உவமைவழி அறநெறி விளக்கம் (சங்க இலக்கியங்கள்) 2 செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் நூற்குறிப்பு உவமை ஆவணம் மழைநாள் : மலை சார்ந்த காடு, செடிகள் தூறுகள் புல்வெளி எனப் பச்சைப் போர்வை பரத்திய அழகு. தொழுவத்தில் இருந்து ஆயன் தன் ஆக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிக் கொண்டு காட்டுக்குச் சென்றான். பசுக்கள் ஆர்வமாய்ப் புல் மேய்ந்தன. மழை மின்னல் இடிகளால் நிலம் குளிர்ந்து, அங்கும் இங்கும் காளான் முளைத்துக் கிடந்தன. நிலத்திற்குக் குடைப்பிடித்து நிற்பது போல் நின்றன! மேயும் மாட்டின் கால் நகரும்போது, கல் புரள்கிறது; கால் பதிந்து நிலம் குழியாகிறது; புல் மிதிபடுகிறது; புதிது தோன்றி வெண்குடையாக நின்ற காளானும், பசுவின் காலில் பட்டு நிலைபெயர்கின்றது; தலைசாய்கின்றது; நொறுங்கியும் போகின்றது! ஆயனுக்கு வழக்கமாகிப் போன காட்சி அவனை அக்காட்சி கவர்ந்து விடவில்லை! அவன் தொழில் மேய்ச்சல். ஆனால், அக் காட்சியை இன்னொருவர் காண்கிறார். அவர் நல்ல சிந்தனையாளர், புலமைத் தோன்றல்; படைப்பு வல்லார். அவர் பெயர் பொய்கை யார்! அவர்க்குப் பசுவின் காலடியில் பட்டுக் குடைசாய்ந்து போகும் காளான் காட்சி, கண்ணைவிட்டு அகலவில்லை! பின்னொரு நாள் : ஒரு போர்க்களம் ; மானமே உயிரென வாழ்ந்த சேரமான் கணைக்கால் இரும்பொறை என்பானுக்கும் சோழன் கோச்செங்கணான் என்பானுக்கும் நிகழ்ந்த போர்க்களம். சேரமான் மேல் அளவற்ற அன்பும் பற்றுமையும் உடையவர்தாம் புலவர். ஆனால், சோழன் யானை செய்த வீறுமிக்க செயலைக் கண்டது கண்டவாறு கூற அவர் தயங்கவில்லை. சோழன் யானை, அச்சோழனுக்கு மாறாக நின்றவர் தூக்கிப் பிடித்திருந்த வெண்கொற்றக் குடைகளையெல்லாம் எற்றி எற்றித் தள்ளின. எளிமையாக - இயல்பாக - அக்குடைகள் சாய்ந்தன, உருண்டன; சிதைந்தன. புலவர் பொய்கையார் பார்வை, முன்னோக்கிச் சென்றது ! ஆயன் பசு காளானை எற்றித் தள்ளிய காட்சி முன்னே நின்றது ! யானை குடையை எற்றும் காட்சி பின்னே தொடுத்து நின்றது! உவமை வழி அறநெறி விளக்கம் குடைக்காளான் எனப் பொது மக்களால் வழங்கப்படும் 'சொல்லாட்சி ' அவரை வியப்பில் ஆழ்த்தியது! காளான் நிறம், குடைநிறம் - இரண்டும் வெள்ளை ! காளான் வடிவம், குடைவடிவம் - இரண்டும் வட்டம்! பசு எற்றுதல், யானை எற்றுதல் - இரண்டும் வினைஒற்றுமை! காளான் சிறு வடிவம், குடை பெருவடிவம் - இரண்டன் அளவுநிலை! இவற்றை எண்ணிப் பூரித்தார். ''இப்படியொரு , 'காட்சி இணையைக் காண முடியுமா? யான் கண்டேனே ! காண்கிறேனே!'' என வியந்தார். காட்சியை அன்று! கண்ட தம்மையே வியந்தார். தாம் காணவாய்த்த காட்சியை ஓவியமாக - சொல்லோவியமாகத் தீட்டினார்! அது களவழி நாற்பது என்னும் நூலில் இடம் பெற்றது. அப்பாடல் அவர்தம் உணர்வு மேம்பாட்டை மட்டுமன்றி, உவமை மேம்பாட்டையும், உவமை உள்ளத்தை ஆட்கொள்ளும் திறத்தையும் உணர்த்த வல்லனவாகத் திகழ்கின்றது. அப்பாடல் : "ஓஓ உவமன் உறழ்வின்றி ஒத்ததே காவிரி நாடன் கழுமலம் கொண்ட நாள் மாவுதைப்ப மாற்றார் குடையெலாம் கீழ்மேலா ஆவுதை காளாம்பி போன்ற புனல்நாடன் மேவாரை அட்ட களத்து." என்பது. பொய்கைப் புலவர் கண்ட காட்சி, அருமையான காட்சியாக இன்றும் விளங்குவது எதனால்? அவர் படைப்பை அவர் துய்த்த அளவில் விட்டு விடாமல், அவர் வருங்கால மக்களுக்காக ஆவணப் படுத்தி வைத்துள்ள அருமை அல்லவோ இதன் மூலம் ! ''இப்படி எத்தனை எத்தனை பேர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். நம் முந்தையர் தேடி வைத்த தேட்டைத் தொகுத்துத் தோட்டாக்கி வைத்தால் என்ன?' என்னும் எண்ணம் எனக்கு 1965 இல் உண்டாயிற்று இதற்கு இதுவே உவமை என்று கூறும் 'உவமான