, எல்லாச் செல்வமும் ஒருங்குடைய சிவபெரு மானே ஞான குரவனாய்த் தோன்றினமைபற்றிச் செல்வன் என்றுரைத்தாரெனினுமாம். சிவபெருமானைச் செல்வன் என்றுரைக்கும் வழக்குப் பண்டைக்காலத்தே உண்மை முக்கட்செல்வர் நகர்வலஞ் செயற்கே என்றும் பழைய தமிழ்ப்பட்டினுங் காண்க. கரு - முதற்பொருள் இறைவன் இயற்கையாகவே முனைத்து விளங்குதற்கு வாயிலாய் நிற்கும் விந்துவொளி எல்லாப் பொருள்கட்கும் முதலாய் அவற்றைத் தோற்றுவிப்ப தாகலின் அதனைக் கருவார்சோதி என்று கூறினார். இனிக் கரு என்பதற்குப் பரமாணு எனப் பொருள் கொண்டு பரமாணுருவுருவாய் விளங்கும் ஒளி என்று அச்சொற் றொடர்க்குப் பொருளுரைத்தலுமாம். கரு பரமாணுவெனப் பொருள் படுதலை கருவளர் வானத் திசையிற் றோன்றி என்பதன் உரையிற் காண்க. பூவலம் அதனிற் பொலிந்தினி தருளிப் பாவ நாசம் ஆக்கிய பரிசும்; பூவலம் அதனில் - பூவலம் என்னுந் திருப்பதியில், பொலிந்து இனிது அருளி - விளங்கி இனிதாக அருள்புரிந்து, பாவம் நாசம் ஆக்கிய பரிசும் - தீவினையை அழித்த தன்மையும் என்றவாறு, தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து நன்னீர்ச் சேவகன் ஆகிய நன்மையும் சயம்பெற - தன் அடியவனான பாண்டியன் வெற்றி அடையுமாறு, தண்நீர்ப்பந்தர் வைத்து - குறிர்ந்த நீரினை உதவும் பந்தல் ஒன்று இட்டு, நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும் - நல்ல நேரத்தில் நீரினைப் பருகத்தரும் ஆளாக உருவெடுத்த நன்றியும் என்றவாறு. என்றது: பண்டொருகால் ஒரு பாண்டியன் சிவபெரு மானிடத்து மிக்க அன்பு உடையனாக ஒழுகிவருங்கால், அவன் காலத்திலிருந்த ஒரு சோழ மன்னன் அவனது அன்பின் றிறத்தைக் கேள்வியுற்று மகிழ்ச்சிமீக்கூர்ந்து, தன் மகளை அவற்கு மணஞ் செய்விப்பான் விழைந்து தக்கார் பலரை அவன்பால் உய்ப்ப, அவனும் உவகையோடு அதற்கு ஒருப் பட்டான். இச் செய்தியினை யுணர்ந்த அப்பாண்டிய அரசனின் தம்பி தீய இயல்பினனும் அஞ்சா ஆண்மையனு மாகலின் தன் படைகளைத் திரட்டிக் கொண்டு அச்சோழ மன்னன்பாற் சென்று நின் மகளை எனக்கு மணஞ் செய்து தாராயேல், என்னொடு போர்க்குவா என்று அறைகூவ, அச்சோழன் அவனை எதிர்க்க அஞ்சி, அவற்கே தன்மகளைக் கொடுத்து அவனை மருமகனாக் கொண்டான். அதன் பின்னர் அச்சோழன் வடநாட்டில் தனக்குப் பெரும் பகைவனாயிருந்த ஓர் ஆரிய அரசனை வெல்லும்பொருட்டுத் தன் மருகனோடும் படை யெடுத்துச் சென்று அவனைப் புறங்கண்டு மீண்டனன். k‰W, ï¢nrhH‹ kUfndh jh‹bg‰w bt‰¿fshš ïWkh¥ò ilatdh», kJiukheflj br§nfhš X¢R« j‹ jikaid v⮤J bt‹W mtdJ muRÇik Æidí« btsîj‰F v©Â¢, nrhHDl‹ gilbaL¤J kJiu nk‰ bršyhÉg, ïtdJ tUifÆid íz®ªj gh©oa‹ bgÇJ« mŠáddh» ïiwtid¤ bjhGJ ‘Iand ah‹ tÈÆšny‹, v‹ brŒnf‹! என்று குறை யிரப்ப, ஆண்டவனும் அஞ்சாது சென்று அவனை எதிரிட்டுப் போர்செய்! யாம் நினக்கு வெற்றி தருகுவம் என்று சொல் பிறப்பிக்க, அப்பாண்டியனும் அதனால் மனவெழுட்சி யுடையனாய்ச் சென்று அவ்விருவரோடும் மலையாநின்றான். இரு திறத்தினர்க்கும் போர்மூண்டு நடக்கையில் கடுங்கோடை வெப்பம் அனலெனத் தீய்க்க அதனால் மாற்றார் படை நா வறண்டு இளைப்புற்றுப் போர்க்களத்தேர வீழ்ந்து மாய்ந்தது. மற்றுச் சிவபிராற்கு மெய்யன்பனான பாண்டியன்படை நின்ற பக்கத்தே ஒரு நறுமணத் தண்ணீர்ப்பந்தர் காணப்பட, அவனும் அவன் படைஞரும் அப்பந்தரிற் சென்று அங்கிருந்து ஓவாது நறுநீர் பருகத்தரும் ஒருவர்பால் எல்லாருங் குளிர்ந்த நறுமணநீர் பெற்றுப்பருகி அயர்வு தீர்ந்து கிளர்ச்சி பெற்றனர். அங்ஙனம் அயர்புதீர்ந்த பாண்டிய மன்னன்படை மாற்றார் படையை முற்றுந் தொலைத்துப் பகைவனாய்வந்த தம்பியையும் அவன் மாமனையுஞ் சிறைபிடித்து மீள்கையில் அத்தண்ணீர்ப் பந்தரைக் காணாதாயிற்று. வெற்றிபெற்று மீண்ட பாண்டியன் இறைவன் தனக்குத் செய்த பேரருட்டிறத்தை நினைந்து நினைந் துருகி வாழ்த்தினான் என்று இவ்வரலாற்றைப் பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவிளையாடற் புராணங் கூறாநிற்கும். பந்தல் பந்தர் என்றானது மொழியிறுதிப் போலி என்பர். 60 விருந்தினன் ஆகி வெண்கா டதனிற் குருந்தின் கீழ்அன் றிருந்த கொள்கையும்; விருந்தினன் ஆகி - புதிதுவந்தோனாகி, வெண்காடு அதனில் - திருவெண்காட்டிலே, குருந்தின் கீழ் - குருந்தமர நீழலின் கீழ், அன்று இருந்த கொள்கையும் - அன்றொருகால் இருந்த கோட்பாடும் என்றவாறு. பட்ட மங்கையிற் பாங்காய் இருந்தங் கட்டமா சித்தி அருளிய அதுவும் பட்டமங்கையில் - பட்டமங்கை என்னுந் திருப்பதியில், பாங்காய் இருந்து - உரிமையாய் எழுந்தருளியிருந்து, அங்கு அட்டமாசித்தி - அவ்விடத்தே எட்டுப் பெரிய சித்திகளின் இயல் பினை, அருளிய அதுவும் - விரித்து உரைத்த அத்தன்மையும் என்றவாறு. என்றது: முன்னொருகால் இறைவன் திருக்கைலை யிலிருந்து இயக்க மகளிர் அறுவர்க்கு அட்டமாசித்திகளின் இயல்பினை விரித்துக்கூறி வருகையில் அம்மாதரார் இடையே பராமுகமா யிருந்தனராக, அது கண்டு இறைவன் அவர்மேல் வெகுண்டு நீவிர் பட்டமங்கலம் என்னும் ஊரில் வான் அளாவுங் கோடுகள் உடையதோர் ஆலமரத்தின் கீழ் கற்களாய் உருமாறிக் கிடக்கக்கடவீர் என்று உரைப்ப, அது கேட்டு அம் மங்கையர் மிக நடுங்கி ஐயனை இறைஞ்சி எம் பெருமானே, சிறியேங்கள் செய்த பிழையைப் பொறுத்தருளல் வேண்டும்; அடியேங்கட்கு இட்ட சாபத்தைத் தேவரீரே போக்கி யருளல் வேண்டும் என்று குறையிரப்ப, ஆண்டவனும் அவரது வேண்டுகோளுக்கு உவந்து நீவிர் அறுவரும் அங்கே கற்களாய்க் கிடக்குஞான்று, யாமே அங்குப் போந்து; நுஞ்சாபத்தினை ஒழித்து, நுமக்கு அவ் வட்டமா சித்தியின் இயல்புகளை மீண்டும் அறிவுறுத்துவேம் என்று புகன்று விடுப்ப, அவ்வறுவரும் பட்டமங்கையிற் போந்து ஒரு பெரிய ஆலின்கீழ் நீண்டகாலங் கற்களாய்க் கிடந்தனர். கிடப்ப, இறைவனும் மொழிந்தவாறே அங்கு ஆசிரியன் வடிவாய் எழுந்தருளி அவர்தம் பழைய உருவினை நல்கி அவர்க்கு அட்டமாசித்திகளையும் அறிவுறுத் தருளினன் எனப் பெரும் பற்றப்புலியூர் நம்பி திருவிளையாடற் புராணங் கூறா நிற்கும். பாங்கு - உரிமை. இயக்க மாதர்க்கு இறைவன் பண்டு மொழிந்தபடியே வந்து அவர்க்கு அருள் செய்தமையிற் பாங்காயிருந்து என்றார். அணிமா மகிமா கரிமா இலகிமா, பிராத்தி, பிராகாமியம் ஈசத்துவம், வசித்துவம் ஆம்பெறக்கரிய அட்டமாசித்தி என்பது திவாகரம். இவற்றுள் அணிமா என்பதுதான் மிகவும் நுண்ணிய அணுவளவாய்ச் சென்று மிகச்சிறிய உயிர்களுள்ளும் இருப்பது; மண்முதற் சிவதத்துவம் ஈறாகிய முப்பத்தாறு தத்துவங்களிலும் உள்ளும் புறமும் அகலாது நிறைந்திருப்பது மகிமா என்னுஞ் சித்தியாம்; பேருமலையைப் போல் கனமாயிருக்கும், யோகியை எடுத்துத் தூக்கினால் மிக இலகுவான அணுவைப் போற் காணப்படுதல் இலகிமா என்னுஞ் சித்தியாம்; இலகுவான அணுப் போல் இருக்கும் அருந்தவனைக் கையிலெடுத்தால் மேருமலையைப் போற் கனமாயிருப்பது கரிமா என்னுஞ் சித்தியாம்; பாதல உலகத்திலிருந்து நான்முகனுலகிற் புகுதலும், மீண்டும் நான்முகனுலகிலிருந்து பாதலம் அடைதலும் பிராத்தி என்னுஞ் சித்தியாம்; வேற்றோர் உடம்பிற் புகுதலும், வானுலகில் இயங்குதலும், விரும்பிய இன்பங்களையெல்லாம் தானிருக்கு மிடத்திருந்தே நினைந்தாங்கு விருவித்து நுகர்தலும் பிராகாமியம் என்னுஞ் சித்தியாம்; வானின்கண் உள்ள ஞாயிறு தன்னிடத்துள்ள ஒளியால் உலகத்துள்ள எல்லாப் பொருள் களையும் விளக்கித் தன்னையும் விளக்குதல்போலச் சிவயோகி தன்னகத்துள்ள ஒளியால் முக்கால நிகழ்ச்சிகளையும் வானு லகின் பொருள்களையும் தான் இருக்குமிடத்திருந்தே உணர் தலும் பிராகாமியம் என்ப; இறைவனைப்போலத் தான் விரும்பியபடி முத்தொழில்புரிந்து ஒன்பது கோள்களுந் தான் ஏவிய பணிகேட்பத் திகழ்வது ஈசத்துவம் என்னுஞ் சித்தியாம்; அரக்கர் விலங்கு புள் பூதர் மக்கள் இந்திரன் முதலான எண்டிசைக் காவலர் எல்லாம் தன்வயமாய்நிற்கத் தான் அவற்றை யாளுதல் வசித்துவம் என்னுஞ் சித்தியாம். இவ் வெட்டுச் சித்திகளையும் இவ்வாறு விளக்கிக் காட்டும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம். வேடுவன் ஆகி வேண்டுருக் கொண்டு காடது தன்னிற் கரந்த கள்ளமும்; வேடுவன் ஆகி - வேடன் ஆகி, வேண்டுஉருக்கொண்டு - தான் விரும்பியதோர் உருவத்தினை மேற்கொண்டு, காடாது தன்னில் கரந்தகள்ளமும் - காட்டின்கண்ணே மறைந்து போய் வஞ்சமும் என்றவாறு. என்றது: முன்னொருகாலத்தில் சோழமன்னன் ஒருவன் தன் வலிமையினைத் தானே வியந்த செருக்குடையனாய் மேல்பால் கீழ்பால் வடபாலுள்ள நாடுகளின்மேலெல்லாம் படையெடுத்துச் சென்று அவற்றின்கண் இருந்த அரசரை யெல்லாம் வென்றி கண்டு, பின்னர்த் தென்னாட்டின்மேல் வருவானாயினான். அஞ்ஞான்று மதுரையில் அரசுவீற்றிருந்த பாண்டியமன்னன் சிவபெருமான் மாட்டு மெய்யன்பு உடைய னாகலின், சோழன் தன்னை எதிர்க்க வருதலை யறிந்து, உற்ற விடத்துதவுவோன் இறைவனே யன்றிப் படைகள் அல்லா மையால் யாம் சிவபிரானிடத்து இதனைச் சென்று அறிவிக்கற் பாலம் என்று உட்கொண்டு திருக்கோயிலிற் சென்று உள்ளங் குழைந்துருகி ஐயனுக்கு அதனை அறிவித்தான். அவனறிவிப்பி னைத் திருவுளத்தேற்ற பெருமான் நீ நின்படை யொடு சென்று இளையாது அவனோடு போர்புரிதி வேந்தரெல்லாங் கொண் டாட நினக்கே யாம் வென்றி தருகுவம், என்றொருசொற்றோற்று விக்கப் பாண்டியனும் அச்சொல் வழியே தன் படையொடு சென்று அவனோடும் பொரு வானாயினன். இறைவன்றிரு வருளால் பாண்டியன் கொண்டு சென்ற சிறுபடை பெரும் படையாய்த் தோன்றச் சோழன் உய்த்துவந்து வலிய பெரும் படை அதன்முன் நிற்கலாற்றாது புறங்காட்டி யோடியது. அது கண்ட சோழன் தன் பரியினை ஊக்கி முன்னேறிப்போந்து பாண்டியனோடு எதிர்க்கும் அளவில், பாண்டியன் என்னை யாளுடைய ஐயனே நின தேவலால் யானும் எதிர்க்கின்றேன் எனக் கூறி முற்செல்ல, அன்பர்க்கு அணுக்கமாயுள்ள பெருமான் ஒரு வேடனுருக் கொண்டு குதிரையூர்ந்து வந்து பாண்டியனைப் பின்றள்ளி முற்போந்து சோழன் ஏறி நிற்குங் குதிரை முகத்தில் ஒரு வேற்படையினை யெறிய, அதுகண்ட சோழன் நின்னைக் குதிரையோடும் பிடிப்பேன் என்றுரைகூறித் தொடர, ஐயனும் அவனுக்கு இளைத்து ஓடுவான்போற் பரியினை ஏவி மதுரை நோக்கிப் போகச், சோழன் வென்றிபெற்றாலென உள்ளங் கிளர்ந்து அவனை விரைந்து பின்றொடர்ந்தேக, அவனும் மதுரைக்கு மேல்பால் உள்ள ஓர் ஆழ்ந்த மடுவிற் குதிரையோடும் வீழ்ந்து மறைய, அவனைப் பின்றொடர்ந்து சென்ற சோழனும் வந்தவிரைவாற் குதிரையோ டதன்கண்வீழ்ந்து மாண்டான் எனப் பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவிளையாடற் புராணங் கூறும். வேடுவனாகி என்றதும் வேண்டுக் கொண்டு என்றதும் ஒன்றனையே உணர்த்தின; வேடுவனானது அப் பொழுதிற்குத் தான் வேண்டியதோர் உருவமாதலின் அங்ஙனங் கூறினார். இனி, ஆகி என்பதைச் செயவெனெச்சத் திரிபாகக் கொண்டு வேடுவனாக வேண்டுருக்கொண்டு என்று வைத்துப் பொருளுரைப்பினுமாம். சோழனை மடுவில் வீழ்த்திய இடம் அக்காலத்துக் காடாயிருந்தமையாற் போலும் அடிகள் காடது தன்னிற் கரந்த கள்ளமும் என்றோதினார். மெய்க் காட்டிட்டு வேண்டுருக் கொண்டு தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்; மெய்க் காட்டிட்டு - உண்மையைக் காட்டி, வேண்டு உருக் கொண்டு - தான் விரும்பியதோர் உருவினை மேற்கொண்டு, தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும் - தகுதியுடையோன் ஒருவனாய்த் தோன்றிய தன்மையும் என்றவாறு. என்றது : பண்டைக்காலத்து அரசு புரிந்த பாண்டிய மன்னன் ஒருவனுக்கு அன்பிற் சிறந்த படைத்தலைவனாய் வயங்கிய சுந்தரசாமந்தன் என்னும் பெரியோன் சிவபிரானி டத்தும் அவனுக்கு மெய்யன்பராயினாரிடத்தும் பேரன்புடைய னாய் ஒழுகி வருகையில், சேதிபர்கோன் என்னும் பெயர் பூண்ட ஒரு வேட்டுவ அரையன் தனக்குள்ள பெரும்படைகளின் வலியால் இறுமாந்து அப்பாண்டிய வேந்தன்மேல் வந்து எதிர்க்க ஒழுங்கு செய்வான் புக்கனன். ஈதுணர்ந்த பாண்டிய மன்னன் துணுக்குற்றுத் தன் படைத்தலைவனை விளித்து அதனை யறிவித்துத் தமக்கு பெரும்படை யின்மையின் அதனைத் திரட்டுதற்குக் களஞ்சியத்தைத் திறந்து வேண்டும் பொருள் எடுத்துக் கொள்ளுமாறு கற்பிக்க, அவனும் அங்ஙனமே பொதி பொதியாகப் பெற்றிரள் எடுப்பித்து வந்து அவந்நை நோக்குதலும், அவை சிவனடியார்க்குப் பயன்படல் வேண்டுமென எண்ணினான். எண்ணி யாங்கே, நாடோறும் சிவனடியாரைத் தொகுதி தொகுதியாக வருவித்து அவர்தமக் கெல்லாம் அறுசுவைக் கறியும் அடிசிலும் உவந்து ஊட்டிவர, ஆறுதிங்களில் அரசன் றந்த பொருளெல்லாம் அழிந்தது. MW â§fŸ br‹wJ« mur‹ gil¤jiytid miH¥ã¤J¥ ‘gilfŸ v›tst bjhF¥ã¤jid? எனக் கேட்ப, அவனும் அடியாக்கெளிய வனான சிவபிரான் உளன். அடியனேன் கருத்தினை அவன் முடிப்பான். வேண்டியபொழுது படைகள் வரும் என்று விடைகூறப், பெயர்த்தும் அரசன் நாளைக் காலையில் நீ தொகுப்பித்த படைகளை மெய்க்காட்டு என்று பகர்ந்து விடுப்பச் சாமந்தன் என் செய்வேன் என நைந்து இறைவன் றிருக்கோயிலினுட் புகுந்து பெருமானுக்குத் தன் குறையினைச் சொல்லியிரக்க, ஆண்டவனும் நீ உளம் வருந்தற்க. வேண்டும் படையெலாங் கொண்டு நாளைக்காலையில் கொற்றவன் காண வருவேம் என ஒரு சொற் பிறப்பிக்க, அவனும் மனந்தேறி மற்றைநாட் காலையில் அரசர்முன் போதருமளவில் எம்மருங்கும் பல்லியங் கறங்கப் பெரும்படைச் சாத்துவர, அரசன் அத்திரளைக்கண்டு வெருவி எதிர் குறுகிய படைத்தலைவனை வினாவ, நாம் தொகுப்பித்த படை, வேந்தே அஞ்சற்க என்றுரைத்து, அணுகிய படையினை எதிர் நிரலேநிறுத்தி வகுத்து அவற்றின் மெய்ம்மையைக் காட்டி யிட்டான். பாண்டிய மன்னன் அவற்றின் சிறப்பெல்லாங் கண்டு மகிழ்ந்து, அப்படைகளின் நடுவேநின்ற மற்றொரு தலைவனது உருவினைக் கண்டு வியந்து அவனை அவனால் அருகழைத்து நோக்கிக் கரையிகந்த களிப்பெய்தி அவற்குப் பொற்றூசு அளித்து, அவன் பரியுகைக்குமாறெல்லாங் கண்டு இறும்பூது யெய்துகையில், வேவுகாரர் சிலர் போந்து படையெடுக்கத் துணிந்த வேட்டுவ மன்னனாகிய சேதிபர்கோன் ஓர் அரிமாவாற் கோள் இழைக்கப்பட்டு உயிர்துறந்தான் என்க கூறக்கேட்ட பாண்டியன், தன் படைத்தலைவனை நோக்கி இதுவுந் திருவருட் டிறமே போலும்! இக்கொடும் பகைவன் ஒழிந்தமையால் இப்பெரும் படைஞரை வருத்துதல் எற்றுக்கு! இவர் தத்தம் நாடு நோக்கிச் சொல்லிவிடு என்று சொல்லி அவனை ஏவிய வளவிலே, வந்த அப்பெரும்படையும் அப்படைஞர்க்குத் தலைவனும் ஒரு நொடிப் பொழுதிலே மறையக் கண்டு பாண்டியனும் சாமந்தனும் பிறரும் இறைவனருளை வாழ்த்தி வியந்தனரெனப் பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவிளையாடற் புராணங் கூறா நிற்கும். காட்டு என்னும் முதலோடு இடு என்னுந் துணைவினை சேர்ந்து காட்டிடு என்று ஆய், இறந்த காலத்தின் பொருட்டுத் துணைவினை இரட்டிக் காட்டிடு என நின்றது. ஈண்டு மெய்க்காட்டிடுதலாவது படைகளின் உண்மையை உள்ளவாறு காட்டுதல். தக்கான் ஒருவன் என்றது வந்த அப்படைகளின் நடுவிற் படைத்தலைவனாய் நின்ற அறவோனை உணர்த்திற்று. ஓரி ஊரின் உகந்தினி தருளிப் பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்; ஓரி ஊரின் உகந்து இனிது அருளி - ஓரியூரின்கண் விருப்பம் மிகுந்து இனிதாக அருள்செய்து, பார் இரும் பாலகன் ஆகிய பரிசும் - இந்நிலத்திலேயும் பெருமை தங்கிய குழவியாகிய தன்மையும் என்றவாறு. என்றது : முன்னொருகாற் பாண்டி நாட்டின்கண் ணுள்ள ஓரியூரில் வாழ்ந்த சைவமறையோர் ஒருவர் தாம் அரிதிற் பெற்ற அழகிய ஒரு பெண்ணைப் பிரமசாரியார் வரும் மறையோன் எவனாயினும் அவனுக்கு வாழ்க்கைப்படுத்துவேன் என்று உறுதி கொண்டிருப்ப, திருமால்குடியிற் றோன்றிய ஓர் அந்தண இளைஞன் பிரமசாரியாய் ஒரு நாள் தனதில்லத்திற்கு வருதலும் அவனுக்கு உடனே தன் மகளை மணஞ்செய்து கொடுத்து அவனோடு அவளைப் போகவிட்டான். விடுப்ப, அவன் அவளொடும் தன்னூருக்குத் திரும்பித் தனது இல்லத்தே புகக் கண்ட அவன் அன்னை ஒரு சைவப் பார்ப்பனன் மகளை அவன் மணஞ்செய்து வந்தமை யறிந்து மன எரிவு மிக்காளாய் அப் பெண்மணியைத் தன் வீட்டின் ஓர் ஒதுக்கிடத்தே வைத்துக் கொடுமையாய் நடத்திவருவாள் ஆயினாள். அந்நங்கையை மணஞ் செய்து வந்தோனும் திருவருட் குறிப்பால் அவள்மேற் கருத்துவையாமல் நடந்துவரலானான். âUkhšFoƉ ãwªj ït®fŸ v©Âwªj ghftjiu¤ jkâšy¤â‰F miH¤J ÉUªJ brŒJ tUjiy¡ f©l m«khjuh® ‘e« átãuh‹ moah® ï§F tUtj‰F« mt®¡F ešÉUªJ b¢aj‰F« eh« bg‰nwh« ïšiyna! என்ற மனத்துயரால் பெரிதுவாடி அதனை யார்க்கும் உரையாளாய் நாட்கழித்துவர, ஒரு நாள் அப்பெண்மணியாரின் மாமன் மாமி முதலான அனைவரும் இவளைத் தனியேவிட்டு ஒரு கொண்டாட்டின் பொருட்டு வேறோர் இல்லத்திற்கு ஏகினாராக, நெந்றியிற் றிருநீறு திகழச் சாத்தி முதியோன் ஒருவன் அம்மாதரார் தனியிருந்த வீட்டினுட் புகுந்தான். புகுந்து தையலாய், நமக்கு அமுது படை எனக் கூறத், தம்பிரானடியார் வரப் பெற்றதற்கு மிக மகிழ்ந்தன ளாயினும், உணவுப் பண்டங்களையெல்லாம் ஓர் அறையினுள் வைத்துத் தன் மாமி கதவடைத்துப் போனதை நினைந்து மிக வருந்தி அதனை அம்முதியோற்கு உரைப்ப, நீ கதவண்டை செல்வை யேல் அது திறக்கும். நமக்கு மிகப்பசித்தலால் பருப்பும் அமுதும் அமைத்துப் படைத்தாலும் அது போதும் என்று அப்பெரி யோன் பகன்றனன். அந்நங்கை அச்சொற்கேட்டுப் பதறி விரைந்து வாயிலிற் செல்லக், கதவும் சடுதியிற் றிறந்ததுகண்டு வியப்புடையளாய் உள் நுழைந்து சிறந்த பொருள்களை எடுத்து ஆக்கிப் படைக்க. அம்முதியோனும் வயிறு நிறைய உண்டபின் எழில் விளங்குந் திருவுருவினோடு ஒர் இளைஞனாய் இருக்கக் கண்டு வியப்புங் காதலும் உடையளானாள். இதற்கிடையில் வேறோர் இல்லத்திற்குச் சென்றிருந்த அவள் மாமி திரும்பி வருவாள் எவரோ தனதகத்தே புகுந்தமையறிந்து விரைந்து உட்செல்ல, அடியார் அல்லல்களையும் ஐயனே அங்கு வந்தோ னாதலால், தன் இளமைக் கோலத்தை மாற்றி அழகிய ஒரு சிறு மகவாய் ஒரு தொட்டிலிற் கிடந்தனன். அதனைக்கண்ட மாமி பெரிதும் வெகுண்டு ‘இக்குழவி ஏது’ என வினவ, ‘இங்கு வந்தா ளோர் அழகிய திருவினாள் இதனை இத்தொட்டிருள் வளர்த்தி வைத்து, இதனைப் பார்த்துக் கொள்ளென்று எனக்கு உரைத்துத் தன் கணவனோடும் போயினள்’ என்று அம்மாதர் விடைகூற, மாமி பின்னுஞ் சீறி ‘நீயோ பிறர் மகவைக் காப்பாய்! என்று சினந்துரைத்து, அக்குழவியை அவள் கைக் கொடுத்து, அவளையும் மனையின் புறத்தே தள்ளிக் கதவடைப்ப, மகவாய்க் கிடந்த ஐயன் தன் இயற்கைத் திருவுருங் கொண்டு, அந்நங்கை யையும் உமையினுருவாக்கி வான்மேற்கொண்டு போயினா னென்று பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவிளையாடல் கூறும் இப் புராணத்தின்கண் ஓரியூர் என்னும் பெயர் கூறப்பட்டில தாயினும் அடிகள் அப்பெயர் கூறுதலின் அதனை இவ் வரலாற்றின்கட் பெய்து கூறினாம். உகப்பே யுயர்தல் என்று * (தொல்காப்பியம் உரியியல் 8) ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுதலின் உகந்து என்பதற்கு விருப்பம் மிகுந்து என்று பொருளுரைக்க. அந்நங்கைமேல் இறைவன் விருப்பம் மிகுந்து போந்தமையின் இங்ஙனங் கூறினார். பார் - நிலம்; இழிவு சிறப்பும்மை தொக்கது. கடைப் பட்டதாகிய இந்நிலத்தின் கண்ணும் முதல்வன் அடியவள் பொருட்டுப் பாலகன் ஆயினானென்று உரைத்தருளியவாறு. இருமை - பெருமை 70 பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்துந் தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில் கோவார் கோலங் கொண்ட கொள்கையும்; பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் - திருப்பாண்டூர் என்னும் இடத்தில் செறிய இருந்தும், தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில் - திருத்தேவூருக்குத் தென்பக்கத்தே விளங்கா நின்ற தீவின்கண், கோ ஆர் கோலம் கொண்ட கொள்கையும் - அரசத் தன்மை நிறைந்த திருவுருவினை மேற்கொண்ட கோட்பாடும் என்றவாறு. ஈண்டல் - செறிதல்; இப்பொருட்டாதல் இமிழ் கடல் வளைஇய ஈண்டகன் கிடக்கை என்பதன்* (புறநானூறு 19) உரையிற் காண்க. தேனமர் சோலைத் திருவாரூரின் ஞானந் தன்னை நல்கிய நன்மையும்; தேன் அமர் சோலைத் திருஆரின் - தேனடைகள் உள்ள சோலைகளையுடைய திருவாரூரில் ஞானம் தன்னை நல்கிய நன்மையும் - வீடு பயக்கும் உணர்வினைக் கொடுத்த நலமும் என்றவாறு. ‘ஞானம்’ வீடு பயக்கும் உணர்வு என்னும் பொருட்டா தலைக் பரிமேலழகியார் உரையிற் காண்க.* (திருக்குறள் 34ஆம் அதி) 75 இடைமரு ததனில் ஈண்ட இருந்து படிமப் பாதம் வைத்தஅப் பரிசும்; இடைமருது அதனில் ஈண்ட இருந்து - திருவிடை மருதூரின்கட் செறிய இருந்து, படிமப் பாதம் - தெய்வவடிவான திருவடிகளை, வைத்த அப்பரிசும் - வைத்த அத்தன்மையும் என்றவாறு. படிமம் தெய்வவடிவம் எனப் பொருள்படுதலைக் கை வினைமுற்றிய தெய்வப்படிமத்து* (சிலப்பதிகாரம் நடுக்காதை 228) என்புழியும், கடவுள் எழுதிய படிமங் காணிய* (மணிமேகலை வஞ்சி மாநகர் புக்கக் காதை 4) என்புழியுங் காண்க. ஏகம் பத்தின் இயல்பாய் இருந்து பாகம் பெண்ணோ டாயின பரிசும்; ஏகம்பத்தின் - திருக்கச்சி ஏகம்பம் என்னுங் காஞ்சிமா நகரில், இயல்பாய் இருந்து - இயற்கையாய் எழுந்தருளியிருந்து, பாகம் பெண்ணோடு ஆயன பரிசும் - இடப்பாகம் உமைப் பிராட்டியாரோடு கூடியான தன்மையும் என்றவாறு. என்றது : திருக்கையிலையில்இறைவனும் இறைவியுங் காதல் விளையாட்டில் இருந்தபொழுது, அம்மை புறத்தே நின்று ஐயன் திருக்கண்களைத் தன் மென்மலர்க்ககைளாற் புதைக்க, உலகத்தின்கண் உள்ள ஞாயிறு திங்கள் வான்மீன் தீ முதலான எல்லா ஒளியுடைப் பொருள்களும் அவன்றன் அருட் கண்ணொளியால் விளங்குவனவாதலால், அவையெல் லாம் ஒளியிழந்து எங்கும் இருள, எல்லா உயிர்களும் பன்னெடுங் காலம் ஆரிடர் உழந்தன. உழவாநிற்ப, அன்னை தன் திருக் கைகளை அகற்றப், பெயர்த்தும் ஞாயிறு திங்கண் முதலான எல்லாம் பண்டுபோல் ஒளியுடையவாய் விளங்கா நின்றன. உடனே இறைவன் அம்மையை நோக்கி மலையரையன் பொற்பாவாய், நீ நம் கண்களை ஒரு விளையாட்டால் மறைத் தது நமக்கு ஒரு நொடிப்பொழுதே யாயினும், அஃது ஏனைக் கீழ் உலகங்களில் உள்ள மன்னுயிர்கட்கெல்லாம் பன்னெடுங் காலமாய் நீண்டு எங்கும் ஒளியின்மையால் அவை தமக் கெல்லாம் ஆற்றொணாய் பெருந்துயரை விளைத்தது. அவை பட்ட துயர் நீங்குதற்குக் கழுவாயாக நீ நம்மை அகன்று மண்ணுலகிற் சென்று காஞ்சி என்னும் நமக்கினிய மாநகரில் நம்மைச் சிவலிங்க வடிவில் வைத்து வழிபாடு ஆற்றுதி!’என்று கூறி விடுப்ப, அம்மையும் இறைவனைப் பிரிதலாற்றாளாய்ப் பிரிந்துபோந்து கச்சியிற் கம்மையாற்றங்கரையிற் சிவலிங்கப் பெருமானை எழுந்தருளச் செய்து வழிபட்டுவருங்கால், ஐயன் றிருக்குறிப்பால் அவ் யாற்றில் வெள்ளம்பெருகிப் பொங்கி மண்ணால் எழுப்பிய சிவலிங்க வடிவின்மேல் வந்துதாவ, அதுகண்டு அம்மை ஆற்றாளாய்ப் பெரிதும் மனங்கரைந்துருகத் தன் இரு மலர்க்கைகளாலும் அதனைச் சூழ்ந்துதழுவ, அவ் அன்பின்மேலீட்டிற்கு உவந்து பெருமானும் அத்திருவுருவத் தினின்றுந் தோன்றி, அம்மையை அணைத்து மணம்புரிந்து தனது இடப்பாகத்தில் அமரவைத்தானெனக் காஞ்சிப்புராணங் கூறாநிற்கும்.* (சிவஞான முனிவரர் இயற்றிய காஞ்சிப் புராணம் தழுவக் குழைந்த படலம்) திருவாஞ் சியத்திற் சீர்பெற இருந்து 80 மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்; திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து - திருவாஞ்சியம் என்னுந் திருப்பதியில் அழகுடன் எழுந்தருளியிருந்து, மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் - மணம் நிறைந்த கூந்தலையுடைய உமைப்பிராட்டியாரோடு மகிழ்ச்சியுற்றபடியும் என்றவாறு. வார்குழல் எனப் பிரிப்பின் நீண்டகுழல் என்று பொருளுரைக்க* (தொல்காப்பியம் உரியியல் 19) சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப் பாவகம் பலபல காட்டிய பரிசும்; சேவகன் ஆகித் திண்சிலை ஏந்தி - போர்வீரனாகித் திட்பம் வாய்ந்த வில்லைக் கையில் ஏந்திக் கொண்டு, பலபல பாவகம் காட்டிய பரிசும் - பலவகையான தோற்றங்களைக் காட்டிய தன்மையும் என்றவாறு. இது பாண்டியன்பொருட்டுப் போரிற் றோன்றிப் பல தோற்றங்களைக் காட்டிய இறைவன் றன்மையைக் கூறியது; இதனை மேற்காட்டிய வரலாறுகளிற் காண்க. பாவகம் என்னும் வடசொல் அகத்தேயுள்ள எண்ணத்தைப் புறத்தே புலப்படக் காட்டும் நடை என்று பொருள்படும். இறைவன்தான்கொண்ட திருவுளக்குறிப்பின்படி யெல்லாம் புறத்தே பல தோற்றங்களைக் காட்டினமையின் இச்சொல்லை எடுத்தாண்டார். சேவகம் வீரம் எனவும் பொருள்படுதலைச் சூடாமணி நிகண்டிற் காண்க. கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும் 85 ஐயா றதனிற் சைவன் ஆகியும் துருத்தி தன்னில் அருத்தியோ டிருந்தும் திருப்பனை யூரில் விருப்பன் ஆகியும் கழுமலம் அதனிற் காட்சி கொடுத்தும் கழுக்குன் றதனில் வழுக்கா திருந்தும் 90 புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் குற்றா லத்துக் குறியாய் இருந்தும்; கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் - திருக்கடம்பூர் என்னுந் தலத்திற் கோயில் கொண்டிருந்தும், ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும் - திருஈங்கோய் மலையில் அழகிய உரு வினைக் காட்டியும், ஐயாறு அதனில் சைவன் ஆகியும் - திருவை யாற்றின் கண்ணே சைவமறையோன் உருவங்கொண்டும், துருத்திதன்னில் கண்ணே சைவமறையோன் உருவங்கொண்டும், துருத்திதன்னில் அருத்தியோடு இருந்தும் - திருத்துருத்தி என்னும் ஊரில் விருப்பத்துடன் இருந்தும், திருப்பனையூரில் விருப்பன் ஆகியும் - திருப்பனையூர் என்னுந் தலத்தில் விருப் புடையவனாகியும், கழுமலம் அதனிற் காட்சி கொடுத்தும் - சீகாழி என்னுந் தலத்திலே தனது திருவுருவினைக் காட்டியும், கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும் - திருக்கழுக் குன்றத்தின்கண்ணே மறவாது இருந்தும், புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் - திருப்புறம்பயம் என்னுந் திருப்பதியில் அறநூற் பொருள்கள் பலவற்றை அருளிச் செய்தும், குற்றா லத்துக் குறியாய் இருந்தும் - திருக்குற்றாலத்தில் அடையாள மாய் இருந்தும் என்றவாறு. இடம் வீடு எனப் பொருள்படுதலைப் பிங்கலந்தையிற் காண்க; இங்கு வீடாவது கோயில். எழில்என்பது எழிலுடைய உருவத்தின் மேற்றாயிற்று. ஐயாறதனிற் சைவனாகியும் என்றது : பண்டொரு காலத்தில் திருவையாற்றில் ஐயாறப்பருக்கு வழிபாடு ஆற்றும் இருபத்துநான்கு ஆதிசைவப் பார்ப்பனரில் ஒருவர் தம் மனைவி யையும் மைந்தனையும் விடுத்துக் காசி நோக்கிச் சென்றனராக, எஞ்சிய இருபத்துமூவரும் அவர் நெடுநாளாக மீண்டுவராமை கண்டு, அவர்க்குரிய காணி முற்றுந் தாம் பங்கிட்டுத் தமக்குரிமை யாகக்கொண்டு வாழ்ந்து வரலானார். அவர்களது செயலினை யுணர்ந்த மனைவியும் மைந்தனும் தமது பொருளைக் கவர்ந்து கொண்டது நன்றாகாதென்று வற்புறுத்தும், அவர்கள் அவர் சொற்களைச் செவிகொளாமை கண்டுவருந்தி, ஐயாறப்பர் முன் நின்று தமது குறையினைச் சொல்லி அழுதனர். அதன்பின்னர்க் காசி நோக்கிச்சென்ற சைவப்பார்ப்பனர் காசிக்கங்கை நீரும் பிறவுங்கொண்டு புகுந்து, அவ்விருபத்துமூவர்பால் வந்துநிற்ப, அவர்கள் நடுக்குற்று அவர்க்குரிய காணி யெல்லாம் அவர்க்கே திரும்பக்கொடுப்ப, அவரும் மகிழ்ந்து தாம் எடுத்துவந்த கங்கை நீராற் சிவபிராற்குத் திருமுழுக்குச் செய்வித்துப் பூசனை ஆற்றிப், பின் தம் மனைவி மைந்தர் துயரையும் போக்கித் தமது திருமடத்தின்கண் இருப்ப, அவரையே முழுதும் ஒத்த மற்றொரு வருங் காசிக் கங்கை நீர் சுமந்து அவர் எல்லாரிடத்தும் வந்து புகுத, எல்லாரும் ‘ஈதென்னை! என்று பெரிதும் இறும்பூதுற்றுத் திகைத்தனர். முதலில் வந்த சைவப்பார்ப்பனர்க்கும் பின்வந்த சைவப் பார்ப்பனர்க்கும் இடையே வழக்குண்டாக, இருவருந் தத்தமக்குரிய முறியோலைகளைக் காட்ட இரண்டும் பெரும் பான்மையும் ஒத்திருப்பினும், சிற்சில வேறுபாட்டால் மெய்யான முறியைப் பொய்யென்றும் பொய்யானமை மெய் யென்றும் எல்லாரும் ஒருப்பட்டுக்கூற, முதல்வந்த சைவர் தாங் காட்டிய முறியே மெய்யானமைதேற்றி மறைந்தருளினார் என்பது. இவ்வாறு திருவையாற்றுப் புராணத்தின்கட் கூறப்பட்டது. கழுமலம் சீகாழிக்குரிய பெயர்களுள் ஒன்று. வழுக்காது - மறவாது; வழுக்கு மறதிப்பொருட்டாதல் திவாகரத்திற் காண்க. அறம் ஈண்டு அறநூற்பொருள்; இனி அறங்கள் பல வற்றைச் செய்தருளியும் என உரைத்தலும் ஒன்று. அந்தமில் பெருமை அழலுருக் கரந்து சுந்தர வேடத் தொருமுதல் உவுருகொண் டிந்திர ஞாலம் போலவந் தருளி 95 எவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்துத் தானே ஆகிய தயாபரன் எம்மிறை சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி அந்தரத் திழிந்துவந் தழகமர் பாலையுட் சுந்தரத் தன்மையொடு துதைந்திருந் தருளியும் அந்தம் இல் பெருமை அழல் உரக் கரந்து - முடிவில்லாத பெருமையினையுடைய தீப்பிழம்பின் உருவத்தை மறைத்து, சுந்தரவேடத்து - அழகிய கோலத்தினை யுடைய, ஒருமுதல் - ஒரு முதற்பொருளாய், உருவுகொண்டு - உருவம் புனைந்து, இந்திரஞாலம் போல வந்தருளி - பெரியதொரு மாயவித்தை போல் வழியறியப்படாமல் தோன்றி, எவ் எவர்தன்மையும் தன்வயின் படுத்து - எத்தன்மைப்பட்டவர் இயல்புகளையும் தன்னிடத்தே அடங்கவைத்து, தானே ஆகிய - தான் ஒருவனே முதல்வன் ஆகிய, தயாபரன் எம் இறை - அருளினால் மேலோனான எம் தலைவன், சந்திரதீபத்து - சந்திரதீபம் என்னுந் திருப்பதியிலே, சாத்திரன்ஆகி -கலைவல்லோனாய் உருவு கொண்டு, அந்தரத்து இழிந்துவந்து - இடைவெளியினூடே இறங்கிவந்து, அழகு அமர் பாலையுள் - அழகுமிக்க பாலை என்னும் தலத்தின்கண்ணே, சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும் - அழகிய இயல்போடு நெருங்கி யிருந்தருளியும் என்றவாறு. எவ்வுலகத்துள்ள எவ்வகை யுயிர்களினும் இறைவன் ஊடுருவி நின்று அவைகளையெல்லாம் இயக்கி அவ்வவை தத்தம் இயற்கைப்படி இயங்கக் காண்டடிலனாலும், அங்ஙனம் இயங்கும் அவ்வுயிர்களின் இயல்புகள் இறைவன் இயக்கினா லன்றித் தாமாகவே ஒரு சிறிதும் புலப்படாமை யினாலும், அவ்வாறு இயங்குமிடத்தும் அவனேவல்வழிநின்றே இயங்கு தலினாலும் எவ்வெவர் தன்மையும் தன்வயிற் படுத்து என்றார். இனி அங்ஙனம் எல்லா வுயிர்களின் தன்மைகளையும் தன்னகப்படுத்துத் தான் அவற்றோடு ஒன்றாய் நிற்பினும் இறைவனியல்பு உயிரியல்புகளின் வேறாய் முதன்மையுற்று நிற்குமென்று உணர்த்துவார் தானே ஆகிய இறை என்றருளிச் செய்தார். இறைவன் உலகுயிர்களோடு கலப்பினால் ஒன்றாயும் தன்மையால் வேறாயும் நிற்பன் என்பதுபற்றியே ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனாரும். கட்டும் உறுப்புங் கரணமுங் கொண்டுள்ளம் இட்டதொரு பேரழைக்க என்என்றாங் - கொட்டி அவன்உளம் ஆகில்லான் உளம்அவனா மாட்டா தவன்உளம்ஆய் அல்லனுமாம் அங்கு என்று அருளிச் செய்தார்*. (சிவஞானபோதம் இரண்டாம் சூத்திரம்) அமர்தல் மிகுதிப்பொருளை யுணர்த்தலும் துதைதல் நெருங்குதற்பொருளை யுணர்த்தலும் திவாகரத்துட் காண்க. 100 மந்திர மாமலை மகேந்திர வெற்பன் அந்தம்இல் பெருமை அருளுடை அண்ணல் எந்தமை ஆண்ட பரிசது பகரின் மந்திர மாமலை - மறைமொழிகள் வெளிப்படுதற்கு இடமான சிறந்த மலையாகிய, மகேந்திர வெற்பன் - மகேந்திரம் எனப் பெயர்வாய்ந்த மலையை இருப்பிடமாய்க் கொண்டவன், அந்தம் இல் பெருமை அருள்உடை அண்ணல் - முடிவு இல்லாத பெருமையினையும் அருளினையும் உடைய பெருமான், எம்தமை ஆண்ட பரிசது பகரின் - எம்மை அடிமைகொண்ட தன்மையைச் சொல்லுமிடத்து என்றவாறு. இறைவன் மறைமொழிகளைப் புலப்படுத்திய இடம் மகேந்திரமலை என்பது மேலே மன்னுமாமலை மகேந்திர மதனிற், சொன்ன வாகமந் தோற்றுவித்தருளியும் என்று அடிகள் கூறியவாற்றால் அறிக. மந்திரமாவது : நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளந்த, மறைமொழிதானே மந்திரமென்ப என்று* (தொல்காப்பியம் செய்யுளியல் 179) ஆசிரியர் தொல் காப்பியனார் கூறிய வாற்றான் நிறைந்த மொழியினை யுடைய தோலா நாவின் மேலோர் ஆணையிற் கிளந்த மறை மொழிகளே யாம் என்பது பெற்றாம். பெறவே, அம்மேலோருள்ளத்திலும் சொல்லிலும் முனைத்து விளங்கும் இறைவன் அவர் வாயிலாய் அம் மந்திரங்களைத் தோற்றுவித்தருளினானென்று கோடலும் பொருத்தமேயாகலின், அவர்செய்த அவற்றை இறைவன் மேலவாக வைத்தும் வழங்குவர். அண்ணல் - பெருமையிற் சிறந்தோன். ஆற்ற லதுவுடை அழகமர் திருவுரு நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும் 105 ஊனந் தன்னை ஒருங்குடன் அறுக்கும் ஆனந் தம்மே ஆறா அருளியும் மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன் நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும் ஆற்றல் அது உடை அழகு அமர் திருவுரு - வலிமையுடைய அழகுமிக்க திருவுருவத்தின்மேல் நீற்றுக்கோடி - திருநீற்று வரிகளை, நிமிர்ந்து காட்டியும் - இடையிட்டுக் காட்டியும், ஊனம் தன்னை ஒருங்கு உடன் அறுக்கும் ஆனந்தமே ஆறு ஆ அருளியும் - கேட்டினை ஒன்றுசேர்த்து ஒன்றாய் அழிக்கும் பேரின்பத்தை ஆறாகத் தந்தருளியும், மாதின் கூறுஉடை மாபெருங் கருணையன் - உமையம்மையை ஒரு பங்கில் உடைய மிகப்பெரிய அருளினையுடையான், நாதப் பெஐம் மறை நவின்று கறங்கவும் - நாததத்துவமாகிய பெரியபறை பல்காலும் பயின்று ஒலிப்பவும் என்றவாறு. இறைவன் முடிவிலாற்றல் உடையனாகலின் ஆற்றலது வுடை என்றார். ஆற்றலது என்பதில் அது பெயர்ப் பொருளை அசைத்து நின்றமையின் ஓர் அசை நிலையாம். நீற்றுக்கோடி என்பதில் கோடி என்பது வளைவுப் பொருளை யுணர்த்துங் கோடு என்னுஞ் சொல் இகர வீந்றொடு புணர்ந்தமையால் வளைந்தவரி எனப் பொருள்படுவதாம்; எனவே, நீற்றுக்கொடி என்பது நெற்றியினும் பிறவிடங்களினும் முன் மூன்றுவரையாக இடப்படுந் திருநீற்றின் வடிவைக் குறிக்கின்றது. இங்ஙனம் பொருளுரைக்க வறியாதார் கொடி எனுஞ்சொற் கோடிஎன நீண்டதெனவும் பிறவாறும் உரைப்ப. இறைவன் அழல்வடிவின னென்பது மேலே விளக்கப் பட்டமையால் அழலினைச் சாரும் ஏனைப் பருப்பொருள்கள் அத்துணையும் அதனான் எரித்துத் தூயவாக்கப்பட்டு வெள்ளிய நீறாய் அதனைச் சார்ந்துநிற்றல்போல, சுத்தமாயை முதலான ஏனைப் பொருள்களெல்லாம் இறைவன்றன் ஞான வனலின் சேர்க்கையாற் றூயவாய் அவனையே பற்றுக் கோடாய்க்கொண்டு நிற்குமென்பதற்கு அடையாளமாக இறைவன் றிருமேனிமேல் திருநீற்றுக் கோடுகள் காணப்படுவ வாயின வென்பது. இதுவே இக்குறியின் கருத்தாதல் துடி கொள்நே ரிடையாள் சுரிகுழன் மடந்தை துணைமுலைக் கண்கள்தோய் சுவட, பொடிகொள்வான் தழலிற் புள்ளி போல் இரண்டு பொங்கொளி தங்குமார் பின்னே என்று* (அருட் பத்து 5) பிறாண்டும் அடிகள் அதனை உவமைமேல் வைத்துக் கூறியவாற்றானும் நன்கு விளங்கும். நிமிர்ந்து இடையிட்டு எனப் பொருள்படுதலை நிறைந்து முறழ்ந்தும் நிமிர்ந்துந் தொடர்ந்தும் என் புழிப்* (பரிபாடல்) பரிமேலழகியார் கூறிய வுரையிற் காண்க. திருநீற்று வரைகளை இடையிட்டுக் காட்டுதலாவது திருமேனி முழுதும் பூசாமல் நெற்றி உரம் வயிறு முழந்தாள் கை முதுகு பிடர் என்னும் உறுப்புக்களில் இடை விட்டு அணிதல். ஊனம் கேடு எனப் பொருள்படுதலைப் பிங்கலந்தையிற் காண்க; இதனைக் குறைவு எனப் பொருள்படும் ஊந என்னும் வடசொற்றிரிபு என்பாரும் உளர். சிவானந்தம் பெருக்கெடுத்த காலத்து அதன்கட் படிந்த உயிரின் மலக்கறை முற்றுங் கழுவப்பட்டு ஒழிதலின் ஊனந் தன்னை ஒருங்குட னறுக்கும் ஆனந்தம் என்றார். ஆறுஆக என்பது கடைக்குறைந்து ஆறா என நின்றது. ஆறாக என்பதற்கு வழியாக என உரைப்பினுமாம். ‘மாப்பெருங் கருணையன்’ என்பதில் அடைமொழி களிரண்டும் பொருட்சிறப்பு நோக்கி வந்தமையின் “ஒரு பொருளிரு சொற் பிரிவில வரையார்” என்பதனால் அமைக்கப் படும்.* (தொல்காப்பியம் எச்சவியல் 64) நாததத்துவம் ஒலிவடிவினதாதலுத், அதுவே இறைவற்குப் பறையாக உருவகப்படுத்தப்படுதலும் மேலே விளக்கிப் போந்தாம். நவின்று பலகாலும் பயின்று எனப் பொருள்படுதலை மூவிரு முகனும் முறைநவின் றொழுகலின் என்பதற்கு *நச்சினார்க்கினியர் கூறிய வுரையிற் காண்க. அழுக்கடையாமல் ஆண்டுகொண் டருள்பவன் 110 கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும் அழுக்கு அடையாமல் - உயிர்கள் மும்மலங்களிற் சேராமைப் பொருட்டு, ஆண்டுகொண்டு அருள்பவன் - அவ்வுயிர்களை அடிமைகொண்டு அருள்செய்யும் பெருமான், கழுக்கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும்- முத்தலை வேலைக் கையின்கட் பிடித்தருளியும் என்றவாறு. அழுக்கு ஈண்மு ஆணவம் மாயை கன்மம் என்னும் மூன்றழுக்கு. கழுக்கடை, கழுமுள், முத்தலைவேல் என்பன ஒரு பொருட் கிளவிகள்; திவாகரம் பிங்கலந்தைகளிற் காண்க. உயிர்கள் மும்மலங்களினின்று விடுபடுதற் பொருட்டு இறைவன் இச்சா ஞானக்கிரியாசக்திகள் உடையனா யிருத்தலின் அம்மூன்று சக்திகளையும் முத்தலைவேலாக உருவகப்படுத்திக் கூறுவர். மூல மாகிய மும்மலம் அறுக்கும் தூய மேனிச் சுடர்விடு சோதி காதலன் ஆகிக் கழுநீர் மாலை ஏலுடைத்தாக எழில்பெற அணிந்தும் மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும் - எல்லாத் துன்பங் கட்கும் முதலாகிய மூன்று மலங்கள் என்னுங் கயிற்றை அறுக்கும் தூய மேனிச் சுடர்விடு சோதி - பரிசுத்தமான அருட்டிரு மேனியையுடைய சுடர்விரியும் பேரொளியானவன், காதலன் ஆகி - மனக்கினிய கணவனாகி, கழுநீர்மலை - செங் கழுநீர் மாலையினை, ஏல் உடைத்தாக - பொருத்தம் உடைத்தாக, எழில்பெற அணிந்தும் - அழகுபெற மேற்கொண்டும் என்றவாறு. மூன்றுமலங்களும் துன்பத்தைத் தரும் முதலாயிருத்தலின் மூலமாகிய மும்மலம் என்றார். இனிப் பிறவிப்பிணிக்குக் காரணமாகிய மும்மலம் என்றுரைப்பாரும் உளர். உயிர்கள் பிறவிக்கு வாராதமுன்னம் ஆணவமலம் அவற்றை வருத்துதல் உண்மையால் அங்ஙனம் உரைத்தல் பொருந்தா தென்க. மும்மலங்களாவன : ஆணவம் மாயை கன்மம் என்பன; இவற்றுள் ஆணவம் என்பது உயிர்களோடு இயற்கையாய் உடன் நின்று அவற்றின் அறிவு செயல் வேட்கைகளை விளங்க வொட்டாது மறைப்பது; அதனால் இது சகசமலம் என்றும் வழங்கப்படும். இது திருவாசகம் முதலான பழைய நூல்களி லெல்லாம் மலம் என்னும் பெயரினாலும், இருக்கு முதலான பழைய ஆரிய மறைகளிற் பாசம் என்னும் பெயரினாலும், வழங்கப்படுகின்றது. ஞானபாதப் பொருளை விரித்துரைக்கும் பௌட்கரம் மிருகேந்திரம் முதலான ஆகமங்களினுங்கூட இது மலம் என்று கூறப்படுகிறதேயல்லாமல் ஆணவம் என்னும் பெயராற் கூறப்படுதலைக் கண்டிலம் சைவசித்தாந்த நுண் பொருட் களஞ்சியமாய்த் திகழும் சிவஞானபோதத்திலும் இது பெரும்பாலும் மலம் எனவே வைத்துக் கூறப்படுகின்றது. சிவஞான போதப் பன்னிரண்டாஞ் சூத்திரத்துப் புண்ணிய பாவம் என்னுஞ் செய்யுளில் மட்டும் அஞ்ஞானங் காட்டும் இவ்வாணவமும் என ஆணவம் என்னும் பெயர் ஒரே ஒருகால் வந்தது. அதனால், ஆவம் என்னும் இச் சொல் திருமூல நாயனார் காலந் தொட்டிருந்த சான்றோரால் தமிழ் மொழி யினின்றும் எடுதது வழங்கப்பட்ட தனித் தமிழ்ச் சொல்லேயா மென்பது பெறுதும். இனிப் பிற்றை ஞான்றிருந்த உரைகாரர் இம்மலம் ஆன்மாவை அணுத்தன்மைப் படுத்துதலின் இஃது ஆணவம் என்னும் பெயர்த்தாயிற்று என்றுரைத்து இதனை வடசொல்லாக்கினார். ஆன்மாச் சிவவியாபகத்தினுள் வியாபக மாய்க் கிடக்கும் அறிவுப் பொருளாகலின் அஃது ஏனைச் சடப் பொருள் போல ஆணவ மலத்தாற் சுருக்கப்பட்டுச் சிறிதாம் என்றல் சைவசித்தாந்தத்திற்கு அடாது. ஆணவம் ஆன்ம வியாபகம் முழுதும் உடனியைந்து வியாபித்து அதன் அறிவு செயல் வேட்கைகளை மறைத்தபடியாய்க் கிடக்குமென்றே அறிவு நூல்களெல்லாம் உரைப்பக் காண்டும். ஆன்ம வியாப கத்தை மறைக்கும் ஆணவமும் வியாபகப்பொருளாய் யிருத் தலின், இரண்டு வியாபகப் பொருள்களில் ஒன்று மற்றொன் றனைச் சுருக்கிற்றென்றல் ஒருவாற்றானும் அமையாது. அங்ங னஞ் சுருக்குமாயின் சுருக்கும் பொருளுஞ் சிறிதாகிச் சுருக்கப் படும் பொருளும் சிறிதாகி வியாபகத்தன்மை கெட்டுப்போம். அதனால், ஆணவம் ஆன்மாவை அணுத்தன்மைப்படுத்து மென்றல் சைவசித்தாந்தக் கோட்பாட்டிற்குப் பெரிதும் முரணாமென்க. அற்றேல், திருமந்திரம் முதலான உண்மை நூல்களில் உயிரின் அளவை அணுவாக்கிக் கூறுதல் என்னையெனின்; ஆணவத்தால் முழுதும் மறைவுண்ட உயிரின் செயல் கலையால் அணுவளவு விளங்கித்தான் ஓர் உயிர்ப் பொருளெனத் தன்னையுஞ் சிறிது காட்டுதலின் அவ்வியல்பு பற்றி அதனை அணுவென்று கூறினாரல்லது பிறிதில்லை யென்க. இவ்வாற்றால் ஆணவம் என்னுஞ் சொல்லுக்கு அணுத் தன்மைப் படுத்துவதெனப் பொருள் கொண்டு அதனை வடசொல் ஆக்குவார் கருத்து நிரம்பு மாறில்லையென் றுணர்க. அல்லதூஉம், ஆணவம் என்னுஞ் சொல்லுக்கு ஆணவமலம் என்னும் பொருள் பழைய வட நூல்களுள் யாண்டும் வழங்கப்படாமையுங் கடைப்பிடிக்க. தமிழிற் செருக்கு என்னும் பொருள்பட வழங்கும் ஆண்மை என்னுஞ் சொற்போல ஆணவம் என்பதும் செருக்கு என்னும் பொருளில் வழங்கக் காண்டலின், இஃது ஆண்மை என்னும் பண்புச் சொல்லின் அடியாகப் பிறந்ததென்றே துணியப்படும். இனி, ஆணவம் என்னுஞ் சிறப்புப் பெயரால் தமிழ் மொழியில் வழங்கப்படும் அறியாமையைச் செய்யும் பொருள் வட மொழியிற் பௌட்கரம் மிருகேந்திரம் முதலான ஆகம நூல்களில் யாண்டும் மலம் என்னும் பெயரினாலேயே கூறப்படுகின்றது; சைவசித்தாந்த முமுமுதற் றமிழ் நூலாகிய சிவஞான போதத்தும் ஓரிடத்துத் தவிர ஏனையிடங்களி னெல்லாம் இது மலம் என்ற சொல்லான்மட்டுமே வைத்து விளங்கப்படுகின்றது. சிவஞானபோதம் திருமந்திரம் முதலிய நூல்கட்கும் முற்பட்டு மிகப் பழையதாகிய இத்திருவாசகச் செம்பொருணூலிலும் இது மலம் என்னுஞ் சொல்லினா லேயே குறிக்கப்படுகின்றது. இவ்வழக்குகளை உற்று நோக்குங் கால் முதற் பொருளும் இரு வினையும் வடமொழி தென்மொழி யிலுள்ள தொன்னூல்களில் மாயை கன்மம் என்னுஞ் சிறப்புப் பெயர்களான் வழங்கப்படுமாறு போல, ஆணவமும் அவற்றின் கண் மலம் என்னுஞ் சிறப்புப் பெயரினாலேயே வழங்கப்படுவ தாயிற்றென்னும் உண்மை நன்கு புலனாம். எனவே, பண்டை யாசிரியரால் மலம் என்னுஞ்சொல் ஆணவ மலத்திற்கே சிறப்புப் பெயராய்க் கொள்ளப்பட்ட உண்மை பெரிதுங் குறிக் கொளற்பாற்று. இப்பெயர் ஆணவமலத்திற்கே சிறப்பா மென்பது. நெல்லிற் குமியும் நிகழ்செம் பினிற்களிம்புஞ் சொல்லிற் புதிதன்று தொன்மையே - வல்லி மலகன்மம் அன்றுளவாம் வள்ளலாற் பொன்வாள் அலர்சோகஞ் செய்கமலத் தாம் என்னுஞ் சிவஞானபோதத் திருவெண்பாவானும், மலமென வேறொன்றில்லை மாயாகா ரியம தென்னில் இலகுயிர்க் கிச்சை ஞானக் கிரியைகள் எழுப்பும் மாயை விலகிடும் மலம் இவற்றை வேறுமன்றதுவே றாகி உலகுடல் கரணம் ஆகி உதித்திடும் உணர்ந்து கொள்ளே எனவும், போதகா ரியம்ம றைத்துநின்றது புகன்ம லங்காண் ஓதலாங் குணமு மாக உயிரினுள் விரவ லாலே காதலால் அவித்தை சிந்தத் தருங்கலை யாதி மாயை ஆதலால் இரண்டுஞ் சோதி இருளென வேறா மன்றே எனவும் மலத்திற்கும் மாயைக்கும் வேறுபாடு நன்கு தெரித்தோதிய சிவஞானசித்தித் திருவிருத்தங்களானும் தெளிய விளங்கும். இனி, ஆணவம் ஒன்றுமே அங்ஙனம் மலமெனும் பெயரால் விதந்தெடுத்து உரைக்கப்பட்டவா றென்னையெனின்; இஃதொன்றுமே உயிரின் அறிவு செயல் வேட்கைகளை முழுதும் மறைத்து எல்லாத் துன்பங்கட்கும் எல்ல வாலாமைகட்கும் எல்லாக் குற்றங்கட்குங் காரணமாய் நிற்றலின் இது மூலமலம் என்றும், பொல்லாத ஆணவம் என்றும் நூல்களால் இழிந் துரைக்கப்படுவதானமையின் இதுமட்டுமே மலம் எனப் பெயர் படைத்தற்கு உரிமையுடைத்தா மென்பதூஉம், மாயையும் வினையும் அம்மல வலியை ஒடுக்கி உயிரின் அறிவை எழுப்பு வதற்குக் கருவிகளாயிருத்தலின் அவை அதுபோல் மலம் என்னுஞ் சிறப்புப் பெயர் பெறுவதற்கு உரியவாகா வென்ப தூஉம் பகுத்துணர்ந்து கொள்ளற் பாலனவாம். அற்றேல், மாயை கன்மங்கள் ஆணவமலத்தோடு ஒருங்கு வைத்து மும் மலம் என்று இந்நூலினும் பிறநூல்களினும் ஓதப்படுதல் என்னையெனின்; ஆணவமலம் வியாபகப் பொருளென்பது சைவசித்தாந்த நூல்கட்கெல்லாம் ஒப்ப முடிந்தமையின், அஃது உயிர்களின் மட்டுமேயன்றி மாயை கன்மங்களினும் விரவி நிற்குமென்பது பெற்றாம்; பெறவே ஆணவமலத்தின் சேர்க்கை யால் அவை யிரண்டும் மலத்தன்மையும் எய்துதலின் அதுபற்றி ஆணவ மலத்தோடு உடன்வைத்து மும்மலம் என்று கூறப் படுவவாயின. இனி, ஒருசாரார் மாயை சுத்தம் அசுத்தம் என இரு திறப்படுதலின், சுத்தமாயை என்றுந் தூயதாயும் அசுத்த மாயை என்றும் வாலாமை யுடையதாயும் இருத்தலே அவற்றின் இயற்கை. அசுத்தமாயை அங்ஙன மாயது ஆணவச் சேர்க்கை யான் வந்தது அன்று எனச் சற்காரியவாதங் கூறுஞ் சைவ சித்தாந்தத்தொடு முரணி வழக்குரை நிகழ்த்துவர். ஆணவம் அறியாமைக்கேதுவாய் இருள்போல்வதெனவும், மாயை அறிவுவிளக்கத்திற்கேதுவாய் அவ்விருளினைத் துரக்கும் ஒளிபோல்வதெனவும் மாயா தனுவிளக்கா மற்றுள்ளங் காணாதேல், ஆயாதாம் ஒன்றை இரண்டுஞ் சோதி இருளென வேறா மன்றே என்றற் றொடக்கத்துத் திருமொழிகளால் நன்கு தெருட்டப்படுதலின் மாயைதன்னியல்பில் அசுத்தப்பொருளா காமை இனிதுவிளங்கும். அஃது இயற்கையில் அசுத்தப் பொருளாயிருப்பின் அது விளக்குப் போல் ஆணவஇருளைத் துரந்து அறிவை விளக்குமென்றல் பொருந்தாது; என்னை? ஒன்றினொன்று மாறுபட்ட இரண்டு தன்மைகள் ஒருபொருட்கு உளவா மென்றல் சற்காரியவாதங் கொள்ளும் சைவசித்தாந் தத்திற்கு ஒருவாற்றானும் அடாதென்பதற்கு ஒருதன்மை அயல்புக்குள்ள தொருவனுக் கிரண்டு செய்தி வருவதென் என்னுஞ் சிவஞானசித்தித் திருமொழியே சான்றாமாகலின் என்க. இவ்வாற்றால், மாயையின்கட் காணப்படும் வாலா மைக்குக் காரணம் அதனோடு விரவிக் கிடக்கும் ஆணவ மலமே யல்லாமல், தூயவியல்புள்ள மாயை யாகாதென்றுணர்க. இவ்வுண்மை அறிவுத்தற் பொருட்டன்றே சிவஞான முனிவரர் தாம் வகுத்தருளிய சிவஞானபோதமா பாடியத்தின் கண் அஃதங்ஙனமாக, ஏதுவின்கண் மும்மலங்களும் அஞ்ஞானத்தை உணர்த்துமெனக் கூறி, ஈண்டு ஆணவ மாத்திரையே அஞ் ஞானங் காட்டுமென்றல் மலைவாமாலெனின், அற்றற்று; அஞ் ஞானங் காட்டுதல் மாயை கன்மங்கட்கு ஆணவமலச்சார் வானாகிய செயற்கை, ஆணவமலத்திற்கு அஃது இயற்கை, என்னும் பொதுச் சிறப்பாமா றுணர்த்துதற்கு ஆண்டுப் பொது வகையாற் கூறிப் போந்தனை ஈண்டுச் சிறந்தெடுத்தோதின ராகலான் என்பது* (சிவஞானபோதம் 12ஆம் சூத்திரம்) என்று தெளிய எடுத்தோதினார். இன்னும் அவர் தமது சிவஞான சித்தியுரையில் நித்தமாய் அருவாய் என்று மாயையின் இலக்கணம் தொகுத்துக் கூறுந் திருவிருத் தத்தில் வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமுஞ் செய்யு மன்றே என்னும் அடிக்கு விதப்புரை கூறுகின்றுழி இத் தன்மைத்தாகிய மாயை ஆணவமலம் போல மயக்கமே செய்யும் என்னுஞ் சைவருள் ஒரு சாராரை மறுத்தற்பாருட்டு, மயக்கமும் செய்யும் என்றுங் கூறினார். செய்யுளாகலின் முறைபிறழ வைக்கப்பட்டன. ஈண்டு மயக்கம் என்றது விபரீதவுணர்வை, மயக்கமும் என்னும் உம்மை அது தன்னியல்புஅன்மை உணர நின்றது என்று மாயையின் தூய இயல்பு நன்கு தெருட்டி யருளினார். இன்னும் அவர் விந்துவின் மாயையாகி என்னுந் திருவிருத்தவுரையில் அவற்றுள், மல கன்மங்களோடு விரவாது முதற்காரணமாய் நிற்பது சுத்தமாயை யென்றும், அஃது ஏனை இரண்டனையும் வியாபித்து மேலாய் நிற்ப, அவ்விந்துவின் கீழாயடங்கி மல கன்மங்களோடு விரவி முதற்காரணமாவது அசுத்தமாயை யென்றும், அவ்வசுத்த மாயையது தூல பரிணாமமாய்த் தோன்றுவது பிரகிருதி மாயையென்றுங் கூறப்படும் என்று மூவகை மாயைகளின் வேறுபாடுகளை விளக்கியவாற்றான் அசுத்தமாயை அவ்வாறு அசுத்தமாயது மலத்தின் சேர்க்கையினாலேயா மென்பது ஐயமின்றித் துணியப்படும். மேலும் அகத்தே அறிவுப் பொருளாகிய உயிரின் கட்டொன்றுதொட்டு விரவிநிற்கும் மலத்தின் சேர்க்கையை விளக்கிக்காட்டுதற் பொருட்டுப் புறத்தே அறிவில் பொருளாகிய செம்பின்கண் விரவிநிற்கும் களிம்பினை அறிவுநூல்கள் உவமையாக எடுத்துக் காட்டுதலானும், உயிரினைப்பற்றிய மலந்தீர்ந்து அது தூய்தாந்தன்மைக்குச் செம்பிற் காணலுறுங் களிம்பு இரதகுளிகை பரிசிக்கக் கழியுஞ் செம்புருநிற்கக் கண்டாமன்றே* (சிவஞான சித்தியார் 11ஆம் சூத்திரம் 5) எனச் செம்பு களிம்பிற் றீர்ந்து தூய பொன்னா மாற்றினை ஒப்பாக எடுத்துரைத்தலானும் செம்பின்கட் களிம் பாயும் உயிரின்கண் அறியாமையாயும் நிற்பது ஆணவ மலமேயா மென்று ஆராய்ந்து உணர்ந்துகொள்க. அற்றாயின், வியாபகப் பொருளாகிய ஆணவமலம் சுத்த மாயையினையும் பொன்னையும் பற்றாமை என்னையெனின்; அவற்றின்கண் இறைவனது அருளொளி முனைத்து விளங்கு தலால், அஃது அவற்றைப் பற்றமாட்டாவாயிற் றென்க. அங்ஙனம் உரைப்பின் ஆணவம் வியாபகப் பொருளென்றது வழுவாமா லெனின்; அற்றன்று, சுத்த மாயையினும் பொன் னிலுங்கூட அஃது ஊடுருவி நிற்பினும் ஆண்டு அது தன்வலி மடங்கிக் கிடக்கும்; எதுபோல வெனின்; மேற்செல்லுங் கல் முதலாகிய பொருள்களை ஈர்க்கும் இந்நிலவுலகத்தின் ஆற்றல் மேல்எழும் நுண்ணிய நீர்வளியைத் தன்கண் ஈர்க்கமாட்டாமை பற்றி ஆண்டு அஃது இல்லையென்றால் அமையாமை போல வென்பது. இந்நில வுலகத்தின் ஆற்றல் எங்கும் நிறைந்து வியாபகமாயிருப்பினும் தன்னாற் பற்றப்படும் பொருள்களின் மட்டுமே தான் உண்டென்பதனைப் புலப்படக்காட்டித் தன்னாற் பற்றப்படாதவற்றின்கட்டான் புலப்படாமற் பரவி நிற்கும் இந்நிகழ்ச்சியின் வைத்து ஆணவ மலம் சுத்தமாயை பொன் முதலியவற்றிற் புலப்படாது வலிமடங்கிக் கிடக்கு மியல்பினைத் தெரிந்துகொள்க. அற்றாயின், சுத்தமாயையில் இறைவனதொளி முனைத்து விளங்குதற்கும், அசுத்தமாயையில் அஃதங்ஙனம் விளங்கா மைக்கும் ஏது வென்னையெனின்; ஞாயிற்றின் ஒளி பளிங்குக் கல்லில் விளங்குதற்கும் கருங்கல்லில் விளங்காமைக்கும் ஏது வென்னை யென்று ஆராயலுறுவார்க்கு, அவை அவ்வப் பொருளின் இயற்கையாலென்பது புலனாகா நிற்கும். இங்ஙனமே சுத்தமாயை அசுத்தமாயையாகிய பொருள்க டம்முளும் இயற்கை வேறுபாடுகள் உளவென்பது பெற்றாம். இன்னும், இறைவன் மலத்தாற் பற்றப்படாமைக்கும் உயிர்கள் அதனாற் பற்றப்பட்டுக் கிடத்தற்கும் ஏது வென்னையென்று நுனித்துக் காண்பார்க்கும் அவ்வப் பொருள்கட்குள்ள இயற்கை வேறுபாடுகள் புலனாமென்பது. இத்துணையுங் கூறியவாற்றால் ஆணவமே இயற்கை மலமாய் அறியாமைக்கும் வாலாமைக்குங் காரணமாமென்பதூஉம், ஏனை மாயை கன்மங்கள் அவ்வறி யாமையை நீக்குங் கருவிகளாய் வரினும் அவ்வாணவமலமுந் தம்முள் விரவி நிற்றலால் ஒரோவழி அவ்வறியாமையும் வாலாமையும் பெற்று உயிர்களை மயக்குதலும் உடையவா மென்பதூஉம் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும். இனிச் சுத்தமாயையின் இயல்புந் தொழிற்பாடும் உய்ய வென் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற என்பதற்கு விரித்த உரையின்கண் விளக்கிப்போந்தாம், ஆண்டுக் கண்டுகொள்க. அசுத்தமாயையின் இயல்பும் பயனும் வல்வினையேன்றன்னை மறைந்திட மூடிய மாயஇருளை என்பதற்கு உரைவிரித்தவழி விளக்கினாம். வினையினியல்பு இனிப்பொருந்துமோரிடத்தில் விரிப்பாம். காதலன் கணவன் எனப் பொருள்படுதலைத் திவாகரத்துட் காண்க. இறைவன் தடாதகைப் பிராட்டியாரை மணஞ்செய்த திருவிளையாடல் ஈண்டுக் குறிப்பிடப்பட்டதுபோலும்! 115 அறியொடு பிரமற் களவறி யாதவன் பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும் அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் - திருமாலுடனே நான் முகனாலும் அளவு அறியப்படாதவன், பரிமாவின் மிசை - குதிரையின்மேல், பயின்றவண்ணமும் - பலகாலும் ஊர்ந்ததன் மையும் என்றவாறு. பிரமற்கு என்பதில் நான்காம் வேற்றுமை யுருபு. அதனாற் செயற்படற் கொத்த கிளவியும்* (தொல்காப்பியம் வேற்றுமை மயங்கியல் 27) என்பதனால் மூன்றும் வேற்றுமைப் பொருளில் மயங்கிற்று. அறியாதவன் என்பது அறியப்படாதவன் என்னும் பொருட்டு; செயப்படு பொருளைச் செய்ததுபோலத், தொழிற் படக் கிளத்தலும் வழக்கியன் மரபே* (தொல்காப்பியம் வினையியல் 49) என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாரும். மீண்டு வாரா வழியருள் புரிபவன் பாண்டி நாடே பழம்பதி யாகவும் மீண்டு வாராவழி அருள்புரிபவன் - திரும்பி இப்பிறவிக்கு வராத வீட்டுநெறியை அருள் செய்பவன், பாண்டி நாடே - பாண்டிய தேயத்தினையே, பழம்பதியாகவும் - பழைய இடமாகத் தான் கொண்டருளியும் என்றவாறு. இறைவன் திருவருளைத் தலைக்கூடி அதனோடொன் றாயினார் மீண்டு இப்பிறப்பின்கண் வராமை ஒருதலையாகலின் அப்பேற்றிற்குச் செலுத்தும் நெறியினை மீண்டு வாராவழி என்றருளிச் செய்தார்; தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரும், கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி (திருக்குறள் 356) என்றிங்ஙனமே அருளிச் செய்தமை காண்க. பாண்டின் நாடு என்பது பாண்டிநாடு என மருவிற்று. இம்மரூஉமுடிபுகள் வழங்கியன் மருங்கின் மருவொடு திரிநவும்* (தொல்காப்பியம் எழுத்து 483) என்பதனான் அமைக்கப்படும். இறைவன் ஒரு பாண்டிய மன்னனாகப்போந்து மதுரைமாநகரிற் செங்கோல் ஓச்சினமை பற்றி அந்நாடு அவற்கு ஒரு பழம்பதியாகக் கூறப்பட்டது. இது குறித்தே கல்லாடத்தும்* (கல்லாடம் 4) கடுக்கைமலர் மாற்றி வேப்பலர்சூடி ஐவாய்க் காப்புவிட் டணிபூண் அணிந்து விரிசடை மறைத்து மணிமுடி கவித்து விடைடக கொடி நிறுத்திக் கயற்கொடி எடுத்து வழுதியாகி முழுதுல களிக்கும் பேரருள் நாயகன் என்று கூறினார். இத்திருவாசகச் செழுமறையுள்ளும் தென்னாடுடைய சிவன் தண்பாண்டிநாட்டான் தென்னான் பாண்டிப் பிரான் பாண்டி நன்னாடர் என்று அடிகள் இறைவனைப் பலகாலுங் கூறுதல் காண்க. பதி இடம் என்னும் பொருட்டாதல் உறைபதி என்பதற்கு (திருக்குறள் 1015) உறைவிடம் என்று பரிமேலழகியார் உரை கூறினமையாற் காண்க. பத்திசெய் அடியரைப் பரம்பரத் துய்ப்பவன் 120 உத்தர கோச மங்கை ஊ ராகவும் பத்திசெய் அடியரை - அன்பாற் றன்னை வழிபடும் அடியவரை, பரம்பரத்து உய்ப்பவன் - மிகமேலான நிலையிற் செலுத்துபவன், உத்தரகோசமங்கை ஊராகவும் - உத்தரகோச மங்கையைத் தானிருக்கும் ஊராகக் கொண்டருளியும் என்றவாறு. பரம் மேலான எனப் பொருள்படுவதொரு வடசொல்; பரம்பரம் என அஃதிருகால் வந்தமையின் மிக மேலான என்று பொருளுரைக்கப்பட்டது. ஆதி மூர்த்திகட் கருள்புரிந் தருளிய தேவ தேவன் றிருப்பெய ராகவும் ஆதி மூர்த்திகட்கு - முதற் றோன்றிய கடவுளர்க்கு, அருள் புரிந்து அருளிய - அருள்செய்த, தேவதேவன் திருப்பெயர் ஆகவும் - மகாதேவன் என்பதே தனக்குரிய அழகிய பெயராகக் கொண்டருளியும் என்றவாறு. ஆதிமூர்த்திகளாவார் சதாசிவர் அநந்தர் சீகண்டர் குணிருத்திரர் விஷ்ணு பிரமா முதலாயினார். இவர்கள் சுத்தமாயை அசுத்தமாயை பிரகிருதிமாயை முதலியவற்றின்கட் பண்டு தொட்டே கடவுட்டன்மை பெற்றவர்களாய் அவ்வத் தத்துவ புவனங்களில் இறைவனருளால் அதிகாரஞ் செலுத்து தலின் இங்ஙனங் கூறினார். ஈண்டுக் கூறப்பட்ட எல்லாக் கடவுளர்க்கும் முதல்வனாதல்பற்றித் தேவதேவன் அல்லது மகாதேவன் என்னும் பெயர் சிவபிரான் ஒருவற்கே உரித்தாதல் தமீச்வராணாம் பரமம் மகேச்வரம்தம் தேவதாநாம் பரமஞ்ச தைவதம், பதிம்பதீ நாம் பரமம் பரதாத்விதாமதேவம் புவநேச மீட்யம் என்னுஞ் சுவேதாசுவதரோபநிடத மந்திரத்தானும் உணர்க. இருள்கடிந் தருளிய இன்ப ஊர்தி அருளிய பெருமை அருண்மலை யாகவும் இருள்கடிந்து அருளிய - அறியாமையிருளைப் போக்கி யருளின, இன்ப ஊர்தி - பேரின்பத்தையே தான் ஊர்ந்து செல்லும் ஏறாகவும், அருளிய பெருமை அருள் மலையாகவும் - எவ்வுயிர்க்கும் அருள்செய்த பேர் அருளேதான் அமர்ந்திருக்கும் மலையாகவும் கொண்டருளி என்றவாறு. உயிரின்கட் பேரின்பம் பெருகியெழுஞான்று அதனைப் பற்றிய அறியாமை வலியொடுங்கி ஒழிதலின் இருள் கடிந் தருளிய இன்பம் என்றும், இப்பேரின்பத்திற்கு முதல்வனாவான் இறைவனேயாத லுணர்த்துவார் இன்ப ஊர்தி என்றும் எண்ணுள் அடங்காத உயிர்கட்கெல்லாம் அவன் செய்யும் அருள் மிகப் பெரிதாயிருத்தலின் அதுவே அவற்கு இருக்கை யாகிய மலையென்றுணர்த்துவார் அருண்மலை என்றும் ஓதினார். இவ்வாறு அடிகள் ஓதியாவாற்றால், இறைவற்கு ஊர்தியாக உருவகப்படுத்திச் சொல்லப்படும் ஏறாவது பேரின்பமே யல்லது பிறிதன்று என்பதூஉம் அவனிருக்கும் வெள்ளி மலையாகச் சொல்லப் படுவது அவனது பேரருளே யல்லாமற் பிறிதன்று என்பதூஉம் பெற்றாம். கடிந்து போக்கி யென்னும் பொருட்டாதல் கொடிது கடிந்து கோல் திருத்தி என்பதன்* (புறநானூறு 17) உரையிற் காண்க. பெருமை அருள் என்னும் புணர்ச்சி தெரிமாண் டமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன் என்புழிப்போல வேறு பாடுறாமல் இயல்பாய் நின்றது. 125 எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும் அப்பரி சதனால் ஆண்டுகொண் டருளி எப்பெருந் தன்மையும் - எவ்வளவு பெருந்தன்மையையும், எவர் திறமும் - எவரெவர் கூறுபாட்டினையும், அப்பரிச தனால் ஆண்டுகொண்டு அருளி - அவ்வவற்றிற்கு ஏற்ற தன்மை களால் அடிமை கொண்டருளி என்றவாறு. ஒருமலம் உடைய விஞ்ஞானகலர் முதல் மும்மலம் உடைய சகலர் ஈறான முத்திறத் துயிர்களின் தன்மைகளும் கூறுபாடு களும் பலவேறு வகைப்படுதலின் அவரவர்க் கிசைந்தபடியால் எல்லாம் வல்ல இறைவன் அவரையெல்லாம் அடிமைகொண்டு அருள் செய்வான் என்பது. இம் முக்கூற்றுயிர்கட்கும் இறைவன் அருள் புரியுமாற்றினை ஆசிரியர் மெய்கண்டதேவ நாயனார், மெய்ஞ்ஞானந் தானே விளையும்விஞ் ஞானகலர்க் கஞ்ஞான அச்சகலர்க் கக்குருவாய் - மெய்ஞ்ஞானம் பின்உணர்த்தும் அன்றிப் பிரளயா கலருக்கு முன்உணர்த்துந் தான்குருவாய் முன் என்று* (சிவஞானபோதம் 8ஆம் சூத்திரம் 3) அருளிச் செய்தமையாற் கண்டுகொள்க. இவருள் விஞ்ஞானகலரும் பிரளயாகலரும் ஏனைச் சகலரினும் பார்க்கப் பேரறிவும் பேராற்றலும் வாய்ந்தவராகலின் அவர்தம்மை நோக்கி எப் பெருந்தன்மையும் என்றும், சகலரை நோக்கி எவ்வெவர் திறமும் என்றும் அருளிச்செய்தார். திறம் - கூறுபாடு. இப்பொருட்டாதல் பற்றலிலியரோ நிற்றிறம் சிறக்க என்பதன்* (புறநானூறு 6) உரையிற் காண்க. சகலரிற் பல கூறுபாடுகள் உண்மையால் இங்ஙனங் கூறினார். நாயி னேனை நலமலி தில்லையுட் கோலம் ஆர்தரு பொதுவினில் வருகென ஏல என்னை ஈங்கொழித் தருளி 130 அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர் ஒன்ற ஒன்ற உடன்கலந் தருளியும் நாயினேனை - நாயிற்கடைப்பட்ட அடியேனை, நலம் மலிதில்லையுள் - நன்மைமலிந்த தில்லைமாநகருள், கோலம் ஆர்தரு பொதுவினில் வருக என - அழகு நிறைந்த அம்பலத்தின் கண்ணே வருவாயாக வென்று சொல்லி, ஏல என்னை ஈங்கு ஒழித்து அருளி - இசைவானபடியாய் ஏழையோனை இந்நிலத்தி லேயே போக்கிவிட்டு, அன்று உடன்சென்ற - அடியேனை இந்நிலத்தே விட்டுச் சென்ற அந்நாளில் தன்னோடுகூடச் சென்ற, அருள்பெறும் அடியவர் - தன் அருளைப் பெறுதற்குரிய அடியார்கள், ஒன்ற ஒன்ற - தன்னோடு ஒருங்குபொருந்த, உடன் கலந்து அருளியும் - அவரோடு இரண்டறக் கலந்தருளியும் என்றவாறு. இது சிவபெருமான் ஞானாசிரியன் வடிவிற் றோன்றித் திருப்பெருந்துறையிற் குருந்தமரநீழலிலே பன்மாணவர் புடை சூழ வீற்றிருந்து அடிகளை ஆட்கொண்டருளியபின் அவரை விடுத்துத் தன்மாணவரோடும் மறைந்த ஞான்று நீ தில்லை அம்பலத்தின் கண்ணே வருக வென்று கட்டளை தந்தமையால், அதனை அடிகள் நினைந்து ஈண்டுக் கூறிய வாறாம். என்னை யுடன்கொண்டுபோதற்கு யான் தகுதியல்லாமை கண்டு அம்பலத்தின் கண்ணே வருக வென்று யான் வருந்த வாறு இசைவாகக் கூறி என்னை இந்நிலவுலகத்திற் புறந்தள்ளிச் சென்றனனே! என்று அடிகள் இறைவன்மேல் வருந்திக் கூறினாரென்க. உடன்சென்ற அடியவர் அருள்பெறுந் தகுதிப்பாடு மிகுதியும் உடையராதலால் அவரோடு இரண்டறக் கலந்து நின்றான் என்பது பின்னிரண்டடிகளிற் கூறினார். கோலம் - அழகு; பிங்கலந்தையிற் காண்க. பொது - மன்று; பொதுவிற் றூங்கும் விசியுறு தண்ணுமை* (புறநானூறு 89) என்பதன் உரையிற் காண்க. பொது, பொதியில், மன்று, மன்றம், அம்பலம் என்பன ஒரு பொருட்கிளவிகள். ஏல - பொருந்த. ஒன்ற ஒன்ற என்னும் வினையெச்ச அடுக்குப் பிரிவறக் கலத்தலை உணர்த்துகின்றது. எய்தவந் திலாதார் எரியிற் பாயவும், மாலது ஆகி மயக்கம் எய்தியும் பூதலம் அதனிற் புரண்டுவீழ்ந் தலறியும் 135 கால்விசைத் தோடிக் கடல்புக மண்டி நாத நாத என்றழு தரற்றிப் பாதம் எய்தினர் பாதம் எய்தவும் பதஞ்சலிக் கருளிய பரம நாமகவென் றிதஞ்சலிப் பெய்தநின் றேங்கினர் ஏங்கவும் எய்தவந்திலாதார் எரியில் பாயவும் - அங்ஙனம் அவனது அருளை அடைய வராதவர் தீயின்கட் பாயவும், மால்அது ஆகி - வேட்கையிடையோர் ஆகி, மயக்கம் எய்தியும் - மயக்கம் அடைந்தும், பூதலம் அதனில் - இம் மண்ணின்மேல், வீழ்ந்து புரண்டு அலறியும் - விழுந்து புரண்டு கதறியும், கால்விசைத்து ஓடி - கால் விரைந்து ஓடி, கடல்புகமண்டி - கடலிலே புகுதற்கு மிக்குச்சென்று, நாத நாத என்று அழுது அரற்றி - தலைவனே! தலைவனே! என்று சொல்லி அழுது ஆரவாரித்து, பாதம் எய்தினர் பாதம் எய்தவும் - திருவடியை யடைந்தவர் அதனோடு பிரிவறக்கலத்தலைப் பெறவும், பதஞ்சலிக்கு அருளிய - பதஞ்சலி முனிவர்க்கு அருள்புரிந்த, பரம நாடக என்று - மேன்மைமிக்க கூத்தனே என்று சொல்லி, இதம் சலிப்பு எய்தநின்று - நெஞ்சம் அயர்வு அடைய நின்று, ஏங்கினர் ஏங்கவும் - ஏங்கினவர் மேலும் மேலும் ஏக்கத்தை அடையவும் என்றவாறு. மால்-வேட்கை; திவாகரத்துட் காண்க. விசை விரைவுப் பொருட்டாதல் திவாகரம் பிங்கலந்தைகளுட் காண்க. ‘மண்டி’ மிக்குசென்று என்று பொருளுரைப்பர் புறநானூற்றுரைகாரர்.