kiwkiya«-- 11 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) பாடல்  மறைமலையடிகள் பாமணிக் கோவை  முனிமொழிப்பிரகாசிகை ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 32+280 = 312 விலை : 390/- மறைமலையம் - 11 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 24339030 தொ.பே. 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி ர் எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 320 கட்டமைப்பு : இயல்பு ர் படிகள் : 1000 நூலாக்கம் : வி. சித்திரா அட்டை வடிவமைப்பு : கவிபாஸ்கர் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005 யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) தனித்தமிழியக்கங் கண்ட தவச் செல்வர்! அடிகளார் தம் நுண்ணுணர்வால் தோற்று வித்த தனித் தமிழியக்கமானது தமிழ் மக்களது சமயத்துறையிலும் சமுதாயத் துறையிலும் அரசியற்றுறையிலும் நன்கு கவடுவிட்டுக் கிளைத்து நற்பயன் தருஞ் செவ்வியினைக் கண்கூடாகக் கண்டு மகிழும் பேறு நமக்குக் கிடைத்துள்ளது. அடிகளா ரவர்கள் எல்லையில்லாத பேரருட்கடலாகிய முழுமுதற் கடவுளிடத்துப் பேரன்புபூண்டு எவ்வுயிர்க்கும் அன்புடையராயொழுகிய அருட் செல்வராவார். திருவருளின் துணைகொண்டு `திசையனைத்தின் பெருமை யெல்லாம் தென்றிசையே வென்றேற அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல்வழக்கின் துறைவெல்லத் தமிழன்னையின் திருக்கோயிலுக்குக் கடைகாலமைத்து விட்டார்கள். தமிழ் வளர்ச்சிக்கு அடிகளாரமைத்த அடிப்படை யினை நன்குணர்ந்து தமிழ்மொழிக்குப் பல துறை களிலும் தொண்டு புரிவதே தமிழ்ப் பெருந்தகையார் மறைமலையடிகளார்க்கு நாம் செய்தற்குரிய நன்றி நிரம்பிய வழிபாடாகும். - வித்துவான் க. வெள்ளைவாரணனார் அண்ணாமலைநகர். (பக். 41) மறைமலைய மாண்பு நுழைவுரை தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்! முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், `முத்தமிழ் அடிகள் என முழக்கமிட நின்றார்! இருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார். தமிழ் தனித்து இயங்காது என்றும், வடமொழி வழியது என்றும், வடமொழித் துணையின்றி இயங்காது என்றும், உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வடமொழியே என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க, வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ்பரப்பாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர். சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், `தனித்தமிழ் (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் `தனித்தமிழ் என்பதை நிலை நாட்டிய நிறைமலை, மறைமலையடிகளாரே! சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், `தொல் காப்பியக் கடல் எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி, ஐந்தெழுத்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே என்றும், ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? என்றும் - எழுதிப் பரப்பினாராக, ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம் என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்! தொல்காப்பியக் காவல் தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என்றும், மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை பேண வேண்டும் என்பதை, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால், ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்ப தற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது என்னும் பாவாணர், மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப் பாடிப் பரவினார். `தனித் தமிழ்த் தந்தையார் என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார். நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழ் காக்கும் படை என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புகளின் மேம்பாட்டையும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார். பல்துறை ஆற்றல் அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார். மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள் என்கிறார். (பனிமலை - இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்). அடிகளார் நூல்கள் அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப் படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை, 1. மருத்துவம் 2. மறைபொருள் 3. இலக்கியம் 4. இதழ்கள் 5. சங்க இலக்கியம் 6. பாடல் 7. நாடகம் 8. புதினம் 9. கடிதம் 10. கட்டுரை 11. சமயம் 12. தத்துவம் 13. வரலாறு 14. சமூக இயல் என்பன. முதற் குறள் வாத நிராகரணம் என்னும் மறுப்பு நூலே, அடிகளின் முதல் நூலாக வெளிப்படுகின்றது (1898) அந்நூன் மறுப்பு நயமே நாகை அடிகளை - பல்லவபுர அடிகளாக -தனித்தமிழ் அடிகளாக ஆக்க அரும் பெரும் தூண்டல் ஆயிற்றாம். அடிகளார் வரலாறு: கீழ்கடல் சார் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிற்றூர் காடம்பாடி, ஆங்கு வாழ்ந்த அருந்தவப் பெருந்தகையர் சொக்கநாதர் - சின்னம்மையார்! இவ்விணையர் கொடையாய்த் தமிழன்னை செய்த தவப் பேற்றால் பிறந்தவர் வேதாசலம். பிறந்த பெரு மங்கல நாள் கி.பி. 15.07.1876. சொக்கநாதர், சித்தமலம் அறுவித்த சித்தமருத்துவர்; அறிவ மருத்துவம் என்பதும் அது. அத்தொழில் அவர்க்கு வளத்தை வழங்கியது. அதனால் வேதாசலம் குறைவற வாழ்ந்தார். நாகப்பட்டினத்து வெசிலியன் மிசன் பள்ளியில் ஐந்து வகுப்புவரை பயின்றார்; சிறந்த மாணவராக விளங்கினார். ஆறாம் வகுப்பில் சேரும் நிலையில், அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். ஆயினும் அன்னையார் உறுதியால் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு இருந்த முதன்மை தமிழுக்கு இல்லை. கிறித்தவ சமயம் பற்றி அன்றிச் சிவனியம் பற்றி அறிய வாய்ப்பில்லை என்னும் இரண்டு குறைகளையும் இளமையிலேயே உணர்ந்தார். வீட்டிலேயே தமிழ் நூல்களைப் பயின்று முதற் குறையையும், நாகையில் இருந்த இந்துமதாபிமான சங்கம் வழி இரண்டாம் குறையையும் நீக்கினார். பள்ளியிலும் குறையறக் கற்றார். வருவாய்க் குறையால் வாடும் அன்னைக்குச் சுமையாய் இல்லாமல் தனியே பயில்வதே இனியவழி என எண்ணி, நாகையில் புத்தக வணிகராக விளங்கிய நாராயண சாமியார் புலமையாலும் சிறந்து விளங்கியவர். ஆதலால் அவரிடம் தனியே இலக்கிய - இலக்கண - சமய நூல்களைக் கற்றார். நாராயணரின் முன்னை மாணவர் பேரா. மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பதையும் அறிந்தார். ஒன்பதாம் வகுப்பொடு பள்ளிக் கல்வியை நிறுத்தித் தனிக்கல்வியே கற்றார். தொல்காப்பியம், தொகை நூல்கள், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவை, இறையனார் அகப் பொருள் எனக்கற்றார். அடிகளார் இயற்றிய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை முகப்பில், எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தேம் என்றும் வேறுசில நூல்களையும் முழுவதாக ஓதியதையும் கூறி, இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். அவ்வாண்டு கி.பி. 1897. நாகை இந்து மதாபிமான சங்கத்திற்குச் சைவ சித்தாந்த சண்ட மருதம் என்னும் விருது பெற்ற சோமசுந்தர நாயகர் வந்து சொற்பொழிவாற்றினார். அவர் பொழிவில் வந்த கருத்தொன்றனை மறுத்து ஒருவர் எழுத, அதற்கு மறுப்பாக முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புரை எழுதினார். அதனைக்கற்ற நாயகர், மீளப் பொழிவுக்கு வருங்கால் முருக வேளைச் சந்திக்க விரும்பினார். அச்சந்திப்பின் பயனே உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம். நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார். இதுவே அடிகளார்க்குச் சென்னை வாழ்வு அமைய முதல் தூண்டல் ஆயிற்று. அடிகளுக்குப் பதினேழாம் வயதில் (1893) திருமணம் நிகழ்ந்தது. துணைவி தம் மாமன் மகள் சவுந்தர வல்லி என்பார். திருவனந்தபுரம் நாராயணசாமி அவர்களின் முன்னை மாணவராம் பேரா. சுந்தரனார் திருவனந்த புரத்தில் இருந்தார். அவரியற்றிய மனோன்மணீய நாடக நூல் கற்று அதன் அருமை கண்டு, பேராசிரியரைக் காணவிரும்பினார். அதனால் தம் ஆசிரியரோடு திருவனந்தபுரம் சென்று பேராசிரியரோடு உரையாடினார். வேதாசலனார் இளம் பருவத்தையும் மூதறிவையும் அறிந்த சுந்தரனார் வியப்புற்றுத் தகுதிச் சான்று ஒன்று வழங்கினார். சிறிது காலம் திருவனந்த புரத்தில் ஆசிரியப் பணியும் செய்தார். அவ்விடத்தின் பருவநிலை ஒவ்வாமையால் நாகைக்கே திரும்பினார். சென்னை: சோமசுந்தரனார் முன்னே கூறியபடி வேதாசலரைச் சென்னைக்கு அழைத்து அறிஞர் நல்லுசாமி என்பார் நடாத்திய சித்தாந்த தீபிகை என்னும் இதழாசிரியர் ஆக்கினார். பின்னே சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டியிருத்தல் அறிந்த சோமசுந்தரனார் வேதாசலனா ர அக்கல்லூரிப் பேராசிரியராக்க முயன்றார். அதுகால் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர். கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் என்பார். 9.3.1898 இல் வேதாசலனார் பணியேற்றார். அங்குப் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்கல்லூரிக் காலத்தே இளங்கலை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு (1903) பட்டினப்பாலை (1906) என்பவற்றுக்கு ஆராய்ச்சி உரை எழுதினார். அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப்புதுமுறை உரை, தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சி யினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டும் என எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்கிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தார்ஆங்கிலமும் வட மொழியும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும் என்றும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம் என்றும் ஒரு தீர்மானம் ஆட்சிக்குழுவில் கொண்டு வந்தனர். ஒரு பாடம் விருப்பப்பாடம் எனப்பட்ட பின்னர் அதனைக் கற்க வருவார் எவர்? தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறையவே ஆசிரியப் பணியிடமும் குறைய வேண்டுவதாகி, அடிகளார் 31.1. 1911 ஆம் நாளுடன் கல்லூரிப் பணியை முடிக்க வேண்டிய தாயிற்று. மாணவர்: இக்காலத்தில் அடிகளின் மாணவராக இருந்தாருள், தணிகைமணி செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சி, நாவலர் ச.சோ. பாரதி, பேரறிஞர் ச. வையாபுரியார் முதலோர் சிலர். தணிகைமணியின், தேவார திருவாசகச் சொல்லடைவு ஒரு பிறப்பளவில் செய்யக் கூடியதா? நாவலர் ச. சோ. பாரதியாரின் ஆய்வுத் துணிவு எத்தனை கசடுகளை நீக்கியது? வையாபுரியார், கால ஆய்விலும், வடமொழிப் பிடிவாதத்திலும் தம்மைச் சால்பு ஆய்வில் இருந்து விலக்கினாலும், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப்பதிப்பு, பல்கலைக் கழக அகரமுதலிப் பதிப்பு இவற்றைச் செய்த அருமை என்ன? புறத்திரட்டு, களவியல், காரிகை ஆயவற்றின் பதிப்புச் சிறப்பு என்ன? இவர்கள் பணியும் அடிகளாரைத் தழுவுதல் உண்மை தானே! சமரச சன்மார்க்கம் கல்லூரிப் பணியில் இருந்து வீடுபெற்ற அடிகளார், பல்லவபுரத்தை வாழ்விடமாகக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் தோற்றுவித்தார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீகாரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும், சமரச சன்மார்க் கத்தையும் பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவார். அச்சுவாமி கள் வலியுறுத்திய அவ்விரண்டு கொள்கைகளையும் எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்கு கூட்ட வேண்டி அச்சுவாமிகள் இட்ட பெயராலேயே, `சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கலாயிற்று. இந்நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்; பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் ஆவர் என்று பெயரீடு செய்து கொள்கைகளையும் வகுக்கிறார். குடும்பம் 1898இல் அடிகளார் சென்னைக்கு வரும்போது அவர்தம் அன்னையார் சின்னம்மையார், துணைவியார் சவுந்திரம் அம்மை யார், செல்வி சிந்தாமணி, அடிகளார் என்னும் நால்வரைக் கொண்ட குடும்பமாக இருந்தது. 1911இல் பல்லவ புரத்தில் குடிபுகும் போது நீலாம்பிகை, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி என்னும் மக்களும் கொண்ட ஒன்பதின்மர் குடும்பமாக இருந்தது. பல்லவுரம் புகுந்த பின் திரிபுர சுந்தரி பிறக்கப் பதின்மன் குடும்பம் ஆயிற்று. இந்நிலையிலேயே 27.08.1911இல் சைவத் துறவியர்க்குரிய துறவாடை (காவி) கொண்டு சுவாமி வேதாசலம் ஆனார். சுவாமி வேதாசலம் என்பதன் தனித்தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது வெளிப்படை. முன்னேயே அவரை அடிகள் என்றது அவர்தம் மாண்பு கருதியேயாம். மீள்பார்வை நாம் மீள்பார்வை ஒன்றுபார்க்க வேண்டும். அடிகள் 21ஆம் அகவையிலேயே தனித்தமிழ் ஆய்வுத்திறம் கைவரப் பெற்றார். 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களுக்கு ஆய்வுரை வழங்குங்கால் இதிலுள்ள சொற்கள் இத்தனை; இவற்றுள் செந்தமிழ்ச்சொல் இத்தனை; வேற்றுச் சொல் இத்தனை - என அறுதியிடுகிறார். ஆதலால், தனித்தமிழ் என்னும் தோற்றம் 1916 ஆம் ஆண்டில் நீலாம்பிகையார் தூண்டலால் ஏற்பட்டமை என்பது, அகத்தே அமைந்து கிடந்த வித்து, முளை விட்டு வெளிப்பட்ட நிலையாம். அவ் வெளிப்பட்ட நிலையும் உடனே பற்றிப் படரவில்லை! மேலும் சில ஆண்டுகளின் பின்னரேயே சமசர சன்மார்க்க நிலையம், பொதுநிலைக் கழகமாகவும், ஞானசாகரம் அறிவுக் கடலாகவும், சுவாமி வேதாசலம் மறைமலையடிகள் ஆகவும் படிப்படியே கிளர்கின்றனவாம்! ஓர் அரிய அமைப்பு உருவாகும் நிலையும், ஓர் அரிய கண்டு பிடிப்பு உலகவர் அறிய வெளிப்படலும், அவை இயக்கமாகவும் பயனாகவும் ஆகின்ற நிலையும் பற்றிய விளக்கம், அடிகளார் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் அடங்கியுள்ளதாம்! எதிரிடைத் தூண்டல்: மேலும் ஒன்று: ஒரு நேரிடைத் தூண்டலினும் எதிரிடைத் தூண்டல் வலிமை மிக்கது என்பதும், உள்ளத்து உறுதியை வெள்ளப் பெருக்காய் வெளிப்படுத்த வல்லது என்பதும் தெளிவாம். ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டா? என்று கற்றறிந்த தமிழர் ஒருவரே வினாவி நகைத்தல், பெற்ற தாய் மொழிப் பிறவிக்கு உற்ற தகைமை ஆகாது என்பதும், அதனை உணர்ந்த அப்பிறவி பாம்பன் குருபாத அடிகள் போல் சேந்தன் செந்தமிழ் என்ன ஒரு நூலியற்றித் தமிழ் தனித்து இயங்கவல்ல தனி உயர் மொழி என்று நிலைநாட்டியிருப்பின் வழிபடத்தக்க பிறவியாய் அமைந்திருக்கும்! அப்பேறு அதற்கு வாய்க்காமை, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (குறள் 263) என்னும் வள்ளுவர் வாய் மொழிப்படி, தனித்தமிழ்த் தந்தைப் பேறு மறைமலையடிகட்கு வர இருப்பதற்கே நேரிட்ட நேர்ச்சியாம் என்க. இயக்கம் அடிகள் இயக்கம் ஆலமரமெனக் கால்பல கொண்டு அகல அகல விரியத் தனித்தமிழ் இயக்கமாய், உலகத்தமிழ்க் கழகமாய், பாவலரேறு தமிழ்க் களமாய், சேரர் கொற்றமாய், தமிழ்க்காப்புக் கழகமாய், தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாய், தனித்தமிழ் இலக்கியக் கழகமாய், தமிழ் வளர்ச்சிக் கழகமாய், மறைமலையடிகள் மன்றமாய், தமிழ்க்காவல் குழுவாய், இயற்றமிழ்ப் பயிற்றகமாய், பாவாணர் தமிழ் இயக்கமாய் ஆங்காங்கு முகிழ்த்து முனைப்பொடு கடனாற்ற ஏவியதாம். நூலகம் அடிகள் நூற்றொகை, அருமணிக் குவையன்ன நாலாயிரம் நூல்களைக் கொண்டது. எதிரது உணர்ந்து, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்கு முற்கொடையாக வழங்கியதால், நாலாயிரம் நாற்பதாயிரமாய் மேலும் மேலும் விரிந்து மறைமலையடிகள் நூலகப் பெயரால், பெருமைமிகு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த பெரியவர் சோமு அவர்கள் இல்லமே வாய்க்க உலக வளமாக்கியதாம்! அதன் வழியாகவே அடிகள் தாமே வெளியிட்ட நூல்களும், வெளியிடாமல் கழக வழி வெளிவந்த நூல்களும், அடிகள் காலத்திற்குப் பின் வெளிவந்த நூல்களும் ஆகிய முழுமைத் தொகுதிகளும் கி.பி. 1898 முதல் 1969 வரை முதற்பதிப்பாக வெளிவந்தவை. அவற்றுள் படிகள் கிட்டுதற்கு அரியவையும் உண்டு. அடிகள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பேற்றால், இன்று வாய்த்த நூல்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வழங்கும் பெருவாய்ப்பைத் தமிழ்மண் பதிப்பகம் பெற்றதாம். வெள்ளச் சேதம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பதிப்பகத்துள் புகுந்து அச்சு அடிக்கப்பட்டதும், அடிக்கப்பட இருந்ததும், கணினிப்படுத்தி வைத்த குறுவட்டுகளும், மூலநூல்களும் என வாரி அள்ளிக் கொண்டு போனமை, களத்துக்கு வந்த கதிர் மணிகள், களஞ்சியத்திற்கு வாராமல் போய, பேரழிவு ஒப்பதாம். ஆதலால், நூல்களை மீளத் தேடவும், கணினிப்படுத்தவும், குறுவட்டு ஆக்கி அச்சிடவும் என மும்மடங்குப் பணியும் பேரிழப்பும் பெருத்த அவலமும் உண்டாக்கிற்றாம். அந்நிலையில், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழியை வாய்மை மொழியாக்கிய துணிவுச் செல்வர் இளவழகனாரும் அவர் குடும்பத்தவரும் ஆவர்! முன்னறிவிப்புத் திட்டப்படி நூலுக்கு ஆர்வமாய்ப் பணம் செலுத்தியோர்க்கும் நூல் காலத்தில் கிட்டா உளைச்சல் இல்லாமல் போகாதே! அவர்களும் அமைந்து தாங்கல், இயற்கை இயங்கியல் வழியதாம். வெளியீடுகள் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மொழி இன மண்வளம் - வளர்ச்சி மீட்டெடுப்பு - என்பவற்றை முன்வைத்துத் தமிழ்ப் போராளி இளவழகனாரால் தொடங்கப்பட்டதால், பேரிழப்புக்காம் எனத் தெளிவாகத் தெரிந்தும், இசைக் கலைக்கு வாய்த்த ஒப்பற்ற களஞ்சியமாய் வாய்த்த - கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டதாம்! முன்னை வந்த முதற்பகுதி பேரிழப்பாக்கியும் அதன் பின்னைப் பகுதிகளையும் அரிதின் முயன்று வெளியிட்டது! மொழிஞாயிறு பாவாணர்; ஈழத்து அறிஞர் ந.சி. கந்தையா; வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா, உரைவேந்தர் ஔவை சு.து; நாவலர் ந.மு.வே; பண்டித வித்துவான் தி.வே. கோபாலர்; சாமி சிதம்பரனார்; மயிலை சீனி. வேங்கட சாமியார்; பேரறிஞர் க. வெள்ளை வாரணனார்; பாவலர் குழந்தையார்; பாவலர் முடியரசனார்; பாவேந்தர், தொல் பொருள் கல்வெட்டு ஆய்ஞர் சதாசிவனார், சாத்தன்குளம் இராகவன் நூல்களையும் எளியேன் நூல்களையும் முழுமை முழுமையாக வெளியிட்டது. தொல்காப்பியம்- பாட்டு - தொகை - காப்பியம் - கீழ்க்கணக்கு - தமிழ்நாட்டு வரலாறு - ஆங்கிலம் வல்ல அறிஞர் இராம நாதனார் நூல்களையும், யாழ்ப்பாண அகராதி முதலாம் அகராதித் தொகுதிகளையும் வெளியிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிதொட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளிவந்த - தமிழுக்கு ஆக்கமாம் நாட் டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை எல்லாம் - ஓரிடத்துப் பெற்று, ஒரு தனித்தமிழ் நூலகம் அமைக்கும் அளவுக்கு அச்சிட்டு வழங்கிய பெருமை இளவழகனார்க்கு உண்டு. அவரே அன்றி அவர் துணையையும் மக்களையும் உறவையும் அன்பையும் நண்பையும் ஒருங்கே இணைத்து, அறிஞர் பெருமக்கள் பலர் அரவணைப்பையும் வாய்ப்பக் கொண்டு வாழும் இயல்பு அவர்க்கு வாய்த்தலால் மட்டுமே, இவ்வாறு செயற்கரிய செய்ய வாய்த்ததாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவரும் அவர். மறைமலைய மாண்பு மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழர் வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்! புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை - 6 625006. மலைக்க வைக்கும் மறைமலையம்! பதிப்புரை மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க -பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்கள் `மொழியின் வழியாகவே மொழிபேசும் மக்கள் முன்னேற முடியும் எனக் கூறுகிறார். உலகம் முழுதும் இவ்வுண்மை உணரப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. பாவாணரை அறிவுலகம் சரியாக அடையாளம் காண்பதற்குக் காரணமானது மறைமலையடிகளார் தந்த பாராட்டு! மறைமலையடிகள் (15.7.1876 - 15.9.1950) தேவநேயப் பாவாணர் (7.2.1902 - 16.1.1981) இருவரும் தனித்தமிழியக்கத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாகப் போற்றப்படுபவர்கள். மறைமலையடிகளார் 1916இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நூற்றாண்டை எட்டியுள்ள மகிழ்வான நேரம் இது! தனித்தமிழியக்க நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், தனித் தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் `மறைமலையம் எனும் பெருந்தொகுப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வழி வெளிக்கொணரத் திட்டமிட்டோம். உலகம் முழுதும் பரவி வாழும் உணர்வு குன்றாத தமிழர்கள் தந்த ஊக்குவிப்பு, இந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் எனும் உறுதியை எனக்குத் தந்தது. தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அடிகளாரின் அரிய படைப்புகள் பலவற்றையும் தேடித்தேடி வழங்கி வழிகாட்டினர்; வலிமையூட்டினர். மறைமலையடிகளார் 1898ஆம் ஆண்டிலிருந்து எழுதி வந்துள்ளார். அறிவுக்கடல் (ஞானசாகரம்) இதழை 1902ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்துள்ளார். அவரின் படைப்புகள் பெருவெள்ளமாய் வெளிவந்திருக்கின்றன. அச்சேறாதவை, பெயர் கூடக் கேட்டறியாதவை, பெயர் தெரிந்தும் பார்வைக்குக் கிட்டாதவை - எனப் பலவகையாய்க் கிடைத்தன அடிகளாரின் அரும்படைப்புகள்! அவற்றை `மறைமலையம் எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாக ஒருசேரப் பார்க்கும்போது, தமிழுலகம் வியப்படைவது உறுதி. மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? இப்படிக் கவலையோடு கேட்பார் பாவலரேறு பெருஞ் சித்திரனார் (10.3.1933 - 11.6.1995). அவரின் `தென்மொழி இதழ் 1.8.1959 இலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்புதான், தனித்தமிழ்த் திசை நோக்கி நூற்றுக்கணக்கானோர் நடைபோடத் தொடங்கினர். அதில் நானும் ஒருவன். பெருஞ்சித்திரனாரின் எழுத்து காட்டிய அடையாளத்தால், பாவாணர் நூல்கள் எனும் அறிவுப்புதையல் பலர் கைகளிலும் குடியேறியது. பாவாணர் நூல்கள் வலியுறுத்திப் பேசியதால், மறைமலை யடிகளாரைத் தேடிப்பயிலும் ஆர்வம் தமிழுலகில் புத்துயிர் பெற்றது. ஆரியத்தை எதிர்ப்பதிலும் சமற்கிருதத்தை விலக்கு வதிலுமே தமிழின மேம்பாடும் தமிழ்க் காப்பும் அடங்கியிருக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தமிழர் நெஞ்சங்களில் அரும்ப வைத்தது திராவிடர் இயக்கம்; மலர்ந்து விரியவைத்தது தனித்தமிழ் இயக்கம்! குமுக, அரசியல், பண்பாட்டு மலர்ச்சிக்கு இந்த ஈரியக்கங்களின் பேருழைப்புப் பயன்பட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் உணர்வு கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் தளரத் தொடங்கியது; 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் சரியத் தொடங்கியது. வடமொழி வெள்ளத்தில் தமிழ் இழுத்துச் செல்லப்பட்டு விடாமல் காப்பாற்றியோர் கம்பரும் பவணந்தியும்! பின்வந்தோருக்கு அந்தக் காப்புணர்ச்சி இல்லாமல், அயன் மொழிப் பற்றுக்கு அடிமையானதால் தமிழும் தமிழினமும் பெற்ற இழப்புகள் ஏராளம்! அயன்மொழிச் சேற்றிலிருந்து தமிழை மீட்கும் முயற்சி ஆங்கிலேயர் வருகையையொட்டிப் புத்துயிர் பெற்றது. வள்ளலார், பாம்பன் சாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சுப்பிரமணியசிவா, பரிதிமாற் கலைஞர் முதலிய பலரும் தொடக்க விதைகளாயினர். கோவை அவிநாசியில் பிறந்து விருதுநகரில் வாழ்ந்த விருதை சிவஞானயோகி 19.11.1908 ஆம் நாள் `திருவிடர் கழகம் தொடங்கித் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வேகங்கூட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினராயிருந்தவர் சுவாமி வேதாசலம் (மலைமலையடிகள்). மறைமலையடிகள் எனத் தம் பெயரைக் கொண்டு, 1916இல் அவர் தொடங்கியதே தனித்தமிழ் இயக்கம். `துறைமிகு ஆங்கிலம் மறைவட மொழியொடு தூய்தமிழ்ப் பேரறிஞர் - தனித்தமிழ் தோற்றிய ஓரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதற்கேற்ப, மறைமலை யடிகளார் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் முதலிய பன்மொழியிலும் புலமை மிக்கவர். பன்மொழிப் பேரறிஞரான மறைமலையடிகளார் தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவாக நின்றதால் எதிர்ப்புக்கும் இழப்புக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனாலும் உறுதி குன்றாமல் தமிழுக்கு ஆதரவாய் உழைக்கும் உள்ளத்தோடிருந்தார். அதனால், தமிழர் உள்ளங்களில் இன்றளவும் மாறாப் பெருமையோடு அவர் வீற்றிருக்கின்றார். வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை வையகம் பாவேந்தர் பாரதிதாசன் அவர் மாண்பினைப் பாடி மகிழ்ந்ததும், தம் `குடும்ப விளக்கு நூலினை மறைமலை யடிகளுக்குக் காணிக்கையாக்கி வழங்கியதும், அவரின் உறுதி தளராத உள்ளமும் உழைப்பும் கண்டு போற்றிய நன்றிக் கடன் என்பதில் அய்யமில்லை. சென்னையில் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ்மண் பதிப்பகப் பணிகளைத் தமிழுலகம் அறியும். வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டவல்ல தமிழறிஞர்கள் பலரின் நூல்களை முழுமுழுத் தொகுப்புகளாக வழங்கியிருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் முடிப்பினை (சாதனை)யாகப் போற்றப்படுகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் நூல்களை முழுமையான தொகுப்புகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவை காலம் முழுதும் பயன்படவல்ல கருவி நூல்கள் என்பதை அறிஞர் உலகம் அறியும்! தமது நலத்தை ஒதுக்கி வைத்து, தமிழ் நலத்தைக் காக்க வாழ்ந்த அறிஞர்களின் அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து முழுத் தொகுப்பாக வழங்குவது பெரும்பணி! அதனைத் தமிழ்மண் பதிப்பகம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொகுப்பு நூல்களின் பட்டியலைப் பின்னிணைப்பில் காண்க. தமிழுக்காக உழைக்கும் உணர்வை இளமையில் எம்மிடம் ஏற்படுத்தியோருள் பெரும்புலவர் நக்கீரனாரும் அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலனாரும் குறிப்பிடத்தக்கோர்! எம் நன்றிக்குரியோர்! தனித்தமிழ் ஆர்வம், திராவிடர் இயக்க ஈடுபாடு எனும் இரு சிறகுகளால் எம்மை எழவைத்தவர் பெரும்புலவர் நக்கீரனார்! அவரை எண்ணிக் கண்பனிக்க நன்றி கூறுகிறது எம் நெஞ்சம். காலப்பழமையாலும் பராமரிப்புக் குறைவாலும் அழிய நேர்ந்த தமிழிலக்கியங்கள் அளவற்றவை! அவற்றில் ஒருபகுதியை யாவது மீட்டு நம் கைகளுக்கு வழங்கியோர் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலிய சான்றோர் பெருமக்கள்! தமிழிலக்கியப் பெருஞ்செல்வத்தை மீண்டும் மீண்டும் அச்சாக்கி, அனைவர் கைகளையும் எட்டச் செய்த பெருமை - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே.சா. நூலகம், மணிவாசகர் பதிப்பகம் முதலிய பதிப்பாளர்களுக்கு உரியது. அச்சுத்துறை அறிமுகமான பின்பே, அறிவுத்துறை அனைவருக்கும் பொதுச்சொத்தாகும் வாய்ப்பு வந்தது. எட்டாக் கனியாக ஓலைச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த இலக்கியச் செல்வங்கள், எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பணியைச் செய்த பதிப்பாசிரியர்களும், பதிப்பாளர்களும் நம் நன்றிக் குரியோர்! இரவு பகல் பாராது முதுமையைக் கருதாது உழைக்கும் மனவுரத்தை முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் பணியே எமக்கு வழங்கியது. அரசும், பல்கலைக் கழகங்களும், அறநிறுவனங்களும், சமய பீடங்களும் ,பெரும் இயக்கங்களும், பெரும் செல்வர்களும் செய்ய வேண்டிய பெருந் தமிழ்ப்பணி இது! எளியவர்களால் இயங்கும் தமிழ்மண் பதிப்பகம் பெருந்தமிழ்ப் பணிகளை இன்னல்களுக்கு இடையில் அருமுயற்சியோடு செய்து வருவது, உள்ளவுரம் ஒன்றினால்தான்! வல்லமை சேர்க்கும் வலிமையுண் டாக்கும்! வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்? காக்கும் தமிழைக் காக்கும் உணர்வைப் பாவேந்தர் பாடல் வரிகள் தந்தன. அச்சுக்கு எட்டாமலும் கைக்குக் கிட்டாமலும் இருந்த பேரறிஞர் பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கி திராவிடர் இயக்க அரசுகள் வழங்கின. அதனால், அறிவு பரவலாகும் வாய்ப்புகள் உருவாயின. `சரிவும் இழப்பும் நமக்கு வந்தாலும் தமிழுக்கு வரக்கூடாது என எண்ணி உழைக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழ் நாட்டில் வற்றாமல் வளர்ந்தபடி இருக்கின்றன. திருவிடர் கழகம் (1908) தனித்தமிழ் இயக்கம் (1916) தென்னிந்திய நலஉரிமைக் கழகம் (1916) சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943) தமிழ்ப் பேராயம் (1959) தமிழ்க்காப்புக் கழகம் (1961) தனித்தமிழ்க் கழகம் (1964) உலகத்தமிழ்க் கழகம் (1968) தமிழியக்கம் (1972) தமிழ்ச் சான்றோர் பேரவை (1998) தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும் பாவாணருமே! தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை! அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு `மறைமலையம் என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது. பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம் இது! தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது! அறிவுலகத்தால் `மறைமலையம் வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம். - கோ. இளவழகன் இதுவரை வெளியிட்டுள்ள தமிழ்மண் பதிப்பகத்தின் நூல் தொகுப்புகள் 1. பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 52 நூல்கள் 2. தொல்காப்பியம் - உரைகளுடன் 15 தொகுப்புகள் 3. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் - 30 நூல்கள் 4. கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி -18 தொகுப்புகள் 5. சாமிநாத சர்மா - 31 தொகுப்புகள் 6. ந.சி.க. நூல் திரட்டு - 24 தொகுப்புகள் 7. சாத்தன்குளம் இராகவன் நூற்களஞ்சியம் - 16 நூல்கள் 8. சதாசிவப் பண்டாரத்தார் - 10 நூல்கள் 9. நா.மு.வே.நாட்டார் தமிழ் உரைகள் - 24 தொகுப்புகள் 10. செவ்விலக்கியக் கருவூலம் - 15 தொகுப்புகள் 11. தேவநேயம் - 14 தொகுப்புகள் 12. திரு.வி.க. தமிழ்க்கொடை - 26 தொகுப்புகள் 13. உரைவேந்தர் தமிழ்த்தொகை - 28 தொகுப்புகள் 14. கருணாமிருத சாகரம் - 7 தொகுப்புகள் 15. பாவேந்தம் - கெட்டிஅட்டை - 25 தொகுப்புகள் 16. புலவர் குழந்தை படைப்புகள் - 16 தொகுப்புகள் 17. கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 தொகுப்புகள் 18. நாவலர் சோம சுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் - 5 தொகுப்புகள் 19. முனைவர் இராசமாணிக்கனார் நூல்கள் - 39 நூல்கள் 20. தமிழக வரலாற்று வரிசை - 12 தொகுப்புகள் 21. உவமைவழி அறநெறி விளக்கம் - 3 தொகுப்புகள் 22. முதுமொழிக் களஞ்சியம் - 5 தொகுப்புகள் 23. சாமி சிதம்பரனார் நூற்களஞ்சியம் - 22 தொகுப்புகள் 24. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 தொகுப்புகள் 25. அறிஞர் க. வெள்ளை வாரணனார் நூல் வரிசை - 21 தொகுப்புகள் 26. ஐம்பெருங் காப்பியங்கள் - 5 தொகுப்புகள் 27. பதினெண் கீழ்க்கணக்கு - 3 தொகுப்புகள் 28. நீதி நூல்கள் - 2 தொகுப்புகள் 29. பி. இராமநாதன் - 10 நூல்கள் 30. யாழ்ப்பாண அகராதிகள் - 2 தொகுப்புகள் 31. வெள்ளி விழாத் தமிழ்ப் பேரகராதிகள் - 3 தொகுப்புகள் 32. ந.சி. கந்தையா அகராதிகள் - 2 தொகுப்புகள் 33. முதுமுனைவர் இளங்குமரனார் தமிழ்வளம் - 40 தொகுப்புகள் 34. இளங்குமரனார் அகராதிகள் - 2 தொகுப்புகள் விரைவில் வெளிவர இருக்கும் அறிஞர்களின் நூல்கள் 1. மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை 2. வ.சுப. மாணிக்கம் 3. பெரியாரியம் (தந்தை பெரியார்) 4. தமிழர் மருத்துவக் களஞ்சியம் 5. தமிழ் - தமிழ் அகராதி பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம் எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகச் சேர்த்து பொருள்வழிப் பிரித்து, கால நிரலில் ஒரே வீச்சில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோஜா முத்தையா நூலகம் புலவர் கா. இளமுருகன் (மறைமலையடிகள் மன்றம், புன்சை புளியம்பட்டி) மறை. தாயுமானவர் (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: புலவர். கா. ஆறுமுகம் மணிமொழி கருப்பையா நாக. சொக்கலிங்கம் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: திருமதி வி. சித்ரா, திருமதி செல்வி, திருமதி மலர், திருமதி ஹேமலதா, திரு. ஆசம், பிராசசு இந்தியா (Process India), திருமதி கலைவாணி, திருமதி புகழ்ச்செல்வி நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்ரா மேலட்டை வடிவடைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், திராவிடன், வே. தனசேகரன், மருது தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை, எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, பிராசசு இந்தியா மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்கு பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும். மறைமலையம் தொகுப்பில் இடம்பெறாத நூல்கள் முதற்குறள் வாத நிராகரணம் (1898), துகளறு போதம் (1898), சித்தாந்த ஞானபோதம் சதமணிக் கோவை குறிப்புரை (1898), வேத சிவாகமப் பிரமாண்யம் (1900), இந்த நான்கு நூல்களும் தமிழகத்தின் பல இடங்களில் தேடியும் எங்கள் கைக்குக் கிடைக்க வில்லை. ஆதலான், மறைமலையம் தொகுப்பில் மேற்கண்ட நூல்கள் இடம் பெறவில்லை. மறைமலையடிகள் பாமணிக் கோவை 1961இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பித்த நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்படுகின்றது. இந்நூலைப் பற்றிய குறிப்புரை... இது, அடிகளாரின் பாநலன் - திறன் காட்டும் நூலாகும். அடிகளாரின் பல்துறைப் பாடல்களையும் தொகுத்துக் கழகப்புலவர் குழுவினர் இந்நூலை வெளியிட்டுள்ளனர். சங்கப் பாக்களைப் போல விளங்கும் அடிகளார் பாநலமும், ஆங்கிலப் பாடல்களையும் வடமொழிப் பாடல்களையும் தமிழ்நாட்டியல்புக்கு ஏற்றவாறு மொழிபெயர்த்துள்ள அடிகளார் திறமும் அனைவரும் அறிந்து வியந்து மகிழும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. செழும் புனலும் கொழும் பழமும் எழும் பொதியக் குளிர் வளியும் தழும் பசியப் பயிர் வளமும் செழும் பொழிலே வாழி அன்னாய் என அமையும் அடிகளாரின் நிலமகள் வணக்கப் பாடலும் இது போல் புதுமையும் சுவையும் மிக்கு விளங்கும் அடிகளாரின் பிற பாடல்களும் இந்நூலில் தொகுக்கப் பெற்றுள்ளன. அடிகளாரின் ஆங்கில நூல்களாக விளங்குவன மூன்று. அவை பற்றிய செய்திகள் இவ் ஆய்வேட்டின் `பன்மொழிப் புலமையும் திறமையும் என்ற கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. அடிகளார் நூல்களின் அடிப்படைகளாகத் தமிழ் நலமும், தமிழர் நலமும், தமிழ்ச் சமுதாய நலமும் விளங்குதல் வெளிப்படை யாகும். அடிகளாரின் வரலாற்றறிவு, ஆராய்ச்சித்திறன், இலக்கிய ஈடுபாட்டுணர்வு ஆகிய பல்துறை அறிவு நலங்கள் அவர்தம் நூல்களுக்கு அழகும் ஆற்றலும் சேர்க்கின்றன அடிகளார்தம் நூல்களில் பழந்தமிழ்த் திறன் பாராட்டப்படுகிறது. தம்காலத் தமிழ்நிலை காட்டப்பெற்றுள்ளது; வருங்காலப் பைந்தமிழின் - வளர் தமிழகத்தின் வளமான வாழ்வுக்கு வழிகூறியுள்ளார் அடிகளார். எழுச்சிமிகு எழுத்து நாயகர் மறைமலையடிகளார், நூல்கள் வடிவில் பிறர்க்கு எடுத்துக்காட்டாக என்றும் வாழ்வார்; வழி காட்டுவார். - டாக்டர் நா. செயப்பிரகாசு மறைமலையடிகள் இலக்கியப்படைப்புகள் பொருளடக்கம் பக்கம் 1. சித்தி விநாயகப் பெருமான் 7 2. நிலமகள் வணக்கம் 10 3. மாடம் பாக்கத்தில் வைகிய சிவன் 12 4. புள்ளிருக்கு வேளூர்ப் பதிகங்கள் 13 5. திருவருளியல்பு கூறி நெஞ்சறிவுறுத்தல் 20 6. வந்தே மாதரம் 31 7. செவ்வந்திப் பூ 21 8. ஆங்கிலேய பல்மல் இதழில் வெளிவந்த தலைப்புப் பாக்களின் மொழிபெயர்ப்பு 34 9. விருதைச் சிவஞான யோகிகள் மீது பாடிய புகழ்ப்பா 37 10. தமிழ்த்தாய் வாழ்த்து 40 11. தமிழிந்திய மாது 42 12. செவ்வந்திமாநகரக் கல்லூரிப் பாட்டு 44 13. வேனிற் பாட்டு 53 14. வாழ்க்கைக் குறள் 59 15. சாகுந்தல நாடகம் 61 16. இரங்கற்பாக்கள் சோமசுந்தரக்காஞ்சி 94 17. தண்டலம் பாலசுந்தர முதலியார் அவர்கள் 116 18. மறைமலைக் காஞ்சி 118 ஒம் திருச்சிற்றம்பலம் மறைமலையடிகளார் பாமணிக் கோவை 1 இலங்கைத் தீவின் அருகேயுள்ள கோட்டை மன்னாரில் திருவானைக்கூடத்தின்கண் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சித்தி விநாயகப் பெருமான் கலித்துறை பண் (இசை : ஆரபி) திருவார் மேலைத் திருக்குறை மன்னர் செய்கோட்டை ஒருபால் மேய நன்னகர் மன்னார் உறைவீரால் தருபால் வேண்டுந் தன்மக விற்குத் தாய்செய்யும் பெருவார் அன்பிற் பின்னையும் மிக்க பெரியீரே. (1) பிறைசேர் சென்னித் தந்தை யமர்ந்த பெருமைத்தாய் நறைசேர் பாலின் நற்றடம் மேய நன்மைத்தா அறைசேர் வண்கே தீச்சுரஞ் செல்லும் அடியார்க்கு முறைசேர் மன்னார் முன்னிருந் தின்பம் முயல்வீரால். (2) முன்நின் பின்னோன் வள்ளியைக் கூட முயன்றாற்போல் பின்நின் அன்பன் அப்பெயர் பெற்றான் பேரின்பம் துன்னல் வேண்டிச் சூழ்கன வின்வெண் களிறாக மின்னி மன்னார் யாப்புற நின்றீர் மேதக்கீர். (3) ஓமென் சொல்லின் உட்பொரு ளான உயர்வெல்லாம் தூமென் யானைத் தொன்முகங் காட்டிச் சொற்றீரால் காமன் கிள்ளை நாகண வாய்ப்புள் கனிகோதிப் பாமுன் சோலை சூழ்வர மன்னார் பயில்வீரே. (4) அடியார்க் கேற்ற பல்பரி சாலும் அங்கங்கே குடியாய்க் கோயில் கொண்டனிர் கோடொன் றுடையீரே. படியார் சீரான் அன்பொடு செய்த பைங்கோயில் மடியா தென்றும் மன்னினிர் மன்னார் மகிழ்ந்தீரே. (5) ஒழியா துள்கி யள்ளுரு குந்நல் அடியார்க்குப் பழியார் செய்யும் அல்ல லறுக்கும் பண்பீரே கழியார் தோணி பல்பொருள் கூட்டுங் கரைத்தன்னால் அழியாச் செல்வம் மல்கிடு மன்னார் அமர்ந்தீரே. (6) அந்தண் உள்ளத் தந்தணர் ஓதும் மறையார்ப்பும் செந்தண் நால்வர் தீந்தமிழ் வேதத் தெளிபண்ணும் சந்தம் ஓவா தென்று மிசைக்குந் தகைமன்னார் வந்தங் குள்ள வாய்மை யருள்சால் வழக்கன்றோ. (7) உள்ளத் தூறும் அன்புறு தொண்டர்க் குருகாமல் கள்ளத் தீது செய்திடுங் கீழ்கள் கலைதேய்ந்து மெள்ளச் சாயுங் கார்மதி போல மெலிந்தல்லல் கொள்ளச் செய்து நீர்மலி மன்னார் குடிகொண்டீர். (8) அருட்கண் கொண்டே யானென தற்ற அடியார்கள் தெருட்கண் ஓங்கித் தெண்பிறை யென்னத் திகழ்வெய்தப்; பொருட்கள் நல்கித் தீம்புனல் ஊறும் புகழ்மன்னார் இருட்கள் நீங்க எல்லவன் என்ன இருந்தீரே. (9) ஒளியே காணும் ஓமெனும் வண்ண உருவத்தை எளியேம் உய்ய இன்னிசை மன்னார் எடுத்தீரால் களியார் தேனே கற்பகம் நாணக் கமழ்கின்ற அளியார் தூய பூங்கழல் யானை அருட்கன்றே. (10) இமிழ்நீர் மன்னார் யானையின் கூடத் தெமக்காகச் சிமிழார்ந் தல்குஞ் செல்வரை வாழ்த்திச் சீர்நாகைத் தமிழார் ஊரிற் சான்றவன் வேதா சலன்சொன்ன அமிழ்தார் பத்துங் கற்பவர் நற்பால் அடைவாரே. (11) அடிக்குறிப்புகள் 1. திருஆர் மேலைத் திரு - பேறு மிக்க முன்னை1. திருஆர் மேலைத் திரு - பேறு மிக்க முன்னைப் புண்ணியம் : பெருவார் - பெருமை மிக்க. 2. தந்தை அமர்ந்த - தந்தை விரும்பிய; நறை சேர் பாலின் நல் தடம் - தேன் சேர்ந்த பாலைப்போல மன்னார் என்னும் ஊரில் நல்ல இடத்தில்; பாலின் நன்மைத்தாக என்று கூட்டுக. அறை - ஒலி. 3. பின்னோன் - முருகன்; அப்பெயர் பெற்றான் - முருகவேள்; அடிகளின் புனை பெயர். 4. காமன் - காமன் தூதாக; பா - பரவிய. 5. பரிசாலும் - கருணை முதலிய பண்பாலும்; கோடு - கொம்பு. படி - உலகம்; சீரான் என்றது மன்னனை. 6. அள் உருகும் - இதயம் உருகும். 7. வாய்மை - திருப்புகழ் கூறும் வள வாய்மை; அருள் - அருளுதல்; சால் - மிக்க 8. கீழ்கள் - கீழ்மக்கள். 9. தெருட்கண் - பதிஞானம்; எல்லவன் - பகலவன்; 10. கற்பகம் - கற்பகமலர். 11. இமிழ் - ஒலிக்கின்ற; யானைகள் கூடத்து - யானைமுகப் பிள்ளையார் திருக்கோயில் உள்ள இடம்; சிமிழ் ஆர்ந்து அல்கும் - சிமிழிற் பொருந்தினாற்போல் தங்கும். 2 நிலமகள் வணக்கம் (இசை : தோடி) (இசை : முறாறி) (ஆரபி) செழும்புனலுங் கொழும்பழமும் எழும்பொதியக் குளிர்வளியும் தழும்பசியப் பயிர்வளமும் கெழும்பொழிலே வாழி அன்னாய்! (1) நிலா விளங்கும் இராப் பொழுதால் மகிழ்ச்சிதரும் நீள்நிலமே குலாவுமுகை அவிழ்க்குமலர் உலாவுமரம் நிறைநிலமே கலாவுநகை தருநிலமே கனிமதுர மொழிநிலமே இலாநலனும் விழைபொருளும் விளைநிலமே வாழி அன்னாய்! (2) ஏழு கோடிபெயர் இடுமொலி கலகல அதிரவே வாழு மீரெழு கோடிகரம் வாளொடும் விதிரவே சூழும் அன்னை நினை வலிவில ளென்றுபிறர் சொல்வரோ தாழு வேமுனை மீதுகிளர் ஆண்மைமிகு செல்வியே! பாழ்படப் பகைவர்படை சாடுவாய், யாம் வாழ்விடப் புரிகுவாய் வாழி அன்னாய்! (3) கலைப்பொருள் நீயே, கருநிறம் நீயே, நிலைப்படு நெஞ்சமும் நீயே, சொலப்படும் உயிர்க்களன் நீயே, உடம்பகத் தியங்கும் உயிர்ப்பும் நீயே, உலம்பொரு தோளின் வன்பும் நீயே, வணங்குமெம் முள்ளத்து அன்பும் நீயே, வாழி அன்னாய்! (4) அடிக்குறிப்புகள் 1. பொதிய வளி என்று தொடர்க. தழும் - தழுவும்; பொழிலே - உலகமே, நிலமே; நிலத்தை `அன்னை என்றார். 2. குலாவும் - விளங்கும்; உலாவும் - காற்றில் அசைந்தாடும்; கலாவும் - கலக்கும்; இலா - இல்லாத. 3. கலகல - கலகல என்று; இது, நகையொலி; பகைவரை எள்ளும் ஒலி; ஏழு கோடிபேர் சொல்லப்பட்டமையின் அவர் கரங்கள் ஈரேழு கோடி யாயின; விதிரவே - அசையவே; அசைதலைப் பிறர் நடுங்குதலாக நினைத்தால்; தாழுவேம் - வணங்குவேம்; மீது - மேன்மை; பெயர். வாழ்விட - வாழ. 4. உயிர்க்களன் - உயிரிடம்; உயிர்; உயிர்ப்பு - மூச்சு; வன்பு - வலிமை 3 மாடம் பாக்கத்தில் வைகிய சிவன் நாளுங் கோள்களும் நச்சுயிர் வினையும் நலமி லாக்கொடுந் தீயவன் திறமுங் கேளுங் கேளலார் கிறிகளும் இடருங் கீழ வாகமேல் அடியரை நிறுவிக் கீளும் வெண்பிறை கிளர்முடி யிருவிக் கிட்டு காலனைப் பட்டிட நெரித்து வாளும் வில்லுத்தன் னடியர்க்கு வழங்கி மாடம் பாக்கத்தில் வைகிய சிவனே. (1) மாடும் பால்சுரந் தன்பினால் வணங்க மக்க ளென்பவர் பொக்கமாம் உயிரைப் பாடும் புன்மையிற் பயனின்றிக் கழிந்து பாரும் விண்ணுமாய்ப் பரந்தநின் பெருமை நாடுந் தன்மையில் நயனின்றிக் கழிவர் நம்பர் பாலூறும் நன்றின்றி யொழிவர் வாடு மன்பர்க்கு மழையென வழங்கும் மாடம் பாக்கத்தில் வைகிய சிவனே. (2) அடிக்குறிப்புகள் 1. கிறிகளும் - பொய்மைகளும்; இருவி - இருத்தி; கிட்டு - அணுகி வரும்; பட்டிட - பட. 2. மாடு, பால்சுரந்து வணங்கினமையால் மாடம் பாக்கம் எனப் பெயர்த்தாயிற்று. பொக்கமாம் - பொய்யுமாம்; நிலையுதலில்லாத. உயிரைப் பாடுவது புன்மை என்க. 4 புள்ளிருக்கு வேளூர்ப் பதிகங்கள் (முதற் பதிகம்) திருச்சிற்றம்பலம் எழுத்தானை எழுத்தான சொல்லானை எழுஞ்சொல்லிற் பழுத்தான பொருளானைப் பல்பிணியிற் பட்டுழன்று புழுத்தேனை யருள்செய்த புள்ளிருக்கும் வேளூரிற் செழித்தானைச் சிவவொளியை என்னுளத்தே சேர்த்தேனே. (1) மருந்தானை மருந்தின்றி நோய்தீர்க்கும் மருத்துவனைப் பொருந்தாத மனத்தேனைப் புள்ளிருக்கும் வேளூரில் வருந்தாதை எடுத்தாண்ட வகைநோக்கி மனங்கசிய இருந்தேனை யருள் செய்த என்னரசைத் தொழுதேனே. (2) இனியானை என்னுயிருக் குரியானை எவ்வுயிர்க்குங் கனியான கண்ணுதலைக் கருதாத காலத்துந் தனியான துணையாகித் தண்ணருள்கள் தான்புரிந்து புனலாரும் புள்ளிருக்கும் வேளூரிற் பொலிந்தானே. (3) பொல்லார்க்குப் பொருளருளிப் புகழருளி யின்பருளி நல்லார்க்கு நன்றல்ல பலஅருளி நலிந்தருளல் புல்லாதென் றுறுவேற்கும் புள்ளிருக்கும் வேளூரான் சொல்லாதே யருள்செய்து துணையாகி நின்றானே. (4) எக்காலும் நினைந்துருகும் எளியேனுக் கிடர்புரிந்தாற் புக்கெங்கு நின்றிடுவென் புள்ளிருக்கும் வேளூரிற் றக்கோயென் றிருந்திரங்கித் தளர்வேனைத் தையலொடு பக்கலுறும் என்றாதை பரிந்தளித்தல் செய்தானே. (5) கண்ணாலுங் காணாதே கருத்தாலும் அறியாதே மண்ணாலும் பிறவியினின் மயங்குகின்ற மனத்தேனைப் புண்ணாகா தருள்செயினும் புள்ளிருக்கும் வேளூரின் கண்ணானான் இருபாலுங் கரந்தருளக் கடவானே. (6) அருளாலே நிகழ்வதென அவ்வழியே செல்வேனைத் தெருளாமே யிகழ்வாரின் திறமடக்கிச் சிறியேற்குப் பொருளாகப் பொன்னருளும் புள்ளிருக்கும் வேளூரான் இருளான துயர்தீர எனக்கருளுஞ் செய்தானே. (7) மாறாத காதலுறு மனைவியொடு மக்களையும் பேறாக எனக்கருளும் பேரொளியிற் றிகழ்பிழம்பு போறானும் விளங்குமுருப் புள்ளிருக்கும் வேளூரான் வேறாகி யவர்பிழைக்க விடாதருளச் செய்வானே. (8) அன்போடு முரணாத அருளறத்தின் றுறவெனக்குப் பொன்போலும் அன்பருடன் புள்ளிருக்கும் வேளூரின் மின்போல மிளிர்வதொரு மின்னிடத்தின் மேவுபிரான் இன்போங்க அருள்செய்த தெங்ஙனநான் இசைக்கேனே. (9) எள்ளிருக்கும் நெய்போல் எங்கிருக்கும் எம்பெருமான் புள்ளிருக்கும் வேளூரிற் பூவிருக்கும் மணம்போல உள்ளிருக்கும் ஆதலினால் உளமுருகி யன்பென்னுங் கள்ளிருக்கச் சொல்லுமவர் கன்றியநோய் காணாரே. (10) (இரண்டாம் பதிகம்) முகிலின் றொகுதி சடையாக முழுகு சுடரின் பாயொளியே தகுநின் வடிவின் உருவாகத் தயங்கு சுடரே முகனாகப் புகுவென் பிறையே நின்சடைமேற் பதியும் பிறையாய்ப் பனிமாலை புகுமென் னுளத்திற் புள்ளிருக்கும் வேளுர்ப் புகுந்த பொதுமுதலே. (1) காலை யொளிருங் கதிரொளியிற் கயற்கண் அம்மை வடிவுணர்த்தி மாலை யொளியின் மற்றுனது மாட்சி வடிவம் வகுத்துணர்த்தும் பாலை யுணரின் நின்னுருவும் மக்களுருவாம் பண்பினையும் போல நிகழும் புள்ளிருக்கும் வேளூர்ப் பொலிந்த புனிதவனே. (2) மக்க ளுருப்போற் சிறிதாகி மனத்தோ டிலகி, மலிந்தழகிற் றொக்க வுருவே மற்றெமக்குத் துணையா முருவென் றுளத்தமைத்து மிக்கவானின் உருக்கரந்து மீன்போல் உமையாள் மேவுருவிற் புக்கு நின்றீர், புள்ளிருக்கும் வேளூர் அதனிற் புத்தமுதே. (3) குறைபா டின்றித் தூய்தாகிக் குலவு மொளியுங் கொழுநிறனும் நிறைவாய் எழிலிற் றிகழ்வடிவை நினைப்பார் நெஞ்சம் நெக்குருக உறைவா ரன்றி யருவான தொன்றை நினைவார் இலரதனாற் பொறையா ருளத்தாய், புள்ளிருக்கும் வேளூரதனிற் பொலிந்த னையால். (4) அறிவினுருவும் பொருளுருவும் ஆக விரண்டாம்; அவற்றுளொன்று முறிவின் றுளதாம், மற்றொன்று முருங்கி யுறையும் முறைதேரிற், குறிகொ ளுனது திருவுருவக் கொள்கை தெரியுங் கொழுங்காவிற் பொறிவண் டார்க்கும் புள்ளிருக்கும் வேளூர் மகிழ்ந்த பொன்னவனே. (5) கள்ளம் அறியாப் பிள்ளைமையிற் காழிப் பெருமான் கண்டுரைத்த தெள்ளும் உனது திருவுருவே தேருந் தோறுந் தெளிவுருவாய்க் கொள்ளும் அடியேன் கண்காணக் கூடா தென்றோ. கல்வடிவி னுள்ளும் இருந்து வழிபட்ட வேளூர் தன்னிற் புகுந்ததுவே. (6) காணே னெனினு றினதுருவக் காட்சி முழுதுங் கண்டுணர்நது பாணே மிழற்றுஞ் சம்பந்தப் பாலுண் குழவி பகருமது வீணே யாத லிசையாமை விளங்க எமக்கு விரிசடைமேற் பூணே மதியாய்ப் புள்ளிருக்கும் வேளூ ரதனிற் பொருந்தினையால். (7) அன்பும் அறிவும் அழியாத அரிய வுருவாய் அமையுமியல் இன்ப வுருவாம் அன்னையொடும் இசைந்த வுன்றன் எழிலுருவில் என்பு முருக எளியேங்கள் எண்ணிக் காண யிரங்கிமிளிர் பொன்புல் குருவிற் புள்ளிருக்கும் வேளு ரிருக்கப் புரிந்தனிரால். (8) தூய நினது திருவுருவிற் றோய்ந்த நினைவார் தொண்டர் தமக் காய வுயிரும் உடம்புமெலாம் அருளாய்த் திகழக் கண்டிருந்தும் பேயம் நினைவு பிறிதாகப் பிடித்தாண் டெம்மைப் பிழைகளெல்லாம் போய நிலையிற் புள்ளிருக்கும் வேளு ரிருந்து பொருத்தினையால். (9) வகுத்தாய் வகுத்த வகைநின்று வாழ விரும்பும் அடியேமை மிகுத்தார் வினையும் மேல்வினையும் மேவா தருளி மிகவினிதாய்த் தொகுத்தார் வளனிற் றோய்வித்துத் தொலையா நினது தொழும்பினுக்கே புகுத்தாய் சிவமே புள்ளிருக்கும் வேளூர் அமர்ந்த பொன்னரசே. (10) திருச்சிற்றம்பலம் அடிக்குறிப்புகள் முதற் பதிகம் 1. எழுத்தான சொல் - எழுத்துக்களாலான சொல்; பழுத்தான - முதிர்ந்த; அருள்செய்த - அருளாற் காத்த. 2. வருந்தாதை- வருந்தாமல்; ஐகாரம் சாரியை; போதையார் பொற்கிண்ணத்து என்புழிப் போல. 3. தனியான - தனிச்சிறப்பான. 4. நலிந்தருளல் - நலிவித்து ஆட்கொண்டருளல்; புல்லாதென்று உறுவேற்கும் - பொருந்தாதென்று கூறி வருவேனுக்கும். 5. புக்கெங்கு நின்றிடுவென் - எங்கே போய் நிற்பேன், என் தாதை - என் தந்தையாகிய சிவபிரான். 6. மண் ஆலும் - உலகில் ஊடாடும்; இருபாலும் - வலம் இடமாகிய இருபாலும்; அருள்மிக்க அன்னையுங்கூட என்றபடி. 7. பொருளாக - பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் பொன் என்றபடி. பொன் - பொன் என்னும் பொருள். 8. பிழம்புபோல் தானும் என்க. வேறாகி - நினைப்பால் வேறாகி அருள, அகரம் சாரியை; அருள் செய்தான் என்பது. 9. துறவெனக்கு அருள் செய்தது என்று தொடர்க. பொன் போலும் அன்பர் என்றது, இனிய மனைமக்களை; பொன் போற் புதல்வர் என்றார் பிறரும்; மின் இடத்தில் - உமையம்மையை இடப் பக்கத்தில்; இவ்வாறு உமையம்மையை உடன்கொண்டு இறைவனும் இல்லறம் பூண்டு உள்ளத் துறவில் திகழ்கின்றான் என்றபடி. இசைக்கேனே - இசைப்பேனே? 10. எங்கிருக்கும் - எங்குமிருக்கும் ; கள் - தேன்; மெய்யுணர்வு இருக்க - இருக்கும்படி; விளங்க. சொல்லுமவர் - இனிமை மிகத் துதிக்கின்றவர்; கன்றிய - நாளாகித் துன்பப்படுகின்ற. இரண்டாம் பதிகம் 1. பாய் - பரவிய; சுடரின்ஒளி உருவாக அச் சுடரே முகனாக என்பது; புகுவெண் பிறையே என்றது. முதற்பிறை என்றற்கு; அடைக்கலமென்று புகுகின்ற என்றுமாம். பனி மாலை - குளிர்ந்த நினது மாலை ; புகும் - காதலுற்றமையாற் புகும். 2. காலையொளியில் அம்மை வடிவும் மாலையொளியில் அப்பன் வடிவும் வகுத்துக்காட்டும் வகுப்பை நோக்கினால், அவை முறையே மக்களுருவும் நின்னுருவும் போலப் பிரிந்து தெரிகின்றன என்க. மக்களுருவெல்லாம் அம்மை கோலமாதலின் இவ்வாறு கூறினார். எதிர் நிரனிறை அணி; பாலை - பகுப்பை 3. சிறிதாகி - குருவாய் எழுந்தருளி யென்பது. உருக்கரந்து என்றது, குருவுருவை; மேவு உருவில், மேவுருவில் எனப்பட்டது. 4. வடிகை என்றது, உருவ வழிபாடு கருதியது; உறைவார், தோய்வார் என்னும் பொருட்டு, அருவானதொன்றை என்றது, அருவ வழிபாட்டை; வழிபடுவார் பொருட்டுப் பொறுமையோடு திருவுருவங்களில் வீற்றிருத்தலின், பொறையார் எனப்பட்டது. 5. பொருள் - அறிவில் பொருள்; முறிவின்று - பால் முறிதல் போலத் திரிவின்றி உளதாம்; மலம் முறிந்து நல்லுயிராதலின்; முருங்கி - அழிந்து; தூலமாயிருப்பது நிலைமாறி நுண்பொருளாதல்; இஃது அறிவிலாப் பொருள்களை நினைந்தது. கொள்கை என்றது, உயிரின் மாறுதல் கருதி, உயிரில்லாப் பொருள்களில் எழுந்தருளித் திருவுருவ வழிபாட்டில் நின்றருளுங் கொள்கை. 6. காழிப் பெருமான் - திருஞான சம்பந்தர். 7. பாண் - பாட்டு; திருப்பதிகங்கள்; திருக்கோயில்கடோறும் திருமேனி கொண்டருளுதல் பாலுண் குழவியாகிய ஞானசம்பந்தர் பகருமது என்க. பூண் - அணி. பூணே மதியாய் - மதியே பூணாய். 8. எண்ணுதற்கெட்டா எழி லுருவாதலின், எழிலுரு என்றார்; பொன் புல்கு உருவின் - பொன்னிறம் பொருந்திய உருவினிறல்; புரிந்தனிர் - விரும்பினீர். 9. நினைவு ஆர் - நினைவு பொருந்திய; பேயம் - பேயேம்; பிறிதாக - பிறிதாதலால்; எச்சம் ஏதுப் பொருளது; பொருத்தினை - நின் அருளே பொருந்தச் செய்தனை, 10. மிகுத்து ஆர் வினையும் - மிகுந்து நிறைந்த சஞ்சித வினையும்; மேல் வினையும் - ஆகாமிய வினையும்; மேவாது - தாக்காதபடி; இனிதாய்த் தொகுத்து ஆர் வளனில் - இனிதாய்ப் பயன்படும் படி உடலூழைத் (ஏன்ற வினையை) தொகுத்துக் கொடுத்து நிரம்பிய வளத்தில்; தொலையா - கெடாத; புகுவிப்பாய் நின் தொழும்பின் என வந்தமைபோல ஈண்டும் நினது தொழும்பினுக்கே புகுத்தாய் என்றார். நான்கின் - நான்கினோடு; ஒன்று கை - ஒரு கை; மிகூஉம் - மிகும் களிறு - யானைமுகப் பிள்ளையார்; வளர் - எழுந்தருளியிருக்கின்ற; பெருங்காடாயினும் - பெரிய உலகமானாலும்; சிறந்தன்று - சிறந்தது; அளிய - அருளால் உதவத் தக்கபடி எளிமையாயிருக்கும்; களிறு வளம் என்றமையாலும், பாசப் புதர்கள் மண்டியிருத்தலாலும், உலகம் காடெனப்பட்டது; உலகம் அருளொளிப் பேறு சிறந்த தென்பது பொருள். 5 உ திருச்சிற்றம்பலம் திருவருளியல்பு கூறி நெஞ்சறிவுறுத்தல் தன்றோ ணான்கி னொன்றுகைம் மிகூஉங் களிறுவளர் பெருங்கா டாயினு மொளிபெரிது சிறந்தன் றளியவென் னெஞ்சே வளிகுலாம் வெளியி லெளிதெனக் கறங்கும் விளம்பழ நிகர்த்தவிவ் வளம்பொலி ஞாலத்து வேறு--வேறு குழீஇய வெறும்பினம் போல வரிதுமுயன் றூக்குந் தெரிவுறு மாந்தரில், 5 விழியிதழ் முகிழ்ப்பிற் கழாய்பல வுருட்டுங் கைவல் லொருவன் போல மெய்பெற வெப்பெரும் புவனமு மெண்ணிலா வுயிரு மப்பெரும் பரிசா லமைந்தாங் கியங்கப் பேதுற லின்றி மாதுட னமர்ந்த 10 வண்ணலார் திருவரு ணண்ணுவழி யறிந்து தருக்குற லின்றி யிருக்குநர் சிலரே. எம்முடை யறிவாற் செம்மைபெரி துறுவே மெம்முடை யறிவா னலம்பல பெறுவே மெம்முடை யறிவினுஞ் சிறந்ததீண் டுண்டுகொ 15 லியாமே யெமக்கீங் குறுதுணை யென்னா வெறும்பல மொழிந்து கழியுநர் பலரே ஈங்ஙன மொழியாத விளையோ னொருவன் கருமாண் குஞ்சியன் றிருவிய னோக்கின னருமைசால் குணத்தின் னொருவழிப் புகழின்றி 20 யொருவா றிருந்து மருவுமோர் குடியி லொருதனித் தோன்றிய மரபினன் றிருவரு டுணைநின் றுய்க்கும் பெற்றி யல்லது பிறிதுதுணை யில்லாச் செறிவுபெரி துடையோ, னகன்கண் ஞாலத் தியாருமி லொருசிறை 25 நினைந்தாங்குத் திரிதரூஉ மளவை, முனைந்தொரு காண்டகு சிறப்பி னான்ற கேள்விப் பல்புகழ் நிறுத்த வொடியாப் படிவத்துப் பெரியோ னொருவ னருள்வரத் தோன்றி யருணெறிச் செலவு தெருளுற வேண்டு 30 மழியா வுள்ளத்துக் கழிபே ரிளையோய்! இந்நெறிச் செலவு பிழையா தோம்பிற் பொன்னகர்ச் செல்வமும் பொருளன் றாக மன்னிய செல்வத்து வதிகுவை யெனாஅ நன்பல மொழிந்து போகப், பின்பல 35 நினையா தொருங்கிய வறிவின னாகி விழைதகக் கலித்த கொழும்புன் னிலத்து வாலுகம் பரந்த கோலமா நெறியிற் கதிர்தெறக் குழைந்து வியர்முக மரும்ப விடுகிய நோக்கமொடு கடிதுசெல லுற்றுப் 40 படுகதி ரமையத்து நெடிதோங்கு பொழிலிற் களிதுளும் புள்ளமொடு தெளிவுபெரி தெய்தி யானா விருப்பொடு தான்சென்று புகுதலும், பொதியத் தென்ற றதையரும் பவிழ்த்துக் கையரிக் கொணர்ந்த பல்விரை தெளிப்பவு 45 மொருசா ரோடும் பொருபுனற் காலிற் சிறுவளி தாவலி னிழுமென வொலிப்பவும் புதுமணம் விரிக்குங் கொழுநனை தோறும் வரிச்சிறைத் தும்பி யுருக்குபாண் மிழற்றலொடு குரூஉக்கட் குயிலினங் கூஉமிசை விராஅய்ச் 50 சுவைமிகப் பயக்கவு மிவையெலாங் கேளா வென்றுங் காணாத் துன்றுமகிழ் சிறந்து நெட்டிலை வாழையிற் கட்டுகோட் பழமும் பொரியரை மாவி னுருகுதேம் பழமுங் கடும்பசி தீரக் குடும்பொடு பறித்துண் 55. டுலைக்களத் துருகி யோடுபொன் போல நனிதெளிந் தியங்கும் பனிநீர்க் காலின் கரைமருங் கெய்திக் குடங்கை சேர்த்தி விழைவறு மளவு முழைமுகந்து பருகி யாறுசெல் வருத்தம் பாறிய பின்றை, 60 மாழையஞ் சிதரும் மணங்கெழு நறவும் விரைசெறி முகிழும் நிரைநிரை வீசிப் போதுபொதுண் மரங்கள் மீதுநிழல் செய்யத் தூவியிடு தளிமம் மேவி யாங்குப் புல்பொழி நிலத்துப் புறமிடைத் துறுவான் 65 வயினோக் குறுதலுங் குயின்வழக் கின்றி மறுவிகந்து விளங்கிய தன்றே; அவ்விடைப் பிறைமதிப் பிள்ளை நிறைமீ னித்திலங் கதிர்க்கை வாரி விதிர்த்துநக் கன்றே, ஈங்கிது காண்டலும் ஓங்கறிவு காழ்கொள 70 வாய்மையே நினைதன் மேயினன் புகுந்து மக்க ளென்போர் மிக்கபல் லுயிரினும் தலைமைபெரி துடைய நிலைமைய ரென்பது அறிவால் என்னின் அறிவொடு வரூஉங் கடுந்துயர் உறுத்து கவலையோ பலவே 75 விலங்கினம் என்ப நலங்கிளர் அறிவு தழுவுதல் இன்மையின் இழிசின என்னின் அகழ்கிழங் குண்டு முகிழ்நறா மாந்தியும் பைங்குழை மென்றும் பால்நீர் குடித்தும் மலையினும் பொதும்பினும் நிலையாக் கூட்டினும் 80 வருந்துதல் இன்றிப் பொருந்தி யிருந்தும் ஒருதுயர் இன்றி உறுநலன் பலவே; யதாஅன்று, மக்கடம் அறிவான் முடிந்தன இலவே; போக்கறும் உணர்வு மாக்களுக் கின்மையின் எனை நிலத்து முடியா வினைகளும் இலவே; 85 அறிவறி யாமையின் பெறுவதென் னென்று சூழ்ந்திட லுறினொன்று போந்ததூஉ மின்றே; அகல்கண் ஞாலம் பொதுவின்றிப் புரந்த இகலறு வேந்தரும் இறந்தொழிந் தனரே; பொய்யுரை கிளந்தும் புறம்பழித் தலைந்துங் 90 கையறி யாமையிற் கடுங்கொலை புரிந்தும் நல்லோர் தொகுத்த பல்பொருள் வௌவியும் பாழ்வயிறு நிரப்பிய கீழ்களும் இலரே. உடம்பினை ஓம்பும் கடம்படு பல்லுணா மலையினும் காட்டினும் இலைமலி மரத்தினும் 95 தவப்பல வாகி இருப்பன தேறாது நாளும் நாளும் ஆள்வினைக் கழித்து வாளாது கழிதல் வருந்துநீர் மைத்தே, நானிது செய்தேன் எனதிது என்னும் பேதைமை கந்தாப் பேரிடர் வருமே, 100 அறிவுறு பொருளையும் அறியாப் பொருளையும் ஒப்ப நாடி அத்தகவு இயக்கும் திருவருட் பெற்றி தேர்தொறும் தேர்தொறும் உவட்டெழும் இன்பந் தலைப்படும் அன்றே; எல்லும் எல்லியும் எழிலுற விளக்கி 105 அந்தரத் தியங்கும் நந்தா விளக்கமும் காலமொடு திறம்பா வளந்தரு மழையும் மழையால் உயிர்க்கும் மாண்பொருட் டொகுதியும் முழுமுதல் அறிவின் முதல்வன்செய்த அலகிலா அருளால் நிலவுறும் அன்றே; 110 அருட்பெரு வள்ளலாம் அத்தகை யோனை மருட்படும் உணர்வினேன் தலைப்படல் என்றோ; நெஞ்சுநெக் குருகிச் செஞ்சொற் குழற மெய்விதிர் விதிர்ப்ப மயிர்முனை நிறுத்த நாத்தழும் பேற ஏத்துரை மொழிந்து 115 விழுந்தருள் வெள்ளத் தழுந்துநாள் என்றோ! என்னை! என்னை! நான் இவ்வுழிவந்து பொச்சாந் திருந்து பொழுது கழித்தே நள்ளிடை யாமமா யினதே தெள்ளிய இளமதி சாயுமுன் இவணின் றகன்று 120 வளமுறு நிதிய வைப்புக் காண்பல் என்று ஓடுகால் மருங்கின் நீடு செல்வுழிப் பளிங்குருக் கன்ன துளங்குநீர் ஓடையில் பால்புரை பிறைக்கதிர் மேன்மிளிர்ந் தாடலும் எழுந்திரை கிழியக் கொடுங்கயல் மறியலும் 125 வான்இடு வில்லின் வாளைமேல் உகளலும் பாசடை நிவந்த நெறியவிழ் ஆம்பல் இரவெனும் அணங்கு திரைமடி இருவிப் பாற்கதிர் ஊட்டும் பாலன் போறலும், அன்புஇடை நெகிழா அன்றிலும் அகன்றிலும் 130 தூதுகல் உண்ணும் காதல்மிகு குரீஇயும் அன்னமும் மயிலும் பொன்னுரை கிள்ளையும் ஆடுவாற் சிரலும் புறவும் பிறவும் கூடுதொறுங் குழீஇத் துணையொடு துயிறலும், அருப்பமாய் அயல்நின்ற பொருப்பகந் தோறும் 135 கழல்கண் கூகை குழறலோ டுளியம் உரற்றலும் பிறவும் கருத்துற நோக்கி அல்லாந் தெழுந்த உணர்வின னாகி மல்லலங் காவிற் செல்லுங் காலை வைகறை யாமம் சிறிதுகழிந் தன்றே; 140 அரனார் அருளொளி விரிதலும் மருவிய ஆணவ வல்லிருள் காணா தொழிந்தாங் கங்கதிர் ஞாயிறு கீழ்ப்பால் எழுதலும் நிறையிருட் படலம் முறைமுறை கழிய அழகுறு புள்ளினம் துழனியெடுத் தனவே; 145 முழுநெறித் தாமரை புரிநெகிழ்ந் தனவே; இமையாக் கண்ண சுமைமயிர்த் தோகை பீலிவிரித் தொருபால் ஆலும் அன்றே; இன்னன பலவும் பன்முறை நோக்கிக் கவலைதீர் உள்ளமோ டுவகைபெரி துறுவோன், 150 தன்னுயிர் தன்னெதிர் தான்கண் டதுபோல் பொன்முகடு வேய்ந்த பொற்பமர் அம்பலம் கண்ணெதிர் தோன்றக் கரையறும் இன்பத்துக் குடைந்தனன் போல அடங்கா மதர்ப்புடன் ஓடுவழி ஓடி ஈடுபெறல் இல்லா 155 வச்சிரப் பலகையை நச்சி ஈர்ந்து தகைபெறு மணிகள் வகைவகை தெரிந்து குயிற்றுமிடங் குயிற்றிப் பூத்தொழில் கனியக் கடவுட் டச்சன் புடைபட வகுத்த விலைவரம் பறியா நிலையுயர் வாயில் 160 உழைநுழைத் துறுதலும், மழைமதர் நோக்கமொடு விரிந்தொழுகு நுதலில் வரிந்தநீ றிலங்க வால்வளை போலப் பால்கெழு கழுத்தில் விழிமணிக் கோவை அழகொடு துவள நுரைமுகந் தன்ன நொறியில்கெழும் அறுவை 165 அரைமருங் கசைய ஒருகரம் அதனால் அரிய அத்துவிதக் கலவையுங் காட்டிச் சிவஞானபோதச் செம்பொருள் தெளித்துப் பண்புறு சீடரைப் பார்வையில் ஆண்டுகொண்டு உருவுடன் வைகிய குருவனைக் கண்டு 170 கழுமிய நோக்கமொடு அழுதுகுறை யிரப்ப, மன்னா உலகத்து மின்னலின் மறையும் பொய்வளர் யாக்கையில் பொருந்துபல் லுயிரும் மெய்மெய் என்று பொய்படு குநவே; பொய்ப்பொருள் தம்மில் மெய்ப்பொருள் தேறிப் 175 புதுநலன் எய்தும் பொருள்கடைப் பிடித்துப் புகுந்தநின் றன்மைக் குவந்தனம் பெரிதே; அன்புடைக் குழந்தாய் நின்பொருட் டீங்குக் கட்புலன் கதுவாத் திப்பிய மெய்யருள் திரளுரு வாக வருதல் மேயினம்; 180 வேறுவே றியற்கை கூறுபல் லுயிரும் உய்குவது காணச் செய்குவம், ஆதலின், தாங்குநல உருவம்ஈ தொன்றோ அன்றே; நிலனும் யாமே, நீரும் யாமே, தீவளி விசும்புடன் யாவும் நாமே, 185 திங்களும் யாமே, எங்குமாம் உயிரும் வெங்கதிர் ஞாயிறு நங்கிளர் வடிவே; ஈங்ஙனம் ஆயினும் இவற்றின் வேறாய் நாங்கொளும் உருவமும் உண்டே; பாங்குபெற நம்மியல் பறிந்துநம் அருள்வழி நிற்போர் 190 இம்மையே நீங்கா இன்பம் எய்தி அம்மைதம் அடிநிழல் வைகுவ ரன்றே; அன்புடைத் தோன்றால் இங்கு நம் அருளொடு பிரிவறக் கெழுமி அமர்நிலை நோக்கி ஒருபே ரின்பத் துறைமதி சிறந் தென்று 195 உருவம் குருவாய் மருவிய முதல்வன் ஒளிப்பிழம் பாகிக் களிப்புறு விடையில் இமையம் பூத்த உமையுடன் தோன்றி, `ஈதுநம் உண்மை வடிவாம் ஆதலின் இளையோய் இவ்வுல குளையாங் காறும் 200 பிறழா நினைவின் முறை முறை உயரி மறுமைநம் அடிநிழல் உறுக என் றருளி நிதிக்கோன் நிதியும் மதிப்ப நல்கிக் கரந்தனன் என்ப ஆகலின், நிரந்தவம் முதல்வன் திருவருள் முனியாது வெஃகி 205 அதற்பட ஒழுகல் ஆற்றிசின் நெஞ்சே! வருவன யாவும் திருவருட் குறிப்பே வாரா தனவும் பேரா அருளே! வந்தவா வழுத்தி வல்லாங்குப் பாடி வணங்குதும் வாழிய நெஞ்சே! அணங்குடன் 210 மழவிடை அமர்ந்து வழிபடும் அடியார் வேண்டிய வேண்டியாங் காண்டுகொண் டருளிப் புலியதள் உடீஇ மதிமுகிழ் பிணித்து மொழியள வமையாக் கழிபெரு வெளியில் ஒருகால் புரிவுடன் தூக்கித் 215 திருநடம் குயிற்றும் தேவர்தம் தேவே! அடிக்குறிப்புகள் 1 - 4 வளி - காற்று; குலாம் - வீசி விளங்குகின்ற; கறங்கும் - சுற்றும்; விளம்பழம் - விளாம் பழம்; உருண்டையாயிருத்தலின் விளாம் பழம் உவமையாயிற்று. குழீஇய - தொகுப்புண்டு கூடிய; ஊக்கும் - ஊக்கங் கொள்ளும்; தெரிவுறு - முன்வந்து தெரிந்த. 5 - 8 விழியிதழ் முகிழ்ப்பில் - கண்ணிமை இமைப்பில்; ஒரு நொடிப் பார்வையில் என்க. கழாய் - கழங்குருண்டைகள்; கைவல் - கைத்திறம் மிக்க, பரிசால் - தன்மையால்; அமைந்தாங்கு - அமைந்ததென்னும்படி; 9- 16 பேது - பேதம்; பேது உறல் இன்றி - எந் நாளும் வேற்றுமையுறுதல் இல்லாமல், அண்ணலார் - சிவபெருமான்; இயக்குநர் - இருப்போர். என்னா - என்று, வெறும் பல - பொருளற்ற பல வெற்றுச்சொற்கள்; கழியுநர் - மாய்வோர். 17 - 25 மாண் மாட்சிமைப்பட்ட; குஞ்சியன் - தலையின் மயிர் முடியுடையவன்; திரு - கருவிற் றிருவும், வியன் - அகன்ற; அன்றி திரு இயல் எனப் பிரித்து திருமகளின் இயற்கை நோக்கம் உடையவன் என்றுரைப்பினும், அன்றி இரட்டுற மொழியினும் ஆம்; சால் - மிக்க; பல் வழியிலும் புகழ் மருவு குடி என்க. ஒருவாறு இருந்து - ஒரு நிலையில் நிலைத்திருந்து; செறிவு - அடக்கம்; அகல் கண் - அகன்ற இடம் பொருந்திய; சிறை - பக்கத்தில்; அளவை - நேரத்தில். 26- 34 முனைந்து - ஊக்கங் கொண்டு; ஒடியா - ஒடிவது போன்ற; அருள்வர - அருளுண்டாக; செலவும் - செல்கையும், கழிபேர் - மிக்க பெருமை வாய்ந்த; செலவு - செல்லும் ஒழுகலாறு; பொருளன்றாக - பொருள் செய்யத் தக்ககன்றாக; மன்னிய - நிலைபெற்ற; செல்வத்து - அம்மை; வீடுபேற்றில்; எனாஅ - என்று; நன் பல - நல்லன பல; நன் மொழிகள் பல. 35 - 42 பல நினையாது - பல நினைப்புகள் நினையாமல்; ஒருங்கிய - ஒருமையுற்ற, விழைதகக் கலித்த - விரும்பும்படி தழைத்த ; வாலுகம் - வண்மணல்; கோல - அழகிய; நெறியின் - நெறி காரணமாக; கதிர் தெற - சூரியன் சுட; இடுகிய நோக்கமொடு - அரைப் பார்வையாய் மருங்கிய கண்ணோடு; சுருங்கிய பார்வையோடு என்க. படுகதிரமையத்து - கதிர்படும் நேரத்தில்; அந்தியில். ஆனா விருப்பொடு - அடங்காத விருப்பத்தோடு 43- 59 ததை அரும்பு - தழைக்கும் அரும்பை;கையரிக் கொணர்ந்த - சேர்த்துக் கொண்டுவந்த; விரை - மகரந்தம் முதலிய மணப் பொருள்களை ஒரு சார் - ஒரு பக்கம்; பொரு - அலைகள் கரைகளை இடித்து பொருகின்ற; காலில் - வாய்க்காலில்; இழும் என - இழும் என்னும் ஒலியுடன். நனைதோறும் - மலருந் தறுவாயிலுள்ள பேரரும்புகள்தோறும் வரிச் சிறை - வரிகள் பொருந்திய சிறகுகளையுடைய; பாண் - பாட்டு; குருஉக் கண் -குரு கண்; ஒளியால் நிறமிக்க கண். கேளா - கேட்டுக் கொண்டு; துன்று - மிக்க. கட்டுகோள் - கட்டுக் கொண்ட; சீப்பிற் பிணைந்த. பொரி அரை - பொரிந்த அடிமரத்தையுடைய; தேம்- தித்திப்பான; குடும்பொடு - தொகுப்பாக. பனி - குளிர்ந்த; காலின் - வாய்க்காலின், குடங்கை - இரண்டு உள்ளங் கைகளையும், உழை - அருகில்; ஆறு - வழி; பாறிய - ஒழிந்த நீங்கிய; 60- 66 மாழை - குளிர்ந்த; சிதர்- தூறல், துளி; முகிழ் - அரும்பின் இதழ்களும்; பொதுள் - தழைத்த; தூவி - அன்னப் பறவையின் வயிற்று நுண்மயிர்; இடு இட்ட; தளிமம் - படுக்கை; பொழி - செழித்த; நிலத்துப் புறம் - நிலத்திடத்தை; மிடைந்து - நெருங்கிப் படுத்து; உறு வான்வயின் - மேல் உற்ற வானத்தின் இடத்தை; குயின் வழக்கு - மேகத்தின் செல்கை; அவ்விடை - அந்த வானிடத்தில் 67-78 நக்கன்று - சிரித்தது; காழ்கொள - உரங்கொள்ள; புகுந்து மேயினன் என்க. பல் உயிரினும் - பல வகையான எல்லாச் சிற்றுயிர்களிலும்; அறிவொடு - அச் சுட்டறிவோடு; வரும் - முன்வினையினால் வருகின்ற; உறுத்து - உறுத்துகின்ற; வினைத்தொகை. என்ப - என்பன; இழிசின - இழிந்தன; முகிழ் - ஊறித் தோன்றுகின்ற; குழை - தளிர்கள்; பால்நீர் - பால்போலும் நீர். 79 - 92 பொதும்பினும் - சோலைகளிலும்; உறு - உறுகின்ற அதா அன்று - அதுவன்றியும்; முடிந்தன - நிறைவேறியவை; போக்கறும் - நீளுதலில்லாத மறந்து போகும். மாக்கள் - விலங்கு முதலியன; எனை - சிறிதும்; அறிவு அறியாமையின் - அறிவும் அறியாமையுமாய் இருக்கும் நிலைமையில்; சூழ்ந்திடலுறின் - கருதினால்; போந்ததும் - முடிவு செய்யப்பட்டதும். அகல்கண் - அகன்ற இடத்தையுடைய; பொது இன்றி- தனக்கே உரியதாய்; புரந்த - ஆட்சி புரிந்து காத்த; இகல் அறு - பகையற்ற. கிளந்தும் - எடுத்துச் சொல்லியும்; கையறியாமையின் - செய்வதறியாமையால்; கீழ்களும் - கீழ்மக்களும்; இலர் - இறந்து போயினர்; இல்லாதவரானார். 93 - 110 கடம்படு - கடமையுட்பட்ட; மலி - மிக்க; தவ - மிக; ஆள்வினைக்கு அழித்து - முயற்சிகளுக்குத் தம் ஆற்றலைக் கெடுத்துக் கொண்டு; வாளாது - வீணாக; நீர்மைத்து - தன்மையுடையது. பேதைமை - செருக்கு; கந்தா - பற்றுக்கோடாக. அறிவுறு பொருள் - உயிர்; உயிர்க்காக உலகப் பொருள்களாதலின் `ஒப்ப நாடி என்றார்; அத்தகவு - அம் முறைமைக் கேற்ப; உவட்டு - தெவிட்டும்படி; எழும் - மிகப் பெருகும். எல் - பகல்; எல்லி - இரவு; இரவு பெண்பாலாகக் கருதப்பட்டு இகர விகுதி பெற்று வந்தது; அந்தரத்து - அருள் வெளியில்; நந்தா - அணையாத; திறம்பா - மாறாத; தவறாத; உயிர்க்கும் - தோன்றுகின்ற; செய்த - செய்தவை; செய்தன நிலவுறும் என்க. 111- 120 மருள் - அறியாமையுள்; தலைப்படல் - அணைதல்; விதிர் விதிர்ப்ப - நடுங்க; முனை நிறுத்த - கூர்ச்செறிய. பொச்சாந்திருந்து - மறந்திருந்து; நள்ளிடை - நடு; நிறைநிலவு நாளாதலின். நள்ளிரவுக்குப்பின் மதிசாய்தலை நினைந்து, மதி சாயுமுன் என்றார்; இள மதி என்பதில் இளமை ஆற்றலைக் குறித்தது. நிதிய வைப்பு - செல்வத் தொகுதி; பொருளுக்குரிய முயற்சி இங்குப் பொதுவாகக் குறிக்கப்பட்டது. 121- 128 ஒடுகால் மருங்கின் - கால் போன வழியே; நீடு - நீண்ட தொலைவு; செல்வுழி - சென்ற இடத்து; உருக்கு - உருக்கப்பட்ட பொருள்; துளங்கு - அசைந்தோடுகின்ற; மிளிர்ந்து - ஒளி வீசி; ஆடலும் - அசைதலும்; மறியலும் - இங்கே துள்ளுதலும் என்னும் பொருட்டு; உகளலும் - எழுந்து புரளலும், பாசடை - பசிய இலைகளுக்குமேல்; நிவந்த - உயர்ந்து வளர்ந்திருக்கும்; நெறி - முறுக்கு; ஓரொழுங்குடைமையின் நெறி எனப்பட்டது. மடி இருவி - மடிப்பில் இருத்தி; ஆம்பல் பாலன் போறலும் என்க. போறலும் - போலுதலும். 129 - 149 அன்றிலும் அகன்றிலும் - பறவையினங்கள் ; தூதுகல் - தூதாகிய கல்; குரீஇ- குருவி; உரை- தேய்வினால் உண்டாகும் நிறம்; `பொன் உரை கிள்ளை யென்றது, இங்கே ஐந்நிறக் கிளியை; சிரல் - பறவையினம்; புறவு - புறா; அருப்பமாய் - விரும்பத் தக்கதாய்; உளியம் - கரடி; உரற்றல் - வலிவாய் ஓசையிடுதல்; அல்லாந்து - மயங்கி; வைகறை யாமம் - வைகறைப் பொழுது. துழனி - ஒலிகள்; ஆலும் - ஆடும். 150 - 160 காண்டலருமையின், கண்டது போல் என்றார்; இன்பத்து - இன்பத்தில்; உருபுதொகச் சாரியை நின்றது; மதர்ப்பு என்றது இங்கே களிப்பை. வச்சிரப் பலகை - பண்பொட்டு விரித்துக் கொள்க; குயிற்றல் - இசைத்தல்; கனிய - முற்ற; கடவுள் தச்சன் - தேவதச்சன் வாயிலுழை நுழைந்+தென்றபடி; மழை மதர் - குளிர்ச்சி நிரம்பிய. 161 - 166 விரிந்தொழுகு நுதல் - அகன்ற நுதல்; வால் வளை - தூயகாது வளையம்; ஓல - அசைந்து விளங்க; பால் கெழு - பகுதியாய்ப் பொருந்தித் தெரிந்த; விழி மணி - சிவத்தின் விழி போன்ற மணிகள்; உருத்திகராக்கம்; துவள - அசைய; நொறில் - நுட்பம்; அறுவை - ஆடை; அரை மருங்கு - இடுப்பின் பக்கம்; சின் முத்திரை காட்டுதலால், ஒரு கரம் அதனால் என்றார்; ஒரு கரம் என்றது. வலக்கையை மும்மலங்களை நீங்கிச் சிவத்தோடு இரண்டறக் கலத்தலைச் சின்முத்திரையால் சிவஞான போதக் கருத்துத் தெளிவிக்கப்படுதலால் அத்துவிதக் கலவையுங்காட்டி என்றார்; உம்மை ; சிறப்பு. 168- 182 பார்வையில் - திருநோக்கத் தீக்கையால்; உருவுடன் வைகிய - திருவுருக் கொண்டு எழுந்தருளிய; கழுமிய - நிறைந்த; மெய் மெய் என்று - நில்லா உடம்பை `மெய் என்னும் பெயரால் அடுத்தடுத்துச் சொல்லிக்கொண்டு; கதுவா - கொள்ளா; திப்பிய - மேலான; அருள் திரள் உருவாக - அருள் திரண்ட அருளுருவாக; மேயினம். மேவினேம்- தாங்கும் - எடுத்துக்கொள்ளும்; ஒன்றோ அன்று - ஒன்று மட்டு மன்று. 191 - 208 அம்மை - இங்கே மறுமையில்; துறக்கஞ் செல்லும் மறு பிறப்பன்று; இம்மை நீங்கிய அடுத்த நிலை என்பது கருத்து. வைகுவர் - தங்கி இன்புறுவர்; அன்று ஏ -அசைகள்; அமர்-அமரும்; இருக்கும் நிலை - நிலையாக உள்ள பேரின்ப நிலைமை; சிறந்து - மேம்பட்டு. பூத்த - தோன்றிய உளையாங்காறும் - உள்ளனையான வரையில், இருக்கும் வரையிலென்க; உயிர்த்திருக்கும் வரையில் என்றபடி. பிறழா - ஐயந்திரிபுகளால் மாறித் தவறிவிடாத; உயரி - உயர்ந்து. நிதியும் - உம்மை இறந்தது தழீஇயது. நிரந்த தவம் என்க; ஈற்றகரம் தொக்கது; நிரந்த - முறைப்பட்ட வரிசையான்; முனியாது வெஃகி - வெறுக்காமல் விரும்பி; துன்பக் காலங்களில் வெறுத்தல் பலரிடம் காணப்படுதலின் இவ்வாறு கூறினார். அதன்பட - அதன்படி; ஆற்றிசின்; ஆற்று இசின்; ஆற்று - ஆற்றுக; இசின் -, அசை. பேரா - நீங்காத; வந்தவா - வந்தவாறு. 212 - 215 மதிமுகிழ் - மதியரும்பு; பிறைநிலா என்றபடி. வெளியில் - திருச்சிற்றம்பலத்தில்; புரிவுடன் - செய்கை விருப்புடன்; ஆடல் விருப்பத்துடன். குயிற்றும் - இழைந்து நடமிடும். 6 வந்தே மாதரம் கோயில் தொறும் கோயில் தொறும் அருட்கோலங் கொண்டிருக்கும் தாய்துர்க்கே தமியேம்நின் படிவமன்றே பரவுவதே; பாய்படைகள் பதின்கரத்தும் பற்றுகின்ற தாய்துர்க்கே சேயிதழ்த்தா மரைநிழல்வாழ் திருமகளும் நீயன்றே; மேயகலை விழுப்பொருள்கள் விளக்குமின்னும் நீயானால் சேயேம்நின் திருவடிகள் வாழ்த்துவதும் சிறப்பாமே; (1) அன்னாய் வாழியரும் பொன்னாள் வாழி, ஒப்பில் மின்னாள் வாழி, கனி நீரும்வாழி, வந்தேமாதரம்; களங்கமிலா தினிதாகி வளம்பெறுநன் னகைதுலங்க விளங்குபசுங் கதிர்முகம்எங் களைகணாம் அன்னாய், நின் இளங்குமுத வாய்முகமெம் இன்னுணவாம் அன்னாய் வந்தேமாதரம் (2) அடிக்குறிப்புகள் அன்னையாகிய கொற்றவையை விளித்து வணக்கம் செலுத்தும் முறையில் இப்பாடல்கள் அமைந்துள்ளன. 1. துர்க்கே - துர்க்கை யம்மையே; படிவம் - உருவம்; பாய் படைகள் - பாயும் கருவிகள்; பதின் கரத்தும் - பத்துக் கைகளிலும், நிழல் - ஒளியில்; மின்னும் - மின்போல் வாயும். 2. பொன் நாள் - பொன் போன்ற வாழ்நாள்; மின்னாள் - மின்னலைப் போன்றாள்; கனிநீரும் - கனிச்சாறு ஒத்தாய்; வந்தே மாதரம் - வணக்கம் தாயே; களைகண் ஆம் என்க. இன் உணவாம் - இனிய துய்ப்பாகும். 7 செவ்வந்திப் பூ இசை: சங்கராபரணம் (தரவுகொச்சகக் கலிப்பா) விலங்கலினும் விலங்கல்சேர் படுகரினும் மிதந்துசெலும் துலங்குபுய லெனவேயான் துணையின்றித் திரிந்தவழிப் பொலன்வண்ணச் செவ்வந்திப் பூத்தொகுதி மரங்கீழும் இலங்கேரி மருங்கும்உலாம் இனியவளி வீசுதொறும் கலங்கிநனி யாடுதலைக் கதுமெனநான் கண்டனெனால். (1) ஒளிபரந்த வானகத்தில் ஒளிர்ந்துமினும் உடுக்குலம்போல் நளிமிகுந்த கடல்வளைவின் கரைநெடுக நனிநீண்டு விளிவில்லா வரிசையுடன் மிகத்தொடர்ந்து விளங்கும்அவை தெளிபதினா யிரங்கணக்காய்த் திகழ்தலையை மிகஅசைத்துக் களிசிறந்து குனிப்பதையோர் கண்ணோக்கிற் கண்டெனெனால். (2) குனிக்குமலர்ப் பக்கலிலே கடல்அலையுங் குனித்தனவே, இனிக்குமலர் என்றாலும் இலங்கலையிற் சிறந்தனவே; நுனிக்குமதிச் செம்புலவன் நுவன்றகளிக் கூட்டத்தில் கனிக்குமனக் களிப்பின்றி யமர்குவது காணேனே; தனிக்குமனத் தமியேனும் நோக்கின்மேல் நோக்கினனே. (3) கருதிமிக நோக்கிடினும் காட்சியென்பாற் கொணர்வித்த இருநிதிய மேதென்ன யான்சிறிது மெண்ணிலனே தருதுயர மனத்தோடு தனிக்காட்டில் மிசைக்கிடக்கும் ஒருவனேன் அகத்திலவை தனிமைமகிழ் வொளிவீச உருகுமனம் பலகாலும் உவந்தவற்றோ டாடினவே. (4) அடிக்குறிப்புகள் 1. விலங்கல் - மலை. 2. விளிவு - கேடு; குனிப்பதை - வளைவதை; 3. நுனிக்கும் - நுணுகிச் செல்லும்; செம்புலவன் - நடுநிலை மேவிய செந்நாப் புலவன்; நுவன்ற - பாராட்டிய; களிக்கூட்டம் - மகிழும் வண்டுக் கூட்டம்; களிக்கும் - களிபோல் இருக்கும்; பெயரடியாய்ப் பிறந்த வினை. நோக்கின்மேல் நோக்கினன் - உற்று நோக்கினேன்; நோக்கினன் - தன்மை; 4. இரு நிதியம் - இருநிதியமன்ன அருளொளி; அவற்றோடு - அச் செவ்வந்திப் பூக்களோடு. 8 ஆங்கிலேய பல்மல் இதழில் வெளிவந்த தலைப்புப் பாக்களின் மொழிபெயர்ப்பு (எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்) வளியது நாப்ப ணுருக்கரந் ததுவோ, வானுறு நீல விதானத்தின் கீழாக் களியது கெழுமி யிருந்ததோ, மாந்தர் காமுறு நெஞ்சோ, கரியதொல் கடலின் தெளிதிரை மடியோ, மண்ணடி நடுவோ, செறிதரு தீத்தனை வளர்க்க வோவாது நளிதர வியங்கு மண்ணினுள் முழைஞ்சோ, நசைகிடந் துறங்குவ திசைவுற நவில்வீர். (1) கதிர் நிற மெனவும் யாழிசை யெனவுங் கட்புலன் கதுவிடா தெம்முளே கலந்து முதிர்சுவை யின்பம் அறிவுமெய் யுருவாய் முழுமுதல் நின்ற மூவிலா வியல்பின் அதிர்விலா தொன்றாய் இருளினு ளன்றே அழுந்தினங் கிடந்தேம் அங்கண்மா ஞாலம் பொதிர்வுற வொளிரும் பரிதியின் முன்பும் பொங்கொளிக் கோள்க ளுழிதரு முன்பும். (2) உலகெலா மெமதே யாங்ஙன மெனினஃ திறைவன தவனி லுகுதலில் லாது நிலவுறு கூறா யமைகுவ மவனை விதுப்புறு நெஞ்சோ டாடவன் வழுத்தும் பலமதக் கொள்கை கிழிக்கினுஞ் சூறை பரந்ததைத் துரக்கினும் அவைவெளித் தோற்றம் கலகவக் கொள்கை யனைத்தையுங் கடந்து கருதரு மெய்ம்மைய னாயவ னுறையும். (3) மெய்ப்பொரு ளறிவைப் பயந்தழி வில்லா மேதகு நிலையைத் தெளிவுற விளக்கிக் கைப்புடைச் சாக்கா டெனும்வழி பிழைத்துக் கனவென நிலையா வுலகியல் பறுத்துப் பொய்ப்பொருள் மறைக்கும் பனியென நலியப் புகலரும் வரம்பில் அறிவினா லிறைவற் றுய்க்குமா கடவு மன்பெனும் என்றூழ் துலங்குதல் காண்டும் வருதிரோ துணைவீர். (4) அடிக்குறிப்புகள் 1897 சித்தாந்த தீபிகையில் வெளிவந்தது 1. வளியது நாப்பண் - காற்றின் நடுவில்; நீல விதானத்தின் - நீல மேற்கட்டியில்; களியது - களிப்பு; அது, பகுதிப் பொருள் விகுதி. திரை மடியோ - அலையின் மடிப்பிலோ; நளிதர - செறிவுமிக; முழைஞ்சோ - குகைகளிலோ; இயங்கும் என்றது, தீ வளர்ப்பு ஓவாது நடத்தலைக் குறித்தது. நசை - அன்பு. இவற்றிலெல்லாம் தங்கிக் கிடந்ததோ? இசைவு உற - பெருத்தமுற. (அன்பு என்பது, எங்கிருக்கிறது என்றபடி) 2. கதிர்நிறம் - ஒளிவண்ணம்; கண்புலன் கதுவிடாது - கட்புலனுக்குப் புலப்படாமல்; மூ இலா - மூவா; இயல்பின் - இயல்பைப் போல; அதிர்வு இலாத - அசைதல் இல்லாத; இருளினுள் - அறியாமை யிருளில்; அங்கண் - அழகிய இடத்தையுடைய; பொதிர்வு உற - நீங்க; விடுதலையுற; இருளிலிருந்து நீங்க; உழிதரு- திரிதலின். (இறைவனைப் போல் அறியாமையிருள் போக்கும் ஞாயிற்றொளியாய் என்னுற்ள அன்பு உள்ளது) 3. (இறைவனது ஆதலின்; உகுதலில்லாது - பிரியாமல்; விதுப்புறு - அன்பினால் நடுங்கும்; ஆடவன் - முயல்வோன்; எவ்வழி நல்லவர் ஆடவர் எண்புழிப்போல் வந்தது; கிழிக்கினும் - பிரித்து ஆராய்ந்தாலும்; உம்மை, எண்; சூறை பரந்ததைத் துரக்கினும் - கருத்துக்கள் கொள்ளைபோனதைப் பின்பற்றி யெடுத்தாலும்; வெளி - அருள்வெளி; அவன் உறையும் - அவ்விறைவன் தங்கும்; அவன் என்றது, இறைவனாய அன்பு. (அன்பு - முதல்வனாய்த் தங்கும்; உலகெலாம் எமதே என்னும் பொதுமை காணும் என்றபடி.) 4. மெய்ப்பொருள் அறிவை - கடவுளுணர்வை; மெய்ஞ்ஞானத்தை; மேதகு நிலை - மேன்மை தக்க வீடுபேற்று நிலையை; கைப்பு - கசப்பு; பிழைத்து - தப்பி; பொய்ப்பொருள் மறைக்கும் பனி என - பொந்துபோலும் பள்ளங்களையும் மறைத்து வருத்தும் பனிப்படலம் ஞாயிற்றொளியால் நீங்குதல் போல; நலிய - அறியாமை நீங்க; இறைவன் - இறைவனை; கடவும் - செலுத்தும்; என்றூழ் - ஞாயிற்றொளி; துலங்குதல் - விளங்குதல்; காண்டும் - காண்போம்; வருதிர் - வருக. துணைவீர் - உடன்பிறப்பினரே! (வீடுபேற்றுக்கு வழிகூட்டும் அன்பொளி காண்போம் வருக என்பது.) இச்செய்யுட்கள் அன்பின் விளக்கம் கூறின. 9 விருதைச் சிவஞான யோகிகள் மீது பாடிய புகழ்ப்பா சீர்கொண்ட அளிக்குலங்கள் செழுந்தருவுள் நறுமலர்க்கண் ணீர்கொண்டு கரைந்துருக நிகழ்த்துமிசைக் குவப்பெய்தி வார்கொண்ட சடைமுடியெம் வள்ளலைப்போல் வன்கொன்றை ஏர்கொண்ட பொன்சொரியு மெழிற்பொழில்சூழ் விருதையூர். (1) இனையவளம் பதிதன்னு ளினியதமிழ்ப் பனுவலினுங் கனைகடலின் விரிவுடைய காமர்வட மொழித்துறையுந் தனைநிகர்ப்பா ரிலராகத் தனிவிளங்கு சிவஞான முனைவனையே யொத்துளார், சிவஞான யோகியார். (2) உலகமெனும் பூம்பிடகை யொளிர்சைவ மணியைமருட் கலகநெறிப் புறச்சமயக் கனையிருள்வாய்ப் பெயுங்காலை இலகறிவுந் தடந்தோளும் எழில்வடிவும் பெருங்கருணை உலவுதிரு விழியிணையும் எமையுடைய வுரவடியும். (3) உளமுருகுங் கட்டுரையு முயர்கலையின் றெளிவுரையும் பளகறுதன் னாவுரையும் விழுமியபற் பலநடையும் வளமுறுவொன் றுறுமாற்றாற் போந்தருளி வழங்கிருளை இளவளஞா யிறுபோலப் புறச்சமய இருள்பாறி. (4) தலையாய சைவமணி தொன்மைபோற் றயங்குறவிப் புலைநாயிற் கடையேமும் போந்ததனைப் பெறவிளக்கும் துலைநாவை யுறழ்சோம சுந்தரமா மெங்கள்பெருந் தலைநாயன் பெருங்கேண்மைப் பெருந்திருவுந் தலைக்கொண்டார். (5) ஆண்டகையாம் அவள்கேண்மை கொண்டதனுக் கடுத்தவா றீண்டுவலைச் சமயநெறி மாழாக்கு மியல்பினார் வேண்டுவன வேண்டியாங் கெய்தலுறுந் தவமுடையார் தூண்டுமனச் செயல்செறிக்குந் துறவொழுக்க மேற்கொண்டார். (6) மும்மறையின் நடுக்கிடந்த இரண்டெழுத்தே மொழிகுவார் செம்மைநெறித் திருத்தொண்டிற் கியைசெயலே சிறந்துளார் தம்மனத்தைச் சிவபெருமான் திருவடிக்கீழ்த் தவிசாக மெய்ம்மையே யிடுவித்தா ரெமையுடைய மேன்மையார். (7) என்னுரையி லமையாத இளையபுக ழியோகியார் இன்னிசைப்பண் விரும்புதலும் இசைப்பாட்டு நும்பெருமாற் கென்னாளு மிலவென்றே யிழுக்குநெறிப் பாகவதர் சொன்னாவி னுரைகேட்டுத் துளக்கமுறு முளத்தினார். (8) முத்திறத்துத் தமிழ்மலய முனிக்கிறைவன் உரைத்ததுவும் வித்தியா தரரிருவர் விளங்குசெவி யிருத்தியது மெத்துபுக ழிலங்கையர்கோன் மிகப்பாடி உய்ந்ததுவும் எத்துணையு மறியாத வேழையர்க்கு மிகப்பரிவார். (9) இழுக்குநெறிப் பாகவத ரியம்புமுரை யெஞ்ஞான்றும் வழுக்குரையாம் படிதெளிய வளமுடைய செழுந்தமிழின் வழக்குநடை யிந்நூலை மறைமுதலா மருங்கலையின் விருப்பமுறு மேற்கோளும் வியற்றமிழிற் காட்டுகளும். (10) எழுவாயும் வேற்றுமையும் என்றுரைக்குங் காட்சியொடு வழுவாத வைத்துறுப்பால் வருங்கருத்தும் வேறுரைக்கு முழுவாய்மை யுரைமூன்றும் இடைவிரவ முரணுவார் பழுதுடைய கோள்களைந்து பாங்குபெற வியற்றினார். (11) வேறு பாழ்படு நெறியெலாம் பாறிச் சென்னியிற் போழ்படு விதுக்குறை சூடும் புங்கவற் கூழ்படு மிசைவிருப் புண்மை காட்டிய சூழ்பொழில் விருதையூர் யோகி வாழியே. (12) அடிக்குறிப்புகள் 1. அளிக்குலங்கள் - வண்டுக் கூட்டங்கள் ; வன் கொன்றை - வலிமை கொண்ட கொன்றை மரம்; பொன் - பொன்னிற மலர்களை; வள்ளலைப்போல் பொன்சொரியும் என்றது, பா நயம். விருதை - விருதுநகர்; 2. கனை கடலின் விரிவுடைய வடமொழி என்றமையால், தமிழ்ப் பனுவல், இனிமையோடு சுருக்கமுமுடைய தென்பது குறிப்பு. 3. பூம்பிடகை - அழகிய பெட்டி; உர அடி - வலிய திருவடி 4. பளகு - குற்றங்கள்; நா - நாவினால் உரைக்கும்; ஓன்றுறு மாற்றால் - ஒன்று சேர்ந்தவகையினால். 5. தயங்குற - விளங்குதலால் துலை நா - துலைபோன்ற நடுநிலை நாவை; தலை நாயன் - தலைவரிற் றலைவர்; தலைவராகிய நாயகர் என்றதுமாம். 6. மாழ் ஆக்கும் - மாழ்குதலைச் செய்விக்கும்; வலை என்றதனால் சமயநெறி, இங்கே சமயநெறிப்பற்றை உணர்த்தும். செறிக்கும் - அடக்கும். 7. இரண்டெழுத்து சிவ; தவிசு - இருக்கை 8. அமையாதன (வாகிய) இணைய என்க. சொல் நாவின். 9. எத்து - எடுத்த. பரிவார் - பரிந்து விளக்குவார். 10. வியன் தமிழில். இந்நூல் என்றது, அவர் நூல் 11. காட்சியொடு - அறிவோடு; உரை மூன்று - பதவுரை, பொழிப்புரை, கருத்துரை. 12. பாறி - அழித்து; விதுக் குறை - நிலாக்குறை; என்றது, பிறை நிலா. 10 தமிழ்த்தாய் வாழ்த்து செழுந்தமி ழென்னுங் கொழுந்தமிழ்க் குழவியை மன்றினுட் குனிக்குங் கொன்றையஞ் சடையோன் தெறுவேல் ஏந்திய அறுமுகற் கருள ஆங்கவ னினிதெழுந் தேற்றுப் பாங்குறக் 5 குறங்கினி லிரீஇ வெரிந்புறந் தைவந் தியல்வகை யென்னும் பயில்பா லூட்டிச் சின்னாள் வளர்த்த பின்னர் மன்னிய வெள்ளியம் பலத்துட் டுள்ளிய பெருமான் பீடுற வமர்ந்த கூடன்மா நகரின் 10 மெய்பெற விருந்த தெய்வப் புலமைப் பெருமதிப் புலவோர்க் குரிமையி னுதவினன்; அவரும் உளந்துளும் புவகையின் வளம்பெற ஏற்றே அகம்புறம் என்னுந் தொகுகலன் பூட்டி நூலெனு மாடையும் வாலரைக் கொளீஇச் 15 சொற்சுவை பொருட்சுவை கனிந்த பற்பல பாவுணா நாடொறும் பல்வே றூட்டிச் சங்க மென்னும் பொங்குபூந் தடத்தினும் ஆலவா யென்னுங் கோலமார் காவினும் வடமொழி யென்னு மடங்கெழு தோழியொடு 20 முடம்படுத் தொருங்கு விடுப்பக் குடம்புரை கொங்கைப் பொறைகெழு கொழுந்தமிழ் மங்கை யானா வேட்கையின் ஆடி மேனாள் தென்னா டதனில் மன்னி யமர்ந்தனள். கவின்மிகு திருமகள் நறும்பொதி யவிழ்க்குஞ் 25 செழுந்தா மரையின் மேவி எழுந்தினி தமர்ந்த வியல்பினா லெனவே. அடிக்குறிப்புகள் * திரு சாமி வேலாயுதம் பிள்ளை தொகுத்த மொழியரசி நூலுக்கு எழுதப் பெற்றது. (2-11) குனிக்கும் - வளைந்து ஆடல்புரியும்; தெறு - பகைவர்களை அழிக்கின்ற; குறங்கினில் - தொடையில்; வெரிந்புறம் - முதுகிடம்; தைவந்து - தடவி. துள்ளிய - மகிழ்வோடு ஆடல்புரிந்த; பெருமான் - மைந்தனுடன் தந்தை; பீடு உற - பெருமை மிக; பீடு அற என்பது பாடமாயின், மாற்றார் பெருமை அழிய எனப் பொருள் கொள்க. மெய் பெற - திருவுருக் கொண்டு; உதவினன் - உடனிருந்து தமிழாய்ந்து உதவினன். (13- 23) கலன் - அணிகள்; வால் - தூய; ஆன - நீங்காத; அமர்ந்தனள் - வீற்றிருந்தனள். இயல்பினால் எனவே மங்கை அமர்ந்தனள் என்க. 11 தமிழிந்திய மாது (சிறந்த பண்டைத் தமிழ் நாகரிகத்தை முன்னிலைப்படுத்திக் கூறிய பாக்கள்) இராகம் (இசை - பைரவி) தாவு கொச்சகக் கலிப்பா வளம்பழுத்த விளைநிலமே விழிதிரும்பும் வழியெல்லாம் குளம்பெருக்கும் அருவிவருங் குன்றுகளே குலவுவன இளம்பருவச் சோலைகளே கருங்காடே எங்குமாய் உளம்பழுத்த மூதறிஞர் உயிராகும் உனக்கன்னாய். (1) விரிந்தபெரு ஞாலத்தில் வேறுபல தேயத்தில் விரிந்திருந்த மக்களெலாம் பேதையராய் இருந்த அந்நாள் தெரிந்துபல கலைகளெலாம் தெளிவாக மிகவிளக்கி வரிந்தனர்நின் மகார்எனிலுன் வளர்பெருமை சொலலரிதே. (2) அலையுலவும் வங்காளக் குடாக்கடலின் அடிக்கிடக்கும் விலைவரம்பு காணாத முழுமுத்தும், மேலுயர்ந்த மலையருவி கொழித்துவரும் மணிகளொடு, பசும்பொன்னும் தலையணியப் பிறநாட்டார் தந்தனைஇந் தியமாதே. (3) முன்னாளில் வாணிகத்தில் முதன்மைபெறு யவனர்களும் தென்னாட்டில் உவரியெனும் துறைமுகத்தில் திரண்டுவந்து வன்னமயில் நறுஞ்சாந்தும் மணியானை அணிமருப்பும் இன்னபல அருஞ்சரக்கும் ஏத்துகவென் றீந்தனையே (4) தொழில்நுட்பம் மிகச்சிறந்த துகளறுபட் டாடைகளும் கொழும்பருத்தி இலவம்பஞ் செலிமயிரிற் கோவைசெய்து செழும்பாலின் நிரையெனவும் திகழ்பாம்பின் உரியெனவும் ஒழுங்காகச் சமைத்தஉடை உலகமெலாம் நிலவியதே. (5) உலகிற்கோர் விளக்கனையாய் எம்முயிர்க்கோர் உயிரனையாய் பலவாறு நின்புகழ்மை பாரித்தென் சிற்றறிவாற் சொலவருமோ தொலையாத வளமுடையாய் தொன்றுதொட்ட நலமெல்லாம் பிறர்கவர இந்நாளில் நாணினையே. (6) அந்நாணம் இனியொழிய நின்மகார் அறிந்தெழுந்து முன்னாளில் விரிந்தபல கைத்தொழிலும் முதிர்ச்சியுற மன்னிமிக முயல்கின்றார் மனக்கவலை நீங்குற்றேம். இன்னும்இவர் சிறக்கவென ஏத்திமிக வாழ்த்துதுமே. (7) அடிக்குறிப்புகள் 1. குளம் - குளம்போலும் நீர் நிலைகளை; உளம் - உள்ளத்தின் ஆற்றல்கள்; எங்குமாய் விளங்கும் உனக்கு மூதறிஞர் உயிர்போல்வர் அன்னாய் - உலகன்னையே 2. உலகத்தில் பல நாடுகளில் மக்களெலாம் பேதையராய் இருந்த அந்நாள் என்க. வரிந்தனர் - நாகரிக வாழ்க்கை எழுப்பி முன்வந்தனர்; நின் மகார் - நின் தமிழ் மக்களாகிய இந்திய மக்கள்! 3. பிறநாட்டார் - பிறநாட்டார்க்கு. இந்திய மாதே - தமிழிந்திய மாதே! 4. உவரி - ஒரு துறைமுக நகர். 5. கோவை செய்து - கோத்து; நெய்து. உடை - உடைகளும்; நிலவியது - நிலவின; ஒருமை பன்மை மயக்கம். 6. பாரித்து - பெருக்கி; நாணினையே - நிலைகுறைந்தனையே. 7. மக்கள் நிலையுயர்தலால் நாடும் உயர்கின்ற தென்றபடி. 12 செவ்வந்திமாநகரக் கல்லூரிப் பாட்டு* Introductory Note - முகவுரை ஆங்கில மொழியில் வல்ல கிரே என்னும் நல்லிசைப் புலவர், ஒரே உவால்போல் என்னும் முதன்மந்திரி புதல்வரொடு கேண்மை கொண்டு மற்றவரோடு ஐரோப்பாக் கண்டத்தின் தென்பகுதியில் யாத்திரை போனபோது இடையில் அவர்க்குந் தமக்கும் மனவேறுபாடு நிகழ, அவரைப் பிரிந்து போந்து இங்கிலாந்து தேசத்திலுள்ள தமது நாட்டிற் சென்றிருத்தலும், யாத்திரை முடித்துத் திரும்பத் தந்நாடடைந்த ஓரே உவால்போல் என்பவர் கிரே என்னும் புலவரொடு தம் மிடை நிகழ்ந்த அவ்வேறுபாடு தமது தகுதியிலொழுக்கத்தான் உண்டாயினதென்றும் இனி அதனை மறந்து தம்மொடு பெயர்த்துங் கேண்மை கொண்டொழுகல் வேண்டுமென்றும் கிரே என்னும் புலவரை இரந்து கொண்டு ஒருகடிதம் விடுப்ப, அதற்கு இசைந்து அவர் உவின்ஸர் என்னும் மலைக் கோட்டையிலிருந்த தந் நண்பரைக் காண்டற்பொருட்டுச் சென்றபோது தம்மெதிரே விளங்கித் தோன்றிய ஈட்டன் என்னுந் தாங் கல்வி பயின்ற கல்விக் கழகத்தையும் அதனை யடுத்துயர்ந்த உவின்சர் மலையையும் அதனடிவாரத்தோடும் தெம் நதியையுங் கண்டு புனைந்து பாடியது இப்பாட்டென்ப. கிரே என்னும் புலவர் தந் நண்பர் உவால்போல் என்பவரோடு ஒருங்கு கல்வி பயின்ற கழகம் ஈட்டன் கலாசாலையாம். இக்கலாசாலை இங்கிலாந்து தேசத்திற் செங்கோலோச்சிய என்றி என்னும் புகழ்மன்னராற் கி.