kiwkiya«-- 12 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு)  அம்பிகாபதி அமராவதி ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 32+288 = 320 விலை : 400/- மறைமலையம் - 12 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 320 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000 üyh¡f« : வி. சித்திரா   அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) தமிழர் தவச் செல்வர்! தமிழ் இலக்கியங்களில் காலம், பொருள் முதலிய கூறுகளை ஆராயும் முறை ஆங்கில நாட்டு முறையை அடியொற்றி வருவதொன்று. காலம் பற்றியும் ஒப்புமை பற்றியும் (Historical method and Comparative method) ஆராய்ச்சி நிகழும். இதனை முதற்கண் தமிழ் இலக்கியத்துறையுட் புகுத்தி இனிய உரையில் எழுதிக்காட்டிய பெருமை அடிகட்கே உரியதாகும். இவ்வாராய்ச்சிக்கு நாட்டின் சமய சமுதாய அரசியல் வரலாறு பற்றிய அறிவு அடிப்படையாக வேண்டுவதொன்று. இதனைத் தமிழ் வகையில் ஆராய்ந்து தமிழ் நாட்டுத் தமிழ்மக்களின் அரசியல், மொழி, சமயம், ஒழுக்கம் முதலியவற்றின் வரலாறுகளை ஆராய்ந்து அடிகள் நிகழ்த்திய சொற்பொழிவுகளும் எழுதிய கட்டுரைகளும் பலவாகும். மாணிக்க வாசகர் வரலாறும் காலவாராய்ச்சியும் என்ற பேருரை நூல், மாணிக்கவாசகரைப் பொருளாகக் கொண்டு எழுந்ததெனினும் அதன்கண் தமிழ் நூல்கள் பலவற்றின் காலமும் கருத்தும் ஆராய்ந்து காட்டி அறிஞர் பலரை அத்துறையில் ஈடுபட்டுச் சிறப்புறச் செய்தவகையில் அடிகள் தமிழிலக்கிய ஆராய்ச்சிநெறித் தந்தையாகின்றார். - ஔவை. சுகு. துரைசாமிப்பிள்ளை அண்ணாமலை நகர். (பக். 43) மறைமலைய மாண்பு நுழைவுரை தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்! முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், `முத்தமிழ் அடிகள் என முழக்கமிட நின்றார்! இருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார். தமிழ் தனித்து இயங்காது என்றும், வடமொழி வழியது என்றும், வடமொழித் துணையின்றி இயங்காது என்றும், உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வடமொழியே என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க, வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ்பரப்பாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர். சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், `தனித்தமிழ் (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் `தனித்தமிழ் என்பதை நிலை நாட்டிய நிறைமலை, மறைமலையடிகளாரே! சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், `தொல் காப்பியக் கடல் எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி, ஐந்தெழுத்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே என்றும், ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? என்றும் - எழுதிப் பரப்பினாராக, ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம் என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்! தொல்காப்பியக் காவல் தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என்றும், மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை பேண வேண்டும் என்பதை, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால், ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்ப தற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது என்னும் பாவாணர், மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப் பாடிப் பரவினார். `தனித் தமிழ்த் தந்தையார் என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார். நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழ் காக்கும் படை என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புகளின் மேம்பாட்டையும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார். பல்துறை ஆற்றல் அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார். மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள் என்கிறார். (பனிமலை - இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்). அடிகளார் நூல்கள் அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப்படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை, 1. மருத்துவம் 2. மறைபொருள் 3. இலக்கியம் 4. இதழ்கள் 5. சங்க இலக்கியம் 6. பாடல் 7. நாடகம் 8. புதினம் 9. கடிதம் 10. கட்டுரை 11. சமயம் 12. தத்துவம் 13. வரலாறு 14. சமூக இயல் என்பன. முதற் குறள் வாத நிராகரணம் என்னும் மறுப்பு நூலே, அடிகளின் முதல் நூலாக வெளிப்படுகின்றது (1898) அந்நூன் மறுப்பு நயமே நாகை அடிகளை - பல்லவபுர அடிகளாக -தனித்தமிழ் அடிகளாக ஆக்க அரும் பெரும் தூண்டல் ஆயிற்றாம். அடிகளார் வரலாறு: கீழ்கடல் சார் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிற்றூர் காடம்பாடி, ஆங்கு வாழ்ந்த அருந்தவப் பெருந்தகையர் சொக்கநாதர் - சின்னம்மையார்! இவ்விணையர் கொடையாய்த் தமிழன்னை செய்த தவப் பேற்றால் பிறந்தவர் வேதாசலம். பிறந்த பெரு மங்கல நாள் கி.பி. 15.07.1876. சொக்கநாதர், சித்தமலம் அறுவித்த சித்தமருத்துவர்; அறிவ மருத்துவம் என்பதும் அது. அத்தொழில் அவர்க்கு வளத்தை வழங்கியது. அதனால் வேதாசலம் குறைவற வாழ்ந்தார். நாகப்பட்டினத்து வெசிலியன் மிசன் பள்ளியில் ஐந்து வகுப்புவரை பயின்றார்; சிறந்த மாணவராக விளங்கினார். ஆறாம் வகுப்பில் சேரும் நிலையில், அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். ஆயினும் அன்னையார் உறுதியால் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு இருந்த முதன்மை தமிழுக்கு இல்லை. கிறித்தவ சமயம் பற்றி அன்றிச் சிவனியம் பற்றி அறிய வாய்ப்பில்லை என்னும் இரண்டு குறைகளையும் இளமையிலேயே உணர்ந்தார். வீட்டிலேயே தமிழ் நூல்களைப் பயின்று முதற் குறையையும், நாகையில் இருந்த இந்துமதாபிமான சங்கம் வழி இரண்டாம் குறையையும் நீக்கினார். பள்ளியிலும் குறையறக் கற்றார். வருவாய்க் குறையால் வாடும் அன்னைக்குச் சுமையாய் இல்லாமல் தனியே பயில்வதே இனியவழி என எண்ணி, நாகையில் புத்தக வணிகராக விளங்கிய நாராயண சாமியார் புலமையாலும் சிறந்து விளங்கியவர். ஆதலால் அவரிடம் தனியே இலக்கிய - இலக்கண - சமய நூல்களைக் கற்றார். நாராயணரின் முன்னை மாணவர் பேரா. மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பதையும் அறிந்தார். ஒன்பதாம் வகுப்பொடு பள்ளிக் கல்வியை நிறுத்தித் தனிக்கல்வியே கற்றார். தொல்காப்பியம், தொகை நூல்கள், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவை, இறையனார் அகப் பொருள் எனக்கற்றார். அடிகளார் இயற்றிய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை முகப்பில், எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தேம் என்றும் வேறுசில நூல்களையும் முழுவதாக ஓதியதையும் கூறி, இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். அவ்வாண்டு கி.பி. 1897. நாகை இந்து மதாபிமான சங்கத்திற்குச் சைவ சித்தாந்த சண்ட மருதம் என்னும் விருது பெற்ற சோமசுந்தர நாயகர் வந்து சொற்பொழிவாற்றினார். அவர் பொழிவில் வந்த கருத்தொன்றனை மறுத்து ஒருவர் எழுத, அதற்கு மறுப்பாக முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புரை எழுதினார். அதனைக்கற்ற நாயகர், மீளப் பொழிவுக்கு வருங்கால் முருக வேளைச் சந்திக்க விரும்பினார். அச்சந்திப்பின் பயனே உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம். நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார். இதுவே அடிகளார்க்குச் சென்னை வாழ்வு அமைய முதல் தூண்டல் ஆயிற்று. அடிகளுக்குப் பதினேழாம் வயதில் (1893) திருமணம் நிகழ்ந்தது. துணைவி தம் மாமன் மகள் சவுந்தர வல்லி என்பார். திருவனந்தபுரம் நாராயணசாமி அவர்களின் முன்னை மாணவராம் பேரா. சுந்தரனார் திருவனந்த புரத்தில் இருந்தார். அவரியற்றிய மனோன்மணீய நாடக நூல் கற்று அதன் அருமை கண்டு, பேராசிரியரைக் காணவிரும்பினார். அதனால் தம் ஆசிரியரோடு திருவனந்தபுரம் சென்று பேராசிரியரோடு உரையாடினார். வேதாசலனார் இளம் பருவத்தையும் மூதறிவையும் அறிந்த சுந்தரனார் வியப்புற்றுத் தகுதிச் சான்று ஒன்று வழங்கினார். சிறிது காலம் திருவனந்த புரத்தில் ஆசிரியப் பணியும் செய்தார். அவ்விடத்தின் பருவநிலை ஒவ்வாமையால் நாகைக்கே திரும்பினார். சென்னை: சோமசுந்தரனார் முன்னே கூறியபடி வேதாசலரைச் சென்னைக்கு அழைத்து அறிஞர் நல்லுசாமி என்பார் நடாத்திய சித்தாந்த தீபிகை என்னும் இதழாசிரியர் ஆக்கினார். பின்னே சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டியிருத்தல் அறிந்த சோமசுந்தரனார் வேதாசலனாரை அக்கல்லூரிப் பேராசிரியராக்க முயன்றார். அதுகால் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர். கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் என்பார். 9.3.1898 இல் வேதாசலனார் பணியேற்றார். அங்குப் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்கல்லூரிக் காலத்தே இளங்கலை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு (1903) பட்டினப்பாலை (1906) என்பவற்றுக்கு ஆராய்ச்சி உரை எழுதினார். அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப்புதுமுறை உரை, தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சி யினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டும் என எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்கிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தார்ஆங்கிலமும் வட மொழியும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும் என்றும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம் என்றும் ஒரு தீர்மானம் ஆட்சிக்குழுவில் கொண்டு வந்தனர். ஒரு பாடம் விருப்பப்பாடம் எனப்பட்ட பின்னர் அதனைக் கற்க வருவார் எவர்? தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறையவே ஆசிரியப் பணியிடமும் குறைய வேண்டுவதாகி, அடிகளார் 31.1. 1911 ஆம் நாளுடன் கல்லூரிப் பணியை முடிக்க வேண்டிய தாயிற்று. மாணவர்: இக்காலத்தில் அடிகளின் மாணவராக இருந்தாருள், தணிகைமணி செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சி, நாவலர் ச.சோ. பாரதி, பேரறிஞர் ச. வையாபுரியார் முதலோர் சிலர். தணிகைமணியின், தேவார திருவாசகச் சொல்லடைவு ஒரு பிறப்பளவில் செய்யக் கூடியதா? நாவலர் ச. சோ. பாரதியாரின் ஆய்வுத் துணிவு எத்தனை கசடுகளை நீக்கியது? வையாபுரியார், கால ஆய்விலும், வடமொழிப் பிடிவாதத்திலும் தம்மைச் சால்பு ஆய்வில் இருந்து விலக்கினாலும், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப்பதிப்பு, பல்கலைக் கழக அகரமுதலிப் பதிப்பு இவற்றைச் செய்த அருமை என்ன? புறத்திரட்டு, களவியல், காரிகை ஆயவற்றின் பதிப்புச் சிறப்பு என்ன? இவர்கள் பணியும் அடிகளாரைத் தழுவுதல் உண்மை தானே! சமரச சன்மார்க்கம் கல்லூரிப் பணியில் இருந்து வீடுபெற்ற அடிகளார், பல்லவபுரத்தை வாழ்விடமாகக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் தோற்றுவித்தார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீகாரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும், சமரச சன்மார்க் கத்தையும் பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவார். அச்சுவாமிகள் வலியுறுத்திய அவ்விரண்டு கொள்கைகளையும் எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்கு கூட்ட வேண்டி அச்சுவாமிகள் இட்ட பெயராலேயே, `சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கலாயிற்று. இந்நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்; பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் ஆவர் என்று பெயரீடு செய்து கொள்கைகளையும் வகுக்கிறார். குடும்பம் 1898இல் அடிகளார் சென்னைக்கு வரும்போது அவர்தம் அன்னையார் சின்னம்மையார், துணைவியார் சவுந்திரம் அம்மை யார், செல்வி சிந்தாமணி, அடிகளார் என்னும் நால்வரைக் கொண்ட குடும்பமாக இருந்தது. 1911இல் பல்லவ புரத்தில் குடிபுகும் போது நீலாம்பிகை, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி என்னும் மக்களும் கொண்ட ஒன்பதின்மர் குடும்பமாக இருந்தது. பல்லவுரம் புகுந்த பின் திரிபுர சுந்தரி பிறக்கப் பதின்மன் குடும்பம் ஆயிற்று. இந்நிலையிலேயே 27.08.1911இல் சைவத் துறவியர்க்குரிய துறவாடை (காவி) கொண்டு சுவாமி வேதாசலம் ஆனார். சுவாமி வேதாசலம் என்பதன் தனித்தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது வெளிப்படை. முன்னேயே அவரை அடிகள் என்றது அவர்தம் மாண்பு கருதியேயாம். மீள்பார்வை நாம் மீள்பார்வை ஒன்றுபார்க்க வேண்டும். அடிகள் 21ஆம் அகவையிலேயே தனித்தமிழ் ஆய்வுத்திறம் கைவரப் பெற்றார். 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களுக்கு ஆய்வுரை வழங்குங்கால் இதிலுள்ள சொற்கள் இத்தனை; இவற்றுள் செந்தமிழ்ச்சொல் இத்தனை; வேற்றுச் சொல் இத்தனை - என அறுதியிடுகிறார். ஆதலால், தனித்தமிழ் என்னும் தோற்றம் 1916 ஆம் ஆண்டில் நீலாம்பிகையார் தூண்டலால் ஏற்பட்டமை என்பது, அகத்தே அமைந்து கிடந்த வித்து, முளை விட்டு வெளிப்பட்ட நிலையாம். அவ் வெளிப்பட்ட நிலையும் உடனே பற்றிப் படரவில்லை! மேலும் சில ஆண்டுகளின் பின்னரேயே சமரச சன்மார்க்க நிலையம், பொதுநிலைக் கழகமாகவும், ஞானசாகரம் அறிவுக் கடலாகவும், சுவாமி வேதாசலம் மறைமலையடிகள் ஆகவும் படிப்படியே கிளர்கின்றனவாம்! ஓர் அரிய அமைப்பு உருவாகும் நிலையும், ஓர் அரிய கண்டு பிடிப்பு உலகவர் அறிய வெளிப்படலும், அவை இயக்கமாகவும் பயனாகவும் ஆகின்ற நிலையும் பற்றிய விளக்கம், அடிகளார் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் அடங்கியுள்ளதாம்! எதிரிடைத் தூண்டல்: மேலும் ஒன்று: ஒரு நேரிடைத் தூண்டலினும் எதிரிடைத் தூண்டல் வலிமை மிக்கது என்பதும், உள்ளத்து உறுதியை வெள்ளப் பெருக்காய் வெளிப்படுத்த வல்லது என்பதும் தெளிவாம். ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டா? என்று கற்றறிந்த தமிழர் ஒருவரே வினாவி நகைத்தல், பெற்ற தாய் மொழிப் பிறவிக்கு உற்ற தகைமை ஆகாது என்பதும், அதனை உணர்ந்த அப்பிறவி பாம்பன் குருபாத அடிகள் போல் சேந்தன் செந்தமிழ் என்ன ஒரு நூலியற்றித் தமிழ் தனித்து இயங்கவல்ல தனி உயர் மொழி என்று நிலைநாட்டியிருப்பின் வழிபடத்தக்க பிறவியாய் அமைந்திருக்கும்! அப்பேறு அதற்கு வாய்க்காமை, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (குறள் 263) என்னும் வள்ளுவர் வாய் மொழிப்படி, தனித்தமிழ்த் தந்தைப் பேறு மறைமலையடிகட்கு வர இருப்பதற்கே நேரிட்ட நேர்ச்சியாம் என்க. இயக்கம் அடிகள் இயக்கம் ஆலமரமெனக் கால்பல கொண்டு அகல அகல விரியத் தனித்தமிழ் இயக்கமாய், உலகத்தமிழ்க் கழகமாய், பாவலரேறு தமிழ்க் களமாய், சேரர் கொற்றமாய், தமிழ்க்காப்புக் கழகமாய், தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாய், தனித்தமிழ் இலக்கியக் கழகமாய், தமிழ் வளர்ச்சிக் கழகமாய், மறைமலையடிகள் மன்றமாய், தமிழ்க்காவல் குழுவாய், இயற்றமிழ்ப் பயிற்றகமாய், பாவாணர் தமிழ் இயக்கமாய் ஆங்காங்கு முகிழ்த்து முனைப்பொடு கடனாற்ற ஏவியதாம். நூலகம் அடிகள் நூற்றொகை, அருமணிக் குவையன்ன நாலாயிரம் நூல்களைக் கொண்டது. எதிரது உணர்ந்து, சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்திற்கு முற்கொடையாக வழங்கியதால், நாலாயிரம் நாற்பதாயிரமாய் மேலும் மேலும் விரிந்து மறைமலையடிகள் நூலகப் பெயரால், பெருமைமிகு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த பெரியவர் சோமு அவர்கள் இல்லமே வாய்க்க உலக வளமாக்கியதாம்! அதன் வழியாகவே அடிகள் தாமே வெளியிட்ட நூல்களும், வெளியிடாமல் கழக வழி வெளிவந்த நூல்களும், அடிகள் காலத்திற்குப் பின் வெளிவந்த நூல்களும் ஆகிய முழுமைத் தொகுதிகளும் கி.பி. 1898 முதல் 1969 வரை முதற்பதிப்பாக வெளிவந்தவை. அவற்றுள் படிகள் கிட்டுதற்கு அரியவையும் உண்டு. அடிகள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப் பட்ட பேற்றால், இன்று வாய்த்த நூல்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வழங்கும் பெரு வாய்ப்பைத் தமிழ்மண் பதிப்பகம் பெற்றதாம். வெள்ளச் சேதம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பதிப்பகத்துள் புகுந்து அச்சு அடிக்கப்பட்டதும், அடிக்கப்பட இருந்ததும், கணினிப்படுத்தி வைத்த குறுவட்டுகளும், மூலநூல்களும் என வாரி அள்ளிக் கொண்டு போனமை, களத்துக்கு வந்த கதிர் மணிகள், களஞ்சியத்திற்கு வாராமல் போய, பேரழிவு ஒப்பதாம். ஆதலால், நூல்களை மீளத் தேடவும், கணினிப்படுத்தவும், குறுவட்டு ஆக்கி அச்சிடவும் என மும்மடங்குப் பணியும் பேரிழப்பும் பெருத்த அவலமும் உண்டாக்கிற்றாம். அந்நிலையில், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழியை வாய்மை மொழியாக்கிய துணிவுச் செல்வர் இளவழகனாரும் அவர் குடும்பத்தவரும் ஆவர்! முன்னறிவிப்புத் திட்டப்படி நூலுக்கு ஆர்வமாய்ப் பணம் செலுத்தியோர்க்கும் நூல் காலத்தில் கிட்டா உளைச்சல் இல்லாமல் போகாதே! அவர்களும் அமைந்து தாங்கல், இயற்கை இயங்கியல் வழியதாம். வெளியீடுகள் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மொழி இன மண்வளம் - வளர்ச்சி மீட்டெடுப்பு - என்பவற்றை முன்வைத்துத் தமிழ்ப் போராளி இளவழகனாரால் தொடங்கப்பட்டதால், பேரிழப்புக்காம் எனத் தெளிவாகத் தெரிந்தும், இசைக் கலைக்கு வாய்த்த ஒப்பற்ற களஞ்சியமாய் வாய்த்த - கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டதாம்! முன்னை வந்த முதற்பகுதி பேரிழப்பாக்கியும் அதன் பின்னைப் பகுதிகளையும் அரிதின் முயன்று வெளியிட்டது! மொழிஞாயிறு பாவாணர்; ஈழத்து அறிஞர் ந.சி. கந்தையா; வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா, உரைவேந்தர் ஔவை சு.து; நாவலர் ந.மு.வே; பண்டித வித்துவான் தி.வே. கோபாலர்; சாமி சிதம்பரனார்; மயிலை சீனி. வேங்கட சாமியார்; பேரறிஞர் க. வெள்ளை வாரணனார்; பாவலர் குழந்தையார்; பாவலர் முடியரசனார்; பாவேந்தர், தொல் பொருள் கல்வெட்டு ஆய்ஞர் சதாசிவனார், சாத்தன்குளம் இராகவன் நூல்களையும் எளியேன் நூல்களையும் முழுமை முழுமையாக வெளியிட்டது. தொல்காப்பியம்- பாட்டு - தொகை - காப்பியம் - கீழ்க்கணக்கு - தமிழ்நாட்டு வரலாறு - ஆங்கிலம் வல்ல அறிஞர் இராம நாதனார் நூல்களையும், யாழ்ப்பாண அகராதி முதலாம் அகராதித் தொகுதிகளையும் வெளியிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிதொட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளிவந்த - தமிழுக்கு ஆக்கமாம் நாட் டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை எல்லாம் - ஓரிடத்துப் பெற்று, ஒரு தனித்தமிழ் நூலகம் அமைக்கும் அளவுக்கு அச்சிட்டு வழங்கிய பெருமை இளவழகனார்க்கு உண்டு. அவரே அன்றி அவர் துணையையும் மக்களையும் உறவையும் அன்பையும் நண்பையும் ஒருங்கே இணைத்து, அறிஞர் பெருமக்கள் பலர் அரவணைப்பையும் வாய்ப்பக் கொண்டு வாழும் இயல்பு அவர்க்கு வாய்த்தலால் மட்டுமே, இவ்வாறு செயற்கரிய செய்ய வாய்த்ததாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவரும் அவர். மறைமலைய மாண்பு மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழர் வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்! புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை - 6 625006. மலைக்க வைக்கும் மறைமலையம்! பதிப்புரை மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க -பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்கள் `மொழியின் வழியாகவே மொழிபேசும் மக்கள் முன்னேற முடியும் எனக் கூறுகிறார். உலகம் முழுதும் இவ்வுண்மை உணரப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. பாவாணரை அறிவுலகம் சரியாக அடையாளம் காண்பதற்குக் காரணமானது மறைமலையடிகளார் தந்த பாராட்டு! மறைமலையடிகள் (15.7.1876 - 15.9.1950) தேவநேயப் பாவாணர் (7.2.1902 - 16.1.1981) இருவரும் தனித்தமிழியக்கத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாகப் போற்றப்படுபவர்கள். மறைமலையடிகளார் 1916இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நூற்றாண்டை எட்டியுள்ள மகிழ்வான நேரம் இது! தனித்தமிழியக்க நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், தனித் தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் `மறைமலையம் எனும் பெருந்தொகுப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வழி வெளிக்கொணரத் திட்டமிட்டோம். உலகம் முழுதும் பரவி வாழும் உணர்வு குன்றாத தமிழர்கள் தந்த ஊக்குவிப்பு, இந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் எனும் உறுதியை எனக்குத் தந்தது. தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அடிகளாரின் அரிய படைப்புகள் பலவற்றையும் தேடித்தேடி வழங்கி வழிகாட்டினர்; வலிமை யூட்டினர். மறைமலையடிகளார் 1898ஆம் ஆண்டிலிருந்து எழுதி வந்துள்ளார். அறிவுக்கடல் (ஞானசாகரம்) இதழை 1902ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்துள்ளார். அவரின் படைப்புகள் பெருவெள்ளமாய் வெளிவந்திருக்கின்றன. அச்சேறாதவை, பெயர் கூடக் கேட்டறியாதவை, பெயர் தெரிந்தும் பார்வைக்குக் கிட்டாதவை - எனப் பலவகையாய்க் கிடைத்தன அடிகளாரின் அரும்படைப்புகள்! அவற்றை `மறைமலையம் எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாக ஒருசேரப் பார்க்கும்போது, தமிழுலகம் வியப்படைவது உறுதி. மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? இப்படிக் கவலையோடு கேட்பார் பாவலரேறு பெருஞ் சித்திரனார் (10.3.1933 - 11.6.1995). அவரின் `தென்மொழி இதழ் 1.8.1959 இலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்புதான், தனித்தமிழ்த் திசை நோக்கி நூற்றுக்கணக்கானோர் நடைபோடத் தொடங்கினர். அதில் நானும் ஒருவன். பெருஞ்சித்திரனாரின் எழுத்து காட்டிய அடையாளத்தால், பாவாணர் நூல்கள் எனும் அறிவுப்புதையல் பலர் கைகளிலும் குடியேறியது. பாவாணர் நூல்கள் வலியுறுத்திப் பேசியதால், மறைமலை யடிகளாரைத் தேடிப்பயிலும் ஆர்வம் தமிழுலகில் புத்துயிர் பெற்றது. ஆரியத்தை எதிர்ப்பதிலும் சமற்கிருதத்தை விலக்கு வதிலுமே தமிழின மேம்பாடும் தமிழ்க் காப்பும் அடங்கியிருக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தமிழர் நெஞ்சங்களில் அரும்ப வைத்தது திராவிடர் இயக்கம்; மலர்ந்து விரியவைத்தது தனித்தமிழ் இயக்கம்! குமுக, அரசியல், பண்பாட்டு மலர்ச்சிக்கு இந்த ஈரியக்கங்களின் பேருழைப்புப் பயன்பட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் உணர்வு கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் தளரத் தொடங்கியது; 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் சரியத் தொடங்கியது. வடமொழி வெள்ளத்தில் தமிழ் இழுத்துச் செல்லப்பட்டு விடாமல் காப்பாற்றியோர் கம்பரும் பவணந்தியும்! பின்வந்தோருக்கு அந்தக் காப்புணர்ச்சி இல்லாமல், அயன் மொழிப் பற்றுக்கு அடிமையானதால் தமிழும் தமிழினமும் பெற்ற இழப்புகள் ஏராளம்! அயன்மொழிச் சேற்றிலிருந்து தமிழை மீட்கும் முயற்சி ஆங்கிலேயர் வருகையையொட்டிப் புத்துயிர் பெற்றது. வள்ளலார், பாம்பன் சாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சுப்பிரமணியசிவா, பரிதிமாற் கலைஞர் முதலிய பலரும் தொடக்க விதைகளாயினர். கோவை அவிநாசியில் பிறந்து விருதுநகரில் வாழ்ந்த விருதை சிவஞானயோகி 19.11.1908 ஆம் நாள் `திருவிடர் கழகம் தொடங்கித் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வேகங்கூட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினராயிருந்தவர் சுவாமி வேதாசலம் (மலைமலையடிகள்). மறைமலையடிகள் எனத் தம் பெயரைக் கொண்டு, 1916இல் அவர் தொடங்கியதே தனித்தமிழ் இயக்கம். `துறைமிகு ஆங்கிலம் மறைவட மொழியொடு தூய்தமிழ்ப் பேரறிஞர் - தனித்தமிழ் தோற்றிய ஓரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதற்கேற்ப, மறைமலை யடிகளார் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் முதலிய பன்மொழியிலும் புலமை மிக்கவர். பன்மொழிப் பேரறிஞரான மறைமலையடிகளார் தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவாக நின்றதால் எதிர்ப்புக்கும் இழப்புக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனாலும் உறுதி குன்றாமல் தமிழுக்கு ஆதரவாய் உழைக்கும் உள்ளத்தோடிருந்தார். அதனால், தமிழர் உள்ளங்களில் இன்றளவும் மாறாப் பெருமையோடு அவர் வீற்றிருக்கின்றார். வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை வையகம் பாவேந்தர் பாரதிதாசன் அவர் மாண்பினைப் பாடி மகிழ்ந்ததும், தம் `குடும்ப விளக்கு நூலினை மறைமலை யடிகளுக்குக் காணிக்கையாக்கி வழங்கியதும், அவரின் உறுதி தளராத உள்ளமும் உழைப்பும் கண்டு போற்றிய நன்றிக் கடன் என்பதில் அய்யமில்லை. சென்னையில் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ்மண் பதிப்பகப் பணிகளைத் தமிழுலகம் அறியும். வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டவல்ல தமிழறிஞர்கள் பலரின் நூல்களை முழுமுழுத் தொகுப்புகளாக வழங்கியிருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் முடிப்பினை (சாதனை)யாகப் போற்றப்படுகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் நூல்களை முழுமையான தொகுப்புகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவை காலம் முழுதும் பயன்படவல்ல கருவி நூல்கள் என்பதை அறிஞர் உலகம் அறியும்! தமது நலத்தை ஒதுக்கி வைத்து, தமிழ் நலத்தைக் காக்க வாழ்ந்த அறிஞர்களின் அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து முழுத் தொகுப்பாக வழங்குவது பெரும்பணி! அதனைத் தமிழ்மண் பதிப்பகம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொகுப்பு நூல்களின் பட்டியலைப் பின்னிணைப்பில் காண்க. தமிழுக்காக உழைக்கும் உணர்வை இளமையில் எம்மிடம் ஏற்படுத்தி யோருள் பெரும்புலவர் நக்கீரனாரும் அவர்தம் இளவல் புலவர் சித்திர வேலனாரும் குறிப்பிடத்தக்கோர்! எம் நன்றிக்குரியோர்! தனித்தமிழ் ஆர்வம், திராவிடர் இயக்க ஈடுபாடு எனும் இரு சிறகுகளால் எம்மை எழவைத்தவர் பெரும்புலவர் நக்கீரனார்! அவரை எண்ணிக் கண்பனிக்க நன்றி கூறுகிறது எம் நெஞ்சம். காலப்பழமையாலும் பராமரிப்புக் குறைவாலும் அழிய நேர்ந்த தமிழிலக்கியங்கள் அளவற்றவை! அவற்றில் ஒருபகுதியை யாவது மீட்டு நம் கைகளுக்கு வழங்கியோர் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலிய சான்றோர் பெருமக்கள்! தமிழிலக்கியப் பெருஞ்செல்வத்தை மீண்டும் மீண்டும் அச்சாக்கி, அனைவர் கைகளையும் எட்டச் செய்த பெருமை - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே.சா. நூலகம், மணிவாசகர் பதிப்பகம் முதலிய பதிப்பாளர்களுக்கு உரியது. அச்சுத்துறை அறிமுகமான பின்பே, அறிவுத்துறை அனைவருக்கும் பொதுச்சொத்தாகும் வாய்ப்பு வந்தது. எட்டாக் கனியாக ஓலைச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த இலக்கியச் செல்வங்கள், எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பணியைச் செய்த பதிப்பாசிரியர்களும், பதிப்பாளர்களும் நம் நன்றிக் குரியோர்! இரவு பகல் பாராது முதுமையைக் கருதாது உழைக்கும் மனவுரத்தை முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் பணியே எமக்கு வழங்கியது. அரசும், பல்கலைக் கழகங்களும், அறநிறுவனங்களும், சமய பீடங்களும் ,பெரும் இயக்கங்களும், பெரும் செல்வர்களும் செய்ய வேண்டிய பெருந் தமிழ்ப்பணி இது! எளியவர்களால் இயங்கும் தமிழ்மண் பதிப்பகம் பெருந்தமிழ்ப் பணிகளை இன்னல்களுக்கு இடையில் அருமுயற்சியோடு செய்து வருவது, உள்ளவுரம் ஒன்றினால்தான்! வல்லமை சேர்க்கும் வலிமையுண் டாக்கும்! வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்? காக்கும் தமிழைக் காக்கும் உணர்வைப் பாவேந்தர் பாடல் வரிகள் தந்தன. அச்சுக்கு எட்டாமலும் கைக்குக் கிட்டாமலும் இருந்த பேரறிஞர் பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கி திராவிடர் இயக்க அரசுகள் வழங்கின. அதனால், அறிவு பரவலாகும் வாய்ப்புகள் உருவாயின. `சரிவும் இழப்பும் நமக்கு வந்தாலும் தமிழுக்கு வரக்கூடாது என எண்ணி உழைக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழ் நாட்டில் வற்றாமல் வளர்ந்தபடி இருக்கின்றன. திருவிடர் கழகம் (1908) தனித்தமிழ் இயக்கம் (1916) தென்னிந்திய நலஉரிமைக் கழகம் (1916) சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943) தமிழ்ப் பேராயம் (1959) தமிழ்க்காப்புக் கழகம் (1961) தனித்தமிழ்க் கழகம் (1964) உலகத்தமிழ்க் கழகம் (1968) தமிழியக்கம் (1972) தமிழ்ச் சான்றோர் பேரவை (1998) தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும் பாவாணருமே! தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை! அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு `மறைமலையம் என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது. பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம் இது! தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது! அறிவுலகத்தால் `மறைமலையம் வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம். - கோ. இளவழகன் இதுவரை வெளியிட்டுள்ள தமிழ்மண் பதிப்பகத்தின் (நூல் தொகுப்புகள்) 1. பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 52 நூல்கள் 2. தொல்காப்பியம் - உரைகளுடன் 15 தொகுப்புகள் 3. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் - 30 நூல்கள் 4. கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி -18 தொகுப்புகள் 5. சாமிநாத சர்மா - 31 தொகுப்புகள் 6. ந.சி.க. நூல் திரட்டு - 24 தொகுப்புகள் 7. சாத்தன்குளம் இராகவன் நூற்களஞ்சியம் - 16 நூல்கள் 8. சதாசிவப் பண்டாரத்தார் - 10 நூல்கள் 9. நா.மு.வே.நாட்டார் தமிழ் உரைகள் - 24 தொகுப்புகள் 10. செவ்விலக்கியக் கருவூலம் - 15 தொகுப்புகள் 11. தேவநேயம் - 14 தொகுப்புகள் 12. திரு.வி.க. தமிழ்க்கொடை - 26 தொகுப்புகள் 13. உரைவேந்தர் தமிழ்த்தொகை - 28 தொகுப்புகள் 14. கருணாமிருத சாகரம் - 7 தொகுப்புகள் 15. பாவேந்தம் - கெட்டிஅட்டை - 25 தொகுப்புகள் 16. புலவர் குழந்தை படைப்புகள் - 16 தொகுப்புகள் 17. கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 தொகுப்புகள் 18. நாவலர் சோம சுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் - 5 தொகுப்புகள் 19. முனைவர் இராசமாணிக்கனார் நூல்கள் - 39 நூல்கள் 20. தமிழக வரலாற்று வரிசை - 12 தொகுப்புகள் 21. உவமைவழி அறநெறி விளக்கம் - 3 தொகுப்புகள் 22. முதுமொழிக் களஞ்சியம் - 5 தொகுப்புகள் 23. சாமி சிதம்பரனார் நூற்களஞ்சியம் - 22 தொகுப்புகள் 24. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 தொகுப்புகள் 25. அறிஞர் க. வெள்ளை வாரணனார் நூல் வரிசை - 21 தொகுப்புகள் 26. ஐம்பெருங் காப்பியங்கள் - 5 தொகுப்புகள் 27. பதினெண் கீழ்க்கணக்கு - 3 தொகுப்புகள் 28. நீதி நூல்கள் - 2 தொகுப்புகள் 29. பி. இராமநாதன் - 10 நூல்கள் 30. யாழ்ப்பாண அகராதிகள் - 2 தொகுப்புகள் 31. வெள்ளி விழாத் தமிழ்ப் பேரகராதிகள் - 3 தொகுப்புகள் 32. ந.சி. கந்தையா அகராதிகள் - 2 தொகுப்புகள் 33. முதுமுனைவர் இளங்குமரனார் தமிழ்வளம் - 40 தொகுப்புகள் 34. இளங்குமரனார் அகராதிகள் - 2 தொகுப்புகள் விரைவில் வெளிவர இருக்கும் அறிஞர்களின் நூல்கள் 1. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை 2. வ.சுப. மாணிக்கம் 3. பெரியாரியம் (தந்தை பெரியார்) 4. தமிழர் மருத்துவக் களஞ்சியம் 5. தமிழ் - தமிழ் அகராதி பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம் எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதி யிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகச் சேர்த்து பொருள்வழிப் பிரித்து, கால நிரலில் ஒரே வீச்சில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். மறைமலையம் தொகுப்பில் இடம்பெறாத நூல்கள் முதற்குறள் வாத நிராகரணம் (1898), துகளறு போதம் (1898), சித்தாந்த ஞானபோதம் சதமணிக் கோவை குறிப்புரை (1898), வேத சிவாகமப் பிரமாண்யம் (1900), இந்த நான்கு நூல்களும் தமிழகத்தின் பல இடங்களில் தேடியும் எங்கள் கைக்குக் கிடைக்க வில்லை. ஆதலான், மறைமலையம் தொகுப்பில் மேற்கண்ட நூல்கள் இடம் பெறவில்லை. நூலுரை அடிகளார் இயற்றிய இறுதி நூலும், அவர் இயற்கை யின்பின் ஐந்தாண்டுகள் கடந்து கழகத்தால் வெளியிடப் பட்டதுமாம் நூல் (1954) இது. புலவர் புராணம், விநோத ரச மஞ்சரி, தனிப்பாடல் என்பவற்றைக் கொண்டும் பாவேந்தர் படைத்த பில்கணியமாம் (புரட்சிக்கவி) நூலைத் தழுவியும் புனையப்பட்ட நாடக நூல். அடிகளார் பன்மாண் பாடல் திறம், புனைவு மாட்சி, உரையாடல் எழில், நகைச் சுவை நறுக்கு என்பன வெல்லாம் ஒருங்கே அறியச் செய்யும் சொல்லொணாத் துன்பியல் படைப்பு இது. இதனைக் கற்கும் எவருக்கும் அடிகளார் ஏன் தனிக் காவியப் புனைவு செய்திலர் என்னும் ஏக்கத்தை எழுப்பவல்ல எழில்மிகு பாவகைகள் தோற்றுவித்தல் ஒருதலை. நிகழ்ச்சிகள் ஐந்து, காட்சிகள் நாற்பது. நாடகமாந்தர் இருபத்து மூவர்; பக்கம் இருநூற்றைம்பது என்பவை சில குறிப்புகள். கதைக் களம் தஞ்சை, அரசன் குலோத்துங்கன், அவன் மகள் அமராவதி, கம்பர் - புகழேந்தி - ஒட்டக்கூத்தர் என்னும் முப்பெரும் புலவர்கள் அணிசெய்த அரசு. ஒட்டக் கூத்தர் முதுவர்; கம்பர் மேல் அளவற்ற பொறாமையர்; நயமாக இடையூறு செய்யும் கோணர்; புகழேந்தியார் துணையும் மகளும் உளராக, அவர் மறைந்து விட்ட காலநிலை. கம்பர் இராமாயண அரங்கேற்றத் தடைப்பாடு; பல்சமயச் சால்புவிட்டு மாலிய வழி நூல் அரங்கேற்றத்தைக் கடவுள் வாழ்த்துக் கொண்டே வல்வாதிட்டு நிறுத்தித் தில்லையிலோ, திருவரங்கத்திலோ ஓராண்டளவில் அரங்கேற்றி மீளுமாறு கம்பரை விடுத்தல். கம்பர் சோழன் மகளுக்கு ஆசானாக விளங்கியவர். அவர் வெளிச் செலவால் தக்க ஆசானாக அவர் மகன் அம்பிகாபதியை அமர்த்தல். அவன் இளமையும் எழிலும் புலமையும், அமராவதி எழிலும் இளமையும் கலை ஆர்வமும் சிக்கலாக்கி விடக் கூடாதென்று, கற்பிப்பவர் தில்லைவாணர் எனப் பெயர் மாற்றியும், பார்வையிலார் எனப் பகர்ந்தும், அமராவதி கையும் காலும் விளங்கா முடமும் அழகின்மையும் கொண்டவள் எனக் கூறியும் - திரையிட்டிருந்து பாடம் சொல்லவும் கேட்கவும் ஏற்பாடு செய்யவும் பயிற்சி தொடர்ந்தது. புறப்பாடல் பாடம் நடத்தும் போது முழுமதித் தோற்றம் பற்றிய செய்தியைச் சுட்டிக் காட்டிய அளவில் கற்பிக்கும் அம்பிகாபதிக்குப் பார்வை இல்லையேல் சுட்ட முடியாதே என ஐயுற்று விலக்கி நோக்க ஈரெழில் இளமை உளங்களும் ஒன்றாகி விடுகின்றன. தொடக்க முதல் கட்டுக் காவல் மிக்கிருந்தும் காதல் வெள்ளக் கரைகடப்பைத் தடுக்க மாட்டா தொழியப் பல்வகை உத்திகளும் உதவுகின்றன. கம்பர் அரங்கேற்றம் முடித்து வர, மீள அவரே ஆசானாம் பொறுப்புக் கொண்டும் - காதல் தொடரவே செய்தது. கம்பர் மகள் காவேரி என்பாள்; அமைச்சன் மகன் அவள்மேல் காதல் உடையான். காவேரியும் அம்பிகாபதியும் உடையாலேதான் ஆண் பெண் எனக் காணலாம் ஒப்பியல் தோற்றம்! அத்தோற்றம் காதல் உருமாற்ற உயர்துணையாய் அமைகின்றது! பலநாள் கனவு ஒருநாள் புலப்படல் உண்மைபோல் வெளிப்பட அதன் விளைவுக் கொடுமையை எண்ணிச் சூழ்ச்சியால் கம்பர், அம்பிகாபதி காவேரி, அமராபதி, ஆரும் அறியா வகையில் திட்டப்படுத்தி புல்லி ஆண்ட வேங்கடம் கடந்து ஓரங்கல் நாடு செல்லுதல்! ஓரங்கல் நாட்டரசன் பிரதாப ருத்திரன் அரவணைப்பால் வாழ, அவனே மணவினையை அம்பிகாபதி - அமராபதிக்கு முடித்து வைத்து அவன் நாட்டிலேயே வாழ வைக்க எண்ணிய போது, கூத்தரும் சோழனும் சூழ்ச்சியால் ஓலை விடுத்து அவர்களுக்குச் சோழ நாட்டிலேயே சிறப்ப மணம் செய்யவிருப்ப தாகக் காட்ட, கம்பர் முதலோர் வருதல். பேரின்பப் பொருளதாய் - சிற்றின்பம் சிறிதும் கலவாததாய் - நூறு பாடல் பாடின், அம்பிகாபதி அமரவாதி திருமணம் நிகழுமெனக் கூற அவ்வாறே அவையில்பாட, கடவுள் வாழ்த்தொடும் எண்ணி 99 ஆம் பாடல் வரவும் 100 எனக் கணக்கிட்டு அமராவதி தோற்றமுற அம்பிகாபதி, சற்றே பருத்த தனமே குலுங்கத் தரளவடம் துற்றே அசையக் குழையூச லாடத் துவர் கொள் செவ்வாய் நற்றேன் ஒழுக நடன சிங்கார நடையழகின் பொற்றேர் இருக்கத் தலையலங் காரம் புறப்பட்டதே எனச் சிற்றின்பப் பாடல் பாட - அதுவே அவன் தலை துண்டாக்க, அமராவதி ஆற்றொணா தோடி அவனொடு முடிய, காவேரியை சோழன் மகன் காவு வாங்க, சோழன் கம்பனை அம்பால் சாவடிக்க பிரதாப உருத்திரன் சோழனை வீழ்த்த பேரவல முடிவாய் முடிகின்றது. புலவர் மூவரும் ஒருகாலத்தரல்லர் என்பது வரலாறு. புனைவுகள் தனிப்பாடல்கள் கொண்டு சுவைமிகப் புனையப்பட்டது இது. அடிகளார் புனைவுத்திறம் எடுத்த நூலை விடாது படித்து முடிக்க வைப்பது. இடைஇடையே அடிகளார் அறவுரையும், சிவனியப் பற்றுமையும் பளிச்சிடு கின்றன. - இரா. இளங்குமரன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோசா முத்தையா நூலகம் - சென்னை. புலவர் கா. இளமுருகன் - புன்செய் புளியம்பட்டி (மறைமலையடிகள் மன்றம்) மறை. தாயுமானவன் - சென்னை (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: திரு. அ. மதிவாணன் (ஆங்கிலம்) திரு. க. கருப்பையா திரு. புலவர். த. ஆறுமுகம் புலவர். மு. இராசவேலு திரு. இராசுகுமார் திரு. நாக. சொக்கலிங்கம் முனைவர். க. சுப்பிரமணியன் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா செல்வி. அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: âUkâ வி. சித்திரா திருமதி மலர் திருமதி செல்வி திருமதி ஹேமலதா திரு. ஆசம் திருமதி கலைவாணி பிராசசு இந்தியா திருமதி`புகழ்ச்செல்வி கயல்விழி (Process India), நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், க. இளந்திராவிடன், வே. தனசேகரன், கு. மருது, இல. தருமராசன் தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை -1 எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை-5. அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு மற்றும் பிராசசு இந்தியா `மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நிறைந்த நன்றியும் பாராட்டும். அம்பிகாபதி அமராவதி 1964இல் பாரி நிலையம் வெளியிட்ட நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்படுகின்றது. இந்நூலைப் பற்றிய குறிப்புரை... அடிகளார் நாடகமாக எழுதிய நூல் இது. அவர் வாழ்ந்த காலத்தில் நூல்வடிவு பெறாமல் 1954 இல் கழகத்தால் வெளியிடப்பட்டது. அதற்கு ஐந்து ஆண்டுகளின் முன் (1949) அடிகளார் எழுதிய நாடகம் இது. இதுவே அடிகளார் இயற்றிய இறுதி நூல். புலவர் புராணம், புலவர் வரலாறு ஆகியவற்றில் சொல்லப்படும் கம்பர் மகன் அம்பிகாபதிக்கும், அமராவதிக்கும் ஏற்பட்ட காதல் அதன் துன்பியல் முடிவு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வரைந்த துன்பியல் நாடகம் இது. ஐந்து நிகழ்வுகளும் 30 காட்சிகளுமாக நாடகம் இயல்கின்றது. வடமொழிப் பில்கணீயக்கவியும், அவன் மாணவியும், ஒளியிழந்தவனாகவும் நோயுடையளாகவும் மறைத்துக் காட்டப் பட்டதும், வெண்மதி பற்றி அவன் பாடியமையால் உண்மை வெளிப்பட்டு அவர்கள் காதலர் ஆகியதும் போன்ற அமைப்பை இந்நாடகத்தில் மேற் கொள்கிறார். ஆங்கில நாடக உத்திகளையும் அடிகள் மேற் கொண்டு நாடகத்தை இயக்குகிறார். இறுதிக்காட்சி முழுவதும் அவலமாய் உணர்வை உருக்குகின்றது. - இரா. இளங்குமரன் இந்திய இலக்கியச் சிற்பிகள் அம்பிகாபதி அமராவதி நாடக மாந்தர் அம்பிகாபதி : தலைமகன் அமராவதி : தலைவி குலோத்துங்கன் (ஒ) : சோழ மன்னன், அமராவதியின் தந்தை ஒட்டக்கூத்தர் : புலவரவையின் தலைவர் கம்பர் : புலவரவையில் ஒரு புலவர், அம்பிகாபதியின் தந்தை கடம்பன் : மன்னனுக்கு மெய்க்காப்பாளன் அங்கயற்கண்ணி : சோழன் மனைவி, அமராவதியின் தாய் தத்தை : கன்னிமாட வாயில் காப்போள் குலசேகர பாண்டியன் : பாண்டி மன்னன் மகன், அங்கயற்கண்ணியின் தம்பி துத்தி : சோழ மன்னனுக்குரிய கோமாளி நம்பிப்பிள்ளை : சோழற்கு முதல் அமைச்சர் தில்லைவாணர் : ஆசிரியராய் வந்த அம்பிகாபதியின் மறைவுப் பெயர் நீலம் : அமராவதியின் உயிர்த்தோழி நயினார் பிள்ளை : அமைச்சர் நம்பிப் பிள்ளையின் மகன், அம்பிகாபதியின் நண்பன் விக்கிரமன் : அமராவதியின் தமையன் காவேரி : அம்பிகாபதியின் தங்கை பச்சை : காவேரியின் உயிர்த்தோழி கருப்பண்ணன் : அரண்மனைத் தோட்டக்காரன் வெள்ளைச்சி : தோட்டக்காரன் மனைவி தங்கம் : புகழேந்திப் புலவரின் மகள் அரங்கம்மாள் : புகழேந்திப் புலவரின் மனைவி பிருதாபருத்ரன் : ஓரங்கல் வேந்தன் மாதவன் : பிரதாபருத்ரனுக்குக் காவற்காரன் பொருளடக்கம் பக்கம் முதல் நிகழச்சி:முதற் காட்சி 10 இரண்டாங் காட்சி 17 இரண்டாம் நிகழ்ச்சி :முதற் காட்சி 28 இரண்டாங் காட்சி 46 மூன்றாம் நிகழ்ச்சி :முதற் காட்சி 54 இரண்டாங் காட்சி 56 மூன்றாங் காட்சி 66 நான்காம் காட்சி 71 ஐந்தாங் காட்சி 78 ஆறாம் காட்சி 81 ஏழாங் காட்சி 88 எட்டாங் காட்சி 94 ஒன்பதாங் காட்சி 97 பத்தாங் காட்சி 109 நான்காம் நிகழ்ச்சி:முதற் காட்சி 119 இரண்டாங் காட்சி 121 மூன்றாங் காட்சி 126 நான்காம் காட்சி 128 ஐந்தாங் காட்சி 133 ஆறாம் காட்சி 140 ஏழாங் காட்சி 143 எட்டாங் காட்சி 152 ஒன்பதாங் காட்சி 160 பத்தாங் காட்சி 164 பதினோராங் காட்சி 171 ஐந்தாம் நிகழ்ச்சி :முதற் காட்சி 180 இரண்டாங்காட்சி 184 மூன்றாங் காட்சி 191 நான்காம் காட்சி 199 ஐந்தாங் காட்சி 204 ஆறாம் காட்சி 209 ஏழாங் காட்சி 214 எட்டாங் காட்சி 225 ஒன்பதாங் காட்சி 228 பத்தாங் காட்சி 231 பதினோராங் காட்சி 236 பன்னிரண்டாங் காட்சி 239 பதின்மூன்றாங் காட்சி 242 பதினான்காம் காட்சி 246 பதினைந்தாங் காட்சி 251 பின்னிணைப்பு 257 ஓம் திருச்சிற்றம்பலம் அம்பிகாபதி அமராவதி கடவுள் வணக்கம் ஒளியுருவாய் ஓவாதே விளங்கியொளிர் ஒளிநடுவே வெளிமருவி அருள்வடிவாம் அம்மையுடன் விரவுதலிற் றெளிமருவு செவ்வொளியுந் திகழ் நீலச்சீரொளியுங் களிபெருகக் கலந்தடியேன் கண்ணுமனமுங் களிக்க அளிபெருகி ஆடல்புரி அம்பலத்தாய் கேளினி! ஒளியுருவில் ஒலியுருவு தோற்றுவித்த தொன்னாளில் தெளிதமிழைப் பிறப்பித்த நின்செயலைத் தேற்றுதற்கோ வளியொலியும் வரிவடிவும் ஓவென்று வழங்கினதே! ஓவென்ற அவ்வழக்கு ஒலிதமிழ்கே யுரியதுவாய்ப் பாவெந்த மொழிக்கண்ணும் பயிலாத பான்மையினாற் சாவெந்த மொழியும்போல் தமிழ்சாவா தருளினையே! நாளுலவா வாழ்வன்றி நாளுலந்து மாய்ந்தவரும் மீளுமுயிர் பெறவழங்கும் மென்றமிழின் மெய்ம்மையினை ஆளுடைய பிள்ளையார் அருட்செயலின் அளித்தனையே! நெருப்புருவும் நீருருவும் நிறைந்தநின தருளுருவில் இருப்புடைய கருத்துடையோர் எரிநீரில் அழியாமை திருப்பதிக நாவரையர் செழுந்தமிழிற் றெரித்தனையே! தென்றமிழாம் அமிழ்தூறத் தெளிமேனி வாய்ந்தவர்கள் பொன்றலிலா வடிவுடன்நின் பொன்னுலகு புகுவதனை வன்றொண்டர் வரஅழைத்த வாய்மையினால் வகுத்தனையே! அணிமொழியாந் தமிழொலியில் ஆர்ந்துருகி யவர்மேனி பணியொலியைப் பயந்தநின தருளொளியிற் பாய்வதனை மணிமொழியார் நினதொளியில் மறைந்ததனால் வயக்கினையே என வாங்குச் செந்தமிழ் மொழிநின் சீரிய ஒளியில் முந்துறத் தோன்றிய முதன்மைத் தாகலின் என்றும் நிலைஇய இளமைச் செவ்வியில் தன்னைப் பயிலுந் தகைமை யாளர்க்கு நன்னர் இளமையும் முன்னுபன் னலனுங் குறையற வழங்குங் கொள்கையிற் சிறந்தன்று: இறைவநின் னொளியின் இயக்கமே கூத்தும் அவ்வொளிப் பிறக்கும் இசையே பாட்டும் எனப்படு மாகலின் வனப்புற விரண்டுஞ் சேர்ந்தொருங்கு பயிலுஞ் சிறப்பிற் றென்ப நாடகத் தழிழென நவிற்று மதுவே; அதுதான் பண்டை முதுதமிழ் வழக்கிற் பொதுவுற மாந்தர் புகுநிலை யெல்லாம் அகத்திணை மேல்வைத் தறைவ தல்லது புறத்திணை மருங்கிற் பொருந்த வைத்துச் சிறப்புடைச் சிலர்திறஞ் செப்பியதின்றே; அதனாற் கம்பன் பயந்த அம்பிகா பதியுஞ் செம்பியன் புதல்வி அமரா வதியும் ஆராக் காதலிற் பேராது மரீஇய காத லொழுக்கம் மேதகு நின்னொளி விளக்கத் தெழுந்த எழிலின் விளைவாய், ஒளிவளர் ஒலியாந் தெளிதமி ழிசையால் ஈருயிர் ஓருயி ராகப் பெற்ற இன்ப நிலையின் இறுதிப் படியாய் மன்பதை யுலகின் மன்னுவ தோராது, மன்னா மன்னர் நிலையிற் செருக்கிச் சோழன் இழைத்த பாழுஞ் செயலால் மற்றவர் அற்றைச் சிற்றுடல் நீப்பினுங் காதலிற் கழுமிய ஏதமில் லாவருயிர் ஒளிவடி வாயும் ஒலியுரு வாயும் விளிவில வாகிக் களிகிள ருளமொடு நின்னரு ளின்பத்து மன்னிய நிகழ்ச்சியைப் புறத்திணைப் பொருளிற் பொருந்த வைத்து நாடகத் தமிழ்நூல் நன்கனம் வகுக்கஎன் நாவினும் உணர்வினும் நலக்க இயங்கி நன்றருள் புரித்திடல் வேண்டும் மன்றி லாடும் மதிமுடி யோயே! முதல் நிகழச்சி: முதற் காட்சி களம் : தஞ்சையிற் சோழன் அரண்மனை; நேரம் : மாலை சோழன் : ஏ, கடம்பா! கூத்தரிடம் உடனே சென்று யான் நிலாமுற்றத்தே இருக்கின்றேன் என்றும், இப்போதே அவர் தனியே வந்து என்னைக் காண வேண்டும் என்றுந் தெரிவித்து அவரைக் கையோ டழைத்துவா! கடம்பன் : அப்படியே செய்கின்றேன் வேந்தே! (வணங்கிப் போய்விடுகின்றான்) சோழன் மனைவி: பெரும! அரசியல் முயற்சிகளையுங் கலை நூலாராய்ச்சிகளையும் விட்டு நாம் ஓய்ந்து மகிழ்ந்திருக்கும் இந்நேரத்திற், புலவர் பெருமான் கூத்தரை இவ்வளவு விரைவாக இங்கே அழைக்க வேண்டுவதேனோ அறிகிலேன். சோழன் : கண்மணி, அங்கயற்கண்ணி! நம் புலவர் குழுவில் ஒருமணி விளக்கம் போல் திகழா நின்ற கம்பர் வடமொழி யிலுள்ள வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்த்து ஒரு பெரும்காப்பியமாகப் பாடி இருக்கின்றார். நம் அருமைத் தோழரும் நின்பாட்டனும் ஆன சடையப்ப பிள்ளை அதனை நமது புலவர் பேரவையில் அரங்கேற்ற வேண்டுமென வேண்டிக் கேட்கின்றார். அதைப் பற்றிக் கூத்தருடன் தனியே கலந்து பேச வேண்டுவது இன்றியமையாததாயிருக்கின்றது. சோழன் மனைவி : என்ன! வடநாட்டரசனான இராமனை ஒரு தெய்வமாக்கிப் பாடிய இராமாயணத்தையா, சிவ பெருமானை யன்றி வேறெதனையும் வணங்குவதில்லா நாம் நமது அவையிற் படிக்கக் கேட்டுச் சிறப்பிப்பது? சோழன் : கண்மணி, அங்ஙனம் அன்று; நமது அரசாட்சியின் கீழ்ச், சைவர் வைணவர் பௌத்தர் யவனர் துருக்கர் முதலான பற்பல சமயத்தவரும் உயிர்வாழ்கின்றனர். நமது கொள்கை சைவசமயமாயிருப்பினும், யான் அரசன் என்ற முறையில் எல்லாச் சமயத்தவர்க்கும் பொதுவாயிருந்து, அவ்வவருந் தத்தஞ் சமய வாழ்க்கையினை மற்றையோர்க்குத் தீது பயவா வகையில் நன்கு நடாத்திக்கொண்டு வாழத் துணைசெய்ய வேண்டும். ஈது எனது பெருங் கடமை யாயிருக்கின்றது. நமது புலவர் பேர7வயிற் பல மதத்திற் குரியவர்களும் இருக்கின்றனர். அதனால், அவ்வம் மதத்தினர் இயற்றிய நூல்களையும் படிக்கக் கேட்டு, அவை குறைபாடுகள் உள்ளனவாயின் அக்குறைகளைக் களைந்து திருத்தியுங், குறைபாடுகள் இல்லன வாயின் அந் நூல்களைப் பாராட்டியும் அவ்வவர் வரிசைக்குத் தகப் பரிசளித்து வருகின்றேன். ஆகையாற், கம்பரது இராமாயணத்தையும் அரங்கேற்றிக் கேட்டல் நமது அரசியல் முறைக்கு ஒத்ததே யாகும். சோழன் மனைவி : பெரும! அது நுங்கள் அரசியல் முறைக்குப் பொருத்தந்தான். ஆனாலும், எல்லா மக்கட்கும் பொதுவான கொள்கைகளைத் தொடுத்துப் புலவர்கள் இயற்றும் நூல்களை மட்டும் நூங்கள் பேரவையில் அரங்கேற்று விப்பதும், அவ்வவர் தத்தஞ் சமயப் பொருள் கோத்து ஆக்கும் நூல்களை அவ்வச் சமயத்தார் கூடுஞ் சமய மன்றங்களில்மட்டும் அரங்கேற்றுவிப்பதும் நல்ல முறை ஆகாவோ? சோழன் : நல்லாய்! நீ சொல்வது மிகவும் பொருத்தந்தான். நுங்கள் பாண்டிய அரசவையில் நடைபெறும் முறையினையே நீ நுவல்கின்றனை போலும்! சோழன் மனைவி : ஆம், பெருமானே! சமய நூற் கொள்கைகள் ஒன்றோடொன்று நிரம்பவும் மாறுபட்டிருக் கின்றன; அக்கொள்கைகள் உள்ள நூல்களை என் தந்தையார் தமது புலவர் பேரவையில் ஒரோவொருகால் அரங்கேற்றுவிக்க இடங்கொடுத்ததிற் புலவர்களுக்குள் உள்ளக்கொதிப்புஞ் சீற்றமும் மிகுந்தன; அது கண்ட பிறகு சமய நூல்களைப் பொதுப் பேரவையில் அரங்கேற்ற விடுவதில்லை; அவைகளை அவ்வச் சமயிகள் குழுவிலேயே அரங்கேற்ற ஒழுங்கு செய்தனர். சோழன் : நல்லது. நாமும் அங்ஙனமே செய்யலாமா என்று கேட்டுத் தெளியக் கூத்தரது வருகை உதவி செய்யுமன்றோ? (கடம்பன் கூத்தருடன் வருகிறான்) அரசனும் அரசியும் : (இருக்கையை விட்டெழுந்து) புலவர் பெருமானுக்கு வணக்கம். அரசன் : ஓய்வு நேரத்திற் றங்களை இங்கு வருவித்த பிழையைப் பொறுத்தருளல் வேண்டும்; அமருங்கள். கூத்தர் : நீங்கள் இருவீரும் தேனும் பாலும் போற் பிரிவின்றி நீடு இனிது வாழ்க! குழந்தாய் குலோத்துங்க, எந்நேரமாயிருந்தாலும் உன்னையும் பேர்த்தியையுங் காண்பதில் யான் மிகுந்த மகிழ்ச்சியுடையேன். இருவீரும் இருக்கையில் அமருங்கள். அரசன் : என் மூதாதைக்குத் தாங்கள் ஆசிரியருந் தெய்வமுமாய் இருந்தீர்கள். எனக்கோ தாங்கள் முதுமையினால் ஆசிரியராய் இல்லாவிடினும், யான் வழிபடுந் தெய்வ மாகவே யிருக்கின்றீர்கள். ஆகையாற், புலவர் குழுவில் நிகழும் ஏதோரு நிகழ்ச்சிக்கும் அரசியலிற் றோன்றுஞ் சிக்கலான எந்த நிகழ்ச்சிக்குந் தங்களையுந் தங்கள் சூழ்ச்சியை யுமே துணை கொண்டு நடந்து வருகின்றேன். கூத்தர் : குழந்தாய், அஃதுண்மையே. இப்போதென்னை வருவித்தது எதற்காக? தெரிவி. அரசன் : நமது புலவர் பேரவையிற் பாவலர் மணியாய் விளங்குங் கம்பர் வான்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்த்துப் பெருங்காப்பியமாய்ப் பாடி இருப்பது தாங்கள் அறிந்தது தானே? கூத்தர் : ஆம். அவர் அதனை நமது புலவர் பேரவையில் அரங்கேற்ற விரும்புகின்றார். நம் தமையனாரான சடையப்ப வள்ளலும் அதனை அங்ஙனமே செய்விக்க விரும்புகின்றார். அரசன் : அவ்வாறு செய்யலாமா என்பதைப்பற்றித் தங்களிடம் கலந்து பேசத்தான் தங்களை இங்கு இவ்வளவு விரைந்து வருவித்தேன். கூத்தர் : நல்லது. அதைக் குறித்து நம்மருமைக் குழந்தை அங்கயற் கண்ணியின் கருத்தென்ன? அரசன் : நாமோ சைவ சமயத்திற் குரியவர்கள், கடவுளுக்குப் பிறப்பு இறப்புச் சொல்வதை மாணிக்க வாசகர் முதலான நம் சமயாசிரியரோ சிறிதும் ஒப்பாதவர்கள். அங்ஙன மிருக்க, இராமன் என்னும் ஓர் அரசனைத் தெய்வமாக்கிப் பாடிய இராமாயணத்தை நமது பேரவையில் ஏற்றிச் சிறப்பிப்பது தகாதென்று அங்கயற்கண்ணி கருதுகின்றாள். மேலும், வைணவ மதத்திற்குரிய ஒரு நூலைப் பன்மதப் புலவருங் குழுமிய நமது பேரவையில் ஏற்றிக் கேட்பதும் அவர்க் கெல்லாம் வருத்தத் தினைத் தருமெனவுஞ் சொல்கின்றாள். (சொல்லித் தன் மனைவியைப் பார்க்கின்றான்) அரசி : ஆம், பாட்டா! கம்பர் தாம் பாடிய இராமாயணக் கதையை அதற்குரிய வைணவப் புலவர் குழுவில் அரங்கேற்றுதலே முறையாகும். தங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். கூத்தர் : குழந்தை அங்கயற்கண்ணி கூறுவது முழுதும் ஒப்பத் தகுந்ததே. முன்னமே கண்ணன் கதை நமது தமிழ்நாட்டிற் குடிபுகுந்து நந்தமிழ் மக்களின் முழுமுதற் கடவுள் நம்பிக்கையினை மாற்றிக் கெடுத்துவிட்டது; இப்போது கம்பர் கொணர்ந்திருக்கும் இவ்விராமன் கதையோ அந்நம்பிக்கை யினை இன்னும் பாழாக்கிவிடுமென்பதிற் சிறிதும் ஐயமில்லை. ஆகையால், அதனை நமது புலவர் பேரவையில் ஏற்றிப் பாராட்டுவது நமது நாட்டுக்குப் பெருந் தீங்கினையே விளைவிப்பதாமன்றி மற்றென்னை? அரசன் : அங்ஙனமாயின், அதனை நமது பேரவையில் ஏறவிடாமற் செய் வதற்கு வழி தெரிவித்தல் வேண்டும். கம்பர் முன்னே எனக்கு ஆசிரியராயிருந்தது மல்லாமல், இப்போதென் அருமை மகள் அமராவதிக்கும் ஆசிரியராயிருந்து தமிழ் கற்பித்துவரல் தாங்கள் அறிந்ததுதானே கூத்தர் : ஆம், ஆசிரியன் மனம் உவக்க அவன் விரும்புவன செய்தல் அவன்றன் மாணாக்கர்க்குரிய கடமையேயாம். ஆயினும், நின் முன்னோரின் சிவத்தொண்டும் வழி வழிச் சிறக்க வேண்டுமன்றோ? தன் அமைச்சர் தெய்வச் சேக்கிழாரைக் கொண்டு திருத்தொண்டர் புராணம் பாடுவித்த அநபாய சோழனாம் நின் மூதாதையின் கீர்த்தி இவ்வுலகெலாம் பரவி என்றும் மங்காது விளங்குவ தொன்றன்றோ? சிவ பிரானைக் குறைத்துக் குறும்பாய்ப் பேசிய இராமாநுசரை நின் பாட்டன் குலோத்துங்கன் இச்சோழ நாட்டெல்லையில் இராதபடி செய்ததுந், தில்லை முன்றிலிருந்த திருமால் கோயிலை அவன் பெயர்த்தழித்ததும் அறியாதார் யார்? அத்தகைய சிவத்தொண்டன் கால்வழியிற் பிறந்த நீ அவற்குச் செய்ய வேண்டிய கடமையினையும் நினைத்துப்பார்! அரசன் : உண்மை, உண்மை. புலவர் பிரானே, இப் போதியான் இரு தலைக்கொள்ளி எறும்பாயினேன். ஒரு பக்கம் என் ஆசிரியரது உள்ளத்தை உவப்பிக்க வேண்டிய கடமை; மற்றொரு பக்கம் என் முன்னோரின் சிவத் தொண்டினைத் தொடர்ந்து நடத்தவேண்டிய கடமை. இவ்விரண்டிலும் யான் வழுவுதல் ஆகாது. இதற்கொருவழி தாங்களே திறப்பித்தல் வேண்டும். கூத்தர் : நல்லது, நாளைக்காலையில் நின் அமைச்சர் நம்பிப் பிள்ளையுடன் சூழ்ந்து, செய்ய வேண்டுவதின்ன தென்று தெரிவிக்கின்றேன்; அது பற்றிக் கவலை வேண்டாம்; நீடு வாழ்மின்! (இருவரும் வணங்க எழுந்துபோய் விடுகின்றார்) அரசன் : (தன் மனைவியை நோக்கி) அங்கயற் கண்ணி, இப்போது நமக்குக் கவலை ஒழிந்தது. கம்பர் தமது இராமா யணத்தை நமது புலவர் பேரவையில் அரங்கேற்ற விடார் கூத்தர். அரசி : ஆம், பெரும! கூத்தர் கல்வியிலுஞ் சிவநேயத் திலும் பிறநற்குணங்களிலுஞ் சிறந்தவரேயாயினும் அவர் நந்தமிழ்ப் புலவர்கள்பால் அழுக்காறு மிக உடையர்; மேலுந் தாம் இளமையாய் இருந்த காலத்தில் தமக்காகாத புலவர்களைக் காளிக்கு வெட்டிப்பலியிட்டாரென்பதை யான் கேட்டது முதல் அவரைக்கண்டாலும் என்னுள்ளம் நடுங்குகின்றது; அத்தகையவர் புலமையிற் சிறந்த கம்பர் பால் மன எரிச்சலின்றி இருப்பரா? கம்பர் நமது புலவர் பேரவையில் இராமாயணத்தை அரங்கேற்றக் கூத்தர் விடாரென்பது தீர்மானந்தான். அரசன் : அற்றேல் உனக்கும் எனக்கும் இருந்த ஒரு பெருங்கவலை தீர்ந்ததன்றோ? ஆனாலுங், கம்பர் மனம் புழுங்குமே என்பதனை நினைக்க நினைக்க எனக்கு ஒரு பால் வருத்தமும் உண்டாகின்றது. அரசி : அதற்கு நாம் என்செய்வது! கம்பர் நல்ல புலவர்தாம். காளிகோயிற் குருக்களாயிருந்து, அம்மைக்குஞ் சிவபெருமானுக்குந் தொண்டுசெய்து, தாம் அரிதிற் பெற்ற மகனுக்கும் அம்பிகாபதி எனப் பெயர் வைத்துச் சைவ வுணர்ச்சி மிகுந்தவாயிருந்தும், அவர் இராமன் கதையைப் பாடியது ஓர் இழுக்கன்றோ? அரசன் : கம்பர் அது பாடியதன் கருத்து யாதோ! ஒருகால் இவ்வாறிருக்கலாம்; என் பாட்டனார் விக்கிரம சோழர் சிவத்தொண்டிற் சிறந்தவரெனும், வைணவ மதத்திலும் ஈடுபட்டார். அவருக்கு மிக நெருங்கிய தோழரான நம் சடையப்ப பிள்ளையும் அவரது சேர்க்கை யாற்றாமும் வைணவத்தில் மிக ஈடுபட்டுச் சரராமன் என்று ஒரு பட்டப்பெயருந்தாமே சூடிக்கொண்டார். அவரது வேண்டுகோளுக்கு இசைந்தே அவராற் பெரிதும் பேணப் படுங்கம்பரும் இராமாயணம் பாடினார் என்று எண்ணுகின்றேன். அரசி : அது மெய்யாயிருக்கலாம். நம் தமிழ்ப் புலவர்களிற் பெரும்பாலார் தமக்குப் பொருளுதவி செய்வார் எவராயிருப்பினும் அவரை வரைகடந்து உயர்த்திப் பாடிப் புகழ்ந்து விடுகின்றனர்; அவர் விரும்பியபடி யெல்லாந் தமது பெருமையுங் கருதாது செய்கின்றனர்; மெய்யான தமது சைவ சமயக் கொள்கையினையும் மெல்ல நழுவவிடுகின்றனர்! தம்போன்ற புலவர்க்குப் பிறர் பொருளுதவி செய்யக் கண்டாலும் வயிறெரிந்துவிடுகின்றனர்! திரு வள்ளுவரைப் போல மானங்காத்தொழுகுவார் அரியராய் இருக்கின்றனரே! அரசன் : ஆமாம், கம்பரும் இக்குற்றங்களுக்கு ஆளாகாதவர் அல்லர். என் முன்னோர் தந்தை