* (புறநானூறு 6) அரற்றல் - ஆரவாரித்தல்; பிங்கலந்தையுட் காண்க. நெஞ்சம் எனப் பொருள்படும் ஹ்ருதயம் எனும் வடசொல் இதயம் எனவும் இதம் எனவும் திரியும். எய்தியும் அலறியும் ஓடி மண்டி அரற்றிப் பாதம் எய்தினர் என இயைக்க. பதஞ்சலி முனிவர்க்கு இறைவன் தனது திருக்கூத்துக் காட்டிய வரலாறு பின்னே புலியூர் என்பதன் பெயர்க்காரண வரலாறு கூறுகின்றுழிச் சேர்த்துரைப்பாம். 140 எழில்பெறும் இமயத்து இயல்புடை அம்பொற் பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம்நவில் கனிதரு செவ்வாய் உமையொடு காளிக் கருளிய திருமுகத் தழகுறு சிறுநகை இறைவன் ஈண்டிய அடியவ ரோடும் 145 பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன் ஒலிதரு கைலை உயர்கிழ வோனே. எழில்பெறும் இமயத்து இயல்பு உடை - எழுச்சி பெறும் இமயமலையின் தன்மையினை உடைய, அம்பொன் பொலிதரு புலியூர்ப் பொதுவினில் - அழகிய பொன் வேய்ந்து விளங்கும் தில்லையம்பலத்திலே, நடம் நவில் - திருக்கூத்தைப் பயிலும், கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு அருளிய திருமுகத்து அழகு உறு சிறுநகை இறைவன் - கொவ்வைப்பழம் போன்ற சிவந்த வாயினையுடைய உமைப்பிராட்டியாருக்கும் மாகாளி யம்மைக்கும் அருள்செய்த அழகிய முகத்திடத்த தான அழகு மிக்க முறுவலிப்பினையுடைய சிவபெருமான், ஒலிதரு கைலை உயர் கிழவோன் - தேவர்கள் வழுத்தும் பாட்டின் ஒலி அறாத கைலை மலைக்குச் சிறந்த உரிமை யுடையவன், ஈண்டிய அடியவரோடும் - திரண்ட அடியாருடன், பொலிதரு புலியூர்ப் புக்கு இனிது அருளினன் - விளங்கா நின்ற தில்லைக்கண்ணே புகுந்து இனிதாக அமர்ந்தருளினன் என்றவாறு. இமயமலைக் குவடு பொன்னிறமாய் விளங்குவதாகலின் அதனைப் பொற்கூரை வேய்ந்த அம்பலத்திற்கு உவமையாகக் கூறினார். உலகத்தின் கண் உள்ள எல்லா மலைக்குவடுகளினும் இமயக் குவடே உயர்ந்ததாகலின் அதன்மேற் படும் ஞாயிற்றின் ஒளி அதனைப் பொன்னிறமாய் விளங்கச் செய்வதாகும் என்பது. இதுபற்றியே புறநானூற்றினும் பொற்கோட் டிமயம் (புறநானூறு 2) பொன் படு நெடுங்கோட் டிமயம்*(புறநானூறு 39) பொன்னுடை நெடுங் கோட் டிமயம்*(புறநானூறு 369) என்றற் றொடக்கத்துச் சொற்றொடர்கள் காணப்படு வாயின. இனித் தில்லைக்கண் அம்பலம் இமயத்தின் கண் உள்ள கைலையும் பொருப்புப் போறலின் அதுபற்றி இமயத்து இயல்பு உடைய என்றா ரெனலுமாம். நவிலல் - பயிலல்; இப்பொருட்டாதல் “மறைநவில் அந்தணர்” என்பதன் உரையிற் காண்க.* (புறநானூறு 1) கனிதரு என்பதில் தரு உவம உருபின் பொருள்பட வந்த உவமவாசகம். கனிதரு செவ்வாய் என்னும் அடையை உமைக் குங் காளிக்குங் கூட்டுக; உமைக்கு அது சிறப்பாதல் பற்றி முன் வைத்தார். நடநவில் என்னும் வினைத்தொகை இறைவன் என்னும் பெயர்கொண்டு முடிந்தது; இத மாட்டு என்னுஞ் செய்யுளு றுப்பான் இங்ஙனம் முடிந்தது; என்னை? அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் இயன்று பொருள் முடியத் தந்தனர் உணர்த்தல் மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின் என்றார் ஆசிரியர் தொல்காப்பியராகலின்.* (தொல்காப்பியம் செய்யுளியல் 211) இத்திருவக வலினும் ஏனை இரண்டகவலினும் அகன்று கிடந்து பொருந்தும் பொருள் களை அணுகிய நிலையில் வைத்து உரைக்கும் உரை இம் மாட்டென்னும் உறுப்பான் வந்ததென்று உணரல் வேண்டும்; இஃது அச்சூத்திரத்திற்குப் பேராசிரியர் கூறிய வுரையானும் அறியப்படும். இறைவன், கிழவோன் என்னும் பெயர்கள் சிவபெருமான் என்னும் ஒருபொருள் குறித்துப் புக்கினிதருளினன் என்னும் ஒருவினைகொண்டு முடிந்தன; என்னை? ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி தொழில்வேறு கிளப்பின் ஒன்றிடன் இலவே v‹wh® MáÇauhfÈ‹.* இனித் தில்லைப்பொதுவில் இறைவன் திருக்குத்தியற்றிய வரலாறு ஒருசிறிது கூறுதும்; பண்டொருகால் மத்தியந்தின முனிவர் தாம் அரிதிற் பெற்ற புதல்வர்க்குக் கலைப்புலமை நிரம்பியபின்னர் அறிவுநூற் பொருள் முழுதும் உணர்த்தி, அவர் சிறந்ததோர் இடத்தே சென்று இறைவனை வழிபடுதற்கு விரும்பினமையால், அவரைத் தில்லைக்குச் செல்லுமாறு கற்பித்து விடுக்க, அவரும் ஆண்டுப் போந்து ஓர் அழகிய பொய்கையும் அதன் தென்பக்கத்தே ஓர் ஆலமரநீழலில் ஒரு சிவலிங்கத் திருவுருவமும் இருக்கக்கண்டு பெருமகிழ்வுற்று அங்கே ஓர் இலைக்குடில் அமைத்துக் கொண்டு இறைவற்கு வழிபாடு ஆற்றி வருவாராயினார். நாடோறும் இறைவனை வழிபடுதற்கென்று பறிக்கும் பல நறுமணமலர்களை ஒருநாள் ஆராய்ந்து பார்த்தக்கால், அவற்றுட் பழையனவும் பழுது பட்டனவுமான பல மலர்கள் விரவியிருக்கக் கண்டு வருந்தி, விடிந்தபின் மலரெடுப்பின் அவை வண்டுகள் ஊதியனவாம்; இரவின்கட்சென்று எடுப்பேமெனில் மரமடர்ந்த இக்காட்ட கத்தே வழிபுலனாகாது; மரங்களில் ஏறினாலும் பனியாற் கால் வழுக்கும்; ஆகையால் என்செய்வேம்! என்று மிக உள்ளங் குழைந்து வருந்த அவ் விளைய முனிவரெதிரே இறைவன் தோன்றினான். அவர் பெருமானை வணங்கி வாழ்த்தி ஐயனே, தேவரீரை வழிபடுதற்பொருட்டு அடியேன் வைகறை யிற்சென்று மரங்களில் வழுவாமல் ஏறவேண்டுதலால் என் கை கால்கள் புலியின் வலிய நகங்கள் உடையவாகுக; வழிதெரிந்து ஏகுதற்கும் பழுதற்ற நறுமலர் தெரிந்து கொய்தற்கும் அவ்விரண்டிற் கண்களும் உண்டாகுக என்று குறையிரப்பச் சிவபிரானும் அங்ஙனமே ஆமாறு தந்து மறைந்தருளினன். அன்று முதல் அவ்விளைய முனிவர் வியாக்கிரபாதர் அல்லது புலிக்கால் முனிவர் என்னும் பெயருடையராய்ச் சிவபிரானைத் தாம் விழைந்தவாறு புதுமலர் கொணர்ந்து வழிபார்ற்றி நன்கிருந் தனர். இங்ஙனம் புலிக்கான் முனிவர் வழிபட்ட காரணத்தானே தில்லை மாநகர் புலியூர் எனவும் வழங்கப்படலாயிற்று. இவ்வாறிவர் இருக்கு நாளில் இவர் தந்தையார் மத்தியந்தின முனிவர் இவர்பாற்போந்து இவர்க்கு ஒரு நன் மங்கையை மணம் முடிக்கவேண்டுமென்னுந் தமது கருத்தை அறிவிக்க, அவரும் அதற்கு இசையவே வசிட்டமுனிவரின் தங்கையாரை அவர்க்கு மணமகளாக்கினர். அவரிருவரும் ஆற்றிய அருந்தவத்தால் உபமன்னியு வென்னும் ஓர் அருங் குழவி பிறந்தது. அக்குழவியை அருந்ததி எடுத்துப்போய்த் தம்பால் உள்ள காமமேனுவென்னுந் தெய்வஆன் பொழிபாலை ஊட்டி வளர்த்து வந்தனள். பின்னர்ப் புலிக்கான் முனிவரும் அவர் மனைவியாரும் மகவின் விருப்பத்தால் அதனைத் தமது இலைக்குடிலுக்குக் கொணர்வித்து இனிய திண்பண்டங்களுந் தீம்பாலும் ஊட்ட அம்மகவு அவற்றை உண்ணாது உமிழ்ந்து பசிபொறாது அழப், பெற்றார் இருவரும் மனம் நைந்து சிவலிங்கப்பெருமான் திருமுன்பு அதனைக் கொண்டு சென்று கிடத்தினார். இறைவன் அருள்சுரந்து அம் மகவுக்குத் தீவிய தெய்வப் பாற்கடலையே உணவாக ஊட்ட அம்மகவு அதனை இனிதுபருகிக் களித்திருக்கப், புலிக்கான் முனிவருங் கவலை தீர்ந்து இறைவனது அருட்குறியினெதிரே சிவயோகத்தில் அமர்ந்து இறைவன் றிருவடியிற் கருத்து ஒன்றுபட்டிருக்க, அப்போது அவரகத்தே இறைவன் தேவதாருவனத்து இருடிகள் பொருட்டு நிகழ்த்திய ஐந்தொழிலின்பக் கூத்தின் வரலாறு வந்து தோன்றிற்று. அதனைத் தெரிந்த அளவானே இறைவன் றனது திருவடியால் திருக்கூத்தியற்றிய தேவதாரு வனத்தில் அயேன் இருக்கப்பெறாமல் இந்த இடத்தில் இருக்கப் பெற்றனனே! Ia dU£T¤ij ah‹ fhQkhW ah§‡d«! என்று பெரிதும் உள்ளம் உருகி வருந்தாநிற்ப, இத்தில்லையே இந்நில வுலகத் திற்கு நடநாடியாயிருத்தலால், இதன்கண்ணேதான் ஆண்டவன் என்றும் ஐந்தொழிற்கூத்து நிகழ்த்துவன்; ஆதலால், இத்தில்லை யம்பலத்தின்கட் புறத்தேயும் யான் அத் திருக்கூத்தினைக் காணப்பெறுவேன் என்று தவக்காட்சியால் உணர்ந்தவராய்ப் புலிக்கான் முனிவர் அங்கே வழிபாடு ஆற்றிக் கொண்டு இரா நின்றார். இவர் இவ்வாறிருப்பப் பதஞ்சலி முனிவர் இவர்பாற் போந்தமையும், இவ்விருவர்க்கும் இறைவன் தனது திருக் கூத்தினைக் காட்டியருளினமையும் சிறிது கூறுவாம். தேவதாரு வனத்தின்கண் இருந்த நாற்பத்தொணணாயிரம் முனிவரரும் மீமாஞ்சைநூற் கோட்பாட்டினைப் பின்பற்றினவர். மறைநூல் ஒருவராற் செய்யப்படாமல் என்றும் உள்ளதெனவும், மறைநூல் கூறிய வேள்விகளை வேட்டல் ஒன்றுமே இம்மை மறுமை யின்பங்களை யளிப்பதெனவும், உயிர்களின் வேறாக முதல்வன் ஒருவன் இல்லையெனவும், மறைநூலிற் சொல்லப் பட்ட சிவம் முதலான ஒலிகளே பிரமமாவதன்றி இவற்றான் அறிவிக்கப்பட்டு இவற்றின் வேறாய் உள்ள கடவுளர் பிறரில்லையெனவும், உலகம் என்றும் அழியாதுநிற்ப தெனவும், உயிர்கள் பலவாய் என்று முள்ளனவாய் எங்கு நிறைந்தனவாய் இருவினைகளுட்பட்டுப் பிறந்திருந்து வருமெனவுங் கொண்ட கொள்கையினராய், இவற்றைத் தம் மனைவிமார்க்கும் அறிவுறுத்தி அவரைத் தஞ்சொல்வழியின் நிறுத்தி ஒழுகி வருவாராயினர். இவர்கள் கொண்ட பிழைபாட் முணர்ச்சி ஸயனையுஞ் செருக்கினையும் அகற்றி இவரை ஆட்கொள்ளத் திருவுளம்பற்றின முதல்வன் திருமாலை அழகிய பெண்வடிவில் வரக்கற்பித்துத் தானும் அவ்வணங்குமாய் அத் தேவதாரு வனத்தின்கட்செல்ல, இறைவன்றன் அளவுக் கடங்கா எழிலுரு வினைக் கண்டு காமுற்று அவ்விருடிகளின் மனைவிமார் நிறை யழிந்தனர்; திருமால் கொண்ட அழகிய அணங்கின் வடிவைக் கண்டு அவ்விருடியர் காமுற்றுத் தம் உரனுஞ் செருக்கும் அழிந்தனர். பின்னர் அவர் ஒருவாறு அறிவு தெளிந்து தமது நிலை சிதைத்தவர் சிவபிரானே என உணர்ந்து அவர்க்குப் பல சாபங்களைத் தல அவை இறைவனைப் பற்றாதொழிய, அவர் கேள்விக்கண்ணே நின்றும் ஒரு கொடும்புலியைப் பிறப்பித்து ஏவ, முதல்வன் அதன் றோலை யுரித்து உடுத்தனன்; பின்னர் ஒரு கொடும்பாம்பை அவர் ஏவ, ஐயன் அதனைக் கைக்காப்பாக அணிந்துகொண்டனன்; அதன்பின்னர்க் குறள்வடிவினதாகிய முயலகனை அவர் ஏவ, ஆண்டவன் அதன்மேற் பாய்ந்து அதன் முதுகு நெரியும்படி மிதித்தருளினன்: அதன்பிறகு பல மந்திரங் களை ஏவ, அவற்றைத் தனது திருவடியிலே சிலம்புகளாக அணிந்து எல்லாம் வல்ல பெருமான் மிகக்கொடிய திருக்கூத்து இயற்றுவானாயினன். அத்திருக்கூத்தின் கடுமை பொறுக்கலாற் றாது அம்முனிவரர் ஒருங்கே அயர்ந்துவிழ, அருகுநின்ற திருமாலும் நடுங்கினர், அதுகண்ட இறைவன் இரக்கம் உடை யோனாய் அக் கடுங்கூத்தை மாற்றி இன்பக் கூத்தினை இன்பப் பெருக்கிலாழ்ந்து மகிழ்ந்தனர்; தேவதாரு வனத்து இருடிகளும் தம் அயர்வு நீங்கித் தம் பிழைபொறுத்தருளும்படி வேண்டினர். இறைவன் அவர் இதற்கு முற்கொண்ட ஆணவ வலிகளெல்லாம் தன் திருவடிக் கீழ்கிடக்கும் முயலகன்பால் வந்தொடுங்க அருள்செய்து மறைந்தருளினன். பின்னர்த் திருமால் தம் இருக்கைசேர்ந்து இறைவன் செய்தருளிய இன்பக்கூத்தினை நினைந்த பெருங்களிப்பால் துயிலாதிருந்து தமக்கு அணையான ஆதிசேடற்கு அப்பேற் றினையுரைப்ப, அவ்வாரிசேடரும் அவ்வின்பக் கூத்தினைக் காணும் வேட்கை மீதூர்ந்து கண்ணீர் பொழிய, அதுகண்ட திருமால் நீர் இறைவற்கு அன்பராயினமையின் இனி நும்மை அணையாகக் கொள்ளல் எமக்கு ஏதமாம்; ஆதலின் நீர் தவம்முயறலே இசைவாம் என்று கூறிவிடுப்ப, அவரும் வடகைலை மருங்கு சார்ந்து சிவபிரான் திருக்கூத்துக் காண விழைந்து அருந்தவம் இயற்றினார். அதுகண்டு இறைவனும் அவர் முன் றோன்றி அவரன்பினைப் பிறரறிய ஆராய்ந்து புலப்படுத்தி, யாம் தேவதாரு வனத்தின்கட் டிருக்கூத்து ஆடிய காலையில் அவ்விடம் இந்நிலத்திற்கு நடுஅன்மையின் அஃது அதனைப் பொறுக்கலாற்றாது அசைந்தது. ஆனதுபற்றி அதனை அங்கியற்றாது விடுத்தேம். இப்போது இங்கு அதனை இயற்று தற்கும் ஈது இடம் அன்று. அதனைப் பொறுத்தற் கிசைந்த தில்லைமன்றத்தின் கண்ணே நமது ஐந்தொழில் இன்பக்கூத்து என்றும் நடைபெறா நிற்கும். அஃதேனெனில், உடம்பும் உலகமும் அமைப்பில் ஒப்பனவாம். இடை பிங்கலை சுழுமுனை உடம்பின் நடுவோடும் அங்ஙனமே, இந்நிலத்திற் சுழுமுனை நாடியும் தில்லைக்கு நேரே போம். உடம்பின்கண் அந்நடு நாடியின் நடுவே வயங்கும் நெஞ்சத் தாமரையினுள் அருள் அம்பலத்தின்கண் என்றும் ஓவாது திருக்கூத்து இயற்றுவேம். அதனை அங்கே காணும் அறிவுக் கண்ணுடையார் பிறவித் துன்பம் அறப் பெறுவர். ஆதலால், நீ இவ்வுருவை ஒழித்து, அத்திரிமுனிவன் மனைவி தொழுதகையிடத்தே முன்னொரு கால் ஐந்தலைச் சிறு பாம்பாய் நீ வந்தமையின், அவ்விடிவி னையே எடுத்துத் தில்லைக்கட் சென்று சேர்வையேல், அங்கு இங்ஙனமே வேட்கை யுற்று வழிபாடு இயற்றும் புலிக்கான் முனிவனுக்கும் உனக்கும் தைப்பூசத்தன்று எமது இன்பக் கூத்தைக் காட்டியருள்வோம் என்று உரைத்து மறைந்தருளி னான். பின்னர்ப் பதஞ்சலி முனிவரரும் அங்ஙனமே தில்லைக்கட் போந்து புலிக்கான் முனிவரருடன் அளவளாவி யிருந்து தவமி யற்றி இறைவன் குறித்த அந்நாளில் ஐயனியற்றிய ஐந்தொழில் இன்பக்கூத்தைக் கண்டுகளித்தனர் என இவ்வரலாறுகளை உமாபதிசிவனார் செந்தமிழ் நந்தா இலக்கியமாய்ச் செய்தருளிய கோயிற்புராணம் விரித்துக் கூறும். இனிக் காளிக்கு அருள்புரிந்தவாறு காட்டுதும் : பண்டொரு கால் தாருகன் என்னும் ஓர் அரக்கனைக் கொல்லும் பொருட்டுத் துர்க்கையால் ஏவப்பட்ட ஒரு காளி அவனொடு பொருது அவனுடலைக் கீண்டவழிக் கீழே சிந்திய குருதியாற் பின்னும் பலர் உண்டாதலைக் கண்டு அவனது செங்குருதியைத் தானே முற்றும் விடாது பருக, அதனால் வெறி பிடித்து உலகத்துள்ள உயிர்களை யெல்லாம் அழிப்பான் புக்கனள். அதுகண்டு எல்லா உயிர்க்குங் தந்ததையாய் விளங்கும் முதல்வன் அவள்முற் றோன்றிக் கொடுங் கூத்தியற்ற, அவள் அக்கூத்தின் கடுமையால் தனது வெறி யடங்கி இறைவனருளைப் பெற்று அமைதி பெற்றாளென்பது இது திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த வென்றிமிகு தாரகன தாருயிர் மடங்கக் கன்றிவரு கோபமிகு காளிகதம் ஓவ நின்றுநடம் ஆடியி டநீடுமலர் மேலால் மன்றல்மலி யும்பொழில்கொள் வண்டிருவை யாறே என்னுந் திருப்பாட்டான் அறியப்படும். இனி இத்திருவகவல் மாட்டு என்னும் உறுப்பால் அகன்று பொருள்முடிய நிற்றலின், அதனை அணுகிய நிலையில் வைத்துரைக்கும் வினைமுடிபு காட்டல் வேண்டும்; அது வருமாறு: ஒலிதரு கைலை உயர் கிழவோன் பயின்றனனாகிப் பல்குணம் விளங்கிக் கல்விதோற்றியும் அழித்தும் இருளைத் துரந்தும் அடியார் உள்ளத்துக் குடியாக்கொண்ட கொள்கை யுஞ் சிறப்புமெனப் பெயர்ப் பயனிலை கொண்டு முடிந்தது, பின்னும் கைலை உயர்கிழவோன் ஆகமந் தோற்றுவித்தருளியும் கலந்தினி தருளி நயப்புரவெய்தியும் இன்னருள் விளைத்தும் நற்றடம் படிந்தும் ஆகமம் வாங்கியும் பணித்தருளியும் அமர்ந் தருளியும் இயல்பினதாகி உய்ய வந்தருளிச் சாத்தாய்த்தான் எழுந்தருளியும் காட்டிய கொள்கையும் ஈந்த விளைவும் காட்டிய தொன்மையும் ஆக்கிய நன்மையும் தோற்றிய தொன்மையும் காட்டிய இயல்பும் ஆகிய கொள்கையும் அருளிய பரிசும் வேடங் காட்டிய இயல்பும் மேனி காட்டிய தொன்மையும் சிலம்பொலி காட்டிய பண்பும் கரந்தகள்ளமும் ஆக்கிய பரிசும் ஆகிய நன்மையும் இருந்த கொள்கையும் அருளிய அதுவும் காடதுதன்னிற் கரந்தகள்ளமும் ஒருவன் ஆகிய தன்மையும் பாலகன் ஆகிய பரிசும் கோலங் கொண்ட கொள்கையும் நல்கிய நன்மையும் வைத்த அப்பரிசும் பெண்ணோடாயின பரிசும் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் பலபல காட்டிய பரிசும் எனப் பல பெயர்ப்பயனிலை கொண்டு முடிந்து, உயர் கிழவோன் என்னும் எழுவாயைக் குறிக்கும் தானேயாகிய தயாபரன் எம்மிறை என்பது இடம்பெற இருந்தும் எழிலது காட்டியும் சைவன் ஆகியும் அருத்தியோ டிருந்தும் விருப்பன் ஆகியும் காட்சி கொடுத்தும் வழுக்கா திருந்தும் அறம்பல அருளியும் குறியாயிருந்தும் சாத்திரன் ஆகித் துதைந்திருந் தருளியும் என்னும் வினையெச்சங்களுக்கு வினைமுதலாய் நிற்ப, அவ்வெழுவாய்ப் பொருளையே குறிக்கும் மாதிற்கூடை மாப்பெருங் கருணையன் என்பது நிமிர்ந்து காட்டியும் ஆறா அருளியும் என்னும் வினையெச்சங்கட்கு முதலாய் நிற்பப், பின்னர் அழுக்கடையாமல் ஆண்டு கொண்டருள்பவன் என்பது கைக்கொண்டருளியும் என்பதற்கும், சுடர்விடு சோதி என்பது அணிந்தும் என்பதற்கும், அளவறியாதவன் என்பது பயின்றவண்ணமும் என்பதற்கும், அருள் புரிபவன் என்பது பதியாகவும் என்பதற்கும், பரம்பரத் துய்ப்பவன் என்பது ஊராகவும் பெயர் ஆகவும் மலையாகவும் ஆண்டு கொண்டருளி நாயினேனைப் பொதுவினில் வருகென ஒழித்தருளி உடன்கலந் தருளியும் என்பவற்றிற்கும் முதலாய்நிற்ப, எய்த வந்திலாதார் எரியிற் பாயவும், பாதம் எய்தினர் மயக்கம் எய்தியும் அலறியும் மண்டி அரற்றிப் பாதம் எய்தவும் ஏங்கினர் ஏங்கவும் பொது வினில் நடம் நவில் இறைவன் உமையொடு காளிக்கு அருளிய சிறுநகை இறைவன் என்னும் அப்பொருளையே குறித்தபெயர் முடிக்கும் எழுவாயாய்ப் புக்கினி தருளினன் என்னும் வினைகொண்டு முடிந்தது. ஆகவே, இத்திருவகவலில் இறைவன் கைலை உயர்கிழவோன் என்னும் இரண்டு எழுவாய்களும் ஒரு பொருண் மேலவாகலின் மேற்காட்டிய பெயர்ப் பயனிலை களையும் புக்கினி தருளினன் என்னும் ஒரு வினைமுற்றையுங் கொண்டு முடிந்தன; இடையிடையே இப்பொருண்மேல் வந்த ஏனைப்பெயர்கள் இடையிடையே ஏனைப் பெயர்ப் பயனிலைகட்கும் வினையெச்சங்கட்கும் வினைமுதலாய் நின்றன வென்க. இனி, இத்திருவகவலின் பொருள் அடைவு ஒரு சிறிது காட்டுவாம். இத்திருவகவலும், இதன்பின் நிற்கும் திருவண்டப் பகுதி போற்றித் திருவகவல் என்னும் ஏனை யிரண்ட கவல்களும் அடிகள் தில்லைக்கண் அருளிச் செய்கின்றாராக லானும், தில்லைக்கண் உளதாகிய அம்பலம் இந்நில வுலகத்திற்கு நடுவணதாய் நிற்றலால் அதன்கண் இறைவன் ஓவாது ஆடுத லானும், நேர் உருளின் சுற்றுவட்டத்தின்கட் காணப்படும் இயக்கம் அதன் நடுமையத்தினின்றுந் தோன்றுதல் போல, இந் நிலவுலகத்தின் இயக்கமும் இதன்கண் உள்ள எல்லாப் பொருள்களின் இயக்கமும் இதன் நடுமையத்தாகிய திருவம் பலத்தின்கண் நின்றே தோன்றற்பாலதாகலானும் அவ்வியல்பு புலப்படத் தில்லைமூதூ ராடிய திருவடி என்னுஞ் சொற் றொடரை முதற்கண் வைத் தருளிச்செய்தார். இனி, அண்டத்தின் நடுவில் ஆடுமாறுபோலவே பிண்டமாகிய ஒவ்வோர் உயிர் உடம்பின் நெஞ்ச வெளியிலும் ஐயன் அருட்கூத்து இயற்றுதல் பற்றிப் பல்லுயிரெல்லாம் பயின்றன னாகி என்பதை அதன்பின் வைத்தார். இவ்வாறு இறைவன் அண்டபிண்டங்கள் இரண்டினும் ஓவாது இயங்கும் முறைகொண்டே, மக்களறிவி னளவுக்கு ஏனையொருவாற்றானும் அகப் படாத அவன்றன் வியத்தகு தன்மைகள் ஒருவாற்றான் அறியக்கிடத்தலின் எண்ணில் பல்குணம் எழில் பெற விளங்கி என்பதனை அதன்பின் வைத்தார். ஓவியம் வல்லான் அறிவின்றிறம் அவன் வரையும் ஓவியத்தின் அழகும் நுணுக்கமும் பற்றி அளக்கப்படுமாறு போல இறைவன்றன் விரிந்த அறிவும் வரம்பிலாற்றலும் கரைகடந்த அருளும் அவனாற் படைக்கப்பட்டியங்கும் இவ்வண்ட பிண்டங்களின் அமைப்புகளைக் கொண்டே ஒருவாற்றானா யினும் அளந்தறியப் படுமென்க. இனி, அறியாமை நீக்கத்தின் பொருட்டு உயிர்களை உடம்புகளிற் புகுத்தி உலகங்களில் இயங்கவிட்ட இறைவன், அவற்றிற்கு அவ்வாற்றான் வரும் அறிவு விளக்கம் பின்னும் விரைந்து முறுகுதல் வேண்டிப், பதி பசு பாச இலக்கணங் களையும் கட்டு வீடென்னும் இவற்றின் இயல்புகளையும், கட்டறுத்து வீடுபேற்றின்கண் முயலுமாற்றையும் படைப்பின் றொடக்கத்தில் தானே அவைதமக்கு வகுத்துரைப்பினல்லது, அவை தாமாகவே அவ்வியல்பெல்லாம் அஞ்ஞான்று ஒருங்குணர்தல் செல்லாமையால் அவன் அவைதம் உள்ளத்தில் நின்றும் நேர்நின்றும் ஆசிரியன் வடிவிற் போந்தும் அக்கல்வி யறிவினைத் தோற்றுவிப்பான் என்பதும் மீண்டும் அதனை ஒடுக்கியருளுவானென்பதும் அறிவுறுத்துவார் துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் என்பதனை அதன்பிற் கூறினார். இனி, எல்லாவுயிர்க்கும் அவை கேளா திருக்கையிலும் இங்ஙனம் அருள் புரிந்து வரும் முதல்வன் ஒன்றுக்கும் பற்றாத அடியனேன் அறியாமையினையும் நீக்கினான் எனத் தம்மளவிற் செய்த உதவியையும் உணர்த்துவார் என்னுடை யிருளை ஏறத் துரந்தும் v‹wUË.ச் செய்தார். உலகத்தின்கண் உள்ள எல்லா வுயிர்க்கும் இறைவன் செய்துவரும் உதவியை ஒருவன் நூல்களின் வாயிலாய்த் தெளிந்தானேனும் அல்லது அதனை நேரே புலப்படக் கண்டானேனும் அவ்வுதவி தன்மாட்டும் நிகழக் கண்டாலன்றி அதன்கண் உறுதிப்பாடும் முதல்வன்பால் நெகிழ்ந்த அன்பும் அவற்குத் தோன்றாவென் றுணர்க. இனித் தமக்குச் செய்த அருட்பான்மை பற்றி, அடியார் எத்திறத்தாரா யினும் அவருள்ளத்தில் ஐயன் மகிழ்ச்சி மீக்கூர நிலைபெற்றிருப்பனென்பது அடியா ருள்ளத் தன்புமீ தூரக் குடியாக்கொண்ட கொள்கையுஞ் சிறப்பும் என்னும் அடிகளாற் கூறினார். இனி, அடியார்க்கு இங்ஙனம் எளியனாயிருந்து அவர்க்கு முதல்வன் ஆற்றும் உதவிகள் பல திறப்படும் என்பதனை ஆண்டாண்டு நிகழ்ந்த வரலாறுகளான் உணர்த்துவான் புகுந்து கல்லாடத்துக் கலந்தினி தருளியும் என்னும் பதினோராம் அடி துவங்கிச் சுந்தரத் தன்மையொடு துதைந்திருத் தருளியும் என்னுந் தொண்ணூற் றொன்பதாம் அடிகாறும் அவற்றை எடுத்துக் கூறினார். இறைவன் தம்மையும் ஓர் அடியவனாக ஏற்றுத் தம் பொருட்டுக் காட்டிய தோற்றங்களையும் இவற்றி டையிடையே அடிகள் கூறுதுல் காண்க. இனி, மந்திர மாமலை மகேந்திர வெற்பன் என்னும் நூறாம் அடி துவங்கி அப் பரிசதனால் ஆண்டுகொண் டருளி என்னும் நூற்றிருபத்தாறாம் அடிவரையில் இறைவன் தம்மைச் சிறப்பாக ஆட்கொண்டருளிய பேரருட் டிறத்தை விதந்தெடுத்து உரைப்பாராயினார். இங்ஙனம் உரைக்கின்றுழித் திருத்த சாங்கம் எனும் பத்து உறுப்புக்களாகிய சிறப்புக்களுடன் ஐயன் எழுந்தருளிய அருள் விழுப்பத்தினை வகுத்தருளிச் செய்தா ராகலின், அப்பத்துறுப்புக்களையும் ஈண்டு எடுத்துக் காட்டுவாம். தசாங்கம் இன்ன வென்பது ஆறு மலையும் யானையுங் குதிரையும், நாடு மூருங் கொடியும் முரசும், தாருந் தேருந் தசாங்க மெனப்படும் என்னுந் திவாகர சூத்திரத்தான் உணரப்படும். சூடாமணி நிகண்டுடையார் திவாகரத்துட் கூறிய இப் பத்திற் காணப்படாத படை என்பதனைச் சேர்த்து அவற்றும் காணப் பட்ட தேர் என்பதனை விடுவர். இனி, இவ்விரண்டு நிகண்டு நூலார் கூறிய பத்துறுப்புக்களுக்கும், அடிகள் கொண்டருளிய பத்துறுப்புக்களுக்கும் சில வேறுபாடுகள் உள. திருத்தசாங்கம் என்னும் திருப்பதிகத்தில் அடிகள் எடுத்துரைத்த பத்துறுப்புக் கள் : பேர், நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி என்பனவாம்; இவற்றும் பேர் படை என்பன திவாகரத்துட் காணப்படா; பேர் என்பது ஒன்றுமே சூடாமணி நிகண்டிற் காணப்படாது; திவாகரத்திலுள்ள யானை தேர் என்பன அடிகள் திருப்பதிகத்திற் காணப்படா; சூடாமணி நிகண்டிலுள்ள யானை என்பதொன்றுமே அடிகள் அருளிய பத்திற் காணப்படுவதில்லை. இவ் வேறுபாடுகள் உணரற்பாலன. ï¥ g¤JW¥ò¡fisí« ã‰fhy¤jh® á‹d¥ó bt‹W TWt® vd e¢ádh®¡»Åa® “tH¡bfhL átÂa tifikahd” v‹DŠ N¤âu îiuƉ TWt®.* (தொல் காப்பியம் புறத்துணையியல் 31) இனி, அடிகள் தாம் அருளிச்செய்த பத்துறுப்புக்களும் ஈண்டு வருமாறு ஆற்ற லதுவுடை யழகமர் திருவுரு, நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும் என்பதனாற் கொடி கூறினா ராயிற்று. இறைவன் றிருநுதலினும் பிற விடங்களினும் மூன்று வரிகளாக இடப்பட்ட திருநீற்று வரைகள் கொடிகள் போல் விளங்குவாயின. நிமிர்ந்து காட்டியும் என்னுஞ் சொற்றொ டர்க்கு இடையிட்டுக் காட்டியும் என்று பொருளுரையாமல் உயர்ந்து காட்டியும் என்று பொருளுரைப்பின் நுதலிற் றீட்டிய திருநீற்றுவரை ஒன்றுமே கொள்ளப்படும். கோடி என்னுஞ் சொல் திருநீற்றுவரையைக் குறிக்குஞ் சொல்லாயினும், அது வளைவுப்பொருளை யுணர்த்தலின் வானின்கண் வளைந்து வளைந்தாடுங் கொடியையும் உணர்த்துதற் குரிமை யுடைத்தாம். இக் கோடி என்னுஞ் சொற் குறுகியே கொடி என்று வழங்குதலும் உணரற்பாற்று. இனி, ஊனந் தன்னை யொருங்குட னறுக்கும், ஆனந் தம்மே யாறா வருளியும் என்பதனால் யாறு கூறியவாறாம். இனி, நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும் என்பத னான் முரசு கூறியவாறாம். இனிக் கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும் என்பதனால் முத்தலை வேலாகிய கைப்படை கூறியவாறாம். இனிக், காதலனாகிக் கழுநீர் மாலை ஏலுடைத்தாக எழில் பெற வணிந்தும் என்பதனான் மாலை கூறியவாற்றாம். அடியவன் தன்னை ஒரு காதலியாகவும் ஆண்டானைக் காதலனாகவும் வைத்துரைத்தல் மரபாதலானும், நான்காவ தாகிய சன்மார்க்கம் அல்லது ஞானமார்க்கத்தின்கண் ஆண்டா னுக்கும் அடியவனுக்கும் உள்ள நெருங்கிய இயைபினுக்குக் காதலன் காதலி என்னும் இருவர்க்குமுள்ள நெருங்கிய உறவினையே எடுத்துக் காட்டல் தொல்லாசிரியர் வழக்காய்ப் போதரலானும், அடிகளைச் சன்மார்க்கத்திற் குரியராகவே சான்றோரெல்லாம் கூறுதலானும், இக் கருத்துப் பற்றியே அடிகளும் திருச்சிற்றம்பலக் கோவையார் அருளிச் செய்தமை யானும், ஈண்டுக் காதலனாகி என்று அருளிச் செய்தது பொருத்தம் உடைத்தேயாம் என்க. மேலே தடாதகைப் பிராட்டியார் பொருட்டு வந்ததுபோலும்! என ஐயப்பாட்டின் வைத்து ஓதியதனினும், ஈண்டு அடிகள் பொருட்டு வந்ததெனக் கூறுதலை துணிபுடைத்தாம். அல்லதூஉம், இறைவன் திருவாதவூரடிகளுக்கு மெய்ப்பொருள் அறிவுறுக்கு ஞான்று கழுநீர் மாலை அணியப்பெறற்றான் என்பது வண்ணமென் கழுநீர்மாலை வளம்பெற அணிந்த பின்னர் என்னுந் திருவாத வூரர் புராணத்* (திருப்பெருந்துறைச் சருக்கம் 50) திருமொழியாற் பெறப்படுதலானும் அது வலியுடைத்தாதல் காண்க. இனி அரியொடு பிரமற் களவறியாதவன், பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும் என்பதனால் ஊர்தி கூறினாரா யிற்று. அற்றேல், இருள்கடிந் தருளிய இன்ப ஊர்தி என்பதனாற் பின்னும் ஓர் ஊர்தி கூறுத லென்னையெனின் காட்டியும் அருளியும் கறங்கவும் என்னும் முடிபுகள் போல ஊர்தி யாகவும் என நில்லாமல் ஆண்டு எச்சமும் உம்மையும் தொக்கு நிற்க வைத்தமையின், அது பத்துறுப்புக்களுக்குரிய வினைகளுள் ஒன்று அன்மை பெற்றாம்; பெறவே, அது வாளா இறைவற்கும் இன்பத்திற்கும் உள்ள இயைபு உணர்த்துதற் பொருட்டாக வந்ததன்றிப் பத்துறுப்புக்களில் ஒன்றாக வந்ததன் றென்பதூஉம் தானே போதரும் அங்ஙனமாயின், ஆண்டு அதனை ஊர்திஎனப் பத்துறுப்புக்களில் ஒன்றைக் குறிக்குஞ் சிறப்புப் பெயராற் கூறி, ஈண்டு இதனைப் பரிமாவின் மிசைப்பயின்ற வண்ணமும் என வாளா பொதுப்படக் கூறுதல் மயங்கக்கூறல்*(தொல்காப்பியம் மரபியல் 108) என்னுங் குற்றமாமா லெனின்; குற்றமாகாது; இறைவற்கு என்றும் ஊர்தியாவதூஉம், ஒரோ வொருகால் ஊர்தி யாவதூஉமென அதுதான் இருவகைத்தாம். அவற்றுள் அவற்கு என்றும் ஊர்தியாவது இன்பம்; ஒரோ வொருகால் அடியார்பொருட்டு ஊர்தியாவது பரிமா. இறைவற்கு என்றும் ஊர்தியாம் இன்பம் கட்புலனாற் காணப்படுதற்கும் பிறர்க்கு உணர்த்தப்படுதற்கும் ஆகாதநுண்மைத்தாம்; மற்று அவன் தன் அடியவர்பொருட்டு ஊர்ந்துவரும் பரிமாவோ கட்புலனாற் காண்டற்கும், அவன் அதன்மேல் இவர்ந்துவந்த பான்மை பிர்க்கெடுதது உரைத் தற்கும் எளிமையுடையவாம். இவ்வாறா கலின், ஐயன் பரிமாவின் மிசைப் புலப்பட்டுத் தோன்றிய தனையே ஈண்டு விதந்தெடுத்துக் கூறி, இங்ஙனங் கூறியது கொண்டு இறைவற்கு என்றும் ஊர்தி யாவது பரிமாவே போலுமென மாணாக்கன் மயங்காமைப் பொருட்டு அவற்கு என்றும் ஊர்தியாவது இன்பமேயாதலும் இனிது விளங்கல் வேண்டி அதனையும் ஈண்டு இடைப்படுத் தருளிச்செய்தார். இறைவனுக்கு என்றும் ஊர்தியாம் இன்பமே அடியவர் பொருட்டு ஒரு பரிமாவடிவிற் கட்புலனாய்த் தோன்றலாயிற் றென்று கடைப்பிடிக்க; இப்பெற்றி தெரித்தற் பொருட்டே அடிகள் பிறாண்டும் எக் காலத்துள்ளும், அறிவு ஒண் கதிர்வாள் உறை கழித்து ஆனந்த மாக்கடவி என்று* அருளிச் செய்தமை காண்க. இன்னும் அவ்வின்பம் பரிமா வடிவிற் கட்புலனாய் வந்த குறிப்புத்தோன்ற அதனைப் பத்துறுப்புக் களில் ஒன்றென வைத்துப் பயின்ற வண்ணமும் என வினையும் உம்மையும் விரித்தும், என்றும் ஊர்தியாம் இன்பம் கட்புலனாகாது மறைந்து நிற்குங் குறிப்புத் தோன்ற ஆண்டு நிற்றற்குரிய ஆகவும் என்னும் வினையும் உம்மையுந் தொகுத்தும் அடிகள் அருளிச் செய்த நுட்பம் பெரிதும் போற்றற் பாலது. பயில்வார்க்கு உணர்வு பெருகல்வேண்டி இங்ஙனம் உய்த்துணர வைத்தாராகலின் இது மயங்கக்கூறல் என்னுங் குற்றமாதல் யாண்டைய தென்க. அற்றேல்,தசாங்க உறுப்புப் பத்தென்பது போய்க் கூடவொன்று சேர்ந்து பதினொன்றாமாலெனின்; ஆகாது; இன்பம் ஒன்றனையே ஊர்தியாக் கூறுமவர் அதன் இருவகை நிலைபற்றி இரண்டி டத்துக் கூறினாரல்லது, ஊர்தியின் வேறாவதொன்று கூறிற்றின்மையின் அஃது அப்பத்துறுப்புக் களின் மேற்படுதல் இல்லையென்க. அஃதொக்குமன்னாயினும், இவ்வாறெல்லாம் உரைக்க வேண்டாது இன்ப ஊர்தி என்னுஞ் சொற்றொடரை இன்பத்தை ஊர்தியாகவுடையவன் என இறைவற்குப் பெயராக வைத்துரைத்தால் வரும் இழுக்கென்னை யெனின்; எங்கோன் தயாபரன் எம்மிறை வெற்பன் அண்ணல் கருணையன் அருள்பவன் உய்ப்பவன் இறைவன் கிழவோன் என முன்னும் பின்னுமெல்லாம் உயர்திணை வாய்பாட்டான் ஓதி இடையே இதனைமட்டும் இன்பஊர்தி என வைத்து அஃறிணை வாய்பாட்டான் ஓதினா ரென்றல் பொருந்தாமையானும் தூயமேனிச் சுடர்விடு சோதி என்னும் அடியிற்போந்த சோதி என்னும் அஃறிணைச் சொல் அதனை அடுத்துநின்ற காதலன் என்பதனோ டிணைந்து உயர்திணை யானாற்போல இன்ப ஊர்தி என்பதனையும் அவ்வாறு உயர்திணையாக்குஞ்சொல் ஏதும் அதனை அடுத்து நிற்பக் காணாமையானும், அதனைப் பெயராக வைத்துரைப் பின் மேற் குறித்த பொருணுட்பங்கள் பெறப்படாமையானும் அங்ஙனம் உரையுரைத்தல் அடிகட்குக் கருத்தன்றென வுணர்க. இனிப், பாண்டிநாடே பழம்பதியாகவும் என்பதனால் நாடு கூறினார். இனி, உத்தரகோசமங்கை யூராகவும் என்பதனால் ஊர் கூறினார். இனி, தேவதேவன் திருப்பெயராகவும் என்பதனாற் பேர் கூறினார். இனி, அருளிய பெருமை யருண்மலையாகவும் என்பதனால் மலை கூறினார். இவ்வாறு தசாங்கம் எனப்படும் பத்துறுப்புங் கூறப் பட்டமை காண்க. இனி ஈண்டுக் கூறப்பட்ட அப்பத்துறுப்புக் களின் முறையும், திருத்தசாங்கப் பதிகத்திற் கூறப்பட்ட பத்துறுப்புக்களின் முறையும் ஒன்றோடொன்று மாறுபட்டு நிற்றல் என்னையெனின்; திருத்தசாங்கப் பதிகத்தில் அப்பத்து றுப்புக்களுங் கூறப்பட வேண்டிய முறையே பொருவாகக் கூறினார்; ஈண்டு இறைவன் ஆசிரியன் வடிவிற் போந்துதம்மை அடிமை கொண்டருளிய ஞான்று தமக்குச் சிறப்பாகத் தோன்றிய அடையாளங்களை முன்வைத்து அம்முறையை மாற்றி விதந்து கூறினார் என்க. திருத்தசாங்கப்பதிகத்தின் ஈற்றிற்கூறிய கொடியை ஈண்டு முதற்கட் கூறினார். ஆண்டு இறைவற்கு ஆடையாளமாக வழக்கமாய்க் கூறப்படும் ஏற்றுக் கொடியைக் கூறினார்; ஈண்டு ஐயனது அழகிய திருமேனியில் தம் கண்மையுங் கருத்தையுங் கவரு நீரதாய் விளங்கித் தோன்றிய திருநீற்றுக்கோடியைக் கூறினார். ஆண்டு நாலாவதாகக் கூறிய ஆனந்த ஆற்றை ஈண்டு இரண்டாவதாகக் கூறினார்; இறைவனது பேரின்பப் பேற்றிலேயே தங்கருத்து ஈடுபட்டு நிற்றலானும், அவ்வின்பம் அவன் திருவுருவின் மேலுள்ள திருநீற்று வரைகளைக் கண்டவளவானே எழுதலானும் என்பது. இனி, ஆண்டு எட்டாவதாகக் கூறிய நாதப்பறையினை ஈண்டு மூன்றாவதாகக் கூறியது, சுத்த வைந்தவத்தின்கட் டோன்றும் நாதவொலி அப்பேரின்பத்தைப் பயக்குங் கருவியாம் ஒற்றுமை பற்றியென்க; இவ்வியைபு வேரின்பத்தோங்கும், பருமிக்க நாதப்பறை என்று அடிகள் ஆண்டோதுமாறு கொண்டு தெளியப்படும். இனி, ஆண்டு ஏழாவதாகக் கூறிய முத்தலை வேற்படையினை ஈண்டு நாதப் பறையின் பின்வைத்து நான்காவதாகக் கூறிய தென்னையெனின், பேரின்பவினைவோடு உடன் நிகழற்பால தாகிய மும்மல நீக்கத்திற்குக் கருவியாம் இயைபு உணர்த்துவான் வேண்டி முத்தலைவேலினை மேலதனோடு அடுக்கக் கூறினார்; இது மும்மலங்களைப்பாறும் என்பதற்கு அடிகளே மும்மலங்கள் பாயுங் கழுக்கடைகாண் கைக்கொள்படை என்று ஆண்டுக் கூறியவாற்றான் அறியப் படும். மும்மலம் அறுக்கவல்லது இறைவனேந்திய கழுக்கடை யேயன்றி அவன் றிருமேனியின் ஒளியும் அது வல்லுமென்பார் மூலமாகிய மும்மலமறுக்கும் என்னும் அடையைச் சோதிக்கும் விதந்தெடுத்தேற்றினார். இனி ஆண்டு ஒன்பதாவதாகக் கூறிய மாலையினை ஈண்டு ஐந்தாவதாகக் கூறியவாறென்னை யெனின், எல்லாம் வல்ல முதல்வன் ஓர் ஒப்பற்ற காதலனாகித் தமக்குப் பேரின்பத்தையும் மெய்யறிவையும் வழங்கல்வேண்டி வந்த குறிப்புணர்த்தச் செந்நிறமும் நறுமணமும் ஒருங்களாவிய செங்கழுநீர் மாலையினை யணிந்து போந்தமையின் இதனை அதன் பின் வைத்துரைத்தார். இனி ஆண்டு ஆறாவதாகக் கூறிய ஊர்தியினை ஈண்டும் ஆறாவதாகவே கூறினாரேனும் ஆண்ட தனை மலையின் பின்னும் ஈண்டு மாலையின் பின்னும் வைத்துரைத்தார். மாலையணிந்து மகிழ்ச்சி மீக்கூரப்போந்து தம்மையடிமைகொண்ட பெருமான் பின்னுந் தம்பொருட்டா கவே மதுரைமா நகரிற் குதிரை யூர்ந்து வந்தமையின் அவ்வியைபு பற்றி இதனை மாலையின்பின் வைத்துப் புகன்றருளினாரென்க. இனி ஆண்டு நாட்டை இரண்டாவதாக வைத்துரைத் தமை போலாது, இறைவன் குதிரையூர்ந்து போந்த பாண்டி நாட்டை ஈண்டுக் கூறுவேண்டுகின்றமையின் ஊர்தியின் பின் நாடுவைத்தாரென்க. இனி, ஆண்டு மூன்றாவதாகக் கூறினா ரேனும் ஊரை நாட்டின் பின் வைத்தது போலவே ஈண்டும் அதனை அவ்வாறு வைத்துரைத்தலோடு, மதுரையை அகன்ற பின் தாம் பெற்ற தவம் தமக்குச் கைவருதற்கு ஏதுவாய் நின்ற ஊராதல்பற்றி உத்தரகோசமங்கை யூரை மேலதன்பின் நிறுத்தினா ரென்க. இனி, ஆண்டு முதல் எடுத்தோதிய தேவர்பிரான் எனும் பெயரை ஈண்டு மேலவற்றின்பின் ஒன்பதாவதாக நிறுத்தியது. இவ்வாறெல்லாம் தம்பொருட்டு எளிவந்து போந்தவன் தேவர்கள் பலருள்ளும் ஒருவனே போலுமென மலையாமைப் பொருட்டும். அவன் எல்லா வுலகங்கட்கும் எல்லா வுயிர்கட்கும் ஒரு தனித் தலைமைக் கடவுளேயாம் மெய்ம்மை அறிவுறுத்தற் பொருட்டுமே யாமென்க. இனி ஆண்டு ஐந்தாவதாகக் கூறிய அருண் மலையினை ஈண்டு இறுதிக்கட் பெய்துரைத்தது, இவ்வா றெல்லாம் ஒன்றுக்கும் பற்றாத ஏழையேன் பொருட்டு எல்லாம் வல்ல ஆண்டவன் குருவடிவிற் போந்ததும் குதிரைச் சேவக னானதுமெல்லாம் அவன் அடியார்மேல் வைத்த பேரருளினா லேயாம் என்பது புலப்படுத்துதற் பொருட்டேயாமென்க. இனிச் சகலரையேயன்றி விஞ்ஞானகலர் பிரளயாகலர் முதலிய மேலோரையும் அவரவர்க்கிசைந்த பரிசால் ஆட் கொள்வானென்பது தெரித்தல் வேண்டியும், மேற்கிளந்தோதிய பலதிற அருள் விளையாட்டுகளெல்லாம் அவரவர்க்கியைந்த படியாமென்பது காட்டல் வேண்டியும் எப்பெருந்தன்மையும் எவ்வெவர் திறமும், அப்பரிசதனா லாண்டுகொண்டருளி என்பதனை ஈண்டருளிச் செய்தார். இனி, இத்துணையுங் கூறியபின் இறைவன் கடை முறையாகக் தம்மைவிட்டு மறைந்தக்கால் தம்மைத் தில்லையம் பலத்தேவருக வெனக் கூறினமையும், அப்போ தவனோடு உடன் சென்ற அடியவர்கள்பால் அவன் இரண்டறக் கலந்தருளின மையும், அவனை அங்ஙனம் எய்தப் பெறாதார் ஏங்கி வருந்தின மையும், சத்திசிவ தத்துவங்கட்கும் அப்பாற்பட்ட அருள்நிலைய மாகிய கைவலையிலே வீற்றிருந்தருளும் அப்பெருமான் அடியார்க்கு நேர் நின்று அருளுதற் பொருட்டுப் புலியூர் பொதுவினிற் புகுந்திருந்தருளினமையுங் கூறிமுடித்தா ரென்பது. இத்திருவகவலில் எல்லாவடியும் நாற்சீரான் வந்தமையின், இது நிலைமண்டில ஆசிரியப்பா; எல்லா அடியும் ஒத்து, நடை பெறுமாயின் நிலைமண்டிலம் என்றார் யாப்பருங்கலக் காரிகையிலும். (யாப்பருங்கலக் காரிகை செய்யுளியல் 1) மூன்றாவது அகவல் திருவண்டப் பகுதி (சிவனது தூல சூக்குமத்தை வியந்தது) தில்லையில் அருளிச் செய்யப்பட்டது. எல்லாம் வல்ல முதல்வன் பெரியதிற் பெரியனாயும் சிறியதிற் சிறியனாயும் நிற்கும் முறைமைகளை இத் திருவகவலில் அடிகள் அருளிச் செய்வான் புகுந்து, முதற்கட் பருப்பொருள் களுட் பெரிய அண்டப் பகுதி யினைக் கூறுகின்றாராகலின், இதன்கண் முதல் நின்ற அவ்விரு மொழிகளும் திரு என்னும் அடையடுத்து இதற்குப் பெயராயின. இவ்வாறு ஒரு பாட்டின் முதல்நின்ற ஒரு சொற்றொடர் அப்பாட்டிற்காதல், ஒரு நூல் முதற்செய்யுட்கண் நின்ற ஒரு சொற்றொடர் அந் நூற்காதல் பெயராய் வருவது முதற் குறிப்பு என்ப. இஃது ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய தெரிபுவேறு நிலையலுங் குறிப்பிற் றோன்றலும் இருபாற் றென்ப பொருண்மை நிலையே என்னுஞ் சூத்திரத்துள் அடங்கும்.* (தொல்காப்பியம் பெயரியல் 3) ஆத்திச்சூடி என்பதும் அது. தூலம் - பருமை; சூக்குமம் - நுண்மை. அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன 5 இன்னுழை கதிரின் துன்அணுப் புரையச் சிறிய வாகப் பெரியோன்; தெரியின் ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின் - ஒன்றற்கொன்று மேற்பட்டு நின்ற எழுச்சியினைச் சொல்லுமிடத்து, நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன - நூற்று ஒரு கோடியினும் மிகுதிப் படப் பரந்தனவாகிய, அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் - அண்டப் பிரிவுகளின் திரண்ட வடிவின் பெருக்கமும், அளப்பு அருந் தன்மை வளப் பெருங் காட்சி - அளத்தற்கு அரிய தன்மையும் வளப்பாடு உடைய பெரிய தோற்றமும், இல் நுழை கதிரின் துன் அணுப் புரைய - மனையினுட் புகும் ஞாயிற்றின் கதிரிற் பொருந்திய அணுக்களை ஒப்ப, சிறிய ஆகப் பெரியோன் - சிறியனவாய்த் தோன்றுமாறு பேரளவினை யுடையோன் என்றவாறு. தெரியின் என்பது பின்னே கூட்டப்படும். ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின், நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன என்னும் இரண்டடிகளின் ஈற்றில் ஆகிய என்னும் ஒரு சொல் விரித்து அண்டப் பகுதி என்பதனோடு கூட்டுக; விரிந்தனவாகிய அண்டப்பகுதி என்க. நள்ளிருட் பொழுதில் வானின்கண் முத்துக்கள் சிதர்ந்தாற் போற் காணப்படும் ஒவ்வொரு வான்மீனும் ஒவ்வோர் உலகாம். அவையெல்லாம் ஒன்றினொன்று பெரியனவாய் வான் வெளியிற் சுழன்று செல்கின்றன. இவ்வுலகங்கள் இத்துணைய வென்றும் ஒன்றினொன்று இத்துணைப் பெரியன வென்றுங் கணக்கிட்டுக் காட்டல் நம்மனோரால் ஆகாமையின் அவை தம்மை நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன என்றார்; நூற்றொரு கோடி என்பது ஈண்டு அளவின்மை குறித்து நின்றது; தொக்கோர் கோடி என்புழிப் போல* (சீவகசிந்தாமணி 3,153) இச் சொற் றொடர்க்கு நூறு கோடி யெனவாதல் நூற்றொரு கோடியென வாதல் பொருளுரைக்க கோடி - நூறு நூறாயிரம். நின்ற எழில் - பெயரெச்சத்து ஈற்றகரம் தொக்கது; புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை என்புழிப்போல*. (திருக்குறள் 59) அண்டம் என்பது முட்டையெனப் பொருள் படுவ தொரு வடசொல். உலகங்கள் ஒவ்வொன்றும் பெரும்பாலும் முட்டை போன்ற வடிவினவா யிருத்தலின் அண்டம் எனப் பெயர் பெற்றன. அண்டங்கள் இங்ஙனந் திரண்ட வடிவினவாய் இருத்தல் தெரித்தற் பொருட்டே அடிகள் உண்டைப் பிறக்கம் என்று பின்னருங் கூறினார். இந்நிலவுலகும், இந் நிலத்தின்மேல் வானிற் காணப்படும் ஏனை யுலகங்களும் உருண்ட வடிவின வாயிருத்தலை மேல்புல வானூலார் கண்டவாறே பண்டை நாளிலிருந்த நம் அடிகளுங் கண்டறிந்தமை குறிக்கொளற்பாற்று. அண்டங்கள் அங்ஙனம் உருண்டை வடிவினவாயிருத்தல் என்னை யெனின்; புலப்படாது நுண்ணிய வடிவிலிருந்த மாயையை இறைவனருளாற்றல் கலக்கிக் கடைதலின் ஆண்டெழுந்த சொல்லுக்கடங்கா விரைந்த சுழன்ற இயக்கத்தால் அது புலப்பட்ட வடிவு பெறுகின்றுழிப் பல பெரும் பகுதிகளாகப் பிரிந்து, அங்ஙனம் பிரியுங்கால் அனற்றிரளையாய் நெகிழ்ந் திருந்த அவை ஆறி யிறுகியபடியாய் அவ்வியக்கத்தின் கட்பட்டு மிகுவிரைவோடு சுழலுதலின், அச்சுழற்சிக்கு ஏற்பப் பந்துபோல் உருண்டைவடிவு பெறலாயின வென்க. அண்டங்கள் இவ்வாறு முதற் பொருளாகிய மாயையிற் பிரிந்த பிரிவுகளாதல்பற்றியே அப்பொருள்படும் பகுதி எனுஞ் சொல்லை ஈண்டெடுத்து வழங்கினார். நுண்ணிய வடிவிற் புலப்படாதிருந்த மாயையைக் கலக்கி அதன்கணிருந்து இவ்வுலகங்களை இறைவன் தோற்று வித்த படைப்பு முறையை, அவன் நீருனுட் புகுந்தான்; அங்கி ருந்து ஒரு முட்டை எழுந்தது; அவன் அதனைக் கையாடினான். அஃது உண்டாகுக, அது வளர்ந்து வருக என்று அவன் கூறினான். அப: ப்ராவிசத்தத: அண்டம் ஸமவர்த்தத தத் அப்யம்ருசத் அத்வ இதி அது பூயோத்வ இதி ஏவதத் அப்ரவீத் என்று சதபத பிராமணமும்* (சதபதபிராமணம் 6, 11, 10) கூறுதல் காண்க. இங்ஙனமே சாந்தோக்கியோப நிடதமும் (சாந்தோக்கியம் 3, 19) ஆதித்யோ ப்ரஹ்ம இதி ஆதேச: தயோபவ் யாக்யாநம் அஸத் ஏவ இதம் அக்ரே ஆஸித் தத்ஸத் ஆஸீத் தத்ஸமபவத் தத் ஆண்டம் நிரவர்த்தத கதிரவன் பிரமத்திற்கு அணுக்கமான இடமாய்ச் சொல்லப் படுகின்றான். இது முதலில் அசத்தாகவே (புலப்படாததாகவே) இருந்தது. அதிலிருந்து இந்தச் சத்து (புலப்பட்ட வடிவுடைய உலகு) வந்தது. அது வளர்ந்து ஓர் அண்டம் (முட்டை அதாவது உலகம்) ஆயிற்று. (சாந்தோக் கியம்3,19) என்று கூறுகின்றது. இனி, அண்டப் பிரகிருதி என்பது அண்டப்பகுதி என ஆயிற்றென்று உரைப்பாரு முளர். சாத்துவிகம் இராசதம் தாமதம் என்னும் முக்குணங்களும் ஒன்றினொன்று மிகாது ஒத்து நின்று வடிவுகாட்டாத நிலையே பிரகிருதியாமெனச் சாங்கியத்தும் சைவ சித்தாந்தத்தும் ஓதப்படுதலின் அதனினின்றுந் தோன்றி வடிவுடைத்தாகிய அண்டத்தைப் பிரகிருதியென வழங்கல் பொருந்தாதென்க. பகுதி பிரிவுப் பொருளைத் தருதல் பகுதியாற் பாற்பட்டொழுகப் பெறின்* (திருக்குறள் 12,1) என்புழிக் காண்க. உண்டை திரள்வடிவினை உணர்த்தல் திவாகரத்துட் காண்க; உருள் என்னும் முதனிலையிற்றோன்றிய உருண்டை என்னுஞ் சொல் இடைக்குறைந்து உண்டை என்றாயிற்று. பிறக்கம் பிறங்கு என்னும் முதனிலையிற் பிறந்த பெயர்; இது பெருமை என்னும் பொருட்டாதலைத் திவாகரத்துட் காண்க. வானின்கட் சுழன்று செல்லும் உலகங்கள் ஒவ்வொன்றன் அளவும் நம்மனோராற் குறித்துணர லாகாமையின் அளப்பருந் தன்மை என்றார். இதனை உம்மைத் தொகையாக வைத்துரை யாமல் காட்சிக்கு அடையாக ஏற்றுவாரும் உளர். அண்டகோளகைகளின் தோற்றங்களை ஆராயப் புகுவார்க்கு, அவை ஆராயுந்தொறும் ஆராயுந்தொறும் குறையா வளப்பாடு உடையனவாய் விரிதலின், வளப்பெருங் காட்சி என்றார். அணு - நுண்துகள்; பிங்கலந்தையுள் நுண்மை என்பர். அளவு குறித்தறியப்படாத அண்டங்களெல்லாம் இறைவனருள்வெளியில் மிகச் சிறிய அணுக்களை யொப்ப ஊடசைய, அவன் அவற்றை யெல்லாம் தன் அகப்படுத்துப் பின்னும் பரந்து செல்லும் பெரும் பரப்பினனாதலை நம்ம னோர்க்கு நன்கு புலப்படுத்துவார். வீட்டின் கூரைமுகட்டுச் சிற்றிடுக்கின்வழியே அதன் அகத்துப் புகும் ஞாயிற்றின் கதிரில் விரைந்தாடும் துகள்களை ஈண்டு உவமையாக எடுத்தோதிய வனப்பு சாலவும் வியக்கற்பாலது. புரைய என்னும் உவம உருபு மெய்யுவத்தின்கண் வந்தது; என்னை? கடுப்ப ஏய்ப்ப மருளப் புரைய ஒட்ட ஒடுங்க ஓட நிகர்ப்பவென் றப்பால் எட்டே மெய்ப்பால் உவமம் என்று (தொல்காப்பியம் உவமயியல் 15) ஆசிரியர் தொல் காப்பியனார் கூறினாராகலினென்பது. வேதியன் றொகையொடு மாலவன் மிகுதியும் தோற்றாமுஞ் சிறப்பும் ஈற்றொடு புணரிய மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும் 10 சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத் தெறியது வளியிற் கொட்கப் பெயர்க்குங் குழகன்; முழுவதும் தெரியின் - ஆராய்ந்து பார்ப்பின், வேதியன் தொகை யொடு - நான்முகக் கடவுளின் கூட்டத்தோடு, மாலவன் மிகுதியும் - திருமாலின் செருக்கியநிலையும், தோற்றமும் - படைப்பும், சிறப்பும் - நிலையும், ஈற்றொடு புணரிய மாப்பேர் ஊழியும் - அவை முடிவொடு கூடிய மிகப்பெரிய ஊழிகாலமும், நீக்கமும் - அதுநீங்குகையும், நிலையும் - நிலைபேறும், சூக்க மொடு தூலத்துச் சூறை மாருதத்து எறியது வளியின் - நுண்மை யுடன் பருமையும் வாய்ந்த சுழல்காற்றினது வீச்சின்கட் பட்ட சிறுகாற்றுச் சுழலுமாறுபோல. கொட்க - சுழல, பெயர்க்கும் - திரிக்கும், குழகன் - இளையோன் என்றவாறு. முழுவதும் என்பது பின்னே கூட்டப்படும். என்றது : பெருந்திரளினரான நான்முகக்கடவுளரும், அவர் கூட்டத்திற்குத் தலைவரான திருமாலும், அவர் முறையே செய்யும் தொழில்களான தோற்றமும் நிலையும், அவை முடிந்த ஊழி காலமும், அவ்வூழிக்காலநீக்கமும், மீண்டும் அவரும் அவையுந் தோன்றி நிலைபெறுதலும் மாறிமாறிச் சுழலச் சுழற்றும் குழகன் என இறைவனது நுண்ணிய வரம்பிலாற்றல் கூறிய படியாம். மேலே, முதல் ஆறடிகளானும் பருப்பொருள்களாய் ஒன்றி னொன்று பெரியவாய அண்டங்களும் தன்னை நோக்கச் சிற்றணுக்களாம்படி தான் வரம்பின்றிப் பெரியனாய் நிற்கும் இறைவனது தூலநிலைகூறி, ஈண்டிவ் வாறடிகளானும் அவ்வவ் வண்டங்கட்குத் தலைவராய்த் தன்னால் நிறுத்தப்பட்டிருக்கும் நான்முகன் திருமான் முதலான கடவுளரையும் அவர் செய்யுந் தொழில்களையும் தன் றொழிற்கட்படுத்துச் சுழற்றுஞ் சூக்கும நிலை கூறினார். அண்டங்கள் தூலப் பொருள்களாதலும், அவ்வண்டத் தலைவராங் கடவுளர் சூக்கும உயிர்களாதலும் தேற்றமாகலின், அவ்விருவகைப் பொருள்களோடு இயைந்து நிற்கும் இறைவனது நிலையும் அவ்வாற்றான் இருவகைப்படுத் தோதப்பட்டதென்க. இனி, அண்டங்கள் எத்துணைய அவ்வண்டத் தலைவரும் அத்துணை யராம் என்பது தெரிப்பார் அவ்விரு நிலைகளையும் முன்னும் பின்னும் அவ்ஆறு அடிகளாற் கூறினார் என்க. அண்டங்கள் பலவற்றினும் படைத்தற்றொழிலைப் புரியும் நான்முகக்கடவுளர் பலராகலின் வேதியன் தொகை என்றார். இதுபற்றியே திருநாவுக்கரசுநாயனாரும் நூறு கோடி பிரமர்கள் நுங்கினார் ஆறு கோடி நாராயணர் அங்ஙனே ஏறு கங்கை மணல்எண்இல் இந்திரர் ஈறி லாதவன் ஈசன் ஒருவனே என்று அருளிச் செய்தனர். மாலவன் மிகுதியும் என்பதில் மிகுதி என்னுஞ் சொல் செருக்கு என்னும் பொருட்டாயிற்று; மிகுதியான் மிக்கவை செய்தாரை என்புழியும்* (திருக்குறள் 158) இப்பொருட்டாதல் காண்க. திருமால் செருக்குற்றுத் தலையிழந்தமை எசுர் வேதத்தைச் சேர்ந்த சதபத பிராமணத்திற் சொல்லப்பட்டிருக் கின்றது; அது வருமாறு: கடவுளர் அதன்பிற் சொன்னார்கள் : நம்முள் எவர் உழைப்பு தவம் அன்பு வேள்வி படில என்னும் இவற்றால் வேள்வியின் பயனைக் காண்கின்றாரோ அவர் நமக்குள் மிகச் சிறந்தவர் ஆகுக. இது நமக்கெல்லாம் பொது (அதற்கெல்லாரும்) அப்படியே ஆகுக (என்றனர்). முதலில் திருமால் அதனை அடைந்தனர். அவர் கடவுளரிற் சிறந்தோர் ஆயினர்: அதனால் மாந்தர்கள் மாயயோன் தேவர்களில் மிகச் சிறந்தோன் என்கின்றனர். எவன் இந்த மாயோனாகின்றான் அவன் வேள்வி யாகின்றான். எவன் இந்த வேள்வியாகின்றான் அவன் ஆதித்தியன் ஆகின்றான். மாயோன் இந்தப் புகழால் அடங் காமற் செருக்குற்றனன். இங்ஙனமே இப்போது ஒவ்வொருவரும் புகழால் அடங்காமற் செருக்குறுகின்றனர். அவன் தன் வில்லையும் மூன்று கண்களையும் எடுத்துக்கொண்டு போயினான். நாண் ஏற்றிய தனது வில்லின் முனைமேல் அவன் தனது தலையைச் சார்த்திக்கொண்டு நின்றனன். அவனை மேற்கொள்ள முடியாமையின் கடவுளர் அவனைச் சூழ்ந்து கொண்டு கீழே அமர்ந்திருந்தனர். அப்போது எறும்புகள் அவர் களை நோக்கி ‘அவ்வில்லின் நாணை அறுப்பவனுக்கு நீங்கள் யாது கொடுப்பீர்கள்? என்று சொல்லின. அவன் நுகர்தற்கு உணவு கொடுப்போம்; பாலைநிலத்திலுங்கூட அவன் தண்ணீர் பெறுவான்; மேரும் நுகர்தற்கு எல்லா உணவுப் பொருளும் தருவோம் என்றார்கள். அவை அணுகி அவனது வில்லின் நாணைக் கடித்தன. அஃது அறுந்ததும் வில்லின் முனைகள் நிமிர்ந்து மாயோன் தலையை அறுத்து விட்டன. அஃது ஓசையிட்டுக்கொண்டு விழுந்தது.”* (சதபத பிராமணம் 4 111) இங்ஙனமே இது கிருஷ்ண எசுர்வேதத்தைச் சேர்ந்த தைத்திரீய ஆரணியகத்திலும்,* (தைத்திரீய ஆரணியம் 5117) சாமவேதத்தைச் சேர்ந்த பஞ்சவிம்ச பிராமணத்தினும்* (பஞ்சவிம்ச பிராமணம் 7,5,6) சொல்லப்பட்டிருத்தல் காண்க. இனி, மிகுதி எண்ணின் மிகுதியைக் காட்டுவதெனப் பொருள்கொண்டு, வேதியன் தொகை என்றாற்போல மாலவன் தொகை எனப் பொருளுரைத்தலும் ஒன்று. தோற்றமும் சிறப்பும் என்பவற்றில் சிறப்பு என்பது ஈண்டுக் காத்தற்றொழி லால் உண்டாகும் நிலைபேற்றினை உணர்த்து கின்றது; சிறப்பினைத் தரும் நிலைபேற்றினைச் சிறப்பென்றது ஆகுபெயரான்; சிறப்புக் குடிமை செல்வம் கல்விகளினாய மிகுதி* (திருக்குறள் 977) என்பர் பரிமேலழகியார். தோற்றம் வேதியன் றொகைக்கும், சிறப்பு மாலவன் மிகுதிக் கும் நிரல் நிரையே வந்தன. அழிப்பினைச் செய்யும் இறுதிக்காலத்தில் படைப்புங் காப்புந் தனிநிற்க மாட்டாவாய் அழிந்து ஒடுங்குதலின் ஈற்றொடு புணரிய மாப்பேர் ஊழி என்றருளிச் செய்தார். சிவஞானசித்தியாரிலும், இறுதியாங் காலந் தன்னில் ஒருவனே இருவ ருந்தம் உறுதியில் நின்றா ரென்னில் இறுதிதான் உண்டா காதாம் அறுதியில் அரனே எல்லாம் அழித்தலால் அவனால் இன்னும் பெறுதும்நாம் ஆக்கம் நோக்கம் பேரதி கரணத் தாலே என்று இவ்வுண்மை தெளிவுறுத்தப்பட்டமை காண்க. ஈண்டு மாப்பேர் ஊழி என்றது மா சங்கார காலத்தை இனி,. இம் மாப்பேர் ஊழிக்கட் படைப்புக் காப்பினையும் அவற்றைச் செய்யுங் கடவுளரையும் ஒடுக்கியருளின மா சங்கார உருத்திரனாகிய எல்லாம் வல்ல முதல்வன் மீண்டும் அவற்றைத் தோற்றுவிக்குங்கால் தன்கண்நின்றே தோற்றுவிப்பனாகலின் நீக்கமும் நிலையும் என்பவற்றை மாப்பேர் ஊழி யின்பின் வைத்தோதினார். இவ்வாறு அண்டங்களும் அவ்வண்டத் தலைவர்களும் மாப்பேரூழியில் ஒடுங்கி மீளத் தோன்றுதலையே ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனாரும், அவன் அவள் அதுவெனும் அவைமூ வினைமையிற் றோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர் என்னுஞ் சூத்திரத்தும்,*(சிவஞானபோதம் 1) ஒடுங்கின சங்காரத்தின் வழியல்லது உற்பத்தியில்லை என்னும் வார்த்திகப் பொழிப்பினும் இனிது விளக்கி யருளினமை காண். மாப் பேர் ஒரு பொருள் இரு சொல். நீக்கம் என்பது ஈண்டு அவ்வூழிநீங்கி அவை மீளத் தோன்றுதலின் மேற்று. இங்ஙனமாக ஒடுக்கமுந் தோற்றமும் மாறிமாறிச் சுழன்று வருதலை ஓர் உவமையின் வைத்துக் காட்டுவார் சூறைக்காற்றின் கண் அகப்பட்டுச் சுற்றும் சிறுகாற்றினை எடுத்துக் கூறினார்; சூறைக்காற்று எல்லாவற்றையுஞ் சுழற்றும் சிறுகாற்றினை எடுத்துக் கூறினார்; சூறைக்காற்று எல்லாவற்றையுஞ் சுழற்றும் முதல்வன் செயலுக்கும், அதன்கட்பட்ட சிறுகாற்று இறைவன் செயலிற்பட்டு நடைபெறும் ஏனை எல்லாவற்றிற்கும் உவமை களாக இயைத்துக் கொள்க. உவமையும் பொருளும் இங்ஙனம் இயையுமாறு வைத்துரைக்க அறியாதார் தத்தமக்கு வேண்டியவாறெல்லாம் உரைப்ப. எறி - வீச்சு; அது பெயர்ப் பொருளையே அசைத்து நின்ற தொரு சொல். (இலக்கணக் கொத்துரை வேற்றுமையியல் 25) ‘வளி’ சிறுகாற்று எனப் பொருள்படுதலை “முயக்கிடைத் தண்வளி போழ” என்பதற்குப் பரிமேலழகியார் கூறிய வுரையிற் காண்க.* (திருக்குறள் 1239) சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத் தெறியது வளி என்பதிற் சூக்கம் என்றது சூறை மாருதத்திற்கும், தூலம் என்றது வளிக்கும் உரிய இயல்புகளை நிரலே குறித்து நின்றன. பருப் பொருளை இயக்குவது நுண்பொருளே யாதல் நீர் தன்னினும் பரிய பொருள்களை இயக்குதற்கண்ணும், நீராவி, காற்று, மின் முதலிய நுண்பொருள்கள் பெரும் பெரும் பொறிகளை இயக்குதற் கண்ணும் வைத்து நன்கு அறியக் கிடத்தலின், நம்ம னோர் மெய்க்கட்படும் சிறுவளியினை இயக்குவதூஉம் அதனினும் நுண்ணிய சூறைக்காற்றே யாதல் பெறப்படும். பெறவே, இறைவன் மிக நுண்ணியனாம் என்பதூம், அவன்றன் நுண்மையை நோக்க ஏனை உயிருள்ளனவும் உயிரில்லனவும் ஆய எல்லாம் பருப் பொருளேயா மென்பதூஉம், அத்துணை நுண்ணியனாதல் பற்றியே எல்லாம் அவன்றன் ஆற்றலாற் சுழற்றப்படுவவாயின வென்பதூஉம் தாமே பெறப்படும். சூக்கம் என்பது சூக்ஷும என்னும் வடசொற் சிதைவு. தூலம் என்பது தூல என்னும் வடசொற் சிதைவு ஈண்டு இரண்டாம் வேற்றுமைஉருபு தொக அத்துச் சாரியை நின்றது; இவ்வாரு வருதல் கொண்பெருங் கானத்துக் கிழவன் என்புழியுங் காண்க. (புறநானூறு 155) எறியது வளி என்புழி அன்சாரியையும்கண் உருபுந் தொக்கன. கொட்கல் - கழலல்; அந்தரக் கொட்பினர் வந்துடன் காண என்றார் திருமுருகாற்றுப்படையினும். பெயர்க்கும் என்பதன் தன்வினை முதனிலை திரிதற் பொருட்டாதல் ஊழி பெயரினும் என்புழிக் காண்க (திருக்குறள் 989) குழகன் - இளையோன்; மழவுங் குழவும் இளமைப் பொருள் என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். எல்லாப் பொருளும் இளமையும் அது கழிந்து மூப்பும் உடையனவாய் வேறுபாடுறா நிற்க, அவற்றை அவ்வாறு திரிபுபடுத்தும் முதல்வன் தான் அங்ஙனந் திரிபெய்தாது என்றும் ஒரு பெற்றியனாய் நிற்றலின் இளையோன் என்றார். படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை காப்போற் காக்குங் கடவுள், காப்பவை 15 கரப்போன் கரப்பசை கருதாக் கருத்துடைக் கடவுள், திருத்தகும் அறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும் வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி கீடம் புரையுங் கிழவோன், நாடொறும் 20 அருக்கனிற் சோதி அமைத்தோன், திருத்தகு மதியில் தண்மை வைத்தோன், திண்டிறற் றீயின் வெம்மை செய்தோன், பொய்தீர் வானிற் கலப்பு வைத்தோன், மேதகு காலின் ஊக்கங் கண்டோன், நிழல்திகழ் 25 நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட மண்ணில் திண்மை வைத்தோன், என்றென் றெனைப்பல கோடி எனைப்பல பிறவும் அனைத்தனைத் தவ்வயின் அடைத்தோன், அஃதான்று முழுவதும் படைப்போற் படைக்கும் பழையோன் - எல்லா வற்றையும் உண்டாக்கும் நான்முகனையும் படைக்கும் பழை யவன், படைத்தவை காப்போற் காக்கும் கடவுள் - உண்டாக்கப் பட்டவைகளைக் காக்கும் மாயோனையும் காக்குங் கடவுள் காப்பவை கரப்போன் - காக்கப்பட்டவைகளைத் தத்தம் துற் பொருள்களில் ஒடுக்கி மறைப்பவன், கரப்பவை கருதாக் கருத்து உடைக் கடவுள் - அங்ஙனம் மறைக்கப்பட்டவற்றைச் சில காலங் கருதாதிருந்து பின்னர்க் கருதுங் கருத்து உடைய கடவுள் திருத்தகும் அறுவகைச் சமயத்து அறுவகையோர்க்கும் - பொலிவு பொருந்தும் ஆறுவகைப்பட்ட சமயத்தைக் கைப் பற்றும் அறுவகையோர்க்கும். வீடு பேறு ஆய் நின்ற விண் ணோர் பகுதி பகுப்புகள் எல்லாம். கீடம்புரையும் கிழவோன் - தன்னை நோக்கப் புழுவை யொப்பாராகத் தானே வீடுபேற்றிற்கு உரியனாய் நின்றோன், நாள்தொறும் அருக்கனிற் சோதி அமைத் தோன் - ஒவ்வொரு நாளும் எழும் பகலவனில் ஒளியினை அமைத்தவன், திருத்தகு மதியில் தண்மை வைத்தோன் - பொலிவு பொருந்திய செய்தோன் - மிக்க வலியினையுடைய நெருப்பின்கண் வெப்பத்தைச் செய்தவன், பொய்தீர் வானில் கலப்பு வைத்தோன் - பொய் இல்லாத வானத்தின்கட் கலப் பினை வைத்தோன், மேதகு காலின் ஊக்கம் கண்டோன் - மேன்மைபொருந்து காற்றின்கட் கிளர்ச்சியினைச் செய்து வைத்தோன், நிழற் திகழ் நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் - ஒளிவிளங்கும் நீரில் இனிய சுவையினை நிகழச் செய்தோன், வெளிப்பட மண்ணில் திண்மை வைத்தோன் - புலனாக மண்ணி னிடத்துத் திட்பத்தினை வைத்தவன் என்று என்று எனைப் பலகோடி எனைப் பல பிறவும் - எவ்வெக் காலத்தும் எத்துணைப் பலகோடியாகிய பொருள்களையும் எத்துணைப் பலவாகிய உயிர்களையும் அனைத்து அனைத்து அவ்வயின் அடைத்தோன் - அவ்வளவு அவ்வளவாக அவ்விடங்களிற் சேர்த்தோன், அஃது ஆன்று - அஃதன்றியும் என்றவாறு. உலகங்களைப் படைக்கும் ஆற்றல் உடைய நான்முகக் கடவுளையும் படைக்கப்பட்ட உலகங்களைக் காக்கும் ஆற்றல் உடைய திருமாலையும் இறைவன் படைத்துக் காப்பன் என்று கூறியதென்னை? மாப்பேருலகங்களையும் அவ்வுலகத்துப் பொருள்களையும் படைக்கவுங் காக்கவும் வல்லரான அவரினும் மேற்பட்ட பிறிதொருகடவுள் உண்டென்றல் மிகையாமா லெனின்; அற்றன்று; படைத்தற் றொழில் ஒன்றற்கே உரியவர் அதனின் வேறாகிய காத்தற்றொழிலைச் செய்யமாட்டாமை யானும், காத்தற் றொழில் ஒன்றற்கே உரியவர் அதனிற் பிறி தாகிய படைத்தற் றொழிரைச் செய்யமாட்டாமையானும், அவ்விருவருமே முதல்வர் எனக் கொள்ளின் அவர் தம் முட்டாமே பெரியரெனக் கருதி மாறுபட்டவழி நடு நின்று அவர் தம் வழக்குத் தீர்த்து அவர்க்கு அறிவு கொளுத்துதற்கு அவரிற் பெரியனாகிய ஒருவன் இன்றியமையாது வேண்டப்படுவனா கலானும், படைத்தல் காத்தல் முதலாகிய எல்லாத் தொழிலும் ஒருங்குவல்ல ஒருமுழுமுதற் கடவுள் அவரின் வேறாய் வேண்டப்படு மென்க. அல்லதூஉம், எவற்றையும் படைக்கும் ஆற்றல்மிக்கோன் தான் ஒன்றாற் படைக்கப்பட்டுப் பிறத்தல் இலனாதல் வேண்டும். எவற்றையுங் காப்போன் தான் பிறத்தலும் பிறராற் காக்கப்படுதலும் இலனாதல் வேண்டும், மற்று, நான்முகனுந் திருமாலும் பிறந்து இருந்து இறந்தமை பண்டை நூல்களில் விளக்கமாகச் சொல்லப்பட்டிருத்தலின், அவர் தனித்தனி முதல்வராதலும் ஒருங்கு சேர்ந்து முதல்வராதலும் அல்லதவருள் ஒருவரே முதல்வராதலும் ஒருவாற்றானும் செல்லாது. இனி, நான்முகன் பிறப்பினைக் கூறும் பழைய வரலாற் றினை இங்கெடுத்துக் காட்டுவாம். எல்லாவற்றிற்கும் மேலான என்றும் பிழித்திருக்கிற தெய்வத்தால் இன்னதென்றறியப்படாத ஒரு முறைமை பற்றி முக்குணங்களுங் கலக்கப்பட்டு இந்த மான் (மகத்) என்னுந் தத்துவம் உண்டாயிற்று. இராசத குணம் மேற்பட்டு ஒரு முறைமையால் உந்தப்பட்ட அந்த மானிலிருந்து பூதாதியகங்காரந் தோன்றி முக்குண வேறுபாட்டால் விசும்பினையும் மற்றவைகளையும் ஐந்து தொகுதிகளாகத் தோற்றுவித்தது. இவை தனித்தனியே படைக்க மாட்டாமை யால், முறைமையால் ஒருங்கு சேர்க்கப்பட்டு ஐம்பூதங்களால் ஆன ஒரு பொன் அண்டத்தை (முட்டையை)ப் பிறப்பித்தன. இவ் அண்ட கோசமானது கடற்றண்ணீரிலே உயிரின்றிக் கிடந்தது. அதில் ஈசன் ஓராயிரம் ஆண்டு இருந்தான். அவனது கொப்பூழிலிருந்து ஆயிரம் ஞாயிறுபோல் ஒளிவிளக்கம் வாய்ந்ததாய், எல்லா உயிர்க்கும் உறைவிடமாயுள்ள ஒரு தாமரை மலர் தோன்றிற்று. அதன்கட் சுராட்டாகிய நான்முகக் கடவுள் பிறந்தனன். அவன் நீரின்கண் அமர்ந்திருந்த இறை வனால் நிறைந்து உந்தப்பட்டுப் பண்டு போல எல்லா உலகங்களையும் தனது ஒரு கூற்றிலிருந்து படைத்திட்டான் என்று பாகவத புராணம் கூறுகின்றது. (பாகவத புராணம் 3, 30, 12) இது கொண்டு நான்முகன் இறைவனருளாற் படைக்கப்பட்டு முன்னொரு காலத்திற் பிறந்தமை நன்கு தெளியப்படும். இனித் திருமால் சுக்கிரனாலும் பிருகுவினாலும் சபிக்கப் பட்டுப் பத்துமுறை நிலவுலகத்திற் பிறந்தாரென மற்ச புராணம், (மற்ச புராணம் 47) அக்கினி புராணம், அரிவமிசம் முதலிய நூல்கள் கிளந் தெடுத்துக் கூறுதலாலும் அவர் செருக்குற்றுத் தலையிழந்த வரலாற்றினைச் சதபதபிராமணம், தைத்தீரிய ஆரணியகம், பஞ்சவிம்ச பிராமணம் முதலிய வேதநூல்கள் கூறுதல் முன்னரே எடுத்துக் காட்டப்பட்டமையாலும் அங்ஙனம் பிறப்பு இறப்புக்களும் கிடந்துழன்ற அத்திருமால் முழுமுதற் கடவுளாதல் ஒருவாற் றானும் இயையா தென்க. அதுவேயுமன்றி, நான்முகனுந் திருமாலுந் தாத்தாமே முதல்வரெனத் தம்முட்டாமே கருதிச் செருக்கி மலைந்தவழி அவர்க்கிடையே இறைவன் பெரியதோன் அனற்பிழம்பு வடிவாய்க் கிளர்ந்து தோன்றி அவர் தலைவரல்லாமை தேற்றின வரலாறு இலிங்கபுராணத்தின்கண் (இலிங்க புராணம் 1, 17) விரித்துரைக்கப்பட்டிருத்த லானும் அவ்விருவரும் முதல்வரா காமையும், எல்லாத் தொழிலும் ஒருங்கு வல்ல முழுமுதற்கடவுள் ஒன்று அவரின் வேறாய் உண்மையும், அம்முழுமுதற்கடவுள் சிவபிரானேயாந் தன்மையும் தெற்றென விளங்காநிற்கும். இவ்வாற்றால், நான்முகன் திருமான் முதலான கடவுளரைப் படைத்துங் காத்தும் வருவான் இறைவனென்று ஈண்டு அடிகள் அருளிச் செய்தது சாலப் பொருத்தமுடைத்தா மென்க. அற்றேல், எல்லாம் எல்ல இறைவனே படைத்தல் காத்தல் அழித்தல் முதலான எத்தொழிற்கும் உண்மையில் உரியனாக, நான்முகன் திருமான் முதலான பிறர் அவற்றுள் ஒரோ வொன்றைச் செய்வாராக நூல்கள் ஓதுதல் என்னை யெனின்; எல்லா வுயிர்களும் உடம்புகளிற் பொருந்தி அவற்றின்கண் அமைந்த அகக்கருவி புறக்கருவிகளின் வாயிலாகப் பலதிறப் பட்ட வினைகளைச் செய்தாலன்றி அவரைப் பற்றிய ஆணவ மலத்தின் வலி தேயாதாகலின், அதன் பொருட்டு மேலுள்ள தேவர் முதற் கீழுள்ள மக்கள் விலங்குகள் புழுக்கள் பூண்டுகள் ஈறான எல்லா வுயிர்களும் அவ்வாணவப்பற்று அறுங்காறும் வினைகளைச் செய்யுங் கடப்பாடு உடையனவாய்ப் போதரு கின்றன. நான்முகன் திருமான் முதலான கடவுளரும் மலக்கறை யுடையராகலான் அவர்க்கது நீங்கும்பொருட்டு, இறைவனே அவர்மேல் வைத்த அருட்பெருக்கால் அவர் தமக்கு ஒரோ வொரு தொழிலினை வகுத்துக் கொடுத்தா னென்க. இவ்வுண்மை உரைத்தஇத் தொழில்கள் மூன்றும் மூவருக் குலகம் ஓத வரைத்தொரு வனுக்கே ஆக்கி வைத்ததிங் கென்னை யென்னின் விரைக்கம லத்தோன் மாலும் ஏவலான் மேவி னோர்கள் புரைத்ததி கார சத்தி புண்ணியம் நண்ண லாலே என்று சிவஞானசித்தியாரிலும் இனிது விளக்கப்பட்டமை காண்க. அற்றேல், தேவர்க்கோ அறியாத தேவ தேவன், செழும் பொழில்கள் பயந்துகாத் தழிக்கும் மற்றை, மூவர்கோ னாய்நின்ற முதல்வன் என்று அடிகள் பிறாண்டும் ஓதுமாறுபோல அழித்தற் றொழிலைச் செய்யும் சங்கார உருத்திரனையும் ஈண்டெடுத்துக் குறிப்பிடாமை என்னையெனின்; புராணங் களும் கூறப்படும் சீகண்டருத்திரக் குரிய வடிவங்களும் பெயர் களுந் தொழில்களும் முதல்வனுக்கும் ஒப்ப உளவென்பது வாயுசங்கிதையுட் கூறப்படுதலின் (சிவஞான சித்தியார் சிவஞான முனிவருரை 1ஆம் சூத்திரம் 53ஆம் செய்யுள்) அவ்வுருத்திரனுக்குரிய சங்காரத் தொழில் முதல்வன் றொழி லாய் அடங்குதல்பற்றி அவனையும் அவன் செய்யும் அத் தொழிலினையும் ஈண்டு வேறுபிரித்து ஓதிற்றிலர். அவ்வாறுரைப்பின் முதல்வன் அழித்தற் றொழில் ஒன்றற்கே உரியனாம் போலும் என ஐயுறக்கிடக்குமாலெனின், அற்றன்று, அழித்தற்றொழிலின் மிக்க வலியுடையது பிறிதில்லை; உலகத்தின்கண் எத்துணை வலியபொருள் களேனும் எத்துணை வலிய உயிர்களேனும் அவையெல்லாம் அழித்தற் றொழில் நிகழுங்கால் அதன்முன் நிற்கலாற்றாது