பி 1440 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. உவின்சர் என்பது ஒரு சிறு குன்று; அதன் குவட்டிலியற்றப்பட்டுள்ள கோட்டையானது இங்கிலாந்து தேசத்து அரசர் இனிது வாசஞ் செய்வதற்கு ஏற்ற உறையுளாகப் பயன்படுவது. இனி, இவ்வரிய பாட்டைக் கிடந்தவாறே யெடுத்துக் கொண்டு மொழிபெயர்ப்பின் நிலநூல் பயிற்சி தேறாத செந்தமிழ் மொழியில் வல்ல எம் பெருமுதுமக்கள் இப்பாட்டின்கட் காணப்படும் ஊர்ப்பெயர் இடப்பெயர் யாற்றின் பெயர் மலைப் பெயர் முதலாயினவற்றுள் ஒன்றுதானும் அறிய மாட்டாமையின் மனவெழுச்சி குன்றி அதனைப் பயிலாது போகடுவாராதலானும், பிறமொழிச் சொற்கள் தன்னகத்து விரவிவருதலால் தன்னழகிழந்து சுவை வேறுபட்டுக் காட்டுஞ் செந்தமிழ் மொழியில் அச்சொற்களை மாட்டிவிட்டு வழங்கல் வடுச்சொற்கேதுவா மாகலானும், சிங்கள முதலிய பிறமொழிச்சொற்களெல்லாங் கலந்து வழங்குந் தமிழ் மொழியை அவற்றொடுபடாது வழங்குந் தூய்மை யுடைத்தென்றல் ஏலாதாமென்பார்க்குச் சிங்கள முதலிய பிறமொழி மாக்கள் தம்மொடு கலந்து பழகுங்கால் அவர் சொற்களை எடுத்துக்கொண்டு தமது தமிழ் வழக்குக் கேற்குமா றெல்லாந் திரித்து உரைநிகழ்த்துந் தமிழ் முதுமக்கள் செந்தமிழியல் வழக்குப்பற்றி வரும் அத்திறம் போலாது எமக்கு வேண்டியவாறெல்லாம் பிறமொழிச் சொற்களைத் தமிழ் மொழியிற் புகுத்தி வழக்கியல் வேறுபடுத்தல் உலக நெறியொடு மாறுபடுமாதலானும் இப்பாட்டின் ஒழுகலாற்றிற் கியையத் திரிசிரபுரம் என்று வழங்குஞ் செவ்வந்திமாநகர்க் கலாசாலையைப் புனைந்து பாடியதாக இதனைத் தமிழில் மொழிபெயர்த் திட்டாம். என்னை? முதனூலிலுள்ள ஈட்டன் கலாசாலைக் கேற்ப புனித யோசேப் கலாசாலையும் எ. பி.ஜி கலாசாலையும், உவின்சர் என்னுங் குன்றிற்கு ஏற்பத் தாயுமானவர் மலையும், உவின்சர் அடிவாரத்தோடும் தெம் யாற்றிற்கேற்பத் தாயு மானவர் மலையடிவாரத்திலோடுங் காவிரியாறும் இந்நகரிடைக் காணப்படுதலான் என்பது. அற்றேல், ஈட்டன் கலாசாலையைப்போலவே இந்நகரிடைக் கல்விக் கழகங்களும் ஆங்கிலமொழிப் பெயர்பெற்று நிலாவுதலின் அப்பெயர்களை இப்பாட்டின்கட் புகுத்தி நடவல் வழுவாம் பிறவெனின் நன்று சொன்னாய்! அங்ஙன மாட்டிவிடினன்றே வழுவாம், முதனூலில் ஈட்டன் கலாசாலைப் பாட்டென்று தலைக்குறியீடு தந்ததன்றி அப்பெயர் பாட்டின்கண் தந்து வழங்கப்படாதவாறுபோலக் கல்விக் கழக மென்றன் மாத்திரைக்கன்றி அப்பெயர்கள் அதனுள் தந்து வழங்கப்படா வென்பது காண்க. இனிக் கிரே என்னும் புலவர் முதிர்ந்த செய்யுட் புலமை மாட்சி கை வரப்பெற்று உலகியற் பொருணெறி முழுதுணர்ந்து பெருநலஞ் சுவைப்பச் செய்யுளிடைக் கொளுவி இனிது மிழற்று மாறும், கழகத்திடைக் கல்விபயிலுஞ் சிறுகுறுமாக்களியல் புணர்ந்து கூறுமாறும், பின் அச்சிறார் தமக்கு வருந் துன்பங்களை யெல்லாந் தொகுத்து இரக்கந் தோன்றக் கிளக்குமாறும் பிறவும் பெரிதும் நன்கு மதிக்கப்படுவனவாம். அவற்றுள், முதல் ஐந்து செய்யுட்களில், தம்மெதிரே அழகொளிர நிவந்து சேணோக்கும் கல்லூரியின் கொடு முடியினையுங் கோபுரத்தினையும் விளித்து நீவிர் இளமரக்காவின் வளமுறு நிழலையும் குறுமரக்காட்டின் நறுமலர்ப் பரப்பையும் செழும்புன்னிலத்தின் கொழும்பொழிதமையும் ஊடுருவிச் செல்லுங் காவிரியாற்றினையும் அதனையடுத்துயர்ந்த நிலப் பரப்பையுங் காண்பீரென்றும், தமது பிள்ளைமைப்பருவத்தே திரிந்தாடுவதற் கிடமாயிருந்த குன்றுகள் மரநிழல்கள் வயல் களாகிய இவற்றை விளித்து நும்மிடத்தினின்று மெல்லிதின் வீசுந் தென்றற் காற்று எமதிளைப்பை நீக்கி எம்முயிருறு துயர் நீங்க ஆறுதல் சொல்வது போலவும் கழிந்த எமது இளமைப் பருவத்தையும் மகிழ்ச்சியையுந் தருவதாகிய ஓரிளவேனிற் பருவத்தைப் பெயர்த்தும் வருவிப்பது போலவும் உலாவு மென்றுங் கூறுமாறு காண்க; பின் இரண்டு செய்யுட்களிற், காவிரியாற்றை விளித்து! ‘அன்னாய், புல்வளர்ந்த நின் பசிய கரையிடத்தின் முன்விளையாட்டயர்ந்த சிறுவர்களுள் நின் திரையைத் தமது திண்டோளாற் கிழித்து நீந்தினாரெவர்?’ என்றும், ‘நாகணவாய்ப் புட்களைக் கண்ணியாற்பிடித்துக் கூட்டிற் சிறைப்படுத்தி மகிழ்ந்தாரெவர்?’ என்றும், ‘இருப்பு வளையங்களைக் கோலாற் புடைத்து ஓட்டிப் பின் ஓடினாரெவர்?’ என்றும், ‘பந்து ஆடினாரெவர்? என்றும் வினாவுதல் காண்க. பின்னிரண்டு செய்யுட்களிற் கல்விக் கழகத்திற் பயிலுஞ் சிறாரிற் சிலர் தாம் புறம்போய் விளையாடுங் காலத்தை நினைந்து கொண்டு முறுமுறுவென்று பாடஞ் சொல்லுதலும், அங்ஙனங் கழகத்தினுள்ளிருந்து பயிலுதற்கு அமையாது துணிந்த வேறு சிலர் திரும்பித் திரும்பித் பார்த்துக் கொண்டே ஓடுதலுங் கூறப்பட்டது காண்க. பின் மூன்று செய்யுட்களில், அச்சிறார் பலவற்றை யடைதற்கு விரும்புதலும், விரும்பிய பொருளெய்தியதும் அதன்கண் அத்துணை விருப்பஞ்செய்யாமையும், ஒரு கணத்திற் றோன்றிய இடரை அவர் மறு கணத்தின் மறத்தலும், அவரது கட்டிளமை யெழிலும், செய்தொழின் முயற்சியும், நுண்ணிய அறிவும், களிப்பும், கவலையின்மையும், நாளை வரு துன்பங்களை நினையாமையும் பிறவுங் கூறப்படுதல் காண்க. பின் இரண்டு செய்யுட்களில், அச்சிறார் தம் விதி நினையாமல் இங்ஙனம் மகிழ்ந்து விளையாட இடர்களெல்லாம் அவரை உணவு கொள்ளுதற்குப் படை குழுமி நிற்குமாறும், அந்நிலையை யறிந்து ‘காவிரி யென்னும் நங்காய்!’ நீயேனும் அச்சிறார் தமக்குச் சொல்லாயோ? என்றுரைக்குமாறுங் காண்க; பின் ஏழு செய்யுட்களில், அவரை வருத்துந் துன்பங்களின் தொழிற் கூறுபாட்டை விரித்துக் கூறுதல் காண்க; பின் இறுதியிற் கிடந்த செய்யுளில், அச்சிறார் தமக்கு இப் போது நுகரும் இன்பங்களெல்லாம் விரைந்து கழியத் துன்பங்கள் கடுகிவருதல் ஒருதலையாகலான் அவர் நாளைவரும் இடரை நினைந்து இன்று துய்க்கும் இன்பத்தினையும் இழத்தல் வேண்டா என்றும், அறியாமையே இன்பம் பயக்குமெனின் அறிவு கொண்டு பிதற்றுதல் மடமையாம் என்னும் உறுதி மொழிந்து முடித்தவாறு காண்க. இங்ஙனம் இப்புலவர் அமைத்தியற்றிய சொற்பொருள் நயங்களும் நுட்பங்களும் கற்றார்க்கெல்லாங் கழிபேரின் பம்பயக்கு நீரவாகலின், அவை தம்மைத் தமிழ்ச் செய்யுளால் மொழி பெயர்த்துத் தமிழ் வழக்குக் கேற்பச் சில பொருள் கூட்டியும் வேறு சில கழித்தும் மற்றுஞ் சில திரித்தும் முதனூற் பொருளொருமை கெடாது இயன்ற அளவு தமிழ்ச் செய்யுட் களைச் சுவைப் படுத்தியும் எழுதினாம். இன்னும் இவற்றின்கட் சொற்பொருணயங் களைத் திருத்திப் பொலிவு செய்யவல்ல அருமைகள் இதனை நோக்கும் அறிவுடை யோர் அறிவாராயின் அவற்றை எமக்கு அன்பு கூர்ந்து தெரிவித்துக் கடமைப் படுத்துவாராக. மக்களாதலே துக்க வேதுவாம் - உறுதி மொழி மாண்கலைதந் தலைவர்செயு நன்றிதனை மதித்தவர்தங் காண்பினிய தூநிழல்சேர்ந் தினிதிருப்பக் கரும்புறழ ஊண்சுவைக்குங் காவிரிபாய் சூழலெலா மொளியுறுத்திச் சேண்பொலியுங் கொடுமுடிகாள், பண்டுபொலி சிகரிகாள்? (1) இளங்காவின் கொழுநிழலு மிறும்புதரு நறுமலரும் வளங்கெழுபுன் னிவப்பொழியும் வடிந்தோடும் வெள்ளியெனத் துளும்புபுனற் காவிரிதான் சுழன்றுசெலத் திகழ்மலையின் விளம்புநுதற் கீழ்விளங்கு வெளியெலாங் காண்பீரால். (2) இலங்கவலை யாமாகி யினைதலறி யேமாகிப் புலம்பெருகாப் பிள்ளைமையிற் புகுத்துதிரிந் தியாமாடு நலம்பெருகு குன்றுகாள் விழைவுதரு நன்னிழல்காள் பலன்றிரியப் பெருங்காதல் கொளுவியநற் பழனங்காள். (3) மெல்லிதினும் மிடனின்று வீசுகா லெமக்குநிலை இல்லின்பந் தந்துதம திருஞ்சிறையை மகிழ்சிறப்ப வொல்லெனநன் கெழுப்புதொறு முயங்குமுயிர்க் குறுதிமொழி அல்லலறப் புகன்றெம்மை யாற்றுவிப்ப தெனத்தோன்ற. (4) ஒருங்குபொதுண் மலரவிழ வுயர்மணமுஞ் செழுந்தாது நெருங்கியளைந் தெழுந்தினிது நெடுவிசும்பிற் சிதர்தோறும் பெருங்களியு மிளம்போதும் பெருக்குமோ ரிளவேனில் தருங்குறிய தெனத்தயங்குந் தன்மையெலாங் காண்டுமால், (5) காவிரியென் றுரையன்னாய் களியயருஞ் சிறுவர்குழாம் பூவிரிபைங் கரைமருங்கு பொருந்திவிளை யாடியவா றோவிலரா யின்பநெறி யுறுதலெலாங் காண்கையினாற் றாவுகொழுந் தோளினெவர் தயங்குதிரை யிடைபோழ்வார். (6) இசைமிழற்றும் பூவைதமை யிரும்பொறியிற் சிறைப்படுத்து நசையுடைய ரெவரிருப்பு நவில்வளையத் துரந்துசெலும் வசையுடைய சோம்பலுள முடையரெவர் வரிப்பந்து விசையுடனன் கெழுந்தோட விடுகுநர்மற் றெவருரையாய். (7) அருந்தொழிலிற் புகுந்தனரா யவர்சிலவர் புறந்திரியத் திருந்துபொழு தினிதாக்குஞ் சிந்தனைசால் காலைகளில் இருந்துதம முறுமுறுக்கு மிரும்பணியி லீடுபடப் பொருந்துமுள மிலர்வேறு துணிவுடைய புன்சிறார். (8) வரம்புடைய தமதுகுறு நிலவாட்சி மனவெறுப்பப் பரம்புபுற நிலமுழுதும் பார்த்துமென வோடுதொறுஞ் சிரந்திரும்பிப் புறநோக்கிச் சிவணுவளி யுளர்தோறும் புரம்பரவு குரல்கேட்பப் பொருந்துவெருக் களிகொள்வார். (9) களியளைந்த நம்புநசை கருதுமா றுரங்கொளினும் எளிதடைந்த பொழுதவர்தாம் விரும்பலிலா வியம்பினார் துளிவிழியி லுகுதலுமே தோன்றாம லதுமறப்பார் தெளியிளமை யொளிவிளங்குந் திறமுடைய தின்மையார். (10) செழுமுளரி யிதழ்வண்ண வெழில்வயங்கு திணிநலமும் எழுநாள்க டொறும்பெருகு செய்திறமும் இன்னாத கொழுமதியு மதுகைதரு கொழுங்களியுங் கவல்வதிலாப் பழுதுகெடு பகற்பொழுதும் பரிவில்லாக் கங்குலும் (11) தாளாண்மை தூயனவுந் தயங்குகதிர் நாள்விடியல் வாளாது கழிந்துவிடு மின்றுயிலு மற்றுமெலாம் நாளாலு முடையசிறார் நாளைவரு தீதுள்ளார் நீளாத கவலையெலா நிகழ்நாண்மேற் பிறிதில்லார். (12) அழிவுதரும் விதிநினையா ரதற்கிரையாய் விளையாடப் பழிவிதியி னுழையோரும் பாழ்வினையின் கொல்படையும் மொழிசிறுவர் தமைச்சூழ முதிர்ந்துகடி கொளுமாறு விழிகொடுகா ணுதிநங்காய் விளங்குபெரு வளமுடையாய். (13) சிறுதூற்றி னிடைமறந்து சிறுவர்தமை யுணவுகொளக் கறுவுடனக் கொல்படைதான் காவலொடு முறுநிலையை மறுவின்றி வயங்குபுகழ் மருவுடையாய் மற்றவருக் குறுதியுறக் காட்டியவர் மக்களென வுரையாயோ. (14) மாந்தருளங் கொழுதியுணும் வல்லெருவை தமைப்போல ஈர்ந்தவரைப் படுவிக்கும் இன்னாத கொடுங்காதல் காந்துசினம் விளர்வெருவு கரந்தியங்கு கழிநாண ஏந்துமெழின் மெலிவிரகம் இளமையெலாங் கழிக்குமால். (15) அவ்வியந்த னெயிறதுக்கி யாழ்நெஞ்சி னகங்கறிப்பச் செவ்விதலா அழுக்காறுந் திறங்குழைக்கும் பெருங்கவலும் ஒவ்வலிலா வலிக்குமுகந் தெளியாத வுள்ளுடைவும் எவ்வமதின் கூர்ங்கணையு மிடையுருவி யடையுமால். (16) பேராசை யொருசிலரைப் பிறங்கியெழ நனிகடவி ஓராவவ் வேழையரை யுடன்சுழற்சி யிளிவினிலுஞ் சீராத விகழ்வினிலுஞ் செலப்படுத்துத் திரிதரவுந் தீராத பொய்ம்மையெனுந் தெறுக்காலிற் கோட்பட்டார். (17) இளகலிலா வன்கண்மை யினைதலிலா விருவிழியும் பளகுமிக வவர்விழிநுண் டுளியரும்பப் பணித்துநக வுளகுருதி வறந்துகெட நினைந்திரங்கு முயர்தகவுந் தளவவிழ்த லெனத்துயரி னிடைநகூஉத் தனிவெறியும். (18) ஆண்டுகளென் றுரைபடுக ராழ்நிலத்திற் கோளிழைப்ப வீண்டிநிற்குங் கொடும்படைதா மிறவியெனு மறையனுக்கு நீண்டபெருங் கிளையெனினும் நீடியதம் மிறைவனிலும் மூண்டபெருங் கொடுமையினார் முறைமைசொலற் பாலதோ. (19) ஒன்றுமுளி யிடைமுறிப்ப வொன்றுநரம் பினையெரிப்பத் துன்றுகொழுந் தசையிசிப்ப மற்றொன்று தோன்றுமுவை நின்றவுயி ருறுப்பிடங்க ணிலையுருவி வெகுண்டலைப்பப் பொன்றுமிடி யுயிர்விறைப்பப் பனிக்கைதனைப் பொருத்துமால். (20) பிறிதுசிறி துடலையுணுந் தெரியகவை யினநிறைப்பப் சிறிதுவர வவரவரும் பேதுறுவ ரவர்வினையால் வறிதுபிறர் வருந்துதல்கண் டினைவோரும் வருந்தாத குறியவரு மெல்லாருங் கலுழ்ந்திரங்கக் குறிப்பட்டார், (21) இன்பமெலாம் விரைந்தோடு மிடர்தாழ்த்து வருதலிலை பின்புவரும் விதிநினைதல் பிழைதரு மாதலினான் முன்புசிறா ரவையறிதல் வேண்டாயா மொழியமைந்தாம் இன்பமறி யாமையெனி னறிவுகொள லெளிமையே. (22) அடிக்குறிப்புகள் * .இது ஞான போதினி (1901) 5 ஆவது தொகுதி முதற் பகுதியில் வெளியிடப் பெற்றது. 1. என்றி என்னு மன்னர் ஈட்டன் கல்லூரியமைத்துக் கல்வி வளம் படுத்து நிறுத்தலின் அந் நன்றியறிந்து அவர்தந்த அந் நீழலிலிருந்து கொண்டு கலைகளெல்லாம் அவரை வழுத்தும் என்று முதனூலிற் கூறப்பட்டதற் கிணங்கச் செவ்வந்திக் கல்லூரிகளிலும் அவ்வாறு கலைகள் தந்தலைவர் செய்ந்நன்றியை மதித்து இனிதிருக்கும் எனப்பட்டது. சூழல் - இடைவெளி கொண்டு சுற்றிலும் மரமடர்ந்த சோலை - Glade கொடு முடி - Spire. சிகரி - Tower 2. இறும்பு - குறுமரக்காடு - பொழி - புற்பற்றை, Tuff. உலையில் உருக்கி வடித்த வெள்ளிபோல நீர்துளும்பியோடுங் காவிரி யென்க. கொடுமுடிகளுஞ் சிகரிகளும் மலையினுந் தாழ்ந்த உயரமுடையனவாதலால் அம் மலைக்குவட்டின்கீழ் விளங்கு நிலப்பரப்பெல்லாங் காண்பவெனப்பட்டது. 3. கவலையிலமாகி என்க. இனைதல் - வருந்தல். புலம் பெருகாப்பிள்ளைமை - அறிவு நிரம்பாத பிள்ளைப் பருவம். விழைவு - விருப்பம். பலன் திரிய - பலனின்றி, தம்மோடுடன் பயின்ற உவெடு என்னும் அரிய நண்பர் இறந்துபட்டமையின் கிரே என்பவருக்கு இவை பயனிலவாகக் காணப்பட்டன. கொழுவிய - உண்டாகிய; பழனம் - வயல், சிறார் விளையாடு மிடனெனினும் அமையும், Field. 4. கால் - காற்று. உயங்கும் - இளைத்த, வாடிய. அல்லல் - துன்பம். 5. இச் செய்யுண்முதலடி யிரண்டும் முதனூலிலில்லனவாயினும், செய்யுளும் பொருளும் நிரம்பல் வேண்டிப் படைத்து எழுதப்பட்டன. பொதுளல் - நிறைதல். தாது - மகரந்தம். களி - மகிழ்வு. 6. முதனூலாசிரியர் தெம் யாற்றைத் தந்தையென அழைப்பராயினுஞ் செந்தமிழ் வழக்குக் கேற்பப் பெண்பாலாக வுரைக்கபட்டது காவிரியாறென்க. ஆடியவாறு - ஆடியபடியே. கொழுந்தோள் - Pliant arm. திரை - அலை. போழ்தல் - இரு கூறாக்குதல். 7. மிழற்றல் - பாடல். பூவை - நாகணவாய்ப்புள், இதனை இக்காலத்து மயினா என்று வழங்குப. முதனூலிற் கண்ட லின்னெட் (linnet) என்னும் இசையறி பறவைக் கேற்ப ஈண்டுப் பூவை எனப்பட்டது. பொறி - கண்ணி, Trap. வளையம் - Hoop. 8. வெளியே திரிவதற்கென்று குறித்த காலத்தை இனிதாக்கும் பாடவேளை என்க. சிறார் பாடம் பயிலும்போது முறுமுறு வென்று ஒலித்தலின் அவ்வாறு கூறப்பட்டது. பணி - வேளை. ஈடுபடல் - அறிவு செலுத்தல். 9. ஆட்சி - ஆளுகை. சிவணுவளி - மெய்யிற் படுங்காற்று. உளர்தல் - அசைதல். புரம்பரவு - பக்கத்தே பரவிவரும். வெருக்களி - அச்சத்தோடு கூடிய மகிழ்வு. 10. அளைந்த - கலந்த. நம்புநசை -ஒன்றனைப் பெறுதற்கு எதிர்பார்த்திருக்கும் அவா. உரங்கொளல் - வலிமைப்படல்; ஓரரும் பொருள் பெற விரும்பினார் அப் பொருள் பெறுதற்கு முன்னரே அதனைப் பெற்றாற்போல நினைந்து மகிழ்தலும், அதனை எளிதிலடைதலும் அதன்கண் அத்துணை விருப்பஞ் செய்யாமையும், வழக்கிற் கண்டு கொள்க. துளி விழியிலுகுதல் - துன்பக் குறிப்பு. 11. முளரி - தாமரை; முதனூலில் ரோ என்பதற்கேற்ப இஃது ஈண்டுப் பொருத்தப்பட்டது. முறுக்கவிழ்ந்த தாமரையிதழ் போலும் இளமையழகு வாய்ப்பப் பெற்றவரென்பதாம். கொழுமதி - தீயவழிப் படுநுண்ணறிவு, Wild wit. மதுகைதரு - மெய்வலியாற் பிறந்த; கவல்வு - கவலை. பரிவு - துன்பம். 12. தாளாண்மை - Spirit. கதிர் - ஞாயிறு. விடியல் - காலை. 13. விதியின் உழையோர் - ஊழ்வினையின் மந்திரிகள். முதிர்ந்து - சூழ்ந்து. கடிகொளல் - காவல் கொளல். நங்கை - காவிரியென்னு நங்கை. 14. தூறு - பதுங்கியிருத்தற்குப் பயன்படுங் குறியபுதல். கறுவு- வைரங்கொளல். ஈண்டுங் காவிரி விளக்கப்பட்டது காண்க. மக்களாய்ப் பிறத்தலே துக்க வேதுவா மென்னும் உறுதி மொழியிற் போந்த பொருள் ஈண்டு வலியுறுக்கப்பட்டது காண்க. 15. கொழுதி - மூக்கினாற் கோதி. எருவை - ஒருவகைப் பருந்து. ஈர்தல் - பிளத்தல், காந்து கினம் - அழலும் கோபம். விளர்வெருவு - வெள்ளிய அச்சம், அச்சமுடையார்க்கு மெய்வெளுத்தலின் இவ்வாறு சொல்லப்பட்டது. கரந்து - ஒளிந்து, கழி - மிகுந்த. ஏந்தும் எழில் - மிக்க அழகு. 16. அவ்வியம் - jealousy. எயிறதுககல் - பற்கடித்தல். கறித்தல் - கடித்துணல். குழைத்தல் - தளர்வித்தல். முகஞ் சுளிக்கச் செய்யும் மனத்தளர்வென்க. எவ்வம் - துன்பம். இடையுருவல் - நடுவு நுழைதல். 17. பிறங்கி - உயர்ந்து. கடவி - வலியச் செலுத்தி. சீராத - சிறவாத. இப்பொருட்டாதல் ஆசிரியர் நக்கீரனார் களவியலுரையிற் காண்க. தெறுக்கால் - தேட்கொடுக்கு. கோட்படல் - கொள்ளப்படுதல். 18. வன்கண்மை - கன்னெஞ்சுடைமை. பளகு - குற்றம். அவர் - சிறார் இரத்தம் வற்றும்படி முன்செய்த குற்றங்களை நினைந்திரங்குந் தன்மை. தளவு - மல்லிகை. வெறி - பித்து. 19. படுகர் - பவளநிலம், கோளிழைத்தல் - கொல்லுதல். இறவி - சாக்காடு. கிளை - சுற்றம். 20. முளி - கணு. joint. இசித்தல் - இழுத்து அழுத்தல், உயிருறுப்பிடம் - பிராணாதாரம். மிடி - வறுமை, பனிக் கை - Icey Hand. 21. அகவை - வயது. முற்கூறிய நோய்களின் தொகுதி முற்ற என்க. பேதுறல் - இடரெய்தல். கலுழ்தல் - அரற்றல். குறிப்பிடல் - விதிக்கப்படுதல். 22. பீழை - வருத்தம், மொழி யமைந்தாம் - இவை கூறுதல் இத்துணையி னமைத்தாமென்பது. 13 *வேனிற் பாட்டு இஃது, ஆங்கிலமொழியில் வல்ல கிரே (gray) என்னும் நல்லிசைப் புலவர் நலத்தகவியற்றிய செய்யுளினின்று மொழி பெயர்த்துக்கொண்டு செய்யப் பட்டது. வேனிற்கால இயனெறி வழாமை அக்கால நிலையிற் புறத்தே தோன்றும் உலகியற் பொருட்கண் நிகழும் நிகழ்ச்சியும், அந்நிகழ்ச்சியையே நிலைக்களனாக மொழிந்து கொண்டு அவ்வுலகியற் பொருணிலை யாமை புலப்படுத்தித் துறவுள்ளந் தோற்றுவிக்கும் அருமையுஞ் சுருங்கவுரைத்து உற்றுநோக்குவா ருணர்வெல்லாந் தன்வயப்படுத்து அவரறிவைப் பெருக்கி இன்பம் பயக்கும் நீரதாய் நிற்றலின் இவ்வரிய பாட்டைத் தமிழிலும் மொழிபெயர்த்து விடுதற்கு விரும்பி அதனை அவ்வாறே இயற்றினாம். கிடந்தவாறன்றி வேறுபடப் புனைந்து பாடுஞ் செய்யுள் வழக்குப்போலாது, உலகியற் பொருட்பெற்றி யெல்லாங் கிடந்தவாறே எடுத்து மொழிந் துறுதி பயக்குஞ் செய்யுள் வழக்கே தழீஇ வருதலின் இன்னோரன்ன பாட்டுகள் பெரிதும் போற்றப்படுவனவாமென்க. சங்கப் புலவரியற்றிய பழைய தமிழ் நூல்களும், பிற்காலத்துச் சேக்கிழார் போன்ற சில ஆசிரியன்மாரியற்றிய நூல்களும் கிடந்தவாறு புனைந்துகூறும் மெய்ப்பொருட் செய்யுள் வழக்கே தழுவி நடை பெறுவனவாக, மற்றும் மெய்பொருள் வழக்கொடு மலைந்த வடமொழி வழக்கேபற்றி உற்றுநோக்குவாருணர் வெல்லாம் ஊக்கமும் உறுதியுமின்றிக் கழிந்து இளைப்படையப் பலப்பல தோன்றியவாறெல்லாம் புனைந்துகூறும் ஏனை நூற்பொருளெல்லாம் அத்துணையாகச் சிறந்தெடுத்துப் போற்றப்படுவன வல்லவாமென்று துணிக. ஒரு காப்பிய நூல் இயற்றுதுமெனப் புகுந்து நாட்டுப்படலம் நகரப்படலமென வகுத்து வாளாது விரியப்பாடுதலும், கம்பராமாயணம் சுந்தரகாண்டங் கடறாவு படல முகத்தில் வரையறையின்றி மிக விரித்துப் புனைந்து பாடுதலும் போல்வன வெல்லாங் கேட்போருணர்வுங் காண்போருணர்வுஞ் சலித்து வெறுப்படையத் திரிக்கும் வடமொழி வழக்குப்பற்றி வருவனவாதலான், மற்றவை அத்துணையாகத் தேறப்படுவன வல்லவாமென்பதூஉம், சிலப்பதிகாரம், மணிமேகலை, கலித்தொகை, பத்துப்பாட்டு, பெரியபுராணம் முதலிய நூல்களிற்போல நூற்பொருள் நடந்து செல்லு நெறிக்கிடையே கேட்போருணர்வு பாற்படுவகை யான் இன்பந் தோன்றக் கிடந்தவா றெடுத்துமொழிந்து உண்மை யுணர்வு தோற்றி விருப்பமுறுக்கவல்ல மெய்ப்பொருள் வழக்கேபற்றி வருவனவெல்லாம் பெரிதுங் குறிக்கொண்டு போற்றப்படுவனவா மென்பதூஉம் நுண்ணறிவுடையார்க் கெல்லாம் இனிது விளங்கும். ஆங்கில மொழியில் வல்ல சேக்பியர், மில்டன், கிரே முதலிய நல்லிசைப் புலவ ரெல்லாரும் இங்ஙனமே கிடந்தவா றெடுத்துச் சமயம் நேர்ந்துழி யெல்லா மெய்யுணர்வு தோன்றக் கூறுதலின் அவரெழுதிய நூற்பொருள்களும் மேதக்கனவா மென்பது. எந்நாட்டிலாயினும் எச்சொல்லிலாயினும் எம்மக்களிலாயினும் புகழப்படும் அருங்குணமாட்சிகளுள வாயின் மற்றவற்றை விளங்கக் காட்டி வியந்து பாராட்டுதல் மெய்ப்பொருளாராயும் நடுவுநிலை யாளர்க்குரிய கடமையாம். அஃதொழியத் தாமுவந்தனவே நல்லவென்று தம்முள் வைத்து நலம் பாராட்டுவா ருரைகள் அறிவுடை மக்கள் கொள்ளராதலின், அத்துணிவுபற்றி ஆங்கில மொழியிலுள்ள இதனை மொழிபெயர்த்தியற்றினாம். இப் பாட்டின் இயனெறி தெரிக்கப்புகுந்தமையின் இத்துணையும் இது விரிந்ததென்றுணர்க. இனி, இப் பாட்டை ஆங்கிலமொழியில் எழுதிய கிரே என்னும் புலவர் தம் ஆங்கில மொழிச் செய்யுள் வழக்குக் கேற்பவும், தந்தேச வொழுக்கங் குலவொழுக்கங்கட் கேற்பவும் அதனை இயற்றுதலின், மொழியும் செய்யுள்வழக்குந் தேசவியலும் வேறுபட்ட எம்மனோர்க்கு அங்ஙனங் கிடந்தவாறே எடுத்து மொழிபெயர்த்துவிடின் அச்செய்யுட் பொருளறிந் தின்புறுதல் செல்லாமையின், தமிழ் வழக்குக் கேற்குமாற்றான் அதனைச் சிற்சில இடங்களிற் றிரிவுபடுத்தி எதுகை நயம், மோனை நயம், சொற்பொருட் பொருத்தங்கட்கேற்பச் சில கூட்டியமைத்து இதனை ஈண்டுவெளியிடத் துணிந்தாம். இன்னும் இதன்கண் திருத்தங்கள் செய்து செய்யுளழகை உயர்த்தவல்ல நுட்பங்கள் இதனை நோக்கும் நண்பர்கள் அறிவாராயின் அவற்றை அன்புகூர்ந்து தெரிவித் தெம்மை இன்பமுறுத்துவாராக! ஒளிவனப்பி னிரதிதனக் குறுபாங்கி மாராகி யொளிர்செஞ் சாந்த நளிகொளுவ வெழின்முலைமேற் றிமிர்ந்தாங்கு நறுஞ்செந்தா மரைகள் பூப்ப வெளிவந்து களிதழுவ விளையாடு வியன்பருவ மடந்தை மார்ந்தாந் தெளியபல பகல்விரும்பு மலரவிழ்த்துத் திகழாண்டு மெழுப்பு வாரால். (1) அக்காலை யிரவதனி லினியவிசை யழகுதர மிழற்று மோர்புள் குக்கூவென் றிசைகுயிலின் குறிப்பாட்டி னெதிர்வேனிற் குலவு பண்கள் மிக்கூர வருமிடற்றிற் பொதிகொண்டு வெளியுகுப்ப விரிதண் கோடை மைக்கூருந் தெளிவிசும்பிற் சிறைதிரட்டு மணந்தெளித்தின் புறுக்குமன்றே. (2) பரியவரைப் பெருமரங்க டிணிகோடு பயந்தசெழு நிழல்க டோறும் பொரிபொகுட்குச் செவிரமுறு மரைமரங்கள் பொலிந்துகவி யதர்க டோறும் விரிதிரைக்கை பொருதடத்தின் கரைமருங்கும் விளங்குகலை மகளென் னோடு முரிதிருப்பப் புறமிடைந்து மருதநில மக்களென வுறுமக் காலை. (3) மன்பதையி னவாவளவு வறிதெழுந்து கழியுமது வென்னே யென்னே இன்பமது வுளந்துளும்பச் செருக்குறுவோ ரிழிவெய்தித் தாழ்த லென்னே துன்பமறு பொருளுடையோ ரதுதொலையத் துயரடைத லென்னே யென்னே அன்புதரு கவலையுட னரிதுழைப்போ ரஃதின்றி யார்த லென்னே. (4) நெடிதுயிர்க்கு முழுபகடு நிலனசைஇ வறிதிருப்ப நீள்வா னூடு குடிகொளுயிர்க் குழாம்பரந்து கறங்குமொலி குலவுறுத லென்னே யென்னே கடிமலரூற் றுறச்சுரக்குங் கழிசுவைத்தேன் பருகவெழு காதல் கூரத் துடிசிறையி னிளஞிமிறு துளும்புபக லொளிப்புனலி னீந்து மன்றே. (5) அவைதம்மிற் சிலமொழிந்த வொளிப்புனலிற் சிறிதுபடீஇ யசைந்து செல்ல உவைசில்ல பொலன்விளங்குஞ் சிறைப்படாஅ முயரவிரித் தொளிஞா யிற்றி நவையின்றி யவிரொளிமு னலமிளிரப் பலகாட்டி நடப்ப வெல்லாம் இவைதாமிம் மனிதருற வருவாழ்வென் றெழுநினைவின் விழிக்கு மன்றே. (6) இடங்குழுமி நகர்வனவு மெழுந்துயரப் பறப்பனவு முதலா வெல்லாந் தொடங்குழியே மறிதரவு முடிவுகொளுந் தொழிலரிதி னுஞற்று வோரு முடங்குகளி யுளம்விளைய நுகர்வோரும் ஊழ்வலியா கியபல் வண்ணப் படங்குலவச் சிலவருநாட் பரப்பிடைபோழ்ந் தரிதெழுந்து பரிகு வாரால். (7) இழவூழி னொருகருங்கை யிழைத்தகொடுங் கொலையானோ விறுமாப் பெல்லாம் விழவூரும் பெருமுதுமை யதனானோ வெறியாட்டு முழுது நீங்கிப் பழகூர வவர்பலரு மிரும்புழுதி யாகியயர் வுயிர்ப்ப யாவு மெழவூறு மெமதுளத்தி லிடையறா தக்காலை யெழுந்த வன்றே. (8) இனையபல வருமையெலா மினிதொளிர விளவிளையாட் டொருசின் மாக்கள் தினையளவு மவைநினையா ரெமைநோக்கி யொழுக்கமறி சிறுமை யுள்ளா யெனைவகையை யொருதனியீத் தனைநிகர்வை யெழில்கிளரு மகளி ரோடு நனைமகிழ்வு தலைசிறப்ப நலம்பருகி யின்பமுறா நடையை மன்னோ. (9) வளங்கெழுநற் றெளிமதுவ முடன்றொகுத்த வளரிறா லுனக்கொன் றின்றால் துளங்கொளிகால் கலவநனி துலங்கவிரித் தெழவொன்று சிறிது மின்றால் இளம்பருவங் கடுஞ்சிறைகொண் டுயரவெழுந் திறந்ததுநின் பரிதி பட்ட துளர்வேனில் கழிந்ததினி விளையாட வெழுதுமென வுரைத்தார் மன்னோ. (10) அடிக்குறிப்புகள் * Lubbuks’s “ The Use of Life” இப்பாட்டு ஞானபோதினி தொகுதி 4. பகுதி 11 இல் வெளியிடப் பெற்றது. 1. முதனூலில் வீன (Venus) என்பதற்கேற்ப இரதி எனப்பட்டது. இரதி - காமன் மனைவி. உயிர்கட்குக் காமவின்பத்தை நுகர்விப்பவள். வேனில் முதலிய பருவங்களைப் பெண்களாகக் கூறுபடுத்தி வீன என்பவளுக்குத் தோழிமாராகக் கிரேக்கர் கூறுபவாகலின் அவ்வாறு சொல்லப்பட்டது. தமிழ் வழக்குக் கேற்பச் சாந்தம் தாமரை முதலியவாகச் சில திரித்துச் சேர்க்கப்பட்டவாறு காண்க. ஆண்டு - வருடம். 2. இரவிற் பாடும் புள் - Nightingale. கோடை - மெல்லிதின் வீசும் மேல்காற்று. 3. பரிய அரை - பெருத்த அடி; அரை - Trunk. பொகுட்டு - கரடு முரடு. செவிரம் - பாசி. அதர் - காட்டுவழி; Glade. கலைமகள் - Muse. புறம் இடைதல் - முதுகு சாய்தல். மருதநிலமக்கள் - நாகரிக மில்லாத நாட்டுப்புறத்தார்; Rustics. 4. மன்பதை - மக்கட்பரப்பு. உழவுத் தொழில் செய்வோர் வேனிற்காலத்தில் வறிதிருத் தலின் நாலாவது வரியில் அவ்வாறு சொல்லப்பட்டது. 5. வேனிற்காலத்து உழவு நடவாமையின் உழவுமாடு வறிதிருக்குமென்பதாம். அசைஇ - இளைப்பாறி. இக்காலத்துச் சில வறிதிருப்ப வேறு சில மிக அரிதினுழைப்ப தென்னென வியந்தவாறு. கறங்குதல் - சுழலுதல். ஞிமிறு - ஒரு வண்டு. ஒளிப்புனல் - பேய்த்தேர். 6. படாம் - போர்வை. நவை - குற்றம்; மேகத்தான் மறைபடுதல். விழிக்கும் - தோன்றும்; விளங்கும் ; விழிப்பத் தோன்றா என்பதனுள் இப்பொருட்டாதல் காண்க. 7. தொடங்குழி - தொடங்கியவிடம். மறிதரல் - திரும்பிவரல். உஞற்றுதல் - அரிது முயலல். படம் - போர்வை போழ்தல் - ஊடறுத்தல்; எல்லாரும் வாழ்நாட் பரப்பை ஊடறுத்து விரைந்து வானுலகு செல்வரென்பதாம். 8. இழவூழ் - கேடுபயக்கும் விதி. கருங்கை - கொலைதொழிலிற் பழகிய கை; கொன்றுவாழ் தொழிலினும், வன்பணித் தொழிலினுங், கன்றிய தொழிற்கை கருங்கை யெனப்படுமே என்றாராகலின். அயர்வுயிர்த்தல் - இளைப்பாறுதல். 9. ஈ - ஈப்பறவை; a fly. எழில் - அழகு 10. இறால் - தேனடை - உருவக வகையால் இன்பந்தரும் பொருட் டொகுதி மேனின்றது. கலவம் - மயிற்றோகை; உருவகவகையாற் சிறந்த வுடைமேனின்றது. பரிதி - சூரியன். நின்பரிதிபட்டது என்பது வாழ்நாள் கழிந்ததென்பதனைக் குறிப்பானுணர்த் திற்று. இவ்விரண்டு பாட்டானும், உலகியற்பொருள் துறவுள்ளந் தோற்று விக்குமாகவும், அந்நுண்மை யறியமாட்டாதார் வேறுசில இன்பங்களையே பெரிதெடுத்துக் கூறுவரென முதனூற்புலவர் முடிவுரை கூறினார். 14 வாழ்க்கைக் குறள் இது பல்லவபுரம் பொதுநிலைக் கழக ஆசிரியர் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள் குறட்பாவில் இயற்றிய நூல். வாழ்க்கை இருவகைத்தா மாந்தர்பாற் றோற்றுவிக்கும் ஊழ்க்கு நிகரே துரை. (1) இம்மையே யன்றி இனிச்சேர் மறுமையும் மெய்ம்மையார் கண்டார் விதந்து. (2) இன்றிருக்கும் ஓரறிஞன் நேற்றிருந்த தன்றியே பின்றைநா ளும்மிருத்தல் பேசு. (3) இரண்டுந் தொடர்ந்தே இயங்குமுறை தேர்ந்தோர் முரண்டு மறுமை மறார். (4) இம்மை இயல்நெறியை ஏற்கத் திருத்தினால் அம்மை யியல்சிறக்கும் ஆர்ந்து. (5) இம்மை யொழுக்கம் இனிது நிகழாக்கால் செம்மையே வாழா ருயிர். (6) மாந்தர்க்கு நூறாண்டு வாழ்த்துமுறை வாழாக்கால் தேர்ந்தபயன் உண்டே தெரி. (7) இறைவன் படைப்பில் இறையுங் குறையாங் கறையே திவன்செயலல் லால். (8) அகத்தும் புறத்தும் அமைந்த அமைப்பை மிகத்தெரிந்து செய்க வினை. (9) மாறா நிலையும் மலையுஞ் செயல்தானும் வேறாதல் கண்டு விளம்பு. (10) அடிக்குறிப்புகள் 1. இருவகை - செல்வநிலை, வறியநிலை. திருவேறு தெள்ளியராதலும் வேறு என்றலும் ஒன்று. ஊழ் - ஊழ்வினை. ஊழ் என்றது ஏன்ற வினையை. 2, மெய்ம்மையார் - மெய்யுணர்ந்த மேலோர். விதந்து - சிறப்புறச் சொல்லி 3. பின்றைநாள் - பின்னாள். ஓர் அறிஞன் பின்னும் பலநாள் வாழக்கூடும் என்றுபேசினால் வாழ்வோருக்கு முயற்சிகளில் ஊக்கம் மிகும் என்பது அடிகளார் கருத்து. 4. இரண்டு - நல்வினை, தீவினை (அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்கள்.) தேர்ந்தோர் - ஆராய்ந்து தெளிந்தவர்கள். முரண்டு - மாறுபட்டு. மறார் - மறுக்கமாட்டார். 5. இயல்நெறி - இயற்கையொடு ஒத்துவாழும் நெறி. ஏற்க - அவ்வழியொடு பொருந்த. அம்மை - மறுபிறப்பு. ஆர்ந்து - நிறைந்து. 6. செம்மையே - சிறப்பாக; இம்மையில் நல்வினை செய்தோர் மறுமையில் இன்புற்று வாழ்வர் என்பது கருத்து. 7. வாழ்த்து முறை - என்று முன்னோர் வாழ்த்திய வகையில். தேர்ந்த பயன் - கற்றறிந்ததனால் உண்டாகும் பயன். 8. இறையும் - சிறிதும். குறையாம் கறை - குறையாகிய இழுக்கு. இன்ப துன்பங்களுக்கு நாம் செய்யும் வினையே காரணம் என்பது கருத்து. கறை இல்லை என்பதற்குக் கறை யேது என்றார். இவன் செயலே கறை என்பதற்கு இவன் செயலல்லால் என்றார். 9. மிகத் தெரிந்து - நன்றாக ஆராய்ந்து. அகத்தும் புறத்தும் - உள்ளும் புறமும். அமைப்பு என்றது உறுப்புகளின் பொருத்தத்தை. 10. மாறா நிலையும் - நிலைத்த நிலையும். மலையும் செயல்தானும் - அதனோடு மாறுபட்டழியும் நிலையாமைச் செயல்களும். கண்டு - அறிந்து. விளம்பு - அவற்றின் இன்றியமையாமை கருதிக் கருத்துக்களைச் சொல்க. 15 சாகுந்தல நாடகம் நடியின் கூற்று விரியு மணமவிழ்க்கும் மலர்முகிழ்மே லெல்லாங் கரிய வரிவண்டு முத்தமிடல் காணாய்! எரியுந் தளிர்ப்பிண்டி யிணர்கிள்ளி யோடுங் கரியவிழி மாதர் காதிடலுங் காணாய்! (1) (இ-ள்) விரியும் மணம் அவிழ்க்கும் - எங்கும் பரவாநின்ற மணத்தை அவிழச்செய்யும்; மலர் முகிழ்மேல் எல்லாம் - பூவரும்புகளின் மேலிடங்களை எல்லாம், கரிய வரிவண்டு - கரிய நிறமும் இறக்கைகளில் வரியும் உடைய வண்டுகள், முத்தம் இடல் காணாய் - முத்தம் இடுதலை ஒப்ப வாயால் தொடுதலைப் பார்ப்பாயாக, எரியும் தளிர்ப்பிண்டி இணர் கிள்ளி - தீ எரிவதனை யொப்பச் சிவந்து தோன்றுந் தளிர்களையுடைய அசோக மரத்தின் பூங்கொத்துகளைக் கிள்ளி, ஓடும் கரியவிழி மாதர் - காதளவும் ஓடாநின்ற நீண்ட கரிய கண்களையுடைய மடந்தையர், காது இடலும் காணாய் - தம்முடைய காதுகளிற் செருகுதலையும் பார்ப்பாயாக. அரசன் கூற்று புள்ளி விளங்கு பொன்மான் உடன்பயின்ற வள்ளைச் செவியாளென் மாதர்க் கொடிதனக்குத் தெள்ளு மடநோக்குந் தெருட்டியதால் மற்றதனை உள்ளிக் கணைதொடுத்தும் உய்த்திடநான் மாட்டேனால். (2) (இ - ள்) புள்ளிவிளங்கு - வெண்புள்ளிகளுடையதாய்த் திகழும், பொன்மான் - பொன்னிறமான மான் ஆனது, உடன் பயின்ற - தன்னுடன் பழகிய, வள்ளைச் செவியாள் - வள்ளைத் தண்டை யொத்த காதினையுடையளாகிய, என்மாதர்க்கொடி தனக்கு - எனக்குக் காதலை விளைக்கும் பூங்கொடி போல்வாளான சகுந்தலைக்கு, தெள்ளுமடநோக்கம் - தெளிவுடையதாய்க் கள்ளமறியாத பார்வையினை, தெருட்டியதால் - கற்பித்தமையால், மற்று அதனை - அத்தகைய மானை, உள்ளி - எய்வதற்கு எண்ணி, கணை தொடுத்தும் - அம்பை வில்நாணில் தொடுத்தும், உய்த்திட நான் மாட்டேன் - அதனைச் செலுத்து தற்கு நான் முடியாத வனாயிருக்கின்றேன்; ஆல் - அசை. மாதர் காதல் (தொல்காப்பியம் உரியியல், 32.) என்மாதர்க்கொடி என்பதற்கு எனக்கு உரியளாகிய இப்பெண்கொடிக்கு என்று பொருளுரைப்பினும் ஆம. சகுந்தலையின் அழகிய பார்வையும் மானின் இனிய பார்வையும் ஒன்றாயிருத்தலின், அவளை யொத்த மானை வேட்டம் ஆடுதலில் அரசனுக்கு உள்ளஞ் செல்லவில்லை யென்பது கருத்து. ஓவிய மாக எழுதிய பின்னை யொருமுதல்வன் ஆவி புகுத்தி விடுத்தன னோவன் றழகையெல்லாந் தாவி மனத்தாற் றிரட்டின னோவவன் றன்வலிவும் பூவை யுருவும் நினையிற்பொன் னாளோர் புதுமையன்றே? (3) (இ- ள்) ஓவியம் ஆக - சித்திரத்திலுள்ள ஓரழகிய வடிவமாக எழுதிய பின்னை - வரைந்தபிறகு, ஒரு முதல்வன் - ஒப்பற்ற தலைவ னாகிய நான்முகக் கடவுள், ஆவிபுகுத்தி - அவ் வடிவத்தினுள்ளே உயிரை நுழைத்து, விடுத்தனனோ - அதன்பின் அவளை இந் நிலவுலகத்திற் பிறப்பித்தனனோ, அன்று - அன்றி, அழகை யெல்லாம் - ஒவ்வோர் உறுப்புகளின் அழகுகளையெல்லாம், தாவி - மனத்தாற் பரந்து ஆராய்ந்து, திரட்டினனோ - ஒருங்கு சேர்த்துச் செய்தனனோ, அவன் தன் வலிவும் - நான்முகனது படைப்புத்தொழிலின் திறமும், பூவை உருவும் - கிளியை யொத்தாளின் உருவச்சிறப்பும், நினையின் - ஒப்பவைத்து நினைப்பின், பொன்னாள் - இலக்குமியைப்போன்ற சகுந்தலை, ஓர் புதுமை யன்றே - இதுகாறும் எங்குங் காணப்படாத ஒரு வியத்தகு படைப்பன்றோ என்றவாறு. மோவா மலரோ நகங்களை யாத முழுமுறியோ ஆவா! கருவி துருவாது பெற்ற அருமணியோ நாவாற் சுவையாப் புதுநற வோசெய்த நற்றவங்கள் தாவா தொருங்கு திரண்டுவந் தாலன்ன தையலரே. (4) (இ-ள்) செய்த நல்தவங்கள் - மேலைப் பிறவிகளிற் செய்த நல்ல தவத்தின் பயன்கள், தாவாது - அழியாமல், ஒருங்கு திரண்டு வந்தால் அன்ன - ஒன்று சேர்ந்து ஓர் உருவாய்த் திரண்டு வந்ததை யொத்த, தையலர் - இம் மாதரார், மோவா மலரோ - மூக்கால் மோந்த பூ வாடிப்போதலால் இதுகாறும் ஆடவர் எவர் மூச்சும்படாத பூவோ, நகம் களையாத முழு முறியோ - பிறர் எவரது நகமும் படாமையின் நகத்தாற் கிள்ளப் படாத முழுத் துளிரோ, ஆவா - ஆஆ; இது வியப்பினைக் காட்டும் இடைச் சொல், கருவி துருவாது பெற்ற அருமணியோ - ஊசியால் தொளைக்கப்படாமற் பெற்றுக்கொண்ட விலையிடுதற்கரிய ஒன்பது மணிகளுள் ஒன்றோ, நாவால் சுவையாப் புது நறவோ - பிறரெவரது நாவினாலுஞ் சுவைக்கப்படாத புதிய தேனோ, இன்னதென்று கூறுகில்லேன் என்றவாறு, நுகர்தல் - அனுபவித்தல். களிவளர் கடவுளாங் காம தேவனே! எளியன்மேற் சிறிதுநீ இரங்கல் இல்லையால்; ஒளிவளர் மலர்க்கணை உறப்பொ ருந்துநீ அளியிலை கொடியைஎன் றாய தென்கொலோ! (5) (இ-ள்) களிவளர் - மகிழ்ச்சியின் மிகுதிப்படுத்துகின்ற அல்லது மகிழ்ச்சி மிக்க அல்லது காம மயக்கத்தை வளர்க்கின்ற அல்லது செருக்குமிக்க, கடவுள் ஆம் - தெய்வமாகிய, காம தேவனே, எளியன் மேல் - நின் வலிமைக்குச் சிறிதும் ஒவ்வாத ஏழையேன்மீது, சிறிதும் நீ இரங்கல் இல்லையால் - சிறிதாயினும் நீ நெஞ்சம் இரங்குகின்றிலை, ஒளிவளர் மலர்க்கணை- நிறம் மிகுந்த பூக்களாகிய அம்புகளை, உறப்பொருந்தும் நீ - நிரம்பவைத்திருக்கும் நீ, அளிஇலை - அருள் இலாய் என்றும், கொடியை என்று - கொடுங்குணம் உடையை யென்றும், ஆயது - எம்மையொத்தார் சொல்லும்படி ஆனது, என்கொலோ - ஏது காரணமோ என்றபடி. விரிகட லடியிற் புதைந்தவெந் தழல்போல் வெகுண்டசிவன் எரிவிழி கான்ற கொழுந்தீ நினதுஅகத்து எரிகின்றதால்; பொரிபட வெந்துசாம்பர்ஆ யினையெனிற் பொறாதஇடர் புரிவாய்!எமை வெதுப்பல் எவ்வாறுனக்குப் பொருந்தியதே? (6) (இ-ள்) விரிகடல் அடியில் புதைந்த வெம்தழல் போல் - அகன்ற கடலின் அடியிலே ஆழ்ந்து கிடக்கின்ற கொடிய தீயைப்போல், வெகுண்டசிவன் எரிவிழி கான்ற கொழும் தீ - சினங்கொண்ட சிவபிரானது நெற்றியிலுள்ள அழற்கண் கக்கிய மிக்கநெருப்பு, நினது அகத்து எரிகின்றதால் - நின்னை எரித்து விடாமல் நின்னுள்ளே எரிந்து கொண்டிருக்கின்றது போலும், பொரிபட வெந்து சாம்பர்ஆயினை எனில் - அவ்வாறின்றிப் பொரியாகத் தீய்ந்து சாம்பலாய் விட்டனையாயின், பொறாத இடர் புரிவாய் - தாங்கல் முடியாத துன்பத்தைச் செய்பவனே, எமை வெதும்பல் - எம்மை நினது கொடுந் தீயிலிட்டு வாட்டல், எவ்வாறு உனக்குப் பொருந்தியது - எங்ஙனம் உனக்குக் கூடியது, ஏ - அசைநிலை. பூங்கணை வாய்ந்த புத்தேள்! நீயும் புதுமதியும் ஈங்குள மக்கட் கின்பந் தருவீர் எனஎண்ணி ஏங்கிய காதலர் எல்லாம் ஏமாந் தனரானார். தாங்காக் காதல் என்போன் மாந்தர் தளர்வாரே. (7) (இ-ள்) பூங்கணைவாய்ந்த புத்தேள் - பூவாகிய அம்பினைப் பெற்ற காமதேவனே, நீயும் புதுமதியும் - நீயும் முதிராத நிலவும், ஈங்கு உளமக்கட்கு - இந் நிலவுலகத்துள்ள மக்களுக்கு, இன்பந் தருவீர் என எண்ணி - இன்பத்தினை விளைக்குந் தன்மை யுடையீரெனக் கருதி, ஏங்கிய காதலர் எல்லாம் - தாம் காதலித்தவரைப் பெறாமையால் ஏக்கமுற்ற காதலர் எல்லாரும், ஏமாந்தனர் ஆனார் - ஏமாற்றம் அடைந்தவராயினார்கள்; தாங்காக் காதல் - பொறுத்தற்கரிய காதலன்பின் வயப்பட்ட, என்போல் மாந்தர் - என்னை யொத்த மக்களோ, தளர்வார் - தாம் பிழைக்கும் வழி காணாமையின் உள்ளஞ் சோர்வா ரென்றபடி. மலரைக் கணையாய் உடையாய் எனநீ வருகுதலும் அலர்தண் கதிரோன் அவனென் றறையும் அவ்வுரையும் இலவாம் பொய்யே; எம்போல் வார்க்கவ் வெழின்மதியம் உலர்வெந் தீயே பொழியும் உறுதண் ஒளியாலே. (8) (இ-ள்) மலரைக் கணையாய் உடையாய் என நீ வருதலும் - பூக்களைக் கணைகளாகப் பெற்றாய் என நீ வழங்கப்பட்டு வருதலும், அலர்தண் கதிரோன் அவன் என்று அறையும் அவ் உரையும் - விரிந்த குளிர்ச்சியான கதிர்களையுடைய மதியோ னாகிய அவன் என்று எங்குஞ் சொல்லப்படும் அச் சொல்லும். இலஆம் பொய்யே - என்றும் இல்லாதன ஆன வெறும்பொய்யே யாகும், எம் போல்வார்க்கு - எம்மைப்போற் காமநோய் கொண்டார்க்கு; அவ் எழில் மதியம் - அவ் எழுச்சியினையுடைய திங்களானது, உலர் வெம் தீயே பொழியும் - யாம் காய்தற்கு ஏதுவான வெவ்விய நெருப்பையே சொரியும். உறு தண் ஒளியால் - மிகுந்த தண்ணிய ஒளியினால், என்றபடி. ஏ : அசை. நீயோ மலர்வெங் கணையை இடிபோல் நிறைக்கின்றாய்! ஆவா மருட்டும் அலர்கண் மடவாள் பொருட்டாக ஓவாது எனைநீ புடைக்கின் றமையால் உயர்மீனப் பூவார் கொடியாய்! என்னாற் புகழப் படுவாயே. (9) (இ-ள்) நீயோ மலர் வெம்கணையை இடிபோல் நிறைக்கின்றாய் - நீயோ பூக்களாகிய கொடிய அம்புகளை இடியை யொப்ப எம்மீது ஏவி நிரப்புகின்றாய், ஆ ஆ மருட்டும் அலர்கண் மடவாள் பொருட்டாக - ஐயோ எம்மை மயக்கும் பரந்த விழிகளையுடைய அம் மங்கையின் பொருட்டாக, ஓவாது எனை நீ புடைக்கின்றமையால் - ஒழியாது என்னை நீ நின் கணைகளால் அடிக்கின்றதனால், உயர் மீனம் பூ ஆர் கொடியாய் - உயர எடுத்ததும் மீன்வடிவு எழுதப்பட்டதும் பொலிவு நிறைந்ததுமான கொடியினை உடையாய், என்னால் புகழப்படுவாய் - என்னால் நீ புகழ்ந்து பேசப்படுவாய், என்றபடி; ஏ: அசை. முகை அவிழ்க்குந் தாமரையின் முதிர்மணத்தின் அளைந்து மிகைபடுநீர் மாலினியின் விரிதிரைநுண் டுளிவீசுந் தகையினிய இளந்தென்றல் தனிக்காம எரிவெதுப்புந் தோகையுடம்பிற் றழுவுதற்குத் தொலையாத வளமுடைத்தே.(10) (இ-ள்) முகை அவிழ்க்கும் தாமரையின் - அரும்பாயிருந்த பதத்தினின்று அலருந் தாமரை மலரின்கண் உள்ள, முதிர் மணத்தின் அளைந்து - மிக்க மணத்திலே தோய்ந்து, மிகைபடுநீர் மாலினியின் - மிகுதியாய் ஓடும் நீரினையுடைய மாலினியாற்றின், விரிதிரை நுண்துளி வீசும் - அகலமான அலைகளினால் எறியப்படுஞ் சிறிய நீர்த்துளிகளை வாரிக்கொணர்ந்து வீசாநின்ற, தகை இனிய இளம் தென்றல் - மென்மைத் தன்மையால் இனிதாகிய முதிராத தென்றற் காற்றானது, தனிக்காம எரி வெதுப்பும் - ஒப்பற்ற காமமாகிய தீயினால் வாட்டப்படும், தொகை உடம்பில் - எழுவகை முதற் பொருள்களின் தொகுதியாகிய உடம்பினால், தழுவுதற்கு - அணைத்தற்கு, தொலையாத வளம் உடைத்து - கெடாத செழுமையினை யுடையதாகும் என்றவாறு. ஏ: அசை. விழிகளாற் பெறூஉம் அழிவில்பே ரின்பம் ஆஅ! பெரி தெய்தினென் மாதோ, தூஉய ஒண்மலர் தாஅய வெண்ணிறக் கன்மிசைத் தோழியர் மருங்கிற் சாஅய என் இன்னுயிர்ச் செல்வியைக் கண்ணுற லானே. (11) (இ-ள்) விழிகளால் பெறூஉம் - கண்களைப் பெற்றதனால் அடையும், அழிவு இல் பேர் இன்பம் - கெடுதல் இல்லாத பேரின்பத்தினை, ஆ ! வியப்பிடைச் சொல், பெரிது எய்தினென் - மிகவும் பெற்றேன், மாது ஓ: அசைநிலை, தூஉய - பரிசுத்தமான, ஒள்மலர் - ஒளி பொருந்திய பூக்கள், தாஅய வெள்நிறம் கல்மிசை - பரவிய வெண்ணிறம் வாய்ந்த கல்லின்மேல், தோழியர் மருங்கில் சாஅய - தன் தோழிமாரின் பக்கத்தே சாய்ந்து கிடக்கும், என் இன் உயிர்ச்செல்வியைக் கண் உறலான் - எனது இனிய உயிர்க்குச் செல்வமாயிருப்பவளைக் காண்டலினால் என்க; ஏ ; அசை, என் இன்னுயிர்ச் செல்வியைக் கண்உறலான் விழிகளாற் பெறூஉம் அழிவில் பேரின்பம் ஆ அ பெரிதெய்தினென் என வினைமுடிவுசெய்க. நறுமண நரந்தம் நகிலமேற் றிமிர்ந்துந் தாமரை நாளங் காமரு கையிற் பவளக் கடகமெனத் துவள வளைத்தும் என், ஆருயிர்க் காதலி ஓரயர் வுறினும் எழில்மிகு செவ்வியள் மாதோ, கழிபெருங் காதல் பயந்த ஏதமுறு நோயுஞ் சுடுகதிர்க் கனலி அடும்பெரு வருத்தமும் ஒன்றென மொழிவ ராயினும் என்றூழ் பொழிகதிர் வருத்த மீதுபோல் மழவிள மகளிர்க்கு அழகுபயந் தின்றே. (12) (இ-ள்) நறுமண நரந்தம் - நல்ல மணத்தை உடைய நரந்தம் புல்லின் அரைப்பை, நகிலம் மேல் திமிர்ந்தும் - கொங்கை களின்மேற் பூசியும், தாமரை நாளம் - தாமரைத் தண்டை, காமரு கையில் - அழகிய அல்லது விரும்பத்தக்க கைகளில், காமர் என்பதன் ஈற்றில் உகரச் சாரியை வந்தது, பவளக் கடகம் எனத் துவள வளைத்தும், என் ஆர் உயிர்க் காதலி ஓர் அயர்வு உறினும் - எனது அரிய உயிரை அனையளான காதலி ஒரு தனித்தளர் வினை அடைந்தாலும், எழில்மிகு செவ்வியள் - அத்தளர்விலும் ஒர் அழகு மிகுகின்ற பதத்தினையுடையள், மாது ஓ: அசை, கழிபெருங்காதல் பயந்த - மிகப்பெரிய காதலன்பு தந்த, ஏதம் உறுநோயும், - துன்பத்தினையுடைய நோயும், சுடுகதிர்க் கனலி அடும் பெரு வருத்தமும் - தீய்க்கும் கதிர்களைச் சொரியும் பகலவன் வருத்தும் பெருந் துன்பமும், ஒன்று என மொழி வராயினும் - ஒரு தன்மையவே எனக் கூறுவாருளாராயினும். என்றூழ் பொழி கதிர்வருத்தம் - பகலவன் சொரியுங் கதிர்களால் உண்டாந் துன்பம், இதுபோல் - இங்க காதல் விளைத்த நோயைப்போல், மழ இள மகளிர்க்கு - மிக இளையமாதர்க்கு, அழகு பயந்தது இன்று - அழகு தந்ததில்லை; ஏ: அசை; பயந்தது இன்று என்னுஞ் சொற்கள் பயந்தின்று என மருவின. வண்மலர்க் கன்னமும் வறண்டு வற்றின திண்ணிய கொங்கையுந் திறந்தி ரிந்தன நுண்ணிய நடுவுமேல் நுணுகிப் போயின வண்ணமும் வெளிறின தோளும் வாடின. (13) (இ-ள்) வள் மலர்க் கன்னமும் வறண்டு வற்றின - கொழுமையான மலர்களை யொத்த சகுந்தலையின் இரு கன்னங்களும் நீர்ப்பசையற்றுச் சுருங்கின, திண்ணிய கொங்கையும் திரிந்தன - இறுகிய கொங்கைகளுந் தமது இறுக்கம் மாறிவிட்டன, நுண்ணிய நடுவும் மேல் நுணுகிப்போயின- இயற்கையிலேயே இடுகிய இடையின் மேல் கீழ் நடு என்னும் மூன்று பகுதிகளும் இன்னும் மிகுதியாய் ஒடுங்கிப் போய் விட்டன, வண்ணமும் வெளிறின - உடம்பின் பல பகுதிகளிலுள்ள நிறங்களும் வெளுத்துவிட்டன, தோளும் வாடின - இரண்டு தோள்களுஞ் சோர்வுற்றன என்றவாறு. உருக்கிளர் இளந்தளிர் உலரத் தீய்த்திடு பொருக்கெனுந் தீவளி பொருந்த வாடிய மருக்கமழ் மல்லிகை போன்ற மாதர்பால் இரக்கமும் இன்பமும் ஒருங்கெ ழுந்தவே, (14) (இ-ள்) உருக்கிளர் இளம் தளிர் உலரத் தீய்த்திடும் - நிறம் விளங்கும் இளந்துளிர்களை ஈரம் இல்லையாகத் தீய்த்துவிடும், பொருக்கெனும் தீவளி பொருந்த வாடிய - விரைய வந்து வீசுந் தீக்காற்று மேலே படுதலால் வாடிப்போன, மருக்கமழ் மல்லிகை போன்ற - மணங்கமழும் மல்லிகைப் பூவையொத்த, மாதர்பால் - மங்கையாகிய சகுந்தலையினிடத்து, இரக்கமும் இன்பமும் ஒருங்கு எழுந்த - அவளது அழகிய மேனியின் வாட்டத்தைக் காண்டலால் அவள்பால் இரக்கமும் அவ்வாட்டம் என்பால் வைத்த காதன்மிகுதியால் உண்டாயிருக்கலாமென்று எண்ணுதலால் இன்பமும் ஒரே காலத்தில் என்னுள்ளத்தில் உண்டாயின என்றவாறு - ஏ : அசை. வேனில் கழிந்த வுடனே விரிகடல்நீர் வானம் பருகி வருகார்நாள் மன்னுயிருக் கானா மகிழ்வு தரல்போல் அடுங்காதல் ஏனை எனக்கும் இன்பம் பயந்ததுவால். (15) (இ-ள்) வேனில் கழிந்த உடனே - கோடை காலங் கடந்தவுடனே, விரி கடல் நீர் - அகன்ற கடலினது நீரை, வானம் பருகி - மேகமானது குடித்து, வரு கார்நாள் - வருகின்ற கார்காலத்தில், மழையை நோக்கும், மன் உயிருக்கு - நிலைபெற்ற உயிர்களுக்கு, ஆனாமகிழ்வு - அடங்காத மகிழ்ச்சியினை, தரல்போல் - தருவதுபோல், அடும்காதல் - வருத்துகின்ற காமப் பேரன்பானது, ஏனை எனக்கும் - இது காறுங் காத லின்னதென்றே யறியாமையின் அதற்கு வேறான எனக்கும், இன்பம் பயந்தது - இன்பத்தை உண்டாக்கியது; ஆல் : அசை. கைமேற் றலைவைத் திரவிற் கிடக்கக் கடைக்கணின்று பெய்ந்நீர் அழற்ற நிறந்திரி வான பெருமணிகள் மொய்பொற் கடகம்வில் நாண்டழும் புற்ற முனைநழுவிச் செய்யில் உரிஞ்சப் பலகால் எடுத்துச் செறிக்கின்றெனே. (16) (இ-ள்) கைமேல்தலை வைத்து இரவில் கிடக்க - கைமேல் தலையை வைத்துக்கொண்டு இராப்பொழுதிற் படுத்துக் கிடக்கையில், கடைக்கண் நின்று பெய்நீர் - என் கண்ணின் கடைகளிலிருந்து சொரியும் நீரின் வெப்பமானது, அழற்ற - சுடுதலால், நிறம் திரிவான பெருமணிகள் மொய் பொன் கடகம் - தம் நிறம் மாறின பெரிய இரத்தினங்கள் நெருங்க அழுத்திய பொன்னாற் செய்த எனது தோள்வளையானது, வில் நாண் தழும்பு உற்ற முனை நழுவி - வில்லின் நாண்கயிறு பட்டு வடுவாகிய இடத்தினின்றுங் கழன்று, செய்யில் உரிஞ்ச - எனது முன் கையில் வீழ்ந்து உராய்தலால், பலகால் எடுத்துச் செறிக்கின்றென் - அதனைப் பலமுறையும் மேல் உயர்த்தி அஃதிருந்த இடத்திற் சேர்ப்பிக்கின்றேன் என்றவாறு. ஏ: அசை. உன்மேற் பற்றின்றி உவர்ப்பான் எவனென உன்னினையோ அன்னான் நின்கூட்டம் விழைந்திங்குளான் அஞ்சும் ஆரணங்கே பொன்னாள் தனைநயப் போனை மறுப்பினும் போவதற்கம் மின்னாள் விரும்பப் படுவோன் அவளை வெறுத்தலின்றே. (17) (இ-ள்) உன் மேல் பற்று இன்றி உவர்ப்பான் எவன் என உன்னினையோ - உன்மேல் அன்பு இல்லாமல் வெறுப்பவன் எவன் என்று நீ நினைத்தனையோ, அன்னான் - அத் தன்மை யினான், நின் கூட்டம் விழைந்து இங்கு உளான் - நினது சேர்க்கையினை மிக அவாவி இவ்விடத்திலேயே இருக்கின்றான்; ஆதலால், அஞ்சும் ஆர் அணங்கே - நின்னை விலக்கிவிடு வானென வீணே எண்ணி அஞ்சா நின்ற பெறுதற்கு அரிய தேவமாதரை ஒத்தவளே, பொன்னாள் தனை நயப்போனை மறுப்பினும் - திருமகள் தன்னை விரும்புவானிடத்தே செல்வதற்கு இசையாவிடினும், போவதற்கு அம் மின்னாள் விரும்பப் படுவோன் - தானே செல்வதற்கு அத்திருமகளால் விரும்பப் படுவாள் ஒருவன், அவளை வெறுத்தல் இன்று - அத் திருமகளை வெறுத்தல் இல்லை என்றவாறு. ஏ: அசை. நொடிசிமிழா விழியால்என் காதலியை நோக்குங்கால் வடிதீஞ்சொற் றொடர்தொடுக்கும் வண்மையில்அன் னாள்முகத்துக் கொடிபோல் ஒருபுருவம் மேல்நெறிந்து குலவியிடப் பொடியுங் கதுப்பென்மேற் காதல்புல னாக்குமால். (18) (இ-ள்) நொடி சிமிழா விழியால் - ஒரு நொடிப் பொழுதும் இமையாத கண்களோடு, என் காதலியை நோக்குங்கால் - என் காதலியை யான் உற்றுப் பார்க்குமிடத்து, வடிதீம்சொல் தொடர் தொடுக்கும் வண்மையில் - வடித் தெடுத்தால் ஒத்த தெளிவினையுடைய இனிய சொற்களாற் செய்யுளைத் தொடர்ந்தமைக்கும் வகையில், அன்னாள் முகத்து - அத்தகைய நிலையிலுள்ளவளான சகுந்தலையின் முகத்தில், கொடிபோல் ஒரு புருவம் மேல்நெறிந்து குலவியிட - கொடியை யொத்த ஒரு புருவமானது மேலே வளைந்து பொருந்தாநிற்க, பொடியும் கதுப்பு - சிலிர்க்குங் கன்னங்களானவை, என்மேல் காதல் - என்மேல் அவட்குள்ள காதலன்பினை, புலன் ஆக்கும் - தெரியச் செய்யும் என்றபடி. ஆல்: அசை. இரக்கமிலா அரசே! நான் என்செய்வேன்! இரவுபகல் எரிக்கின்றா னென்உடம்பை எழிற்காமன் நின்மேலே பெருக்கின்ற தென்காதல் பேதையேன் நின்நெஞ்சம் இருக்குமா றுணர்ந்திலேன் எனக்கதனை இயம்புதியோ. (19) (இ-ள்) இரக்கம் இலா அரசே - நின்பால் வைத்த காதலால் துன்புறும் என்னைக் கண்டும் என்பால் இரங்குதல் இல்லாத மன்னா! நான் என் செய்வேன் - ஏழையேன் யாதுசெய்வேன், எழில் காமன் என் உடம்பை இரவு பகல் எரிக்கின்றான் - மனவெழுச்சியுடைய காமதேவன் எனது உடம்பை இரவும் பகலுந் தீயில் வெதுப்புகின்றான், நின்மேலே என் காதல் பெருக்கின்றது - நின்மேற் கொண்ட என் பேரன்பானது வரவரப் பெரிதாகின்றது, பேதையேன் நின் நெஞ்சம் இருக்கும் ஆறு உணர்ந்திலேன் - அறிவதறியாச் சிறியேனான யான் நினது நெஞ்சத்தின் றன்மை இருக்கும் வகையினை உணர்ந்தேனில்லை, ஆதலால், எனக்கு அதனை இயம்புதியோ - எனக்கு நின் உள்ளத்தில் உள்ளதைத் தெரியக் கூறுவாயோ என்றவாறு. மெல்லியலாய்! நின்னையவன் மென்மேலும் எரிக்கின்றான், சொல்லவொணா வகையாக என்னையோ சுடுகின்றான்; அல்லொழிந்த விடிநாளில் அழிமதியை வாட்டுதல்போல் எல்லவன்மற் றதன்மனைஅல் லியைவாட்ட லில்லையே. (20) (இ-ள்) மெல்லியலாய் நின்னை அவன் மேல் மேலும் எரிக்கின்றான் - மெல்லிய இயல்பினையுடையாய் உன்னை அக்காமன் மேலும் மேலும் அழற்றுகின்றான், என்னையோ சொல்ல ஒண்ணாவகையாகச் சுடுகின்றான் - என்னையோ அவன் நாவினாற் சொல்லக் கூடாதபடியாகக் கொளுத்து கின்றான், எல்லவன் அல் ஒழிந்த விடிநாளில் அழிமதியை வாட்டுதல் போல் - பகலவன் இருள் நீங்கிய விடியற்காலையில் ஒளி மழுங்கிய திங்களை மெலியச் செய்தல்போல, மற்று அதன்மனை அல்லியை வாட்டல் இல்லையே - வேறு அதன் மனையாளான அல்லி மலரை மெலிவித்தல் இல்லையன்றே என்றவாறு. ஒருபொழுதும் என்உளத்திற் பிரியாதாய்! உனைக்காண்பார் மருளமனம் பேதுறுக்கும் மதர்விழியாய்! நினையன்றிப் பெரியபொருள் பிறிதறியா என்நெஞ்சைப் பிறிதறிந்தால் எரிவேடன் கணைகொல்ல இனைகின்றேன் பிழைப்பெனோ! (21) (இ-ள்) ஒருபொழுதும் என் உளத்தில் பிரியாதாய் - ஒரு நொடி நேரமும் என் நெஞ்சைவிட்டு அகலாதவளே, உனைக் காண்பார் மருள மனம் பேதுறுக்கும் மதர்விழியாய் - நின்னைக் காண்பவர்கள் மயங்கு மாறு அவர்கள் உள்ளத்தைக் கலங்கச் செய்யுங் களித்த விழிகளை யுடையவளே, நினை அன்றிப் பெரிய பொருள் பிறிது அறியா என் நெஞ்சை - நின்னையல்லாமற் பெரிதாகக் கருதத்தக்க பொருள் வேறேதும் அறியாத எனது நெஞ்சத்தை, பிறிது அறிந்தால் - வேறாக நீ அறிந்தால், எரிவேடன் கணை கொல்ல இனைகின்றேன் பிழைப்பெனோ - மன் மதனின் சுடுகின்ற அம்புகள் வருத்த வருந்துகின்ற யான் உயிரோடிருத்தல் கூடுமோ என்றவாறு. கண்மணி யனையாய்! நின்மனங் கவலேல்; நீ வேண்டுவன புரிய ஈண்டுநான் உளெனால்; பெருகயர் வொழிக்கும் மரையிலை யாக்கிய நளிவிசிறி கொண்டு குளிர்வளி தருகோ குமரி வாழையின் அமைவுறு குறங்கை, என் மடிமிசைச் சேர்த்திச் செந்தா மரைபுரை அடிக ளிரண்டும் மெல்லென வருடுகோ; அழகிய தோகாய்! பழுதற உரையே! (22) (இ-ள்) கண்மணி அனையாய் - என்கண்ணின் மணியை ஒப்பவளே, நின்மனம் கவலேல் - நினது மனத்தின்கட் கவலைப்படாதே, நீ வேண்டுவன புரிய - நீ விரும்புகின்றவைகளைச் செய்ய, ஈண்டு நான் உளன் - இங்கே நான் இருக்கின்றேன், ஆல் : அசை. பெருகு அயர்வு ஒழிக்கும் - மிகுகின்ற தளர்வினை நீக்கும், மரை இலை ஆக்கிய - தாமரையிலையாற் செய்த, நளி விசிறிகொண்டு - குளிர்ந்த விசிறியினால், குளிர்வளி தருகோ - குளிர்ங் காற்றைத் தருவேனா, குமரிவாழையின் - இளவாழை மரத்தைப் போல், அமைவுறு குறங்கை - வழுவழுப்பாகச் சமைந்த நின்தொடை களை, என் மடிமிசைச்சேர்த்து - என் மடியின்மேற் சேரவைத்து, செந்தாமரைபுரை- சிவந்த தாமரைப் பூவையொக்கும், அடிகள் இரண்டும் மெல்லென வருடுகோ - நின் அடிகள் இரண்டனையும் மெதுவாகத் தடவுவேனா, அழகிய தோகாய் - அழகிய மயிற்றோகையின் சாயலை யுடையாளே, பழுது அற உரையே - நினக்குற்ற சிதைவு நீங்கச் சொல்வாயாக என்றவாறு. கதுவப் படாம லிளைதா முளைத்துக் கயங்கெழுமிப் புதிதே விரிந்த மலரிற் றுளும்பிப் பொழிநறவைக் கொதிகாதல் வண்டுணல் போலச் சுவையாக் குழையும்இதழ் மெதுவே சுவைத்தமிழ் துண்டணங் கேபின் விடுக்குவெனே. (23) (இ-ள்) கயம் - ஓர் ஆழ்ந்த குளத்தினின்றும், கதுவப்படாமல் - எவராலும் பற்றப்படாமல், இளைதுஆக - இளைய தாக, கெழுமி முளைத்து - பொருந்தித் தோன்றி, புதிதே விரிந்த மலரில் துளும்பிப் பொழிநறவை - புதிதாக மலர்ந்த பூவின்கண் நிறைந்து தளும்பிச் சொரிகின்ற தேனை, கொதிகாதல் வண்டு உணல்போல - பருகுதற்குக் கொதிக்கின்ற அவாவினையுடைய தொரு வண்டு குடித்தல்போல, சுவையாக் குழையும் இதழ் - சுவைத்து அஃதாவது சுவைமிகுந்து நெகிழ்ந்திருக்கும் நினது இதழினை, மெதுவே சுவைத்து - யான் மெல்லச் சுவைத்து, அமிழ்துஉண்ட - அதன்கண் ஊறாநின்றபுனல் அமிழ்தத்தை உட்கொண்டு, அணங்கே - தேவமாது போன்றாய், பின் - அதன்பிறகு, விடுக்குவென் - நின்னைப் போகவிடுவேன்; ஏ : அசைநிலை. விழைபொருள் பெறுதற் கிடையூறு பலவே, கருமயி ரிறைசேர் பெருவிழி யுகளும் வியர்த்தவொண் முகத்தையான் உயர்த்துதொறும் பிணங்கி வெறித்தேன் சுவைக்கும் மறுத்துரை மொழிந்து தவளமுகிழ் விரலாற் பவளவிதழ் பொத்தித் தோட்புறங் கோட்டின ளதனால் வாய்ப்புற இதழ்த்தேன் பருகிலன் அந்தோ! அதற்பின் யாண்டுச் செல்கேன்? காண்டகு காதலி (23) (சுற்றிலும் நோக்கி) முந்தின் புற்றவிப் பந்தர்வயின் அமர்கோ; மெல்லுருப் பட்டுப் பல்வயிற் சிதறிய மென்மலர்ப் பாயலக் கன்மே லுளதால்; கிளிநகம் பொறித்த அளிநசைமுடங்கன் மரையிலை வாடியிவ் வுழையே யுறுமால்; நாளக் கடகமவள் தோளிற் கழன்றுவிழுந்து ஆங்கே கிடந்தன; ஈங்கிவை நோக்க வெறிதே யாயினுஞ் சிறிதொரு போதிற் சூரற் பந்தரைப் பிரிந்து வாரற் கென்மனம் வலியில தன்றே. (24) (இ-ள்) விழைபொருள் பெறுதற்கு - விரும்பப்பட்ட பொருளையடைதற்கு, இடையூறு பல - தடைகள் பல உள, கருமயிர் இறைசேர் பெருவிழிஉகளும் - கரிய மயிரையுடைய இறைப் பையின்கட் பொருந்திய பெரிய விழிகள் பாயாநின்ற, வியர்த்த ஒள்முகத்தை - வியர்வு அரும்பிய ஒளிபொருந்திய முகத்தை, யான் உயர்த்துதொறும் - யான் மேல் நிமிர்த்துந் தோறும், பிணங்கி - மாறுபட்டு, வெறித்தேன் சுவைக்கும் மறுத்த உரை மொழிந்து - மணங்கமழுந் தேனைப்போல் இனிக்கும் மறுத்த மொழிகளைச் சொல்லி, தவளமுகிழ் விரலால் பவள இதழ் பொத்தி - வெள்ளிய பூ அரும்புகளையொத்த தன் விரல்களாற் பவளம் போன்ற தன் வாய் இதழ்களை மூடி, தோள்புறம் கோட்டினள் - தோளின் பக்கமாய்த் தன்முகத்தை வளைத்தனள், அதனால் வாய்ப்புற இதழ்த்தேன் பருகிலன் அந்தோ - அதனாலே வளம்பெற அவளிதழின் தேனைக் குடித்திலேன் ஐயோ!, அதன்பின் - என் காதலியைப் பிரிந்த அதற்குப்பின், யாண்டுச் செல்கேன் - எந்த இடத்திற்குப் போவேன், காண்தகு காதலி முந்து இன்புற்ற இப் பந்தர்வயின் அமர்கோ - காட்சிக்குத் தக்காளான என்காதலி முன்னே மகிழ்ந்திருந்த இப் பந்தலினிடத்தே அமர்வேனா, மெல் உருப்பட்டுப் பல்வயின் சிதறிய - அவளது மெல்லிய உடம்புபட்டுப் புரளலாற் பலவிடங்களிலுஞ் சிதறுண்ட, மெல் மலர்ப் பாயல் அக்கல்மேல் உளது - மெல்லிய பூக்களையுடைய அல்லது பூக்களால் ஆகிய படுக்கை அச் சலவைக்கல்லின்மேற் கிடக்கின்றது, ஆல் : அசைநிலை, கிளி நகம் பொறித்த - கிளிமூக்கை யொத்த தன் நகங்களால் வரைந்த, அளிநசை முடங்கல் மரையிலை - மிக்க அன்பினால் ஆன விருப்பத்தைப் புலப்படுத்துந் திருமுகமாகிய தாமரையிலை, வாடி இவ் உழையே உறும் - வாடிப் போய் இப் பக்கத்திலேயே கிடக்கின்றது, நாளக் கடகம் - தாமரைத் தண்டினாற் செய்யப்பட்ட தோள்வளை, அவள் தோளில் கழன்றுவிழுந்து ஆங்கே கிடந்தன - அவளுடைய தோள்களினின்றுங் கழன்று கீழ்விழுந்து அவ்விடத்தே கிடந்தன, ஈங்கு இவை நோக்க - இங்கே இவைகளைப் பார்க்கையில், வெறிதேயாயினும் - அவள் இல்லாமையால் வெறுமையாகக் காணப்படினுஞ், சிறிதொரு போதில் - சிறியதொரு பொழு திலுஞ், சூரல் பந்தரைப் பிரிந்து - பிரப்பங் கொடியினால் ஆகிய இப் பந்தரைப் பிரிந்து, வாரற்கு என்மனம் வலியிலது - வருதற்கு என் உள்ளம் வலிமை யுடையதாயில்லை, அன்று, ஏ : அசைநிலை. இலைகிளர் பூண்டுக்குத் தலைவ னாகிய சுடரொளி மதியங் குடபால் வரையின் ஒருபுறஞ் செல்லா நிற்ப, ஒருபுறம் வைகறை யென்னுங் கைவல் பாகனை முன்செல விடுத்துப் பொன்போன் ஞாயிறு கீழ்பா லெல்லையிற் கிளரு மன்றே, ஒருகா லீரிடத் தீரொளிப் பிண்டந் தோன்றலும் மறைதலும் ஆன்றறி யுங்கால் மண்ணோர் வாழ்க்கையி லின்னலு மின்பமும் மாறி மாறி வீறுதல் பெறுமே செழுமதி யென்னுங் கொழுநனை யிழந்து முதிரெழில் போன ஆம்பல் எதிர்விழிக்கு இன்பம் பயவா இயல்புணர் விடத்துஈங்கு ஆருயிர்க் காதலர்ப் பிரிந்த வாரிருங் கூந்தன் மடவார் எய்துஞ் சாந்துயர் பொறுத்தற் கரிதெனப் படுமே. (25) (இ-ள்) இலைகிளர் பூண்டுக்குத் தலைவன் ஆகிய சுடர் ஒளிமதியம் - இலைகள் விளங்கும் மருத்துச் செடிகளுக்குத் தலைவனாகிய மிகுந்த ஒளியினைத் தரும் முழுநிலாவானவன், குடபால் வரையின் ஒருபுறம் செல்லாநிற்ப - மேற்கின்கண் உள்ளதாகிய அத்தகிரியிலே ஒருபக்கஞ் சென்று சேராநிற்க, ஒருபுறம் - மற்றொரு பக்கத்தே, வைகறை என்னும் கைவல் பாகனை - விடியற்காலம் என்று சொல்லப்படுங் கைதேர்ந்த தேர்ப்பாகனை, முன்செல விடுத்து - முன்னே போகவிட்டு, பொன் போல் ஞாயிறு கீழ்பால் எல்லையில் கிளரும் - பொற்றிரளை யொத்த பகலவன் கிழக்குத் திசையின் மருங்கே விளங்கா நிற்கின்றது, ஒருகால் ஈர் இடத்து ஈர்ஒளிப்பிண்டம் தோன்றலும் மறைதலும் ஆன்று அறியுங்கால் - ஒரே காலத்தில் இரண்டிடங்களில் இருவகை ஒளிப் பிழம்புகளில் ஒன்று தோன்றுதலையும் மற்றொன்று மறைதலையும் அமைதியாக ஆராய்ந்தறியுமிடத்து, மண்ணோர் வாழ்க்கையில் இன்னலும் இன்பமும் மாறி மாறி வீறுதல் பெறும் - இம் மண்ணுலகத்தவர் வாழ்வில் துன்பமும் இன்பமும் மாறி மாறி மிக்குத் தோன்றுதல் விளங்கப்பெறும், செழுமதி என்னும் கொழுநனை இழந்து - அழகிய திங்கள் என்னுங் கணவனை இழந்து, முதிர்எழில் போன ஆம்பல் - அதனாற் றனது சிறந்த அழகு கெட்ட அல்லிப் பூவின் தோற்றமானது, எதிர் விழிக்கு - அதனை நேர் நின்று நோக்குங் கண்களுக்கு, இன்பம் பயவா - இன்பந்தராத, இயல்பு உணர்விடத்து - தன்மையினை உணர்ந்து பார்க்குமிடத்து, ஈங்கு - இவ்வுலகத்திலே, ஆர்உயிர்க் காதலர்ப் பிரிந்த - தம் அரிய உயிர் போன்ற கணவரைப் பிரிந்த, வார் இருங் கூந்தல் மடவார் - நீண்ட கரிய கூந்தலையுடைய மங்கையர், எய்தும் சாம்துயர் - தாம் அடையுஞ் சாக்காடு அன்னதுன்பம், பொறுத்தற்கு அரிது எனப்படும் - தாங்குதற்காகாதது என்று சொல்லப்படும்; அன்று ஏ : அசைநிலைகள். முன்னுக தவமுதிர் முனிவ! நின்மகள் வன்னிமா மரந்தனுள் வளர்தீ வைத்தல்போல் இந்நிலம் நலம்பெறத் துடியந்தன் னிட்ட பொன்னுயிர் அகட்டினிற் பொலியக் கொண்டனள். (26) (இ-ள்) தவம் முதிர் முனிவ - தவவொழுக்கத்திற் சிறந்த முனிவனே, முன்னுக - நினைந்திடுக, வன்னிமாமரம் தன்னுள்வளர் தீ வைத்தல்போல் - வன்னியென்னும் பெயருடைய பெரியமரம் தன்னுள்ளே வளரத்தக்க தீயினை வைத்திருத்தல் போல, இந்நிலம் நலம்பெற - இந்நிலவுலகத்துள்ள உயிர்கள் வாழ்க்கை நலத்தை யடைய, துடியந்தன் இட்டபொன் உயிர் - துஷியந்தன் இட்ட தாகிய பொலிவுள்ள உயிரை, அகட்டினில் பொலியக் கொண்டனள் - தன்வயிற்றினுள்ளே நிறையக் கொண்டாள் என்க. இன்று சகுந்தலை போகின் றாளென் றெண்ணுதொறுங் கன்றுவ தொன்றுங் கவலையி னாலென் காழ்மனனே துன்றிய கண்ணீர் சோரா தம்ம தொடர்புற்று நின்றென் மிடறோ கம்முவ தென்னென் னிலைதானே (27) (இ-ள்) இன்று சகுந்தலை போகின்றாள் என்று எண்ணுதொறும் - இன்றைக்குச் சகுந்தலை என்னைப் பிரிந்து போகின்றாளே என்று நினைக்குந்தோறும், என் காழ்மனன் ஒன்றுங் கவலையினால் கன்றுவது - எனது வயிரம் ஏறிய உள்ளமும் பொருந்திய கவலையினால் நைகின்றது, துன்றிய கண்நீர் சோராது அம்ம - என் கண்களில் வந்து நிறைந்த கண்ணீரானது வடியாது யான் அடைக்கவே, தொடர்பு உற்று நின்று என் மிடறு ஓ கம்முவது - அதனொடு தொடர்பு கொண்டு நின்று எனது தொண்டையோ கம்மிக்கொள்கின்றது, என் நிலைதான் என் - எனது நிலைமையிருந்தவாறு என்னே! என்றவாறு. வழியி லிடையிடையே கொழுந்தாமரை பொதுளி வளஞ்சால் தடங்கள் வயங்கிடுக அழிவெங் கதிர்வருத்தம் அடர்ந்த நிழன்மரங்கள் அகற்றி மகிழ்ச்சி அளித்திடுக, கழிய மலர்த்துகள்போற் கழுமு புழுதியடி கலங்கா தினிதாய்க் கலந்திடுக. செழிய மலயவளி திகழ வுலவிடுக திருவே யனையாள் செலுநெறியே. (28) (இ-ள்) வழியில் இடையிடையே - வழியின் நடு நடுவே, கொழுந்தாமரை பொதுளி வளம்சால் தடங்கள் வயங்கிடுக - கொழுவிய தாமரைம லர்கள் நிறைந்து வளம்மிக்க அகன்ற குளங்கள் விளங்குவனவாக, அழி வெம் கதிர் வருத்தம் அடர்ந்த நிழல் மரங்கள் அகற்றி மகிழ்ச்சி அளித்திடுக - மிக்க வெப்பத்தினைத் தரும் பகலவனால் உண்டாகும் வருத்தத்தினை நெருங்கிய இலைகளை யுடையமையால் இடைவெளியில்லாத நிழலையுடைய மரங்கள் நீக்கி மகிழ்ச்சியினைத் தந்திடுக, கழிய மலர்த்துகள் போல் கழுமு புழுதி அடி கலங்காது இனிதாய்க் கலந்திடுக - மிகுந்த மகரந்தப்பொடி போல் நிறைந்த மட்புழுதி யானது அடிகள் துன்புறாதபடி இனிதாக வழியிற் பொருந்துக, திருவே அனையாள் செலும்நெறி செழிய மலயவளி திகழ உலவிடுக - இலக்குமியை ஒத்தவளாகிய சகுந்தலை செல்லும் வழியில் வளவிய பொதியமலையினின்று வீசுந் தென்றற் காற்றானது தோன்ற உலவுக என்றவாறு; ஏ : அசை. தாமரை யிலைப்பினே, தங்கு சேவலைக் காமரு மகன்றிறான் காண லாமையாற் பூமரு வாயினாற் புலம்பிக் கூவிட வேமென துளமிது விழிகள் காணவே. (29) (இ-ள்) தாமரை இலைப்பினே தங்கு சேவலை - தாமரையிலைகளுக்குப் பின்னே மறைந்து தங்கியிருக்கின்ற ஆண் அன்றிலை, காமரு மகன்றில்தான் காணலாமையால் - காம விருப்பு மிகுதியும் உடைய பெண் அன்றிற் பறவையானது காணாமையால், பூமரு வாயினால் புலம்பிக் கூவிட - பூவைக் கோதுந் தன்வாயினால் வருந்திக் கூவாநிற்க, இது விழிகள் காணவே - இதனை என் கண்கன் காணவே, எனது உளம்வேம் - என் உள்ளமானது வேகாநிற்கும் என்றவாறு. விழுநறவு வேண்டிவிரி மாவிணரிற் பருகிச் செழுமுளரி யிடைவறிது சேருமிள வண்டே! செழுமுளரி யிடையிருந்து திகழ்மாவை நீயோர் பொழுதுமறந் துறைகுவது பொருந்துமோ உரையாய்? (30) (இ-ள்) விழுநறவு வேண்டி - சிறந்த தேனைப் பெற விரும்பி, விரி மா இணரில் பருகி - விரிந்த மாமரத்தின் பூங்கொத்திலிருந்து அதனைக் குடித்து, செழுமுளரி யிடை வறிது சேரும் இளவண்டே - வண்டே, செழுமையான தாமரை யினிடத்து வீணே சென்று அடையும் இளசெழுமுளரி யிடை யிருந்து - செழுவிய தாமரையின் பாற்சேர்ந்திருந்து கொண்டு, திகழ்மாவை நீ ஓர் பொழுதும் மறந்து உறைகுவது - விளங்கா நின்ற மாமலரினை நீ ஒரு நொடிப்பொழுதேனும் மறந்துவிட்டு இருத்தல், பொருந்துமோ உரையாய் - நினக்கு இசைவதாகுமோ சொல்லாய் என்றவாறு. வெங்கதிரின் வெப்பம் விரிதலையிற் றாங்கித் தங்குவோர்க் குக்கீழ் தண்ணிழல்செய் மரம்போல் இங்குநின் னின்பங் குறியாது குடிகட்குப் பொங்குதுயர் கொளுநின் பொலிவாழ்க்கை யிதுவே. (31) (இ-ள்) வெம்கதிரின் வெப்பம் - வெவ்விய ஞாயிற்றின் வெப்பத்தை, விரிதலையில் தாங்கி - தமது விரிந்த தலையிலே தாங்கிக்கொண்டு, கீழ் தங்குவோர்க்குத் தண்நிழல் செய்மரம்போல் - தம் அடியில் வந்து தங்குவார்க்குக் குளிர்ந்த நிழலைத் தருகின்ற மரங்களைப்போல், இங்கு நின் இன்பம் குறியாது - இவ்வுலகத்தே நீ நுகர்தற்குரிய இன்பங்களை ஒரு பொருளாகக் கருதாமல், குடிகட்கு - நின் குடிமக்களின் பொருட்டாக, பொங்குதுயர் கொளும் - மிகுந்த துன்பத்தை யடையும், நின் பொலிவாழ்க்கை இது - நினது சிறப்புமிக்க அரசவாழ்க்கையின் தன்மை இப்படிப்பட்டதாயிருக்கின்றது; ஏ: அசை. ஒறுக்கும்வலி யுடைமையா லுண்மைநெறி திறம்புநரை மறுக்கின்றாய் புரக்கின்றாய் மாறுபடு வோர்வாழ்க்கை அறுக்கின்றா யருஞ்செல்வ முறுவழிச்சேர் கேள்போலா தறக்கிழமை குடிகண்மே லருள்கின்றா யண்ணலே. (32) (இ-ள்) ஒறுக்கும் வலி உடைமையால் - தண்டித்தற்குரிய ஆற்றல் இருத்தலால், உண்மைநெறி திறம்புநரை - மெய்வழியினின்றுந் தவறி நடப்போரை, மறுக்கின்றாய் - நீ அதனினின்றும் நீக்குகின்றாய், புரக்கின்றாய் - வலியிலாரைப் பாதுகாக்கின்றாய், மாறுபடுவோர் வழக்கை - ஒருவர் ஒருவரோடு மாறுபாடுறுவாராய்க் கொண்டு வரும் வழக்கை, அறுக்கின்றாய் - இஃது அறத்தின்பாலது இஃது அல்லாதது என்று ஆராய்ந்து வரையறுக்கின்றாய், அரும் செல்வம் உறுவழிச் சேர் கேள் போலாது - ஒருவர்க்குப் பெறுதற்கரிய செல்வம் வந்தடைந்த காலத்து அவர்பால் வந்து சேரும் உறவினர் போலாமல், அறக்கிழமை குடிகள் மேல் அருள்கின்றாய் அண்ணலே - அறம் (தருமம்) ஆகிய உரிமையினை நின் குடிமக்கட்கு அளித்து அருள் செய்கின்றாய் பெருமானே என்றவாறு. வடுவறு பேரெழில் வயங்கவிவ் வயின்வருங் கொடிபுரை யுருவினாள் தன்னைக் கூடிநான் கடிமணம் அயர்ந்ததாக் கருத லாமையால் விடியலிற் பனியகத் துள்ளமென் மல்லிகை படிதரா துழிதரும் பைஞ்சிறை வண்டெனத் தொடுதலும் விடுதலுந் துணிய கில்லேனே. (33) (இ-ள்) வடுஅறு - குற்றம் அற்ற, பேர்எழில் வயங்க - மிகுந்த அழகு விளங்க, இவ்வயின் வரும் - இவ்விடத்தே வந்திருக்கும், கொடி புரை உருவினாள் தன்னைக்கூடி - பூங்கொடிபோல் துவளாநின்ற உருவத்தினை யுடைய இப் பெண்ணைப் புணர்ந்து, நான் கடி மணம் அயர்ந்ததாக் கருதலாமையால் - யான் புதியதொரு மணத்தைச் செய்ததாக எண்ணக் கூடாமையால், விடியலில் பனிஅகத்துள்ள மெல்மல்லிகை படிதராது உழிதரும் பைம் சிறைவண்டு என- விடியற்காலத்தே பெய்யும் பனியினை உள்ளேயுடைய மெல்லிய மல்லிகை மலரின்கண்ணே சென்று அமர்தலைச் செய்யாது சுழன்று கொண்டிருக்கும் பசிய சிறையினையுடைய ஒரு வண்டைப்போல, தொடுதலும் விடுதலும் துணியகில்லேன் - இவனைத் தொடுதலையாவது விட்டு விடுதலையாவது துணிந்து செய்யமாட்டேனாய் இருக்கின்றேன் என்றவாறு, ஏ: அசை. மறைவிற் செறிந்த காதற் பெருங்கிழமை மனக்கொளாது குறையும் நினைவாற் கொடுமனம் வல்லென்ற எனைக்குறித்துப் பிறைபோற் புருவம் முரியப் பெருவிழிகள் சிவக்கச்சினம் முறையே மிகுதல் மதன்வில் லிரண்டாய் முறித்திட்டதே. (34) (இ-ள்) மறைவில் செறிந்த - பிறர் எவரும் அறியாமல் யான் இவளைக் கூடுதற்கு ஏதுவாயிருந்த, காதல்பெரும் கிழமை - பேரன்பாகிய பேர் உரிமையினை, மனக்கொளாது - என் மனதின்கட் பதியக் கொள்ளாதபடி, குறையும் நினைவால் - குறைந்துபோன நினைவால் அஃதாவது மறதியால், கொடுமனம் வல் என்ற எனைக் குறித்து - நிலை கோணிய உள்ளங் கடுமையாய்ப் போன என்னை உறுத்து நோக்கி, பிறைபோல் புருவம் முரிய - பிறையைப் போற் புருவங்க ளானவை வளைய, பெரு விழிகள் சிவக்க - பெரிய கண்கள் சிவந்த நிறத்தினையடைய, சினம் முறையே மிகுதல் - கோபமானது இவட்கு நீதியாகவே அல்லது மேலுக்குமேல் மிகுவது, மதன்வில் இரண்டாய் முறித்திட்டது - காமவேள் கையிற்பிடித்த கருப்புவில்லை இரண்டுபட ஒடித்துவிட்டது என்றவாறு. ஏ : அசை. விழுத்தக்க வேனிலுயிர் மிகுதரவே கொண்டு முழுச்செம்மை பசுமையுடன் வெண்மையெனு மூன்றுங் குழைத்திட்டா லெனவயங்கு கொழுமாவின் முகையே! தழைப்பருவ நற்குறியாத் தயங்குநையென் றறிந்தேன். (35) (இ-ள்) விழுத்தக்க - சிறப்புமிக்க, வேனில் உயிர் மிகுதரவே கொண்டு - வேனிற்காலத்திற்குரிய உயிர்ப்பினை மிகும்படியாய்க் கொண்டு, முழுச்செம்மை பசுமையுடன் வெண்மை எனும் மூன்றும் - மிக்க செம்மை பசுமை வெண்மை யென்னும் மூன்று வண்ணங்களையும், குழைத்திட்டால் என - ஒன்றுசேர்த்துக் கலந்து எழுதினாற்போல, வயங்கு கொழுமாவின் முகையே - விளங்காநின்ற கொழுவிய மாமரத்தேன் அரும்புகள், தழைப்பருவ நல்குறியாத் தயங்குநை என்று அறிந்தேன் - தழைக்கும் வேனிற்கால வருகையினை முன் அறிவிக்கும் நல்ல அடையாள மாக நீ விளங்குகின்றனை என்று அறிந்துகொண்டேன் என்றவாறு. புறஞ்சென்ற காதலரைப் பிரிந்திருக்கும் பூவையரை மறஞ்செய்து மதனெடுத்து வளைவில்லில் தொடுத்தல்பெறுந் திறஞ்செய்த ஐங்கணையுட் சிறப்பெய்தி மற்றவர்தம் நிறஞ்சென்று பாய்வையென நின்னையவற் கிட்டனெனால். (36) (இ-ள்) புறம்சென்ற காதலரைப் பிரிந்திருக்கும் பூவையரை - நம்மைவிட்டு வெளியே சென்ற கணவரைப் பிரிந்து உறைவாரான மங்கையர்மேல், மறம்செய்து - கறுவுகொண்டு, மதன் எடுத்து வளைவில்லில் - காமவேள் கையிலெடுத்து வளைக்கும் வில்லிலே, தொடுத்தல் பெறும் - தொடுக்கப்படும், திறம்செய்த ஐங்கணையுங் - வலிமை செய்யும் ஐந்து மலர் அம்புகளுள், சிறப்பு எய்தி - தலைமைபெற்று, மற்று அவர்தம் - அங்ஙனம் பிரிந்துறைவாரான மங்கையருடைய, நிறம் சென்று பாய்வை என நின்னை அவற்கு இட்டனென் - மார்பிலே சென்று பாய்வாய் என வெண்ணி மாமுகையாகிய நின்னை அக் காமவேளுக்குத் தூவினேன் என்றவாறு. ஆல் : அசை. செழுமா மரங்கள் கொழுமுகை அரும்பியும் பொன்றுகள் பெறாமை கண்டிலீர் கொல்லோ; குரவமுகிழ் நிரம்பி நெடுநா ளாகியும் விரியா திருத்தல் தெரியிலிர் கொல்லோ; பனிநாட் கழித்து நனிநா ளாகியுஞ் சேவலங் குயில்கள் வாய்திற வாவே: காம வேளும் புட்டிலி லெடுத்த நாம வெங்கணை புகுத்தி அச்சமிக் கனனென அறிகுவென் மாதே. (37) (இ-ள்) செழுமாமரங்கள் - செழுவிய மாமரங்கள், கொழுமுகை அரும்பியும் - கொழுவிய மொட்டுகளை அரும்பியும், பொன் துகள் பெறாமை கண்டிலீர் கொல்லோ - இன்னும் பொன் நிறமான மகரந்தப் பொடிகள் உண்டாகப் பெறாததை நீங்கள் காணவில்லையா, குரவம் முகிழ்நிரம்பி நெடுநாளாகியும் - குராமரங்கள் அரும்புகள் நிறைந்து நீண்டகாலமாகியும், விரியாது இருத்தல் தெரியிலிர் கொல்லோ - அவை மலராக அலராதிருத்தலை நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையா, பனிநாள் கழித்து நனிநாள் ஆகியும் - பனிக்காலங் கடந்துபோய் மிகுந்த காலம் ஆகியும், சேவல் அம் குயில்கள் வாய்திறவாவே - ஆணாகிய அழகிய குயிற்பறவைகள் வாய்திறந்து கூவவில்லையே, காமவேளும் புட்டிலில் எடுத்த- மன்மதனுந் தனது அம்புக் கூட்டினின்றும் எடுத்த, நாமவெம்கணைபுகுத்தி - அச்சத்தைத் தருங் கொடிய அம்புகளை மீண்டும் அதன் கண்ணே நுழைத்து, அச்சம் மிக்கனன் என அறைகுவென் - அச்சம் மிகுதியும் உடையனாய் இருந்தனன் என்று அறிவித்துச் சொல்கின்றேன் என்றவாறு. மாது, ஏ : அசைநிலைகள். இன்பநுகர் பொருளெல்லாம் வெறுத்து விட்டார் இனியநூல் அமைச்சரையுங் கலவார் முன்போற் கண்ணுறக்கம் இரவெல்லாம் பெறமாட் டாராய்க் கட்டில்மிசை யிங்குமங்கும் புரளு கின்றார் தன்பெரிய மனைநல்லார் பேசும் போது தன்மையினாற் சிலசொல்லுஞ் சொல்லி னுள்ளும் பெண்ணரசி சகுந்தலையைப் பிழைத்துச் சொல்லிப் பெரிதுவரும் நாணத்தாற் கலங்கு கின்றார். (38) (இ-ள்) இன்பம் நுகர்பொருள் எல்லாம் வெறுத்துவிட்டார் - இன்பந் துய்த்தற்குரிய பொருள்களை யெல்லாம் உவர்த்துவிட்டார். இனியநூல் அமைச்சரையும் கலவார் முன்போல் - சிறந்த அரசியல் நூலாராய்ச்சியில் வல்ல மந்திரிமாரையும் முன்போற் கலந்து சூழார். கண் உறக்கம் இரவெல்லாம் பெறமாட்டாராய் - கண் துயிலுதலை இராப் பொழுது முற்றும் பெறுதற்கு ஏலாதவராய், கட்டில்மிசை இங்கும் அங்கும் புரளுகின்றார் - கட்டிலின்மேல் இப்பக்கத்தும் அப்பக்கத்துமாகப் புரள்கின்றார், தன் பெரிய மனை நல்லார் பேசும்போது - தனது பெரிய அந்தப்புர அரண்மனைக்கண் வைகும் மாதர்கள் தன்னோடு உரையாடும்போது, தன்மையினால் சில சொல்லும் சொல்லின் உள்ளும் - அவர்பால் வைத்த அருள் காரணமாகப் பேசுஞ் சில சொற்களிலேயும், பெண் அரசி சகுந்தலையைப் பிழைத்துச் சொல்லி - மாதர்க்கு அரசியான சகுந்தலையின் பெயரைத் தன்னை மறந்து தவறுதலாகச் சொல்லிவிட்டு, பெரிதுவரும் நாணத்தால் கலங்குகின்றார் - அங்ஙனந் தவறிச் சொல்லி விட்டதை உடனே அறிந்ததும் அதனால் மிகுந்த நாணத்தினாலே உள்ளங்கலங்குகின்றார் என்றவாறு. சிறப்பணி கலன்கள் வெறுப்புடன் நீக்கி இடதுகை முன்பொற் கடகம் பிணைந்தும் நெட்டுயிர்ப் பெறிதலிற் றுப்பிதழ் விளர்த்துந் துயிலா திருத்தலிற் பயில்விழி யிடுகியும் உடல்மிக மெலிவுற லாயினுஞ் சுடர்மணி தேய்த்தொறுந் தேய்த்தொறும் வாய்த்துருக் குறைந்து நிறமிக வுறுதல் போல இறைவன் மேனியும் ஒளியா னாதே. (39) (இ-ள்) சிறப்பு அணிகலங்கள் வெறுப்புடன் நீக்கி - சிறப்புடையவான நகைகளை வெறுப்பொடு களைந்துவிட்டு, இடதுகை முன் பொன்கடகம் பிணைந்தும் - இடது முன்கையிற் பொன்னாற் செய்த கைவளையைக் கட்டியும், நெடு உயிர்ப்பு எறிதலின் துப்பு இதழ் விளர்த்தும் - பெருமூச்சு விடுதலாற் பவளம்போற் சிவந்த இதழ் வெளுப்படைந்தும், துயிலாது இருத்தலின் பயில்விழி இடுகியும் - உறங்காமல் இருத்தலால் எந்நேரமுந் திறந்திருக்கின்ற கண்கள் ஒடுங்கியும், உடல் மிக மெலிவுறலாயினும் - உடம்பு மிகவும் மெலிவடைந்ததாயினும், சுடர்மணி தேய்த்தொறும் தேய்த்தொறும் - ஒளிவிடும் ஒரு மணியை (இரத்தினத்தை)த் தேய்க்குந் தோறுந் தேய்க்குந்தோறும், வாய்த்த உருக்குறைந்து நிறம் மிக உறுதல்போல - தனக்கு இயற்கையாகப் பொருந்திய வடிவின் அளவு குறைந்தாலும் அது தன் ஒளியின் நிறம்மிகப் பெறுதல்போல, இறைவன் மேனியும் ஒளி ஆனாது - அரசனது உடம்பின் நிறமும் ஒளியிற் குறையாது என்றவாறு. ஏ : அசை. வலதுகையிலிட வேண்டிய கடகத்தை அரசன் இடதுகையி லிட்டது, பிறழ்ந்த அவனது மனநிலையைக் குறிக்கின்றது. துறவி மகள் மேல்வைத்த தொல்காதல் மறைத்த மறதியெனும் இருள்நெஞ்சை மற்றகன்ற பின்னே உறவருந்து மெனைக்குறியிட் டுலைப்பதற்கு மதனன் நிறமாவின் முகையைவில்லில் நிறுத்துகின்றான் என்னே! (40) (இ-ள்) துறவி மகள்மேல் வைத்த - முனிவர் மகளாகிய சகுந்தலைமேல்வைத்த, தொல்காதல் மறைத்த மறதி எனும் இருள் - பழைய காதலன்பை நினைவுகூர வொட்டாது மறைத்த மறதியாகிய இருள், நெஞ்சை மற்று அகன்ற பின்னே - என் நெஞ்சை அங்ஙனம் மறையாது விட்டு நீங்கியபின்னர், உறவருந்தும் எனைக் குறியிட்டு உலைப்பதற்கு - மிகத் துன்புறும் என்னைக் குறிவைத்து அலைப்பதற்காக, மதனன் நிறம் மாவின் முகையை வில்லில் நிறுத்துகின்றான் என்னே - காமவேள் நிறத்திற் சிறந்த மாவினது மொட்டாகிய அம்பைத் தனது வில்லின்கண் நிறுத்துகின்றனனே இனி நான் உய்யுமாறு எங்ஙனம்! என்றவாறு. கொடியேனால் நீக்குண்டு கூடுமுற வினரோடும் படர்வதற்கென் காதலிதான் பரிவுறுங்காற் பெருந்தந்தைக் கடியாராஞ் சீடரவர் போற்பெரியர் ஆர்த்திந்த இடமேநில் லெனவொழுகும் நீர்விழியாள் ஏங்கினளே. (41) (இ-ள்) கொடியேனால் - கொடுமைமிக்க என்னால், நீக்குண்டு - நீக்கப்பட்டு, கூடும் உறவினரோடும் படர்வதற்கு - தன்னொடு கூடி வந்த சுற்றத்தினரோடும் மீண்டு செல்வதற்கு, என் காதலிதான் பரிவுறுங்கால் - என் அன்புமிக்க மனையாளான சகுந்தலை துன்புற்றக்கால், பெருந்தந்தைக்கு அடியார் ஆம் சீடர் - தவப்பெருமை வாய்ந்த தன் தந்தையாராகிய காசியபருக்கு அடியவராம் மாணவர், அவர்போல் பெரியவர்- காசியபரைப் போலவே தவப்பெருமை வாய்ந்தவர், ஆர்த்து - உரத்துக்கூவி, இந்த இடமே நில் என - இந்த இடத்திலேயே தங்கக் கடவாய் என்றுகூற, ஒழுகும்நீர் விழியாள் ஏங்கினள் - ஒழுகாநின்ற நீரினையுடைய கண்ணினள் ஏக்கமுற்றுத் திகைத்தனள். ஏ : அசை. காரிகை தன்னையான் கலந்தி ருந்தமை ஓரில்பொய்த் தோற்றமோ உளத்தின் மாற்றமோ சேரிய பிறவியில் திரண்ட நல்வினை சீரிய பயன்பயந் தொழிந்த செய்கையோ. (42) (இ-ள்) காரிகை தன்னை யான் கலந்திருந்தமை - அழகியாளான சகுந்தலையை யான் கூடியிருந்த நிகழ்ச்சியை, ஓரில் - ஆராய்ந்து பார்ப்பின், அது பொய்த்தோற்றமோ- கானல் நீர்போற் பொய்யான தோற்றமோ, உளத்தின் மாற்றமோ - என் மனத்தின் செயலால் உண்மைக்கு மாறாகக் காணப்படுங் கனவுதானோ, சேரிய பிறவியில் திரண்ட நல்வினை - முன்னே சேர்ந்து சென்ற பழம் பிறவிகளில் ஒருங்குதொக்க நல்வினை, சீரிய பயன் பயந்து ஒழிந்த செய்கையோ - இப் பிறவியில் வந்து எனக்குச் சிறந்ததொரு பயனைத் தந்து உடனே மறைந்த செயலாகுமோ, இன்னதென்றறிகிலேன் என அரசன் கவன்றான் என்பது. கெண்டையங் கண்ணினாள் கிளிநக விரலிடங் கொண்டுநீ சிறிதுநாள் கூடிப் பின்னதை விண்டமை தெரிந்திடல் வினைவளஞ் சிறிதுறப் பெண்டிரைப் பிரிந்தவென் பெற்றி ஒத்தியால். (43) (இ-ள்) கெண்டைஅம் கண்ணினாள் - கெண்டைமீனைப் போல் வடிவுஞ் செயலும் வாய்ந்த அழகிய கண்களையுடைய சகுந்தலையின், கிளிநக விரலிடம் கொண்டு - கிளிமூக்குப்போற் சிவந்து விளங்காநின்ற நகத்தையுடைய இரண்டாம் விரலை இருக்கும் இடமாகப் பற்றிக் கொண்டு, நீ சிறிதுநாள்கூடி - நீ சில நாட்கள் அதனொடு சேர்ந்திருந்து, பின் அதை விண்டமை தெரிந்திடில் - பிறகு அதனைவிட்டு நீங்கின தன்மையை ஆராய்ந்து பார்ப்பின், வினைவளம் சிறிது உற- பண்டை ஊழின் நலமானது சிறிது வரப்பெற்றமையால் அத்துணைச் சிறந்தாளை யான் காதன் மனைவியாகச் சிலநாட்பெற்று, பெண்டிரைப் பிரிந்த - பிறகு அப்பெண்ணைப் பிரிந்துவிட்ட, என்பெற்றி ஒத்தி - எனது தன்மையை ஒத்திருக்கின்றாய், என்று அரசன் கணையாழியை நோக்கிக் கவன்று கூறினானென்க. ஆல் : அசை. மெல்லிதா யழகிதாய் விளங்குநீள் விரலுடை அல்லிமென் கையைவிட் டாழ்ந்ததென் நீருளே புல்லிய அறிவிலாப் பொருளவள் நலம்பெற வல்லதன் றேழையேன் மயங்கிற் றென்னையோ (44) (இ-ள்) மெல்லிதாய் - மென்றன்மை யுடையதாயும், அழகிதாய் - அழகினையுடையதாயும், விளங்கு நீள் விரல் உடை - விளங்காநின்ற நீண்ட ஒவ்வொரு விரலையும் உடைய, அல்லி மென்கையை விட்டு - அல்லிக்கொடிபோன்ற சகுந்தலையின் மெல்லிய கையைப்பிரிந்து, நீர் உளே ஆழ்ந்தது என் - நீரின் உள்ளே அக் கணையாழி அமிழ்ந்திப்போயது ஏன்!, புல்லிய அறிவு இலாப் பொருள் அவள் நலம் பெறவல்லது அன்று - இழிந்த அறிவில்லாத அப்பொருள் அவளது நலத்தினை அடைதற்கு ஆற்றல் உடையது அன்று, ஏழையேன் மயங்கிற்று என்னையோ - சிறிதாயினும் அறிவுடைய யான் மயங்கிவிட்டது யாது காரணமோ! என்றவாறு தானே வலிவிலென் பால்வந்த தையலைத் தள்ளிவிட்டு நானே படத்தி லெழுதுமிந் நங்கைக்கு நன்றுசெயல் மீனே பிறழப் பெருகுமொ ராற்றை விடுத்துவெய்ய கானே படர்கின்ற பேய்த்தேரை வேட்டல் கடுக்குமன்றே. (45) (இ-ள்) தானே வலிவில் என்பால்வந்த தையலைத் தள்ளிவிட்டு - தானாகவே வலிய என்னிடத்தே வந்த மாதினை விலக்கிவிட்டு, நானே படத்தில் எழுதும் இந் நங்கைக்கு நன்று செயல் - யானே வருந்தி ஓவியத்தில் வரையும் இம் மங்கைக்கு நல்லது செய்தலானது. மீனே பிறழப் பெருகும் ஓர் ஆற்றை விடுத்து - மீன்கள் புரளும்படியாக நீர் பெருகிச் செல்லும் ஓர் யாற்றை விட்டு விலகி, வெய்ய கானே படர்கின்ற பேய்த்தேரை வேட்டல் கடுக்கும் அன்றே - வெம்மையுடைய காட்டகத்தே பரவித் தோன்றாநின்ற கானல்நீரை ஒருமான் விரும்பிச் சென்றதை ஒக்குமன்றோ! என்றவாறு. துணைபுண ரன்னம் மணற்பாங் கிருப்பத் தண்ணென் றொழுகும் நீர்மா லினியும், அதன் இருகரை மருங்குங் கௌரியை யீன்ற இமயம் வைகும் எழிலுடை மான்கள் அமைதரு தூய பனிதூங் கடுக்கலும், மரவுரி ஞான்ற விரிகிளை மரநிழல் தடக்கலைக் கோட்டில் இடக்கண் டேய்க்கும் விழைவுறு பேடை மானும் வரைதல் வேண்டினேன் மற்றிது தெரிமோ. (46) (இ-ள்) துணை புணர் அன்னம் - தன் சோட்டொடு கூடிய அன்னப்புள், மணல்பாங்கு இருப்ப - மணற் பக்கத்தே அமர்ந்திருக்க, தண் என்று ஒழுகும் நீர் மாலினியும் - குளிர்ந்து ஓடாநின்ற நீரினையுடைய மாலினி யாற்றையும், அதன் இருகரை மருங்கும் - அவ்வியாற்றின் இரண்டு கரைப் பக்கங்களிலும். கௌரியை ஈன்ற இமயம் வைகும் - உமைப் பிராட்டியைப் பெற்ற இமயமலையின் கண்ணேயுள்ள, எழில் உடை மான்கள் அமைதரு தூய பனிதூங்கு அடுக்கலும் - அழகு வாய்ந்த மான்கள் பொருந்தினவுந் தூய்மையான பனிக்கட்டிகள் தங்குவனவும் ஆன மலைப் பக்கங்களையும், மரவுரிஞான்ற விரிகிளை மரநிழல் - மரநார்களினால் நெய்த ஆடைகள் தொங்காநின்ற விரிந்த கிளைகளையுடைய மரங்களின் நீழலிலே, கலைத்தடக்கோட்டில் - ஆண்மானின் பெரிய கொம்பிலே, இடக்கண்தேய்க்கும் - தனது இடதுகட் கடையை உரைசும், விழைவுறுபேடை மானும் - புணர்ச்சி வேட்கையுடைய பெண்மானையும், வரைதல் வேண்டினேன் - எழுதற்கு விரும்பினேன், இது தெரிமோ - இது தெரிவாயாக என்றவாறு, மற்று : அசைநிலை, தெரிமோ என்பதில், மோ : முன்னிலையசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் ) காம்புகாது செருகிக் கன்னமேற் றொங்கும் நரம்புடைச் சிரீடம் நான்வரை திலெனால், மழைநாள் மதியின் தழைகதிர் புரையுந் தாமரை மென்னூல் காமரு கொங்கைகள் நடுவே வயங்க வடிவெழு திலெனே. (47) (இ-ள்) காம்பு காது செருகிக் கன்னம்மேல் தொங்கும் நரம்புடைச்சிரீடம் நான் வரைந்திலென் - காம்பு காதிலே செருகப்பெற்றுக் கன்னங்களின்மேல் தொங்காநின்ற நரம்பு களையுடைய வாகை மலரை நான் எழுதவில்லையே, மழைநாள் மதியின் தழைகதிர்புரையும் - மழை பெய்துவிட்ட நாளின்கட் டோன்றுந் திங்களின் ஒளிமிக்க கதிர்களை யொக்கும், தாமரை மெல்நூல் - தாமரைத் தண்டினின்றும் எடுத்த ஒரு மெல்லிய நூலையேனும், காமரு கொங்கைகள் நடுவே வயங்க வடிவு எழுதிலெனே - விழைவினை யுண்டாக்கும் அவடன் கொங்கை களின் நடுவிலே விளங்க அவளது வடிவத்தினை எழுதிற்றிலேனே! என்றவாறு. ஆல் : அசை. மணமலரில் வேட்கையொடு மகிழ்பேடை வைகிநீ அணவுவது கருதித்தேன் பருகாமை அறியாய். (48) (இ-ள்) மணமலரில் வேட்கையொடு மகிழ்பேடை வைகி - மணங்கமழாநின்ற பூவின்கண்ணே நின்னை மருவலாம் என்னும் அவாவுடன் மகிழ்ந்த பெண் வண்டானது தங்கி, நீ அணவுவது கருதித் தேன் பருகாமை அறியாய் - நீ கிட்ட வருவதனை எதிர்ப்பார்த்துக்கொண்டு தேன் குடியாதிருத்தலை அறியா திருக்கின்றனை என்றவாறு. காம வின்பம் நுகருங்காற் கனிந்து நான்மெல் லெனச்சுவைத்த தோமில் மரத்திற் கிள்ளாத தூமென் றுளிரோ மிகப்பழுத்த காமர் கொவ்வைப் பழமோஎன் கண்ணே யனையாள் கனிந்தவிதழ் நீமேற் றொட்டால் முண்டகமா முகையுட் சிறையாய் நினையிடுவேன். (49) (இ-ள்) காம இன்பம் நுகருங்கால் - காம இன்பத்தைத் துய்க்கையில், கனிந்து நான் மெல்லெனச் சுவைத்த - கனிவு கொண்டு யான் மென்மையாகச் சுவைத்த, தோம்இல் மரத்தில் கிள்ளாத தூமெல்துளிரோ - குற்றம் இல்லாத ஒரு மரத்தி னின்றுங் கிள்ளப்படாத அதன் தூய மெல்லிய தளிர்தானோ, மிகப் பழுத்த காமர் கொவ்வைப் பழமோ - நிரம்பவும் பழுத்த விரும்பத்தக்க கொவ்வைக் கனிதானோ, என் கண்ணே அனையாள் கனிந்த இதழ் - என் இருகண்களை யொத்தவளாகிய சகுந்தலையின் கனிவு மிக்க இதழ், நீ மேல் தொட்டால் - நீ அவ்விதழைத் தொட்டால், முண்டகமாமுகையுள் சிறையாய் நினை இடுவேன் - தாமரையின் பெரிய மொட்டினுள்ளே நின்னைச் சிறைப்படுத்துவேன் என்றவாறு. விழிதுயி லாமையால் விரைக னாவினும் எழிலி னாள்தனை ஏயப் பெற்றிலேன் ஒழுகுகண் ணீரினால் ஓவியத்தினும் பழியறு பாவையைப் பார்க்க கில்லேனே. (50) (இ-ள்) விழிதுயிலாமையால் - கண் உறங்கப் பெறாமை யால், விரை கனாவிலும் - விரைந்த நிகழ்ச்சியுடைய கனவிலா யினும், எழிலினாள்தனை - அழகியாளான சகுந்தலையை, ஏயப்பெற்றிலேன் - பொருந்தப் பெற்றேனில்லை, ஒழுகு கண்ணீரி னால் - வடியா நின்ற கண்ணீரினாற் பார்வை மறைபடுதலின், ஓவியத்தினும் - படத்தின் கண்ணும், பழி அறு பாவையைப் பார்க்க கில்லேனே - குற்றம் அற்ற பாவை போல்வாளைப் பார்க்க மாட்டாதேனாயினனே! என்க. பிள்ளையில்லாக் கொடியேனாற் பெயப்பட்ட எண்ணீரைப் பிதிரர் கண்டு தள்ளாத முறைப்படியே யிவன்பின்னே தகுநீரு மெள்ளுங் கூட்டிக் கொள்ளுமினோ பலியெனவே கொடுப்பாரா ரெனக்கூறி யுகுங்கண் ணீரோ டள்ளியே யுண்பாராற் பலிபெறுவோர் ஐயமுற லாயிற் றந்தோ! (51) (இ-ள்) பிள்ளையில்லாக் கொடியோனால் பெயப்பட்ட எள்நீரை - பிள்ளையில்லாக் கொடியவனாகிய என்னால் வார்க்கப்பட்ட எள்ளொடு கலந்த நீரை, பிதிரர் கண்டு - மறுமையுலகிற் சென்ற என் மூதாதையர் பார்த்து, தள்ளாத முறைப்படியே இவன் பின்னே தகுநீரும் எள்ளுங் கூட்டிக் கொள்ளுமினோ பலி எனவே கொடுப்பார் ஆர் - தவறாத நூன் முறைப்படியே இவனுக்குப் பிறகு தகுதி வாய்ந்த நீரும் எள்ளுஞ் சேர்த்து இதனை யுணவாக ஏற்றுக்கொள்வீராக வென்று கொடுப்பவர் யாருளர்? எனக்கூறி உகும் கண்ணீரோடு அள்ளியே உண்பார் - என்று சொல்லிக்கொண்டே சொரியுங் கண்ணீரோடு அப் பலியினை வாரியுண்பார்கள், பலிபெறுவோர் ஐயம் உறல் ஆயிற்று அந்தோ - யாம் இடும் உணவினைப் பெறும் மூதாதையர் என் கால்வழி யற்றுப்போமோவென்று ஐயப்படுதற்கு! இடமா யிற்றே ஐயகோ! என்றவாறு. ஆல் : அசை. ஓங்குவரை மேலிருந் தாங்கிழி வதுபோல் ஆன்றநில வுலகந் தோன்றுவது காண்மோ! உயர்பெரு மரங்கள் வியன்கிளை தோற்றிச் செழுந்தழை மறைப்பினின் றொழிவதூஉங் காண்மோ! நன்குபுல னாகா இன்புன லியாறுகள் அகன்றுநனி கிடத்தலிற் றுலங்குதல் காண்மோ! இவ்வியல் பதனால் எழில்கெழுஉ மிவ்வுல கியாரோ வொருவன் எழச்செய் தீங்கென் பக்கல் இயைப்பது போன்மே. (52) (இ-ள்) ஓங்குவரை மீதிருந் தாங்கு இழிவது போல் - உயர்ந்த மலையின்மே லிருந்தபடியே கீழ் இறங்குவதுபோல ஆன்ற நில உலகம் தோன்றுவது காண்மோ - அகன்ற நிலவுலகமானது தோற்றுதலைக் காண்மின்! உயர்பெருமரங்கள் வியன்கிளை தோற்றிச் செழுந்தழை மறைப்பினின்று ஒழிவதுங் காண்மோ - உயர்ந்த பெரிய மரங்கள் தம்முடைய பெரிய கிளைகளைத் தோன்றச் செய்து செழுமையான தழைகளின் மறைப்பிலிருந்து விடுபடுவதுங் காண்மின்!, நன்கு புலன் ஆகா இன்புனல் யாறுகள் அகன்று நனிகிடத்தலின் துலங்குதல் காண்மோ - முதலில் நன்றாகக் கண்களுக்குத் தெரியாத இனிய நீரினையுடைய ஆறுகள் வரவரப் பெரிதும் அகன்று கிடத்த லினால் விளங்கித் தோன்றுதல் காண்மின்!, இவ்இயல்வு அதனால் எழில்கெழும் இவ்உலகு - இவ்வாறு காணப்படுந் தன்மையினாலே எழுச்சி பொருந்தும் இந் நிலவுலகத்தினை, யாரோ ஒருவன் எழச்செய்து ஈங்கு என்பக்கல் இயைப்பது போன்ம் - எவனோ ஒருவன் கீழிருந்து மேலே எழும்பும்படி செய்து இங்கே என் பக்கத்திற் சேர்ப்பதுபோற் றோன்றுகின்றது என்றவாறு. ஏ : அசை. மாலைக் காலத்து மங்கொளி மருங்கிற் புயலரண் போலப் பொருந்தித் தெளிபொன் உருகவிட் டாலென மருவித் தோன்றிக் குணகடல் குடகடல் கழூஉவக் கிடக்கும் வளஞ்சா லிம்மலை யாதோ வுரைமோ. (53) (இ-ள்) மாலைக்காலத்து மங்கு ஒளி மருங்கில் - சாய்ங்கால வேளையில் மங்கலாகத் தோன்றா நின்ற ஒளியினிடத்தே, புயல் அரண் போலப் பொருந்தி - முகிலாகிய (மேகமாகிய) காவற் சுவர்போற் பொருந்தி, தெளிபொன் உருக விட்டாலென மருவித் தோன்றி - தூய பொன்னை உருக்கியோட விட்டதை யொப்பக் கீழ்பால் மேல்பால் எல்லையைத் தான் பொருந்தித் தோன்றி, அங்ஙனம் இருபால் எல்லையையுந் தான் தொடுதலால், குணகடல் குடகடல் கழுவக் கிடக்கும் - கீழ் கடலும் மேல்கடலுந் தன் அடிகளைக் கழுவும்படி கிடக்கும், (பக்கம். 124 ) வளம் சால் இம்மலை யாதோ உரைமோ - வளம் மிகுந்த இந்த மலை யாது? சொல்லுவீராக என்றவாறு. வேட்பன தரூஉங் கற்பகம் பொதுளிய அடவியி லிருந்தும் மற்றிவர் ஆர்வது நடைபெறுந் தூய வளியே; முடவிதழ்ப் பொற்றா மரையின் நற்றா துகுதலிற் பழுப்புருந் தோற்றும் விழுத்தட நீரே பொழுதுமா றாதிவர் முழுகுதீம் புனலே; வீழ்ந்தொரு குறியில் ஆழ்ந்திவ ரிருப்பதும் விளக்கம் வாய்ந்த மணிக்கன் மிசையே; அரம்பை மாதரார் மருங்குறப் பெற்றும் ஐம்பொறி யடக்குமிவர் மொய்ம்புமிகப் பெரிதே; இந்நற் றவர்பால் மன்னுமிப் பொருள்கள் ஏனை முனிவரும் விழைவுற் றானது நோற்கும் அருமைசான் றனவே. (54) (இ-ள்) வேட்பன தரும் கற்பகம் பொதுளிய அடவியி லிருந்தும் - விரும்பிக் கேட்பவைகளையெல்லாங் கொடுக்குங் கற்பகமரங்கள் நிறைந்த காட்டின்கண் இருந்தும், மற்று அசைநிலை; அல்லது அவைகளை ஏதும் விரும்பிக் கேளாத வராய் என்று வினைமாற்றுப் பொருள் பட உரைப்பினும் ஆம்; இவர் ஆர்வது நடைபெறும் தூயவளியே - இவர் அருந்துவதோ இயங்குகின்ற தூய்மையான காற்றாய் இருக்கின்றது, முடவு இதழ்ப் பொன்தாமரையின் நல்தாது உகுதலின் பழுப்பு உருத்தோற்றம் விழுத்தட நீரே - வளைந்த இதழ்களையுடைய செம்பொன் நிறமான தாமரை மலர்களின் நல்ல துகள் சொரிதலினாலே பழுப்பான நிறத்தைக் காட்டுஞ் சிறந்த குளங்களின் நீரே, பொழுது மாறாது இவர் முழுகு தீம்புனலே - சிறு பொழுதுகள் தோறும் மாறாமல் இவர் ஆடும் இன்சுவைத் தண்ணீராயிருக்கின்றது, வீழ்ந்து ஒரு குறியில் ஆழ்ந்து இவர் இருப்பதும் - விரும்பி ஓர் அடையாளத்தின்கண்ணே நினைவு பதிந்து இவர் இருப்பதற்கு இடமாவதும்; விளக்கம் வாய்ந்த மணிக்கல் மிசையே - துலக்கம் பொருந்திய இரத்தினக் கற்களின் மேலாகவே இருக்கின்றது. அரம்பை மாதரார் மருங்கு உறப்பெற்றும் - அழகின் மிக்க அரம்பை மகளிர் தம் பக்கத்தே பொருந்தப் பெற்றும், ஐம்பொறி அடக்கும் இவர் மொய்ம்பு மிகப் பெரிதே - ஐம்பொறி வழிச் செல்லும் அவாவை அடக்கியிருக்கும் இவரது மனவலிமை மிகவும் பெரிதாயிருக்கின்றது, இந் நல்தவர் பால் மன்னும் இப் பொருள்கள் - இந்த நல்ல தவத்தினையுடைய முனிவரிடத்தே நிலைபெற்றிருக்கும் இவ் வரும் பொருள்கள், ஏனை முனிவரும் விழைவு உற்று ஆனாது நோற்கும் அருமை சான்றன - மற்றை முனிவர்களும் பெறுதற்கு அவாக்கொண்டு இடையறாது தவம்புரியத்தக்க அளவு அருமை மிக்கனவாய் இராநின்றன என்றவாறு. முன் நான்கு ஏகாரங்கள் - பிரிநிலைத் தேற்றம்; ஐந்தாவது ஆறாவது - தேற்றம். வீழ்தல் விரும்புதற் பொருட்டாதல் தாம் வீழ்வார் மென்றோள் என்புழியுங் காண்க (திருக்குறள்.1103 ) குறி என்றது ஒளியும், ஒளிவடிவின் அடையாளமான சிவலிங்கமும். பேதமை தன்னான் மாதைநான் நீக்கக் கண்ணின் நுண்டுளி கீழிதழ் வீழ்ந்து பெருந்துய ருறுத்திய தன்றே, இன்றே மற்றது சிறிதே வளைமயி ரிறையில் உற்ற தாகலிற் பொற்கொடி அதனை அளியேன் பெருந்துயர் நீங்க எளியேன் முந்துறத் துடைக்குவென் மயிலே (55) (இ-ள்) பேதமைதன்னால் - அறியாமையினால், மாதை நான் நீக்க - மங்கையாகிய நின்னை யான் விலக்கிவிட, அதனை நினைந் தெழும் - ஆற்றாமையாற் பெருகுங், கண்ணின் நுண்துளிகீழ் இதழ் வீழ்ந்து பெரும் துயர் உறுத்தியது அன்றே - கண்களின் சிறு நீர்த்துளிகள் கீழ் உதட்டின்கண்ணே விழுந்து யான் நின்னை விலக்கிய அந்நாளில் நினக்குப் பெருந் துன்பத்தை யான் விளைத்தற்கு அறிகுறியாயின வல்லவோ? இன்றே - யான் நின்னைத் தலைக்கூடிய இந்நாளிலும், அற்று - அப் பிரிவினை நினைந்து பெருகும், அது சிறிதே வளைமயிர் இறையில் உற்ற தாகலின் - அக் கண்ணீர் சிறிதுளிகளாக வளைந்த மயிர்களை யுடைய இறைப்பை விளிம்பிற் றங்கியிருக்கின்றனவாதலால், பொன்கொடி பொன்னிறமான பூங்கொடி யனையாய், அதனை - அக் கண்ணீர்த் துளிகளை, அளியேன் பெரும் துயர் நீங்க - இரங்கத்தக்க எனது பெருந் துயரம் நீங்கும்படியாக, எளியேன் முந்துறத் துடைக்குவென் மயிலே - மயிலின் சாயலையுடையாய்! ஏழையேன் முன்னதாகத் துடைப்பேன் என்றவாறு. சிறந்த மன்னவன் தண்குடிச் செல்வமே தெரிக! விறந்த கல்விசால் புலவர்சொல் வியந்திடப் படுக! நிறந்து வாழுமை கூறராம் நீலலோ கிதர்யான் பிறந்தி டாவகை யருளிமேற் பேறுநல் குகவே. (56) (ï-Ÿ) áwªj k‹dt‹ - m¿î M©ik eLÃiyikÆš Ä¡nfhdhd mur‹, j‹Fo¢ brštnk bjÇf - j‹ Fok¡fË‹ tsÉa thœ¡ifÆidna jdJ thœ¡ifahf¤ bjÇthdhf!, விறந்த கல்விசால் புலவர் சொல் வியந்திடப்படுக - செறிந்த கல்வியறிவு மிக்க புலவரின் மொழிகள் எல்லாராலும் பாராட்டப்படுக! நிறந்த வாழ் உமை கூறர் ஆம் நீலலோகிதர் - எல்லா உலகிலும் உயிரிலும் விளங்கித்தோன்றி வாழாநின்ற உமைப்பிராட்டியாரைத் தமது இடப் பாகத்தே கொண்டவரான சிவபிரான், யான் பிறந்திடாவகை அருளி மேல் பேறு நல்குக - யான் மீண்டும் பிறவாதபடி அருள்செய்து அதன்மேல் தமது திருவடிப் பேற்றையும் எனக்குக் கொடுத்தருள் வாராக! என்றவாறு. ஏ : அசை; பேறு என்பதில் உம்மை தொக்கது. அடிக்குறிப்பு 1. மறைத்திரு மறைமலையடிகளார் இயற்றிய சாகுந்தல நாடகம் பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப் பெறுவது யாவரும் அறிவர். அந்த நாடகத்தில் இடையிடையே உரைநடையுடன் அடிகளார் வகைப் பாவினங்களில் இயற்றிய 52 செய்யுட்கள் காணப் பெறுகின்றன. அடிகளார் நாடகத்தின் பின்னிணைப்பாக எழுதப் பெற்றிருக்கும் விளக்கக் குறிப்புக்களில் அப் பாடல்களுக்கு உரை விளக்கம் காணப்பெறுகின்றது. எனவே அடிகளார் பாமணிக் கோவையில் அப் பாடல்களை உரை விளக்கத்தோடு சேர்ப்பது பொருத்தமாகுமெனச் சேர்த்திருக்கின்றோம். 