வாணியன்தாதன் என்னும் பெரும் புலவர்க்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்புச் செய்தபோது, கம்பர் அது கண்டு மனம்பொறாது அப் புலவர்மேல் வசை பாட, அப்புலவருங் கம்பர்மேற் சீற்றங்கொண்டு வசை பாடினர். இது புலவர்க்குள் இயற்கையாய்விட்டது! பிறரைத் திருத்தவல்ல கலைவாணரே தாந்திருந்தாராயின் அவரைத் திருத்தவல்லார் யார்! அது நிற்க, நம் அருந்தவப் புதல்வி அமராவதியை யான் இரண்டு மூன்று நாட்களாய்ப் பார்க்கவில்லை. கன்னி மாடத்திற்குச் சென்று அவளைப் பார்ப்போம் வா. (இருவரும் போகின்றனர்) முதல் நிகழ்ச்சி : இரண்டாங் காட்சி களம் : அரண்மனையிற் கன்னி மாடம். நேரம் : அதுவே. அரசனும் அரசியும்: (வாயில் காப்போளை நோக்கி) ஏடி தத்தே! நாங்கள் வருவதை முன்னோடிச் சென்று அமராவதிக்குத் தெரிவி. (அவள் இருவரையும் வணங்கி விரைகின்றாள்) (அரசனும் அரசியுங் கன்னி மாடத்தினுட் செல்ல அமராவதி எதிரே வந்து) அமராவதி : அம்மா அப்பாவுக்கு வணக்கம். இருவரும் : அம்பலத்தான் அருளாற், குழந்தாய் நீ எல்லா நலன்களும் நன்கு பெற்று நீடு இனிது வாழ்க! (இருவரும் புதல்வியுடன் அமர்கின்றனர்) அரசன் : (புன்சிரிப்புடன்) குழந்தாய், நீ நின் அன்னை யிடத்துத் தான் மிக்க அன்புடையை. எங்களை வணங்கிய போது நீ முதலில் நின் அன்னையைத்தானே குறிப்பிட்டாய். அமராவதி : ஆம், அப்பா. ஆறறிவுடைய மக்கனினுந் தாழ்ந்த ஆன்கன்றும் அம்மா என்று தாயைத்தானே அழைக்கின்றது. மக்களின் குழந்தைகளும் முதற்கண் அம்மா என்றுதானே அழைக்கின்றன. பிள்ளைமைப் பருவ முதல் இயற்கையாய் உண்டான அப்பழக்கம் முதற்கண் அம்மா என்று இப்போதும் என்னை அழைக்கச் செய்தது. அதனால் யான் உங்கள்பாற் குறைந்த அன்புடையேனென்று கூறலாகுமோ? அரசன் : (மகளின் நெற்றிமேல் முத்தமிட்டு) அருமைச் செல்வி, நின் அறிவு மொழியை மெச்சினேன். நாங்கள் வரும்போது யாழொலி கேட்டது: நீ யாழ்ப்பயிற்சி செய்துகொண்டிருந்தனை போலும்! அமராவதி : ஆம், அப்பா, யான் ஆசிரியர் கம்பர்பாற் சிலப்பதிகாரம் பாடங் கேட்டு வருவதுதான் உங்கட்குத் தெரியுமே. அக்காப்பியத்தின் இடையிடையே அமைக்கப் பட்டிருக்கும் இனிய வரிப்பாட்டுகளை யாழிலிட்டுப் பாடி இசைப்பயிற்சி செய்து கொண்டிருந்தேன். அரசன் : கண்மணி, நீ இயற்றமிழோடு இசைத்தமிழ் நாடகத் தமிழ்களுங் கருத்தாய்ப் பயின்று வருவதுதான் என்னுள்ளத்திற்குப் பெருங் களிப்பினைத் தருகின்றது. அரசி : கல்வி விளக்கே, உன் தந்தையார்க்கு மட்டுமன்று, எனக்கும் நின் முத்தமிழ்ப் பயிற்சி எவ்வளவோ பேருவகையினைப் பயக்கின்றது! பார்! நின் தந்தையின் முன்னோரான கரிகாற் சோழ வேந்தரின் மகள் ஆதிமந்தி என்னுங் கற்பரசி முத்தமிழ்ப் புலமை முழுதும் வாய்ந்து திகழ்ந்தமை அகநானூற்றில் காணப்படும் அவருடைய பாக்களால் நன்கறிகின்றனம் அல்லமோ? அங்ஙனமே நம் சேர சோழ பாண்டிய மரபில் வந்த பெண்மணிகளெல்லாரும் முத்தமிழ்ப் புலமையில் மிகச்சிறந்தே விளங்கினர். அரசன் : நல்லது, சிலப்பதிகாரத்தில் இப்போது நீ பயிலும் பகுதியிலிருந்து சில வரிப்பாடல்களை எடுத்து யாழில் இசைத்துப் பாடு. அமராவதி : அங்ஙனமே செய்கின்றேன். அப்பா (யாழைக் கையிலெடுத்து வணங்கி அதனை இயக்கிப் பாடுகின்றாள்) காதலற் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும் ஊதுலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சன்றே ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சாயின் ஏதிலார் சொன்ன தெவன்வாழி யோதோழீஇ நண்பகற் போதே நடுங்குநோய் கைம்மிகும் அன்பனைக் காணா தலவுமென் நெஞ்சன்றே அன்பனைக் காணா தலவுமென் நெஞ்சாயின் மன்பதை சொன்ன தெவன்வாழி யோதோழீஇ தஞ்சமோ தோழீ தலைவன் வரக்காணேன் வஞ்சமோ உண்டு மயங்குமென் நெஞ்சன்றே வஞ்சமோ உண்டு மங்குமென் நெஞ்சாயின் எஞ்சலார் சொன்ன தெவன் வாழி யோதோழீஇ (அமராவதி கண்ணீர் சிந்தியபடியாய்ப் பாட அரசியுங் கண்கலுழ்கின்றாள்) அரசன் : (இருவரையும் நோக்கி) ஆ! கண்ணகி ஆற்றாது பாடிய இவ்விரங்கற் பாக்கள் நுங்களிருவரையும் அழச் செய்துவிட்டன! அரசி : ஆம், பெரும! அமராவதி பாடியது கண்ணகியே நேரிருந்து ஆற்றாது பாடியதைப் போலிருந்தது. கணவன் கொலையுண்ட செய்தி தெரியாதிருக்கையிலேயே அவர்க்கு ஏதோ தீங்கு நேர்ந்ததென்று நெஞ்சம் ஐயுற்று இங்ஙனம் அழுதனளாயின் அவன் இறந்த செய்தி கேட்ட பின் அவள் எவ்வளவு துடிதுடித்திருப்பாளோ! ஐயோ! கண்ணகி கணவன் மேல் வைத்த காதலன்பு அளவிடற் பாலதாயில்லையே! அரசன் : இவ்வரிப் பாட்டுகளை இயற்றிய இளங்கோ வடிகள் இவை தம்மை எத்துணைத் திறமையாகப் பாடியிருக்கின்றார். அரசி : ஆம், பெரும! கண்ணகியின் காதலுயிர் துடிதுடித்த நிலையில் இளங்கோவடிகள் தாமுமிருந்து பாடின மையாலன்றோ அவை அவ்வளவு உருக்கம் வாய்ந்தனவாயிருக்கின்றன! அம்மா, அமராவதி, கணவன் இறந்த செய்தி கேட்டபின் கண்ணகி துயருற்ற துயரப் பாடல்களையும் பாடு. (அமராவதி மறுபடியும் யாழை இயக்கிப் பாடுகின்றாள்) இன்புறு தங்கணவர் இடரெரி யகம் மூழ்கத் துன்புறு வனநோற்றுத் துயருறு மகளிரைப்போல் மன்பதை யலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப அன்பனை இழந்தேன்யான் அவலங்கொண்டழிவனோ அரசன் : (நெஞ்சழிந்து) அம்மா! துயர் மிகுந்த இப்பாட்டுப் போதும், நிறுத்திவிடு. அரசி : ஆற்றாமையிலும் ஓர் இன்பம் இருக்கின்றது. பெரும! முதன்மையாய்க் காதலன்பிற் பிணிப்புண்டவர்பட்ட துன்பங்களைக் கண்டுங் கேட்டும் நாம் அழும் போதும் ஓர் இன்பத்தை அடைகின்றோம்; அல்லாக்கால் அந்நிகழ்ச்சிகளைக் காண்பதிலுங் கேட்பதிலும் நமக்கு விருப்பம் உண்டாகாதன்றோ? (அரசனை நோக்கி) பெருமான் கருத்து யாதோ? அரசன் : அது மெய்யே, என்றாலுங், கணவனும் மனைவியுமாய் வாழ்பவர் தம்முள் அன்புடையராயினும் இலராயினும் ஒருவரையொருவர் இழக்க நேருங்கால் துயருற்றுப் புலம்புவது இயற்கைதானே! அதைக் காணும் பிறரும் அந்நேரத்தில் ஆற்றாராய்க் கண்கலுழ்தலும் இயற்கைதானே! அங்கயற்கண்ணி! அதைச் சிறப்பித்துப் பேசுவதில் என்ன ஏற்றம் இருக்கிறது? அரசி : அங்ஙனமன்று பெருமானே! காதலன்புடையார் தம் பிரிவில் உண்டாகும் ஆற்றாமை அவருயிர் உடம்பில் தாங்கமாட்டாத ஓர் ஏக்கத்தினை உண்டாக்கி விடுகின்றது. அதனால் அவருள் ஒருவர் மாய்ந்தக்கால் மற்றவரும் ஏங்கி உயிர் துறந்துவிடுகின்றனர். வேறு வலிய காரணத்தால் உயிர் பிழைத்திருப்பினும் நடைப்பிணமாகவோ, இவ்வுலகியலிற் பற்றற்று இறைவன்பால் உருகி ஒடுங்கியபடியாகவோ வாணாட் கழிக்கின்றனர். காதலரைப்பற்றி மாணிக்கவாசகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளியது இப்போதென் நினைவுக்கு வருகின்றது. அரசன் : அஃதியாது? அரசி : காகத் திருகண்ணிற்கொன்றே மணிகலந் தாங்கிருவர் ஆகத்துள் ஒருயிர் கண்டனம் யாம்இன்றி யாவையுமாம் மேகத் தொருவன் இரும்பொழில் அம்பலவன் மலையில் தோகைக்குந் தோன்றற்கும் ஒன்றாய் வரும்இன்ப துன்பங்களே இவ்வருமைத் திருப்பாட்டிற்கு இலக்கியங் கண்ணகியும் மாதவியுமாதல் அவர்தம் நிகழ்ச்சிகளை நேரே கண்டுங் கேட்டும் இளங்கோவடிகள் இயற்றியருளிய சிலப்பதிகாரத்தால் நன்கறிகின்றனம் அரசே! அரசன் : கண்ணகியும் மாதவியுங் கோவலனைத் தம்முயிராகக் கருதி அன்பு பாராட்டினராயின் அவன் இறந்தமை கேட்டவுடனே அவ்விருவரும் ஏன் இறந்துபடவில்லை? அரசி : பின் நிகழ்ச்சிகளைப் பெருமான் மறந்து விட்டீர்கள் போலும்! கோவலனைக் கள்வனெனப் பிழைத்துணர்ந்து பாண்டியன் அவனைக் கொலை செய்வித்தமையின், தன் கணவற்கு அக்குற்றம் அணுகாமைப் பொருட்டும் பாண்டியன் முறை தவறிச் செய்த குற்றத்தை அவற்கு எடுத்துக்காட்டி அவனைப் பழிக்குப்பழி வாங்குதற் பொருட்டுங் கொலைக் களத்திற்பட்ட தன் கணவனைக் காணுதற் பொருட்டுமே கண்ணகி சிலநாள் உயிர் தாங்கியிருந்து, தன் நோக்கம் முடிந்தபின் தன்னுயிர் நீத்துத் தன் கணவனை நுண்ணுடம்பிற் கண்டு அவனுடன் கூடி வானுலகு புகுந்தனள். மாதவியோ தான் ஈன்ற அருமை மகள் மணிமேகலையின் பொருட்டுச் சிறிது காலம் உயிர் தாங்கிப் பின்னர் துறவியாகி உயிர் நீங்கினள். ஆசிரியர் இளங்கோ வடிகள் இந்நிகழ்ச்சிகளைத் தெளிவாக எடுத்துச் சொல்லி யிருக்கின்றனரே! அரசன் : இவைகளை முற்றுமே மறந்து போனேன் கண்மணி! அமராவதி : அப்பா, அரசியல் நிகழ்ச்சிகளிற் கருத்து ஈடுபட்டுஇருத்தலால் இவைகளை மறந்துவிட்டது இயற்கைதானே அம்மா! அரசி : அஃதியற்கைதான் கண்மணி! நாம் எந்நேரமும் மிகுதியாய்க் கல்வியிலேயே நினைவு வைத்திருப்பதால் இவை நம் நினைவை விட்டகலவில்லை. மேலும், நான் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களைப் பயின்ற பின் கண்ணகி, மாதவி, மணிமேகலை என்னும் பெண்மணிகளின் பேரன்புங் கற்பும் என் நினைவிற் கண்மேலெழுத்துப் போற் பதிந்து, தூண்டா மணிவிளக்குப் போற்சுடர்ந்து திகழ்ந்து கொண்டிருக்கின்றன. அரசன் : என்ன அங்கயற்கண்ணி! அம்மாதர்களின் அன்பை அவ்வளவு மிகுதியாகச் சிறப்பித்துப் பேசுகின்றனையே! மணஞ்செய்து கொண்டபின் தங்கணவரிடத்தில் அன்பில்லா தொழுகும் மாதரார்தாம் யார் உளர்? அரசி : பெரும! உறவினராற் பிணைக்கப்பட்ட மணமக்களிடத்துக் காதல் அன்பும் உண்மைக் கற்பொழுக்கமுந் தோன்றி நிலைத்தல் அரிதாகவே யிருக்கின்றது, இத்தகைய சேர்க்கையிற் பலர் தம் உறவினரின் கட்டுப்பாட்டுக்காகவே ஒருவர் மீதொருவர் அன்பு பாராட்டுகின்றனர்; மற்றும் பலர் கடமைக்காகவே வாழ்க்கை செலுத்துகின்றனர்; இன்னும் பலர் பிறர் கூறும் பழிக்கஞ்சி ஒருமித்திருக்கின்றனர் மேலும் பலர், முன்னமே தம்மால் விரும்பப்பட்டார் பால் உள்ளன்பும், தமக்குள் வெளியன்பும் உடையவராய்க் கரந்தொழுகு கின்றனர்; இங்ஙன மெல்லாமின்றி, மணந்து கொண்டபின் ஒருவரையொருவர் உயிராய்க் கருதியொழுகுங் கணவன் மனைவியரும் இல்லாமற் போகவில்லை. அரசன் : அங்ஙனமாயின், அங்கயற்கண்ணி! நீ என்மேல் எவ்வகையான அன்பு பூண்டு நடக்கின்றனையோ? (அரசி நாணத்தால் வாளாதிருக்க) அமராவதி : (புன்சிரிப்புடன்)அப்பா, அம்மாவும் நீங்களுந்தாங் காதலன்பு மிக்கவர்கள் ஆயிற்றே. உங்கள் உள்ளம் அறிந்ததொன்றை வினவினால் அம்மா எங்ஙனம் விடை சொல்லுவார்? அரசி : அம்மா! உண்மையைச் சொல்லிவிடுகின்றேன். (அரசன் திடுக்கிடுகின்றான்) யான் உன் தந்தையாரைப் பாராமலும் இவரது உள்ளன்பை யான் அறியாமலும் இருக்கையில், என் பெற்றோர்கள் இவர் தம் பெற்றோருக்கு இணங்கி என்னை இவர்க்கே மணஞ் செய்து கொடுக்க உறுதி செய்துவிட்டார்கள். ஆனால் அப்போது என் உள்ளத்தில் உண்டான நடுக்கத்தைச் சிவபிரான் ஒருவரே அறிவர். எனது காதலன்புக்கு ஏற்றவர் அல்லாது ஒருவரை யான் மணக்கும்படி நேர்ந்ததால் யான் என் செய்வதென்று மிகவும் கலங்கி நின்றேன். மணம் முடிந்த பிறகோ யான் செய்த நல்வினைப் பயத்தால் இவர்பால் எனக்குக் காதலன்பே நிகழ்ந்து எனது நடுக்கத்தைத் தீர்த்தது. நின் தந்தையாரும் இதுவரையிற் பேரன்புடைய ராகவே என்பால் நடந்து வருகின்றார். அஃது யான் பெற்ற பெறுதற்கரிய பேறன்றோ? அரசன் : செல்வி, அமராவதி! நின் அன்னை உண்மையைச் சொல்லிவிடுகின்றேன் என்றதைக் கேட்டவுடன் என் நெஞ்சந் திடுக்கிட்டது. எங்கே இவள் காதலன்பில்லா மனையாளாயினளோ என அஞ்சினேன். ஆனாற் பேரன்பினள் என்பதை நெடுக அறிந்தே வருகின்றேன். நின் அன்னையின் பேரழகையுங் குணநலங் கலைநலங்களையும் யான் கண்டது முதல் என் உயிர் ஒரு புதிய இன்ப உணர்ச்சி வாய்ந்ததாய் இவளை என் உயிராகவே கருதி வருகின்றது. அமராவதி : (கை கொட்டிச் சிரித்துக் கொண்டு) அம்மா, அம்மா, இப்போது தான் அப்பாவுக்குக் காதலன்பு இன்னதுதான் என்று தெரிந்துவிட்டது. அரசன் : அங்ஙனமன்று கண்மணி, யான் பழைய தமிழ் இலக்கியங்களைப் பயின்ற காலத்திலேயே காதலன்பைப் பற்றி அறிவேன். ஆனால், அது புலவர்களாற் புனைந்து கட்டப் பட்டுச் சொல்லளவாய்க் கருதப்படுவதேயன்றி மெய்யாகவே நிகழ்வ தன்றென்றே எண்ணி வந்தேன். இப்போது நின் அன்னையின் உண்மை மொழிகளையுங் கண்ணகி மாதவியின் அன்பின் திறத்தையும் நினைத்துப் பார்க்குங்கால், நம்மை யறியாமலே நமதுள்ளத்தில் நிகழும் அத்தகையதோர் அன்பு இருக்கத்தான் வேண்டு மென்றுணர் கின்றேன்.( என்று சொல்லி அமராவதியை உற்று நோக்கியிருக்க) அரசி : பெரும, என்ன என் மகளை உற்றுநோக்கிக் கொண்டிருக் கின்றீர்களே? அரசன் : அங்கயற்கண்ணி! நின் அழகை யெல்லாம் வடித்தெடுத்துத் திருத்திய பொற்பாவைபோல் அமராவதி திகழ்கின்றாள். இவட்கு ஏற்ற கணவன் வாய்க்க வேண்டுமே! இவட்கு அவன்பாற் காதலன்பு நிகழ வேண்டுமே! என்பதைப் பற்றித்தான் கவலைப்படுகின்றேன். அரசி : அதைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அமராவதியின் மனப்பாங் கறிந்தே மணம் முடிப்போம். அரசன் : அஃது எங்ஙனம் முடியும்? நாமோ மிக உயர்ந்த அரச வாழ்க்கையில் இருக்கிறோம். நம்மையொத்த சேர பாண்டிய அரச குலத்திற் பிறந்த அரசிளைஞரிலிருந்தன்றோ நாம் நம் புதல்விக்கு மணமகனைத் தேர்ந்தெடுத்து மணம் புரிதல் வேண்டும்? தேர்ந்தெடுக்கப்படுபவன்பால் இவட்குக் காதலன்பு நிகழாவிட்டாலும், நமது மேல் நிலையையறிந்து இவள் அவன் பாற் பேரன்பு பாராட்டக் கடமைப்பட்டிருக் கின்றனளன்றோ? அரசி : பெரும! என் புன்சொல்லையும் நன்சொல்லா நீங்கள் செவியேற்றருளல் வேண்டும். கணவன் மனைவியர்க்குள் உண்டாகும் அன்பு பிறர் குழைத்து ஊட்டுவது அன்று, அஃதவர்க்குள் இயற்கையாகவே உண்டாவது: தேம்பொதி ஆம்பல் திகழ்மதி மன்னோ வேங்கதிர் முன்னோ விரிந்துவாய் விளங்கும்? கொழுஞ்சுவை மாவும் மாவுறை குயிலுங் குழைமுகந் தோன்றிக் கூவிக் களிப்பது பொதியத் தென்றலின் முன்னோ? அன்றிப் புதுமை சிதைக்கும் புயற்கால் முன்னோ? தோகை மாமயில் ஓகையில் ஆல்வது கருமுகில் முன்னோ? கதிரவன் வெம்மையிற் பால்நுரை யென்னப் பார்க்கும் வால் நிற மாசியின் முன்னோ? மன்னா! அரசன் : நன்கு நுவன்றனை நங்காய்! நீபுகல் அல்லியும் மாவும் மெல்லிய குயிலும் நீல மஞ்ஞையும் மாந்தரைப் போலப் பகுத்தறி வுடைய பிறவியோ வகுத்தி! அதனால், தேரும் அறிவின் வழிவைத் தன்பை ஆரச் செலுத்தல் அணங்கனை யார்க்கு மான வாழ்க்கையென மதித்தறி நீயே அரசி : அன்பின் வழிய துயர்நிலை யென்ற வள்ளுவர் வாய்மொழி பொய்யோ வள்ளால்! உயிர்க்குயி ராக நடக்கும் அன்பின் வழியே அறிவும் ஒழுகுவ தல்லது மாறி இயல்வதை மகாரிலுங் கண்டிலம், பிள்ளைப் பருவத்துப் பள்ளியிற் கொள்ளுஞ் சிறார்தங் கேண்மை சிறந்ததோ? வெறாத நெஞ்சின ராகி எஞ்சா தியாவுந் தேர்ந்து பார்த்து நேர்ந்த கேண்மை மைந்தரில் மகளிரிற் சிறந்ததோ? பகரீர் அரசன் : அன்பும் அறனும் அறிவினை முன்நிறீ இப் பின்பு செல்லா வாயின் மண்ணோர் அல்லற் கடலிற் பட்டுப் பல்லோர் பழிக்க மாய்வது திண்ணம்; அதனால் அருமைப் புதல்வி அமராவதியுங் காத லன்பைக் கடைக்கண் நிறுவிநம் மேதகு நிலையை அறிவான் அளந்தொரு மன்னவன்மகனை மணந்து நன்னய வாழ்க்கை நடத்தவே கடவள். அமராவதி : பொல்லாத இவ்வுலகிற் பொருந்தாத வாழ்க்கையினில் ஒல்லா மனத்தோ டொருங்கிருந்து நைவதினுங் கல்லாத நூலெல்லாங் கற்றறிந்து கண்ணுதலின் சொல்லார் திருவடிகள் தொழுதிருப்பேன் தோன்றலே! அரசன் : அம்மா, அமராவதி! எவ்வளவுதான் கல்வியிலுங் கடவுள் வழிபாட்டிலுங் கருத்தைச் செலுத்தியிருந்தாலும், நீ திருமணமின்றியிருத்தல் நங்குலத்திற்கு அடாது. இப்போது நீ பதினாறாண்டுக்கு மேற்பட்ட மடந்தைப் பருவத்தை அடைந்துவிட்டாய். (தன் மனைவியை நோக்கி) நம் பாண்டி மன்னன் மகனும் நின் தம்பியுமான குலசேகர பாண்டியனை வருவித்துச் சிறிதுகாலம் நம் புதல்வியுடன் அவன் பழகுமாறு செய்வோம். அரசி : பெருமான் திருவுளப்படியே. (கோமாளி வருகிறான்) அரசன் : ஏடா, துத்தி! உணவெடுத்தற்கு அழைக்க வந்தனையோ? கோமாளி : ஆமா, மாராசா! பத்து நாழி ஆனதுகூட உங்களுக்குத் தெரியலே. உங்களுக்குப் பேச்சு ஆப்பிட்டா சோறுகூட வேணாம். (அரசியை நோக்கி) சின்னம்மா, பெரியம்மா, இந்தராசா கூட ரொம்பப் பேச்சு வச்சுக்காதிங்க. உங்களெக்கூட சோறுதின்ன விடமாட்டார். அரசன் : என்னடா, துத்தி! எந்நேரமுஞ் சோற்றையே கட்டிக்கொண்டு அழுகின்றனையே! கோமாளி : ஆமா, மாராசா, நான் சோறு தின்னுகிட்டே ரொம்பநாள் இருப்பேன். சோறு தின்னாமே நீங்க ஒருநாளாவது இருக்க முடியுமா? அரசன் : உணவருந்திப் பலநாளிருப்பதில் வியப்பொன்றும் இல்லை. உணவு அருந்தாமற் சிலநாளாயினும் இருப்பதுதான் வியப்பு. கோமாளி : நம்மால் அது முடியாது. நமக்கு மூணுவேளையும் சட்டதிட்டமாகச் சாப்பிடணும். என்னுடம்பைப் பார்த்திங்களா? (தன் தடித்த உடம்பைத் திருப்பித் திருப்பிக் காட்ட மூவரும் சிரிக்கின்றனர்) நீங்க வேளா வேளைக்குச் சாப்பிடாமே எஃகு குச்சிபோல் இளைச்சு இருக்கிறிங்கோ வாங்க போவலாம், பேச்சே வளத்தாதிங்க. (அரசன் அவனுடன் செல்ல, அரசியரும் அரசனை வணங்கித் தம் உணவறைக்குச் சென்றுவிட்டனர்.) இரண்டாம் நிகழ்ச்சி : முதற் காட்சி களம் : சோழன் அரண்மனையிற் புலவர் மண்டபம்: நேரம் : பிற்பகல் சோழன் : (அமைச்சர் நம்பிப் பிள்ளையை நோக்கி) ஐய! இப் பங்குனித் திங்களிலேயே வெயிலின் கடுமை மிகுதியாயிருக்கின்றது! பகல் இருபத்தைந்து நாழிகை ஆனமையால் இப்போதுதான் வெயிலின் கடுமை தணிந்து வருகின்றது. புழுக்கத்தை மாற்றித் தென்றல்காற்று மெல்லென வீசு கின்றது. சண்பகம் சந்தனம் முல்லை மௌவல் முதலான மலர்களின் நறுமணத்தில் அளைந்து வருதலால் இம்மாலைக்காற்று நம் உடம்புக்கும் உயிருக்கும் எவ்வளவு ஆறுதலையுங் கிளர்ச்சியையுந் தருகின்றது! பாருங்கள்! அமைச்சர் : ஆம், பெருமானே! கொழுந்தமிழ் நறவினைப் பருகும் புலவர் பெருமக்கள் குழாம் ஒருங்கு கூடியிருந்து அகப்பொருள் புறப்பொருள்களை நுணுகி ஆராய்ந் தின்புறுதற்கு ஏற்றதோரிடமாக இம்மண்டபம் அமைக்கப் பட்டிருப்பதுதான் பெரிதும் பாராட்டற்பாலது! இதனைச் சூழ்ந்துள்ள இளமரக்காவில் மணங் கமழ் மரஞ் செடி கொடிகள் அழகுற அமைந்து பசுந்தழை நெருங்கிப் பல நிறப்பூக்கள் உடையவாய்ப் பகலவன் வெப்பந் தோன்றாவாறு தண்ணிழல் பயந்து நிற்கின்றன. இம் மரத் தொகுதிகளின் இடையிடையே பளிங்கை உருக்கி நிறைத்துவிட்டாற்போற் குளிர்ந்த நீர் நிரம்பிய வாவிகள் அமைந்து விளங்குகின்றன; அவ்வாவிகளில் அகன்ற இலைகளின் ஊடே ஊடே அல்லியுந் தாமரையும் முறுக்கவிழ்ந்த மலரினவாய்த் திகழ அம்மலர் களிலும் இலைகளிலும் பெரியவுஞ் சிறியவுமான புள்ளினங்கள் பறந்து பறந்தமர்கின்றன. மரக்கோடுகளிலும் பூங்கொடி களிலுமிருந்து குயில்கள் கூவுகின்றன, நாகணவாய் பாடுகின்றன; இவை யெல்லாம் நம் உணர்வினை இயற்கை யழகின் வயப்படுத்தி நமதுள்ளத்தினை எத்துணைப் பெருங் களிப்பின்கண் தோய்த்து விடுகின்றன! அரசன்: ஆம் நம்பிப் பிள்ளை, என் முன்னோரான சோழ வேந்தர்கள் தமிழமிழ்தை ஆரப்பருகித் தெவிட்டா அவ்வின்பத்தில் வாழ்நாள் முழுதுந் திளைத்தவர்கள். ஆதலால் அகத்தே தாம் துய்த்த அப்பேரின்பப் பெருக்கைப் புறத்தே இவ்வமைப்பிலும் பெருகவிட்டுக் களிகூர்தற்கே இப்புலவர் மண்டபத்தையும் இதனைச் சூழ்ந்த இளமரக் காவையும் வழி வழியே இவ்வளவு அழகுடையவாகச் சீர் செய்து வந்தார்கள். ஆ! இந்நேரத்திற் றாங்கள் நமது புலவர் பேரவையினைக் கூட்ட ஒழுங்கு செய்தது எவ்வளவு நல்லதாயிருக்கின்றது! அமைச்சர் : இப்போது நடைபெறப்போகுங் கம்பராமாயண அரங்கேற்றத்தால் நம் புலவர் குழுவிற் பெரும் போராட்டம் நேரும். ஆதலால் அது தணிதற்கு இரவில் நெடுநேரஞ் செல்லுமெனக் கண்டே, எப்போதும் போல் மாலைப்பொழுதில் இவ்வவையினைக் கூட்டாமல் முன்னதாக இப் பிற்பகலிலேயே இதனைக் கூட்ட ஒழுங்கு செய்தேன் பெரும! அரசன் : அது நன்றே. ஆனாலும், ஆசிரியர் கம்பர் தமது இராமாயணத்தை நமது புலவர் பேரவையில் அரங்கேற்றக் கொணராமற் செய்துவிட வேண்டுமென்றன்றோ புலவர் பெருமான் கூத்த முதலியார்க்கு யான் சொல்லி விட்டேன். அமைச்சர் : அதைப்பற்றி முதலியாரும் யானும் நெடுநேரம் பேசினோம். கம்பர் கல்வியிற் பெரிய புலவர் பெருமானாய் இருத்தலுடன், முன்னே தங்கட்கும் பின்னே தங்கள் இளவரசியாருக்கும் ஆசானாகவும் இருக்கின்றார். பேர் உழைப்பிற் பாடிய அப்பெருங் காப்பியத்தை அவர் நமது புலவர் கழகத்திற்கொணர்ந்து அரங்கேற்ற இடங் கொடுத்திலாமாயின் அவர்க்கு நம்மாட்டு மிக்க மன வருத்தம் உண்டாகும். அதுவேயுமன்றிக் கூத்தர்க்கும் அவர்க்கும் புறத்தொன்றாப் பகைமை நீண்டகாலமாய் வேரூன்றியிருக் கின்றது; அதனால், அவரது சொற்கேட்டே நடுவின்றித் தாங்கள் இராமாயணத்தை அரங்கேற்ற மறுத்தீர்களென்னும் பழிச்சொல்லும் உண்டாம். அரசன் : (பதைத்து) அற்றேல், அவர் அந்நூலை அரங்கேற்று வதற்கே ஒழுங்குசெய்து விட்டீர்கள் போலும்! அமைச்சர் : இல்லை அரசே, இன்றுடன் அரங்கேற்றம் முடிந்துபோகும். நம் புலவர்கள் இடுஞ் சொற்போரால் உடனே அது முடிவுக்கு வருதலைக் காண்பீர்கள்! கோமாளி : மாராசா, புலவர் சண்டையை நிறுத்தாதிங்க. ஊருச்சண்டே கண்ணுக்குக் குளிர்ச்சி. அரசன் : (நகைத்து) ஏடா துத்தி, புலவர் சண்டை கண்ணுக்கு மட்டும் அன்று அஃது அறிவுக்குங் குளிர்ச்சிதான். (ஒட்டக்கூத்தர், கம்பர், அம்பிகாபதியும் மற்றைப் புலவரும் பிறரும் வருகின்றனர்) அரசன் : (இருக்கையினின்றும் எழுந்து) புலவர் பெருமான்கட்கு வணக்கம். எல்லீரும் இருக்கையில் அமர்ந்தருள்க! (எல்லாரும் அமர்கின்றனர்) அமைச்சர் : (உடனே எழுந்து நின்று) வேந்தர் பெருமானுக்கும், இப்பேரவையில் அமர்ந்திருக்கும் நல்லிசைப் புலவர்க்கும், பிறர்க்கும் எனது வணக்கம். அறிவான் ஆன்ற சான்றோர்களே! நம் மன்னர் பெருமான் நிறுவியிருக்கும் இப்புலவர் பேரவையிற் பெருந் தமிழ்ப் புலவரும் பாவலருமாக நுங்களாலும் மற்றவர்களாலும் மிகப் பாராட்டப்படுங் கம்பநாடர் இராமாயணம் என்னும் பெருங்காப்பியத்தைத் தமிழில் மொழி பெயர்த்துப்பாடி இருப்பது நீங்கள் அனைவரும் அறிந்ததொன்றேயாம். அதனை அவர் இங்கே அரங்கேற்றக் கொணர்ந்திருக்கின்றனர். முதுமையிலும் முது தமிழ்ப் புலமையிலும் இப்புலவர் பேரவைக்குத் தலைமை யாசிரியராய் அமர்ந்திருக்குங் கூத்தமுதலியார் இதைப்பற்றித் தமது கருத்தைத் தெரிவிக்குமாறு நம் வேந்தர் பெருமான் விரும்புகின்றார்கள். கூத்தர் : அரசர் ஏறே! அமைச்சர் பெருந்தகையே! அருந் தமிழ்வல்ல பெருந் தமிழ்ப் புலவர்களே! கல்வியிற் சிறந்த கம்பர் இயற்றியிருக்கும் இராமவதாரம் என்னும் பெருங் காப்பியத்தை நாம் எல்லாங் கேட்டு மகிழவேண்டுவதே செயற் பாலது. இங்கமர்ந்திருக்குங் கலைவாணரின் கருத்து யாதோ? ஒரு புலவர் : (எழுந்து) ஆம்! அந் நூற் சொற்பொருள்களில் எமக்குக் குற்றமாகத் தோன்றுவனவற்றை நாங்கள் வினவவும், அவைகட்குக் கம்பர் விடை சொல்லவும் நம் அரசர் பெருமான் இசைந்தால், அதனை இங்கே அரங்கேற்றுவிக்கலாம். (மற்றைப் புலவர்களுந் தமது இணக்கத்தை ஆம், ஆம் என்று கைகொட்டி ஆர்ப்பரிக்க அரசன் கம்பரை நோக்குதலும்) கம்பர் : நம் மன்னர்பிரான் கட்டளைப்படியே யானும் என் புதல்வன் அம்பிகாபதியுங் களிப்புடன் விடையளிக்கக் காத்திருக்கின்றோம். கூத்தர் : அங்ஙனமாயின், தமது இராமாவதாரத்தைக் கம்பர் துவக்கஞ் செய்து படித்துப் பொருள் விளக்கட்டுமே. அரசனும் அமைச்சரும் : அங்ஙனமே செய்க! (எனச் சொல்லிப் பணியுடன் கம்பர்க்குக் கைக்குறிகாட்டக் கம்பர் தமது நூலின் முதற் கண்ணதான சிறப்புப் பாயிரத்தைப் படித்துப் பொருள் விளக்கினர்) சைவ சமயப் புலவர் ஒருவர் : (எழுந்து) முதற்கட்படித்த உலகம் யாவையுந் தாமுள வாக்கலும் என்னுங் கடவுள் வாழ்த்துச் செய்யுள், படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிலைச் செய்யும் முழுமுதற் கடவுண்மேற்பாடப் பட்டிருப்பினும், அம்முதற் கடவுள் சிவபெருமானா? அல்லது திருமாலா? என்னும் வினாவுக்கு அதில் விடை இல்லை. முத்தொழிலைச் செய்யும் முழுமுதற் கடவுளுக்கு ஒரு திருவுருவும், அத்திருவுருவிற்கு ஒரு நிறமும், அதனை அழைத்து வாழ்த்துதற்கும் வணங்குதற்கும் ஒரு பெயருங் குறிப்பிட்டாலன்றி, அதனை மனத்தால் நினைந்து வாயால் வாழ்த்திக் கையாற் றொழுதல் ஒரு சிறிதும் இயலாது. பழைய செந்தமிழ் இலக்கியங்களை அருளிச் செய்த புலவர்களுந் தாந்தாஞ் செய்த கடவுள் வாழ்த்தைச் சிவபெருமான் முருகவேள் மேற்றாகவாதல் திருமால் கண்ணன், அருகன், புத்தன் மேற்றாகவாதல் வைத்துப் பாடியிருக்கின்றனரே யல்லாமல் உருவும் பெய ருமில்லாக் கடவுண்மேல் வைத்துப் பாடிற்றிலர். ஆதலாற் கம்பர் பாடிய வாழ்த்துச் செய்யுள் குற்றமுடைத்து. கூத்தரும் மற்றைப் புலவரும் : ஆம்! ஆம்! இக்குற்றந் தீர விடையளிக்க வேண்டுவது கம்பர் கடமையே. கம்பர் : பல்சமயப் புலவருங் குழுமிய இம்மாப் பேரவையில் அவ்வெல்லார்க்கும் பொதுப்பட வைத்து முழுமுதற் கடவுள் வணக்கஞ் சொன்னேனாகையால், அது குற்றமாதல் செல்லாது. வைணவப் புலவர் : அது பொதுக் கடவுள் வணக்கம் என்பது சாலாது. என்னை? சிற்குணத்தர் என்னும் இரண்டாவது செய்யுளிலும், ஆதியந்தம் அரியென என்னும் மூன்றாவது செய்யுளிலும், திருமாலையே முதற் கடவுளாக வைத்துக் கம்பர் பாடியிருத்தலால், முதற் செய்யுளைப் பொதுக் கடவுள் வணக்கமென்று அவர் கூறுவது பொருந்தாமையின் மேலும், இப்பொதுப் பேரவையை நோக்கிப் பொதுக் கடவுள் வணக்கஞ் சொல்ல வந்தவர், பின்னிரண்டு செய்யுட்களிலுந் திருமாலுக்கு முதன்மை சொல்வது முன்னோடு பின் முரணாகுமன்றோ? கோமாளி : (அரசனை நோக்கி) மாராசா! பொலவருக்கா அச்சப்பட்டுச் சொன்னாரே அதெப் பொலவர் வணக்கம் என்னாமே, கடவுள் வணக்கம் என்னு ஏன் சொல்லணும்? என்னு நான் ஒருகேள்வி கேக்கிறேன். (எல்லோரும் சிரிக்கின்றனர்) அம்பிகாபதி : (உடனே எழுந்து) புலவர் என்னுஞ் சொல்லுக்குக் கடவுளர் என்றும் ஒரு பொருள் உண்டு. அதனாற் கடவுள் வணக்கஞ் சொல்லவே, புலவர் வணக்கமும் அதில் அடங்கும். (எல்லோரும் அம்பகாபதியின் நுண்ணறிவை வியக்கின்றனர்) கோமாளி : அப்படியானா, சாமிங்களா! எனக்கொரு வரங்கொடுங்க! என் பொண்டாட்டிக்கு ஆம்பிளெ பிள்ளே மேலே ஆசை; எனக்கு பொம்பிளே பிள்ளே மேலேதான் ஆசை; எனக்கு ஒரு பொம்பிளே பிள்ளெக்கி வரங்கொடுங்க! புலவர்கள் : (குலுங்கச் சிரித்து) அப்படியே தந்தோம். அரசன் : ஏடா, துத்தி! வாயைமூடு. சிவபூசையிற் கரடியை விட்டோட்டுதல் போற் புலவர்கள் பேச்சினிடையே ஏதும் உளறாதே! (அவன் வாயை மூடிக்கொண்டு அச்சமுற்றவன் போல் நிற்கக் கண்டு எல்லோரும் நகைக்கின்றனர்) கூத்தர் : முதற் செய்யுளிற் போந்த முழுமுதற் கடவுள் வணக்கத் திற்குப் பின்னிரண்டு செய்யுளிற் போந்த திருமால் வணக்கம் மாறாயிருக்கின்ற தன்றோ? என்ற வினாவுக்கு விடை தரல்வேண்டும். (என்று கம்பரை நோக்கிக் கூறக் கம்பர் தம் மகனை நோக்கல்) அம்பிகாபதி : காணவுங் கருதவும் படாத முழுமுதற் கடவுளை வாழ்த்துவது முகமனே யாதலால், சத்துவ குணத்தின் பாற்பட்டுக் காணவுங் கருதவும் எளிதாக நம்மனோர்க்குத் திருமால் வடிவிற் றோன்றிய அம்முதற் கடவுளைப் பின்னிரண்டு செய்யுட்களில் வணங்கியது மாறுகோளாகாது. சைவசமயப் புலவர் : அற்றேல், முழுமுதற் கடவுளை வாழ்த்திய முதற் செய்யுள் முகமனே யன்றி உண்மையன்றென்பது அம்பிகாபதியாரால் ஒப்புக்கொள்ளப்பட்டது. அது நிற்க, முக்குணங்களுங் கடந்த முழுமுதல் அம்முக் குணங்களுள் ஒன்றான சத்துவத்தின் பாற்பட்டுத் தன் பெருமை குன்றிச் சிறுமை எய்திய தெனல் அதன் இறைமைக்கு இழுக்காம். அங்ஙனஞ் சிறுமைப் பட்ட திருமாலை முதல்வராக இசைப்பது யாங்ஙனம் பொருந்தும்? அம்பிகாபதி : இந்நிலவுகத்தைவிட எத்தனையோ கோடிமடங்கு பெரிதான பகலவன் மண்டிலம் இங்கிருந்து நோக்கும் நம்மனோர் ஊனக்கண்களுக்கு ஒரு சிறு சிவந்த வட்டம் போற்றோன்றினும், அது தன்னளவில் மிகப் பெரியதோர் உலகமே யாதல் போல நம்மனோர் பொருட்டுத் திருமால் வடிவிற் சிறுத்துத் தோன்றும் முதல்வன் தன்னிலையிற் பெருத்த இயல் பினனேயாம்; அதனால் அஃதவன் இறைமைக்கு இழுக்காகாது. சைவசமயப் புலவர் : அற்றேல், சத்துவ குணத்திற் றோன்றிய முதல்வன், தமோ குணத்திற்றோன்றிய முதல்வனான உருத்திரனிலுஞ் சிறந்ததவன் என்பதுபடக் கம்பர் இரண்டாவது செய்யிளில் மூன்றனுள் முற்குணத்தவரே முதலோர் எனக் கூறியது பிழையன்றோ? அம்பிகாபதி : தந்தையாயினான் ஒருவன் தன் மக்களுள் தனக்கே நேரே பயன்படும் ஒரு புதல்வனை உயர்த்தி மற்றைப் புதல்வர்களைத் தாழ்த்திப் பேசுதல் போலத், திருமால் வடிவில் நேரே போந்து இந் நிலவுலகினர்க்குதவிபுரிந்த இறைவனை யுயர்த்தி, அங்ஙனம் நேர்நின்றுதவி புரியாது எட்டா நிலைமையனாய் உருத்திரன் என நின்ற இறைவனை மிகுத்துப் பேசாதுவிட்டனர்; ஆதலால்; அஃதொரு குற்றமாகாது. வைணவப் புலவர் : இஃது எங்கள் வைணவமதக் கொள்கையன்று. எங்கள் கொள்கைப்படி திருமாலே முதற்கடவுள்; மற்றை நான்முகன் உருத்திரன் என்னும் இருவருந் திருமாலினுந் தாழ்ந்த சிறு தேவர்களே ஆவர். (அரசனுங் கூத்தருஞ் சைவப் புலவருஞ் சினக்குறி யுடையராகின்றனர்) அம்பிகாபதி : அற்றேல், வைணவமத ஆழ்வார்களில் ஏனையோரைவிட மெய்யுணர்வில் மிக்கவருங் காலத்தால் முற்பட்டவருமான பொய்கை யாழ்வாரும் பேயாழ்வாரும். பொன் திகழும் மேனிப் புரிசடையம் புண்ணியனும் நின்றுலகந் தாய நெடுமாலும் - என்றும் இருவரங்கத் தால் திரிவ ரேனும் ஒருவன் ஒருவனங்கத் தென்றும் உளன் என்றும், தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவுஞ் சக்கரமும் சூழ்அரவும் பொன்ஞாணுந் தோன்றுமால் - சூழுந் திரண்டருவி பாயுந் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து என்றும் முறையே பாடிச் சிவபெருமானையுந் திருமாலையும் உயர்வு தாழ்வு கருதாது ஒத்த நிலையில் ஓருருவில் வைத்துக் கூறியிருக்கின்றனராதலால், அது வைணவ மதக் கொள்கை அன்றென்பது பொருந்தாது. (அரசனும் அமைச்சரும் அம்பிகாபதியின் விடையை வியந்து மகிழ்கின்றனர்) சைவசமயப் புலவர் : தீவடிவினனான சிவபிரானுக்கு நீர் வடிவினனான திருமால் ஒரு தேவியே யெனச் சைவ சமயாசிரியர் நால்வரும் அருளிச் செய்திருத்தலால் அதனையே முதலாழ்வார் இருவருந் தழீஇக் கூறினர். அதனால், அது வைணவத்திற்கே யுரிய கொள்கையாதல் யாங்ஙனம்? இம்முதற் பெருங் கொள்கையில் வேறாகாத போது, வைணவத்தைப் பிறிதொரு மதமாக வைத்துரைத்தல் இசையுமா? வைணவப் புலவர் : முதலாழ்வார் இருவர்க்கும் பின் வந்த நம்மாழ்வார் முதலாயினார் கைக்கொண்ட கொள்கையே எம்மனோர்க்குரிய உண்மை வைணவமாகும். அதனை விடுத்துச், சைவ சமயச் சார்பில் நின்று முதலாழ்வார் பாடியருளிய திருப்பாட்டுகளை எடுத்துக் காட்டி அம்பிகாபதியார் கூறிய விடை எம்மனோர்க் குடம்பாடாகாது. அம்பிகாபதி : பண்டைக்காலத்தே அதாவது இற்றைக்கு ஆயிரத்திரு நூற்றாண்டுகட்கு முற்பட்ட காலத்தே சைவம் என்றும் வைணவம் என்றும் இருவேறு மதங்கள் இருந்தமைக்குத் தினையளவு சான்றுதானும் இல்லை எல்லாரும் நீலமேனி வாலிழை பாகத் தொருவனையே வணங்கியும் வாழ்த்தியும் வழிபட்டு வந்தனர். சைவசமய ஆசிரியரும் முதலாழ்வார் இருவரும் அம்மெய்ந் நெறியிற் கடைப் பிடியாய் நின்றே நம்மனோர்க்கு முழுமுதற் கடவுளுண்மையினை அறிவுறுத்தினர். அவர்க்குப் பிற்காலத்தில் வந்தவர்களே மதவெறி பிடித்துத் திருமாலை யுயர்த்திச் சிவபெருமானைத் தாழ்த்தி, தம் புன்செயலுக் கேற்ற புராணக் கதைகளைப் பொய்யாகப் புனைந்து கட்டி மதவேற்றுமை யுண்டாக்கிப் பிறவிப்பயனைத் தாமும் இழந்து பிறரும் இழக்கும்படி செய்துவிட்டனர்! இவ்வுண்மையினையே என் தந்தையாரும் இவ்விராமாவதார காவியத்தின் கிட்கிந்தா காண்டம், நாடுவிட்ட படலத்தில், அரனதிகன் உலகளந்த அரியதிகன் என்றுரைக்கும் அறிவிலார்க்குப், பரகதிசென் றடை வரிய பரிசே போல் என்று விளக்கமாக நன்கெடுத்துப் பாடியிருக்கின்றார். மேலும், நம்மாழ்வார் சிவபிரானை இழிவாக விடுத்துத் திருமாலையே உயர்வாகப் பிடித்துப் பாடிய கொள்கையினர் என்பதும் உண்மையன்று; அவர், பூத்தள் துழாய்முடியாய் புனைகொன்றையஞ் செஞ்சடையாய் என்றும், என் மலைமகள் கூறன்றன்னை... எயில் மூன்றெரித்த வென்றுபுலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ என்றும், முனியே நான்முகனே முக்கண் அப்பா என்றுஞ் சிவபெருமானைப் பலவிடங்களில் அன்பு துளும்ப வழுத்திக் கடைப்படியாக நின்ற பட்டியல், அவாவறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் என்று முடித்துக் கூறியும் இருக்கின்றார். சைவசமயப் புலவர் : அற்றேல், கம்பர், தாம் இயற்றிய இந்நூலுக்கு இராமாவாதாரம் எனப் பெயர் வைத்த தென்னை? அம்பிகாபதி : இந்நிலவுலகில் தீயவர் தொகையுந் தீமை யும் மிகுந்து, நல்லவர் குழுவும் நன்மையும் அளவற்றுக் குன்றுகின்ற காலத்தே, எல்லாம்வல்ல இறைவன் தன்னருட் செயலுக்குத் தக்கார்பால் நின்று தீயாரைத் துடைத்து நல்லாரைப் புரப்பன். ஆதலால், அரக்கரின் கொடுமை பெருகி அறவோரின் பெருமை அருகிய பண்டை நாளில் இறைவன் இராமபிரானைப் பிறப்பித்து அவன்பால் முனைந்து நின்று அரக்கரை அழித்து அறவோரை ஓம்பினன். கட்புலனாகாத இறைவன்செயல் கட்புலனாய்ப் பிறந்த இராமபிரான் என்னுந் தக்கோன்பால் நின்று அவனை இயக்கித் தன் நோக்கத்தினை முடித்தது. ஆகவே, தக்கோனான இராமன் பிறப்பினையும் அதனால் உலகத்திற்குவிளைந்த நன்மையினையுங் கூறுதலின் இக்காப்பியத்திற்கு இராமாவதாரம் எனப் பெயர் தந்தனர் என் தந்தையார். வைணவப் புலவர் : இதுவும் எமது வைணவமதக் கொள்கை யன்று. இது சைவ மதக் கொள்கை. இராமபிரான் திருமாலினும் மிக்க கடவுட்டன்மை யுடையன் என்பதே எமது கோட்பாடு. கம்பர் இராமனது தெய்வத் தன்மையைப் பற்றிக் கூறிய செய்யுட்களைப் படித்துக் காட்டினால் அவரது கருத்தின் மெய்ம்மை தெற்றென விளங்கும். (கம்பர் தமது நூலின் இடையிடையே இராமனது தெய்வத்தன்மையினை நுவன்ற பாடல்களைப் படித்து முடிவாக) முளரிமேல் வைகுவான் முருகற் றந்தஅத் தளிரியல் பாகத்தான் தடக்கை ஆழியான் அளவிஒன் றாவரே யன்றி ஐயமில் கிளவியர் தனித்தனி கிடைப்ப ரோதுணை என்னுஞ் செய்யுளைப் படித்தனர். வைணவப்புலவர் : பளா! பளா! இதுதான் எமது மதம்! மும்மூர்த்திகளுந் தனித்தனியே எம் இராமபிரானுக்கு ஒப்பாக மாட்டா ரென்பதே எமது கொள்கை. இவ்விடத்தே கம்பர் சொல்லியது முற்றிலும் பொருத்தமே. (அரசன், அமைச்சர், சைவப்புலவர் முகஞ் சிவக்கின்றனர்) கூத்தர் : (சீற்றத்துடன் எழுந்து) ஈதென்ன பேதைமை! பிறவா யாக்கைப்பெரியோன் என இளங்கோவடிகளாலும், தாயுமிலி தந்தையிலிதான் றனியன் காணேடீ என மாணிக்கவாசகராலும், தந்தையாரோடு தாயிலர் தம்மையே, சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால், எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ எனத் திருஞான சம்பந்தராலும் வழுத்தப்பட்ட முழுமுதற் கடவுளான சிவபெருமான் எங்கே, கோசலையின் வயிற்றிற் கருவாய்த் தங்கிப் பிறந்து தன்னரசையும் மனைவியையும் இழந்து, அரக்கரொடு பலநாள் வருந்திப் போராடி அகத்தியர் ஈந்த சிவபிரான் வில்லாலுங் கணையாலும் அவரை மடித்துப், பின் தன் மனைவியாளையும் அரசையும் பெற்று வைகி, நாட்செல்லச் சரயு நதியில் வீழ்ந்து மாண்ட இராமன் எங்கே! இத்தகைய இராமனை மும்மூர்த்தியினுஞ் சிறந்தவன் என்றலினும் மிக்கதொரு மடமையுண்டோ சொல்லுமின் புலவீர்கள்! வைணவப் புலவர் : கொள்கைகளைப் பற்றிப் பேசுங் கால் பேதைமை மடமை முதலான வசைச் சொற்களை வழங்கி எதிர்ப் பக்கத்தாரை இகழ்தல் முறையன்று. கூத்தர் : அரனதிகன் உலகளந்த அரியதிகன் என்றுரைக்கும் அறிவிலார்க்கு என்றுரைத்த விடத்து அறிவிலார் என்னும் வசைச் சொல்லால் இருபக்கத்தாரையுங் கம்பர் இகழ்ந்து பேசியிருக்கின்றனரன்றோ? யாம் வழங்கிய அவ்விரண்டு சொற்களும் மெய்யறிவில்லாமையைத் தெரி விக்கின்றதாகலின், அவ்வாறு சொல்லியதை ஒரு குற்றமாக எடுத்தலாகாது. அரசன் : எடுத்த பொருளை விடுத்துச் சொற் குற்றம் பார்த்தல் நன்றன்று. உண்மை காணும் வேட்கையுடன் நிகழ்த்தப்படும் இவ்வழக்கில் தவறி வசைச் சொற்கள் சில வரினும் அவற்றை நீங்கள் பாராட்டலாகாது. ஆயினும், யாகாவாராயினும் நாகாக்க என்னுந் தெய்வத் திருக்குறளை நுங்களெல்லார்க்கும் பணிவுடன் நினைப்பூட்டுகின்றேன். அது நிற்க, மும்மூர்த்திகளுந் தனித்தனியே இராமனுக்கு ஒப்பாகார், என்ற கம்பருரை பொருந்துமா? என வினாயதற்கு இன்னும் விடை வந்திலது. அம்பிகாபதி : மன்னர் பிரான் கட்டளைப்படியே அதற்கு யான் அறிந்த விடை கூறுவேன். முளரிமேல் வைகுவான் எனுஞ் செய்யுளின் கருத்துப் பொருள் என் தந்தையார் கருத்தன்று; அது சுக்கிரீவன் கருத்து. இராவணனாற் கவர்ந்து கொள்ளப்பட்ட சீதை தன் மெய்யினின்றுங் கழற்றி யெறிந்த அணிகலன்களைச் சுக்ரீவன் கொணர்ந்து இராமனுக்குக் காட்ட, அவன் அவற்றைக் கண்டு சீதையின் பிரிவை யாற்றானாய் மிக நைந்து உணர்வற்றுக் கீழே விழ, அவனைச் சுக்கிரீவன் தாங்கி, அவன் அப்பெருந்துயர் நீங்கி மனக்கிளர்ச்சி கொள்ளுமாறு மும் மூர்த்திகளும் ஒன்று சேர்ந்தால் உனக்கு ஒப்பாவரேயன்றி அவர் தனித் தனியே நினக்கு ஒப்பாகார் என உயர்வு நவிற்சியாற் கூறிய புனைந்துரையை என் தந்தையார் கருத்தாகத் துணிதல் தக்கதன்று. (கூத்தரும் அரசனும் மகிழ்ச்சிக்குறி காட்டுகின்றனர்) சைவப் புலவர் : சுக்கிரீவன் கருத்தாக அவ்வாறு கம்பர் கூறுதலுங் குற்றமேயாம். மும்மூர்த்திகளுந் தனித்தனியே இராமனுக்கு ஒப்பாகார் என்பதற்கு மேற்கோள் பண்டைச் சான்றோர் அருளிச் செய்த தமிழ் நூல்களிலாதல் வடநூல் களிலாதல் இருக்கின்றதா? மேற்கோள் காட்டாக்கால் அக்கூற்றுக் குற்றமேயாகும். சமணப் புலவர் : (எழுத்து) காணப்பட்ட இவ்வுலகமும், இவ்வுலகத் தியங்கும் உயிர்களுமே நம்பொறி புலன்களாலும் அறிவாலும் அறியப் படுகின்றன. இவற்றின் மேற்பட்ட கடவுள் என்றொரு பொருள் உண்டென்பது எவ்வாற்றானுந் துணியப் படவில்லை. அங்ஙனமிருக்கக் கடவுளென் றொரு பொருள் உண்டென்றும், அக்கடவுளும் ஒன்றா யிராமல், சிவன் மாயன் நான்முகன் என மூவராய் உளரென்றும், மாயனே இராமனாய்ப் பிறக்க அவ்விராமன் மாயனிலும் ஏனையிருவரிலும் ஏற்றம் மிக்கவனென்றும் புகல்வன வெல்லாஞ் சிற்றறிவினாரை ஏமாற்றி, அவர் தம்முட் கலாம் விளைத்து, அவ்வாற்றால் தம் பிழைப்புக்கு வழி செய்து கொண்டவர் கட்டிவைத்த குருட்டுக் கதைகளேயன்றி வேறல்ல. அத்தகைய பொய்யை ஒரு காப்பியமாகப் பாடிய கம்பரது செயல், ஒரு முயற் கொம்பின் மேலேறிச் சென்று வான் வெளியில் ஒரு மாளிகை கட்டுவதற்கே ஒப்பாயிருக்கின்றது! சாக்கியப் புலவர் : (உடனே எழுந்து) கடவுளென்றொரு பொருள் உண்டென்பது எவ்வாற்றானும் அறியப்படாமை போலவே, உயிர் என்று ஒரு பொருள் உண்டென்பதும் எவ்வாற்றானும் அறியப்படவில்லை. இவ்விரண்டின் வேறாக உலகம் என்பதொரு பொருளும் உண்மையில் இல்லை. இல்லாதவற்றை உள்ளனவாகக் கனவின் கண் உணரும் மயக்கவுணர்வே கடவுளும், உயிரும், உலகமும் உண்டென நனவின் கண்ணும் மயங்கியுணர்கின்றது. இம்மயக்கந் தீர்ந்தவழி அம்மூன்று பொருளும் இல்லை யாமென்பதே முடிபு, இல்பொருளான கடவுள் இல்பொருளான இராமன் என்னும் ஓர் உயிராகப் பிறந்த தென்றலும், பிறந்து இல்பொருளான இவ்வுலகின்கண் இல்பொருளான இராவணனைக் கொன்ற தென்றலும், எல்லாம் முழுப்பொய். மேலும், வான்மீகி இராமாயணத்திற்கு முற்பட்ட எமது தசரத ஜாதகம் இராமன் தென்னாடு போந்ததாக ஏதும் நுவலவில்லை. அவன் கங்கையாற்றங் கரையிலேயே தன் தங்கை சீதையுடன் சிலகாலந் தங்கியிருந்து தன் தந்தை இறந்தபின் தனது நகர்க்கு மீண்டேகிச் சீதையை மணந்து கொண்டு அரசு செலுத்தினான் என்னுமளவே கூறுகின்றது. ஆகவே, இராமாயணங் கூறும் நிகழ்ச்சிகள் அத்தனையும் முழுப் பொய்யும் புரட்டுமேயாகும்; அதனாற் பொய்யான இராமனைப் பொய்யான மும்மூர்த்திகளுந் தனித்தனியே ஒவ்வாரென்பதும் பொய். (இவை கேட்டு அவையினர் எல்லாரும் நகைக்கின்றனர்) கோமாளி : (அரசனை நோக்கி) மாராசா, எனக்கொரு ஐயுரவு. அதெக் கெஞ்சிக் கேக்கட்டுமா? அரசன் : கண்டபடியெல்லாம் உளறாமற் சொல்லக் கூடுமானாற் சொல். கோமாளி : (சாக்கியப் புலவரைச் சுட்டிக்காட்டி) இந்தச்சாக்கியச்சாமி சொன்னாங்களே கடவுள் இல்லை என்று; அது எப்படியாவது போவட்டும். ஆனா, உயிர் கூட இல்லே என்னாங்களே, அது எப்படி? இதோ நான் இருக்கிறேனே, என்னெக்கூடப் பொய்யின்னு சொன்னா எனக்கு அளுவைவருது (சிறிது அழுகின்றான், எல்லாருஞ் சிரிக்கின்றனர்) மாராசா, நீங்க கூடப் பொய்யா? இந்த ஓலவமெல்லாம் பொய் என்னாங்களே; அப்பிடியானா இந்த இரவைக்கி எனக்குச் சாப்பாடு? அது பொய்யாவாமே பாத்துங்குங்கோ. (எல்லோரும் மிகச் சிரிக்கின்றனர்! சாக்கியப் புலவர் நாணுகின்றனர்) அரசன் : (நகைத்துக் கொண்டு) ஏடா! துத்தி, சாக்கியப் புலவர் தமது மதக் கொள்கையை எடுத்துச் சொன்னாரே தவிர, உடனே எல்லாம் பொய்யாய் விடுமென்பது அவரது கருத்தன்று; உனக்கு மும்மடங்கு மிகுதியான உணவு இன்றிரவு தரச்செய்வோம், அஞ்சாதே; (அம்பிகாபதியை நோக்கி) ஏதும் விடை உண்டோ? அம்பிகாபதி : சாக்கியப் புலவர் கூறிய தமது மதக் கொள்கை உலக வழக்கிற்கும் நூல் வழக்கிற்கும் ஆன்றோர் மெய்யுணர்விற்குஞ் சிறிதும் பொருந்தியதாயில்லை. அஃது உலக வழக்கிற்கு முழுமாறாதல் இப்போது துத்தி நகைச்சுவை யுண்டாகப் பேசிய சொற்களால் வெட்ட வெளியாய் விளங்கிவிட்டது. இனிக் கடவுளும் உயிரும் உண்டோ இல்லையோ என்னும் ஆழ்ந்த ஆராய்ச்சியில் நாம் இப்போது நுழையவேண்டுவதில்லை. நம் பெருமான் மெய்கண்ட தேவர் தாம் அருளிச் செய்திருக்கும் சிவஞான போதத்திற் கடவுள் உயிர் உலகம் அல்லது பதி பசு பாசம் என்னும் முப்பொருள்களையும் பற்றி ஆராய்ந்துரைக்க வேண்டுவன வெல்லாம் முற்ற ஆராய்ந்து அவற்றின் உண்மையை முடித்துக் கூறியிருக்கின்றார். மற்று, என் தந்தையார் இயற்றியிருக்கும் இராமாவதார காப்பியச் சொற்பொருட் டன்மைகளை ஆராய்தற் பொருட்டுக் குழுமிய இப்புலவர் பேரவையில் அதனை விட்டுப் பிறவற்றை ஆராய்தல் வெறுங் காலப் போக்காகும். இனி, இராமன் என்றோர் அரசன் வடநாட்டில் இருந்தமை, பழைய பௌத்த சமய நூலாகிய தசரத ஜாதகத்திலேயே சொல்லப் பட்டிருத்தலின் அவனை இல்பொருளென்றல், பௌத்தர் தம் நூலுக்கே மாறா யிருக்கின்றது. ஆனால், அவன் தென்னாட்டிற் போந்து இராவண னோடு போராடினான் என அது நுவலவில்லையே யெனின்; அவன் தென்னாடு போந்ததாக அந்நூல் நுவலாமையால், அவன் தென்னாடு போந்த செய்தி பொய்யாகக் கருதப்படினும், உள்ளோன் தலைவனாக நிகழாததனை நிகழ்ந்ததாக வைத்து அவன் மேலேற்றி யுரைப்பது இல்லதினியது நல்லது என்று புலவரால் நாட்டப்பட்டதோர் ஒழுக்கமாம் என்று தெய்வப்புலமை நக்கீரனார் உரையுரைத்தாராகலின், வட மொழியில் வான்மீகி நாட்டிய அப்புனைந் துரையினையே என் தந்தையார் மொழிபெயர்த்துப் பாடினர். அதனால் அதனை என் தந்தையார் நூலுக்கு ஒரு குற்றமாகக் கூறுதல் அடாது. வைணவப் புலவர் : இராமாயணத்தின் பின் நிகழ்ச்சி பொய் யென்னும் பௌத்தரின் கொள்கையை அம்பிகாபதியார் ஏற்று மொழிதலாலும், இராமன் மும்மூர்த்திகளிலும் மிக்கவன் என்பதனைப் புனைந்துரையென அவர் அங்ஙனமே கூறுத லாலுங் கம்பரியற்றிய இவ்விராமாவதார நூலை வைணவராகிய யாங்கள் ஒப்புக்கொள்ளல் முடியாது. சைவப் புலவர் : பிறப்பு இறப்பு இல்லா முதல்வனாகிய சிவபிரானைப் பார்க்கிலும் பிறப்பு இறப்பிற்பட்ட ஒரு சிற்றுயிராகிய இராமனை மேலவனாகக் கூறுங் கம்பரது இந்நூல் சைவர்களாகிய எங்களாலும் ஏற்றுக் கொள்ளப் படுதல் இயலாது. சாக்கியப் புலவர்: கடவுள் உண்டென்பதே பெறப்படாதிருக்கக் கடவுளே இராமனாகப் பிறந்தானென்றலின், கம்பரது இந்நூல் பௌத்தராகிய எங்களாலும் ஒப்புக் கொள்ளப்படுதல் இசையாது. சமணப் புலவர் : இதே காரணம் பற்றிக் கம்பராமா யணத்தைச் சமண மதத்தவராகிய யாங்களும் ஏற்றல் சிறிதுங்கூடாது. கூத்தர் : கம்பர் பாடிய இவ்விராமாவதாரக் கடவுள் வணக்கமே வைணவத் திற்கும் முரணாய்ச் சைவத்திற்கும் முரணாய்ச் சமண் சாக்கியத்திற்கும் முரணாய்க் காணப்படுகின்றது. அம்பிகாபதியார் கூறிய விடைகளோ சைவ சமயக் கொள்கைகளோடு இணங்கி அறிவு நுட்பம் வாய்ந் தனவாயிருப்பினும், அவை கம்பர் கருத்தோடு ஒட்டியவையல்ல வென்பது அதனைச் சிறிது நினைந்து பார்ப்பவரும் நன்குணர்வர். ஆகையால், இந்நூலைப் பல்சமயப் புலவரும் ஒருங்கு குழீஇய இப்பேரவையில் எங்ஙனம் அரங்கேற்றுவிப்பதென்பது எனக்கு விளங்கவில்லை. இதற்கு மன்னர்பிரானும் அமைச்சருமே முடிவு பகர்தல் வேண்டும். (அரசன் அமைச்சரை முடிவு கூறும்படி குறிப்பிக்கிறான்) அமைச்சர் : மாபெரும் புலவீர்காள்! இப்பேரவையில் அமர்ந்திருக்கும் நீவிர் எல்லீரும் ஒரு சமயத் தீராயில்லாமல், ஒன்றோடொன்று ஒவ்வாப் பல்பெருஞ் சமயத்தீராய் இருக்கின்றீர். நும்மிற் பலரும் இதுகாறும் நிகழ்த்திய தடைகளாற் கம்பர் இயற்றிய இவ்விராமாவதார நூல் நும்மில் அம்பிகாபதியாரைத் தவிர மற்றெவராலும் ஏற்றுக்கொள்ளப் படுவதாயில்லை. ஆதலால் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படத்தக்கது. தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த திருக்குறளைப் போன்றதொரு நூலாக இருத்தல் வேண்டும். புலவர் எல்லாரும் : ஆம்! ஆம்! திருக்குறளை யொத்த தொரு பொது நூலே இப்பேரவையில் அரங்கேற்றத் தக்கதாகும்; மற்றைய ஆகா. அமைச்சர் : அங்ஙனமாயின், ஆசிரியர் கம்பர் தமது இராமாவதார நூலைச் சைவ சமயக் கொள்கைக்கேற்பச் செய்தனராயின் அதனை அவர் தில்லைக்குக் கொண்டு சென்று தில்லைவாழ்அந்தணர் தம் அவையில் அரங்கேற்றுதலே செயற்பாலது. அன்றி, அதனை அவர் வைணவ சமயக் கொள்கைக்கேற்பச் செய்து முடித்தனராயின் அதனை அவர் திருவரங்கத் திற்குச் எடுத்துச் சென்று திருமாலடியார் இடையில் அரங்கேற்றுதலே செயற்பாலது. மன்னர்பிரான் கட்டளையாதோ? (அரசனை நோக்குகிறார்) அரசன் : அறிவான் மிக்க சான்றோர்காள்! அமைச்சர் நம்பிப்பிள்ளை கூறுவது எமக்குப் பொருத்தமாகவே காணப்படுகின்றது. ஆசிரியர் கம்பர் இயற்றிய இராமவதார காப்பியத்தின் கடவுள் வணக்கச்செய்யுட்களே நுங்களுள் எவராலும் ஏற்றுக்கொள்ளப்படாமையினை யாம் வருத்தத் துடன் நேரே கண்டேம்; ஆகையால் இந்நூலின் மற்றைப் பெரும்பகுதி முழுதும் நுங்களால் ஏற்றுக்கொள்ளப் படுமோவென ஐயுறுகின்றோம். சமண் சாக்கியப் புலவர்கள் எவருமே இதனை ஏலார்கள் என்பது வெள்ளிடை எஞ்சிய சைவராதல் வைணவராதல் இதனை ஏற்பார்களானால் இதனை அவ்விருவரில் ஒருகுழுவினரிடையே அரங்கேற்று வித்தலே வாய்வது, ஆசிரியரது உள்ளக்கிடையாதோ? (கம்பரைப் பார்க்கின்றான்) கம்பர் : மன்னர் பிரான் திருவுள்ளங் கருதுமாறே யான் இந்நூலை முதலில் தில்லை மாநகர்க்கு எடுத்துச் சென்று அங்கே தில்லைவாழந்தணரிடையில் இதனை அரங்கேற்ற முயல்வேன். அவரதற்கு இடந்தராராயின் பின்னர்த் திருவரங்கஞ் சென்று திருமாலடியார் நாப்பண் இதனைத் திண்ணமாய் அரங்கேற்றி மீள்வேன். யான் இன்னும் ஒரு கிழமையில் இங்கிருந்து புறப்படுதற்கு, அரசர் பெரும! விடையளித்தருளல் வேண்டும். அரசன் : அவ்வாறே செய்தருள்க புலவர் பிரானே! (அமைச்சரை நோக்கி) நம்பிப்பிள்ளை! ஆசிரியர் தில்லையுந் திருவங்கமுஞ் சென்று தமது நூலை அரங்கேற்றி வருந்துணையும் அவர்க்காஞ் செலவுகளுக்குச் சிறிதுங் குறை வின்றி நிரம்பப் பொற்றிரளும், ஏவலாட்களும், ஊர்தி முதலியவைகளுங் கொடுத்து வழிவிடுங்கள் (எழுந்து புலவரனைவரையும் வணங்கி) மாலை ஒன்பது நாழிகைக்கு மேல் ஆகிவிட்டது. நுங்களை நெடுநேரம் இன்று இவ் வகையில் நிறுத்தி வைத்துவிட்டோம். பிழைபொறுத்தருள்க! (எல்லோருஞ் செல்ல விடைதர) புலவர் அனைவரும் - மன்னர் பெரும! பன்னெடுங் காலம் ஆழிசூழுலகில் வாழியர் பெரிதே! (அமைச்சரைத் தவிர மற்றையோ ரனைவரும் போய் விடுகின்றனர்) இரண்டாம் நிகழ்ச்சி : இரண்டாங் காட்சி களம் : அரண்மனை, உவளகம். நேரம் : மாலை அரசன் : (அமைச்சருடன் உவளகத்திற்குச் செல்கையிற் கோமாளியைப் பார்த்து) ஏடா, துத்தி! அமைச்சரும் யானும் வருகின்றோம் என்று அரசிக்கு முன் ஓடிச்தெரிவி. (அமைச்சரைப் பார்த்து) நெடுநேரமாகியும், இன்னஞ் சிறிது நேரம் இம்மாலையில் நீங்கள் எம்முடன் இருக்க வேண்டுவது பற்றி வருந்துகின்றேன். அமைச்சர் : எவ்வளவு நேரமானாலும் மன்னர் பெருமான் பணியிற் காத்திருக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன். அரசன் : ஆசிரியர் கம்பர் தில்லை திருவரங்கம் போய்த் தமது நூலை அரங்கேற்றி மீள ஏறக்குறைய ஓர் ஆண்டு செல்லுமென எண்ணுகின்றேன். அதுவரையில் எம்மருமைப் புதல்வி அமராவதிக்குத் தமிழ்ப்பாடங் கற்பிக்க எவரை ஏற்படுத்தலாம் எனக் கருதுகிறீர்கள்? (இருவரும் உவளகத்தினுட் சென்று அரசன் அமர, அமைச்சர் பக்கத்தே நிற்க, அரசி வந்து அரசனைப் பணிந்து) அரசி : பெருமான் புலவர் பேரவையினின்றும் வர நெடுநேரமாயிற்றுப் போலும் (அமைச்சரைப் பார்த்து) நம் பிள்ளை நிற்கின்றனரே. அரசன் : பிள்ளே! இருக்கையில் அமருங்கள்! அங்கயற்கண்ணி! நீயும் அத்தளிமத்தில் அமர். இன்றைக்கு நம்புலவர் பேரவையில் மிகவுங் கிளர்ச்சியான தொரு சொற் போர் நடைபெற்றது; அஃதிப்போதுதான் ஒரு முடிவுக்கு வந்தது. அரசி : ஆசிரியர் கம்பர் இயற்றிய இராமாயணத்தைப் பற்றியதாகத்தான் அச்சோற் போர் நிகழ்ந்திருக்க வேண்டுமென நினைக்கின்றேன். அரசன் : நம் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் செய்த சூழ்ச்சி எளிதிலே நிறைவேறுதற்குக் கம்பரது நூலே மிகவும் இடர்தந்து விட்டது . கம்பர் முன்னோடு பின் முரணாக அத்துணைப் பிழைபடக் கடவுள் வணக்கம் பாடுவாரென்று யான் நினைக்கவேயில்லை. சிவபிரான் மேலாதல் திருமால் மேலாதல் அவர் கடவுள் வாழ்த்துச் சொல்லாமல் முத்தொழில் புரியும் முழுமுதற் கடவுளை நேரே கண்டவர் போற் றலைவர் என்னுஞ் சொல்லால் அவ்வாழ்த்தை முதலிற் கூறினார். அரசி : முத்தொழில் புரியுங் கடவுளை வணங்கத் தொடங்கினவர் அவற்கோர் உருவும் பெயரும் ஏற்பித்தன்றி அதனை வாழ்த்தி வணங்கல் இயலாதே. அரசன் : நீ சொல்லும் இத்தடையினையே நம் சைவப் புலவர் நன்கெடுத்துக்காட்டி மறுத்தார். அதற்குக் கம்பர் பொருத்தமான விடை சொல்லல் இயலாமல் இப்புலவர் பேரவை பல் சமயப் புலவருங் குழுமிய தொன்றாயிருத்தலின் அவ்வெல்லார்க்கும் பொதுப்படவைத்து முழுமுதற் கடவுள் வணக்கஞ் சொன்னேன் என்றார். உடனே நம் வைணவப் புலவர் எழுந்து முதற்பாட்டிற் பொதுக் கடவுள் வணக்கஞ் சொல்லிப் பின்னிரண்டு பாட்டுகளில் திருமாலே முதற் கடவுள் என்றது முன்னோடுபின் முரணாமன்றோ என மறுத்தனர். அரசி : ஆம், அஃதுண்மைதானே அரசே! முத்தொழிலைப் புரியுங் கடவுளினும் மேலாகக் காத்தற்றொழில் ஒன்றே புரியுந் திருமாலை முதல்வராக வைத்தல் யாங்ஙனம் பொருந்தும்? இதுதானும் உணராமற் கம்பர் முன்னொடு பின் முரணாகக் கடவுள் வாழ்த்துப் பாடியது எனக்குப் பெரியதொரு வியப்பைத் தருகின்றது. அரசன் : சிறு தெய்வ வணக்கத்தி;ல ஈடுபட்டவர்க்கு அறிவுக்கண் குருடாவிடு மென்பதற்குக் கம்பரே ஒரு சான்று இராமநுசர் பரப்பிய குரு தெய்வக்கொள்கையில் மயங்கிச், சைவவேளாளச் செல்வராகிய திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்பவள்ளலே சடையன் எனத் தாம் பூண்ட சிவபிரான் பெயரையுமாற்றிச் சரராமன் என்னும் வைணவப் பெயரைத் தமக்குப் புனைந்து கொண்டார். அவரது உதவியையே மிக நாடி நிற்குங் கம்பரும் அவரையொப்ப வைணவ மதவெறி பிடித்து, அவரது ஏவுதலால் அவரது ஊரிலிருந்தே இவ்விராமாயணத்தை இங்ஙனம் முன்பின் முரணாகப் பாடி முடித்திருக்கின்றார். அரசி : பெரும! பின்னர்க் கடவுள் வாழ்த்தைப் பற்றிய முடிவு என்னவாயிற்று? அரசன் : அந்நேரத்தில் நங் கோமாளி துத்தி கேட்ட ஒரு கேள்வி, கம்பர் கூறிய விடை பொருந்தாமையினை நன்கு விளக்கியதோடு அவரையும் வெள்கச் செய்தது. புலவர் எல்லார்க்கும் அஞ்சிக் கம்பர் பொதுக்கடவுள் வணக்கங் கூறினாராயின், அதைப் புலவர் வணக்கம் என்னாமற் கடவுள் வணக்கம் என்று ஏன் சொல்லல் வேண்டும் என்று துத்தி வினவினான். அரசி : ஆ! ஆ! குறியான கேள்விதான். அதற்கு யாது விடை? அரசன் : கம்பர் ஏதுமே சொல்லிற்றிலர். ஆனால், அவர் மகன் அம்பகாபதி எழுந்து புலவர் என்னுஞ் சொல்லுக்குக் கடவுளர் என்னும் பொருளுமுண்டு; அதனாற் கடவுள் வணக்கஞ் சொல்லவே புலவர் வணக்கமும் அதன்கண் அடங்கும் என்றான், அவ்விடையின் நுட்பத்திற்காக அம்பிகாபதியை எல்லாரும் வியந்தனர். அரசி : ஓ! கம்பர் மகன் அவ்வளவு நுண்ணிய கல்வியறிவு வாய்ந்தவனா! அவனுக்குத் துத்தி யாது சொன்னான்? அரசன் : துத்தி அவனை நோக்கி ஏதும் கூறிற்றிலன். ஆயினும், புலவரெல்லாரையும் பார்த்து என் மனைவிக்கு ஆண்பிள்ளை மேல் விருப்பம், எனக்குப் பெண் பிள்ளைமேல் விருப்பம் ஆகையாற், சுவாமிகளே எனக்கு ஒரு பெண் பிள்ளை பிறக்க வரங் கொடுங்கள் என்று கேட்டு எல்லாரை யுஞ் சிரிக்க வைத்தனன். அரசி : நகையாடக் கூறிய துத்தியின் சொற்களும் நுட்பம் உடையனவாகவே காணப்படுகின்றன! பிள்ளைப் பேறு வழங்கல் கடவுள் ஒருவரால் மட்டுமே இயலுமன்றி மக்களால் இயலாது; ஆகவே, மக்களாகிய புலவரைக் கடவுளர் என்றல் பொருந்தாமை, அவன் கூறிய சொற்களிற் குறிப்பாய்க் காட்டப்படுகின்றது. (கோமாளியை நோக்கி) நின் சொல்லின் நுட்பத்தை வியந்தேன். (கோமாளி மகிழ்ச்சி மிக்குக் கோணற் கும்பிடு போடுகிறான்) அதன்பின் யாது நிகழ்ந்ததோ? அரசன் : அதன்மேற் கோமாளியை பேசவிடாமல் அடக்கினேன். புலவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விடை தருமாறு நங் கூத்தமுதலியார் வேண்ட, கம்பர் வாளா விருந்தனர். ஆனால், அம்பிகாபதியோ ஒவ்வொரு கேள்விகட்கும் அனைவரும் வியக்கத்தக்க விடைகளை நுண்ணறிவோடும் நூற்சான்று களோடும் நன்கு பகர்ந்தே வந்தான். என்ன நம்பிப்பிள்ளே! நுங்கள் கருத்தையுஞ் சொல்லுங்கள். அமைச்சர் : அம்பிகாபதியார் கூறிய விடைகள் நுண்பொருள் பொதிந்து பழைய வைணவத்திற்குஞ் சைவசமய வுண்மைக்கும் முற்றும் ஒத்திருந்தன. அவர் கூறிய விடை விளக்கத்தில் வைத்து நோக்கினால், கம்பர் கூறிய கடவுள் வாழ்த்திற்குக் குற்றம் வராதென்று கருதினேன். ஆனாற் சைவத்திற்குப் பகையாய்ப் பிற்காலத்து வைணவர்கள் கட்டிய புராணக் கதைகளையே விடாப்பிடியாய்ப் பிடித்திருக்கும் நம் வைணவப்புலவர், அம்பிகாபதியாரின் விடைகளைச் சிறிதுமே ஏற்றுக் கொள்ளவில்லை. திருமாலின் பிறப்பாக இராமன், திருமாலினும் நான்முகன் சிவபிரானிலுஞ் சிறந்தவன் என்றே முழங்கினர். அது கண்டு நங்கவிச்சக்ரவர்த்தி கூத்தர் எவ்வளவு சீற்றங்கொண்டு அதனை மறுத்தனர்! சமண் சாக்கியப் புலவர்கள் கடவுள் உண்மையினை ஒப்புக் கொள்ளாவிடினும், இராமாயணக் கதை பொய்யென்றே கழறினர்; சாக்கியப் புலவர் தமது மிகப்பழைய தசரதஜாதகச் சான்று கொண்டு இராமாயணப் பின் நிகழ்ச்சி முழுப் பொய்யென்று காட்டியதை அம்பிகாபதியாரும் ஒரு வகையில் உடன்பட்டே மொழிந்தனர். இந்தவாற்றாற் பண்டைக் காலத்தில் முருகவேள் சூரன் மேற்சென்று அவனை வென்ற நிகழ்ச்சியினையே, வைணவர்கள் இராமன் இராவணனை வென்ற நிகழ்ச்சியாகப் பிற்காலத்தே மாற்றி இராமாயணம் எழுதி வைத்தார்களென்று கருதுகிறேன். அரசன் : அதுதான் உண்மை. இனி, நம் அம்பிகாபதியின் நுண்ணுணர்வை யும் பரந்தாழ்ந்த கல்வியறிவையும் அழகையும் இனிய குணங்களையும் நினைக்க நினைக்க அவனைப் பிள்ளையாகப் பெற்ற கம்பர் என்ன தவஞ்செய்தனரோ வென்றெண்ணி வியக்கின்றேன்! இத்தகையான் ஒருவன் நம் அரச குடும்பத்திற் பிறந்திலனே என்றெண்ணியும் வருந்து கின்றேன்! அரசி : அத்துணைச் சிறந்த அம்பிகாபதியை நம் அரச குடும்பத்தில் ஒருவனாகவே வைத்துப் பாராட்டுதல் நமக்குப் பெருமையே யன்றிச் சிறுமையாகாதே? அரசன் : அஃதெங்ஙனம் அங்கயற்கண்ணி? அவனோ உவச்ச குலத்திற் பிறந்தவன்; நாமோ உயர்ந்த வேளாளகுலத்தினேம். நம்மினும் எத்தனையோ மடங்கு தாழ்ந்த குலத்தவனான அவனை நம் குலத்தவருள் ஒருவனாக வைத்து நலம் பாராட்டுதல் ஒரு சிறிதும் ஆகாது. ஆயினும், அவனை, அவன் தந்தையரைப் போலவே நம்புலவர் பேரவையில் ஒரு பெரும் புலவனாக வைத்துப் பல சிறப்புகளுஞ் செய்யக் கருதியிருக்கின்றேன். அதனோடு, இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நம் அருமைப் புதல்வி அமராவதிக்கு அம்பிகா பதியை ஆசிரியனாகவும் அமர்த்த முடிவு செய்திருக்கின்றேன். அவளது கூர்ந்த அறிவுக்கு இசையத் தமிழ் கற்பிக்கவல்லவன் அவனே. அரசி : ஈதென்ன பெருமானே! அம்பிகாபதி கல்வியும் நுண்ணறிவும் வாய்ந்தவனாதலோடு பேரழகும் இளமையும் இனிய குணங்களும் உடையனென்றும் நீங்களே சொல்லுகிறீர்கள். இத்தகைய ஒருவனை, மடந்தைப் பருவத்தினளும் பேரழகியும் முத்தமிழ்ப் பயிற்சியில் மிக்க விழைவினளுந் திருமண மாகாதவளுமான என் மகளுக்கு ஆசிரியனாக அமர்த்துதல் நன்றாகுமா என நினையாமற் பேசுகிறீர்களே! நுங்கள் சொல்லைக்கேட்டு என் நெஞ்சம் நடுங்குகின்றது! மேலும் ஆசிரியர் கம்பர்தாம் நம்மருமைப் புதல்விக்குத் தமிழ் கற்பித்து வருகையில் அவர் மகனை எதுக்காக அவளுக்கு ஆசிரியனாக அமர்த்தக் கருதுகிறீர்கள்? அரசன் : அதன் காரணத்தை யான் உனக்கு தெரிவிக்கு