கெட்டு அழிந்து மறைந்து போதல் கண்டா மன்றே. இவ்வாறு எல்லாத் தொழில்களையும் தன்கண் அடக்கி எவற்றினும் மிக்கதாய் நிற்கும் அவ்வழித்தற் றொழிரைச் செய்யவல்லவன் எல்லாம் வல்ல முதல்வன் ஒருவனேயன்றி ஏனையோர் அதனை மாட்டுவார் அல்லர். அவ்வாறு இறைவனது வரம்பிலாற்றலைப் புலப்படும் சிறப்புடைமை பற்றியே சங்காரத் தொழிலினை இறைவற்குச் சிறப்பாக எடுத்து வழங்குப. அங்ஙனம் வழங்கினும் ஏனை யிரண்டு தொழில்களும் அதன் வழியே பெறப்படுதல் திண்ணமாமென்க. என்னை? எது எதன்கண் ஒடுங்கிற்று அஃது அதன்கண் நின்றே தோன்றக் காண்டுமாகலின். ஒரு மரத்தினகண் உள்ள வன்மையெல்லாம் அதன் வித்தின்கண் ஒடுங்க, மீண்டும் அவ்வித்தினின்றே அம்மரம் முளைத்தல் கண்கூடாய் அறியக் கிடத்தல்போல, முதல்வனால் அழிக்கப் பட்டு அவன்கண் ஒடுங்கிய உலகம் மீள உளதாங்கால், அவன்கண் நின்றே போதரும் என்க. இவ்வியல்பு ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனார் இனி ஒடுங்கிய சங்காரத் தினல்லது உற்பத்தி இல்லை எனவும், இலயித்த தன்னில்இல யித்ததாம்ம லத்தால் இலயித்த வாறுளதா வேண்டும் - இலயித்த தத்திதியில் என்னின் அழியா தவைஅழிவ தத்திதியும் ஆதியுமாம் அங்கு எனவும் அருளிச் செய்த வாற்றால் நன்கு உணரப்படும் அற்றேல், உலகங்களுக்கெல்லாம் முதற்பொருளாவது மாயையே யாதலான் அவை ஒடுங்குங்கால் அம்மாயையில் ஒடுங்கி, மீண்டும் உளவாங் கால் அம்மாயையினின்றும் உளவாமென்றலே பொருத்தம் உடைமையின், அதனின்வேறாக அவை இறைவனில் ஒடுங்கிப் பெயர்த்தும் அவன்பால் நின்றே தோன்றுமென்றல் அமையாதாம் பிறவெனின்; அற்றன்று, இறைவன் ஒரு வரம்புடைப் பொருளாய், மாயையைப் பிரிந்து வேறாய்த் தனி நிற்பான் அல்லன். அவன் நுண்ணியவற்றி லெல்லாம் நுண்ணிய னாகலின் மாயையின் உள்ளும் புறம்பும் நிறைந்து நிற்பன்; நிற்கவே, மாயை அவனது நிறைவின்கண் அடங்கிநின்று அவன்றன் ஆற்றலால் உந்தப்பட்டு உலகங்களைத் தோற்றுவித்தலும் மீள அவற்றைத் தன்கண் ஒடுக்குவித்தலும் செய்யும். இவ்வாறு தன்னோடு உடன் விரவிநிற்கும் இறைவன் செயலாலன்றித் தானாகவே மாறை ஒன்றைப் பிறப்பித்தலும் ஒடுக்குதலுஞ் செய்யமாட்டாதாகலின், மாயையில் ஒடுங்கித் தோன்றும் உலகங்களை அதனோடு உடன்விராய் நிற்கும் இறைவனில் ஒடுங்கித் தோன்றுவனவாக மெய்ந்நூல்கள் அறிவுறுப்பவாயின. யாங்ஙனமெனின், நெற் பயிர் நெல்லாகிய வித்தினின்று முளைப்பதே யாயினும் அவ்வித்து நிலமாகிய வயலுட் கிடந்துழி யன்றி அஃது அதன்கண் நின்று முளையாது; நென் முளைத்தற்கு வயல் நிலத்தின் சேர்க்கை இன்றியமை யாததாயிருத்தலின் வித்தினின்று தோன்றிய அப்பயிரை வயலில் முளைத்த பயிரென்று வழங்குவர்; அது போலவென்பது. எனவே, மாயையிற் றோன்றிய உலகங்களை, அவ்வாறவை தோன்றுதற்கு இன்றியமையா நிமித்த காரணமாய் அதனோடு உடன்கலந்து அதனைத் தன்கண் அடக்கி நிற்கும் இறைவன்பால் நின்று தோன்றுவனவாகவும் மீள அவன்பால் ஒடுங்கு வனவாகவும் கூறல் வாய்ப்புடைத்தேயா மென்க. இந்நுட்பம் ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனார், வித்துண்டா மூலம் முளைத்தவா தாரகமாம் அத்தன்தாள் நிற்றல் அவர்வினையால் - வித்தகமாம் வேட்டுவன்ஆம் அப்புழுப்போல் வேண்டுருவைத் தான் கொடுத்துக் கூட்டானே மண்போற் குளிர்ந்து என்று தெளிந்துரைத்தவாறு பற்றி அறிந்து கொள்க. இந் நுணுக்கந் தேற மாட்டாத மாயாவாத நூலார் அசத்தே முதற்கண் இருந்தது; அதிலிருந்து சத்துத் தோன்றிற்று எனவும், (தைத்திரீய உபநிஷத் 2,6,1) சத்தே முதற்கண் இருந்தது; அஃது ஒன்றாய் அத்துவித் தன்மை யுற்றிருந்தது எனவும் (சாந்தோக்கிய உபநிஷத் 6,2,1) உபநிடதங்கள் ஒன்றோடொன்று மாறு பாடுறுவன போற் கூறுஞ் சொற்றொடர்ப் பொருளொரு மையறிந்து கொளுவ மாட்டாமையின், இறைவனே உலகங் களுக்கு முதற் காரணப் பொருளாமெனக் கொண்டு பெரிதும் இழுக்கினார். அறிவில் பொருள்களான பருப்பொருளுலகங்கள் கரைந்து மறைந்தவழி அவை நுண்ணிய அறிவில் பொருளான மாயை யாய் ஒடுங்குமேயல்லாது, அறிவுப் பொருளான கடவுளாக மாறுதல் ஒருவாற்றானும் செல்லாது; என்னை? அறிவில் பொருள் ஒன்றே புலப்படாத நுண்ணிய உருவில் மாயை யெனவும், புலப்பட்ட பருவடிவில் உலகம் எனவும் வைத்து இருவேறு வகைப்படுத்து உரைக்கப்படுமாயினும், அவை யிரண்டன் றன்மையை ஆராயும்வழி அவை பொருளால் ஒன்றேயாமென்பது நன்கு பெறப்படுமாகலினென்பது. மற்றுக் கடவுளோ எஞ்ஞான்றும் ஒரு பெற்றித்தாய் நிற்கும் பேரறிவுப் பொருளாகலின் அது தன் றன்மைகெட்டு அறிவில் பொருள் களான மாயையும் உலககுமாய்த் திரியுமென்றல் பெரியதொர் இழுக்காம் என்க. அறிவில் பொருளாய உலகிற்கு முதற்காரண மாம் மாயைக்கும் அதனிற் பிறிதாகிய கடவுட்கும் உள்ள வேறுபாடு பகுத்துணர மாட்டாமல் மாயையைக் கடவுளாக்கி அதற்கு மேற்செல்ல மாட்டாமையின் அவர் மாயாவாதி யெனப் பண்டையோரால் இழித்துரைக்கப் படுவா ராயினர். மாயா வாதம் அஸச் சாத்ரம் ப்ரச்சந்ந பௌத்தமேவக என்னும் பத்மபுராணத் திருமொழியும் இது பற்றியே எழுந்தது. அற்றேல் அசத்தே முதற்கண் இருந்தது; அதிலிருந்து சத்துத் தோன்றிற்று என்னும் உபநிடதச் சொற்றொடர்ப் பொருள் யாதெனிற் கூறுதும்: உலகங்களும் உலகத்துப் பொருள்களும் ஒருங்கழிந்து நுண்ணிய மாயையாய் ஒடுங்கியவழி, அவற்றின் இருப்புக் காணவுங் கருதவும் படாத இயல்பிற்றாய் நிற்க, அவற்றை உடம்புகள் உறுப்புகள் இடங்கள் நுகர்பொருள் களாகக் கொண்டு அறிவு விளங்கி வாழ்ந்த உயிர்களும் அங்ஙனமே ஒடுங்கி நிற்க, நிகழும் மாப்பேர் ஊழிக்காலத்து அம்மாயையை அறிவார் பிறர் இன்மையின் அஃது இல் பொருள் போல் வைத்து அவ்வாறு அசத்து என்றோதப்பட்டது; இச்சொல்லுக்கு விளங்காமை என்னும் பொருளும் வட மொழியில் உண்டாகலின் புலப்படாத நிலையிலிருந்த மாயையை அச்சொல்லாற் கூறுதல் வாய்ப் புடைத்தேயாமென்க. அவ்வூழிக்காலத்து ஒடுக்கத்திலிருந்த உயிர்கள் அதனை அறியாவென்றல் ஒக்குமாயினும், அஞ்ஞான்றும் தன்னிரை திரிபுறாது விளங்கும் இறைவன் அதனை அறிவானென்றல் ஒக்குமாலெனின், நம்மனோர் இதுகுடம் இதுதடம் என்றறியு மாறுபோல் அறியும் சுட்டுணர்வும் அறிந்தது கொண்ட அறியா ததை உணரும் உய்த்துணர்வும் இறைவற்கு இலவாகலானும் இறப்ப நுண்ணிய பேரறிவாய்த் திகழும் அவனருளொளிமுன் மாயையாகிய அறிவில்பொருள் முனைத்துத் தோன்றாதா கலானும் அவன் அதனை அறிவானென்றால் ஒவ்வாது முற்றுணர்வாய் இருந்தாங்கிருந்து அதனை உணர்வனெனின், அவ்வாறுணரும் உணர்வும் மாயையை வேறாய் வைத்துணர் வதின்றி அதனோ டொருங்கியைந் துணர்வதேயா கலானும், அக்காலத்து உயிர்கள் அதனை யுணர்ந்து பயன்படுத்திக் கோடலும் அதனை ஒரு பெயரான் வழங்குதலுஞ் செய்யா வாகலானும், ஒரு பொருளை உளதெனக் கோடல் அதனை வழங்குதற்கும் பயன்படுத்திக் கோடற்குமேயாகலின் அவை யிரண்டுஞ் செய்யலாகாவழியும் அவையிரண்டுஞ் செய்தற் குரியார் செயலிழந்து கிடக்கும் வழியும் அதனை உளதெனக் கொண்டு சத்தெனக் கூறுதல் இயையாமையானும், சிவசத்தின் முன் அசத்தாய் விளக்கமின்றி யிருக்கும் அதனை அந்நிலையிற் சத்தென்றுரைத்தல் பொருந்தா மையானும் அவ்வுழி அதனை அசத்து என்று கூறியதன்றி அஃது இல்லாததொரு பொய்ப் பொருளென்றறிவித்தற்கு அவ்வுப நிடதமொழி எழுந்ததன்றென வுணர்க. இனி, அவ்வசத்திலிருந்து சத்துப் போந்ததென்று என்னை யெனின், அசத்தென்றது இல்லாத வெறும் பொய்ப் பொருளா காமல் நுண்ணிய நிலையிலிருந்த மாயையேயாதல் மேலே றெப் பட்டமையின், அம்மாயையிலிருந்து உயிர்கட்குப் பயன்படுமாறு தோன்றிய உடம்பு உறுப்பு இடம் நுகர்பொருள் (தநு கரண புவன போகம்) என்னும் நான்குமே அவ்வாறு சத்தென்னும் பெயராற் றொகுத்துக் கூறப்பட்டன. இவை தம்மோடியைந்த உயிர்களின் அறிவை விளக்கித் தாமும் அவ்வறிவுக்குப் புலனாய் விளங்குதலால் தம் உண்மையைப் புலப்படக் காட்டும் அவை சத்து என வைத்து வழங்கப்படுதற்குப் பெரிதும் பொருத்த முடையவாதல் காண்க. இவ்வாற்றால் அச்சொற்றொடர் பொய்யிலிருந்து மெய் தோன்றியதென்னும் பொருளை உணர்த்தாமல், புலப்படாது. நுண்ணிய நிலையிலிருந்த மாயையிலிருந்து புலப்பட்ட பருப்பொருள்கள் தோன்றிய உலகத் தோற்ற முறையினையே தெரித்ததெனக் கடைப்பிடிக்க. அற்றேல் அஃதங்ஙனமாக, இனிச் சத்தே முதற்கண் இருந்தது; அஃது ஒன்றாய் அத்துவிதத் தன்மையுற்றிருந்தது என்று மேலெடுத்துக் காட்டிய உபநிடத வுரைப்பொரு ளென்னை யெனின், புலப்பட்ட பருப்பொருள்களான உடம்பு உறுப்பு இடம் நுகர்பொருள் என்னும் நான்கும் புலப்படாத நுண்பொருண் மாயையில் ஒடுங்கிப்போக, அவற்றோடியைந்து அறிவு ஒருசிறிது விளங்கிய உயிர்களும் அவ்விளக்கம் மங்கி அங்ஙனமே ஒடுங்கிப்போக எல்லாம் அசத்தாய்க் காணப்படும் மாப்பேரூழிக் காலத்தே எல்லாம் வல்ல சிவம் ஒன்றுமே சத்தாய் நிற்குமாகலின் அச்சிவத்தையே அவ்வுபநிடதவுரை அங்ஙனந் தெரிப்ப தாயிற் றென்க. அற்றேல், உலகமும் உயிர்களும் ஒடுங்கிய அஞ்ஞான்று சிவத்தை அறிவாரும் அதனைப் பயன்படுத்துக் கொள்வாரும் இன்மையின், புலப்படாத மிக நுண்ணிய நிலையிலுள்ள அதனையும் அசத்தெனலே பொருத்தமுடைத் தெனின், அற்றன்று; அஞ்ஞான்று சிற்றறிவுடைய உயிர்களும், அவற்றின் அறிவாகிய பசுஞான பாசஞானங்களுடே அவ்வாறொடுங்கி நிற்குமல்லாது, பேரறிவுடையராய் இறைவன் திருவடியைத் தலைக்கூடி வீடுபேற்றின்பத்தினை நுகரும் உயிர்களும், இறைவனுக்கு அணுக்கராய்ப் பதிஞானப் பேறு டைய சதாசிவரும், அவனோடு இரண்டறக்கூடி நிற்கும் அம்மையும் அவனையுணர்ந்து இன்புற்றபடியா யிருப்ப ராகலின் அவர்க்கெல்லாம் அப்பொழுது விளங்கித் தோன்றும் முதல்வனைச் சத்தென்றுரைத்தலே இயைவதாமன்றி அசத் தென்றல் பெரியதொரு குற்றமா மென்க. அற்றேல், வீடு பெற்ற உயிர்களும் சதாசிவரும் அம்மையும் நுண்ணிய நிலையிலுள்ள மாயையையும் உணர்வரென்று உரையாமோவெனின், உரையா மன்றே; என்னை? அவரெல்லாம் இறைவனோடொன்று கூடி நின்று அவன்றன் பேரின்பப் பெருக்கிற்றிளைத்து அவனையே உணருநுராய் இருப்பரல்லது, தம்மிற் பலபடியுந் தாழ்ந்து கீழுள்ள மாயையினை ஒருசிறிதும் நோக்குவா ரல்லரென் றுணர்க. அதனால், மாப்பேரூழியிற் சிவமொன்றே சத்தாய் நிற்குமென்பது பெறப்பட்டது. இது தெரித்தற் பொருட்டே சுவேதா சுவதரோப நிடதம் உருத்திரர் ஒருவரே உளர்; இரண்டாவதொன்றைக் கொள்வாரல்லர் (ஏகோஹிருத்ரோ நத்விதீயாய ததுர்) எனவும்*,(சுவேதாசுவதரம் 3,2) இருள் உளதாய் பகலிரவுள் இலவாய்ச் சத்தும் அசத்தும் இலவாய் இருந்தபோது சிவன் ஒருவரே தனித்துளர் (யதாதமதந்நதிவா நராத்ரிர்ந் நஸந் நசாஸம்ச் சிவஏவ கேவல:) எனவும்* (சுவேதாசுவதரம் 4,18) கூறுவதாயிற்று. இவ்வாற் றாற் சத்தே முதற்கண் இருந்தது என்னும் உபநிடதவுரையிற் போந்த சத்தாவது சிவசத்தேயாதல் இனிது பெறப்பட்டமை காண்க. இங்ஙனமாக உபநிடத வுரைப்பொருள் ஒன்றோ டொன்று முரணாவாறு பகுத்துணர்ந் துரைக்க வறியாது மயங்கி மாயாவாதப்பொருள் கூறல் அவ்வுபநிடதக் கருத்துக்கு முற்றும் மாறாய் வழுப்படுமென்க. எனவே, இறைவன் நிமித்தக் காரணப் பொருளாய் மாயையில் உடன்கலந்து நின்று அதனை இயக்கி அதிலிருந்து இவ்வுலகங் களை யெல்லாந் தோற்றுவிப்பா னென்பது தெற்றென விளங்கா நிற்கும். அங்ஙனமாயின், மண்ணிலிருந்து குடத்தை ஆக்குதற்கு நிமித்த காரணனாயிருக்குங்குயவன் அம்மண்ணின் வேறாய் நிற்பக் காண்டுமன்றி, அதனோடுடன்கலந்துநிற்கக் காண்டில மாலெனின்; முதற்காரணப் பொருளின் வேறாய் நின்றன்றி அதனை ஆக்கமாட்டாத குயவனுக்குள்ள குறைபாடு பற்றி முதல்வனும் அங்ஙனம் நிற்கமாட்டுவான் அல்லலென் றுரைத்தல் பொருந்தாது; இறைவன் முதற்காரணத்தும் அதன் காரியத்துமெல்லாம் எள்ளில் எண்ணெய் போன்றும் பாலில் நெய் போன்றும் உடன்கலந்துநிற்கும் நுண்ணியனாகலின் அவனுக்குக் குயவனை முற்றுவமையாக வெடுத்தல் அவ்வப் பொருளினியல்பறியாக் குறையாய் முடியும் என்பது. அற்றேல், நிமித்தக் காரணப்பொருள் முதற்காரணப் பொருளோடு ஒருங்கியைந்து நின்று காரியங்களைத் தோற்றுவித்தல் உலகின்கட் கண்டிலமா லெனின்; அறியாது வினாயினாய்; சிலந்தி என்னும் உடம்பில் நிற்கும் உயர் அவ்வுடம்போடு ஒற்றித்து நின்று அதிலிருந்து நூலைத் தோற்றுவித்தல் நாடெமாறுங் கண்கூடாய் நிகழக் காண்டமாகலின் நிமித்த காரணம் முதற்காரணத்திற் கலந்து நின்று இயக்கக் கண்டில மென்றல் அமையாது. சிலந்தி யுடம்பு மாயையாகவும், அவ்வுடம்பிற் கலந்து காணப்படும் உயிர் மாயையிற் கலந்து நிற்கும் முதல்வனாகவும், சிலந்தி யுடம்பிற் றோன்றும் நூல் மாயையிற் றோன்றும் உலகமாகவும் உவமையும் பொருளும் இயையுமாற்றைப் பகுத்தறிந்துகொள்க. இறைவன் மாயை யிலிருந்து உலகங்களைத் தோற்றுவிக்கும்முறை முண்டகோப நிடதத்தில் சிலந்திப்பூச்சி நூலைத் தோற்றுவித்து இழுத்துக் கொள்ளுமாறு போலவும், நிலத்திலிருந்து புற் பூண்டுகள் வெளிப்படுமாறு போலவும், ஓர் ஆண் மகனிடத்திலிருந்து மயிர் முளைக்குமாறு போலவும் அழிவில்லா இறைவனிலிருந்து இவ்வுலகந் தோன்றுகின்றது என்று இங்ஙனமே கூறப்படுதல் காண்க*. (முண்டகோபநிடதம் 1 7) இவ்வாறாகலின் நிமித்தகாரணனான முதல்வன் முதற் காரணப் பொருளாய மாயையுட் கலந்துநிற்கு மெனக் கூறுதல் பண்டைநூற்கருத்துக்கும் ஆராய்ச்சியுணர்வுக்கும் இசைந்த தேயாமென்று தெளிந்துகொள்க. இனிக் கரப்பவை கருதாக் கருத்துடைக் கடவுள் என்றது. உடம்புகளை எடுதது இருவினைகளுட் கிடந்து உழன்று அயர்வுற்ற உயிர்கட்கு அவ்வுயர்வு தீர்த்து அவற்றின் வினைகளை முதிர்வித்தற்பொருட்டு அழித்தற் றொழிலைச் செய்த முதல்வள், அவை அவ்விளைப்புத் தீருங்காறும் வாளா இருந்து பின்னர் அவற்றைத் தொழிற்படுத்துவா னென்பதை உணர்த்து கின்றது. இனி அறுவகைச் சமயத்து அறுவகையோர்க்கும் வீடுபேறாய் நின்ற விண்ணோர்பகுதி என்பதில் அறுவகைச் சமயங்கள் என்பன அடிகள் காலத்தும் அடிகட்கு முற்பட்ட காலத்தும் எவை என்று ஒருசிறிது ஆராயற்பாற்று அடிகட்குப் பன்னெடுங் காலம் பிற்பட்டெழுந்த நூல்களுள் வகுத்துரைக்கப் பட்ட சமயப் பகுப்பு ஈண்டு கொள்ளற்பாற்றன்று. அடிகள் காலத்திற்கு முற்பட்டதான மணிமேகலைச் செந்தமிழ்க் காப்பியத்துச் சமயக் கணக்கர் தந்திறங்கேட்ட காதையில் எடுத்துக் கூறப்பட்ட சமயங்கள் வருமாறு : பிருகற்பதி செய்த உரோகாயதம், புத்தன் வகுத்த பௌத்தம், கபிலன் இயற்றிய சாங்கியம், அக்கபாதன் ஆக்கிய நையாயிகம், கணாதன் கண்டவைசடிகம், சைமினி தந்த மீமாஞ்சகம் என்னும் ஆறும்; சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசிவகவாதி, நிகண்டவாதி, பூதவாதி என்னும் ஏழுமாம்; இவற்றுட் பூதவாதி சொல்வன உலோகாயத்துள் அடங்குதலிற் பிற்கூறிய மதங் களும் ஆறெனவே படும். இனித் திவாகரத்துட் கூறப்பட்டன: வைசேடிகம், நையாயிகம், மீமாஞ்சை, ஆருகதம், பௌத்தம், உலோகாயதம் என்பனவாம். சமயம் ஆறென்னும் பகுப்பின்றி, அகச்சமயம் புறச்சமயம் என்னும் பாகுபாடு திவாகரத்துட் காணப் படுவதில்லை. இனித் திவாகரத்திற்குப் பிற்பட்டதாகிய பிங்கலந்தையுள் உலகாயதம், புத்தம், சமணம், மீமாஞ்சை, பாஞ்சராத்திரம், பட்டாசாரியம் என்னும் ஆறும் புறச்சமயமாம் எனவும்; வைரவம் வாமம் காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம் என்னும் ஆறும் உட்சமயமாம் எனவும் கூறப்படுகின்றன. இனிச், சூடாமணி நிகண்டுடையார் அகச்சமயம் ஆறும் பிங்கலந்தையுட் கூறியவாறே கூறிப், புறச்சமயம் கூறுகின்றுழிப் பிங்கலர் கூறிய பாட்டாசாரியத்தை விடுத்து அதனின் வேறாக மாயாவாதம் என்பதொன்று சேர்த்து மற்றையவெல்லாம் பிங்கலர் மொழிந்தவாறே எடுத்துரைப்பர். இங்ஙனமல்லாமற் பின்றைக்கால நூல்களில் வகுத்துரைக்கப்படும் அகச்சமயம் அகப்புறச்சமயம் புறச்சமயம் புறப்புறச்சமயம் என்னும் நால்வகைப் பகுப்பும் அப்பகுப்பிற்பட்ட எல்லாச் சமயப் பெயர்களும் சூடாமணி நிகண்டினும் அதற்கு முற்பட்ட பண்டை நூல்களினுங் காணாமையின் அடிகள் ஈண்டுக் குறிப்பிட்ட அறுவகைச் சமயங்களும் பிற்றை ஞான்றை ஆசிரியர் கூறும் நாற்கூற்றிற்பட்ட அறுவகைச் சமயங்கள் ஆகா. ஆசிரியர் திருமூலநாயனாரும் புறச்சமயம் எனவும் ஆறுசமயம் எனவுங் குறித்ததன்றி அவற்றின் பெயரும் வகையும் எடுத்தோ திற்றிலர். ஆகலான், அடிகளுக்கு முற்பட்ட காலத்தில் எழுந்த மணிமேகலைச் செந்தமிழ்ப் பொருட்டொடர் நிலைச் செய்யுளில் எடுத்தோதப்பட்ட சமயங்களே ஈண்டு அடிகளாற் சுட்டப்பட்டனவாமென்பது தெற்றெனப் பெறப்படும். இனி, மணிமேகலையிற் கூறிய அடைவே அச்சமயக் கோட்பாடுகளை ஒருசிறிது விளக்கிக் காட்டுதும். அவற்றுள், உலோகாயதம் என்பது கட்புலனாற் காணப்படுவனவே உண்மையாமன்றி ஏனையவெல்லாம் பொய்யாமெனவும், நிலம் நீர் தீ வளி என முதற்பொருள்கள் நான்கேயாமெனவும், இந்நான்கின் கலப்பால் உடம்பும் அவ்வுடம்பினிட்த்தே கள்ளின்கட் களிப்புப்போல் ஓர் அறிவும் உண்டாமெனவும், அந்நூற்பொருட் பிரிவில் உடம்பழிய அவ்வுடம்பின் கட்பிறந்த அறிவும் உடன்அழியு மெனவும், இவ்வாறன்றி உடம்பின் வேறாய் ஓர் உயிரும் அது துய்க்கும் இருவினைகளும் அவற்றின் பயனாமெனுற் துறக்க நிரயங்களும் உளவாமென்றல் வெறும் பொய்யேயா மெனவும், வேள்வி யாற்றுதலும் மறைகள் ஓதுதலும் முக்கோல் தாங்குதலும் உடம்பெங்கும் வெண்ணீறணிதலும் எல்லாம் ஆண்மையும் அறிவும் இல்லாதார் தம் பிழைப்பின் பொருட்டுச் செய்து கொண்டனவேயா மல்லாமற் பிறிதல்லவெனவும், வேள்விக்கட் கொன்ற உயிர் துறக்கம் புகுவது உண்மையாயின் அது வேட்பவனே அதன்கண் விழுந்து உயிர் விடாமை என்னை? என்று வினாவுவார்க்கு இறுக்கலாகாமையின் அது பொய்யே யாமெனவும், ஆகலான் இம்மைக்கண் உயிர் உள்ள போதே கடன் புகுந்தாயினும் உண்டுடுத்து இன்புற்று வாழ்வதே மெய்யாமெனவும், ஏனெனில் ஒருமுறை உடம்பு சாம்பராய் வெந்தழிந்தாற் பின்னர் உயிர் அதன்கண் மீண்டு புகுது மாறில்லை யெனவும் கூறாநிற்கும். இனிப் பூதவாதமாவது நிலம் நீர் தீ வளி என்னும் நாற்பொருள்களோடு அவற்றின் வேறாகிய விசும்பு என்பதும் ஒன்று உண்டெனக் கொண்டு, ஏனைக்கொள்கைகளெல்லாம் உலோகாயதத்தோடு ஒத்து நிற்பது. இனிப் பௌத்தம் என்பது சௌத்திராந்திகமும் யோகா சாரமும் மாத்தியமிகமும் வைபாடிகமும் என நான்காம். அவருட் சௌத்திராந்திகர் மதம் வருமாறு. கொலை முதலாகிய ஐவகைக் குற்றமுங் கடிந்து, பழுதற்ற அருளாற் பிற உயிரின் துன்பங்களைத் தானே ஏன்று கொள்வானாய்ப் பிடகநூல் சொன்ன புத்தமுனிவனே தமக்குத் தெய்வமாவன் என இவர் கூறுப. இவர் கைக்கொள்ளும் அளவைகளாவன காண்டலுங் கருதலும் என இரண்டாம் இவை இரண்டாலும் அறியப்படுவன ஞானமும் ஞேயமும் என இரு பகுப்பினவாம். இவற்றுள் ஞானமென்பது அறிவதூஉம், ஞேயமென்பது அறியப்படுவதூஉமாகும். இஞ்ஞானஞேயங்கள் உருவும் அருவும் வீடும் வழக்குமென நான்காகி இந்நான்கும் பெயர்த்தும் அவ்விரலண்டாகி எட்டாய் விரியும். இனி இவையெல்லாங் கணங்கடோறும் மாய்ந்து மாய்ந்து வருமெனக் கூறுபவாகலின் இவர் கணபங்கவாதிகள் எனவும் பெயர் பெறுவர். இனி, மேற்சொன்ன உருவுதான் நிலம் நுர் தீ வளி என்னும் நாற் பொருள்களைப் பற்றிய பூத உருவும், அந்நாற்பொருட் பண்பு களான வன்மை நாற்றம் சுவை நிறம் என்பவற்றைப் பற்றிய உபாதான உருவுமென இரு உபாதான வுருவாவதும் பண்பினுரு வென்றும் உணரற்பாற்று. சித்த அருவும், அங்ஙனம் அறிந்த வற்றை நல்லது தீயது எனப் பகுத்துக் காணபதாகிய கன்ம அருவு மென இருமன்மைத்தாம். சித்த அருவை மன அரு எனவும், கன்ம அருவைத் தொழில் அருவெனவும் தமிழில் மொழிபெயர்த் துணர்ந்துகொள்க. இனி வீடு என்பதுதான் இணைவிழைச்சு சினம் செருக்கு அழுக்காறு அவர் பொருட்பாற்று என்னும் ஆறு இழி தகவுகளின் வலியை ஒடுக்கு அடைவதாகிய குற்றவீடும, உருவும் வினை குறிப்பு எண்ணம் அறிவு என்னும் ஐவகைப்பாகுபாடும் ஒருங்கே பொன்றக்கெட்டு அடைவதாகிய கந்தவீடுமென இருபகுதித்தாம். இனி, வழக்குத் தான் உண்மை வழக்கும் இன்மை வழக்குமென இருபிரிவுடையதாகி, மறித்தும் அவை தொகையுண்மை வழக்குத் தொகையின்மை வழக்குத் தொடர்ச்சியுண்மை வழக்குத் தொடர்ச்சியின்மை வழக்கு மிகுத்துரையுண்மை வழக்கு மிகுத்துரையின்மை வழக்கு என ஆறாம் என்றும், மேற் கூறிய உருவம் முதலான ஐந்து கந்தங்களும் ஒருங்குகூடி வருபவனே ஓர் உயிராமென்றல் தொகையுண்மை வழக்காமன்றி, அவ்வைந்தையுங் கூடாமற் றனி நிற்பவனே ஓர் உயிராமென்றல் தொகையின்மை வழக்கா மென்றும், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலமும் பற்றாது காரண காரியத் தொடர்ச்சியாய்க் கெட்டுக் கெட்டுத் தோன்றும் என்றுரைக்கும்வழியே தொடர்ச்சி யுண்மை வழக்காமன்றி ஒருவனே எக்காலத்தும் மாறுபாடின்றியுளன் எனக்கோடல் தொடர்ச்சியின்மை வழக்காமென்றும், தோன்றிய பொருள்கள் அத்துணையும் அழிவெய்து மெனவுரைத்தலே மிகுத்துரை யுண்மை வழக்கமல்லத கட்பொறிக்குப் புலனாகமற் போனது போற் காணப்படினும் மற்று அவை காரணப் பொருளாய் நிலை பெறுமெனக் கிளர்த்தல் மிகுத்துரை யின்மை வழக்காமென்றும் கூறுவர். இவ்வாற்றால், ஐந்து கந்தங்களும் ஒருங்கு தொக்க தொகையே உயிரெனப்படுமல்லது இவ்வைந்தின் வேறாய் உயிரென்பதொரு தனிப்பொருள் இல்லையென்பதே சௌத் திராந்திக பௌத்தர் கோட்பாடாதல் தெற்றென உணர்ந்து கொள்க. இனி, மேற்கூறிய உள்வழக்கும் இல்வழக்கும், உள்ளது சார்ந்த உள்வழக்கு, உள்ளது சார்ந்த இல்வழக்கு, இல்லது சார்ந்த உள்வழக்கு, இல்லது சார்ந்த இல்வழக்கு என்னும் நான் கோடுகூடிஆறாம். இவற்றுள் உள்வழக்காவது யானைக்குக் கோடு உண்டென உள்ளதனை உள்ளவாறே கூறுதல்; இல்வழக்காவது முயற்குக் கோடு இல்லையென இல்லதனை இல்லையெனவே கூறுதல்; உள்ளது சார்ந்த உள்வழக்காவது உணர்வைச் சார்ந்த உணர்வு தோன்றும் என்றல்; உள்ளது சார்ந்த இன்மை வழக்காவது உணர்வு அழிந்தாற் பின் உணர்வு இல்லையாம் என்றல்; இல்லது சார்ந்த உண்மை வழக்காவது உணர்வு முன்னர் இல்லாதிருந்த பின்னர் உண்டாமென்றல்; இல்லது சார்ந்த இல்வழக்காவது உள்ளங்கையில் மயிர் உளவென்றலும் அவற்றாற் கயிறு திரிக்கப்படும் என்றலுமாம். இத்துணையும் இவர் மதக் கோட்பாடுகளாம். இனி, இவர் ஏனைச் சமயத்தாரை மறுக்குமாறு மேலெடுத்துக் காட்டிய உரு அரு வீடு வழக்கு என்னும் நான்கும் அவற்றின் விரிவும் அல்லாமல், வானம் காலம் திக்கு என்னும் அருவப்பொருள்களும், உயிர் என்பதோர் அறிவுப்பொருளும், மனமொழிகளைக் கடந்துநின் றறியப்படுவதாகிய க.டவுள் என்பதொன்றும் உளவெனக் கூறுதல் மயக்கவறிவுடையார் கூற்றே போலும்! எற்றாலெனிற் கூறுதும்: அருவப்பொருள் ஒன்று உண்டென்றல் அதன் றொழில்பற்றி யல்லது துணியப் படாமையானும், வானம் ஒருதொழில் பிரியக் கண்டில மாதலானும் ஏனை றான்கு பொருள்களையுந் தாங்கி நிற்றலே அதன் செயலென வுரைப்பின் அஃது அருவப் பொருளாதலால் அஃது ஏனையவற்றைத் தாங்குமென்றல் பொருந்தாமையானும், ஓசைக்கு அது முதலெனின் உருவுடைப் பொருளின் இயக்கத்தானன்றி ஓசை உளதாகக் காணாமையின் அஃது அருவினி லுண்டாமென்றல் ஏலாமையானும், அஃது எங்கும் நிறைந்து நிற்பதெனின் அவ்வாறு நிற்கும். அதனைக் கண்டு அது வான் அது வான் என வழங்குவாரைக் கண்டில மாதலானும் வான் என்பதோர் அருவப் பொருள் உளதெனக் கோடல் திரிபுணர்ச்சியேயாம். இனி, அறிவுடைய உயிர்ப்பொருள் ஒன்று உளதெனலும் ஆகாது. அஃது அறிவுடையதாயின் ஐம்பொறிகளையும் அவற்றாற் பற்றப்படும் புலன்களையும் நூல்களையுங் கொண்டு அறிவு கூடுதல் என்னை? பொறிகளோடு ஒற்றித்து நின்றும் புலன்களைத் தொட்டு ËW.ம் அறிவு விளங்கப் பெறுதலே அதன் இயற்கை யெனின், பொறி புலன்களோடு ஒன்றுசேர்ந்து நின்றவழியும் இருளின்கட் பசுமை செம்மை முதலிய நிற வேறுபாடு பகுத்தறியக் காணாமையின் அஃதுஅறிவுடைத் தென்றல் அமையாது. அல்லதூஉம், பொறிகளின்றி அறிவு விளங்கலின்மை யானும், பொறிகள் அறிவுடையன அல்ல வாகையால் அவற்றின்கண் உடன்நின்று அறியும் அறிவு வேறாய் ஒன்று உண்டெனின் ஐம்புலனால் அறியும் ஐந்தறிவினையும் ஒரு புலனில் நின்றே அறிந்திடல் வேண்டும் அல்ல தொருதன்மைத் தாகவாவது அறிந்திடல் பேண்டும் மற்று அவ்வாறு அறியக் காணாமையானும், பொறிகளை ஒன்றொன் றாய்ச் சார்ந்தே அறியுமெனின் அவ்வாறு கூறுதல் சௌதா திராந்திகரான எம்மனோர் கோட்பாடேயாகலின் சுற்றிச் சுற்றி அவ்வூரே புகுந்தான் என்பதுபோல் அஃது யாங் கூறும் முடிபோயாமாதலானும் அறிவும் அதனை யுடையதோர் உயிரும் உண்டடென்றல் போலியேயாம். அற்றன்று, அறிவும் அறியப்படுவதுமாகிய ஞானஞேயங்களின் வேறாக அறியும் முதலாகிய ஞாதுரு ஒன்று உளதெனக் கோடலே முறையா மாலெனின், அற்றேல் அங்ஙனம் அறியும் முதல் அறிவுடையதோ அல்லதோ என வினாயினார்க்கு அஃது அல்லதெனிற் பின்னை உயிர் மண்போல் அறிவில் பொருளாம்; அஃது உடையதெனிற் பருப்புச் சோற்றுக்குப் பருப்புச்சோறேகறி யென்பதனோ டொக்குமாகலின் அறிவாகிய ஞானத்தின் வேறாக அறிவுடையதோர் உயிருண்டென்றல் மிகையாமென்க. இனி, உயிரினை அருவப்பொருளென் றுரைப்பின் அருவாகிய அஃது உருவப்பொருளாய உடம்பினைப் பொருந்தி நிற்றல் அமையாமையானும், அற்றன்று அஃது உருவுடைய தேயா மெனிற் பின் அஃது பிறிதோர் உருவப் பொருளாம் உடம்பினில் அடங்கி நிற்றல் ஏலாமையானும், இவ்விரண்டு மன்றி உயிர் ஓர் அணுவா மெனிற் சிறு துகளாகிய அஃது உடம்பின்கட் காணப்படும் பல தொளைகளில் ஒன்றினூடே புகுந்து புறம் போதல் வேடுமாகலானும், அதனை என்றும் உள்ள பொருளெனிற் றோற்றக் கேடுகள் இலதாதல் வேண்டு மாகலானும், அஃது எங்குமாய் நிறைந்து நிற்பதெனின் அவ்வாறு நிற்றல் ஒருவாற்றானும் அறியப்படாமையானும், உடம்பு கடோறும் நிறைந்து நிற்பதே அதன் நிறைவாமெனின் உடம்பழியுங்கால் அதுவும் உடனழிய வேண்டுமாகலானும், உடம்பினில் ஓர் உறுப்பினைப்பற்றிக் கொண்டு நிற்குமெனின் அவ்வுறுப்பினை யொழித்து ஒழிந்தவற்றை அஃது அறிதல் செல்லாமையானும் உயிர் என்பதொரு பொருள் இல்லை யென்றலே தேற்றமாம் என்பது. இனிக் காலமென்பது ஓர் உள்பொரு ளென்றலும் அடாது. பொருள்களைத் தோற்றுவித்தலும் நிலைபெறுத்தலும் அழித்தலுமாகிய தொழில்கள் காலத்தின் றொழில்களென வுரைப்பின் அது பொருள்களோ டொன்றுபட்டுப் போமல்லது அவற்றின் வேறாமாறில்லை. அவற்றோ டொன்றாய் நிற்கு மென்றாலும், அவை யழியுங்கால் அவற்றோடு தானும் அழிந்து படுமல்லது வேறு தனித்து நில்லாது. ஆதலாற் காலத்தினி யல்பை உற்று நோக்குவார்க்கு அஃதோர் இல்வழக்கேயா மென்பது தெற்றென விளங்கா நிற்கு மென்க. இனித் திக்கு என்பதோர் உள்பொருள் உண்டென்றலும் இசையாது. என்னை? மூவரில் நடு நிற்கும் ஒருவன் தனக்குக் கீழ் நிற்பானை நோக்கத் தான் மேல் நிற்பானாய்த், தனக்குமேல் நிற்பானை நோக்கத் தான் கீதுநிற்பானாய் வழங்கப்படுதலை உற்றுணருங்கால் ஒருவர்க்கு மற்றொருவரும் ஒன்றுக்கு மற்றொன்றும் நிற்கும் நிலையே அங்ஙனங் கிழக்கு மேற்கென வழங்கப்படுகின்றதன்றி, இவற்றின் வேறாய்க் கிழக்கு மேற்கென வரையறுத்து உணரப்படுவன பிற இன்மையின் என்பது. இனி இவ்வுலகம் ஒரு முதற்கடவுளாற் படைக்கப்பட்ட தென்பதூஉத் பொருந்தாமை காட்டுதும் படைப்பிற்கு முன் உலகம் உளதெனின் ஒருவன் அதனைப் படைத்தல் வேண்டாம்; அதற்குமுன் அஃது இல்லையெனிற் பின்னர் அஃது ஒருவராற் படைக்கப்படுதலுங் கூடாது. படைப்பென்பது காரணத்திலி ருந்து ஒரு காரியத்தைப் பிறப்பித்தலேயாமெனில், உலகம் ஒரு நிலையில் உள்ளதாய் மற்றொரு நிலையில் இல்லதாமெனப் பட்டு அருகர்கூறும் உண்டு இல்லை எனும் வழக்காய் முடியும். ஒரு குயவன் மண்ணின்று குடத்தைத் தோற்றுவிக்குமாறு போல இறைவனும் உலகத்தைத் தோற்றுவிப்பானெனின், அவன் அவ்வாறாதனை எங்கு நின்று படைப்பானெனும் வினா உண்டாம். உலகத்தின் மீது நின்றே படைப்பானெனின் அவ்வாறவன் நிற்கும் உலகம் அவன் படைப்பிற்கு முன்னரே உளதாதல் பெறப்படும். அற்றன்று, இறைவன் தனக்கு இயல்பாகவுள்ள பேரிரக்கத்தால் இல்லாத உலகத்தை இருக்குமாறு படைத்தானெனிற் கொலைத் தொழில்வல்ல அரிமா புலி பாம்பு கூற்றம் என்னுமிவற்றைப் படைத்திட்டவன் இரக்கத்தை என்னென்பேம்! நன்று சொன்னாய், அவன் அளவிலாற்ற லுடையனாகலின் தான் வேண்டிற்றெல்லாம் வேண்டியவாறே படைத்தா னெனின், செய்வதுந் தவிர்வதும் ஆராயாது செய்யும் பித்தனுக்கும் அப்பெற்றியனான கடவுளுக்கும் வேறுபாடு சிறிதுமில்லையாம். இனி இவ்வுலகத்தைப் படைத்ததனால் இறைவற்கு வரும் பயன் யாதுளது? அதனால் அஃது அவற்கு ஒரு விளையாட்டேயா மெனின், அற்றேல் அவன் அங்ஙனம் விளையாடும் ஒரு மழஇளங் குழவியே யாவன். அவரவர் செய்த வினைக்கீடாகப் படைப்ப னெனின், வினைசெய்வோர் முன்னரே உளராதல் போதரும், இவ்வாறெல்லாம் ஆயும்வழி இவ்வுலகம் பண்டு தொட்டு உளதென்பதே பெறப்படுதல் காண்க. இனி, இறைவன் உருவமுடையனா யிருப்பானெனின் அவ்வுருவத்தை அவற்குப் படைத்துக் கொடுத்தார். பிற ரொருவர் வேண்டப்படுவராகலானும், அங்ஙனம் அன்று, இறைவனே தான் விரும்பியவாறு உருவெடுப்பனெனின் உலகத்திலுள் ளாரும் அவ்வாறே தாம் விரும்பியபடியெல்லாம் உருவெடுப்ப ரெனக் கூறவேண்டுமாகலானும், உலகத்தவர்க்கு வரும் வடிவுகள் அவரவர்செய்த வினைக்கீடாக வருமெனின் உருவுடையார்க் கெல்லாம் வினையே முதலாய் நிற்குமென்பது பெறப்படுத லானும் இறைவனுக்கு முற்பட்டதூஉம் அவனிலும் பார்க்க வலியுடையதூஉம் வினையே யென்பது முடிக்கப்படும். இனி, இறைவன் அருவமாயே யிருப்பானெனின் அதுவும் பொருந்தாது. இடைவெளியைப் போல் அருவமா யிருப்ப தொன்று தொழிற்பாடு இலதாகலின் அஃது உயிர்களைப் பிறவித் துன்பத்தினின்றும் எடுக்கமாட்டாது. எவ்வுயிருஞ் சென்று தங்குங் குளிர்நிழல் அருவமாயிருப்பினும் அஃது அவற்றிற்குத் தட்பத்தினைத் தந்து அயர்வு தீர்க்கக் காண்டுமா லெனின், அந் நிழலுந் தன்பால்வந்து அடைந்தவற்றிற்குப் பயன்றரக் காண்பதல்லது தானே சென்று அவற்றிற்கு அவ்வாறு உதவக் காணாமையின் அருவமாகிய நிழலுக்குந் தொழிற்பாடு இல்லையென்பதே துணிபொருளாமென்க. அஃதொக்கும், அருவமாகிய நிழல்போல் இறைவனும் அறிவிலனாயினன்றே அவற்குத் தொழிற்பாடில்லை யென்று கூறுதலாம்; மற்று அவன் பெரியதோர் அறிவுடையனாகலின் பிறப்பினை அஞ்சித் தன் மாட்டு வந்தடைந்தார்க்கு அவர் துன்பத்தை நீக்குவன் என்று கோடலே இயைவதாமெனின், அங்ஙனங் கூறுமிடத்தும் பிறவற்றை அன்போடு நினைந்து பார்த்து அவற்றின் துயர் துடைத்தற் பொருட்டு இறைவற்கு ஓர் உருவம் இன்றியமையாது வேண்டப்படும். என்னை? உருவம் இல்லையேல் அறிவும் இல்லை யென்றே முடிக்கப்படுமாகலி னென்க. தொன்று தொட்டே உள்ள எங்கள் சமய நூல்கள் இறைவன் உண்டென்பதைத் தேற்றுமெனின், ஒருவரால் ஆக்கப்படாமல் அந்நூல்கள் பண்டே உளவென்பது சால அழகிது! மேலும் அந்நூல் கொண்டு இறைவனையும், இறைவனைக் கொண்டு பின்னர் அந்நூலினையும் அறிந்தோமென்றல் ஒன்றனை யொன்று பற்றுதல் என்னுங் குற்றமா மென்க. இனிப் புன் மரம் முதலியவற்றை உயிருடைப் பொருள் என்பதும் ஆகாது. அவை நிலம் நீர் தீ வளி என்னும் நாற்பொருளுருவினையே தமக்கும் உருவெனப் பெற்றுப் பலவேறு தொகுதிகளாய்ப், புற்றும் மயிருங் கொம்பும் உயிரின்றியே தோன்றிமாய்தல் போலத் தாமுந் தோன்றி மாயும். முட்டையினும் வியர்வையினும் கருப்பையினும் பிறக்கும் ஏனையுயிர்களுக்கு அப்புன்மரம் முதலியன உணவாய்ப் பயன்படும் அத்துணையேயன்றி அவை தமக்கென வேறு உயிருடைய அல்ல வென்றுணர்க. இனி, ஓருயிரையுங் கொல்லுதல் ஆகாது. ஆயினுங் கொல்லப் பட்டவைகள் உயிர் இன்மையால் மண்ணோடொக்கு மாகலின் அவற்றைத் தின்பது குற்றமாகாது. அற்றன்று தின்பார்க்கு ஊன் தரற் பொருட்டே விற்பார் உயிருடைப் பொருளைக் கோறலின், தின்பார்க்கும் அதுகுற்றமாமெனின், நறுமணம் ஊட்டிய தண்ணீர்ப் பந்தர் வழியடை வைத்தார்க்கே நல்வினை விளையு மென்பாரல்லது, அப்பந்தரின்கண் அந்நறு நீரைப் பெற்றுப் பருகுவார்க்கு அந்நல்வினை விளையுமெனக் கூறுவாரைக் கண்டிலமாகலின், கொலைவினையையுஞ் செய்தார்க்கே அது குற்றமாவதன்றி அதனாற் பெறப்படும் ஊனைத் தின்றார்க்கு அது குற்றமாகா தென்பது தெளியப்படும். இனி மேற்கிளந்தெடுத்துரைத்த உருவம் முதலிய ஐந்து கந்தங்களும் (ஐந்து கந்தங்களுள் உருவக் கந்தம் பொருளுரு நான்கும் பண்புரு நான்குமென எட்டாம்; வினைக்கந்தம் இன்பமுந் துன்பமும் இன்ப துன்பமும் என மூன்றாம்; குறிப்புக் கந்தம் மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறியும் அவற்றொடு கூடிநின் றறியும் மனமுமாம்; எண்ணக் கந்தம் மனமொழி மெய்களைப் பற்றி வரும் அறமும் மறமுமாம்; அறிவுக்கந்தம் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் எனும் ஐந்துணர்வும் சித்தமும் ஆகும். இவற்றுள், மனமொழி மெய்களைப் பற்றி வரும் அறம் பத்தும் மறம் பத்து மென எண்ணக் கந்தம் இருபதாம் என்பர்; அவை வருமாறு : கொலை நினைவு, காமப்பற்று, அவா என மனத்தைப் பற்றிய மறம் மூன்று : பொய் கூறுதல், கோட் சொல்லுதவ், சினந்து பேசல், பயனில மொழிதல் என மொழியினைப் பற்றிய மறம் நான்கு; களவு செய்யப் போதல், வீண் டொழில் புரிதல், கொலை புரிதல் என மெய்யினைப் பற்றிய மறம் மூன்று; அருள் நினைவு, அவா அறுத்தல், தவப் பற்று என மன அறம் மூன்று; மெய்யுரை நல்லுரை, இன்னுரை, பயனுரை என மொழியறம் நான்கு; பள்ளி வலம் வரல், தவம் புரிதல், ஈதல் என மெய்யறம் மூன்று.) ஒருங்குகூடி வழிமுறையே தோன்றிக் கெடுவது கட்டுக்கு ஏதுவாய துன்பமாகலின், அவைமுற்றும் பொன்றக் கெட்டு அடைவதே வீட்டின்பமெனத் தெளிதல் வேண்டும். நன்மையை யழிக்கும் இணைவிழைச்சு சினம் செருக்கு அழுக்காறு அவா பொருட்பற்று என்னும் அறுவகைக் குற்றங் களையுங் களைந்து, நல்ல அறச்செயல்களை நிறையப் புரிந்து, இழிக்கத் தக்க ஐம்புலன்களை அறுத்து, இன்ப துன்பங்களைக் கைவிட்டு நற்காட்சி நல்லூற்றம் நல்வாய்மை நற்செய்கை நல்வாழ்க்கை நன்முயற்சி நற்கடைப்பிடி நல்லுளத்தோர் தலைப்பாடு என்னும் பழிப்பில்லாத வாழ்க்கை எட்டையும் வளரச்செய்து இவற்றிற்கு மாறான தீயவாழ்க்கை எட்டையும் ஒழித்து அறிவொழுக்கத் திற்றலை நிற்கும் முடிந்த நிலையே வீடுபேற்றுறுதியாம் என்பர். இனிப் பௌத்தரில் யோகாசாரர் என்பார் சௌத்தி ராந்திகர் கூறுவன வெல்லாம் பெரும்பான்மையும் உடன்பட்டு, அதற்கு மேற் புறப்பொருளுண்மை கொள்ளாதாராவர். அகத்து நிகழும் அறிவே புறத்துள்ள பொறிகளுமாய் அப்பொறிகட்குப் புலனாகும் பொருள்களுமாய்த் தோன்றுதலானும், அவ்வறிவு தானும் ஐம்பொறிப் பழக்கத்தாற் கூடிவருவதொன்றாகலானும், அதுவும் அருவேயன்றி உருவுடைத்தன்றாகலானும் அவ்வறிவின் றோற்றமாய்ப் புறத்தே காணப்படும் உலகம் கனவு போற் பொய்ப்பொருளேயாமென்று துணியப்படும். உண்மையில் உளதாவது அறிவு ஒன்றுமேயன்றிப் பிறிதேதுமில்லையென்பர். இனிப் பௌத்தரில் மாத்தியமிதகராவார் சௌத்தி ராந்திகர் கூறுவனவற்றிற் பல கைக்கொண்டு சில கைக்கொள் ளாதார் ஆவர். கண்முதலான பொறிகளின் வாயிலானன்றிப் பொருள்கள் உணரப்படாமையாற் பொருளென வேறொன் றில்லை, பொறிகளேபொருளென் றுணர்தல் வேண்டும். பொறி கள் அழிந்தாற் பொருள்களும் இல்லையாம். பொருள்கள் இல்லாதொழியவே அவற்றின் வழிவரும் அறிவும் இல்லையாம். இவர்கள் உயர் உளதும் அன்று இலதுமன்று, நிலைபேறு டையதுமன்று. அஃது இலதும் அன்று எனக் கூறுவர். இனிப் பௌத்தரில் வைபாடிகமிகராவாரும் சௌத்தி ராந்திகர் கூறுவனவற்றுட் பல தழீஇக்கொண்டு, மேலுஞ் சில கூறுவர். மஞ்சளுஞ் சுண்ணமும் விரவியவழிப் பிறந்த சிவப்பு நிறம்போல உலகமும் உலகத்துப் பொருள்களும் பொறியுணர்வு விரவலால் உளவாய்த் தோன்றுதலின் அவை இலவென்று கூறுதல் மாறுகோளுரையா மென்பர். இங்ஙனங் கௌதமபுத்தர் மாணாக்கர் நால்வகைப்பட்டுத் தம் ஆசிரியன் அறிவுறுத்த கோட்பாட்டினைத் தத்தமக்கியைந்த வாறு நால்வேறு வகைப்படுத்து வழங்கினமையிற் பௌத்தமதம் ஒன்றே அவரவர் கருத்துவகையால் நால்வேறு பகுப்பாய்ப் போதரலாயிற்று. அவ்வாறாயினும், எல்லாப் பொருள்களுங் கணங்கடோறும் மாய்ந்துமாய்ந்து வருமென்பதூஉம், கடவுளும் உயிரும் இல்லை யென்பதூஉம் இவர் தமக்கெல்லாம் பொதுக் கொள்கைகளாகலானும். அவாவவறுத்தல் ஒன்றையே வீடு பேற்றுதிப் பயனாக்கொண்டு அங்ஙனம் வீடுபெற்ற புத்த முனிவனையே தமக்கு முதலாசிரியனுந் தலைவனுமாய்க் கோடலானும், புத்திதத்துவத்தையே பொருளெனக்கொண்டு அதற்கு மேற் செல்லாமையானும் இந்நால்வரும் பௌத்தரெனப் பட்டா ரென்க. இப்பௌத்தம் பெரும்பாலும் உலோகாயதமதம் போறலின் இஃது அதனை அடுத்துவைக்கப்பட்டது. பௌத்த சமய நூலாகிய மணிமேகலையுள்ளும் இஃது அங்ஙனம் உலோகாயத்தை அடுக்க வைக்கப்பட்டிருத்தல் பெரிதும் நினைவுகூரற்பாற்று. இனிச் சாங்கியமதம் உடையார் கூறுமாறு காட்டுதும். உலகமும் உலகத்தின்கண் உள்ள பொருள்களுந் தோன்றுதற்கு முதலாய் நிற்பதனைப் பிரகிருதி என வழங்குப. பிரகிருதி எனுஞ் சொல், வேறுபாடு உறாதது என்னும் பொருட்டாம். இஃது உலகமும் உலகத்துப் பொருள்களுமெல்லாந் தோன்றுதற்குத் தான் ஒரு முதலாயிருப்பதல்லது தான் ஒன்றிற் பிறவாமையான் இது மூலப்பிரகிருதி எனப்படுமெனவும், இதன் கட்டோன்றும் ஏனைப் பொருள்களெல்லாம் வேறுபாடுறுவனவா யிருத்தலின் அவை விகிருதி எனப்படமெனவும் உரைப்ப. பிரகிருதி பகுதி எனவும், விகிருதி விகுதியெனவுந் தமிழிற் றிரிந்து வழங்கும். மேலும், இம் மூலப்பகுதிகட் சத்துவம் இராசதம் தாமதம் என முக்குண தத்துவங்கள் உளவெனவும், அவை மூன்றும் ஒன்றி னொன்று மிகாது ஒத்துநின்ற நிலையே மூலப்பகுதி யாமெனவும் அறிதல் வேண்டும். ஈண்டுக் குணமென்றது ஒரு பொருளின் பண்பினையன்று. ஒரு பொருளின் றன்மை அப்பொருள்போற் பருவடிவிற்றன்றாய் நுண்ணுருவிற்றாய் நிற்குமாறு போலக் குணதத்துவ மென்பதூஉம் மிக நுண்ணிய இயல்பிற்றாய் நிற்றல் பற்றி அவ்வாறு குணம் எனப் பெயர் பெறலாயிற்று. இங்ஙனம் முக்குணவுருவிற்றாகிய மூலப்பகுதிகட் சத்துவகுணம் மிக்கு நிற்புழி மகத்* (மகத் என்பது தமிழில் மான் எனத் திரிந்து வழங்கும்) அல்லது புத்தி எனுந் தத்துவம் உண்டாம். ஈண்டுப் புத்தி என்றது அறிவினையன்று, அறிவினைக் கிளர்விக்கும் ஒரு நுண்பொருளேயாம். இப்புத்தி தத்துவத்தி னின்று நான் என்னும் உணர்வினை எழுவிக்கும் அகங்கார தத்துவம் உண்டாம்; இவ்வகங்கார தத்துவம் மேற்கூறிய முக்கணக் கலப்பால் மூவேறுவகைத்தாய்நிற்க, அம்மூன்றினின்று அகக்கருவியாகிய மனமும், புறக்கருவிகளுள் அறிதலைச் செய்வனவாகிய மெய் வாய் கண் மூக்குச்செவி என்னும் ஐந்தும், தொழிலைச் செய்வனவாகிய நா கை கால் எருவாய் கருவாய் என்னும் ஐந்தும், ஓசை ஊறு ஒளி சுவை நாற்றம் என்னும் நுண்பொருள்கள் ஐந்தும், இவ்வைந்திலிருந்து வாள் வளி தீ நீர் மண் என்னும் பருப்பொருள்கள் ஐந்தும் ஆக இருபத்து மூன்று தத்துவங்கள் அல்லது பொருள்கள் ஒன்றினொன்று பரியனவாய்த் தோன்றும். இவ்விருபத்துமூன்று பொருள்களுள் மேல் நின்றது தன் கீழ் நின்றதை நோக்கத் தான் பகுதியாயும், தனக்கு மேனின்றதை நோக்கத் தான் விகுதியாயுமிருக்க, இவை யிற்றுக்கு மேல் இருபத்துநான்காவதாய் நின்ற மூலப்பகுதி ஒன்றுமே என்றும் ஒரு பெற்றித்தாய் நிற்குமென்று உரைப்பர். இனி இம் மூலப்பகுதிக்குமேல் இருபத்தைந்தாவது தத்துவமாய் நிற்பது புருட தத்துவம் என்பர். இவர் புருட தத்துவம் என்றது உயிர்க்கிழவனையேயாம். இப்புருடதத்து வந்தான் என்றுமுள்ளதாயும் தூய அறிவுப்பொருளாயும் கட்டுறாததாயும் இருப்பதென்றும், அங்ஙனமாயினும் அது மூலப்பகுதியின் சேர்க்கையால் இடையே கட்டற்று நிற்கு மென்றும், புருடனுக்கு வருந்துன்பம் பளிங்கைச் சார்ந்த மலர்களின் பலவகை நிறங்களும் அப்பளிங்கினுட் டோன்று மாறுபோல அவன் மூலப்பகுதியைச் சார்ந்து அதனைத் தன்னின் வேறாய்க் காணாது நிற்றலால் வருவதாமென்றும், அவன் தன்னை அம்மூலப்பகுதியின் வேறாய்க் கண்டுணரவே அத்துன்பம் நீங்குமாகலின் அத்துன்ப நீக்கமே வீடுபேறா மென்றும், உயிருடைய விலங்கினங்களைக் கொன்று வேட்கும் வேள்விகள் உயிர்கட்குத் துன்பத்தையே தருதலின் அவற்றை வேட்டல் தீவினையேயாமென்றும் இவ்வாற்றல் வேள்வி வேட்டலை மிக்கெடுத்துக் கூறும் வேதவுரைகள் வாலாமை யுடையவாய்த் துன்பத்தை மேன்மேல் விளைத்தலின் அவை கொள்ளற்பாலன அல்லவென்றும், உயிர்க்கொலை செய்யா மையே எல்லா அறங்களினும் மிக்கதாய்த் துன்ப நீக்கமாகிய வீடுபேற்றுதிப்பயனை அளிக்கும் என்றும் இல்பொருளாகிய அவிச்சையால் உயிர் கட்டற்று நிற்குமென்னும் மாயாவாதி கூற்று விஞ்ஞானவாதியாகிய சௌத்திராந்திகன் கூற்றாய் முடிதலின் அது வெறும் பொய்யோமென்றும், உலகு உள் பொருளேயாமன்றி இல்பொருளாதல் ஒருவாற்றானும் எய்தாதாமென்றும், வினைகள் தன்னாற் பிறராற் றெய்வத்தால் உயிர்களின் நுகர்ச்சிக்கு வருமென்றும், ஆயினும் அவ்வினைப் பயன்கள் நிலையுதல் உடையவல்லவென்றும், உயிர்களின் இன்பதுன்ப நுகர்ச்சிகளும் பிறப்பு இறப்புகளும் வேறுவேறா யிருப்பக்காண்டலின் அவை தம்மைத் தனித்தனியே உடைய உயிர்களும் ஒன்றல்லவாய்ப் பலவாமென்றும், இவ்வுயிர்களை வீடுபேற்றின்கண் உய்த்தற்பொருட்டே மூலப்பகுதியினின்று படைப்பு நிகழ்கின்றமையின் அவை அது பெற்றபின் படைப்பு இன்றாம் என்றும், படைப்பின்கட் காணப்படும் எண்ணிறத்ந வேறுபாடுகள் அத்துணையும் எண்ணிறந்த பழவினை வேறுபாட்டால் வந்தனவாமென்றும் அறிவுறுத்துப. இச்சாங்கியநூலார் கொள்கைகளுட் பெரும்பாலன சைவ சித்தாந்தத்திற்கு உடம்பாடாதல் காண்க. காரியங் கெட்ட வழி அது தன்காரணத்தில் நுண்வடியில் அமைந்து உளதா யிருக்கு மென இவர் கூறுஞ் சற்காரியவாதம் சைவ சித்தாந்தத்திற் பெரிதும் எடுத்தாளப்படுதலும் உணரற்பாற்கு. சாங்கியநூலும் கடவுளைப் பற்றிய ஆராய்ச்சி காணப்படாமையின் அக்கோட் பாட்டினை நிரீசுரசாங்கியம் எனவும் ஓதுப. இவர் காண்டல் கருதல் உரை என்னும் மூன்று அளவைகள் கைக்கொள்வர். இனி நையாயிகமதம் இன்னதென்பது காட்டுதும். அளவை, அளக்கப்படுபொருள், ஐயம், பயன், எடுத்துக்காட்டு, பெறப்பட்ட முடிபு, உறுப்பு, மறுப்பு, உறுதிப்பாடு, வழக்கு, அழி வழக்கு, இடக்கு, ஏதுப்பிழை, புரட்டு, விடைப்போலி, தோல்வியுரை என்னும் பதினாறுவகையான் மெய்யறிவு பெற்றவழி வீடுபேறு வாய்க்குமென நியாயநூலார் கூறுப. இவர் சாங்கிய நூலார் கூறும் காண்டல்கருதல் உரை என்னும் மூன்றனோடு உவமை ஒன்று சேர்த்து நான்களவைகள் கொள்வர்; இவ்வளவைகளான் அளக்கப்படு பொருள்களாவன. உயிரும் உடம்பும் ஐம்பொறிகளும் ஐம்புலன்களும் அறிவும் மனமும் முயற்சியும் வழுவும் மறுபிறப்பும் பயனும் துன்பமும் வீடும் எனப் பன்னிரண்டாம்; ஐயமாவது ஒரு பொருட்டன் மையை உள்ளவாறறியமாட்டாது இதுவே அதுவோ வென ஐயுறுதல்; பயனாவது ஒரு முயற்சியாற் பெறப்படுவது: எடுத்துக்காட்டாவது பொதுவாக எல்லாரானும் சிறப்பாக ஓர் அறிஞனாலும் அறியப்பட்டது; சித்தாந்தம் அல்லது பெறப் பட்ட முடிபாவது உண்மையெனத் துணிந்து நாட்டப்பட்டது; உறுப்பாவது ஒரு வழக்கினை ஆராய்ந்து உண்மைமுடிபு காட்டுதற்கு வேண்டப்படும் மேற்கோள் ஏது எடுத்துக்காட்டு மாட்டு முடிபு என்னும் ஐந்துமாம்; மறுப்பாவது ஒரு பொருளின் உண்மைத் தன்மை துணிதற்பொருட்டு அதற்கு மறுதலைப்பட்ட இயல்புகளையெல்லாம் ஆராய்ந்து காட்டுவதாம்; உறுதிப் பாடாவது இருபக்கத்தார் சொல்வனவுங் கேட்டு ஐயத்தை நீக்குவதும் வினாவியதை உறுதிப்படுத்தலுமாம்; வழக்காவது இருபக்கத்தார் கூற்றினுள் ஒன்றெடுத்து அதனை ஐந்துறுப்புக் களான் ஆராய்ந்து உண்மையறிதற் கருவிகளுள் எதனானும் அதனை நாட்டி அதற்கு மறுதலையாயதைப் பெறப்பட்ட கோட்பாட்டிற் பிறழாமல் மறுப்பதாம்; அழி வழக்காவது வெற்றி பெறுதலையே பெரு நோக்காய்க் கொண்டு இழிக்கத் தக்க புல்லிய உரைகளால் எதனையும் எடுத்து மறுப்பது; இடக் காவது தான் சொல்லிய தொன்றும் நிலைநிறுத்தாது ஏனைப் பக்கத்தை மறுப்பதாம்; ஏதுப்பிழையாவது தனது மேற்கோளை நிறுவுதற்குத் தான் காட்டுங் காரணம் அதற்கு மாறான வேறொரு மேற்கோளை நாட்டுதற்கும் ஆவதூஉம், தான் கூறும் மேற்கோளுக்கு முரணாவதூஉம், மேற்கோளில் நாட்ட வேண்டு வதனையே கூறுவதூஉம், ஏதுவினுண்மையை நாட்டுதற்கு அது பிறிதோர் ஏதுவினை அவாவி நிற்பதூஉம், காலப்பிறழ்ச்சி யுடையதூஉமென ஐவகையாற் பிழைபடுவதாம், புரட்டாவது கூறுவோன் கருத்துக்கு மாறான ஒரு பொருளைக் கற்பித்தல்; விடைப்போலியாவது வறிதே ஒப்புமை பற்றிப் பொருந்தாவிடை கூறுதல்; தோல்வியுரையாவது தனது தோல்வியை மறைத்தற்குப் பொருளொடு பொருந்தாதவற்றைப் பேசுதல். இவற்றுள் விடைப்போலி இருபத்து நான்கு வகைப்படுமாறும், தோல்வி யுரை இருபத்திரண்டு வகைப்படுமாறும் அவற்றின் இயல்பும் நியாய சூத்திரம் ஐந்தாம் அத்தியாயத்துட் பரக்கக் கூறப் பட்டிருத்தலின் ஆண்டுக் கண்டு கொள்க; அவையெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது மிக விரியும். இனி இவர்தங் கோட்பாடுகள் வருமாறு: உண்மை கூறுவோன் சொற்கள் உரையளவையென எடுக்கற்பாலன. ஒரு சொல்லுக்கும் அச் சொல்லால் உணர்த்தப்படும் பொருளுக்கும் இயற்கையில் ஏதுந் தொடர்பில்லையென் றறியற்பாற்று; தொடர்புளதாயின் உணவு நெருப்பு கோடரி என்னுஞ் சொற்களைக் கேட்ட வளவானே பசிநீக்கமும் சுடுதற்றொழிலும் வெட்டுதற் றொழிலும் உடன்நிகழ வேண்டும். அற்றன்று ஆவென்னுஞ் சொல் ஒரு குதிரையையாதல் ஒரு குடத்தையாதல் உணர்த்தாது பசுவினையை குறிக்கக் காண்டலால், அச் சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் நிலைபெற்ற தொடர்பு இல்லை யென்றல் அமையா தெனிற் குழூஉக்குறிபோல இப்பொருளை அறிதற்கு இச்சொல்லென மக்கள் தம்முள் இயற்கையை யமைத்த ஏற்பாட்டால் அஃதங்ஙனம் அதனை உணர்த்துகின்றதன்றிப் பிறிதில்லையென்க. அல்லதூஉம், ஒரு சொல் பலபொருள் பயத்தல் உலக வழக்கினும் செய்யுள் வழக்கினும் உண்மையால் ஒரு சொல் ஒரு பொருளையே சுட்டும் இயற்கைத் தொடர்புடையதென்றல் பொருந்தாதென மறுக்க. இனி வேதமொழி விதியும் அர்த்தவாதமும் அநுவாதமும் என மூவகைப் பாகுபாட்டுள் அடங்கும். விதி எனினும் கட்டளை யெனினும் ஒக்கும்; அது துறக்கம் வேண்டினோன் சோதிட் டோமம் வேட்க என்றாற்போல வியங்கோட் பொருட்டாய் வருவது. அர்த்தவாதமாவது தன்வழி நிறுத்துதல், அது தான் புகழ்ந்து பேசுதலாலும் இகழ்ந்து கூறுதலானும் அச்சுறுத்துத லானும் பாராட்டுதலானும் நடை பெறுவது; சருவ சித்து வேள்வியையாற்றுதலால் தேவர்கள் எல்லாரையும் வென்றார் கள், ஆதலாற் சருவசித்து வேள்வியைப் போல்வது பிறிதில்லை, அஃது எல்லாவற்றையும் நமக்குத் தருவது, எல்லாரையும் நாம் வெல்லும்படி செய்வது என்னும் மறைமொழி புகழ்ச்சி பற்றி வந்தது; சோதிட்டோமத்தை விடுத்து வேறொரு வேள்வியினை ஆற்றுவோன் ஒரு குழியின்கண் வீழ்ந்து பழுதுறுவான் என்னுந் தொடர்மொழி இகழ்ச்சி பற்றி வந்தது: அவிகொடுக்குங்கால் முதலிற் கொழுப்பினையும் அதன் பின் நெய்யினையும் எடுக்கற்பாற்று; ஆனால், ஐயோ! சரகக்குருக்கள் தீக்கடவுட்கு உயிர்போல்வதாகிய நெய்யினை முன்னெடுத்தார்! என்பது அச்சுறுத்து மாற்றால் வந்தது; இதனாற் பிராமணர் சாம கீதத்தைப் பாடினர் என்பது பாராட்டுதல் பற்றி வந்தது. அநுவாதமாவது விதிமொழித்தொடரிற் கட்டளையிடப் பட்ட தனைப் பெயர்த்தும் எடுத்துக் கூறுவது. விதிவாக்கியம் அர்த்தவாதவாக்கியம் அநுவாத வாக்கியம் என்பவற்றைக் கட்டளைத் தொடர் இணக்குமொழித் தொடர் வழிமொழித் தொடர் எனத் தமிழில் நிரலே மொழி பெயர்த்துக் கொள்க. வேதங்களைச் செய்த முனிவரர் உண்மையறிவுடையராத லானும், உயிர்களிடத்து மிகுந்த அன்பு உடையராதலானும், தாமறிந்த உண்மைகளைப் பிறர்க்குத் தெரிவிக்கும் வேட்கை பெரிதுடைய ராதலானும் அவராற் செய்யப்பட்ட அம் மறை மொழிகள் நம்பற்பாலன என்பர். இனி இவர் உயிரினியல்பைப் பற்றி உரைக்குமாறு: ஐம்பொறிகளுள் ஒரு பொறியே உயிராமென்றல் அடாது; என்னை? ஒரு பொருளை நாம் கண்ணாற்கண்டுணர்தலே யன்றிக் கையாற் றொட்டும் அறிகின்றோமாகலின். அதுபோக, உடம்பே உயிர் என்னாமோ வெனின் அதுவும் ஆகாது; என்னை? உடம்பு நீறாக்கப் பட்டவழித் தீவினையினின்றும் அது விடுபடக் காணாமையின்; அல்லதூஉம், முன்நேரத்தி லிருந்த வுடம்பு பின் நேரத்தில் இருப்பதின்றி அடுத்தடுத்து மாறிவரக் காண்டலின் அஃது ஒரு நேரத்தில் ஓருயிரைக்கொன்றதாயின் அதனால் வருங்குற்றம் பின்நேரத்தில் உளதாகிய அவ்வுடம்புக்கு வராதொழிதல் வேண்டும்; மற்று அக்குற்றம் அதனைப் பற்றுதற்கு ஏதுவாய் நின்றது என்றும் உள்ள உயிரேயாதல் தெளியப்படுதலின் உடம்பின் வேறாய் உயிர் உளதெனலே பொருத்தமாம். உயிர் என்றும் உளதாயின் அஃது உடம்போடு கூடியிருக்கும் வழி அவ்வுடம்பை நெருப்பிலிட்டுக் கொளுத்தல் குற்றமாகாதெனின், அற்றன்று, ஓர் உயிரின் இயக்கத்திற்கு அதனுடம்பு ஒரு சிறந்த கருவியாயிருத்தலின் அதனைச் சிதைத்தல் குற்றமேயாம் என்பது. ஐம்பொறியுள் ஒன்றும், ஐம்பொறிக் கிருப்பிடமாகிய உடம்பும் உயிர் ஆகாவாயினும், ஐம்பொறியும் ஒருங்கு தொக்க தொகையே உயிரெனக் கொள்ளாமோ வெனிற் கொள்ளாம்; என்னை? இடக்கண்ணாற் கண்டதொருபொருளை வலக்கண்ணானுங் கண்டு அதனை நினைவு கூர்வது ஒன்று வேறேயுளதாகலின். அற்றன்று, கண் ஒன்றே நடுநின்ற மூக்கெலும்பால் இரண்டு போற்றோன்றுகின்ற தெனின், அது பொருந்தாது, ஒரு கண் சிதைந்து பழுதுபட்ட விடத்தும் மற்றொருகண் காண்டற் றொழிற்குப் பயன்படுதலின். அதுவேயுமன்றி கட்பொறியாற் புளியம் பழத்தைக் காண் கின்றுழி வாயின் கண் நீர் சுரக்கக் காண்டலின், ஒரு பொறியால் அறிந்தது கொண்டு ஏனையதன் கண்ணும் ஒரு கிளர்ச்சியினைத் தோற்றுவித்தற்கு அவ்விரண் டினும் வேறாய் நிற்பதோருயிர் இன்றியமையாது வேண்டப்படு மென்பது. அவ்வாறு ஒன்றன் நிகழ்ச்சிபற்றிப் பிறிதொன்றினும் ஒரு கிளர்ச்சி தோன்றல் நினைவின் செயலெனின், அந்நினைவு தானும் உயிரின் ஒரு தன்மை யாவதன்றிப் பிறிதன்றென மறுக்க. மேலும், நினைக்கப் பட்ட பொருள்கள் பலவாயிருத்த லானும், அவற்றைப் பற்றிய நினைவுகள் அத்துணையும் ஓர் உயிரின்கண் நிலைப்பெற்று நிற்பினல்லது அவை மறித்தும் நினைக்கப்படுதல் செல்லாமை யானும் உயிரொன்று தனித்துளதென்பது தேற்றமேயாம். இனி, அகக்கருவியாகிய மனமே உயிரென்றலும் அமையாது, என்னை? மனம் ஓர் அணுவளவிற்றாகலானும் அணுவளவிற்றாகிய அது காண்டல் கேட்டல் அறிதல் உணர்தல் முதலாய பல தொழில்களை நிகழ்த்தும் வினைமுதலாதல் செல்லாமை யானும், எல்லா வற்றையும் அறியும் உயிரை அணுவளவிற் றென்றல் ஏலாமை யானுமென்பது. இனி, முன் நிகழ்ந்தவற்றை நிகைக்கும் நினைவால் ஒரு மகவின்மாட்டு அச்சமுந் துயரமும் மகிழ்ச்சியும் தோன்றக் காண்டலின் நிகழ்ச்சிகட்கெல்லாம் ஒரு பற்றுக் கோடாய் நிற்கும் ஓருயிர் தனியேயுண்டென்பது துணியப்படும். அற்றன்று, ஒரு தாமரை மலரின்கண் அதன் இதழ்கள் விரிந்து குவியுமாறு போல, அம்மகவின்மாட்டும் அந்நிகழ்ச்சிகள் இயற்கையாய்க் காணப்படுகின்றன வெனின்; நன்று சொன்னாய், அறிவில்லாப் பொருள்களில் உண்டாம் நிகழ்ச்சி வேறுபாடுகள் சூடு குளிர் மழை காலம் என்பவற்றின் மாறுதல் களாற் றோன்று வனவாகையால் அவைதம்மை ஈண்டைக்கு உவமையாகக் காட்டுதல் அடாது. இம்மையில் ஒரு மகவு பால்பருகுதற்கு விரையும்அவா அது மேலைப்பிறவியிற் பால் பருகிய பழக்கத்தால் நேர்வ தொன்றாகலின் என்பது. அற்றன்று, காந்தக் கல்லினை இருப்பு ஊசி சென்று அடையுமாறு போலக் கண் பூவாக் குழவியும் தாயின் முலையைச் சென்று அடைகின்ற தெனின், இருப்பூசி காந்தகக் கல்லையன்றிப் பிறிதொன்றனைச் சென்றடையாமையானும், இளங்குழவி தாயின் முலையை யன்றிப் பிறிதொன்றனைச் சென்று சாராமையானும் இவ்வாறு இவை தத்தமக்கேற்ற பொருள்களைச் சார்தற்கு ஒரு காரணம் வேண்டுமன்றே, அது தான் குழவிமாட்டுயாதென ஆயும் வழி அது மேலைப்பிறவிப் பழக்கத்தான் வந்த அவாவெனவே பெறப்படுமென்பது. அற்றாயினுங் குடம் முதலாயின வடிவு நிறம் முதலிய பண்புகளோடு படைக்கப்படுதல்போல, உயிரும் அவா முதலிய பண்புகளோடு படைக்கப்படும் எனலே பொருத்தமாகலின் உயிர் என்றுமுள்ள பொருளாகாதெனின், நன்று சொன்னாய், மகவின் மாட்டுக் காணப்படும் அவா அது மேலைப் பிறவிக்கண் நுகர்ந்த பொருட் பயனாய் அதன்கண் எஞ்சி நின்ற நினைவுகளால் உண்டாவதாகலின் உயிர் என்றுமுள்ள பொருள் என்னும் உண்மை மறுக்கப்படாதென்க. இனி உயிர்கட்கு உறையுளாய் வரும் உடம்பு அறிவில் பொருளாகிய மண்ணேயாமென்றும், மேலைப்பிறவியிற்செய்த இருவினைக் கீடாக உடம்புகள் உண்டாமென்றும், இருவினை நுகர்ச்சி ஒழிந்த வளவானே உயிர் உடம்பைவிட்டு நீங்கு மென்றும், உடம்பு உலகுகட்கு முதலாவன அறிவில் பொருளாயும் உயிர் அறிவுப் பொருளாயுமிருத்தலின் அவை யிரண்டும் வெவ்வேறியல்பினவாமென்றும், உயிர் என்றும் உளதாகலின் அது மறித்தும் மறித்தும் பிறவி எடுக்குமென்றும், அவரவர் செய்த வினைகட்கு இயைய இறைவனே அவற்றின் பயன்களை உயிர்கட்கு நுகர்விப்பனென்றும், உள்பொருள் இல்பொருட்கணின்று தோன்றல் இயலாமையாற் காரியப் பொருள்கள் கெட்ட வழிக் காரணப் பொருளாய் நிலை பெறுமென்றும், பிறவித் துன்பங்கள் பலவாயிருத்தலிற் பிறவி யெடுத்தல் துன்பமேயாமென்றும், என்றாலும் இடையிடையே இன்பம் உளதென்பது மறுக்கப்படாதென்றும், துறவுபூண்டு வீட்டினைத் தலைப்படுவார்க்குத் துன்பங்கள் அறவே தொலைய இன்பம் உண்டாமென்றும் வழூஉக்களின் காரணங் களை உள்ளவாறுணர்தலாற் செருக்கு அறு மென்றும், தவ முயற்சியான் உயிர் தூயதாமென்றும், வீடுபேற்றைக் காதலிப்பா ரெல்லாம் அறிவு நூல்களை ஓதிக் கற்றாரோடு உசாவித் தெளிதல் வேண்டு மென்றும் நையாயிகர் வற்புறுத்துப. இவர், பரமாணுக்கள் பகுக்கப் படாதனவாய், அறிவில் பொருள்கட் கெல்லாம் முதலாய் என்றும் நிலைபெறுமென நிறுவுவர். நியாயநூலார் தழூஉங் கோட்பாடுகளிற் பெரும்பாலன சைவசித்தாந்தத்திற்கு உடம்பாடாதல் காண்க. இனி, வைசேடிகர் கூறுவன வெல்லாம் நையாயிகர் உரைப் பொருளோடு முழுதொக்குமாயினும், அவர் அவற்றை விளக்கு மாற்றின்கட் சிற்சில வேறுபாடுகள் உண்மையின் அவர் கூறும் பொருளும் ஈண்டொருசிறிது காட்டுதும். பொருள், பண்பு, தொழில், பொதுவியல்பு, சிறப்பியல்பு, தற்கிழமை என்னும் அறுவகைச் சொற் பொருள்களின் ஒற்றுமை வேற்றுமைகளை அறியும் அறிவால் துன்பநீக்கம் உண்டாம் என்பர். இவ்வறு வகைச் சொற்பொருள்களின் இல்லாமை யாகிய அபாவம் என்பதொன்று கூட்டிச் சொற்பொருள் ஏழென்றலும் வைசேடிக நூலார்க்கு உடன்பாடு. இவற்றுட் பொருளெனப்படுவது நிலம் நீர் தீ வளி வெளி காலம் திசை உயிர் மனம் என ஒன்பது வகைத்து; பண்பெனப்படுவது ஒளி சுவை நாற்றம் ஊறு எண் அளவு வேறுபாடு புணர்ப்பு பிரிவு முன் பின் அறிவு இன்பம் துன்பம் விருப்பு வெறுப்பு முயற்சி எனப் பலவகைத்தாம்; தொழிலெனப் படுவது எழுதல் விழுதல் கருங்கல் விரிதல் இயங்கல் எனப் பல வகைத்து; பொது வியல்பென்பது மிகுதியின் இருப்பதூஉங் குறைவின் இருப்பதூஉம் என இருபகுதித்து; சிறப்பியல்பென்பது முடிவாய் என்றுமுள்ள பொருள்களான பரமாணுக்களின் மட்டும் இருப்பது; தற்கிழமை என்பது பிரிவின்றி என்றுமுள்ள இயைபு, அஃது உறுப்பு உறுப்பிகட்கும் பண்பு பண்பிகட்கும், வினை வினைமுதல்கட்கும் உளதாவ தொரு நீக்கமில் இயைபு; இன்மை யென்பது பண்புந் தொழிலும் பொருந்தாமையான் முன் இல்லாதது; என்று எழுகூற்றினையும் விளக்குவர். இனி இவர்தங் கோட்பாடுகளுட் சிலவருமாறு: நிலம், நீர், தீ, வளி, வான், காலம், திசை, ஆன்மா, மனம் என்னும் ஒன்பதும் உள்பொரு ளென்பர். இவ்வொன்பதின் வேறாகிய இருளைச் சாங்கிய நூலாரும் பட்டமீமாஞ்சகரும் வேதாந்திகளும் ஓர் உள் பொருளென்றே கொள்ளாநிற்ப, இவர் ஒளியினது இன்மையே இருளெனப்படுவதன்றி அஃது ஓர் உள்பொருளா மாறில்லை யென் றுரைப்பர். ஓர் உள் பொருளின் இலக்கணமாவது பண்புந் தொழிலும் நீக்க மின்றி இருத்தற்கு இடமாவதாம். இனிக் காரணம் இல்வழிக் காரியம் இல்லை யாதல்போலக், காரியம் இல்வழிக் காரணமும் இல்லை யென்றுரைத்தல் அடாது; என்னை? மண்ணும் கோல் திகிரிகளுங் குயவனும் இல்வழிக் குடந்தோன்றாமை கண்டாம்; அங்ஙனமே, குடம் இல்வழி அதற்குக் காரணமாகிய மண் முதலியனவும் இல்லையென்று ரைத்தல் பொருந்தாதாகலின். இனி, ஒரு பொருளின் இருப்பு அப்பொருளின் வேறாவதாம்; அங்ஙனமே, குடம் இல்வழி அதற்குக் காரணமாகிய மண் முதலியனவும் இல்லையென்று ரைத்தல் பொருந்தாதாகலின். இனி, ஒரு பொருளின் இருப்பு அப்பொருளின் வேறாவதாம்; அங்ஙனமே ஒரு பொருட்டன் மையும் பண்பின்றன்மையும் தொழிற்றன்மையும் அப் பொருள் பண்பு தொழில்களின் வேறாவனவாம் என்று அறியற்பாற்று. ஓசையாகிய பண்பு ஏனை நிலம் நீர் தீ வளி முதலிய நான்கு பொருள்களுள் ஒன்றற்கு உரியதாதல் செல்லாமையானும், அந்நான்கும் நாற்றம் சுவை ஒளி ஊறு என்னும் பண்புகளை யுடைமை தனித்தனியே துணியப்படுதலானும், அங்ஙனமே அஃது ஆன்மா மனம் என்பவற்றின் பண்பாதலும் பெறப்படா மையானும் அதனைத் தனக்கென உடைய வான் எனும் ஒரு பொருளுண்மை தெற்றெனப் பெறப்படும்; அவ்வானும் எங்கும் நிறைந்த பொருளாகலின் அது பலவாதலின்றி ஒன்றேயாதலும் துணியப்படும். இனி, முன் பின் உடன் நிகழ்ச்சி விரைவு விரைவின்மை முதலிய குறிகளுக்கு இடமாயிருத்தலிற் காலம் என்பதும் ஓர் உள் பொருளே யாமென்றுணரற்பாற்று; இம் முன் பின் முதலான வழக்கு ஓரிடத்தன்றி எவ்விடத்தும் நிகழக் காண்டலின் இவற்றிற்குக் காரணமாகிய காலமும் பலவாத லின்றி ஒன்றே யாமென்பதுந் துணியப்படும்; அக்காலந்தான் நிலையுதல் உடைய பொருட்குக் காரணமாகாது, அஃதில்லாப் பொருள்கட்குக் காரணமாவதாம். இனி, இஃது அதற்குக் கீழ்பால் உள்ளது. அஃது இதற்கு மேல்பால் உள்ளது. இஃது அதற்கு வடக்கண் உள்ளது. அஃது இதற்கு தெற்கண் உள்ளது என்றற் றொடக்கத்து வழக்குகளுக்குக் காரணமாவதோர் உள்பொருளின் இருப்பு இன்றியமையாது வேண்டப் படுமாகலின் அதுவே திசை யாமென அறியற் பாற்று என்பர். இனி, இவர் உயிரின் இருப்பு இயல்புகளைப் பற்றிக் கூறுவன வருமாறு: மெய் வாய் கண் மூக்குக் செவிகளால் அறியப்படும் ஐம்புலன்களும் அவ் வைம்பொறிகளின் வேறாய் நிற்றல் எல்லாரானும் உணரப்படுதலின், அதுபோல் ஐம்பொறி களினும் விரவி நின்று அவற்றையறிவும் உயிரும் அவ்வைம் பொறியினும் அவற்றாற்கவரப்படும் ஐம்புலன்களினும் வேறாதல் இனிது பெறப்படும். அற்றன்று, ஐம்புலவுணர்ச்சி நிகழ் தற்கு ஐம்பொறிகளும் அவை தமக்கு இருப்பிடமாகிய உடம்புமே காரணமாயிருத்தலின் இவற்றின் வேறாக ஓர் உயிர் உண்டெனக் கோடல் மிகையாமாலெனின், நன்று கூறினாய், உடம்பும் அவ்வுடம்பின்கட் சில உறுப்புக்களாகயி ஐம்பொறி களுமே அறிவுடையன என்றுரைப்பின் அங்ஙனமே அதன்கண் உள்ள கை கால் முதலான ஏனை உறுப்புக்களும் அறிவுடைய னவா யிருத்தல் வேண்டுமன்றே, அவை அவ்வாறிருப்பக் காணா மையின் உறுப்புக்களில் இல்லாததோர் அறிவு அவை தொக்க உடம்பின்கண் உண்டாமென்றல் சிறிதும் இறையாதென்க. அற்றன்று, உடம்பினுறுப்புகள் அறிவுஉடைய வல்லவாயினும் அவை தமக்கெல்லாம் முதலான பரமாணுக்கள் அறிவுடைய வாகலின், அப்பரமாணுக்களின் வேறாக உயிர் ஒன்று உண்டெனக்கோடல் பொருந்தாதெனின், உடம்பிற்குப் போலவே குடம் படம் முதலியவற்றிற்கும் பரமாணுக்களே முதலாகலின் அக்குடம் படம் முதலியனவும் அறிவுடையவா யிருத்தல் வேண்டும்; மற்று அவை அவ்வாறிருப்பக் காணா மையின் பரமாணுக்கள் அறிவு உடையனவென்றல் அமையாது. ஆதலால், உயிரின் சேர்க்கையினான் மட்டுமே ஐம்பொறி களினும் அறிவு நிகழுகின்ற தெனக் கடைப்பிடிக்க அறிவு நிகழ்ச்சியே உயிரின் உண்மைக்கு அடையாளமாமென்க. அல்லதூஉம், முயற்சியும் முயற்சியின்மையும் ஒருவன்தன் உயிரின்கண் முட்டுமே நிகழக்காண்டலின், அவையும் உயிரினிருப்பை யுணர்தற்குரிய அடையாளங்களா மென்று தெளிதல் வேண்டும். இன்னும், மேற் செல்லும் மூச்சும், கீழ்ச் செல்லுங் காற்றும், கண்மூடுதலும், கண்திறத்தலும், பிழைத் திருத்தலும், மன இயக்கமும், ஏனைப் பொறிகளின் நிகழும் வேறுபாடும், இன்பந் துன்பம் விருப்பு வெறுப்பு முயற்சி முதலியனவும் உயிரினிருப்பை அறிவிக்கும் அடையாளங்களாம். உயிர் பண்பையுடைய பொருளாய் என்றும் உள்ளதாகும். கட்புலனாய்த் தோன்றும் புகையைக் கொண்டு தீயினுண்மை யறியப்படு மாறுபோல, உயிரும் கட்புலனாவதோர் அடை யாளங் கொண்டு அறியப்படுமென்று கொள்ளற்க. அஃது ஒவ்வொருவருக்கும் மெய்ந்நிகழ்ச்சியாய்த் தோன்றும் நான் என்னும் உணர்வுக்கு இடமாதல் பற்றித் துணியப்படுமென்க. அற்றேல் நான் பருத்தேன் நான் சிறுத்தேன் நான் சாத்தன் நான் கொற்றன் என்றற் றொடக்கத்து வழக்குகளின்கண் நான் எனும் உணர்ச்சிக்கு இடமாவது உடம்பே யாமா லெனின், உயிர் உடம்போடு ஒற்றித்து நிற்றல்பற்றி ஓரோ விடங்களில் நான் என்பது உடம்போ டொன்றுபடுத்தி வழங்கப்படுமாயினும் தன்னின் வேறாம் பொருள்களை எனது மனை எனது ஊர் எனது பொருள் என்று வழங்குமாறு போலவே எனது உடம்பு எனது கண் எனது கை என்னும் வழக்கும் பெரும்பான்மையாய் நிகழக் காண்டலின் அங்ஙனம் என் என்னுஞ் சொல்லாற் குறிக்கப்படும் உயிர்க்கு அவ்வுடம்பும் உறுப்பும் வேறாமென்பதே தேற்றமாம். இங்ஙனம் நான் என் என்னும் உணர்வுக்கு உயிர் ஒன்றுமே உரித்தாதல் எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததாகலின், அவ்வுணர்ச்சிக்கு உயிர்நேரே புலனாவ தொன்றாமென்க. அதுவே யுமன்றி, ஒருவன் தன் நினைவு உடம்பு உறுப்புக்களிற் செல்லா மற்றடுத்து, ஐம்பொறிகளையும் அடைத்து, எஞ்சித் தன்னள வாய் நிற்புழி ஆண்டு அவன்பால் நான் எனும் உணர்வு நிகழக் காண்டலின், அவ்வுணர்வுக்குப் பற்றுக் கோடாவது உயிர் ஒன்றுமே என்பது முடிக்கப்படும். இனி, இன்பதுன்பநுகர்ச்சியும் அறிவும் வேறுபாடின்றி எல்லாவுயிர்கட்கும் ஒத்த இயல்பினவாய்க் காணப்படுதலின், உயிர் தனித்தனிப் பலவாதலன்றி ஒன்றேயாமென உரையாமோ வெனின், உரையாமன்றே, என்னை? ஒருவர் செல்வராயும் ஏனையொருவர் வறியராயும், ஒருவர் இன்பமுடையராயும் பிறரொருவர் துன்பமுடையராயும், ஒருவர் உயர்ந்த பிறப்பின ராயும் மற்றையொருவர் தாழ்ந்த