16 இரங்கற்பாக்கள் சோமசுந்தரக்காஞ்சி பாட்டுடைத் தலைவர் வரலாறு திருப்பெருந்திரு சோமசுந்தர நாயகரவர்கள் கி. 1846 ஆம் ஆண்டு ஆகஃச்டு மாதம் 16 ஆம் நாள், சென்னை மாநகரத்தின் ஒரு பகுதியாக விளங்கும் சூளை என்னும் ஊரில் இராமலிங்கர் அம்மணியம்மாள் என்னும் நற்றவஞ் செய்த பெற்றோருக்கு அருமை மகவாகப் பிறந்தார். இவர்க்குப் பெற்றோர் வழங்கிய பிள்ளைத் திருப்பெயர் அரங்கசாமி என்பதாகும். அரசினர் கல்விச் சாலையில் தெலுங்கும் ஆங்கிலமும் கற்ற இவர் 1முத்து வீரிய உபாத்தியாயர் என்னும் பெரியாரிடம் தமிழிலக்கண இலக்கியங்களும் அச்சுதானந்த அடிகள் என்னும் துறவி யார்பால் வடமொழியும் கற்றுச் சிறந்தார். சிவஞானம் என்னும் அம்மையாரை மணந்து இல்லறம் மேற்கெண்ட சோமசுந்தரர், செகதாம்பாள், விசாலாட்சி, லோகாம்பாள் என்னும் பெண்மணிகள் மூவரும், சிவபாதம் என்னும் ஆண் மகன் ஒருவனும் ஆக நால்வரையும் மக்கட் செல்வமாகப் பெற்றார். கொலைத் தொழிலால் வரும் சம்பளத்திற்காக ஊழியம் பார்த்தல் ஆகாது என்னும் உணர்வு மேலீட்டால் தோற்கிடங் கொன்றில் தாம் பார்த்துவந்த கணக்கர் வேலையைக் கை விட்டமையும், அங்ஙனமே பொய்சொல்லி விடுப்பெடுக்க வேண்டியுள்ள வேலை பார்ப்பதினும் அதனை விட்டொழித்தலே மேலென்றுகருதி நகராண்மைக் கழகத்தில் தாம் பார்த்துவந்த எழுத்தர் வேலையைக் கைவிட்டமையும் இவர் தம் உண்மை யுள்ளத்தையும் உள்ளவுறுதியையும் புலப்படுத்தும். இளமையில் மாயாவாத வேதாந்தக் கொள்கையில் சிக்குண்டிருந்த நாயகர் திருமிகு மதுரை நாயகம் என்னும் பெரியாரால் சிவநெறி மெய்ப்பொருள் நுட்பம் உணர்ந்து தெளிந்தார். வடமொழி இலக்கண இலக்கியங்கள், மறை நூல்கள், 1அவையங்கள், மெய்ப்பொருள் நூல்கள், தொல் கதைகள் முதலியவற்றில் சோமசுந்தரர்க்கு இருந்த ஒப்பற்ற புலமைச் சிறப்பையும் மற்றும் பாநல நாநலங்களையும், தருக்க முறையோடு வழக்கிட்டுத் தங்கோள் நிறுவும் வீறுமிக்க பேராற்றலையும் கண்டு வியந்து இராமநாதபுரத்து மன்னரான சேதுபதி அவர்கள் இவர்க்குச் 2 சைவசித்தாந்த சண்டமாருதம் என்னும் பட்டமும், வெற்றித் தோடாவும், பொற்குவையும் வழங்கிப் பாராட்டிச் சிறப்பெய்தினர். நாயகரவர்கள் ஒருமுறை விவேகானந்த அடிகளை வழக்குரையில் வென்று தம் மதம் நிறுவினார். மெய்யறிவு சான்ற சோமசுந்தரவள்ளலின் அரும்பணியால் வேற்று மதங்களினின்றும் மீண்டு, சிவநெறி தழுவியவர் பலர். தவத்திரு அச்சுதானந்த அடிகளே தம் மாணவரின் விளக்கத்தால், தாம் மேற்கொண்டிருந்த மாயாவாத வேதாந்தக் கொள்கையை யும் துறவையும் கைவிட்டுச் சிவநெறித்துறவு மேற்கொண்டு தம் பெயரையும் ஏகாம்பர சிவயோகிகள் என்று மாற்றிக் கொண்டமை குறிப்பிடத் தக்கது. வேத பாஹ்ய சமாஜ கண்டனம் என்னும் வழக்குரை நூலே நாயகரவர்கள் இயற்றி வெளியிட்ட முதல் நூலாகும். அப்போது அவர்கட்கு அகவை 22. பின் நாற்பதுக்கு மேற்பட்ட அரும்பெறல் நூல்களை நாயகரவர்கள் அடுத்தடுத்து இயற்றி வெளியிட்டுள்ளனர். சிவநெறி தழைக்க அரும்பணியாற்றிய இப் பெரியார் தமது 55 ஆம் அகவையில் 1901 ஆம் ஆண்டு, பிப்பிரவரி மாதம், 22 ஆம் நாள் வெள்ளிக்கிழமை யன்று சிவபெருமான் திருவடி நீழல் எய்தினர். இவர் தம் மாணாக்கர் பலருள்ளும் தலைசிறந்தவர் தவத்திரு மறைமலையடிகளாராவர். சோமசுந்தரக்காஞ்சி தாம்மாசிரியரின் பெரும்பிரிவால் உளங் குழையப்பெற்ற அடிகளார் கையறுநிலை என்னுந் தலைப்பில் எட்டுச் செய்யுட் களும், தாபதநிலை என்னந் தலைப்பில் பத்துச் செய்யுட்களும், மன்னைக்காஞ்சி என்னுந் தலைப்பில் அறுபத்தேழு அடிகளான் அமைந்த அகவற்பா ஒன்றும் கொண்ட சோமசுந்தரக்காஞ்சி என்னும் இந்நூலை இயற்றினார். இஃது அச்சியற்றப்பட்டுப் பாட்டுடைத் தலைவர்க்கு நீத்தார் கடன் நிகழ்ந்த 16 ஆம் நாள் ஆண்டுக்கூடிய பேரவையில் மற்றையோர் இயற்றிக் கொணர்ந்த இரங்கற் பாக்கள் படித்து முடிக்கப்பட்டபின் அடிகளால் கண்ணீர் ஒழுகக் கலுழ்ந்த படியாய்ப் படித்து முடிக்கப்பட்டது. ஏனையோர் பாக்கள் உண்மையில் இரங்கற்பாக்களாய் இல்லாமல் நாயகரவர்களின் மெய்ந்நூற் புலமையினையும், நாநலத்தையும் அவர்களிடம் எதிர் வழக்கிட்டுத் தோல்வியுற்றார் நிலைகளையுமே எடுத்தியம்பி நகையினை உண்டாக்கினவாக, அடிகளார் நெஞ்சங் குழைந்துருகிப் பாடிய இக் காஞ்சிப் பாக்களோ அனைவரையும் அகங்கரைந்து கண்ணீர் பெருகி அழுமாறு செய்துவிட்டன. ஆதலின் நாயகரவர்களின் மாணாக்கர், நண்பர், உறவினர், மற்றையோர் யாவராலும் இந்நூல் யாண்டும் *பாராட்டப் பட்டது. அடிக்குறிப்புகள் * இவர் - முத்துவீரியம் இலக்கண நூலாசிரியர் 1. அவையங்கள் - உபநிடதங்கள் 2. சண்டமாருதம் - சூறாவளி வைதிக சைவசித்தாந்த சண்டமாருதம் திருப்பெருந்திரு. சோமசுந்தர நாயகரவர்கள் மேல் இயற்றிய 1. கையறுநிலை சைவமெனப்படு சமயந லுண்மை தழைத்து செழித்திடவோ தாவறு நீதி வழிப்படு வாதிகள் சார்ந்து களித்திடவோ மெய்வழி பொய்வழி வேறுவே றாக விரிந்து விளங்கிடவோ வேதவே தாந்த வரம்பினி யார்க்கும் விளங்க விளம்பிடவோ தெய்வ மினிச்சிவ மென்று தெளிந்துல கிங்கு திகழ்ந்திடவோ திப்பிய மெய்யரு ளிப்புவி வந்து சிறந்த திறம்படவோ துய்ய வெண்ணீறு துதைந்த தொழும்பர்க டன்மை சுடர்ந்திடவோ சோமசுந் ரனெனு நாமமொ டிங்குநீ தோன்றிய தெங்குருவே. (1) புத்தர் கரைந்திடு பொய்ம்மொழி கீழ்ந்தது போதுவ தன்றென்றோ புன்சம ணுக்கொரு வன்கழு வீந்ததும் போதுவ தன்றென்றோ சுத்தசை வத்தொடு முரணி யிழிப்புரை தோற்றுந ருண்டென்றோ சொல்வழி வாரலர் நல்வழி கண்டு துலங்குக வின்றென்றோ பித்துரை யாடுந ரத்திறந் தீர்ந்து பிழைத்திட லொன்றென்றோ பேதுரை கூறுநர் வாதுரை போழ்ந்து பிறங்குவ தின்றென்றோ தொத்தலர் கொன்றையி னான்புக ழின்று தொடங்குவது நன்றென்றோ சோமசுந் தரனெனு நாமமொ டிங்குநீ தோன்றிய தெங்குருவே. (2) வான்மதி மீனின நீங்க வழுக்கியிம் மண்ணிடை வீழ்ந்ததுவோ மல்லலங் கற்ப மரஞ்சிவம் வீசியிம் மண்ணிடை வீழ்ந்ததுவோ நான்முக னான்மறை யுட்பொருள் கூற நலத்தக வந்ததுவோ நல்லகல் லாலமர் நம்பர்கை காட்டுரை நாட்ட வெழுந்ததுவோ மான்மக ணாமக டூமகள் கூடி வளந்தர வந்ததுவோ மாதவ வாழ்வொடு மில்வினை காட்டிட வள்ளுவர் வந்ததுவோ சூன்முதிர் வண்புய னூன்முறை தந்து சுரந்திட வந்ததுவோ சோமசுந் தரனெனு நாமமொ டிங்குநீ தோன்றிய தெங்குருவே. (3) நாயி னிழிந்தவெம் புன்மை களைந்து நலந்தர வந்தனையோ நல்லது தீயது நன்று பகுத்து நவின்றிட வந்தனையோ தாயினு மென்னுயர் தந்தையி னும்முயர் தன்மையில் வந்தனையோ தண்டமி ழிற்படு வண்டுறை நன்றுநீ தந்திட வந்தனையோ காயினு மல்ல துவப்பினு மன்பது காட்டிட வந்தனையோ கன்மன மியாவுமொர் நன்மன மாயெமைக் காத்திட வந்தனையோ தூய வுளத்தினர் சாம்பவ ரென்பது தோற்றிட வந்தனையோ சோமசுந் தரனெனு நாமமொ டிங்குநீ தோன்றிய தெங்குருவே. (4) கண்ணுது லார்நெறி பண்ணின மொண்கழல் காணுத மினியென்றோ கௌணியர் தந்தலை வன்கழல் கண்டு களிக்குது மினியென்றோ எண்ணில ரன்பர்மு னண்ணிய நல்வழி யேகுது மினியென்றோ ஈசனற் றொண்டர் குழீஇயவெள் வெற்பி லிருக்குது மினியென்றோ மண்ணில் வரும்பொரு டுய்த்துறை வாழ்வு மதித்தில மினியென்றோ மன்ன ரிறைஞ்ச வரும்பெரு வாழ்வு மயங்கு வகைத்தென்றோ. துண்ணென விவ்வுல கம்முத லென்று சுருங்குத லறிமென்றோ சோமசுந் தரனெனு நாமம் விடுத்து மறைந்தனை யெங்குருவே (5) இங்கினி நின்கழல் கண்டிரு கண்களு மின்புற லாகாதே ஏழைய முய்ய மிழற்றுநி னின்னிசை யெய்துவ தாகாதே செங்குமு தம்புரை நின்றிரு வாய்மொழி சேர்வது மாகாதே செம்மை தரும்முப தேச வழக்கினித் தேர்ந்திட லாகாதே கொங்கலர் கொன்றையி னான்றிற மிங்கு குறிப்பது மாகாதே குன்றலி லன்பர் குணங்குறி யிங்கு குறிக்கொள லாகாதே துங்கந லாகம நுட்ப முணர்ந்து சுகம்பெற லாகாதே சோமசுந் தரனென நாமுரை யண்ண றுறந்து மறைந்திடவே. (6) குன்றி விழிக்குயில் காளுயி ரன்னவெங் கோவினைக் கண்டனிரோ கூம்பு சிறைக்குரு கேகுரு மாமணி கோலநீர் கண்டனிரோ பொன்றுகள் சிந்திடு கொன்றைக ளேசிவ போதனைக் கண்டனிரோ புந்தி நிறைந்தவர் சிந்தை விளக்கினைப் புன்னையே கண்டனிரோ கன்று முளத்தொடு கண்கலு ழெந்துயர் கண்டுரை யாடீரோ கைலை மலைத்தலை வன்கழல் வைகினற் கண்டது சொல்லீரோ துன்றுமெ மெந்தையை யென்றினிக் காண்குவந் தோகையே கூறிரோ சோமசுந் தரனெனு நாமனைக் கண்டு தொடர்ந்துசொ றூதுணமே. (7) வேதமொ டாகம வித்தக நூல்கள் விரிந்து விளங்கிடுமோ வென்றவெண் ணீற்றொளி யிந்நில மெங்கும் தீதறு நால்வர்தி றம்படு மன்பு திகழ்ந்து சிறந்திடுமோ தேறரு மெய்ப்பொருள் கண்டவர் நூல்க டெளிந்து சிறந்திடுமோ மேதக வாக மொழிந்திட வல்லதொர் மெல்லியற் பைங்கிளியே மெல்லென விவ்வுரை யாவு மவற்கு விரித்து விளம்பிடினே தூதொடு வந்தநி னின்மழ லைம்மொழி தூய தெனக்கொண்டே சோமசுந் தரனிவ ணாமுறு துன்பறத் தோன்றுவ னெம்முளமே. (8) 2. தாபதநிலை அரைசே யெனுமா லருளே யெனுமால் உரைசேர் புகழா யுடையா யெனுமால் தரை நீ யொருவ றகுமோ வெனுமால் குருவே யெனுமால் குணநின் மனையே (1) சிவமே கருதுந் திறலோ யெனுமால் அவநீ யெமைநீ யகல லெனுமால் தவமே திருவே தலைவா வெனுமால் குவிகை தொழுமாற் குணநின் மனையே. (2) அறிவோ பிறழு மலமந் தழுநின் குறியும் பிறவுங் குலவும் முளமே செறிவே தொருவுந் திறமோ தெரியா தெறியுங் கரமே யிவணென் செயுமே. (3) எழிலார் மதிய மியைநின் முகனே அழியா துளமே யடையும் மெனுமால் வழியா விழுதேன் வளர்நின் மொழியே பழியே மினியோ பருகல் லெனுமால். (4) உயிரே யுறவே யுலகாற் சிவநற் பயிரே தழையப் படுநன் முகிலே எயிலார் புறவத் திளையார் திறமே பயில்வாய் தகுமோ பழியார் பிரிவே. (5) மறைநா வுடையாய் மறையோர் புகழ நிறையா ருரைகள் நிரைப்பா யெனுமால் குறையா மதியாய் குணமா மலையே இறையே பிரிய விரெனா னெனுமால். (6) கரவோ அறியாய் கணமும் பிரியாய் உரவோய் பிரிதல் கரவோ வுரையாய் அரவே ரிறைவ னடியே யுறைவாய் விரவுந் திறமோ விரியா யெனுமால். (7) கடலோ கரையுங் கருங்கல் லுருகும் மடலார் மலர்க்கண் மலிநீர் சொரிய மிடலார் மரமும் மெழுகா யுருகும் அடலே றனையோ யறியா யிதுவோ (8) அருமை மகனை யகன்றா யெனுமால் திருவை நிகருஞ் சிறுமி யரையும் ஒருவா வுறைத லுறுமோ வெனுமால் பெருமா பிரியப் பெறுமோ வெனுமால். (9) மொழியப் படுமோ முனிவா மனையின் கழியாத் துயரங் கருத லரிதால் அழியாப் புகழென் னனையின் றுயர மொழியா யெனயா னுனைவேண் டுவெனே. (10) 3. மன்னைக் காஞ்சி வாங்குகடல் குழிப்ப வண்புனன் முகந்து பாங்குபெற வுயரிய வோங்குமலை யேறி மன்னுயி ரஞ்ச மின்னுட னுரறி வரையாது பெய்த மழைக்குலம் போல, மறைநூற் பொருளுந் திருநெறித் தமிழும் அரும்பொருள் பயப்ப வொருங்குடன் காட்டி, உவலைச் சமயிகள் கவலை யெய்தச் சைவ சித்தாந்த மெய்யொடு கிளர உரைமுறை நிறுத்தனை பலநாண் மற்றஃ தழுந்து துயர் கூரக் கழிந்தன்று மன்னே. நீறினி தளைஇய வீறின தாகி அகன்றுநிவந் தொழுகிப் பரந்தநின் னுதலுங் கருகி முரிந்த திருவளர் புருவமும் பேரருள் நிரம்பு சீர்கெழு விழியும் முல்லை முகிழன்ன மெல்லிய நாசியுங் கொவ்வை யன்ன செவ்விய விதழும் முருந்தி னன்ன திருந்திய வெயிறு நவையாறு கன்னற் சுவையின தாகிக் குயிலிசை யோடு பயிலுத லுடைத்தாய்க் காணினுங் கேட்பினுங் கருதினுங் களிதரும் உரையொடு பயின்ற புரையறு மொழியுஞ் செறிவொடு தசைந்த நறுவிய கதுப்புங் கத்தரிக் கொழுங்கடை யொத்திடு செவியுஞ் சுரிவளை போல வரியொடு திரண்டு பூதிமணி திகழுந் தீதறு மிடறும் எழுவெனத் திணிந்து முழவெனச் சரிந்துபின் எழிலொடு கிளருங் கொழுவிய தோளும் நான்முக னறியா வான்பொருள் வழக்கும் உரைமுடிவு கடந்த விருபொருட் கல்வியும் ஒருவழி யெமக்குந் திருவொடு காட்டும் யாழ்நுனி யோடு வாழ்திருக் கையும் நீறு சண்ணித்த நிகரறு மேனியும் மருளது நீங்க வருளொடு காட்டி நாயினு மிழிந்த பேயின மாகிய எம்மையு மாண்ட பின்னை யம்மைப் பண்டைய வுருவொடு சென்றனை மன்னே, நின்னடி சேர்குநர்க் கெல்லா மின்னருள் திரிவின்றிச் செய்குவை மன்னே, மருவலர் நின்முகங் கண்டொன் றிரக்குவ ராயினது வரையாது வழங்குவை மன்னே, யொருகால் வெகுண்டுரை யாடுவை யெனினும் நகையொடும் எம்முறு விழுமங் களைவோய் மன்னே, தாயினு மெமக்குத் தலையளி புரிந்து தந்தையிற் பெரிய தயவினை மன்னே, காழியில் வந்த கௌணியக் கன்றின் மிகுத்துரை யெமக்குத் தொகுத்தனை மன்னே, மறைமுடி வெல்லாந் துறைபடி நிறுவிக் குறையற வீந்த குரிசிலை மன்னே, மண்ணிடை வாழ்வும் விண்ணிடை வாழ்வும் மதியாது வைகிய சிதைவறு திருவினை சிவன்றிரு வடியே சிவணிய குறிப்பின் அவமது களைந்த தவமுறு தன்மையை கட்புலம் படராது விட்புலம் படர்ந்து கண்ணுத றிருவடி நண்ணினை யாயினும். பிரிவுறு துன்ப மரிதரி தாகலின் விழி நீ ருகுப்ப மொழியிடை குழற வானாத் துயர மடைது மன்றே. குருவே கண்ணே திருவே மணியே அறிவின் கொழுந்தே பொறையி னிறைவே எம்முள மமர்ந்த வம்மணி விளக்கே புகழின் வடிவே பொலிவுறு மமுதே கலையின் றிறனே நிலையுமெ முயிரே உயிரிடை நிரம்பு செயிரறு முணர்வே உணர்வுக் குணர்வே யொப்பிலா முதலே அறிவொடு கூடாச் சிறியே முறுதுயர் பரிவொடு களைமதி யெனநின் திருவடி நினைந்தொரு வரம்வேண் டுவலே. அடிக்குறிப்புகள் * சோமசுந்தரக் காஞ்சி யாண்டும் பாராட்டப்படுதலைக் கண்டு அழுக்காறுற்ற புலவர் சிலர் அதன்கண் குற்றங்காணப் புகுந்து மறுப்பெழுத, அதற்கு எதிர்மறுப்பாக அடிகளார் சோமசுந்தரக் காஞ்சியாக்கம் என்னும் நூலை உரைநடையில் இயற்றி வெளியிட்டனர். தொல்காப்பியப் பொருளிலக்கண நுட்பங்களும் பிறவும் விளங்க விரித்து உயரிய தனிச் செந்தமிழ் நடையில் வரையப்பட்டது இந்நூல். இச் செய்யுட்கள் ஆண்பாற் கையறுநிலை குறித்து வந்தன. கைஅறு நிலை - செயலற்றநிலை. 1. செழித்திடவோ கழித்திடவோ நீ தோன்றியது எம் குருவே என்று தொடரும்; தா அறு - கெடுதல் இல்லாத, அழிதல் இல்லாத; நீதி வழிப்படு வாதிகள் - முறைமை வழிப்பட்ட வாதத்தார்; விளம்பிடவோ - விளக்கமாய்த் தெளிவிக்கவோ; இனி - இனியேனும்; சிவம் - கடவுளுக்குச் சிறப்புப் பெயர்; திப்பிய - சிறந்த; துதைந்த - செழித்து அடர்ந்த; தொழும்பர் - தொண்டர்; கடன்மை - கடமை; சுடர்ந்திடவோ - விளங்கிடவோ; 2. புத்தர் கரைந்திடு பொய்மொழி என்றது, உலகம், சார்பில் தோன்றும் என்பதும், அதனைத் தோற்றுவிக்கக் கடவுள் தேவையில்லை என்பதும்; கரைந்திடு - பொருளின்றிச் சொல்லும்; என்றது, பொய்ச் சொற்கள். புத்தர் - பொதுவாகப் புத்த சமயத்தார்; கீழ்ந்தது - திருவாதவூரர் சாய்த்தது; போதுவதன்று - போதுமானதன்று; என்றோ - என்று கருதியோ; குருவே நீ தோன்றியது என்று முடிக்க. புன் - தாழ்ந்த; சமணுக்கு - சமண் சமயத்துக்கு; ஒருவன் - பாண்டி மன்னன்; ஈந்ததும் - தண்டனை தந்ததும்; தோற்றுநர் - புத்தர் சமணர் அல்லாத ஏனைய சமயத்தார்; சுத்த சைவம், இங்கே வைதிக சுத்தாத்வைத சைவ சித்தாந்த சன்மார்க்கம்; முரணி - மாறுபட்ட; தெய்வ நலம் சாராத பொதுமக்களை நினைந்து, சொல்வழி வாரலர் என்றார்; அத்திறம் - அப்பித்துத் திறம்; பேது உரை - மயக்கச் சொல். கூறுநரின் வாதுரையை என்க; போழ்ந்து - பிளந்து, இங்கே அழிந்து என்னும் பொருட்டு; போழ்ந்து பிறங்குவதின்று - அழித்து விளங்குவதில்லை; தொத்து - கொத்து; நன்று தொடங்குதும் - பெரிது தொடங்குவேம். 3. மதி வழுக்கி மண்ணிடை வீழ்ந்ததுவோ என்க; வீழ்ந்ததுவோ - வீழ்ந்தமையோ; பெயர், மல்லல் - செழுமையுடைய; சிவம் வீசி - சிவமணங் கமழ்ந்து கொண்டு; வீழ்ந்ததுவோ - விண்ணுலகி லிருந்து இவ்வுலகினில் வந்து தோன்றியதோ; உட்பொருள் - உள்ளுள்ள கருத்து; நலத்தக - நன்றாக; வந்ததுவோ - நான்முகன் வந்தவாறோ; கைகாட்டுரை - கைகாட்டி உரைக்கும் அருள் மொழி; அது, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்; சின்முத்திரை என்பதும் இது! எழுந்ததுவோ - எழுந்த நிலையோ; மான் மகள் - திருமகள்; தூ மகள் - உமை; மா - பெருமைமிக்க; இல்வினை - இல்லறச் செயல்கள்; கூடிவந்ததுவோ - மூவரும் கூடி வந்தபடியோ; வள்ளுவர் வந்ததுவோ - வள்ளுவர் வந்த வகையோ; திருவள்ளுவர் இல்லறச் செயல்கள் வாயிலாக மாதவப் பெருவாழ்வும் விளக்கினமை தெரிவிக்கப் பட்டது. புயல் - மேகம்; மழை போல நூல் முறைகள் வழங்கி அருள் கரந்திட, மழைதான் வந்ததோ என்க. எங் குருவே நீ தோன்றியது? 4. தண்டமிழிற் படு வண் துறை என்றது, இங்கே. தமிழ நெறியாகிய சிவநெறியை; காயினும் - சினந்தாலும்; சாம்பவர் - சிவனடியார்கள்; 5. நெறி பண்ணினம் - சிவநெறியை உருவாக்கிப் பரப்பினம்; நல்வழி - மீண்டும் பிறவிக்கு வாராவழி; வெள் வெற்பு - வெள்ளி வெற்பாகிய திருக்கயிலை; வகைத்து - வகையுடையது; துண்ணென - திடுமென; முதலென்று - காரணமென்று; மாயை முதற் காரணம் ஆகுமென்று; அறிம் - அறிவோம்; 6. மிழற்றும் - இசைக்கும்;செங்குமுதம் - திருவாய்க்கு உவமை; தேர்ந்திடல் - தெரிந்துகொள்ளுதல்; கொங்கு அலர் - தேன் விளங்குகின்ற; ஏழாம் செய்யுளில் மகரந்தப் பொடி வருகின்றது. திறம் - சைவத்திறம்; குன்றல் இல் - குறைதல் இல்லாத; குறி - பெயர்; துங்க - மேலான; ஆகமம் - முப்பொருள் உணர்த்தும் சைவநூல்; துறந்து - நீங்கி; 7. குன்றி - குன்றிமணி போன்ற; கோவினை - தலைவனை ; குருகே - கொக்கே; மா - பெரிய; மணி - மாணிக்கமணி;கோலம் - சிவக்கோலம்; குருமாமணி - சோதி குருவாய் எழுந்தருளிய மாமணி போன்ற தலைவரின் அடியார் கோலம் என்க; துகள் - மகரந்தப்பொடி; சிவபோதனை - சைவ சித்தாந்தம் போதிப்பவனை சிவ குருவை; சிவபிரான் முதற்கடவுளெனப் போதிக்கும் குருவை. புந்தி நிறைந்தவர் சிந்தை விளக்கினை - அறிவு நிறைந்த அறிஞர்களின் சிந்தையின் மயக்க இருள் போக்கிய விளக்கு போன்றவனை; கன்றும் - வருந்தும்; கலுழ் - நீர் வார்ந்து அழுகின்ற; கழல் வைகினன் - திருவடி சூடினானை; அது - துயர்; துன்றும் - அன்பால் நெருங்கிய; தோகை - மயில்; நாமனை - நாமம் உடையயோனை; பெயர் உள்ளவனை. துயரமிகுதியால் குருகுகள், குயில்கள், தோகைகள், தூதுணங்கள் முதலிய பறவைகளையும், கொன்றை புன்னை மரங்களையும் விளித்து ஆசிரியர் பேசுகிறார். 8. வித்தக நூல்கள் - வல்லமை வாய்ந்த நூல்கள்; வென்ற - திருஞான சம்பந்தர் போன்றாரால் சமயங்களை வெற்றி பெற்ற; நால்வர் - மாணிக்கவாசகர், அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் என்னும் சைவ சமய குரவர் நால்வர்; தேறு - தெளியப்படுகின்ற; மெய்ப்பெருள் கண்டவர் நூல்கள் - மெய்கண்ட நூல்கள்; மேதகவாக- மென்மை தக்கனவாக; மென்மையாக. மெல்லியல் - இனிய இயல்புடைய; விளம்பிடின் - தெரியும்படி சொன்னால்; இன் - இனிய; தூயது - உண்மையானது; வாய்மையுள்ளது; துன்பு - துன்பம்; எம் முனம் - எம் எதிர்; தாபத நிலை - கணவனை இழந்த மனைவியின் நிலை, 1. அரைசே - அரசே; ஒவ்வொன்றிலும் ஆல் அசை; எனும் - என்று சொல்லி வருந்தும். ஒருவல் - நீங்கல்; மனை - மனைவி; 2. அவம் - பொருத்தமல்லாதது; குவிகை - குவிகின்ற கையால். 3. அலமந்து - மயங்கி; குறியும் - நோக்கமும்; செறியாது ஒருவும் - நெருங்காது நீங்கும்; திறமும் - வகையும்; தெரியாது - பிறர்க்குத் தெரியாது; எறியும் - வீசித் தரையில் அடிக்கும். 4. இயை - உவமையாய்ப் பொருந்துகின்ற; அழியாது - நிலை மாறாமல்; வழியா விழும் - வழிந்து விழுகின்ற; பழியேம் - தூற்றாமல் போற்றுவேம்; இனியோ - ஒகாரம் எதிர்மறை; இனியோ பருகல் - இனிமேலா சுவைத்தல்/ இனிக்கேட்டல் இயலாது என்றபடி; தேன் வளர்மொழி என்றமையால் `பருகல் என்றார். 5. படும் - பொழியும்; எயிலார் புறவத்து இணையார் - மதில் சூழ்ந்த இடத்தில் இருக்கும் வீரர்; பழி ஆர் பிரிவு - சூறை பொருந்திய குறைவு. 6. மறையோர் - வேதம் வல்லவர்; நிறை - மனநிறைவு; நிரைப்பாய்- வரிசையாய் முறைப்படுத்திச் சொல்லுவாய்; இறையே பிரிய இரேன் நான் எனும் என்று தொடர் கொள்க. 7. கரவோ அறியாய் - வஞ்சனை அறியாதவரே; பிரியாய் - பிரியாதவரே; உரவோய் - அறிவு உடையவரே; பிரிதல் - இப்போது மறைதல்; கரவோ உரையாய் - வஞ்சனையோ சொல்லாய்; அரவு ஏர் - பாம்பு சூடிய அழகினையுடைய; விரவும் திறம் - மீண்டும் கலக்கும் வகை; ஓகாரம் அசை. 8. கடலும் பாறையும் மலரும் மரமும் உருகும் என்பது இச் செய்யுளில் வருகின்றது. கரைதல் - ஒலித்து அழுதல்; மடல் - இதழ்; மலர்க் கண்- மலர் போன்ற கண்; மிடல் - வலிமை; அடல் ஏறு - கொல்லேறு; ஏறு - எருது. 9. மகனை - தோன்றிய புதல்வரை; ஒருவர் - நீங்கி; பெருமா - பெருமானே; பிரியப் பெறுமோ - பிரிதலாகுமோ.. 10. கழியாத் துயரம் - நீக்க முடியாத துன்பம்; அழியாப் புகழ் என் அனை - சிவநெறி பரவச் செய்த தலைவர்க்கு மனைவியாய் அமையும் பேறு பெற்ற என் அன்னை; ஆதலின், அழியாப் புகழுடையார் என்று சிறப்பித்தார்; ஒழியாய் - நீக்குவாயாக! இச் செய்யுள் தேவபாடாண்டிணைக்கண் வந்த காஞ்சித் திணைத் தாபதநிலை; ஆசிரியர், அன்னையார் துயரப் படுகின்ற வகையை உணர்ந்து சங்காலக் கபிலரைப் போலத் தாம் வருந்திக் கூறுதல்; பேகனால் துறக்கப்பட்ட கண்ணகியின் வருத்தத்தைக் கூறும் செய்யுளில் கபிலர், இகுத்த கண்ணீர் நிறுத்தல் சொல்லாள் .............................................................. சூழல் இணைவது போல் அழுதனன் பெரிதே (புறநா. 143) மன்னைக் காஞ்சி - கழிந்ததனால் உண்டான உலக நிலையாமையைக் கூறி இரங்கி வருந்ததுதல் வாங்கு கடல் - வளைந்த கடல்; குழிய - குழி போலத் தோன்றும்; சுருங்க என்னும் பொருட்டு. உரறி - இடித்து; மழைக் குலம் - மேகக்கூட்டம்; அரும்பொருள் - அரிய கருத்துக்கள்; காட்டி - மேற்கோள் காட்டி; உவலைச் சமயிகள் - கருத்து வலிவற்ற அகப்புறச் சமயத்தார்கள்; மெய் - உண்மை; கிளர - விளங்கித் தோன்ற; உரை முறை நிறுத்தனை - தருக்கத்தோடு விரிவுரையாற்றும் முறையினை நிறுவினை; அது கழிந்தன்று மன், மழைக்குலம் போல உரை முறை நிறுத்தனை அது கழிந்தன்று மன், என்று இரங்கினார். கழிந்தன்று - கழிந்தது; மன் - இவ்வாறு கழிதற் கருத்திற் சேர்ந்து வரும் இடைச்சொல்; ஆதலால், காஞ்சி என்னும் உலக நிலையாமையைக் குறிக்கும் சொல், மன்னைக் காஞ்சி என அடையடுத்து வந்தது. அனை இய - செழிப்பாய்ப் பூசிய; வீறினதாகி - வீறுபாடுடையதாகி; நிவந்து - உயர்ந்து; முரிந்த - இரண்டாய்ப் பிரிவுபட்ட; கொவ்வை - கொவ்வைக் கனி; முருந்து - மயில் இறகின் அடி; நவை - குற்றம்; பயிலுதல் ஒத்துப் பழகுதல்; புரை அரு - குற்றம் நீங்கிய; தசைந்த - தசை செழித்த; கொழுங் கடை - கொழுவிய பூ; கடைசியாய்த் தோன்றும் பூ வாதலின் கடை என்றார். சுரி வளை - வளைந்த சங்கு; பூதி மணி விபூதியும் உருத்திராக்க மணியும்; எழு - தூணின் திரட்சி; முழவு - மத்தளம்; வான் பொருள் - உயர்ந்த கருத்து; மறைநூலின் பிழிவாய்ப் பொருணூற் சுவையாய் வடிக்கப்பட்ட சைவ சித்தாந்தக் கருத்து; மறைநூற் கருத்துக்கு மேற்பட்ட நுண்ணிய கருத்தாதலின், வான் பொருள் என்றார். மறையை ஓதியும் அதன் நுட்பம் அறிய மாட்டாமை நினைந்து, நான் முகன் அறியா வான்பொருள் வழக்கு என்றார். வழக்கு என்பது அதன் பழைமையையும் குறித்தது. உரை முடிவு கடந்த - சொன் முடிவுக்கு அப்பாற்பட்ட; இருபொருட் கலவியும் - இரண்டற்ற பொருட் பேறுடைய அத்துவிதக் கலப்பும்; திருவொடு - பொருள் வளத்தோடு; சண்ணித்த - பூசிய என்னும் பொருட்டு; ஆண்ட - குருவாய் எழுந்தருளி ஆட்கொண்ட; இம்மை - அம்மை மறுமைகளுக்கு அப்பாற் பட்ட நிலை. சென்றனை மன்னே என்று முடிக்க. இப் பகுதியில் ஆசிரியரின் திருவுருவைக் கூறிக். குருவாகி எம்மையும் ஆண்ட பின்னைச் சென்றனை என்றபடி; மன் என்னும் சேர்க்கை, இனி அந் நிலையைப் பார்க்க முடியாதே என்னும் உலக நிலையாமைக் கழிவைக் காட்டியது. மேல் வரும் இடங்களிலும் இவ்வாறே கருத்துக்கொள்க. சேர்குநர்க்கு- சேரும் அன்பர்க்கு; திரிவு இன்றி - உண்மைக்கு மாறின்றி; செய்குவை - செய்குவாய்; மருவலர் - கூடாதவர்கள்; வரையாது - வரையறை செய்யாமல்; விழுமம் - இன்னல்; தலையளி - தலையன்பு; காழி - சீகாழிப் பதி; கவுணியக் கன்று - திருஞானசம்பந்தர்; மிகுத்துரை - கருத்து மிகுந்த வெற்றிச் சொல்; துறை பட - வகை உண்டாக; குரிசிலை - தலைவனானோய்; சிதைவறு திருவினை - அழிதலற்ற நிலையான செல்வத்தை; சிவணிய - பொருந்திய; குறிப்பின் - கருத்தினால்; விட் புலம் - விண்ணிடம்; அருள் வெளியிடம் என்றபடி; கடவுள் திருவடியைச் சேர்வது, உள்ளத்துக்கு நிறைவு தருவதே யானாலும், பிரிதலுறும் துன்பம் தாங்குதல் அரிதாதலின், ஆசிரியர் துயரம் அடைகிறார். உகுப்ப - சிந்த; ஆனாத் துயரம் - நீங்காத துன்பம்; அடைதும் - அடைகின்றனம். அம் மணி விளக்கு - மாணிக்க மணியின் விளக்கமே போன்ற ஒளியே என்னுங் கருத்தில், அம் மணி விளக்கு எனச் சுட்டினார். அமுதமே யாயினும் அனைவரும் அறிந்து பயன்படுத்துதல் வேண்டு மாதலின், பொலிவுறும் அமுதே என்றார்; பொலிவுறுதல் - விளங்குதல்; கேட்கும் மக்களின் உள்ளம் கொள்ளும் வகையில் விரிவுரைத் திறம் வெளிப்பட்டமையால், கலையின் திறன் எனப்பட்டது. குருவாய் எழுந்தருளித் திருவாய் மலர்ந்தவை உயிருணர்வில் மறத்தலின்றி நிலை பெற்றிருக்குமாதலின் நிலையும் எம் உயிரே என வந்தது; உயிராய்க் கருதினமையால், உயிரே என்றார். உயிரினும் மேம்பட்ட குற்றமற்ற உணர்வே எனவும், (செயிர் - குற்றம்) உணர்வுக்கும் உணர்வாக விளங்கும் குருவே என்னுங் கருத்தில் உணர்வுக்குணர்வே எனவும் ஏனைய எல்லாவற்றிற்கும் இணையில்லா முதன்மையாய் விளங்குதலின் ஒப்பிலா முதலே எனவும், (முதல் - முதன்மை) ஆசிரியர் கூறினார் உலக நிலையாமையும் உண்மையும் கருதுதலுக்கு மேற்பட்டுப், பிரிவுத் துன்பத்தில் சிந்தை மயங்குதலால், அறிவோடு கூடாச் சிறியேம் என்றார் பரிவொடு - அன்பொடு; களைமதி - களைக; மதி ; அசை; வேண்டுவலே - வேண்டுவனே; ஏகாரம் - இரக்கம்; சிறியேம் உறுதுயர் களைக என நின் திருவடி நினைந்து ஒரு வரம் வேண்டுவல் என்று தம் துயர் மிகுதியை ஆசிரியர், இப் பகுதியிற் கூறி வேண்டுகின்றார். 4. திரு மதுரைநாயகம் பிள்ளை அவர்கள் வரலாற்றுச் சுருக்கம் (திரு.வ. திருவரங்கனார் எழுதியது) கல்வி கேள்வி அறிவொழுக்கங்களிலும் சிவபத்தி அடியார் பத்தியிலுஞ் சிறந்து, சைவசமயத்தைப் பரவச் செய்யு முயற்சியில் தமது வாழ்நாள் முழுமையும் பயன்படுத்தி வந்த இப்பெரியவர் விரோதிகிருது ஆண்டு (1851) ஆடித் திங்கள் 9ஆம் நாளன்று திருச்சிராப்பள்ளியிற் பிறந்தனர். இத் தென்றமிழ் நாட்டில் தமிழ் மொழியையும் சைவசமயத்தையும் விளக்கி மகாவித்துவானெனத் தமிழ்ப் புலவர்களாற் கொண்டாடப் பெற்ற திரு. மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கட்கு இவர் உறவினர். அவர்களோடும் அவர்கள் மாணாக்கரான திரு. தியாகராய செட்டியார் முதலான அரும்பெருந் தமிழ்ப் புலவர்களோடும் நட்புரிமை கொண்டவர். நாகை வெளிப் பாளையத்தில் அறமன்றத்தில் 55 ஆண்டு காலம் இவர்கள் நிறைவேற்றியாக வேலை பார்த்து வந்தமையால் இவர்களது வாழ்நாளின் பெரும்பகுதி நாகை வெளிப்பாளையத்திற் கழிந்தது. இவர்கள் அங்கிருந்த காலத்தில் தமது இளம் பருவத்திலேயே நல்லார் இணக்கமும் சைவசமய நூல் உணர்ச்சியும் பெற்று வந்தனர். அப்போது நாகூரிலும் நாகபட்டினத்திலும் புத்தக வாணிகம் நடத்திவந்த இயற்றமிழ்ப் புலவரும், அன்பு அருள் அமைதி பொறை முதலான உயர் குணங்களிற் சிறந்து விளங்கினவருமான திரு. வெ. நாராயணசாமிப் பிள்ளையவர்களை அடுத்து அவர்கள்பால் திருவிளையாடல் பெரியபுராணம் முதலான உயர்ந்த சைவசமய இலக்கியங்களையும் பிறவற்றையும் பாடங் கேட்டு உணர்ந்து சிவபத்தியிற் சிறந்து வளர்வாராயினர். அக் காலத்தில் வைணவ சமயத்திற் கற்றவர் ஒருவர் வெளிப்பாளையத்தின்கண் திருமாலின் பெருமைகளைச் சொற்பொழிவாற்றியபோது தாம் எடுத்த பொருளைக் கடந்து முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை அளவு கடந்து இழித்துரைக்க, அதனைக் கேட்டு மனம் பொறாமல், இப் பெரியவர் அப்போது தமிழ் நாட்டின்கட் சைவசித்தாந்த சண்டமாருதமாய் நிகரற்று உலாவிய சிவஞானச் செல்வரும் சித்தாந்த ஆசிரியருமான திருப்பெருந்திரு சோமசுந்தர நாயகரவர்களைச் சென்னை யிலிருந்து வரவழைத்து, அவர்களாற் சைவசமய உண்மைகளை எவரும் அறிந்து களிக்கும்படி செய்தனர். அவ்வளவோடு நில்லாமல், நாகையிற் சிவஞானியாய் விளங்கிய திரு. வீரப்ப செட்டியார் முதலான சிவநேயர்களின் துணையைப் பெற்று வெளிப்பாளையத்தின்கண் இவர் ஒரு சைவசித்தாந்த சபையை நிலைபெறுத்தினர். அந்நாளில் நாகையிற் பிறந்து சிறு பருவத்தினராய் ஆங்கில கலாசாலை யில் கல்வி பயின்று கொண்டிருந்த தவத்திரு மறைமலையடிகளார் அவர்கள் தமிழும் கற்கும் விருப்பம் மிக உடையவராய், அப்போது நாகையிற் புத்தக வாணிகம் செய்து கொண்டிருந்த இயற்றமிழாசிரியர் திரு. வெ. நாராயணசாமிப் பிள்ளையவர்கள் திருவடியை அடுத்து அவர்கள்பால் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களை வரன் முறையாகக் கற்று வந்தனர். மிகச் சிறிய பருவத்தே ஆங்கில மொழியோடு தமிழையும் செவ்வையாகக் கற்றுவந்த அடிகளிடத்தே இப்பெரியவருக்கு மிகுந்த அன்பு உண்டாயிற்று. மேற்குறித்த இயற்றமிழ் ஆசிரியர் முன்னிலையில் இவர்கள் இருவர்க்கும் உண்டான நட்பு நாளுக்குநாள் வளர்ந்து வரலாயிற்று. ஆசிரியராலும் இப்பெரியவர் நட்பினாலும் மறைமலையடிகள் அவர்கள் மிகவும் திருத்தமாக வளர்ந்து புலமை நிரம்பினார்கள். பிறகு இப் பெரியவர் முயற்சியினாலே அடிகள் திருப்பெருந்திரு சோமசுந்தர நாயகரவர்களைச் சித்தாந்த ஆசிரியராகக் கொண்டனர். இப் பெரியவர் சைவசித்தாந்த உண்மைகளைப் பல நூல் மேற்கோள்களோடு கல்லுங்கரையச் சொற்பொழிவாற்ற வல்லவராய் இருந்ததோடு அடிகளையும் அடிக்கடி நாகை வெளிப்பாளையம், திருச்சிராப்பள்ளி முதலான இடங்களுக்கு வருவித்து அவர்களால் சொற்பொழிவு செய்வித்தார்கள். நாகையிற் சைவசித்தாந்த மகாசமாசம் கூடியபோது இவர்கள் செய்த உதவி மிகப் பெரிது. இப் பெரியார் சார்வதாரி ஆண்டு (1889) கார்த்திகைத் திங்கள் 5 ஆம் நாள் வெளிப்பாளையம் சைவசித்தாந்த சபைக் கட்டிடத்தை இரண்டாயிரரூபாவரையில் திரட்டிப் புதுக்கிக் கட்டினர். 1909 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவர் வேலையிலிருந்து விடுதி பெற்றபின் உறையூரைத் தமக்கு இருப்பிடமாய்க்கொண்டு அங்குள்ள அன்பர்களை ஒன்று சேர்த்துப் பெருந்தொகை திரட்டி வாகீசபக்தசன சபைக் கட்டிடத்தைப் பிங்கல ஆண்டு (1917) தைத்திங்கள் 10 ஆம் நாள் அமைப்பித்தார். இன்னும் இவர் செய்த நன்மைகள் பல. சில நாளாக இருமல் நோயாயிருந்து 1920 ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 3 ஆம் நாள் சிவபெருமான் திருவடிநீழலை எய்தினர். இப் பெரியவர்தம் மனைவியாரான திருவாட்டி அம்மணி அம்மையார் அவர்கள் இவர்தம் நல்லியல்புக்கு ஒத்தவர்களாய் இல்லறத்தைச் செவ்வையாக நடத்துவதிலும், விருந்தினரைப் போற்றுவதிலும், சிவனடியார்க்குத், தொண்டு புரிவதிலும், கணவனார் குறிப்பறிந்து அன்புடன் ஒழுகுவதிலும், சமையற் றொழிலிலும் சிறந்து விளங்கினார்கள். தங் கணவனார் சிவபதவி அடைதற்குச் சிறிதேறக் குறையப் பதினோராண்டுகளுக்குமுன் இவ்வம்மை சிவனடி சேர்ந்தார். இவர்தம் தகுதிக்கேற்ற ஓர் அருமையான ஆண் மகனையும் நான்கு பெண்மகாரையும் பெற்றனர். இவர் மகனார் திரு. பரமசிவம்பிள்ளை, மறைமலையடிகளார் அவர்கட்கு மாணவராய் அவர்போல் சித்தாந்த சொற்பொழிவுகள் சிறக்கச் செய்யும் ஆற்றல் படைத்தவர். திருவருள் வாழ்க! நாகை வெளிப்பாளையம் சைவசித்தாந்தசபையின் அடியவரும் உறையூர் வாசீகபக்தசனசபையின் நிறுவனருமான திருவாளர் மதுரைநாயகம்பிள்ளை யவர்கள்மேல் மறைமலையடிகள் பாடிய இரங்கற்பாக்கள் மணியொளிபோ லெனக்குயிராய் மன்னுசிவம் அருள்சுரந்து துணிவுடைய பிள்ளைமையாம் பருவத்தே துணையாகப் பணிவுடைய நினைத்தந்தென் பரிசின்கட் டுரிசகற்றி அணிசெய்த பான்மையெலாம் அறிந்தறிந்து நைவேனால். (1) ஆராத அன்பினுடன் அடிபணிந்து நீகற்ற நாரா யணகுரவன் றிருவடியை நான்நணுகிச் சாராது போயினனேற் சான்றோய்நின் பெருங்கேண்மை சேராது பலவாறாய்ச் சென்றிருப்பேன் சிறியேனே. (2) வேறு குரவன் ஒருபாற் சீர்திருத்தக் குழைந்த அன்பால் மற்றொருபால் விரவி எனைநீ சீர்திருத்த வெய்ய கதிராற் பகல்விளங்கி இரவு மதியால் நின்றொளிரும் இனிய கால எல்லையென உரவாய் வளர்ந்தேன் றன்மை யெலாம் உன்னி உருகி உழல்வேனால். (3) நானே கடவுள் என்றுரைக்கும் நலமில் நூலின் வழிபற்றி யானே யுழன்ற அந்நாளில் இதனின் வேறாம் உண்மைநெறி தேனே யனையாய் உண்டென்று தெருட்டி மேலுந் தெய்வவருள் ஊனே புகுந்து போந்ததென அடியேம் உய்ய உவந்தருளி. (4) சொல்லும் பொருளுந் தொடர்பாகத் தொல்லோர் கண்டமெய்ந் நெறியாய்ச் செல்லுஞ் சைவ சித்தாந்தத் தெவிட்டா அமிழ்தந் தெளித்தெடுத்துக் கல்லுங் கரையக் கறைதேயக் கருத்துள் ஊறக் கரைகடக்கச் சொல்லுஞ் சோம சுந்தரன்பால் தொண்டு புரியத் தொடுத்தனையால். (5) அறிவு நூலின் பொருள்களெலாம் ஆராய்ந் தறிந்தே அழகாகச் செறியுந்தீந்தேன் சுவையொழுகச் சிவமும் அன்புஞ் சேர்ந்தொழுகப் பொறிகொள் தூவிக் குயிலிசையும் பொருந்தி யொழுகப் புகல்திறத்தோய் சிறியன் சொல்லும் அவைகூட்டிச் செவிவாய் மடுத்துக் களித்தனையால். (6) சின்னஞ் சிறிய காலத்தே சிறந்த தந்தை இழந்தேற்குக் கன்னன் மொழிசேர் தமிழ்க்குரவர் இருவரோடு காதன்மிகும் அன்னை யனைய நின்றனையும் அரிய துணையா அடைந்திருந்தேன் பின்னை யிருவர் பிரிந்தேகப் பெரிய துணையாய்ப் பிறங்கினையால். (7) சிறக்க வளர்ந்த இந்நாளிற் சிவத்தின் பெருமை தெரிந்தமட்டும் பிறக்க மாக அடியேனும் பின்என் சார்பிற் பிறைமதிபோல் நிறக்க வளரு நின்மகனும் நிகழ்த்தும் உரைகேட் டுவந்ததனை மறக்கப் பிரிந்தாய் இனிநின்போல் மகிழ்வார் உளரோ வையகத்தே. வேறு திருவருள்சேர் நினதுளத்தைச் சிவனடிக்கே ஒப்புவித்தாய் உருவருநின் எழிலுடம்பை உருத்திரற்கே உவந்தளித்தாய் இருமைவளர் புகழுடம்பை எந்தையடி யார்க்களித்தாய் அருமைமகார் துயர்கூர அளித்ததுவும் அழகாமோ. (9) இம்மைதனிற் பிரிந்தாலும் இனியொருகால் இசைந்திடலாம் அம்மைதனில் நீபிரிந்தால் அணைகுவதும் உண்டாமோ? எம்மையிலும் இவையெலாம் இறைசெயலால் நிகழுவதால் நம்மையவன் அருள்வழியில் நடத்துவது நன்றாமே. (10) அடிக்குறிப்புகள் 1. மணியொளி உவமை இரண்டற்ற அணுக்கம் புலப்படுத்தியது. பரிசின்கண் - இயல்பில்; துரிசு - குற்றம். பணிவுடைய நினை என்றதனால், அவர் பணிவு தெரிகின்றது. 3. விரவி - நேயத்தாற் கலந்து; கால எல்லை - கால அளவு; உரவாய் - அறிவாய். 4. நூல் - மாயாவாத நூல்; ஊனே - மதுரை நாயகம் பிள்ளையின் உடலில். 5. கறை - மனக் கசடு; கரை - பிறவிக் கடலின் கரை. தொடுத்தனை - சேர்த்தனை 6. தேன் சுவை - ஞானச் சுவை; பொறி - புள்ளி; தூவி - சிறகு; இச் செய்யுளால் இசைத்திறம் உடையவர் என்பதும் தெரிகின்றது. புகல் - புகலுகின்ற. 7. குரவர் இருவர் - நாராயணசாமி பிள்ளையும், சோமசுந்தர நாயகரும். 8. பிறக்கமாக - தோற்றமாக நின்மகன் என்றது, அவர் மகன் பரமசிவம் பிள்ளையை. 9. உளத்தை - உயிரை; உருஅரு - அரிய உருவுடைய; உருத்திரற்கே - தீவண்ணற்கே; எந்தை - எம் தந்தை போன்ற நீ. 10. எம்மையிலும் - எப்பிறப்பிலும்; நம்மை என்றார். இருவர் கூட்டுறவுங் கருதி. 17. தண்டலம் பாலசுந்தர முதலியார் அவர்கள் (இது சென்னை தொண்டைமண்டல துளுவ வேளாளர் உயர்நிலைப் பள்ளித் தலைவராயிருந்தவரும் இரங்கூன் முதன்மை நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்தவருமான, தண்டலம் திரு. பாலசுந்தர முதலியாரவர்கள் 1908 இல் இறைவன் திருவடி நீழலை அடைந்தகாலை, அவரது பிரிவாற்றாமையினால் மறைமலையடிகளால் பாடப்பெற்ற இரங்கற்பா மணிநிறக் கடல்சூழ் மாநில மாந்தர் பிணியற வாழ்நாள் பெரிதென எண்ணித் திணியிருள் வானில் திடுமெனத் தோன்றித் தணிமினின் மாய்வது சாற்றினை ஐயா! (1) ஆங்கிலம் உணர்ந்தாய் அருந்தமிழ் உணர்ந்தாய் மேங்கிளர் சைவமும் மேதக உணர்ந்தாய் ஈங்கிவை உணரினும் இறப்பினை நழுவி நீங்குவ துணராய் நீத்தது முறையோ! (2) கல்வியும் பெறுவார் கனநிலை பெறுவார் செல்வமும் பெறுவார் சீர்பல பெறுவார் பல்புகழ் பெறுவார் பலர்உளர் நின்போல் நல்இயல் புடையார் நனிசிலர் ஐயா! (3) மண்மேற் பிரிந்தால் மறித்தும் பெறலாம் விண்மேற் பிரிந்தால் மீண்டது வருமோ! கண்போல் இனியாய் கருதற் கினியாய் நண்பா இனிநீ நண்ணுவ திலையே! (4) அந்தர மதியினை அடைந்ததுன் முகமே இந்திய நாட்டிடை இயைந்ததுன் பெயரே மைந்த நின் குணம்பலர் மனத்தது பால சுந்தர பிரிந்ததாச் சொல்லவும் படுமோ! (5) அடிக்குறிப்புகள் 1. மினின் - மின்னின்; வாழ்நாள் பெரிதென எண்ணி, மின்போல் மாய்வதைத் தெரிவித்தனையே! 2. மேம்கிளர் - மேன்மை கிளர்ந்த; உணரினும் - உணர்ந்தும். 3. கனநிலை - பெருமையான நிலை; பிறவற்றில் பலருளர், நின்போல் நல்லியல்புடையார் சிலரே. 4. இச்செய்யுள் பிரிவருமை கூறியது 5. இந்தியப் புகழும் பலர் நினைவிற் படிந்த நின்குணமும் நின்னைப் பிரிந்ததாகச் சொல்லமுடியவில்லை. 18 மறைமலைக் காஞ்சி இதுகாறும் இப்பகுதியில் மறைமலை அடிகளார் அவர்கள் தம்மாசிரியரையும் அருமை நண்பர்களையும் பிரிந்து வருந்திப் பாடிய இரங்கற் பாக்களைக் கண்டோம். 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் அன்று அடிகளார் அவர்களைப் பிரிந்த தமிழ்ப்பேருலகம் கண்ணீர்மல்கப் பாடிய இரங்கற் பாக்கள் சிலவற்றை இங்குக் காண்போம்.) தமிழின் தீஞ்சுவை தனித்தமிழின் தீஞ்சுவையும் சைவத்தின் நறுஞ்சுவையும் தாழ்விலாமல் இனித்திட்ட நடையினிலே எமக்களித்த மறைமலையார் இல்லா ராகப் பனித்திட்ட தமிழ்நாட்டின் பாவலரும் நாவலரும் படர்வ தெங்கே? இனித்திட்டம் ஏதுண்டு தமிழரசு பெறுவதனுக்(கு) என்னே! என்னே! - புலவர் அரசு தமிழ்ப் பண்பு மறைமலையைக் கலைக்கடலை மதிக்கொழுந்தை அக்கொழுந்தின் வனப்பை வைப்பை முறைதிறம்பாச் சிவப்பணியை முதுநூல்கள் பலவிளைத்த முகத்தை அன்பின் உறையுளை நற்றமிழ்ப்பண்பை உணர்ச்சியினை ஊக்கத்தை ஊதி யத்தைக் குறைவின்றி இனிப்பெறுநாள் கூடுங்கொல் அறிவுடையீர் கூறுவீரே! - வித்துவான் மு. அருணாசலம்பிள்ளை. மேன்மை நலம் விளக்கினையே! புன்மைமிகு குழுவினர்கைப் போய்ப்புகுந்த தமிழன்னை வன்மையிலள் வளமுமிலள் வடமொழியின் துணையின்றேல் நன்மையிலள் இறந்தொழிவள் எனக்கரைந்த நவையகற்றி மென்மையவள் தனித்தியங்கும் மேன்மைநலம் விளக்கினையே! விளக்கியவாய் எழுதியகை வெந்தழலில் போய்ப்புகுத அளக்கலா ஆய்வுரைநூல் அலைகடந்தும் அகம்புறமும் விளக்கெனவே நின்றுலகை விழுமநிறை கடலழுந்த இளக்கத்தால் புலவரெலாம் ஏங்கிநனி இனைந்தனரே! - சித்தாந்த பண்டிதர் புலவர் ப. இராமநாத பிள்ளை. நீயோ மறைந்தாய்! நீயோ மறைந்தாய் நிறைவுறு தமிழின் சாயல் மறைந்தது தனித்தமிழ் குறைந்தது சைவக் கொண்டல் சாய்ந்து வீழ்ந்தது ஐயகோ ஐயகோ அருள்மறை மலையே வையக மெல்லாம் மாழ்க மறைந்து ஐயநீ சென்ற இடமறி கில்லேம் சிவபரம் பொருளின் திருவடி நீழல் உவந்தினி திருக்கும் உயர்குணக் குன்றே உன்புகழ் நிலைக்க உலகெலாம் பரவுக! - செல்லூர்கிழார் செ. இரெ. இராமசாமிபிள்ளை. கலைகளெல்லாம் அறிந்த தெய்வம் ஏரணத்தில் இலக்கணத்தில் இலக்கியத்தில் சான்றோர்தம் இனிய பாவில் காரணத்தை நுதலிவரும் சிந்தாந்தம் முதலான கலைகள் தம்மில் ஆரணத்தைத் தலையாக்கொள் ஆரியத்தில் சங்கதத்தில் ஆங்கி லத்தில் சீரணைத்த கலைளெலாம் அறிந்ததெய்வம் நீயன்றித் தெரியக் காணேம்! - புலவர். வீ. உலகவூழியனார். பாமணிக் கோவை - முற்றும் - முனிமொழிப் பிரகாசிகை தேவர் குறளுந் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியுங்-கோவை திருவா சகமுந் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர் எனும் ஔவையார் திருவாக்கிற் போந்த முனிமொழி என்பதற்கு வியாச சூத்திரம் என்று பொருளுரைத்த ஆன்றோருரைப் பொருளொடு பிணங்கி, அப் பொருள் வழக்கின்கண்ணாதல், செய்யுட் கண்ணாதல், நிகண்டு முதலிய நூல்களின் கண்ணாதல் பெறப்படாமையாற் செம்பொருளென்றலும், முன்னும் பின்னுமுள்ள சொற்கள் தம்முள் இணங்கிப் பொருள் பயவாவழி ஒருசொற் றன் பொருளிற் றீர்ந்து பிறிது பொருள் பயக்கும் இலக்கணைப் பொரு ளென்றலும், வியாசர் மாயாவாதப் பொருள் விளங்கச் சூத்திரஞ் செய்த கருத்தறிந்து திரு சங்கராச் சாரியர் பாடியஞ் செய்தாராகலிற், சித்தாந்தசைவப் பொருள் போதிக்கும் நெறிக்கிடையே வழீஇச்செல்லும் அம்மாயாவாதச் சத்திரத் கை ஏனைச் சித்தாந்த சைவ நூல்களோ டொப்ப வைத் துரைத்தல் ஔவையார்க்குக் கருத்தன்றாகலின் குறிப்புப் பொருளென்றலும் செல்லாமையான், அதனை வாதவூர் முனிவர் என்று புகழ்பெற்று விளங்கும் மாணிக்கவாசக சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய வெனப் பெயரெச்சத் தொடராக வைத்துப் பொருளுரைத்துக் கோவை திருவாசகமும் என்பதனோடு கூட்டிக்கோடலும் வேண்டுமெனப் புதுவதாக வொரு பொருள் கூறுவார் அச்செய்யுட் பொருளை நுணுகி ஆராயுமதுகையின்றி அங்ஙனங் கூறினாரென்பதும், அதற்குத் தொல்லாசிரியர் கூறு முரையே நடுக்கின்றி நிலையுறுவதா மென்பதும் போதரச் சிறிது காட்டுதும். பிரமசூத்திரம், வேதாந்த சூத்திரம், வியாச சூத்திரம் என்பன ஒரு பொருட்கிளவிகளாம். அது முதலில் அதாதோப்ரஹ்மஜிஜ்ஞாஸா என்று தொடங்கிப் பிரமப்பொருளை அறிதல் வேண்டுமென, முறையாக அறிவுரை கூறி, பிரமத்தைக் கூறுவதனால் பிரமசூத்திர மெனவும், கணாத சூத்திரம், கௌதமசூத்திரம், காபில சூத்திர முதலியவற்றைப் போல் வைசேடிகம், நியாயம், சாங்கிய முதலிய வேறு பொருள்களை யுணர்த்தாது, வேதாந்த மெனப்பட்டு உபநிடதங்களிற் பொருள்பெறக் கிளந்தோதப்படும் ஞானத் தையே விரித்து விளக்குஞ் சிறப்பால் வேதாந்தசூத்திர மெனவும், ஆக்கியோன் பெயரால் வியாச சூத்திர மெனவும், ஆக்கியோன் பெயரால் வியாச சூத்திர மெனவும் வழங்கப்படும். இஃது யாது பயன்கருதி யியற்றப்பட்ட தோவெனின், மறையின் முன்பாகத்திற் கூறப்படும் கர்மத்தையே பிரமப் பொருளாக நிறுவித் தம் மாணாக்கராகிய ஜைமினியா லியற்றப்பட்ட சூத்திரப் பொருளை மறுத்து. அம்மறையின் பிற்பகுதியாகிய உபநிடதங்களிற் கூறப்படும் ஞானத்தை விளக்குதற் பொருட்டு இயற்றப்பட்டதாமென்பது. இங்ஙனம் கர்மத்தையே பிரமமாகக் கூறி எழுந்த ஜைமினி சூத்திரத்தையும், ஞானத்தையே பிரமமாகக் கூறி எழுந்த வேதாந்த சூத்திரத்தையும் உற்று நோக்குவார்க்கு, ஞானச்செயல் வடிவராகிய சிவபரஞ்சுடரின் மேலான ஆற்றல்களாகிய தொழிலை விளக்கவொன்றும், மெய்யறிவை விளக்க மற்றொன்றும் எழுந்தவுண்மை நன்கு விளங்கும். இதனாற் சிவபெருமானது தொழில் திறத்தை விளக்கம் ஜைமினி சூத்திரமும் ஞானத்திறத்தை விளக்கும் வேதாந்த சூத்திரமும இன்றியமையாதனவாம் என்பதூஉம், இவற்றுள்ளும் ஞானத் திறத்தை விளக்கும் வேதாந்த சூத்திரம் ஏனையதினும் மிகச் சிறந்ததாம் என்பதூஉம் பெறப்படும். ஏனைச் சூத்திரங்களாற் கூறப்படாததும், அச்சூத்திரப் பொருள்களினுந் தலைமையுற்று மக்களுக்கு உறுதி பயக்குஞ் சிறப்புடையதுமான ஞானத்தை விரித் துரைக்கும் வியாச சூத்திரமே வேதாந்த சூத்திரம் எனப் படுவதன்றி ஏனைய அப்பெயர்க்குரியவாதல் செல்லாமை யுணர்ந்து கொள்க. உபநிடதப் பொருளையே முதலாகக் கொண்டெழுந்து உண்மை ஞானத்தை யுள்வாறே யினிது விளக்கும் வேதாந்த சூத்திரத்தை எடுத்தோதுதல் ஔவையார்க்குக் குறிப்பு வேறுபடுவதன் றென்பதற்கு அவர் அதன் முதனூலாகிய திருநான் மறைமுடி வைக்கிளந்தோதலே சான்றாதல் காண்க. இனி, முனிமொழியும் என்பதில் முனி என்னுஞ் சொல்லுக்கு வியாதமுனி என்று பொருள் கோடல் யாங்ஙனம்? அகத்தியர் முதற் பிறரு முளராலோ வெனின்; - அன்றன்று, உலகமெல்லாம் ஒருங்குதிரண்டு பழிச்சும் பெருமையராயினும் அவர்க்கு வேத அகத்தியர் வேதவசிட்டர் வேதகௌதமர் எனப் பெயர் வழங்கக் கண்டிலம், வியாத முனிவரையே வேதவியாசர் வேத முனிவர் என்று வழங்கக் காண்டலானும், வேதத்தில் இவர்க்குள்ளவுரிமை வேறு பிறர்க்கிருப்பக் காணாமையானும், சைவ எல்லப்ப நாவலர் மிக்க வேதவியாசர் விளம்பிய எனவும், வில்லிபுத்தூரார் முனிராஜன் மபாரதஞ் சொன்ன நாள் எனவுங், கச்சியப்ப சிவாசாரியார், கரையறு வேதமாங் கடலை நான்கவாய்ப் பிரிநிலை யாக்கியே நிறுவு பெற்றியாற் புரைதவிர் முனிவரன் புகழ்வியா தனென் றொருபெயர் பெற்றன னுலகம் போற்றவே எனவுங் கூறுதலானும் முனி என்னுஞ் சொல்லுக்கு வியாதமுனிவர் என்று கோடலே பொருந்துவதாமன்றி வேறு கூறுதல் ஒருவாற்றானும் பொருந்தாதென் றொழிக. அல்லதூஉம், பரந்துகிடந்த வேதப்பொருளை யெல்லாம் ஒருங்கு திரட்டிப் பாகுபடுத்துதவிய அவ்வியாசரை, வேதமே ஸஹோவாசவ்யாஸ: பாராஸர்ய: என்னும் மொழியால், பராசரகுமாரராகிய வியாசர் பொய்சொல்லா தவரென் றினிது புகழ்ந்தோதுதலானும், கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் இவரை ஆல்வரு கடவுளை யனைய தன்மையான் என்றுரைத்தலானும் அங்ஙனம் பொருள் கோடலே ஔவையார்க்குக் கருத்தாமென்பது இனியேனு முணர்ந்து கொள்க. குணமென்னுங் குன்றேறி நின்றவிவ்வியாத முனிவர் இயற்றிய சூத்திரமும் அதன் முதனூலாகிய வேதாந்தமும் ஒரு நெறிப்பட்டுச் சைவ சித்தாந்தப் பொருளே போதிக்கு மென்பதனை விளக்கியவன்றே ஔவையார் அவற்றை ஏனைச் சைவநூல்களோ டொருங்கு தலைப்பெய்து ஒருவாசகமென்றுணர் என்று கூறுவாராயிற்றென்பது. இனி, வேதாந்த சூததிரம் மாயாவாதப் பொருளையே போதிக்கு மென்பார்க்கு, அவ்வேதாந்த சூத்திரத்தின் முதனூலாகிய உபநிடதங்களும் அப்பொருளையே போதிக்குமென் றுரைத்தல் வேண்டும். அதனையும் அவ்வாறுரைப்பவே, ஔவையார் பாகுபாட்டுணர்ச்சியின்றி, மாயாவாத நூல்களைச் சைவசித்தாந்த நூல்களோ டொப்பவைத் தோதினாரென்னுங் குற்றமுண்டாம். அல்லதூஉம், மாயாவாத நூல்களோ டொப்பவைத் தோதப்பட்ட தோவார திருவாசக முதலிய திருவாக்குகளும் மாயாவாத நூல்களேயாமென்று பெறப்பட்டுச் சைவசித்தாந்தப் பொருளெல்லாம் விட்டொழிக்கப் பட்டுப் போமன்றோ? இத்துணைக்குமிடஞ் செய்யும் அப்பொருள் ஈண்டைக்கு ஒரு சிறிதும் இயையுமாறில்லை. அற்றன்று. வேதாந்த சூத்திரம் மாயாவாதப் பொருளே நுதலுவ தென்பதற்குச் சங்கராச்சாரியர் அதன் கருத்தறிந்து கூறிய விழுமியவுரையே சான்றாமாலெனின்; அவர்க்கு முன் அதற்கங்ஙனமே சிறந்த வோருரை விரித்த நீலகண்ட சிவாசாரியார் உரைப் பொருள்பற்றி வேதாந்த சூத்திரப் பொருட்டுணிவு கோடு மென்பார்க்கு இறுக்கலாகாமையின் அது பொருந்தாது. அல்லதூஉம், நூலாசிரியர் கருத்தறிவதற்குச் சங்கரர் பாடியப் பொருளைக் கரவியாகக் கோடல் முற்றிலும் நீக்கத்தக்க போலியுரையாம். அல்லதூ உம், நீலகண்ட சிவாசாரியர் முதலான தொல்லாசிரியரால் உரை யெழுதப்படாத பத்து உபநிடதங்களுக்குச் சங்கரர் உரையெழுதியிருப்பதனால் மற்று அவ்வுரைப் பொருளையே கருவியாகக் கொண்டு ஆண்டும் மாயாவாதக் கருத்தையே யேற்றி, அவற்றையும் ஒழித்தல் வேண்டும். ஆதலால், நூலாசிரியர் கருத்தைத் துணிதற் பொருட்டுச் சங்கரர் பாடியப் பொருளையே கருவியாகக் கோடல் பல வழூஉக்களுஞ் செறிந்து மேன்மேற் கிளைத்தற்கேதுவாமென் றொழிக. இனி, சங்கரர் வேதாந்த சூத்திரக் கருத்தறிந்து உரை யெழுதினா ரென்றலும் பொருந்தாது; என்னை? நீலகண்டர், பண்டிதாராத்தியர், இராமாநுசர், ஆனந்த தீர்த்தர் முதலிய ஆசிரியரெல்லாரும் சூத்திரப் பொருளுரைக்கும்வழி ஒரவகையால் இணங்கிச் சொல்லும் பொருளும் ஒரு நெறிப்பட்டுச் செல்ல வுரைத்து, அஃதியாண்டும் சீவபரபேதங் களை விரித்து விளக்குவதென்றே வலியுறுத்துக் கூறுவாராக, இச்சங்கரர் தாமட்டும் அவரொடு முரணிச் சூத்திரப் பொருளைக் கிடந்தவாறெடுத்துத் தம்மதத்தோடு இணக்கி உரைக்க மாட்டாமையான், அச் சூத்திரங்களிற் சிலவற்றை அலைத்து ஈர்த்துப் பொருளுணர்த்தியும், சிலவற்றிற்குச் சொல்லும் பொருளம் மிக வருவித்துரைத்தும், சிலவற்றிற்கு கருத்துகள் கற்பித்தும், சிலவற்றிற்றிற்கு மாட்டுறுப்புப்பட நிகழ்த்திச் சொற்களைத் துணித்தியைத்துப் பொருள் கொண்டும், சிலவற்றிற்குச் சிறப்பில்லாத பொருளுரைத்தும் இவ்வாறெல்லாம் சூத்திரங்களை நலிந்து பொருள் சொல்லிப் பெரிதும் இடர்ப்பாடுறுவர். இங்ஙனமெல்லாம் இடர்ப் பட்டும் முயற்சியளவு பயன்பெறுதலின்றி மலைக்கல்லி யெலி பிடித்தவாறு போல சீவபரங்களை யபேதமென்று கூறி வாளாபோயினார். இன்னும் சங்கராச்சாரியர் தமது பாடியத்தின்கண்ணே அபரேது வாதிநா என மொழிந்து தாமுரைக்குஞ் சூத்திரவுரையோடு மாறுபடும் ஆசிரியர் பலருளரெனத் தாமே கிளந்து கூறுதலும், அவர்க்குப் பின் வேதாந்த சூத்திரவுரை கூறிய இராமாநுசர் தாமுரைப்பனவெல்லாம் முன்னை உரையாசிரியரான போதாயன தங்க திரமிட குகதேவ கபர்திந்பருசி முதலியோர் வழிப்பட்டன வென்றலும், அம்முன்னையுரையாசிரியருள்ளும் போதாயனர் சங்கராச்சாரியர்க்கு முன்னுரை கூறிய பூருவவாசிரியராதலால் அவருரைத்தவுரை வழியே யாமுரை எழுதுகின்றாம் என இராமாநுசர் பின்னும் வலியுறுத்தலும், அங்ஙனந் தொகுத்தோதப்பட்ட பழையவாசிரியன்மாருள் திராவிடர் எனப் படுவோர் எல்லாவாசிரியர்க்கும் பழமையானவராய் வேதாந்த சூததிரவுரை கண்டருளிய தமிழ் முனிவராதலும் உணரும் வழிப் பின்னை யுரையாசிரியரான சங்கருரைதான் வியாச சூத்திரக் கருத்தறிவிக்கும் மெய்யுரையெனத் துணிபு காட்டுதல் நல்லறிவு மாட்சியுடையார்க்குச் சிவணுவதன்றாம். முன்னே சொல்லப்பட்ட திராவிட ரென்னும் பழையவாசிரியர் வேதாந்த சூத்திரம் சைவசித்தாந்தப் பொருள் மெய்பெறக் கிளக்கும் அரியதொரு நூலாதல் கண்டு விழுப்பமுடைய மெய்யுரை யதற்குரைத்தருளினாராக, அதற்கிணங்காது அவரோடும் பிறவாசிரியன் மாரோடும் பெரிதும் முரணித் தமக்கு வேண்டியவாறே சூத்திரப் பொருளை நலிந்து புதுவதோருரை எழுதிய சங்கரர்மாட்டு வெகுட்சியும் இரக்கமுடை யோராய் இராமாநுசர் முன்னையாசிரியருரைக்குப் பெரும்பான்மையும் பொருந்தத் தாமொரு நல்லுரை கண்டாரென்க. சங்கரருரை முன்னையாசிரியருரைக்கு இணங்குமாயின் இராமாநுசர் தாமொரு புத்துரை எழுத வேண்டிற்று இல்லையாம். அவ்வாறின்றி அவருரை சூத்திரக் கருத்தோடு பெரிதும் மாறுபட்டுக் கிடத்தலினன்றே தாமவருரை யினை ஆண்டாண்டு மறுத்து வேறுரைவிடுவராயினார்? அது கிடக்க, சர்வான்மசம்பு சிவாசாரியார் சித்தாந்தப் பிரகாசிகையில் மாயாவாத நூல் செய்தவன் வியாதன் என்று கூறுதலும், வடமொழி தென்மொழி மாப்பெருங்கடல் நிலைகண்ட ஆசிரியர் - சிவ ஞான யோகிகளும் அவ்வாறே திராவிட மாபாடியத்தின்கண் உரைத்தலும் என்னையெனின்; - நன்று கடாயினாய், ஆண்டு மாயாவாதநூல் செய்தவன் வியாதனென்ற தன்றி வேதாந்த சூத்திரம் மாயாவாதம் போதிப்பதென்று அப்பெரியார் யாண்டும் ஓதாமையின் அவர்க்கது கருத்தன் றென்க. அது கருத்தாயின் ஆசிரியர் - சிவஞானயோகிகள் மறையினா லயனால் என்னுஞ் சித்தியார் செய்யுளுரையிலே அவ்வேதத்தைக் கருமகாண்டம் ஞானகாண்டமென் றிருவகைப் படுத்தெடுத்துக் கொண்டு அதன் பொருளை உறுதி செய்துரைக்கும் நூலாகிய பூருவமீமாஞ்சை உத்தரமீமாஞ்சைகளையும் என்னும் உரைக்கூற்றால் வேதத்தின் ஞானகாண்டப் பொருளைத் தெளித்துரைப்பது உத்தரமீமாஞ்சை யெனப்படும் வேதாந்த சூத்திரமென்ற லென்னையெனக் கடாவுவார்க்கு விடுக்கலாகாதென்பது. இனி அங்ஙனம் ஞானகாண்டப் பொருளை உறுதிசெய் துரைக்கும் உத்தரமீமாஞ்சை மாயாவாதம் நுதலுவதென்றே கொள்ளற்பாற்றெனின், அவ் வேதத்தின் ஞானகாண்டமும் அப்பொருளே பயப்பதென்று கோடற்கு இடஞ்செய்யுமாகலானும/ அங்ஙனங் கோடலும் ஆசிரியர் சிவஞான யோகிகள் கருத்தோடு பெரிது முரணுவதாகலானும் அவ்வாறு சொல்லுதல் அடாதென்றொழிக. அல்லதூஉம், வேதவியாதர் வேதாந்த சூத்திரம் ஒன்றே செய்தாராயின் மாயாவாதநூல் செய்தவன் வியாதன் என்றன் மாத்திரையானே அங்ஙனம் பொருள்கோடலாம். அவர் ஆன்மாக்கள் பக்குவத்தின் பொருட்டு இதிகாசங்கள், புராணங்கள் முதலாகப் பலதிறப்படும் நூல்களியற்றினா ராகலானும், அவற்றுள் இக்காலத்து வழக்கமின்றாய் இறந்துபட்டன பலவாதலானும் அங்ஙனந் துணிபொருள் கூறல் ஏதமாம் என மறுக்க மேலும், பாணினி முனிவர் தமது அட்டாத்தி யாயியின்கண் வியாதர் பிக்ஷூ சூத்திரங்கள் இயற்றினாரெனக் கூறுகின்றார். பிக்ஷுக்களெனப் படுவோர் பௌத்த சந்நியாசிகளாவர்; ஆகவே அவர்க்குரிய பௌத்த சமய நெறியினை விளக்கும் பொருட்டு எழுதப்பட்டன. பிக்குசூத்திரங் கள் என்று கோடலுமாம்; மாயாவாதம் பிரசின்ன பௌத்தமென வழங்கப்படு மாதலின், அங்ஙனம் நூல் செய்தமை நோக்கி மாயாவாத நூல் செய்தவன் வியாதன் என்று சொல்லப்பட்ட தென்று கோடலே பொருத்தமாமென்க. இன்னுங் கந்தபுராணம் இயற்றிய கச்சியப்ப சிவா சாரியார் இப்பெற்றியெல்லாம் இனிதுணர்ந்தன்றே ஏத்திடு சுருதிகளிசைக்கு மாண்பொருள், மாத்திரைப் படாவெனா மாசில் காட்சியர், பார்த்துணர் பான்மையாற் பலவகைப்படச், சூத்திரமானவுஞ் சொற்று வைகினான் என்று அதனியல்பு வரையறுத் தோதுவாராயினதூஉமென்க. இதனுள், சுருதிப் பொருள் உறுதி பெறாமல் பலரும் பலவகையாலுணருமாறு இடஞ்செய்து கிடந்தமையால், அஃதங்ஙனமாகாமை உண்மைப் பொருள் தெளித்தற் பொருட்டு அதனுண் பொருளெல்லாம் ஒரு பிண்டமாகத் திரட்டி வேதாந்த சூத்திரம் செய்தருளினாரெனவும் அது சீவ பரபேதங்களை விளக்கும் பல வகுப்புடையதாய்ப் பொலிவு பெற்றதென்றும் சொல்லப்பட்டவாறு காண்க; ஈண்டுப் பலவகை என்றது மறைமொழிபோற் றலைமயங்கிக் கிடவாமல் அது பல அத்தியாய வகுப்புடைத்தாய் நிற்றலை இங்ஙனம் பொருள் கொள்ளவறியாது பலவகைப்பட என்பதற்குப் பலசமயத்தாருந் தத்தமக்கிணங்கப் பல பொருள் கொள்ளு மாறு என்று பொருளுரைப்பார்க்குச் சுருதிப் பொருள் பஃறலைப்பட்டு மயங்கிக் கிடத்தலின் சூத்திர மியற்றுவாராயின ரென்னும் மேலை மொழிப் பொருளோடு அஃதியையாமை யானும், அச்சுருதிப் பொருளைப் போலவே மயக்கந்தருதற் கேதுவாகப் பின்னும் ஒரு நூலியற்றினாரென்றல் அவர் பெருமைக் கேலாமையானும் அன்றி அங்ஙன மியற்றுதலாற் போந்த பயன்றான் என்னையெனுங் கடா நிகழுமாதலானும் அது பொருந்தாதென மறுக்க. அது கருத்தாயிற் பல பொருள் என்று தெளியக் கூறுவார்மன். இங்ஙனமெல்லா நுணுகியாராக வல்லார்க்கு ஆசிரியர் சிவஞானயோகிகள் கருத்தினிது புலப்படுமாதலின், அவர் கருத்தறியாது கூறுவாருரைபற்றி ஈண்டைக்காவதோர் இழுக்கில்லை என்க. வேதாந்த சூத்திரத்தைச் சங்கரபாடியத்தோடும் ஆங்கிலேய பாடையில் மொழி பெயர்த்துரைத்துப் புகழ்பெறும் தீபாவென்னம் ஆங்கிலப் பெரும்புலவர் தமது முகவுரையில் சங்கரபாடியப் பொருள் வேதாந்த சூத்திரக் கருத்தோ டொருசிறிதும் இயையாமையை விரித்து விளக்கி, பின் அச்சூத்திரப் பொருளிவை யென்று விடுப்பனவெல்லாம் சித்தாந்த சைவப்பொருளோ டொற்றுமையுறுத லுணரவல்லார்க்கு யாமீண்டுரைப்பனவெல்லாம் வாய்மையேமென்ப தினிது விளங்கும். அல்லதூஉம், வேதாந்த சூத்திரம் சங்கரருரைப் பொருளோடியைந்து, சீவப்பிரமவாதத்தைக் கிளந்தோதும் வழியதெனிற் றொடங்குழியே அதாதோப்ரஹ்மஜிஜ்ஞாஸா என்றுரையாமல் அதாதோஜீ ஜீஜ்ஞாஸா என்ற மயக்கறக் கூறும்; அங்ஙனமின்றிப் பிரமப் பொருளையே யாராய்வதாக வெழுந்தமையால், அது மாயாவாதப் பொருளோ டொற்றுமையுறுதல் யாண்டைய தென்றொழிக. வேதாந்த சூத்திரம் மாயாவாதப் பொருளையே கருக்கொண்டு கிடத்தலின், அந்நுணுக்கமுணர்ந்து மாயாவாதப் பொருளே பயப்ப உரையெழுதிய சங்கராச்சாரியரை அதுபற்றி மாயாவாதியெனவைத் தெள்ளுத லமையாதாமெனவும், பிருகற்பதி உலகாயத நூலும், சுக்கிரன் மாயாவாத நூலுமியற்றியவாறு போலத் தாமும் ஓரோர்கோட்பாடு பற்றி யங்ஙனமுரை யெழுதினாரெனவும் திருநீறு அக்கமணி யணிதல், திருவைந்தெழுத்தோதல், சிவபூசை முதலிய அருஞ்சைவநெறி மேற்கொண்டு சிவபுயங்கம், சிவானந்தலகரி, சௌந்தரியலகரி முதலிய பல வேறு வகைப்பட்ட சைவ நூல்களியற்றிச் சைவ சமயத்தை நிறீஇப் புறச்சமயநெறி கடிந்து விளங்கும் சைவப் பெரியாரெனவும் உரையாமோவெனின்; - உரையாமன்றே, வியாழ வெள்ளிகள் அங்ஙனம் உலகாயதநூலும், மாயாவாத நூலுமியற்றுதற்குக் காரணம் புராணங்களுரைப்பக் காண்டும், பிருகற்பதி இந்திரன் பொருட்டும் சுக்கிரன் சூரன் முதலாயினார் பொருட்டும் அவ்வாறியற்றினர். சங்கராச்சாரியர் எவர் பொருட்டு யாது காரணம் பற்றி மாயாவாதபாடிய மியற்றினாரெனக் கூறியிறுக்கலாகாமையுணர்க. உலகை மயக்குதற்பொருட் டஃதியற்றினாரெனின், அதனையொரு நூலாகத் தாமே இயற்றுவதல்லது. பிறிதொருவர்நூற்கு உரை யெழுதி அதனையம்முகத்தான் விளக்குதல் பெரிதும் இழுக்குடைத்தாய் முடியுமென்பது. உயர்ந்த பொருளையுயர்ந்த தோராற்றாற் றெரித்துணர்த்திய வேதவி யாதரை மாயாவாதியெனவும், அவ்வுயர்ந்த நூற்பொருளை இழிந்ததாகத் திரிதுணர்ந்து இழிந்ததோராற்றால் விளக்கிப் பெரியதொரு குற்றஞ் செய்த சங்கராச்சாரியரைச் சித்தாந்த சைவரெனயும் மயங்கி முறைபிறழ்ந் துரைத்தல் நியாயமன்றாம். ஆற்றாயினும், சங்கராச்சாரியர் மாயாவாத பாடிய முரைத்தது பற்றி, அவரை மாயாவாதியாகத் துணிதல் அமையாதாம் பிறவெனின்;- நன்று கடாயினாய், அவ்வுரைப் பொருளால் அவரை அம்மதவாதியாகத் துணியாதொழியின், வேறு அவர் தமது சித்தாந்த சைவ மரபு தெற்றென விளங்கவெழுதிய நூல் யாதோவெனவும், அத்தகைய நூலொன்றுள் வழி அதனால் அவர் சித்தாந்த சைவரென்பது இனிது துணியப்படுமன்றே யெனவுங் கடாநிகழ்ந்துழி அதனை விடுத்தல் வேண்டும். அங்ஙனம் விடுதற்குக் கருவியாய் அவராற் றனிமுதலாய் விரிவாகவாதல் சுருங்கவாத லெழுதப்பட்ட நூலொன் றின்மையின் அவரை யங்ஙனஞ் சித்தாந்த சைவரென்றல் அடாதென்றொழிக. அற்றேலஃதாக, இனிச் சிவ புஜங்க முதலிய சைவநலந் திகழும் அரிய நூல்களியற்றினாராலெனின்;- அதுவும் பொருந்தாமை காட்டுதும். அவர் அப்பெற்றியவாஞ் சைவகிரந்தங்களியற்றிய வாறு போலவே, விஷ்ணு புஜங்கம்-பஜகோவிந்த சுலோக முதலிய நூல்களுமியற்றி, மற்றிவ் விருவகை நூல்களையும் விவகாரத்திற் சத்தியமெனக்கொண்டு மேலாம் வழிக்குப் பொய்ப் பொருள்களாமென் றொழித்தலானும், அவர் வழியொழுகும் ஏனைமாயாவா திகளும் திருநீறு சிவமணி திருவைந்தெழுந்து சிவபூசை முதலியவைகளையும், வெள்ளை மண் கோபீ சந்தனம் துளசிக்கட்டையணி திருவெட்டெழுத்து திருமால் வழிபாடு முதலியவைகளையும் ஒத்து நோக்கிக் கடைப்பிடித்து, மற்றிக் கடைப்பிடிப்பையும் பெருநெறியில் பொய்ப் பொருள் களாமென்று கழித்தலானும், சங்கராச்சாரியரைச் சைவரெனத் துணிவமென்பார்க்கு அஃதியாம் அவ்விவ்வேதுக்களால் வைணவரெனத் துணிதுமென்பாரை நீக்கா மறுதலைப்பொருளை யுடன் கொண்டுவரும் ஏதுப் போலியாய் முடிதலானும், அவர் வழிமுறையில் வருவாரெல்லாரும் மாயாவாதிகளாகவே யிருப்பக் காண்டலன்றி, வேறு பிறராகக் காணாமையானும் அவரைச் சைவரென்று கூறுதல் போலியென்றொழிக. வெளுத்ததெல்லாம் பால், கறுத்ததெல்லாந் தண்ணீர் என்றுணருந் தமக்கென வொன்றிலாரைப் போல், மாயா வாதிகளிடும் புறக்கோல அளவால் மயங்கிச் சங்கராச் சாரியரைச் சைவரெனக் கூற லுண்மை முறைதிறம்பு முரையாம். மாயாவாதிகள் படிற்றொழுக்கத்தை நன்றுணர்ந்த எம்மாசிரியர் உயர்திரு நாயகரவர்கள் உத்தம வாததூலவாதூல த்தில் ஏதுவெனுஞ் சொல்லு மெழினான்மறைகூறு, மீசனெனுஞ் சொல்லு மினிதொன்றாப் - பேசவுனக் கென்னோ கெடுமதி தான் என்றிழித்துக் கூறுதலானும் இவ்வுண்மை கடைப்பிடிக்க, அன்னோர்க்கு ஈசன் - விஷ்ணு - ஏசு - அல்லாவெனுஞ் சொற்கள் ஒரு பொருளவாமென்றுணர்க. இனி முனிமொழியும் என்பதில் முனி என்னுஞ் சொல்லுக்கு வாதவூர் முனிவர் என்று பொருள் கோடல் ஈண்டைக்கேலா தென்பதூஉஞ் சிறிது காட்டுதும், சொற்சுருங்கிய வாய்பாட்டானோதிப் பொருள் விளக்குவான் புகுந்த ஔவையார் இயற்பெயரானும், அவ்வியற் பெயர் போலத் தாங்கருதிய பொருளை இனிது விளக்குஞ் சிறப்புப் பெயரானும் தேவர் குறள் நான்மறை மூவர் தமிழ் முனிமொழி கோவை திருவாசகம் திருமூலர் சொல் எனத் தெளிய வெடுத் தோதினார். இவற்றுள், தேவர்குறள் மூவர் தமிழ் தொகைகளில் எனுந் தேவர் மூவர் என்னும் அடைமொழிகள் வழக்குப் பயிற்சியாற்றிரு வள்ளுவரையும், திருஞானசம்பந்த சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதலாயினோரையும் நிரலே குறித்து நின்றன. இனி, வாதவூரடிகளைப் பேராசிரியர் திருவாதவூர்மகிழ் செழுமறை முனிவர் என்று சுட்டியோதுதலின் அவரையே ஔவையார் முனி என்றாரெனின்; - அற்றன்று, அருகிய வழக்கா யாண்டேனு மோரிடத்து ஒரு காரணம்பற்றி அச்சொல் அவ்வாறு பயன்படுத்தப்படுவதன்றித் திருவாதவூரடிகள், மாணிக்க வாசக சுவாமிகள் என்பனபோற் பரவைவழக்காய் நிகழ்வதின்மையானும், சிறப்புப் பெயராற் றாங்குறித்த பொருளைச் செறித்து விளக்குவான் புகுந்த ஔவையார்க்கு அம்முறைதவறி யருகிய சொல்லாற் கூறுதலிழுக் காய் முடிதலானுமென்பது. அல்லதூஉம் வாதவூரடிகளுக்கு மட்டும் முனி என்னுஞ் சொல் வழங்குவதாயின், அங்ஙனம் பொருள்கோடல் சிறுபான்மை பொருந்தும். முலையமுத முண்ட முனி வாகீதமுனி வன்றொண்டமுனி என வேறு பிறர்க்கும் அப்பெயர் வேறு வேறு நூல்களில் வழங்கக் காண்டலின் அதுவுமமையாது. இதுவன்றியும், ஔவையார் எடுத்தோதிய இத்திருவெண்பாவில் வேதவியாதமுனிவரைத் தவிர வேறு முனிவரிலர். அல்லதூஉம், திருவள்ளுவ முனிவர், சம்பந்த முனிவர், திருநாவுக்கரசு முனிவர், திருமூல முனிவர் என்று சைவ சித்தாந்திகள் தம்முள் வழங்குவதுஞ் செய்யார்; அது தமது வழக்கமான பெயர்களொடு மாறுகொள்ளுமாதலின், அற்றேல், அப்பர் சுவாமிகளை வாகீச முனிவர் என்று வழங்குதலென்னை யெனின், அஃதவர் பழம்பிறப்புச் சிறப்புப் பற்றி யவ்வாறு வழங்கப்படுவதாகலின் அவ்வாறு வினாதல் கடாவன்றென மறுக்க. இனி முனி என்னுஞ் சொல்வழக்குச் சடகோபமுனி, மணவாளமாமுனி, வரவரமுனி, நாத முனி முதலியவாக வைணவர் குழுவில் மிக்குநிகழக் காண்டலின், இச்சொல்லை திருவாதவூர்ப் பெருமானிடமேற்றிக் கூறுதலாற் போந்த சிறப்பென்னையெனக் கடாவி மறுக்க. சைவசமயிகள் வைணவப் பெரியோரை முனியென்று கூற வொருட்படார். வைணவரும் சைவப்பெரியாரை முனிவர் என்று கூறுர். பாரிசேடத்தாற் சைவரும் வைணவரும், மாயாவாதி களும், பிறரும் வேதவியாசரை வேதவியாச முனிவர் என்றே வழங்குப. இங்ஙனம், முனியென்னுஞ் சொல்வழக்கு வாதவூரடி களுக்குப் பெயராய்ப் பரவைவழக்கிற் பயிலக் காணாமையானும், அது வியாதருக்கே யவ்வழக்காய் நிகழ்வதானும் முனிமொழி என்பதற்கு வாதவூர் முனிவர்சொல் எனப் பொருளுரைப்பார் கூற்று வெறும்போலியே யாமென்றுணர்ந்து கொள்க. அல்லதூ உம், தேவர் குறள் மூவர் தமிழ் திருமூலர் சொல் என முன்னும் பின்னுமெல்லாம் செய்யுட் கிழமைக்கண் வந்த ஆறாம் வேற்றுமைத் தொகைப்பட வுரைத்து முனிமொழியுங் கோவைதிருவாசகம் என்புழிமட்டும் பெயரெச்சத் தொடராக வைத்துக் கூறுதல் நியமமுறை பிறழ்ந்தொழிதலென்னும் வழூஉக்கிடனாய், இதனை எண்ணுப் பொருட்டாக வைத்தாரோ, பெயரெச்சப் பொருட்டாக வைத்தாரோவென்று ஐயுறுதற் கேதுவாய் முடிதலினங்ஙனங் கூறுதல் ஒருவாற்றானும் பொருந்தாதாமென மறுக்க. செய்யுள் செய்வார்க்குத் தாங்கொண்ட வழக்குமுறை பிறழ்தல் வழுவாமென்பது ஆசிரியர் சிவஞான யோகிகள் சூறாவளியில் ஆங்காங்குக் கூறுமாற்றானுமுணர்க. அல்லதூஉம் தேவர்குறள் மூவர் தமிழ் திருமூலர் சொல் என்புழியெல்லாஞ் சொற்சுருங்கவுரைத்து, ஈண்டுமட்டும் முனிமொழியும் எனக்கூறுதல் சொற்பல்குதல் என்னுங் குற்றத்திற் கிடமாதலானும் அங்ஙனம் பொருள் கூறலாகாமையுணர்க. அல்லதூஉம், நிரல்படக் கோத்தெண்ணிச் சொல்லு நெறிக்கிடையே, ஒன்றைனைப் பெயரெச்சமாக வைத்துரைத்தல் கட்டுரைச்சுவை குன்றுமாறு அஃகிய செவிப் புலனுடையார்க்கெல்லாம் இனிது புலனாம். நன்று சொன்னீர். நீருநிலனு நிலம் பொதியு நெற்கட்டும் என்புழி ஔவையார் தாமே நீரும், நிலனும், நெற்கட்டும் என்றெண்ணிச் செல்லுதற்கண் இடையே பொதியும் என்பதனைப் பெயரெச்சமாக வைத்து நெற்கட்டைச் சிறப்பித்தல் தெற்றெனக் காண்டு மாகலின் அவர் எண்ணு நியமம் பிறழாரென நியதி கூறுதல் பொருத்தமின்றாமெனின்; அதன் நுட்பந் தேறாது கடா யினாய்; முன்னே சிலவற்றை எண்ணி வாளாதொழிதலுமென எண்ணு நியமமிரண்டாம் அவற்றுள் முன் எண்ணிப் பின் தொகைகொடுத்து முடிப்பதன்கண் இடையே பிளவுபடுத்து முறை பிறழ வேறு உம்மை தலைப்பெய்து நல்லிசைப் புலவர் யாண்டுமோதார். பின் தொகை கொடாது கூறும் எண்ணும்மை மொழியின்கண் அம்முறை பிறழ்தலா லிழுக் கில்லாமையின் வேண்டியவாறே வேறுவே றும்மையும் இடையிட்டு மொழிவர். இங்ஙனமே ஔவையார் தேவர் குறள் முதலியனவற்றை நெறிப்பட வெண்ணிப்பின் ஒருவாசகம் என்னுந் தொகை கொடுத்து முடிக்கின்றாகலின் வேண்டியவாறே வேறுவே றும்மையும் இடையிட்டு மொழிவர். இங்ஙனமே ஔவையார் தேவர் குறள் முதலிய வற்றை நெறிப்பட வெண்ணிப் பின் ஒருவாசகம் எண்ணுந் தொகை கொடுத்து முடிக்கின்றாராகலின் இடையே வேறும்மை தலைப்பெய்து கூறார்! நீருநிலனும் என்புழிப் பின்றொகுத் தோதுதலின்றி வாளாவெண்ணிப் போதலி;ன ஆண்டிடையே வேறும்மை தலைப்பெய்தல் பற்றி முறை பிறழ்ந்தாரெனல் இல்லையாம். ஆகவே, அச்செய்யு ளெண்ணு முறைப் பற்றித் தேவர் குறளும் என்னுந் செய்யுளின் கண்யாங் கண்டு கூறிய முறை பிறழ்ந்து வழுவாமாறில்லை யென்றொழிக.. இனி, சங்கரர் எழுதிய பாடியவுரை, இவ்வுலகின் பொய்ம்மை யுணர்ந்து அதன்கண் வெறுப்பெய்தித் துறவறநெறியிற் சேறற்கேதுவாம் வலிவு தோன்ற நுட்பப் பொருள்தேற்றும் நலப்பாடுடையதாய் அஃதறி வுடை யார்க்கெல்லாம் இன்றியமையாச் சிறப்பினையுடைய நிதியமாய்ப் பயன்படற்பாலதாகலின் அது வேதாந்த சூத்திரத்திற் கியையாத் திரிபுரையென அங்ஙனம் வைத்திகழ் நிகழ் தலமை யாதெனின் - நன்று சொன்னாய், பிரமத்தை யொழித்தொழிந்தன வெல்லாம் பொய் யென்னும் அவருரை தேறுவார்க்கெல்லாம் தாமே பிரமமென்னும் அவருரை தேறுவார்க்கெல்லாம் தாமே பிரமமென்னும் உணர்வு தோன்றி ஆணவமிகுதலானும், அவ்வுணர்வால் அவர் நல்லது தீயது பகுத்துணரமாட்டாமல் தாம் வேண்டியவாறெல்லாம் உலகிற்கு இடர்பயப்ப ராதலானும் அவ்வாறு சொல்லுதல் பொருந்துமாறில்லை. இது கிடக்க. இனி முனிமொழியும் என்பதில் மொழியும் எனுஞ் சொல்லை நடுவுநிலைத் தீவகமாக வைத்து ஒவ்வொன்றோடுங் கூட்டியுரைத்துக் கோடற்பாற்றென்றலும் பொருந்தாமை காட்டுதும், தேவர் மொழியுங் குறள் மூவர் மொழியுந்தமிழ் திருமூலர் மொழியுஞ் சொல் எனக் கூட்டியுரைத்தல்போலத் திருநான் மறைமுடிவு என்புழியும் அவ்வாறு கூட்டிப் பொருளுரைத்தல் வேண்டும். அவ்வாறியைத்துப் பொருள் கோடலாகாமையின் மொழியும் எனுஞ் சொல் ஆண்டு நின்று பொருள் வற்றும். அதுவேயுமன்றித் திருமூலர் மொழியுஞ் சொல் எனவுரைக்கும்வழி மொழியும் என்பதுஞ் சொல்லும் என்னும் பொருளே பயப்ப சொல் என்பதும் சொல் என்னும் பொருளே பயப்பச் வொரு பயனுமின்றி யொருபொருண்மே லிரண்டு சொல் வந்தனவெனப் படுமாகலின் அதுவும் போலியாமென் றொழிக. என்றித் துணையுங் கூறியவாற்றால், முனிமொழியும் என்பதற்கு வேதாந்த சூத்திரம் எனப் பொருளுரைத்தல் ஔவையார் குறிப்பொடு படுத்துக்கொள்ளப் படுவதாமென்பதூஉம், முனி என்னுஞ் சொல்லுக்கீண்டு வேதவியாத முனிவர் என்று கொள்வதே யன்றிப் பிறவாறு கூறுதல் வழூஉப்படுமென்பதூஉம் வேதாந்த சூத்திரம் மாயாவாதப் பொருளே போதிக்குமென்பார்க்கு உபநிடத முதலிய வெல்லாக் கலைகளையும் அவ்வாறு கூறவேண்டுதலின் அது வெறுங் கூற்றே யாமென்பதூஉம், சங்கரர் வேதாந்த சூத்திரக் கருத்தறிந்துரை யெழுதினாரென்றல் தொல்லைமரபு மாறுபாடாமென்பதூஉம், சங்கரர் சைவசித்தாந்தப் பெரியரென்றல் உலக வழக்கொடும் புலனெறி வழக்கொடும் மாறுகொள்ளுதலின் அது கொள்ளற்பாற்றன்றென்பதூஉம், முனி மொழியும் என்பதில் முனி என்னுஞ் சொல்லுக்கு வாதவூர் முனிவர் என வுரை விரித்தல் மூவகைப் பொருளில் ஒன்றுமாவான் செல்லாதென்பதூஉம், சங்கரர் பாடியப் பொருளுணர்ச்சி யுலகின்கண் உவர்ப்புணர்ச்சி தோன்றித் துறவற நெறியிற் சேறற் கேதுவாமென்றல் சைவ சித்தாந்தப் பொருளொடு பிணங்குமேனைச் சமயத்தார் கூறும் ஆரவார வுரைகளாதலின் அவை ஈண்டைக்கேலாவென்பதூஉம், மொழியும் என்பதனை நடுவுநிலைத் தீவகமாக வைத்துப் பொருள் சொல்லுதல் ஏலாதென்பதூஉம் இனிது விளக்கப்பட்டன வென்க. முனிமொழிப் பிரகாசிகை - முற்றும் - தமிழ்த் திருவாளர் மறைமலை அடிகளாரின் வாழ்க்கை அ. கனகராயர் தமிழ்த்திருவும் மறைத்திருவும் ஒருங்கே அமையப்பெற்ற மாண்புமிக்க பேராசிரியர் மறைமலையடிகள் இன்றும் நம் மனக் கண்ணில் இருந்து ஆரா அமுதமாய், அருளுருவாய்க் காட்சியளித்து வருகின்றார். அவர்தம் உடலும் மறைந்தது. உண்மைத் தமிழ் உறவும் உயர் குறிக்கோள்களும் ஒப்புயர்வற்ற ஒழுக்க நிலையும் இங்கு மறைந்தில. அடிகளாரை நான் பல்லாண்டுகளாக நன்கு அறிவேன். அவர்தம் திருவாயிலிருந்து தோன்றும் ஒவ்வொரு சொல்லும் தமிழ்ப் பண்பையும் தமிழ்க் கண்ணோட்டத்தையும் என்றும் குன்றா எழில்மிக்க தமிழின் சுவையையும் ஆடியின் நிழலில் அறியத் தோன்றுமாறு தெள்ளிதின் எடுத்துக் காட்டும். இளமை முதல் முதுமை வரையில் தமிழர் வாழ்விற்கு அடிகோலியவர் அடிகள். அடிகளின் உருவத்தோற்றம் யாவரையும் பிணிக்க வல்லது. பெருந் திருவாளராய் மறைமலை யாய்ப் பிறங்கி, மெல்லிய இனிய குரலில் சொற்பொழிவு செய்து தமிழ் உலகை உய்வித்தவர் அடிகளாவார் என்பதும் யான் சொல்லாமலே போதரும். தொன்னூற் கடலைக் கரைகண்டு, மற்றும் பன்னூற்டலையும் வாய்மடுத்து, செந்தமிழும் சைவத் திருநெறியும் ஓம்புவான் வேண்டித் தன்னலம் பாராத்தளரா ஊக்கத்துடன் உழைத்தவர் நமது அடிகளாவர். அன்புக் கோயிலே அவர் உள்ளம்; அறிவுச் சுடரே அவர் உயிர்ப்பு; நண்புக்கோர் அணியாய்த் தம் மக்களையும் ஒக்கலையும் தூய பைந்தமிழ்ச் சுவையை நுகரும்படி செய்து வழி காட்டியவர் நம் அடிகளார். பொழுது புலர்ந்ததும் அடிகளாரிடம் குடிகொண்டிருந்த தூய ஒழுக்க முறைகள் தமிழ் மாணவர்கட்கு ஒரு தனி விருந்தாம். வைதாரையும் வாழ்விக்கும் திறனும், பகைவர், நண்பர், நொதுமலாளர் ஆய முத்திறத்தவரிடத்தும் பழகும் பண்பும், தமிழன் உற்ற இடர்களைக் களையும் அருட் கடலும், ஆவர் அடிகள். உரை நடை என்ன, விரிவுரை என்ன, ஒளிவிளங்கும் செய்தித் தாள்களிலுள்ள பொருள் நுட்பங்களென்ன, கலை நுட்பங்கள் என்ன, எந்நாட்டவரும் ஏற்றுக்கொள்ளும் பொது நோக்கு அமைந்த புதுக் கருத்துக்களென்ன, இவை போன்ற பிறவெல்லாம் அடிகளாரைத் தாமே தேடி வந்தடையும். ஆராய்ச்சி நூற்களின் அழகும், நேர்மையும், அமைவும், நுணுக்கமும் அடிகளாரின் நூலாராய்ச்சித் திறனை நுணுக்கமாகக் காட்டும் அடிகள் ஒரு கலைக் களஞ்சியம்! ஒரு கலங்கரை விளக்கம்! ஒரு திருநெறி மாமலை! தாமே தோன்றிய ஒரு தனி இளஞாயிறு! அடிகளாருடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்பவர் உறவினர் மட்டுமல்லர், புறவினத்தாரும்! புலவர் மட்டுமல்லர், புரவலரும்! இங்ஙனம் எல்லோர்க்கும் நல்லராய், மாமுது குரவராய், தமிழ் மொழியின் மாண்பு மறைய இருந்த நேரத்தில் தமது உடல், பொருள், ஆவிகளைப் பொருட்படுத்தாமல் அதனை உயர்நிக்கு ஊக்கித் தாழாது ஒளிரும் நந்தா விளக்கெனத் தமிழகத்தில் சீர்மை செய்தவர் நம் அடிகளே ஆவர். திருநெறித் தமிழ் ஓதுவதையே தமக்குப் பொழுது போக்காகக் கொண்டு வாழ்க்கைத் தரத்தை வளமுடன் உயர்த்திக் கொண்டவர் அடிகளேயாவர். தம் மக்களுக்கும் மற்றுமுள்ள அன்பர்கட்கும் நற்றமிழ் மொழியையே வழக்கத்திலும் வழங்கவேண்டுமென்று வற்புறுத்தியவர். வகுப்பு வேற்றுமை, மதப்பூசல், சமயக் காழ்ப்பு முதலியவைகளை அறவே வெறுப்பவர். கண்டென இனிக்கும் கனிந்த குரலினராய், நல்லறிஞர் குழுமியுள்ள நல்லதொரு அவை வரவேற்கும் ஞாயிறாய், பசுமை படர்ந்த செம்மேனியராய், தமிழ் மணங்கமழும் பேச்சாளராய், கண்டோர் பிணிக்கும் கவின் ஒழுகும் திருமுகத்தினராய், உலகளந்த பெருமானைப் போல் உயர்ந்த தமிழ்த் தோன்றலாய், நிலவியவர் நம் அடிகள். அடிகளாரின் மாசற்ற தொண்டு இன்றும் ஒரு மலையாகப் பொலிகின்றது. புதுமைத் தமிழ் உலகிற்குப் புத்துயிர் அளித்தவர். நமது மறைமலை அடிகளாவர். கடிதங்கள் தீட்டி, அவற்றின் வாயிலாகக் கன்னித் தமிழ்ச் சுவை உண்பிப்பவர் அடிகளாவர். செய்தித் தாள்களின் வாயிலாகச் செந்தமிழ்ச் சிறப்பை ஓதுவார் நம் அடிகள். பொருள் பொதிந்த அகல உரைகளின் வாயிலாகத் தமிழ் அழகைக்காட்டுவார் அடிகளார். புதுப்புது ஆராய்ச்சி களினால் பழந்தமிழர் வாழ்ககையை நிலைநிறுத்தியவர் அடிகள். அடிகள் உண்பதும் தமிழ் உணவே! புலால் என்னும் சொல்லைக் கேட்ட அளவிலே நெஞ்சு புழுங்குபவர். கொலை நோக்கமாகிய புலை நோக்கைக் கனவிலுங் கருதாதவர். தன்மானம் என்னும் போர்வையால் தம்மை மூடிக் காத்துக்கொண்டிருப்பவர் அடிகள். அடிகள் எழுத்தில் உயிர் நெளியும்; அழகு பழகும்; அன்பு தவழும்; அருள்நெறி குலவும்; பொருள்நலம் காணும்; வாய்மை விளங்கும்; தூய்மை ஒளிரும். முற்றுந் துறந்த முனிவர்கள் கையாண்ட ஒழுக்க முறைகளால் நூறு ஆண்டு எப்பொழுதும் இளமையோடு உலகில் உலாவலாம் என்பதையும் இவர் இயற்றியுள்ள மக்கள் நூறாண்டு உயிர் வாழ்வது எப்படி? என்னும் நூலிலிருந்து அறிந்துகொள்ளலாம். அன்றியும் உணவு அளவு, அது உண்ணும் நேரம், உணவின் கொழுமை, உழைப்பு இவற்றின் இயல்புகளும் தெள்ளிதின் இந்நூலகத்தே விளக்கப்பட்டுள்ளன. உழுவார்க்கு வேண்டும் கருவிப் பொருள்களும், உடல் உரமும், உயர் நலமும், இன்ப வாழ்வும், பிறவும் இதில் அங்கைக் கனியெனக் காணப்படுகின்றன. உயிர் நூல், உடல் நூல், உள நூல், தரை நூல் முதலிய பலவகை நூல்களையும் அடிகள் நுணுகி ஆராய்ந்துள்ளனர். உழைத்த உடம்பிற்கு உறக்கம் ஓர் இயற்கை மருந்து என்றும் கூறுகிறார். பச்சிலை மருந்து முதலியவற்றால் உடல்நலம் பெறாத உடம்பு தூய உணவாலும், உறக்கத்தாலும், நல்ல பழக்க வழக்கங்களினாலும் மேன்மையுறுமென்று கூறுகின்றார். திருக்கோயில் வழிபாடுகளைத் தொகுத்தும், வகுத்தும், வழிநிலை பிறழாது தெரியவைத்தும் இருக்கின்றார். அருளெனும் குழவிக்கு அன்பு தாயாக நிலவுகிறது என்கிற திருக்குறள் உண்மையைச் சிவநெறியில் காணலாம் என்பது அடிகள் கருத்து. முழு முதற் கடவுள் ஒன்று உண்டு. அதுவே சிவம் என்கிறார். அமைதியே குடிகொண்ட அருள்நெறி வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்று இசைக்கின்றார். தமிழர் கொள்கைகளையும் பழந் தமிழரின் போக்குகளையும் தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார். இவைபோன்ற பல அரிய உண்மைகள் இவருடைய நூல்கள் வாயிலாக அறியக் கிடக்கின்றன. அவற்றை எல்லாம் அறிஞர் கண்டு தெளிக. என்பும் உருகும் இசை பாடும் பண்புடையவர் இவர். இல்லறத் துறவியாகத் தம் இல்லின்கண் வீற்றிருந்து நல்லறம் புரிந்த நற்றமிழ் நாவலர் இவர். தமிழ்ப்பாலொடு எந்த நஞ்சையும் கலவாது தமிழ்க் குழவிகளுக்கு ஊட்டியவர். இவரது தூய செந்தமிழ் உரைநடையைக் கண்டு சீறுவார் ஒரு சாரார். மறுப்புக் கூறுவார் மற்றொரு சாரார். சுவையற்ற தென்று விளம்புவார் பிறிதொரு சாரார். இப்படிப்பட்ட கொடுமையாளர்களை எல்லாம் அறக்களைந்து தமிழ் அறத்தை உணர்ந்து முயற்சியிலும் முன்னேற்றத்திலும் முனைந்துநின்று தொண்டாற்றியவர் இவர். வருந்தி வருவார்க்கு விருந்துவைத்துப் போற்றுவார் அடிகள். அவர்தம் குறையைத் தம்மாலியன்ற வரையும் போக்குவார். அன்பினால் அகங் குழைவார். தமிழுலகு தனி உலகாய்த் தமிழர்க்கும் பிறர்க்கும் வாழ்வு காட்டப் பாடுபட்டவர். மேல்நாட்டுப் பேரறிஞர்களும் கண்டு வியக்கும் முறையில் வியத்தகு நூல்களை எழுதி வெளியிட்டவர் அடிகள். ஆங்கில மொழியிலும் அறிவு நிரம்பப் பெற்றவர். அம்மொழியில் பல கட்டுரைகளும், வரலாறுகளும் எழுதியுள்ளார்கள். நம் அடிகளார் சிவனையே உன்னிக்கொண்டிருக்கும் உள்ளம் படைத்தவர்; மரபு நெறி தவறாது; மாசு படியாது சைவ உலகத்தைத் தளிர்ப்பித்தவர்; காய்தலும் உவத்தலுமின்றித் தம் வாழ்க்கையை நடுநிலையில் நின்று கழித்தவர்; உடற்பயிற்சி முதலியவற்றை அதற்கு உறுதுணையாகக் கொண்டவர். மாதர் உலகமும் செம்மை நெறியுணர்ந்து வெம்மை அகற்றித் தமிழர்க்கு ஆக்கம் தேட வழி காட்டியவர். இவரது தமிழ் நூல்களில் தலைசிறந்தனவாய் இலங்குவன. `அறிவுரைக் கொத்து, `முல்லைப்பாட்டு ஆராய்ச்சி, `பட்டினப் பாலை, `கோகிலாம்பாள் கடிதங்கள் முதலியனவாம். பொதுவாகக் கூறுங்கால் இவர் அளப்பரிய பெரும் புலவர். கலையின் உயிர்நாடியை உணர்ந்த ஒரு தமிழ் மருத்துவராகத் திகழ்நதார் நம் அடிகளார். கன்னெஞ்சும், வன்னெஞ்சும், இரும்பினால் ஏயந்த நெஞ்சும் படைத்த தமிழ்ப் பகைவராகிய கோளரவுகளுக்கு ஓர் இடியேறாக விளங்கியவர் நம் அடிகள். தம்மிடம் எவரேனும் வந்து சில ஐயுறவுகளை வினவினால் அடிகளார் மனச் சோர்வின்றி அவர் கேட்ட வினாக்களுக்கெல்லாம் விடையளித்துக்கொண்டே தம் உணவு நேரத்தையும் பொருட்படுத்தாது சீரிய வீறிய திருத்தொண்டு புரிவார். இம்மட்டோ! இன்னும் எத்துணையோ ஆற்றல்களெல்லாம் இவரிடம் குடிகொண்டிருந்தன. அவற்றை யெல்லாம் இங்கு விரித்துரைக்கில் இஃது ஒரு பெரிய நூலாக விரியும் என அஞ்சி இம்மட்டோடு இதனை யான் முடிட்துக்கொள்கின்றேன். அடிகள் முதலில் நாகையை விட்டுச் சென்னை வந்த பின் அடிகட்குத் திரு.வி.க அவர்களும், அவர்கள் குடும்பமும் மிகவும் உதவி செய்ததாக அடிகள் வாயிலாகவே கேட்டுள்ளேன். இறுதியில் உடனிருந்து உதவியோர், திரு.என். ஆடலரசு அவர்களும், சைதைத் திருவள்ளுவர் செந்தமிழ்ச் சிவநெறிக் கழகத்தாருமாவர். தமிழரிடம் வேண்டும் தலையாய பண்புகளில் ஒன்றாய நன்றி மறவாமை என்பது இவரது குருதியில் கலந்து நின்றது. ஓர் எடுத்துக்காட்டால் இதனை உலகோர்க்குக் காட்ட அடியேன் விழைகின்றேன். அடிகள் உயிர் துறக்கும் நேரத்தில் எழுதியுள்ள வாழ்க்கை உரிமைக் குறிப்பு ஏடு ஆகிய உயிலில் அடியேற்கு ஓர் ஆயிரம் வெள்ளிகள் அளிக்கவேண்டுமென்றும், அடிகள் தம்மால் இயற்றப்பெற்ற நூல்கள் நான்கும் அடியேற்கு அளிக்க வேண்டுமென்றும் குறித்துள்ளார். இவ்வண்ணம் எந்நேரமும் உயிர் ஓம்பலும், உடல் ஓம்பலும், தமிழ் ஓம்பலும் செய்து வருங்கால உலகிற்கு வழி காட்டியாய், கற்றவரும் மற்றவரும் வியக்கும் ஒரு நல்ல தமிழாசிரியராய் அடிகளார் விலைமதிக்க முடியாத தொண்டு செய்துவிட்டுத் தமிழ் நாட்டினர் செய்த தவப்பயன் குறைவால் நம்மைத் தனித்தேங்கவிட்டு உம்பர் உலகு உற்றனர். உறுக அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நீழலில்! வாழ்க தமிழகம்! வெல்க தமிழ்! அடிகளாரின் அன்றாட நிகழ்ச்சி முறை 6 மணி முதல் 7 மணிவரை 1. கடவுளை வணங்கிக்கொண்டே காலையில் துயிலெழுதல், பின்னர்த் தேவார திருவாசகப் பாடல்களைப் பாடிக்கொண்டே தாமே மாளிகையின் சன்னல்களைத் திறந்து கண்ணாடிக் கதவுகளைத் துணியால் தட்டித் தூய்மை செய்தல். 7 மணிமுதல் 8 மணிவரை 2. தோட்டத்தைச் சுற்றிக்கொண்டே உலவுதல், பல் துலக்குதல். 8 மணிமுதல் 8.30 மணிவரை 3. நீரேற்றி (Enama) கொண்டு மலக்குடலைத் துப்புரவு செய்தல். 8.30 மணிமுதல் 9 மணிவரை 4. சிறிது வெப்பமான நீரில் குளித்தல், தோய்த்துலர்ந்த துணிகளை உடுத்தல். 9 மணிமுதல் 9-30 மணிவரை 5. நாள்தோறும் உட்கொள்ளும் உப்பினை (Efforsol) உட்கொள்ளுதல், உடல் நலமில்லாதிருப்பின் அதற்கேற்ற மருந்து வகைகளை உட்கொள்ளுதல். (நீர்க் கோவையானால் சூடான இஞ்சிச் சாற்றில், தேன் கலந்து உட்கொள்ளுதல்; அடிகளுக்கு அடிக்கடி நீர்க்கோவை உண்டாகும். சில வேளைகளில் பட்டினி கிடந்து நோயைத் தீர்த்துக் கொள்வதும் உண்டு.) 9.30 மணிமுதல் 10.30 மணிவரை 6. மணைமீதமர்ந்து மூச்சுப்பழக்கம் செய்தல், அனலில் நறுமணப் புகையூட்டி இறைவனை வழிபடுதல். 10.30 மணிமுதல் 11.30 மணிவரை 7. காலை உணவு உண்ணுதல் (தட்ப வெப்ப நிலைக்குத் தக்கவாறு கோதுமைப் பாற்கஞ்சி, மோர் கலந்த கஞ்சி ஆகிய இவற்றுடன் உலர்ந்த பழங்கள், அத்திப் பழம், அங்கர் திராட்சை, வாதுமைப் பழம், அக்ரூட் கொட்டையிலுள்ள பருப்பு, பாதம் பருப்பு ஆகியவற்றையும் உண்ணுதல்.) 11.30 மணிமுதல் 12.30 மணிவரை 8. வீட்டுக் கணக்குப் பார்த்தல். அச்சுப் பிழை (புரூப்) திருத்துதல். அச்சகத்தில் வேலை செய்யும் ஆட்களுக்கு வேலை கொடுத்தல். தோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றுபவரைக் கவனித்தல். தன் இல்லத்திற்கு வருபவருடன் உரையாடுதல். 12.30 மணிமுதல் 2 மணிவரை 9. கால அட்டவணையிற் குறிப்பிட்டுள்ளபடி படித்தல். 2 மணிமுதல் 2.30 மணிவரை 10. நண்பகல் உணவுண்ணுதல். அன்றாடம் அவர் குறிப்பிடும் முறையிலேயே உணவைச் சமைத்தல் வேண்டும். தேங்காய்ப் பாலில் கலந்த குழம்பு, மிளகுநீர் இலைக் கோசு, பூக்கோசு, நூல்கோல், சிவப்பு முள்ளங்கி, கீரை வகைகளில் ஒன்று. நல்லெண்ணெய்க்குப் பதிலாக நெய்; புளிக்கீடாக எலுமிச்சம் பழம்; உப்புக்கு இந்துப்பு,. 2.30 மணிமுதல் 4 மணிவரை 11. ஓய்வு 4 மணிமுதல் 5.30 மணிவரை 12. வருவாருடன் உரையாடல் மாணவர்க்குக் கற்பித்தல். 6 மணிமுதல் 6.30 மணிவரை 13. பாலில் மிகுதியாகச் சர்க்கரை சேர்த்து அருந்துதல். 6.30 மணிமுதல் 9.30 மணிவரை 14. படித்தல். 9.30 மணிமுதல் 11 மணிவரை 15 நீரேற்றி மலைக்குடலைத் துப்புரவு செய்தல் நீராடல். 11 மணிமுதல் 12 மணிவரை 16 இறைவனை வழிபடுதல். 12 மணிமுதல் 12.30 மணிவரை 17. இரவு உணவு. பால் சிறிது, அரிசி மாவினால் செய்த இட்லி, (அல்லது) தோசை உருளைக்கிழங்கு வற்றல், உழுத்தம்மாவிலிட்ட பண்டங்கள் முதலியன. 12 மணிமுதல் 1 மணிவரை 18. உலாவல், உட்புறக் கதவுகளையும் பிறவற்றையும் தாமே விளக்குடன் சென்று பார்த்தல். 1 மணிமுதல் 6 மணிவரை 19. உறங்குதல். சிறப்புச் சொற்பொழிவு சங்ககாலத் தமிழகம் தோற்றுவாய் தாய்மார்களே, அன்பர்களே! சங்ககாலத் தமிழகம் பற்றி நான் பேச வேண்டுமென்று அன்பிற் சிறந்த ஆடலரசு என்னைக் கேட்டுக் கொண்டார். அவருடைய முயற்சியைப் பாராட்டுகிறேன். இந்தக் காலத்தில் ஆண்டில் முதிர்ந்தவர் செய்யும் முயற்சியைவிட இளைஞர் செய்யும் முயற்சி பெரிதும் பயன்படும் என்பது என் நம்பிக்கை. கொங்கு நாட்டிலே பதினாயிரம் இளைஞர்களிடையே நான்கைந்து சொற்பொழிவுகள் நிகழ்த்தினேன். அப்பெருங் கூட்டம் மிக்க மனக்களிப்பைத் தந்தது. நான் இளைஞனாய் இருந்தபோது தமிழைப் பற்றிப் பேசினால் பயித்தியக்காரன் என்பார்கள். ஆங்கிலம் அறிந்தவர்களே அன்று மேன்மையாகக் கருதப்பட்டார்கள். அக்காலத்தில் தமிழில் பேசினால் மானக்குறைச்சலாகக் கருதினார்கள். எனக்குத் தமிழைக் கற்றுக் கொடுத்தவர் வைதீக சித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தர நாயகர் அவர்களே ஆவர். என்போன்ற மக்கள் தமிழுணர்ச் சியையும், சைவ சித்தாந்த உணர்ச்சியையும் பெறுவதற்குப் பெருந் துணையாயிருந்தவர் அவரே ஆவர். அவர்கள் முப்பது ஆண்டுகள் வரை தமிழையும் சைவத்தையும் நன்கு கற்றவர்கள்; மிகக் கடினமாக உழைத்தவர்கள். அவர் பதவியையோ பொருளையோ விரும்பவில்லை. அக்காலத்தில் செல்வர்கள் ஏராளமாக இருந்தார்கள். செல்வர்கள் யாரும் அவருக்கு உதவிபுரிய முன்வரவில்லை. பிற்காலத்திலே அவர் பல இடர்ப்பாடுகளுக்குட்பட்டார். வறுமையால் வாடினார். முப்பது ஆண்டுக்குள் செல்வர்கள் நிலை மாறிப் போயிவிட்டது. அவருடைய இறுதிக்காலத்திலே அப்படிப்பட்ட பெரியவரை நான் கண்டதில்லை. எனது ஆசிரியர் அயல்நாட்டிலே பிறந்திருந்தால் வில்லியம் ஷேக்ஸிபியருக்குக் கோயில் கட்டிய மாதிரி அவருக்கும் ஒரு நினைவுச் சின்னம் எழுப்பி அவருடைய நூல்களை வெளியிட்டு அவர் புகழைப் பரப்பி இருப்பார்கள். இங்கு வில்லியம் ஜேம் என்ற அறிவாளியைப்பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். இது சைதாப்பேட்டை சிவநெறிக்கழகத்தின் சார்பில் 15-5-49 அன்று திரு.வி.க. அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழுருவாகிய தலைவர் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலை அடிகளார் சங்ககாலத் தமிழகம் பற்றிக் கொடுத்த தோற்றுவாயேயாகும். இதனைத் தொடர்ந்து பல சொற்பொழிவுகள் ஆற்ற அவர் எண்ணியிருந்தார். ஆனால் அந்தோ! தமிழர் புண்ணியக் குறைவினால் அடிகளார் மேற்கொண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்த முடியாது போயிற்று. மெய்கண்டாரே வில்லியம் ஜேம்ஸாகப் பிறந்தாரோ என்று எண்ணவேண்டியிருக்கிறது. வில்லியம் ஜேம் அவர்கள் உயிரோடு இருந்தபோது, என்னுடைய ஆங்கில நூல்களைப் பார்த்து, எங்கள் நாட்டில் இல்லாத வேறு சிறந்த கொள்கையும், உங்கள் நாட்டில் இருக்கிறதே என்று மகிழ்ந்தார். மேலை நாடுகளிலே சைவ சித்தாந்தத்தைப் பரவச் செய்ய வேண்டு மென்ற ஆர்வம் என்கிருந்தது. வெளிநாடு செல்வதானால், இருபதினாயிரம் ரூபா செலவு செய்யவேண்டும். அவ்வளவு பெருந் தொகையை யான் செலவிட வழியில்லை! இப்பெருந் தொகை கொடுத்து உதவ அப்பொழுது யாரும் முன்வரவில்லை. இப்பொழுதும் இல்லை! மாக்முல்லர், மொழி முதலியவற்றின் தன்மையைப் பற்றி விரிவாக நூல் எழுதியவர், மொழி இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது. கையினாலே சாடை காட்டினாலும், கண்களினாலே குறிப்புத் தெரிவித்தாலும், வேறு உறுப்பினாலே அறிவித்தாலும், ஒருவர் கருத்தை, மற்றொருவருக்குப் புலப்படுத்தச் சொற் றொடர்கள் வேண்டும். மொழியின் மூலம் நமக்கு ஆன்றோர்கள் செய்த உதவி என்றும் மறக்க முடியாதது. ஆன்றோர்களின் அரும் பெருமுயற்சி பெரிதும் பாராட்டுதற்குரியது. சென்ற ஐம்பது ஆண்டுகளாக நான் ஆராய்ச்சி செய்திருக்கிறேன். அறிவினாலே எழுத்தினாலே, உணர்ச்சி யினாலே, நூல் வடிவிலே, புதினத் தாள்களிலே எல்லாம் எழுதி வந்திருக்கிறேன். வெளிநாட்டுப் புதினத்தாள்களிலும் என் ஆராய்ச்சிபற்றி எழுதி வந்திருக்கிறேன். என்னுடைய ஆசிரியர் அறுபது நூல்கள் வரை எழுதியிருக்கிறார். அவர்கள் நூலை எல்லோரும் படித்து விட முடியாது. அவர்கள் நூலிலே நூற்றுக்கு எண்பது வடசொற்கள் கலந்திருக்கும். மிகுதியாக வடசொற்கள் கலந்திருக்கும். ஆசிரியரை நோக்கி, ஏன் மிகுதியாக வடசொற்களைச் சேர்த்து எழுதுகிறீர்கள்? என்று கேட்டதற்கு என்னால் வடசொற்களின்றி எழுத இயலாது. நீ வடசொல் கலவாது தனித் தமிழிலே எழுது என்று சொன்னார். நச்சினார்க்கினியர், சிவஞான முனிவர் முதலிய உரையாசிரியர்கள் எழுத்திலே நான் சொக்கித் தனித்தமிழிலே எழுதத் துவங்கினேன். ஆசிரியர் யான் தனித்தமிழிலேயே எழுதும் கட்டுரைகளைப் பார்த்து, நீ தனித் தமிழிலேயே எழுது. உனக்குத் தனித் தமிழிலே எழுதும் ஆற்றலை இறைவன் ஆக்கி உள்ளான். உன் தனித் தமிழைப் படிக்கப்படிக்க என் காதுகளுக்கு இன்பமாயிருக்கிறது என்றார். தனித் தமிழில் எழுதுவதை விடாதே! நீ தனித்தமிழிலே எழுதுவது எனக்கு விழிப்பையும் கிளர்ச்சியையும் உண்டு பண்ணுகிறது என்றும் கூறினார். ஆசிரியர் சோமசுந்தர நாயகர் ஒரு பெரிய வேதாந்தி. அவருடைய பேருதவியால்தான் நான் தமிழையும், வடமொழியையும் ஆராய்ச்சி செய்ய முடிந்தது. அவர் செய்த நன்றியை நான் எக்காலத்திலும் மறக்க முடியாது. துயில் நீங்கி எழுந்தவுடன் என் ஆசிரியரின் நிழலுருவப் படத்திற்கு வணக்கம் செலுத்துவது வழக்கம். அன்றாடம் என் ஆசிரியருக்கு வணக்கம் செலுத்துவதில் நான் தவறுவதில்லை! பிராமணீயம் என்பதை பிராமணம் என்றேதான் எழுதி வந்தேன். கனவிலும் நான் வடமொழியில் எழுதுவதில்லை! என் பிறவி பெரிதும் பயன்பட்டது. சிவஞானமுனிவர் இனிமையான நடையிலே தமிழை வளர்த்தார். நான் எழுதிய நூல்களை இப்பொழுது குடிமக்கள் படிக்கிறார்கள். முன்னர் ஏகினான் என்பதைப் போயினான் என்றும், வம்மின் என்பதை வருக, வாருங்கள் என்றும் எழுதக் கற்றுக்கொண்டேன். கற்றவர் கல்லாதவர் ஆகியவர்களுக்கும் புரியவேண்டும் என்பதற்காகவே அப்படி எழுதினேன். அந்தக் காலத்திலேயும் யான் பேசம் சொற்களிலேயும் எழுத்திலேயும் வடசொல் கலப்பதில்லை! சொற்பொழிவால் தமிழுணர்ச்சி யால் யான் செய்த பேறு என்னுடைய பதவியைப் புனித மாக்கிற்று; திருக்குறள் ஒரு பெரிய நூல். ஏதோ ஓரிரண்டு வடசொற்கள் தவிரத் திருக்குறளிலே மற்றவை எல்லாம் தனித் தமிழிலே அமைந்திருப்பதைக் காணலாம். அன்பர் திரு. வி.க. எனக்கு இளையவர். அவர் இளமையில் உடல் நலத்துடன் திண்மையாக இருந்தார். அவர் சிறந்த உள்ளம் படைத்தவர். கரவாக உள்ளத்தை மறைத்துப் பேசமாட்டார். அவருக்கென்று ஒருவகையான நடை உடை உண்டு. கொள்கைகளிலே மட்டிலும் அடிக்கடி மாறுவார். சில காலம் யான் கொண்ட கருத்துக்கு மாறாக இருந்தார். பையப் பைய அவர் என் வழிக்கு வந்து விட்டார். அந்நாளிலேயே அவர் புலமையை நான் உயர்த்திப் பேச நேர்ந்தது. ஒருவரை ஒருவர் உயர்த்திப் பேசுவது இயல்புதான். அவர் என்னைப்பற்றிப் பேசிய யாவும் உண்மைதான். என்னுடைய தாயாகிய தமிழுக்கும், சைவத்துக்கும் தொண்டாற்ற யான் கடமைப் பட்டிருக்கிறேன். அந்தக் காலத்தில் பொருள் மிகுதியாகத் தந்து என் கொள்கைகளை மாற்றிக்கொள்ளும்படி நேயர்களிலே பலர் என்னை வேண்டினார்கள். பட்டங்களும் பதவியும் தந்து உதவுவதாகச் சொன்னார்கள். அதென்னவோ அவற்றிலெல்லாம் எனக்கு விருப்பமில்லை! இப்பொழுதும் பட்டம் பதவிபெற வேண்டும் என்ற விருப்பம் எனக்கில்லை. யான் அறிந்த உண்மையை எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். தொண்டின் வாயிலாக என் உயிரைத் தூய்மை செய்துகொள்ள விரும்புகிறேன். அங்ஙனமே செய்து வருகிறேன். கனவிலும் நினைவிலும் தமிழையும், சைவத்தையும் எண்ணி வருகிறேன். இன்றும் யான் இப்படியே எண்ணி வர இறைவன் அருள் செய்வானாக. அறுமுகப் பெருங்கடவுளே சங்கத்தில் வீற்றிருந்து தமிழை ஆராய்ந்தான். தமிழ் நூல் இலக்கண வரம்புள்ள நூல்; என்றும் மாறாமல் இளமையோடு அது இருக்கிறது. இலக்கண வரம்பில்லாத மொழி மாறிக் கொண்டே போகும் என்று மாக்முல்லர் எடுத்துக் காட்டுகிறார்; பாதிரிமார்கள் நல்லெண்ணம் உடையவர்கள். பாதிரிமார்கள் இங்கு வராமல் இருந்திருந்தால் கல்வி வளரவே முடியாது. காட்டுமிராண்டிகள் பேசுகிற மொழிகூட நாளுக்கு நாள் மாறிக்கொண்டே போகிறது. இலத்தீன் மொழி, கிரேக்க மொழி ஆகியவை இன்று இருந்த இடம் தெரிய வில்லை. ஈப்ரு, அரேபியம் ஆகிய மொழிகளும் இறந்து போயின. தமிழ் மொழி மட்டும் என்றும் மாறாமல் இன்றும் இருக்கிறது. வாழைப்பழம் என்பதை வாயப்பயம் என்கிறார்கள். அடித்தான் என்பதை அடிச்சான் என்கிறார்கள். மழை பெய்தது என்பதை மழை பேஞ்சுது என்கிறார்கள். ஒரு கட்டடத்தை அமைக்கிறபோது மிகவும் திருத்தமாக அழகாக அமைக்கவேண்டும். ஒரு மொழியின் வளர்ச்சியை மிக்க விழிப்போடு பாதுகாக்க வேண்டும். இப்பொழுது உள்ள 999 மொழிகளிலே சிறந்ததாயும் உயிருடையதாயும் ஒரு நிலையில் இருப்பது தமிழே. ஆங்கிலத்தை 150 ஆண்டுகளாகச் சீர்திருத்தி வந்தார்கள். 