உவமைவழி அறநெறி விளக்கம் (காப்பியங்கள்) 3 செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் நூற்குறிப்பு உவமை ஆவணம் மழைநாள் : மலை சார்ந்த காடு, செடிகள் தூறுகள் புல்வெளி எனப் பச்சைப் போர்வை பரத்திய அழகு. தொழுவத்தில் இருந்து ஆயன் தன் ஆக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிக் கொண்டு காட்டுக்குச் சென்றான். பசுக்கள் ஆர்வமாய்ப் புல் மேய்ந்தன. மழை மின்னல் இடிகளால் நிலம் குளிர்ந்து, அங்கும் இங்கும் காளான் முளைத்துக் கிடந்தன. நிலத்திற்குக் குடைப்பிடித்து நிற்பது போல் நின்றன! மேயும் மாட்டின் கால் நகரும்போது, கல் புரள்கிறது; கால் பதிந்து நிலம் குழியாகிறது; புல் மிதிபடுகிறது; புதிது தோன்றி வெண்குடையாக நின்ற காளானும், பசுவின் காலில் பட்டு நிலைபெயர்கின்றது; தலைசாய்கின்றது; நொறுங்கியும் போகின்றது! ஆயனுக்கு வழக்கமாகிப் போன காட்சி அவனை அக்காட்சி கவர்ந்து விடவில்லை! அவன் தொழில் மேய்ச்சல். ஆனால், அக் காட்சியை இன்னொருவர் காண்கிறார். அவர் நல்ல சிந்தனையாளர், புலமைத் தோன்றல்; படைப்பு வல்லார். அவர் பெயர் பொய்கை யார்! அவர்க்குப் பசுவின் காலடியில் பட்டுக் குடைசாய்ந்து போகும் காளான் காட்சி, கண்ணைவிட்டு அகலவில்லை! பின்னொரு நாள் : ஒரு போர்க்களம் ; மானமே உயிரென வாழ்ந்த சேரமான் கணைக்கால் இரும்பொறை என்பானுக்கும் சோழன் கோச்செங்கணான் என்பானுக்கும் நிகழ்ந்த போர்க்களம். சேரமான் மேல் அளவற்ற அன்பும் பற்றுமையும் உடையவர்தாம் புலவர். ஆனால், சோழன் யானை செய்த வீறுமிக்க செயலைக் கண்டது கண்டவாறு கூற அவர் தயங்கவில்லை. சோழன் யானை, அச்சோழனுக்கு மாறாக நின்றவர் தூக்கிப் பிடித்திருந்த வெண்கொற்றக் குடைகளையெல்லாம் எற்றி எற்றித் தள்ளின. எளிமையாக - இயல்பாக - அக்குடைகள் சாய்ந்தன, உருண்டன; சிதைந்தன. புலவர் பொய்கையார் பார்வை, முன்னோக்கிச் சென்றது ! ஆயன் பசு காளானை எற்றித் தள்ளிய காட்சி முன்னே நின்றது ! யானை குடையை எற்றும் காட்சி பின்னே தொடுத்து நின்றது! உவமை வழி அறநெறி விளக்கம் குடைக்காளான் எனப் பொது மக்களால் வழங்கப்படும் 'சொல்லாட்சி ' அவரை வியப்பில் ஆழ்த்தியது! காளான் நிறம், குடைநிறம் - இரண்டும் வெள்ளை ! காளான் வடிவம், குடைவடிவம் - இரண்டும் வட்டம்! பசு எற்றுதல், யானை எற்றுதல் - இரண்டும் வினைஒற்றுமை! காளான் சிறு வடிவம், குடை பெருவடிவம் - இரண்டன் அளவுநிலை! இவற்றை எண்ணிப் பூரித்தார். ''இப்படியொரு , 'காட்சி இணையைக் காண முடியுமா? யான் கண்டேனே ! காண்கிறேனே!'' என வியந்தார். காட்சியை அன்று! கண்ட தம்மையே வியந்தார். தாம் காணவாய்த்த காட்சியை ஓவியமாக - சொல்லோவியமாகத் தீட்டினார்! அது களவழி நாற்பது என்னும் நூலில் இடம் பெற்றது. அப்பாடல் அவர்தம் உணர்வு மேம்பாட்டை மட்டுமன்றி, உவமை மேம்பாட்டையும், உவமை உள்ளத்தை ஆட்கொள்ளும் திறத்தையும் உணர்த்த வல்லனவாகத் திகழ்கின்றது. அப்பாடல் : "ஓஓ உவமன் உறழ்வின்றி ஒத்ததே காவிரி நாடன் கழுமலம் கொண்ட நாள் மாவுதைப்ப மாற்றார் குடையெலாம் கீழ்மேலா ஆவுதை காளாம்பி போன்ற புனல்நாடன் மேவாரை அட்ட களத்து." என்பது. பொய்கைப் புலவர் கண்ட காட்சி, அருமையான காட்சியாக இன்றும் விளங்குவது எதனால்? அவர் படைப்பை அவர் துய்த்த அளவில் விட்டுவிடாமல், அவர் வருங்கால மக்களுக்காக ஆவணப் படுத்தி வைத்துள்ள அருமை அல்லவோ இதன் மூலம் ! ''இப்படி எத்தனை எத்தனை பேர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். நம் முந்தையர் தேடி வைத்த தேட்டைத் தொகுத்துத் தோட்டாக்கி வைத்தால் என்ன?' என்னும் எண்ணம் எனக்கு 1965 இல் உண்டாயிற்று இதற்கு இதுவே உவமை என்று கூறும் 'உவமான சங்கிரகம்' என்னும் பின்னூல், புலவன் புலமையை 'ஆலை உருவாக்கப் பொருள்' போல் ஆக்கும் குறைபாடுடைய தாயிற்று. ஆனால், செய்யுள் சிறந்த சுவையாகவும், பொருள் விளக்கமுடையதாகவும் அமைய உவமை என ஓர் அழகியல் வேண்டும் என்பதைத் தம் கூர்த்த அறிவால் கண்டு, செய்யுள் இயலுக்கு முற்பட உவமை யியலையும், அதற்கு முற்பட மெய்ப்பாட்டியலையும் வைத்த தொல்காப்பியத் தோன்றல் காட்டிய வழியில், சங்கப்புலவர்கள் முதல் இக்காலப் புலவர்கள் வரை படைத்த படைப்புகளில் உள்ள உவமைகளைத் தொகுத்து அடைவாக்கினால் எத்தகு பாரிய நலமாக இருக்கும் என்ற எண்ணத்தில் ஆழ்ந்தேன். எல்லையிலாக் கடலாழம் காண எளியேன் முயல்வதாக அவ்வுவமைத் தொகுப்பு முடிந்தது! ஈராண்டுகள் கொண்ட முயற்சியில், ஏறத்தாழ எண்ணாயிரம் உவமைகள் தொகுக்கப்பட்டன. ஆயினும் தொகையாக்கப்பட வேண்டுவ மேலும் பல மடங்காக உணர்ந்த பட்டறிவால், ஒரு கட்டளை எனக்கு யானே அமைத்துக் கொண்டேன். "அறங்கூறும் உவமைகளை மட்டும் அடைவு செய்து, பொருள் வகைப்படுத்தித் தமிழுலாக் கொள்ள வைத்தல் சாலும் '' என முடிவு செய்தேன். அவ்வடைவையும் முப்பால் படுத்திக் கொண்டேன். 'அறம்' என்றே புறநானூற்றுப் புலவர் ஆலத்தூர் கிழாரால் பாடப்பெற்ற திருக்குறள் முதலாக வெளிப்பட்ட அறநூல்கள் வழியாகக் காணக் கிடைக்கும் அறம் பற்றிய உவமைகள் ஓராயிரத்தைத் தொகுத்து, அத் தொகையை இறை முதலாக மெய்யுணர்வு ஈறாகப் பதினைந்து தலைப்புகளில் பகுத்து நூலாக்கம் செய்தேன். ''உவமை வழி அறநெறி விளக்கம் என்னும் பெயரால் முதற் பாகமாகத் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வழியாக வெளிவந்தது. ஆண்டு 1968. இரண்டாம் பாகம், சங்க நூல் உவமைகளையும், மூன்றாம் பாகம், காப்பிய உவமைகளையும் கொண்டமைய எழுதிவந்தேன். இவ்விரு தொகுதிகளிலும் ஏறத்தாழ ஆயிரத்து ஐந்நூறு உவமைகள் இடம் பெற்றன. முதற்பதிப்பு வெளிவந்து அதன் பயன்பாட்டை உணர்ந்த பெருமக்கள் பலர்; பாராட்டிக் கூறியவர் சிலர். அவருள் நெறி யொன்று காட்டியவர் ஒருவர். அவர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் ஆவர். "இத்தொகுப்பு மேடைப் பொழிவாளர், கட்டுரையாளர் ஆயோர்க்கு அரிய கையேடாகும். இந்நூலில் காட்டப்பட்டுள்ள நூல்கள் அனைத்தையும் கற்பார் ஒவ்வொருவரும் தொகுத்து வைத்திருப்பார் எனல் இயலாது. உரைநடையில் காட்டியுள்ள உவமையின் மூலமாகிய பாடல், பாடற்பகுதி அவ்வவற்றின் கீழே அமைந்தால், மேலும் பயனாம்" என்றார். இதனைக் கூறக் கேட்டவர் கழக நிறுவனரும் பதிப்பாளாரும் ஆகிய தாமரைச் செல்வர் வ. சுப்பையா அவர்கள் ஆவர். தாம் நாவலர்பால் கேட்ட குறிப்பைக் கூறிப், பின்வரும் தொகுதிகளை உரையும் பாட்டுமாக அமைக்க வேண்டினார். அவ்வகையில் பின்னிரண்டு தொகுதிகளும் தொடர்ந்து வெளிவந்தன. உவமை வழி அறநெறிவிளக்க முத்தொகுதிகளும் 1968 முதல் 1971 ஆம் ஆண்டுக்குள் வெளிவந்தன. சிலர்தம் ஆழிய உணர்வு எக்காலக் கழிவும் தாண்டிச் சுடர்விட வல்லது என்பதை உணர்த்தியது. உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவராய்த் திகழும் திரு. பழ. நெடுமாறனார் உரை. திரு. கோ. இளவழகனாரும் யானும் ஐயா அவர்களைக் கண்டு உரையாடிக் கொண்டு இருக்கும்போது, 'உவமைவழி அறநெறி விளக்கத் தொகுதிகளின் பயன்பாட்டையும், அவற்றை மீளப் பதிப்பிக்க வேண்டிய தேவையையும் உணர்வோடு உணர்த்தினார். இளவழகனார் உடனே வெளியிடுவதாக உறுதி மொழிந்தார். ஆனால், என்னுளம் திகைப்பில் ஆழ்ந்தது. முத்தொகுதி களில் முதல் தொகுதி என்னிடம் இல்லை. பின்னிரு தொகுதிகள் மட்டுமே இருந்தன. பல்லாண்டுகளாக முதல் தொகுதியை அடைய முயன்றும் கைகண்ட பயன் இல்லை! மூலப்படி இல்லாமல் என்ன செய்வது? தமிழ்க்கடல் மறைமலையடிகளார் பெயர் தாங்கி, வள்ளலார் முதற் பொழிவிடத்தில் அமைந்துள்ள கழக நூலகத்தில், தேடிப் பெறக்கூடும் என்னும் நம்பிக்கையில் ஒரு துணிவு கொண்டு இசைந்தேன். ஊருக்கு வந்தேன் ; ஈரோட்டில் இருந்து, தமிழ் இலக்கியக் கழகச் செயலாளர் இனிய அன்பர் திரு. கண்ணையனார் பன்னிரண்டு சிப்பங்களில் நூல்களைப் பாவாணர் ஆராய்ச்சி நூலகத்திற்கு விடுத்தும், கொடையாக்கியதைக் கண்டு மகிழ்ந்தேன்! முதற்சிப்பத்தைப் பிரித்து நூல்களை நோக்கினேன். தேடியிருந்த உவமைவழி அறநெறி விளக்க முதற் தொகுதி ஓடிவந்து என்கையை அடைந்தது! உவகையானால் உவகை! "அழுந்திய உணர்வு ஆக்கம் செய்தே தீரும்" என்று, அத்தொகுதி சொல்லாமல் சொல்லி மகிழ்வித்தது. கண்ணையனார் முதற்கண் இந்நூலை வாங்கும் போதும், யான் கொண்ட மகிழ்ச்சியை அடைந்திருக்க மாட்டார். முதற்பதிப்பு வெளிவந்து முதன் முறையாக இந்நூலைக் கண்ட போதும் இம்மகிழ்ச்சியை யான் உறுதியாகக் கொண்டிருக்க மாட்டேன். ஏனெனில், ''காணாமல் போனதைக் கண்டடைந்த களிப்பு " இக்களிப்பு ! இளங்கோவடிகள் வாக்காகச் சொன்னால், "கண்களி மயக்கத்துக் காதல் காட்சி அது. நெடுஞ்செழியனார் உரையை மறவாமல், முதற் தொகுதிக் குரிய உவமைகளுக்கு மூலப்பகுதி அல்லது பாடல் சேர்க்கப்பட்டு அச்சிடப்பட்டது. குறுகிய காலத்தில் அச்சிட்டு முடிக்கும் திட்டம். அதனால், இளவழகனார் தம் பதிப்பகம் சார் புலமையரைக் கொண்டு பெரும்பால் தொகுப்பும், மெய்ப்புப் பார்ப்பும் நிறைவித் தார். முத்தொகுதிகளும் ஒரு சேர வெளியிடும் திட்டம் உலகத் தமிழர் பேரமைப்பு வழியே, பழஞ் சேரலமாம் , சேலமா நகரில் வெளிப்பட லாயிற்று. கழக ஆட்சிப் பொறுப்பாளர் அமைச்சர், முனைவர் திருமிகு. இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் கழகவழி வெளிவந்த என் நூல்களைத் தவச்சாலை வெளியீடாகக் கொள்ள இசைவு வழங்கி னார்கள். ஆதலால், தவச்சாலை உரிமை கொண்ட நூல்களைத் திரு. இளவழகனார் வெளியிடும் பொறுப்பேற்றுச் செய்துள்ளமைக்குப் பெருநன்றியுடையேன். இத்தொகுப்பு களுக்குப் பல்லாற் நானும் உழைத்த தமிழ்மண் பதிப்பகப் பணியாளர் தொண்டர் ஆகிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்தும் நன்றியும் உடையேன். இனி, இத்தொகுதிகளின் பயன்பாடு குறித்த சில செய்திகள் : 1. சொற்பொழிவாளர், கட்டுரையாளர் ஆகியோர்க்குக் கையில் வாய்த்த கருவூலம் அன்னவை இவை. 2. ஒப்பீட்டு ஆய்வாளர்க்கு அருந்துணை. 3. வாழ்வியல் வளம் காண விழைவார்க்கு வாய்த்த விருந்து. 4 தமிழர் தம் ஊன்றிய பார்வையை உணர்த்தும் உயிர்ப்பிடம். 5. "இக் காட்சிதானே, அக்காட்சி ! அக்காட்சியை அவர் பொதுவாக்கம் செய்தது போல, நாமும் ஏன் செய்யக்கூடாது?" எனப் படைப்பாளியையும் சிந்தனையாளர்களையும் தூண்டும், தூண்டாமணிவிளக்கு. மேல் ஒரு குறிப்பு: ஒரு காட்சியை ஒரு புலவர் தாமா கண்டார்? எத்தனை எத்தனை பேர்கள் கண்டனர்? அவர்கள் காட்சிகள் எத்தனை எத்தனை வெளிப்பாடாகிச் சிறக்கின்றன - என வியப்பில் ஆழ்த்து கின்றன! நெல் புல், வாழை கரும்பு, வண்டு நண்டு, ஆடு மாடு, ஆறு மலை, கடல் வான், கதிர் திங்கள் - இக்காட்சிகள் கால - இட - எல்லைகள் கடந்தவை அல்லவோ! இவற்றைக் கண்டு படைத்த படைப்பாளர்களும் கால இட எல்லை கடந்து நின்றவர்கள் அல்லரோ! ஆயினும் என்ன; அவர்கள் நம்மோடு உறவாடுகின்றனரே! தம் படைப்புகளை நம்மோடு உறவாட விடுகின்றனரே! தாமும், தம் படைப்புகளும் 'சாவா வாழ்வுக்குத் தூண்டலாய்த் திகழ ஓவிய ஆவணக் காட்சி ஆக்கிவிட்டனரே! "நாம் பிறந்தமண் எவ்வளவு உயர்ந்தமண்! நம்மவர் எவ்வளவு உயர்ந்தவர்!' என்னும் வீறுகள் கிளர்ந்து நம்மை விம்மிதம் உறச் செய்வன் அல்லவா! ஆற்றலும் ஆர்வமும் உடையார் கூட்டுப்பணியாக - கூட்டுறவுப் பணியாக - உவமைகளையெல்லாம் பொருள் வரிசையில் தொகுத்தால், அரும்பெருஞ்செயல் அல்லவா! அத் தொகை தொடர இத்தொகை தூண்டு மானால், இத் தொகை பெற்ற பேறாக அமையும் அல்லவோ! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன், இரா. இளங்குமர 1. இறை 1. மலரினுள்ளே மணம் பொருந்தி இருப்பதுபோல் உயிர்களின் உள்ளே இறைவன் பொருந்தி அமைந்துள்னான். 2. எள்ளுக்குள் எங்கும் எண்ணெய் நிரவி இருப்பது போல இறைவன் எல்லா இடங்களிலும் நிரவி அமைந்துள்ளான். - கம்பர், உயுத்தகாண்டம் : 250. உலகுதந் தானும் பல்வே றுயிர்கள் தந் தானும் உள்ளுற்று உலைவிலா உயிர்கள் தோறும் அங்கங்கே உறைகின் றானும் மலரினின் மணமும் எள்ளில் எண்ணெயும் போல எங்கும் அலகில்பல் பொருளும் பற்றி முற்றிய அரிகாண் அத்தா. (1,2) 3. அகரம் உயிரெழுத்தின்கண்ணும், மெய்யெழுத்தின் கண்ணும் கலந்து நிற்கும். அதுபோல் இறைவன் இயங்குதிணைக் கண்ணும், நிலைத்திணைக் கண்ணும் அவ்வவற்றின் தன்மை யாய்க் கலந்து நிற்பான். - திருவிளையாடற் புராணம், 51:9 அத்தகு வருண மெல்லாம் ஏறிநின் றவற்ற வற்றின் மெய்த்தகு தன்மை யெய்தி வேறுவேறியக்கம் தோன்ற உய்த்திடும் அகாரத்திற்கு முதன்மையாய் ஒழுகு நாதர் முத்தமிழ் ஆல வாயெம் முதல்வரம் முறையான் மன்னோ . (3) 4. ஓம் என்னும் ஓர் எழுத்தினுள்ளே அ', 'உ', 'ம்' என்னும் மூன்று எழுத்துக்களும் அடங்கியுள்ளன. அவற்றுள் முதல் எழுத்தாம் அகரம் போல்பவன் இறைவன். ஆதலால் அவனது முதன்மையும், மற்றவற்றைத் தன்கண் அடக்கி வைத்துள்ள சீர்மையும் புலனாம். - கம்பர், உயுத்தகாண்டம் : 206 ஓமெனும் ஓர் எழுத் ததனின் உள்ளுயிர் ஆமவன் அறிவினுக் கறிவும் ஆயினான். (4) 5. நீரினுள்ளே மொக்குள்கள் (குமிழ்கள்) தோன்றும்; அது போல் இறைவனுக்குள்ளே பலவகை அண்டங்களும் தோன்றி யுள்ளன. - கம்பர்; ஆரணிய காண்டம் : 1185. நிற்கும் நெடுநீத்தம் நீரின் முளைத்தெழுந்த மொக்கு ளேபோல முளைத்தெழுந்த அண்டங்கள் ஒக்கவுயர்ந் தூனுளே தோன்றி ஒளிக்கின்ற பக்கம் அறிதற்(கு) எளிதோ பரம்பரனே. (5) (6) சின்னஞ்சிறிய ஆல விதையின் உள்ளே மிகப்பெரிய ஆலமரம் அடங்கி இருப்பதுபோல நுண்ணிய பொருள்களின் உள்ளேயும் மிகப் பெரியவனாம் இறைவன் அடங்கியுள்ளான். - கம்பர், உயுத்தகாண்டம் : 204 காலமும் கருவியும் இடனு மாய்க்கடைப் பாலமை பயனுமாய்ப் பயன்துய்ப் பானுமாய்ச் சீலமும் அவைதருந் திருவு மாயுளன் ஆலமும் வித்து மொத் தடங்கு மாண்மையான். (6) 7. பண்ணின் பகுதி அனைத்தினுள்ளும் இசை அமைந்து இருப்பதுபோல் எங்கும் பரவி இருப்பவன் இறைவன். - திருவிளையாடற் புராணம், 5:175 விண்ணுளார் திசையி னுள்ளார் வேறுளார் பிலத்தினுள்ளார் மண்ணுளார் பிறரும் வேள்வி மண்டபத் தடங்கி என்றும் பண்ணுளார் ஓசை போலப் பரந்தெங்கும் நிறைந்த மூன்று கண்ணுளார் அடியின் நீழல் கலந்துளார் தம்மை ஒத்தார். (7) 8. பூங்கொடியில் இருந்து தோன்றும் பூவும், அதன் வண்ணமும் ஆங்கிருந்து பரவும் மணமும் போன்றன , முழுமுதல் இறைவனில் இருந்து தோன்றும் மெய்ம்மை , அறிவு, இன்பம் ஆகிய முப்பெரு நலங்கள். - திருவிளையாடற் புராணம், பாயிரம் : 5 பூவண்ணம் பூவின் மணம் போல் மெய்ப் போதவின்பம் ஆவண்ண மெய்கொண்ட வன். (8) 9. வித்து இல்லாமல் எங்கும் விளைவு உண்டாவது இல்லை. அதுபோல் இறைவன் ஒருவன் இல்லாமல் இந்த உலகம் அமைந்ததில்லை. - கம்பர், உயுத்தகாண்டம் : 188. வித்தின்றி விளைவதொன் றில்லை வேந்தநின் பித்தின்றி யுணர்தி யேல் அளவைப் பெய்குவன். (9) 10. மலரில் விடாமல் மணம் பரவி நிற்கும்; அதுபோல் உலகியல் பொருள்கள் அனைத்திலும் விடாமல் இறைவன் பரவி நிற்பான். - கம்பர், கிட்கிந்தா காண்டம் : 369. யாவரும் எவையுமாய் இருந்துவும் பயனுமாய்ப் பூவுநல் வெறியுமொத் தொருவரும் பொதுமையாய் (10) 11. இணையற்ற கலைத் தேர்ச்சியாளன் மிக இனிதாக வீணை மீட்டுவான். அவ் வீணை இசையினும் இனியவன் இறைவன். - கம்பர், உயுத்தகாண்டம் : 205. உள்ளுற உணர்வினிது உணர்ந்த ஓசையோர் தெள்விளி யாழிடைத் தெரியும் செய்கையான் உள்ளுளன் புறத்துளன் ஒன்றும் நண்ணலான் தள்ளரு மறைகளும் அருளும் தன்மையான். (11) 12. இறைவன் யானை போல்வான். அவனை அடியார் தம் உள்ளமே கூடமாக, ஊக்கமே கட்டுத்தறியாக, நீங்காத அன்பே சங்கிலியாகப் பிணைத்துக் கொள்ளுதல் வேண்டும். அவ் யானைக்கு ஊட்ட வேண்டிய கவளமோ, கள்ளவினையும் பற்றும் நீங்கிய தூய உள்ளமே யாகும். - திருவிளையாடற்புராணம், பாயிரம் : 14. உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனும் தறிநிறுவி உறுதி யாகத் தள்ளரிய அன்பென்னும் தொடர்பூட்டி யிடைபடுத்தித் தறுகட் பாசக் கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணை என்னும் வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை நினைந்துவரு வினைகள் தீர்ப்பாம். (12) 13. இறைவன் யானை ஒப்பான். அவ் யானை, பற்றறுத்த பெரியோரின் நிலைப்பட்ட உள்ளம் என்னும் வலிய கட்டுத் தறியில் கட்டப்பெற்று, 'மறை' என்னும் உயர்ந்த கூடத்தில் நிற்கும். - கலிங்கத்துப்பரணி : 9. காரணகாரியங்களின் கட்டறுப்போர் யோகக் கருத்தென்னும் தனித்தறியில் கட்டக் கட்டுண்டு) ஆரணமாம் நாற்கூடத்(து) அணைந்து நிற்கும் ஐங்கரத்(து) ஒருகளிற்றுக்(கு) அன்பு செய்வாம். (13) 14. பெருகிவரும் பிறவி என்பது ஆழ்கடல் போன்றது; அப்பிறவியைத் தொடர்ந்து வந்து அலைக்கழிக்கும் பழவினை என்பது கடலிடைத் தோன்றும் 'சுழல்' போன்றது ; அச்சுழலை அல்லல் இன்றிக் கடக்க உதவும் உறுதிமிக்க மரக்கலம் போன்றது இறைவன் திருவடியே. - கம்பர், உயுத்தகாண்டம் : 175. தோற்றம் என்னுமத் தொல்வினை தொடுகடற் சுழிநின்று நன்கலன் ஏற்றும். (14) 15. உயிர்களைப் பற்றித் துன்புறுத்தும் பிணி நோய்களுக்கு மருந்துகள் பலப்பல உண்டு. ஆனால் பிறவி என்னும் நோய் வராமல் தடுத்துக் காக்கும் மருந்து இறையருட்பேறு எய்துவது ஒன்றே . - கம்பர் கிட்கிந்தா காண்டம் : 393. பாலமை தவிர்நீ என்சொல் பற்றுதி யாயின் தன்னின் மேலொரு பொருளும் இல்லா மெய்ப்பொருள் வில்லும் தாங்கிக் கால்தரை தோய நின்று கட்புலக் குற்ற தம்மா மால்தரும் பிறவி நோய்க்கு மருந்தென வணங்கு மைந்த. (15) 16. பொற்கட்டியில் இருந்து பலவகைப் பொற்கலங்கள் தோன்றப்பெறும். அதுபோல் இறைவனில் இருந்து உயிரும் உலகும் தோன்றும். - கம்பர், உயுத்தகாண்டம் : 290. நின்னுளே என்னை நிருமித்தாய் நின்னருளால் என்னுளே எப்பொருளும் யாவரையும் யானின்றேன் பின்னிலேன் முன்னிலேன் எந்தை பெருமானே பொன்னுளே தோன்றியவேளர் பொற்கலனே போல்கின்றேன். (16) 17. சிலந்திப் பூச்சி தன் வடிவுக்குச் சிறிதும் வேறுபாடில்லாத நூலை உண்டாக்கித் தான் உண்டாக்கிய நூலை மீண்டும் தானே உட்கொள்ளும். அதுபோல் இறைவன் தன் உண்மை உருவத் திற்கு வேறுபாடு இல்லாமல் உலகங்களைப் படைத்து மீண்டும் அவற்றைத் தன்னுள் ஒடுக்கிக் கொள்வான். - கம்பர், உயுத்தகாண்டம் : 2618. அண்டம் பலவும் அனைத்துயிரும் அகத்தும் புறத்தும் உளவாக்கி உண்டும் உமிழ்ந்தும் அளந்திடந்தும் உள்ளும் புறத்தும் உளையாகிக் கொண்டு சிலம்பி தன்வாயில் கூர்நூல் இயையக் கூடியற்றிப் பண்டும் இன்றும் அமைக்கின்ற படியை ஒருவாய் பரமேட்டீ. (17) 18. ஒரு மாலையின் கண் பலவகையான அழகிய மலர்கள் ஒன்றாக அமைந்து அழகுபடுத்துவதுபோலப் பலப்பல சமயங்களும் இறைவன் ஒருவனை அழகுபடுத்துகின்றன. 19. கடலில் அலைகள் பலவாக எழுந்து காணப்பட்டாலும் அவ்வலைகள் அனைத்தும் அக்கடலுக்குள்ளாகவே அடங்கி விடுவது போல், பலப்பல சமயத் தோர்களும் சொல்லும், பொருள்கள் எல்லாமும் ஒப்பற்ற இறைவன் ஒருவனுள்ளேயே அடங்கும். - கம்பர் உயுத்தகாண்டம் : 207. காலையில் நறுமலர் ஒன்றக் கட்டிய மாலையின் மலர்புரை சமய வாதியர் சூலையின் திருக்கலால் சொல்லு வார்க்கெலாம் வேலையும் திரையும்போல் வேறு பாடிலான் (18,19) 20. கடல் நீர் ஒன்றே ஆறு, கால்வாய்; குளம், கிணறு, பள்ளம், அகழ், கிடங்கு ஆகிய இடங்களை அடைந்து வெவ்வேறு பெயர் பெற்றுக் கடமை புரியும். அதுபோல் முழுமுதல் இறைவன் ஒருவனே வெவ்வேறு பெயர்களைப் பெற்றுப் படைத்தல், காத்தல், அளித்தல், அழித்தல், மறைத்தல் ஆகிய தொழில்களைச் செய்வான். - திருவிளையாடற் புராணம், திருநாட்டுச் சிறப்பு : 17. ஈறிலாதவள் ஒருத்தியே ஐந்தொழில் இயற்ற வேறு வேறு பேர்பெற்றென வேலைநீர் ஒன்றே யாறுகால் குளம் கூவல் குண்டகழ் கிடங்கெனப்பேர் மாறி யீறில்வான் பயிரெலாம் வளர்ப்பது மாதோ. (20) 21. தனிக் குற்றெழுத்தின் முன் நின்ற லகரம் றகரமாக மாறும். (கல்+தீது : கற்றது) அன்றியும் அஃது ஆய்தம் ஆகவும் மாறும். (கல்+தீது கஃறீது) ஆயினும் அந்த நகரமும் ஆய்தமும் லகரமே என்பதைக் கற்றோர் தெளிவாக அறிவர். அதுபோல் இறைவன் எவ்வுருவங் கொண்டு தோன்றினாலும் மெய்யுணர்வு உடையவர் அவனைத் தெள்ளிதின் அறிவர். - பிரபுலிங்க லீலை , அக்கமாதேவி உற்பத்தி கதி : 28. குறில்வழி லகரம் தனிநிலை ஆயும் கூடிய தகரமுன் எழுத்தென்(று) அறிகுறி வடிவம் திரிதல் போல் நந்தி அடல்விடை மெய்திரிந் துறினும் நறுமலர் விழியிற் கண்டவர் எல்லாம் நந்தியே என்றுளம் மகிழ்ந்தார். (21) 22. புகையைக் காணுங்கால் ஆங்கு நெருப்பு உண்டென உணரலாம். அது போல் இயற்கைப் பொருள்களைக் கண்டு இறைவன் உண்மையை எளிதில் உணரலாம். - கம்பர், உயுத்தகாண்டம் : 206 தாமமூ வுலகமுந் தழுவிச் சார்தலால் தூமமும் கனலும்போல் தொடர்ந்த தோற்றத்தான். (22) 23. குழந்தைகள் விளையாட்டாகச் சிறுவீடு கட்டி ஆங்குக் குடியிருந்து பின்னர் அவ்வீட்டை அழிப்பர். அதுபோல் இறைவனுக்கு உலகைப் படைப்பதும், வேண்டுவனவற்றை உதவிக் காப்பதும், இறுதிக்கண் அழிப்பதும் விளையாட்டுப் போன்ற எளிய செயல்களேயாம். - கம்பர், பாலகாண்டம், தற்சிறப்புப்பாயிரம் : 1. உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலாவிளை யாட்டுடை யாரவர் தலைவ ரன்னவர்க் கேசர ணாங்களே. (23) 24. உடலில் உள்ள நரை திரை முதலிய குறைபாடுகள் உயிரைச் சேரா அதுபோல் உலகிடையில் காணப்பெறும் இன்ப துன்பங்கள் உலகத்து உயிர் கட்கு உயிராய் விளங்கும் இறைவனைச் சேர மாட்டா. - கம்பர், உயுத்தகாண்டம் : 2615 உன்னை உள்ள படியறியோம் உலகம் உள்ள திறமுள்ளோம் பின்னை அறியோம் முன்னறியோம் இடையும் அறியோம் பிறழாமல் நின்னை வணங்கி நீவகுத்த நெறியில் நிற்கும் அதுவல்லால் என்னை அறியேம் செயற்பால இன்ப துன்பம் இல்லோனே! (24) 25. தளர்ச்சியும் மயக்கமும் உடையவர் ஓங்கி உயர்ந்த மலையுச்சியை அடைவது மிக அரிது. அதுபோல் என் கடவுள் உயர்ந்தது' 'உன் கடவுள் உயர்ந்தது' என்று தருக்கத்திலே பொழுதுபோக்கித் திரிபவர்க்குக் கடவுளை அடைவது மிகமிக அரிது. - கம்பர், கிட்கிந்தா காண்டம் : 776. அரனதிகன் உலகளந்த அரியதிகன் என்றுரைக்கும் அறிவி லார்க்குப் பரகதி சென்றடைவரிய பரிசேபோல் புகலரிய பண்பிற் றாமால் சுரந்தியின் அயலதுவான் தோய்குடுமிச் சுடர்த் தொகைய தொழுதோர்க் கெல்லாம் வரனதிகம் தருந்தகைய அருந்ததிமா நெடுமலையை வணங்கி அப்பால். (25) 26. கட்பார்வை செல்லும் வழியைத் தொடர்ந்து கருத்துச் செல்லுவது போல இறையருளைத் தொடர்ந்து இறைவன் அடியார்கள் செல்வர். - பெரிய புராணம், திருஞானசம்பந்தர் புராணம் : 84. அண்ணல் அணைந்தமை கண்டு தொடர்ந்தெழும் அன்பாலே மண்மிசை நின்ற மறைச்சிறு போதகம் அன்னாரும் கண்வழி சென்ற கருத்து விடாது கலந்தேகப் புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலின் உட்புகுந்தார். (26) 27. காந்தத்தின் ஆற்றலால் இழுக்கப் பெற்ற இரும்பு அதனுடன் ஒட்டிக் கொள்ளும். அதுபோல் இறைவன் அருளாற்றலால் ஈர்க்கப் பெற்ற அடியார் களும் இறைவனை எளிதில் ஒட்டிக் கொள்வர். - பெரிய புராணம், தடுத்தாட் கொண்ட புராணம் : 50. செல்லும் நான் மறையோன் தன்பின் திருமுகக் காரந்தஞ் சேர்ந்த வல்லிரும் பணையு மாபோல் வள்ளலுங் கடிது சென்றான். (27) 28. அறிவு நிலை சிதறிப் பித்தர் ஆகியவர்க்கு உட்கவலை இல்லாது ஒழியும். பிறர் என்ன நினைப்பார்?' என்று எண்ணும் வெளிக் கவலையும் இல்லாது ஒழியும். அது போலவே இறைவன் மேல் இணையற்ற பற்றுக் கொண்ட அடியார்களுக்கும் உட் கவலையும் வெளிக் கவலையும் ஒழியும். - பெரிய புராணம், கண்ணப்ப நாயனார் புராணம் : 179. நின்ற செங் குருதி கண்டார் நிலத்தினின் றேறப் பாய்ந்தார் குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினர் கூத்தும் ஆடி நன்று நான் செய்த இந்த மதியென நகையும் தோன்ற ஒன்றிய களிப்பி னாலே உன்மத்தர் போல மிக்கார். (28) 29. யாதானும் ஒருவழியால் தடைப்படுத்தப் பட்ட கன்று கதறித் துடிக்குமானால் அக் கதறலைக் கேட்ட ஈன்றணிய தாய்ப்பசுவும் கதறிக் கொண்டு கன்றை நெருங்கி ஓடிவரும். அதுபோல் மெய்யடியார் வேண்டுதல் கேட்டு இறைவன் செவிசாய்த்து அருள்புரிவான். - பெரிய புராணம், சேரமான் பெருமாள் நாயனார் புராணம் : 135. மன்றில் நிறைந்து நடமாட வல்லார் தொல்லை ஐயாற்றில் கன்று தடையுண் டெதிரழைக்கக் கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல் ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம் கேட்க ஓலமென நின்று மொழிந்தார். (29) 30. மரப் பொந்தினைப் பற்றிப் பிடித்துக் கொண்டு எத்தகைய வலிய இழுப்பாற்றலையும் வெல்ல வல்லது உடும்பு. இறைவனை அடையக் கருதுபவரும் அவ்வுடும்பைப் போலவே விடாமல் இறைவனைச் சிக்கெனப் பற்றிப் பிடித்துக் கொள்ளு தல் வேண்டும். - பெரிய புராணம், கண்ணப்ப நாயனார் புராணம் : 116. அங்கிவன் மலையில் தேவர் தம்மைக்கண் டணைத்துக் கொண்டு வங்கினைப் பற்றிப் போகா வல்லும் பென்ன நீங்கான். (30) 31. தாய் தன் கன்றை அறிந்து அன்பு செலுத்தும்; கன்றும் தன் தாயை அறிந்து அன்பு செலுத்தும். தாய் மட்டும் கன்றின் மேல் அன்பு செலுத்தத் தாயைக் கன்று மறந்து திரிவதில்லை. அதுபோல் உலகத்து உயிர்களுக்கு எல்லாம் தாயாக விளங்கும் இறைவன் உயிர்களிடத்து அன்பு செலுத்தி அருள் செய்வது போலவே, உயிர்களும் அவ்விறைவனிடத்து அன்பு செலுத்துதல் வேண்டும். - கம்பர், ஆரணிய காண்டம் : 55. தாய் தன்னை அறியாத கன்றில்லை தன்கன்றை ஆயு மறியும் உலகின் தாய் ஆகின் ஐய நீ அறிதி எப்பொருளும் அவையுன்னை நிலையறியா மாயையிது என்கொலோ வாராதே வரவல்லாய். (31) 32. சுவருக்குள் மறைந்து இருப்பவர் வடிவைக் காணுதற்கு இயலாது. ஆனால் பளிக்குச் சுவர் அமைந்த அறைக்குள் புகுந் திருப்பார் வடிவை எளிதில் காணலாம். அதுபோல் வெளிப்படு தற்கு அரியவனாம் இறைவன் மனமாசற்றுத் தவநெறி மேற் கொண்ட பெருமக்களுக்கு எளிதாக வெளிப்பட்டு அருள் செய்கின்றான். - கம்பர், அயோத்தியா காண்டம் : 759. அளிக்கும் நாயகன் மாயைபுக்கு அடங்கினன் எனினும் களிப்பில் இந்தியத்தி யோகியைக் கரக்கிலன் அதுபோல் ஒளித்து நின்றுளர் ஆயினும் உருத் தெரிக் கின்ற பளிக்கறைச் சில பரிமுக மாக்களைப் பாராய். (32) 33. தலைவன் மேல் காதல் கொண்ட தலைவிக்குத் தான் காணும் பொருள்கள் எல்லாம் அத்தலைவனாகவே தோன்றும். அது போல் இறைவன் மாட்டு மெய்யன்பு உடையார்க்கும் நோக்கும் பொருள்கள் எல்லாம் அவன் வடிவாகவே தோன்றும். - திருவிளையாடற் புராணம், 5:136 வலத்தயன் வரவு காணாள் மாலிடங் காணாள் விண்ணோர் குலத்தையும் காணாள் மண்ணோர் குழாத்தையும் காணாள் ஞானப் புலத்தவர் போலக் கண்ட பொருளெலாம் மழுமான் செங்கைத் தலத்தவன் வடிவாக் கண்டாள் ஒரு தனித் தையல் மாது. (33) 34. மெய்யடியார்க்குத் தந்தை, தாய், குரு, ஆசான் ஆகியவன் இறைவனே; பற்றில்லாமையே பண்பமைந்த மனையாள், உலகத்து உயிர்கள் எல்லாம் மக்கள், சுற்றம் அடியார்; பிறவியே பகை. - திருவிளையாடற் புராணம், 50:84. தந்தை தாய் குரவன் ஆசான் சங்கரன் நிராசை பெண்டிர் மைந்தர்பல் லுயிரும் சுற்றம் மாசிலா ஈசன் அன்பர் அந்தமில் பிறவி ஏழும் அடுபகை என்ப தோர்ந்தே எந்தையார் கருணை காட்டி எம்மையாட் கொண்ட அன்றே. (34) 35. இறைவன் மேல் உள்ளார்ந்த காதலால் உருகிச் சொல்லும் சொல்லே மணி. மாசிலா அன்புப் பெருக்கே அந்த மணி கோக்கப் பெற்ற நாண் (கயிறு). அன்புமீதூர்ந்த அழுகையே அந்த மணிமாலையை இறைவற்குச் சூட்டுதல். மெய்யடிமைத் தன்மை என்பது ஈது. - திருவிளையாடற் புராணம், 50. 