பிறப்பினராயும், ஒருவர் கற்றறிவுடையராயும் ஏனையொருவர் அஃது இல்லாதவராயும், ஒருவர் இளையராயும் பிறரொருவர் முதியராயும் பல்வேறு வகைப்பட்ட தன்மைகளோடு காணப்படுதலானும், ஒருவர்க்கு உண்டாம் இன்ப துன்ப நுகர்ச்சிகள் ஏனையோர்க்கும் ஒத்தபடியாய் உடன் நிகழக் காணாமையானும் உயிர்கள் ஒன்றல்லவாய்ப் பலப்பலவாமென்பதே துணிபொருளாமென்க. மேலும், உயிர்கள் பல உண்மை முண்டகோபநிடதத்திற் சொல்லப் படுதலினாலும் (முண்டகோபநிடதம் 311) நன்கு தெளியப்படும் என்பது இவ்வுயிர்கள் கருவாய்ப் பிறப்பனவும் அங்ஙனம் பிறவாதனவும் என இருபாலனவென்ப. நீர் மண்டிலம் ஞாயிற்று மண்டிலம் வளிமண்டிலம் என்பவற்றின்கண் வாழும் உயிர்களெல்லாங் கருவிற் பிறவாதனவென்றும், கடவுளரும் முனிவரரும் அவ்வகுப்பினராவரென்றும், அவரல்லாத மக்களும் அவரிற் றாழ்ந்த ஏனை யுயிர்களுமெல்லாங் கருவிற் பிறப்பனவே யாமென்றுங் கூறுப. இனி முழுமுதற் கடவுள் பலவாதலின்றி ஒன்றேயா மெனவும், அதனிருப்பு உரையளவையினும் கருதலளவையினும் வைத்து அறியப்படுமெனவும், ஏனை உயிர்களின்பாற் காணப் படுங் குற்றம் சிறிதும் இல்லாதது அதுவாமெனவும், இறைவன் வாய்மொழி அனைத்தும் பிரமாணமேயாமெனவும் வைசேடிக நூலார் கூறுவர். மேலும், பொருளை யறிவிக்குஞ் சொல் வழக்கும், யாண்டும் செய்வினையுண்மையும் அவனை யறிதற்கு அடையாளங்களா மென்பர். உலகத்தின்கட் காணப்படும் எல்லாப் பொருள்கட்கும் பெயர் இறைவனாலேயே தரப் பட்டன வென்பதூஉம் இறைவனாகிய வினைமுதலின்றி வினையுளதாதல் செல்லா தென்பதூஉம் இவர்தங் கருத்தாம். மறைமொழிகள் சொற்கோவை யுடைமையால், அச்சொற்களும் பிறந்தழியும் நீர்மையுடைமையால் அவை என்றும் நிலை யுதலுடைய வாகாவெனக் கூறி இவர் முமாஞ்சகர் கொள்கை யை மறுப்ப. மேலும், சொல்லுவோன் இன்றிச் சொற்கள் என்றும் நிலை பேறாய் உளவாமெனக் கூறும் மீஞ்மாசக நூலார் கொள்கை பொருந்தாமை காட்டிச், சொற்கள் பொருளறி வுறுக்கும் ஓசைகளாதலால் அவை அறிவுடைய முதல்வனாற் பிறப்பிக்கப் பட்டனவேயா மென நிறுவுவர். இனிப் பொறிகளோடு மனங்கூடிய வழி அறிவு நிகழ்தலும், அவற்றோ டது கூடாதவழி அது நிகழாமையும் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின், பொறிகளின் வேறாக மனம் என்பதோர் அகக்கருவி உண்டெனவும், அஃது ஒவ்வொரு பொறியினும் ஒவ்வொரு நேரத்தின் இயங்குவதல்லாமல், எல்லாப் பொறி யினும் எந்நேரத்தினும் இயங்கக் காணாமையின் மனம் எங்கும் நிறைந்த பொருளாதலின்றி ஓர் அணுவள விற்றாமெனவும், ஒவ்வோருடம்பினும் ஒவ்வொரு மனம் உளதாமெனவும், அஃதென்றுமுள்ள அழிவில் பொருளாமெனவுங் கூறுப. இனி, என்றுமுள்ள பொருளாவது நிலைபேறுடையதாய்த் தான் ஒன்றிற் காரியப்படாததாய் இருப்பதெனவும், அவ்வியல் பின பரமாணுக்களா மென்பது காரியப் பொருள்களின் அடையாளத்தால் உணரப்படு மெனவுங்கூறிப், பரமாணுக்களே உலகத் தோற்றத்திற்குக் காரணமா மென்பர். முதலிற் பரமாணுக்கள் இரண்டு சேர்ந்து இருமையணுத் தோன்றும், இருமையணு மூன்று சேர்ந்து மும்மையணுத் தோன்றும்; இங்ஙனமே நான்மையணு முதலியன வுண்டாய் அவற்றின் சேர்க்கையால் மாநிலம் மாநீர் மாநெருப்பு மாவளி முதலியன தோன்றி இம்முறையே படைப்பு நடை பெறுமென்றும், மற்று இவை ஒடுங்குங்காலும் இம்முறையே ஒடுங்குமென்றும், பரமாணுக்களிலிருந்து உண்டாம் இத்தோற்ற வொடுக்கங்கள் இறைவன் கருதுமாற்றான் நிகழுமென்றும் விளக்குவர். இனி, உயிர் மனத்தோடுகூட, மனம் பொறிகளோடுகூடப், பொறிகள் புலன்களோடுகூட இன்பதுன்பங்கள் உளவா மெனவும், மனம் உயிரின் வயத்தில் நின்று ஒருவழிப்படவே அவ்விரண்டும் இலவாமெனவும், இதுவே யோகமா மெனவும், இவ்வாற்றல் இப்பருவுடம்பின் தொடர்பு அற, அவ்வழியே நுண்ணுடம்பின் தொடர்பும் அற்றுப் போமெனவும், அஃது அறவே இனிப் பிறப்புக்கள் உளவாமாறில்லையெனவும், இதுவே வீடுபேறாமெனவுங் கூறுப. நல்வினையுந் தீவினையும் இவை யிரண்டு மல்லாதனவும் என உயிர்களின் வினைகள் முத்திறப் படும் என்பதும், தீவினைகளுள் அறக்கொடியது கொலைவினை யேயாம் என்பதும், அத்தகைய உயிர்க் கொலையைப் புரிவ ரோடு கூடுதலுந் தீவினையாய் முடியுமென்பதும், கொலைத் தொழிலுங் கொலைநினைவும் இல்லாரோடு உண்டாம் சேர்க்கையே நல்வினை யாமென்பதும் இவர்தங் கோட்பாடு களாம். இவ்வைசேடிக நூலார் கூறும் பொருள்களிற் பெரும் பாலன சைவ சித்தாந்த நூற் பொருள்களாதல் கடைப்பிடித் துணரற்பாற்று. இனி, மீமாஞ்சகர்மதம் இன்னதென்பது காட்டுதும். இவர் இருக்கு எசுர் சாமம் அதர்வணம் என்னும் நான்கு வேதங்களையுமே கடவுள் நிலையில் வைத்து, அவ்வேதங்களின் மேற் கடவுள் இல்லையென்று கூறுதலால், அவர் அவ்வேதங் களைப் பற்றிக் கூறுவன சில ஈண்டு எடுத்துரைக்கற்பாற்று. இம் மீமாஞ்சகர் மதத்திற்கு முதல் நூலாவது சைமினிமுனிவன் பன்னிரணடு அத்தியாயங்களிற் செய்த மீமாஞ்சை சூத்திரங் களேயாம். அவற்றுள் முதல் அத்தியாயத்தின்கண் முதற் சூத்திரம் அதாதோதர் மஜிஞ்ஞாசா என்று நல்வினை யாராய்ச்சியை மேற்கொள்ளா நிற்கின்றது. அதனையடுத்த இரண்டாஞ் சூத்திரம் நல்வினை யாவன வேதங்கள் செய்க வென்று ஏவும் வினைகளே யாம் எனக்கூறும். நல்வினை என்பது கண்முதலான பொறிகளுக்குப் புலனாகாத தொன்றாகை யானும், ஆகவே ஐம்பொறிகளின் வழியாகவன்றி அறிய மாட்டாத கருதலள வைக்கும் அஃது அறியப்படுபொருளாதல் செல்லாமையானும் வேதம் ஒன்றானே மட்டும் நல்வினையாவ தின்னதென்றுணரற் பாற்றென்பர். அற்றேல், வேதங்களுஞ் சொற்களானன்றிப் பொருளை அறிவுறுத்தாமை யானும், சொற்குப் பொருடெரியி னன்றி அதன் பொருளையுணர்தல் ஏலாமையானும், ஆ முதலான பொருள்கள் உலகின்கண் கண்மை உணரப்படினன்றி ஆ முதலான சொற்களின் பொருள் அறியப்படாமையானும், இப்பொருட்கு இச்சொல் என்னுந் தொடர்பு உலகின்கண் மக்களால் நிறுத்தப்பட்ட வழக்கா னன்றித் துணியப்படாமை யானும், அதுபோல் நல்வினை என்பதும் உலக வழக்கின்கண் வைத்து உணர்தல் ஆகாமை யானும் வேதமொழியைக் கொண்டும் அதனை யறிதல் செல்லாது என உரைப்பாரை மீமாஞ்சகர் மறுக்குமாறு: சொற்கும் அதன் பொருட்கும் உளதாகிய தொடர்பு மக்களால் நிறுத்தப்பட்டதன்று; அஃது இயற்கையே என்றும் உளதாவ தாம்; அஃது அவரால் நிறுத்தப் படாததாகவே அது பிழைபடு மாறுமில்லை. ஆதலால் வேத மொழியைக் கொண்டே நல் வினை யின்னதென்று உணரற் பாற்று. வேதங்களில் ஏவற் பொருண்மேல்வருஞ் சொற்றொடர் களிற் பெறப்படும் பொருள்கள் பிழைபடுதல் ஒரு காலத்துங் காணப்படாமையின், அவற்றின் உண்மைத்தன்மை என்றுங் களங்கமுறாதென்க. இனிச், சொல் என்றுமுள்ள தென்றல் யாங்ஙனம்? அஃது ஒருவனது முயற்சியால் முற்பொழுதிற்றோன்றிப் பிற்பொழுதில் அழியக்காண்டு மென நையாயிகர் உரைப்பர். அதுவேயுமன்றி, அவன் குடத்தை உண்டாக்கினான் என்று வழங்குமாறு போலவே, அவன் சொல்லை உண்டாக்கினான் என்றும் வழங்குகின்றாராகலின், சொல் ஒருவரால் ஆக்கப்படுதலும்; ஒரு சொல்லே ஒரே நேரத்திற் பலராற் பல இடங்களிற் பேசப் படுதலும் அங்ஙனமே கேட்கப்படுதலும் உண்மையாய் நிகழ்தலின் ஒன்று அஃது எங்கும் நிறைந்த பொருளாதல் வேண்டும் அல்லதது வரம்புடைப் பொருளாய் ஒரே காலத்திற் பலவிடங்களிற் றோற்றுவித்தற்கு இசைந்ததாகல் வேண்டும்; மற்று அஃது எங்குமுள்ள பொருளென்பது எவர்க்கும் உடம்பாடன்மையின், அது பலராற் பலவிடங்களிற் றோற்று விக்கப்படும் வரம்புடைப் பொருளென்றே முடிக்கப்படும். அதனால், ஒரு சொல் பலராற் பலவிடங்களிற் றோற்று விக்கப்படும் பல பொருளே யல்லாமல் ஒரு பொருளாக மாட்டாது. அல்லதூஉம், அல் திணை என்னுஞ் சொற்கள் புணர்ச்சிக்கண் அஃறிணை எனத் திரிபுறுகின்றன; இங்ஙனந் திரிதல் என்றுமுள்ள பொருள்கட்கு ஏலாமையும் கருதற்பாற்று; மேலும், ஒரு விளக்கி னொளிபடினும், அன்றி நூறு விளக்கினொளி படினும் தான் ஒரு படித்தாயே விளங்கும் ஒரு குடம்போலாது, ஒரு சொற் பலராற் சொல்லப்பட்டவிடத்துத் தன் ஓசை முன்னை அளவிற் பெருகுதலானும் சொற்கள் திரிபுறுந் தன்மைய வென்பதுபெறப்படும். ஆதலாற், சொற்கள் என்றுமுள பொருள் என்றல் யாங்ஙனமென வினாவுவார்க்கு மீமாஞ்சகர் விடுக்குமாறு: சொற்கள் ஓர் ஆண்மகன் முயற்சியாற் றோன்றி ஒருநொடிப் பொழுதில் அழியுமென்றுரைத்தல் பொருந்தாது, என்னை? அம்முயற்சிக்கு முன்னுள்ள சொற்களையே அவ்வாண்மகனது முயற்சி அந்நேரத்திற் றோற்றுவிக்கின்ற தாகலின் சொல்லும் முயற்சிக்கு முன்னும் பின்னும் சொற்கள் உளவாதல் கண்டிலமாலெனின், சொல்லும் முயற்சி இடையறவு படாத முன்னும் பின்னும் தொடர்புற்று நிகழுமாயிற் சொற்களுந் தொடர்புறத் தோன்றிய படியாய் நிற்கும். அவ்வாறின்றி முயற்சி இடைவிட்டுப் போதலின் அவை முன்னும் பின்னும் உண்மை புலப்பட்டிலது; ஆதலாற் சொற்கள் சொன்னிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் இல்லையென்றல் அடாது. இன்னும், சொற்களெல்லாங் குடம்போல் ஆக்கப்படு பொருளென்றலும் அமையாது; என்னை? ஒருகுடம் ஆக்கப் பட்ட வழி அஃது அந்நேரந் தொட்டுப் பிற்பொழுதெல்லாந் தொடர்புற நிற்றலைத் தெளியக் காண்டும். மற்றுச் சொற்களும் அதுபோல் ஒருகால் ஆக்கப்பட்ட வழிப் பின்னர் நெடும் பொழுது தொடர்பாய் நிற்கக் காணாமையினென்பது. ஆதலாற், றோற்றுவிக்குங் காரணம் உள்வழித்தோன்றி, அல்லுழித் தோன்றாமை என்றும் உளதாய் நிற்றலே சொல்லின் இயற்கை என்பது பெறுதும். இனிச், சொற்கள் உண்டாக்கப் பட்டன வென்று உலகத்தார் வழங்குவதூஉம் அவைமுன் இல்லா திருக்கப் பின் படைக்கப்பட்டன வென்னும் பொருளைத் தராமல், தோற்றுவித்தற்குரிய முயற்சியால் அவை முன்னிருந்தே தோன்றின என்னும் பொருளைத் தருமென்று உணர்ந்து கொள்க. இனி ஒரே காலத்திற் பலராற் பலவிடங்களிற் கேட்கப்படுதல் கொண்டு ஒரு சொல் ஒன்றாதலும் என்றுமுளதாதலும் ஆகாவெனக் கூறுதலும் அடாது. என்னை? ஞாயிறு ஒன்றே ஒரே காலத்து ஓரிடத்தன்றிப் பலவிடத்தும் பலராலுங் காணப்படுதல் கொண்டு பலவா மென்றல் பொருந்தாமைபோலச், சொல்லும் அங்ஙனங் கேட்கப்படுதல் பற்றிப் பலவாம் என்றல் பொருந்தாது; ஞாயிறு அங்ஙனங் காணப்படினும் ஒன்றாய் என்றுமுளதாய் நிலைபெறுதல் எல்லார்க்குந் துணிபொருளாய் இருத்தல் போலச் சொல்லும் ஒன்றாய் நிலைபேறுடைய பொருளேயா மென்பது தேற்ற மாகலின் என்க. இனி, அஃறினை என்னும் புணர்ச்சியில் அல் திணை என்னுஞ் சொற்களே அவ்வாறு திரிந்தன வென்றலும் அமையாது, அல் திணை என நின்றவழி நின்ற எழுத்துக்களும் வேறே; அஃறிணை என நின்றவழி இடையே நின்ற எழுத்துக் களும் வேறே; பனிக்கட்டி தண்ணீரின் திரிபாற்றோன்றிய தொன்றாகலின் அஃது அத்தண்ணீரின் வேறா மாறில்லை. அதுபோல் ஆய்தமும் றகரமும் லகர தகரங்களின் திரிபேயாயின் அவ்வெழுத்துக்களும் லகர தகரங்களின் வேறு அல்லவாதல் வேண்டும். மற்று அவை அவ்வெழுத்துக்களின் வேறென்பதே இலக்கண நூலார் கருத்தாகலிற் சொற்கள் திரிபெய்து மென்றல் இசையாது. இனிப் பலராற் சொல்லப்படுதலிற் சொற்கள் தம் ஓசையளவிற் பெருகுமென்பதும் உண்மையன்றாம். என்னை? இவற்றைக் கூறுவோர் குரலின்கண் அவ்வேறுபாடு காணப் படுகின்றதேயல்லாமல், ஒரு சொற்றானே தன்னளவிற் பெருகு தலுஞ் சுருங்குதலுஞ் காணப்படாமையினாலும் கூறுவோர் தொகை மிகுதிப்பட்டால் ஓசை ஓங்குதலும் அது குறைந்தால் ஏனையதுங் குறைதலுங் கண்கூடாய் எவருங் காணக் கிடத்தலானு மென்பது. மேலும், நையாயிகர் கருத்துப்படி நோக்கினும் ஒருசொற் றன்னளவில் வேறுபாடுறுதல் செல்லா தென்பது புலனாம். சொல்லாவது ஓசையின் வடிவேயன்றிப் பிறிதில்லை. இனி ஓசை யொரு பண்பென்றே அவருங் கூறுபவாகலின், அவ்வோசையாகிய பண்புக்கு அளவு என்னும் வேறுமொரு பண்புகோடல் அவர் கொள்கைக்கே முரணாய் முடியுமென் றோர்க. என்று, சொற்கள் நிலைபேறுடையவல்லவென நையா யிகர் கூறுங் கூற்றுக்களையெல்லாம் முறையே தந்து மறுத்தபின் மீமாஞ்சகர்: சொற்கள் நிலைபேறுடையவல்ல வென்னும் பிழைபாட்டுணர்ச்சி. அவை நாங் கூறுமாற்றான் மட்டுமே உளவாகின்றன என்னும் வழூஉ நினைவால் வலுருவதொன்றாம் மற்று உண்மையான் நோக்குவழிச், சொற்களை நாங்கூறுவது அவற்றைப் படைத்தற் பொருட்டாக வன்றி அச் சொற் பொருளைத் தெரிவித்தற்பொருட்டாகவேயாம். சொல் நிலை பேறுடைத்தன்றாயின் அச்சொற் றோன்றி மறைந்த பிற்பொழுதில் அதனைக்கேட்டோர் உள்ளத்து நிகழும் பொருளுணர்ச்சியினை அது பயக்குமாறு யாங்ஙனம்? பின் சொற் பொருளுணர்ச்சி நடைபெறுமாற்றினை நுணுகி நோக்கவல்லார்க்கு, அதனைப் பயக்குஞ் சொல் என்றும் உளதாவதேயாம் என்பமு நன்கு புலனாம். மேலும், எல்லாச் சொற்களும் எல்லாரானும் பண்டு தொட்டே ஒரு பெற்றியவாய் உணரப்பட்டு வருகின்றன; முன்னர்ப் பலகாற் கேட்ட ஆ என்னுஞ் சொல்லைப் பின்னருங் கேட்குங்கால், அது முற்கேட்ட சொல்லின் வேறெனக் கருதப்படாது ஒன்றென்றே எல்லா ரானுங் கருதப்பட்டு வருதலால், இப்பரவை வழக்கானும் சொல் என்றுமுள பொருளாதல் துணியப்படும். மேலும், ஒரு சொல்லை மறித்தும் மறித்தும் பலகாற் கூறியவிடத்து, இச்சொல் ஐந்து அல்லது பத்து அல்லது பன்னிரண்டு முறை சொல்லப்பட்டது என எவரும் உரைக்கக் காண்பதல்லால், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சொற்றோன்றி யழிந்து வெவ்வேறு ஐந்து சொற்கள் அல்லது பத்துச் சொற்கள் அல்லது பன்னிரண்டு சொற்கள் தோன்றின வென்று உரைப்பாரைக் காண்கின்றிலேம்; அதனாரும், திரிபில்லாததும் என்றும் உளதாவதுமாகிய சொல் லால் என்னுஞ் சொற் றொடர் வேதத்துட் காணப்படுத லானும் சொல் என்றுமுள்ள நிலையியற்பொருளா மென்றே முடிப்ப. இனிச், சொற்கள் நிலைபேறுடையன வென்று நாட்டிய பின், அச்சொற்கள் ஒருங்கியைந்த தொடர் மொழிகளையுடைய வேதங்களும் என்று நிலைபேறாயுள்ளன வென்று நாட்டுதலே மீமாஞ்சகர் கோட்பாடாம். என்னை? ஒரு தொடர்மொழிப் பொருள் அதன்கண் உள்ள சொற்களின் பொருளையே சார்ந்திருத்தலானும், அங்ஙனம் ஒரு தொடர்மொழிக்கண் ஒன்றனை யொன்று அடுக்க நின்று பொருடருஞ் சொற்க ளெல்லாம் எஞ்ஞான்றும் உள்ளன வென்பது மேலே பெறப் பட்டமையானும், இவையிற்றின் நிலைபேறுடைமை பெறப் படவே, இவற்றால் ஆக்கப்பட்ட தொடர்மொழிகளால் ஆக்கப் பட்ட வேதங்களும என்றும் நிலைபேறாயுள்ளன வென்பது தானே போதரலானு மென்பது. அற்றேல், வேதப்பகுதிகள் பலவும் கடன் பிப்பலாதன் முதலான மக்களால் இயற்றப் பட்டன வென்பதற்கு அவை அவர் பெயர் தாங்கி நிற்றலே சான்றாகாலானும், வேதங்களின் இடையிடையே உளத்தாலகி விரும்பினான் பபர பிரவாகநி விரும்பினான் என்பவை போன்ற மக்கள் பெயர் காணப் படுதலின் அப்பகுதிகள், அம்மக்கட்குப் பன்னெடுங் காலம் பின்னே இயற்றப்பட்டன வென்பது தெளியப்படுதலானும் வேதங்கள் முக்காலத்தும் உள்ளன வென்பது யாங்ஙன மென வினாவுவார்க்கு மீமாஞ்சகர் இறுக்குமாறு; வேதத்தின் சிற்சில பகுதிகள் கடன் பிப்பலாதன் முதலியோரால் நன்கு பயிலப்பட்டு அவராற் பெரிதும் பாராட்டப்பட்டு வந்தமைபற்றி அவர் பெயர் தாங்கி நின்றனவே யல்லாமல், அவரால் இயற்றப்பட்டமை பற்றியன்று. இனி, மக்கட்கும் ஏனைப் பொருள்கட்கும் பெயர்கள் போல் ஆங்காங்கு அவ்வேதத்தின்கட் காணப்படுஞ் சொற்கள் உண்மையில் அம்மக்களையும் ஏனைப்பொருள்களையும் குறிப்பனவல்ல; வேதத்திற் காணப்பட்ட அச்சொற்களையே பின்வந்தோரான மக்களும் ஏனைப் பல்பொருள்களும் தமக்கும் பெயராய்க் கொண்டனர். அச்சொல் ஒப்புமைபற்றி அவை மக்கள் முதலான நிலையில்லாப் பொருட்பெயர்கள் போற் காணப்படுகின்றன வென்க. அற்றாயினும்; ஆக்கள் வேள்விக்கண் அமர்ந்தன, மரங்கள் வேள்வி ஆற்றின என்றற் றொடக்கத்துப் பொருந்தாத் தொடர் மொழிகள் வேதத்திற் காணப்படுதல் என்னையெனின்; அத்தொடர் மொழிகளைமட்டுந் தனியே யெடுத்து நோக்கு வார்க்கு அவை பொருந்தாதன போற் றோன்றுமாயினும், அவை யிருக்குமிடத்தின் முன் பின் ஆராய்வார்க்கு அவை அங்ஙனம் ஆகாமை புலப்படும். இன்னோன்ன தொடர்மொழிகள் ஒரு வேள்வியினைக் குறித்துப்பேசும் பகுதிக்கட் காணப்படுவனவாம். அவ்வேள்வியினை ஆண்டுப் புகழ்ந்து பேசுதல் கருத்தாகலின் ஓர் அறிவுடைய மரங்களும் அவ்வேள்வியை ஆற்றின என்று அதன் சிறப்பு ஓரறிவுயிர்கள் முதலானவற்றின்மேல் வைத்துப் புனைந்துரைக்கப்பட்டது; இது கேட்ட வளவானே ஆறறிவு டைய மக்கள் அதன் மாட்சி கடைப்பிடித்து அதனை ஆற்றுவராகலின் என்பது. இவ்வாறு வேதங்கள் ஒருவரால் ஆக்கப்படாது தாமே நிலையாய் என்றுமுளவாயிருத்தலால், அவற்றின்கண் முன் பின் முரணாம் பொருள்கள் வருதற்கு இடமின்று. அதனால் வேதங்கள் மட்டுமே நல்வினை அன்னதென்றுணர்தற்கு உண்மைப் பிரமாணமாமென்பர். இனி, இன்னது செய்கவென ஏவுதற் பொருட்கண் வரும் சொற்றொடர்களும், இன்னது செய்யற்க வென விலக்குதற் பொருட்கண்வரும் சொற்றொடர்களும் வேதங்களுள் முதன்மைப் பிரமாணங்களாம் என்பர். இவ் ஏவுதல் விலக்குதல் என்னும் பொருண்மேலன்றிப், புகழ்ந்துரை இகழ்ந்துரைப் பொருண்மேல் வருவனவும், மந்திரங்களாய் நிற்பனவும், பெயர் குறிப்பனவும் எல்லாம் அவை போல் முதன்மைப் பிரமாணங்கள் அல்ல வாயினும், ஏவுதல் விலக்குதற் பொருண் மேல் வருஞ் சொற்றொடர்ப் பொருட் சிறப்பு உணர்தற்கு உதவியாய் நிற்றலால் அவையும் அம்முகத்தால் அவற்றிற்கு அடுத்த நிலையிற் பிரமாணமாய்க் கொள்ளற் பாலனவா மென்பர். நலம்பெற வேண்டினோன் வாயுதேவற் குகந்த வெள்ளிய விலங்கை வேட்க என்னுந் தொடர்மொழி இன்னது செய்க வென வியங்கோட் பொருண்மேல் வருதலின் அது சிறந்த பிரமாணமாம். வாயு மிகவிரைந்த செலவினை யுடைய தேவனாம் என்னும் புகழ்ந்துரைச் சொற்றொடரும், உருத்திரன் அழுதான். அதிலிருந்து வெள்ளி உண்டாயிற்று என்னும் இகழ்ந்துரைச் சொற்றொடரும் இன்னது செய்த வென ஏவாமையின் முதன்மைப் பிரமாணங்கள் அல்லவாயினும், மேற்கிளந்த ஏவற்றொடர் மொழிப் பொருளைச் சிறப்பித்தற்குப் பயன்படுதலின், அவையும் அதுபற்றி அடுத்த பிரமாணங் களாய்க் கொள்ளப்படும். யாங்ஙனமெனின், வெள்ளிய விலங்கை வாயுதேவற்கு வேட்க வேண்டுமென்ப தென்னை யென்று வினாயினார்க்கு, வாயு மிக விரைந்த நடையினை யுடைமையால் வேட்போனை அவன் மிகு விரைவில் நலம்பெறச் செய்வான் என்னும் பொருளியைபு காட்டி அப்புகழ்ந்துரைப் பொருள் வியங்கோன் மொழிப் பொருளுக்கு உதவியாய் நின்று இறைபயக்குமாகலின் என்க. இன்னும் இ.ருக்கு முதலாகிய நான்மறைகளும் மக்களா லாயினும், கடவுளாலாயினும் ஆக்கப்படாமல் என்றும் நிலை பேறாயுள்ளனவாமகலின் அவற்றின்கண் ஏவப்பட்ட வேள்விகளை முறைப்படி ஆற்றுதலே நல்வினையாமென்றும், அவற்றை அங்ஙனஞ் செய்யாதொழித்தலே தீவினையா மென்றும், பலதிறப்பட்ட வேள்விகளை வேட்டலொன்றானே மக்கள் தாம் வேண்டிற்றெல்லாம் பெறுவரென்றும். மறைகளும் போதரும் மந்திரங்கள் எல்லாம் பொருளுடையனவேயா மென்றும், மிருதிகளும் ஆறங்கங்களும் எல்லாம் மறைமொழிப் பொருளோடு முரணாவழியே பிரமாணமாகுமல்லால் அவற் றொடு முரணுங்கால் அவை பிரமாணமாகக் கொள்ளப்படா வென்றும் உரைப்பர். இன்னும், வேள்வி வேட்டல் ஒவ்வொரு பயனைப்பெறற் பொருட்டேயாம் என நிறுவப்பட்டிருத்தலால், வேள்வி யாற்றுதற்கும் அது பயப்பிக்கும் துறக்கம் துலிய பயனைப் பெறுதற்கும் இடையே நெடுங்காலஞ் செல்லாநிற்பவும் செய்த அச்செயலின் பயனைத் தப்பாமல் தருதற்கு இடையே ஒரு கருவி இன்றியமையாது வேண்டப்படுமன்றே; அக்கருவிதான் யாதோவெனின், அது அபூருவம் எனப்படுவதாம் என்பர். எனவே, ஒருவன் செய்த நல்வினையின் பயனை இடைநின்று கூட்டுவதே அபூருவம் என்று அறியற்பாற்று. மகளிர் தங் கொழுநர் அல்லாதாரையும் மருவிப் பிழைத்துப் பெறும் பிள்ளைகளும் உளராதலால் இவர் பார்ப்பனர் இவர் பார்ப்பனர் அல்லாதவர் என்று பகுத்துணர்தல் ஏலாதாயினும், புகழ்பெற்ற தம் முன்னோர் பெயர்களை எடுத்துக் கூறவே அவர்க்குப் பார்ப்பனத் தன்மை யுண்டாமென மீமாஞ்சை நூல் முதல் அத்தியாயத்து முதற் பாதத்து ஆறாம் அதிகரணத்தின் கண் உள்ள ஏழாஞ் சூத்திரம் புகலாநிற்கின்றது. இம்மீமாஞ்சை நூலுட் கடவுளைப் பற்றிய ஆராய்ச்சி ஒரு சிறிதுங் காணப்படாமை யானும், அவரவர் செய்த வேள்வி வினையினின்றும் அபூருவம் என்பதோர் ஆற்றல் தோன்றி அதுவே அவர்க்குத் துறக்கம் முதலிய அவ்வேள்விப் பயனைத் தருமென்பதே அதன்கண் வற்புறுத்துரைக்கப் படுதலானும் மீமாஞ்சர்க்கு முழுமுதற் கடவுள் ஒன்றுண்டென்பது உடன் பாடன்றுபோலும் என்க. இவ்வளவின் மீமாஞ்சகர் மதம் முடிந்தது. இனிச் சைவமதம் என்பது நிலம், நீர், தீ, வளி, வெளி, ஞாயிறு. திங்கள், உயிர் என்னும் எண்வகைப் பொருளொடும் புணர்ந்து, படைப்புக் காப்பு அழிப்பு மறைப்பு அருள் என்னும் ஐந்தொழில்களையும் தனக்கொரு விளையாடல்போற் கொண்டு நடாத்தி, உயிர்களின் துன்பங்களைப் போக்கித் தன்னிற் பிறிதாவது ஒன்று இல்லானாய் விளங்கும் சிவபெரு மானை முழுமுதற்கடவுளாக வழிபடுவது என மணிமேகலையுட் கூறப்பட்டது. மணிமேகலையுட் சொல்லப்பட்ட சைவசமயமே திருவாதவூரடிகளாற் றழுவப்பட்டதூஉமா மென்பதனை இவ்வுரையுள் ஆண்டாண்டு விளக்குமாறுகொண்டு உணர்ந்து கொள்க. இனிப் பிரமவாதிமதமாவது உலகமெல்லாம் இறை வனால் இடப்பட்ட ஒரு முட்டை யென்றுரைப்பதாம். இவ்வாறு மணிமேகலையுட் சொல்லப்பட்டது; இது மனு வினும் சதபத பிராமணத்தினுங் காணப்படும். இனி வைணவமதமாவது எப்பொருட்கும் முதல்வரான திருமால் தமது விருப்பத்தாலேயே உருவுகொண்டு திருப்பாற் கடற்கண்ணே அறிதுயிலிற் கிடந்தருளுவ ரெனவும், ஐந்து இரவுகளிலே அவர் வைணவ சமயத்திற் குரிய ஆகம நூல்களை அருளிச் செய்தமையால் வைணவம் பாஞ்சராத்திரமென்றும் பெயர்பெறு மெனவும், அவர் தமது கொப்பூழினின்று நான் முகனைத் தோற்றுவித்து அவனாற் படைப்புத் தொழிலையும் அந் நான்முகன் முகத்தினின்று உருத்திரனைத் தோற்றுவித்து அவனால் அழித்தற்றொழிலையும் நடைபெறச்செய்தது தாம் என்றுங் காத்தற் றொழிலையே நிகழ்த்துவரெனவும், உலகின்கட் டீயோரை ஒறுத்து நல்லோரைக் காத்தற் பொருட்டு மீன் யாமை கேழல் நரசிங்கம் குறள் பரசுராமன் இராமன் பலராமன் மாயன் கல்கி முதலிய பத்துத் திருவவதாரங்களை எடுத்தருளியும் இனியெடுத்தும் வருவரெனவும், அவர் மூலப்பகுதியாகிய மாயையாகியும் எல்லாவுயிர்களுமாகியும் அவ்வுயிர்களைத் தொடக்கும் மாயா காரியங்களாகியும் நிற்பராதலால் மாயை யாற் கட்டுறுத்தும் அவராலன்றி மாயையின் றொடர்பை அறுத்தல் ஏலாதெனவும், அவரை ஓவாது வழிபடுவார்க்கு மாயையின் றொடர்பை யறுத்துத் தமது வைகுண்ட வாழ்க்கையில் அவரை வைப்பரெனவும் உரைப்பதாம். இனி வேதவாதிமதமாவது துவக்கமும் ஈறும் இல்லாத தாய் ஒருவராலும் ஆக்கப்படாததாய் என்றும் உளதாவது வேதமெனவும், வேதங்களுட் கூறப்படும் வினைகளைக் கைக் கொண்டு நடத்தும் முறைமையினை அறிவுறுத்தும் போதாய னீயம் முதலிய கற்பமும், வேதங்களும் போந்த காயத்திரி முதலான சந்தங்களின் பெயரும் அவ்வவற்றிற்கு எழுத்து இத்துணையவென்றலும் உணர்த்தும் சந்தோவிசியும், வேத வினைகள் செய்தற் கிசைந்த கால வகைகளை வரையறுத் துரைக்கும் சோதிடமும், வேதங்களின் சொற்பொருள் அறிவிக்கும் நிருத்தமும், வேதங்களை எடுத்தல் படுத்தல் நலிதல் முதலிய ஒலி வேறுபாட்டாற் சொல்லுமாறு காட்டும் சிக்கையும், வேதங்களின் எழுத்துச் சொற் பொருளியல்பு அறிவிக்கும் வியாகரணமும் என்னும் இவ் ஆறும் அவ்வேதத்திற்கு முறையே கை கால் கண் செவி மூக்கு முகம் என்னும் ஆறு உறுப்புக்களா மாகலின், அவை அங்கம் எனப் பெயர்பெறு மெனவுங் கூறுவதாம். இனிச் சமணமதமாவது ஆசீவகவாதம் எனவும் நிகண்ட வாதமெனவும் இரு பாகுபாட்டினை யுடைத்து. இவருள் ஆசீவகவாதங் கூறுவோர் கோட்பாடுகள் வருமாறு: எல்லை யில்லாத எல்லாப் பொருள்களிலும் எங்கும் எப்பொழுதும் நீங்காமல் நின்று புலப்பட்டு அருள்புரிகின்ற வரம்பில்லாத அறிவினையுடைய மற்கலி தேவனே இவர் தமக்கு இறைவனாம். இவ்விறைவன் அருளிச்செய்த முதல் நூலிற் சொல்லப்பட்ட பொருள்கள் ஐந்து. அவை: உயிரும், நில அணு நீர் அணு தீ அணு காற்றணு என்பனவாம் ஆம். இவைதம்முள் நில அணு வல்லென்றிருப்பது; நீரணுத் தண்ணென்று சுவையினை யுடையது; தீயணுச் சுடுதலும் மேற் சேர்தலும் உடையது; காற்றணுக் குறுக்கிட்டு அசைத்தலைச் செய்வது. உயிர் இவைதம்மை யெல்லாம் அறிவு மியல்புடையது. நிலவணு முதலிய நான்கும் உணர்வுடைய அல்ல; அவை ஒன்று கெட்டு மற்றொன்றாதலும், புதியவாய்ப் பிறத்தலும், ஒன்று மற்றொன் றிற் புகுந்திருத்தலும் ஒரு காலத்தும் இல்லை; ஓரணு இரண் டாய்ப் பிளவுபடுதலும் இல்லை; அவலைப் போற் பரப்பனவும் அல்ல; ஆயினும் உலவுதலும், தாழ்தலும், உயர்தலும், மலை முதலிய பேருருக்கள் உண்டாம்படி தாம் ஒருங்குகூடுதலும், பின்னர் அவ்வுருக்கள் இல்லையாம்படி பிரிந்து தந்தன்மை யவாதலும், நிலை பெற்ற வைரக்கல் ஆம்படி அத்துணை வன்மையாகச் செறிதலும், நடுவே புரையுடைய மூங்கிலாகக் கூடுதலும் இவ்வணுக்கள் வல்லனவாம். நிலன் முதலாகக் கூறிய இவ்வணுக்கள் நான்கும் என்றும் ஒன்று கூடியே நிலன் முதலாகிய பொருள்களைத் தோற்றுவிக்குமல்லாமல், இவற்றுள் இரண்டேனும் அன்றி மூன்றேனும் ஒன்றுகூடி நிற்க ஏனைய அவற்றை வேறு பிரிந்து நிற்பனவல்ல; இங்ஙனம் அவை ஒருங்குகூடி நிற்றலால் நிலத்தின்கட் சுவை ஒளி ஊறு என்னும் மூன்று தன்மைகளும், தீயின்கண் ஒளி ஊறு என்னும் இரண்டு தன்மைகளும், காற்றின்கண் ஊறு என்னும் ஒரு தன்மையுங் காணப்படாநிற்கும். படைத்தல் காத்தல் அழித்தல் வீட்டின்கட் சேர்த்த லென்னுந் தொழில்கள் நான்கும் பிறரொருவராற் செய்யப்படாமல் இவ்வணுக்களாலேயே நடைபெறுவனவாம். இவ்வணுக்கள் ஒன்றுகூடி விரிதலே படைப்பு; அவ்வாறு விரிந்தவை நீள நிற்றலே காப்பு; அவை மீளக்குறுகுதலே அழிப்பு; அவை ஊன்றி நிற்றலே வீடுபேறு என அறியற்பாற்று. இனி, ஓர் அணுவாகிய உயிரை நாற்பொருட்டிரட்சியில் நிற்கும் மக்கள் காணவல்லுநரல்லர்; என்றாலும், விண்ணின்கட் பொன்னெயில் வட்டத்து எழுந்தருளியிருக்கும் அருகக்கடவுளே அதனைக் காணமாட்டுவான். இவ்வுயிர்கள் தத்தம் வினை களுக்கு ஈடாகப் பல வேறுருக்கள் எடுத்துத் தோன்றியபின் எல்லாரானுங் காணப்படாநிற்பர். இவரெடுக்கும் பிறப்புக்கள் தாம் கருமை கருநீலம் பசுமை செம்மை பொன்மை வெண்மை என்னும் ஆறு நிறங்களோடு கூடியிருப்பனவாம். இவற்றுள், மிக்க வெண்மை நிறத்தோடுங் கூடிய பிறவியில் வந்தவர்களே வீடு பேற்றின்பத்தினை அடைவர்; ஏனைக் கருமை முதலிய நிறங்கள் வாய்ந்த பிறவி யெடுத்தவர்கள் கட்டுற்றுப் பிறழ்ந்துழ லுவர். ஈண்டுக் காட்டிய பிறவிகளுட் கருநிறப்பிறவியினும் கருநீலப் பிறவி உயர்ந்ததெனவும், பசும்பிறவியினும் செந்நிறப் பிறவி உயர்ந்ததெனவும், செம்பிறவியினும் பொன்னிறப்பிறவி உயர்ந்ததெனவும், பொற் பிறவியினும் மிக்க வெண்பிறவி உயர்ந்ததெனவுங் கூறாநிற்பர். இன்னும் பேறு, இழவு, இடை யூறு, இன்பம், பிரிவிலாதிருத்தல், பிற நாட்டிற் சேர்தல், மூப்புச், சாக்காடு என்னும் எட்டும் முற்பிறவியிற் செய்த வினையால் அவரவர்க்குக் கருவிலேயே வந்து பொருந்துமென்றும், எல்லாம் ஊழ்வினையிற் பட்டு நடத்தலே இவ்வுலகத்தின் இயல்பா மென்றும், மேல் அணுக்கள் ஐந்தெனப்பட்டவற்றோடு நல் வினை தீவினை யென்னும் இரண்டையும் உடன் கூட்ட இவ்வுலகம் ஏழணுக்களா யிருக்குமென்றும் சமணரில் ஆசீவகவாதிகள் புகலாநிற்பர். இனிச் சமணரில் நிகண்டவாதிகள் கூறுவன வருமாறு: எட்டுத் தீயதன்மைகளை விட்டு எட்டு நல்ல தன்மைகளோடு கூடி இந்திரர்களாற் றொழப்படும் அருகக்கடவுளே இவர் தமக்கு இறைவனாம் என்பர். எட்டு நல்ல தன்மைகளாவன; கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா ஆண்மை, கடையிலா இன்பம், பெயரில்லாமை, குடியில்லாமை, வாழ் நாளின்மை, அழியா இயல்பு என்பனவாகும்; இவற்றுக்கு மறுதலைப்பட்ட எட்டும் எட்டுத் தீயதன்மைகளாகும். இன்னும் இவர்தம் கடவுள் முக்காலத்து நிகழும் நிகழ்ச்சிகளையும் ஓரிமைப் பொழுதிலே அறியுந் தவஆற்றல் வாய்தவனென்றும் தன்னை வழிபட்டார்க்கும் வழிபடாது மாறுபட்டார்க்கும் ஓர் நீர்மையனாய் நிற்கும் ஒத்த வுள்ளத்தினையுடையனென்றும், பசி நீர்வேட்கை அச்சம் செற்றம் உவகை மயக்கம் நினைவு பழித்தல் நோய் சாதல் வியர்பு கவலை செருக்கு வியப்பு உணவு பிறப்பு உறக்கம் என்னுங் குற்றங்களினின்றும் அகன்று மேலுலகத்தின் கட் பொன்னெயில் வட்டத் தெழுந்தருளியிருப்பனென்றும், அவன் அருளிச்செய்த நூல்கள் அங்காகமம் பூருவாகமம் செகுசுருதியாகமம் என மூன்றாமென்றும், இந்நூலின்கட் சொல்லப்படும் காலம் உயிர் தன்மாத்திகாயம் அதன்மாத்தி காயம் நல்வினை தீவினை விண் பரமாணு கட்டு வீடு என்றும் பத்தும் ஒருவராற் படைக்கப்படாமல் தொன்று தொட்டே உள்ளவாமென்றும் உரைப்பர். இவர் கூறும் இப்பத்தினுட் காலமாவது ஒரு பொருள் ஒரு நொடிப்பொழுதில் தோற்றம் நிலை இறுதி என்னும் மூவகை நிலையினையும் அடையுமாறு செய்யவல்லது; உயிராவது வாழ்நாள் எல்லையைப் பொருந்தி, ஓர் உடம்பினை மேவிக், கரும்பின் சாறு அக்கரும்பெங்கும் நிறைந்து நின்றாற்போல அவ்வுடம்பெங்கும் நிறைந்து நின்று, குழவி பிள்ளை இளமை முதுமை முதலான வேறு பல பருவங்களுடையதாய், ஓரறிவு முதல் ஆறறிவுகள் பெற்றுக், கட்டு வீடு என்னும் இருவகை நிலைகளினும் எக்காலத்தும் உளதாவது; தன்மாத்திகாயமாவது எங்குமுள்ளதாய்க் கீழ் நிலையில் நிற்கும் பொருள்களை நிலைபெறாமற் செய்து உயிர்களுக்கும் புற்கலத்திற்கும் மேலாகச் செல்லப்பண்ணும்; அதன் மாத்திகாயமாவது அங்ஙனமே எங்குமுள்ளதாய் உயிர்கட்கும் புற்கலத்திற்குங் கீழுள்ள பொருள்கள் நிலைபெற்று நிற்குமாறு செய்யும்; நல்வினை யாவது நலத்தைப் பயப்பது; தீவினையாவது துன்பத்தைத் தருவது; விண்ணென்பது எல்லாப் பொருள்கட்கும் இடந்தந்து நிற்பது; புற்கலமென்பது அணு புற்கலம் கந்தபுற்கலம் என்னும் இருவகைப் பாகுபாடு உடைய தாய், அணுபுற்கலம் வலிமையும் நெகிழ்ச்சியும் உடைத்தாய் மூன்றுலகங்களினும் நிறைந்திருக்கக், கந்தபுற்கலமானது இரும்பு கல் மரம் முதலான பருப்பொருள் வடிவாய்த் திரிபுற்று நிற்கும்; கட்டாவது உழவு, தொழில், வரைவு, வாணிகம், கல்வி, கொற்றொழில் என்னும் அறுவகை வினைகளாற் கட்டுப்பட்டு இயங்குவது: வீடாவது இவ்வறுவகைக் கட்டும் நீங்கிநிற்பது. இவ்வளவிற் சமணரில் நிகண்டவாதிமதம் முடிந்தது. இவ்வாறு இருகூற்றிற்பட்ட அறுவகைச் சமயங்களும் அறியற்பாற்று. திருவாதவூரடிகள் காலத்திற்கும் முற்பட்ட மணிமேகலைச் செந்தமிழ்க் காப்பியத்துட் சொல்லப்பட்டமையின் மேற்கூறிய அறுவகைச் சமயங்களுமே அடிகள் காலத்தும், அடிகட்கு முற்பட்ட காலத்தும் வழங்கின வென்பது நன்கு பெறப்படும். பதஞ்சலிமுனிவர் இயற்றிய யோகமும், வியாசமுனிவரியற்றிய வேதாந்தமும் மணிமேகலையுட் காணப்படாமையின், அவை யிரண்டும் மணிமேகலை காலத்திற்குப் பிற்பட்டு எழுந்தனவா மென்பதூஉம் இதுகொண்டு முடிக்கப்படும். இனி, மாயாவாதம் என்பது மணிமேகலை, திவாகரம், பிங்கலந்தை என்னும் பழைய நூல்களிற் காணப்படாமற் சூடாமணி நிகண்டின்கண் மட்டுங் காணப்படுதலின், அஃது அந்நிகண்டு எழுதப்படுதற்குச் சிறிது முன்னே தோன்றி நடைபெறலாயிற் றென்பதூஉம் அறிதல் வேண்டும். எனவே, அடிகள் மிண்டிய மாயாவாதம் என இத்திருவாசகத்தின்கட் கூறியது பிற்காலத்திற் கௌடபாதர், சங்கரர் முதலானோராற் காட்டி விடப்பட்ட மாயாவாதம் அன்றென்பதூஉம், கௌட பாதர் சங்கரர் மயாயாவாதக் கொள்கையோடு பெரிதொத்து அதற்கும் முற்பட்ட காலத்தேயிருந்து யோகாசார சௌத்தி ராந்திக பௌத்தமதமே மிண்டிய மாயாவாதம் என அங்ஙனம் அடிகளாலெடுத்துரைக்கப்பட்ட தென்பதூஉம், பின்றைநாள் மாயாவாதம் பௌத்தமதக் கொள்கையோடு பெரும்பான்மை யும் ஒத்தல் பற்றியே அது பிரசந்த பௌத்தம் எனப் பெயர் பெறலாயிற்றென்பதூஉம் பகுத்துணர்ந்து கொள்க. வடமொழி யிற் சிவராமன் என்பார் வரைந்த சொற்பொருள் வரிசையிலும் மாயாவாதம் எனுஞ் சொற்றொடர் பௌத்தசமயக் கொள்கை யினைத் தெரிப்பதெனக் குறிக்கப்பட்டிருத்தலுங் கண்டுகொள்க. இனி, அறுவகைச் சமயத்து அறுவகையோர்க்கும், வீடுபேறாய் நின்ற விண்ணோர்பகுதி, கீடம்புரையுங் கிழவோன் என்றது மேலெடுத்துக்காட்டிய இருகூற்று அறுவகைச் சமயப் பகுப்புகளில் நிற்பார் தத்தமக்கு ஏற்ற பெற்றி அடையும் தத்துவங்களில் அவர்க்கு அருள் செய்யும் முதல்வர்களாயுள்ள தேவர்களெல்லாரும், எல்லாத் தத்துவங்கட்கும் மேற்பட்டு அவற்றை யெல்லாந் தன்னுள் அடக்கிநிற்கும் ஓர் ஒப்பற்ற முழுமுதற் கடவுளின் அளவிலாற்றற்குமுன் மிகச் சிறிய இயக்க முடைய புழுப்போல்வரென அவரது சிறுமையினையும் எல்லாம்வல்ல முதல்வனது பெருமையினையும் விளக்கிய வாறாம். ‘பகுதி’ பகுப்பென்னும் பொருட்டாதல் “பகுதியாற் பாற்பட்டொழுகப்பெறின்” என்புழிக் காண்க.*(திருக்குறள் 12.1) கீடம் புழுவெனப் பொருள்படும் ஒரு வடசொல். கிழவோன் உரியோன்; வீடுபேற்றைத் தருதற்கு உரியவன்; கிழமை - உரிமை. அருக்கனிற் சோதி அமைத்தோன் என்றது ஞாயிறிற் காணப்படும் ஒளிவிளக்கம் இறைவன் அதன்கண் முனைத்து நிற்றலால் அமைக்கப்பட்டதென அறிவித்தது. உலகின்கட் காணப்படும் எல்லா ஒளிகளும் அறைவன்றன் ஒளிவிளக்க மாதல் தெரித்தற்பொருட்டே, நாயகன் கண் நயப்பால் நாயகி புதைப்ப எங்கும் பாய் இருளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றித் தூய நேத்திரத் தினாலே சுடரொளி கொடுத்த பண்பின் தேயம் ஆர் ஒளிகள் எல்லாம் சிவன்உருத் தேசதென்னார் என்னுஞ் சிவஞானசித்தித் திருமொழியும்* (சிவஞான சித்தியார் 1.52) எழுந்த தென்க. அருக்கனாவான் அரனுரு அல்லனோ என்னும் அப்பர் தேவாரமும் உற்று நோக்கற்பாற்று. திருத்தகு மதியில் தண்மை வைத்தோன் என்றது திங்களிற் குளிர்ந்த ஒளியாய் இறைவன் விளங்கிநின்று அதனை அதன்கண் அமைத்தானெனக் கூறியவாறாம். திருத்தகு பொலிவு பொருந்தும் எனப் பொருள் படுதலைச் செழுந்தா தவிழ்பொழி லாய்த்துச்சேர்க திருத் தகவே (திருக்கோவையார் 124) என்பதற்குப் பேராசிரியர் உரைத்த வுரையிற் காண்க. எல்லாப் பொருள்களையும் அழிக்கவல்லதாகலின் திண் திறற்றீ என அடை கொடுத்தார். உலகாயத நூலார் கூறுமாறு பொய்யாகாமல், ஓசையும் ஒளியும் உலவுதற்கு இடமாய் என்று முள்ள பொருளாகலிற் பொய்தீர்வான் என அருளிச் செய்தார். ஊக்கம் கிளர்ச்சி, முயற்சி எனப் பொருள்படுதல் திவாகரத்துட் காண்க. நிழல் ஒளி என்னும் பொருட்டாதல் நிழல்கால் நெடுங்கல்* (சிலப்பதிகாரம் 5.127) என்பதற்கு அடியார்க்கு நல்லார் கூறிய வுரையிற் காண்க. முன்னோன் காண்க முழுதோன் காண்க 30 தன்நேர் இல்லோன் தானே காண்க ஏனத் தொல்எயி றணிந்தோன் காண்க கானப் புலியுரி அரையோன் காண்க நீற்றோன் காண்க நினைதொறும் நினைதொறும் ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன் 35 இன் இசை வீணையில் இசைந்தோன் காண்க அன்னதொன் றவ்வயின் அறிந்தோன் காண்க பரமன் காண்க பழையோன் காண்க பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க அற்புதன் காண்க அநேகன் காண்க 40 சொற்பதங் கடந்த தொல்லோன் காணக சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க பத்தி வலையிற் படுவோன் காண்க ஒருவன் என்னும் ஒருவன் காண்க விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க 45 அணுத்தருந் தன்மையில் ஐயோன் காண்க இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க அரியதில் அரிய அரியோன் காண்க மருவிஎப் பொருளும் வளர்ப்போன் காண்க நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க 50 மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க பந்தமும் வீடும் படைப்போன் காண்க நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க கற்பமும் இறுதியுங் கண்டோன் காண்க 55 யாவரும் பெறஉறும் ஈசன் காண்க தேவரும் அறியாச் சிவனே காண்க பெண்ஆண் அலிஎனும் பெற்றியன் காண்க கண்ணாலியானுங் கண்டேன் காண்க அருள்நனி சுரக்கும் அமுதே காண்க 60 கருணையின் பெருமை கண்டேன் காண்க புவனியிற் சேவடி தீண்டினன் காண்க சிவன்என யானுந் தேறினன் காண்க அவன்எனை ஆட்கொண் டருளினன் காண்க குவளைக் கண்ணி கூறன் காண்க 65 அவளுந் தானும் உடனே காண்க முன்னோன் காண்க - எப்பொருட்கும் முன் உள்ளவன் காண்க, முழுதோன் காண்க - எல்லாவற்றையும் உடையவன் காண்க, தன் நேர் இல்லோன் தானே காண்க - தனக்கு ஒப்பாவதொன்றும் இல்லாதவன் காண்க, ஏனத் தொல் எயிறு அணிந்தோன் காண்க என்பதனைத் தொல் ஏன எயிறு அணிந்தோன் காண்க என மாற்றிப் பழையதொரு பன்றியின் கூர்ம் பல்லினை அணிந்துகொண்டவன் காண்க என உரைக்க, கானப்புலி உரி அரையோன் காண்க - காட்டின்கண் வந்த புலித்தோலை உடுத்த கடிதடத்தினை உடையோன் காண்க, நீற்றோன் காண்க - திருநீற்றை யணிந்தவன் காண்க, நினை தொறும் நினைதொறும் ஆற்றேன் காண்க - இறைவன் திருவுருவப் பொலிவினை நினைக்குந்தோறும் நினைக்குந் தோறும் அவனைப் பிரிந்திருத்தலைப் பொறேன் காண்க, அந்தோ கெடுவேன் - அவனது பிரிவினைப் பொறாமையின் ஐயோ யான் கெட்டொழிவேன். இன் இசை வீணையில் இசைந்தோன் காண்க - இனிய ஒலியும் அதனையுடைய வீணையும்போல் தூய உயிர்களில் இயைந்திருப்பவன் காண்க, அன்னது ஒன்று அவ்வயின் அறிந்தோன் காண்க - அவ்வியல்பினதாகிய வீணையின் அரிய இசை ஒன்றனை அவ்வீணையில் அறிந்தவன் காண்க, பரமன் காண்க - எல்லாவற்றிற்கும் மேலானவன் காண்க, பழையோன் காண்க - எப்பொருளினும் பழையனாயினோன் காண்க, பிரமன் மால் காணாப் பெரியோன் காண்க - நான்முகனுந் திருமாலுங் காணாத பேரியல்பினன் காண்க. அற்புதன் காண்க - வியத்தகு தன்மைகள் உடையோன் காண்க, அநேகன் காண்க - பல வடிவாயிருப்பவன் காண்க, சொல் பதம் கடந்த தொல்லோன் காண்க - சொல்லின் தரத்தையுங் கடந்த பழையவன் காண்க, சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க - மனமுஞ் சென்று பற்றாத சேய்மைக்கண் உள்ளவன் காண்க, பத்தி வலையிற் படுவோன் காண்க - பேரன்பாகிய வலையில் அகப்படுவோன் காண்க, ஒருவன் என்னும் ஒருவன் காண்க - உலகிற்கு ஒரு முழு முதல்வனே என்று சொல்லப்படும் ஒப்பற்றவன் காண்க. விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க - விரிந்த உலகம் எல்லாமாய் விரிந்து நின்றவன் காண்க, அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க - ஒரு சிறு துகளின்கட் காணப்படுந் தன்மையைப்போல வியக்கப்படும் நுண்மையுடையோன் காண்க, இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க - ஒப்புச் சொல்லுதற்கு அரிய பெருமையினையுடைய தலைவன் காண்க, அரியதில் அரிய அரியோன் காண்க - அருமையுடைப் பொருளிலும் அருமை யுடைய அரியவன் காண்க, மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க என்பதனை எப்பொருளும் மருவி வளர்ப்போன் காண்க என மாற்றி எல்லாப் பொருள்களினும் நண்ணி அவற்றை வளர்த்துவருவோன் காண்க எனப் பொருள் உரைக்க, நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க - நூற்பொருள் உணர்ச்சியினால் உணரப்படாத நுட்பத்தினை யுடையோன் காண்க, மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க - மேலுங் கீழாய் விரிந்தோன் காண்க - மேலும் கீழுமாய் விரிந்து நின்றவன் காண்க, அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க - ஈறும் முதலும் விட்டு நின்றவன் காண்க, பந்தமும் வீடும் படைப்போன் காண்க - கட்டுட் வீடும் உண்டாக்குவோன் காண்க, நிற்பதும் செல்வதும் ஆனோன் காண்க - அசையாப் பொருளும் அசையும் பொருளுமாய் நின்றவன் காண்க, கற்பமும் இறுதியும் கண்டோன் காண்க - கற்ப காலமும் அதன் முடிவும் ஒருங்கே கண்டவன் காண்க, யாவரும் பெற உறும் ஈசன் காண்க - அன்பராயினார் எப்படிப்பட்டவராயினும் அவர் தனதருளைப் பெறுமாறு அவர்பாற் சென்று பொருந்தும் தலைவன் காண்க, தேவரும் அறியாச் சிவனே காண்க - அன்பர் அல்லாதார் கடவுளரே யாயினும் அவரால் அறியப்படாத சிவனே காண்க, பெண் ஆண் அலி எனும் பெற்றியன் காண்க - பெண்ணும் ஆணும் இவையிரண்டுமல்லாத அலியும் என்னும் இவற்றின் தன்மைகளை யுடையோன் காண்க, கண்ணால் யானும் கண்டேன் காண்க - ஒன்றுக்கும் பற்றாத யானும் என் ஊனக் கண்ணால் நினது திருவுருவைக் கண்டேன் காண்க, அருள் நனி சுரக்கும் அமுதே காண்க. - அருளினை மிகுதியுஞ் சுரக்கும் அமுத ஊற்றே காண்க, கருணையின் பெருமை கண்டேன் காண்க - அருளினது பெருமையினைக் கண்டேன் காண்க, புவனியிற் சே அடி தீண்டினன் காண்க - இந்நிலத்தின் மேல் தனது செவ்விய திருவடி படச் செய்தனன் காண்க, சிவன் என யானும் தேறினன் காண்க - சிவபெருமான் என்று யானுந் தெளிந்தேன் காண்க, அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க - அவன் என்னை அடிமைகொண்டு அருள் செய்தனன் காண்க, குவளைக் கண்ணி கூறன் காண்க - நீலமலர் போலுங் கண்களையுடைய உமைப் பிராட்டியாரை ஒரு கூற்றில் உடையவன் காண்க, அவளும் தானும் உடனே காண்க - அம்மையாகிய அவளும் அப்பனாகிய தானும் உடனே காண்க என்றவாறு. ஏனத் தொல்லெயி றணிந்த வரலாறு சிவரகசிய கண்டத்திற் சொல்லப்பட்டது. இரணியாக்கன் என்னுங் கொடிய ஓர் அரக்கன் இந்நிலத்தைப் பாய்போற் சுருட்டி எடுத்துக்கொண்டு கீழுலகத்தில் மறைந்து போயினனாகத், திருமால் ஒரு பன்றி வடிவெடுத்துச் சென்று அவனை மாய்த்து அவனது செங்குருதியினைப் பருகி வெறிகொண்டு உலகங்களை யெல்லாந் துன்புறுத்தலானார். அத்துன்பம் பொறுக்கலாற்றாத கடவுளர் இறைவனை அணுகிக் குறையிரப்ப, அவர் அப்பன்றி யின் பல்லைப் பிடுங்கி அணிந்தனர் என்பது. தொல் என்பதனை ஏனத்திற்கு அடையாக்கிப் பழைய ஏனம் என்க; அது திருமால் பிறப்பினில் ஒன்று. எயிறு என்பன வாயின் முன்னுள்ள பல் வரிசைகளின் இருகடையினு மமைந்த கூர்ம்பற்கள்; கோட்டிளங் குழவித் திங்க ளிரண்டன்ன எயிற்றுக் கோளே* (கனகமாலையாரிலம்பகம் - 183) என்றார் சிந்தா மணியினும். கானப் புலியுரி யரையோன் என்றது தேவதாரு வனத்து இருடிகள் ஏவிய வெம்புலியின் றோலை உரித்து அதனை அரைமேல் உடுத்துக் கொண்டமை யினை; இது கந்தபுராணத்திற் சொல்லப்பட்டது. உரி - உரித்தெடுக்கப்பட்ட தோலினுக்கு ஆகுபெயர். அழல் வடிவாய் விளங்கும் இறைவன் மாப்பேரூழிக் காலத்து எல்லாப் பொருள்களையும் எரித்து நீறாக்க, அங்ஙனம் நீறாய அவை அப்போதும் அவனையன்றிப் பற்றுதற்குப் பிறிதொன்றனைக் காணாமையின் அவனையே களைகணாப் பற்றிநிற்கும் என்பதனால் நீற்றோன் எனக் கூறினார். எனவே, எல்லாப் பொருள்களும் பருவடிவினவாய் நின்ற காலத்தும், அவ்வடிவு திரிந்து அவை நுண்ணியவாய காலத்தும் இறைவன் ஒருவனே அவையிற்றுக்குப் பற்றுக்கோடாவான் என்பதனை அவன் றிருமேனிமிசை யிலங்கும் திருநீறு அடையாளமாய் உணர்த்துகின்றது. இன்னும், நாற்காற் பசுவினது மலமாகிய சாணாகம், நெருப்பின் சேர்க்கையால் எரிக்கப்பட்டுத் தூயவாம் என்பதூஉம் அவ்வடையாளத்தால் அறிவுறுத்தப்படும் உண்மை யாம். அனலைச் சார்ந்த இரும்பு அவ்வனல் வடிவாய்ப் பொலிய, அவ்விரும்பினைப் பொதிந்த அழுக்கு அதனான் எரிக்கப்பட்டுத் தூவெண் சாம்பராய் அதன்மேல் நிற்றல்போல், இறைவனைச் சார்ந்த உயிரும் அவனுருவாய்த் திகழ அவ்வுயிரைப் பொதிந்த மும்மலங்களும் அவனாற் றூயவாய்ப் புறம்பே கழிந்து நிற்கும். இவ் வுண்மையை அறிகுறியாகவே சைவசமயத் துறவோர் அழல் நிறத்ததாகிய காவியாடையினையும், வெண்ணிறத்ததாகிய திருநீற்றினையும் தம்மேலணிகின்றார். இஃதிங்ஙனமாக, அழலுருவினனான முழுமுதற் கடவுளை வணங்காத ஏனைச் சமயங்களிலுள்ளாரும் சைவசமயத் துறவோரைப்போற் காவியாடை யுடுத்தல் அவர்தஞ் சமயவழக்குக்கு முரணாய்ப் பொருளிலதாதலுங் கடைப்பிடித்துணர்க. இறைவன்றன்றிரு வுருவ மாட்சியினையும், அதனைத் தலைக்கூடினார்க்கு வரும் தூய பெரும்பேற்றினையும் நினைவுறுத்தல் பற்றியன்றே திருநீறு பராமுகஞ் செயற்பாலதன்று எனத் (தைத்திரீயோ பநிடதம் 1,11,1 தைத்திரீயோ பநிடதத் திருமொழியும் எவராற் சிரோ விரதம் என்னுந் திருநீற்றுப் பூச்சு நூன் முறைப்படி கைக்கொள்ளப் படுகின்றதோ, அவர்க்கே இந்தப் பிரமவித்தை அறிவுறுக்கற் பாற்று என* (முண்டகோபநிடதம் 3,2,10) முண்டகோபநிடதத் திருமொழியும் எழுந்தன வென்க. இன்னிசை வீணையி லிசைந்தோன் என்பது கட்டு நீங்கி வீடுபெற்ற உயிர்கள்பால் இறைவன் இன்பவுருவினனாய் விளங்கித் தோன்றும் முறைமையினை அறிவுறுத்துகின்றது. நரம்பு தெறிக்கும் முன்னெல்லாம் வீணையிற் புலப்படுதலில் லாத இனிய ஒலி அதனைத் தெறித்த அளவானே புலப்பட்டுத் தனது இனிமையினைக் காட்டல்போல, அருள்வழி நில்லாது மருள்வழி நின்ற காலத்தெல்லாம் உயிரிற் புலப்படாது நின்ற சிவம் அஃது அதன்வழி நின்றவளவானே புலப்பட்டுத் தன் இன்பவுருவினைக் காட்டு மென்பதாம். அன்னதொன் றவ்வயி னறிந்தோன் என்றது மதுரையிற் பாணபத்திரனென்னும் அன்புமிக்க ஓர் யாழ்ப்பணன் பொருட்ட இறைவன் சாதாரிபாடின திருவிளையாடலைக் குறிக்கின்றது. அது வருமாறு : பாணபத்திரன் என்னும் யாழ்ப்பணன் சிவபெருமான்மாட்டும் சிவனடியார் மாட்டும் சிறந்த மெய்யன்புடையோனாய், அக்காலத்து மதுரையிற் செங்கோல் ஓச்சிய பாண்டிய மன்னனுக்கு யாழிற் பண்பாடும் தொழில்மேற் கொண்டுவந்தான். இடையே ஒருநாள் மற்றோர் யாழ்ப்பணன் இசைபாடுதலில் மிகவல்லான் பரிசில் பெறுதற் பொருட்டுப் பாண்டிய மன்னனிடம் போந்து மிக இனிய இசைகளைப் பாடினான். அவன் பாடிப் பரிசு பெற்ற அளவின் அமையாது ‘என்னையொப்ப இசைபாட வல்லார் இங்குளரோ? வெனச் செருக்கிக் கூறினான். அதுகேட்ட பாண்டிய அரசன் அவனை ‘நாளைவருக’ வெனப் போக்கி, உடனே தன் பாணபத்திரனை வருவித்து ‘என்னின் மிக்கார் இல்லையெனத் தருக்கிக் கூறும் இப்பாணனை நீ இசையில் வெல்ல வல்லையோ? என வினாவ, நீயும், அடியார்க்கு உயர்வுதரும் சொக்கலிங்கப் பெருமானும் இருப்ப என்னோ டொப்ப இசை பாடவல்லார் ஒருவர் இந்நிலத்தின் மீது உளராவரோ! யான் அவனை இசையில்வென்று ஓட்டி விடக்கடவேன் என்று கூறித் தனது இருக்கை சேர்ந்தான். சேர, வந்த பாணன் உடன் வந்த பாடுவார்கள் தமது இசை வன்மை காட்டல்வேண்டித் தம்முடைய இசைக்கருவிகளை இயக்கிக் கொண்டு அரிய இனிய இசைகளைப் பாடியபடியாய் அந்நகரமெங்கும் உலவினர். இவர்தம் இசைத் திறமையினைக் கண்ட பாணபத்திரன் பெரிதும் மனம் மருண்டு இவரே அத்துணை வல்லராயின், இவர் தமக்குத் தலைவனாவான் எத்துணைவல்லனாம். அவனை யான் பாண்டியன் அவைக்களத்தே வெல்லுமாறியாங்ஙனம் என்று வருந்திச் சிவபெருமானுக்குத் தன் குறையினையறிவிப்ப, அவன் தன் அடியவன் படும் துயர்தீர்த்தற்குத் திருவுளம் இரங்கி ஒரு விறகுதலையனாய் வடிவெடுத்துப், புதிய பாணன் அமர்ந்திருக்கும் இல்லம் நண்ணி, விறகு கட்டினைக் கீழே வைத்துவிட்டு, இளைப்பாறுவான் போல் அங்குள்ள திண்ணைமேற்கிடந்து கொண்டு, சாதாரி என்னும் பண்ணை உலகத்தின்கண் உள்ள இயங்குதிணை நிலைத்தினை என்னும் எல்லாப்பொருள்களும் உருகுமாறு பாடினான். mJ nf£L cŸËUªj òâa ghz‹ btËnanghªJ ‘Ú ah®? என்று வினாவ, யான் பாண பத்திரர்க்கு ஏவல் புரியும் அடியவன் என்று ஐயன் விடைகூற, அவன் பெரிதும் அஞ்சித் தனக்கேவல் புரியும் அடியனது இசைத் திறமே அளக்கலாகா இத்துணைச் சிறப்பினதாயின், இவன்றன் தலைவனாம் பாணபத்திரன் எத்துணைச் சிறந்த புலமை யுடையோனாம்! Mifahš, mitd btšYjÈayhJ! என்று கருதி, எவர்க்குந் தெரிவியாமே தங்கூட்டத்தாரோடும் இரவே அந்நகரை விட்டுப் போயினான் என்பது. அன்னது என்னுஞ் சுட்டு மேலடியிற்போந் இன்னிசை யினையும், அவ்வயின் என்னுஞ் சுட்டு வீணை யினையும் குறித்தல் உற்றறியற்பாற்று. நிலன்நீர் நெருப்பு உயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன், புலனாய் மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்து நிற்றல்பற்றி இறைவனை அநேகன் என்றார். சொற்பதம் என்னுஞ் சொற்றொடரிற் பதம் தரம் என்னும் பொருட்டாம்; இப்பொருட்டாதல் பெண்டிருந் தம்பதங் கொடுக்கும் என்னும் புறப்பாட்டிற்* (புறநானூறு 151) காண்க. சித்தம் - மனம், திவாகரம். வேறொன்றானும் பற்றப்படாத முதல்வன் அன்பு ஒன்றான் மட்டும் பற்றப்படுதலிற் பத்திவலையிற் படுவோன் என்றார்; இது சிறுபான்மை யுருவகம், படுவோனை அரிமாவாகக் களிந்து கூறாமையின். மாப்பேரூழிக்காலத்தில் முழுமுதற் கடவுள் ஒருவரே உளராதலாலும், அவரோடொப்பர் பிறர் எவரும் ஆண்டு இன்மையாலும் ஒருவனென்னும் ஒருவன் என்றார்; இங்ஙனமே சுவேதாசுவதரோப நிடதமும் சிவ ஏவ கேவல: என்று கூறுதல் காண்க. விரிபொழில் என்பதிற் பொழில் உலகம் எனப் பொருள் படுதலை ஏழுடையான் பொழில் (திருச்சிற்றம்பலக் கோவை யார் 7) என்று அடிகள் பிறாண்டும் ஓதியவாற்றாற் காண்க. ஐயோன் என்பதில் ஐ வியப்புப் பொருட்டாதல் ஐவியப்பாகும் (தொல்காப்பியம் உரியியல் 89) என்னும் உரியியற் சூத்திரத்தாலுணர்க. இனிப் பிங்கலந்தையிற் கூறியவாறு ஐ நுணுக்கம் எனப் பொருளுரைப்பினும் ஆம். ஈசன் தலைவன் எனப் பொருடரும் வடசொற் றிரிபு. நூற்பொருளுணர்ச்சி பெற்ற வளவானே இறைவனியல்பை யுணர்ந்து இன்புறுதல் செல்லாமையின் நூலுணர் வுணரா நுண்ணியோன் என்றார். தேமா இன்னதென நூலானும் பிறர் வாயுரையானுங் கேட்டுணர்ந்தோன், அவ்வாறுணர்ந்த வளவானே அதனைக் காண்டலும் அதன் கனியைச் சுவைத்தலும் மாட்டுவானல்லன்; பின்னர் அதனைத் தானே முயன்று தேடிக் கண்டு அதன் கனியைச் சுவைத்தான் மட்டும் அதனை நன்கு உணர்ந்து பயன் பெற்றானாவன், நூலறிவு ஒருவற்குள்ள இயற்கை யறிவினையும் முயற்சியையும் எழுப்புதற் கருவியே யாகுமல்லது அது தானே அவற்கு எல்லாப் பயனையுந் தரவல்லதன்றென்பது பற்றி, அடிகள் இங்ஙனம் அருளிச் செய்தரென்க. அற்றாயினும், தொட்டனைத் தூறும் மணற் கேணி மாந்தர்க்குக், கற்றனைத் தூறும் அறிவு என்பதனால், நூலறிவு பெறாமல் ஒருவற்குள்ள இயற்கையறிவு விளங்கா மையின், அதனை விளக்குதற்பொருட்டு உயர்ந்த பல அறிவு நூற்பயிற்சி இன்றியமையாது வேண்டற்பால தொன்றேயா மென்க. மேலொடு கீழாய் விரிந்தோன் என்பது மேல் நிற்குஞ் சுத்தமாயா வுலகம் முதற் கீழ்நிற்கும் அசுத்தமாயா வுலகம் ஈறான மாயையின் பரப்புமுழுதும் விரிந்துநிற்கும் அவன்றன் விரிவினை உணர்த்தியது. மேல் கீழ் என்பன ஆகுபெயர். அங்ஙனம் மாயையின் பரப்பெல்லாம் தான் விரிந்திருப் பினும், அம்மாயையிற் காணப்படுந் தோற்றமும் ஈறும் தனக்கில் லாதவன் என்று குறிப்பிப்பார் அந்தமும் ஆதியும் அகன்றோன் என்றார். பெண் ஆண் அலி எனும் மூவகை அமைதியும் இறை வனால் ஆக்கப்பட்டே இவ்வுலகின்கட் காணப்படுதலானும், இவற்றை யமைத்தவன் மாட்டும் அம்மூன்று தன்மைகளும் இருந்தன்றி இவையுளவாதல் செல்லாமையானும் பெண் ஆண் அலியெனும் பெற்றியன் என்றார். கண்ணாலியானுங் கண்டேன் என்றருளிச் செய்த மையால், அடிகள் இறைவனை நேரே கண்டருளின வுண்மை மறுக்கப் படாதெனவுணர்க. அவர் கடவுளை நேரே கண்டார், இவர் கடவுளை நேரே கண்டார் எனப் பிறர் தாந்தாம் விரும்பிய வாறு பிறரை உயர்த்துக் கூறும் பொய்யுரை போலாது, கடவுளை நேரே கண்டருளிய திருவாதவூரடிகள் அதனைத் தாமே தெளிந்துரைக்கும் இம்மெய்யுரை மெய்யாய் விளங்கும் விழுப்பம் பகுத்துணர்ந்து கடைப்பிடிக்கற் பாற்று. அருணனி சுரக்கும் அமுது என்பதில் அருள் தீ நீராகவும் சிவம் அது சுரக்கும் அமுதவூற்றாகவும் உருவகஞ் செய்யப் பட்டன. இதுவுஞ் சிறுபான்மையுருவகம். புவனியிற் சேவடி தீண்டினன் சிவனெனயானுந் தேறினன் அவனெனை யாட்கொண்ட டருளினன் என்னும் மூன்றடிகளானும், நிலமிசைச் தன்றிருவடிதோய வந்து தம்மை யாண்டவன் சிவபெருமானேயெனத் தாம் தெளிந்தவாறு கூறினார்; இவற்றாலும் அடிகள் இறைவனால் நிலத்தின்மேல் நேரே அடிமை கொள்ளப்பட்ட சீர் இனிது புலப்படுதல் காண்க. குவளைக் கண்ணி கூறன் என்பதும் அவளுந்தானும் உடனே காண்க என்பதும் முழுமுதற் பொருள் அம்மையும் அப்பனுமாய் நின்ற முறையை உணர்த்திற்று. சிவமுஞ் சத்தியும் இருமுதற் பொருள்களாம் உண்மை. இவ்வாற்றால் நன்கு தெளியப்படும், இனிச் சிவமுஞ் சத்தியும் குணியுங் குணமுமாய் நிற்கும் ஒரு முதற் பொருளேயாம் என்பாரும் உளர். அது பொருந்தாது; என்னை? இறைவனை அறியாது மயங்கி நின்ற கடவுளர் முன் இறைவி வெளிப்பட்டுத் தோன்றி இறைவனை அறிவுறுத்தினாளென்று கேநோபநிடதத்தின்கட் சொல்லப் படுதலானும். இறைவி இறைவனை நோக்கித் தவமியற்றினா ளெனவும், இறைவன் இறைவியை மணந்து கொண்டானெ னவுங் கூறும் பழைய வரலாறுகளெல்லாம் அவர் குண குணிப் பொருள்களாயிற் பொருத்தமாதல் செல்லாமையானும், உலகின்கண் இருவேறு வகையவாய்க் காணப்படும் ஆண் பெண் வடிவங்கட்கு முதலாய் நிற்குஞ் சிவமுஞ் சத்தியுமாய இருவேறு அறிவுருவங்கள் இன்றியமையாது வேண்டப்படுத லானும் என்பது. அற்றேற், சிவமுஞ் சத்தியுங் குணிகுணங் கள்போல் வைத்து அறிவு நூல்கள் ஓரோவழிக் கூறுதல் என்னையெனின்; பண்பும் அதனின் வேறன்றாய் எண்ணப்படும் பண்பியும்போலச் சத்தி சிவங்களிரண்டும் அத்துணை நெருக்க மாய்ப் பிணைந்திருத்தல் பற்றி, அவ்வியைபினுக்கு ஒத்த வேறொன் றனைக் காட்டலியலாது. பண்புக்கும் பண்பிக்கும் உளதாம் தற்கிழமை யியைபினையே அதற்கெடுத்து அவை காட்டா நிற்கும். அவ்வாறு காட்டுதல் கொண்ட அவை யிரண்டனையும் பண்பும் பண்பியுமாய்க் கோடல் பொருந்து மாறில்லை யென்க. இவ்வுண்மை தெரித்தற் பொருட்டன்றே ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனார் அண்ணல்தாள், அத்துவிதமாதல் அருமறைகள் ஒன்றென்னா, தத்துவிதம் என்றறையும் ஆங்கு என்று அருளிச் செய்ததூஉம் இருபொருட் கலவையே அத்துவித இயைபெனக் கூறப்படுதற்கு ஏற்பதா மன்றி, ஒன்றேயாம் பண்பும் பண்பியும் அங்ஙனம் அத்துவிதப் பெயரான் வழங்குதற்கு ஏலாமையும், அன்றி அங்ஙனம் வழங்கலுறின் அஃது ஏகான்மவாதங் கூறும் மாயாவதி கோட்பாடாய் முடியுமாறும் நுணுகியறிந்து கொள்க. சத்தி சிவங்களிரண்டும் இருமுதற் பொருள்களென வுரைப்பின், உலகிற்கெல்லாம் ஒரு முழுமுதற் கடவுளென்பது போய், முதல்வர் இருவருளரெனப்பட்டு அநேகேசுரவாதமாய் முடியுமாலெனின்; அற்றன்று, சிவம் ஒன்றே ஆண்மையும் அறிவும்மிக்கு எல்லாவற்றையுந் தன்னுள்ளடக்கி விரிந்து எங்கணும் நிறைந்து நிற்கும் தனி முழுமுதற்பொருளாம்; சத்தி பெண்மையும் அன்பும்மிக்கு அச்சிவத்தோடிரண்டறக் கலந்து அதனுள் அடங்கி விரிந்து நிறைந்து நிற்பதொரு முழுமுதற் பொருளாம்; இங்ஙனம் முதற்பொருள் இரண்டாயிருப்பினும், ஆண்டுஞ் சிவம் ஒன்றே சத்தியைத் தன்னுள்ளடக்கித் தனி முதன்மைப் பெரும்பொருளாய் நிற்குமாகலின் அஃது அநேகே சுரவாதமாதல் ஒருவாற்றானும் இல்லையென்க. இப் பெற்றி யெல்லாம் சிவஞானபோத வாராய்ச்சியில் அம்மையப்பர் அத்துவிதவியைபு உரைக்கின்றுழி விரித்து விளக்கினாம்; ஆண்டுக் கண்ட கொள்க; ஈண்டு இன்னும் விரிப்பிற் பெருகுமென விரித்திலம் பரமா னந்தப் பழங்கடல் அதுவே கருமா முகிலிற் றோன்றித் திருவார் பெருந்துறை வரையில் ஏறித் திருத்தகு மின்ஒளி திசைதிசை விரிய 70 ஐம்புலப் பந்தனை வாள்அர விரிய வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப நீடெழிற் றோன்றி வாள்ஒளி மிளிர எந்தம் பிறவியிற் கோபம் மிகுத்து முரசெறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கிப் 75 பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட எஞ்சா இன்அருள் நுண்டுளி கொள்ளச் செஞ்சுடர் வெள்ளந்திசை திசைதெவிட்ட, வரையுறக் கேதக் குட்டங் கையற ஓங்கி இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை 80 நீர்நசை தரவரு நெடுங்கண் மான்கணந் தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும் அவப்பெருந் தாபம் நீங்கா தசைந்தன; ஆயிடை வானப் பேரியாற் றகவயிற் பாய்ந்தெழுந் தின்பப் பெருஞ்சுழி கொழித்துச் 85 கழித்தெம் பந்தமாக் கரைபொரு தலைத்திடித்(து) ஊழ்ஊழ் ஓங்கிய நங்கள் இருவினை மாமரம் வேர்பறித் தெழுந் துருவ அருள்நீர் ஒட்டா அருவரைச் சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ் 90 வெறிமலர்க் குளவாய் கோலி நிறைஅகில் மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின் மீக்கொள மேன்மேல் மகிழ்தலின் நோக்கி அருச்சனை வயலுள் அன்புவித் திட்டுத் தொண்ட உழவர் ஆரத்தந்த 95 அண்டத் தரும் பெறல் மேகன் வாழ்க (இறைவியும் இறைவனும் ஒருங்குகூடி நோக்கும்) பரம ஆனந்தப் பழங்கடல் அதுவே - மேலான இன்பப்பழங்கடலாகிய அதுவே, கருமாமுகிலின்தோன்றி - கரிப பெரிய மேகம்போலத் தோன்றி, திருஆர் பெருந்தறை வரையில் ஏறி - அழகு நிறைந்த பெருந்துறையாகிய மலைமேல் ஏறி, திருத்தகும் மின்ஒளி திசை திசை விரிய - பொலிவு பொருந்தும் மின்னல் ஒளியானது திக்குகடோறும் பரவ, ஐம்புலப் பந்தனை வாள் அரவு இரிய - ஐம்பல அவாவின் கட்டாகிய ஒளியினையுடைய பாம்புகள் கெட, வெம்துயர்க் கோடை மாத்தலை கரப்ப - வெம்மையாகிய துன்பத்தைச் செய்யும் வேனிற்காலம் தனது பெரிய தலையை ஒளித்துக் கொள்ள, நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர - மிகுந்த அழகினையுடைய தோன்றிப்பூக்கள் ஒளி சிறந்து விளங்க, எம்தம் பிறவியின் கோபம் மிகுத்து - எம்முடைய அளவில்லாப் பிறவிகளைப்போல் இந்திரகோபப் பூச்சிகளை மிகுதியாய்த் தோற்றுவித்து, முரசு எறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கி - முரசு அடித்தால் ஒப்பப் பேர் அருளினால் முழக்கத்தினைச் செய்து, பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட - தாமரைப் பூவின் கூம்புதலை யொப்ப அடியார் மேலே கூப்பிய கைகள் காந்தண் மலரைப்போல் தோன்றாநிற்க, எஞ்சா இன் அருள் நுண்துணி கொள்ள - குறையாத இனிய அருளாகிய சிறு துளிகள் விழா நிற்ப, செஞ்சுடர்வெள்ளம் திசைதிசை தெவிட்ட - சிவந்த ஒளியினையுடைய வெள்ளமானது திக்குகடோறும் திரள, வரைஉற - மலையை யடைந்து, கேதக் குட்டம் கைஅற ஓங்கி - துன்பமாகிய குளம் தன்செயலற்றுப் போக உயர்ந்து, இருமுச்சமயத்து ஒரு பேய்த் தேரினை - அறுவகைச் சமயங் களாகிய ஒரு கானல் நீரினை, நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம் - தண்ணீர்விடாய் மிகுதிப்பட நீரைத் தேடிவரும் பெரிய கண்களை உடைய மான்கூட்டம் தவப்பெரு வாயிடைப் பருகி - மிகப் பெரிய வாயினிடத்தே குடித்தும், தளர்வொடும் அவப்பெருந்தாபம் நீங்காது அசைந்தன ஆயிடை - தளர்ச்சி யோடும் கேட்டினைச் செய்யும் பெரிய வெம்மை நீங்கப் பெறாது வருந்தினவாகிய அவ்விடத்தே, வானப்பேர் யாற்று அகவயின் பாய்ந்து எழுந்து - வானின்கண் உள்ள பெரிய யாற்றின் உள்ளிடத்திற் பாய்ந்து பின்னர் எழுச்சி பெற்று, இன்பப் பெருஞ்சுழி கொழித்துச் சுழித்து - இன்பமாகிய பெரிய கழியினைத் தெள்ளிச் சுழித்துக் கொண்டு சென்று, எம் பந்தம் மாக்கரை பொருது அலைத்து இடித்து - எமது கட்டாகிய பெரிய கரையினை முட்டி அலைத்து இடித்து, ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள் இருவினை மாமரம் வேர்பறித்து எழுந்து - முறை முறையே உயர்ந்த நம்முடைய இரு வினைகளாகிய பெரிய மரத்தை வேரோடு பறித்து எழுந்து, உருவ அருள்நீர் ஓட்டா - அழகிய அருள் என்னும் நீரை ஓடச்செய்து, அருவரைச் சந்தின் வான்சிறை கட்டி - அரியமலைகளில் வளர்ந்த சந்தனமரங்களால் பெரிய அணையைக் கட்டி, மட்டு அவிழ் வெறி மலர்க்குளவாய் கோலி - தேன் விரிகின்ற மணத்தினையுடைய பூக்கள் நிறைந்த குளங்களின் இடத்தை வளைத்து, நிறை அகில் மாப்புகைக் கரைசேர் வண்டு உடைக் குளத்தின் மீன்கொள மேன்மேல் மகிழ்தலின் நோக்கி - நிறைந்த அகிலின் பெரிய புகையினை யுடைய கரைகள் சேர்ந்த வண்டுகள் மொய்க்கும் குளங்களின் மேற்கொண்டுவர அதனை மேலும்மேலும் மகிழ்ச்சியோடும் உற்றுப் பார்த்து, அருச்சனை வயலுள் அன்புவித்து இட்டு - வழிபாடு என்னும் வயலினுள்ளே அன்பு என்னும் வித்தை இட்டு விளைத்து, தொண்ட உழவர் ஆரத்தந்த - தொண்டர் களாகிய உழவர்கள் உண்ணும்படியாகத் தந்த, அண்டத்து அரும் பெறல் மேகன்வாழ்க - அருள்வெளியின்கட் பெறுதற்கரிய மேகம்போல் விளங்குவோன் வாழ்க! என்றவாறு. இறைவனும் இறைவியும் ஒருங்குகூடி உயிர்கட்குச் செய்யும் பேரருள் பரமானந்தப் பழங்கடலா யிருத்தலின், மேலே குவளைக் கண்ணி கூறன் காண்க, அவளுந் தானும் உடனே காண்க எனக் கூறியதனோடு அடுக்கப் பரமானந்தப் பழங்கட லதுவே என்பதனை வைத்துரைத்தார். கடல்நீரின் ஒரு பகுதியே கருமுகிலாய்த் திரிபுறுதல் உலகின்கட்காண்டும்; மற்று இப்பேரானந்தப் பழங்கடலோ முழுதும் முகிலாய்த் திரிபுற்றது ஒரு வியப்பென்பார் அதுவே கருமா முகிலிற்றோன்றி என்றார். கடல்நீரின் ஒரு சிறுபகுதி மட்டும் முகிலாய்த் திரிந்து மழையைப் பொழியுங்கால், அது தன் அளவிற்கு ஏற்பவே நீரினைச் சொரிந்து பின்னர் இல்லையாம்; மற்றுக் கடல் முழுதுமே முகிலாய்த் திரிபுற்று நீரைச் சொரியப் புகுமாயின், அது தன் பேரளவிற்கேற்ப ஓவாது அதனைப் பொழியாநிற்கும். அதுபோல் எல்லை காணப்படாத பேரானந்தக் கடலே முகிலாய்ப் பொழியப்புகுமாயின் அஃது ஓவாது பொழியும் அருண் மழைக்கு ஓர் எல்லை காண்டல் இயலாதெனக் கூறியவாறாம். அப்பேரின்ப முகில் திருப்பெருந்துறைக்கட் குருவடிவிற் றோன்றித் தமக்கருள் பொழிந்தமை பற்றி அடிகள் அதனை வரையாக உருவகப்படுத்தித் திருவார் பெருந்துறை வரை யிலேறி என்றருளிச் செயதார். வான்முகில் மழைபெய்யுங்கால் மின்னொளி காலல் உலகின்கட் காணப்படுமாறுபோல அருண்மழை பொழியுங் கால் மின்போற் புலப்படுவது இதுவென்று அடிகள் கூறிற்றில ரானெனின்; அற்றன்று, கட்புலனாகாத அருளொளி தோன்றுங் கால் அதனோடியைந்து நிற்கும் விந்துவென்னும் மின்னொளி கட்புலனாயே விளங்கித் தோன்றுமாதலால் அதனைத் திருத்தகு மின்னொளி என அடிகள் விளங்கக் கூறினாரென்றே கொள்க. இனி, மின்னொளிகண்டு பாம்புகள் அழியுமாறுபோல, அருளொளி மின்னின் முன்னும் ஐம்புல அவாக்களாகிய அரவுகள் கெட்டொழியு மென்றார். மின்னும் இடியுந் தோன்ற அரவுகள் இறக்குமென்பது அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு, அணங்குடை அரவின் அருந்தலை துமிய என்னும் புறப்பாட்டினும் (புறநானூறு 211) மேகம் பாப்பினம் பதைப்ப மின்னி என்னுஞ் சிந்தாமணியினும் (சீவகசிந்தாமணி 3071) கண்டு கொள்க. பந்தனை பந்தநம் என்னும் வடசொற்றிரிபு. ஐம்புல அவாக்களும் உயிர்களைக்கட்டிப் பிறவிகட் செலுத்துதலின், அவை தம்மைப் பந்தனை எனக் கூறினார். அழகிய தொற்றத் தினவாயினும் நஞ்சு உடையவாய்த் தம்மையணுகினாரைக் கொல்லும் நச்சரவுகள் போல, ஐம்புல அவாக்களும் இன்பந் தருவனபோற் றோன்றினும் துன்பமுடையவாய்த் தம்மை யுடையாரைப் பிறவிக்கட் செலுத்துதலின் இவை அவற்றோடு ஒப்பிக்கப்பட்டன. ஈண்டுப் புலம் புலங்கள்மேற் செல்லும் அவாக்களுக்கு ஆயின. இஃது ஆகுபெயர். இரிய - கெட; இப்பொருட்டாதல் இகல் இரிய என்பதன் (புறப்பொருள் வெண்பா மாலை 9 14) உரையிற் காண்க. கார்காலந் தோன்றியவுடன் வேனிற்கால வெப்பம் முற்றும் மறைதல்பற்றி வெந்துயர்க் கோடை மாத்தரைகரப்ப என்றார். ஈண்டு அருண்மழைக்கு முன் மறைவது பிறவித்துன்பமாகிய கோடைய யாம் என்க. தோன்றி செங்காந்தள் என்பர் திவாகரத்தில்; இது கார்காலத்திற் பூக்கும் என்பது தோடார் தோன்றி குருதி பூப்ப என்னும் முல்லைப் பாட்டினால் அறியப்படும். இது மிகச் சிவந்த பூக்களை யுடையது. குருவடிவிற் றோன்றிய இறைவன் அஞ்சேல் என்று தூக்கிய திருக்கையை அடிகள் ஈண்டுத் தோன்றிமலர் எனக்கூறினர் போலும். பட்டுப்போன்ற மெல்லிய உடம்பும் அதன்கண் மிகச்சிவந்த நிறமும் வாய்ந்த இந்திரகோப மென்னுந் தம்பலப்பூச்சிகள் கார்காலத்தில் நிலத்தின்கட் டோன்றுதல் இயல்பாகலின், அவற்றையும் அடிகள் ஈண்டுக் குறித்தருளினார். அடியார் முன்னெடுத்துப் போந்த எண்ணிறந்த பிறவிகளே ஈண்டு இந்திர கோபம் எனப்பட்டன. கார் காலத்து முகில் முரசின் அதிர்ச்சிபோல் முழங்கு தலின் முரசெறிந்து முழங்கி என்றார், அருண்மழையின் முழக்கமாவது நாததத்துவத்தின் ஒலியேயாம்; மேலே நாதப் பெரும்பறை நவின்று கறங்க என்று அருளிச் செய்ததூஉங் காண்க. காந்தளுங் கார்காலத்துப் பூவாதலின் பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட என்றார்; ஈண்டு அருண்மழையிற் காந்தாளாவது அடியார்கூப்புங் கைகளேயாம். இனி, அடிகட்குப் புலப்பட்டுத் தோன்றிய அருளே அம் முகிலிற்றோன்றிய நுண்ணிய மழைத்துளிகளாகச் சொல்லப் பட்டது. இவ் வருண்முகிலிற்றோன்றிய வெள்ளமானது எத்திசை யிலுள்ள எவ்வுயிர்கட்குந் தானே சென்று பயன்படுதலிற் செஞ்சுடர் வெள்ளந் திசை திசை தெவிட்ட என்றார். தெவிட்ட - திரள; இச்சொல் இப்பொருட்டாதலை மான் கணம் மரமுதற்றெவிட்ட (குறிஞ்சிப்பாட்டு 2.14) என்புழிக் காண்க. கேதக்குட்டம் கையற ஓங்கி என்பது மழைவெள்ளம் பெருகாவழித் தனித்தனியே நின்று விலங்குகளையும் ஆட்க ளையுந் தங்கண் வீழ்த்தி மடிவித்த குட்டங்கள் அவ்வெள்ளம் பெருகியவழி எல்லாம் அவ்வெள்ளத் தின்கண் அமிழ்ந்தித் தஞ்செயலற்றுப் போதல்போல, உயிர்களை வருத்தி வரும் துன்பமாகிய குட்டங்களும் அருள்வெள்ளம் பெருகிய வழி அதன்கண் ஆர்ந்து தஞ் செயலற்றுப் போமென்று உணர்த்திய படியாம். கேதம் - துன்பம்; குட்டம் - வாவி; இச்சொற்கள் இப் பொருள்படுதலைத் திவாகரத்துட் காண்க. கையறுதல் - செயலறுதல்; மையன்மாலையாங் கையாறு பினைய என்றார் புறத்திலும் (புறநானூறு 67) இருமுச்சமயத் தொருபாய்த் தேரினை, நீர்நசை தரவரும் நெருங்கண் மான்கணந், தவப்பெருவாயிடைப் பருகித் தளர் வொடும், அவப்பெருந்தாபம் நீங்காதசைந்தன என்பது நீர் வேட்கையான் நாவறண்டு தண்புனலைத் தேடிவரும் மான் மந்தைகள் உண்மையான நீரினைப் பெறாமல் வேனில் வெப்பத்தால் நீர் போற் றோன்றுங் கானல் நீரினைப் பருகுதற்கு விரைந்து சென்று நீரினைப் பெறாமல் எய்த்தல் போல, அறுவகைச் சமயத்தில் நின்றோரும் அவை தம்மால் நுவலப் படும் உண்மையல்லாத வீடுபேற் றின்பத்தினைப் பெறவிழைந்து தம் வாழ்நாள் முடியுங்காறும் முயன்று முயன்று பொய்த் தோற்றமாய் ஒழிந்த அவ்வின்பத்தினைப் பெறாமல் இறுதியில் எல்லையற்ற துன்பத்தினை உழக்குமாறு அருளியதாம். அடிகள் குறிப்பிட்ட அறுவகைச் சமயங்களாவன இவை என்பதை மேலே விரித்துக் காட்டினாம். வறட்சியால் வாய்திறந்தபடியே யிருத்தலின் தவப் பெருவாய் என்றார். தவ மிகுதிப்பொருளை உணர்த்தும் ஓர் உரிச்சொல். அவம் - கேடு; இச்சொல் இப்பொருட்டாதல் அவஞ் செய்வா ராசையுட்பட்டு என்பதனுரையிற் (திருக்குறள் 266) காண்க. தாபம் விடாய் எனப் பொருள்படும் ஒரு வடசொல். அசைதல் - வருந்துதல் களனுழந் தசைஇய என்புழியும் (புறநானூறு 97) இப்பொருட்டாதல் காண்க. அவ்வாறு அறுவகைச் சமயத்துட்பட்டோரும் உண்மையான வீடு பேற்றின்பத்தினையும், அதுதரும் ஒரு முழுமுதற் கடவுளையும் அறியாது மயங்கி நிற்ப, தன்னை அடைந்த மெய்யன்பர்க்குத் தன் அருட்பெருக் கினையும் தந்து தனது உண்மை நிலையினையும் இறைவன் புலப்படுத்தும் முறை ஆயிடை வானப் பேரியாற்று என்பது துவங்கிக் குளத்தின் மீக்கொள என்பதுகாறுங் கூறியருளினார். அ இடை என்னும் இரு சொற்களில் முதல் நின்ற அகரச் சுட்டு ஆ என நீண்டது; இவ்வாறு சுட்டு நீளுதல் நீடவருதலுஞ் செய்யுளுள் உரித்தே என்பதனாற் காண்க. (தொல்காப்பியம் எழுத்து 208) அ இடை - அவ் இடம். வானப் பேரியாற் றகவயிற் பாய்ந்தெழுந்து என்பது வானின்கண் நுண்ணியவடிவில் நின்ற நீராவியினூடே குளிருங் கால் உருவிவீசிய அளவானே, அஃது உறைந்து மழைத் துளிகளாய்க் கீழ் விழுதல்போல, இறைவனும் தனது அறிவு வெளியினூடேநிறைந்த அருளாவியிற் றோய்ந்து அதனைத் தன்னடியார்க்குப் புலப்படப் பொழியு மாற்றினை உணர்த்திய படியாம். அகம்- உள், வயின் - இடம். கொழித்தல் - தெள்ளுதல்; நன் பொன்மணி நிறங்கிளரப் பொன் கொழியா என்றார் திருமுருகாற்றுப்படையினும். இன்பப் பெருஞ்சுழி கொழித்த லாவது யாற்றின் கண் நீர் மிகப்பெரிய வளவானே அஃது ஆழும் மிகுதியும் உடைத்தாய்ச் கழித்துச் செல்லுதல் போலப், பேரின்பம் பெருகிய வளவானே தூயவுயிர்கள் எல்லாவற்றையுந் தன்னகப்படுத்தி இயங்கு வதாகும். வெள்ளப் பெருக்கினாற் றாக்குண்டு கரைகள் இடிதல் போலப் பேரின்பப் பெருக்காலும் பந்தம் என்னும் மலக்கட்டுச் சிதையும் என்பார் பந்த மாக்கரை பொருதலைத்து இடித்து என்றருளிச் செய்தார். பொருதல் - முட்டுதல்; விண்பொரு புகழ் என்றார் புறத்தினும் (புறநானூறு 11) ஊழ் - முறை; இப்பொருட்டாதல் ஊழ் ஊழ் முயங்குங்காலே என்பதன் உரையிற் காண்க. (புறப்பொருள் வெண்பாமாலை 11 2) பெருவெள்ளம் பெருகினால் அஃது ஓடும் வழியிடையே நின்ற மரங்களை வேரோடும் பெயர்த்துக் கொண்டு செல்லுதல் போலப், பேரின்பப் பெருக்கும் உயிர்களுள்ளத்திற் பெருகுங்கால் ஆண்டு நின்ற இருவினைகளை அடியோடு பெயர்த் தெளியு மாதலின் இருவினை மாமரம் வேர் பறித்தெழுந்து என்றருளினார். உருவ அருணீர் ஓட்டா என்பது பேரின்பமும் பேரருளும் இறைவற்குரிய பண்புகளாகலின், அவன் உயிர்கட்கு இன்பத் தினைத் தருதல் அவர் மாட்டு வைத்த அருள்பற்றியேயாம்; ஆகவே அவ்வின்பத்திற்கு முன் இறைவன் அருளினைச் செலுத்துதல் அறிவித்தபடி யாயிற்று. அருள் நீர் அருள் நீர்மையென மற்றொரு பொருளு முரைத்துக் கொள்க. cUt mH»a; “cUt¡Fâiu kHtnuh£oa” v‹òÊ¥ nghy cU v‹D« cÇ¢brhš xnuhtÊ totHifí« cz®ªJbk‹g® e¢ádh®¡»Åa®.