முன் வேறுபேச்சு வந்து குறுக்கிட்டது. கம்பர் தமது இராமா யணத்தை நமது புலவர் பேரவையில் அரங்கேற்றுதற்கு நம்புலவர் எவரும் இடங்கொடுக்கவேயில்லை. அது கண்டு நம் அமைச்சர் அதனை அவர் தில்லை வாழந்தணரிடையிலாவது திருவரங்கத் திருமாலடி யாரிடையிலாவது கொண்டு போய் அரங்கேற்றுக வென்று சொல்லிவிட்டார். (அமைச்சரைப் பார்க்க) அமைச்சர் : ஆம், அன்னையே ! கம்பர் தம் நூலின் கடவுள் வணக்கச் செய்யுட்களைப் படித்தவுடனேயே நம் புலவர்கள் ஒருவர் பின்னொருவராய் அவற்றின்கட் பிழை கண்டு வினவவும் அவற்றிற்கு அம்பிகாபதியார் விடை சொல்லவும் ஆக ஒரு பெருஞ் சொற்போர் நிகழ்ந்தது! கடைசியாகச் சாக்கியப் புலவர் கூறிய எல்லாம் பொய்யென்னுங் கொள்கையினால் ஒரு பெருங் குழப்படும் உண்டாயிற்று. அரசன் : பார்த்தீரா நம்பிப் பிள்ளை! கடவுளும் பொய், உயிரும் பொய், உலகமும் பொய், எல்லாம் பொய் என்று நம் சாக்கியப் புலவர் கூறியது எத்தனைப் படுபொய்யாயிருக்கின்றது! இதுவும் ஒரு கொள்கையா? இதுவும் ஒரு மதமா? இதற்கு அம்பிகாபதி சொல்லிய விடையைப் பார்க் கிலும், நமது துத்தி அதற்குக் கொடுத்த சாட்டையடியே திறமான விடை! (துத்தி அது கேட்டு விலாப் புடையை அடித்துக்கொண்டு குதிக்கிறான்) அரசி : (நகைத்துக்கொண்டே) துத்தி அதற்கு யாது சொன்னான் அரசே? அரசன் : சாக்கியப் புலவர் எல்லாம் பொய் என்று சொன்னவுடனே இவன் என்னை விளித்து, அப்படியானால் நான் இதோ இருக்கிறேனே! என்னைக்கூடப் பொய்யென்று சொன் னால் எனக்கு அழுகை வருது என்று சொல்லி அழத் தொடங்கி விட்டான். அவையின ரெல்லாரும் வயிறு குலுங்கக் குலுங்க நகைத்தனர். அதன் பின் என்னைச் சுட்டிக்காட்டிஅரசே! Ú§fŸ Tl¥ bghŒah? என்று அவன் வினவ, அவையின ரனைவருஞ் சாக்கியப் புலவரை நோக்கியபடியாய் அடங்கி விட்டனர். மேலும் அவன் இந்த உலகமெல்லாம் பொய் யென்றாரே; அப்படியானால் இந்த இரவில் எனக்கு உணவு; அதுவும் பொய்யாகாமற் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கோணற் கும்பிட்டுடன் கொச்சையாய்ப் பேசவே, பின்னும் எல்லாரும் பெரிதும் சிரித்தனர்! சாக்கியப் புலவர் முகங் கருகிப் போயிற்று. அது கண்டு யான் அவர் தமது மதக் கொள்கையைச் சொன்னாரே தவிர, எல்லாம் உடனே பொய்யாய் விடுமென்பது அவரது கருத்தன்று எனக் கூறி எல்லாரையும் அமைதிப் படுத்தினேன். அரசி : துத்தி சொல்லிய சொற்களால் சாக்கியப் புலவர் தமது கொள்கையின்படி தாமும் பொய்யாகல் வேண்டும். அவர் உட்கொள்ளும் உணவும் பிற நுகர் பொருள்களும் பொய்யாகவே ஒழியவேண்டும் என்பது எளிது போதரலால் அவர் முகங்கருகாமல் வேறேன்செய்வார்! ஏடா துத்தி! உனக்கு இன்றிரவு இரட்டைச்சாப்பாடு. கோமாளி : அம்மா, அம்மா. மாராசா எனக்கு மூணு சாப்பாடல்லோ ரொம்ப ரொம்பத் தாரேனெண்ணு சொன்னாங்க, நீங்க ஒரு சாப்பாட்டெ குறைச்சிட்டிங்களே! அரசி : (நகைத்து) அப்படியானால், நான் உனக்கு நான்கு சாப்பாடு தருகிறேன். அரசன் : கம்பர் திரும்பிவரும் வரையில் அம்பிகாபதி தான் நம் புதல்விக்குப் பாடம் சொல்லல்வேண்டும். அவன் நமது நிலையுந் தனது நிலையும் நன்குணர்ந்த தக்கோனாதலால், ஏதுந் தவறிழைப்பான் அல்லன். என் மகளுந் தனது மேதகு நிலையுணர்ந்த மிக்கோளாதலால் சிறிதும் பிழைபடாள். அமைச்சர் : மன்னர் பெரும! இருவரும் தக்கோரென்பதில் தட்டில்லை. என்றாலும், அரசியார் சொல்லுவதுங் கருதற்பாலது. ஆதலால், யான் ஒரு சூழ்ச்சி சொல்லுகின்றேன். அது பிராட்டிக்குந் தமக்கும் எனக்குமல்லது பிறரெவர்க்குந் தெரிதலாகாது. (அரசன் கோமாளியைச் சிறிது நேரம் வெளியே போயிருக்கக் கடடளையிட்டபின் அமைச்சர் தமது சூழ்ச்சியைப் பிறரெவர் செவிக்குங் கேளாதபடி அரசர்க்கும் அரசிக்கும் மெல்லச் சொல்ல, இருவரும் அவ்வாறே செய்விக்க இசைந்தபின், அமைச்சர் போக எழுகின்றனர்) அரசன் : நம்பிப்பிள்ளை! இன்னும் ஒரு சொல். நம் புதல்வியின் திருமணத்திற்கு வேண்டும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம். நம் மருகன் சடையவர்மன் குலசேகர பாண்டியனுக்குத் திருமுகம் நாளையே விடுத்து, அவனை மதுரையினின்றும் இங்கு வருவியுங்கள். அமைச்சர் : அங்ஙனமே செய்கின்றேன் பெருமானே. (வணங்கிப் போய் விடுகிறார்) மூன்றாம் நிகழ்ச்சி : முதற் காட்சி களம் : அமராவதி இருக்குங் கன்னிமாடம். தோழி : அம்மா அமராவதி! நம் ஆசிரியர் கம்பர் நேற்று தான் வெளியூர்க்குப் போய் இருக்கிறார். அவர் திரும்பிவர ஓராண்டு செல்லுமாம்; அதுவரையில் நமக்குக் கல்வி கற்பிக்கத் தில்லைவாணர் என்னும் ஒரு சிறந்த தமிழாசிரியர் ஏற்படுத்தப் பட்டிருக்கிறார். அவர் கட்பார்வையிழந்த குருடராதலால், அவரை நாம் யாரும் பார்க்கலாகாதாம். அவர்க்கும் நமக்கும் இடையே சாயம்பூசிய தடிப்பான ஓர் இரட்டுத் திரைகட்டி, அத்திரையின் வெளிப்புறத்தில் அவர் இருந்து பாடஞ் சொல்ல, நாம் அதன் உம்புறத்திலிருந்து பாடங்கேட்டல் வேண்டுமாம். இதனை நின் அன்னையாரான அரசியார் உனக்குத் தெரிவிக்கச் சொன்னார்கள். நம் அமைச்சரின் மகன் நயினார் பிள்ளை தான் ஆசிரியருடன் வருவார். அமராவதி : ஏடி நீலம்! ஈதென்னடி ஒருபெரு வியப்பா யிருக்கின்றதே! கண்ணில்லாக் குருடர் ஒருவர் எங்ஙனங் கல்வி கற்றார்? அவர் எங்ஙனம் நமக்குப் பாடஞ் சொல்வார்? என வியப்புறுகின்றேன். தோழி : அப்படியன்று அம்மா! அவர்க்குக் கண் குருடாய்ப் போனது சில ஆண்டுகளுக்கு முன்னே தானாம். அவர் தமக்கு இருபதாமாண்டு நிரம்பு முன்னமே தமிழ் இலக்கண இலக்கிய நூல்களுங் கலைநூல்களும் ஆழ்ந்து ஆராய்ந்து கற்றுத் தேர்ந்த நுண்ணறிவினராய் விட்டனராம். இருபதாமாண்டு கடந்த பிறகுதான் அம்மை நோய் கண்டு அவர்க்குக் கண் குருடாயிற்றாம். இப்போதவர்க்கு இருபத்தைந்தாமாண்டு நடக்கிறதாம்; அவர் எப்படி இருந்தால் நமக்கென்ன? நமக்குக் கல்விதானே வேண்டும். அமராவதி : அஃதுண்மைதான். அவர் இளமையிலேயே கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தாற் பின்னர்க்கண் குருடாய்ப் போனாலும் பாடஞ்சொல்வதிற் சிறிதுங்குறை இராதென்றே நம்புகின்றேன். அவர் குருடராய் இருத்தலால் நமது மேல் மாளிகைக்கு வருவது அவர்க்கு இடர்ப் பாடாயிருக்கும். ஆதலால், இக்கன்னி மாடத்தின் பின்னுள்ள பூந்தோட்ட மண்டபத்தில் இருந்தே நாம் பாடம் கேட்டற்கு வேண்டும் ஒழுங்குகளை என் அன்னையார் தெரிவித்தபடியே போய்ச்செய். மாலைக்காலம் நெருங்குகின்றது. ஆசிரியர் தில்லைவாணர் விரைவில் வந்துவிடுவர். அவர் நங்கண்ணிற்படாமல் வரவும், வந்திருந்து பாடஞ் சொல்லவும், பின் திரும்பிச் செல்லவும் நம் அமைச்சரின் மகன் நயினார் பிள்ளையும் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வாரெனக் கருதுகின்றேன். (தோழி போய் விடுகின்றாள்) மூன்றாம் நிகழ்ச்சி : இரண்டாங் காட்சி களம் : கம்பரது மாளிகை. அம்பிகாபதி : வருக, வருக என் நண்ப நயினார் பிள்ளை! நின்னைச் சில நாட்களாய் யான் காணவில்லையே! நயினார் பிள்ளை : அம்பிகாபதி! நின்னைக்காணாத நாட்கள் பயனில் நாட்களே! நம் மன்னர்பிரான் கட்டளைப் படி என் தந்தையாரால் ஏவப்பெற்றுச் சடைய வர்மன் குலசேகர பாண்டியனை இங்கு அழைத்துவரும் பொருட்டு மதுரைமா நகர் சென்று நேற்றுத்தான் அவனை அழைத்துக்கொண்டு இங்குவந்து சேர்ந்தேன். அம்பகாபதி : எதற்காக நம்மரசர் அப்பாண்டிய இளவரசனை அத்தனை விரைவாக இங்கு அழைப்பித்திருக்கின்றனர்?. நாயினார் பிள்ளை : நம்மரசரின் மகள் அமராவதிக்குத் திருமணஞ்செய்ய எற்படாகின்றது. குலசேகரன் அமராவதிக்கு மாமனாதலால் இருவரும் பழகும் பொருட்டு அவன் வருவிக்கப்பட்டிருக்கலாம். அம்பிகாபதி: அவன் அங்ஙனம் விரைந்து வருகைக்கு அதுதான் காரணமாக இருத்தல் வேண்டும். அஃதிருக்கட்டும். இளவரசி அமராவதி கூர்ந்த அறிவும் முத்தமிழ்ப் பயிற்சியும் உடையவளாயினுங், கைகால் முடமாயிருப்பவளென்றும், அழகற்ற முகத்தின ளென்றும் நின் தந்தையார் சொல்லக்கேட்டேன். ஆனால், என் தந்தையாரோ நீண்ட காலமாய் அவட்குப் பாடஞ் சொல்லி வருபவராயிருந்தும் அவளுடைய யாக்கையின் குற்றத்தையும் முக அழகு இன்மையினையும் எனக்குச் சொன்னதேயில்லை! நயினார் பிள்ளை : அவள் நம் அரசர்க்கு ஒரே செல்லப் புதல்வியாய் இருத்தலால், அவளைப் பற்றிக் குறைவு சொன் னால் அஃதொரு பெருங்குற்றமாகக் கருதப்படுமன்றோ? அதனால்தான் நின் தந்தையார் அவளிடத்துள்ள உடற் பழுதினைக் கூறினாரில்லையென எண்ணுகின்றேன். அரசர் குலசேகரனை வருவித்தும் அவன் அவளை மணந்து கொள்ளுமாறு இணங்குதற் பொருட்டே போலும்! அம்பிகாபதி : இருக்கலாம். இம்மாலைப் பொழுதிலிருந்து யான் இளவரசி அமராவதிக்குக் கல்வி கற்பித்து வரும்படி நம் சோழமன்னர் கட்டளையிட்டிருக்கின்றாரென நின் தந்தையார் எனக்குச் சொல்லினர். நயினார் பிள்ளை : அதனை மீண்டும் உனக்குத் தெரிவித்து, இன்னுஞ் சிறிது நேரத்தில் உன்னை அரண்மனைக்கு அழைத்துச் சென்று, அங்கே கன்னிமாடத்தின் பின்னேயுள்ள இளமரக்காவின் எழில்கெழு மண்டபத்தில் இளவரசிக்குப் பாடஞ் சொல்லுமிடத்தில் நின்னை விட்டு வரும்படி என் தந்தையார் என்னை ஏவியிருக்கின்றனர். அதனோடு இளவரசி நின்னைப் பார்க்கவும் நீ அவளைப் பார்க்கவும் கூடாதபடி நும்மிருவர்க்கும் இடையே திரையிடப்பட்டிருக்குமாம். அங்ஙனம் திரையிட்டது உடற்பழுதுற்ற இளவரசியை வெளியார் எவரும் பார்க்கலாகாது என்பதற்கே. அதுபோக, நீ தொட்டதற்கெல்லாம் பாட்டும் பாடும் இயற்கையினனாத லால், அரண்மனை இளமரக்கா அதன் மண்டபம் முதலியவை களின் அழகுகளைக் கண்டவுடனே பாட்டுப்பாடி விடாதே. அவட்குப் பாடஞ் சொல்லி வீட்டுக்குத் திரும்பும் வரையில் நீ கண்ணில்லாத ஒரு குருடனைப் போலவே நடந்து கொள்ளல் வேண்டுமென்று என் தந்தையார் வற்புறுத்திச் சொன்னார். சிறிது பிசகு கண்டாலும் நம் அரசர் பெருஞ்சீற்றங் கொள்ளுமியல்பினராதலால் மிகவும் கருத்தாக நீ நடந்து கொள்ளல்வேண்டும். அறிவிற் சிறந்த உனக்கு யான் வேறு மிகுதியாய்ச் சொல்ல வேண்டுவது என் உளது? நீ மேற்கொண்ட செயலை இறைவன் இனிது நிறை வேற்றுவானாக! அம்பிகாபதி : என் ஆருயிர்த் துணைவ! நீ இத்துணையன்புடன் எனக்கு நல்லுரை பகர்ந்ததற்கு மிகமகிழ்கின்றேன். நீ கற்பித்தபடியே யான் அரண்மனையில் முறை வழுவாது நடந்து அமராவதிக்குத் தமிழ்நூல் கற்பித்து வருவேன். பார்! பகலவன் மேல்பால் விரைந்திறங்குகின்றான். நாம் அரண்மனைக்குச் செல்வோம் வா. (இருவருஞ் செல்கின்றனர்) (சென்று அரண்மனை வாயில் காவலனை நோக்கி) நயினார் பிள்ளை : கடம்பா! இளவரசியார்க்குப் பாடஞ் சொல்ல இதோ ஆசிரியர் தில்லைவாணரைஅழைத்து வந்திருக்கின்றேன். இவர் நாடோறும் மாலைப் பொழுதில் இந்நேரத்திற்கு பாடஞ் சொல்ல வருவர். இவரை இளவரசியின் கன்னிமாடப் பூங்கா மண்டபத்திற்குத் தடை செய் யாமற் போகவிடு. வாயிலான் : நல்லது சுவாமி! நம்மன்னர் பெருமானும் முன்னமே எனக்கு இதே கட்டளை தந்திருக்கின்றார். அம்மண்டபத்திற்கு இவ்வழியே வாருங்கள் சுவாமிகாள்! (இருவரும் அவனைப் பின்றோடர்ந்து சென்று கன்னி மாடஞ் சேர்கின்றனர்) யார் அம்மா அங்கே? தத்தையா? வாயிலாள் : ஆம் ஐயா கடம்பரே. நம் இளவரசி யார்க்குப் பாடஞ் சொல்ல ஆசிரியர் தில்லைவாணர் வந்திருக்கின்றனரோ? அம்மையுந் தோழியும் அவரை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். யான் இவர்களைப் பூங்கா மண்டபத்திற்கு அழைத்துக் கொண்டு போகின்றேன். நீர் போகலாம். (வாயிலான் போய் விடுகிறான்) சுவாமிகாள்! இவ்வழியே வாருங்கள்! (அழைத்துப்போய் அம்மண்டபத்தில் விட்டு) இவ்விருக்கையில் அமருங்கள்! (நயினார் பிள்ளையைப் பார்த்து) இதோ இடப்பட்டிருக்கும் இத் திரையின் இப்பக்கத்தேயிருந்துதான் ஆசிரியர் பாடங்கற்பித்தல் வேண்டும். இளவரசியாருந் தோழியும் இதன் அப்பக்கத்தே யிருந்துதான் பாடங் கேட்பர். நாளை முதல் ஆசிரியர் என் உதவியை வேண்டாமலே இங்கு இந்நேரத்தில் வந்து பாடஞ்சொல்லிப் போகலாம். (திரைக்கு அப்பால் உள்ள தோழியை விளித்து) அம்மா நீலம்! இதோ ஆசிரியர் தில்லைவாணரை நம் அமைச்சரின் மகன் நயினார்பிள்ளை அழைத்து வந்திருக்கிறார். எனக்கு யாது கட்டளை? தோழி : ஏடி தத்தே! இதோ! இளவரசியாரை அழைத்து வருகின்றேன். நீ போகலாம். வாயிலாள் : அப்படியே அம்மா. இளவரசியார் நீடு வாழ்க! (திரும்பிப் போகையில் தனக்குள்) ஆ! இவ்வளவு பேரழகு வாய்ந்த இவ்விளைய ஆசிரியர் தில்லைவாணர் எந்த ஊரி லிருந்து வந்தவரோ! மிக்க வனப்புடைய மெழுகுபாவையை யொத்த நம் இளவரசியும் இவரும் ஒருவரை யொருவர் காணநேர்ந்தால் ஒருவர்மேலொருவர் காதல் கொள்ளா திருப்பரோ? ஆதலால் தான் இருவர்க்கும் இடையே திரையிட்டு வைத்திருக்கின்றனர் போலும்! இது நல்லதோர் ஏற்பாடே! அம்பிகாபதி : (தன் நண்பனைப் பார்த்து மெல்லிய குரலில்) அருமை நண்ப! எனக்குரிய பெயரால் என்னைக் குறிப்பிடாமல், தில்லைவாணர் என்னும் பெயரால் நீயும் இங்குள்ளவர்களும் என்னைக் குறிப்பிடுதல் ஏன்? நயினார் பிள்ளை : அதைப்பற்றி என் தந்தையாரை முன்னமே கேட்டேன். அவர் அதன் காரணத்தைச் சொல்ல மறுத்தனர். ஈதெல்லாம் ஏதோ ஒரு சூழ்ச்சியாக இருக்கின்றது. அகலா தணுகாது தீங்காய்வார் போல்க, இகல் வேந்தர்ச் சேர்ந் தொழுகுவார் என்று தெய்வத் திருவள்ளுவர் கற்பித்தபடி நாம் இங்கே முறை தவறாது நடந்து கொள்ளுதலைக் கருதியே உனக்கு இப்புனைவுப் பெயர் வைக்கப்பட்டிருக்கின்றதென எண்ணுகின்றேன். என் தந்தையார் உனது நன்மையின் பொருட்டாகவே இங்ஙனஞ் செய்திருக்கின்றாரென்ப தென் நம்பிக்கை ஆகையால், அவர் கட்டளை தந்துள்ளபடி நீ நடக்குமாறு உன்னை மிகவும் வேண்டிக்கொள்கின்றேன். அம்பிகாபதி : ஓ நண்பா! நீ அங்ஙனம் என்னை வேண்டல் எற்றுக்கு? கரும்பு தின்னக் கூலியா? நின் தந்தையார் கூர்த்த அறிவும் எல்லார்க்கும் நன்மையே செய்யும் ஈர நெஞ்சமும் உடையர். அவர் செய்திருக்கும் ஏற்பாட்டில் எனது நன்மையும் உள்ளடங்கி நிற்கும்; அதிற் சிறிதும் ஐயமில்லை. (அமராவதியுந் தோழியுந் திரைக்கு உட்புறத்தே வந்து) அமராவதி : (உள்ளிருந்தபடியே) ஆசிரியர் தில்லைவாணர்க்கு எனது புல்லிய வணக்கம். அம்பிகாபதி : (திரைக்கு வெளியிலிருந்தபடியே) இளவரசியார் கல்வியிற் சிறந்து பல்லூழி இனிது வாழ்க! அமராவதி : நயினார் பிள்ளை! நும் தந்தையார் அன்னையார் முதலியோருடன் நலமாயிருக்கின்றீரா? நயினார் பிள்ளை : அம்மணி! தங்களருளால் அனைவேமும் நலமுடன் வாழ்கின்றோம். அம்பிகாபதி : இளவரசியார் இதுகாறும் பயின்றுள்ள நூல்கள் இன்னவை யென்றறிய விரும்புகின்றேன். அமராவதி : இலக்கியத்திற் பதிணெண்கீழ்க் கணக்கும் சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி திருத்தொண்டர் புராண மும்; இலக்கணத்தில் தொல்காப்பியம் எழுத்துஞ் சொல்லும் இறையனாரகப் பொருள் யாப் பருங் கலக்காரிகையும் பயின்றிருக்கின்றேன். இனித் தொல்காப்பியப் பொருளிலக்கணமும் புறநானூறுந் தொடங்கல் வேண்டும். அம்பிகாபதி : இளவரசியார் பயின்றுள்ள நூல்களில் தாம் அடைந்திருக்கும் புலமையின் அளவை யான் தெரிந்து கொண்டால்தான் அதற்கேற்ப மற்றைப் பெருநூல்களை யான் கற்பித்தல் கூடும். அமராவதி : அங்ஙனமே தாங்கள் தெரிந்து கொள்ளலாம். அந்நூற் பொருள்களைப்பற்றித் தாங்கள் வினாவுகின்றவைகளுக்கு யான் தெரிந்தமட்டில் விடைகூறுகின்றேன். அம்பிகாபதி : சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, திருத்தொண்டர் புராணம் என்னும் நான்கு காப்பியங்களின் ஒற்றுமை வேற்றுமைகளையும் ஏற்றத் தாழ்வுகளையுஞ் சிறிது எடுத்துக்காட்டுங்கள்! அமராவதி : இதுமிகப் பெரிய வினா; என் அறிவினளவுக்கு மேற்பட்டது. ஆயினும், ஆசிரியர் வினாவியதனால் விடை சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் நம் தமிழ் நாட்டு மேன் மக்கள் சிலரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை நிகழ்ந்தபடியே மெய்யாக வைத்துச் சுவைபடுத்திக் கூறுகின்றன. இவ்வகை யில் மணிமேகலையைவிடச் சிலப்பதிகாரமே சிறந்ததெனக் கருதுகின்றேன். மேலும், மணிமேகலை ஒரே தன்மையவான அகவற்பாக்களினால் ஆக்கப்பட்டிருக்கின்றது. சிலப்பதிகாரமோ ஆங்காங்கு நிகழும் நிகழ்ச்சிகளில் ஈர்ப்புண்டு மக்கள் உள்ளம் எவ்வெவ்வாறு அசைவுறுகின்றதோ, அவ்வவ்வ ற்றிற் கிசைந்தபடி யெல்லாம் அகவற்பா, கலிப்பா வஞ்சிப்பா முதலான பலதிறப் பாக்களும் இசை தழுவி யாக்கப்பட்டுத் தான் கூறுங் கதை நிகழ்ச்சிகளை நங் கண்முன்னே காட்டிப் பலவகையுணர் வெழுச்சிகளால் நம்மை யின்புறுத்துந் தகையதாய் விளங்கு கின்றது. உண்மையை உள்ளபடி யெடுத்துச் சொற்சுவை பொருட்சுவை துளும்பத் தொடுத்து இசைத்தேன் துளிக்க மிழற்றும் முறையிற் சிலப்பதிகாரமும் திருத்தொண்டர் புராணமும் ஒருங்குவைத் தெண்ணற்பாலன வென்பது சிறியேன் கருத்து. அம்பிகாபதி : இளவசியாரின் கருத்து மிகவும் பொருத்தமாயிருக்கின்றது. ஆயினுஞ், செயற்கரிய செய்கைகளால் தாம் சிவபிரான் திருவடிக்கண் வைத்த பேரன்பிற் சிறிதும் பிறழாமையினைத் தெருட்டிய மெய்யடியார் வரலாறுகள் எல்லா நலனுந் தோய்ந்தொளிரக் கொண்டு. ஆசிரியர் சேக்கிழார் அருளிச் செய்த திருத்தொண்டர் புராணந் துலங்கா நிற்கின்றது; மற்றுச் சிலப்பதிகாரமோ எம்போன்ற மக்களின் வாழ்க்கை வரலாற்றினை நுவலா நிற்கின்றது; இது தமிழ் நலம் ததும்ப இயற்றப்பட்ட தொன்றாயிருப்பினும் இதனை அதற்கு ஒப்பாக உரைத்தல் கூடுமோ? அமராவதி : ஆம், அதற்கு இதனை ஒப்பாக உரைத்தல் பெரும்பாலும் இசையாததேயாம். ஆயினுஞ், சுவாமி! காரைக்காலம்மையார், மங்கையற்கரசியார், திலகவதியார், பரவையார், சங்கிலியார் முதலான தெய்வக் கற்பரசிகளின் வரலாறுகளை ஆசிரியர் சேக்கிழார் நுவலுமாறு போலவே, கண்ணகி, மாதவி என்னுங் கற்பணங்குகளின் வரலாறுகளை ஆசிரியர் இளங்கோவடிகளும் எமது நெஞ்சம் நெக்கு நெக்குருக இயம்பி இருக்கின்றார். அவ்வாற்றால் அவ்விருகாப்பியங்களுந் தம்முள் ஒக்கு மன்றோ? அம்பிகாபதி : இளவரசியார் அவ்விரண்டுக்குமுள்ள ஒற்றுமையினை எடுத்துக்காட்டிய நுட்பம் பெரிதும் பாராட்டற்பாலது. இனி மெய்ந்நெறி பிறந்தவர்களுங் கற்பிற் சிறந்த காதன் மனைவியர்க்குப் பிழை செய்தொழுகினவர்களும் முன்னர் ஒறுக்கப்படினும் பின்னர் அருள் செய்யப் பட்டமையினை அப்பர், கூன்பாண்டியர், சுந்தரமூர்த்திகள் முதலாயினார் பால் வைத்துச் சேக்கிழார் கூறுமாப்போல் இளங்கோவடிகள் கூறிற்றிலரே! அமராவதி : அப்பர், கூன்பாண்டியன், சுந்தரமூர்த்திகளெல்லாம் எந்த நிலையிலுஞ் சிவபிரான் றிருவடிக்கட்பதிந்த பேரன்பிற் சிறிதும் பிறழாதவர்கள்; ஆதலால், அவர்கள் தாஞ் செய்த பிழைக்காக முன்னர் ஒறுக்கப் படினும், பின்னர் அருள் செய்யப்பட்டார்கள். மற்றுக் கோவலனும், பாண்டியன் நெடுஞ்செழியனும் அவர்போல் இறைவன்பாற் பதிந்த மெய்யன்பினராதல் காணப்படாமையின், அவர் ஊழ்வினையின் பாலராய்க்கிடந்து ஒறுக்கப் பட்டு மடிந்தனர்! அவர் அருளின் பாலராய் நில்லாமையால், அவரை ஊழ் வினை உருத்து வந்து ஊட் டியதென இளங்கோவடிகளும் இயம்பி இருக்கின்றனர். அம்பிகாபதி : அதுதான் உண்மை! இவ்வேற்றுமையிலும் அவ்விரண்டு காப்பியங்களும் ஓர் ஒற்றுமையுடையனவாயே திகழ்கின்றன. அது நிற்க, திருத்தொண்டர் புராணத்திற் சிவபிரானுக்கு முதன்மை சொல்லப்பட்டிருத்தல் போலச் சிலப்பதிகாரத்திற் சொல்லப்பட்டுள்ளதோ? அமராவதி : சொல்லப்பட்டிருக்கின்றது; சுவாமி! காவிரிப் பூம்பட்டினத்திலிருந்த தெய்வங்களின் திருக்கோயில் களைச் சொல்லுங்காற் பிறவாயாக்கைப் பெரியோன் கோயிலும் என்று சிவபிரான் கோயிலையே ஆசிரியர் இளங்கோவடிகள் இந்திர விழவூரெடுத்த காதையில் முதற்கண் வைத்துரைக்கின்றார். மற்றைத் தெய்வங்களெல்லாம் பிறந் திருப்பனவாதலால், அவை உண்மையில் தெய்வங்களாகா; அதனால் அவை பெரியனவும் ஆகா; மற்றுச் சிவபெருமா னொருவனே பிறவா ஒளியுரு வினனாகலான் அவனே உண்மையான தெய்வமாவன், அதனால் அவனே பெரியன் (மகாதேவன்) ஆவன் என்று அச்சொற்றொடரில் நன்கு அறிவுறுத்தியிருக்கின்றார். இத்தகைய மெய்ம்மைச் சொற் றொடரால் மற்றைத் தெய்வங்களை வேறெங்கும் அவர் ஓதிற்றிலர். அம்பிகாபதி : உண்மை! உண்மை! சிலப்பதிகாரத்தில் இன்னும் பல இடங்களிலும் இளங்கோவடிகள் சிவபிரான் முதன்மை கூறியிருப்பினும், ஈதொன்றே போதும். அது நிற்க, திருத்தொண்டர் புராணத்திற்குஞ் சீவகசிந்தாமணிக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளையுஞ் சிறிது நுவலுங்கள்! அமராவதி : சிந்தாமணி, சீவகன் தன் கலையுணர்வின் திறத்தாலும், போர்த்திறத்தாலும், நுண்ணறிவாலும் எட்டு மனைவியரை மணந்த ஒரு வாழ்க்கை வரலாற்றைச் சொல்கின்றதே யன்றிச், செயற்கரிய செய்த பெரியார் வரலாறுகளைத் திருத்தொண்டர் புராணம்போற் சொல்கின்றிலது. மேலும், மக்களை மேல் நிலைக்கண் உய்க்குந் தெய்வ அருள் விளக்கமுஞ் சிந்தாமணியிற் காணப்படுகின்றிலது. அதுவல்லாமலுஞ் சீவகன் வரலாறு உண்மை என்பதற்குச் சான்று மில்லை பெரியபுராணம் மெய்யடியார் வரலாற்றின் உண்மை யினை உள்ளபடியே நுவல்வது; அவ்வரலாறுகளின் உண்மைக்குச் சான்றுகள் மிகுதியாய் உள்ளன. உண்மையே கூறுந் தமிழ் வழக்கிற்குச் சீவகசிந்தாமணி சிறிது ஒவ்வாது. அம்பிகாபதி : இரண்டுக்கும் வேற்றுமை சொன்னீர்கள்; ஒற்றுமை ஏதேனும் உண்டா? அமராவதி : வல்லோசையின்றித் தமிழ்ச்சுவை துளும்பும் இனிய மெல்லோசை வாய்ந்த நடையில் ஆக்கப்பட்டிருத்தலின் சிந்தாமணியுந் திருத்தொண்டர் புராணமும் ஒற்றுமையுடைய வெனவே உரைக்கலாம். நுணுகி ஆராய்ந்து பார்த்தால் இந்த வகையிலும் கூடப் பெரிய புராணமே சிந்தாமணியிலுஞ் சிறந்து திகழ்கின்றது. அம்பிகாபதி : ஆம், ஆம். நடையழகிற் சிந்தாமணியை விடச் சிலப்பதிகாரமே பெரியபுராணத்திற்கு ஒப்பாக நிற்கற்பாலது. பொருண் மாட்சியிலோ பெரியபுராணத்திற்கு ஒப்பாகவோ உயர்வாகவோ நிற்கவல்ல காப்பியம் ஏதுமேயில்லை. இளவரசியார் இலக்கியத்துறையில் இத்துணை ஆழமாக இறங்கி அவ்வந் நூற்றன்மை ஆய்ந்தெடுத்தறிந்திருப்பது மிகவும் வியக்கற்பாலது. அது நிற்க, இலக்கணத்திலும் ஒன்று வினவி அதற்கு மேல் இளவரசியார்க்கு வருத்தங் கொடாமல் நிறுத்துகின்றேன். அமராவதி : ஆசிரியர்க்கு விடை கூறுவதிற் சிறிதும் அடியேற்கு வருந்தந் தோன்றவில்லை. அம்பிகாபதி : உவந்தேன். ஆசிரியர் தொல்காப்பியனார் ஆறறிவுடைய மக்களை மட்டுமே உயர்திணை எனக்கொண்டு, உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே, அஃறிணை என்மனார் அவரல பிறவே எனக் கூறினார். இக்காலத்தார்க்கு நன்னூல் செய்த பவணந்தியாரோ, மக்கள் தேவர் நரகர் என்னும் முப்பாலாரையும் உயர் திணையெனக்கொண்டு மக்கள் தேவர் நரகர் உயர்திணை, மற்றுயிருள்ளவும் இல்லவும் அஃறிணை எனக் கூறு கின்றார். இவ்விரண்டில் எது தங்கட்குப் பொருத்தமாகக் காணப்படுகின்றது? அமராவதி : இலக்கணமென்பது எல்லாச் சமயத் தார்க்கும் பொதுவான நிலையில்நின்று, ஒரு மொழியின் சொற்பொருள் அமைதிகளைக் கண்ணாற்கண்டு, அறிவான் ஆராய்ந்து காட்டுவது. கட்புலனாகாதவைகளைச் சிறுபான்மை சொல்ல நேர்ந்தால் மொழியமைதியினளவுக்கு வேண்டுந் துணையே அது கூறுதல் வேண்டும். இந்த முறையிற் பார்த்தால், ஆறறிவுடைய மக்களே உயர்திணையென்பது எல்லாராலுங் கட்புலனாக அறியப்பட்ட உண்மையாகும். மற்றுத், தேவர் நரகர் என்பார் எல்லாராலுங் கட்புலனாற் காணப்பட்டவரல்லர்; அதனால், அவரை உயர்திணை என்று கொள்வது எல்லார்க்கும் உடன் பாடன்று. ஆகவே, தொல்காப்பியனார் மக்களை மட்டும் உயர்திணையென்று வரையறுத்துரைத்ததே சாலவும் பொருத்தமுடைத்தெனக் கருதுகின்றேன். அம்பிகாபதி: இளவரசியாரின் ஆராய்ச்சி யறிவின் திறம் மிகவும் பாராட்டற்பாலது. இனி, இப்போது புற நானூற்றின் கடவுள் வணக்கச் செய்யுளைத் தொடங்கலாம். (அங்ஙனமே அமராவதி அதனைப் படிக்க அம்பிகாபதி அதற்குப் பின்னர்ச் சில செய்யுட்களுக்கும் உரை சொல்லி விடைபெற்று நண்பனுடன் இல்லஞ் செல்கின்றான்) மூன்றாம் நிகழ்ச்சி : மூன்றாங் காட்சி களம் : தஞ்சைச் சிவபிரான் திருக்கோயில் நேரம் : காலை (சோழன், சோழன் மனைவி, அவர் மகள் அமராவதி, குலசேகரபாண்டியன், அமைச்சர், காவலாளர் முதலியோர் வருகின்றனர்.) சோழன் : இவ் விளவேனிற்காலத் துவக்கத்தின் காலைவேளை பனிக்காலக் கழிவில் தோன்றியிருத்தலால், தண்ணெனும் புனலிற் றலைமுழுகி இறைவனைத் தொழச்செல்வார்க்கு ஈது எவ்வளவு இனியதாய்க் காணப்படுகின்றது! சிறிதே மூடிய பனியினைக் கீறிக்கொண்டு புறப்படும் பகலவன், அரக்கரின் மாயவலையினைக் கிழித்துக் கொண்டு புறப்படுந் திருமாலின் திகிரிப்படைபோல் திகழ்தலைப் பார்ன்மிகள்! அமைச்சர் : ஆம் பெரும! இக்கதிரவனது வட்ட வடிவந் தேன் முற்றிய தேனடை போலவும், அதிலிருந்து பாயுங் கதிரொளிகள் அவ்வடை யிலிருந்தொழுகுந் தேன் போலவும், இரவெல்லாங் கூடுகளில் அடங்கிக் கிடந்து பசியோடு எழும் பல்வகைப் பறவைகளும் அவ்வொளியினை நோக்கிப் பறந்து செல்வது அத்தேன் ஒழுக்கினைப் பருகச் செல்வது போலவுங் காணப்படுகின்றன. அரசி : அமைச்சர் இத்தோற்றத்தினை உவமித்துச் சொல்லிய பான்மையில் இயற்கைக் காட்சியே ஓர் அழகிய ஓவியமாய்த் துலங்கா நிற்கின்றது! மேலும் பாருங்கள்! கதிரவன் ஒளிதோய்ந்த இக்கோயிற் கொடுமுடிமேற்காணுந் திருக்குட மானது, வானவர் பாற்கடலிற் பெற்ற குடத்தின் அமிழ்தமானது என்றுமே சாவாநிலையினைப் பயப்பதன்று; மற்று என்னகத்தே நிரம்பிய அமிழ்தமோ சிவபிரான் திருவருட் பேரமிழ்தமாகும்; அதனை நீவிர் பருகி என்றும் அழியா அருட் பேரின்பத்தைப் பெரும் பொருட்டே இக்கோபுரமாகிய பூதத்தின் தலைமேற் சுமக்கப்பட்டு வானளாவி நிற்கின்றேன் எனப் புகன்று திகழ்வதுபோற் காணப்படுகின்றது! அமைச்சர் : ஆ! ஆ! யாங்கள் கூறிய புனைந்துரையினும், அரசியார் இயம்பிய புனைந்துரையே, இறைவனை வழிபடச் செல்லும் எமக்கு இறைவன்றன் அருள் வழக்கத்தினை நினைப்பித்து, இந்நேரத்திற்குச் சாலச்சிறந்த தாய்த் தோன்றுகின்றது! கோமாளி : ஐயயோ! இந்தக் கோவுரம் பூதமா? இதின் வாய்க்குள்ளவா நாம்ப எல்லாம் நுளையப் போறோம். அம்மா! மாராசா! நான் வரமாட்டேன். என்னை விட்டுடுங்கோ! என் பெண்டாட்டிக்கி யாருதுணை? எனக்குச் சாமியும் வேணாம் பூதமும் வேணாம். (எல்லாருஞ் சிரிக்கின்றனர்) சோழன் : ஏடா துத்தி! இது கோபுரந் தானடா, பூதம் அன்று; பூதம் போற் பெரிய வடிவமாகக் காணப்படுவதால் அரசி அங்ஙனஞ் சொன்னாள். உனக்குக் கண் இல்லையா? நன்றாய்ப்பார்! அஞ்சாதே! கோமாளி : (தன் கண்களைத் தடவிப்பார்த்து) ஆமா, மாராசா! எனக்குக் கண் இருக்கு, இருக்கு, ஆமா இது கோவுரந்தான். அது மேலே உள்ள குடத்திலே அமுதம் இருக்கு என்று அம்மா சொன்னாங்களே; அதிலே எனக்கு (குடங்கையைக் காட்டிக் கெஞ்சுகின்றான்) சோழன் : நாம் கோவிலினுள்ளே சென்று சிவபிரானையும் பிராட்டியையும் வணங்கியதும், முக்கனியுங் கற்கண்டுந் தேனும் பாலுங் கலந்த தேவாமிர்தம் உனக்கு ஏராளமாய்க் கிடைக்கும். (கோமாளி முடங்கிய கையை விலாப்புடையில் அடித்துக் கொண்டு நாவைச் சுவைத்துக் கொண்டும் வர, எல்லாரும் நகைத்தபடியாய்க் கோயிலினுள்ளே சென்று இறைவனையும் இறைவியையும் தொழுது நிற்கக், குருக்கள் வழிபாடு நடத்த, முடிவில்) சோழன் : (அமராவதியை நோக்கி) அம்மா அமராவதி! நீ இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் நன்கு பயின்றுவரும் பயிற்சியினை இங்கே கடவுள் முன்னிலையிலும் நம் அரண்மனையிலும் பலகாற் பாடியும் ஆடியுங் காட்டியதனை நாங்கள் கண்டு களித்திருக்கின்றோம் ஆனால், இங்கே வந்திருக்கும் நின் அருமை மாமன் குலசேகர பாண்டியன் அவற்றைக் கேட்டதும் பார்த்ததும் இல்லை. ஆதலால், அம்மையப்பர் மேல் நீயே ஒரு கலிப்பாட்டு இயற்றி அதனை யாழில் இட்டுப் பாடி அதனை நடித்துங்காட்டி எங்களை மகிழ்வி. (குலசேகரன் அமராவதியின் பாட்டையும் ஆட்டத்தை யுங் காணவுங் கேட்கவுந் தனக்கெழும் பேரவாவினை முகத்தாலுங் கையாலுங் குறிப்படுகின்றான்; எல்லாரும் அங்ஙனமே; ஆனால், அமராவதி நாணத்துடன் நிற்க) அரசி : அம்மா! குழந்தே ! இதற்கேன் இவ்வளவு வெட்கம்! குலசேகரன் என்னுடன் பிறந்த என் தம்பிதானே. அவன் நீள உன்னுடன் பழகாவிட்டாலும் அவன் உனது கல்வித் திறமையைக் காணுதற்கு எல்லா வகையிலும் உரிமை யுடையவனே. ஆகையால், உன் தந்தையார் சொல்கிறபடியே செய்! (அமராவதியின் முகத்தை யுயர்த்தி நெற்றியைத் துடைக்க) அமராவதி: (தாய் தந்தையரை வணங்கி) அப்பா விரும்பியபடியே செய்கிறேன் அம்மா! (எல்லாரும் கடவுளெதிரே அமர, அமராவதியும் அமர்ந்து யாழைக் கையிலெடுத்துத் தான் இறைவன்மேல் இயற்றிய இசைப்பாவினை அதிலிருந்துப் பாடுகின்றாள்) தேவிற் சிறந்த சிவனே செழுங்குவளைப் பூவிற் பொலிந்த புகழுமையைப் புல்கினையே பூவிற் பொலிந்த புகழுமையைப் புல்கிலையேல் நாவிற் புகலுலதற்கு நல்லுயிரொன் றுண்டாமோ? மங்கையொரு கூறுடையாய் மாதவனாய் நீயமர்ந்து பொங்கு சடையும் புலித்தோலும் பூண்டனையே பொங்கு சடையும் புலித்தோலும் பூண்டிலையேல் இங்குளார் எல்லாம் இணைவிழைச்சில் இழிகுவரே! முப்புரங்கள் செற்றனையோ மும்மலங்கள் செற்றனையோ எப்புரமும் எரிக்கவல எந்தாய்க் கெதுசிறப்பு? எப்புரமும் எரிக்கவல எந்தாய்க் கிரண்டொன்றாம் அப்புரங்கள் அழித்ததனை அருஞ்செயலாய் அறைகு வரோ? குலசேகரன் : ஆ! ஆ! எளிதாக இனிதாகத் தமிழ்ப் பாட்டுக்கட்டியது மல்லாமல், அமராவதி அதனை யாழில் இசைத்துப் பாடியதும் என்னறிவையே பிறிதாக்கிவிட்டது! சோழன் : (மகிழ்ந்து) மைத்துன! இப்பாட்டின் பொருளைப் புதல்வி நடித்துக் காட்டுவதும் நன்றாயிருக்கின்றதா வென்று பாருங்கள்! (அமராவதியை நோக்கி) அம்மா அமராவதி! நீ பாடிய இவ்வினிய பாட்டின் பொருளைச் சிறிது நடித்துக் காட்டி எல்லாரையும் உவப்பி! (அமராவதி அங்ஙனமே நடிக்க எல்லாரும் மிக மகிழ்கின்றனர்) குலசேகரன் : அமராவதியின் நடனக்காட்சி பேரின்பக் காட்சியாகவே விளங்குகின்றது! இதற்குமேல் எனக்கு ஏதுஞ் சொல்லத் தெரியவில்லை! சோழன் : மைத்துன! நீங்கள் மீண்டும் மதுரை செல்லும் வரையில் இடைஇடையே கன்னிமாடத்திற் சென்று அமராவதியின் முத்தமிழ்ப் பயிற்சியையுங் கண்டுங் கேட்டுங் களிக்கலாம். குலசேகரன் : அதற்காக உங்களை மிகவும் வணங்கு கின்றேன். அமராவதியின் ஆடல் பாடல்களைக் கண்டு கேட்டுக் களிப்பதினும் வேறெனக்கியாது வேண்டும்?(எல்லாரும் அம்மையப்பரைத் தொழுதபின் குருக்கள் அரசன் முதலியோர்க்கெல்லாம் திருநீறளித்து அமராவதிக்கு அஃதளிக் கையில்) குருக்கள் : முத்தமிழ்ச் செல்வமே! முத்தமிழையுமே முக்கண்ணாய்க் கொண்ட சிவபிரான் பிராட்டி திருவருளால் நீ நினக்கினிய காதலனை விரைவில் பெற்று இனிது வாழக் கடவாய்! (கடவுட்குப் படைத்த பூ பழம் முதலியன பெற்றுக் கொண்டு எல்லாரும் அரண்மனைக்கு ஏகிவிட்டனர்) மூன்றாம் நிகழ்ச்சி : நான்காம் காட்சி களம் : கம்பரது மாளிகை காலம் : மாலை (அம்பிகாபதி நயினார் பிள்ளையை வரவேற்கின்றான்) அம்பகாபதி : வருக! வருக! நண்ப நயினார் பிள்ளை, நினது வருகைக்காகவே காத்துக் கொண்டிருந்தேன். யான் அரண் மனைக்குச் செல்லும் நேரம் அணுகுகின்றது. என் தங்கை காவேரியும் அவள் தோழி பச்சையும் நின்னிடம் பாடங்கேட்ப தற்காக மேன் மாளிகையில் விளக்கேற்றி வைத்துக் கொண்டிக்கின்றனர். இன்றைக்கேன் இவ்வளவு நேரங் கழித்து வந்தாய்? நயினார் : சென்ற பதினைந்து நாட்களாக என் தந்தை யார்க்குச் சிறிதும் ஒழிவில்லை. அரசன் பணிபுரிவதிலேயே ஈடுபட்டிருந்தார். இன்றைப் பிற்பகலிலேதான் அவர்க்கு ஓய்வு கிடைத்தது. நீ அமராவதிக்குப் பாடந் துவங்கியதிலிருந்து நடந்தவைகளையும். யான் நின் தங்கைக்குப் பாடஞ் சொல்லி வரும் வகைகளையும் விரிவாய்ச் சொல்லும்படி என்னைக் கேட்டார். யான் அவைகளைச் சொல்லி முடித்துவர நேரம் ஆயிற்று. அம்பிகாபதி : யான் பாடஞ்சொல்லி வருவதைப் பற்றி அமராவதிக்கும் அவள் தந்தைக்கும் நல்லெண்ணம் உண்டா? நின் தந்தையார் யாது சொல்லினர்? நயினார் : பாடஞ் சொல்லும் உனது திறமையைப் பற்றி அவ்விருவரும் மிகவும் பாராட்டிப் பேசியதாகவே என் தந்தையார் மகிழ்வுடன் கூறினார். உனது திறமையை எவர்தாம் பாராட்டாதிருப்பர்? உன்னைப்போற் பரந்த நூலறிவும் நுண்ணறிவும் இல்லாத யான் இயற்கையே கூர்த்த அறிவு வாய்ந்த நின் தங்கைக்குப் பாடஞ் கற்பிப்பது எனக்கே நாணமாயிருக்கின்றது. அம்பிகாபதி : அங்ஙனம் உரையாதே. கற்பிக்குந் திறமையில் நீ சிறிதுங் குறைந்தாய் அல்லையென்றும், ஆனாலும் நின் திறமையை நீயே யறியாமற் கூசுகின்றனை என்றும் என் தங்கை பகர்கின்றாள். நீ இரு. நான் அரண் மனைக்குப் போய் வருகின்றேன். (போய் விடுகின்றான்) (நயினார்மேன் மாளிகையிற் செல்லக் காவேரி தோழியுடன் போந்து) காவேரி : ஆசிரியர்க்கு வணக்கம். இருக்கையில் அமருங்கள்! இன்றைக்கு நீங்கள் இவ்வளவு நேரஞ் சென்று வருவதற்கு இடையூறு ஏதோ? (தோழி போய் விடுகிறாள்) நயினார் : சென்ற இரண்டு கிழமைகளில் என் தந்தை யார்க்கு இந்தப் பிற்பகலிற்றான் ஓய்வுநேரங்கிடைத்தது. நின் தமையன் இளவரசி அமராவதிக்குக் கற்பிக்கும் வகைகளையும் யான் நினக்குக் கற்பிக்கும் வகைகளையும் விளக்கமாய்ச் சொல்லும் படி என் தந்தையார் கேட்டார்; அவற்றை விரிவாய்ச் சொல்லிவர நேரமாயிற்று. காவேரி : ஏந்தல்! என் தமையன் இளவரசிக்குப் பாடஞ் சொல்லி வருவதில் எனக்கு மனவமைதியில்லை. நயினார் : ஏன்? அதில் யாது தொல்லை? காவேரி : இளவரசி சொல்லிமுடியாப் பேரழகியாம், அதனுடன் நுண்ணறிவும் முத்தமிழ்த் தேர்ச்சியும் வாய்ந்தவளாம். என் தமையனும் பேரழகுவாய்ந்தவர்; கல்வியில் நிகரற்ற புலமையுடையவர்; கூரிய அறிவினர்; இன்குணத்தினர் என்பதை நீங்களே நன்கறிவீர்கள். இத்தகைய இருவரும் ஒருவரையொருவர் காணநேர்ந்தாற் பிரியாக் காதல் கொள்வரே என்று நடுங்குகின்றேன். நயினார் : அமராவதி பேரழகி யென்பதை யான் அறியேன். நினக்கு யார் சொன்னார்? காவேரி : என் தந்தையாரே எனக்குச் சொன்னார். ஆனால், அதனை உன் தமையனுக்குச் சிறுதுந் தெரிவியாதே என்றும் வலியுறுத்திக் கூறினார். நயினார் : ஆ! அப்படியா! இப்போது எல்லாச் சூழ்ச்சியும் பட்டப்பகல்போல் வெட்டவெளியாய் விட்டது. காவேரி : ஐயனே! என்ன சூழ்ச்சி? நயினார் : அமராவதி கைகால் சிறிது முடமானவள் என்றும், பார்வைக்கு அழகில்லாத முகத்தனள் என்றும், அதனால் அவளெதிரேயிருந்து பாடஞ் சொல்லாமல் அவளைத் திரை மறைவில் வைத்து அம்பிகாபதி பாடஞ் சொல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதென்றும் என் தந்தையார் சொன்னார். எனக்கும் அவர் உண்மையை மறைத்தது, அம்பிகாபதிக்கு யான் ஆருயிர் நண்பன் என்பதனாற் போலும்? காவேரி : என் தமையன் றன் இயற்பெயர் கூடத் தெரியாமல் மறைவுப் பெயர் பூண்டு, திரைமறைவிலிருக்கும் இளவரசிக்குப் பாடங்கற்பிக்க ஏற்பாடு செய்திருப்பதை யான் முன்னமே அறிவேன்! நயினார் : உன் தமையனே அதனை உனக்குத் தெரிவித்தனனோ? காவேரி : என் தமையன் அதனைத் தெரிவிப்பதற்கு முன்னமே, என் தமையன்பால் இடையிடையே வந்துபோம் அரசிளைஞன் விக்கிரமன் அதனை எனக்குத் தெரிவித்து, அம்மறைபொருளை எவருக்கும் வெளிவிடலாகாதென்று உறுத்திச் சொன்னான். நயினார் : அங்ஙனமாயின் உனக்கும் அரசிளைஞனுக்கும் நெருங்கிய உறவு உண்டாய்விட்டது போலும்! காவேரி : அங்ஙனங் கருதிவிடலாகாது. அரசிளைஞன் என் தமையனின் எழில் நல அறிவு நலங்களைக்கண்டு அகத்தே அழுக்காறு மிகுதியும் உடையனென்பது குறிப்பால் அறிந்தேன். ஆயினும் புறத்தே அவர்பால் உண்மையன் புடையவன் போல் வந்து ஒழுகுகின்றான். எதன் பொருட்டு? நயினார் : உன் பொருட்டே அரசச் செல்வமும் அழகும் வாய்ந்த அவ்விளைஞன் உன் பொருட்டு இங்கு வருவது உனக்கொரு பெரும் பேறன்றோ? காவேரி : ஐயனே! அங்ஙனம் உரையாதீர்கள்! பொன்னை உருக்கித்திரட்டிய அழகுப் பாவை காண்பார்க்கு எவ்வளவு அழகாய் இருக்கின்றது! அதன் உடம்பே பொன்னானால் அதனின் மிக்க செல்வம் அதற்கு வேறுண்டோ? அரசிளைஞனும் அதனையே போல்வன்; ஆனால், அவனுக்குயிர் உண்டு, பொற்பாவைக்கு அஃதில்லை. நயினார் : ஓ! அவ்வாறாயின் அரசிளைஞன் நுண்ணறிவும் மென்குணங்களும் இல்லாதவன் என்று கருதுகின்றனையோ? காவேரி : என் தமையனுடனிருந்து அவருடைய விழுமிய குணநல அறிவு நலங்களிற் பழகிய எனக்கு அரசிளைஞனது கூட்டுறவு சிறிதும் இனியதாய்த் தோன்றவில்லை. ஒரு மானானது தான் பயின்ற மான் கூட்டத்தையே நாடு மல்லாது, தனக்கு முரணான மறப்புலியின் சேர்க்கையினை நாடுமோ? நயினார் : அவ்வாறாயின் அவன் ஏன் அடுத்தடுத்திங்கு வந்தலை கின்றான்? காவேரி : புதிதவிழ்ந்த முல்லை மலரின் நறுமணத்தை மிகுதிப்படுத்த நினைந்து அதனைக் கசக்கி நிற்கும் புல்லறிவாளனைத் தெருட்டுவார் யார்? நயினார் : அற்றேல், தன்மேற் காதல் கொள்ளும்படி அவன் உன்னை வலுக்கட்டாயம் பண்ணுகின்றனனோ! காதல் வலுக் கட்டாயத்தால் உண்டாவதன்று. வலுக்கட்டாயத் தால் உண்டாவது மனவெறுப்பே. அது போகட்டும். அழகும் அரசச் செல்வமும் உடைய இளைஞன் விக்கிரமனே நினது காதலைப் பெறுவதற்குத் தகுதியும் நல்வினையும் இல்லாதவனாய் விட்டாற், கட்டழகும் மனநலகுணநலங்களும் ஒருங்கு நிறைந்த நங்காய்! நின் காதலைப் பெறுதற்குத் தக்கார் எவருளரோ தெரியவில்லையே! காவேரி : அத்தகையவரைத் தெரிந்து கொள்ளாதது உங்கள் குற்றமே. (இது சொல்லி முகங் கவிழ்கின்றாள்) நயினார் : (சிறிது மனங்கலங்கி) அவரை யான் எங்ஙனந் தெரிந்து கொள்வேன்? காவேரி : (முகங்கவிழ்ந்தபடியே புன்முறுவல் செய்து) இக்கேள்வியினை என்னைக் கேளாதீர்கள்; உங்கள் நெஞ்சை நோக்கிக் கேளுங்கள்! நயினார் : (சிறிது நேரம் வாளா இருந்து) ஆம்! பெண்மணி! சென்ற பதினைந்து நாட்களாக என் நெஞ்சக் கண்ணாடியில் மறக்கொணாப் பேரழகு வாய்ந்த ஓர் இளம் பெண்ணின் உருவம் இடைவிடாது தோன்றி என்னை வாட்டி வருத்திக் கொண்டேயிருக்கின்றது! என் செய்வேன்! காவேரி : என்செய்யவேண்டும்? அப்பெண்ணின் உருவத்தை யொத்தவள் எவள் வெளியேயிருக்கின்றனளென்று தேடிக் கண்டுபிடியுங்களேன். நயினார் : அவனை யான் தேடிச் செல்லவேண்டுவதில்லை. மிக்க அண்மையிலே தான் இருக்கின்றனள். ஆனாலும், அவளது மனநிலையினைத் தெரியாமல் அவளை அணுக என் உள்ளம் நடுங்குகின்றது! காவேரி : அப்படியானால் அவள் இருக்குமிடத்தை நெருங்கி அவளது மன நிலையினைத் தெரிந்து கொள்ளுங்களேன், அவள் எங்கிருக்கின்றாள்? நயினார் : இதோ, இங்கேதான் இருக்கின்றாள். (என்று காவேரியினையே சுட்டிக் காட்டுகின்றான்) காவேரி : (அவன் சுட்டிக்காட்டியதனைப் பாராதவள் போல் எழுந்து) நான் இங்கிருப்பதனால் உங்கள் காதலியை அணுக அஞ்சுகிறீர்கள். நான் கீழே போய் வருகின்றேன். அவள் பாற் பேசி மகிழுங்கள் (என்று சொல்லிப்புறப்பட) நயினார் : என் ஆருயிர்ப் பாவாய்! நீயே யன்றோ என் நெஞ்சிற் குடிகொண்ட அப்பெண்மணி? (என்று அவளாடையைப் பிடித்திழுக்க) காவேரி : அடீ பச்சே! ஓடிவா! ஓடிவா! (என்று உரத்துக் கூவ, நயினார் பிள்ளை அச்சத்தால் நடு நடுங்கிச் சோர்ந்து சாய்ந்து விடுகின்றான்) பச்சை : (ஓடிவந்து பதறி) அம்மா! என்ன நேர்ந்தது? காவேரி : (மனங்கலங்கி) ஆசிரியர் எனக்கு நெடுநேரம் பாடஞ் சொல்லிக் கொண்டிருந்தமையாற் களைத்துச் சாய்ந்து விட்டார்! என் செய்வேன்! எனக்கு யாது செய்வதென்று ஒன்றுந் தோன்றவில்லையே! (இச்சொற்கள் செவியில் விழுந்தவுடன் நயினார் அச்சந் தீர்கின்றான்) பச்சை : அம்மா! அஞ்சாதே! இதோ குளிர்ந்த நீரும் மோருங்கொணர்ந்து அவரது களைப்பைத் தீர்த்து விடுகின்றேன். (அங்ஙனமே கொணர்ந்து நீரை முகத்தில் தெளித்து மோரைப் பருகக் கொடுக்கின்றாள். இதற்குள் அம்பிகாபதி வருகின்றான்) அம்பிகாபதி : (பதைத்து) அம்மா காவேரி! நயினார் பிள்ளை ஏன் களைப்புற்றிருக்கின்றான்? நயினார் : (முற்றுந் தெளிந்து) ஒன்றுமில்லை அம்பிகாபதி! இன்றைக்கு என் தந்தையாரிடம் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தமையாலும் அதனை யடுத்துக் காவேரிக்கு இலக்கணப் பாடங் கற்பித்துக் கொண்டிருந்தமை யாலுஞ் சிறிது களைப்புற்றேன். இவ்விருவருஞ் செய்த உதவியாற் களைப்பு முற்றிலுந் தீர்ந்து விட்டது. நான் வீட்டுக்குப் போய் வருகின்றேன். காவேரி : அண்ணா! ஆசிரியர் இந்த நிலைமையில் தனியே வீடு செல்லல் ஆகாது. யாராவது அவருடன் துணையாகச் செல்லல் வேண்டும். அம்பிகாபதி : யானே துணையாகப் போய் வருகின்றேன். நயினார் : வேண்டாம் அம்பிகாபதி! நீயும் அரண்மனைக்குப் போய் வந்தமையாற் களைப்பாகவே காணப்படுகின்றாய்! காவேரி : (நயினார்க்குக் கண்ணாற் குறி செய்து) அண்ணா! என் தோழி பச்சையே அவருடன் துணையாய்ப் போய் வரட்டுமே. அம்பிகாபதி : அப்படியானால் அவள் நயினாருடன் போய்வர ஏற்பாடு செய்! (காவேரி அப்பாற் போய்ச் சிறிதுநேரஞ் சென்று தோழியுடன் வந்து அவளைத் துணைவிடுக்க நயினார் அவளோடு வீடு செல்கின்றான்) நயினார் : (தன் வீட்டுள் நுழையுங்கால்) பச்சே! நீ என்னுடன் துணையாக வந்ததற்காக உனக்கும் உன் தலைவிக்கும் என் நண்பனுக்கும் நன்றி செலுத்துகின்றேன். நீ செவ்வனே வீடு போய்ச்சேர். பச்சை : பெருமானே! இதை என் தலைவி உங்களிடஞ் சேர்ப்பிக்கச் சொன்னார்கள்! (என்று ஓர் ஓலை நறுக்கை நீட்ட அவன் அதை மகிழ்வுடன் ஏற்க. அவள் அவனை வணங்கிப் போய்விடுகிறாள்) மூன்றாம் நிகழ்ச்சி : ஐந்தாங் காட்சி களம் : அமராவதியின் கன்னி மாடம். காலம் : காலை பத்து நாழிகை; குலசேகர பாண்டியன் வருகின்றான். குலசேகரன்:ஏடீ!தத்தே!யான்வருவதாகஇளவரசிக்குத் தெரிவி! (தெரிவித்து வந்து அவனைப்போக விடுகின்றான்) குலசேகரன் : இளவரசி நீடு வாழ்க! அமராவதி : மாமா! வாருங்கள்! அமருங்கள்! நீங்கள் ஊரிலிருந்து வந்த பிறகு சிவபிரான் கோயிலிலேதான் ஒரு கால் உங்களைப் பார்த்தேன். பிறகு இன்றைக்குத்தான் உங்களைப் பார்க்கலாயிற்று. மதுரையிற் பாட்டன் பாட்டியிடமிருந்து செய்தி ஏதேனும் வந்ததா? அவர்கள் நலமுடனிருக் கின்றார்களா? குலசேகரன் : என் தந்தை தாயார் நலமாகவேயிருக்கின்றனர். வந்தநாள் முதல் நின் தந்தையாரும் யானும் யானைப் பந்தயங் குதிரைப்பந்தயம் மல்லரின் மற்போர் சிலம்பம் முதலிய விளையாட்டுகளைக் கண்டுகளித்து வந்தோம். சென்ற வெள்ளிக்கிழமை உன்னையும் உன் கலைப் பயிற்சியையுங் கோயிலிற் கண்டபிறகுதான் உன்னைப் பார்க்க வேண்டு மென்னும் அவா மிக்கெழுந்தது. அமராவதி : மாமா! உங்களுக்கு யானையேற்றங் குதிரை யேற்றம் முதலியவைகளில் ஆர்வம் உள்ள அளவுக்குக் கலைப் பயிற்சியில் ஆர்வம் இல்லை போல் தோன்றுகின்றதே! குலசேகரன் : அமராவதி! அங்ஙனங் கருதாதே, நம் பாண்டிநாடும் நம்பாண்டியர் குலமுந் தமிழுக்கே பிறந்தவை. யான் கலைப்பயிற்சியிற் கொண்ட ஆர்வஞ் சிறிதுந் தணிந்திலது. ஆனால், அரசவாழ்க்கையில் உள்ளவர்கட்கு முடி சூடுங்காலம் நெருங்குகையிற், படைக்கலப் பயிற்சியைத் தவிரக் கலைப்பயிற்சியைக் கைக்கொள்ள நேரம் இல்லாமற் போகின்றது! என் செய்யலாம்? அமராவதி : அஃது உண்மைதான். அரச வாழ்க்கையே அல்லலுக் கிடமானது. என்போன்றோர்க்கு அரச வாழ்க்கையினும் எளிய கல்வி வாழ்க்கையே இசைந்ததுஞ் சிறந்ததுமாய்க் காணப்படுகின்றது. குலசேகரன் : அரசவாழ்க்கையினுங் கல்வி வாழ்க் கையே சிறந்ததெனக் கருதி, கலைப்பயிற்சியிலேயே எல்லாருங் காலங்கழிப்பதானாற், கலைவாணரையும் மற்றைக் குடிமக்களையுங் காப்பார் யார்? அமராவதி : என் கருத்து எல்லாருங் கல்வியிலேயே காலத்தைச் செலுத்த வேண்டுமென்பதன்று. கல்வியில் விழைவுமிக்கோர் கலைப்பயிற்சியிலும், அரசியலிற் கருத்துடையோர் அரசியலிலும் ஈடுபடுதலே நன்று. அது குறித்தே, என் போன்றோர்க்கு எனப் பிரித்துப் பேசினேன். குலசேகரன் : அப்படியானால், அரசன் மகளாகிய நீ ஓர் அரசன் மகனைத்தானே மணக்கவேண்டும். மற்றையோன் ஒருவன் எவ்வளவுதான் கல்வியில் மிக்கவனாயினும் அவனை மணத்தல் பொருந்தாதே. அதற்கென் செய்வாய்? அமராவதி : கல்வியிலேயே கருத்தழுந்தி நிற்கும் யான் திருமணத்தில் உள்ளஞ் செல்லாதவளாயிருக்கின்றேன். குலசேகரன் : நீ திருமணத்தைப்பற்றி நினையாவிட்டாலும், மணங் கூடுதற்கேற்ற பருவத்தை அடைந்திருக்கும் உன்னை மணஞ்செய்விக்க வேண்டுவது நின் பெற்றோர்க்குக கடனன்றோ? அதற்காகவே நின் தந்தையார் என்னை இங்கே வருவித்திருக்கின்றனர். அமராவதி : நல்லது! என் தந்தையார்க்குரிய கடனை நீங்கள் எவ்வாறு செய்துமுடிக்கக்கூடும்? குலசேகரன் : யானே நின்னை மணந்துகொள்ள விரும்புகின்றேன். அமராவதி : யான் உங்களை மணப்பதில் விருப்பமில்லாதிருக்க நீங்கள் எங்ஙனம் என்னை மணக்க விரும்பலாம்? குலசேகரன் : நீ ஏன் என்னை மணக்க விரும்பலாகாது? நான் அழகில்லாதவனா? யான் நின்னிற் சிறிதுதானே மூத்த இளைஞன். செல்வமும் அரசர்க்குரிய ஆண்மையுங் கல்வியும் உயர் குடிப்பிறப்பும் யான் இல்லாதவனா? கூறு. அமராவதி : மாமா! அங்ஙனமெல்லாம் நீங்கள் இல்லையென்று யார் சொன்னார்? குலசேகரன் : பின்னே ஏன் நீ என்னை மணத்தல் கூடாது? அமராவதி : மணவிருப்பந் தானாகவன்றோ எனக்கு வரல் வேண்டும்? பசியில்லாதவனுக்கு உணவு கொடுத்தால் அஃதவனுக்கு நோயையன்றோ வருவிக்கும்? (குலசேகரன் விடைதர மாட்டானாயிருக்க) மணத்தைப் பற்றிப் பேசி வீண் பொழுது போக்குவதைவிட, யான் இயற்றிய செய்யுட்களை யாழிலிட்டு இசைக்கின்றேன்; கேட்டு மகிழுங்களே. குலசேகரன் : (வருத்தமுஞ் சினமுமுடையனாய்) மணப்பேச்சுப் பிணப்பேச்சா? நின் இசைப்பாட்டைக் கேட்பதில் எனக்கு விருப்பமில்லை. இயல் இசை நாடகங்களில் வல்ல அழகிய மங்கையர் பலர் எங்கள் அரண்மனையிலிருக்கின்றனர். அமராவதி : (முகஞ் சிவந்து) அவ்வாறானால், அம் மங்கைமாரைவிட்டு நீங்கள் இங்கு வந்தது வீணேகாண்! அவர்கள் பால் விரைவிற் செல்லுங்கள்! (குலசேகரன் போய் விடுகின்றான்) மூன்றாம் நிகழ்ச்சி : ஆறாம் காட்சி களம் : அமைச்சர் நம்பிப்பிள்ளையின் பூந்தோட்டம். காலம் : விடியற்காலம். நயினார் பிள்ளை : (ஒரு பிண்டிமர நிழலிலிருந்து காவேரி விடுத்த சீட்டைப் பிரித்துப் படிக்கின்றான்) இயலாருந் தமிழரசே! என்னுளத்தைக் கவர்ந்தகள்வன் யாண்டு ளானென் றயலாரும் அறியாமே ஆராய அவனென்றன் நெஞ்சி னுள்ளே செயலாரும் அறியாமே திறமாக ஒளித்திருந்துஞ் சீரமைச்சர் புயலாரும் மாளிகையிற் புக்கிருப்ப னெனப்புகறல் புதுமை யன்றே! என்னுளத்தி லவனிருக்க அவனுளத்தி லியானிருத்த லியலு மோதான் பொன்செறிந்த வாயுடைய பூவைகாள்! புகலுமினோ! போந்தெ னோடும் முன்கிளைத்த தமையற்கும் என்றனுக்கும் உயிர் போல்வான் முடிவிலாத அன்பிருக்க என்பொருட்டால் இருவருளம் வேறுபட ஆற்று வேனோ? நயினாரை யான் நயத்தல் என்றமையன் றானறிந்தால் நல்ல தாமோ? குயினாரும் பொழில்வளரும் மஞ்ஞைகாள் கூறுமினோ! கூடி வந்த உயிரான என்றமையன் உளம்உவக்க ஒருப்படுக்கும் ஒழுங்கு காணேன் துயிலாத விழியுடனே நயினாரை நினைந்தெனுளந் துயரு மந்தோ! ஆ! எத்தனைமுறை படித்தாலும் பின்னும் பின்னும் இவற்றைப் படிக்கவே என் மனம் விழைகின்றது! என்னுயிரே! காவேரி! நீ என்பால் உண்மைக்காதல் உடையை! அக்காதலைப் புலப்படுத்த நீ நின் தமையனுக்காகவே அஞ்சுகின்றனை! யானும், அவன் என்ன நினைப்பானோ, என்ன சொல்வானோ என்றே அஞ்சுகின்றேன். ஆயினும், என் ஆருயிர்க் காதலி! நின் மதர்விழிகளும் தேன் மொழிகளும் முன்னில்லாத ஒரு துணிவினை என்னுள்ளத்தே தோற்று விக்கின்றன! என்னச்சத்தை மீதூர்கின்றன! என் நண்பன் நின்னை எனக்கு ஈயானேல் என் உயிரை அவனெதிரில் மாய்த்துவிடுவேன்! இது திண்ணம்! இது திண்ணம்! (திடுமென அம்பிகாபதி வருகின்றான்) அம்பிகாபதி : (கடைசியிற் சொன்ன சொற்கள் மட்டுங் காதில் விழ) என் ஆருயிர் நண்ப! நின்னுயிரை மாய்த்து விடுவதாகச் சொல்லி ஏன் இவ்வளவு துன்புறுகின்றனை? உனக்கு யாது நேர்ந்தது? யான் அறியச்சொல்! சென்ற சில நாட்களாக நீ பாடஞ்சொல்ல வராமையால் நின்னுடம்புக்குக் கடுமையான நோய் ஏதேனும் உண்டோ என்று என் தங்கை மிக மனங்கவன்று வருந்துகின்றாள். யானும் அதனால் வருந்தியே நின் உடல்நலம் அறிய வந்தேன். நயினார்: (சிறிது நேரம் வாளா இருந்து முகங்கவிழ்ந்த படியே) அருமைத் தோழ! என் மனநோயே என்னுடலையும் நோய்ப்படுத்துகின்றது! அம்பிகாபதி : அத்தனை கொடிய மனநோய் யாதோ? நயினார் : அதுதான் என்னால் தாங்கமுடியாத காதல் நோய். அம்பிகாபதி : நண்பா! காதல் என்பது கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள பிரியாநேசம் என்பதை நூல்களின் வாயிலாக அறிவேன். அது நோய்போற் சிலரைத் துன் புறுத்தும் என்பதும் புலவர்களின் பாக்களால் மிகுத்துக் கூறப்படுதலையும் அறிவேன். ஆனாலும், யானுங்காலஞ் சென்ற என்னருமை மனைவியும், அத்தகைய காதல் நோய்க்கு ஆளானதில்லை. அதனால், நீ சொல்லும் அந்நோயின் கொடுமை எனக்குச் சிறிதும் விளங்கவில்லையே! நயினார் : அற்றேல், நீ நின் மனைவியைக் காதலித்த தில்லையோ? அம்பிகாபதி : என் தந்தையாரால் எனக்கு மனைவி யாக அமர்த்தப்பட்டவளை யான் அன்புடன் நடத்தக் கடமைப் பட்டிருக்கின்றேன். அல்லேனோ? நயினார் : அதை நான் கேட்கவில்லை. நீ நின் மனைவியைக் காணாத நேரமுங் கூடாத நேரமும் உனக்கெப்படித் தோன்றின? அம்பிகாபதி : வீட்டுக்குட் சென்றால் என் மனைவியை யான் காண்பது திண்ணமாதலால், அவளைக் காணாத நேரத்தில் அவளை நினைந்திலேன்; ஆனால், அவள் இறந்து போனபோது அவளது பிரிவினை ஆற்றாது அழுதேன். நயினார் : ஓ! தமக்குரியவர் இறந்தால் எவரும் ஆற்றாது அழுகின்றனர்; அஃது இயல்பு; உன் மனைவி இறந்ததில் நின்னுயிர் தத்தளித்ததா? ஏங்கிற்றா? அம்பிகாபதி : தத்தளித்தல், ஏங்குதல் என்னும் இரண்டு நிகழ்ச்சியையுஞ் சொல்லளவாயன்றி வேறு வகையில் அறிந்திலேன். நயினார் : அற்றேல், நீ காதலின் உண்மையைச் சிறிதும் உணர்ந்திலை; என்னுயிரோ காதலால் தத்தளிக்கின்றது. ஏக்கமடைகிறது. அம்பிகாபதி : அங்ஙனமாயின், நீ யாரைச் சாவக் கொடுத்தனை? நயினார்: இல்லை, இல்லை, யான் எவரையுஞ் சாகக் கொடுக்கவில்லை. உயிரோடிருக்கும் ஒருவர் பொருட்டாகவே என்னுயிர் தத்தளிக்கின்றது. அம்பிகாபதி : அவர் யார்? ஆணா? பெண்ணா? நயினார்: அவர் ஓர் அழகிய பெண். அம்பிகாபதி: அப்பெண்ணிற்காக நீ ஏன் அவ்வளவு துன்புறல் வேண்டும்? நயினார் : அவளைக் காணாமலிருக்க முடியவில்லை. கண்டாலோ அவளைக் கூடாமலிருக்க முடியவில்லை; என் செய்வேன்! அம்பிகாபதி : அப்பெண் திருமணம் ஆகாதவளாயிருந்தால் அவளை நீ திருமணம் செய்துகொள்ளளாமே. நயினார் : அவள் திருமணமாகாத கன்னிப்பெண்தான். உன்னைப் பார்த்தால் அவளைப் பார்ப்பது போலிருக்கின்றது. அம்பிகாபதி : அற்றேல், அவளை நீ மணப்பதற்கு யான் இடைநின்று செய்யக்கூடிய உதவியிருந்தாற் சொல். யான் எவ்வகையிலேனும் அதனைச் செய்து முடிப்பேன். நின்னினும் எனக்குச் சிறந்தார் யார்? நின் உயிர்வருந்த யான் காணேன். நயினார் : ஈது உறுதிதானா? அம்பிகாபதி : எப்போதாயினும் யான் கூறிய சொல்லிற் பிழைத்ததுண்டா? என்னை வேறு நினைந்து பிழை செய்யாதே! நயினார் : இல்லை, இல்லை. நீ நின் வாய்மையில் என்றும் பிழைத்திலை. என் அச்சமே நின் வாய்மொழியை ஐயுறச் செய்தது. இதைப் பார்! (காவேரி விடுத்த திருமுக ஓலையை நீட்டுகின்றான்) அம்பிகாபதி : (செய்யுட்களைப் படித்துப் பார்த்து) ஓ! இவை என் தங்கையின் கையெழுத்தாகக் காணப்படுகின்றனவே! நயினார் : ஆம், உன் தங்கையின் எழுத்தேதான். இப்பொழுதாயினும் அவளது மனநிலையினையும் எனது மனநிலையினையும் அறிந்தனையா? அம்பிகாபதி : ஆம், அவள் உன்மேல் அளவுக்கு மிஞ்சிய அன்பு பாராட்டுகின்றனள்; நீயும் அங்ஙனமே அவள் மேல் அன்பு பாராட்டுகின்றனை; அறிந்தேன்; அறிந்தேன். நயினார் : அற்றேல், நீ எங்களைப்பற்றி என்ன முடிவு செய்கின்றனை? அம்பிகாபதி : எனக்கொன்றுமே தோன்றவில்லை. உன் கருத்தைத் தெரிவித்தால் நான் எண்ணுவதைச் சொல்கின்றேன். நயினார் : நின் தங்கையை நான் மணந்து கொள்ளவே விழைகின்றேன். அதற்கு நீ இணங்கவே வேண்டும்; நீ இணங்கா விட்டால் என்னை நீ உயிரோடு காணாய். அம்பிகாபதி : சீ. ஒரு பெண்ணுக்காக நீ நின் சிறந்த உயிரை மாய்க்கக் கருதுவது சிறிதுந் தக்கதன்று. காதலென்பது கட்டுக் கடங்காததா? நம் அறிவினால் அதனை அடக்குதலன்றோ ஆண்மை? நயினார் : அபிகாபதி! என் ஆருயிர் நண்பா! காதலின்னதென்றே கண்டறியாத உன்னை நோவதிற் பயனில்லை. நீ வேறொன்றும் எனக்குச் சொல்லல் வேண்டாம். நின் தங்கையை எனக்கு மணஞ்செய்து கொடுக்கின்றனையா? இல்லையா? இரண்டிலொன்று சொல்! அம்பிகாபதி: என் தந்தையார் ஊரிலில்லாத வேளையில் நீ இப்படி என்னை நெருக்கிக் கேட்டால் யான் எங்ஙனம் விடையளிப்பேன்? நீ என் தங்கையை மணப்பதென்றால் என் தந்தையார் முதலில் அதற்குடன் படல் வேண்டும். இரண்டாவது நின் தந்தையாரும் அதற்கு இணங்கல் வேண்டும். நீங்களோ சைவவேளாள குலத்தினர். யாங்களோ உவச்ச குலத்தினேம். இங்ஙனம் இருவேறு வகைப்பட்ட குலத்தினரும் ஒருங்கு கலக்க இருதிறத்தாரும் இசைவரோ என்பதனைக் கருதிப் பார்த்தல் வேண்டும். நயினார் : அஃதெல்லாம் இருக்கட்டும். சாதி, குலம், சமயம், செல்வம், தலைமை, தாழ்மை முதலான எதுவுங் காதலன்பினைத் தடை செய்ய வல்லதன்று. நீ என்னை நின் உயிராகவும் யான் உன்னை என் உயிராகவும் நினைப்பது உண்மையானால், நீ நின் தங்கைபால் மிக்க அன்பு பூண்டு நடந்து அவளுயிரைக் காப்பது உண்மையானால், அவனை நீ எனக்கு மணஞ் செய்து கொடுத்தல் வேண்டும். உன் தந்தையை இதற்கு இணக்க வேண்டுவது உன் கடமை; என் தந்தையை இணக்க வேண்டுவது என் கடமை. நின் தங்கையும் நீயும் மடிய உன் தந்தையார் பார்ப்பரா? யான் மடிய என் தந்தை பார்ப்பரா? அம்பிகாபதி : நான் மடிவதாயிருந்தாலும் அவர்கள் இணங்காவிட்டால் என் செய்வது? நயினார் : நான் உயிர் மடிவதே செயற்பாலது. அம்பிகாபதி : நல்லது பார்ப்போம் என் தங்கை உனக்கெழுதிய சீட்டுக்கு ஒரு விடை எழுதித்தா. யானே அதனை அவள்பாற் சேர்ப்பிக்கின்றேன். நயினார்:(பாட்டினாலேயே விடை எழுதுகின்றான்) கொவ்வைக் கனியைக் குறைத்த இதழுங் குயில்போற் பயில்மொழியும் நவ்வி யனைய மதர்விழியும் நறவு வார மணங்கமழும் மௌவற் கொடிபோற் றுவள்வடிவும் வாய்ந்த நங்காய் இருபளிங்குங் கௌவி யிடைசேர் மலர்நிறம்போல் இருவேமுளமுங் கழுமுமால் இருவேம் உடம்பில் ஒருளமே இசைந்தார்ந் திருக்க என்னுளத்தை இருவே றாக்கி ஒருபாலில் நீதான் இருக்க இசைவிலையென் றுருகா வரைந்த தென்? அணங்கே! உன்முன் பிறந்தான் யான்மடிய அருகாதிக்க மாட்டானால் அச்சந் தவிர்க அருளமுதே! மாறாத காதலுடையார்க்கு மாறாயிம் மண்ணகத்தே ஊறான செய்வார் உருகாத நெஞ்சுள்ள ஒன்னலரே; வேறாக நின்னை நினையாத அண்ணலென் வெள்ளையுள்ளங் கூறாய் அழிய ஒரு காலும் பாராக் குணத்தினனே. அம்பிகாபதி : நயினா! நீ பாட்டுப் பாடுவதிலும் வல்லவனாகவே யிருக்கின்றாய். நீ இயற்றிய இச்செய்யுட்கள் இனியனவாகவே யிருக்கின்றன. இவற்றைக் கண்டு என் தங்கை மிக மகிழ்வள். நீ மனச்சோர்வகற்று. முன்போலவே நீ என் இல்லத்திற்கு வந்து என் தங்கைக்குப் பாடங் கற்பித்து வா, என் தந்தையார் வந்தபின் என் தங்கையை நினக்கு மணஞ் செய்விக்க முயற்சியெடுப்பேன். நயினார் : அம்பிகாபதி! என் ஆருயிர்த் துணைவ. நினது பேரன்பிற்கு எங்ஙனம் நன்றி செலுத்தவல்லேன்! என்னுயிரின் ஒரு பாதியை நீயும் மற்றொரு பாதியை நின் தங்கையுமே அடிமையாய்க் கொண்டு விட்டீர்கள்! (அம்பிகாபதி தன் நண்பன் கையைப்பிடித்து ஒற்றிக்கொண்டு போய் விடுகின்றான்) மூன்றாம் நிகழ்ச்சி : ஏழாங் காட்சி களம் : அமராவதியின் கன்னிமாடம். நேரம் : உவாநாளின் பிற்பகல். அமராவதி : அருமைத்தோழீ நீலம்! நேற்றுக் காலையில் நாம் நம்பெற்றோர்களுடனும் அமைச்சர் நம்பிப்பிள்ளை யுடனுஞ் சிவபிரான் திருக்கோயிலுக்குச் சென்று சிவபிரானையும் பிராட்டியையும் வணங்கியபின், என் தந்தையார் என்னை இறைவன் முன்னிலையிற் பாடி ஆடச் சொன்னார். அங்ஙனமே யான் பாடி ஆடுகையில் ஓர் அழகிய இளைஞர் அங்கேவர, என் தந்தையாரும் அமைச்சரும் அவரை அன்புடன் வரவேற்று அமர்வித்து என் ஆடல்பாடல்களை அவர் கண்டு கேட்கும்படிச் செய்தனரே. தோழி : ஆம் அம்மா, அதைப் பற்றி நமக்கென்ன? அமராவதி : அங்ஙனஞ் சொல்லாதே நீலம்! சிலநாட்களுக்கு முன் என்னை இங்ஙனமே என் பெற்றோர்கள் கோயிலில் ஆடிப்பாடச் செய்ததும், அப்போது என் மாமன் குலசேகரனை அவர்கள் அங்கே வருவித்திருந்ததும் நீதான் அறிவாயே. தோழி : ஆம், அறிவேன் தான். அதைப்பற்றித்தான் நமக்கென்ன? அமராவதி : பின் நடந்ததை நீ அறியாய். கோயிலில் என்னைப் பாத்ததற்குப் பின் என் மாமன் கன்னிமாடத்தில் என்னை வந்து கண்டான். கண்டு உரையாடுகையில், தான் என்னை மணந்து கொள்ளக் கருதியதைத் தெரிவித்தான். யானோ மணஞ்செய்து கொள்ளக் கருதாமையினை அவனுக்கு அறிவித்தேன். அதனால் அவன் என்மேற் சீற்றங்கொண்டு போய்விட்டான். பின்னர் என் தந்தையார் என்னைப் பார்த்தபோது யான் அவனை மணக்க மறுத்தமைக்காக வருந்திப் பேசினார்; அதன் பின் மீண்டும் என்னை நேற்றுக் கோயிலில் ஆடிப்பாடிச் செய்தபோது, வேறோர் இளைஞரை அங்கு வரச் செய்திருந்தார். இதில் ஏதோ ஒரு சூழ்ச்சி யிருக்கிறதென்பது உனக்குத் தோன்றவில்லையா? தோழி : ஆம் அம்மா! முன்பின் நிகழ்ச்சிகளை அறிந்தால் தானே உண்மை இன்னதென்று விளங்கும். வேறென்ன சூழ்ச்சி? நீ நின்மாமனை மணக்க விரும்பாமையால் நேற்றோர் இளைஞரை நின் தந்தையார் வருவித்தது, அவரை யாவது நீ மணக்க விரும்புவையா என்று பார்க்கத்தான். அமராவதி : நீலம், நேற்றுவந்த இளைஞரை யான் மணக்க விரும்பினாலும், அவ்விளைஞர் என்னை மணக்க விரும்பு வாரோ என்பது தெரிதல் வேண்டுமே! தோழி : அமராவதி! நீயே நின் பேரழகின் சிறப்பினைச் சிறிதும் அறியாமற் பேசுகின்றாய். நின் ஒப்புயர்வில்லாப் பேரழகினைக்கண்டும் உன்னை விரும்பாத ஒருவன் இருப்பனாயின், ஒன்று அவன் அலியாக இருக்கவேண்டும்.