50. பழுதி லாதசொன் மணியினைப் பத்தி செய் தன்பு முழுது மாகிய வடத்தினான முறைதொடுத் தலங்கல் அழுது சாத்துமெய் யன்பருக் ககமகிழ்ந் தையர் வழுவிலாதபேர் மாணிக்க வாசகன் என்றார். (35) 36. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவந்த காலையில் குளம், தடம், சோலை, வயல் ஆயவற்றை நிரப்பி நீர் வழியச் செய்யும். அதுபோல் இறைவன் திருவருட்பேறு உண்டாயின் அடியார்கள் உள்ளத்தில் அன்பு பெருகி வழியும். - திருவிளையாடற் புராணம், திருநாட்டுச் சிறப்பு : 15. மறைவழி கிளைத்த எண்ணெண் கலைகள் போல் வருநீர் வெள்ளம் துறைவழி ஒழுகும் பல்கால் சோலைதண் பழனம் செய்தேன் உறைவழி ஓடை எங்கும் ஓடிமன் றுடையார்க் கன்பர் நிறைவழி யாத உள்ளத்(து) அன்புபோல் நிரம்பிற் றன்றே. (36) 37. தேன் ஒழுகும் மலர்களைத் தூவி மணம் பரப்பக் கூடிய மரம், அன்புக் கண்ணீர் வழிய அகங்குழைத்து மலர் தூவி நிற்கும் இறைவன் அடியார்கள் போன்றது. - திருவிடையாடற் புராணம், மதுரைத் திருநகரப் படலம் : 94. சுரந்து தேன்துளித் தலர்களும் சொரிந்துவண் டரற்ற நிரந்து சுந்தரற் கொருசிறை நின்றபூங் கடம்பு பரந்து கட்புனல் உகப்பல மலர்கள் தூய்ப் பழிச்சி இரந்து நின்றருச் சனைசெயும் இந்திரன் நிகரும். (37) 38. மலரும் தேனும் பாலும் சந்தனமும் கத்தூரியும் அலைக் கைகளால் தூவிச் செல்லும் ஆறு, இறைவனை மெய்யன்போடு வழிபாடு செய்யும் அடியவரைப் போன்றது. - திருவிளையாடற் புராணம், திருநாட்டுச் சிறப்பு : 11. வல்லைதாய் இருபால் வைகும் சிவாலய மருங்கும் ஈண்டி முல்லை ஆன் ஐந்தும் தேனும் திரைக்கையால் முகந்து வீசி நல்லமான் மதம்சாந் தப்பி நறுவிரை மலர்தூய் நீத்தம் செல்லலால் பூசைத் தொண்டின் செயல்வினை மாக்கள் போலும். (38) 39. விரிந்த நீர்ப் பெருக்குடைய கடல் சிறிய பனித்துளியை யும் விரும்பி ஏற்கும். அதுபோல் பேரிறைவன் உள்ளன்புடன் அடியார் தரும் சிறிய காணிக்கையையும் உவப்புடன் ஏற்பான். மலையினும் மாணப் பெரிய காணிக்கை வேண்டுவது இன்றாம் . - குசேலோபாக்கியானம் : 167. எழுக டற்கொரு புல்நுனிப் பனித்துளி என்னுவ கையைச் செய்யும் கொழும லைத்துணைத் தேவுக்கும் மலைத்துணை கொண்டுபோற் றிடலுண்டோ? (39) 40. நல்ல வித்தினை விதைத்துப் பருவத்தே நீர் பாய்ச்சிக் காவல் புரியும் உழவன் நல்ல விளைவினைப் பெறுவான். அதுபோல் பத்தி என்னும் விதை விதைத்து, அருள் வேட்கை என்னும் நீர் பாய்ச்சும் அடியார் பேரின்ப வடிவமான இறைவன் திருவடிப் பேற்றை அடைவார். - திருவிடையாடற் புராணம், திருநாட்டுச் சிறப்பு, 25. அன்புறு பத்தி வித்தி ஆர்வநீர் பாய்ச்சும் தொண்டர்க்(கு) இன்புறு வான ஈசன் இன்னருள் விளையு மாபோல் வன்புறு கருங்கால் மள்ளர் வைகலும் செவ்வி நோக்கி நன்புல முயன்று காக்க விளைந்தன நறுந்தண் சாலி. (40) 41. இறைவன் பேரன்பில் ஆழ்வது இன்ப வெள்ளத்துள் ஆழ்வது போன்றது. கற்பன கற்றுக் கேட்பான் கேட்டு, நினைவன நினைந்து, பிறர்க்கு உணர்த்தி அசைவு சிறிதும் இன்றி, இரவு பகல் என்று இல்லாமல் எப்பொழுதும் உண்மை , அறிவு, ஆனந்தத்தில் திளைப்பதே இறைவனாம் வெள்ளத்துள் நீந்துவார் இயல்பாகும். - திருவிளையாடற் புராணம், திருநகரச் சிறப்பு : 107. கற்பவை கற்றும் கேட்டும் கேட்டவை கருத்து ளூரச் சொற்பொருள் நினைந்துங் கேட்போர்க் குணர்த்தியுள் துளக்கம் தீர்த்தும் எற்பகல் இரவு நீங்கும் இடத்துமெய் யறிவா னந்த அற்புத வெள்ளத் தாழா தாழ்ந்து நாள் கழிப்பர் சில்லோர் (41) 42. மதியம் எழுந்து நிலாவொளி பரப்பவும் மாளிகையில் பதிக்கப்பெற்றிருந்த சந்திர காந்தக் கல்லில் இருந்து தண்ணிய நீர் கசியும். அதுபோல் இறைவன் இனிய திருவடிகளை அடையப் பெற்ற அடியார் உள்ளத்து இணையற்ற இன்பம் சுரக்கும். - திருவிளையாடற் புராணம், திருநகரச் சிறப்பு : 31 ஆல நின்றமா மணிமிடற்றண்ணலா னந்தக் கோல நின்றசே வடிநிழல் குறுகினார் குணம்போல் வேலை நின்றெழு மதியெதிர் வெண்ணிலாத் தெண்ணீர் கால நின்றன சந்திர காந்தமா ளிகையே. (42) 43. பளிக்கு மாளிகையின் முன்னர் இருக்கும் அனைத்துப் பொருள்களும் அப்பளிக்கினுள் அடங்கிக் காட்சியளிக்கும்; அதுபோல் இறைவன் இனிய அடிகளைச் சேர்ந்த எல்லா உயிர்களும் அவ்வடிகளில் இரண்டறக் கலந்துவிடும். - திருவிளையாடற்புராணம், திருநகரச் சிறப்பு : 32 குன்ற நேர்பளிக் குபரிகை நிறைந்தொறுங் குழுமி நின்ற பல்சரா சரமுமந் நீழல்வாய் வெள்ளி மன்ற கம்பொலிந் தாடிய மலரடி நிழல்புக் கொன்றி யொன்றறக் கலந்த பல்லுயிர்நிலை யனைய. (43) 44. இறைவன் திருவருட் பேற்றை அடையப் பெற்றவர்களின் பாவம், பற்றியெரியும் பெரு நெருப்பிடைப் பட்ட பஞ்சுபோல உடனே ஒழிந்துபோம். 45. ஆறாச் சினத்துக்கு ஆட்பட்டவன் கொண்ட அரிய தவநெறியும் அழிந்துபோம். அதுபோல் இறைவன் திருவருட் பேற்றை எழுதியவர் கொண்ட கொடிய பாவமும் எளிதில் ஒழியும். 46. செயல் திறம் வல்லவன் செய்தளித்த மருந்தை உண்ணப் , போதற்கரிய புன் கொடும் நோயும் போவது போல், இறைவன் திருவருளுக்கு ஆளாயவர் அடைந்த அரிய பாவமும் எளிதில் அகலும். 47. கருமித்தனத்தில் கைதேர்ந்தவன் கொண்டிருந்த பிற உயர் குணங்கள் எல்லாம் ஒருமிக்க ஒழிந்துபோம். அதுபோல் இறைவன் திருவருட் பேற்றை எய்தியவரின் கொடிய பாவமும் ஒருமிக்க ஒழிந்து பேரம். - திருவிளையாடல், மூர்த்தி விசேடப்படலம் : 14. இத்தனிச் சுடலை நேர்கண் டிறைஞ்சினோர் பாவ மெல்லாம் கொத்தழல் பொறிவாய்ப் பட்ட பஞ்சு போல், கோப மூள மெய்த்தவம் சிதையு மாபோல், மருந்தினால் வீயும் நோய்போல், உத்தம குணங்கள் எல்லாம் உலோபத்தால் அழியு மாபோல். (44-47) 48. கருங்கடலில் செங்கதிர் கிளம்பக் காரிருள் அகல்வது போல் இறைவன் திருவருள் பெற்றவர் பாவங்கள் நொடியளவில் அகலும். 49. வெருட்டியடிக்கும் காற்றினால் முகில் கூட்டம் தள்ளுண்டு. சிதறி யோடும். அதுபோல் இறைவன் திருவருட்பேறு வாய்க்கப் பெற்றோர் பாவமும் சிதறியோடும். 50. விலங்கின் வேந்தனாம் சீயம் தாக்க, வீரிட்டு வீழ்ந்து படும் பெரிய கரிய யானை, அதுபோல் இணையற்ற இறைவன் இன்னருட் பேற்றை எய்தப் பெற்றவர் பாவம் பட்டென மாய்ந்து ஒழியும். 51. வல்லடி தாக்குதலால் கற்பாறை கலகலத்துப் பொடி யாகிவிடும். அதுபோல் அருந்திறல் இறைவன் அடியிணைகளை அடையப் பெற்றவர் பாவப் பாறை பூழ்தியாகிவிடும். - திருவிளையாடல், மூர்த்தி விசேடப்படலம் : 15. கலிகடல் இரவி தோன்றக் கருகிருள் உடையு மாபோல் ஒலிகெழு பெருங்கால் தள்ள உடைபடு மேகம் போல வலிகெழு மடங்கல் சீற மாயுமால் யானை போலக் குலிசவல் லேறு தாக்கப் பொடிபடும் குன்றம் போல. (49 - 51) 52. மையல் ஊட்டும் காமநோய்க்கு ஆட்பட்டவரின் மதி, கெட்டு ஒழியும். அதுபோல் மாறாப் பேரருள் இறைவன் மாணடியைப் பற்றிக் கொண்டவர்களின் மாபாவமும் மடியும். 53. அருளாளரின் திருக்கண்பட்ட அளவில் மயக்கம் உடையவன் மருள் தன்மை மாய்ந்துபோம். அதுபோல் இறைவன் திருவடித்துணை வாய்க்கப் பெற்ற பொழுதில் அடியவர் பாவம் அகன்றுபோம். 54. கருடன் பறக்கக் கண்ட அளவிலேயே பாம்பின் வலியும் அற்றமும் ஒடுங்கிப் போகும். அதுபோல் ஆண்டவன் அடிகளைச் சார்ந்த அளவிலேயே அடியார்களின் பாவக் கொடுமையும் அதன் வலிமையும் ஒடுங்கிப்போகும். 55. சீருறக் கற்ற கல்வியும் செருக்கு மிகுதலால் சிதைந்து போகும். அதுபோல் செந்தண்மைக்கு இருப்பாம் இறைவன் இணையடிகளைப் பற்றிக் கொண்டோர் இழிந்த பாவமும் இமைப்பளவில் ஒழியும். - திருவிளையாடல், மூர்த்தி விசேடப்படலம் : 16. மருட்சிசெய் காம நோயால் மதிகெடு மாறு போல, அருட்சிவ ஞான நோக்கால் வலிகெடும் அவிச்சை போலத் தருக்குறும் உவணம் சீறத் தழலரா விளியு மாபோல் செருக்குற அழியும் கற்ற கல்விபோல் சிதையும் அன்றே. (52-57) 56. செறிவுமிக்க பெருங்காட்டை வெட்டி அழித்தபின் அது வெட்ட வெளியாகி ஒளியுடன் தோன்றும். அத்தோற்றம் மெய்யுணர்வால் மயக்கம் நீங்கி ஒளி பெற்ற உள்ளம் போன்றது. 57. காடு கெடுத்து நாடு நகராக்கக் கருதுவார் மரங்களை வெட்டி வேரொடு பறிப்பது, இறைவனடி எய்தப் பெற்றோர் தம் பிறவிவேரைப் பறிப்பது போன்றது. - திருவிளையாடல், திருநகரங்கண்ட படலம் : 31. இருள் நிரம்பிய வனமெலாம் எறிந்துமெய் யுணர்ந்தோர் தெருள் நிறைந்த சிந்தையின் வெளிசெய்து பல் லுயிர்க்கும் அருள் நிறைந்து பற்றறுத்(து) அரனடி நிழல் அடைந்த கருணை யன்பர்தம் பிறப்பென வேரொடுங் களைந்தார். (56 - 57) 58. நல்வினை நண்ணவும் தீவினை ஒழியும். அஃது இறைவன் அடிகளை அடையவும் வினைத்துயர் ஒழிவது போன்றது. - நளவெண்பா : 404. மிக்கோன் உலகளந்த மெய்யடியே சார்வாகப் புக்கோர் அருவினைபோல் போயிற்றே - அக்காலம் கானகத்தே காதலியை நீத்துக் கரந்துறையும் மானகத்தேர்ப் பாகன் வடிவு. (58) 59. ஆழம் மிக்கதாகவும் முதலை முதலாய கொடிய உயிர்வகைகள் உள்ளதாகவும் இருக்கும் அகழியுள் வீழ்ந்தோர் அதனின்றேறி வாரார். அதுபோல் இறைவன் முழுமுதல் தன்மையை உணர்ந்து போற்றாதவர் கடைத்தேறார். - திருவிளையாடல், திருநகரச் சிறப்பு : 16. கண்ணிலாதவெங் கூற்றெனக் கராங்கிடந் தலைப்ப மண்ணி னாரெவ மடுவிடை வீழ்ந்தோர் தெண்ணி லாமதி மிலைந்தவர்க் கொப்பெனச் சிலரை எண்ணினாரிருள் நரகநீத் தேறினும் ஏறார். (59) 60. இறைவன் திருவருள் கிடைக்கப் பெற்ற பெரு மக்கள் அவ்வருளைச் சிறிது பொழுது பிரிய நேருமாயினும், வறிய பிறவிக்குருடன் கையில் தானே வந்து வாய்த்த பெருவிலை மணியை அவன் தவறவிட்டது போலவும், மழலை நீங்காக் குழவி கையில் வரப்பெற்ற பொன்மணிக் கிண்ணத்தை அது பறி கொடுத்தது போலவும் வருந்துவர். - திருவிளையாடல், வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் : 56. வறியவனாம் ஒரு பிறவிக் குருடன் கையில் வந்தபெரு விலைமணிபோல் மழலை தேறாச் சிறியவனாம் ஒருமதலை கையிற் கொண்ட செம்பொன்மணி வள்ளம் போல் தேவர் யார்க்கும் அறிவரியாய் சிறியேனை எளிவந் தாண்ட அருமை அறி யேன் துன்பத் தழுவத் தாழப் பிறிவறியா அன்பரொடும் அகன்றாய் கல்லாய் பேதையேன் குறையலாதெம் பிரானால் என்னே (60) 61. ஆடு, கரும்பின் மேல் தோகையையே தின்னும். ஆனால் யானை கரும்பைத் தின்று அதன் சாற்றைச் சுவைக்கும். அது போல் மெய்யுணர்வு இல்லாதவனுக்கு இறைவன் உருவத் தன்மையே புலப்படும். மெய்யுணர் வாளனுக்கு இறைவன் அருவத்தன்மையும் தெளிவாகப் புலனாகும். - பிரபுலிங்கலீலை , சாதகாங்ககதி:7 புறம்பு காண்குவன் புல்லியன் ஈசனை அறிந்த ஞானி அகமுறக் காண்பனால் எறும்பி காணுறில் இன்கரும் பேகொளும் செறிந்த ஆடிலை தின்பன என்பவே. (61) 62. கதிரோன் முன்னிலையில் தாமரை தன் இயல்புக்கு ஏற்ப மலர்தலும் கூம்பலும் கொள்ளும். அதுபோல் உயிர்களும் இறைவன் முன்னிலையில், தாம் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப இன்ப துன்பங்கள் அடையும். - திருவிளையாடல், கீரனைக் கரையேற்றிய படலம் : 8. பாயு மால்விடை மேல்வரு வோய்பல் லுயிர்க் கெலாம் தாயும் தந்தையும் ஆகுநின் தண்ணளி தாமரைக்(கு) ஏயும் ஆதவன்போல் நல்ல தீய இயற்றினார்க்கு ஆயும் இன்பமும் துன்பமும் ஆக்குவ(து) ஆதலால். (62) 63. துன்பம் ஆக்குவது பிணி; துன்பம் போக்குவது மருந்து; உயிர்களின் நன்மையைக் கருதி இறைவன் ஓரொரு வேளை பிணியாகவும் மருந்தாகவும் இருந்து கடனாற்றுவான். - திருவிளையாடல், கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம் :18. தெரிந்த நீ அதை அரில்தபத் தெருட்டெனப் பிணியும் மருந்தும் ஆகிய பெருந்தகை செய்யவாய் மலர்ந்தான். (63) 64. மகவு மருந்தினை உண்ண மறுத்தது ஆகவும் தாய் கசக்கும் மருந்தினை அதன் வாயில் ஊட்டித் தீய நோயை ஒழிப்பது போல் அடியார்க்கு நலம் பயப்பதை அவர் விரும்பா விடினும் ஆண்டவன் வற்புறுத்தி அவர் அதனை அடையும் வண்ணம் செய்வான். - திருவிளையாடல் , கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம் : 29. மகவை ஈன்றதாய் கைத்திடு மருந்துவாய் மடுத்துப் பகைப டும்பிணி அகற்றிடும் பான்மைபோல் என்னை இகல் இழைத்தறிவுறுத்தினாற்(கு) ஏழையேன் செய்யத் தகுவ தியாதென வரம்பிலா மகிழ்ச்சியும் தாழ்ந்தான். (64) 65. தம் மைந்தனைக் காணுங்கால் உண்டாகும் அன்பும், ஆள்வோரைக் காணுங்கால் உண்டாகும் அச்சமும் ஆகிய இருதன்மையும் கலந்த ஒரு தன்மையால் இறைவன் அடியாரை வரவேற்றுப் பேணுதல் வேண்டும். - திருவிளையாடல், திருநாட்டுச் சிறப்பு : 31. நிச்சலும் ஈசன் அன்பர் நெறிப்படிற் சிறார்மேல் வைத்த பொச்சமில் அன்பு மன்னர் புதல்வரைக் கண்டால் அன்ன அச்சமும் கொண்டு கூசி அடிபணிந்தினிய கூறி இச்சையா றொழுகி உள்ளக் குறிப்பறிந் தேவல் செய்வார். (65) 66. முதல் இல்லாத வாணிகனுக்கு ஊதியம் இல்லை . அது போல் அடியாரைப் பேணாதவனுக்கு ஆண்டவன் அருட்பேறு இல்லை . - பிரபுலிங்கலீலை, கோரக்கர்கதி : 29. மதலை ஆகிய நற்குணம் சார்ந்துநல் வாய்மை சிதைவிலாவடி யாரினம் சேர்ந்திடா தவன்கண் நுதலினானையும் சேர்ந்திடான் என்ப எந்நூலும் முதலி லான்பெறும் ஊதியம் யாதுகொல் மொழியில். (66) 67. யான் இது செய்வேன் எனக்குப் பிறர் இது செய்வார்' என்னும் பற்றுடன் வாழ்வோர் இறையடியை எய்த நினைப்பது, இருளின் துணையால் கதிரொளியைக் காண நினைப்பது போன்றதாம். - பிரபுலிங்க லீலை , மனோலயகதி: 7. யானித்து செய்வல் எனக்கிது செய்வர் ஏனையர் என்ன இருந்த கருத்தான் மேனிகழ் முத்தி விரும்பல் இருட்டால் பானுவை மேவுறு பற்றை நிகர்க்கும். (67) 68. அறிவுடையார் உள்ளொளியால் இறைவனை அடைவதற்கு முயலுதல் கண்டு, அறிவிலார் புறச் செயல்களால் இறைவனை அடைய எண்ணுவது செல்வ வளமுடையார் மணிமாலை அணிவது கண்ட வறியார் சங்கு மணிமாலை அணிந்து அழகுறக் கருதுவது போன்றது. - பிரபுலிங்க லீலை , முனிவரர்கதி : 20. மறையின் உள்ள கரும் மனவினை வறியர் கொள்ளுதல் போல் மதியறும் சிறியர் கொள்வர் தெளிதத் துவமசி அறிஞர் கொள்வர் அணிகொளும் செல்வர்போல் (68) 69. நெல்லுக்கு நீர் இறைப்பதை விடுத்துப் பாழ்ப் புல்லுக்கு இறைக்கும் அறிவிலாச் செயல் போன்றது. இறைவனை நினைந்து வணங்கி வாழ்த்துவதை விடுத்துப் பிறநெறிகளில் சென்று வாணாளை வீணாளாக்குவது. - பிரபுலிங்கலீலை , மாயை கோலாகலகதி : 10 பீடுறு மானிடப் பிறப்பு வாய்த்து நல் ஏடவிழ் மலரினால் இறையைப் பூசியார் பாடமை நாளெலாம் பாழ்க்கிறைப்பவர் மூடரை எண்ணுங்கால் முந்தி நிற்பரே. (69) 70. ஈசனை இருத்த வேண்டிய உள்ளத்தில் ஆசையை இருத்தி வைப்பது, பேரருள் பெருமக்கள் உறைதற்கென அமைத்த இல்லத்தில் கீழ்ச்சிறு மக்களைத் தங்கியிருக்கச் செய்வது போன்றதாம். - பிரபுலிங்கலீலை, இட்டலிங்க்கதி : 36 ஈசனை இருத்துறும் இதயத் தோர்பொருள் ஆசையை இருத்துதல் அந்த ணாளர்தாம் வாசமுற் றிடுமொரு மனையில் புன்செயல் நீசரை இருத்துதல் நிகர்க்கும் என்பரால். (70) 71. கல்லினுள் சிறு தேரையைக் காப்பவன் இறைவன் கருப்பைக் குள்ளும், முட்டைக்குள்ளும் இருக்கும் உயிர்களைக் காப்பவனும் இறைவன். ஆதலால் எவ்வுயிரையும் காப்பவன் இறைவனே என்பதைத் தெளியலாம். - குசேலோபாக்கியானம் : 99. கல்லினுள் சிறிதே ரைக்கும் கருப்பையண் டத்து யிர்க்கும் புல்லுண வளித்துக் காக்கும் புனத்துழாய்க் கண்ணி அண்ணல் ஒல்லுநின் மைந்தர்க் காவா தொழிவனோ ஒழியான் உண்மை மெல்லியல் கொண்ட துன்பம் விடுவிடு மறந்தும் எண்ணல். (71) 72. இறைவன் உயிர்களை ஈர்த்து ஆட்டும் நுண்ணிய கயிற்றை உடையவன். உயிர்கள் அனைத்தும் அவ்விறைவன் கயிற்றால் ஆடும் பாவைகள். ஆதலால் அவன் ஆட்டுதலுக்கு ஏற்ப உணர்வுடையோர் ஆடுதல் கடன். - பிரபுலிங்கலீலை, வசவண்ணர்கதி : 36. சூத்திரப் பாவை யான் அச் சூத்திரி நீ அருட்கண் பார்த்தெனைக் குறைய கற்றிப் பணிசெயக் கோடி என்று வாய்த்தநற் குரவன் செந்தா மரையடி மிசைவி ழுந்தான் . ஏத்தி மெய்ப் பத்தி நீத்தம் எனப்படும் வசவ தேவன். (72) 73. பண்ணின் பயன் இசை, பாலின் பயன் சுவை; கண்ணின் பயன் ஒளி; விண்ணின் பயன் மழை: இவற்றைப் போலக் கருத்தின் பயன் கடவுள் உணர்வேயாம். - பெரிய புராணம் ; சண்டேசுர நாயனார் புராணம் : 9. பண்ணின் பயனாம் நல்லிசையும் பாலின் பயனாம் இன்சுவையும் கண்ணின் பயனாம் பெருகொளியும் கருத்தின் பயனாம் எழுத் தஞ்சும் விண்ணின் பயனாம் பொழிமலையும் வேதப் பயனாம் சைவமும் போல் மண்ணின் பயனாம் அப்பதியின் வளத்தின் பெருமை வரம்புடைத்தோ . (73) 2. அரசு 1. செங்கோல் அரசு ஒரு தாய் ! அத்தாயின் வழியே வளமை என்னும் செழுமகள் பிறப்பாள், அவள் வழியே செல்வம் என்னும் மகள் பிறப்பாள்; அவள் வழியே அறம் என்னும் மகள் பிறப்பாள்; அவள் வழியே புகழ் என்னும் மகள் பிறந்து பொலிவுடன் திகழ்வாள். - திருவிளையாடல், திருநகரச் சிறப்பு : 99. முன்ன வன்னர சிருக்கையால் அந்நகர் முளரிப் பொன்னை யீன்றதால் அதுபல பொருள் நிறை செல்வம் தன்னை ஈன்றதால் அதுபல தருமமென் றுரைக்கும் மின்னை ஈன்றதஃதீன்றதால் விழுத்தகு புகழே. (1) 2. ஆள்வோர் தம் அடி எடுத்து வைப்பது, அறம் அடியெடுத்து வைப்பது போல் இருத்தல் வேண்டும். அவர் நடை இடுவது அறத் துறையும் மறத் துறையும் (வீரம்) நடை இடுவது போல் இருத்தல் வேண்டும். - கலிங்கத்துப்பரணி : 240. அனைத்தமும் ஒக்க அடி வைக்க அடி வைத்தே அறத்தொடு மறத்துறை நடக்கநடை கற்றே. (2) 3. சிறகற்ற பறவை, வேலியற்ற பயிர், கையற்ற யானை, ஆட்டும் கயிறற்ற பாவை , உயிரற்ற உடல் ஆயவை போல் செங்கோல் வேந்தனை இழந்த நற்குடிமக்கள் செயலற்றுத் துன்புறுவர். - அரிச்சந்திர புராணம், நகர் நீங்கிய காண்டம் : 3. மயிரொடும் சிறை இழந்த போகில் போல் வேலியொடு வரம்பிழந்த பயிரேபோல் கரமிழந்த கரியே போல் பொறிஇழந்த பாவையேபோல் உயிரே போய்ப் பாரதவிக்கும் உடலே போல் மத்தாலுள் ளுடைந்த லம்பும் தயிரேபோல் தளிர்த்தலைந்து தத்தமக்கு நிகழ்ந்தவெலாம் சாற்றலுற்றார். (3) 4 உருவங்கள் பல ஆயினும் உயிர் ஒன்றேயாம். அதுபோல் அமைச்சர்கள் பலராக இருப்பினும் நாட்டுக்கு நன்மை செய்யும் நல்லுணர் வால் அவர்கள் அனைவரும் ஒருவரே என்று எண்ணுமாறு அமைந்து செயலாற்றுதல் வேண்டுதல். - கம்பர்; அயோத்தியா காண்டம் : 13. அறுபதி னாயிர ரேனும் ஆண்டகைக் குறுதியில் ஒன்றவர்க் குணர்வென் றுன்னலாம் பெறலரும் சூழ்ச்சியர் திருவின் பெட்பினர் மறிதிரைக் கடலென வந்து சுற்றினார். (4) 5. குழந்தை உற்று நோயைக் கண்டு குற்றுயிர்ப் புறுவாள் . தாய். அக்குழந்தையின் நோயைப் போக்குதற்காகத் தானே மருந்தும் உண்பாள். அது போல் தம் நாட்டவர் அடையும் நலிவைக் கண்டு வருந்தி அதனைப் போக்குதற்குரிய முயற்சிகளில் ஆள்வோர் ஊன்றுதல் வேண்டும். - திருவிளையாடல், மேருவைச் செண்டலடித்த படலம் : 7. மகவுறு நோயை நோக்கி வருந்துறு தாய்போல் மன்னன் பகவுறு மதியஞ் சூடும் பரஞ்சுடர் முன் போய்த் தாழ்ந்து மிகவுறு பசியால் வையம் மெலிவதை ஐய என்னாத் தகவுற இரங்கிக் கண்ணீர் ததும்பிநின் றிரந்து வேண்ட. (5) 6. ஒளியுடைய கதிரவன் தன் பேரொளிப் பெருக்கால் உலகப் பொருள்கள் அனைத்துக்கும் தனித்தனி ஒளி தந்து உதவுவது போல், நாட்டில் வாழும் அனைத்து உயிர்கள் மேலும் அருள் பரப்பி நலம் ஆக்கும் பணி புரிபவனாக ஆள்வோன் விளங்குதல் வேண்டும். - கம்பர், பாலகாண்டம் : 179. குன்றென உயரிய குவவுத் தோளினான் வென்றியந் திகிரிவெம் பருதி யாமென ஒன்றென உலகிடை உலாவி மீமிசை நின்றுநின் றுயிர்தொறும் நெடிது காக்குமே. (6) 7. ஒற்றை வட்டக் கதிரால் ஒளிபரப்பி உலகிருளை ஒழிக்கும் ஞாயிறு. அதுபோல் ஆள்வோர் தம் ஒற்றை ஆணைச் சக்கரத்தால் மக்களின் துன்ப இருளை ஒழிப்பர். - திருவிளையாடல், திருநகரச் சிறப்பு : 70. ஒற்றை யாழியால் உலகிருள் ஒதுக்குமா போலச் செற்ற நேமியால் கலியிருள் தின்றுகோல் ஓச்சி மற்றடம் புய வலியின் மாறடு சீற்றக் கொற்ற மன்னவர் விழுக்குடிக் கோமறு குரைப்பாம். (7) 8. வஞ்சத்தால் நாட்டுள் வந்து தலைகாட்டும் கொடுமை யாளர்களை அழித்தொழிப்பது ஆள்வோர் கடமை. அதுபோல் தம் உள்ளமாம் நாட்டினுள் வந்து அலைக்கழிக்கும் காமம், கோபம் முதலாய தீய பண்புகளை அடக்கித் தலையெடுக்கா வண்ணம் செய்வதும் ஆள்வோர் கடமையே. - கம்பர், அயோத்தியா காண்டம் : 20. வெள்ளநீர் உலகினில் விண்ணில் நாகரில் தள்ளரும் பகையெலாம் தவிர்த்து நின்றயான் கள்ளரில் கரந்துறை காமம் ஆதியாம் உள்ளுறை பகைஞருக் கொதுங்கி வாழ்வேனோ. (8) 9. பகைவரைச் சிறைப்படுத்தி வைப்பது ஆள்வோர்க்குரிய அருஞ் செயல். புலன் வழியே தம் நெஞ்சத்தைப் போகவிடாமல் நிறுத்திக் காக்கும் சிறைச்சாலையாக விளங்குவதே செயற்கரிய செயல் ஆகும். - கம்பர், அயோத்தியா காண்டம் : 24. அருஞ்சிறப் பமைவரும் துறவும் அவ்வழி தெரிஞ் சுறவெனமிகுந் தெளிவு மாய்வரும் பெருஞ்சிறை உளவெனில் பிறவி என்னுமிவ் விருஞ்சிறை கடத்தலின் இனிது யாவதே. (9) 10. ஈன்றணித்தான பசு தன் கன்றின் மேல் அளவிறந்த அன்பு செலுத்தும். அதுபோல் ஆள்பவரும் தம் நாட்டு மக்கள் மேல் அன்பு செலுத்திக் காத்தல் வேண்டும். - கம்பர், அயோத்தியா காண்டம் : 429. கள்றொன்றும் ஆவில் பல யோனியும் காத்த நேமி. (10) 11. அன்பினால் தாய் போலவும், நலம் புரிதலால் தவம் போலவும், பிற்பயன் உண்டாக உதவுவதால்மைந்தன் போலவும், தீமை செய்பவர்க்கு நோய் போலவும், அருள் செய்தலால் அமுதம் போலவும், ஆராய்ச்சியால் அறிவு போலவும் ஆள்வோன் அமைதல் வேண்டும். - கம்பர், பாலகாண்டம் : 172. தாயொக்கும் அன்பில் தவமொக்கும் நலம்பயப்பில் சேயொக்கும் முன்னின் றொருசெல்கதி யுய்க்கு நீரால் நோயொக்கும் என்னின் மருந்தொக்கும் நுணங்கு கேள்வி ஆயப் புகுங்கால் அறிவொக்கும் எவர்க்கும் அன்னான். (11) 12. ஏழை உழவன் தனக்குரிய ஒரே ஒரு சிறிய பரப்புள்ள நிலத்தில் பயிரிடப் பெற்றுள்ள பயிரை எவ்வளவு அக்கறையுடன் பேணிக் காப்பானோ, அவ்வளவு அக்கறையுடன் தன் நாட்டு மக்களை ஆள்வோன் பேணிக் காத்தல் வேண்டும். - கம்பர், பாலகாண்டம் : 180. வையக முழுவதும் வறிஞன் ஓம்புமோர் செய்யெனக் காத்தினிது அரசு செய்கின்றான். (12) 13. தன் ஆட்சியின்கண் உள்ள உயிர்கள் அனைத்தையும் தன் உயிர் என்று கருதி ஆள்பவன் கடமை புரிந்தான் என்றால் அவன் 'உயிரெலாம் உறையும் ஓர் உடம்பு' என்னும் பெருமைக்குரிய பேற்றைத் தவறாது அடைவான். - கம்பர், பாலகாண்டம் : 178. வயிரவான் பூணணி மடங்கல் மொய்ம் பிளான் உயிரெலாம் தன்னுயிர் ஓப்ப ஓம்பலால் செயிரிலா உலகினில் சென்று நின்றுவாழ் உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான். (13) 14. மகளிர் கூந்தலில் மொய்த்திருந்த வண்டு, அவர்கள் பொய்கை நீருள் புகுந்து மூழ்கி ஆடுங்கால் ஆரவாரித்து மேலே எழும்பும். அந்நிலை, செங்கோல் செலுத்துவோன் மறைய அவன் ஆளுகைக்குட்பட்ட மக்கள் அலறி அரற்றுவது போன்றது. - அரிச்சந்திர புராணம், விவாக காண்டம் : 275 சிறுநு தற்பெருங் கண்ணியோர் தெரிவைநீர் மூழ்க நறுமலர்க்குழல் வண்டெழுந் தலமந்து நரல்வ அறநெறிப்படி புரந்தகோல் அரசர்கள் இறக்க மறுகும் அக்கடி போல்வன காண்டி மாமயிலே. (14) 15. இளவேனில் காலத்தில் குயில்கள் கூவ, மயில்கள் கூவாமல் ஒடுங்கும். அதுபோல் நல்லாட்சி நடைபெறும் பொழுது அறவோர் தழைத்து வாழக் குறும்பர் கொடுமை அடங்கும். - திருவிளையாடல், தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் : 18. நாறிய தண்ணந் தேமா நறுந்தளிர் கோதிக் கூறி ஊறிய காமப் பேட்டை உருக்குவ குயில்மென் சேவல் வீறிய செங்கோல் வேந்தன் வெளிப்படத் தேயங் காவல் மாறிய வேந்தன் போல ஒடுங்கின மயில்கள் எல்லாம். (15) 16. பெருகிய அளவில் தான் கண்டு வந்த பொருள்களையெல்லாம் கரையில் இறக்கி விடப் பெற்ற கப்பல் சுமையாற்றி நிற்கும். அதுபோல் அறநெறி அறிந்து செங்கோல் நடாத்தப் பெறும் ஆள்வேரைப் பெற்ற நிலமும் தன் சுமையை இறக்கி இளைப்பாறி நிற்கும். - கம்பர், பால காண்டம் : 51. முறையறிந் தவாவை நீக்கி முனிவுழி முனிந்து வெஃகும் இறையறிந் துயிர்க்கும் நல்கும் இசைகெழு வேந்தன் காக்கப் பொறைதவிர்ந் துயிர்க்குந் தெய்வப் பூதலம் தன்னில் பொன்னின் நிறை பரஞ் சொரிந்து வங்கம் நெடுமுது காற்றும் நெய்தல். (16) 17. உயிர் உடம்பினுள் உறையும்; அதுபோல் ஆள்வோர் நாட்டு மக்கள் உள்ளத்துள் அன்பால் உறைதல் வேண்டும். அதுவே அவர்க்குப் பெரும் பேறாம். - கம்பர், அயோத்தியா காண்டம் : 116. வையம் மன்னுயிர் ஆகஅம் மன்னுயிர் உய்யத் தாங்கும் உடலன்ன மன்னன். (17) 18. நல்லவர் கையில் ஆட்சிப் பொறுப்பு அமைவது, ஊருணி நீரால் நிரம்புவதையும், பயன்மிக்க பழமரம் பழுப் பதையும், பருவ காலத்தில் தவறாமல் மழை பெய்வதையும், வறட்சி இல்லாமல் வாய்க்காலில் நீர் ஓடுவதையும் போல் மக்களுக்கு நலம் தரும். - கம்பர், அயோத்தியா காண்டம் : 84. ஊருணி நிறையவும் உதவும் மாடுயர் பார்க்கெழு பயன்மரம் பழுத்த தாகவும் கார்மழை பொழியவும் கழனி வாய்நதி வார்புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார்? (18) 19. வலிய பகைவனை வெல்ல வல்லார்க்குப் பலவகைப் படைக் கலங்கள் வேண்டும். அதுபோல் நாட்டை நன்முறையில் ஆள விரும்புப வர்க்குத் தெளிவு, அறம், செம்மை, அருள் ஆகிய நல்ல பண்புகள் படைகளாய் அமைந்திருத்தல் வேண்டும். - கம்பர், அயோத்தியா காண்டம் : 110 உருளும் நேமியும் ஒண்கவர் எஃகமும் மருளில் வாணியும் வல்லவர் மூவர்க்கும் தெருளும் நல்லற மும்மனச் செம்மையும் அருளும் நீத்தபின் ஆவதுண் டாகுமோ. (19) 20. நோயாளன் விரும்பாவிட்டால் கூட அவன் உடல் நலத்திற்கு உரியவற்றைத் தேர்ந்து மருத்துவன் கொடுத்து உதவுவான். அதுபோல் மக்கள் விரும்பாவிட்டால் கூட உறுதியாக நன்மை தரும் செயல்களை ஆள்வோர் செய்தல் வேண்டும். - கம்பர், அயோத்தியா காண்டம் : 10 நல்லவும் தீயவும் நாடி நாயகற்கு எல்லையின் மருத்துவன் இயல்பின் எண்ணுவார் ஒல்லை வந் துறுவன உற்ற பெற்றியில் தொல்லை நல் வினையென உதவும் சூழ்ச்சியார். (20) 21. ஒவ்வோர் உடலகத்தும் தன்னுயிர் (சீவான்மா) இறையுயிர் (பரமான்மா) என இருண்டுயிர்கள் உள. இவை புறக்கண்களுக்குப் புலப்படா. ஆயினும் மெய்யுணர்வாளர் களுக்கு இவையுண்மை புலனாம். அதுபோல், நுண்செயல் பருஞ்செயல், நுண்காட்சி பருங்காட்சி ஆயவற்றைத் தேர்ந்து தெளியும் திறம் அமைச்சருக்கு வேண்டும். - கம்பர், உயுத்த காண்டம் : 716. பெருமையும் சிறுமை தானும் முற்றுறு பெற்றி ஆற்ற அருமையின் அகன்று நீண்ட விஞ்சையுள் அடங்கித் தாமும் உருவமும் தெரியா வண்ணம் ஒளித்தனர் குறையு மாயத்து இருவரை ஒருங்கு காணும் யோகியும் என்ன லானான் (21) 22. ஆள்பவனை நன்னெறிச் செலுத்துதலில் அமைச்சர் கண்ணைப் போலவும், அவனுக்கு வரும் கேடுகளைப் போக்குதலில் கவசத்தைப் போலவும் விளங்குதல் வேண்டும். - திருவிளையாடல், வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் : 9 அண்ணல் அரி மருத்தனனுக்கு அடல்வாத வூரமைச்சர் கண்ணுமிகு கவசமும் போல் காரியம் செய் தொழுகுவார்.