சங்கிரகம்' என்னும் பின்னூல், புலவன் புலமையை 'ஆலை உருவாக்கப் பொருள்' போல் ஆக்கும் குறைபாடுடைய தாயிற்று. ஆனால், செய்யுள் சிறந்த சுவையாகவும், பொருள் விளக்கமுடையதாகவும் அமைய உவமை என ஓர் அழகியல் வேண்டும் என்பதைத் தம் கூர்த்த அறிவால் கண்டு, செய்யுள் இயலுக்கு முற்பட உவமை யியலையும், அதற்கு முற்பட மெய்ப்பாட்டியலையும் வைத்த தொல்காப்பியத் தோன்றல் காட்டிய வழியில், சங்கப்புலவர்கள் முதல் இக்காலப் புலவர்கள் வரை படைத்த படைப்புகளில் உள்ள உவமைகளைத் தொகுத்து அடைவாக்கினால் எத்தகு பாரிய நலமாக இருக்கும் என்ற எண்ணத்தில் ஆழ்ந்தேன். எல்லையிலாக் கடலாழம் காண எளியேன் முயல்வதாக அவ்வுவமைத் தொகுப்பு முடிந்தது! ஈராண்டுகள் கொண்ட முயற்சியில், ஏறத்தாழ எண்ணாயிரம் உவமைகள் தொகுக்கப்பட்டன. ஆயினும் தொகையாக்கப்பட வேண்டுவ மேலும் பல மடங்காக உணர்ந்த பட்டறிவால், ஒரு கட்டளை எனக்கு யானே அமைத்துக் கொண்டேன். "அறங்கூறும் உவமைகளை மட்டும் அடைவு செய்து, பொருள் வகைப்படுத்தித் தமிழுலாக் கொள்ள வைத்தல் சாலும் '' என முடிவு செய்தேன். அவ்வடைவையும் முப்பால் படுத்திக் கொண்டேன். 'அறம்' என்றே புறநானூற்றுப் புலவர் ஆலத்தூர் கிழாரால் பாடப்பெற்ற திருக்குறள் முதலாக வெளிப்பட்ட அறநூல்கள் வழியாகக் காணக் கிடைக்கும் அறம் பற்றிய உவமைகள் ஓராயிரத்தைத் தொகுத்து, அத் தொகையை இறை முதலாக மெய்யுணர்வு ஈறாகப் பதினைந்து தலைப்புகளில் பகுத்து நூலாக்கம் செய்தேன். ''உவமை வழி அறநெறி விளக்கம் என்னும் பெயரால் முதற் பாகமாகத் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வழியாக வெளிவந்தது. ஆண்டு 1968. இரண்டாம் பாகம், சங்க நூல் உவமைகளையும், மூன்றாம் பாகம், காப்பிய உவமைகளையும் கொண்டமைய எழுதிவந்தேன். இவ்விரு தொகுதிகளிலும் ஏறத்தாழ ஆயிரத்து ஐந்நூறு உவமைகள் இடம் பெற்றன. முதற்பதிப்பு வெளிவந்து அதன் பயன்பாட்டை உணர்ந்த பெருமக்கள் பலர்; பாராட்டிக் கூறியவர் சிலர். அவருள் நெறி யொன்று காட்டியவர் ஒருவர். அவர் நாவலர் இரா. நெடுஞ் செழியன் ஆவர். "இத்தொகுப்பு மேடைப் பொழிவாளர், கட்டுரையாளர் ஆயோர்க்கு அரிய கையேடாகும். இந்நூலில் காட்டப்பட்டுள்ள நூல்கள் அனைத்தையும் கற்பார் ஒவ்வொருவரும் தொகுத்து வைத்திருப்பார் எனல் இயலாது. உரைநடையில் காட்டியுள்ள உவமையின் மூலமாகிய பாடல், பாடற்பகுதி அவ்வவற்றின் கீழே அமைந்தால், மேலும் பயனாம்" என்றார். இதனைக் கூறக் கேட்டவர் கழக நிறுவனரும் பதிப்பாளாரும் ஆகிய தாமரைச் செல்வர் வ. சுப்பையா அவர்கள் ஆவர். தாம் நாவலர்பால் கேட்ட குறிப்பைக் கூறிப், பின்வரும் தொகுதிகளை உரையும் பாட்டுமாக அமைக்க வேண்டினார். அவ்வகையில் பின்னிரண்டு தொகுதிகளும் தொடர்ந்து வெளிவந்தன. உவமை வழி அறநெறிவிளக்க முத்தொகுதிகளும் 1968 முதல் 1971 ஆம் ஆண்டுக்குள் வெளிவந்தன. சிலர்தம் ஆழிய உணர்வு எக்காலக் கழிவும் தாண்டிச் சுடர்விட வல்லது என்பதை உணர்த்தியது. உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவராய்த் திகழும் திரு. பழ. நெடுமாறனார் உரை. திரு. கோ. இளவழகனாரும் யானும் ஐயா அவர்களைக் கண்டு உரையாடிக் கொண்டு இருக்கும்போது, 'உவமைவழி அறநெறி விளக்கத் தொகுதிகளின் பயன்பாட்டையும், அவற்றை மீளப் பதிப்பிக்க வேண்டிய தேவையையும் உணர்வோடு உணர்த்தினார். இளவழகனார் உடனே வெளியிடுவதாக உறுதி மொழிந்தார். ஆனால், என்னுளம் திகைப்பில் ஆழ்ந்தது. முத்தொகுதி களில் முதல் தொகுதி என்னிடம் இல்லை. பின்னிரு தொகுதிகள் மட்டுமே இருந்தன. பல்லாண்டுகளாக முதல் தொகுதியை அடைய முயன்றும் கைகண்ட பயன் இல்லை! மூலப்படி இல்லாமல் என்ன செய்வது? தமிழ்க்கடல் மறைமலையடிகளார் பெயர் தாங்கி, வள்ளலார் முதற் பொழிவிடத்தில் அமைந்துள்ள