(bjhšfh¥ãa« சொல் 302) அருவரைச் சந்தின் வான் சிறைகட்டி என்பது நிலை திரியாத மலைகளில் வளர்ந்த சந்தன மரங்களால் அணைகட்டி வெள்ளப் பெருக்குத் தானே தனக்கொரு தடையினை ஆக்கிக் கொள்ளுதல்போலப், பேரின்பப் பெருக்கும் நிலைதிரியாத இயல்பினையுடைய தூயவுள்ளத்தின்கட் டடைப்பட்டு நிற்குமெனக் கூறினார். நிலையிற் றிரியா தடங்கியான் றோற்றம். மலையினும் மாணப் பெரிது என்பவாகலின், இறைவன் மாட்டுச் செலுத்தும் அன்பின்கண் ஈடுபட்டு நின்று, அந் நிலையினின்றுஞ் சிறிதும் பெயராத மெய்யடியார் இயற்கை, நிலை திரியாத மலையினியற்கையை ஒப்பதாயிற்று. மலையின் கண் வளர்ந்த சந்தனமரம் திட்பமும் தூய்மையும் நறுமணமும் உடையதாதல் போல, மெய்யடியார் உள்ளமும் திட்பம் தூய்மை நறுமணம் என்னும் இவ்வியல்புகள் உடைத்தா. ஆகவே, இறைவனருளிய பேரின்ப வெள்ளம் மெய்யடியார் உள்ளத் தளவிற் றடைப்பட்டு நிற்குமென்று அறியற்பாற்று. இனி அருவரைச்சந்து என்பதற்கு அரிய மலையின்கண் உள்ள பிளவு என்று உரைப்பாரும் உளர்; அப்பொருள் சிறவாமை கண்டு கொள்க. மட்டவிழ் வெறிமலர்க் குளவாய் கோலி என்பது வெள்ளம் பெருகிச் சென்று குளங்களை வளைத்தல் போலப், பேரின்பமும் மெய்யன்பர் உள்ளங்களாகிய வாவிகளை வளைக்குமென உணர்த்தியபடியாம். கோலல் - வளைத்தல்; அச்சிரக் காலார்த் தணிமழை கோலின்றே என்புழியும் (பரிபாடல் 18) இப்பொருட்டாதல் காண்க. நிறை அகில் மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின் மீக்கொள என்பது புது வெள்ளத்தால் நிறைந்த குளங்களிலே மாதரார் தலைமுழுகிக் கரையேறி அதன்கட் டமது கூந்தலின் ஈரம் புலர்த்துதல் வேண்டி அகில் புகைத்தல் போலப், பேரின்ப வெள்ளம் நிறையப்பெற்ற தமது உள்ளத்திற் றோய்ந்தெழுந்த நினைவினையே மெய்யடியார் நோக்கிய படியா யிருப்பாரென அறிவித்தவா றாயிற்று. நீரிற்றோய்ந்த கூந்தல் மாசு நீங்கித் தூயதாதல் போல, இன்பத்திற் றோய்ந்த நினைவும் மலமாசு நீங்கித் தூயதாம் என்பதூஉம் உய்த்துணரற் பாற்று. மீக்கொள என்பது காறும் அதுவே என்பதன் வினை ஆனந்தப்பழங்கடல் அது முகிலிற்றோன்றி, வரையில் ஏறி, மின்னொளி விரிய, வாளரவு இரியக், கோடை தலைகரப்பத் தோன்றி ஒளி மிளிரக் கோபம் மிகுத்து, முரசு எறிந்து, கருணையின் முழங்கி, அஞ்சலி காந்தள் காட்ட, அருள் நுண் துளி கொள்ள, வெள்ளந் தெவிட்டக், குட்டங் கையற ஓங்கிப் பேய்த் தேரினை மான்கணம் பருகித் தாபம் நீங்காது அசைந்தன ஆயிடை, யாற்று அகவயிற் பாய்ந்தெழுந்து சுழிகொழித்துச் சுழித்து, எம் பந்தக் கரை பொருது அலைத்து இடித்து, இருவினை மாமரம் வேர்பறித்தெழுந்து, அருள் நீர் ஓட்டா, வரைச்சந்தின் சிறைகட்டிக், குளவாய் கோலி, வண்டுடைக் குளத்தின் மீக்கொள என வினை முடிவு செய்க. மகிழ்தலின் நோக்கி என்பதில் நோக்கி என்னும் வினைக்கு முதல் தொண்ட உழவர் என்பதாம். தொண்டராகிய உழவர் அங்ஙனம் போந்த இன்ப வெள்ளத்தினைத் தமது வழிபாடாகிய வயலுள் நிரப்பித் தமது பேரன்பாகிய வித்தினை அதன்கண் விதைத்து அதன் பயனான சிவபோகத்தினை நுகருமாறு இறைவன் செய்த அருட்டிறத்தை விரித்தெடுத் தருளிச் செய்தாரென்க. அண்டம் - வெளி; இங்கது அருள்வெளியினை உணர்த்தா நின்றது. இச்சொல் வான்வெளியினை யுணர்த்தல் திவாகரத் துட் காண்க. கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க! அருந்தவர்க் கருளும் ஆதி வாழ்க! அச்சந் தவிர்த்த சேவகன் வாழ்க! நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க! 100 சூழ்இருந் துன்பந் துடைப்போன் வாழ்க! எய்தினர்க் காரமுது அளிப்போன் வாழ்க! கூர்இருட் கூத்தொடு குனிப்போன் வாழ்க! பேர்அமைந் தோளி காதலன் வாழ்க! ஏதிலர்க் கேதில்எம் இறைவன் வாழ்க! 105 காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க! கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க - கரியபடத்தினை யுடைய பாம்பை அரைக்கச்சையாக அணிந்த கடவுள் வாழ்க, அருந்தவர்க்கு அருளும் ஆதி வாழ்க - அரிய தவத்தை முடிந்த வர்கட்கு அருள் செய்யும் முதல்வன் வாழ்க, அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க - அச்சத்தை நீக்கிய போர்வீரன் வாழ்க, நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன் வாழ்க - எப்போதும் வலிந்திழுத்து அடிமை கொள்வோன் வாழ்க, சூழ்இருந் துன்பம் துடைப்போன் வாழ்க - உயிரைவந்து சூழும் பெரிய வினைத் துன்பத்தைப் பற்றத் தீர்ப்பவன் வாழ்க, எய்தினர்க்கு ஆர்அமுது அளிப்போன் வாழ்க - தன்னைவந்து அடைந்தார்க்கு அரிய அமுதினைக் கொடுப்பவன் வாழ்க, கூர்இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க - மிக்க இருளின்கண் இயற்றுங் கூத்துடன் குனிந்தாடுவோன் வாழ்க, வேர் அமைத்தோளி காதலன் வாழ்க - பெரிய மூங்கிலை யொத்த தோளினையுடைய உமைப்பிராட்டி யாரின் கணவன் வாழ்க, ஏதிலர்க்கு ஏதுஇல்எம் இறைவன் வாழ்க - அன்பால் இயைபு உறாதவர்க்கு இயைபில்லாதவனான எம் இறைவன் வாழ்க, காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க - அன்பரா யினார்க்கு இளைப்பின்கட் பயன்படச் சேர்த்து வைத்த பொருள் போல்வான் வாழ்க என்றவாறு. பணம் அரவின்படம் எனப் பொருள்படுவதொரு வட சொல்; அஃது ஈண்டுச் சினையாகு பெயராய்ப் பாம்பினை உணர்த்தாநின்றது. இறைவற்குப் பாம்பு ஓர் அரைக்கச்சையாம் என்றது: இறைவன் உலகங்களைத் தோற்றுவிப்பான் வேண்டிச் சுத்தமாயையைக் கலக்க, ஆண்டு அதன்கட் பாம்பு மண்டலித் தாற் போலுஞ் சுழல் சுழலான ஓர் இயக்கம் உண்டாம்; அவ்வியக்கம் இறைவனையே ஒரு பற்றுக் கோடாகக் கொண்ட நடைபெறுதலின் அஃது அவற்கு அரைக்கச்சுப் போலாம் என்று உணர்த்தியபடியாம். கச்சை - அரைப்பட்டிகை; திவாகரம். அச்சந் தவிர்த்த சேவகன் என்பது பாண்டியன் கொண்ட அச்சந்தீர்த்தற்பொருட்டு இறைவன் போர்க்களத்தே போர் வீரனாய்த் தோன்றியபடியை அறிவித்தது; அவ்வரலாறு மேலே காட்டினாம் ஆண்டுக் கண்டு கொள்க. சேவகன் - போர்வீரன். நிச்சல் என்பது நித்யம் என்னும் வடசொற்றிரிபு. அன்பராயினாரைப் பதம் அறிந்துவந்து வலிந்திழுத்து ஆட்கொள்ளும் அருளுடையான் என்ப துணர்த்துவார் ஈர்த்தாட் கொள்வோன் என்றும், அங்ஙனம் அருள்செய்வதும் ஒரு காலத்தன்றி எக்காலத்துமா மென்பார் நிச்சலும் என்றும் அருளிச் செய்தார். மேலைப்பிறவிகளிற் செய்த தீவினைகள் அவை செய்தானை அவனறியாமலே வந்து இப்பிறவிக்கட் சூழ்ந்துகொண்டு துன்பந் தருதலிற் சூழ் இருந் துன்பம் என்றருளிச் செய்தார்; இக் கருத்துப் பல்லாவுள் உய்த்து விடினுங் குழக்கன்று வல்லதாந் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப் பழவினையும் அன்ன தகைத்தேதற் சேர்ந்த கிழவனை நாடிக் கொளற்கு என்னும் பழைய நாலடியார் செய்யுளினுங் காண்க. ஆர் அமுது அரிய அமுது; அருமை என்னும் பண்புப் பெயர் ஆர் எனத் திரிந்தது; ஈண்டு அரிய அமுதாவது தனது திருவடிப் பேரின்பமேயா மென்க. கூரிருட் கூத்தொடு குனிப்போன் என்றது உயிர்கள் தம் அறிவு செயல் வேட்கைகள் ஒடுங்கிக் கேவல நிலையில் ஆணவ வல்லிருளில் இடையிடையே அழுந்திக் கிடக்குங் காலத்தும், இறைவன் அவர் பொருட்டுச் செய்யும் ஐந்தொழிற் கூத்தை ஓவாது இயற்றுவான் என்பதை அறிவித்த வாறாம்; மேலும், நள்ளிருளில் நட்டம் பயின்றாடுநாதனே என்றருளிச் செய்தார். குனித்தல் - வளைந்தாடுதல்; குனிவு வளைவுப் பொருட் டாதல் குனிகொள்பாக வெண்மதி என்புழிக் (சீவகசிந்தாமணி 704) காண்க. கூத்தொடு குனித்தலாவது நிமிர்ந்தாடுதற் கிடையே வளைந்தாடுதல். அமை - மூங்கில்; இது பிராட்டியாரின் தோளுக்கு உவமம். ஏதிலர் - இயைபில்லாதவர், ஏது இயைபு எனப் பொருள் படுதலை ஏதில் பிணம் என்பதற்கு (திருக்குறள் 913) இயைபில்லாததோர் பிணம் எனப் பரிமேலழகியார் உரை கூறியவாற்றாற் காண்க. தன்பால் அன்பால் இயைபுறாதாரைக் தானும் இறைவதின்றி இறைவன் அகன்று நிற்பான் என்றவாறாயிற்று. அற்றேல், யாண்டும் நிறைந்து நிற்கும் இறைவன் ஏதிலர்பால் இலனாம் என்று உரைப்பின் அஃதவற்கு இழுக்காமா லெனின்; அற்றன்று அன்பால் விரிந்த உள்ளத்தில் முறுக்கவிழ்ந்த மலரின் மணம் போன்றும், அஃதின்றிக் குவிந்த உள்ளத்துள் முகையுள் மணம் போன்றும் இருப்பனாகலின், ஏதிலர்பாற் புலப்படாது நிற்றல் பற்றி அங்ஙனங் கூறுதல் பொருந்தாது. காதலர் - பேரன்பு உடையோர். காதலாவது அன்பின் முதிர்ச்சி. எய்ப்பு - இளைப்பு; இப்பொருட்டாதல் எய்த்த மெய்யேன் எய்யேனாகி என்புழியும் (பொருநராற்றுப்படை 68) காண்க, வறுமையால் நலிந்து நாளைக்கு என்செய்வேம் என்றிருப்பார்க்குச் சடுதியிற்கிடைத்த புதையற்பொருள் அவரது வறுமை தீர்த்து அவர்க்கு வேண்டுவவெல்லாம் அளித்தல் போல, இருவினையெச்சத்தால் நலிந்து போதரும் அன்பர்க்கு அவ்வெச்சத்தையுந் தொலைத்துத் தனது பேரின்பப் பெருஞ் செல்வத்தை வழங்குதலின் இறைவனை எய்ப்பினில் வைப்பு என்றருளிச் செய்தார். கேவலத்தில் இறைவன் கூத்தியற்றுங்கால், ஆண்டு அவனோடு உடனிருந்து அதனைக் காண்பாள் உமைப் பிராட்டியேயாகலிற் கூரிருட் கூத்தொடு குனிப்போன் என்பதனை அடுக்கப் பேரமைத் தோளி காதலன் என்பதனை வைத்தோதினார். கேவலத்தின் இறைவன் ஆடுங் கூத்தை இறைவி ஒருத்தியே உடனிருந்து காண்பா ளென்பதற்குப் பண்டைக் காலத்ததாகிய கலித்தொகையுட் போந்த பாணியுந் தூக்குஞ் சீரும் என்றிவை மாணிழை அரிவை காப்ப ஆணமில் பொருளெமக் கமர்ந்தனை யாடி என்னுஞ் சுரிதகப் பாட்டுச் (கலித்தொகை கடவுள் வாழ்த்து) சான்றாதல் காண்க. இனி ஏதிலர்க்கு எட்டாமல் அகன்றுநிற்ப னாயினுங் காதலர்க்கு அணுக்கனாய் உற்றுழியுதவுவான் என்பது தெரிப்பார் அவ்விரண்டையும் ஒருங்குவைத் துரைத்தருளினா ரென்க. நச்சர வாட்டிய நம்பன் போற்றி, பிச்செமை ஏற்றிய பெரியோன் போற்றி, நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி, நாற்றிசை நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய் 110 நிற்பன நிறீஇச் சொற்பதங் கடந்த தொல்லோன் உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன், கண்முதற் புலனாற் காட்சியும் இல்லோன். விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன். 115 பூவின் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் ஒழிவற நிறைந்து மேவிய பெருமை இன்றெனக் கெளிவந் தருளி அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள், இன்றெனக் கெளிவந் திருந்தனன் போற்றி, 120 அனிதரும் ஆக்கை செய்தோன் போற்றி, ஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி, ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப் போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்; நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி - நஞ்சினையுடைய பாம்பை ஆட்டிய நம்பெருமானுக்கு வணக்கம், பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி - (என்பதை எமைப் பிச்சு ஏற்றிய பெரியோன் போற்றி என மாற்றி) எமக்கு மயக்கத்தினை ஏறச் செய்த பெரியவனுக்கு வணக்கம் எனப் பொருளுரைக்க, நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி - திருநீற்றோடு வடிவு தோற்ற வல்லவனுக்கு வணக்கம், நால்திசை நடப்பன நடாஅய் - நான்கு திக்கினுள்ளும் நடப்பனவற்றை நடக்கச்செய்து, கிடப்பன கிடாஅய் - கிடப்பனவற்றைக் கிடக்கச் செய்து, நிற்பன நிறீஇ - நிற்பனவற்றை நிற்கச் செய்து, சொல்பதம் கடந்த தொல்லோன் - இங்ஙனமெல்லாம் எல்லாவற்றையும் இயக்கினும் தான் சொல்லின் தரத்தையுங் கடந்த பழையவன், உள்ளத்து உணர்ச்சி யில் கொள்ளவும் படாஅன் - மனத்தினது உணர்வினாற் பற்றவும் படாதவன், கண்முதற்புலனால் காட்சியும் இல்லோன் - கண் முதலாய பொறியுணர்வினாற் காணப்படுதலும் இல்லாதவன், விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன் - வான் முதலான ஐம்பெரும் பொருள்களும் உண்டாகுமாறு படைத்தவன், பூவின் நாற்றம் போன்று உயர்ந்து எங்கும் ஒழிவு அற நிறைந்து மேவிய பெருமை இன்று எனக்கு எளிவந்து அருளி அழி தரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள் - மலரினின்றும் எழுந்து பரம்பிய மணம் போல ஓங்கி எங்கும்தான் இல்லாத இடம் இல்லையாம் படி நிறைந்து பொருந்திய தனது பெருந்தன்மையை இந்நாளில் ஒன்றுக்கும் பற்றாத அடியேனுக்கும் எளிதாகவந்து அருள் செய்து அழிந்துபோம் இவ்வுடம்பு நீங்குமாற செய்த ஒள்ளிய பொருளாவான், இன்று எனக்கு எளிவந்து இருந்தனன் போற்றி - இந்நாளில் அடியனேனிடத்தும் எளிதாகவந்து இருந்தவனுக்கு வணக்கம், அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி - அன்பால் உருகும் உடம்பினை அடியேற்கு அருள் செய்தவனுக்கு வணக்கம், ஊற்று இருந்து உள்ளம் களிப்போன் போற்றி - நீர் ஊற்றுப்போலிருந்து என் உள்ளத்தைக் களிக்கச் செய்வோ னுக்கு வணக்கம், ஆற்றா இன்பம் அலர்ந்து அலைசெய்யப் போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன் - பொறுத்தற்கரிய இன்ப வெள்ளம் விரிந்து அலையினை எழுப்ப அதனைப் பேண மாட்டாத உடம்பைத் தாங்குதலை விரும்பேன் என்றவாறு. ‘eŠR muî? என்னுந் தொடர்மொழி மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம், வல்லொற் றிறுதி கிளையொற் றாகும் என்பதனால் நச்சரவு (தொல்காப்பியம் எழுத்து 414) என்றாயிற்று. நச்சரவு ஆட்டிய நம்பன் என்பது மணஞ்செய்து கொள்ளும் பொருட்டு தன் மனக்கினிய காதலியை அழைத்துச் சென்ற ஒருவன் திரும்புறம்பயம் என்னும் ஊர்க்கு வருகையில் அரவுதீண்டி இறக்க, அதுகண்டு அவன்றன் இளங்காதலி உளம் பெரிதுங் கலங்கி இறைவனை நினைந்துருகி அழ, ஐயன் அவட்கு இரங்கி ஒரு பாம்பாட்டியாய் அங்குப் போந்து பாம்பினை ஆட்டி அவற்கு அந்நஞ்சினைத் தீர்த்து அவனை உயிர் பெற்றெழச் செய்தமையினைக் குறிப்பது. திருப்புறம்பயத்தில் அரசின்நஞ்சு தீர்த்தவன் சிவபிரானேயாக, இஃதறியாத திருவிளையாடற் புராண ஆசிரியர் இருவரும் அதனைத் திருஞானசம்பந்தப் பெருமான் மேலேற்றி இழுக்கினார். திருஞானசம்பந்தப் பிள்ளையார் அரவின் நஞ்சு தீர்த்தது திருமருகலிற் போந்த காதலர் வேறிருவரில் ஒருவற்கேயாம். நம்பன் என்னுஞ் சொல் நம்பி என்னுஞ் சொற்போல நம் என்னும் முதனிலையிற் றோன்றி உயர்வுப் பொருளைத் தருவது. ciuaháÇa® e¢ádh®¡»ÅaU« “நம்பி நம்முதனிலையாக நமக்கு இன்னானென்னும் பொருள்பட வருவதோர் உயர்ச்சிக் சொல்” என்பர்.(சீவகசிந்தாமணி 1909) பிச்செமை ஏற்றிய பெரியோன் என்றது பிறிது எந்நினைவுமின்றி இறைவனது அருட்டிறம் ஒன்றனையே நினைந்திருக்குமாறு தம்மைச் செய்தமை தெரிவித்தவாறாம். பிச்சு பித்த என்னும் வடசொற் றிரிபு. காணவுங் கருதவும் படாத தனதுஅருளுருவினைக் காணவுங் கருதவு மாம்படி அத்துணை எளிதாக்கித் தோன்றச் செய்தல் பெரியதொரு வல்லமையா மென்பார், நீற்றொடு தோற்ற வல்லோன் என்றார். அரவினை ஆட்டி அதன் நஞ்சை இறக்குவோன், பின்னர்ப் பித்தாகிய நஞ்சை எனக்கு ஏறச் செய்தது ஒரு வியப்பென்பார் அவ்விரண்டனையும் ஒருங்குவைத்தோதி, அதன்பின் அவனது அளவி லாற்றலுக்கு ஓர் அடையாளமாக அவன் தனது அருளுருவினைத் தங் கட்புல னெதிரே தோற்றுவித்தமை சிறந்தெடுத்துக் கூறி, அதன் பின்னர்ப் பொதுவான அவனது பேராற்றற்கு அடையாளமாக ஆண்டாண்டு நடைபெறுவன வற்றை அருளிச் செய்தார். நடாஅய் கிடாஅய் என்னும் அளபெடைகள் செய்யு ளிசை நிறைத்தற்கும், நிறிஇ என்பது அதனோடு சொல்லிசை நிறைத்தற்கும் வந்தன; இவ்விருவகையும் பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும் வாலிதாம் பக்கம் இருந்தைக் கிருந்தன்று கோலாற் கடாஅய்க் குறினும் புகலொல்லா நோலா உடம்பிற் கறிவு என்னும் நாலடியார் செய்யுளிற் போந்தமை காண்க. பதம் - தரம்; இச்சொல் இப்பொருட்டாதலை மேலே விளக்கினாம். புலன் - பொறியுணர்ச்சி; ஐம்பொறிகள்: மெய் வாய் கண் மூக்கு செவி என்பன; ஐம்புலன்கள்: சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பன. விண்முதற்பூதம்: வான் வளி தீ நீர் மண் என்பன. மலரின்கண் எழுந்த நறுமணம் தான் நிரம்புமிட னெல்லாம் தான் உண்டென்பதனைப் பிறர்க் கறிவித்தலே யன்றித் தனது இனிமையால் அவர்க்கு இன்பத்தினையுந் தருதல்போல, இறைவனுந் தான் நிறைந்திருக்கும் இடங்களினும் உயிர்களினுமெல்லாந் தான் உண்டென்பதனை விளங்க் காட்டுதலோடு தன்னைக் காண்பார்க்குப் பேரின்பத்தினையும் ஊட்டுவானென உவமையையும் பொருளையும் பொருத்திக் கொள்க. யாண்டும் நிறைந்த இறைவன் ஓரிடத்துள்ளான்போல ஒரு மாநுடவடிவில் எளியனாய்ப் போந்தானேனும், அழியுமியல் பிற்றாகிய இவ்வூனுடம்பின் றன்மையை நீக்கித் தனது பேராற்றலைப் புலப்படுத்தினா னென்பார் மேவிய பெருமை இன்றெனக் கெளி வந்தருளி, அழிதரும் ஆக்கை ஓழியச் செய்த ஒண்பொருள் என்றருளிச் செய்தார். யாக்கை - எழுவகைப் பொருள்களாற் கட்டப்பட்டது; அஃது ஆக்கை என மருவிற்று. அளிதரும் - அறக்கனியும்; ஈண்டு அன்பினால் மிகக் குழையும் என்னும் பொருட்டாம்; இச்சொல் இப்பொருட்டா தலை மாம்பழக் கனிகளும் மதுத்தண் டீட்டமுந் தாம்பழுத் தளிந்தன என்னுஞ் சூளாமணிப் பாட்டின்கட் காண்க. அளிதரும் ஆக்கை செய்தோன் என்பது ஊனுடம்பை அதன் வாலாமை நீக்கி அன்பாற் குழையும் இன்பவுடம்பாக்கித் தமக்கருள்செய்த பான்மை கூறினார். இனி, உள்ளத்தைப் பற்றியிருந்த மலமாசு நீங்கிப் போக அதன்கண் முன்னெல்லாம் புலப்படாது நின்ற முதல்வன் இஞ்ஞான்று புலப்பட்டுத் தோன்றித் தனது பேரின்பப் பெருக் கினை மேன்மேல் எழச் செய்வனாகலின் ஊற்றிருந்துள்ளங் களிப்போன் என்றார். இனிச், சிற்றறிவுஞ் சிற்றின்பமுமே நிகழ்தற்கிடனாய் அமைந்த இம்மக்கள் யாக்கையில் இருந்தபடியே வரையறைப் படாத பேரின்பத்தினை நுகர்தல் இயலாதாகலின் இவ்வுடம்பை யொழித்து அப்பேரின்பப் பெருக்கிற் றோய்தற்கு உள்ளம் வேட்கின்ற தென்பார் ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப், போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன் என்றோதி யருளினார். புகலேன் - விரும்பேன்; இச்சொல் இப்பொருட்டாதல் போரெனிற் புகலும் புனைகழன் மறவர் என்புழிக் (புறநானூறு 31) காண்க. இஃது இப்பொருள்படுதலை அறியாதார் தாந்தாம் வேண்டியவாறுரைப்பர். மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம் 125 மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத் திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும், முறையுளி ஒற்றி முயன்றவர்க் கொளித்தும், ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத் துற்றவர் வருந்த உறைப்பவர்க் கொளித்தும், 130 மறைத்திறம் நோக்கி வருந்தினர்க் கொளித்தும் இத்தந் திரத்திற் காண்டும்என் றிருந்தோர்க் கத்தந் திரத்தின் அவ்வயின் ஒளித்தும், முனிவர நோக்கி நனிவரக் கௌவி ஆண்எனத் தோன்றி அலிஎனப் பெயர்ந்து 135 வாணுதற் பெண்என ஒளித்தும், சேண்வயின் ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும்போய்த் துற்றவை துறந்த வெற்றுயிர் ஆக்கை அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும், ஒன்றுண் டில்லை யென்றறி வொளித்தும், 140 கண்டே பயிறொறும் இன்றே பயிறொறும் ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம் ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலில் தாள் தளை இடுமின் சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின் 145 பற்றுமின் என்றவர் பற்றுமுற் றொளித்தும்; மரகதக் குவால் மாமணிப் பிறக்கம் மின் ஒளிகொண்ட பொன் ஒளி திகழத் திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும் - பச்சைமனியின் குப்பலும் சிறந்த செம்மணியின் பெருக்கமும் ஒன்று சேர்ந்த மின்னல் ஒளியினை உள்ளடக்கியதான ஒரு பொன்னொளி விளங்காநிற்க அதனை நான்முகனுந் திரு மாலுஞ் சென்று தேடினராகவும் அவர்க்கு அகப்படாமல் ஒளித்தும், முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும் - நூல்களிற் சொல்லிய முறையால் உள்ளம் ஒன்றுபட்டு நின்று காண முயன்றோர்க்கு ஒளித்தும், ஒற்றுமைகொண்டு நோக்கும் உள்ளத்து உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும் - அன்பால் ஒற்றுமை கொண்டு கருதிப் பார்க்கும் உள்ளத்தினையுடைய உற்றார் வருந்தத் தவமுயற்சியில் உறைத்து நிற்பார்க்கும் ஒளித்தும், மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் - வேதங்களின் பொருட் கூறுபாடுகளை ஆராய்ந்து பார்த்து வருந்தினவர்க்கு ஒளித்தும், இத்தந்திரத்திற் காண்டும் என்று இருந்தோர்க்கு அத்தந்திரத்தின் அவ்வயின் ஒளித்தும் - இந்த நூலின் வழியாற் காண்போம் என்று துணிந்திருந்தவர்க்கு அந்த நூலினாலேயே அவ்விடத்தில் ஒளித்தும், முனிவு அற நோக்கி நனிவரக் கௌவி ஆண் எனத் தோன்றி அலி எனப் பெயர்ந்து வாள்நுதல் பெண் என ஒளித்தும் - வெறுப்பின்றிக் கருதிப் பார்த்து அருள் மிகுதிப்படப்பற்றி ஒருகால் ஆண் என்று கருதும்படி தோன்றியும் பிரிதொருகால் அலி என்று கருதும்படி இயங்கியும் பின்னர் ஒருகால் ஒளிபொருந்திய நெற்றியினை யுடைய பெண் என்று கருதும்படி ஒளித்தும், சேண்வயின் ஐம்புலன் செலவிடுத்து அருவரை தொறும் போய்த் துற்றவை துறந்த வெறு உயிர் ஆக்கை அருநதவர் காட்சியுள் திருத்த ஒளித்தும் - தமக்குச் சேய்மைக் கண்ணே ஐம்புல அவாக்களும் செல்லுமாறு போக்கிப் பிறர் தம்மை அணுகுதற்கு அரிய மலைகடோறும் போய்த் தாம் முன்னே ஐம்புலன்களால் நுகர்ந்தவற்றை எல்லாம் அறவே விட்ட உயிர்மட்டும் நிற்கும் ஊனில்லாத வெறிய உடம்பினையுடைய செய்தற்கரிய தவத் தினைப் புரிந்தோரது தூய அறிவினுள்ளும் முற்ற ஒளித்தும், ஒன்று உண்டு இல்லை என்ற அறிவு ஒளித்தும் - எல்லாம்வல்ல ஒரு முழுமுதற்பொருள் உண்டோ இல்லையோ என்று மயங்கிய அறிவுக்கு ஒளித்தும், பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம் ஆர்மின் ஆர்மின் நாள்மலர்ப்பிணையலில் தாள் தளைஇடுமின் சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேல்மின் பற்றுமின் என்றவர் பற்று முற்று ஒளித்தும் - பழமையே பழகுந்தோறும் இந்நாளில் பழகுந்தோறும் தன்னை மறைத்துக் கொள்ளுங் கள்வனைக் கண்டு கொண்டோம் ஆதலின் வந்துநிறையுங் கோள் நிறையுங் கோள் அன்றலர்ந்த மலர்களாற் பின்னிய மாலைகளைக் கொண்டு திருவடிகளைக் கட்டுங்கோள் சுற்றுங்கோள் வளையுங்கோள் பின்றொடருங்கோள் விடாதே யுங்கோள் பிடியுங்கோள் என்று கூறினவர்களது பிடிப்புக்கும் அகப்படாமல் முழுதும் ஒளித்தும் என்றவாறு. திருமாலும் நான்முகனுந் தம்முட்டாமே பெரியரெனத் தருக்கி மலைந்தவழி அவ்விருவரும் பெரியரல்லர்; அவரின் மேற்பட்ட முழுமுதற் கடவுளாகிய தானே அவரினும் ஏனை யெல்லாரினும் பெரியனாம் என்பதனைத் தேற்றுவிப்பான் வேண்டி இறைவன் அவர் தமக்கு நடுவே ஒரு பெரும் பொன்னொளிப் பிழம்பு வடிவினனாய்த் தோன்றி அவ்விருவ ராலுங் காண்டற்கு இயலா அடிமுடி யுடையனாய்த் திகழ்ந்தன னாகலின் மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத் திசை முகன் சென்று தேடினர்க் கொளித்தும் என்றருளிச் செய்தார். இனி, அங்ஙனந் தோன்றிய பிழம்புவடிவு பண்பும் பண்பியும் போல் அம்மையும் அப்பனும் இரண்டறப் பிணைந்த தொன்றாகலிற், பச்சைமணியின் ஒளியும் செம்மணியின் ஒளியும் அதன்கண் ஒருங்கு விராய்க் காணப்பட்டதென்றார். பச்சைநிறம் அம்மைக்குஞ் செந்நிறம் அப்பற்கும் உரியன. இறைவன் ஆண்மையும் அறிவும் மிக்கு அனல்போல் வெவ்வியனாய் நிற்கும் பெற்றியனாகலின் அவற்குச் செந்நிறமும், இறைவி பெண்மையும் அருளும் மிக்கு நீர்போல் தண்ணியளாய் நிற்குந்தன்மையளாகலின் அவட்குப் பசுநிறமும் உரியவாயின. ஆண்மை: பெண்மை, வெம்மை: தண்மை, செம்மை பசுமை என்னும் இருகூற்றிலே உலகின்கண் உள்ள எல்லா உயிர்களும் எல்லாப் பொருள்களும் எல்லா நிறங்களும் வந்து அடங்குமாறு காண்க. இவையிற்றுக் கெல்லாம் முதல்வரான அம்மையப்பர் மாட்டும் இவை தமக்கெல்லாம் முதலான இருவேறியல்பும் உளவாதல் சிவஞானபோத ஆராய்ச்சியில் விளங்க விரித்துரைத்தாம். ஆண்டுக் காண்க. ஈண்டவை யெல்லாம் எடுத்துக் காட்டலுறின் இது மிக விரியுமென அஞ்சி அவையிற்றைக் காட்டிற்றிலம். மரகதம் பச்சைமணியைக் குறிக்கும் ஒரு வடசொல். குவால் - குப்பல், மேடு; திவாகரம். தோன்றிய பொன் னொளி வடிவு எல்லை காணப்படாவாறு உயர்ந்து சென்ற மையின் அதனுள் விரவித் தோன்றிய பச்சைநிறமும் உயர்ந்து சென்ற தென்பார் மரகதக் குவால் என்றருளிச் செய்தார். மணி ஈண்டுச் செம்மணியாகிய மாணிக்கத்தை உணர்த்துகின்றது; இச்சொல் ஒரோவழி இப்பொருட்டாதலை மணிமருள் தேன்மகிழ் என்னும் பரிபாடல் (பரிபாடல் 21) அடிக்குப் பரிமேலழகியார் கூறிய வுரையிற் காண்க. பிறக்கம் - பெருக்கம், திவாகரம். இதற்கு உயர்ச்சி என்றுரைப்பினுமாம். திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும் என்னுந் தொடர்மொழியுள் திருமால் என்னும் பெயர் இல்லை யாயினும், திசைமுகன் என்னும் ஆண்பால் ஈறும் தேடினர் என்னும் பலர் பால் ஈறுந் தம்முள் இயையாமையின், பின்னை யதற்கேற்பத் திருமால் என்பது அவாய்நிலையால் வருவித் துரைக்கப்பட்டது. திசைமுகன் - நாற்றிசைகளையும் முகமாகவுடையவன். இனி, உள்ளத்தை ஒருவழி நிறுத்துதற் பொருட்டு நூல்களிற் சொல்லிய முறையால் அகத்தே மூலத்தினும் அதற்கு மேலும் உந்தியினும் நெஞ்சத்தினும் அண்ணத்தினும் நெற்றி நடுவினும் கருத்தை வைத்து இறைவனை அறிய முயல்வார்க்கும் அவன் சேயனாய் நிற்றலை யுணர்த்துவார் முறையுளி யொற்றி முயன்றவர்க் கொளித்தும் என்று கூறினார். முறையுளி - முறையால்; உளி என்பது மூன்றாவதன் பொருள்படுவதோர் இடைச்சொல் (திருக்குறள் 545) என்பர் பரிமேலழகியார். ஒற்றுமைகொண்டு நோக்குமுள்ளத், துற்றவர்வருந்த உறைப்பவர்க் கொளித்தும் என்பது கடும்பனி நாளில் நீரிடை நின்றும் வெந்துயர்க் கோடையில் தீயிடை நின்றும் தாம் கடுந்தவம் புரிதலைக் கண்டு தம்மாட்டு அன்புடைய உறவினராவா ரெல்லாம் வருந்தாநிற்பவும் அவரைப் பாராது தமது தவ முயற்சியிலேயே உறைத்து நிற்பவர்க்கும் இறைவன் தன்னை ஒளிக்குமாறு கூறியபடியாம். ஒற்றுமையாவது பிறர்க்கு வரும் இன்ப துன்பங்களைத் தமவாகக் காணுதற்கு ஏதுவாம் அன்பால் வரும் ஒருமைப்பாடு. உறைப்பவர்- தாமெடுத்த முயற்சியில் கருத்து மிகுதியும் ஈடுபட்டு நிற்பவர். நான்மறைகளின் பொருட் கூறுபாடுகளை எத்துணை காலம் வருந்தி ஆராயினும் அவற்றின்கண் ஒரு முழுமுதற் கடவுளின் இயல்பு ஒரு சிறிதும் விளங்காமையின் மறைத்திறம் நோக்கி வருத்தினர்க் கொளித்தும் என்றருளிச் செய்தார். வேதங்களிற் காணப்படும் வழுத்துரைகளெல்லாம் இந்திரன் வருணன் சூரியன் அசுவினி மருத்துக்கள் முதலான இயற்கைப் பொருட்டெய்வங்கண் மேலவாய் இருப்பக் காண்டுமன்றி, ஒரே முதல்வன் இயல்பை அறிவுறுத்தாமை அவற்றைப் பொரு டெரிந்து ஓதுவார் எவரும் அறிவர். இனி, வேதங்களானே யன்றி வைரவம் வாம் காளாமுகம் மாவிரதம் பாசுபதம் சைவம் முதலான அகச்சமயங்கள் ஆறுக்கும் உரிய தந்திரங்களானும், பாஞ்சராத்திரம் பாட்டா சாரியம் மீமாஞ்சை சமணம் புத்தம் உலகாயதம் முதலான புறச்சமயங்கள் ஆறுக்கும் உரிய தந்திரங்களானும் ஒப்பற்ற ஒரு முழுமுதற் கடவுளை யறிதல் செல்லாமையின் இத் தந்திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க்கத் தந்திரத்தின் அவ்வயின் ஒளித்தும் என்றருளிச் செய்தார். தந்திரம் நூல் எனப் பொருடருவதொரு வடசொல். இறைவனியல்பு வேதங்களான் அறியப்படாமை கூறிய அடிகள், அவ்வேதங்களின் வேறாய் அவ்வச் சமயத்தாராற் செய்யப்பட்ட நூல்களாகிய தந்திரங்களானும் அவனியல்பு அறியப்படாமை கூறுதலே பொருத்தமாகலின், இச்சொல்லுக்கு உபாயம் எனப் பொருள் கூறினார் உரை பொருந்தாமை கண்டு கொள்க. காண்டும் என்னும் உளப்பாட்டுத் தன்மை வினைமுற்று எதிர் காலங் காட்டுதல் உம்மொடு வரூஉங் கடதற எதிர் காலம் பற்றிவரும் என்று சேனாவரையர் (தொல்காப்பியம் சொல்லதிகாரம் 202) கூறிய உரையாற் காண்க. இனி, அவ்வச் சமயவழி நின்று ஒழுகி இறைவனைத் தாந்தாம் அறிந்தவாறு வழுத்தி அன்பராய் இருக்குநரை எல்லா இரக்கமுமுடைய இறைவன் வெறுப்பின்றி நோக்கி அவரைப் பற்றிக் கொண்டு அருள்புரிய மிடத்தும், தன்னைப் பெண்ணுரு வாய்க் கருதி வழிபட்டார்க்கு அதற்கு மாறான ஆணுருவிற் றோன்றியும், ஆண் பெண் என்னும் இரு திறமுங் கலந்த வுருவில் வழிபட்டார்க்கு அவ்விரண்டுமல்லா அலியுருவிற் றோன்றியும், ஆணுருவாய்க் கொண்டு வழிபட்டார்க்கு அதற்கு மாறான பெண்ணுருவிற் றோன்றியும் அவ்வவர் அறிவின் சிற்றள வினையும் அதற்கு அகப்படாத தன்னியல்பின் பேரளவினையுந் தெரித்தருளுவான் என்பதுணர்த்துவார் முனிவற நோக்கி நனிவரக் கௌவி, ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து, வாணுதற் பெண்ணென வொளித்தும் என்றருளிச் செய்தார். எல்லையறியப் படாத முதல்வ னியல்பை முற்று முணர்ந்தார் போல் இறுமாந்து வழிபடுவாரையும் வெறாது தனது பேரிரக்கத்தால் அவரை ஆண்டுகொள்ளு மிடத்தும், இறைவன் அவரது அறிவின் பொய்ம்மை தேற்றியே அவர்க்கு அருள் புரிவா னென்பது இதனாற் கூறியபடியாம்.மக்கள் தாந்தாம் வல்லவாறும் கூறும் ஆண் பெண் அலி யென்னும் இயல்புகட் கெல்லாம் மேலாய் நிற்பனென்பது பற்றியே எல்லாம் ஓதாதுணர்ந்த திருஞான சம்பந்தப் பெருமான். வெந்த சாம்பல் விரையெனப் பூசியே தந்தை யாரொடு தாயிலர் தம்மையே சிந்தி யாஎழு வார்வினை தீர்ப்பரால் எந்தை யார்அவர் எவ்வகை யார்கொலோ எனவும். ஆட்பா லவர்க்கருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகில்அள வில்லை கிளக்க வேண்டா கோட்பா லனவும் வினையுங் குறுகாமை எந்தை தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க தக்கார் எனவும் அருளிச் செய்ததூஉ மென்க. அற்றாயின், முன்னே குவளைக் கண்ணி கூறன் காண்க, அவளுந் தானும் உடனே காண்க எனவும், பின்னே தோலுந் துகிலுங் குழையுஞ் சுருடோடும், பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ், சூலமுந் தொக்கவளையு முடைத்தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பி எனவும் போந்த திருமொழிகளெல்லாம் முழுமுதற் கடவுளை ஆண்பெண்ணுருவில் வைத்துக் கூறியவாறென்னை யெனின்; இத்திருமொழிகளுள் எடுத்து உரைக்கப்பட்ட ஆண் பெண் உருவு முதல்வன் மெய்யன்பர்க்கு அருள் செய்தற் பொருட்டுத் தானே காட்டிய தனக்கு என்றும் உண்மையாய் உரிய அருட்டிருவுருவேயாம். ஏனைச் சமயத்தார் கூறும் ஆண் பெண் வடிவுகள் இறைவன் தானே காட்டியன அல்லவாய் அவர் தாந்தாம் வல்லவாறு கற்பித்துக் கொண்ட கூறுவனவாம்; இவை அவ்விரண்டற்கும் உள்ள வேற்றுமை என்க. பின்னர்க் காட்டிய திருமொழியில் தொன்மைக் கோலம் என்றதூஉம் அஃது இறைவற்கு என்றுமுள்ள பழையவுருவாம் என்பதனை வலியுறுத்துதல் காண்க. இனி, ஐம்புல அவாக்களையுந் தொலைத்து வரையேறி அருந்தவம் உழந்த முனிவரர் அறிவுக்கும் இறைவன் எட்டாதவன் என்பது சேண்வயின், ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும் போய்த், துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை, அருந்தவர் காட்சியுட் டிருந்த வொளித்தும் என்பதனால் உணர்த்தப்பட்டது. அற்றேல், இதனை ஒருகால் உணர்த்தினால் அமையாதோ, முறையுளி யொற்றி முயன்றவர்க் கொளித்தும் என்பதனாலும் ஒற்றுமை கொண்டு நோக்குமுள்ளத், துற்றவர் வருந்த உறைப்பவர்க் கொளித்தும் என்பதனாலும் முன்னேயும் இருகால் தவ முயற்சியுடையாரை எடுத்துக் கூறுதல் வேண்டு மோவெனிற் கூறுதும். அகத்தே உள்ளத்தை ஒருவழி நிறுத்து மளவில் முயலுந் தவமும் அதனோடு புறத்தே உடம்பையும் வாட்டி முயலுந் தவமும், அகம் புறமென இருதிறத்தானும்நுகரற் பாலனவாகிய சிற்றின்பங்களைத் துவரத் துறந்து அறிவைத் துலக்குந் தவமுமெனத் தவமுயற்சிதான் முத்திறப்படுதலின் அம் மூன்றனையும் ஒன்றன்பின் ஒன்றாய்க் கூறுவான் றொடங்கி முறையுளி யொற்றி முயன்றவர் என்பதனால் அகமுயற்சி யுடையாரையும், ஒற்றுமை கொண்டுநோக்குமள்ளத் துற்றவர் வருந்த உரைப்பவர் என்பதனால் அதனோடு புறமுயற்சியும் உடையாரையும், சேண்வயின், ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும்போய்த் துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை யிருந்தவர் என்பதனால் அகப்புற இன்பங்கள் முற்றும்விட்டு முயல் வாரையும் ஓதியருளினாராகலின், அது கூறியதுகூறலன்மை யுணர்க. அஃதொக்குமாயினும், இறைவனை யிங்ஙனமெல்லாம் வருந்தி நாடுந் தவமுயற்சியுடையார்க்கும் அவன் தன்னைக் காட்டாது ஒளிக்குமாயின், பின்னர் இறைவனை யடைதற்கு முயலும் முயற்சியெல்லாம் பயனிலவாம் போலு மெனின்; அற்றன்று, இவ்வுடம்பையும் இதன்கண் அகக்கருவி புறக் கருவிகளையும் இவ்வுலகத்தையும் இவ்வுலகத்துப் பல நுகர் பொருள்களையும் எல்லாம் உயிர்கட்கு வகுத்துக் கொடுத்த முதல்வன் அங்ஙனம் அவைதம்மைக் கொடுத்தது அவற்றால் அவர் அறிவு விளங்கி அவனது அருட்செயலை அவற்றுள்ளுந் தம்முள்ளும் ஓவாது கண்டு தஞ்செயலற்று அவனருள் வழி நிற்றற்கேயா மென்பதனை உணராது, அவன் றந்த உடம்பையும் கருவிகளையும் யான் எனதெனுந் தமது அறிவு முனைப்பால் வாட்டி வருத்தி அவன் கருத்துக்கு மாறாய் இயற்றுந் தவமுயற்சி பயனிலதா மென்பதே ஈண்டு அடிகளின் திருவுள்ளக் கிடையா மென்றோர்க. இக்கருத்துப்பற்றியே தவமுதல்வரான திருமூல நாயனாரும், அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை அஞ்சும் அடக்கில் அசேதனம் ஆமென்றிட் டஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே எனவும், எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினுங் கண்ணா ரமுதனைக் கண்டறி வாரில்லை உண்ணாடி யுள்ளே ஒளிபெற நோக்கிடிற் கண்ணாடி போலே கலந்திருந் தானே எனவும் அருளிச் செய்வாராயின ரென்க. அவனருளே கண்ணாகக் காணின் அல்லால், இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே என்னும் திருமறைத் தமிழும், அவனருளாலே அவன்றாள் வணங்கி எனவும், நானார் என்னுள்ளமார் ஞானங்களார் என்னையாரறிவார், வானோர் பிரானென்னை யாண்டிலனேல் எனவும், காணுங் கரணங்களெல்லாம் பேரின்பமெனப் பேணுமடியார் பிறப்பகலக் காணும் பெரி யானை எனவும் அடிகள் பிறாண்டும் இத் திருவாசகச் செழுந் தமிழ் மறையுள் ஓதுந் திருமொழிகளும் உற்று நோக்க வல்லார்க்கு எல்லாப் பொருள்களுள்ளும் எல்லாவுயிர் களுள்ளும் நிற்கும் இறைவனையும் ஆங்காங்கு அவன் நிகழ்த்தும் அருள் நிகழ்ச்சிகளையுங் கண்டு அந்நிகழ்ச்சிவழியே தஞ் செயலற்று ஒழுகும் அருட்டவம் உடையார்க்கு அவன் அணுக் கனாய் வெளிப்பட்டு நின்று அருள்புரிவா னென்பதனைத் தெற்றென வுணர்த்தாநிற்கும் என்க. துற்றவை - நுகர்ந்தவை; இச்சொல் இப்பொருட்டாதல் ஐம்புலத்தைத், துற்றுவதுற்றம் என்பதற்குப் பரிமேலழகியார் கூறிய வுரையால் (பரிபாடல் 20) உணரப்படும். ஆர்தல் - நிறைதல்; திவாகரம். பிணையல் - பின்னிய மாலை, திவாகரம் தன்நேர் இல்லோன் தானேஆன தன்மை என்நேர் அனையோர் கேட்கவந் தியம்பி அறைகூசி ஆட்கொண் டருளி மறையோர் கோலங் காட்டி அருளலும் 150 உளையா அன்பென் புருக ஓலமிட் டலைகடற் றிரையின் ஆர்த்தார்த் தோங்கித் தலைதடு மாறா வீழ்ந்துபுரண் டலறிப் பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து நாட்டவர் மருளவுங் கேட்டவர் வியப்பவுங் 155 கடக்களி றேற்றாத் தடப்பெரு மதத்தின் ஆற்றேனாக அவயவஞ் சுவைதரு கோற்றேன் கொண்டுசெய்தனன்; ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின் வீழ்வித் தாங்கன் 160 றருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில் ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்; தடக்கையின் நெல்லிக் கனிஎனக் காயினன்; தன்நேர் இல்லோன் - தனக்கு ஒர் ஒப்பில்லாதவன். தானே ஆனதன்மை என்நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி - தனக்குத்தானேயாய் இருந்த இயல்பினை என்னோடொத்த அத்தன்மையினரெல்லாம் செவிகொடுத்துக் கேட்குமாறு குரு வடிவில் எழுந்தருளிவந்து சொல்லி, அறைகூவி ஆட்கொண்டு அருளி - போர் செய்தற்குக் கூவியழைத்தாற்போல் வலிந்து அழைத்து என்னை அடிமை கொண்டருளி, மறையோர்கோலம் காட்டி அருளலும் - அந்தணரது அழகிய வடிவத்தைக் கட்புலனாம்படி காட்டியருளின அளவிலே, உளையா அன்பு என்பு உருக ஓலம் இட்டு - வெறாத அன்பினால் என் என்பும் உருக ஓசையிட்டு, அலைகடல் திரையின் ஆர்த்து ஆர்த்து ஓங்கித் தலைதடுமாறா வீழ்ந்து புரண்டு அலறி - அசையுங் கடலின் அலையைப் போற் பேரொலியினைச் செய்து செய்து மேலுயர்ந்து தலைமயங்கிக் கீழ் விழுந்து புரண்டு கதறி, பித்தரின் மயங்கி - பித்தம் உடையவர் போல் மயங்கிய, மத்தரின் மதித்து - வெறி பிடித்தவரைப்போற் களித்து, நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும் - நாட்டிலுள்ளார் மயங்கவும் கேட்டவர் இறும்பூது கொள்ளவும், கடக்களிறு ஏற்றாத் தடப்பெரு மதத்தின் - மத நீரினையுடைய ஆண் யானை தன்மேற் பாகனை ஏற விடாமைக்குக் காரணமாய் அடைந்த மிகப் பெரிய மதாளிப்பினைப்போல், ஆற்றேன் ஆக - என்பாற் பெருகிய அன்பினை யான் தாங்க ஏலாதேனாய்ச் சுழலா நிற்க, அவயவம் சுவைதரு கோல்தேன்கொண்டு செய்தனன் - என் உறுப்புகளை எல்லாம் தீஞ்சுவையினைத் தரும் பொம்பிற் றேன்கொண்டு ஆக்கினன், ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின் வீழ்வித்த ஆங்கு - பகைவருடைய பழைய ஊர் மூன்றனையும் எழுச்சி பெற்றுத் தோன்றிய சிரிப்பில் உண்டான நெருப்பின் கண்ணே விழச் செய்தாற்போல, அன்று அருட் பெருந்தீயின் அடியோம் அடிக்குடில் ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன் என்னுந் தொடர் மொழியை அன்று ஒருத்தரும் வழாமை அடியோம் அடிக்குடில் அருட்பெருந்தீயின் ஒடுக்கினன் எனமாற்றி எம்மை ஆட் கொண்ட அந்நாளில் ஒருவருந் தவறிப் போகாமே அடியேங் களது அடிமைச்சிறு வீடுகளைத் தனது அருளாகிய பெருந் தீயினிடத்தே ஒடுங்கச் செய்தனன் என்று பொருளுரைக்க, தடக்கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன் - வளைந்த கையினிடத்தே ஏந்திய நெல்லிக்கனிபோல எனக்கு எளிவந்து விளங்கித் தோன்றுவானாயினன் என்றவாறு. ‘மேற் கூறியவா றெல்லாங் கடவுளர்க்கும் அருந்தவர்க்கும் பிறர்க்குமெல்லாம் ஒளிக்கும் இயல்பினனாய் ஒப்பற்ற தனித் தலைமைக் கடவுளாயுள்ள பெருமான் ஒன்றுக்கும் பற்றாத என்னை யொப்பாருங் கேட்கும்படி தனது முழுமுதற்றன்மை யைத் தானே எடுத்துச் சொல்லி ஓர் அந்தணன் வடிவிற் றோன்றி என்னை அடிமை கொண்டருளிய அருட்பெருந் தகைமை என்னே! என அடிகள் இப்பகுதியால் இறைவன் தமக்குச் செய்த பேரருட்டிறத்தை வியந்துரைத்தருளினார். இறைவன் நேரே போந்து தம்மை அடிமை கொண்டமை ஈண்டு அடிகளே தெளியக் கூறுமாறு பெரிதுங் குறிக்கொளற்பாற்று. தன் நேர் இல்லோன் என்பதில் நேர் பெயர்ச் சொல்லாய் நின்று ஒப்பு என்றும், என் நேர் அனையோர் என்பதில் அது வினைச்சொல்லாய் நின்று ஒத்த என்றும் பொருள் தந்தவாறு காண்க. அனையோர் - அத்தன்மையோர்; இச்சொல் தன்மைப் பொருட்டாதல் - அனையை யாகன்மாறே என்புழியுங் (புறநானூறு 20) காண்க. அறைகூவல் - போர்க்கு அழைத்தல் என்பர். புறப் பொருள் வெண்பாமாலை உரைகாரர்; (காஞ்சிப் படலம் 7) போர்புரிதற்கு வலிந்த ழைத்தாற் போல ஈண்டு அடிமை கொண்டதும் வலிந்து இழுத் தேயாமென்பார் இச் சொற்றொடரை ஈண்டுப் பெய்துரைத்தார். உளையா - வெறுப்பில்லாத; இப் பொருட்டாதல் இளைய னிவனென உளையக் கூறி என்புழியுங் (புறநானூறு 72) காண்க. .தாம் பிறராற் றுன்புறுத்தப்படுங்கால் இறைவன் தமக்கு அத் துன்பத்தை உடனே நீக்காது வாளா இருப்பினும் அது பற்றி அவனை வெறாது அன்பில் முதிர்ந்து நின்றமையின் உளையா அன்பு என்று கூறினார். குதிரை வாங்க எடுத்துச் சென்ற பொருளையெல்லாந் திரும்பத் தரும்படி பாண்டியன் அடிகளைப் பலவாறு துன்புறுத்திய காலத்தும் அவர் இறைவனை வெறாது பேரன்பு மீதூர்ந்து நின்றமை காண்க. இறைவன் றிருவுளத்திற்கு இசைவானால் எத்தகைய துன்பம் வரினும் அது தமக்கும் இசைவாம் என அடிகள் கொண்டமை நரகம்புகினும், எள்ளேன் திருவருளாலே யிருக்கப் பெறினி றைவா என்று அவர் திருச்சதகத்துள் ஓதியவாற்றால் நன்க றியப்படு மென்பது. ஓலம் - ஒலி என்பர் பிங்கலந்தையுள்; அன்பு மீதூர்தலால் அதனை யாற்றாது இடும் ஒலி ஈண்டு ஓல மெனப்பட்டது; துயர் மிகுந்தவிடத்து இடும் ஒலியும் ஓல மெனப்படும். துன்பமாயினும் இன்பமாயினும் அளவின்றியே பெருகியக்கால் ஓ வென்னும் ஓசையுண்டாதல் மக்களெல்லார்மாட்டும் இயல்பாகக் காணக் கிடத்தலால் இச்சொல் அவ்விரண்டற்கும் பொதுப்படநின்றது. ஆர்த்து - பேரொலிசெய்து; ஆர்ப்பு ஒன்றலாப் பேரொலி என்பர் திவாகரர். ஆர்த்து ஆர்த்து என இருகால் அடுக்கியது விரைவுபற்றி; என்னை? இசைநிறை அசைநிலை பொருளொடு புணர்தலென், றவைமூன் றென்ப ஒருசொல் அடுக்கே என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாராகலின் (சொல் 411) தலைதடுமாறா வீழ்ந்து - தலை தடுமாறி விழுந்து; தடுமாறா செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். தடுமாற்றம் மயக்கம் என்னும் பொருட்டாதல் படுமழை மொக்குளிற பலகாலுந் தோன்றிக், கெடுமிதோர் யாக்கை யென்றெண்ணித், தடுமாற்றம், தீர்ப்பேம்யாம் என்றுணருந் திண்ணறிவாளரை என்னும் நாலடியாரிலுங் காண்க. உடலலையைப் போல ஆர்த்து ஓங்கி வீழ்ந்து புரண்டு அலறி என்க. பித்தம் மயக்கத்தைச் செய்வதாகலின் அறிவு மயங்கினார் பித்தர் எனவும், மதம் களிப்பினைத் தருவதாகலின் அதனை யுடையார் மத்தர் எனவும் வேறுபிரித் தோதப் பட்டார். வெறித்தல், களித்தல் எனப் பொருடரும். மத் என்னும் வடசொல் முதனிலையிற் பிறந்த வினையாகலின் மதித்து என்பதற்குக் களித்து எனப் பொருளுரைத்தாம்; இதற்குப் பாராட்டி எனப் பொருளுரைத்தல் பொருந்தாமை கண்டு கொள்க. பேரன்பால் நிரம்பினார் செயலும் அறிவு மயங்கினார் செயலும் வெறித்தார் செயலும் தம்மும் பெரும்பான்மையும் ஒத்தலின், பித்தர் மத்தரை ஈண்டுவமையாக எடுத்துக் கூறினார். இவ்வுண்மை, ஞாலமதின் ஞாநநிட்டை யுடையோருக்கு நன்மையொடு தீமையிலை நாடுவதொன் றில்லை சீலமிலை தவமில்லை விரதமொடாச் சிரமச் செயலில்லை தியானமிலை சித்தமல மில்லை கோலமிலை புலனில்லை கரண மில்லை குணமில்லை குறியில்லை குலமு மில்லை பாலருடன் உன்மத்தர் பிசாசர்குண மருவிப் பாடலினோ டாடலிவை பயின்றிடினும் பயில்வார் என்னும் சிவஞானசித்தித் திருப்பாட்டில் இனிது காட்டப் பட்டமை காண்க. கடக்களிறு ஏற்றாத் தடப்பெரு மதத்தின் என்பதில் அவாய்நிலையாற் பாகனை என்னும் ஒரு சொல் வருவித்துரைக்கப்பட்டது. மிகுதியும் மதவெறி கொண்ட யானை, பாகன் வயப்படாமலும், அவன் ஏறுதற்கு இடங் கொடாமலும் விரைதல் இயல்பு. இதற்கு இப்பொருள் காண மாட்டாதார் தமக்குத் தோன்றியவாறெல்லாம் உரை கூறுவர். இவ்வூனுடம்பு, தன்னுள் இருந்த வுயிர் தூயதாய் இறைவன் மாட்டெழுந்த பேரன்பினுருவான வளவானே, அவ்வுயிரி னெழுச்சிக்குத் தக உடனொத்து நிற்குந்தன்மைத் தாகாமையின், அதனுள்ளிருந்த உயிர் அவ்வன்பின் பெருக்கை ஏற்கும் வாயில் காணாது பெரிதும் ஆற்றா நிலைமைத்தாம். அந்நிகழ்ச்சி தெரித்தற்கே தடப்பெரு மதத்தின் ஆற்றேனாக என்றருளிச் செய்தார். இவ்வுடம்பு தாங்கும் அளவைக்குமேல் இன்பமாதல் துன்பமாதல் ஒருவர்க்கு நேர்ந்தக்கால் அவரதனை ஆற்றாராய் வருந்துதல் நம்மனோர் மாட்டும் ஓரோவழி நிகழ்தற்கண் வைத்துக் கண்டுகொள்க. இங்ஙனம் ஆற்றாநிலைமைத்தாதல் கண்டு எல்லாம் வல்ல இறைவனே தன்மாட்டுப் பேரன்பாற் பொங்கும் தூயவுயிரின் இயல்புக்குத் தக அதனுடம்பையும் நுண்ணிய தூய சுத்த மாயையின் வடிவாகத் திரிபுறச் செய்து அதனை முழுதும் இன்ப வுருவாக்குதலின் அவயவஞ் சுவைதரு கோற்றேன் கொண்டு செய்தனன் எனத் திருவாய் மலர்ந்தருளினார். நுண்ணிய தூய சுத்தமாயை பேரின்ப நுகர்ச்சிக்கு ஒத்தவாயிலாய் நிற்ப தொன்றா கலிற் பேரன்பினுருவான தூயவுயிர் இந்நிலவுலகி லுலவுங் காறும் அதனுடம்பு சுத்த மாயையின் வடிவாகத் திரிபுற்றுப், பின்னர் அஃது இறைவனோடு இரண்டறக் கலக்குங்கால் அதனை விட்டு வேறுநிற்கு மென்க. அவயவம் உறுப்பு எனப் பொருள்படும் ஒரு வடசொல். கோற்றேன் - கொம்புத்தேன்; கோல் - மரக்கொம்பு; சூடாமணி நிகண்டு. அவயவம் சுவைதரு கோற்றேன் கொண்டு செய்தனன் என்பதனால் உறுப்புக்களை யெல்லாந் தீஞ்சுவைத் தேனாற் சமைத்த தொப்ப இன்பவடிவாக்கின்மை குறிப்பிக்கப்பட்டது. இனி ஏற்றார் மூதூர் எழிநகை எரியின் வீழ்வித்த வரலாறு வடமொழி மகா பாரதத்தின் அநுசாசந பர்வத்திற் சொல்லப்பட்டிருத்தலின் அதனை இங்கே மொழிபெயர்த்துத் தருகின்றாம். இரும்பாலும் வெள்ளியாலும் பொன்னாலும் ஆக்கப்பட்ட மூன்று நகரங்கள் மறஞ்சிறந்த அசுரர்களுக்கு வானின்கண்ணே இருந்தன. மகவானாகிய இந்திரன் தன்னிடத் துள்ள படைக்கலங்கள் எவற்றாலும் அவைதம்மை அழிக்கக் கூடவில்லை. அதனாற், பெரியரான தேவர்களெல்லாருந் துன்புற்று மகாருத்திரரின் திருவடிகளை யடைந்து தம்மில் ஒருங்கு கூடி உருத்திரரே, எல்லா வேள்விகளிலும் தேவரீர்க்கு உகந்த பசுக்கள் உளவாகுக. பெருமையைத் தருவோரே, அரக்கர்களை அவர்களுடைய நகரங்களோடும் அழித்து, உலகங்களைத் துன்பத்தினின்றும் மீட்டருளும் என்று வழுத்தினார்கள். அவ்வாறு வழுத்தப்பட்ட அவர் அங்ஙனமே ஆகுக என்று கூறித் திருமாலை அம்பாகவும், தீக்கடவுளை அதன் பல்லாகவும். வைவசுவதன் புதல்வனான யமனை அதன் இறகாகவும், எல்லா வேதங்களையும் வில்லாகவும், சிறந்த சாவித்திரியை நாணாகவும் அமைத்து நான்முகளைத் தன் தேர்ப்பாகனாக இருத்தி, ஞாயிற்றின் நிறத்தை யுடையனவும் உலகை எரிக்கும் நெருப்பை யொத்த கொடுமை வாய்ந்தனவும் ஆன மூன்றாய்ப் பிணைக்கப்பட்ட பல்லம்புகள் மூன்றினால் இசைந்த காலத்தே அம்மூன்று நகர்களையும் எய்தனர். அவ்வசுரர்கள் தம்முடைய நகரங் களோடும் உருத்திரரால் எரிக்கப்பட்டனர். இறைவன் திரி புரங்களை எரித்த இவ்வரலாறு எசுர் வேதத்திலும் சரபோபநிடதத்திலும், காந்தம் மற்சம் இலிங்கம் முதலான புராணங்களிலும் காணப்படுகின்றது. இவற்றுள் உபதேச காண்டத்தில் மட்டும் சிவபிரான் நகை நெருப்பிலும் அம்பிற்றீயிலும் திரிபுரங்களைப் படுவித்தார் என்பது சொல்லப் பட்டிருக்கின்றது. மேற்காட்டிய பல நூல்களிற் காணப்படும் இவ்வரலாற்றின் வகைகளும் பல திறமாய்க் காணப்படுகின்றன. அது நிற்க. இனி, முப்புரங்களாவன எவையென்று உண்மையான் நோக்குவார்க்கு ஆணவம் மாயை கன்மம் என்னும் மும்மலங்களின் காரியங்களேயா மென்பது நன்கு விளங்கும்; இம் மலங்கள் மூன்றானுங் கட்டுண்டு நிற்கும் உயிர்கள் தூயவாய் இறைவன் திருவடியைத் தலைக்கூடுதற் கேற்ற காலம் வந்த வளவானே அம்மும்மலக்கட்டும் இறைவன்றன் ஞானவனலால் எரிக்கப்பட்டுப் போக அவ்வுயிர்கள்முற்றுந் தூயவாய் விடுபட்டு அவனருளோடு இரண்டறக் கூடா நிற்கும் என்க. திரிபுர மெரித்தவுண்மை இதுவே யாதல் ஞானயோகத் தலைவரான திருமூலர், அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புர மாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யார்அறி வாரே என்று அருளிச் செய்தவாற்றாற் றெளியப்படும். ஏற்றார் பவைரெனப் பொருள்படுதலைப் போரெ திர்ந்து ஏற்றார் என்புழியுங் (பரிபாடல் 18) காண்க. முதுமை ஊர் மூதூர் என்றாயிற்று; முதுமை என்பதன் ஈறுகெட்டு முதல் நீண்டது. இறைவனைக் குழீஇய கடவுளர் ஒவ்வொருவரும் ‘எம் மாலன்றோ இம்முப்புரங்களும் அழிவுறப் போகின்றன! என்று தம்மிற்றாங் கருதிச் செருக்கினாராகலின் இறைவன் அவரது அறியாமை யுணர்ந்து கிளர்ச்சிபெற நகைத்தமையின் எழில் நகை என்றார். எழில் - எழுச்சி, கிளர்ச்சி; இஃதிப்பொருட்டாதல் மேலே காட்டினாம். அடிகளும் அடிகளோடு உடனிருந்த தொண்டர்களும் இறைவன் றிருவருளால் தம்முடம்புகளுந் தூயவாகத் தாம் அவன்றிருவடிப் பேரின்பத்தின்கண் ஒடுக்கப்பட்டமையின் அன்று, அருட்பெருந்தீயின் அடியோம் அடிக்குடில், ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன் என்றருளிச் செய்தார். தம் உடம்புகள் அருள்நெருப்பாற் றூயவானமைக்கு, நகை நெருப்பால் முப்புரங்கள் எரிந்து தூயவானமை உவமையாயிற்று. அடிமைக்குடில் அடிக்குடில் என்றாயிற்று; சிந்தாமணி யுள்ளும் அடிப்பணி என்னுஞ் சொற்றொடர் அடிமைப்பணி என்பதன் விகாரமென்றார் நச்சினார்க்கினியர். (சீவக சிந்தாமணி 552) குடிலுக்குரி யாரது அடிமைத் தன்மை குடின்மேல் ஏற்றப்பட்டது. குடில் சிற்றில் என்பர் திவாகரர். தடக்கை - வளைந்த கை; அஃதாவது உள்ளங்கை; தட வென்கிளவி கோட்டமுஞ் செய்யும் என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். (சொல் 321) நீர்விடாய் கொண்டு வருந்தினார் அது தீர்தற்கு உள்ளங்கையிற் கிடைத்த நெல்லிக்கனி எளிதிற் பயன்படுதல் போலவும், அது கையிற் கிடைத்தவளவானே விடாய்தீர்க்கும் அதன் நீர்மை அதனை யுடையார்க்கு இனிது விளங்குதல் போலவும் இறைவன் தமது பிறவித்துன்பத்தை எளிதிற் போக்குமாறு தமக்குத் கிடைத்த படியும், கிடைத்த அவ்வாண்டவன் அத்துன்பத்தைப் போக்கும் அருள்நீர்மைய னாதல் தமக்குத் தெற்றென விளங்குகின்றபடியும் உணர்த்துவார் தடக்கையின் நெல்லிக்கனி எனக் காயினன் என்றருளிச் செய்தார். தன்னை யுண்டார்க்கு உடனே நீர் வேட்கை யினைப் போக்குதலோடு அடுத்து நீர்பருகுங்காற் றீஞ்சுவையினையும் பயத்தலால் நெல்லிக்கனியை ஈண் டுவமையா வெடுத்துக் காட்டினார். இறைவனைத் தலைக் கூடினார்க்கும் பிறவிப்பணி தீர்தலேயன்றிப் பேரின்ப நுகர்ச்சியும் ஒருங்குநிகழா நிற்கு மென்பதூஉம் இவ்வுமையாற் பெற்றாம். உள்ளங்கையிற் கிடைத்த நெல்லிக்கனி நீர்வேட்கை எளிதிற் றீர்க்கும் மருந்தாதல் பற்றியும், அங்ஙனங் கிடைத்த வளவானே தான் பயன்படு மாற்றினை எளிதில் விளங்கச் செய்தல் பற்றியும் அன்றே இதனை ஒரு பழமொழியா வழங்கி வருகின்றன ரென்பது. சொல்லுவ தறியேன் வாழி முறையோ தரியேன் நாயேன் தான்எனைச் செய்தது 165 தெரியேன் ஆவா செத்தேன் அடியேற் கருளிய தறியேன் பருகியும் ஆரேன் விழுங்கியும் ஒல்ல கில்லேன் செழுந்தண் பாற்கடற் றிரைபுரைவித் துவாக்கடல் நள்ளுநீர் உள்ளகந் ததும்ப 170 வாக்கிறந் தமுத மயிர்க்கால் தோறும் தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்றழை குரம்பை தோறு நாயுடல் அகத்தே குரம்பைகொண் டின்றேன் பாய்த்தி நிரம்பிய அற்புதமான அமுத தாரைகள் 175 ஏற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவ துள்ளங் கொண்டோர் உருச்செய் தாங்கெனக் கள்ளூ றாக்கை அமைத்தனன் ஒள்ளிய கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை என்னையும் இருப்ப தாக்கினன் என்னிற் 180 கருணை வான்றேன் கலக்க அருளொடு பரா அமு தாக்கினன் பிரமன்மால் அறியாப் பெற்றி யோனே. சொல்லுவது அறியேன் - சொல்லத்தக்கது ஏதும் அறிந்திலேன், வாழி - எம்பெருமானே நீ வாழ்வாயாக, முறையோ தரியேன் நாயேன் என்பதை நாயேன் தரியேன் முறையோ என மாற்றி நாயை யொத்தவனான அடியேன் தாங்கேன் இது நீதீயோ எனப் பொருளுரைக்க, தான் எனைச் செய்தது தெரியேன் - எம் பெருமான் என்னை ஆக்கியவகை இன்னதென்றும் தெரிந்திலேன், ஆ ஆ செத்தேன் - ஐயோ நான் இறந்தேன், அடியேற்கு அருளியது அறியேன் - அடியேனுக்கு எம்பெருமான் அருள் செய்தது ஏதுக்காக என்றும் அறிந்;தலேன், பருகியும் ஆரேன் - எம்பெருமான் அருளிய பேரின்பத்தைக் குடித்தும் நிறைவு பெற்றேன், விழுங்கியும் ஒல்லகிலேன் - அதனை முழுதுமாய் விழுங்கியும் பொறுக்க மாட்டேன், செழும் தண் பால் கடல் திரை புரைவித்து - செழுமையான குளிர்ந்த பாற்கடலின் அலையை ஓக்கச் செய்து, உவாக்கடல் நள்ளுநீர் உள்அகம் ததும்ப வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும் தேக்கிடச் செய்தனன் - முழு நிலாக் காலத்துக் கடலின் நடுவிலுள்ள நீரைப் போல எனது உள்ளத்தின் உள்ளிடம் நிரம்பச் சொல்லினளவையுங் கடந்து பேரின்ப அமுதமானது மயிரின் அடிதோறும் வந்து நிறையச் செய்தனன், கொடியேன் ஊன் தழை குரம்பைதோறும் - கொடியவனாகிய எனது ஊன் மிகுந்த சிறிய உடம்புதோறும், நாய் உடல் அகத்தே குரம்பை கொண்டு இன் தேன் பாய்த்தி - நாய் போல் இழிந்த எனது உடம்பினுள்ளே இருக்குஞ் சிறு வீடு அமைத்துக் கொண்டு இனிய தேனைப் பாயச்செய்து நிரம்பிய அற்புதமான அமுத தாரைகள் எற்புத் துளைதொறும் ஏற்றினன் - நிறைந்த புதுமையான அமுத ஒழுக்குகளை எலும்பின் துளைதோறும் ஏறச் செய்தனன், உருகுவது உள்ளங்கொண்டு ஓர் உருச்செய்த ஆங்கு - உருகுவதாகிய ஓர் உள்ளத்தையே முதலாகக் கொண்டு அதனைக் கட்புலனாகும் ஒரு வடிவமாகச் செய்தாற்போல, எனக்கு அள் ஊறு ஆக்கை அமைத்தனன் - எனக்குச் செறிந்து ஊறும் உடம்பை ஆக்கி வைத்தனன், ஒள்ளிய கன்னற்கனி தேர்களிறு எனக் கடை முறை என்னையும் இருப்பது ஆக்கினன் - ஒளிபொருந்திய கரும்பையும் விளவின் கனியையும் உணவு கொள்ளும் ஆண் யானையைப் போல முடிந்ததரமாக ஒன்றுக்கும் பற்றாத என்னையும் பேரின்பத்தில் நிலைபெற்றி ருப்பதாகச் செய்து வைத்தனன், என்னில் கருணை வான் தேன் கலக்க - என்னுள்ளே அருளாகிய தூய தேன் கலவாநிற்க, அருளொடு பரா அமுது ஆக்கினன் பிரமன் பால் அறியாப் பெற்றியோன் என்பதைப் பிரமன் மால் அறியாப் பெற்றியோன் அருளொடு பரா அமுது ஆக்கினன் என மாற்றி நான்முகனுந் திருமாலும் அறியாத தன்மையையுடைய எம்பெருமான் அவ்வருளோடு மிக்க அமுதத்தினையும் செய்துவைத்தான் என்றவாறு. இன்பமே உருவாயினார்க்கு அவ்வின்பத்தையன்றிப் பிறிதொன்றுந் தோன்றாமையில் வேறேதும் எடுத்துக் கூறுதற்கு ஏலாமையானும், அவ்வுருவாய் நின்று அதனை நுகர்வார்க்கு அதனியல்பு விளங்குவதன்றி அதனியல்பினைப் பிறர்க் கெடுத்துக் காட்டல் ஒருவாற்றானும் ஆகாமையானும் சொல்லுவதறியேன் என்றருளிச் செய்தார். வாழிய என்பதன் ஈறு கெட்டு வாழி என நின்றது; இஃது ஈண்டு இரக்கக் குறிப்பின்கண் வந்தது. அடிபணிந் தருளு வாழி என்புழிப்போல (சிந்தாமணி, 2900) அசை நிலை யெனினுமாம். பேரின்பப் பெருக்குத் தம்மளவின் மிகுதலின் தரியேன் நாயேன் என்றார். ஊன்வடியில் நின்ற வுடம்பு இப்போது இன்பவடிவாம்படி இறைவன் செய்த திறம் தம்மால் அறியலாகாமையின் தானெனைச் செய்தது தெரியேன் என்றார். ஆ ஆ என்பன இடையே உடம்படுமெய்பெற்று அவா என்றாயின; ஆவா விருவரறியா என்புழிப் (திருச்சிற்றம்பலக் கோவையார் 72) போல, ஈண்டிவை இரக்கத்தின்கட் குறிப்பாய் வந்த இடைச்சொற்கள். இன்பத்தின்கட் படிந்து அதனுருவாயினார் தம்மை நான் என்றும் எனது என்றும் முனைத்துக் காணமாட்டாமையின் அவை யிரண்டன் ஒழிவு