(22) 23. தம் வீட்டு நெய்யை விட்டு எரிக்கும் விளக்கு என்றாலும் அதனை முத்தமிட்டால் எரிக்கவே செய்யும். அதுபோல் ஆள்வோர் தம் அன்புக்கு எத்துணை வேண்டியவராக இருப்பினும் அது கருதி நெருங்குதல் நன்மை யன்றாம் . - குசேலோபாக்கியானம் : 285 அல்லது மிகுநட் பேயென்று அற்றநோக் காது சொல்லின் ஒல்லையில் நினக்குண் டாயின் உறுமவ மானம் மெய்யே நல்ல தன் மனையின் வாக்கும் நறுநெயுண் டொளிர்வதே யென்று எல்லடர் சுடரை முத்தம் இடிற்சுடா தமைவ துண்டோ? (23) 24. செவ்விய அரசியல் நடைபெறாத நாடு , பேரொளி பரப்பும் கதிரோன் இல்லாத பகலையும், வெண்ணிலாப் பரப்பும் மதியம் இல்லாத இரவையும், உயிர் இல்லாத உடலையும் போன்றது. - கம்பர், அயோத்தியா காண்டம் : 958. வள்ளுறு வயிரவாள் அரசில் வையகம் நள்ளுறு கதிரிலாப் பகலும் நாளொடுந் தெள்ளுறு மதியிலா இரவும் தேர்தரின் உள்ளுறை உயிரிலா உடலும் ஒக்குமே. (24) 25. அறிவுடைய அமைச்சன் ஆராய்ந்து கூறும் அறவழியில் செல்லாமல் தன் மனம் போன போக்கில் செல்லும் ஆட்சியாளன், பாகன் கருத்துக்கு மாறுபடச் சென்று அல்லல்படும் வெறி கொண்ட யானை போன்றவன் ஆவான். - கம்பர், பாலகாண்டம் : 900. கதங்கொள் சீற்றத்தை ஆற்றுவான் இனியன கழறிப் பதங்கொள் பாக்னும் மந்திரி ஒத்தனன் பன்னூல் விதங்க ளாலவன் மெல்லென மெல்லென விளம்பும் இதங்கள் கொள்கிலா இறைவனை ஒத்ததோர் யானை. (25) 26. கடல் அளவாகப் பெருகிய பாலிலும் ஒரு துளி அளவு நீர் கலந்துள்ளதாயின் அதனைப் பிரித்து விட வல்லமை உடையது அன்னப் பறவை. அதுபோல், பல்லாயிரவர் இடையே நின்றால் கூட இவன் இன்னார் ஒற்றன்' என்பதைக் கண்டு பிடித்துச் செயலாற்ற வல்லவனே சீரிய அமைச்சன். - கம்பர், உயுத்த காண்டம் : 715. பேர்வுறு கவியின் சேனைப் பெருங்கடல் வெள்ளம் தன்னுள் ஓர்வுறு மனத்தன் ஆகி ஒற்றரை உணர்ந்து கொண்டான் சேர்வுறு பாலின் வேலைச் சிறுதுளி தெறித்த வேனும் நீரினை வேறு செய்யும் அன்னத்தின் நீரன் ஆனான். (26) 27. சுழலும் விசையினால் காற்றாடி எல்லாப் பக்கங்களிலும் இடையீடு இல்லாமல் அமைந்து சுழல்வதாகவே தோன்றும். அதுபோல் செங்கோலும் 'இப்பக்கம் ' 'அப்பக்கம்' என்று இல்லாமல் விரைந்து எப்பக்கமும் அமைந்து செயல்பெறல் வேண்டும். . - கம்பர், சுந்தர காண்டம் : 850. பிரிவரும் ஒருபெருங் கோலெனப் பெயரா கறங்கெனத் திரிந்தான். (27) 28. ஆட்சிப் பொறுப்பு உடையவர் எவராயினும் நெருப்புப் போன்றவர் ஆவர். தீக்காய விரும்புபவர் நெருப்பை மிக நெருங்க மேலும் மிக விலகாமலும் இருந்து தீக்காய்வது போல் ஆட்சிப் பொறுப்புடையவர்களையும் அகலாது அணுகாது இருந்து கடமை புரிதல் வேண்டும். - கம்பர், கிட்கிந்தா காண்டம் : 382. அரசியல் பாரம் பூரித் தயர்ந்தனை இகழா தையன் மரைமலர்ப் பாதம் நீங்கா வாழுதி: மன்னர் என்பார் எரிஎனற் குரியார் என்றே எண்ணுதி எண்ணம் யாவும் புரிதிசிற் றடிமை குற்றம் பொறுப்பரென் றெண்ண வேண்டா. (28) 29. கதிரோன் மறைந்த பொழுதை நோக்கி ஆம்பல் பூ தலைதூக்கி மலர்ந்து தோன்றும். அது செங்கோலாளர் மறைந்து விட்டது கண்ட குறும்பர் தலையெடுத்துத் தருக்குவது போன்றது. - கம்பர், பாலகாண்டம் : 637. விரைசெய் கமலப் பெரும்போது விரும்பிப் புகுந்த திருவினொடும் குறைசெய் வண்டின் குழாமிரியக் கூம்பிச் சாம்பிக் குவிந்துளதால் உரைசெய் திகிரி தனையுருட்டி ஒருகோல் ஓச்சி உலகாண்ட அரசன் ஒதுங்கத் தலையெடுத்த குறும்பு போன்ற தரக்காம்பல். (29) 30. பெருஞ் சுமை ஏற்றப் பெற்ற வண்டியை நொண்டி மாட்டால் இழுத்துச் செல்ல இயலாது. அதுபோல் பலவகைக் குறைகளை உடைய ஆள்வோர்களாலும் பொறுப்பு மிக்க அரசைச் செவ்வையாக நடத்த இயலாது. - கம்பர், அயோத்தியா காண்டம் : 68. ஒருத்தலைப்பரத் தொருத்தலைப் பங்குவின் ஊர்தி எருத்தி னிங்குநின் றியல் வரக் குழைந்திடர் உழக்கும் வருத்தம் நீங்கியவ் வரம்பறு திருவினை மருவும் அருத்தி யுண்டெனக்கு ஐயா தருளிட வேண்டும். (30) 3. இல்வாழ்வு 1. உணர்வொடு கற்பவர் தாம் கற்கும் பொருளை அன்றித் தம்மைக் காணார். ஞானியர் தாம் அறியும் ஞானத்தை அன்றித் தம்மைக் காணார். இவற்றைப் போல் காதல் வயப்பட்டோரும் அக்காதலை அன்றித் தம்மைக் காணார். - பிரபுலிங்கலீலை , மாயை கோலாகலகதி: 21. கண்கட்கு , ஊணெனும் அழகின் மிக்கான் ஒருவன்வந் தனனன்னானைக் காணலும் எனைநான் காணேன் என்றனள் கற்றார் போல. (1) 2. ஐவாய்ப் பாம்பு தன் ஐந்து வாய்களாலும் இரை விழுங்கினாலும் அஃது ஐவேறு பாம்பு ஆகாது. அதுபோல் அன்புடைய தலைவன் தலைவியர் உடலால் இருவரே எனினும் உணர்வால் ஒருவரே ஆவர். - திருவிளையாடல், வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம் : 51 உடம்பினால் இரண்டே அன்றி உயிர்ப்பொருள் இரண்டற் றுள்ளம் மடப்படும் அழுக்கா றற்று மைந்தரும் அனைய ராக விடம்படும் ஐவாய் நாகம் விழுங்கரை ஒத்துத் தம்மில் இடம்படும் அன்புற் றின்புற றிருவரும் இருந்தார் மன்றோ. (2) 3. இயற்கையாக அரும்பி முதிர்ந்த காதலைக் கண்டும் கேட்டும் உரைத்தும் நினைவூட்டுவது, வேகும் நெருப்பில் விறகு இட்டது போல் பெருகி வளரவே துணை செய்யும். - கம்பர், பாலகாண்டம் : 604 4. ஊமன் தான் கண்ட கனவு எத்தகு அருமை பெருமை வாய்ந்ததாக இருப்பினும் அதனைப் பிறர் அறியும் வண்ணம் எடுத்துரைக்க அறியான். அதுபோல் காதல் வயப்பட்டோரும் தம் காதலைப் பிறர்க்கு வெளிப்படுத்தும் விதம் அறியார். - கம்பர், பாலகாண்டம் : 604 நோமுறு நோய் நிலை நுவல கிற்றிலள் ஊமரின் மனத்திடை உன்னி விம்முவாள் . காமனும் ஒரு சாரம் கருத்தில் எய்தனன் வேம்; அதனிடை விறகிட் டென்னவே. (3-4) 5. பாலில் விடப் பெற்ற பிரைமோர் அப்பாலின் பகுதி எங்கும் பரவிக் கட்டித் தயிராக்கும். அதுபோல் காதல் விருப்பும் உடலகத் தொங்கும் பரவிச் செறிந்து உணர்வைத் திரட்டி வைக்கும். - கம்பர், பாலகண்டம் : 603. மாலுற வருதலும் மனமும் மெய்யும்தன் நூலுறு மருங்குல்போல் நுடங்கு வாள்நெடும் காலுறு கண்வழிப் புகுந்த காதல் நோய் பாலுறு பிரையெனப் பரந்த தெங்குமே. (5) 6. வெற்றி யன்றி வேறு ஒன்று அறியாத வீரனது புகழ், அவனுக்கு மாறுபட்டோர்க்குத் தாழாத் துயரம் ஊட்டும். அது போல் காதலால் உந்தப் பெற்று அதனால் ஆட்படுத்தப்பட்ட வர்க்கு வெண்ணிலா வெந்துயர் விளைக்கும். - கம்பர், ஆரணிய காண்டம் : 669. மின்னிலந் திரிந்த தன்ன விழுநிலா மிதிலை சூழ்ந்த செந்நெலங் கழனி நாடன் திருமகள் செவ்வி கேளா நன்னலந் தொலைந்து சோரும் அரக்கனை நாளும் தோலாத் துன்னலன் ஒருவன் பெற்ற புகலெனச் சுட்ட தன்றே. (6) 7. கள்ளை மிகுதியாகப் பருகியவனால் அக் கள் உண்டாக்கிய உணர்வை உள்ளத்தில் அடக்கி வைக்க இயலாது. அதுபோல் அன்பு என்னும் கள்ளைப் பருகியவனாலும் உள்ளத் துண்டாய உணர்வை அடக்கி வைக்க இயலாது. அவ் உணர்வு வெளிப்பட்டே தீரும். - கம்பர், பாலகாண்டம் : 33. ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவம் மாந்தி மூங்கையான் பேச லுற்றான் என்னயான் மொழிய லுற்றேன். (7) 8. நல்லியல் மிக்க இருவர் ஒன்றிய உணர்வால் கூடிய கூட்டம் நீரும் நீரும் வேறின்றிக் கலந்தாற் போன்ற நீர்மையானது. - நளவெண்பா : 174. ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி இருவர் எனும் தோற்றம் இன்றி - பொருவெங் கனற்கேயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார் புனற்கே புனல்கலந்தாற் போன்று. (8) 9. இனிய தலைவனும் தலைவியும் உருவால் இருவர் எனினும் தன்மையால், பண்ணும் இசையும், நீரும் தன்மையும், பாலும் சுவையும், பூவும் மணமும், மணியும் ஒளியும் போல்வர். - திருவிளையாடல் , திருமணப் படலம் : 174. பண்ணுமின் னிசையும் நீரும் தண்மையும் பாலும் பாலில் நண்ணுமின் சுவையும் பூவும் நாற்றமும் மணியும் அங்கேழ் வண்ணமும் வேறு வேறு வடிவுகொண் டிருந்தால் ஒத்த தண்ணலும் உலகம் ஈன்ற அம்மையும் இருந்த தம்மா. (9) 10. குவளை தாமரை முதலாய நீர்ப்பூக்கள் நீர் வறண்ட காலத்தில் வாடிப் போகும். அவை, ஆருயிர் அன்பரைப் பிரிய வாடி வருந்தும் அரிவையர் போல்வன. - திருவிளையாடல், அன்னக்குழியும் வையையும் அழைத்த படலம் : 7 ஆவி அன்னவர்ப் பிரிந்துறை அணங்கனார் போலக் காவி நாண்மலர் தாமரைக் கடிமலர் வாட வாவி ஓடையும் குளங்களும் வறப்பவாய் வைத்துக் கூவ நீணிலை நீர்களும் பசையறக் குடித்தான். (10) 11. கோடையின் வெதுப்புதலால் மரம் வாட்டமுற அம் மரத்தைச் சுற்றிய பசுமையான கொடிகளும் வாடும். அதுபோல் விருப்பமிக்க காதலர் வருந்தி மெலியுங்கால் கற்புடைய மாதரும் வருந்தி மெலிவர். - திருவிளையாடல், தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் : 15. விழைதரு காத லார்தாம் மெலிவுற மெலிந்து நெஞ்சம் குழைவுறக் குழைந்து நிற்கும் கோதிலாக் கற்பினளர்போல் மழையறுங் கோடை தீப்ப மரந்தலை வாட வாடித் தலைவுறத் தழைத்து நின்ற தழீஇயபைங் கொடிக ளெல்லாம் (11) 12. கணவன், தன்னை மறந்து விடுவான் என்று நினைப்பு உண்டாவதும் கணவன், தன்னை உறுதியாக மறக்கமாட்டான் என்னும் நினைப்பு உண்டாவதும் காதல் மிக்க தலைவிக்கு இறப்பும் பிறப்பும் போன்றன . - கம்பர், பாலகாண்டம் : 1097 மறப்பிலள் கொழுநனை வரவு நோக்குவாள் பிறப்பினொ டிறப்பெனப் பெயரும் சிந்தையாள். (12) 13. ஈர்ப்புக்கு ஆட்பட்ட மத்து தயிர்க்கட்டியைக் கலக்கும். அதுபோல், அன்பொத்த காதல், காதலர் மனத்தைக் கலக்க வல்லது. - கம்பர், பாலகாண்டம் : 573 தயிர் உறு மத்தில் காம சாம்படத் தலைப்பட் டூடும் உயிர் உறு காதலார். (13) 14. தயிரைக் கடைவாரது கை போய்ப் போய் மீளும். அது போல் உள்ளார்ந்த அன்புடைய தலைவியை ஊழ்வினையால் பிரிய நேருமாயின் தலைவன், உள்ளம் ஒருப்படா நிலையில் போய்ப் போய் மீள்வான். - நளவெண்பா : 283 போய் ஒரு கால்மீளும் புகுந்தொருகால் மீண்டேகும் ஆயர் கொணர்ந்த அடுபாலின் - தோயல் கடைவார்தம் கைபோல ஆயிற்றே காலன் வடிவாய வேலான் மனம். (14) 15. எவ்வளவு முயன்று மறைத்து வைத்தாலும் மறைக்க முடியாதது ஊடல். அது மறைத்து வைக்க வேண்டிய செய்தியை யும் எளிதில் வெளிப்படுத்தி வைக்குமாறு வெறியேற்ற வல்ல கட்குடி போன்றது. - கம்பர் பாலகாண்டம் : 577. பளிக்குவள் ளத்து வாக்கும் பசுநறுந் தேறல் மாந்தி வெளிப்படு நகைய வாகி வெறியினை மிழற்று கின்ற ஒளிப்பினும் ஒளிக்க ஒட்டா ஊடலை உணர்த்து மாபோல் களிப்பினை உணர்த்தும் செவ்விக் கமலங்கள் பலவும் கண்டார். (15) 16. மாலை, சுண்ணம், மணிகள், தளிர்கள், ஒளி விளக்குகள் நிறைகுடங்கள் இவற்றைக் கொண்டு பொலிவுடன் திகழும் நகரம் கணவனை எதிர்கொண்டு வரவேற்க நிற்கும் கற்புடைய மகள் போன்றது. - திருவிளையாடல், திருநகரச் சிறப்பு : 30 கழையும் தாமமும் சுண்ணமு மணிநிழற் கலனும் குழையும் தூபமும் தீபமும் கும்பமும் தாங்கித் தழையும் காதலர் வரவு பார்த் தன்பகந் ததும்பி விழையும் கற்பினார் ஒத்தன விழவறா வீதி. (16) 17. தலைவனுடன் இருக்கும் போது தலைவிக்கு இன்ப மூட்டிய தண்ணிலா, பிரிவின் போது பெருந்துயர் ஊட்டும். அச்செயல், வலிய பகைவனுக்குத் தோற்று வந்தவர் அவனைத் தாக்கி அழிப்பதற்குக் காலம் பார்த்திருந்து ஒரு நெருக்கடி நேருமாயின் அதனைப் பயன்படுத்திக் கொண்டு எளிதாக வெற்றி பெறுவது போன்றது. - கம்பர், ஆரணிய காண்டம் : 666 அயிர்உறக் கலந்த நன்னீர் ஆழிநின் றாழி இந்து செயிர் உறச் சேதித் தாண்டோர் தேய்வுவந் துற்ற போது வயிரமுற் றடைந்த செற்றோர் வலியவாச் செல்லு மாபோல் உயிர்தெறக் காலன் என்பான் ஒத்தனன் உதயம் செய்தான். (17) 18. வானம் பொய்யாமல் பொய்த்துப் போகவும் இருந்த நீரும் வற்றிப் போகவும் மிகுந்த துடிப்புடையதாகும் மீன். அம்மனின் துடிப்பு அன்பு செய்யும் தலைவனை இழந்து அவன் அன்புக்கு ஆட்பட்ட தலைவியின் துடிப்புப் போன்றது. - கம்பர், அயோத்தியா காண்டம் : 601 தானே தானே தஞ்சமிலாதான் தகவில்லான் போனான் போனான் எங்களை நீத்திப் பொழுதென்னா வானிர சுண்டி மண்ணற வற்றி மறுகுற்ற மீனே என்ன மெய்தடுமாறி விழுகின்றான். (18) 19. பாலை நிலம் கொடிய வெப்பம் உடையது. அதிலும் கதிரோன் வாட்டும் பகற்பொழுதில் பாலைவனத்தில் நெருங் குவதே அரிது. அத்தகு பாலையினும் தலைவனுடன் நடந்து செல்லுதற்குத் தலைவி துணிந்து விடுவாள். ஏனெனில் அவனைப் பிரிந்து வாழும் வெம்மை போல் பாலைவன வெப்பம் இல்லை என்பதை அவள் அறிவாள். - கம்பர், அயோத்தியா காண்டம் 525 பரிவி கந்த மனத்தொடு பற்றிலாது ஒருவு கின்றனை ஊழி அருக்கனும் எரியும் என்பது யாண்டைய தீண்டுநின் பிரிவினுஞ் சுடு மோபெருங் காடென்றாள். (19) 20. துன்பப் பெருக்குக்கு ஆட்பட்டவர்க்கே இன்பப் பெருக்கும் வந்து சேரும். அதுபோல் துன்பத்துள் துன்பமாம் பிரிவு உண்டானால் தான், இன்பத்துள் இன்பமாம் கூடுதல் உண்டாகும். - கம்பர், அயோத்தியா காண்டம் : 698 துன்புள தெனினன்றோ சுகமுளது அதுவன்றிப் பின்புள திடைமன்னும் பிரிவுள தெனவுன்னேல். (20) 21. கதிரோன் வெளிப்பட்டதும் தாமரைப்பூ மலரும். அம்மலர்ச்சி, பொருள் தேடுதற்காகப் பிரிந்து சென்ற தலைவன் வருகையை, அவன் வரும் தேரில் பூட்டப் பெற்ற குதிரையின் மணி ஒலியால் கேட்டறிந்த கற்புடைய தலைவி அடையும் மகிழ்ச்சி போன்றது. - கம்பர், பாலகாண்டம் : 714 பண்டுவரும் குறிபகர்ந்து பாசறையில் பொருள்வயினில் பிரிந்து போன வண்டு தொடர் நறுந்தெரியல் உயிரனைய கொழுநர்வர மணித்தே ரோடும் கண்டு மனங் களி சிறப்ப ஒளிசிறந்து மெலிவகலும் கற்பினார்போல் புண்டரிகம் முகமலர அகமலர்ந்து பொலிந்தனபூம் பொய்கை எல்லாம். (21) 22. கணவனைத் தேடிக் காண்பதற்கு அலமரும் தலைவி, உயிரைத் தேடி அலமரும் உடல் போன்றவள். - கம்பர், பாலகண்டம் : 988 பயில்வாள் இறைபண்டு பிரிந்தறியாள்ப தைத்தாள் உயிர்நாடி ஓல்கும் உடல் போல் அலமந் துழன்றாள் (22) 23. வெந்த இரும்பு தான் உண்ட நீரை மீண்டும் வெளி விடாது. அதுபோல், கரும்பு அன்ன மொழியுடைய மகளிரைப் பிறர் துயரில் இருந்து காக்க முனைந்த அன்புடையவரும் எளிதில் அவரைக் கைவிட்டார். - கம்பர், ஆரண்ய காண்டம் : 915 இரும்புண்ட நீர் மீள்கினும் என்னுழையில் கரும்புண்ட சொல் மீள் கிலள் காணுதியால். (23) 24. களிறு சாய அதன் மேல் இருந்த கொடியும் உடன் வீழ்வது, கணவன் இறக்க அவனுடன் தீப்பாய்ந்து இறக்கும் கற்புடைய மகள் போன்றது. - கலிங்கத்துப்பரணி : 480 சாய்ந்துவிழும் கடகளிற்றின் உடனே சாய்ந்து தடங்குருதி மிசைப்படியும் கொடிகள் தங்கள் காந்தருடன் கனலமளி யதன்மேல் வைகும் கற்புடைமா தரைஒத்தல் காண்மின் காண்மின்! (24) 25. கணவனை இழந்த மனைவி, சாவினைத் தாராத நன்மருந்தை இழந்து வருந்துபவரையும், மணியை இழந்து வருந்தும் அரவத்தையும், துணையை இழந்து வருந்தும் அன்றில் பறவையையும் போன்றவள். - கம்பர், அயோத்தியா காண்டம் : 600 பெருந்தவம் செய்த நங்கை கணவனைப் பிரிந்து தெய்வ மருந்திழந்தவரின் விம்மி மணிபிரி அரவின் மாந்தி அருந்துணை இழந்த அன்றில் பெடையென அரற்ற லுற்றாள். (25) 26. நலமிக்க கனிவகைகளையும், நறுமணப் பூக்களயும் தந்து தூய்மையுடையதாகத் திகழும் சோலை, தங்கள் கணவன் மாரே தம் தெய்வம் என்று கருதி வாழும் மங்கைமார்களது தூய மனம் போன்றது. - கம்பர், பாலகாண்டம் : 433. தங்கள் நாயகனில் தெய்வம் தான்பிறிதில்லென் றுன்னும் மங்கைமார் சிந்தை போலத் தூயது (சோலை) (26) 27. 'திட்டிவிடம்' என்னும் பாம்பு தன் கட்பார்வையா லேயே தனக்கு மாறுபட்ட பகையைக் கொல்ல வல்லது என்பர். அத்திட்டி விடம் அன்னவர் கற்புடை மகளிர். - கம்பர், உயுத்த காண்டம் : 1298. திட்டியின் விட்மன்ன கற்பின் செல்வியை விட்டிலை யோவிது விதியின் வன்மையே. (27) 28. நீர்ப் பெருக்கு உளதாயின் ஆங்கே நீர்வாழும் மீனும், குவளைக் கொடியும் இருக்கும். அதுபோல் அன்பு நீர்ப் பெருக் குடையவர் இடத்தே தான் காதல் சுற்றமும் நண்பும் கூடி அமையும். - கம்பர், அயோத்தியா காண்டம் : 454 நீருள் எனினும் மீனும் நீலமும் பாருள எனினுள் யாவும் பார்ப்புறின் நாருள தனுவுளாய் நானும் சீதையும் ஆருளர் எனினுளம் அருளுவாய் என்றான். (28) 29. விண்ணில் பரவி நிற்கும் முகிலைக் கண்ட அளவில் தாமரை முதலாய கொடிகள் எழுச்சி பெறும். அதுபோல் வெளியே வருகின்ற விருந்தாளரைக் காணுதலால் வீட்டின் உள்ளே இருக்கும் மகளிர் முகமலர்ச்சி அடைவர். - கம்பர் : கிட்கிந்தா காண்டம் : 489 வெளிக்கண் வந்த கார் விருந்தென விருந்துகண் டுள்ளம் களிக்கு மங்கையர் முகமெனப் பொலிந்தன கமலம். (29) 30. வீரப் போராற்றி இறந்துபட்ட வீரரைப் பருந்தும் கழுகும் குத்திக் குடையும். ஆயினும் அவர்கள் முகம் மலர்ந்தே இருப்பது, விருந்தினரும் வறியவரும் வீடு தேடி வந்த போதில் உவகை அடையும் மேன்மக்கள் போன்றது. - கலிங்கத்துப்பரணி : 477 விருந்தினரும் வறியவரும் நெருங்கி உண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போலப் பருந்தினமும் கழுகினமும் தாமே உண்ணப் பதும் முகம் மலர்ந்தாரைப் பார்மின் பார்மின் 31. மக்களை இல்லாத இல்வாழ்க்கை , தியானம் இல்லாத மனத்தையும், ஞானம்' இல்லாத வினையையும் போன்றது. - பிரபுலிங்கலீலை, விமலைகதி : 20 மக்களை இல்லாத இல்வாழ்க்கை, நினையுந் தியானம் இல்லாத நெஞ்சு , ஞானம் இல்லாத வினையும் போலும் மக்களிலா மிக்க வாழ்வென் றியம்பியே. (30) 32. மகப்பேறு வாய்க்கப் பெறாதவர் பிறர் பெற்ற பிள்ளை களைக் குருடன் கண்ணொளி பெற்றது போலவும், வறியவன் புதையல் பெற்றது போலவும் கருதி நன்கு பேணுதல் வேண்டும். - திருவிளையாடல் - வலைவீசிய படலம் : 27. பிறவி அந்தகன் தெரிந்துகண் பெற்றெனக் கழிந்த வறியன் நீணிதி பெற்றென வாங்கினாள். (32) 33. உலகோர் வறுமையும் துயரும் அச்சமும் நீக்கத்தக்க ஆண்மை யாளன் ஒருவன் ஒரு குடிக்கண் தோன்றுவது காரிருள் நீக்கக் கதிரவன் எழும்புவது போன்றதாம். - கலிங்கத்துப்பரணி : 261 கலிஇருள் பரந்த காலைக் கலியிருள் கரக்கத் தோன்றும் ஒலிகடல் அருக்க னென்ன உலகுய்ய வந்து தோன்றி . (33) 34. வறிய உழவன் ஒருவன் தன் சிறிய விளை நிலத்தின் பயிரைக் காப்பது போலவும், கல்வி வேட்கையாளன் தான் கற்ற பாடத்தை மறவாமல் போற்றிக்காப்பது போலவும், செங்கோல் ஆட்சியாளர் தம் நாட்டு மக்களைக் கண்ணும் கருத்துமாகப் பேணிக் காப்பது போலவும் தம் மக்களைப் பெற்றோர் காத்தல் வேண்டும். - பிரபுலிங்கலீலை, மாயை உற்பத்திகதி : 49 மிடியன் ஒரு செய் யாளன் அச்செய் விளையக் காக்குஞ் செயல்போலப் படியில் கல்வி விரும்பினேன் . பாடம் போற்றும் அதுபோல ஓடிவில் செங்கோல் மனுவேந்தன் உலகம் புரக்கும் முறை போலக் கொடிய நோன்பு செய்தீன்ற கொடியை வளர்த்தாள் மோகினியே. (34) 35. கண்ணை இமை காப்பது போலவும், கற்றோர். கற்ற கல்வியறிவைக் காப்பது போலவும் இம்மைக்கும் மறுமைக்கும் நற்பயன் அளிக்க வல்ல மக்களைப் பெற்றோர் காத்தல் வேண்டும். - திருவிளையாடல், வேல்வளை செண்டு கொடுத்த படலம் : 63. மாட்சி அறிஞர் தமை நோக்கி வம்மின் இவனைக் கண்ணிமைபோல் காட்சி பயக்கும் கல்விபோல் காப்பீர் இதுநும் கடன். (35) 36. வேடர்கள் குஞ்சைப் பற்றிக் கொண்டு போய்விட, அதற்கு ஊட்டுதற்கு இரையுடன் வந்து காணாமல் தவிக்கும் தாய்ப்பறவையின் துயரை அளவிட முடியாது. அதுபோல் மக்கள் அடையும் துயரம் கண்டு பெற்றோர் கொள்ளும் துயருக்கு அளவில்லை . - பிரபுலிங்கலீலை, வசவண்ணர் வந்தகதி :6 கண்டு வார்சிலைக் கானவர் பார்ப்பினைக் கொண்டு போகக் குடம்பைகண் டேங்கியே துண்ட மாரிரை சோரப் பறவைகள் மாண்டு நோயில் மறுகுதல் காணுமோ? (36) 37. ஊனை விரும்பி அலையும் வேடர் வலையில் மானிளங்கன்று தானே போய் விழுமாயின், அக்கன்றின் தாய் உறும் துயர் பெரிதாம். அதுபோல் தம் மக்கள் சீரிலா வழியில் சென்று சிக்கித் துயருறுவார் ஆயின் அவர் பெற்றோர் பெருந் துயர் பெரிதாம். - பிரபுலிங்க லீலை, வசவண்ணர் வந்தகதி : 5 காய்ப சிக்குக் கவன்று தசைதின வாய்ப தைக்கும் மறவர் வலையிடைப் போய்வி ழக்குழக் கன்று புகுந்தவண் தாய்ப தைப்பது தன்னெதிர் காணுமோ? (37) 38. சிறிய ஆலம் வித்தில் தோன்றிய முளையே எனினும் பருத்துப் பரவிப் பெருநிழல் செய்யும். அதுபோல் இளைய மைந்தனே எனினும் தகுதி உடையவன் ஆயின் அவன் உலகெல் லாம் வளைத்து அருள் செலுத்தும் புகழாளனாகத் திகழ்வான். - திருவிளையாடல், மாணிக்கம் விற்ற படலம் : 4 குறிய ஆலவித் தங்குரம் போன்றொரு குமரன் நிறையு நீருல கருட்குடை நிழற்றவந் துதித்தான். (38) 39. மக்கள் அன்பு பெரிது; அவ்வன்பு உயிரையும் போக்கும் ஆற்றல் பெற்றது. மக்கள் அன்பால் பெற்றோர் அழிதுயர் அடைவது, நண்டு, சிப்பி , வாழை, மூங்கில் ஆகியவை தாம் கருக்கொண்ட காலத்தே தமக்கு அழிவு தேடிக்கொண்டது போன்றது. - கம்பர் : அயோத்தியா காண்டம் : 603. நோயும் இன்றி நோன்கதிர் வாள்வேல் இவையின்றி மாயும் தன்மை மக்களி னாலோ மறமன்னன் ஏயும் ஞெண்டும் இப்பியும் ஆகங் கனிவாழை வேயும் போன்றான் என்று மயங்கா விழுகின்றான். (39) 40. நெய்யும் பாவில் குழலைத் தொடுத்துச் செல்லும் நூல் இழையைப் போல, ஒரு குடிப்பிறந்த அண்ணனும் தம்பியும் அன்புத் தொடர்பாளராக அமைதல் வேண்டும். - கம்பர் : பால காண்டம் : 309. ஐயனும் இளவலும் அணிநில மகள்தன் செய்தவம் உடைமைகள் தெரிதர நதியும் மைதவழ் பொழிகளும் வாவியும் மருவி நெய்குழல் உறும் இழை எனநிலை திரிவார். (40) 41. இணையான அன்புடைய மைந்தர் இருவரின் அன்புக்கு இரங்கி நிற்கும் ஒரு தாயின் நிலைமை, ஒத்த அன்புடைய இரண்டு கன்றுகளுக்கு இரங்கும் ஒரு தாய்ப் பசுவின் தன்மை போன்றது. - கம்பர், அயோத்தியா காண்டம் : 34. வெருண்டு மன்னவன் பிரிவெனும் விம்முறு நிலையால் இரண்டு கன்றினுக்கு இரங்குமோர் ஆவென இருந்தார் (41) 42. மக்களின் செய்கையாலும், பண்பாலும் அவர்களை அறிந்த பெரியவர்கள் அனைவரும் 'தம்மக்கள்' என்றே கருதி அன்பு செலுத்துமாறு பெருந்தகையாளராய் விளங்குதல் வேண்டும். - கம்பர், பாலகாண்டம் : 312 ஏழையர் அனைவரும் இவர்தட முலைதோய் கேழ்கிளர் மதுகையர் கிளைகளும் இனையார் வாழியர் எனவவர் மனனுறு கடவுள் தாழ்குவர் கவுசலை தயரதன் எனவே. (42) 4. கல்வி 1. அரும் பெரும் பொருள்களை ஆய்ந்து கொள்ளுமாறு அமைந்து கிடக்கும் ஆவணம். அதுபோல், ஆன்றவிந் தடங்கிய சான்றோரால் செய்யப் பெற்ற அருமறை நூலும் கற்பவர் கவின் கொள்ளும் கருத்துக்களைக் கொண்டிருக்கும். - திருவிளையாடல் , திருநகரச் சிறப்பு : 68. ஒழிவில் வேறுபல் பொருளும் ஏழுலோகமும் பிறவும் வழுவில் வேறுபல் கலைகளு மரபுளி வகுத்துத் தழுவி வேண்டினர் தாங்கொளத் தக்கவா பகரா அழிவி லாமறை போன்றன ஆவண வீதி. (1) 2. வணிகர் மரக்கலத்தில் வெவ்வேறு வகைப் பொருள்கள் அளவிறந்து நிரம்பிக் கிடக்கும். அதுபோல் ஆன்றோர் நூலகத்தும் அரும் பொருள்கள் நிரம்பிக் கிடக்கும். - திருவிளையாடல், தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் : 82 வங்கத்தார் பொருள் போல் வேறு வகைமை கேள்வி நோக்கிச் சங்கத்தார் எல்லாம் தம்மில் தனித்தனி தேர்ந்து தேர்ந்து துங்கத்தார் வேம்பன் உள்ளம் சூழ்பொருள் துழாவி உற்ற பங்கத்தார் ஆகி எய்த்துப் படருறு மனத்தர் ஆனார். (2) 3. ஆய்வோர் அறிவு ஆராய்வு நலனுக்கு ஏற்ப விரிந்து பொருட் பெருக்கம் காட்டும் சீரிய நூல், தகுதி உடையோர்க் கெல்லாம் அமரும் இடம் தந்து வளர வல்ல 'சங்கப் பலகை' வாய்த்தது போன்றது. - திருவிளையாடல், சங்கப் பலகை தந்த படலம் : 28. இருங்கலை வல்லோர் எல்லாம் இம்முறை ஏறி ஏறி ஒருங்கினி திருந்தார் யார்க்கும் ஒத்திடம் கொடுத்து நாதன் தருஞ்சிறு பலகை ஒன்றே தன்னுரை செய்வோர்க் கெல்லாம் சுருங்கிநின் றகலம் காட்டித் தோன்றுநூல் போன்ற தன்றே. (3) 4. நூல் தேர்ச்சியும் நுண்ணறிவும் உடையவர் செய்யும் கவிதை தெளிவும் விளக்கமும் பொருள் ஆழமும் உடையதாக இருக்கும். அது பளிங்கு போன்ற நீர்ப்பெருக்குடைய ஆறு போன்றது. 5. பெருக்கெடுத்து நுரையுடனும் கலங்கலுடனும் வரும் ஆற்று வெள்ளம் நூல்களை முறையே கற்றுத் தெளியாதவர் செய்யும் கவிதை போன்றது. 6. ஆறு செல்லுங்கால் பலவகை நீர்த்துறைகளைக் கொண்டும், மணி பொன் முதலாயவற்றை எறிந்து தள்ளிக் கொண்டும், நாட்டினர் பலவகைப் பயனும் கொள்ள வரும். அதுபோல் ஆன்றோர் கவியும் அகத்துறை புறத் துறை ஆகிய துறைகளைக் கொண்டு முத்து, மணி அன்ன கருத்துக்களைத் தாங்கிக் கற்றவர் கேட்டவர் அனைவரும் நற்பயன் கொள்ள வரும். - திருவிளையாடல், அன்னக் குழியும் வையையும் அழைத்த படலம் : 22 கல்லார் கவிபோல் கலங்கிக் கலைமாண்ட கேள்வி வல்லார் கவிபோல் பலவான் றுறை தோன்ற வாய்த்துச் செல்லாறு தோறும் பொருளாழ்ந்து தெளிந்து தேயத் தெல்லாரும் வீழ்ந்து பயன்கொள்ள இறுத்த தன்றே. (6-9) 7. புகலுதற்கு அரிய புகழாளன் வரலாற்றைப் பாடுவது எளிதன்று, அச்செயல் சினமிக்க களிற்றைத் தாமரை நூலால் கட்ட முயல்வது போன்றது. - நளவெண்பா : 6 வெந்தறுகண் வேழத்தை வேரிக் கமலத்தின் தந்துவினால் கட்டச் சமைவதொக்கும் - பைந் தொடையில் தேன்பாடும் தார்நளன் தன் தெய்வத் திருக்கதையை யான்பாடல் உற்ற இது. 8. அரும்பெரும் புதையல் கிடப்பதை அறிந்தோர் நிலத்தை எவ்வளவு ஆர்வத்துடனும் கருத்துடனும் அகழ்ந்து செல்வாரோ, அது போலவே உயர்ந்தோர் செய்யுட்களையும் கற்றறிந்தோர் ஆராய்ந்து அரும்பொருள் கண்டடைவர். - பிரபுலிங்கலீலை, கொக்கி தேவர் கதி : 20 தொடலும் செம்பொன் சிகரமொன்று தோன்றச் செய்யுட் பொருட்போலக் கடிதின் அகழ்ந்து புகுந்ததனுட் கண்டார். (8) 9. பயன்படாப் பொருள்களை விலக்கித் தள்ளிப் பயன் மிக்கதை மட்டுமே கொள்ளுவது, குப்பையைக் கிளறி அதன் கட் கிடந்த முத்தை எடுத்துப் போற்றிக் கொள்வது போன்றது. - பிரபுலிங்க லீலை , முத்தாயி அம்மை கதி : 25 தத்துவ முற்று மயக்குவ தள்ளி மெய்த்த தனைப்பெற வேறு கொடுத்தான் பொய்த்துறு குப்பை கிளைத்தொளி பொங்கும் முத்தை அளித்தென முத்தை தனக்கு . 