கழக நூலகத்தில், தேடிப் பெறக்கூடும் என்னும் நம்பிக்கையில் ஒரு துணிவு கொண்டு இசைந்தேன். ஊருக்கு வந்தேன் ; ஈரோட்டில் இருந்து, தமிழ் இலக்கியக் கழகச் செயலாளர் இனிய அன்பர் திரு. கண்ணையனார் பன்னிரண்டு சிப்பங்களில் நூல்களைப் பாவாணர் ஆராய்ச்சி நூலகத்திற்கு விடுத்தும், கொடையாக்கியதைக் கண்டு மகிழ்ந்தேன்! முதற்சிப்பத்தைப் பிரித்து நூல்களை நோக்கினேன். தேடியிருந்த உவமைவழி அறநெறி விளக்க முதற் தொகுதி ஓடிவந்து என்கையை அடைந்தது! உவகையானால் உவகை! "அழுந்திய உணர்வு ஆக்கம் செய்தே தீரும்" என்று, அத்தொகுதி சொல்லாமல் சொல்லி மகிழ்வித்தது. கண்ணையனார் முதற்கண் இந்நூலை வாங்கும் போதும், யான் கொண்ட மகிழ்ச்சியை அடைந்திருக்க மாட்டார். முதற்பதிப்பு வெளிவந்து முதன் முறையாக இந்நூலைக் கண்ட போதும் இம்மகிழ்ச்சியை யான் உறுதியாகக் கொண்டிருக்க மாட்டேன். ஏனெனில், ''காணாமல் போனதைக் கண்டடைந்த களிப்பு " இக்களிப்பு ! இளங்கோவடிகள் வாக்காகச் சொன்னால், "கண்களி மயக்கத்துக் காதல் காட்சி அது. நெடுஞ்செழியனார் உரையை மறவாமல், முதற் தொகுதிக் குரிய உவமைகளுக்கு மூலப்பகுதி அல்லது பாடல் சேர்க்கப்பட்டு அச்சிடப்பட்டது. குறுகிய காலத்தில் அச்சிட்டு முடிக்கும் திட்டம். அதனால், இளவழகனார் தம் பதிப்பகம் சார் புலமையரைக் கொண்டு பெரும்பால் தொகுப்பும், மெய்ப்புப் பார்ப்பும் நிறைவித் தார். முத்தொகுதிகளும் ஒரு சேர வெளியிடும் திட்டம் உலகத் தமிழர் பேரமைப்பு வழியே, பழஞ் சேரலமாம் , சேலமா நகரில் வெளிப்பட லாயிற்று. கழக ஆட்சிப் பொறுப்பாளர் அமைச்சர், முனைவர் திருமிகு. இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் கழகவழி வெளிவந்த என் நூல்களைத் தவச்சாலை வெளியீடாகக் கொள்ள இசைவு வழங்கி னார்கள். ஆதலால், தவச்சாலை உரிமை கொண்ட நூல்களைத் திரு. இளவழகனார் வெளியிடும் பொறுப்பேற்றுச் செய்துள்ளமைக்குப் பெருநன்றியுடையேன். இத்தொகுப்பு களுக்குப் பல்லாற் நானும் உழைத்த தமிழ்மண் பதிப்பகப் பணியாளர் தொண்டர் ஆகிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்தும் நன்றியும் உடையேன். இனி, இத்தொகுதிகளின் பயன்பாடு குறித்த சில செய்திகள் : 1. சொற்பொழிவாளர், கட்டுரையாளர் ஆகியோர்க்குக் கையில் வாய்த்த கருவூலம் அன்னவை இவை. 2. ஒப்பீட்டு ஆய்வாளர்க்கு அருந்துணை. 3. வாழ்வியல் வளம் காண விழைவார்க்கு வாய்த்த விருந்து. 4 தமிழர் தம் ஊன்றிய பார்வையை உணர்த்தும் உயிர்ப்பிடம். 5. "இக் காட்சிதானே, அக்காட்சி ! அக்காட்சியை அவர் பொதுவாக்கம் செய்தது போல, நாமும் ஏன் செய்யக்கூடாது?" எனப் படைப்பாளியையும் சிந்தனையாளர்களையும் தூண்டும், தூண்டாமணிவிளக்கு. மேல் ஒரு குறிப்பு: ஒரு காட்சியை ஒரு புலவர் தாமா கண்டார்? எத்தனை எத்தனை பேர்கள் கண்டனர்? அவர்கள் காட்சிகள் எத்தனை எத்தனை வெளிப்பாடாகிச் சிறக்கின்றன - என வியப்பில் ஆழ்த்து கின்றன! நெல் புல், வாழை கரும்பு, வண்டு நண்டு, ஆடு மாடு, ஆறு மலை, கடல் வான், கதிர் திங்கள் - இக்காட்சிகள் கால - இட - எல்லைகள் கடந்தவை அல்லவோ! இவற்றைக் கண்டு படைத்த படைப்பாளர்களும் கால இட எல்லை கடந்து நின்றவர்கள் அல்லரோ! ஆயினும் என்ன; அவர்கள் நம்மோடு உறவாடுகின்றனரே! தம் படைப்புகளை நம்மோடு உறவாட விடுகின்றனரே! தாமும், தம் படைப்புகளும் 'சாவா வாழ்வுக்குத் தூண்டலாய்த் திகழ ஓவிய ஆவணக் காட்சி ஆக்கிவிட்டனரே! "நாம் பிறந்தமண் எவ்வளவு உயர்ந்தமண்! நம்மவர் எவ்வளவு உயர்ந்தவர்!' என்னும் வீறுகள் கிளர்ந்து நம்மை விம்மிதம் உறச் செய்வன் அல்லவா! ஆற்றலும் ஆர்வமும் உடையார் கூட்டுப்பணியாக - கூட்டுறவுப் பணியாக - உவமைகளையெல்லாம் பொருள் வரிசையில் தொகுத்தால், அரும்பெருஞ்செயல் அல்லவா! அத் தொகை தொடர இத்தொகை தூண்டு மானால், இத் தொகை பெற்ற பேறாக அமையும் அல்லவோ! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன், இரா. இளங்குமரன் 1. இறை 1. எல்லா உயிர்களிடத்தும் இறைவன் பொருந்தி இருந்தும் வெளிப்படாமல் அடங்கியிருப்பது, ஆரவாரித்து மேலே எழும்பும் கடல் தன் ஆரவாரத்தை எல்லாம் அடக்கி அமைந்து கிடப்பது போன்றது. - கல்லாடம் : 65. தோடணி கடுக்கைக் கூட லெம் பெருமான் எவ்வுயிர் இருந்தும் அவ்வுயிர் அதற்குத் தோன்றா அடங்கிய தொன்மைத் தென்ன ஆர்த்தெழு பெருங்குரல் அமைந்துநின் றொடுங்கி பெருமுகில் வயிறள வூட்டித் திருவுல களிக்கும் கடல்மட மகளே. (1) 2. எல்லாப் பொருள்களும், இறைவனே; இப்பொருள்களின் உட்பொருளாக இருப்பவனும் இறைவனே. அவ் விறைவனே , தீயினுள் வெம்மை ; பூவினுள் மணம்; கல்லினுள் மணி; சொல்லினுள் வாய்மை, அறத்தினுள் அன்பு; மறத்தினுள் மைந்து; வேதத்தினுள் மறை; பூதத்தினுள் முதல் ஞாயிற்றினுள் ஒளி ; திங்களுள் அளி. - பரிபாடல் : 3. தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ அறத்தினுள் அன்பும் நீ மறத்தினுள் மைந்தும் நீ வேதத்து மறைநீ பூதத்து முதலும் நீ வெஞ்சுடர் ஒளியும் நீ திங்களுள் அளியும் நீ அனைத்தும் நீ அனைத்தினுட் பொருளும் நீ. (2) 3. இறைவன் குணக்கடலானவன். அவன் வெம்மையும் ஒளியும் ஞாயிற்றில் காணலாம்; அவன் தண்மையும் மென்மையும் திங்களில் காணலாம்; அவன் பொருட் பெருக்கமும் கொடை வளமும் மழையில் காணலாம்; அவன் காவலும் வலிமையும் நிலத்தில் காணலாம்; அவன் மணமும் பொலிவும் மலரில் காணலாம்; அவன் வடிவம் ஒலியும் வானில் காணலாம்; அவன் தோற்றமும் ஒடுக்கமும் காற்றில் உணரலாம். - பரிபாடல் : 4. நின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றுள் நின், தண்மையும் சாயலும் திங்களுள நின், சுரத்தலும் வண்மையும் மாரியுள நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்துள் நின், நாற்றமும் ஓண்மையும் பூவையுள் நின், தோற்றமும் அகலமும் நீரினுள் நின், உருவமும் ஒலியும் ஆகாயத்துள் நின், வருகையும் ஒடுக்கமும் மருத்தினுள் அதனால், இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும் ஏம மார்ந்த நிற்பிரிந்து மேவல் சான்றன வெல்லாம் சேவலோங் குயர்கொடி யோயே. (3) 4. செம்பஞ்சு பளிங்கைச் சேர்வதால் பளிங்கின் நிறத்தையும் சிவப்பாகத் தோன்றச் செய்துவிடும். அது போல் பளிங்கனைய இறைவனும் கருதுபவர் கருத்துக்கு ஏற்ற உருவும் செயலும் உடையவனாகக் கருதப் பெறுகின்றான். - நீலகேசி : 747. பரமாத் துமனைப் பளிங்கடை போல வருமாத்து மாக்களின் மன்னும் விகாரம் தருமாத்திரையன்றித் தக்கதொன் றாக உருமாத் துமனை யுரைத்திடு கென்றாள். (4) 5. இறைவனுக்குத் திருவருளே குடையாகும். நல்லறமே செங்கோல் ஆகும்; அவன் குடைநிழலைச் சார்வாகக் கொண்டு தங்கியவர்க்கு வெம்மை இல்லை; அவன் செங்கோல் ஆட்சிக்கு ஆட்பட்டவர்க்குக் கொடுமை இல்லை. - பரிபாடல் : 3 அருள்குடை யாக அறம் கோல் ஆக இருநிழல் படாமை மூவேழ் உலகமும் ஒருநிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ. (5) 6. எளிதில் கிடைப்பதற்கு அரியதாம் இறைவன் திருவருளை ஒருவன் அடையப் பெறுவது, ஆழ்ந்து அகன்ற கடலில் வீழ்ந்து பட்ட மணி ஒன்றைத் தேடிக் கண்டடைந்தது போன்றதாம். - சீவகசிந்தாமணி : 3109. மழைக்குரல் உருமுவா வோத மாக்கடல் பிழைத்ததோர் அருமணி பெற்ற தொக்குமால் குழைத்தலைப் பிண்டியான் குளிர்கொள் நல்லறம் தழைத்தலைச் சந்தனப் பொதும்பர்ச் சார்ந்ததே. (6) 7. நினைப்பவர் நினைப்பவற்றை எல்லாம் உடனுக்குடன் தரும் நீர்மையுடைய தெய்வ மரத்தைச் சார்ந்தவர், தமக்கு