அன்றி அவன் நின்னினுஞ் சிறந்த அழகியாள் ஒருத்தியை மணந்த வனாக இருக்கவேண்டும். நல்லது; நீ ஆடிப்பாடுகையில் அவ்விளைஞர் உன்னைக் கண்டு எத்தகைய மனநிலையி லிருந்தார்? குறிப்பா லாயினும் அறிந்தனையா? அமராவதி : ஆம், சிறிதறிந்தேன். அவ்விளைஞர் என்னைத் தவிர அங்கிருந்த வேறெவரையுமே பார்த்திலர். என் ஆட்டத்தின் பொருளை நன்குணர்ந்து களித்தார். யான் பாடிய பாடல்களின் பொருளையும் இனிய இசையையும் உணர்ந் துணர்ந்து தன்னை மறந்த மகிழ்ச்சியுடையராகவே காணப் பட்டார். இருந்தவாற்றால் அவர் முத்தமிழிலும் வல்ல ஓர் எழில் கிளர் காளையாகவே தோன்றுகின்றார். தோழி : நல்லது. உன் தந்தையார் உங்கள் இருவர் மன நிலையினையுந் தெரிந்து கொண்டவராக அப்போது காணப்பட்டனரா? அவரது குறிப்பு எத்தகையதாயிருந்தது? அமராவதி : யான் அவ்விளைஞரைக்கண்டு நாட்டங் கொண்டதும், அவ்விளைஞர் என்னையும் என் ஆடல் பாடல் களையும் உற்றுநோக்கி மகிழ்ந்ததும் என் தந்தையாருளத்திற்கு இசைவாயில்லையென்பதை அவரது முகக்குறிப்பால் அறிந்து சிறிது வாட்டமுற்றேன். தோழி : ஆம் அம்மா. எனக்கும் அப்படித்தான் தோன்றியது; அதனால் யான் சிறிது அச்சமும் எய்தினேன். நின் அன்னையாரும் அமைச்சர் நம்பிப்பிள்ளையும் நும் மிருவர் மனநிலையினையும் அறிந்து முதலில் மகிழ்ந்தனராயினும், பின்னர் நின் தந்தையாரது சினக்குறிப்பினையறிந்து வெருக்கொண்டமையினையுந் தெரிந்து கொண்டேன். அமராவதி : எவர் என்ன குறிப்புடையராயினும் இருக்கட்டும். யானோ அவரைக்கண்டது முதல் வேறொரு பிறப்புடையவளாய் விட்டேன். இதற்குமுன் யான் காணாத, யான் அறியாத ஓர் இன்பஉலகம் என் கண்முன்னே தோன்றா நிற்கின்றது! அதன்கண்ணே அவ்விளைஞர் என்னை அடிமை கொண்ட ஒரு கதிரொளித் தெய்வமாய்த் திகழ்கின்றனர்! முன்னஞ்சேர் பனிப்பாறை முழுதுருக்குங் கதிரவன்போல் என்னெஞ்சங் கரையவரும் இளைஞனையான் கண்டதற்பின் முன்னெஞ்சிற் புதைகிடந்த மூதுணர்வு பெருகிஎழ என்னெஞ்சம் படுதுயரம் எடுத்துரைக்க இயலேனால்! ஏந்திழாய் என்னையவர் இணைவரேல் உயிர்வாழ்வேன் நீந்தலாக் காதலெனை நிலைதிரித்தும் நெஞ்சுகந்த ஏந்தல்பால் உய்த்திலதேல் இடர்ச்சுழியில் அகப்பட்டு மாய்ந்திடுமென் னுயிரென்று மற்றவர்க்கு மொழியாயோ? தாமரையின் இதழ்வரைந்த தன்மையெனத் தயங்கும்விழி காமருளம் பாய்ந்தென்னைக் கவர்ந்தசெயல் அறிவானோ? தேமுறுவல் என்னுயிரைத் தேடியுடன் தெருட்டியதும் பூமகளின் சேய் அனையான் பொருந்தவுணர்ந் திடுவானோ? தோழி : அதில் ஏன் ஐயமுறுகின்றனை? அவர் தம் அழகிய விழி நோக்கத்தாலும் புன்சிரிப்பாலுந் தாம் நின் மேற்கொண்ட காதலைப் புலப்படுத்தி யிருப்பதோடு உயிருள்ள பொற்பாவையேயனைய நீ தம்மேற் காதல் கொண்டமையினையும் அறிந்தேயிருக்கின்றார். அமராவதி : ஆமடி நீலம், அஃதுண்மைதான்; ஆனாலும், அவரை இன்னாரென்றும், அவர் பெயர் இன்னதென்றும், அவர் எங்கிருப்பவரென்றும் ஏதோன்றுந் தெரியவில்லையே? அவரைப் பற்றி உனக்கேதாவது தெரியுமா? அல்லது தெரிய முயன்றனையா? தோழி : அவரைப்பற்றித் தெரிந்தாலென்ன? தெரியாவிட்டாலென்ன? நீங்கள் இருவீருங்கொண்ட காதலை உங்களுக்குள் உங்கள் உள்ளத்தளவாய்த்தான் வைத்துக் கொள்ள வேண்டும். நின் தந்தையார் அறிந்தால் இது தீங்காய் முடியுமன்றோ? அமராவதி : ஆற்றாது வருந்துமெனை ஆற்றும்வகை காணாமல் மாற்றான சொற்கூறி மடித்திடுதல் நன்றாமோ? கூற்றான நஞ்சேறிக் குலைந்துள்ளந் திரிவார்க்கு வேற்றான செய்வாரை மிகவுமே ஒத்தியால் ! தோழி : அமராவதி, நான் என்னம்மா செய்யக் கூடும்? நின் தந்தையார் அறிந்தால் என் தலை போய் விடுமே, அமராவதி : அங்ஙனமாயின் நீ செவ்வையாய் உயிர் வாழ்! நான் இனி உயிர் வாழ்வேன் என்று நினையாதே . (இது சொல்லி ஏங்கி உணர்விழந்து விழுகின்றாள்) தோழி : (உடனே அவளைத் துடிதுடித்தெடுத்து முகத்திற் பனிநீர் தெளித்துச் சாந்தாற்றிக் கொண்டு வீச, அவட்குச் சிறிதுணர்வு வரக்கண்டு மனந்தேறி)கண்மணி அமராவதி, நீ உயிர் துறக்க நான்மட்டும் உயிர் வாழவா? நீ காதலித்த அவ்விளைஞரை இன்னாரெனக் கண்டறிந்து அவரை உன்னுடன் கூட்ட முயல்வேன். மனந்தேறு. நீ விரும்பிய அவ்விளைஞரை உனக்குக் கொடுத்தருளும்படி அம்மையையுஞ் சிவபெருமானையுந் தொழுது வேண்டுவோம் வா.(இருவருங் கன்னிமாடப் பூங்காவிலுள்ள கோயிலிற் சென்று இறைவியையும் இறைவனையுந் தொழுதபின் அமராவதி பாடு கின்றனள்.) தந்தையுரை கேளாமல் தான்வேட்ட தலைவனையே முந்தைநீ மணந்ததுவும் முறையன்றோ என்தாயே! முந்தை நீ மணந்தமுறை முதன்மைபெறு கற்பானால் எந்தையினும் எனக்கினிய காதலனை ஈந்தருளே! இயல்பாக எழுங்காதல் எவ்வுர்க்கும் இசைந்தவள் நீ உயலாகா மயலாலென் உளமுவந்தாற் றருதியால் உயலாகா மயலாலென் உளமுவந்தாற் றருகிலையால் பெயலாருஞ் சடையானைப் பெட்டது நீ பிழையாமே. அன்னையினும் அன்புடையாய் அப்பனிலும் அருளுடையாய் உன்னையே நம்புமெனை ஓம்பிடுதல் கடனன்றோ, உன்னையே நம்புமியான் உணர்ந்துருகும் காதலனைப் பின்னே நீ தருகிலையேற் பிறிதுதுணை ஏதன்னாய்? (இன்நேரத்திற் கோயிலுக்கு விளக்கேற்ற வந்த பணிப்பெண்கள் சிலர் தாம் சிறிது தொலைவிற் பேசிக்கொண்டு வந்த பேச்சின் முடிவிற் கூறிய வேண்டியது விரைவிற் கிடைக்கும் என்னுஞ் சொற்கள் காதில்விழ, அமராவதியுந் தோழியும் மிகமகிழ்ந்து, அச்சொற்கள் இறைவி அருள் செய்தனவாகவே துணிந்து மீண்டும் அம்மையப்பரை வணங்கிக்கொண்டு கோயிலுக்கு வெளியே வருகின்றனர்) தத்தை :(எதிரே வந்து வணங்கி) இளவரசியார் நீடு வாழ்க! ஆசிரியர் தில்லைவாணர் நமது பூங்காமண்டபத்தில் வந்து காத்துக் கொண்டிருக் கின்றார். அமராவதி:இதோ வந்துவிட்டோமென்று ஆசிரியர்க்குத் தெரிவி: (தன் தோழியை நோக்கி) என்னடி நீலம்! இதற்குமுன் யான் அறியாத ஓர் உள்ளக்களிப்பு என்னகத்தே பொங்குகின்றது. அதனோடு ஒரு தடுமாற்றமும் என் நெஞ்சைக் கலக்குகின்றது! தோழி:வேறொன்றும் இல்லை அம்மா. நீ அவ் விளைஞர் மேற் கொண்ட காதலே நின்னை இவ்வாறு தொல்லைப் படுத்து கின்றது. விழைந்தது விரைவிற்கிட்டும் என்று இறைவியே அருள்செய்தபின் நீ ஏன் நெஞ்சங் கலங்க வேண்டும்? மூன்றாம் நிகழ்ச்சி : எட்டாங் காட்சி களம் : அமராவதியின் கன்னிமாடப் பூங்கா மண்டபம். காலம் : மாலை (அமராவதியுந் தோழியுந் திரைக்குப் பின்னே வருகின்றனர்) இருவரும் : ஆசிரியர்க்கு வணக்கம்! கோயிலுக்குப் போய் இறைவியையும் இறைவனையும் யாங்கள் வணங்கி வரச் சிறிது நேரஞ் சென்றுவிட்டது; தங்களைக் காக்க வைத்த பிழையைப் பொறுத்தருளல் வேண்டும். அம்பிகாபதி : நீங்கள் பிழையொன்றுஞ் செய்யவில்லை. கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன், நற்றாள் தொழா அரெனின் என்று தெய்வத்திருவள்ளுவர் அருளிச் செய்தபடி கல்விகற்பதெல்லாங் கடவுளை வணங்கத்தானே? நல்லது, புறநானூறு துவங்கிச் சிறிதேறக் குறைய ஒரு திங்கள் ஆகப்போகின்றது. தொல்காப்பியப் பொருளிலக்கணப் பாடமும் ஊடே ஊடே நடந்து வருதலால், புறநானூற்றின் பாடம் மெல்லச் செல்கின்றது. இப்போது எந்தப் பாட்டுக்கு உரை சொல்லல் வேண்டும்? அமராவதி : பெரும, இப்போது பாடம் நடக்கவேண்டுவது எட்டாஞ் செய்யுள்; அதனைப் படிக்கின்றேன். வையங் காவலர் வழிமொழிந் தொழுகப் போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறா அது இடஞ் சிறிதென்னும் ஊக்கந் துரப்ப ஒடுங்கா வுள்ளத் தோம்பா ஈகைக் கடந்தடு தானைச் சேர லாதனை யாங்கனம் ஒத்தியோ விலங்குசெலன் மண்டிலம் பொழுதென வரைதி புறக்கொடுத் திறத்தி மாறிவருதி மலைமறைந் தொளித்தி அகலிரு விசும்பி னானும் பகல் விளங்கலையாற் பல்கதிர் விரித்தே அம்பிகாபதி : ஓ! இச் செய்யுளுக்கு இருவேறு பாடங்கள் உண்டு. ஞாயிறு திங்கள் என்னும் இரு பெருஞ்சுடர்களில் ஒன்றை எடுத்துச் சேரலாதன் என்னும் வேந்தர் பெருமானுக்கு உவமையாகச் சொல்லப்புகுந்த இதன் ஆசிரியர், சேரலாதன்றன் உயர்பெருங் குணங்களுக்கு ஒவ்வாத குறைபாடு உடையது திங்களேயல்லாமல் ஞாயிறு அல்லாமையை நன்கு உணர்ந்தவராதல் வேண்டும்; ஆகவே திங்கள்மேல் வைத்துப் பாடங்கொண்டு உரைகூறிய பேராசிரியருரையே மெய்யுரையாகக் காணப்படுகின்றது. அமராவதி : சேரலாதற்குத் திங்கள் ஒவ்வாமையினைச் சிறிது விளக்கியருள்க. அம்பிகாபதி : அங்ஙனமே ஏனை அரசரெல்லாருஞ் சேரலாதனுக்கு அடங்கி ஒழுகுவரேயல்லாமற், சேரலாதன் வேறெவர்க்கும் அடங்கி ஒழுகுவான் அல்லன். மற்று, மதியமோ ஞாயிறு முதலான கோள்களின் ஒளியைத் தன்னொளியுள் அடக்க வல்லதன்று: ஞாயிற்றினொளியில் தன்னொளி அடங்க நடப்பது பாருங்கள்; இதோ கீழ்ப்பால் நிலவொளிதுலங்கத் திகழாநின்ற முழுமதியமானது, பகற்காலத்தே கதிரவன் முன்னே இத்துணைப் பேரொளியுடன் தோன்ற வல்லதாமோ? அமராவதி : (தன் தோழியை நோக்கி மெல்லிய குரலில்) என்னடி நீலம் நம் ஆசிரியரைக் கண்ணில்லாக் குருடர் என்றனையே! இதோ அவர் வானில் விளங்கும் முழுமதியினைச் சுட்டிக்காட்டிச் சொல்கின்றனரே! தோழி : எனக்கும் இஃதொரு பெருவியப்பாகவும் ஐயமாகவுமே இருக்கின்றது! (அமராவதி உடனே திரையை ஒருபால் விலக்கி வெளியே நோக்க) அம்பிகாபதி : ஓ! ஓ! அமராவதி உன்னை அழகில்லாத முடத்தி என்றனரே! அமராவதி : ஐயோ! பெருமானே! உங்களைக் கண்ணில்லாத குருடரென்றனரே! (இது சொல்லி அமராவதி இருக்கைமேல் மயங்கிச் சாய்கின்றாள். அது கண்டு அம்பிகாபதி துடிக்கின்றான்; தோழி நீலம் துடிதுடித்து ஓடிப்போய் வந்து முகத்திற் பனிநீர் தெளித்து மயில் விசிறி கொண்டு வீச அமராவதி மயக்கந் தெளிந்து இருக்கையை விட்டெழுந்து நாணத்தோடு நிற்கின்றாள்) அம்பிகாபதி : (தோழியை நோக்கி) அம்மா நீலம்! இன்றைக்கு நடந்த பாடம் இவ்வளவே போதும், நாளை அதனை நடத்தலாம். அமராவதியைக் கருத்தாய்ப்பார். ஒன்றுமட்டுங் கேட்கின்றேன். நேற்றுக்காலையிற் சிவபிரான் கோயிலில் பாடி நடித்தவர் அமராவதிதானே? தோழி : ஆம் பெருமானே. அப்போது அங்கு வந்திருந்த இளைஞருந் தாங்கள் தாமே? அம்பிகாபதி : ஆம் அம்மா. எனக்கும் ஒரு வகையான மயக்கம் உண்டாகின்றது. யான் போய் வருகின்றேன். மூன்றாம் நிகழ்ச்சி : ஒன்பதாங் காட்சி களம் : கம்பரது மாளிகை. காலம் : மாலை நயினார் பிள்ளை : கண்மணி காவேரி! அன்று யான் நின்பாற் கொண்ட காதலைப் புலப்படுத்தியபோது, நீ நின் காதலை வெளிப்படுத்தாமல் நின் தோழியைக் கூவியழைத்து என்னைத் திகிலடையச் செய்ததேன்? காவேரி : பெரும! நீங்களும் என் அருமைத்தமையனும் ஆருயிர் நண்பர்கள், என் தமையன் வரும் நேரத்தில் யான் உங்கள்மேற் காதல் கொண்டமையினை அவர் தெரியும்படி நேர்ந்தால், அவர் உங்கள்மேற் சீற்றங்கொள்வர் என அஞ்சியே யான் அங்ஙனம் என் தோழியை அழைத்தேன். யான் செய்தது பிழையாயின் அதனைப் பொறுத்தருளல் வேண்டும். (இது சொல்லிக் கீழ் விழுந்து வணங்குகின்றாள்) நயினார் : (உடனே அவளை வாரியெடுத்தணைத்து முத்தமிட்டு) மதியின் கறையைக் கழுவியதன் மருங்கே மழைக்கார் தனையமைத்துப் புதிய குவளை மலரிரண்டும் பொருத்தி நடுவே குமிழ்நிறுத்தி நுதியின் அளவும் வளைகரிய சிலைகள் நுடக்கித் துவர்விளங்கப் பதியும் மதியொன் றுளதேல்நின் பழுதில் முகத்தைப் பொருவுமால்! வானூர் மதியும் ஒவ்வாநின் முகத்தின் வனப்பும் அம்முகத்திற் றேனூர் சுவையும் மாறாது தெளிந்த உணர்வுங் தேங்குகின்ற பானேர் மொழியுங் கண்டுள்ளம் பரிந்து மயங்கி வீழ்ந்ததனை மானே யனையாய் வண்பாவின் மகிழ்சொல் லமிழ்தால் மாற்றினையால்! மாயாப் புகழ்கெண்ட நின்றந்தை தந்த மகனெனக்குச் சாயாத நண்பனும் நின்னுடன் போந்த தமையனுமாய் வாயா விடினுனை யான்பெற லெங்ஙனம் வார்குழலாய் நீயாது செய்வை யிதுவுநம் வேலவன் நீடருளே. காவேரி உண்மை யுண்மையென் உயிர்த்துணைப் பெரும! அண்ணன் மறுத்தால் அப்பனும் மறுப்பன்; என்னைப் பேணிக் கண்ணென வளர்த்துத் தண்டமிழ் உணர்த்திய வண்டமிழ் வாணராம் அப்பனும் அண்ணனும் ஒப்பா வழியிற் செல்லின்என் னெஞ்சம் அல்லற்படுமால் நல்ல அவ் விருவர்தஞ் சொல்வழிச் செலினோ நல்லஅவ் விருவர்தஞ் சொல்வழிச் செலினோ காதற் கற்பிற் கேதம் வருமால்! ஒருவரை விழைந்தஎன் திரிபில் நெஞ்சம் மன்னன் மகனே யாயினும் அன்னவனை நனவினும் நினையாது கனவினும் நினையாது; கல்லுண்டு வாழுங் காதற் புறவுங் காதலற் பிரியாது பிரிந்துழிச் சாதல் பெரியோர் சொல்லத் தெரிது மன்றே; ஏந்தால் நின்னை விழைந்தஎன் னெஞ்சம் பேர்ந்தோர் ஆடவற்பேணாப் பான்மையை நன்கினி தெனக்கு முன்னவன் உணர்ந்து நின்னுடன் என்னைப் பின்னமுன் னியதூஉம் முன்னி யாங்கே இன்னுரைத் திருமுகம் என்பார் சேர்த்தெனக் கன்புரை பகர்ந்ததூஉம் எல்லா வல்லநம் இறைவ னருளெனத் தொல்புகழ்ச் சேவடி தொழுது வாழ்த்துவமே! (மாளிகையின் தலைவாயிற் கதவுதட்டும் ஓசை கேட்டு இருவரும் உரையாடலை நிறுத்தித் திருத்தொண்டர் புராணம் ஓதுகின்றனர்) தோழி பச்சை : ( மாளிகைமேல்வந்து) அம்மா காவேரி, அரசிளைஞர் வந்து நிற்கின்றார். மேலே வரலாமா என்று கேட்டுவரச் சொன்னார். இருவரும் : (பரபரப்புடன்) வரச்சொல்! (தமக்குள்) இவன் ஏன் இந்நேரத்தில் வந்து நமக்குத் தொல்லை கொடுக்கவேண்டும்? அரசிளைஞன்:  (மேற்போந்து) ஓ! நயினார்! காவேரிக்குப் பாடஞ் சொல்கின்றாயோ? திருத்தொண்டர் புராணம் இன்னும் முடியவில்லையா? காவேரி! உங்கள் அப்பா தென்னாட்டுக்குப் போய் ஒரு திங்களுக்கு மேல் ஆகிறதே! நீ மிக மெதுவாகப் படிக்கின்றனை போலும்! நயினார் : அப்பா விக்கிரமா! பெரிய புராணத்தை எளிதாக நினைத்து விடாதே! இதன் செய்யுட்கள் தெரிந்த சொற்களால் தொடுக்கப்பட்டிருப்பன போற்றோன்றினும் அவை பொருள் நுணுக்கமும் ஆழமும் வாய்ந்தவை. என் சிற்றறிவுக்கு எட்டியமட்டில் இதன் செய்யுட் சொற்பொருள் நுட்பங்களை நன்காராய்ந்து பாடஞ்சொல்லி வருகின்றேன். யான் நம் ஆசிரியர் கம்பர்பால் இந்நூலைப் பாடங் கேட்டபோது எனக்குண்டான அறிவினும், என்னறிவை யானே பயன்படுத்தி இதனை இப்போது ஆராய்ந்து வருதலால் என்னறிவு மேலும் மேலும் நிரம்பத் தெளிவடைந்து வருகின்றது. அரசிளைஞன் : நீ சொல்வது எப்படியோ! இந்த நூல் களையெல்லாம் இவ்வளவு நுட்பமாகப் படித்தலால், என்ன பயன் அடையப் போகிறாய்? படித்தோம் என்கிற பெயருக்கு அடித்து நகர்த்திவிடாமல், வீணே காலத்தை ஏன் கழிக்க வேண்டும்? மற்போர், சேவற்சண்டை, கத்தி விளையாட்டு, நீர்விளையாட்டு, குதிரைப்பந்தயம் முதலியவைகளில் நான் கருத்தைச் செலுத்துவதுபோல், இந்நூல்களைப் படிப்பதில் நான் கருத்தைச் செலுத்தவில்லை. என் தந்தையும் அன்னையும் எந்நேரமுந் தமிழ் நூல்களைக் கட்டிக் கொண்டு அழுகின்றார்கள்! அது போதாதென்று என் தங்கை அமராவதியையும் எந்த நேரமும் படிக்கச் சொல்லியும், பாடச்சொல்லியும், ஆடச்சொல்லியும் கெடுக்கின்றார்கள்! கம்பர் திரும்பி வரும் வரையில் அமராவதியின் பாடத்தை நிறுத்தி வைத்தால் என்ன முழுகிப்போய்விடும்? காவேரியைப் போலவே அமராவதி மிக்க அழகுடையவள்; அவளுக்கு அம்பிகாபதி பாடஞ் சொல்ல ஏற்பாடு செய்துவைத்து, இவனும் மிக்க அழகுடையவனாதலால் இவன் என் தங்கையையும் என் தங்கை இவனையும் பாராதபடி பொய்யும் புளுகுங் கட்டிவிட்டுப் பாடம் நடத்தி வருகிறார்கள்! இதை நான் வெளியே சொன்னால் என் தலை போய்விடும்! நயினார்! காவேரி! இதைப்பற்றி வாயைத் திறந்துவிடாதீர்கள்! அதிருக்கட்டும்; பெண் பிள்ளைகள் ஏன் இவ்வளவு ஆழமாகவும் கருத்தாகவும் படிக்கவேண்டுமென்பது விளங்கவில்லை. ஆண்பிள்ளைகளுக்கே இவ்வளவு ஆழமான கல்வி வேண்டுவதில்லை; பொருள் தேடிச் சேர்ப்பதற்கு வேண்டுமளவே அவர்கட்குக் கல்விவேண்டும். அவர்கள் தேடித் தொகுத்த பொருளைக் கொண்டு பெண்பிள்ளைகள் அவர் களுடன் கூடிப் பலவகையான இன்பங்களையும் நுகரல் வேண்டும். நானும் நீயும் அம்பிகாபதியும் கம்பரிடம் பாடங்கேட்கும் போது; அவர் வீணே விரித்து நீட்டிக்கொண்டு போன உரைகளை யெல்லாம் நான் மனத்தில் வாங்குவதே யில்லை. அம்பிகாபதி என் தங்கைக்குப் பாடஞ்சொல்லும் போது ஒருநாள் திரைமறைவில் யானும் என் தங்கை தோழி மாருடனிருந்து அவன் சொல்லி வந்த உரையைக் கேட்டேன். அவனுந் தன் தந்தையைப் போலவே வீணே விரித்து வழவழவென்று உரை சொல்லி வந்தான்; எனக்கது பிடிக்கவில்லை. நயினார் : உனக்கது பிடியாவிட்டாற் போகட்டும் பாடங் கேட்பவர்கட்கு அவனது உரை எங்ஙனமிருந்தது? அரசிளைஞன் : அவன் உரைசொல்லி வரும்போதெல்லாம் எந் தங்கையுந் தோழிமாரும் இடையிடையே ஆ! ஆ! ஈது எவ்வளவு நுட்பமானது! ஈது எவ்வளவு அழகானது! ஈது எவ்வளவு ஆழமானது! ஈது எவ்வளவு உருக்கமானது! என்று சொல்லிச் சொல்லி வியந்தார்கள்! மகிழ்ந்தார்கள்! எனக்கோ அவன் சொல்லி வந்த உரையும், அது கேட்டு அவர்கள் வியந்து மகிழ்ந்ததும் எள்ளளவும் பிடிக்கவில்லை. பிறகு நான் அந்தப் பக்கம் செல்வதேயில்லை. அதுபோகட்டும். அம்பிகாபதி ஏன் இன்னும் அரண்மனை யிலிருந்து வரவில்லை? முழு நிலாவாதலால் இன்னும் பாடஞ்சொல்லிக் கொண்டிருக் கின்றானோ? பத்து நாழிகையாகிறது, அவனைப் பார்த்து விட்டுப் போகலா மென்றிருக்கிறேன். உனக்கு நேரமாவதால் நீ வீட்டுக்குப் போகலாம். நயினார் : (மனஐயுறவுடன்)நல்லது. நான் போய் வருகிறேன். அம்பிகாபதிக்குச் சொல். காவேரி, நான் போய் வரட்டுமா? காவேரி : நல்லது சுவாமி (நயினார் போய்விடுகின்றான்) அரசிளைஞன் : (தோழியை நோக்கி) பச்சே, நானுங் காவேரியும் அரண்மனைச் செய்திகளைப் பற்றித் தனியேயிருந்து பேசவேண்டும். நீ கீழே போய் வீட்டு வேலைகளைப் பார். (தோழி காவேரியை நோக்க) காவேரி : (சிறிது தடுமாற்றத்துடன்) ஆம், பச்சே, இவரும் என் தமையன்றானே. அப்பா ஊரிலிருக்கும்போதே எத்தனையோ முறை யான் இவருடன் தனியே யிருந்து படிக்கவில்லையா? விளையாடவில்லையா? என் தமையனும் இவரும் நயினாரும் யானும் சிறுபருவம் முதல் ஆடி விளையாடியவர்கள்தாமே. நீ கீழேபோ, நான் அழைக்கும் போது வா (தோழி கீழே போய்விடுகிறாள்) அரசிளைஞன் : (மகிழ்ந்து) காவேரி என் பக்கத்தே வந்து அமர். காவேரி : தமையனாயிருந்தாலும் பருவம் அடைந்த மங்கை, அவனை நெருங்கப்பெறாள். ஆகையால் யான் உன்னை விலகியே யிருக்கின்றேன். அரசிளைஞன் : நானும் நீயும் ஒரே தாய்வயிற்றிலா பிறந்தோம்? காவேரி : உடன் பிறப்பவர்களெல்லாந் தாம் பிறந்கும் போது ஒரு தாய் வயிற்றிலிருந்தே தான் பிறக்கின்றோம் எனக் கண்டனரா? இல்லையே. பெற்றோரும் பிறருஞ் சொல்லு தலாலும், ஒருங்கு நெருங்கிப் பழகி நீளவளர்தலாலுமே தாம் ஒரு தாய் வயிற்றிற் பிறந்தோமெனக் கருதுகிறார்கள். நீ அரசன் மகன் என்றும், யான் கம்பர் மகள் என்றும் எவருமே நமக்குத் தெவியாவிட்டால், நீயும் யானும் நெருங்கி நீளவளர்ந்த பான்மையில் நீ தமையனும் நான் உனக்குத் தங்கையுமாதல் திண்ணமன்றோ, ஆதலால், நீ எனக்கு என்றுந் தமையனே காண். அரசிளைஞன் : நீ நின் அறிவின் திறமையால் என் வாயை அடைக்கப் பார்க்கின்றாய். நல்லது, ஒரு பெண்ணுக்குத் தன் தமையனினும் மிக்க அன்புடையவனாகக் கொள்ளப் படுபவன் யாவன்? நீயே சொல். காவேரி : தமையனிலும் அன்புடையவனாகக் கருதப்படுபவன் யாரோ எனக்குத் தெரியாது. அரசிளைஞன் : பருவம் அடைந்த உனக்கு அது தெரியாதது புதுமையே! நல்லது நானே சொல்லுகிறேன். எவன் உன்னைத் தன்னுயிராக்க கருதிக் காதலன்பு பாராட்டுகின்றானோ அவனே உனக்குத் தமையனிலும் மேலான காதலன் ஆவன். காவேரி : ஆம்! நீ சொல்வது நன்றாயிருக்கின்றது! என் தந்தையுந் தமையனும் என்னைத் தம்முயிராகவே கருதி உள்ளன்புடன் வளர்த்து வருகின்றனர். அவரை நீ என்னென்று நினைக்கின்றாய்? அரசிளைஞன் : உள்ளன்பு மட்டுமன்று; உன்னழகிய உடம்புடன் தன்னுடம்பும் பொருந்தப் பெறுபவனே உனக்குக் காதலன் ஆவன். காவேரி : என் தந்தை தமையனாரால் எனக்குக் கணவனாக மணஞ்செய்விக்கப்படுபவன் அல்லனோ என்னுடன் பொருந்தத் தக்கவன் ஆவான்? அரசிளைஞன் : அங்ஙனம் மணஞ்செய்விக்கப்படாமற் காதலன்பு பாராட்டும் ஒருவன் உன்னைப் பொருந்தத்தக்கவன் அல்லனோ? காவேரி: அல்லன் அல்லன் வீணே பேச்சை வளர்க் காதே; என் தமையன் வர நேரம் ஆகும் போலிருக்கின்றது; நீ அரண்மனைக்குப் போ! அடீ பச்சே! (என்று கூவ, வந்த தோழியைப் பார்த்து) அரசிளைஞர் அரண்மனைக்குப் போக வழி விட்டுவா! அரசிளைஞன் : (சீற்றத்துடன்) எனக்குப்போக வழி தெரியும்; இவள் என்னுடன் வரவேண்டுவதில்லை! (என்று சொல்லிப் போய் விடுகின்றான்) (சிறிது நேரத்தில் நயினார் பிள்ளை வருகின்றான்) காவேரி : என்ன பெருமான்! வீட்டுக்குப் போனவர்கள் ஏன் திரும்பி வந்தீர்கள்? நயினார் : (புன்சிரிப்புடன்) கண்மணி! யான் வீட்டுக்குப் போனேன் என்றா நினைத்தாய்? உன்னை விக்கிரமனுடன் தனியே விட்டுப்போக மனம் இசையாமல் நம் தோழி பச்சையினுதவியால் இவ்வறைக்குப் பக்கத்தறையிலேயே ஒளித்திருந்து, உனக்கும் அவனுக்கும் இடையே நடந்த உரை யாட்டைக் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தேன். விக்கிமன் வாயை நீ அடைத்துவிட்டதுபோல், அன்றைக்கு என் வாயையும் நீ அடைத்திருந்தால் என்னுயிர் போயிருக்குமே! காவேரி : (புன்சிரிப்புடன்) உங்களுயிர் யானாகவே இருக்கையில், அஃதெங்ஙனம் போகக்கூடும்? (அம்பிகாபதி வருகின்றான்) நயினார் : என்ன அம்பிகாபதி! இன்றைக்கு இவ்வளவு நேரங்கழித்து வந்தனை? அம்பிகாபதி : (விடைசொல்லச் சிறிது தயங்கி) நீயும் இன்றைக்கு நெடுநேரமாய் இங்கிருக்கின்றனையே! நயினார் : யான் காவேரிக்குப் பாடஞ் சொல்லி முடித்து வீட்டுக்குச் செல்லுந் தறுவாயில் அரசிளைஞன் வந்தான். வந்தவன் நான் செய்யும் ஆழ்ந்த தமிழ் ஆராய்ச்சியினை முழுமடமையுடன் இழித்துப்பேசிவிட்டு, என்னை வீட்டுக்கு ஏகும்படி ஏவினான். அவனைக் காவேரியுடன் தனியே விட்டுப்போக மனம் ஒருப்படாமற், போவது போற் காட்டிப் பக்கத்தறையில் ஒளித்திருந்தேன். விக்கிரமன் காவேரியைத் தனக்கு வைப்பாட்டியாக்கிக் கொள்ளப் பார்த்தான். ஆனால், காவேரியோ அவன் வினாவியவை களுக்கெல்லாஞ் செவிட்டில் அடிப்பதுபோல் விடை கூறி அவனைத் துரத்தி விட்டாள். அவன் சினத்துடன் சென்றதை நோக்குங்கால், அவன் காவேரிக்கும் உனக்குந் தீங்கிழைப்பான் போற்றோன்று கின்றனவே! என்செய்வது? அம்பிகாபதி : நண்பா! அதுபற்றிக் கவலைப்படாதே காவேரியினிடம் அவன் கொட்டம் ஒன்றுஞ் செல்லாது. மேலும் அவன் முழுமுட்டாள். அவன் ஆராய்ச்சியறிவின்றிச் செய்யும் ஏதும் நம்மை ஒன்றுஞ் செய்யமாட்டாது. அவனையே அது தாக்கும். நேரமாவதால் நீ வீட்டுக்குப் போய்வா. ஒன்று சொல்கிறேன், எவ்வகையிலும் அவன் நம் அரசன் மகனாதலால், அவனை நாம் பகைத்துக் கொள்ளல் ஆகாது, இங்கு அவன் நடந்ததேதுங் காட்டிக் கொள்ளாமல் என்றும் போல் நண்பராகவே நாம் ஒழுகல் வேண்டும். நயினார் : நல்லதங்ஙனமே நின்முகம் ஏதோ வாடிய தாமரை போல் வாட்டமுற்றிருக்கிறதே! அம்பிகாபதி : ஒன்றுமில்லை. தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் மிகவுஞ் சிக்கலானது; அதனை இளவரசிக்கு நெடுநேரம் விளக்கியதால் உண்டான களைப்பைத் தவிர வேறெதுமில்லை. நயினார் : நன்கு அயர்வு தீர்த்துக்கொள்! (போய் விடுகிறான்) காவேரி : அண்ணா உணவெடுக்க வாருங்கள், உணவெடுத்த பின் களைப்புத் தீரும். அம்பிகாபதி : எனக்கு உணவில் தேட்டம் இல்லை அம்மா! ஏதாவது பருகக் கொடுத்தாற்போதும், நாவறண்டு நெஞ்சுலர்ந்து போயிருக்கின்றது. காவேரி : வெறும் பருகுநீர் ஆகாது. இவ்விளவேனிற் பருவத்திற்கு ஏற்றது நாரத்தம் பழமே; அதிற் சில அருந்திப் பனங்கற்கண்டு இட்டுக் காய்ச்சிய ஆவின் பாலைப் பருகுங்கள்! (இவையிரண்டுங் கொணரும்படி தோழியை அழைக்கத் தோழி அவற்றைக் கொணர்ந்து வைக்கின்றாள்) அம்பிகாபதி : (பாலை முதலிற் சிறிது பருகிவிட்டு) குழந்தாய்! இப்போ தெனக்குச் சிறிது களைப்புத் தீர்ந்தது. முற்றிலுந் தீர்ந்த பிறகு இவைகளை உட்கொள்கின்றேன். மேன்மாளிகை முற்றத்திற் போய் நிலவொளியில் தனியாயிருந்து இவ்விரவைக் கழித்தால் தான் என் அயர்வு முழுதும் நீங்கும். காவேரி : அங்ஙனமே செய்யுங்கள் (மேன்மாளிகை முற்றத்திற்கு அவன் போக) அடி பச்சே! என் தமையனுக்கு வந்த களைப்புப் பாடஞ்சொன்னதனால் வந்ததன்று: வேறெதோ பிசகு நடந்திருக்கின்றது! தோழி : எனக்கொன்றும் புலப்படவில்லை அம்மா! காவேரி : என்னைப்போல் மணமாகாத கன்னிப்பெண் உனக்கு இதன் உண்மை புலப்படாதுதான். யானே நயினார் மேற் காதல் கொண்ட பிறகுதான் காதலின் நிகழ்ச்சிகளை அறிந்தேன். என்றமையன் யாரோ ஓர் அழகிய பெண்ணைக் கண்டு காதலித்துத்தான் இங்ஙனம் வாடியிருக்கின்றாரென்று கருதி என் நெஞ்சம் நடுங்குகின்றது! தோழி : நம் அண்ணன் யாரைக் கண்டு காதலித்திருக்கக்கூடும். அரண்மனையிற்றான் கட்டுக்காவல் கடுமையாயிற்றே. அதுவும் அமராவதியிருக்குங் கன்னிமாடத்தில் ஆண்காற்றே வீசப்படாதே. நம் அண்ணன் திரைக்கு வெளியிலிருந்து தானே அமராவதிக்குப் பாடங் கற்பித்து வருகிறார், மேலும், அமராவதி கைகால் முடமானவளாம், அழகில்லாதவளாம். வேறு பெண்களையும் நம் அண்ணன் அங்கே பார்த்திருக்க முடியாதே. காவேரி : ஆம், எனக்கும் ஒன்றுமே விளங்கவில்லை. நல்லது! பார்ப்போம், வழி நாட்களில் எல்லாம் விளங்கிவிடும். நள்ளிரவாயிற்று, ஊரெல்லாம் அரவம் அடங்கிப் போயிற்று, ஊர் காவற்காரர் சீழ்க்கையடித்துக் கொண்டு வருகின்றார். அது கேட்டும் அம்புலியைப் பார்த்தும் நாய்கள் குலைக்கின்றன. இனி நாம் விழித்திருக்கலாகாது. உறங்கச் செல்வோம் வா! (இருவரும் படுக்கைக்குப் போய் விட்டனர்) (அம்பிகாபதி காதற்காமந் தாங்காமல் தனியே அரற்றுகிறான்) அம்பிகாபதி : (அமராவதியின் வடிவழகினை நினைந்து) கண்மணி! உன்னைக் கண்மணி என்றழைக்க எனக்கு உரிமையுள்ளதா? நீயோ வேந்தன் மகள்! நானோ ஓர் எளிய புலவன் மகன்! ஆனாலும், யான் நின்மேற் காதல் கொண்டதுபோல், நீயும் என்மேற் சிறிதாயினுங் காதல் கொண்டால், யான் வேந்தரும் பெறாத பெருஞ் செல்வம் அடைந்தவன் ஆவேன்! ஆம், நீ என்னைத் திரை நீக்கிக் கண்டவுடன் உணர்விழந்து சாய்ந்தது எதனால்? என்மேல் வைத்த காதலினாலா? அல்லது உனக்கு ஆசிரியனாய் அமர்ந்த என்னைக் குருடனாக வைத்துப் பொய்யுரை புகன்றவர் பொய்ம்மைக்கு வருந்தியா? ஆம், உன்னைக் காணாத காலம் வரையில் யான் அகத்தும் புறத்துங் குருடனாகவே தான் இருந்தேன்,உன்னைக் கண்டவுடனே உன்மின் வடிவம் என் அகக்கண் புறக்கண்களின் குருட்டை விரட்டிவிட்டது. பேரோளி தன்னிற் பிறங்குருக் கொண்ட பிறைமுடியோன் வாரொளி மின்னில் வகுத்த நின்மேனி வனப்பினியல் காரறல் வெண்பிறை கார்க்கழை நீலங் கனிந்தகொவ்வை ஏரணி முத்தி லிசைதல்கண் டேயிவை ஏத்துவனே. எழிலின் வளமோ இசைப்ப தரிதாம் இதனொடுநின் கொழிசெந் தமிழின் இயலிசை நாடகங் கூர்த்துணர்ந்த கழிபேரறிவின் றிறமோ பெரிது கலைமகளின் வழியே பிறந்தாய்! எளியேன் பிழைக்கும் வகையுரையே! குயில்போற் கூவுங் குரலுடையாய்! யான் ஏது பிதற்றினும் நீ நின்கனிவாய் திறக்கின்றிலையே! இதோ நின்முகம் போல் ஒளிவிடும் இம்மதியமேனும் எனக்கேதேனும் ஓர் ஆறுதல் தருமா? (சிறிது நேரம் மதியினை நோக்கிக் கொண்டிருந்து) ஆ! மதியமே! நினது நிலவொளி எனக்குக் குளிர்ச்சியினையன்றோ தருதல் வேண்டும்? அதற்கு மாறாக என்னை இது சுடுகின்றதே! ஈதென்ன வியப்பு? சினக்கதி ரோன்றந்த தெள்ளொளி யன்றித் திகழுமொளி நினக்கெனவாயா நிலாக்கதி ரோய்! அந்த நீர்மையினால் எனக்கினித் தீயவ னாயினை! என்போல் இடருழப்போன் றனக்கினி யாருளர் தையலிவனைத் தணந்திடவே! பாவாய்! இது மதியத்தின் வெம்மையன்று; காதல் நோய் கொண்டாரையே இந்நிலாக் கதிர் வெதுப்புகின்றது! மஞ்சட் காமாலை யுடையவன் கண்களுக்கு எல்லாப் பொருள்களும் மஞ்சள் நிறமாகவே தோன்றுகின்றது. பித்தங்கொண்டவன் நாவினுக்குக் கரும்புங் கசக்கின்றது. இவை போலவே யான் கொண்ட காதல் நோயுங் குளிர்ந்த நிலவை வெம்மை யுடையதாகச் செய்கின்றது! உருகி யுடல்கருகி யுள்ளீரல் பற்றி எரிவ தவியாதென் செய்கேன்- வரியரவ நஞ்சிலே தோய்ந்த நளினவிழிப் பெண்பெருமாள் நெஞ்சிலே யிட்ட நெருப்பு (இது சொல்லித் சோர்ந் துறங்கி விடுகின்றான்) மூன்றாம் நிகழ்ச்சி : பத்தாங் காட்சி களம் : கன்னிமாடத்தின் பின்னுள்ள பூங்கா மண்டபம். காலம் : உவாமூன்றாம் நாள் நள்ளிரவு. அமராவதி : அடி நீலம்! ஏன் இந்த நெய்ப்பொங்கலை அருந்தச் சொல்லி என்னைத் துன்புறுத்துகின்றனை? பால் தானும் பருகல் என்னாலாகாது. என் காதலனைக் காணாமல் என்னுயிரோ தத்தளிக்கின்றது! இதோ! குயில் கூவும் ஓசையைக் கேட்டனையா? இஃதென்னுயிரைக் கொள்ளை கொள்ளுங் கூற்றுவனது அழைப்பொலியாகவன்றோ காணப்படுகின்றது! இத்தேமாவின் உச்சியிலிருந்து கூவும் அக்குயிலைத் துரத்திவிடு! இதோ! இந்நிலவொளியின் கடுமையையும், இவ்விளந்தென்றலின் வன்செயலையும் பார்! மதியின் கதிராம் பெருந்தீயை மறுகுமென்மேல் மாட்டுதற்குப், பொதியின் றென்றல் பூவிலுறை பொடியை வாரிப் புகுந்தப்பி, உதியின் செயல்போற் கவிந்தூதும் உளவை ஓராய்! உற்றதுணை மிதியின் ஏனோர் மேலிருந்து மிதிப்ப ரென்றல் மிகையன்றோ? நீலம்! என் ஆருயிர்த் தோழியாகிய நீயே என் காதற்கொழுநனை என்பாற் கொணர்ந்து சேர்ப்பியாமல் என்னைத் துன்புறுத்துகின்றனை என்றால் உயிரில் பொருளாகிய திங்களுந் தென்றலும் என்னைத் துன்புறுத்துதல் சொல்ல வேண்டுமோ! துணையில்லாதவர்களை மெலி யாரும் வலிந்து வந்து வருத்துவரென்பது உண்மையா யிருக்கின்றதே! ஐயோ! மெய்யாகவே நீ என் உயிர்த்தோழியா? உண்மையைச் சொல்லிவிடு! இதோ! இந்த வாவியில் வீழ்ந்து என்னுயிரை மாய்த்து விடுகிறேன். njhÊ: என் கண் அனையாய்! நீ இங்ஙனமெல்லாம் ஆற்றா தரற்றுவது என் உயிரையே வாட்டுகின்றது! நீ திரையை நீக்கி ஆசிரியரைக் கண்டது முதல் இந்த மூன்று நாளுந் தில்லைவாணர் நோயாய் கிடந்து, நின் திருமுகத்தைக் கண்டபின்னேதான் நோய் தீர்ந்து நலமாயிருக்கின்றார். நீயும் இந்த மூன்றுநாளாக நின்னை மறந்த நிலையிற் படுக்கை யிலேயே கிடந்தாய்! ஆசிரியர் உனக்கெழுதிய திருமுகத்தைக் கண்டபின்றானே நீயும் உணர்வு தெளிந்தனை. உன் திருமுகத்தை அவரிடம் சேர்ப்பிக்கவும் அவரது திருமுகத்தை உன்னிடம் மறைவாய்ச் சேர்ப்பிக்கவும் யான்பட்ட அல்லலை நீ அறிவாய். அதுமட்டுமா! உன் பெற்றோரும் அண்ணனும் நீ உணர்விழந்து கிடந்த நிலையைக் கண்டு அடைந்த ஆற்றாமையோ மிகப் பெரிது. அவர்களை ஆற்று விக்கவும், நின்நோயின் உண்மை அவர்கட்குப் புலப்படாமல் மறைக்கவும் எவ்வளவு அலக்கணுற்றேன்! இதற்கிடையில் எத்தனை மந்திரக்காரர்! எத்தனை குறிகாரர்! எத்தனை மருத்துவர்! அவ்வளவு பேர்க்கும் ஈடு கொடுக்க யான் பட்ட துன்பம் என்னால் எடுத்துரைக்க முடியாது! உன் அன்னையார் நாலைந்து நாழிகைக்கு முன்னேதான் தமது மாளிகை யிற் படுக்கைக்குப் போனார். அவர்க்கும் மற்றைத் தோழி மார்க்குந் தெரியாமல் உன்னைத் தனியே இங்குக் கொணர்தற்கு எவ்வளவு பாடு! எல்லாம் நம் அம்பலவாணனே அறிவான்! அமராவதி : அதெல்லாமிருக்கட்டும். நம் ஆசிரியர் தில்லைவாணர் யார்? அவரைப்பற்றிய முழு வரலாறுந் தெரிந்தனையா? அவர் நாளையாவது நமக்குப் பாடஞ் சொல்ல வருவாரா? அவரும் என் மேல் அளவுபடாக் காதல் வாய்ந்தவரா யிருக்கின்றனரே? பாடஞ்சொல்லுங்கால் அவர் என்னைப் பார்க்கவும் யான் அவரைப் பார்க்கவும் வாய்ப்பு இல்லையே! தோழிமாரும் என் அன்னையாரும் அப்போது அடுத்தடுத்து வந்து நம்மைப் பார்க்கின்றனரே! அன்றைக்கு யான் திரையை நீக்கி அவரைக்காண நேர்ந்த போது, உன்னைத்தவிர வேறு யாரும் இல்லாமற்போனது எல்லாம்வல்ல நம் இறைவன் செயலன்றோ! என்னால் தாங்க முடியாத இந்நோய்க்கு ஏதேனும் மருந்து கண்டனையா? தோழி : ஆம், கண்டேன். அமராவதி : (பேராவலோடெழுந்து அவளைக் கட்டி அணைத்துக் கொண்டு) என் ஆருயிரணங்கே! என் காதலரை எப்போது யான் தனியே காண்பேன்? தோழி : இப்போது இன்னுஞ் சிறிது நேரத்திற் காண்பாய். அமராவதி : (மருண்டு) என்னடி நீலம்! என்னைப் பகடி பண்ணு கின்றனையா? தோழி : இல்லை அம்மா! இன்னும் சிறிது நேரத்தில் நீ அவரைக் காண்பாய்; ஈது உண்மை. அமராவதி : (திகைத்து) உண்மையா? எவ்விடத்தில் அவரைக் காண்போம்? நாம் இருக்கும் இவ்விளமரக்காவும், இதனுள்ளிருக்கும் மண்டபங்கள் மாளிகைகளெல்லாமும் வானளாவும் மதிலாற் சூழப்பட்டு மதிற்புறத்துங் கடுங்காவலர்களை உடையனவல்லவோ? இவ்விடங்களில் நீயும் நானுந்தவிர நம் தோழிமார்கூட நம் உடன்பாடின்றி வரல் முடியாதே! நம் பெற்றோருந் தமையனுங்கூட இங்கு வருவதில்லையே! தோழி : அதனாலேதான் அவர் இங்கே வருவதற்கு வேண்டிய ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. அமராவதி: நல்லது! அவ்வொழுங்குதான் யாது? சிறிதாயினுஞ் சொல்லி என் மனக்கலக்கத்தை அகற்றே. தோழி : நாம் தனியே நீராடும் செங்கழுநீர் ஓடைக்கு வா. அதன் கரையிலுள்ள நமது ஒப்பனை மாளிகையில் அவரை வரவேற்றல் வேண்டும். அம்மாளிகையின் அருகிலுள்ள வேப்பமரம் தன் பக்கத்துள்ள மதிலினும் உயர்ந்து மதிற்புறத்தும் நிழல் பரப்பி நிற்கின்றது. மதிற் புறத்தேபடும் அதன் நிழலில் ஒரு காளிகோயிலிருக்கின்றது. அக்காளி கோயி லிருக்கும் இடம் ஊர்க்கு வெளியே தனிமையிலுள்ளது. அதன்கண் உள்ள காளியம்மை மிகக் கொடுமையானவள் என்னும் எண்ணத்தாற் குடிமக்கள் மாலை ஐந்து நாழிகைக்குமேல் அப்பக்கத்தில் இயங்குவதில்லை. இந்நள்ளிரவில் நின் காதலர் அக்கோயிலண்டையில் வந்திருந்து நூலேணி வழியே மதிலைத் தாண்டி இங்கு வருவர். நிலவு பட்டப் பகல் போல் எவ்வளவு தெளிவாய் எரிக்கின்றது பார்! வா! போவோம். (இருவருங் குறித்த இடத்திற்குச் செல்கின்றனர்) அமராவதி : (வழியில்) என்னடியம்மா நீலம்! எனக்கு அச்சமாயிருக் கிறதே! இளைஞரான நம் ஆசிரியர் இந்நள்ளிரவில் அக்காளிகோயிற் பக்கத்தே வருவதை நினைக்க என் நெஞ்சம் நடுங்குகின்றதே! தோழி : (சிரித்துக்கொண்டு) அம்மம்ம! கணவனைக் கூடா முன்னமே நீ அவர்மேல் உயிரை விடுகின்றனையே! அவரைக் கூடிவிட்டால் நீ என்னைக்கூட மறந்து விடுவாய் போல் தோன்றுகின்றதே! ஒன்றுக்கும் அஞ்சாதே! நின் கணவனும் அவர் தந்தையும் இக்கோயிற் குருக்கள்; அதனாற் காளி நின் கணவற்குத் தீங்கேதுஞ் செய்யாள். அமராவதி : நம் முன் ஆசிரியர் கம்பரல்லரோ காளிகோயிற் பூசகர்? அங்ஙனமானால் இவர் யார்? தோழி : கம்பர்மகன் அம்பிகாபதிதான் இப்போதிங்கு வரும் நின் காதலர். அமராவதி : என்ன முற்றவஞ் செய்தனென் ஏடீ! எளிய னேனுயிர்க் கொழுநனா விந்த மன்னர் ஏத்திடு மாண்கலை வல்ல மதியி னானைமான் மகனனை யானைக் கன்ன லென்னவென் கட்கினி யானைக் கருத்தி லூறுதீங் கனியென நாவிற் பன்ன வல்லவென் பாவல வேந்தைப் பரவி யானுறப் பகர்ந்திடு பாங்கீ! இறவாத அன்பினனை யான் விழைந்த எழிலானைப் பறவாத கிளியனையாய்! பரிந்தெனக்கு நல்கினையே, உறவான பேரன்பை எழுமையிலும் உள்ளியுள்ளி மறவாத செயலன்றி மற்றேது செய்கேனே! பிழைக்கு வழி காணாமற் பெரிதே வருந்தும் மாந்தர்க்குப் பெரிது காக்கும் மழைக்குமொரு கைமாறு மதிப்பா ருளர்கொல்! மாதேபார்! மற்றுமிங்கே உழைக்குமுயிர் எல்லாமும் இரவும் பகலும் ஓவாதே ஓங்கி வாழ்ந்து தழைக்கவொளிர் வெய்யோற்குந் தவழ்வெண் மதிக்கும் என்செய்வர் சாற்று வாயே! தோழி : கண்மணி அமராவதி! எனக்கென்ன கைம்மாறு வேண்டும்? நீயும் நின் காதலரும் ஒன்றுகூடி இனிது வாழ்வதைக் காண்பதே எனக்குக் கைம்மாறு. நின்னை அவர் பெறுதற்கும் அவரை நீ பெறுதற்கும் முற்பிறப்பில் நீங்கள் செய்த தவமே உங்களைக் கூட்டுகின்றது. (ஓர் ஓசை கேட்டு) அவ்வோசையைக் கேட்டனையா? அவர் வந்துவிட்டார். அவர் எறிந்த பூம்பந்து விழுந்த ஓசை தான் அது. யான் நூலேணி கொண்டு போய் அவரை அழைத்து வருகிறேன். நீ மாளிகையுள் இரு. அமராவதி: யான் அணிந்திருக்கும் ஆடையணிகலங் களைல்லாம் அவர் பார்த்து மகிழத்தக்க வகையாய்த்திருத்தமாய் அமைந்திருக்கின்றனவா? தோழி : நின் பேரழகினுக்கு முன் அவ்வாடை அணிகலங்கள் எம்மட்டு? நின் அழகினாலேயே அவை அழகு பெறுகின்றன! நின் காதலர் தம்முடைய கண்களாற் பெறுதற்குரிய அரும்பெரும் காட்சியை இப்போது காண்பர். (நூலேணியுடன் போய் விடுகிறாள்) அமராவதி : (தனக்குள்) ஓ! நெஞ்சமே உனக்கு ஆசிரியராயிருந்தவர் இப்போதுனக்குக் காதலருமாயினர். அவருடன் எங்ஙனம் உரையாடுவதென்று தயங்காதே! தடுமாறாதே! நீ விழைந்த அரும்பொருள் நினக்கு எளிதில் கிட்டும்போது அதனைப் பயன்படுத்திக் கொள்ளுதற்கேற்ற வழியும் நினக்குப் பிறக்கும்; நின் ஆருயிர்த் தோழி நினக்கு அவ்வழியினைக் காட்டுவான். பதறாதே! அமைதியாயிரு. (தோழி அம்பிகாபதியுடன் வந்து) தோழி : இளவரசியார்க்கு வணக்கம். ஆடவர் அணுகப் பெறாத இவ் வரண்மனைக் கன்னிமாடப் பூங்காவில் இந்நள்ளிரவில் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்த இக் கள்வரைத் தங்களிடம் இதோ பிடித்துக்கொண்டு வந்திருக்கின்றேன். இவரை எப்படி ஒறுக்க வேண்டுமென்று நினைக்கின்றீர்களோ அப்படியே செய்யுங்கள்! அமராவதி : நல்லது, இவரது வாய்ப் பிறப்பைக் கேட்டு இவரைச் சிறை செய்து வைக்கிறேன்; நீ போய் விடியும் முன்னமே இங்கு வா! தோழி : (புன் சிரிப்புடன்) அப்படியே அம்மணி! (வணங்கிப்போய் விடுகிறாள்) அமராவதி : ஐய நீர் யார்? இக்கன்னிமாடப் பூங்காவில் இந்நள்ளிரவில் நீர் வந்தது பெருங்குற்றமன்றோ? எதற்காக இங்கு வந்தீர்? உடனே சொல்லும்! அம்பிகாபதி : ஆம், அரசி! எங்குமில்லாத பேரழகு வாய்ந்த ஒரு பெண்மான் இத்தோட்டத்தின்கண் உளதென்று கேள்வியுற்று அதனைப் பிடிக்கவே இவ்வளவு அல்லற்பட்டு இங்கு இந்நள்ளிரவில் வந்தேன், பெருமாட்டி! அமராவதி : ஆ! அங்ஙனமாயின் அதனைக் கண்டு பிடித்தீரா? அம்பிகாபதி : தேனொக்கும் இன்மொழியாள் தேராத என்நெஞ்சிற் றிகழ் கின்றாளை மானொக்கும் என்றெண்ணி மற்றதனைக் கவர்தற்கு வந்தேன் மின்னே! மீனொக்குங் கண்ணுடையாள் மின்னோக்கிற் கொப்பன்றி மிகுந்தன் னாளைத் தானொக்கும் பொற்பொன்றுஞ் சார்தலிலா மறிதன்னைச் சார்ந்தி லேனே! அமராவதி : ஓ! நன்றாய்ப் பாட்டுப் பாடுகிறீர்! அம்மானைப் பிடியாததற்கு அது காரணமாயின், வேறென் செய்தீர்! அம்பிகாபதி : என் செய்தாய் என்றா கேட்கிறாய்? கண்மணி! அமராவதி : என்ன! என்னைக் கண்மணி என்றழைக்கின்றீரே. நான் அரசி என்பதை மறந்துவிட்டீரா? அம்பிகாபதி : இல்லை, இல்லை. என்னுயிருக்கும் என்னுடம்பிற்கும் என் அன்பிற்குமெல்லாம் நீங்களேதாம் அரசி. வாய்தவறிச் சொன்னதைப் பொறுத்தருளல் வேண்டும். அமராவதி : பொறுக்க முடியாது. அத்தவறுதலுக்காக உம்மை இதனால் அடிக்கின்றேன். (ஒரு மெல்லிய பூம்பந்தை அவன் மேலெறிகின்றாள்) அம்பிகாபதி : இத்தகைய அடி கிடைப்பதாயின் இன்னும் பலமுறை அவ்வினிய சொற்களைச் சொல்ல விழைகின்றேன். அமராவதி : ஓ! நீர் பெருத்த வாயாடியாய் இருக்கின்றீர். அஃதிருக்கட்டும். மானைக் கைவிட்ட நீர் வேறென்ன திருட்டுத் தொழில் செய்தீர்? அம்பிகாபதி : புயலாருங் குழன்மடவாள் பொற்பினையே பொருவுமென மயிலாரை யான்நோக்க மற்றதுதான் ஆணாக, இயலாத மயிற்பேடும் ஏந்திழையாட் கொவ்வாமை அயிலாரும் விழியாய்! யான் அறிந்ததனை அகன்றெனனால்! அமராவதி : ஆம்! அஃதுண்மைதான்; ஆண் மயிலை ஒரு பெண் மகளுக்கு உவமை கூறுதல் ஆகாதுதான்; பெண் மயிலோ அழகிலது. அங்ஙனமாயின் வேறென் செய்தீர்? அம்பிகாபதி : உதோ தோன்றும் ஓடையின் மருங்கே பொன்னிற் கடைந்து திரட்டிய ஓர் அழகிய பெண் பாவை ஒளிர்வது பார்மின்! அஃதென் காதலியையே முழுதும் ஒத்திருந்தது; அது கண்டு அதனைக் கவர அணுகினேன்; ஆனாற், காதலியின் கருவிழிபோல் அதன் விழிகள் காண்கிலவே கோதலிலாக் கனியிதழ்கள் குறுஞ்சொற்கள் கூறுகில காதலிலாத் தனியுயிர்ப்பும் மணம்கமழத் தருகிலதே ஆதலினாற் பொலம்பாவை அருகணைந்தும் அடைந்திலெனால் அமராவதி : நல்லது, அப்பொற் பாவையையும் வேண் டாத நீர் வேறென்ன செய்தீர்? அம்பிகாபதி : காணப் பேசாக் கமழா உயிரா மாணாப் பாவைக்கு மாட்சி நல்கிய மூலப் பாவை நீலப் பூவென விழிப்பதுஞ் செய்யுஞ் செழிக்க மொழியும் முகிழ்விரி முல்லையின் மகிழ உயிர்க்கும் ஆதலி னதனைக் காதலிற் காண்குவென், காணு மதனைப் பேணிக் கவர்வென், என்றியான் போத நின்பெருந் தோழி ஈங்கெனைக் கொணர்ந்து நிறுவினள், ஏங்கிய உள்ளத் துறுதுயர் ஒழியக் கள்ளவிழ் பூங்குழலாய் நின் பொலிவினைக் கண்டு வான்குலாம் அணங்கே ஈங்குநிற் பவளென் றெண்ணினெ னாகலின் அண்ணிய நின்னைக் கவர்ந்துகொண் டேகல் தவிர்ந்தனென் செய்வதறியா மையலுற் றேனே! அமராவதி : மையலுற்று மயங்கிய நும்மை இம்மலர்த் தொடையலாம் இருந்தொடர் தன்னால் இறுகப் பிணித்தென் நறுமலர்க் கட்டிலில் சிறைசெய் திணைநகின் மருப்பிற் குத்தி முறைசெய் தென்கடன் முடிப்பென் நிறைகவர்ந் தென்னை நெகிழ்வித்தீரே! (மலர் மாலையாற் கட்டித் தன் காதலனைத் தன் பஞ்சணைக்கு ஈர்த்துச் செல்கின்றாள்) அம்பிகாபதி : இத்தகைய சிறையடைய எத்தனை நாள் தவம்புரிந்தேன் முத்தனைய மூரலாய்! மொழிக்குமொழி தித்திக்குந் தத்தையே! யானடைந்த தனிப்பேற்றை எவர்பெற்றார்! இத்தனைக்குங் கைம்மாறொன் றெங்ஙனம்யான் ஆற்றுவெனே! அமராவதி : அரும்புலமைக்களஞ்சியமாய் அழகினுக்கோர் உறைவிடமாய் விரும்புமென துளத்தெழுதும் ஓவியமாய் விளங்குமுமைப் பெரும்புவியிற் பெறுவதினுங் கைம்மாறு பிறிதுளதோ? கரும்பினுமென் அகத்தினிக்குங் காதல்வளர் கலையமுதே!  அம்பிகாபதி : என்னாருயிர்ப் பாவாய்! அமராவதி! விடியற் காலம் அணுகுகின்றது! எங்ஙனம் உன்னைப் பிரிந்து போவதென்று என் நெஞ்சமோ ஏங்குகின்றது! இத்தனை நாள் உன்னைக் கூடாமல் வருந்தினேன். இப்போது உன்னைக் கூடி வருந்துகின்றேன்! அமராவதி : ஆம் பெருமான். உங்களை யான்தான் எங்ஙனம் பிரிந்திருப்பேன்! இந்த இராப்பொழுது இன்னுஞ் சிறிது நீளலாகாதா! கதிரவன் வராமற் றடை செய்த நளாயினியே போல் இன்னுமொரு கற்புடை நங்கை இங்கில்லையா? என் கண்ணாளா! இன்னுஞ் சிறிது நேரம் இங்கிருங்கள்! என் தோழி வருவாள். அப்புறம் நீங்கள் செல்லலாம். நாளை மாலையில் எமக்குப் பாடஞ் சொல்ல வருவீர்களல்லவா? அதுதான் என்னுயிர்க்கு ஆறுதல் அளிப்பது. (தோழி வருகின்றாள்) தோழி : அம்மா அமராவதி! கடாரத்து நீரில் இட்ட நமது நாழிகை வட்டிலில் இருபத்தைந்து நாழிகை ஆய்விட்டது. விடிவதற்கு முன் நின் கணவர் இவ்விடத்தை விட்டு ஏகல் வேண்டும். இன்னும் ஐந்து நாழிகையில் ஊரவர் விழித்துக் கொள்வர்! அமராவதி : ஏடி நீலம்! இதோ வருகின்றோம்! (கணவனைக் கட்டித்தழுவி விடைதர, அவன் அவளை முத்தமிட்டுப் புறப்படுகின்றான்) கருத்தாய்ப் போய் வாருங்கள் பெருமானே! தோழி : பெருமானே! இவ்வழியே வாருங்கள்! இவ்வழியே வாருங்கள்! (அழைத்துச் சென்று அவனை நூலேணிமேல் ஏறச் செய்ய, அவன் அவளை வாழ்த்திப் போய்விடுகிறான்) நான்காம் நிகழ்ச்சி: முதற் காட்சி களம் : அரண்மனைப் பூந்தோட்டக் குடிசை; நேரம் : நள்ளிரவு தோட்டக்காரன் : அடி என் கண்ணாட்டி வெள்ளச்சி; என்னடி செய்யிறது! நம்ம ராசா பூசைக்கு வேணும் பூவெ எவனோ வேலியெ தாண்டி வந்து ராவேளையில் பறிச்சிக் கிட்டு போறான். ராசாவோ எங்கடா, கருங்குவளைப்பூ, அல்லிப்பூ, தாமரைப்பூ? எங்கடா மகிழம்பூ, பவளமல்லி, சந்தனப்பூ, நாரத்தம்பூ, பன்னீர்ப்பூ? எங்கடா முல்லைப்பூ, சம்பங்கிப்பூ, பிச்சிப்பூ? என்று நாடோறும் என்னக் கேட்டுக் கேட்டு என்மேல் சீறி விழுறார். இன்னெ ராவுலே அந்த திருடனெக் கண்டு பிடிச்சு நாளெக் காலம்பெறெ அவனெ ராசாகிட்ட ஒப்பிக்காவிட்டா, ராசா என்னெ தோட்டத்தெவிட்டுத் தொரத்தி விடுவாராம். என்னடி செய்யிறது! நம்ம பிளெப்பு வாயிலே மண்ணு விளும் போலிருக்குதே! வெள்ளைச்சி : ஆமாங்கறே. நாம எப்படிப் பௌப் போம்! எப்படியாவது இன்னெ ராமுளுக்க நாம முளிச்சிக்கிட்டு இருந்து அந்த திருட்டுப் பயலெக் கண்டு பிடிப்போம் வா. நாம தூங்கப்படாது. (அங்ஙனமே இருவரும் விழித்துக் கொண்டு காவலிருப்ப, நிலவொளியில் அம்பிகாபதி தோட்டத்தினுட் புகுந்து பூக்களைப் பறிக்கின்றான்) தோட்டக்காரன் : வெள்ளச்சி, அதொ பார்த்தியா! திருடன் வந்து பூப்பறிக்கிறான். வெள்ளைச்சி : அவனெ இப்போ பிடிக்கப்படாது பூவெப் பறிச்சுக்கிட்டு எங்கே போறான்னு பார்த்து, அவனுக்குத் தெரியாமே அவன் பின்னாலே போயி எந்த வீட்டில நொளெயிறான்னு பார்த்து ஒடனே ராசாவுக்குத் தெரிவிச்சா ராசா காவலாளெ ஏவி அவனெப் பிடிச்சுக்குவார். நாம அவனெப் பிடிக்கப்படாது; அவன் கையிலே கத்தி வச்சிருந்து நம்மெ வெட்டி விட்டா என்ன செய்யிறது! தோட்டக்காரன் : ஆமடி எங்கண்ணே! நீ சொல்லுறது சரிதான்; திருடனென்னா எனக்கு ரொம்ப அச்சம். (அம்பிகாபதி பூக்களைப் பறித்துக் கொண்டு வேலியின் வெளியே வந்து காளிகோயிற் பக்கம் போய் நூலேணி வழியே மதிலைத் தாண்டி அமராவதியிடஞ் செல்கின்றான்) ஐயையோ! இதென்னடி அந்தத் திருட்டுப்பய ராசா மக அமராவதியின் தோட்டத்துக்குள்ளே மதிலெத்தாண்டிப் போறானே! கொத்தவாலண்டே ஓடிப்போயி சொல்லட்டுமா? வெள்ளச்சி : சீ! சும்மாயிரு! அவன் திருட்டுப்பய அல்ல. அவன் திருட்டுப்பயலாயிருந்தா, அவ்வளவு ஒயரமான மதிள்மேலேறிப் போவத் தோட்டத்துக்குள்ளேயிருந்து ஒரு கயித்துச் சுருணெ வெளியே வந்து விளுமா? கன்னிமாடத்திலே எவளெயோ இவன் வச்சிருக்கிறான். அவளுக் காகத்தான் இவன் பூவெப் பறிச்சிக்கிட்டுப் போறான். தோட்டக்காரன் : அப்படியானா, இவனெ எப்படி ராசா கிட்டே பிடிச்சுக்கிட்டுப் போயி என்ன சொல்லுறது? வெள்ளைச்சி : இவன் கன்னிமாடத் தோட்டத்துக் குள்ளே போய் வார சேதியெ நாம சொல்லப்படாது. நாம சொன்னா ராசாவுக்கு ரொம்ப வருத்தம் வரும். நம்மெயெ திருப்பிக் கொள்ளுவார்; நம்ம தலெ போய்விடும். இவன் திரும்பி எறங்கிப்போவெயிலே இவனெக் கொத்தவாலெக் கொண்டு பிடிச்சுக்கிட்டு ராசாவெடம் போயி இவன்தான் பூப்பறிச்ச திருடன்னு சொல்லு, வேறெ ஒண்ணுஞ் சொல்லாதே! ( இருவரும் மதிற்புறத்தே தொலைவிற் காத்திருக்கின்றார்கள்) நான்காம் நிகழ்ச்சி: இரண்டாங் காட்சி களம் : அமராவதியின் ஒப்பனை மாடம். நேரம் : அதே நாளிரவு அமராவதி : என்னாருயிர்ப் பெருமானே வரவேண்டும்! வரவேண்டும்! பேதையேன் பொருட்டாக இந்த ஏழு திங்களும் நீங்கள் இந்நள்ளிரவில் வந்து இடர்ப்பட்டு வந்து அல்லற் படுகின்றீர்களே! இதனை நினைக்க நினைக்க என் நெஞ்சம் ஆற்றாத் துயரில் ஆழ்கின்றதே! இதற்கேதும் மருந்தில்லையா? அம்பிகாபதி : கண்மணி! என் காதற் செல்வி! பெறுதற்கரிய பொருளை ஒரு வறியவன் பெற்று இன்புற வேண்டுமானால் அதற்கான முயற்சியை அவன் அல்லும் பகலுஞ் செய்து அல்லற்பட்டே தீரல் வேண்டும். நீயோ ஒப்புயர்வற்ற ஒரு வேந்தர் பெருமானுக்கு ஒரேயோர் அருமைப் புதல்வி யானோ ஓர் ஏழைப்புலவன் மகன்; உங்களை அண்டிப் பிழைப்பவன். உன்னை யான் என் காதற் கற்பகமாகப் பெறலானது எத்தனையோ பிறவிகளில் யான் சிவபெருமானை நோக்கிச் செய்த தவத்தின் பயனேயாகும். வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல்கடல் வானுகத்தின் துளைவழி நேர்கழி கோத்தெனத் தில்லைத்தொல் லோன்கயிலைக் கிளைவயின் நீங்கியக் கெண்டையங் கண்ணியைக் கொண்டுதந்த விளைவையல் லால்விய வேன்நய வேன்றெய்வம் மிக்கனவே (திருச்சிற்றம்பலக் கோவையார்) கண்ணே! நம்மையொருங்கு கூட்டிய அம்பலவனே நம்மை என்றும் பிரியாநிலையில் வைக்க வழி செய்தல் வேண்டும். அமராவதி : ஐயோ! பெருமானே! யான் ஏன் ஓர் அரசன் மகளாய்ப் பிறந்தேன்! உங்களைக் கூடுதற்கு யான் இழைத்த பெருந்தவத்தில் ஏதோ பிழைபட்டமையாலன்றோ, அங்ஙனம் பிறந்தேன். ஓர் ஏழைக் குடியானவன் வீட்டில் பிள்ளையாபிறந்திருந்தால் அச்சமின்றி உங்களை மணஞ் செய்து கொண்டு இனிது வாழ்வேனே. நீங்கள் இங்கே வரும்போதுந், திரும்பி வெளியே செல்லும் போதும் என் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கின்றேனே! என் அன்னையார் உடம்பட்டாலும் என் தந்தையார் என்னை உங்களுக்கு மணஞ்செய்து கொடுக்கச் சிறிதும் உடம்படமாட்டாரே! தான் அரசன் என்ற இறுமாப்பால் தன்னைப் போன்ற ஓர் அரசன் மகனுக்கே என்னை மணஞ்செய்விக்க ஒரே பிடியாய் நிற்கின்றார். என்னை என் மாமன் குலசேகர பாண்டியனுக்கு மணஞ் செய்விக்க எண்ணங்கொண்டு அவனைத் தம்மிடம் வரவழைத்திருந்தபோது, யான் அவனை மணக்க இசைந் திலேன். அது முதல் அவர் என்மேல் வருத்தம் உடையவ ராகவேயிருக் கின்றார். ஆனாலும், அவர் கல்வியில் மிக்க விருப்பமுடையவராகையால் எனக்குப் பாடங் கற்பிக்க உங்களை ஆசிரியராக அமர்த்தி வைத்தார். நாம் ஒருவரை ஒருவர் பாராதபடி அதற்கு எத்துனைக் கட்டுக்காவலுஞ் செய்து வைத்திருக்கின்றார்! அம்பிகாபதி : ஆம், ஆம் கண்மணி. நாம் ஒருவரை யொருவர் பார்த்திருப்பமோ, காதலித்திருப்பமோ என்பதை அறியத்தான், அவர் அன்றொருநாள் நீ சிவபெருமான் கோயிலில் ஆடிப் பாடும்போது என்னை வருவித்திருந்தார். ஆனால், நல்ல காலமாய் அதற்கு முன் நாம் ஒருவரை யொருவர் பார்த்துக் காதலித்த தின்மையால், அன்றைக்கு நமது முகக்குறிப்பிலிருந்து நாம் ஒருவரையொருவர் பார்த் திலாமையைத் தேர்ந்து ஒருவாறு மனவமைதியடைந்தார். நாம் காதலித்தபின் அவர் அங்ஙனம் என்னை வருவித்திருந்தன ராயின், எவ்வாறாயினும் நம் காதல் நம் முகக்குறிப்பில் வெளிப்பட்டிருக்கும்; அதனைத் தெரிந்திருந்தால் அவர் அன்றைக்கே என்னை அரண்மனை வாயிலிலும் வர வொட்டாமற் றடை செய்திருப்பார். யானும் நின்னைப் பெறும் என் பிறவிப் பெரும் பயனை ஒருங்கே இழந்து போயிருப்பேன். நம்மைப் பிணைத்து வைத்த இறைவன் பேரருளுக்கு எனது புல்லிய அன்பைச் செலுத்து தலன்றி வேறெது செய்ய வல்லேன்? அமராவதி: உண்மைதான் பெருமானே! யான் ஆடிப் பாடும்போது நீங்கள் என்னை இன்னாளென அறிந்து கொண்டீர்களா? யானோ அப்போது உங்களை இன்னாரென்று சிறிதும் அறிந்திலேன். அம்பிகாபதி: இல்லை அமராவதி, உன்னை அரண் மனையிலுள்ள ஒரு நடனமாது என்றே எனக்குச் சொல்லி வைத்திருந்தார்கள். அமராவதி: ஆ! எவ்வளவு கட்டுக்காவல்! என் ஆசிரிய ரையே யான் தெரிந்துகொள்ளாமற் செய்தார்கள்! ஆனாலும், என் மனக்கினிய காதலரை யான் அடையாமலிருக்க நம் அருட்கடலான ஆண்டவன் தடை செய்வானோ! இறைவனருளுக்கு முன் மக்களின் கட்டுக்காவல் என் செய்யும்? நல்லது, கோயிலில் என்னைக் கண்டபோது உங்கள் நெஞ்சம் என்ன நிலையிலிருந்தது? அம்பிகாபதி: கட்புலனிற் காணாத என்னுயிரே காணுமா றுருவு கொண்டு விட்புலத்தி னின்றிறங்கு மின்போல விளங்கியதோ! மின்னுக்கில்லாத் தட்பமுறு மென்குவளை தார்முல்லை இலவமலர் தாங்கித் தோன்றும் பெட்புவளர் மென்கொம்பாய்ப் போந்ததுவோ! என்றெண்ணிப் பிறிதுற் றேனே! அமராவதி : யானும் அங்ஙனமே உங்களை நோக்கியதும், கண்ணுங் கருத்துங் கவருமோர் விண்ணவன் காட்சிநல்க மண்ணுற்றென் கண்முன்னர் வந்தனனென்றே மயங்கிமனம் எண்ணுற்றென், நம்பி! நுமையெய்த லெங்ஙனென் றேங்கலுற்றேன் பண்ணுற்ற பாடலும் ஆடலுஞ் சற்றே பழுதுற்றெனே! அம்பிகாபதி: இருவேம் நெஞ்சமும் ஒருவேம் நெஞ்சமாய்க் காதலிற் கழுமிய மேதகு நிலையை நின்னை ஈன்ற பொன்னன அன்னையார் கண்டுண் மகிழ்ந்தன ரேனும், மண்டிய சினமிகு தந்தையின் மனமது தெரிந்து மாழ்கி யிருந்தனர்; பாழ்வினை யேனும் நடுக்குறு முளத்தொடு நின்னை நோக்க இடுக்கப்பட்ட நிலையினை யாகிக் கறங்கிய தோர்ந்து அலந்தனன் மானே! ஓ! நாம் அப்போதிலிருந்த காதல் நிலையினைக் கண்ட நின் தந்தையார் நமக்கேது தீங்கு செய்வரோவென யான் திகிலடைந்தபடி அவர் இதுகாறும் ஏதொரு தீங்குஞ் செய்திலர். அதுபற்றி நாம் இப்போது துன்புறல் வேண்டாம். இதோ யான் இப்போது கொணர்ந்திருக்கும் நறுமண மலர் களை நின் கருமணற்கூந்தலில் சூட்டிக் களிக்கின்றேன். (தன் மடியினின்றும் பூக்களை எடுக்கின்றான்) அமராவதி : (அவற்றைப் பார்த்து) என் பெருமானே! இவைகள் பூக்கள் அல்ல; இவை என்னைச் சுடும் நெருப்புத் தணல்களே! அம்பிகாபதி : (மருண்டு) கண்மணி அமராவதி! ஏன் இந் நறுமண மலர்களை இவ்வளவு வெறுத்துப் பேசுகின்றனை? யான் நினக்கு யாது பிழை செய்தேன்? அமராவதி : இப்பூக்களை இடையிடையே எங்கிருந்தெடுத்து வருகிறீர்கள்? அம்பிகாபதி : இதற்கு முன் கேளாத கேள்வி இப்போது எதற்காக எழுந்தது? அமராவதி : அரண்மனைப் பூந்தோட்டத்தில் என் தந்தையார் வழிபாட்டிற்கென்று நாடோறும் எடுக்கப்படுங் கெழுவிய நறுமலர்கள் இடையிடையே குறைகின்றனவென்னும் பேச்சு அரண்மனையில் உலாவுகின்றதாம்; அவைகளைக் கவர்ந்து செல்லுங் கள்வனை உடனே கண்டு பிடித்துக் கொணரும்படி என் தந்தையார் ஒரு கட்டளையும் பிறப்பித்திருக்கின்றனராம். அம்பிகாபதி : என்னாருயிரே, நினக்குத் துன்பந்தரும் இம்மலர்கள் இனி இங்கு வரா! அமராவதி : ஏன் என் வலக்கண்ணுந் தோளுந் துடிக்கின்றன? ஐயோ கண்ணாளா! உங்களுக்கேதேனுந் தீங்கு நேர்ந்தால் யான் என் செய்வேன்! எங்ஙனம் உயிர் வாழ்வேன்! (தன் காதலனைக் கட்டிக் கொண்டு கண்ணீர் சொரிகின்றாள்) அம்பிகாபதி : என்னாருயிர்ச் செல்வி! அமராவதி! நமக்கேதொரு தீங்கும் வராதிருக்க, அதனை எதிர்பார்த்து வருந்துவது தக்கதன்று. நம்மை ஒருங்குபிணைத்த நம்மிறைவன் நம்மைக் கைவிடான். (கோழி கூவத் திடுக்கிட்டு) கண்ணே! கேட்டனையா கோழி கூவுதலை. விடியுமுன் போய் வருகின்றேன். (தோழியும் வர அரிதில் விடைபெற்று மதிற்புறத்தே இறங்கி விடிநிலவிற் செல்கின்றான்) நான்காம் நிகழ்ச்சி : மூன்றாங் காட்சி களம் : மதிற்புறத்துத் தெரு. நேரம் : அதே இரவின் வைகறை. நகர் காவற்றலைவன் : யாரேடா அங்கே செல்பவன்? செல்லாதே நில் (அம்பிகாபதி நிற்கின்றான் தோட்டக் காரன் ஓடி வந்து அவனருகே நின்று) தோட்டக்காரன் : ஐயா! இவன் தான் அரமெனப்பூந்தோட்டத்லே ராவேளையிலே பூந்து பூவெப்பறிச்சிக் கிட்டு போற திருடென். அம்பிகாபதி : ( நகர் காவலனை நோக்கி) ஐயா யான் திருடன் அல்லேன், யான் காளிகோயிற் பூசகன். நகர்க்காவலன் : நல்லது, இந்த நேரத்தில் உமக்கிங்கு என்ன வேலை? அம்பிகாபதி : நாளை மார்கழித்திங்கள் பிறக்கப் போகின்றது; அதற்காக ஐயை கோயிலில் வைகறை வழிபாடு நடத்தல் வேண்டிக் கோயிலுக்கு வந்து செல்கின்றேன். தோட்டக்காரன்: ஐயா, இவன் சொல்லுறது முளுப்பொய். நம்ம மாராசா இன்னெ ராவுக்குள்ளே இவனெப் பிடிச்சிக்கிட்டு வந்து நாளெக் காலம்பர ஒப்பிக்காட்ட என்னெத் தோட்டத்தெ விட்டு தொரத்தி விடுவதாச் சீறிச்சொன்னார். அதுனாலே, நானும் என் பொண்டாட்டியும் இந்த ராமுளுக்கத் தோட்டத்திலெ முளுச்சிக்கிட்டு இருந்து இவனெக் கண்டு பிடிச்சோம். இவனெத் தவர வேறே யாரும் இந்த ராவேளெயிலே இந்தப் பக்கத்திலெ வரவேயில்லெ. இவனெ விடாதிங்க! விடியப் போவுது, இவனெ மாராசாகிட்டே இளுத்துக்கிட்டு வாங்க! நகர்க்காவலன்: நம் மன்னர் பிரான் கட்டளை அதுவாயின், ஐயா நீர் மன்னரிடம் வந்து, நீர் சொல்ல வேண்டியதைச் சொல்லி, நும்மை விடுவித்துக் கொள்ளும். நான் என் கடமையைச் செய்தே தீரவேண்டும். (அம்பிகாபதி மனக் கலக்கத்துடன் நகர்க்காவலன் பின்னே செல்லத், தோட்டக்காரனும் அவன் மனைவியும் அவன் பின்னே செல்ல நால்வரும் அரசன்பால் ஏகுகின்றனர்) நான்காம் நிகழ்ச்சி : நான்காம் காட்சி களம் : கம்பர் இல்லம். காலம் : காலை நேரம் நயினார் பிள்ளை : பச்சே! பச்சே! நான் வந்திருப்பதாக நின் தலைவிக்குத் தெரிவி. தோழி : (தெரிவித்து வந்து) மாளிகைமேல் வாருங்கள் சாமி! நயினார் : கண்மணி காவேரி? நின் தமையன் எங்கே? காவேரி : (திடுக்கிட்டு) நேற்றிரவு வெளியே சென்றவர் இன்னும் வரவில்லை. சுவாமி! நீங்கள் இவ்வளவு விடியற் காலையில் வந்து அவரைத் தேடுவதுகண்டு என் உள்ளங் கலங்குகின்றது! நயினார் : கலங்காதே கண்ணே! என் தந்தையார்க்குச் சிறிது நேரத்திற்கு முன்னேதான் நம் அரசரிடமிருந்து அழைப்பு வர, அவர் அங்கே சென்றிருக்கின்றார். செல்லும் போது உன்னை அச்சமின்றியிருக்கச் செய்யும்படி என்னை இங்கு ஏவினார். காவேரி : (மனம் பதைத்து) என்ன சுவாமி! நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே! என்தமையனார்க்கு ஏதுந் தீங்குண்டோ? திறந்து சொல்லுங்கள். நயினார் : நின் தமையனார்க்கு ஏதுந் தீங்கு வராது. என் தந்தையார் அதற்குத் தக்கது செய்வார். காவேரி : சுவாமி! உண்மையைச் சொல்லுங்கள்! சொல்லுங்கள்! என் அண்ணனாரைப் பற்றிய செய்தி ஏதோ இருக்கின்றது! என்னுயிர் தத்தளிக்கின்றது! உண்மையைச் சொல்லுங்கள்! நயினார் : காவேரி! எனக்கும் முழுச்செய்தியுந் தெரியாது. பதறாதே! அஞ்சாதே! நகர்காவற்றலைவன் அம்பிகாபதியை அழைத்துக்கொண்டு விடியற்கருக்கலில் அரசனிடஞ் சென்றன னாம். அரண்மனைத் தோட்டக்காரனும் அவன் மனைவியும் உடன் சென்றனராம். இன்னுஞ் சிறிது நேரத்தில் முழுச்செய்தியும் தெரிந்துவிடும். (இது கேட்டுக் காவேரி சோர்ந்து இருக்கைமேல் விழுகின்றாள். சிறிது நேரத்தில் அம்பிகாபதி வருகின்றான்) அம்பிகாபதி : (மாளிகைமேல் வந்து) ஆ! என் தங்கைக்கு யாது நேர்ந்தது? நயினார், பச்சே, நீங்களேன் அவள் மேற் கவிந்து கொண்டிருக்கின்றீர்கள்? நயினார் : அம்பிகாபதி, நின்னைப் பார்த்ததும் எனக்குயிர் வந்தது! (இச்சொற் கேட்டதுங் காவேரி உணர்வு கூடி எழுந்து) காவேரி : அண்ணா, அண்ணா நகர்க் காவலன் உங்களை அரசனிடம் அழைத்துச் சென்றனனாமே! என்ன குற்றம்? (தமையனை கட்டிக்கொண்டு அழுகின்றாள்) அம்பிகாபதி : (மருண்டு) குழந்தாய், ஏன் அழுகின்றாய்? ஏதுங் குற்றமில்லை, தீங்குமில்லை. ஆள் மாறாட்டமாய் என்னை நகர்க்காவலன் நம்மரசன்பால் அழைத்துச் சென்றான். நயினார் : யார் செய்த குற்றத்தற்காக அவன் உன்னை அழைத்துச் சென்றான்? அக்குற்றந்தான் யாது? தோட்டக்காரனும் அவன் மனைவியும் நின்னையேன் பின்றொடர்ந்து வந்தனர்? சென்ற இரவு நீ எங்கு சென்றாய்? ஏன் சென்றாய்? கடுங்குளிர் மிகுந்த இப் பனிக்காலக் கங்குலில் வெளியே உனக்கென்ன வேலை? உண்மையைச் சொல்! அம்பிகாபதி : என் தந்தையார்க்காக யான் ஊர்ப்புறத்தேயுள்ள ஐயை கோயிலில் வழிபாடாற்றி வருவது தான் உனக்குத் தெரியுமே. நாளை மார்கழித்திங்கள் பிறக்கப்போவதால் வைகறை வழிபாடு நடத்துவதற்கு வேண்டுவன ஒழுங்கு செய்தற் பொருட்டுச், சிறிது முன்னதாகவே நேற்றிரவு கோயிலுக்குப் போயிருந்தேன். நயினார் : இருக்கலாம், அதன் பின் என்ன? அம்பிகாபதி : கோயிலிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வரும்போது நகர்க்காவலனும் அரண்மனைத் தோட்டக் காரனும் என் பின்னே போந்து, அரசன் வழிபாட்டிற் கென்றுள்ள தோட்டத்தின் பூக்களைக் களவு செய்யுங் கள்வனாக என்னைக் கருதி, அரசன்பால் அழைத்துச் சென்றனர். யான் கள்வன் அல்லன் என்று எவ்வளவோ சொல்லியும் அவர்கள் என் சொல்லை ஏற்றுக் கொண்டிலர். நயினார்: அரசன் நின்னைப் பார்த்ததுந் திடுக்கிட்டிருப்பாரே! அம்பிகாபதி : ஆம். அரசன் மருண்டு என்ன கம்பர் மகன் அம்பிகாபதியை அழைத்து வந்திருக்கிறீர்களே? என்று வினவ, இவரைப்பற்றி எனக்கொன்றுந் தெரியாது. மன்னர் பெரும! இதோ தோட்டக்காரனும் அவன் மனைவியும் இவனே அரண்மனைத் தோட்டப் பூக்களைத் திருடினவன் என்று காட்டினர் என நகர்க்காவலன் கூறினன். அரசன் திகைத்து, உடனே உன் தந்தையார் நம்பிப்பிள்ளையைத் தம்மால் வருவித்தனர். நயினார் : என் தந்தையார் வந்தேது செய்தார்? அம்பிகாபதி : நின்னருமைத் தந்தையார் செய்த உதவி எழுமையும் மறக்கற் பாலதன்று. (இச்சொற்களைக் கேட்டதுங் காவேரி கண்களைத் துடைத்துக்கொண்டு பின் சொல்வதை ஆவலோடு கேட்கின்றாள்) அமைச்சர் தோட்டக் காரனை நோக்கி, ‘நல்லது, நேற்றிரவில் எந்நேரத்தில் தோட்டத்திற் புகுந்து இவர் பூக்களைப் பறித்தார்?, என்று கேட்க, நள்ளிராப் பதினைந்து நாழிகை என்றான். ‘இது முன்னிருட்டுக் காலமாயிற்றே, அதில் இவரை எப்படிக் கண்டுபிடித்தாய்? என்று நின் தந்தையார் வினவ, அவன் அப்போதுதான் நிலா வெளிச்சம் வந்தது; அதனால் இவரைக் கண்டுபிடித்தேன் என்றான். மீண்டும் அவர் ‘நீ இவரைக் கிட்டப்போய்ப் பார்த்தனையா?’ என்று வினவ, அவன் கிட்டப்போனால் இவர் ஓடிவிடுவாரென எண்ணி இவர்க்குத் தெரியாமல், நூற்றைம்பதடி தொலைவில் மறைந்திருந்து இவரைப் பார்த்தோம்’ என்றான் ‘அவ்வளவு தொலைவில் நீ பார்த்தவர் உருவமும் இப்போது கிட்டப் பார்க்கும் இவர் உருவமும் ஒன்றெயென நீ எப்படி உறுதிப்படுத்துவாய்? என அமைச்சர் வினவ, அவன் இவரைத்தவிர வேறே யாரும் அங்கே கண்ணுக்குத் தென்படவில்லை. அதுவல்லாமலும், இவர் பூக்களைப் பறித்துக் கொண்டு, தோட்டத்து வேலியைத் தாண்டிவெளியே போனபோது, நாங்களும் மறைவாகவே இவரைப் பின்தொடர்ந்து, போனோம். இளவரசியின் தோட்டத்து மதிற்சுவர்ப் பக்கமாய்ப் போன இவர் திடீரென எங்கள் கண்களுக்குத் தென்படவில்லை; நாங்கள் அங்கேயே பத்து நாழிகை வரையில் காத்திருக்க மறுபடியும் இவர் எங் கண்களுக்குத் தென்பட்டார் எனச் சொல்கையில், அவன் மனைவி இல்லை மாராசா இவர் காளி கோயிலில் அதுவரையில் ஒளிந்து கொண்டிருந்தா ரென்று நினைக்கின்றேன் என்று இடை மறித்துப் பேசினாள். அதுகேட்ட நம் அமைச்சர் மன்னர் பிரானே! இவ்விருவரும் தாங்கண்ட கள்வனை நெருங்கிப் பார்த்திலர். பின்னரும் பத்து நாழிகைக்குப்பின் இவரை விடியப்போகுந் தறுவாயிற் காளி கோயிலினின்றும் வரக் கண்டதாகக் கூறுகின்றனர். இவர்கள் கண்ட கள்வன் எங்ஙனமோ தப்பிப்போய் விட்டான். ஐயை கோயிலில் வைகறை வழிபாடு ஆற்றி வெளிவந்த அம்பிகாபதி யாரைத் தாங் கண்ட கள்வனாக மாறியுணர்ந்து பிடித்து வந்திருக்கின்றனர் என்று நுவலவே, அரசன் என்னை நோக்கி அம்பிகாபதி இவர்கள் அறியாமல் உனக்குத் துன்பங் கொடுத்ததற்காக மிக வருந்துகின்றேன். இனி நீ நின் இல்லம் செல்லலாம் என்று விடையளித்தனர். நயினார் : இது கேட்டு பின் எனக்குயிர் வந்தது. காவேரி : அண்ணா, இப்போதுதான் எனக்கும் உயிர் வந்தது. இனி நீங்கள் இரவில் தனியே புறஞ் செல்லலாகாது. அப்பாதான் இன்னும் ஒரு கிழமையில் இங்கு வந்து விடுவார்களே. அவர்கள் வந்தபின் அவர்களுடன் சென்று ஐயைக்கு வழிபாடாற்றுங்கள். அது வரையில் உங்கள் ஆருயிர் நண்பர் நயினார் பிள்ளையை அழைத்துக் கொண்டு சென்று வழிபாடாற்றுங்கள், (நயினார் பிள்ளையை நோக்கி) உங்களுக்கு இங்ஙனந் தொல்லை கொடுப்பதைப் பற்றி மன்னித்தல் வேண்டும். நயினார் : கரும்பு தின்னக் கூலியா? காவேரி. இதன் வாயிலாகவாவது யான் என் நண்பனுடன் சென்று ஐயையை வைகறையில் தொழுது வழுத்தும் பேறு கிடைத்தது. (பின்னர் மூவருந் தத்தந் தொழின்மேற் செல்கின்றனர்) நான்காம் நிகழ்ச்சி: ஐந்தாங் காட்சி களம் : காளி கோயில்: காலம் : நள்ளிரவு நயினார் பிள்ளை : அம்பிகாபதி வைகறையில் நடத்தும் வழிபாட்டிற்கு அந்நேரத்தில் நாம் இங்கு வந்தாற் போதாதோ? இவ்வளவு முன்னதாக இக் கடுங்குளிர் காலத்து இந்நள்ளிரவில் அங்கு வரவேண்டுவது ஏன்? அம்பிகாபதி : நேற்றிரவு இந்நேரத்தில் அரசனது பூங்காவிற் புகுந்து பூக்களைக் களவு செய்த கள்வன்யானே! இவ்வுண்மையை என்னாருயிர் நண்பனாகிய உனக்குத் தெரிவிக்கவே இந் நேரத்தில் உன்னை இங்கழைத்து வந்தேன். இதை என் தங்கை அறிந்தால் திகில் கொண்டு ஏங்கி விடுவாளன்றோ? அதனால், இதனை நமதில்லத்தில் தெரிவித்திலேன். நயினார் : இதென்னப்பா இவ்வளவு துணிவான செயலைச் செய்து விட்டனையே! ஐயை வழிபாட்டிற்கு வேண்டுமென்று நீ அரசற்குச் சொல்லி விடுத்தால் எவ்வளவோ சிறந்த பூக்களெல்லாங் குடலை குடலையாக வந்து சேருமே! நீ பேசுவதைப் பார்த்தால் ஏதோ வெறி பிடித்தவன் போற் காணப்படுகின்றனையே! அம்பிகாபதி : உண்மையிலேயே நான் வெறி பிடித்தவனாகத்தான் ஆய்விட்டேன். உன்னைப் பிடித்த வெறி, என்னை இன்னும் மிகுதியாய்ப் பிடித்து விட்டது! நயினார் : எனக்கென்ன வெறி? அம்பிகாபதி : என் தங்கை காவேரி மேல் நீ கொண்ட வெறிதான். நயினார் : ஓ! அம்பிகாபதி! நீ சொல்வது எனக்கு மிக்க வியப்பைத் தருகின்றது! நீ யார் மேல் வெறி கொண்டாய்? அம்பிகாபதி : யானும் அழகுக் கொடியான ஒரு நங்கை மேற்றான் காதல் வெறி கொண்டேன். அந்நங்கையின் பொருட்டு என்னுயிர் போவதாயினும் அதனை ஒரு பொருட்டாக எண்ணேன். நயினார் : ஓ! அவ்வளவுக்குத் துணிந்துவிட்டனையா! (முன்னொருகால் அம்பிகாபதி தனக்குச் சொல்லிய சொற்களைச் சொல்லிப் பகடி பண்ணுவானாய்ச்) சீ! ஒரு பெண்ணுக்காக நீ நின் சிறந்த உயிரை மாய்க்கக் கருதுவது சிறிதுந் தக்கதன்று. காதலென்பது கட்டுக்கடங்காததா? நம் அறிவினால் அதனை அடக்குதலன்றோ ஆண்மை? அம்பிகாபதி : நல்லது! முன்னொரு கால் யான் உனக்குச் சொல்லிய சொற்களையே இப்போ தெனக்குத் திருப்பிச் சொல்லுகின்றாய்! ஆயினும், நீ கொண்ட காதலினும் யான் கொண்ட காதல் சாலப் பெரிது! என் காதலிக்கு ஒப்பாகவோ உயர்வாகவோ சொல்லத்தக்க ஒரு பெண் இவ்வுலகில் இருப்பாளென்று யான் நம்பவேயில்லை. நயினார்: காதல் மிக்குழிக் கற்றவுங் கைகொடா ஆதல் கண்ணகத் தஞ்சனம் போலுமால் தாது துற்றபு தங்கிய வண்டனார்க் கேதமிற்றென எண்ணுமென் நெஞ்சரோ என்று மூதறிஞர் மொழிந்தபடி கல்வியிலும் நுண்ணறிவிலும் அழகிலும் பிற நற்குணங்களிலும் ஈடும் எடுப்பும் இல்லாத நீயே இங்ஙனங் காதலுணர்வில் மயங்கிவிட்டனையென்றால், நினக்கெவ்வகையிலும் ஒவ்வாத எம் போல்வார் நிலை என்னாம்! நின் கண்ணுக்கு நீ காதலித்த மங்கை ஒப்புயர் வற்றவளாய்த் தோன்றுதல் போலவே என் கண்ணுக்கு யான் காதலித்த காவேரியும் ஒப்புயர்வற்றவளாகவே தோன்றுகின்றாள். காவேரி நின் தங்கையாதலால் அவளது அழகின் நலம் உனக்கு அத்துணை வியப்பினையும் விழைவினையுந் தாராது. வேறோர் அழகிய மாதைக் கண்டு நின்னுள்ளங் காதலிற் கலங்காதிருக்குமாயின் அப்போதுதான் நீ காதலித்த மங்கையின் வனப்பும் அவள் வழிபட்ட நின் காதலின் உரமும் பாராட்டற் பாலனவாயிருக்கும். அம்பிகாபதி : நீ கூறுவதுண்மையே. ஆனாலும், என் காதலியைப் பார்க்கிலும் எழின் மிக்காள் ஒருத்தியைக் காணினும் என்னுள்ளம் அவளை நயவாது. நயினார் : அதைத்தான் நான் பார்க்க வேண்டும். நல்லது. நீ புகழேந்திப் புலவர் மகள் தங்கத்தைப் பார்த்திருக்கின் றனையா? அவள் பருவம் அடைந்த இரண்டு மூன்று ஆண்டுகள்தாம் ஆகின்றன. காவேரிக்கும் அவட்கும் ஏறக் குறைய ஒரே அகவைதான் இருக்கும். அவளுஞ் சொல்லிய முடியாப் போரழகி. அம்பிகாபதி : ஆம்! ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் யான் அவளைப் பார்த்திருக்கிறேன். அப்போதே அவள் அழகிய சிறுமியாயிருந்தாள். இப்போதவள் பேரழகியாகத்தான் இருக்க வேண்டும். அங்ஙனமாயின் நீ ஏன் அவளைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளவில்லை? நயினார் : இக்கேள்விக்கு என்னால் விடை சொல்லல் இயலாது. காவேரி என்னுள்ளத்தைக் கவர்ந்த பின், வேறு மொரு மாது கவர்தற்கு என்பால் வேறுமோர் உள்ளம் இல்லையே! அம்பிகாபதி : அங்ஙனந்தானே எனக்கும். நயினார் : அதைத்தான் நான் தெரிந்துகொள்ளல் வேண்டும். அஃதிருக்கட்டும். நின் காதலி யார்? யான் அறியச் சொல். அம்பிகாபதி : (மெல்லிய குரலில்) நண்பா! திடுக்கிடாதே! அச்சப்படாதே! என்னாருயிர்க் காதலி நம்மரசன்... நயினார் : (திகில் கொண்டு) ஐயோ என்ன சொல்கிறாய்? அம்பிகாபதி : நம்மரசன் மகள் அமராவதிதான் என் ஆருயிர்க் காதலி! நயினார் : ஐயையோ! ஈதென்ன தீவினை! இருவீருயிருங் கூற்றுவன் கையிலன்றோ சிக்கியிருக்கின்றன! நெருப்பை வாரி மடியிற் கட்டிக்கொண்டது போலாயிற்றே! நின் தங்கை துவக்கத்திலேயே அஞ்சியது உண்மையாய் வந்து முடிந்ததே! திரைக்கு வெளியேயிருந்து பாடங் கற்பித்த நீயும், உள்ளே தோழியர் புடை சூழ இருந்து பாடங் கற்ற இளவரசியும் எங்ஙனங் காதல் கொண்டீர்கள்? அம்பிகாபதி : (அவ்வரலாறு முழுதுஞ் சொல்லி) விழியாற் பிணையாம் விளங்கியலான் மயிலாம் மிழற்றும் மொழியாற் கிளியாம் முதுவானவர் தம் முடித்தொகைகள் கழியாக் கழற்றில்லைக் கூத்தன் கயிலை முத்தம் மலைத்தேன் கொழியாத்திகழும் பொழிற் கெழிலா மெங்குலதெய்வம் நண்பா, அமராவதியை நீ கண்டிலை. அவளைக் காணும் வரையில் யானும் ஒரு குருடனாகவேயிருந்தேன். அவளைக் கண்ட பின் என் காட்சியுங் கருத்தும் பெறுதற் கரிய ஒரு பெருங் கண்காட்சியைக் கண்டன. ஒரு பெரும் பேற்றைப் பெற்றன! நயினார் : அமராவதி பேரழகியென்பதை நின் தங்கை சொல்ல யானுந் தெரிந்திருக்கின்றேன். அத்தகைய பேரழகியைக் கண்டு நீ காதல் கொண்டதும் இயற்கை தான். காதலைத் தடை செய்ய வல்லவர் எவருமில்லை, அதனைத் தடைசெய்ய வல்லதும் ஏதுமில்லை. ஆனாலும், நம்மரசன் பொல்லாதவன் ஆயிற்றே! கல்வியில் வல்லவனாயினுங் கற்றார்பால் நன்கு மதிப்புடையனாயினுந், தான் அரசனென்ற இறுமாப்புந் தனக்கு முன் கற்றவரெல்லாம் இழிந்த இரவலரென்னும் எண்ணமும் உடையனாயிற்றே! இக்கள வொழுக்கந் தெரிந்தால் அவன் உன்னை உயிரோடு விடான்! ஆதாலால் இக்காத லொழுக்கத்தை மறந்துவிடு! அம்பிகாபதி : ஈதொன்றைத் தவிர நீ வேறேது சொன்னாலும் அவ்வண்ணஞ் செய்வேன், அமராவதியை மறப்பதும் என்னுயிரைத் துறப்பதும் ஒன்றே. அவளை மறவாதிருந்து, அரசனால் என்னுயிர் போவதாயின் அஃதென்னால் வேண்டற் பாலதேயாம். அமராவதியும் என்னுடன் உயிர் துறக்கத் துணிந்திருக்கின்றாள்! நயினார் : இனி, எனக்குப் பேச வாயில்லை. இறைவன் விட்டபடிதான் நடக்கும்! நல்லது! இப்போது நீ யாது செய்யப் போகின்றாய்? அம்பிகாபதி : நகர்க் காவலன் இன்றைக் காலையில் என்னை அரசன்பால் அழைத்துச் சென்றது அமராவதிக்குத் தெரிந்திருக்கும். அதனால் அவள் மிகவும் நெஞ்சங் கலங்கியிருக்கின்றாள். இன்று மாலையில் யான் அவட்குப் பாடஞ் சொல்லுகையில் அவளது மன நிலையினை யறிந்து துன் புற்றேன். அப்போது அவள் அன்னையுந் தோழிமாரும் உடனிருந் தமையால் அவளைப் பார்த்து ஆறுதல் பகர எனக்கு வாய்ப்பில்லை. இப்போதவளென்னை எதிர் நோக்கியபடி யாயிருப்பாள். இதோ இப் பூம்பந்தை இம்மதிலுக்கு அப்பால் தோட்டத்தினுள்ளே எறிந்தேனானால், அமராவதியின் உயிர்த்தோழி நீலம் ஒரு நூலேணியை இப்பக்கம் எறிவள்; அதன் வழியே அமராவதிபாற் போய் வருகிறேன். அதுகாறும் நீ எனக்குதவியாய் இங்கே காத்திருப்பாயா? நயினார் : ஆகா, காத்திருப்பேன், நீ இப்போதிருக்கும் நிலை நெருப் பாற்றில் மயிர்ப்பாலத்தின் மேல் நடப்பவன் நிலையோடொத்த தாயிருக்கின்றது. இனி நீ இரவில் எங்கு சென்றாலும் யானும் உனக்குத் துணையாகக் கூடவே வந்திருக்க உறுதி செய்திருக்கின்றறேன் பார்! யாரோ வரும் அரவங் கேட்கின்றது. (இருவரும் பேச்சை நிறுத்தி உற்றுக் கேட்கின்றனர்) (நகர்க் காவலன் வருகின்றான்) நகர்க் காவலன் : யார் அங்கே காளி கோயிலில்? அம்பிகாபதி : யான்றான் இக்கோயிற் பூசகன் அம்பிகாபதி. காவலன் : இன்று காலையில் என்னுடன் அரசனிடம் வந்தவர் நீர் தாமே? அம்பிகாபதி : ஆம், ஆம், நம் அமைச்சர் மகன் நயினார் பிள்ளையும் இதோ வந்திருக்கின்றார். காவலன் : (நயினாரை நோக்கி) தங்களை வணங்குகின்றேன். நயினார் : நீடு வாழ்தி! மரங்களின் இலைகளிலிருந்து பனித்துளிகள் சொட்டுச் சொட்டென்று வடிகின்றன. ஊதற் காற்றோ சாரலைக் கொண்டு வந்து மேனி மேல் அப்புகின்றது; இத்தகைய பனிக் காலத்தில் இவ்விரவில் நீ தன்னந்தனியே ஊரைச் சுற்றி வருவது உனக்கு மிக்கதொரு துன்பமாயிருக்குமே! காவலன் : என் செய்வது! ஐயா! அரசன் ஏவியபடி தானே நடக்க வேண்டியது! ஊர் முழுவதுஞ் சுற்றுபவர் என்கீழ்ப் பணியாளர். யானோ திருடனைக்கண்டு பிடித்தாக வேண்டும்! சிறிது காலமாக அரண்மனைப் பூந்தோட்டத்திற் புகுந்து சிறந்த பூக்களைக் கவர்ந்து போகுங் கள்வனைப் பிடிக்கும் பொருட்டே இரவு முழுதும் இந்தப் பக்கத்திற் காத்து உலவும்படி அரசர் எனக்குக் கடுமையாகக் கட்டளை யிட்டிருக்கின்றார். யான் தனியே உலவவும் இல்லை. என் கீழ்ப் பணியாளர் பலரை இப்பக்கங்களில் ஒளிந்திருக்கச் செய்துள்ளேன். அது கிடக்கட்டும். நீங்களேன் இக் கடுங் குளிர்கால இரவில் இங்கே வந்திருக்கின்றீர்கள்? அம்பிகாபதி ஐயா மேல் நம்மரசனுக்கு ஏதோ சிறிது ஐயுறவு உண்டா யிருக்கின்றது; ஆகையால் அவர் இந்நேரத்தில் மீண்டும் இங்கிருந்தது தெரிந்தால் அவர்க்கு அவ்வையுறவு மிகுதியாய் விடும்.! நயினார் : இது மார்கழித் திங்களாதலால்அம்மைக்கு வைகறைப்போதில் வழிபாடு நடத்த வேண்டியிருக்கின்றது. அந்நேரத்தில் துயிலுணர்ந்து கோயிலுக்கு வருவதோ பெருந் தொல்லையாயிருக்கின்றது. முன் நேரத்திலேயே இங்கு வந்து படுத்திருந்து வைகறையில் வழிபாடாற்றுவது தான் இவர்க்கு இசைந்தது. தம்மேல் நீ ஐயங்கொள்வை யென்று கருதியே தமக்குத் துணையாக இவர் என்னை இங்கு அழைத்து வந்திருக்கின்றார். காவலன் : ஆனாலும், இதனை அரசன் அறிந்தால் இது பெருந் தொல்லைக்கிடமாகும்! ஆகவே நீங்கள் வைகறைப் பொழுதுக்குமுன் இங்கே வராதிருக்கும்படி உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகின்றேன். இருவரும் : நல்லது, அங்ஙனமே செய்கின்றோம். (நகர்க் காவலன் போய் விடுகின்றான்) நயினார் : (மெல்லிய குரலில்) பார்த்தனையா அம்பிகாபதி! நீ நூலேணியில் ஏறும்போது இந்நகர்க் காவலன் வந்திருந்தால் உனது வாழ்க்கை என்னவாயிருக்கும்? உன் காதலியின் வாழ்க்கைதான் என்னவாயிருக்கும்? ஐயையின் அருளினாலன்றோ இருவீரும் இன்றைக்குத் தப்பிப் பிழைத்தீர்கள்! அம்பிகாபதி : ஆம், ஆம், நயனார் பிள்ளை! என் செய்வேன்! என் காதலியைச் சென்று காணாமல் என்னுயிர் என்னுடலில் இராது! நயினார் : நாம் என்ன செய்யலாம்! ஊழ்வினை மூண்டு தடை செய்கின்றது! நீ அமராவதியை முற்றுமே மறந்து விடு! அம்பிகாபதி: நீ காவேரியை மறந்துவிடு. இல்லையேல் நான் என் அமராவதிபாற் செல்ல வழிசெய்! (இரவெல்லாம் இருவருங் கலந்து சூழ்கின்றனர்.) நான்காம் நிகழ்ச்சி : ஆறாம்காட்சி களம் : சோழன் மாளிகை. காலம் : பிற்பகல் அரசன் : வரவேண்டும், வரவேண்டும், புலவர் பெருமான் வணக்கம். இருக்கையில் - அமருங்கள். ஒட்டக்கூத்தர் : வேந்தே நீடு வாழ்க! என்னை வருவித்தது எதன் பொருட்டோ? அரசன் : சிவபெருமான் வழிபாட்டுக்கென்று வைக்கப் பட்டுள்ள நமது பூந்தோட்டத்தின் சிறந்த நறுமலர்கள் சிறிது காலமாகக் களவு போயின. கள்வனைப் பிடித்துக் கொணர்கவென்று தோட்டக்காரனுக்குக் கட்டளை பிறப்பித்திருந்தேன். சென்ற கிழமை காலையில் அவனும் நகர் காவலனுஞ் சேர்ந்து கம்பர் மகன் அம்பிகாபதியைக் பிடித்துக் கொணர்ந் தனர். எனக்கது வியப்புந்திகைப்பு மாயிருந்தது. உடனே யான் அமைச்சரை வருவிக்க, அவர் தோட்டக்காரனும் அவன் மனைவியுங் கூறியவைகளை நன்காராய்ந்து பார்த்து, ஏதோ ஆள் மாறாட்டம். அம்பிகாபதி குற்றவாளி யல்லன் என்றனர். இதைப் பற்றித் தங்கள் கருத்தை அறியவே தங்களை இங்கு வருவித்தேன். கூத்தர்: அம்பிகாபதியைக் கொண்ர்ந்தது ஆள் மாறாட்டமாயிருக்கலாம். ஆனால் ஒன்று; திருடனாயிருப்பவன் பொன்னும் மணியும் பூணும் பட்டாடையுமன்றோ திருடுவான்; பூக்களைத் திருடுவதால் அவன் எய்தும் பயன் என்னை? மேலும், நறுமணங் கமழுங் விழுமிய பூக்களைக் களவு செய்பவன் கள்வனாயிருத்தல் இயல்பன்று. தான் விழைந்த ஒரு மாதுக்குச் சூட்டும்பொருட்டே எவனோ ஒரு காமுகன் அவைகளைப் பறித்துச் சென்றானாகல் வேண்டும் தோட்டக் காரனும் அவன்றன் மனைவியுங் கூறியவற்றிலிருந்து நுங்கள் அருந்தவப்புதல்வி அமராவதியின் தோட்டத்து மதிற்புறத்தே அக்கள்வன் மறைந்து போயதும், பின்னர்ப் பத்து நாழிகை கழித்து மீண்டும் அவன் அப்பக்கத்தேயுள்ள ஐயை கோயிற் பக்கமாய்க் காணப்பட்டதும். அங்ஙனங் காணப்பட்டவன் அம்பிகாபதி யாயிருப்பதும் ஆழ்ந்தாராயற் பாலன. அல்லதூஉம், தோட்டக் காரன் சொல்லிய சொல்லொன்றை அவன்றன் மனைவி மறைத்து வேறு முகமாய்த் திருப்பிப் பேசியதிலும் ஒரு நுணுக்கமிருக்கின்றது. அரசன் : ஆம், ஆம், பெருமான். இது முதலில் என் னறிவில் தட்டுப்படவில்லை. அம்பிகாபதி எம் அருமைப் புதல்விக்குப் பாடஞ் சொல்லிவருவது தாங்கள் அறிந்ததுதானே? ஆனாலும், இளைஞரான அவ்விருவரும் ஒருவரை யொருவர் பாராமலே பாடம் நடக்கும்படி நாம் திட்டஞ் செய்திருப்பதுந் தாங்களறிவீர்க ளன்றோ? ஆதலால், இதில் ஏதும் பிசகு நடப்பதற்கு இடமேயில்லை. கூத்தர் : உண்மைதான்! என்றாலும், இளைஞராயிருக் கும் ஆண் பெண் பாலாரை நெருங்கவிடல் முறையன்று. நம் நண்பர் கம்பர்தாந் திரும்பி வந்துவிட்டனரே. முன்போல அவரே அமராவதிக்குப் பாடஞ் சொல்லட்டுமே. அரசன் : ஆம், நம் புலவர் திலகமான கம்பர் தாமியற்றிய இராமாயணத்தை மிக்க சிறப்புடன் திருவரங்கத்தில் திருமாலடியார் குழுவில் நன்கு அரங்கேற்றிவைத்து வரிசைகள் பல பெற்று வந்திருக்கிறார்; ஏறக்குறையப் பத்துத் திங்கள் கழித்து அவர் வந்திருத்தலால் இன்னும் ஒரு கிழமை வரையில் ஓய்வாயிருந்து அவர் அயர்வு தீர்த்துக் கொண்டபின், அவரே புதல்வி அமராவதிக்குப் பாடங் கற்பிக்க ஏற்பாடு செய்கிறேன். கூத்தர் : நல்ல தங்ஙனமே ஏற்பாடு செய்க; நான் போய் வருகிறேன். அரசன் : புலவர் பெருமானுக்குத் தொல்லை கொடுத்து விட்டேன். வணக்கம். போய் வாருங்கள். (கூத்தர் போய் விடுகிறார்) அரசன் : (தனியேயிருந்து தனக்குள்) முன்னமே அம்பிகாபதியைப் பற்றி நான் கொண்ட ஐயுறவினைக் கூத்தர் கூறிய சொற்கள் இன்னும் மிகுதிப்படுத்துகின்றன! ஆனாலும், அரசனாயிருக்கும் நான் தக்க சான்றின்றி அம்பிகாபதியின் மேல் ஐயுறுதல் ஆகாது. மேலும், கூத்தர் அம்பிகாபதி மேலும் அவன் றந்தை மேலும் நிரம்பிய அழுக்காறுடையவர். எனினும், அவர் கூறிய அறிவுரையை நான் பாராமுகஞ் செய்தலும் ஆகாது. இன்று தொட்டே அவன் பாடஞ் சொல்லுவதை நிறுத்திவிடுகின்றேன். தன் தங்கை காவேரி கல்வியறிவும் இயற்கை நுண்ணறிவும் நிரம்பியவளென்றும் அவள் அமராவதியுடனிருந்து நெடுகப் பழகும்படி நான் கட்டளை தந்தால் அமராவதி கலைப்புலமையில் மிக்க தேர்ச்சியடைதற்கு அஃதொரு சிறந்த வழியாமென்றும் அம்பிகாபதி முன்னமே எனக்குத் தெரிவித்திருக்கின்றான். ஆகையால், இன்று முதலே காவேரி என் புதல்வியுடனிருந்து கலை பயிலும்படிசெய்து விடுகின்றேன். தவத்துக்கொருவர் கல்விக்கிருவர் என்று பழமொழியும் உளதன்றோ? தம் புதல்வியும் உடனிருந்து பாடங்கேட்டால் கம்பர் இன்னுந் திறமாகக் கற்பிப்பார். நான்காம் நிகழ்ச்சி: ஏழாங்காட்சி களம் : அமராவதியின் கன்னி மாடம் காலம் : முற்பகல் அமராவதி : (குளிர் கொண்டு வருந்தத் தோழியர் போர்வை கொண்டு மூடித் தாங்குகின்றனர்) இந்தக் குளிர்காய்ச்சல் என்னால் தாங்கமுடிய வில்லை. ஐயோ! தோழிகாள். யான் எங்ஙனம் பிழைப்பேன்! இத்தனை பேர் என் மருங்கிருந்து பணி செய்வதே எனக்குத் துன்பமாயிருக்கின்றது! ஏடி நீலம்! இவர்களெல்லாரையும் போக விட்டு நீ மட்டும் எனக்கருகேயிரு. (மற்றைத் தோழிகளெல்லாரும் போய்விடுகின்றனர்) நீலம் : அம்மா அமராவதி, நீ இப்படி வருந்துவதை அறிந்தால், நின் பெற்றோர்கள் இதன் மூலத்தை ஆராயத் தொடங்குவர். அமராவதி : யான் என்னடி செய்வேன்! அவரைக் காணாமல் என்னுயிர் தத்தளிக்கின்றதடி! என் தந்தையார் திடீரென்று நேற்று மாலை முதல் எனக்குப் பாடஞ் சொல்ல அவரை வர வேண்டாமென்று தடுத்துவிட்டதை நினைக்க நினைக்க என் நெஞ்சம் ஆறாத்துயரத்தில் ஆழ்கின்றதடி! இவ்வளவு துன்பமும் அவர் இரவிற் கொணர்ந்த பூவாலன்றோ விளைந்தது! சென்ற ஒரு கிழமையாக இரவிலும் அவர் என்பால் வரமுடியாமற் போயிற்றே! நீலம் : என்னம்மா செய்யலாம்! நாம் நெருப்புக் கோட்டைக்கு நடுவிலன்றோ இருக்கின்றோம்! நின் காதலரோ நின்மேற் கொண்ட அளவுக்கு மிஞ்சிய காதலால் இந்த உலகத்தில் நடப்பவராகவே தோன்றவில்லை; தீது செய்யும் மக்களிடையே தாம் இருப்பதாகவும் தம்மை நினைக்க வில்லை. உனது நிலைமையும் ஏறக்குறைய அப்படித்தானிருக் கின்றது. முட்செடி களினிடையே கிளம்பிய நெற்பயிர் போலிருக்கும் உங்கள் நிலைமையை நினைந்தாவது, நீ நின் மனத்தைத் தேற்றிக்கொள்ளல் வேண்டும். அமராவதி : யான் மனந்தேறுதற்கு ஏதேனும் வழியிருந்தாற் சொல். நீலம் : வழியிருக்கின்றது. நேற்றுப் பிற்பகல் நம் தந்தையார், புலவர் பெருமான் ஒட்டக்கூத்தரைத் தம்பால் வருவித்துப் பேசினர். அமராவதி : ஐயோ! இரக்கமில்லா அந்தக் கொடும் பாவியையா? அவர் ஏழை எளிய புலவர்களையெல்லாந் தலையறுத்த தறுகண்ணராயிற்றே! நீலம் : அவருடன் பேசியிருந்த பிறகுதான், நம்மரசர் நின் காதலரைப் பாடங்கற்பிக்க வரவேண்டா மென்று நிறுத்திவிட்டார். ஆனாலும் அமராவதி : இன்னுமென்ன? நீலம் : நின் காதலிரின் தங்கை காவேரி அழகுங் கல்வியும் நற்குணங்களும் வாய்ந்தவளாம் அவளை நின்னுடன் கலந்து பழகச் செய்தால் நினக்குக் கலைப்பயிற்சியில் மிக்கதேர்ச்சியு முண்டாகுமாம். ஆதலால், அவள் இன்று முதல் இங்கு வந்து நின்னுடன் கலை பயிலும்படி நின் தந்தையார் ஏற்பாடு செய்திருக்கின்றனர். அமராவதி : (மகிழ்ந்து)அவள் எப்போது இங்கு வருவாள்? நீலம் : இன்னுஞ் சிறிது நேரத்தில் தன் தந்தை கம்பர் பெருமானுடன் அவள் இங்கு வரக்கூடுமென்று நினைக்கின்றேன். (கம்பர் தம் மகள் காவேரியுடன் வர நீலம் எதிரே வந்து) வரவேண்டும், வரவேண்டும், ஆசிரியர் பெருமான் திருவடிகளுக்கு வந்தனம். கம்பர் : நீடு வாழ்க! அம்மா நீலம், குழந்தை அமராவதி நலமாயிருக்கின்றனளா? உங்களை யெல்லாம் பார்த்து நீண்ட நாளாயிற்று. (அமராவதி மெல்ல வந்து வணங்க) குழந்தாய்! நீடூழி வாழ்தி! என்ன! நின் திங்கள் முகஞ் சிறிது இளைத்திருக்கின்றது! யாது காரணமோ? நீலம் : சாமி, சில நாட்களாக அமராவதிக்குக் குளிர் காய்ச்சல். இப்போதுதான் சிறிது நலம். கம்பர் : குழந்தாய் அமராவதி! நம்பிராட்டி கலைமகள் திருவருளால் நீ முழுநலம் பெற்று நன்கு வாழக்கடவை. இதோ! இவள் என் ஒரே மகள் காவேரி! முத்தமிழுஞ் செவ்வையாய்ப் பயின்றிருக்கின்றாள். இவள் உனக்கு மற்றுமொரு தோழியாய் அமர்ந்து, நீலத்துடன் உனக்கு வேண்டிய பணி செய்யவும், உங்களுடன், கூடித் தமிழ்ப் பயிற்சி செய்யவும், நின் தந்தையார் கட்டளைப்படி நின்னிடம் இருக்க இவளை அழைத்து வந்திருக்கிறேன். இவள் எப்போதும் உன்னிடமே இருக்கட்டும். இவள் வேண்டும்போது மட்டும் எங்கள் இல்லம் வந்து திரும்ப விடை கொடு. அமராவதி : (காவேரியைப் பார்த்துப்பார்த்து மகிழ்ந்து அருகழைத்து அணைத்துக் கொண்டு) ஆசிரியர் பெருமான் திருவுளப்படியே! (காவேரியை நோக்கி) அம்மா! காவேரி நீ எங்களுக்குக் தேடக்கிடையாப் பெருஞ் செல்வம். கண்மணி! நீ எங்களுடனேயே மகிழ்ச்சியாயிருக்க வேண்டும். காவேரி : (வணங்கி) இளவரசியாருடன் ஒருங்கிருந்து பயில யான் என்ன தவஞ் செய்தேன்! கம்பர் : குழந்தாய் அமராவதி! யான் இப்போது இல்லஞ் சென்று இன்னும் ஒரு கிழமையிற் பாடஞ்சொல்ல வருகின்றேன். உடம்பைச் செவ்வையாய்ப் பார்த்துக் கொள்! (மூவரும் வணங்கப், போய்விடுகின்றார்) அமராவதி : அம்மா காவேரி நீ சிறிது நேரம் இந்நூல் நிலையத்திலுள்ள சுவடிகளைப் பார்த்துக்கொண்டிரு. நானும் நீலமும் பூந்தோட்டத்துக்குப்போய் வருகின்றோம். இங்குள்ள தோழிமார் உனக்கு வேண்டியது செய்வர். (நீலத் துடன் பூந்தோட்டத்திற் புகுந்து ஒரு தனியிடத்திருந்து) நீலம், என்னடி பெரு வியப்பா யிருக்கின்றதே! காவேரி தன் தமையனாரைப் போலவே யிருப்பதை நீ உற்று நோக்கினையா? நீலம் : ஆம், அம்மா! யான் கம்பர் இல்லத்திற்கு நின் பொருட்டுச் சென்ற நாட்களிளெல்லாம் நின் காதலரின் அழகிய வடிவம் அவர் தங்கை காவேரியின் வடிவும் முற்றும் ஒத்திருத்தல் கண்டு நிரம்பவும் வியப்படைந்தேன். அமராவதி : கண்ணோ குவளையிதழ் கருங்குழலோ கார்க்கொண்டல் வண்ண இதழோ வளர்பவளம் அதனருகே நண்ணுமுறுவல் நகுமுத்தம் நகை முகமோ விண்ணார் மதியினொளி விரவும் வேறென்னை! வானிற் றிகழும் மதியொளி வாய்ந்தஇம் மங்கைமுகம் பானிறத் திங்களின் வட்ட வடிவின்றிப் பார்ப்பதற்கு மேனின்று கீழே சிறிதே குவிந்து மெழுகுநிகர் ஊனிற் செழித்தென் கணவன் முகத்தையும் ஒத்திடுமே! இருவர்க்கும் மேனி மெழுகிற் றிருத்திநன் கேற்படுத்த பொருவற்ற பாவையின் வண்ணமும் மென்மையும் பூண்டிடுமால் உருவுற்ற பான்மையில் ஆண்மையிற் பெண்மையும் ஓங்கு பெண்ணில் மருவுற்ற ஆண்மையும் மற்றிவர் பாற்கண்டு மாழ்கினெளே அண்ண லுருவினில் அம்மையுருவம் அளவினல்லால் நண்ண லியலா அறிவுங்கலையும் நலமுமென்று திண்ண முறவே அறிவிற்பெரியார் தெரிக்குமுரை பெண்ணிற் சிறந்தவிப்பூவையின் முன்னோன் பிறக்கினனே அழகியராயினும் ஆண்மை யுருவோ டதிர்ந்துநிற்குங் குழகரை அஞ்சுவென் கொவ்வை யிதழுங் குளிர்ந்தகண்ணுங் குழலின் மொழியும் அடங்கு முளமுங் குறிப்பறியுங் கிழமையும் வாய்ந்தவென் கேள்வனைக் கண்டோ கிளர்குவெனே நீலம் : ஆம் அம்மா, நின் கணவரைக் கண்டால் அச்சமின்றி அவருடன் பேசலாம் என்னும் எண்ண முண்டா கின்றது. வேறு ஆடவர் சிலரைக் கண்டாலோ அவர் அழகியராயினும், அவர்பால் அச்சமே உண்டாகின்றது. கலை வல்லார் உடம்பிலும் உயிரிலுங் கலைமகளின் திருவருள் கலந்திருத்தலால் அவர் அழகிய மாதர் வடிவினைப் பெரும் பாலும் ஒத்திருக்கின்றனர். இவ்வியற்கையைக் கற்றார் பலர் மாட்டுங் கண்டிருக்கின்றேன். அமராவதி : நீலம், யான் தன் தமையன்மேற் காதல் மிக்கு ஆற்றேனாதலைக் காவேரி அறிந்தால் என்னைப்பற்றி யாது நினைப்பளோ என்று என் நெஞ்சந் தயங்குகின்றதடி! நீலம் : அதைப்பற்றி நீ சிறிதுங் கலங்க வேண்டுவதில்லை. நின் கணவரை முதன் முதல் நின்பால் வருவித்தற்குக் காவேரியைக் கலந்துதான் ஏற்பாடு செய்தேன். நீங்கள் இருவீருங் காதலிற் கலந்து வருவதை அவள் நன்கறிவள். அமராவதி : எங்கள் காதலொழுக்கத்தை அறிந்ததும் அவள் யாது சொன்னாள்? நீலம் : அதனை யான் சொல்லக் கேட்டதும் அவள் உணர்விழந்து கீழே விழுந்துவிட்டாள். அதற்குக் காரணமாயிருந்த யான் எவ்வளவு மனந் துடித்து மாழ்கியிருக்க வேண்டும் என்பதை நீயே எண்ணிப்பார். அமராவதி : அபபுறம் நிகழ்ந்ததென்ன? அதையுடனே சொல்! நீலம் : எனக்கின்னது செய்வதென்று ஏதுந் தோன்றாமல், அவளின்ஆருயிர்த் தோழி பச்சையைக் கூவியழைத்தேன். அவள் ஓடி வந்தாள். அவளைக் கூவியழைத்த ஓசை கேட்டு அமபிகாபதியும் ஓடி வந்தார். யாங்கள் மூவருங் கூடிச் செய்த முறைகளால் அவள் உணர்வு கூடிக் கண்களைத் திறந்தாள். எங்களுக்கும் உயிர் வந்தது. அமராவதி : அதன் பின் நிகழந்ததென்ன? நீலம் : சொல்கிறேன், அது கேட்டு நீ வருந்தாதே! அருகே தன் தமையனைக் கண்டதும் அவரைக் கட்டிக் கொண்டு பொருமிப் பொருமி அழத் துவங்கி விட்டாள்! அவர் எவ்வளவோ தேறுதல் சொல்லிய பின் சிறிது மனந் தெளிந்து அண்ணா! உங்களுயிர் நம்மரசர் கையிலன்றோ சிக்கி யிருக்கின்றது! எந்நேரத்தில் ஏதாய் விளையுமோ என்பதை நினைக்க நினைக்க என்னுயிர் என்னுடம்பில் நில்லாமல் தத்தளிக்கின்றதே! என்னண்ணா செய்வேன்! என ஆற்றாது சொல்லிக் கண்ணீர் ஆறாய்ப் பெருக்கினள்! அமராவதி : (கண்கலங்கி) இதைக் கேட்க என் நெஞ்சம் அனலிடை மெழுகாய் உருகுகின்றது எல்லா வகையிலுஞ் சிறந்தவரான தன் தமையனாரைப் பிறந்தது முதல் தன்னோடு உடன் வளர்ந்து பழகித் தனக்கு உயிர் போன்றிருக்குந் தன் ஒரே தமையனாரைப் பறி கொடுப்பதென்றால் அவளுக்கு எங்ஙனந்தான் மனந் துணியும்? பாவியாகிய யான் ஏன்தான் பிறந்தேன்? என்னாலன்றோ என்னுயிரினுஞ் சிறந்த என் கேள்வற்கும் அவர்தந் தங்கைக்கும் இனி அவர் தந்தைக்கும் அளவிலாத் துயரம்? யான் என்னுயிரை மடித்துவிட்டால் அவர்களெல்லாரும் என் தந்தையின் சீற்றத்திற்குத் தப்பி நலமுடன் வாழ்வரன்றோ! (இது சொல்லிக் கீழே சோர்ந்து விழுகின்றாள்)(தோழி நீலம் மிக்க அச்சத்துடனுங் கலக்கத்துடனும் இளவரசியை எடுத்தணைத்து அச்சோர்வு தீரச் செய்ய வேண்டுவன செய்ய, இவ்விருவரும் நெடுநேரமாகியிந் திரும்பி வராமை கண்ட காவேரி மனந்திடுக்கிட்டு இவர்களைத் தேடிக் கொண்டு பூந்தோட்டத்துட் போந்து, இளவரசியின் சோர்வு கண்டு திகைப்பும் வருத்தமும் எய்தி, நீலத்தால் நிகழ்ந்ததை அறிகின்றாள்) நீலம் : (அமராவதியை நோக்கி) அம்மா அமராவதி! இதோ பார்! காவேரி உன்னைத் தேடிக்கொண்டு இங்கே வந்துவிட்டாள். அமராவதி : (கண் விழித்து) கண்மணி காவேரி! நெடு நேரம் உன்னை நூல்நிலையத்திற் காக்க வைத்துவிட்டோம். (என்று சொல்லி அவள் கையைப் பிடித்தெடுத்து முத்தம் வைக்கின்றாள்) காவேரி : அம்மா நீங்கள் இவ்வளவு சோர்வுற்றது கண்டு என்னுள்ளம் பதைக்கின்றது! இதனை என் தமையன் அறிந்தால் அவர் உயிர் தாங்கார். கைகடந்து போன ஒரு நிகழ்ச்சிக்காக வருந்தி இன்னும் நெஞ்சைப் புண்படுத்திக் கொள்ளாதீர்கள்! சொல்லொணா அழகிற் சிறந்த உங்களை நேரே கண்டபின் உங்கள் மேற் காதல் கொள்ளாதிருத்தல் என் தமையனால் ஏலுமோ? அமாராவதி : அங்ஙனமே, அழகும் மனநலங்குண நலங்களும் ஒருங்கே குடிகொண்டு திகழும் ஒரு தெய்வ வடிவினரான நின் தமையனாரை நேரே கண்டபின்னும், அவரது கலையறிவின் திறனைப் பன்னாளும் நேரேயுணர்ந்து வியந்த பின்னும் அவர்மேற் காதல் கொள்ளாதிருத்தல் என்னால் இயலுமோ? சொல், கண்மணி! காவேரி : அம்மா, உண்மையாகவே அது சிறிதும் இயலாததேதான். பகலவற் கண்டவண்டாமரை கூம்பிதழ் பாரித்தலும் நகலொளி வெண்டிங்கள் முன்னின்ற அல்லிநறுமணந்தான் மிகவலர்ந் தோங்கி விளங்கலுங் கண்டிடின் மேன்மைமிக்க மகனொரு மாதையும் மாதோர் மகனையும் வாவல்தப்பே? அமராவதி : ஐயோ! கண்மணி! எல்லா உயிர்களிலும் இயற்கையாய்க் காணப்படும் இக்காதலன்பின் உயர்வை அறிவார் உலகில் அரியராயிருக்கின்றனரே! பிறப்பா லுயர்ந்தஎம் பேதையைக் கீழோன் பிணையமனந் திறப்பா னெனினவன் நெஞ்சைப் பிளந்து செகுத் திடுவேன் மறப்பான்மை மிக்க எம்மன்னர் குலத்தில் மறைந்தொரிழி பிறப்பாளன் போதத்துணிந்திடின் அன்னான் பிழைப்பதின்றே! என்றெந்தை சீறிச் செருக்கொடு கூறும் எரிவுரைகேட் டன்றென்று முள்ளம் அனலிடைப்பட்டே அழி புழுப்போல் பொன்று மிதுதப்பிப் போம் வழி காண்கிலேன்; பொன்னனையாய்! என்றுன் றமையனைக் காண்பதென்றுள்ளமும் ஏங்கிடுமே காவேரி : இளவரசியார் அதற்குங் கலங்க வேண்டு வதில்லை. நம்மையெல்லாம் ஒருங்கு கூட்டுவித்த நம் ஆண்டவனே நமக்கு ஏதுந்தீங்கு நேராமல் மீண்டும் நம்மை நிலை பெறக் கூட்டுவிப்பவன்; அதுகாறும் நாம் சிறிது பொறுமை யோடிருக்கவேண்டும். அமராவதி : கண்மணி காவேரி! நின் தமையனைக் காணா நிரயவாழ்க்கையைப் பொறுத்திருப்ப தெங்ஙனம்? இதற்கொரு வழிசொல். நின்னைக்கண்ட பின்னரே நின் தமையனைக் கண்டாற்போல் மனந்தேறினேன். ஆனாலும், நின் அழகிய உருவம் நின் தமையனுருவை முழுதும் ஒத்திருத்தலால், நின்னைக் காணுந்தோறும் நின்றமையனைத் பற்றிய நினைவு என் னுள்ளத்தை முற்றுங்கவர்ந்து எழுந்த வண்ணமாயிருக்கின்றதே! காவேரி : அம்மா! எனக்கு ஏதொரு வழியுந் தோன்ற வில்லை! நுண்ணுர்வு வாய்ந்த நந்தோழி நீலந்தான் இதற் கொரு வழிசெய்ய வேண்டும். நீலம் : அம்மா அமராவதி! நம் ஆசிரியர் கம்பர் இன்னும் ஒரு கிழமையில் நமக்குப்பாடஞ் சொல்ல வருவர்; வந்தால் அவரை நம்மரசர் இரவில் தமதில்லஞ்செல்ல விடார்; நமதரண்மனையிலேயே இருக்கச் செய்வார். இவ்வாறே முன்னெல்லாம் நடந்து வந்திருக்கின்றது. தம் தந்தையார் வீட்டில் இல்லாத நாட்களிலேதாம் நின் கேள்வர் நின்பால் வருதல் கூடும். அந்நாட்களில் நம்மருமைத்தோழி காவேரி தன்னிலல்லத்திற்கு ஏக நீ விடை கொடுப்பையானால் நின் கேள்வர் நின்னை வந்தணைதற்கு ஒரு வழி பிறக்குமென்று நினைக்கிறேன். அமராவதி : (பரபரப்புடன்) அஃதென்ன வழி நீலம்? நமதரண்மணையைச் சூழக் காவலர்கள் இரவில் நிறுத்தப்பட்டிருக்கின்றனரே! ஏதோரு தீங்கும் நேராமல் என் கணவர் என்பால் வருவதற்கு இடம் எது? நீலம் : அதைப் பற்றி இப்போதொன்றும் என்னாற் சொல்லல் முடியாது. பிறகு இறைவி அருள் செய்வள். (எல்லாரும் மனவமைதியுடன் உணவருந்தப்போய் விடுகின்றனர்) நான்காம் நிகழ்ச்சி : எட்டாங்காட்சி களம் : புகழேந்திப் புலவர் மாளிகை காலம் : மாலை அம்பிகாபதி : நயினார்! பத்தாண்டுகளுக்குமுன் யான் சிறுவனாயிருந்த போது இவ்வீடு எவ்வளவு களையாயிருந்தது? புகழேந்தியார் மாய்ந்த பின்னோ இவ்வீடும் உயிரிழந்த ஓருடம்புபோல் ஒளிமழுங்கிக் காணப்படுகின்றது! (உற்றுக் கேட்டு) ஓ! இவ்வீட்டினுள் யாரோ நோயாய்க் கிடப்பதுபோற் றோன்றுகின்றதே! நயினார் : ஆம் அம்பிகாபதி, இவ்வீட்டைப்பற்றிய செய்தி ஏதும் நீ அறியாய் போலும்! அம்பிகாபதி : ஒட்டக்கூத்தருக்குப் புகழேந்தியார்மேற் கடும்பகை. நம் சோழமன்னர் கூத்தரை ஆசிரியராய்க் கொண்டு அவர் சொல்வழி நடப்பவராதலால், அவர் புகழேந்தியாரைப் பாராட்ட வேண்டுமளவுக்குப் பாராட்ட வில்லை. நம்மரசியாரின் துணையினாலேயே புகழேந்தியார் நம்மரசவையிலிருந்து காலங்கழித்தனர். என் தந்தையாரும் புகழேந்தியாரும் உள்ளன்புமிக்க நண்பர்களாயினுங், கூத்தருக்கும் அரசனுக்கும் அஞ்சித் தமது நேயமிகுதியை இருவரும் வெளிக்காட்டுவதில்லை. அதனாலேயே தான் யான் இவ்வீட்டுக்குத் தொடர்ந்து வராமற் றடை செய்யப்பட்டேன். நயினார் : உண்மைதான். புகழேந்தியார் இறந்தபின் அவர் தம் மனைவியார் அரங்கம்மாள் இருமல் நோயாற் படுக்கையிலேயே பெரும்பாலுங் கிடக்கின்றார்! அம்பிகாபதி : ஐயோ! அங்ஙனமாயின் அவர் தம் மகள் தங்கத்திற்கு யார் துணை? நயினார் : தங்கம் ஒருத்தியைத் தவிர அவர்கட்கு வேறு பிள்ளை கிடையாது. என் தந்தையாரும் புகழேந்தியாரும் மிக நெருங்கிய நண்பர்கள்; அதனால் என் தந்தையாரும் அவரது கட்டளைப்படி யானும் இவர்கட்குத் துணையாயிருந்து வேண்டிய உதவிகளைச் செய்து வருகின்றோம். புகழேந்தி யார்க்குப் பாண்டிய மன்னனும் நம்மரசி அங்கயற் கண்ணியாருந் திரண்ட பொருள் கொடுத்திருப்பதால், இவர்கட்கு வறுமை யில்லை. ஏவலர்கட்குங் குறைவில்லை; அரங்கம்மாள் நோயால் வருந்துவதும், எல்லா நலனும் வாய்ந்த தம் ஒரே மகளுக்கு ஏற்ற மணவாளன் வாயாதிருத்தலால் அவ்வம்மையார் கவலைநோய் கொண்டு மேலுமேலுந் துன்புறுவதுமே இவ்வில்லம் பொலிவிழந்து காணப்படு வதற்குக் காரணம். அம்பிகாபதி : இவர்களின் துணையற்ற நிலைமையை நினைக்கையில் என்போன்றவர்களின் கன்னெஞ்சமும் கரையாதிராது! இத்தகையவர்கட் கிரங்கி யுதவிபுரியும் நுங்கட்கு உலகின்கட் செய்யக்கூடிய கைமாறு ஒன்றுண்டோ? அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு மல்லன்மா ஞாலங் கரி, என்று பொய்யாமொழியார் புகன்ற வண்ணம்நுங்கட் கேதுமே துன்பம் அணுகாது.(இவ்வாறு பேசிக் கொண்டே இருவரும் அவ்வீட்டினுள் நுழைகின்றனர். உடனே ஏவலர் அறிவிக்கத் தங்கம் வருகின்றாள்) தங்கம்: (இருவரையும் வணங்கி) அண்ணால் வரல் வேண்டும்! வரல் வேண்டும்! நயினார்: அன்னையார் எவ்வாறிருக்கின்றார்கள்? தங்கம்: முன்னிலையிலேயேதான் இருக்கின்றார்கள். உள்ளே வந்து பாருங்கள்! (இருவரும் அரங்கம்மாள் படுக்கையறையுட் புக) அரங்கம்மாள்: (படுக்கையிற் கிடந்தபடியே) அப்பா நயினார் பிள்ளை! எங்கோ நாலைந்து நாளாய் நீ வரவில்லையே! உன்னைக் காணாமல் எனக்கு நோய் மிகுதியாய் விட்டதே! (அம்பிகா பதியைப் பார்த்து) இந்தப் பிள்ளை யார்? நயினார் : அம்மா! இவர் கம்பர் மகன் அம்பிகாபதி; என்னுயிர்த் தோழர்; இவர்க்குதவியாகச் சில சில முயற்சிகள் தொடர்ந்து செய்யவேண்டி நேர்ந்தமையால் யான் சில நாட்கள் இங்கே வரக்கூடாதாயிற்று. உங்கட்கு அதனால் நோய் மிகுதிப்பட்டமைக்கு மிக வருந்துகின்றேன்; பிழை பொறுத்தல் வேண்டும். அரங்கம்மாள் : உன்பாற் பிழையொன்றுமில்லை. உன் ஆருயிர் நண்பனுக்கு நீ உற்றவிடத்து உதவி செய்ய வேண்டுவது பெருங் கடமைதான்.(அம்பிகாபதியை நோக்கி) அப்பா அம்பிகாபதி, நீ சிறு பிள்ளையாய் இருந்த போது நின் தந்தையாருடன் நீ என் கணவரிடம் வரும்போதெல்லாம் உன்னைத் தூக்கி எடுத்து முத்தமிட்டிருக்கின்றேன். நின் தந்தையார்க்கும் என் கணவற்குமுள்ள மெய்யன்பின் நேசத்தால் நின் தந்தையாரை என் அருமைத் தமையனாராகவே கருதி அன்பு பாராட்டி வந்தேன்; அவரும் என்னைத் தம்முடன் பிறந்த தமக்கையாகவே கருதி அன்பு பாராட்டி வந்தார். என் கணவர் காலமான பிறகோ நின் தந்தையார் இங்கே வருவதில்லை. அந்தப் பாவி ஒட்டக்கூத்தன் பழிச்சொற்களைப் பரப்புவான் என்ற அச்சமே அதற்குக் காரணம் அதனால், அருமைக் குழந்தே! உன்னையும் யான் பார்க்க முடியாப் பாவியானேன்! (கண்ணீர் சொரிகின்றாள்) அம்பிகாபதி : அம்மா, அழாதீர்கள்! நோயால் மெலிந்திருக்கும் நீங்கள் அழுதால் நோய் மிகுதிப்படும், இனி, யான் இங்கு வராமல் இரேன்; எவர் தடைசெய்தாலும் யான் இங்கு வந்து என்னாலியன்ற உதவியைச் செய்தல் தடைபடாது. நாங்கள் உங்களுக்குப் பயன்படாப் பதர்களாயிருந்தாலும், நயினாரும் இவர் தம் தந்தையாரும் உங்களுக்கு உற்ற நேரத்தில் உதவி புரியும்படி எல்லாம் வல்ல இறைவனே இவர்களை ஏவியிருக்கின்றான். நயினார் : செந்தமிழ்ப் புலவர் திலகமாய் விளங்கிய புகழேந்தியார்தங் குடும்பத்தார்க்கு இடர்ப்பட்ட நேரத்தில் ஏதோ சிறிதுதவி செய்யும் பேற்றை எமக்களித்த இறைவனை இறைஞ்சுகின்றோம். நீங்கள் இப்போது அமைதியாயிருங்கள். நீங்கள் மனங் கலங்கினால் தங்கை தங்கம் எங்ஙனம் ஆற்றும்? அம்பிகாபதியாரும் யானும் ஒன்றாயுந் தனித்தனியாயும் உங்களை அடுத்தடுத்து வந்து காண்போம். (இருவரும் அவ்விருவர்பாலும் விடைபெற்று மீள்கின்றனர்; மீண்டு செல்லும் வழியில்) அம்பிகாபதி : நயினார் நீ சொல்லிய அளவுக்குமேல் தங்கம் எவ்வளவு அழகா யிருக்கின்றனள்! ஆனாலும். நயினார் : (தடுத்து) இங்கே ஒன்றும் வாயைத் திறவாதே! நாம் தெருவில் செல்கின்றோம் என்பதை மறந்தனையா? மேலும், இது முன்னிருட்டுக் காலம்; பக்கத்தே செல்பவர் இன்னாரென்பது தெரியவில்லை; வழிக்கரை மரங்களில் நெடுகத் தொங்கவிட்டிருக்கும் அகல் வெளிச்சம் அருகே செல்வாரையுஞ் செவ்வனே தெரிந்து கொள்ளப் போதியதாயில்லை. இதோ! அண்மையிற் பெரியநாயகி யம்மை கோவில் இருக்கிறது; அங்கே சென்று அம்மை யப்பரை வணங்கியபின் எல்லாங் கலந்து பேசுவோம். அம்பிகாபதி : நல்லதங்ஙனமே! (இருவரும் கோயிலிற் சென்று வணங்கியபின் ஒரு மண்டபத்தில் தனியேயமர்ந்து மெல்லிய குரலில் உரையாடுகின்றனர்) நயினார் : அம்பிகாபதி, இப்போதுன்மனம் எந்த நிலையி லிருக்கின்றது? அம்பிகாபதி : என் அமராவதியின் அழகுநலங் குண நலங்களையும் தங்கத்தின் அழகுநலங் குணநலங்களையும் என் மன ஒப்பிட்டு ஆராய்ந்த வண்ணமாயிருக்கின்றது ஆ, ஆண்டவன் படைத்த பெண்மை அழகில் எத்தனை வகை! ஒவ்வொன்றும் வியக்கத் தக்கவாறாய் அமைந்திருக் கின்றதேயன்றி, மிக அழகிய மாதரில் எவர் அழகில் மிக்கார்? எவர் அதிற் சிறிது குறைந்தார்? என்று வரையறுத்துக் காண்டல் ஒரு சிறிதுமியலவில்லையே! நயினார் : காவேரி, அமராவதி, தங்கம் என்னும் இவர் மூவரில் எவர் மற்றையிருவரிலும் மேம்பட்ட வனப்புடையர் என்பதை நன்காராய்ந்து சொல்வையா? அம்பிகாபதி : என்னாலியன்ற மட்டும் எண்ணிப் பார்த்துச் சொல்கின்றேன், கேள்! மதியினெழிலும் பிறையின் வடிவுங் காரறலின் வனப்பும் மயிற்றழையிற் பொதியும் பொலிவுங் குமிழி னுருவும் போர்ச்சிலையின் வளைவும் புகழ்ப்பவள முதிருந் துணியின் சிவப்பும் முருந்தின்வால் வெளியே வொளியும் முகிழமரா வதியின் உருவம் பசும்பொற் படிவம் வாழுயிரோ டுலவும் வகையினதால் உயர்ந்துநிமி ருடம்பின்கண் உருத்தெழுந்தே ஒளிர் கொங்கை உடையைக் குத்திப் பெயர்ந்துநடத் தொறுமவடன் சிற்றிடைக்குப் பெரிதுமிடர் பெயுங்கொ லென்று மயர்ந்திடைமேன் மணியரற்ற மருண்மானின் நோக்கமொடு மயங்கி நிற்பாள் அயர்ந்த மனத் ததுகண்ட அடியேனும் அவ்வழகில் அமிழ்ந்தி னேனால் நயினார் : நல்லது, தங்கத்தின் அழகைப் பற்றி யாது சொல்வை? அம்பிகாபதி : சிறிது சொல்கிறேன். கொங்கப்பு மலர்க்குழலோ குளிர்காலத் கரும்புயலோ கொழுவி தாகப் பொங்கற்றை மரைமலரோ புதுமுகமோ புரள்கயலோ பொருந்து கண்ணோ அங்குற்ற விளங்குமுகை அழகியமூக் கெனவருமோ அரிய முத்தந் தங்கத்தின் நகையனைய தகைமையதோ அவள்வடிவந் தளிர்மென் கொம்போ! ஏதென்று துணிந்துரைப்பென் ஏந்திழையா ளிருகொங்கை யிருசெப் பேய்க்கும் மாதென்றுங் கரவறியா வருந்துளத்தின் மறுகுதலால் மதர்த்த லின்றிச் சூதென்றுந் தொடலரிய சுடர்க்கொடியாய்ச் சுழல்வளது சுடுமென் னெஞ்சை யாதென்று விளம்பிடுவென் எனக்கவள்பால் எழுநேயம் இரக்கத் தாமால் நயினார் : இனி, என் காவேரியைப்பற்றி யாது சொல்லப் போகின்றாய்? அம்பிகாபதி : எனக்குப்பின் பிறந்தாளை என்னிருகண் ணனையாளை இளமான் கன்று தனக்குத்தான் நிகர்வாளைச் சடைப்பாசி யென அடர்ந்து தழைந்து மைபோல் வனக்கரிய குழலாளை அதனருகே வளர்பானல் மலர்க்கண் ணாளை நினக்கியா னெடுத்துரைத்தல் மிகையன்றோ நேயமிகு நெஞ்சிற் செம்மால்! மெழுகினால் எழில்கனிய வனைந்திட்டு விளங்குமொரு பாவை மேனின் றொழுகுசெழு முகத்துடனே உயர்தெங்கின் இளங்காய்கள் உறழ்ந்து தோன்ற முழுநெறியாஞ் செவ்வாம்பல் வாய்திறந்து மொழிநறவு வழியப் பேசிப் பழுதிலுயிர் கொண்டுலவும் பான்மையளென் றங்கையெனப் பகர்வென் பாராய்! நயனிர் : ஆ! அம்மூவர் உருவினையும் வரம்புகட்டிப் பாடிய நின் பாடல்களால் அம் மூவரையும் யான் என் கண்ணெதிரே காண்பதுபோல் உணர்கின்றேன், ஆனாலும், நீ அம்மூவரில் எவர் மற்றை இருவரிலும் அழகின் மிக்கார் என்பதை எடுத்துக் கூறிற்றிலை; அதனையும் அம்புகூர்ந்து சொல்! அம்பிகாபதி : நங்கையர் மூவரிற் பொற்பிற் சிறந்த நலமுடையார் இங்கெவ ரென்று மிகுத்துரை கூறல் இயல்வதில்லை; அங்கஃ தாயினும் என்னமராவதி ஆரணங்கின் கொங்கை முகிழென்றன் நெஞ்சத் தடத்திற் குடிகொண்டதே. நயினார் : நல்லது! அமராவதியின் அழகின் மேன்மையைப்பற்றி நீயும் பிறருங் கூறக் கேட்டதேயன்றி, அதனை யான் கண்டறிந்திலேன். அதனை நேரே கண்டு அதன் இனிமையையும் நுகர்ந்த நினக்குத்தான் அதன் உண்மை நன்கு விளங்கும். அது நிற்க. தங்கத்தின் வடிவழகைப் பற்றி நீ கூறியதை நோக்கினால், அவளது வனப்பு நினதுளத்தைக் கவராம லிருக்கவில்லை யெனக் கருதுகின்றேன். அம்பிகாபதி : உண்மைதான்; தங்கத்தின் உருவழகு எந்த வகையில் எனதுளத்தைக் கவர்ந்ததென்பதனைச் சிறிது பகர்கின்றேன். ஓவியம் வரைதலையே தொழிலாய்க் கொண்டிருப்பான் ஒருவன், வனப்பின்மிக்க ஒரு மாதின் வடிவைக் காணின் அதனைப் பிறழாமல் வரைதலிலேயே கருத்துக் கொண்டிருப்பானன்றி, அம் மாதின் மேற் காதல் கொண்டு விடுவான் அல்லன்; அதுபோல, யானுந் தங்கத்தின் உருவமைப்பை நோக்கி வியக்கின்றேனேயன்றி, அவள் மேற் சிறிதுங் காதல் கொண்டிலேன். நயினார் : எழிலிற் சிறந்த ஒரு நங்கையைக் காண்பவன், அவள்பாற் காதல் கொள்ளாதிருத்தல் இயலுமோ? அம்பிகாபதி : இயலும்; வனப்பின்மிக்க மங்கையரெல்லாரும் ஆடவர்க்குக் காதலை மூட்ட மாட்டுவார் அல்லர். காதலை மூட்டுவது வனப்பு மட்டும் அன்று; மங்கையர் சிலரின் குணநலங் கலைநலங்களும், கவர்ச்சிக் குறிப்புக்கள் சிலவுமே காதலை மூளச்செய்வன. மேலும், ஒத்த உள்ளமும், ஒத்த அன்பும், ஒத்த அறிவும், ஒத்த நலங்களுமே மகளிர் ஆடவர்க்குட் காதலை எழுப்புவனவாகும். அதுவல்லாமலும், ஓராண்மகனும் ஒரு பெண் மகளுந் தம்முட் காதல் கொள்ளப் பெற்றாற் பின்னர் அவர் பிறரை நச்சுவார் அல்லர். ஆதலினாற்றான், யான் அமராவதிமேற் காதல் கொண்டபின் தங்கத்தின்மேற் காதல் கொள்ள மாட்டாதோன் ஆயினேன். நயினார் : நல்லது, இந்நிலை எனக்கும் உளதேதான். இப்போது இரவு பத்து நாழிகைக்குமேல் ஆய்விட்டது! நின் தங்கையுந் தந்தையாரும் நீ இன்னும் ஏன் வரவில்லையே யென்று கவன்று கொண்டிருப்பர். ஆகையால் நின் இல்லஞ் செல்வோம் வா. (இருவரும் கம்பர் மாளிகை வாயிலை அணுகியதும்) நயினார்: அம்பிகாபதி, என் தந்தையாரும் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பர். யானும் என் இல்லஞ் செல்கின்றேன். வேறு தக்க வழி பிறக்கும் வரையில் நீ அமராவதிபாற் செல்லுதலை நினையாதே! காளிகோயிற் பக்கத்திற் காவலர் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்! அம்பிகாபதி : (நயினார் கையை அன்புடன் எடுத்து) என்னாருயிர்த் துணைவ! தீவினையேனான என்பொருட்டு இக்கடுங் குளிர்கால இரவிலும் எனக்குத் துணையாய் என்னுடன் போந்து துன்புறுகின்றனை. நீ எங்கள் ஏவலனுடன் செவ்வனே வீடு செல். நாளை நாம் பார்ப்போம். நின் சொற்படி நடக்கத் தவறேன். நயினார் : நின் தங்கைக்கு என் அன்பையும் நின் தந்தையார்க்கு என் வணக்கத்தையும் தெரிவி. (போய் விடுகின்றான்) நான்காம் நிகழ்ச்சி : ஒன்பதாங் காட்சி களம் : சோழன் மாளிகை காலம் : மாலை சோழன்: (தனக்குள்): தோட்டக்காரன் அம்பிகாபதியைக் கள்வனெக் கொணர்ந்து என் முன்னே நிறுத்தினன். அமைச்சர் நம்பிப்பிள்ளையோ ஆராய்ந்து பார்த்துப் பூக்களைக் களவு செய்தவன் அம்பகாபதி அல்லன் என முடிவு செய்தனர். அதன்மேல் யானும் அம்பிகாபதியை விடுதலை செய்தேன். இது நிகழ்ந்த பிறகு பூக்கள் களவு போகக் காணோம். பூக்களைக் களவு செய்பவன் வேறோரு வனாயிருந்தால், அவன் இதுகாறும் பிடிபடாமையால், மேலுமேலும் பூக்கள் களவு போகவேண்டுமன்றோ! ஆகையாற், கூத்தர் குறிப்பிட்டபடி அம்பிகாபதிமேல் எனக்கு ஐயம் மிகுதிப்படுகின்றது! இதைப் பற்றி மீண்டும் யான் கூத்தரைக் கலக்க வேண்டும். (வெளியே) ஏ கடம்பா! நீ ஆசிரியர் கூத்தரிடஞ் சென்று அவரை உடனே இங்கழைத்து வா! கடம்பன் : மன்னர் பெருமான் கட்டளைப்படியே (வணங்கிப் போய்விடுகிறான்) சோழன் : (தனக்குள்) இதைப்பற்றிக் கூத்தரைக் கலப்பதிலும் ஒரு தொல்லையிருக்கின்றது! கூத்தரோ கம்பர் மேலும் அம்பிகாபதி மேலும் நிரம்பிய அழுக்காறுடையவர்; தறுகண்ணர். குற்றமில்லாத அம்பிகாபதி மேற் பெருங் குற்றத்தைச் சுமத்திவிடுவாரானால் அவரது சொல்லை நம்பிக் கல்விவல்ல அம்பிகாபதியை யான் ஒறுப்பது எனக்குப் பெரும் பழியை விளைக்குமன்றோ? எதற்கும் அவரது கருத்து யாதென்று பார்ப்போம். (கடம்பன் ஒட்டக்கூத்தருடன் வருகின்றான்) அரசன் : ஆசிரியர்க்கு வணக்கம்! அமருங்கள்! கூத்தர் : குழந்தாய்! நீ நீடூழி வாழ்க! (இருக்கையில் அமர்கின்றார்) அரசன் : புலவர் பெருமானுக்கு மீண்டுந் தொல்லை கொடுத்துவிட்டேன். தங்களை வருவித்தது அம்பிகாபதி மேல் எனக்குண்டான ஐயத்தைத் தீர்த்துக்ககொள்ளுதற்கே. நமது அரண்மனைப் பூந்தோட்டத்தில் நறுமணங் கமழும் பூக்களைக் களவு செய்தவன் கம்பர் மகன் அம்பிகாபதியே என்று நம் தோட்டக்காரன் அவனை கொணர்ந்து என் முன்னே நிறுத்தினன். அவன் கள்வன் அல்லன் என்று நம் அமைச்சர் ஆராய்ந்து கூற, அவனை விடுதலை செய்தேன், அதற்குப் பின் தோட்டத்திலிருந்து பூக்கள் களவு போகக் காணோம். மேலுந் தங்கட்கு முன்னொரு கால் அக்களவைப் பற்றிச் சொல்லிய போது, பூக்களைத் திருடுவோன் கள்வனாயிருத்தலாகாது, அவன் ஒரு காமுக னாயிருத்தல் வேண்டுமென்றும் அவன் என் புதல்வி அமராவதியின் கன்னிமாடப் பூங்கா மதிற்பக்கத்தே மறைந்து சென்று சிறிது நேரங் கழித்து வெளிப்பட்டுப் போந்ததில் ஒரு நுணுக்கம் இருக்கின்றதென்றுந் தாங்கள் கூறியது தங்கள் நினைவிலிருக்கலாம். கூத்தர் : ஆம், ஆம். அம்பிகாபதி, அமராவதிக்குத் தமிழ் கற்பிக்க ஏற்பாடு செய்ததில், அவ்விருவரும் ஒருவரையொருவர் பாராதபடி நடுவே திரையிட்டுத், தோழிமாரையுங் காவலாக இருக்கச் செய்தனையே; அவ்வேற்பாட்டின் படி அவர் ஒருவரையொருவர் பாராமலே பாடம் நீள நடை பெற்று வந்ததா? அரசர் : ஆம், அதனைக்கண்டறிதற் பொருட்டே பெரிய நாயகியம்மை கோயிலில் ஒருநாட் புதல்வி அமராவதியை ஆடிப் பாடச் செய்தோம். அப்போது அம்பிகாபதியையும் வருவித் திருந்தோம். ஆயினும், ஆடிப்பாடியவள் எம் புதல்வி அமராவதியே என்பதும், அப்போதங்கு வந்திருந்தவன் அவளுக்குத் தமிழ் கற்பிக்கும் அம்பிகாபதியே யென்பதும் அவ்விருவரும் அறியாமற் செய்திருந்தோம். அங்ஙனஞ் செய்ததில் அவள் அவனையும், அவன் அவளையும் அதற்கு முன்நேரே பார்த்தறிந்த குறிப்புச் சிறிதுமே இல்லை. அது கண்டு முதலில் மிக மகிழ்ந்தோம். கூத்தர் : ஓ! முதலில் மகிழ்ந்த மகிழ்ச்சி பின்னர் மாறி விட்டதா? அரசன் : ஆம்; பெருமானே! அமராவதி ஆடிப்பாடுவதைக் கண்ட அம்பிகாபதி அவள்மேல் அடங்காக் காதல் கொண்ட குறிப்புப் புலனாயிற்று; அங்ஙனமே அவளும் அவனைக் கண்டபின் அவன்மேற் கரைகடந்த காதல் கொண்டவளாய்க் காணப்பட்டு ஆடல் பாடல்களிற்றடுமாறினாள். அவ் விருவரையும் அங்கே நேர் காணுமாறு யான் செய்தமைக்குக் கழிவிரக்கமும் அங்ஙனம் யான் செய்யினும் என் புதல்விமேற் காதல்கொள்ளுந் தகுதிவாயாத அம்பிகாபதி அவளை விழைந்தமைக்குச் சினமும் கொண்டு அந்நாடகத்தை நிறுத்தி விட்டேன். கூத்தர் : நன்று. நீயோ வேந்தர் பெருமானாய் விளங்குகின்றனை. நின்னருந் தவப் புதல்வி அமராவதியைப் பற்றி பிழைபட நினைத்தலே ஆகாது. அம்பிகாபதியுங் கல்வியறிவில் மிகச் சிறந்தவன்; என் நண்பர் கம்பர்க்கு மகன்; ஆனால், ஒன்று; அவன் துடுக்கன்; நெஞ்சழுத்தம் வாய்ந்தவன். இரு பக்கத்தீரும் எனக்கு நெருங்கிய கேண்மையுடையீராதலில், யான் எவரைப் பற்றி எதுதான் சொல்லக்கூடும்? அரசன் : பெருமானே! நான் கொண்ட ஐயத்தைத் தீர்த்துக் கொள்ளுதற்குத்தானே புலமையிற் சிறந்த தங்கள் கருத்தை வினவினேன். தாங்கள் இங்ஙனம் நெகிழ்ந்து பேசினால் யான் உண்மை காண்பது யாங்ஙனம்? கூத்தர் : நல்லது யான் இதில் ஏதுந் தீர்த்துச் சொல்ல இயலாது. நீயே இதனை நன்காய்ந்து பார்த்து உண்மையைக் கண்டறிதல் வேண்டும். ஆயினும் ஒன்று; பூக்கள் திருடிய கள்வனைக் குறித்துத் தோட்டக்காரன் ஏதோ ஒன்று சொல்லத் தொடங்கியபோது, அவன்றன் மனைவி அவன் அது சொல்லாமற் றடை செய்து, தான் வெறொன்று சொல்லினள் என்றனையே. அது கொண்டு தோட்டக் காரனும் அவன்றன் மனைவியும் இதிலுள்ள மறைவினைத் தெரிந்தவராகக் காணப்படுகின்றனர். அவர்கள் இரவிற் பேசிக்கொள்வதைக் கேட்டறிந்தால், இதனுண்மை வெளிப்படக் கூடுமெனக் கருதுகின்றேன். இதற்குமேல் வேறெதுவும் என்னறிவிற் றென்படவில்லை. அரசன் : இது சொன்னதே போதும். உண்மையைக் காண வழி தெரிந்துகொண்டேன். பின் நிகழ்ச்சிகளைப் பின்னர்த் தெரிவிப்பேன். இனித் தாங்கள் இல்லஞ் செல்லலாம். (வணங்கக், கூத்தர் போய்விடுகின்றார்) நான்காம் நிகழ்ச்சி : பத்தாம் காட்சி களம் : புகழேந்திப் புலவர் மாளிகை காலம் : சாயங்காலம் அம்பிகாபதி : (தனக்குள்) அமராவதியைக் காணாமல் அடியேனுள்ளம் அகம்புழுங்கிக் கமராய் வெடிக்க உயிர்மாளுங் காலம் அண்மிற்றெனக் கவலேன் தமர்வே றின்றித் தனியாளாய்த் தானும் இறக்குந் தகை நினைந்தே நமனெம் முயரைப் பிரியாமல் ஒருங்கே கவர நயக்கு வெனே. ஆ! அமராவதி! நின் பொன்வடிவைக் காணாமலும், நின் இன்மொழி களைக் கேளாமலும், நின் பவளவாய் முத்தங் கவராமலும், நின் கொங்கை மருப்பிற் குழையாமலுங் கழியும் இந்நாட்களில் வீணே இவ்வுடற் பொறையைச் சுமந்து துன்புறுகின்றேனே! இத் துன்பத்தினின்று மீளுதற்கு ஒரு மருந்து தாராயோ? ஏதேது! இனி உன்னைக் காணப்பெறேன். நின்னை ஒரு புடையொத்த தங்கத்தைக் கண்டாவது எனது பொறுத்தற்கரிய துன்பத்தை ஆற்றிக் கொள்கின்றேன். தன் தந்தையை இழந்தும், நோயால் வருந்திக்கிடக்குந் தன் தாயைக் கண்டும், நெஞ்சம் நைந்துவாடி என்போல் துயருறுந் தங்கத்தைக் கண்டால் என் மனம் ஒருவாறு ஆறுதல் அடையும். ஆறாத்துயரில் அமிழ்ந்திக்கிடக்கும் ஒருவர். தம்போல் துயருறும் பிறர் ஒருவரைப் பார்த்து ஆறுதல் கூறுதலால் தமது ஆறாத் துன்பம் ஆறப்பெறுகின்றனர். மேலுந், தக்க துணை யின்றிக் கலங்கி நிற்கும் ஓர் அழகிய இளமங்கையின் நிலை, ஆற்றருந் துன்பத்தால் அலைவுறும் எத்தகைய ஆட வருள்ளத்தையும் இளகச்செய்து அவருக்குள்ள துன்பத்தைத் துடையாதிராது. (இவ்வாறு தனக்குட் பேசிக் கொண்டே புகழேந்திப் புலவர் மாளிகையுள் நுழைகின்றான்) தங்கம் : (எதிரே போந்து வணங்கி) அத்தான்! வாருங்கள். வாருங்கள். அம்மை உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அம்பிகாபதி : இன்றைக்குள்ள உனது முகமலர்ச்சியைக் காண்கையில், தங்கம், நின் அன்னையார்க்கு உடம்பு நலம்பெற்று வருகிறதென்று கருதுகிறேன். தங்கம் : ஆம், அத்தான், நீங்கள் வந்து பார்க்கத் தொடங்கிய நாளிலிருந்து அன்னையார்க்கு உடம்பு செம்மையாகி வருகின்றது. அம்பிகாபதி : அது மகிழத்தக்கதேயாயினும், நீ சில நாட்களாக அகமும் முகமும் மலரப் பெற்றிருத்தலே நின் அன்னையாரின் உடம்பு நலம் பெற்றிருந்ததற்கு உண்மைக் காரணமாகும்; எனது வருகையும் அதற்கு அடுத்தபடியில் ஒரு சிறு காரணமாயிருக்கலாம். அஃதிருக்கட்டும். நினது மகிழ்ச்சிக்குக் காரணமாவதை எனக்குத் தெரிவிப்பதில் தடை ஏதும் இல்லையாயின், அதனைத் தெரிவிக்கக் கோருகிறேன். தங்கம் : தடை ஏதுமில்லை; அதனைப் பின்னர்த் தெரிவிக்கிறேன். இப்போது அம்மையிடம் வாருங்கள்! (இருவரும் அரங்கம்மாளிடம் போக) அம்பிகாபதி : அத்தையார்க்கு வணக்கம். உங்களுடம்பு நலம்பெற்று வருதலறிந்து களிக்கின்றேன். சிவபிரான் உங்கட்கு முழுநலமும் அருள்க! அரங்கம்மாள் : குழந்தாய் அம்பிகாபதி, நினது வருகையுந் தங்கத்தின் மகிழ்ச்சியுமே என்னைப் பிடித்த வெம்பிணியை நீக்கி வருகின்றன. என் புதல்வி தங்கம் என்றும் மகிழ்ந்திருக்கக் காண்பேனேல், என்னை வருத்தும் பிணி அறவே நீங்கிவிடும். அஃதிருக்கட்டும். தாமரை மலர் போன்ற நின்முகம் ஏன் வாடியிருக்கின்றது? சிற்றுண்டி சிறிதருந்தி நமது பூங்காவிற் சிறிது நேரமாவது அமர்ந்திருப்பையானால் இவ் வாட்டம் அகலும். (தங்கத்தை நோக்கி) குழந்தே! நின் அத்ததனை அழைத்துச் சென்று நமது பூங்காவில் அமர்வித்துச் சிற்றுண்டி அருத்தி அழைத்து வா. (இருவரும் அம் மாளிகையின் பின்னுள்ள பூந்தோட்டத்திற்குச் செல்கின்றனர்) தங்கம் : அத்தான், அதோ அந்த நாரத்த மரத்தின் கீழுள்ள சலவைக்கல் மனைமேல் அமருங்கள்! சிறிது நேரத்தில் யான் சிற்றுண்டியும் பருகுநீருங் கொண்டு வருகின்றேன். அம்பிகாபதி : தங்கம், அவ்வளவு வருத்தம் எடுத்துக் கொள்ள வேண்டாம். அத்தையார் சொல்லுக்குக் குறுக்குச் சொல்லப்படா தென்று சிற்றுண்டி அருந்துபவன் போல் வந்தேன். உண்மையில் எனக்குள்ள வாட்டத்தின் காரணம் வேறு. உணவின்மேல் எனக்குச் சிறிதுமே தேட்டம் இல்லை. உன்னைக் கண்டு உன்னையும் அத்தையாரையும் மகிழ்விப் பதற்கும், அவ்வாற்றால் எனது மனநோயைத் தணித்துக் கொள்ளுதற்குமே இங்கு வந்தேன். தங்கம் : அத்தான், உங்கள் இன்சொற்களால் எனது கவலையே தீர்ந்துவிட்டது. நீங்கள் சிற்றுண்டி அருந்தாவிட்டாலும், மிக இனிய செவ்வாழைக் கனியும் ஆவின் பாலும் அருந்தலாமன்றோ? அதற்குந் தடை சொல்லாதீர்கள்! (அவை கொணரப் போகிறாள்) அம்பிகாபதி : (தனக்குள்) ஆ! பேரழகு வாய்ந்த இம் மங்கையின் அன்பு என்னுள்ளத்தை எவ்வளவு குளிரச் செய்கின்றது! இவளது எழில் வடிவு என் அமராவதியின் அளவிலா வனப்பை என் அகக்கண்ணெதிரே எவ்வளவு தெளிவாய்க் கொணர்ந்து காட்டுகின்றது! இஃதெனக்கு ஒரு பேர் ஆறுதலே! அழகிய உருவைக் காண்பதிலேயே ஒரு பேரின்ப அமிழ்தம் உள்ளத்தூறி வழிகின்ற தெனின், அவ்வுருவம் உயிரோடுலவி அன்பாம் இன்ப மழையையும் ஒருங்கே பொழிந்திடுமாயின் அதனை ஏற்கும் என் போன்ற ஓருயிரின் நெஞ்சம் எத்தகைய பேரின்பத்தில் தேக்கும்! அமராவதியோடு அளவளாய் யான்துய்த்த இன்பப் பெருக்கு இவளது அன்பின் றொடர்பாக என்னுள்ளத் தடத்தே தேங்கிப் பெருகுகின்றது! தங்கம் : (திரும்பி வந்து) அத்தான். இத் தாம்பாளத்திலுள்ள வாழைப் பழத்தை அவ்வெள்ளிக் கிண்ணத்துள்ள தேனிற் றோய்த் தருந்துங்கள்! (அவ்வாறே அவன் அருந்த வேறொரு வெள்ளிக் கிண்ணத்துள்ள ஆவின் பாலை அவளெடுத்து, அவன் பருகக் கொடுக்க நெருங்குகின்றாள்.) அம்பிகாபதி : (பாற்கிண்ணத்தைத் தன் கையில் வாங்க முயன்று) தங்கம், நீயோ களங்கமற்ற நெஞ்சமுள்ள கன்னிப் பெண். யானோ ஓர் இளைஞன். நீ சிறிது எட்டியிருந்து இவற்றைத் தருதலே வாய்வது. நீ என்னுடன் மிக நெருங்கி அளவளாவுதலை நின் பணிப்பெண்கள் பார்ப்பராயின் நின்மேற் பழிச் சொற்களைப்பரப்புவரென அஞ்சுகின்றேன். தங்கம் : அத்தான், அது குறித்து நீங்கள் சிறுதும் அஞ்ச வேண்டு வதில்லை. என் அன்னையார் என்னை உங்களுக்குத் தான் மணஞ் செய்து கொடுக்கப்போவதாக இங்குள்ள ஏவலர் களுக்கும், அண்ணன் நயினார் பிள்ளைக்குஞ் சொல்லி வருகின்றார்கள்; அது கேட்டு எல்லாரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தவர்களாயிருக்கின்றார்கள். எனது மகிழ்ச்சிக்கும் அதுவே காரணம். அம்பிகாபதி: (நெஞ்சங் கலங்கி) அருமைத் தங்கம். நீ களங்கமில்லா நெஞ்சத்துடன் சொல்வது கேட்டு என் உள்ளம் ஒரு பால் உவந்தாலும், நின்னை மணந்து கொள்ளத் தவஞ் செய்திலேனே என்று மற்றொருபால் அது மிகக் கவல்கின்றது! தங்கம் : (துடிதுடித்து) என்ன சொன்னீர்கள்! அத்தான், என்ன சொன்னீர்கள்! என்னை நீங்கள் மணக்க விரும்பா விட்டால் இப்போதே என்னுயிர் போய்விடும். உங்களைத் தவிர வேறோர் ஆடவனை மணக்கக் கனவிலும் நினையேன். உங்கள் தீர்மானத்தை இப்போதே தெரிவித்து விடுங்கள்! தெரிவித்து விடுங்கள்! அம்பிகாபதி : (சிறிது நேரம் சும்மா இருந்து) தங்கம், பதறாதே! நீயோ உலகியலறியாச் சிறுபெண். இப்போதுள்ள என் மனநிலையினை உனக்குச் சொல்லுதலும் நன்றாகாது. நாளடைவில் என்னுள்ளத்துள்ளது உனக்கு விளங்கி விடும்.