கூறுவார். செத்தேன் என்றருளிச் செய்தார். இக்கருத்தேபற்றித் திருவள்ளுவனாரும், யான் எனதென்னுஞ் செருக்க றுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும் என்றருளினார். அடியேற் கருளிய தறியேன் என்றது ஒன்றுக்கும் பற்றாத அடியனேனுக்கு இத்துணை எளியனாய் வந்து இறைவன் அருளியது ஏதுக்காகவோ! என இறைவன் அன்பர்க் கெளிய னாதலை வியந்துரைத்தவாறு. பருகுந்தொறும் பின்னும் புதிதாய் அடங்கா வேட்கை யினைப் பயக்கு நீரதாகலிற் பேரின்பத்தைப் பருகியும் ஆரேன் என்றார். புணருந்தொறும் பெரும்போகம் பின்னும் புதிதாய் எனவும், ஆரா வின்பத் தன்புமீ தூர எனவும் (9வது செய்யுள்) அடிகள் திருச்சிற்றம்பலக் கோவையாரிலுங் கூறியது காண்க. பருகுதல் - குடித்தல்; ஆர்தல் - நிறைதல்; பிங்கலந்தை. பருகுதலாவது நீர்போல் நெகிழ்ந்திருப்பவற்றைச் சிறுகச் சிறுகக் குடித்தல்; விழுங்குதலாவது வாழைக்கனிபோற் குழைந்திருப்பவற்றின் ஒரு கவளத்தை முழுதுமாய் உண்டல். ஒல்லகில்லேன் - பொறுக்க மாட்டேன்; ஒல்லல் பொறுத்தலெனப் பொருள்படுதல் ஒல்லுவ சொல்லாது என்புழியுங் காண்க. (பரிபாடல் 12) பேரின்பம் மிகத் தூயதாகலானும், அது மேன் மேல் எழுதலானும் செழுங்தண் பாற்கடற் றிரைபுரை வித்து எனப் பாற்கடலையும் அதன் அலையையும் உவமையாக் கூறினார். உவா - நிறைநிலாக் காலம்; இஃது உவவுமதி யுருவின் என்பதனாலும் உணர்க. (புறநானூறு 3) இளைய எனப் பொருள்படும் யுவந் என்னும் வடசொல்லும், நிறைவு எனப் பொருள்படும் உவவு என்னுந் தமிழ்ச் சொல்லும் வேறாதலை உணராதார் அவை யிரண்டும் ஒன்றென்பர். உவாநாளிற் கடல் பொங்குமென்ப வாகலின் உவாக்கடல் நள்ளு நீரை ஈண் டுவமையாக எடுத்தோதினார். நிறைமதி வருகையாற் கடல் கிளர்ந்தாற்போல இறைவனது வரவாலும் பேரின்பம் உள்ளத்தே மிகுந்து நிரம்பிய தென்றார். நள்ளு நீர் - நடுவிலுள்ள நீர்; நடு வெனப் பொருடரும் நள் என்னும் பெயரினடியாகப் பிறந்த வினை. இச்சொல் இப் பொருட்டாதல் நள்ளிருட்கண் வந்தார் நமர் என்பதன் (புறப்பொருள் வெண்பா மாலை 1,6) உரையிற் காண்க. ததும்ப - நிரம்ப; பிங்கலந்தை. சொல்லினால் எடுத்துக் காட்டுதற்கும் ஏலாதவாறாய் அப் பேரின்பவமுதம் உடம்பின் மயிர்க்கால் வரையில் வந்து நிறையச் செய்தலின் வாக்கிறந் தமுதம் மயிர்க்கா றோறும், தேக்கிடச் செய்தனன் என்றருளினார். உடம்பின் அகத்தேயிருந்து நிரம்பி வரும் அமுதம் அதன்மேலுள்ள மயிர்க் காலுக்குமேற் செல்லுமிடம் பிறிதின்மையின் மயிர்க்காலளவில் வந்து நிறைய என்றுரைத்தருளினார். தேக்கிடநிறைய : தேக்கல் நிறைதல் என்பர் பிங்கலந் தையுள். தழை பெயரினடியாகப் பிறந்த வினை; தழை - இலை; மரத்தின்கண் இலைகள் நிறைந்திருந்தாற்போல, உடம்பின்கண் ஊண்செறிந்திருத்தலின் ஊன்தழை குரம்பை என்றார். குரம்பை - குடில்; திவாகரம். குடில் போறலின் இவ்வுடம் புங் குரம்பை எனப்பட்டது. இறைவன் தனது உடம்பைத் தானிருக்கு மிடமாகக் கொண்டமை கண்டு அடிகள் நாயுடல் அகத்தே, ழுரம்பை கொண்டு என்று கூறினார். இனியதேன் போன்ற பேரின்பத்தை உடம்பெங்கும் இறைவன் நிறைத்தான் என்றவழிக் கற்போல் வலிதாய என்புகளினூடு அதனை நிறைக்குமாறு யாங்ஙனம் என்று ஐயுறாமைப் பொருட்டு ஏற்புத் துளைதொறும் ஏற்றினன் என்றருளிச் செய்தார். என்பினூடு மிகக் குறுகிய சிறு சிறு புரைகள் உளவென்பது அதன் அடியிற் காணப்படும், அவற்றின் வாயில்களான சிறு சிறு துளைகளால் அறியப்படும். இப்பேரின்ப ஒழுக்கு இதற்குமுன் கண்டறியப்படாத தொன்றாகலின் அற்புதமான அமுததாரை என்றார். தாரை என்பது தாரா என்னும் வடசொற்றிரிபு; தாரை - ஒழுக்கு. என்பு என்னும் மென்றொடர்மொழிக் குற்றியலுகர ஈறாய் நின்றசொல் மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம், வல்லொற் றிறுதி கிளையொற் றாகும் என்பதனால் ஏற்பு (தொல்காப்பியம் எழுத்து 414) என்றாயிற்று. தொள் என்னும் முதனிலையிற் பிறந்த தொளை என்னுஞ் சொல் துளை எனத் திரிந்தது. அன்பால் இடையறா துருகும் ஓர் உள்ளத்தையே முதலாக எடுத்து அதனால் ஓர் உருச் செய்தால் அது நொய்யதாய் உருகும் இயல்பிற்றாயே யிருக்குமாதலால், அங்ஙனமாகிய தமது யாக்கைக்கு உருகுவ, துள்ளங் கொண்டோ ருருச் செய்தாங்கு என உவமையெடுத்துக் கூறினார். இஃது இல்பொருளுவமை. அள் ஊறு ஆக்கை - செறிந்து ஊறும் உடம்பு; செறிந்து ஊறுதலாவது ஒவ்வோரிடத்து ஒவ்வொரு பகுதியாய் உருகாது எல்லாம் அடைய உருகுதல். அள் செறிவு, நெருக்கம் எனப் பொருள் படுதலைத் திவாகரத்துட் காண்க; அள் என்னும் முதனிலையே அள்ளி என வினையெச்சமாய் நின்றாற்போற் பொருய் பயந்தது; இவ்வாறு வருதல் வரிப்புனை பந்து என்புழியுங் (திருமுருகாற்றுப்படை) காண்க. முற்றிய கரும்பினையும் விளங்கனியையும் விரும்பி யுண்ணுங் களிற்றியானை அவ்வுண்டற் சுவையின்கண் நிகழும் இன்பத்திற் செம்மாந்திருத்தல் போல, அடிகளையும் இறைவன் பேரின்ப நுகர்ச்சிக்கண் இறுமாந்திருக்க வைத்தமையின் ஒள்ளிய, கன்னற் கனிதேர்களிறெனக் கடைமுறை, என்னையும் இருப்பதாக்கினன் என்றருளிச் செய்தார். கன்னற் கனிதேர் என்பதில் தேர்தல் கொள்ளுதல் எனப் பொருள்படுதலைப் பிங்கலந்தையிற் காண்க; ஈண்டு உணவு கொள்ளுதல். எம்பெருமான் எளியனேன் மாட்டும் வைத்த பேரருட்டிறத்தால், அவ்வருளோடு பேரின்பமும் என்னுள்ளே நிறைய வைத்தான் என்பது குறிப்பிப்பார் என்னிற் கருணை வான்றேன் கலக்க, அருளோடு பராவமுதாக்கினன் என்றருளிச் செய்தார். இறைவன் தனது பேரின்பத்தை உயிர் கட்கு வழங்கவேண்டுமென்று கொண்ட பேரருட் பெருக்கால் அவர் தமக்கு அவ்வின்பப் பேறு வாய்த்தலின், அப்பேற்றிற்குமுன் அவர்பாற் பதிந்த அருளினையும் அதன் பின் அவர் பெற்ற இன்பத்தினையும் அம்முறையே வைத்து ஈண்டு ஓதியருளினார் என்க. வான்தேன் - தூயதேன்; வால் என்னுஞ் சொல் வான் எனத் திரிந்தது; அங்ஙனந் திரிந்து நின்றுழியும் இச்சொல் அப்பொருள் பயத்தல் வான்றுகள் என்பதன்கட் காண்க. (பரிபாடல் 12) பரா அமுது என்பதில் பரா எனுஞ்சொல் மிகுதிப் பொருள் தவருவதொரு வடமொழி. ஈண்டு மிக்க அமுதென்றத பேரின்பத்தை. இங்ஙனமெல்லாம் எளிவந்து தோன்றி அருளும் இன்பமும் வழங்கிய பெருமான், கடவுளரிற் சிறந்த நான்முகன் திருமால் என்னும் இருவருங் கூட அறிய இயலாத பெருந் தகைமையான் என்பது தெரிப்பார் பிரமன்மா லறியாப் பெற்றியோன் என்று கூறி முடித்தார்: உளையா அன்பென் புருக ஓலமிட்டு என்னும் நூற்றைம்பதாம். அடிதுவங்கி இவ்வகவலின் ஈற்றடிகாறும், இறைவன் தமக்கு வழங்கிய பேரின்ப வயமாய் நின்று அடிகள் அவ்வின்பத்தினியல்பை ஒருவாற்றானாயினும் புலப்படுத் துரைப்பான் வேண்டிப் பெரிதும் முயன்று வருந்திப் பாடுமாறும், அங்ஙனம் புலப்படுத்துரைத்தற்குச் சொற்கள் ஏற்ற கருவியாகாமையின் இடையிடையே இவ்வகவலின் அடிகள் முச்சீராயும் இருசீராயுஞ் சுருங்கித் தெற்றுண்டு நடக்குமாறும் உற்றுணர்ந்து கொள்க. இனி, இத்திருவகவற்கண் உட்பகுதிகளின் பொருளியைபு ஒரு சிறிது காட்டுதும் : நம்மனோரது சிற்றறிவினால் அளக்கலாகாப் பேரளவினவாகிய அண்டங்களெல்லாம் இறைவன்றன் அருள்வெறிப் பரப்பினும் சிற்றணுக்களை யொப்பத் தோன்றுதலின், அவன்றன் பேரளவு சொல்லுக்கும் மனத்திற்கும் எட்டா இயல்பிற்றென முதல் ஆறடிகளானும் உணர்த்தி யருளினார். இனி, அவ்வண்டங்களிற் பெரியனாயினும், அவ்வண்டங் களுக்குத் தலைவர்களாக நிறுத்தப்பட்ட கடவுளராகிய மிக நுண்ணிய உயிர்களானும் அறியப்படாவாறு அவரினும் நுண்ணியனாயிருந்து அவரை யெல்லாம் இயக்குதலின் இறைவன் நுண்ணியவற்றுள் எல்லாம் நுண்ணியனா மென்பது ஏழாம் அடிமுதற் பன்னிரண்டாம் அடிகாறும் வைத்துரைத்தார். இனி, அண்டத்தலைவர்களாகத் தன்னால் நிறுத்தப்பட்ட நான்முகன் திருமால் முதலான கடவுளரும், அறுவகைச் சமயத்தோர்க்கும் வீடுபேறாய் நின்ற வானவர் கூட்டங்களும் எல்லா ஆற்றலும் எல்லா முதன்மையும் ஒருங்குடைய இறைவனாகிய தன்னை யின்றித் தாமாகவே தந்தொழில் நடத்த வல்லுநர் அல்லராகலானும், அவரெல்லாம் எல்லாம் வல்ல முழுமுதற் பொருளாகிய தன்னை நோக்க ஞாயிற்றின் முற் புழுப் போல்வ ராகலானும், நுண்ணியவற்றுளெல்லாம் நுண்ணிய இறைவனது மதுகைத்திறம் பதின் மூன்றாம் அடிமுதற் பத்தொன்பதாம் அடிகாறும் வைத்து விளக்கியருளினார். இனி, அண்டத் தலைவரும் அவரோ டொப்பாருமான மிக நுண்ணிய உயிர்களேயன்றி, அவரினுந் தாழ்ந்த கரத்தினராய் இம்மண்ணுலகத்தில் உலாவுஞ் சிற்றுயிர்களும், அவற்றின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாச் சிறப்பினவாகிய ஞாயிறு திங்கள் வான் வளி தீ நிர் மண் முதலிய பொருள்களும் முறையே பயன் பெறுதலும் பயன்படுதலும் உடையவாமாறு அவற்றைத் தொழிற்படுத்துவோனும் இறைவனேயாவ னென்பது இருபதாம் அடிமுதல் இருபத்தெட்டாம் அடிகாறும் வைத்து அறிவுறுத்தருளினார். இப்பகுதிக்கண் ஏனைச் சிற்றுயிர்களை எடுத்து ஓதிற்றிலரா லெனின்; சிற்றுயிர்கட்கு வீடுபேறாய் நின்ற விண்ணோர் கூட்டங்களே இறைவனை நோக்கப் புழுவாய் ஒழிந்தன ராயின், ஏனை இச்சிற்றுயிர்கள் இறைவன் முன் எத்துணையராம்! அதனானுங், கறங்கோலைப் போல இந்நிலத் தின் மீதும் நிலைபெறாது பிறப்பு இறப்புக்களிற் பட்டுச் சுழலு தலானும் இச்சிற்றுயிர்களை ஈண்டுக் கிளந்து கூறற்கு அமர்ந்தி லராய், அவர்க்குப் பயன்பட்ட ஊழிகாலம் வரையில் நிலை பெற்றியங்கும் ஞாயிறு திங்கள் முதலியவற்றைக் கிளந்து கூறி அம்முகத்தால் அச்சிற்றுயிர்களை உய்த்துணர வைத்தார். என்னை? பயன்படும் பொருள்களைக் கூறியக்கால், அவற்றின் பயன் பெறுவார் தாமே பெறப்படுவராகலி னென்பது. இவ்வாற்றால் மிக நுண்ணிய வானோரினுந் தாழ்ந்த சிற்றுயிர்களும், அவர்க்குப் பயன்படும் பொருள்களினியக்கமும் மேலவாற்றின் பின் வைத்து ஓதுதற்கு இயைபுடையவாதல் கண்டுகொள்க. இனி, அளக்கலாகா இயல்புகளுடைய இறைவனை ஒருவாற்றானும் உணர்தலும் உரைத்தலும் மாட்டாராயின் அவன்மாட்டுப் பேரன்புடையரானார் அம்மாட்டாமையினை ஒரு சிறிதும் பொறாராகலின், அவன் அன்பரல்லார்க்கு அவற்றாற் சேயனாயும், அன்பின் மிக்கார்க்கு எளியனாயும் நின்று அருளும் முறைமைகளை இருபத்தொன்பதாம் அடிமுதல் அறுபத்து நான்காம் அடிகாறும் வைத்துரைத் தருளினார். இனி, அன்பரல்லாரால் ஒருவாற்றானும் உணர்தற்கரிய முதல்வன் தன்மாட்டு அன்பால் உருகும் அடியவர் தனதுண்மை யுருவினை எளிதிற் கண்டு இன்புறுதற்பொருட்டு மாதொரு கூறனாய்த் தோன்று மாற்றினை அறுபத்து நான்காம் அடியிற் றெளிவுற எடுத்துக் கூறி, அங்ஙனம் அன்பர்க்கு எளியனாய்த் தோன்றிய இறைவன் திருவுருவினைக் கண்டவளவானே பேரின்பமாகிய பெருங்கடல் பேரின்ப முகிலாய்க் கிளர்ந் தெழுந்து தமக்குந் தம்மோடொருங்கிருந்த தொண்டர்க்கும் நுகர்பொருளாமாறு பேரின்ப வெள்ளத்தினைப் பொழிந்த பெரும்பான்மையினை அறுபத்தைந்தாம் அடிமுதற் றொண் ணூற்றைந்தாம் அடிகாறும் அடிகள் விரித்துரைத்த திறம் பெரிதும் வனப்புடைத்தாதல் கண்டுகொள்க. இப் பகுதியில், மழை பொழியுங்காற் படுந் தோற்றங்கள் உலக இயற்கையிற் காணுமாறே வைத்துரைக்கப்பட்ட நுட்பஞ் சாலவும் வியக்கற் பாலதாம் என்க. இனி, அவ்வாறு தமக்குந் தம்மோடிருந்த தொண்டர்க்கும் எளிவந்து தோன்றிப் பேரின்ப வெள்ளத்தை வழங்கிய வள்ளலை வாழ்த்துதற்கு அவா எழுதலின், தொண்ணூற்றைந் தாம் அடி முதல் நூற்றைந்தாம் அடிகாறும் தாம் வேண்டிய வாழ்த்துரைகளை எடுத்துக் கூறினார். பேரிரக்கமுடைய ஒரு வள்ளல்பாற் பெறுதற்கரியதொரு பொருளினைப் பெற்ற வறியர் அது பெற்ற வளவனே மகிழ்ச்சி மிக்கு அவ்வள்ளலை வாழ்த்துதல் இயற்கையாகக் காணப்படுதலிற், றமக்குப் பேரின் பத்தை வழங்கிய முதற்பெரு வள்ளலை கண்டு அடிகள் வாழ்த்தியது பொருத்தமேயாதல் காண்க. இனி, பெறுதற்கரிய தொன்று பெற்றார் அதனை வழங்கிய வள்ளலை வாழ்த்துதன்மட்டின் அமையாது, அதனையடுத்து அவனைப் போற்றுதலுஞ் செய்தல் மரபாய்ப் போதரக் காண்டலின் நூற்றாயிரம் அடி துவங்கி நூற்றிருபத்தொன்றாம் அடிகாறும் இறைவற்கு வணக்க வுரைகளும் மொழிந்தருளினார். இனி, இறைவன் எளிவந்து தோன்றித் தமக்கு வழங்கிய பேரின்பந் தாம் தமது யாக்கையோடிருந்து தாங்கமாட்டா மையினை நூற்றிருபத்திரண்டு இருபத்துமூன்றாம் அடிகளிற் சுருங்கக் கூறிப், பின்னும் அதனை விரித்துரைத்தற்கு வேட்கை மேன் மேல் எழுதலின், நான்முகன் முதலான கடவுளர்க் கெல்லாம் ஒளித்த திருக் கோலத்தின் அருமையினை நூற்றிருபத்து நான்காம் அடிமுதல் நூற்று நாற்பத்தைந்தாம் அடிகாறும் வைத்து வகுத்துக் கூறி, அதன்பின் அத்திருக் கோலம் தமக்கு எளிவந்து தோன்றிய பான்மையினை நூற்று நாற்பத்தாறாம் அடியிலிருந்து நாற்பத்தொன்பதாம் அடி வரையில் வைத்து விளக்கி, அவ் வருளுருவக் காட்சியிலிருந்து கிளர்ந்து தம்மை விழுங்கிய பேரின்பத்தின் பெற்றியினையும் அதனாற் றாம் ஆயவாற்றினையும் நூற்றைம்பதாம் அடிமுதல் நூற்றெண்பதாம் அடியாகிய இறுதிவரையும் தொடுத்து மொழிந்தருளினா ரென்பது. இத் திருவகவல் இருசீர் முச்சீர் அடிகளால் இடை யிடையே சுருங்கி வந்தது; ஆசிரியர் தொல்காப்பியனார் இன்னோரன்னவற்றைக் குட்டவடியால் வந்த ஆசிரியம் என்பர்; என்னை? மண்டிலங் குட்டம் என்றிவை இரண்டுஞ், செந்தூக் கியல என்மனார் புலவர் என்றாராகலின் (தொல்காப்பியம் செய்யுளியல் 117) இதனுட் செந்தூக்கு என்றது ஆசிரியத்தை பிற்காலத்தார் இங்ஙனம் வரும் ஆசிரியத்தை இணைக்குற ளாசிரியப்பா என்று வழங்கினர். (யாப்பருங்கலக் காரிகை செய்யுளியல் 8) நான்காவது அகவல் போற்றித் திருவகவல் சகத்தின் உற்பத்தி இத் திருவகவலில், வணக்கம் எனப் பொருள்படும் போற்றி எனுஞ் சொற் பெரு வரவிற்றாய்க் காணப்படுதலின் இஃது அச் சொற்பற்றிப் போற்றித் திருவகவல் என்னும் பெயர்த்தாயிற்று. இதன்கண் உயிர்கள் உடம்புகளிற் பொருந்தித் தோன்றுமாறு முதற்கண் வகுத்துரைக்கப்படுதலின் இத் திருவகவற் கருத்துச் சகத்தின் உற்பத்தி எனப் பழைய சான்றோராற் குறித்து வைக்கப்பட்டது. ஈண்டுச் சகம் என்றது உலகத்துள்ள உயிர்களை. நான்முகன் முதலா வானவர் தொழுதெழ ஈரடி யாலே மூவுல களந்து நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப் போற்றிசெய் கதிர்முடித் திருநெடுமால் அன்று 5 அடிமுடி யறியும் ஆதர வதனிற் கடுமுரண் ஏனம் ஆகிமுன் கலந்து ஏழ்தலம் உருவ இடந்துபின் எய்த்து ஊழி முதல்வ சயசய என்று வழுத்தியுங் காணா மலரடி இணைகள் 10 வழுத்துதற் கெளிதாய் வார்கடல் உலகினில் நான்முகன் முதல் ஆ வானவர் தொழுது எழ - நான்கு திருமுகங்களையுடைய பிரமன் முதலாக வானுலகத்துள்ள கடவுளர் பணிந்து எழாநிற்க, ஈர் அடியாலே மூ உலகு அளந்து - இரண்டு திருவடிகளாலே மூன்று உலகங்களையும் நீட்டி யளந்து, நால்திசை முனிவரும் ஐம்புலன் மலரப் போற்ற செய் - நான்கு திக்கிலுள்ள முனிவர்களும் ஐம்புலன்களும் மகிழ்ச்சி யால் அலரும்படி வணங்குதலைச் செய்யாநிற்கும். கதிர்முடித் திருநெடுமால் - சுடர் விரியும் முடியினையுடைய அழகிய நீண்ட மால், அன்று அடிமுடி அறியும் ஆதரவு அதனில் - நான்முகனோடு மாறுபட்ட அந்நாளில் திருவடியின் முடிவினை அறியவேண்டும் விருப்பத்தினால், கடுமுரண் ஏனம் ஆகி - மிக்க வலியினையுடைய பன்றியாக வடிவெடுத்து, முன் கலந்து ஏழ்தலம் உருவ இடத்து - முற்பட்டுக் கீழ் ஏழ் உலகங்களையும் ஊடுருவப் பிளந்து, பின் எய்த்து - பின் இளைப்புற்று, ஊழி முதல்வ சயசய என்று - ஊழிக் காலத்தும் முதல்வராய் நிற்கும் தேவரீருக்கே வெற்றி வெற்றி என்று சொல்லி, வழுத்தியும் காணா - பரவியுங் காணாத, மலர் அடி இணைகள் - தாமரை மலர் போன்ற திருவடிகள் இரண்டும், வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில் என்பதை வார்கடல் உலகினில் வாழ்த்துதற்கு எளிதாய் என மாற்றி நெடிய கடல் சூழ்ந்த நில வுலகத்தின் கண்ணே பரவுதற்கு எளியவாம்படி என்று பொருளுரைக்க. இவ் வடியில் நின்ற எளிதாய் என்னும் வினையெச்சம் முன்னே எழுபத்தைந்தாம் அடியிலுள்ள வந்து என்பதில் வருதல் என்னும் வினையைக் கொண்டு முடிந்தது. இவ்வாறு ஒருவினை இடைவிட்டு நீளச் சென்று தான் கொள்ளும் வினையைக் கொண்டு முடிதல் மாட்டு என்னும் உறுப்பாம் என்பது. என்னை? அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் இயன்று பொருண் முடியத் தந்தனர் உணர்த்தல் மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின் என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாராகலின். இவ் வினை யெச்சத்திற்கும் அது கொண்டு முடியும் வினைக்கும் இடையே யானைமுதலா என்பது துவங்கிக் கனவிலும் நினையாது என்ப தீறாக வந்தன வெல்லாம் இடைநிலை ஆயின. இங்ஙனம் வருதலைத் தத்தம் எச்சமொடு சிவணுங் குறிப்பின் எச்சொல் ஆயினும் இடைநிலை வரையார் என்னுஞ் சூத்திரத்தான் (தொல்காப்பியம் வினையியல் 40) உணர்ந்து கொள்க. திருமால் ஈரடியால் மூவுலகளந்த வரலாறு வான்மீகி இராமாயணத்திற் கூறப்பட்டது; அது வருமாறு: விசுவா மித்திரர் இராமனை நோக்கிச் சொல்லுகிறார்: தடந்தோளி னையுடைய இராம, பெருந் தவத்தினரும் தேவர்களாற் றொழப் படுவோருமான விஷ்ணு பெருந்தவம் புரிந்து உள்ளத்தை ஒருக்குதற் பொருட்டு இவ்விடத்தில் உறைந்தனர். இராமனே இது பெரியோனான வாமன முனிவனது துறவாசிரமமாகும்; இதன்கண் அப்பெருந் தவத்தோன் தாம் விரும்பிய பேற்றை அடைந்தமையான இது சித்தாசிரமம் எனப் பெயர் பெற லாயிற்று. முன்னொருகால், விரோசனன் மகனான பலி என்பவன் தேவர்கட்குத் தலைவனான இந்திரனை வென்ற பின் மூவுலகங்களையும் அரசாளும் உரிமை பெற்றுத் தன் ஆற்றலின் பெருக்கால் மயங்கினான்: அதன்பிற் பலி ஒரு பெருவேள்வி யாற்றியபோது இந்திரனும் மற்றைத் தேவர்களும் அச்சமுற்று இத்துறவாசிரமத்தில் உறைந்த விஷ்ணுவை நோக்கி இவ்வாறு கூறினார்: ஓ விஷ்ணுவே, விரோசனன் மகனான வலிய பலி என்பவன் இப்போது வேள்வி ஆற்றுகின்றான்; அசுரர்களுக்குத் தலைவனாய்ச் செழித்தோங்கும் அவன் எல்லாரும் வேண்டியன வெல்லாம் வேண்டியபடி கொடுக்கின்றான். எந்தத் திக்கிலிருந்து வரும் இரவலரும் எவ்வெவற்றை விரும்பிக் கேட்டாலும் அவ்வற்றை யெல்லாந் தக்கவாறாய் அவர்கட்கு வழங்குகின்றான். ஓ விஷ்ணுவே, நீரும் தேவர்கள் நன்மையின் பொருட்டு மாயமாய் ஒரு குறுகிய வடிவெடுத்து எங்கட்குப் பெரியதொரு நன்மையை விளைத்தல் வேண்டும் ஓ இராமா, இதே பொழுதில் தீயைப் போல் விளங்குபவரும் பேரொளியால் திகழ்பவருமான காசியபர் தேவ ஆண்டில் ஆயிரம் ஆண்டுகள் ஓர் அருந்தவம் இயற்றி முடித்து அதிதியுடன் போந்து வரந்தரும் மதுசூதன னுடைய புகழ்களை எடுத்தோதுவாரானார்; தவத்தின் சார மாயும், தவத்தின் தொகுதியாயும், தவத்தின் உருவாயும் தவத்தின் செல்வமாயும் உள்ள புருடரிற் சிறந்தோனே, நின்னை யான் தவத்தின் மிகுதியாற் காணப் பெறுகின்றேன். பெருமானே, நினதுடம்பினிடத்தே இவ்வுலகம் முழுதுங் காண்கின்றேன்; நீர் தொடக்கம் இல்லாதீர்; சொல்லுக்கு அடங்காதீர்; உம்மை யான் அடைக்கலமாகப் புகுந்தேன்: அதனால் அரியானவர் மகிழ்ந்து களங்கம் அற்ற காசியபரை நோக்கிக் கூறுவர்: ஒரு வரத்தைக் கேள்; உனக்கு நன்மை உண்டாகுக; நீ வரம்பெறத் தக்கவனாக என்னாற் கருதப் படுகின்றாய்: அவர் கூறிய இச்சொற்களைக் கேட்டு, மரீசியின் மகனான காசியபர் கூறுவார்: பகவானே, அதிதிக்கும் எனக்கும் நீர் மகனாக வருதல் வேண்டும். அசுரரைக் கொல்வோனே, சக்கரனுக்கு இளைய தம்பியாக நீர் வருதல் வேண்டும். தளர்வுற்று வருந்துத் தேவர்களுக்கு நீர் உதவி புரிதல் வேண்டும். பேரொளியினரான விஷ்ணுவானவர் துறவியின் கோலமுடைய ராய்க் கரகம் ஏந்தித் தலையின் உச்சியிற் குடுமி யோடுங் குடை நீழலில் அதிதிக்கு அங்ஙனமே புதல்வனாய்ப் பிறந்தனர். இவ்வாறு தேவர்களால் வழுத்தப்பட்டு விஷ்ணு வானவர் குறள் வடிவெடுத்து, விரோசனன் மகனை அணுகித் தன்னடி யால் மூன்றடி இடம் இரந்தனர். மூன்றடியிடம் பெற்றுக் கொண்ட பின் திரிவிக்கிரமனான விஷ்ணு வியக்கத் தக்கதோர் உருவெடுத்து மூன்றடிகளால் உலகங்களைக் கைப்பற்றிக் கொண்டார். எங்ஙனமென்றால், ஓரடியால் நிலம் முழுமையும், இரண்டாம் அடியால் வளி மண்டிலத்தையும், மூன்றாம் அடியால் வான் உலகத்தையும், ஓ இராகவனே, அவர் கவர்ந்து கொண்டார். அதன்பின் அசுரனாகிய பலிக்குப் பாதாளத்தில் ஓர் இருப்பிடத்தை வகுத்துக் கொடுத்து, அவற்குப் பகைவனை நீக்கிய பின்னர், இந்திரற்கு மூவுலக ஆட்சியினையுந் தந்தனர்.(வான்மீகி இராமாயணம் 1,31) அவ்வாறு திருமால் மூவுலகு அளந்த ஞான்று நான்முகன் முதலான கடவுளரும், முனிவரது தொழுது வணங்கினமையின் வானவர் தொழுதெழ எனவும், நாற்றிசை முனிவரும் போற்றிசெய் எனவும் அருளிச்செய்தார். இனி, அங்ஙனங் கடவுளரானும் முனிவரரானும் தொழப் படும் அத்துணைப் பெருமைவாய்ந்த திருமாலும், இறைவன் அனற்பிழம்பு வடிவாய்த் தமதெதிரே தோன்றிய ஞான்று அவ்வடிவின் அடிக்கண்முடிவைக் காண்பான வேண்டி ஒரு பன்றி வடிவெடுத்துக் கீழ் ஏழ் உலகங்களையும் ஊடுருவப் பிளந்து சென்றும் அதன் முடிவறியப் படாமையின் இளைப் புற்று இறைவனை வழுத்தினாரென எங்கும் நிறைந்த சிவத்தின் எல்லையற்ற தன்மை எடுத்தோதினார். இங்ஙனந் திருமால் இறைவன்றன் திருவடி தேடிய வரலாறு பிற்காலத்திற் பாரதநூல் தமிழிற் பாடிய வில்லிபுத்தூராழ்வாரும், ஓர்ஏனந் தனைத்தேட ஒளித்தருளும் இருபாதத் தொருவன் அந்தப், போர்ஏனந் தனைத்தேடிக் கணங்களொடும் புறப்பட்டான் புவனம் என்னும், சீர்ஏனல் வளர்கிரிக்குத் தெய்வதமாங் குழவியையுஞ் செங்கை ஏந்திப் பார்ஏனை யுலகனைத்தும் ஈன்றாளும் பரிவுடனே பதிபின் வந்தாள் என நன்கெடுத்துக் கூறினார். இனித் திருமால் இறைவன்றன் அடிமுடி தேடிய வரலாறு இலிங்கபுராணத்தில் விரித்துக் கூறப்பட்டிருத்தலின் அதனை ஈண்டு மொழிபெயர்த்துக் காட்டுதும். அது வருமாறு: பிதா மகனான நான்முகள் கூறுவான் : பிரதானம் இலிங்கமென்று சொல்லப்படுகின்றது. பரமேசுவரன் இலிங்கி என்று சொல்லப் படுகின்றனன். ஓ தேவர்களே, என்னையும் விஷ்ணுவையும் பாதுகாத்தற் பொருட்டாக அது கடலினின்றும் எழுந்தது. சனலோகம் அளவும் வைமாநிகசிருட்டி இருடிகளோடும் நடைபெற்ற காலத்தில், திதிகாலம் முடிவுபெற்றவுடனே, நான்கு ஊழிகளும் ஆயிரம் முறையாக வந்து முடிய எல்லாம் ஒடுங்கிச் சத்தியலோகத்திற்குப் போனவுடனே, அசையாப் பொருள்க ளெல்லாம் மழையின்மையால் வற்றி வறண்டு போக, விலங்கு களும் மக்களும் மரங்களும் பேய்களும் ஊன்றின்னுங் கூளிகளும் கந்தருவரும் முறைமுறையே ஞாயிற்றின் கதிர்களால் எரிக்கப் பட்ட பொழுது பிரமனாகிய யான் இறுதியில் எல்லாவற்றோ டொப்ப ஆட்சியிழந்த நிலைமையை அடைந்தேன். ஒன்றாயுள்ள கடலானது மிகவுங் கொடுமையான இருளால் எங்குங் கவரப்பட்டிருந்தமையின் களங்கம் அற்றவனும், அமைதி யுடையோனும், ஆயிரந் தலைகளுடை யோனும், உலகத்திற்கு உயிராவோனும் ஆயிரக்கண்களும், ஆயிரங் கால்களும், ஆயிரங் கைகளும் உடையோனும், எல்லாம் அறிபவனும் எல்லாத் தேவர்களின் உயிர்வாழ்க்கைக்கு வாயிலாவோனும், இராசத குணத்தை யுடைமையால் தானே இரணியகருப்ப னாவோனும், தமோகுணத்தை யுடைமையாற் றானே சங்கர னாவோனும், சத்துவகுணத்தை யுடைமையால் எங்கும் நிறைந்த விஷ்ணு வாவோனும், எல்லா உயிர்களிலும் உண்மையால் மகேசுவரன் ஆவோனும், காலத்தி னியல்பை யுடையோனும், காலத்தை மையமாக உடையோனும், வெண்மையுங் கருமையும் உடையோனும், முக்குணங்களிற் றீர்ந்தோனும், எல்லாவற்றினுயிராய்ச் சத்து அசத்துக்களின் மயனாய் உள்ளோனும் நடந்தோளினனும் ஆன நாராயணன் தவ நினைவில் ஆழ்ந்த உள்ளத்தினனாய் நீர்மேற் றுயின்றான். தாமரைக் கண்ணனாகிய அக்கடவுள் இங்ஙனந் துயிலும் நிலைமையிலுள்ளதைக் கண்ட அவனது மாயத்தால் மயக்கப் பட்டேனாய், அவனை என் கையாற் றொட்டு நீ யார்? சொல் என்று விரைந்து கேட்டேன். எனது கையால் வல்லென்று கடுமையாகத் தட்டப்படுதலும் தனது பாம்பணையினின்றும் எழுந்து, அடக்கமுடன் சிறிதமர்ந்து, தாமரை மலர்போற் றூய கண்களையுடை அத்தேவன் தூக்க மயக்கத்தோடும் என்னை நிமிர்ந்து நோக்கினன். ஒளியாற் சூழப்பட்ட பகவானான அரி, யான் தன்னெதிரில் நிற்பதைக் காண்டலும் எழுந்து இனிது முறுவலித்துக் கொண்டே நின்வருகை நன்றாகுக, நின்வருகை நன்றாகுக, என் மகவாகிய சிறந்த பிதாமகனே என்று என்னை நோக்கி மொழிந்தனர். நகையோடு அவர் மொழிந்த இச் சொற்களைக் கேட்டு, ஓ தேவர்களே, எனக்கு இராசதத்தால் எரிச்சல் உண்டாகவே யான் சநார்த்தனனை நோக்கி ஓ பாவமற்ற தேவனே, படைப்பிற்குங் காப்பிற்குங் காரணனாயும், எல்லா வுலகங்களையுந் தோற்று விப்போனாயும், பிரகிருதியை இயக்குவோனாயும் என்றும் உள்ள பிறவாத விஷ்ணுவாயும், தாமரைக் கண்ணனாயும், எல்லாவற்றையும் படைத்துக் காத்து அவற்றின் உயிராயும் உள்ள என்னை ஓர் ஆசிரியன் தன் மாணாக்கனை நோக்கிப் பேசுமாறுபோல உள்ளே நகைத்துக் கொண்டு மகவே மகவே என்று அழைக்கின்றனையா? நீ ஏன் என்னை அவ்வளவு மடமையோடும் அங்ஙனம் அழைக்கின்றனை? விரைவிற் சொல் என்று கூறினேன். அதற்கவர் யானே உலகங்களைப் படைத்துக் காத்து அழிப்பவன் என்று தெரி; அழிவில்லாத என் உடம்பினின்றும் நீ பிறந்தாய். உலகிற்குத் தலைவனும், வலிமை மிக்க நாராயணனும், புருடனும், பலரால் வழுத்தப்பட்டுப் பலராற் புகழப்படும் பரமான்மாவும் விஷ்ணுவும் அழிவில்லாத வனும், தலைவனும் உலகிற்குப் பிறப்பிடமும் வாயிலும் ஆவோனும் ஆகிய என்னை நீ மறந்திருக்கின்றனை. இதில் உன்னுடைய குற்றம் ஒன்றும் இல்லை. இஃது எனது மாயையால் உண்டாயது. ஓ நான்முகக் கடவுளே, யான் சொல்லும் உண்மையைக் கேள்: யானே எல்லாக் கடவுளருக்குந் தலைவன்; யானே படைப்பவன் காப்பவன் அழிப்பவன்; எங்கும் நிறைந்த எனக்கு நிகராவார் எவரும் இலர். ஓ பிதா மகனே, யானே மேலான பிரமம், மேலான மெய்ம்மை, மேலான ஒளி, மேலான ஆன்மா, எங்கும் நிறைந்தவன், இவ்வுலகின்கட் காணப்பட்ட அல்லது கேட்கப்பட்ட அசையும் பொருள் அசையாப் பொருளாகிய எல்லாம் என்னிலிருந்தே உண்டாயின வென்று, ஓ நான்முகனே தெரியக் கடவாய். இருபத்துநான்கு தத்துவங்களால் ஆக்கப் பட்டனவாய் அறியப்படும் எவ்வெப் பொருளும் பண்டு தொட்டே என்னாற் படைக்கப்பட்டன; முடிவான நிலையில் என்றும் உள்ளனவாகிய அணுக்கள் ஒன்றுசேர்க்கப்பட்டன; எனது சினத்தினின்றும் உயிர்கள் தோன்றிப் படைக்கப்பட்டன. எனது மன நிறைவினின்று நீயும் பல அண்ட கோளங்களும் விளையாட்டாகப் படைக்கப்பட்டன. புத்திதத்துவமும் என்னால் விளையாட்டாகவே தோற்றுவிக்கப்பட்டது; அதன்பின் அதிலிருந்து மூவகை அகங்காரதத்துவமும், அவற்றிலிருந்து ஐந்து தன்மாத்திரைகளும் மனமும் ஞானேந்திரிய கன்மேந்திரியங்களும் வான்முதலிய ஐந்து பூதங்களும், ஐம்பூதக்கலப்பிலிருந்து பல பொருள்களும் என்னால் விளையாட்டாகவே தோற்றுவிக்கப்பட்டன. அவரும் யானும் அங்ஙனம் பேசவே, பெருஞ் சினத்தாற் பகைமை கிளர, எம்மிருவர்க்கும் அவ்வூழி முடிவான கடலினிடையே அஞ்சத் தக்க தொரு பெரும்போர் மூண்டது. அந்நேரத்தில், எனது போரினை நிறுத்தி எமக்கு அறிவுறுத்தும் பொருட்டு, எல்லாப் பொருள்கட்கும் பிறப்பிடமாய், வரம்பு குறிக்கப் படாததாய், உரையளவுக் கெட்டாததாய், உவமையற்றதாய், முதல் நடு ஈறு இல்லாததாய், வளர்தலுங் குறைதலும் மாட்டாததாய், ஊழிமுடிவிற் பற்றி எரியும் நூறு அண்டங்களின் நெருப்பை ஒப்பதாய்., ஆயிரம் அனற் கொழுந்து வளையங் களாற் சூழப்பட்டதாய்த் திகழும் ஒளி வடிவானதோர் இலிங்கம் எமக்கெதிரே தோன்றியது. இவ்வாயிரஞ் சுடர்களையுங் கண்டு திகைப்புற்ற தேவனான அரி அங்ஙனமே திகைப்பெய்திய என்னை நோக்கி இவ்வனற் பிழம்பின் வரலாற்றை இவ்விடத்திலேயே ஆராயக் கடவம். ஒப்பற்ற இவ்வனற்றூணின் அடியைக் காண்டற்கு யான் கீழே செல்கின்றேன். நீ இதன் முடியைக் காண்டற்க விரைவாய் விடாமல் மேலே செல்லல் வேண்டும் என்று கூறினார். அங்ஙனம் பேசியவுடன் உலகுருவான திருமால் ஒரு பன்றிவடி வெடுத்தார். யானும் உடனே ஓர் அன்னப் புள்ளின் வடிவை எடுத்தேன் அக்காலந் தொட்டு மக்கள் என்னை அன்னம் என்றழைக்கின்றார்கள். ஏனெனில் அன்னமே விராட்டு. எவர் என்னை அன்னம், அன்னம் என்றழைக்கின்ற னரோ அவர் அன்னம் (ஹம்சம்) ஆகின்றனர். தூய வெண்ணிறத்தையும், நெருப்புப் போன்ற கண்களையும் எல்லாப் பக்கங்களிலும் சிறகுகளையும் உடையோனாய் எண்ணமுங் காற்றும் போல் விரைந்து நான் மேலே போயினேன். பத்து யோசனை அகலமும் நூறு யோசனை நிகளமும் உள்ள ஒரு நீல மைக்குவியல் போன்றதாய், மேரு மலையைப் போற் பருமனுள்ள தாய்க், கூரிய வெண்மருப்புகளுடையதாய், ஊழிக்காலத்திறுதியிற் றோன்றுந் தெறுகதிர்போல் ஒளி மிக்கதாய், நீண்ட மூக்கும் உரத்த உருமொலியுங் குறுகிய கால்களும் அழகிய உறுப்புகளும் வாய்ந்ததாய், வெற்றி மறஞ் சிறந்து வலியதாய் நிகரற்றதாய் வயங்குங் கரியதொரு பன்றி வடிவத்தினை எல்லாப் பொருள் கட்கும் உயிராக உள்ள நாராயணரும் எடுத்துக் கொண்டு கீழ்நோக்கிச் சென்றார். அவ்வாறு ஆயிரம் ஆண்டுகள் விஷ்ணு கீழ் நோக்கி விரைந்து சென்றும், அவர் அவ்விலிங்கத்தின் அடியைக் கண்டிலர். யானும் அவ்வளவுகாலம் என்னாற் கூடியமட்டும் அதன் முடிவை அறிய வேண்டி மேல்நோக்கி விரைந்துபோயும், ஓ நுங்கள் பகைவரை யழிப்போரே, அதன் முடிவைக் காணேனாய் அக்காலக் கழிவிற் கீழ் இறங்கினேன்; எல்லாத் தேவர்கட்கும் பிறப்பிடமும் பேரளவினருமான பகவான் விஷ்ணுவும் வெருக்கொண்ட பார்வையினராய தேய்வுற்று அங்ஙனமே விரைந்து மேலேறி வந்தனர். சம்புவாகிய சிவபிரான்றன் வியத்தகும் ஆற்றலை அறியாது மயங்கிக் கலக்குண்ட மனத்தினனாய் அப் பெரிய கடவுள் என்னைத் தலைக்கூடி, என்னோடு கூடப் பரமேசுவரன் எதிரிலும் பக்கங்களிலும் புறத்திலும் கீழ் விழுந்து வணங்கி இஃது என்! என்று வியத்துரைத்தான். அதன் பின், ஓ கடவுளர்க்குத் தலைவனே, அங்கே ஓம் ஓம் என்னுஞ் செவிப் புலனாம் ஓசை தெளிவாய்த் தொடர்புற்று எழுந்தது. பின்னர் இஃது யாதாயிருக்கலாம் என்று ஆழ நினைத்துக் கொண்டு அவர் என்னுடன் நிற்கையில், அவ்விலிங்கத்தின் வலப்புறத்தில் என்றும் நிலைபேறாய் உரக்க நிகழும் இவ்வெதிரொலியினைக் கண்டார். முதல் எழுத்து அகாரம், அதன் பின் உகாரம் நடுவில் மகாரம். X« v‹gJ ï›bthÈfË‹ bjhFâ.(ïȧf¥òuhz« 1, 17) இங்ஙனம் போந்த வடமொழி இலிங்கபுராணத்தின் பதினேழாம் அத்தி யாயத்திற்குப் பின் பதினெட்டாம் அத்தியாயத்தில் விஷ்ணு வானவர் சிவபிரானை வழுத்தும் ஒரு பதிகமும் அதன்பிற் சிவபிரான் அவர்முற்றோன்றி அவ்விருவருந் தன்னிடத்தி னின்றுந் தோன்றிய படியை அறிவுறுக்கும் அறிவுரையும், அதன்பிற் சிவபிரான் அவ்விரு வரையுந் தொட்டு வரந் தருமாறுங் கூறப்பட்டிருக்கின்றன. இனித் திருமால் அல்லாத மற்றைத் தேவர்களிற் பிரம தேவன் சிறந்தமையின் நான் முகன் முதலாவானவர் என்றருளிச் செய்தார். தொழுதல், பணிதல் என்பன ஒருபொருட் கிளவிகள் திவாகரம். ஈண்டு மூவுலகு என்றவை நிலமண்டிலம் வளிமண்டிலம் வான் மண்டிலம் என்பனவாம்; அது மேலெடுத்துக் காட்டிய இராமாயண வாமனன் கதையிற் காண்க; இஃதறியாதார் திருமால் ஈரடியால் நிலத்தையும் வானையும் அளந்து, மூன்றாம் அடிக்கு இடமின்மையிற் பலியரசன் றலைமேல் அதனை வைத்து அவனைப் பாதலத்தில் அழுத்தினாரெனக் கதையைத் தமக்கு வேண்டியவாறு திரிந்துரைப்பர். இனித், திருமாலின் நெடிய வுருவத்தைக் காண்டலானும், அவர் திருவாய் மலர்ந்தருளுஞ் சொற்களைக் கேட்டலானும், அவரது அழகிய வுருவைக் காண்புழி வாய்நீர் ஊற அதனைச் சுவைத்தலானும், தெய்வத்தன்மையான் அவரைச் சூழ வீசும் நறுமணத்தைக் கவருதலானும், அவர்தந் திருவடிகளை வருடுதலானும் முனிவரெல்லாந் தம் ஐம்புலன்களும் இன்புறப் பெறுதலின் நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலர என்றருளிச் செய்தார். ஈண்டு நீண்டு வளர்ந்த திருமாலைப்பற்றிப் பேசுகின்ற மையின் அதற்கேற்ப நெடுமால் என்றும், அங்ஙனம் நீண்டோங் குந் திருமாலின் கதிர் முடியையே நோக்கிப் போற்றுதலின் முனிவரும் போற்றிசெய் கதிர்முடி என்றும் அருளிச் செய்தார். அடி முடி அடியினது முடிவு எனப் பொருள்படும். முடி முதனிலை வினைப்பெயர். இங்ஙனம் பொருள்படுதலை யறியாதார் இச் சொற்றொடர்க்கு அடியும் முடியும் எனப் பொருள் கூறினார்; அடி முடி யறிவும் ஆதரவு ஈண்டுத் திருமால் மேற்றாகவைத் துரைக்கப்படுதலானும், அத் திருமால் இறைவனது அடியைத் தேடப் புக்கனரே யல்லால் முடியையுங் காணப்புகுந்தன ரென்பது புராணத்தின்கட் பெறப்படாமை யானும், நான்முகன் முடிதேடப்போனமை ஈண்டு அடிகளாற் கூறப்படாமையானும் அவ்வாறு பொருளுரைத்தல் பொருந்தா தென்க. அற்றேல், நான்முகன் இறைவனது முடி தேடச் சென்று இளைத்தமை ஈண்டெடுத்துக் கூறாமை யென்னை யெனின்; தேவர்கள் எல்லாரினுஞ் சிறந்த திருமால் இறைவனது அடி தேடி யெய்த்தமை கூறவே, அவரினுந் தாழ்ந்த நான்முகன் முதல் வன்றன் முடித் தேடிக் காணாமை தானே பெறப்படுமாகலின் அதனை எடுத்துக் கூறாது உய்த்துணர வைத்தாரென்பது. ஆதரவு அவா எனப் பொருள்படும். ஆதர: என்னும் சொற்றிரிபு; ஆதரவதனில் என்பதில் அது பெயர்ப்பொருளை அசைத்துநின்ற அசைநிலை இடைச்சொல். கடுமுரண் - மிக்க வலி; கடும்பசி கலக்கிய என்புழிப் போல (புறநானூறு 230) ஈண்டுக் கடு மிகுதிப் பொருள்பட நின்றது; கடி என்னும் உரிச்சொற் கடு வெனத் திரிந்தது. இனி, அனற்பிழம்பு வடிவாய்த் தோன்றிய இறைவன்றன் அடியை முதலிற் றேடப்புக்கவர் திருமாலென்பது மேலெடுத்துக் காட்டிய இலிங்கபுராணக் கதையின்கட் சொல்லப் பட்டிருத்தலின், அதற்கேற்ப அடிகளும் ஈண்டு முன் கலந்து என்றருளிச் செய்தார். ஈண்டு ஏழ்தலம் என்றவை பாதலத்தின்கண் உள்ள ஏழ் உலகங்களை; அவை யாவன: அதல விதல சுதல நிதல தராதல, ரசாதல மகாதல மென்னப், பாதலம் ஓரேழுலகெனப் பகர்வர் என்றார் திவாகரத்தில். உருவுதல் - நடுவே துளைத்தல்; இச்சொல் இப்பொருட் டாதல் உம்பரும் அறியா ஒருவனே இருவர்க் குணர்விறந் துலகம் ஊடுருவுஞ் செம்பெருமானே என்று அடிகள் பிறாண்டும் (வாழாப்பத்து 2) ஓதுமாற்றாற் காண்க. இடந்து - பிளந்து; படை யிடந்த ஆறாப்புண் என்புழியும் (புறப்பொருள் வெண்பா மாலை 4 18) இப்பொருட்டாதல் காண்க. எய்த்து - இளைத்து: எய்த்த மெய்யேன் எய்யே னாகி என்பதுஉங் காண்க. (பொருநராற்றுப்படை 68) ஐய என்னும் வடசொல் சய வெனத் திரிந்தது; அஃது இருகால் அடுக்கி உடம்பாட்டுப் பொருளை உணர்த்தியது; இப்பொருளுணர்த்தல் சேனாவரைய ருரையினுங் (தொல்காப்பியம் சொல் 411) கண்டு கொள்க. வழுத்துதல், பரவுதல், துதித்தல் என்பன ஒரு பொருட் கிளவிகள்; பிங்கல;நதை. மலரடி இணைகள் என்பதில் இணைகள் என்பதன் ஈற்றில் நின்ற கள் என்னும் ஈற்றைப் பிரித்து அடி என்பதனோடு கூட்டுக; அருங்கேடன் என்பதறிக என்பதனுட் (திருக்குறள் 210) கேடன் என்பதன் ஈற்றில் நின்ற அன் என்னும் ஈற்றை அரு என்பதனொடு கூட்டிக் கேடரியன் என உரைப்பவாகலின். வார் கடல் என்பதில் வார்தல் நெடுமைப் பொருட்டாதல் வார்தல் போகல் ஒழுகல் மூன்றும், நேர்வு நெடுமையுஞ்செய்யும் பொருள் என்னுந் தொல்காப்பிய உரியியற் சூத்திரத்தானுணர்க. யானை முதலா எறும்பீ றாய ஊனமி லியோனியி னுள்வினை பிழைத்தும் மானுடப் பிறப்பினுள் மாதா உதரத் தீனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும், 15 ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும், இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும், மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும், ஈர்இரு திங்களிற் பேர்இருள் பிழைத்தும், அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும், 20 ஆறு திங்களின் ஊறலர் பிழைத்தும் ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும், எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும் ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் தக்க தசமதி தாயொடு தான்படுந் 25 துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும், ஆண்டுக டோறும் அடைந்தஅக் காலை ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும், காலை மலமொடு கடும்பகற் பசிநிசி வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும் 30 கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில் ஒருங்கிய சாயல் நெருங்கிஉள் மதர்த்துக் கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத் தெய்த்திடை வருந்த எழுந்து புடைபரந் தீர்க்கிடை போகா இளமுலை மாதர்தங் 35 கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும் பித்த உலகர் பெருந்துறைப் பரப்பினுள் மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும், கல்வி என்னும் பல்கடற் பிழைத்தும், செல்வம் என்னும் அல்லலிற் பிழைத்தும் 40 நல்குர வென்னுந் தொல்லிடம் பிழைத்தும் புல்வரம் பாய பலதுறை பிழைத்தும் யானை முதல் ஆ எறும்பு ஈறு ஆய - மிகப் பெரிய யானை முதலாக மிகச்சிறிய எறும்பு இறுதியாகிய, ஊனம் இல்யோ னியின் உள்வினை பிழைத்தும் - கெடுதல் இல்லாத கருப்பை களினின்றும் உள்ளத்தின் கண்ணதாகிய நல்வினையான் தப்பியும், மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும் - மக்களாய்ப் பிறக்கும் பிறப்பினுள்ளுந் தாயின் கருப்பையினுள்ளே குன்றுதல் இல்லாத புழுக்கள் இடும் போரின் நடுவே பட்டுமடியாது தப்பியும், ஒரு மதித்தான்றியின் இருமையிற் பிழைத்தும் - முதற்றிங்களில் தான்றிக்காயின் வடிவினை ஒப்பதாகி இருவகைப்பட்ட தன்மையினின்று தப்பியும், இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும் - இரண்டாந் திங்களிற் கருத்தோற்றத்தின் ஒன்று பட்ட தன்மையினின்று தப்பியும், மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் - மூன்றாந் திங்களிற் றோன்றும் அந்த மத நீருக்குத் தப்பியும், ஈர் இரு திங்களிற் பேர்இருள் பிழைத்தும் - நான்காந் திங்களிற் பெரிய இருளுக்குத் தப்பியும், அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் - ஐந்தாந் திங்களிற் சாதலுக்குத் தப்பியும், ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும் - ஆறாந் திங்களில் கொலைக்குக் காரணமாகிய பழிச்சொல்லுக்குத் தப்பி யும், ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும் - ஏழாந் திங்களிற் கீழுள்ள நிலத்தின் வந்து பிறத்தலுக்குத் தப்பியும் எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும் எட்டாந் திங்களில் உண்டாகுந் துன்பத்திற்குத் தப்பியும், ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத் தும் - ஒன்பதாந் திங்களில் வரும் துன்பங்களுக்குத் தப்பியும், தக்க தசமதி தாயொடு தான்படும் துக்க சாகரத் துயர்இடைப் பிழைத்தும் - தாயின் கருப்பையை விட்டு அகலுதற்கு இசைந்த பத்தாந் திங்களில் தாயுந் தானுமாய்ப் படுந் துன்பக்கடலில் உளதாகிய துயரத்தினின்று தப்பியும், ஆண்டுகடோறும் அடைந்த அக்காலை ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும் - பருவங்கடோறும் வளர்ந்து மனிதப்பருவம் எய்திய அப்பொழுது பொருளைத் தொகுத்தும் தொகுத்த பொருளைப் புதைத்து வைத்தும் இவ்வாறு எவ்வளவோ பலவாகிய துன்பங்களுக்குத் தப்பியும், காலை மலமொடு கடும்பகற் பசி நிசிவேலை நித்திரை யாத்திரை பிழைத்தும் - காலைப் பொழுதில் மலத்தானும் உச்சிப் பகற் பொழுதிற் பசியானும் இராப்பொழுதில் துயிலானும் இவையொழிந்த காலங்களில் ஊர்ப்பயணம் போதலானும் நேருந் துன்பங்களுக்குத் தப்பியும், கருங் குழல் - கரிய கூந்தலினையும், செவ்வாய் - சிவந்த வாயி னையும், வெண் நகை - வெள்ளிய மூரலினையும், கார் மயில் ஒருங்கிய சாயல் - கார் காலத்து ஆண் மயில் போல் ஒரு வழிப் பட்ட மென்மை யினையும், நெருங்கி உள் மதர்த்துக் கச்சு அற நிமிர்ந்து கதிர்த்து முன் பணைத்து எய்த்து இடை வருந்த எழுந்து புடை பரந்து ஈர்க்கு இடைபோகா இளமுலை - மிகப் பெருத்தலின் ஒன்றோடொன்று நெருங்கி உள்ளே களிப்புக் கொண்டு பட்டினை அறும்படி மிகைத்து ஒளி வீசி எதிரே பருத்து நடுவானது இளைப்புற்று வருந்தாநிற்க எழுச்சி பெற்றுப் பக்கங்களிற் படர்ந்து ஈர்க்கும் நடுவே நுழையாத இளமை பொருந்திய கொங்கைகளையும் உடைய, மாதர்தம் கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும் - மகளிரினுடைய மிகுதியான கண்களின் சூறைக்குத் தப்பியும், பித்த வலகர் பெருந்துறைப் பரப்பினுள் மத்தக்களிறு எனும் அவா இடைப் பிழைத்தும் - மருள் கொண்ட உலகத்தவரின் பெரிய நீர்த்துறையாகிய பரப்பினுள்ளே கிடந்து கலக்கும் மதச் செருக்குடைய ஆண் யானை யென்னும் வோவினிடத்து நின்று தப்பியும், கல்வி என்னும் பல் கடற் பிழைத்தும் - கல்வி என்றுரைக்கப்படும் பலவாகிய கடல்களினின்று தப்பியும், செல்வம் என்னும் அல்லலிற் பிழைத்தும் - செல்வமென் றுரைக்கப்படும் துன்பத்தி னின்று தப்பியும், நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் - வறுமை என்று கூறப்படும் பழைய நஞ்சுக்குத் தப்பியும், புல்வரம்பு ஆய பல துறை விழைத்தும் - புல்லை எல்லை யாகவுடைய பல பிறவித் துறைகளுக்குத் தப்பியும் என்றவாறு. இயங்கும் உயிர்களுள் மிகப் பெரியது யானையும் மிகச் சிறியது கட்புலனுக்குத் தோன்றும் எறும்புமாகலின் யானை முதலா எறும் பீறாய என்று அருளிச்செய்தார். எறும்பினுஞ் சிறிய வுயிர்கள் உளவாயினும் அவை கருவிகளி னுதவியின்றிக் கட்புலனாகாமையின் அவற்றைக் கூறாராயினார். ஆக என்பது ஆ என ஈறு கெட்டது. இப்பிறவிகள் அழிந்துபட்டு இலவாய் ஒழியாமல் தொன்று தொட்டுத் தொடர்பாய் வருதலின் ஊனமில் யோனி என்றார். ஊனம் கேடு எனப் பொருள் பயத்தலைப் பிங்கலந் தையுட் காண்க. யோநி கருப்பை எனப் பொருள் படுவதொரு வடசொல். நல்வினை தீவினை யென்பன ஒருவன் தன் உள்ளத்தாற் கருதிச் செய்யப்படுதலின் அவை அவ்வுள்ளத்தையே நிலை பேறாய் பற்றி நிற்கும். வினை செய்தற்குக் கருவியாகிய உடம்பு ஒழியினும் அவ்வினைகள் ஒழியாவாய்த் தாம் பிறத்தற்கு நிலைக் களனாகிய உள்ளத்தைப் பற்றிக்கொண்டு பிறவிகடோறும் சேறலின் உள்வினை என்றார். அஃதீண்டு நல்வினைமேற்று, என்னை? ஐயறிவுக்குட்பட்ட பலகோடி உயிர்வகைகளுட் படாது ஓருயிரை மக்கட் பிறவியுட் படுவிப்பது அதுவே யாகலின் என்க. உள்வினை பிழைத்தும் என்பதிற் கருவிப் பொருள் படவரும் ஆலுருபு விரிக்க. மாநுடப் பிறப்பினுள் மாதா வுதரத்து, ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும் என்றது தாய் தந்தையர் ஒருங்கு புணர்ந்தவழித் தந்தையின் உடம்பினின்றும் புறனாகிய வெண்பால் தாயின் கருப்பையுட் சென்றவளவானே, ஆண்டு அப்பாலினின்றுந் தோன்றிய எண்ணிறந்த புழுக்கள் அத் துணையும் முன்னரே அங்குள்ள தாய்க்கருவினோடு ஒன்று கூடுதற்குப் பெரிது முயன்று போர் இயற்றாநிற்ப, அவற்றுள் ஒன்று ஏனையவற்றைப் புறந்தள்ளித் தான் முற்சென்று அத்தாய் கருவினுட் பதியும் ஆற்றினை அறிவுறுத்தியது. இற்றை ஞான்றை மேல்புல நூலார் மிக ஆழ ஆராய்ந்த கண்டுரைக்குங் கருத் தோற்றமுறை, பன்னூறாண்டுகட்கு முன்னிருந்த நம்பெருமான் திருவாதவூரடிகளாற் பொருந்தக் கூறப்பட்டிருத்தல் பெரிதும் வியக்கற்பாலதொன்றா மென்க. உதரம் என்பது கருப்பை யெனப் பொருடரும் ஒரு வடசொல். குன்றுதல் எனப் பொருள்படும் ஹீந என்னும் வடசொல் ஈனம் என ஆயிற்று. கிருமி வடசொல். செரு - போர், சண்டை; திவாகரம். தாயின் கருப்யையுட்பட்ட வெண்பாலிற் றோன்றும் புழுக்கள் மிகுதியா யிருத்தலின் ஈனமில் கிருமி என்றார். கருக்கொண்ட தாயின் கருப்பை முதற் றிங்களில் தான்றிக் காய்ப்போன்ற வடிவுடையதாய் இருத்தலின் ஒரு மதித் தான்றியின் என்றருளிச் செய்தார்; மேல்பு நூலார் தாம் எழுதிய கருநூலிற் காட்டுங் கருப்பையின் வடிவு தான்றிக் காயைப்போல் உடல் திரண்டு முனைகுவிந்திருத்தல் காண்க. இனி, முதற்றிங்களில் இருமையிற் பிழைத்தலாவது, தந்தையின் வெண்பாலிற் றோன்றிய புழுக்களில் ஒன்று தாயின் செம்பாலிற் றோன்றிய கருவிற் பதிந்து ஒன்றாகாமல் வேறாய் நின்றால் மகவு உண்டாமா றில்லை; மற்று அங்ஙனமின்றி அப் புழுக்கள் பலவற்றுள் ஒன்று ஏனையவற்றைப் பின்றள்ளித் தாய்க்கருவை யணுகி, அதனுள் தன் தலையை நுழைத்த வள வானே, தாய்க்கரு அப்புழுவினைத் தன்னகப்படுத்திக் கொண்டு, ஏனைப் புழுக்கள் தன்னை அணுகாவாறு தன் மஞ்சட் கருவி னின்றும் மெல்லியதொரு தோலினைத் தோற்றுவித்துத், தன்னும் புழு நுழைதற்கு வாயிலான துளையை உடனே அடைத்துவிடா நிற்கும்; அவ்வாறு செய்த பின்னர்த் தான் நுழைந்த புழுத் தாய்க் கருவிற் கரைந்து ஒன்றாய்ப் போக மகவு உண்டாவதாகும். ஒரோவழித் தாய்க்கரு நோயாலேனும் மயக்கம் ஏற்றப்படுதலாலேனும் அங்ஙனம் வழி யடைத்தலைச் செய்யாது வாளா இருந்திடுமாயின் மகவு உண்டாமாறில்லை. இந்நிகழ்ச்சியினைப் பண்டைக் காலத்திருந்த நம் அடிகள் நன்குணர்ந்து ஒரு மதித்தான்றியின் இருமையிற் பிழைத்தும் என்றருளிச் செய்தமை பெரிதும் போற்றற்பால தொன்றா மென்க. மதி, திங்கள் என்பன சந்திரற்குப் பெயராய் வருந் தமிழ்ச் சொற்கள்; பதினான்குநாள் வளர்ந்தும் பதினான்குநாட் டேய்ந்தும் இயங்கும் மதியின் இயக்கம் பற்றி வரையறுக்கப்படுங் காலக்கூறாகிய மாதத்திற்கும் அவை பெயராயின; இவ்வாறு வருதல் அளவை ஆகுபெயர் (தொல்காப்பியம் சொல் 116) சந்திரனை உணர்த்தும் மதி என்னும் பெயரை வடமொழி என்று கூறுவாருமுளர். அது பொருந்தாது. என்னை? அப்பொருளில் அச்சொல் அமர நிகண்டு முதலான வடநூல்களிற் காணப்படாமையானும், தமிழிற்குரிய அம் சாரியை ஏற்று மதியம் எனவும் அஃதேலாது மதி எனவும் அது பண்டைத் தமிழ் நூல்களிற் பரவி வழங்கு தலானும் என்பது. இனி மதிக்கப்படுதலின் மதி என வாயிற்று என்பாரும், மதுவை யுடைமையின் மதி யெனவாயிற்று என்பா ரும் உளர். மதித்தல் எனப் பொருள்படும் முதனிலையும் மது வென்னும் பெயரும் வடமொழியிலன்றிப் பண்டைத் தமிழ் நூல்களில் வழங்கக் காணாமையின், அவற்றுள் ஒன்றை அடியாகக் கொண்டு பிறந்து மதி என்னும் பெயர் பண்டை நூல்களில் வழங்கிற் றெனல் பொருந்தாக் கூற்றா மென்க. இனி இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்த லாவது: தந்தையின் வெண்பாலிற் றோன்றிய புழுக்களில் ஒன்று தாய்க் கருவிற் பதிந்த வளவானே, அக்கரு ஏனைப் புழுக்கள் தன்னுட் புகாவாறு, நோய், கள்மயக்கம் முதலிய காரணங்களாற் றடை செய்யாது வறிதே யிருந்திடுமாயின், அப் புழுக்கள் பலவும் அதனுள் நுழைந்து, முன்னரே புகுந்து ஒன்றுபட்ட புழு மகவாய் உருக்கூட வொட்டாமல் அதனைச் சிதைத்து விடும். இஃது ஒரோ வழி இரண்டாந் திங்களில் நிகழ்தலின், அந் நிகழ்ச்சிக்குந் தப்பிய படியை அறிவித்தவா றாயிற்று. விளைவு - கருத்தோற்றம். ஒருமை - இரண்டும் ஒன்றுபட்ட தன்மை. இனி, மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தலாவது: வாயில் அடைப்பட்டுக் கருத்தோன்றி வளருங் கருப்பை யினுள்ளே, முன்னெல்லாம் புறத்தே கழிந்து கொண்டிருந்த தாயின் மதநீர் இப்போது கழிவாயில் காணாமையிற் கரு வளர்தல் வேண்டிப் பெருகிவந்த நிறையாநிற்கும்; அதனாற் கருப்பை பெருக்க வயிறும் புடைக்கும்; இவ்வாறு வந்து பெருகும் மதநீர் தாங்க மாட்டாமல் அக் கருப்பை ஒரோ வொருகாற் கிழிந்து கருச் சிதைதலும் மூன்றாந் திங்களில் நிகழ்த லுண்டா கலின், அதற்குந் தப்பி வந்தமை அருளிச் செய்தார். மதம் - மதநீர். இனி, அங்ஙனம் வந்து பெருகும் மதநீர் கரிய நிறத்ததாய் நன்காந் திங்களிற் கருப்பையுள் நிரம்புதலின், அக் கருப்பையின் அகம் அப்போதும் பெரிதும் இருண்டு நிற்கும்; அவ் விருளுக்குந் தப்பி உயிரோடிருத்தல் அரிதாகலின் ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும் என்றருளிச் செய்தார். இனி, ஐந்தாந் திங்களிற் கருப்பையினுள் மதநீரும் இருளும் மேன்மேன் மிகுதலின் அவற்றினிடைப்பட்ட மகவு பிழைத்தல் அரிதென்பார் அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும் என்றார். வழங்கியன் மருங்கின் மருவொரு திரிநவும் என்பதனால் (தொல்காப்பியம் எழுத்து 483) ஐந்து அஞ்சு என மரூஉவாய்த் திரிந்தது. முஞ்சுதல் - சாதல்; திவாகரம். கணவர் இல்லாக் காலத்தேனும், கைம்மை நிலை யிலேனும் பிழைத்துக் கருக்கொண்ட மகளிர் தாம் சூல் கொண் டமை ஆறாந் திங்களிற் புறத்தார்க்குக் கட்புலனாக, அவர் அதுகண்டு பழித்துத் தூற்றுவராகலின், அப் பழிமொழிக் கஞ்சி அம்மகளிர் அவ்வாறாந் திங்களிற் கருச் சிதைத்தற்கு முயலுதல் வழக்கம்; அங்ஙனஞ் சிதைக்கப் படுதலுக்குந் தப்பியவாறு தெரிப்பார் ஆறு திங்களின் ஊறலர் பிழைத்தும் என்றார். ஊறு அலர் கொலைக்குக் காரணமாகிய பழிச்சொல்; ஊறு - கொலை; இனி இடையூறெனப் பொருள் கொண்ட, மகவின் உயிர்க்கு இடையூறாகிய பழிச்சொல்லென உரைத் தலும் ஒன்று; இச் சொல்லிற்கு இவ்விரு பொருளும் உண்மை ஊறிடையூறும் உற்றிடு கொலையும் என்னுந் திவாகர சூத்திரத்தால் காண்க. அலர் - பழிச்சொல்; பிங்கலந்தை. இனி, ஊரலர் எனப் பாடங்கொண்டு ஊரவர் கூறும் பழிச்சொல் எனப் பொருளுரைப்பினுமாம். இனி, ஏழு திங்களிற் றாழ்புவி பிழைத்தும் என்பது கருப்பையி னுள்ளிருக்குங் கரு ஏழாந் திங்களில் எல்லா உறுப்புகளும் செவ்வனே ஒருங்கு அமையப் பெறுதலானும், ஓரோவொருகால் மகளிர் சிலரின் கருப்பை இவ்வேழாந் திங்களிற் பெரும்பாலும் முதிர்ந்த மகவினைத் தாங்க மாட்டாமல் வெளிப்பட விடுதலானும் அதற்குந் தப்பிவந்த வாற்றினை அறிவுறுத்திய தாயிற்று. ஏழாந் திங்களிற் பிறக்கும் மகவு பன்னிரண்டு முதற் பதினான்கு விரற்கடை நிகளம் இருக்குமெனவும், அஃது உயிர்க்கவும் அழவும் பால் பருகவும் மாட்டு மெனவும், ஆயினும் அது மிகவும் வலிகுன்றிய நிலையிலிருத்தலால் நீராட்டப்படுதற்கு இறையாதாய்ப் பால் பருகும் நேரம் போக எஞ்சிய காலமெல்லாம் உறக்கத்திலேயே கிடக்குமெனவும், தன்னுடம்பினுட் சூடு பிறப்பித்தற்கு வேண்டிய வலிவுதானும் அதற்கப்போது மிக மெலிந்திருக்கின்ற தெனவும், அதனால் அம்மகவினை வெது வெதுப்பான கம்பலப் போர்வையாற் சுற்றித் தாயோ டணைத்துப் படுக்க வைத்தால் அஃது உயிர் பிழைத்துக்கொள்ளு மெனவும் மேல் புலக் கருநூலாரும் நன்காராய்ந்து எழுதுவர். ஏழ் என்பது ஒற்றீறாகிய சொல்லென்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுகின்றமையின், ஏழு திங்கள் என்னும் புணர்ச்சிக்கண் வந்த உகரம் சாரியை என்க; இங்ஙனம் உகரம் ஏற்று வருதல், அளவு நிறையும் எண்ணும் வருவழி நெடுமுதல் குறுகலும் உகரம் வருதலுங் கடிநிலை யின்றே ஆசிரியற்க என்பதனாற் (தொல்காப்பியம் எழுத்து 389) கொள்க, புவி நிலமெனப் பொருடரும் புவநம் என்னும் வடசொற் சிதைவு. ஏழாந் திங்களுக்குப்பிற் கருப்பையிலுள்ள மகவு மிக விரைந்து வளர்தலானும், அதன் சுமை தாங்கமாட்டாமற் றாய் வருந்துதலே யன்றி அம் மகவும் உள்ளே நெருக்குண்டு வருந்து தலானும், அத் துன்பங்களுக் கெல்லாந் தப்பி யுய்ந்தமை தெரிப்பார் எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும், ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் என்றருளிச் செய்தார். கஷ்டம் என்னும் வடசொல் கட்டம் எனத் திரிந்தது. இனிப் பத்தாந்திங்கள் கரு முற்றும் முதிர்ந்து வெளி வருதற்குத் தக்க காலமாதல் பற்றித் தக்க தசமதி என்றார். தச என்பது தசந் என்னும் வடசொற் சிதைவு. பத்தாந்திங்களிற் கருவுயிர்க்குங்காற் றாய் படுந் துன்பங்கடல்போற் பெரிதாயிருத்தலின் அதனைத் துக்கசாகரம் என்றும், அத்துன்பத்தினிடையே வெளிப்படும் மகவும் துன்புறுதலின் அதனைத் துயர் என்றும் இருகால் ஓதினார். ஆறறிவோடு கூடிய தாய் படுந் துயர் எல்லையற்றதாயிருத்தலின் அதனைச சாகரமாக உருவகப்படுத்தினார்; அவ்வாறு ஆறறிவு விளக்க மில்லாத பச்சைப் பசுங்குழவி படுந் துயர் அத்துணைப் பெரிதாகாமையின் அதனை வாளா துயர் என்று கூறுவாராயின ரென்க. சாகரம் கடல்; இது வடசொல்; சகரரால் அகழப்பட்ட மையிற் கடல் சாகர மெனப் பெயர் பெற்ற தென்பது வடநூல் வழக்கு. ஆண்டுகடோறும் அடைந்த அக்காலை என்பதன் இடையே மனிதப்பருவம் என்பது அவாய் நிலையால் வருவித்துரைக்கப்பட்டது. ஈட்டியும் என நிற்கற்பாலது எதுகை நோக்கி ஈண்டியும் என மெலிந்தது. எனை - எவ்வளவு, எத்துணை; இப்பொருட்டாதல் எனை மாட்சித்தாயினு மில் என்புழியுங் (திருக்குறள் 52) காண்க. மலம் - அழுக்கு; இது மலங்கல் என்னுந் தமிழ்ச் சொல்லினின்றுந் தோன்றிய பெயர். உடம்பின் தூய்மையையும் உயிரின் தூய்மையையும் பிறழச் செய்தலின் அப் பெயர்த்தாயிற்று. தமிழ் மொழியினின்று வடமொழிக்கட் சென்று வழங்கும் பல சொற்களுள் மலம் என்பதும் ஒன்று. மற்றைக் காலங்களினும் மலவருத்தம் சிறிது உண்டேனும், ஒரு நாள் முழுவதும் உண்ட உணவு அற்று மலக்குடரிற் சென்று திரண்டு கழியுங் காலம் காலைப்போதே யாகலிற் காலை மலம் என்றார். ஏனைக் காலங்களினும் பசித்து வருந்துதலுளதேனும், ஞாயிறும் ஞாயிற்றின வாயிலாற கிளர்ந்தெழும் ஆற்றல்களும் எழுச்சி பெற்று நிற்குங்காலம் நண்பகற்போதே யாகலின், அக்காலத் துண்டாம் பசித்துன்பம் பொறுத்தல் அரிதென்பார் கடும் பகற் பசி என்றார். பகலினும் அயர்வுண்டாங்கால் உறக்கம் வந்து கூடுதல் இயல்பே யாயினும் ஞாயிற்றின் ஒளியில்லா நள்ளிரவில் எல்லா வுயிர்களும் அயர்ந்துறங்குதல் இயற்கையாய் நிகழக் காண்டலின் நிசிவேலை நித்திரை என்றருளிச் செய்தார். நள்ளிரவு எனப் பொருள்படும் நிசீத என்னும் வடசொல் தமிழில் நிசி என ஆயிற்கு. காலம் எனப் பொருள்படும் வேலா என்னும் வடசொல் தமிழில் வேலை எனத் திரிந்தது. நித்ரா யாத்ரா என்னும் வடசொற்கள் தமிழில் நித்திரை யாத்திரை எனத் திரிந்தன. நித்திரை - உறக்கம்; யாத்திரை - வழிச் செலவு. இனி, அழகாற் சிறந்த மகளிர்க்கு அவ்வழகினைப் பயத்தற் கண் அவர்தங் கரிய கூந்தல் முதலதாய்த் திகழ்ந்து கட்புலன் கவர்தலின் அதனை முன்னும், அதனையடுக்க அழகு பயப்பது கொவ்வைக்கனிபோற் சிவந்த அவர்தஞ் செவ்வாயே யாகலின் அதனை அதன் பின்னும், அவ்வாய் விரிவின்கட்டோன்றி அதனை யடுக்க அழகுறுத்துவன அவர்தம் வெள்ளிய பற்களே யாகலின் அவற்றை அதன் பின்னும், அவற்றை யடுக்கக் கார்மயில் போற்றோன்றும் அவர்தம் வடிவம்முற்றுங் காண்பார் கருத்துட் பதிதலின் அதனை அவற்றின் பின்னும், அத்துணை யழகிதாய அவர்தம் வடிவத்தைக் கண்டவளவானே அவர்மேல் வேட்கை மீதூரச் செய்வன அவருடைய மதர்த்த கொங்கை களுங் கயல் போற் பிறழும் விழிகளுமே யாகலின் அவ்விரண்டனையும் அதன் பின்னுமாக வைத்து முறைப்படுத் தோதினார். ஒருவர் ஒருவரைக் காணுங்கால் அவரது கட்பார்வை ஏனையோரது கூந்தன்மேன் முதற்கட்சென்று படுதலும், பின்னர் அவர் பேசுஞ் சொற்களைக் கேட்டற் பொருட்டு அவர் வாயை நோக்குதலும், அவர் பேசுங் காற்றோன்றும் வெண்பற்களை அதன்பின் நோக்கி மகிழ்தலும் எல்லாம் முறைமுறையே நிகழ்தல் இயல்பு. தாங் காதலிக்கும் ஆடவர்க்குத் தங் காதற் குறிப்புப் புலனாக மகளிர் மெல்ல நகுதல் இயல்பாகலின், அவ்வியல் பினை உய்த்துணரவைப்பார் பற்களுக்குரிய ஏனைப் பெயர்களை உரையாத நகை என்னும் பெயரைச் சிறந்தெடுத்துரைத்தார். கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில் என்பதில் நாற்சீரும் முரண்டொடைநயம்பற்றி வந்தது. என்னை? மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே என்றார் ஆசிரியராகலின் (தொல்காப்பியம் செய்யுள் 95) கார்காலத்து மயில் மிகுதியுங் களிப்புடைத்தாய் ஆலதலிற் கார்மயிலை எடுத்தக் கூறினார். சாயல் மென்மை என்றார் ஆசிரியர் தொல்காப்பிய னார்; சாயல் என்னுஞ் சொல் மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம்பொறியான் நுகரும் மென்மையை உணர்த்தும் (தொல்காப்பியம் சொல் 325) என்பர் உரைகாரர் நச்சினார்க்கினியர். எல்லா வுறுப்புகளும் ஒரே தன்மையவாம் மென்மை யுடைமைபற்றி ஒருங்கிய சாயல் என்றருளிச் செய்தார். உடங்கு ஒருங்காகும் என்பது திவாகரம். மதர்ப்பு - உள்ளக் களிப்பு; உள்ளத்தின் கண்ணதாகிய களிப்புக் கொங்கையின் கொழுவிய திரட்சிக்கட் புலனாதலின் அவ்வினையை அதன் மேலேற்றினார். கச்சு - பட்டிகை; இயங்குங்கால் அசையாமைப் பொருட்டுக் கொங்கைமேற் கட்டப்படுவது. வம்பு பிணிகை பட்டிகை வார்வடம், என்றிவை யைந்துங் கச்சென இசைப்பர் என்றார் திவாகரத்தும். இங்ஙனம் பிணிக்கப்படுங் கச்சும் அறும்படி திட்பத்துடன் நிமிருங் கொங்கையென அவற்றின் புத்திளமைச் செச்வி அறிவித்தாராயிற்று. கதிர்த்து - ஒளி வீசி; கதிர்த்த நகைமன்னும் என்றார் அடிகள் பிறாண்டும். (திருச்சிற்றம்பலக் கோவையார் 396) பணைத்து - பருத்து; திவாகரம். எய்த்து - இளைத்து; எய்த்த மெய்யேன் என்பதன் உரையிற் காண்க. (பொருநராற்றுப்படை 68) கொங்கைகள் மிகப் பருத்தால் அவற்றின் சுமை தாங்க லாற்றாது சிற்றிடை மிக வருந்துமென்பது பற்றி எய்த்திடை வருந்த என்றார்; இங்ஙனமே அம்மா முலைசுமந்து, தேயுமருங்குல் என்று அடிகள் திருச்சிற்றம்பலக் கோவை யாரினும் அருளிச் செய்தமை காண்க. மாதர் காதல் என்று (தொல்காப்பியம் சொல் 328) ஆசிரியர் தொல்காப்பியனார் ஓதலின், ஈண்டு மாதர் என்னுஞ் சொற் காதலை விளைக்கும் பெண்டிரை உணர்த்துதல் காண்க. கூர்த்த நயனக் கொள்ளை என்பதிற் கூர்த்த என்னும் பெயரெச்சம் கொள்ளை என்னும் பெயரைக் கொண்ட முடிந்தது; கூர்த்த கொள்ளையாவது தாம் கவர்ந்த காதலர் உயிரை வௌவும் மிகுந்த சூறை; இது செயவல்லன அம் மாதரார்தம் அழகிய கட்பார்வையே யாகலின் இவ்வாறு கூறினார். திருவள்ளுவநாயனாரும் இருநோக் கிவளுண்கண் உள்ள தொரு நோக்கு, நோய் நோக்கொன்றந்நோய் மருந்து என்றருளிச் செய்தார். அடிகளும் கோவையாரில் பிணியும் அதற்கு மருந்தும் பிறழப் பிறழமின்னும், பணியும் புரைமருங் குற்பெருந் தோளி படைக்கண்களே என்றருளிச் செய்தமை காண்க. ஈண்டு அவ்விருவகை நோக்கும் அடங்கக் கூறினார். இனிக் கூர்மை என்னும் பண்படியாகப் பிறந்த வினையெனக் கொண்டு அதனை நயனத்தின் மேல் ஏற்றிக் கூரிய கட்பார்வை யெனப் பொருளுரைத்தலும் ஒன்று. நயனம் ஈண்டுக் கட்பார்வை; இது வட சொல். மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய் யென மயங்கிக் கோடலிற் பித்த உலகர் என்றார்; மருளுணர்ச்சியாவது, மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் இல்லை யெனவும், மற்று மித்தன்மையவுஞ் சொல்லும் மயக்க நூல் வழக்குக்களை மெய்ந்நூல் வழக்கெனத் துணிதல். (திருக்குறள் 351 பரிமேலழகியார் உரை) இதனையே திருவள்ளுவ நாயனாரும், பொருள்அல் லவற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு என்று அறிவுறுத்தினமை காண்க. பித்த உலகர் பலதிறத்தராய்ப் பெருகிக் கடத்தலின் அவரை ஒரு பெரிய நீர்ப்பரப்பாகவும், பொருளின்ப முயற்சி கனை அவர் ஓவாது சென்று புரியுமாறு அவருள்ளத்தைப் பலதலைப் படுக்கும் அவாவினை அந்நீர்ப்பரப்பினும் புகுந்து கலக்கும் மதகளிறாகவும் உருவகப்படுத்தினார். மத்தம் - மதச் செருக்கு; திவாகரம். கல்வி யென்பது பல கலைப் பிரிவுகளை யுடைத்தாய் ஒவ்வொன்றும் எல்லை காணப்படாத பெரும் பரப்பிற்றாய் இருத்தலின் அதன்கண் வேட்கை மீதூரப் பெற்றார் அதன் வழியராயே சென்று உழல்வாரல்லது, இறைவனை இடை யறாது நினைந்துபிறவியறுக்குந் தவமுயற்சியிற் புகாராதலிற், கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும் என்று அவற்றிற்குந் தாம் தப்பியபடியை அறிவித்தாரென்க. அடிகள் ஈண்டு விலக்கியது உலகநூற் கல்வியேயன்றி அறிவுநூற்கல்வி யன்று; என்னை? தன்னையுந் தன் றலைவனையும் நினையவொட்டாது ஒருவனை நிலைபேறில்லாப் பொருள்வயிற் படுப்பிப்பது உலகநூற் கல்வியும், எக்காலுந் தன்னியல்பினையுந் தன் றலைவ னியல்பி னையும் அவன் இடையறாது நினையுமாறு செய்விப்பது அறிவுநூற் கல்வியுமா யிருத்தலின் என்க; இதுபற்றியே நாலடியாரிலும், அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா துலகநூல் ஓதுவ தெல்லாங் - கலகல கூஉந் துணைஅல்லாற் கொண்டு தடுமாற்றம் போஒந் துணை அறிவார் இல் என்று கூறப்பட்டது. இனிப், பெருந்திரளான பொருள் பெற்றக்கால் அதனைக் காத்தலினும் அதனை மேன்மேற் பெருக்குதலினும் ஒருவற்கு மேன்மேல் முயற்சி செல்லுதலின், அவன் இறைவனை நினைந்து வழிபடுதற்கும், அவனடியார்க்கு அப்பொருளை வழங்கிப் பயன்படுத்தற்கும் மாட்டானாய், அம்முயற்சியில் ஈர்ப்புண்டு பல பாவங்களைச் செய்து மேலுமேலும் பிறவிக்கு வித்தாகிய வினைகளை ஈட்டித் துன்புறுவனாகலிற் செல்வ மென்னும் அல்லலிற் பிழைத்தும் என்று அதற்குந் தாந் தப்பியபடியை அறிவுறுத்தருளினார். இனி, உடம்போடிருக்குங்காறும் ஐம்பொறியான் நுகர்தற்குரிய நுகர்பொருளெல்லாம் பெறவேண்டுவது இன்றி யமையாததா யிருத்தலானும், தன்னைச் சார்ந்துளார்க்கு வேண்டுவன தந்து அவரைப் பாதுகாத்தல் ஒவ்வோராண் மகற்கும் இன்றியமையாத கடமையா யிருத்தலானும், இவை யெல்லாங் கடை போகச் செய்தற்கு இன்றியமையாக் கருவியாவது பொருளேயாகலின், அஃதின்றி வறுமையான் நலிவார் இவ்வுலகத்தின் நடைப்பிணங்களே போல்வராக லானும் நல்குரவென்னுந் தொல்விடம் பிழைத்தும் என்று தாம் அவ் வறுமைக்குந் தப்பியபடியை அறிவித்தார். பொருளது இன்றியமையாமை, பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் எனவும், இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாருஞ் செய்வர் சிறப்பு எனவும், அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் எனவுந் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார் கூறுமாற் றானும், அடிகள் திருக்கோவையாரில் முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான்முடியும் என ஓதுமாற்றானும் நன்கு தெளியப்படும். பிறர் நல்குவதனை ஊர்ந்து சென்றும் பெறுமாறு நலிந் தோனை