உதவ வேண்டிப் பிறிதொரு கொடையாளனை நாடமாட்டார். அது போல் அருளே வடிவாய இறைவனது அருளறம் கேட்டவர்கள் பிறிதொன்றைக் கேட்க விரும்பார். - சீவகசிந்தாமணி : 3110. மல்கு பூங் கற்பக மரத்தின் நீழலான் நல்குவான் ஒருவனை நயந்து நாடுமோ மல்குபூம் பிண்டியான் அமிர்துண் டார்பிறர் செல்வங்கண் டதற்கவாச் சிந்தை செய்யுமோ. (7) 8. நற்பருவம் வாய்ந்து உடல் நலக் கூறுகள் ஒருங்கமைந்த மகளிரின் கூந்தல் மிகக் கருநிறம் அடையும். அக்கூந்தலின் கருநிறம் போன்றது, இறைவன் திருவடிகளை நினைத்து வாழ்த்தாத மடமை உடையவர்களது மாசற்ற நெஞ்சம். - கல்லாடம் : 1. கடவுள் கூறார் உளமெனக் குழலும் கொன்றை புறவகற்றி நின்றவிருள் காட்டின. (8) 9. இறைவன், பேரொளி பரப்பும் ஒளிவிளக்குப் போன்றவன். அவன் புற இருளை அன்றி அடியார்களது உள்ளத்தே பெருகிக் கிடக்கும் மலம் என்னும் இருளையும் அறவே கெடச் செய்வான். - கல்லாடம் : 56 அடியவர் உளத்திருள் அகற்றலின் விளக்கும். (9) 10. ஈருடலும் ஓர் உயிருமாகப் பிணைந்து வாழும் காதலனும் காதலியும் ஒத்த அன்பினால் கொடிய பாலை நிலத்தையும் எளிதில் கடந்து செல்வது போல், இறைவன் திருவடிகளையே அடைக்கலமாகக் கொண்ட அடியவர்களும் கொடிய பிறவி என்னும் பாலை நிலத்தைக் கடந்துவிடுவர். - கல்லாடம் : 6 குன்றுடுத் தோங்கிய கூடலம் பதியோன் தாள்தலை தரித்த கோளினர் போல நெடுஞ்சுரம் நீங்கத் தங்கால் அடுந்தழல் மாற்றிய காற்குறி இவணே. (10) 11. தன்னைத் தனியே விடுத்துப் பிரிந்து சென்ற தலைவன் மீண்டு வந்த போழ்தில் தலைவியைப் பற்றியிருந்த பிரிவுத் துயரும், பசலை நோயும் ஒழியும். அதுபோல் பெறுதற்கு அரியதாம் இறைவன் திருவடிப் பேற்றை அடைந்த அடியார் களுக்கும் பிறவிப் பிணியும், இருவினைகளும் அகலும். - கல்லாடம் : 30. கூடற்கு இறைவன் இருதாள் இருத்தும் கவையா வென்றி நெஞ்சினர் நோக்கப் பிறவியும் குற்றமும் பிரிந்தன போலப் பீரமும் நோயும் மாறின் வாரித் துறைவற் கென்னா தும்மே. (11) 2. அரசு 1. சமன்பாடு அமைந்த நிலத்தில் ஊர்ந்து செல்லும் தேர் சேரவேண்டிய இடத்தைத் தடங்கல் இன்றிச் சேரும். ஊர்ந்து செல்ல வேண்டிய நிலம் இன்னதென அறியாமல் இயக்கப் பெறும் தேர் இடைக்கண் முறிந்து அல்லல் படுத்தும். 'அரசு' என்னும் தேரின் செலவும் இத்தகையதே ஆகும். - சீவகசிந்தாமணி : 2909. ஆர்வலஞ் சூழ்ந்த ஆழி அலைமணித் தேரை வல்லான் நேர்நிலத் தூரும் ஆயின் நீடுபல் காலம் செல்லும் ஊர்நிலம் அறிதல் தேற்றா தூருமேல் முறிந்து வீழும் தார்நில மார்ப வேந்தர் தன்மையும் அன்ன தாமே. (1) 2. சக்கரமும் பார்ச்சட்டமும் நன்கு அமைந்து முறைப்படி சேர்க்கப்பெற்ற வண்டியே ஆயினும், அதனைச் செலுத்துபவன் தேர்ச்சி உடையவன் ஆனால் தான் கேடு எதுவும் இல்லாமல் இனிது செல்லும். அவன், வண்டியைச் செலுத்தும் தேர்ச்சி இல்லாதவன் ஆயின் சேற்றிலே பட்டு வண்டி சீரழிந்து போகும். அரசியல் என்னும் வண்டியைச் செலுத்துபவனுக்கும் இத்தகு தேர்ச்சி மிக்க வேண்டும். - புறநானூறு : 185. கால்பார் கோத்து ஞாலத் தியக்கும் காவல் சாகாடு உகைப்போன் மாணின் ஊறின்றாகி ஆறினிது படுமே உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும் பகைக்கூழ் அள்ளல் பட்டு மிகப்பஃறிநோய் தலைத்தலைத் தருமே. (2) 3. நிலம் போன்று பொறுமை, வானம் போன்று விரிந்த அறிவு, காற்றுப்போன்று வலிமை , தீப்போன்று கெட்டவற்றை அழித்தல், நீர் போன்று அருள் ஆளும் ஒருவன் உடையவன் என்றால் அவன் புகழொடும் விளங்குவான். அவன் குடிகளும் அச்சமின்றி வாழ்வர். - புறநானூறு : 2. மண்டிணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலைஇய தீயும் தீமுரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத் தியற்கை