10. தென்றல் காற்று, சோலையில் நுழைந்து குளத்தில் புகுந்து தாமரையைத் தழுவி மல்லிகை முல்லைப் பந்தர்களில் தாவி ஆங்குக் கிடைக்கும் தேன் மகரந்தம் இவற்றைக் கொண்டு தண்ணிதாகவும், மென்மை யாகவும் நறுமணத்துடன் வரும். அதுபோல் நன்மாணாக்கனும் நல்லாசிரியர் பலரை அணுகி அவர்களிடத்துள்ள அரும்பொருள் பலவற்றை ஏற்று நன் னடையும் இன்குணமும் அமைந்து புகழாளனாக விளங்குதல் வேண்டும். - திருவிளையாடல், தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் : 19 பொங்கரில் நுழைந்து வாவி புகுத்துபாங் கயந்து ழாவிப் பைங்கடி மயிலை முல்லை மல்லிகைப் பந்தர் தாவிக் கொங்கலர் மணங்கூட் டுண்டு குளிர்ந்து மெல்லென்று தென்றல் அங்கங்கே கலைகள் தேரும் அறிவன்போல் இயங்கும் அன்றே. (10) 11. மயங்கி இருப்பவரை உணர்வுடையோர் தேற்றித் தெளிவு படுத்துவது ஒளி மழுங்கி அணைய இருக்கும் விளக்கைச் சுடர் விட்டெரியச் செய்யுமாறு தூண்டும் துரும்பின் செயல் போல் பயன்மிக்கது. - பிரபுலிங்கலீலை, வசவண்ணர் கதி : 34 பெருந்தகை மாச்சி தேவன் பேசுசொல் விளக்குத் தூண்டும் துரும்பென உதவ. (11) 12. வீட்டாருக்கென ஏற்றப்பெற்ற விளக்கு விருந்தாளிக்கும் பயன்படும். அதுபோல் உயர்ந்த ஒருவனுக்கு வாய்த்த நல்லாசிரியன் ஊருக்கும் பயன்படுவான். - பிரபுலிங்கலீலை, சூனியசிங்காதன கதி : 15 வசவன் தன்னை , நாட்டமுற் றடையும் ஆசான் நமக்குமாம் என்றி ருந்தார் வீட்டினுக் கேற்றும் சோதி விருந்திற்கும் உதவுறாதோ? (12) 13. என்னைத் தேடிக் கொண்டு மெய்க்குரு தானே வருவான் என்று ஒருவன் முயற்சியின்றி வாளர் விருப்பது, கனவில் கண்ட சோற்றை உண்ணுதற்கு விருந்தினரைத் தேடுதல் போன்றது. - பிரபுலிங்கலீலை, சிங்காதனத்தில் இருந்த கதி : 34. தண்ட நாயகன் தோள்வலம் துடித்தது தன்னைக் கொண்டு தான் வரும் குருபரன் என்றெதிர் கோடல் கண்ட ஓர்கன விற்பெறும் அடிசிலைக் கருதி உண்டு போம்விருத்தினர்தமைத் தேடுதல் ஓக்கும். (13) 14. கதிரோன் கிளர்ந்து எழுந்த காலையில் இருளில் கிடந்த பொருள்கள் எல்லாம் தெளிவாகத் தோன்றும். அதுபோல் பல்கலையும் பயின்று அறிவு விரிவடைந்தபோது அரிய நூல் களில் அமைந்துள்ள சொல்லும் பொருளும் தெள்ளிதில் விளங்கும். - குசேலோபாக்கியானம் : 466. கல்வி அறிவு மேலிடலுங் கரிசில் பல்லோர் இயற்றியநூற் சொல்லும் பொருளும் வெளிப்படையாய்த் தோன்ற விளங்கு வனபோல அல்லை யனுக்கும் இரவிளழ ஆங்காங் கமரும் அரும்பொருள்கள் ஒல்லையின்ன இன்னவென உணரு மாறு விளங்கினவே. (14) 15. கடல் நீரை முகந்து உவர் நீக்கி நன்னீராக்கிப் பொழியும் முகில், அதுபோல் ஒரு நூலிற் காணும் குறை போக்கிக் குணங் கண்டறிதல் வேண்டும். - குசேலோபாக்கியானம், பாயிரம் : 16. கனைகடல் முகிலைப் பார்த்தெனீர் உவரைக் கழிப்பிமன்னுயிர்க்கெலாம் இனிதாப் புனையெனக் கேளா தெனினுமம் முகிலே புரியுமென் செய்யுளின் புகரை நினைவரு முழுநூல் உணர்ந்தவர் அகற்றி நீடுலகினுக்கினி தாக்க அனையரை யான்கே ளாதிருந்திடினும் அது புரிந்திடலவர்க் கியல்பே. (15) 16. மணம் இல்லாமல் பார்வைக்கு மட்டும் பகட்டான முருக்கமலர் மாண்பு பெறாது. அதுபோல் குலநலம் செல்வநலம் உடையரே எனினும் கல்விநலம் இல்லார் புகழ்பெறார். - வில்லிபாரதம், ஆரணிய பருவம் : 650 குலமிக உடையர் எழில்மிக உடையர் குறைவில் செல்வமு மிகவுடையர் நலமிக உடையர் என்னினும் கல்வி ஞானநற் பழமிலா தவரை வலமிகு திகிரிச் செங்கையாய் முருக்கின் மணமிலா மலரென மதிப்பேன் சலமிகு புவியி லென்றனன் வாகைத் தார்புனை தாரைமா வல்லான். (16) 17. இறைவனைக் குறித்து மகளிர் உரையைக் கேட்டுக் கேட்டுக் கிளிகளும் நாகணவாய்ப் பறவைகளும் விடாமல் மீண்டும் மீண்டும் ஒலிப்பது, ஆசிரியர் உரைக்கும் உரையைப் பன்முறை கூறி நெஞ்சத்தே நிறுத்திக் கொள்ளும் மாணவர் செயல் போன்றது. - திருவிளையாடல், திருநகரச் சிறப்பு : 51 ஆலவாய் உடையான் என்றும் அங்கயற் கண்ணி என்றும் சோலைவாழ் குயிலினல்லார் சொல்லியாங் கொருங்கு சொல்லும் பாலவாங் கிளிகள் பூவை பன்முறை குரவன் ஓதும் நூல்வாய்ச் சந்தை கூட்டி நுவன்மறைச் சிறாரை ஒத்த. (17) 18. வாணிகன் பொருளைத் துலைத்தட்டில் இட்டு நிறுத்து எடை அளவு காண்பான். அதுபோல் அறிஞனும் தன் கண் வைக்கப்பெற்ற அரும்பொருளை ஆய்ந்து அதன் தரங்காண்பான். - திருவிளையாடல், சங்கத்தார் கலகம் தீர்த்த படலம் : 13 பல்காசொடு கடலிற்படு பவளஞ்சுடர் தரளம் எல்லா நிறுத் தளப்பானென இயல்வாணிகக் குமரன் சொல்லாழமும் பொருளாழமும் துலைநாவெனத் தூக்க நல்லாற்றி புலவோர்களு நட்டாரிகல் விட்டார். (18) 19. ஆன்றோர் உரையைக் கேளாது ஒழிவான் செவியில் கூறப்பெறும் நற்செயல் பாறைக் கல்லில் அடித்த முளைபோல் பயனற்றதாம். - திருவிளையாடல் , மண்சுமந்த படலம் : 46. இன்சொல் விளம்பினும் கேளான் கல்லின் பாலறை முளையே யாகிப் பராமுகம் பண்ணி நின்றான். (19) 20. புண்ணில் இருந்து ஒழுகும் சீழையும் குருதியையும் உண்ணுதற்கு ஈக்கள் விரும்பிச் செல்லும். அதுபோல் புல்லிய நூல்களைக் கற்பதற்குக் கீழ்மக்கள் விரும்புவர். - பிரபுலிங்கலீலை, துதிகதி: 15 புறங்கறை ஒழுகுசெம் புண்ணில் ஈயென உறுங்கதை புல்லியர் கொள்வர் மாமலர் வறுங்களி வண்டினல் லமண்காதையைப் பிறந்துள் பயன்பெறு பெரியார் கொள்வரே. (20) 21. நெற்பயிரின் உள்ளடக்கிய கரு, முதிர்ந்த காலையில் வெளிப்படும். அதுபோல் அறிஞர் நூலகத்து வரையறுக்கப் பெற்ற கருத்துக்கள் தக்கோர் ஆயுங்கால் வெளிப்பட்டுத் தோன்றும். - திருவிளையாடல், திருநாட்டுச் சிறப்பு : 24 22. நெற்கதிரில் மணி பிடிக்குமுன் சிறிதும் சாயாமல் நிமிர்ந்து நிற்கும். அதுபோல் கரையற்ற கல்வியில் சிறிதளவு தேர்ச்சியும் இல்லாத கவிஞர் இறுமாப்புடன் நிற்பர். 23. நெற்பயிர் உரிய பருவத்தை அடையுங்கால் கதிர் ஈனுதற்கான கருவைக் கொண்டிருக்கும். அதுபோல் அறிஞர் நூலகத்தும் அரும்பயன் நல்கத்தக்க கருத்துக்கள் அடங்கிக் கிடக்கும். 24. ஆன்றோர் நூற்கண் உள்ள பாக்களின் கருத்துக்கள் ஆயுந்தோறும் ஆயுந் தோறும் பெருகி விரிவடையும். அதுபோல் மணி முதிரத் தக்க நிலையில் உள்ள நெற்கதிர் அகன்று விரியும். - திருவிளையாடல், திருநாட்டுச் சிறப்பு : 24. புரையற உணர்ந்தோர் நூலின் பொருளினுள் ளடங்கி யந்நூல் வரையறை கருத்துமான வளர்கருப் புறம்பு தோன்றிக் கரையமை கல்வி சாலாக் கவிஞர்போல் இறுமாந் தந்நூல் உரையென விரிந்து கற்பின் மகளிர் போல் ஒசிந்த தன்றே. (21-24) 25. கதிரோன் ஒளியின் முன் மற்றை ஒளிகள் விளக்கம் அடையமாட்டா. அது போல் தளராத கல்வி, கேள்வி அறிவு மிக்க அறிஞர்களின் கூட்டத்தில் கல்விப் பயிற்சி இல்லாதவர் பெருமை அடையார். - கம்பர், கிட்கிந்தா காண்டம் : 113. அயர்வில் கேள்விசால் அறிஞர் வேலைமுன் பயில்வில் கல்வியார் பொலிவில் பான்மைபோல் குயிலு மாமணிக் குழுவு சோதியால் வெயிலும் வெள்ளிவெண் மதியும் மேம்படா. (25) 26. சாப்பறைகள் ஒலிக்கும் இடத்திலே மங்கலப்பறைகள் முழங்க மாட்டார். அதுபோல் கல்வி அறிவில்லாத கீழ்மக்களின் கூட்டத்தே கல்விவல்ல மேன்மக்கள் பேசார். - கம்பர், அயோத்தியா காண்டம் : 984. தாரையும் சங்கமும் தாளம் கொம்பொடு வார்மிசைப் பம்பையும் துடியும் மற்றவும் பேரியும் இயம்பல சென்ற பேதைமைப் பூரியர் குழாத்திடை அறிஞர் போலவே. (26) 27. வல்லவன் ஏவிய அம்பு இலக்கினில் தைத்து ஊடே உருவிக் கொண்டு செல்லும். அது போல் கல்லாப் புல்லர்க்கு நல்லோர் உரைத்த உரையும் நில்லாமல் ஓடிச் செல்லும். - கம்பர், பாலகாண்டம் : 412. சொல்லொக்கும் கடியவேகச் சுடுசரங் கரிய செம்மல் அல்லொக்கும் நிறத்தினளாள்மேல் விடுதலும் வயிரக் குன்றக் கல்லொக்கும் நெஞ்சில் தங்கா தப்புறம் கழன்று கல்லாப் புல்லாக்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்றன்றே. (27) 28. நீந்துதற்குப் பயிற்சி இல்லாதவனை நெடுஞ்சுழல் வெள்ளம் இழுத்துச் சென்று அலைக்கழிக்கும். அதுபோல் அறிவு நூல் பயிற்சி இல்லாதவனை நெஞ்சம் அலைத்துத் தொலைத்து அல்லல்படுத்தும். - பெரிய புராணம், திருநாவுக்கரசர் பொருள் நீத்தம் கொளவீசிப் புலன் கொளுவ மனமுகிழ்த்த சுருள் நீக்கி மலர்விக்கும் , கலைபயிலத் தொடங்குவித்தார். (28) 29. மிகுந்த ஆழம் உடையதாக இருப்பினும் தூய நீரை யுடைய பொய்கையின் உட்பகுதி மிகத் தெளிவாகத் தோன்றும். அதுபோல் உயர்ந்தோர் உரை ஆராய்ந்து பார்க்கப் பார்க்க ஆழ்ந்த கருத்துடையதாக இருந்தாலும் பொருளை ஐயமறத் தெளிவாக்கும். - கம்பர், கிட்கிந்தா காண்டம் : 6 எற்பொரு நாகர்தம் இருக்கை ஈதெனக் கிற்பதோர் காட்சிய தெனினும் கீழுறக் கற்பகம் அனையவக் கவிஞர் நாட்டிய சொற்பொரு ளாமெனத் தோன்றல் சான்றது. (29) 30. வலிய வீரன் ஒருவன் மெலிய வீரர் பலரை வென்று விடுவான். அதுபோல் திறமான அறிவுப் புலன் ஒன்றால் தான், அசைவுடைய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன் களையும் வெற்றிகொள்ள முடியும். - கம்பர், சுந்தர காண்டம் : 930 வஞ்சமும் களவும் வெஃகி வழியலா வழிமேல் ஓடி நஞ்சினும் கொடியர் ஆகி நவைசெயற் கரிய நீரார் வெஞ்சின அரக்கர் ஐவர் ஒருவனே வெல்லப் பட்டார் அஞ்செனும் புலன்கள் ஒத்தார் அவனும் நல்லறிவை ஒத்தான். (30) 31. புறத்து உறுப்பாய கண் காது முதலியவற்றின் வழியே அறிவு புலன்களில் சென்று பற்றும். அதுபோல் அறியவேண்டும் வற்றைத் தெளிவாக அறிந்தவர் வழியாகவே அறிந்து கொள்ளு தல் வேண்டும். - கம்பர், சுந்தர காண்டம் : 1178. அற்றையவ் விரவில் தான்தன் - அறிவினால் முழுதும் உன்னப் பெற்றிலன் எனினும் ஆண்டொன் றுள்ளது பிழையு றாமே. மற்றுறு பொறிமுன் செல்ல மறைந்து செல் அறிவு மானக் கற்றிலா அரக்கர் தாமே காட்டலில் தெரியக் கண்டார். (31) 32. மெல்லிய காற்றசைவிலும் சுழலும் இயல்பினது காற்றாடி அது போல் எத்தகைய நுணுக்கமான பொருளையும் எளிதில் சுழன்றும் நுழைந்து எணவல்லது அறிவு. - கம்பர், சுந்தரகாண்டம் : 850. இருவினை துடைத்தவர் அறிவென... கறங்கென. (32) 33. தேனீக்கள் நெடுந்தொலை சென்று அயராமல் பல பூக்களிலும் உள்ள தேனை எடுத்துச் சேர்க்கும் அது போல் பலவகை உணர்ச்சிகளையும், கருத்துக்களையும் தேடிக் கொணர்ந்து புலமையாளன் ஒருங்கு சேர்ப்பன். - கம்பர், கிட்கிந்தா காண்டம் : 490. பரத நூல்முறை நாடகம் பயனுறப் பகுப்பான் . இரத மீட்டுறும் கவிஞரைப் பொருவின தேனீ (33) 34. மரம், செடி, கொடிகளை நாடிச் சென்று ஆங்குள்ள பூக்களில் தேன் எடுத்த வண்டு, மகளிர் கூந்தலில் சூடிய பூவையும் விடாமல் புகுந்து தேன் எடுக்கும். அதுபோல் ஆராய்ச்சியையே தம் வாழ்வாகக் கொண்ட அறிஞர் பெருமக்கள் எவ்விடத்தில் ஆராய்ச்சிக்குரிய பொருள் கிடைத்தாலும் எளிதில் - விடார். - கம்பர், பாலகாண்டம் : 982. நதியினும் குளத்தும் பூவா நளினங்கள் குவளை யோடு மதிநுதல் வல்லி பூப்ப நோக்கிய மழலைத் தும்பி அதிசயம் எய்திப் புக்கு வீழ்ந்தன அலைக்கப் போகா புதியன கண்ட போழ்து விடுவரோ புதுமை பார்ப்பார். (34) 35. கீழேயுள்ள பொருள்களை எல்லாம் தெளிவாகக் காட்டும்படியான தூய நீரையுடைய பொய்கை என்றாலும் ஆங்குள்ள தாமரை அல்லி முதலிய கொடிகளின் இலைகள் பரவிக் கிடந்தால் நீரின் உட்பகுதி தோன்றாது ஒழியும். அது போல் மாசற்றுத் தெளிந்த அறிவினரே எனினும் இடை இடைத் தோன்றும் முக்குண வேற்றுமையால் அறிவு மயக்கம் அடைவது உண்டு. - கம்பர், கிட்கிந்தா காண்டம் : 9. காசடை விளக்கிய காட்சித் தாயினும் மாசடை பேதைமை யிடைம யக்கலால் ஆசடை நல்லுணர் வனைய தாமெனப் பாசடை வயின்தொறும் பரந்த பண்பது. (35) 36. உள்ளே இருக்கும் விதைகள் இத்துணை என்று நெல்லிக் கனியின் மேலே இருக்கும் வரிகள் காட்டும். அதுபோல் உள்ளத்தே மறைந்து கிடக்கும் உணர்ச்சியை முகம் தெளிவாகக் காட்டும். - கம்பர், உயுத்த காண்டம் : 2164. கைத்தலை நெல்லி ஒப்பக் காட்டிலேன். (36) 37. கண்ணாடி எதனையும் வாயால் சொல்லாது எனினும், தன் முன்னே இருப்பதைக் காட்சியால் வெளிப்படுத்தும். அதுபோல் அகத்தே உள்ள செய்தியைச் சொல்லாமல் வெளிப் படுத்தாது என்றாலும் முகம் அதன் தோற்றத்தால் வெளிப் படுத்தி விடும். 38. வெளிச்சம் எளிதில் புகாத மிகப் பள்ளமான இடத்தில் இருள் பெருகிக் கிடக்கும். அதுபோல் உள்ளத்தின் ஆழத்தில் வஞ்சக நினைவு கிடக்கும்; ஆயினும் அதனை முகத்தின் வழியே கண்டு விடலாம். - கம்பர், உயுத்த காண்டம் : 397. உள்ளத்தில் உள்ளதை உரையின் முந்துற மெள்ளத்தம் முகங்களே விளம்பும் ஆதலால் கள்ளத்தின் விளைவெலாம் கருத்தி லாமிருள் பள்ளத்தில் அன்றியே வெளியில் பல்குமே (37-38) 39. உயிருடையவை எல்லாம் ஓர் அளவுக்கே உண்ணும் தன்மையன. ஆனால் தீ இவ்வளவு என்று இல்லாமல் எவ்வளவையும் எரிக்கும். காற்று, மலையையும் பெயர்த்து எறியும். ஆதலால் இன்னதன் ஆற்றல் இன்னதென ஆய்ந்து தெளிதல் அறிவு வல்லார்க்கும் அரிதேயாம். - கம்பர் உயுத்த காண்டம் : 3594 ஒன்றிடின் அதனை உண்ணும் உலகத்தின் உயிர்க்கொன் றாத நின்றன எல்லாம் பெய்தால் உடனங்கு நெருப்புங் காண்டும்; குன்றொடு மரனும் புல்லும் பல்லுயிர்க் குழுவும் கொல்லும் வன்றிறல் காற்றும் காண்டும் வலிக்கொரு வரம்பும் உண்டோ ? (39) 40. கலை நிரம்பிய முழுமதி எழுந்த போது கடலின் அலையும் மிகுந்து எழும். அதுபோல் அறிவான் நிரம்பிய ஆசிரியர் முன்னிலையில் அவர் வழிநிற்கும் மாணவர் திறமையும் ஓங்கிச் சிறப்புறும். - கம்பர், பால காண்டம் : 742 கலையாழிக் கதிர்த்திங்கள் உதயத்தில் கலித்தோங்கும் அலையாழி எனவளர்ந்தார் மறைநான்கும் அனையார்கள். (40) 41. நெருப்பை நீர் எளிதாக அழித்து விடும். அதுபோல் கோவம் என்னும் நெருப்பை அறிவு என்னும் நீரால் அழித்தல் வேண்டும். - கம்பர், சுந்தர காண்டம் : 226. மறுக ஏறிய முனிவெனும் வடவை வெங்கனலை அறிவெனும் பெரும் பரவையம் புனலினால் அவித்தான். (41) 5. முயற்சி 1. உழுது விதைக்காதவனுக்கு விளைவு கிட்டாது. அது போல் முழு முயற்சியில் ஈடுபடாதவனுக்குச் செல்வம் சேராது. - குசேலோபாக்கியானம் : 147. நன்முயற்சி, உலைவறப் புரியா ஒருவனுக் கெங்ஙன் உற்றிடும் செல்வ நன்னிலத்தை நிலைபெற உழுது வித்திலான் தனக்கு நீள்பயன் உற்றிடுங் கொல்லோ. (1) 2. பெறுதற்கு அரிய மானிடப் பிறவி வாய்த்தவர். அப் பிறவியில் செய்தற்கு அரிய செயல்களைச் செய்யாது ஒழிதல், பொற்கலத்தில் பெய்தற்குரிய பாலை நில வெடிப்பில் விடுவது போன்றது. - பிரபுலிங்க லீலை, கொக்கி தேவர் கதி : 12. எய்தற் கரிய யாக்கை தனக் கெய்திற் றென்றால் அதுகொண்டு செய்தற் கரிய அறங்கள் பல செய்து துயர்கூர் பிறவியினின் றுய்தற் கொருமை பெறவொண்ணா துழல்வோன் உடம்பு பொற்கலத்தில் பெய்தற் குரிய பால்கமரில் பெய்த தொக்கும் என்பரால். (2) 3. பொற்கலத்தில் இருக்கும் பாற்சோறே ஆயினும் கையால் எடுத்துண்ணான் தன் பசியைத் தீரான். அதுபோல் முயற்சி இல்லாதவன் தான் உற்ற வறுமையை என்றும் களையான். - குசேலோபாக்கியானம் : 152. கடவுளீ குவனென் றெண்ணிநித் தியமும் கருதுறு முயற்சிசெய் யானேல் அடலுறு செல்வம் அடைகுவ னேகொல் அருங்கலத்திட்டபா லடிசில் மிடலுடைக் கரத்தால் எடுத்துணா தெங்ஙன் வீங்குவெம் பசிப்பிணி ஒழிப்பன். (3) 4. ஆட்டையே கொல்ல வல்லவன் சிங்கத்தை வெல்வேன் என்று வீறுடன் எழுவதும் பாராட்டத்தக்க ஆண்மையே ஆகும். அதுபோல் எளிய செயல்களைச் செய்து முடிக்க வல்லவர் அரிய செயல்களைத் தொடங்குவதும் பெருமிதமே யாகும். - பிரபுலிங்கலீலை, வசவண்ணர் வந்தகதி: 32 "ஆடு கொல்வோன், மடங்கல்முன் வெல்வேன் என்று வருதலே ஆற்றல் அன்றோ " (4) 5. விரும்பிய செயல் ஒன்றைச் செய்ய முனைவாரை வெடுக்கெனத் தடுப்பது, பாலைவனத்தில் வெப்பக் கொடுமை கூர்ந்து நடப்பவர் ஓரிடத்து நீர் கண்டு அதனைப் பருகுமாறு கையால் அள்ளி வாய்க்குக் கொண்டு செல்லுங்கால் தடுப்பது போல்வது. - பிரபுலிங்க லீலை, அக்கமாதேவி துறவுகதி : 47. புல்லுவன் என்றெ ழுந்த புரவலன் தனைத்த டுத்துச் சொல்லிய தன்னம் அன்னாள் சுரந்துள் நீர் முகந்து வாயில் செல்லுமொண் கரத்தை ஓடிச் சென்று பற்றுதலை ஒக்கும். (5) 6. கண்களைக் கருதிக் காத்தலில் சிறிதளவு சோர்வும் காணாதவை இமைகள். அது போல் ஒருவர் தாம் எடுத்துக் கொண்ட செயலைச் செவ்வையாகக் காத்து நிறைவேறச் செய்தல் வேண்டும். - கம்பர், பாலகாண்டம் : 458. எண்ணுதற் காக்கரி திரண்டு மூன்று நாள் விண்ணவர்க் காக்கிய முனிவன் வேள்வியை மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள் கண்ணினைக் காக்கின்ற இமையில் காத்தனர். (6) 7. மெய்யுணர்வாளன் என்றாலும் தான் உலக வாழ்வில் உள்ள காலத்தெல்லாம் வெளிப்படையாகப் பிறருக்கு ஒப்பாகவே தோன்றி, பொய்ப்பொருள்களையும் மெய்ப்பொருள் என்று கருதி நடித்து வாழ்வான். அது போல், செயலாற்றும் திறம் வல்லவர்களும் அதற்குரிய காலமும் இடமும் கருதி இருந்து செயலாற்றுவர். - கம்பர், சுந்தர காண்டம் : 1168. நொய்ய பாசம் புறம்பிணிப்ப நோன்மை இலன்போல் உடனுடங்கி வெய்ய அரக்கர் புறத்தலைப்ப வீடும் உணர்ந்தே விரைவில்லா ஐயன் விஞ்சை தனையறிந்தும் அறியா தான் போல் அவிஞ்சையெனும் பொய்யை மெய்போல் நடிக்கின்ற யோகி போன்றான் போகின்றான். (7) 8. இரவுப் பொழுதில் கூகையைக் கண்ட காக்கை அஞ்சி அகன்றோடும். அதுபோல் செயற்கரிய செயலைக் கண்ட அளவிலேயே ஊக்கமில்லாதவர் ஓடிப்போவர். - கம்பர், பாலகாண்டம் : 771. அற்காக்கை கூகையைக்கண் டஞ்சினவாம் என அகன்றார்.(8) 9. ஆரவாரம் மிக்க கடலும் கரையை விஞ்சி எழும்பாமல் அடங்கிக் கிடக்கும். அதுபோல் காலம் கருதும் கருத்து உடைய வர்களும் எத்தகைய சூழ்நிலையிலும் அடங்கி இருந்து காலம் வரும் போது கடிது செய்து முடிப்பர். - கம்பர், சுந்தர காண்டம் : 317. ஆலம்பார்த் துண்டவன்போல் ஆற்ற அமைந் துளரெனினும் சீலம் பார்க் குரியோர்கள் எண்ணாது செய்பவோ மூலம் பார்க் குறினுலகை முற்றுவிக்கும் முறை தெரினும் காலம் பார்த்திறை வேலை கடவாத கடலொத்தான். (9) 10. பாதுகாப்பான மிதப்பு இல்லாதவர் கடலைக் கடப்பது அரிது. அதுபோல் வலிய துணை வாய்க்கப் பெறாதவர் வினையைச் சிறப்புறச் செய்து முடிப்பது அரிது. - கம்பர், ஆரணிய காண்டம் : 1192. புணையிலா தவற்கு வேலை போக்கரி தன்ன தேபோல் துணையிலா தவற்கும் இன்னா பகைப்புலம் தொலைத்து நீக்கல். (10) 11. மணி பொன் முதலியவற்றை அள்ளி வெவ்வேறு இடங்களில் வெள்ள நீர் விட்டுச் செல்லும். அதுபோல் தளரா முயற்சியுடைய வாணிகர்கள் சிறந்த பொருள் கிடைக்கும் இடங்களிலெல்லாம் சென்று சேர்த்து, அவற்றை வேண்டிய இடங்களுக்குக் கொண்டுவந்து வழங்குவதைத் தம் கடமையாகக் கொள்வர். - கம்பர், பாலகாண்டம் : 19 மணியும் பொன்னும் மயில் தழைப் பீலியும் அணியும் ஆனைவெண் கோடும் அகிலும்தன் இணையில் ஆரமும் இன்னகொண் டேகலான் வணிக மாக்களை ஒத்ததவ் வாரியே. (11) 6. செல்வம் 1. செவ்வந்திப் போதும், மகிழம் பூவும் நிலத்தில் உதிர்ந்து வாடிக் காய்ந்தாலும் வண்டுகள் வந்து மொய்க்குமாறு இருக்கும். அவற்றின் தன்மை, உள்ள மிகுதியும், உயர்குடி மாண்பும் உடைய பெருமக்கள் தம் செல்வம் குறைந்தாலும் தம்மிடத்து வருந்தி வந்தவர்க்கு இல்லை என்னாமல் தம்மை விற்றேனும் உதவி செய்யும் தன்மை போன்றது. - திருவிளையாடல், தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் : 17. மலர்ந்த செவ்வந்திப் போதும் வகுளமு முதிர்ந்து வாடி உலர்ந்து மொய்த் தளிதே னக்கக் கிடப்பன உள்ள மிக்க குலத்தரு நல்லோர் செல்வங் குன்றினும் தம்பால் இல்லென் நலந்தவர்க் குயிரை மாறி யாயினும் கொடுப்பர் அன்றோ . (1) 2. பூஞ்சோலை , தன் பூ, காய், கனி, நிழல் ஆகியவற்றால் பலர்க்கும் பல வகைகளாலும் பயன்படும். அதுபோல் நல்லறம் தேர்ந்தவர் செல்வமும் நாடி வந்தவர்களுக்கெல்லாம் நல்ல பலவகைகளால் பயன்படும். - கம்பர், கிட்கிந்தா காண்டம் : 770. ஞாலம் நுங்குறு நல்லறத்தோர் பொருள் போல நின்று பொலிவது பூம்பொழில். (2) 3. அறநெறி நீங்கிப் பெரிதளவு ஈட்டி வைத்தவர் செல்வம் பெரிதளவும் இல்லாமல் ஒருங்கே அழிவது, கடல் நீர் ஒரு துளியும் இன்றி வறண்டு விட்டது போல்வது. - திருவிளையாடல், இந்திரன் பழிதீர்த்த படலம் : 54 அறந்துறந் தீட்டுவார் தம் அரும்பெற்ற செல்வம் போல வறந்தன படுநீர்ப் பெளவம். (3) 4. தாம் பெறுதற்கு உரிமை இல்லாத செல்வத்தைப் பெறுதற்கு, உயர்ந்தவர் ஒரு பொழுதும் விரும்பார். அவரிடம் ஒருவன் சென்று தகுதியற்ற தீயவழிச் செல்வத்தைத் தந்து பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தினால் 'நஞ்சினை உண்க' என்று ஒருவரைத் துன்புறுத்தினால் அவர் எவ்வாறு அஞ்சி நடுங்குவாரோ அதுபோல் அஞ்சி நடுங்குவார். - கம்பர், அயோத்தியா காண்டம் : 963. தஞ்சமிவ் வுலகநீ தாங்கு வாயெனச் செஞ்சவே முனிவரன் செப்பக் கேட்டலும் நஞ்சினை நுகரென நடுங்கு வாரினும் அஞ்சினன் அயர்ந்தனன் அருவிக் கண்ணினான். (4) 5. வயலிலும், சோலையிலும், காட்டிலும் விளைந்த பொருள் வகை களையெல்லாம் உலகத்தின் நன்மையைக் கருதிய உழவப் பெருமக்கள் தொகுத்து வைப்பர். அவர் தம் உயர் செயல் , நெடுந்தொலைவில் உள்ள பலவகை மலர்களையும் சோர்வில்லா மல் தேடிச்சென்று தேன் எடுத்துத்தன் கூட்டில் சேர்த்து வைக்கும் தேனீயின் வாழ்வு போன்றது. - கம்பர், பாலகாண்டம் : 53. கதிர்படு வயலின் உள்ள கடிகமழ் பொழிலின் உள்ள முதிர்பல மரத்தின் உள்ள முதிரைகள் புறவின் உள்ள பதிபடு கொடியின் உள்ள படிவளர் குழியின் உள்ள மதுவள மலரில் கொள்ளும் வண்டென மள்ளர் கொள்வார்.(5) 6. பெரிய கடலை அடுத்து நீர் பருகுதற்கு ஏற்ற ஊற்றுக் களும் இருக்கும். அவை, உலகில் பயன்படாப் பெருஞ் செல்வரும் உளர்; பயன்படத்தக்க சிறிய செல்வர்களும் உளர் என்பதைக் காட்டும். - குசேலோபாக்கியானம் : 212 பெருகிய செல்வ ருள்ளும் பயனிலார் உளரால் பேணி அருகிய செல்வருள்ளும் பயனுளார் உளரென் றாய்ந்து பெரியவர் சொல்லுஞ்சொல் தேற்றும் பெரியநீர்க் கடலும் ஆங்காங் குரியவெண் மணற்சிற் றூறற் கேணியும் உரிய நீரால். (6) 7. நன்றாக மூடிவைத்த நெய்க்குடத்தின் மேலும் எறும்பு சூழும்; அது போல் கொடாதவர் என்றாலும் செல்வரை நண்பரெனத் தேடிப் பலர் அடைவர். - குசேலோபாக்கியானம் : 658 ஒன்றும் பெறுதல் இலரேனும் உற்ற பெருஞ்செல்வத்தினர்பாற் சென்று கொளுநட் புடையரெனத் தேயஞ் சொலற்கே சிலர்சூழ்வார் மன்ற என்றா யினுமொர்பயன் வழங்க லாகு மெனமூடல் துன்று நறுநெய்க் குடத்தெறும்பு சூழ்தல் போலும் சிலர் சூழ்வார். (7) 8. பூக்கள் தோறும் சென்று சிறிது சிறிது தேனெடுத் துண்ணும் வண்டு, தேன் நிரம்பிய கிண்ணத்தைக் கண்டுவிட்டால் விலகாது. அதன் தன்மை, பலரிடத்தும் சென்று பல பொழுதும் இரந்து திரியும் வறியவர் பெருத்த நிதியினைக் காண்பரே யாயின் அதனை விடுத்துச் செல்லார் என்பதைக் காட்டும். - திருவிளையாடல், தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம் : 69. மலர்தொறும் சிறுதே னக்கித் திரிவண்டு மடவார் தங்கைத் தலனெடுத் தோச்ச வோடா தழீஇத்தடஞ் சாடி மொய்ப்ப இலமெனப் பல்லோர் மாட்டும் இரந்திரந் தின்மை நீங்கா தலமரும் வறியோர் வைத்த நிதிகண்டால் அகல்வ ரேயோ. (8) 9. வறிதே வந்த ஒருவனுக்கு வாய்ப்பான செல்வம் கிட்டுவது பிச்சைக்கு வந்தவனுக்குப் பெண் கிடைத்தது போன்ற பேறாகும். - அரிச்சந்திரபுராணம், நகர் நீங்கிய காண்டம் : 6 கொச்சைக்கு வலயமயில் கொற்றவனை விட்டுமுனிக் கூட்டம் வேட்டாள் இச்சைக்கி தம்பேசி ஈத்தாரைப் பாராட்டி வார் தம்பால் பிச்சைக்கு வந்தவரோ பெண்ணுக்கு மணவாளப் பிள்ளை என்பார். (9) 10. பெரும்பசிக்கு ஆட்பட்டோர் சிறிதுணவும் இன்றி வெதும்புவது ஈயாதவன் தான் தேடிவைத்த பொருளை , இழந்து போன பொழுதில் அடையும் வெதுப்பம் போன்றது. - திருவிளையாடல், குண்டோதரனுக்கு அன்னம் இட்ட படலம் : 21 நட்ட மாடிய சுந்தர நங்கையெம் பிராட்டி அட்ட போனகம் பனிவரை அனையவாய்க் கிடந்த தொட்டு வாய்மடுத் திடவுமென் சுடுபசி தணியா திட்டு ணாதவர் வயிறுபோற் காந்துவ தென்றான். (10) 11. கண்கள் இரண்டையும் ஒப்பப் பேணிக் காத்தல் போல், ஆள்வோர் கல்வியும் செல்வமும் செழித்து வளரத் தக்க கடமைகளைத் தேர்ந்து செய்தல் வேண்டும். - திருவிளையாடல், தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம் : 59. இன்னிலை ஒழுகும் தொல்லோர் இயற்றிய தருமம் வேறும் அந்நிலை நிறுத்தும் வேள்வி அறம்பல ஆக்கம் செய்ய நன்னிதி அளித்தும் வேள்வி நடாத்தியும் செல்வம் கல்வி தன்னிரு கண்க ளாகத் தழைந்திட வளர்க்கு நாளும். (11) 12. மாரிக் காலம் கழியவும் ஆறுகளில் நீர் குறைந்து வற்றிப் போகும். அதுபோல் அறப்பேறு தீர்ந்தவன் செல்வமும் குறைந்து ஒழியும். - கம்பர், கிட்கிந்தா காண்டம் : 50. மேகமா மலைகளின் புறத்து வீதலான் மாகயாறியாவையும் வாரி அற்றன ஆகையாற் றகவிழந் தழிவில் நன்பொருள் போகவா றொழுகலான் செல்வம் போன்றவே. (12) 7. அறம் 1. குற்றம் நீங்கிய மணி ஒளிவிடும். அதுபோல் மாசு கழிந்த மாந்தனும் புகழ் பெறுவான். - திருவிளையாடல், இந்திரன் பழிதீர்த்த படலம் : 15 மாசிற் கழிந்த மணியே போல் வந்த பழிதீர்ந்து. (1) 2. நல்லோர் தாம் பெற்ற மகவைச் சான்றோன் ஆக்குவதில் பெருநாட்டம் செலுத்துவர். அதுபோல் உழவப் பெருமக்கள் அறிவு, பொறுமை, நன்றி, ஊக்கம், கொடை, அன்பு, நண்பு , மானம் என்பவற்றைத் தாம் ஈன்ற மக்களாகக் கொண்டு பேணி வளர்த்துப் பெருவாழ்வு வாழச் செய்வர். - திருவிளையாடல், திருநகரச் சிறப்பு : 57. வானமும் திசையும் பொங்கும் புகழ்மையும் வானம் பேணும் ஞானமும் பொறையும் குன்றா நன்றியும் ஊக்கப் பாடும் தானமும் கொடையும் அன்பும் வரிசையும் தகைசால் நண்பும் மானமும் தவம்செய் தீன்ற மகவுபோல் வளர்க்க வல்லார். (2) 3. கடல் நீரை அள்ளி அதன் உவரை நீக்கி நன்னீர் ஆக்கி மழையாகப் பொழியும் முகில். அதுபோல் பிறர் கூறும் உரையில் உள்ள அல்லவை நீக்கி நல்லவை கோடல் நேரிய உணர்வினர் கடன். - திருவிடையாடல், கடவுள் வாழ்த்து : 28 பாய வாரியுண் டுவர்கெடுத் துலகெலாம் பருகத் தூய வாக்கிய காரெனச் சொற்பொருள் தெளிந்தோர் ஆய கேள்வியர் துகளறு தாலவா யுடைய நாயனார்க்கினி தாக்குப் நலமிலேன் புன்சொல். (3) 4. பெருக்கெடுத்துச் செல்லும் நீர் ஆழ்ந்த பள்ளத்துள் நிரம்பத் தேங்கும். அதுபோல் அறநெறி என்னும் ஆறு பெருக் கெடுத்தோடி நிரம்பி நிற்கும். பள்ளமாக இருப்பவன் அறநெறி யாளனே ஆவன். - கம்பர், பாலகாண்டம் : 740 தள்ளரிய பெருநீதித் தனியாறு புகமண்டும் பள்ளமெனும் தகையானைப் பரதனெனும் பெயரானும். (4) 5. தீவினை தான் செய்த தீவினையினாலும், நல்வினை தான் செய்த நல்வினையினாலும் அறவோர் உலகில் தோன்றுவர். அது நிலத்தில் இட்ட வித்துக்குரிய முளையே தோன்றி வெளிப் பட்டு வருவது போன்றது. - கம்பர், பாலகாண்டம் : 739 விரிந்திடுதீவினை செய்த வெவ்வியதீ வினையாலும் அருங்கடையின் மறையறைந்த அறஞ்செய்த அறத்தாலும் இருங்கடகக் காதலத்திவ் வெழுதரிய திருமேனிக் கருங்கடலைச் செங்கனிவாய்க் கவுசலையென் பாள்பயந்தாள். (5) 6. திரண்டு செறிந்த இருளை ஒழிப்பதற்கு முழுமதி தோன்றி எழுவது, மறநெறியை ஒழித்துப் போடுதற்கு அறநெறி கிளம்புவது போன்றது. - கம்பர், சுந்தர காண்டம் : 147. தீண்டருந் தீவினை தீர்க்கத் தீந்துபோய் மாண்டற உலர்ந்தது மாருதிப் பெயர் ஆண்டகை மாரிவந்தளிக்க ஆயிடை ஈண்டற முளைத்தென முளைத்த திந்துவே. (6) 7. உடலில் உள்ள நரம்பு, தோல் முதலிய எழுவகைத் தாதுப் பொருள்களுள் எலும்பே முதன்மையானது; மற்றவை தங்குதற்கும் அடிப்பொருளாக உள்ளது. அதுபோல் எல்லாப் பண்புகளிலும் அன்பே சிறந்தது. அதுவே மற்றைப் பண்புகளை யெல்லாம் தழுவிக்கொண்டும் நிற்பது. - கம்பர், சுந்தர காண்டம் : 61. முன்பிற் சிறந்தாரிடை உள்ளவர் காதல் முற்றப் பின்பிற் சிறந்தார் குணநன்றிது பெற்ற யாக்கைக்கு என்பிற் சிறந்தாயதோர் ஊற்றமுண் டென்ன லாமே அன்பிற் சிறந்தாயதொர் பூசனை யார்கண் உண்டே. (7) 8. அருள் என்பது அழகிய கோயில் . அக்கோயிற்கு அறிவு, அறம், தவம் என்பவை கோட்டைச் சுவர்கள், பெருமையும் பொறுமையும் வாயில்கள். - கம்பர், உயுத்தகாண்டம் : 356 தருமமும் ஞானமும் தவமும் வேலியாய் மருவரும் பெருமையும் பொறையும் வாயிலாய்க் கருணையங் கோயிலுள் இருந்த கண்ணனை அருணெறி யெய்திச்சென்றடிவ ணங்கினான். (8) 9. கார்காலம் கழிந்து செல்லும் ஆற்றின் நீர், பளிங்கு போல் தூயதாக இருக்கும். அது கறையற்றவற்றை நினைத்துச் செவ்வை யாக எதனையும் செய்யும் அருளாளர் தூய நெஞ்சம் போன்றது. - கம்பர், கிட்கிதா காண்டம் : 564 வஞ்சனைத் தீவினை மறந்த மாதவர் நெஞ்செனத் தெளிந்த நீரம். (9) 10. எளியவர்களாகத் தம்மை அடைந்து அடைக்கலமாக ஏற்றுதவ வேண்டுபவர்க்கு, ''இவர்க்கு அடைக்கலம் அளித்தால் வலியவர் நம்மை அழிப்பர்" என அஞ்சி மறுத்து விடுவது, கிணற்று நீர் தன்னை அடித்துக் கொண்டு போய்விடக் கூடும் எனக்கடல் அஞ்சுவது போன்றது. - கம்பர், உயுத்தகாண்டம் : 409 ஆவத்தின் வந்து அபயம் என்றானை, அயிர்த்தகல விடுதி யாயின் கூவத்தின் சிறுபுனலைக் கடலயிர்த்தது, ஒவ்வாதோ கொற்ற வேந்தே. (10) 11. வேலி அழிந்தால் பயிரும் கெட்டொழியும்; பயனும் அற்றுப் போகும். அதுபோல் அறத்தின் வேலியாய் வாழ்வோரை அழித்தால் உலகத்து உயர்பண்புகளும், அவற்றின் பயன்களும் அழியும். - கம்பர், கிட்கிந்தா காண்டம் : 334. நூலியற் கையும் நும்குலத் துந்தையர் போலியற் கையும் சீலமும் போற்றலை வாலியைப் படுத் தாயலை மன்னற வேலியைப் படுத்தாய் விறல் வீரனே. (11) 12. முன்னர் வந்த விருந்தினர் அருந்திச் செல்ல, வந்துள்ள விருந்தினர் அருந்திக் கொண்டிருக்க, வர இருக்கும் விருந்தினரை எதிர்நோக்கிக் கொண்டு நல்லறமாம் இல்லற வாழ்வினர் இருப்பர். அவர்கள் விருந்தினரை எதிர் நோக்கும் தன்மை வீட்டில் இருந்த விதையை வயலில் விதைத்துவிட்டு மழை எப்பொழுது பெய்யுமென வானத்தை நோக்கிக் கொண்டிருக்கும் வறியவனான ஓர் ஏர் உழவனைப் போன்றது. - திருவிளையாடல், திருநகரச் சிறப்பு : 56. அருந்தினர் அருந்திச் செல்ல அருந்துகின்றாரும் ஆங்கே இருந்தினி தருந்தா நிற்க இன்னமு தட்டுப் பின்னும் விருந்தினர் வரவு நோக்கி வித்தெலாம் வயலில் வீசி வருந்திவின் நோக்கும் ஓரேர் உழவர்போல் வாடி நிற்பார்.