அதற்குள் நீ ஒன்றுந் துணிந்து செய்யாதே! நீ உயிர் விடுதலைக் காண என் நெஞ்சந் தாங்குமா? தங்கம் : அத்தான், நீங்கள் பின் சொன்னது என் னுயிருக்கு ஓர் ஆறுதல் அளித்தாலும், முன் சொன்னது மூடு பொருளாயிருத்தலால், அஃதென்னுயிரை வாட்டுகின்றதே! நீங்கள் என்னை மணந்து கொள்வதில் தடையாதுள்ளது? யான் உங்கள் கண்ணுக்கு அழகுடையவளாய் இல்லையா? கல்வியில் உங்களுக்கு யான் குறைந்தவளாயினும், மற்றைப் பெண்பாலார்க்குச் சிறிதுங் குறைந்தவள் அல்லேனே! உங்கள் உள்ளத் துள்ளதைத் திறந்து சொல்லுங்களே. அம்பிகாபதி : தங்கம், உன்னை அழகில்லாதவள் என்று சொல்லத் துணிபவன், காதுங் கேளாத பிறவிக் குருடனாக வன்றோ இருத்தல் வேண்டும். உன்னைப் பார்த்தவரும் உன்னழகைப் பற்றிக் கேட்டவரும் உன்னை எவ்வளவு புகழ்ந்து பேசுகின்றார்களென்பதை யான் நன்கறிவேன். அஃதிருக்கட்டும். என் வாழ்நாளில் யான் கண்ட அழகிற் சிறந்த மங்கையர் மூவர். தங்கம் : (பரபரப்புடன்) அம் மூவரும் யார்? அம்பிகாபதி : அருமைத் தங்கம், நீ ஒருத்தி, என் தங்கை காவேரி ஒருத்தி, பின் நம் சோழ மன்னன் மகள் அமராவதி ஒருத்தி இம் மூவரது அழகுக்கு ஒப்பாகவோ உயர்வாகவோ கருதக் கூடிய வேறோரு பெண்ணை இதுகாறும் யான் எங்குங் கண்டிலேன். தங்கம் : (மகிழ்ந்து) அஃதிருக்கட்டும். கல்வியில் யான் எந்த மங்கையர்க் கேனுங் குறைந்தவளா? அம்பிகாபதி : இல்லை, இல்லை. நல்லிசைப் புலமை மலிந்த புகழேந்திப் புலவர்க்குப் புதல்வியாய்ப் பிறந்து, அவரால் முத்தமிழும் பயிற்றப்பட்ட நீ, மற்றைய மாதர்க்கு அப்பயிற்சியிற் குறைந்தவளாதல் யாங்ஙனம்? தங்கம் : அத்தான், இவ்வளவு நீங்கள் இந்த ஏழையை உயர்த்துப் பேசியதற்கு இவள் யாது கைம்மாறு செய்ய வல்லாள். உங்களை மணக்கும்பேறு பெறுவேனேல் உங்கள் உள்ளம் உவக்க நீங்கள் வேண்டிய பணி புரிதலையே விழைதல் செய்வேன். அஃதிருக்கட்டும். காவேரியோ உங்கள் தங்கை; யானோ உங்கள் அத்தை மகள்; எங்களிருவரையும் நீங்கள் காண்பது போல, நம் மன்னர் பெருமான்றன் அருந்தவப் புதல்வியான அமராவதி கன்னிப் பெண்ணாதலாற் புறத்துள்ள ஆடவரெவரும் அவளைப் பார்த்தல் இயலாதே. அம்பிகாபதி : அது மெய்தான். ஆனாலும், என் தந்தையார் தாம் பாடிய இராமாயணத்தைத் திருவரங்கத் திருமாலடியார் குழுவில் அரங்கேற்றச் சென்றபோது யான் அமராவதிக்குப் பாடஞ் சொல்லும் ஆசிரியனாக அரசனால் அமர்த்தப் பட்டேன். அதனால், அவளைக் கண்களாற் காணவும், அவளோடு உரையாடவும் பெற்றேன். தங்கம் : ஆ! இப்போதுங்கள் மனநிலையினை நன்கறிந்தேன். உங்கள் தந்தையார் திரும்பி வந்த பிறகு நீங்கள் இளவரசிக்குப்பாடஞ் சொல்லும் வாய்ப்பு உங்களை விட்டு நீங்கியது போலும்! அதனாலேதான் உங்களுக்கு இவ்வளவு மனவாட்டம் என்றாலும், நீங்கள் இளவரசிக்குப் பாடஞ் சொல்லாமல் இப்போது நிறுத்தப்பட்டது ஒரு பெரு நன்மைக்கே. அரசரோடு உறவாடுவது நெருப்போடு உறவாடுதலையே ஒக்கும். கல்வியும் பேரறிவும் வாய்ந்த உங்களுக்கு அவ்விரண்டிலுஞ் சிறியவளாகிய யான் யாது சொல்வேன்? அம்பிகாபதி : அருமைத் தங்கம், நீ ஆண்டிற் சிறியவளே யல்லாமல் அறிவிற் பெரியவளாகவே யிருக்கின்றாய். நீ கூறிய அறிவுரை என்றும் என் நினைவை விட்டு அகலாது. யான் இளவரசிக்குப் பாடஞ் சொல்லாமல் நிறுத்தப்பட்டது ஒரு பெரு நன்மைக்கே என்று என் தங்கை காவேரியும் நின்னைப்போலவே சொல்கின்றாள். யான் நிறுத்தப்பட்ட பின்னர் நம் அரசர் பெருமான் விருப்பப்படி காவேரியும் இளவரசியும் ஒருங்கிருந்து முத்தமிழ்ப் பயிற்சி செய்கின்றனர். தங்கம் : அங்ஙனமாயின், காவேரி இளவரசியின் கன்னி மாடத்திலேயே இருக்கின்றனளோ? யானுங் காவேரியுடன் கூடித் தமிழ் பயில விழைகின்றேன். ஆனால், அஃதெனக்குக் கிட்டாது போலும்! அம்பிகாபதி: அங்ஙனமன்று; காவேரி இடையிடையே தன்னில்லத் திற்குச் சென்று தங்கி வர விரும்பினால் அவ்வாறே செய்யலாமென்று அரசனாலும் அமராவதியினாலும் விடையளிக்கப் பெற்றிருக்கின்றாள். அதனால், அவள் எமது இல்லத்திற்கு இடையிடையே போந்து தங்கிப் போவதுண்டு. அங்ஙனம் வரும் நாட்களில் அவளை நின்பால் வந்து அளவளாவச் செய்விக்கின்றேன். தங்கம் : அத்தான், காவேரி வரும் நாளைத் தெரிவியுங்கள்; யானே நுங்கள் மாளிகைக்குப்போந்து காவேரியைக் காண்பேன். அம்பிகாபதி : நீ வரலாகாது தங்கம். நின் அன்னையார் நோயா யிருத்தலால், ஒரு நொடிப் பொழுதும் நீ அவர்களை விட்டு வரலாகாது; மேலும், இவ்வீட்டில் ஆண்துணையுமில்லை, ஆகையால், யானே என் தங்கையை நின்பால் யான் அழைத்து வருகின்றேன். தங்கம் : அத்தான், உங்களன்பிற்கும் இரக்கத்திற்கும் அளவேயில்லை; அவ்வன்பையும் இரக்கத்தையும் முற்றும் பெற யான் தவஞ்செய்துளேனோ? காவேரியை எப்போதுகாண்பேன் ? அம்பிகாபதி: மிகு விரைவிற் காண்பாய்! அமைதியாய் உள்ளம் உவந்து இரு! யான் அத்தையார் பால் விடை பெற்றுச் சென்று வருகின்றேன். (அவள் வணங்கப் போய் விடுகின்றான்.) நான்காம் நிகழ்ச்சி : பதினோராங் காட்சி களம் : அமராவதியின் கன்னிமாடம் காலம் : முன்னிரவு. அமராவதி : (தன் உயிர்த் தோழியை நோக்கி) என்னடி நீலம், காவேரி நாலைந்து நாட்களாய் நம்மிடம் வரவில்லையே! நீலம் : நின் கணவர் புகழேந்திப் புலவரில்லத்துக்கு அடுத்தடுத்துப் போய்வருதலைக் காவேரி தெரிவிக்கத் தெரிந்தேன். அமராவதி : யான் கேட்டதற்கு இதுதானா விடை? என் கணவர் எதற்காக அங்கே செல்கின்றார். புகழேந்திப் புலவர் காலமானபின் அங்கே ஆண்பாலார் எவருமே யில்லை யென்றும், அவர் தம் மனைவியாரும் அவர்தம் ஒரே மகள் ஒருத்தியும் பணிப்பெண்களுமே அங்குளரென்றும் என் அன்னையார் சொல்லக் கேட்டிருக்கின்றேன். நீலம் : அஃதுண்மைதான் அம்மா, புகழேந்தியாரின் மனைவியார் இருமல் நோயால் மிகவுந் துன்புற்றுக் கிடக்கின்றார். அவர்தம் ஒரே மகளான தங்கம் பேரழகு வாய்ந்த இளமங்கை; தாயின் துன்பங்கண்டு கலங்கி நிற்கின்றாள். நம் புலவர் பெருமான் கம்பர் புகழேந்தியார்க்கு ஆருயிர் நண்பர். அதனால், அவர்தம் அருமைப் புதல்வரான அம்பிகாபதியார் துணையற்ற அவ்விருவர்க்கும் வேண்டும். உதவிகள் செய்யவும், ஆறுதல் சொல்லவுமே அடுத்தடுத்து அங்கே சென்று வருகின்றனராம்; சென்ற நாலைந்து நாட்களாகத் தன் தங்கை காவேரியையும் அங்கே அழைத்துச் சென்று அவர்களுக்குத் துணையாகத் தங்க வைத்திருக்கின்றனராம். அமராவதி : ஐயோ! பாவம்! புகழேந்தியார் எங்கள் பாட்டனார் பாண்டியவேந்தரது அவைக்களத்தில் மிக்க சிறப்புடன் வீற்றிருந்த நல்லிசைப் புலவர்; நற்குணங்களுக்கு ஓர் உறை விடமானவர்; என் அன்னையார் என் தந்தையாரை மணந்து கொண்டு வந்தஞான்று அவர்க்கு வரிசையாக உடன் விடுக்கப் பட்டவர். இங்கே வந்தபின் ஒட்டக்கூத்தரால் அவரடைந்த துன்பத்திற்கோர் அளவேயில்லையாம். அதனை என் அன்னை யார் அறிந்து என் தந்தையாரைக் கடிந்து கொண்ட பிறகுதான் புகழேந்தியார்க்கு நல்ல காலம் உண்டாயிற்றாம். அது முதல் என் அன்னையார் செய்துவரும் உதவியினாலேயே அவர்கள் வறுமை தீர்ந்து செழுமையாக வாழலாயிற்றாம். ஆனாற், புகழேந்தியார் காலமான பிறகோ அவர்கட்கு ஆண்துணையில்லை. நம் அமைச்சரும் அவர்தம் புதல்வர் நயினார் பிள்ளையுமே அவர்கட்கு வேண்டும் உதவிகளை மனமுவந்து செய்து வருகின்றனராம். அஃதிருக் கட்டும். இத்தனை காலமாகப் புகழேந்தியாரது இல்லத்திற்குச் செல்லாத என் கணவர் சென்ற சில நாட்களாக மட்டும் அங்கே சென்று வருவதற்கு ஏதோ முதன்மையான ஒரு காரணம் இருக்க வேண்டுமென்பது உனக்குத் தோன்றவில்லையா? நீலம் : ஆம், அம்மா காரணம் இருக்கத்தான் வேண்டும்; காரணம் திட்டமாகவே இருக்கின்றது. நயினாரும் நின்கணவரும் உயிர்த்தோழர்கள். நின்கணவர் நின்பால் வருதலைத் தவிர்த்து, அவரது நினைவை வேறுமுகமாகத் திருப்பல் வேண்டியே அவரை நயினார் அங்கு அழைத்துக் கொண்டு போய் அவர்களுடன் பழகச் செய்திருக்கின்றனரெனக் காவேரி சொல்லத் தெரிந்தேன். அமராவதி : (முகம்வாடி) நயினாரின் சூழ்ச்சி இப்போது நன்கு விளங்கிவிட்டது! அம்பிகாபதியார் என்பால் வருதலைத் தெரிந்தால், என் தந்தை அவர்க்கு ஏதம்புரிவரென்றஞ்சியே நயினார் அங்ஙனஞ் செய்திருக்கின்றனர். அதுபற்றி அவரை நோவதிற் பயனில்லை. தங்கமோ பேரழகி; மணமாகாத கன்னிப்பெண். அவளையே அம்பிகாபதியார் மணந்துகொண்டு நன்கு வாழட்டும்! தீவினையாட்டியாகிய என்னால் அவரேன் பேரிடருக்கு உள்ளாகவேண்டும்? (இது சொல்லி அழுதுகொண்டே சோர்ந்து இருக்கையிற் சாய்ந்து விடுகின்றாள். நீலம் அவளது சோர்வு தீரச் செய்வன செய்கையிற் காவேரி வந்து சேர்கின்றாள்) காவேரி : கண்மணி அமராவதி, நீ ஏன் சோர்ந்திருக்கின்றாய்? யான் வந்திருப்பது உனக்குத் தெரியவில்லையா? கண்விழித்து என்னைப்பார்! அமராவதி : (கண்விழித்துப்பார்த்து வியந்து மெலிந்த குரலில்) கண்ணே காவேரி, உன்னைச் சென்ற சில நாட்களாகப் பாராத குறையினாலேயே எனக்கு இந்தச் சோர்வு உண்டா யிற்று; இப்போதுன்னைப் பார்த்ததும் அது முற்றுமே என்னைவிட்டு அகன்று போயிற்று. நல்லது, இப்போதுன் தமையனார் உடல்நல மனநலமுடன் இருக்கின்றனரா? காவேரி : ஆம் கண்மணி! அவர் உன்னையே இரவும் பகலும் நினைந்துகொண்டிருத்தலால் அவர் ஆண் உருவம் மாறி உன்னைப்போற் பெண் உருவமாய்விட்டார்! எவர் எதனையே எண்ணிக் கொண்டிருக்கின்றனரோ, அவர் அதனைப் போலவே உருமாறுதலடைவரென நம் அறிவு நூல்கள் அறைவது அரியதோர் உண்மையாய்க் காணப்படுகின்றது! அமராவதி : அருமைக்கண்ணே! நீ கூறுவது உண்மையோ? விளையாட்டோ? எனக்கொன்றும் விளங்கவில்லையே! காவேரி : இல்லை, கண்மணி! அவர் உண்மையாகவே பெண்ணுருவிற்றான் இருக்கின்றார்! அமராவதி : (ஐயுற்று) அங்ஙனமாயின் இதுகாறும் எனக்கு மைத்துனனாயிருந்தவர் இனி எனக்கு மைத்துனியாய் விட்டனரோ; அஃதிருக்கட்டும். காவேரி இதற்கு முன்னெல்லாம் நீ என்னுடன் உரையாடி வந்தபோது வழங்கிய சொன்முறையும், இப்போது நீ வழங்குஞ் சொன் முறையும் வேறாய்த் தோன்றுகின்றனவே! உன் குரலொலியும் ஒரு சிறிது வேறாய்த் தோன்றுகின்றதே! காவேரி : (புன்சிரிப்புக்கொண்டு) ஆம் என் ஆருயிரே, ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் மாறினாலும், ஆண்குரல் பெண்குரலாகவும், பெண் குரல் ஆண்குரலாகவும் மாறுவது அருமையே. அமராவதி : அங்ஙனமாயின், நீயும் நின்தமையனைப் போல் முன்னமே ஆணாயிருந்து பின்னே பெண்ணாக மாறி விட்டனையோ! காவேரி : ஆமாம், கண்மணி; திரும்பவும் நீ விரும்பினால் முன்னுள்ள என் ஆணுருவினைக் காட்டுகிறேன். அமராவதி : கண்ணே காவேரி, நீயோ சொல்லி முடியாப்பேரழகி; அதனால், நின் முன்னை ஆண்வடிவம் பேரழகு வாய்ந்து துலங்குவதாகவேயிருக்க வேண்டும். ஆனாலும், என் காதலர் அம்பிகாபதியாரின் பேரழகு வாய்ந்த ஆண்வடிவைக் கண்ட என் கண்களால் வேறோர் அழகிய ஆடவர் வடிவைக்காண என் உள்ளம் இசையாதே. காவேரி : ஆனால், அது நன்றுதான். நான் காட்டுவது நின் காதலரின் உண்மையுருவாய் இருக்குமேல் (தோழி நீலம் சிரித்துக் கொண்டு போய் விடுகின்றாள்) அமராவதி : ஓ! அதனை யான் கட்டித் தழுவி முத்தமிடுவேன். (உடனே காவேரியின் பெண்ணுடையிலிருந்த கோலத்தைவிட்டு அம்பிகாபதி ஆணுடையிற் றோன்றுகின்றான்) ஓ! நீர் என் ஆருயிர்க் காதலர் அம்பிகாபதியார்தாம். தமையனுந் தங்கையும் ஒரே வடிவினராக இருத்தலால், இங்ஙனம் என்னை ஏமாற்றலாயினர். அம்பிகாபதி : உன் தோழியைத் தவிர இக்கன்னி மாடத்திலுள்ளார் அனைவரையுமே யான் ஏமாற்றி விட்டேன். அமராவதி : என் தமையனும் யானும் உங்களைப் போலவே ஒரேவடிவினமாகப் பிறந்தோ மில்லையே! அங்ஙனம் வாய்த் திருந்தால் உங்களையும் இந்த அரண்மனையிலுள்ளார் அனைவரையுமே யானும் ஏமாற்றியிருப்பேன். (இது சொல்கையில் அம்பிகாபதி அவளைத் தழுவ நெருங்க) எட்டி நில்லும்! யான் நும் ஆருயிர்த் காதலி தங்கம் அல்லேன்! யான் சோழவேந்தன் புதல்வி அமராவதி, இளவரசி! காதலி மேற்கொண்ட காம மயக்கம் நுங்கண்களைத் தெரியாமல் மறைக்கின்றது போலும்! அம்பிகாபதி : மாற்றறியாத் தங்க்ம் நீயிருக்க மனமாழ்கி வேற்றொருத்தி தங்கத்தை விழைந்திட நான் மாட்டேனால் ஏற்றத்தாழ் வறிபெருமை யுரையாணி எடுத்தகையன தேற்றமாய் அதிற்குறைந்த செம்பொன்னைத் தேர்குவனோ? அமராவதி : ஐயோ! தந்தையை இழந்து தாயும் நோயாய்க் கிடந்து வருந்தக் கலங்கி நிற்குந் தங்கத்திற்கு நீங்கள் மணமகனாய் அமைய இசைந்தால் அஃதவள் துன்பமெல்லாஞ் சுவடறத் துடைத்து விடுமே! அம்பிகாபதி : அஃதுண்மைதான் கண்மணி. ஆனால், தங்கத்தைப் பார்க்கும்போது நின் பொன் வடிவும் நின் சொற் செயல்களுமே என் நினைவுக்கு வருகின்றன வல்லாமல், அவள்மேற் காதல் சிறிதுமே எனக்கு வரவில்லையே! அமராவதி : அங்ஙனமாயின், துன்புறும் மகளிர்பால் இரக்கஞ் சிறிதுமில்லாக் கன்னெஞ்சமுடைய வன்கண்ணர் நீர்! அம்பிகாபதி : அற்றன்று, என்னாருயிரே துன்புறும் அன்னார்பால் எனக்கு இரக்கமுண்டு; காதல் இல்லை; என் காதலுக்குரியவள் நீயொருத்தியே. அமராவதி : அங்ஙனமாயின், தங்கத்தின்பால் இரக்கம் வைத்து அவளுக்கு என்ன உதவி செய்தீர்கள்? அம்பிகாபதி : அவள் என்னை மணக்க விழைந்துரைத்த சொல்லுக்கு யான் உடன்படாமை கண்டு தன்னுயிரையே போக்கிவிடத் துணிந்து பதறினாள்; அது கண்டு யான் பெரிதுங் கலங்கி அவளது நினைவை மெல்ல வேறுமுகமாத் திருப்பி அவளுக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் உண்டாம் வண்ணம் என் தங்கையை அவளுடன் அளவளாய் இருக்கச் செய்தேன். அமராவதி : அது நன்றே. ஆனாலும், ஒருவர்க்கிரங்கி நன்மை செய்யப்போய் மற்றொருவர்க்குத் துன்பத்தைத் தரலாமோ? உங்களைக் காணாமல் எனக்குண்டான ஆற்றாமையை உங்கள் தங்கையைக் கண்டு ஒருவாறு ஆற்றிக் கொண்டிருந்தேன். அவளையும் என்பால் வராமல் தடை செய்து விட்டால் வேறு யாரைக் கண்டு நான் ஆற்றிக் கொண்டிருப்பேன்? அம்பிகாபதி : என்னைக் கண்டுதான் நீ ஆற்றிக் கொண்டிருக்க வேண்டும். அமராவதி : அதற்குத்தான் யான் அரசன் மகளாயிருப்பது பேரிடையூறாய் இருக்கின்றதே! மலரின் மணமும் மலரைவிட்டு மறையக் காண்டும் மற்றிந்த உலகின் உயிர்கள் உடலைவிட்டும் ஒழியக் காண்டும் உமைப்பிரிந்தால் நிலமே லிருக்க என்னாவி நிலையா திதற்கோர் நிலைவகுக்கப் புலமே பெரியீர் ஒரு நொடியும் போகா துஞற்றப் புகுதிரால் அம்பிகாபதி : வடநாட்டிற் பெருந்திறலான் வடுக மன்ன னொருவனுளன் கடனாற்றும் இந்நாட்டுக் காவலனுங் கலக்கமுற அடலாற்றும் பெருமிடலான் என்றந்தைக் கருநண்பன் தொடர்நாட்டுந் தொன்னகரே துணையாகத் துணைவருமே. அமராவதி : பெருமான், நீங்கள் கூறும் மன்னன் யார்? அவரது நகரம் யாது? அங்கே நாம் எப்போது போகக் கூடும்? நுங்கள் தந்தையார்க்கு நண்பரான அம்மன்னர் உங்களுக்கும் நண்பரா? எங்ஙனமாயினும் எவ்விடத்தாயினும்எவராலாயினும் நீங்கள் உயிர் தப்பிப் பிழைத்தாற் போதும். ஆனால் ஒன்று. என்னை விட்டு நீங்கள் மட்டும் எங்கேயுஞ் சென்று விடாதீர்கள்! நீங்கள் என்னை விட்டுப் போனால், என் உயிரும் என் உடலை விட்டுப் புறப்பட்டு உங்களைப் பின்றொடர்ந்து வரும்! அம்பிகாபதி : (அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டு) கண்மணி, என்னாருயிர்க் காதலி, நின்னை யான் பிரிந்து போதல் இம்மையிலும் இல்லை, மறுமையிலும் இல்லை. நம்மிருவரையும் என் தங்கையையும் உடனழைத்துக் கொண்டு வடநாடு செல்வதற்கே என் தந்தையார் ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றார். அமராவதி : அங்ஙனமாயின், நம் காதற் சேர்க்கை நுங்கள் தந்தையார்க்கு எங்ஙனந் தெரியும்? அவர் அதனை ஏற்றுக் கொண்டனரா? அம்பிகாபதி : காதலி, இடையே பலநாட்கள் இங்கே வந்து உன்னைக் காணாமலும் உன்னோடு அளவளாவாமலும் இருக்க நேர்ந்த பெருந்துன்பத்தால், இடையிடையே கனவின் கண் வாய்விட்டு அலறிப் புலம்பலாயினேன். அப்புலம்பலின் ஊடேயூடே நின் பெயருந் தோன்றியது! என்னருகே படுக்கை யிலிருந்த என் தந்தையார் அவையெல்லாங் கேட்டு வெருக் கொண்டு என்னை யெழுப்பி, நம் சேர்க்கையின் வரலாறு முற்றும் என்பாற் கேட்டறிந்தார். அது முதல் அவர் என்பால் ஏக்கங் கொண்டவராய், நின்பால் என்னை வராமற்றடை செய்ய எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்; அஃதொன்றும் பயன் படாமை கண்டு என்னை மட்டும் வட நாட்டுக்கு அழைத்துக்கொண்டு செல்ல மிக முயன்றார். நின்னோடன்றி வடநாடு ஏகயான் ஒரு சிறிதும் ஒருப்படாமை கண்டு நின்னையும் உடன் கொண்டு செல்லத் துணிந்து ஏதேதோ சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார். செல்லும் ஊர், அவ்வூரின் வேந்தன் நாம் புறப்படவேண்டிய நாள் முதலியவைகளைப் பற்றிக் கேட்டால், இப்போதொன்றுங் கேளாதே! தெரிவிக்க வேண்டிய நேரம் வரும்; வருங்கால் எல்லாம் தெரிவிப்பேன் என்று பகர்கின்றார். எல்லாம் மிக மறைவாக அவர் செய்வதை நோக்கினால், நாம் இங்கிருந்து அகன்றபின் நம்மைப்பற்றி நின் தந்தையார் ஏதுமே தெரிந்து கொள்ளுதற்கு வழி தோன்றாவாறு சூழ்கின்றார் என்று கருதுகின்றேன். அரண்மனையில் வாழும் மயிலனைய நின்னை எவ்விடத்தில் வைக்க நேருமோ என என் நெஞ்சங் கவல்கின்றது. அமராவதி : நுண்ணறிவு சான்ற அண்ணல் நுந்தந்தை சூழ்ந்து செய்வதில் ஆழ்ந்தபொரு ளுண்டே; கொலைவினை யஞ்சாக் கொடுங்கட் கானவர் வலையகப் படுத்த கலைமான் பிணையிற் பேதை நெஞ்சம் பெருந்துயர் கூர எல்லும் எல்லியும் அல்லலுற் றிருக்கும் என் இந்நிலை தீரச் செல்லுந் தேஎம் நாடே யாயினும் ஆகுக; அன்றிக் காடே யாயினும் ஆகுக; நாடுங் காடுமன்றி வேடுவ ரொதுங்குங் கழைவளர் பொருப்பின் முழையே யாயினும் ஆகுக, அதனை ஓரேன்; நாகிளம் பெடைமான் றன்னை நொடியுந் தணவாக் கலைமா னெனவெனைக் கலந்துறை வீரேல் இலையால் அதனின் இனிய தோரிடந் தலைவ! எனக்கென மகிழ்விற் றழைமோ! அம்பிகாபதி : கண்மணி, அமராவதி, என் ஆருயிர்க் காதலி! சித்திரைக் கொடுவெயில் தீய்க்க வந்தவன் முத்தினைக் கரைத்தென முழுகு நீர்நிறை நத்தியல் வாவியும் நறிய தென்றலும் ஒத்திசைந் தவன்விடாய் ஒழித்த பான்மைபோல், கிளியின் மொழியுங் கிளர்மலரின் செழுநறவும் எளியவாக இசைமிழற்றும் நின்னுரைகள் அளியவிவ் வேழை அலமருநெஞ் சங்குளிரத் தெளிவு பயந்தமைக்குச் செயும்நன்றி தேரேனால். அமராவதி : பெருமான், பெறுதற்கரிய நுங்களை யான் எளிதிற் பெறுமாறு நீங்கள் பேரிடரினூடு போந்து இந்த ஏழைக்குத் தலையளி செய்து வருதலினும் மிக்கதொரு நன்றி வேறுண்டோ? இனி, நீங்கள் என் மைத்துனியின் உடையில் என்பால் வரத்தெரிந்து கொண்டமையால், இரவும் பகலும் என்னை விட்டுப் பிரியாத பாங்கியாய் நீங்கள் இங்கேயே யிருக்கலாமன்றோ? அம்பிகாபதி : பிறரெல்லாம் என்னைக் காவேரியென்றே கருதியிருக்க, நீ மட்டுஞ் சிறிது முன்னே என்மேல் ஐயுற்றனை யன்றோ? நின்போல் நுண்ணறிவு வாய்ந்த நின் தோழிய ரெவரேனும் என் கரந்த உருவினைக் கண்டு கொள்வரேல் அஃதென்னாய் முடியும்! மேலும், பகலி லாயினும் இரவிலாயினும் நெடுநேரம் யான், எம் இல்லத்தில் இல்லா விட்டால், என் தந்தை என்மேற் சீற்றங் கொள்கின்றார். யான் நின்பால் வந்து செல்வதெல்லாம் என் தந்தையறியாமலே நடைபெறுகின்றன. இவ்வகையில் நின்தோழி நீலமும் என் தங்கை காவேரியும் மிகு மறைவாகப் பெரி தெண்ணிச் செய்யும் உதவி எழுமை எழு பிறப்பும் மறக்கற் பாலதன்று. ஆகையாற், கண்மணி, நேரம் வாய்க்கும் போதெல்லாம் யான் நின்பால் வரத்தவறேன். இந்நிலத்தில் இன்பம் இதுபோல்வ துண்டென்ன எந்நினைவின் முன்னே எழுந்ததிலை ஏந்திழையே அந்நிலத்தில் உண்டென்பர் ஆரதனைக் கண்டவரே? வெந்நிலத்தின் வெப்பும் நுனைக்காணின் வீந்திடுமே! அமராவதி : எளிய னுயிரும் உடலும் எரியாமல் விளியாத காதல் விரைகமழும் பனிமலர்போல் நளியாரத் தந்த நன்மதியம் நீரானால் முளியான புல்லும் முன்போல் முளைத்திடுமே! ஐந்தாம் நிகழ்ச்சி : முதற் காட்சி களம் : அரண்மனைப் பூந்தோட்டத்தருகிலொரு தனியிடம். காலம் : மறைநிலாக் காலத்து ஒரு நள்ளிரவு. சோழ மன்னன் : நம்பிப்பிள்ளை, நிலவு வெளிச்சஞ் சிறிதும் இல்லா இந் நள்ளிரவில் உங்களை இங்கே யான் அழைத்துவர நேர்ந்தமைக்கு மிக வருந்துகின்றேன். என் செய்வது! யான் கொண்ட ஐயம் முற்றுந் தீர்ந்தாலன்றி என்னுள்ளம் அமைதி பெறுவதாய் இல்லை! அமைச்சர் : மன்னர் பெருமானே, இந்நள்ளிரவில் வெளிப்போந்து அலைச்சற் படுக்கையில், தங்களை நிழல் போற் பின்பற்றி வருவதற்குரிய எனது கடமை எனக்கு எப்போதுமே எத்தகைய வருத்தமுந் தருவதன்று. சோழன் : நமது பூந்தோட்டத்துப் பூக்களைத் திருடி வந்தவனாக அம்பிகாபதியைத் தோட்டக்காரன் பிடித்துக் கொணர்ந்து ஆள் மாறாட்டம் ஆமென நீங்கள் முடிவு செய்தது பொருத்தமாயிருந்தாலும், என் மனம் மட்டும் அதனை ஒப்புக் கொள்ளவில்லை. அம்பிகாபதி திருடன் அல்லன் என நாம் அவனை விடுவித்தபின், அந்நாள் முதல் இந்நாள் காறும், நமது பூந்தோட்டத்துப் பூக்கள் களவு போகவில்லை. திருடன் வேறோருவனாயிருந்தால் இது காறும் பிடிபடாதிரான். மேலும், அம்பிகாபதி அந்நாள் நள்ளிரவில் என் புதல்வி அமராவதியின் இளமரக்கா மதில் ஓரமாய்க் காணப்பட்டதும் ஐயுறுதற்கிட மாயிருக்கின்றது. நம் புலவர் பெருமான் ஒட்டக்கூத்தரும் இங்ஙனமே கருதுகின்றனர். அமைச்சர் : நல்லது. இப்போது தாங்கள் செய்யக் கருதுவது யாதோ? சோழன் : இப்போது இத்தோட்டத்தின் உள்ளே நுழைந்து, நமது தோட்டக்காரன் கறுப்பண்ணனும் அவன் மனைவியும் பேசிக் கொள்வதை அருகிருந்து ஒட்டுக்கேட் போமாயின் ஏதாவதுண்மை அதிலிருந்து வெளிப்படக் கூடும். அமைச்சர் : மன்னர் பெருமான் கருதுகிறபடியே செய்வம். (இருவருந் தோட்டத்துள் நுழைந்து தோட்டக் காரனது குடிலோரமாய் ஒளிந்து நிற்கின்றனர்) வெள்ளைச்சி : என்னங்கிறேன், உனக்கு எள்ளத்தனெ கூட முன்னறிவு இல்லெ. நம்ம தோட்டத்துப் பூவெ பறிச்சிக்கிட்டுப் போனவன் திருடன் அல்ல என்று நான் சொன்னனே, அவன் நம்ம இளைய ராசாத்தி தோட்டத்து மதிற் பக்கமாப் போய்வந்ததெ ராசா கிட்டே சொல்லாதே என்று நான் சொன்னேனே; அதெ காலத்திலே பறக்க விட்டிட்டியே! நீ சொன்னது பெருந்தீங்கா விளைஞ்சு போச்சே! கருப்பண்ணன் : அடி கண்ணாட்டி, நீ சொன்னதெ மறந்தல்லோ சொல்லிப்போட்டேன். என்னா தீங்கு வந்துதடி? ராசாவுக்கு என்மேலெ கோவமா? வெள்ளைச்சி : நீ திருடனென்னு பிடிச்சுக்கிட்டுப் போனவன் நம்ம அரமனெப் பொலவர் கம்பர் மகன் அம்பிகாபதியல்லவோ! கருப்பண்ணன் : ஆமா, அப்பிடித்தான் பின்னாலெ தெரிஞ்சுது. நான் சொன்னதிலே ஐயொறவு பட்டுத் தான் நம்ம மன்னன் அம்பிகாபதியெ அரமனெக்கி வரவேணா மென்னு நிறுத்தி விட்டாராக்கும். அதுக்கு முன்னே அம்பிகாபதி தான் மன்னன் மகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுத்து வந்தானாம். வெள்ளைச்சி : ஆமா, மா; அவன் பிழப்பு வாயிலெ மண்ணெப் போட்டியெ! ஐயோ! பாவம்! அம்பிகாபதி அவங்கப்பாவெவிட அறிவாளியாம். ரொம்ப ரொம்பப் படிச்சவனாம். அல்லாமலும், அவன் எவ்வளவு அழகாயிருக் கிறான்! நம்ம ராசா மகன்கூட அவனழகுக்கு ஈடாயில்லெ. நம்ம இளய ராசாத்தி அழகுதான் அம்பிகாபதி அழகுக்கு ஈடா இருக்கு. அவங்கரெண்டு பேரும் ஒருத்தர் மேலெ ஒருத்தர் உயிர்நேசமா மறவிலெ கூடிக்குலாவுறாங்களாம். இதே அரமனெ வேலைக்காரர் குசுகுசு வென்னு பேசிக் கொள்ளுறாங்க. கருப்பண்ணன் : அடி அதெப்பற்றி நாம மறவாக்கூடப் பேசப்படாது. பகலிலே பக்கம் பார்த்துப் பேசு, இராவிலே அதுதானும் பேசாதே என்னு பழமொழி பெரியவங்க சொல்லுறாங்களே. வெள்ளைச்சி : அது சரிதாங்கிறேன். அவ்வளவு படிச்சவனா அழகனா இருக்கும் அம்பிகாபதிக்கி நம்ம ராசா மகளெக் குடுத்தாலென்னா? கருப்பண்ணன் : அப்பாடா! நம்ம மன்னன் ஒசந்த வெள்ளாள குலம், அம்பிகாபதியோ தாழ்ந்த ஓச்ச குலம். மேலும், நம்ம மன்னன் ஊரையாளும் முடியரசன், அம்பிகாபதியோ நம் மன்னனெ அண்டிப் பிழைப்பவன். நம்ம மன்னன் ரொம்பப் பொல்லாதவர். தன் குலத்திற்காகத் தன் உயிரையும் விட்டுடுவார். அப்பிடிப்பட்டவர் தன் ஒரே மகளெ அவனுக்குக் குடுத்துடுவாரா! வெள்ளைச்சி : என்னங்கிறேன். நீயோ தாழ்ந்த வேட்டக்காரன், நானோ ஒசந்த எடச்சி; நீ என் மேலும் நான் உன்மேலும் ரொம்ப அவாப்பட்டதெப் பார்த்து என்னெப் பெத்தவங்க என்னெ உனக்குக் குடுக்கலெயா? கண்ணன் பிறந்த குலத்திற் பிறந்த பெண்ணை யுனக்குப் பெண்டாக் கொடுத்த பெருமையைப் போல நம்பெருங் கொற்றவன் அருமை மகளை அவனுக் களித்தால் அதிலென்ன குற்றம் அறைந்திடு மச்சான். கருப்பண்ணன் : வள்ளி பிறந்தது எங்கள் குலம் அந்தக் கள்ள முருகன் அவளைக் கவர்ந்து சீரா யிருந்ததும் எங்கள் குலம் நம்ம ஊராளும் மன்னனோ உயர்ந்த வேளாளன் ஒச்சனுக் கொப்பா உரைக்கலாமோ கண்ணே. வெள்ளைச்சி : மையல் கொண்டு மயங்கிய மைந்தர்க்குப் பொய்யே குலமுங் குடியும் பொருளும் இறைவன் வகுத்த எழுத்தை அழிக்க மறையவராலும் மாளாது மச்சான் மற்றவராலது மாளுமோ சொல்லாய். (ஒட்டுக் கேட்கும் அரசன் அமைச்சரை நோக்கிக் கூறுகின்றான்) சோழன் : கேட்டீரா நம்பிப் பிள்ளை! இச்செய்தி கேட்டு என்னுயிரும் உடம்புந் துடிக்கின்றன! எமது உயர் வொப்பிலா வேளாண் அரசகுடிக்குத் தீராப் பெருவசையை உண்டாக்கின அம்பிகாபதியை இப்போதே சென்று என் வாளால் இருகூறாய் வெட்டி வீழ்த்தட்டுமா? அமைச்சர் : மன்னர் பெருமான் சிறிது பொறுக்க வேண்டும். எதனையுந் தீரத்தெளிய ஆராய்ந்து செய்வதே நமது பெருங் கடமை. ஆராய்ந்து தெளியுங்காற் கண்ணாற் கண்டதும் பொய்யாய் விடும். காதாற் கேட்டதும் பொய்யாய் விடும். யான் அன்றைக்குத் தெரிவித்தபடி இவர்கள் இன்னும் ஆள்மாறாட்ட மாகவே அம்பிகாபதியைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆதலால் இதனை இன்னும் நாம் நன்காராய்ந்து பார்க்கவேண்டும். சோழன் : நீர் சொல்வது உண்மைதான். இதனை நம் ஆசிரியர் ஒட்டக்கூத்தரிடம் தெரிவித்து அவர் கூறும் முடிபு யாதென்று பார்ப்பம் (இருவரும் போய் விடுகின்றனர்) ஐந்தாம் நிகழ்ச்சி : இரண்டாங் காட்சி களம் : அரண்மனை உணவு விடுதி காலம் : உச்சிக் காலம் கம்பர் : (தம் மகன் அம்பிகாபதியை நோக்கி) குழந்தாய்! நம்மரசன் சிறப்பு நாட்களில் மட்டுந்தான் நம்மை இங்கு வருவித்து விருந்து செய்விப்பது வழக்கம். இப்போதோ சிறப்பொன்றும் இல்லாதிருக்கவும் நம்மை இங்கே விருந்துக்கு அழைத்திருப்பதை உற்று நினைத்தால் இதில் ஏதோ ஒரு சூழ்ச்சியிருக்கின்றது. நீ கருத்தாயிருக்க வேண்டும். அம்பிகாபதி : ஆம் அப்பா, இதில் ஏதோ ஒரு சூழல். நீங்கள் சொல்லும் வண்ணமே கருத்தாயிருக்கின்றேன். (நயினார் பிள்ளை வருகின்றான்) நயினார் : ஆசிரியர்க்கு வணக்கம் (அம்பிகாபதியைக் கைதொட்டு) அருமை நண்ப! நலந்தானே? சில நாட்களாக யான் நின்னைப் பார்க்கவில்லையே? கம்பர் : நயினார், நன்கினிது வாழ்தி! அரசன் எம்மை இங்கு விருந்துக்கு அழைத்திருக்கிறான். உன்னையும் உன் தந்தையாரையும் அழைத் திருப்பானென்று நம்புகின்றேம். நயினார் : ஆம், ஐயனே! என் தந்தையார் இன்னுஞ் சிறிது நேரத்தில் இங்கே வந்து விடுவார். முன்னே சென்று அம்பி காபதியை விழிப்பா யிருக்கும்படி சொல்ல என்னை விரைந்தேவினார். கம்பர் : காரணம் ஏதேனுந் தெரியுமா? நயினார் : என் தந்தையார் இதில் ஏதோ கவலையுடைய வராகக் காணப்பட்டார். வேறொன்றும் அவர் திறந்து சொல்லவில்லை. (அமைச்சர் நம்பிப்பிள்ளையும் ஒட்டக்கூத்தரும் வர மூவரும் அவ்விருவரையும் வணங்குகின்றனர்). கூத்தர் : கம்பரே! நாம் ஒருங்கிருந்து விருந்துண்டு நீண்ட நாளாயிற்று. நும் அருமைப் புதல்வன் அம்பிகாபதியால் நாம் இன்றைக்கு ஒருங்கிருந் துணவுகொள்ளும் வாய்ப்பு நேர்ந்தது. நீர் இராமாயணம் அரங்கேற்றுதற் பொருட்டு வெளியூர் சென்றிருந்த காலையில், அம்பிகாபதி நம் மன்னர் பிரான் திருமகள் அமராவதிக்குக் கல்வி கற்பித்து அவளை அதில் தேர்ச்சிபெறச் செய்தனன். அதனைப் பாராட்டி மகிழ்தற்பொருட்டாகவே நம்வேந்தர் இவ்விருந் தாட்டினைச் செய்விக்கின்றார். இதில் நம்மரசர் நம்மோடிருந்துண வருந்துவர்; அவர் தந்திருமகள் அமராவதியே நமக்கெல்லாம் உணவு பரிமாறுவாள். (இது கேட்டெல்லாருந் துணுக்குறு கின்றனர்) (அரசன் தன் சமையற்காரன் ஏவலருடன் வர எல்லாரும் அரசனை வாழ்த்துகின்றனர்) எல்லாரும் : அரசர் பெருமான் நீடு வாழ்க! வேந்தற்கு வெற்றி சிறக்க! அரசன் : எல்லோர்க்கும் வணக்கம்! எல்லாரும் இருக்கையில் அமருங்கள்! (சினங்கொண்ட சிரிப்புடன் அம்பிகாபதியை அணுகி) ஆ! அம்பிகாபதி! எவ்வளவு நன்றாய் நீ என் மகளுக்குக் கல்வி கற்பித்திருக்கின்றனை! இவ்வுழைப்பில் நின் ஆவியையே நீ கொடுத்துவிட்டனை! இதனை உறுதிப்படுத்திக் காட்டவே நின்னை இவ்விருந்துக்கு அழைக்க லாயினோம்! (இவ்வாறு சொல்லிக் கொண்டே அம்பிகாபதி யின் கையினை நோவுண்டாக நெருங்கிப் பிடித்துக் குலுக்க, அம்பிகாபதி வெருவி ஏதும் உரையாமற் றன்கையை விடுவித்துக் கொள்கின்றான். எல்லாரும் இதனைக் குறிப்பாற்கண்டு உளங் கலங்குகின்றனர்) ஏடா துத்தி! ஏவலர்களை அழைத்து இலைகளை இடச் சொல்! தத்தையைக் கூப்பிட்டு உணவு பரிமாறும் பொருட்டு இளவரசியையுந் தோழியையும் வருவி! (சிறிது நேரத்திலெல்லாம் அமராவதி தோழியுடன் உணவு வட்டில் சுமந்து வருகின்றாள்) அம்பிகாபதி : (உணவு வட்டில் சுமந்துவரும் அமராவதி யின் பேரழகைக் கண்டு தன்னை மறந்தவனாய்) இட்டடி நோவ எடுத்தடி கொப்புளிக்க வட்டில் சுமந்து மருங்கசையக் - (என்று பாடியது கேட்டுக் கம்பர் பெரிதும் வெருக்கொண்டவராய் அதனை அவன் முடிக்கும் முன்) .................................................... கொட்டிக் கிழங்கோ கிழங்கென்று கூறுவாள் நாவில் வழங்கோசை வையம் பெறும் (என்று பாடி முடித்தார்) அரசன் : (சிறிது வெகுண்டு) நீவிர் இருவீரும் யாரைக் குறித்து இங்ஙனம் பாடினீர்கள்? கம்பர் : வெளியே தெருவிற் கொட்டிக் கிழங்கு விற்றுக் கொண்டேகும் ஒரு மாதினைக் குறித்துப் பாடினோம். அரசன் : ஏடா கடம்பா, தெருவில் எவளேனும் ஒருத்தி கொட்டிக் கிழங்கு விற்றுக்கொண்டு சென்றால், அவளை உடனே இங்கே கொணா! (அங்ஙனமே சென்று அவன் அவளை அழைத்து வந்துவிட, அரசன் அவளைச் சில வினாய் ஐயந் தீர்ந்தபின் சிறிது பொருள் கொடுத்து அவளைப் போக விடுகின்றான். எல்லாரும் உணவு கொண்டபின்.) ஏடா துத்தி, எல்லார்க்குங் கலவைச் சாந்தம் பூசி, வெற்றிலை பாக்குக் கொடு. (எல்லாரும் மன்னனை வாழ்த்தி விடைபெற்று உணவு விடுதியை விட்டுப் போகையில், அம்பிகாபதி, மட்டும் எல்லார்க்கும் பின்னே மெல்லச் செல்லுதலையும், அமராவதி ஓர் ஒதுக்கிடத்திற் சிறிது நின்று அவற்குக் கண்ணாற் குறி செய்து போதலையும் அரசன் மறைவிற்கண்டு) ஏடா கடம்பா, அம்பிகாபதி எவ்வழியாய் எங்கே செல்கின்றான் என்பதை ஓடிச்சென்று பார்த்துவா! ஏடாதுத்தி, தத்தையை ஓடிச் சென்றழைத்துவா! (இதற்கிடையில் எதிரே வந்த தோழி நீலம் தான் கொணர்ந்த காவேரியின் ஆடைகளை அம்பிகாபதிக்கு அணிவித்துக் கன்னிமாடப் பூங்காவில் வேனில் மண்டபத்திற்கு அவனை அழைத்துச் சென்றுவிடுகின்றாள்.) அமராவதி : என்னாருயிர் பெருமானே! இப் பிற்பகல் காலத்தில் நுங்களை இங்கே யான் வருவித்த பிழையைப் பொறுத்தல் வேண்டும். என் தந்தையாருடன் நீங்களெல்லீரும் இருந்து விருந்தருந்துகையில் என்னைக் கண்டவுடன் நீங்கள் பாட்டுப் பாடியதைக் கண்டு என்னுயிர் என்னுடம் பையே விட்டுப் போய்விடும்போலாயிற்று! அம்மையின் பேரருளால் நீங்கள் பாட்டை முடிக்குமுன் நுங்கள் தந்தையார் அதனை வேறொரு முகமாய்த் திருப்பி முடித்தார்! அவர் முடித்தற்கு ஏற்பவே, அந்நேரத்திற்கொட்டிக் கிழங்கு விற்பாளொருத்தியும் வந்து தலைப்பட்டாள்! இல்லையானால் உங்கள் நிலைமை யாதாயிருக்கும்! இங்ஙனம் நீங்கள் முன்பின் ஆராய்ந்து பாராமற் செய்த செயல்களினாலேயே என் தந்தையார் உங்கள்மேல் ஐயமுஞ் சினமுங்கொண்டு உங்களைக் கையுங் களவுமாய்ப் பிடித்து ஒறுக்க முனைந் திருக்கிறாரென்று அறிகின்றேன். நீங்கள் அரண்மனைப் பூந்தோட்டத்திலுள்ள மலர்களைக் கவர்ந்து என்பாற் கொணர்ந்தமையன்றோ இத்தனை துன்பத்திற்கும் அடிக்காரணமாயிருக்கின்றது! இதற்காகத் தானா நீங்கள் எளியேன் மீது காதலன்பு பாராட்டுவது? (கண்ணீர் சொரிகின்றாள்) அம்பிகாபதி : கண்மணி, என்னாருயிர்க்காதலி! யான் என்னையே மறந்து நின்மேல் அப்போது பாடிவிட்டேன். அதனால் நினக்குப் பெருங்கலக்கத்தை விளைத்த எனது பெரும் பிழையைப் பொறு. மின்னற் கொடியோ! மேற்பிறப்பில் யான்செய் தவத்தின் மிகுபயனோ! பன்னாள் முயன்று பாவையரின் வனப்பை யெல்லாம் பகுத்தெடுத்துக் கன்னற் கண்டில் உருவாக்கிக் கடவுள் விடுத்த கலைமகளோ! என்னென் றுரைப்பென் நினைக்கண்ட அப்போ தென்னை மறந்தனனே! அமராவதி : பெரும! நீங்கள் பாட்டுப் பாடுவதில் மிகுதிறம் வாய்ந்தவர்கள் தாம்! நெருப்பாற்றின் ஊடுமயிர்ப் பாலத்தின்மேற்செல்பவர்களாக நாமோ வாழ்நாட் கழிக்கின்றோம். இவ்விடத்தை விட்டுத் தப்பிப்போக உடனே வழி செய்யுங்கள்! அம்பிகாபதி : அங்ஙனமே செய்கின்றேன் கண்மணி! எல்லாம் இரண்டொரு நாளில் வந்து தெரிவிக்கின்றேன். (காவேரியுடையிலேயே போய் விடுகின்றான்.) (கடம்பனுந் துத்தியுந் தத்தையுடன் அரசன் பால் வந்து) மன்னர் பெருமான் நீடுவாழ்க! (என்று வாழ்த்த) அரசன் : ஏ கடம்பா! அம்பிகாபதி எவ்வழியாய்ச் சென்றான்? கடம்பன் : ஐயனே! மிகு விரைவாய்ச் சென்று நோக்கியும், என் கண்களுக்கு அகப்படாமலே அவர் போய்விட்டார். அரசன் : ஏடி தத்தே! இளவரசி எங்கிருக்கின்றாள்? எவருடன் இருக் கின்றாள்? விரைந்துபோய்ப் பார்த்துவா! தத்தை : பெருமானே! இப்போதுதான் இளவரசியாரின் வேனில் மண்டபத்தருகிலிருந்து வருகின்றேன். இளவரசியாருங் காவேரியம்மையும் பேசிக்கொண்டிருந்தார்கள். துத்தி வந்தென்னை அழைக்கும்போதுதான் காவேரியம்மை தமதில்லத்திற்குச் சென்றனர். அரசன் : நல்லது, நீ போ! ஏ கடம்பா, நீ கூத்தரிடம் ஓடிப்போய் அவரை இவ்வுணவு விடுதிக்கே மீண்டும் அழைத்துவா! (அவன் போய்ச் சிறிது நேரத்தில் அவரை அழைத்து வருகின்றான்.) கூத்தர் : அரசே! நீடுவாழ்க! மீண்டும் என்னை இங்கு ஏன் வருவித்தனை? யாது நேர்ந்தது? இன்னும் ஏன் இங்கேயே இருக்கின்றனை? அரசன் : ஐயனே! சிறிது முன்னே நடந்த விருந்தினால் என் ஐயந்தீர்ந்தது; உண்மை உள்ளங்கை நெல்லிக்கனி போல் நன்கு விளங்கிற்று. அம்பிகாபதியும் அமராவதியும் ஒருவரை யொருவர் காதலிக்கின்றனர்! எங்ஙனமோ மறைவிற் கூடிக் களிக்கின்றனர்! இதைக் கம்பர்க்குக் குறிப்பாய்த் தெரிவித்தேன்; ஆனால், அவர் அதை நம்பவில்லை! எமது வேளாள அரசகுலத்திற்கு இழுக்குத் தேடிய அவ்வோச்சப் பயலை என் வாளால் இரு கூறாக்க முனைந்தேன்! தீர ஆராய்ந்து முறை செய்யவேண்டிய அரசியற் கடமையை நினைந்து தடைப்பட்டேன். விருந்தில் உணவு கொண்டு சென்ற அப்பயல் அமராவதியின் வேனில் மண்டபத் திற்குப் போனதைச் சிலகுறிப்புகளால் அறிந்தேன். உடனே ஏவலரை அம்மண்டபத்திற்கு விடுத்து வருவித்துக் கேட்க, அவர் அம்பிகாபதியின் தங்கை காவேரியுடன் அமராவதி பேசிக் கொண்டிருப்பதாகப் பகர்ந்தனர். இதில் எனக்கொன்றும் புலனாகவில்லை. தாங்கள் தங்கள் நுண்ணறிவால் ஆராய்ந்து உண்மையைக் காண வல்லீர்களென்று தங்களை மீண்டும் இங்கு வருவித்தேன். கூத்தர் : அது நன்றுதான், அம்பிகாபதியும் அவன் தங்கை காவேரியும் உருவ அமைப்பில் ஒருவராயிருத்தலை நீ அறிவாயா? அரசன் : யான் அறியேன்; அவன் தங்கையை யான் பார்த்ததேயில்லை? கூத்தர் : அவ்விருவர்க்கும் ஆண் உடையோ பெண் உடையோ இரண்டிலொன்றை அணிவித்துப் பார்த்தால், அவ்விருவரில் யார் அம்பிகாபதி, யார் அவன்றங்கை காவேரியென்று தெரிந்துரைத்தல் எத்துணைக் கூர்த்த அறிவினார்க்கும் எட்டுணையும் இயலாது; பெண்ணுடையிற் காவேரியும் ஆணுடையில் அம்பிகாபதியும் இருந்தால் மட்டுமே இருவரையும் வேறு வேறென்று அறிதல் கூடும். அரசன் : ஆ! அங்ஙனமாயின் தன் தங்கையின் உடையிற் கரந்து வருபவன் அம்பிகாபதியென்றே கருதுகின்றீர்களோ? கூத்தர் : ஒருகால் அங்ஙனம் இருக்கலாமென்று எண்ணு கின்றேனேயொழிய உறுதியாக யான் அதனைக் கூறவில்லை. அதனை உறுதிப்படுத்திக் காண்பது நினது முயற்சியின்பாலது. அரசன் : நல்லது பெருமானே, கள்வனைப் பிடிக்க இப்போது வழி கண்டேன்! இனித் தாங்கள் போய் வரலாம் (என்று வணங்க அவர் போய்விடுகின்றார்.) ஐந்தாம் நிகழ்ச்சி : மூன்றாங் காட்சி களம் : அமராவதியின் கன்னிமாடப் பூங்கா மண்டபம் காலம் : மறைநிலாக் கால நள்ளிரவு. அமராவதி : என்னாருயிர்ப் பெருமானே! இப்போது நாம் துய்க்கும் இன்பம் இன்பமாக எனக்குத் தோன்றவில்லை. என் தந்தை நம்மைக் கையுங் களவுமாய்க் கண்டுபிடிக்கும் முயற்சியிலிருக்கின்றாரென்று என்றோழி நீலத்தின் வாயிலாய் அறிகின்றேன். நீங்கள் இங்கிருக்கும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் என்னுயிரை எரிக்கும் நெருப்பின் சுடரா யிருக்கின்றது! உங்களைக் காணாது கழிக்கும் ஒவ்வோரிமைப் பொழுதுமோ என்னுடலையும் உயிரையும் ஒருங்கே அழிக்கும் நஞ்சாயிருக்கின்றது! என் செய்வேன்! என் தெய்வமே! அம்பிகாபதி : கண்மணி! இன்னுஞ் சிலநாள் நெஞ்சைத் தேற்றிக்கொண்டிரு! நம்மை அழைத்துக் கொண்டு வடநாடு செல்ல என் தந்தையார் எற்பாடு செய்திருக்கின்றாரென்று முன்னமே உனக்குத் தெரிவித்திருக்கின்றேன். என்னாருயிர் நண்பன் நயினார் பிள்ளை இதன் பொருட்டு என் தந்தைக்கும் நமக்கும் இடையில் நின்று உதவி செய்கின்றான். இவ்வரண்மனைக்கு வெளியே நாம் எவ்வாறு செல்வதென்பதுதான் பேரிடராய்த் தோன்றுகின்றது! பகலிலுஞ் செல்லல் இயலாது. இரவிலுஞ் செல்லல் இயலாது. ஆனால் அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட மயங்கன் மாலையே நீ வெளி வருவதற்கேற்ற காலம்; அந்நேரத்தில் நீ எங்ஙனம் வெளிவருவை? அரண்மனையின் அகத்தும் புறத்துமுள்ள காவலர்களைத் தப்பி நீ வெளி வருதல் யாங்ஙனம்? அமராவதி : அதற்கும் நீங்கள்தாம் எனக்குப் பாடங் கற்பித்திருக் கின்றீர்களே! அம்பிகாபதி : பகடிபண்ணாதே! என்ன பாடம்? புலப்படச் சொல்லு? அமராவதி : நீங்கள் உங்கள் தங்கையின் உடையில் வருவது போல யானும் என் தமையன் உடையில் வரலாமன்றோ? அம்பிகாபதி : ஆம், ஆம் முன்னமே இஃதென் அறிவிற் றென்படாமற் போயிற்று. இடர்ப்பட்ட நேரத்தில் அவ்விடரைத் தப்புவித்தற்கேற்ற வழிநுண்ணறிவு வாய்ந்த பெண்மக்கட்குக் கதுமெனத் தோன்றுதல்போல எத்துணை நுண்ணறிவு வாய்ந்த ஆண்மக்கட்குந் தோன்றுவதில்லை. நின்பால் வருவதற்கொரு வழிகாணாமல் யான் மிகவுந் தயங்கிக் கொண்டிருக்கையில் என் தங்கையின் உடையில் வரும்படி கற்பித்தவள் நின்தோழி நீலமேயாவள். அமராவதி : (திடுமெனக்கலங்கி) பெருமான் பேசாதீர்கள்! என் தோழி நீலத்தைத் தவிர வேறெவரும் வரப்பெறாத இவ்விடத்தில் இந்நேரத்தில் யாரோ விரைந்து வரும் அரவங் கேட்கின்றது! (இது சொல்லி முடிகையில் அரசன் அமைச்சர் காவலாளருடன் மண்டபத்துள் வந்து நுழைகின்றான்) அரசன்: (மிக்க சீற்றத்துடன் அம்பிகாபதி மேற்பாய்ந்து) அடே ஓச்சப்பயலே! நன்றி கெட்ட கயவனே! உண்ட வீட்டிற்கே இரண்டகம் பண்ணின திருட்டுப் பயலே! எங்க அரச குடிக்குப் பழிச்சொல் விளைத்த பாவி! நீ இப்போதே பாழாய் ஒழி! (என்று கடிந்து கூறி அவனைக் குத்தி மடிப்பதற்குத் தன் குத்துவாளை ஓங்குகின்றான்.) அமராவதி : (அரசன் கையைப் பிடித்து) அப்பா அவரை ஒன்றுஞ் செய்யவேண்டாம்! வேண்டாம்! அவர் மேற் குற்றஞ் சிறிதுமில்லை! யானே அவரை வலிந்து இங்கு வரவழைத்தேன்! அரசன் : (அமராவதியின் கையை உதறி) அடி பேயே! நீ என் மகளா! குலத்தைக் கெடுக்கவந்த கோடரிக் காம்பே! (என்று சினந்து கூவி அவளைக் கீழே பிடித்துத் தள்ளுகின்றான்.) அமராவதி : (கீழ்விழுந்தபடியே அழுதகண்ணினளாய்) அப்பா! யான் உங்கள் மகள் அல்லளோ? அரசர் புதல்விகள் தாம் காதலித்த ஆடவரை மணந்து கொள்ளவில்லையா? யானும் அவர்களைப் போல் மகிழ்ந்திருக்க வேண்டாமா? அமைச்சர் நம்பிப்பிள்ளை : மன்னர் பிரானே! சினந்தணிந் தருளல் வேண்டும். அரசன் : (அமைச்சரை நோக்கி) இவனை வேறு யாது செய்யலாம்? என் சொல்லை நம்பாத கம்பர் அரண்மனைத் தலைவாயிலில் நிற்கின்றார்; அவரை உடனே வருவியுங்கள். (தம்முடன் வந்த காவலன் ஒருவனை அவர்பால் விடுக்கக் கம்பர் நடுங்கிக்கொண்டு வருகின்றார்.) அரசன் : (கம்பரை நோக்கி) பார்த்தீரா கம்பரே! நும்மகன் இதனை அரண்மனையென்று நினைத்தனனா? வேசி வீடென்று நினைத்தனனா? அழகிய மாதர் எவராயிருப்பினும் அவரைக் கெடுக்க முனைந்திருக்கும் இப்பயல் உயிரோடிருந் தால் இன்னும் எத்தனை மாதரைக் கற்பழித்துக் கெடுத்து விடுவான்! என் சொல்லை நம்பாத நீர் இப்போதென்ன சொல்லுகிறீர்? கம்பர் : அரசே! தஞ்சம்! நாடாளும் மன்னவனாகிய நின்கையில் எங்கள் உயிரும் உடலும் பொருளும் அகப்பட்டிருக்கின்றன! நீ எது வேண்டுமாயினுஞ் செய்யலாம். துணையுஞ் செயலும் அற்ற எளியேங்கள் யாது செய்யக் கூடும்? ஆனால் ஒன்று - அரசன் : யாது அது? சொல்லும். கம்பர் : மன்னர்பிரான் கருதுமாறு, என் மகன் இதுகாறும் மாதர் எவரையும் நச்சி வழுவியொழுகினவன் அல்லன். ஊழ்வினையின் வலியாலும், இளைஞரும் அழகியருமான இவ்விருவரும் நேரிருந்து கல்வி கற்கவுங் கற்பிக்கவும் நாம்செய்த ஏற்பாட்டினாலுமே இங்ஙனம் நேர்ந்து விட்டது! இனி என் செய்வது! காதலிற் கழுமிய இவ்விருவரையும் மணம் பொருத்துதலே தக்கது. அரசன் : (உளங் கொதித்துக்) கம்பரே, நீரன்றி வேறெவ ரேனும் இச்சொற்களைச் சொல்லியிருப்பாராயின் அவர் உடனே என் கத்திக்கு இரையாகியிருப்பர்! வேளாள அரச குலத்திற் பிறந்த என் மகளையா எம்மையண்டிப் பாடிப் பிழைக்கும் ஓர் ஓச்சப்பயலுக்கு மணஞ் செய்து கொடுப்பது? அஃது ஒருகாலும் நடவாது! அமராவதி : (அதுகேட்டு அழுது) ஓ! ஐயனே! யான் உங்கள் மகள் அல்லேன்! அல்லேன்! யான் ஓர் ஏழைக்குடிக்குரிய ஓர் எளிய பெண்! யான் என் கணவனுடன் கூடி வெளியே எமதேழைக் குடிலுக்குச் செல்ல மனமிரங்கி விடை கொடுங்கள்! அரசன் : (இன்னும் மிக வெகுண்டு) அல்லை! நீ என் மகள் அல்லை! இவ்வரண்மனையில் களவொழுக்கம் நிகழ்த்திய நும்மிருவரையும் உயிருடன் விடப்போகிறதில்லை. ஏடா கடம்பா, இவ்வரண்மனையிற் களவாய்ப் புகுந்து தகாதது செய்த இப்பயல் அம்பிகாபதியைக் காவலருடன் கொலை களத்துக்குடனே கொண்டுபோய் வெட்டி வீழ்த்துக! அமராவதி : (அச்சொற் கேட்டு) ஐயோ! ஐயோ! சிவனே! என்னுயிர் போகின்றதே! எமக்கு யாருந்துணையில்லையா! ஐயோ! தெய்வமே! இது நின் திருவுளத்திற்கடுக்குமா! (சோர்ந்து விழுகின்றாள்.) (அரசி அங்கயற்கண்ணி ஓடி வருகின்றாள்.) அரசி : பெருமான்! என் மகளை என் செய்தீர்கள்? என் செய்தீர்கள்! (அமராவதியை எடுத்துத் தன் மார்பின்மேற் சார்த்திக்கொண்டு அழுதபடியாய்க்) கண்மணி! அமராவதி! என் தேடக்கிடையாச் செல்வமே! கண்ணை விழித்துப்பார்! (அரசனை நோக்கி) என் ஒரே மகளுக்குப் பாடஞ் சொல்ல இளைஞன் அம்பிகாபதியை அமர்த்த வேண்டாமென்று நான் துவக்கத்திலேயே சொல்லியும், என் சொல்லைக் கேளாமல் நீங்களே செய்துவிட்டு, இப்போதிவர்கண்மேற் பழி சுமத்தி இவர்களைக் கொல்ல முனைவது முறையா? இது தெய்வத்திற்கு அடுக்குமா! கண்ணே! அமராவதி! எழுந்திரு! என்னைப் பார்! (தேம்புகின்றாள்.) அமைச்சர் : அம்மா! தங்கள் மகளார்க்கு ஒன்றும் நேர்ந்து விடவில்லை! மன அதிர்ச்சியினால் மயக்க முற்றிருக்கின்றார். அவர்களைத் தங்கள் மாளிகைக்கு எடுப்பித்துச் செல்லுங்கள். இன்னுஞ் சிறிது நேரத்தில் அங்கு வருகின்றோம். அமைச்சர் : மன்னர் பெரும! பொறுத்தருளல் வேண்டும்! இப்போது அம்பிகாபதியைக் கொலை செய்வித்தால், இளவரசியார் உயிர்நீங்குவார்! அது கண்டு உளம் ஆற்றாது அரசியாரும் உயிர் நீப்பர்! அதுவேயு மன்றி, அரண்மனையின் அகத்து நிகழ்ந்த இந்நிகழ்ச்சியினைப் புறத்தார் எவரும் அறியார்; அதனால் அம்பிகாபதியை ஆராயாது கொலை செய்வித்தார் எனப் பழிச் சொற் பரப்பாநிற்பர். நம் ஏனையமைச்சரும் அவையத்தாரும் இஃது அரசியன் முறைக்குச் சிறிதும் அடாததாகும் என்றும் கருதாநிற்பர்! ஆகையால், இதனை எல்லாரும் அறியத் தீர ஆராய்ந்து எல்லா அமைச்சரும் அவையத்தாரும் முடிவு செய்யுமாறு நாம் செய்வதே தக்கதாகும். அரசன் : (சீற்றந்தவிர்ந்து) ஆம், நம்பிப்பிள்ளே, நீங்கள் சொல்லும் வண்ணஞ் செய்வது முறைதான். அடே! கடம்பா! இவனை நமது சிறைக்களத்திற், கொண்டுபோய் அடைத்து, அதன் சாவியை என்பால் உடனே கொண்டுவா! (கடம்பன் காவலருடன் அம்பிகாபதியைச் சிறைக்களத்திற்குக் கொண்டுபோய் விடுகின்றான். இஃதறிந்து அமராவதி ஒருவாறு மனந்தேறிக் கண்விழிக்க, அரசியார் ஆற்றாமை நீங்கி அவளைத் தமது உவளகத்திற்கு எடுப்பித்துச் செல்கின்றனர். அதன் பின் அரசன் அமைச்சரை நோக்கி) நம்பிப்பிள்ளே! நாளை நமதரசவையில் இதனை ஆராய்வம். நீங்களெல்லீரும் இப்போதில்லஞ் செல்லலாம். அமைச்சர் : அங்ஙனமே, செய்வம், பெருமானே, செல்லு தற்கு முன் அரசியாரது உவளகத்திற்குப் போய், இளவரசியாரின் உடல் நிலையத் தெரிந்துகொண்டு யாங்கள் ஏக விடையருளல் வேண்டும். அரசன் : ஆம், நீங்கள் மட்டும் உவளகஞ் செல்லலாம். கம்பர் உடனே வெளிச் செல்லல் வேண்டும். அவர் இனி இவ்வரண்மனையினுள் நுழையலாகாது. யான் எனது மாளிகைக்குச் செல்கின்றேன். (கம்பர் ஆற்றாமை நீங்கியும் வருத்தத்துடன் தமதில்லஞ்சென்று விடுகின்றனர்.) அமைச்சர் : (உவளகத்திற் சென்ற அரசியாரை வணங்கி) இளவரசியார்க்கு இப்போதுடம்பின் நிலை எவ்வாறிருக்கிறது? அரசி : உடம்பின் நிலை சிறிது நன்றே. ஆனால் அவள் மனத்தைத் தேற்றுவதற்கோ என்னாலும், அவளுயிர்த் தோழியாலுஞ் சிறிதும் இயலவில்லை. அம்பிகாபதியை நம் மன்னர் கொன்றுவிடுவரோ வென்றெண்ணி ஏங்குகின்றாள்! அவளுயிர் தத்தளிக்கின்றது! எங்கே அவளுயிர் போய்விடுமோ என்று நினைக்க என்னுயிர் தத்தளிக்கின்றது! அவளுக்குப் பின் யான் உயிர் வாழேன்! mik¢r® : அம்மா, சிறிது மனத்தைத் தேற்றிக் கொள்ளுங்கள்! அம்பிகாபதியைச் சிறைக் களத்தினின்றுந் தப்புவித்து, நம் மன்னரது ஆளுகைக்கு அப்பாற்பட்ட வடநாடு கடத்த வழியிருக்கின்றது. அரசி : நம்பிப்பிள்ளை! நீங்கள் நீடுவாழ்க! அம்பிகாபதியைத் தப்புவித்தற்கு யாது வழி? அவனை வடநாடு கடத்தினால், அப்போதும் என் மகள் அவனைப் பிரிதலாற்றாது உயிர் துறப்பளே! அமைச்சர் : ஆம், அரசியார் கூறுவது மெய்தான். ஆனாலும் இதைப்பற்றி இளவரசியாரது கருத்து இன்னதென்று தெரிந்து கொள்வது, நன்று. (இருவரும் இளவரசியிடஞ் செல்கின்றனர். இவர்களைக் கண்டதும் அமராவதி வருந்தி எழுகின்றாள்) அம்மா, வருந்தி எழ வேண்டாம். படுக்கையிலே அமருங்கள்! அம்பிகாபதியாரைச் சிறையினின்றுந் தப்புவித்து வடநாடு கடத்த எண்ணுகின்றோம்; உங்களுடம்பாடு தெரியவேண்டும். அமராவதி : என்னையும் இந்த அரண்மனைச் சிறையினின்றும் விடுவித்து அவருடன் போகவிடும்படி உங்களைப் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன். அரசி : கண்ணே! உன்னைப் பிரிந்திருந்து யான் எங்ஙனம் உயிர் வாழ்வேன்? அமராவதி : அம்மா, உன்னை அப்பாவுடன் இந்நாட்டுக்குப் போக விடுங்காற் பாட்டியும் இங்ஙனந்தானே ஆற்றாமைப்பட்டுப், பின்னர் மனந்தேறியிருப்பார்கள். அரசி : ஆம் கண்ணே, அவர்கள் நினைத்தபோதெல்லாம் என்னைப் பார்க்கலாமாகையால் அவர்கள் மனந்தேற இடமிருக்கின்றது; எனக்கோ அங்ஙனமில்லையே! அமராவதி : அஃதுண்மைதான் அம்மா. ஆனாலும், அப்பா மனந்திருந்தினால் நாங்கள் இங்கே திரும்பி வரலாமன்றோ? அரசி : கண்ணே நின் அப்பாவின் உள்ளத்தை எங்ஙனமாவது சிலநாளில் திருத்தி விடுகின்றேன்; அது வரையில் அம்பிகாபதி வெளிநாட்டிலிருக்கட்டும்; நீ எங்கள்பால் இரு. அமராவதி : அம்மா, ஒருகாலும் அப்பா மனந்திருந்தார். ஆதலால், என் கணவரைப் பிரிந்து யான் ஒரு நொடியும் உயிர் வாழேன். அமைச்சர் : (அரசியை நோக்கி) அம்மா இளவரசியாரும் அம்பிகாபதியாருடன் கூடியே வெளிநாடு செல்லட்டும். சில தினங்களில் இவர்களிருவரையும் இங்கு வருவித்து மணஞ்செய்து முடிப்போம். அரசி : அமைச்சர் தலைவ, இரக்கமும் அறிவும் வாய்ந்த நீங்கள் முனைந்தால் எதுதான் ஆகாது? ஆனாலும், நம் அரசர் நிறுத்தியிருக்குங் கட்டுக்காவலைக் கடந்து இவர்களை வெளிநாடு கடத்துவது எங்ஙனம் என்றுதான் என் நெஞ்சந் திகிலடைகிறது. அமைச்சர் : ஆம்! அரசியார் அஞ்சுகிறபடியே என் நெஞ்சமும் அஞ்சுகின்றது. ஆனாலும் காதலர் உயிரைக் காப்பதற்கு இறைவன் துணை கிடைக்கும். புலவர் பெருந்தகை புகழேந்தியாரின் புதல்வி தங்கத்தைக் கொண்டே இவ்வினையை மிகவும் கருத்தாய் முடிக்க வேண்டும். தங்கத்தைத் தவிர வேறெவரும் இங்கே வருதல் இயலாதன்றோ? கம்பராவது அவரைச் சேர்ந்த வேறெவராவது இனி இங்கு வரப்பெறார். எல்லாஞ் சூழ்ந்து முடிவு செய்துகொண்டு இரண்டொரு நாளில் தங்கத்தைத் தங்களிடம் வரச் செய்கிறேன். அரசி : அமைச்சர் பெருந்தகை! அங்ஙனமே செய்க. (அமைச்சர் போய்விடுகிறார்.) ஐந்தாம் நிகழ்ச்சி : நான்காம் காட்சி களம் : அரசி அங்கயற் கண்ணியின் மாளிகை காலம் : பிற்பகல் தங்கம் : அரசியார்க்கு என் புல்லிய வணக்கம். அரசி : கண்மணி தங்கம், சென்ற இரண்டு நாட்களாக நின் தங்கை அமராவதியும் யானும் நின் வருகையை மிக்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். என் தோழியை விடுத்து நின்னை இங்கு வருவிக்கவும் அச்சமாய்விட்டது! நம் அரசர் இப்போது வைத்திருக்குங் காவல் மிகக் கடுமையாய் இருக்கின்றது! கம்பர்க்கு வேண்டியவர் எவருமே இந்த அரண்மனைப் பக்கமும் வரலாகாதென்று நம்மரசரது கட்டளை பிறந்திருக்கின்றது. ஆதலாற்றான், நீ இங்கே வரும் வழக்கப்படியே வரட்டுமென்று துடிப்புடன் காத்துக்கொண்டிருந்தோம்! தங்கம் : ஆம், தேவியார் கூறுகின்றபடியே அரண்மனை யின் அகத்தும் புறத்தும் காவலர்கள் எந்நேரமும் உலாவிக் கொண்டிருந்தனர். அதைக் கண்டு வரும்போது என் நெஞ்சந் துணுக்குற்றது! யான் இங்கு வருகையில் அவர்கள் என்னை உற்றுற்று நோக்கினர்! தங்கை அமராவதி எங்ஙனமிருக்கின்றாள்? அம்பிகாபதியார் சிறையில் எந்நிலையிருக் கின்றார்? அரசி : இருவரும் ஒருவர் பொருட்டொருவர் படுந் துயரங் கண்ணாற் காணவுங் காதாற் கேட்கவுங் கூடியதாயில்லை! என் நெஞ்சம் இருகூறாய்ப் பிளந்து போகின்றது! நம் மன்னர்பிரான் இவர்கட்குத் தீங்கிழைக்கும் முன்னமே இருவருந் தம்முயிரை இழந்துவிடுவர் போற்றோன்று கின்றனர்! அம்பிகாபதியைப் பற்றி நமது அரசவையில் என்ன முடிவு செய்யப்படுகின்றது? தங்கம் : அதனைச் சிறிதறிவேன் தாயே! தமையனார் நயினார்பிள்ளை சொல்லத் தெரிந்தேன். நம் அரசவையிலுள்ள அமைச்சர் ஐவரில் மூவர் நம்மரசர் பெருமான் நோக்கம் அறிந்து - மேற்சொல்ல என் மனமும் வாயும் உடலும் நடுங்குகின்றன! அரசி : (மனங்கலங்கி) அறிந்தேன்! மற்றை அமைச்சர் இருவருங் கூறிய முடிபு யாது? தங்கம் : (நெஞ்சந்தேறி) நம் முதலமைச்சர் நம்பிப்பிள்ளையும், படைத்தலைமையமைச்சரும் அம்பிகாபதியார் பாலுங்குற்றமில்லை, நம்மிளவரசியார்பாலுங் குற்றமில்லை; இளமையும் அழகும் அறிவும் நிறைந்த அவ்விருவரையும் நெருங்கவிட்டவர் பாற்றான் குற்றமுளது என்று முடிவு கூறிவிட்டனர். நம் மன்னரோ நம் முதலமைச்சர் முடிபையும் நம் படைத்தலைவர் முடிபையுங் கடந்து ஏதுஞ்செய்ய மாட்டாதவராய் மனம் உளைந்து நெடுங்காலம் நம் அரசவையில் முதலமைச்சராயிருந்து விடுதி பெற்றிருக்கும் ஒட்டக்கூத்தர் இத்தகைய சிக்கலான நிகழ்ச்சிகளிற் சிக்கறுத்து முடிவுகூறும் முதிர்ந்த பழக்கம் வாய்ந்தவர், ஆகையால், அவர் கூறும் முடிபு தெரிந்து அதன்படி செய் தலே முறை என்று அறிவித்திருக்கின்றனராம். இப்போது ஒட்டக்கூத்தர்க்கு உடம்பு நலமில்லை; ஆண்டிலும் முதிர்ந்த அவர் நலம் பெற்று வந்து தீர்ப்புச் சொல்ல இன்னும் இரண்டு கிழமையாகுமாம். அரசி : ஐயோ! அந்த ஒட்டக்கூத்தரா! அவர் இரக்கமில்லா வன்னெஞ்சக் கொடியராயிற்றே! நின்னருமைத் தந்தையை அவர் படுத்திவைத்த பாடெல்லாம் என்னெஞ்சைவிட்டு இன்னும் அகலவில்லையே! அவர் இழைத்த தீங்குகளால் உள்ளம் நைந்தன்றோ நின் தந்தை இறந்து போயினார்! ஒரே மகளான உனக்குத் திருமணஞ் செய்து பார்க்குமுன் தாம் இறப்பதை நினைந்து நினைந்து அவர் உள்ளங்கவன்று வருந்திய வருத்தம் அளவிடற்பாலதன்று! கம்பர் நின் தந்தையார்க்கு நெஞ்சங்கலந்த நண்பராதலால், ஒட்டக்கூத்தர் தமது இயற்கைப் பொறாமைக் குணத்தை விடாராய்க் கம்பரையும் அவர் தம் அருமைப் புதல்வனையும் அதுபற்றி மிக வெறுக்கின்றார். ஆகையாற் கூத்தர் யாது முடிபு கூறுவாரென்று ஐயுற்று நாம் அதனை எதிர்பார்க்க வேண்டுவதில்லை! தங்கம் : அதனாற்றான் நாம் செய்ய வேண்டியதை உடனே செய்து முடிக்கவேண்டுமென்று அண்ணன் நயினார் பிள்ளை என்னைத் தங்கள்பால் விடுத்தனர். அரசி : கண்மணி தங்கம், இப்போது நாம் யாது செய்தல் வேண்டும்? தங்கம் : அம்மா, தங்கை அமராவதி தனது இளமரக்காவில் நீராடும் ஓடைக்கருகில் மதிற்புறத்தே தனித்திருக்குங் காளிகோட்டத்திற்குத் தன் தமையனார் உடையை அணிந்து கொண்டு இம் மயங்கன் மாலையிலேயே வந்துவிடல் வேண்டும் யானும் அப்போது சிறிது முன்னேயே அங்கே போயிருந்து தங்கையை அழைத்துக்கொண்டு என்னில்லஞ் செல்வேன். அரசி : அதன் பிறகு யாது செய்தல் வேண்டும்? தங்கம் : அம்மா, இதோ இத்தூக்க மருந்தை ஏலக்காய் இட்டுக் காய்ச்சின ஆவின் பாலிற் கரைத்துக் கற்கண்டுங் கலந்து, நம்மன்னர் அதனை இன்றிரவு உறங்கப் போகுங்காற் பருகும்படி கொடுங்கள்! அரசி : ஆ! என்ன சொன்னாய் தங்கம்? இதனை என் னாருயிர்க் கணவற்கா? தங்கம் : தாயே அஞ்சாதீர்கள்! நம்மன்னருயிர்க்கு ஏதுந் தீங்கில்லை. தங்கள் மகளும் மருமகரும் உயிர் பிழைக்க வேண்டித், தங்கள் கணவனாரை இன்றிரவு அயர்ந்துறங்கச் செய்ய வேண்டுவது இன்றியமையாத தாயிருக்கின்றது! அவ்வளவு தான்! அரசி : அங்ஙனமாயின், அதனை என் கையிற்கொடு, நீ சொன்னவாறே செய்வேன். என் கணவனாற்கு ஏதுந் தீங்கு நேராமல், என் மகளையும் அவள் காதலனையும் உயிர் தப்பச் செய்வாயென்று நம்புகின்றேன். தங்கம் : அம்மா, அதுபற்றித் தங்கள் சிறிதும் ஐயுறவு