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கி மொழி சிறந்ததாயில்லை. Butc என்றும் Put என்றும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். எழுதுகிற முறையும் சொல்லுகிற முறையும் இடத்துக்கு இடம் மாறுகிறது. calm என்பதில், ஒலி இல்லை. Psychology என்ற சொல்லை பிஸிகாலஜி என்று பிரஞ்சு மொழியில் வழங்குகிறார்கள். தமிழிலே அந்தக் குறை இல்லை. எழுதியதை எழுதியவாறே, சொல்லியதைச் சொல்லியவாறே தமிழில் உச்சரிக்கலாம், வட மொழியிலோ பேசும் பொழுதும், எழுதும் பொழுதும் பல குற்றங்கள் காணப்படும். அருமைத் தமிழர்களே! சங்கம் இருந்த நிலை, சங்கம் என்பது என்ன, சங்கத் தமிழ் எப்படி ஓங்கியது. சங்க நூல்கள் எப்படி வெளிவந்தன. என்பவற்றை எல்லாம் சொல்லும்படி கேட்டார்கள். சங்கம் என்றால் கூட்டம். சங்கம் வடமொழி. கழகம் என்பது தமிழ். ஏறக்குறைய ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னே கழகம் ஏற்பட்டது. தமிழிலே நிகரற்ற புலவர்கள் இருந்தார்கள். அவ்வளவு சிறந்த புலவர்களை இப்போது நாம் காண முடியாது. திருவள்ளுவர் காலமும் சங்க காலமும் ஒன்றேதான். கிறித்து பிறப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார். ஆண்டைத் தவிர அவர் பிறந்த நாளும் திங்களும் அதற்குச் சான்றம் கிடைக்கவில்லை. இன்றைக்கு 1977 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது மட்டும் உறுதி. வாழ்க்கைக் குறள் இது பல்லவபுரம், பொதுநிலைக்கழக ஆசிரியர் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள் இயற்றும் செய்யும் நூல். வாழ்க்கை இருவகைத்தா மாந்தர்பாற் றோற்றுவிக்கும் ஊழ்க்கு நிகரே துரை. (1) இம்மையே யன்றி இனிச்சேர் மறுமையும் மெய்ம்மையார் கண்டார் விதந்து. (2) இன்றிருக்கும் ஓரறிஞன் நேற்றிருந்த தன்றியே பின்றைநாளு மிருத்தல் பேசு. (3) இரண்டுந் தொடர்ந்தே இயங்குமுறை தேர்ந்தோர் முரண்டு மறுமை மறார். (4) இம்மை இயல்நெறியை ஏற்கத் திருத்தினால் அம்மை யியல்சிறக்கும் ஆர்ந்து. (5) இம்மை யொழுக்கம் இனிது நிகழாக்கால் செம்மையே வாழா ருயிர். (6) மாந்தர்க்கு நூறாண்டு வாழ்த்துமுறை வாழாக்கால் தேர்ந்தபயன் உண்டோ தெரி. (7) இறைவன் படைப்பில் இறையுங் குறையாங் கறையே திவன் செயலல் லால். (8) அகத்தும் படைப்பில் அமைந்த அமைப்பை மிகத்தெரிந்து செய்க வினை. (9) மாறா நிலையும் மலையுஞ் செயல்தானும் வேறாதல் கண்டு விளம்பு. (10) வடவர் தென்னாடு புகுந்தமை அன்புள்ள.... வடக்கே தமிழ்நில எல்லையாக மிகப் பழைய தொல்காப்பியர் பாயிரச் செய்யுளில், வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து என ஓதப்பட்டவாறு செந்தமிழ் வழங்கும் மாநிலம் நிருவேங்கடம் என்னும் திருப்பதி வரையில் நீண்டிருந்தது. வேங்கடத்துக்கும் மிக வடக்கே இமயமலை வரையிலும் தமிழ்மொழியும் அதனை வழங்குந் தமிழ் மக்களும் பரவியிருந் தனராயினும், அவரெல்லாந் தமிழைத் திருத்தமாகப் பேசவும் எழுதவும் பயிலவும் தெரிந்தவர் அல்லர். தென்னாட்டகத்தே யிருந்த தம் இனத்தாரைப் போல் நாகரிக வாழ்க்கையில் இருந்தவரும் அல்லர். வடக்கே சென்று குடியேறிய அப்பெருந்தொகுதியாரிற் சிறந்த சிறுசிறுகுழுவினர் பல நூற்றாண்டுகளுக்குப் பின் மீண்டும் இத்தென்னாடு புகுந்து ஆங்காங்கு வைகலாயினர். இங்ஙனம் வந்தார் அனைவரும் வடநாட்டில் வைகிய காலத்தே, தாம் பேசும் மொழியாலுந், தாம் கைக்கொண்ட பழக்க வழக்கங்களாலும், அவற்றால் தாம் விடாப்பிடியாய்க் கொண்ட கொள்கைகளாலும் இவ்விந்திய நாட்டுக்குப் புறம்பேயிருந்து போந்து தம்மோ டொருங்கு கலந்து வாழ்ந்த ஆரிய மக்களின் சேர்க்கையாலுந், தாந் தெற்கேயிருந்த தமிழர்களுக்குப் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னமே நெருங்கிய உறவினராயிருந்தும் அவரைப் பிரிந்து நெடுங்காலங் கழிந்தமையின், அவர் தம்மினத்தவராதலை அறவே மறந்து, ஆரியச் சேர்க்கையால் தம்மை ஆரியரெனவே பிறழ உணர்ந்து, தென்னாட்டவருடனும் அவர்தம் வழக்க வொழுக்கங்களுடனும் முழுதும் மாறுபட்டே நிற்பராயினர். - மறைமலையடிகள். ஓம் பல்லாவரம், 8-11-1949 அன்பர் கனகராயர்க்குத் திருவருளால் எல்லா நலனும் உண்டாகுக! பனிமிகுதியால் எனக்கு நீர்க்கோவை. ஆதலால் நாளைக்கு யான் சென்னை வருதல் இயலாதாயிற்று. கூடுமானாற் சனிக்கிழமை வருகிறேன். நமது நூற்பதிப்பு வேலையை விரைவில் வாங்குதற்கு வேண்டும். ஏற்பாடுகளை நம் அன்பர் திரு. செங்கல்வராயருடன் கலந்து விரைவிற் செய்யுங்கள். பிறபின். நலம். அன்புள்ள. மறைமலையடிகள். பல்லாவரம் பொதுநிலைக் கழக ஆசிரியர் மறைமலை அடிகளால் வேண்டப்படும் சீர்திருத்தக் குறிப்புகள் உண்மை அன்பர்கள் வற்புறுத்துக் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, இக்காலத்துக்கு இன்றியமையாது வேண்டப்படும் சீர்திருத்தக்குறிப்புகள் சிலவற்றை இங்கு எடுத்துக் காட்டுகின்றோம். சமயச் சீர்திருத்தம் தென்னாட்டிலுள்ள தமிழர்களாகிய நாம் தொன்றுத் தொட்டு ஒரே முழுமுதற்கடவுளை வணங்கி வருகின்றோம். அம்முழுமுதற் கடவுளுக்குச் `சேயோன், `மாயோன், `முக்கண்ணன், என்னும் பெயர்கள் வழங்கிவந்திருக்கின்றன. இச்சிறப்புப் பெயர்களாற் குறிக்கப்படாதபோது, `வாலறிவன், `மலர்மிசை யேகினான், `வேண்டுதல் வேண்டாமை யிலான், `பொறிவாயிலைந்தவித்தான், `தனக்குவமை யில்லாதான், `அறவாழியந்தணன், `எண் குணத்தான், `இறைவன், `கடவுள் என்னும் பொதுப்பெயர்கள் பொதுவாக எல்லாராலும் வழங்கப்பட்டு வந்திருக்கின்றன. இத்தகைய கடவுள் பிறப்பில்லாதது, இறப்பில்லாதது, எல்லாமறிவது, எங்குமுள்ளது, எல்லாம்வல்லது, அளவிலாற்றலுடையது, வரம்பிலின்ப முடையது, என்னும் இலக்கணங்கள் உடையதென்பது இத்தமிழ்நாட்டி லுள்ளவர்கள் எல்லாருக்கும் உடன்பாடாகும். இஃது எல்லாவற்றையும் படைத்து அழிக்கும் அப்பனாகவும், படைத்தவற்றைக் காக்கும் அம்மையாகவும் வணங்கப்பட்டு வருகின்றது. இத்தன்மைத்தாகிய கடவுளையே தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரும், மாணிக்கவாசகரும், திருமூலரும், அப்பர் சம்பந்தர் சுந்தரரும், மெய்கண்டதேவரும் தாம் அருளிச் செய்த நூல்களிலும் பதிகங்களிலும் எடுத்து விளக்கி வணங்கிவந்திருக்கின்றார்கள். மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த தேவரும் காணாச்சிவபெருமான் என்றும், தேவர்கோ அறியாத தேவதேவன் செழும்பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை, மூவர் கோனாய் நின்ற முதல்வன் என்றும் மாணிக்கவாசகப் பெருமான் எல்லாம் வல்ல முழுமுதற்கடவுளையே சிவமென்னும் பெயரால் வாழ்த்தி வணங்கி யிருப்பது நன்குவிளங்கும். ஆனால், வடநாடுகளில் கோடிக்கணக்கான சிறுதெய்வங் களை வணங்கி, அவற்றுக்கு ஊனுங் கள்ளும் படைத்து வெறியாட்டு வேள்விகள் எடுத்த ஆரியர்கள் இத் தென்றமிழ் நாட்டுக்கு வந்து குடியேறித் தாம் வணங்கிய சிறுதெய்வ வணக்கத்தையும் அவற்றிற்காக எடுத்த வெறியாட்டு வேள்விகளையும் அச்சிறுதெய்வங்களின் மேற் கட்டிவிட்ட புராணகதைகளையும்இந்நாடுகளிற் பரவ வைத்தார்கள். இந்நாடுகளில் நாகரிகமும் கல்வியறிவும் இல்லாத கீழ் மக்களே ஆரியர் நடைகளை மிகுதியாய்ப் பின்பற்றலாயினர். அது கண்ட தமிழ்ச்சான்றோர்கள் ஆரியர் வணங்கிய சிறுதெய்வ இழிவும், தமிழர் வணங்கம் முழுமுதற் கடவுளாகிய சிவத்தின் உயர்வும் புலப்படுத்தல் வேண்டித் தாமும் பலபுராணகதைகளை உண்டாக்கலாயினர். இவ்வாறு எழுந்த பலப்பல புராண கதைகளுட் கடவுளிலக்கணத்துக்குப் பொருந்துவனவும் அதற்குப் பொருந்தாதனவும் இருக்கின்றன. அவைகளை யெல்லாம் செவ்வையாக ஆராய்ந்துபார்த்துப் பொருத்தமான வைகளை உரிய சீர்திருத்தம் முதன்மையாகச் செயற்பாலதாகும். நம் ஆசிரியர்கள் தமதுகாலத்திருந்த பொதுமக்களின் மனச் சார்பை அறிந்து, அவர்கள் பொருட்டுத் தழுவிப்பாடியிருக்கும் புராணகதைகளை யெல்லாம் நாம் அப்படியே தழுவவேண்டு மென்பது கட்டாயமாகாது. ஏனென்றால், அப்பனை வணங்கும் நமது சைவசமயமும், அம்மையை வணங்கும் வைணவ சமயமும் இக்கதைகளைச் சார்ந்து பிழைப்பனஅல்ல. இக்கதைகளின் உதவி வேண்டாமலே இவ்விருசமயங்களும், மக்களின் இம்மை மறுமைவாழ்க்கைக்கு இன்றியமையாதனவாகிய அரியபெரிய மெய்ப்பொருள்களினாலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால், நம்முடைய சமயங்களின் உண்மைகளைச் `சிவஞானபோதம் `சிவஞானசித்தியார் என்னும் உயர்ந்த அறிவு நூல்களில் விளக்கப்பட்டபடி இளம் பருவமுதற் கொண்டே நம்முடைய மக்களுக்குக் கற்பித்துவர ஏற்பாடு செய்தல் வேண்டும். இச்சமய உண்மைகளுள் எதனையுங் குருட்டுத்தனமாய் நம்பும் தீயபழக்கத்தை ஒழித்து எதனையும் தம்மறிவால் ஆராய்ந்து பார்க்கவும் தம் மறிவுக்கு விளங்காதவைகளை அறிந்தோர்பாற் கேட்டுத் தெளியவும் அவாவை உண்டாக்குதல் வேண்டும். சிவபிரான் திருக்கோயில்களில் நிறுத்தப்படிருக்கும் சிவலிங்க வடிவானது ஒளிவடிவாய் விளங்கும் இறைவனது நிலையை உணர்த்துவதாகும். இவ்வடிவு எல்லாச் சமயத் தாராலும் வழுத்தி வழிபடுதற்குரிய பொதுவான அடையாள மாய் உலகம் எங்கும் உள்ளதாகும். எந்தச் சமயத்தோரேனும் எந்தச் சாதியாரேனும் இதனை வணங்குவதற்கு விரும்பிக் கோயிலுள் வருவார்களாயின் அவர்களைத் தடைசெய்யாமல் வந்துவணங்குதற்கு இடங்கொடுத்தல் வேண்டும். என்மார்க்கம் இருக்குது எல்லாம் வெளியே என்ன எச்சமயத் தவர்களும் வந்து இறைஞ்சா நிற்பர் என்னும் தாயுமான அடிகளின் திருமொழியை நம்மவர்கள் எப்போதும் நினைவில் வைத்தல் வேண்டும். ஆனாற் கோயிலுள் வருபவர்கள் எல்லோரும் குளித்து முழுகித் துப்புரவான ஆடை உடுத்து அடக்க வொடுக்கமாய் வாய் பேசாது உட்சென்று வணங்கும்படி செய்தல் வேண்டும். இப்போது கோயிலுள் இறைவனுக்குச் செய்யும் நாள் வழிபாடுகள் பொருத்தமாய் இருந்தாலும், அவை வடமொழி மந்திரங்களைச் சொல்லிச் செய்யப்படுதலின், பொதுமக்கள் அவற்றின் உண்மை அறியாமல் விழிககின்றனர். தேவார திருவாசகங்களாற் பாடப்பெற்ற கோயில்களே பாராட்டப் படுகின்றன அல்லாமல், வடமொழி மந்திரங்களுக்காக எந்தக் கோயிலும் பாராட்டப் படவில்லை. ஆதலால், வழிபாடு முழுதும் வேதார திருவசாகத் தமிழ்மந்திரங்களைக் கொண்டே நடைபெறுமாறு ஒவ்வொரு கோயிலிலும் ஏற்பாடு செய்தல் வேண்டும். இனி ஒவ்வொரு கோயிலின் சார்பாக நடத்தப்பட்டு வரும் திருவிழாக்கள் எப்போதும் போலவே எங்கும் நடைபெறும்படி செய்தல் வேண்டும். ஏனென்றால், நாடோறும் நெற்றித் தண்ணீர் நிலத்தில் விழப் பாடுபடும் ஏழைமக்களும், செல்வமிகுதியாற் கடவுளை மறந்து சிற்றின்பத்தில் கிடந்துழலும் செல்வர்களும், இவ்விருவர் நிலையிலும் சிறிது சிறிது ஒட்டி நிற்கும் மற்றைப் பொதுமக்களும் இத்திருவிழாக் காலங்களிலேதாம் தத்தம் முயற்சிகளினின்றும் ஓய்வுபெற்று நீராடி நல்ல ஆடை அணிகலன்கள் அணிந்து, தம் மனைவிமக்கள் சுற்றத்தாருடன் மன மகிழ்ந்து கடவுள் நினைவும் வணக்கமும் உடையராய்ப் பலஊர்க்காட்சிகளையும் பலமக்களின் தோற்றங்களையும் கண்டு இம்மை மறுமைப் பயன்களைப் பெற்று இன்புறு கின்றனர். இத்திருவிழாக்களும் திருக்கோயில்களும் இல்லை யானால் இந்நாடும் ஏனை அயல்நாடுகளைப்போல் ஓயாத சண்டைக்கு இடமான போர்களமாகவே இருக்கும். ஆதலால், திருவிழாக்களை இன்னும் செவ்வையான முறையில் நடைபெறச்செய்வதோடு, அத்திரு விழாக்களின் உண்மையும் பயனும் எல்லார்க்கும் எடுத்துச் சொல்லுமபடி கல்வியிற்றேர்ந்த அறிஞர்களுக்குத் தக்க பொருளுதவி செய்து, அவர்கள் அத்திருவிழாக் காலங்களில் ஆங்காங்கு விரிவுரை செய்யும்படி ஏற்பாடு செய்தல் வேண்டும். கோயில்களிற் பொதுப்பெண்டிரைத் தொண்டு செய்ய அமைத்தலும், அவர்களைக் கோயிலுக்குப் பொட்டுக்கட்டுவதும் அடியோடு விலக்கப்படல் வேண்டும். கோயில்களில் வழிபாடாற்றுங் குருக்கள்மார் தமிழ் மொழியிற் பயிற்சி யுடையராயும், சைவசித்தாந்தம் நன்குணர்ந்த வராயும் தேவார திருவாசகம் ஓதுபவராயும் இருக்கும்படி ஏற்பாடு செய்தல்வேண்டும். சிலகோயில்களிற் றவிரப் பெரும்பான்மை யான மற்றைக்கோயில்களில் வழிபாடுசெய்யும் குருக்கள் மார்க்குத் தக்கவரும்படியும் தக்கசம்பளமும் இல்லை. ஆதலால், மிகுந்தவரும்படி உள்ள கோயில்களின் வருவாயிலிருந்து மற்றைக்கோயில்களின் ஏழைக்குருக்களுக்குத் தக்கசம்பளங்கள் கொடுப்பித்தல் வேண்டும். கோயில்களிலுள்ள இறைவன் திருவுருவத்திற் எப்போதும் போலக் குருக்கள்மாரே வழிபாடு செய்யவேண்டுமல்லாமல் வணங்கப்போகிறவர்களெல்லாம் அதனருகிற் சென்று அதனைத்தொட்டுப் பூசித்தல் வேண்டுமென்பது நல்லமுறை யன்று. ஏனென்றால், வணங்கச் செல்பவர்களுக்குக் கடவுள்பால் உள்ள அன்பும் அச்சமும் குறைந்துவிடும்; அவ்விடமுந் தூய்மைகெடும்; மக்களின் நெருக்கடியும் இடைஞ்சலைத் தரும். வணங்கச் செல்வோர்களில் இவர் உயர்ந்தவர், இவர் தாழ்ந்தவர் என்று காட்டும் வேறுபாடுகள் அடியோடு நீக்கப்படல் வேண்டும். சில கோயில்களில் வரும் ஏராளமான வரும்படியிற் கோயிலின் இன்றியமையாச் செலவுகளுக்குப் பயன்படுத்தப் பட்டனபோக, மிச்சத்தைத் தேவாரபாடசாலைக்கும், தனித்தமிழ்ப பாடசாலைக்கும், சைவசித்தாந்த சபைகட்கும், தமிழ் சைவ சித்தாந்த முணர்ந்த ஆசிரியர்க்கும், தமிழ் நூல் எழுதுவார்க்கும், சைவசித்தாந்த விரிவுரை யாளர்க்கும், கோயிலைச்சார்ந்த சத்திரஞ் சாவடிகட்கும் பயன்படுத்தல் வேண்டும். கோயிலின் வரும்படியைக்கொண்டு பார்ப்பனர்களுக்கு மட்டும் உணவு கொடுத்தலும், ஆரியவேதபாடசலை அமைத்தலும், ஆங்கிலப்பள்ளிக்கூடங்கட்குப் பொருளுதவி செய்தலும் அடியோடு நீக்கப்படல் வேண்டும். தமிழ் மொழிச் சீர்திருத்தம் இத் தென்றமிழ்நாட்டிலுள்ள நம்மனோர்க்கு உயிர்போற் சிறந்ததாகிய தமிழ்மொழியானது பல்லாயிர ஆண்டுகளாக உயிரோடு உலவி வரும் சிறப்புடையது. ஆரியம் முதலான பிற மொழிகளைப்போல் இறவாதது. ஆரியத்திலுள்ள கட்டுக் கதைகளைப்போல்வன சிறிதும் இல்லாதது. இயற்கைப் பொருள்களையும் மக்களின் அன்பு அருள் ஒழுக்கங்களையும் கடவுளையும் அடியார் வரலாறுகளையும் பாடின உண்மை நூல்களே நிரம்பி உள்ளது. சாதி வேற்றுமையினையும், ஒரு சாதியை உயர்த்தி ஏனைப் பலசாதிகளைத் தாழ்த்தி முறை யில்லாத விதிகளை வகுத்த ஆரிய நூல்களைப் போன்ற முறையற்ற நூல்கள் சிறிதும் இல்லாதது. கடவுளின் அருளைப் பெறுதற்கும், வாழ்க்கையின் நலங்களை அடைதற்கும், எல்லா மக்களும் ஒத்த உரிமை உடையரென வற்புறுத்தும் `திருக்குறள், `பெரியபுராணம் போன்ற உயர்ந்த ஒழுக்கநூல்களையே உடையது. ஆரியத்திலுள்ள கட்டு கதைகள் மலிந்த புராண நூல்கள் சிறிதும் இல்லாமற் கடவுள் நிலையினையும் உயிர்கள் நிலையினையும் நுணுக்கமாக ஆராயும் `சிவஞான போதம் போன்ற உயர்ந்த அறிவு நூல்களையே உடையது. இத்துணைச் சிறந்ததாகிய இத்தமிழ் மொழி எத்தகைய நுண்ணிய உயர்ந்த ஆழ்ந்த கருத்துக்களையும் தெரிவித்தற்கு இயைந்த சொல்வள முடைய தாகலின், ஆரியம், ஆங்கலம் முதலான பிறமொழிச் சொற்களை இதன்கட் புகுத்தாமல் இதனையும் இதன் நூல்களையும் எல்லார்க்கும் தனிமையிற் கற்பித்தல் இன்றியமையாததாகும். தமிழ்நாட்டிற் செல்வர்களாயிருப்பவர்களும் பிறருந் தமிழ்மொழிப் பயிற்சிக்கும் தமிழ்க்கல்லூரிகள் அமைப்பதற்கும் பொருளுதவி செய்யவேண்டுமே யல்லாமல், இவற்றைவிடுத்து ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிப்பயிற்சிக்கும் அதற்குரிய கல்லூரிகட்குமே பொருளுதவிசெய்தல் நன்றாகாது. இத்தமிழ் நாட்டு மக்களெல்லாரும் தமக்குரிய தாய்மொழி யிலேயே எளிதாகக் கல்வி கற்பிக்கப் படல் வேண்டும். ஆங்கிலம் முதலிய அயல்மொழிகளிலுள்ள இயற்கைப் பொருள் நூல்களையும் உயிர்நூல்களையும் கடவுள் நூல்களையும் தமிழில் மிகுதியாக மொழி பெயர்த்து அவற்றைப் பயிலும்படி செய்தல் வேண்டும். சைவ மடத்தின் தலைவர்கள், அரசர்களுக்குள்ள பொருள்களிலும் மிகுதியான பொருள்களை வைத்துக்கொண்டு பாவமான பல துறைகளிலும் அவற்றைப் பாழ்படுத்தி வருகின்றார்கள். சைவசித்தாந்தமுந் தமிழும் நன்குணர்ந்த அறிஞர்களோ தமது வாழ்க்கைக்கு வேண்டும் செலவுக்குத் தக்கவருவாய் இன்றிப் பெரிதுந் துன்புறுகின்றார்கள். இவ் அறிஞர்கள் மிக இடர்ப்பட்டு எழுதி வெளியிடும் நூல்களின் செலவுக்குக் கூடப் பொருளுதவி செய்வார் எவரும் இல்லாமையின் அவர்கள் படுந்துன்பங்களுக்கு ஓர் அளவேஇல்லை. ஆதலாற், சைவ மடங்களின் பொருள்களை இத்தகைய அறிஞர்க்கும், சைவ சித்தாந்தக் கல்லூரிகட்கும், தமிழ்க் கல்லூரிகட்கும் மிகுதியாய்க்கொடுத்துப் பயன்படுத்தல் வேண்டும். இவ் இந்தியநாட்டின் அரசினை நடத்துதற்கு உதவியாய் நிற்பாரிற் பெரும்பாலார் ஆரியமுறையைத் தழுவிய பார்ப்பனராயும் அவர் சொல்வழி நடப்பவராயும் இருத்தலால், சைவ சமய வளர்ச்சிக்குந் தமிழ் வளர்ச்சிக்குந் தமிழ் உணர்ந்தார் செலவிற்கும் அரசினரிடமிருந்து உதவிபெறுதல் இயலாதா யிருக்கின்றது. இதனை உணர்ந்தாவது தமிழ்நாட்டு மன்னர்களும் சிற்றரசர்களும் சைவசித்தாந்த உணர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் தமது பொருளைச் செலவுசெய்தல் வேண்டும். ஆங்கில அரசினராற் போற்றி வளர்க்கப்பட்ட ஆங்கில மொழிப் பயிற்சிக்கே இவர்கள் தம்பொருளைச் செலவுசெய்தல் சிறிதும் பயன் தராததாகும். இனிச், சைவ அவைகளும் தமிழ்க்கழகங்களும் வைத்து நடத்துவோர், தம்முடைய கழகக்கொண்டாட்டங்களுக்குச் சைவமும் தமிழும் நன்குணர்ந்த அறிஞர்களையே வருவித்து அவற்றை நடத்துதல்வேண்டும். வெறும்பட்டங்கள் வாங்கினவர் களையும் ஆங்கிலம் மட்டும் உணர்ந்தாரையும் வருவித்து ஆரவாரம் செய்தல் பயன்படாது. தமிழ் அறிஞர்களை வருவிப்போர் அவர்கட்குத் தக்கபடி பொருளுதவி செய்தல்வேண்டும். இனித் திங்கள் இதழ், கிழமை இதழ், நாள் இதழ் நடத்துவோர் தம்முடைய இதழ்கட்குக் கட்டுரைகள் எழுதுந் தமிழ் அறிஞர்க்குத் தக்கபடி பொருளுதவி செய்தல் வேண்டுமே யல்லாமல்; அவர்களை வறிதே துன்புறுத்தி அவர்கள்பால் வேலைவாங்குவது நன்றாகாது. தமிழ்கற்றவர்கட்கு எல்லாவகையிலும் பொருளுதவி செய்து அவர்களைச் சிறக்கவைத்தால்தான் இந்நாடு முன்னேற்றம் அடையும். இவர்களைச் சிறக்க வையாமல், வேறு துறைகளில் எவ்வளவு செலவு செய்தாலும் இந்நாடு முன்னேற்றம் அடையாது. இதனை எல்லாருங் கருத்திற் பதித்தல் வேண்டும். மக்கட் கூட்டச் சீர்திருத்தம் இப்போது தமிழ்நாட்டிலுள்ள தமிழ்மக்களிற் பெரும் பாலார் எல்லாம் வல்ல ஒருதெய்வத்தை வணங்காமல், இறந்து போன மக்களின் ஆவிகளையும், பலபேய்களையும் இவைபோன்ற வேறுசில சிறு தெய்வங்களையும் வணங்கி, அவற்றுக்காகப் பல கோடிக்கணக்கான கோழிகளையும் ஆடுகளையும் வெட்டிப் பலியிடுகின்றார்கள். இக்கொடிய செயலை அவர்கள் அறவே விடுமாறு செய்து, சிவம் அல்லது திருமால் என்னும் ஒரு தெய்வத்தையே வணங்கும்படி செய்தல் வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள மக்கள் ஊன்தின்பவரும் ஊன்தின்னாத சைவரும் என்னும் இரு பெரும்பிரிவில் நின்றாற் போதும். சைவரிலேயே பல வகுப்புகளும், அங்ஙனமே ஊன்தின்பவர்களிற் பலப் பல வகுப்புகளும் இருத்தல், பொருளற்ற வேற்றுமையாய் ஓயாத சாதிச்சண்டைகளை உண்டாக்குவதாய் இருக்கின்றது. பொருளற்ற இவ்வேறுபாடுகளை முற்றும் ஒழிப்பதற்கு எல்லாரும் பெருமுயற்சி செய்தல்வேண்டும். ஊன் தின்னும் வகுப்பினரிலும் அருளொழுக்க முடைய ராய்ச் சைவ உணவுகொண்டு சிவத்தையே வணங்கும் அன்பு மிகுந்து தூயராய் வருவாரைச் சைவராயிருப்பவர்கள் தம்முடன் சேர்த்துககொண்டு அவர்களோடு ஏதெரு வேறுபாடு மின்றி உண்ணல் கலத்தல்களைச் செய்தல்வேண்டும். கல்வியிலும் நுண்ணறிவிலும் சிவநேய அடியார் நேயங்களிலும் அருளொழுக்கத்திலும் சிறந்தார்க்கே உயர்வுகொடுக்க வேண்டுமேயல்லாமல் வெறும் பிறப்புப் பற்றி இவ்வியல்புகள் இல்லார்க்கு உயர்வுகொடுத்தல் ஆகாது. என்றாலும், எவரையும் பகையாமல் அவரவர்க்கு வேண்டு முதவிசெய்து, எல்லாரோடும் அன்பினால் அளவளாவுதல்வேண்டும். சத்திரஞ் சாவடிகளிலும் சிறப்பு நாட்களிலும், பிறப்பால் உயர்ந்தவரென்று சொல்லிக் கொள்ளும் ஒருவகுப்பினர்க்கே உணவுகொடுத்தல் பொருள் கொடுத்தல் முதலிய அறங்களைக் குருட்டுத் தனமாய்ச் செய்கின்றார்கள். இதுவும் அறவே தொலைக்கப்படுதல் வேண்டும். உயர்வு தாழ்வு கருதாது அறஞ் செய்யத் தக்கார் எவரைக்காணினும் அவர்க்கு அறஞ் செய்தலே தக்கது. மாணிக்கவாசகர் அப்பர் சம்பந்தர் சுந்தரர் முதலான நம் சமயாசிரியர்கள் பௌத்த சமணமதங்களில் இருந்து சைவ சமயம் தழுவவிரும்பினாரை அங்ஙனம் சைவ சமயத்திற் சேர்த்து அதனைப் பரவச்செய்திருக்கின்றார்களாதலால், நம் ஆசிரியர் காட்டிய அந் நன்முறையைக் கடைப்பிடித்து நாமும் அயற் சமயத்திலிருந்து வருவாரை நம்முடன் சேர்த்துக்கொண்டு எவ்வகை வேறுபாடுமின்றி அளவளாவுதல் வேண்டும். இவர் தீண்டத்தக்கார் இவர் தீண்டத்தக்காதவர் என்னும் போலி வேறுபாடுகளை அறவே ஒழித்துக் கோயில்களிலும் கல்விச்சாலைகளிலும் எல்லார்க்கும் ஒத்த உரிமை கொடுத்தல் வேண்டும். இதற்கு இன்றியமையாதனவான சைவ உணவு எடுத்தல், குளித்து முழுகித் துப்புரவாய் இருத்தல், நோய்க்கு இடங் கொடாமை முதலான நலம் பேணும் முறைகளை எல்லாரும் உணர்ந்து நடக்கும்படி அவற்றைத் துண்டுத் தாள்களிலும் விரிவுரைகளிலும் ஆங்காங்குப் பரவச்செய்தல் வேண்டும். கல்வியிலும் உடம்புநலத்திலும் நல்லொழுக்கத்திலும் மேன்மேல் உயர்வதற்குப் பெருந்தடையாய் உள்ள சிறுபருவ மணத்தை அறவே ஒழித்தல் வேண்டும். பெண்மக்களுக்கு இருபதாண்டும் ஆண்மக்களுக்கு இருபத்தைந்தாண்டும் நிரம்பும்முன் அவர்களை செய்வித்தல் ஆகாது. அங்ஙனம் மணஞ்செய்யுமிடத்தும், ஒருவரை ஒருவர் அன்புபாராட்டுதல் அறிந்து அதன்பின் அவர்களை மணம் பொருத்தல் வேண்டும். ஆணையாவது பெண்ணையாவது ஆடு மாடுகளைப்போல் விலை கொடுத்து வாங்குங் கொடியவழக்கத்தை வேரோடு களைவதற்கு எல்லாரும் மடிகட்டி நிற்றல்வேண்டும். ஏனென்றால் அன்பில்லாத வாழ்க்கையால் வருந்தீமைகள் அளவில்லாத வைகளாய் இருக்கின்றன. அன்பில்லாத சேர்க்கையிற் பிறக்கும் பிள்ளைகள் குறுகிய வாழ்நாளும் பல தீயதன்மைகளும் உடையராய் இருக்கின்றனர். அன்பு வளர்ச்சிக்கு ஏதுவாக ஆண்மக்களும் பெண்மக்களுங் கள்ளங்கவடின்றி நடமாடச் செய்தல் வேண்டும். பெண்மக்களைக் கல்வியிலும் நன் முறையிலும் பழகவிடாமல், மணங்கூடும்வரையில் அவர்களை அறைகளில் அடைத்து வைப்பது பெருந்தீமைகளை விளைவிக் கின்றது. பெண்மக்களைப் பெரும்பாலுந் தமிழ்முதலிய தாய்மொழிக் கல்லூரியிலேயே கல்வி பயிற்று வித்தல் வேண்டும். உணவமைத்தல் இல்லறம் நடப்பித்தல் குழந்தைகளைப் பாதுகாத்தல் முதலிய முறைகளில் தேர்ச்சிபெறவேண்டுவது பெண்மக்களுக்கு இன்றியமையாததாகும். ஆண்மக்கள் தாய்மொழியோடு மற்ற மொழிகளையும் நன்கு பயிலச் செய்தல் வேண்டும். முப்பதாண்டுகட்கு உட்பட்ட பெண்கள் கணவனை இழந்து விடுவார்களானால், அவர்களைத் திரும்ப மணஞ்செய்து கொடுத்தல்வேண்டும். ஆண்மக்களில் நாற்பதாண்டுக்கு மேற்பட்டவர்கள் இளம்பெண்களை மணஞ்செய்தல் ஆகாது. அப்படிச்செய்ய முந்துகின்றவர்களை எல்லாவகையாலும் தடை செய்தல் வேண்டும். நாற்பதாண்டுக்கு மேற்பட்ட ஆண்பாலார் மணஞ்செய்துகொள்ள வேண்டுவார்களானால் தம் ஆண்டுக்கு ஏறக்குறைய ஒத்த கைம்பெண்களையே அவர்கள் மணஞ்செய்து கொள்ளும்படி தூண்டுதல் வேண்டும். தமிழ்மக்களிற் பெரும்பாலார் ஒருவர்பாலுள்ள குற்றங்களை மற்றவர் எடுத்துப் பேசுபவராய்ப் பகைமையையும் மனவருத்தத்தையும் பரவச்செய்து வருகின்றார்கள். இத்தீய பழக்கத்தை ஒழித்தால் அன்றித் தமிழ்மக்கள் முன்னேற்ற மடைவது சிறிதும் முடியாது. ஒருவர்பாலுள்ள குற்றங்களை மறைத்து அவர்பாலுள்ள நலங்களை எடுத்துப்பேசுவதற்கு எல்லாரும் விடாப்பிடியாய்ப் பழகுதல் வேண்டும். ஒவ்வொரு வரும் தங்கள் தங்களால் இயன்ற உதவியை மற்றவர்களுக்கு மனமாரச்செய்து, அவர்களை மேன் மேல் உயர்த்திவிடுதல் வேண்டும். தாம்செய்யும் உதவிக்குக் கைம்மாறாவதொன்றை எதிர்பார்த்திருத்தல் ஆகாது. அப்போதுதான் நம்முடைய மக்கள் உண்மையான முன்னேற்றத்தை அடைவார்கள். பின்னிணைப்பு - தமிழ்மலை - இளங்குமரனார் 1. குயிலிசை இயற்கைச் சூழல் : அழகிய சிறிய மாளிகை; அதனைச் சுற்றி ஒரு சிறு பூங்கா; புல்வெளி, பூஞ்செடி, பழமரம், நிழல் மரம்; ஊடே செல்லும் நடைவழி; இத்தகைய மனங்கவர் சூழல்! பதின்மூன்று அகவையுடைய ஓர் இளங்குயில்; அக்குயிலைத் தமிழ் செய்த தவத்தால் தந்த தந்தையார்! இருவரும் புல்வெளியின் ஊடேயமைந்த நடைபாதையில் உலாவிக்கொண்டே நூல் ஓதுகின்றனர்; உரையாடுகின்றனர்; இடை இடையே இசைக் கின்றனர். இன்னிசை : தந்தையார் இசையில் இளங்குயில் தோய்கின்றது. தந்தையின் குரலிசை தேனில் தோய்த்தெடுத்த பலாச் சுளைபோல் இனியது அதனையும் வெல்ல வல்லது இளங்குயிலின் குரலிசை; யாழும் குழலும் குயிலும் திறை செலுத்துமாம்! பண்ணென்னாம் பாடற்கு இயைபின்றேல் என்பது வள்ளுவம்; பண்ணிசையுடன் பாடற்பொருளும் உணர்ந்து ஓதினால் அன்றோ உள்ளம் தளிர்க்கும்! உயிரும் தளிர்க்கும்! அவ்வாறு தளிர்க்கப் பாடவல்ல தந்தையும் மகளும் அவர்கள். தந்தையார் வள்ளலார் பாடிய பாடலொன்றை மெல்லென இசைக்கிறார்! அம் மெல்லியல் குயிலும் மெல்லிதழ் அசையமிழற்று கின்றது. அப்பாடல்: பெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுதாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந்தாலும் உயிரை மேவிய உடல்மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும் நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும் நமச்சி வாயத்தை நான்மற வேனே. என்பது. ஒரு சொல் : ஓரியக்கம் : இசைப்பாகாக வடித்த தந்தை முதலடியை மீண்டும் இசைத்து உற்ற தேகத்தை என்று சொல்லிச் சற்றே தயங்கினார். தந்தை முகத்தை நோக்கினார் இளஞ் செல்வி குறிப்பில் குறிப்பு உணரவல்ல தந்தையார், நீலா (இளங்குயிலின் பெயர் நீலாம்பிகை) வள்ளலார் பாடிய இவ் வளமான பாடலில் தேகம் என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. இது வடசொல்; இவ்விடத்தில் யாக்கை என்னும் தென் சொல்லைப் பெய்திருந்தால் இன்னும் எத்தகு சுவையாகவும் நயமாகவும் இருந்திருக்கும் என்றார். அப்பா! வடசொல் தமிழில் புகுவதால் சுவையும் நயமும் குறையுமா அப்பா? சுவையும் நயமும் குறைவது மட்டுமில்லை. வழக்கில் உள்ள தென் சொற்களும் படிப்படியாய் வழக்கில் இருந்து நீங்கிப்போகும். அதனால் காலவெள்ளத்தில் மறைந்து வழக்கற்ற சொற்களாகவும் போய்விடும். அவ்விடத்தில் வேண்டாத வேற்றுச் சொற்கள் புகுந்துவிடும். அதனால் வேண்டியதை இழப்பதுடன் வேண்டாததை ஏற்கும்படியான இருமடங்குக் கேடும் உண்டாகும் அப்பா! அப்படியானால் நாம் வடமொழி முதலிய வேற்று மொழிச் சொற்கள் கலவாமல் பேசவும் எழுதவும் உறுதி கொள்ளலாமே! அது, நம் மொழிக்காவல் ஆகுமே! ஆம் குழந்தாய்! என்னுள் ஆழமாக அமிழ்ந்து கிடந்த செய்தி இது; உன் வழியாக வெளிப்படுகின்றது. ešyJ; ï‹W Kjš e« vG¤âY« ng¢áY« ãwbkhÊ¡ fy¥ãšyhj fil¥ão bfhŸnth«.”- தந்தையும் மகளும் தேர்ந்து தெளிந்து எடுத்த முடிவு இது. இதுவே தனித்தமிழ் இயக்கம் தோன்றிய வரலாறு ஆகும். உறுப்பை வெட்டி ஓட்டல் : தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுலித்த தந்தையும், மகளும் தவத்திரு மறைமலையடிகளாரும் நீலாம்பிகையும் ஆவர். தோன்றிய இடம் மறைமலையடிகள் வாழ்ந்த வளமனையாய் இருந்து, இந்நாளில் மறைமலையடிகள் கலைமன்ற மாளிகை யாய்த் திகழ்வதாகும். இது பல்லவ புரம் ஆகிய பல்லாவரத்தில் உள்ளது. இவ்வியக்கம் தோன்றிய ஆண்டு 1916. அப்பொழுது அடிகளார்க்கு அகவை நாற்பது. நாற்பத்து ஐந்தாம் அகவையிலே எழுதிய அறிவுரைக் கொத்து என்னும் நூலிலே. தமிழிற் பிறமொழிக் கலப்பு, தனித்தமிழ் மாட்சி என்னும் கட்டுரைகளை வரைந்தார் அடிகளார். தனித்தமிழும் கலப்புத் தமிழும் என்றொரு கட்டுரையைச் செந்தமிழ்ச் செல்வியில் எழுதினார். இளங்குயில் நீலாவோ, புலத்துறை முற்றியபோதில் தனித்தமிழ்க் கட்டுரைகள் என்னும் நூலும், வட சொல் தமிழ் அகர வரிசை என்னும் நூலும் ஆக்கினார். தனித் தமிழ் பற்றிய அடிகளார் குறிப்புகளுள் சில : இயற்கைச் சொற்களால் அமைந்ததாகிய தமிழிற் பிற சொற்களைப் புகுத்துதல் எதுபோல் இருக்கிறது என்றால், எல்லா உறுப்புகளும் அமைந்த அழகியதோர் உடம்பில் உள்ள உறுப்பு களை வெட்டி எரித்துவிட்டு வேறு மண்ணாலும் மரத்தாலும் செயற்கையாக அவ் உறுப்புகள் போற்செய்து அவற்றை அதன் கண் ஓட்ட வைத்துப் பார்த்தலுக்கே ஒப்பாய் இருக்கின்றது. மயிர், குஞ்சி, கூந்தல் முதலிய தமிழ்ச் சொற்களை விடுத்து ரோமம், சரீரம், சிரசு. வதனம் என்பவற்றையும், கண், காது, செவி, மூக்கு என்பற்றுக்கு நயனம் கர்ணம், நாசி என்பவற்றையும், மிடறு, கழுத்து என்பவற்றுக்கு மாறாகக் கண்டம் என்னும் சொல்லையும், தோள், கை முதலியன இருக்க புஜம் கரம் என்பவற்றையும், வயிறு, அகடு இருக்க உகரம் குக்ஷி என்பவற்றையும், கால், அடி என்னும் சொற்களுக்குப் பதம் பாதம் என்பன வற்றையும் கொண்டு வந்து நுழைத்தல் அவ்வத்தமிழ்ச் சொற்களாகி ணய உறுப்புகளை வெட்டி எறிந்து விட்டு அவை போன்ற ஏனைமொழிச் சொற்களைக் கொணர்ந்து அத்தமிழ் உடம்பின் கண் ஒட்டவிடுதலைப் போல்வது அன்றோ! பொருள்களை, வதுக்கள் என்று சொல்வது எதற்கு? ஒளியைப் பிரகாசம் என்றும், ஓசையைச் சப்தம் என்றும், சுவையை ருசி என்றும், மணத்தை வாசனை என்றும், தித்திப்பு, இனிப்பை மதுரம் என்றும், தொடுதல், உறுதலை பர்சம் என்றும் கல்வியை வித்தை என்றும், தண்ணீர், சோறு, உணவு என்பனவற்றை ஜலம் அந்நம் ஆகாரம் என்றும், ஆடையை வதிரம் என்றும், கட்டாயம் என்பதை அவயம் என்றும், தாய், தந்தை, மகன், மகள், உறவினரை மாதா, பிதா, புத்ரன், புத்ரி, பந்துக்கள் என்றும், துன்பம், கேடு, குடும்பம் என்பவற்றைக் கஷ்டம், நஷ்டம் சம்ஸாரம் என்றும், தலைமுழுக்கு, வழிபாடு, இளைப்பு, தூக்கம் முதலியவைகளை நாநம், பூஜை, ஆயாசம் நித்திரை என்றும், முயற்சி, ஊழ்வினை, உயிர், சிவம், கடவுள் என்பவற்றைப் பிரயத்நம், விதி, ஆத்மா, ஈசன், பிரமம் என்றும், நினைத்தல், எண்ணல், சொல்லல் என்பவற்றை ஞாபகம், பாவநை, வசனித்தல் என்றும், தூய தமிழ்ச் சொற்களை ஒழித்து வடசொற்களைக் கொண்டு வந்து புகுத்தித் தனித்தமிழ்ச் சொற்களை வழங்காமல் தொலைப்பது தானா நமது அருமைச் செந்தமிழ் மொழியை வளர்ப்பது? அறிவுடையீர்! கூறுமின்கள்! தனித்தமிழ் இயக்கம் கண்ட அடிகளார் செயலைக் கலிகாலக் கொடுமை என்று வெறுத்துப் பழித்தாரும் இருந்தனர். அவர்களை நோக்கி, பண்டு தொடங்கிப் புனிதமாய் ஓங்கி நிற்கும் தம் தனித்தமிழ்த் தாயைப் பிறமொழிச் சொற்கள் என்னும் கோடரியினுள் நுழைந்து கொண்டு, இத் தமிழ்ப் புதல்வர் வெட்டிச் சாய்க்க முயல்வது தான் கலிகாலக் கொடுமை! இத் தீவினைச் செயலைப் புரியும் இவர் தம்மைத் தடுத்து எம் தமிழ்த் தாயைப் பாதுகாக்க முன் நிற்கும் எம் போல்வாரது நல்வினைச் செயல் ஒரு காலும் கலிகாலக் கொடுமை ஆகாது என்று உணர் மின்கள் நடுநிலையுடையீர் என்று மறுத்தெழுதினார் அடிகள். குயிலிசை கேட்ட நாம், பள்ளியெழுச்சி பார்ப்போம். 2. பள்ளி எழுச்சி நாகைச்சிறப்பு : கற்றார் பயில் கடல் நாகை எனப்பாடு புகழ் பெற்றது நாகப்பட்டினம். அவ்வூர்க் குழந்தைகளும் அறிவாற்றல் மிக்கோராக விளங்கினர் என்பதற்கு ஒரு செய்தி கூறப்படுகின்றது: வசைபாடக் காளமேகம் என்று சொல்லப்படும் புலவர், ஒருகால் அவ்வூர்க்குச் சென்றார். அவர்க்குப் பசியாயிற்று! சோறு விற்குமிடம் எது என்று தெரிந்து கொள்ள விரும்பினார். அவர் வந்த தெருவில் சில சிறுவர்கள், பாக்கு வைத்துத் தெறித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் புலவர் சோறு எங்கே விக்கும்? என்றார். விக்கும் என்ற சொல்லின் வழுவை அறிந்து கொண்ட சிறுவர்களுள் ஒருவன் இது தெரியாதா? சோறு தொண்டைக்குள் விக்கும் என்றான்! உடனிருந்த சிறுவர்கள் அனைவரும் அவன் செய்த கேலியைப் புரிந்து கொண்டு, பெருஞ் சிரிப்புச் சிரித்தனர். பசிக்கடுமை, சிறுவன் மறுமொழி, சிறுவர்கள் நகைப்பு எல்லாம் சேர்ந்தால் வசைபாடும் காளமேகத்தை வாளா விட்டுவிடுமா? பாக்குத் தெறித்துவிளை யாடுசிறு பாலகர்க்கு நாக்கு என்ற அளவில் நினைத்து. ஆங்குக் கிடந்த கரித்துண்டு ஒன்றை எடுத்து, இவ்வடியை ஒரு சுவரில் எழுதினார். பின்னர்ப் பசியாறிக் கொண்டு வந்து வசைப்பாட்டை முடிக்கலாம் என்னும் எண்ணத்துடன் சென்றார்! கடுகடுத்த காளமேகம் கரித்துண்டால் சுவரில் எழுதியதைப் படித்துப்பார்த்த சிறுவருள் ஒருவன், அவர் வைதுதான் பாடுவார்! அதற்கு இடம்வைக்காமல் செய்து விடவேண்டும் என்று துணிந்து அக் கரித்துண்டை எடுத்து, நாக்குத் தமிழ்விளங்க நாகேசா என இரு சீர்களை எழுதிவிட்டான்! காளமேகம் அசைபோட்டுக் கொண்டு வந்தார். நாக்குத் தெறித்துவிழ நாகேசா என்று தொடர வேண்டும் என்பது அவர் வேட்கை. சுவரில் உள்ள புதுத் தொடரைக் கண்டார்! ஆசு கவி என்னும் தம்மை, ஆசு கவியாக்கி விட்ட அவ்வூர்க் குழந்தைகளை வெறுக்க மனம் வராமல் தமக்கு உண்டாகிய செருக்குக்கும் சீற்றத்துக்குமே வருந்தினார்! அக்குழந்தைகளை அழைத்து அருகே வைத்துப் பாராட்டினார். இது செவி வழியாக அறியவரும் செய்தி. பெற்றோர் : இந் நாகப்பட்டினத்தை அடுத்துள்ளதோர் ஊர் காடம்பாடி என்பது. அவ்வூரின் புகழ் வாய்ந்தஅறுவை மருத்துவர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் சொக்கநாதர் என்பது; அவர் நாகப் பட்டினத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். அவர்தம் இனிய இயல்பாலும், மருத்துவத் தேர்ச்சியாலும் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்தார். அவர்தம் இனிய வாழ்க்கைத் துணைவியார் சின்னம்மை என்பார். திருக்கழுக்குன்றம் : சொக்கநாதரும் சின்னம்மையும் கருத்தொத்த வாழ்க்கைத் துணையாக இருந்தும், மகப்பேறு வாய்க்கவில்லை. அதுவும் ஓராண்டு ஈராண்டு என்றில்லாமல் நெடுங்காலம் மகப்பேறு வாய்க்கவில்லை. சொக்கநாதருக்கு, அகவை அறுபதைத் தாண்டிற்று; சின்னம்மைக்கு, அகவை நாற்பதைத் தாண்டிற்று. இனி மகப்பேறு வாய்ப்பது அரிதே என்ற நிலைக்கு ஆட்பட்ட போதில், திருக்கழுக் குன்றத்திற்குச் சென்று வேதாசலரையும் சொக்கம்மையையும் வழிபட்டால் மகப்பேறு வாய்க்கும் என்று கேள்விப்பட்டனர். தவப்பிறவி : திருக்கழுக்குன்றம் ஒரு வகையில் தனிச் சிறப்புடையது. மலைமேல் அமைந்த சிவன்கோயில் தமிழ் நாட்டில் அஃதொன்றே என்பது அச் சிறப்பு. அம் மலைமேல் பல்கால் ஏறி இறங்கி வழிபட்டனர். ஒரு மண்டலம் (நாற்பது நாள்) நோன்பு கொண்டு மலையேறி வழிபட்டனர். அவர்கள் நம்பியது வீண்படாமல் சின்னம்மையார் வயிறு வாய்த்தார். உரிய காலத்தில் இடரெதுவும் இல்லாத ஓர் ஆண் மகவு பிறந்தது. அம் மகவுக்கு வேதாசலம் என்னும் பெயரைச் சூட்டினர். நாகை வாழ் சொக்கநாதர் தம் மகவுக்கு வேதாசலம் என்னும் பெயரிட்ட கரணியம் இதனால் விளங்கும். வேதாசலம் பிறந்தநாள் 1876 ஆம் ஆண்டு சூலைத்திங்கள் 15ஆம் நாள் பரணி ஓரை மாலை 6-35 மணியாகும். வேதம் அசலம் என்னும் இரண்டு சொற்களின் சேர்ப்பே வேதாசலம் என்பதும், அவ் வட சொற்கள் இரண்டன் தென் சொற்களே மறைமலை என்பதும் இவண் அறிந்து கொள்ளத் தக்கதாம். பழுத்த புலவர் வழுவையும் திருத்தும் ஆற்றலும், ஆடித் திரியும் பருவத்திலேயே பாடிப் பழகும் திறமும் அமைந்த குழந்தையர் வாழும் அம்மண்ணின் மணம், வேதாசலக் குழந்தையின் வருங்காலத் திறத்திற்கு வைப்பு நிதியாக வாய்த்திருந்தது போலும்! இளமைக் கல்வி : தளர்நடை கொண்டு மழலை பொழிந்த வேதாசலம் பள்ளிப் பருவம் எய்திய நிலையில், நாகப்பட்டினத்தில் சிறந்து விளங்கிய வெசிலியன் மிசன் பள்ளியில் சேர்க்கப்பட்டார். விளையும் பயிர் முளையிலே; விதைக்காய்ப் பிஞ்சிலே என்பது பழமொழி. அவ்வாறே தொடக்கப் பள்ளியில் பயிலும் போதே வேதாசலத்தின் அறிவுக் கூர்மையும் பண்பு நலமும் சிறந்து விளங்கின. பெற்றோர் மகிழவும் ஆசிரியர் பாராட்டவும் பயின்றார். பள்ளியில் வகுப்புத் தலைவன் என்னும் சிறப்பும், கல்வியில் தலை மாணவன் என்னும் தகுதியும் உண்டாயின. வீட்டில் கல்வி : வேதாசலம் தமிழ்க் கல்வியில் தனிச்சிறப்புக் கொண்டி ருந்தார். அதனைப் போலவே ஆங்கிலக் கல்வியிலும் கருத்து ஊன்றினார். ஆங்கிலக் கல்விக்கு ஆங்குக் கிடைத்த வாய்ப்புப் போதுமானதாக இருந்தது. ஆனால் தமிழ்ப் பாடத்தின் அளவு, வேதாசலத்தின் ஆர்வத்திற்கு ஈடுதருவதாக அமையவில்லை! யானைப் பசிக்குச் சோளப் பொரி என்பது போலவே இருந்தது. அதனால் பள்ளிக்கூடத்திற்கு வெளியே தமிழ்க்கல்வி பெறுதற்கு உரிய வாய்ப்பைத் தேடினார். தமக்குக் கிடைக்கும் நூல்களை வீட்டில் இருந்து ஓதவும் செய்தார். தந்தையார் மறைவு : வேதாசலத்தின் அகவை 12; பள்ளிக்குச் சென்று ஆறு ஆண்டுகளே ஆகியிருந்தன. உயர்நிலைப்பள்ளி முதல் வகுப்பில் கால்வைக்கும் போதே அக் குடும்பத்தில் வாழ்வாய் வளமாய் வைப்பாய் இருந்த சொக்கநாதர் என்னும் பழமரம் கால் சாய்ந்து விட்டது! அடியற்ற ஆலமரத்தை வீழ்து தாங்குவதுபோல் சின்னம்மை தாங்கினார்! அதனால், தம் ஒரே ஒரு மகனுக்குத் தந்தையோடு கல்விபோம் என்பதைப் பொய்யாக்குவதுபோல், தாய் சின்னம்மையார் தந்தை கடமையையும் சேர்த்துச் செய்தார். குடும்ப நிலையை உணர்ந்து மேலும் படிப்பிலே அழுத்தமாக ஊன்றினார் வேதாசலம். ஆயினும், குடும்பத்தின் வறுமையும் சூழலும் அழுத்திய அழுத்தத்தால் ஒன்பதாம் வகுப்புக் கல்வியுடன் பள்ளிக் கல்வி முடிந்தது! வெளியுலகில் பெறும் கல்விக்குக் காலம் என்ன: இடம் என்ன! அளவென்ன! பள்ளியெழுச்சி கண்ட நாம் வேதாசலம் தமிழ்த் தேனீ ஆதலைக் காண்போம். வேதாசலம் மறைமலையான வரலாற்றை நாம் அறிந்து கொண்டதால், இனி, மறைமலை என்றே காண்போம்! அடிகளார் எனச் சுருக்கமாகவும் உரைப்போம். 3. தமிழ்த் தேனீ தேனீ : கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி என்பது இறையனார் பாடிய குறுந்தொகைப் பாட்டு. தும்பி சேர்கீரனார் என்பது சங்கப்புலவர் ஒருவர் பெயர். அவர் பெயர் தும்பைச் சொகினனார் என ஆய்வுத் தும்பி ஒருவர் கூறுவார். எத்தனை எத்தனையோ கல் தொலைவு சென்றும் தேன் எடுத்து வருதல் தேனீக்கு இயற்கை; அவ்வாறு எடுத்த தேனையும், தன் இனத்துக்கும் உலகுக்கும் பயன்படுமாறு கூட்டில் சேர்த்து வைத்தலும் தேனீக்கு இயற்கை. அவ்வாறே தேர்ந்த அறிஞர்களும் நூல்களைத் தேடிக் கற்பதுடன், கற்பார்க்கு நூல்கள் ஆக்கிப் படைத்தும் அருந் தொண்டாற்றுகின்றனர். அவ் வகையில் கற்பன கற்றுப், பிறர் கற்றுத் தெளிய நற்றமிழ் நூல்கள் பலப்பல துறைகளில் ஆக்கிப் படைத்தவர் நிறை மலையாம் மறைமலையார்! பொதுநிலைக் கல்வி : பள்ளிக் கல்வி என்பது திட்டப்படுத்தப்பட்ட ஓர் அளவு உடையது. தரத்தில் குறைந்த மாணவர்களுக்கும் தரத்தில் ஒத்த மாணவர்களுக்கும் கற்கும் வகையால் ஒரு பொது அளவுத் திட்டம் கொண்டது; அப்பொது அளவு, சிறப்பு முயற்சியும் ஆர்வம் பெருக்கும் உடைய மாணவர்க்குப் போதுமான அளவினதாக அமைதல் இல்லை. அப்படி அமைந்தால் முன்னுரைத்த இருவகை மாணவரும் கல்வியை வேம்பாய் எண்ணிக் கை விட்டு விடவே செய்வர்! கல்வியின் மேல் தீராக் காதல் கொண்ட அடிகளார் போன்றவர்க்ப் பள்ளிக் கல்வி போதாது எனினும் பள்ளிக்கு வெளியே வாய்க்கும் விரிவுக் கல்வியைப் பெற்றுக் கொள்ளத் தடையில்லையே! உரிய கல்வியைக் கற்கவே வெளியேயும் தனிப்பாடம் படிக்க வேண்டிய நிலையர்க்குப் பாடச்சுமை மிகுதியானால் என் செய்வர்? படிப்புக்கே முற்றிலும் முழுக்கத் தானே போட்டு விடுவர்? நாராயணசாமி : நாகப்பட்டினத்தில் அந்நாளில், மறைமலையாரின் நற்பேற்றால் வாய்த்தவர் போல் நாராயணசாமி என்பார் ஒருவர் இருந்தார். அவர் பொத்தக வணிகர்; ஆனால் அவர் வணிகர் மட்டும் அல்லர்; வண்டமிழ்ப் புலவர்; பொருள் வாணிகத்திலும் புலமை வாணிகத்தைப் பெருக்கமாகச் செய்துவந்த பெரும் புலவர். அவரைப் பேராசிரியர் எனலும். பேராசிரியர்க்குப் பேராசிரியர் எனலும் தகும். சங்க காலத்தில் விளங்கிய கூலவாணிகர், பொன் வாணிகர், அறுவை வாணிகர் என்னும் புலமையாளர் ஒப்பத் திகழ்ந்த பொத்தக வாணிகர்! நாராயணசாமியார், அந்நாளில் நடமாடும் சுவடிச் சாலை, என்றும், பல்கலைக் குரிசில் என்றும், வாழும் கம்பர் என்றும் பாராட்டப்பட்ட பெரும்புலவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனா ரிடமும், ஐந்திலக்கணம் வல்ல பெரும் புலவர் உறையூர் முத்துவீர உபாத்தியாயரிடமும் கற்றுத் தெளிந்த தேர்ச்சியர். கற்ற தேர்ச்சி இத் தகையதானால் கற்பித்த தேர்ச்சி இதனையும் வெல்ல வல்லதாம். நாடக இலக்கியத் தந்தை என்று பாராட்டப் படும் மனோன்மணீயம் பெ. சுந்தரனார்க்கும் நாகூர்ப் பெரும் பாவலர் வா குலாம் காதிறு நாவலர் அவர்களுக்கும் கற்பித்தவர் இவர் என்னின் இக் கடை வணிகர் தமிழின் தலைவணிகர் என்பதற்கு ஐயமுண்டோ? இளந்தைக் கல்விப் பொழுதிலேயே நாராயண சாமியாரின் புலமைப் புகழைக் கேள்வியுற்றிருந்த மறைமலையார் அவரை அடுத்துக் கற்றார். கலை ஞாயிறு : பதினான்காம் அகவை தொட்டே பள்ளிக் கல்வி நின்றமை யாலும், ஆசிரியரும் வணிகத் தொழிலொடு கற்பிப்பவராகவும் இருந்தமையாலும், அடிகளார் பெரும் பொழுதைத் தனியே கற்றலிலும் செலவிட்டார். ஐயப்பாடுகள் உற்றபோது ஆசான் துணை நாடும் அளவு போதுமானதாக இருந்தமையால் அடிகளார் தம் பதினைந்தாம் அகவை தொட்டு இருபத்தோராம் அகவைக்குள் கற்றுக்கொண்ட ஆறாண்டுக் கல்வி அவரைக் கலை ஞாயிறு என விளங்கச் செய்தது. அவர் அவ்வகவையிற் பெற்ற கல்வியைத் தாம் இயற்றிய திருவொற்றியூர்முருகர் மும்மணிக் கோவை முகப்பில் குறிப்பிடுகிறார் : எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி தொடங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தோம். கலித்தொகை, பத்துப்பாட்டு/ சிலப்பதிகாரம், நாலடி முதுலிய நூல்களிற் பெரும் பகுதிகள் அங்ஙனமே நெட்டுருச் செய்து முடிக்கப்பட்டன. சிவஞானபோதம், சிவஞான சித்தியார் என்னும்நூல்கள் இரண்டும் முழுமையும் நெட்டுருச் செய்து முடிக்கப்பட்டன. இவையேயன்றி நன்னூல் விருத்தி, இறையனார் அகப்பொருள் உரை, தண்டியலங்காரம் முதலான நூல்களும் முன்னமே முழுமையும் நெட்டுருச் செ4ய்து முடிக்கப்பட்டனவாகும். கல்லாடம், சீவகசிந்தாமணி, பெரியபுராணம் என்னும் நூல்களின் சொற்சுவை பொருட்சுவைகளில் பெரிதும் மூழ்கி யிருந்தும் அவற்றிலிருந்தெடுத்துப் பாடஞ் செய்த செய்யுள்கள் மிகுதியாய் இல்லை. என்றாலும், அவற்றின் சொற்பொருள் நயங்கள் எமதுள்ளத்தில் வேரூன்றி நின்றன. இங்ஙனமாக விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப்பருவத்திலேயே எமக்கு வாய்ப்பதாயிற்று என்பதாம் அது. அடிகளார்க்கு இருபத்தோராம் அகவை என்பது 1897 ஆம் ஆண்டாகும். அக் காலத்திற்குள் தொல்காப்பியம் (1847, 1868, 1885), சிலப்பதிகாரம் (1880), சிந்தாமணி (1887), கலித்தொகை (1887), பத்துப்பாட்டு (1889), மணிமேகலை (1894) என்பவை அச்சில் வெளி வந்திருந்தன. புறநானூறும் (1894) வெளிவந்தது. இவை பழந்தமிழ் நூல்கள். திருக்குறள் மூலம் 1812 ஆம் ஆண்டே வெளிவந்தது. உரைப்பதிப்பு 1830 இல் சரவணப் பெருமாள் கவிராயராலும், 1861 இல் ஆறுமுக நாவலராலும் வெளியிடப் பட்டன. அடிகளார் குறிப்பிடும் கல்வி நிலையையும், அக் காலத்தில் அச்சில் வெளிவந்த இந்நூல் தொகுதிகளையும் ஒப்பிட்டு நோக்கினார், அச்சில் வெளிவந்த நூல்களை யெல்லாம் அடிகளார் திறமாகக் கற்றுத் தெளிந்தார் என்பது புலப்படும். ஐங்குறுநூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல் என்பன 1903 முதல் 1918 வரை வெளிவந்தன ஆகலின் தம் இளந்தைக் கல்வியில் இவற்றைச் சுட்டினார் அல்லர் அடிகளார். இவையும் பிறவும் பின்னே கற்றவையாம். மதுரை நாயகம் : ஆசிரியர் நாராயண சாமியாரின் மாணவர்களுள் ஒருவர் மதுரை நாயகம் என்பார். அவர் ஒரு சாலை மாணவர் ஆதலின், மறைமலையார்க்குப் பேரன்பராக விளங்கினார். அவர் திரிசிரபுரம் பெரும்புலவர் மீனாட்சி சுந்தரரின் உறவினர். திருச்சியைச் சேர்ந்த அவர் நாகப்பட்டினத்தின் ஒரு பகுதியான வெளிப்பாளையத்தில் இருந்தார்; மறிப்பர் (அமீனா) என்னும் வேலை பார்த்தார். அகவையால் தந்தையனையார்! அடிகளார் அவரைத் தந்தை யுரிமையராய்க் கொண்டு பழகினார். அவர் அடிகள் கல்விக்கு ஆக்கமும், ஊக்கமும் ஊட்டி வளர்த்தார். வெளிப்பாளையத்தில் திருமாலிய (வைணவ)ப் பேரவை ஒன்று இருந்தது. அவ் வவையில் சொற்பெருக்காற்றிய ஒருவர் மாலியப் பெருமையுரைக்கும் அளவில் நில்லாமல். சிவனியப் பழியும் உரைத்தார். இதனைக் கேட்ட சிவனியப் பெரும் பற்றாளராம் மதுரை நாயகர் அப் பொழிவை மறுத்துரைக்க அவாவினார். சோமசுந்தர நாயகர் : அந்நாளில் சோமசுந்தர நாயகர் என்பார் ஒருவர் சென்னையில் இருந்தார். அவர்தம் சைவ வீறும், பிற சமயக் கொள்கைகளைச் சூறைக்காற்றில் பறக்கும் சருகெனச் சுழற்றி யடிக்கும் திறமும் அறிந்து சேதுநாட்டு வேந்தர் சைவசித்தாந்த சண்டமாருதம் என விருது தந்து விழா எடுத்துப் போற்றினர். அதனால் சைவசித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தர நாயகர் எனச் சமய உலகில் பேருலா வந்து பெரும்புகழ் கொண்டு விளங்கினார். அச்சோமசுந்தரரை மதுரை நாயகம் நாகைக்கு அழைத்துச் சிவனியப் பழியைத் துடைத்துக் கொள்ள விரும்பினார். அவ்வாறு மறுப்புக்காக அழைக்கப்பட்ட சோமசுந்தரர் மறுபடி மறுபடி நாகைக்கு வந்து பொழிந்து சிவப்பயிரை வளர்ப்பாரானார். இது மறைமலையார்க்குக் காலத்தால் வாய்ந்த மழையெனக் கவின் செய்தது. இலக்கிய இலக்கணத் தேர்ச்சி மிக்க அடிகளைச் சிவனியப் பெருந் தேர்ச்சியராகச் செய்தது இப் பொழிவாகும். அன்றியும் அவரை எழுத்துத் துறையில் புகுவித்த பேறும் அதற்கு உண்டு. முருகவேள் : சோமசுந்தர நாயகர் செய்த பொழிவைப் பசித்தவர்க்கு வாய்த்த பல்சுவையுணவென்ன, மறைமலையார் தவறாமல் கேட்டு வந்தார். அதனாற் சிவநெறிச் சீர்மை அவருள்ளத்தில் ஆழப் பதிந்தது. இந் நிலையில் நாயகர் கூறிய ஒரு கருத்தை மறுத்து அந்நாளில் வெளிவந்த சச்சனப் பத்திரிகா என்னும் கிழமைத் தாளில் ஒருவர் கட்டுரை வரைந்தார். அதனைப் படித்த மறைமலையார் மறுப்புக் கட்டுரையாளர் கொண்ட மயக்கவு ணர்வையும் அவர் மறுப்புக் கட்டுரையில் அமைந்த வழுக்களையும், நாயகர் கருத்தின் நயத்தையும் உரைத்து நாகை நீலலோசனி என்னும் இதழில் முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புக்கு மறுப்பு வெளியிட்டார். நீலலோசனிக் கட்டுரையை நாயகர் படித்தார்; கட்டுரையின் நடையும் ஓட்டமும் கருத்துமாட்சியும் அவரை வயப்படுத்தின. அவர் வியப்புற்று அக் கட்டுரையாளரை அறிய அவாவினார். தம் கருத்தை மறுக்கத் துணிந்தாரைத் தாம் அறியாமலே மறுத்து நிலைநாட்டியவர் ஒருவர் உள்ளார் என்றால் அவரை அறிய அவாவுண்டாதல் இயற்கைதானே அதனால், மதுரை நாயகத்திற்கு நாயகர் எழுதினார். அதற்கு விளக்கம் வரைந்தார் நாயகம். அதனால் வேதாசலம் (மறைமலை) என்னும் வளர்பயிரின் பெயர் நாயக முகிலின் நெஞ்சில் பதிவதாயிற்று! பதிவுற்ற சூழல் இது. மீண்டும் ஒருகால் நாகைப்பொழிவுக்கு வந்த நாயகர் மறைமலையைக் காண விரும்பினார். மதுரை நாயகர் மறைமலையை நாயகர்க்கு அறிமுகப்படுத்தினார்! அறிமுகம் வியப்பாயிற்று! திகைப்பாயிற்று! விம்மிதமும் ஆயிற்று! கட்டுரையின் ஆழமென்ன! விரிவென்ன! அதனை எழுதியவர் முதுவர் அல்லாத இவ்விளைஞரா! நரைமுடியாமலே சொல்லால் முறை செய்த கரிகால் வளவனின் மறுவடிவம்தான் இவ் விளைஞரோ என எண்ணினார். தாம் போற்றி வணங்கும் மெய்கண்டாரும் ஞானசம்பந்தரும், குமரகுருபரரும் இப்படித் தான் இளந்தையில் இருந்திருப்பரோ என உள்ளுள் வியந்தார்! வினாக்கள் சிலவற்றை எழுப்பி அவர்தம் புலமை நலம் அறிந்து கொள்ளத் தலைப்பட்ட நிலையில், மறைமலை உடனுக்குடன் வழங்கிய மறுமொழிகள் அவர்தம் கல்விப் பரப்பைக் காட்டுதலால் இவ் விளைஞர் புலமைத்திறம் இந்நாட்டுக்குப் பயன்படுதற்கு வழிகாணுதல் வேண்டும் என்னும் ஓர் எண்ணம் உண்டாயிற்று! அதனால்; உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம். நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார் நாயகர். இயற்றமிழ் வல்ல நாராயணசாமியார் அடிகளுக்கு ஓராசிரியர்! சைவசித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தர நாயகர் மற்றும் ஓராசிரியர்! நுண்மாண் நுழைபுல மறைமலையார்க்குக் கூடிவரும் காலம் தேடிநின்ற வாய்ப்புகள் இவை கட்டுரை வன்மை : மறைமலையார் பள்ளியில் பயின்றுவந்த காலத்திலேயே ஒரு பெரும் வேட்கை கொண்டார். தாம் பயின்ற கிறித்தவப் பள்ளியில் வகுப்பிலும் வெளியிலும் திருக்கோயிலிலுமாக நடத்தப்பெற்று வந்த கிறித்தவ மதக் கருத்துரைகள், வெளியீடுகள் கூட்டங்கள் ஆகியவற்றை உற்று நோக்கினார். அவ்வழிகளில் தாமும் தொண்டு செய்தல் வேண்டுமென உட்கொண்டார். அதனால் தம் மொத்த பள்ளி மாணவர்களைச் சேர்த்துக்கொண்டு, இந்து மதாபிமான சங்கம் என ஓர் அமைம்பை ஏற்படுத்தினார் அதன் வழியாக மாணவர்களுக்குச் சமய அறிவும், மொழியறிவும், உரையாற்றும் திறமும் உண்டாக வழி கண்டார். ஒருவர் எதிர்காலம் எப்படி எப்படியெல்லாம் அமையும் என்பதற்கு முன்னோட்டம் போன்ற செய்திகளுள் ஒன்று ஈது; மற்றொன்று அவ்விளமைப் பருவத்திலேயே மறுப்புக் கட்டுரை எழுதிய அளவுடன் நில்லாமல் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதி, காரைக்காலில் இருந்து வெளிவந்த திராவிட மந்திரி என்னும் கிழமைத் தாளிலும், நாகை நீலலோசனி என்னும் கிழமைத் தாளிலும் வெளியிட்டுக் கட்டுரை வன்மையர் என்னும் பாராட்டுக்கு உரியவராக விளங்கினார். இனிக் கல்வி மணம் பரப்பிய மறைமலையாரின், காதல் மணம் குறித்துக் காண்போம். 4. மணமலர் உடல், உளம் : மறைமலையார் திருமுகம், தாமரை மலர் அன்னது; உடல் பொன்னிறம்; உயரம் 5 அடி; திரண்டதாள் - தோள்; குயில் குரல்! பெண்மையில் பிறங்கும் பண்புகள்! அவர் தம் வாழ்வியலை அவர் தம் அருமை மைந்தர் மறை திருநாவுக்கரசு வடித்தெடுத்து வழங்குகின்றார் : அடிகளின் ஒன்று விட்ட மாமன் மகள் சவுந்தரவல்லி. அவர் நிறம் கறுப்பு; பண்போ கரும்பு; பொருந்திய உருவம்; அடிகளுக்கு மூன்று ஆண்டுகள் இளையவர், சிறு பருவமுதல் அடிகளும் சவுந்திரமும் அன்பு நிறைந்தவர்களாய் ஆடிப்பாடி வளர்ந்தனர். ஆண்டு வளர வளர அவர்களை அறியாமலே அவர் களுக்குள் காதல் வளர்ந்து வந்தது. சவுந்திரத்திற்கு அகவை 13, அடிகளுக்கு அகவை 16. சின்னம்மையார் தம் தனி மகனார்க்குக் கடிமணம் செய்ய நினைத்தார். பெற்றோர் சிலர் தம் சிவந்த அழகான நங்கைமாரை அடிகளுக்கு மணமுடிக்க முன் வந்தனர். அவர்களில் ஒருத்தியைத் தம் மகனுக்கு மணமுடிக்க அன்னையார் முயன்றார். அடிகள் காதலில் முனைந்து நின்று தம் அன்னையின் இசைவைப் பெற்றார். அவ்வளவில் சவுந்திரம் காதல் வென்றது. திருமணம் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்க் காதல் : மறைமலை சவுந்திரம் காதல் வெளிப்படு முன்னர், சின்னம்மையார் தம் குடும்பநிலை கருதித் திருமண முயற்சியில் ஊன்றினார். அடிகள் திருமண முயற்சியைத் தடுத்தார்; திருமணம் செய்துகொள்ள முடியாதெனவும்மறுத்தார்; சின்னம்மையார் பல்கால் மன்றாடினார்; அதன் பின் தாம் வேண்டும் தமிழ் நூல்களை வாங்கித் தருவதாக இருந்தால் திருமணத்திற்கு இசைவதாகக் கூறினார். அம்மையார் நூல்கள் வாங்கித்தர ஒப்பினார்; தமிழ் நூல் பெரும் பட்டியல் ஒன்றை வழங்கினார் மறைமலை. அப்பட்டியலில் கண்ட நூல்களை வாங்க அந்நாளில் முந்நூறு உருபா ஆயிற்றாம்! அதனை வாங்கித் தந்த பின்னரே தம் வாக்குப்படி திருமணத்திற்கு இசைந்தாராம்! மறைமலையின் தனிக்காதல் பெரிதா? தமிழ்க் காதல் பெரிதா? ஒன்றை ஒன்று விஞ்சுவதா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டிய செய்தி இது. சிந்தாமணி : பதினாறாம் அகவையில் திருமணம் கொண்ட மறைமலை பதினெட்டாம் அகவையில் சிந்தாமணி என்னும் மகவுக்குத் தந்தையானார்! சிவநெறிச் செம்மல் மறைமலை! சைவசித்தாந்த சண்டமாருதத்தின் மாணவர் மறைமலை! நம் அருமை மகவுக்கு இட்ட பெயர் சிந்தாமணி! ஆம்! சிந்தாமணியில் மறைமலையார் தோய்ந்த தோய்வின் வெளிப்பாடு இது! இலக்கியம் சமயம் கடந்தது என்பதை மெய்ப்பிக்கும் சான்றுகளுள் ஈதொன்று! வீரசைவத் தோன்றல் சிவப்பிரகாச அடிகளார் தாம் இயற்றிய வெங்கைக் கோவையில், மந்தா கினியணி வேணிப் பிரான் வெங்கை மன்வைநீ கொந்தார் குழல்மணி மேகலை நூனுட்பம் கொள்வ தெங்ஙன் சிந்தா மணியும் திருக்கோ வையுமெழு திக் கொளினும் நந்தா உரையை யெழுதலெவ் வாறு நவின்றருளே எனப் பாடியுள்ள நயம், இலக்கியம் சமயங்கடந்த பார்வைக்குரியது என்பதை நன்கு விளக்கும். அரிசி ஆழாக்கு என்றாலும் அடுப்புக்கல் மூன்று என்பது பழமொழி. மறைமலை ஒரே பிள்ளை. அக்குடும்பத்திற்கு முன்னிருப்பு அன்னையார் மட்டுமே? பின் வருவாய் வேண்டுமே! குந்தித்தின்னின் குன்றும் மாளும் என்பது பழமொழியன்றோ! பேரா. சுந்தரனார் : நாராயணசாமியாரிடம் பயின்ற மாணவருள் ஒருவர் பேராசிரியர் சுந்தரனார் என்பதை முன்னரே அறிவோம்! அவர் இயற்றிய மனோன்மணீயத்தைக் கற்ற மறைமலையார், அந்நூல் நயத்தில் தோய்ந்து நூலாசிரியரைக் காண விரும்பினார். பேராசிரியர் சுந்தரனார் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் மெய்ப்பொருளியல் பேராசிரியராக விளங்கினார். அவர்க்கு, மனோன்மணீய நயம் பற்றியும், தம் ஆசிரியர் பற்றியும், தம்மைப் பற்றியும் செய்திகள் அடங்கிய அகவற்பா ஒன்று எழுதினார். அச் சீட்டுச் செய்யு ளைக் கண்ட பேராசிரியர் மகிழ்ந்தார். தம் ஆசிரியரையும் சீட்டுச் செய்யுள் விடுத்த மறைமலையாரையும் காண விரும்பியவளாய்த் திருவனந்தை வருமாறு வேண்டினார். மேனாள் மாணவர் விருப்பை நிறைவேற்றவும், இந்நாள் மாணவர் நலத்தைக் கருதியும் நாராயணசாமி யார் தம்மாணவருடன் திருவனந்தபுரம் சென்றார். 1895 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் கடைசிக் கிழமையில் ஒருநாள் இது நிகழ்ந்தது. இச் சந்திப்பைப் பற்றி அடிகளார் எழுதியுள்ளதாக அவர் திருமகனார் மறை திருநாவுக்கரசு குறிப்பது : அகவற்பாவில் எழுதிய கடிதத்தைக் கண்டு இவரை ஆண்டில் முதியவராகக் கருதியிருந்த சுந்தரம்பிள்ளை அவர்கள், இவர் மிக இளைஞராய் இருத்தலை நேரில் கண்ட அளவானே பெரிதும் வியப்புற்றுத், தாம் முன் எண்ணியதனை மொழிந்தார். ஒரு கிழமை வரையில் இவர் பிள்ளையவர்களோடு அளவளாவி இருக்கையில் இவர் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை முதலான பழைய சங்கத் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் வல்லுநராயிருத்தலை ஆராய்ந்து பார்த்து இத்துணைச் சிறு பொழுதிலேயே இத்துணை உயர்ந்த நூல்களை இவர் இவ்வாறு பயின்று தெளிந்தமை அரிதரிது எனப்புகன்று அங்ஙனம் தாம் பாராட்டியதற்கு அடையாளமாக ஒரு சான்றிதழ் எழுதித் தந்தனர் என்பது. திருவனந்தபுரத்தில் வேலை : அடுத்த ஆண்டிலும் (1896) சுந்தரனார் அஞ்சல் எழுதி அடிகளைத் திருவனந்தபுரத்திற்கு அழைத்தார், அந்நகரில் மார்த்தாண்டன் தம்பி என்பவரால் நடாத்தப்பட்ட ஆங்கிலப் பள்ளியில் தமிழாசிரியராக அடிகளை அமரச் செய்தார். பள்ளியில் படித்த காலத்திலேயே, வெளிக்கல்வி கற்றவர் அல்லரோ அடிகள்! அவர் பள்ளிப் பணியொடும் அமைவாரா? அந் நகரில் சிறந்து விளங்கிய சைவசித்தாந்த சபைகளில் தொடர்பு கொண்டு இடை இடையே சொற்பொழி வாற்றினார். பேராசிரியர் சுந்தரனார் பணியாற்றிறய அரசர் கல்லூரியில் 12-9-86 ஆம் நாள் நாடகத் தமிழ் என்னும் பொருளில் அரியதொரு பொழிவு செய்தார். இவ்வாறு இரண்டரைத் திங்கள் திருவனந்தபுரத்தில் பணியாற்றினார் அடிகளார். அவ்வூர்ப் பருவநிலை அடிகள் உடல் நிலைக்கு ஏற்று வாராமையால் தம் பணியை விடுத்து நாகைக்கே திரும்பினார். துகளறுபோத உரை : அடிகளார் நாகைக்குத் திரும்பியது அறிந்த சோம சுந்தர நாயகர் சீர்காழிச் சிற்றம்பல நாடிகள் அருளிச் செய்த துகளறு போதம் என்னும் நூலை விடுத்து, அதற்கு உரை வரையுமாறு கட்டளையிட்டார். அந் நூலின் நூறு பாடல்களுக்கும் சீரிய உரையெழுதி நாயகர்க்கு அனுப்பினார் அடிகளார். அவ்வுரையின் நடை நயம், பொருட் சிறப்பு ஆகியவற்றைக் கண்ட நாயகர் மாதவச் சிவஞான முனிவர் உரையொடும் ஈதொப்பது எனப் பாராட்டி, அந் நூலைத் தம் செலவில்தாமே வெளியிட்டார். முதற்குறள் வாத நிராகரணம் : அந்நாளில் சென்னையில் வாழ்ந்த ஒருவர் திருக்குறள் முதற்குறளுக்கு மாயாவாதக் கொள்கையின்படி முதற் குறள் வாதம் என்பதொரு நூலை இயற்றி வெளியிட்டார். அதனை மறுக்க வெண்ணிய நாயகர் மறைமலையாரை எழுதத் தூண்டினார். அதன்படி, முதற்குறள் வாத நிராகரணம் என்பதொரு நூலை அடிகளார் இயற்றினார். உண்மை விளக்கம் : நாயகரிடம் கொண்முடிபு (சித்தாந்த)ப்பாடம் கேட்டவருள் ஒருவர் நல்லசாமிப்பிள்ளை என்பார். அவர் சிவஞான போத நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவர். அவர் சித்தூரில் மாவட்ட உரிமை மன்ற நடுவராகப் பணிசெய்து வந்தார். அவர்க்குச் சிவணியக் கொள்கைகளைத் தமிழ் ஆங்கிலம் என்னும் இரு மொழிகளின் வழியாகவும் பரப்புதல் வேண்டும் என்னும் பெருவேட்கை இருந்தது. அதனால் சித்தாந்த தீபிகை அல்லது உண்மை விளக்கம் என்னும் மாதிகை (திங்களிதழ்) தொடங்கினார். அவ்விதழைத் தம்மோடும் இருந்து நடாத்தத் தக்க புலமைச் செல்வர் ஒருவரை வேண்டி நின்றார். நல்லசாமியாரையும் மறைமலையாரையும் தம் மாணவராகக் கொண்டு இருந்த சோமசுந்தரநாயகர், இருவர்க்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார். சித்தாந்த தீபிகையின் தமிழ்ப் பதிப்புக்கு மறைமலையடிகள் ஆசிரியராய் முதல் இதழ் 1897 ஆம் ஆண்டு சூன் திங்கள் 21ஆம் நாள் வெளிவந்தது. அதன் முதல் ஐந்து இதழ்கள் அளவுக்கே அடிகள் ஆசிரியராக விளங்கினார். அதில் திருமந்திரம், சிவஞான சித்தியார், தாயுமானவர் பாடல், குறிஞ்சிப் பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு என்பன வெல்லாம் தொடர் கட்டுரைகளாக வெளிப்பட்டன. காதல் மணமும் கலைமணமுமாம் இம் மணமலர், பூஞ்சோலைப் பரப்பாகிப் பொலிதலைக் காண்போம். 5. பூஞ்சோலை கிறித்துவக் கல்லூரி : உண்மை விளக்க ஆசிரியராக இருந்த அடிகள் ஒரு நாள் செய்தித் தாளில், சென்னை கிறித்தவக்கல்லூரிக்குத் தமிழாசிரியர் ஒருவர் வேண்டியிருக்கும் விளம்பரம் கண்டார். நாயகர் அதற்கு வேண்டுகை விடுக்கத் தூண்டினார். அக் கல்லூரியின் முதல்வர் பெரும்புகழ் வாய்த்தவர், புலமையாளர்களால் பாடுபுகழ் பெற்றவர்; மாணவர் ஆசிரியர் அரசினர் பெற்றோர் ஆகிய அனைவரின் ஒருமித்தபுகழுக்கும் உரிமை பூண்டவர்; வில்லியம் மில்லர் என்பார் அவர்; அக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராக விளங்கியவர் பரிதிமாற் கலைஞர் எனப்படும் சூரிய நாராயண சாத்திரியார்! விரிந்த நோக்கும் பரந்த கல்வியும் சிறந்த பாவன்மையும் உயர்ந்த பல்துறையறிவும் ஒருங்கே கொண்ட ஏந்தல் அவர். அக்கல்லூரியின் ஒரே ஓர் ஆசிரியப் பணிக்கு விண்ணப்பம் விடுத்தவர் அறுபதின் மராம்! அவருள் நனி இளைஞர் நம் அடிகளாராம்! அவர் புலமையே அனைவர் புலமையிலும் விஞ்சி நின்றதாம். எழுத்துத் தேர்விலே முதன்மை பெற்ற மலையைப் பரிதி நேர்முகம் காண நேர்ந்ததாம்; எப்படி? பரிதியும் மலையும் : தொல்காப்பிய இலக்கணத்தில் இருந்து எளிதில் விடை யிறுக்க ஒண்ணாக் கேள்விகள் மூன்றினைக்கேட்டார். அடிகள் எளிதாக விடையளித்தார். சாத்திரியார் அடிகளின் இத் திறங்கண்டு அவரை அளவின்றிப் பாராட்டினார்! இளமை மிடுக்கும். புலமைத் துடுக்கும் உடைய அடிகள், இவரென்ன நம்மை ஆராய்வது என்று ஆணவங் கொண்ட வராய் அவரை நோக்கி யான் கேட்கும் மூன்று வினாக்களுக்குத் தாங்கள் விடையிறுக்க வேண்டும் என்றார். அவ்வாறே கேட்டார். சாத்திரியார் நீடு நினைந்து இறுதியில் அடிகளை நோக்கி, நீரே இம் மூன்றிற்கும் விடையளிப்பீர் என்றார். அடிகள் அவ்வாறே செய்தார். அவையும் தொல்காப்பியம் பற்றிய நுணுக்கமான ஆய்வுக் கேள்விகளாகும். அடிகளின் ஆழ்ந்த புலமை கண்டு சாத்திரியார் வியந்தார்; பலவாறு பாராட்டினார், தம்மைக் கேள்வி கேட்டவர் என்று கருதாது, வெறாது - சாத்திரியார் அடிகள்பால் பேரன்பு கொண்டார். மில்லரிடம் அடிகளை அழைத்துச் சென்று அவர்தம் ஆழ்ந்த அரும்புலமை, கூரறிவு முதலியவற்றை எடுத்துக் கூறி அவரையே தமிழாசிரியர் ஆக்குமாறு கேட்டுக் கொண்டார். புலன் அழுக்கற்ற அந்தணாளர் ஆகிய சாத்திரியாரின் பெருந்தகை நினைதோறும் இனிமை யாகின்றது. அடிகள் உருபா 25 சம்பளத்தில் மில்லரால் 9-8-1898 இல் தமிழாசிரியர் ஆக்கப்பட்டார். (ம.ம.அ. வரலாறு), ஆசிரியப் பணியேற்ற அடிகள் தம் குடும்பத்துடன் சென்னை வாழ்வை மேற்கொண்டார். அது நாயகர்க்குப் பெருமகிழ்வாயிற்று. கிறித்தவக் கல்லூரி எனினும் அது, உயர்நிலைப் பள்ளி யொடும் கூடியது. அடிகள் முதற்கண் உயர்நிலைப் பள்ளி வகுப்புகளே எடுக்க நேர்ந்தது. பின்னர் அவர்தம் திறமையை அறிந்து கொண்ட மில்லர் (கல்லூரி முதல்வர்) கல்லூரி வகுப்புகளுக்கு அடிகள் கற்பிக்கும் ஏற்பாட்டைச் செய்தார். மும்மணிக்கோவை : அடிகளார் கிறித்தவக் கல்லூரியில் அமர்ந்த நான்கு திங்கள் அளவுக்குள் ஒரு கொடிய நோய்க்கு ஆட்பட்டார். அந்நாள் 27-6-1898. அந்நோயைத் தீர்த்தருளுமாறு திருவொற்றியூர் முருகனை வேண்டிக் கொண்டார். நோய் தீர்ந்தது. அம் மகிழ்வால் ஒரு நூல் ஆக்கினார். அது திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை என்பது. அது முன்னாடி முடிக்கப்பட்ட நாள் 28-9-1900. முனிமொழிப் பிரகாசிகை : அக் காலத்தில் ஈழத்து யாழ்ப்பாணத்தில் சபாபதி நாவலர் என்னும் பெரிய பெரும்புலவர் ஒருவர் இருந்தார். அவர் உரைநடை வரைதலில் தனித்திறம் வாய்ந்தவர். இவர் வரைந்த நூல்களுள் ஒன்று திராவிடப் பிரகாசிகை என்பது. அவர் நடத்திய மாதிகை (திங்களிதழ்) ஞானாமிர்தம் என்பது. அதில் தேவர் குறளும் எனத் தொடங்கும் பாடலில் வரும் முனிமொழியும் கோவை என்பதைத் திருக்கோவை எனப் பொருள் கண்டார். இக் கருத்தை ஒப்பாத சோமசுந்தர நாயகர் முனிமொழி வேதாந்த சூத்திரமே என்பதை வற்புறுத்தி முனிமொழிப் பிரகாசிகை என்னும் நூலை வரையுமாறு அடிகளை வேண்டினார்; ஆசிரியர் உரையேற்ற அடிகள், அவ்வாறே செய்தார். இந்நூலைத் தாம் படுத்த படுக்கையில் நோயாய்க் கிடந்த சபாபதி நாவலர் படிக்கக் கேட்டு, தமக்குப் பின்னும் தமிழ் உரைநடை வரையவல்லார் ஒருவர் உள்ளார் என்று பூரிப்படைந்து வாழ்த்தினர். தம் கருத்தை மறுத்துரைத்தார் என்னும் கைப்பு இல்லாமல் கன்னித்தமிழ் நடையைப் பாராட்டியமை நாவலர் சால்புக்கும் அடிகளார் உரைநடைத் திறத்திற்கும் ஓரொத்த சான்றுகளாம். நாவலர் உடல்நலம் பெற்று 19-4-1900 இல் அடிகளார் இல்லத்திற்கு வந்தார் சபாபதி நாவலர் மகன் எளிய குடிசைக்கு வந்ததார். அறச் செயல்களுக்கு வென்றன செய்வேன் என்றேன் என்று தம் நாட்குறிப்பில் அடிகளார் இதனைப் பொறித்துள்ளார். 3-12-1901 இல் சபாபதி நாவலர் என் நூலைப் பாராட்டிக் கடிதம் எழுதினார் என்றும் குறித்துள்ளார். சமயநூற்கல்வி : பாடல் பயிற்றிய அடிகளார், பாடம் பயிலவும் விரும்பினார். அவர் என்றும் ஓதுவது ஒழியாதவர்; பயிலும் காலம் தொட்டே பழகிப்போன நடைமுறை. தமிழ் இலக்கண இலக்கியம் கரைகண்ட அடிகள் சிவனிய நூல்களையும் ஆழ்ந்து கற்றிருந்தார். எனினும் குருவர் ஒருவர் வழியே மெய்ப்பொருள் நூல்களைக் கற்பதே முறைமை எனக் கருதினார். கருது குருவர் ஒருவர் முன்னமே கருத்துள் இடம்பெற்றிருந்தாரே! சோமசுந்தர நாயகர் அல்லரோ அவர்; அவர் தாமே, சென்னைக்கு அழைத்துத் தம்பால் இருக்கவும் அமைத்துக் கொண்டவர். ஆதலால், அவரை அணுகித் தம் விருப்பை உரைத்தார். அப்பன் உனக்கு ஓர் ஆசிரியர் கற்பிக்க வேண்டிய நிலை இல்லையே. நீ நன்கு கற்றுள்ளாயே என்று நாயகர் கூறினார். மெய்ப்பொருட் கல்வி சிறக்க மேதக்க குருவர் வேண்டும் என்னும் மரபு நெறிகூறி, நாயகரை இசைவித்தார் அடிகளார். அவ்வகையில் சைவசித்தாந்த நுணுக்கங்கள் பலவற்றை அடிகள் அவரிடம் அறிந்து கொண்டார். அறிவுத் துணையாக மட்டுமல்லாமல் நாயகர் குடும்பப் பிணைப்பமைந்த தந்தையார் போலவும் அமைந்தார். அவர்தம் துணைவியார் தம் மகவாகவே அடிகளைப் புரந்தார். நாயகரும் அடிகளும் ஓரிரு நாள்கள் காணாவிடினும் தாங்க ஒண்ணாராய் நான் முந்தி நீ முந்தி என இல்லந் தேடிவந்து விருந்து உண்டு விரும்புவ பேசிச் சென்றனர். கூட்டங்களுக்கும் கோயில்களுக்கும் இணைந்தே செல்வதுடன் இணைந்தே பொழிவும் ஆற்றினர். நாயகரும் அடிகளும் உருவும் நிழலுமென இயைந்து இந்நிலை நெடிது செல்ல வாய்க்கவில்லை. நாயகர் மறைவு : நாயகர் 22-2-1901 இல் இயற்கை எய்தினார். தாயாய் - தந்தையாய் - தனிப் பேராசிரியராய் - தாழா நண்பராய் - தாங்குதலாய் இருந்த நாயகர் பிரிவு அடிகளாரை அசைத்தது; உலுக்கியது; உருக்கியது. ஊனும் உளமும் உணர்வும் நெகிழ அழுது தேம்பினார் அடிகள். அழுகை வாட்டாகியது; உணர்வாளர் அழுகையும் அரற்றும் அவலமும் பாட்டாதல் புதுவன அல்லவே! பண்டுதொட்டு வரும் கையறு நிலையும் இரங்கலும் இவைதாமே! அடிகளார் அழுங்கல் சோமசுந்தரக் காஞ்சி ஆயது. சோமசுந்தரக் காஞ்சி : காஞ்சியாவது நிலையாமை. நில்லாத்தன்மை அமைந்த உலகியலைச் சொல்லும் திறத்தால் சொல்லி, நிலைபெறு செயலைச் செய்யத் தூண்டுவது காஞ்சியின் உட்கிடை நாயகர் மறைந்த பதினாறாம் நாள் நீத்தார் கடன் நிகழ்ந்தது. அவர்தம் இல்லில் அறிஞர் பெருமக்கள் ஆற்றொணாத் துயரால் கூடிய அவையில் காஞ்சி பாடப்பட்டது. அடிகள் வாய் சொன்மழை பொழிய, கண், கண்மழை பொழிந்தது; அவையும் கண்மழை பொழிய அவலப் பெருக்காயது சார்ந்ததன் வண்ணமாதல் என்னும் சிவனியக் கொள்கை சீருற விளக்கமாகிய நிகழ்ச்சியாயிற்று அது. காஞ்சி நூல் வடிவம் பெறவேண்டும் என அன்பரும் ஆர்வலரும் அவாவினர், நூலும் ஆயிற்று. பழம் புலவர் பாவன்ன செறிவும் செப்பமும் இயற்கை நவிற்சியும் அமைந்தது காஞ்சி எனப் பெரும் பெரும் புலவர்களும் பாராட்டினர். எனினும், புலமைக் காய்ச்சல் என்பது ஒன்று உண்டே! நல்லன விடுத்து அல்லனவே தேடி அதையே முன்வைத்து அலைக் கழிப்பார் என்றுதான் இலர்? அதனால் சோமசுந்தரக் காஞ்சியில் சொல்வழு, பொருள்வழு, இலக்கண வழு இன்ன இன்ன எனக் கூறுவார் கிளர்ந்தனர். அவற்றுக்கு அஞ்சி ஒடுங்குவரோ அடிகள்! முருகவேள் பெயரால் இளந்தையிலேயே பெரும்புலவர்கள் கருத்துகளைப் பிழை யென்றால் பிழையென்று வீறிநின்ற நக்கீரர் அல்லரோ அவர். அதனால் அழுக்காற்றால் சுட்டிக் காட்டிய புலவர் கூற்றுகளை யெல்லாம், சூறையில் சுழலும் சருகெனச் சுழற்றி எறிந்து சோமசுந்தரக் காஞ்சியாக்கம் என்னும் பெரியதொரு நூலை வரைந்தார். எதிர்ப்பு அமைந்தது; அடங்கியது; அப்பொழுது அடிகளார் அகவை 26; ஆண்டு 1902 ஆகும். அறிவுக் கடல் : அதே 1902 இல் ஞானசாகரம் என்னும் மாதிகையை அடிகளார் தொடங்கினார். அடிகளார் தனித்தமிழ் உணர்வு கொண்ட பின்னர் அது அறிவுக்கடல் ஆயிற்று. பெயர் ஞானசாகரம் என வைக்கப்பட்டாலும், அப்பொழுதே அடிகளார் தமிழ் வடமொழி வேறுபாட்டை அறிந்தே இருந்தார் என்பதை அதன் முதல் இதழே வெளிப்படுத்துகிறது. தமிழ் வடமொழியினின்றும் பிறந்ததா? என்பதொரு கட்டுரையும், தமிழ் மிகப் பழையதொரு மொழி என்பதொரு கட்டுரையும் அதில் உள்ளன. சொல்லாய்விலும், தொல்காப்பிய ஆய்விலும் அடிகளார் கொண்டிருந்த ஈடுபாடு தமிழ்ச்சொல் உற்பத்தி, தொல்காப்பிய பரிசீலனம், தொல்காப்பிய முழுத் தன்மை ஆகிய கட்டுரைகளால் விளங்கும். இவ்விதழ் வழியாக வெளிவந்த நூல்களில் பெரியதும் அரியதும் ஆகியது மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் என்பதாகும். நமக்குப்பின் நாம் நடத்திய சைவசித்தாந்த விளக்கத்தையே நீயே நடத்துக என்று நாயகர், தம் இறுதி நாளில் அடிகளாரிடம் கூறியிருந்தார். அதனை ஒப்பிய அடிகளார் அப் பணியைக் கல்லூரி விடுமுறை நாள்களில் எல்லாம் சிறப்பாகச் செய்தார். அருட்பா - மருட்பாப் போர் : அந்நாளில் அருட்பா - மருட்பாப் போர் நிகழ்ந்தது. வள்ளலார் பாடிய பாக்கள் அருட்பாக்கள் அல்ல; மருட் பாக்களே என்பது போரின் ஊடகம். ஒருபால் வள்ளலார் கூட்டம்; மற்றொருபால் ஆறுமுக நாவலர் கூட்டம். இக்கூட்டத்துள் வள்ளலார் வழிக் கூட்டம் மறைமலையடிகளை அரணாகப் பற்றியது. நாவலர் வழிக் கூட்டத்தின் நாயகராகப் பெரும்புலவர் கதிரை வேலர் விளங்கினார். அவர் அந்நாளில் சென்னை வெசுலி கல்லூரியில் தமிழ்ப்பணி புரிந்தார். அவர்தம் மாணவராக விளங்கியவர் திரு.வி.க. அடிகளார்க்கும் கதிரைவேலர்க்கும் தனிப்பட்ட வெறுப்போ காழ்ப்போ உண்டோ? இல்லை! அடிகளார் தம் 1-8-1903 நாட் குறிப்பில், கதிரைவேற்பிள்ளை என் வீடு வந்து எனக்குத் தங்கள் கல்லூரியில் வேலை வாங்கித் தரவேண்டும் என்றார். நான் உங்கள்பால் எனக்குச் சினமில்லை. அப்படியே செய்வேன் என்றேன் என்று குறித்துள்ளமை அவர்கள் தனித் தொடர்பைக் குறிக்கும்! ஆனால் அருட்பாவைப் பற்றிய போரில் எதிர் எதிராக நின்றனர். வள்ளலார் பாடிய பாடல்கள் அருட்பாவா மருட்பாவா என்பதை முடிவு செய்வதற்கு, ஒரு பொது ஏற்பாடு செய்யப்பட்டது. அடிகளார் அருட்பாவின் பக்கலிலும், கதிரைவேலர் மருட்பாவின் பக்கலிலும் முறையுரைக்க முடிவு செய்தனர். முறைமன்ற நடுவர் ஒருவரும் அறிஞர் பெருமக்களும் பொதுமக்களும் 20-9-1903 ஆம் நாள் சிந்தாதிரிப்பேட்டையில் கூடினர். அடிகளார், வள்ளலார் பாக்கள் அருட்பாக்களே என முன்வைத்து இசைத்துப் பாடியும் கருத்துநலம் கொழிக்கப் பேசியும் அமர்ந்தார். கதிரைவேலர் கொண்டலென முழங்க வல்லார். எனினும் அப்பொழுது கொண்ட கருத்தை விடுத்து வள்ளலாரைப் பழிப்பதே குறியாகிப் பொழிந்தார். தலைவர் உரை அடிகளார் உரையைச் சார்ந்து நின்றது! அருட்பாவே என்னும் கருத்தே, அவையில் பொலிந்தும் விளங்கிற்று! ஆனால், மறுநாள் ஓர் இதழில், கதிரைவேலர் தம் பக்கமே வெற்றி என ஓர் அறிக்கை விடுத்தார். அதனால் மீண்டும் அதே மேடையில் அவரவர் கருத்தை மீண்டும் நிலைநாட்டிப் பேசி ஒரு முடிவுக்கு வருமாறு இடை நின்றோர் ஏற்பாடு செய்தனர். அதன் படி 27-9-1903 ஆம் நாள் அவ் ஆய்வு நிகழ அடிகளார் மட்டுமே வந்தார்; கதிரைவேலர் வந்திலர். அடிகளார் அருட்பாச் சிறப்பினை வந்தோர் மனங்கொள எடுத்துரைத்து, அருட்பாவே என உறுதிப்படுத்தினார். பின்னர் 18-10-1903இல் சென்னை வேணு கோபால் அரங்கில் வழக்குரை காதை தொடர்வதாய் இருந்தது அன்றும், அடிகள் மட்டுமே மேடைக்கு வந்தார்; பொழிந்தார். அருட்பா வென்றது என அவை பெருமுழக்கம் செய்தது! அவ் எதிராட்டு முடிந்தது எனப் பெருமக்கள் முடிவு செய்தனர். ஆயினும் அடைமழை விட்டும் செடிமழை விடவில்லை என்பது போல், ஈராண்டுகள் கழித்தும் காஞ்சியிலும் திருச்சியிலும் கதிரைவேலர் மருட்பாக் கிளர்ச்சியைத் தூண்டினார். ஆங்கும் அடிகளார் முறையே 27-2-1905, 1-7-1905 ஆகிய நாள்களில் சென்று மறுப்புரை பகர்ந்தமை பின்வரலாறாகும். சைவசித்தாந்த சமாசம் : சிவநெறிப் பரப்பலுக்கு ஓர் அமைப்பை உருவாக்க அடிகள் விரும்பினார். அவ் விருப்பம் 7-7-1905 இல் திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகளின் முன்னர்ச் சைவ சித்தாந்த சமாசம் என்னும் பெயரால் தோன்றியது. அடிகள், அதன் தலைமைச் செயலாளர். நாகை மதுரை நாயகம், வேலூர் அ. சிதம்பரம், கீழ்வேளூர் வி.சி. இராமலிங்கர் முதலியவர்கள் உறுப்பினர். நாட்டில் சிவநெறி சார்ந்து விளங்கிய அமைப்புகளும், புதியனவுமாகக் கிளைகள் பல தோற்றமுற்றன. சமாசத்தின் முதல் ஆண்டுவிழா 26-12-1906 ஆம் நாளிலும், இரண்டாம் ஆண்டுவிழா 1907 திசம்பர் 25, 26, 27 ஆகிய நாள்களிலும் சிதம்பரத்தில் நிகழ்ந்தன. இவ் விழாக்களுக்கு முறையே இலங்கை சர்பொன்னம்பலம் இராமநாதன் அவர்களும், மதுரைத் தமிழ்ச்சங்க நிறுவனர் பொன். பாண்டித்துரை அவர்களும் தலைமை தாங்கினர். மூன்றாம் ஆண்டுவிழா நாகை வெளிப்பாளையத்தில் 1906 திசம்பர் 25, 26, 27 ஆம் நாள்களில் செ.எம். நல்ல சாமி அவர்கள் தலைமையில் நிகழ்ந்தது. நான்காம் ஆண்டுவிழா 1909 திசம்பரில் இலங்கை சர். ஏ. கனகசபை அவர்கள் தலைமையில் திருச்சியில் நிகழ்ந்தது. 1910 ஆம் ஆண்டு முதலே அடிகள் சமாசப் பிணைப்பில் இருந்து விலகித் தாம் விரும்பிய வண்ணம் சமயப் பணியும் பொதுப் பணியும் ஆற்றலானார். சமாசத்தில் உண்டாகிய சில உட்பூசல்கள் அடிகளாருக்குப் பிடியாமையாலேயே இந்நிலை உண்டாயிற்று. எனினும், அவ்வப் போது சமாச விழாக்களில் மட்டும் கலந்துகொண்டு தலைமை தாங்கிப் பேருரையாற்றியுள்ளார். கிறித்தவக் கல்லூரியில் அடிகள் 13 ஆண்டுகள் பணியாற் றினார். அக் காலத்தில் அண்ணாப்பிள்ளைத்தெரு, தண்டலம் பாலுசுந்தர முதலியார் தெரு, 26 முல்லா சாய்பு தெரு, 197, இலிங்கிச் செட்டித் தெரு, 62, அரண்மனைக்காரன் தெரு ஆகிய ஐந்திடங்களில் குடியிருந்தார். கற்பிக்கும் திறம் : அடிகளார் பாடம் கற்பிக்கும் திறம் குறித்து மறை. திருநாவுக்கரசு வரைகின்றார் : அடிகள் கற்பிப்பு மிகவும் தெளிவாய் விரைந்தும் மெதுவுமான போக்கில் இல்லாமல் அளவான போக்கில் செல்லும்; விரைந்து பேசார்; இரைந்து ஒலியார்; பேச்சில் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் கலந்தொலிக்கும்; விளக்க உரைகள் கண்ணாடியில் காணும் உருவம்போலத் தெளிவாய் இருக்கும்; அறிவு செறிந்திருக்கும்; இடை இடையே நகைச்சுவையும் உலகியல் மேற்கோளும் உண்டு; பண்டை நூல்களின் மேற்கோள் உண்டு; சீரிய ஆராய்ச்சிகளும் கூரிய நோக்குகளும் உண்டு. சுருங்கச் சொன்னால் அடிகள் ஆசிரிய இயலின் உருவம் அனையார் என்றுதான் கூறவேண்டும் என்பது அது. (மறைமலையடிகள் வரலாறு 24) மாணவர்கள் : நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், தணிகைமணி வ.சு. செங்கல்வராயர், திருப்புகழ்மணி டி.எம். கிருட்டிணசாமி, அமைச்சர் பி. சுப்பராயன், திவான்பகதூர் ஆர்.வி. கிருட்டிணர், இரசிகமணி டி.கே. சிதம்பர நாதர், பேராசிரியர் ச.வையாபுரியார். சி.என்.முத்துரங்கர், எசு. அனவரதவிநாயகர், சி.டி. நாயகம், கோவை இராமலிங்கம் ஆகியோர் அடிகளாரிடம் பயின்ற மாணவர்கள் ஆவர். இவர்களுள் சுப்பராயனும், முத்துரங்கரும் அடிகளாரிடம் சில ஆண்டுகள் தனிப் பாடமும் பயின்றவர் ஆவர். சிலச்சில நூல்களை மட்டும் பாடம் தனியே கேட்டுச் சென்றவரும், சில ஐயங்களை மட்டும் கேட்டுச் சென்றவரும் மிகப்பலர். ஆய்வு நூல் : கல்லூரித் தமிழ்ப் பாடத்தில் ப்ழந்தமிழ் நூல்களும் இடம் பெற்றிருந்தன. அவ் வகையில் முல்லைப்பாட்டு, பட்டினப் பாலை என்பவை குறிப்பிடத்தக்கவை இப் பாடம் பற்றியும், உரைவந்த வகைபற்றியும், வெளியீடுபற்றியும் அடிகளார் முல்லைப்பாட்டு ஆய்வுரை மூன்றாம் பதிப்பு முகவுரையில் சுட்டுகிறார் : இம் முல்லைப்பாட்டு கி.பி. 1903 ஆம் ஆண்டு கலைநூற் புலமைக்குப் பயிலும் மாணாக்கர்க்குப் பாடமாக வந்தது. சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் அப்போது யாம் தமிழாசிரியராய் இருந்து மாணாக்கர்க்குத் தமிழ்நூல் அறிவுறுத்தி வந்தமையால், இம்முல்லைப் பாட்டிற்கும் உரைவிரித்து உரைக்கலானோம். இச்செய்யுட்கு நச்சினார்க் கினியர் எழுதிய உரையையும் கூடவே விளக்கி வருகையில் செய்யுளியற்றிய ஆசிரியர் கொண்ட பொருண்முறை ஒரு பக்கமாகவும், உரைகாரர் கொண்ட பொருண் முறை மற்றொரு பக்கமாகவும் ஒன்றோடு ஒன்று இணங்காதாய் மாறுபட்டு நிற்றல் கண்டு மாணாக்கர் பெரிதும் இடர்ப்படுவார் ஆயினர். அதுவேயும் அன்றி, ஆக்கியோன் அமைத்த சொற்றொடர் நெறியைச் சிதைத்துச் சொற்களையும் அடைமொழிகளையும் ஒரு முறையுமின்றிப் பிரித்துக் கூட்டிப் பொருளுரைக்கும் நச்சினார்க் கினியருரை சிறிதும் ஏலா உரையேயாம் என்றும் அவர் கருதுவாராயினர். முன்னரே ஆக்கியோன் கருத்தை யொட்டி வேறோர் உரை செய்து வைத்திருந்தயாம் அதனை யெடுத்து அவர்க்கு விளக்கிக் காட்டினேமாக அது கண்டு அவரெல்லாம் தமதுரை ஆக்கியோன் கருதிய பொருளை நேர்நின்று விளக்குவ தோடு பண்டைக் காலத்துத் தண்டமிழ்ச் சிறப்புகளைப் பின்றைக் காலத்துக் கேற்றபடி தெற்றென நன்கு தெரிப்பதாயும் இருத்தலின் தமது விரிந்த இவ்வாராய்ச்சி யுரையினையே பதிப்பிட்டு எமக்குத் தந்தருளல் வேண்டும் எனக்கேட்டு அது பதிப்பித்தற்காம் செலவும் ஒருங்கு சேர்ந்து முன் உதவினர். கி.பி. 1906 ஆம் ஆண்டு கலைநூல் புலமைக்குப் பயிலும் மாணாக்கர்க்குப் பத்துப் பாட்டுகளில் ஒன்றான பட்டினப் பாலை என்னும் அருந்தமிழ்ச் செய்யுள் பாடமாய் வந்தது. யாம் முல்லைப் பாட்டிற்கெழுதிய ஆராய்ச்சியுரையினைப் பற்றிக் கேள்வியுற்ற அவ்வாண்டின் மாணாக்கர்களும் தமக்குப் பாடமாய் வந்த பட்டினப்பாலைக்கும் அதனைப் போலவே ஓர் ஆராய்ச்சியுரை எழுதித் தரும்படி வேண்டி, அதனைப் மதிப்பிடுதற்காம் செலவின் பொருட்டு தாமும் ஒருங்குசேர்ந்து பொருளுதவி செய்தனர் என்கிறார். மாணவர் நலங்குறித்து வரையப்பட்ட இந் நூல்களின் உரைமாட்சி என்ன வகையில் உதவியது என்பதையும் அடிகளார் அவ்வுரையில் காட்டுகிறார்: அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பெரிதும் வியந்து பாராட்டி அம்முறையினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப் புதுமுறையுரை தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அகமகிழ்ச்சியினை விளைத் தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டுமென எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்பது அது. அடிகளார் ஆய்வின் ஆழத்திற்கு ஒரு சான்று : இப்பாட்டினுள் இடைச்சொற்களையும் வேற்றுமை உருபுகளையும் நீக்கி எண்ணப்பட்ட சொற்கள் சிறிதேறக் குறைய ஐந்நூறு சொற்களாகும். அவற்றுள் முன்வந்த சொல்லே பின்னும் வருமாயின் பின்வந்தது எண்ணப்படவில்லை. இவ் வைந்நூறு சொற்களுள் நேமி கோவலர், படிவம், கண்டம், படம், கணம், சிந்தித்து, விசயம், அஞ்சனம் என்னும் ஒன்பதும் வட சொற்கள், யவனர் மிலேச்சர் இரண்டும் திசைச் சொற்கள். ஆக இதனுட் காணப்பட்ட பிறமொழிச் சொற்கள் பதினொன்றேயாம். எனவே இப் பாட்டினுள் நூற்றுக்கு இரண்டு விழுக்காடு பிற சொற்கள் புகுந்தன என்றறிக, ஏனைய வெல்லாம் தனிச் செந்தமிழ்ச் சொற்களாகும். இது முல்லைப்பாட்டின் சொல்லாய்வுக் கணக்கு (பக்.56) இப் பாட்டின்கண் சிறிதேறக் குறைய ஆயிரத்து முந்நூற்று அறுபத் தொன்பது சொற்கள் இருக்கின்றன. இவற்றுட் பதினொரு சொற்கள் வடசொற்களாம். அவை மகம், அங்கி, ஆவுதி, பூதம், மது, பலி, பதாகை அமரர், கங்கை, புண்ணியம்,சமம் என்பனவாம். ஞமலி என்னும் ஒருசொல் பூழி நாட்டுக்குரிய திசைச் சொல்லாகும் ஆகவே, இப் பாட்டில் நூற்றுக்கு ஒன்று விழுக்காடு பிறநாட்டுச் சொற்கள் கலந்தன என்பது அறியற் பாற்று இதனால் இவ்வாசிரியர் காலத்தில் தமிழ் மிகவும் தூயதாக வழங்கப்பட்டு வந்ததென்பது புலப்படும் என்க இது பட்டினப் பாலையின் சொல்லாய்வுக் கணக்கு (பக்.77). மதுரைத் தமிழ்ச் சங்கம் : முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை முதலாய பழைய நூல் களைத் தமிழ் மரபில் ஆய்ந்து புத்துரை காணும் அடிகளார் புலமை நலத்தை மதுரை நான்காம் தமிழ்ச் சங்க நிறுவனர். பொன். பாண்டித்துரையார் அறிந்தார். அதனால் அடிகளாரைத் தமிழ்ச்சங்க விழாக்களுக்கு அழைத்தார். மூன்றாம் ஆண்டுவிழாவில் (24-5-1904) சீரிய பொழிவாற்றி அடிகளார், அனைவரையும் கொள்ளை கொண்டார்; அவர்தம் தோற்றமும் பொழிவும் கவர்ச்சி மிக்கனவாக வயப்படுத்தின. அடுத்த ஆண்டும் நான்காம் விழாவுக்கு அடிகள் அழைக்கப்பட்டார். அது 24-5-1905 இல் நிகழ்ந்தது. தலைமை தாங்கிய வி. கனகசபையார் தொல்காப்பியர் பிராமணர்; என்று கூறி அதனால் தமிழர் ஆரியர்க்குக் கடமைப்பட்டவர் என்று வலியுறுத்தினார். மேலே அடிகளைப் பேசுமாறு பாண்டித் துரையார் அழைத்தார். அடிகளார் தமிழர் நாகரிகப் பழமை, சிறப்பு ஆகியவற்றை விரித்துரைத்து ஆரிய நாகரிகத்திற்கும் பிராமணர்க்கும் தமிழர் கடப்பட்டிருக்கவில்லை என வலியுறுத்தினார். பாண்டித் துரையாரும் அவையோரும் அடிகள் கருத்தை மிக வரவேற்றனர். (25-5-1905) அடிகள் பண்டைக்காலத் தமிழர் ஆரியர் என்பதோர் அரிய உரையை ஆற்றினார் அதனைக் கேட்ட புலவர்கள் பலர் மகிழ்வுற்று அடிகளைப் பாராட்டிப் பாமாலை சூட்டினர். ஐந்தாம் விழாவுக்கும் அடிகள் சென்றார். 26-5-1906 இல் உ.வே. சாமிநாதர் தலைமையில் நிகழ்ந்த மூன்றாம் நாள் விழாவில் பட்டினப்பாலையின் புத்துரை பற்றிப் பேசினார். தலைவர் சொற்பொழிவின்பத்தில் மூழ்கிவிட்டேன்; அவர் இனிய பேச்சொலிகள் என் இரண்டு காதுகளிலும் இன்ப முழக்கம் செய்கின்றன; என்ன பேசுவதென்று தெரியவில்லை என்று அமைந்தார். பின்னர் ஒருமுறை 24-5-1908 இல் தமிழர் நாகரிகம் பற்றியும் 25-5-1908 இல் குறிஞ்சிப் பாட்டு ஆராய்ச்சி பற்றியும் 26-5-1908 இல் தாம் இறையன்பு பற்றி ஆங்கிலத்தில் இயற்றிய பாடல்கள் குறித்தும் பொழிந்தார். எனினும் தமிழரல்லாதார் போக்கும் அவரைத் தழுவிய தமிழ்ப் புலவர் போக்கும் அடிகளார் நாகரிகம், தமிழர் சமயம் என்பன பற்றிச் செய்ய வேண்டியிருந்த அரும்பெருங் கடமைகளை உணர்ந்து அவற்றில் பெரிதும் கிளர்ந்தார்! சங்கத் தொடர்பு அவ்வளவில் அமைந்தது. பற்பல தொண்டுகள் : அடிகளார் சென்னைப் பகுதியிலும், திருச்சி, தஞ்சை, தூத்துக்குடி, நெல்லை முதலான இடங்களிலும் நடைபெற்ற சமய விழாக்களில் பங்குகொண்டார். செல்லும் இடங்களில் எல்லாம் திருக்கோயில் வழிபாடு செய்தலில் பேரீடுபாடு காட்டினார். அடுத்துள்ள திருத்தலங்களுக்கும் சென்று வழிபாடாற்றினார். கல்லூரியின் விடுமுறைக் காலங்கள் எல்லாம் இவ்வாறு சமயப் பணியிலும் மொழிப் பணியிலும் அடிகளார் தொண்டு இயன்றது. தூத்துக்குடிக்குச் சென்றபோது வ.உ.சி. யின் விருந்தினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1908 இல் ஆங்கிலத்தில் ஓரிதழ் தொடங்கினார் அடிகள். அதன் பெயர் ‘The Oriental mystic Myna’ என்பது. அது அமெரிக்கா, பிரான்சு, ஆத்திரியா, செருமனி இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்றது. உலகோர்க்குத் தமிழ் மொழி குறித்தும் சிவநெறி குறித்தும் வெளிப்படுத்த வேண்டும் என்னும் அடிகளின் வேட்கையே இவ்விதழைத் தொடங்கச் செய்தது. திங்களிதழாகிய அது ஓராண்டுடன் அமைந்தது. இதன் பின்னரும் 1935 இல் ‘The Ocean of Wisdom’ என்னும் ஆங்கில வெளியீட்டையும் தொடங்கினார். அதனை முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் என்னும் நூலின் முன்னுரையில், செந்தமிழ் மொழியிலும் சைவ சித்தாந்தத்திலும் பொதிந்து கிடக்கும் அரும்பெரும் பொருள்களை இவ்வுலகம் எங்கணுமுள்ள அறிஞர்கள் தெரிந்து நலம் பெறல் வேண்டி அவையிற்றை யாம் ஆங்கில மொழியில் எழுதி இரண்டு திங்கட்கு ஒருகால் ஒரு வெளியீடாகச் சென்ற ஒன்றரையாண்டு களாக வெளியிட்டு வருதலால் எனக் குறிப்பிடுகிறார். பொதுநிலைக் கழகம் : தமிழகத்தில் சாதி சமயப் பிணக்கற்ற பொதுநிலைக் கழகம் ஒன்று உருவாக்கவேண்டும் என அடிகள் விரும்பினார். இயல்பாகவே வள்ளலார் கொள்கை வழியில் நின்ற வரும் வள்ளலார் பாடல்கள் அருட்பாக்களே என நிலை நாட்டிய வருமாகிய அடிகளார் அவ் வள்ளலார் கண்ட சமரச சன்மார்க்க சங்கம் என்னும் சங்கத்தை 22-4-1911 இல் தோற்றுவித்தார். அச் சங்கமே பின்னர்ப் பொது நிலைக் கழகம் என்னும் பெயரைத் தாங்கிற்று. சன்மார்க்க சங்கம் தோற்றுவிக்க நேர்ந்த நிலையை அடிகள் ஞான சாகரத்தில் குறிப்பிடுகிறார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீ காரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும் சமரச சன்மார்க்கத்தையும், பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவர். அச் சுவாமிகள் வலியுறுத்திய அவ்விரண்டு கொள்கைகளையுமே எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்குகூட்ட வேண்டி அச் சுவாமிகள் இட்ட பெயராலேயே சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கப்படலாயிற்று. இந் நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார். பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் என்பது அது. வள்ளுவர் உள்ளமே வள்ளலார் உள்ளமாகப் பிறங்கியது என்பதைத் தெள்ளத் தெளிந்த தேர்ச்சியால் அடிகளார் இவ்வாறு தலைத் தலைமையையும், வழித் தலைமையையும் கொண்டார் என்க. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்னும் வள்ளுவர் வழியதுதானே வள்ளலார் வழி! அவர் தம் அருளுடைமைத் திருவடிவம்தானே வள்ளலார்! ஒருமைக்கண் தான் கற்ற கல்வி தானே வள்ளலார்க்கு வாய்த்த ஓதாக்கல்வி! சமரச சன்மார்க்க சங்க நோக்கங்கள் இவை எனவும் ஞான சாகரத்தில் குறிப்பிடுகிறார் அடிகளார். எல்லா உயிர்களிடத்தும் அன்பு பாராட்டும் சீவகாருண் ணியத்தை விளக்கும் முகத்தால் கொலை நிறுத்தல், புலாலுணவு விலக்கல் எல்லாம் வல்ல கடவுள் ஒருவரே என்று வலியுறுத்தி அவரை அடைதற்கு அன்பு ஒன்றே வழியெனக் காட்டுதல் ஏழைகட்கும் வலியற்றவர்கட்கும் அன்னம் இடுதல் ஏழைப் பிராணிகட்குத் தீனி கொடுத்தல், எவ்வுயிரையும் கொடுமையாக நடத்தலினிநின்றும் காத்தல் - என்பன அவை. பொதுநிலைக் கழக மாணவர்கள் : சமரச சன்மார்க்க சங்கம் என்னும் பொதுநிலைக் கழகம் இருபான் ஆண்டுகள் இயன்ற பணியாற்றியது. ஆங்காங்குச் சொற்பொழிவாற்றியதுடன், தக்க மாணவர்களைத் தெரிந்து பயிற்சி தருதலையும் மேற்கொண்டது. அவ் வகையில் பொதுநிலைக் கழக மாணவராகிப் பின்னாளிலும் தத்தம் இயலால் தொண்டு புரிந்தவர்கள் சிலர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் பாலசுந்தரம் எனவந்து இளவழகனார் ஆகி அழகரடிகளாய் மதுராந்தகம் திருவள்ளுவர் குருகுலம் கண்ட பெருமகனார்; இளம் பருவத் திலேயே அருட்பெருந்தொண்டுக்கு ஆளாகி, நன்மணம் பரப்பும் காலத்திலேயே மறைந்த மணி. திருநாவுக்கரசர்; புதுக்கதை களால் புகழுற்ற நாகை சொ. கோபாலகிருட்டிணர்; அவர் உடன் பிறப்பாகித் திருக்குறள் அறத்துப்பாலுக்கு அரியதாம் உரை விளக்கம் கண்ட நாகை சொ. தண்டபாணியார், மகளிர் விடுதலை, சீர்திருத்தம், நாட்டுத் தொண்டு இவற்றில் அருந் தொண்டாற்றிய சிறந்த எழுத்தாளர் நாரணதுரைக் கண்ணனார்; நயன்மை (நீதி)க்கட்சியின் நாளிதழ் கனக சங்கரக்கண்ணப்பன் என்பார். இதுகாறும் குறிப்பிட்டதும் இதனினும் விரிந்ததாகக் குறிப்பிடாததுமான பொழிவுப்பணிகளும் எழுத்துப் பணிகளும் குமுகாயப் பணிகளும் கல்லூரிப் பணியின் இடை இடையே நடைபெற்றவையாம். முற்றாகப் பொதுப் பணிக்கே ஆட்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுபோல் ஒரு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி வேலை விடுதல் : கலைப்பட்டப் படிப்புகளுக்கு ஆங்கிலமே போதும்; தாய் மொழியைக்கட்டாயப் பாடமாக மாணவர்கள் கற்க வேண்டுவ தில்லை; விருப்பமுடையவர் படிக்கலாம்; விருப்ப மில்லாதார் ஆங்கிலந் தவிர வேறு மொழியை எடுத்துப் படிக்கலாம் எனச் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவினர் முடிவு செய்தனர். அதனிடையேயும் மற்றொரு தீர்மானமும் வந்தது. தாய்மொழிகளை மாணவர்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டிய தில்லை. ஆங்கிலத்தையும் வடமொழியையும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும். தாய்மொழிகள் விருப்பப்பாடம் ஆகலாம் என்பது அது. அத் தீர்மானம் வரும்போது தமிழர் அனைவரும் வாளா வாய் பொத்தி இருக்கவும் ஆங்கிலவர் ஒருவர் எழுந்து சிறந்த இலக்கியங்களைக் கொண்ட தமிழ் முதலிய தாய்மொழிகள் கட்டாயப் பாடமாக இருக்கக் கூடாது என்றால் ஒருவராலும் பேசப்படாது வாக்கில் இல்லா வடமொழி மட்டும் கட்டாயப் பாடமாக இருக்கலாமா? ஆதலால் அதுவும் கட்டாயங் கூடாது. விருப்பப் பாடமாகவே இருத்தல் வேண்டும் என்கிறார்! சூழ்ச்சியாளர் முகத்தில் கரி பூசினாலும் அம் மொழி தமிழுக்கு ஆக்கமாக அமையாமல் ஆங்கில நிலைப் பாட்டுக்கே உதவிற்று! அந்நாள் அப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் இருந்தவர் கிறித்தவக் கல்லூரி முதல்வராகிய வில்லியம் மில்லரே ஆவர். (ம.ம.அ.