ஏவுதலின் வறுமை நல்குரவு எனப் பெயர் பெற்றது; நல்கூர் முதனிலை. நாடு நகரங்களும் விளைபுலங்களுந் தோன்றாத மிகப் பழைதாகிய காலத்தில் எல்லா மக்களும் வறியராயே யிருந்து வருந்தின ராகலின் நல்குரவைத் தொல்லிடம் என்றார். விஷம் என்னும் வடசொல் விடம் எனத் திரிந்தது. இனிப் புல்லை முதற் றோற்றமாகக் கொண்டு இவ்வா றெல்லாம் மேன்மேற் பெருகிவந்த பல பிறவித்துறைகளை யெல்லாம் பிழைத்துவந்தமை ஈற்றில் ஒருங்குவைத்து அடக்கிப் புல்வரம் பாய பலதுறை பிழைத்தும் என்று அருளிச் செய்தார் என்பது. வரம்பு - எல்லை; புலங்கெட இறுக்கும் வரம்பில் தானை என்றார் புறத்தினும் (புறநானூறு 16) கட்புலனான ஓரறி வுயிர்களிற் புல்லினுஞ் சிறியது பிறிதின்மையின் அதனையே கீழ்ச்செல்லும் பிறவி களுக்கு முடிந்த எல்லையாகக் கூறினார் என்க. தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி முனிவி லாததோர் பொருளது கருதலும் ஆறு கோடி மாயா சத்திகள் 45 வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின; ஆத்த மானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்; சுற்றம் என்னுந் தொல்பசுக் குழாங்கள் பற்றி யழைத்துப் பதறினர் : பெருகவும் 50 விரத மே பர மாக வே தியருஞ் சரத மாகவே சாத்திரங் காட்டினர்; சமய வாதிகள் தத்தம் மதங்களில் அமைவ தாக அரற்றி மலைந்தனர்; 55 மிண்டிய மாயா வாதம் என்னுஞ் சண்ட மாருதஞ் சுழித்தடித் தாஅர்த் துலோகா யதன்எனும் ஒண்டிறற் பாம்பின் கலா பேதத்த கடுவிடம் எய்தி அதிற்பெரு மாயை எனைப்பல சூழவும், தெய்வம் என்பது ஓர் சித்தம் உண்டாகி முனிவு இலாதது ஓர் பொருளது கருதலும் - கடவுள் என்று சிறப்பித்துச் சொல்லப் படுவதாகிய ஒரு கருத்து வரப்பெற்று வெறுப்பில் லாததாகிய ஒப்பற்றதொரு பொருளை எண்ணப் புகுந்த வளவிலே, ஆறு கோடி மாயாசத்திகள் வேறு வேறு தம் மாயை கள் தொடங்கின - ஆறு கோடி யளவினவாகிய மாயையின் சத்திகள் வேறு வேறாகத் தமக்குரிய வஞ்சனைகளைச் செய்யத் தொடங்கி விட்டன, ஆத்தம் ஆனார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நா தழும்பு ஏறினர் - நம்புதற் குரியரான நேயரும் பிறரும் ஒன்று சேர்ந்து கொண்டு கடவுள் இல்லையெனப் பொய் வழக்குப் பேசி நாவும் தழும்பேறப் பெற்றனர், சுற்றம் என்னும் தொல் பசுக் குழாங்கள் பற்றி அழைத்துப் பதறினர் - உறவினர் என்று சொல்லப்படும் பழைய பசுக்கூட்டங்கள் எம்மைப் பிடித்து அழைத்துப் பதைத்தனர், பெருகவும் விரதமே பரம் ஆக வேதியரும் சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர் - மிகுதியும் விரதம் ஆற்றுதலே வீடுபேற்றினைத் தரும் இறைமுதற் பொருளாகச் சொல்லி வேதம் உணர்ந்த பார்ப்பனரும் தாம் அங்ஙனங் கூறுவதனை மெய்ப்படுத்திக் காட்ட நூல்களைக் கொணர்ந்து காட்டினர். சமய வாதிகள் தம் தம் மதங்களில் அமைவதாக அரற்றி மலைந்தனர் - சமணக் கணக்கர்கள் தங்கள் தங்கட்குரிய மதங்களில் வந்து பொருந்தி யிருக்க வென்று வாய்விட்டுப் புலம்பிப் பூசலிட்டனர், மிண்டிய மாயா வாதம் என்னுஞ் சண்டமாருதம் - திட்பங் காட்டிய மாயாவாதம் என்று சொல்லப்படும் கொடிய சுழல் காற்றானது, சுழித்து அடித்து ஆர்த்து - சுழன்று வீசிப் பேரொலி செய்ய, உலோகாயதன் எனும் ஒள் திறல் பாம்பின் - உலோகாயதன் என்று சொல்லப்படும் ஒள்ளிய வலிமையினை யுடைய பாம்பினது, கலாபேதத்த கடுவிடம் எய்தி - கலை வேறுபாடுகளையுடைய கொடிய நஞ்சு வந்து பொருந்தாநிற்க, அதில் பெரு மாயை எனைப் பல சூழவும் - அங்ஙனம் அவ்விரண்டாலும் அலைக்கப் படுதலாற் பெரிய வஞ்சனைகள் எவ்வளவோ பல தம்மை வந்து கற்றவும் என்றவாறு. மேலே கூறிப்போந்தவாறு புறத்தே உலகியன் முறையில் நேரும் பல நேரிடர்களுக்கெல்லாம் பிழைத்து, அகத்தே ஒருவற்கு அறிவு சென்று தெய்வம் ஒன்று உளதெனக் கருதுங் கருத்துண்டாகப் பெறுதல் மிக அரிதாகலின் தெய்வ மென்ப தோர் சித்த முண்டாகி என்றருளிச் செய்தார். தெய்வம் ஒளிவடிவிற் றாகிய கடவுளை உணர்ந்துத் தமிழ்ச் சொல்; தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் என்றார் (தொல்காப்பியம் சொல் 4) ஆசிரியர் தொல் காப்பியனாரும், தெய்வம் என்பது என்னுஞ் சொற்றொடரில் என்பது எனுஞ் சொல் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவதெனப் பொருள் பயந்தது; என்னை? களவெனப்படுவது என்பதற்குக் களவென்றற்குச் சிறப்புடைத் தென்றவாறு ஊரெனப்படுவ துறையூர் என்ற விடத்துப் பிறவும் ஊருண்மை சொல்லி அவற்றுளெல்லாம் உறையூர் சிறப்புடைமை சொல்லுப. இங்குப் பிறவுங் களவுண்மை சொல்லி அக்களவுகட்கெல்லாம் இக்களவு சிறப்புடைத்து என்று (இறையனாரகப் பொருள் 1ஆம் சூத்திர உரை) ஆசிரியர் நக்கீரனார் உரை கூறினாரா கலினென்க. அதுபோல ஈண்டும் ஒருவனுள்ளத்தே நிகழும் பல நினைவு களுள்ளுந் தெய்வம் என்பதொரு நினைவு சிறந்த தாகலின் என்பது என்னுஞ் சொல் தலைப்பெய்தாரென்றுணர்க. சித்தம் கருத்து; திவாகரம்; இது வடசொல். கடவுளுண்மையினை ஆராய்தலிற் சென்ற கருத்து ஈண்டுத் தெய்வ மென்பதோர் சித்தம் எனப்படுவதாயிற்று. கடவுளுண் மையினை ஆராயும் ஒரு கருத்துத் தமக்கு வரப்பெற்றுத் தாம் அதனை எண்ணிப் பார்க்கப் புகுந்த அளவிலே என அடிகள் அடியாருள்ளத்து நிகழ்ந்ததனைக் கூறினமையின் தாம் என்னும் எழுவாய் தொக்குநின்றது; உண்டாகி என்னும் செய்தெ னெச்சம் கருதலும் என்னுந் தன் வினை முதல் வினையையே கொண்டு முடிந்தது; அல்லது இதனைச் செயவெனெச்சத் திரிபாகக் கொண்டுரைத்தலும் ஒன்று. எல்லா வுயிர்களும் பண்டு தொட்டே ஆணவமலத்துண் மறைந்து தமக்கு வேண்டுவன இவை யென்று தெரிந்து கேளாமலே கிடப்பவும், அவற்றின்கட் பேரிரக்க முடையனாய், அவற்றிற்கு உடம்புகளையும் உலகங்களையுந் தந்து அறிவை எழச் செய்து இன்பத்தை வழங்கும் எல்லாம் வல்ல முதல்வன் அருட் செயலில் அவன் எதனையேனும் வெறுக்குஞ் செயல் ஒரு சிறிதாயினும் விரவக் காணாமையின் அதனைத் தெரித்தற் பொருட்டு முனிவிலாததோர் பொருள் என் றருளிச் செய்தார். அற்றேல், எவற்றின் கண்ணும் வெறுப்பில்லாமை போல விருப்பில்லாமையும் இறைவற்கு இயல்பன்றோ வெனின்; தமது நலத்திற்கு மாறாய் நிற்பாரை வெறுத்தலும், அதற்கிசைந்திருப் பாரை விரும்புதலும் தமது நலத்தின் பொருட்டுப் பிறரைச் சார்ந்திருப்பாரான மக்களுக்கே உளவாவனவன்றி, எல்லா நலனும் பிறரைச் சாராமலே ஒருங்குடைய இறைவற்கு உள வாகா; ஆகலின், இறைவற்கு வெறுப்பில்லாமை சொல்லவே விருப்பின்மையுந் தானே போதரு மென்க. அங்ஙனமாயின், உயிர்கண் மேல் இரக்கமுற்று அவற்றுக் கருள்புரிதலும் ஒரு விருப்பமாய்ச் செல்லாதோவெனிற், செல்லாது; என்னை? மக்களெல்லாருந் தம்முள் ஒருவரை யொரவர் விரும்புதல் ஒருவர் மற்றொருவர்பால் ஒரு நலம் பெறுவது குறித்தேயாம்; மற்று முதல்வனாவான். தன்பால் இல்லாமல் ஏனை உயிர்கள் பாற் பெறுவதொரு நலம் வேண்டிநிற்பான் அல்லனாகலானும் ஏதொரு பயனும் நோக்காது ஏதொன்றும் வேண்டாது உயிர்கள் நலம் பெறு தலையே கருதி இறைவன் ஆற்றும் அருட்பாடு விருப்பமாதல் செல்லாமையானும் என்பது. அற்றேல், தன் நலங் கருதாது பிறிதொன்றற்கு நன்மை செய்ய விரும்புதல் குற்றமாகா மையின், ஏதொரு குறைபாடும் இலனாகிய முதல்வன் உயிர் கட்கு நலந்தர விரும்புவது உண்டாகலின், அவற்கு விருப்பில்லை யென்றல் யாங்ஙனமெனின், தன்னைக் குறியாது பிறர்நலங்குறித் தெழும் விழுமிய விருப்பமே அருள் என ஆன்றோரால் வழங்கப்பட்ட தாகலின், அவற் கஃது இல்லையெனக் கூறுவார் ஈண்டி யாருமிலர். அதனானற்றே, ஈண்டு அடிகள் முனிவிலா மையை முதல்வற்கொரு சிறந்த இயல்பாய் எடுத்தோதினாற் போல விருப் பிலாமையை எடுத்தோதாதூஉ மென்க. ஒரு சித்தம், ஒரு பொருள் என்று நிற்கற்பாலன செய்யு ளாகலின் ஓர் சித்தம் ஓர் பொருள் எனத் திரிந்து நின்றன; இவ்வாறு வருதல் வானாறிழிந்து மழைமின்னென வந்தொர் தேவன் என்புழியுங் (சீவகசிந்தாமணி 15) காண்க. பொருளது என்பதில் அது பெயர்ப் பொருளை அசைத்து நின்ற அசை நிலை. இனி, முனிவிலாததொரு பொரு ளாகிய அதனை என்று பொருளுரைப்பினுமாம். கடவுளுண்மை நினைவு தோன்றி அதனை முதற்கண் ஆராயப் புகுவார்க்கு அதன் இருப்பு மட்டுமாகிய பொது வியல்பின்றி அதன் சிறப்பியல்பு விளங்காமையின் அந்நிலையில் அம்முதற் பொருள் அது வென ஒரு குறிப்புப் பெயரளவாய் வைத்துச் சொல்லப் பட்டது. ஆரிய மறைகளுட் கடவுட் பொருளியல்பு தெற்றென விளங்காமையின் அஃது ஆண்டு அது, அது எனவே வைத்து ரைக்கப்படுதலுங் காண்க. ஆறுகோடி மாயாசக்திகள் என்றதில் கோடி என்னுஞ் சொல் மிகச் பல என்னும் பொருளில் வந்தது. தோள்வயிரந் தோன்றத் தொழுவா ரழுது நைவார் தொக்கோர் கோடி என்ற விடத்துங் கோடி என்பதற்கு நச்சினார்க்கினியர் அநேகர் எனப் பொருளுரைத்தார். ஆறு மாயா சத்திகளாவன: இணை விழைச்சு, வெகுளி, இவறன்மை, மயக்கம், செருக்கு, அழுக்காறு என்பன; இவ்வாறினால் விரியும் வினைகள் அளவிளந்த னவாய்ப் பெருகி நிகழ்தலின் இவை தம்மை ஆறுகோடி மாயாசத்திகள் என்றார். இவ்வுட்பகை ஆறும் ஆணவத்தின் வலியால் அதன் வழி நிற்கும் உயிரின்கட் டோன்றுவன வாயினும், அவை தோன்றுதற்குக் கருவியாய் அவ்வுயிரோ டுடன் நின்று உதவுவது மாயையே யாகலின் அவற்றை அதன்மே லேற்றி மாயாசத்திகள் என்றருளிச் செய்தார்; ஈண்டு மாயை என்றது மாயையிற் றிரண்ட உடம்புங் கருவிகளும் உலகமும் நுகர் பொருள்களுமே யாம். சத்தி என்பது ஆற்றல் எனப் பொருள்படும் சக்தி என்னும் வடசொற் றிரிபு. மாயை வஞ்சனை; பிங்கலந்தை. கடவுள் நினைவு பிறத்தற்கு முன்னும் இம் மாயா சத்திகள் வருத்துதலைக் கருங்குழற் செவ்வாய் என்பது துவங்கித் தொல்விடம் பிழைத்தும் என்ப தீறாக அடிகள் வகுத்துக் கூறினாராகலின், அந்நினைவு பிறந்த பின்னும் அவை வந்து வருத்துமென்றல் யாங்ஙனமெனின், அவை அதற்கு முன்னும் பின்னும் உளவாதல் உண்மையே யென்றாலும், முதற்கண் அவற்றின் வலிமைக்குத் தப்பிக் கடவுள் நினைவு வரப் பெற்றார்க்கு அந்நினைவு தோன்றிய வளவானே அவை முன்னையினும் பன் மடங்கு மிகுதியாகக் கிளைந்தெழுந்து அந் நினைவைக் கலைத்தல் இயல்பாகலின் அதுபற்றி அங்ஙன முரைத்தாரென்க. இனி, இம் மாயாசத்திகளே யன்றித், தம்மையொத்த மக்களுள்ளும் அறிவும் அன்பும் வாய்க்கப் பெற்றாருங்கூட அக்கடவுள் நினைவைக் கலைக்கத் தலைப்படுவாராதலின் அதனைக் கூறுவான் றொடங்கி, உண்மையே கூறும் நண்பர் களும் அவரல்லாத பிறரும் ஒருங்கு கூடிக்கொண்டு கடவுளே இல்லை எனப் பேசிப் பேசித் தமது நாவுந் தழும்பேறப் பெற்றமையினைத் தெரித்தார். உண்மை கூறுவார் சொற்களை மறுத்தல் வருத்தமாகலின் ஆத்தமானாரை முதல்வைத்தார்; அவரை யன்றித் தம்பாற் பகையும் நட்பும் இல்லாத நொது மலருங் கடவுளை எவர் கண்டார்! நன்கு முயன்று பெற்ற பொருள் கொண்டு தமக்கினியாரோடு உண்டுடுத்து இனிது வாழ்தலே கடவுள் வாழ்க்கை. இஃதொழிந்து கடவுள் கடவுள் என வாளாகூறி வறிதே நாட்கழித்தல் பயமின்று என்று எளிதாய்க் கூறிப் போவாராகலின் அவரை அவர் பின் வைத்தார்: உண்மை கூறுவார் சொற்கேட்டும், தமக்கு அயலவ ராயினார் தாங்கண்ட பழக்கமாய்ச் சொல்லுஞ் சொற்கேட்டுங், கடவுள் நினைவு கொளப் பெற்றார்க்கு அந்நினை கலைதல் இயல்பாகலின், இவர்க்கு அடியார் தம்மைத் தப்புவித்த முதல்வனது அருட்பெருக்கின் பெருமை தெரிப்பார் முதற்கண் இவரை எடுத்தோதினார். ஆப்தம் என்னும் வடசொல் ஆத்தம் எனத் திரிந்தது; ஆப்தமாவது உண்மை கூறுதல்; தாங் கண்ட உண்மையை மறையாது வந்துரைப்பார் தம்பால் அன்பு மிக்குள்ள நண்பரே யாகலின் அவர் ஆத்தமானார் எனப்பட்டார். ஆத்தமானாரும் அயலவரும் என உம்மை விரித்துக் கொள்க. தம்பாற் பகையும் நட்பும் இல்லாதவர் அயலவர், நொதுமலர் எனப்படுவர்; நண்பராவார் தமக்கு இனியவே தேடுவர்; பகைஞர் தீயவே சூழுவர்; நொதுமலர் அவ்விரண்டுஞ் செய்யா ராகலின் அவர் கூற்றுக்களும் மறுத்தற்கு ஆகா, அற்றேல், இவ்விரு திறத்தினரும் உண்மை யுரைப்பாரா யிருப்பவும், எல்லாவற்றிற்கும் முதலுண்மைப் பெரும் பொரு ளாகிய கடவுளை இல்லையெனக் கட்டுரைத்தல் ஒவ்வுமோ வெனின்; அவ்விருவரும் உலகத்துப் பொரு ணிகழ்ச்சிகளுள் தாந்தாம் அறிந்தவற்றைப் பிழையாது கூறுவரே யல்லாது, அப் பொருணிகழ்ச்சிகளுள்ளும் உள்ளுறையாய்க் கரந்துநின் றியலுங் கடவுட் பொருளை அறியமாட்டாராகலான் அது பற்றி அவர் உண்மையுரைப்பா ராகாமையில்லை. உலகியற் பொரு ணிகழ்ச்சி களை உள்ளவா றுரைத்தலா லன்றே. அவர் கடவுளில்லை எனச் சொல்லுங் கட்டுரையும் உண்மையே போலுமென மயங்குதற் கிடஞ் செய்து நிற்பதாயிற்று; உலகத்திற் பொய்யே சொல்லுவார் உரைகளை எவருந் தெளியா ராகலின், அவ்வியல்பினார் கடவுளில்லை யெனக் கூறுஞ் சொற்களும் எவரானுந் தெளியப்படா வென்க. நாத்திகம் என்பது நாதிகம் என்னும் வடசொற் றிரிபாகும். அஃதாவது கடவுள் உண்மையை மறுப்பது. இனிக், கடவுள் நினைவுடையரான இவர் பொருள் ஈட்டுதலையும், ஈட்டிய பொருள்கொண்டு எமக்கு வேண்டுவன வெல்லாந் தந்து எம்மைப் பாதுகாத்தலையும் விடுத்து அந் நினைவிலேயே அழுந்தி எம்மை விட்டுப் பிரிவரே! ah« v‹ brŒnt«! என்னுங் கவலை பெரிதுடையராய் மனைவி மக்கள் உறவி ரென்னுஞ் சுற்றத்தார் மிகப் பதைத்து அவரைத் தம் மாட்டு ஈர்த்தல் இயல்பாகலிற் சுற்ற மென்னுந் தொல் பசுக் குழாங்கள், பற்றி யழைத்துப் பதறினர் என்று அருளிச் செய்தா. சுற்றம் சுற்ற இருப்போர், பெற்றோர் உற்றார் மனைவி மக்கள் என்னுஞ் சுற்றத் தொடர்பு ஒருவர்க்குப் பிறவியெடுத்த ஞான்றுதொட்டே மக்கள் உளராயகாலம் முதல் இடையறாது வருதலிற் சுற்றம் என்னுந் தொல்பசுக் குழாங்கள் என்றார். பசு என்னும் வடசொற் பாசத்தாற் கட்டப்படும் உயிர்களைப் பொதுப்படக் குறித்து நிற்பது. கட்டுதற்குக் கருவியாகலிற் கயிறு பாசம் என்று வடமொழியில் வழங்கப் படும். உயிர்கள் நாற்காலனவும் இருகாலனவு மென இரு கூற்றுள் அடங்கு மென்னும் இருக்குவேதம்; (இருக்குவேதம் 1,114) ஆகவே, மக்களெல்லாரும் இருகாற் பசுக்களுள் அடங்குவர். புறத்தே யாடு மாடுகளைப் பிணிக்குங் கயிறுபோல, அகத்தே உயிர்களின் அறிவைக் கட்டி நிற்கும் ஆணவமும் பாசமெனச் சைவ சித்தாந்தத்துட் கூறப்படும் என்க. கடவுணினைவு வரப்பெற்றுக் கடவுளைச் சாரா முயல் வாரை அது செய்ய வொட்டாது தடை செய்தலிற் சுற்றத் தாராய உயர்தினையுயிர்களையும பசுக்குழாங்கள் என அஃறிணை யுயிர்கள் போல் வைத்து இழித்துக் கூறினார். இங்ஙனங் கூறுதல் ஆசிரியர் தொல்காப்பியனார் குடிமை யாண்மை (தொல்காப்பியம் சொல் 56) என்னுஞ் சூத்திரத்துக் கூறிய செறற்சொல் என்பதன்பால் அடங்கும். ஆரிய வேதங்களை உணர்ந்தோரான மீமாஞ்சகர் வேள்வியாற்றுதன் முதலாய விரதங்களே ஒருவற்கு வீடு பேற்றினை நல்குமாதலின் இதனைத் தருதற்கு இவற்றின் வேறாகக் கடவுள் என்றொருபொருள் வேண்டப்படா தெனவும், வேதங்கள் ஒருவராற் செய்யப்படாமல் என்றும் நிலைபேறா யுள்ளனவாமாகலின் அவை மட்டுமே மேற்கோளா மெனவும், அவை ஏவுவன செய்தலும் விலக்குவன வொழிதலும் உறுதிப் பயன்றரு மெனவும் வலியுறுத்திச் சொல்லித், தாஞ் சொல்வன வற்றிற்குத் தம் வேத நூல்களையுஞ் சான்றாகக் கொணர்ந்து காட்டி அக் கடவுள் நினைவைக் கலைத்தற்கு மடிகட்டி நிற்றலின் விரதமே பரமாக வேதியருஞ், சரதமாகவே சாத்திரங் காட்டினர் என்றருளிச் செய்தார். பழைய ஆரிய வேத நூல்களில் முழுமுதற் கடவுள் இருப்பும் இலக்கணமுந் தெற் றென விளக்கப் படாமை யானும், அவ் வேதநூல்களைப் பன்னெடுங் காலம் ஓதியுணர்வா ரெல்லாம் தம்மையுந் தம்மோ டொத்த மக்களையுமே கடவுளாகத் துணிந்து அவ்வழியில் ஒழுகுதலானும், வேள்வி யாற்றுதல் முதலாகிய வினைகளையே அவர் இஞ்ஞான்றுஞ் சிறந்தெடுத்துப் பேசுதலுஞ் செய்தலுங் கைக்கொண்டு வருதலானும், முழுமுதற் கடவுளாகிய சிவம் என்பதன் பெயரைக் கேட்பினும் அவர் அருவருப்புதலானும் ஆரியவேத மோதும் வேதியர் முமுமுதற் கடவு ணினைவுக்கு மாறாய் நிற்பவரென்பது ஐயுறவின்றித் துணியப்படும். வ்ரதம் என்னும் வடசொல் தமிழில் விரதம் எனத் திரிந்தது; விரதமானது வேள்வியாற்றுதல் முதலாகிய நோன்பு. பரம் என்னும் வடசொல் கடவுளை உணர்த்தும். வேதியர் - வேதம் ஓதுவோர், வேதம் உணர்ந்தோர். சாதம் - மெய்ம்மை; இச்சொல் இப்பொருட்டாதல் சரதம் உடையர் என்பதற்குப்* (திருச்சிற்றம்பலக் கோவையார் 57) பேராசிரியர் கூறிய வுரையிற் காண்க. நூல் எனப் பொருள்படும் சாதிரம் என்னும் வடசொல் சாத்திரம் எனத் திரிந்தது. மேலே திருவண்டப் பகுதியில் அறுவகை சமையத்தறு வகையோர் கோட்பாடுகளை விரித்துரைத்த உரைப்பகுதி களாற் சைவமல்லாத ஏனைச் சமயத்தவர்களெல்லாம் முழுமுதற் கடவுளை யறியாதவ ரென்பதூஉம் அவர் உலகத்துப் பொருள் களொரேராவொன்றனையும், மக்களுள் அறிவானும் ஆற்றலா னுஞ் சிறந்தோர் ஒரோ வொருவரையுந் தெய்வங்களாகத் திரியவுணரு நீர ரென்பதூஉங் காட்டினாமாகலின், அவர் தாங் கொண்ட அத்திரிபுணர்ச்சியைத் தம்மவரல்லாத பிறர்க்கும் புகுத்தி அவர் கொண்ட கடவுள் நினைவைச் சிதைக்க முந்தும் பெருமுயற்சியுடையராதல் தெரிப்பர் சமயவாதிகள் தத்தம் மதங்களில் அமைவதாக அரற்றி மலைந்தனர் என்றருளிச் செய்தார். மதம் - கோட்பாடு தத்தம் மதங்களே அமைவதாக என்று பாட மோதுவோரும் உளர். அமைதல் - பொருந்துதல்; ஆடுவார் நெஞ்சத் தலர்ந்த மைந்த காமம் என்பதன்* (பரிபாடல் 6 105) உரையில் இப்பொருட்டாதல் காண்க. அரற்றுதல் - வாய்விட்டுப் புலம்புதல்; இப்பொருட்டாதல் கனவின் அரற்றின்று என்பதன்*(புறப்பொருள் வெண்பா மாலை 11,9) உரையிற் காண்க. பொருளுண்மை ஆராய்ந்தறியும் மதுகையின்றித் தாந் தாம் பிழைத்துணர்ந்தவைகளையே அச்சமயவாதிகள் முன்னொடு பின் பொருத்தமின்றி உரத்துக் கூவுதலின் அவருரைகளை அரற்றுதலாகக் கூறினார். மலைதல் - பூசலிடுதல்; அஃதாவது போராடுதல். இனிக், கடவுளும் உயிரும் இல்பொருளென வலியுறுத்து மாறாடுதற்கண் நால்வகைப் பாகுபாடுடைய பௌத்ததத்தினும் ஆண்மைமிக்கது பிறிதின்மையின் மிண்டிய மாயாவாத மெனுஞ், சண்ட மாருதஞ் சுழித்தடித்(து) ஆர்த்து என்றருளிச் செய்தார். அற்றேல், உலகாயதத்திற்கும் இதற்கும் வேறுபா டென்னை யெனின்ன, உலகாயதம் நிலன் நீர் தீ வளி என்னும் நான்கு பொருளின்மேல் வேறொன்றனை உடம்படாது. மற்றுப் பௌத்தமோ அறிவும், உயிரும், இருவினையும், உலகமும், கட்டு வீடுகளும், கட்டறுத்து வீடுபெறுதற்குரிய நல்லொழுக்க முறைகளுஞ் சைவத்துட் கூறுமாறே முதற்கட் கூறிப் பின்னர் அவை யெல்லாவற்றிற்குஞ் சூனியங் கோடலின் அது பெரிய தொரு மயக்கத்தினை விளைவிக்கும் கோட்பாடாம். இத்தகைய மயக்கத்தினை விளைவித்து மக்களை வஞ்சித்தல் பற்றியே இது மாயாவாதம் என அடிகளாலும் ஏனைத் தொல்லாசிரியராலும் வழங்கப்பட்டது. ஈண்டு மாயாவாதம் என்றது, அடிகள் காலத்திற்குப் பிற்பட்டெழுந்த கௌடபாதர் சங்கர ரென்னும் இவராற் கட்டப்பட்ட மாயாவாதம் அன்று. இது மேலும் உரைத்தாம். அற்றேற், சங்கரர் கட்டிய கொள்கை மாயாவாத மெனப் பெயர் பெற்றது எற்றாலெனின்; உலகமும் உயிரும் இருவினையும், கட்டு வீடுகளும், கட்டறுத்து வீடு பெறுமாறும், முழுமுதற் கடவுளியல்பும் முதலிற் சைவத்துட் கூறுமாறே கூறிவைத்துப், பின் நான் என்பதைத் தவிர ஏனைய வெல்லாம் வெறும் பாழெனக் கூறி மக்களை வஞ்சிக்கும் நீர்மையிற் சங்கரர் கொள்கை பௌத்தரின் மாயாவாதம் பொறலின் இதுவும் அப்பெயரான் வழங்கப் படுவதாயிற்று. பிற்றை ஞான்றை மாயாவாதம் மறைந்த பௌத்தம் என முன்னை யோராற் கூறப்பட்டமையினை மேலேயும் எடுத்துக் காட்டினாம். மிண்டிய - திட்பங் காட்டிய: திட்பமுடையோரை மிண்டர் என்றல் பிங்கலந்தையினும், உலக வழக்கினுங் காண்க. பொருட் டிண்மை இல்லையெனினும் அஃதுடையார்போற் சொல்லாற் பிறரை வெருட்டுதற்கண் மாயாவாதிகள் திண்ணிய ராதல்பற்றி, அவர்க்குள்ள இயல்பை அவர்தங் கோட்பாட்டின் மேலேற்றி மிண்டிய மாயாவாதம் என்றார். கடுங்காற்றுத் தன்கட்பட்ட மெலிய பொருள்களைத் தான் நெல்லுமாறே ஈர்த்துச் செல்லுதல் போல, மாயாவாதமும் தன்கட்பட்ட மெல்லறிவினாரைத் தன் வழியிலன்றி அவர் வழியிற் செல்லவிடாமை தெரிப்பார் அதனைச் சண்டமாருத மாக உருவகப்படுத்தினார். சண்ட கடிய எனவும் மாருத காற்று எனவும் பொருடரும் வடசொற்கள். சுழித்தற்றொழில் நீரினுங் காற்றினும் ஓரோவழித் தீயினுங் காணப்படும். ஆர்ப்ப வென்னுஞ் செயவெ னெச்சம் ஆர்த்து எனச் செய்தெனெச்சமாய்த் திரிந்தது. இனி, உலகத்துப் பொருள்களை ஆராயும் இயற்கைப் பொருள் நூல்களும், உயிர்நூல் பயிர்நூல் உடம்புநூல் உளநூல் முதலியனவு மெல்லாம் பெரும்பாலும் இறைவ னின்றியே இவையெல்லாம் இயற்கையே தோன்றி நின் றழியு மெனக் கூறுதலால் இவைதம்மைக் கலாபேதத்த கடுவிடம் என்றார். லோக ஆயுத என்னும் வடசொற்கள் லோகாயத எனப் புணர்ந்து தமிழில் உகரச்சாரியை பெற்று மதத்தை யுணர்த்துங்கால் உலோகாயதம் எனவும், அதனை யுடை யோனை யுணர்த்துங்கால் உலோகாயதன் எனவும் நிற்கும்; ஆயத என்பதற்கு இழுக்கப்பட்ட என்பது பொருளாகலின், உலோகாயதன் என்பதற்கு உலகத்தால் இழுக்கப்பட்டவன் என்று பொருளுரைத்துக் கொள்க. கலா நூல்; இது கல் என்னும் முதனிலையிற் பிறந்த தமிழ்ச்சொல்; தமிழிலிருந்து வடமொழிக்கட் சென்று வழங்கும் பலசொற்களுள் இதுவும் ஒன்று. கற்கப்படுதலின் நூல் கலை யென்னும் பெயர்த்தாயிற்று. அக்கலைதான் பல பிரிவுகளை யுடைமையிற் கலாபேதத்த என்றார். உலகாயதக் கொள்கையில் அகப்பட்டாரது அறிவு அதனால் நிலைகுலைந்து மேற்பட்டதொன்றனை அறிதற்கு வலியிலதாய் ஒழிதலின், அதனை யுடையானை ஒரு வல்லரவாகவும், அவன் எழுதிய கலை நூல்களை அவ்வரவின் நஞ்சாகவும் உருவகப்படுத்தினார். பேதம் - வேறுபாடு; இது வடசொல். விஷம் - நஞ்சு; இவ்வடசொல் தமிழில் விடம் எனத் திரிந்தது. எய்த வென்னும் செயவெ னெச்சம் எய்தி என்னுஞ் செய்தெ னெச்சமாகத் திரிந்தது. அவ்வாறு ஒருபாற் பௌத்தமென்னும் மாயாவாதக் கொள்கையானும், மற்றொருபால் உலோகாயதக் கொள்கை யானும் தாம் இடைநின்று அலைக்கப்படுதலை ஒருபாற் புயற் காற்றானும் மற்றொருபாற் கொடியதொரு நச்சுப்பாம்பானும் அலைக்கப்படுதலோடு ஒப்பிட்டார். அங்ஙனம் அலைக்கப் பட்டதனைத் தெரிப்பார் அதில் என்னுஞ் சுட்டுச் சொல் தலைப்பெய்துரைத்தார். இங்ஙனமெல்லாம் மாயாசத்திகளும், பல்வேறு வகை யினரான மக்களின் பிழைபாடான கோட்பாடுகளுந் தம்மைச் சூழ்ந்து கொண்டு தம்மை மயக்குறுத்தவும், இறைவன் தம்பாற் கொண்ட பேரிரக்கத்ற் குருவடீவிற் றோன்றி அடியார் தம்மை அம்மயக்கத்தினின்றும் மீட்டு அருள் புரிந்தமை அடிகள் மேல் அருளிச் செய்கின்றார். தப்பாமே தாம் பிடித்தது சலியாத் 60 தழலது கண்ட மெழுகது போலத் தொழுதுளம் உருகி அழுதுடல் கம்பித் தாடியும் அலறியும் பாடியும் பரவியுங் கொடிறும் பேதையுங் கொண்டது விடாதெனும் படியே யாகிநல் லிடையறா அன்பிற் 65 பசுமரத் தாணி அறைந்தாற் போலக் கசிவது பெருகிக் கடலென மறுகி அகங்குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்துச் சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப நாணது வொழிந்து நாடவர் பழித்துரை 70 பூணது வாகக் கோணுத லின்றிச் சதுர்இழந் தறிமால் கொண்டுசாருங் கதியது பரமா வதிசய மாகக் கற்றா மனமெனக் கதறியும் பதறியும் மற்றோர் தெய்வங் கனவிலும் நினையா 75 தருபரத் தொருவன் அவனியில் வந்து குருபரன் ஆகி அருளிய பெருமையைச் சிறுமைஎன் றிகழாரே திருவடி யிணையைப் பிறிவினை அறியா நிழலது போல முன்பின் னாகி முனியா தத்திசை 80 என்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி அன்பெனும் ஆறு கரையது புரள நன்புலன் ஒன்றி நாதஎன் றரற்றி உரைதடு மாறி உரோமஞ் சிலிர்ப்பக் கரமலர் மொட்டித் திருதயம் மலரக் 85 கண்களி கூற நுண்டுளி அரும்பச் சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர் தாயே யாகி வளர்த்தனை போற்றி தப்பாமே - அவற்றால் தவறுபடாமே, தாம் பிடித்தது சலியா - தாம் பிடித்த பிடியை இளைத்து விடாமல், தழலது கண்ட மெழுகது போல - தீயை எதிரே அணுகின மெழுகைப் போல, தொழுது உளம் உருகி அழுது உடல் கம்பித்து என்பதனை உளம் உருகித் தொழுது அழுது உடல் கம்பித்து என மாற்றி உள்ளம் உருகிப் பணிந்து அழுது உடம்பு நடுங்கி எனப் பொருளுரைக்க ஆடியும் அலறியும் பாடியும் பரவியும் - ஆடுதல் செய்தும் அலறுதல் செய்தும் பாடுதல் செய்தும் வணங்குதல் செய்தும், கொடிறும் பேதையுங் கொண்டது விடாது எனும் படியே ஆகி - குறடும் அறிவிலியும் தாம் பிடித்ததை நெகிழ விடா என்னும் வகையே ஆகி, நல் இடைஅறா அன்பின் நன்றாகிய நடுவே அறுதல் இல்லாத அன்பினால், பசுமரத்து ஆணி அறைந்தாற் போல - பச்சைமரத்தி னிடத்தே ஆணியை அடித்தால் ஒப்ப, கசிவது பெருகி - மன நெகிழ்ச்சி மிகுந்து, கடல் என மறுகி - கடலைப் போலச் சுழன்று, அகம் குழைந்து - உள்ளம் வாடி, அனுகுலமாய் மெய்விதிர்த்து - அதற்கு இசைந்து உடம்பு நடுங்கி, சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப - உலகத்தவர் தம்மைப் பேய் என்று சிரியாநிற்ப, நாணது ஒழிந்து - நாணத்தை விட்டு, நாடவர் பழித்து உரை கோணுதல் இன்றிப் பூணது ஆக என மாற்றி நாட்டிலுள்ளோர் தம்மைப் பழித்துக் கூறுஞ் சொற்களை மனங்கோணாமல் அணிகலனாக ஏற்றுக் கொண்டு சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும் கதியது பரம அதிசயம் ஆக - யாம் வல்லேம் என்னுந் திறமையை இழந்து அறியும் மீதூரப் பெற்றுத் தாம் சார்தற்கு உரிய வீடுபேற் றின்பமே மேலான வியப்புக்கு இடமாக. கற்றா மனம் எனக் கதறியும் பதறியும் - கன்றையுடைய ஆவின் மனம்போலக் கதறுதலைச் செய்தும் பதறுதலைச் செய்தும், மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது - வேறு ஒரு தெய்வத்தைக் கனவினிடத்தும் நினையாதபடி, அருபரத்து ஒருவன் அவனியில் வந்து குருபரன் ஆகி அருளிய பெருமையை - அறிதற்கரிய மேன்மைத் தன்மை யையுடைய ஒப்பற்ற முதல்வன் நிலத்தின்மேல் உருவு கொண்டு வந்து ஆசிரிய முதல்வனாய் அமர்ந்து அருள்செய்த பெருந் தன்மையை, சிறுமை என்று இகழாதே - அத்துணை யெளிதிற் கிடைத்தமைபற்றி அதனைப் புல்லிதாக நினைத்து இகழ்ந்து விடாமே, திருஅடி இணையைப் பிறிவினை அறியா நிழலது போல முன்பின் ஆகி - திருவடிகள் இரண்டையும் பிறிது படுதலை அறியாத நிழலைப் போல முன்னும் பின்னும் ஆக நினைந்து, முனியாது - அங்ஙனம் நினைத்தலை அலுத்து வெறாது, அத்திசை - அவ்வாறு குருபரன் எழுந்தருளிய திசையை நோக்கி, என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி அன்பு எனும் ஆறு கரையது புரள - எலும்புந் தனது வன்றன்மை கெட்டு உருகக் கனிந்து கனிந்து இரங்கி அன்பு என்று சொல்லப்படும் ஆறு கரைமேற் புரண்ட செல்ல, நல்புலன் ஒன்றி - நல்ல பொறி யறிவுகள் ஐந்தும் ஒன்றுபட்டு, நாத என்று அரற்றி - தலைவனே என்று வாய்விட்டு புலம்பி, உரை தடுமாறி - சொற்கள் குழறி, உரோமம் விலிர்ப்ப - மயிர் சிலிர்க்க கரமலர் மொட்டித்து - கைம்மலர் குவித்து, இருதயம் மலர - நெஞ்சம் விரிய, கண் களி கூர நுண்துளி அரும்ப - கண்கள் களிப்பு மிகுத லாலே சிறிய நீர்த்துளிகளைத் தோற்றாநிற்க, சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர் - கெடாத அன்பினால் நாடோறுஞ் செழிப்பவரை, தாயே ஆகி வளர்த்தனை போற்றி - தாயைப் போல நின்று வளர்த்த உனக்கு வணக்கம் என்றவாறு. மேலெடுத்துக் காட்டியவாறு எத்துணையோ பல மாயைகள் தம்மைவந்து சூழ்ந்து கொள்ளவும் அவற்றுட்பட்டுப் பிழையுறாதும், இறைவனது வீடுபேற்றின்பத்தினைச் சாருந் தமது குறிப்பினின்றும் வழுவாதும் அதனைக் கடைப்பிடியாய்க் கொண்டுள்ள மெய்யடியார்க்கு இறைவன் குருவடிவிற் போந்து அருள் செய்யுமாற்றினையும், அதனால் அவர் அன்பால் இன்புறு நிலையினையும் அடிகள் எடுத்தோதுவான் புகுந்தார். ஐம்பத்தெட்டாம் அடியில் உள்ள சூழவும் என்னும் வினைக்குச் செயப்படுபொருளாவது எண்பத்தாறாம் அடியில் உள்ள தழைப்பவர் என்பதனைக் குறிக்குந் தம்மை என்னும் இரண்டன் உருபேற்ற இடப்பெயரே யாகலின், அது சூழவும் என்பதன்முற் றொக்கு நின்றது; மற்றுத் தப்பாமே தாம் பிடித்தது சலியா என்னும் இவ்வடியில் தாம் என்னும் அப்பெயர் பிடித்தது சலியா என்னும் வினைகட்கு வினை முதலாய் விரிந்து நின்றது. இத்திருவகவலின் முதலடி துவங்கி எண்பத்தேழாம் அடிகாறும் போந்த சொற்றொடரிலக்கணம் இதுவாதல் அயி மாட்டாதார் ஐம்பத்தெட்டாம் அடியிற் போந்த எனைப் பல சூழவும் என்பதில் உள்ள எனை என்பதற்கு என்னை எனப் பொருள்கொண்டு என்னைப் பல சூழ்ந்து கொள்ளவும், என உரை கூறினார். முதல் எண்பத்தேழ் அடிகாறும் சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர் என மாயாசத்திகளின் மாயத்திற்குத் தப்பிக் கெடாத பேரன்பிற் றழைத்த மெய்யடியாரை இறைவன் தாயாய் நின்று வளர்க்கு மியல்பினை அடிகள் எடுத்தோதுகின்றாரல்லது தம்மைப் பற்றி அங்ஙன முரையாமை யானும், எனை என்பதற்கு என்னை எனப் பொருளுரைக்கப்பட்ட அச்சொல், தப்பாமே தாம் பிடித்தது சலியா சகம் பேயென்று தம்மைச் சிரிப்ப, சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர் என்னும் அடிகளுட் போந்த தம் தம்மை தழைப்பவர் என்னும் படர்க்கையிடத்துப் பலர்பாற் பெயர்களோடு சென்றியைந்து பொருடராமை யானும் அவ்வாறுரைத்தல் அடிகள் திருவுளக் கருத்துக்கு மாறாமென்க. அற்றேல், யானை முதலா எறும் பீறாய, ஊனமி லியோனியி னுள்வினை பிழைத்தும் என்றற் றொடக்கத்துத் திருவடிகளி னெல்லாம் அடிகள் அவற்றுக்கெல்லாந் தாம் தப்பி வந்தவாறு போல்வதொரு குறிப்புப் புலனாம்படி அங்ஙனங் கூறிய தென்னை யெயின்; மெய்யடியார் அவற்றுக்கும் ஏனை மாயா சக்திகட்குந்தப்பி இறைவன் றிருவரு ணெறி சார்ந்தமை தெரிக்கவே, மெய்யடிமைத் திறம் பிறழாத அடிகள் தாமும் அவற்றுக்கெல்லாந் தப்பி இறைவனால் அடிமை கொள்ளப் பெற்ற வரலாறும் அம்மெய்யடியார் திறத்துள் அடங்குமாகலின் அடிகள் தாமும் அவற்றுக்குத் தப்பித் திருவரு ணெறி சார்ந்ததொரு குறிப்பு ஆண்டுப்புலனாம்படி வைத்தமை பற்றி வரக் கடவதாகிய இழுக்கு ஒன்றுமில்லை யென்க. எனினும், இத்திருவகவல் முதற்பகுதியின் சொன்முடிவு பொருண் முடிவுகளை ஆய்ந்து நோக்கும்வழிச் சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர் எனப் படர்க்கையிடத்தில் வைத்து மெய்யடியார் வரலாறே இதன்கட் கூறப்படுகின்ற தென்பது இனிது விளங்கா நிற்கும்; அதனால் எனை என்பதற்கு என்னை எனப் பொருளுரையாமல் எவ்வளவோ என வுரைத்துத் தப்பா மேதாம் பிடித்தது சலியா என்னும் இவ்வடியோடும், மேல்வந்து முடியும் சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர் என்னும் அடியோடும் பொருளி யைத்துக் கொள்க. தப்பாமே - தவறாமே; பார்ப்பார்த் தப்பிய என்புழி (புறநானூறு 34) இப்பொருட்டாதல் காண்க. சலியா - சலியாமல்; அதாவது இளைத்துக் கைவிடாமல்; சலியாமல் என்று நிற்கற் பாலதாகிய எதிர்மறை வினையெச்சம் ஈறுகெட்டுச் சலியா என நின்றது. காக்கை கரவா கரைந் துண்டும் என்புழியும் (திருக்குறள் 527) கரவாமல் என்னும் எதிர்மறைவினை யெச்சம் ஈடுகெட்டுக் கரவா என நின்றமை காண்க. தழலது மெழுகது என்பவற்றில் அது பெயர்ப் பொருளை அசைத்து நின்ற அசைநிலை. கம்பித்தல் என்பது நடுங்கு எனப் பொருள்படும் கம்ப என்னும் வடசொன் முதனிலையிற் பிறந்தது. கொடிறு - குறடு; பிங்கலந்தை; குறடு தான் பற்றியதனைத் தானாகவே விடாது; அறிவிலியுந் தான் பிடித்ததனை விடான், கொடிறு என்னும் அஃறிணைச் சொல்லும் பேதை என்னும் உயர்திணைச் சொல்லும் ஒருங்கியைந்து இழிபினால் விடாது என்னும் அஃறிணைமுடி பேற்றன. அற்றேல், அவை யிரண்டு சொல்லாகலான் விடா எனப் பன்மை வினையன்றே ஏற்கற் பாலன; விடாது என ஒருமை வினை கொண்டு முடிந்த தென்னை யெனின்; கொடிறும் பேதையுங் கொண்டது. விடாமைக்கண்ட ஒரே தன்மையவா யிருத்தலின், அவை சொல்லால் இரண்டாயினும் ஒருமைப் பயனிலைகொண்டு முடிந்தன. தானுந் தேரும் பாகனும் வந்தென் னலன் உண்டான் எனப் பலபெயரும் விரவிச் சிறப்பினால் உயர்திணை ஆண்பால் முடிபு ஏற்றாற் போலவும், தொல்லை நால்வகைத் தோழருந் தூமணி நெடுந்தேர் மல்லற் றம்பியும் மாமனும் மதுவிரி கமழ்தார்ச் செல்வன் றாதையுஞ் செழுநக ரொடுவள நாடும் வல்லைத் தொக்கது வளங்கெழு கோயிலுள் ஒருங்கே என்புழி (சீவகசிந்தாமணி 2360) உயர்திணை யஃறிணைப் பெயர்கள் ஒருங்கு விராய்த் தொக்கது என அஃறிணை யொருமை வினையான் முடிந்தாற் போலவும் ஈண்டுங் கொடிறும் பேதையுங் கொண்டது விடாது என அஃறிணை யொருமைப் பெயரான் முடிந்தது. இன்னோரன்ன முடிபு களெல்லாம், பலவயினானும் எண்ணுத்திணை விரவுப் பெயர் அஃறிணை முடிபின செய்யும் உள்ளே என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய சூத்திரத்தின் கண்ணே (சொல் 51) அடங்கு மென். கொண்டது விடாமைக்கண் மெய்யன்பருங் கொடிறும் பேதையும் ஒன்றாதல் பற்றிப் பின்னிரண்டையும் உவமையாக்கினார். படி - வகை; கல்லுரு, ஒன்றியடி யிது என்புழியும் (பரிபாடல் 19) இச்சொல் இப்பொருட்டாதல் காண்க. அறைதல் - அடித்தல்; திவாகரம். கொடிறும் பேதையுங் கொண்டது விடாதென்பது தாம் பிடித்தது சலியாமைக்கு உவமையாய் வந்தது; ஈண்டுப் பசு மரத்தாணி அறைந்தா லென்றது இடையறா அன்பில் நிலை பெறுதற்கு உவமையா வந்தது. முதற்றோன்றும் அன்பு மெல்ல வெளிப்புலனாதலிற் கசிவது என்வும், பின்னர் அது வரம்பின்றியே பெருகுதலிற் பெருகி எனவும், அங்ஙனம் மேன்மேற் பெருகுமதில் அகப்பட்ட உயிர் இன்பத்தாற் சாலக் களித்தலின் மறுகி எனவும், அளவின்றிப் பெருகின அவ் அன்பினைத் தாங்கமாட்டாது உள்ளம் வாடுதலின் அகங் குழைந்து எனவும், அதற் கேற்பப் புறத்தே உடம்பு நடுங்குதலின் அநுகுலமாய் மெய்விதிர்த்து எனவும், பேரன்பு மீதூரப் பெற்றார் செயலெல்லாம் உலகத்தார் செயல்களுக்கு முற்றும் மாறாய்க் காணப்படுதலின் அவ்வியல் பினாரைக் காணும் உலகினர் அவரை இகழ்ந்து நகுதல் அறிவிப்பார் சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப எனவும், அவ்வாறவர் தமது புல்லறிவுகொண்டு இகழ்ந்துரைக்கும் பழித்துரைகளுக்கு மெய்யன்பர் நாணாராகலின் நாணது ஒழிந்து எனவும், நாணாமையே யன்றி அப்பழித்துரைகளை அவர் தமக்கு அணிகலனாகவுங் கொள்வரென்பார் நாடவர் பழித்துரை பூணதுவாக எனவும் அருளிச் செய்தார். கசிதலாவது நெகிழ்ந்து மெல்ல வெளிப்புலனாதல்; இப் புதுக்குடத்தில் நீர் கசிகின்றது என உலக வழக்கினும் வருதல் காண்க. மறுகி - சுழன்று; மறுகின் மறுகும் மருண்டு என்புழியும் (திருக்குறள் 1139) இப்பொருட்டாதல் காண்க. குழைதல் - வாடுதல்; பிங்கலந்தை. அநுகுலம் என்பது அதற்கு இயைய எனப் பொருள்படும் அநுகூல என்னும் வடசொற் றிரிபு. விதிர்த்து - நடுங்கி; அதிர்வும் விதிப்பும் நடுக்கஞ் செய்யும்என்றார் (தொல்காப்பியம் சொல் 316) ஆசிரியர் தொல்காப்பியனார். தொழுதுளம் உருகி அழுதுடல் கம்பித்து என்று மேற் கூறியவாறே, ஈண்டும் அகங் குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்து என ஓதுதல் கூறியது கூறல் ஆகாதோவெனின்; ஆகாது என்னை? மெய்யன்பின் மிகுந் தார்க்கு இத்தகைய மெய்ப்பாடுகள் அடுத்தடுத்துத் தோன்று தலானும் இவற்றை எடுத்துக்கூறுந் திருவாதவூரடிகளும் பேரன்பிலக்கப்பட்ட ஒரு பேரின்ப நிலைக்கண்ணே நின்று இவற்றை அருளிச் செய்தலானும், அப்பேரன்பின் வழிப் பட்டார்க்கு அவ்வன்பின் கிளர்ச்சியை ஒரு காலன்றிப் பலகாலுங் கூறுதற்கு அடங்காப் பெருவேட்கை எழுதலானும் என்பது; இது மேலும் உரைத்தாம். இவ்வாறே பின்வருவன வற்றிற்கும் உரைத்துக் கொள்க. சகம்- உலகம்; ஈண்டு உலகத்தவர்மேல் நின்றது ஆகுபெயர்; ஜகத் என்னும் வடசொற் றிரிபு. சதுர என்னும் வடசொல் சதுர் எனத் திரிந்தது; ஈண்டு இஃது யான் வல்லேன் என்னுஞ் செருக்கினை உணர்த்தா நின்றது. யான் என முனைத்து நின்று அறிவார்க்கு இன்பம் புலனாகாது; இன்பம் நிகழ்வழியெல்லாம் யான் என்னும் முனைத்துணர்வு அழிந்துபடுதல் இம்மைக்கண்ணே ஐம்புல நுகர்ச்சியினும் நன்குவைத் தறியப்படும். அங்ஙனமாயின், அறிவின்றி இன்பம்நிகழுங்கொல்லோ வெனின்; அறிவின்றியும் இன்பம் நிகழ்தல் அயர்ந்துறங்கி எழுத்தோன்மாட்டுக் காணப் படுமாயினும், அறியாமையோடு கூடித்துய்க்கும் அவ்வுறக்க வின்பம் வேண்டற்பாற்றன்று; மற்று நனவின்கட் டுய்க்கு மின்ப மெல்லாம் அங்ஙனம் அறியாமைக்கண் நிகழ்வதின்றி அறி வோடு கூடியே நிகழுமென்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்தமை யானும், ஆண்டுள்ள அறிவு இது இது வெனப் புடை பெயர்ந்தறியும் நீர்மையிற் றீர்ந்து நின்றாங்கு நின்றறறியும் இயல்பிற்றாதல் நுணுகி நோக்குவார்க்குத் தெற்றென விளங்கு தலானும் பேரின்ப நுகர்ச்சியும் உயர்ந்ததோ ரறிவோடுகூடியே நிகழுமென் றோர்க. கட்டுணர்வின்றி யறியப்படும் அப்பேரின்ப வியல்பு தெரித்தற்கே அடிகள் சதுரிழந் தறிமால் கொண்டு சாருங்கதி என்றருளிச் செய்தார் என்க. இன்னுஞ் சுட்டியறி தலின்றி நிகழும் அறிவு இன்பத்திற் றோய்ந்தவளவானே அவ்வின்பமே தானாய்த் தன்னை அதனின் வேறாகப் பகுத்துணருமாறின்றி மயங்குதலின் அறிமால் என்று மேலும் அதனியல் விளங்கியருளினார். மால் - மயக்கம்; மங்குன் மனங்கவர மான்மாலை நின்றேற்கு என்னும் புறப்பொருள் வெண்பாமாலையினும் (பாடாண் படலம் 45) இஃதிப் பொருட்டாதல் காண்க. கதி நிலை, வீடுபேறு எனப் பொருள்படும் ஒரு வடசொல். பரம என்னும் வடசொல் ஓசையின்பம் நோக்கிப் பரமா என ஈறு நீண்டது. அதிசயம் வடசொல். கன்று ஆ கற்றா என ஆயின; கன்றையுடைய ஆன்; இவ்வாறு திரிதல் மெல்லொற்றுத் தொடர்மொழி மெல் லொற் றெல்லாம், வல்லொற்றிறுதி கிளையொற்றாகும் என்பதனான் (தொல்காப்பியம் எழுத்து 414) முடிக்கப்படும். கன்றைப் பிரிந்து ஆ பொறுத்தற் கரிதாந்துயர் உறல்போல, இறைவன் றிருவடியைப் பிரிந்திருக்கும் அடியாருள்ளமும் பெரிதும் ஆற்றாதாம் என்பது குறித்தா ராயிற்று. உள்ளம் பொறிவழியேவரும் புறத்துப் பொருட்டன் மையிற் பதித்தால் மனம் எனப் பெயர் பெற்றது; இச்சொல்லின் முதனிலை மன் மன்னுதல் - பதிதல், நிலைபெறுதல். இச்சொற் பிறப்பு இதுவாதல் அறியாதார் இதனை வடசொல் என்பர். கடவுள் ஒன்றுண்டெனக் கொண்டார்க்கு அக்கொள்கை நிலைபெறுவது அஃது அவர்க்கு ஓரோவழித் தோன்றி யருள் புரியும் வழியே யாகலான் மற்றோர் தெய்வங் கனவிலும் நினையாது. அருபரத் தொருவன் அவனியில் வந்து, குருபரனாகி யருளிய பெருமையை என்றருளிச் செய்தார். தெய்வ முண்டெனக் கொண்டார்க்கும் அஃது ஒருகாலுந் தோன்றி யருள் புரிந்தின் றாயின், அவர் தாம் இடர்ப்படுஞான்று தமக்குதவி புரியும் ஏனைச் சிறுதெய்வங்களையே முழுமுதற் கடவுளெனத் துணிந்து வழிபடா நிற்பர். இவ்வாறு இறைவனருட் பேற்றினுக்கு நேரே உரியரல்லாதார் தம்மினும் மேலோராய் நின்று தமக்கு உதவியாற்றிய சிறு தெய்வங் களையே முழுமுதற் கடவுளென நாட்டப்புக்கமையாற் பாஞ்சராத்திரம் புத்தம் முதலான புறச் சமயங்களும், வைரவம் வாமங் காளாமுகம் முதலான அகச் சமயங்களும், இவை யல்லாத பிறவுந் தோன்றுவவாயின. இனி முழுமுதற்கடவுளின் திருவருளை நேரே பெறும் பெருந் திருவுடையார்க்குக் கடவுளல்லாததைக் கடவுளென அங்ஙனம் மயங்கிக் கூறல் வேண்டாவென்க. மெய்ப் பொருளாம் முழுமுதற் கடவுளை நேரே காணப்பெற்றார்க்குப் பிறிதொன்றிலும் நினைவு செல்ல மாட்டாதாகலின் மற்றோர் தெங்வங் கனவிலும் நினையாது என்றார். ஒருதெய்வம் என்பது செய்யுளாகலின் ஓர் தெய்வம் எனத் திரிந்து நின்றது. தெய்வம் என்பது தேய் என்னும் முதனிலையிற் பிறந்த தமிழ்ச்சொல்; ஞெலிகோலிரண்டை ஒன்றோ டொன்று சேர்த்துத் தேய்த்தலால் தீ உண்டாம்; இங்ஙனமாகத் தேய்க்குந் தொழிலாற் பிறத்தல்பற்றி அழல் தீயெனப் பெயர் பெறலாயிற்று; இனி, முழுமுதற் கடவுள் தீயின்கண்ணே விளங்கித் தோன்றுமியல்பினை மேலே நன்கு விளக்கிக் காட்டின மாகலின், கடவுள் அவ்வியைவுபற்றித் தெய்வம் எனப் பட்டதென்க. வடமொழிக்கண் வழங்கும் தேவன் என்னுஞ் சொல்லும் தேய் என்னும் இத்தமிழ் முதனிலையினின்றே தோன்றியதொன்றாம். வடநூலார் தேவன் என்னுஞ் சொல் திவ் எனும் முதனிலையிற் றோன்றி ஒளி யுடையவன் எனப் பொருள்படு மென்ப. ஒளியுடைப் பொருள் தீயேயாதலானும், அத்தீயும் தேய்யதற்றொழி லானன்றிப் பிறவாமையானும் திவ் என்னும் முதனிலைக்கும் முற்பட்டது. தேய் என்னுந் தமிழ் முதனிலையோயா மென்று துணிக. இதனானன்றே ஆசிரியர் தொல்காப்பியனார் தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் என்று (தொல்காப்பியம் சொல் 4) இச்சொல்லை எடுத்தாளுவா ராயினரென்பது. அவநி நிலம் எனப் பொருள்படுவதொரு வடசொல். குரு என்பது பெருமையிற் சிறந்தோன் எனப் பொருள் படும் குரிசில் என்னுந் தமிழ்ச் சொல்லினின்றும் பிறந்து ஆசிரியன் என்னும் பொருளில் வழங்குவது; குருவன் குருவனே போற்றி (திருச்சரகம் 68) குரவன் என்பவையும் அன்ன. இஃதுணராதார் இவற்றையும் வடசொல்லென் றுரைப்பர். திருவடியிணையைப், பிறிவினை யறியா நிழலது போல, முன் பின்னாகி என்றது நிலத்தே நாட்டிய ஒருகோலின் நிழல் ஞாயிறு கீழ்த்திசையிற் றோன்றுங்கால் அதன் மேற்பக்கத்தே காணப்பட்டும், அது மேற்றிசையிற் சாயுங்கால் அந்நிழல் அக்கோலின் கீழ்ப்பக்கத்தே காணப்பட்டும் அதனைவிட்டுப் பிரியாமைபோலக் குருவடியில் எழுந்தருளிய முதல்வன் றிருவடி யிணைகளை நேரே கண்ட களித்தற்கு ஏதுவாய்நின்ற அன்பு அவன் மறைந்துழியும் மறவாது மெய்யடியார்க்கு முன்னும் பின்னுந் தொடர்புற்று நிகழுமாற்றினை விளக்கியபடியாம். பிறிவினை - பிறிது ஆதல்; அதாவது வேறாதல். ஒரு பொருளும் அதன் நிழலும் வேறு வேறாதல் யாண்டும் இல்லாமையின் பிறிவினை யறியா நிழல் என்றார். பிறிதாம் வினை என வினைத் தொகையாக விரைக்க வினை - செயல். முனியாது - வெறாது; முனைவு முனிவாகும் என்றார் (தொல்காப்பியம் சொல் 386) ஆசிரியர் தொல்காப்பியனார். ieªJ bf£L; m~jhtJ t‹ w‹ikaʪJ v‹f; ï¥ bghU£lhjš “eW§ fŸË‹ ehL ie¤jÈ‹” v‹òÊí§ fh©f.(òweh}W 97) நெக்கு என்பதன் முதனிலை நெகு. நெக்கு - நெகிழ்ந்து; கனிந்து. புலம் - அறிவு; நுண்மான் நுழைபுலம் என்றார் (திருக்குறள் 407) ஆசிரியர் திருவள்ளுவனாரும். ஈண்டு அது பொறிவழிச் செல்லும் ஐந்தறிவுகளை உணர்த்திற்று; அன்பின் வழிப்பட்ட அறிவு அதன்வழி யன்றிப் பொறிவழிச் செல்லாமையின் அன்பெனும் ஆறு கரையதுபுரள, நன்புலன் ஒன்றி என்றார்; ஐந்துபே ரறிவுங் கண்களே கொள்ள என்றார் சேக்கிழார் நாயனாரும். அரற்றுதல் - வாய்விட்டுப் புலம்பல் (புறப்பொருள் வெண்பா மாலை, 11,9) உரோமம் வடசொல். மொட்டித்து என்னும் வினை மொட்டு என்னும் பெயர்ச் சொல்லி னடியாகப் பிறந்தது. மொடு முகை; திவாகரம். மாலைக்காலத்தில் தாமரைமலர் கூம்புதல்போல் இரு கைகளையும் சேரக் குவித்தலிற் கரமலர் மொட்டித்து என்றார். ஹ்ருதய என்னும் வடசொல் இருதயம் என ஆயிற்று. கண்களிகூர நுண்துளி யரும்ப என்பதிற் கூர வென்னும் செயவென் வாய்பாட்டு வினையெச்சம் காரண காரியப் பொருட்டாய்க் கண்கள் களிப்பு மிகுதலாலே சிறிய நீர்த் துளிகளைத் தோற்றாநிற்க, எனப் பொருடந்தது. கூர்தல் - உள்ளது சிறத்தல்; அதாவது மிகுதல்; தொல்காப்பியம், சொல் 314. சாயா - கெடாத, முன்னுள்ளது நுணுகாத (தொல்காப்பியம் சொல் 330) அன்பினை என்பது அன்பினால் எனப் பொருள்பட்டது உருபு மயக்கம் என்னை? யாதனுருபிற் கூறிற்றாயினும், கொருள்சென் மருங்கின் வேற்றுமைசாரும் (தொல்காப்பியம் சொல் 106) என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாராகலின். அன்பிலால் தழைப்பவர் என்க. தழைப்பவர் என்பதன் ஈற்றில் இரண்டாம் வேற்றுமை யுருபாகிய ஐ தொக்கது. தழைப்பவர், தாயே யாகி என வல்லெழுத்து மிகா தியல்பாய்ப் புணர்தல் உயிர் ஈறாகிய உயிர்திணைப் பெயரும் புள்ளி யிறுதி உயிர்திணைப் பெயரும் எல்லா வழியும் இயல்பென மொழிப என்பதனான் (தொல்காப்பியம் எழுத்து 153) உணர்க. தன்னைப் பாதுகாத்தலும் வளர்த்தலும் அறியாமையாற் றன்செய லற்றுக் கிடக்குங் குழவியைத் தாய் தானே பாது காத்தலும் வளர்த்தலுங் கருத்தாய்ச் செய்து போதருமாறு போல, தஞ்செயல் முற்றுமற்று இறைவனையே முழுதுஞ் சார்ந்து நிற்கும் மெய்யன்பரை அவ்விறைவனே பாதுகாத்து வளர்ப்பனாகலின் சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர், தாயே யாகி வளர்த்தனை போற்றி என் றருளிச் செய்தார். இவ்வா றிறைவன் மெய்யன்பரை என்றுகொண் டருளுமுறை, இவனுலகில் இதம்அகிதஞ் செய்த எல்லாம் இதம்அகிதம் இவனுக்குச் செய்தார்பால் இசையும் அவன் இவனாய் நின்றமுறை ஏகன் ஆகி அரன்பணியின் நின்றிடவும் அகலுங் குற்றம் சிவனும் இவன் செய்தியெல்லாம் என் செய்தி என்றுஞ் செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும் பவம்அகல உடனாகி ஏன்றுகொள்வன் பரிவாற் பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே என்று அருணந்தியடிகள் கூறுமாற்றால் (சிவஞானசித்தியார் 10,1) அறியப்படும் என்பது மெய்தரு வேதியன் ஆகி வினை கெடக் கைதர வல்ல கடவுள் போற்றி மெய் தரு - மெய்ப்பொரு ளுணர்ச்சியினைத் தரும், வேதி யன் ஆகி - மறையோன் ஆகிவந்து, வினைகெட - எச்ச வினை ஏறு வினைகள் அழியுமாறு, கைதர வல்ல - உதவி செய்ய வல்லவனாகிய, கடவுள் போற்றி - கடவுளே வணக்கம் என்ற வாறு. மெய் யென்றது ஈண்டு மெய்ப்பொரு ளுணர்ச்சியினை. மறையோன் வடிவிற் போந்து இறைவன் தமக்கு மெய்ப் பொரு ளுணர்ச்சியினைத் தந்தருளினமை அடிகள் ஈண் டருளிச் செய்தார். ஆணவ முனைப்பால் உயிர்கள் செய்யும் வினைகள் ஏன்ற வினையும் ஏறு வினையும் என இருதிறத்தவாம்; இவை தம்முள் ஏன்றவினை யென்பது தொகைவினையுந் தவக்கவினையு மென மறித்தும் இருவகைப்படும்; இவற்றுள் தொகைவினையாவது மேலைப் பிறவிகள் பலவற்றினுந் தொகுக்கப்பட்டது. இதனை வடநூலார் சஞ்சித கன்ம மென்ப; துவக்க வினையாவது மேற் பிறவியிற் செய்தவை கீர்ப்பிறவியில் வந்து நுகரப்படுதற்குத் துவக்கமாய் நிற்பது. இதனை வடநூலார் பிராரத்த கன்ம மென்ப; இனி ஒரு பிறவியில் ஒருவராற் செயப்பட்டு ஏறுவது ஏறுவினையென் நுணரற்பாற்று. இதனை வடநூலார் ஆகாமிய கன்ம மென்ப. இம்மன்றனுட் டொகைவினையெல்லாம் இறைவன் குருவடிவிற்றோன்றி நோக்கும் நோக்கவனலால் எரிந்தொழியும்; துவக்கவினை யெல்லாம் உடலுளதாங்காறும் உளவாகி அது கழியுங்கால் உடன் கழியும்; இனி ஏறுவினையோ வெனிற் குரவன் அறிவுறுக்கும் மெய்யறிவானே சுடப்பட் டொழியும் ஈண்டு வினையென்றவை தொகைவினையும் ஏறுவினையுமே யாம். என்னை? ஆசிரியனருளால் ஒழிவன அவ்விரண்டுமேயாகலின், உமாபதிசிவனாரும் ஏன்ற வினை யுடலோ டேகும் இடை ஏறும் வினை தோன்றில் அருளே சுடும் என்று (திருவருட்பயன் 10,8) அருளிச் செய்தமை காண்க. கைதருதல் - உதவி செய்தல் எப்பொருட்டன்மையுங் கடந்து நிற்றலிற் கடவுள் எனும் பெயர் இறைவற் காயிற்று. 90 ஆடக மதுரை அரசே போற்றி கூடல் இலங்கு குருமணி போற்றி தென்றில்லை மன்றினுள் ஆடி போற்றி இன்றெனக் காரமு தானாய் போற்றி ஆடக மதுரை அரசே போற்றி - பொன்வண்ணமாய் விளங்கும் மதுரைமா நகருக்கு அரசனே வணக்கம், கூடல் இலங்கு குருமணி போற்றி - மதுரையில் விளங்காநின்ற நிறம் பொருந்திய மணியே வணக்கம், தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி - தெற்கின்கண்ணதான தில்லை அம்பலத்தில் ஆடினவனே வணக்கம், இன்று எனக்கு ஆர்அமுது ஆனாய் போற்றி - இன்றைக்கு அடியேனுக்கு அரிய அமுதமாயினவனே வணக்கம் என்றவாறு. ஆடகம் - பொன்; ஹாடகம் என்னும் வடசொல் தமிழில் ஆடகம் என்றாயிற்று. தடாதகைப் பிராட்டியாரை மணந்து மதுரைமா நகர்க்கு மன்னனாய் முடிகவித்து இறைவன் செங்கோல் ஓச்சினான் என்னும் புராண வழக்குப்பற்றி மதுரையரசே என்றார். மதுரைமாநகர் கடல் எனப் பெயர் பெற்ற வரலாறு பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவிளையாடலிற் பின் வருமாறு கூறப்பட்டது: முன்னொருகால் வருணன் செருக்குடையனாய் மதுரை யாலவாய்ப் பெருமான் பெருமையை அறிவான் வேண்டிக் கடலை மதுரைமேல் ஏவினானாக, அது பெரிதும் பொங்கிப் புரண்டு பெருகி மதுரையை விழுங்குதற்கு வரா நின்றது; அது கண்டா ரெல்லாரும் நிரம்ப வெருண்டு இறைவனைச் சென்று தொழுது குறையிரப்ப, இறைவனும் பொன் முதலியவற்றைச் சொரியும் நான்கு மழைகளை ஏவிக் கடல் முழுதும் பருகச் செய்தனன். அது கண்டு வருணன் மீண்டுஞ் செருக்குற்றுத் தனக்குரிய மழைகளை யெல்லாம் வருவித்து மதுரைமேற் பெரும்புனல் பெய்து எல்லா வுயிர்களையும் வருத்துக என்று விடுக்க, அவைகள் ஒருங்கு திரண்டு நீர் பொழியப் புகுதலும், இறைவன் திரும்பவும் அந் நான்கு பெரும் புயல்களையும் அழைத்து, அவை நான்கும் நான்கு மாடங்களாய் ஒருங்குகூடி மேலே பந்தரிட்டாற் போல் இருக்குமாறு கற்பித்தான். அக்கூடற்பந்தரின்கீழ் நான் மாடங்களிலும் ஆண்டுள்ளா ரெல்லாருஞ் சேர்ந்து குழுமி யினிதிருந்தனர். வருணன் ஏவிய மழைக் கூட்டங்கள் பெய்த நீரெல்லாம், இறைவனுக்குரிய அந்நாற்பெரும் புயல்களும் சுவறிப் போகவே, வருணன் வெள்கிச் செருக்கற்று இறைவனைத் தொழுது உய்ந்தான். இங்ஙனமாக நாற்பெரும் புயல்கள் ஒருங்கு கூடிக் காத்தமையால், மதுரைமாநகர் கூடல் எனப் பெயர் பெற்ற தென்ப. இலங்குதல் - விளங்குதல்; இச்சொல் இப்பொருட்டாதல் இலங்கிழாய் இன்று மறப்பின் என்னுந் திருக்குறளுரையிற் (திருக்குறள் 1262) காண்க. குருமணி - நிறஞ் சிறந்த மணி; குருவுங் கெழுவும் நிறனா கும்மே என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார் (தொல் காப்பியம் சொல் 301) திருப்பெருந் துறையிலன்றிக் கூடன்மா நகரில் இறைவன் ஆசிரியனாய் வந்திலாமையின் ஈண்டு ஆசிரியமணி எனப் பொருளுரைத்தல் பொருந்தாது. திருவாலங்காட்டி லாடும் மணிமன்றிற்குத் தெற்கே உளதாதல் பற்றித் தில்லைமன்று தென்றில்லைமன்று எனக் கூறப்பட்டது. அடிகள் ஈண்டு மதுரையை நோக்கி அதனைக் கூறுகின்றாரல்லர்; என்னை! அதற்கு அது வடக்கின்கண்ண தாகலின் என்பது. அரு அமுது ஆர் அமுது என்றாயின; ஆரிடர் அழுவத்து என்புழிப் (மலைபடுகடாம் 368) போல பெறுதற்கரிய அமுது என்று பொருளுரைத்துக் கொள்க. மூவா நான்மறை முதல்வா போற்றி 95 சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி மின் ஆர் உருவ விகிர்தா போற்றி கன்னார் உரித்த கனியே போற்றி காவாய் கனகக் குன்றே போற்றி ஆவா என்றனக் கருளாய் போற்றி மூவா நால்மறை முதல்வா போற்றி - மூத்தலில்லாது என்றும் ஒரு தன்மையவான நான்கு மறைகட்கும் முதல்வனே வணக்கம், சே ஆர் வெல் கொடிச் சிவனே போற்றி - ஆனேற்றின் வடிவு நிறைந்த வெல்லுங் கொடியினை உயர்த்திய சிவனே வணக்கம், மின் ஆர் உருவ விகிர்தா போற்றி - மின்னை யொத்த உருவ வேறுபாட்டினை யுடையோனே வணக்கம், கல் நார் உரித்த கனியே போற்றி - கல்லின்கண் நார் உரித்த கனியையொப் பானே வணக்கம், காவாய் கனகக் குன்றே போற்றி - காத்திடு வாயாக பொன் மலையைப் போன்றவனே நினக்கு வணக்கம், ஆ ஆ என்றனுக்கு அருளாய் போற்றி - ஐயோ எனக்கு அருள் புரிவாயாக; உனக்கு வணக்கம் என்றவாறு. இந்நிலவுலகத்து மொழிகளுட் பண்டைக் காலந்தொட்டு இன்றுகாறும் இறவாது வழங்குவது தமிழ்மொழி ஒன்றே யல்லது பிற அன்மையானும, என்றும் உளனாகிய இறைவன் தன்போல் என்றும் உளதாகிய தமிழ்மொழிக்கண் அன்றி இடையே இறந்துபட்ட ஆரியம் முதலான மொழிகளில் உண்மை நுண் பொருள்களை அறிவுறுத்தல் உயிர்கட்குப் பயன் படாமையின் அவன் அவற்றை அவற்றின்கண் அருளுதல் ஏலாமையானும், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் நான்கனையும் வகுத்துக் கூறுவனவே நான் மறை எனப்படுதற்குப் பொருத்தமா மன்றி, ஒரு காலத்து இருக்கு என ஒன்றேயாயும் பின் ஒரு காலத்து அவ் இருக்கினின்றும் எடுத்துச் சில கூட்டி எசுர் சாமம் எனப் பிரித்துச் சேர்க்கப்பட்டு மூன்றேயாயும், ஏனை யொருகாலத்து அம் மூன்றினின்றும் பிரித்தெடுத்துத் தொகுத்த அதர்வணம் என ஒன்று கூட்டப்பட்டு நான்காயும் வெவ்வேறாய் வழங்கிய ஆரிய மறைகளை நான்மறைகள் எனத் தொன்று தொட்டு வழங்குதல் ஏலாமையானும் அடிகள் ஈண்டு மூவா நான்மறை என்று அருளிச் செய்தது மூத்தலில்லாது என்றும் இளமைச் செவ்வியோடு திகழுந் தமிழ் நான்மறைகளேயா மென்க. இறைவன் அருளிச்செய்த மறைகள் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற் பொருள்களை அறிவுறுத்து மென்பதூஉம், அப்பொருள்கள் அடங்கிய நாற்கூறான மறைகளை இறைவன் திருவால நீழற்கீழ் எழுந்தருளி அருந்தவத்தோர் நால்வர்க்கு அறிவுறுத் தருளின னென்பதூஉம், ஆல நீழல் அன்றிருந் தறநெறி நால்வர் கேட்க நன்கினி துரைத்தனை என்று நக்கீரர் அருளிச் செய்த திருவெழு கூற்றிருக்கை யினும், அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கனையும் இருந்தவருக் கருளுமது எனக் கறிய இயம்பேடீ அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேற் றிருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ என்று அடிகள் அருளிச் செய்த திருச்சாழலினும், அன்றாலின் கீழிருந்தங் கறம்புரிந்த அருளாளர் என்று திருஞானசம்பந்தப் பெருமானும், அன்றாலின் கீழிருந்தங் கறஞ்சொன் னானை என்று திருநாவுக்கரசு நாயனாரும், அன்றாலின் னிழற்கீழ் அறம் நால்வர்க்கருள் புரிந்து என்று சுந்தரமூர்த்திநாயனாரும் அருளிச் செய்த தேவாரத் தினும் இனிது தெளிக்கப்பட்டமை காண்க. சிவபெருமான் அறமுதலாகிய நாற்பொரு ளடங்கிய நான்மறைகளைத் திருவால நீழற் கீழிருந்து அருந்தவர் நால்வர்க்கு அருளிச் செய்தன னென்னும் இத்தொன்று தொட்ட வரலாறு ஆரியவேத வரலாறுகளுள் ஒரு சிறிதுங் காணப்படாமையின், இது தமிழ் மறைகள் வந்த வரலாறே தெரிப்ப தென்பது நன்கு பெறப்படும். அல்லதூஉம் உறுதிப் பொருள்களை அறம் பொருள் இன்பம் வீடு எனப் பகுத்தலும், பகுத்த அம்முறையே அவற்றை விளக்கு தலுந் தமிழ் நூற்கண் அன்றி வடநூல்கண் இல்லாமை திருக்குறளாராய்ச்சியினுந் தெற்றென விளங்கிப் போந்தாம். அதனாலும் அவற்றை அம்முறையே கூறும் மறைகள் தமிழ் மொழிக்கண்ணவா மென்றலை நன்கு நிறுவு மென்க. அற்றேல், இறைவன் அருளிச்செய்த மறைகள் தமிழ் மொழிக்கண் யாவையோ வெனிற் கூறுதும். இறைவன் மறைகளை அருளிச்செய்கின்றுழி நம்மநோரைப் போல் ஏடும் எழுத்தாணியுங் கொண்டு அவைதம்மை எழுதி வைத்துப் பின்னர் அவற்றைப் பிறர்க்கு அறிவுறுத்துவா னென்று கொள்ளற்க. நம்மநோ ரெல்லாந் தாந்தாம் அறிபவற்றை அடுத்தடுத்து மறத்தலும், பின்னரவற்றை வருந்தி முயன்று நினைவுகூர்தலும் ஆகிய சிற்றறிவுஞ் சிறு தொழிலும் உடைய ராகலான். அவர் தாம் ஆராய்ந்தறிந்தவற்றை மறவாதிருத்தற் பொருட்டு ஏடும் எழுத்தாணியுங்கொண் டெழுதிவைப்பர். மற்று இறைவனோ எல்லாவற்றையும் இருந்தாங்கிருந்து ஒருங்கறியும் முற்றறிவும் முழுத்தொழிலும் உடையனாக லானும், அதனான் அவன் நினைப்பு மறப்புக்கள் இலனாக லானும் அவனருளிச் செய்வன வெல்லாம் அவற்றை ஏற்குந் தரத்தராய் உண்மை நுண்ணறிவு மிக்கு அவனோ டொன்றி யைந்து நிற்கும் அருந்தவத் தோர்பாற் பொருந்தி அவர்வயி னின்னும் புலனா மென்று தெரிந் துணர்ந்து கொள்க. இனி, இறைவன் அவ்வாறு அருந்தவத்தோர் உண்ணின்று அவற்றை அருளுமிடத்து ஆரிய மறைகளுட் போல வாளா வரம்பின்றி மிகுத்தருளிச் செய்வானல்லன். ஒரு சிறு தீப்பொறி பேரளவி னதாகிய பஞ்சுப் பொதியை எல்லாம் ஒரு நொடியிற் கொளுத்தி விடுமாறு போல, அவன் தன் அருளறிவு அருந்தவத்தோர் உள்ளத்தில் முனைத்து நின்று அதனை உந்திய வளவானே, அவர்க்கு அவ்வரும் பெருநுண் பொருள்கள் தோன்றாநிற்கும்; பின்னர் அவர் அவற்றை வழிபடுத்துத் தொகுத்தும் விரிந்துந் தொகைவிரி யாக்கியும் நூலியற்றாநிற்பர். இவ்வாறு இறை வனால் அறிவுறுக்கப்பட்டு நூலியற்றி னார் தொல்காப்பியனாரும், இறையனாரும், திருவள்ளுவனாரும், திருஞான சம்பந்தரும், மெய்கண்ட தேவரும் என்று இத் தொடக்கத்தினர் ஆவர். இவருள் தொல்காப்பியனாரும் திருவள்ளுவனாரும் அருளிச் செய்த தொல்காப்பியமுந் திருக்குறளும் அறம் பொருளின்பம் வீடென்னும் நாற்பொருள்களையுந் தெளித்து ரைக்குந் தமிழ்மறைகளாம். தொல்காப்பியம் இந்நாற் பொரு ளோடு இவற்றை யுள்ளவாறுணர்தற்குக் கருவியாய எழுத்துச் சொல் யாப்பு என்னும் எழுத்தோசை இலக்கணமும் வகுத்தோ துவதாம். இறையனார் அருளிச் செய்த களவியல் இன்பத்துப் பால் ஒன்றனையே விரித்துரைக்கும் மாண்பிற்றாம். திருஞான சம்பந்தப் பெருமான் முதலான சமயாசிரியர் நால்வரும் அருளிச் செய்தவை இறைவனை வழிபடு முறையால் வீட்டியல்நெறி அறிவுறுத்தும் மாப்பெருந் தகையவாம்; மெய்கண்டதேவ நாயனார் அருளிச்செய்த சிவஞானபோதம் நூன்முறையால் முப்பொருட் பொது சிறப்பியல் தேற்றி உயிர்களை வீட்டிய னெறிக்கண் உய்க்கும் முடிந்த சிறப்பிற்றாம். இவையும் இன்னோ ரன்ன பிறவு மெல்லாம் அடிகள் மூவா நான்மறை என்றருளிய தன்கண் அடங்குமென்க. அஃதொக்குமன்னாயினும், திருஞானசம்பந்தப் பெரு மானும் மெய்கண்ட தேவ நாயனாரும் அடிகள் காலத்திற்குப் பிற்பட்டெழுந்தவ ராகலான் அவர் அருளிச் செய்தவற்றையும் அடிகளருளிய இதன்கட் கொண்டுவந்து அடக்குதல் யாங்ஙனம் பொருந்து மெனின்; அவ்விருவரும் அருளிச்செய்த சொற்களும் பொருள்களும் என்றும் நிலைபேறாயுள்ள உண்மைகளை அறிவுறுப்பனவாமாகலின், அவர்க்கு முன்னும் அவை இறைவன் மாட்டுண்மை ஐயுறற்பாலதன்றாம். அதுவேயுமன்றி, அடிகட்கு இறைவன் குருவடிவிற் றோன்றி அறிவுறுத்தருளியது சிவஞான போத மெய்ப்பொருளே யாகலின், அதுவும் முன்னரே இறைவன்பா லுண்மை பெற்றாம். பெறவே, மூவா நான்மறை என்றதன்கண் அவ்விரண்டும் அடங்குமென்றல் வாய்வதேயா மென்க. அவ்வாறு கொள்ளின், ஆரிய வேதங்களும் முன்னரே இறைவன்பால் அமைந்து கிடந்து பின்னர் அவனருட் குரியரான முனிவரர் வாயிலான் வெளிவந்தன வென்று உரையாமோ வெனின், உரையாமன்றே. இறைவனருளாற் றோன்றிய நூல் களாயின அவ்விறைவற்குரிய பேரறிவுத்தன்மை அவற்றின்கட் காணப்படுதல் வேண்டும்; மற்று அவைதம்மோடு, தொல் காப்பியந் திருக்குறள் சிவஞானபோதம் முதலிய மெய்ந்நூற் பொருள்களை ஒப்பவைத்து நடுநின்று நோக்குவா ரெவர்க்கும் மற்றித் தமிழ்மறைகளுட் காணப்படும் அரும்பெரு நுண் பொருட் பெற்றி ஆரிய வேதங்களுள் ஒரு சிறிதுங் காணப் படாமை எளிது விளங்கு மாகலின் இவற்றோடொப்ப அவை களும் இறைவனருளாற் பிறந்தனவென்றால் பொருளில் புன்மொழிகளாமென்க. அற்றேல், ஆரிய வேதங்களும் சிவ பிரான் அருளிச் செய்தனவே யென்று புராணங்களுள் ஆண்டாண்டுக் கூறப்படுதல் என்னை யெனின்; எல்லா வுயிர்களின் அறிவு விளக்கத்திற்கும் ஏதுவாய் இறைவன் அவைகளின் உண்ணின்று இயக்கும் பொதுவியல்பு பற்றி அவ்வுயிர்கள் செய்தனவற்றையும் இறைவன் மேலனவாகக் கூறுதற்கு அப்புராணவுரைகள் முகமனுரைகளாய் எழுந்தன வல்லது, அவனத அருளறிவியக்கத்தால் தூய அருந்தவத்தோர் மாட்டுப் பிறப்பிக்கப்படுஞ் சிறப்பியல்பு பற்றி அவை அங்ஙனங் கூறுவவாயினவென்று கொள்ளற்க. இங்ஙனங் கொள்ளாக்கால், சூதன் வேதவியாதன் முதலாயினார் இயற்றிய புராணங் களையும், போதாயனன் யாகன் பாணினி முதலாயினர் இயற்றிய கல்பம் நிருத்தம் வியாகரணம் முதலிய நூல்களையும் வேள்விப்பயனே எல்லாந் தருமாதலிற் கடவுளென் றொருபொருள் வேண்டப்படா தென்று நாட்டிச் சைமினி செய்த மீமாஞ்சை நூலையும் அகப்படுத்துப் பதிணென் விச்சைகளையும் முதலிற் செய்தோன் சிவபிரானே எனக்கூறும் வாயுவங்கிதையுரையும் வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்கு எனவும், வேதமுடன் ஆறங்கம் ஆயினான் காண் எனவும் வருந்த தமிழ்மறைப் பாட்டுகளும் பொருட் பேறிலவாய் ஒழியும். ஆகலின், எங்கும் நிறைந்து நின்று எவற்றையும் இயக்கும் இறைவனது பொதுவியல்புபற்றிக் கூறும் இன்னோரன்னவை யெல்லாம் முகமனுரைகளே யாவதல்லது பிறவாகா வென்பது தெற்றென விளங்குவதால், தூயரான அருந்தவத்தோர்பால் முனைத்து நிற்குஞ் சிறப்பியல்புபற்றி முதல்வன் தனது அருளறிவியக்கத்தால் அவர்பானின்றுந் தோற்றுவிக்குந் தமிழ் மறைகள் அவ்வாரிய நூல்களோடு ஒப்பவைத் தெண்ணப்படுஞ் சிறுமையுடைய வாகாது அவற்றினூங்கு வரம்பிகந்த பெருமை யுடையவாய், அம் முதல்வன் அருளிய உண்மைத் திருமொழி களாயே நிலை பெறுமென்று ஓர்ந்து கொள்க. இதனானும், ஆரிய வேதங்கள் மூத்துவிளியும் மக்களால் இயற்றப்பட்டுத் தம்மையுடைய ஆரியமொழி மூப்புற்று இறந்து பட்டவாறே தாமும் மூத்து விளிந்ததுபோ லாகாமல், மூவா முதல்வனால் மூவா இளமைச் செந்தமிழ் மொழிக்கண் அருளிச் செய்யப்பட்டு அம்மொழி யோடு இன்றுகாறும் உடன்உலவி வராநின்ற செந்தமிழ் நான்மறைகளைக் கூறுதலே தமது திருவுள்ளக்கிடை யென்பது தெரிப்பார் அடிகள் ஈண்டு மூவா என்னும் அடைகொடுத்து மூவா நான்மறை என்று அருளிச் செய்தா ரென்க. இன்னும் இது விரிப்பிற் பெருகும். இறைவன் முந்நகர்களை அழிக்கப் புக்க ஞான்று தான் பெறும் வொன்றிக்கு அறிகுறியாகத் தனது ஆனேற்றின் வடிவு நிறைத்து எழுதப்பட்ட தொரு கொடியை உயர எடுப்பித்தா னாகலின் சேவார் வெல்கொடிச் சிவனே என்றார். சே - ஆனேறு; எருது. ஆர்தல் நிறைதல்; திவாகரம். வெல்கொடி வினைத்தொகை. வெல்லுங் கொடி யென விரிக்க; வெல் புரவி பூண்ட விளங்குமணித் திண்டேர் என்புழியும் அதன் உரைகாரர் பகை வெல்லுங் குதிரை என்று (புறப்பொருள் வெண்பா மாலை 25) விரித்தல் காண்க. இறைவன் பொன்னிறம் உடையனாகலின் மின்னார் உருவ என்றார். அதில் ஆர் என்பது உவமவுருபின் பொருள்பட வந்தது. விக்ருத என்னும் வடசொல்லினின்றும் பிறந்த விகிர்தன் என்னும் பெயர் விளியேற்று விகிர்தா என ஆயிற்று. விகிர்தம் - வேறுபாடு, அடியார் வேண்டிய வடிவிலெந்தாந் தோன்றுதலிற் பல வேறுபாடுடைய உருவுகள் மேற்கொள்வன் என்பார் உருவ விகிர்தா என்றருளிச் செய்தார்; இக் கருத்தே பற்றி, ஒருவனே இராவணாதி பாவகம் உற்றாற் போலத் தருவன்இவ் வுருவம் எல்லாந் தன்மையுந் திரியானாகும் வரும்வடி வெல்லாஞ் சத்தி சக்திதான் மரமுங் காழ்ப்பும் இருமையும் போலமன்னிச் சிவத்தினோ டியைந்து நிற்கும் என்னுந் திருப்பாட்டும் (சிவஞானசித்தியார் ..87) எழுந்தது இனி விஹ்ருதம் என்னும் வட சொல்லினடியாகப் பிறந்து விளையாட்டு டையவன் எனப் பொருள்படுமென் றுரைப்பி னுமாம். மிக வல்லென்ற கல்லின்கண் நார் உரித்தல் எவர்க்கும் அரிதாகலின் அதனைச் செயவல்லுநர் திறம் பெரிதும் வியக்கற் பாலதாதல் போல, எவ்வகையானும் நெஞ்சம் உருகப் பெறாதார்க்கு அவ்வுருக்கத்தினை வருவிப்பார் திறம் பெரிதும் வியக்கற்பால தென்பார் கன்னார் உரித்த கனியே என்றார். அடிகள் தமது நெஞ்சத்தினை இறைவன் அன்பாற் கனியச் செய்த அருட்பெருந் தகைமையின் றிறத்தைத் தெரிவித்தா ராயிற்று. வல்லென்ற நெஞ்சத்தைக் கனிய வைப்பார் தாமும் அக் கனிதற்றன்மை யுடையராயினல்லது அது செய்த லியலா மையின், அதற்கேற்ற அத்தன்மையினை இறைவன் சாலவும் உடையனென்பார் கனியே என அச் சொல்லையே உடம்பொடு புணர்த் தோதினார் என்க. கனகக்குன்றே காத்திடுவாயாக நினக்கு வணக்கம் என நினக்கு என்னும் ஒருசொல் அவாய்நிலையால் வருவித்துரை யுரைத்துக் கொள்க. இங்ஙனமே போற்றி என்பதற்குமுன் வருவிக்க வேண்டும் பெயர்களை ஆங்காங்கு வருவித்துரைத்துக் கொள்க. கநகம் - வடசொல் ஆ ஆ என்னும் வியப்பிடைச் சொற்கள் நடுவே வகர உடம்படுமெய் வந்தமையின் அவா என்றாயின; ஆவா விருவர் அறியா என்று அடிகள் திருச்சிற்றம்பலக்கோவையாரினும் அருளிச் செய்தமை காண்க. 100 படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி இடரைக் களையும் எந்தாய் போற்றி ஈச போற்றி, இறைவ போற்றி தேசப் பளிங்கின் திரளே போற்றி அரைசே போற்றி அமுதே போற்றி 105 விரைசேர் சரண விகிர்தா போற்றி வேதி போற்றி விமலா போற்றி ஆதி போற்றி அறிவே போற்றி கதியே போற்றிகனியே போற்றி நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி 110 உடையாய் போற்றி உணர்வே போற்றி கடையேன் அடிமை கண்டாய் போற்றி படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி - எவற்றையும் உண்டாக்குபவனே காப்பவனே அழிப்பவனே நினக்கு வணக்கம், இடரைக் களையும் எந்தாய் போற்றி - துன்பத்தை விலக்கும் எம் தலைவனே போற்றி, ஈச போற்றி - உடையானே போற்றி, இறைவ போற்றி - எப்பொருளினுந் தங்குவோனே போற்றி, தேசப் பளிங்கின் திரளே போற்றி - ஒளி பொருந்திய பளிங்கின் தொகையை ஒத்தவனே போற்றி, அரைசே போற்றி - அரசனே போற்றி, அமுதே போற்றி - அமிர்தமே போற்றி, விரைசேர் சரண விகிர்தா போற்றி - மனம் பொருந்திய திருவடிகள் வாய்ந்த விளையாட்டுடையவனே போற்றி, வேதி போற்றி, - புலவனே போற்றி, விமலா போற்றி - மாசற்றவனே போற்றி, ஆதி போற்றி - எப்பொருட்கும் முதலே போற்றி அறிவே போற்றி, கனியே போற்றி - பழமே போற்றி, நதி சேர் செம்சடை நம்பா போற்றி - கங்கையாறு சேர்ந்த சிவந்த சடையினையுடைய சிவபெருமானே போற்றி, உடையாய் போற்றி - எப்பொருள்களையும் உடை யானே போற்றி, உணர்வே போற்றி - மெய்யுணர்வே போற்றி, கடையேன் அடிமை கண்டாய் போற்றி - கடைப்பட்டவனாகிய என்னையும் ஓர் அடியவனாகக் கொள்ளக் கடைக்கணித்தவனே போற்றி என்றவாறு. துடைத்தல் - அழித்தல்; இப்பொருட்டாதல் தோற்று வித்தளித்துப் பின்னுந் துடைத்தருள் தொழில்கள் மூன்றும், போற்றவே யுடையன் ஈசன் என்னுஞ் சிவஞான சித்தியார் திருப்பாட்டினுங் காண்க. ஈசன் என்னும் வடசொல் எப்பொருளையும் உடை யோன் அல்லது ஆள்வோம் என்னும் பொருட்டு. இறைவன் என்பதற்கு எப்பொருளினுந் தங்குகின்றவன் எனப் பொருள் உரைப்பர் அடியார்க்கு நல்லார். (சிலப்பதிகாரம் 10. 