கொள்ளல் வேண்டாம். இன்னுமொன்று தங்கள் மேலும் அருமைத் தோழி நீலத்தின் மேலும் நம்மரசர் ஐயுற்றுச் சினவாதிருக்கும் பொருட்டுத் தங்கை அமராவதி கைப்பட யான் என் கணவனாரைச் சிறையினின்றும் அழைத்துக் கொண்டு வெளியே செல்கின்றேன் என்றொரு நறுக்குயெழுதி வாங்கி, அதனை அரசர் அணிந்திருக்குஞ் சட்டைப் பையினுட் செருகி விட்டு அதனுள்ளிருக்குஞ் சிறைக்களச் சாவியினை எடுத்துக் கொணர்ந்து, தோழி நீலத்தின் கையிற் கொடுத்து விடுங்கள். அவள் அம்பிகாபதியாரைக் காவலர் அறியாமற் சிறையினின்றும் விடுவித்து யான் முன் சொன்ன காளி கோட்டத்திற்கே அவர் இன்று நள்ளிரவிற் போம்படி செய்வள். அரசி : நல்லது, சிறைக் காவலனையும் வாயில் காவ லனை யுங் கடந்து அம்பிகாபதி செல்வது எங்ஙனம்? தங்கம் : இத்தூக்க மருந்தையே அவர்கட்குங் கொடுக்க ஏற்பாடு செய்தாயிற்று. அரசி : ஆயினும், ஊர்க் காவலரை அம்பிகாபதி தப்பிச் செல்ல யாது செய்தாய்? தங்கம் : கம்பர் காளி கோட்டத்தின் கண் இருப்பர்; அம்பிகாபதி அங்கு சென்றவுடன், தன் மகள் காவேரியின் ஆடையை அவர் உடுக்கும்படி செய்வித்து, அவரை யழைத்துக் கொண்டு எமதில்லத்திற்கு வந்து விடுவர். இன்றைக்குப் பதினைந்து நாழிகைக்கு மேற்றான் நிலவு புறப்படும். ஆகையால், முன்னேரத்தில் இவர்கள் எவராலுந் திட்டமாயறியப் படாமல் எங்கள் இல்லம் வந்து சேர்தலும், பின்பு அங்கிருந்து வெளி நாட்டுக்கு உடனே புறப்படுதலும் எளிதில் முடியும். அரசி : நல்லது, என் மகளும் அம்பிகாபதியும் மட்டும் வெளிநாடு செல்வரோ? கம்பரும் உடன் செல்வரோ? தங்கம் : கம்பரும் அவர் மகள் காவேரியும் அம்பிகாபதி யாரைப் பிரிந்திருக்க மாட்டாமல் அவருடன் செல்லவே உறுதி செய்திருக்கின்றனர். அரசி : கம்பருங் காவேரியும் உடன் செல்வதறிந்து என்னுள்ளம் பெரிதும் ஆறுதலடைகின்றது. வழிச் செலவுக்காக இந்த ஆயிரம் பொன்னையுங் கம்பர் கையில் கொடு. நீயும் நீலமும் நயினாருஞ் செய்யும் இவ்வரும் பேருதவி இனிது நிறைவேறுமாறு அம்மையப்பர் அருள் புரிக! என் மகளும் அம்பிகாபதியுங் கம்பர் காவேரியுடன் வாய்ப்பான இடஞ் சென்று இனிது வாழ்க என்று சிவபிரான் பிராட்டியாரை வேண்டு வோமாக! நாளை முதல் சில நாட்கள் வரையில் இவ்விடம் பெருங் குழப்பத்தில் இருக்கும்! உன்னை இங்கு வரும்படி நான் ஆள் விடுக்கும்போது மட்டும் நீ இங்கு வா - இனி நிகழப் போவனவெல்லாம் நின்னுள்ளத்தே புதைந்து மறைந்து கிடப்பனவாக! நீ இப்போது செவ்வனே வீடு போய்ச் சேர்! (தங்கம் வணங்கிப் போய்விடுகின்றாள்.) ஐந்தாம் நிகழ்ச்சி : ஐந்தாம் காட்சி களம் : புகழேந்திப் புலவர் மாளிகை காலம் : குறைநிலாக் காலத்தொருநாள் முன்னிரவு தங்கம் : அம்மா அமராவதி, நீ ஏன் இவ்வளவு நடுங்கு கின்றனை? நின் கணவர் இன்னுஞ் சிறிது நேரத்தில் இங்கு வந்துவிடுவர். அமராவதி : அக்கா, முன்னொருகால் என் கணவர் காளி கோயிற் பக்கத்துள்ள மதின்மேலேறி என்பால் வந்து மீண்டுசென்றபோதுதான் காளிகோயிற் பக்கமாய்ச் சுற்றிவந்த நகர்க்காவலர் அவரைப் பிடித்துக்கொண்டனர்! அங்ஙனமே இப்போதும் நேர்ந்துவிட்டால் என் செய்வதென்று தான் என் நெஞ்சந் துடிக்கின்றது! தங்கம் : கண்மணி கலங்கவேண்டாம். அம்பிகாபதியார் சிறையில் அடைக்கப்பட்ட பின் காவலரெல்லாஞ் சிறைக்களப் பக்கமாகவே நிற்கின்றனரென்றுங், காளிகோயிற் பக்கம் எவருஞ் செல்வதில்லை யென்றும் முன்னமே தெரிந்து கொண்டுதான் இம்முயற்சியில் இறங்கினோம். அமராவதி : அருமை அக்கா, நீ செய்யும் இப்பேருத விக்கு வானகமும் வையகமு மாற்றலரிது! தங்கம் : அங்ஙனஞ் சொல்ல வேண்டாம் அம்மா. நீங்கள் செய்த பேருதவியினாலன்றோ என் தந்தையார் புகழ் பொருள் வளம் பெற்று விளங்கினார்! இன்னும் யாங்கள் ஏதொரு குறையுமின்றி யுயிர் வாழ்கின்றோம்! காலந்தவறாத மழைக்கும் உங்களுதவிக்குங் கைம்மாறு ஏது? அமராவதி : ஆனாலும், என்னால் உனக்கொரு மனக்குறை நேர்ந்து விட்டதன்றோ? தங்கம் : அதென்ன கண்மணி? அமராவதி : அக்கா, நீ என்னைவிட அழகிலுங் குணத் திலுஞ் சிறந்த நங்கையாயிருந்தும், அம்பிகாபதியார் நின் அழகையுங் குணத்தையும் மிக வியந்து பாராட்டுபவராயிருந்தும், என்னாலன்றோ நின்னை அவர் மணந்து கொள்வதற்கு ஒரு பேரிடையூறு தோன்றலாயிற்று! தங்கம் : அம்மா, என்னுடன் பிறந்த தங்கை ஒருத்தி யிருப்பாளானால், அவளினும் உன்னையே என்னுயிர்க் குயிராய் நினைத்து அன்பு பாராட்டி வருகின்றேன் என்பதனை நீயே நன்கறிவாய். அமராவதி : அதிற் சிறிதும் ஐயமில்லை. நின்பாலுள்ள எனது அன்பு நிலையும் அத்தகையதே. தங்கம் : கண்ணே, உன்னிலும் யான் அழகிலுங் குணத்திலுஞ் சிறந்தவளென்பது ஒப்புக்கொள்ளத்தக்கதன்று. உன்னை அம்பிகாபதியாரும், அம்பிகாபதியாரை நீயும் நேரிற் கண்டபின் நீங்களிருவீரும் ஒருவர் மேலொருவர் காதல் கொள்ளாதிருத்தல் சிறிதும் இயலாததேதான். நுங்கள் காதற் கிழமையினை யான் சிறிதும் அறியேன். எனது பெதும்பைப் பருவத்திலேயும் யான் அம்பிகாபதியாரைக் காதலித்து வந்தேன்; யான் மங்கைப் பருவம் அடைந்த பின் என் பெற்றோர்கள் என்னை அம்பிகாபதியார்க்கே மணஞ் செய்து கொடுக்க உறுதி செய்திருந்தனர்; அதுவே நெருப்பில் நெய் சொரிந்தது போல் இயற்கையே எனதுளத்தில் அவர் மேலிருந்த காதலை மூண்டெரியச் செய்தது! என்னால் தாங்க முடியாத நிலைமைக்கு வந்த அக்காதலைச் சின்னாட்களுக்கு முன் என் நாணமுந் துறந்து அவர்க்கு வாய்விண்டு சொல்லுதலுஞ் செய்தேன்! ஆனால் அவர் மிக மென்மையான சொற்களால் தாம் என்னை மணக்கக் கருதாமையினைத் தெரிவித்து விட்டார்; அப்போதென் ஆவியோ நிலை கலங்கியது! அவர் எங்ஙனமோ என் ஆற்றாமையினைத் தணியச் செய்தார். பின் நாட்களில் அவர் நின்னைக் காதலித்திருத்தல் தெரிந்து எனதாற்றாமையினை ஒருவாறு ஆற்றிக் கொண்டேன். நீங்களிருவீரும் ஏதோர் இடரும் இன்றி ஒருங்கு பொருந்தி இனிது வாழவேண்டுமென்றும், அதற்காம் முயற்சிகளை யான் நெஞ்சாரச் செய்யவேண்டு மென்றும் எண்ணி, அவ்வெண்ணத்திலேயே எனது நினைவைச் செலுத்தி வருகின்றேன். ஆகையால், நின்னால் எனக்கொரு மனக் குறையுமில்லை. நுங்கள் நன்மையின் பொருட்டு எதுவுஞ் செய்யத் துணிந்து நிற்கின்றேன்! அமராவதி : அருமை அக்கா! இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உயிராய் நிற்கும் ஒரு பெருங் காதலின்பத்தை என் பொருட்டு நீ துறந்து விட்டது. வேறு பெண் மக்கள் எவராலும் செய்தற்கு இயலாதது! என்னே! நின் மனத்தூய்மை! என்னே! நின் பேரன்பின்திறம் (இச் சொன் முடிவிற் கம்பர் அம்பிகாபதி காவேரியுடன் வருகின்றனர்) தங்கம் : (மெல்லிய குரலில்) மாமா, அத்தான் வரவேண்டும் (வணங்குகிறாள்) கண்ணே காவேரி, (அவளை அணைத்துக்கொண்டு) முன்னே எனக்கு மைத்துனனாயிருந்த நின் தமையனார் இப்போதெனக்கு மைத்துனியாய் விட்டார். (புன்முறுவல் செய்கின்றாள். அமராவதியும் வந்து இருவரையும் வணங்கிக் காவேரியைத் தழுவிக் கொள்கின்றாள். இந்நேரத்தில் நயினார் பிள்ளை கதுமென வருகின்றான்.) நயினார் : (கம்பரை வணங்கி) ஐயனே! சகடமுங் குதிரைகளும் பின்வாயிலில் வந்து நிற்கின்றன. சிறிதும் நேரம் போக்கலாகாது. இரவு பதினைந்து நாழிகையாய் விட்டது! இன்னும் இரண்டு நாழிகையில் நிலவு வெளிப்படும்; அதற்குள் நீங்கள் எல்லாம் இத்தஞ்சைநகர் எல்லையைக் கடந்து நெடுந்தொலைவு விரைந்து ஏகிவிடல் வேண்டும்! (எல்லாரும் விரைகின்றனர்.) அமராவதி : (தங்கத்தை தழுவி) அருமை அக்கா, உன்னை எங்களுடன் கொண்டுபோக யான் மிக விழைந்தும் நோயாய்க் கிடக்கும் நம் அன்னையார் பொருட்டு நின்னை இங்கேயே விட்டு யாங்கள் செல்ல வேண்டியதாகின்றது. இனி உன்னையும் அம்மையையும் எப்போது காண்பேன்! என் தந்தையால் உங்கட்கு யாது தீங்கு நேருமோ! (கண்ணீர் உதிர்க்கின்றாள்) தங்கம் : அழாதே கண்ணே! எங்கிருந்தாலும் வருவது வரும்! இறைவனருளை நம்பி எதற்குங் கலங்காமலிருக்க வேண்டும். உங்களுயிர் தப்பினால் அதுவே எனக்குப் போதும். (காவேரியும் அம்பிகாபதியும் நயினாருமெல்லாம் பிரிதலாற்றாது பெரிதுங் கண்கலுழக் கம்பர் எல்லாரையும் ஆற்றுவிக்கின்றார்.) அம்பிகாபதி : (நயினாரைக் கட்டித்தழுவி) என்னாருயிர்ச் செல்வா! உன்னை இனி என்னுயிரொடு காண்பேனா? நம்மன்னர் உனக்கு யாது தீங்கு இழைப்பரோ என்பதை நினைக்க என்னுடலும் உயிரும் ஒருங்கே நடுங்குகின்றன! அப்பா, உன்னைப் போல் ஒரு நண்பனை எப்பிறப்பிற் காண்பேன்! நீயும் எங்களுடன் வராலாகாதா? (இருவரும் அழுது கதறுகின்றனர்; இருவரையுங் கம்பர் தேற்றுகின்றார்.) நயினார் : (ஒருவாறுதேறி) அம்பிகாபதி, என்னாருயிர்த்துணைவா, கல்விக் களஞ்சியமே, கலைக்கு நிலைக்களமே. நின்னைப் பிரிந்த இந்நகர் உயிரையிழந்த வெற்றுடலே யாகும்! உன்னைப் பிரிந்து யான் உயிரோடிருந்தென் செயப் போகின்றேன். யான் என்னருமைத் தந்தையின் பொருட்டு இங்கிருப்பினும், என்னுயிர் நீங்கள் செல்லுமிடமெல்லாம் உங்களைப் பின்றொடர்ந்தே வரும். (இது சொல்கையிற் காவேரியை நோக்கித் தேம்பக், காவேரியும் இவனை நோக்கித் தேம்புகின்றாள்.) கம்பர் : (எல்லாரையுந் தேற்றி) அம்பிகாபதி, நம் அமைச்சர்க்கு நயினார் ஒரே புதல்வன்; அமைச்சரும் என் போல் ஆண்டில் முதிர்ந்துவிட்டார்; அருகிருந்து அவர்க்கு வேண்டும் உதவிகளைச் செய்யவேண்டிய இப்பருவத்தில் இவன் நம்முடன் வருதல் நன்றா? மேலும் நம்மருமைத் தங்கத்திற்கும், நோயாய்க் கிடக்கும் அவளன்னைக்கும் இவனன்றோ உற்ற துணையா யிருந்துதவி செய்து வருகின்றான்? இறைவனரு ளிருந்தால் நாமெல்லாம், மீண்டும் ஒருங்கு கூடுவம். எல்லாரும் நெஞ்சைத் தேற்றிக் கொள்ளுங்கள்! (காவேரியின் தோழி பச்சையை நோக்கி) அம்மா பச்சே! நீ நம்மருமைத் தங்கத்துடனேயே யிருந்து அவர்கட்குற்ற துணையாய் உயிர் வாழக்கடவாய்! (அவளுந் தங்கமும் வணங்கக் கம்பர் ஏனையெல்லாருடனும் பின்வாயிலிற் சென்று சகடம் ஏறுகின்றனர்.) நயினார் : (கம்பரை வணங்கி) ஐயனே. இன்னும் எனக்கு யாது கட்டளை? கம்பர் : மகனே, நம்மன்னன் நாங்கள் சென்று வைகும் இடத்தைத் தெரிந்துகொள்ளப் பெருமுயற்சி செய்வான். நாங்கள் அவனிலும் வலிய துணையைச் சார்ந்து வாழும் வரையில் யாங்கள் இருக்குமிடம் எவர்க்குமே தெரியா திருக்கட்டும். சில திங்கட்குப் பின் இச்சகடவலவனே எனது திருமுகத்தை உன்னிடங் கொணர்வன். அதன் பின் இவன் வழியாகவே இங்கு நேரும் நிகழ்ச்சிகளை வரைந்து நின் திருமுகத்தை எனக்கு விடு! (கம்பர் தம் மகன், மகள், மருமகளுடன் வண்டியில் இவர, வண்டி விரைந்தேகி விட்டது.) ஐந்தாம் நிகழ்ச்சி : ஆறாம் காட்சி களம் : சோழன் அரண்மனை காலம் : அடுத்த நாட் காலை சோழன் : (துயில் நீங்கி எழுந்து தனக்குள்) வழக்கமாய்ப் பகலவன் கீழ்பால் எழுகையிலேயே துயிலுணர்ந்தெழும் யான், இன்றைக்கோ விடிந்து ஐந்து நாழிகைக்குப் பின்னால் எழலானேன்! ஆ! எவ்வளவு அயர்ந்த தூக்கம்! எவ்வளவு இனிய துயில்! என்ன! கவலை நெஞ்சம் உடை யார்க்கு இத்தனை அயர்ந்த தூக்கம் வருவதுண்டா? அந்தப் பயல் அம்பிகாபதி எனக்குச் செய்த மானக்கேடான செயலை எண்ணி எண்ணி என்னெஞ்சம் எறும்பிடைப்பட்ட புழுப்போல் துடிக்கையில், எனக்கு உறக்கம் எப்படி வரக்கூடும்? அவனை என் கத்திக்கு இரையாக்கினாலன்றி என் கண்கள் துயிலாவே! (தன் சட்டைப்பையை உற்று நோக்கித் தடவி) ஆ! என்னை இது! அம்பிகாபதியை அடைத்த சிறைக்களச் சாவியைக் காண் கிலேனே! சாவியிருந்த இடத்தில் ஏதோ ஒன்று தட்டுப்படு கின்றதே! (அமராவதியின் ஓலை நறுக்கை வெளியேயெடுத்து இறும்பூதுடன் நோக்குகின்றான்) யான் என் கணவனாரைச் சிறையினின்றும் அழைத்துக் கொண்டு வெளியே செல்கின்றேன் இதனை எழுதினவள் யார்? என் மகள் அமராவதியா? அவளது கையெழுத்துத்தான் இது! ஏ! அமராவதி நீ என் மகளா? ஓர் ஒச்சப் பயலைக் களவிற் புணர்ந்த நீ வேசியேயன்றோ? நீயும் அந்தக் கள்வனும் எனது ஆளுகையினைத் தப்பி எங்குப் போய் விடுவீர்கள்? இதோ! உங்களிருவரையும் பிடித்துக் கொணர்வித்து நீற்றறையிலிட்டு நீறாக்கி எனது பழியைத் தீர்த்துக் கொள்கின்றேன் பார்! யாரேடா அங்கே! கடம்பன் : (ஓடி வந்து) பெருமான் நீடு வாழ்க! கட்டளை? சோழன் : அடே! சிறைக்காவலர், நகர்க் காவலர் அனை வரையும் உடனே இங்குவருவி! (போய் அவரெல்லாருடனும் வந்துவணங்க அரசன் சிறைக்காவலனை நோக்கி) அடே! அம்பிகாபதி நமது அரண்மனைச் சிறையிலிருக்கின்றானா? சிறைக்காவலன் : (நடுக்கத்துடன்) அரசே! தஞ்சம்! அம்பிகாபதி சிறை வீட்டில் இல்லை! எப்படியோ தப்பிப் போய்விட்டான்! சிறை வீட்டின் சாவி தங்களிடம் இருக்க அஃதெப்படித் திறக்கப்பட்டது! இது மாயமாயிருக்கின்றதே! சோழன் : (தனக்குள்) ஈதெனக்கும் புலனாகவில்லை! (அவனை நோக்கி) நல்லது! சிறைவீடு திறக்கப்பட்டு, அவன் வெளியே போகும் வரையில், மடையா, நீ என் செய்தாய்! சிறைக்காவலன் : (நடுங்கி) பெருமானே! சிறைக்காவலில் என்றுங் கண்ணிமையுங் கொட்டாத இந்த ஏழை நேற்றிரவிலோ என்னையறியாமலே அயர்ந்துறங்கிவிட்டேன்! சோழன் : (தனக்குள்) யானும் அங்ஙனமே தான் தூங்கிவிட்டேன்! இதில் ஏதோ சூது நடந்திருக்கின்றது! இவன் மேற் குற்றஞ் சொல்லுவதிற் பயனில்லை. (நகர்க் காவலரை நோக்கி) ஏ! நகர்க் காவற்புலிகளே! சிறை வீட்டுக்கு வெளியே வந்த அம்பிகாபதியை நீங்கள் எங்ஙனந் தப்ப விட்டீர்கள்? நகர்காவலர் : (அச்சத்துடன்) மன்னர் பிரானே தங்கள் கட்டளைப்படியே யாங்கள் சிறைவீட்டுக்கு வெளியே நேற்றிரவெல்லாங் கண்ணிமை கொட்டாமலே காவல் செய்து நின்றோம். ஆனால் அம்பிகாபதியேனும் வேறெவரேனும் அரண் மனைச் சிறைக்களத்துக்குப் புறம்பே வரயாங்கள் காண வில்லையே! சோழன் : நல்லது, நீங்களெல்லீரும் போகலாம் (எல்லாரும் போய்விடத் தனக்குள்) இஃதொரு பெருமாயமாய் இருக்கின்றது! நுண்ணறிவிற் சிறந்த ஒட்டக்கூத்தரை வருவித்துக் கேட்டால் உண்மை வெளியாகிவிடும். அடே கடம்பா, ஒட்டக்கூத்தர் பாற்சென்று, அவரை உடனே இங்கழைத்துவா! (அவன்போய் அவரை அழைத்து வருகிறான்) பெருமான், வரவேண்டும்! இருக்கையில் அமருங்கள்! கூத்தர் : குழந்தாய்! இத்தனை விடியற் காலையில் யாது நேர்ந்தது? சோழன் : அரண்மனைக்குப் புறத்தேயுள்ள சிறைக் கோட்டத்தில் அடைப்பித்திருந்தால் அம்பிகாபதி தப்பிப் போய் விடுவா னென்றெண்ணி, இவ்வரண்மனைக்குள்ளேயே ஓர் அறையில் அவனைச் சிறையிடுவித்து, அவ்வறையின் சாவி யினையும் யானே என் சட்டைப் பையினுள் வைத்திருந்தேன். விடியற்காலையில் எழுந்து பார்க்க அச்சாவியைக் காணேன், இந்த ஓலை நறுக்குத்தான் இருந்தது (அதனை அவர்க்கு நீட்டுகின்றான்.) கூத்தர் : (அதனை வாங்கிப் பார்த்து) ஐயகோ! இப்பேர சுக்குப் பேராப் பெரும்பழி வந்துவிட்டதே! அம்பிகாபதியை இவ்வரண்மனையில் அணுகவிடாதே என்று யான் அன்று கூறிய அறிவுரையைச் செவியேற்றாயில்லையே! இருவரும் இந்த நகரை விட்டு நெடுவழி சென்றிருப்பார்களென்பதிற் றட்டில்லை. அருமை மகளை அவன் எங்கே கொண்டு போய் எவ்வாறு அலைக்கழிப்பானோ! அரசே, இப்போதென்ன செய்யப் போகின்றாய்? சோழன் நாற்புறமும் என் படைஞர்களைப் போக்கி அவர்களைப் பிடித்துக் கொணர்விக்கக் கருதுகின்றேன். கூத்தர் : நல்லது. காலந்தாழாதுடனே அதனைச் செய்! கம்பர்எங்கிருக்கின்றார், என்பதை உடனே தெரிந்துகொள். அவர் தம்மகனைத் தம்முயிராய்க் கொண்டவர்; அவரும் அவர்களுடன் சேர்ந்தே போயிருப்பர்; அவருங் கூடப் போயிருந்தால், நம்மினும் வலிய ஓர் அரசனின் உதவியை அவர் நாடிக் கொள்வர்! சோழன் : அடே கடம்பா, நம் ஏவலரை விடுத்துக் கம்பர் எங்கே யிருக்கிறாரென்பதை உடனே தெரிந்து வரச் செய்! (அவன் அங்ஙனமே செய்ய, ஏவலர் போய் வந்து நிகழ்ந்ததை அறிவித்து விட்டனர்.) கூத்தர் : அரசே, பார்த்தனையா? புகழேந்தியின் மனையிற் கம்பரும் அவர் மக்களும் நின் அருமைப் புதல்வியும் ஒன்றுசேர்ந்து நேற்றிரவே வெளிநாடு சென்றுவிட்ட செய்தி வெளியாகி விட்டது. புகழேந்தியின் மகள் தங்கம் ஒருத்தி தானே இங்கே அரண்மனைக்குள் வந்து போய்க் கொண்டிருந்தவள். அவர்களைச் சகடம் ஏற்றி வெளிநாடு கடத்தியவன் அமைச்சர் மகன் நயினார் பிள்ளையேயென்பதும் இப்போது வெளியாய் விட்டது! சோழன் : (மிக்க சீற்றங்கொண்டு) ஆம்! ஆம்! தங்கமும் நயினானுஞ் செய்த சூழ்ச்சியிலேயே அவர்களெல்லாரும் நம்மைத் தப்பிப் போய் விட்டார்கள்! இவர்களிருவரையுஞ் சிறையில் அடைப்பித்து விடுகின்றேன். அம்பிகாபதியையும் அந்த வேசியையும் பிடித்துக் கொணர்ந்து நீற்றறையிலிட்டு நீறாக்கக் கூடாவிட்டால், இவர்களிருவரையும் நீறாக்கி விடுகின்றேன்! கூத்தர் : அப்பனே! பதறாதே! தங்கந் திருமணமாகாத இளம் பெண்; அவள் தந்தையோ என்னால் துன்புறுத்தப் பட்டு இறந்தார் என்னும் பழிச்சோல் எங்கும் பரவியிருக்கின்றது! இப்போதவர் மகளையும் நீ மாய்த்து விட்டால், நீ என் சொற்கேட்டே அங்ஙனஞ் செய்தாய் என்று எல்லாரும் என்னைத் தூற்றுவர்! மேலும், அவளன்னையோ நோயாற் படுக்கையிலேயே கிடக்கின்றாள்! இனி, நயினானோ நம் அமைச்சர்க்கு ஒரே மகன், அவனை நீ கொலை செய்வித்தால், அறிவிலுஞ் சூழ்ச்சியிலுந் தமக்கு நிகராவார் எவருமில்லா நம்பிப்பிள்ளை நமதரசையே பாழாக்கிவிடுவார்! சோழன் : (மனங்கசந்து) அவ்வாறானால், எனக்கு நேர்ந்த மானக் குறைச்சலுக்கு ஏதொரு தீர்வும் இல்லையா? கூத்தர் : சிறிது பொறு! அம்பிகாபதிதானே உனக்குத் தீது செய்தவன்? நீ நம்பிச் செய்த செய்கையில் அவன் தகாதொழுகியதனால், அவனை நீ ஒறுத்தல் முறையேதான். அதற்கொரு வழி செய்யலாம். சோழன் : அஃதென்ன பெருமானே? அவனுயிரைப் போக்கினாலன்றி எனதுயிர் இங்கு நிலையாது! என் மனம் வேகின்றது! மானங்கெட் டுயிர்வாழ என்னுள்ளம் ஒருப்படாது! கூத்தர் : சொல்லுகிறேன் கேள்! நயினான் அம்பிகா பதிக்கு உயிர்த்தோழன். அவனை வருவித்து, ஆறு திங்களுக்குள் அம்பிகாபதியும் அமராவதியும் இருக்குமிடந் தெரிந்து, அவர்களை இங்கே கொணர நீ வழி செய்யாவிட்டால், நீ நின் உயிரை இழப்பாய்! நின்னாலன்றோ என் மானத்தையும் மகளையும் இழந்தேன்! என்று அவற்கு வலியுறுத்திச் சொல். தன் உயிர்த்தோழன் தன்னால் உயிரிழக்க நேருமென்பது தெரிந்தால், அதனை மாற்ற அம்பிகாபதி இங்கு வந்து விடுவான். அதன்பின் அவனை நீ வேண்டியபடி ஒறுக்கலாம். அவர்களைத் தேடிப்பிடிக்க இப்போது நீ விடுக்கும் படைஞர்கள் அவர்களைக் கண்டுபிடித்தல் இயலாமல் திரும்பி விடுவார்களானால், நாற்புறமும் உள்ள நாடு நகரங்களுக்கு வேவுகாரரைப் போக்கி அவர்களிருக்குமிடத்தைத் தெரிந்து கொள்! அம்பிகாபதியிடமிருந்து நயினாருக்கு எவரேனுஞ் செய்திகொண்டு வருகின்றனரா என்பதையும் ஒற்றர்களை வைத்து முயன்று பார்! இதற்கிடையில் யாது நேர்கின்றதெனப் பார்ப்போம். அங்கயற்கண்ணி தன் மகளைக் காணாமல் ஆறாத்துயர்க்கடலில் ஆழ்ந்திருக்குமாதலால், நின் மகள் மேலும் அம்பிகாபதிமேலும் நீ கொண்ட சினத்தையுஞ் சீற்றத்தையும் அங்கே காட்டாதே! என் சொற்கடவாது நடந்தால் நீ கருதியது கைகூடும். சோழன் : அண்ணலார் கட்டளைப்படியே நடந்து கொள்கிறேன். இனி நீங்கள் இல்லஞ் செல்லலாம். (எழுந்து வணங்கக் கூத்தர் போய்விடுகிறார்.) ஐந்தாம் நிகழ்ச்சி : ஏழாங் காட்சி களம் : காட்டுவழி காலம் : வைகறை யாமம் அம்பிகாபதி : (தந்தையை நோக்கி) அப்பா, பாதி மதியாயிருந்தும் அஃதெறிக்கும் நிலவோ மிகவுந் தெளிவான ஒளியினைத் தருகின்றது. அதுகண்டு என்னுள்ளந் திகில் கொள்கின்றதே! அமராவதி : (கம்பரை நோக்கி) ஆம் ஐயனே! இந்த நிலவு வெளிச்சத்தில் என் தந்தையின் படைஞர் நம்மைத் தேடிப் பிடிக்க வருவாராயின் நமது சகடத்தின் உருள்கள் பதிந்த சுவடு நாஞ்செல்லும் வழியினை அவர்க்கு காட்டிவிடுமே! என் செய்வது! கம்பர் : உண்மைதான் குழந்தாய்! ஆனாலும் இப்போதே ஒரு பெருமழை பொழியும்படி நம் இறைவனை வேண்டினால், மழை பொழியும்; அதனால் உருட்சுவடு கட்புலன் ஆகாமற் கலைந்துவிடும். நாஞ் சகடத்தினின்றுங் கீழ் இழிந்து எல்லாம் வல்ல ஆண்டவனை வணங்கி வேண்டுவோமாக! (சகடத்தை நிறுத்தி எல்லாரும் அதனின்றும் இறங்கி வான்நோக்கி வழிபடுகின்றனர்.) கம்பர் : (வழிபட்டபின் பாடுகின்றார்):- காத லிருவர் கழுமுவது வாய்மையெனில் ஏதம் அவர்க் கிழைத்தல் இன்னலெனில் - மேதகவாய்ப் போனநீர் தாங்குசடைப் பெம்மாள் றிருவருளால் வானங்காள் பெய்ம்மின் மழை! (இது பாடிய சிறிது நேரத்திலெல்லாம் வானங் கறுத்துக் குமுறி இடியும் மின்னலுந் தோன்றி மழைத்துளிகள் விழித்துவாங்கவே எல்லாரும் மிக வியப்புற்று இறைவனை வாழ்த்தி, மழைக்கு ஒதுங்கி நின்று அங்கேதும் ஒரு குடிசையுங் காணாமையால் விரைந்து சகடமேறிச் செல்லச் சிறிது தொலைவில் ஒரு பாழ் மண்டபங் காணப்படுகின்றது. அமராவதி : (கம்பரை நோக்கி) ஐயனே! பேருதவி செய்யும் இம்மழைக்கும் அஞ்சி ஓர் ஒதுக்கிடந் தேட வேண்டியிருக் கின்றதே! இக் கானகத்திற்றங்க ஒரு சிற்றில்லுந் தென்படவில்லையே! சகடவலவன் : அம்மணி! கவலைப்படவேண்டாம்! அதோ! சிறிது தொலைவில் ஒரு மண்டபந் தென்படுகின்றது! நிலா வெளிச்சத்தை மழைக்காலிருட்டு முழுவதும் மறைக்குமுன் நாம் அவ்விடம் போய்ச்சேரலாம். (எல்லாரும் மகிழ்ந்து அம்மண்டபம் போய்ச்சேர, மழை பொழிகின்றது) கம்பர் : (வலவனை நோக்கி) அப்பனே! இம்மண்டபம் பாழடைந்த தொன்றாய்த் தோன்றுகிறது! இருண்டு கிடக்கின்றது! தீப்பந்தம் ஏற்றிப்பார்த்துத்தான் உள்ளே தங்கல் வேண்டும் (வல்லவன் தீப்பந்தம் ஏற்றிக்காட்ட எல்லாருந் துப்புரவாயிருந்த ஒருபகுதியிற் சென்று அமர்கின்றனர்.) இன்னும் பொழுது விடிவதற்கு இரண்டொரு நாழிகைதான் இருக்கு மென்று நினைக்கின்றேன். நம்மரசனின் ஏவலாட்கள் நாம் செல்லும் வழியைத் திட்டமாய்த் தெரிந்து பின்றொடர்தல் விரைவில் இயலாது. சகடவலவன் : சாமி, குதிரைகள் மிக விரைவாய் வந்திருக் கின்றன! இப்போது நாம் தில்லைமாநகர்க்கு வடக்கேயுள்ள காட்டிற் குறுக்குவழியாய் வந்திருக்கின்றோம். பெரும் பாட்டையில் வந்தால் நம்மன்னரின் ஏவலாட்கள் பின் றொடரக்கூடுமென்று இப்படிச் செய்தேன். கம்பர் : நன்று செய்தாய்! பொழுதுவிடியும்முன் நாம் இன்னுந் தொலைவான இடம் போய்விடுவது நலம். ஆனால், மழையோ கடுமையாய்ப் பெய்கின்றது. இன்னுஞ் சிறிது நேரத்தில் மழை நின்றுவிடும்; நின்றவுடன் புறப்படலாமா? வலவன் : சாமி, குதிரைகளை இனி ஒரே நெட்டாய்க் கொண்டுபோதல் ஏலாது; இடையிடையே அவைகளின் அலுப்புத் தீர்த்துத்தான் கொண்டுபோக வேண்டும். கம்பர் : அன்பனே! எங்கனமாவது நீ எங்களை வேங்கட மலைப் பக்கங் கொண்டு போய்ச் சேர்த்து விட்டால், அங்கிருந்து வேறு குதிரைகள் மாற்றிக் கொண்டுசெல்லலாம். அங்கே எனக்கு வேண்டிய உதவி செய்யத்தக்கவர்கள் இருக்கின்றார்கள். நாம் இனிச் செல்வது பகற்பொழுதிலா கையால் ஆள் வழக்கம் மிகுதியாயில்லாத வழியே சகடத்தைச் செலுத்தப் பார்! வலவன் : நல்லதப்படியே சாமி! குறுக்கு வழி மழைத் தண்ணீரால் நனைந்து சேறாயிருக்குமானால், குதிரைகள் சகடத்தை விசையாய் இழுத்துச் செல்லமாட்டா. எல்லாவற்றிற்கும் பொழுது விடிந்தபின் புறப்படுவம். அதுவரையிற் சிறிது ஓய்வாக உறங்குங்கள்! (வலவனைத் தவிர எல்லாரும் அயர்ந்துறங்குகின்றனர்.) அம்பிகாபதி : (துடிதுடித்து) ஐயோ! அப்பா! ஏதோ ஒரு பெரும்பாம்பு வந்து என் காலைக் கடிக்கின்றதே! ஐயோ! அமராவதி! காவேரி! உங்களை இக்கானகத்தில் விட்டு யான் இறக்க நேர்ந்துவிட்டதே! என் செய்வேன் தெய்வமே! (வலவன் தீப்பந்தத்துடன் ஓடிவந்து பாம்பை அடித்துக் கொல்கின்றான். காவேரியும் அமராவதியுந் திகில் கொண்டெழுகின்றனர்.) அமராவதி : (தன் செயலற்றவளாய் எழுந்து கணவனைத் தன் மடிமேற் சார்த்திக் கொண்டு புலம்புகின்றாள்.) உயிரிற் சிறந்தவென் கேள்வனுயிர் உயல் வேண்டிச் செயிருற்ற தந்தையெனுங் கூற்றுவனைத் தீர்ந்துவந்தேன், துயிலுற்ற நேரத்திற் றுணைவனுயிர் கவர்தற்கிங் கெயிறுற்ற வெவ்வரவை ஏவியதென் னிறைவனே! பெண்ணென்றாற் பேயு மிரங்குமென்பர் பேருலகில் துண்ணென்று பேயோ டுடனாடு தொழிலோனே! எண்ணென்று மென்மட்டில் நின்னெஞ்சம் இரங்கிலையால், மண்ணென்று மடிந்திடுவென் அதுகண்டு மகிழ்தியோ! இரக்கமிலி நின்கணவன் எவ்வுயிரும் மடிப்பவன் நீ புரக்கவுயிர் தமையென்றும் பெருகுமருள் பொழிபவளால், துரக்கவல எவ்வினையுந் தோகைநின தின்னருளைக் கரக்க வெமக் கெவ்வாறு நின்னெஞ்சிற் கருதினையோ! (இவ்வாறு அமராவதி புலம்பிச் சோர்ந்து விழக் காவேரி கலங்கி அவளைத் தன் மடிமேற் றாங்குகின்றாள்.) கம்பர் : குழந்தாய் அமராவதி, கலங்காதே! இதோ பார்! கண்ணுதலோன் தண்ணருளால் நின் கணவன் துயின்றெழு பவன் போல் உயிர்பெற் றெழுந்திடுவான்! அமராவதி : (இச்சொற் கேட்டதும் விழித்தெழுந்து) மாமா, என் கணவன் பிழைத்துக் கொள்வாரா? உயிர் வந்துவிடுமா? (கணவனை உற்று நோக்க) கம்பர் : (பாடுகின்றார்) :- மங்கை யொருபாகன் மார்பிலணி யாரமே பொங்கு கடல்கடைந்த பொற்கயிறே - திங்களையுஞ் சீறியதன் மேலூருந் தெய்வத் திருநாணே ஏறிய பண்பே யிறங்கு. (உடனே அம்பிகாபதி துயின்றெழுந்தவன் போலெழுந்து, தந்தையைப் பணிந்து, அமராவதியை அணைந்து, தன் தங்கை காவேரியின் முகத்தைத் துடைக்கின்றான்) வலவன் : (கம்பரின் அடிகளில் விழுந்து வணங்கி) புலவர் பெருமானே, தாங்கள் தெய்வம்! எவருடைய துணை யும் உதவியுங் கிட்டாஇக் கடுங்காட்டில் தாங்களன்றோ தெய்வமாயிருந்து எங்களைக் காப்பாற்றினீர்கள்! தாங்களே கண்கண்ட தெய்வம்! கம்பர் : அன்பனே! அங்ஙனஞ் சொல்லாதே! தேவர்களைக் கொல்ல எழுந்த கொடிய நஞ்சைப் பருகி அவர்களைக் காத்த நீலமணி மிடற்றானருளாலன்றோ என் மகன் பிழைத்தான். ஆதலால், நாம் எல்லாம் அவனைப் பாடிப் பரவுவோமாக! அமிழ்துண்டு சாவாமை வேண்டி அருவரையைச் சிமிழ்கின்ற பாந்தளாற் றிருப்பாற் கடல்கடைந்தோர் உமிழ்நஞ்சாற் றீதெய்த உளமிரங்கி யந்நஞ்சை அமிழ்தென்று பருகியவர் ஆருயிரை அளித்தோய் நீ! எவ்வுயிர்க்கும் இறப்பினையும் பிறப்பினையும் இசைத்தோய் நீ! அவ்வுயிர்போல் இறத்தலிலும் பிறத்தலிலும் அலைகிலையால்; இவ்வுலகிற் பிறந்தவுயிர் இறைவநினை யுறுங்காறும் ஒவ்வுமா புரப்போனும் உமைகேள்வ நீயன்றோ! அடித்திடினும் ஒருகையால் அணைத்திடுதி மறுகையால் இடித்துரைக்குந் தந்தையுளத் தேதேனுந் தீதுண்டோ? மடித்திடுதற் கெண்ணியஎம் மன்னனையும் பிழைப்பித்து நடித்துயிரைக் காப்பவன்நீ நங்களையுங் காத்தனையே! (இதற்குட் பொழுது விடியச் சகடமேறிப் புறப்பட்டு, இடையிடையே தங்கிப் பத்தாம் நாள் வேங்கடமலைப் பக்கமாயுள்ள காட்டுவழியே செல்கின்றனர். பகலவன் மேல்பால் மறையும் வேளையிற் கள்வர் கூட்டமொன்று வந்து இவர்களை வளைத்துக் கொள்கின்றது.) வந்த கள்வரிற் றலைவன் : அடே பயல்களா! இந்தச் சகடம் ஓட்டியையும் இந்தக் கிழவனையும் மரத்தோடு சேர்த்துக் கட்டிவையுங்கள்! இந்தக் குமரிகள் இரண்டு பேரும் நிரம்ப அழகாயிருக்கின்றார்கள்! இவர்களை நம் கொற்ற வனிடங் கொண்டுபோய்ச் சேர்ந்தால் அவன் நம்மை மெச்சிக் கொண்டு இவர்களை வைப்பாட்டிமாராக வைத்துக் கொள்வான். (அம்பிகாபதியைச் சுட்டி) இந்த இளம்பயல் பழுதில்லா அழகுள்ளவனாய் இருக்கிறான். இவனைக் கையுங்காலுங் கட்டிக் கொண்டுவாருங்கள்! நம்ம காளியம்மன் திருவிழாப் பூசைக்கு இவனை வெட்டிப் பலி யூட்டலாம்! அமராவதியுங் காவேரியும் (இச்சொற்களைக் கேட்டுத் திகில் கொண்டு நடுங்கி)- ஐயா! எங்களுக்கொன்றுந் தீங்கு செய்யாதீர்கள்! எங்கள் கையிலுள்ள பொருள்களை எல்லாம் உங்களுக்குக் கொடுத்து விடுகிறோம்! எங்களை வழிபோகவிட்டுவிடுங்கள்! கள்வர் தலைவன் : ஏ! சிறுக்கிகளா! உங்கள் பொருளை மட்டும் அல்ல, உங்களையும் எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். (இவன் குறிகாட்டி ஏவ, அவன் ஆட்கள் ஆண்பாலார் மூவரையும் பிடித்துக்கட்ட அணுகுகின்றனர்.) கம்பர் : (இறைவனை நினைந்து) நின்னால் வருந்துணையை யல்லாமல் நின்னின்வே றென்னாவி என்றுமே எண்ணவிலை - பொன்னான வெள்ளச் சடையாய் வெருட்டி முருக்கவருங் கள்ளரைக் காலற்கே காட்டு. (இச் செய்யுளைப் பாடிய அளவிலே தலைவனைத் தவிர நெருங்கி வந்த கள்வரனைவரும் உணர்வற்றுக் கீழே விழுந்துவிடுகின்றனர். அதுகண்ட தலைவன் நடுநடுங்கிக் கம்பர் காலில் வீழ்ந்து வணங்குகின்றான்.) கள்வர் தலைவன் : ஆண்டவனே! தாங்கள் தமிழறிவிற் சிறந்த பெரியாரென்பதைத் தெரியாமற் பெரும் பிழை செய்துவிட்டேன். இதனை எங்களரசன் அறிந்தால் துண்டு துண்டாக வெட்டிப்போடுவான். கம்பர் : (வியந்து) அப்பா! நுங்கள் அரசனது ஏவ லாற்றானே நீங்கள் இங்ஙனம் வழிப்பறி செய்ய வந்தீர்கள்? கள்வர் தலைவன் : ஆம், ஆண்டவனே! ஆனாலுந் தமிழுணர்ந்த வர்களுக்கு ஏதொரு தீங்கும் புரியாமல், அவர்களுக்கு வேண்டும் உதவிகளைச் செய்து அவர்களைப் பணிந்து வழிவிடுக்கவேண்டுமென்பது எங்கள் மன்னனின் கடுமையான கட்டளை! கம்பர் : அவ்வாறாயின், நுங்கள் மன்னன் பழைய கள்வர் கோமான் புல்லியின் கால்வழியில் வந்தவனா? கள்வர் தலைவன் : ஆம், ஐயனே! எங்கள் மன்னன் தமிழ் உணர்ச்சி உடையவர். எங்கள் ஊரில் தமிழ்ப் பயிற்சியில்லாதவர்கள் எவருமேயில்லை. மேலும் எம் மன்னன் தமிழ்ப் புலவர் கேட்டவைகளைக் கேட்டபடியே நன் கொடையாக அளிப்பவர். அவரை இதோ சிறிது நேரத்தில் இங்கழைத்து வருகின்றேன். (விரைந்து போய் விடுகின்றான்.) கம்பர் : அம்பிகாபதி பார்த்தனையா? கள்வர்களின் மன்னன் தமிழ்ப் புலமை வாய்ந்தவர்கள் பால் வைத்திருக்கும் அன்பும் பணிவும் உதவியும் நந்தமிழ் நாட்டரசர்கள்பாலும் இல்லையே! அம்பிகாபதி : ஆம், அப்பா, நம்மரசர்கள் தமக்கு மேற்பட்டவர்களில்லை யென்னும் இறுமாப்பில் அமிழ்ந்தித், தாங்கருதியதைத் தாங்கருதியாங்கே முடிக்குங் கடப்பாடு உடையராயிருக்கின்றனர்; அதனால், அவர்கட்குத் தமிழ்ப் புலவர்பால் அன்பும் இரக்கமும் எங்ஙனம் உண்டாகும்? நல்லதப்பா, கள்வர் மன்னன் வந்து தம்மவர் இத்தனை பேரும் இறந்து கிடப்பதைக் கண்டால் என் ஆகுவானோ! என் செய்வனோ! கம்பர் : இவர்கள் உயிரிழந்து சாகவில்லை; உணர்வும் உயிர்ப்பும் அற்ற ஆழ்ந்த துயிலில் இருக்கின்றார்கள். அம்பிகாபதி : அங்ஙனமாயின், இவர்களை மீண்டும் உயிர்த்தெழச் செய்யலாமா? கம்பர் : செய்யலாம்; ஆனால், இன்னும் இரண்டரை நாழிகைக்குமேல் இதே துயிலில் இருப்பார்களானால், இவர்களனைவரும் இறந்துபோய் விடுவார்கள்! (கள்வர் தலைவனுடன் கள்வர் கோமான் வருகின்றான்) இருவரும் (கம்பர் காலில் விழுந்து வணங்கி) - புலவர் பெருமானுக்கு அறிவிலேம் செய்த பெரும் பிழையைப் பொறுத்தருளல் வேண்டும். அப்பிழைக்காக எம்மவர் இத்தனைபேருந் தங்கள் வசைக்கு ஆளாகி இறந்தொழிந்தது பொருத்தந்தான்; இவர்கள் செய்த பிழைக்குப் பொறுப் பாளிகள் யாங்களேயாதலால், யாங்களும் இறந்தொழியும் படி வசைபாடி விடுங்கள் பெருமானே! கம்பர் : (மனமிரங்கி) கோவே, வருந்தாதே! இறைவ னருளால் இவர்கள் மீண்டும் உயிர்பெற்றெழுவார்கள் (பாடுகிறார்) : நின்னால் வருந்துணையை யல்லாமல் நின்னின்வே றென்னாவி என்றுமே எண்ணவிலை - பொன்னான வெள்ளச் சடையாய் வெருண்டு திருந்தியவிக் கள்ளரைக் காவலற்கே காட்டு. (இவ்வாறு பாடியவளவிலே நிலத்தே வீழ்ந்துகிடந்த கள்வரனைவரும் உயிர்த்தெழக் கள்வர்கோமான் மீண்டுங் கம்பரடிகளில் வீழ்ந்து) கள்வர் கோமான் : ஐயனே! யாங்கள் எல்லேமுந்தங்கட்குந் தங்கள் கால்வழியே வருவார் அனைவர்க்கும் வழிவழி அடிமை, ஆண்டவனே! அடியேங்கட்கு யாது கட்டளை? (உயிர்த்தெழுந்த அனைவரையுங் கம்பர் காலில் வீழ்ந்து வணங்கச் செய்கின்றான்.) கம்பர் : (வணங்கியெழுந்தாரொடு நின்ற கள்வர் கோமானை நோக்கி) அப்பனே! ஆறலைக்கும் இக்கொடுந் தொழிலை நீயும் நின் வழியில் வருவாரனைவரும் அறவே விட்டொழித்தல் வேண்டும். கள்வர் கோமான் : எல்லாம் வல்ல ஆண்டவனறிய இத்தீத் தொழிலை யாங்கள் இனிக் கனவிலும் நினையோம். ஏழையெளியவர்கள் தேடிய சிறுபொருளைப் பல்வகைச் சூழ்ச்சிகளாற் கவருஞ் செல்வர்களின் பெரும் பொருளையும், வறியார்க் கிரங்கி ஈயாதவர் செல்வத்தையும், அறத்திற்குங் கற்றார்க்கும் நல்காதவர் பொருட்டிரளையுங் கவர்ந்து மிடிப்பட்டார்க்குங் குறையுடையார்க்கும் அவற்றைப் பயன்படுத்தவே இத்தீச் செயலை இதுகாறுஞ் செய்து வந்தோம், பெருமானே! கம்பர் : கோமானே! இரக்கமும் அறநெஞ்சமும் இல்லாத் தீயசெல்வரின் பொருளைக் கவர்தற்கு இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறும் இருக்கையில், தமிழன்பர் களாகிய நீங்கள் ஏன் இப்பழிக்கும் பாவத்திற்கும் ஆளாக வேண்டும்? அழக் கொண்ட எல்லாம் அழப்போம் ஆதலால் அதன் பொருட்டு இத்தீவினையை இனி எக்காலும், எக்காரணத்தாலும் நீங்கள் மேற்கொள்ளலாகாது. கள்வர் கோமான் : தங்கள் கட்டளைப்படியே இனித் தவறாமல் நடப்போம். புலவர் பெருந்தகையே, எல்லீரும் அடியேன் சிறு குடிலுக்கு எழுந்தருளி உணவருந்தி வழி வந்த அயர்வினைத் தீர்த்துக் கொள்ள வேண்டுகின்றேன். (எல்லாரும் அவனது இல்லத்திற்குச் செல்ல, அவன் அவர்கட்கு வேண்டுவனவெல்லாஞ் செய்து அகமும் முகமும் மலர்ந்து விருந்தோம்ப அங்கே மூன்று நாட்கள் தங்கிய பின்) கம்பர் : அன்பனே! நீ எம்மை அன்புடன் விருந்தோம்பிய திறத்தை என்றும் மறவேம். இனி. யாங்கள் குறித்த இடத்திற்குச் செல்ல விடை கொடு. கள்வர் கோமான் : புலவர் பெருமானே! தாங்கள் செல்ல வேண்டும் இடம் இன்னதென்பதை அறிந்திலேன். அது வல்லாமலும, புலவர் பெருமானைப் பற்றி வரலாறும் பெரு மானுடன் வந்திருப்பவர் வரலாறுஞ் சிறிதுந் தெரியப் பெற்றிலேன். இவற்றை யான் தெரிவதிற் குற்றமில்லையானால் ......... கம்பர் : குற்றம் ஏதுமில் அப்பனே. என் பெயர் ஏகம்பன்; சொற் சுருக்கத்தாற் கம்பன் என்று வழங்கப்படுகின்றேன். (தம்மவரைச் சுட்டி) இவன் என் மகன் அம்பிகாபதி; இம்மங்கை அம்பிகாபதியின் மனைவி; இவள் என் புதல்வி காவேரி. யாங்கள் சோழ மன்னன் அவைக்களத்திற் புலவர் களாயிருந்தோம். ஒரு காரணத்தை முன்னிட்டு ஓரங்கல் வேந்தன் பிரதாபருத்திரனிடஞ் செல்கின்றோம். சிறிது காலம் வரையில் எங்களைப் பற்றிய செய்தி எவர்க்குமே தெரியலாகாது. கள்வர் கோமான் : (கைகூப்பி வணங்கியழுது) - என் தெய்வமே! யான் முற்பிறவியில் ஆற்றிய தவமன்றோ தங்களுருவாய் என் கண்ணெதிரே தோன்றலாயிற்று. தங்கள் அருமைத் திருப்பெயரையுந் தங்களருமைப் புதல்வரின் திருப்பெயரையும் நீண்ட நாளாய்க் கேள்வியுற்றுத் தங்களைக் கண்டு களிக்கும்பேறு வாய்க்குமா என்று ஏங்கிக் கிடந்த ஏழையேனுக்கு எதிர்பாராது கிடைத்த இத் தெய்வக் காட்சியை யான் காண்பது கனவா! நனவா! (என்று சொல்லி திகைத்து நிற்கக்) கம்பர் : (அவனது பேரன்பினை வியந்து) அப்பனே! உனது பேரன்பே எமது புல்லியமக்களுருவினை இவ்வளவு உயர்த்துப் பேசச் செய்தது. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? எப்போதும் யாங்கள் நின் அன்பை வியந்து நின்னை நினைந்த படியாய் இருப்போம். நல்லது யாங்கள் செல்ல விடை கொடு! கள்வர் கோமான் : தங்கள் பிரிவினை ஆற்றகில் லேன் தங்களை மீண்டுங் காணும்பேறு கிட்டுமோ? (கண் கலங்குகின்றான்) கம்பர் : அன்பனே! வருந்தற்க! இப்போது நம்மை ஒருங்குகூட்டிய தெய்வம் மீண்டும் நம்மை ஒன்று கூட்டலாமன்றோ? கள்வர் கோமான் : ஆம் ஐயனே! தாங்கள் பூட்டிவந்த குதிரைகள் நெடுவழி வந்தமையால் மிகக் களைத்துப்போய் விட்டன. என்னுடைய குதிரைகளைப் பூட்டிச் செல்லுங்கள்! இன்னுஞ் செல்லவேண்டிய வழி நெடிதாக இருத்தலால் என்னுடைய குதிரைகள் இளையாமல் மிக விரைவில் வண்டியை ஈர்த்துச் செல்லும். இன்னும் அடியேன் செய்ய வேண்டும் பணியைக் கட்டளையிடுங்கள்! கம்பர் : கோமானே! இதுகாறும் நீ அன்புடன் செய்த பணியே போதும். வேறு ஏதும் வேண்டுகில்லேம். (அவனும் அவன் சுற்றமும் அடி வீழ்ந்து வணங்கக், கம்பர் தம்மவருடன் புதிய குதிரைகள் பூட்டிய சகடத்துள் ஏறிப் போகலாயினர். இடையிடையே தங்கிப் பதினைந்து நாட்களுக்குப் பின் ஓரங்கல் நகர்போய்ச் சேர்கின்றனர்.) ஐந்தாம் நிகழ்ச்சி : எட்டாங் காட்சி களம் : பிருதாபருத்ரன் அரண்மனையின் பூங்கா மண்டபம் காலம் : காலை பத்து நாழிகை பிரதாபருத்ரன் : அடே மாதவா! யாது, செய்தி கொணர்ந்தனை? காவலாளி : மன்னர் பிரான் நீடு வாழ்க! தென்னாட்டி லிருந்து கம்பர் என்னுந் தமிழ்ப் புலவர் தங்களைக் காண வந்து நிற்கின்றார். பிரதாபருத்ரன் : ஆ! கம்பரா! அவருடன் வேறெவரேனும் வந்திருக்கின்றனரா? காவலாளி : ஆம், அரசே! அவரின் மகன் போலக் காணப்படும் ஓர் இளைஞரும் இளைய மங்கையர் இருவரும் அவருடன் வந்திருக்கின்றனர். பிரதாபருத்ரன் : அவர்களைப் பணிந்து உடனே இங்கழைத்துவா (அங்ஙனமே அவன் போய் அவர்களை அழைத்து வந்துவிட, அரசன் கம்பரை வணங்கி) புலவர் பெருமானே, தாங்கள் அடியேனின் சிறுகுடிலுக்கு எழுந் தருள யானும் என் சுற்றமும் யாது தவஞ் செய்தோம்! தாங்கள் இராமாயணத் தைத் தமிழ்ப் பாவிற் பாடித் திருவரங்கத்தில் அரங்கேற்றிய சிறப்புகளை யெல்லாந் தென்னாட்டிலிருந்து இங்கு வந்து செல்லும் புலவர்மணிகள் பலர் பலகாலுஞ் சொல்லக் கேட்டு அளவிலா மகிழ்ச்சியடைந்தேன். பிறவிக் குருடன் சடுதியிற் குருடுதீர்ந்து கட்பார்வை பெற்றாற்போல, யான் இப்போது தங்களைக் கதுமெனக் காணும் பேறு பெற்றேன். யான் தங்கட்குக் குற்றேவல் புரியத் தாங்கள் என் சிறு குடிலிலேயே தங்கியிருக்கத் திருவுளம் பற்றல் வேண்டும். கம்பர் : (அது கேட்டுளங்களித்து) அவனி முழுதுண்டும் அயிரா வதத்துன் பவனி தொழுவார் படுத்தும் - புவனி யுருத்திரா வுன்னுடைய ஓரங்கல் நாட்டிற் குருத்திரா வாழைக் குழாம் பிரதாபருத்ரன் : (அவரை வணங்கி) பெருமானே! தங்கள் திருவாயால் இவ்வளவு யான் உயர்த்துப் பாடப் பெறுதற்கு என்ன தவஞ்செய்தேன்! பல நாட்களாக நெடுவழி வந்தமையால் தாங்களும் உடன்வந்தவர்களும் மிகக் களைத்துப் போயிருக்கிறீர்கள். (காவலாளியைப் பார்த்து) அடே மாதவா, நமது வேனில் மண்டபத்தருகிலுள்ள மாளிகையில் இவர்கட்கு இருக்கை அமைத்து, அங்குள்ள ஏவலர்கள் இவர்கட்கு வேண்டும் எல்லா வசதிகளுஞ் செய்யும்படி கற்பித்துச் சுருக்கென வா! (அவன் வணங்கிப் போகக் கம்பரை நோக்கி) தங்கள் பின்னே ஒடுங்கி நிற்கும் இவர் தங்கள் புதல்வரென்று கருதுகின்றேன். கம்பர் : வேந்தே, நீ வாழ்க! இவன் என் மகன் அம்பிகாபதி; அதோ அங்கே ஒதுங்கி நிற்கும் மங்கை என் மகள் காவேரி; அவளுக்குப் பின்னே சிறிது மறைந்து நிற்கும் நங்கை என் மருமகள், அம்பிகாபதியின் மனைவி, சோழ மன்னனன்றன் அருமைப்புதல்வியார்; இவரைப் பாதுகாத்தற் பொருட்டே சோழமன்னன் சீற்றத்திற் கஞ்சி நும்மைப் புகலிடமாய் அடைந்தோம். பிரதாபருத்ரன் : புலவர் பெருமானே, இப்போதெல்லாம் விளங்க அறிந்தேன். இன்னும் இதன் வரலாறுகளை யெல்லாம் பின்னர்க் கேட்டறிவேன். தாங்கள் சிறிதும் அஞ்சல் வேண்டாம். தங்களில் எவர்க்கும் எவரும் எத்தகைய தீங்கும் இழைக்க யான் அதனை உயிருடனிருந்து காணேன். தாங்களெல்லாம் உணவெடுத்து அயர்வு தீர்த்துக் கொள்ளுங் கள். இன்று மாலையில் தங்களை மீண்டும் வந்து காண்பேன். (வணங்கி வேத்தவைக்குப் போய் விடுகின்றான்.)(கம்பரும் அவர் மக்களும் மருகியுமெல்லாம் அகம் மகிழ்ந்து நிற்கக் காவலாளி அவர்களை வேனில் மண்டப மாளிகைக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள ஏவலர் பால்விட, அவர்கள் அவர்களை வணங்கி, வரவேற்று, அவர்கட்கு அங்கெல்லா வசதிகளும் விரைந்து செய்து இருக்கை அமைக்கின்றனர்.) ஐந்தாம் நிகழ்ச்சி : ஒன்பதாங் காட்சி களம் : சோழன் அரண்மனைப் பூங்கா காலம் : விடியற்காலம் (ஒட்டக்கூத்தருஞ் சோழனும் உரையாடுகின்றனர்.) கூத்தர் : அப்பா, நான் நினைத்த படியேயாயிற்று, கம்பர் நம்மினும் வலிய ஒரு வேந்தனது துணையை நாடுவரென்றேனன்றோ? பிரதாபருத்ரன் எத்தகையவ னென்று நினைக்கின்றாய்? சோழன் : ஆம், அவன் மிகவலியவன்றான். தமிழறிவிலுஞ் சிறந்தவனென்று தமிழ்ப் புலவர்களாலும் பாராட்டப்படுகின்றான். அதனால், அவன் கம்பரைப் பாதுகாத்து அவர் வேண்டும் உதவிகளெல்லாம் முன்நின்று செய்வானென்பதிற் சிறிதும் ஐயமில்லை. அவனை நாடி அவ்வளவு தொலைவிலுள்ள அவனது ஓரங்கல் நாட்டுக்குச் சென்ற அவரையும் அவர்தம் மக்களையும் நம் ஒற்றர்கள் மூன்று திங்களாகத் தேடியுங் கண்டு பிடித்தார்களில்லையே! கூத்தர் : நம் ஒற்றர்கள்பாற் குற்றமில்லை. கம்பரும் அவர் மக்களும், இந்நகரைவிட்டு வெளியேறின இரவில், அவர்கள் சென்ற வண்டியின் சுவடு கலையும்படி பெருமழை பெய்த தன்றோ? வழிச்சென்ற அடையாளந் தெரியாமல், வழிச்சென்ற வரைக் கண்டுபிடித்தல் இயலுமோ? சோழன் : உண்மை, உண்மை. அம்பிகாபதியினிடமிருந்தும் நம் அமைச்சர் மகனுக்குச் செய்திகொணர்ந்த தூதுவனாலன்றோ அவனும் அவன் தந்தையும் அமராவதியும் இருக்குமிடந் தெரியலானோம்; இல்லையேல் வடுக நாட்டுக்குச் சென்ற அவர்கள் இருக்குமிடத்தைக் கண்டறிதல் எளிதில் இயலாததேதான்! பார்த்தீர்களா! அம்பிகாபதி, தானும் அமராவதியும் மற்றவர்களுஞ் சென்று சேர்ந்திருக்கு மிடத்தை நமக்கெல்லாந் தெரிவிக்கும்படி அஞ்சா நெஞ்சத்துடன் எழுதியிருக்கிறான்! (பல்லைக் கடித்துக் கையைப் பலகை மேல் அறைகின்றான்.) கூத்தர் : அப்பா, சீற்றங்கொள்ளாதே. தாம் சார்ந்திருக்குந் துணையின் வலிமை தெரிந்தவர்களுக்கு அத்தகைய மனத்துணிவு தோன்றுதல் இயற்கையேகாண்! சோழன் : ஆம், என் குலத்தினுயர்வும் அரசின் பெருமையுங் குலைந்துவிட்டனவே! என் மகளை ஓர் ஒச்சப்பயல் உடன்கொண்டு போயதை என் போன்ற ஓர் அரசன் அறிவது எமக்கு எவ்வளவு மானக்கேடு! இதற்கென் செய்வது! கூத்தர் : அப்பனே, பதறாதே! பதறாத காரியஞ் சிதறாது நீ பிரதாபருத்ரனுக்கு ஒரு திருமுகம் போக்கு என் மகளுக்கும் அம்பிகாபதிக்கும் உண்டான காதலன்பின் திறத்தை அறியாமல் யான் செய்த பிழையால் அவர்கள் தங்கள்பால் அடைக்கலம் புகலாயினர். இங்கு எம் அரண்மனையில் நேர்ந்திருக்கும் மனக்கலக்கமும் பெருங்குழப்பமும், அவர்க ளிருவரையும் இங்குவருவித்துத் திருமணஞ் செய்வித்து விட்டாலன்றித் தீரா. மேலும், புலவர் பெருமான் கம்பர் இல்லாத எனது அவைக்களம் மதியிழந்த வான்போற் பொலிவிழந்து புலர்கின்றது! ஆதலால், தாங்களே அவர்களெல்லாரையும் இங்கழைத்து வந்து, எம் புதல்வியை எங்கண்ணும் மனமுங்களிக்க அம்பிகாபதிக்கு மணஞ் செய்வித்து, எமக்கும் எமதரசுக்கும் வந்த பழியையும் இழிவையும் போக்கியருளல் வேண்டும். அமராவதி நுங்கள் மகள். யான் நுங்கள் உடன் பிறப்பு என்ற அத்திருமுகத்தில் எழுதிவிடு! சோழன் : அண்ணால்! பிரதாபருத்ரன் கூடவே வருவானானால், யான் அம்பிகாபதியை ஒறுத்தல் இயலாதே! கூத்தர் : பிரதாபன் பேரரசனாதலால் அவன் சடுதியில் அவர்களுடன் வாரான்; அவர்களை இங்கே முன் விடுத்துச், சிலநாட்களின் பின்னர்த்தான் வருவான்; அதற்குள் நீ கருதியதை முடித்துவிடலாம். யானுங் கம்பருக்கு ஒரு திருமுகம் வரைகின்றேன். சோழன் : நல்லது, தங்கள் கட்டளைப்படியே செய்கின்றேன் பெருமானே! (அரசன் எழுந்து வணங்கக் கூத்தர் போய்விடுகின்றார்.) ஐந்தாம் நிகழ்ச்சி : பத்தாங் காட்சி களம் : பிரதாபருத்ரனது வேனில் மண்டபம் காலம் : குறைநிலாக் காலத்தொரு நாள் மாலை அம்பிகாபதி : கண்மணி அமராவதி! வானகத்து வயங்கும் இப்பாதிமதியினைப் பார்த்தனையா? அஃதுன் ஒளி விளங்கு நளிர் நுதலையே ஒத்துளதுகாண். அமராவதி : இல்லை பெருமான், அஃதென் கழுத்தை வெட்டுவதற்குக் கூற்றுவன் ஏந்திய கூர்ங்கத்தியாகவன்றோ தோன்றுகின்றது! அம்பிகாபதி : (கலங்கி) என் ஆருயிர்ச் செல்வி! சில நாட்களாக நீ ஏன் இங்ஙனம் உளங்கசந்தே பேசுகின்றனை? நமக்கேதொரு குறையும் இல்லாமல் இம்மன்னர் பெருமான் நம்மைப் பேரின்ப நிலையில் வைத்திருக் கின்றனரன்றோ? அமராவதி : (கண்ணீர் வடித்து) என் தெய்வமே! சில நாட்களுக்கு முன் யான் உங்களைப் பற்றிக் கண்ட கொடிய கனவு என் உள்ளத்தைப் பிளந்து பேதுறுத்துகின்றது! அஃதென்னால் ஆற்ற முடியவில்லை! அதனை முன்னமே உங்களுக்குத் தெரிவித்தால் நீங்களும் ஆற்றாமைப்படுவீர்களென்று என் உள்ளத்தே அதனை அடக்கிவைத்தேன். அம்பிகாபதி : கண்மணி, ஒரு துன்பம் வரும்முன் அதன் வரவினை நாம் எதிர்பார்த்திருந்து மாழ்குவது, வராத அத்துன்பத்தை வருவித்ததாய் முடியுமன்றோ? மேலும், நீ கண்டது கனவுதானே; அக்கனா நிகழ்ச்சி நினது கலவரத்தால் வந்ததென்பதில் ஐயமே யில்லை! (கம்பரும் பிரதாபருத்ரனும் வருகின்றனர், அம்பிகாபதியும் அமராவதியும் அவர்களை வணங்கி நிற்க; வந்த அவர்கள் இருக்கையில் அமர்ந்து அவர்களையும் இருக்கையில் அமர்த்துகின்றனர்.) பிரதாபன் : (அம்பிகாபதியைப் பார்த்து) இளம் புலவரேறே! யான் நல்ல செய்திகொண்டு வரலானதற்கு அகங்களிக்கின்றேன். நுங்கள் தந்தையாரும் அங்ஙனமே நல்ல செய்தி கொணர்ந்திருக்கின்றனர். (இருவரும் தாம் கொணர்ந்த ஓலைச்சுருளினை அம்பிகாபதி கையிற் கொடுக்கின்றனர்.) அம்பிகாபதி : (முதலிற் சோழமன்னன் விடுத்த ஓலைச் சுருளைப் பிரித்துப் பார்க்கின்றான். அப்போதங்கு வந்த அவன் தங்கை காவேரியும் உடனிருந்த அமராவதியும் அவன் முகத்தை உற்றுநோக்குகின்றனர்.) அரசர் பெரும! எம்மன்னர் பிரான் வரைந்திருக்கும் இத்திருமுகத்திற் கண்டபடி அவர் செய்வது உறுதியெனத் தங்கள் திருவுள்ளத்திற் றோன்றினால் தங்கள் கட்டளைப்படி நடக்கக் காத்திருக்கின்றோம். பிரதாபன் : தமிழ்ச்செல்வமே, தங்கள் மன்னர் கூற்று உறுதியே யென நம்புகின்றோம். தம் அருமை மகளைக் காணாது அரசியார் பெரிதும் ஆற்றாது புலம்புவரென்பது திண்ணந்தானே. அரசியாரின் ஆற்றாமைக்கிரங்கியாவது நம் நண்பர் தம் புதல்வியாரைத் தங்கட்குத் திருமணஞ் செய்து கொடுப்பரென்றே கருதுகின்றோம். (எல்லாரும் மகிழ்கின்றனர்.) அம்பிகாபதி : ஓ! இவ் ஓலை என் உள்ளத்தை இரு கூறாய்ப் பிளக்கின்றது. என் பொருட்டு என் ஆருயிர் நண்பர் நயினார் பிள்ளைஅரசனாற்சினந்து சிறையிடப்பட்டிருக்கின்றன னென்றும், யான் என் காதலி அமராவதியுடன் திரும்பிவந்தா லன்றி அவன் சிறைவிடப் படானென்றும், உடனே திரும்பி வருவது எல்லார்க்கும் நன்றாம்படி ஏற்பாடு செய்யப் பட்டிருக்கின்ற தென்றும், ஆகவே நாங்கள் எல்லாம் அச்சமின்றி வரலா மென்றும் ஒட்டக்கூத்தர் என் தந்தை யார்க்கு வரைந்திருக்கின்றார். (இச் செய்திகேட்டு அமராவதி வெருக்கொண்டுங் காவேரி கண் கலங்குதல் கண்டு ஏதுங் கூறமாட்டாமல் மயங்கியிருக்கின்றாள். அம்பிகாபதி தன் தங்கையை நோக்கி) அருமைக் குழந்தாய்! என் நண்பன் இடர் உறயான் உயிரோடு இரேன்! என் உயிரை இழந்தாவது அவனைச் சிறையினின்றும் விடுவிப்பேன்? காவேரி : அண்ணா, அண்ணா, யான் எதற்கென்று வருந்துவேன்! இருதலைக் கொள்ளியிடைப்பட்ட எறும்பாயினேனே! (தேம்பித் தேம்பி அழுகின்றாள்; அமராவதி அவள் கண்களைத் துடைத்து அமர்த்துகின்றாள்.) பிரதாபன் : அருமைக் குழந்தைகாள்! நீங்கள் எதற்குமே மனங்கலங்க வேண்டாம். உங்களில் எவர்பாலுங் குற்றமில்லை. ஆதலால், எல்லாம்வல்ல இறைவன் உங்களைப் பாதுகாப்பான். ஊழ்வினையால் ஏதேனுந் தீங்கு நேரின், என் உயிரை இழந்தாயினும் அதனைத் தீர்ப்பேன்! (எல்லாரும் வேந்தனைப் பணிந்து வாழ்த்துகின்றனர்) நீங்கள் அனைவீரும் தஞ்சைமா நகருக்குப் புறப்பட வேண்டும் ஏற்பாடுகளை விரைந்து செய்யுமாறு அமைச்சரை ஏவுகின்றேன். (இதற்குள் ஒரு தூதுவன் போந்து மன்னனை வணங்கி ஒரு திருமுகத்தை நீட்ட, மன்னன் அதனைப் பிரித்துப் பார்த்து) ஓ! இஃதென்ன ஆருயிர் நண்பன் கூர்ச்சர மன்னனிடமிருந்து வந்திருக்கின்றது! மகமது கோரி என்னுந் துலுக்கர் மன்னன் கூர்ச்சர நாட்டினைக் கைப்பற்றுதற்குப் படையெடுத்து வருகின்றனனென்றும், அவனை யெதிர்த்து நின்று ஓட்டு தற்கு வேண்டும் உதவிகளைச் செய்ய உடனே யான் புறப் பட்டு வரல்வேண்டுமென்றும், அவன் துரத்தப்படாவிடிற் சிவபிரான் திருக்கோயில்களை அழித்துச் சைவ சமயத்திற்கும் நம் நாட்டு மக்களுக்குமே அவன் பெருந்தீங்கு புரிவனென்றும் நடுங்கத்தக்க செய்தி இதன்கண் வரையப் பட்டிருக்கின்றதே. (இது கேட்டு எல்லாருந் திகில் கொள்கின்றனர்.) கம்பர் : மன்னர் பிரானே! தங்களையொத்த பெருவேந்தர் முனைந்தால் மிலேச்ச அரசரும் பிறரும் நமது நாட்டினுள்ளே தலைக்காட்டல் இயலுமோ? ஆதலால், தாங்கள் உடனே சென்று கூர்ச்சர மன்னனுக்குத் துணையாய் நின்று, நமது நாட்டிற்கு வருவதாய்க் காணப்படும் பேரிடரை நீக்கியருளல் வேண்டும். அமராவதி : (அரசனை நோக்கி வணங்கி) அங்ஙனமானால், அப்பா, தாங்கள் எங்களுடன் போந்து எங்களுக்குதவி செய்தல் இயலாது போலிருக்கின்றதே! தங்கள் துணையின்றி என் தந்தைபாற் செல்ல என்நெஞ்சம் நடுங்குகின்றதே! (அழுகின்றாள்.) பிரதாபன் : குழந்தாய்! அழல் வேண்டாம். நீயும் நின் கணவனும் நின் தந்தைபாற் செல்லவேண்டுவது தான் எதற்க்கு? நுங்கள் திருமணத்தை இங்கேயே செய்வித்து விடுகின்றேன். நீங்களெல்லாம் இங்கே என்னுடனிருந்தே அச்சமின்றி உயிர் வாழலாமன்றோ? அமராவதி : மன்னர்பிரான் நீடு வாழ்க! தாங்கள் எளியேங்கள் பால் இவ்வளவு இரக்கம் வைத்து எங்களை முற்றும் பாதுகாக்க ஒருப்பட்ட பேரருட்டிறத்திற்கு ஏழையேம் எங்ஙனம் கைமாறு செலுத்த வல்லேம்! பெருமான் திருவுளத்திற்கு மாறாக ஏதும் பேசுகில்லேன் - பிரதாபன் : அருமைத் தோன்றால்! நீங்கள் கருதுவதை அஞ்சாமல் திறந்து சொல்லலாம். அதுபற்றிச் சிறிதும் வருந்தேன். அம்பிகாபதி : அமராவதியும் யானுந் திரும்பித் தம்மிடம் வந்தாலன்றி, என்னாருயிர் நண்பர் நயினார் பிள்ளை சிறையினின்றும் விடப்படானென்று சோழ மன்னர் உறுதி செய்திருப்பதாக எனக்கு வந்த ஓலை தெரிவிக்கின்றது. மேலும், என்னருமைத் தங்கை காவேரிக்கு நயினார் பிள்ளையே மணமகன்! பெருமான்! யாங்கள் என் செய்வேம்! பிரதாபன் : ஆ! தம் ஆருயிர் நண்பனைக் காக்கத் தன்னுயிரையும் பொருட்படுத்தாத அம்பிகாபதியாரின் அன்பும் வாய்மையும் எவ்வளவு வியக்கத்தக்கன! அவரது நல்லெண்ணத் திற்கு யான் ஏதுந் தடை சொல்கில்லேன் - நீங்களெல்லாம் நாளையே நம் நண்பர் குலோத்துங்க சோழ மன்னர்பாற் செல்ல ஒழுங்கு செய்கின்றேன். யானும் நாளையே கூர்ச்சர மன்னர்பாற் சென்று ஆவன விரைந்து செய்து, என் படைஞருடன் ஒரு கிழமையிற் காற்றினுங் கடுகித் தஞ்சைக்குப் போந்து உங்களைக் காண்பேன். விரும்பினால் யான் வருவதற்குள் அம்பிகாபதியார் அமராவதி திருமணத்தைச் சிறப்பாக நடத்தி வைக்கலா மென்றும் வற்புறுத்தி அரசற்கு ஒரு திருமுகமும் விடுக்கின்றேன். அம்பிகாபதி : (அரசனை வணங்கி) மன்னர்பிரான் பேருதவி மன்னுயிர்கட்கு மழை செய்யும் உதவியினும் விழுமிது. மன்னர்பிரானை யாம் மீண்டுங் காணும் வரையில் எம்முயிர் எம்முடலின்கண் நிலைபெறுமோ? அமராவதி : (தனக்குள்) இச்சொல் நற்சொல் அன்று! எமக்குதவி செய்யும் பொருட்டு எம்முடன் போத இருந்த இம்மன்னர் பிரானையும் ஊழ்வினை தடை செய்துவிட்டது! என் காதலர் தம் நண்பர்பாலும் தம் தங்கையின் நலத்திலும் கொண்டுள்ள நல்லெண்ணம் பெரிதும் பாராட்டற்பாலது! அவரோடுடனிருந்து மாய்வதே எனக்கு வாய்வது! (எல்ரும் அரசனை வணங்க அரசன் போய் விடுகின்றான்.) ஐந்தாம் நிகழ்ச்சி : பதினோராங் காட்சி களம் : தஞ்சையிற் சோழன் அரண்மனை காலம் : காலை நேரம் சோழன் : (சினத்தை அடக்கி மகிழ்ச்சிக் குறிகாட்டி) புலவர் பெருமான் கம்பர் வரல் வேண்டும்! புலவர்மணி அம்பிகாபதி வரல்வேண்டும்! நீங்கள் இருவீரும் இல்லாத நமது அவைக்களம் பகலவனும் முழுமதியும் இல்லாத வானையே நிகர்த்திருந்தது. அம்பிகாபதி, நீயும் அமராவதியும் பூண்ட காதலன்பின் றிறத்தை யறியாமல் நுங்கட்குப் பிழைசெய்து விட்டேன். நம் நண்பர் பிரதாபருத்திர வேந்தன் ஒரு கிழமையில் இங்கு வருவதாகவும், அதற்கிடையில் யாம் விரும்பினால் நுங்கள் திருமணத்தை முடித்து விடலாமென்றும் எமக்கு வரைந் திருக்கின்றார். ஆதலால், அதனை விரைந்து முடித்தற்கு வேண்டுவது சூழ தமது அத்தாணி மண்டபத்திற்குச் செல்வோம் வாருங்கள்! கம்பரும் அம்பிகாபதியும் : மன்னர்பிரான் கட்டளைப்படியே (எல்லாரும் போகின்றனர்.) (அரசி அங்கயற்கண்ணியின் மாளிகையில்) அரசி : (அமராவதியையும் காவேரியையுங் கட்டித் தழுவி) கண்மணி அமராவதி, நீ மீண்டு வந்ததில் என்னுயிரையே யான் திரும்பப் பெற்றவளாயினேன். ஆனாலும், நின் கணவன் உயிர் பிழைக்க வேண்டுமே யென்பதை நினைக்க என்னுள்ளம் ஆறாத்துயரத்திற்கு ஆளாகின்றது! காவேரி : (நடுங்கி) ஏனம்மா அப்படிச் சொல்லுகிறீர்கள்? நம் மன்னர் பிரான் நம் அருமைப் பெருமாட்டி அமராவதியை என் தமையனார்க்கு மணஞ்செய்து விடுவதாகவே பிரதாபருத்திர வேந்தற்குத் திருமுகம் விடுத்தனரே! அரசி : கண்மணி! நம் அரசர் சீற்றஞ் சிறிதுந் தணிந்திலர்! அதனால், அவர் வரைந்த அச்சொல்லில் எனக்கு நம்பிக்கையில்லை, நீங்களெல்லாம் இங்கே திரும்பி வந்ததில் எனக்குச் சிறிதுமே மனவமைதியில்லை! அமராவதி : அம்மா, என் செய்யலாம்? அம்பிகாபதியின் ஆருயிர் நண்பர் நயினார் பிள்ளை எங்கட்குதவி செய்தது பெருங்குற்றமாகக் கருதப்பட்டுச் சிறையிடப்பட்டிருக்கின்றனராம். நாங்கள் திரும்பி வந்தாலன்றி அவர் சிறையினின்றும் விடப்படாரென்றுங் கூத்தர் எழுதியிருந்தார். மேலும், நம் கண்மணி காவேரிக்கு நயினார் பிள்ளையே மணமகன். ஆகவே, இச்செய்தி தெரிந்ததும் அம்பிகாபதி நெஞ்சந்துடித்து, ‘நாமெல்லாந் தஞ்சைக்குடனே புறப்படல் வேண்டும்! என்று உறுதி சொல்லிவிட்டார். அதனை யாருந் தடுத்துச் செல்வதற்குத் துணியவில்லை! (காவேரியை நோக்கின்றாள்) காவேரி : நாணத்தாலும் மனத்துயரத்தாலும் முகங் கவிழ்ந்தும்) ஆம், தாயே யான் ஒரு தீவினையாட்டி, நுங்கள் குடிக்கும் எங்கள் குடிக்குந் தீங்காய்ப் பிறந்தேன்! (அமராவதியின் தோழி நீலம் வருகின்றாள்) நீலம் : அரசியார் திருவடிகளுக்கு வணக்கம்! நல்ல செய்தி கொண்டு வந்திருக்கின்றேன். நம் இளவரசியாரை அம்பிகாபதியார்க்குத் திருமணஞ் செய்ய நம் மன்னர் பிரான் இப்போதுதான் அரசவையில் முடிவு செய்திருப்பதாகச் சிறையினின்றும் விடுதலை செய்யப்பட்ட நயினார் பிள்ளை நம் அமைச்சர் மகன், எனக்குத் தெரிவித்து விட்டுச் சென் றார். (அதுகேட்டு மூவருந் திடுக்கிட்டு மகிழ்ச்சிக் குறி காட்டுகின்றனர்.) அரசி : நீலம், எப்பொழுது திருமணம்? எங்ஙனம் முடிவு செய் திருக்கின்றனர்? நீலம் : அம்மா, நாளைமுற்பகல், அரசவையில் அம்பிகாபதியார் சிற்றின்பப் பொருள் சிறிதும் விரவாமல் பேரின்பப் பொருளே முழுதும் விளங்க நூறு செந்தமிழ்ப் பாப்பாடல் வேண்டுமாம்; அங்ஙனம் அவர்பாடி முடித்த பின் திருமணத்திற்கு வேண்டும் ஏற்பாடு செய்யப்படுமாம். அரசி : (கவலையுடன்) நல்லது! அங்ஙனம் பாடும் நூறு பாக்களில் எங்காயினுந்தப்பித் தவறித் சிற்றின்பப் பொருள் கலந்து விட்டால்? நீலம் : அதைப்பற்றி என்ன முடிவு செய்தார்களென்பது எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. அமராவதி : அம்மா, அதனை நாமே சென்றிருந்து நேரே கண்டு தெரிவோமே. ஐந்தாம் நிகழ்ச்சி : பன்னிரண்டாங் காட்சி களம் : தஞ்சையிற் கம்பரது மாளிகை காலம் : முற்பகல் நயினார் பிள்ளை : (காவேரியைக் கட்டித் தழுவி அவள் கண்ணீரைத் துடைத்து) கண்மணி, அழாதே! அழாதே! நின்தமையன் அமராவதியுடன் இங்கே திரும்பி வந்தவுடன் சிறையினின்றும் விடுதலை செய்யப்பட்டேன்; நின்னை மீண்டுங்காணவும் பெற்றேன். காவேரி : ஆம், பெருமான், யானுந்தங்களை மீண்டும் காணப்பெற்றதில் ஒருவாறு மனந்தேறினேன், ஆனாலும் ... நயினார் : நின் தமையன் இங்குத் திரும்பியதில் எனக்குச் சிறிதும் மனமகிழ்ச்சியில்லை. அரசன் என்னைச் சிறைப்படுத்தியதில் எனக்குச் சிறிதுங்கவலையே யில்லை. அரசன் என்னுயிரைப் போக்கினும் போக்குக! அம்பிகாபதி பிழைத்தாற் போதுமென்றே துணிந்திருந்தேன். காவேரி : பெருமான், என்தமையன் அமராவதியுடன் திரும்பி வந்தாலன்றி நீங்கள் சிறையினின்றும் விடப்படமாட்டீர்கள் என்பது தெரிந்ததும், என்தமையன் துடிதுடித்து உடனே எங்களுடன் இங்கே திரும்பிவர உறுதி செய்துவிட்டார். அதனைத் தடைசெய்ய அமராவதிக்கும் எனக்கும் நாவெழவில்லை. நயினார் : என் செய்யலாம்! ஊழ்வினை எங்கட்கு மாறாய் நிற்கின்றது. நின்தமையன் சிற்றின்பப் பொருள் விரவாமல் நூறுபாக்கள் அரசவையிற் பாடி முடித்தால், அவற்கு அமராவதியை மணஞ் செய்து கொடுப்பதாக அரசன் கூறினமையின், இப்போது அம்பிகாபதியின் பாட்டு அரசவையில் நடந்து கொண்டிருக்கின்றது! நின் தந்தையார் கவலையுள்ளத்துடன் அரசவையின் முடிவினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார். யான் அங்கிருக்க மனமின்றி, உனக்கதனைத் தெரிவித்துப் போகவே இங்கு வந்தேன். காவேரி : (மனம் மருண்டு) என் அன்பே, தாங்கள் தெரிவித்த இது நன்றாய் முடியுமோ? வேறாய் முடியுமோ தெரிவியுங்கள்! என் நெஞ்சம் ஒரு நிலைப்படாது குழம்புகின்றது! நயினார் : (திகைபுற்று) யான் ஏது சொல்வேன் கண் மணி? எனக்கொன்றுமே தோன்றவில்லை. (வாயில் முகமாய்த் திரும்பி) யாரோ மிகு விரைவாய் உள்ளே வருவதாய் அறிகின்றேன். (சோழன் மகன் திடுமென இருவர்க்கும் எதிரே வந்து நின்று) அரசிளைஞன் : ஏ! நயினார்! இங்கே என்ன செய்கின்றாய்? சிறையினின்றும் நீ விடுவிக்கப்பட்டதனைக் காவேரிக்கு அறிவிக்க வந்தனயோ? நயினார் : ஆம் ஐயா! நல்லது, நீங்கள் இங்கு வந்தது எதற்காகவோ? அரசிளைஞன் : நானும் அம்பிகாபதியைப் பற்றிய செய்தியைக் காவேரிக்கு அறிவிக்கவே இங்கு வந்தேன். காவேரி : (துடித்து) அண்ணால், என் தமையனைப் பற்றிய செய்தியை விரைந்து அறிவியுங்கள்! என் உள்ளங் கலங்குகின்றது. அரசிளைஞன் : கலங்காதே! நின் தமையனுக்கு என் தங்கையை மணஞ்செய்விக்கவே என் தந்தையார் அரசவையில் அமைச்சர்களுடன் கலந்து பேசிக்கொண்டிருக்கின்றார். (நயினாரை நோக்கி) ஆசிரியர் கம்பரிடம் நான்பேசவேண்டுவதொன்றிற்காக அவர் வரும்வரையில் நான் இங்கே காத்திருக்க வேண்டும். நீ நின் இல்லத்திற்கு ஏகலாம். (நயினார் காவேரிக்குக் கண்ணாற் குறி செய்து போய்விடுகின்றான்.) (காவேரியை நோக்கி) கண்மணி காவேரி, நின் தமையனுக்கு என் தங்கையை மணஞ்செய்விக்க ஏற்பாடாகின்றது. ஆதலால், நீ என்னை மணப்பது நன்றாகக் கருதப் படவேண்டுமன்றோ? காவேரி : (மருண்டு) அண்ணால், மணத்தைப் பற்றி என்னிடம் ஒன்றுமே பேசல் வேண்டாம். அரசிளைஞன் : (சினந்து) அரசன் மகனாகிய நான் உன்னை மணந்துகொள்ள விரும்பும்போது, எங்களை அண்டிப் பிழைக்கும் ஓர் ஒச்சன் மகளாகிய நீ எனக்கு மாறாய் வீண்வீம்பு செய்தால் அஃது என்பாற் செல்லாது. ஏ, உன்னை நான் வலிந்து பற்றி மருவினால், யார் என்னைத் தடை செய்ய வல்லார்? இதோ பார்! (என்று சொல்லி அவளது கூந்தலைப் பிடித்திழுக்க முந்துகின்றான்.) காவேரி : (சீற்றங் கொண்டு) அடே! என்னைத் தொடாதே எட்டி நில்! நீ அரசன் மகனாயிருந்தால் என், ஆயிரங் கண்ணன் மகனாயிருந்த;லென்! முறை தவறி ஓர் ஏழைப் பெண்ணை வலிமை செய்ய வந்த உன்னை என் கால் தூசிதானும் பொருட்படுத்தாது! (தன் தோழியை விளித்து) அடீபச்சே! இவனை வெளியே தள்ளிக் கதவைத் தாழ் இடு! (பச்சை ஓடி வந்து அரசிளைஞனைப் பிடிக்க முந்த, அவன் அவளைக் கீழே உதைத்துத் தள்ளிவிட்டு காவேரியைப் பிடிக்க விரைய, அவள் அவன் கையில் அகப்படாமல் தம் வீட்டின் பின்புறத்துள்ள தோட்டத்துள்ளே ஓட, அவனும் அவளைப் பின்றொடர்கின்றான்.) ஐந்தாம் நிகழ்ச்சி : பதின்மூன்றாங் காட்சி களம் : சோழன் அரசியல் மண்டபம் காலம் : முற்பகல் (அம்பிகாபதி அரசவையில் அரசன் கட்டளைப்படியே சிற்றின்பப் பொருள் விரவாமல் தொண்ணூற்றொன்பது பாட்டுப்பாடி, நூறாவது பாட்டுப்பாட முனைகையில், மேன்மாளிகையின் கணிருந்து அவற்றைக் கேட்டு எண்ணிக் கொண்டிருந்த அமராவதி காப்புச் செய்யுளையுஞ் சேர்த்துப் பாட்டு நூறாக எண்ணி மகிழ்மீக் கூர்ந்தும், அம்பிகாபதியைச் சாளரத்தின் வழியே எட்டிப் பார்க்க, அம்பிகாபதியும் அவளைப் பார்த்துத் தன்னை மறந்தவனாய்ப் பாடுகின்றான்:- சற்றே பருத்த தனமே குலுங்கத் தரளவடந் துற்றே யசையக் குழையூச லாடத் துவர்கொள் செவ்வாய் நற்றே னொழுக நடனசிங்கார நடையழகின் பொற்றே ரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே. சோழன் மன்னன் : (உடனே சீற்றங் கொண்டவனாய்) அடே அம்பிகாபதி, நீ உன் தலையை இழந்தாய்! (அவையிலிருந்தவர் எல்லாரும் நடுங்கி வாய் பேசாதிருக்க அவர்களை நோக்கி) அவையிலுள்ள ஆன்றோர்களே! அமைச்சர்களே! சிற்றின்பப் பொருள் கலவாமல் நூறு பாட்டுப் பாட ஒப்புக் கொண்ட அம்பிகாபதி அதனை மறந்து இறுதிப்பாட்டை எவ்வளவு அடாத நெஞ்சழுத்தத்தோடு சிற்றின்பப் பொருளில் முடித்தான்! ஆதலால், அவனை அரசியன் முறைப்படி நான் ஒறுப்பதில் நுங்கள் கருத்தென்னை? (முதல் அமைச்சர் நம்பிப்பிள்ளையை நோக்க) நம்பிப்பிள்ளை : மன்னர்பிரான்! சீற்றந் தணிந்தருள்க!