வ. 124-6). தமிழ் விருப்பப்பாடம் என்னும் நிலைக்குத் தாழ்த்தப் பட்டமையால், தமிழ் கற்கும் மாணவர் குறைந்தனர். அதற்குத் தக ஆசிரியர் எண்ணிக்கையும் குறையத்தானே செய்யும். மெய்க்குருவர் காட்சி : இறையருள் நாட்டத்தால் தமக்கொரு மெய்க்குரு வரை அடிகளார் உள்ளம் முன்னரே நாடி நின்றது. விவேகானந்த அடிகளார் இராமகிருட்டிணரைக் கண்டடைந்தது போலவும் குமரகுருபரர் மாசிலாமணி தேசிகரைக் கண்டடைந்தது போலவும் அடிகளார் குடந்தையை அடுத்துள்ள கொட்டையூரில் திருமூலர் வழிவரு இராசானந்த அடிகள் என்பாரைக் கண்டு வழிபட்டார். அவரிடம் தவநிலை (நிட்டை) பெற்றார். (21-1-1907) மீண்டும் அவரைக் கண்டு வணங்கித் தவயோகப் பயிற்சிகளில் முற்றாக நிலைக்க வேண்டினார் (1-6-1908) ஆனால் அதற்குக் காலம் வரும் என்று கையமைத்துக் கடமையாற்றிவரக் கட்டளையிட்டார். அக் காலம் இதுவே என்பதுபோல் நிகழ்ச்சி கூடிவந்தது. அதனால் 30-4-1911 இல் வேலையை விடுத்து வெளியேறினார் அடிகளார். அவரைப் பிற கல்லூரிகள் விரும்பி அழைத்தும் ஆங்குச் சென்று பணியாற்றும் எண்ணமில்லாராய்த் தம்மை முழுமையாகத் தொண்டுக்கே ஆட்படுத்திக் கொண்டார். பின்னே இந்தி எதிர்ப்புப் பொழுதில் அவ்வெதிர்ப்பை அடிகள் விடுப்பாரானால் பெருவரு வாய்க்குரிய வேலை வாய்க்குமென்று கூறப்பெற்றும் அடிகள் அதனைக் கருதாது கடிந்துரைத்து ஒதுக்கியமையால், அவர்தம் உரிமைவேட்கையும் உண்மை உள்ளமும் ஒருங்கே புலப்படும். பூஞ்சோலை க்குள் புகுந்து அதன் அழகில் தோய்ந்த தாம்; வீசம் தென்றல் உலா வில் திளைப்போம். 6. தென்றல் உலா பல்லவபுரம் : கல்லூரிப் பணியில் இருந்து விலகிய அடிகளார் வாழ்விடம் சென்னையில் இருந்து பல்லவபுரத்திற்கு மாறியது. அங்கே ஒரு மனையிடத்தை 22-2-1911 இல் விலைக்கு வாங்கினார். 1-5-1911 இல் ஆங்கொரு வீட்டை வாடகைக்கு அமைத்துக் கொண்டு தாம் விலைக்கு வாங்கிய மனையிடத்தில் கட்டடம் கட்டத் தொடங் கினார். அக்கட்டடமே அடிகளார் கண்ட பொது நிலைக் கழக மனையாயிற்று. அடிகளார் கொண்டிருந்த சமயப் பற்றும், மெய்ப்பொருள் ஆய்வும் பண்டைத் தமிழர் மேற்கொண்டிருந்த மனையோடு வாழ்ந்து, மக்களோடு விளங்கி, சிறந்தது பயிற்றி, துறவினை மேற்கொள்ளும் நெறியைக் கடைப்பிடியாகக் கொள்ளத் தூண்டின. பேராசிரியப் பணி நீக்கம் இதற்குத் தக்க வாய்ப்பாக அமைந்தது. அடிகளார் 27-8-1911 இல் தம் முப்பத்து ஐந்தாம் அகவையில் துறவு கொண்டார் அவர் தம் பின்னால் துறவுநிலை கொண்டு முன்னரே அடிகள் என நாம் வழங்கினாலும் அவர் அடிகள் நிலைகொண்டது, இந்நாள் முதலேயாம். அடிகளார் நாகையிலிருந்து சென்னைக்கு வருமுன்னரே மணம் செய்திருந்தமையும் சிந்தாமணி என்னும் மகவு பிறந்திருந் தமையையும் அறிந்துளோம். தம் மனைவியுடனும் அம் மகவுடனும் சென்னைக்கு வத்த அடிகளார் குடும்பம் துறவு மேற்கொள்ளுதற்கு முன்னர்ப் பெரிய குடும்பம் ஆயிற்று. 1903 இல் நீலாம்பிகையும், 1904இல் திருஞான சம்பந்தரும், 1906இல் மாணிக்கவாசகரும், 1907 இல் திருநாவுக்கரசும், 1909 இல் சுந்தரமூர்த்தியும், 1911 இல் திரிபுர சுந்தரியும் பிறந்தனர். இல்வாழ்வு : அடிகளார் நடத்திய இல்வாழ்வியல் குறித்தும், சாந்தா அம்மையார் அன்பியல் குறித்தும் அவர்கள் அருமைத் திருமகனார் மறை திருநாவுக்கரசர் வரைந்துள்ளார். அடிகளார் எதனைச் சொன்னாலும் நம்பி அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஆமாம் சாமியாக அம்மையார் இருந்தார் என்றும், அம்மையார் உடன்பாடு இன்றி அடிகள் எதுவும் செய்யார் என்றும் கூறுகிறார். அடிகள் மனம் விட்டுப்பேசக்கூடிய ஒரே நண்பரும் சாந்தம்மாதான். சாந்தா! இன்று மாணிக்கவாசகர் காலம் எழுதினேன். தஞ்சாவூர் சீனிவாச பிள்ளை அவரைப் பத்தாம் நூற்றாண்டு என்றார். நான் மூன்றாம் நூற்றாண்டு என்று முடிவு கட்டியிருக்கிறேன். நல்ல சான்றுகள் கிடைத்துள்ளன. வெள்ளைக்கார நாட்டில் மில்டன் என்பவர் ந்ல்ல பாட்டுகள் பாடியிருக்கிறார். நிரம்ப நன்றாய் இருக்கிறது சாகுந்தல நாடகத்தில் சகுந்தலைக்குச் செடிகளிடத்தும் மான் முதலிய உயிர்களிடத்தும் உள்ள அன்பைக் காளிதாசர் நன்றாகச் சொல்கின்றார். பிள்ளா! இன்று பறவைகளின் வாழ்க்கை பற்றி ஒரு வெள்ளைக்காரர் எழுதியதைப் படித்தேன். எவ்வளவு ஆராய்ந்து எழுதியிருக்கிறார் தெரியுமா? தோட்டக்காரனுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கலாம்? கொழும்பில் இருந்து என்னைப் பேசவருமாறு அழைக்கிறார்கள். போகட்டுமா? வருகிறேன் என்று எழுதட்டுமா? அறிதுயில் என்னும் நூலை எழுதிவிட்டேன். 300 பக்கம் உண்டு. மூன்று ரூபா விலை வைக்கட்டுமா? அச்சுக்கூடத்து இராசு நாலணா முன்பணம் கேட்கிறான் கொடுக்கட்டுமா? இன்று தேங்காய்ப்பால் குழம்பு வை. இன்றைக்கு நூல் விற்ற பணம் 6-ரூ வந்தது. இன்று ஐந்து வந்தது. இன்று ஒன்றும் இல்லை. இன்று சென்னைக்குச் சென்று நூற்பதிப்புக்கான பொருள்களை வாங்கிவிடட்டுமா? மாணிக்கம் புத்தகம் வாங்க எட்டணாக் கேட்கிறான் கொடுக்கட்டுமா? நீலா நன்றாகப் படிக்கிறாள். சம்பந்தனைப் பண்டங்கள் வாங்கக் கடைக்கு அனுப்பட்டுமா? திருநாவுக்குத் தமிழ் மருந்து கொடுக்கட்டுமா? இங்கிலீசு மருந்து கொடுக்கட்டுமா? வெந்நீர் கொண்டு வா. நான் தஞ்சாவூர் சென்றபோது உமாமகேசுவரம் பிள்ளை நிரம்ப அன்பும் சிறப்பும் செய்தார். பிள்ளா, அவர் வந்துள்ளார். அருமையான விருந்து செய். இளவழகன் நுட்பமான அறிவாளி. நான் சொல்வதை யெல்லாம் நன்றாக விரைவில் தெரிந்து கொள்கிறான். எம்.எல்.பிள்ளை சட்டக்கல்லூரிப் பேராசிரியராய் விட்டார். கவியாண சுந்தரம் (திரு.வி.க.) நாளை வருவார். கீதம் இனிய குயிலே என்னும் திரவாசகம் மிகவும் அழகானது. இப்படியெல்லாம் எழுதப் படிக்கத்தெரியாத சாந்தம்மாளிடம் அடிகள் பேசிக்கொண்டிருப்பார். தம் கணவர்தாம் அவருக்குத் தெய்வம். அந்தப் பேரறிஞர் இந்த எழுத்தறிவில்லாப் புலவரிடத்தில் அறிவுரைகள் கேட்பது பார்ப்பவருக்கு மிக வேடிக்கையாகத் தோன்றும். சாந்தம்மா உடன்பாடின்றி அடிகள் மாளிகையைக் கடவார். ஒருவருக்கும் கடிதம் எழுதார். கொடுக்கல் வாங்கல் செய்யார். வெளியூர் அழைப்புகளை ஏலார் சவுந்திரம் வேண்டாம் என்றால் கோடியாயினும் விரும்பார். அடிகள்பால் சில வியப்பான போக்குகள் உண்டு. அவற்றிற் சில தப்பாகவோ சரியாகவோ சாந்தம்மாள் சொல்வதை மீறாமை, அவ்வப்போது நூல்கள் விற்றுப்பணம் அனுப்பில், வரும் தொகைகளைச் சவுந்திரம் கையில் கொடுத்துப்பின் தாம் வாங்குதல்; எந்தச் சிறு செயல் களையும் சவுந்திரத்தைக் கேட்டே செய்தல் முதலியவாம் என்கிறார். (மறைமலையடிகள் வரலாறு 72-74) வாழ்வியல் மேலாய்வு : விளையாட்டுப் பருவக் குழந்தையின் செய்கைபோல் கருதத் தக்கது அன்று இது! வேடிக்கைச் செய்தியும் அறிவறியாத் தன்மையும் அன்று! அன்று! அடிகளார் ஆழ்ந்த மூளைக் கூர்ப்புக்கும், கடும் உழைப்புக்கும் ஓய்வு பெறும் மாசில் வீணை மாலைமதி, வீசுதென்றல், வீங்கிளவேனில், மூசுவண்டறை பொய்கை இவையே! இன்னும் சொன்னால் கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் குளிர்தரு, தருநிழல், நிழல் கனிந்த கனி, ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீர், மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்று இன்னவெல்லாம் தம்மை மறந்து, தாமே குழந்தையாய் மாறி நிற்கும் அடிகளார் செய்கையேயாம்! சிலர் ஆடலில் - சிலர் பாடலில் - சிலர் காட்சியில் - சிலர் உலாவலில் - சிலர் பிறபிற வழிகளில் மன அமைதி பெறுவர்; வாழ்வின் வெம்மையை மாற்றிக் கொள்வர். அடிகளாரோ இவ்வினிய வகையை மேற்கொண்டார்! இம் மேற்கோள் அவர்தம் பணிச் சீர்மைக்கு ஏந்தாக அமைந்ததென்க. அடிகளார் நாள்வழிக் கடமைகள் எப்படி? நாள்வழிக் கடமை : காலையில் எட்டு மணிக்குத் துயிலில் இருந்து எழுவார். இதனைப் படித்ததும் அடிகளாரா அப்படி! வைகறைப் போதில் எழாரா? விடிந்தும் இரண்டு மணிப் பொழுதும் நடந்த பின்னரா எழுவார்? என வினவத் தோன்றும்! நாள்வழிக்கடமைகளை முழுதுறக் கண்டு பின் எண்ணங்களை ஆய்வில் ஓடவிடுக : எட்டு மணிக்கு எழுந்த அடிகள் பாதக் குறடு இட்டவாறே சிறிது பொழுது, பொதுநிலைக் கழக மாளிகையைச் சுற்றியுள்ள பூங்காவில் உலாவுவார். பிறகு எனிமா வைத்துக்கொண்டு குடல் தூய்மை செய்வார். 11 மணிவரை காலைக் கடனும் நீராடுவதும் இறைவழிபாடும் நடைபெறும். பிறகு கஞ்சியுணவு கொள்வர். அவ்வுணவையும் ஆர அமர இருந்தும் சிறிது சிறிதாகப் பருகுவார். அதனுடன் பக்குவப்படுத்தப்பட்ட திராட்சை முதலிய பழவகைகளையும் சுவைத்துண்பார். இட்டலியும் சில நாளில் உணவாகும். காலைச் சிற்றுண்டி முடிந்ததும் அரைமணி நேரம் மறுபடியும் உலவுவார். பிறகு இருக்கையில் இருந்து நூலாய்வார், கடிதம் எழுதுவார்; நூல் எழுதுவார். அடிகளின் இருக்கையும் மேசையும் எழுதுகோலும் நூல்களும் தூயவைகளாக இருக்கு. எழுதுகோலும் நூல்களும் தமக்குரிய இடத்தைவிட்டு மாறியிருந்தது எப்போதும் இல்லை. மாளிகையின் கீழும் மேலும் தனித்தனியே மேசை நாற்காலி முதலிய படிக்கும் வசதிகள் உண்டு. ஓய்வாய் இருக்கும்போது சாய்ந்து படிக்கச் சாய்வு நாற்காலி பஞ்சணையுடன் உண்டு. பகலுணவு 21/2 மணிக்குமேல் 3 மணிக்குள்ளாக நடைபெறும். இந்துப்பையே கறி முதலியவற்றில் சேர்த்துக் கொள்வார் மிளகாயும் புளியும் சேர்க்க மாட்டார். ஆங்கிலக் காய்கறியும் பட்டாணியும் கோசுக்கீரையும் பொன்னாங் கண்ணிக் கீரையும் மிளகு நீருமே அடிகட்கு விருப்பம். எலுமிச்சம் பழமே புளிக்கு மாறாகச் சேர்க்கப்படும். எலுமிச்சம்பழத் தொக்கு அடிகளுக்கு மிகவும் விருப்பமானது. உண்ண அரைமணி நேரம் ஆகும். உணவுக்குப்பின் சிறிது உறங்குவார். பிறகு நூல்களுக்கு உறையிடுதலும், ஆங்கில நூல்களின் ஓரம் பிரித்தலும் செய்வார். 6 மணிக்கு இஞ்சிநீர் பாலுடன் கலந்து பருகுவார். மறுபடியும் உலாவுவார். இறைவழிபாடு செய்வார். 8 மணி முதல் 10 மணிவரை எழுதுதலும் நூலாய்தலும் ஒழுங்காகச் செய்வார். பதினோரு மணிக்கு எனிமா வைத்துக்கொள்வார். வேது பிடிப்பார். இரவு ஒரு மணிக்கே சிற்றுண்டியும் பாலும் உண்பார். 2 மணிக்கே படுக்கைக்குச் செல்வார். காலையில் துயிலில் இருந்து எழுந்தவுடன் கண்ணாடியிலே தம் உருவத்தை நோக்கிக் கல்வி செல்வம் நலம் என்னும் மொழியைப் பன்முறை கூறுவார். ஆடையைக் காலை மாலை இருபோதும் மாற்றுவார் எண்ணெய் கலந்த சிற்றுண்டிகளைத் தொடமாட்டார். நெய்யே யாவற்றிற்கும் பயன்படல்வேண்டும் தாளிப்பதும் நெய்யிலேதான். கடுகு சேர்க்கமாட்டார். காப்பி, தேயிலை முதலிய குடிவகைகள் அவருக்கு வெறுப்பானவை. பசும்பாலும் நெய்யுமே அவருடைய செலவில் மிகுதியான பொருளைக் கவரும். இவ்வாறு தம் உடலைப் பேணும் வகையில் மிகவும் விழிப்பாகவே இருப்பார். தாம் சொற்பொழிவு செய்யப்போகும் இடங்களிலும் இவ் வகை உணவே வேண்டுமென முன்னரே எழுதிவிடுவார். அடிகளுக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உண்டு. ஒவ்வொரு நாளும் தம் நூல்நிலையத்தில் உள்ள நூல்களில் ஒரு பகுதியை எடுத்துத் தூசி தட்டிப் பிரித்துப் பார்த்து வைப்பது வழக்கம். தம் கைப்படவே கடிதங்கள் எழுதுவார். விளக்குகளைத் தாமே துடைத்து வைப்பார். கடிகாரத்திற்குச் சாவி கொடுப்பார். நாட்காட்டியில் நாள்களை மாற்றுவார். வீட்டில் தூசு தும்புகள் தோட்டத்தில் உதிர்ந்த சருகுகள் யாவும் அப்போதைக்கு அப்போதே நீக்கப்பெறல் வேண்டும். வீட்டில் உள்ள பொருள்கள் தத்தமக்குரிய இடங்களிலேயே இருத்தல் வேண்டும் இவை புலவர் அரசு அவர்கள் அடிகளாரைப் படம் பிடித்துக் காட்டும் செய்திகள். இவற்றை மேலோட்டமாகப் பார்த்த அளவிலேயே அடிகள் திட்டமிட்டுத் தேர்ந்து செயலாற்ற வல்ல திருவாளர் என்பது விளங்கும். பிற்பகல் 4 மணி இருக்கும்; பல்லாவரத்தில் அடிகளார் மாளிகைத் தோட்டத்தில் மெல்ல நுழைந்தேன் நல்ல காலம் போலும்! அடிகளார் தமது மாளிகையின் முன் தாழ்வாரத்தில் கட்டைச்சுவர்மேல் எதிர்முகமாகத் தனியாய் அமர்ந்திருந்தார். ஏதோ ஓய்வாகப் படித்துக் கொண்டிருந்தார். அத்தகைய அமர்த்தலான நிலையை இறுதிவரையில் அவர்கள் வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை; அடியேற்கு என்றே ஒருநாள் மட்டும் அவ்வாறு அமர்ந்திருத்தார்கள் போலும்! என்று அழகரடிகள் எழுதும் எழுத்தால் அடிகளாரின் ஒழுங்கு மாறா ஒரு சீர் நிலையை அறிந்து கொள்ளலாம். அடிகளார் செயல்நிலை இன்னதெனத் தெரிந்தால், இன்ன நேரம் இது எனத் திட்டமாகக் கூறலாம் என்பர். அத்தகு கடைப்பிடியர் அடிகள். இக் கடைப்பிடி ஒழுங்கும் தூய்மை போற்றலும் இயற்கை நாட்டமும் சுவைத் தேர்ச்சியும் உள்ளுள் ஊறிக் கிடந்து கிடந்து என்ன செய்தன! தமிழின் தனித் தன்மையை - தமிழின் தூய்மையை - தமிழின் நடையழகை - தமிழின் இயற்கை எழிலை - உலகம் கண்டுகொள்ளும் வகையில் தனித் தமிழ் இயக்கம் தோன்றப் பக்குவப்படுத்தின - பண்பட்ட இயல்வளம் ஆக்கின என்பதேயாம். ஒரு மாணவர் : பல்லவ புரத்துப் பொதுநிலைக் கழகத் திருமாளிகையில் மாணவப் பேறு எய்த ஒருவர் செல்கின்றார். அடிகளாரின் அமர்ந்த கோலம் கண்ட அவர், திருப்பெருந்துறையில் குருந்த மர நிழலில் வீற்றிருந்த குருதேவரை மாணிக்கவாசகப் பெருமான் கண்டுகொண்ட முதல் நிலையில் அவர் இப்படித்தான் உள்ளம் நிலை கொள்ளாமல் தத்தளித் திருப்பாரோ எனத் தத்தளித்தார். யார்? என்று ஒரு கீச்சொலி அடிகளிடமிருந்து எழுந்தது. கையுறையாகக் கொண்டு சென்ற இரண்டு நாரத்தைப் பழங்களையும் வைத்து வணங்கினார் சென்றவர். எங்கிருந்து வருகிறாய்? சைதாப்பேட்டையில் இருந்து என்ன செய்தி இராயப்பேட்டைப் பேரவையில் பார்த்தேன்; ஓங்கார விளக்கம் கேட்டேன். இரண்டாம் நாளும் சைவ மாட்சி கேட்டேன். தமிழும் சைவமும் பயில விருப்பம் பெருகிவிட்டது பெயர் என்ன? பாலசுந்தரம்; சைதையில் ஆசிரியர் பயிற்சியில் இருக்கிறேன். கிழமையில் இருமுறை வரக்கூடும். இது வரையில் என்னென்ன படித்திருக்கிறாய்? மதுராந்தகத்தில் பள்ளித் தமிழாசிரியர் குமரகுரு செட்டியார்; அவரிடம் பதினெண்கீழ்க் கணக்குகள் ஒவ்வோரரளவு படித்ததுண்டு; வீட்டில் நானே பெரும் பாலும் படித்துக்கொண்டேன்; சென்னையில் மயிலை சிவ. முத்துக்குமாரசாமி முதலியாரிடம் இரண்டு மாதங்கள் திருமுருகாற்றுப் படையில் ஒரு பகுதி படித்து வந்தேன்; அடிகளைப் பார்த்தது முதல் வேறு நினைவு ஓடவில்லை. அடிகள் நூல்களையே பார்த்து வருகிறேன். இலக்கணப் பயிற்சி? தனியாக எதுவும் பாடம் கேட்டதில்லை ஆங்கிலம்? சில தொடர்கள் தெரியும் உணவு எப்படி? சைதையில் உணவகத்தில் உண்கிறேன்; பயிற்சிக்குச் சிறு ஊதியம் உண்டு; தந்தையார்; ஊர்க்கணக்கர்; அவரால் என்னை இங்கே சேர்க்க மட்டும் முடிந்தது; அடிகளைக் காணும் நற்பேறும் அவரால் கிடைத்ததென்றுதான் சொல்லவேண்டும்; தாயார் மாணிக்கம்மமாள், இருவரும் சிவநேயர்கள்; திருக்கழுக்குன்றத்து இறைவரையே வழுத்துவார்கள்; எந்நேரமும் என் தந்தையார் வேதகிரிநாதா வேதகிரிநாதா என்றே சொல்லிக் கொண்டிருப்பார். எனக்குத் தமக்கை ஒருவரும் தம்பி ஒருவரும் தங்கை ஒருவரும் உண்டு. மரக்கறியே உண்டு பழக்கம். பயிற்சிப் பாடங்களில் தேர்ச்சி பெறவேண்டாமா? இங்கும் வந்துகொண்டிருந்தால் எப்படி? அவை எளிமையாய் இருக்கின்றன; வகுப்பிற் கேட்பதே போதும் ஒரு திங்கட்கிழமை மாலையில் வா; நன்னூல் தொடங்கலாம் இதற்குள் உள்ளே இருந்து அம்மையார் வந்தார்கள். யார் சாமி? பாடம் கேட்க வேண்டுமாம்; சைதையில் இருப்பதால் கிழமைதோறும் வரமுடியுமாம்; சைவப்பிள்ளை; அடக்கமாய் இருக்கிறது; அறிவும் இருக்கிறது; எளிய குடும்பம், உரைகோளாளன் என்று நன்னூலில் சொல்லு வார்கள், அந்த வகையில் அமையலாம்; நம் திருக்கழுக் குன்றத்துப் பெருமானே தெய்வமாம் அம்மையார் : நண்ணாப் படிப்பியா? நிலையா இருப்பியா? ஒன்றும் சொல்ல நாவெழாமல் ஊமைபோல் அடிகளைப் பார்த்தார். அம்மையார் பால் கொணர்ந்து தந்தார்; அருளமுது எனப் பருகினார்! இக் காட்சி பாலசுந்தரம் ஆகிய இளவழகனார் அடிகளை முதற்கண் இல்லத்தில் கண்ட காட்சி! அடிகள் வேலை என, வருவாய் என இருந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியன்று. அத்தகு காலத்தினும் ஆர்வமிக்க ஏழைக்கு எக் கட்டணமும் இல்லாமல் விட்டிலே வைத்து ஊணும் உதவி எவர் கற்பிப்பார்? அடிகள் என்ன கொழுத்த செல்வரா? ஆலையோ வாணிகமோஈட்டித் தரும் பணத்தை எண்ணிப் பார்க்கவும் இயலா நிலையில் இருக்கும் செல்வச் செழிப்பரா? கைந்நிறையத் திங்கள் ஊதியம் வாங்கும் திருவாளரா? எதுவும் இல்லையே! நூல் விற்குமா? விற்ற தொகை ஏதாவது வருமா? இன்று என்ன செய்யலாம்? குடும்பம் பெரியது ஆயிற்றே! என்று நாளும் பொழுதும் தட்டுத்தடவும் குடும்பச் சூழலில் இப்படி உரை கோளாளனுக்கு (பாடம் விரும்பிக் கேட்பவனுக்கு) உதவ எவர் முன்வருவார்? மற்றைக் கல்விக்கூடங்களையும், தனிக்கல்வி கற்பிப்பாரையும் எண்ணிப் பார்க்கவே அடிகளின் தனிப் பெருமாண்பு புலப்படும். இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர் (218) வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று (955) என்னும் குறள்மணி வாழ்வு அடிகளார் வாழ்வாகும். அடிகளார் தந்த கலைவளம் என்ன செய்தது? வறியர் எனத் தள்ளாது வள்ளற்கலை வழங்கிய பேறு என்னவெல்லாம் செய்தது? மறைமலையடிகள் கல்விக் கழகம்! ஆயது! தனித்தமிழ்த் தொண்டுக்கும் சைவச் செந்நெறிக்கும் தம்மை முற்றாக ஆக்கிக் கொண்ட அழகரடிகளைத் தந்தது. கல்விக் கழகம் : 1930 இல் மறைமலையடிகள் கல்விக் கழகம் தொடங்கப் பட்டது. அதனைக் குறித்து எழுதுகின்றார் இளவழகனார் : ஓம் சிவம் திரு மறைமலையடிகள் துணை அடிகள்பால் அடியேன் கல்வி பயின்ற நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டாகவும், அடிகள் நம் தமிழ்நாட்டுக்குச் செய்துள்ள அரும்பெரும் நன்மைகளை அனைவரும் என்றும் நினைவுகூர்தற் பொருட்டாகவும் உலகமெங்கும் வல்ல அறிஞர் கட்குப் பல அரும்பெரும் சிறப்புகள் அடையாள முகத்தாற் காணப்படுதல்போல, நமதினிய தமிழ்நாட்டிலும் அங்ஙனம் ஒரு சிறப்புக் காணப்படாக் குறையை நிரப்பும் பொருட்டாகவும் இக் கல்விக் கழகம் இவைகளின் இசைவின் மேல் அடிகள் திருப்பெயரை ஏற்று மறைமலையடிகள் கல்விக் கழகம் என்னும் பெயரால் சென்னையை அடுத்த பறங்கி மலையில் 1930 இல் அடியேனால் தொடங்கப்பெற்றது. இது தொடங்கப் பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இக்கழகம் நம் தமிழ்மொழிக்கும் முக்கியத்துக்கும் நாகரிக வாழ்க்கைக்கும் அடிகள் நோக்கங்களைப் பின்பற்றி உறுதொண்டு செய்யும் உறுதியுடைவர் என்பது அது. இதனைக் கண்ட அடிகளார், ஓம் சிவம் பல்லாவரம் 9-7-1932 அன்புமிக்க தி.சு. பாலசுந்தரன் என்னும் இளவழகற்குத் திருவருளால் எல்லா நலங்களும் உண்டாகுக எமது பெயரால் நீ ஒரு கல்விக்கழகம் வைத்து நடத்துவதைவிட தமிழன்னையின் பெயரினாலே அதனை நடத்துவதே சிறந்ததாகும். என்றாலும், எமது பெயரின் தொடர்பு அக்கழகத்திற்கு இருக்கவேண்டுமென்று நீ வற்புறுத்தி வேண்டுதலால் நின்னன்பின் பொருட்டு அவ்வாறு நீ செய்தற்கு இசைகின்றோம். இங்ஙனமாக நீ வைத்து நடத்தும் மறை மலையடிகள் கல்விக்கழகம் என்பதற்கு எமது பெயரின் தொடர்பைத் தவிர வேறு ஏதொரு தொடர்பும் எமக்கும் இல்லை என்பதை இதனால் அறிவிக்கின்றேன். அதன் பொருட்டு நீ பிறரிடமிருந்து திரட்டும் பொருளும் இதனைச் செலவிடும் பொறுப்பும் எல்லாம் நினக்கே உரியன. நலம். அன்புள்ள, மறைமலையடிகள் என மறுமொழி விடுத்தார். அழகரடிகளார் பேரன்பும், நம் அடிகளார் வாழ்வியல் தேர்ச்சியும்இவ்வஞ்சல்களால் புலப்படும். தக்கார்க்கு உதவும் உதவி எப்படியெல்லாம் நாட்டுப் பயனாம் என்பதனை நாட்டும் செய்தி ஆதலின் காட்டப் பெற்றதாம்! அடிகளார் அரவணைப்புத்தானே அழகரடிகளார் தொண்டுகள் அனைத்துக்கும் மூலவைப்பு? இவ்வாறு அடிகளார் தவமனை, தமிழ்க் கலைக்கழகமெனவும், சிவநெறி மன்றமெனவும் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பலவற்றுக்கு ஈதொரு சான்று எனக்கொள்க. வடநாட்டுச் செலவு : அடிகளார் கட்டற்ற உரிமை வாழ்வால், கருதும் இடங்களுக்கெல்லாம் சென்று பொழிவாற்றவும், திருக்கோயில் வழிபாடாற்றவும் வாய்த்தது! தமிழகம் தழுவிய அளவில் அவர்கள் திருவுலாமுன்னரே நிகழ்ந்திருந்தாலும் வடநாட்டுச் செலவுக்குப் பேராசிரியப் பணி இடந்தந்திலது. அக்காலப் போக்குவரவு நிலையும் விரைந்து மீள்தற்கு வாய்ப்பிலதாய்த் தகைந்தது. அதனால், முழு விடுதலை பெற்ற அடிகள் நோக்கு வடபால் செலவை நாடிற்று. 21-3-1913 இல் சென்னையினின்றும் கிளர்ந்து விசயவாடா, தவளேசுவரம், பூரி, புவனேசுவரம் ஆகிய இடங்களைக் கண்டும் வழிபட்டும் 4-4-1913 இல் கல்கத்தா நகரை அடைந்தார். ஆங்குப் பேலூர் மடம், தட்சிணேசுவரம் கோயில் ஆகியவற்றை வழிபட்டார். கல்கத்தாவில், திருஞானசம்பந்தர் சாங்கியமும் சைவ சித்தாந்தமும் என்னும் பொருள்களைப்பற்றி முறையே தமிழிலும், ஆங்கிலத்திலும் சொற்பொழிவாற்றினார். அன்பர் களைக் கூட்டி அங்கே சன்மார்க்க சபை ஒன்றையும் நிறுவினார். (4-5-1913) அதன்பின் தார்சிலிங்குக்குச் சென்றார். அடிகள் சென்ற நேரம் மாலைப்பொழுது; பனிமலை அடிப்பகுதி அது; குளிர்வாடை தாக்கத் தொடங்கியது. அடிகள் எதிர்பார்த்தவர் அங்கே எய்தினார் அல்லர்! என் செய்வார் திருவருளை நினைந்து நின்றார் அடிகள் நடுங்கும் நடுக்கத்தையும் எவரும் துணையில்லா நிலையையும் கண்டு அங்கு உலாவந்த இருவர் தம் உறைவிடத்திற்கு அடிகளை அழைத்துச் சென்றனர். பெருவளமான மாளிகை நல்ல - உணவு - வெதுப்பி ஏற்பாடு - இனிய கலந்துரை பாடல் எல்லாமும் வாய்த்தன! அவ்வில்லத்தவர் களும் அவர்கள் உறவினர்களும் அடிகளின் புலமை நலம் கண்டு மகிழ்ந்து வழிபட்டும் மெய்ப்பொருள்பற்றிக் கேட்டறிந்து பெருமகிழ்வுற்றனர்! அவர்கள் செய்த தொண்டும், ஆர்வ தளிர்ப்பும் வழிபாடும் அடிகளைத் திருவருள் மாண்பு இஃது என உணருமாறு செய்தன. இரவு எய்தியது; தண்ணிலா வெண்ணிலா ஒளியை வாரி வழங்கியது; பனிமலை மேல் அவ் வெண்ணிலா அருவிப் பொழிவைக் கண்ணாடிப் பலகணி வழியே கண்டு கண்டு கழிபேருவகை எய்தினார் அடிகள். நெட்ட நெடுந்தொலைவில் திகழும் கயிலாயக் காட்சியில் தம்மை மறந்த இன்பத்தில் ஆழ்ந்தார். நான்கு நாள்கள் அவ்விடத்தே தங்கிக் காண்பன கண்டு மீண்டும் கல்கத்தா திரும்பினார். பின்னர்க் காசிக்குச் சென்று, கங்கை நீராடினார். பிரயாகைக்குச் சென்று முக்கூடலில் (கங்கை யமுனை) சரசுவதி என்னும் மூன்றாறுகளும் கூடும் திரிவேணி) நீராடினார். அரித்துவாரியில் பன்னிரு நாள்கள் தங்கினார். அதன்பின் பல்தேவ்சிங் என்பாரின் அன்பின் விருந்தாளராய்த் தேராதூனில் சில நாள்கள் தங்கினார். அங்கிருக்கும்போது உலகமதம் என்னும் சொற்பொழிவை ஆக்கி முடித்தார். 13-6-1913 இல் தில்லி மாநகர்க்கு எய்தினார். இராமச்சந்திர வர்மா என்னும் பஞ்சாபியர்அடிகளை எதிர்பாராது வரவேற்றுப் போற்றினார். அவர் அடிகளை ஆக்ராவிற்கும் அழைத்துச் சென்று தாசுமால் அழகில் தோய உதவினர். அடிகள் 20-6-1913 இல் பம்பாய்க்குச் சென்று 11-7-1913 இல் சென்னைக்கு மீண்டார். அடிகளுக்கு 20-7-1913 இல் மயிலாப்பூர் இரானடே மண்டபத்தில் இராயப்பேட்டை அவையினரால் ஒரு பாராட்டு விழா எடுக்கப்பட்டது. அடிகள் தாம் சிவப் பணி செய்ததற்காகச் சென்ற செலவையும், கண்ட காட்சிகளையும் வடநாட்டவர் பண்புகளையும் விரிவாக மூன்று மணி நேரம் பொழிந்தார். ஈழநாட்டுச் செலவு : தூத்துக்குடியில் வழுதூர் அழகிய சுந்தரர் என்பார் ஒருவர் இருந்தார்; அவர் சிவநெறிச் செல்வர்; தூத்துக் குடி சைவ சித்தாந்த சபையின் தொடர்புடையவர்; அவர் மறைமலையடிகளிடத்துப் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர். அவர் வழியாக அடிகளார் பெருமையை அறிந்தார் இளைஞர் திருவரங்கனார். திருவரங்கனார் பாளையங்கோட்டை வயிரமுத்தர் சந்தரத்தம்மையார் மைந்தர். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் பின்னாளில் நிறுவியர்; தாமரைச் செல்வர் வ. சுப்பையா அவர்களுக்கு முன் தோன்றல்! அரங்கர் கொழும்பில் சிவசு என்னும் வணிகக் கூட்டு நிறுவனத்தில் பணி செய்து வந்தார். அவர்தம் இளந்தைப் பருவ நிலையை ஒரு பெரியவர் படமாகப் பிடித்துக் காட்டுகிறார்: நம் பேரன்பர் திருவரங்கம் பிள்ளை, அவர்கள் எடுத்த காரியத்தை முற்றுப்பெறச் செய்வதில் சலியா உழைப்பும் தளரா ஊக்கமும் அயரா ஆர்வமும் அஞ்சா நெஞ்சமும், தமிழ்ப்பற்றும் இறைவனிடத்தில் மாறாத அன்பும் கொண்டவர்கள். அவர்கள் நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் மட்டும் தூங்கி, பாக்கி 21 மணி நேரமும் உழைத்து வந்த காலமும் உண்டு என்கிறார். அப்படி உழைத்த காலத்தில்தான் அடிகளாரை அறிந்து அவரை ஈழத்திற்கு அழைக்க ஆழத்தில் ஆழமாக மூழ்கினார். அவ்வாறே அவர் அழைப்பை ஏற்று 7-1-1914 -இல் கொழும்புத் துறையை அடைந்தார் அடிகளார். தம்மை ஈழத்திற்கு இவ்விளைஞர் தாமே அழைத்தார் என வியப்புற்றார் அடிகளார். பின்னர் அவரிடத்து ஈழத்துச் செல்வர்கள் கொண்டுள்ள ஈடுபாட்டை உணர்ந்து இவ்விளைஞர்பால் இங்குறையும் பொருட் செல்வர்களும் அருட்செல்வர் களும் கொண்டுள்ள ஈடுபாடு தான் என்னே! என்னே! எனக்குத் தொண்டு செய்ய என்றே இறைவன் இத்திருவரங்கரை அருளினன் போலும் எனப் பெருமித முற்றார். 11-1-1914 இல் கொழும்பு தம்பையா சத்திரத்தில் முதற்கூட்டம் நடந்தது. திருஞானசம்பந்தரைப் பற்றி அடிகள் பேசினார். 24-3-1914 வரை அடிகள் கொழும்பிலே தங்கினார்; பன்னிரு கூட்டங்களில் பொழிவு செய்தார். இச் சுற்றுலாவிலே உருபா 1883 கிடைத்தது. திங்கள் தோறும் ஒரு தொகை உதவும் வள்ளன்மையர் சிலர் வாய்த்தனர்; அடிகளார் இயற்றிய நூல்களைத் தருவித்து விற்கவும் ஏற்பாடாயிற்று அடிகளார் அச்சுக்கூடம் ஒன்று நிறுவுவதற்குத் துணிந்தார். அதற்கும் திருவரங்கர் பேருதவி புரிந்தார். அதனால் ஞானசாகரத்தில், நமது அச்சுக்கூடத்திற்காக அன்பர்களிடம் பொருள் திரட்டித் தர முன்வந்து நின்று, சென்ற ஒன்றரையாண்டுகளாக இடையறாது உழைத்து உதவி செய்து வரும்நம் அன்புருவான் ஸ்ரீமான் வ. திருவரங்கம் பிள்ளையவர்களின் பேருபகாரச் செய்கைக்குத் திருவள்ளுவ நாயனார், செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது என்றருளிச் செய்த வண்ணம் எவ்வகையான கைம்மாறு நான் செய்யக் கூடும்? என்றும், ஸ்ரீமான் திருவரங்கம் பிள்ளையின் வேண்டுகோட்கிணங்கிப் புண்ணியத் திருவாளரான குலசேகரன் பட்டினம் ஸ்ரீமான் ரா.ப. செந்திலாறுமுகம் பிள்ளையவர்கள் எழுநூற்றைம்பது ரூபாவும், தயாளகுணப் பிரபுவான கு.ப. பெரியநாயகம் பிள்ளையவர்கள் ஐந்நூறு ரூபாவும் நமது அச்சுக்கூடத்திற் கென்று தருமமாக உதவி, உடனே உயர்ந்த புதிய அக்சியந்திரம் வாங்கும் படி முன் முயற்சியும் காட்டிய அரும்பெருந் தகைமை எழுமை எழுபிறப்பும் மறக்கற்பாலன்று என்று எழுதினார். அச்சகம் - நூலகம் : பல்லவபுரம் சாவடித் தெருவில் மனைகட்டி வந்த அடிகளார் 19-5-1915 இல் அதில் குடி புகுந்தார். 1916 இல் அம் மாளிகையின் ஒரு பகுதியில் அச்சுக் கூடம் நிறுவினார். அதன் திறப்பு விழாவைத் திரு.வி.க. நிகழ்த்தினார். அம்பலவாணர் நூல் நிலையமும் உருக்கொண்டது. 1915, 1916 ஆகிய ஈராண்டுகளும் அடிகளார் அச்சிடல், நூலியற்றல், இதழ் வெளியிடல் ஆகியவற்றிலேயே முழுமையாக ஈடுபட்டிருந்தார். இவ்வாண்டிலேயே (1916) நாம் முதற்கண் கண்ட தனித்தமிழ் இயக்கம் தோற்றமுற்ற நிகழ்ச்சி நடந்ததாகும். இப்பொழுதுதான் ஞானசாகரத்தை அறிவுக் கடல் என்றும், சமரச சன்மார்க்க சங்கத்தைப் பொதுநிலைக் கழகம், என்றும், தம் பெயரை மறைமலையடிகள், என்றும் அடிகள் மாற்றி வைத்தார். திருஞான சம்பந்தம். அறிவுத்தொடர் பாகவும் திரிபுர சுந்தரி முந்நகரழகியாகவும் பெயருற்றனர். இவை நீலாம்பிகை செய்ததாம்! பெயர் மாற்றத்துடன் நின்றாரா அடிகளார். முன்னே அச்சிட்ட நூல்களின் மறுமதிப்புகள் வெளிப்படுந்தோறும் பிறமொழிச் சொற்களை விலக்கித் தனித் தமிழாக்கம் செய்தார்! இதனைக் காலமெல்லாம் தொடர்ந்தும் செய்தார். அடிகளாரின் வாழ்வுக்கும் மனைகட்டுதலுக்கும் அச்சகத்திற்கும் தொடர்ந்து உதவி வந்த அரங்கனார், அடிகளாரை மீண்டும் கொழும்புக்கு அழைத்தார். 21-5-1917 இல் கொழும்புக்குப் புறப்பட்ட அடிகளார் 28-9-1917 இல் மீண்டார். இவ்வுலகில் பல்வேறு உதவிகளுடன் உருபா 1797 - உம் நன்கொடையாகத் தண்டி உதவினார் அரங்கர். ஒரு பெரிய விழாவில் நீவிர் நாயன்மார் அறுபத்து மூவரை அறிவீர்; அறுபத்து நான்காம் நாயனார் ஒருவருளர்; அவரே இத் திருவரங்கர் என அடிகள் பாராட்டினார். செந்தமிழ்க் களஞ்சியம் : திருவரங்கரின் கெழுதகை நண்பர் வி சங்கரநாராயணர் என்பார். தம் பெயரையும், அவர் பெயரையும் இணைத்துத் திரு. சங்கர் கம்பெனி என்னும் பெயரால் ஒரு புத்தக நிறுவனத்தை 1917 இல் நிறுவினார். மற்றையோர் நூல்களும் விற்கப் பெறுமாயினும் அடிகளார் நூல்களை விற்பதற்கெனவே அமைக்கப்பட்ட அமைப்பாகும் அது பின்னர் இவ்வமைப்பின் வழியாகவே வெளிப்பட்ட செந்தமிழ்க் களஞ்சியம் என்னும் திங்கள் வெளியீடு அடிகளாரின் திருவாசக விரிவுரை வெளியிடற்கென்றே எழுந்த தாகும். இவ்வாறெல்லாம் எண்ணி எண்ணி அடிகளார்க்கு உதவிய அரங்கர் ஒருநாள் பல்லவபுரத்தில் அடிகளார் இல்லத்தை எய்தினார் அவரை வரவேற்று மகிழ்வதில் எங்கள் குடும்பம் அப்பரை வரவேற்ற அப்பூதி அடிகள் குடும்பத்தையும் விஞ்சி விட்டது என்கிறார் மறை. திருநாவுக்கரசு! ஏனெனில் அவ் வரவேற்பு உறுப்பாளர்களுள் அவரும் ஒருவர் அல்லரோ! அரங்கர் தாம் தொடங்கிய திருசங்கர் புத்தக நிறுவனத்தைச் சென்னையில் நடத்த வேண்டும் என்றும், அதனைப் பற்றிப்பேசி அடிகளார் வாழ்த்துப்பெற வேண்டும் என்றும் கருதினார். அடிகளார் மனையில் சின்னாள்கள் தங்கினார். முன்னரே அரங்கரைப் பல்காலும் கேட்டிருந்த நீலாம்பிகையார் அன்புற்றார். அரங்கர் அவரைப் பார்த்து ஆர்வப் பெருக்குற்றார். நாள்கள் செலச்செல அது காதலாகக் கனிந்தது. இருவரும் மாறிப் புக்கனர் என்னுமாறு காதலுறுதியாயிற்று! அரங்கர் சென்னை பவழக்காரத் தெருவில் திருசங்கர் குழுமத்தைத் தொடங்கினார். செந்தமிழ்க் களஞ்சியம் இதழும் தொடங்கப் பெற்றது. அடிகளாரின் திருவாசகக் கட்டுரையை அது தாங்கிற்று. உள்நாட்டுக் கையொப்பம் உருபா நான்கு வெளிநாட்டுக் கையொப்பம் உருபா ஆறு. உரைவளம் நல்கும் அடிகளார்க்கு ஓரிதழ்க்கு உருபா நூறு. இத் திட்டத்துடன் 1920 பெப்ருவரியில் முதல் இதழ் வெளிவந்தது. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்: அடிகளார்க்கு அன்பராக நெல்லையில் திரவியம் இருந்தார். அவர்க்கு அன்பர் விசுவநாதர் என்பார். அவர் சிவனெறியும் செந்தமிழும் தழைக்கவேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டவர். தாம் சிவஞ்சார் குடியில் பிறந்ததும் தோல்பதனிடும் தொழிலக மேலாண்மைப் பொறுப்பில் இருக்க நேர்ந்ததை எண்ணி வருந்துவார். நம் மக்கள் எத்தனையோ புதுப்புதுத் தொழில் முறைகளில் ஈடுபடுகின்றனர். எனினும், உயிர்க்கு ஊதியமாம் அறிவு நூல் வெளியீட்டுத் துறையில் ஈடுபடுவார் இலரே என வருந்துவார். அவ் வருத்தம் திரவியனாரை அசைக்க, அவர் அடிகளாரை அணுக, அடிகளார் அரங்கர்க்கு ஆற்றுப் படுத்தினார். அவ்வாற்றுப் படையில் பங்கு ஒன்றுக்கு உருபா பத்து விழுக்காடு 5,000 பங்குக்கு உருபா ஐம்பதாயிரத்தில் திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் என்னும் பெயரால் 21-9-20 இல் திருநெல் வேலியில் பதிவு செய்யப்பெற்றது. திருவரங்கனாரும் திரவியனாரும் கூட்டமைச்சர் களாக இருந்து கழகத்தை நடத்தினர். கழகம் பதிவானபின் அரங்கனார் நெல்லையிலேயே தங்க நேர்ந்தது. அதனால் அவர் சென்னையில் நடத்தி வந்த திருசங்கர் கம்பெனி வணிகத்தைத் தொடர்ந்து நடத்தும் பொறுப்புக்கு அவர்தம் இளவல் வ.சு.வை அமர்த்தினார். அவ்விடத்திலேயே கழகக்கிளை நிலையமும் தொடங்கப் பட்டது. பின்னர்க் கழகத் தோடு திரு சங்கர் குழும்பும் இணைந்தது! ஓரிடர் : நல்லெண்ணத்தால் தொடங்கப்பட்ட நன்முயற்சிக்கும் எதிர் பாராத் தடை எதிரிடுதலும், உள்ளார்ந்த அன்பு உடையாரும் எதிரிட்டுக் கொண்டு நிற்கவும் வாழ்வில் நிகழ்தல் உண்டு. அத்தகு நிலை அடிகளார்க்கும் அரங்கர்க்கும் உண்டாயிற்று. 1920 பிப்ரவரி முதல் 1922 ஏப்பிரல் முடிய இருபத்தேழு மாதங்களில் 27 இதழ்கள் செந்தமிழ்க் களஞ்சியம் வெளிவந்திருக்க வேண்டும்! ஆனால் வெளிவர வாய்த்தவை 12 இதழ்களே! அதன் பின்னர் அறவே வெளிவரும் சூழலும் இல்லை! அரங்கரால் நிகழ்ந்ததா இது! இல்லை. அடிகளார் உரையல்லவோ இதழ்! அடிகளார் வழங்கினால் அல்லவோ களஞ்சியம் நடையிடும்! என் செய்வது; அரங்கர் ஆயிரவரிடம் உறுப்புதவி பெற்றிருந்தார்! அவர்க்கெல்லாம் என்ன சொல்வது? அடிகளார் எடுத்துக் கொண்ட உரைப்பணி அரும்பணி! புனைகதை போல்வதன்று! கருத்துக் கட்டுரையும் அன்று! உரைகாண்டலும் ஆகாது என ஓதப்பட்ட நூலுக்கு, உரைவரைய ஏற்றுக் கொண்டவர் அடிகளார்! அவர்க்கு நிறைவு தராவகையில் காலமும் இதழும் கருதி எழுதி முடிக்க இயலவில்லை! இதழ்த் தடை சிறிது சிறிதாய் உறவுத் தடையாயிற்று! அடிகள் அரங்கரைப் பொறுத்த அளவில் வணிகத்தடையும் அன்புத் தடையுமாக அமையும்! ஆனால், அரங்கர் அம்பிகையார்க்கோ அது காதல் தடையும் ஆயிற்று! கடிகையாரத்தின் ஒரு சக்கரச் சிக்கல் பிறபிற சக்கரங்களையும் சுழலாது செய்து ஓட்டத்தைத் தடுத்து நிறுத்துவது போல் ஆயிற்று! இருபாலும் நிகழக் கூடாத ஒரு பிரிவு உண்டாயிற்று. யாழ்ப்பாணத் தமிழர் மீண்டும் அடிகளார் பொழிவைக் கேட்க விரும்பினர். அழைப்பு விடுத்தனர்; அடிகளார் 21-12-1921 இல் கொழும்பு சேர்ந்தார். இச் செலவில் அடிகளார், பண்டித மயில் வாகனனார் என்னும் விபுலானந்த அடிகளார் விருந்தினராகத் தங்கினார். 16-1-1922 வரை பல்வேறு இடங்களில் சொற்பொழிவாற்றிப் பெருஞ் சிறப்புடன் மீண்டார். நீலாம்பிகையார் : நீலாம்பிகையார் உள்ளம் வீட்டில் நிலைகொள்ளவில்லை. மேலே படிக்க விரும்பினார். 1920 இல் வில்லிங்டன் பெருமாட்டி ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் முதற்படிவத்தில் சேர்ந்தார். அக் கல்லூரியொடு சார்ந்த விடுதியிலேயே உறைந்தார். நான்காம் படிவம் பயிலும்போது அவர்க்கு இளைப்பு இருமல் வருத்தியது. சின்னாள் விடுப்பும், பன்னாள் விடுப்புமாய் முற்றாகப் பள்ளியை விடுக்கும் நிலையையும் இருமல் ஆக்கிற்று. ஆங்கில மருத்துவம் சித்தமருத்துவம் எல்லாம் செய்தாயின. உடல் நோய்த் தீர்வு, உளநோய்த் தீர்வு ஆகாமல் தீராது போலும்! இந்நிலையில் பல்லவபுரத்தில் வித்தியோதயா என்றொரு கல்லூரி தொடங்கிற்று. அக்கல்லூரியின் தமிழாசிரியர் வேலை அம்பிகையைத் தேடி வந்தது. அம்பிகையார் தம் பத்தொன்பதாம் அகவையில் அப் பணி மேற்கொண்டார். ஈராண்டுகளுக்குப் பின் அக் கல்லூரி மயிலாப்பூர் சாந்தோம் பகுதிக்குச் சென்றது. அங்கும் பணி மேற்கொண்டார் நீலாம்பிகையார். முன்னே ஓரளவு விடுப் பட்டிருந்த இருமல் பெருகியது; வேலையைத் துறந்து; பணியை விடுத்து வீட்டில் அமைந்தார்! 4இல் சென்னை இராயபுரத்தில், நார்த்விக் மகளிர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழாசிரியப் பணியை ஏற்றார். ஆங்கு நான்கு ஆண்டுகள் பணி செய்தார். ஆசிரியப் பணி ஏற்ற காலம் தொட்டே தக்க அவையில் பொழிவு செய்யும் கடமையை மேற்கொண்டார் நீலாம்பிகையார். பொழிவுக்கும் பயிற்றுதற்கும் முறையாக ஆய்வு மேற்கொண்டார். அவ்வாய்வு அவரை அழியா வாழிச் செல்வியராய் ஆக்கி வைத்தது. அக் காலத்தில் அவர் செய்த ஆய்வு நுணுக்கங்கள் பின்னே தனித்தமிழ்ச் செல்வங்களாக வெளிப்பட்டு அடிகளார் வழிமரபைப் புதுப்பித்தது. அரங்கர் திருமணம் : அடிகளார் மெல்லுள்ளம் கரைந்தது அரங்கர் அம்பிகை காதல் நோன்புக்கு உருகியது. நீலா, உங்கள் மணத்தை யான் தடுக்கவில்லை; நம் வீட்டில் என் முன்னிலையில் உங்கள் திருமணம் நிகழ இயலாது. நீயும் காதலரும் வேறிடத்தில் திருமணத்தை நிகழ்த்திக் கொள்ளுங்கள்: யான் அதற்கு வரமாட்டேன்; ஆனால் தாயும் உடன் பிறந்தாரும் உங்கள் திருமணத்தில் வைத்துக் கொள்ள வேண்டுவன வெல்லாம் செய்வேன். அணிகலன்களுக்கும் திருமணச் செலவுக்கும் பொறுப்பேற்றுக் கொள்வேன் என்று பல்கால் வலியுறுத்தினார் இத்திட்டத்தை அறிவறிந்த அம்பிகை ஏற்பரோ? அரங்கர் ஏற்பரோ? ஆண்டுகள் ஒன்றா இரண்டா கடந்தன? ஒன்பது ஆண்டுகள் கடந்தன. ஒருநாள் ஓராண்டாய், ஒன்பதாண்டாக உருண்டன! கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதுபோல் அரங்கரின் உடன் பிறந்தாராகிய வ.சு. அவர்கள் அடிகளார்க்கு அணுக்கரானார்; அன்பரானார்; அரவணைப்பும் ஆனார். அடிகளார் உள்ளம், படிப்படியே மாறிவருவதை உணர்ந்து தக்க பொழுதில் தமிழ்க் காசு அவர்களுடன் பல்லவபுரம் சென்றார். தமிழ்க் காசு வலியுறுத்தினார்; திரு. வி. க.வும் வேண்டினார். திருமணத்திற்கு இசைவு தந்தார் அடிகளார். 2-9-1927 இல் மயிலை கபாலீசுவரர் திருக்கோயிலில் அரங்கர் அம்பிகை திருமணம் நிகழ்ந்தது. அடிகள் அம்பிகையாரைக் கொடுப்ப அரங்கர் பெண்ணின் நல்லரோடும் பெருந்தகைக் கோலம் கொண்டு திகழ்ந்தார். பேரறிஞர் கா.சு.; பொறியியல் அறிஞர் பா. வே. மாணிக்கர்; தமிழ்த் தென்றல் திரு. வி.க. ; மணிதிருநாவுக்கரசர்: கா. நமச்சிவாயர்; ச. சச்சிதானந்தர்; பாரிப்பாக்கம் கண்ணப்பர்; இசைவல்லார் சாம்பமூர்த்தியார்; நெல்லை சுந்தர ஓதுவார்; பரலி சு. நெல்லையப்பர்; செந்தில் ஆறுமுகனார்; பெரும்புலவர் ,. மு. சுப்பிரமணியனார் இன்ன பெருமக்கள் முன்னிலையில் விழா பெருஞ்சிறப்பு உற்றது. இசையரங்கு, இசைக்காதை, வாழ்த்து, அழைப்பு இன்னவெல்லாம் சீர்சிறக்கச் செறிந்தன. அரங்கர் அம்பிகை வாழ்க்கை பாளையங் கோட்டையில் தொடங்கியது. நீலாவுக்கு அஞ்சல் : அடிகளார் உள்ளம் வன்கண்மையதா? மென் கண்மையதா? சூழலும் செயலும் காலமும் பிறவும் எவரெவரையெல்லாம் எப்படி எப்படி ஆட்டிப் படைத்து விடுகின்றன! ஒன்றாய் உருகி நின்ற உள்ளமும், வேறாய் இருவேறு துருவங்களாய்ப் பிரியும் இயல் ஏற்பட்டுவிடுகின்றதே! இதோ ஓர் அஞ்சல்; அடிகளார் தம் அருமை மகளார்க்கு வரைந்தது; அடிகளார் உள்ளத்தை உள்ளபடி காட்டுவது: ஓம் சிவம் டி.எம். அச்சுக்கூடம், பல்லாவரம். 7-12-1927 அருமை திருமிகு திருவரங்க நீலாம்பாளுக்கு அம்மையார் திருவருளால் எல்லா நலங்களும் உண்டாகுக! நீங்கள் இருவரும் அறிவும், உங்கு நலமுடன் சேர்ந்த அன்றைக்கே எழுதிய கடிதங்கள் இரண்டு பெற்றுப் பேரின்ப வெள்ளத்துள் திளைத்தேம் ஆயினேம். நீலாவும் அவள்தன் அருமை அத்தையாரும் அன்னையும் புதல்வியும் போல் அத்துணை யன்புடன் அளவளாவுதலை அறிந்தெழுந்த பெருமகிழ்ச்சியால் எம்பெருமானை வாழ்த்தியும் வணங்கியும் எம் புல்லிய நன்றியைச் செலுத்தினேம். யாம் கற்ற பண்டைத் தனிச் செந்தமிழ் அகப்பொருள் இலக்கணத்திற்குக் கண்கண்ட இலக்கியமாய் நீவிர் இருவீரும் இருதலைப் புள்ளின் ஓர் உயிரினராய்த், தோகைக்கும் தோன்றற்கும் ஒன்றாய் வரும் இன்ப துன்பங்களே என்று திருச்சிற்றம்பலக் கோவையாரில் மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்தாங்கு, இன்ப துன்பங்களிலும் ஒருவரை யொருவர் இன்றியமையாக் காதல் அன்பில் தலைப்பிரியா வாழ்க்கையினில் நீவிர்நீடுவாழுமாறு அருள் புரிந்த அம்மையப்பர் தம் பேரிரக்த்திற்கு ஏழையேம் எங்ஙனம் கைம்மாறு செலுத்த வல்லேம். அவ்வருட் பெருந்திறத்தை எங்ஙனம் ஏத்திப் புகழ வல்லேம். காதல் அன்பின்கண் ஈடுபட்ட நும் இல்லற இன்ப வாழ்க்கை அம்மையப்பர் தம் அருள் வாழ்க்கையில் வேறாகுவது அன்றாகலின் இவ் வாழ்க்கையிலேயே நும் வாழ்நாள் எல்லா நலங்களிலும் இனிது நீடுக என்று எம்பெருமான் பெருமாட்டியின் இணைமலர்த் திருவடிகளை இறைஞ்சி வேண்டுகின்றேம். எம்முடைய வாழ்க்கையினும் யாம் ஈன்ற எம் மக்களின் இல்வற வாழ்க்கை முற்றும் அன்பிற் பிரிதல் இல்லர் இன்பச் சுற்றத்தவரோடு இனிது நடைபெறுக என்று யாம் வேண்டிய வேண்டுகோள் உரையினை எம் இறைவன் திருச்செவி பெற்று நீலாள். கணவனுடன் அவள்தன் அருமை அத்தையாரும், அருமை மைத்துனரும், ஏவலாளரும், ஏவலாட்டியும் பிறரும் எல்லாம் அன்பிற்கெழுவிய நன்பெரு மாட்சியினை அருள் செய்தான்! அவ்வருளுக்கு எளியரேம் எழுமை எழு பிறப்பும் உழுவற்றொழும்பு ஆற்றுவதல்லது வேறென் கடவேம்! தன் மனக்கினிய காதலன்பாள் நீலாளை ஒப்படைத்து விட்டபின் யான் கவலையுறுதற்கு இடனில்லையாயினும், அவட்கு வந்த நோய் இனி வாராதென்னும் உறுதிப்பாடு பெற்ற பின்னரே என்னுள்ளம் அமைதி பெறும். நெடுந்தொலைவில் இருப்பதனாலும் அடுத்தடுத்துக் காணுதற்கு இல்லாமையாலும் அருமை மகளை நினைத்து நெஞ்சம் நிலைகலங்குகின்றது. எமது கலக்கத்தை நன்கறியும் இறைவனே, அவட்கு இனி அந்நோய் வராமல் அருள் செய்து எமது பெருங்கவலையைத் தீர்க்கற்பாலான். நீலா, தலைமுழுகும் நாள்களில், உடைத்து விதை அகற்றிய நான்கு கடுக்காய், ஏழு கசப்பில்லாத வாதுமைப் பருப்புகளின் எடையுள்ள மிளகு, இம்மிளகின் எடையில் அரைவாசி கொண்ட ஓமம் என்னும் இவற்றை நெகிழ அரைத்து வடிகஞ்சியிற் குழப்பி, இறுகக் காய்ச்சி, சூட்டோடு அதனைத் தலையிலும் உடம்பிலும் தேய்த்துக் கொண்டு அளவான வெந்நீரில் முடிக்காய் சவற்காரத் தால் நெய்ச்சிக்கும் அழுக்கும் போக முழுகுதல் வேண்டும். தேனும் இந்துப்புப் பொடி சிறிதும் கலந்த இஞ்சிச் சாற்றை அகமும் புறமும் தூயவாய்ப் பளபளப்பாக்கிய குடகு நாரத்தை நிறக் கண்ணாடிப் புட்டிலிலும் ஆழ்ந்த நீலக் கண்ணாடிப் புட்டிலிலும் அடைப்பித்து, வெயிலில் நாள் முழுதும் வைத்த படியாகவே அதனை உட்கொண்டு வரல் வேண்டும். நோய் மிகுந்தில்லா நாள்களில் மூன்று மணி நேரத்திற்கு ஒருகால் குடகு நாரத்தை நிறப்புட்டிலின் சாற்றையும் இடையே ஒன்றல்லது இரண்டு முறை ஆழ்ந்த நீலப்புடிலின் சாற்றையும் மாற்றி மாற்றிக் காற்பலம் பருகிவரல் வேண்டும். தலை முழுகிய மறு நாளில் ஐந்து விதை நீக்கிய கடுக்காய்ச்சாறு அருந்திமலக்குடரைத் துப்புரவு செய்க. உடம்பு இடுங்கச்சுகள் முழங்கைக்கு மேல் நீளமாய் இறுகப்பிடித்திருத்தல் வேண்டும். குளிர்ச்சி மிகுந்த பண்டங்களை உட்கொள்ளல் வேண்டாம். நலம். அன்புமிக்க, மறைமலையடிகள். அடிகள், அடிகளாய், தாயாய் தந்தையாய் குருவாய் மருத்துவராய் பல்லுருக்காட்டி நிற்கும் பாங்கு இக் கடிதம் ஒன்றால் வெளிப்பட விளங்குமே! அடிகளார் எத்தனை எத்தனை தலைப்புகளில் எங்கெங் கெல்லாம் பொழிந்தார்! எவ்வெவ்வூர்களுக்கு எல்லாம் சென்றார்! எவ்வெவரோடும் எல்லாம் தொடர்பாளராய்த் துலங்கினார்! எவர்க்கெல்லாம் வழிகாட்டியாய் இலங்கினார்! எத்தகைய பல்கலைக் களஞ்சியமாகத் திகழ்ந்தார்! எத்தனை துறைகளைப் புதுக்கினார்! இவற்றைப் பட்டியலிட்டால் அதுவே ஒரு தனிப்பெரு நூலாதல் ஒருதலை. அவர் நடாத்திய பொது நிலைக்கழக இருபதாம் ஆண்டு விழா ஒன்றைமட்டும் சுட்டி அமைவாம். அடிகள் தம் வருவாய் கொண்டு அரிதில் தேடித் தொகுத்த நூல்கள் நாலாயிரம் ஆகும் அவை, தமிழ், வடமொழி, ஆங்கிலம் என்னும் மும்மொழி சார்ந்த நூல்களாம். அந்நூல்களை நூலகமாக அமைத்து மணிமொழி நூல் நிலையம் எனப் பெயரிட விரும்பினார். பொதுநிலைக் கழக விழா : பொதுநிலைக் கழக மாளிகையின்மேல் இறைவழிபாட்டுக் கென அம்பலவாணர் திருக்கோயில் ஒன்றும் அமைத்தார். முறையே இவற்றின் திறப்பு விழாவும், குடமுழுக்கு விழாவும் பொதுநிலைக் கழக இருபதாம் ஆண்டு விழாவும் ஒருங்கே நடத்தத் திட்டப்படுத்தினார். அந்நாள் 1931 ஆம் ஆண்டு பெப்ரவரித் திங்கள் இரண்டாம் பக்கல் தைப்பூசத் திருநாள் ஆகும். அடிகள் நடாத்திய குடமுழுக்கு அவர்களாலேயே தமிழ்மறை ஓதிச் செய்யப்பட்டது ஆகும். விழாவுக்கு வந்திருந்தவர் அனைவரும் தாமே அம்பலவாணர் திருவடியில் மலரிட்டு வணங்கினர்; தாமே திருநீறு எடுத்து அணிந்து கொண்டனர். அம்பலவாணர் திருமுன் எவ்வகையான ஏற்றத்தாழ்வுமின்றி வழிபாடாற்ற அடிகள் செய்த ஏற்பாடு வள்ளலார் வழிபட்டதாகும்! வழிபாட்டு நிகழ்ச்சி முடிந்தபின் மணிமொழி நூல்நிலையம் திறக்கப்பெற்றது. அதன்பின் பொதுநிலைக்கழக விழாத் தொடங்கியது. தேவார திருவாசகங்கள் இன்னிசைக் கருவிகளுடன் ஓதப்பட்டன. அன்பர்கள் மகிழ்ச்சியின் இடையே அடிகள் அவைத் தலைமை பூண்டார்கள். அப்போது திருவாவடுதுறைத் திருமடத்துத் தலைவர் அடிகட்கு அனுப்பிய பொற்பட்டாடையும் பொற்பட்டுப் போர்வையும் மறைத்திரு. கருணானந்த அடிகள் சிறப்பித்துக் கொடுக்க, அடிகள் அவற்றை ஏற்றருளினார். சென்னைப் பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் மணி. திருநாவுக்கரசர் பொதுநிலைக்கழக அமைப்பும் நோக்கமும் பற்றி விளக்கியுரைத்தார். இளவழகனார் விரிவுரையாளர்களுக்கு வரவேற்பும், பொருளுதவி செய்தார்க்கு நன்றியும் கூறினார்; அடிகள் அப் பேரவையில் அம்பலவாணர் திருக்கூத்தின் உண்மையும் ஞானயோகமும் என்பது பற்றி உரையாற்றினார். பின்னர் இரண்டு நாள்கள் அறிஞர்கள் பலர் உரையாற்றினர். ஆக முப்பெரு விழாக்களும் மூன்று நாள் விழாக்களாகச் சிறந்தன. இவ்விழாப் பேரவையில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் அடிகளாரின் சீர்திருத்த நாட்டத்தைச் செவ்விதின் விளக்குவனவாம். அவை : 1) மடத்துத் தலைவர்கள் எல்லாக் குலத்தவர்க்கும் வேற்றுமை இன்றிச் சமயச் சடங்குகள் கற்பிக்க முயற்சி செய்தல் வேண்டும். 2) கோயில்களில் வேற்றுமையின்றித் திருநீறு முதலியன பெறவும் நிற்கவும் கோயில் தலைவர்கள் இடம் செய்தல் வேண்டும்; 3) பழந்தமிழ்க் குடிமக்கள் (தீண்டாதார்) எல்லோரையும் தூய்மையாகத் திருக்கோயில்களிற் சென்று வழி பாடாற்றப் பொதுமக்களும் கோயில் தலைவர்களும் இடம் தரல் வேண்டும். 4) கோயில்களில் பொது மாதர் திருப்பணி செய்தல் கூடாது. 5) வேண்டப்படாதனவும் பொருட்செலவு மிக்கனவும் சமய உண்மைக்கு முரண்பட்டனவும் அறிவுக்குப் பொருத்தம் அற்றனவும் ஆகிய திருவிழாக்களையும் சடங்குகளையும் திருக்கோயில்களிலே செய்தல் முற்றும் கூடாது. தூயதும் வேண்டப்படுவதுமான சடங்குத் திருவிழாவும் குறைந்த செலவிலே செய்தல் வேண்டும். 6) சாரதா சட்டத்தை உடனே செயன்முறைக்குக் கொணர்தல் வேண்டும். 7) கைம்பெண்ணைத் தாலியறுத்தல், மொட்டையடித்தல், வெண்புடவையுடுத்தல், பட்டினி போடல் முதலியவை நூல்களிற் கூறியிருப்பினும் வெறுக்கத் தக்க இச் செயல்களை நீக்குதல் வேண்டும். கைம் பெண் மணம் முற்காலத்திலும் இருந்திருப்பதாலும் நூல்களில் ஒப்புக் கொண்டிருப்பதாலும் அதனைச் செயன் முறைக்குக் கொணர்தல் வேண்டும். 8) சாதிக் கலப்பு மணம் வரவேற்கத் தக்கது. 9) தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழுக்குத் தலைமை தருதல் வேண்டும். 10) தமிழைத் தனிப்பாடமாக பி.ஏ. ஆனர்சு வகுப்புக்கு ஏற்படுத்தல் வேண்டும். இவை பொதுநிலைக் கழக விழாவில் நிறைவேற்றப் பட்டன என்றால் இவற்றைக் கொணர்ந்தவர் எவர்? அடிகளாரே அல்லரோ! இக் கொள்கைகள்தாமே பொது நிலைக் கழகம் அஃதென்பதை வெளிப்படுத்த வல்லன வல்லவோ! சீர்திருத்தம் சீர்த்திருத்தம் எனக் கொடி கட்டிப் பறந்தார் சீர்திருத்தக் கொள்கைகளையெல்லாம் அடக்கமாக-அமைவாக-காட்டிய அடிகளார் பெருநிலை சிவநெறியர்க் கெல்லாம் உண்டாகி யிருந்தால், அச் சமயம் எத்தகு வழிகாட்டியாக அமைந்திருக்கும், அஃதில்லாமை. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் என்னும் மறைமொழியைச் சொல்லுமாறே உள்ளது இவ்வாறு அமைந்ததே அடிகளார் தனித்தமிழ் இயக்கம் கண்டதும், இந்தி எதிர்ப்பில் தலைப்பட்டு நின்றதுமாம்! ஒரு சொற்போர் : தனித்தமிழ் இயக்கம் தோன்றிய சூழலை அறிந்துள்ளோம். அதனைப் பழுத்த புலமையாளர்களும் போற்றத் துணிய வில்லை. தனித்து அமிழ் என்று அத்தொடரைப் பிரித்து எள்ளியவர் களும் உண்டு. ஒரு புதுமை தோன்றும்போது, அதனை ஆய்ந்து அறிவாளர்கள் ஏற்றுப் போற்றத் தொடங்கினால், அது நாடு தழுவிய விளக்கமாய்த் திகழும். அவ் வகையில் அடிகளாரின் அருமை மகளார் நீலாம்பிகையார் தனிப்பெரும் பரப்பாளியாகத் திகழ்ந்தார். அவர்தம் அருமைத் துணைவர் திருவரங்கனார் அத் தூய தமிழ்க்காதல் தொண்டாலேயே தம்மை இழந்து பின்னே நீலாம்பிகையார் காதலில் கட்டுண்டு கடிமணம் கொண்டவர் அல்லரோ! அதனால், அவர் அடிகளார் இயக்கத்திற்கு ஊன்றுகோலாய் அமைந்தார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடுகளாலும், செந்தமிழ்ச் செல்வி என்னும் இதழ் வழியாலும் பெருந்தொண்டு செய்தார். அவர் ஊன்று கோலாய் இருந்தார் என்னின், அவ்வியக்கத் தூணாக இருந்தவர் அவர்தம் தம்பியார் தாமரைச் செல்வர் வ. சுப்பையா அவர்களே ஆவர். எத்தனை எத்தனை அறிக்கைகள்! துண்டு வெளியீடுகள்! ஆசிரிய உரைகள்! இவற்றின்மேல் பாவாணர் எழுத்து அடிகளார் இயக்கத்திற்கு மாளிகை எழுப்பி மணிக்கூண்டும் அமைத்தது போன்ற மாண்பினதாயிற்று. அடிகளார் காலத்தில் தனித்தமிழ்க்கு இருந்த நிலையை ஓர் எடுத்துக்காட்டால் காணலாம். 24-7-1927 இல் கரந்தை தமிழ்ச் சங்க ஆண்டுவிழா. அவ் விழாவில் அடிகளார் தலைமையுரையாற்றினார். அடிகள் தம் உரையின் இடையே ஆ என்பது சிலருக்கு விளங்காது பசு என்றால் விளங்கும் ஆ என்பது தனித்தமிழ்ச் சொல். பசு என்பது வடசொல். தண்ணீர் என்று உரையாது நம் மக்களிற் பலர் ஜலம் என்கின்றனர் ஜலம் என்பது வடமொழி ஐயகோ! மலையாளிகள் கூட வெள்ளம் எனும் தனித்தமிழை வழங்கு கின்றனரே என்றார். அவ் விழாவில் அடிகளுக்கு முன்னர்ப் பெரும் புலவர்கள் நாவலர் ந. மு. வேங்கடசாமியார், பண்டிதமணி கதிரேசனார், கரந்தைக் கவியரசு, புரவலர் உமாமகேசுவரர் ஆகியோர் இருந்தனர். அவர்களுள் பண்டிதமணியார், சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் என்று அப்பர்கூட கூறியிருக்கிறாரே என்றார். உடனே அடிகளார், சலசல; என்ற ஓசையுடன் ஓடுதலின் சலம் என்பது காரணப்பெயர். அது தமிழ்ச் செய்யுள் ஒன்றிலும் கூறப்பட்டுள்ளதே! அது வடமொழிதான் என்று உறுதியானால் அதைவிட்டு நீர் என்னும் தனித்தமிழ்ச் சொல்லை ஆளலாமே. ஆ! ஆ! என் செய்வது! தனித்தமிழை இழிவென்று நினைப்பது முறையாகுமோ? தமிழிலே கடவுளை வணங்கக்கூடாது என்று கூறும் பார்ப்பனரும் உளர். பெரியோர் தமிழைப் பகுத்துப் பாழ் செய்தால் அது குற்றமில்லையோ? இப்படிப் புலவர் பலர் தனித்தமிழ் உணர்ச்சி தகுதியற்றதென்று மொழிந்து தமிழைப் பாழாக்கினால் ஐயகோ! என் செய்வது பழம் புலவர்களால் தமிழ் பாழாகவா போய்விட்டது? இடைக் காலத்துப் புலவர் பழைய தனித்தமிழ் உணர்வை மறந்து வடசொற்களை மிகுதியும் புகுத்தித் தமிழைக் கெடுத்துத்தான்விட்டனர். அவர்களை நாம் ஏன் பின்பற்றவேண்டும்? வடசொற்களைக் கலத்தல் குற்றமில்லையாயின் ஆங்கிலத்தையும் தாராளமாக வழங்கித் தனித் தமிழ் உணர்ச்சியைக் கெடுத்தால் நற்றமிழ் எவ்வாறு உயிர் வாழும்? அந்தோ! குமரகுருபரர் சலாம் என்னும் சொல்லை வழங்கினார் என்று நாமும் பல கொடுந் துலுக்கச் சொற்களை வழங்கித் தமிழைப் பாழ்படுத்தலாமா? (கைதட்டல்) யானை வழுக்கி விழுந்தால் அஃது அதற்குப் பெருமையாக முடியலாம். நாங்களோ சிறியோம். எங்களுக்கு இடர் மிகுதியும் உண்டு. அதன் பின்னர்ப் பண்டிதமணியார் தொல்காப்பியத்தில் வடசொற் கலப்புப் பற்றிய செய்தி உள்ளது என்றும், திருவள்ளுவர் வேதவழக்கொடுபட்டு நூல் செய்தார் என்றும், அவர் கருத்தறிந்து பரிமேலழகர் உரை வரைந்தார் என்றும் விரியக் கூறினார். உணர்வோங்கிய அடிகளார், இப்பொழுது தமிழுக்கு பரிந்து பேசுவோர் பலர் இலர். தமிழராய்ப் பிறந்த பாவிகளே தமிழைப் பாழ்படுத்திவிட்டார்கள்; பாழ்படுத்துகிறார்கள் என்றார். அப்பொழுது பண்டிதமணியார், பழம்புலவர் களால் தமிழ் பாழாகவா போய்விட்டது? என்று மீண்டும் வினாவினார். அடிகளார், அவர்களிலும் சிலர் பாழ் செய்தற்கு இடங்காட்டி விட்டார்கள் என்றார். கதிரேசனார், தொல்காப்பியர் என்றார். அடிகளார் அம் முறையில் அவரும் ஓர் இழையளவு வழுவியே விட்டார். அஃது ஒண்டவந்த பிடாரிக்கு ஊர்ப்பிடாரி இடங் கொடுத்த கதையாகவே முடிந்தது, என்று மறுமொழியுரைத்து அவையோரை நோக்கி அன்பர்களே நாம் தமிழை உயிரோடு வைக்கப் பாடுபடவேண்டும். ஐயகோ! தமிழைக் கொல்ல மடிகட்டி நிற்கலாமா? நூற்றுக்கு எண்பது வடசொல்லும் இருபது தமிழ்ச் சொல்லுமாக எழுதினால் பேசினால், தமிழ் எப்படிப் பிழைத்தல் கூடும்? வடமொழி பயிலவேண்டாம் என்று யான் கூறவில்லை. மகிழ்வுடன் பயிலுங்கள்; யானும் பயில்கின்றேன். ஆனால் அன்பர்களே தமிழ்த் தாயைக்கொல்லாதீர்கள். தமிழ் நன்மங்கையின் அழகிய நன்மேனியில் அம்மைத் தழும்புபோல் வடசொற்களைப் புகுத்தாதீர்கள். அடியேன் உங்களைப் பெரிதும் கெஞ்சுகிறேன். ஆண்டவர்களே தமிழைக் கெடுக்காதீர்கள். தனித் தமிழுக்குப் பாடுபடுங்கள் என்றார். அவை பெரிதும் கைதட்டி வரவேற்றது. பண்டைப் புலவராயினும், இக்காலத்தவராயினும் மற்று எவராயினும் தமிழுக்குக் கேடு விளைத்தோரை, விளைப்போரை ஒரு பொருளாகக் கருதமாட்டேன். பழம் பெரும் புலவர் ஒருவர் ஒரு வடசொல் வழங்கியிருந்தால் பிற்காலத்தில் நூறு சொற்களை வழங்குகிறார். நாம் நூறாயிரம் சொற்களை வழங்குகின்றோம். பெரும் கடனாளியாகின்றோம். சங்கத் தமிழ் வழக்கை இடைக்காலத்தவர் பின்பற்றியிருந்தால் அவர்களுக்குப் புகழ் உண்டு. இடையில் வந்து தமிழைக் கெடுத்தவர்களை நான் ஒருநாளும் பொருட்படுத்தேன். தமிழிற் பிறமொழிக் கலப்பை வெறுத்துத் தள்ளுங்கள். தமிழின் சுவையை மாற்றாதீர்கள் வல்லோசை களைப் பெருக்காதீர்கள். தமிழர் ஆரியத்திற்கு அடிமைபட்டு அச்சொற்களைத் தமிழிற் கலத்தல் தீங்கே. இவ்வடி மைத்தனத்தில் நின்றும் முதலில் விடுபடுங்கள். இது முதலிற் பெறவேண்டிய விடுதலை (சுயராச்சியம்) (நீண்ட நேரம் கைதட்டி அவை வரவேற்றது). மேலும் அடிகள் உணர்ச்சி மீக்கூரப் பேசினார். கதிரேசனார், யான் தனித் தமிழ் உணர்ச்சியைப் பற்றிக் குறைகூறவில்லை என்றார். எங்களைப் போன்ற பெருந் தமிழ்ப் புலவர்களின் உதவியில்லாமல் தனித்தமிழ் வளரமுடியுமா? தாங்கள் பெரும் புலவர். தாங்கள் அப்படிப் பேசியதனால்தான் எனக்குப் பெருவருத்தம் உண்டானது. மற்றவர்கள் தனித்தமிழுக்கு மாறாகச் சொன்னால் எனக்கு இவ்வளவு கவலை ஏற்பட்டிராது என்றார் அடிகள். பின்னர்ப் பண்டிதமணி, அடிகள் நேற்று பேசிய திலிருந்து தனித்தமிழைப் பற்றி எனக்கு இருந்த அரைகுறையான ஐயங்கள் அடியோடு அகன்று விட்டன. நம் பெரியோர்கள் வடசொற்களைத் தமிழிற் கலந்துவிட்டார்களே. நாம் அவற்றை நீக்கின் அவர்கள் செயல்குற்றமென்றுகூறப்படுமோ என்று தான் யான் அஞ்சியிருந்தேன், தனித்தமிழை எதிர்த்தேன். ஆனால் அதற்கு அடிகள் சரியான விடையளித்து விட்டீர்கள் என்று பாராட்டடித் தம் கருத்தொப்புதலை வெளிப்படுத்தினார். - மறைமலையடிகள் வரலாறு 522- 535. (செந்தமிழ்ச் செல்வி 1937 ஆக, செப்,) பெரிதும் பிறசொற் கலவாமல் எழுதியவர் எழுதத் தேர்ந்தவர் ப்ண்டிதமணியார்! எனினும் ஒரு புதிய கொள்கையை அது எவ்வளவு நல்லதாக இருப்பினும் ஏற்பதற்குள்ள இடர்ப்பாடு எத்தகையது என்பதை விளக்கும் செய்தி இது. ஆனால் விடாப்பிடியாகப். பல்கலைக் கழகம் என்பது வழக்குக்கு வந்தும் சர்வகலா சாலையை விடேன் என்றும், நூல் என்பது பழவழக்கும் பெருவழக்குமாய் இருந்தும் சாதிரம் என்பதை விடேன் என்றும் முரட்டுப் பிடியாக இருந்த அறிஞர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் பண்டிதமணியின் பெருமையும் சால்பும் இனிது விளங்கும்! அதே வேளையில் அடிகளார் கொள்கையூற்றமும் செவ்விதில் புலனாம். இந்தி எதிர்ப்பு : இராசாசி அவர்கள் 14-7-1937 இல் சென்னை அரசின் முதல்வரானார். அவர்ஆட்சிக்கு வந்த சில நாள்களில் 5,6,7 ஆம் வகுப்புகளில் இந்தியைக் கட்டாயமாகப் படிக்கவேண்டும் என்னும் சட்டத்தைக் கொண்டுவந்தார். அதனை எதிர்த்துத் தமிழ் அறிஞர்களும் தமிழ்சார் கட்சித் தலைவர்களும் போர்க்களத்தில் இறங்கினர். அந்தோ! வடமொழி வந்து தமிழைப்பெரிதும் வீழச் செய்துவிட்டதே! அதைக் குற்றுயிராக்கி விட்டதே ஆங்கிலம்! இனி இந்தியும் வந்தால் தமிழ் ஒழிதல் திண்ணமே என ஏங்கிய அடிகளார் இந்தி எதிர்ப்புக் கண்டு மகிழ்வுற்றார். இந்நிலையில் 1-9-1937 இல் திருவல்லிக்கேணிக் கடற்கரைக் கூட்டத்திலும் 3-6-1938 இல் சைதையில் கூடிய இந்தி எதிர்ப்பு மாநாட்டிலும் அடிகள் தலைமை தாங்கி இந்தியை எதிர்த்து முரசு கொட்டினார். அவ்வாறே 4-10-1937 இல் கோகலே மண்டபத்தில் கூடிய இந்தி எதிர்ப்பு மாநாட்டுத் தலைமையும் பூண்டார் அடிகள். தமிழைக் காப்பதற்காகவும் இந்தியை எதிர்ப்பதற்காகவும் நாவலர் பாரதியார் தமிழர் கழகம் என ஓர் அமைப்பைக் கண்டார். அடிகளார், இந்தி பொது மொழியா? என்னும் பெயரிய கருவிநூலை எதிர்ப்பாளர்க்குப் படைக்கலம் போலப் படைத்துத் தந்தார். இப்போராட்டத்தில் அடிகளார் ஆற்றிய தொண்டு அளவில் நில்லாமல் அடிகளார் குடும்பமே தலைப்பட்டு இருந்தது என்பது தகும். அடிகளாரின் திருமைந்தர் மறை திருநாவுக்கரசு மறியல் கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காக இரண்டு குற்றங்களுக்கு, ஆறு ஆறு திங்கள் தண்டனை வழங்கப்பட்டு, ஒரே காலத்தில் அமையுமாறு சிறையுற்றார். அவர்தம் துணைவியார் ஞானம்மாள் தம் ஐந்து திங்கள் கைக் குழந்தையுடன் சிறை வாழ்வுற்றார். மாணிக்கவாசகனாரின் துணைவியாரும் தம் மூன்றாண்டுச் சிறுவனுடன் சிறையுற்றார்: நீலாம்பிகையார் இந்தி எதிர்ப்பு மகளிர் மாநாட்டுத் தலைமையைப் பங்கேற்று வீறுகாட்டினார். 1937 இல் தோன்றிய கட்டாய இந்தி, 1940 இல் மறைந்தது. நாடு விடுதலை பெற்றபின் 1948 இல் மீண்டும் அரசின் சட்டத்தால் உருவாகும் நிலை உண்டாயிற்று. அந்நிலையில் 17-7-1948 சென்னை தூயமேரி மன்றத்தில் கூடிய தமிழ் மாகாண இந்தி எதிர்ப்பு மாநாட்டில், கட்டாய இந்தியைக் கொணராதீர் என அடிகள் அறை கூவல் விடுத்தார். அம்மாநாட்டில் திரு.வி.க. பெரியார், ம. பொ.சி; அறிஞர் அண்ணா நாரண துரைக்கண்ணனார், பாவேந்தர், அருள் தங்கையா, அறிஞர் இரா. கிருட்டிணசாமி, அப்துல் மசீது ஆகியோரும் பங்கு கொண்டனர். இன்ன இன்ன வாய்ப்புகள் எல்லாம் செய்து, இவ்வளவு அடியுறை வைத்தால்தான் பொழிவுக்கு வருவோம் என்று வரம்பாய் இருந்த அடிகள், இந்தி எதிர்ப்புக் கூட்டத்திற்கு எதனையும் எதிர்நோக்குதல் இல்லாமல் உணர்வுப்பிழம்பாகச் செயல்பட்டமை. மொழிக்காப்பில் அவர்களுக்கு இருந்த உண்மை ஊற்றத்தைக் காட்டுவதேயாம். தமிழர் மத மாநாடு : தமிழர் சடங்குகள் தமிழிலேயே நடத்தப்படுதல் வேண்டும், தமிழர் கோயில் வழிபாடு தமிழிலேயே நடத்தப்படுதல் வேண்டும் என்பனவெல்லாம் அடிகளாரின் உயிர்ப்பான கொள்கைகள் ஆகும். அவ்வகைத் தொண்டில் அடிகள் ஈடுபட்டதன் சான்றாக 16-7-1939 இல் கோகலே மண்டபத்தில் நிகழ்ந்த தமிழர் திருமண மாநாட்டையும், 10-10-1940 இல் பச்சையப்பன் மண்டபத்தில் நிகழ்ந்த அனைத்து இந்தியத் தமிழர் மத மாநாட்டையும் சுட்டலாம். இரண்டு மாநாடுகளிலும் அடிகள் தலைமையேற்க, தமிழ்க் காசு வரவேற்புரைத்தார். இரு மாநாடுகளிலும் நாவலர் பாரதியாரும் கலந்து கொண்டார். மேலும் உமாமகேசுவரர், முன்னாள் அமைச்சர் முத்தையா, செட்டிநாட்டு அரசர் முத்தையா ஆகியோரும் கலந்து கொண்டனர். அடிகளார் எழுதிய நூல்களில் ஒன்று தமிழர் மதம் என்பதாகும். வள்ளுவராண்டு : அடிகளார் ஆக்கச் செயல்களுள் ஒன்று திருவள்ளுவர் ஆண்டு கண்டமை ஆகும். தமிழர்க்கெனத் தனி ஆண்டு மானம் வேண்டும் என்றும், அவ்வாண்டுமானமும் உலகம் போற்றும் ஒப்பற்ற மறைநூலை ஆக்கிய தமிழ்ப் பேராசிரியர் திருவள்ளுவர் பெயரால் அமைதல் வேண்டும் என்றும் குறிக்கொண்டு ஆய்ந்தார். சிலம்பு மேகலை முதலாம் நூல்களுக்கு முற்பட்டதும், சங்கநூல் ஆட்சியைக் கொண்டதும், தொல்காப்பிய நெறியில் அமைவதுமாம். அந்நூலின் நடையும் பொருளமைதியும் கொண்டு அதன் காலத்தைக் கி.மு. 31 எனத் தீர்மானித்தார் அடிகள். திருவள்ளுவர் திருநாள் வைகாசித் திங்கள் பனை (அனுட) நாள் எனவும் திட்டப்படுத்தினார். அடிகளின் இத்திட்டத்தை ஏற்றுத் திருவள்ளுவர் திருநாட் கழகம் என ஓர் அமைப்பு உருவாகித் திருநாள் விழாவும் நடாத்தியது. அக் கழகத்தின் மலர் ஒன்று மிக அரியது ஆகும். mofsh® jªj ï¤ â£lnk ïªehËš â.K., தி.பி. எனப்பொது மக்கள் வழக்கிலும், அரசிலும் வழங்கத் தலைப்பட்டுள்ளதாகும். இதனை ஏற்றுப்போற்றிய நாடுகளில் ஒன்று ஈழமாகும். இதனை ஆங்கு நிலைப்படுத்தியவர் அறிஞர் கா. பொ. இரத்தினம் ஆவர். பின்னே இத் திட்டத்தை விரித்துத் தமிழ் வளமாக்கியவர் பாவாணர் என்பது சுட்டத் தக்கது. தென்றல் உலா வாம் இப் பகுதியில், அடிகளார் துறவு கொண்டு தொண்டு பூண்ட காலச் செய்திகளைக் கண்டோம். இனி, அவர் நூல்களின் வழியாகத் தேனருவியாகத் திகழ்தலைக் காணலாம். 7. தேனருவி உரையும் பாட்டும் : அடிகளார் தமிழ் தனித்தமிழ்! ஆம்! தூய அருவித் தமிழ்! தேனருவித்தமிழ்! அவர் கை தேன் தமிழ் எழுத்தைத் தீட்டியது! அவர்வாய் தேன் தமிழ்ச் சொல்லைப் பொழிந்தது! சொல்லியதை எழுதுதல், எழுதியதைச் சொல்லுதல் என்னும் இரண்டும் அடிகளார் நன்முறையும் பொழிவு முறையுமாம். அத் தேனருவி நடைக்கும் கருத்துக்கும் சிதறல் போலச் சிலச்சில சான்றுகள் : பால் கறந்த மாத்திரையே உண்பார்க்குச் சுவை பயக்கு மாயினும், அதனை வற்றக் காய்ச்சிக் கட்டியாகத் திரட்டிப் பின்னுண்பார்க்குக் கழிபெருஞ்சுவை தருதல் போலவும், முற்றின கருப்பங்கழியை நறுக்கிப் பிழிந்த மாத்திரையே அதன் சாற்றைப் பருகுவார்க்கு அஃதினிமை விளைக்குமாயினும், மேலும் அதனைப் பாகுதிரளக் காய்ச்சிச் சருக்கரைக் கட்டியாக எடுத்துண்பார்க்கு ஆற்றவும் பேரினிமை பயத்தல் போலவும் உரையும் நலம் பயப்பதொன்றே ஆயினும் அதனைக் காட்டினும் செய்யுளாற் பெறப்படும் பயன் சாலவும் பெரிதாம் - பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை-7. மக்கள் வாழ்நாள் என்கின்ற நீரோடையிலே வறுநினைவு களான கலங்கற் பெருநீர் பெருகிச் செல்லும் போது. உலக இயற்கை என்னும் மலைக்குகைகளிலே, அரித்து எடுத்து வந்த அருங்கருத்துகளான பொற்றுகள், இடை இடையே ஆழ்ந்து அவ்வோடையின் அடிநிலத்தில் சிதர்ந்து மின்னிக் கிடப்ப, நல்லிசைப் புலவன் என்னும் அரிப்புக்காரன் மிக விழைந்து முயன்று அப் பொற்சிதர்களையெல்லாம் ஒன்றாகப் பொறுக்கி எடுத்துத், தன் மதிநுட்ப நெருப்பில் இட்டு, உருக்கிப் பசும்பொற் பிண்டமாகத் திரட்டித் தருவதே, பாட்டு என்று அறிதல் வேண்டும். - முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை - 5. மொழித் தூய்மை : முற்றுந் தனித்து இயங்கமாட்டாக் குறைபாடுடைய ஆங்கில மொழியையே இயன்ற மட்டும் தூய்தாய் வழங்குதலில் கண்ணும் கருத்தும் வைக்கவேண்டும் என்று அம்மொழிக்குரிய ஆங்கில நன்மக்கள் ஓயாது வற்புறுத்தி வருகுவாராயிற் பண்டைக் காலந் தொட்டே நாகரிக வாழ்க்கையிற் சிறந்தாராய்த் தாம் ஒருவர் கீழ் அடங்கிவாறாது பிறமொழி பேசவாரையும் தம்கீழ் அடக்கி வைத்துத் தமது செந்தமிழ் மொழியையே நீண்டகாலம் வரையில் தூய்தாய் வழங்கி வளர்த்து வாழ்ந்து வந்த தமிழ் மக்களின் கால்வழியில் வந்தோரான நாம் நமது அருமைச் செந்தமிழ் மொழியைத் தூய்தாய் வழங்குதலில் எவ்வளவு கண்ணும் கருத்தும் வைக்கவேண்டும். -அறிவுரைக் கொத்து 127-8. யாம் நாயகர் அவர்களின் நூல்களைப் பயின்று அவர்களை அடுத்த இளமைக் காலத்தில் நாயகர் அவர்களின் உரைநடையைப் போல், வடசொற் கலப்பு மிகுதியும் உடைய ஓர் உரைநடை எழுத எமக்கும் ஒரு சிறு விருப்பம் உண்டாயிற்று. என்றாலும், நக்கீரர் சேனாவரையர் சிவஞான முனிவர் முதலிய உரையா சிரியன்மார் வரைந்த தனித்தமிழ்த் தீஞ்சுவை யுரைநடையிற் பெரிதும் பழகிய எமதுள்ளத்தை வடசொற் கலந்த நடைக்குத் திருப்புவது எளிதில் இயலவில்லை. - சோமசுந்தர நாயகர் வரலாறு 22. சொல்லாய்வு : பருத்துயர்ந்த மரங்கள் நெருங்கிய காட்டை வல்லை என்றும், சிறுமரங்கள் மிடைந்த காட்டை இறும்பு குறுங்காடு? என்றும், சிறு தூறுகள் பம்பிய காட்டை அரில் அறல் பதுக்கை என்றும், மிக முதிர்ந்து முற்றிப் போன மரங்களையுடைய காட்டை முதை என்றும், மரங்கள் கரிந்து போன காட்டைப் பொச்சை சுரம் பொதி என்றும், அரசனது காவலிலுள்ள காட்டைக் கணையம் மிளை, அரண் என்றும் பண்டு தொட்டுத் தமிழ் மக்கள் வழங்கி வந்திருக்கின்றனர். - சிறுவர்க்கான செந்தமிழ். 44. பண்டை மக்கள் விலங்குகளுக்கு அஞ்சிக் கீழே இருக்க இடம் பெறாத போது நீண்டுயர்ந்த மரங்களின் மேற்பருத்த கிளை களிற் குடிசைகள் கட்டி அவற்றின்கண் இருந்து உயிர் வாழ்ந்தனர். அவர்கள் அக் குடிசைகளில் இருந்து கீழ் இறங்கவும் திரும்பவும் மேலேறவும் நூலேணி அமைத்துக் கொள்ளத் தெரிந்திருந்தனர். இத்தகைய வாழ்க்கையில் இருந்த ஒருவனைக் குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர் சேணோன் என நுவல்கின்றார். - இளைஞர்க்கான இன்றமிழ் -174. காட்சிப் பொருத்தம் : முருகப்பிரானுக்குக் கோழிக் கொடியொன்றுள தெனக் கூறுதல் என்னை எனின், விடியற் காலையிற் றோன்றும் ஞாயிற்றின்கண் முளைத்து விளங்கும் இறைவனே முருகன் எனப்பட்டான். அவ் விடியற் காலையில் ஞாயிறு கீழ்பால் எழுகின்ற நேரத்தில் கோழி கூவுதலை எவரும் அறிவர். இங்ஙனம் இறைவனது வருகையைப் புலரிக் காலையில் முன்னறிவிக்கும் இயைபு பற்றி அக்கோழியின் உருவானது அவன்றன் கொடிக்கண் உளதாக வைத்து இயைபுபட்டது. - கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா - 112. நம்மவர் பேச்சு : நாலுபேர் ஒன்று சேர்வார்களானால், சாதிப்பேச்சும்; பெண் கொடுக்கல் வாங்கலைப் பற்றிய பேச்சும்; அவன் சாதி கெட்டவன், அவனுக்கும் நமக்கும் உறவு கிடையாது, எங்கள் சாதி உயர்ந்தது, எங்கள் சாதியில் ஒடித்தாற் பால் வடியும், எங்களிற் பத்து வீட்டுக்காரரோடு தாம் நாங்கள் கலப்பது வழக்கம், மற்றவர் கையில் தண்ணீர்கூட வாங்கமாட்டோம் என்னும் பேச்சும்; அதைவிட்டால் பொருள்தேடும் வகைகளைப்பற்றியே பேச்சும்; அதுவும் விட்டால் தமக்குப் பொருள் சேருங்காலத்தைப்பற்றியும், நோய் தீரும் நேரத்தைப் பற்றியும், மணம் ஆகும் நாளைப்பற்றியும், எந்த இடத்திற் போனாற் குறி கேட்கலாம்? எந்தத் தெய்வத்துக்கு ஆடு கோழி அறுத்தால் இவைகூடும்? மாரியைக் கும்பிடலாமா? மதுரை வீரனைக் கும்பிடலாமா? காளியைக் கும்பிடலாமா? கறுப்பண்ணனைக் கும்பிடலாமா? எசக்கியைக் கும்பிடலாமா? சுடலைமாடனைக் கும்பிடலாமா? என்னும் சிறு தெய்வச் சிற்றுயிர்க் கொலைக் கொடும் பேச்சும்: தனக்குப் பகையான வனைப் பல வகையால் இழித்துத் தன்னைப் பல வகையால் உயர்த்திச் செருக்கிப் பேசும் பேச்சுமே எங்கும் எல்லாரும் பேசக் காண்கிறோம்! புகை வண்டிகளிலும் - இந்தப் பேச்சே! பொதுக் கூட்டங்களிலும் இந்தப் பேச்சே, கோயில்களிலும் இந்தப் பேச்சே, குளக்கரையிலும் இந்தப் பேச்சே. - அறிவுரைக் கொத்து 119-120 ஒருமுகப்பாடு : ஒரு மாணாக்கன் கணக்கு நூல் பயிலும்போது அதிற் சொல்லப்பட்ட கணக்கு வகைகளிற் கருத்தை அழுந்தவையாமல், தான் விளையாடப்போம் இடத்தையும் தன் நேசரையும் தின்பண்டங்களையும் எண்ணிக் கொண்டே அதனைப் பார்ப் பானானால் அக் கணக்கின் வகைகள் அவற்குச் சிறிதும் புலப் படாமற்போகும். போக மனச்சோர்வடைந்து எத்தனை முறை பயின்றாலும் இக் கணக்குகள் என் மண்டையில் ஏற வில்லையே என்று புத்தகத்தை வீசி எறிந்து விட்டுப் போய் விடுகிறான். அவன் அக் கணக்கு நூலைக் கையில் எடுத்தவுடனே தன் விளையாட்டுத் தொழில்கள் எல்லாவற்றையும் முற்றும் மறந்து விட்டு எடுத்த பாடத்திலே அறிவை நாட்டுவானானால் எவ்வளவு விரைவில் அவன் அதன் பொருள்களைச் செவ்வையாகத் தெரிந்து தேர்ச்சி பெறுவான் - மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி 19. மன அமைதி இன்மையைப் புத்தகங்களைப் படிப்பதால் போக்கிக் கொள்வேன் இன்று பகல் முழுதும் ஓய்வாக இருந்தேன். ஆனால் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கவே விரும்புகிறேன். நாம் இன்புறுவதற்கும் மெய்யறிவு பெறுதற்கும் அல்லாமல் தம்மைச் சார்ந்த மக்கள் அறிவுபெறச் செய்தற்கும் அவர்கள் சிறப்புற வாழ்தற்கும் படியாமல் எதற்காக வறிதே ஓய்வாக இருப்பது - அடிகளார் நாட்குறிப்பு. எதனையும் நுணுகி ஊன்றி நோக்கி ஆராயும் சிந்தனைத் திறனுடையோர்க்கு இயல்பாகவே வெறும் சொல் விளையாட்டு களில் கருத்துச் செல்வதில்லை. வேடிக்கைக் குறும்புப் பேச்சுகளும் வெறும் நகைப்பூட்டும் பயனில் உரைகளும் ஆழ்ந்த சித்தனை யாளர்கள் பால் இயற்கையாகவே அமைவதில்லை. - அடிகளார் உரையாடலில் கூறியது. மறைமலையடிகளின் நூற்றொகை மருத்துவம் 1. மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை (இருதொகுதிகள்) முதற்பதிப்பு 1933 2. பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் 1921 மறைபொருளியல் 3. மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி 1927 4. யோக நித்திரை : அறிதுயில் 1922 5. தொலைவில் உணர்தல் 1935 6. மரணத்தின்பின் மனிதர் நிலை 1911 இலக்கியம் 7. சாகுந்தல நாடகம் 1907 8. சாகுந்தல நாடக ஆராய்ச்சி 1934 இதழ்கள் 9. ஞான சாகரம் மாதிகை 1902 10. Oriental mystic myna Bi. Monthly 1908 -1909 11. Ocean of wisdom Bi. Monthly 1935 சங்க இலக்கிய ஆய்வு 12. Ancient Modern Tamil Poets 1937 13. முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் 1936 14. முல்லைப் பாட்டு - ஆராய்ச்சியுரை 1903 15. பட்டினப்பாலை முதற்பதிப்பு 1906 16. முதற்குறள் வாத நிராகரணம் 1898 17. திருக்குறள் ஆராய்ச்சி 1951 பாடல் 18. முனிமொழிப் பிரகாசிகை 1899 19. மறைமலையடிகள் பாமணிக் கோவை 1977 நாடகம் 20. அம்பிகாபதி அமராவதி 1954 புதினம் 21. கோகிலாம்பாள் கடிதங்கள் 1921 22. குமுதவல்லி : நாகநாட்டரசி 1911 கடிதம் 23. மறைமலையடிகளார் கடிதங்கள் 1957 கட்டுரை 24. அறிவுரைக் கொத்து 1921 25. அறிவுரைக் கோவை 1971 26. உரைமணிக் கோவை 1972 27. கருத்தோவியம் 1976 28. சிந்தனைக் கட்டுரைகள் 1908 29. சிறுவர்க்கான செந்தமிழ் 1934 30. இளைஞர்க்கான இன்றமிழ் 1957 சமயம் 31. திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை 1900 32. மாணிக்க வாசகர் மாட்சி முதற்பதிப்பு 1935 33. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் (இரண்டு தொகுதி) முதற்பதிப்பு 1930 34. மாணிக்கவாசகர் வரலாறு 1952 35. சோமசுந்தரக் காஞ்சியாக்கம் 1901 36. சோமசுந்தர நாயகர் வரலாறு 1957 37. கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா 1968 38. திருவாசக விரிவுரை 1940 தத்துவம் 39. சித்தாந்த ஞான போதம், சதமணிக்கோவை குறிப்புரை 1898 40. துகளறு போதம், உரை 1898 41. வேதாந்தமத விசாரம் 1899 42. வேத சிவாகமப் பிரமாண்யம் 1900 43. Saiva Siddanta as a Philosophy of Practical Knowledge 1940 44. சைவசித்தாந்த ஞானபோதம் 1906 45. சிவஞான போத ஆராய்ச்சி 1958 வரலாறு 46. Can Hindi be a lingua Franca of India 1969 47. இந்தி பொது மொழியா? 1937 சமூக இயல் 48. சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் 1913 49. Tamilian and Aryan form or Marriage முதற்பதிப்பு -1936 50. தமிழ் நாட்டவரும் மேல் நாட்டவரும் 51. பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் 1958 52. வேளாளர் நாகரிகம் 1923 53. தமிழர் மதம் 1941 54. பண்டைக் காலத் தமிழரும் ஆரியரும் 1906 8. உதிர்மலர் பொழிவாலும் நூலாலும் தென்றல் உலாவாகவும் தேனருவி யாகவும் திகழ்ந்த அடிகளார், பேராப்பெருநிலையற்ற செய்தியாக வருவது இவ்வுதிர் மலர். கொடியில் அரும்பிய மலர், பொழுதில் மலர்ந்து, அலர்ந்து உதிர்தல் இயற்கை அல்லது ஊழ்; ஊழ்மலர் எனலும் இணரூழ்த்தல் எனலும் பழநூல் ஆட்சிகள் கொடியில் இருந்து மலர் உதிர்வதுபோல் அரற்றல் அவலம் இன்றி உயிர் நீத்தல் வேண்டும் என்பது மெய்ப் பொருள் உணர்ந்தோர் வேட்புரை. தொடர் இடிபாடுகள் : அடிகளார் உள்ளத்தையும் அசைக்கும் சூழல்கள் அமைந்தன. ஈருயிர் ஓருடலாக அரங்கரும் அம்பிகையாரும் வாழ்வதாக எவ்வளவு மகிழ்வில் இருந்தாரோ அடிகள் அதற்கொரு பெருந்தடையுண்டாயிற்று அரங்கனார் அயரா உழைப்பர்; உழைப்பின்போது ஓய்வு அறியார்; அவர்க்கு நெஞ்சுவலி வருத்தியது; அவர் தம் அருமைச் செல்வி முதன்மகள் மங்கையர்க்கரசி பூத்துக் குலுங்கும் பூங்கொடியாய்த் திகழும் பன்னிரண்டாம் அகவையில் இயற்கை எய்தினாள் அவள்மேல் ஆராத அன்பு கொண்டிருந்த அரங்கரை அப் பிரிவு பெரிதும் வாட்டியது. இவ் வாட்டுதல் இடையே ஆரூயிர் அம்பிகையார் பெரும் பாடு என்னும் நோயால் பற்றப்பட்டார். முன்னமே பத்தாண்டுகள் இளைப்பு இருமலால் அல்லல் உற்ற அவர் - அடிக்கடி மக்களைப் பெற்ற அவர் - இந் நோய்க்கும் ஆட்பட்டமை மேலும் வாட்டுதல் ஆயிற்று. அவரைத் தோனாவூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அறுவை மருத்துவம் செய்து 27-4-44இல் அரங்கர் மீண்டார். திரும்பும் போதே சோர்ந்திருந்த அரங்கர் பாளையங் கோட்டைக்கு வந்து படுத்தார்! மீள எழுந்திருக்க வில்லை! 28-4-44 இல் உலகை விட்டுப் பிரிந்தார்! நீலாம்பிகையார் நிலைமை என்ன? தம் காதல் தலைவ ருக்காக ஒன்பான் ஆண்டுகள் காதல் தவம் கொண்டவர் அல்லரோ அவர்! எப்பாடு பட்டிருப்பார்! அவர் தம் உடல் நிலைதான் என்ன! மெலிந்தது! நலிந்தது! அவரால் ஓராண்டும் தாங்க இயலவில்லை! 5-11-45 இல் இயற்கையொடும் ஒடுங்கினார்! இவ்வொடுக்கங்கள் அம்மையையும், அப்பர் ஆகிய அடிகளையும் விட்டு வைக்குமோ? அடிகள் தம்மக்களுள் நீலாம்பிகையார்மேல் கொண்ட பேரன்பு இணையற்றது; உடன் பிறந்தாரும் பொறாமை கொள்ளும் அளவு மிக்கது! தம் தமிழ் வாழ்வே அம்மகவு எனக்கண்ட - தம் தமிழ்த் தொண்டின் வழியே அவர் எனக்கண்ட - அடிகளார்க்கு அமைதியுண்டாகுமோ? நீலாம்பிகையாரின் அன்னை சவுந்திரம் அம்மையார் நோயர் ஆனார்! படுக்கையர் ஆனார்! மூன்றாண்டுகள் அளவு நோயொடு போராடிக்கிடந்த கிடையாய் அமைந்து வாராப் பெருநடையும் கொண்டார். அந்நாள் 24-5-50! பேரன்புப் பெருந்துணை - ஒப்பற்ற துணை - என நின்ற அம்மையார் பிரிவு அடிகளைப் புண்மீதில் அம்பு பாய்ச்சிய கொடுமைக்கு ஆளாக்கிற்று! மோதும் வெள்ளத் திடையே பட்ட உப்பு மலை எத்துணைக் காலம் தாங்கும்! அம்மையார் மறைவின் பின் அடிகள் மூன்று திங்கள் அளவே மண்ணில் உலாவினார்! இறுதியாவணம் : 15-8-1950 இல் அடிகள் நோயெனப் படுத்தார். ஒரு கிழமை கஞ்சியும் பழச்சாறும் பருகினார். மருத்துவப் பேரறிஞர் குருசாமியார் வந்து பார்த்தார். அடிகளுக்கு ஈரற்பை வீங்கியுள்ளது; இனிப் பிழைப்பது அருமை என்றார். அடிகளின் இல்லமருத்துவர் ஆனந்தர் மருந்து தந்து பேணினார். அடிகள் அம்பலவாணர் திருவுருவை நோக்கிக் கொண்டு கைகுவித்தும் வாழ்த்தியும் அமைதியை நாடியே நின்றார். 9-9-50 இல் தாம் ஈட்டிய செல்வம் பயன்படுத்தப்பட வேண்டிய வகை குறித்து இறுதியாவணம் எழுதினார். தாம் தொகுத்த மணிமொழி நூல்நிலையம் பொது மக்களுக்குப் பயன்படும் வகையில் மறைமலையடிகள் நூல் நிலையம் என்னும் பெயரால் பயன்படுத்தப்படவேண்டும் என்றும், தம் நூல்களைப் பதிப்பித்து அதனால் வரும் வாரமுறை வருவாய் தம் குடும்பத்தைச் சாரவேண்டும் என்றும் இப் பணியைச் சைவசித்ததாந்த நூற்பதிப்புக் கழகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் எழுதிவைத்தார். இதனை நிறைவேற்றற் குழுவினராக மருத்துவர் ஆனந்தர் சைவசித்தாந்தக் கழக ஆட்சியாளர் வ. சுப்பையா ஆகியவர்களை உள்ளிட்ட எழுவரை அமர்த்தினர். ஒளியுடல் : இறுதியாவணம் எழுதி நிறைவேறிய பின்னர் ஐந்து நாள்கள் அடிகள் பருவுடலம் தாங்கியிருந்தார். 15-9-50 மாலை 3.30 மணிக்குத் தமிழும் சைவமும் தத்தளித்துக் கலங்க அடிகள் ஒளியுடன் உற்றார்! மறு நாட் காலையில் அடிகளின் உடல் மண நீரால் நீராட்டப் பட்டது. மலர் மாலையொடு கண்ணீர் மாலையும் சேர மக்கள் வரிசைவரிசையாய்த் திரண்டனர்! அறிவுச் செல்வர்கள் உற்ற அவலமோ சொல்லில் அடங்காது! அடிகள் உடல் பூம்பல்லக்கில் வைக்கப்பட்டு அன்பர்கள் தோள் மிதவையாக மக்கட் கடலின் ஊடே எடுத்துக் கொண்டு நன்காடு சேர்க்கப்பட்டது. அங்கே பெரும் புலவர்கள் மு.வ; இரா. பி. சேது; தருமாம்பாள்; சானப் சாபி மகமது; பாரிப்பாக்கம் கண்ணப்பர்; ஆடலரசு; ஆகியோர் கையறு நிலை கூறினர். இரவு எட்டுமணியளவில் அடிகளார் பொன்னுடல் செந்தீ நாவுக்கு இரையாயிற்று. 17-5-50 இல் அடிகளார் உடற்பொடி கடலொடு கலந்தது. மூவா யிரவாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப்பட்ட அடிகளாரின் பேரூழி இவ்வாறமைந்தது. அடிகளார் மறைவுக்கு இரங்கல் மலையாய்க் குவிந்தது; அன்புள்ளங்கள் ஆறாய் ஒழுக்கின! இதழ்கள் ஓலமிட்டன! தனித்தமிழ்ப் பற்றாளர்களோ தவத்தந்தையை இழந்த தவிப்பில் அழுந்தினர். அடிகளார் உரையாலும் பாட்டாலும் பாராட்டப்பட்ட தொகை தனிப்பெருந் தொகையாம்! இந்நூலின் அளவுக்குச் சிலச் சில கீற்றுகள் மட்டும் போற்றிக் கொள்ளப்பட்டன. வரும் புகழ் மாலை அது. 9. புகழ் மாலை உரைமாலை : மறைமலையடிகள் யார்? சுவாமி வேதாசலம் அடிகள் கிறிதுவக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக இருந்தவர். அவரது பழைய பெயர் நாகை வேதாசலம் பிள்ளை என்பது அற்றை நக்கீரனாரும் பிற்றைச்சிவஞான முனிவரனாரும் ஓருருக் கொண்டு வேதாசலனாராக போந்து இற்றைத் தமிழ் வளர்க்கிறார் என்று யாரும் அவரைச் சொல்லாலும் எழுத்தாலும் போற்றுவதுண்டு வேதாசலனார் தமிழ் - செந்தமிழ் - சங்கத்தமிழ் - என்ன அவ்வாறு சொல்லவும் எழுதவும் செய்தது. இந்நாளில் சங்க நூல்களின் சுவையை தமிழ் நாட்டுக்கு ஊட்டியபெருமை வேதாசலனார்க்கு உண்டு என்று அறுதியிட்டுக் கூறுவேன். அவர் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்; வடமொழியும் தெரிந்தவர். ஈழக் கதிரைவேற் பிள்ளைக்கும் நாகை வேதாசலம் பிள்ளைக்கும் அடிக்கடி நிகழ்ந்த வாதப்போர் இளமையில் இவருடன் கலந்து உறவாடிய என்னை விடாமல் தகைந்தது. பின்னே 1910 ஆம் ஆண்டில் சிந்தாதிரிப்பேட்டையில் வேதாசலனார் சொல்லமிழ்தைப் பருகும் தவமுடையவன் ஆனேன். அவர் தமிழ் உடலும் தமிழ் உரையும், குரலும், தமிழ்ப் பொருளும் என்னை அவர்தம் தோழனாக்கின; தொண்டனாக்கின. வேதாசலம், அடிகளாகிப் பல்லாவரத்தை உறைவிடமாகக் கொண்ட போது அடிகள் ஒருநாள் இராமநாதபேட்டை நண்பர் சிலரை வரவழைத்தார்; பகலில் விருந்தளித்தார்; மாலையில் திரிசூலத்தில் சிவவிருந்தளித்தார். தமிழும் சிவமும் ஒன்றிய மறைமலை அடிகளாரின் விருந்து மறக்கற் பாலதன்று. முன்னாளில் மறைமலையடிகள் அடிக்கடி இராயப்பேட்டை போதருவர்; குகானந்த நிலையத்தில் தங்குவர். அடிகட்கு எல்லாப் பணிகளையும் யானே செய்ய முந்துவன்: மற்றவரும் போட்டியிடுவர். இரவில் சங்க நூல்களில் எனக்குற்ற ஐயங்களை அடிகளிடம் வெளியிடுவன். அடிகள் படுக்கையில் கிடந்து கொண்டே ஐயங்களைக் களைவர்; வேறு பல தமிழ்ப் பேச்சுக்களும் எங்களிடை நிகழும். மறைமலையடிகளுடன் யான் தூத்துக்குடிச் சைவ சித்தாந்த சபைக்கு இரண்டு முறை சென்றேன்; நாகை முதலிய சில இடங் கட்குச் சென்றேன்; சொற்பொழிவுகள் நிகழ்த்தினேன்; அந்நாளில் தமிழ் வானத்தில் ஒரு திங்களென அடிகள் திகழ்ந்ததை யான் கண்டேன். வெலி தமிழ்ப் பேராசிரியர் பதவிக்கு யான் முயன்ற வேளையில் தகுதித்தாள் ஒன்று மறைமலையடிகளால் வழங்கப் பட்டது. அஃது இன்னும் என்னிடத்தில் இருக்கிறது. அடிகளால் டி.எம். அச்சகம் என்றொன்று அமைக்கப்பட்டது. அதைத் திறக்குந் தொண்டு எனக்குக் கிடைத்தது. அத் திறப்பு விழா சுருங்கிய முறையில் செவ்வனே நடைபெற்றது. செய்வன திருந்தச் செய் என்னும் முதுமொழிக்கு அடிகளின் வாழ்க்கை ஓரிலக்கியம். யான் கல்லூரிவிடுத்து அரசியலில் தலைப்பட்டதை மறைமலையடிகள் ஆதரித்தாரில்லை. என்னைக் கடிந்தும் பேசினார். தமிழ்ப் புலவர்களில் என்னைக் கடிந்துபேசுவோர் உலகில் ஒருவர் இருக்கிறார் எனின் அவர் மறைமலை அடிகளே யாவர்........ மறைமலை அடிகள் உடல் ஓம்புவதில் கருத்தும் உடையவர்; தமது நிலையம் போதருவோரை உடலோம்பலில் மனம் செலுத்து மாறு வலியுறுத்துவர். எனக்குஞ் சொல்வர். அடிகளின் உடலோம்பு முறைகளைக் கடைப்பிடிக்க யான் முயன்றேன். அம் முயற்சி சில மாத காலமாதல் இடையீடினின்றி நிகழ்ந்ததா? .இல்லை. சில வாரக்கணக்கிலேயே அது வீழ்ந்தது. என் வாழ்க்கை வானக்கப்பலில் பறப்பது. அப் பறவைக்கு நேரம் ஏது? ஓய்வு ஏது? ஒன்றுமட்டும் நிலைத்தது அஃது எது? அஃது எனிமா அதுவும் சென்னையிலேயே! மறைமலையடிகளிடத்தில் பலவித நல்லியல்புகள் உண்டு. அவைகளுள் சிறந்த ஒன்று இரக்கம் - ஜீவகாருண்யம். அடிகளின் இரக்கப் பண்பை விளக்கு வதற்கு ஈண்டொரு நிகழ்ச்சி குறித்தல் சாலும். இராமலிங்க சுவாமிகளை யொட்டிக் கதிரைவேலருக்கும் வேதாச லனார்க்கும் பலதிற வாதங்கள் நடந்தன. சிவனடியார் திருக்கூட்டங்கள் இரண்டாகப் பிரிந்தன. ஒரு கூட்டம் கதிரை வேற்பிள்ளையை ஆதரித்தது. மற்றொன்று வேதாசலத்தை ஆதரித்தது. பின்னைய கூட்டம் கதிரைவேற் பிள்ளைக்குப் பலவிதத் தீங்கு செய்ய முயன்றது. கதிரைவேலர்மீது கல்லை எறிந்தது; அவரை இழித்து இழித்துத் துண்டுகள் வெளியிட்டது; அவரைப் போன்ற உருவஞ் செய்து அதைப் பாடையில் இட்டுக் கொளுத்தியது. இவைகள் எல்லாம் போக, மற்றொரு கொடுமை நிகழ்த்த உறுதிகொண்டது. அஃது இராமலிங்க சுவாமிகள் கொள்கைக்கு முற்றும் மாறுபட்டது. அஃதென்ன? கொலை! வழக்குக் காலத்தில் கதிரைவேற்பிள்ளை இரவு பத்து மணிவரை சிந்தாதிரிப் பேட்டையில் இருப்பார். சில சமயம் பன்னிரண்டு மணிவரை இருப்பார். அதற்குமேல் புரசை நோக்குவார். ஒரு நாள் அவரை வழியிலே கொலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாம். அச் செய்தி எப்படியோ வேதாசலனார்க்கு எட்டியது. வேதாசலனார் இரக்கம் உடையவர்; இராமலிங்க அடிகளின் அருள் நெறியில் நிற்பவர். அவர் என் செய்தார்? யாழ்ப்பாணத்து மாணாக்கர் ஒருவர் வாயிலாகக் கொடுமையைக் கதிரைவேற் பிள்ளைக்கு அறிவித்தனர். அன்று கதிர்வேற் பிள்ளை தக்க காவலுடன் சென்றனர். கொலைஞர் கருத்து நிறைவேற வில்லை. இந்நிகழ்ச்சியை எனக்குச் சொன்னவர் மறைமலையடிகளே. - திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் - 163-169. தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை மறைமலையடிகட்கு உண்டு. அவர் தமிழ்ப் புலமையும் வடமொழிப் புலமையும் ஆராய்ச்சியும் பேச்சும் எழுத்தும் தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும்; மரமும்முழங்கும் அடிகள் பேச்சு பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து பல எழுத்தாளரை ஈன்றது; நூல் பல நூல் ஆசிரியன்மாரை அளித்தது. அடிகளே தென்னாடு; தென்னாடே அடிகள் என்று கூறல் மிகையாகாது. - திரு.வி.க. மறைமலையடிகள் மாண்பு. முன்னுரை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற புலவர் - கா. சுப்பிரமணியனார். தேனும் பாலும் போன்ற தூய தீந்தமிழ்ச் சொற்களால் உரை நடையும் செய்யுளுமாகிய இருவடிவிலும் பல்துறை தழுவி ஐம்பதிற்கு மேற்பட்ட அருநூலியற்றி முதலிரு கழக நிலைக்குத் தமிழைப் புதுக்கி அதற்குப் புத்துயிர் அளித்தவர் மாநிலத்தில் மக்கள் உள்ளவரை மறையாப் புகழ்பெற்ற மறைமலையடிகளே. -பாவாணர் : வடமொழி வரலாறு - முன்னுரை. பொதுத் தமிழ் இலக்கியம் அனைத்தும் பொருந்தக் கற்று ஆங்கிலரும் வியக்கும் அழகிய ஆங்கில நடை கை வரப்பெற்று, ஆரிய மறைகளையும் ஆழ்ந்து ஆராய்தலுற்று, கடந்த மூவாயிரம் ஆண்டாக மறைந்து கிடந்த தனித்தமிழை மீட்டு எப்பொருள் பற்றியும் செந்தமிழில் எழுதவொண்ணும் என்னும் உண்மையை நாட்டிய மறைமலை அடிகள் திருவள்ளுவர்க்கு அடுத்தபடியாக வைத்து எண்ணத் தக்க தனிப்பெரும் தகுதியுடையவர் ஆவர் - பாவாணர்; தமிழிலக்கிய வரலாறு. பக், 232 மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம் தமிழ்த் தாயின் நெஞ்சு புரையோடாதும் தமிழர் அறை போகாதும் காத்த. தமிழன் வயிற்றில் இருந்து முன்பு பல திராவிட மொழியில் கிளைத்து அதன் பரப்பைச் சுருக்கியதுபோல, மீண்டும் தமிழகத்துள் ஒரு புதிய திராவிட மொழி பிறந்து தமிழை இன்னும் குன்றிக் குலையாதவாறு தடுத்தது. இன்று பாடநூல்கள் பெரும்பாலும் தமிழ் வடிவாக வருகின்றன. ஒருசார் இளைஞர் வட்டம், எழுத்தாளர் கூட்டம் குடிநீரைத் தூயநீராகக் காத்தல் போலத் தமிழைத் தூயதாகக் காத்து வருகின்றன. கலப்பு மிகுதியிருந்தாலும் பல செய்தித்தாள்கள் தமிழ்த் தூய்மையையும் முடிந்த அளவு பேணி வருகின்றன. வாழ்த்துகள் வரவேற்புகள் அழைப்பிதழ்கள் எல்லாம் நல்ல தமிழ்ப் பைங்கூழ் வளரும் பைந்நிலங்களாக மிளிர்கின்றன. இந்நான் மாற்றங்களை யெல்லாம் மறைமலையடிகளைப் பெற்றமையால் தமிழ்த்தாய் பெற்றாள். அத் தவமகள் அடிச்சுவட்டை அன்புச்சுவடாகப் போற்றிப் பாலின் தூய்மை போலத் தமிழின் தூய்மையைக் கடைப்பிடித்துவாழும் இளைய மறைமலையடிகள் இன்று பல்கி வருப. ஆதலின் தமிழ் தனித்தடத்திற் செல்லும் புகைவண்டி போலப் பழைய புதிய தன் சொற்களைக் கொண்டே விரைந்து இயங்கி முன்னேறும் என்று உறுதி கொள்வோம். தனித்தமிழ்த் தொண்டும் எழுத்தாளர் கடமையும் மறைமலையடிகள் தனித்தமிழில் வீரநெஞ்சினர் ஆயினும் வடமொழியில் ஈர நெஞ்சினர்; அதன் பெருமையை நன்கு கற்று அறிந்தவர்; சாகுந்தல நாடகத்தில் தனிப்பற்றுக் கொண்டவர்; அதனை மொழி பெயர்த்ததோடு தனி ஆய்வு எழுதியவர்; அதனால் அன்றோ தவத்திரு காஞ்சி காமகோடிப் பெருமகனார் அடிகளின் மொழிபெயர்ப்புச் சாகுந்தலத்திற்குப் பரிசுதரும் அறக் கட்டளை வகுத்தருளினார். இவ்வொப்புதல் ஒன்றே அடிகளின் வடமொழி யன்புக்குச் சாலும் கரியாகும். - வ.சுப. மாணிக்கனார். மயிலையில் ஒரு சிற்பியார். அவர்க்கு இன்ன இன்ன திருவுருவங்கள் விரைவில் வார்க்க நினைவாய் இருக்கிறது என ஓர் அட்டை எழுதினார். அடிகள். எழுதும்போது இளவழகனார் உடனிருந்தார். சிற்பியை வரும்படி இதில் எழுதவில்லையே என்றார். அடிகளார் அந்த அஞ்சல் அட்டையின் கருத்து அதுதான் என்றும், வெளிப்படையாக எழுதக்கூடாது என்றும் ஒருவர் மற்றொரு வர்க்குக் கட்டளையிட வாய்ப்பில்லை என்றும் உரிமையால் ஒழுக வழி செய்ய வேண்டும் என்றும் கூறினார். அடிகளின் உரிமை மதிப்பு இதனால் புலப்படும். - இளவழகனார். விரித்தது தொகுத்தல் என்னும் உத்தி பற்றித் தமது சொற்பொழிவில் விரித்து ஓதப்பட்ட பொருள்கள் யாவற்றையும் முடிவில் தொகுத்துரைக்கும் திறம் அடிகளார்க் கென்றே அமைந்த அரும்பண்பாகும். அடிகளார் முடியைப் பற்றி முதுபெரும் புலவர் ஒருவர் எள்ளற் குறிப்புடன் பேசினர். தலைமை ஏற்றிருந்த அடிகளார் புலவர் அவர்களின் மயிராராய்ச்சி மிக நன்று என்று சொல்ல அவை மகிழ்வாரவாரம் செய்தது. ஔவை சு- துரைசாமியார் மறைமலையடிகளும் கா. சு. பிள்ளையும் என் வலக்கையும் இடத்தைப் போன்றவர்கள். - தந்தை பெரியார். இருபதாம் நூற்றாண்டின் தமிழ் வரலாற்றில் மானுடம் இவர்தாம் அல்லர்; நம் பெரும் தெய்வம் எனத் திகழ்ந்திருந்து அரும்பெருந் தொண்டுகள் ஆற்றியுள்ள மறைமலையடிகளுக்கு ஒரு பெரும் தனிச் சிறப்பிடம் உண்டு. தமிழுக்கும் சமயத்திற்கும் சமுதாயத்திற்குமாகப் பல்வேறு துறைகளில் அளப்பரும் தொண்டுகள் ஆற்றியவர் அப் பெருந்தகையாளர். - ந. ரா. முருகவேள். என்பும் உருகும் இசைபாடும் பண்புடையவர் இவர். இல்லறத் துறவியாகத் தம் இல்லின்கண் வீற்றிருந்து நல்லறம்புரிந்த நற்றமிழ் நாவலர் இவர். தமிழ்ப்பாலொடு எந்த நஞ்சையும் கலவாது தமிழ்க் குழவிகளுக்கு ஊட்டியவர். - அ. கனகராயர் மறைமலை அறிவூற்று ஊறிய மாமலை. பல்வகைக் கருத்து வளம் கொழித்த மாமலை; அயல் வழக்கின் களைகடுத்த மாமலை; மறைமலை யடிகள் ஒரு தமிழ்நிறுவனம்; சமய இயக்கம்; அவர்தம் எழுத்தும் பேச்சும் ஒரு புதிய தலைமுறையையே தோற்று வித்திருக்கிறது. - தவத்திரு குன்றக்குடியடிகளார். கடலின் ஆழத்தையும் அகலத்தையும்அறியமுடியாது என்பார்கள். அதுபோலவே தவக்கோலத்தில் இருந்த தமிழ்க் கடலாம் மறைமலையடிகளின் மாண்பையும்அவர் இயற்றியுள்ள நூல்களின் பெருமையையும் சொல்லிவிட முடியாது. - தொழிற்செல்வர் நா. மகாலிங்கம். தமிழ் என்றாலே தாழ்வு என்றே கொண்டு தமது மொழியின் தகுதி மறந்து தாழ்வுற்ற தமிழகத்தில் தமிழ் ஒன்றே உயர்வு அன்றியும் தனித்தமிழே நனியுயர்வு என்று உளங்கொண்டு தமது எழுத்திலும் பேச்சிலும் நாளும் தனித்தமிழின் கனிச்சுவை காட்டி, நாடெங்கும் நல்ல தமிழ் வலம் வரச் செய்த தனிப்பெருமை பூண்டவர் அடிகளார். - பேராசிரியர் க. அன்பழகனார். சாதி வேறுபாடற்ற தமிழ்ச் சமுதாயம் காணப் பாடுபட்டு ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற நெறியில் தமிழரை ஆற்றுப்படுத்திய அடிகளாரின் புகழ் என்றென்றும் வையத்து வாழும் என்பது உறுதி. - பேரா. அ. மு. பரமசிவானந்தம் ஆசிரியர் மறைமலையடிகள் தமிழ் விடுதலைக்காக தமிழ்மொழி, தமிழ்நெறி தோன்றிய தமிழ் ஞாயிறு ஆவார். மிக அமைதியாய் இவ் விடுதலைப் புரட்சியைத் தமது புலமை நலத்தால் அவர்கள் செய்து வந்தார்கள். - தவத்திரு அழகரடிகள். அடிகளார் திருச்சிக்கு ஒரு முறை பொழிவுக்கு வந்த போது அவரை அழைத்த அன்பர் தங்களைக் கொண்டே தமிழையும் சைவத்தையும் வளர்க்கவேண்டியுள்ளது. தாங்களோ ஒரு வருகைக்குப் பெருந்தொகை கேட்கின்றீர்கள். இவ்வாறு கேட்பின் எத்துணை பேர் அதற்கு ஈடு கொடுக்க முடியும். எனவே இனி இம் முறையைக் கைவிட வேண்டும் என்றார். அப்பொழுதில் அதனை மறுத்துரையாத அடிகள் அவர் தம்மைச் சென்னையில் மீண்டும் காண வந்தபோது, அன்பரே அன்று திருச்சியில் சொன்னதை நினைவு கூர்கின்றேன். என் பேச்சக்குப் பெரும் பொருள் கேட்பதைக் குறையாகக் குறித்தீர்கள். அது குறையா? அதுபற்றிச் சிறிது இப்போது நினையுங்கள். ஒரு பொது விழாவோ திருவிழாவோ நிகழின் அதற்கு ஒரு பாடகியை அழைக்கின்றீர்கள். அவளுக்கு இருநூறு முந்நூறு என்று வாங்குகின்றீர்கள். கூத்தாடும் கூத்திக்கு அதுபோல் பெருந்தொகை கொடுக்கின்றீர்கள் பெரு வங்கியக்காரனுக்குப் பெருந்தொகை வழங்கப்படுகின்றது. யான் அந்தக் கூத்தும் பாட்டும் குழலும் பயிலாமல் தமிழ் படித்த பாவம் குறையாகி விட்டது. அப்படித்தானே, என்றார். வினவிய அன்பர் கண்ணீர் வடித்தாராம். அடிகளார்க்கு இளமையில் தமிழ் கற்பித்த நாராயண சாமியார், அடிகளார் பழந்தமிழ்ப் புலமைக்கு வியந்தவராய்ச் சங்கப் புலவர் வருகிறார் சங்கப் புலவர் போகிறார் என்று கூறினார். அது பின்னர்ப் பிறர் கூறும் வழக்கும் ஆயிற்று. தமிழ் இயற்கை மொழி. இந்தியா முழுதும் வழங்கிய மொழி என நெல்லையில் பேசினார் அடிகள். இந்தியாவின் ஒரு கோடியில் வழங்கும் தமிழை இயற்கைமொழி என்பதும் இந்தியா முழுதும் வழங்கிய மொழி என்பதும் பொருந்தாது என ஒருவர் மறுத்தார். அடிகள், இந்தியா மட்டுமன்று உலகமெங்கும் தமிழே முன்பு வழங்கியது எனச் சான்றுகளுடன் விளக்கினார். அடிகளார் சைவத்தின் மேல்நிலையைப் பெறவேண்டும் என்று சூரியனார் கோயில் மடத்தில் கூறினார்; மதுரைநாயகம், தாயார்க்கு உதவியாய் இருப்பது முதன்மை எனக் கூறித் தடுத்தார். அடிகளாரை அலுவலக எழுத்தராக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மதுரை நாயகர்; அடிகள் ஆசிரியப் பணி செய்யவே ஆர்வம் என்று மறுத்து விட்டார். ஆய்வுத்திறம் சிலப்பதிகாரத்தில் சித்திரப் படத்துள் என்னும் கானல்வரியில் யாழ்கை யில் தொழுது வாங்கி எனவரும் பகுதியைக் கேட்ட அடிகளார், யாழ்கையில் தொழுது வாங்கியவர் யார்? கொடுத்தவர் யார்? என வினவினார். வாங்கியவர் மாதவி, கொடுத்தவள் வயந்த மாலை என்றேன். வயந்த மாலை ஏவற் பணிப்பெண்ணாகிய சேடியே அன்றோ! அவளை மாதவி எற்றுக்குத் தொழுதல் வேண்டும்? என வினவினார். வினாவை எதிர்பாராத யான் சிறிது தயங்கினேன். உடனே அடிகளார், மாதவி தொழுதது வயந்த மாலை அன்று; யாழ்க் கருவியையே மாதவி தொழுதாள். இசைத் தெய்வம் அதன்கண் தங்கி உயர்வதாகக் கலையுணர்வு மிக்க மாதவி கருதினாள் என்றார் அடிகள். ஒரு சொல்லின் மூலம் அல்லது வேர் தமிழெனக் கொள்ள இயலுமாயின் அது பிறமொழிச் சொற்போல ஐயுறக் கிடப்பினும் அதனைத் தமிழ்ச் சொல் என்றே கொள்ளுதல் கூடும். துரை என்னும் சொல் துர என்னும் மூலம் அல்லது வேரினின்று செலுத்து - ஏவு என்னும் பொருள் உடையதால் ஏனை யோரைச் செலுத்துபவன் ஏவுபவன் என்னும் குறிப்பில் ஒரு தலைவனைக் குறிப்பதாயிற்று. இவ்வாற்றால் அதனைத் தமிழ்ச் சொல் என்றே கோடல் பொருந்தும் என்றார் அடிகள். - ந. ரா. முருகவேள். அடிகளார் நூல்களைத் தாம் பயன்படுத்தியபின் இதனைச் சேர்த்துத் தொகுத்து வைத்த முறை சுவை உடைய கனி கிழங்குகளைத் திரட்டி வைத்த சபரியின் செயலையே நினை வூட்டுவதாகும். சீராமன் இலக்குமணன் ஆகியவர்கள் சேவையில் ஈடுபட்டு அவர்களுக்கு அளிப்பதற்காகவே சபரி அவற்றைத் தொகுத்துவைத்தாள். மறைமலையடிகள் இத் தொகுப்பைத் திரட்டியதும் இதுபோலப் பொதுமக்கள் சேவையை உளத்தில் கொண்டே தான் என்பது குறிப்பிடத்தக்கது. - முனைவர் எசு. ஆர். அரங்கநாதன் நூலகத்திறப்பு விழாப்பொழிவு 24-8-58. பாமாலை : வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலையடிகள் மறையாத் திருப்பெயர் - வாழ்த் ஆழ்ந்து கடலில் முத்தெடுப் பார்போல் அகன்ற உலக இலக்கியம் அனைத்திலும் வீழ்ந்து பொருளுண்மை விளக்கும் ஆற்றலால் வெல்ல முடியாத நல்லா சிரியனை - வாழ்த். தென்னாடு சார்ந்த குமரிப் பெருநிலம் திரைகடல் மறைத்த உண்மைச் செய்திக்குப் பொன்னேடு காட்டும் புலவர்க்குப் புலவனைப் பொழுதெல்லாம் தமிழுக்குழைத்த தலைவனை - வாழ்த். மறையெனப் படுவது தமிழ்நான் மறைநூல் மற்றை மறைநூல் பின்வந்த குறைநூல் முறையாய் இவைகட்குச் சான்றுகள் காட்டி முழக்கஞ் செய்த முத்தமிழ் அறிஞனை - வாழ்த். - பாவேந்தர் பாரதிதாசனார். மறைமலையடிகள் பல்துறையாற்றற் பதிகம் 1. பேராசிரியர் நூலும் நுவல்வும் நுணங்குரையும் நன்பதிப்பும் சாலும் இதமும் சமமாக - மேலுயர்வுப் பேரா சிரியர் பெரும்பேர் மறைமலையார் நேரார் உளரிந் நிலத்து. 