(12) 13. பிறர் நலம் நாடும் பெருங்குணத்தவனும், தன்னலம் நாடும் ஒருவனும் நேர் எதிர் நின்று தாக்கிப் போர் புரிவது, அறமும் மறமும் தாக்கிப் போர் புரிவது போன்றதாம். - திருவிளையாடல், இந்திரன் பழிதீர்த்த படலம் : 20 அறத்தொடு பாவம் நேர்ந் தென்ன ஆர்த்திரு திறத்தரு மூண்டமர் செய்ய. (13) 8. கொடை 1. உலகத்து உயிர்கள் தனக்கு எத்தகைய உதவியும் செய்யாது இருப்பினும் அதனை நினைக்காமல் மழை பொழிந்து உதவும். அதுபோல் பெரியோர்களும் பிறர் செய்யும் கைம்மாற்றைக் கருதாமல் நல்ல பல உதவிகளை உவப்புடன் செய்வர். - கம்பர், உயுத்தகாண்டம் : 2223. ஆரியன் அவனை நோக்கி ஆருயிர் உதவி யாதும் காரியம் இல்லான் போனான் கருணையோர் கடன்மை ஈதால் பேரிய லாளர் செய்கை ஊதியம் பிடித்தும் என்னார் மாரியை நோக்கிக் கைம்மாறியற்றுமோ வையம் என்றான்.(1) 2. நீர் நிறைந்த கருமுகில் உள்ள நீரையெல்லாம் கொட்டிய பின்னர் நிறம் வெளுப்பாக மாறும். அதுபோல் உள்ளவற்றை யெல்லாம் உவந்து ஈந்த பெருங்கொடையாளர் இனி ஈவதற்கு எதுவும் இல்லையே என்று நாணத்தால் வெளுப்படைவர். - கம்பர், கிட்கிந்தா காண்டம் : 556. மள்கலில் பெருங்கொடை மருவி மண்ணுளோர் உள்கிய பொருளெலாம் உதவி அற்றபோது எள்கலில் இரவலர்க் கீவ தின்மையால் வெள்கிய மாந்தரின் வெளுத்த மேகமே. (2) 3. தன்னிடம் ஒரு துளி நீரையும் வைத்துக் கொள்ளாமல் வழங்கும் மழை, தன்னிடம் இருக்கும் பொருள் அனைத்தையும் தனக்கெனச் சிறிதளவும் பேணி வைத்துக் கொள்ளாமல் பிறர்க்கு உதவும் வள்ளல் போன்றது. - கம்பர், பாலகாண்டம் : 16 புள்ளி மால்வரை பொன்னென நோக்கிவான் வெள்ளி வீழிடை வீழ்த்தெனத் தாரைகள் உள்ளி உள்ளவெலாம் உவந் தீயுமவ் வள்ளி யோரின் வழங்கின மேகமே. (3) 4. வெள்ளம் பெருக்கெடுத்தோடிய ஆறு, வறண்ட நாளிலும் தன்னைச் சிறிது தோண்டிய அளவில் தண்ணீர் சுரந்து தரும். அதுபோல் பெருஞ் செல்வம் அழிந்துபோன நாளிலும் உயர்ந்த உள்ளம் உடையோர் தம்மிடம் வேண்டி வந்தவர்க்குத் தம்மால் இயன்ற அளவு உதவிபுரிவர். - கம்பர், பாலகாண்டம் : 919 வெள்ளநெடு வாரியுற வீசி யிலவேனும் கிள்ளவெழு கின்றபுனல் கேளிரின் விரும்பித் தெள்ளுபுனல் ஆறுசிறி தேயுதவு கின்ற உள்ளது மறாதுதவு வள்ளலையும் ஒத்த. (4) 5. உட்புகுந்து உண்ணுதற்கு வாய்ப்பு இல்லாத பொற் கிண்ணத்துத் தேனை விரும்பி வண்டுகள் சுற்றிச் சுற்றி மொய்ப்பது, ஈயாதவன் செல்வத்தை நாடி வந்து வறிதே சுழலும் இழிந்த இரவலர் போன்றது. - கம்பர், பாலகண்டம் : 1064 வான் துணைப் பிரிதல் ஆற்ற வண்டினம் வாச்சை மாக்கள் ஏன்றமா நிதியம் வேட்ட இரவலர் என்ன ஆர்ப்பத் தேன்தரு கமலச் செவ்வாய் திறந்தனள் நுகர தானி ஊன்றிய கழுநீர் நாளத் தாளினால் ஒருத்தி உண்டாள் (5) 6. வள்ளல் தன்மையாளர்களை வறியவர்கள் நெருங்கிச் சென்று தமக்கு வேண்டிய பொருள்களைப் பெற்று மீள்வது. வெண்ணிற முகில் கடலை அடைந்து நீரிடைப் படிந்து கருநிறங் கொண்டு வானிடை எழும்பிப் பரவி வருவது போன்றது. - கம்பர், பாலகாண்டம் : 787 வெண்ணிற மேகம் மேன்மேல் விரிகடல் பருகு மாபோல் மண்ணுறு வேந்தன் செல்வம் வறியவர் முகந்து கொண்டார்.(6) 7. குளத்தின் மடையடி நிலம் ஆயினும் நீர் பாய்ச்சாவிடில் பயிர் வாடிப்போகும். அதுபோல் கொடாத கயவர்களைத் தேடிச் சென்று அவர் கடை வாயிலில் நின்றாலும் காணும் பயன் சிறிதும் இல்லை . - கம்பர், அயோத்தியா காண்டம் : 832. அலர்ந்த பைங்கூழ் அகன்குளக் கீழன மலர்ந்த வாயிற் புனல்வழங் காமையால் உலர்ந்த வன்கண் உலோபர் கடைத்தலை புலர்ந்து நிற்கும் பரிசிலர் போலவே. (7) 8. இருக்கும் பொருள் ஒன்றை இரவலர் வேண்டி நிற்க அதனை உதவாமலும் இல்லை என்று மறுக்காமலும் இருக்கும் ஒருவன் தன்மை, கொடைப் பயன் கொள்ளக் கருதி இல்லை என்று கூறாமலும், பணம் போய்விடுமே எனக் கருதிக் கொடுக்க மனம் இல்லாமலும் இருக்கும் கொடிய கருமியின் இயல்பு போன்றது. - கம்பர், பாலகாண்டம் : 992. ஏற்றார்க் குதவான் இடையேந்தினன் நின்றான் ஒழிந்தான் மாற்றான் உதவான் கடுவச் சையன் போலோர் மன்னன். (8) 9. உயிரோடு இருப்பவர் ஆயினும் இரந்து திரிபவர் இறந்தவரே ஆவர். அதுபோல் ஈகையால் வாழ்ந்தவர் இறந்து போனார் எனினும் அவர் என்றும் உயிரோடு இருப்பவரே ஆவர். - கம்பர், பாலகாண்டம் : 447 மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள் மாயாது ஏந்திய கைக்கொடு இரந்தவர் எந்தாய் விந்தவர் என்பவர் வந்தவ ரேனும் ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே. (9) 10. காலத்தால் செய்த உதவி மிக உயர்ந்தது. அதற்கு உலகமும் இணையாக மாட்டாது. ஏனெனில் காலத்தால் செய்த உதவி நிலைபேறு உடையது. ஆனால் உலகமோ நிலைபேறு உடையது அன்று. ஆதலால் உலகினும் உதவியே பெரிதாம். - கம்பர், உயுத்தகாண்டம் : 3948 உலகம் மூன்றும் உதவற்கு ஒருதனி விலையி லாமையும் உன்னினன் மேலவை நிலையி லாமை நினைந்தனென் நின்னையென் தலையினால் தொழ வேதகும் தன்மையால். (10) 11. சிறிய உருவம் ஒன்று எதிர்பாரா நிலையில் உயர்ந்து தோன்றுவது, உயர்ந்தவர்களுக்குச் செய்த உதவி வளர்ந்து தோன்றுவது போன்றது. - கம்பர், பாலகாண்டம் : 452 கயத்தரு நறும்புனல் கையில் தீண்டலும் பயந்தவர் களும்இகழ் குறளன் பார்த்தெதிர் வியந்தவர் வெருக்கொள விசும்பின் ஓங்கினான் உயர்ந்தவர்க் குதவிய உதவி ஒப்பவே. (11) 12. பெருமழை பெய்தலால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அது நற்பெருமக்கள் பெற்ற கொடைநலம் பெருகுவதையும், செங்கோல் ஆட்சியாளர் புகழ் பெருகுவதையும் போன்றது. - கம்பர், பாலகண்டம் : 17. மானம் நேர்ந்தறம் நோக்கி மனுநெறி போன தண்குடை வேந்தன் புகழென ஞான முன்னிய நான்மறை யாளர்கைத் தான மென்னத் தழைத்தது நீத்தமே. (12) 13. உலகைச் சூழ்ந்து பரவியுள்ள இருள் திரளை உண்டு நிலவொளி பரப்பும் திங்கள். அதன் செயல் விண்ணும் மண்ணும் திசையும் பரவிப் பெருகவல்ல கொடையாளரின் புகழ் பெருகுவது போன்றது. - கம்பர், பாலகாண்டம் : 635 வண்ண மாலைக் கைபரப்பி உலகை வளைத்த இருளெல்லாம் உண்ண எண்ணித் தண்மதியத் துதயத் தெழுந்த நிலாக்கற்றை விண்ணும் மண்ணும் திசையனைத்தும் விழுங்கிக் கொண்ட விரிநன்னீர்ப் பண்ணை வெண்ணெய்ச் சடையன்தன் புகழ்போல் எங்கும் பரந்துளதால். (13) 14. வயிற்றுள் இடப்பெற்ற சோறு அருவறுப்பாலும் குமட்டலாலும் வாந்தியாய் வெளியேறி விட, அதனை வழித்து எடுத்து அருந்துவார் இலர். அதுபோல், 'கொள்க' என்று ஒருவற்குக் கொடுத்த பொருளை மீண்டும் கொள்ள நல்லோர் எண்ணார். - அரிச்சந்திரபுராணம், நகர் நீங்கிய காண்டம் : 124 குக்கி புக்கது செருக்கொடு குடற்கரு வருப்பு வரவே கக்கி விட்டது புசிப்பவர் கடற்புவி இடத்தி லுளரோ தக்க சொற்றிற முரைத்திலை சழக்கின னெனப் பெயரிடும் இக்கருத்தையின் விட்டுவிடு விட்டுவி டெனக்க ழறினான். (14) 15. ஒருவற்கு விரும்பிக் கொடுத்த கொடையை மீண்டும் பெற்றுக் கொள்வது, ஏற்றுவந்தவன் கலத்தில் இடம்பெற்ற சோற்றை இட்டவனே மீண்டும் எடுத்துக் கொள்வது போன்ற இழிவுடையது. - அரிச்சந்திரபுராணம், நகர் நீங்கிய காண்டம் : 121 கடிஞை இட்டபலியைக் கையிலெடுத்தடு பசிக்கு நுகரும் மிடிய ரிப்புவி யிடத்திலை எனக்கிது விதித்ததல். (15) 16. உயிர்க்கு உறுதி பயக்கும் என்று கருதாமல் புகழ் கருதிக் கொடை புரிவது, உட்சுவரைப் பேணாமல் புறச்சுவரைப் பேணி வண்ணம் தீட்டி அழகூட்டுவது போன்ற வீண் செயலேயாம். - வில்லிபாரதம், சபா பருவம் : 158 அறஞ்செறி தானம் வண்மை அளவிலா தளித்து நாளும் புறஞ்சுவர் கோலம் செய்வான். (16) 17. நகரைச் சூழ்ந்திருக்கும் மதில் நடுவு நிலையாளனைச் சூழ்ந்த அறம் போல்வது. ஓங்கி எழுந்து நிற்கும் மதில் உயர்ந் தோர்க்குச் செய்யும் உதவி போல்வது. - குசேலோபாக்கியானம் : 547. நயந்தரு நடுவுள் ளானை நல்லறஞ் சூழ்ந்தாற் போலப் பயங்கெழு நகரஞ் சூழ்ந்து பாசநீத்தறிவின் மேலாய் உயர்ந்தவர்க் கினிது செய்த உதவிபோல் உயர்ந்து மிக்க வயங்கொளப் பொலிந்தன் றெஞ்சா மஞ்சுசூழ் இஞ்சி மாதோ. (17) 9. நட்பு 1. விரைந்து ஓடவல்ல குதிரை வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் எங்கும் இடையறாது ஓடிக்கொண்டு இருப்பதுபோல் தோன்றும். அதுபோல் உயர்ந்த பெருமக்கள் வேறு வேறு இடங்களில் இருந்தாலும் அவர்தம் நட்பு இடையறாது நிற்கும். - கம்பர், பாலகாண்டம் : 575 கொட்புறு கலினப் பாய்மா குலான்மகன் முடுக்கி விட்ட மட்கலத்திகிரி போலே வாளியின் வருவ மேலோர் நட்பினின் இடையறாவாய் ஞானிகள் உணர்வின் ஒன்றாய்க் கட்புலத் தினைய வென்று தெரிவில் தெரியக் கண்டார். (1) 2. முல்லைநிலப் பசு தந்த பாலும், குறிஞ்சி நிலம் தந்த தேனும் ஒன்றுபட்டு இன்பம் தருவது போன்றது இருவேறு இடங்களில் பிறந்து வளர்ந்த இனிய நண்பர்கள் உறவு. - பெருங்கதை : 2:8:11. - கம்பர், கிட்கிந்தா காண்டம் : 256. ஆன்முலைப் பிறந்த வால்நிற அமிர்தம் மலைப்பெய் நெய்யொடு தலைப்பெய் தாங்கு வேறுபட் டேகினும் கூறுபட் டியலா அன்பினின் அளைஇய நண்பின் அமைதி. (2) 3. மனந்தூய்மை யுடையவர் தொடர்பு, கண்டவுடன் தோன்றி என்றும் பிரிந்து செல்லாத் தன்மையது. அஃது இரவும் பகலும் இணைந்து வரும் கால வட்டம் போன்ற இயற்கைத் தொடர்பு உடையது. - கம்பர், உயுத்தகாண்டம் : 429. தொல்பெருங் கால் மெல்லாம் பழகினும் தூய ரல்லார் புல்லலர் உள்ளம் தூயார் பொருந்துவர் எதிர்ந்த ஞான்றே ஒல்லைவந் துணர்வும் ஒன்று இருவரும் ஒருநாள் உள்ள எல்லியும் பகலும் போலத் தழுவினர் எழுவில் தோளார் (3) 4. நினைத்த செயல் நிறைவேறுதற்கு முழு முயற்சியும் முன்னை ஊழ்வினையும் வேண்டும். அதுபோல் உயரிய நண்பர்கள் கிட்டுதற்கும் அவை இன்றியமையாது வேண்டும். - கம்பர், கிட்கிந்தா காண்டம் : 103. கூட்ட மொத்திருந்த வீரர் குறித்ததோர் பொருட்கு முன்னாள் ஈட்டிய தவமும் பின்னர் முயற்சியும் இயைந்த தொத்தார். (4) 5. கரிநாள் (அமாவாசை) வரும்போது திங்களும் ஞாயிறும் ஒன்று சேர்ந்து கொள்ளும். அதுபோல் அரிய காலவாய்ப்புக் கிட்டும் போது உயரிய பெருமக்களும் நண்பராக வாய்த்து விடுவர். - கம்பர், கிட்கிந்தா காண்டம் : 102 தவாவலி அரக்கர் என்னுந் தவாஇருட் பகையைத் தள்ளிக் குவாலறம் நிறுத்தற் கேற்ற காலத்தின் கூட்டம் ஒத்தார் அவா முதல் அறுத்த சிந்தை அனகனும் அரியின் வேந்தும் உவாவுற வந்து கூடும் உடுபதி இரவி ஒத்தார். (5) 6. குயமகன் சுழற்றும் சக்கரம் இடைவெளி இல்லாமலும், வழியில் இருந்து விலகாமலும் சுழலும். அதுபோல் பெரியவர் நட்பும் இடையீடு இல்லாமலும் முறை தவறாமலும் இயங்கும். - கம்பர், பாலகாண்டம், 575. குலான்மகன் முடுக்கி விட்ட, மட்கலத்திகிரி போலே வாளியின் வருவ மேலோர் நட்பினின் இடையறாவாய். (6) 7. கல்வியும் மெய்யுணர்வும் கூடிய வழி தீவினை ஒழியும். அதுபோல் அரிய நண்பர் ஒருவர் வாய்த்த போது வலிய பகைத் துயரும் அழியும். - கம்பர், கிட்கிந்தா காண்டம் : 103. கேட்டுணர் கல்வி யோடு ஞானமும் கிடைத்த தொத்தார். (7) 8. உழுவலன்புடைய நண்பர் கண் போன்றவர் என்பர். அவர்கண் போன்றவர் அல்லர்; கண்ணின் கருமணி போன்றவர். அவரே ஒளி ; அவரே காட்சி. - பெரிய புராணம், பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம் : 9 மண்ணின்றிகழும் திருநாவலூரில் வந்த வன்றொண்டர் நண்ணற் கரிய திருக்கயிலை நாளை எய்த நான்பிரிந்து கண்ணிற் கரிய மணிகழிய வாழ்வோர் போல வாழேன்என் றெண்ணிச் சிவன்றாள் இன்றே சென்றடைவன் யோகத் தாலென்பார். (8) 9. நன்றி மறவா நயனுடைய நண்பர் எத்தகு நலிவினைத் தம் நண்பர் அடைந்த பொழுதிலும் பிரிந்து செல்லார். அவர்தம் இயல்பு கழலாமல் காலை ஒட்டிக் கிடக்கும் சிலம்பினை ஒப்பதாம். 10. கையில் இருந்தும் இடுப்பில் இருந்தும் கழன்றோடும் தொடி வளையல், மேகலை என்னும் அணிகலங்கள் நண்பர்க்கு யாதானும் ஒரு நலிவு உண்டாய பொழுதில் அகன்று செல்லும் புல்லிய நண்பர் போன்றன . - திருவிளையாடல் , திருமணப் படலம் : 129 நட்டவர்க் கிடுக்கண் எய்த நன்றி கொன்றவர்போற் கையில் வட்டவாய்த் தொடியும் சங்கும் மருங்கு சூழ் கலையும் நீங்க விட்ட பொற் சிலம்பிட்டாங்கே நன்றியின் இகவார் போற்கால் ஓட்டியே கிடப்ப நின்றார் உகுத்தபூங் கொம்பர் அன்னார். (9-10) 11. மெய்ம்மறந்து வேற்றுமை இன்றிக் கலந்து ஒன்றுபட்ட உணர்வுடையவர் ஒருங்கு கூடிய தன்மை, இறைவன் இனிய அடிகளை எய்திய ஆருயிர்கள் அடையும் அமைந்த தன்மை போன்றது. - திருவிளையாடல் , திருமணப் படலம் : 175. விண்ணுளார் திசையின் உள்ளார் வேறுளார் பிலத்தின் உள்ளார் மண்ணுளார் பிறரும் வேள்வி மண்டபத் தடங்கி என்றும் பண்ணுளார் ஓசை போலப் பரந்தெங்கு நிறைந்த மூன்று கண்ணுளார் அடியி னிழல் கலந்துளார் தம்மை ஒத்தார். (11) 12. பெருகிக் கிடக்கும் பலவகைப் பொருள்களின் இடையே இருந்தாலும் நெருஞ்சி மலர் கதிரோனையே நோக்கி நிற்கும். அதுபோல் பகைவர்கள் பலர் அண்மையில் இருந்தாலும் அவர்களைக் கருதாமல் நண்பர்கள் நெடுந் தொலைவில் இருந்தாலும் அவர்களைக் கருதியே அன்பர்கள் வாழ்வர். - குசேலோபாக்கியானம் : 432. நள்ளார்கள் அண்மைக்கண் இருந்தாலும் நட்புறத்தார் விள்ளார்கள் சேய்மைக்கண் இருந்தாலும் விருப்பொழி யார் தள்ளாத பல்பொருள்கள் தனைச் சூழ இருந்தாலும் உள்ளாத வன்கதிரை உறநோக்கும் நெருஞ்சியே. (12) 13. நெற்கதிரை அறுக்குங்கால் அதனை அடுத்துள்ள பூங்கொடியும் சேர்ந்து அறுபட்டு விடுவதுண்டு. அது நண்பர்க்கு இறப்பு நேர்ந்த பொழுதில் உடன் தாமும் இறக்கின்ற நல்லன்பர் போல்வது. - அரிச்சந்திரபுராணம், விவாக காண்டம் : 272 துஞ்ச வந்த நாள் தோழரை விட்டயல் துறக்கும் வஞ்ச நெஞ்சார் போல் அலாதுவண் டணிகுழல் மாதே அஞ்ச லாதுநின் றவருடன் இறந்தநல்லவர்போல் கஞ்சம் நெல்லுடன் அறுப்புண்டு கிடப்பன காணாய். (13) 14. கடுவை (கசப்புப் பொருளை) விதைத்துக் கரும்பைப் பெற எவராலும் இயலாது. அதுபோல் வன்பினைச் செய்து அன்பினைப் பெற இயலாது. அன்பைப் பெற வேண்டுவார் அன்பையே விதைத்தல் வேண்டும். - பிரபுலிங்க லீலை , மாயை கோலாகல கதி : 73. அன்பினால் அன்பர்பெறற் கெளியனாம் எனச்சூளொன் றறைந்து வந்து வன்பினால் பெற வேண்டி நின்றழிந்தாய் இதுகுமோ மாயை மாதே முன்பினால் கடுவிதைத்துக் கரும்பாக வேண்டிமிக முயன்று நெஞ்சிற் றுன்பராய்த் திரியுமவர் போலென்றான் மாயைதனைத் துரக்க வல்லான். (14) 15. இரசகுளிகை, தன்னை அடைந்த களிம்பு படிந்த செம்பின் இயல்பை நோக்காமல் ஏற்றுக்கொள்ளும். அதுபோல் குறை நோக்காமல் குணம் நோக்கிக் கொள்ளுதல் அன்பர் கடனாம். - பிரபுலிங்க லீலை , மாயை கோலாகல கதி : 84 இரதமுறு களிம்புமலி செம்பினியல் நோக்குறா இயல்பு போல அருள்புரிதி ஜயவிவள் குணநோக்கா தென்று தொழு தஞ்சிச் சொன்னாள். (15) 16. நஞ்சு உண்பவரை அவர் அருகில் நிற்பவர் இச்செயல் நல்லது என்று பாராட்டி உரையார். அதுபோல் தீயவை செய்யும் போது நண்பர்கள் இது நல்லது என்று பாராட்டிச் சொல்லிக் கெடார். - கம்பர், ஆரணிய காண்டம் : 752. உஞ்சுபிழை யாயுறவி னோடுமென வுன்னா நெஞ்சுபறை போதுமது நீநினைய கில்லாய் அஞ்சுமென தாருயிர் அறிந்தருகு நின்றார் நஞ்சுகர் வாரையிது நன்றெனலு நன்றோ. (16) 17. குதிரை தன் மேல் படிந்த தூசியை உடலை உலுக்கித் தட்டிவிடும். அதுபோல் அறியாமல் தீயவர் நட்பைப் பெற்ற நல்லவர். அதனை உதறி ஒதுக்கிவிடுவர். - கம்பர், பாலகாண்டம் : 916 தீயவரோ டொன்றிய திறத்தரு நலத்தோர் ஆயவரை அந்நிலை அறிந்தனர் துறந்தாங்கு ஏயவரு நுண்பொடி படிந்துடன் எழுதொண் பாய்பரி விரைந்துதறி நின்றன பரந்தே. (17) 18. உள்ளம் பொருந்தாதவர்களுடன் ஒன்றி வாழும் வாழ்வினும், நடுக்கத்தக்க நச்சுப் பாம்புடன் வாழும் வாழ்வு நல்லதாம். - கம்பர், உயுத்தகாண்டம் : 314 வஞ்சனை மனத்தினை பிறப்பு மாறினை நஞ்சினை உடன்கொடு வாழ்தல் நன்றாரோ. (18) 10. பெருமை 1. உலகத்துப் பொருள்கள் அனைத்தும் அழிந்தாலும் அழியாமல் ஓங்கி நிற்கும் உயர்வு உடையது மலை. அம்மலை போல் கால வெள்ளத்தால் அழியாப் பேறு பெற்றவர் அறவோரே. - கம்பர், கிட்கிந்தா காண்டம் : 778 வடசொற்குந் தென்சொற்கும் வரம்பிற்றாய் நான்மறையும் மற்றை நூலும் இடைசொற்ற பொருட்கெல்லாம் எல்லையதாய் நல்லறத்துக்கு ஈறாய் வேறாய் புடை சுற்றும் துணை இன்றிப் புகழ் பொதிந்த மெய்யேபோல் பூத்து நின்ற அடை சுற்றும் தண்சாரல் ஓங்கியவேங் கடத்திற்சென்றடைதிர் மாதோ. (1) 2. நெருக்கத்தால் காடு பெரிது; பெருக்கத்தால் கடல் பெரிது; விரிவால் வான் பெரிது; உயரத்தால் மலை பெரிது. இவ்வனைத் திலும் ஆன்று அவிந்து அடங்கிய சான்றோர் ' மிகப் பெரியவர். - கம்பர், சுந்தர காண்டம் : 758 கானினும் பெரியர் ஓசைக் கடலினும் பெரியர் சீர்த்தி வானினும் பெரியர் மேனி மலையினும் பெரியர் மாதோ. (2) 3. கதிரோன் ஒளி, மற்றை ஒளிகளை யெல்லாம் அடக்கி மழுங்கச் செய்துவிடும். அதுபோல் பெரும்புகழாளன் ஒளியும் அக்குடியில் பிறந்த மற்றையோர் ஒளியை அடக்கி உயர்ந்து விடும். - கம்பர், அயோத்தியா காண்டம் : 1046 என்புகழ் கின்ற தேழை எயினனேன் இரவி என்பான் தன்புகழ்க் கற்றை மற்றை ஒளிகளைத் தவிர்க்கு மாபோல் மன்புகழ் பெருமை நீங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம் உன்புகழ் ஆக்கிக் கொண்டாய் உயர்குணத் துரவுத் தோளாய். (3) 4. ஒருவரில் ஒருவர் விஞ்சிய அன்புடையார் இருவர் தழுவிக்கொண்டு, உள்ளத்தால் ஒன்றுபட்டு வாழ்வது ; அருள் அறத்தைத் தழுவிக் கொண்டு வாழ்வது போன்றது. - கம்பர், அயோத்தியா காண்டம் : 1138. அயாவுயிர்த் தழுகணீர் அருவி மார்பிடை உயாவுறத் திருவுளம் உருகப் புல்லினான் நியாயமத் தனைக்குமோர் நிலையம் ஆயினான் . தயாமுதல் அறத்தினைத் தழுவி என்னவே. (4) 5. சிந்தையில் செம்மை இருப்பவரிடம் சீற்றம் சிறிதும் உண்டாவ தில்லை. அதுபோல் நல்லறமே கொண்டவர்க்கு வாழ்வில் புகழை அன்றி இகழ் உண்டாவதில்லை. - கம்பர், பாலகாண்டம் : 71. சீற்றம் இல்லை தம் சிந்தையின் செம்மையால் ஆற்ற நல்லறம் அல்லது இல்லாமையால் ஏற்றம் அன்றி இழிதகவு இல்லையே. (5) 6. தேரில் அமைந்த பொன்னால் செய்யப்பெற்ற உருளை கல்மேல் உராய்ந்து செல்லுதலால் கருங்கல்லும் பொன் நிறம் பெறும். அதுபோல் தெளிந்த அறிவுடையோர் தம்மை அடுத்த சிறியவர்களையும் பெருமைத் தன்மை உடையவராக மாற்றுவர். - கம்பர், பாலகாண்டம் : 904. தெருண்ட மேலவர் சிறியவர்ச் சேரினும் அவர்தம் மருண்ட புன்மையை மாற்றுவர் எனுமிது வழக்கே உருண்ட வாய்தொறும் பொன்னுருள் உரைத்துரைத் தோடி இருண்ட கல்லையும் தந்நிற மாக்கிய இரதம். (6) 7. தாமரை அல்லி முதலிய மலர்களின் மணம் மீன் தவளை முதலியவற்றின் நாற்றத்தைப் போக்கும். அதுபோல் தங்களைத் தாங்கும் துணையாய் இருப்பவர்களின் பழியைத் தகுதியுடைய பெருமக்கள் மறைப்பர். - குசேலோபாக்கியானம் : 206. வாங்குதெண் கடலின் மீனம் முதலுயிர் மருவ லாலே வீங்கிய புலவு மாற்றி மிளிர்தரப் பூத்த நெய்தல் தேங்கிய மணம்கான்று ஆன்ற சிறப்பினைச் செய்யும் தம்மைத் தாங்குறு களைகண் ஆனோர் தம்பழி மறைப்பார் போல. (7) 8. குன்றின் உயரத்தைக் குன்றம் அறியாது, அதனை நெருங்கு வோரே அறிவர். அதுபோல் உயர்ந்தவர் தம் தன்மையைத் தாம் அறியார். பிறரே அறிந்து பெருமை கொள்வர். - வில்லிபாரதம், ஆரணிய பருவம் : 23. துன்றினர் இன்னல் எய்தத் துன்னலர் ஆகித் தம்மில் ஒன்றினர் செறினும் உள்ள துண்டென உணரத் தேற்றிக் கன்றினர் கவலை தீர்த்தான் கண்ணுடைக் கருணை மூர்த்தி குன்றின் துயர்ச்சி அந்தக் குன்றினுக் கறிய உண்டோ ? (8) 9. உவர்க்கடலில் உள்ள நீர் முகிலைச் சேருமாயின் உவரை நீங்கி நன்னீர் ஆகும். அதுபோல் இழிந்த மக்கள் உதவிய பொருள் என்றாலும், உயர்ந்த கையிற் சேரும் ஆயின் பெருமைக்குரிய பொருளாக மாறும். - திருவிளையாடல் - திருநாட்டுப் படலம் : 16. இழிந்த மாந்தர்கைப் பொருள்களும் இகபரத் தாசை கழிந்த யோகியர் கைப்பற் றூயவாய்க் களங்கம் ஒழிந்த வாறுபோல் உவரியுண் டுவர்கெடுத் தெழிலி பொழிந்த நீரமு தாயின புவிக்கும் வானவர்க்கும். (9) 10. பளிங்கு தன் முன் உள்ள பொருள்களின் உண்மை வடிவைத் தெளிவாக எடுத்துக்காட்டும்; அதுபோல் தூய பெருமக்களும் தம்முன் உள்ளோரின் உள்ளத்தைத் தெள்ளத்தின் அறிந்து வெளிப்படுத்துவர். - நைடதம், 227 பளிங்கில் துன்னிய பல்பொருள் மற்றதில் விளங்கித் தோன்றல்போல் யான்செய்த வெம்பிழை களங்கம் அற்றஉன் உள்ளத்தில் கண்டுகொல் துளங்க யான்பிழைத் தேன் என்று சொற்றதே. (10) 11. எளிய மக்களைத் தேடிப் பெருமக்கள் வந்து உதவுவது, நடக்கவியலா நொண்டி ஒருவன் இருந்த இடத்திற்குப் புனித நீராறு தேடிவந் தடைவது போன்றது. - பிரபுலிங்க லீலை ; முத்தாயி அம்மைகதி : 19 பங்கன் இருந்த பதிக்கருள் செய்து கங்கை அடைந்த கணக்கென என்பால் இங்கு வந்தனை எங்குடி உள்ளார் தங்கள் தவத்தரு தன்மையின் என்று. (11) 12. பாலொடு சேர்ந்த நீரும், மணியொடு சேர்ந்த பதரும், பூவொடு சேர்ந்த நாரும், மணத்தோடு சேர்ந்த வேரும் போற்றிக் கொள்ளப்பெறும். அவைபோல் நன்சொல்லோடு கூடிய புன்சொல்லும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகிவிடும். - அரிச்சந்திரபுராணம் ; பாயிரம் : 11 நீர்கொள்வார் பாலோடு நேர்உற்றால் பதர்கொள்வார் நெல்லோ டுற்றால் நார்கொள்வார் பூவுற்றால் வேர்கொள்வார் அதிற்சிறிது நறையுண் டாயின் சீர்கொள்வார் புன்சொல்லும் செஞ்சொல்லும் சேர்ந் தொன்றிற் சேரப் புன்சொல் ஆர்கொள்வார் என்பது சற் றறியாமல் சிறியேன்நா அசைக்கிக் றேனே. (12) 13. பெரியவர்முன் சிறியவர் அறிவுரை கூறுதல் அறிவுடைய கணவனுக்கு அறிவிலா மனைவி நல்லுரை கூறுதல் போலவும், திருட்டே தொழிலாக உடையவன் உயர்ந்தவர்க்கு அறம் உரைப்பது போலவும், வலிய கருடனுக்கு எளிய பறவை வலிமை கற்பிப்பது போலவும், ஒளிபடைத்த கண்ணனுக்குக் குருடன் வழிகாட்டல் போலவும் ஆகும். - அரிச்சந்திரபுராணம் : பாயிரம் - 12 புருடனார்க் கேந்திழையார் பொருள் உரைப்ப தெனப்பிறர்தம் பொருளே வெளவும் திருடனார் மேலவருக் கறம் உரைப்ப தெனச் சிறிய தெள்கு துள்ளிக் கருடனார்க் குப்பறவை கற்பிப்ப தென அனந்தம் கண்ணுள் ளார்க்குக் குருடனார் வழிகாட்டல் எனப் பெரியோர் முன் சிறியேன் கூறல் உற்றேன். (13) 14. சீரிய மெய்யுணர்வு இல்லாதவன் கல்வி சிறப்படையாது. அதுபோல் சீரிய அறிஞர் இல்லாத அவையும் சிறப்பு அடையாது. - திருவிளையாடல், கீரனைக் கரையேற்றிய படலம் : 3 ஆன்ற ஞானமிலாதவர் கல்வியும் ஆனதே சான்ற கீரன் இலாதவை கூடிய சங்கமே. (14) 15. வாய்ப்பாகக் குறிவைத்து வல்லவன் ஏவும் படைகுறித்த இலக்கில் தப்பாமல் தைக்கும். அதுபோல் உயர்ந்த பெருமக்கள் உள்ளார்ந்த உணர்வால் கூறும் சொல்லும் தப்பாது. - கம்பர் : பாலகாண்டம் : 418 மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்தன சடையன் வெண்ணெய் அண்ணல் சொல்லே அன்ன படைக்கலம் அருளினானே. (15) 16. பிரை விடப் பெற்ற பால் தன் இயல்பில் மாறிவிடும். அத்தகைய மாறுபாடுடைய சொல்லை அறிவுடைய பெருமக்கள் கூறார். - கம்பர், உயுத்தகாண்டம் : 2120 பிரையுண்ட பாலின் உள்ளம் பிறிதிறப் பிறர்முன் சொல்லா உரையுண்ட நல்லோர் என்ன உயிர்த் துயிர்த் துழைப்ப தானார். (16) 17. பழமரம் வேருடன் சாய்ந்து நீரிடை வீழ்ந்தாலும் அதன் கனிகளால் மீன் முதலாயவற்றுக்கு உதவும். அது போல் நற்குடிப் பிறந்த மக்கள் தன் குடியுடன் கெட்டாலும் பிறர்க்கு அந் நிலை யிலும் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்வர். - கம்பர், உயுத்தகாண்டம் : 367 தேமுதல் கனியும் காயும் தேனினோ டூனும் தெய்வப் பூமுதல் ஆய வெல்லாம் மீக்கொளப் பொலிந்த அன்றே மாமுதல் தருவோ டொக்கும் வானுயர் மானக் குன்றம் தாமுத லோடும் கெட்டால் ஓழிவரோ வண்மை தக்கோர். (17) 18. கடலை எத்துணை கலக்கினாலும் விலைமதிப்பற்ற முத்து பவழம் முதலியவற்றையே வழங்கும். அதுபோல் தகுதி மிக்க பெரியவர்களுக்குப் பிறர் எத்தகைய அல்லல்களைச் செய் தாலும் அவர்கள் நல்லனவே செய்வர். - கம்பர், உயுத்தகாண்டம் : 434 தீர்வரும் இன்னல் தம்மைச் செய்யினும் செய்ய சிந்தைப் பேரருளாளர் தத்தம் செய்கையில் பிழைப்ப துண்டோ கார்வரை நிறுவித் தன்னைக் கனலெழக் கலக்கக் கண்டும் ஆர்கலி அமரர் உய்ய அமிழ்துபண் டளித்த தன்றே. (18) 19. உயர் பெரும் பொறுப்பில் இருந்து விலகும் நிலைமை உண்டாயினும் பெருமக்கள் மகிழ்ச்சி அடையவே செய்வர். அவர்கள் உவகை, வலிய சுமையேற்றிய வண்டியிலே பூட்டப் பெற்றிருந்த காளையை அருளாளன் ஒருவன் வந்து அவிழ்த்து விட்டால் அக்காளை அடையும் உவகை போன்றது. - கம்பர், அயோத்தியா காண்டம் : 295. தெருளுடை மனத்து மன்னன் ஏவலில் திறம்ப அஞ்சி இருளுடை உலகம் தாங்கும் இன்னலுக் கியைந்து நின்றான் உருளுடைச் சகடம் பூண்ட உடையவன் உய்த்த காரேறு அருளுடை ஒருவன் நீக்க அப்பிணி அவிழ்ந்த தொத்தான். (19) 20. பகைவர் ஏவிய படைக்கருவி மார்பில் தாக்கும் போதும் சிறிதும் பின்வாங்காமல் நேர் நிற்பது ஆண்மை அன்று. சாவு நேர்வதாயினும், செல்வம் அனைத்தும் இழப்பதாயினும் அறத்தைத் துறந்து போகவிடாமல் காப்பதே ஆண்மையாம். - கம்பர், அயோத்தியா காண்டம் : 567 நிறப்பெரும் படைக்கலம் நிறுத்தி நேருற மறப்பயன் விளைக்கும் வன்மை அன்றரோ இறப்பினும் திருவெலாம் இழப்ப எய்தினும் துறப்பிலர் அறமெனல் சூரர் ஆவதே. சூரார் அவதே. (20) 21. காற்று விசிறும் போதெல்லாம் இடையீடு தோன்றாமல் காற்றாடி சுழன்று கொண்டிருக்கும். அதுபோல் கடமை உணர் வுடைய மக்கட்குக் கடமை உள்ளபோதெல்லாம் அதே உணர் வுடன் இடையீடு படாமல் செயலாற்றுவர். - கம்பர், ஆரணிய காண்டம் : 50 அறங்காத்தற் குனக் கொருவர் ஆருமொரு துணையின்றிக் கறங்காகும் எனத்திரிய நீயேயோ கடவாய்தான். (21) 22. சிறுபிள்ளைகள் கட்டி விளையாடும் சிறு வீட்டைக் கண்டு சிற்பத் திறம் வல்லவர் இவ்வீட்டில் இன்ன குற்றம் உள்ளது என்று இகழ்ந்துரைக்க மாட்டார். அதுபோல் அறிவிலார் செயலைப் பெரியவர் இகழ்ந்து பேசார். - கம்பர், பால காண்டம் : 9 அறையும் ஆடரங் கும்படப் பிள்ளைகள் தறையில் கீறிடில் தச்சரும் காய்வரோ இறையும் ஞானம் இலாதஎன் புன்கவி முறையில் நூல் உணர்ந் தாரு முனிவரோ. (22) 23. கப்பல் வாணிகத்தால் செல்வம் பெருகும்; வளமான நிலத்தால் வருவாய் பெருகும்; சுரங்கத்தைத் தோண்டுதலால் அரிய மணிகள் கிடைக்கும். இவற்றைப் போல் நற்குடியில் பிறத்தலால் ஒழுக்கம் பெருகும். - கம்பர், பாலகாண்டம் : 70 கலம் சுரக்கும் நிதியம் கணக்கிலா நிலம் சுரக்கும் நிறைவளம் நன்மணி பிலம் சுரக்கும் பெறுதற் கரியதாம் குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கலாம். (23) 24. மலையில் ஏறிச் செல்வது அரிது. ஆனால் ஆங்கிருந்து இறங்கி வருவது எளிது. அதுபோல் புகழ் என்னும் குன்றத்தில் ஏறுவது அரிது; இழிவு என்னும் பள்ளத்தில் இறங்குவதோ மிக எளிது. - கம்பர், உயுத்தகாண்டம் : 891 (செங்கதிர்ச் செல்வன்) பொன்றாது பொன்றினான்தன் புகழென இழிந்து போனான். (24) 25. காலைக்கதிர் எழுந்ததும் அல்லிமலர் மூடிக் குவியும். அதுபோல் நல்லவர்கள் தம்மைச் சேர்ந்தவர் பழிக்கு உரியவர் ஆனார் என்னும் சொல்லைக் கேட்ட அளவில் தம் வாயடங்கிச் செயலற்றுப் போவர். - கம்பர், அயோத்தியா காண்டம் : 240 சாயடங்க நலங் கலந்து தயங்கு தன்குல நன்மையும் போயடங்க நெடுங் கொடும்பழி கொண்டரும் புகழ் சிந்துமத் தீயடங்கிய சிந்தை யாள்செயல் கண்டு சீரிய நங்கைமார் வாயடங்கின என்ன வந்து குவிந்த வண்குழு தங்களே. (24) 11. சிறுமை 1. உயிரின் நிலையற்ற சிறிதுகால வாழ்வு, மின்மினிப் பூச்சியின் வெளிச்சம் போன்று தோன்றி விரைவில் மறையும் தன்மையது. - கம்பர், உயுத்த காண்டம் : 444 