அம்பிகாபதியார் உள்ளமும் இளவரசியாருள்ளமும் ஒன்றுபட்ட உயர்ந்த காதல் நிலையில், அம்பிகாபதியார் இறுதியில் தம்மை மறந்து வேறுபொருள் விரவப்பாடி விட்டதை ஒரு பெருங் குற்றமாகக் கருதி அவரை ஒறுப்பது அரசியன் முறைக்கு ஒத்ததாயில்லை. அல்லதவரை ஒறுப்பின் இளவரசியார் அதனை ஆற்றாது மடிவர்; அது நமது அரசுக்குங் குலத்திற்குந் தீராப்பழியாம்! படைத்தலைமையமைச்சர் : வேந்தர் பெருமான்! யானும் அங்ஙனமே கருதுகின்றேன். சொன்ன சொற்றவறினமைக்கு அம்பிகாபதியாரை ஒறுக்க வேண்டுவது கட்டாயமாயின், இருவரையுந் திருமணம் புணர்த்துங் காலத்தைச் சிறிது தாழ்த்து வைக்கலாம். இதற்கு மேற் செயத்தக்கது பிறிது ஏதும் எனக்குத் தோன்றவில்லை. ஒட்டக்கூத்தர் : (அரசன் குறிப்பறிந்து) பெரியோர் களே பாட்டுத் தவறியது ஒரு மாபெருங் குற்றமாகாவிடினும், அரசின் காவலை மீறி இளவரசியின் உவளகத்தில் ஓராண் மகன் நள்ளிரவிற் புகுந்ததனையே பொறுத்தற்கரிய பெருங்குற்றமாக வேந்தன் நினைக்கின்றார். அக்குற்றத்தை உள்ளிட்டே, அம்பிகாபதியின் பாட்டியற் புலமை யாவது இவ்வவைக்கண் உள்ள புலம்வல்ல நுங்கட்கு விளங்கக் காட்டி அதனால் அக்குற்றத்திற்கு அரசன் கழுவாய் காண முனைந்தார். அக்கழுவாய்க்குந் தடைநேர்ந்தது ஊழ்வினைப் பயனே போலும்! அரசன் : (மீண்டுஞ் சினந்து) எமதரசின் கடுங்காவலையும் பொருட்படுத்தாது நள்ளிரவில் அரச மகளிர்க்குரிய கன்னிமாடத்திற் புகுந்து தகாத செய்த அம்பிகாபதிக்கும் அறத்தீய கள்வனுக்கும் யான் வேறுபாடு காண்கிலேன். இவனைக் கையுங் களவுமாய்க் கண்டுபிடித்த அன்றிரவே இவனை என் கத்திக்கு இரையாக்கியிருப்பேன்! ஆனால், அரசவையில் ஆன்றோர் அமைச்சர் முன்னிலையில் இவனை நிறுத்தி இவன் அஞ்சா நெஞ்சத்துடன் செய்த தீதினை வெளிப்படுத்தி, அதன்பின் இவ்வவையத்தார் கருத்தை யொட்டி இவனை ஒறுத்தலே அரசின் முறைக்கு ஒத்த தாகுமென நினைந்து இவனைச் சிறைப்படுத்தி வைத்தேன். இவன் அச்சிறைக் காவலையுங் கடந்து, எம் புதல்வியைக் கைப்பற்றிக் கொண்டு, சேய்மைக் கண் உள்ள ஓரங்கல் நாட்டு வேந்தரும்என் நண்பருமான பிரதாபருத்திரரிடஞ் சென்று, அம் மன்னனையுந் தன்வயப்படுத்திக் கொண்டனன். இவன் செய்த அடாத செயலை எவர்தாங் குற்றமாக நினையார்? வேறு எவ்வரசன்றான் இவனை ஒறாது விடுவான்? கம்பர் : (இரந்த முகத்துடன்) மன்னர்பிரான் பிழை பொறுத்தல் வேண்டும். இளவரசியார் இசைவுபெற்று உவளகத்தில் இவன் அவர்பாற் சென்றிருந்ததனைக் களவாகக் கருதலாமா? ஒருவரை யொருவர் இன்றியமையா ராய்க் காதல் கொண்டார்க்குள் இத்தகைய ஒழுகலாறு நிகழ்வது இயல்பேயாதலை முன்னுங் கண்டோம். எல்லாம்வல்ல சிவபிரானே தக்கன் மகளாய்த் தோன்றிய உமைப்பிராட்டியை, அவள் தந்தையின் கருத்துக்கு மாறாக மறைவிற் கொண்டு சென்று மணக்கவில்லையா? அருச்சுனன் துறவியுருவிற் சென்று சுபத்திரையை மறைவிற் கவர்ந்து செல்லவில்லையா? நளன் தன் உருவம் புலனாகாமல் தமயந்தியின் உவளகத்திற் புகுந்து அவளது கருத்தொருப்பாடு பெற்றுச் செல்லவில்லையா? இத்தகைய காதல் நிகழ்ச்சிகள் முன்னும் பல நிகழ்ந்ததனை எண்ணிப் பார்த்து, என் மகனையும் இளவரசியையும் மன்னித்து மணம் பொருத்த அரசர் பெருந்தகை மனம் பற்றுதல் வேண்டும். அரசன் : (பின்னுஞ் சினந்து) கம்பரே, அஃதொரு காலும் நடவாது. அரசின் கடுங்காவலையுங் கடந்து இளவரசியின் கற்பையுங் குலைத்த இத்தீயன் அம்பிகாபதியை இருகூறாக்கி என் அரசியன் முறையை நடத்துதலே செயற்பாலது! (ஒட்டக்கூத்தரை நோக்க) கூத்தர் : (தாம் நெடுங்காலங் கொண்ட வஞ்சந் தீர்ப்பாராய்) பனிப்பகையுங் திங்களுமே பார்த்தசெய லானால் உனக்கியான் சொல்வதொன்றுண்டோ - கனத்த பிழைசெய்தான் அன்னைக்குப் பின்பார்க்க வேண்டாம் கழுவினிலே யேற்றிவிடல் காண்! அரசன் : (அது கேட்டுக் கொலைஞரை விளித்து) ஏ கொலைஞர்காள்! இப்பயல் அம்பிகாபதியை ஈர்த்துக் கொண்டுபோய்ச் கொலைக்களத்தில் வெட்டி வீழ்த்துக! (இச்சொற்கேட்டு மேன்மாளிகையில் அமராவதி துடித்து உணர்வு மயங்கி விடுகின்றாள்; அரசவையுங் கலைந்துவிடுகின்றது.) கம்பர் : (உணர்வு கலங்கி ஆற்றாமைமிக்கு) அடே குலோத்துங்கா! கூத்தா! தீது செய்யாத என் அருமை மகனை இரக்கமின்றிக் கொலைசெய்விக்கும் நீவிர் இருவீருங் கூற்றுவனுக்கிரையாகி உடனே ஒழியக்கடவீர்கள்! இச்சோழ அரசும் பாழாய் ஒழியக் கடவது, (இங்ஙனம் வசை கூறிவிட்டு, மண்டபத்தின் புறத்தே செல்ல, எதிரே நயினார் பிள்ளை அழுதுகொண்டு வருகின்றான்.) ஐந்தாம் நிகழ்ச்சி : பதினான்காம் காட்சி களம் : அரண்மணை வெளி காலம் : பிற்பகல் கம்பர் : (அழுத கண்ணினராய்) அப்பா நயினா, நின் உயிர்த்தோழன் மடிந்தான்! அவன் மடிந்தும் யான் மடிந்திலேன்! பரப்போத ஞால மொருதம்பி யாளப் பனிமதியந் துரப்போ னொருதம்பி பின்வரத் தானுந் துணைவியுடன் வரப்போன மைந்தற்குத் தாதை பொறாதுயிர் மாய்ந்தனனெஞ் சுரப்போ எனக்கிங் கினியார் உவமை யுரைப்பதற்கே நயினார் : (அழுதபடியே) ஆ! என் ஆருயிர்த் தோழன் மடிந்தனனா? ஐயோ அம்பிகாபதி! இனி உன்னை எப்பிறப்பிற் காண்பேன்! நின்னருமைத் தங்கை காவேரியும் மடிந்தனளே! தீ வினையேன் இன்னும் ஏன் இப்பாழுமுயிர் தாங்கி நிற்கின்றேன்! (தன் உடைவாளை யுருவித் தன் மார்பில் அதனை ஓச்ச முனைகின்றான்.) கம்பர் : (அவன் கையைப் பிடித்துத் தடுத்து) அப்பா! நாம் பழிக்குப்பழி வாங்கல் வேண்டும்! ஆதலால், நீ நின் உயிரைப்போக்குதல் தக்கதன்று. (இந்நேரத்தில் பிரதாபருத்ரனிடமிருந்து வந்த ஒற்றர் வணங்குகின்றனர்.) கம்பர் : (ஒற்றரை நோக்கி) நீடு வாழ்க, நும்வேந்தர் பெருந்தகை! நுங்கள் வேந்தர் பெருமான் வந்து விட்டனரோ? ஒற்றர் : ஆம், புலவர் பெருமான்! அதனைத் தங்கட்கறிவிக்கவே எங்களை எம்மன்னர்பிரான் இங்கு விடுத்தனர். அவர் இந்நகர்ப்புறத்தே படையுடன் வந்து தங்கியிருக்கின்றனர்; தங்கள் வருகையை எதிர்நோக்குகின்றனர். கம்பர் : நம் மன்னர்பிரானே இங்கென்னிடம் வரல் வேண்டுவதாய் உளது! இதோ! இங்கு நிற்கும் எம் அமைச்சர் மகனே நுங்களுடன் போந்து நம் மன்னர்பிரானைக் காண்பன். (நயினார் பிள்ளை ஒற்றருடன் பிரதாப ருத்திரனிடஞ் சென்றுவிடக், கம்பர்க்கெதிரே சோழன் மகனும் அவனைப் பின்றொடர்ந்து பச்சையும் வருகின்றனர்.) பச்சை : (பதை பதைத்துக்கூவி) அப்பா! அப்பா! இப்பாவி நம்காவேரியைக் கொன்றுவிட்டுப் போகின்றான்! இவனைப் பிடியுங்கள்! பிடியுங்கள்! கம்பர் : (சோழன் மகனைத் தடுத்து நிறுத்தி) அடே! பாவி! நின்தந்தை என்மகனைக் கொலை செய்தான்! நீ ஏனடா என் மகளைக் கொலை செய்தாய்? சோழன் மகன் : யான் உங்கள் மகளைக் கொலை செய்யவில்லை. என் சொல்லைக் கேளாமல் அவளே விரைந்தோடிக் கிணற்றிற்குதித்து மாய்ந்தாள்! பச்சை : பொய்! அப்பா! காவேரி எவ்வளவோ சொல்லியுங் கேளாமல், இவன் அவளைக் கற்பழிக்க வலிந்து துரத்தினான்! தடை செய்த என்னையுங் கடுமையாய் உதைத்துக் கீழே தள்ளிவிட்டான்! துணையற்ற தன் நிலைமையையுணர்ந்து காவேரி விரைந்தோடிக் கிணற்றில் விழுந்து மாண்டாள்! என்செய்வோம்! அப்பா! (ஓவென்று அலறி அழுகின்றாள்.) கம்பர் : (ஆற்றாமையுஞ் சீற்றமும் மிக்கு) அடே! பாவி! நீயும் நின் தந்தையும் எங்குலத்தை வேரோடு அழித்தனிரே! இதோ! பார்! உன் குலத்தையும் நான் வேறோடழித்துத் தொலைக்கின்றேன்! (தம்மடியிலிருந்த எழுத்தாணியையெடுத்து அவனை மார்பிற்குத்தி மாய்க்கின்றார். உடனே அரசியற் காவலர் கம்பரைப் பிடித்துக் கட்டி, அம்பிகாபதி வெட்டுண்டு கிடக்குங் கொலைக்களத்தின் வழியே அரசன்பால் ஈர்த்துச் செல்கின்றனர்.) கம்பர் : வெட்டுண்டு கிடக்கும் மகனைப் பார்த்து அழுது புலம்பி : மட்டுப்படாக் கொங்கை மானார் கலவி மயக்கத்திலே கட்டுப்பட்டா யென்ன காதல் பெற்றாய் மதன் கையம்பினால் பட்டுப்பட் டாயினுந் தேறுவையே யென்று பார்த்திருந்தேன் வெட்டுப் பட்டாய் மகனே முனைநாளின் விதிப்படியே (அரண்மனை வெளியில் வில்லுங்கணையும் ஏந்தி நிற்குஞ் சோழன் முன்னே காவலர் கம்பரைக் கொணர்ந்து நிறுத்து கின்றனர்.) சோழன் : (கம்பரைப் பார்த்துக் கடுகடுத்த முகத்தினனாய்) ஓய்! கம்பரே! நீர் கற்ற கல்வியும் நும்மகன் கற்ற கல்வியும் நும்மை ஆளும் மன்னனுக்கே தீங்கிழைக்கத்தான் பயன்பட்டன போலும்! கம்பர் : என்மகன் ஏதுந் தீது செய்திலன். இளவரசியும் என் மகனுங் காதல் கொள்ளுதற்கு வழிசெய்த நீயே முறைதவறி என்மகனைக் கொலை செய்தாய். பாவி! நின் மகனோ நின்னைப் போலவே முறைதவறிக் கற்பிற் சிறந்த என் மகளைக் கொலை செய்தான்! ஆதலால், அவனை யான் பழிக்குப் பழிவாங்கியதிற் பிழையொன்றுமில்லை. சோழன் : (சீற்றம் மிக்கு) கொலைகாரனான உன்னை இதோ கொல்கின்றேன் பார்! (வில்லை வளைத்துக் கணையைத் தொடுத்து விடுகின்றான்.) கம்பர் : (தம்மார்பிற் பாய்ந்த கணையைப் பிடுங்கவே குருதி பெருகிச் சொரிய) வில்லம்பிற் சொல்லம்பு மேதகவே யாதலினால் வில்லம்பிற் சொல்லம்பே வீறுடைத்து - வில்லம்பு பட்டதடா என் மார்பிற் பார்வேந்தா நின்குலத்தைச் சுட்டதடா என்வாயிற் சொல் (என்னுஞ் செய்யுளை வசையாகப் பாடிவிட்டு நிலத்தே விழுந்து விடுகின்றார். இந்நேரத்திற் பெரிதோடி வந்த பிரதாபருத்ர வேந்தன் நிலத்திற் குருதி சோரக்கிடக்குங் கம்பரைப் பார்த்துக் கதறிக் கையால் அவரது முகத்தைத் தடவித், தன் பட்டாடையால் அவரது மார்பிற் சொரியுங் குருதியைத் தடுத்துப் புண்ணை அடைக்கின்றான்.) கம்பர் : (மெலிந்த குரலில்) வேந்தே! யான் உயிர் பிழையேன்! என் மகனை முறைதவறிக் - கொன்ற - இவன் காவலன் - அல்லன் - இவனை - நீக்கி - வேறொரு - நல்லோனை - இந்நாட்டுக்கு - அரசனாய் - நிறுத்து! பிரதாபருத்ரன் : (விலகி நின்ற சோழனைப் பார்த்து) ஏ மன்னனே! புலவர் பெருந்தகையாகிய இக்கம்பரையும், இவர் தம் அருந்தவப் புதல்வனையும் நடுவுநிலை சிறிது மின்றிக் கொன்ற நீ இச்சிறந்த தமிழ்நாட்டுக்குக் காவலனாய் இருக்கத் தக்கவன் அல்லை! உடனே நீ இவ்வரசு துறந்து கானகத்தேகு! அல்லதென்னுடன் போர்புரிந்து கூற்று வனுலகிற்குச் செல்! சோழன் : (சினந்து) நீ என்போல் ஓர் அரசன். என் அரசியல் முறையில் தலையிட்டு எனக்கு இங்ஙனம் கட்டளையிட நீயார்? பிரதாபருத்ரன் : அடே பேதாய்! முறை தவறிய உன்னை, முறைதவறாதார் எவரும் ஒறுத்தற்குரிமை யுடையார். சோழன் : ஏ முழுமகனே! நின்னுடன் வீணே உரையாட நிற்கிலேன். போர்க்களத்தில் நினதாண்மையைக் காண்பேன். நீ நின்படையுடன் அங்கு வரும் நாளைக் குறிப்பிடு! யானும் அங்கென் படையுடன் போந்து நின் ஆண்மையை அடக்குவேன்! பிரதாபருத்ரன் : ஏ! இரக்கமிலாக் கன்னெஞ்சனே! நீ செய்த கொடுங் கொலைக்காக, என் படையிலும் நின்படையிலுங் கூலிக்கமர்ந்த குற்றமில்லா வயவரைப் போர் செயவிட்டு ஏன் ம்ய்க்கப் பார்க்கின்றாய்? (தன் வாளை ஏந்தி) இதோ நீ ஆண்மையுடையவனானால் நின்வாளை ஏந்தி என்னுடன் தனித்து நின்று போர்செய்! புலவர் பெருமக்களைச் சிறிதும் அறம் இன்றிக் கொன்ற உன்னை மடித்தால் எனக்குப் பெரும் புகழ் உண்டு! யான் மடிந்தால் எனக்குத் துறக்கம் உண்டு! (சோழனும் பிரதாபருத்ரனும் பெருஞ்சீற்றத்துடன் போர்புரிவதை இறக்குந் தறுவாயில் உள்ள கம்பர் கவலைக் கண்ணுடன் நோக்குகின்றனர். சிறிது நேரத்திலெல்லாம் பிரதாபனால் வெட்டப்பட்டுச் சோழன் நிலத்தேவிழக், கம்பர் பிரதாபனுக்கு நன்றி செலுத்துங் குறிப்போடு உயிர் துறக்கின்றார்.) ஐந்தாம் நிகழ்ச்சி : பதினைந்தாங் காட்சி களம் : கொலைக்களத்தில் காலம் : மசங்கல் மாலை (அமராவதி கொலைக்களத்தில் அம்பிகாபதி வெட்டுண்டு கிடக்கும் இடத்தை நோக்கி ஓட அவளன்னை அரசி அங்கயற் கண்ணியுந் தோழி நீலமும் அவளைப் பின்றொடர்ந்தோடிப் பிடிக்கின்றனர்.) அரசி : அம்மா! என் கண்ணே! நீ எங்கே ஓடுகின்றனை? ஓடிப் பயனில்லை! நின் கணவனைக் காண முடியாது! அமராவதி : ஏன் காணமுடியாது? அவரை வெட்டுங் கொலைஞர் என்னையுஞ் சேர்த்து வெட்டட்டும்! என்னை விடுங்கள்! என்னை விடுங்கள்! (என்று அவர்களது பிடியைத் திமிரிக்கொண்டோடி நிலத்தே செந்நீர்ப் பெருக்கிற்கிடக்கும் அம்பிகாபதி மேல் விழுந்து புலம்பி அழுகின்றாள்.) என்ன காலம் வந்த தையா! என்னுயிர் தன்னில் இசை நீவிர் தன்னந் தனியே எளியேனைத் தணந்து பெயர்தல் தகுமோ உரையீர்! மன்னன் நும்மேல் வஞ்சங் கொண்டே மாய்த்தனன் என்னால், எனைநீங்கிப் பொன்னின் மிளிரும் புகழ்மேனி புழுதி படியப், புரிந்தீர்! பிரிந்தீர்! காதல் பெருகக் கலந்தார் தம்மைக் கனலிற் கொடிய உள்ளத்தாற் சாதல் புரிந்தான் தகவில்லாத் தந்தை அவன்பால் தமியேன் பிறந்த தீதல் லதுவே றொருதீ திங்குச் செயக்கண் டறியேன் தீயேனால் வீதல் அடைந்தீர் இனியாவி விண்டே யழிவேன் விரவீர்! கரவீர்! ஓருயி ரான நம்மில் ஒருபால் ஒழிந்து பிரிந்தால் ஒருபாதி பாருறு வாழ்விற் பட்டு மயங்கல் பரிசோ பகரீர்! பகர்மாதர் சீருறு கற்பிற் செஞ்சொற் செயலிற் சிறந்து திகழச் சிறியேனை நீருறு வானிற் கொண்டே பெயர்வீர்! நிகரில் அறிவீர்; குறியீரே! பிருதாபருத்ரன் : (ஓடிவந்து) அம்மா! அம்மா! குழந்தையில்லா எனக்குச் சிறிது காலமேனுங் குழந்தையாய் இருந்தனையே! கைகடந்து போனதற்கு ஏங்காதே! என்னைத் தியங்கவிட்டு உயிர் துறவாதே! துறவாதே! அமராவதி : (திரும்பிப் பார்த்து) அப்பா! அப்பா! நீங்களே என் ஆருயிர்த் தந்தை! உங்கள் வயிற்றிற் பிறக்கும் தவமில்லாத் தீவினையேன் என்னருமைக் காதலனைப் பிரிந்து இம் மண்ணுலகிலிருந்து மண்ணாகக் கடவேனோ! என் இன்னுயிர்க் கணவனுடன் பொன்னுலகு புகுவேன்! (ஏங்கி, அம்பிகாபதி மார்பின்மேல் விழுந்து உயிர் துறக்கின்றான். அமைச்சர் நம்பிப்பிள்ளை வருகிறார்.) நம்பிப்பிள்ளை : (பிரதாபருத்தினை வணங்கி) மன்னர் பெருமானே! இக்கொடிய காட்சியினைக் காணவும், இதற்கு முன்னே என் மகனை இழக்கவும் எத்துணை தீவினை செய்தேன்! தாங்கள் உற்ற நேரத்தில் இந்நகருக்கு வராதபடி ஊழ்வினை தங்களைத் தடை செய்தது! (கண் கலங்குகின்றார்.) பிரதாபருத்ரன் : (பதறி) ஆம்! ஆம்! உற்றநேரத்தில் உதவி யாம்படி யான் இங்கே வர எவ்வளவோ துடிப்புடன் முயன்றும், அது பயன்படாமலே போயிற்று! தங்கள் புதல்வன் நிகழ்ந் தவைகளை அறிவிக்க வந்த அந்நேரத்திலேயே, சோழன் கம்பரைக் கொன்று விட்டான் என்று ஒற்றர் வந்து சொல்லக் கேட்டுத் துடித்துடித்தோடி வந்தேன். வந்த என் கண்ணெதிரே கம்பர் குருதிசோர நிலத்தே கிடக்குங் கொடுங் காட்சியினைக் காணுந் தீவினையேன் ஆயினேன்! அதன் மேலும், அருமை அம்பிகா பதியும் கற்பரசி அமராவதியும் ஒருங்குயிர் துறந்த இப்பொல்லாக் காட்சியினையுங் காண இன்னும் எவ்வளவு பெருந்தீவினை செய்தேன்! (கண்ணீர் சொரிகின்றான்.) நம்பிப்பிள்ளை : (உடனே வருந்தி) மன்னர் பெருமானே! என் செய்வது! கம்பரையும் அம்பிகாபதியையும் நாம் மட்டுமே அல்லாமல் இத்தமிழ் உலகமுமே இழந்துவிட்டது! முத்தமிழ் வல்ல அம்பிகாபதி அமராவதியிருவரும் ஒருவரையொருவர் இழந்துவிட்டனர்! அம்பிகாபதியையும் அவர் அருமைத் தங்கை காவேரியையும் என் மகன் நயினார் இழந்து விட்டனன்! நயினாரை யான் இழந்துவிட்டேன்! (இது சொல்லிக் கதறியழுகின்றார்.) (சிறிது நேரஞ் சென்று இருவரும் ஆறுதல் உற்றபின்) பிரதாபருத்ரன் : அறிவான் ஆன்ற ஐய! அன்பிலும் அறிவிலுஞ் சிறந்த இவர்களை இழந்தபின் அரசு செலுத்துவதில் எனக்கு மனஞ்சிறிதும் பற்றவில்லை. யான் எனது நாடு சென்று அரசியலை வேறொருவர்பால் ஒப்படைத்துவிட்டுத் தவவாழ்க்கையில் அமர்வேன். இச்சோழ நாட்டரசியலைச் சோழ மன்னர் குடியில் வந்த ஒருவர்பால் விடுத்து முறை செய்யுங்கள்! (போய் விடுகின்றான்.) அன்பினுருக் கொண்ட அம்மையினோ டென்றும் ஆர்ந்துருகி இன்பினுயிர்கள் இசைவுடன் வாழ இரங்கியருன் பொன்பிதிர் செஞ்சடைப் பெம்மான் சிவன் இந்தப் புல்லுலகில் துன்பின்றிக் காதலர் வாழ்ந்து தனைத்துன்னத் தூண்டுகவே!  பின்னிணைப்பு தமிழக மறுமலர்ச்சியின் தந்தை மறைமலை அடிகள் இருபதாம் நூற்றாண்டில் தமிழை வாழ்வித்த சான்றோர்களின் எண்ணிக்கை பலபட விரியும் தன்மை யுடையது, எனினும் ஒரு சிலரின் பணியைத்தான், தமிழ் மக்களும் - குறிப்பாக தமிழ் மாணவர்களும் அறிந்துள்ளனர். ஆனால் இதுகொண்டு ஒரு சிலர் நீங்கலாக ஏனையோர் தமிழுக்கு நிலையான பணியாற்றவில்லை என்று கருதுவது தவறுடைத்தாகும். பாட்டிற்கொரு புலவன் பாரதி தன் பாட்டுத் திறத்தால் பைந்தமிழை வாழ்வித்ததை நாம் மறுப்பதற்கில்லை. அவருடைய நாட்டுப்பற்றும், அவர் கையாண்ட எளிய உணர்ச்சி மிக்க நடையும் காலத்தின் தேவையை நிறைவுசெய்து தமிழ் மக்களை புதிய வழியில் இட்டுச் சென்றதை நம்மவர் ஏற்றே யாக வேண்டும். அதே வேளையில் தமிழ்மொழியில் படிந்த எல்லை மீறிய பிறமொழிமாசினைக் களைந்து தமிழின் தூய்மையைப் பேணி, தமிழைர் தமிழாகவும், தமிழனைத் தமிழனாகவும் வாழவைத்த பெருமை மறைமலையடி களாருக்கேயுண்டு. மொழி ஒரு இனத்தின் விழி மட்டுமல்ல. மொழி அதனின் உயிருமாகும். ஒரு மொழி அழிகின்றபோது அம்மொழியைப் பேசுகின்ற இனமும் அழிகின்றது. இதனைத் தான் ஒரு ஆங்கில அறிஞன் ஐக லடிர றயவே வடி னநளவசடில ய யேவடி கசைளவ னநளவசடில வைள டயபேரயபந நீ ஒரு தேசிய இனத்தை அழிக்க விரும்பின் முதலில் அவ்வினத்தில் மொழியை அழி என்று கூறினான். இதே உண்மையை மற்றுமோர் ஆங்கில அறிஞன் டுயபேரயபந ளை வாந ளடிரட டிக வாந யேவடி கை லடிர சநஅடிஎந வை வாந யேவடி ளை னநயன ஒரு தேசிய இனத்தின் உயிர் நாடி அதன் மொழியாகும். அது நீக்கப்படின் அவ்வினம் உயிரற்ற பிணமாக மாறும், என்று கூறிய கூற்றுக்கள் வெறும் உணர்ச்சி நிலையில் கூறிய கூற்றுக்கள் அல்ல. அவை ஆழ்ந்த பட்டுணர்வில் எழுந்த கூற்றுக்களே யாகும். இவ்வுண்மையைத் தான் புரட்சிக் கவிஞன் பாரதி தாசனும் தமிழுக்கு அமுது என்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று அழகுபட ஆணித்தரமாக தமிழுக்கும் தமிழ் இனத்திற்குமுள்ள பிரிக்கமுடியாத பிணைப்பை பீறிட்டு எழும் உணர்ச்சியுடன் மொழிந்துள்ளார். மேற்கூறிய கூற்றுக்கள் அனைத்தையும் நாம் நிலைவிற் கொள்ளும்போதுதான் மறைமலையடிகளாரின் மாண்பினை நாம் உணரும் நிலை ஏற்படுகிறது. தமிழன் தன்மொழி எது, தன் பண்பாடு எது, தன் நாகரீகம் எது, தனது நெறி எது, தனது வாழ்வியல் முறை எது என்பதை உணராது தத்தளித்து தன் நிலை மறந்திருந்த வேளையில் தமிழனுக்கு தன் இன உணர்வை, மொழி உணர்வை ஊட்டியவர் மறைமலை யடிகளார். இன்று ஆட்சி மன்றங்களிலும், தமிழ் மன்றங் களிலும் நல்ல தமிழ் - தூய தமிழ் அரச்சோச்சுகின்ற தென்றால் அதற்கு அடிகோலிய பெருமை, தானே ஒரு தனி இயக்கமாக விளங்கி எதிர்ப்புகள் அனைத்தையும் துணிவுடன் தாங்கிய மறைமலையடிகளார் ஆற்றிய பணியின் விளைவே என்பதனை அவரின் கொள்கையுடன் மாறுபடுவோர் கூட ஏற்றேயாகவேண்டும். தனித்தமிழ் நடையை ஒரு காலத்தில் எள்ளி நகையாடியோர் கூட இன்று நல்ல தமிழில் எழுதுவதற்கு அடிப்படைக் காரணம் நல்ல தமிழில் எழுதா விட்டால், நல் அறிஞர்களின் மதிப்பினையோ, வாழ்த் தினையோ பெற முடியாததோடு, தமிழ்ப் பொதுமக்களும் வரவேற்க மாட்டார்கள் என்ற நிலையும் இன்று உருவாகியுள்ளது. இவை எல்லாம் மறைமலையடிகளாரின் இயக்கம் ஏற்படுத்திய தாக்கமேயாகும். இவ்விதம் நல்ல மாறுதல்கள் தமிழ் மக்களிடையே ஏற்பட்டுவரினும் தென்னகத்தில் லோக்ஷபா, ராஜசபா, நயாபைசா, ஆகாஷவாணி போன்ற இந்திமொழிச் சொற்களின் ஊடுருவலால் தமிழின் தனித்தன்மை அழிகின்ற பேரின்னல் அங்கு ஏற்பட்டிருக்கையில் ஈழத்திலோ ஜாதி சம்பத, சலுசல, லக்சல, சதோச, ஓசுசல, ஜனவாசம போன்ற சிங்கள மொழிச் சொற்களின் ஊடுருவல்களும் நம் செந்தமிழின் சீர்மையை சீரழிப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. சமயமொழிகளாக வந்த வடமொழியும் பாளியும் காலப்போக்கில் தமிழின் தனித்தன்மையை அழித்து நிற்கையில் ஆளுமினங்களாக படையெடுத்து வந்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், அரேபியர், ஆங்கிலேயர் ஆகியோரும் தம்மொழிச் சொற்களை எம்மொழி மீது திணித்து எம்மொழியின் தனி இயல்பினை அழிப்பதில் இன்பம் கண்டனர். இன்று இந்திய துணைக்கண்டத்தில் ஆளும் இனத்தின் மொழியாக விளங்கும் இந்தியும், ஈழத்தில் ஆளும் இனத்தின் மொழியாக விளங்கும் சிங்களமும் எம்மொழியை அழித்து காலப்போக்கில் தத்தம் மொழிகளின் கிளைமொழியாக தமிழை ஆக்க வெறி கொண்டு முனைந்து நிற்கும் காட்சியினை நாம் காண்கிறோம். இவ்வெறிப் போக்குக்கு அடிமையாகாது எம்மினத்தின் தனித்துவத்தைப் பேணி வாழவேண்டின் எம் மொழியின் தூய்மையை எந்நிலையிலும் காக்க நாம் உறுதி பூணவேண்டும். தனியொரு மானிடனாக நின்று தன்னை எதிர்த்த எதிர்ப்புகளை யெல்லாம் துகளாக்கி வெற்றி கண்டவர் மறைமலையடிகளார். தனியொரு மானிடரால் இவ்வெற்றியை ஈட்ட முடியுமெனில் தமிழ் இனம் ஒருங்கிணைந்து தன்னிலை உணர்ந்து தமிழைத் தமிழாக வாழ்விக்க உறுதி பூணின் எவரும் அதனைத் தடுக்க முடியாது. இன்று தமிழனை எதிர்நோக்கும் பெரும் அழிவுக்கு அடிப்படைக்காரணம் பிறநாட்டுப் படையெடுப்போ அல்லது பிற இனத்தின் ஆட்சியோ அல்ல. இவையனைத் திற்கும் மேலாகத் தமிழனுக்கு தம் மீது நம்பிக்கையின்மையே இவ்வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணமாக அமைகிறது. இவ்வுண்மையையே உலகப்புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் ஆர்னல்ட் ரொபின்பி (Arnold Toynbe) பின்வருமாறு கூறுகிறார். “Out of the 21 notable civilizations 19 perished not from external conquest but from the evaporation of belief within” (குறிப்பிடத்தக்க 21 நாகரீகம் படைத்த நாடுகளில் 19 நாடுகள் அழிவுற்றதற்குக் காரணம் வெளிநாட்டுப் படையெடுப்பு அல்ல. ஆனால் தம்மீது தாம் நம்பிக்கையை இழந்தமையே ஆகும்.) எனவே ஒவ்வொரு தமிழனும் குறிப்பாக ஒவ்வொரு தமிழ் மாணவனும், மாணவியும் தன் மொழியின் தனி ஆற்றலில் நம்பிக்கை வைத்து தனித்தியங்கவல்ல அதனின் தன்மையில் உறுதிபூண்டு செயலாற்றின் வெற்றி நமதே. எம் அறிவின் பஞ்சத்தை, எம்மொழியின் பஞ்சமாக ஆக்காது காலத்தின் கருத்தோட்டத்திற்கேற்ப நம் மொழியை பல துறைகளிலும் வளமாக்க முயல்வது எமது தலையாய கடனாகும். (இவ்வுணர்வினை உந்துவதற்காகவே மறைமலை யடிகளாரின் வாழ்வையும், பணியையும் இச்சிறு நூல் வடிவில் தமிழ் மக்களின் கைகளில் தவழ விடுகிறோம். தமிழ் முதியோரின் போக்கில் நாம் நம்பிக்கையிழந்து வருகிறோம். ஆனால் எம் அருமைத் தமிழ்த் தம்பி. தங்கைகள் மீது எமக்கு எல்லையற்ற நம்பிக்கையுண்டு. என்மனோர் தொடக்கி வைத்த இப்பணியை எம் இளைஞர்கள் நிறைவேற்றி வைப்பார்கள் என்ற உணர்ச்சி எம்மை உந்தியபடியே இருக்கின்றது. எம் தம்பி, தங்கைமார்கள் எம்மைக் கைவிடமாட்டார்கள் என்று நம்புகிறோம்.) மொழியில் செம்மையிருப்பின் கருத்தில் தெளிவு பிறக்கும். கருத்துத் தெளிவோடு ஆட்சி அமையின் அவ் ஆட்சியில் அமைதி நிலவும். எனவே செந்தமிழில் செம்மை காண விழைந்த மறைமலையடிகளாரின் முயற்சி ஆட்சியிலும் அமைதிகாண துணி நிற்கிறதென்பது எம்மனோர் துணிவு; அத்தகைய பெருமகனின் நூற்றாண்டு நிறைவு விழாவினை உள்ள நிறைவோடு வழுத்தி வாழ்த்துவோமாக. அப்பெருமகனுக்கு இச்சிறு நூல் எம் அன்பின் காணிக்கையாக அமையட்டும். இப் படைப்பில் நாம் பெறும் அமைதியும் நிறைவும் சொல்லும் தன்மையுடையதல்ல. உண்மையிலேயே சொல்ல முடியாத பேரின்பத்தில் ஆழ்ந்துள்ளோம்.) அன்பன் ஈழவேந்தன் மறைமலையடிகள் ஞானசம்பந்தரும் மறைமலையடிகளும் திசையனைத்தின் பெருமையெல்லாம் தென்திசையே வென்றேற மிசையுலகும் பிறவுலகும் மேதினியே தனிவெல்ல அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல இசைமுழுதும் மெய்யறிவும் இடம் கொள்ளும் நிலைபெருகத் தோன்றியவர் தமிழ் ஞானசம்பந்தர் என்று சேக்கிழார் தகைசான்ற முறையில் ஞானசம்பந்தர் புகழ் பாடினார். ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய ஞானசம்பந்தர் பற்றி சேக்கிழார் செப்பிய மேற்குறித்த செஞ்சொற்பா, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி. இருபதாம் நூற்றாண்டு நடுப்பகுதிவரையில் வாழ்ந்த மறைமலையடிகளார்க்கும் முற்றும் பொருந்தும். திசையனைத்தின் பெருமையெல்லாம் தென்திசையே வெல்ல அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல்வழக்கின் துறைவெல்லத் தோன்றிய ஞானசம்பந்தர், இவ்வுலகில் வாழ்ந்தது பதினாறு ஆண்டுகள் தான். அவர் விட்டகுறையை நிறைவு செய்வதுபோல் தமிழகத்தில் தோன்றிய மறைமலையடிகளார், ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்து, நிலையான பணி பல ஆற்றி, அம்பலவாணர் திருவடி அடைந்தார். தமிழ்த் தென்றல் வாழ்த்தும் தமிழ் மலை வேற்றுமொழி வேற்று நெறி வேற்றுப் பண்பாடு நாகரிகம் ஆகிய வேண்டாத பண்புகள் பல தமிழகத்தைச் சூழ்ந்தன. தமிழகம் இத்தாக்குதலால் தன் நிலை தவறி, தன் உணர்வு கெட்டுத் தத்தளித்த வேளையில், தமிழைத் தமிழாக, தமிழரைத் தமிழராக வாழவைத்தார் மறைமலையடிகள். அத்தோடு என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என்ற திருமூலர் திருமொழிக்கமைய செந்தமிழர் செந்நெறியாம் சிவநெறியை சிந்தையில் ஏற்றி அதில் பதிந்திருந்த மாசினை நீக்கி மங்காது ஒளிவிடச் செய்தார். இன்பத் தமிழால் இறைவனைப் பாடி அன்பைப் பெருக்கிய இவ்வடிகளை - தீந்தமிழ் நிலவு, தமிழ்க்கடல், தமிழ் மலையென தமிழகம் வாழ்த்தியது, வழுத்தியது. கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்ற கனிவுடைக் கூற்றிற்கமைய இத்தமிழ் மலையை தமிழ்த் தென்றல் திரு.வி.க. பின்வருமாறு பெருமித உணர்ச்சியோடு வாழ்த்துகிறார். தென்னாடு பன்னெடுங் காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை மறைமலையடிகளுக்கு உண்டு. அவர் தம் தமிழ்ப் புலமை ஆராய்ச்சியும், பேச்சும், எழுத்தும், தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும், மரமும் முழங்கும். mofŸ ng¢R., பல பேச்சாளரைப் படைத்தது. எழுத்துப் பல எழுத்தாளரை ஈன்றது. நூல் பல நூலாசிரியரை அளித்தது. அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள் என்று கூறல் மிகையாகாது. திரு.வி.க. வின் இவ்வாழ்த்துரை வெறும் புகழுரையல்ல. நூற்றுக்குநூறு உண்மையுள்ளது என்பதை அடிகளார் தென்னகத்தில் தோன்றுமுன் நிலவிய சூழ்நிலையையும் அடிகளார் தோன்றிய பின்பு ஏற்பட்ட புரட்சிகரமான மாறுதல்களையும் வரலாற்றுக் கண்கொண்டு ஆராய்வார் ஏற்றேயாவர். பிறப்பும் தோற்றமும் அறிவறிந்த இப்பெருமானை அருந்தமிழ் உலகிற்குத் தத்தளித்த பெருமை நாகையில் நலம்பல பெற்று வாழ்ந்த சொக்கநாதருக்கும் அன்னவர் மனைவி சின்னம்மையாருக்குமே உரியது. ஈன்ற பொழுதினிற் பெரிதுவக்கு முறையில் சான்றோன் ஆக்கிய அடிகளாரின் அன்னையையும், அறிஞர் அவையத்து முந்தியிருக்கச் செய்த அவரின் தந்தையையும், பல்கலை அறிவூட்டிய அவரின் அறிவுத்தந்தை சோமசுந்தர நாயக் கரையும் சிந்தையில் நன்றி உணர்வோடு போற்றுவோமாக. மறை மலையடிகளாரைப் பெற்றெடுத்த பெற்றோர் அவருக்குச் சூட்டிய பெயர் வேதாசலம் என்பதே. அவரின் சமயப்பணி அவரை சுவாமி வேதாசலம் ஆக்கியது. சுவாமி வேதாசலம் அவர்களின் உள்ளத்தில் ஊற்றெடுத்த தனித்தமிழ் உணர்ச்சி அவரை மறைமலையடிகள் ஆக்கியது. வேதம் மறையாக மலர அசலம் மலையாக உருவெடுக்க சுவாமி அடிகளாக மாறி தமிழ் காக்கும் மறைமலையடிகளாக விளங்கினார். திருவேங்கடமும் தென்குமரியும் தமிழகத்தை அரண் செய்யும் இயற்கை மலைகள் எனின் தமிழுக்கு அரண் செய்த மானிடமலை மறைமலை என்பதை யாம் மறக்க முடியாது. தமிழ்மொழி வரலாற்றை வரைவோர் மறைமலையடிகளாரின் பணியை மறந்தோ, மறைத்தோ வரையமுடியாதபடி மறைமலையடிகளாரின் வாழ்வும் வளமான பணியும் தமிழ்மொழி வரலாற்றோடு பிரிக்க முடியாத முறையில் பின்னிப் பிணைந்து விட்டது. சுவாமி வேதாசலம் மறைமலையடிகளாக மாறிய பின்பே கனக சபாபதி பொன்னம்பலவாணராகவும், கனகேந்திரன் ஈழவேந்தனாகவும், பாலேந்திரன் இளங்கோவாகவும், பாலசுந்தரம் இளவழக னாகவும், பாலசுப்பிரமணியம் இளமுருகனாகவும், கலியாண சுந்தரன் மணவழகனாகவும், சோமசுந்தரன் மதியழகனாகவும், ஈவரி இறைவியாகவும், சரவதி நாமகளாகவும், லட்சுமி திருமகளாகவும் மாறிவருவதை யார்தான் மறுக்கமுடியும். தனித்தமிழ் இயக்கம் மறைமலையடிகளாரின் பைந்தமிழ்ப்பணி சென்னை கிறித்தவர் கல்லூரியில் தொடங்கியது. ஏறக்குறைய 15 ஆண்டுகள் அங்கு தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். சிறந்த தமிழ்ப் பேரறிஞர்களை உருவாக்கிய பெருமையையும் தேடிக்கொண்டார். பின்பு பல்லாவரம் போந்து துறவுபூண்டு பொதுநிலைக் கழகம் தோற்றுவித்து இறுதிவரை செந்தமிழ்ப் பணியும் சிவவெறிப் பணியும் சிறப்புற ஆற்றினார். மறைமலை யடிகளாரும், அன்று வாழ்ந்த ஏனைய தமிழ் அறிஞர்போல், தமிழில் பிறமொழிச் சொற்களை கலந்தே பேசியும் எழுதியும் வந்தார். ஆனால் தமிழ்மொழி வரலாறுபற்றி அவர் தொடர்ச்சியாகச் செய்துவந்த ஆராய்ச்சி சங்க காலத்தில் தூய்மையோடு விளங்கிய தமிழ், காலப்போக்கில் பிற நாட்டார் குறிப்பாக ஆரியர், அராபியர், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரெஞ்சுநாட்டார், ஆங்கிலேயர் ஆகியோர் வருகையாலும். ஆட்சி அவர்கையில் சிக்கியதாலும் அவர்களோடு எம் இனம் கலந்து வாழ்ந்ததாலும் தமிழ் தன் தனித்தன்மையை இழக்கும் முறையில் பிற மொழிச் சொற்கள் எல்லையற்று எம் மொழியில் கலந்ததைக் கவனித்தார். பிற நாட்டார் நாகரிகம் பண்பாட்டோடு நம் இனத்தவர் கலந்து வாழும்பொழுது எம்மொழியில் பிறமொழிச் சொற்கள் அடித்தளத்தை, அதன் வடிவை - அதன் ஒலி அமைப்பையே முற்றாக மாற்றி அழிவுறச் செய்யும் நிலையைக் கண்டு வருந்தினார். இந்நிலை தொடர்ந்து நீடிக்கின் தமிழ் வெறும் பெயரளவில் தமிழாக வாழுமே யன்றித் தமிழ் தனது தனித்தன்மையைப் பாதுகாத்து அதனின் பண்டைய பெருமையை நிலைநாட்டி வாழ முடியாதென்பதை அடிகள் உணர்ந்தார். டாக்டர் கால்டுவெல் (ஊயடனறநடட) சிலேற்றர் ஆகிய ஆங்கிலப் பேரறிஞர்கள் திராவிடமொழிகள் பற்றி செய்த ஆராய்ச்சி இவரின் இக் கொள்கைக்கு அருந்துணையாக அமைந்து விளங்கின. சிறப்பாக டாக்டர் கால்டுவெல் அவர்கள் தனது திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற அரிய நூலில் தமிழ் வடமொழி யினதும் ஏனைய பிற மொழியினதும் கலப்பின்றிச் சொல் ஆட்சி சிறப்போடு தனித்தியங்கும் ஆற்றல் பெற்றுள்ளதென்று கூறிய கூற்று இவரின் மொழித் தூய்மைப்பணிக்கு வலிவூட்டியது. இவை அனைத்திற்கம் மேலாகப் பேராசிரியர் பிரீமன் (Freeman), பேராசிரியர் மிக்லியோன் (Meiklu john) ஆகியோரின் நூல்கள், பிறமொழிக் கலப்பினால் வளர்ந்துள்ள ஆங்கிலமே பிறமொழிக் கலப்பில்லாது தனது மொழித் தூய்மையை பெருமளவு காக்கும் நிலையில் உள்ளது என்று உரைத்த மொழிகள், மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கத்திற்கு ஊக்கம் ஊட்டின. தமிழில் வடசொற்கள் தமிழில் சுருக்கமாய் விளக்கமாய் இனிமையாய் எடுத்துரைக்கத்தக்க அரிய தமிழிச் சொற்களாகிய உடல், தலை, தோள் முதலிய சொற்கள் இருக்கும் போது சரீரம், சிரசு. புஜம் என்றும் ஓசையை சப்தம் என்றும் இசையை சங்கீதம் என்றும் புதல்வன் புதல்வியை, புத்திரன், புத்திரி என்றும் நீரை, ஜலம் என்றும் சோற்றை, சாதம் என்றும் வடசொற்கைள வலிந்து புகுத்தி தமிழ் அன்னையின் இயற்கை உறுப்புகளை ஏன் அறுத்தெறிய முயல்கிறார்கள் என்று கேட்டு, மறைந்தொழியும் நிலையில் உள்ள தமிழ்ச் சொற்கள் பலவற்றிற்குப் புத்துயிர் ஊட்டினார் அடிகள். இன்று அக்கிராசனர் என்ற சொல் அழியத் தவைர் என்ற தகைசான்ற சொல் தலையெடுத்துள்ளது காரியதரிசி என்ற சொல் காண்பதற்கு அரியதாகி செயலாளர் என்ற செம்மைமிகு சொல் சிறப்புப் பெற்றுவிட்டது. பொக்கிஷாளர் என்ற சொல் புதைக்கப்பட்டுப் பொருளாளர் என்ற பொருள் பொதிந்த சொல் போற்றப்படுகின்றது. போஷகர் போன இடம் தெரியாது போகக், காப்பாளர் என்ற கனிவுமிகு தமிழ்ச்சொல் தமிழ் மன்றங்களில் பெரு வழக்கில் வந்துவிட்டது. மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கத்தின் பயன், பெறுபேறு இளை என்பதை எந்த அறிவுடை மகனும் மறுக்கமாட்டான். அருந்தமிழில் அறிவியற் சொற்கள் : மேலே கூறியவற்றைக் கொண்டு மறைமலையடிகள் தமிழில் இருந்து வடசொற்களை நீக்கும் பணியில் தான் ஈடுபட்டிருந்தார் என்று சிலர் கருதக்கூடும். ஆனால் உண்மையில் அவர் தமிழில் அறிவியல் சொற்கள் ஆக்கு வதற்கு ஆற்றிய பணியைப் பலர் அறியார் போலும். (Telepathy) என்ற சொல்லை தொலைவில் உணர்தல் என்றும் (Telephone) தொலைபேசி என்றும் (Telescope) தொலைநோக்கியென்றும் (Clairvoyance) அறிதுயில் என்றும், (Vitamins) உய்வுறை என்றும், (ஞசடிவநளே) முதல்உணா என்றும், (Chlorides) பசுமஞ்சள் என்றும் (Amplitude) அலைவீச்சு என்றும் (Aerial) வானலை என்றும் (Carrierwave) ஊர்தி அலை என்றும் அரிய சொற்களை ஆக்கி அளித்துள்ளதை அவரின் அறிவியல் நூல்களை நுகர்வோர் நன்கு உணர்வர். உரைநடையின் உயர்வு மறைமலையடிகளாரை தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று மட்டும் கூறி அவரிள் புகழுக்கு எல்லைக்கோடு அமைத்தல் தவறு. அவர் தலைசிறந்த எழுத்தாளர். உரை யாசிரியர் என்பதையும் யாம் மறப்பதற்கில்லை. மறைமலை யடிகளாரின் உரைநடை தனித்தன்மை வாய்ந்தது. ஒருவரின் உளப்பாங்கினை அவரின் உடை நடை எடுத்துக்காட்டும் என்பதற்கமைய, மறைமலையடிகளின் தனி இயல்பை அவரின் உரைநடை எடுத்து இயம்பும். மறைமலையடிகளார் தனித்தமிழிலே தேனும் பாலும் கலந்தனைய தீஞ்சொற்சுவை மிக்க இழுமெனும் இனிய உயரிய உரைநடை எழுதும் ஆற்றல் உடையவர் என்று பேராசிரியர் கா. சுப்பிரமணியம் பிள்ளை கூறும் கூற்று ஏற்புடையதே. மறைமலையடிகளின் உயரிய உரைநடைக்குச் சான்றாக ஒரு சொற் தொடரை கண்டு எடுத்துக் காட்டுவோம். திருச்சிற்றம்பலக் கோவையார் என்னுந் தமிழ்த்தேன் நிறைந்த பொன் குடத்திருந்து ஒரு நறுந்தி வலையினை எடுத்து ஈண்டு நூஞ் செவி வாய்ப் பெய்குதும் அடிகள் தன் உரைநடையில் தம்மோடு மாறுபடு பவர் கருத்தை மறுத்துரைக்கும் முறையும் பெருமிதமும் பேருவகையும் தரும் தன்மையுடையது; எடுத்துக்காட்டாக அறிவியல் கூற்றென மறுக்க, மிகப்பெரிதோர் ஏதமாம் என்க. பொருத்தமில் போலியுரையாம் என மறுக்க, அழிவழக்குப் பேசுதல் அடாதென்க. நெகிழ்ந்துரையாடி இழுக்கினார் என்க. என்ற சொற்றொடர்களைக் கூறலாம். பலவகை நூல்கள் மறைமலையடிகளார் தமிழ் கூறும் நல் உலகிற்கு ஆக்கி அளித்த நூல்கள் பலவகைப்படும். அவரின் ஆராய்ச்சி நூல்கள் சமயச் சார்புடையதாகவும் சமயச் சார்பு அற்றவையாகவும் இரு துறைகளில் அமைந்துள்ளன. இவற்றை விட இலக்கியத்திறன் ஆய்வு நூல்கள், கட்டுரை நூல்கள், செய்யுள் நூல்கள், புதினம் நாவல் நாடகம், அறிவியல் எனப் பலபடவிரியும். சமய ஆய்வு நூல்கள் ஆராய்ச்சி ஓர் அரிய கலை. இந்த ஆராய்ச்சி தமிழகத்தைப் பொறுத்தவரை மூவகையாகப் பிரிந்து கிடக்கிறது. அவற்றை ஆக்க ஆய்வு, அழிவு ஆய்வு, குழப்ப ஆய்வு எனக் குறிப்பிடலாம். தாம் ஒரு ஆராய்ச்சியாளர் என்று பேர் எடுப்பதற்காக உள்ளதை இல்லை என்று கூறும் ஆய்வோரும் எம்மிடை உண்டு. இவர்களை விடத் தங்கள் கருத்து எதுவென்று தெளிவாகக் கூறாது அவர் இப்படிக் கூறுகிறார் இவர் அப்படிக் கூறுகிறார் என்று கூறி குழப்பத்தை ஏற்படுத்தும் ஆய்வாளரும் உண்டு. இவ்விரு பாலாராலும் எமக்குப் பயன் இல்லை. எனினும் யாம் செய்த நற்பேற்றின் பயனாக மறைமலையடிகளார் போன்ற சிலர் தோன்றி ஆக்க ஆய்வு செய்துள்ளனர். அடிகளார் யாத்த சமயச்சார்பான ஆய்வு நூல்களுள் பழந்தமிழ்க் கொள்கையே சைவசமயம், தமிழர் மதம், கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா. சாதி வேற்றுமையும் போலிச் சைவரும், சைவ சித்தாந்த ஞானபோதம், சிவஞானபோத ஆராய்ச்சி, திருவாசக விரிவுரை (நாலு அகவல்கள்) மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் முதலியவை குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் மாணிக்கவாசகர் காலமும் வரலாறும் என்ற நூல் ஒப்புயர்வற்ற நிலையில் ஒளிவிடுகிறது. ஏறக்குறைய இருபது ஆண்டுகள் அவர் செய்த ஆராய்ச்சியின் முடிவாக இப்பரந்து விரிந்த நூல் மலர்ந்துள்ளது. இந்நூலில் தேவாரம் பாடிய மூவர்க்கு முந்தியவர் மாணிக்கவாசகர் என்பதையும் எடுத்துக் காட்டுகளோடு விளக்குகிறார். அவர் கூறும் காரணங்கள் அனைத்தையும் ஈண்டு எடுத்து விரிக்கின் அதுவே ஒரு தனி நூலாக அமைந்துவிடும் என்று அஞ்சுவதால் அவற்றின் விரிவு இங்கு வேண்டாம். அடிகளார் வகுத்த காலவரையோடு மாறுபடும் அறிஞரும் உளர் என்பதையாம் மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் கூட அடிகளாரின் ஆய்வு உள்ளத்தை, நுண் அறிவுத்திறனை வியந்து போற்றுகிறார்கள். இலக்கிய ஆய்வு இலக்கியத்துறையில் அடிகளார் எழுதிய பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை, முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை, முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர் முதலிய நூல்கள் அன்னவரின் சங்க இலக்கிய ஈடுபாட்டையும் சங்கச் சான்றோர் பிற்காலப் புலவர்களிலும் பார்க்கப் புலமையிலும் இயற்கையோடு ஒட்டிய கற்பனை வளத்திலும் சிறந்து விளங்குகிறார்கள் என்ற அன்னவரின் கருத்தினை வலியுறத்தி நிற்கின்றன. கட்டுரை நூல்கள் அடிகள் சிறுவர்களின் உள்ளவளர்ச்சியை நினைவிற் கொண்டு கவின்மிகு முறையில் கட்டுரைகள் எழுதும் ஆற்றல் உடையவர் என்பதை அவரின் சிறுவர்க்கான செந்தமிழ், இளைஞர்க்கான இன்தமிழ், அறிவுரைக் கொத்து, முதலிய நூல்கள் உணர்த்தி நிற்கின்றன. அடிகளின் சிந்தனைக் கட்டுரைகள் என்ற இந்நூல்கள் அடிசனின் (ஹனனளைடி) அருமைமிகு ஆங்கிலக் கட்டுரைகளைச் சுவைகுன்றாது தமிழில் மொழி பெயர்க்கும் அவரின் இருமொழிப் புலமையைப் புலப்படுத்தி நிற்கின்றது. செய்யுள் நூல்கள் அடிகளின் திருவொற்றி முருகன், மும்மணிக்கோவை உரை, சோமசுந்தர காஞ்சியாக்கம் ஆகிய நூல்கள் சங்கச் சான்றோர்போல் விழுமிய நடையில் சொற்சுருக்கத்துடன் பொருட் பொலிவோடு செய்யுள் யாக்கம் ஆற்றலை அடிகளார் பெற்றிருந்தார் என்பதை இனிது எடுத்துக் காட்டுகின்றன. தன் தீராத நோய் தீர்த்த முருகன் புகழை முன்னைய நூல்பாட, பின்னைய நூல் அவருக்கு அறிவூட்டிதன் ஆசிரியரின் அரும் பண்புகளை எடுத்து இயம்புகிறது. இரண்டும் அடிகளின் நன்றி உணர்ச்சிக்கு நல்ல எடுத்துக்காட்டு. வரலாற்று நூல்கள் வரலாற்றுத் துறையில் வேளாளர் நாகரிகம், பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் ஆகிய நூல்கள் வேறுபட்ட ஆரிய திராவிட இனங்களின் பண்புகளையும் சாதிகள், சமயச்சடங்குகள் தோன்றிய முறையையும் இனிது எடுத்துக் காட்டுகின்றன. வரலாற்று நூல் வரைவோர்க்கு இந்நூல்கள் நல்ல வழிகாட்டிகளாய் விளங்குகின்ற.ன. அறிவியல் நூல்கள் அறிவியல் துறையில் அடிகளார் ஆக்கம் காண விழைந்தார் என்பதற்கு அவரின் மக்கள் நூற்றாண்டு உயிர் வாழ்க்கை பொருந்தும் உணவும் பொருந்தா உணவும், மனோவசியம் அல்லது மனக்கவர்ச்சி, இறந்த பின் இருக்கும் நிலை, அறிதுயில் (யோக நித்திரை), தொலைவில் உணர்தல் ஆகிய நூல்கள் சான்றாய் அமையும். மக்கள் தங்கள் உடலையும், உயிரையும் ஓம்பி உயர் வாழ்வு வாழவேண்டும் என்பது அடிகளாரின் விடுதல் அறியா விருப்பு. தன்விருப் பினை தமிழ் மக்களுக்கு பயன்படுத்தும் முறையில் அரிய ஆங்கிலச் சொற்களை அருந்தமிழில் ஆக்கி இந்நூல்களை படைத்த அடிகளாரின் பெருமை சொல்லுதற்கரியது. புதினம் (நாவல்) புதினம் அல்லது நாவல் தமிழுக்குப் புதியது. அந்தப் புதுத்துறையில் இறங்கி தமிழை வளப்படுத்தியவர் அடிகளார், அன்னவரின் கோகிலாம்பாள் கடிதங்கள் தலைசிறந்த புதின நூல் - கடிதங்கள் வாயிலாக கதையை நடத்திச் செல்கிறார் ஆசிரியர். கதைத் தலைவி எழுதும் பதினேழு காதற் கடிதங்களில் நூல் முடிவடைகின்றது. பல சீர்திருத்தக் கருத்துக்களை இந்நூல் தன்னுள் அடக்கியுள்ளது. குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி என்ற அவரின் மற்றைய நூல் ஆங்கில மூலத்தின் தழுவல் எனினும் சுவை ததும்ப தமிழில் வரையப்பட்ட புதின நூல். இவ்விடத்தில் புதினம் (நாவல்) பற்றி மறைமலையடிகளார் கூறும் கருத்து இன்பமும் பயனும் தருவதாகும். இதோ அவர் செப்பும் செம்மொழி நாவல் எதைப்போன்ற தெனின் மிக அகன்றதோர் அழகிய ஏரிநீர் தனக்கு மேலே பரந்து நிற்கும் நீலவானில் விளங்கும் தண்ணொளி தரும் திங்களையும் அதைச் சூழ்ந்து விளங்கும் மீன்களையும் காட்டுவதைப் போன்றது. இவரின் இவ்விளக்கம் ஆங்கில நலன் ஆய்வாளர் பலரையும் இவர் மிஞ்சிவிட்டார் என்பதை எடுத்துக் காட்டுகிறது. நாடகம் சாகுந்தல நாடகமும்; சாகுந்தல நாடக ஆராய்ச்சியும், அவர் எம் தமிழ் நாடக இலக்கியத்திற்கு அளித்த அரும் களஞ்சியங்கள். இவ்விரு நூல்களிலும் காளிதாசரின் நிறைவை குறைவை, காய்தல் உவத்தல் அகற்றி துணிவோடு ஆராயும் முறையும் நாடக இலக்கணங்கள் பற்றி எடுத்துக் கூறும் விளக்கங்களும் அறிஞர் உலகிற்கு நல்விருந்து. அடிகளின் மும்மொழிப் புலமைக்கு மணிமுடி வைத்தது போல் இந்நூல்கள் விளங்குகின்றன. காஞ்சி காமகோடியாரின் கருத்தினை, அடிகளின் இவ்விரு நூல்கள் கவர்ந்துள்ளன என்பது ஈண்டு குறிப்பிடத் தக்கது. நாடகம் என்பது ஒரு புல்லின்மேல் நின்ற பனித்துளி தன்னைச் சூழ்ந்துள்ள இயற்கைப் பொருட்களை தன்னகத்தே அடக்கிக் காட்டுவதைப் போன்றது எனலாம் என்ற நாடகம் பற்றி ஓர் இடத்தில் அடிகள் நவிலும் கருத்து நயம் மிக்க கருத்தாகும். இந்தி பொது மொழியா 1937-இல் தென்னகத்தில் இந்தி கட்டாய மொழியாகத் திணிக்கப் பட்டபோது மறைமலையடிகள் போர்க்குரல் எழுப்பினார். வழக்காற்றில் இல்லாத சமய மொழியாக மட்டும் வந்த வடமொழியே தமிழ் மொழியின் வளத்தை வாழ்வை பெருமளவு குன்றச் செய்த போது ஆட்சி மொழியாக வரும் இந்தி தமிழ் மொழியை எவ்வளவு தூரம் மாசுபடுத்தும் - அழிவுறுத்தும் எனக்கூறி தமிழ் மக்களை பேரணியாகத் திரட்டினார். அவர் தலைமையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாடு தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஓர் நிகழ்ச்சி என்பதை யாம் நினைவில் கொள்ளல் நலம். வெறும் பேச்சுக்களுடன் நிறைவடையாத மறைமலையடிகளார் இந்தி பொது மொழியா என்ற சிந்தனைச் செறிவுமிக்க சிறு நூலினை பல்லாயிரக் கணக்கில் வெளியிட்டுப் பரப்பி மக்களுக்கு அறிவினை ஊட்டியதோடு மக்களை உரிமை வேட்கை உடையவர்களாகவும் விளங்கச் செய்தார்; அவரின் குடும்பமே இந்தியை எதிர்த்து சிறை சென்றது என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. அரசியல் நுண்ணறிவில் ஒரு சாணக்கியர் எனப் பெயர் பெற்ற இராசாசி அவர்கள் 1937-இல் இந்தியை தென்நாட்டில் திணிப்பதற்கு உடந்தையாக இருந்தவர்களில் ஒருவர். அதே இராசாசி ஏறக்குறைய இருபது ஆண்டுகள் கழித்து 1957-இல் ஏறக்குறைய மறைமலையடிகளார் எடுத்தாண்ட காரணங்களையே எடுத்து இயம்பி .இந்தியை எதிர்த்து இந்திய அரசியல் வானில் பெரும்புயலை - பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அரசியலில் இருந்து பெருமளவு ஒதுங்கி மொழியியல் துறையில் மட்டும் ஈடுபட்ட மறைமலையடிகளுக்கு இருந்த முன்கூட்டி உணர்கின்ற அறிவு (தீர்க்க தரிசனம்) அரசியலிலே தோய்ந்திருந்த இராசாசிக்கு 1957-ல் தான் ஏற்பட்டது அந்தளவிலாவது அவரின் அறிவில் தெளிவு ஏற்பட்டது தென்னகத்திற்கு நன்மை அளித்துள்ளது என்று கூறி அமைதியுறுவோமாக. மறைமலையடிகளின் நூல்களின் நலன் பற்றி தொகுத்து ஆராயும்போது திரு. எம். எ பூரணல்லிங்கம் அவர்களின் பின்வரும் கூற்றே எம் நினைவலைகளில் மோதுகிறது. “His books are sure to set a thousand minds a thinking, ten thousamd tongues a talking and atleast a century of able pens a writing.” எம். என். அவரின் நூல்கள் ஆயிரம் மூளைகளைச் சிந்திக்கச் செய்யும், பத்தாயிரம் நாக்குகளைப் பேசச் செய்யும். அத்தோடு ஒரு நூற்றாண்டு காலத்திகாகுதல் ஆற்றல் மிக்க எழுத்தாளரை எழுதச் செய்யும். மறைமலை யடிகளின் நூல்களை நுகரவேண்டிய முறையில் நுகர்வோர் இவ்வுண்மையை உணர்ந்தேயாவர். எம். என். பூரணலிங்கம் பேருரைகள் நிகழ்த்தும் பேராற்றல் சிந்தனைச் சிறப்பும், எழுதும் ஆற்றலும், பேசும் திறனும் ஒருங்கே கொண்டு உலகில் திகழ்ந்தவர்கள் - திகழ்பவர்கள் மிகச் சிலரே. சிந்தனைத் திறன் படைத்த பலர் ஏற்றமுற எழுதவும் பேசவும் முடியாத நிலையில் உள்ளனர். பேசும் திறன் படைத்த பலர் எழுத்திலே ஏமாற்றம் காண்கிறார்கள். எழுத்தாளர் எனப் பேர் எடுத்த பலர் மக்கள் மனம் கவரும் முறையில் பேச முடியாது மூலையில் முடங்கிக் கிடக்கின்றனர். ஆனால் நம் மறைமலையடிகளாரோ புரட்சி மிகு சிந்தனையாளராக விளங்கியதோடு, புலமை நலமிக்க எழுத்தாளராக மிளிர்ந்தார். அருந்தமிழிலும், ஆங்கிலத்திலும் அவர் ஆக்கி அளித்த அறிவுக் களஞ்சியங்கள் எம் கூற்றினை மறைமலையடிகளார் தமிழ் நாட்டில் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராய்த் துலங்கினார். குழலோசையென ஐயுறும் முறையில் குயிலிலுமினிய மென்குரலால் அவர் நிகழ்த்திய ஆய்வுத் திறன் மிக்க பேருரைகளைக் கேட்டு பெருமிதமும் பேருவகையும் எய்திய தமிழ் மக்கள் எண்ணற்றோர். தம் மாற்றாரோடு மாறுபட்டு தன் கருத்தினை தக்க சான்றுகளோடு அவர் விளக்கும் போமு செவி மமுத்துக் கொண்டிருந்த மக்கள் பலர் வென்றது தமிழ் என்று பலதடவை எழுப்பிய குரலை யாம் மறக்க முயன்றாலும் மறக்க முடியாது. இதனாற்றான் ஒரு தமிழ்ப் பாவலர், உடல் குளிர உயிர் தழைக்க உணர்ச்சி ஓங்க உளங்கனிய மெய்யன்பர் உள்ளத் தூடே கடலனைய பேரின்பந் துளும்பச் செய்யும் பேச்சாளர் என அவரை வாழ்த்திச் சென்றார். பிறிதோர் சொல்லை வெல்லும் பயனுள்ள சொல்லை, கேட்போர் பிணிக்க கேளாதாரும் வேட்பமுறும் முறையில் பேசும் சோர்வில்லாத சொல் வல்லராக அவர் விளங்கியதால் தமிழகம் அவர் சொற் கேட்டு விரைந்து பணியாற்றத் துடித்தது : சமூகச் சீர்திருத்தம் மறைமலையடிகள் வெறும் மொழித்தொண்டுடனோ அல்லது இலக்கியப் பணியுடனோ நிறைவடைந்தார் என்று கூறமுடியாது. அவர் சமூக, சமயத்துறைகளில் ஏற்படுத்திய புரட்சி அவரை ஒரு சீர்திருத்தச் செம்மல் என்ற நிலைக்கு உயர்த்துகிறது. எம்முன்னோர் செயல் என்பதற்காக மட்டும் எதையும் அப்படியே பின்பற்றும் மூட நம்பிக்கையை மக்களிடம் இருந்து களையச் செய்தார். அனைத்தையும் அறிவுக் கண்கொண்டு ஆராய்ந்து கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளுமாறு வேண்டினார். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் எப்பொருள் எத்தன்மையாயினும் அப்பொருளின் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதைப் பலதடவை வலியுறுத்தினார். பெண்கள் புதுமையின் பேரில் தம் பெண்மை நலத்தை இழப்பதை விரும்பாத அடிகள் அவர்கள் அறியாமையில் அழுந்தியிருப்பதைக் கண்டு அவர்கள் அறியாமையை நீக்க அரும்பாடுபட்டார். தாய்மார்களிடம் நிறைந்த கல்வி கேள்விச் செல்வமும் சமய உணர்ச்சியும் இருந்தாற்றான் வருங்காலத் தமிழகம் வளமாக வாழ முடியுமென்பதை நம்பி உரைகள் பல நிகழ்த்தி கட்டுரைகள் பல எழுதினார். இந்தியத் துணைக்கண்டம் உழவுத் தொழிலிலும் கைத்தொழிலிலும் நாட்டம் காட்டினாற்றான் நாடு நலம்பெறும் என்பதை பல இடங்களில் வற்புறுத்தியுள்ளார். அவர் யாத்த அறிவுரைக் கொத்து என்ற நூலில் உள்ள கல்வியும், கைத்தொழிலும், தமிழ் நாட்டவரும் மேல்நாட்டவரும், பகுத்துணர்வும் மாதரும், ஆகிய கட்டுரைகள் அவரின் பல்துறைப்பட்ட அறிவை சீர்திருத்த நோக்கை இனிது எடுத்துக்காட்டுகின்றன. சமயச் சீர்திருத்தம் மறைமலையடிகள் ஆழ்ந்த சமயப்பற்றுள்ளவர், அடிகள் என்ற அடைமொழியே அதற்கு எடுத்துக்காட்டு. அவரின் நூல்கள் பலவற்றில் இறைஉணர்ச்சி ததும்பி வழிவதைக் காணலாம். இவ்விதம் சமயப்பற்றில் ஊறிய அடிகளார் வெறும் சமயச் சடங்குகளில் நம்பிக்கையற்றவர். நெஞ்சம் நெகிழ்ந்துருகி இறையருளை வேண்டி நின்ற அடிகளார் வீண்சடங்குகளில் எம் நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்வதை விரும்பவில்லை. சிறு தெய்வங்களுக்கு உயிர்ப்பலியிடும் கொடுமையை மிக வன்மையாக ஒறுத்தார். சமயத்தின் பேரில் எழுந்த சாதிச் சண்டைகளுக்கு நல்ல சாட்டையடி கொடுத்தார். சாத்திரம் பல பேசும் சழுக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர் என்று நவின்ற நாவுக்கரசரின் உள்ளத்தையே அடிகளும் ஏற்றிருந்தார். சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்ற அடிகளாரின் நூல் அடிகளின் உயர்ந்த உள்ளத்தை உலகிற்கு எடுத்து உணர்த்தி நிற்கிறது. இந் நூலினை நுகர்வோர் உள்ளத்தில் புரட்சி பூப்பது உறுதி. தமிழ் வழிபாடு சமயத்துறையில் அடிகள் செய்த மற்றைய புரட்சி எம் கோயில்களில் தமிழ் வழிபாட்டை நடைமுறைக்கு கொண்டுவரச் செய்ததே. பொருள்விளங்கா மொழியில் கடவுளை வழிபடுவதை அவர் விரும்பவில்லை. மாறாக அதை வெறுத்தார். தெற்கோதும் தேவாரம் திருவாசகம், திருவாய் மொழி எம் ஊனிணை உருக்கி உள்ளொளி பெருக்க உதவும் போது வேற்றுமொழி எதற்கு என்பது அவர் கேள்வி, குருடும் குருடும் குருடாட்டம் ஆடி குழி விழும் நிலையை மாற்றி சொல்லியபாட்டின் பொருள் உணர்ந்து பாடினாற்றான் அம்பலவாணர் அருள் கிட்டும் என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை. அவரின் இக் கொள்கையின் விரிவை அவரின் நூல்களிற் கண்டு கொள்க. இன்று தமிழ்நாட்டுக் கோயில்கள் பலவற்றில் தமிழில் வழிபாடு செய்யும் முறைக்கு வழிகோலிய பெருமை மறைமலைய டிகளார்க்கே உரிய தென்பதை யாம் மறப்பதற்கில்லை. நடமாடும் நூல்நிலையம் தோற்றுவித்த நிலையான நூல் நிலையம் நடமாடும் நூல்நிலையமாய் விளங்கிய அடிகளார் பல்லாயிரம் பெறுமதியான பல்லாயிரம் நூல்களை தனது நூலகத்தில் சேர்த்து வைத்திருந்தார். அருந்தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளில் அமைந்த அந்நூல்களை அவர் நுகர்ந்த முறையும் அவற்றை அட்டையிட்டு அழகுற அடுக்கி வைத்த தன்மையையும் கண்ட கற்றறிந்த நல்லறிஞர் வியந்து பாராட்டி அவை நல்கிய நல்விருந்தை சுவைத்து மகிழ்ந்தனர். நூலகத் துறையில் தனிச் சிறப்புப் பட்டங்கள் பெற்ற அறிஞர் அரங்கநாதன் அவர்கள் இந்திய துணைக் கண்டத்தில் தனியார் முயற்சியில் உருவாக்கப்பட்ட நூல்களுள் மறைமலை யடிகள் உருவாக்கிய நூல்நிலையம் தலைசிறந்து விளங்குகிறதென்று கூறிய கூற்று மறைமலை யடிகளாரின் நூலகத்தின் பெருமையைப் பாரெங்கும் பறைசாற்ற போதிய சான்றாக அமைகிறது. அண்மையில் மறைமலையடிகள் நூல்கள் அனைத்தும் சென்னையில் தோற்றுவிக்கப்பட்டு மறைமலையடிகள் நூல் நிலையத்தில் சேகரிக்கப்பட்டு பொதுமக்கள் தேவைக்குப் பயன்படுத்தப் பட்டு வருகிறது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் அதனின் மேற்பார்வையாளராக விளங்கி மேன்மைமிகு பணியாற்றி வருகிறது. இந்நூல் நிலையம் இன்று சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமரா பொது நூலகத்திற்கு மாற்றப்ட்டடு மக்கள பயன்படுத்தும் நூலகமாக இயங்கி வருகிறது. தோற்றப் பொலிவு சிறந்த சிந்தனையாளராய், சொல்லேர் உழவராய், சொல்மாரி பொழிந்த சொற்பொழிவாளராய், சீர்திருத்தச் செம்மலாய் விளங்கிய மறைமலையடிகள் தோற்றப் பொலிவிலும் கவர்ச்சி மிகவுடையவராய் காட்சியளித்தார் மெல்லிய செந்நிற மேனியும், அதனை மூடியிருந்த காவி யுடையும், தன்னைப் பார்க்க வருவோரை கூர்ந்து கவனிக்கும் கூர்மையான பார்வையும், மெல்லிய புன்னகையும் அவரின் உடல் உறுப்புகளில் சிறிய அசைவும் அவரின் பண்பட்ட அறிவின் நிறைவையும், பற்றற்றான் பற்றினை பற்றி நின்ற பாங்கினையும் எடுத்துக் காட்டின. இச்சிறப்பியல்புகளை எண்ணும்போது இயற்கை அன்னை மறைமலையடி களிடத்தில் தனி அன்பை அள்ளிச் சொரிந்தாள் என்று கூறினால் அதனை மிக்கற்றென ஒதுக்க முடியாது. நாவலர் - மறைமலையடிகள் சுருங்கக்கூறின் தன்நலம் கருதாது தமிழர் நலமே தம்நலமாய்க் கருதி தன் சிந்தனை, எழுத்து, பேச்சு, செயல் அதனைத்தையும் தமிழ் மயமாக்கி தமிழ் மலையாய் தமிழ் அறிஞர் தம் தலைவராய் ஒளிவிட்டு விளங்கியவர் மறைமலையடிகளார் என்று கூறலாம். ஆறுமுகநாவலர் மறைந்தபோது தண்டமிழ் தாமோதரனார் நல்லைநகர் ஆறுமுகநாவலர் பிறந்திலரேல் சொல்லுதமிழ் என்கே. சுருதி எங்கே, எல்லவரும் ஏற்றும் புராண ஆகமங்கள் எங்கே, பிரசங்கம் எங்கே, ஆத்தன் அறிவெங்கே அறையென அரற்றினார். யாமும் அக்கூற்றினை சிறிது மாற்றி மறைமலையடிகள் பிறந்திலரேல் மாண்புமிகு தனித்தமிழ் எங்கே. சுவைமிகு சொற்பொழிவெங்கே எல்லவரும் ஏற்றும் ஆய்வுத்திறன் மிக்க அறிவு நூல்கள் எங்கே, சிவநெறியின் சிறப்பெல்லாம் எங்கே என்று எம்மையே யாம் கேட்கும் நிலை உருவாகியிருக்கும். எம் இனத்தின் வாட்டத்தைப் போக்கி எம்மொழியின் வறட்சியை மாற்றி எம் நெறியிலே புகுந்த நெறியிலா நெறிகளை நீக்கி எம்மை வாழ்வித்து வளம்பல தந்த மறைமலை வள்ளலாரை வாயார வாழ்த்தி நெஞ்சிலே நிறுத்தி நிலமிசை அவர்புகழ் நீடூழி வாழ வழி காண்போமாக. அதுவே மறைந்தும் மறையாத மறைமலை யடிகளார்க்கும் யாம் காட்டும் நன்றிமறவாத நற்பண்பு. வாழ்க மறையடிகள் புகழ்! - ஈழவேந்தன் சுதந்திரன் வெளியீடு கொழும்பு