2. பெரும் புலவர் தொல்காப் பியமுதலாந் தொன்னூலும் பின்னூலும் பல்காற் றனிப்பாடல் பட்டயமும் - ஒல்காப் பெரும் புலவர் உள்ளும் பெரியார் தனியே அரும்பொன் மறைமலை யார். 3. பாவலர் உரைநடையும் பாவும் ஒருங்கே சிறந்த விரைவுடையார் சில்லோர் வியன்பார் - மறைகலையார் செம்மைப் பொருளணிசேர் செய்யுள் திருவொற்றி மும்மணிக் கோவை முறை. 4. ஆராய்ச்சியாளர் நுண்மதி கல்வி நுடங்காத் தறுகண்மை நண்ணிலை மன்னலம் நல்வாய்மை - திண்முயற்சி சாலுமா ராய்ச்சிச் சதுரர் மறைமலையார் பாலையும் முல்லையும் பார். 5. மும்மொழிப் புலவர் மொழியும் இலக்கியமும் முத்தமி ழும்பேச் சழியும் வடமாங் கிலமும் - கழிபுலமை கொண்ட மறைமலையார் கோன்மை தமிழ்நிலமுன் கண்டதும் கேட்டதும் இல். 6. மொழிபெயர்ப்பாளர் வேற்று மொழியின் விரகன் விழுப்பனுவல் ஆற்று மரபும் அரும்பொருளும் - தேற்றி அடிகள் மொழிபெயர்க்கும் ஆற்றற்குச் சான்று முடிகொள்ளும் சாகுந் தலம். 7. சொற்பொழிவாளர் இன்குரலும் இன்சொல்லும் இன்னிசையும் இன்கதையும் நன்பொருளும் ஏதுவுடன் நற்காட்டும் - தென்பாய்ப் பகைவரும் உண்ணாது பன்னாளும் வேட்கும் வகையடிகள் சொற்பொழிவு வாய்ப்பு. 8. எழுத்தாளர் கடிதமும் கட்டுரையும் கண்டனமும் கற்கும் படியெழுதும் பாடமும் பன்னூல் - நடிகதையும் மற்றோர் உரைமறுப்பும் மன்னும் புதினவரை வுற்றார் மறைமலை யார். 9. பல்கலைச் செல்வர் தோற்றுந் தொலையுணர்வு தூய மனவசியம் ஆற்றும் அறிதுயில் ஆர்வாழ்வு - மாற்றும் மறுமை மறைமலையார் மாணும் கலைகள் பொறுமை யுடன்கற்ற போக்கு. 10. தனித்தமிழ்த் தந்தையார் மூவா யிரமாண்டு மோதும் வடமொழியாற் சாவாந் தகைநின்ற தண்டமிழ் - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலையார். - மொழிஞாயிறு பாவாணர். நம்மொழிப் புலமை எல்லாம் நடுத்தெருப் புலமை யாகும் செம்மொழி பேசி வந்த திருமறை மலையார் பெற்ற மும்மொழிப் புலமை யன்றோ முற்றிய புலமை அன்னார் தும்மலும் கல்வித் தும்மல் தூக்கமும் கல்வித் தூக்கம். - பாவலர் சுரதா. நினைவு நிலையங்கள் மறைமலையடிகள் நூல்நிலையம் சென்னை இலிங்கிச் செட்டித் தெரு 261 ஆம் எண் இல்லம் வள்ளலார்தம் ஒன்பதாம் அகவையில் முதற்பொழிவு செய்த சோமு (செட்டியார்) இல்லமாகும். அவ்விடம் தென்னிந்திய தமிழ்ச் சங்கச் சார்பில் 1958 இல் மறைமலையடிகள் நூல் நிலையமாக உருவாகியது. அடிகளார் தம் ஆய்வுக்கெனத் தொகுத்து வைத்த மும்மொழி நாலாயிர நூல்களுடன் ஐம்பதாயிரம் நூல்களைத் தன்னகத்தே கொண்டு உள்ளூர்ப் பழுத்த பயன்மரமாய் இயங்கி வருகின்றது. ஆய்வுப் பகுதி, அரங்குப் பகுதி, வழங்கு பகுதி, செய்திப் பகுதி என நாற்பகுதியினதாய் நூலகம் இயங்கி வருகின்றது. பல்வேறு பட்டங்கள் பெறுவாரும். நூல் எழுதுவாரும் பயன் கொள்ளும் வளநிலையம் இது. இதில் பழமையான இதழ்களும், புலவர்கள் படங்களும், கடிதங்களும் கையெழுத்துகளும் தொகுத்து வைக்கப்பட்டுள. மறைமலையடிகள் கலைமன்றம் சென்னை, பல்லவபுரத்தில் அடிகளார் வாழ்ந்த இல்லம், சைவசித்தாந்த சங்கத்தால் இந்திய - தமிழக - அரசு பொருளு தவியுடன் வாங்கப் பெற்று மறைமலை அடிகள் கலைமன்றமாகத் திகழ்கிறது. அடிகளாரின் கையெழுத்துப் படிகள் நூலின் முதற்பதிப்புகள் இசைத் தட்டுகள் ஆகியவை கண்ணாடிப் பேழைகளில் வைக்கப்பட்டுள. தமிழ்ப் புலவர் பெருமக்களின் உருவப்படங்கள் காட்சியாக வைக்கப்பட்டுள. பயில்வார்க்கும் பயன்படும் வகையில்நூலகமும் உண்டு. இந்திய அரசுச் சுற்றுலாத் துறை சிறந்த சுற்றுலா இடமாகத் தெரிந்துள்ளது. மறைமலையடிகள் பாலம் அடையாற்றுப் பாலம் தாண்டியே சைதையில் இருந்து பல்லவபுரத் திற்கோ, மறைமலைநகர்க்கோ செல்லுதல் வேண்டும். அப் பாலம் மர்மலாங் பாலம் எனப்பட்டது. அதற்கு மறைமலை யடிகள் பாலம் எனப்பெயர் சூட்டியவர் கலைஞர் மு. கருணாநிதி ஆவர். மேலும் பல்லவபுரத்தில் அரசுப்பள்ளி, மறைமலையடிகளார் பள்ளி எனப்பெயர் வழங்குகின்றது! மதுரை மாநகராட்சிப் பள்ளியொன்றும் அடிகள் பெயர் விளக்குகின்றது. நாகையில் அடிகளார் சிலை உண்டு. மறைமலை பெயர்த்தெருக்கள், நகர்கள் ஆங்காங்கு உள. மன்றங்களும் அப்படியே. மறைமலை நகர் சென்னைக்குத் தெற்கே சென்னைக்கும் செங்கற்பட்டுக்கும் இடையே 40 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சிராப்பள்ளி நோக்கிச் செல்லும் நாட்டுப் பெருஞ் சாலையருகில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் நூறாயிரம் மக்கள் தொகை வாழ வாய்ப்புடைய தாய் அமைந்துள்ள நகர் மறைமலை நகர் ஆகும். தொழிற்சாலை, வணிக நிறுவனம், போக்குவரவு வாய்ப்பு, மருத்துவமனை, பள்ளிகள், பூங்கா, சிற்றுண்டிச்சாலை மனமகிழ்மன்றம், சிறிய பெரிய குடியிருப்பு ஆகியனவெல்லாம் கொண்டது. அடிகளார் பெயர் தாங்கும் நகரை அடுத்தொரு தொடர் வண்டி நிலையம். அதற்கு என்ன பெயர்? மறைமலைநகர் - தொடர்வண்டி நிலையம்! புதிய நகருக்கு அடிகளார் பெயரிட்டதும் தொடர்வண்டி நிலையத்திற்கு அடிகளார் பெயரையே நிலைக்கச் செய்ததும் கலைஞர் மு. கருணாநிதி யவர்களின் கவின் தமிழ்ச் செயலாகும். அடிகளார் புகழ் வாழ்க! தமிழ்ச் சான்றோர் பெயர் வாழ்க! அடிகளின் கடிதம் ஓம் சைவசித்தாந்த சபை, மேலூர், தூத்துக்குடி, 31-12-1913 எனது அன்பிற்றிகழும் செல்வச் சிரஞ்சீவி திருவரங்கம் பிள்ளையவர் களுக்கு. யான் முன் எழுதிய கடிதம் வந்திருக்குமென்று நம்புகின்றேன். அதன் பிறகு தாங்கள் 28-ஆந் தேதி எழுதிய அன்புள்ள கடிதம் வந்தது. நம் அன்பினிற்கினிய செல்வச் சிரஞ்சீவி தியாகராசச் செட்டியாரவர்கள் நம் சமரச சன்மார்க்க நிலையம் நிலைப்படுதற் பொருட்டுத் தங்களோடு சேர்ந்து ஒத்துழைப்பது தெரிந்து, அளவிலா மகிழ்ச்சியடைந்தேன். இக் காலத்தில் அன்புமிக்க இளைஞர்களால் நடந்தேறும் அரும்பெருங் காரியங்கள், செல்லமும் அறிவும் முதுமையும் வாய்ந்த பெரியவர்களாலும் நடந்தேறுவதில்லை. இஃது என் அனுபவத்திற் கண்டது. பதினைந்து வருடங்களுக்கு முன் யான் மிகவும் இளைஞனா யிருக்கும் போது நமது தமிழுக்குஞ் சைவசித்தாந்தத்திற்கும் உழைக்க முன் வந்தேன். அக் காலத்தில் செல்வமும் அறிவும் முதுமையும் வாய்ந்த முதியோர்கள் எனக்குச் சிறிதும் உதவிசெய்ய இசைந்திலர்; யான் செய்யத் தொடங்கின ஒவ்வொரு முயற்சி யினையும் வேண்டாவென்று சொல்லித் தடை செய்தவர்களும், அவற்றிற்கு இடையூறு செய்தவர்களுமே பலர். என்றாலும், அவர்கள் துணையை ஒரு பொருட்டாக எண்ணாது, எல்லாம் வல்ல இறைவனுதவியையே நம்பி, ஞானசாகரத்தைத் தொடங்கி நடத்தியும், சைவ சித்தாந்த மகா சமாஜத்தை தாபித்து நடை பெறுவித்தும் ஆங்காங்கு இடையறாது சென்று உபந்நியாசங்கள் நிகழ்த்தியும் வந்தேன். அம் முயற்சிகளின் பயன் இப்போது தாங்கள் அறிந்ததே. தமிழ், சைவ சித்தாந்தமென்னும் இரண்டன் பெருமை இவ்விந்தியாவிலே மாத்திரமன்றி அந்நிய நாடுகளிலும் பரவி வருகின்றது. இச் சமயத்தில் நமது சமரச சன்மார்க்க நிலையத்தை நிலைபெறச் செய்து நாம் குறித்த காரியங்களை ஒழுங்குடன் நடைபெறச் செய்வமாயின் உலகமெல்லாம் அரும்பெரும் பயன் எய்துமென்றற்கு ஐயமுளதாமோ? நம் நிலையக் காரியங்கள் தங்களையொத்த நல் இளைஞர் உதவியைக் கொண்டே நடைபெறுமாறு திருவருள் செய்யும் என்னும் நம்பிக்கையும் மிகவுடையேன். ஆகையால், முதியோர் உதவியையாவது, அவர்கள் தடைப்படுத்துஞ் சொற்களையாவது கவனியாமல் முயல்வதே நம் கடமை; கூடுமானவரை அவர்களைத் தழுவிப் போவதும் நலமுடைத்தே. ஸ்ரீமான் சொக்கநாதரவர்களிடமிருந்து கடிதம் வந்தது. அதில் அவர் எனது வருகைக்காகத் தாம் மிக மகிழ்வதாகவும், என்னை அங்கேற்று அளவளாவ மிக்க விருப்பம் வைத்திருப்ப தாகவும் தெரிவித்தனர். ஆனால் இச் சமயம் தம்மால் குறிப்பிட்ட தர்மத்திற்குப் பொருள் திரட்டித்தர இயலாமைபற்றி வருந்து கிறதாகவும் எழுதியிருக்கிறார். இவர்கள் போன்ற முதியவர் சொற்களினால் இளைஞர்களான நம் முயற்சி தளரா வண்ணம் அருட்கடலான நம் ஆண்டவன் துணைபுரிவானாக. நல்லறிவினும் நற்குணத்தினும் சிறந்த நம் ஆப்தர் ஸ்ரீமான் வித்துவான், தாமோதரம் பிள்ளையவர்கள் தங்கள் முயற்சிக்கு ஒரு பெருந்துணையா யிருப்பார்களெனத் திருவருளைச் சிந்திக் கின்றேன். இங்கே இடையறாது உபந்நியாசங்கள் செய்துவந்தமையால் மூளையிற் கொதிப்பேற, அச் சமயத்தினும் வாதுமைத் தைலம் தேய்த்து முழுகினதால், கடும் தோஷம் பிடித்து வருத்தியது; இப்போது சுகம். இன்று ஓர் உபந்நியாசம் இங்கே செய்ய வேண்டியிருக்கின்றது. அது முடிந்ததும் ஐந்தாறு நாளில் கொழும்புக்கு செல்ல வேண்டு மென்று கருதுகின்றேன். எல்லாம் வல்ல இறைவனை நாம் எடுத்தகாரியங்கள் இனிது நிறைவேறும். சுகத்தை விரும்பித் திருவருளை வழுத்தும், அன்புள்ள சுவாமிவேலு பின்னிணைப்பு ஒம் திருச்சிற்றம்பலம் மறைமலையடிகளார் பாமணிக் கோவை 1 இலங்கைத் தீவின் அருகேயுள்ள கோட்டை மன்னாரில் திருவானைக்கூடத்தின்கண் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சித்தி விநாயகப் பெருமான் கலித்துறை பண் (இசை : ஆரபி) திருவார் மேலைத் திருக்குறை மன்னர் செய்கோட்டை ஒருபால் மேய நன்னகர் மன்னார் உறைவீரால் தருபால் வேண்டுந் தன்மக விற்குத் தாய்செய்யும் பெருவார் அன்பிற் பின்னையும் மிக்க பெரியீரே. (1) பிறைசேர் சென்னித் தந்தை யமர்ந்த பெருமைத்தாய் நறைசேர் பாலின் நற்றடம் மேய நன்மைத்தா அறைசேர் வண்கே தீச்சுரஞ் செல்லும் அடியார்க்கு முறைசேர் மன்னார் முன்னிருந் தின்பம் முயல்வீரால். (2) முன்நின் பின்னோன் வள்ளியைக் கூட முயன்றாற்போல் பின்நின் அன்பன் அப்பெயர் பெற்றான் பேரின்பம் துன்னல் வேண்டிச் சூழ்கன வின்வெண் களிறாக மின்னி மன்னார் யாப்புற நின்றீர் மேதக்கீர். (3) ஓமென் சொல்லின் உட்பொரு ளான உயர்வெல்லாம் தூமென் யானைத் தொன்முகங் காட்டிச் சொற்றீரால் காமன் கிள்ளை நாகண வாய்ப்புள் கனிகோதிப் பாமுன் சோலை சூழ்வர மன்னார் பயில்வீரே. (4) அடியார்க் கேற்ற பல்பரி சாலும் அங்கங்கே குடியாய்க் கோயில் கொண்டனிர் கோடொன் றுடையீரே. படியார் சீரான் அன்பொடு செய்த பைங்கோயில் மடியா தென்றும் மன்னினிர் மன்னார் மகிழ்ந்தீரே. (5) ஒழியா துள்கி யள்ளுரு குந்நல் அடியார்க்குப் பழியார் செய்யும் அல்ல லறுக்கும் பண்பீரே கழியார் தோணி பல்பொருள் கூட்டுங் கரைத்தன்னால் அழியாச் செல்வம் மல்கிடு மன்னார் அமர்ந்தீரே. (6) அந்தண் உள்ளத் தந்தணர் ஓதும் மறையார்ப்பும் செந்தண் நால்வர் தீந்தமிழ் வேதத் தெளிபண்ணும் சந்தம் ஓவா தென்று மிசைக்குந் தகைமன்னார் வந்தங் குள்ள வாய்மை யருள்சால் வழக்கன்றோ. (7) உள்ளத் தூறும் அன்புறு தொண்டர்க் குருகாமல் கள்ளத் தீது செய்திடுங் கீழ்கள் கலைதேய்ந்து மெள்ளச் சாயுங் கார்மதி போல மெலிந்தல்லல் கொள்ளச் செய்து நீர்மலி மன்னார் குடிகொண்டீர். (8) அருட்கண் கொண்டே யானென தற்ற அடியார்கள் தெருட்கண் ஓங்கித் தெண்பிறை யென்னத் திகழ்வெய்தப்; பொருட்கள் நல்கித் தீம்புனல் ஊறும் புகழ்மன்னார் இருட்கள் நீங்க எல்லவன் என்ன இருந்தீரே. (9) ஒளியே காணும் ஓமெனும் வண்ண உருவத்தை எளியேம் உய்ய இன்னிசை மன்னார் எடுத்தீரால் களியார் தேனே கற்பகம் நாணக் கமழ்கின்ற அளியார் தூய பூங்கழல் யானை அருட்கன்றே. (10) இமிழ்நீர் மன்னார் யானையின் கூடத் தெமக்காகச் சிமிழார்ந் தல்குஞ் செல்வரை வாழ்த்திச் சீர்நாகைத் தமிழார் ஊரிற் சான்றவன் வேதா சலன்சொன்ன அமிழ்தார் பத்துங் கற்பவர் நற்பால் அடைவாரே. (11) அடிக்குறிப்புகள் 1. திருஆர் மேலைத் திரு - பேறு மிக்க முன்னை1. திருஆர் மேலைத் திரு - பேறு மிக்க முன்னைப் புண்ணியம் : பெருவார் - பெருமை மிக்க. 2. தந்தை அமர்ந்த - தந்தை விரும்பிய; நறை சேர் பாலின் நல் தடம் - தேன் சேர்ந்த பாலைப்போல மன்னார் என்னும் ஊரில் நல்ல இடத்தில்; பாலின் நன்மைத்தாக என்று கூட்டுக. அறை - ஒலி. 3. பின்னோன் - முருகன்; அப்பெயர் பெற்றான் - முருகவேள்; அடிகளின் புனை பெயர். 4. காமன் - காமன் தூதாக; பா - பரவிய. 5. பரிசாலும் - கருணை முதலிய பண்பாலும்; கோடு - கொம்பு. படி - உலகம்; சீரான் என்றது மன்னனை. 6. அள் உருகும் - இதயம் உருகும். 7. வாய்மை - திருப்புகழ் கூறும் வள வாய்மை; அருள் - அருளுதல்; சால் - மிக்க 8. கீழ்கள் - கீழ்மக்கள். 9. தெருட்கண் - பதிஞானம்; எல்லவன் - பகலவன்; 10. கற்பகம் - கற்பகமலர். 11. இமிழ் - ஒலிக்கின்ற; யானைகள் கூடத்து - யானைமுகப் பிள்ளையார் திருக்கோயில் உள்ள இடம்; சிமிழ் ஆர்ந்து அல்கும் - சிமிழிற் பொருந்தினாற்போல் தங்கும். 2 நிலமகள் வணக்கம் (இசை : தோடி) (இசை : முறாறி) (ஆரபி) செழும்புனலுங் கொழும்பழமும் எழும்பொதியக் குளிர்வளியும் தழும்பசியப் பயிர்வளமும் கெழும்பொழிலே வாழி அன்னாய்! (1) நிலா விளங்கும் இராப் பொழுதால் மகிழ்ச்சிதரும் நீள்நிலமே குலாவுமுகை அவிழ்க்குமலர் உலாவுமரம் நிறைநிலமே கலாவுநகை தருநிலமே கனிமதுர மொழிநிலமே இலாநலனும் விழைபொருளும் விளைநிலமே வாழி அன்னாய்! (2) ஏழு கோடிபெயர் இடுமொலி கலகல அதிரவே வாழு மீரெழு கோடிகரம் வாளொடும் விதிரவே சூழும் அன்னை நினை வலிவில ளென்றுபிறர் சொல்வரோ தாழு வேமுனை மீதுகிளர் ஆண்மைமிகு செல்வியே! பாழ்படப் பகைவர்படை சாடுவாய், யாம் வாழ்விடப் புரிகுவாய் வாழி அன்னாய்! (3) கலைப்பொருள் நீயே, கருநிறம் நீயே, நிலைப்படு நெஞ்சமும் நீயே, சொலப்படும் உயிர்க்களன் நீயே, உடம்பகத் தியங்கும் உயிர்ப்பும் நீயே, உலம்பொரு தோளின் வன்பும் நீயே, வணங்குமெம் முள்ளத்து அன்பும் நீயே, வாழி அன்னாய்! (4) அடிக்குறிப்புகள் 1. பொதிய வளி என்று தொடர்க. தழும் - தழுவும்; பொழிலே - உலகமே, நிலமே; நிலத்தை `அன்னை என்றார். 2. குலாவும் - விளங்கும்; உலாவும் - காற்றில் அசைந்தாடும்; கலாவும் - கலக்கும்; இலா - இல்லாத. 3. கலகல - கலகல என்று; இது, நகையொலி; பகைவரை எள்ளும் ஒலி; ஏழு கோடிபேர் சொல்லப்பட்டமையின் அவர் கரங்கள் ஈரேழு கோடி யாயின; விதிரவே - அசையவே; அசைதலைப் பிறர் நடுங்குதலாக நினைத்தால்; தாழுவேம் - வணங்குவேம்; மீது - மேன்மை; பெயர். வாழ்விட - வாழ. 4. உயிர்க்களன் - உயிரிடம்; உயிர்; உயிர்ப்பு - மூச்சு; வன்பு - வலிமை 3 மாடம் பாக்கத்தில் வைகிய சிவன் நாளுங் கோள்களும் நச்சுயிர் வினையும் நலமி லாக்கொடுந் தீயவன் திறமுங் கேளுங் கேளலார் கிறிகளும் இடருங் கீழ வாகமேல் அடியரை நிறுவிக் கீளும் வெண்பிறை கிளர்முடி யிருவிக் கிட்டு காலனைப் பட்டிட நெரித்து வாளும் வில்லுத்தன் னடியர்க்கு வழங்கி மாடம் பாக்கத்தில் வைகிய சிவனே. (1) மாடும் பால்சுரந் தன்பினால் வணங்க மக்க ளென்பவர் பொக்கமாம் உயிரைப் பாடும் புன்மையிற் பயனின்றிக் கழிந்து பாரும் விண்ணுமாய்ப் பரந்தநின் பெருமை நாடுந் தன்மையில் நயனின்றிக் கழிவர் நம்பர் பாலூறும் நன்றின்றி யொழிவர் வாடு மன்பர்க்கு மழையென வழங்கும் மாடம் பாக்கத்தில் வைகிய சிவனே. (2) அடிக்குறிப்புகள் 1. கிறிகளும் - பொய்மைகளும்; இருவி - இருத்தி; கிட்டு - அணுகி வரும்; பட்டிட - பட. 2. மாடு, பால்சுரந்து வணங்கினமையால் மாடம் பாக்கம் எனப் பெயர்த்தாயிற்று. பொக்கமாம் - பொய்யுமாம்; நிலையுதலில்லாத. உயிரைப் பாடுவது புன்மை என்க. 4 புள்ளிருக்கு வேளூர்ப் பதிகங்கள் (முதற் பதிகம்) திருச்சிற்றம்பலம் எழுத்தானை எழுத்தான சொல்லானை எழுஞ்சொல்லிற் பழுத்தான பொருளானைப் பல்பிணியிற் பட்டுழன்று புழுத்தேனை யருள்செய்த புள்ளிருக்கும் வேளூரிற் செழித்தானைச் சிவவொளியை என்னுளத்தே சேர்த்தேனே. (1) மருந்தானை மருந்தின்றி நோய்தீர்க்கும் மருத்துவனைப் பொருந்தாத மனத்தேனைப் புள்ளிருக்கும் வேளூரில் வருந்தாதை எடுத்தாண்ட வகைநோக்கி மனங்கசிய இருந்தேனை யருள் செய்த என்னரசைத் தொழுதேனே. (2) இனியானை என்னுயிருக் குரியானை எவ்வுயிர்க்குங் கனியான கண்ணுதலைக் கருதாத காலத்துந் தனியான துணையாகித் தண்ணருள்கள் தான்புரிந்து புனலாரும் புள்ளிருக்கும் வேளூரிற் பொலிந்தானே. (3) பொல்லார்க்குப் பொருளருளிப் புகழருளி யின்பருளி நல்லார்க்கு நன்றல்ல பலஅருளி நலிந்தருளல் புல்லாதென் றுறுவேற்கும் புள்ளிருக்கும் வேளூரான் சொல்லாதே யருள்செய்து துணையாகி நின்றானே. (4) எக்காலும் நினைந்துருகும் எளியேனுக் கிடர்புரிந்தாற் புக்கெங்கு நின்றிடுவென் புள்ளிருக்கும் வேளூரிற் றக்கோயென் றிருந்திரங்கித் தளர்வேனைத் தையலொடு பக்கலுறும் என்றாதை பரிந்தளித்தல் செய்தானே. (5) கண்ணாலுங் காணாதே கருத்தாலும் அறியாதே மண்ணாலும் பிறவியினின் மயங்குகின்ற மனத்தேனைப் புண்ணாகா தருள்செயினும் புள்ளிருக்கும் வேளூரின் கண்ணானான் இருபாலுங் கரந்தருளக் கடவானே. (6) அருளாலே நிகழ்வதென அவ்வழியே செல்வேனைத் தெருளாமே யிகழ்வாரின் திறமடக்கிச் சிறியேற்குப் பொருளாகப் பொன்னருளும் புள்ளிருக்கும் வேளூரான் இருளான துயர்தீர எனக்கருளுஞ் செய்தானே. (7) மாறாத காதலுறு மனைவியொடு மக்களையும் பேறாக எனக்கருளும் பேரொளியிற் றிகழ்பிழம்பு போறானும் விளங்குமுருப் புள்ளிருக்கும் வேளூரான் வேறாகி யவர்பிழைக்க விடாதருளச் செய்வானே. (8) அன்போடு முரணாத அருளறத்தின் றுறவெனக்குப் பொன்போலும் அன்பருடன் புள்ளிருக்கும் வேளூரின் மின்போல மிளிர்வதொரு மின்னிடத்தின் மேவுபிரான் இன்போங்க அருள்செய்த தெங்ஙனநான் இசைக்கேனே. (9) எள்ளிருக்கும் நெய்போல் எங்கிருக்கும் எம்பெருமான் புள்ளிருக்கும் வேளூரிற் பூவிருக்கும் மணம்போல உள்ளிருக்கும் ஆதலினால் உளமுருகி யன்பென்னுங் கள்ளிருக்கச் சொல்லுமவர் கன்றியநோய் காணாரே. (10) (இரண்டாம் பதிகம்) முகிலின் றொகுதி சடையாக முழுகு சுடரின் பாயொளியே தகுநின் வடிவின் உருவாகத் தயங்கு சுடரே முகனாகப் புகுவென் பிறையே நின்சடைமேற் பதியும் பிறையாய்ப் பனிமாலை புகுமென் னுளத்திற் புள்ளிருக்கும் வேளுர்ப் புகுந்த பொதுமுதலே. (1) காலை யொளிருங் கதிரொளியிற் கயற்கண் அம்மை வடிவுணர்த்தி மாலை யொளியின் மற்றுனது மாட்சி வடிவம் வகுத்துணர்த்தும் பாலை யுணரின் நின்னுருவும் மக்களுருவாம் பண்பினையும் போல நிகழும் புள்ளிருக்கும் வேளூர்ப் பொலிந்த புனிதவனே. (2) மக்க ளுருப்போற் சிறிதாகி மனத்தோ டிலகி, மலிந்தழகிற் றொக்க வுருவே மற்றெமக்குத் துணையா முருவென் றுளத்தமைத்து மிக்கவானின் உருக்கரந்து மீன்போல் உமையாள் மேவுருவிற் புக்கு நின்றீர், புள்ளிருக்கும் வேளூர் அதனிற் புத்தமுதே. (3) குறைபா டின்றித் தூய்தாகிக் குலவு மொளியுங் கொழுநிறனும் நிறைவாய் எழிலிற் றிகழ்வடிவை நினைப்பார் நெஞ்சம் நெக்குருக உறைவா ரன்றி யருவான தொன்றை நினைவார் இலரதனாற் பொறையா ருளத்தாய், புள்ளிருக்கும் வேளூரதனிற் பொலிந்த னையால். (4) அறிவினுருவும் பொருளுருவும் ஆக விரண்டாம்; அவற்றுளொன்று முறிவின் றுளதாம், மற்றொன்று முருங்கி யுறையும் முறைதேரிற், குறிகொ ளுனது திருவுருவக் கொள்கை தெரியுங் கொழுங்காவிற் பொறிவண் டார்க்கும் புள்ளிருக்கும் வேளூர் மகிழ்ந்த பொன்னவனே. (5) கள்ளம் அறியாப் பிள்ளைமையிற் காழிப் பெருமான் கண்டுரைத்த தெள்ளும் உனது திருவுருவே தேருந் தோறுந் தெளிவுருவாய்க் கொள்ளும் அடியேன் கண்காணக் கூடா தென்றோ. கல்வடிவி னுள்ளும் இருந்து வழிபட்ட வேளூர் தன்னிற் புகுந்ததுவே. (6) காணே னெனினு றினதுருவக் காட்சி முழுதுங் கண்டுணர்நது பாணே மிழற்றுஞ் சம்பந்தப் பாலுண் குழவி பகருமது வீணே யாத லிசையாமை விளங்க எமக்கு விரிசடைமேற் பூணே மதியாய்ப் புள்ளிருக்கும் வேளூ ரதனிற் பொருந்தினையால். (7) அன்பும் அறிவும் அழியாத அரிய வுருவாய் அமையுமியல் இன்ப வுருவாம் அன்னையொடும் இசைந்த வுன்றன் எழிலுருவில் என்பு முருக எளியேங்கள் எண்ணிக் காண யிரங்கிமிளிர் பொன்புல் குருவிற் புள்ளிருக்கும் வேளு ரிருக்கப் புரிந்தனிரால். (8) தூய நினது திருவுருவிற் றோய்ந்த நினைவார் தொண்டர் தமக் காய வுயிரும் உடம்புமெலாம் அருளாய்த் திகழக் கண்டிருந்தும் பேயம் நினைவு பிறிதாகப் பிடித்தாண் டெம்மைப் பிழைகளெல்லாம் போய நிலையிற் புள்ளிருக்கும் வேளு ரிருந்து பொருத்தினையால். (9) வகுத்தாய் வகுத்த வகைநின்று வாழ விரும்பும் அடியேமை மிகுத்தார் வினையும் மேல்வினையும் மேவா தருளி மிகவினிதாய்த் தொகுத்தார் வளனிற் றோய்வித்துத் தொலையா நினது தொழும்பினுக்கே புகுத்தாய் சிவமே புள்ளிருக்கும் வேளூர் அமர்ந்த பொன்னரசே. (10) திருச்சிற்றம்பலம் அடிக்குறிப்புகள் முதற் பதிகம் 1. எழுத்தான சொல் - எழுத்துக்களாலான சொல்; பழுத்தான - முதிர்ந்த; அருள்செய்த - அருளாற் காத்த. 2. வருந்தாதை- வருந்தாமல்; ஐகாரம் சாரியை; போதையார் பொற்கிண்ணத்து என்புழிப் போல. 3. தனியான - தனிச்சிறப்பான. 4. நலிந்தருளல் - நலிவித்து ஆட்கொண்டருளல்; புல்லாதென்று உறுவேற்கும் - பொருந்தாதென்று கூறி வருவேனுக்கும். 5. புக்கெங்கு நின்றிடுவென் - எங்கே போய் நிற்பேன், என் தாதை - என் தந்தையாகிய சிவபிரான். 6. மண் ஆலும் - உலகில் ஊடாடும்; இருபாலும் - வலம் இடமாகிய இருபாலும்; அருள்மிக்க அன்னையுங்கூட என்றபடி. 7. பொருளாக - பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும் பொன் என்றபடி. பொன் - பொன் என்னும் பொருள். 8. பிழம்புபோல் தானும் என்க. வேறாகி - நினைப்பால் வேறாகி அருள, அகரம் சாரியை; அருள் செய்தான் என்பது. 9. துறவெனக்கு அருள் செய்தது என்று தொடர்க. பொன் போலும் அன்பர் என்றது, இனிய மனைமக்களை; பொன் போற் புதல்வர் என்றார் பிறரும்; மின் இடத்தில் - உமையம்மையை இடப் பக்கத்தில்; இவ்வாறு உமையம்மையை உடன்கொண்டு இறைவனும் இல்லறம் பூண்டு உள்ளத் துறவில் திகழ்கின்றான் என்றபடி. இசைக்கேனே - இசைப்பேனே? 10. எங்கிருக்கும் - எங்குமிருக்கும் ; கள் - தேன்; மெய்யுணர்வு இருக்க - இருக்கும்படி; விளங்க. சொல்லுமவர் - இனிமை மிகத் துதிக்கின்றவர்; கன்றிய - நாளாகித் துன்பப்படுகின்ற. இரண்டாம் பதிகம் 1. பாய் - பரவிய; சுடரின்ஒளி உருவாக அச் சுடரே முகனாக என்பது; புகுவெண் பிறையே என்றது. முதற்பிறை என்றற்கு; அடைக்கலமென்று புகுகின்ற என்றுமாம். பனி மாலை - குளிர்ந்த நினது மாலை ; புகும் - காதலுற்றமையாற் புகும். 2. காலையொளியில் அம்மை வடிவும் மாலையொளியில் அப்பன் வடிவும் வகுத்துக்காட்டும் வகுப்பை நோக்கினால், அவை முறையே மக்களுருவும் நின்னுருவும் போலப் பிரிந்து தெரிகின்றன என்க. மக்களுருவெல்லாம் அம்மை கோலமாதலின் இவ்வாறு கூறினார். எதிர் நிரனிறை அணி; பாலை - பகுப்பை 3. சிறிதாகி - குருவாய் எழுந்தருளி யென்பது. உருக்கரந்து என்றது, குருவுருவை; மேவு உருவில், மேவுருவில் எனப்பட்டது. 4. வடிகை என்றது, உருவ வழிபாடு கருதியது; உறைவார், தோய்வார் என்னும் பொருட்டு, அருவானதொன்றை என்றது, அருவ வழிபாட்டை; வழிபடுவார் பொருட்டுப் பொறுமையோடு திருவுருவங்களில் வீற்றிருத்தலின், பொறையார் எனப்பட்டது. 5. பொருள் - அறிவில் பொருள்; முறிவின்று - பால் முறிதல் போலத் திரிவின்றி உளதாம்; மலம் முறிந்து நல்லுயிராதலின்; முருங்கி - அழிந்து; தூலமாயிருப்பது நிலைமாறி நுண்பொருளாதல்; இஃது அறிவிலாப் பொருள்களை நினைந்தது. கொள்கை என்றது, உயிரின் மாறுதல் கருதி, உயிரில்லாப் பொருள்களில் எழுந்தருளித் திருவுருவ வழிபாட்டில் நின்றருளுங் கொள்கை. 6. காழிப் பெருமான் - திருஞான சம்பந்தர். 7. பாண் - பாட்டு; திருப்பதிகங்கள்; திருக்கோயில்கடோறும் திருமேனி கொண்டருளுதல் பாலுண் குழவியாகிய ஞானசம்பந்தர் பகருமது என்க. பூண் - அணி. பூணே மதியாய் - மதியே பூணாய். 8. எண்ணுதற்கெட்டா எழி லுருவாதலின், எழிலுரு என்றார்; பொன் புல்கு உருவின் - பொன்னிறம் பொருந்திய உருவினிறல்; புரிந்தனிர் - விரும்பினீர். 9. நினைவு ஆர் - நினைவு பொருந்திய; பேயம் - பேயேம்; பிறிதாக - பிறிதாதலால்; எச்சம் ஏதுப் பொருளது; பொருத்தினை - நின் அருளே பொருந்தச் செய்தனை, 10. மிகுத்து ஆர் வினையும் - மிகுந்து நிறைந்த சஞ்சித வினையும்; மேல் வினையும் - ஆகாமிய வினையும்; மேவாது - தாக்காதபடி; இனிதாய்த் தொகுத்து ஆர் வளனில் - இனிதாய்ப் பயன்படும் படி உடலூழைத் (ஏன்ற வினையை) தொகுத்துக் கொடுத்து நிரம்பிய வளத்தில்; தொலையா - கெடாத; புகுவிப்பாய் நின் தொழும்பின் என வந்தமைபோல ஈண்டும் நினது தொழும்பினுக்கே புகுத்தாய் என்றார். நான்கின் - நான்கினோடு; ஒன்று கை - ஒரு கை; மிகூஉம் - மிகும் களிறு - யானைமுகப் பிள்ளையார்; வளர் - எழுந்தருளியிருக்கின்ற; பெருங்காடாயினும் - பெரிய உலகமானாலும்; சிறந்தன்று - சிறந்தது; அளிய - அருளால் உதவத் தக்கபடி எளிமையாயிருக்கும்; களிறு வளம் என்றமையாலும், பாசப் புதர்கள் மண்டியிருத்தலாலும், உலகம் காடெனப்பட்டது; உலகம் அருளொளிப் பேறு சிறந்த தென்பது பொருள். 5 உ திருச்சிற்றம்பலம் திருவருளியல்பு கூறி நெஞ்சறிவுறுத்தல் தன்றோ ணான்கி னொன்றுகைம் மிகூஉங் களிறுவளர் பெருங்கா டாயினு மொளிபெரிது சிறந்தன் றளியவென் னெஞ்சே வளிகுலாம் வெளியி லெளிதெனக் கறங்கும் விளம்பழ நிகர்த்தவிவ் வளம்பொலி ஞாலத்து வேறு--வேறு குழீஇய வெறும்பினம் போல வரிதுமுயன் றூக்குந் தெரிவுறு மாந்தரில், 5 விழியிதழ் முகிழ்ப்பிற் கழாய்பல வுருட்டுங் கைவல் லொருவன் போல மெய்பெற வெப்பெரும் புவனமு மெண்ணிலா வுயிரு மப்பெரும் பரிசா லமைந்தாங் கியங்கப் பேதுற லின்றி மாதுட னமர்ந்த 10 வண்ணலார் திருவரு ணண்ணுவழி யறிந்து தருக்குற லின்றி யிருக்குநர் சிலரே. எம்முடை யறிவாற் செம்மைபெரி துறுவே மெம்முடை யறிவா னலம்பல பெறுவே மெம்முடை யறிவினுஞ் சிறந்ததீண் டுண்டுகொ 15 லியாமே யெமக்கீங் குறுதுணை யென்னா வெறும்பல மொழிந்து கழியுநர் பலரே ஈங்ஙன மொழியாத விளையோ னொருவன் கருமாண் குஞ்சியன் றிருவிய னோக்கின னருமைசால் குணத்தின் னொருவழிப் புகழின்றி 20 யொருவா றிருந்து மருவுமோர் குடியி லொருதனித் தோன்றிய மரபினன் றிருவரு டுணைநின் றுய்க்கும் பெற்றி யல்லது பிறிதுதுணை யில்லாச் செறிவுபெரி துடையோ, னகன்கண் ஞாலத் தியாருமி லொருசிறை 25 நினைந்தாங்குத் திரிதரூஉ மளவை, முனைந்தொரு காண்டகு சிறப்பி னான்ற கேள்விப் பல்புகழ் நிறுத்த வொடியாப் படிவத்துப் பெரியோ னொருவ னருள்வரத் தோன்றி யருணெறிச் செலவு தெருளுற வேண்டு 30 மழியா வுள்ளத்துக் கழிபே ரிளையோய்! இந்நெறிச் செலவு பிழையா தோம்பிற் பொன்னகர்ச் செல்வமும் பொருளன் றாக மன்னிய செல்வத்து வதிகுவை யெனாஅ நன்பல மொழிந்து போகப், பின்பல 35 நினையா தொருங்கிய வறிவின னாகி விழைதகக் கலித்த கொழும்புன் னிலத்து வாலுகம் பரந்த கோலமா நெறியிற் கதிர்தெறக் குழைந்து வியர்முக மரும்ப விடுகிய நோக்கமொடு கடிதுசெல லுற்றுப் 40 படுகதி ரமையத்து நெடிதோங்கு பொழிலிற் களிதுளும் புள்ளமொடு தெளிவுபெரி தெய்தி யானா விருப்பொடு தான்சென்று புகுதலும், பொதியத் தென்ற றதையரும் பவிழ்த்துக் கையரிக் கொணர்ந்த பல்விரை தெளிப்பவு 45 மொருசா ரோடும் பொருபுனற் காலிற் சிறுவளி தாவலி னிழுமென வொலிப்பவும் புதுமணம் விரிக்குங் கொழுநனை தோறும் வரிச்சிறைத் தும்பி யுருக்குபாண் மிழற்றலொடு குரூஉக்கட் குயிலினங் கூஉமிசை விராஅய்ச் 50 சுவைமிகப் பயக்கவு மிவையெலாங் கேளா வென்றுங் காணாத் துன்றுமகிழ் சிறந்து நெட்டிலை வாழையிற் கட்டுகோட் பழமும் பொரியரை மாவி னுருகுதேம் பழமுங் கடும்பசி தீரக் குடும்பொடு பறித்துண் 55. டுலைக்களத் துருகி யோடுபொன் போல நனிதெளிந் தியங்கும் பனிநீர்க் காலின் கரைமருங் கெய்திக் குடங்கை சேர்த்தி விழைவறு மளவு முழைமுகந்து பருகி யாறுசெல் வருத்தம் பாறிய பின்றை, 60 மாழையஞ் சிதரும் மணங்கெழு நறவும் விரைசெறி முகிழும் நிரைநிரை வீசிப் போதுபொதுண் மரங்கள் மீதுநிழல் செய்யத் தூவியிடு தளிமம் மேவி யாங்குப் புல்பொழி நிலத்துப் புறமிடைத் துறுவான் 65 வயினோக் குறுதலுங் குயின்வழக் கின்றி மறுவிகந்து விளங்கிய தன்றே; அவ்விடைப் பிறைமதிப் பிள்ளை நிறைமீ னித்திலங் கதிர்க்கை வாரி விதிர்த்துநக் கன்றே, ஈங்கிது காண்டலும் ஓங்கறிவு காழ்கொள 70 வாய்மையே நினைதன் மேயினன் புகுந்து மக்க ளென்போர் மிக்கபல் லுயிரினும் தலைமைபெரி துடைய நிலைமைய ரென்பது அறிவால் என்னின் அறிவொடு வரூஉங் கடுந்துயர் உறுத்து கவலையோ பலவே 75 விலங்கினம் என்ப நலங்கிளர் அறிவு தழுவுதல் இன்மையின் இழிசின என்னின் அகழ்கிழங் குண்டு முகிழ்நறா மாந்தியும் பைங்குழை மென்றும் பால்நீர் குடித்தும் மலையினும் பொதும்பினும் நிலையாக் கூட்டினும் 80 வருந்துதல் இன்றிப் பொருந்தி யிருந்தும் ஒருதுயர் இன்றி உறுநலன் பலவே; யதாஅன்று, மக்கடம் அறிவான் முடிந்தன இலவே; போக்கறும் உணர்வு மாக்களுக் கின்மையின் எனை நிலத்து முடியா வினைகளும் இலவே; 85 அறிவறி யாமையின் பெறுவதென் னென்று சூழ்ந்திட லுறினொன்று போந்ததூஉ மின்றே; அகல்கண் ஞாலம் பொதுவின்றிப் புரந்த இகலறு வேந்தரும் இறந்தொழிந் தனரே; பொய்யுரை கிளந்தும் புறம்பழித் தலைந்துங் 90 கையறி யாமையிற் கடுங்கொலை புரிந்தும் நல்லோர் தொகுத்த பல்பொருள் வௌவியும் பாழ்வயிறு நிரப்பிய கீழ்களும் இலரே. உடம்பினை ஓம்பும் கடம்படு பல்லுணா மலையினும் காட்டினும் இலைமலி மரத்தினும் 95 தவப்பல வாகி இருப்பன தேறாது நாளும் நாளும் ஆள்வினைக் கழித்து வாளாது கழிதல் வருந்துநீர் மைத்தே, நானிது செய்தேன் எனதிது என்னும் பேதைமை கந்தாப் பேரிடர் வருமே, 100 அறிவுறு பொருளையும் அறியாப் பொருளையும் ஒப்ப நாடி அத்தகவு இயக்கும் திருவருட் பெற்றி தேர்தொறும் தேர்தொறும் உவட்டெழும் இன்பந் தலைப்படும் அன்றே; எல்லும் எல்லியும் எழிலுற விளக்கி 105 அந்தரத் தியங்கும் நந்தா விளக்கமும் காலமொடு திறம்பா வளந்தரு மழையும் மழையால் உயிர்க்கும் மாண்பொருட் டொகுதியும் முழுமுதல் அறிவின் முதல்வன்செய்த அலகிலா அருளால் நிலவுறும் அன்றே; 110 அருட்பெரு வள்ளலாம் அத்தகை யோனை மருட்படும் உணர்வினேன் தலைப்படல் என்றோ; நெஞ்சுநெக் குருகிச் செஞ்சொற் குழற மெய்விதிர் விதிர்ப்ப மயிர்முனை நிறுத்த நாத்தழும் பேற ஏத்துரை மொழிந்து 115 விழுந்தருள் வெள்ளத் தழுந்துநாள் என்றோ! என்னை! என்னை! நான் இவ்வுழிவந்து பொச்சாந் திருந்து பொழுது கழித்தே நள்ளிடை யாமமா யினதே தெள்ளிய இளமதி சாயுமுன் இவணின் றகன்று 120 வளமுறு நிதிய வைப்புக் காண்பல் என்று ஓடுகால் மருங்கின் நீடு செல்வுழிப் பளிங்குருக் கன்ன துளங்குநீர் ஓடையில் பால்புரை பிறைக்கதிர் மேன்மிளிர்ந் தாடலும் எழுந்திரை கிழியக் கொடுங்கயல் மறியலும் 125 வான்இடு வில்லின் வாளைமேல் உகளலும் பாசடை நிவந்த நெறியவிழ் ஆம்பல் இரவெனும் அணங்கு திரைமடி இருவிப் பாற்கதிர் ஊட்டும் பாலன் போறலும், அன்புஇடை நெகிழா அன்றிலும் அகன்றிலும் 130 தூதுகல் உண்ணும் காதல்மிகு குரீஇயும் அன்னமும் மயிலும் பொன்னுரை கிள்ளையும் ஆடுவாற் சிரலும் புறவும் பிறவும் கூடுதொறுங் குழீஇத் துணையொடு துயிறலும், அருப்பமாய் அயல்நின்ற பொருப்பகந் தோறும் 135 கழல்கண் கூகை குழறலோ டுளியம் உரற்றலும் பிறவும் கருத்துற நோக்கி அல்லாந் தெழுந்த உணர்வின னாகி மல்லலங் காவிற் செல்லுங் காலை வைகறை யாமம் சிறிதுகழிந் தன்றே; 140 அரனார் அருளொளி விரிதலும் மருவிய ஆணவ வல்லிருள் காணா தொழிந்தாங் கங்கதிர் ஞாயிறு கீழ்ப்பால் எழுதலும் நிறையிருட் படலம் முறைமுறை கழிய அழகுறு புள்ளினம் துழனியெடுத் தனவே; 145 முழுநெறித் தாமரை புரிநெகிழ்ந் தனவே; இமையாக் கண்ண சுமைமயிர்த் தோகை பீலிவிரித் தொருபால் ஆலும் அன்றே; இன்னன பலவும் பன்முறை நோக்கிக் கவலைதீர் உள்ளமோ டுவகைபெரி துறுவோன், 150 தன்னுயிர் தன்னெதிர் தான்கண் டதுபோல் பொன்முகடு வேய்ந்த பொற்பமர் அம்பலம் கண்ணெதிர் தோன்றக் கரையறும் இன்பத்துக் குடைந்தனன் போல அடங்கா மதர்ப்புடன் ஓடுவழி ஓடி ஈடுபெறல் இல்லா 155 வச்சிரப் பலகையை நச்சி ஈர்ந்து தகைபெறு மணிகள் வகைவகை தெரிந்து குயிற்றுமிடங் குயிற்றிப் பூத்தொழில் கனியக் கடவுட் டச்சன் புடைபட வகுத்த விலைவரம் பறியா நிலையுயர் வாயில் 160 உழைநுழைத் துறுதலும், மழைமதர் நோக்கமொடு விரிந்தொழுகு நுதலில் வரிந்தநீ றிலங்க வால்வளை போலப் பால்கெழு கழுத்தில் விழிமணிக் கோவை அழகொடு துவள நுரைமுகந் தன்ன நொறியில்கெழும் அறுவை 165 அரைமருங் கசைய ஒருகரம் அதனால் அரிய அத்துவிதக் கலவையுங் காட்டிச் சிவஞானபோதச் செம்பொருள் தெளித்துப் பண்புறு சீடரைப் பார்வையில் ஆண்டுகொண்டு உருவுடன் வைகிய குருவனைக் கண்டு 170 கழுமிய நோக்கமொடு அழுதுகுறை யிரப்ப, மன்னா உலகத்து மின்னலின் மறையும் பொய்வளர் யாக்கையில் பொருந்துபல் லுயிரும் மெய்மெய் என்று பொய்படு குநவே; பொய்ப்பொருள் தம்மில் மெய்ப்பொருள் தேறிப் 175 புதுநலன் எய்தும் பொருள்கடைப் பிடித்துப் புகுந்தநின் றன்மைக் குவந்தனம் பெரிதே; அன்புடைக் குழந்தாய் நின்பொருட் டீங்குக் கட்புலன் கதுவாத் திப்பிய மெய்யருள் திரளுரு வாக வருதல் மேயினம்; 180 வேறுவே றியற்கை கூறுபல் லுயிரும் உய்குவது காணச் செய்குவம், ஆதலின், தாங்குநல உருவம்ஈ தொன்றோ அன்றே; நிலனும் யாமே, நீரும் யாமே, தீவளி விசும்புடன் யாவும் நாமே, 185 திங்களும் யாமே, எங்குமாம் உயிரும் வெங்கதிர் ஞாயிறு நங்கிளர் வடிவே; ஈங்ஙனம் ஆயினும் இவற்றின் வேறாய் நாங்கொளும் உருவமும் உண்டே; பாங்குபெற நம்மியல் பறிந்துநம் அருள்வழி நிற்போர் 190 இம்மையே நீங்கா இன்பம் எய்தி அம்மைதம் அடிநிழல் வைகுவ ரன்றே; அன்புடைத் தோன்றால் இங்கு நம் அருளொடு பிரிவறக் கெழுமி அமர்நிலை நோக்கி ஒருபே ரின்பத் துறைமதி சிறந் தென்று 195 உருவம் குருவாய் மருவிய முதல்வன் ஒளிப்பிழம் பாகிக் களிப்புறு விடையில் இமையம் பூத்த உமையுடன் தோன்றி, `ஈதுநம் உண்மை வடிவாம் ஆதலின் இளையோய் இவ்வுல குளையாங் காறும் 200 பிறழா நினைவின் முறை முறை உயரி மறுமைநம் அடிநிழல் உறுக என் றருளி நிதிக்கோன் நிதியும் மதிப்ப நல்கிக் கரந்தனன் என்ப ஆகலின், நிரந்தவம் முதல்வன் திருவருள் முனியாது வெஃகி 205 அதற்பட ஒழுகல் ஆற்றிசின் நெஞ்சே! வருவன யாவும் திருவருட் குறிப்பே வாரா தனவும் பேரா அருளே! வந்தவா வழுத்தி வல்லாங்குப் பாடி வணங்குதும் வாழிய நெஞ்சே! அணங்குடன் 210 மழவிடை அமர்ந்து வழிபடும் அடியார் வேண்டிய வேண்டியாங் காண்டுகொண் டருளிப் புலியதள் உடீஇ மதிமுகிழ் பிணித்து மொழியள வமையாக் கழிபெரு வெளியில் ஒருகால் புரிவுடன் தூக்கித் 215 திருநடம் குயிற்றும் தேவர்தம் தேவே! அடிக்குறிப்புகள் 1 - 4 வளி - காற்று; குலாம் - வீசி விளங்குகின்ற; கறங்கும் - சுற்றும்; விளம்பழம் - விளாம் பழம்; உருண்டையாயிருத்தலின் விளாம் பழம் உவமையாயிற்று. குழீஇய - தொகுப்புண்டு கூடிய; ஊக்கும் - ஊக்கங் கொள்ளும்; தெரிவுறு - முன்வந்து தெரிந்த. 5 - 8 விழியிதழ் முகிழ்ப்பில் - கண்ணிமை இமைப்பில்; ஒரு நொடிப் பார்வையில் என்க. கழாய் - கழங்குருண்டைகள்; கைவல் - கைத்திறம் மிக்க, பரிசால் - தன்மையால்; அமைந்தாங்கு - அமைந்ததென்னும்படி; 9- 16 பேது - பேதம்; பேது உறல் இன்றி - எந் நாளும் வேற்றுமையுறுதல் இல்லாமல், அண்ணலார் - சிவபெருமான்; இயக்குநர் - இருப்போர். என்னா - என்று, வெறும் பல - பொருளற்ற பல வெற்றுச்சொற்கள்; கழியுநர் - மாய்வோர். 17 - 25 மாண் மாட்சிமைப்பட்ட; குஞ்சியன் - தலையின் மயிர் முடியுடையவன்; திரு - கருவிற் றிருவும், வியன் - அகன்ற; அன்றி திரு இயல் எனப் பிரித்து திருமகளின் இயற்கை நோக்கம் உடையவன் என்றுரைப்பினும், அன்றி இரட்டுற மொழியினும் ஆம்; சால் - மிக்க; பல் வழியிலும் புகழ் மருவு குடி என்க. ஒருவாறு இருந்து - ஒரு நிலையில் நிலைத்திருந்து; செறிவு - அடக்கம்; அகல் கண் - அகன்ற இடம் பொருந்திய; சிறை - பக்கத்தில்; அளவை - நேரத்தில். 26- 34 முனைந்து - ஊக்கங் கொண்டு; ஒடியா - ஒடிவது போன்ற; அருள்வர - அருளுண்டாக; செலவும் - செல்கையும், கழிபேர் - மிக்க பெருமை வாய்ந்த; செலவு - செல்லும் ஒழுகலாறு; பொருளன்றாக - பொருள் செய்யத் தக்ககன்றாக; மன்னிய - நிலைபெற்ற; செல்வத்து - அம்மை; வீடுபேற்றில்; எனாஅ - என்று; நன் பல - நல்லன பல; நன் மொழிகள் பல. 35 - 42 பல நினையாது - பல நினைப்புகள் நினையாமல்; ஒருங்கிய - ஒருமையுற்ற, விழைதகக் கலித்த - விரும்பும்படி தழைத்த ; வாலுகம் - வண்மணல்; கோல - அழகிய; நெறியின் - நெறி காரணமாக; கதிர் தெற - சூரியன் சுட; இடுகிய நோக்கமொடு - அரைப் பார்வையாய் மருங்கிய கண்ணோடு; சுருங்கிய பார்வையோடு என்க. படுகதிரமையத்து - கதிர்படும் நேரத்தில்; அந்தியில். ஆனா விருப்பொடு - அடங்காத விருப்பத்தோடு 43- 59 ததை அரும்பு - தழைக்கும் அரும்பை;கையரிக் கொணர்ந்த - சேர்த்துக் கொண்டுவந்த; விரை - மகரந்தம் முதலிய மணப் பொருள்களை ஒரு சார் - ஒரு பக்கம்; பொரு - அலைகள் கரைகளை இடித்து பொருகின்ற; காலில் - வாய்க்காலில்; இழும் என - இழும் என்னும் ஒலியுடன். நனைதோறும் - மலருந் தறுவாயிலுள்ள பேரரும்புகள்தோறும் வரிச் சிறை - வரிகள் பொருந்திய சிறகுகளையுடைய; பாண் - பாட்டு; குருஉக் கண் -குரு கண்; ஒளியால் நிறமிக்க கண். கேளா - கேட்டுக் கொண்டு; துன்று - மிக்க. கட்டுகோள் - கட்டுக் கொண்ட; சீப்பிற் பிணைந்த. பொரி அரை - பொரிந்த அடிமரத்தையுடைய; தேம்- தித்திப்பான; குடும்பொடு - தொகுப்பாக. பனி - குளிர்ந்த; காலின் - வாய்க்காலின், குடங்கை - இரண்டு உள்ளங் கைகளையும், உழை - அருகில்; ஆறு - வழி; பாறிய - ஒழிந்த நீங்கிய; 60- 66 மாழை - குளிர்ந்த; சிதர்- தூறல், துளி; முகிழ் - அரும்பின் இதழ்களும்; பொதுள் - தழைத்த; தூவி - அன்னப் பறவையின் வயிற்று நுண்மயிர்; இடு இட்ட; தளிமம் - படுக்கை; பொழி - செழித்த; நிலத்துப் புறம் - நிலத்திடத்தை; மிடைந்து - நெருங்கிப் படுத்து; உறு வான்வயின் - மேல் உற்ற வானத்தின் இடத்தை; குயின் வழக்கு - மேகத்தின் செல்கை; அவ்விடை - அந்த வானிடத்தில் 67-78 நக்கன்று - சிரித்தது; காழ்கொள - உரங்கொள்ள; புகுந்து மேயினன் என்க. பல் உயிரினும் - பல வகையான எல்லாச் சிற்றுயிர்களிலும்; அறிவொடு - அச் சுட்டறிவோடு; வரும் - முன்வினையினால் வருகின்ற; உறுத்து - உறுத்துகின்ற; வினைத்தொகை. என்ப - என்பன; இழிசின - இழிந்தன; முகிழ் - ஊறித் தோன்றுகின்ற; குழை - தளிர்கள்; பால்நீர் - பால்போலும் நீர். 79 - 92 பொதும்பினும் - சோலைகளிலும்; உறு - உறுகின்ற அதா அன்று - அதுவன்றியும்; முடிந்தன - நிறைவேறியவை; போக்கறும் - நீளுதலில்லாத மறந்து போகும். மாக்கள் - விலங்கு முதலியன; எனை - சிறிதும்; அறிவு அறியாமையின் - அறிவும் அறியாமையுமாய் இருக்கும் நிலைமையில்; சூழ்ந்திடலுறின் - கருதினால்; போந்ததும் - முடிவு செய்யப்பட்டதும். அகல்கண் - அகன்ற இடத்தையுடைய; பொது இன்றி- தனக்கே உரியதாய்; புரந்த - ஆட்சி புரிந்து காத்த; இகல் அறு - பகையற்ற. கிளந்தும் - எடுத்துச் சொல்லியும்; கையறியாமையின் - செய்வதறியாமையால்; கீழ்களும் - கீழ்மக்களும்; இலர் - இறந்து போயினர்; இல்லாதவரானார். 93 - 110 கடம்படு - கடமையுட்பட்ட; மலி - மிக்க; தவ - மிக; ஆள்வினைக்கு அழித்து - முயற்சிகளுக்குத் தம் ஆற்றலைக் கெடுத்துக் கொண்டு; வாளாது - வீணாக; நீர்மைத்து - தன்மையுடையது. பேதைமை - செருக்கு; கந்தா - பற்றுக்கோடாக. அறிவுறு பொருள் - உயிர்; உயிர்க்காக உலகப் பொருள்களாதலின் `ஒப்ப நாடி என்றார்; அத்தகவு - அம் முறைமைக் கேற்ப; உவட்டு - தெவிட்டும்படி; எழும் - மிகப் பெருகும். எல் - பகல்; எல்லி - இரவு; இரவு பெண்பாலாகக் கருதப்பட்டு இகர விகுதி பெற்று வந்தது; அந்தரத்து - அருள் வெளியில்; நந்தா - அணையாத; திறம்பா - மாறாத; தவறாத; உயிர்க்கும் - தோன்றுகின்ற; செய்த - செய்தவை; செய்தன நிலவுறும் என்க. 111- 120 மருள் - அறியாமையுள்; தலைப்படல் - அணைதல்; விதிர் விதிர்ப்ப - நடுங்க; முனை நிறுத்த - கூர்ச்செறிய. பொச்சாந்திருந்து - மறந்திருந்து; நள்ளிடை - நடு; நிறைநிலவு நாளாதலின். நள்ளிரவுக்குப்பின் மதிசாய்தலை நினைந்து, மதி சாயுமுன் என்றார்; இள மதி என்பதில் இளமை ஆற்றலைக் குறித்தது. நிதிய வைப்பு - செல்வத் தொகுதி; பொருளுக்குரிய முயற்சி இங்குப் பொதுவாகக் குறிக்கப்பட்டது. 121- 128 ஒடுகால் மருங்கின் - கால் போன வழியே; நீடு - நீண்ட தொலைவு; செல்வுழி - சென்ற இடத்து; உருக்கு - உருக்கப்பட்ட பொருள்; துளங்கு - அசைந்தோடுகின்ற; மிளிர்ந்து - ஒளி வீசி; ஆடலும் - அசைதலும்; மறியலும் - இங்கே துள்ளுதலும் என்னும் பொருட்டு; உகளலும் - எழுந்து புரளலும், பாசடை - பசிய இலைகளுக்குமேல்; நிவந்த - உயர்ந்து வளர்ந்திருக்கும்; நெறி - முறுக்கு; ஓரொழுங்குடைமையின் நெறி எனப்பட்டது. மடி இருவி - மடிப்பில் இருத்தி; ஆம்பல் பாலன் போறலும் என்க. போறலும் - போலுதலும். 129 - 149 அன்றிலும் அகன்றிலும் - பறவையினங்கள் ; தூதுகல் - தூதாகிய கல்; குரீஇ- குருவி; உரை- தேய்வினால் உண்டாகும் நிறம்; `பொன் உரை கிள்ளை யென்றது, இங்கே ஐந்நிறக் கிளியை; சிரல் - பறவையினம்; புறவு - புறா; அருப்பமாய் - விரும்பத் தக்கதாய்; உளியம் - கரடி; உரற்றல் - வலிவாய் ஓசையிடுதல்; அல்லாந்து - மயங்கி; வைகறை யாமம் - வைகறைப் பொழுது. துழனி - ஒலிகள்; ஆலும் - ஆடும். 150 - 160 காண்டலருமையின், கண்டது போல் என்றார்; இன்பத்து - இன்பத்தில்; உருபுதொகச் சாரியை நின்றது; மதர்ப்பு என்றது இங்கே களிப்பை. வச்சிரப் பலகை - பண்பொட்டு விரித்துக் கொள்க; குயிற்றல் - இசைத்தல்; கனிய - முற்ற; கடவுள் தச்சன் - தேவதச்சன் வாயிலுழை நுழைந்+தென்றபடி; மழை மதர் - குளிர்ச்சி நிரம்பிய. 161 - 166 விரிந்தொழுகு நுதல் - அகன்ற நுதல்; வால் வளை - தூயகாது வளையம்; ஓல - அசைந்து விளங்க; பால் கெழு - பகுதியாய்ப் பொருந்தித் தெரிந்த; விழி மணி - சிவத்தின் விழி போன்ற மணிகள்; உருத்திகராக்கம்; துவள - அசைய; நொறில் - நுட்பம்; அறுவை - ஆடை; அரை மருங்கு - இடுப்பின் பக்கம்; சின் முத்திரை காட்டுதலால், ஒரு கரம் அதனால் என்றார்; ஒரு கரம் என்றது. வலக்கையை மும்மலங்களை நீங்கிச் சிவத்தோடு இரண்டறக் கலத்தலைச் சின்முத்திரையால் சிவஞான போதக் கருத்துத் தெளிவிக்கப்படுதலால் அத்துவிதக் கலவையுங்காட்டி என்றார்; உம்மை ; சிறப்பு. 168- 182 பார்வையில் - திருநோக்கத் தீக்கையால்; உருவுடன் வைகிய - திருவுருக் கொண்டு எழுந்தருளிய; கழுமிய - நிறைந்த; மெய் மெய் என்று - நில்லா உடம்பை `மெய் என்னும் பெயரால் அடுத்தடுத்துச் சொல்லிக்கொண்டு; கதுவா - கொள்ளா; திப்பிய - மேலான; அருள் திரள் உருவாக - அருள் திரண்ட அருளுருவாக; மேயினம். மேவினேம்- தாங்கும் - எடுத்துக்கொள்ளும்; ஒன்றோ அன்று - ஒன்று மட்டு மன்று. 191 - 208 அம்மை - இங்கே மறுமையில்; துறக்கஞ் செல்லும் மறு பிறப்பன்று; இம்மை நீங்கிய அடுத்த நிலை என்பது கருத்து. வைகுவர் - தங்கி இன்புறுவர்; அன்று ஏ -அசைகள்; அமர்-அமரும்; இருக்கும் நிலை - நிலையாக உள்ள பேரின்ப நிலைமை; சிறந்து - மேம்பட்டு. பூத்த - தோன்றிய உளையாங்காறும் - உள்ளனையான வரையில், இருக்கும் வரையிலென்க; உயிர்த்திருக்கும் வரையில் என்றபடி. பிறழா - ஐயந்திரிபுகளால் மாறித் தவறிவிடாத; உயரி - உயர்ந்து. நிதியும் - உம்மை இறந்தது தழீஇயது. நிரந்த தவம் என்க; ஈற்றகரம் தொக்கது; நிரந்த - முறைப்பட்ட வரிசையான்; முனியாது வெஃகி - வெறுக்காமல் விரும்பி; துன்பக் காலங்களில் வெறுத்தல் பலரிடம் காணப்படுதலின் இவ்வாறு கூறினார். அதன்பட - அதன்படி; ஆற்றிசின்; ஆற்று இசின்; ஆற்று - ஆற்றுக; இசின் -, அசை. பேரா - நீங்காத; வந்தவா - வந்தவாறு. 212 - 215 மதிமுகிழ் - மதியரும்பு; பிறைநிலா என்றபடி. வெளியில் - திருச்சிற்றம்பலத்தில்; புரிவுடன் - செய்கை விருப்புடன்; ஆடல் விருப்பத்துடன். குயிற்றும் - இழைந்து நடமிடும். 6 வந்தே மாதரம் கோயில் தொறும் கோயில் தொறும் அருட்கோலங் கொண்டிருக்கும் தாய்துர்க்கே தமியேம்நின் படிவமன்றே பரவுவதே; பாய்படைகள் பதின்கரத்தும் பற்றுகின்ற தாய்துர்க்கே சேயிதழ்த்தா மரைநிழல்வாழ் திருமகளும் நீயன்றே; மேயகலை விழுப்பொருள்கள் விளக்குமின்னும் நீயானால் சேயேம்நின் திருவடிகள் வாழ்த்துவதும் சிறப்பாமே; (1) அன்னாய் வாழியரும் பொன்னாள் வாழி, ஒப்பில் மின்னாள் வாழி, கனி நீரும்வாழி, வந்தேமாதரம்; களங்கமிலா தினிதாகி வளம்பெறுநன் னகைதுலங்க விளங்குபசுங் கதிர்முகம்எங் களைகணாம் அன்னாய், நின் இளங்குமுத வாய்முகமெம் இன்னுணவாம் அன்னாய் வந்தேமாதரம் (2) அடிக்குறிப்புகள் அன்னையாகிய கொற்றவையை விளித்து வணக்கம் செலுத்தும் முறையில் இப்பாடல்கள் அமைந்துள்ளன. 1. துர்க்கே - துர்க்கை யம்மையே; படிவம் - உருவம்; பாய் படைகள் - பாயும் கருவிகள்; பதின் கரத்தும் - பத்துக் கைகளிலும், நிழல் - ஒளியில்; மின்னும் - மின்போல் வாயும். 2. பொன் நாள் - பொன் போன்ற வாழ்நாள்; மின்னாள் - மின்னலைப் போன்றாள்; கனிநீரும் - கனிச்சாறு ஒத்தாய்; வந்தே மாதரம் - வணக்கம் தாயே; களைகண் ஆம் என்க. இன் உணவாம் - இனிய துய்ப்பாகும். 7 செவ்வந்திப் பூ இசை: சங்கராபரணம் (தரவுகொச்சகக் கலிப்பா) விலங்கலினும் விலங்கல்சேர் படுகரினும் மிதந்துசெலும் துலங்குபுய லெனவேயான் துணையின்றித் திரிந்தவழிப் பொலன்வண்ணச் செவ்வந்திப் பூத்தொகுதி மரங்கீழும் இலங்கேரி மருங்கும்உலாம் இனியவளி வீசுதொறும் கலங்கிநனி யாடுதலைக் கதுமெனநான் கண்டனெனால். (1) ஒளிபரந்த வானகத்தில் ஒளிர்ந்துமினும் உடுக்குலம்போல் நளிமிகுந்த கடல்வளைவின் கரைநெடுக நனிநீண்டு விளிவில்லா வரிசையுடன் மிகத்தொடர்ந்து விளங்கும்அவை தெளிபதினா யிரங்கணக்காய்த் திகழ்தலையை மிகஅசைத்துக் களிசிறந்து குனிப்பதையோர் கண்ணோக்கிற் கண்டெனெனால். (2) குனிக்குமலர்ப் பக்கலிலே கடல்அலையுங் குனித்தனவே, இனிக்குமலர் என்றாலும் இலங்கலையிற் சிறந்தனவே; நுனிக்குமதிச் செம்புலவன் நுவன்றகளிக் கூட்டத்தில் கனிக்குமனக் களிப்பின்றி யமர்குவது காணேனே; தனிக்குமனத் தமியேனும் நோக்கின்மேல் நோக்கினனே. (3) கருதிமிக நோக்கிடினும் காட்சியென்பாற் கொணர்வித்த இருநிதிய மேதென்ன யான்சிறிது மெண்ணிலனே தருதுயர மனத்தோடு தனிக்காட்டில் மிசைக்கிடக்கும் ஒருவனேன் அகத்திலவை தனிமைமகிழ் வொளிவீச உருகுமனம் பலகாலும் உவந்தவற்றோ டாடினவே. (4) அடிக்குறிப்புகள் 1. விலங்கல் - மலை. 2. விளிவு - கேடு; குனிப்பதை - வளைவதை; 3. நுனிக்கும் - நுணுகிச் செல்லும்; செம்புலவன் - நடுநிலை மேவிய செந்நாப் புலவன்; நுவன்ற - பாராட்டிய; களிக்கூட்டம் - மகிழும் வண்டுக் கூட்டம்; களிக்கும் - களிபோல் இருக்கும்; பெயரடியாய்ப் பிறந்த வினை. நோக்கின்மேல் நோக்கினன் - உற்று நோக்கினேன்; நோக்கினன் - தன்மை; 4. இரு நிதியம் - இருநிதியமன்ன அருளொளி; அவற்றோடு - அச் செவ்வந்திப் பூக்களோடு. 8 ஆங்கிலேய பல்மல் இதழில் வெளிவந்த தலைப்புப் பாக்களின் மொழிபெயர்ப்பு (எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்) வளியது நாப்ப ணுருக்கரந் ததுவோ, வானுறு நீல விதானத்தின் கீழாக் களியது கெழுமி யிருந்ததோ, மாந்தர் காமுறு நெஞ்சோ, கரியதொல் கடலின் தெளிதிரை மடியோ, மண்ணடி நடுவோ, செறிதரு தீத்தனை வளர்க்க வோவாது நளிதர வியங்கு மண்ணினுள் முழைஞ்சோ, நசைகிடந் துறங்குவ திசைவுற நவில்வீர். (1) கதிர் நிற மெனவும் யாழிசை யெனவுங் கட்புலன் கதுவிடா தெம்முளே கலந்து முதிர்சுவை யின்பம் அறிவுமெய் யுருவாய் முழுமுதல் நின்ற மூவிலா வியல்பின் அதிர்விலா தொன்றாய் இருளினு ளன்றே அழுந்தினங் கிடந்தேம் அங்கண்மா ஞாலம் பொதிர்வுற வொளிரும் பரிதியின் முன்பும் பொங்கொளிக் கோள்க ளுழிதரு முன்பும். (2) உலகெலா மெமதே யாங்ஙன மெனினஃ திறைவன தவனி லுகுதலில் லாது நிலவுறு கூறா யமைகுவ மவனை விதுப்புறு நெஞ்சோ டாடவன் வழுத்தும் பலமதக் கொள்கை கிழிக்கினுஞ் சூறை பரந்ததைத் துரக்கினும் அவைவெளித் தோற்றம் கலகவக் கொள்கை யனைத்தையுங் கடந்து கருதரு மெய்ம்மைய னாயவ னுறையும். (3) மெய்ப்பொரு ளறிவைப் பயந்தழி வில்லா மேதகு நிலையைத் தெளிவுற விளக்கிக் கைப்புடைச் சாக்கா டெனும்வழி பிழைத்துக் கனவென நிலையா வுலகியல் பறுத்துப் பொய்ப்பொருள் மறைக்கும் பனியென நலியப் புகலரும் வரம்பில் அறிவினா லிறைவற் றுய்க்குமா கடவு மன்பெனும் என்றூழ் துலங்குதல் காண்டும் வருதிரோ துணைவீர். (4) அடிக்குறிப்புகள் 1897 சித்தாந்த தீபிகையில் வெளிவந்தது 1. வளியது நாப்பண் - காற்றின் நடுவில்; நீல விதானத்தின் - நீல மேற்கட்டியில்; களியது - களிப்பு; அது, பகுதிப் பொருள் விகுதி. திரை மடியோ - அலையின் மடிப்பிலோ; நளிதர - செறிவுமிக; முழைஞ்சோ - குகைகளிலோ; இயங்கும் என்றது, தீ வளர்ப்பு ஓவாது நடத்தலைக் குறித்தது. நசை - அன்பு. இவற்றிலெல்லாம் தங்கிக் கிடந்ததோ? இசைவு உற - பெருத்தமுற. (அன்பு என்பது, எங்கிருக்கிறது என்றபடி) 2. கதிர்நிறம் - ஒளிவண்ணம்; கண்புலன் கதுவிடாது - கட்புலனுக்குப் புலப்படாமல்; மூ இலா - மூவா; இயல்பின் - இயல்பைப் போல; அதிர்வு இலாத - அசைதல் இல்லாத; இருளினுள் - அறியாமை யிருளில்; அங்கண் - அழகிய இடத்தையுடைய; பொதிர்வு உற - நீங்க; விடுதலையுற; இருளிலிருந்து நீங்க; உழிதரு- திரிதலின். (இறைவனைப் போல் அறியாமையிருள் போக்கும் ஞாயிற்றொளியாய் என்னுற்ள அன்பு உள்ளது) 3. (இறைவனது ஆதலின்; உகுதலில்லாது - பிரியாமல்; விதுப்புறு - அன்பினால் நடுங்கும்; ஆடவன் - முயல்வோன்; எவ்வழி நல்லவர் ஆடவர் எண்புழிப்போல் வந்தது; கிழிக்கினும் - பிரித்து ஆராய்ந்தாலும்; உம்மை, எண்; சூறை பரந்ததைத் துரக்கினும் - கருத்துக்கள் கொள்ளைபோனதைப் பின்பற்றி யெடுத்தாலும்; வெளி - அருள்வெளி; அவன் உறையும் - அவ்விறைவன் தங்கும்; அவன் என்றது, இறைவனாய அன்பு. (அன்பு - முதல்வனாய்த் தங்கும்; உலகெலாம் எமதே என்னும் பொதுமை காணும் என்றபடி.) 4. மெய்ப்பொருள் அறிவை - கடவுளுணர்வை; மெய்ஞ்ஞானத்தை; மேதகு நிலை - மேன்மை தக்க வீடுபேற்று நிலையை; கைப்பு - கசப்பு; பிழைத்து - தப்பி; பொய்ப்பொருள் மறைக்கும் பனி என - பொந்துபோலும் பள்ளங்களையும் மறைத்து வருத்தும் பனிப்படலம் ஞாயிற்றொளியால் நீங்குதல் போல; நலிய - அறியாமை நீங்க; இறைவன் - இறைவனை; கடவும் - செலுத்தும்; என்றூழ் - ஞாயிற்றொளி; துலங்குதல் - விளங்குதல்; காண்டும் - காண்போம்; வருதிர் - வருக. துணைவீர் - உடன்பிறப்பினரே! (வீடுபேற்றுக்கு வழிகூட்டும் அன்பொளி காண்போம் வருக என்பது.) இச்செய்யுட்கள் அன்பின் விளக்கம் கூறின. 9 விருதைச் சிவஞான யோகிகள் மீது பாடிய புகழ்ப்பா சீர்கொண்ட அளிக்குலங்கள் செழுந்தருவுள் நறுமலர்க்கண் ணீர்கொண்டு கரைந்துருக நிகழ்த்துமிசைக் குவப்பெய்தி வார்கொண்ட சடைமுடியெம் வள்ளலைப்போல் வன்கொன்றை ஏர்கொண்ட பொன்சொரியு மெழிற்பொழில்சூழ் விருதையூர். (1) இனையவளம் பதிதன்னு ளினியதமிழ்ப் பனுவலினுங் கனைகடலின் விரிவுடைய காமர்வட மொழித்துறையுந் தனைநிகர்ப்பா ரிலராகத் தனிவிளங்கு சிவஞான முனைவனையே யொத்துளார், சிவஞான யோகியார். (2) உலகமெனும் பூம்பிடகை யொளிர்சைவ மணியைமருட் கலகநெறிப் புறச்சமயக் கனையிருள்வாய்ப் பெயுங்காலை இலகறிவுந் தடந்தோளும் எழில்வடிவும் பெருங்கருணை உலவுதிரு விழியிணையும் எமையுடைய வுரவடியும். (3) உளமுருகுங் கட்டுரையு முயர்கலையின் றெளிவுரையும் பளகறுதன் னாவுரையும் விழுமியபற் பலநடையும் வளமுறுவொன் றுறுமாற்றாற் போந்தருளி வழங்கிருளை இளவளஞா யிறுபோலப் புறச்சமய இருள்பாறி. (4) தலையாய சைவமணி தொன்மைபோற் றயங்குறவிப் புலைநாயிற் கடையேமும் போந்ததனைப் பெறவிளக்கும் துலைநாவை யுறழ்சோம சுந்தரமா மெங்கள்பெருந் தலைநாயன் பெருங்கேண்மைப் பெருந்திருவுந் தலைக்கொண்டார். (5) ஆண்டகையாம் அவள்கேண்மை கொண்டதனுக் கடுத்தவா றீண்டுவலைச் சமயநெறி மாழாக்கு மியல்பினார் வேண்டுவன வேண்டியாங் கெய்தலுறுந் தவமுடையார் தூண்டுமனச் செயல்செறிக்குந் துறவொழுக்க மேற்கொண்டார். (6) மும்மறையின் நடுக்கிடந்த இரண்டெழுத்தே மொழிகுவார் செம்மைநெறித் திருத்தொண்டிற் கியைசெயலே சிறந்துளார் தம்மனத்தைச் சிவபெருமான் திருவடிக்கீழ்த் தவிசாக மெய்ம்மையே யிடுவித்தா ரெமையுடைய மேன்மையார். (7) என்னுரையி லமையாத இளையபுக ழியோகியார் இன்னிசைப்பண் விரும்புதலும் இசைப்பாட்டு நும்பெருமாற் கென்னாளு மிலவென்றே யிழுக்குநெறிப் பாகவதர் சொன்னாவி னுரைகேட்டுத் துளக்கமுறு முளத்தினார். (8) முத்திறத்துத் தமிழ்மலய முனிக்கிறைவன் உரைத்ததுவும் வித்தியா தரரிருவர் விளங்குசெவி யிருத்தியது மெத்துபுக ழிலங்கையர்கோன் மிகப்பாடி உய்ந்ததுவும் எத்துணையு மறியாத வேழையர்க்கு மிகப்பரிவார். (9) இழுக்குநெறிப் பாகவத ரியம்புமுரை யெஞ்ஞான்றும் வழுக்குரையாம் படிதெளிய வளமுடைய செழுந்தமிழின் வழக்குநடை யிந்நூலை மறைமுதலா மருங்கலையின் விருப்பமுறு மேற்கோளும் வியற்றமிழிற் காட்டுகளும். (10) எழுவாயும் வேற்றுமையும் என்றுரைக்குங் காட்சியொடு வழுவாத வைத்துறுப்பால் வருங்கருத்தும் வேறுரைக்கு முழுவாய்மை யுரைமூன்றும் இடைவிரவ முரணுவார் பழுதுடைய கோள்களைந்து பாங்குபெற வியற்றினார். (11) வேறு பாழ்படு நெறியெலாம் பாறிச் சென்னியிற் போழ்படு விதுக்குறை சூடும் புங்கவற் கூழ்படு மிசைவிருப் புண்மை காட்டிய சூழ்பொழில் விருதையூர் யோகி வாழியே. (12) அடிக்குறிப்புகள் 1. அளிக்குலங்கள் - வண்டுக் கூட்டங்கள் ; வன் கொன்றை - வலிமை கொண்ட கொன்றை மரம்; பொன் - பொன்னிற மலர்களை; வள்ளலைப்போல் பொன்சொரியும் என்றது, பா நயம். விருதை - விருதுநகர்; 2. கனை கடலின் விரிவுடைய வடமொழி என்றமையால், தமிழ்ப் பனுவல், இனிமையோடு சுருக்கமுமுடைய தென்பது குறிப்பு. 3. பூம்பிடகை - அழகிய பெட்டி; உர அடி - வலிய திருவடி 4. பளகு - குற்றங்கள்; நா - நாவினால் உரைக்கும்; ஓன்றுறு மாற்றால் - ஒன்று சேர்ந்தவகையினால். 5. தயங்குற - விளங்குதலால் துலை நா - துலைபோன்ற நடுநிலை நாவை; தலை நாயன் - தலைவரிற் றலைவர்; தலைவராகிய நாயகர் என்றதுமாம். 6. மாழ் ஆக்கும் - மாழ்குதலைச் செய்விக்கும்; வலை என்றதனால் சமயநெறி, இங்கே சமயநெறிப்பற்றை உணர்த்தும். செறிக்கும் - அடக்கும். 7. இரண்டெழுத்து சிவ; தவிசு - இருக்கை 8. அமையாதன (வாகிய) இணைய என்க. சொல் நாவின். 9. எத்து - எடுத்த. பரிவார் - பரிந்து விளக்குவார். 10. வியன் தமிழில். இந்நூல் என்றது, அவர் நூல் 11. காட்சியொடு - அறிவோடு; உரை மூன்று - பதவுரை, பொழிப்புரை, கருத்துரை. 12. பாறி - அழித்து; விதுக் குறை - நிலாக்குறை; என்றது, பிறை நிலா. 10 தமிழ்த்தாய் வாழ்த்து செழுந்தமி ழென்னுங் கொழுந்தமிழ்க் குழவியை மன்றினுட் குனிக்குங் கொன்றையஞ் சடையோன் தெறுவேல் ஏந்திய அறுமுகற் கருள ஆங்கவ னினிதெழுந் தேற்றுப் பாங்குறக் 5 குறங்கினி லிரீஇ வெரிந்புறந் தைவந் தியல்வகை யென்னும் பயில்பா லூட்டிச் சின்னாள் வளர்த்த பின்னர் மன்னிய வெள்ளியம் பலத்துட் டுள்ளிய பெருமான் பீடுற வமர்ந்த கூடன்மா நகரின் 10 மெய்பெற விருந்த தெய்வப் புலமைப் பெருமதிப் புலவோர்க் குரிமையி னுதவினன்; அவரும் உளந்துளும் புவகையின் வளம்பெற ஏற்றே அகம்புறம் என்னுந் தொகுகலன் பூட்டி நூலெனு மாடையும் வாலரைக் கொளீஇச் 15 சொற்சுவை பொருட்சுவை கனிந்த பற்பல பாவுணா நாடொறும் பல்வே றூட்டிச் சங்க மென்னும் பொங்குபூந் தடத்தினும் ஆலவா யென்னுங் கோலமார் காவினும் வடமொழி யென்னு மடங்கெழு தோழியொடு 20 முடம்படுத் தொருங்கு விடுப்பக் குடம்புரை கொங்கைப் பொறைகெழு கொழுந்தமிழ் மங்கை யானா வேட்கையின் ஆடி மேனாள் தென்னா டதனில் மன்னி யமர்ந்தனள். கவின்மிகு திருமகள் நறும்பொதி யவிழ்க்குஞ் 25 செழுந்தா மரையின் மேவி எழுந்தினி தமர்ந்த வியல்பினா லெனவே. அடிக்குறிப்புகள் * திரு சாமி வேலாயுதம் பிள்ளை தொகுத்த மொழியரசி நூலுக்கு எழுதப் பெற்றது. (2-11) குனிக்கும் - வளைந்து ஆடல்புரியும்; தெறு - பகைவர்களை அழிக்கின்ற; குறங்கினில் - தொடையில்; வெரிந்புறம் - முதுகிடம்; தைவந்து - தடவி. துள்ளிய - மகிழ்வோடு ஆடல்புரிந்த; பெருமான் - மைந்தனுடன் தந்தை; பீடு உற - பெருமை மிக; பீடு அற என்பது பாடமாயின், மாற்றார் பெருமை அழிய எனப் பொருள் கொள்க. மெய் பெற - திருவுருக் கொண்டு; உதவினன் - உடனிருந்து தமிழாய்ந்து உதவினன். (13- 23) கலன் - அணிகள்; வால் - தூய; ஆன - நீங்காத; அமர்ந்தனள் - வீற்றிருந்தனள். இயல்பினால் எனவே மங்கை அமர்ந்தனள் என்க. 11 தமிழிந்திய மாது (சிறந்த பண்டைத் தமிழ் நாகரிகத்தை முன்னிலைப்படுத்திக் கூறிய பாக்கள்) இராகம் (இசை - பைரவி) தாவு கொச்சகக் கலிப்பா வளம்பழுத்த விளைநிலமே விழிதிரும்பும் வழியெல்லாம் குளம்பெருக்கும் அருவிவருங் குன்றுகளே குலவுவன இளம்பருவச் சோலைகளே கருங்காடே எங்குமாய் உளம்பழுத்த மூதறிஞர் உயிராகும் உனக்கன்னாய். (1) விரிந்தபெரு ஞாலத்தில் வேறுபல தேயத்தில் விரிந்திருந்த மக்களெலாம் பேதையராய் இருந்த அந்நாள் தெரிந்துபல கலைகளெலாம் தெளிவாக மிகவிளக்கி வரிந்தனர்நின் மகார்எனிலுன் வளர்பெருமை சொலலரிதே. (2) அலையுலவும் வங்காளக் குடாக்கடலின் அடிக்கிடக்கும் விலைவரம்பு காணாத முழுமுத்தும், மேலுயர்ந்த மலையருவி கொழித்துவரும் மணிகளொடு, பசும்பொன்னும் தலையணியப் பிறநாட்டார் தந்தனைஇந் தியமாதே. (3) முன்னாளில் வாணிகத்தில் முதன்மைபெறு யவனர்களும் தென்னாட்டில் உவரியெனும் துறைமுகத்தில் திரண்டுவந்து வன்னமயில் நறுஞ்சாந்தும் மணியானை அணிமருப்பும் இன்னபல அருஞ்சரக்கும் ஏத்துகவென் றீந்தனையே (4) தொழில்நுட்பம் மிகச்சிறந்த துகளறுபட் டாடைகளும் கொழும்பருத்தி இலவம்பஞ் செலிமயிரிற் கோவைசெய்து செழும்பாலின் நிரையெனவும் திகழ்பாம்பின் உரியெனவும் ஒழுங்காகச் சமைத்தஉடை உலகமெலாம் நிலவியதே. (5) உலகிற்கோர் விளக்கனையாய் எம்முயிர்க்கோர் உயிரனையாய் பலவாறு நின்புகழ்மை பாரித்தென் சிற்றறிவாற் சொலவருமோ தொலையாத வளமுடையாய் தொன்றுதொட்ட நலமெல்லாம் பிறர்கவர இந்நாளில் நாணினையே. (6) அந்நாணம் இனியொழிய நின்மகார் அறிந்தெழுந்து முன்னாளில் விரிந்தபல கைத்தொழிலும் முதிர்ச்சியுற மன்னிமிக முயல்கின்றார் மனக்கவலை நீங்குற்றேம். இன்னும்இவர் சிறக்கவென ஏத்திமிக வாழ்த்துதுமே. (7) அடிக்குறிப்புகள் 1. குளம் - குளம்போலும் நீர் நிலைகளை; உளம் - உள்ளத்தின் ஆற்றல்கள்; எங்குமாய் விளங்கும் உனக்கு மூதறிஞர் உயிர்போல்வர் அன்னாய் - உலகன்னையே 2. உலகத்தில் பல நாடுகளில் மக்களெலாம் பேதையராய் இருந்த அந்நாள் என்க. வரிந்தனர் - நாகரிக வாழ்க்கை எழுப்பி முன்வந்தனர்; நின் மகார் - நின் தமிழ் மக்களாகிய இந்திய மக்கள்! 3. பிறநாட்டார் - பிறநாட்டார்க்கு. இந்திய மாதே - தமிழிந்திய மாதே! 4. உவரி - ஒரு துறைமுக நகர். 5. கோவை செய்து - கோத்து; நெய்து. உடை - உடைகளும்; நிலவியது - நிலவின; ஒருமை பன்மை மயக்கம். 6. பாரித்து - பெருக்கி; நாணினையே - நிலைகுறைந்தனையே. 7. மக்கள் நிலையுயர்தலால் நாடும் உயர்கின்ற தென்றபடி. 12 செவ்வந்திமாநகரக் கல்லூரிப் பாட்டு* Introductory Note - முகவுரை ஆங்கில மொழியில் வல்ல கிரே என்னும் நல்லிசைப் புலவர், ஒரே உவால்போல் என்னும் முதன்மந்திரி புதல்வரொடு கேண்மை கொண்டு மற்றவரோடு ஐரோப்பாக் கண்டத்தின் தென்பகுதியில் யாத்திரை போனபோது இடையில் அவர்க்குந் தமக்கும் மனவேறுபாடு நிகழ, அவரைப் பிரிந்து போந்து இங்கிலாந்து தேசத்திலுள்ள தமது நாட்டிற் சென்றிருத்தலும், யாத்திரை முடித்துத் திரும்பத் தந்நாடடைந்த ஓரே உவால்போல் என்பவர் கிரே என்னும் புலவரொடு தம் மிடை நிகழ்ந்த அவ்வேறுபாடு தமது தகுதியிலொழுக்கத்தான் உண்டாயினதென்றும் இனி அதனை மறந்து தம்மொடு பெயர்த்துங் கேண்மை கொண்டொழுகல் வேண்டுமென்றும் கிரே என்னும் புலவரை இரந்து கொண்டு ஒருகடிதம் விடுப்ப, அதற்கு இசைந்து அவர் உவின்ஸர் என்னும் மலைக் கோட்டையிலிருந்த தந் நண்பரைக் காண்டற்பொருட்டுச் சென்றபோது தம்மெதிரே விளங்கித் தோன்றிய ஈட்டன் என்னுந் தாங் கல்வி பயின்ற கல்விக் கழகத்தையும் அதனை யடுத்துயர்ந்த உவின்சர் மலையையும் அதனடிவாரத்தோடும் தெம் நதியையுங் கண்டு புனைந்து பாடியது இப்பாட்டென்ப. கிரே என்னும் புலவர் தந் நண்பர் உவால்போல் என்பவரோடு ஒருங்கு கல்வி பயின்ற கழகம் ஈட்டன் கலாசாலையாம். இக்கலாசாலை இங்கிலாந்து தேசத்திற் செங்கோலோச்சிய என்றி என்னும் புகழ்மன்னராற் கி.பி 1440 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. உவின்சர் என்பது ஒரு சிறு குன்று; அதன் குவட்டிலியற்றப்பட்டுள்ள கோட்டையானது இங்கிலாந்து தேசத்து அரசர் இனிது வாசஞ் செய்வதற்கு ஏற்ற உறையுளாகப் பயன்படுவது. இனி, இவ்வரிய பாட்டைக் கிடந்தவாறே யெடுத்துக் கொண்டு மொழிபெயர்ப்பின் நிலநூல் பயிற்சி தேறாத செந்தமிழ் மொழியில் வல்ல எம் பெருமுதுமக்கள் இப்பாட்டின்கட் காணப்படும் ஊர்ப்பெயர் இடப்பெயர் யாற்றின் பெயர் மலைப் பெயர் முதலாயினவற்றுள் ஒன்றுதானும் அறிய மாட்டாமையின் மனவெழுச்சி குன்றி அதனைப் பயிலாது போகடுவாராதலானும், பிறமொழிச் சொற்கள் தன்னகத்து விரவிவருதலால் தன்னழகிழந்து சுவை வேறுபட்டுக் காட்டுஞ் செந்தமிழ் மொழியில் அச்சொற்களை மாட்டிவிட்டு வழங்கல் வடுச்சொற்கேதுவா மாகலானும், சிங்கள முதலிய பிறமொழிச்சொற்களெல்லாங் கலந்து வழங்குந் தமிழ் மொழியை அவற்றொடுபடாது வழங்குந் தூய்மை யுடைத்தென்றல் ஏலாதாமென்பார்க்குச் சிங்கள முதலிய பிறமொழி மாக்கள் தம்மொடு கலந்து பழகுங்கால் அவர் சொற்களை எடுத்துக்கொண்டு தமது தமிழ் வழக்குக் கேற்குமா றெல்லாந் திரித்து உரைநிகழ்த்துந் தமிழ் முதுமக்கள் செந்தமிழியல் வழக்குப்பற்றி வரும் அத்திறம் போலாது எமக்கு வேண்டியவாறெல்லாம் பிறமொழிச் சொற்களைத் தமிழ் மொழியிற் புகுத்தி வழக்கியல் வேறுபடுத்தல் உலக நெறியொடு மாறுபடுமாதலானும் இப்பாட்டின் ஒழுகலாற்றிற் கியையத் திரிசிரபுரம் என்று வழங்குஞ் செவ்வந்திமாநகர்க் கலாசாலையைப் புனைந்து பாடியதாக இதனைத் தமிழில் மொழிபெயர்த் திட்டாம். என்னை? முதனூலிலுள்ள ஈட்டன் கலாசாலைக் கேற்ப புனித யோசேப் கலாசாலையும் எ. பி.ஜி கலாசாலையும், உவின்சர் என்னுங் குன்றிற்கு ஏற்பத் தாயுமானவர் மலையும், உவின்சர் அடிவாரத்தோடும் தெம் யாற்றிற்கேற்பத் தாயு மானவர் மலையடிவாரத்திலோடுங் காவிரியாறும் இந்நகரிடைக் காணப்படுதலான் என்பது. அற்றேல், ஈட்டன் கலாசாலையைப்போலவே இந்நகரிடைக் கல்விக் கழகங்களும் ஆங்கிலமொழிப் பெயர்பெற்று நிலாவுதலின் அப்பெயர்களை இப்பாட்டின்கட் புகுத்தி நடவல் வழுவாம் பிறவெனின் நன்று சொன்னாய்! அங்ஙன மாட்டிவிடினன்றே வழுவாம், முதனூலில் ஈட்டன் கலாசாலைப் பாட்டென்று தலைக்குறியீடு தந்ததன்றி அப்பெயர் பாட்டின்கண் தந்து வழங்கப்படாதவாறுபோலக் கல்விக் கழக மென்றன் மாத்திரைக்கன்றி அப்பெயர்கள் அதனுள் தந்து வழங்கப்படா வென்பது காண்க. இனிக் கிரே என்னும் புலவர் முதிர்ந்த செய்யுட் புலமை மாட்சி கை வரப்பெற்று உலகியற் பொருணெறி முழுதுணர்ந்து பெருநலஞ் சுவைப்பச் செய்யுளிடைக் கொளுவி இனிது மிழற்று மாறும், கழகத்திடைக் கல்விபயிலுஞ் சிறுகுறுமாக்களியல் புணர்ந்து கூறுமாறும், பின் அச்சிறார் தமக்கு வருந் துன்பங்களை யெல்லாந் தொகுத்து இரக்கந் தோன்றக் கிளக்குமாறும் பிறவும் பெரிதும் நன்கு மதிக்கப்படுவனவாம். அவற்றுள், முதல் ஐந்து செய்யுட்களில், தம்மெதிரே அழகொளிர நிவந்து சேணோக்கும் கல்லூரியின் கொடு முடியினையுங் கோபுரத்தினையும் விளித்து நீவிர் இளமரக்காவின் வளமுறு நிழலையும் குறுமரக்காட்டின் நறுமலர்ப் பரப்பையும் செழும்புன்னிலத்தின் கொழும்பொழிதமையும் ஊடுருவிச் செல்லுங் காவிரியாற்றினையும் அதனையடுத்துயர்ந்த நிலப் பரப்பையுங் காண்பீரென்றும், தமது பிள்ளைமைப்பருவத்தே திரிந்தாடுவதற் கிடமாயிருந்த குன்றுகள் மரநிழல்கள் வயல் களாகிய இவற்றை விளித்து நும்மிடத்தினின்று மெல்லிதின் வீசுந் தென்றற் காற்று எமதிளைப்பை நீக்கி எம்முயிருறு துயர் நீங்க ஆறுதல் சொல்வது போலவும் கழிந்த எமது இளமைப் பருவத்தையும் மகிழ்ச்சியையுந் தருவதாகிய ஓரிளவேனிற் பருவத்தைப் பெயர்த்தும் வருவிப்பது போலவும் உலாவு மென்றுங் கூறுமாறு காண்க; பின் இரண்டு செய்யுட்களிற், காவிரியாற்றை விளித்து! ‘அன்னாய், புல்வளர்ந்த நின் பசிய கரையிடத்தின் முன்விளையாட்டயர்ந்த சிறுவர்களுள் நின் திரையைத் தமது திண்டோளாற் கிழித்து நீந்தினாரெவர்?’ என்றும், ‘நாகணவாய்ப் புட்களைக் கண்ணியாற்பிடித்துக் கூட்டிற் சிறைப்படுத்தி மகிழ்ந்தாரெவர்?’ என்றும், ‘இருப்பு வளையங்களைக் கோலாற் புடைத்து ஓட்டிப் பின் ஓடினாரெவர்?’ என்றும், ‘பந்து ஆடினாரெவர்? என்றும் வினாவுதல் காண்க. பின்னிரண்டு செய்யுட்களிற் கல்விக் கழகத்திற் பயிலுஞ் சிறாரிற் சிலர் தாம் புறம்போய் விளையாடுங் காலத்தை நினைந்து கொண்டு முறுமுறுவென்று பாடஞ் சொல்லுதலும், அங்ஙனங் கழகத்தினுள்ளிருந்து பயிலுதற்கு அமையாது துணிந்த வேறு சிலர் திரும்பித் திரும்பித் பார்த்துக் கொண்டே ஓடுதலுங் கூறப்பட்டது காண்க. பின் மூன்று செய்யுட்களில், அச்சிறார் பலவற்றை யடைதற்கு விரும்புதலும், விரும்பிய பொருளெய்தியதும் அதன்கண் அத்துணை விருப்பஞ்செய்யாமையும், ஒரு கணத்திற் றோன்றிய இடரை அவர் மறு கணத்தின் மறத்தலும், அவரது கட்டிளமை யெழிலும், செய்தொழின் முயற்சியும், நுண்ணிய அறிவும், களிப்பும், கவலையின்மையும், நாளை வரு துன்பங்களை நினையாமையும் பிறவுங் கூறப்படுதல் காண்க. பின் இரண்டு செய்யுட்களில், அச்சிறார் தம் விதி நினையாமல் இங்ஙனம் மகிழ்ந்து விளையாட இடர்களெல்லாம் அவரை உணவு கொள்ளுதற்குப் படை குழுமி நிற்குமாறும், அந்நிலையை யறிந்து ‘காவிரி யென்னும் நங்காய்!’ நீயேனும் அச்சிறார் தமக்குச் சொல்லாயோ? என்றுரைக்குமாறுங் காண்க; பின் ஏழு செய்யுட்களில், அவரை வருத்துந் துன்பங்களின் தொழிற் கூறுபாட்டை விரித்துக் கூறுதல் காண்க; பின் இறுதியிற் கிடந்த செய்யுளில், அச்சிறார் தமக்கு இப் போது நுகரும் இன்பங்களெல்லாம் விரைந்து கழியத் துன்பங்கள் கடுகிவருதல் ஒருதலையாகலான் அவர் நாளைவரும் இடரை நினைந்து இன்று துய்க்கும் இன்பத்தினையும் இழத்தல் வேண்டா என்றும், அறியாமையே இன்பம் பயக்குமெனின் அறிவு கொண்டு பிதற்றுதல் மடமையாம் என்னும் உறுதி மொழிந்து முடித்தவாறு காண்க. இங்ஙனம் இப்புலவர் அமைத்தியற்றிய சொற்பொருள் நயங்களும் நுட்பங்களும் கற்றார்க்கெல்லாங் கழிபேரின் பம்பயக்கு நீரவாகலின், அவைதம்மைத் தமிழ்ச் செய்யுளால் மொழி பெயர்த்துத் தமிழ் வழக்குக் கேற்பச் சில பொருள் கூட்டியும் வேறு சில கழித்தும் மற்றுஞ் சில திரித்தும் முதனூற் பொருளொருமை கெடாது இயன்ற அளவு தமிழ்ச் செய்யுட் களைச் சுவைப்படுத்தியும் எழுதினாம். இன்னும் இவற்றின்கட் சொற்பொருணயங் களைத் திருத்திப் பொலிவு செய்யவல்ல அருமைகள் இதனை நோக்கும் அறிவுடையோர் அறிவாராயின் அவற்றை எமக்கு அன்பு கூர்ந்து தெரிவித்துக் கடமைப் படுத்துவாராக. மக்களாதலே துக்க வேதுவாம் - உறுதி மொழி மாண்கலைதந் தலைவர்செயு நன்றிதனை மதித்தவர்தங் காண்பினிய தூநிழல்சேர்ந் தினிதிருப்பக் கரும்புறழ ஊண்சுவைக்குங் காவிரிபாய் சூழலெலா மொளியுறுத்திச் சேண்பொலியுங் கொடுமுடிகாள், பண்டுபொலி சிகரிகாள்? (1) இளங்காவின் கொழுநிழலு மிறும்புதரு நறுமலரும் வளங்கெழுபுன் னிவப்பொழியும் வடிந்தோடும் வெள்ளியெனத் துளும்புபுனற் காவிரிதான் சுழன்றுசெலத் திகழ்மலையின் விளம்புநுதற் கீழ்விளங்கு வெளியெலாங் காண்பீரால். (2) இலங்கவலை யாமாகி யினைதலறி யேமாகிப் புலம்பெருகாப் பிள்ளைமையிற் புகுத்துதிரிந் தியாமாடு நலம்பெருகு குன்றுகாள் விழைவுதரு நன்னிழல்காள் பலன்றிரியப் பெருங்காதல் கொளுவியநற் பழனங்காள். (3) மெல்லிதினும் மிடனின்று வீசுகா லெமக்குநிலை இல்லின்பந் தந்துதம திருஞ்சிறையை மகிழ்சிறப்ப வொல்லெனநன் கெழுப்புதொறு முயங்குமுயிர்க் குறுதிமொழி அல்லலறப் புகன்றெம்மை யாற்றுவிப்ப தெனத்தோன்ற. (4) ஒருங்குபொதுண் மலரவிழ வுயர்மணமுஞ் செழுந்தாது நெருங்கியளைந் தெழுந்தினிது நெடுவிசும்பிற் சிதர்தோறும் பெருங்களியு மிளம்போதும் பெருக்குமோ ரிளவேனில் தருங்குறிய தெனத்தயங்குந் தன்மையெலாங் காண்டுமால், (5) காவிரியென் றுரையன்னாய் களியயருஞ் சிறுவர்குழாம் பூவிரிபைங் கரைமருங்கு பொருந்திவிளை யாடியவா றோவிலரா யின்பநெறி யுறுதலெலாங் காண்கையினாற் றாவுகொழுந் தோளினெவர் தயங்குதிரை யிடைபோழ்வார். (6) இசைமிழற்றும் பூவைதமை யிரும்பொறியிற் சிறைப்படுத்து நசையுடைய ரெவரிருப்பு நவில்வளையத் துரந்துசெலும் வசையுடைய சோம்பலுள முடையரெவர் வரிப்பந்து விசையுடனன் கெழுந்தோட விடுகுநர்மற் றெவருரையாய். (7) அருந்தொழிலிற் புகுந்தனரா யவர்சிலவர் புறந்திரியத் திருந்துபொழு தினிதாக்குஞ் சிந்தனைசால் காலைகளில் இருந்துதம முறுமுறுக்கு மிரும்பணியி லீடுபடப் பொருந்துமுள மிலர்வேறு துணிவுடைய புன்சிறார். (8) வரம்புடைய தமதுகுறு நிலவாட்சி மனவெறுப்பப் பரம்புபுற நிலமுழுதும் பார்த்துமென வோடுதொறுஞ் சிரந்திரும்பிப் புறநோக்கிச் சிவணுவளி யுளர்தோறும் புரம்பரவு குரல்கேட்பப் பொருந்துவெருக் களிகொள்வார். (9) களியளைந்த நம்புநசை கருதுமா றுரங்கொளினும் எளிதடைந்த பொழுதவர்தாம் விரும்பலிலா வியம்பினார் துளிவிழியி லுகுதலுமே தோன்றாம லதுமறப்பார் தெளியிளமை யொளிவிளங்குந் திறமுடைய தின்மையார். (10) செழுமுளரி யிதழ்வண்ண வெழில்வயங்கு திணிநலமும் எழுநாள்க டொறும்பெருகு செய்திறமும் இன்னாத கொழுமதியு மதுகைதரு கொழுங்களியுங் கவல்வதிலாப் பழுதுகெடு பகற்பொழுதும் பரிவில்லாக் கங்குலும் (11) தாளாண்மை தூயனவுந் தயங்குகதிர் நாள்விடியல் வாளாது கழிந்துவிடு மின்றுயிலு மற்றுமெலாம் நாளாலு முடையசிறார் நாளைவரு தீதுள்ளார் நீளாத கவலையெலா நிகழ்நாண்மேற் பிறிதில்லார். (12) அழிவுதரும் விதிநினையா ரதற்கிரையாய் விளையாடப் பழிவிதியி னுழையோரும் பாழ்வினையின் கொல்படையும் மொழிசிறுவர் தமைச்சூழ முதிர்ந்துகடி கொளுமாறு விழிகொடுகா ணுதிநங்காய் விளங்குபெரு வளமுடையாய். (13) சிறுதூற்றி னிடைமறந்து சிறுவர்தமை யுணவுகொளக் கறுவுடனக் கொல்படைதான் காவலொடு முறுநிலையை மறுவின்றி வயங்குபுகழ் மருவுடையாய் மற்றவருக் குறுதியுறக் காட்டியவர் மக்களென வுரையாயோ. (14) மாந்தருளங் கொழுதியுணும் வல்லெருவை தமைப்போல ஈர்ந்தவரைப் படுவிக்கும் இன்னாத கொடுங்காதல் காந்துசினம் விளர்வெருவு கரந்தியங்கு கழிநாண ஏந்துமெழின் மெலிவிரகம் இளமையெலாங் கழிக்குமால். (15) அவ்வியந்த னெயிறதுக்கி யாழ்நெஞ்சி னகங்கறிப்பச் செவ்விதலா அழுக்காறுந் திறங்குழைக்கும் பெருங்கவலும் ஒவ்வலிலா வலிக்குமுகந் தெளியாத வுள்ளுடைவும் எவ்வமதின் கூர்ங்கணையு மிடையுருவி யடையுமால். (16) பேராசை யொருசிலரைப் பிறங்கியெழ நனிகடவி ஓராவவ் வேழையரை யுடன்சுழற்சி யிளிவினிலுஞ் சீராத விகழ்வினிலுஞ் செலப்படுத்துத் திரிதரவுந் தீராத பொய்ம்மையெனுந் தெறுக்காலிற் கோட்பட்டார். (17) இளகலிலா வன்கண்மை யினைதலிலா விருவிழியும் பளகுமிக வவர்விழிநுண் டுளியரும்பப் பணித்துநக வுளகுருதி வறந்துகெட நினைந்திரங்கு முயர்தகவுந் தளவவிழ்த லெனத்துயரி னிடைநகூஉத் தனிவெறியும். (18) ஆண்டுகளென் றுரைபடுக ராழ்நிலத்திற் கோளிழைப்ப வீண்டிநிற்குங் கொடும்படைதா மிறவியெனு மறையனுக்கு நீண்டபெருங் கிளையெனினும் நீடியதம் மிறைவனிலும் மூண்டபெருங் கொடுமையினார் முறைமைசொலற் பாலதோ. (19) ஒன்றுமுளி யிடைமுறிப்ப வொன்றுநரம் பினையெரிப்பத் துன்றுகொழுந் தசையிசிப்ப மற்றொன்று தோன்றுமுவை நின்றவுயி ருறுப்பிடங்க ணிலையுருவி வெகுண்டலைப்பப் பொன்றுமிடி யுயிர்விறைப்பப் பனிக்கைதனைப் பொருத்துமால். (20) பிறிதுசிறி துடலையுணுந் தெரியகவை யினநிறைப்பப் சிறிதுவர வவரவரும் பேதுறுவ ரவர்வினையால் வறிதுபிறர் வருந்துதல்கண் டினைவோரும் வருந்தாத குறியவரு மெல்லாருங் கலுழ்ந்திரங்கக் குறிப்பட்டார், (21) இன்பமெலாம் விரைந்தோடு மிடர்தாழ்த்து வருதலிலை பின்புவரும் விதிநினைதல் பிழைதரு மாதலினான் முன்புசிறா ரவையறிதல் வேண்டாயா மொழியமைந்தாம் இன்பமறி யாமையெனி னறிவுகொள லெளிமையே. (22) அடிக்குறிப்புகள் * .இது ஞான போதினி (1901) 5 ஆவது தொகுதி முதற் பகுதியில் வெளியிடப் பெற்றது. 1. என்றி என்னு மன்னர் ஈட்டன் கல்லூரியமைத்துக் கல்வி வளம் படுத்து நிறுத்தலின் அந் நன்றியறிந்து அவர்தந்த அந் நீழலிலிருந்து கொண்டு கலைகளெல்லாம் அவரை வழுத்தும் என்று முதனூலிற் கூறப்பட்டதற் கிணங்கச் செவ்வந்திக் கல்லூரிகளிலும் அவ்வாறு கலைகள் தந்தலைவர் செய்ந்நன்றியை மதித்து இனிதிருக்கும் எனப்பட்டது. சூழல் - இடைவெளி கொண்டு சுற்றிலும் மரமடர்ந்த சோலை - Glade கொடு முடி - Spire. சிகரி - Tower 2. இறும்பு - குறுமரக்காடு - பொழி - புற்பற்றை, Tuff. உலையில் உருக்கி வடித்த வெள்ளிபோல நீர்துளும்பியோடுங் காவிரி யென்க. கொடுமுடிகளுஞ் சிகரிகளும் மலையினுந் தாழ்ந்த உயரமுடையனவாதலால் அம் மலைக்குவட்டின்கீழ் விளங்கு நிலப்பரப்பெல்லாங் காண்பவெனப்பட்டது. 3. கவலையிலமாகி என்க. இனைதல் - வருந்தல். புலம் பெருகாப்பிள்ளைமை - அறிவு நிரம்பாத பிள்ளைப் பருவம். விழைவு - விருப்பம். பலன் திரிய - பலனின்றி, தம்மோடுடன் பயின்ற உவெடு என்னும் அரிய நண்பர் இறந்துபட்டமையின் கிரே என்பவருக்கு இவை பயனிலவாகக் காணப்பட்டன. கொழுவிய - உண்டாகிய; பழனம் - வயல், சிறார் விளையாடு மிடனெனினும் அமையும், Field. 4. கால் - காற்று. உயங்கும் - இளைத்த, வாடிய. அல்லல் - துன்பம். 5. இச் செய்யுண்முதலடி யிரண்டும் முதனூலிலில்லனவாயினும், செய்யுளும் பொருளும் நிரம்பல் வேண்டிப் படைத்து எழுதப்பட்டன. பொதுளல் - நிறைதல். தாது - மகரந்தம். களி - மகிழ்வு. 6. முதனூலாசிரியர் தெம் யாற்றைத் தந்தையென அழைப்பராயினுஞ் செந்தமிழ் வழக்குக் கேற்பப் பெண்பாலாக வுரைக்கபட்டது காவிரியாறென்க. ஆடியவாறு - ஆடியபடியே. கொழுந்தோள் - Pliant arm. திரை - அலை. போழ்தல் - இரு கூறாக்குதல். 7. மிழற்றல் - பாடல். பூவை - நாகணவாய்ப்புள், இதனை இக்காலத்து மயினா என்று வழங்குப. முதனூலிற் கண்ட லின்னெட் (linnet) என்னும் இசையறி பறவைக் கேற்ப ஈண்டுப் பூவை எனப்பட்டது. பொறி - கண்ணி, Trap. வளையம் - Hoop. 8. வெளியே திரிவதற்கென்று குறித்த காலத்தை இனிதாக்கும் பாடவேளை என்க. சிறார் பாடம் பயிலும்போது முறுமுறு வென்று ஒலித்தலின் அவ்வாறு கூறப்பட்டது. பணி - வேளை. ஈடுபடல் - அறிவு செலுத்தல். 9. ஆட்சி - ஆளுகை. சிவணுவளி - மெய்யிற் படுங்காற்று. உளர்தல் - அசைதல். புரம்பரவு - பக்கத்தே பரவிவரும். வெருக்களி - அச்சத்தோடு கூடிய மகிழ்வு. 10. அளைந்த - கலந்த. நம்புநசை -ஒன்றனைப் பெறுதற்கு எதிர்பார்த்திருக்கும் அவா. உரங்கொளல் - வலிமைப்படல்; ஓரரும் பொருள் பெற விரும்பினார் அப் பொருள் பெறுதற்கு முன்னரே அதனைப் பெற்றாற்போல நினைந்து மகிழ்தலும், அதனை எளிதிலடைதலும் அதன்கண் அத்துணை விருப்பஞ் செய்யாமையும், வழக்கிற் கண்டு கொள்க. துளி விழியிலுகுதல் - துன்பக் குறிப்பு. 11. முளரி - தாமரை; முதனூலில் ரோ என்பதற்கேற்ப இஃது ஈண்டுப் பொருத்தப்பட்டது. முறுக்கவிழ்ந்த தாமரையிதழ் போலும் இளமையழகு வாய்ப்பப் பெற்றவரென்பதாம். கொழுமதி - தீயவழிப் படுநுண்ணறிவு, Wild wit. மதுகைதரு - மெய்வலியாற் பிறந்த; கவல்வு - கவலை. பரிவு - துன்பம். 12. தாளாண்மை - Spirit. கதிர் - ஞாயிறு. விடியல் - காலை. 13. விதியின் உழையோர் - ஊழ்வினையின் மந்திரிகள். முதிர்ந்து - சூழ்ந்து. கடிகொளல் - காவல் கொளல். நங்கை - காவிரியென்னு நங்கை. 14. தூறு - பதுங்கியிருத்தற்குப் பயன்படுங் குறியபுதல். கறுவு- வைரங்கொளல். ஈண்டுங் காவிரி விளக்கப்பட்டது காண்க. மக்களாய்ப் பிறத்தலே துக்க வேதுவா மென்னும் உறுதி மொழியிற் போந்த பொருள் ஈண்டு வலியுறுக்கப்பட்டது காண்க. 15. கொழுதி - மூக்கினாற் கோதி. எருவை - ஒருவகைப் பருந்து. ஈர்தல் - பிளத்தல், காந்து கினம் - அழலும் கோபம். விளர்வெருவு - வெள்ளிய அச்சம், அச்சமுடையார்க்கு மெய்வெளுத்தலின் இவ்வாறு சொல்லப்பட்டது. கரந்து - ஒளிந்து, கழி - மிகுந்த. ஏந்தும் எழில் - மிக்க அழகு. 16. அவ்வியம் - jealousy. எயிறதுககல் - பற்கடித்தல். கறித்தல் - கடித்துணல். குழைத்தல் - தளர்வித்தல். முகஞ் சுளிக்கச் செய்யும் மனத்தளர்வென்க. எவ்வம் - துன்பம். இடையுருவல் - நடுவு நுழைதல். 17. பிறங்கி - உயர்ந்து. கடவி - வலியச் செலுத்தி. சீராத - சிறவாத. இப்பொருட்டாதல் ஆசிரியர் நக்கீரனார் களவியலுரையிற் காண்க. தெறுக்கால் - தேட்கொடுக்கு. கோட்படல் - கொள்ளப்படுதல். 18. வன்கண்மை - கன்னெஞ்சுடைமை. பளகு - குற்றம். அவர் - சிறார் இரத்தம் வற்றும்படி முன்செய்த குற்றங்களை நினைந்திரங்குந் தன்மை. தளவு - மல்லிகை. வெறி - பித்து. 19. படுகர் - பவளநிலம், கோளிழைத்தல் - கொல்லுதல். இறவி - சாக்காடு. கிளை - சுற்றம். 20. முளி - கணு. joint. இசித்தல் - இழுத்து அழுத்தல், உயிருறுப்பிடம் - பிராணாதாரம். மிடி - வறுமை, பனிக் கை - Icey Hand. 21. அகவை - வயது. முற்கூறிய நோய்களின் தொகுதி முற்ற என்க. பேதுறல் - இடரெய்தல். கலுழ்தல் - அரற்றல். குறிப்பிடல் - விதிக்கப்படுதல். 22. பீழை - வருத்தம், மொழி யமைந்தாம் - இவை கூறுதல் இத்துணையி னமைத்தாமென்பது. 13 *வேனிற் பாட்டு இஃது, ஆங்கிலமொழியில் வல்ல கிரே (gray) என்னும் நல்லிசைப் புலவர் நலத்தகவியற்றிய செய்யுளினின்று மொழி பெயர்த்துக்கொண்டு செய்யப்பட்டது. வேனிற்கால இயனெறி வழாமை அக்கால நிலையிற் புறத்தே தோன்றும் உலகியற் பொருட்கண் நிகழும் நிகழ்ச்சியும், அந்நிகழ்ச்சியையே நிலைக் களனாக மொழிந்து கொண்டு அவ்வுலகியற் பொருணிலை யாமை புலப்படுத்தித் துறவுள்ளந் தோற்றுவிக்கும் அருமையுஞ் சுருங்கவுரைத்து உற்றுநோக்குவா ருணர்வெல்லாந் தன்வயப் படுத்து அவரறிவைப் பெருக்கி இன்பம் பயக்கும் நீரதாய் நிற்றலின் இவ்வரிய பாட்டைத் தமிழிலும் மொழிபெயர்த்து விடுதற்கு விரும்பி அதனை அவ்வாறே இயற்றினாம். கிடந்தவாறன்றி வேறுபடப் புனைந்து பாடுஞ் செய்யுள் வழக்குப்போலாது, உலகியற் பொருட்பெற்றி யெல்லாங் கிடந்தவாறே எடுத்து மொழிந் துறுதி பயக்குஞ் செய்யுள் வழக்கே தழீஇ வருதலின் இன்னோரன்ன பாட்டுகள் பெரிதும் போற்றப்படுவனவாமென்க. சங்கப் புலவரியற்றிய பழைய தமிழ் நூல்களும், பிற்காலத்துச் சேக்கிழார் போன்ற சில ஆசிரியன்மாரி யற்றிய நூல்களும் கிடந்தவாறு புனைந்துகூறும் மெய்ப்பொருட் செய்யுள் வழக்கே தழுவி நடை பெறுவனவாக, மற்றும் மெய்பொருள் வழக்கொடு மலைந்த வடமொழி வழக்கேபற்றி உற்றுநோக்குவாருணர் வெல்லாம் ஊக்கமும் உறுதியுமின்றிக் கழிந்து இளைப்படையப் பலப்பல தோன்றியவாறெல்லாம் புனைந்துகூறும் ஏனை நூற்பொருளெல்லாம் அத்துணையாகச் சிறந்தெடுத்துப் போற்றப்படுவன வல்லவாமென்று துணிக. ஒரு காப்பிய நூல் இயற்றுதுமெனப் புகுந்து நாட்டுப்படலம் நகரப்படலமென வகுத்து வாளாது விரியப்பாடுதலும், கம்பராமாயணம் சுந்தரகாண்டங் கடறாவு படல முகத்தில் வரையறையின்றி மிக விரித்துப் புனைந்து பாடுதலும் போல்வன வெல்லாங் கேட்போருணர்வுங் காண்போருணர்வுஞ் சலித்து வெறுப்படையத் திரிக்கும் வடமொழி வழக்குப்பற்றி வருவன வாதலான், மற்றவை அத்துணையாகத் தேறப்படுவன வல்லவாமென்பதூஉம், சிலப்பதிகாரம், மணிமேகலை, கலித்தொகை, பத்துப்பாட்டு, பெரியபுராணம் முதலிய நூல்களிற்போல நூற்பொருள் நடந்து செல்லு நெறிக்கிடையே கேட்போருணர்வு பாற்படுவகையான் இன்பந் தோன்றக் கிடந்தவா றெடுத்துமொழிந்து உண்மை யுணர்வு தோற்றி விருப்பமுறுக்கவல்ல மெய்ப்பொருள் வழக்கேபற்றி வருவனவெல்லாம் பெரிதுங் குறிக்கொண்டு போற்றப்படுவனவா மென்பதூஉம் நுண்ணறிவுடையார்க் கெல்லாம் இனிது விளங்கும். ஆங்கில மொழியில் வல்ல சேக்பியர், மில்டன், கிரே முதலிய நல்லிசைப் புலவ ரெல்லாரும் இங்ஙனமே கிடந்தவா றெடுத்துச் சமயம் நேர்ந்துழி யெல்லா மெய்யுணர்வு தோன்றக் கூறுதலின் அவரெழுதிய நூற்பொருள்களும் மேதக்கனவா மென்பது. எந்நாட்டிலாயினும் எச்சொல்லிலாயினும் எம்மக்களிலாயினும் புகழப்படும் அருங்குணமாட்சிகளுள வாயின் மற்றவற்றை விளங்கக் காட்டி வியந்து பாராட்டுதல் மெய்ப்பொருளாராயும் நடுவுநிலை யாளர்க்குரிய கடமையாம். அஃதொழியத் தாமுவந்தனவே நல்லவென்று தம்முள் வைத்து நலம் பாராட்டுவா ருரைகள் அறிவுடை மக்கள் கொள்ளராதலின், அத்துணிவுபற்றி ஆங்கில மொழியிலுள்ள இதனை மொழிபெயர்த்தி யற்றினாம். இப் பாட்டின் இயனெறி தெரிக்கப்புகுந்தமையின் இத்துணையும் இது விரிந்ததென்றுணர்க. இனி, இப் பாட்டை ஆங்கிலமொழியில் எழுதிய கிரே என்னும் புலவர் தம் ஆங்கில மொழிச் செய்யுள் வழக்குக் கேற்பவும், தந்தேச வொழுக்கங் குலவொழுக்கங்கட் கேற்பவும் அதனை இயற்றுதலின், மொழியும் செய்யுள்வழக்குந் தேசவியலும் வேறுபட்ட எம்மனோர்க்கு அங்ஙனங் கிடந்தவாறே எடுத்து மொழிபெயர்த்துவிடின் அச்செய்யுட் பொருளறிந் தின்புறுதல் செல்லாமையின், தமிழ் வழக்குக் கேற்குமாற்றான் அதனைச் சிற்சில இடங்களிற் றிரிவுபடுத்தி எதுகை நயம், மோனை நயம், சொற்பொருட் பொருத்தங்கட்கேற்பச் சில கூட்டியமைத்து இதனை ஈண்டுவெளியிடத் துணிந்தாம். இன்னும் இதன்கண் திருத்தங்கள் செய்து செய்யுளழகை உயர்த்தவல்ல நுட்பங்கள் இதனை நோக்கும் நண்பர்கள் அறிவாராயின் அவற்றை அன்புகூர்ந்து தெரிவித் தெம்மை இன்பமுறுத்துவாராக! ஒளிவனப்பி னிரதிதனக் குறுபாங்கி மாராகி யொளிர்செஞ் சாந்த நளிகொளுவ வெழின்முலைமேற் றிமிர்ந்தாங்கு நறுஞ்செந்தா மரைகள் பூப்ப வெளிவந்து களிதழுவ விளையாடு வியன்பருவ மடந்தை மார்ந்தாந் தெளியபல பகல்விரும்பு மலரவிழ்த்துத் திகழாண்டு மெழுப்பு வாரால். (1) அக்காலை யிரவதனி லினியவிசை யழகுதர மிழற்று மோர்புள் குக்கூவென் றிசைகுயிலின் குறிப்பாட்டி னெதிர்வேனிற் குலவு பண்கள் மிக்கூர வருமிடற்றிற் பொதிகொண்டு வெளியுகுப்ப விரிதண் கோடை மைக்கூருந் தெளிவிசும்பிற் சிறைதிரட்டு மணந்தெளித்தின் புறுக்குமன்றே. (2) பரியவரைப் பெருமரங்க டிணிகோடு பயந்தசெழு நிழல்க டோறும் பொரிபொகுட்குச் செவிரமுறு மரைமரங்கள் பொலிந்துகவி யதர்க டோறும் விரிதிரைக்கை பொருதடத்தின் கரைமருங்கும் விளங்குகலை மகளென் னோடு முரிதிருப்பப் புறமிடைந்து மருதநில மக்களென வுறுமக் காலை. (3) மன்பதையி னவாவளவு வறிதெழுந்து கழியுமது வென்னே யென்னே இன்பமது வுளந்துளும்பச் செருக்குறுவோ ரிழிவெய்தித் தாழ்த லென்னே துன்பமறு பொருளுடையோ ரதுதொலையத் துயரடைத லென்னே யென்னே அன்புதரு கவலையுட னரிதுழைப்போ ரஃதின்றி யார்த லென்னே. (4) நெடிதுயிர்க்கு முழுபகடு நிலனசைஇ வறிதிருப்ப நீள்வா னூடு குடிகொளுயிர்க் குழாம்பரந்து கறங்குமொலி குலவுறுத லென்னே யென்னே கடிமலரூற் றுறச்சுரக்குங் கழிசுவைத்தேன் பருகவெழு காதல் கூரத் துடிசிறையி னிளஞிமிறு துளும்புபக லொளிப்புனலி னீந்து மன்றே. (5) அவைதம்மிற் சிலமொழிந்த வொளிப்புனலிற் சிறிதுபடீஇ யசைந்து செல்ல உவைசில்ல பொலன்விளங்குஞ் சிறைப்படாஅ முயரவிரித் தொளிஞா யிற்றி நவையின்றி யவிரொளிமு னலமிளிரப் பலகாட்டி நடப்ப வெல்லாம் இவைதாமிம் மனிதருற வருவாழ்வென் றெழுநினைவின் விழிக்கு மன்றே. (6) இடங்குழுமி நகர்வனவு மெழுந்துயரப் பறப்பனவு முதலா வெல்லாந் தொடங்குழியே மறிதரவு முடிவுகொளுந் தொழிலரிதி னுஞற்று வோரு முடங்குகளி யுளம்விளைய நுகர்வோரும் ஊழ்வலியா கியபல் வண்ணப் படங்குலவச் சிலவருநாட் பரப்பிடைபோழ்ந் தரிதெழுந்து பரிகு வாரால். (7) இழவூழி னொருகருங்கை யிழைத்தகொடுங் கொலையானோ விறுமாப் பெல்லாம் விழவூரும் பெருமுதுமை யதனானோ வெறியாட்டு முழுது நீங்கிப் பழகூர வவர்பலரு மிரும்புழுதி யாகியயர் வுயிர்ப்ப யாவு மெழவூறு மெமதுளத்தி லிடையறா தக்காலை யெழுந்த வன்றே. (8) இனையபல வருமையெலா மினிதொளிர விளவிளையாட் டொருசின் மாக்கள் தினையளவு மவைநினையா ரெமைநோக்கி யொழுக்கமறி சிறுமை யுள்ளா யெனைவகையை யொருதனியீத் தனைநிகர்வை யெழில்கிளரு மகளி ரோடு நனைமகிழ்வு தலைசிறப்ப நலம்பருகி யின்பமுறா நடையை மன்னோ. (9) வளங்கெழுநற் றெளிமதுவ முடன்றொகுத்த வளரிறா லுனக்கொன் றின்றால் துளங்கொளிகால் கலவநனி துலங்கவிரித் தெழவொன்று சிறிது மின்றால் இளம்பருவங் கடுஞ்சிறைகொண் டுயரவெழுந் திறந்ததுநின் பரிதி பட்ட துளர்வேனில் கழிந்ததினி விளையாட வெழுதுமென வுரைத்தார் மன்னோ. (10) அடிக்குறிப்புகள் * Lubbuks’s “ The Use of Life” இப்பாட்டு ஞானபோதினி தொகுதி 4. பகுதி 11 இல் வெளியிடப் பெற்றது. 1. முதனூலில் வீன (Venus) என்பதற்கேற்ப இரதி எனப்பட்டது. இரதி - காமன் மனைவி. உயிர்கட்குக் காமவின்பத்தை நுகர்விப்பவள். வேனில் முதலிய பருவங்களைப் பெண்களாகக் கூறுபடுத்தி வீன என்பவளுக்குத் தோழிமாராகக் கிரேக்கர் கூறுபவாகலின் அவ்வாறு சொல்லப்பட்டது. தமிழ் வழக்குக் கேற்பச் சாந்தம் தாமரை முதலியவாகச் சில திரித்துச் சேர்க்கப்பட்டவாறு காண்க. ஆண்டு - வருடம். 2. இரவிற் பாடும் புள் - Nightingale. கோடை - மெல்லிதின் வீசும் மேல்காற்று. 3. பரிய அரை - பெருத்த அடி; அரை - Trunk. பொகுட்டு - கரடு முரடு. செவிரம் - பாசி. அதர் - காட்டுவழி; Glade. கலைமகள் - Muse. புறம் இடைதல் - முதுகு சாய்தல். மருதநிலமக்கள் - நாகரிக மில்லாத நாட்டுப்புறத்தார்; Rustics. 4. மன்பதை - மக்கட்பரப்பு. உழவுத் தொழில் செய்வோர் வேனிற்காலத்தில் வறிதிருத்தலின் நாலாவது வரியில் அவ்வாறு சொல்லப்பட்டது. 5. வேனிற்காலத்து உழவு நடவாமையின் உழவுமாடு வறிதிருக்குமென்பதாம். அசைஇ - இளைப்பாறி. இக்காலத்துச் சில வறிதிருப்ப வேறு சில மிக அரிதினுழைப்ப தென்னென வியந்தவாறு. கறங்குதல் - சுழலுதல். ஞிமிறு - ஒரு வண்டு. ஒளிப்புனல் - பேய்த்தேர். 6. படாம் - போர்வை. நவை - குற்றம்; மேகத்தான் மறைபடுதல். விழிக்கும் - தோன்றும்; விளங்கும் ; விழிப்பத் தோன்றா என்பதனுள் இப்பொருட்டாதல் காண்க. 7. தொடங்குழி - தொடங்கியவிடம். மறிதரல் - திரும்பிவரல். உஞற்றுதல் - அரிது முயலல். படம் - போர்வை போழ்தல் - ஊடறுத்தல்; எல்லாரும் வாழ்நாட் பரப்பை ஊடறுத்து விரைந்து வானுலகு செல்வரென்பதாம். 