மின்மினி ஓளியின் மாயும் பிறவியை வேரின் வாங்கச் செம்மணி மகுடம் நீங்கித் திருவடி புனைந்த செல்வன். (1) 2. முன்னர்க் கொண்ட நுகர்ச்சியையே விடாமல் எப்பொழுதும் நுகர்ந்து நாளைப் போக்கிக் கொண்டிருக்கும் வாழ்க்கை, முன்னுண்ட எச்சிலை விடாமல் மீண்டும் மீண்டும் எடுத்து உண்பது போன்றது. - கம்பர், அயோத்தியா காண்டம் : 28. கச்சையங் கடக்கரி கழுத்தின் கண்ணுறப் பிச்சமும் கவிதையும் பெய்யும் இன்னிழல் நிச்சயம் அன்றெனில் நெடிது நாளுண்ட் எச்சிலை நுகருவ தின்ப மாவதோ? (2) 3. தகுதிப்பாடு இல்லாதவர்க்குத் தருகின்ற உயர் பதவி, சிங்கத்திற்குத் தருதற்குரிய ஊனை, நாய்க்குத் தருவது போன்றது. - கம்பர், அயோத்தியா காண்டம் : 414 சிங்கக் குருளைக்கிடு தீஞ்சுவை ஊனை நாயின் வெங்கட் சிறுகுட்டனை ஊட்ட விரும்பி னளோ நங்கைக் கறிவின்திறம் நன்றிது நன்றிது. (3) 4. தாழம் பூவினுடன் பிறந்த சோறு தகுதியற்றதாகக் கருதப் பெற்று வெளியே எடுத்தெறியப்படும். அதுபோல் சிறந்த குடியில் தோன்றினால் கூடத் தகுதி இல்லாதவரை எவரும் பொருளாக எண்ணிப் போற்றார். - கம்பர், அயோத்தியா காண்டம் : 944. துன்னு தாள்வளம் சுமந்த தாழையில் பன்னு வான்குலைப் பதடி யாயினேன். (4) 5. தூய பொய்கையின் நீர் தனக்கென ஒரு நிறமும் கொள்ளாமல் ஒன்பான் மணிகளில் ஒவ்வொன்றைச் சாரும் போதும் அதன் நிறத்தைக் கொண்டு விளங்கும். அதுபோல் மெய்யறிவில்லார் மனமும் தமக்கென ஒரு தெளிவு இல்லாமல் ஆங்காங்குக் காணும் பொருள்களை யெல்லாம் மெய்ப்பொருள் என்றே பற்றிக் கொள்ளும். - கம்பர் : கிட்கிந்தா காண்டம் : 3 ஈர்ந்தநுண் பளிங்கெனத் தெளிந்த ஈர்ம்புனல் போந்தொளிர் நவமணி படர்ந்த பித்திகை சேர்ந்துழிச் சேர்ந்துழி நிறத்தைச் சேர்தலால் ஓர்ந்துணர் வில்லவர் உள்ளம் ஓப்பது. (5) 6. அனுபவம் இல்லாத இளைஞன் ஒருவன் முதிர்ந்த அறிஞர் அவையில் ஒன்றை எடுத்துப் பேசுவது, கலைத் திறமை யும், கண்ணொளியும் இல்லாத ஒருவன் தன் கையில் தூரிகையை எடுத்துக்கொண்டு ஓவியம் வரையத் தொடங்கியது போல் ஏளனத்திற்கு உரியதாகும். - கம்பர். உயுத்தகாண்டம் : 79 கருத்திலான் கண்ணிலான் ஒருவன் கைக்கொடு திருத்துவான் சித்திரம் அனைய செப்புவாய் விருத்தாமே தகையவர் வினைஞர் மந்திரத்து இருத்தியே இளமையால் முறைமை எண்ணிலாய். (6) 7. உள்ளார்ந்த அன்புடையவர் உள்ளத் துயரத்தைப் போக்க முடியாமல் கண்டிருக்கும் கண்கள் கண்கள் அல்ல. அவை மரப்பாவைக்கு அமைந்த உணர்ச்சியற்ற கண்களேயாம். - கம்பர் : உயுத்தகாண்டம் : 2733 இரக்கமும் பாழ்பட எம்பி ஈறுகண் அரக்கரை வென்றுநின் றாண்மை ஆள்வனேல் மரக்கண்வன் கள்வனேன் வஞ்ச னேன்இனிக் கரக்கும தல்லதோர் கடனுண் டாகுமோ. (7) 8. கதிரோன் வெளிப்பட்ட காலையில் கூம்பும் அல்லி மலரில் தேன் பருக வந்த வண்டு பூவின் உள்ளே புக முடியாமல் வெளியே வருந்திச் சுழன்று திரியும். அது, இசை இன்பம் அறியா மாக்களைத் தேடிச் சென்று, தெருவிலே நின்று பாடிக் கொண் டிருக்கு. பாணனைப் போன்றது. - கம்பர், ஆரணிய காண்டம் : 686 நாண்மதிக் கல்லது நடுவண் எய்திய ஆணையிற் றிறக்கலா அலரிற் பாய்வன மாண்வினைப் பயன்படா மாந்தர் வாயில்சேர் பாணரிற் றளர்ந்தன பாடற் றும்பியே. (8) 9. வேர்ப் பிடிப்பற்றுச் சேற்றிலே வீழ்ந்த மரத்தின் கனிகள் எவருக்கும் பயன்படாமல் ஒழியும். அஃது இல்லை என்று வந்தவர்க்குத் தன் இறுதி வேளையிலும் உதவாத கருமியின் செல்வம் போன்றது. - கம்பர் : உயுத்தகாண்டம் : 2733 மண்ணுறச் சேற்றுட் புக்குச் சுரிகின்ற மாலைக் குன்றம் கண்ணிறை போதும் காயும் கனிகளும் பிறவும் கவ்வி வெண்ணிற மீன்கள் எல்லாம் வறியவர் என்ன மேன்மேல் உண்ணிறை செல்வம் நல்காது ஒளிக்கின்ற உலோபர் ஒத்த. (9) 10. உள்ள கருவிகளை எடுத்துப் பயன்படுத்தப் பெறாமல் கிடக்கும் படைக்கலக் கொட்டில் பிறருக்கு எடுத்து உதவும் உயர்குணம் இல்லாத கருமிகளது கருவூலம் போன்றது. - கம்பர் : ஆரணிய காண்டம் : 936 திண்டேர் அழித்தாங்கவன் திண்புறஞ் சேர்ந்த தூணி விண்டான் மறைப்பச் செறிகின்றன வில்லி லாமை மண்டா ரமர்தான் வழங்காமையின் வச்சை மாக்கள் பண்டார மொக்கின்றன வள்ளுகிராற் பறித்தான். (10) 11. பகற் பொழுதிலும் கண்ணை மூடித் துயின்று கொண்டிருக்கும் சோம்பர் தன்மை, இரந்து வந்தவர்க்குச் சோறு தானும் வழங்க விரும்பாமல் பகலிலும் வாயிற் கதவை மூடி வைத்திருக்கும் கருமிகளின் இல்லம் போன்றது. - கம்பர் : ஆரணிய காண்டம் : 684. இச்சையில் துயில்வதற் கியாவர் கண்களும் நிச்சயம் பகலுந்தம் இமைகள் நீக்கல பிச்சையும் இடுதும் என் றுணர்வு பேணலா வச்சையர் நெடுமனை வாயில் ஆனவே. (11) 12. ஆண் நண்டு தன் பெண் நண்டுடன் தன் வளைக்குள் சென்று அவ்வளையின் வாயைச் சேற்றால் அடைத்துக் கொள்ளும். அதுபோல் பகுத்துண்ணும் பண்பில்லா மக்கள் விருந்தினர் சுற்றத்தார் வரவு கண்டு தம் வீட்டுக் கதவைச் சாத்தி உள்ளே ஒடுங்கி விடுவர். - கம்பர் : கிட்கிந்தா காண்டம் : 573. மழைபடப் பொதுளிய மருதத் தாமரை தழைபடப் பேரிலைப் புரையில் தங்குவ இழைபடு பெடையொடும் எள்ளில் நள்ளிகள் புழையடைத் தொடுங்கின வச்சை மாக்கள் போல். (12) 13. பாலை நிலத்தில் கானல் நீரைக் கருதி ஓடும் மான், ஈயாதாரை விரும்பிச் செல்லும் இரவலன் போன்றது தருவதாகக் காட்டித் தாராத கருமி போன்றது கானல் நீர். - (1) அரிச்சந்திர புராணம் : 107 - (2) குசேலோபாக்கியானம் : 182 (1) காப்புறு சிறைப்புனல் எனக்கருதி வற்றிய துவட்சி யதனால் நிரப்புறு தவிப்பினை ஒழித்திட மனத்தினில் நினைத்து ழையெலாம் இரப்பவரை நித்தலும் நடத்தியுமோர் அற்பமும் இரக்க மிலர்பால் பரப்பவரை ஒத்தன கரப்பவரை ஒத்தன பசாச ரதமே. (13) (2) தெள்ளுபுனல் நசைமிக்குந் திரிமருப்பின் இரலையெலாம் நள்ளிய பேய்த்தேரின் பின்தொடர்ந்து நலிந்திடுமால் வள்ளலென வெளிக்காட்டி வஞ்சிக்கும் உலோபர்முன் எள்ளு வறுமைப்பிணியோர் தொடர்ந்து தொடர்ந் திளைப்பதுபோல். (13) 14. வறுமையாளர் தம்மினும் வறுமையாளர் பால் சென்று ஒன்றை இரந்து நிற்பது, வெப்பக் கொடுமையால் இலை உதிர்ந்து பட்டுப்போய் நிற்கும் மரத்தின் கீழ் வெயிலுக்கு ஆற்ற மாட்டாதவர் போய் நிற்பது போன்றது. - திருவிளையாடல், தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம் : 28 தருக்கற நிரப்பால் எய்த்தோர் தம்மினும் வறியர் பாற்சென் றிரப்ப போல் இலை தீந்துக்க மரநிழல் எய்து வாரும். (14) 15. கொடிய வெப்பத்துக்கு ஆட்பட்டவர் நிழல் தாராத கள்ளியின் அடிப்பகுதியை அடைந்து நிற்பது போன்றது இரக்கம் இல்லாச் செல்வரிடம் போய் வறியவர் இரந்து நிற்பது. - திருவிளையாடல், தண்ணீர்ப்பந்தல் வைத்தபடலம் : 28 இரக்கமில் கொடிய செல்வர் மருங்கு போய் இரப்பார் போல உருப்பமொண் டிறைக்குங் கள்ளி நீழல் புக் கொதுங்கு வாரும். (15) 16. வீரர்களின் உயிர் உள்ளவரை அவரை நெருங்காமலும் விலகிச் செல்லாமலும் நிற்கும் நரி, இறக்கும் வரை எதுவும் வழங்காத கருமியைச் சார்ந்த இரவலனைப் போன்றது. - கலிங்கத்துப்பரணி : 478 சாமளவும் பிறர்க்குதவா தவரை நச்சிச் சாருநர் போல் வீரருடல் தரிக்கும் ஆவி போமளவும் அவரருகே இருந்து விட்டுப் போகாத நரிக்குலத்தின் புணர்ச்சி காண்மின். (16) 17. புகழாளன் ஒருவனது சீரிய புகழைப் பொறாமையாளன் அழிக்க நினைப்பது, ஒருவன் தன் நிழலை நிலத்துள் புதைக்க முயலும் முயற்சி போன்றதாம். (குழிதோண்டிப் புதைக்கப் புதைக்க நிழல் மேலே வரும்.) - பிரபுலிங்க லீலை , சித்தராமையர் கதி : 26 கொடியவர் எறிந்த கல் குவியக் குன்றென முடிமிசை நின்றனன் முத்தன் அல்லமன் புடவியில் உடல் நிழல் புதைப்ப அந்நிழல் கடிதினின் மீமிசை காணும் தன்மை போல். (17) 18. முன்னரே வருந்தி இருப்பவர் முன்னர்ச் சென்று எள்ளி நகையாடுவது, மூக்கில்லாதவன் அழகை அவன் முகத்தின் முன்னர்க் கண்ணாடி பிடித்துக் காட்டுவது போன்றது. - பிரபுலிங்கலீலை, வசவண்ணர் வந்ததி : 31 போக்கரும் வலிபு கன்று போய்வரு மாயை சொன்ன வாக்கினில் வருந்து வேனை வள்ள நீ நகைசெய் தெள்ளல் மூக்கிலி முகத்தின் முன்னர் முகுரங்காட்டுதல் போன்ம் என்ன மீக்கிளர் இமயம் ஈன்ற மெல்லியல் மெலிந்து சொன்னாள். (18) 19. தம் தகுதிக்கு இயலாத பேற்றை விரும்பி எதிர் நோக்கி இருப்பவன் தன்மை, முழுமதியைத் தன்னோடு விளையாட அழைக்கும் குழந்தைத் தன்மை போன்றதே. - குசேலோபாக்கியானம் : 286 பழியிலுன் குலத்தோர் செய்யப் படுதொழில் நன்கி யற்றி இழிவற உண்டு டுத்தல் இன்றிமிக் கெண்ணங் கொண்டு வழிநடந் திளைத்தாய் மெய்யும் வாடினாய் அந்தோ வானில் கழிமதி வருக என்றுள் கசிந்தழும் மகவு போன்றாய். (19) 20. பிறனொருவன் பெற்ற வெற்றியைத் தன் வெற்றியாகப் பாராட்டித் திரிவது தன் மனைவி பிறருக்குப் பெற்ற பிள்ளையைத் தன் பிள்ளை என்று பாராட்டுவது போன்றது. - வில்லிபாரதம், விராட பருவம் : 276 சோரர்தம் கருவைத் தங்கள் கருவெனத் தோளில் ஏந்தி ஆர்வமுற்றுருகு நெஞ்சின் அறிவிலார் தம்மைப் போல வீரன்வெஞ் சமரம் வெல்ல விராடனுத் தான்வென் றானப் போரினை என்னா மேனி புளகெழப் பூரித் தானே. (20) 21. மடை வழியில் சென்று வயலில் பாய வேண்டிய நீர் அவ்வழியில் புகாது வெளியே சென்று பரவுவது, தன் இல்லக் கிழத்தியை விடுத்துப் பரத்தையர் வழியிற் செல்லும் நிலைப்பாடா நீர்மையன் போன்றது. - அரிச்சந்திர புராணம், விவாக காண்டம் : 264 ஆர நீள்மடைப் படப்பையிற் புகா திடை அழுந்து தூர ஓடிய வெளியிடைப் பரவுறும் தோயம் தார மானவள் வருந்திடக் கணிகையைச் சாரும் சோரார் ஒத்தன முத்தன திருநகைத் தோகாய். (21) 22. கணவனொடு கூடும் மகள் தான் அணிந்த மேகலை என்னும் ஒலியுடைய அணிகலத்தைக் கழற்றி எறிவது அறைபறை அன்ன கீழ்மக்கள் மறைவான செய்திகளைப் போற்றிக்காவார் என்பதை வெளிப்படுத்திக் காட்டுவது போன்றது. - கம்பர், பாலகாண்டம் : 1101 நறைகமழ் அலங்கல் மாலை நளிர்நறுங் குஞ்சி மைந்தர் துறையறி கல்விச் செவ்வித் தோகையர் தூசு வீசி நிறைய கல் அல்குல் புல்கும் கலைபழித் தகல நீத்தார் அறைபறை அனைய நீரார் அருமறைக்கு ஆவ ரோதான். (22) 23. ஒருவன் சொன்ன சொல்லையே தாமும் திரும்பத் திரும்ப சொல்லித்திரிபவர், அடித்தவன் அடிப்புக்கு ஏற்றவாறு ஒலிக்கும் முரசு போன்றவர். - கம்பர், உயுத்த காண்டம் : 3054. முரட்டடந் தண்டும் ஏந்தி மனித ரை முறைமை குன்றப் பிரட்டரில் புகழ்ந்து பேதை அடியரில் தொழுது பின்சென்று இரட்டுறு முரசம் என்ன இசைத்ததே இசைக்கின் றாயைப் புரட்டுவன் தலையை இன்று பழியொடு மொழிவன் போலாம். (23) 24 உள்ளார்ந்த கருத்தை ஓரிடத்தே வைத்து மற்றோரிடத்தே உகண்டு பருகி உலாவி உணர்வு இன்றி வாழுபவர், உணர்ச்சி கெட்ட இயந்திரப் பதுமை இயங்குவது போல்வர். - கம்பர், சுந்தர காண்டம் : 566. அந்நிலை யாய அண்ணல் ஆண்டுநின் றன்னை நின்னைத் துன்னிரும் கானும் யாறும் மலைகளும் தொடர்ந்து நாடி இன்னுயிர் இன்றி ஏகும் இயந்திரப் படிவம் ஒப்பான் தன்னுயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை வந்து சார்ந்தான். (24) 25. வெளிப்படையாக அணைந்தது போல் தோன்றினாலும் கனல் ஆறாமல் உள் வெதுப்பம் உடையதாக இருக்கும். அதுபோல் வஞ்சக நெஞ்சும் வெளிப்படையாகத் தோன்றா தொழியினும் உள்ளே அதன் தன்மையை விடாமல் நிறைத்து வைத்துக் கொண்டிருக்கும். - கம்பர், அயோத்தியா காண்டம் : 230 அரிந்தான் முன்னோர் மன்னவன் அன்றே அருமேனி வரிந்தார் வில்லாய் வாய்மை வளர்ப்பான் வரம்நல்கிப் பரிந்தால் என்னாம் என்றனள் பாயும் கனலே போல் ளிந்தா றாதே இன்னுயிர் உண்ணும் எரியன்னாள். (25) 26. புகைக்கு அஞ்சி ஓடிய பறவை கடலை அடைந்து ஆங்குள்ள மீன் இனத்திற்கு இரையாகி அழிவது போன்றது, பிறருக்கு அஞ்சியமையால் அருளற்றவர்களை அடைக்கலமாக அடைந்தவர் அவரால் காக்கப்படாமல் அழிக்கப்படுவது. - கம்பர், சுந்தரகாண்டம் : 1223 வெருளும் வெம் புகைப் படலையின் மீச்செல வெருவி இருளும் வெங்கடல் விழுந்தன எழுந்தில் பறவை மருளில் மீன்களும் விழுங்கிட உலந்தன மனத்தோர் அருளில் வஞ்சரைத் தஞ்சமென்றடைந்தவர் அனைய. (26) 27. செங்கதிர் மறையும் வேளையில் வானில் அமைந்திருந்த செம்மை அகன்று காரிருள் படியும். அதுபோல் நன்னிலை கெட்டுப் போகிய மனத்திலும் செம்மை அகன்று கறை படியும். - கம்பர், அயோத்தியா காண்டம் : 542. அந்தியில் வெயிலொளி அழிய வானகம் நந்தலில் கேகயன் பயந்த நங்கைதன் மந்தரை யுரையெனும் கடுவின் மட்கிய சிந்தையின் இருண்டது செம்மை நீங்கியே. (27) 28. சிறிதளவு ஆற்றலும் இல்லாத எளியவர் வலியவரை யாம் வெல்வோம் என்று கருதுவது, இளமுயல் கூட்டம் இன யானைகளை வெல்லவும், சீயத்தின் இனத்தைச் சிறிய மான் கூட்டம் வெல்லவும் விரும்புவது போன்றது. - கம்பர், ஆரணிய காண்டம் : 868. மானவள் உரைத்த லோடும் மானிடர் அரக்கர் தம்மை மீனென மிளிரும் கண்ணாய் வேரற வெல்வர் என்னின் யானையின் இனத்தை எல்லாம் இளமுயல் கொல்லும் பின்னும் கூனுகிர் மடங்கல் ஏற்றைக் குருளைமான் கொள்ளும் என்றான். (28) 29. கதிரோன் மறைந்ததும் இருள் பெருகி வளர்வது ஊன் உடை முதலியன உதவிக் காத்த தலைவனுக்குத் துணையாக நின்று போரிடாமல் உயிர்க்கு அஞ்சி ஓடி வந்தவனுக்குப் பெருகி வளரும் பழிக்கு ஒப்பானது. - கம்பர், பாலகாண்டம் : 1258. அழிபோர் இறைவன் பட அஞ்சியவன் பழிபோல வளர்ந்ததுபாயிருளே. (29) 30. போர் முகத்தில் நில்லாமல் புது முதுகிட்டு ஓடி வந்து மானம் இழந்த வீரனது மன வெப்பம், பாழ்பட்ட பாலை நிலத்தின் ஆறா வெப்பம் போன்றது. - கம்பர், பாலகாண்டம் : 348 விஞ்சுவான் மழையின்மேல் அம்பும் வேலும்படச் செஞ்சவே செருமுகத் தமர்செயும் திறனிலா வஞ்சர்தீ வினையினால் மானமா மணியிழந்து அஞ்சினார் நெஞ்சு போல் என்றும் ஆறாதரோ. (30) 31. பிரைவிடப் பெற்ற பால், தன் உருவும் தன்னையும் மாறுபட்டு விடும். அதுபோல் அச்சம் உற்றவர் உருவமும் தன்மை யும் மாறுவது இயல்பு. - கம்பர், ஆரணிய காண்டம் : 594. கரையறு திருநகர்க் கருங்கண் நங்கைமார் நிரைவளைத் தளிர்க்கரம் நெரித்து நோக்கினார் பிரையுறு பாலென நிலையில் பின்றிய உரையினர் ஒருவர் முன் ஒருவர் ஓடினார். (31) 32. சிறிது ஒளியும் இல்லாமல் பெருகிக் கிடக்கும் இருட்டில் உள்ள எப்பொருளும் கண்ணுக்குத் தோன்றாது. அதுபோல நூற் கேள்வி இல்லாமலும், நற்குணமும் நற்செயலும் இல்லாமலும் இருக்கும் கீழ்மக்கள் உள்ளக் கருத்தும் தோன்றாது. - கம்பர், ஆரணிய காண்டம் : 698 முருடு ஈர்ந்து உருட்டற் கெளிது என்பது என் முற்றும் முற்றிப் பொருள் தீங்கு இல் கேள்விச் சுடர்புக்கு வழங்கல் இன்றிக் குருடு ஈங்கிதென்னக் குறிக் கொண்டு கண்ணோட்டம் குன்றி அருள் தீர்ந்த நெஞ்சிற் கரிதென்பதவ் அந்த காரம். (32) 33. முதிர்ந்த மரத்தின் இடையே வலிய வைரம் ஊடுருவி நிற்கும். அதுபோல் புல்லிய பகைவர்களின் உள்ளத்தே மாறாத வைரம் ஊடுருவி நிற்கும். - கம்பர், கிட்கிந்தா காண்டம் : 175. வள்ளல் இந்திரன் மைந்தற்கும் தம்பிக்கும் வயிர்த்த உள்ள மேயென ஒன்றினொன்றுள்வயிர்ப் புடைய (33) 34. பளிங்கு பதிக்கப்பெற்ற அகழியின் ஓரமும் அதன் உள்ளே உள்ள நீரும் மேலே இருந்து பார்ப்பவருக்கு வேறுபாடு இல்லாமல் தோன்றும். அதுபோல் தெளிந்த சிந்தையுடைய மக்களும், சிறியரும் வெளித் தோற்றத்தால் வேற்றுமை காணு தற்கு அரியர். - கம்பர், சுந்தரகாண்டம் : 249 பளிங்கு செற்றிக் குற்றிய பாயொளி விளிம்பும் வெள்ளமும் மெய்தெரி யாதுபோல் தெளிந்த சிந்தைய ருஞ்சிறி யார்களோடு அளிந்த போதறி தற்கெளிதாவரோ. (34) 35. உயர்ந்த மலை , தாழ்ந்த பள்ளம், மரக்காடு ஆகிய எவ்விடத்தும் காற்றுச் சுழன்று வீசும். அதுபோல் நிலைப்பாடற்ற உள்ளம் உடையவரும் எவ்விடத்தும் சுழன்று திரிவர். - கம்பர், கிட்கிந்தா காண்டம் : 464 தலைமையும் கீழ்மையும் தவிர்தல் இன்றியே மலையினும் மரத்தினும் மற்றும் முற்றினும் விலை நினைந் துள்வழி விலங்கும் வேசையர் உலைவுறு மனமென உலாயது ஊதையே. (35) 36. கற்புடைய மகளைக் காமுகன் ஒருவன் விரும்புவது வேள்வித் தீயில் இடும் அவியுணவைத் தின்ன நாய் விரும்புவது போன்றது. - கம்பர், ஆரணிய காண்டம் : 880. செவிகளைத் தளிர்க்கை யாலே சிக்குறச் சேமம் செய்தாள் கவினும் வெஞ் சிலைக்கை வென்றிக் காகுத்தன் கற்பி னேனைப் புவியிடை ஒழுக்கம் நோக்கப் பொங்கெரிப் புனிதர் ஈயும் அவியை நாய் வேட்ட தென்ன என்சொனாய் அரக்க என்ன. (36) 37. ஈகை இல்லாதவன் தன் கருமித்தனத்தால் இழிவே அடைவான். அதுபோல் நற்குடிப் பிறப்பில்லாத நங்கையும் பழியே அடைவாள். - கம்பர், உயுத்தகாண்டம் : 3986 பெண்மையும் பெருமையும் பிறப்பும் கற்பெனும் திண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும் உண்மையும் நீயெனும் ஒருத்தி தோன்றலால் வண்மையில் மன்னவன் புகழின் மாய்ந்ததால், (37) 38. உள்ளத்தில் ஈரம் இல்லாமல் இருந்தும், முகத்தில் ஈரம் உடையவ ராகக் காட்டும் பொதுமகளிர் மனம், பின்பனிக் காலத்து ஈரமும் கோடை காலத்து வெப்பமும் உண்டு' 'இல்லை' என உணரமுடியாத இளவேனில் காலம் போன்றது. - கம்பர், அயோத்தியா காண்டம் : 702. பூரியர் புணர்மாதர் பொதுமன மெனமன்னும் ஈரமும் உளதில்லென் றறிவரும் இளவேனில் (38) 39. ஒன்றோடு ஒன்றை ஒட்டச் செய்யவல்லது பசை . அதுபோல் தன்னலம் என்னும் பசையும், தன் அறிவை மனத்தை விட்டுச் செல்லா வண்ணம் நெருக்கமாக ஒட்டி விடும். - கம்பர், அயோத்தியா காண்டம் : 229. ஊழில் பெற்றால் என்னுரை இன்றேல் உயிர்மாய்வேன் பாழிப் பொற்றார் மன்னவ என்றாள் பசையற்றாள். (39) 40. தவநெறியில் நிற்பவர் அவநெறியராய் வாழ்வது, பசுத் தோல் போர்த்துக்கொண்டு புலிப்பாய்ச்சல் பாய்வதை ஓக்கும். - வில்லிபாரதம், ஆரணிய பருவம் : 95. நின்றுபெருந் தவமுயல்வோர் தாங்கள் கொண்ட நினைவொழியப் புறத்தொன்று நினைவ ரோசொல் பொன்றிடினும் நீயறியப் பசுத்தோல் போர்த்துப் புலிப்பாய்ச்சல் பாய்வரோ புரிவி லாதாய். (40) 41. சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக வாழ்பவர், இசைக்கும் கருவிகளுக்கு ஏற்ப ஆடும் கூத்தர் போல்வர். - பிரபுலிங்க லீலை , வசவண்ணர் கதி : 41. சொல்லிய சொற்கள் கற்றீர் சொற்ற அந் நெறியில் நிற்கும் நல்லியல் இல்லை நும்பால் நவில்தரு மாற்றம் ஒன்று புல்லிய செயலொன்றாகப் பொருந்துநர் நம்மில் ஆர்க்கும் பல்லிய மொடுந டிக்கும் பரதரே பெரியார் அம்மா . (41) 42. பாம்பின் உடலைவிட்டு ஒருநாட் பொழுதில் ஒழிவது அதன் சட்டை அதுபோல் உயிர் ஒருநாள் தன் உடலைவிட்டுத் தானே பிரிந்து செல்லும் இயல்பினது. 43. கூட்டில் இருந்து பறவை வெளிக்கிளம்பிப் போவது போல உயிர் உடலை விட்டுப் போகும் இயல்பினது. - திருவிளையாடல், இந்திரன் பழிதீர்த்த படலம் : 33 விடம்பயில் எயிற்றர வுரியும் வீநுழை குடம்பையும் தானெனும் கொள்கைத் தேகொலாம் நடம்பயில் கூத்தரின் நடிக்கும் அவர்வாழ் உடம்பையும் யானென உரைக்கற் பாலதே. (42, 43) 12. நன்மை 1. உலகத்தின் இருளை ஒளிமிக்க கதிர் விலக்கும். அது போல் மக்கள் உள்ளத்து இருளை அருள் ஒளிமிக்க அடியார்கள் வரலாறு ஒழிக்கும். - பெரிய புராணம், பாயிரம் : 10 இங்கிதன் நாமம் கூறின் இவ்வுலகத்து முன்னாள் தங்கிருள் இரண்டின் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற செங்கதிரவன்போல் நீக்கும் திருத்தொண்டர் புராணம் என்பாம். (1) 2. இறைவன் அடியார்கள் ஒருவரை ஒருவர் காணுங்கால் தலை தாழ்ந்து பணிவுடன் வணங்குவது செழிப்பாக வளர்ந்த நெற்கதிர் மணி முதிர்ந்ததும் தலை தாழ்ந்து நிற்பது போன்றது. - பெரிய புராணம், திருநாட்டுச் சிறப்பு : 22. பத்தியின் பால ராகிப் பரமனுக் காளாம் அன்பர் தத்தமில் கூடினார்கள் தலையினால் வணங்கு மாபோல் மொய்த்த நீள் பத்தியின்பான் முதிர்தலை வணங்கி மற்றை வித்தகர் தன்மை போல் விளைந்தன சாலி யெல்லாம் (2) 3. துன்பத்தால் சோர்கின்றவர்க்கு அன்புடையவர் சென்று ஆறுதல் கூறுவது, நெய்யின்றி எரிந்து அவியப் போகும் நிலைமையில் உள்ள விளக்கில் நெய் சொரிந்து ஒளியை வளர்ப்பது போன்றது. - கம்பர், சுந்தரகாண்டம் : 513. ஐயுறல் உளதடை யாளம் ஆரியன் மெய்யுற உணர்த்திய உரையும் வேறுள கையுறு நெல்லியங் கனியில் காண்டியால் நெய்யுறு விளக்கனாய் நினையல் வேறென்றான். (3) 4. மீளாத் துயரத்தில் ஆழும் ஒருவற்கு ஆறுதல் ஆக ஒருவன் வந்து துணையாவது கப்பல் கவிழ்ந்து கடலில் வீழ்ந்து இடர்ப் படுபவனுக்கு மிதவை ஒன்று கிட்டியது போன்ற நலம் செய்வது. - கம்பர், ஆரணிய காண்டம் : 123 கரக்கருங் கடுந்தொழில் அரக்கர் காய்தலில் பொரற்கிடம் இன்மையில் புழுங்கிச் சோருநர் அரக்கரென் கடலிடை ஆழ்கின் றாரொடு மரக்கலம் பெற்றென மறுக்கம் நீங்கினார். (4) 5. கதிரவன் தோன்றியதும் காரிருள் அகலும். அதுபோல் பேரருளாளன் உதவியால் துயர இருள் நீங்கும். - கம்பர், ஆரணிய காண்டம் : 133. உருளுடைய நேமியால் உலகை ஓம்பிய பொருளுடை மன்னவன் புதல்வ போக்கிலா இருளிடை வைகினேம் இரவி தோன்றினாய் அருளுடை வீரநின் அபயம் யாம்என்றார். (5) 6. மகளிரின் இனிய பேச்சு ஒலி கேட்ட குயில் கூவாமல் அவ்விடத்திருந்தும் அகன்று போவது, இனிதாகப் பேசுவர் முன் பிறர் வாய்திறத்தல் கூடாது என்னும் நன்னெறியை வலியுறுத்தும். - கம்பர், பாலகாண்டம் : 979. மூசிய கூந்தல் மாதர் மொய்த்தபே ரமலை கேட்டுக் கூசின வல்ல பேச நாணின குயில்கள் எல்லாம் வாசகம் வல்லார் முன்னின்றியாவர்வாய் திறக்க வல்லார். 7. இனிமை மிக்க சொல் எவர் உள்ளத்தையும் வயப் படுத்தும் யாழிசை போன்றது. இனிமை இல்லாத வன்சொல் கேட்டவரை நடுங்கச் செய்யும் பறை ஒலி போன்றது. - கம்பர், பாலகாண்டம் : தற்சிறப்புப் பாயிரம் : 7 துறைய டுத்த விருத்தத் தொகைக்கவிக்கு உறைய டுத்த செவிகளுக் கோதில்யாழ் நறைய டுத்த வசுணநன் மாச்செவிப் பறைப டுத்தது போலுமென் பாவரோ. (7) 8. தண்ணிய நறுஞ் சாந்தத்தைப் பூசினால் உடல் குளிரும். அதுபோல் நினைக்குந் தோறும் இனிமை நல்கும். சொற்களைக் கேட்டால் உள்ளம் குளிரும். உயிரும் குளிரும். - கம்பர், அயோத்தியா காண்டம் : 1088. உரைத்த வாசகம் கேட்டலும் உள்ளெழுந் திரைத்த காதல் இருந்தவத் தோர்க்கெலாம் குரைத்த மேனியோ டுள்ளங் குளிர்ந்ததால் அரைத்த சாந்துகொ டப்பிய தென்னவே. (8) 9. கழுத்து, காது, கை முதலிய உறுப்புக்களில் அணியும் அணிகலங்கள் உடலுக்கு அழகுபடுத்தும். அது போல், நற்பண்பு களாகிய அணிகலங்களை ஒருவர் அணிவது அவர் வாழ்வுக்கே புகழ் உண்டாக்கும். - கம்பர், அயோத்தியா காண்டம் : 226. ஏண்பால் ஒவா நாண்மடம் அச்சம் இவையேதம் பூண்பால் ஆகக் காண்பவர் நல்லார் புகழ் பேணி. (9) 10. எழில்மிக்க ஓவியத்தைப் புகைபடிந்த கூடத்தில் வைத்துப் பொலிவு கெடச் செய்ய அறிவுடையோர் கருதார். அதுபோல் நல்லவர்களை அல்லல்களுக்கு ஆளாக்கிக் கொடுக்க நல்லுணர்வுடையோர் கருதார். - கம்பர், சுந்தரகாண்டம் : 340 தேவு தெண்கடல் அமிழ்துகொண்டனங்கவேள் செய்த ஓவியம்புகை உண்டதே ஒக்கின்ற உருவாள் (10) 11. நாட்டுக்கு நலம் தரவல்ல நல்லோர் ஆதரவு இல்லாமல் நலிவது, உள்ள நோயை அகற்றி உடற்கு நலம் உண்டாக்கும் மருந்துச் செடி மழைத்துளி இன்றி வறண்டு வாடுவது போன்றது. - கம்பர், சுந்தர காண்டம் : 332 வன்மருங்குல் வாளரக்கியர் நெருக்க அங்கிருந்தாள் கன்மருங்கெழுந் தென்றுமோர் துளிவரக் காணா நன்மருந்து போல் நலன்ற உணங்கிய நங்கை மென்மருங்குல்போல் வேறுள அங்கமும் மெலிந்தாள்.(11) 12. உடலில் கட்டி உண்டானால் அதனை அறுவை செய்து அகற்றிவிட்டு அவ்விடத்தில் மருந்திட்டுப் புண்ணை ஆற்றுவர். அதுபோல் உடன் பிறந்தவர் என்றால் கூடத் தீயவராக இருப்ப வரை அகற்றி ஒதுக்கிவிட்டு வாழ்வதே அறிவுடைமை ஆகும். - கம்பர், உயுத்தகாண்டம் : 136. உடலிடைத் தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றிச் சுடலுறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர். (12) 13. சீலத்தினும் சிறந்த செய்தவம் இல்லை. சீரிய சீலமே கால மன்றியும் கனிகொடுக்கும் சோலை; வேர் இன்றியும் படர்ந்து நிழல் தரும் பூங்கா . - கம்பர், அயோத்தியா காண்டம் : 745. கால மன்றியும் கனிந்தன கனிநெடுங் கந்த மூலமின்றியும் முகிழ்த்தன நிலனுற முழுதும் கோல மங்கையர் கொம்பர்கள் இன்பச் சீலம் அன்றியும் செய்தவம் வேறுமொன் றுளதோ. (13) 14. போட்ட வித்தினும் விளைவு பன்மடங்கு மிகுதியாக இருக்கும். அதுபோல் ஒருவன் செய்த உதவிக்குப் பன்மடங்கு உதவி திருப்பித் செய்தலே நல்லோர் கடமை. ஆனால் உயிர் தந்த உதவிக்கு அவ்வாறு செய்ய முடியுமா? - கம்பர், உயுத்தகாண்டம் : 2767 அழியுங் கால் தரும் உதவி ஐயனே மொழியுங் கால் தரும் உயிரின் முற்றுமே பழியும் காத்தரும் பகையும் காத்தெமை வழியும் காத்தனை மறையும் காத்தனை. (14) 15. புலால் நாற்றமுடைய மீன், பூநாற்றமுடைய மகளிர் நீராடிய பொய்கையில் வாழ்தலால் நறுமணம் பெறும். அது போல் நல்லவருடைய தொடர்பு கிடைக்கப் பெற்ற பொல்லாத வரும், அவருடைய நற்குணத்தைப் பெற்று உயர்வர். - கம்பர், பாலகாண்டம் : 1032 ஆன தூயவரோடுட னாடினார் ஞான நீரவர் ஆகுவர் நன்றாரோ தேனு நாவியும் தேக்ககி லாவியும் மீனு நாறின வேறு வேண்டுமோ. (15) 16. கார்காலத்தில் கத்தும் தவளை அக்காலம் கடந்ததும் கத்தாமல் அடங்கிக் கிடக்கும். அதுபோல் உயர்ந்த பெரு மக்களும் தம் சொல் செல்லத்தக்க காலத்தில் சொல்லிப் பிறிது காலத்துச் சொல்லாது அமைதி காப்பர். - கம்பர், கிட்கிந்தா காண்டம் : 566 கல்வியில் திகழ் கணக்காயர் கம்பலைப் பல்விதச் சிறாரெனப் பகர்வ பல்லரி செல்லிடத் தல்லது ஒன்றுரைத்தல் செய்கலா நல்லறி வாளரின் அவிந்த நாவெலாம். (16) 17. மணமிக்க கோட்டம் என்னும் பொருளைப் புலவு நாறும் கடலில் எவரும் கரைத்து விடமாட்டார். அதுபோல் தீயவர் கூட்டத்திடையே நல்லவர் புகுந்திருத்தலைச் சான்றோர் விரும்பார். - கம்பர், உயுத்தகாண்டம் : 1364 கடலிடைக் கோட்டம் தேய்த்துக் கழிவது கருமம் அன்றால் மடலுடை யலங்கன் மார்ப மதியுடை யவர்க்கு மன்னோ. (17) 18. இழந்து போன பொருள் ஒன்றை மீண்டும் எய்தப் பெறுவது மிகுந்த இன்பம் நல்கும். அது, பிறவிப் பயன் இன்றி வீணே காலம் போக்கிக் கழித்தவர் பிறவிப் பயன் எய்த நேர்ந்த இன்பம் போல்வது. 19. உயர்ந்த பொருள் ஒன்று கையைவிட்டுச் சென்று பின்னர்க் கிட்டுவது, பிரிந்து போன உயிர் மீண்டும் உடலில் வந்து பொருந்தியது போன்ற இன்பம் தருவது. 20. இழந்ததோர் உயர் பொருளை மீண்டும் எய்தப் பெறுவது, மறந்து போன அரியவொரு செய்தியை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தவர் அடையும் இன்பத்தை வழங்கும். - கம்பர், சுந்தரகாண்டம் : 552 இறந்தவர் பிறந்த பயன் எய்தினர்கொல் என்கோ மறந்தவர் அறிந்துணர்வு வந்தனர்கொல் என்கோ துறந்தவுயிர் வந்திடை தொடர்ந்தது கொல் என்கோ திறந்தெரிவ தென்னைகொலி நன்னுதலி செய்கை. (20) 21. கண் கெட்டுப் போனவர்கள் மீண்டும் கண்ணொளி வரப்பெற்றால் எத்தகு மகிழ்வு எய்துவார்களோ அத்தகு மகிழ்வை இழந்துபோன அரிய பொருள் ஒன்றைப் பெற்றவர் அடைவர். - கம்பர், சுந்தரகாண்டம் : 553 உழந்துவிழி பெற்றதோர் உயிர்ப் பொறையும் ஒத்தாள். (21) 22. இழந்து போன உயர்ந்த பொருள் ஒன்றைக் காணப் பெறுவது, மணியை இழந்து போன பாம்பு, அந்த மணியை அடைவது போன்ற மகிழ்வு அளிக்கும். - கம்பர், சுந்தர காண்டம் : 553 இழந்தமணி புற்றரவு எதிர்ந்ததென லானாள். (22) 23. இழந்து போன பொருள் ஒன்று தாம் இருக்கும் இடம் தேடி வந்து சேர்வது, அழிந்துபட விருக்கும் ஆருயிரைப் போகாமல் காக்கும் மருந்து கிடைப்பது போன்றது. - கம்பர், சுந்தரகாண்டம் : 557 வியும் உயிர் மீளும் மருந்தும் எனலாகியது வாழிமணியாழி. (23) 24. கழிந்து போன பொருள் ஒன்று கையகத்து மீண்டும் வந்தடைவது, வழிவழித் தேடிய பழஞ் செல்வத்தை இழந்து போயவர் அச் செல்வம் எய்தப் பெற்றது போன்றது. - கம்பர், சுந்தரகாண்டம் : 553. பழந்தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள். (24) 25. போன பொருள் ஒன்று தானே வந்து சேர்வது குழந்தைப் பேறு இன்றி இருந்த மலடி ஒருத்திக்குக் குழந்தை பேறு வாய்த்தது போன்றது. - கம்பர், சுந்தரகாண்டம் : 553 குழந்தையை யுயிர்த்த மலடிக் குவமை கொண்டாள். (25) 26. உயரிய பொருள் ஒன்று தம்மை அகன்று மீண்டும் வரப்பெற்றவர், அறவோர்களை எதிர்நோக்கி விருந்தோம்ப நிற்கும் இல்லறத்தவர் அடையும் மகிழ்வு கொள்வர். 