போலப் போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சிய தகலமும் வலியும் தெறலும் அளியும் உடையோய். (3) 4. ஒருவர் காக்கும் காவலுள் எல்லாம் தலையாய காவலாக இருப்பது தம் உயிர்க்காவல் ஒன்றே ஆகும். தம் உயிரைக் காத்து நெடுநாள் இன்பமாக வாழ்வதற்கு எடுத்துக்கொள்ளும் முயற்சியைப் போல் தம் நாட்டில் வாழும் மக்கள் அனைவரையும் காப்பதற்கு ஆள்வோர் முயற்சி எடுத்துக்கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களின் அடிநிழற்கண் உலகமே சூழ்ந்து தங்கும். - சூளாமணி : 266. மறந்தலை மயங்கி வையத் தொருவரை ஒருவர் வாட்ட இறந்தலை யுறாமை நோக்கி இன்னுயிர் போலக் காக்கும் அறந்தலை நின்ற வேந்தர் அடிநிழல் அன்றி யார்க்கும் இறந்ததொன் றில்லை கண்டாய் திருமணி திகழும் பூணோய். (4) 5. தம்மை வருத்திக் கொண்டும் பிற உயிர்களுக்குப் பெருநலந் தரும் செயல்களைச் செய்வதே தவம் ஆகும். அத்தவம் போலச் செயலாற்றும் தன்மை உடையதே ஆட்சிப் பொறுப்பு ஆகும். - சூளாமணி : 271. அருந்தவம் அரச பாரம் இரண்டுமே அரிய தம்மை வருந்தியும் உயிரை ஓம்பி மனத்தினை வணக்கல் வேண்டும் திருந்திய இரண்டும் தத்தம் செய்கையில் திரியும் ஆகில் பெருந்துயர் விளைக்கும் அன்றே பிறங்குதார் நிறங்கொள் வேலோய். (5) 6. அரசு என்பது ஒரு பொறி; அப் பொறிக்கு அமைச்சர் கண் ; நாட்டு மக்கள் கால் ; நண்பர் தோள்; ஒற்றர் காது; நூல் உள்ளுணர்வு. - சூளாமணி : 565. மந்திரக் கிழவர் கண்ணா , மக்கள் தன் தாள்க ளாகச் சுந்தர வயிரத் திண்தோள் தோழராச் செவிகள் ஓற்றா அந்தர உணர்வு நூலா அரசெனும் உருவு கொண்ட எந்திரம் இதற்கு வாயாத் தூதுவர் இயற்றப் பட்டார். (6) 7. களிற்றின் கன்னத்தால் உரிஞ்சித் தேய்க்கப் பெற்ற சந்தனமரம் நறுமணம் உடையதாக இருக்கும். அதுபோல் தம் குடிகளாக இருப்போர் அறியாமல் தவறு செய்வார்கள் ஆயின் அதனைப் பொறுத்துக்கொள்ளுதல் வேண்டும். அத்தகு ஆள்வோர் வழியில் உலகமுழுவதும் வழிபட்டுச் செல்லும். - சூளாமணி : 262. கண்ணியல் கடாத்த வேழம் கவுளினால் உரிஞப் பட்டுத் தண்ணிய தன்மை நீங்காச் சந்தனச் சாதி போலப் புண்ணியக் கிழவர் கீழோர் பிழைத்தன பொறுப்ப வாயின் மண்ணியல் வளாக மெல்லாம் வழிநின்று வணங்கும் அன்றே. (7) 8. அருள் மிக்க தாய் தன் குழந்தையை நெஞ்சார்ந்த அன்புடன் காவல் புரிந்து ஊட்டி வளர்ப்பது போல, ஆள்வோரும் அன்புடன் தம் நாட்டைக் காத்து வளர்த்தல் கடமையாகும். - (1) புறநானூறு : 5; (2) பெருங்கதை : 4 : 10 : 134. (1) அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல் குழவி கொள்பவரின் ஓம்புமதி அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே. (2) குழவிகொள் பவரின் இகழா தோம்பிப் புகழ்பட வாழ்க; புகழ்பிறிதில்லை . (8) 9. உரிமை அன்புடன் நாட்டைக் காவல் புரியும் ஆள்பவரை இழந்து அல்லலுற்றுத் தவிக்கும் நாடு , பேரன்புடைய தாயை இழந்து பெருந்துயர் கொள்ளும் குழந்தை போல் இரங்கத்தக்கது ஆகும். - (1) புறநானூறு : 230; (2) மணிமேகலை : 25 : 111. (1) பொய்யா எழினி பொருது களம் சேர ஈன்றோள் நீத்த குழவி போலத் தன்னமர் சுற்றம் தலைத்தலை இனையக் கடும்பசி கலக்கிய இடும்பைகூர் நெஞ்சமொடு நோயுழந்து வைகிய உலகு. (2) நீயொழி காலை நின்னா டெல்லாம் தாயொழி குழவி போலக் கூஉம் துயர்நிலை உலகம். (9) 10. ஆலமரத்தின் வீழ்து, அதன் அடிமரம், கிளை, கவடு முதலிய அனைத்தையும் தாங்கும். அதுபோல் அமைச்சரும் அனைத்து நலத் துறைகளையும் ஏற்று மக்கட்கு நலம் புரிதல் வேண்டும். - திரிகடுகம் : 33. கோலஞ்சி வாழும் குடியும் குடிதழீஇ ஆலம்வீழ் போலும் அமைச்சனும் வேலின் கடைமணிபோல் திண்ணியான் காப்பும் இம் மூன்றும் படை வேந்தன் பற்று விடல். (10) 