8. இழவூழ் - கேடுபயக்கும் விதி. கருங்கை - கொலைதொழிலிற் பழகிய கை; கொன்றுவாழ் தொழிலினும், வன்பணித் தொழிலினுங், கன்றிய தொழிற்கை கருங்கை யெனப்படுமே என்றாராகலின். அயர்வுயிர்த்தல் - இளைப்பாறுதல். 9. ஈ - ஈப்பறவை; a fly. எழில் - அழகு 10. இறால் - தேனடை - உருவக வகையால் இன்பந்தரும் பொருட் டொகுதி மேனின்றது. கலவம் - மயிற்றோகை; உருவகவகையாற் சிறந்த வுடைமேனின்றது. பரிதி - சூரியன். நின்பரிதிபட்டது என்பது வாழ்நாள் கழிந்ததென்பதனைக் குறிப்பானுணர்த் திற்று. இவ்விரண்டு பாட்டானும், உலகியற்பொருள் துறவுள்ளந் தோற்று விக்குமாகவும், அந்நுண்மை யறியமாட்டாதார் வேறுசில இன்பங்களையே பெரிதெடுத்துக் கூறுவரென முதனூற்புலவர் முடிவுரை கூறினார். 14 வாழ்க்கைக் குறள் இது பல்லவபுரம் பொதுநிலைக் கழக ஆசிரியர் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள் குறட்பாவில் இயற்றிய நூல். வாழ்க்கை இருவகைத்தா மாந்தர்பாற் றோற்றுவிக்கும் ஊழ்க்கு நிகரே துரை. (1) இம்மையே யன்றி இனிச்சேர் மறுமையும் மெய்ம்மையார் கண்டார் விதந்து. (2) இன்றிருக்கும் ஓரறிஞன் நேற்றிருந்த தன்றியே பின்றைநா ளும்மிருத்தல் பேசு. (3) இரண்டுந் தொடர்ந்தே இயங்குமுறை தேர்ந்தோர் முரண்டு மறுமை மறார். (4) இம்மை இயல்நெறியை ஏற்கத் திருத்தினால் அம்மை யியல்சிறக்கும் ஆர்ந்து. (5) இம்மை யொழுக்கம் இனிது நிகழாக்கால் செம்மையே வாழா ருயிர். (6) மாந்தர்க்கு நூறாண்டு வாழ்த்துமுறை வாழாக்கால் தேர்ந்தபயன் உண்டே தெரி. (7) இறைவன் படைப்பில் இறையுங் குறையாங் கறையே திவன்செயலல் லால். (8) அகத்தும் புறத்தும் அமைந்த அமைப்பை மிகத்தெரிந்து செய்க வினை. (9) மாறா நிலையும் மலையுஞ் செயல்தானும் வேறாதல் கண்டு விளம்பு. (10) அடிக்குறிப்புகள் 1. இருவகை - செல்வநிலை, வறியநிலை. திருவேறு தெள்ளியராதலும் வேறு என்றலும் ஒன்று. ஊழ் - ஊழ்வினை. ஊழ் என்றது ஏன்ற வினையை. 2, மெய்ம்மையார் - மெய்யுணர்ந்த மேலோர். விதந்து - சிறப்புறச் சொல்லி 3. பின்றைநாள் - பின்னாள். ஓர் அறிஞன் பின்னும் பலநாள் வாழக்கூடும் என்றுபேசினால் வாழ்வோருக்கு முயற்சிகளில் ஊக்கம் மிகும் என்பது அடிகளார் கருத்து. 4. இரண்டு - நல்வினை, தீவினை (அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்கள்.) தேர்ந்தோர் - ஆராய்ந்து தெளிந்தவர்கள். முரண்டு - மாறுபட்டு. மறார் - மறுக்கமாட்டார். 5. இயல்நெறி - இயற்கையொடு ஒத்துவாழும் நெறி. ஏற்க - அவ்வழியொடு பொருந்த. அம்மை - மறுபிறப்பு. ஆர்ந்து - நிறைந்து. 6. செம்மையே - சிறப்பாக; இம்மையில் நல்வினை செய்தோர் மறுமையில் இன்புற்று வாழ்வர் என்பது கருத்து. 7. வாழ்த்து முறை - என்று முன்னோர் வாழ்த்திய வகையில். தேர்ந்த பயன் - கற்றறிந்ததனால் உண்டாகும் பயன். 8. இறையும் - சிறிதும். குறையாம் கறை - குறையாகிய இழுக்கு. இன்ப துன்பங்களுக்கு நாம் செய்யும் வினையே காரணம் என்பது கருத்து. கறை இல்லை என்பதற்குக் கறை யேது என்றார். இவன் செயலே கறை என்பதற்கு இவன் செயலல்லால் என்றார். 9. மிகத் தெரிந்து - நன்றாக ஆராய்ந்து. அகத்தும் புறத்தும் - உள்ளும் புறமும். அமைப்பு என்றது உறுப்புகளின் பொருத்தத்தை. 10. மாறா நிலையும் - நிலைத்த நிலையும். மலையும் செயல்தானும் - அதனோடு மாறுபட்டழியும் நிலையாமைச் செயல்களும். கண்டு - அறிந்து. விளம்பு - அவற்றின் இன்றியமையாமை கருதிக் கருத்துக்களைச் சொல்க. 15 சாகுந்தல நாடகம் நடியின் கூற்று விரியு மணமவிழ்க்கும் மலர்முகிழ்மே லெல்லாங் கரிய வரிவண்டு முத்தமிடல் காணாய்! எரியுந் தளிர்ப்பிண்டி யிணர்கிள்ளி யோடுங் கரியவிழி மாதர் காதிடலுங் காணாய்! (1) (இ-ள்) விரியும் மணம் அவிழ்க்கும் - எங்கும் பரவாநின்ற மணத்தை அவிழச்செய்யும்; மலர் முகிழ்மேல் எல்லாம் - பூவரும்புகளின் மேலிடங்களை எல்லாம், கரிய வரிவண்டு - கரிய நிறமும் இறக்கைகளில் வரியும் உடைய வண்டுகள், முத்தம் இடல் காணாய் - முத்தம் இடுதலை ஒப்ப வாயால் தொடுதலைப் பார்ப்பாயாக, எரியும் தளிர்ப்பிண்டி இணர் கிள்ளி - தீ எரிவதனை யொப்பச் சிவந்து தோன்றுந் தளிர்களையுடைய அசோக மரத்தின் பூங்கொத்துகளைக் கிள்ளி, ஓடும் கரியவிழி மாதர் - காதளவும் ஓடாநின்ற நீண்ட கரிய கண்களையுடைய மடந்தையர், காது இடலும் காணாய் - தம்முடைய காதுகளிற் செருகுதலையும் பார்ப்பாயாக. அரசன் கூற்று புள்ளி விளங்கு பொன்மான் உடன்பயின்ற வள்ளைச் செவியாளென் மாதர்க் கொடிதனக்குத் தெள்ளு மடநோக்குந் தெருட்டியதால் மற்றதனை உள்ளிக் கணைதொடுத்தும் உய்த்திடநான் மாட்டேனால். (2) (இ - ள்) புள்ளிவிளங்கு - வெண்புள்ளிகளுடையதாய்த் திகழும், பொன்மான் - பொன்னிறமான மான் ஆனது, உடன் பயின்ற - தன்னுடன் பழகிய, வள்ளைச் செவியாள் - வள்ளைத் தண்டை யொத்த காதினை யுடையளாகிய, என்மாதர்க்கொடி தனக்கு - எனக்குக் காதலை விளைக்கும் பூங்கொடி போல்வாளான சகுந்தலைக்கு, தெள்ளுமடநோக்கம் - தெளிவுடைய தாய்க் கள்ளமறியாத பார்வையினை, தெருட்டியதால் - கற்பித்தமையால், மற்று அதனை - அத்தகைய மானை, உள்ளி - எய்வதற்கு எண்ணி, கணை தொடுத்தும் - அம்பை வில்நாணில் தொடுத்தும், உய்த்திட நான் மாட்டேன் - அதனைச் செலுத்து தற்கு நான் முடியாத வனாயிருக்கின்றேன்; ஆல் - அசை. மாதர் காதல் (தொல்காப்பியம் உரியியல், 32.) என்மாதர்க்கொடி என்பதற்கு எனக்கு உரியளாகிய இப்பெண்கொடிக்கு என்று பொருளுரைப்பினும் ஆம. சகுந்தலையின் அழகிய பார்வையும் மானின் இனிய பார்வையும் ஒன்றாயிருத்தலின், அவளை யொத்த மானை வேட்டம் ஆடுதலில் அரசனுக்கு உள்ளஞ் செல்லவில்லை யென்பது கருத்து. ஓவிய மாக எழுதிய பின்னை யொருமுதல்வன் ஆவி புகுத்தி விடுத்தன னோவன் றழகையெல்லாந் தாவி மனத்தாற் றிரட்டின னோவவன் றன்வலிவும் பூவை யுருவும் நினையிற்பொன் னாளோர் புதுமையன்றே? (3) (இ- ள்) ஓவியம் ஆக - சித்திரத்திலுள்ள ஓரழகிய வடிவமாக எழுதிய பின்னை - வரைந்தபிறகு, ஒரு முதல்வன் - ஒப்பற்ற தலைவ னாகிய நான்முகக் கடவுள், ஆவிபுகுத்தி - அவ் வடிவத்தினுள்ளே உயிரை நுழைத்து, விடுத்தனனோ - அதன்பின் அவளை இந் நிலவுலகத்திற் பிறப்பித்தனனோ, அன்று - அன்றி, அழகை யெல்லாம் - ஒவ்வோர் உறுப்புகளின் அழகுகளை யெல்லாம், தாவி - மனத்தாற் பரந்து ஆராய்ந்து, திரட்டினனோ - ஒருங்கு சேர்த்துச் செய்தனனோ, அவன் தன் வலிவும் - நான்முகனது படைப்புத்தொழிலின் திறமும், பூவை உருவும் - கிளியை யொத்தாளின் உருவச்சிறப்பும், நினையின் - ஒப்பவைத்து நினைப்பின், பொன்னாள் - இலக்குமியைப்போன்ற சகுந்தலை, ஓர் புதுமை யன்றே - இதுகாறும் எங்குங் காணப்படாத ஒரு வியத்தகு படைப்பன்றோ என்றவாறு. மோவா மலரோ நகங்களை யாத முழுமுறியோ ஆவா! கருவி துருவாது பெற்ற அருமணியோ நாவாற் சுவையாப் புதுநற வோசெய்த நற்றவங்கள் தாவா தொருங்கு திரண்டுவந் தாலன்ன தையலரே. (4) (இ-ள்) செய்த நல்தவங்கள் - மேலைப் பிறவிகளிற் செய்த நல்ல தவத்தின் பயன்கள், தாவாது - அழியாமல், ஒருங்கு திரண்டு வந்தால் அன்ன - ஒன்று சேர்ந்து ஓர் உருவாய்த் திரண்டு வந்ததை யொத்த, தையலர் - இம் மாதரார், மோவா மலரோ - மூக்கால் மோந்த பூ வாடிப்போதலால் இதுகாறும் ஆடவர் எவர் மூச்சும்படாத பூவோ, நகம் களையாத முழு முறியோ - பிறர் எவரது நகமும் படாமையின் நகத்தாற் கிள்ளப் படாத முழுத் துளிரோ, ஆவா - ஆஆ; இது வியப்பினைக் காட்டும் இடைச் சொல், கருவி துருவாது பெற்ற அருமணியோ - ஊசியால் தொளைக்கப்படாமற் பெற்றுக்கொண்ட விலையிடுதற்கரிய ஒன்பது மணிகளுள் ஒன்றோ, நாவால் சுவையாப் புது நறவோ - பிறரெவரது நாவினாலுஞ் சுவைக்கப்படாத புதிய தேனோ, இன்னதென்று கூறுகில்லேன் என்றவாறு, நுகர்தல் - அனுபவித்தல். களிவளர் கடவுளாங் காம தேவனே! எளியன்மேற் சிறிதுநீ இரங்கல் இல்லையால்; ஒளிவளர் மலர்க்கணை உறப்பொ ருந்துநீ அளியிலை கொடியைஎன் றாய தென்கொலோ! (5) (இ-ள்) களிவளர் - மகிழ்ச்சியின் மிகுதிப்படுத்துகின்ற அல்லது மகிழ்ச்சி மிக்க அல்லது காம மயக்கத்தை வளர்க்கின்ற அல்லது செருக்குமிக்க, கடவுள் ஆம் - தெய்வமாகிய, காம தேவனே, எளியன் மேல் - நின் வலிமைக்குச் சிறிதும் ஒவ்வாத ஏழையேன்மீது, சிறிதும் நீ இரங்கல் இல்லையால் - சிறிதாயினும் நீ நெஞ்சம் இரங்குகின்றிலை, ஒளிவளர் மலர்க்கணை- நிறம் மிகுந்த பூக்களாகிய அம்புகளை, உறப்பொருந்தும் நீ - நிரம்பவைத்திருக்கும் நீ, அளிஇலை - அருள் இலாய் என்றும், கொடியை என்று - கொடுங்குணம் உடையை யென்றும், ஆயது - எம்மையொத்தார் சொல்லும்படி ஆனது, என்கொலோ - ஏது காரணமோ என்றபடி. விரிகட லடியிற் புதைந்தவெந் தழல்போல் வெகுண்டசிவன் எரிவிழி கான்ற கொழுந்தீ நினதுஅகத்து எரிகின்றதால்; பொரிபட வெந்துசாம்பர்ஆ யினையெனிற் பொறாதஇடர் புரிவாய்! எமை வெதுப்பல் எவ்வாறுனக்குப் பொருந்தியதே? (6) (இ-ள்) விரிகடல் அடியில் புதைந்த வெம்தழல் போல் - அகன்ற கடலின் அடியிலே ஆழ்ந்து கிடக்கின்ற கொடிய தீயைப்போல், வெகுண்டசிவன் எரிவிழி கான்ற கொழும் தீ - சினங்கொண்ட சிவபிரானது நெற்றியிலுள்ள அழற்கண் கக்கிய மிக்கநெருப்பு, நினது அகத்து எரிகின்றதால் - நின்னை எரித்து விடாமல் நின்னுள்ளே எரிந்து கொண்டிருக்கின்றது போலும், பொரிபட வெந்து சாம்பர்ஆயினை எனில் - அவ்வாறின்றிப் பொரியாகத் தீய்ந்து சாம்பலாய் விட்டனையாயின், பொறாத இடர் புரிவாய் - தாங்கல் முடியாத துன்பத்தைச் செய்பவனே, எமை வெதும்பல் - எம்மை நினது கொடுந் தீயிலிட்டு வாட்டல், எவ்வாறு உனக்குப் பொருந்தியது - எங்ஙனம் உனக்குக் கூடியது, ஏ - அசைநிலை. பூங்கணை வாய்ந்த புத்தேள்! நீயும் புதுமதியும் ஈங்குள மக்கட் கின்பந் தருவீர் எனஎண்ணி ஏங்கிய காதலர் எல்லாம் ஏமாந் தனரானார். தாங்காக் காதல் என்போன் மாந்தர் தளர்வாரே. (7) (இ-ள்) பூங்கணைவாய்ந்த புத்தேள் - பூவாகிய அம்பினைப் பெற்ற காமதேவனே, நீயும் புதுமதியும் - நீயும் முதிராத நிலவும், ஈங்கு உளமக்கட்கு - இந் நிலவுலகத்துள்ள மக்களுக்கு, இன்பந் தருவீர் என எண்ணி - இன்பத்தினை விளைக்குந் தன்மை யுடையீரெனக் கருதி, ஏங்கிய காதலர் எல்லாம் - தாம் காதலித்தவரைப் பெறாமையால் ஏக்கமுற்ற காதலர் எல்லாரும், ஏமாந்தனர் ஆனார் - ஏமாற்றம் அடைந்தவராயினார்கள்; தாங்காக் காதல் - பொறுத்தற்கரிய காதலன்பின் வயப்பட்ட, என்போல் மாந்தர் - என்னை யொத்த மக்களோ, தளர்வார் - தாம் பிழைக்கும் வழி காணாமையின் உள்ளஞ் சோர்வா ரென்றபடி. மலரைக் கணையாய் உடையாய் எனநீ வருகுதலும் அலர்தண் கதிரோன் அவனென் றறையும் அவ்வுரையும் இலவாம் பொய்யே; எம்போல் வார்க்கவ் வெழின்மதியம் உலர்வெந் தீயே பொழியும் உறுதண் ஒளியாலே. (8) (இ-ள்) மலரைக் கணையாய் உடையாய் என நீ வருதலும் - பூக்களைக் கணைகளாகப் பெற்றாய் என நீ வழங்கப்பட்டு வருதலும், அலர்தண் கதிரோன் அவன் என்று அறையும் அவ் உரையும் - விரிந்த குளிர்ச்சியான கதிர்களையுடைய மதியோ னாகிய அவன் என்று எங்குஞ் சொல்லப்படும் அச் சொல்லும். இலஆம் பொய்யே - என்றும் இல்லாதன ஆன வெறும்பொய்யே யாகும், எம் போல்வார்க்கு - எம்மைப்போற் காமநோய் கொண்டார்க்கு; அவ் எழில் மதியம் - அவ் எழுச்சியினையுடைய திங்களானது, உலர் வெம் தீயே பொழியும் - யாம் காய்தற்கு ஏதுவான வெவ்விய நெருப்பையே சொரியும். உறு தண் ஒளியால் - மிகுந்த தண்ணிய ஒளியினால், என்றபடி. ஏ : அசை. நீயோ மலர்வெங் கணையை இடிபோல் நிறைக்கின்றாய்! ஆவா மருட்டும் அலர்கண் மடவாள் பொருட்டாக ஓவாது எனைநீ புடைக்கின் றமையால் உயர்மீனப் பூவார் கொடியாய்! என்னாற் புகழப் படுவாயே. (9) (இ-ள்) நீயோ மலர் வெம்கணையை இடிபோல் நிறைக்கின்றாய் - நீயோ பூக்களாகிய கொடிய அம்புகளை இடியை யொப்ப எம்மீது ஏவி நிரப்புகின்றாய், ஆ ஆ மருட்டும் அலர்கண் மடவாள் பொருட்டாக - ஐயோ எம்மை மயக்கும் பரந்த விழிகளையுடைய அம் மங்கையின் பொருட்டாக, ஓவாது எனை நீ புடைக்கின்றமையால் - ஒழியாது என்னை நீ நின் கணைகளால் அடிக்கின்றதனால், உயர் மீனம் பூ ஆர் கொடியாய் - உயர எடுத்ததும் மீன்வடிவு எழுதப்பட்டதும் பொலிவு நிறைந்ததுமான கொடியினை உடையாய், என்னால் புகழப்படுவாய் - என்னால் நீ புகழ்ந்து பேசப்படுவாய், என்றபடி; ஏ: அசை. முகை அவிழ்க்குந் தாமரையின் முதிர்மணத்தின் அளைந்து மிகைபடுநீர் மாலினியின் விரிதிரைநுண் டுளிவீசுந் தகையினிய இளந்தென்றல் தனிக்காம எரிவெதுப்புந் தோகையுடம்பிற் றழுவுதற்குத் தொலையாத வளமுடைத்தே. (10) (இ-ள்) முகை அவிழ்க்கும் தாமரையின் - அரும்பாயிருந்த பதத்தினின்று அலருந் தாமரை மலரின்கண் உள்ள, முதிர் மணத்தின் அளைந்து - மிக்க மணத்திலே தோய்ந்து, மிகைபடுநீர் மாலினியின் - மிகுதியாய் ஓடும் நீரினையுடைய மாலினியாற்றின், விரிதிரை நுண்துளி வீசும் - அகலமான அலைகளினால் எறியப்படுஞ் சிறிய நீர்த்துளிகளை வாரிக்கொணர்ந்து வீசாநின்ற, தகை இனிய இளம் தென்றல் - மென்மைத் தன்மையால் இனிதாகிய முதிராத தென்றற் காற்றானது, தனிக்காம எரி வெதுப்பும் - ஒப்பற்ற காமமாகிய தீயினால் வாட்டப்படும், தொகை உடம்பில் - எழுவகை முதற் பொருள்களின் தொகுதியாகிய உடம்பினால், தழுவுதற்கு - அணைத்தற்கு, தொலையாத வளம் உடைத்து - கெடாத செழுமையினை யுடையதாகும் என்றவாறு. ஏ: அசை. விழிகளாற் பெறூஉம் அழிவில்பே ரின்பம் ஆஅ! பெரி தெய்தினென் மாதோ, தூஉய ஒண்மலர் தாஅய வெண்ணிறக் கன்மிசைத் தோழியர் மருங்கிற் சாஅய என் இன்னுயிர்ச் செல்வியைக் கண்ணுற லானே. (11) (இ-ள்) விழிகளால் பெறூஉம் - கண்களைப் பெற்றதனால் அடையும், அழிவு இல் பேர் இன்பம் - கெடுதல் இல்லாத பேரின்பத்தினை, ஆ ! வியப்பிடைச் சொல், பெரிது எய்தினென் - மிகவும் பெற்றேன், மாது ஓ: அசைநிலை, தூஉய - பரிசுத்தமான, ஒள்மலர் - ஒளி பொருந்திய பூக்கள், தாஅய வெள்நிறம் கல்மிசை - பரவிய வெண்ணிறம் வாய்ந்த கல்லின்மேல், தோழியர் மருங்கில் சாஅய - தன் தோழிமாரின் பக்கத்தே சாய்ந்து கிடக்கும், என் இன் உயிர்ச்செல்வியைக் கண் உறலான் - எனது இனிய உயிர்க்குச் செல்வமாயிருப்பவளைக் காண்டலினால் என்க; ஏ ; அசை, என் இன்னுயிர்ச் செல்வியைக் கண்உறலான் விழிகளாற் பெறூஉம் அழிவில் பேரின்பம் ஆ அ பெரிதெய்தினென் என வினைமுடிவுசெய்க. நறுமண நரந்தம் நகிலமேற் றிமிர்ந்துந் தாமரை நாளங் காமரு கையிற் பவளக் கடகமெனத் துவள வளைத்தும் என், ஆருயிர்க் காதலி ஓரயர் வுறினும் எழில்மிகு செவ்வியள் மாதோ, கழிபெருங் காதல் பயந்த ஏதமுறு நோயுஞ் சுடுகதிர்க் கனலி அடும்பெரு வருத்தமும் ஒன்றென மொழிவ ராயினும் என்றூழ் பொழிகதிர் வருத்த மீதுபோல் மழவிள மகளிர்க்கு அழகுபயந் தின்றே. (12) (இ-ள்) நறுமண நரந்தம் - நல்ல மணத்தை உடைய நரந்தம் புல்லின் அரைப்பை, நகிலம் மேல் திமிர்ந்தும் - கொங்கை களின்மேற் பூசியும், தாமரை நாளம் - தாமரைத் தண்டை, காமரு கையில் - அழகிய அல்லது விரும்பத்தக்க கைகளில், காமர் என்பதன் ஈற்றில் உகரச் சாரியை வந்தது, பவளக் கடகம் எனத் துவள வளைத்தும், என் ஆர் உயிர்க் காதலி ஓர் அயர்வு உறினும் - எனது அரிய உயிரை அனையளான காதலி ஒரு தனித்தளர் வினை அடைந்தாலும், எழில்மிகு செவ்வியள் - அத்தளர்விலும் ஒர் அழகு மிகுகின்ற பதத்தினையுடையள், மாது ஓ: அசை, கழிபெருங்காதல் பயந்த - மிகப்பெரிய காதலன்பு தந்த, ஏதம் உறுநோயும், - துன்பத்தினையுடைய நோயும், சுடுகதிர்க் கனலி அடும் பெரு வருத்தமும் - தீய்க்கும் கதிர்களைச் சொரியும் பகலவன் வருத்தும் பெருந் துன்பமும், ஒன்று என மொழி வராயினும் - ஒரு தன்மையவே எனக் கூறுவாருளாராயினும். என்றூழ் பொழி கதிர்வருத்தம் - பகலவன் சொரியுங் கதிர்களால் உண்டாந் துன்பம், இதுபோல் - இங்க காதல் விளைத்த நோயைப்போல், மழ இள மகளிர்க்கு - மிக இளையமாதர்க்கு, அழகு பயந்தது இன்று - அழகு தந்ததில்லை; ஏ: அசை; பயந்தது இன்று என்னுஞ் சொற்கள் பயந்தின்று என மருவின. வண்மலர்க் கன்னமும் வறண்டு வற்றின திண்ணிய கொங்கையுந் திறந்தி ரிந்தன நுண்ணிய நடுவுமேல் நுணுகிப் போயின வண்ணமும் வெளிறின தோளும் வாடின. (13) (இ-ள்) வள் மலர்க் கன்னமும் வறண்டு வற்றின - கொழுமையான மலர்களை யொத்த சகுந்தலையின் இரு கன்னங்களும் நீர்ப்பசையற்றுச் சுருங்கின, திண்ணிய கொங்கையும் திரிந்தன - இறுகிய கொங்கைகளுந் தமது இறுக்கம் மாறிவிட்டன, நுண்ணிய நடுவும் மேல் நுணுகிப்போயின- இயற்கையிலேயே இடுகிய இடையின் மேல் கீழ் நடு என்னும் மூன்று பகுதிகளும் இன்னும் மிகுதியாய் ஒடுங்கிப் போய் விட்டன, வண்ணமும் வெளிறின - உடம்பின் பல பகுதிகளிலுள்ள நிறங்களும் வெளுத்துவிட்டன, தோளும் வாடின - இரண்டு தோள்களுஞ் சோர்வுற்றன என்றவாறு. உருக்கிளர் இளந்தளிர் உலரத் தீய்த்திடு பொருக்கெனுந் தீவளி பொருந்த வாடிய மருக்கமழ் மல்லிகை போன்ற மாதர்பால் இரக்கமும் இன்பமும் ஒருங்கெ ழுந்தவே, (14) (இ-ள்) உருக்கிளர் இளம் தளிர் உலரத் தீய்த்திடும் - நிறம் விளங்கும் இளந்துளிர்களை ஈரம் இல்லையாகத் தீய்த்துவிடும், பொருக்கெனும் தீவளி பொருந்த வாடிய - விரைய வந்து வீசுந் தீக்காற்று மேலே படுதலால் வாடிப்போன, மருக்கமழ் மல்லிகை போன்ற - மணங்கமழும் மல்லிகைப் பூவையொத்த, மாதர்பால் - மங்கையாகிய சகுந்தலையினிடத்து, இரக்கமும் இன்பமும் ஒருங்கு எழுந்த - அவளது அழகிய மேனியின் வாட்டத்தைக் காண்டலால் அவள்பால் இரக்கமும் அவ்வாட்டம் என்பால் வைத்த காதன்மிகுதியால் உண்டாயிருக்கலாமென்று எண்ணுதலால் இன்பமும் ஒரே காலத்தில் என்னுள்ளத்தில் உண்டாயின என்றவாறு - ஏ : அசை. வேனில் கழிந்த வுடனே விரிகடல்நீர் வானம் பருகி வருகார்நாள் மன்னுயிருக் கானா மகிழ்வு தரல்போல் அடுங்காதல் ஏனை எனக்கும் இன்பம் பயந்ததுவால். (15) (இ-ள்) வேனில் கழிந்த உடனே - கோடை காலங் கடந்தவுடனே, விரி கடல் நீர் - அகன்ற கடலினது நீரை, வானம் பருகி - மேகமானது குடித்து, வரு கார்நாள் - வருகின்ற கார்காலத்தில், மழையை நோக்கும், மன் உயிருக்கு - நிலை பெற்ற உயிர்களுக்கு, ஆனாமகிழ்வு - அடங்காத மகிழ்ச்சியினை, தரல்போல் - தருவதுபோல், அடும்காதல் - வருத்துகின்ற காமப் பேரன்பானது, ஏனை எனக்கும் - இது காறுங் காத லின்னதென்றே யறியாமையின் அதற்கு வேறான எனக்கும், இன்பம் பயந்தது - இன்பத்தை உண்டாக்கியது; ஆல் : அசை. கைமேற் றலைவைத் திரவிற் கிடக்கக் கடைக்கணின்று பெய்ந்நீர் அழற்ற நிறந்திரி வான பெருமணிகள் மொய்பொற் கடகம்வில் நாண்டழும் புற்ற முனைநழுவிச் செய்யில் உரிஞ்சப் பலகால் எடுத்துச் செறிக்கின்றெனே. (16) (இ-ள்) கைமேல்தலை வைத்து இரவில் கிடக்க - கைமேல் தலையை வைத்துக்கொண்டு இராப்பொழுதிற் படுத்துக் கிடக்கையில், கடைக்கண் நின்று பெய்நீர் - என் கண்ணின் கடைகளிலிருந்து சொரியும் நீரின் வெப்பமானது, அழற்ற - சுடுதலால், நிறம் திரிவான பெருமணிகள் மொய் பொன் கடகம் - தம் நிறம் மாறின பெரிய இரத்தினங்கள் நெருங்க அழுத்திய பொன்னாற் செய்த எனது தோள்வளையானது, வில் நாண் தழும்பு உற்ற முனை நழுவி - வில்லின் நாண்கயிறு பட்டு வடுவாகிய இடத்தினின்றுங் கழன்று, செய்யில் உரிஞ்ச - எனது முன் கையில் வீழ்ந்து உராய்தலால், பலகால் எடுத்துச் செறிக்கின்றென் - அதனைப் பலமுறையும் மேல் உயர்த்தி அஃதிருந்த இடத்திற் சேர்ப்பிக்கின்றேன் என்றவாறு. ஏ: அசை. உன்மேற் பற்றின்றி உவர்ப்பான் எவனென உன்னினையோ அன்னான் நின்கூட்டம் விழைந்திங்குளான் அஞ்சும் ஆரணங்கே பொன்னாள் தனைநயப் போனை மறுப்பினும் போவதற்கம் மின்னாள் விரும்பப் படுவோன் அவளை வெறுத்தலின்றே. (17) (இ-ள்) உன் மேல் பற்று இன்றி உவர்ப்பான் எவன் என உன்னினையோ - உன்மேல் அன்பு இல்லாமல் வெறுப்பவன் எவன் என்று நீ நினைத்தனையோ, அன்னான் - அத் தன்மை யினான், நின் கூட்டம் விழைந்து இங்கு உளான் - நினது சேர்க்கையினை மிக அவாவி இவ்விடத்திலேயே இருக்கின்றான்; ஆதலால், அஞ்சும் ஆர் அணங்கே - நின்னை விலக்கிவிடு வானென வீணே எண்ணி அஞ்சா நின்ற பெறுதற்கு அரிய தேவமாதரை ஒத்தவளே, பொன்னாள் தனை நயப்போனை மறுப்பினும் - திருமகள் தன்னை விரும்புவானிடத்தே செல்வதற்கு இசையாவிடினும், போவதற்கு அம் மின்னாள் விரும்பப் படுவோன் - தானே செல்வதற்கு அத்திருமகளால் விரும்பப் படுவாள் ஒருவன், அவளை வெறுத்தல் இன்று - அத் திருமகளை வெறுத்தல் இல்லை என்றவாறு. ஏ: அசை. நொடிசிமிழா விழியால்என் காதலியை நோக்குங்கால் வடிதீஞ்சொற் றொடர்தொடுக்கும் வண்மையில்அன் னாள்முகத்துக் கொடிபோல் ஒருபுருவம் மேல்நெறிந்து குலவியிடப் பொடியுங் கதுப்பென்மேற் காதல்புல னாக்குமால். (18) (இ-ள்) நொடி சிமிழா விழியால் - ஒரு நொடிப்பொழுதும் இமையாத கண்களோடு, என் காதலியை நோக்குங்கால் - என் காதலியை யான் உற்றுப் பார்க்குமிடத்து, வடிதீம்சொல் தொடர் தொடுக்கும் வண்மையில் - வடித் தெடுத்தால் ஒத்த தெளிவினையுடைய இனிய சொற்களாற் செய்யுளைத் தொடர்ந்தமைக்கும் வகையில், அன்னாள் முகத்து - அத்தகைய நிலையிலுள்ளவளான சகுந்தலையின் முகத்தில், கொடிபோல் ஒரு புருவம் மேல்நெறிந்து குலவியிட - கொடியை யொத்த ஒரு புருவமானது மேலே வளைந்து பொருந்தாநிற்க, பொடியும் கதுப்பு - சிலிர்க்குங் கன்னங்களானவை, என்மேல் காதல் - என்மேல் அவட்குள்ள காதலன்பினை, புலன் ஆக்கும் - தெரியச் செய்யும் என்றபடி. ஆல்: அசை. இரக்கமிலா அரசே! நான் என்செய்வேன்! இரவுபகல் எரிக்கின்றா னென்உடம்பை எழிற்காமன் நின்மேலே பெருக்கின்ற தென்காதல் பேதையேன் நின்நெஞ்சம் இருக்குமா றுணர்ந்திலேன் எனக்கதனை இயம்புதியோ. (19) (இ-ள்) இரக்கம் இலா அரசே - நின்பால் வைத்த காதலால் துன்புறும் என்னைக் கண்டும் என்பால் இரங்குதல் இல்லாத மன்னா! நான் என் செய்வேன் - ஏழையேன் யாதுசெய்வேன், எழில் காமன் என் உடம்பை இரவு பகல் எரிக்கின்றான் - மனவெழுச்சியுடைய காமதேவன் எனது உடம்பை இரவும் பகலுந் தீயில் வெதுப்புகின்றான், நின்மேலே என் காதல் பெருக்கின்றது - நின்மேற் கொண்ட என் பேரன்பானது வரவரப் பெரிதாகின்றது, பேதையேன் நின் நெஞ்சம் இருக்கும் ஆறு உணர்ந்திலேன் - அறிவதறியாச் சிறியேனான யான் நினது நெஞ்சத்தின் றன்மை இருக்கும் வகையினை உணர்ந்தேனில்லை, ஆதலால், எனக்கு அதனை இயம்புதியோ - எனக்கு நின் உள்ளத்தில் உள்ளதைத் தெரியக் கூறுவாயோ என்றவாறு. மெல்லியலாய்! நின்னையவன் மென்மேலும் எரிக்கின்றான், சொல்லவொணா வகையாக என்னையோ சுடுகின்றான்; அல்லொழிந்த விடிநாளில் அழிமதியை வாட்டுதல்போல் எல்லவன்மற் றதன்மனைஅல் லியைவாட்ட லில்லையே. (20) (இ-ள்) மெல்லியலாய் நின்னை அவன் மேல் மேலும் எரிக்கின்றான் - மெல்லிய இயல்பினையுடையாய் உன்னை அக்காமன் மேலும் மேலும் அழற்றுகின்றான், என்னையோ சொல்ல ஒண்ணாவகையாகச் சுடுகின்றான் - என்னையோ அவன் நாவினாற் சொல்லக் கூடாதபடியாகக் கொளுத்து கின்றான், எல்லவன் அல் ஒழிந்த விடிநாளில் அழிமதியை வாட்டுதல் போல் - பகலவன் இருள் நீங்கிய விடியற்காலையில் ஒளி மழுங்கிய திங்களை மெலியச் செய்தல்போல, மற்று அதன்மனை அல்லியை வாட்டல் இல்லையே - வேறு அதன் மனையாளான அல்லி மலரை மெலிவித்தல் இல்லையன்றே என்றவாறு. ஒருபொழுதும் என்உளத்திற் பிரியாதாய்! உனைக்காண்பார் மருளமனம் பேதுறுக்கும் மதர்விழியாய்! நினையன்றிப் பெரியபொருள் பிறிதறியா என்நெஞ்சைப் பிறிதறிந்தால் எரிவேடன் கணைகொல்ல இனைகின்றேன் பிழைப்பெனோ! (21) (இ-ள்) ஒருபொழுதும் என் உளத்தில் பிரியாதாய் - ஒரு நொடி நேரமும் என் நெஞ்சைவிட்டு அகலாதவளே, உனைக் காண்பார் மருள மனம் பேதுறுக்கும் மதர்விழியாய் - நின்னைக் காண்பவர்கள் மயங்கு மாறு அவர்கள் உள்ளத்தைக் கலங்கச் செய்யுங் களித்த விழிகளை யுடையவளே, நினை அன்றிப் பெரிய பொருள் பிறிது அறியா என் நெஞ்சை - நின்னையல்லாமற் பெரிதாகக் கருதத்தக்க பொருள் வேறேதும் அறியாத எனது நெஞ்சத்தை, பிறிது அறிந்தால் - வேறாக நீ அறிந்தால், எரிவேடன் கணை கொல்ல இனைகின்றேன் பிழைப்பெனோ - மன் மதனின் சுடுகின்ற அம்புகள் வருத்த வருந்துகின்ற யான் உயிரோடிருத்தல் கூடுமோ என்றவாறு. கண்மணி யனையாய்! நின்மனங் கவலேல்; நீ வேண்டுவன புரிய ஈண்டுநான் உளெனால்; பெருகயர் வொழிக்கும் மரையிலை யாக்கிய நளிவிசிறி கொண்டு குளிர்வளி தருகோ குமரி வாழையின் அமைவுறு குறங்கை, என் மடிமிசைச் சேர்த்திச் செந்தா மரைபுரை அடிக ளிரண்டும் மெல்லென வருடுகோ; அழகிய தோகாய்! பழுதற உரையே! (22) (இ-ள்) கண்மணி அனையாய் - என்கண்ணின் மணியை ஒப்பவளே, நின்மனம் கவலேல் - நினது மனத்தின்கட் கவலைப் படாதே, நீ வேண்டுவன புரிய - நீ விரும்புகின்றவைகளைச் செய்ய, ஈண்டு நான் உளன் - இங்கே நான் இருக்கின்றேன், ஆல் : அசை. பெருகு அயர்வு ஒழிக்கும் - மிகுகின்ற தளர்வினை நீக்கும், மரை இலை ஆக்கிய - தாமரையிலையாற் செய்த, நளி விசிறிகொண்டு - குளிர்ந்த விசிறியினால், குளிர்வளி தருகோ - குளிர்ங் காற்றைத் தருவேனா, குமரிவாழையின் - இளவாழை மரத்தைப் போல், அமைவுறு குறங்கை - வழுவழுப்பாகச் சமைந்த நின்தொடை களை, என் மடிமிசைச்சேர்த்து - என் மடியின்மேற் சேரவைத்து, செந்தாமரைபுரை- சிவந்த தாமரைப் பூவையொக்கும், அடிகள் இரண்டும் மெல்லென வருடுகோ - நின் அடிகள் இரண்டனையும் மெதுவாகத் தடவுவேனா, அழகிய தோகாய் - அழகிய மயிற்றோகையின் சாயலை யுடையாளே, பழுது அற உரையே - நினக்குற்ற சிதைவு நீங்கச் சொல்வாயாக என்றவாறு. கதுவப் படாம லிளைதா முளைத்துக் கயங்கெழுமிப் புதிதே விரிந்த மலரிற் றுளும்பிப் பொழிநறவைக் கொதிகாதல் வண்டுணல் போலச் சுவையாக் குழையும்இதழ் மெதுவே சுவைத்தமிழ் துண்டணங் கேபின் விடுக்குவெனே. (23) (இ-ள்) கயம் - ஓர் ஆழ்ந்த குளத்தினின்றும், கதுவப் படாமல் - எவராலும் பற்றப்படாமல், இளைதுஆக - இளைய தாக, கெழுமி முளைத்து - பொருந்தித் தோன்றி, புதிதே விரிந்த மலரில் துளும்பிப் பொழிநறவை - புதிதாக மலர்ந்த பூவின்கண் நிறைந்து தளும்பிச் சொரிகின்ற தேனை, கொதிகாதல் வண்டு உணல்போல - பருகுதற்குக் கொதிக்கின்ற அவாவினையுடைய தொரு வண்டு குடித்தல்போல, சுவையாக் குழையும் இதழ் - சுவைத்து அஃதாவது சுவைமிகுந்து நெகிழ்ந்திருக்கும் நினது இதழினை, மெதுவே சுவைத்து - யான் மெல்லச் சுவைத்து, அமிழ்துஉண்ட - அதன்கண் ஊறாநின்றபுனல் அமிழ்தத்தை உட்கொண்டு, அணங்கே - தேவமாது போன்றாய், பின் - அதன்பிறகு, விடுக்குவென் - நின்னைப் போகவிடுவேன்; ஏ : அசைநிலை. விழைபொருள் பெறுதற் கிடையூறு பலவே, கருமயி ரிறைசேர் பெருவிழி யுகளும் வியர்த்தவொண் முகத்தையான் உயர்த்துதொறும் பிணங்கி வெறித்தேன் சுவைக்கும் மறுத்துரை மொழிந்து தவளமுகிழ் விரலாற் பவளவிதழ் பொத்தித் தோட்புறங் கோட்டின ளதனால் வாய்ப்புற இதழ்த்தேன் பருகிலன் அந்தோ! அதற்பின் யாண்டுச் செல்கேன்? காண்டகு காதலி (23) (சுற்றிலும் நோக்கி) முந்தின் புற்றவிப் பந்தர்வயின் அமர்கோ; மெல்லுருப் பட்டுப் பல்வயிற் சிதறிய மென்மலர்ப் பாயலக் கன்மே லுளதால்; கிளிநகம் பொறித்த அளிநசைமுடங்கன் மரையிலை வாடியிவ் வுழையே யுறுமால்; நாளக் கடகமவள் தோளிற் கழன்றுவிழுந்து ஆங்கே கிடந்தன; ஈங்கிவை நோக்க வெறிதே யாயினுஞ் சிறிதொரு போதிற் சூரற் பந்தரைப் பிரிந்து வாரற் கென்மனம் வலியில தன்றே. (24) (இ-ள்) விழைபொருள் பெறுதற்கு - விரும்பப்பட்ட பொருளையடைதற்கு, இடையூறு பல - தடைகள் பல உள, கருமயிர் இறைசேர் பெருவிழிஉகளும் - கரிய மயிரையுடைய இறைப் பையின்கட் பொருந்திய பெரிய விழிகள் பாயாநின்ற, வியர்த்த ஒள்முகத்தை - வியர்வு அரும்பிய ஒளிபொருந்திய முகத்தை, யான் உயர்த்துதொறும் - யான் மேல் நிமிர்த்துந் தோறும், பிணங்கி - மாறுபட்டு, வெறித்தேன் சுவைக்கும் மறுத்த உரை மொழிந்து - மணங்கமழுந் தேனைப்போல் இனிக்கும் மறுத்த மொழிகளைச் சொல்லி, தவளமுகிழ் விரலால் பவள இதழ் பொத்தி - வெள்ளிய பூ அரும்புகளையொத்த தன் விரல்களாற் பவளம் போன்ற தன் வாய் இதழ்களை மூடி, தோள்புறம் கோட்டினள் - தோளின் பக்கமாய்த் தன்முகத்தை வளைத்தனள், அதனால் வாய்ப்புற இதழ்த்தேன் பருகிலன் அந்தோ - அதனாலே வளம்பெற அவளிதழின் தேனைக் குடித்திலேன் ஐயோ!, அதன்பின் - என் காதலியைப் பிரிந்த அதற்குப்பின், யாண்டுச் செல்கேன் - எந்த இடத்திற்குப் போவேன், காண்தகு காதலி முந்து இன்புற்ற இப் பந்தர்வயின் அமர்கோ - காட்சிக்குத் தக்காளான என்காதலி முன்னே மகிழ்ந்திருந்த இப் பந்தலினிடத்தே அமர்வேனா, மெல் உருப்பட்டுப் பல்வயின் சிதறிய - அவளது மெல்லிய உடம்புபட்டுப் புரளலாற் பலவிடங்களிலுஞ் சிதறுண்ட, மெல் மலர்ப் பாயல் அக்கல்மேல் உளது - மெல்லிய பூக்களையுடைய அல்லது பூக்களால் ஆகிய படுக்கை அச் சலவைக்கல்லின்மேற் கிடக்கின்றது, ஆல் : அசைநிலை, கிளி நகம் பொறித்த - கிளிமூக்கை யொத்த தன் நகங்களால் வரைந்த, அளிநசை முடங்கல் மரையிலை - மிக்க அன்பினால் ஆன விருப்பத்தைப் புலப்படுத்துந் திருமுகமாகிய தாமரையிலை, வாடி இவ் உழையே உறும் - வாடிப் போய் இப் பக்கத்திலேயே கிடக்கின்றது, நாளக் கடகம் - தாமரைத் தண்டினாற் செய்யப்பட்ட தோள்வளை, அவள் தோளில் கழன்றுவிழுந்து ஆங்கே கிடந்தன - அவளுடைய தோள்களினின்றுங் கழன்று கீழ்விழுந்து அவ்விடத்தே கிடந்தன, ஈங்கு இவை நோக்க - இங்கே இவைகளைப் பார்க்கையில், வெறிதேயாயினும் - அவள் இல்லாமையால் வெறுமையாகக் காணப்படினுஞ், சிறிதொரு போதில் - சிறியதொரு பொழு திலுஞ், சூரல் பந்தரைப் பிரிந்து - பிரப்பங் கொடியினால் ஆகிய இப் பந்தரைப் பிரிந்து, வாரற்கு என்மனம் வலியிலது - வருதற்கு என் உள்ளம் வலிமை யுடையதாயில்லை, அன்று, ஏ : அசைநிலை. இலைகிளர் பூண்டுக்குத் தலைவ னாகிய சுடரொளி மதியங் குடபால் வரையின் ஒருபுறஞ் செல்லா நிற்ப, ஒருபுறம் வைகறை யென்னுங் கைவல் பாகனை முன்செல விடுத்துப் பொன்போன் ஞாயிறு கீழ்பா லெல்லையிற் கிளரு மன்றே, ஒருகா லீரிடத் தீரொளிப் பிண்டந் தோன்றலும் மறைதலும் ஆன்றறி யுங்கால் மண்ணோர் வாழ்க்கையி லின்னலு மின்பமும் மாறி மாறி வீறுதல் பெறுமே செழுமதி யென்னுங் கொழுநனை யிழந்து முதிரெழில் போன ஆம்பல் எதிர்விழிக்கு இன்பம் பயவா இயல்புணர் விடத்துஈங்கு ஆருயிர்க் காதலர்ப் பிரிந்த வாரிருங் கூந்தன் மடவார் எய்துஞ் சாந்துயர் பொறுத்தற் கரிதெனப் படுமே. (25) (இ-ள்) இலைகிளர் பூண்டுக்குத் தலைவன் ஆகிய சுடர் ஒளிமதியம் - இலைகள் விளங்கும் மருத்துச் செடிகளுக்குத் தலைவனாகிய மிகுந்த ஒளியினைத் தரும் முழுநிலாவானவன், குடபால் வரையின் ஒருபுறம் செல்லாநிற்ப - மேற்கின்கண் உள்ளதாகிய அத்தகிரியிலே ஒருபக்கஞ் சென்று சேராநிற்க, ஒருபுறம் - மற்றொரு பக்கத்தே, வைகறை என்னும் கைவல் பாகனை - விடியற்காலம் என்று சொல்லப்படுங் கைதேர்ந்த தேர்ப்பாகனை, முன்செல விடுத்து - முன்னே போகவிட்டு, பொன் போல் ஞாயிறு கீழ்பால் எல்லையில் கிளரும் - பொற்றிரளை யொத்த பகலவன் கிழக்குத் திசையின் மருங்கே விளங்கா நிற்கின்றது, ஒருகால் ஈர் இடத்து ஈர்ஒளிப்பிண்டம் தோன்றலும் மறைதலும் ஆன்று அறியுங்கால் - ஒரே காலத்தில் இரண்டிடங்களில் இருவகை ஒளிப் பிழம்புகளில் ஒன்று தோன்றுதலையும் மற்றொன்று மறைதலையும் அமைதியாக ஆராய்ந்தறியுமிடத்து, மண்ணோர் வாழ்க்கையில் இன்னலும் இன்பமும் மாறி மாறி வீறுதல் பெறும் - இம் மண்ணுலகத்தவர் வாழ்வில் துன்பமும் இன்பமும் மாறி மாறி மிக்குத் தோன்றுதல் விளங்கப்பெறும், செழுமதி என்னும் கொழுநனை இழந்து - அழகிய திங்கள் என்னுங் கணவனை இழந்து, முதிர்எழில் போன ஆம்பல் - அதனாற் றனது சிறந்த அழகு கெட்ட அல்லிப் பூவின் தோற்றமானது, எதிர் விழிக்கு - அதனை நேர் நின்று நோக்குங் கண்களுக்கு, இன்பம் பயவா - இன்பந்தராத, இயல்பு உணர்விடத்து - தன்மையினை உணர்ந்து பார்க்குமிடத்து, ஈங்கு - இவ்வுலகத்திலே, ஆர்உயிர்க் காதலர்ப் பிரிந்த - தம் அரிய உயிர் போன்ற கணவரைப் பிரிந்த, வார் இருங் கூந்தல் மடவார் - நீண்ட கரிய கூந்தலையுடைய மங்கையர், எய்தும் சாம்துயர் - தாம் அடையுஞ் சாக்காடு அன்னதுன்பம், பொறுத்தற்கு அரிது எனப்படும் - தாங்குதற்காகாதது என்று சொல்லப்படும்; அன்று ஏ : அசைநிலைகள். முன்னுக தவமுதிர் முனிவ! நின்மகள் வன்னிமா மரந்தனுள் வளர்தீ வைத்தல்போல் இந்நிலம் நலம்பெறத் துடியந்தன் னிட்ட பொன்னுயிர் அகட்டினிற் பொலியக் கொண்டனள். (26) (இ-ள்) தவம் முதிர் முனிவ - தவவொழுக்கத்திற் சிறந்த முனிவனே, முன்னுக - நினைந்திடுக, வன்னிமாமரம் தன்னுள்வளர் தீ வைத்தல்போல் - வன்னியென்னும் பெயருடைய பெரியமரம் தன்னுள்ளே வளரத்தக்க தீயினை வைத்திருத்தல் போல, இந்நிலம் நலம்பெற - இந்நிலவுலகத்துள்ள உயிர்கள் வாழ்க்கை நலத்தை யடைய, துடியந்தன் இட்டபொன் உயிர் - துஷியந்தன் இட்ட தாகிய பொலிவுள்ள உயிரை, அகட்டினில் பொலியக் கொண்டனள் - தன்வயிற்றினுள்ளே நிறையக் கொண்டாள் என்க. இன்று சகுந்தலை போகின் றாளென் றெண்ணுதொறுங் கன்றுவ தொன்றுங் கவலையி னாலென் காழ்மனனே துன்றிய கண்ணீர் சோரா தம்ம தொடர்புற்று நின்றென் மிடறோ கம்முவ தென்னென் னிலைதானே (27) (இ-ள்) இன்று சகுந்தலை போகின்றாள் என்று எண்ணுதொறும் - இன்றைக்குச் சகுந்தலை என்னைப் பிரிந்து போகின்றாளே என்று நினைக்குந்தோறும், என் காழ்மனன் ஒன்றுங் கவலையினால் கன்றுவது - எனது வயிரம் ஏறிய உள்ளமும் பொருந்திய கவலையினால் நைகின்றது, துன்றிய கண்நீர் சோராது அம்ம - என் கண்களில் வந்து நிறைந்த கண்ணீரானது வடியாது யான் அடைக்கவே, தொடர்பு உற்று நின்று என் மிடறு ஓ கம்முவது - அதனொடு தொடர்பு கொண்டு நின்று எனது தொண்டையோ கம்மிக்கொள்கின்றது, என் நிலைதான் என் - எனது நிலைமையிருந்தவாறு என்னே! என்றவாறு. வழியி லிடையிடையே கொழுந்தாமரை பொதுளி வளஞ்சால் தடங்கள் வயங்கிடுக அழிவெங் கதிர்வருத்தம் அடர்ந்த நிழன்மரங்கள் அகற்றி மகிழ்ச்சி அளித்திடுக, கழிய மலர்த்துகள்போற் கழுமு புழுதியடி கலங்கா தினிதாய்க் கலந்திடுக. செழிய மலயவளி திகழ வுலவிடுக திருவே யனையாள் செலுநெறியே. (28) (இ-ள்) வழியில் இடையிடையே - வழியின் நடு நடுவே, கொழுந்தாமரை பொதுளி வளம்சால் தடங்கள் வயங்கிடுக - கொழுவிய தாமரைம லர்கள் நிறைந்து வளம்மிக்க அகன்ற குளங்கள் விளங்குவனவாக, அழி வெம் கதிர் வருத்தம் அடர்ந்த நிழல் மரங்கள் அகற்றி மகிழ்ச்சி அளித்திடுக - மிக்க வெப்பத்தினைத் தரும் பகலவனால் உண்டாகும் வருத்தத்தினை நெருங்கிய இலைகளை யுடையமையால் இடைவெளியில்லாத நிழலையுடைய மரங்கள் நீக்கி மகிழ்ச்சியினைத் தந்திடுக, கழிய மலர்த்துகள் போல் கழுமு புழுதி அடி கலங்காது இனிதாய்க் கலந்திடுக - மிகுந்த மகரந்தப்பொடி போல் நிறைந்த மட்புழுதி யானது அடிகள் துன்புறாதபடி இனிதாக வழியிற் பொருந்துக, திருவே அனையாள் செலும்நெறி செழிய மலயவளி திகழ உலவிடுக - இலக்குமியை ஒத்தவளாகிய சகுந்தலை செல்லும் வழியில் வளவிய பொதியமலையினின்று வீசுந் தென்றற் காற்றானது தோன்ற உலவுக என்றவாறு; ஏ : அசை. தாமரை யிலைப்பினே, தங்கு சேவலைக் காமரு மகன்றிறான் காண லாமையாற் பூமரு வாயினாற் புலம்பிக் கூவிட வேமென துளமிது விழிகள் காணவே. (29) (இ-ள்) தாமரை இலைப்பினே தங்கு சேவலை - தாமரையிலைகளுக்குப் பின்னே மறைந்து தங்கியிருக்கின்ற ஆண் அன்றிலை, காமரு மகன்றில்தான் காணலாமையால் - காம விருப்பு மிகுதியும் உடைய பெண் அன்றிற் பறவையானது காணாமையால், பூமரு வாயினால் புலம்பிக் கூவிட - பூவைக் கோதுந் தன்வாயினால் வருந்திக் கூவாநிற்க, இது விழிகள் காணவே - இதனை என் கண்கன் காணவே, எனது உளம்வேம் - என் உள்ளமானது வேகாநிற்கும் என்றவாறு. விழுநறவு வேண்டிவிரி மாவிணரிற் பருகிச் செழுமுளரி யிடைவறிது சேருமிள வண்டே! செழுமுளரி யிடையிருந்து திகழ்மாவை நீயோர் பொழுதுமறந் துறைகுவது பொருந்துமோ உரையாய்? (30) (இ-ள்) விழுநறவு வேண்டி - சிறந்த தேனைப் பெற விரும்பி, விரி மா இணரில் பருகி - விரிந்த மாமரத்தின் பூங்கொத்திலிருந்து அதனைக் குடித்து, செழுமுளரி யிடை வறிது சேரும் இளவண்டே - வண்டே, செழுமையான தாமரை யினிடத்து வீணே சென்று அடையும் இளசெழுமுளரி யிடை யிருந்து - செழுவிய தாமரையின் பாற்சேர்ந்திருந்து கொண்டு, திகழ்மாவை நீ ஓர் பொழுதும் மறந்து உறைகுவது - விளங்கா நின்ற மாமலரினை நீ ஒரு நொடிப்பொழுதேனும் மறந்துவிட்டு இருத்தல், பொருந்துமோ உரையாய் - நினக்கு இசைவதாகுமோ சொல்லாய் என்றவாறு. வெங்கதிரின் வெப்பம் விரிதலையிற் றாங்கித் தங்குவோர்க் குக்கீழ் தண்ணிழல்செய் மரம்போல் இங்குநின் னின்பங் குறியாது குடிகட்குப் பொங்குதுயர் கொளுநின் பொலிவாழ்க்கை யிதுவே. (31) (இ-ள்) வெம்கதிரின் வெப்பம் - வெவ்விய ஞாயிற்றின் வெப்பத்தை, விரிதலையில் தாங்கி - தமது விரிந்த தலையிலே தாங்கிக்கொண்டு, கீழ் தங்குவோர்க்குத் தண்நிழல் செய்மரம்போல் - தம் அடியில் வந்து தங்குவார்க்குக் குளிர்ந்த நிழலைத் தருகின்ற மரங்களைப்போல், இங்கு நின் இன்பம் குறியாது - இவ்வுலகத்தே நீ நுகர்தற்குரிய இன்பங்களை ஒரு பொருளாகக் கருதாமல், குடிகட்கு - நின் குடிமக்களின் பொருட்டாக, பொங்குதுயர் கொளும் - மிகுந்த துன்பத்தை யடையும், நின் பொலிவாழ்க்கை இது - நினது சிறப்புமிக்க அரசவாழ்க்கையின் தன்மை இப்படிப்பட்டதாயிருக்கின்றது; ஏ: அசை. ஒறுக்கும்வலி யுடைமையா லுண்மைநெறி திறம்புநரை மறுக்கின்றாய் புரக்கின்றாய் மாறுபடு வோர்வாழ்க்கை அறுக்கின்றா யருஞ்செல்வ முறுவழிச்சேர் கேள்போலா தறக்கிழமை குடிகண்மே லருள்கின்றா யண்ணலே. (32) (இ-ள்) ஒறுக்கும் வலி உடைமையால் - தண்டித்தற்குரிய ஆற்றல் இருத்தலால், உண்மைநெறி திறம்புநரை - மெய்வழியினின்றுந் தவறி நடப்போரை, மறுக்கின்றாய் - நீ அதனினின்றும் நீக்குகின்றாய், புரக்கின்றாய் - வலியிலாரைப் பாதுகாக்கின்றாய், மாறுபடுவோர் வழக்கை - ஒருவர் ஒருவரோடு மாறுபாடுறுவாராய்க் கொண்டு வரும் வழக்கை, அறுக்கின்றாய் - இஃது அறத்தின்பாலது இஃது அல்லாதது என்று ஆராய்ந்து வரையறுக்கின்றாய், அரும் செல்வம் உறுவழிச் சேர் கேள் போலாது - ஒருவர்க்குப் பெறுதற்கரிய செல்வம் வந்தடைந்த காலத்து அவர்பால் வந்து சேரும் உறவினர் போலாமல், அறக்கிழமை குடிகள் மேல் அருள்கின்றாய் அண்ணலே - அறம் (தருமம்) ஆகிய உரிமையினை நின் குடிமக்கட்கு அளித்து அருள் செய்கின்றாய் பெருமானே என்றவாறு. வடுவறு பேரெழில் வயங்கவிவ் வயின்வருங் கொடிபுரை யுருவினாள் தன்னைக் கூடிநான் கடிமணம் அயர்ந்ததாக் கருத லாமையால் விடியலிற் பனியகத் துள்ளமென் மல்லிகை படிதரா துழிதரும் பைஞ்சிறை வண்டெனத் தொடுதலும் விடுதலுந் துணிய கில்லேனே. (33) (இ-ள்) வடுஅறு - குற்றம் அற்ற, பேர்எழில் வயங்க - மிகுந்த அழகு விளங்க, இவ்வயின் வரும் - இவ்விடத்தே வந்திருக்கும், கொடி புரை உருவினாள் தன்னைக்கூடி - பூங்கொடிபோல் துவளாநின்ற உருவத்தினை யுடைய இப் பெண்ணைப் புணர்ந்து, நான் கடி மணம் அயர்ந்ததாக் கருதலாமையால் - யான் புதியதொரு மணத்தைச் செய்ததாக எண்ணக் கூடாமையால், விடியலில் பனிஅகத்துள்ள மெல்மல்லிகை படிதராது உழிதரும் பைம் சிறைவண்டு என- விடியற்காலத்தே பெய்யும் பனியினை உள்ளேயுடைய மெல்லிய மல்லிகை மலரின்கண்ணே சென்று அமர்தலைச் செய்யாது சுழன்று கொண்டிருக்கும் பசிய சிறையினையுடைய ஒரு வண்டைப்போல, தொடுதலும் விடுதலும் துணியகில்லேன் - இவனைத் தொடுதலையாவது விட்டு விடுதலையாவது துணிந்து செய்யமாட்டேனாய் இருக்கின்றேன் என்றவாறு, ஏ: அசை. மறைவிற் செறிந்த காதற் பெருங்கிழமை மனக்கொளாது குறையும் நினைவாற் கொடுமனம் வல்லென்ற எனைக்குறித்துப் பிறைபோற் புருவம் முரியப் பெருவிழிகள் சிவக்கச்சினம் முறையே மிகுதல் மதன்வில் லிரண்டாய் முறித்திட்டதே. (34) (இ-ள்) மறைவில் செறிந்த - பிறர் எவரும் அறியாமல் யான் இவளைக் கூடுதற்கு ஏதுவாயிருந்த, காதல்பெரும் கிழமை - பேரன்பாகிய பேர் உரிமையினை, மனக்கொளாது - என் மனதின்கட் பதியக் கொள்ளாதபடி, குறையும் நினைவால் - குறைந்துபோன நினைவால் அஃதாவது மறதியால், கொடுமனம் வல் என்ற எனைக் குறித்து - நிலை கோணிய உள்ளங் கடுமையாய்ப் போன என்னை உறுத்து நோக்கி, பிறைபோல் புருவம் முரிய - பிறையைப் போற் புருவங்க ளானவை வளைய, பெரு விழிகள் சிவக்க - பெரிய கண்கள் சிவந்த நிறத்தினையடைய, சினம் முறையே மிகுதல் - கோபமானது இவட்கு நீதியாகவே அல்லது மேலுக்குமேல் மிகுவது, மதன்வில் இரண்டாய் முறித்திட்டது - காமவேள் கையிற்பிடித்த கருப்புவில்லை இரண்டுபட ஒடித்துவிட்டது என்றவாறு. ஏ : அசை. விழுத்தக்க வேனிலுயிர் மிகுதரவே கொண்டு முழுச்செம்மை பசுமையுடன் வெண்மையெனு மூன்றுங் குழைத்திட்டா லெனவயங்கு கொழுமாவின் முகையே! தழைப்பருவ நற்குறியாத் தயங்குநையென் றறிந்தேன். (35) (இ-ள்) விழுத்தக்க - சிறப்புமிக்க, வேனில் உயிர் மிகுதரவே கொண்டு - வேனிற்காலத்திற்குரிய உயிர்ப்பினை மிகும்படியாய்க் கொண்டு, முழுச்செம்மை பசுமையுடன் வெண்மை எனும் மூன்றும் - மிக்க செம்மை பசுமை வெண்மை யென்னும் மூன்று வண்ணங்களையும், குழைத்திட்டால் என - ஒன்றுசேர்த்துக் கலந்து எழுதினாற்போல, வயங்கு கொழுமாவின் முகையே - விளங்காநின்ற கொழுவிய மாமரத்தேன் அரும்புகள், தழைப்பருவ நல்குறியாத் தயங்குநை என்று அறிந்தேன் - தழைக்கும் வேனிற்கால வருகையினை முன் அறிவிக்கும் நல்ல அடையாள மாக நீ விளங்குகின்றனை என்று அறிந்துகொண்டேன் என்றவாறு. புறஞ்சென்ற காதலரைப் பிரிந்திருக்கும் பூவையரை மறஞ்செய்து மதனெடுத்து வளைவில்லில் தொடுத்தல்பெறுந் திறஞ்செய்த ஐங்கணையுட் சிறப்பெய்தி மற்றவர்தம் நிறஞ்சென்று பாய்வையென நின்னையவற் கிட்டனெனால். (36) (இ-ள்) புறம்சென்ற காதலரைப் பிரிந்திருக்கும் பூவையரை - நம்மைவிட்டு வெளியே சென்ற கணவரைப் பிரிந்து உறைவாரான மங்கையர்மேல், மறம்செய்து - கறுவுகொண்டு, மதன் எடுத்து வளைவில்லில் - காமவேள் கையிலெடுத்து வளைக்கும் வில்லிலே, தொடுத்தல் பெறும் - தொடுக்கப்படும், திறம்செய்த ஐங்கணையுங் - வலிமை செய்யும் ஐந்து மலர் அம்புகளுள், சிறப்பு எய்தி - தலைமைபெற்று, மற்று அவர்தம் - அங்ஙனம் பிரிந்துறைவாரான மங்கையருடைய, நிறம் சென்று பாய்வை என நின்னை அவற்கு இட்டனென் - மார்பிலே சென்று பாய்வாய் என வெண்ணி மாமுகையாகிய நின்னை அக் காமவேளுக்குத் தூவினேன் என்றவாறு. ஆல் : அசை. செழுமா மரங்கள் கொழுமுகை அரும்பியும் பொன்றுகள் பெறாமை கண்டிலீர் கொல்லோ; குரவமுகிழ் நிரம்பி நெடுநா ளாகியும் விரியா திருத்தல் தெரியிலிர் கொல்லோ; பனிநாட் கழித்து நனிநா ளாகியுஞ் சேவலங் குயில்கள் வாய்திற வாவே: காம வேளும் புட்டிலி லெடுத்த நாம வெங்கணை புகுத்தி அச்சமிக் கனனென அறிகுவென் மாதே. (37) (இ-ள்) செழுமாமரங்கள் - செழுவிய மாமரங்கள், கொழுமுகை அரும்பியும் - கொழுவிய மொட்டுகளை அரும்பியும், பொன் துகள் பெறாமை கண்டிலீர் கொல்லோ - இன்னும் பொன் நிறமான மகரந்தப் பொடிகள் உண்டாகப் பெறாததை நீங்கள் காணவில்லையா, குரவம் முகிழ்நிரம்பி நெடுநாளாகியும் - குராமரங்கள் அரும்புகள் நிறைந்து நீண்டகாலமாகியும், விரியாது இருத்தல் தெரியிலிர் கொல்லோ - அவை மலராக அலராதிருத்தலை நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையா, பனிநாள் கழித்து நனிநாள் ஆகியும் - பனிக்காலங் கடந்துபோய் மிகுந்த காலம் ஆகியும், சேவல் அம் குயில்கள் வாய்திறவாவே - ஆணாகிய அழகிய குயிற்பறவைகள் வாய்திறந்து கூவவில்லையே, காமவேளும் புட்டிலில் எடுத்த- மன்மதனுந் தனது அம்புக் கூட்டினின்றும் எடுத்த, நாமவெம்கணைபுகுத்தி - அச்சத்தைத் தருங் கொடிய அம்புகளை மீண்டும் அதன் கண்ணே நுழைத்து, அச்சம் மிக்கனன் என அறைகுவென் - அச்சம் மிகுதியும் உடையனாய் இருந்தனன் என்று அறிவித்துச் சொல்கின்றேன் என்றவாறு. மாது, ஏ : அசைநிலைகள். இன்பநுகர் பொருளெல்லாம் வெறுத்து விட்டார் இனியநூல் அமைச்சரையுங் கலவார் முன்போற் கண்ணுறக்கம் இரவெல்லாம் பெறமாட் டாராய்க் கட்டில்மிசை யிங்குமங்கும் புரளு கின்றார் தன்பெரிய மனைநல்லார் பேசும் போது தன்மையினாற் சிலசொல்லுஞ் சொல்லி னுள்ளும் பெண்ணரசி சகுந்தலையைப் பிழைத்துச் சொல்லிப் பெரிதுவரும் நாணத்தாற் கலங்கு கின்றார். (38) (இ-ள்) இன்பம் நுகர்பொருள் எல்லாம் வெறுத்துவிட்டார் - இன்பந் துய்த்தற்குரிய பொருள்களை யெல்லாம் உவர்த்துவிட்டார். இனியநூல் அமைச்சரையும் கலவார் முன்போல் - சிறந்த அரசியல் நூலாராய்ச்சியில் வல்ல மந்திரிமாரையும் முன்போற் கலந்து சூழார். கண் உறக்கம் இர வெல்லாம் பெறமாட்டாராய் - கண் துயிலுதலை இராப்பொழுது முற்றும் பெறுதற்கு ஏலாதவராய், கட்டில்மிசை இங்கும் அங்கும் புரளுகின்றார் - கட்டிலின்மேல் இப்பக்கத்தும் அப்பக்கத்துமாகப் புரள்கின்றார், தன் பெரிய மனை நல்லார் பேசும்போது - தனது பெரிய அந்தப்புர அரண்மனைக்கண் வைகும் மாதர்கள் தன்னோடு உரையாடும்போது, தன்மையினால் சில சொல்லும் சொல்லின் உள்ளும் - அவர்பால் வைத்த அருள் காரணமாகப் பேசுஞ் சில சொற்களிலேயும், பெண் அரசி சகுந்தலையைப் பிழைத்துச் சொல்லி - மாதர்க்கு அரசியான சகுந்தலையின் பெயரைத் தன்னை மறந்து தவறுதலாகச் சொல்லிவிட்டு, பெரிதுவரும் நாணத்தால் கலங்குகின்றார் - அங்ஙனந் தவறிச் சொல்லி விட்டதை உடனே அறிந்ததும் அதனால் மிகுந்த நாணத்தினாலே உள்ளங்கலங்குகின்றார் என்றவாறு. சிறப்பணி கலன்கள் வெறுப்புடன் நீக்கி இடதுகை முன்பொற் கடகம் பிணைந்தும் நெட்டுயிர்ப் பெறிதலிற் றுப்பிதழ் விளர்த்துந் துயிலா திருத்தலிற் பயில்விழி யிடுகியும் உடல்மிக மெலிவுற லாயினுஞ் சுடர்மணி தேய்த்தொறுந் தேய்த்தொறும் வாய்த்துருக் குறைந்து நிறமிக வுறுதல் போல இறைவன் மேனியும் ஒளியா னாதே. (39) (இ-ள்) சிறப்பு அணிகலங்கள் வெறுப்புடன் நீக்கி - சிறப்புடையவான நகைகளை வெறுப்பொடு களைந்துவிட்டு, இடதுகை முன் பொன்கடகம் பிணைந்தும் - இடது முன்கையிற் பொன்னாற் செய்த கைவளையைக் கட்டியும், நெடு உயிர்ப்பு எறிதலின் துப்பு இதழ் விளர்த்தும் - பெருமூச்சு விடுதலாற் பவளம்போற் சிவந்த இதழ் வெளுப்படைந்தும், துயிலாது இருத்தலின் பயில்விழி இடுகியும் - உறங்காமல் இருத்தலால் எந்நேரமுந் திறந்திருக்கின்ற கண்கள் ஒடுங்கியும், உடல் மிக மெலிவுறலாயினும் - உடம்பு மிகவும் மெலிவடைந்ததாயினும், சுடர்மணி தேய்த்தொறும் தேய்த்தொறும் - ஒளிவிடும் ஒரு மணியை (இரத்தினத்தை)த் தேய்க்குந்தோறுந் தேய்க்குந்தோறும், வாய்த்த உருக்குறைந்து நிறம் மிக உறுதல்போல - தனக்கு இயற்கையாகப் பொருந்திய வடிவின் அளவு குறைந்தாலும் அது தன் ஒளியின் நிறம்மிகப் பெறுதல்போல, இறைவன் மேனியும் ஒளி ஆனாது - அரசனது உடம்பின் நிறமும் ஒளியிற் குறையாது என்றவாறு. ஏ : அசை. வலதுகையிலிட வேண்டிய கடகத்தை அரசன் இடதுகையி லிட்டது, பிறழ்ந்த அவனது மனநிலையைக் குறிக்கின்றது. துறவி மகள் மேல்வைத்த தொல்காதல் மறைத்த மறதியெனும் இருள்நெஞ்சை மற்றகன்ற பின்னே உறவருந்து மெனைக்குறியிட் டுலைப்பதற்கு மதனன் நிறமாவின் முகையைவில்லில் நிறுத்துகின்றான் என்னே! (40) (இ-ள்) துறவி மகள்மேல் வைத்த - முனிவர் மகளாகிய சகுந்தலைமேல்வைத்த, தொல்காதல் மறைத்த மறதி எனும் இருள் - பழைய காதலன்பை நினைவுகூர வொட்டாது மறைத்த மறதியாகிய இருள், நெஞ்சை மற்று அகன்ற பின்னே - என் நெஞ்சை அங்ஙனம் மறையாது விட்டு நீங்கியபின்னர், உறவருந்தும் எனைக் குறியிட்டு உலைப்பதற்கு - மிகத் துன்புறும் என்னைக் குறிவைத்து அலைப்பதற்காக, மதனன் நிறம் மாவின் முகையை வில்லில் நிறுத்துகின்றான் என்னே - காமவேள் நிறத்திற் சிறந்த மாவினது மொட்டாகிய அம்பைத் தனது வில்லின்கண் நிறுத்துகின்றனனே இனி நான் உய்யுமாறு எங்ஙனம்! என்றவாறு. கொடியேனால் நீக்குண்டு கூடுமுற வினரோடும் படர்வதற்கென் காதலிதான் பரிவுறுங்காற் பெருந்தந்தைக் கடியாராஞ் சீடரவர் போற்பெரியர் ஆர்த்திந்த இடமேநில் லெனவொழுகும் நீர்விழியாள் ஏங்கினளே. (41) (இ-ள்) கொடியேனால் - கொடுமைமிக்க என்னால், நீக்குண்டு - நீக்கப்பட்டு, கூடும் உறவினரோடும் படர்வதற்கு - தன்னொடு கூடி வந்த சுற்றத்தினரோடும் மீண்டு செல்வதற்கு, என் காதலிதான் பரிவுறுங்கால் - என் அன்புமிக்க மனையாளான சகுந்தலை துன்புற்றக்கால், பெருந்தந்தைக்கு அடியார் ஆம் சீடர் - தவப்பெருமை வாய்ந்த தன் தந்தையாராகிய காசியபருக்கு அடியவராம் மாணவர், அவர்போல் பெரியவர்- காசியபரைப் போலவே தவப்பெருமை வாய்ந்தவர், ஆர்த்து - உரத்துக்கூவி, இந்த இடமே நில் என - இந்த இடத்திலேயே தங்கக் கடவாய் என்றுகூற, ஒழுகும்நீர் விழியாள் ஏங்கினள் - ஒழுகாநின்ற நீரினையுடைய கண்ணினள் ஏக்கமுற்றுத் திகைத்தனள். ஏ : அசை. காரிகை தன்னையான் கலந்தி ருந்தமை ஓரில்பொய்த் தோற்றமோ உளத்தின் மாற்றமோ சேரிய பிறவியில் திரண்ட நல்வினை சீரிய பயன்பயந் தொழிந்த செய்கையோ. (42) (இ-ள்) காரிகை தன்னை யான் கலந்திருந்தமை - அழகியாளான சகுந்தலையை யான் கூடியிருந்த நிகழ்ச்சியை, ஓரில் - ஆராய்ந்து பார்ப்பின், அது பொய்த்தோற்றமோ- கானல் நீர்போற் பொய்யான தோற்றமோ, உளத்தின் மாற்றமோ - என் மனத்தின் செயலால் உண்மைக்கு மாறாகக் காணப்படுங் கனவுதானோ, சேரிய பிறவியில் திரண்ட நல்வினை - முன்னே சேர்ந்து சென்ற பழம் பிறவிகளில் ஒருங்குதொக்க நல்வினை, சீரிய பயன் பயந்து ஒழிந்த செய்கையோ - இப் பிறவியில் வந்து எனக்குச் சிறந்ததொரு பயனைத் தந்து உடனே மறைந்த செயலாகுமோ, இன்னதென்றறிகிலேன் என அரசன் கவன்றான் என்பது. கெண்டையங் கண்ணினாள் கிளிநக விரலிடங் கொண்டுநீ சிறிதுநாள் கூடிப் பின்னதை விண்டமை தெரிந்திடல் வினைவளஞ் சிறிதுறப் பெண்டிரைப் பிரிந்தவென் பெற்றி ஒத்தியால். (43) (இ-ள்) கெண்டைஅம் கண்ணினாள்-கெண்டைமீனைப் போல் வடிவுஞ் செயலும் வாய்ந்த அழகிய கண்களையுடைய சகுந்தலையின், கிளிநக விரலிடம் கொண்டு - கிளிமூக்குப்போற் சிவந்து விளங்காநின்ற நகத்தையுடைய இரண்டாம் விரலை இருக்கும் இடமாகப் பற்றிக் கொண்டு, நீ சிறிதுநாள்கூடி - நீ சில நாட்கள் அதனொடு சேர்ந்திருந்து, பின் அதை விண்டமை தெரிந்திடில் - பிறகு அதனைவிட்டு நீங்கின தன்மையை ஆராய்ந்து பார்ப்பின், வினைவளம் சிறிது உற- பண்டை ஊழின் நலமானது சிறிது வரப்பெற்றமையால் அத்துணைச் சிறந்தாளை யான் காதன் மனைவியாகச் சிலநாட்பெற்று, பெண்டிரைப் பிரிந்த - பிறகு அப்பெண்ணைப் பிரிந்துவிட்ட, என்பெற்றி ஒத்தி - எனது தன்மையை ஒத்திருக்கின்றாய், என்று அரசன் கணையாழியை நோக்கிக் கவன்று கூறினானென்க. ஆல் : அசை. மெல்லிதா யழகிதாய் விளங்குநீள் விரலுடை அல்லிமென் கையைவிட் டாழ்ந்ததென் நீருளே புல்லிய அறிவிலாப் பொருளவள் நலம்பெற வல்லதன் றேழையேன் மயங்கிற் றென்னையோ (44) (இ-ள்) மெல்லிதாய் - மென்றன்மை யுடையதாயும், அழகிதாய் - அழகினையுடையதாயும், விளங்கு நீள் விரல் உடை - விளங்காநின்ற நீண்ட ஒவ்வொரு விரலையும் உடைய, அல்லி மென்கையை விட்டு - அல்லிக்கொடிபோன்ற சகுந்தலையின் மெல்லிய கையைப்பிரிந்து, நீர் உளே ஆழ்ந்தது என் - நீரின் உள்ளே அக் கணையாழி அமிழ்ந்திப்போயது ஏன்!, புல்லிய அறிவு இலாப் பொருள் அவள் நலம் பெறவல்லது அன்று - இழிந்த அறிவில்லாத அப்பொருள் அவளது நலத்தினை அடைதற்கு ஆற்றல் உடையது அன்று, ஏழையேன் மயங்கிற்று என்னையோ - சிறிதாயினும் அறிவுடைய யான் மயங்கிவிட்டது யாது காரணமோ! என்றவாறு தானே வலிவிலென் பால்வந்த தையலைத் தள்ளிவிட்டு நானே படத்தி லெழுதுமிந் நங்கைக்கு நன்றுசெயல் மீனே பிறழப் பெருகுமொ ராற்றை விடுத்துவெய்ய கானே படர்கின்ற பேய்த்தேரை வேட்டல் கடுக்குமன்றே. (45) (இ-ள்) தானே வலிவில் என்பால்வந்த தையலைத் தள்ளிவிட்டு - தானாகவே வலிய என்னிடத்தே வந்த மாதினை விலக்கிவிட்டு, நானே படத்தில் எழுதும் இந் நங்கைக்கு நன்று செயல் - யானே வருந்தி ஓவியத்தில் வரையும் இம் மங்கைக்கு நல்லது செய்தலானது. மீனே பிறழப் பெருகும் ஓர் ஆற்றை விடுத்து - மீன்கள் புரளும்படியாக நீர் பெருகிச் செல்லும் ஓர் யாற்றை விட்டு விலகி, வெய்ய கானே படர்கின்ற பேய்த்தேரை வேட்டல் கடுக்கும் அன்றே - வெம்மையுடைய காட்டகத்தே பரவித் தோன்றாநின்ற கானல்நீரை ஒருமான் விரும்பிச் சென்றதை ஒக்குமன்றோ! என்றவாறு. துணைபுண ரன்னம் மணற்பாங் கிருப்பத் தண்ணென் றொழுகும் நீர்மா லினியும், அதன் இருகரை மருங்குங் கௌரியை யீன்ற இமயம் வைகும் எழிலுடை மான்கள் அமைதரு தூய பனிதூங் கடுக்கலும், மரவுரி ஞான்ற விரிகிளை மரநிழல் தடக்கலைக் கோட்டில் இடக்கண் டேய்க்கும் விழைவுறு பேடை மானும் வரைதல் வேண்டினேன் மற்றிது தெரிமோ. (46) (இ-ள்) துணை புணர் அன்னம் - தன் சோட்டொடு கூடிய அன்னப்புள், மணல்பாங்கு இருப்ப - மணற் பக்கத்தே அமர்ந்திருக்க, தண் என்று ஒழுகும் நீர் மாலினியும் - குளிர்ந்து ஓடாநின்ற நீரினையுடைய மாலினி யாற்றையும், அதன் இருகரை மருங்கும் - அவ்வியாற்றின் இரண்டு கரைப் பக்கங்களிலும். கௌரியை ஈன்ற இமயம் வைகும் - உமைப் பிராட்டியைப் பெற்ற இமயமலையின் கண்ணேயுள்ள, எழில் உடை மான்கள் அமைதரு தூய பனிதூங்கு அடுக்கலும் - அழகு வாய்ந்த மான்கள் பொருந்தினவுந் தூய்மையான பனிக்கட்டிகள் தங்குவனவும் ஆன மலைப் பக்கங்களையும், மரவுரிஞான்ற விரிகிளை மரநிழல் - மரநார்களினால் நெய்த ஆடைகள் தொங்காநின்ற விரிந்த கிளைகளையுடைய மரங்களின் நீழலிலே, கலைத்தடக்கோட்டில் - ஆண்மானின் பெரிய கொம்பிலே, இடக்கண் தேய்க்கும் - தனது இடதுகட் கடையை உரைசும், விழைவுறுபேடை மானும் - புணர்ச்சி வேட்கையுடைய பெண்மானையும், வரைதல் வேண்டினேன் - எழுதற்கு விரும்பினேன், இது தெரிமோ - இது தெரிவாயாக என்றவாறு, மற்று : அசைநிலை, தெரிமோ என்பதில், மோ : முன்னிலையசைச்சொல் (தொல்காப்பியம், இடையியல் ) காம்புகாது செருகிக் கன்னமேற் றொங்கும் நரம்புடைச் சிரீடம் நான்வரை திலெனால், மழைநாள் மதியின் தழைகதிர் புரையுந் தாமரை மென்னூல் காமரு கொங்கைகள் நடுவே வயங்க வடிவெழு திலெனே. (47) (இ-ள்) காம்பு காது செருகிக் கன்னம்மேல் தொங்கும் நரம்புடைச்சிரீடம் நான் வரைந்திலென் - காம்பு காதிலே செருகப்பெற்றுக் கன்னங்களின்மேல் தொங்காநின்ற நரம்பு களையுடைய வாகை மலரை நான் எழுதவில்லையே, மழைநாள் மதியின் தழைகதிர்புரையும் - மழை பெய்துவிட்ட நாளின்கட் டோன்றுந் திங்களின் ஒளிமிக்க கதிர்களை யொக்கும், தாமரை மெல்நூல் - தாமரைத் தண்டினின்றும் எடுத்த ஒரு மெல்லிய நூலையேனும், காமரு கொங்கைகள் நடுவே வயங்க வடிவு எழுதிலெனே - விழைவினை யுண்டாக்கும் அவடன் கொங்கை களின் நடுவிலே விளங்க அவளது வடிவத்தினை எழுதிற்றிலேனே! என்றவாறு. ஆல் : அசை. மணமலரில் வேட்கையொடு மகிழ்பேடை வைகிநீ அணவுவது கருதித்தேன் பருகாமை அறியாய். (48) (இ-ள்) மணமலரில் வேட்கையொடு மகிழ்பேடை வைகி - மணங்கமழாநின்ற பூவின்கண்ணே நின்னை மருவலாம் என்னும் அவாவுடன் மகிழ்ந்த பெண் வண்டானது தங்கி, நீ அணவுவது கருதித் தேன் பருகாமை அறியாய் - நீ கிட்ட வருவதனை எதிர்ப்பார்த்துக்கொண்டு தேன் குடியாதிருத் தலை அறியா திருக்கின்றனை என்றவாறு. காம வின்பம் நுகருங்காற் கனிந்து நான்மெல் லெனச்சுவைத்த தோமில் மரத்திற் கிள்ளாத தூமென் றுளிரோ மிகப்பழுத்த காமர் கொவ்வைப் பழமோஎன் கண்ணே யனையாள் கனிந்தவிதழ் நீமேற் றொட்டால் முண்டகமா முகையுட் சிறையாய் நினையிடுவேன். (49) (இ-ள்) காம இன்பம் நுகருங்கால் - காம இன்பத்தைத் துய்க்கையில், கனிந்து நான் மெல்லெனச் சுவைத்த - கனிவு கொண்டு யான் மென்மையாகச் சுவைத்த, தோம்இல் மரத்தில் கிள்ளாத தூமெல்துளிரோ - குற்றம் இல்லாத ஒரு மரத்தி னின்றுங் கிள்ளப்படாத அதன் தூய மெல்லிய தளிர்தானோ, மிகப் பழுத்த காமர் கொவ்வைப் பழமோ - நிரம்பவும் பழுத்த விரும்பத்தக்க கொவ்வைக் கனிதானோ, என் கண்ணே அனையாள் கனிந்த இதழ் - என் இருகண்களை யொத்தவளாகிய சகுந்தலையின் கனிவு மிக்க இதழ், நீ மேல் தொட்டால் - நீ அவ்விதழைத் தொட்டால், முண்டகமாமுகையுள் சிறையாய் நினை இடுவேன் - தாமரையின் பெரிய மொட்டினுள்ளே நின்னைச் சிறைப்படுத்துவேன் என்றவாறு. விழிதுயி லாமையால் விரைக னாவினும் எழிலி னாள்தனை ஏயப் பெற்றிலேன் ஒழுகுகண் ணீரினால் ஓவியத்தினும் பழியறு பாவையைப் பார்க்க கில்லேனே. (50) (இ-ள்) விழிதுயிலாமையால் - கண் உறங்கப் பெறாமை யால், விரை கனாவிலும் - விரைந்த நிகழ்ச்சியுடைய கனவிலா யினும், எழிலினாள்தனை - அழகியாளான சகுந்தலையை, ஏயப்பெற்றிலேன் - பொருந்தப் பெற்றேனில்லை, ஒழுகு கண்ணீரி னால் - வடியா நின்ற கண்ணீரினாற் பார்வை மறைபடுதலின், ஓவியத்தினும் - படத்தின் கண்ணும், பழி அறு பாவையைப் பார்க்க கில்லேனே - குற்றம் அற்ற பாவை போல்வாளைப் பார்க்க மாட்டாதேனாயினனே! என்க. பிள்ளையில்லாக் கொடியேனாற் பெயப்பட்ட எண்ணீரைப் பிதிரர் கண்டு தள்ளாத முறைப்படியே யிவன்பின்னே தகுநீரு மெள்ளுங் கூட்டிக் கொள்ளுமினோ பலியெனவே கொடுப்பாரா ரெனக்கூறி யுகுங்கண் ணீரோ டள்ளியே யுண்பாராற் பலிபெறுவோர் ஐயமுற லாயிற் றந்தோ! (51) (இ-ள்) பிள்ளையில்லாக் கொடியோனால் பெயப்பட்ட எள்நீரை - பிள்ளையில்லாக் கொடியவனாகிய என்னால் வார்க்கப்பட்ட எள்ளொடு கலந்த நீரை, பிதிரர் கண்டு - மறுமையுலகிற் சென்ற என் மூதாதையர் பார்த்து, தள்ளாத முறைப்படியே இவன் பின்னே தகுநீரும் எள்ளுங் கூட்டிக் கொள்ளுமினோ பலி எனவே கொடுப்பார் ஆர் - தவறாத நூன் முறைப்படியே இவனுக்குப் பிறகு தகுதி வாய்ந்த நீரும் எள்ளுஞ் சேர்த்து இதனை யுணவாக ஏற்றுக்கொள்வீராக வென்று கொடுப்பவர் யாருளர்? எனக்கூறி உகும் கண்ணீரோடு அள்ளியே உண்பார் - என்று சொல்லிக்கொண்டே சொரியுங் கண்ணீரோடு அப் பலியினை வாரியுண்பார்கள், பலிபெறுவோர் ஐயம் உறல் ஆயிற்று அந்தோ - யாம் இடும் உணவினைப் பெறும் மூதாதையர் என் கால்வழி யற்றுப்போமோவென்று ஐயப்படுதற்கு! இடமா யிற்றே ஐயகோ! என்றவாறு. ஆல் : அசை. ஓங்குவரை மேலிருந் தாங்கிழி வதுபோல் ஆன்றநில வுலகந் தோன்றுவது காண்மோ! உயர்பெரு மரங்கள் வியன்கிளை தோற்றிச் செழுந்தழை மறைப்பினின் றொழிவதூஉங் காண்மோ! நன்குபுல னாகா இன்புன லியாறுகள் அகன்றுநனி கிடத்தலிற் றுலங்குதல் காண்மோ! இவ்வியல் பதனால் எழில்கெழுஉ மிவ்வுல கியாரோ வொருவன் எழச்செய் தீங்கென் பக்கல் இயைப்பது போன்மே. (52) (இ-ள்) ஓங்குவரை மீதிருந் தாங்கு இழிவது போல் - உயர்ந்த மலையின்மே லிருந்தபடியே கீழ் இறங்குவதுபோல ஆன்ற நில உலகம் தோன்றுவது காண்மோ - அகன்ற நிலவுலகமானது தோற்றுதலைக் காண்மின்! உயர்பெருமரங்கள் வியன்கிளை தோற்றிச் செழுந்தழை மறைப்பினின்று ஒழிவதுங் காண்மோ - உயர்ந்த பெரிய மரங்கள் தம்முடைய பெரிய கிளைகளைத் தோன்றச் செய்து செழுமையான தழைகளின் மறைப்பிலிருந்து விடுபடுவதுங் காண்மின்!, நன்கு புலன் ஆகா இன்புனல் யாறுகள் அகன்று நனிகிடத்தலின் துலங்குதல் காண்மோ - முதலில் நன்றாகக் கண்களுக்குத் தெரியாத இனிய நீரினையுடைய ஆறுகள் வரவரப் பெரிதும் அகன்று கிடத்த லினால் விளங்கித் தோன்றுதல் காண்மின்!, இவ்இயல்வு அதனால் எழில்கெழும் இவ்உலகு - இவ்வாறு காணப்படுந் தன்மையினாலே எழுச்சி பொருந்தும் இந் நிலவுலகத்தினை, யாரோ ஒருவன் எழச்செய்து ஈங்கு என்பக்கல் இயைப்பது போன்ம் - எவனோ ஒருவன் கீழிருந்து மேலே எழும்பும்படி செய்து இங்கே என் பக்கத்திற் சேர்ப்பதுபோற் றோன்றுகின்றது என்றவாறு. ஏ : அசை. மாலைக் காலத்து மங்கொளி மருங்கிற் புயலரண் போலப் பொருந்தித் தெளிபொன் உருகவிட் டாலென மருவித் தோன்றிக் குணகடல் குடகடல் கழூஉவக் கிடக்கும் வளஞ்சா லிம்மலை யாதோ வுரைமோ. (53) (இ-ள்) மாலைக்காலத்து மங்கு ஒளி மருங்கில் - சாய்ங்கால வேளையில் மங்கலாகத் தோன்றா நின்ற ஒளியினிடத்தே, புயல் அரண் போலப் பொருந்தி - முகிலாகிய (மேகமாகிய) காவற் சுவர்போற் பொருந்தி, தெளிபொன் உருக விட்டாலென மருவித் தோன்றி - தூய பொன்னை உருக்கியோட விட்டதை யொப்பக் கீழ்பால் மேல்பால் எல்லையைத் தான் பொருந்தித் தோன்றி, அங்ஙனம் இருபால் எல்லையையுந் தான் தொடுதலால், குணகடல் குடகடல் கழுவக் கிடக்கும் - கீழ் கடலும் மேல்கடலுந் தன் அடிகளைக் கழுவும்படி கிடக்கும், (பக்கம். 124 ) வளம் சால் இம்மலை யாதோ உரைமோ - வளம் மிகுந்த இந்த மலை யாது? சொல்லுவீராக என்றவாறு. வேட்பன தரூஉங் கற்பகம் பொதுளிய அடவியி லிருந்தும் மற்றிவர் ஆர்வது நடைபெறுந் தூய வளியே; முடவிதழ்ப் பொற்றா மரையின் நற்றா துகுதலிற் பழுப்புருந் தோற்றும் விழுத்தட நீரே பொழுதுமா றாதிவர் முழுகுதீம் புனலே; வீழ்ந்தொரு குறியில் ஆழ்ந்திவ ரிருப்பதும் விளக்கம் வாய்ந்த மணிக்கன் மிசையே; அரம்பை மாதரார் மருங்குறப் பெற்றும் ஐம்பொறி யடக்குமிவர் மொய்ம்புமிகப் பெரிதே; இந்நற் றவர்பால் மன்னுமிப் பொருள்கள் ஏனை முனிவரும் விழைவுற் றானது நோற்கும் அருமைசான் றனவே. (54) (இ-ள்) வேட்பன தரும் கற்பகம் பொதுளிய அடவியி லிருந்தும் - விரும்பிக் கேட்பவைகளையெல்லாங் கொடுக்குங் கற்பகமரங்கள் நிறைந்த காட்டின்கண் இருந்தும், மற்று அசைநிலை; அல்லது அவைகளை ஏதும் விரும்பிக் கேளாத வராய் என்று வினைமாற்றுப் பொருள் பட உரைப்பினும் ஆம்; இவர் ஆர்வது நடைபெறும் தூயவளியே - இவர் அருந்துவதோ இயங்குகின்ற தூய்மையான காற்றாய் இருக்கின்றது, முடவு இதழ்ப் பொன்தாமரையின் நல்தாது உகுதலின் பழுப்பு உருத்தோற்றம் விழுத்தட நீரே - வளைந்த இதழ்களையுடைய செம்பொன் நிறமான தாமரை மலர்களின் நல்ல துகள் சொரிதலினாலே பழுப்பான நிறத்தைக் காட்டுஞ் சிறந்த குளங்களின் நீரே, பொழுது மாறாது இவர் முழுகு தீம்புனலே - சிறு பொழுதுகள் தோறும் மாறாமல் இவர் ஆடும் இன்சுவைத் தண்ணீராயிருக்கின்றது, வீழ்ந்து ஒரு குறியில் ஆழ்ந்து இவர் இருப்பதும் - விரும்பி ஓர் அடையாளத்தின் கண்ணே நினைவு பதிந்து இவர் இருப்பதற்கு இடமாவதும்; விளக்கம் வாய்ந்த மணிக்கல் மிசையே - துலக்கம் பொருந்திய இரத்தினக் கற்களின் மேலாகவே இருக்கின்றது. அரம்பை மாதரார் மருங்கு உறப்பெற்றும் - அழகின் மிக்க அரம்பை மகளிர் தம் பக்கத்தே பொருந்தப் பெற்றும், ஐம்பொறி அடக்கும் இவர் மொய்ம்பு மிகப் பெரிதே - ஐம்பொறி வழிச் செல்லும் அவாவை அடக்கி யிருக்கும் இவரது மனவலிமை மிகவும் பெரிதாயிருக்கின்றது, இந் நல்தவர் பால் மன்னும் இப் பொருள்கள் - இந்த நல்ல தவத்தினையுடைய முனிவரிடத்தே நிலைபெற்றிருக்கும் இவ் வரும் பொருள்கள், ஏனை முனிவரும் விழைவு உற்று ஆனாது நோற்கும் அருமை சான்றன - மற்றை முனிவர்களும் பெறுதற்கு அவாக்கொண்டு இடையறாது தவம்புரியத்தக்க அளவு அருமை மிக்கனவாய் இராநின்றன என்றவாறு. முன் நான்கு ஏகாரங்கள் - பிரிநிலைத் தேற்றம்; ஐந்தாவது ஆறாவது - தேற்றம். வீழ்தல் விரும்புதற் பொருட்டாதல் தாம் வீழ்வார் மென்றோள் என்புழியுங் காண்க (திருக்குறள்.1103 ) குறி என்றது ஒளியும், ஒளிவடிவின் அடையாளமான சிவலிங்கமும். பேதமை தன்னான் மாதைநான் நீக்கக் கண்ணின் நுண்டுளி கீழிதழ் வீழ்ந்து பெருந்துய ருறுத்திய தன்றே, இன்றே மற்றது சிறிதே வளைமயி ரிறையில் உற்ற தாகலிற் பொற்கொடி அதனை அளியேன் பெருந்துயர் நீங்க எளியேன் முந்துறத் துடைக்குவென் மயிலே (55) (இ-ள்) பேதமைதன்னால் - அறியாமையினால், மாதை நான் நீக்க - மங்கையாகிய நின்னை யான் விலக்கிவிட, அதனை நினைந் தெழும் - ஆற்றாமையாற் பெருகுங், கண்ணின் நுண்துளிகீழ் இதழ் வீழ்ந்து பெரும் துயர் உறுத்தியது அன்றே - கண்களின் சிறு நீர்த்துளிகள் கீழ் உதட்டின்கண்ணே விழுந்து யான் நின்னை விலக்கிய அந்நாளில் நினக்குப் பெருந் துன்பத்தை யான் விளைத்தற்கு அறிகுறியாயின வல்லவோ? இன்றே - யான் நின்னைத் தலைக்கூடிய இந்நாளிலும், அற்று - அப் பிரிவினை நினைந்து பெருகும், அது சிறிதே வளைமயிர் இறையில் உற்ற தாகலின் - அக் கண்ணீர் சிறிதுளிகளாக வளைந்த மயிர்களை யுடைய இறைப்பை விளிம்பிற்றங்கியிருக்கின்றன வாதலால், பொன்கொடி பொன்னிறமான பூங்கொடி யனையாய், அதனை - அக் கண்ணீர்த் துளிகளை, அளியேன் பெரும் துயர் நீங்க - இரங்கத்தக்க எனது பெருந் துயரம் நீங்கும்படியாக, எளியேன் முந்துறத் துடைக்குவென் மயிலே - மயிலின் சாயலையுடையாய்! ஏழையேன் முன்னதாகத் துடைப்பேன் என்றவாறு. சிறந்த மன்னவன் தண்குடிச் செல்வமே தெரிக! விறந்த கல்விசால் புலவர்சொல் வியந்திடப் படுக! நிறந்து வாழுமை கூறராம் நீலலோ கிதர்யான் பிறந்தி டாவகை யருளிமேற் பேறுநல் குகவே. (56) (இ-ள்) சிறந்த மன்னவன் - அறிவு ஆண்மை நடுநிலைமையில் மிக்கோனான அரசன், தன்குடிச் செல்வமே தெரிக - தன் குடிமக்களின் வளவிய வாழ்க்கையினையே தனது வாழ்க்கையாகத் தெரிவானாக!, விறந்த கல்விசால் புலவர் சொல் வியந்திடப்படுக - செறிந்த கல்வியறிவு மிக்க புலவரின் மொழிகள் எல்லாராலும் பாராட்டப்படுக! நிறந்த வாழ் உமை கூறர் ஆம் நீலலோகிதர் - எல்லா உலகிலும் உயிரிலும் விளங்கித்தோன்றி வாழாநின்ற உமைப்பிராட்டியாரைத் தமது இடப் பாகத்தே கொண்டவரான சிவபிரான், யான் பிறந்திடாவகை அருளி மேல் பேறு நல்குக - யான் மீண்டும் பிறவாதபடி அருள்செய்து அதன்மேல் தமது திருவடிப் பேற்றையும் எனக்குக் கொடுத்தருள் வாராக! என்றவாறு. ஏ : அசை; பேறு என்பதில் உம்மை தொக்கது. அடிக்குறிப்பு 1. மறைத்திரு மறைமலையடிகளார் இயற்றிய சாகுந்தல நாடகம் பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப் பெறுவது யாவரும் அறிவர். அந்த நாடகத்தில் இடையிடையே உரைநடையுடன் அடிகளார் வகைப் பாவினங்களில் இயற்றிய 52 செய்யுட்கள் காணப் பெறுகின்றன. அடிகளார் நாடகத்தின் பின்னிணைப்பாக எழுதப் பெற்றிருக்கும் விளக்கக் குறிப்புக்களில் அப் பாடல்களுக்கு உரை விளக்கம் காணப்பெறுகின்றது. எனவே அடிகளார் பாமணிக் கோவையில் அப் பாடல்களை உரை விளக்கத்தோடு சேர்ப்பது பொருத்தமாகுமெனச் சேர்த்திருக்கின்றோம். 16 இரங்கற்பாக்கள் சோமசுந்தரக்காஞ்சி பாட்டுடைத் தலைவர் வரலாறு திருப்பெருந்திரு சோமசுந்தர நாயகரவர்கள் கி. 1846 ஆம் ஆண்டு ஆகஃச்டு மாதம் 16 ஆம் நாள், சென்னை மாநகரத்தின் ஒரு பகுதியாக விளங்கும் சூளை என்னும் ஊரில் இராமலிங்கர் அம்மணியம்மாள் என்னும் நற்றவஞ் செய்த பெற்றோருக்கு அருமை மகவாகப் பிறந்தார். இவர்க்குப் பெற்றோர் வழங்கிய பிள்ளைத் திருப்பெயர் அரங்கசாமி என்பதாகும். அரசினர் கல்விச் சாலையில் தெலுங்கும் ஆங்கிலமும் கற்ற இவர் 1முத்து வீரிய உபாத்தியாயர் என்னும் பெரியாரிடம் தமிழிலக்கண இலக்கியங்களும் அச்சுதானந்த அடிகள் என்னும் துறவி யார்பால் வடமொழியும் கற்றுச் சிறந்தார். சிவஞானம் என்னும் அம்மையாரை மணந்து இல்லறம் மேற்கெண்ட சோமசுந்தரர், செகதாம்பாள், விசாலாட்சி, லோகாம்பாள் என்னும் பெண்மணிகள் மூவரும், சிவபாதம் என்னும் ஆண் மகன் ஒருவனும் ஆக நால்வரையும் மக்கட் செல்வமாகப் பெற்றார். கொலைத் தொழிலால் வரும் சம்பளத்திற்காக ஊழியம் பார்த்தல் ஆகாது என்னும் உணர்வு மேலீட்டால் தோற்கிடங் கொன்றில் தாம் பார்த்துவந்த கணக்கர் வேலையைக் கை விட்டமையும், அங்ஙனமே பொய்சொல்லி விடுப்பெடுக்க வேண்டியுள்ள வேலை பார்ப்பதினும் அதனை விட்டொழித்தலே மேலென்றுகருதி நகராண்மைக் கழகத்தில் தாம் பார்த்துவந்த எழுத்தர் வேலையைக் கைவிட்டமையும் இவர் தம் உண்மை யுள்ளத்தையும் உள்ளவுறுதியையும் புலப்படுத்தும். இளமையில் மாயாவாத வேதாந்தக் கொள்கையில் சிக்குண்டிருந்த நாயகர் திருமிகு மதுரை நாயகம் என்னும் பெரியாரால் சிவநெறி மெய்ப்பொருள் நுட்பம் உணர்ந்து தெளிந்தார். வடமொழி இலக்கண இலக்கியங்கள், மறை நூல்கள், 1அவையங்கள், மெய்ப்பொருள் நூல்கள், தொல் கதைகள் முதலியவற்றில் சோமசுந்தரர்க்கு இருந்த ஒப்பற்ற புலமைச் சிறப்பையும் மற்றும் பாநல நாநலங்களையும், தருக்க முறையோடு வழக்கிட்டுத் தங்கோள் நிறுவும் வீறுமிக்க பேராற்றலையும் கண்டு வியந்து இராமநாதபுரத்து மன்னரான சேதுபதி அவர்கள் இவர்க்குச் 2 சைவசித்தாந்த சண்டமாருதம் என்னும் பட்டமும், வெற்றித் தோடாவும், பொற்குவையும் வழங்கிப் பாராட்டிச் சிறப்பெய்தினர். நாயகரவர்கள் ஒருமுறை விவேகானந்த அடிகளை வழக்குரையில் வென்று தம் மதம் நிறுவினார். மெய்யறிவு சான்ற சோமசுந்தரவள்ளலின் அரும்பணியால் வேற்று மதங்களினின்றும் மீண்டு, சிவநெறி தழுவியவர் பலர். தவத்திரு அச்சுதானந்த அடிகளே தம் மாணவரின் விளக்கத்தால், தாம் மேற்கொண்டிருந்த மாயாவாத வேதாந்தக் கொள்கையை யும் துறவையும் கைவிட்டுச் சிவநெறித்துறவு மேற்கொண்டு தம் பெயரையும் ஏகாம்பர சிவயோகிகள் என்று மாற்றிக் கொண்டமை குறிப்பிடத் தக்கது. வேத பாஹ்ய சமாஜ கண்டனம் என்னும் வழக்குரை நூலே நாயகரவர்கள் இயற்றி வெளியிட்ட முதல் நூலாகும். அப்போது அவர்கட்கு அகவை 22. பின் நாற்பதுக்கு மேற்பட்ட அரும்பெறல் நூல்களை நாயகரவர்கள் அடுத்தடுத்து இயற்றி வெளியிட்டுள்ளனர். சிவநெறி தழைக்க அரும்பணியாற்றிய இப் பெரியார் தமது 55 ஆம் அகவையில் 1901 ஆம் ஆண்டு, பிப்பிரவரி மாதம், 22 ஆம் நாள் வெள்ளிக்கிழமை யன்று சிவபெருமான் திருவடி நீழல் எய்தினர். இவர் தம் மாணாக்கர் பலருள்ளும் தலை சிறந்தவர் தவத்திரு மறைமலையடி களாராவர். சோமசுந்தரக்காஞ்சி தாம்மாசிரியரின் பெரும்பிரிவால் உளங் குழையப்பெற்ற அடிகளார் கையறுநிலை என்னுந் தலைப்பில் எட்டுச் செய்யுட் களும், தாபதநிலை என்னந் தலைப்பில் பத்துச் செய்யுட்களும், மன்னைக்காஞ்சி என்னுந் தலைப்பில் அறுபத்தேழு அடிகளான் அமைந்த அகவற்பா ஒன்றும் கொண்ட சோமசுந்தரக்காஞ்சி என்னும் இந்நூலை இயற்றினார். இஃது அச்சியற்றப்பட்டுப் பாட்டுடைத் தலைவர்க்கு நீத்தார் கடன் நிகழ்ந்த 16 ஆம் நாள் ஆண்டுக்கூடிய பேரவையில் மற்றையோர் இயற்றிக் கொணர்ந்த இரங்கற் பாக்கள் படித்து முடிக்கப்பட்டபின் அடிகளால் கண்ணீர் ஒழுகக் கலுழ்ந்த படியாய்ப் படித்து முடிக்கப்பட்டது. ஏனையோர் பாக்கள் உண்மையில் இரங்கற்பாக்களாய் இல்லாமல் நாயகரவர்களின் மெய்ந்நூற் புலமையினையும், நாநலத்தையும் அவர்களிடம் எதிர் வழக்கிட்டுத் தோல்வியுற்றார் நிலைகளையுமே எடுத்தியம்பி நகையினை உண்டாக்கினவாக, அடிகளார் நெஞ்சங் குழைந்துருகிப் பாடிய இக் காஞ்சிப் பாக்களோ அனைவரையும் அகங்கரைந்து கண்ணீர் பெருகி அழுமாறு செய்துவிட்டன. ஆதலின் நாயகரவர்களின் மாணாக்கர், நண்பர், உறவினர், மற்றையோர் யாவராலும் இந்நூல் யாண்டும் *பாராட்டப் பட்டது. அடிக்குறிப்புகள் * இவர் - முத்துவீரியம் இலக்கண நூலாசிரியர் 1. அவையங்கள் - உபநிடதங்கள் 2. சண்டமாருதம் - சூறாவளி வைதிக சைவசித்தாந்த சண்டமாருதம் திருப்பெருந்திரு. சோமசுந்தர நாயகரவர்கள் மேல் இயற்றிய 1. கையறுநிலை சைவமெனப்படு சமயந லுண்மை தழைத்து செழித்திடவோ தாவறு நீதி வழிப்படு வாதிகள் சார்ந்து களித்திடவோ மெய்வழி பொய்வழி வேறுவே றாக விரிந்து விளங்கிடவோ வேதவே தாந்த வரம்பினி யார்க்கும் விளங்க விளம்பிடவோ தெய்வ மினிச்சிவ மென்று தெளிந்துல கிங்கு திகழ்ந்திடவோ திப்பிய மெய்யரு ளிப்புவி வந்து சிறந்த திறம்படவோ துய்ய வெண்ணீறு துதைந்த தொழும்பர்க டன்மை சுடர்ந்திடவோ சோமசுந் ரனெனு நாமமொ டிங்குநீ தோன்றிய தெங்குருவே. (1) புத்தர் கரைந்திடு பொய்ம்மொழி கீழ்ந்தது போதுவ தன்றென்றோ புன்சம ணுக்கொரு வன்கழு வீந்ததும் போதுவ தன்றென்றோ சுத்தசை வத்தொடு முரணி யிழிப்புரை தோற்றுந ருண்டென்றோ சொல்வழி வாரலர் நல்வழி கண்டு துலங்குக வின்றென்றோ பித்துரை யாடுந ரத்திறந் தீர்ந்து பிழைத்திட லொன்றென்றோ பேதுரை கூறுநர் வாதுரை போழ்ந்து பிறங்குவ தின்றென்றோ தொத்தலர் கொன்றையி னான்புக ழின்று தொடங்குவது நன்றென்றோ சோமசுந் தரனெனு நாமமொ டிங்குநீ தோன்றிய தெங்குருவே. (2) வான்மதி மீனின நீங்க வழுக்கியிம் மண்ணிடை வீழ்ந்ததுவோ மல்லலங் கற்ப மரஞ்சிவம் வீசியிம் மண்ணிடை வீழ்ந்ததுவோ நான்முக னான்மறை யுட்பொருள் கூற நலத்தக வந்ததுவோ நல்லகல் லாலமர் நம்பர்கை காட்டுரை நாட்ட வெழுந்ததுவோ மான்மக ணாமக டூமகள் கூடி வளந்தர வந்ததுவோ மாதவ வாழ்வொடு மில்வினை காட்டிட வள்ளுவர் வந்ததுவோ சூன்முதிர் வண்புய னூன்முறை தந்து சுரந்திட வந்ததுவோ சோமசுந் தரனெனு நாமமொ டிங்குநீ தோன்றிய தெங்குருவே. (3) நாயி னிழிந்தவெம் புன்மை களைந்து நலந்தர வந்தனையோ நல்லது தீயது நன்று பகுத்து நவின்றிட வந்தனையோ தாயினு மென்னுயர் தந்தையி னும்முயர் தன்மையில் வந்தனையோ தண்டமி ழிற்படு வண்டுறை நன்றுநீ தந்திட வந்தனையோ காயினு மல்ல துவப்பினு மன்பது காட்டிட வந்தனையோ கன்மன மியாவுமொர் நன்மன மாயெமைக் காத்திட வந்தனையோ தூய வுளத்தினர் சாம்பவ ரென்பது தோற்றிட வந்தனையோ சோமசுந் தரனெனு நாமமொ டிங்குநீ தோன்றிய தெங்குருவே. (4) கண்ணுது லார்நெறி பண்ணின மொண்கழல் காணுத மினியென்றோ கௌணியர் தந்தலை வன்கழல் கண்டு களிக்குது மினியென்றோ எண்ணில ரன்பர்மு னண்ணிய நல்வழி யேகுது மினியென்றோ ஈசனற் றொண்டர் குழீஇயவெள் வெற்பி லிருக்குது மினியென்றோ மண்ணில் வரும்பொரு டுய்த்துறை வாழ்வு மதித்தில மினியென்றோ மன்ன ரிறைஞ்ச வரும்பெரு வாழ்வு மயங்கு வகைத்தென்றோ. துண்ணென விவ்வுல கம்முத லென்று சுருங்குத லறிமென்றோ சோமசுந் தரனெனு நாமம் விடுத்து மறைந்தனை யெங்குருவே (5) இங்கினி நின்கழல் கண்டிரு கண்களு மின்புற லாகாதே ஏழைய முய்ய மிழற்றுநி னின்னிசை யெய்துவ தாகாதே செங்குமு தம்புரை நின்றிரு வாய்மொழி சேர்வது மாகாதே செம்மை தரும்முப தேச வழக்கினித் தேர்ந்திட லாகாதே கொங்கலர் கொன்றையி னான்றிற மிங்கு குறிப்பது மாகாதே குன்றலி லன்பர் குணங்குறி யிங்கு குறிக்கொள லாகாதே துங்கந லாகம நுட்ப முணர்ந்து சுகம்பெற லாகாதே சோமசுந் தரனென நாமுரை யண்ண றுறந்து மறைந்திடவே. (6) குன்றி விழிக்குயில் காளுயி ரன்னவெங் கோவினைக் கண்டனிரோ கூம்பு சிறைக்குரு கேகுரு மாமணி கோலநீர் கண்டனிரோ பொன்றுகள் சிந்திடு கொன்றைக ளேசிவ போதனைக் கண்டனிரோ புந்தி நிறைந்தவர் சிந்தை விளக்கினைப் புன்னையே கண்டனிரோ கன்று முளத்தொடு கண்கலு ழெந்துயர் கண்டுரை யாடீரோ கைலை மலைத்தலை வன்கழல் வைகினற் கண்டது சொல்லீரோ துன்றுமெ மெந்தையை யென்றினிக் காண்குவந் தோகையே கூறிரோ சோமசுந் தரனெனு நாமனைக் கண்டு தொடர்ந்துசொ றூதுணமே. (7) வேதமொ டாகம வித்தக நூல்கள் விரிந்து விளங்கிடுமோ வென்றவெண் ணீற்றொளி யிந்நில மெங்கும் தீதறு நால்வர்தி றம்படு மன்பு திகழ்ந்து சிறந்திடுமோ தேறரு மெய்ப்பொருள் கண்டவர் நூல்க டெளிந்து சிறந்திடுமோ மேதக வாக மொழிந்திட வல்லதொர் மெல்லியற் பைங்கிளியே மெல்லென விவ்வுரை யாவு மவற்கு விரித்து விளம்பிடினே தூதொடு வந்தநி னின்மழ லைம்மொழி தூய தெனக்கொண்டே சோமசுந் தரனிவ ணாமுறு துன்பறத் தோன்றுவ னெம்முளமே. (8) 2. தாபதநிலை அரைசே யெனுமா லருளே யெனுமால் உரைசேர் புகழா யுடையா யெனுமால் தரை நீ யொருவ றகுமோ வெனுமால் குருவே யெனுமால் குணநின் மனையே (1) சிவமே கருதுந் திறலோ யெனுமால் அவநீ யெமைநீ யகல லெனுமால் தவமே திருவே தலைவா வெனுமால் குவிகை தொழுமாற் குணநின் மனையே. (2) அறிவோ பிறழு மலமந் தழுநின் குறியும் பிறவுங் குலவும் முளமே செறிவே தொருவுந் திறமோ தெரியா தெறியுங் கரமே யிவணென் செயுமே. (3) எழிலார் மதிய மியைநின் முகனே அழியா துளமே யடையும் மெனுமால் வழியா விழுதேன் வளர்நின் மொழியே பழியே மினியோ பருகல் லெனுமால். (4) உயிரே யுறவே யுலகாற் சிவநற் பயிரே தழையப் படுநன் முகிலே எயிலார் புறவத் திளையார் திறமே பயில்வாய் தகுமோ பழியார் பிரிவே. (5) மறைநா வுடையாய் மறையோர் புகழ நிறையா ருரைகள் நிரைப்பா யெனுமால் குறையா மதியாய் குணமா மலையே இறையே பிரிய விரெனா னெனுமால். (6) கரவோ அறியாய் கணமும் பிரியாய் உரவோய் பிரிதல் கரவோ வுரையாய் அரவே ரிறைவ னடியே யுறைவாய் விரவுந் திறமோ விரியா யெனுமால். (7) கடலோ கரையுங் கருங்கல் லுருகும் மடலார் மலர்க்கண் மலிநீர் சொரிய மிடலார் மரமும் மெழுகா யுருகும் அடலே றனையோ யறியா யிதுவோ (8) அருமை மகனை யகன்றா யெனுமால் திருவை நிகருஞ் சிறுமி யரையும் ஒருவா வுறைத லுறுமோ வெனுமால் பெருமா பிரியப் பெறுமோ வெனுமால். (9) மொழியப் படுமோ முனிவா மனையின் கழியாத் துயரங் கருத லரிதால் அழியாப் புகழென் னனையின் றுயர மொழியா யெனயா னுனைவேண் டுவெனே. (10) 3. மன்னைக் காஞ்சி வாங்குகடல் குழிப்ப வண்புனன் முகந்து பாங்குபெற வுயரிய வோங்குமலை யேறி மன்னுயி ரஞ்ச மின்னுட னுரறி வரையாது பெய்த மழைக்குலம் போல, மறைநூற் பொருளுந் திருநெறித் தமிழும் அரும்பொருள் பயப்ப வொருங்குடன் காட்டி, உவலைச் சமயிகள் கவலை யெய்தச் சைவ சித்தாந்த மெய்யொடு கிளர உரைமுறை நிறுத்தனை பலநாண் மற்றஃ தழுந்து துயர் கூரக் கழிந்தன்று மன்னே. நீறினி தளைஇய வீறின தாகி அகன்றுநிவந் தொழுகிப் பரந்தநின் னுதலுங் கருகி முரிந்த திருவளர் புருவமும் பேரருள் நிரம்பு சீர்கெழு விழியும் முல்லை முகிழன்ன மெல்லிய நாசியுங் கொவ்வை யன்ன செவ்விய விதழும் முருந்தி னன்ன திருந்திய வெயிறு நவையாறு கன்னற் சுவையின தாகிக் குயிலிசை யோடு பயிலுத லுடைத்தாய்க் காணினுங் கேட்பினுங் கருதினுங் களிதரும் உரையொடு பயின்ற புரையறு மொழியுஞ் செறிவொடு தசைந்த நறுவிய கதுப்புங் கத்தரிக் கொழுங்கடை யொத்திடு செவியுஞ் சுரிவளை போல வரியொடு திரண்டு பூதிமணி திகழுந் தீதறு மிடறும் எழுவெனத் திணிந்து முழவெனச் சரிந்துபின் எழிலொடு கிளருங் கொழுவிய தோளும் நான்முக னறியா வான்பொருள் வழக்கும் உரைமுடிவு கடந்த விருபொருட் கல்வியும் ஒருவழி யெமக்குந் திருவொடு காட்டும் யாழ்நுனி யோடு வாழ்திருக் கையும் நீறு சண்ணித்த நிகரறு மேனியும் மருளது நீங்க வருளொடு காட்டி நாயினு மிழிந்த பேயின மாகிய எம்மையு மாண்ட பின்னை யம்மைப் பண்டைய வுருவொடு சென்றனை மன்னே, நின்னடி சேர்குநர்க் கெல்லா மின்னருள் திரிவின்றிச் செய்குவை மன்னே, மருவலர் நின்முகங் கண்டொன் றிரக்குவ ராயினது வரையாது வழங்குவை மன்னே, யொருகால் வெகுண்டுரை யாடுவை யெனினும் நகையொடும் எம்முறு விழுமங் களைவோய் மன்னே, தாயினு மெமக்குத் தலையளி புரிந்து தந்தையிற் பெரிய தயவினை மன்னே, காழியில் வந்த கௌணியக் கன்றின் மிகுத்துரை யெமக்குத் தொகுத்தனை மன்னே, மறைமுடி வெல்லாந் துறைபடி நிறுவிக் குறையற வீந்த குரிசிலை மன்னே, மண்ணிடை வாழ்வும் விண்ணிடை வாழ்வும் மதியாது வைகிய சிதைவறு திருவினை சிவன்றிரு வடியே சிவணிய குறிப்பின் அவமது களைந்த தவமுறு தன்மையை கட்புலம் படராது விட்புலம் படர்ந்து கண்ணுத றிருவடி நண்ணினை யாயினும். பிரிவுறு துன்ப மரிதரி தாகலின் விழி நீ ருகுப்ப மொழியிடை குழற வானாத் துயர மடைது மன்றே. குருவே கண்ணே திருவே மணியே அறிவின் கொழுந்தே பொறையி னிறைவே எம்முள மமர்ந்த வம்மணி விளக்கே புகழின் வடிவே பொலிவுறு மமுதே கலையின் றிறனே நிலையுமெ முயிரே உயிரிடை நிரம்பு செயிரறு முணர்வே உணர்வுக் குணர்வே யொப்பிலா முதலே அறிவொடு கூடாச் சிறியே முறுதுயர் பரிவொடு களைமதி யெனநின் திருவடி நினைந்தொரு வரம்வேண் டுவலே. அடிக்குறிப்புகள் * சோமசுந்தரக் காஞ்சி யாண்டும் பாராட்டப்படுதலைக் கண்டு அழுக்காறுற்ற புலவர் சிலர் அதன்கண் குற்றங்காணப் புகுந்து மறுப்பெழுத, அதற்கு எதிர்மறுப்பாக அடிகளார் சோமசுந்தரக் காஞ்சியாக்கம் என்னும் நூலை உரைநடையில் இயற்றி வெளியிட்டனர். தொல்காப்பியப் பொருளிலக்கண நுட்பங்களும் பிறவும் விளங்க விரித்து உயரிய தனிச் செந்தமிழ் நடையில் வரையப்பட்டது இந்நூல். இச் செய்யுட்கள் ஆண்பாற் கையறுநிலை குறித்து வந்தன. கைஅறு நிலை - செயலற்றநிலை. 1. செழித்திடவோ கழித்திடவோ நீ தோன்றியது எம் குருவே என்று தொடரும்; தா அறு - கெடுதல் இல்லாத, அழிதல் இல்லாத; நீதி வழிப்படு வாதிகள் - முறைமை வழிப்பட்ட வாதத்தார்; விளம்பிடவோ - விளக்கமாய்த் தெளிவிக்கவோ; இனி - இனியேனும்; சிவம் - கடவுளுக்குச் சிறப்புப் பெயர்; திப்பிய - சிறந்த; துதைந்த - செழித்து அடர்ந்த; தொழும்பர் - தொண்டர்; கடன்மை - கடமை; சுடர்ந்திடவோ - விளங்கிடவோ; 2. புத்தர் கரைந்திடு பொய்மொழி என்றது, உலகம், சார்பில் தோன்றும் என்பதும், அதனைத் தோற்றுவிக்கக் கடவுள் தேவையில்லை என்பதும்; கரைந்திடு - பொருளின்றிச் சொல்லும்; என்றது, பொய்ச் சொற்கள். புத்தர் - பொதுவாகப் புத்த சமயத்தார்; கீழ்ந்தது - திருவாதவூரர் சாய்த்தது; போதுவதன்று - போதுமானதன்று; என்றோ - என்று கருதியோ; குருவே நீ தோன்றியது என்று முடிக்க. புன் - தாழ்ந்த; சமணுக்கு - சமண் சமயத்துக்கு; ஒருவன் - பாண்டி மன்னன்; ஈந்ததும் - தண்டனை தந்ததும்; தோற்றுநர் - புத்தர் சமணர் அல்லாத ஏனைய சமயத்தார்; சுத்த சைவம், இங்கே வைதிக சுத்தாத்வைத சைவ சித்தாந்த சன்மார்க்கம்; முரணி - மாறுபட்ட; தெய்வ நலம் சாராத பொதுமக்களை நினைந்து, சொல்வழி வாரலர் என்றார்; அத்திறம் - அப்பித்துத் திறம்; பேது உரை - மயக்கச் சொல். கூறுநரின் வாதுரையை என்க; போழ்ந்து - பிளந்து, இங்கே அழிந்து என்னும் பொருட்டு; போழ்ந்து பிறங்குவதின்று - அழித்து விளங்குவதில்லை; தொத்து - கொத்து; நன்று தொடங்குதும் - பெரிது தொடங்குவேம். 3. மதி வழுக்கி மண்ணிடை வீழ்ந்ததுவோ என்க; வீழ்ந்ததுவோ - வீழ்ந்தமையோ; பெயர், மல்லல் - செழுமையுடைய; சிவம் வீசி - சிவமணங் கமழ்ந்து கொண்டு; வீழ்ந்ததுவோ - விண்ணுலகி லிருந்து இவ்வுலகினில் வந்து தோன்றியதோ; உட்பொருள் - உள்ளுள்ள கருத்து; நலத்தக - நன்றாக; வந்ததுவோ - நான்முகன் வந்தவாறோ; கைகாட்டுரை - கைகாட்டி உரைக்கும் அருள் மொழி; அது, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்; சின்முத்திரை என்பதும் இது! எழுந்ததுவோ - எழுந்த நிலையோ; மான் மகள் - திருமகள்; தூ மகள் - உமை; மா - பெருமைமிக்க; இல்வினை - இல்லறச் செயல்கள்; கூடிவந்ததுவோ - மூவரும் கூடி வந்தபடியோ; வள்ளுவர் வந்ததுவோ - வள்ளுவர் வந்த வகையோ; திருவள்ளுவர் இல்லறச் செயல்கள் வாயிலாக மாதவப் பெருவாழ்வும் விளக்கினமை தெரிவிக்கப் பட்டது. புயல் - மேகம்; மழை போல நூல் முறைகள் வழங்கி அருள் கரந்திட, மழைதான் வந்ததோ என்க. எங் குருவே நீ தோன்றியது? 4. தண்டமிழிற் படு வண் துறை என்றது, இங்கே. தமிழ நெறியாகிய சிவநெறியை; காயினும் - சினந்தாலும்; சாம்பவர் - சிவனடியார்கள்; 5. நெறி பண்ணினம் - சிவநெறியை உருவாக்கிப் பரப்பினம்; நல்வழி - மீண்டும் பிறவிக்கு வாராவழி; வெள் வெற்பு - வெள்ளி வெற்பாகிய திருக்கயிலை; வகைத்து - வகையுடையது; துண்ணென - திடுமென; முதலென்று - காரணமென்று; மாயை முதற் காரணம் ஆகுமென்று; அறிம் - அறிவோம்; 6. மிழற்றும் - இசைக்கும்;செங்குமுதம் - திருவாய்க்கு உவமை; தேர்ந்திடல் - தெரிந்துகொள்ளுதல்; கொங்கு அலர் - தேன் விளங்குகின்ற; ஏழாம் செய்யுளில் மகரந்தப் பொடி வருகின்றது. திறம் - சைவத்திறம்; குன்றல் இல் - குறைதல் இல்லாத; குறி - பெயர்; துங்க - மேலான; ஆகமம் - முப்பொருள் உணர்த்தும் சைவநூல்; துறந்து - நீங்கி; 7. குன்றி - குன்றிமணி போன்ற; கோவினை - தலைவனை ; குருகே - கொக்கே; மா - பெரிய; மணி - மாணிக்கமணி;கோலம் - சிவக்கோலம்; குருமாமணி - சோதி குருவாய் எழுந்தருளிய மாமணி போன்ற தலைவரின் அடியார் கோலம் என்க; துகள் - மகரந்தப்பொடி; சிவபோதனை - சைவ சித்தாந்தம் போதிப்பவனை சிவ குருவை; சிவபிரான் முதற்கடவுளெனப் போதிக்கும் குருவை. புந்தி நிறைந்தவர் சிந்தை விளக்கினை - அறிவு நிறைந்த அறிஞர்களின் சிந்தையின் மயக்க இருள் போக்கிய விளக்கு போன்றவனை; கன்றும் - வருந்தும்; கலுழ் - நீர் வார்ந்து அழுகின்ற; கழல் வைகினன் - திருவடி சூடினானை; அது - துயர்; துன்றும் - அன்பால் நெருங்கிய; தோகை - மயில்; நாமனை - நாமம் உடையயோனை; பெயர் உள்ளவனை. துயரமிகுதியால் குருகுகள், குயில்கள், தோகைகள், தூதுணங்கள் முதலிய பறவைகளையும், கொன்றை புன்னை மரங்களையும் விளித்து ஆசிரியர் பேசுகிறார். 8. வித்தக நூல்கள் - வல்லமை வாய்ந்த நூல்கள்; வென்ற - திருஞான சம்பந்தர் போன்றாரால் சமயங்களை வெற்றி பெற்ற; நால்வர் - மாணிக்கவாசகர், அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் என்னும் சைவ சமய குரவர் நால்வர்; தேறு - தெளியப்படுகின்ற; மெய்ப்பெருள் கண்டவர் நூல்கள் - மெய்கண்ட நூல்கள்; மேதகவாக- மென்மை தக்கனவாக; மென்மையாக. மெல்லியல் - இனிய இயல்புடைய; விளம்பிடின் - தெரியும்படி சொன்னால்; இன் - இனிய; தூயது - உண்மையானது; வாய்மையுள்ளது; துன்பு - துன்பம்; எம் முனம் - எம் எதிர்; தாபத நிலை - கணவனை இழந்த மனைவியின் நிலை, 1. அரைசே - அரசே; ஒவ்வொன்றிலும் ஆல் அசை; எனும் - என்று சொல்லி வருந்தும். ஒருவல் - நீங்கல்; மனை - மனைவி; 2. அவம் - பொருத்தமல்லாதது; குவிகை - குவிகின்ற கையால். 3. அலமந்து - மயங்கி; குறியும் - நோக்கமும்; செறியாது ஒருவும் - நெருங்காது நீங்கும்; திறமும் - வகையும்; தெரியாது - பிறர்க்குத் தெரியாது; எறியும் - வீசித் தரையில் அடிக்கும். 4. இயை - உவமையாய்ப் பொருந்துகின்ற; அழியாது - நிலை மாறாமல்; வழியா விழும் - வழிந்து விழுகின்ற; பழியேம் - தூற்றாமல் போற்றுவேம்; இனியோ - ஒகாரம் எதிர்மறை; இனியோ பருகல் - இனிமேலா சுவைத்தல்/ இனிக்கேட்டல் இயலாது என்றபடி; தேன் வளர்மொழி என்றமையால் `பருகல் என்றார். 5. படும் - பொழியும்; எயிலார் புறவத்து இணையார் - மதில் சூழ்ந்த இடத்தில் இருக்கும் வீரர்; பழி ஆர் பிரிவு - சூறை பொருந்திய குறைவு. 6. மறையோர் - வேதம் வல்லவர்; நிறை - மனநிறைவு; நிரைப்பாய்- வரிசையாய் முறைப்படுத்திச் சொல்லுவாய்; இறையே பிரிய இரேன் நான் எனும் என்று தொடர் கொள்க. 7. கரவோ அறியாய் - வஞ்சனை அறியாதவரே; பிரியாய் - பிரியாதவரே; உரவோய் - அறிவு உடையவரே; பிரிதல் - இப்போது மறைதல்; கரவோ உரையாய் - வஞ்சனையோ சொல்லாய்; அரவு ஏர் - பாம்பு சூடிய அழகினையுடைய; விரவும் திறம் - மீண்டும் கலக்கும் வகை; ஓகாரம் அசை. 8. கடலும் பாறையும் மலரும் மரமும் உருகும் என்பது இச் செய்யுளில் வருகின்றது. கரைதல் - ஒலித்து அழுதல்; மடல் - இதழ்; மலர்க் கண்- மலர் போன்ற கண்; மிடல் - வலிமை; அடல் ஏறு - கொல்லேறு; ஏறு - எருது. 9. மகனை - தோன்றிய புதல்வரை; ஒருவர் - நீங்கி; பெருமா - பெருமானே; பிரியப் பெறுமோ - பிரிதலாகுமோ.. 10. கழியாத் துயரம் - நீக்க முடியாத துன்பம்; அழியாப் புகழ் என் அனை - சிவநெறி பரவச் செய்த தலைவர்க்கு மனைவியாய் அமையும் பேறு பெற்ற என் அன்னை; ஆதலின், அழியாப் புகழுடையார் என்று சிறப்பித்தார்; ஒழியாய் - நீக்குவாயாக! இச் செய்யுள் தேவபாடாண்டிணைக்கண் வந்த காஞ்சித் திணைத் தாபதநிலை; ஆசிரியர், அன்னையார் துயரப் படுகின்ற வகையை உணர்ந்து சங்காலக் கபிலரைப் போலத் தாம் வருந்திக் கூறுதல்; பேகனால் துறக்கப்பட்ட கண்ணகியின் வருத்தத்தைக் கூறும் செய்யுளில் கபிலர், இகுத்த கண்ணீர் நிறுத்தல் சொல்லாள் .............................................................. சூழல் இணைவது போல் அழுதனன் பெரிதே (புறநா. 143) மன்னைக் காஞ்சி - கழிந்ததனால் உண்டான உலக நிலையாமையைக் கூறி இரங்கி வருந்ததுதல் வாங்கு கடல் - வளைந்த கடல்; குழிய - குழி போலத் தோன்றும்; சுருங்க என்னும் பொருட்டு. உரறி - இடித்து; மழைக் குலம் - மேகக்கூட்டம்; அரும்பொருள் - அரிய கருத்துக்கள்; காட்டி - மேற்கோள் காட்டி; உவலைச் சமயிகள் - கருத்து வலிவற்ற அகப்புறச் சமயத்தார்கள்; மெய் - உண்மை; கிளர - விளங்கித் தோன்ற; உரை முறை நிறுத்தனை - தருக்கத்தோடு விரிவுரையாற்றும் முறையினை நிறுவினை; அது கழிந்தன்று மன், மழைக்குலம் போல உரை முறை நிறுத்தனை அது கழிந்தன்று மன், என்று இரங்கினார். கழிந்தன்று - கழிந்தது; மன் - இவ்வாறு கழிதற் கருத்திற் சேர்ந்து வரும் இடைச்சொல்; ஆதலால், காஞ்சி என்னும் உலக நிலையாமையைக் குறிக்கும் சொல், மன்னைக் காஞ்சி என அடையடுத்து வந்தது. அனை இய - செழிப்பாய்ப் பூசிய; வீறினதாகி - வீறுபாடுடையதாகி; நிவந்து - உயர்ந்து; முரிந்த - இரண்டாய்ப் பிரிவுபட்ட; கொவ்வை - கொவ்வைக் கனி; முருந்து - மயில் இறகின் அடி; நவை - குற்றம்; பயிலுதல் ஒத்துப் பழகுதல்; புரை அரு - குற்றம் நீங்கிய; தசைந்த - தசை செழித்த; கொழுங் கடை - கொழுவிய பூ; கடைசியாய்த் தோன்றும் பூ வாதலின் கடை என்றார். சுரி வளை - வளைந்த சங்கு; பூதி மணி விபூதியும் உருத்திராக்க மணியும்; எழு - தூணின் திரட்சி; முழவு - மத்தளம்; வான் பொருள் - உயர்ந்த கருத்து; மறைநூலின் பிழிவாய்ப் பொருணூற் சுவையாய் வடிக்கப்பட்ட சைவ சித்தாந்தக் கருத்து; மறைநூற் கருத்துக்கு மேற்பட்ட நுண்ணிய கருத்தாதலின், வான் பொருள் என்றார். மறையை ஓதியும் அதன் நுட்பம் அறிய மாட்டாமை நினைந்து, நான் முகன் அறியா வான்பொருள் வழக்கு என்றார். வழக்கு என்பது அதன் பழைமையையும் குறித்தது. உரை முடிவு கடந்த - சொன் முடிவுக்கு அப்பாற்பட்ட; இருபொருட் கலவியும் - இரண்டற்ற பொருட் பேறுடைய அத்துவிதக் கலப்பும்; திருவொடு - பொருள் வளத்தோடு; சண்ணித்த - பூசிய என்னும் பொருட்டு; ஆண்ட - குருவாய் எழுந்தருளி ஆட்கொண்ட; இம்மை - அம்மை மறுமைகளுக்கு அப்பாற் பட்ட நிலை. சென்றனை மன்னே என்று முடிக்க. இப் பகுதியில் ஆசிரியரின் திருவுருவைக் கூறிக். குருவாகி எம்மையும் ஆண்ட பின்னைச் சென்றனை என்றபடி; மன் என்னும் சேர்க்கை, இனி அந் நிலையைப் பார்க்க முடியாதே என்னும் உலக நிலையாமைக் கழிவைக் காட்டியது. மேல் வரும் இடங்களிலும் இவ்வாறே கருத்துக்கொள்க. சேர்குநர்க்கு- சேரும் அன்பர்க்கு; திரிவு இன்றி - உண்மைக்கு மாறின்றி; செய்குவை - செய்குவாய்; மருவலர் - கூடாதவர்கள்; வரையாது - வரையறை செய்யாமல்; விழுமம் - இன்னல்; தலையளி - தலையன்பு; காழி - சீகாழிப் பதி; கவுணியக் கன்று - திருஞானசம்பந்தர்; மிகுத்துரை - கருத்து மிகுந்த வெற்றிச் சொல்; துறை பட - வகை உண்டாக; குரிசிலை - தலைவனானோய்; சிதைவறு திருவினை - அழிதலற்ற நிலையான செல்வத்தை; சிவணிய - பொருந்திய; குறிப்பின் - கருத்தினால்; விட் புலம் - விண்ணிடம்; அருள் வெளியிடம் என்றபடி; கடவுள் திருவடியைச் சேர்வது, உள்ளத்துக்கு நிறைவு தருவதே யானாலும், பிரிதலுறும் துன்பம் தாங்குதல் அரிதாதலின், ஆசிரியர் துயரம் அடைகிறார். உகுப்ப - சிந்த; ஆனாத் துயரம் - நீங்காத துன்பம்; அடைதும் - அடைகின்றனம். அம் மணி விளக்கு - மாணிக்க மணியின் விளக்கமே போன்ற ஒளியே என்னுங் கருத்தில், அம் மணி விளக்கு எனச் சுட்டினார். அமுதமே யாயினும் அனைவரும் அறிந்து பயன்படுத்துதல் வேண்டு மாதலின், பொலிவுறும் அமுதே என்றார்; பொலிவுறுதல் - விளங்குதல்; கேட்கும் மக்களின் உள்ளம் கொள்ளும் வகையில் விரிவுரைத் திறம் வெளிப்பட்டமையால், கலையின் திறன் எனப்பட்டது. குருவாய் எழுந்தருளித் திருவாய் மலர்ந்தவை உயிருணர்வில் மறத்தலின்றி நிலை பெற்றிருக்குமாதலின் நிலையும் எம் உயிரே என வந்தது; உயிராய்க் கருதினமையால், உயிரே என்றார். உயிரினும் மேம்பட்ட குற்றமற்ற உணர்வே எனவும், (செயிர் - குற்றம்) உணர்வுக்கும் உணர்வாக விளங்கும் குருவே என்னுங் கருத்தில் உணர்வுக்குணர்வே எனவும் ஏனைய எல்லாவற்றிற்கும் இணையில்லா முதன்மையாய் விளங்குதலின் ஒப்பிலா முதலே எனவும், (முதல் - முதன்மை) ஆசிரியர் கூறினார் உலக நிலையாமையும் உண்மையும் கருதுதலுக்கு மேற்பட்டுப், பிரிவுத் துன்பத்தில் சிந்தை மயங்குதலால், அறிவோடு கூடாச் சிறியேம் என்றார் பரிவொடு - அன்பொடு; களைமதி - களைக; மதி ; அசை; வேண்டுவலே - வேண்டுவனே; ஏகாரம் - இரக்கம்; சிறியேம் உறுதுயர் களைக என நின் திருவடி நினைந்து ஒரு வரம் வேண்டுவல் என்று தம் துயர் மிகுதியை ஆசிரியர், இப் பகுதியிற் கூறி வேண்டுகின்றார். 