27. இழந்து போன பொருள் ஒன்றை அடையப் பெற்றவர் அடையும் இன்பம், பசியுற்று நலிந்து கிடந்த ஒருவன் தனக்குப் பாலுணவு கிட்டினால் அடையும் இன்பம் போன்றது. - கம்பர், சுந்தரகாண்டம் : 557 இருந்துபசி யாலிட ருழந்தவர்கள் எய்தும் அருந்து மமுதாகிய தறந்தவரை யண்மும் விருந்து மெனலாகியது................ ............ ....................... வாழிமணி யாழி. (29-27) 28. கோபம் ஒரு தீ; அதனைத் தணிக்க வல்லது தண்ணிய இனிய சொல்லாகிய அமிழ்த நீரே ஆகும். - திருவிளையாடல், இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் : 35. நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம் தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தித் தணிந்த தென்ன.(28) 29. மதங்கொண்ட யானையை அடக்கி வயப்படுத்திய பொழுதில் அது பாகன் ஏவலை இனிது ஏற்றுச் செயல்படும். அல்லாக்கால் அதன் வெறிச் செயலை விட்டொழியாது. அது போல் அருளாளர், அறநெறி விடுத்துப் பிறநெறிப் போவாரை அடுத்துச் சென்று வயப்படுத்தி வழிகாட்டினால் நன்னெறி செல்வர். - பிரபுலிங்கலீலை , சித்தராமையர் கதி : 64, கருத்தழி கடமி றங்கு கவுட்கரி வலிந்து பற்றித் திருந்து பு தன்கால் ஏவும் செயல்செயக் கொள்வ தன்றி ஒருத்தல் வந்தறிந்து தானே உறவுகொண்டிடுவ துண்டோ தெரித்திடில் அடிய னேனின் திருவடிக் கத்தி றத்தேன். (29) 30. நீரில் குளித்தலால் உடல் தூயதாகும். அதுபோல் உயர்ந்தோர் சொற்களைக் கேட்டலால் கலங்கிய மனம் தெளிந்து தூயதாகும். - வில்லிபாரதம், ஆதிபருவம் : 563. ஓதா துணர்ந்து மறைநாலும் உருவு செய்த வேதாவும் ஒவ்வா வியா தன்மொழி வெள்ள நீரால் கோதான நெஞ்சைக் குளிப்பாட்டினன் கோடி கொடி கோதான வண்டு துதைமாலைகொள் சோம கேசன். (30) 31. விதைத்துப் பயன்கொள்ள விரும்புவார் கொல்லையில் உள்ள முட் செடிகளை வெட்டித் தீ மூட்டுதலால் களையை அழிப்பதுடன், உரத்தை ஆக்கிக் கொள்ளவும் செய்வார். அதுபோல் பிறரை அறநெறிப்படுத்த நினைப்பவர் முதற்கண் அவர்களைப் பக்குவப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். - பிரபுலிங்கலீலை, முனிவரர் கதி : 7 நல்லறி வவனுளம் நடுதற் கொப்பிலா அல்லமன் வினையற அருட்கண் வைத்தனன் கொல்லையில் விதையிடக் கொழுப்புக் காமுளி புல்லெரி வுறவழற் போகட் டென்னவே. (31) 32. நீரின் அழுக்கு நுரை; நிலத்தின் அழுக்கு உவர்; மரத்தின் அழுக்கு பிசின்; அவைபோல் ஒருவன் உள்ளத்தின் அழுக்கு கொலை வஞ்சம் பொறாமை முதலியன. மற்றை அழுக்கு களை அவை வெளிப்படுத்தி நீக்குமாறு போல், மனமும் தன் அழுக்கை நீக்கிவிட வேண்டும். - திருவிளையாடல், இந்திரன் பழிதீர்த்த படலம் : 13 அப்பிடை நுரையாய் மண்ணில் அருவருப் புவராய் அம்பொற் செப்பிளங் கொங்கை யார்பால் தீண்டுதற் கரிய பூப்பாய்க் கப்பிணர் மரத்திற் காலும் பயினதாய்க் கழிக வென்றார் இப்பழி சுமந்த எங்கட் கென்னலம் என்றார் பின்னும். (32) 13. தீமை 1. மூங்கிலில் பிறந்த நெருப்பு, தான் பிறந்த பண்ணையையும், அதன் சூழலையும் மொத்தமாக அழிக்கும். அது போல் தீயவர் களும் தாம் பிறந்த குடியையும் அதன் சுற்றத்தையும் ஒருங்கே அழிப்பர். - கம்பர், ஆரணிய காண்டம் : 433. தோன்றிய தோன்றல் தன்னைச் சுட்டினள் காட்டிச் சொன்னாள் வான்தொடர் மூங்கில் தந்த வயங்குவெந் தீய தென்னத் தான்தொடர் குலத்தை யெல்லாம் தொலைக்குமா சமைந்து நின்றாள் என்றுவந் தெதிர்த்த வீரன் இவன்இகல் இராமன் என்ன. (1) 2. நச்சுப்பல் போன பின்னும் நல்ல பாம்பு சீற்றம் தவிராது. அதுபோல் தம் வலிமையனைத்தும் கெட்டுப் போனாலும் தாம் செய்யும் தீச் செயல்களைத் தீயவர் தவிரார். - கம்பர், ஆரணிய காண்டம் : 551 விராவ ருங்கடு வெள்ளெயி றிற்றபின் அராவ ழன்ற தனையதன் ஆற்றலான் மராம ரங்கையில் வாங்கிவந் தெய்தினான் இராம னங்கோர் தனிக்கணை ஏவினான். (2) 3. பாம்பு சிறிதாயினும் பெரிதாயினும் நச்சுத் தன்மையால் ஒன்றேயாம். அதுபோல் தீயவர்கள் உருவத்தால் பெரியவர் சிறியவர் எனினும் அவர்களின் தீமைத் தன்மையில் வேறுபாடு இல்லை . - கம்பர், ஆரணிய காண்டம் : 695 கருமை கறைநெஞ்சினி நஞ்சு கலந்த பாம்பின் பெருமை சிறுமைக்கொரு பெற்றி குறைந்த துண்டோ (3) 4. நக்சரவுகூட மணி மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பது உண்டு. ஆனால் நச்சுக்குணமே உருவான தீயவரோ எந்த ஒரு வகைக்கும் கட்டுப்பட்டு நடவார். - கம்பர், சுந்தர காண்டம் : 465 கடிக்கும் வாளரவும் கேட்கும் மந்திரம் களிக்கின் றோயை அடுக்குமீ தடாதென்றான்ற வேதுவோ டறிவு காட்டி இடிக்குநர் இல்லை நீயே எண்ணிய தெண்ணியுன்னை முடிக்கின்ற போது முன்னின் முடிவன்றி முடிவ துண்டோ.(4) 5. தீமை என்று தெளிவாக அறிந்த ஒருவன் தீச்செயல்களை குறைவறச் செய்வது, தன் ஆடைக்குள்ளேயே தீயைப் பொதிந்து வைத்துக் கொள்வது போன்றது. - கம்பர், உயுத்தகாண்டம் : 353 சுடுதியைத் துகிலிடைப் பொதிந்து துன்மதி இடுதியே சிறையிட இறைவன் தேவியை விடுதியேல் உய்குதி விடாது வேட்டியேல் படுதி என்று உறுதிகள் பலவும் பன்னினாள். (5) 6. அறிவில்லாதவன் தன் தீவினையை மறைக்க முயன் றாலும் அது மறைபடாமல் வெளிப்பட்டே தீரும். அதுபோல் பிறர் அறியக் கூடாதென்று தன் பேராசையை எவ்வளவு மறைத்து வைத்தாலும் அஃது உடல் உரை உள்ளங்களின் வழியே வெளிப்பட்டே தீரும். - கம்பர், ஆரணிய காண்டம் : 645 விதியது வலியினாலும் மேலுள விளைவினாலும் பதியுறு கேடு வந்து குறுகிய பயத்தி னாலும் கதியுறு பொறியின் வெய்ய காமநோய் கவ்வி நோக்கா மதியிலி மறையச் செய்த தீமைபோல் வளர்த்த தன்றே.(6) 7. கதிரோன் மறைந்தபோது காரிருள் பரவிக் கிடக்கும். அதுபோல் செய்யத்தகாத செயல்களைச் செய்பவனுக்குப் பழி யுண்டாகிப் பரவிக் கிடக்கும். - கம்பர், சுந்தரகாண்டம் : 141 வண்மை நீங் காணொடு மரபின் வந்தவள் பெண்மை நீங் காதகற் புடைய பேதையைத் திண்மை நீங் காதவன் சிறைவைத் தானெனும் வெண்மை நீங்கிய புகழ் விரிந்த தென்ளவே. (7) 8. எரியும் நெருப்புத் தூய பொருளுடன் தீய பொருளையும் விலக்காமல் சேர்த்து எரிக்கும். அதுபோல் தீமை புரிபவரும் இவர் அவர் என்று பாராமல் எவர்க்கும் கேடு செய்வர். - கம்பர், சுந்தரகாண்டம் : 1200 பேய மன்றினில் அன்று பிறங்கெரி மாயர் உண்ட நறவு மடுத்ததால் தூயர் என்றிலர் வைகிடத் துன்னினால் தீய ரன்றியும் தீமையும் செய்வரால். (8) 9. கொடிய நஞ்சு நாளும் உடலில் புகுத்தப்பட்டுக் கொண்டே இருந்தால் உடலே நஞ்சாகிவிடும். அதுபோல் வஞ்சத்தை நாளும் வளர்த்துக்கொண்டே வந்தால் நெஞ்சமே வஞ்ச உருவமாகிவிடும். - கம்பர், அயோத்தியா காண்டம் : 167. நஞ்சு தீர்க்கினும் தீர்கிலா ததுநலிந் தென்னத் தஞ்ச மேயுனக் குறுபொருள் உணர்த்துகை தவிரேன். (9) 10. எரியும் தீயிலே விழுந்த விறகு சாம்பலாகும். அதுபோல் கவலைத் தீயிலே வீழ்ந்த உயிர் வாழ்வும் நைந்து நலிந்து போகும். - கம்பர், உயுத்த காண்டம் : 1615. எந்தையே எந்தை யேஎன் பொருட்டிண லுனக்கும் இக்கோள் வந்ததே என்னைப் பெற்று வாழ்ந்தவா றிதுவோ மண்ணோர் தந்தையே தாயே செய்த தருமமே தவமே என்னும் வெந்துயர் வீங்கித் தீவில் விறகென வெந்து வீழ்வாள். (10) 11. அம்மி தன்மேல் வைத்து அரைக்கப் பெறும் பொருளைப் பொடியாக்கிக் குழைக்கும். அதுபோல் கவலை என்னும் அம்மி உயிர் என்னும் பொருளை அரைத்துக் கூழாக்கி ஒழிக்கும். - கம்பர், சுந்தர காண்டம் : 308 காவியங் கண்ணி தன்பால் கண்ணிய காதல் நீரின் ஆவியை யுயிர்ப்பென் றோதும் அம்மியிட் டரைக்கின் றானை (11) 12. ஒரு வழியால் உண்டாய கவலையை ஒழித்து விடாமல் மேலும் மேலும் அதனை நினைந்து நைந்து கொண்டேஇருப்பது, பழம் புண்ணிலே பழுக்கக் காய்ச்சிய இரும்பைப் பன்முறை செலுத்திச் செலுத்தி எடுப்பது போன்றது. - கம்பர், சுந்தரகாண்டம் : 342. மாண்டு போயினன் எருவைகட் கரசன்மன் மற்றோர் யாண்டை யென்னிலை அறிவுறுப் பார்களிப் பிறப்பிற் காண்ட லோவரி தென்றென்று விம்முறும் கலங்கும் மீண்டும் மீண்டுபுக் கெரிநுழைந்தாலென மெலிவாள். (12) 13. கொடிய கொள்ளையாளர் அகப்பட்ட பொருளைச் சூறையாடிக் கொண்டு போவார். அதுபோல் கவலை என்னும் கொள்ளைக்காரன் அறிவு என்னும் அரிய பொருளை எளிமை யாகக் கொள்ளையிட்டுச் செல்வான். - கம்பர், அயோத்தியா காண்டம் : 499 மக்களை மறந்தனர் மாதர் தாயரைப் புக்கிட மறந்திலர் புதல்வர் பூசலிட்டு உக்கனர் உயங்கினர் உருகிச் சோர்ந்தனர் துக்கம் நின் றறிவினைச் சூறையாடவே. (13) 14. ஓரிடத்தில் அடிக்கப் பெற்ற ஆணியின் மேல் மற்றோர் ஆணியை அடித்தால் பின்னர் அடிக்கும் ஆணிமுன்னர் இருந்த ஆணியை உள்ளே செலுத்தி விடும். அதுபோல் முன்னை உண்டாகியிருந்த கவலையால் செயலற்று இருந்தவரும், பின்னர் மூட்டப் பெற்ற சினத்தால் அக்கவலையை மறந்து கொடுஞ் செயல் புரிய முந்துவர். - கம்பர், சுந்தரகாண்டம் : 1006. ஆற்றலன் அனையன் ஆகி அறிவழிந் தயரும் வேலை சீற்றமென் றென்று தானே மேனிமிர் செலவிற் றாகித் தோற்றிய துன்ப நோயை உள்ளுறத் துறந்த தம்மா ஏற்றஞ்சொல் ஆணிக் காணி எதிர்செலக் கடாய தென்ன. (14) 15. மெய்யுணர்வு உடையவரை அன்றிப் பிறர், தொடுத்து வரும் பிறவி நோயை ஒழிக்க முடியாது. அதுபோல் மன உறுதிப்பாடு உடையவரை அன்றிப் பிறர்க்குத் துயர நோயையும் ஒழிக்க முடியாது. - கம்பர், ஆரணிய காண்டம் : 1039 மெய்யுற உணர்வு செல்லா அறிவினை வினையின் ஊக்கும் பொய்யுறு பிறவி போலப் போக்கரும் பொங்கு கங்குல் நெய்யுறு நெருப்பின் வீங்கி நிமிர்தர உயிர்ப்பு நீளக் கையற விறுகின் றாரால் காணலாங் கரையிற் றன்றே. (15) 16. உவர் நிலத்தில் உயர்ந்த நெல் வித்தை இட்டாலும் விளையாது; பாம்புக்குப் பால் விட்டு வளர்த்தாலும் நஞ்சு ஒழியாது; அவற்றைப் போல் தீயோர்க்கு எத்துணை நன்மை செய்தாலும் தம் தீத் தன்மையை விட்டொழியார். - வில்லிபாரதம், உத்தியோக பருவம் : கிருட்டிணன் தூதுச் சருக்கம் 25 பொன்னரு திகிரியினான் போனாலும் பொறைவேந்தன் புகன்ற வெல்லாம் சொன்னாலும் அவன்கேளான் விதி வலியாற் கெடுமதிகண் தோன்றா தன்றே எந்நாளும் உவர்நிலத்தில் நெல் முளைவித் திடினும் விளை வெய்திடாது பன்னாகந் தனக்கமிர்தம் கொடுத்தாலும் விடமொழியப் பயன்கொ டாதே. (16) 17. பாவம் பெருகிய கடல் போன்றது; அதன் வழியாக உண்டாகும் பிறவிகள் அலைகள் போன்றன ; பிறவி வாய்ப் பட்டுத் துடிக்கும் உயிர்கள், அலையிடைப் பட்டு மேலும் கீழும் அலைக்கழியும் துரும்புகள் போன்றன . - திருவிளையாடல், பாயிரம் : 12 உருமாறிப் பவக்கடல் வீழ்ந் தூசலெனத் தடுமாறி உழலும் மாக்கள். (17) 18. நெருப்பு கொழுந்து விட்டெரிந்து தன்னை நெருங்கிய அனைத்தையும் அழிக்கும். அதுபோல் ஒருவன் செய்த பாவம் என்னும் நெருப்பும் நன்றாகப் பற்றி அவனை நலியச் செய்யும். - திருவிளையாடல், இந்திரன் பழி தீர்த்த படலம் : 7 குரவனை இகழ்ந்த பாவம் கொழுந்துவிட் டருந்தும். (18) 19. கொடிய வெப்பமுடைய நிலத்தின் வழியே வரும் காற்றும் வெதும்பும். தண்ணிய நிலவின் ஒளியும் வெதும்பும். அவற்றைப் போல வெங்கொடுந் தீயரைச் சேர்ந்த நல்லோரும் அத்தகையர் ஆவர். - திருவிளையாடல், தண்ணீர் பந்தல் வைத்த படலம் : 25. ஆயிடை அலகைத் தேரும் அடைந்தவர் வெயர்வு மன்றித் தூயநீர் வறந்த அந்தச் சுடுபுலந் தோய்ந்த காலும் மீயுயர் மதிநிலாவும் வெய்யவாய்ச் சுடுநல் லோரும் தீயவர் தம்மைச் சேர்ந்தால் தீயவர் ஆவர் அன்றோ . (19) 20. வலிமையில்லாதவன் ஏவிய படைக்கலங்களை வலியவன் உடனுக்குடன் ஒழித்து விடுவான். அதுபோல் ஒருவன் செய்யும் தவநெறியை அவன் பொய்ம்மை நெஞ்சம் எளிதில் ஒழிக்கும். - திருவிளையாடல் , திருமணப் படலம் : 37 கையிற்படை யற்றனர் கற்படை தொட்டுவீரர் மெய்யிற்படு கொன்று விடுக்குமுன் வீரக் கன்னி பொய்யிற்படு நெஞ்சுடையார் தவம்போல மாய நெய்யிற்படு வச்சிர வேலை நிமிர்த்தி வீசி. (20) 21. பேரருளாளர் அருள் செய்தற்கு நேரில் வந்த பொழுதில் அவரை எதிர் நோக்கிச் செல்லாது ஒதுங்கி இருப்பது, அன்புப் பெருக்கால் வரும் தாய்ப் பசுவை நாடாமல் தும்பை அறுத்துக் கொண்டு ஓடும் இளங்கன்றின் செயல் போன்றது. - பிரபுலிங்கலீலை, வசவண்ணர்கதி : 32. அல்லமன் புகன்ற மாற்றம் அப்பணன் சென்று நின்று சொல்லலுந் துணுக்கென்றுள்ளம் சொற்றளர்ந் துடல் வியர்த்துப் புல்லவந் தணையும் தாய்முன் பொறாதுதும் பறந்திட் டோடும் நல்லிளங் கன்று போல் முன் நான்செலா திருந்தேன் என்று. (21) 22. பொருளுக்காகத் தன்னை விற்கும் பரத்தையின் உள்ளம் அன்பு என்னும் ஈரப்பசை சிறிதும் இல்லாதது. அது ஈரப்பசை சிறிதும் இல்லாத பாலைவனம் போன்றது. - கம்பர், பாலகாண்டம் : 356 பொன்விலைப், பாவையர் மனமும் போல் பசையும் அற்றதே. (22) 23. வேடர்கள் வழியில் செல்பவர் பொருளைக் கொள்ளை இட்டு அலைப்பர். அவ்வேடர்போல் அனைத்துத் தொல்லைப்படுத்துவன ஐம் பொறிகள். - திருவிளையாடல், வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம் : 55 பரவசம் அடைந்து வழிகவர்ந் துண்ணும் பழிப்புல வேடர்போய் ஒளிப்ப. (23) 24. பகைவர்கள் தம் நாட்டில் புகுந்து மக்கட்குத் துயர் இழைக்காமல் காத்துக் கொள்வது காவலர் கடமை. அதுபோல் காமம், வெகுளி முதலிய பகைவர்கள் தம் உள்ளத்தைக் கெடுக் காமல் காப்பது துறவோர் கடமை. - கம்பர், பாலகாண்டம் : 527 தருவனத்துள் யானியற்றும் தகைவேள்விக் கிடையூறாத் தவம்செய் வோர்கள் வெருவரச் சென்றடைகாம வெகுளியென நிருதரிடை விலக்கா வண்ணம் செருமுகத்துக் காத்தியென நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதியென உயிரிரக்கும் கொடுங் கூற்றின் உளையச் சொன்னான். (24) 25. நெய் இல்லாமல் நெருப்பு எரியாது. ஆனால் பேராசை என்னும் நெருப்பு, நெய் இல்லாமல் எரியும். - கம்பர், ஆரணிய காண்டம் : 663 நீலத்தார் அரக்கன் மேனி நெய்யின்றி எரிந்த தன்றே. (25) 26. பயிர் நீரால் செழிப்பாக வளரும். அதுபோல் காமம் என்னும் பயிர், கள்ளால் வளமுற வளரும். - கம்பர், சுந்தரகாண்டம் : 202 வருந்திய கொழுநர் தம்பால் வரம்பின்றி வளர்ந்த காமம் அருந்திய பயிர்க்கு நீர்போல் அருநற வருந்து வாரை. (26) 27. நச்சுப் பொருள் உடலில் கலந்து விட்டால் அதனை மாற்ற வல்ல மருந்து உண்டு. ஆனால் காமம் என்னும் நஞ்சு ஒருவர் உள்ளத்தே கலந்துவிட்டால் அதனைப் போக்கவல்ல மருந்து வேறு எதுவும் இல்லை . - கம்பர், ஆரணிய காண்டம் : 659 அன்பெனும் விடமுண் டாரை ஆற்றலாம் மருந்து முண்டோ இன்பமும் துன்பம் தானும் உள்ளத்தோ டியைந்த வன்றே. (27) 28. ஒரு விளக்கில் உள்ள தீ, மற்றொரு விளக்கு எரிவதற்குத் தீயைத் தரும். அதுபோல் காமம் என்னும் விளக்கு, தவிப்பு என்னும் மற்றொரு விளக்கை எரியச் செய்து இரண்டு விளக்காகிக் கொள்ளும். 29. தீவினை நிலைத்த இடத்தில் அறநெறி நிற்க மாட்டாது. அதுபோல் தீய காமம் பொருந்தியுள்ளவரிடத்தில் வீரமும் மானமும் நிற்கமாட்டா. - கம்பர், ஆரணிய காண்டம் : 641 கோபமும் அறனும் மானக் கொதிப்புமென் றினைய வெல்லாம் பாபநின்றிடத்து நில்லாத் தன்மம் போற் பற்றுவிட்ட தீபமொன் றொன்றை யுற்றால் என்னலாம் செயலில் புக்க தாபமும் காம நோயும் ஆருயிர் கலந்த வன்றே. (28-29) 30. வலிய மீன், வலைக்குள் அகப்பட்டாலும் கட்டு மீறி வெளியேறவே துடிக்கும். அதன் இயல்பு, ஒரு நெறிப்படா உள்ளம் கொண்ட பரத்தையர் போன்றது. - திருவிளையாடல், வலைவீசிப்படலம் : 40 எறிவலைப்படும் அகமலர்ந் தீர்ப்பவன் உள்ளம் மாறு தலைப்பட வலையினும் வழீஇப் பொருளாசை நெறிமலர்க்குழல் நல்லவர் நினைவென நினைவுற்று அறிப வர்க்கரி தாம்பரம் பொருள் என அகலும். (30) 31. காம வெறி கொண்டவர் அக்காமத்தால் கெடுவது திண்ணம். அதுபோல் மனச்செருக்கு உடையவரும் அதனால் அழிவது திண்ண ம். - கம்பர், ஆரணிய காண்டம் : 760 தருக்கினார் கெடுவர் அன்றே தத்துவ நிலையிற் றன்றோ செருக்கினில் தீர்தும் என்பார் தம்மினார் செருக்கர் என்னா.(31) 32. இருட்பிழம்பு எப்பொருளையும் காணவிடாமல் கண்ணொளியை மறைத்துவிடும். அது போல் நீதி நெறிகள் புலப்படாதபடி காமம் மறைத்துவிடும். - கம்பர், சுந்தர காண்டம் : 1144 பொருளும் காமம் என்றிவை போக்கி வேறு இருளுண் டாமென எண்ணலர் ஈதலும் அருளும் காதலில் தீர்தலும் அல்லதோர் தெருளுண் டாமென எண்ணலர் சீரியோர். (32) 33. நிலைப்பாடு இல்லாத நெஞ்சம், சேர்ந்த இடத்திற்கு ஏற்ப மாறி மாறி அமையும். அது பளிக்குத் தரையில் படும்போது வெளுப்பாகவும், கையகத்து இருக்கும் போது சிவப்பாகவும், கண்ணுக்கு நேர் வரும்போது கறுப்பாகவும் தோன்றும் பந்து போன்றது. - கம்பர், பாலகாண்டம் : 578 மெய்வரு போகம் ஒக்க உடனுண்டு விலையும் கொள்ளும் பையா வல்கு லார்தம் உள்ளமும் பளிங்கு போல மையரி நெடுங்கண் நோக்கம் படுதலும் கருகி வந்து கைபுகில் சிவந்து காட்டும் கந்துகம் பலவும் கண்டார். (33) 34. வேம்பின் கசப்புச் சுவையுடைய தளிரை விரும்பி உண்ணும் ஒட்டகம் இனிய தழைகளைத் தின்ன விரும்பாது. அதுபோல் கள்ளின் மேல் காதல் உடையவர் அக்கள்ளைத் தவிர பால், பழச்சாறு முதலியவற்றில் கருத்துக் கொள்ளார். - கம்பர், பாலகாண்டம் : 51 தள்ள ரும்பரம் தாங்கிய ஒட்டகம் தெள்ளு தேங்குழை யாவையும் தின்கில உள்ள மென்னத் தம்வாயும் உலர்ந்தன கள்ளுண் மாந்தரில் கைப்பன தேடியே. (34) 35. எரியும் நெருப்பில் எண்ணெய் சொரிந்தால் அவியாது வளர்ந்தோங்கி எரியும். அதுபோல் இயற்கையிலேயே மயக்கத் திற்கு ஆட்பட்ட மக்கள் மயக்க வல்ல கள்ளையும் பருகுவது தீராமயக்கத்தை உருவாக்குவதற்கே உதவும். - கம்பர், கிட்கிந்தா காண்டம் : 664 நெளிந்துறை புழுவை நீக்கி நறவுண்டு நிறைகின் றேனால் அளிந்தகத் தெரியுந் தீயை நெய்யினால் அவிக்கின்றாமால். (35) 36. பஞ்சை எளிதாகத் தீ எரித்துவிடும். அதுபோல், ஆற்றலை உடையவரைத் தூண்டிக் கோவத்தை உண்டாக்கிய வரும் விரைவில் அழிவர். - கம்பர், அயோத்தியா காண்டம் : 424 மெய்யைச் சிதைவித்துநின் மேன்முறை நீத்த நெஞ்ச மையிற் கரியான் எதிர்நின்னையும் மெளலி சூட்டல் செய்யக் கருதித் தடைசெய்குநர் தேவரேனும் துய்யைச் சுடுவெங் கனலில் சுடுவான் துணிந்தேன். (36) 37. வாளை ஓங்கி வெட்டினால்தான் பொருளை இரண்டாகத் துண்டிக்கும். ஆனால் கொடுஞ் சொல்லோ அதற்கு உரியவர் போய்ச் சேரு முன்னரே அவர் உள்ளத்தை ஊடு அறுத்து விடும். - கம்பர், அயோத்தியா காண்டம் : 232 கூறா முன்னம் கூறு படுக்கும் கொலைவாளின் ஏறா மென்னம் வன்துயர் ஆகத் திடைமூழ்கத் தேறான் ஆகிச் செய்கை மறந்தான். (37) 38. வல்லவன் ஏவிய வாய்த்த படைக்கலங்கள் தான் வைத்த குறி தவறாமல் சென்று இலக்கில் தைக்கும். அது போல் பொய்ச் சான்று சொன்னவன் சொல்லும் அவனைத் தவறாமல் அழிக்கும். - கம்பர், ஆரணிய காண்டம் : 491 கைக்கரி அன்னவன் பகழி கண்டகர்– மெய்க்குலம் வேரொடும் துணித்து வீழ்த்தின மைக்கரு மனத்தொரு வஞ்சகன் மாண்பிலன் பொய்க்கரி கூறிய கொடுஞ்சொல் போன்றவே. (38) 39. பாலைவனத்தில் பருகுதல் வேட்கையால் அலைந்த மானுக்கு ஒரு நீர்நிலை தோன்ற, அந்நீர் நிலைக்கு இறங்கு துறை இல்லையாயின் எத்தகைத்தோ அத்தகைத்து எதிர்நோக்கி இருந்த ஒரு பொருள் எய்துங் காலத்துக் கிட்டாமல் ஒழிவது. - கம்பர், உயுத்தகாண்டம் : 3991 பருந்தடர் சுரத்திடைப் பருகு நீர்நசை வருந்தருந் துயரினான் மாள லுற்றமான் இருந்தடங் கண்டதின் எய்து றாவகைப் பெருந்தடை யுற்றெனப் பேதுற் றாளரோ. (39) 40. உடன் பிறந்தவர்கள் தீயவர்கள் ஆனால், அவர்களால் ஒருவன் அழிபடுவது மிக எளிது. அதுபோல், நல்வினை தீவினை களை ஒழித்து உலகப்பற்றை அறுத்து வாழும் பெருமக்களையும் அவர்கள் உடலில் பிறந்து வளர்ந்த நோய் எளிமையாக அழித்துவிடும். - கம்பர், ஆரணிய காண்டம் : 423 வந்தது சேனை வெள்ளம் வள்ளியோன் மருங்கு மாய பந்தமா வினையை மாளப் பற்றது பற்றி யோர்க்கும் உந்தரு நிலைய தாகி உடனுறைந் துயிர்கள் தம்மை அந்தகற் களிக்கு நோய்போல் அரக்கி முன்னாக அம்மா. (40) 41. குழியிலே வாழும் மீன் அக்குழி நீரில் நஞ்சு கலக்கப் பெற்றால் அதனைத் தாங்கவும் மாட்டாமல், அதனுள் இருந்து வாழவும் மாட்டாமல் தவிக்கும். அதுபோல் கொடியவர் களின் கட்டளையை நிறைவேற்றப் புகுந்த மெலியவர்கள் மனமும் மறுக்கவும் மாட்டாமல், ஏற்கவும் மாட்டாமல் தவிக்கும். - கம்பர், ஆரணிய காண்டம் : 770 வெஞ்சுற் றநினைந் துகும்வீ ரரைவேறு அஞ்சுற் றுமறுக் குறுமாழ் குழிநீர் நஞ்சுற் றுழிமீ னினடுக் குறுவான் நெஞ்சுற் றதொர்பெற் றிஷனைப் பரிதால். (41) 42. மெல்லியல் தன்மை இயல்பாக வாய்ந்த நங்கையர் நல்லிடை துவளும். அதுபோல் கொடிய நோயை ஆற்ற மாட்டாத உயிரும் உடலகத்துத் துவளும். - கம்பர், அயோத்தியா காண்டம் : 444 நோயாற்று கில்லா உயிர்போல நுடங்கு இடையார். (42) 43. சோர்வு மிகவுடையவர் பொழுது மிக ஆகியும் கூட விழித்தலும் உறங்கலுமாக மயங்கிக் கிடப்பர். அதுபோல் மெய் யுணர்வு இல்லாமையால் பிறப்பு, இறப்பு, வீடு இவை பற்றிய தெளிவு இல்லாத மாக்களும் மனத்தால் மயங்கிக் கிடப்பர். - கம்பர், ஆரணிய காண்டம் : 687 அருமணிச் சாளரம் அதனின் ஊடுபுக்கு எரிகதிர் இன்றுயில் எழுப்பி ஏற்றவும் மருளொடு தெருளுறு நிலையர் மங்கையர் தெருளுற மெய்ப்பொருள் தெளிந்தி லாரினே. (43) 44. வெளியே ஒளி பரப்பும் விளக்கு உள்ளே கருப்பைக் கொண்டிருக்கும். அதுபோல் வெளியே பொய்த் தோற்றத்தால் தம்மை மெய்யடியாராகக் காட்டுபவரும் அகத்தே களங்கம் உடையவராக இருத்தல் உண்டு. - பெரிய புராணம், மெய்ப்பொருள் நாயனார் புராணம் : 7 மெய்யெலாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டிக் கையினில் படைக ரந்த புத்தகக் கவளி ஏந்தி மைபொதி விளக்கே என்ன மனத்தினுட் கறுப்பு வைத்துப் பொய்தவ வேடம் கொண்டு புகுந்தனன் முந்த நாதன். (44) 45. உண்டு கொழுத்த பெரும் பாம்புகள் தமக்கு எத்தகைய கேடு நேரினும், உணர்ச்சி கொண்டு ஓடமாட்டாமல் கிடக்கும். அதுபோல் உணவையே பொருட்டாக எண்ணிய உணர் வில்லாதவர்களும் சோம்பிக் கிடப்பர். - கம்பர், உயுத்தகாண்டம் : 639 கறங்கெனத் திரியும் வேகக் கவிக்குலம் கையின் வாங்கிப் பிறங்கிருங் கடலில் பெய்த போழ்தத்தும் பெரிய பாந்தள்’ மறங்கிளர் மான யானை வயிற்றின வாக வாய்சோர்ந்து உறங்கின கேடுற் றாலும் உணர்வரோ உணர்விலாதார். (45) 46. ஒருவன் நெடுக அடைந்திருந்த இன்பத்தை இடையே விட்டொழியு மாறு நேர்வது, கண்ணிலா ஒருவன் அதனைப் பெற்று மீண்டும் இழக்க நேர்வது போன்றது. - கம்பர், பாலகாண்ம் : 328 எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பியசொல் மருமத்தின் எறிவேல் பாய்ந்த புண்ணிலாம் பெரும்புழையில் கனல் நுழைந்தா லெனச்செவியில் புகுத லோடும் உண்ணிலா வியதுயரம் பிடித்துந்த ஆருயிர்நின்றுச் லாடக் கண்ணிலான் பெற்றிழந்தான் எனஉழந்தான் கடுந்துயரம் கால வேலான். (46) 47. மலர்களைப் போற்றிக் காத்தார் அம்மலரின் வழியே கனி உண்டாகப் பெறலாம். அவ்வாறின்றி மலர்களைக் கொய்து அழித்தவர் கனி பெறார். அதுபோல் பயன்பெறும் காலத்தை எதிர் நோக்கி இருந்தவர் அஃது எய்து முன்னர்த் தாமே சிதையார். - கம்பர், உயுத்த காண்டம் : 1370 கனிவருங் காலத் தைய பூக்கொய்யக் கருத லாமோ? (47) 48. நிறையில் நீங்கிய மகளிர் நீர்மை, பொறுமையில் நீங்கிய தவம், அருளில் நீங்கிய அறம், முறைமை நீங்கிய அரசு ஆகியவை பயன் இல்லாமையால் தம்முள் மிக ஒப்புடையன. - கம்பர், அயோத்தியா காண்டம் : 1183 நிறையில் நீங்கிய மகளிர் நீர்மையும் பொறையில் நீங்கிய தவமும் பொங்கருள் துறையில் நீங்கிய அறமும் தொல்லையோர் முறையில் நீங்கிய அரசின் முந்துமோ. (48) 49. பயனற்ற வழிகளில் பாடுபட்டுத் தன் வாழ்வைக் கெடுப்பது, கோட்டம் என்னும் நறுமணக் கலவைப் பொருளைக் கடலில் கலக்குவது போன்றது. - கம்பர், உயுத்தகாண்டம் : 2845 குரங்கினிலுன்னோ டொப்பார் இல்லெனக் களிப்புக் கொண்டேன் பெருங்கடற் கோட்டத் தேய்வை யொத்த தென் அடிமைப் பெற்றி. (49) 50. பொருளைப் பறித்துக்கொண்டு இன்பந் தருவதாகக் கூறும் பொதுமகளிர் செயல், எள்ளை வாங்கிக் கொண்டு அவ்வளவுக்கு எண்ணெய் தருவேன் எனக்கூறும் ஒருவன் ஏமாற்றுப் போன்றது. - திருவிளையாடல், மதுரைத் திருநகரப் படலம் : 46 அழிபவர் பொருள் கொண் டெள்ளுக்கு எண்ணெய் போய் அளந்து காட்டிப் பழிபடு போகம் விற்பார் .......... (50) 14. ஊழ் 1. மழை பெய்தலால் பெருக்கெடுத்தோடும் வெள்ளம் தானே கடலைச் சேரும். அதுபோல் கல்வி, செல்வம் முதலியவை ஒருவற்குச் சேரவேண்டிய நாளில் தானே வந்து சேரும். - கம்பர், பாலகாண்டம் : 332 பெய்யு மாரியால் பெருகு வெள்ளம்போய் மொய்கொள் வேலைவாய் முடுகு மாறுபோல் ஐயநின் மகற் களவில் விஞ்சை வந்து எய்து காலம் இன்று எதிர்ந்த தாமென்றான். (1) 2. தேரின் உறுப்புக்களைத் தனித்தனியே கழற்றி நாவாயில் ஏற்றி ஆற்றைக் கடந்ததும், அவற்றை உரியவாறு பொருத்துவது, இறந்த பின்னர் உயிர்களை அவ்வப் பிறப்புக்களில் கூட்டும் ஊழ்வினை போன்றது. - கம்பர், அயோத்தியா காண்டம் : 1061 கொடிஞ்சொடு தட்டும் அச்சும் ஆழியும் கோத்த மொட்டும் நெடுஞ்சுவர்க் கொடியும் யாவும் நெறிவரு முறையின் நீக்கி விடுஞ்சுவற் புரவி யோடும் வேறுவே றேற்றிச் சென்ற மடிஞ்சபின் உடம்பு கூட்டும் வினையென வயிரத் தேர்கள். (2) 3. நாவாய் ஆற்றின் இக்கரையில் உள்ளாரை அக்கரைக்கும் அக்கரை யில் உள்ளாரை இக்கரைக்கும் ஏற்றும். அதுபோல் இருவினைகளும் இங்கும் அங்குமாகச் செலுத்தி உயிர்களுக்குப் பிறப்பு இறப்புகளை உண்டாக்கும். - கம்பர், அயோத்தியா காண்டம் : 1056 நங்கையர் நடையின் அன்ன நாணுறு செல்வின் நாவாய் கங்கையும் இடமி லாமை மிடைந்தன கலந்த எங்கும் அங்கொடு இங்கிழித்தி ஏற்றும் அமைதியின் அமரர் வையத்து இங்கொடு அங்கிழித்தி ஏற்றும் இருவினை என்ன லான. (3) 4. ஆறு, முல்லையைக் குறிஞ்சி ஆக்கும்; மருதத்தை நெய்தல் ஆக்கும்; எல்லாப் பொருள்களையும் இடம் மாற்றி அமைக்கும். அதுபோல் உயிர்கள் பிறக்கும் இடத்தையெல்லாம் அவற்றை விடாமல் வினைகள் தொடர்ந்து செல்லும். - கம்பர், பாலகாண்டம் : 29 முல்லையைக் குறிஞ்சி ஆக்கி மருதத்தை முல்லை யாக்கிப் புல்லிய நெய்தல் தன்னைப் பொருவறும் மருதம் ஆக்கி எல்லையில் பொருள்கள் எல்லாம் இடைதடு மாறு நீரால் செல்லுறு கதியில் செல்லும் வினையெனச் சென்ற தன்றே.