11. வளமார்ந்த மரத்தின் தண்ணிய நிழல் தன் கீழ்த் தங்கியவர்க்கு நலம் பயக்கும். ஆனால் செங்கோல் முறைமைப் படி அமைந்து கடமை புரியும் ஆள்வோரின் குடை நிழலோ நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒருசேர நிழல் தந்து நலம் பயக்கும். - நற்றிணை : 146. கடனறி மன்னர் குடைநிழல் போலப் பெருந்தண் என்ற மரன் நிழல். (11) 12. கடற்கரைச் சோலையில் மலர்ந்த தாழையின் மணம் கடற்கரைப் பகுதியெங்கும் நறுமணம் பரப்பும். அதுபோல் செம்மையும் அருளும் சேர ஆள்வோர் புகழும் நாடெங்கும் பரவும். - கல்லாடம் : 2. விரிசடை மறைத்து மணிமுடி கவித்து விடைக்கொடி நிறுத்திக் கயற்கொடி யெடுத்து வழுதி யாகி முழுதுல களிக்கும் பேரருள் நாயகன் சீரருள் போல மணத்துடன் விரிந்த கைதையங் கானம். (12) 13. செம்பஞ்சு ஊட்டினால் போன்ற சிவந்த விதைகளை யுடைய மாதுளம் பழத்தின் தோற்றத்தையும், விதையையும் அதன் சிவந்த பூவே வெளிப்படுத்திவிடும். அதுபோல் ஆள்வோரது உண்மை உருவத்தை அவர் வாயில் இருந்து வரும் சொற்களே தெளிவாக வெளிப்படுத்திவிடும். - சூளாமணி : 275. பஞ்சிநன்றூட்டப் பட்ட மாதுளம் பருவ வித்து மஞ்சில்நின் றகன்ற சாகை மலரிடை வடிவு காட்டும் அஞ்சிநின் றனலும் வேலோய் சூழ்ச்சியும் அன்ன தேயால் வெஞ்சொலொன் றுரைக்க மாட்டா விடு சுடர் விளங்கு பூணோய். (13) 14. வன்பகை எதுவும் வந்து தாக்காமல் வலிய புலி தன் இளைய குட்டியைக் காக்கும். அதுபோல் வேற்று நாட்டவர் எவரும் புகுந்து தம் நாட்டுக்கு அழிவு செய்யாமல் படைவீரர் காவல் புரிவர். - புறநானூறு : 42. புலிபுறங் காக்கும் குருளை போல மெலிவில் செங்கோல் நீபுறம் காப்ப. (14) 15. புலி தங்கியுள்ள செறிவு மிக்க காட்டில் தன் ஆடுகளை ஓட்டிக்கொண்டு அறிவுடைய இடையன் போக மாட்டான். அதுபோல் வலிய வீரர்களை வாய்க்கப்பெற்ற நாட்டினுள் பகைவர் தம் படையுடன் எளிதில் துணிந்து புகமாட்டார். - புறநானூறு : 54. பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி மாசுண் உடுக்கை மடிவாய் இடையன் சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப் புலிதுஞ்சு வியன்புலத் தற்றே வலிதுஞ்சு தடக்கை அவனுடை நாடே . (15) 16. மக்கள் நலன் கருதாமல் ஆண்டு, கேடுகள் செய்த கொடுங்கோல் வேந்தன் பகைவரின் போர்க்களத்தில் தக்க பாதுகாப்பு இன்றிப் பட்டழிவது, மலையிடை மறைந்து போய்க் கடலிடை வீழும் கதிரொளி போன்றது. - கல்லாடம் : 38. கோடிய கோலினன் செருமுகம் போலக் கனைகதிர் திருகிக் கல் சேர்ந்து முறைபுக. (16) 17. உலகத்து இருளையெல்லாம் ஒருங்கே வளைத்துக் கொண்ட இடையாமத்து இருள், அரசியல் விதி முறையில் நடக்காத கொடுங்கோல் ஆட்சியாளன் நாட்டில் நிரம்பி வழியும் குற்றப் பெருக்குப் போல்வது. - கல்லாடம் : 8. மறைவழி ஒழுகா மன்னவன் வாழும் பழிநாட்டார்ந்த பாவம் போலச் சேர மறைத்த கூரிருள் நடுநாள். (17) 18. ஆட்சித் தெளிவுடைய அறிஞர்களுக்கு அத் தெளிவு இல்லாதவர்கள் அறிவுரை கூறுவது, கற்றறிந்த பெருமக்களிடம் கதை கூறுவது போன்றது. - சூளாமணி : 276. கொற்றவேல் மன்னர்க்கு ஓதும் குணமெலாம் குழுமி வந்து முற்றுநின் றுருவு கொண்ட மூர்த்திநின் முன்னர் யாங்கள் இற்றென உரைக்கும் நீதி ஓதுநூல் எல்லை காணக் கற்றவர் முன்னை ஏனோர் கதையொத்துக் காட்டும் அன்றே. (18) 19. காடும் மலையும் நிலைகுலைந்து, வளம் குறைந்து, வெப்பம் மிகுந்து அமைவதால் பாலை என்னும் நிலம் உண்டாகும். அப் பாலை நிலம், பழம் பகைவருடன் நெருங்கி உறவாடியும், தன் துணையாயவரைப் பகைத்தும், காலம், இடம், வலி அறியாமல் செயலாற்றியும், புறப்பகைக்கு இடம் தந்து, உட்பகை உண்டாக வழி செய்தும் நல்லோர் உரையைப் புறக்கணித்தும் ஆட்சிபுரியும் அறிவில்லாரது