4. திரு மதுரைநாயகம் பிள்ளை அவர்கள் வரலாற்றுச் சுருக்கம் (திரு.வ. திருவரங்கனார் எழுதியது) கல்வி கேள்வி அறிவொழுக்கங்களிலும் சிவபத்தி அடியார் பத்தியிலுஞ் சிறந்து, சைவசமயத்தைப் பரவச் செய்யு முயற்சியில் தமது வாழ்நாள் முழுமையும் பயன்படுத்தி வந்த இப்பெரியவர் விரோதிகிருது ஆண்டு (1851) ஆடித் திங்கள் 9ஆம் நாளன்று திருச்சிராப்பள்ளியிற் பிறந்தனர். இத் தென்றமிழ் நாட்டில் தமிழ் மொழியையும் சைவசமயத்தையும் விளக்கி மகாவித்துவானெனத் தமிழ்ப் புலவர்களாற் கொண்டாடப் பெற்ற திரு. மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கட்கு இவர் உறவினர். அவர்களோடும் அவர்கள் மாணாக்கரான திரு. தியாகராய செட்டியார் முதலான அரும்பெருந் தமிழ்ப் புலவர்களோடும் நட்புரிமை கொண்டவர். நாகை வெளிப் பாளையத்தில் அறமன்றத்தில் 55 ஆண்டு காலம் இவர்கள் நிறைவேற்றியாக வேலை பார்த்து வந்தமையால் இவர்களது வாழ்நாளின் பெரும்பகுதி நாகை வெளிப்பாளையத்திற் கழிந்தது. இவர்கள் அங்கிருந்த காலத்தில் தமது இளம் பருவத்திலேயே நல்லார் இணக்கமும் சைவசமய நூல் உணர்ச்சியும் பெற்று வந்தனர். அப்போது நாகூரிலும் நாகபட்டினத்திலும் புத்தக வாணிகம் நடத்திவந்த இயற்றமிழ்ப் புலவரும், அன்பு அருள் அமைதி பொறை முதலான உயர் குணங்களிற் சிறந்து விளங்கினவருமான திரு. வெ. நாராயணசாமிப் பிள்ளையவர்களை அடுத்து அவர்கள்பால் திருவிளையாடல் பெரியபுராணம் முதலான உயர்ந்த சைவசமய இலக்கியங்களையும் பிறவற்றையும் பாடங் கேட்டு உணர்ந்து சிவபத்தியிற் சிறந்து வளர்வாராயினர். அக் காலத்தில் வைணவ சமயத்திற் கற்றவர் ஒருவர் வெளிப்பாளையத்தின் கண் திருமாலின் பெருமைகளைச் சொற்பொழிவாற்றியபோது தாம் எடுத்த பொருளைக் கடந்து முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை அளவு கடந்து இழித்துரைக்க, அதனைக் கேட்டு மனம் பொறாமல், இப் பெரியவர் அப்போது தமிழ் நாட்டின்கட் சைவசித்தாந்த சண்டமாருதமாய் நிகரற்று உலாவிய சிவஞானச் செல்வரும் சித்தாந்த ஆசிரியருமான திருப்பெருந்திரு சோமசுந்தர நாயகரவர்களைச் சென்னை யிலிருந்து வரவழைத்து, அவர்களாற் சைவசமய உண்மைகளை எவரும் அறிந்து களிக்கும்படி செய்தனர். அவ்வளவோடு நில்லாமல், நாகையிற் சிவஞானியாய் விளங்கிய திரு. வீரப்ப செட்டியார் முதலான சிவநேயர்களின் துணையைப் பெற்று வெளிப்பாளையத்தின்கண் இவர் ஒரு சைவசித்தாந்த சபையை நிலைபெறுத்தினர். அந்நாளில் நாகையிற் பிறந்து சிறு பருவத்தினராய் ஆங்கில கலாசாலையில் கல்வி பயின்று கொண்டிருந்த தவத்திரு மறைமலை யடிகளார் அவர்கள் தமிழும் கற்கும் விருப்பம் மிக உடையவராய், அப்போது நாகையிற் புத்தக வாணிகம் செய்து கொண்டிருந்த இயற்றமிழாசிரியர் திரு. வெ. நாராயணசாமிப் பிள்ளையவர்கள் திருவடியை அடுத்து அவர்கள்பால் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களை வரன் முறையாகக் கற்று வந்தனர். மிகச் சிறிய பருவத்தே ஆங்கில மொழியோடு தமிழையும் செவ்வையாகக் கற்றுவந்த அடிகளிடத்தே இப்பெரியவருக்கு மிகுந்த அன்பு உண்டாயிற்று. மேற்குறித்த இயற்றமிழ் ஆசிரியர் முன்னிலையில் இவர்கள் இருவர்க்கும் உண்டான நட்பு நாளுக்குநாள் வளர்ந்து வரலாயிற்று. ஆசிரியராலும் இப்பெரியவர் நட்பினாலும் மறைமலையடிகள் அவர்கள் மிகவும் திருத்தமாக வளர்ந்து புலமை நிரம்பினார்கள். பிறகு இப் பெரியவர் முயற்சியினாலே அடிகள் திருப்பெருந்திரு சோமசுந்தர நாயகரவர்களைச் சித்தாந்த ஆசிரியராகக் கொண்டனர். இப் பெரியவர் சைவசித்தாந்த உண்மைகளைப் பல நூல் மேற்கோள்களோடு கல்லுங்கரையச் சொற்பொழிவாற்ற வல்லவராய் இருந்ததோடு அடிகளையும் அடிக்கடி நாகை வெளிப்பாளையம், திருச்சிராப்பள்ளி முதலான இடங்களுக்கு வருவித்து அவர்களால் சொற்பொழிவு செய்வித்தார்கள். நாகையிற் சைவசித்தாந்த மகாசமாசம் கூடியபோது இவர்கள் செய்த உதவி மிகப் பெரிது. இப் பெரியார் சார்வதாரி ஆண்டு (1889) கார்த்திகைத் திங்கள் 5 ஆம் நாள் வெளிப்பாளையம் சைவசித்தாந்த சபைக் கட்டிடத்தை இரண்டாயிரரூபாவரையில் திரட்டிப் புதுக்கிக் கட்டினர். 1909 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவர் வேலையிலிருந்து விடுதி பெற்றபின் உறையூரைத் தமக்கு இருப்பிடமாய்க்கொண்டு அங்குள்ள அன்பர்களை ஒன்று சேர்த்துப் பெருந்தொகை திரட்டி வாகீசபக்தசன சபைக் கட்டிடத்தைப் பிங்கல ஆண்டு (1917) தைத்திங்கள் 10 ஆம் நாள் அமைப்பித்தார். இன்னும் இவர் செய்த நன்மைகள் பல. சில நாளாக இருமல் நோயாயிருந்து 1920 ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 3 ஆம் நாள் சிவபெருமான் திருவடிநீழலை எய்தினர். இப் பெரியவர்தம் மனைவியாரான திருவாட்டி அம்மணி அம்மையார் அவர்கள் இவர்தம் நல்லியல்புக்கு ஒத்தவர்களாய் இல்லறத்தைச் செவ்வையாக நடத்துவதிலும், விருந்தினரைப் போற்றுவதிலும், சிவனடியார்க்குத், தொண்டு புரிவதிலும், கணவனார் குறிப்பறிந்து அன்புடன் ஒழுகுவதிலும், சமையற் றொழிலிலும் சிறந்து விளங்கினார்கள். தங் கணவனார் சிவபதவி அடைதற்குச் சிறிதேறக் குறையப் பதினோராண்டு களுக்குமுன் இவ்வம்மை சிவனடி சேர்ந்தார். இவர்தம் தகுதிக்கேற்ற ஓர் அருமையான ஆண் மகனையும் நான்கு பெண்மகாரையும் பெற்றனர். இவர் மகனார் திரு. பரமசிவம்பிள்ளை, மறைமலையடிகளார் அவர்கட்கு மாணவராய் அவர்போல் சித்தாந்த சொற்பொழிவுகள் சிறக்கச் செய்யும் ஆற்றல் படைத்தவர். திருவருள் வாழ்க! நாகை வெளிப்பாளையம் சைவசித்தாந்தசபையின் அடியவரும் உறையூர் வாசீகபக்தசனசபையின் நிறுவனருமான திருவாளர் மதுரைநாயகம்பிள்ளை யவர்கள்மேல் மறைமலையடிகள் பாடிய இரங்கற்பாக்கள் மணியொளிபோ லெனக்குயிராய் மன்னுசிவம் அருள்சுரந்து துணிவுடைய பிள்ளைமையாம் பருவத்தே துணையாகப் பணிவுடைய நினைத்தந்தென் பரிசின்கட் டுரிசகற்றி அணிசெய்த பான்மையெலாம் அறிந்தறிந்து நைவேனால். (1) ஆராத அன்பினுடன் அடிபணிந்து நீகற்ற நாரா யணகுரவன் றிருவடியை நான்நணுகிச் சாராது போயினனேற் சான்றோய்நின் பெருங்கேண்மை சேராது பலவாறாய்ச் சென்றிருப்பேன் சிறியேனே. (2) வேறு குரவன் ஒருபாற் சீர்திருத்தக் குழைந்த அன்பால் மற்றொருபால் விரவி எனைநீ சீர்திருத்த வெய்ய கதிராற் பகல்விளங்கி இரவு மதியால் நின்றொளிரும் இனிய கால எல்லையென உரவாய் வளர்ந்தேன் றன்மை யெலாம் உன்னி உருகி உழல்வேனால். (3) நானே கடவுள் என்றுரைக்கும் நலமில் நூலின் வழிபற்றி யானே யுழன்ற அந்நாளில் இதனின் வேறாம் உண்மைநெறி தேனே யனையாய் உண்டென்று தெருட்டி மேலுந் தெய்வவருள் ஊனே புகுந்து போந்ததென அடியேம் உய்ய உவந்தருளி. (4) சொல்லும் பொருளுந் தொடர்பாகத் தொல்லோர் கண்டமெய்ந் நெறியாய்ச் செல்லுஞ் சைவ சித்தாந்தத் தெவிட்டா அமிழ்தந் தெளித்தெடுத்துக் கல்லுங் கரையக் கறைதேயக் கருத்துள் ஊறக் கரைகடக்கச் சொல்லுஞ் சோம சுந்தரன்பால் தொண்டு புரியத் தொடுத்தனையால். (5) அறிவு நூலின் பொருள்களெலாம் ஆராய்ந் தறிந்தே அழகாகச் செறியுந்தீந்தேன் சுவையொழுகச் சிவமும் அன்புஞ் சேர்ந்தொழுகப் பொறிகொள் தூவிக் குயிலிசையும் பொருந்தி யொழுகப் புகல்திறத்தோய் சிறியன் சொல்லும் அவைகூட்டிச் செவிவாய் மடுத்துக் களித்தனையால். (6) சின்னஞ் சிறிய காலத்தே சிறந்த தந்தை இழந்தேற்குக் கன்னன் மொழிசேர் தமிழ்க்குரவர் இருவரோடு காதன்மிகும் அன்னை யனைய நின்றனையும் அரிய துணையா அடைந்திருந்தேன் பின்னை யிருவர் பிரிந்தேகப் பெரிய துணையாய்ப் பிறங்கினையால். (7) சிறக்க வளர்ந்த இந்நாளிற் சிவத்தின் பெருமை தெரிந்தமட்டும் பிறக்க மாக அடியேனும் பின்என் சார்பிற் பிறைமதிபோல் நிறக்க வளரு நின்மகனும் நிகழ்த்தும் உரைகேட் டுவந்ததனை மறக்கப் பிரிந்தாய் இனிநின்போல் மகிழ்வார் உளரோ வையகத்தே. வேறு திருவருள்சேர் நினதுளத்தைச் சிவனடிக்கே ஒப்புவித்தாய் உருவருநின் எழிலுடம்பை உருத்திரற்கே உவந்தளித்தாய் இருமைவளர் புகழுடம்பை எந்தையடி யார்க்களித்தாய் அருமைமகார் துயர்கூர அளித்ததுவும் அழகாமோ. (9) இம்மைதனிற் பிரிந்தாலும் இனியொருகால் இசைந்திடலாம் அம்மைதனில் நீபிரிந்தால் அணைகுவதும் உண்டாமோ? எம்மையிலும் இவையெலாம் இறைசெயலால் நிகழுவதால் நம்மையவன் அருள்வழியில் நடத்துவது நன்றாமே. (10) அடிக்குறிப்புகள் 1. மணியொளி உவமை இரண்டற்ற அணுக்கம் புலப்படுத்தியது. பரிசின்கண் - இயல்பில்; துரிசு - குற்றம். பணிவுடைய நினை என்றதனால், அவர் பணிவு தெரிகின்றது. 3. விரவி - நேயத்தாற் கலந்து; கால எல்லை - கால அளவு; உரவாய் - அறிவாய். 4. நூல் - மாயாவாத நூல்; ஊனே - மதுரை நாயகம் பிள்ளையின் உடலில். 5. கறை - மனக் கசடு; கரை - பிறவிக் கடலின் கரை. தொடுத்தனை - சேர்த்தனை 6. தேன் சுவை - ஞானச் சுவை; பொறி - புள்ளி; தூவி - சிறகு; இச் செய்யுளால் இசைத்திறம் உடையவர் என்பதும் தெரிகின்றது. புகல் - புகலுகின்ற. 7. குரவர் இருவர் - நாராயணசாமி பிள்ளையும், சோமசுந்தர நாயகரும். 8. பிறக்கமாக - தோற்றமாக நின்மகன் என்றது, அவர் மகன் பரமசிவம் பிள்ளையை. 9. உளத்தை - உயிரை; உருஅரு - அரிய உருவுடைய; உருத்திரற்கே - தீவண்ணற்கே; எந்தை - எம் தந்தை போன்ற நீ. 10. எம்மையிலும் - எப்பிறப்பிலும்; நம்மை என்றார். இருவர் கூட்டுறவுங் கருதி. 17. தண்டலம் பாலசுந்தர முதலியார் அவர்கள் (இது சென்னை தொண்டைமண்டல துளுவ வேளாளர் உயர்நிலைப் பள்ளித் தலைவராயிருந்தவரும் இரங்கூன் முதன்மை நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்தவருமான, தண்டலம் திரு. பாலசுந்தர முதலியாரவர்கள் 1908 இல் இறைவன் திருவடி நீழலை அடைந்தகாலை, அவரது பிரிவாற்றாமையினால் மறைமலையடிகளால் பாடப்பெற்ற இரங்கற்பா மணிநிறக் கடல்சூழ் மாநில மாந்தர் பிணியற வாழ்நாள் பெரிதென எண்ணித் திணியிருள் வானில் திடுமெனத் தோன்றித் தணிமினின் மாய்வது சாற்றினை ஐயா! (1) ஆங்கிலம் உணர்ந்தாய் அருந்தமிழ் உணர்ந்தாய் மேங்கிளர் சைவமும் மேதக உணர்ந்தாய் ஈங்கிவை உணரினும் இறப்பினை நழுவி நீங்குவ துணராய் நீத்தது முறையோ! (2) கல்வியும் பெறுவார் கனநிலை பெறுவார் செல்வமும் பெறுவார் சீர்பல பெறுவார் பல்புகழ் பெறுவார் பலர்உளர் நின்போல் நல்இயல் புடையார் நனிசிலர் ஐயா! (3) மண்மேற் பிரிந்தால் மறித்தும் பெறலாம் விண்மேற் பிரிந்தால் மீண்டது வருமோ! கண்போல் இனியாய் கருதற் கினியாய் நண்பா இனிநீ நண்ணுவ திலையே! (4) அந்தர மதியினை அடைந்ததுன் முகமே இந்திய நாட்டிடை இயைந்ததுன் பெயரே மைந்த நின் குணம்பலர் மனத்தது பால சுந்தர பிரிந்ததாச் சொல்லவும் படுமோ! (5) அடிக்குறிப்புகள் 1. மினின் - மின்னின்; வாழ்நாள் பெரிதென எண்ணி, மின்போல் மாய்வதைத் தெரிவித்தனையே! 2. மேம்கிளர் - மேன்மை கிளர்ந்த; உணரினும் - உணர்ந்தும். 3. கனநிலை - பெருமையான நிலை; பிறவற்றில் பலருளர், நின்போல் நல்லியல்புடையார் சிலரே. 4. இச்செய்யுள் பிரிவருமை கூறியது 5. இந்தியப் புகழும் பலர் நினைவிற் படிந்த நின்குணமும் நின்னைப் பிரிந்ததாகச் சொல்லமுடியவில்லை. 18 மறைமலைக் காஞ்சி இதுகாறும் இப்பகுதியில் மறைமலை அடிகளார் அவர்கள் தம்மாசிரியரையும் அருமை நண்பர்களையும் பிரிந்து வருந்திப் பாடிய இரங்கற் பாக்களைக் கண்டோம். 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் அன்று அடிகளார் அவர்களைப் பிரிந்த தமிழ்ப்பேருலகம் கண்ணீர்மல்கப் பாடிய இரங்கற் பாக்கள் சிலவற்றை இங்குக் காண்போம்.) தமிழின் தீஞ்சுவை தனித்தமிழின் தீஞ்சுவையும் சைவத்தின் நறுஞ்சுவையும் தாழ்விலாமல் இனித்திட்ட நடையினிலே எமக்களித்த மறைமலையார் இல்லா ராகப் பனித்திட்ட தமிழ்நாட்டின் பாவலரும் நாவலரும் படர்வ தெங்கே? இனித்திட்டம் ஏதுண்டு தமிழரசு பெறுவதனுக்(கு) என்னே! என்னே! - புலவர் அரசு தமிழ்ப் பண்பு மறைமலையைக் கலைக்கடலை மதிக்கொழுந்தை அக்கொழுந்தின் வனப்பை வைப்பை முறைதிறம்பாச் சிவப்பணியை முதுநூல்கள் பலவிளைத்த முகத்தை அன்பின் உறையுளை நற்றமிழ்ப்பண்பை உணர்ச்சியினை ஊக்கத்தை ஊதி யத்தைக் குறைவின்றி இனிப்பெறுநாள் கூடுங்கொல் அறிவுடையீர் கூறுவீரே! - வித்துவான் மு. அருணாசலம்பிள்ளை. மேன்மை நலம் விளக்கினையே! புன்மைமிகு குழுவினர்கைப் போய்ப்புகுந்த தமிழன்னை வன்மையிலள் வளமுமிலள் வடமொழியின் துணையின்றேல் நன்மையிலள் இறந்தொழிவள் எனக்கரைந்த நவையகற்றி மென்மையவள் தனித்தியங்கும் மேன்மைநலம் விளக்கினையே! விளக்கியவாய் எழுதியகை வெந்தழலில் போய்ப்புகுத அளக்கலா ஆய்வுரைநூல் அலைகடந்தும் அகம்புறமும் விளக்கெனவே நின்றுலகை விழுமநிறை கடலழுந்த இளக்கத்தால் புலவரெலாம் ஏங்கிநனி இனைந்தனரே! - சித்தாந்த பண்டிதர் புலவர் ப. இராமநாத பிள்ளை. நீயோ மறைந்தாய்! நீயோ மறைந்தாய் நிறைவுறு தமிழின் சாயல் மறைந்தது தனித்தமிழ் குறைந்தது சைவக் கொண்டல் சாய்ந்து வீழ்ந்தது ஐயகோ ஐயகோ அருள்மறை மலையே வையக மெல்லாம் மாழ்க மறைந்து ஐயநீ சென்ற இடமறி கில்லேம் சிவபரம் பொருளின் திருவடி நீழல் உவந்தினி திருக்கும் உயர்குணக் குன்றே உன்புகழ் நிலைக்க உலகெலாம் பரவுக! - செல்லூர்கிழார் செ. இரெ. இராமசாமிபிள்ளை. கலைகளெல்லாம் அறிந்த தெய்வம் ஏரணத்தில் இலக்கணத்தில் இலக்கியத்தில் சான்றோர்தம் இனிய பாவில் காரணத்தை நுதலிவரும் சிந்தாந்தம் முதலான கலைகள் தம்மில் ஆரணத்தைத் தலையாக்கொள் ஆரியத்தில் சங்கதத்தில் ஆங்கி லத்தில் சீரணைத்த கலைளெலாம் அறிந்ததெய்வம் நீயன்றித் தெரியக் காணேம்! - புலவர். வீ. உலகவூழியனார். பாமணிக் கோவை - முற்றும் - முனிமொழிப் பிரகாசிகை தேவர் குறளுந் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியுங்-கோவை திருவா சகமுந் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர் எனும் ஔவையார் திருவாக்கிற் போந்த முனிமொழி என்பதற்கு வியாச சூத்திரம் என்று பொருளுரைத்த ஆன்றோருரைப் பொருளொடு பிணங்கி, அப் பொருள் வழக்கின்கண்ணாதல், செய்யுட் கண்ணாதல், நிகண்டு முதலிய நூல்களின் கண்ணாதல் பெறப்படாமையாற் செம்பொருளென்றலும், முன்னும் பின்னுமுள்ள சொற்கள் தம்முள் இணங்கிப் பொருள் பயவாவழி ஒருசொற் றன் பொருளிற் றீர்ந்து பிறிது பொருள் பயக்கும் இலக்கணைப் பொரு ளென்றலும், வியாசர் மாயாவாதப் பொருள் விளங்கச் சூத்திரஞ் செய்த கருத்தறிந்து திரு சங்கராச் சாரியர் பாடியஞ் செய்தாராகலிற், சித்தாந்தசைவப் பொருள் போதிக்கும் நெறிக்கிடையே வழீஇச்செல்லும் அம்மாயாவாதச் சத்திரத் கை ஏனைச் சித்தாந்த சைவ நூல்களோ டொப்ப வைத் துரைத்தல் ஔவையார்க்குக் கருத்தன்றாகலின் குறிப்புப் பொருளென்றலும் செல்லாமையான், அதனை வாதவூர் முனிவர் என்று புகழ்பெற்று விளங்கும் மாணிக்கவாசக சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய வெனப் பெயரெச்சத் தொடராக வைத்துப் பொருளுரைத்துக் கோவை திருவாசகமும் என்பதனோடு கூட்டிக்கோடலும் வேண்டுமெனப் புதுவதாக வொரு பொருள் கூறுவார் அச்செய்யுட் பொருளை நுணுகி ஆராயுமதுகையின்றி அங்ஙனங் கூறினாரென்பதும், அதற்குத் தொல்லாசிரியர் கூறு முரையே நடுக்கின்றி நிலையுறுவதா மென்பதும் போதரச் சிறிது காட்டுதும். பிரமசூத்திரம், வேதாந்த சூத்திரம், வியாச சூத்திரம் என்பன ஒரு பொருட்கிளவிகளாம். அது முதலில் அதாதோப்ரஹ்மஜிஜ்ஞாஸா என்று தொடங்கிப் பிரமப்பொருளை அறிதல் வேண்டுமென, முறையாக அறிவுரை கூறி, பிரமத்தைக் கூறுவதனால் பிரமசூத்திர மெனவும், கணாத சூத்திரம், கௌதமசூத்திரம், காபில சூத்திர முதலியவற்றைப் போல் வைசேடிகம், நியாயம், சாங்கிய முதலிய வேறு பொருள்களை யுணர்த்தாது, வேதாந்த மெனப்பட்டு உபநிடதங்களிற் பொருள்பெறக் கிளந்தோதப்படும் ஞானத் தையே விரித்து விளக்குஞ் சிறப்பால் வேதாந்தசூத்திர மெனவும், ஆக்கியோன் பெயரால் வியாச சூத்திர மெனவும், ஆக்கியோன் பெயரால் வியாச சூத்திர மெனவும் வழங்கப்படும். இஃது யாது பயன்கருதி யியற்றப்பட்ட தோவெனின், மறையின் முன்பாகத்திற் கூறப்படும் கர்மத்தையே பிரமப் பொருளாக நிறுவித் தம் மாணாக்கராகிய ஜைமினியா லியற்றப்பட்ட சூத்திரப் பொருளை மறுத்து. அம்மறையின் பிற்பகுதியாகிய உபநிடதங்களிற் கூறப்படும் ஞானத்தை விளக்குதற் பொருட்டு இயற்றப்பட்டதாமென்பது. இங்ஙனம் கர்மத்தையே பிரமமாகக் கூறி எழுந்த ஜைமினி சூத்திரத்தையும், ஞானத்தையே பிரமமாகக் கூறி எழுந்த வேதாந்த சூத்திரத்தையும் உற்று நோக்குவார்க்கு, ஞானச்செயல் வடிவராகிய சிவபரஞ்சுடரின் மேலான ஆற்றல்களாகிய தொழிலை விளக்கவொன்றும், மெய்யறிவை விளக்க மற்றொன்றும் எழுந்தவுண்மை நன்கு விளங்கும். இதனாற் சிவபெருமானது தொழில் திறத்தை விளக்கம் ஜைமினி சூத்திரமும் ஞானத்திறத்தை விளக்கும் வேதாந்த சூத்திரமும இன்றியமையாதனவாம் என்பதூஉம், இவற்றுள்ளும் ஞானத் திறத்தை விளக்கும் வேதாந்த சூத்திரம் ஏனையதினும் மிகச் சிறந்ததாம் என்பதூஉம் பெறப்படும். ஏனைச் சூத்திரங்களாற் கூறப்படாததும், அச்சூத்திரப் பொருள்களினுந் தலைமையுற்று மக்களுக்கு உறுதி பயக்குஞ் சிறப்புடையதுமான ஞானத்தை விரித் துரைக்கும் வியாச சூத்திரமே வேதாந்த சூத்திரம் எனப் படுவதன்றி ஏனைய அப்பெயர்க்குரியவாதல் செல்லாமை யுணர்ந்து கொள்க. உபநிடதப் பொருளையே முதலாகக் கொண்டெழுந்து உண்மை ஞானத்தை யுள்வாறே யினிது விளக்கும் வேதாந்த சூத்திரத்தை எடுத்தோதுதல் ஔவையார்க்குக் குறிப்பு வேறுபடுவதன் றென்பதற்கு அவர் அதன் முதனூலாகிய திருநான் மறைமுடி வைக்கிளந்தோதலே சான்றாதல் காண்க. இனி, முனிமொழியும் என்பதில் முனி என்னுஞ் சொல்லுக்கு வியாதமுனி என்று பொருள் கோடல் யாங்ஙனம்? அகத்தியர் முதற் பிறரு முளராலோ வெனின்; - அன்றன்று, உலகமெல்லாம் ஒருங்குதிரண்டு பழிச்சும் பெருமையராயினும் அவர்க்கு வேத அகத்தியர் வேதவசிட்டர் வேதகௌதமர் எனப் பெயர் வழங்கக் கண்டிலம், வியாத முனிவரையே வேதவியாசர் வேத முனிவர் என்று வழங்கக் காண்டலானும், வேதத்தில் இவர்க்குள்ளவுரிமை வேறு பிறர்க்கிருப்பக் காணாமையானும், சைவ எல்லப்ப நாவலர் மிக்க வேதவியாசர் விளம்பிய எனவும், வில்லிபுத்தூரார் முனிராஜன் மபாரதஞ் சொன்ன நாள் எனவுங், கச்சியப்ப சிவாசாரியார், கரையறு வேதமாங் கடலை நான்கவாய்ப் பிரிநிலை யாக்கியே நிறுவு பெற்றியாற் புரைதவிர் முனிவரன் புகழ்வியா தனென் றொருபெயர் பெற்றன னுலகம் போற்றவே எனவுங் கூறுதலானும் முனி என்னுஞ் சொல்லுக்கு வியாதமுனிவர் என்று கோடலே பொருந்துவதாமன்றி வேறு கூறுதல் ஒருவாற்றானும் பொருந்தாதென் றொழிக. அல்லதூஉம், பரந்துகிடந்த வேதப்பொருளை யெல்லாம் ஒருங்கு திரட்டிப் பாகுபடுத்துதவிய அவ்வியாசரை, வேதமே ஸஹோவாசவ்யாஸ: பாராஸர்ய: என்னும் மொழியால், பராசரகுமாரராகிய வியாசர் பொய்சொல்லா தவரென் றினிது புகழ்ந்தோதுதலானும், கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் இவரை ஆல்வரு கடவுளை யனைய தன்மையான் என்றுரைத்தலானும் அங்ஙனம் பொருள் கோடலே ஔவையார்க்குக் கருத்தாமென்பது இனியேனு முணர்ந்து கொள்க. குணமென்னுங் குன்றேறி நின்றவிவ்வியாத முனிவர் இயற்றிய சூத்திரமும் அதன் முதனூலாகிய வேதாந்தமும் ஒரு நெறிப்பட்டுச் சைவ சித்தாந்தப் பொருளே போதிக்கு மென்பதனை விளக்கியவன்றே ஔவையார் அவற்றை ஏனைச் சைவநூல்களோ டொருங்கு தலைப்பெய்து ஒருவாசகமென்றுணர் என்று கூறுவாராயிற்றென்பது. இனி, வேதாந்த சூததிரம் மாயாவாதப் பொருளையே போதிக்கு மென்பார்க்கு, அவ்வேதாந்த சூத்திரத்தின் முதனூலாகிய உபநிடதங்களும் அப்பொருளையே போதிக்குமென் றுரைத்தல் வேண்டும். அதனையும் அவ்வாறுரைப்பவே, ஔவையார் பாகுபாட்டுணர்ச்சியின்றி, மாயாவாத நூல்களைச் சைவசித்தாந்த நூல்களோ டொப்பவைத் தோதினாரென்னுங் குற்றமுண்டாம். அல்லதூஉம், மாயாவாத நூல்களோ டொப்பவைத் தோதப்பட்ட தோவார திருவாசக முதலிய திருவாக்குகளும் மாயாவாத நூல்களேயாமென்று பெறப்பட்டுச் சைவசித்தாந்தப் பொருளெல்லாம் விட்டொழிக்கப் பட்டுப் போமன்றோ? இத்துணைக்குமிடஞ் செய்யும் அப்பொருள் ஈண்டைக்கு ஒரு சிறிதும் இயையுமாறில்லை. அற்றன்று. வேதாந்த சூத்திரம் மாயாவாதப் பொருளே நுதலுவ தென்பதற்குச் சங்கராச்சாரியர் அதன் கருத்தறிந்து கூறிய விழுமியவுரையே சான்றாமாலெனின்; அவர்க்கு முன் அதற்கங்ஙனமே சிறந்த வோருரை விரித்த நீலகண்ட சிவாசாரியார் உரைப் பொருள்பற்றி வேதாந்த சூத்திரப் பொருட்டுணிவு கோடு மென்பார்க்கு இறுக்கலாகாமையின் அது பொருந்தாது. அல்லதூஉம், நூலாசிரியர் கருத்தறிவதற்குச் சங்கரர் பாடியப் பொருளைக் கரவியாகக் கோடல் முற்றிலும் நீக்கத்தக்க போலியுரையாம். அல்லதூ உம், நீலகண்ட சிவாசாரியர் முதலான தொல்லாசிரியரால் உரை யெழுதப்படாத பத்து உபநிடதங்களுக்குச் சங்கரர் உரையெழுதியிருப்பதனால் மற்று அவ்வுரைப் பொருளையே கருவியாகக் கொண்டு ஆண்டும் மாயாவாதக் கருத்தையே யேற்றி, அவற்றையும் ஒழித்தல் வேண்டும். ஆதலால், நூலாசிரியர் கருத்தைத் துணிதற் பொருட்டுச் சங்கரர் பாடியப் பொருளையே கருவியாகக் கோடல் பல வழூஉக்களுஞ் செறிந்து மேன்மேற் கிளைத்தற்கேதுவாமென் றொழிக. இனி, சங்கரர் வேதாந்த சூத்திரக் கருத்தறிந்து உரை யெழுதினா ரென்றலும் பொருந்தாது; என்னை? நீலகண்டர், பண்டிதாராத்தியர், இராமாநுசர், ஆனந்த தீர்த்தர் முதலிய ஆசிரியரெல்லாரும் சூத்திரப் பொருளுரைக்கும்வழி ஒரவகையால் இணங்கிச் சொல்லும் பொருளும் ஒரு நெறிப்பட்டுச் செல்ல வுரைத்து, அஃதியாண்டும் சீவபரபேதங் களை விரித்து விளக்குவதென்றே வலியுறுத்துக் கூறுவாராக, இச்சங்கரர் தாமட்டும் அவரொடு முரணிச் சூத்திரப் பொருளைக் கிடந்தவாறெடுத்துத் தம்மதத்தோடு இணக்கி உரைக்க மாட்டாமையான், அச் சூத்திரங்களிற் சிலவற்றை அலைத்து ஈர்த்துப் பொருளுணர்த்தியும், சிலவற்றிற்குச் சொல்லும் பொருளம் மிக வருவித்துரைத்தும், சிலவற்றிற்கு கருத்துகள் கற்பித்தும், சிலவற்றிற்றிற்கு மாட்டுறுப்புப்பட நிகழ்த்திச் சொற்களைத் துணித்தியைத்துப் பொருள் கொண்டும், சிலவற்றிற்குச் சிறப்பில்லாத பொருளுரைத்தும் இவ்வாறெல்லாம் சூத்திரங்களை நலிந்து பொருள் சொல்லிப் பெரிதும் இடர்ப்பாடுறுவர். இங்ஙனமெல்லாம் இடர்ப்பட்டும் முயற்சியளவு பயன்பெறுதலின்றி மலைக்கல்லி யெலி பிடித்தவாறு போல சீவபரங்களை யபேதமென்று கூறி வாளாபோயினார். இன்னும் சங்கராச்சாரியர் தமது பாடியத்தின்கண்ணே அபரேது வாதிநா என மொழிந்து தாமுரைக்குஞ் சூத்திரவுரையோடு மாறுபடும் ஆசிரியர் பலருளரெனத் தாமே கிளந்து கூறுதலும், அவர்க்குப் பின் வேதாந்த சூத்திரவுரை கூறிய இராமாநுசர் தாமுரைப்பனவெல்லாம் முன்னை உரையாசிரியரான போதாயன தங்க திரமிட குகதேவ கபர்திந்பருசி முதலியோர் வழிப்பட்டன வென்றலும், அம்முன்னையுரையாசிரியருள்ளும் போதாயனர் சங்கராச்சாரியர்க்கு முன்னுரை கூறிய பூருவவாசிரியராதலால் அவருரைத்தவுரை வழியே யாமுரை எழுதுகின்றாம் என இராமாநுசர் பின்னும் வலியுறுத்தலும், அங்ஙனந் தொகுத்தோதப்பட்ட பழையவாசிரி யன்மாருள் திராவிடர் எனப்படுவோர் எல்லாவாசிரியர்க்கும் பழமையான வராய் வேதாந்த சூததிரவுரை கண்டருளிய தமிழ் முனிவராதலும் உணரும் வழிப் பின்னையுரையாசிரியரான சங்கருரைதான் வியாச சூத்திரக் கருத்தறிவிக்கும் மெய்யுரையெனத் துணிபு காட்டுதல் நல்லறிவு மாட்சியுடையார்க்குச் சிவணுவதன்றாம். முன்னே சொல்லப்பட்ட திராவிட ரென்னும் பழையவாசிரியர் வேதாந்த சூத்திரம் சைவசித்தாந்தப் பொருள் மெய்பெறக் கிளக்கும் அரியதொரு நூலாதல் கண்டு விழுப்பமுடைய மெய்யுரை யதற்குரைத்தருளினாராக, அதற்கிணங்காது அவரோடும் பிறவாசிரியன்மாரோடும் பெரிதும் முரணித் தமக்கு வேண்டியவாறே சூத்திரப் பொருளை நலிந்து புதுவதோருரை எழுதிய சங்கரர்மாட்டு வெகுட்சியும் இரக்கமுடையோராய் இராமாநுசர் முன்னையாசிரியருரைக்குப் பெரும்பான்மையும் பொருந்தத் தாமொரு நல்லுரை கண்டாரென்க. சங்கரருரை முன்னையாசிரியருரைக்கு இணங்குமாயின் இராமாநுசர் தாமொரு புத்துரை எழுத வேண்டிற்று இல்லையாம். அவ்வாறின்றி அவருரை சூத்திரக் கருத்தோடு பெரிதும் மாறுபட்டுக் கிடத்தலினன்றே தாமவருரையினை ஆண்டாண்டு மறுத்து வேறுரைவிடுவராயினார்? அது கிடக்க, சர்வான்மசம்பு சிவாசாரியார் சித்தாந்தப் பிரகாசிகையில் மாயாவாத நூல் செய்தவன் வியாதன் என்று கூறுதலும், வடமொழி தென்மொழி மாப்பெருங்கடல் நிலைகண்ட ஆசிரியர் - சிவ ஞான யோகிகளும் அவ்வாறே திராவிட மாபாடியத்தின்கண் உரைத்தலும் என்னையெனின்; - நன்று கடாயினாய், ஆண்டு மாயாவாதநூல் செய்தவன் வியாதனென்ற தன்றி வேதாந்த சூத்திரம் மாயாவாதம் போதிப்பதென்று அப்பெரியார் யாண்டும் ஓதாமையின் அவர்க்கது கருத்தன் றென்க. அது கருத்தாயின் ஆசிரியர் - சிவஞானயோகிகள் மறையினா லயனால் என்னுஞ் சித்தியார் செய்யுளுரையிலே அவ்வேதத்தைக் கருமகாண்டம் ஞானகாண்டமென் றிருவகைப் படுத்தெடுத்துக் கொண்டு அதன் பொருளை உறுதி செய்துரைக்கும் நூலாகிய பூருவமீமாஞ்சை உத்தரமீமாஞ்சைகளையும் என்னும் உரைக்கூற்றால் வேதத்தின் ஞானகாண்டப் பொருளைத் தெளித்துரைப்பது உத்தரமீமாஞ்சை யெனப்படும் வேதாந்த சூத்திரமென்ற லென்னையெனக் கடாவுவார்க்கு விடுக்கலாகாதென்பது. இனி அங்ஙனம் ஞானகாண்டப் பொருளை உறுதிசெய் துரைக்கும் உத்தரமீமாஞ்சை மாயாவாதம் நுதலுவதென்றே கொள்ளற்பாற்றெனின், அவ் வேதத்தின் ஞானகாண்டமும் அப்பொருளே பயப்பதென்று கோடற்கு இடஞ் செய்யுமாகலானும/ அங்ஙனங் கோடலும் ஆசிரியர் சிவஞான யோகிகள் கருத்தோடு பெரிது முரணுவதாகலானும் அவ்வாறு சொல்லுதல் அடாதென்றொழிக. அல்லதூஉம், வேதவியாதர் வேதாந்த சூத்திரம் ஒன்றே செய்தாராயின் மாயாவாதநூல் செய்தவன் வியாதன் என்றன் மாத்திரையானே அங்ஙனம் பொருள்கோடலாம். அவர் ஆன்மாக்கள் பக்குவத்தின் பொருட்டு இதிகாசங்கள், புராணங்கள் முதலாகப் பலதிறப்படும் நூல்களியற்றினா ராகலானும், அவற்றுள் இக்காலத்து வழக்கமின்றாய் இறந்துபட்டன பலவாதலானும் அங்ஙனந் துணிபொருள் கூறல் ஏதமாம் என மறுக்க மேலும், பாணினி முனிவர் தமது அட்டாத்தி யாயியின்கண் வியாதர் பிக்ஷூ சூத்திரங்கள் இயற்றினாரெனக் கூறுகின்றார். பிக்ஷுக்களெனப் படுவோர் பௌத்த சந்நியாசிகளாவர்; ஆகவே அவர்க்குரிய பௌத்த சமய நெறியினை விளக்கும் பொருட்டு எழுதப்பட்டன. பிக்குசூத்திரங் கள் என்று கோடலுமாம்; மாயாவாதம் பிரசின்ன பௌத்தமென வழங்கப்படு மாதலின், அங்ஙனம் நூல் செய்தமை நோக்கி மாயாவாத நூல் செய்தவன் வியாதன் என்று சொல்லப்பட்ட தென்று கோடலே பொருத்தமாமென்க. இன்னுங் கந்தபுராணம் இயற்றிய கச்சியப்ப சிவா சாரியார் இப்பெற்றியெல்லாம் இனிதுணர்ந்தன்றே ஏத்திடு சுருதிகளிசைக்கு மாண்பொருள், மாத்திரைப் படாவெனா மாசில் காட்சியர், பார்த்துணர் பான்மையாற் பலவகைப்படச், சூத்திரமானவுஞ் சொற்று வைகினான் என்று அதனியல்பு வரையறுத் தோதுவாராயினதூஉமென்க. இதனுள், சுருதிப் பொருள் உறுதி பெறாமல் பலரும் பலவகையாலுணருமாறு இடஞ்செய்து கிடந்தமையால், அஃதங்ஙனமாகாமை உண்மைப் பொருள் தெளித்தற் பொருட்டு அதனுண் பொருளெல்லாம் ஒரு பிண்டமாகத் திரட்டி வேதாந்த சூத்திரம் செய்தருளினாரெனவும் அது சீவ பரபேதங்களை விளக்கும் பல வகுப்புடையதாய்ப் பொலிவு பெற்றதென்றும் சொல்லப்பட்டவாறு காண்க; ஈண்டுப் பலவகை என்றது மறைமொழிபோற் றலைமயங்கிக் கிடவாமல் அது பல அத்தியாய வகுப்புடைத்தாய் நிற்றலை இங்ஙனம் பொருள் கொள்ளவறியாது பலவகைப்பட என்பதற்குப் பலசமயத்தாருந் தத்தமக்கிணங்கப் பல பொருள் கொள்ளு மாறு என்று பொருளுரைப்பார்க்குச் சுருதிப் பொருள் பஃறலைப்பட்டு மயங்கிக் கிடத்தலின் சூத்திர மியற்றுவாராயின ரென்னும் மேலை மொழிப் பொருளோடு அஃதியையாமை யானும், அச்சுருதிப் பொருளைப் போலவே மயக்கந்தருதற் கேதுவாகப் பின்னும் ஒரு நூலியற்றினாரென்றல் அவர் பெருமைக் கேலாமையானும் அன்றி அங்ஙன மியற்றுதலாற் போந்த பயன்றான் என்னையெனுங் கடா நிகழுமாதலானும் அது பொருந்தாதென மறுக்க. அது கருத்தாயிற் பல பொருள் என்று தெளியக் கூறுவார்மன். இங்ஙனமெல்லா நுணுகியாராக வல்லார்க்கு ஆசிரியர் சிவஞானயோகிகள் கருத்தினிது புலப்படுமாதலின், அவர் கருத்தறியாது கூறுவாருரைபற்றி ஈண்டைக்காவதோர் இழுக்கில்லை என்க. வேதாந்த சூத்திரத்தைச் சங்கரபாடியத்தோடும் ஆங்கிலேய பாடையில் மொழி பெயர்த்துரைத்துப் புகழ்பெறும் தீபாவென்னம் ஆங்கிலப் பெரும்புலவர் தமது முகவுரையில் சங்கரபாடியப் பொருள் வேதாந்த சூத்திரக் கருத்தோ டொருசிறிதும் இயையாமையை விரித்து விளக்கி, பின் அச்சூத்திரப் பொருளிவை யென்று விடுப்பனவெல்லாம் சித்தாந்த சைவப்பொருளோ டொற்றுமையுறுத லுணரவல்லார்க்கு யாமீண்டுரைப்பனவெல்லாம் வாய்மையேமென்ப தினிது விளங்கும். அல்லதூஉம், வேதாந்த சூத்திரம் சங்கரருரைப் பொருளோடியைந்து, சீவப்பிரமவாதத்தைக் கிளந்தோதும் வழியதெனிற் றொடங்குழியே அதாதோப்ரஹ்மஜிஜ்ஞாஸா என்றுரையாமல் அதாதோஜீ ஜீஜ்ஞாஸா என்ற மயக்கறக் கூறும்; அங்ஙனமின்றிப் பிரமப் பொருளையே யாராய்வதாக வெழுந்தமையால், அது மாயாவாதப் பொருளோ டொற்றுமையுறுதல் யாண்டைய தென்றொழிக. வேதாந்த சூத்திரம் மாயாவாதப் பொருளையே கருக்கொண்டு கிடத்தலின், அந்நுணுக்கமுணர்ந்து மாயாவாதப் பொருளே பயப்ப உரையெழுதிய சங்கராச்சாரியரை அதுபற்றி மாயாவாதியெனவைத் தெள்ளுத லமையாதாமெனவும், பிருகற்பதி உலகாயத நூலும், சுக்கிரன் மாயாவாத நூலுமியற்றியவாறு போலத் தாமும் ஓரோர்கோட்பாடு பற்றி யங்ஙனமுரை யெழுதினாரெனவும் திருநீறு அக்கமணியணிதல், திருவைந்தெழுத்தோதல், சிவபூசை முதலிய அருஞ்சைவநெறி மேற்கொண்டு சிவபுயங்கம், சிவானந்தலகரி, சௌந்தரியலகரி முதலிய பல வேறு வகைப்பட்ட சைவ நூல்களியற்றிச் சைவ சமயத்தை நிறீஇப் புறச்சமயநெறி கடிந்து விளங்கும் சைவப் பெரியாரெனவும் உரையாமோவெனின்; - உரையாமன்றே, வியாழ வெள்ளிகள் அங்ஙனம் உலகாயதநூலும், மாயாவாத நூலுமியற்றுதற்குக் காரணம் புராணங்களுரைப்பக் காண்டும், பிருகற்பதி இந்திரன் பொருட்டும் சுக்கிரன் சூரன் முதலாயினார் பொருட்டும் அவ்வாறியற்றினர். சங்கராச்சாரியர் எவர் பொருட்டு யாது காரணம் பற்றி மாயாவாதபாடிய மியற்றினாரெனக் கூறியிறுக்கலாகாமையுணர்க. உலகை மயக்குதற்பொருட் டஃதியற்றினாரெனின், அதனையொரு நூலாகத் தாமே இயற்றுவதல்லது. பிறிதொருவர்நூற்கு உரை யெழுதி அதனையம்முகத்தான் விளக்குதல் பெரிதும் இழுக்குடைத்தாய் முடியுமென்பது. உயர்ந்த பொருளையுயர்ந்த தோராற்றாற் றெரித்துணர்த்திய வேதவி யாதரை மாயாவாதியெனவும், அவ்வுயர்ந்த நூற்பொருளை இழிந்ததாகத் திரிதுணர்ந்து இழிந்ததோராற்றால் விளக்கிப் பெரியதொரு குற்றஞ் செய்த சங்கராச்சாரியரைச் சித்தாந்த சைவரெனயும் மயங்கி முறைபிறழ்ந் துரைத்தல் நியாயமன்றாம். ஆற்றாயினும், சங்கராச்சாரியர் மாயாவாத பாடிய முரைத்தது பற்றி, அவரை மாயாவாதியாகத் துணிதல் அமையாதாம் பிறவெனின்;- நன்று கடாயினாய், அவ்வுரைப் பொருளால் அவரை அம்மதவாதியாகத் துணியாதொழியின், வேறு அவர் தமது சித்தாந்த சைவ மரபு தெற்றென விளங்கவெழுதிய நூல் யாதோவெனவும், அத்தகைய நூலொன்றுள் வழி அதனால் அவர் சித்தாந்த சைவரென்பது இனிது துணியப்படுமன்றே யெனவுங் கடாநிகழ்ந்துழி அதனை விடுத்தல் வேண்டும். அங்ஙனம் விடுதற்குக் கருவியாய் அவராற் றனிமுதலாய் விரிவாகவாதல் சுருங்கவாத லெழுதப்பட்ட நூலொன் றின்மையின் அவரை யங்ஙனஞ் சித்தாந்த சைவரென்றல் அடாதென்றொழிக. அற்றேலஃதாக, இனிச் சிவ புஜங்க முதலிய சைவநலந் திகழும் அரிய நூல்களியற்றினாராலெனின்;- அதுவும் பொருந்தாமை காட்டுதும். அவர் அப்பெற்றியவாஞ் சைவகிரந்தங்களியற்றியவாறு போலவே, விஷ்ணு புஜங்கம்-பஜகோவிந்த சுலோக முதலிய நூல்களுமியற்றி, மற்றிவ் விருவகை நூல்களையும் விவகாரத்திற் சத்தியமெனக்கொண்டு மேலாம் வழிக்குப் பொய்ப் பொருள்களாமென் றொழித்தலானும், அவர் வழியொழுகும் ஏனைமாயாவா திகளும் திருநீறு சிவமணி திருவைந்தெழுந்து சிவபூசை முதலியவைகளையும், வெள்ளை மண் கோபீ சந்தனம் துளசிக்கட்டையணி திருவெட்டெழுத்து திருமால் வழிபாடு முதலியவைகளையும் ஒத்து நோக்கிக் கடைப்பிடித்து, மற்றிக் கடைப்பிடிப்பையும் பெருநெறியில் பொய்ப் பொருள் களாமென்று கழித்தலானும், சங்கராச்சாரியரைச் சைவரெனத் துணிவமென்பார்க்கு அஃதியாம் அவ்விவ்வேதுக்களால் வைணவ ரெனத் துணிதுமென்பாரை நீக்கா மறுதலைப்பொருளை யுடன் கொண்டுவரும் ஏதுப் போலியாய் முடிதலானும், அவர் வழிமுறையில் வருவாரெல்லாரும் மாயாவாதிகளாகவே யிருப்பக் காண்டலன்றி, வேறு பிறராகக் காணாமையானும் அவரைச் சைவரென்று கூறுதல் போலியென்றொழிக. வெளுத்ததெல்லாம் பால், கறுத்ததெல்லாந் தண்ணீர் என்றுணருந் தமக்கென வொன்றிலாரைப் போல், மாயா வாதிகளிடும் புறக்கோல அளவால் மயங்கிச் சங்கராச் சாரியரைச் சைவரெனக் கூற லுண்மை முறைதிறம்பு முரையாம். மாயாவாதிகள் படிற்றொழுக்கத்தை நன்றுணர்ந்த எம்மாசிரியர் உயர்திரு நாயகரவர்கள் உத்தம வாததூலவாதூல த்தில் ஏதுவெனுஞ் சொல்லு மெழினான்மறைகூறு, மீசனெனுஞ் சொல்லு மினிதொன்றாப் - பேசவுனக் கென்னோ கெடுமதி தான் என்றிழித்துக் கூறுதலானும் இவ்வுண்மை கடைப்பிடிக்க, அன்னோர்க்கு ஈசன் - விஷ்ணு - ஏசு - அல்லாவெனுஞ் சொற்கள் ஒரு பொருளவாமென்றுணர்க. இனி முனிமொழியும் என்பதில் முனி என்னுஞ் சொல்லுக்கு வாதவூர் முனிவர் என்று பொருள் கோடல் ஈண்டைக்கேலா தென்பதூஉஞ் சிறிது காட்டுதும், சொற்சுருங்கிய வாய்பாட்டானோதிப் பொருள் விளக்குவான் புகுந்த ஔவையார் இயற்பெயரானும், அவ்வியற் பெயர் போலத் தாங்கருதிய பொருளை இனிது விளக்குஞ் சிறப்புப் பெயரானும் தேவர் குறள் நான்மறை மூவர் தமிழ் முனிமொழி கோவை திருவாசகம் திருமூலர் சொல் எனத் தெளிய வெடுத் தோதினார். இவற்றுள், தேவர்குறள் மூவர் தமிழ் தொகைகளில் எனுந் தேவர் மூவர் என்னும் அடைமொழிகள் வழக்குப் பயிற்சியாற்றிரு வள்ளுவரையும், திருஞானசம்பந்த சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதலாயினோரையும் நிரலே குறித்து நின்றன. இனி, வாதவூரடிகளைப் பேராசிரியர் திருவாதவூர் மகிழ் செழுமறை முனிவர் என்று சுட்டியோதுதலின் அவரையே ஔவையார் முனி என்றாரெனின்; - அற்றன்று, அருகிய வழக்கா யாண்டேனு மோரிடத்து ஒரு காரணம்பற்றி அச்சொல் அவ்வாறு பயன்படுத்தப்படுவதன்றித் திருவாதவூரடிகள், மாணிக்க வாசக சுவாமிகள் என்பனபோற் பரவைவழக்காய் நிகழ்வதின்மையானும், சிறப்புப் பெயராற் றாங்குறித்த பொருளைச் செறித்து விளக்குவான் புகுந்த ஔவையார்க்கு அம்முறைதவறி யருகிய சொல்லாற் கூறுதலிழுக் காய் முடிதலானுமென்பது. அல்லதூஉம் வாதவூரடிகளுக்கு மட்டும் முனி என்னுஞ் சொல் வழங்குவதாயின், அங்ஙனம் பொருள்கோடல் சிறுபான்மை பொருந்தும். முலையமுத முண்ட முனி வாகீதமுனி வன்றொண்டமுனி என வேறு பிறர்க்கும் அப்பெயர் வேறு வேறு நூல்களில் வழங்கக் காண்டலின் அதுவுமமையாது. இதுவன்றியும், ஔவையார் எடுத்தோதிய இத்திருவெண்பாவில் வேதவியாதமுனிவரைத் தவிர வேறு முனிவரிலர். அல்லதூஉம், திருவள்ளுவ முனிவர், சம்பந்த முனிவர், திருநாவுக்கரசு முனிவர், திருமூல முனிவர் என்று சைவ சித்தாந்திகள் தம்முள் வழங்குவதுஞ் செய்யார்; அது தமது வழக்கமான பெயர்களொடு மாறுகொள்ளுமாதலின், அற்றேல், அப்பர் சுவாமிகளை வாகீச முனிவர் என்று வழங்குதலென்னை யெனின், அஃதவர் பழம்பிறப்புச் சிறப்புப் பற்றி யவ்வாறு வழங்கப்படுவதாகலின் அவ்வாறு வினாதல் கடாவன்றென மறுக்க. இனி முனி என்னுஞ் சொல்வழக்குச் சடகோபமுனி, மணவாளமாமுனி, வரவரமுனி, நாத முனி முதலியவாக வைணவர் குழுவில் மிக்குநிகழக் காண்டலின், இச்சொல்லை திருவாதவூர்ப் பெருமானிடமேற்றிக் கூறுதலாற் போந்த சிறப்பென்னையெனக் கடாவி மறுக்க. சைவசமயிகள் வைணவப் பெரியோரை முனியென்று கூற வொருட்படார். வைணவரும் சைவப்பெரியாரை முனிவர் என்று கூறுர். பாரிசேடத்தாற் சைவரும் வைணவரும், மாயாவாதி களும், பிறரும் வேதவியாசரை வேதவியாச முனிவர் என்றே வழங்குப. இங்ஙனம், முனியென்னுஞ் சொல்வழக்கு வாதவூரடி களுக்குப் பெயராய்ப் பரவைவழக்கிற் பயிலக் காணாமையானும், அது வியாதருக்கே யவ்வழக்காய் நிகழ்வதானும் முனிமொழி என்பதற்கு வாதவூர் முனிவர்சொல் எனப் பொருளுரைப்பார் கூற்று வெறும்போலியே யாமென்றுணர்ந்து கொள்க. அல்லதூஉம், தேவர் குறள் மூவர் தமிழ் திருமூலர் சொல் என முன்னும் பின்னுமெல்லாம் செய்யுட் கிழமைக்கண் வந்த ஆறாம் வேற்றுமைத் தொகைப்பட வுரைத்து முனிமொழியுங் கோவைதிருவாசகம் என்புழிமட்டும் பெயரெச்சத் தொடராக வைத்துக் கூறுதல் நியமமுறை பிறழ்ந்தொழிதலென்னும் வழூஉக்கிடனாய், இதனை எண்ணுப் பொருட்டாக வைத்தாரோ, பெயரெச்சப் பொருட்டாக வைத்தாரோவென்று ஐயுறுதற் கேதுவாய் முடிதலினங்ஙனங் கூறுதல் ஒருவாற்றானும் பொருந்தாதாமென மறுக்க. செய்யுள் செய்வார்க்குத் தாங்கொண்ட வழக்குமுறை பிறழ்தல் வழுவாமென்பது ஆசிரியர் சிவஞான யோகிகள் சூறாவளியில் ஆங்காங்குக் கூறுமாற்றானுமுணர்க. அல்லதூஉம் தேவர்குறள் மூவர் தமிழ் திருமூலர் சொல் என்புழியெல்லாஞ் சொற்சுருங்கவுரைத்து, ஈண்டுமட்டும் முனிமொழியும் எனக்கூறுதல் சொற்பல்குதல் என்னுங் குற்றத்திற் கிடமாதலானும் அங்ஙனம் பொருள் கூறலாகாமையுணர்க. அல்லதூஉம், நிரல்படக் கோத்தெண்ணிச் சொல்லு நெறிக்கிடையே, ஒன்றைனைப் பெயரெச்சமாக வைத்துரைத்தல் கட்டுரைச்சுவை குன்றுமாறு அஃகிய செவிப் புலனுடையார்க்கெல்லாம் இனிது புலனாம். நன்று சொன்னீர். நீருநிலனு நிலம் பொதியு நெற்கட்டும் என்புழி ஔவையார் தாமே நீரும், நிலனும், நெற்கட்டும் என்றெண்ணிச் செல்லுதற்கண் இடையே பொதியும் என்பதனைப் பெயரெச்சமாக வைத்து நெற்கட்டைச் சிறப்பித்தல் தெற்றெனக் காண்டு மாகலின் அவர் எண்ணு நியமம் பிறழாரென நியதி கூறுதல் பொருத்தமின்றாமெனின்; அதன் நுட்பந் தேறாது கடாயினாய்; முன்னே சிலவற்றை எண்ணி வாளாதொழிதலுமென எண்ணு நியமமிரண்டாம் அவற்றுள் முன் எண்ணிப் பின் தொகைகொடுத்து முடிப்பதன்கண் இடையே பிளவுபடுத்து முறை பிறழ வேறு உம்மை தலைப்பெய்து நல்லிசைப் புலவர் யாண்டுமோதார். பின் தொகை கொடாது கூறும் எண்ணும்மை மொழியின்கண் அம்முறை பிறழ்தலா லிழுக்கில்லாமையின் வேண்டியவாறே வேறுவே றும்மையும் இடையிட்டு மொழிவர். இங்ஙனமே ஔவையார் தேவர் குறள் முதலியனவற்றை நெறிப்பட வெண்ணிப்பின் ஒரு வாசகம் என்னுந் தொகை கொடுத்து முடிக்கின்றாகலின் வேண்டியவாறே வேறுவே றும்மையும் இடையிட்டு மொழிவர். இங்ஙனமே ஔவையார் தேவர் குறள் முதலியவற்றை நெறிப்பட வெண்ணிப் பின் ஒருவாசகம் எண்ணுந் தொகை கொடுத்து முடிக்கின்றாராகலின் இடையே வேறும்மை தலைப்பெய்து கூறார்! நீருநிலனும் என்புழிப் பின்றொகுத் தோதுதலின்றி வாளாவெண்ணிப் போதலி;ன ஆண்டிடையே வேறும்மை தலைப்பெய்தல் பற்றி முறை பிறழ்ந்தாரெனல் இல்லையாம். ஆகவே, அச்செய்யு ளெண்ணு முறைப் பற்றித் தேவர் குறளும் என்னுந் செய்யுளின் கண்யாங் கண்டு கூறிய முறை பிறழ்ந்து வழுவாமாறில்லை யென்றொழிக.. இனி, சங்கரர் எழுதிய பாடியவுரை, இவ்வுலகின் பொய்ம்மை யுணர்ந்து அதன்கண் வெறுப்பெய்தித் துறவறநெறியிற் சேறற்கேதுவாம் வலிவு தோன்ற நுட்பப் பொருள்தேற்றும் நலப்பாடுடையதாய் அஃதறி வுடை யார்க்கெல்லாம் இன்றியமையாச் சிறப்பினையுடைய நிதிய மாய்ப் பயன்படற்பாலதாகலின் அது வேதாந்த சூத்திரத்திற்கியையாத் திரிபுரையென அங்ஙனம் வைத்திகழ் நிகழ் தலமையாதெனின் - நன்று சொன்னாய், பிரமத்தை யொழித்தொழிந்தன வெல்லாம் பொய் யென்னும் அவருரை தேறுவார்க்கெல்லாம் தாமே பிரமமென்னும் அவருரை தேறு வார்க்கெல்லாம் தாமே பிரமமென்னும் உணர்வு தோன்றி ஆணவமிகுத லானும், அவ்வுணர்வால் அவர் நல்லது தீயது பகுத்துணரமாட்டாமல் தாம் வேண்டியவாறெல்லாம் உலகிற்கு இடர்பயப்ப ராதலானும் அவ்வாறு சொல்லுதல் பொருந்துமாறில்லை. இது கிடக்க. இனி முனிமொழியும் என்பதில் மொழியும் எனுஞ் சொல்லை நடுவுநிலைத் தீவகமாக வைத்து ஒவ்வொன்றோடுங் கூட்டியுரைத்துக் கோடற்பாற்றென்றலும் பொருந்தாமை காட்டுதும், தேவர் மொழியுங் குறள் மூவர் மொழியுந்தமிழ் திருமூலர் மொழியுஞ் சொல் எனக் கூட்டியுரைத்தல்போலத் திருநான் மறைமுடிவு என்புழியும் அவ்வாறு கூட்டிப் பொருளுரைத்தல் வேண்டும். அவ்வாறியைத்துப் பொருள் கோடலாகாமையின் மொழியும் எனுஞ் சொல் ஆண்டு நின்று பொருள் வற்றும். அதுவேயுமன்றித் திருமூலர் மொழியுஞ் சொல் எனவுரைக்கும்வழி மொழியும் என்பதுஞ் சொல்லும் என்னும் பொருளே பயப்ப சொல் என்பதும் சொல் என்னும் பொருளே பயப்பச் வொரு பயனுமின்றி யொருபொருண்மே லிரண்டு சொல் வந்தனவெனப் படுமாகலின் அதுவும் போலியாமென் றொழிக. என்றித் துணையுங் கூறியவாற்றால், முனிமொழியும் என்பதற்கு வேதாந்த சூத்திரம் எனப் பொருளுரைத்தல் ஔவையார் குறிப்பொடு படுத்துக்கொள்ளப் படுவதாமென்பதூஉம், முனி என்னுஞ் சொல்லுக்கீண்டு வேதவியாத முனிவர் என்று கொள்வதே யன்றிப் பிறவாறு கூறுதல் வழூஉப்படுமென்பதூஉம் வேதாந்த சூத்திரம் மாயாவாதப் பொருளே போதிக்குமென்பார்க்கு உபநிடத முதலிய வெல்லாக் கலைகளையும் அவ்வாறு கூறவேண்டுதலின் அது வெறுங் கூற்றே யாமென்பதூஉம், சங்கரர் வேதாந்த சூத்திரக் கருத்தறிந்துரை யெழுதினாரென்றல் தொல்லைமரபு மாறுபாடாமென்பதூஉம், சங்கரர் சைவசித்தாந்தப் பெரியரென்றல் உலக வழக்கொடும் புலனெறி வழக்கொடும் மாறுகொள்ளுதலின் அது கொள்ளற்பாற்றன்றென்பதூஉம், முனி மொழியும் என்பதில் முனி என்னுஞ் சொல்லுக்கு வாதவூர் முனிவர் என வுரை விரித்தல் மூவகைப் பொருளில் ஒன்றுமாவான் செல்லாதென்பதூஉம், சங்கரர் பாடியப் பொருளுணர்ச்சி யுலகின்கண் உவர்ப்புணர்ச்சி தோன்றித் துறவற நெறியிற் சேறற் கேதுவா மென்றல் சைவ சித்தாந்தப் பொருளொடு பிணங்குமேனைச் சமயத்தார் கூறும் ஆரவார வுரைகளாதலின் அவை ஈண்டைக்கேலாவென்பதூஉம், மொழியும் என்பதனை நடுவுநிலைத் தீவகமாக வைத்துப் பொருள் சொல்லுதல் ஏலாதென்பதூஉம் இனிது விளக்கப்பட்டன வென்க. முனிமொழிப் பிரகாசிகை - முற்றும் - தமிழ்த் திருவாளர் மறைமலை அடிகளாரின் வாழ்க்கை அ. கனகராயர் தமிழ்த்திருவும் மறைத்திருவும் ஒருங்கே அமையப்பெற்ற மாண்புமிக்க பேராசிரியர் மறைமலையடிகள் இன்றும் நம் மனக் கண்ணில் இருந்து ஆரா அமுதமாய், அருளுருவாய்க் காட்சியளித்து வருகின்றார். அவர்தம் உடலும் மறைந்தது. உண்மைத் தமிழ் உறவும் உயர் குறிக்கோள்களும் ஒப்புயர்வற்ற ஒழுக்க நிலையும் இங்கு மறைந்தில. அடிகளாரை நான் பல்லாண்டுகளாக நன்கு அறிவேன். அவர்தம் திருவாயிலிருந்து தோன்றும் ஒவ்வொரு சொல்லும் தமிழ்ப் பண்பையும் தமிழ்க் கண்ணோட்டத்தையும் என்றும் குன்றா எழில்மிக்க தமிழின் சுவையையும் ஆடியின் நிழலில் அறியத் தோன்றுமாறு தெள்ளிதின் எடுத்துக் காட்டும். இளமை முதல் முதுமை வரையில் தமிழர் வாழ்விற்கு அடிகோலியவர் அடிகள். அடிகளின் உருவத்தோற்றம் யாவரையும் பிணிக்க வல்லது. பெருந் திருவாளராய் மறைமலை யாய்ப் பிறங்கி, மெல்லிய இனிய குரலில் சொற்பொழிவு செய்து தமிழ் உலகை உய்வித்தவர் அடிகளாவார் என்பதும் யான் சொல்லாமலே போதரும். தொன்னூற் கடலைக் கரைகண்டு, மற்றும் பன்னூற்டலையும் வாய்மடுத்து, செந்தமிழும் சைவத் திருநெறியும் ஓம்புவான் வேண்டித் தன்னலம் பாராத்தளரா ஊக்கத்துடன் உழைத்தவர் நமது அடிகளாவர். அன்புக் கோயிலே அவர் உள்ளம்; அறிவுச் சுடரே அவர் உயிர்ப்பு; நண்புக்கோர் அணியாய்த் தம் மக்களையும் ஒக்கலையும் தூய பைந்தமிழ்ச் சுவையை நுகரும்படி செய்து வழி காட்டியவர் நம் அடிகளார். பொழுது புலர்ந்ததும் அடிகளாரிடம் குடிகொண்டிருந்த தூய ஒழுக்க முறைகள் தமிழ் மாணவர்கட்கு ஒரு தனி விருந்தாம். வைதாரையும் வாழ்விக்கும் திறனும், பகைவர், நண்பர், நொதுமலாளர் ஆய முத்திறத்தவரிடத்தும் பழகும் பண்பும், தமிழன் உற்ற இடர்களைக் களையும் அருட் கடலும், ஆவர் அடிகள். உரை நடை என்ன, விரிவுரை என்ன, ஒளிவிளங்கும் செய்தித் தாள்களிலுள்ள பொருள் நுட்பங்களென்ன, கலை நுட்பங்கள் என்ன, எந்நாட்டவரும் ஏற்றுக்கொள்ளும் பொது நோக்கு அமைந்த புதுக் கருத்துக்களென்ன, இவை போன்ற பிறவெல்லாம் அடிகளாரைத் தாமே தேடி வந்தடையும். ஆராய்ச்சி நூற்களின் அழகும், நேர்மையும், அமைவும், நுணுக்கமும் அடிகளாரின் நூலாராய்ச்சித் திறனை நுணுக்கமாகக் காட்டும் அடிகள் ஒரு கலைக் களஞ்சியம்! ஒரு கலங்கரை விளக்கம்! ஒரு திருநெறி மாமலை! தாமே தோன்றிய ஒரு தனி இளஞாயிறு! அடிகளாருடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்பவர் உறவினர் மட்டுமல்லர், புறவினத்தாரும்! புலவர் மட்டுமல்லர், புரவலரும்! இங்ஙனம் எல்லோர்க்கும் நல்லராய், மாமுது குரவராய், தமிழ் மொழியின் மாண்பு மறைய இருந்த நேரத்தில் தமது உடல், பொருள், ஆவிகளைப் பொருட்படுத்தாமல் அதனை உயர்நிக்கு ஊக்கித் தாழாது ஒளிரும் நந்தா விளக்கெனத் தமிழகத்தில் சீர்மை செய்தவர் நம் அடிகளே ஆவர். திருநெறித் தமிழ் ஓதுவதையே தமக்குப் பொழுது போக்காகக் கொண்டு வாழ்க்கைத் தரத்தை வளமுடன் உயர்த்திக் கொண்டவர் அடிகளேயாவர். தம் மக்களுக்கும் மற்றுமுள்ள அன்பர்கட்கும் நற்றமிழ் மொழியையே வழக்கத்திலும் வழங்கவேண்டுமென்று வற்புறுத்தியவர். வகுப்பு வேற்றுமை, மதப்பூசல், சமயக் காழ்ப்பு முதலியவைகளை அறவே வெறுப்பவர். கண்டென இனிக்கும் கனிந்த குரலினராய், நல்லறிஞர் குழுமியுள்ள நல்லதொரு அவை வரவேற்கும் ஞாயிறாய், பசுமை படர்ந்த செம்மேனியராய், தமிழ் மணங்கமழும் பேச்சாளராய், கண்டோர் பிணிக்கும் கவின் ஒழுகும் திருமுகத்தினராய், உலகளந்த பெருமானைப் போல் உயர்ந்த தமிழ்த் தோன்றலாய், நிலவியவர் நம் அடிகள். அடிகளாரின் மாசற்ற தொண்டு இன்றும் ஒரு மலையாகப் பொலிகின்றது. புதுமைத் தமிழ் உலகிற்குப் புத்துயிர் அளித்தவர். நமது மறைமலை அடிகளாவர். கடிதங்கள் தீட்டி, அவற்றின் வாயிலாகக் கன்னித் தமிழ்ச் சுவை உண்பிப்பவர் அடிகளாவர். செய்தித் தாள்களின் வாயிலாகச் செந்தமிழ்ச் சிறப்பை ஓதுவார் நம் அடிகள். பொருள் பொதிந்த அகல உரைகளின் வாயிலாகத் தமிழ் அழகைக்காட்டுவார் அடிகளார். புதுப்புது ஆராய்ச்சி களினால் பழந்தமிழர் வாழ்ககையை நிலைநிறுத்தியவர் அடிகள். அடிகள் உண்பதும் தமிழ் உணவே! புலால் என்னும் சொல்லைக் கேட்ட அளவிலே நெஞ்சு புழுங்குபவர். கொலை நோக்கமாகிய புலை நோக்கைக் கனவிலுங் கருதாதவர். தன்மானம் என்னும் போர்வையால் தம்மை மூடிக் காத்துக் கொண்டிருப்பவர் அடிகள். அடிகள் எழுத்தில் உயிர் நெளியும்; அழகு பழகும்; அன்பு தவழும்; அருள்நெறி குலவும்; பொருள்நலம் காணும்; வாய்மை விளங்கும்; தூய்மை ஒளிரும். முற்றுந் துறந்த முனிவர்கள் கையாண்ட ஒழுக்க முறைகளால் நூறு ஆண்டு எப்பொழுதும் இளமையோடு உலகில் உலாவலாம் என்பதையும் இவர் இயற்றியுள்ள மக்கள் நூறாண்டு உயிர் வாழ்வது எப்படி? என்னும் நூலிலிருந்து அறிந்துகொள்ளலாம். அன்றியும் உணவு அளவு, அது உண்ணும் நேரம், உணவின் கொழுமை, உழைப்பு இவற்றின் இயல்புகளும் தெள்ளிதின் இந்நூலகத்தே விளக்கப்பட்டுள்ளன. உழுவார்க்கு வேண்டும் கருவிப் பொருள்களும், உடல் உரமும், உயர் நலமும், இன்ப வாழ்வும், பிறவும் இதில் அங்கைக் கனியெனக் காணப்படுகின்றன. உயிர் நூல், உடல் நூல், உள நூல், தரை நூல் முதலிய பலவகை நூல்களையும் அடிகள் நுணுகி ஆராய்ந்துள்ளனர். உழைத்த உடம்பிற்கு உறக்கம் ஓர் இயற்கை மருந்து என்றும் கூறுகிறார். பச்சிலை மருந்து முதலிய வற்றால் உடல்நலம் பெறாத உடம்பு தூய உணவாலும், உறக்கத்தாலும், நல்ல பழக்க வழக்கங்களினாலும் மேன்மையுறுமென்று கூறுகின்றார். திருக்கோயில் வழிபாடுகளைத் தொகுத்தும், வகுத்தும், வழிநிலை பிறழாது தெரியவைத்தும் இருக்கின்றார். அருளெனும் குழவிக்கு அன்பு தாயாக நிலவுகிறது என்கிற திருக்குறள் உண்மையைச் சிவநெறியில் காணலாம் என்பது அடிகள் கருத்து. முழு முதற் கடவுள் ஒன்று உண்டு. அதுவே சிவம் என்கிறார். அமைதியே குடிகொண்ட அருள்நெறி வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்று இசைக்கின்றார். தமிழர் கொள்கைகளையும் பழந் தமிழரின் போக்குகளையும் தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார். இவைபோன்ற பல அரிய உண்மைகள் இவருடைய நூல்கள் வாயிலாக அறியக் கிடக்கின்றன. அவற்றை எல்லாம் அறிஞர் கண்டு தெளிக. என்பும் உருகும் இசை பாடும் பண்புடையவர் இவர். இல்லறத் துறவியாகத் தம் இல்லின்கண் வீற்றிருந்து நல்லறம் புரிந்த நற்றமிழ் நாவலர் இவர். தமிழ்ப்பாலொடு எந்த நஞ்சையும் கலவாது தமிழ்க் குழவிகளுக்கு ஊட்டியவர். இவரது தூய செந்தமிழ் உரைநடையைக் கண்டு சீறுவார் ஒரு சாரார். மறுப்புக் கூறுவார் மற்றொரு சாரார். சுவையற்ற தென்று விளம்புவார் பிறிதொரு சாரார். இப்படிப்பட்ட கொடுமையாளர்களை எல்லாம் அறக்களைந்து தமிழ் அறத்தை உணர்ந்து முயற்சியிலும் முன்னேற்றத்திலும் முனைந்துநின்று தொண்டாற்றியவர் இவர். வருந்தி வருவார்க்கு விருந்துவைத்துப் போற்றுவார் அடிகள். அவர்தம் குறையைத் தம்மாலியன்ற வரையும் போக்குவார். அன்பினால் அகங் குழைவார். தமிழுலகு தனி உலகாய்த் தமிழர்க்கும் பிறர்க்கும் வாழ்வு காட்டப் பாடுபட்டவர். மேல்நாட்டுப் பேரறிஞர்களும் கண்டு வியக்கும் முறையில் வியத்தகு நூல்களை எழுதி வெளியிட்டவர் அடிகள். ஆங்கில மொழியிலும் அறிவு நிரம்பப் பெற்றவர். அம்மொழியில் பல கட்டுரைகளும், வரலாறுகளும் எழுதியுள்ளார்கள். நம் அடிகளார் சிவனையே உன்னிக்கொண்டிருக்கும் உள்ளம் படைத்தவர்; மரபு நெறி தவறாது; மாசு படியாது சைவ உலகத்தைத் தளிர்ப்பித்தவர்; காய்தலும் உவத்தலுமின்றித் தம் வாழ்க்கையை நடுநிலையில் நின்று கழித்தவர்; உடற்பயிற்சி முதலியவற்றை அதற்கு உறுதுணையாகக் கொண்டவர். மாதர் உலகமும் செம்மை நெறியுணர்ந்து வெம்மை அகற்றித் தமிழர்க்கு ஆக்கம் தேட வழி காட்டியவர். இவரது தமிழ் நூல்களில் தலைசிறந்தனவாய் இலங்குவன. `அறிவுரைக் கொத்து, `முல்லைப்பாட்டு ஆராய்ச்சி, `பட்டினப் பாலை, `கோகிலாம்பாள் கடிதங்கள் முதலியனவாம். பொதுவாகக் கூறுங்கால் இவர் அளப்பரிய பெரும் புலவர். கலையின் உயிர்நாடியை உணர்ந்த ஒரு தமிழ் மருத்துவராகத் திகழ்நதார் நம் அடிகளார். கன்னெஞ்சும், வன்னெஞ்சும், இரும்பினால் ஏயந்த நெஞ்சும் படைத்த தமிழ்ப் பகைவராகிய கோளரவுகளுக்கு ஓர் இடியேறாக விளங்கியவர் நம் அடிகள். தம்மிடம் எவரேனும் வந்து சில ஐயுறவுகளை வினவினால் அடிகளார் மனச் சோர்வின்றி அவர் கேட்ட வினாக்களுக்கெல்லாம் விடையளித்துக் கொண்டே தம் உணவு நேரத்தையும் பொருட்படுத்தாது சீரிய வீறிய திருத்தொண்டு புரிவார். இம்மட்டோ! இன்னும் எத்துணையோ ஆற்றல்களெல்லாம் இவரிடம் குடிகொண்டிருந்தன. அவற்றை யெல்லாம் இங்கு விரித்துரைக்கில் இஃது ஒரு பெரிய நூலாக விரியும் என அஞ்சி இம்மட்டோடு இதனை யான் முடிட்துக்கொள்கின்றேன். அடிகள் முதலில் நாகையை விட்டுச் சென்னை வந்த பின் அடிகட்குத் திரு.வி.க அவர்களும், அவர்கள் குடும்பமும் மிகவும் உதவி செய்ததாக அடிகள் வாயிலாகவே கேட்டுள்ளேன். இறுதியில் உடனிருந்து உதவியோர், திரு.என். ஆடலரசு அவர்களும், சைதைத் திருவள்ளுவர் செந்தமிழ்ச் சிவநெறிக் கழகத்தாருமாவர். தமிழரிடம் வேண்டும் தலையாய பண்புகளில் ஒன்றாய நன்றி மறவாமை என்பது இவரது குருதியில் கலந்து நின்றது. ஓர் எடுத்துக்காட்டால் இதனை உலகோர்க்குக் காட்ட அடியேன் விழைகின்றேன். அடிகள் உயிர் துறக்கும் நேரத்தில் எழுதியுள்ள வாழ்க்கை உரிமைக் குறிப்பு ஏடு ஆகிய உயிலில் அடியேற்கு ஓர் ஆயிரம் வெள்ளிகள் அளிக்கவேண்டுமென்றும், அடிகள் தம்மால் இயற்றப்பெற்ற நூல்கள் நான்கும் அடியேற்கு அளிக்க வேண்டுமென்றும் குறித்துள்ளார். இவ்வண்ணம் எந்நேரமும் உயிர் ஓம்பலும், உடல் ஓம்பலும், தமிழ் ஓம்பலும் செய்து வருங்கால உலகிற்கு வழி காட்டியாய், கற்றவரும் மற்றவரும் வியக்கும் ஒரு நல்ல தமிழாசிரியராய் அடிகளார் விலைமதிக்க முடியாத தொண்டு செய்துவிட்டுத் தமிழ் நாட்டினர் செய்த தவப்பயன் குறைவால் நம்மைத் தனித்தேங்கவிட்டு உம்பர் உலகு உற்றனர். உறுக அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நீழலில்! வாழ்க தமிழகம்! வெல்க தமிழ்! அடிகளாரின் அன்றாட நிகழ்ச்சி முறை 6 மணி முதல் 7 மணிவரை 1. கடவுளை வணங்கிக்கொண்டே காலையில் துயிலெழுதல், பின்னர்த் தேவார திருவாசகப் பாடல்களைப் பாடிக்கொண்டே தாமே மாளிகையின் சன்னல்களைத் திறந்து கண்ணாடிக் கதவுகளைத் துணியால் தட்டித் தூய்மை செய்தல். 7 மணிமுதல் 8 மணிவரை 2. தோட்டத்தைச் சுற்றிக்கொண்டே உலவுதல், பல் துலக்குதல். 8 மணிமுதல் 8.30 மணிவரை 3. நீரேற்றி (Enama) கொண்டு மலக்குடலைத் துப்புரவு செய்தல். 8.30 மணிமுதல் 9 மணிவரை 4. சிறிது வெப்பமான நீரில் குளித்தல், தோய்த்துலர்ந்த துணிகளை உடுத்தல். 9 மணிமுதல் 9-30 மணிவரை 5. நாள்தோறும் உட்கொள்ளும் உப்பினை (Efforsol) உட்கொள்ளுதல், உடல் நலமில்லாதிருப்பின் அதற்கேற்ற மருந்து வகைகளை உட்கொள்ளுதல். (நீர்க் கோவையானால் சூடான இஞ்சிச் சாற்றில், தேன் கலந்து உட்கொள்ளுதல்; அடிகளுக்கு அடிக்கடி நீர்க்கோவை உண்டாகும். சில வேளைகளில் பட்டினி கிடந்து நோயைத் தீர்த்துக் கொள்வதும் உண்டு.) 9.30 மணிமுதல் 10.30 மணிவரை 6. மணைமீதமர்ந்து மூச்சுப்பழக்கம் செய்தல், அனலில் நறுமணப் புகையூட்டி இறைவனை வழிபடுதல். 10.30 மணிமுதல் 11.30 மணிவரை 7. காலை உணவு உண்ணுதல் (தட்ப வெப்ப நிலைக்குத் தக்கவாறு கோதுமைப் பாற்கஞ்சி, மோர் கலந்த கஞ்சி ஆகிய இவற்றுடன் உலர்ந்த பழங்கள், அத்திப் பழம், அங்கர் திராட்சை, வாதுமைப் பழம், அக்ரூட் கொட்டையிலுள்ள பருப்பு, பாதம் பருப்பு ஆகியவற்றையும் உண்ணுதல்.) 11.30 மணிமுதல் 12.30 மணிவரை 8. வீட்டுக் கணக்குப் பார்த்தல். அச்சுப் பிழை (புரூப்) திருத்துதல். அச்சகத்தில் வேலை செய்யும் ஆட்களுக்கு வேலை கொடுத்தல். தோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றுபவரைக் கவனித்தல். தன் இல்லத்திற்கு வருபவருடன் உரையாடுதல். 12.30 மணிமுதல் 2 மணிவரை 9. கால அட்டவணையிற் குறிப்பிட்டுள்ளபடி படித்தல். 2 மணிமுதல் 2.30 மணிவரை 10. நண்பகல் உணவுண்ணுதல். அன்றாடம் அவர் குறிப்பிடும் முறையிலேயே உணவைச் சமைத்தல் வேண்டும். தேங்காய்ப் பாலில் கலந்த குழம்பு, மிளகுநீர் இலைக் கோசு, பூக்கோசு, நூல்கோல், சிவப்பு முள்ளங்கி, கீரை வகைகளில் ஒன்று. நல்லெண்ணெய்க்குப் பதிலாக நெய்; புளிக்கீடாக எலுமிச்சம் பழம்; உப்புக்கு இந்துப்பு,. 2.30 மணிமுதல் 4 மணிவரை 11. ஓய்வு 4 மணிமுதல் 5.30 மணிவரை 12. வருவாருடன் உரையாடல் மாணவர்க்குக் கற்பித்தல். 6 மணிமுதல் 6.30 மணிவரை 13. பாலில் மிகுதியாகச் சர்க்கரை சேர்த்து அருந்துதல். 6.30 மணிமுதல் 9.30 மணிவரை 14. படித்தல். 9.30 மணிமுதல் 11 மணிவரை 15 நீரேற்றி மலைக்குடலைத் துப்புரவு செய்தல் நீராடல். 11 மணிமுதல் 12 மணிவரை 16 இறைவனை வழிபடுதல். 12 மணிமுதல் 12.30 மணிவரை 17. இரவு உணவு. பால் சிறிது, அரிசி மாவினால் செய்த இட்லி, (அல்லது) தோசை உருளைக்கிழங்கு வற்றல், உழுத்தம்மாவிலிட்ட பண்டங்கள் முதலியன. 12 மணிமுதல் 1 மணிவரை 18. உலாவல், உட்புறக் கதவுகளையும் பிறவற்றையும் தாமே விளக்குடன் சென்று பார்த்தல். 1 மணிமுதல் 6 மணிவரை 19. உறங்குதல். சிறப்புச் சொற்பொழிவு சங்ககாலத் தமிழகம் தோற்றுவாய் தாய்மார்களே, அன்பர்களே! சங்ககாலத் தமிழகம் பற்றி நான் பேச வேண்டுமென்று அன்பிற் சிறந்த ஆடலரசு என்னைக் கேட்டுக் கொண்டார். அவருடைய முயற்சியைப் பாராட்டுகிறேன். இந்தக் காலத்தில் ஆண்டில் முதிர்ந்தவர் செய்யும் முயற்சியைவிட இளைஞர் செய்யும் முயற்சி பெரிதும் பயன்படும் என்பது என் நம்பிக்கை. கொங்கு நாட்டிலே பதினாயிரம் இளைஞர்களிடையே நான்கைந்து சொற்பொழிவுகள் நிகழ்த்தினேன். அப்பெருங் கூட்டம் மிக்க மனக்களிப்பைத் தந்தது. நான் இளைஞனாய் இருந்தபோது தமிழைப் பற்றிப் பேசினால் பயித்தியக்காரன் என்பார்கள். ஆங்கிலம் அறிந்தவர்களே அன்று மேன்மையாகக் கருதப்பட்டார்கள். அக்காலத்தில் தமிழில் பேசினால் மானக்குறைச்சலாகக் கருதினார்கள். எனக்குத் தமிழைக் கற்றுக் கொடுத்தவர் வைதீக சித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தர நாயகர் அவர்களே ஆவர். என்போன்ற மக்கள் தமிழுணர்ச் சியையும், சைவ சித்தாந்த உணர்ச்சியையும் பெறுவதற்குப் பெருந் துணையாயிருந்தவர் அவரே ஆவர். அவர்கள் முப்பது ஆண்டுகள் வரை தமிழையும் சைவத்தையும் நன்கு கற்றவர்கள்; மிகக் கடினமாக உழைத்தவர்கள். அவர் பதவியையோ பொருளையோ விரும்பவில்லை. அக்காலத்தில் செல்வர்கள் ஏராளமாக இருந்தார்கள். செல்வர்கள் யாரும் அவருக்கு உதவிபுரிய முன்வரவில்லை. பிற்காலத்திலே அவர் பல இடர்ப்பாடுகளுக்குட்பட்டார். வறுமையால் வாடினார். முப்பது ஆண்டுக்குள் செல்வர்கள் நிலை மாறிப் போயிவிட்டது. அவருடைய இறுதிக்காலத்திலே அப்படிப்பட்ட பெரியவரை நான் கண்டதில்லை. எனது ஆசிரியர் அயல்நாட்டிலே பிறந்திருந்தால் வில்லியம் ஷேக்ஸிபியருக்குக் கோயில் கட்டிய மாதிரி அவருக்கும் ஒரு நினைவுச் சின்னம் எழுப்பி அவருடைய நூல்களை வெளியிட்டு அவர் புகழைப் பரப்பி இருப்பார்கள். இங்கு வில்லியம் ஜேம் என்ற அறிவாளியைப்பற்றிக் குறிப்பிட விரும்பு கிறேன். இது சைதாப்பேட்டை சிவநெறிக்கழகத்தின் சார்பில் 15-5-49 அன்று திரு.வி.க. அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழுருவாகிய தலைவர் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலை அடிகளார் சங்ககாலத் தமிழகம் பற்றிக் கொடுத்த தோற்றுவாயேயாகும். இதனைத் தொடர்ந்து பல சொற்பொழிவுகள் ஆற்ற அவர் எண்ணியிருந்தார். ஆனால் அந்தோ! தமிழர் புண்ணியக் குறைவினால் அடிகளார் மேற்கொண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்த முடியாது போயிற்று. மெய்கண்டாரே வில்லியம் ஜேம்ஸாகப் பிறந்தாரோ என்று எண்ணவேண்டியிருக்கிறது. வில்லியம் ஜேம் அவர்கள் உயிரோடு இருந்தபோது, என்னுடைய ஆங்கில நூல்களைப் பார்த்து, எங்கள் நாட்டில் இல்லாத வேறு சிறந்த கொள்கையும், உங்கள் நாட்டில் இருக்கிறதே என்று மகிழ்ந்தார். மேலை நாடுகளிலே சைவ சித்தாந்தத்தைப் பரவச் செய்ய வேண்டு மென்ற ஆர்வம் என்கிருந்தது. வெளிநாடு செல்வதானால், இருபதினாயிரம் ரூபா செலவு செய்யவேண்டும். அவ்வளவு பெருந் தொகையை யான் செலவிட வழியில்லை! இப்பெருந் தொகை கொடுத்து உதவ அப்பொழுது யாரும் முன்வரவில்லை. இப்பொழுதும் இல்லை! மாக்முல்லர், மொழி முதலியவற்றின் தன்மையைப் பற்றி விரிவாக நூல் எழுதியவர், மொழி இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது. கையினாலே சாடை காட்டினாலும், கண்களினாலே குறிப்புத் தெரிவித்தாலும், வேறு உறுப்பினாலே அறிவித்தாலும், ஒருவர் கருத்தை, மற்றொருவருக்குப் புலப்படுத்தச் சொற் றொடர்கள் வேண்டும். மொழியின் மூலம் நமக்கு ஆன்றோர்கள் செய்த உதவி என்றும் மறக்க முடியாதது. ஆன்றோர்களின் அரும் பெருமுயற்சி பெரிதும் பாராட்டுதற்குரியது. சென்ற ஐம்பது ஆண்டுகளாக நான் ஆராய்ச்சி செய்திருக்கிறேன். அறிவினாலே எழுத்தினாலே, உணர்ச்சி யினாலே, நூல் வடிவிலே, புதினத் தாள்களிலே எல்லாம் எழுதி வந்திருக்கிறேன். வெளிநாட்டுப் புதினத்தாள்களிலும் என் ஆராய்ச்சிபற்றி எழுதி வந்திருக்கிறேன். என்னுடைய ஆசிரியர் அறுபது நூல்கள் வரை எழுதியிருக்கிறார். அவர்கள் நூலை எல்லோரும் படித்து விட முடியாது. அவர்கள் நூலிலே நூற்றுக்கு எண்பது வடசொற்கள் கலந்திருக்கும். மிகுதியாக வடசொற்கள் கலந்திருக்கும். ஆசிரியரை நோக்கி, ஏன் மிகுதியாக வடசொற்களைச் சேர்த்து எழுதுகிறீர்கள்? என்று கேட்டதற்கு என்னால் வடசொற்களின்றி எழுத இயலாது. நீ வடசொல் கலவாது தனித் தமிழிலே எழுது என்று சொன்னார். நச்சினார்க்கினியர், சிவஞான முனிவர் முதலிய உரையாசிரியர்கள் எழுத்திலே நான் சொக்கித் தனித்தமிழிலே எழுதத் துவங்கினேன். ஆசிரியர் யான் தனித்தமிழிலேயே எழுதும் கட்டுரைகளைப் பார்த்து, நீ தனித் தமிழிலேயே எழுது. உனக்குத் தனித் தமிழிலே எழுதும் ஆற்றலை இறைவன் ஆக்கி உள்ளான். உன் தனித் தமிழைப் படிக்கப்படிக்க என் காதுகளுக்கு இன்பமாயிருக்கிறது என்றார். தனித் தமிழில் எழுதுவதை விடாதே! நீ தனித்தமிழிலே எழுதுவது எனக்கு விழிப்பையும் கிளர்ச்சியையும் உண்டு பண்ணுகிறது என்றும் கூறினார். ஆசிரியர் சோமசுந்தர நாயகர் ஒரு பெரிய வேதாந்தி. அவருடைய பேருதவியால்தான் நான் தமிழையும், வடமொழியையும் ஆராய்ச்சி செய்ய முடிந்தது. அவர் செய்த நன்றியை நான் எக்காலத்திலும் மறக்க முடியாது. துயில் நீங்கி எழுந்தவுடன் என் ஆசிரியரின் நிழலுருவப் படத்திற்கு வணக்கம் செலுத்துவது வழக்கம். அன்றாடம் என் ஆசிரியருக்கு வணக்கம் செலுத்துவதில் நான் தவறுவதில்லை! பிராமணீயம் என்பதை பிராமணம் என்றேதான் எழுதி வந்தேன். கனவிலும் நான் வடமொழியில் எழுதுவதில்லை! என் பிறவி பெரிதும் பயன்பட்டது. சிவஞானமுனிவர் இனிமையான நடையிலே தமிழை வளர்த்தார். நான் எழுதிய நூல்களை இப்பொழுது குடிமக்கள் படிக்கிறார்கள். முன்னர் ஏகினான் என்பதைப் போயினான் என்றும், வம்மின் என்பதை வருக, வாருங்கள் என்றும் எழுதக் கற்றுக்கொண்டேன். கற்றவர் கல்லாதவர் ஆகியவர்களுக்கும் புரியவேண்டும் என்பதற்காகவே அப்படி எழுதினேன். அந்தக் காலத்திலேயும் யான் பேசம் சொற்களிலேயும் எழுத்திலேயும் வடசொல் கலப்பதில்லை! சொற்பொழிவால் தமிழுணர்ச்சி யால் யான் செய்த பேறு என்னுடைய பதவியைப் புனித மாக்கிற்று; திருக்குறள் ஒரு பெரிய நூல். ஏதோ ஓரிரண்டு வடசொற்கள் தவிரத் திருக்குறளிலே மற்றவை எல்லாம் தனித் தமிழிலே அமைந்திருப்பதைக் காணலாம். அன்பர் திரு. வி.க. எனக்கு இளையவர். அவர் இளமையில் உடல் நலத்துடன் திண்மையாக இருந்தார். அவர் சிறந்த உள்ளம் படைத்தவர். கரவாக உள்ளத்தை மறைத்துப் பேசமாட்டார். அவருக்கென்று ஒருவகையான நடை உடை உண்டு. கொள்கைகளிலே மட்டிலும் அடிக்கடி மாறுவார். சில காலம் யான் கொண்ட கருத்துக்கு மாறாக இருந்தார். பையப் பைய அவர் என் வழிக்கு வந்து விட்டார். அந்நாளிலேயே அவர் புலமையை நான் உயர்த்திப் பேச நேர்ந்தது. ஒருவரை ஒருவர் உயர்த்திப் பேசுவது இயல்புதான். அவர் என்னைப்பற்றிப் பேசிய யாவும் உண்மைதான். என்னுடைய தாயாகிய தமிழுக்கும், சைவத்துக்கும் தொண்டாற்ற யான் கடமைப் பட்டிருக்கிறேன். அந்தக் காலத்தில் பொருள் மிகுதியாகத் தந்து என் கொள்கைகளை மாற்றிக்கொள்ளும்படி நேயர்களிலே பலர் என்னை வேண்டினார்கள். பட்டங்களும் பதவியும் தந்து உதவுவதாகச் சொன்னார்கள். அதென்னவோ அவற்றிலெல்லாம் எனக்கு விருப்பமில்லை! இப்பொழுதும் பட்டம் பதவிபெற வேண்டும் என்ற விருப்பம் எனக்கில்லை. யான் அறிந்த உண்மையை எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். தொண்டின் வாயிலாக என் உயிரைத் தூய்மை செய்துகொள்ள விரும்புகிறேன். அங்ஙனமே செய்து வருகிறேன். கனவிலும் நினைவிலும் தமிழையும், சைவத்தையும் எண்ணி வருகிறேன். இன்றும் யான் இப்படியே எண்ணி வர இறைவன் அருள் செய்வானாக. அறுமுகப் பெருங்கடவுளே சங்கத்தில் வீற்றிருந்து தமிழை ஆராய்ந்தான். தமிழ் நூல் இலக்கண வரம்புள்ள நூல்; என்றும் மாறாமல் இளமையோடு அது இருக்கிறது. இலக்கண வரம்பில்லாத மொழி மாறிக் கொண்டே போகும் என்று மாக்முல்லர் எடுத்துக் காட்டுகிறார்; பாதிரிமார்கள் நல்லெண்ணம் உடையவர்கள். பாதிரிமார்கள் இங்கு வராமல் இருந்திருந்தால் கல்வி வளரவே முடியாது. காட்டுமிராண்டிகள் பேசுகிற மொழிகூட நாளுக்கு நாள் மாறிக்கொண்டே போகிறது. இலத்தீன் மொழி, கிரேக்க மொழி ஆகியவை இன்று இருந்த இடம் தெரிய வில்லை. ஈப்ரு, அரேபியம் ஆகிய மொழிகளும் இறந்து போயின. தமிழ் மொழி மட்டும் என்றும் மாறாமல் இன்றும் இருக்கிறது. வாழைப்பழம் என்பதை வாயப்பயம் என்கிறார்கள். அடித்தான் என்பதை அடிச்சான் என்கிறார்கள். மழை பெய்தது என்பதை மழை பேஞ்சுது என்கிறார்கள். ஒரு கட்டடத்தை அமைக்கிறபோது மிகவும் திருத்தமாக அழகாக அமைக்கவேண்டும். ஒரு மொழியின் வளர்ச்சியை மிக்க விழிப்போடு பாதுகாக்க வேண்டும். இப்பொழுது உள்ள 999 மொழிகளிலே சிறந்ததாயும் உயிருடையதாயும் ஒரு நிலையில் இருப்பது தமிழே. ஆங்கிலத்தை 150 ஆண்டுகளாகச் சீர்திருத்தி வந்தார்கள். 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கி மொழி சிறந்ததாயில்லை. Butc என்றும் Put என்றும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். எழுதுகிற முறையும் சொல்லுகிற முறையும் இடத்துக்கு இடம் மாறுகிறது. calm என்பதில், ஒலி இல்லை. Psychology என்ற சொல்லை பிஸிகாலஜி என்று பிரஞ்சு மொழியில் வழங்குகிறார்கள். தமிழிலே அந்தக் குறை இல்லை. எழுதியதை எழுதியவாறே, சொல்லியதைச் சொல்லியவாறே தமிழில் உச்சரிக்கலாம், வட மொழியிலோ பேசும் பொழுதும், எழுதும் பொழுதும் பல குற்றங்கள் காணப்படும். அருமைத் தமிழர்களே! சங்கம் இருந்த நிலை, சங்கம் என்பது என்ன, சங்கத் தமிழ் எப்படி ஓங்கியது. சங்க நூல்கள் எப்படி வெளிவந்தன. என்பவற்றை எல்லாம் சொல்லும்படி கேட்டார்கள். சங்கம் என்றால் கூட்டம். சங்கம் வடமொழி. கழகம் என்பது தமிழ். ஏறக்குறைய ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னே கழகம் ஏற்பட்டது. தமிழிலே நிகரற்ற புலவர்கள் இருந்தார்கள். அவ்வளவு சிறந்த புலவர்களை இப்போது நாம் காண முடியாது. திருவள்ளுவர் காலமும் சங்க காலமும் ஒன்றேதான். கிறித்து பிறப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார். ஆண்டைத் தவிர அவர் பிறந்த நாளும் திங்களும் அதற்குச் சான்றம் கிடைக்கவில்லை. இன்றைக்கு 1977 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது மட்டும் உறுதி. வாழ்க்கைக் குறள் இது பல்லவபுரம், பொதுநிலைக்கழக ஆசிரியர் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள் இயற்றும் செய்யும் நூல். வாழ்க்கை இருவகைத்தா மாந்தர்பாற் றோற்றுவிக்கும் ஊழ்க்கு நிகரே துரை. (1) இம்மையே யன்றி இனிச்சேர் மறுமையும் மெய்ம்மையார் கண்டார் விதந்து. (2) இன்றிருக்கும் ஓரறிஞன் நேற்றிருந்த தன்றியே பின்றைநாளு மிருத்தல் பேசு. (3) இரண்டுந் தொடர்ந்தே இயங்குமுறை தேர்ந்தோர் முரண்டு மறுமை மறார். (4) இம்மை இயல்நெறியை ஏற்கத் திருத்தினால் அம்மை யியல்சிறக்கும் ஆர்ந்து. (5) இம்மை யொழுக்கம் இனிது நிகழாக்கால் செம்மையே வாழா ருயிர். (6) மாந்தர்க்கு நூறாண்டு வாழ்த்துமுறை வாழாக்கால் தேர்ந்தபயன் உண்டோ தெரி. (7) இறைவன் படைப்பில் இறையுங் குறையாங் கறையே திவன் செயலல் லால். (8) அகத்தும் படைப்பில் அமைந்த அமைப்பை மிகத்தெரிந்து செய்க வினை. (9) மாறா நிலையும் மலையுஞ் செயல்தானும் வேறாதல் கண்டு விளம்பு. (10) வடவர் தென்னாடு புகுந்தமை அன்புள்ள.... வடக்கே தமிழ்நில எல்லையாக மிகப் பழைய தொல்காப்பியர் பாயிரச் செய்யுளில், வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து என ஓதப்பட்டவாறு செந்தமிழ் வழங்கும் மாநிலம் நிருவேங்கடம் என்னும் திருப்பதி வரையில் நீண்டிருந்தது. வேங்கடத்துக்கும் மிக வடக்கே இமயமலை வரையிலும் தமிழ்மொழியும் அதனை வழங்குந் தமிழ் மக்களும் பரவியிருந் தனராயினும், அவரெல்லாந் தமிழைத் திருத்தமாகப் பேசவும் எழுதவும் பயிலவும் தெரிந்தவர் அல்லர். தென்னாட்டகத்தே யிருந்த தம் இனத்தாரைப் போல் நாகரிக வாழ்க்கையில் இருந்தவரும் அல்லர். வடக்கே சென்று குடியேறிய அப்பெருந்தொகுதியாரிற் சிறந்த சிறுசிறுகுழுவினர் பல நூற்றாண்டுகளுக்குப் பின் மீண்டும் இத்தென்னாடு புகுந்து ஆங்காங்கு வைகலாயினர். இங்ஙனம் வந்தார் அனைவரும் வடநாட்டில் வைகிய காலத்தே, தாம் பேசும் மொழியாலுந், தாம் கைக்கொண்ட பழக்க வழக்கங்களாலும், அவற்றால் தாம் விடாப்பிடியாய்க் கொண்ட கொள்கைகளாலும் இவ்விந்திய நாட்டுக்குப் புறம்பேயிருந்து போந்து தம்மோ டொருங்கு கலந்து வாழ்ந்த ஆரிய மக்களின் சேர்க்கையாலுந், தாந் தெற்கேயிருந்த தமிழர்களுக்குப் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னமே நெருங்கிய உறவினராயிருந்தும் அவரைப் பிரிந்து நெடுங்காலங் கழிந்தமையின், அவர் தம்மினத்தவராதலை அறவே மறந்து, ஆரியச் சேர்க்கையால் தம்மை ஆரியரெனவே பிறழ உணர்ந்து, தென்னாட்டவருடனும் அவர்தம் வழக்க வொழுக்கங்களுடனும் முழுதும் மாறுபட்டே நிற்பராயினர். - மறைமலையடிகள். ஓம் பல்லாவரம், 8-11-1949 அன்பர் கனகராயர்க்குத் திருவருளால் எல்லா நலனும் உண்டாகுக! பனிமிகுதியால் எனக்கு நீர்க்கோவை. ஆதலால் நாளைக்கு யான் சென்னை வருதல் இயலாதாயிற்று. கூடுமானாற் சனிக்கிழமை வருகிறேன். நமது நூற்பதிப்பு வேலையை விரைவில் வாங்குதற்கு வேண்டும். ஏற்பாடுகளை நம் அன்பர் திரு. செங்கல்வராயருடன் கலந்து விரைவிற் செய்யுங்கள். பிறபின். நலம். அன்புள்ள. மறைமலையடிகள். பல்லாவரம் பொதுநிலைக் கழக ஆசிரியர் மறைமலை அடிகளால் வேண்டப்படும் சீர்திருத்தக் குறிப்புகள் உண்மை அன்பர்கள் வற்புறுத்துக் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, இக்காலத்துக்கு இன்றியமையாது வேண்டப்படும் சீர்திருத்தக்குறிப்புகள் சிலவற்றை இங்கு எடுத்துக் காட்டுகின்றோம். சமயச் சீர்திருத்தம் தென்னாட்டிலுள்ள தமிழர்களாகிய நாம் தொன்றுத் தொட்டு ஒரே முழுமுதற்கடவுளை வணங்கி வருகின்றோம். அம்முழுமுதற் கடவுளுக்குச் `சேயோன், `மாயோன், `முக்கண்ணன், என்னும் பெயர்கள் வழங்கி வந்திருக்கின்றன. இச்சிறப்புப் பெயர்களாற் குறிக்கப்படாதபோது, `வாலறிவன், `மலர்மிசை யேகினான், `வேண்டுதல் வேண்டாமை யிலான், `பொறி வாயிலைந்தவித்தான், `தனக்குவமை யில்லாதான், `அறவாழியந்தணன், `எண் குணத்தான், `இறைவன், `கடவுள் என்னும் பொதுப்பெயர்கள் பொதுவாக எல்லாராலும் வழங்கப்பட்டு வந்திருக்கின்றன. இத்தகைய கடவுள் பிறப்பில்லாதது, இறப்பில்லாதது, எல்லாமறிவது, எங்குமுள்ளது, எல்லாம்வல்லது, அளவிலாற்றலுடையது, வரம்பிலின்ப முடையது, என்னும் இலக்கணங்கள் உடையதென்பது இத்தமிழ்நாட்டி லுள்ளவர்கள் எல்லாருக்கும் உடன்பாடாகும். இஃது எல்லாவற்றையும் படைத்து அழிக்கும் அப்பனாகவும், படைத்தவற்றைக் காக்கும் அம்மையாகவும் வணங்கப்பட்டு வருகின்றது. இத்தன்மைத்தாகிய கடவுளையே தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரும், மாணிக்கவாசகரும், திருமூலரும், அப்பர் சம்பந்தர் சுந்தரரும், மெய்கண்டதேவரும் தாம் அருளிச் செய்த நூல்களிலும் பதிகங்களிலும் எடுத்து விளக்கி வணங்கிவந்திருக்கின்றார்கள். மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த தேவரும் காணாச்சிவபெருமான் என்றும், தேவர்கோ அறியாத தேவதேவன் செழும்பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை, மூவர் கோனாய் நின்ற முதல்வன் என்றும் மாணிக்கவாசகப் பெருமான் எல்லாம் வல்ல முழுமுதற்கடவுளையே சிவமென்னும் பெயரால் வாழ்த்தி வணங்கி யிருப்பது நன்குவிளங்கும். ஆனால், வடநாடுகளில் கோடிக்கணக்கான சிறுதெய்வங் களை வணங்கி, அவற்றுக்கு ஊனுங் கள்ளும் படைத்து வெறியாட்டு வேள்விகள் எடுத்த ஆரியர்கள் இத் தென்றமிழ் நாட்டுக்கு வந்து குடியேறித் தாம் வணங்கிய சிறுதெய்வ வணக்கத்தையும் அவற்றிற்காக எடுத்த வெறியாட்டு வேள்விகளையும் அச்சிறுதெய்வங்களின் மேற் கட்டிவிட்ட புராணகதைகளை யும் இந்நாடுகளிற் பரவ வைத்தார்கள். இந்நாடுகளில் நாகரிகமும் கல்வி யறிவும் இல்லாத கீழ் மக்களே ஆரியர் நடைகளை மிகுதியாய்ப் பின்பற்றலாயினர். அது கண்ட தமிழ்ச்சான்றோர்கள் ஆரியர் வணங்கிய சிறுதெய்வ இழிவும், தமிழர் வணங்கம் முழுமுதற் கடவுளாகிய சிவத்தின் உயர்வும் புலப்படுத்தல் வேண்டித் தாமும் பலபுராணகதைகளை உண்டாக்கலாயினர். இவ்வாறு எழுந்த பலப்பல புராண கதைகளுட் கடவுளிலக்கணத்துக்குப் பொருந்துவனவும் அதற்குப் பொருந்தாதனவும் இருக்கின்றன. அவைகளை யெல்லாம் செவ்வையாக ஆராய்ந்துபார்த்துப் பொருத்தமான வைகளை உரிய சீர்திருத்தம் முதன்மையாகச் செயற்பாலதாகும். நம் ஆசிரியர்கள் தமதுகாலத்திருந்த பொதுமக்களின் மனச் சார்பை அறிந்து, அவர்கள் பொருட்டுத் தழுவிப்பாடியிருக்கும் புராணகதைகளை யெல்லாம் நாம் அப்படியே தழுவவேண்டு மென்பது கட்டாயமாகாது. ஏனென்றால், அப்பனை வணங்கும் நமது சைவசமயமும், அம்மையை வணங்கும் வைணவ சமயமும் இக்கதைகளைச் சார்ந்து பிழைப்பனஅல்ல. இக்கதைகளின் உதவி வேண்டாமலே இவ்விருசமயங்களும், மக்களின் இம்மை மறுமைவாழ்க்கைக்கு இன்றியமையாதனவாகிய அரியபெரிய மெய்ப்பொருள்களினாலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால், நம்முடைய சமயங்களின் உண்மைகளைச் `சிவஞானபோதம் `சிவஞானசித்தியார் என்னும் உயர்ந்த அறிவு நூல்களில் விளக்கப்பட்டபடி இளம் பருவமுதற் கொண்டே நம்முடைய மக்களுக்குக் கற்பித்துவர ஏற்பாடு செய்தல் வேண்டும். இச்சமய உண்மைகளுள் எதனையுங் குருட்டுத்தனமாய் நம்பும் தீயபழக்கத்தை ஒழித்து எதனையும் தம்மறிவால் ஆராய்ந்து பார்க்கவும் தம் மறிவுக்கு விளங்காதவைகளை அறிந்தோர்பாற் கேட்டுத் தெளியவும் அவாவை உண்டாக்குதல் வேண்டும். சிவபிரான் திருக்கோயில்களில் நிறுத்தப்படிருக்கும் சிவலிங்க வடிவானது ஒளிவடிவாய் விளங்கும் இறைவனது நிலையை உணர்த்துவதாகும். இவ்வடிவு எல்லாச் சமயத் தாராலும் வழுத்தி வழிபடுதற்குரிய பொதுவான அடையாள மாய் உலகம் எங்கும் உள்ளதாகும். எந்தச் சமயத்தோரேனும் எந்தச் சாதியாரேனும் இதனை வணங்குவதற்கு விரும்பிக் கோயிலுள் வருவார்களாயின் அவர்களைத் தடைசெய்யாமல் வந்துவணங்குதற்கு இடங்கொடுத்தல் வேண்டும். என்மார்க்கம் இருக்குது எல்லாம் வெளியே என்ன எச்சமயத் தவர்களும் வந்து இறைஞ்சா நிற்பர் என்னும் தாயுமான அடிகளின் திருமொழியை நம்மவர்கள் எப்போதும் நினைவில் வைத்தல் வேண்டும். ஆனாற் கோயிலுள் வருபவர்கள் எல்லோரும் குளித்து முழுகித் துப்புரவான ஆடை உடுத்து அடக்க வொடுக்கமாய் வாய் பேசாது உட்சென்று வணங்கும்படி செய்தல் வேண்டும். இப்போது கோயிலுள் இறைவனுக்குச் செய்யும் நாள் வழிபாடுகள் பொருத்தமாய் இருந்தாலும், அவை வடமொழி மந்திரங்களைச் சொல்லிச் செய்யப்படுதலின், பொதுமக்கள் அவற்றின் உண்மை அறியாமல் விழிககின்றனர். தேவார திருவாசகங்களாற் பாடப்பெற்ற கோயில்களே பாராட்டப் படுகின்றன அல்லாமல், வடமொழி மந்திரங்களுக்காக எந்தக் கோயிலும் பாராட்டப் படவில்லை. ஆதலால், வழிபாடு முழுதும் வேதார திருவசாகத் தமிழ்மந்திரங்களைக் கொண்டே நடைபெறுமாறு ஒவ்வொரு கோயிலிலும் ஏற்பாடு செய்தல் வேண்டும். இனி ஒவ்வொரு கோயிலின் சார்பாக நடத்தப்பட்டு வரும் திருவிழாக்கள் எப்போதும் போலவே எங்கும் நடைபெறும்படி செய்தல் வேண்டும். ஏனென்றால், நாடோறும் நெற்றித் தண்ணீர் நிலத்தில் விழப் பாடுபடும் ஏழைமக்களும், செல்வமிகுதியாற் கடவுளை மறந்து சிற்றின்பத்தில் கிடந்துழலும் செல்வர்களும், இவ்விருவர் நிலையிலும் சிறிது சிறிது ஒட்டி நிற்கும் மற்றைப் பொதுமக்களும் இத்திருவிழாக் காலங்களிலேதாம் தத்தம் முயற்சிகளினின்றும் ஓய்வுபெற்று நீராடி நல்ல ஆடை அணிகலன்கள் அணிந்து, தம் மனைவிமக்கள் சுற்றத்தாருடன் மன மகிழ்ந்து கடவுள் நினைவும் வணக்கமும் உடையராய்ப் பலஊர்க்காட்சிகளையும் பலமக்களின் தோற்றங்களையும் கண்டு இம்மை மறுமைப் பயன்களைப் பெற்று இன்புறு கின்றனர். இத்திருவிழாக்களும் திருக்கோயில்களும் இல்லை யானால் இந்நாடும் ஏனை அயல்நாடுகளைப்போல் ஓயாத சண்டைக்கு இடமான போர்களமாகவே இருக்கும். ஆதலால், திருவிழாக்களை இன்னும் செவ்வையான முறையில் நடைபெறச்செய்வதோடு, அத்திரு விழாக்களின் உண்மையும் பயனும் எல்லார்க்கும் எடுத்துச் சொல்லுமபடி கல்வியிற்றேர்ந்த அறிஞர்களுக்குத் தக்க பொருளுதவி செய்து, அவர்கள் அத்திருவிழாக் காலங்களில் ஆங்காங்கு விரிவுரை செய்யும்படி ஏற்பாடு செய்தல் வேண்டும். கோயில்களிற் பொதுப்பெண்டிரைத் தொண்டு செய்ய அமைத்தலும், அவர்களைக் கோயிலுக்குப் பொட்டுக்கட்டுவதும் அடியோடு விலக்கப்படல் வேண்டும். கோயில்களில் வழிபாடாற்றுங் குருக்கள்மார் தமிழ் மொழியிற் பயிற்சி யுடையராயும், சைவசித்தாந்தம் நன்குணர்ந்த வராயும் தேவார திருவாசகம் ஓதுபவராயும் இருக்கும்படி ஏற்பாடு செய்தல்வேண்டும். சிலகோயில்களிற் றவிரப் பெரும்பான்மை யான மற்றைக்கோயில்களில் வழிபாடுசெய்யும் குருக்கள் மார்க்குத் தக்கவரும்படியும் தக்கசம்பளமும் இல்லை. ஆதலால், மிகுந்தவரும்படி உள்ள கோயில்களின் வருவாயிலிருந்து மற்றைக்கோயில் களின் ஏழைக்குருக்களுக்குத் தக்கசம்பளங்கள் கொடுப்பித்தல் வேண்டும். கோயில்களிலுள்ள இறைவன் திருவுருவத்திற் எப்போதும் போலக் குருக்கள்மாரே வழிபாடு செய்யவேண்டுமல்லாமல் வணங்கப்போகிறவர் களெல்லாம் அதனருகிற் சென்று அதனைத்தொட்டுப் பூசித்தல் வேண்டுமென்பது நல்லமுறை யன்று. ஏனென்றால், வணங்கச் செல்பவர்களுக்குக் கடவுள்பால் உள்ள அன்பும் அச்சமும் குறைந்துவிடும்; அவ்விடமுந் தூய்மைகெடும்; மக்களின் நெருக்கடியும் இடைஞ்சலைத் தரும். வணங்கச் செல்வோர்களில் இவர் உயர்ந்தவர், இவர் தாழ்ந்தவர் என்று காட்டும் வேறுபாடுகள் அடியோடு நீக்கப்படல் வேண்டும். சில கோயில்களில் வரும் ஏராளமான வரும்படியிற் கோயிலின் இன்றியமையாச் செலவுகளுக்குப் பயன்படுத்தப் பட்டனபோக, மிச்சத்தைத் தேவாரபாடசாலைக்கும், தனித்தமிழ்ப பாடசாலைக்கும், சைவசித்தாந்த சபைகட்கும், தமிழ் சைவ சித்தாந்த முணர்ந்த ஆசிரியர்க்கும், தமிழ் நூல் எழுதுவார்க்கும், சைவசித்தாந்த விரிவுரை யாளர்க்கும், கோயிலைச்சார்ந்த சத்திரஞ் சாவடிகட்கும் பயன்படுத்தல் வேண்டும். கோயிலின் வரும்படியைக்கொண்டு பார்ப்பனர்களுக்கு மட்டும் உணவு கொடுத்தலும், ஆரியவேதபாடசலை அமைத்தலும், ஆங்கிலப்பள்ளிக் கூடங்கட்குப் பொருளுதவி செய்தலும் அடியோடு நீக்கப்படல் வேண்டும். தமிழ் மொழிச் சீர்திருத்தம் இத் தென்றமிழ்நாட்டிலுள்ள நம்மனோர்க்கு உயிர்போற் சிறந்ததாகிய தமிழ்மொழியானது பல்லாயிர ஆண்டுகளாக உயிரோடு உலவி வரும் சிறப்புடையது. ஆரியம் முதலான பிற மொழிகளைப்போல் இறவாதது. ஆரியத்திலுள்ள கட்டுக் கதைகளைப்போல்வன சிறிதும் இல்லாதது. இயற்கைப் பொருள்களையும் மக்களின் அன்பு அருள் ஒழுக்கங்களையும் கடவுளையும் அடியார் வரலாறுகளையும் பாடின உண்மை நூல்களே நிரம்பி உள்ளது. சாதி வேற்றுமையினையும், ஒரு சாதியை உயர்த்தி ஏனைப் பலசாதிகளைத் தாழ்த்தி முறை யில்லாத விதிகளை வகுத்த ஆரிய நூல்களைப் போன்ற முறையற்ற நூல்கள் சிறிதும் இல்லாதது. கடவுளின் அருளைப் பெறுதற்கும், வாழ்க்கையின் நலங்களை அடைதற்கும், எல்லா மக்களும் ஒத்த உரிமை உடையரென வற்புறுத்தும் `திருக்குறள், `பெரியபுராணம் போன்ற உயர்ந்த ஒழுக்கநூல்களையே உடையது. ஆரியத்திலுள்ள கட்டு கதைகள் மலிந்த புராண நூல்கள் சிறிதும் இல்லாமற் கடவுள் நிலையினையும் உயிர்கள் நிலையினையும் நுணுக்கமாக ஆராயும் `சிவஞான போதம் போன்ற உயர்ந்த அறிவு நூல்களையே உடையது. இத்துணைச் சிறந்ததாகிய இத்தமிழ் மொழி எத்தகைய நுண்ணிய உயர்ந்த ஆழ்ந்த கருத்துக்களையும் தெரிவித்தற்கு இயைந்த சொல்வள முடைய தாகலின், ஆரியம், ஆங்கலம் முதலான பிறமொழிச் சொற்களை இதன்கட் புகுத்தாமல் இதனையும் இதன் நூல்களையும் எல்லார்க்கும் தனிமையிற் கற்பித்தல் இன்றியமையாததாகும். தமிழ்நாட்டிற் செல்வர்களாயிருப்பவர்களும் பிறருந் தமிழ்மொழிப் பயிற்சிக்கும் தமிழ்க்கல்லூரிகள் அமைப்பதற்கும் பொருளுதவி செய்யவேண்டுமே யல்லாமல், இவற்றைவிடுத்து ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிப்பயிற்சிக்கும் அதற்குரிய கல்லூரிகட்குமே பொருளுதவிசெய்தல் நன்றாகாது. இத்தமிழ் நாட்டு மக்களெல்லாரும் தமக்குரிய தாய்மொழி யிலேயே எளிதாகக் கல்வி கற்பிக்கப் படல் வேண்டும். ஆங்கிலம் முதலிய அயல்மொழிகளிலுள்ள இயற்கைப் பொருள் நூல்களையும் உயிர்நூல்களையும் கடவுள் நூல்களையும் தமிழில் மிகுதியாக மொழி பெயர்த்து அவற்றைப் பயிலும்படி செய்தல் வேண்டும். சைவ மடத்தின் தலைவர்கள், அரசர்களுக்குள்ள பொருள்களிலும் மிகுதியான பொருள்களை வைத்துக்கொண்டு பாவமான பல துறைகளிலும் அவற்றைப் பாழ்படுத்தி வருகின்றார்கள். சைவசித்தாந்தமுந் தமிழும் நன்குணர்ந்த அறிஞர்களோ தமது வாழ்க்கைக்கு வேண்டும் செலவுக்குத் தக்கவருவாய் இன்றிப் பெரிதுந் துன்புறுகின்றார்கள். இவ் அறிஞர்கள் மிக இடர்ப்பட்டு எழுதி வெளியிடும் நூல்களின் செலவுக்குக் கூடப் பொருளுதவி செய்வார் எவரும் இல்லாமையின் அவர்கள் படுந்துன்பங்களுக்கு ஓர் அளவேஇல்லை. ஆதலாற், சைவ மடங்களின் பொருள்களை இத்தகைய அறிஞர்க்கும், சைவ சித்தாந்தக் கல்லூரிகட்கும், தமிழ்க் கல்லூரிகட்கும் மிகுதியாய்க்கொடுத்துப் பயன்படுத்தல் வேண்டும். இவ் இந்தியநாட்டின் அரசினை நடத்துதற்கு உதவியாய் நிற்பாரிற் பெரும்பாலார் ஆரியமுறையைத் தழுவிய பார்ப்பனராயும் அவர் சொல்வழி நடப்பவராயும் இருத்தலால், சைவ சமய வளர்ச்சிக்குந் தமிழ் வளர்ச்சிக்குந் தமிழ் உணர்ந்தார் செலவிற்கும் அரசினரிடமிருந்து உதவிபெறுதல் இயலாதா யிருக்கின்றது. இதனை உணர்ந்தாவது தமிழ்நாட்டு மன்னர்களும் சிற்றரசர்களும் சைவசித்தாந்த உணர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் தமது பொருளைச் செலவுசெய்தல் வேண்டும். ஆங்கில அரசினராற் போற்றி வளர்க்கப்பட்ட ஆங்கில மொழிப் பயிற்சிக்கே இவர்கள் தம்பொருளைச் செலவுசெய்தல் சிறிதும் பயன் தராததாகும். இனிச், சைவ அவைகளும் தமிழ்க்கழகங்களும் வைத்து நடத்துவோர், தம்முடைய கழகக்கொண்டாட்டங்களுக்குச் சைவமும் தமிழும் நன்குணர்ந்த அறிஞர்களையே வருவித்து அவற்றை நடத்துதல்வேண்டும். வெறும் பட்டங்கள் வாங்கினவர் களையும் ஆங்கிலம் மட்டும் உணர்ந்தாரையும் வருவித்து ஆரவாரம் செய்தல் பயன்படாது. தமிழ் அறிஞர்களை வருவிப்போர் அவர்கட்குத் தக்கபடி பொருளுதவி செய்தல்வேண்டும். இனித் திங்கள் இதழ், கிழமை இதழ், நாள் இதழ் நடத்துவோர் தம்முடைய இதழ்கட்குக் கட்டுரைகள் எழுதுந் தமிழ் அறிஞர்க்குத் தக்கபடி பொருளுதவி செய்தல் வேண்டுமே யல்லாமல்; அவர்களை வறிதே துன்புறுத்தி அவர்கள்பால் வேலைவாங்குவது நன்றாகாது. தமிழ்கற்றவர்கட்கு எல்லாவகையிலும் பொருளுதவி செய்து அவர்களைச் சிறக்கவைத்தால்தான் இந்நாடு முன்னேற்றம் அடையும். இவர்களைச் சிறக்க வையாமல், வேறு துறைகளில் எவ்வளவு செலவு செய்தாலும் இந்நாடு முன்னேற்றம் அடையாது. இதனை எல்லாருங் கருத்திற் பதித்தல் வேண்டும். மக்கட் கூட்டச் சீர்திருத்தம் இப்போது தமிழ்நாட்டிலுள்ள தமிழ்மக்களிற் பெரும் பாலார் எல்லாம் வல்ல ஒருதெய்வத்தை வணங்காமல், இறந்து போன மக்களின் ஆவிகளையும், பலபேய்களையும் இவைபோன்ற வேறுசில சிறு தெய்வங்களையும் வணங்கி, அவற்றுக்காகப் பல கோடிக்கணக்கான கோழிகளையும் ஆடுகளையும் வெட்டிப் பலியிடுகின்றார்கள். இக்கொடிய செயலை அவர்கள் அறவே விடுமாறு செய்து, சிவம் அல்லது திருமால் என்னும் ஒரு தெய்வத்தையே வணங்கும்படி செய்தல் வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள மக்கள் ஊன்தின்பவரும் ஊன்தின்னாத சைவரும் என்னும் இரு பெரும்பிரிவில் நின்றாற் போதும். சைவரிலேயே பல வகுப்புகளும், அங்ஙனமே ஊன்தின்பவர்களிற் பலப் பல வகுப்புகளும் இருத்தல், பொருளற்ற வேற்றுமையாய் ஓயாத சாதிச்சண்டைகளை உண்டாக்குவதாய் இருக்கின்றது. பொருளற்ற இவ்வேறுபாடுகளை முற்றும் ஒழிப்பதற்கு எல்லாரும் பெருமுயற்சி செய்தல்வேண்டும். ஊன் தின்னும் வகுப்பினரிலும் அருளொழுக்க முடைய ராய்ச் சைவ உணவுகொண்டு சிவத்தையே வணங்கும் அன்பு மிகுந்து தூயராய் வருவாரைச் சைவராயிருப்பவர்கள் தம்முடன் சேர்த்துககொண்டு அவர்களோடு ஏதெரு வேறுபாடு மின்றி உண்ணல் கலத்தல்களைச் செய்தல்வேண்டும். கல்வியிலும் நுண்ணறிவிலும் சிவநேய அடியார் நேயங்களிலும் அருளொழுக்கத்திலும் சிறந்தார்க்கே உயர்வுகொடுக்க வேண்டுமேயல்லாமல் வெறும் பிறப்புப் பற்றி இவ்வியல்புகள் இல்லார்க்கு உயர்வுகொடுத்தல் ஆகாது. என்றாலும், எவரையும் பகையாமல் அவரவர்க்கு வேண்டு முதவிசெய்து, எல்லாரோடும் அன்பினால் அளவளாவுதல்வேண்டும். சத்திரஞ் சாவடிகளிலும் சிறப்பு நாட்களிலும், பிறப்பால் உயர்ந்தவரென்று சொல்லிக் கொள்ளும் ஒருவகுப்பினர்க்கே உணவுகொடுத்தல் பொருள் கொடுத்தல் முதலிய அறங்களைக் குருட்டுத் தனமாய்ச் செய்கின்றார்கள். இதுவும் அறவே தொலைக்கப்படுதல் வேண்டும். உயர்வு தாழ்வு கருதாது அறஞ் செய்யத் தக்கார் எவரைக்காணினும் அவர்க்கு அறஞ் செய்தலே தக்கது. மாணிக்கவாசகர் அப்பர் சம்பந்தர் சுந்தரர் முதலான நம் சமயாசிரியர்கள் பௌத்த சமணமதங்களில் இருந்து சைவ சமயம் தழுவவிரும்பினாரை அங்ஙனம் சைவ சமயத்திற் சேர்த்து அதனைப் பரவச்செய்திருக் கின்றார் களாதலால், நம் ஆசிரியர் காட்டிய அந் நன்முறையைக் கடைப் பிடித்து நாமும் அயற் சமயத்திலிருந்து வருவாரை நம்முடன் சேர்த்துக்கொண்டு எவ்வகை வேறுபாடுமின்றி அளவளாவுதல் வேண்டும். இவர் தீண்டத்தக்கார் இவர் தீண்டத்தக்காதவர் என்னும் போலி வேறுபாடுகளை அறவே ஒழித்துக் கோயில்களிலும் கல்விச்சாலைகளிலும் எல்லார்க்கும் ஒத்த உரிமை கொடுத்தல் வேண்டும். இதற்கு இன்றியமை யாதனவான சைவ உணவு எடுத்தல், குளித்து முழுகித் துப்புரவாய் இருத்தல், நோய்க்கு இடங் கொடாமை முதலான நலம் பேணும் முறைகளை எல்லாரும் உணர்ந்து நடக்கும்படி அவற்றைத் துண்டுத் தாள்களிலும் விரிவுரைகளிலும் ஆங்காங்குப் பரவச்செய்தல் வேண்டும். கல்வியிலும் உடம்புநலத்திலும் நல்லொழுக்கத்திலும் மேன்மேல் உயர்வதற்குப் பெருந்தடையாய் உள்ள சிறுபருவ மணத்தை அறவே ஒழித்தல் வேண்டும். பெண்மக்களுக்கு இருபதாண்டும் ஆண்மக்களுக்கு இருபத்தைந்தாண்டும் நிரம்பும்முன் அவர்களை செய்வித்தல் ஆகாது. அங்ஙனம் மணஞ்செய்யுமிடத்தும், ஒருவரை ஒருவர் அன்புபாராட்டுதல் அறிந்து அதன்பின் அவர்களை மணம் பொருத்தல் வேண்டும். ஆணையாவது பெண்ணையாவது ஆடு மாடுகளைப்போல் விலை கொடுத்து வாங்குங் கொடியவழக்கத்தை வேரோடு களைவதற்கு எல்லாரும் மடிகட்டி நிற்றல்வேண்டும். ஏனென்றால் அன்பில்லாத வாழ்க்கையால் வருந்தீமைகள் அளவில்லாத வைகளாய் இருக்கின்றன. அன்பில்லாத சேர்க்கையிற் பிறக்கும் பிள்ளைகள் குறுகிய வாழ்நாளும் பல தீயதன்மைகளும் உடையராய் இருக்கின்றனர். அன்பு வளர்ச்சிக்கு ஏதுவாக ஆண்மக்களும் பெண்மக்களுங் கள்ளங்கவடின்றி நடமாடச் செய்தல் வேண்டும். பெண்மக்களைக் கல்வியிலும் நன் முறையிலும் பழகவிடாமல், மணங்கூடும்வரையில் அவர்களை அறைகளில் அடைத்து வைப்பது பெருந்தீமைகளை விளைவிக் கின்றது. பெண்மக்களைப் பெரும்பாலுந் தமிழ்முதலிய தாய்மொழிக் கல்லூரியிலேயே கல்வி பயிற்று வித்தல் வேண்டும். உணவமைத்தல் இல்லறம் நடப்பித்தல் குழந்தைகளைப் பாதுகாத்தல் முதலிய முறைகளில் தேர்ச்சிபெறவேண்டுவது பெண்மக்களுக்கு இன்றியமையாததாகும். ஆண்மக்கள் தாய்மொழியோடு மற்ற மொழிகளையும் நன்கு பயிலச் செய்தல் வேண்டும். முப்பதாண்டுகட்கு உட்பட்ட பெண்கள் கணவனை இழந்து விடுவார் களானால், அவர்களைத் திரும்ப மணஞ்செய்து கொடுத்தல்வேண்டும். ஆண்மக்களில் நாற்பதாண்டுக்கு மேற்பட்டவர்கள் இளம்பெண்களை மணஞ்செய்தல் ஆகாது. அப்படிச்செய்ய முந்துகின்றவர்களை எல்லாவகை யாலும் தடை செய்தல் வேண்டும். நாற்பதாண்டுக்கு மேற்பட்ட ஆண்பாலார் மணஞ்செய்துகொள்ள வேண்டுவார்களானால் தம் ஆண்டுக்கு ஏறக்குறைய ஒத்த கைம்பெண்களையே அவர்கள் மணஞ்செய்து கொள்ளும்படி தூண்டுதல் வேண்டும். தமிழ்மக்களிற் பெரும்பாலார் ஒருவர்பாலுள்ள குற்றங்களை மற்றவர் எடுத்துப் பேசுபவராய்ப் பகைமையையும் மனவருத்தத்தையும் பரவச்செய்து வருகின்றார்கள். இத்தீய பழக்கத்தை ஒழித்தால் அன்றித் தமிழ்மக்கள் முன்னேற்ற மடைவது சிறிதும் முடியாது. ஒருவர்பாலுள்ள குற்றங்களை மறைத்து அவர்பாலுள்ள நலங்களை எடுத்துப்பேசுவதற்கு எல்லாரும் விடாப்பிடியாய்ப் பழகுதல் வேண்டும். ஒவ்வொரு வரும் தங்கள் தங்களால் இயன்ற உதவியை மற்றவர்களுக்கு மனமாரச்செய்து, அவர்களை மேன் மேல் உயர்த்திவிடுதல் வேண்டும். தாம்செய்யும் உதவிக்குக் கைம்மாறாவதொன்றை எதிர்பார்த்திருத்தல் ஆகாது. அப்போதுதான் நம்முடைய மக்கள் உண்மையான முன்னேற்றத்தை அடைவார்கள்.