(4) 5. திங்கள் மறைந்ததும் குவியும் ஆம்பல் பூக்கள், நல்லூழால் செல்வம் எய்தியிருந்த கீழ்மக்கள் அந் நல்லூழ் தீர்ந்ததும் செல்வத்தை இழந்து வறியராய் நிற்பது போன்றது. - கம்பர், ஆரணிய காண்டம் : 676 இருக்கின் மொழியார் எரிமுகத்தின் ஈந்த நெய்யின் அவிர்செம்பொன் உருக்கி அனைய கதிர்பாய அனல் போல் விரிந்த துயர்கமலம் அருக்கன் எய்த வமைந்தடங்கி வாழா வடாத பொருளெய்திச் செருக்கி இடையே திருவிழந்த சிறியோர் போன்ற சேதாம்பல். (5) 6. சிறிது பொழுதே வானில் விளங்கி மறையும் பிறைத் திங்கள், தாம் செய்த வினைக்கு ஏற்பச் சிறிது காலமே இருந்து மறையும் செல்வம் போன்றது. - கம்பர், பாலகாண்டம் : 1112 கடையுற நன்னெறி காண்கி லாதவர்க்கு இடையுறு திருவென இந்து நந்தினான். (6) 7. தண்ணீர் இல்லாமல் போகுமானால் அஃது ஆற்றின் குற்றம் ஆகும். அதுபோல் நாம் அடையும் துயரம் பிறர் செய்தது அன்று. ஊழ் உருத்து வந்து ஊட்டிய துயரே ஆகும். - கம்பர், அயோத்தியா காண்டம் : 431 நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை யற்றே பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள் . மதியின் பிழையன்று மகன் பிழையன்று மைந்த விதியின் பிழை நீ இதற்கென்னை வெகுண்ட தென்றான். (7) 8. உயர்ந்த ஒருவன் உவகையுடன் தரும் பொருள், முன்னைச் செய்த நல்வினைப் பயன் பின்னைப் பிறப்பில் தேடிவந்து சேர்வது போன்றது. - கம்பர், பாலகாண்டம் : 419 தேறிய மனத்தான் செய்த நல்வினைப் பயன்கள் எல்லாம் மாறிய பிறப்பிற் றேடி வருவபோல் வந்த வன்றே. (8) 15. மெய்யுணர்வு 1. வற்றாத ஆறுகளில் அமைந்துள்ள துறைகள் எப்பொழுதும் நீரால் நிரம்பி இருக்கும். அதுபோல் துறவிகளின் தூய உள்ளமும் நிறைந்த இன்பத்தில் ஆழ்ந்து இருக்கும். - கம்பர், கிட்கிந்தா காண்டம் : 782 துறக்கமுற்றார் மனமென்னத் துறைகெழுநீர்ச் சோணாடு.(1) 2. வரையப்பெற்ற தாமரை ஓவியம், இன்ப துன்ப நிலைமை களுக்கு ஏற்ப மலர்ச்சியும் சுழிப்பும் அடையாமல் ஒரு தன்மைய தாய் இருக்கும். அதுபோல் விருப்பு வெறுப்புக்களை ஒப்ப நோக்கும் மெய்யுணர்வுப் பெருமக்களும் இன்ப துன்பங்களுக்கு ஆட்படாமல் ஒருநிலைப்பட்டு இருப்பர். - கம்பர், சுந்தர காண்டம் : 349 மெய்த் திருப்பதம் மேவென்ற போதினும் இத்திருத்துறந் தேகென்ற போதினும் சித்தி ரத்தி னலர்ந்தசெந் தாமரை ஒத்திருக்கு முகத்தினை உன்னுவாள். (2) 3. தேர்ச்சி இல்லாதவன் ஓட்டும் தேர் ஒழுங்காக ஓடாது. அதுபோல் ஐம்புலன்களையும் அறிவால் அடக்கிக் காக்காதவன் செய்யும் தவமும் ஒரு நெறியில் நிலைக்காது. - கம்பர், உயுத்தகாண்டம் : 3101 உய்வினை ஒருவன் தூண்டா துலத்தலின் தவத்தை நண்ணி ஐவினை நலிய நைவான் அறிவிற்கும் உவமை யாகி மெய்வினை அமைந்த காமம் விற்கின்ற விரகில் தோலாப் பொய்வினை மகளிர் கற்பும் போன்றதப் பொலம்பொற் றிண்டேர். (3) 4. உரமிக்க வீரர்களை நேரில் கண்டதும் ஊக்க. பில்லா வீரர் ஓடித் தப்புவர். அது போல் மெய்யுணர்வு உண்டாய போது ஆர்வம் முதலிய குற்றங்கள் அகன்று ஓடும். - பெரிய புராணம், ஏனாதிநாத நாயனார் புராணம் : 27 தலைப்பட்டார் எல்லாரும் தனிவீரார் வாளில் கொலைப்பட்டார் முட்டாதார் கொல்களத்தை விட்டு நிலைப்பட்ட மெய்யுணர்வு நேர்பட்ட போதில் அலைப்பட்ட ஆர்வமுதல் குற்றம்போல் ஆயினார் (4) 5. குதிரை ஒன்று ஆயினும் தன் விரைவினால் பல இடங் களில் பல குதிரைகளாகத் தோன்றும். அதுபோல் முழுதுணர்ந்தவர் அறிவும் ஒரு வேளையில் பல இடத்துப் பல பொருள்களின் மேலும் பற்றிச் சென்று உண்மை உணரும். - கம்பர், பாலகாண்டம் : 575 கொட்புறு கலினப் பாய்மா குலான்மகன் முடுக்கி விட்ட மட்கலத்திகிரி போலே வாளியின் வருவ மேலோர் நட்பினின் இடையறாவாய் ஞானிகள் உணர்வின் ஒன்றாய்க் கட்புலத்தினைய வென்ற தெரிவில தெரியக் கண்டார். (5) 6. சிறிதாக இருந்த நெருப்பும் காற்று நெய் இவற்றின் துணையால் பெரிதாக வெளிப்படும் அதுபோல் பற்றும் மாயையும் அகன்ற பெரியோர் மெய்யுணர்வின் துணையால் தூய உடல் பெற்றுப் பொலிவடைவர். - கம்பர், சுந்தர காண்டம் : 1192 இல்லிற் றங்கு வயங்கெரி யாவையும் சொல்லிற் றீர்ந்தன போல்வன தொல்லுருப் புல்லுக் கொண்டன மாயைப் புணர்ப்பறக் கல்வித் தம்மியல் பெய்தும் கருத்தர்போல். (6) 7. முன்னைப் பிறப்பால் உண்டாய அறிவின் தொடர்ச்சி யால் உள்ளம் விரிவடைய உணர்வடையும். அது முகை விரியவும் அதன் உள்ளிருந்த மணமும் விரிந்து பரவுவது போன்றது. - பெரிய புராணம், சண்டேசுர நாயனார் புராணம் : 13 முந்தை அறிவின் தொடர்ச்சியினால் முகைக்கு மலரின் வாசம் போல் சிந்தை மலர உடன் மலரும் செவ்வி உணர்வு சிறந்ததுவால். (7) 8. கீரை முதலிய சிறுபயிர் வகைகளை வேருடன் பிடுங்கிக் கொய்து கறியாக்குவர். அதுபோல் ஆசை முதலியவற்றை அதன் அடிவேருடன் அகழ்ந்தெடுத்துப் பற்றறுத்தவர் எறிவர். - பெரியபுராணம், இளையான்குடி மாற நாயனார் புராணம் : 21 குழிநிரம் பாத புன்செய்க் குறும்பயிர் தடவிப் பாசப் பழிமுதல் பறிப்பார் போலப் பறித்தவை கறிக்கு நல்க. (8) 9. தீயில் வெந்த ஆடை தோற்றத்தால் ஆடை போல் இருப் பினும் ஆடை அன்றாம். அதுபோல் பற்றினை அறுத்தோர் உடலுடன் தோன்றினாலும் அவ்வுடலின் வேறாகவும் இருக்கப் பெறுவர். - பிரபுலிங்கலீலை , முத்தாயி அம்மை கதி : 13 பந்த பாசம் முழுதும் பரிந்திட நந்தும் ஓர் சிவஞானி நாவினை சிந்து மாறு செறிந்த உடம்புதான் வெந்த தூசின் விழியெதிர் தோன்றுமே. (9) 10. காமவயப்பட்டோர் ஓரிடத்து நிற்கமாட்டாராய் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று அலைக்கழிவர். அதுபோல் இறப்புத் துயரால் ஐம்புல உணர்வும் ஒழிந்து செய்வதறியாத உயிர் அவாவின் வயப்பட்டு அவ்வுடல் விடுத்து வேறோர் உடலை அடையும். - கம்பர், ஆரணிய காண்டம் : 720 ஊறோசை முதற்பொறி யாவையும் ஒன்றின் ஒன்று தேறா நிலையுற்றதோர் சிந்தையன் செய்கை ஓரான் வேறாய பிறப்பிடை வேட்கை விசித்த தீர்ப்ப மாறே ருடலுற்றென மண்டபம் வந்து புக்கான். (10) 11. தன் தேரைச் செலுத்திச் சென்று தன் பகைவர் தேரை வெற்றி கொள்வது வீரமே என்றாலும், அதனினும் வீரமாவது பேய் ஏறிச் செலுத்தும் ஐம்புலன் என்னும் தேர்களை அடக்கி வெற்றி கொள்வதேயாகும். - கம்பர், அயோத்தியா காண்டம் : 21 பஞ்சிமென் தளிரடி பாவை கோல்கொள வெஞ்சினத் தவுணர்தேர் பத்தும் வென்றுளேற்கு எஞ்சலின் மனமெனும் இழுதை ஏறிய அஞ்சுதேர் வெல்லும் தருமை யாவதோ? (11) 12. விளையாட்டுக்குப் பயன்படும் வட்டுக்காய் அங்கும் இங்கும் சுழன்றலையும். அஃது ஐம்புலன்களின் வழியே சென்று மயங்கித் திரியும் அறிவு போன்றது. - கம்பர், பாலகாண்டம் : 581 இயங்குறு புலன்கள் அங்கும் இங்குங் கொண்டே க ஏகி மயங்குபு திரிந்து நின்று மறுகுறும் உணர்வி தென்ன ...... ......... ................ .................................. (12) 13. நல்வழிகளில் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தும் பொறிகள் அகப்பட்டவற்றைப் பற்றிக் கொண்டு விடாமல் துன்புறுத்தும் முதலை போல்வன. - கம்பர், பாலகாண்டம் : 107 அன்னமா மதிலுக் காழிமால் வரையை அலைகடல் சூழ்ந்தென அகழி ............... …………………… நன்னெறி விலக்கும் பொறியென வெறியும் கராத்த்து நவிலலுற் றத நாம். (13) 14. தன்னைப் பிணைத்திருந்த கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிய குதிரை , பின்னர்த் தேர் செலுத்துவோன் திறத்திற்குக் கட்டுப்பட்டு வழியே செல்வது, பற்றுக்களை அறுத்துச் சென்ற துறவி இவ்வுலக வாழ்வுக்கு இன்றியமையாக் கடப்பாடுகளையும் செவ்வையாகச் செய்வது போன்றது. - கம்பர், பாலகாண்டம் : 917 மும்மைபுரி வன்கயிறு கொய்து செயல் மொய்ம்பால் தம்மையும் உணர்ந்து தரை கண்டுவிரை கின்ற அம்மையினொ டிம்மையை யறிந்து நெறி செல்லும் செம்மையவர் என்ன நனி சென்றன துரங்கம். (14) 15. பாலைவனம் பசை சிறிதும் அற்றது. அது, காமம் வெகுளி மயக்கம் என்னும் பற்றுக்கள் அனைத்தும் அற்றொழிந்த துறவிகள் போல்வது. - கம்பர், பாலகாண்டம் : 356 தாவரும் இருவினை செற்றுத் தள்ளரும் மூவகைப் பகையரண் கடந்து முத்தியில் போவது புரிபவர் மனமும் பொன்விலைப் பாவையர் மனமும் போற் பசையும் அற்றதே. (15) 16. காலையில் எழுந்த கதிரவன் மாலையில் மறைவதும் மாலையில் மறைந்த கதிரவன் காலையில் எழுவதும் உயிர்களுக்குப் பிறப்பு இறப்புக்கள் மாறி மாறி வருவன என்பதைக் காட்டும். - கம்பர், அயோத்தியா காண்டம் : 679 துறக்கமே முதல் வாய தூயன யாவை யேனும் மறக்குமா நினையல் அம்மா வரம்பில தோற்ற மாக்கள் இறக்குமா றிது வென் பான்போல் முன்னைநாள் இறந்தான் பின்னாட் பிறக்குமா றிதுவென் பான்போல் பிறந்தனன் பிறவா வெய்யோன். (16) 17. சோலை, காடு, பொய்கை, மணல் ஆகிய பல இடங் களுக்கும் ஆறு சென்று உலாவுவது, ஊழ்வினையால் பலவகை உடல்களிலும் சென்று உலாவும் உயிர் போன்றது. - கம்பர், பாலகாண்டம் : 32 தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும் போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும் மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும் ஒதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே. (17) 18. நீரிலே நெடுநாள் கிடந்தாலும் கிடை என்னும் மரத்தில் நீர் புகப் பெறாது. அதுபோல் பற்றில்லார் பாரிலே நெடுநாள் வாழ்ந்தாலும் பற்றுகள் எவற்றாலும் பற்றப் பெறார். - குசேலோபாக்கியானம் : 742 நீருறப் பயின்றும் உள்ள நீருறக் கிடையே போலப் ருற வுற்றுஞ் சற்றும் பற்றிலான் ஆகி அன்பர்க்கு ஏருரு வாய கண்ணன் இணையடிக் குறவு பூண்டு தாருரு வுற்ற தோளாய் சாலநாள் கழிய வாழ்ந்தான். (18) 19. மரத்தில் கட்டப்பெற்ற ஊஞ்சலில் இருந்து ஆடும் மகளிரின் கூந்தலை நெருங்கும் வண்டுகள் மேலே எழுந்தும் கீழே தாழ்ந்தும் ஒரு நிலைப்படாமல் பறக்கும். அதுபோல் பிறவியும் பல நிலைகளில் போவதும் வருவதும் ஆக அமையும். - கம்பர், பாலகாண்டம் : 571 பூசலின் எழுந்த வண்டு மருங்கினுக் கிரங்கிப் பொங்க மாசுறு பிறவி போல வருவது போவதாகிக் காசறு பவளச் செங்காய் மரகதக் கமுகிற் பூண்ட ஊசலின் மகளிர் மைந்தர் சிந்தையோ நிலவக் கண்டார். (19) 20. வானத்தில் இருந்து வீழும் மழைத்துளியில் தோன்றும் மொக்குகள் போல், நிலைபேறற்ற தன்மையது உடல். - கம்பர், அயோத்தியா காண்டம் : 1162 விண்ணுநீர் மொக்குளின் விளியும் யாக்கையை எண்ணிநீ அழுங்குதல் இழுதைப் பாலதால். (20) 21. பெருங்கடலுள் அகப்பட்டுக் கொண்டவன் அலை களுக்கு அஞ்சுவதால் பயன் இல்லை. அதுபோல் துன்பமிக்க பிறவிச் சிறையில் அகப்பட்டுக் கொண்டவன் அதில் நேரும் துன்பங்களுக்கு அஞ்சுவதால் பயன் இல்லை. - கம்பர், ஆரணிய காண்டம் : 1123 ஆய்வுறு பெருங்கட லகத்து ளேயவன் பாய்திரை வருதோறும் பரிதற் பாலனோ தீவினைப் பிறவிவெஞ் சிறையிற் பட்டயாம் நோயுறு துயரென நுடங்கல் நோன்மையோ. (21) 22. பூளைப் பூ, காற்று அடித்தலால் பறந்து சிதறிப் போய்விடும். அப்பூவைப் போலவே உயிர் வாழ்வும் நிலையாமல் அழிந்து போய்விடும். - பெரியபுராணம், திருநாளைப் போவார் புராணம் : 22 பூளைப் பூவாம் பிறவிப் பிணிப்பு. 23. கட்டியாகத் திரண்டிருந்த எஃகு பின்னர் பற்பல கருவிகளாக உருவெடுக்கும். அவற்றில் தீப்பிடித்து எரிந்தால் மீண்டும் உருகித் திரண்டு விடும். அதுபோல் ஒரு நிலையில் கிடந்த உயிர் பல்வேறு உருப்பெற்று உலகிடை வாழ்ந்து மீண்டும் பழைய நிலையை அடையும். - கம்பர், சுந்தர காண்டம் : 1221 வில்லும் வேலும்வெங் குந்தமும் முதலிய விறகா எல்லுடைச் சுடர் என்புகர் எஃகெலாம் உருகித் தொல்லை நன்னிலை தொடர்ந்துபேர் உணர்வன்ன தொழிலால் சல்லி உண்டையில் திரண்டன படைக்கலச் சாலை. (23) 24. பண்டங்கள் நிரம்பப் பெற்ற வண்டியில் பூட்டப் பெற்ற காளைகள் தம் கட்டை அறுத்துக் கொண்டு போய்த் துயரம் அற்று நிற்பது, ஆசையை ஒழித்துப் பிறவித்துயரம் நீங்கப் பெற்ற துறவிகளைப் போன்றது. - கம்பர், பாலகாண்டம் : 873 கொற்றநல் இயங்கள் எங்கும் கொண்டலில் துவைப்பப் பண்டி பெற்றவேறன்னம் புள்ளில் பேதையர் வெருவி நீங்க முற்றுறு பரங்கள் எல்லாம் முறைமுறை பாசத் தோடும் பற்றற வீசி யேகி யோகியில் பரிவு தீர்ந்த. (24) 25. துறப்பு என்பது ஒருமிதவை அம்மிதவையைச் சிக்கெனப் பற்றிக் கொள்ளாதவர் பிறப்பு என்னும் கடலை நீந்தமாட்டார். - கம்பர், அயோத்தியா காண்டம் : 23 துறப்பெனும் தெப்பமே துணை செய்யாவிடிற் பிறப்பெனும் பெருங்கடல் பிழைக்க லாகுமோ. (25) 26. ஆற்றின் நீரோட்டத்தை எதிர்த்து மீன் செல்லும். அதுபோல் பிறவி என்னும் ஆற்றை எதிர்த்து மெய்யுணர்வாளர் மனம் செல்லும். - பெரிய புராணம் : திருஞானசம்பந்தர் புராணம் : 846 ஏடு, மருவிய பிறவி ஆற்றில் மாதவர் மனம் சென்றால் போல் பொருபுனல் வையை ஆற்றில் எதிர்த்து நீர் கிழித்துப் போகும். (26) 27. மாலை, பார்ப்பவனது மயக்க உணர்வால் பாம்பெனத் தோன்றக் கூடும். ஆனால் தெளிவு பிறந்த போது பொய்த் தோற்றம் விலகி மெய்ம்மை புலப்படும். அதுபோல் இறையரு ளால் மெய்யுணர்வு தோன்றிய போதில் மயக்கப்பிறவி அகலும். - கம்பர், சுந்தரகாண்டம் : 1 அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவெனப் பூதம் ஐந்தும் விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபா டுற்ற வீக்கம். (27) 28. ஒருவன் அடைய விரும்புபவற்றை எல்லாம் தவத்தினால் அடையலாம். அவ்வாறு இருக்க அந்நெறி மேற்கொள்ளாது பிறநெறிச் செல்வது, அமுதம் இருக்க அதனை விடுத்து நஞ்சம் உண்பது போன்றது. - கம்பர், அயோத்தியா காண்டம் : 27 இழைத்ததீ வினைதனைக் கடக்கு மெண்ணுறத் தழைத்தபே ரருளுடைத் தவத்தி னாகுமேல் குழைத்ததோர் அமிர்தனைக் கோடல் நீக்கிவேறு அழைத்ததீ விடத்தினை யருந்த லாவதோ. (28) 29. பாற்கடலில் கொண்டுபோய் மீனை விடுத்தாலும் அப் பாலில் வாழ விரும்பாமல் பாசியும் புழுவும் மல்கிய நீரையே விரும்பும். அதுபோல் வீட்டின்பம் நாடும் மெய்யுணர்வாளர் பிற இன்பங்களை விரும்பார். - (2) குசேலோபாக்கியானம் : 143 பாற்கடல் அடுத்த மீன் அப் பால்விரும் பாது மற்ற ஏற்குமா விரும்பினாற்போல் எம்பிரான் திருமுன் சார்ந்து நாற்கதி கடக்கும் இன்பச் செல்வத்தை நண்ணி டாமல் சேற்கருங் கண்ணாய் துன்பச் செல்வமோ நண்ணு வேன்யான். (29) 30. உயிர் ஒரு பறவை. அப்பறவைக்குத் தெளிந்த உணர்வு என்பதும், துறவு என்பதும் இரண்டு சிறகுகள். இச்சிறகுகள் பெற்றவரே விண்ணுலகத் திற்குப் பறந்து செல்லக்கூடும். - கம்பர், அயோத்தியா காண்டம் : 4 அருஞ்சிறப் பமைவருந் துறவும் அவ்வழி தெரிஞ்சுற வெனமிகுந் தெளிவு மாய்வரும் பெருஞ்சிறை யுளவெனில் பிறவி என்னுமிவ் விருஞ்சிறை கடத்தலின் இனிது யாவதே. (30) 31. மலைவளம் கண்டவர் அதனை மறக்காமல் மகிழ்ந்து கொண்டே இருப்பர். அதுபோல் வீட்டுலகம் எய்த விரும்பியவர்கள் அதே குறிப்பில் இருப்பர். - கம்பர், பாலகாண்டம் : 961 இறக்கம் என்பதை எண்ணிலர் எண்ணுங்கால் பிறக்கும் என்பதோர் பீழைய தாதலால் துறக்கம் எய்திய தூயவ ரேயென மறக்க கிற்றிலர் அன்னதன் மாண்பெலாம். (31) 32. மலையில் பிறந்த வெள்ளம் பலப்பல பிரிவுகளாகி இறுதியில் கடலை அடையும். அதுபோல் ஒன்றாக அடைய பலப்பலவாகப் பிரிந்து இறுதியில் ஒரே இறைவனை இருந்து வழிகாட்டுவனவே சமயங்கள். - கம்பர், பாலகாண்டம் : 31 கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம் எல்லையின் மறைக ளாலும் இயம்பரும் பொருளீ தென்னத் தொல்லையில் ஒன்றே யாகித் துறைதொறும் பரந்த சூழ்ச்சிப் பல் பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்த தன்றே. (32) 33. கூதிர் வரவும் மாரிப் பேரிருள் அகலும். அது, மெய்ப் பொருள் உணர்வால் பரம்பொருளை அடைந்தவர்க்கு மாயை நீங்குவது போன்றது. - கம்பர், கிட்கிந்தா காண்டம் : 557 தீவினை நல்வினை என்னத் தேற்றிய பேய்வினைப் பொருள்களை அறிந்து பெற்றதோர் ஆய்வினை மெய்யுணர் வணுக ஆசுறும் மாயையின் மாய்ந்தது மாரிப் பேரிருள். (33) 34. மாசு இல்லாத கண்ணாடியிலேதான் முகம் தெளிவாகத் தோன்றும். அதுபோல் கறை இல்லாத உள்ளத்திலேதான் மெய் யுணர்வு தோன்றும். - பிரபுலிங்க லீலை , மனோலயகதி: 14 ஆசு தீர்ந்த மனத்திடை அன்றி உணர்வு தோன்றாது மாசு தீர்ந்த ஆடியிடை அன்றி வதனம் தோன்றுமோ? (34) 35. செறிவு மிக்க கொடிய காட்டை விளை நிலமாக்க விரும்புவார் முதற்கண் ஆங்குள்ள மரம் செடி கொடிகளை வெட்டி வெட்டவெளி ஆக்குவர். அவ்வெளி மெய்யுணர்வாளர் தெளிந்த தூய உள்ளம் போன்றது. - திருவிளையாடல், திருநகரங்கண்ட படலம் : 31 இருள் நிரம்பிய வனமெலாம் எறிந்துமெய் யுணர்ந்தோர் தெருள் நிறைந்த சிந்தையில் வெளிசெய்து. (35) 36. மண்ணுள் புதையுண்டிருக்கும் பொருளைமை பூசப் பெற்ற கண்ணுடையவன் எளிதில் கண்டறிவான். அதுபோல் இறைவனை மெய்யுணர் வாளன் எளிதில் கண்டறிவான். - பிரபுலிங்க லீலை , - சூனிய சிங்காதனத்தில் இருந்தகதி : 46 மண்ணிடை மறைவுறு நிதிய வைப்பினைக் கண்ணிடும் அஞ்சனக் காரன் காண்கைபோல் நண்ணிடும் உணர்வுடை நந்தி எம்பிரான் அண்ணலை அறிந்தனன் ஐயம் இன்றியே. (36) 37. அளவிலாப் பொருள்களை ஆராய்ந்து, மெய்யுணர்வுப் பொருள்களை மேதக்கோர் உலக நலங் கருதித் தந்தருள்வது, கரும்பில் இருந்து சக்கை முதலியவற்றை ஒழித்து எடுக்கப்பெற்ற சாற்றைக் காய்ச்சிச் சருக்கரை ஆக்கித் தருதல் போன்றது. - திருவிளையாடல், பாண்டியன் சுரந்தீர்ந்த படலம் : 22 கரும்பினில் கோது நீத்துச் சாறடு கட்டியே போல் வரம்பிலா மறையின் மாண்ட பொருளெலாம் மாணத் தெள்ளிச் சுரும்பிவர் கொன்றை வேணிப் பிரானிடம் தோறும் போகி விரும்பிய தென்சொல் மாலை சிவமணம் விளையச் சாத்தி. (37) 38. மிதவை இல்லாமல் அகன்ற கடலைக் கையால் நீந்திக் கடக்க இயலாது. அதுபோல், மெய்யுணர்வு ஆசான் துணை யில்லாமல், நூல் கேள்வி மட்டும் உடையவன் பற்று என்னும் அகன்ற கடலைக் கடக்க ஆகாது. - திருவிளையாடல், வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் : 14 கரவி லாதபே ரன்பினுக் கெளிவருங் கருணைக் குரவனார் அரு ளன்றிக் கொடிய வெம் பாசம் புரையில் கேள்வியால் கழிப்பது புணையினால் அன்றி உரவு நீர்க்கடல் கரங்கொடு நீந்துவ தொக்கும். (38) 39. தக்கவர் இடத்தன்றித் தகவல்லார் இடத்து மெய்ந்நூல் கற்றல், உண்ணுநீர் வேட்கை உடையவன் உவர்க்கடல் நீர் உண்பது போன்றது. - திருவிளையாடல், வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் : 16 எண்ணி லாரிடத் தளந்தளந் தறிபொரு ளெல்லாம் உண்ணு நீர்விடாய்க் குவரிநீருண்டவர் ஒப்ப. (39) 40. இலையிடை மறைந்துள்ள காயினை அறிந்து கொள் ளுதல் அரிது. அதுபோல் இல்லறத்தில் ஆயினும், துறவறத்தில் ஆயினும் பற்றற வாழும் பாங்குடைய மெய்யுணர்வாளரைக் கண்டு அறிவது அரிது. - பிரபுலிங்க லீலை , மருளசங்கர தேவர்கதி : 9 நலமுறும் ஓர் சிவஞானி இல்லில் வாழ் நிலையறம் ஆகினும் நீத்து நிற்குமோர் தலையறம் ஆகினும் தரித்து ஞாலமேல் இலைமறை காயென இருக்கும் என்பவே. (40) 41. மெய்யறிவால் அன்றி நோன்புகளால் உடலை வருத்தி வீடுபேறு எய்த முடியாது. எய்தலாம் என்று கொள்வது சேற்றைக் கொண்டு சேற்றைக் கழுவுதல் ஒப்பது. - பிரபுலிங்கலீலை, முனிவரர் கதி : 16 நோற்று நோன்புடன் நொந்து வருந்துவீர் ஆற்று நீர்மகம் ஆதி வினையினால் மாற்று மாயை மலஞ்செறு விற்படு சேற்றினாற்கழுஞ் சேறு நிகர்க்குமால். (41) 42. கலங்கிச் செல்லும் பெருவெள்ளம் போன்றது மெய்யுணர்வுத் தெளிவாளர் அறிவு. மெய்யுணர்வு எய்தியோர் உள்ளமோ தெளிந்து செல்லும் நீர்ப் பெருக்குப் போன்றது. - திருவிளையாடல், திருநாட்டுப் படலம் : 37 அறைகுவ தறிந்து தேரார் அறிவெனக் கலங்கி அந்த முறையின் வீடுணர்ந்தோர் போலத் தெளிந்தது மூரி வெள்ளம். (42) 43. பிறப்பு இறப்பை ஒழிக்க நினைப்பார், மனத்தைப் புறச் செயல்களில் போகாவண்ணம் தடுத்தல் வேண்டும். அவ்வாறு தடுக்காது விட்டுப் பிறப்பு இறப்பை ஒழிக்க முயல்வது எரியும் நெருப்பை நெய் விடுத்து அணைக்க முனைவது போன்றது. - பிரபுலிங்கலீலை , முத்தாயி அம்மைகதி: 23 மரிப்பொ டுதிப்பு மறிக்குதும் என்று கருத்தை வெளிக்கரு மத்தின் விடுத்து விரிக்குதல் நெய்யை விடுத்தெரி கின்ற நெருப்பை அவிப்ப நினைப்பதை ஒக்கும். (43) 44. அடியில் உள்ள ஒரு குடத்தை உடைத்துத் தள்ளினால் மேலே உள்ள குடங்கள் அனைத்தும் சாய்ந்து ஒழியும். அது போல் ஐம்புலன் களையும் ஒழித்தால் பொறி , பூதம், கரணம், கலை, சுத்தம் ஆகிய தத்துவங்கள் தாமே அழிந்துபடும். - பிரபுலிங்க லீலை , சித்தராமையர்கதி : 72 புலன்களை ஒழித்த போதே பொறிகளும் பூதம் ஐந்தும் கலங்குறு கரணம் நான்கும் கலாதியும் சுத்தம் ஐந்தும் விலங்குறும் அடியில் வைத்த வெறுங்குடம் தள்ளின் மேல்மேல் மலங்குற ஒருங்க டுக்கு மட்கலம் விழுதல் போல.(44) 45. ஐந்தலை நாகத்தின் ஒரு தலையை அரிந்தால் மற்றைத் தலைகளால் நஞ்சு கக்கும். அதன் அடிக்கழுத்தையே அரிந்து விட்டால் நஞ்சு கக்காது. அதுபோல் ஐம்பொறிகளின் வழியாக உண்டாகும் ஐவகை ஆசை களையும் ஒவ்வொன்றாக விட்டால் மற்றொன்று பற்றும். மனத்தைப் புலன்வழிச் செல்லாமல் விடுத்தால் எப்பற்றும் தொடராது. - பிரபுலிங்கலீலை , சித்தராமையர்கதி : 73 இந்தியம் ஓரொன் றாய்விட் டிடின்மற்றை ஒன்று சாரும் முந்திய மனம் அழிப்ப முற்றும்போம் மணிய பாம்பின் ஐந்தலை களினுள் ஒன்றை அரிந்திடின் மற்றொன் றாலம் சிந்திடும் மிடற ரிந்தால் தீர்ந்திடும் ஒருங்கு மாதோ. (45) 46. அறிவென்னும் வேலால் ஐம்புலன் என்னும் மான்களை அடக்கி , அருள் என்னும் வலைக்குள் தப்பியோடாமல் சேர்க்க வல்லவன், துயரமிக்க பிறப்பை ஒழித்தவனாம். - பிரபுலிங்கலீலை , முனிவரர்கதி : 9 அறிவெனும் வேலினால் ஐம்பு லன்களாம் மறியினம் அருளெனும் வலையைத் தப்புறா தெறிகுவை எனினுனக் கில்லை துன்பெனா நெறியினை வழுவற நிமலன் கூறினான். (46) 47. நீரின் வழியே மிதவை செல்வது போல், பொறிகளின் வழியே உள்ளம் செல்லும். - திருவிளையாடல், சமணரைக் கழுவேற்றிய படலம் : 52 நாசம் செய்யும் பொறிவழியே நடக்கும் உள்ள மெனச்சென்று நீச ரேடெண் ணாயிரமும் நீத்த வழியே ஒழுகியவால். (47) 48. கூத்தர்கள் அரங்கத்தில் ஆடுவர். ஐம்பொறிகள் உடல் என்னும் அரங்கத்தில் நின்று ஆடும். - திருவிளையாடல், இந்திரன் பழிதீர்த்த படலம் : 33 நடம்பயில் கூத்தரின் நடிக்கும் ஐவர் வாழ் உடம்பு. (48) 49. ஆறாக் கொடும்பசி, அளவிறந்த அரிய உணவு கிடை பொழுதில் அகலும். அஃது இறைவன் மேல் அன்பு கொண்டு வீட்டின்பம் உற்றவன் பழவினை ஒழிவது போன்றது. - திருவிளையாடல், அன்னக் குழியும் வையையும் அழைத்த படலம் : 5 ........ எடுத்தெடுத்து வாய் மடுத்துத் துய்த்திடப் பசி விடுத்தது சுருதி நாயகன் தாள் பத்திவைத்து வீடுணர்ந்தவர் பழவினைத் தொடர்போல். (49) 50. போர்க்களத்தில் ஏவப்படும் கருவிகள் சில பகை மேல் பட்டுத் தாக்கும்; படாமல் தவறும்; முறிந்தும் ஒழியும்; அவற்றைப் போல், அவரவர் செய்த வினைக்கு ஏற்ப நுகர்வு, பொருந்தியும், பொருந்தாதும், ஒருகால் பொருந்தி ஒருகால் பொருந்தாமையும் அடையும். - திருவிளையாடல் , திருமணப் படலம் : 32 எறிகின்றன ஓச்சுவ எய்வன ஆதியாகச் செறிகின்றன பல்படை செந்நிறப் புண்ணீர் மூழ்கிப் பறிகின்றன வும்பிழைக் கின்றவும் பட்டுத் தாக்கி முறிகின்றனவு முயன்றார் வினைப் போகம் ஒத்த. (50) 51. ஓடும் குதிரையை அடக்க வேண்டுமாயின் அதன் கடிவாளத்தை இழுத்துப் பிடித்தல் வேண்டும். அதுபோல் ஓடும் மனத்தை ஒடுக்க வேண்டுமாயின் வெளிச்செல்லும் மூச்சுக் காற்றை உள்ளாகத் திருப்ப வேண்டும். - பிரபுலிங்க லீலை , சாதரங்ககதி: 17 ஓடு மாவை நிறுத்துறின் உள்ளுறக் கோடும் வாய்க்காலினத்தினைக் கொள்ளுவார் நீடுமா மனம் நிற்க நிறுத்துறில் ஓடும் வாயுவை உள்ளுற ஈர்ப்பரால். (51) 52. குடத்தில் இடம்பெற்ற விளக்கு அசையாது. அதுபோல் ஐம்பொறி களையும் அடக்குதலால் மனம் அடங்கப்பெற்ற மெய்யுணர்வாளனும் அசைவின்றி இருப்பான். - குசேலோபாக்கியானம்; 413 ஐந்தும், பொருவில் ஆனந்தம் எய்தப் பொலிகடத்தீபம் போன்றான். (52) 53. இரண்டு கால்களையும் பிணைத்துள்ள பொன் விலங்கை அகற்ற நினைப்பவன் இரும்பு விலங்கைப் பூட்டிக் கொள்ள ஆசைப்படுவானோ? மாட்டான். அதுபோல் இறைவன் அடியாம் செல்வத்தை அடைய விரும்புபவன் பிற செல்வங்களைக் கருதான். - குசேலோபாக்கியானம் : 729 ... இருகாலும் யாத்த தொடர்செய்பொன் நிகளம் சீக்கத் துணிந்தவன் இரும்பால் செய்யப் படுபொருள் நிகளம் பூண்டு கொள்வனோ பாரிடத்து. (53) 54. பயன் அற்ற மண் ஓடு இரச குளிகையால் பொன்னாக மாறாது. ஒருவேளை அது மாறினால் கூட மெய்யுணர்வாளனின் உள்ளம் மாயை வழியில் மாறிச் செல்லாது. - பிரபுலிங்கலீலை , மாயை கோலாகலகதி : 75 இலங்கிலைவேல் மருட்டுமதர் விழிவிமலாய் வறியவோ டிரதந் தன்னால் நலங்கிளர் பொன் உருவாயில் என்னாலும் மாயையின்பம் நணுகும். (54) 55. கள்ளக்காதலனிடத்துக் கொண்ட அன்பினை உள்ளடக்கி வைத்துத் தன் கணவனுக்கு வெளிப்படையாகத் தொண்டு செய்யும் காரிகையின் உள்ளம் போன்றது, மெய்யுணர்வாளர் உள்ளம். அவர்கள் உலக வாழ்வில் இச்சை உடையவர் போல் தோன்றினாலும் பரம்பொருள் பற்றிய நினைவி லேயே இருப்பர். - திருவிளையாடல், வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் : 20 கள்ளக் காதல னிடத்தன்பு கலந்துவைத் தொழுகும் உள்ளக் காரிகை மடந்தையோ லும்பரைக் காப்பான் பள்ளக் காரியுண் டவனிடத் துள்ளன்பு பதிந்து கொள்ளக் காவல னிடையுறத் தொழிலுமுட் கொண்டார். (55) 56. புளியம் பழமும் அதன் மேலோடும் ஒட்டாமல் நிற்கும். அதுபோல் மெய்யுணர்வுடையோர் இல்லறத்திருப்பினும் பற்றின்றி வாழ்வர். - குசேலோபாக்கியானம் : 26 இல்லறத் திருந்தும் புளிம்பழம் ஏய்ப்ப இயைந்தவுள் துறவுடைக் குசேலன். (56) 57. சிறுமிகள் கட்டிய சிறு வீட்டில் அலைகள் பாய்ந்து அழித்தால் அச்சிறுமிகள் தாம் வைத்திருந்த சங்குமணிகளைத் சினத்தால் வீசி எறிவர். அதுபோலவே உலகியலை உணர்ந்து பற்றற்ற மெய்யுணர்வாளரும் ஓடும் பொன்னும் ஒப்பக் கருதுவர். - திருவிளையாடல், திருநாட்டுப் படலம் : 37 எற்று தெண்டிரை எறிவளை எயிற்றியர் இழைத்த சிற்றில் வாய்நுழைந்தழிப்பவச் சிறுமியர் வெகுண்டு பற்றி லாரெனச் சிதறிய மனவணி .. (57) 58. உண்ட பின்னர் உணவு இருந்த இலையை எடுத்து எறிவது போல், தம் உடலையும், மெய்யுணர்வாளர் எத்தகைய துயரும் இன்றி எளிதில் விட்டொழிப்பர். - பிரபுலிங்கலீலை , முத்தாயி அம்மை கதி : 11 கண்ட மெய்த்தவன் காயந் தனையனம் உண்ட நெட்டிலை ஓப்ப விடுப்பனால் . (58) 59. செங்கதிர் எழுந்ததும் விண்மீன்களின் ஒளிபோம். அது போல மெய்யுணர்வால் பரம்பொருளை அறிந்தபோது சிறு தெய்வ வழிபாட்டுப் பொய்யுணர்வு போகும். - திருவிளையாடல், பரி நரியாக்கிய படலம் : 33 ஈறி லாச்சிவ பரஞ்சுடர் இரவி வந்தெறிப்பத் தேறு வாரிடைத் தோன்றிய சிறுதெய்வம் போல மாறி லாதபன் செங்கதிர் மலர்ந்து வாளெறிப்ப வீறு போயொளி மழுங்கின மீன்கண மெல்லாம். (59) 60. குடம் உடைந்தால் அக்குடத்துள் இருந்த காற்று விண்ணுடன் கலந்து விடும். அதுபோல் உடல் சுமை நீங்கிய மெய் யுணர்வாளன் உயிர் பரம்பொருளுடன் ஒன்றி விடும். - பிரபுலிங்கலீலை , முத்தாயி அம்மை கதி : 12 படியில் வந்த பரம குரவனால் தடையறும்படி தன்னை அறிந்தவன் உடல்வி ழும்பொழு தொன்றொரு மண்மயக் கடமு டைந்தஆ காயம் நிகர்ப்பனால். (60) 61. நீரொடு உப்பு இரண்டறக் கலக்கும். நெருப்போடு கற்பூரம் இரண்டறக் கலக்கும். அவற்றைப் போல் மெய்யுணர் வாளன் இறைவனுடன் இரண்டறக் கலந்து விடுவான். - குசேலோபாக்கியானம் : 414 நீருறும் உப்புப் போலும் . நெருப்புறு பளிதம் போலும் ஏருறு வடிவத் தண்ணல் இடத்துத்தன் மனங் கலப்பப் பேருறு பவஞ்ச வாழ்க்கைப் பிணிப்பொழிந் தகலக் கஞ்சத் தாருறு மார்பத் தையன் தன்னையு மறந்திருந்தான். (61) 62. கதிரவன் தோன்றியவுடன் காரிருள் ஒழியும். அதுபோல் மெய் யுணர்வு தோன்றியவுடன் வினைகள் கழியும். - கம்பர், கிட்கிந்தா காண்டம் : 42 பொங்கிமுற்றியவுணர்வு புணர்தலும் புகையினொடு பங்கமுற் றனையவினை பரிவுறும்படி முடிவில் கங்குலிற் றது கமல முகமெடுத் தனகடலில் வெங்கதிர்க் கடவுளெழ விமலன்வெந் துயரினெழ. (62) முற்றிற்று