184) தேசம் - ஒளி; தேஜ என்னும் வடசொற்றிரிவு. திரள் - தொகை, தொகுதி; திவாகரம் அரைசு என்பது அரசு என்னுஞ் சொல்லின் போலி. சரணம் வடசொல். வேதி என்பது புலவன் எனப் பொருள்படும் வடசொல். நதி சேர் செஞ்சடை நம்பன் என்பது பகீரத முனிவன் வேண்டச் செருக்கோடும் விரைந்து இழிந்த கங்கையை இறைவன் தன் சடைக்கண் அடக்கி அதற்கு அச்செருக்கினைப் போக்கினமை தெரித்தற்கு வந்தது; பகீரதன்பொருட்டு இறைவன் இங்ஙனங் கங்கையைச் சடையில் ஏற்ற வரலாறு வடமொழி வான்மீகி இராமாயணத்தின நாற்பத்திரண்டாம் பகுதியிற் சொல்லப்பட்டது. இதன் உண்மைப் பொருள்: இறைவனது திருமுடி வானமாகவும், அவனது செஞ்சடை செக்கர் வானத்திற் றோன்றும் முகிற் படலமாகவும், அச்சடைக் கண் உள்ள கங்கை அம்முகிற் படலத்துள்ள நீராவியாகவும் உருவக வகையாற் கூறப்பட்டதேயாம் என்க. நம்பன் என்பது சிவபெருமான் பெயர்களுள் ஒன்றாகத் திவாகரம் கூறும்; நம்பி என்னுஞ் சொற்போல உயர்வுப் பொருளைத் தரும். இனி, நம்பும் மேவும் நசையா கும்மே என்று (தொல்காப்பியம் சொல் 329) ஆசிரியர் தொல்காப்பியனார் ஓதினமையின் எவ்வுயிரும் விரும்புதற்குரியோன் எனப் பொருள் கோடலும் ஒன்று. ஐயா போற்றி அணுவே போற்றி சைவா போற்றி தலைவா போற்றி குறியே போற்றி குணமே போற்றி 115 நெறியே போற்றி நினைவே போற்றி வானோர்க் கரிய மருந்தே போற்றி ஏனோர்க் கரிய மருந்தே போற்றி மூவேழ் சுற்றம் முரண்உறு நரகிடை ஆழாமே அருள் அரசே போற்றி 120 தோழா போற்றி துணைவா போற்றி வாழ்வே போற்றிஎன் வைப்பே போற்றி முத்தா போற்றி முதல்வா போற்றி அத்தா போற்றி அரனே போற்றி உரையுணர் விறந்த ஒருவ போற்றி 125 விரிகடல் உலகின் விளைவே போற்றி அருமையில் எளிய அழகே போற்றி கருமுகில் ஆகிய கண்ணே போற்றி மன்னிய திருவருண் மலையே போற்றி என்னையும் ஒருவன் ஆக்கி இருங்கழல் 130 சென்னியில் வைத்த சேவக போற்றி ஐயா போற்றி - ஐயனே போற்றி, அணுவே போற்றி - துகள் போல் E.ண்Âand போற்றி, சைவா போற்றி - சைவனே போற்றி, தலைபோற்றி - எவ்வுயிர்க்குந் தலைவனே போற்றி, - எண்பெருங் குணங்களுடையவனே போற்றி, நெறியே போற்றி - இன்ப வழியே போற்றி, நினைவே போற்றி - என்றும் ஒரு தன்மைத்தான் நினைவுடையவனே போற்றி, வானோர்க்கு அரிய மருந்தே போற்றி - அன்பரல்லாத தேவர்களும் பெறுதற்கரிய மருந்தே போற்றி, ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி - அன்பரான மக்களும் பெறுதற்கு எளியனாய் நிற்கும் இறைவனே போற்றி, மூ ஏழ் சுற்றம் முரண் உறு நரகு இடை ஆழாமே அருள் அரசே போற்றி - இருபத்தொரு தலைமுறையாக வரும் அடியாராகிய கற்றத்தவர் ஒன்றோடொன்று மாறுபட்ட நரகங்களிற் சென்று ஆழ்ந்து போகாதபடி அருள்புரியும் மன்னனே போற்றி, தோழா போற்றி - மெய்யன்பர்க்கு நண்பனே போற்றி, துணைவா போற்றி - அவர்க்குத் துணைவனே போற்றி, வாழ்வே போற்றி - அன்பர்தம் இன்ப வாழ்க்கையே போற்றி. என் வைப்பே போற்றி - எனது புதை பொருளே போற்றி, முத்தா போற்றி - இயல்பாகவே பாசங்களில் நீங்கினவனே போற்றி, முதல்வா போற்றி - எல்லாவற்றிற்கும் முதலாய் நிற்பவனே போற்றி, அத்தா போற்றி - எவ்வுயிரையும் ஈன்றோனே போற்றி, அரனே போற்றி - தீவினைகளை நீக்குபவனே போற்றி, உரை உணர்வு இறந்த ஒருவ போற்றி - சொல் அளவினையும் உணர்ச்சி யளவினையுங் கடந்த ஒருவனே போற்றி, விரிகடல் உலகின் விளைவே போற்றி - விரிந்த கடல் சூழ்ந்த உலகத்தின் பயனே போற்றி, அருமையில் எளிய அழகே போற்றி - அன்பர் அல்லாதார்க்கு அருமையாய் இருந்தே அன்பர்க்கு எளியனாய் விளங்கும் அழகனே போற்றி, கருமுகில் ஆகிய கண்ணே போற்றி - கரிய மழைபோல் அருளைப் பெய்யும் கண்போற் சிறந்தானே போற்றி, மன்னிய திரு அருள் மலையே போற்றி, நிலைபெற்ற அழகிய அருளையுடை மலையே போற்றி, என்னையும் ஒருவன் ஆக்கி இருங்கழல் சென்னியில் வைத்த சேவக போற்றி - ஒன்றுக்கும் பற்றாத எளியேனையும் எவ்வாற்றானுஞ் சிறந்த அடியாருள் ஒருவனாகச் செய்து பெருமை தங்கிய திருவடிகளை என் புன்தலைமேல் வைத்த வீரனே போற்றி என்றவாறு. இறைவற்குச் சைவன் என்னும் பெயர் போந்த வரலாற்றினை மேலே கீர்த்தித் திருவகவலில் ஐயாறதனிற் சைவனாகியும் என்பதற் குரை விரித்தவழி எடுத்துக் காட்டினாம்; ஆண்டுக் காண்க. குறியாவது அனற் பிழம்பின் வடிவு; அதன்கண் இறைவன் முனைத்து விளங்குமாற்றினை மேலே விரித்துக் காட்டினாம். அவ்வனற்பிழம்பு போற் செய் தமைக்கப்படுங் கல்வடிவும் இறைவற்குக் குறியாயிற்று. குறி, அடையாளம் இலிங்கம் என்பன ஒரு பொருட் கிளவிகள். குணம் ஈண்டு எண் குணங்களின் மேற்று; அவை: தன் வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர்வின னாதல் முற்றுமுணர்தல், இயல்பாகவே, பாசங்களி னீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்ற லுடைமை, வரம்பிலின்ப முடைமை என வினவ. இறைவனனப் பற்றினாலன்றிப் பேரின்பந் தலைப்படுதல் ஏலாமையின், அவனை அதற்குச் செலுத்தும் நெறியாகக் கூறினார். ஏனை யுலகத்துப் பொருள்களும் உயிர்களும் எல்லாம் அதன்கட் செலுத்த மாட்டாமையின் அவை அதற்கு நெறி யாகாவாயின. எல்லாம் வல்ல இறைவன் மூவா மருந்தா யிருத்தல் ஓர்ந்து அவனை யடைந்து இறப்பினை நீக்கிக்கொள்ளமாட்டாது, பாற்கடலின் மருந்தை நாடிச் சென்று இடருற்றனராகலின் வானோர்க்கரிய மருந்தே என்றருளிச் செய்தார். குறி, குணம், நெறி, நினைவு, மருந்து முதலிய சொற்களும் இவைபோற் பின் வருவனவுமெல்லாம் ஆகுபெயரால் இறை வனையே உணர்த்தும். மூவேழ் இருபத்தொரு தலைமுறையும் வாழ்க என்று வாழ்த்துரை கிளக்கும் உலகியல் வழக்குப்பற்றி, அடியார் சுற்றமும் இருபத்தொரு தலைமுறை வரையில் நரகத்திற் சென்று ஆழாமற்காப்பான் என்றார். பேரன்பிற் சிறந்த ஓர் அடியவரின் இயல்பு அவர் கால்வழியில் வருவோர்க் கெல்லாம் இருபத் தொரு தலைமுறை வரையிற் றொடர்ந்துவரும் என்ப வாகலின் அவரை யெல்லாம் இறைவன் உயர்நிலைக்கண் வைப்பனென் பது குறித்தாராயிற்று. தங்கட் பட்ட உயிர்களை வருந்துந் தன்மையில் ஒரு நரகின் இயல்பு மற்றொரு நரகின் இயல்பின் வேறா யிருத்தலின் முரண் உறு நரகு என்றார். தன்பால் அன்புமிக்க அடியாரைத் தன்னோ டொப்ப வைத்து நலம் பாராட்டுதலின் இறைவனைத் தோழ என்றும், அவர்க்கு எந் நிலையினும் எக் காலத்தினும் நீங்காத் துணையா யிருத்தலின் துணைவா என்றும் அருளிச் செய்தார். முத்தன் என்பது விடுபட்டவன் எனப் பொருள்படும் முக்த : என்னும் வடசொற் றிரிபு. இறைவன் தன்னியற்கை யிலேயே மும்மலப் பற்றின் நீங்கினவனாய் இருத்தலின் அவனையும் முத்தன் என்றார். அரன் என்னும் பெயர் அடியார் வினைகளை அரித்தல் அல்லது அராவுதல் பற்றி வநதது. தமிழிலிருந்து வடமொழிக்கட் சென்ற சொற்களுள் இதுவும் ஒன்று. உயிர்கள் உடம்புகளிற் புகுந்து உலகின்கட் டோன்றி அறிவுடையராய் அவ் வுலகத்துப் பொருளமைப்புகளைக் காண்டொறும் அவற்றை அமைத்த முதல்வனது அருட்பெருந் தகைமையினையும் அவனிருப்பினையும் அறியப் பெறுத லானும், இவ்வாறாகிய உலக வாழ்க்கையின் முடிந்த பயனாக இறைவனை அடையப் பெறுதலானும் விரிகடல் உலகின் விளைவே என்றருளிச் செய்தார். மழையைப் பொழியும் முகிலும், பொழிந்த அம் மழையருவியைத் தாங்கும் மலையும்போல அருண்மழையைச் சொரியும் முகிலும் அம்மழையாலாய அருளருவியைத் தாங்கும் மலையும் இறைவனே என்பார். கருமுகிலாகிய கண்ணே என்றும் மன்னிய திருவருண் மலையே என்றும் அருளிச் செய்தார். இருங்கழல் என்பதில் இருமை பெருமை எனப் பொருள் படுதலை அகல் இரு விகம்பினானும் என்புழியுங் (புறநானூறு 8) காண்க. கழல் என்பது காலின் அடிக்கும், ஆடவர் காலணிக்கும் பெயராய் வருதல் திவாகரத்திற் காண்க. சென்னி - தலை; இச்சொல் இப்பொருட்டாதல் இறைஞ்சுக பெரும நின் சென்னி என்னும் புறப்பாட்டடியிற் (புறநானூறு 6) காண்க. சேவகன் - வீரன்; சேவகம் வீரம் எனப் பொருள் படுத லைச் சூடாமணி நிகண்டிற் காண்க. தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி அழிவிலா ஆனந்த வாரி போற்றி அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி முழுவதும் இறந்த முதல்வா போற்றி 135 மானேர் நோக்கி மணாளா போற்றி வானகத் தமரத் தாயே போற்றி பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி 140 வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி அளிபவர் உள்ளத் தமுதே போற்றி கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி நனவிலும் நாயேற் கருளினை போற்றி தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி - கும்பிட்ட கையினை யுடையார்கக்கு வருந் துன்பங்களை அகற்றுவோனே போற்றி, அழிவிலா ஆனந்த வாரி போற்றி - கெடுதலில்லாத இன்பக்கடலே போற்றி, அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி - கேடும் ஆக்கமுங் கடந்தவனே போற்றி, முழுவதும் இறந்த முதல்வா போற்றி - எல்லாவற்றையுங் கடந்த முதல்வனே போற்றி, மான் நேர் நோக்கி மணாளா போற்றி - மானையொத்த பார்வையினையுடைய அம்மைக்கு மணவாளனே போற்றி, வானகத்து அமரர் தாயே போற்றி - வானிடத்திலுள்ள தேவர்க் குத் தாயை யொத்தவனே போற்றி, பார் இடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி - நிலத்தினிடத்தே ஐந்து தன்மைகளாய் விரிந்தவனே போற்றி, நீர் இடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி - நீரினிடத்தே நான்கு தன்மைகளாய் விளங்கினவனே போற்றி, தீ இடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி - நெருப்பினிடத்தே மூன்று தன்மைகளாய் மிக்கு நின்றவனே போற்றி, வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி - காற்றினிடத்தே இரண்டு தன்மைகளாய் மகிழ்ந்து நின்றவனே போற்றி, வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி - விசும்பினிடத்தே ஒரு தன்மையாக விளைந்தவனே போற்றி, அளிபவர் உள்ளத்து அமுதே போற்றி - அன்பால் உருகுபவரது உள்ளத்தின்கண் ஊறும் அமுதமே போற்றி, கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி - கனவிடத்தும் அன்பரல்லாத தேவர்கட்கு அரியனாய் உள்ளவனே போற்றி, நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி - நனவிடத்தும் நாயின் இழிந்த அடியேனுக்கு அருள்செய்தவனே போற்றி என்றவாறு. துன்புறுவார் அத்துன்பத்தை நீக்கவல்லார்பாற் சென்று கைதொழுது நின்று தம் குறை யறிவிப்பராகலின், தொழு வார்க்குள்ள துன்பத்தை அதற்கடையாளமாக எடுத்த கைம் மேல் ஏற்றித் தொழுத கை துன்பம் என்றருளிச் செய்தார். தொழுதல் - கும்பிடுதல், பிங்கலந்தை. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் (திருக்குறள் 828) என்றார்* ஆசிரியர் திருவள்ளுவ நாயனாரும். ஊழிக்காலத்திற் கடல் நீரும் வற்றி இல்லையாமாகலின் எக்காலத்துந் திரிபில்லாத இன்பநிலையான இறைவனை அழிவிலா ஆனந்த வாரி என்றார். வாரி - கடல்நீர்; திவாகரம்; நீர் ஈண்டுக் கடல் மேலானது ஆகுபெயர். கேடும் ஆக்கமும் உள்ள பொருள்களினுஞ் சிற்றுயிர் களினும் அப்பாற்பட்டவனாதல் போலவே, கேடும் ஆக்கமும் இல்லாத் தூய விந்து தத்துவத்திற்கும் அத்தத்துவத்தில் வைகு வாரான கடவுளருக்கும் அப்பாற்பட்டவன் இறைவனென்று ணர்த்துவார் முழுவதும் இறந்த முதல்வா என்றருளிச் செய்தார். இறத்தல் - கடத்தல்; பிங்கலந்தை. மடவார் நோக்கத்திற்கு மானையே உவமை கூறுவர். “mt® e«, khnd® neh¡f« kw¥gh® mšy®” v‹wUË¢ brŒjh® ïs§nfhtofS«*.(áy¥gâfhu« கானல் வரி 44) மான்போற்றுதள்ளுதலின் மடவார் கண்களாகிய சினைக்கு மான் என்னும் முதல் உவமை யாயிற்று. இவ்வாறு முதலுஞ் சினையும் ஒப்புறுத்தப்படுதல் முதலுஞ் சினையுமென் றாயிரு பொருட்கும், நுதலியமரபின் உரியவை உரிய என்று* ஆசிரியர் (தொல்காப்பியம் உவமயியல் 6) தொல்காப்பியனார் கூறிய வாற்றானறிக. மண ஆளன் எனுஞ் சொற்றொடர் மணாளன் என மருவிற்று. குளவாம்பல், மரவடி, மராடி என மரீ இயினாற் போல்*. மணவாளன் (சிவஞானபோதமாபாடியம் 2ஆம் சூத்திரம் 3ஆம் அதிகரணம்) - கணவன்; பிங்கலந்தை. அமரர் சாவில்லாதவர் எனப் பொருள்படும் அமர: என்னும் வடசொற் றிரிபு. பாரிடை யைந்தாய்ப் பரந்தாய் என்பது மண்ணின்கட் காணப்படும் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐந்து தன்மைகளிலும் இறைவன் கலந்துநிற்குமா றுணர்த்தியது. முதற்பொருண் மாயையிலிருந்து இறைவன் நிலத்தைத் தோற்றுவித்த பின்னரன்றி இஃது அவ்வியல்புகள் உடையதாதல் புலப்படாமையானும், எல்லாவற்றின் உள்ளும் புறம்புமாய் நிற்கும் முதல்வன் இந்நிலத்தினும் அதனியல்புகளினுங் கலந்து நிற்பனாகலானும் இவ்வாறு கூறினார். இஃது ஏனைப் புனல் அனல் கால்வெளி முதலியவற்றிற்கும் ஒக்கும். இனி, மண்ணிற்கு நாற்றம் ஒன்றுமே இயற்கைத் தன்மை; ஏனைச் சுவை ஒளி ஊறு ஓசை என்னும் நான்கியல்புகளும் ஏனை நாற்பொருள்களுந் தன்னோ டுடன் கலந்திருத்தலாற் போந்த செயற்கைத் தன்மைகளாகும். நீரிடை நான்கு என்பன நீருக்கு இயற்கைத் தன்மையான சுவையும், ஏனை அனல் கால் வெளி என்பவற்றின் சேர்க்கையாற் பிறந்த ஒளி ஊறு ஓசை என்னும் மூன்று செயற்கைத் தன்மை களுமாம். நிகழ்த்தல் - விளங்குதல். இச்சொல் இப்பொருட்டாதலை வளன்அற நிகழ்ந்து வாழுநர் என்னும் பதிற்றுப்பத்து அடி யுரையிற் (பதிற்றுப்பத்து 49) காண்க. தீயிடை மூன்று என்பன: அனலுக்கு இயற்கைத் தன்மை யான ஒளியும், ஏனை வளி வெளி என்பவற்றின் சேர்க்கையாற் றோன்றிய செயற்கைத் தனமையான ஊறும் ஓசையுமாம். திகழ்தல் - மிக்குநிற்றல். இப்பொருட்டாதல் அங்கண் விசும்பின் அணிதிகழும் என்பதன் உரையிற்* (புறப்பொருள் வெண்பா மாலை 6 22) காண்க. வளி யிடை யிரண் டாவன : காற்றின் இயற்கைத் தன்மை யான ஊறும், ஏனை விசும்பின் கூட்டுறவாற் பிறந்த செயற்கைத் தன்மையான ஓசையுமாம். வெளி யிடை ஒன்று என்பது விசும்பின் இயற்கைத் தன்மையான ஓசை. அளிப்பவர் அன்பால் உருகுபவர். அளி - அன்பு; திவாகரம். இனிக் கனிந்த பழத்தை அளிந்த பழம் என்று வழங்கு பவாகலின், அன்பாற் கனிபவரெனப் பொருளுரைப்பினுமாம்; அளிந்த தீம் பழம் இஞ்சி யார்ந்த நீர் என்றார் சீவக சிந்தாமணியுள்ளும்*. (சீவகசிந்தாமணி 13 84) அறிந்த பழத்திற் றேன் ஊறுமாபோல் அன்பாற் கனிந்தவ ருள்ளத்தும் இறைவன் இன்பவூறலா யிருப்பனென்பது பெறப்பட்டது. 145 இடைமரு துறையும் எந்தாய் போற்றி சடையிடைச் கங்கை தரித்தாய் போற்றி ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீரார் திருவை யாறா போற்றி அண்ணா மலைஎம் அண்ணா போற்றி 150 கண்ணார் அமுதக் கடவே போற்றி ஏகம் பத்துறை எந்தாய் போற்றி பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி பாராய்த்துறை மேவிய பரனே போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி 155 மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி குற்றா லத்தெங் கூத்தா போற்றி கோகழி மேவிய கோவே போற்றி ஈங்கோய் மலைஎம் எந்தாய் போற்றி பாங்கார் பழனத் தழகா போற்றி 160 கடம்பூர் மேவிய விடங்கா போற்றி இடைமருது உறையும் எந்தாய் போற்றி - திருவிடை மருதூரில் உறைந்தருளும் எம் தலைவனே போற்றி, சடை அடைக் f.ங்if தரித்தாய் போற்றி - சடையினிடத்துக் கங்கை நீரினைத் தாங்கினவனே போற்றி, ஆரூர் அமர்ந்த அரசே போற்றி - திருவாரூரின்கண் விரும்பி யிருந்த அரசனே போற்றி, சீர் ஆர் திரு ஐயாறா போற்றி - அழகு நிறைந்த திருவையாற்றை யுடையவனே போற்றி, அண்ணாமலை எம் அண்ணா போற்றி - திருவண்ணாமலையில் எழுந்தருளி யிருக்கும் எம் அண்ணலே போற்றி, கண் ஆர் அமுதக் கடலே போற்றி - கண் நிறைந்த அமுதக்கடலே போற்றி, ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி - திருவேகம்பத்தில் உறையும் எந் தலைவனே போற்றி, பாகம் பெண்உருஆனாய் போற்றி - இடப்பாகம் பெண்வடிவு ஆனவனே போற்றி, பராய்த்துறை மேவிய பரனே போற்றி - திருப்ப ராய்த் துறையிற் பொருந்தின மேலோனே போற்றி, சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி - திருச்சிராப்பள்ளியிற் பொருந்திய சிவபெருமானே போற்றி, மற்று ஓர் பற்று இங்கு அறியேன் போற்றி - வேறு ஒரு பற்றுக்கோடும் இவ்விடத்தே அறியேன் பெருமானே போற்றி, குற்றாலத்து எம் கூத்தா போற்றி - திருக்குற்றாலத்தில் எழுந்தருளியிருக்கிற எம் கூத்தனே போற்றி, கோகழி மேவிய கோவே போற்றி - திருப்பெருந் துறையில் விரும்பி எழுந்தருளிய அரசே போற்றி, ஈங்கோய்மலை எம் எந்தாய் போற்றி - திருவீங்கோய் மலையில் அமரும் எம் தலைவனே போற்றி, பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி - அழகு நிறைந்த திருப்பழனத்தில் இருக்கும் அழகனே போற்றி, கடம்பூர் மேவிய விடங்கா போற்றி - திருக்கடம்பூரில் விரும்பியிருந்த ஆண்மையுடையோனே போற்றி என்றவாறு. எந்தை - எம் தலைவன்; எந்தையொடு கிடந்தோர் என்பதன்* (புறநானூறு 19) உரையில் இப்பொருட்டாதல் காண்க. உலகமே உருவமாக* (சிவஞானசித்தியார் 5,7) நிற்கும் முதல்வற்கு முகிற்குழாம் சடையாகவும், அம்முகலிற் றங்கு நீர் சடைக்கட் டங்கு கங்கை யாகவுங் கொள்ளப்படுமாகலிற் சடையிடைக் கங்கை தரித்தாய் என்றார். சடை என்பது நெட்டி; ஒன்றோடொன்று பிணைந்து நெட்டி போற் றிரண்டிருக்கும் பின்னல் மயிரும் சடையெனப் பெயர் பெறலாயிற்று. வேணியும் வேருங் கிடையுஞ் சடையெனல் என்பது பிங்கலந்தை. இத் தமிழ்ச்சொல் வடமொழிக்கட் சென் ஜடா எனத் திரிந்து வழங்கும். கங்கா என்னும் வடசொற் கங்கை எனத் திரிந்தது. தரி என்னும் வடசொல் தாங்கு என்னும் பொருட்கண் வரும். அமர்தல் - உவந்திருத்தல். அகனமர்ந்து செய்யாள் உறையும் என்று* (திருக்குறள் 92) திருக்குறனினும் போந்தது. சீர் என்னுஞ் சொல் புகழ் அழகு செல்வஞ் சீர்மை என்னும் பொருள்களை உணர்த்துதல் திவாகரத்திற் காண்க. அண்ணல் - பெருமையிற் சிறந்தோன். இச்சொல் விளியேற்றக்கால் அண்ணால் என அயல் நீண்டு பின்னர்க் கடைக் குறைந்து அண்ணா என நின்றது. நோக்கு மிடனெல்லாம் இறைவன்றன் இன்பவடிவே அடிகட்குப் புலனாதலானும், அவ்வடிவுதானும் எல்லை காணப்படாததாய் இருத்த லானும் கண் ஆர் அமுதக்கடலே என்றருளிச் செய்தார். ஏகம்பம் என்பது காஞ்சி நகர். சிவபெருமான் தன திடப்பாகத்தில் அம்மையை அடக்கிக் கொண்டமைப்பற்றிப் பாகம் பெண்ணுருவானாய் என்றார். பாகம் என்பது பகு என்னும் முதனிலையிற் பிறந்து ஒரு கூறு எனப் பொருடருந் தமிழ்ச் சொல்; இது வடமொழியினுஞ் சென்று வழங்கு;ம. உரு வென்றது மனனுணர்வாய் நிற்குங் கருத்துப் பொருள் எனவும், வடிவாவது கட்புலனாகியே நிற்ப தென வும் நச்சினார்க்கினியர் ஓதுதலின்* (தொல்காப்பியப் பாயிரவுரை) ஈண்டு இறைவற்கு உரு வென்றது அறிவுருவேயாம் என்க. நிறத்தானன்றி உருவு தெரியாமையின் நிறத்தின் பெயரான உரு அதனை யுடைய பொருண்மேல் ஆயிற்று; உரு தமிழ்ச் சொல். உருவம் சிவந்த நிற மெனப் பொருடருதலை உருவப் பல்பூத் தூஉய் என்னுந் திருமுருகாற்றுப் படை அடிக்கு நச்சினார்க்கினியர் உரைத்த உரையுட் காண்க. மேவுதல் - பொருந்தல். மிகன் மேவல் மெய்ப்பொருள் காணார் என்புழிப்* (திருக்குறள் 857) பரிமேலழகியா ருரைத்த வுரையில் இஃதிப் பொருட்டாதல் காண்க. பற்று - பற்றுக்கொடு. பரிந்தோம்பிப் பற்று அற்றே மென்பர் என்பதற்குப்* (திருக்குறள் 88) பரிமேலழகியார் கூறிய வுரையைக் காண்க. கோகழி - திருப்பெருந்துறை; இஃதிப் பொருட்டாதல் மேலே விரித்துரைத் தாம். மேவுதல் விரும்புதல் எனவும் பொருடருதல் இரந்து கோள் மேவார்* (திருக்குறள் 1059) என்பத னுரையிற் காண்க. பாங்கு - அழகு; திவாகரம். விடங்கம் ஆண்மை எனப் பொருள்படும் வடசொல். அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி இத்தி தன்னின் கீழ்இரு மூவர்க் கத்திக் கருளிய அரசே போற்றி தென்னா டுடைய சிவனே போற்றி 165 எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி ஏனக் குருளைக் கருளினை போற்றி மானக் கயிலை மலையாய் போற்றி அருளிட வேண்டும் அம்மான் போற்றி இருள்கெட அருளும் இறைவா போற்றி 170 தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி - சார்ந்தவர்க்கு அருள் செய்யும் அப்பனே போற்றி, இத்தி தன்னின் கீழ் .இரு மூவர்க்கு அத்திக்கு அருளிய அரசே போற்றி - இத்தி மரத்தின் நீழற்கீழ் இயக்கியர் அறுவர்க்கும் யானைக்கும் அருள்செய்த அரசே போற்றி, தென்னாடு உடைய சிவனே போற்றி - தென்றமிழ் நாட்டினை அரசு உரிமையாக உடைய சிவபெருமானே போற்றி, எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி - எந்த நாட்டிலுள் ளார்க்குந் தலைவனே போற்றி, ஏனைக் குருளைக்கு அருளினை போற்றி - பன்றிக்குட்டிகட்குப் பாலூட்டி அருள் செய்தவனே போற்றி, மானக் கயிலை மலையாய் போற்றி - பெருமையுடைய கயிலை மலையை உறையுளாக உடையவனே போற்றி, அருளிட வேண்டும் அம்மான் போற்றி - அருள் செய்திடல் வேண்டும் மாமனே போற்றி, இருள் கெட அருளும் இறைவா போற்றி - ஆணவஇருள் கெடும்படி அருள்புரியும் தலைவனே போற்றி, தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி என்பதை அடியேன் தமியேன் தளர்ந்தேன் போற்றி என மாற்றி அடியனே னாகிய தனியேன் தளர்வுற்றேன் பெருமானே போற்றி என்றவாறு. அடைதல் - சார்தல்; அடையாவாம் ஆயங் கொளின் என்பதன் (திருக்குறள் 939) உரையில் இப்பொருட்டாதல் காண்க. இத்திதன்னின்கீழ் இருமூவர்க்கு அருளிய வரலாற்றினை மேலே கீர்த்தித் திருவகலிற் பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங் கட்டமா சித்தி யருளிய அதுவும் என்பதன் உரையில் எடுத்துக் காட்டினாம். ஆண்டு, நம்பியார் திருவிளையாடல் ஆலமரத்தின் நீழற் கீழ் இறைவன் அருள்செய்தானென் றுரைப்ப, ஈண்டு அடிகள் இத்திமரம் என்றோதுதல் என்னையெனின்; நம்பியார் காலத்திற்கும் மிக முற்பட்ட அடிகள் அதனை இத்திமர மென்றே ஓதுதலின் அதுவே கொள்ளற்பாற் றென்க. அத்திக்கு அருளிய வரலாறு வருமாறு: முன்னொரு காலத்துத் தேவேந்திரன் நிலத்தினின்றும் வானுலகஞ் செல்ல, அவனை எதிரேற்றுத் தேவரும் முனிவரரும் ஒவ்வொரு கையுறை நல்கினார். அவ்வமயத்தில், துருவாச முனிவரனும் ஒரு தாமரைப் பூவும் ஒரு துளவத்தாருங் கொடுப்ப, அவற்றை வாங்கிய தேவர் கோன் அவற்றை ஒரு பொருட்படுத்தாது இகழ்ந்து தானூர்ந்து சென்ற வெள்ளானை மேல் எறிய, அதுவும் அவற்றை இகழ்ந்து தன் அடிக்கீழ் இட்டு மிதித்தது. mJf©l KÅtu‹ m¢rKŠ ádK§ bfh©L m›Éu©ilí« vL¤J¤ j‹ KoÄir mªJbfh©L ïªâuid neh¡» ‘Ë jiyKo gh©oa‹ tisÆdh‰ ãs¡f¥gLtjhf!’ v‹W«, btŸshidia neh¡» ‘Ú Ãy¤â‹f£ fhLf nlhW§ fh£oahidahŒ cHšthahf! என்றுஞ் சபித்தனன். அச்சாபவுரை கேட்ட ஏனை முனிவரரும் தேவரும் மிக வருந்தி அம்முனிவரனைப் பொறுக்குமாறு வேண்ட, அவனுஞ் சினந் தணிந்து பாண்டிய மன்னனால் தலைமுடி பிளவுபடினும், மீண்டும் உயர்வு பெற்றுப் பண்டுபோல் வானுலகை அரசாள்வான் எனவும், வெள்ளானைக் காட்டி யானையாகி உழலுங்காற் கடம்பமா அடவிக்கண் எழுந்தருளி யிருக்கும் சிவலிங்கப் பெருமானைக் கண்டு வழிபட்டுப் பழைய நிலையைப் பெறும் எனவும் சாபவிடுதி தந்தான். அங்ஙனமே பின்றை நாளில் இந்திரன் முடிப்பிளவுண்டும், அவனது வெள்ளானை கடப்பங்காட்டிற் பெருமானை வழிபட்டும் தம் பண்டை நிலைமை எய்தினரென நம்பியார் திருவிளையாடல் கூறாநிற்கும். அத்தி என்பது ஹதிந் என்னும் வடசொற் சிதைவு. புழைக்கை யுடைமையால் யானை அப்பெயர் பெற்றது. ஹத:- கை, ஈண்டுப் புழைக்கை மேற்று. பண்டைக்காலந்தொட்டுச் சிவவழிபாடு தென் றமிழ் நாட்டின் கண்ணதாயே நிலை பேறுற்றுவருதலிற் றென்னா டுடைய சிவனே என்றார். இனித், தடாதகைப் பிராட்டியாரை மணந்து இறைவன் தென்னாட்டில் அரசு செலுத்தினான் என்னும் புராண வழக்குப்பற்றி அவ்வாறு கூறினா ரென்றலும் ஒன்று. பன்றிக்குட்டிக்கு அருளிய வரலாறு :- ஒருகாலத்துப் பன்னீர் இளைஞர் காட்டகத்தே தவஞ்செய்த ஒரு முனிவரனை அணுகி அவற்குச் சினத்தை விளைவித்துப் பன்றிவயிற்றிற் பிறந்துழலுமாறு சாபமிப் பெற்றுத் தமதுகுறம்பு அடங்கித் தாஞ்செய் பிழை பொறுக்குமாறு அவனை வேண்டி, இறை வனருளாற் சாபந் தீருமென அதற்கு விடுதியும் பெற்றனர். துனிவரன் சாபவழியே ஒரு காட்டுபபன்றி வயிற்றில் அப்பன்னிரு வருங் குருளைகளாய்ப் பிறந்தவுடன், தாய்ப்பன்றி பாண்டியன் வேட்டையில் அகப்பட்டு இறக்க, ஆய்வரவு காணாது அயரும் அக்குட்டிகட்கு இறைவனே தாய்ப்பன்றி வடிவிற் சென்று பாலூட்டி அருள் புரிந்தன னென நம்பியார் திருவிளையாடல் பகர்கின்றது. குருளை - பன்றிக்குட்டி; நாயே பன்றி புலி முயல் நான்கும், ஆயுங் காலைக் குளை என்ப என்று ஆசிரியர் தொல்காப்பிய னார் கூறினமையின்* (தொல்காப்பியம் மரபியல் 8) பன்றிக்குட்டிகளுங் குருளை எனப்பெயர் பெற்றன. மானம் - பெருமை; சூடாமணி நிகண்டு. அம்மான் என்னுஞ் சொல் மாமன் என்னும் பொருட்டாதலைப் பிங்கலந்தையிற் காண்க. தமி என்பது தனி யெனப் பொருள்படுதலை நூறுசெறு வாயினுந் தமித்துப் புக்குணினே என்பதன் உரையிற்* (புறநானூறு 184) காண்க. களங்கொளக் கருத அருளாய் போற்றி அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி அத்தா போற்றி ஐயா போற்றி 175 நித்தா போற்றி நிமலா போற்றி பத்தா போற்றி பவனே போற்றி பெரியாய் போற்றி பிரானே போற்றி அரியாய் போற்றி அமலா போற்றி மறையோர் கோல நெறியே போற்றி 180 முறையோ தரியேன் முதல்வா போற்றி உறவே போற்றி உயிரே போற்றி சிறவே போற்றி சிவமே போற்றி மஞ்சா போற்றி மணாளா போற்றி பஞ்சேர் அடியாள் பங்கா போற்றி 185 அலந்தேன் நாயேன் அடியேன் போற்றி இலங்கு சுடர்எம் ஈசா போற்றி களம் கொளக் கருத அருளாய் போற்றி - அடியனேன் ஒரு நிலையான இடத்தைப் பெறவும் நின்னையே கருதவும் அருள் செய்வாயாக பெருமானே போற்றி, அஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றி - அஞ்சாதே என்று சொல்லி இம்மை யிலேயே அருள் புரிவாயாக பெருமானே போற்றி, நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி - நஞ்சையே அமுதமாக விரும்பின வனே போற்றி, அத்தா போற்றி - அப்பனே போற்றி, ஐயா போற்றி - ஆசிரியனே போற்றி, நித்தா போற்றி - என்று முள்ளவனே போற்றி, நிமலா போற்றி - மல மில்லாதவனே போற்றி, பத்தா போற்றி - தலைவனே போற்றி, பவனே போற்றி - எல்லாவற்றிற்கும் பிறப்பிடமானவனே போற்றி, பெரியாய் போற்றி - பெரியவனே போற்றி, பிரானே போற்றி - எப் பொருட்கும் இறைவனே போற்றி, அரியாய் போற்றி - அரிய வனே போற்றி, அமலா போற்றி - மல மற்றவனே போற்றி, மறையோர் கோல நெறியே போற்றி - அந்தணர் வேடத்தை மேற்கொண்டுவந்த நீதியே போற்றி, முறையோ தரியேன் முதல்வா போற்றி என்பதனைத் தரியேன் முறையோ முதல்வா போற்றி என்பதனைத் தரியேன் முறையோ முதல்வா போற்றி என மாற்றி யான் தாங்கமாட்டேன் இது நீதியோ முதல்வனே போற்றி எனப் பொருளுரைக்க, உறவே உயிரே போற்றி, சிறவே போற்றி - சிறப்பே போற்றி, சிவமே போற்றி - சிவமே போற்றி, மஞ்சா போற்றி - மழையே போற்றி, மணாளா போற்றி - மணவாளனே போற்றி, பஞ்சு ஏர் அடியாள் பங்கா போற்றி - செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய அழகுவாய்ந்த திருவடிகளை யுடைய அம்மையை ஒரு கூற்றில் உடையவனே போற்றி, அலைந்தேன் நாயேன் அடியேன் போற்றி - துன்பமுற்றேன் நாயினேனாகிய அடியோன் பெருமானே போற்றி, இலங்கு கூடர் எம் ஈசா போற்றி - விளங்காநின்ற ஒளியினையுடை எம் ஈசனே போற்றி என்றவாறு. களம் - இடம்; பிங்கலந்தை. நூற்றறுபத்தொன்பதாம் அடியில் ஒரு நிலைக்களன் காணாது தாம் மதியராய்த் தளர்வுற்ற மையினைக் கூறினாராகலின், அதனை அடுத்த அடியில் தாம் ஒருநிலைக்களன் கொள்ளுமாறு தமக்கு அருள்செய்தல் வேண்டுமெனக் குறை இரந்தார். இவ்வாறு பொருளுரைக்க வறியாதார் கள்ளம் களம்என ஆயிற்றெனக் கொண்டு ஓரியையுமின்றிப் பொருந்தாவுரை கூறினார். களம் கொளவும் கருதவும் என உம்மை விரித்துரைக்க. இங்கு ஈண்டு இம்மை யென்னும் பொருள்மேல் நின்றது. இம்மைக்கண் அருள் பெற்றார்க்கன்றி மறுமைக்கண் அப்பேறு வாய்த்தல் துணியப்படாமையி;ன இங்கு அருளாய் என்றார். கடவுளர் தாம் இறவாமைப் பொருட்டுப் பாற்கடல மிழ்தை வேண்டி முயன்றவராக, இறைவன் அவரைப் பாது காத்து அவர்க்கு அவ்வமிழ்தை நுகர்வித்தற்பொருட்டு, அக் கடலின்கண் எழுந்த நஞ்சை அயின்றும் தான் இறப்பின்றியே இருந்தமையின் இவனே எல்லாம் வல்ல முழுமுதற் கடவுள் என்றறிவிப்பார் நஞ்சே அமுதா நயந்தாய் என்றருளிச்செய்தார். அமுது ஆக என்னுந் தொடரில் ஆக என்பது ஆ எனக் கடைக்குறைந்து நின்றது. நயத்தல் - விரும்புதல். நயத்தக்க நாகரிகம் என்புழியுங் காண்க. (திருக்குறள் 580) ஐயன் - ஆசிரியன்; பிங்கலந்தை. நித்ய என்னும் வடசொல் நித்த என்றாய், விளியேற்று நித்தா என நின்றது. நிர்மலன் என்பதில் நிர் என்னும் வடமொழி எதிர்மறை இடைச்சொல் ஈறு கெட்டு நி என நின்று மலம் என்னுந் தமிழ்ச் சொல்லோடு புணர்ந்து வரலாயிற்று. தலைவன், கணவன் எனப் பொருள்படும் பர்த்ரு என்னும் வடசொல் பத்தா எனத் திரிந்தது. சிவபெருமான் எவற்றையுந் தோற்றுவித்தலிற் பவன் எனவும், எவற்றையும் அழித்தலிற் சர்வன் எனவும் ஆரிய வேதங்களும் கூறப்படுவன். எசுர்வேதத்திடையில் உள்ள சத ருத்ரீயத்தில் நமோ பவாய ருத்ராயச நம : சர்வாயச பகபதயேச நமோ நீலக்ரீவாயச் சிதிகண்டாயச எனப் போந்தமை காண்க. எப்பொருட்கும் இறைவனாவான் பிரான் எனப்படும் என்று திவாகரம் கூறும். அமலா என்பதில் அகரம் எதிர்மறைப் பொருளை யுணர்த்தும் ஒரு வடமொழி இடைச்சொல். கோலம் - வேடம்; இச்சொல் இப்பொருட்டாதல் உள் வரிக் கோலந் துறுதுணை தேடி என்னுஞ் சிலப்பதிகார அடிக்கு (சிலப்பதிகாரம் இந்திர விழா வூரெடுத்த காதை 216) அரும்பதவுரைகாரர் கூறிய வுரையிற் காண்க. நெறி - பீதி; பிங்கலந்தை. இறைவன் தமக்கு ஆசிரிய வடிவிற் றோன்றிய ஞான்று ஒரு மறையவன் போல் எழுந்தருளின னாகலின் மறையோர் கோலம் என்றும், எல்லா வுயிர்கட்கும் அவன் நடுநின்று அருள்புரிதலின் அவனை நெறி என்றுங் கூறினார். முறை நீதியினை யுணர்த்தல் முறை வேண்டு பொழுதிற் பதினெளியோர் என்பதன் (புறநானூறு 35) உரையிற் காண்க. ஆசிரியனாய் எழுந்தருள் செய்த முதல்வனைத் தாம் பிரிந்திருக்கலாற்றாமையின் முறையோ தரியேன் என்றார். சிறவு - சிறப்பு; இஃது அருகிய வழக்கு. மஞ்சு - மழை மேகம்; திவாகரம்; அடியார்க்கு வேண்டுவன வெல்லாங் கேளாதே வழங்கலின் இறைவனை மஞ்சு என்றார். இதனை வடசொல்லெனக் கொண்டு அழகன் எனப் பொரு ளுரைப்பாரும் உளர். மஞ்சு முகிலை உணர்த்துங்கால் தமிழ்ச் சொல்; அழகை உணர்த்துங்கால் வடசொல். பஞ்சு ஏர் அடியாள் என்பதிற் பஞ்சு செம்பஞ்சுக் குழம்பு; மாதரடிக்கு ஊட்டப்படுவது அதுவேயாகலின் என்றார் சிலப்பதிகாரத்தும் (சிலப்பதிகாரம் கடலாடு காதை 82) ஏர் - அழகு; இரப்பும் ஓர் ஏ எ ருடைத்து என்பது திருக்குறள். (திருக்குறள் 1053) அலத்தல் - துன்புறுதல்; அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் என்னுந் திருக்குறளினும் (1303) இப் பொருட்டாதல் காண்க. சுடர் - ஓளி; ஒண்சுடர்ப் பாண்டிற் செஞ்சுடர் போல என்புழி (ஐங்குறுநூறு 405) இப்பொருட்டாதல் காண்க. கவைத்தலை மேவிய கண்ணே போற்றி குவைப்பதி மலிந்த கோவே போற்றி மலைநா டுடைய மன்னே போற்றி 190 கலையார் அரிகே சரியாய் போற்றி திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி பொருப்பமர் பூவணத் தரனே போற்றி அருவமும் உருவமும் ஆனாய் போற்றி மருவிய கருணை மலையே போற்றி 165 துரியமும் இறந்த சுடரே போற்றி தெரிவரி தாகிய தெளிவே போற்றி தோளா முத்தச் சுடரே போற்றி ஆளா னவர்கட் கன்பா போற்றி ஆரா அமுதே அருளே போற்றி 200 பேராயிரம் உடைப் பெம்மான் போற்றி தாளி அறுகின் தாராய் போற்றி நீளொளி ஆகிய நிருத்தா போற்றி சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி சிந்தனைச் கரிய சிவமே போற்றி 205 மந்திர மாமலை மேயாய் போற்றி எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி சுவைத்தலை மேவிய கண்ணே போற்றி - சுவைத்தலை என்னும் ஊரில் விரும்பி யிருந்த கண் அனையாய் போற்றி, குவைப்பதி மலிந்த கோவே போற்றி - குவைப்பதி என்னும் ஊரில் மகிழ்ச்சி மிகுந்திருந்த அரசே போற்றி, மலைநாடு உடைய மன்னே போற்றி - மலைநாட்டினையுடை மன்னனே போற்றி, கலை ஆர் அரிகேசரியாய் போற்றி - நூற்பயிற்சி நிறைந்த அரி கேசரி என்னும் ஊரினை உடையாய் போற்றி, திருக்கழுக்குன்றில் செல்வா போற்றி - திருக்கழுக்குன்றில் எழுந்தருளியிருக்கும் செல்வனே போற்றி, பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி - மலைகள் பொருந்திய திருப்பூவணத்தில் எழுந்தருளிய சிவபெருமானே போற்றி, அருவமும் உருவமும் ஆனாய் போற்றி - அருவமும் உருவமும் ஆனவனே போற்றி, மருவிய கருணை மலையே போற்றி என்பதனைக் கருணை மருவிய மலையே போற்றி என மாற்றி அருள் பொருந்திய மலையை யொத்தவனே போற்றி எனப் பொருளுரைக்க, துரியமும் இறந்த சுடரே போற்றி - நான்காம் நிலையுங் கடந்த ஒளியே போற்றி, ஆள் ஆனவர்கட்கு அன்பா போற்றி - அடிமையினார்க்கு அன்பனே போற்றி, ஆரா அமுதே அருளே போற்றி - உண்டு அமையாத அமுதை யொப்பானே அருளையுடையோனே போற்றி, பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி - ஆயிரம் பெயர்களையுடைய பெருமானே போற்றி, தாளி அறுகின் தாராய் போற்றி - தாளியும் அறுகுஞ் சேர்த்துக் கட்டின மாலையை அணிந்தவனே போற்றி, நீள் ஒளியாகிய நிருத்தா போற்றி - நீண்ட ஒளியுருவாய்த் தோன்றிய கூத்தனே போற்றி, சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி - சந்தனத்தோடு கலந்த திருநீற்றினை அணிந்த அழகனே போற்றி - சந்தனத்தோடு கலந்த திருநீற்றினை அணிந்த அழகனே போற்றி, சிந்தனைக்கு அரிய சிவமே போற்றி - நினைத்தற்கு அரிதாகிய சிவமே போற்றி, மந்திர மாமலை மேயாய் போற்றி - மறை மொழிகளைப் புலப்படுத்தற்கு இடமான பெரிய மகேந்திர மலையிற் பொருந்தினவனே போற்றி, எம்தமை உய்யக் கொள்வாய் போற்றி - எம்மைப் பிழைக்குமாறு அடிமை கொள்வானே போற்றி என்றவாறு. நூற்றெண்பத்தேழாம் அடி முதல் நூற்றுத்தொண்ணூற் றிரண்டாம் அடிகாறும் இறைவன் திருக்கோயில் கொண் டெழுந்தருளி அடியார்க் கருள்புரிந்த இடங்களையே அடிகள் கூறுகின்றார் என்பதற்கு மேவிய மலிந்த உடைய என்னும் வினைகளே சான்றா மாகலிற் சுவைத்தலை குவைப்பதி என்பனவும், அவற்றிடையே போந்த அரிகேசரி என்பதும் திருக்கழுக்குன்றம், திருப்பூவணம் முதலியவற்றைப்போற் சிவ தலங்களையே குறிப்பனவா மென்பது நன்கு பெறப்படும். இஃதயியாதார் இவைதமக்கு வேறுவேறு பொருளுரைத்து இடர்ப்படுவர். அற்றேற் கவைத்தலை குப்பதி அரிகேசரி முதலிய தலங்கள் யாண்டுள்ளன? அவற்றின் வரலாறுகள் யாவை? எனின்; மிகப்பழைய காலத்தவான அத்தலங்களும் அவற்றின் வரலாறுகளும் அழிந்துபட்டமையின் அவை இஞ்ஞான்று விளங்கா. இங்ஙனமே இஞ்ஞான்று விளங்கா இன்னுஞ் சில சிவதலங்கள் கீர்த்திக் திருவகவலிற் போந்தமை காண்க. மலிதல் மிகுதிப் பொருட்டாதல் கார்மலி கதழ்பெயல் என்பதற்குப் (பரிபாடல் 14) பரிமேழகியார் கூறிய வுரையிற் காண்க மன் - அரசன்; பிங்கலந்தை. அருவம் உருவம் என்னும் இரு தன்மைகளும் இறைவற் குண்டென்பது. அருவமோ உருவாரூபம் ஆனதோ அன்றி நின்ற உருவமோ உரைக்குங் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னின் அருவமும் உருவாரூபம் ஆனதும் அன்றி நின்ற உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக் குள்ளவாமே என்னுஞ் சிவஞானசித்திச் செய்யுளாற் கண்டுகொள்க. மருவிய - பொருந்திய. இப்பொருட்டாதல் உடனுறையு மரீ இ என்பதன் (சிலப்பதிகாரம் 2 61) உரையிற் காண்க. நான்காவது எனப் பொருள்படும் துரீயம் என்னும் வட சொல் துரியம் என்றாயிற்று. சிவம் மும்மூர்த்திகளுக்கும் அப்பாற் பட்ட துரியப் பொருளென வேதாந்தமும், அந்நான் காவது பொருளுக்கும் அப்பாற் பட்டதெனச் சைவசித்தாந்தமும் வழங்குதலின் அவ்விருவகை வழக்கும்பற்றி அடிகள் ஒரோவிடத்துச் சிவபெருமானை நான்காவது பொருளெனவும் மற்றும் ஓரோவிடத்து அதனையுங் கடந்த தெனவுங் கூறாநிற்பர் தேவர்கோ வறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்து காத் தழிக்கும் மற்றை மூவர்கோ னாய்நின்ற முதல்வன் பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த, நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும், மாவேறு சோதியும் வானவருந்தா மறியாச், சேவேறு சேவடி என்றற் றொடக்கத்துச் செய்யுட் களாற் சிவம் நான்காம்பொருள் என்றருளிச் செய்தார். மற்றுத் துரியமும் இறந்த சுடரே என்னும் இன்னோரன்னவற்றால் அஃது அந்நான்காம் பொருளையுங் கடந்ததென அறிவுறுத்தார். வடமொழி வேதாந்தமாகிய மாண்டூக்கிய உபநிடதமும் சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் அந்யந்தே என்பதனாற் (மாண்டூக்கியோபநிடதம் 2 1) சிவம் நான்காவது பொருளா தலை வற்புறுத்துரைத்தது. அவர் நாராயணர்க்கும் மேற்பட்டவ ரென்பதை நாராயண பரம்ப்ரஹ்ம என்று தைத்தீரிய ஆரணியக உபநிடதங் (தைத்திரீயம் 10, 13, 29) கூறா நிற்கும். அவர் எல்லாத் தேவர்கட்குந் தலைவரான நான்முகக் கடவுளைப் படைப்பவ ரென விச்வாதிகோருத்ரோ மஹர்ஷிர் ஹிரண்ய கர்ப்பம் பஜ்யதஜாயமாந: என்று அவ்வுபநிடதமே பின்னுங் கூறியது (10, 12, 28). நான்முகன், திருமால், உருத்திரன் முதலிய எல்லாம் பிறத்தலின் அவரெல்லாம் முதற் பொருளா கார் எனவும், எல்லாவற்றிற்குங் காரணனாய் வழிபடப் படுவோன் சிவபிரான் ஒருவனோயாம் எனவும் அதர்வசிகை ஸர்வ மிதம் ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரேந்த்ராதே ஸம்ப்ரஸூ யந்தே ஸர்வாணி சேந்த்ரியாணி ஸஹ பூதைர் நாகரணம், காரணாநாந்தியாதா காரணந்து த்யேயஸர்வைச்வர்ய ஸம்பந்ந ஸர்வேச் வரச்சம்புராகாச மத்யே என்று புகலாநிற்கின்றது. இன்னும் பரத்திற்குப் பரமாயுள்ளவர் பிரமா; அதற்குப் பரமாயுள்ளவர் நாராயணர்; அதற்குப் பரமாயுள்ளவர் சிவபிரான் என்பது போதரப் பராத்பரதரோப்ரஹ்மா தத் பராத்பரதோஹரி : தத்பராத்பரதோ தீச: என்று சிவசங்கற் போபநிடதமும் உரை தருகின்றது. இனி அத்துவிதமாயும் நான்காவதாயும் நான்முகன் திருமால் உருத்திரன் என்னும் மூவர்க்கும் அப்பாற்பட்டவராயும் உள்ளார் சிவபிரான் என்று அத்வைதம் சதுர்த்தம் பிரஹ்ம விஷ்ணு ருத்ராதீத மேக மாஸாயயம் பகவந்தம் சிவம் ப்ரணம்ய என்னும் பமஜாபாலோபநிடதமுந் தெளித்துக் கூறுதல் காண்க. இனி, வேதாந்தத் துள்ளும் ஓரோவழிச் சைவ சித்தாந்த முடிநிலைப் பொருள் கடைப்பிடித் துரைக்கும்வழித் துரியங் கடந்த நிலையும் கூறப்படு மென்றற்குத் தமீச்வராணாம் பரமம் மகேச்வரம் தம் தைவதாநாம் பரமஞ்சதைவதம் பதிம் பதீநாம் பரமம் பரதாத் விதாமதேவம் புவநேச மீட்யம் என்னுஞ் சுவேதாசுவதரோப நிடத வுரையே (6இ7) சான்றாதல் காண்க. பருப்பொரு ளறிவானும் உயிர்ப்பொரு ளறிவானும் கடவுளின் சிறப்பியல்பு அறியப்படாதேனும், அருட்கொருளறி வான் அது தெளியப் படுதலின் தெரிவரிதாகிய தெளிவே என்றருளிச் செய்தார். பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத்தாலே, நேசமொடு முள்ளத்தே நாடி என்ற சிவஞானசித்தித் திருப்பாட்டும் இக் கருத்தே பற்றி எழுந்ததென்க. தோளா - தொளைக்கப்படாத; இப்பொருட்டாதல் தோட்கப் படாத செவி என்புழியுங் (திருக்குறள் 418) காண்க. ஒன்பது மணிகளுள்ளும் முதலாதலின் முத்தம் எனப் பெயர் போந்தது; இது தமிழ்ச் சொல்லாதலை அறியாதார் இது முக்தம் என்னும் வட மொழியினின்றும் வந்ததெனப் பொருந்தாவுரை நிகழ்த்துவர். ஆராத - அமையாத; புறப்பொருள் வெண்பாமாலை யுரைகாரரும் அமையாக்காதல் என்பதற்கு ஆராத அன்பு எனப் பொருளுரைத்தார். (புறப்பொருள் வெண்பாமாலை 9 48) பெருமான் என்னுஞ் சொல் இடைக் குறைந்து ஒற்று விரிந்து பெம்மான் என்றாயிற்று. தாளி என்பது ஒரு படர்கொடி; அதன் இலையும் அறுகம் புல்லின் றோடும் ஒருங்குசேர்த்துக் கட்டிய மாலை சிவபிராற்குரித்தாகலின் தாளி யறுகின் தாராய் என்றார். தாளி, இலைகள் செறிந்த கொடி என்பது அள்ளிலைத் தாளி கொய்யு மோனே என்பதனானுங் காண்க, (புறநானூறு 252) நான்முகன் திருமால் என்னும் இருவர்க்கும் இடையே ஒளி யுருவாய் நீண்டமையின் நீளொளி யாகிய நிருத்தா என்றார். நிருத்தன் என்பது நிருத்த என்னும் வடசொல்லினின்று பிறந்த பெயர். நிருத்தம் - கூத்து; ஒளியின் அசைவே ஈண்டுக் கூத்தெனப்பட்டது. சாந்து - திருநீறு; பிங்கலந்தை. சந்தனமுந் திருநீறுங் கலந்த கலவையே கோபீசந்தனம் ஆமாறும், அதனைப் பூசுமாறும் அதிராத் ராக்நி ஹோத்ர பம நாக்நேர் பஸிதமிதம் விஷ்ணுத்ரீணி பதேதி மந்த்ரைர் வைஷ்ணவ காயத்ரியா ப்ரணவேநோத்தூளநம் குர்யாத், ஏவம் விதிநா கோபீசந்த நஞ்ச தாரயேத் என்று வாசுதேவோப நிடதத்துட் கூறப்பட்டமை காண்க. சுந்தரம் - அழகு; வடசொல். மன்னு மாமலை மகேந்திர மதனிற், சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும் எனவும் (கீர்த்தித் திருவகவல் 9) மற்றவை தம்மை மகேந்திரத்திருந், துற்றவைம் முகங்க ளாற்பணித் தருளியும் எனவும் (19) மந்திர மாமலை மகேந்திர வெற்பன் எனவும் (100) அடிகள் கீர்த்தித்திருவகவலுட் பலகாலும் அருளிச் செய்தமை யின் ஈண்டு மந்திரமாமலை என்றதூஉம் அம் மகேந்திர மலையையேயாமென்க. உய்ய - பிழைக்க. கங்குல் தலைவரின், உய்குவென் (புறப்பொருள் வெண்பா மாலை 11,10) என்புழியும் இப்பொருட் டாதல் காண்க. புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி கருங்குரு விக்கன் றருளினை போற்றி 210 இரும்புலன் புலர இசைந்தனை போற்றி படியுறப் பயின்ற பாவக போற்றி அடியொடு நடுஈ றானாய் போற்றி நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமற் பரகதி பாண்டியற் கருளினை போற்றி 215 ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி கழுநீர் மாலைக் கடவுள் போற்றி தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன் 220 குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி புரம்பல எரித்த புராண போற்றி பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி போற்றி போற்றி புயங்கப் பெருமான் போற்றி போற்றி புராண காரண 225 போற்றி போற்றி சயசய போற்றி. புலிமுலை புல்வாய்க்கு அருளினை போற்றி - ஒரு புலி தனது முலையை ஒரு புல்வாய் மான் கன்றுக்கு ஊட்டுமாறு அருள் செய்தவனே போற்றி, அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி - அலைகளையுடைய கடலின்மேல் நடந்தவனே போற்றி, கருங் குருவிக்கு அன்று அருளினை போற்றி - கரிக் குருவிக்கு அன்றொருகால் அருள் செய்தவனே போற்றி, இரும்புலன் புலர இசைந்தனை போற்றி - பெரிய ஐம்புல அவாக்களுங் காயும்படி பொருந்தினவனே போற்றி, படி உறப் பயின்ற பாவக போற்றி - நிலத்தின்கண்ணே பொருந்தப் பலகாலுங் காட்டிய தோற்றங் கள் உடையவனே போற்றி, அடியொடு நடு ஈறு ஆனாய் போற்றி - முதலொடு நடுவுங் கடையும் ஆனவனே போற்றி, நரகொடு சுவர்க்கம் நால்நிலம் புகாமல் பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி - நரகத்துடன் துறக்கம் நால்வகைப்பட்ட நிலம் என்னும் இவற்றின்கட் போகாதபடி மேலான வீடுபேற்றி னைப் பாண்டியனுக்கு அருளிச் செய்தவனே போற்றி, ஒழிவு அற நிறைந்த ஒருவ போற்றி - தான் இல்லாத இடம் இல்லையாம் படி நிறைந்த ஒருவனே போற்றி, செழுமலர்ச் சிவபுரத்து அரசே போற்றி - செழுமையான மலர்கள் நிறைந்த திருப்பெருந் துறையில் எழுந்தருளிய அரசே போற்றி, கழுநீர் மாலைக் கடவுள் போற்றி - செங்கழுநீர் மாலையை அணிந்து போந்த முனிவனே போற்றி, தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி - வணங்கு வாருடைய மயக்கத்தினை அறுப்பவனே போற்றி, பிழைக்க வாய்ப்பு ஒன்று அறியா நாயேன் குழைத்த சொல் மாலை கொண்டு அருள் போற்றி - பிழைபடுதலும் பிழைபடாமையுஞ் சிறிதும் அறியாத நாயினேன் கூட்டிச் செய்த சொற்களால் ஆகிய மாலையை ஏற்றருளல் வேண்டும். பெருமானே போற்றி, புரம் பல எரித்த புராண போற்றி - பட்டினங்கள் பலவற்றையும் கொளுத்திய பழையவனே போற்றி, பரம் பரம் சோதிப் பரனே போற்றி - மேலோனே போற்றி, போற்றிபோற்றி புயங்கப் பெருமான் - போற்றி போற்றி பாம்பை அணியாகவுடைய பெருமானே, போற்றி போற்றி புராண காரண - போற்றி போற்றி பழைய காரணப்பொருளே, போற்றி போற்றி சய சய போற்றி - போயீற போற்றி வென்றி வென்றி போற்றி என்றவாறு. புலிமுலை புல்வாய்க்கு அருளிய வரலாறு வருமாறு: பண்டொருகாற் பாண்டிநாட்டின்கட் கடப்பங்காட்டிற் புலிகள் நெருங்கிப் புல்வாய்மான்கள் அருகிவராநிற்பக். கடைப்படியாக ஒரேயொரு புல்வாய் மாண்பிணை ஒரு கன்றை ஈன்று, அதனைப் பழைய தொரு தூற்றினையிடையே மறைத்து வைத்து, அக்காட்டகத்துள்ள மடுவின்கண் நீர் பருகச் சென்றது. சென்று நீர் பருகுங்கால் அதனை ஒரு வன்னெஞ்ச வேட்டுவன் அம்பால் எய்து வீழ்த்தினான். அது கீழ்விழுந் துயிர்விடுங்கால் தன் கன்றை நினைத்து அழுதுருகி உயிர்விட்டது. அதனை யறிந்து வேரிரக்க முடையனாகிய சிவபெருமான் அக்காட்டகத்தில் வேறு ஏதும் மான்பிணை யில்லாமையை யுன்னி, அத்தூற்றுக்கு அருகினில் உலாவிய ஒரு பெண்புலியையே அதற்குப் பாலூட்டுமாறு ஏவ, அதுவும் அங்ஙனமே சென்று நாளும் அம்மான் கன்றுக்கு முலைதந்து அதனை வளர்த்துவரலாயிற் றெனப் பெரும்பற்றப் புலியூர்நம்பி திருவிளையாடற்புராணங் கூறாநிற்கும். புல்வாய் ஒருவகை மான். அலைகடல் மீமிசை நடந்த தென்றது கடலினை உழக்கி வலைஞரைத் துன்புறுத்திய ஒரு பெருங் கெளிற்று மீனை இறைவன் வலைஞர் கோலத்திற் சென்று படுத்த திருவிளை யாடலைக் குறித்தது. கேவேடராகிக் கெளிறது படுத்தும் என்று முன்னும், அலைகடல்வாய் மீன் விசிறும், பேராசை வாரியனை என்று பின்னும் அடிகள் அருளிச்செய்தல் காண்க. மீமிசை என்பது ஒரு பொருள் இருசொற் பிரிவில வரையார் என்பதனான் (தொல்காப்பியம் சொல் 460) வந்தது. ‘கருங்குருவிக் கருளியது’ வருமாறு: முன்னொரு காலத்திற் கரிக்குருவிகள் காக்கைகளால் நலியப்பட்டு அஞ்சி யுழல்கையில் அவற்றுள் அறிவுமிக்கதொரு குருவி ‘பகை நீங்க செல்லும் வாயில் யாது? எனத் தன்னுள் ஆராய, முந்நகர்களை நகைத் தெரிந்த இறைவனை வழிபடுதலே அதுவாமென வுணர்ந்து, நாடோறும் பொற்றாமரையில் முழுகிச் சிறகடித்து ஆலவா யண்ணலை வலம்வந்து வழிபட்டு வரலாயிற்று. அதுகண்ட இறைவன் இரங்கிப் பகைவரை வெல்லும் மூன்றெழுத்தா லாயதொரு மறையை அதற் கறிவுறுப்ப, அஃ ததனையோதித் தானுந் தன் கிளையும் தன்கிளைவழி வருவனவு மெல்லாம் காக்கை முதலான பெரும் பறவையினங்களை வெல்லுந் திறம்பெற்று, அதனால் வலியான் என்னும் பெயரும் பெற்றதெனப் பெரும்பற்றப் புலியூர்நம்பி திருவிளையாடல் புகலும். ஈண்டுப் புலன் என்றது ஐம்புல அவாக்களின் தொகுப்பை. தூய உயிரின்கண் இறைவன் தருள் முனைத்து நிற்கு மாகலின், அவ்வருள்வழி நின்று அதனையே நோக்கி நிற்கும் அவ்வுயிர்க்கு ஐம்புல அவாக்களுங் கெட்டொழியு மென்பது பற்றி இரும்புலன்புலர இசைந்தனை என்றார். இனிப் பொறி வாயில் ஐந்தவித்தான் என்று திருவள்ளுவனார் கூறியவாறே ஐம்புல அவாக்களும் அவிய இருந்தவன் என்று இரும்புலன் புலர்தலை இறைவன் மேலேற்றிக் கூறுதலுமாம் : எல்லா இன்பமும் இறைவனிடத்து உண்டாகலின், அவன் அதன் பொருட்டுப் பிறிதொன்றனை நாடவேண்டுவது இன்றென வுணர்க. எனவே, வறுத்த வித்துப்போல, ஐம்புலன்களும் இறைவனுள் நின்றே அவனை வேறுபடுத்த மாட்டா வென்க. படியுறப் பயின்ற பாவக என்றது சேவனாகித் திண் சிலையேந்திப், பாவகம் பலபல காட்டிய பரிசினைக் (கீர்த்தித் திருவகவல் 81-82) குறித்தது. இறைவன் தன் அடியவர் பொருட்டு நிலத்தின் மிசைத் தோன்றிப் பல பல பாவகங்கள் காட்டிய வரலாறுகளைக் கீர்த்தித் திருவகவலுரையுட் காட்டினாம்; ஆண்டுக் காண்க. படி - நிலம்; படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் என்னுந் திருக்குறளைக் காண்க (606). மலயத்துவச பாண்டியனுக்குத் திருமகளாய்த் தோன்றிய தடாதகைப் பிராட்டியாரை இறைவன் மணந்து அவ்வரசனைத் துறக்கத்தினின்றும் வருவித்து எழுகடலில் முழுகுவித்து வீடுபேறு நல்கினமையிற் பரகதி பாண்டியற் கருளினை என்றார். இதனைப் பெரும்பற்றப் புலியூர்நம்பி கூறிய மலயத்துவசனை அழைத்த திருவிளையாடல் முதலியவற்றுட் காண்க. இம் மாநிலம், குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்னும் நாற் பகுப்பில் அடங்குதலின் நால்நிலம் என்னும் பெயர்த்தாயிற்று. அற்றேற் பாலைநிலம் யாண் டடங்குமெனின், முல்லை குறிஞ்சியுள் அடங்கு மென்க; என்னை? முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து, நல்லியல் பழிந்து நடுங்கு துய ருறுத்துப், பாலை யென்பதோர் படிவங் கொள்ளும் என்று இளங்கோவடிகள் அருளிச்செய்தா (சிலப்பதிகாரம் 64-66) ராகலானும், ஆசிரியர் தொல்காப்பியனார் அவற்றுள், நடுவண் ஐந்திணை நடுவணதொழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே என்று ஆணைதந்தா ராகலானும் (தொல் காப்பியம் பொருள் 2) என்பது. நரகு, சுவர்க்கம் என்பன வடசொல்லினின்றும் பிறந்தவை. செழுமலர்ச் சிவபுரம் என்றது திருப்பெருந்துறையை அடிகள் அருட்பத்தில் திருப்பெருந்துறையிற் செழுமலர்க் குருந்தம் மேவியசீர் அருத்தனே என்றருளிச் செய்தலும் ஒத்து நோக்குக. கழுநீர்மாலைக் கடவுள் போற்றி என்றும் அடியை இதனை யடுக்கவைத்து அருளிச் செய்திருத்தலானும் ஈண்டுச் சிவபுரம் என்றது திருப்பெருந்துறையையே யெனத் தெளியற் பாற்று. அடிகளை ஆட்கொளல் வேண்டி இறைவன் ஆசிரியனாய் எழுந்தருளிய ஞான்று கழுநீர்மாலை யணிந்திருந்தன னென மேலு (கீர்த்தித் திருவகவல் 113 - 114) முரைத்தார். கடவுள் - முனிவன்; இச்சொல் இப் பொருட்டாதல் வண்டூது சாந்தம் என்னும் மருதக்கலியுள்ளுங் (கலித்தொகை 93) காண்க. மையல் - மயக்கம்; மைய லொருவன் களித்தற்றால் என்புழிக் (திருக்குறள் 838) காண்க. துணித்தல் - அறுத்தல்; திவாகரம். பிழைப்பு - தவறுபடுதல்; இச்சொல்லை இப்பொருளி லேயே வேறிரண் டிடங்களினும் (திருச்சதகம் 66 குழைத்த பத்து 1) அடிகள் அருளிச் செய்வர். வாய்ப்பு - பிழையாமை, இப்பொருட்டாதல் வாய்ப்பு செயல் என்புழிக் காண்க (திருக்குறள், 948). குழைத்தல் - கூட்டிச் செய்தல்; குழலும் யாழும் அமிழ்துங் குழைத்த என்னுஞ் சிலப்பதிகார அடியில் (2, 58) இப்பொருள் படுதல் அறிக. மாலை என்னுஞ் சொல்லின் முதற்பொருள் ஒழுங்கு; இனிப் பூ பொன் மணி சொல் முதலியவற்றால் ஒழுங்காகத் தொடுக்கப்படுவனவும் மாலை எனப்படும். மாலை ஒழுங்கு எனப் பொருள்படுதல் மாலை வெண்பற் றாலிநிரை பூட்டி (சிலப்பதி காரம், 12, 28) என்புழிக் காண்க. இனி அது பூமாலை முதலிய வற்றை யுணர்த்தல் திவாகரத்துட் காண்க. தமிழர் பண்டு தொட்டுப் பெருகிய வழக்காய் வரும் இச்சொல்லை மாலா என்னும் வடசொற் றிரிபெனக் கூறுதல் பொருந்தாது; இத் தமிழ்ச் சொல்லே வடமொழிக்கட் சென்று மாலா எனத் திரிந்தது. இரும்பு வெள்ளி பொன் என்பவற்றாலாகிய முந்நகர்களை இறைவன் எரித்தனன் என்று மாபாரதங் கூறுதலிற் புரம்பல எரித்த என்றார். இவ்வரலாற்றினை ஏற்றார் மூதூர் எழில் நகை எரியின், வீழ்வித்து (திருவண்டப்பகுதி. 158 - 159) என்ற வழி எடுத்துக் காட்டினாம். புயங்கம் - பாம்பு; புஜங்க: என்னும் வடசொற் றிரிந்தது. வான்முகிலினிடத்து இடை யிடையே பாம்புபோன் மிளிரும் மின்னொளியே இறைவன்றன் சடைமுடிக்கட் பாம்பாக உருவகஞ் செய்து வழங்கப்பட்டது. முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொரு ளாகலின் இறைவனைப் புராணகாரணன் என்றார். இத்திருவகலின் எல்லா அடிகளும் நாற்சீரான் வந்தமையின் இது நிலைமண்டில ஆசிரியப்பா. இனி, இத்திருவகவலின் பொருளியைபு ஒரு சிறிது காட்டுதும்: கடவுளரிற் சிறந்த திருமாலுங் காண்டற் கரிய தன் திருவடியினையை உள்ளன்பால் உருகும் மெய்யடியார் காண்டற் பொருட்டு இந்நிலவுகினிடத்தே இறைவன் எளிதில் வரலாயினான் என அவனது அருட்பெருந் தகைமையை முதற் பத்தடிகாறுங் கூறினார். இனி அங்ஙனங் கூறுதற்கிடையே, மெய்யடியாலைத் தாயின் கருப்பையுட் கருவாய்ப் புகுத்திய நாட்டொட்டு அவர் அங்கிருந்து வெளிப்படுங்காறும் அவரை ஆண்டுவைத்துப் பாதுகாத்துப் பின்னர்ப் பத்தாந் திங்களிற் பிறப்பித்த அவனது அருட்பெருநீர்மையை யானை முதலா என்னும் பதினோராம் அடி துவங்கித் துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும் என்னும் இருபத்தைந்தாம் அடிகாறும் எடுத்துக்கூறி, அதன்பிற் குழவிப்பருவந்தொட்டு ஆண்மைப்பருவங்காறும் நேரும் பல்வேறு இடர்களுக்கும் அவரைத் தப்புவித்துக் கொணர்ந்த பேரிரக்கச் செயலையும் நாற்பத்தொன்பதாம் அடிகாறுந் தோன்ற அருளிச்செய்தார். இனித் தெய்வ மென்பதோர் சித்தம் உண்டாகி என்னும் நாற்பத்திரண்டாம் அடி துவங்கி, அதிற்பெறு மாயை எனைப்பல சூழவும் என்னும் ஐம்பத்தெட்டாம் அடிகாறும் முதுமைப் பருவத் துவக்கத்திற் கடவுள் நினைவு தோன்றப் பெற்ற அளவானே, பல்வேறு கொள்கைகளை யுடையாருந் தத்தங் கோட்பாடுகளே மெய்யெனக்கொண்டு காட்டி அக்கடவிடி னைவைக் கலைத்தற்கு மடிகட்டிநிற்பதுகூறி, அதன்பின் அவற்றாற் சிறிதும் உளந்திரிவுபடாமே தன் திருவருட் பேற்றையே நாடி நின்ற மெய்யடியார் வேறொரு தெய்வத்தைக் கனவினும் நினையாதபடி நிலத்தே ஆசிரிய வடிவிற் றோன்றி அவர்க்குத் தாயென அருள்புரிந்த அருட்பான்மையினைத் தாயே யாகி வளர்த்தனை போற்றி என்னும் எண்பத்தேழாம் அடிகாறும் கல்லு முருக எடுத்தருளிச் செய்தார். இங்ஙனமாகத் திருமான் முதலிய கடவுளருக்கும் எட்டாத பெருமான் தன்னையுந் தம்மையும் உணரும் நிலையில் இல்லாதிருந்து உயிர்கட்குப் பிறவியைத் தந்து தம்மையுந் தன்னையும் உணருமாறு செய்து மீளாப்பேறு வழங்கு மாற்றினை மெய்யடியார்மேல் வைத்தருளிச் செய்தமை காண்க. இனி, எண்பத்தேழாம் அடிமுதல் இருநூற்றிருபத்தைந் தாம் அடிகாறும், வடமொழி எசுர்வேதத் திடைநின்ற திருவுருத் திரமே போல், வணக்க மந்திரவுரை கூறி முடித்தருளினார். அடிக ளருளிய ஒப்புயர்வில்லா இம்மந்திர உரைகளே திருக் கோயில்களினும் பிற இடங்களிலும் இறைவனை வழிபடுதற்கு ஓதற்பாலன வென்று கடைப்பிடிக்க. திருவாதவூரடிகள் அருளிய திருவாசகத் திருமறையில் முதல் நான்கு திருப்பாட்டுக்களுக்கு மறைத்திரு மறைமலையடிகள் இயற்றிய விரிவுரை முற்றுப்பெற்றது. உ சிவமயம் மாணிக்கவாசக அடிகளைப் போற்றி அருளிய புகழ்ப் பாடல்கள் துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள் அகவல் விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட் காரணன் உரையெனும் ஆரண மொழியோ ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல் மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ யாதோ சிறந்த தென்குவீ ராயின் வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி நெஞ்நெக் குருகி நிற்பவர்க் காண்கிலேம் திருவா சகமிங் கொருகால் ஓதிற் கருங்கன் மனமுங் கரைந்துகக் கண்கள் தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி அன்ப ராகுநர் அன்றி மன்பதை உலகின் மற்றையர் இலரே. 1 பகிர்மதி தவழும் பவளவார் சடையோன் பேரருள் பெற்றும் பெறாரின் அழுங்கி நெஞ்சநெக் குருகி நிற்பை நீயே பேயேன் பெறாது பெற்றாற் போலக் களிகூர்ந் துள்ளக் கவலைதீர்ந் தேனே அன்ன மாடு மகன்றுறைப் பொய்கை வாதவூர் அன்ப வாத லாலே தெய்வப் புலமைத் திருவள் ளுவனார் நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவல தில ரெனுஞ் செஞ்சொற் பொருளின் தேற்றறிந்த தேனே. 2 செய்ய வார்சடைத் தெய்வ சிகாமணி பாதம் போற்றும் வாதவூர் அன்ப பாவெனப் படுவதுன் பாட்டுப் பூவெனப் படுவது பொறிவாழ் பூவே. 3 உ சிவமயம் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள் அருளிய ஆளுடையவடிகள் அருள்மாலை (தரவு கொச்சக் கலிப்பா) தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க வாசகனே ஆனந்த வடிவான மாதவனே மாசகன்ற நீ திருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின் ஆசகன்ற அநுபவநான் அநுபவிக்க அருளுதியே. 1 கருவெளிக்குட் புறனாகிக் கரணமெலாங் கடந்துநின்ற பெருவெளிக்கு நெடுங்காலம் பித்தாகித் திரிகின்றோர் குருவெளிக்கே நின்றழலக் கோதறநீ கலந்ததனி உருவெளிக்கே மறைபுகழும் உயர்வாத வூர்மணியே. 2 மன்புருவ நடுமுதலா மனம்புதைத்து நெடுங்காலம் என்புருவாய்த் தவஞ்செய்வாம் எல்லாரு மேமாக்க அன்புருவம் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்துபின்னர் இன்புருவம் ஆயினைநீ எழில்வாத வூரிறையே. 3 உருவண்டப் பெருமறையென் றுலகமெலாம் புகழ்கின்ற திருவண்டப் பகுதியெனுந் திருவகவல் வாய்மலர்ந்த குருவென்றப் பெருந்தவருங் கூறுகின்ற கோவேநீ இருவென்றத் தனியகவல் எண்ணமெனக் கியம்புதியே 4 தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையிற் சின்மயமா ஆடுகின்ற சேவடிக்கீழ் ஆடுகின்ற ஆரமுதே நாடுகின்ற வாதவூர் நாயகனே நாயடியேன் வாடுகின்ற வாட்டமெலாம் வந்தொருகால் மாற்றுதியே. 5 சேமமிகுந் திருவாத வூர்த்தேவென் றுலகுபுகழ் மாமணியே நீயுரைத்த வாசகத்தை எண்ணுதொறுங் காமமிகு காதலன்தன் கலவிதனைக் கருதுகின்ற ஏமமுறு கற்புடையாள் இன்பினும்இன் பெய்துவதே. 6 வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே. 7 வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில் ஒருமொழியே என்னையுமென் னுடையனையும் ஒன்றுவித்துத் தருமொழியாம் என்னிலினிச் சாதகமேன் சஞ்சலமேன் குருமொழியை விரும்பிஅயல் கூடுவதேன் கூறுதியே. 8 பெண்சுமந்த பாகப் பெருமான் ஒருமாமேல் எண்சுமந்த சேவகன்போல் எய்தியதும் வைகைநதி மண்சுமந்து நின்றதுமோர் மாறன்பி ரம்படியாற் புண்சுமந்து கொண்டதுநின் பொருட்டன்றோ புண்ணியனே. 9 வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசகத்தைக் கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும் வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான நாட்டமுறும் என்னில்அங்கு நானடைதல் வியப்பன்றே. 10 திருவாதவூரர் திருத்தாள் போற்றி!