நாடு போன்றது. - சிலப்பதிகாரம் : 11 : 60-66; கல்லாடம் : 3. கோத்தொழிலாளரொடு கொற்றவன் கோடி வேத்தியல் இழந்த வியனிலம் போல வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தானலந் திருகத் தன்மையிற் குன்றி முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்தும் பாலை என்பதோர் படிவங் கொள்ளும் பகையுடன் கிடந்த நிலை பிரி வழக்கினைப் பொருத்தலும் பிரித்தலும் பொருபகை காட்டலும் உட்பகை அமைத்தலும் உணர்த்துசொற் பொருத்தலும் ஒரு தொழிற் கிருபகை தீராது வளர்த்தலும் செய்யா அமைச்சுடன் சேரா அரசன் நாடு கரிந்தன்ன காடு. (19) 20. கொடுமை செய்தலைக் கடமையாகக் கொண்டுள்ள ஆள்வோன் எப்பொழுது ஒழிவான் என மக்கள் எதிர்நோக்கி யிருப்பர். அவ்வாறு எதிர்நோக்குதல் தாங்க முடியாத வெம்மையைத் தந்த கோடைக் கொடுங்கதிரோன் எப்பொழுது மறைவான் என எதிர்நோக்கி இருப்பது போன்றது. - சிலப்பதிகாரம் : 13 : 15 16. கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப் படுங்கதிர் அமையம் பார்த்திருந் தோர். (20) 21. தீயவர்களைத் தோழமையாக்கி அவர்கள் வழியில் சென்று ஆள்வோர் தம் நாட்டு மக்கட்குக் கேடு செய்வராயின், புலிக்கு அஞ்சிய புள்ளிமான் போல மக்கள் அலக்கண் அடைந்து அயலிடங்கட்குத் தப்பியோட வேண்டிய கொடுமை உண்டாகும். - சூளாமணி : 265. தீயினம் படர்ந்து வேந்தன் செறுவதே புரியும் ஆயின் போயினம் படர்ந்து வாழும் புகலிடம் இன்மை யாலே வேயினம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவிப் புல்வாய் மாயினம் படர்வ தெல்லாம் வையகம் படரும் அன்றே . (21) 22. தலைவனைப் பிரிந்த தலைவிக்குத் தென்றல் காற்று வெம்மை மிக்கதாகவும், அவனைச் சேர்ந்த தலைவிக்கு அது தண்மை மிக்கதாகவும் இருக்கும். அதுபோல் செங்கோல் ஆட்சியாளரைச் சேராதவர் துன்பத்தையும் சேர்ந்தோர் இன்பத்தையும் அடைவர். - கல்லாடம் : 51 பெருமறை நூல் பெறு கோன்முறை புரக்கும் பெருங்கதை வேந்தன் அருங்குணம் போல மணந்தோர்க் கமுதும் தணந்தோர்க் கெரியும் புக்குழிப் புக்குழிப் புலன்பெறக் கொடுக்கும் மலையத் தமிழ்க் கால். (22) 23. காய்த்த நெற்கதிரை அறுத்துச் சோறாக்கிக் கவளம் - கவளமாகத் திரட்டி யானைக்குத் தந்தால் 'மா' அளவு நிலத்து வருவாயும் பல நாட்களுக்கு உணவாகும். ஆனால் யானையை மனம்போன போக்கில் அவிழ்த்துக் கழனியில் விட்டுவிட்டால் அதன் வாயில் போவதைப் பார்க்கிலும் காலில் பட்டு அழிவதே மிகுதியாகும். அதுபோல் ஆள்வோர் உரிய முறையில் வரி வாங்கித் தக்க வழிகளுக்குப் பயன்படுத்தினால் நாடும் மக்களும் நலமுற வாழ்வர். அவ்வாறன்றித் தகவற்ற முறையில் நடுங்கச் செய்து வரி வாங்கினால் அப்பொருள் அவருக்குப் பயன்படாததுடன் நாட்டுக்கும் கேடு தரும். - (1) புறநானூறு : 184. (2) சீவகசிந்தாமணி : 2907. (1) காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே மாநிறை வில்லதும் பன்னாட் காகும் நூறுசெறு ஆயினும் தமித்துப்புக் குணினே வாய்புகு வதனினும் கால் பெரிது கெடுக்கும் அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடு பெரிது நந்தும் மெல்லியன் கிழவன் ஆகி வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின் யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே. (2) வாய்ப்படும் கேடும் இன்றாம் வரிசையின் அரிந்து நாளும் காய்த்தநெல் கவளம் தீற்றில் களிறுதான் கழனி மேயின் வாய்ப்படல் இன்றிப் பொன்றும் வல்லனாய் மன்னன் கொள்ளின் நீத்த நீர் ஞாலம் எல்லாம் நிதி நின்று சுரக்கும் அன்றே. (23) 24. கொடிய பாலைவனத்தில் உலர்ந்தும் பட்டுப் போயும் நிற்கும் மரங்கள், கொலைத் தொழிலுக்கும் அஞ்சாத அமைச்சர் கொள்ளையடிப்போர் மக்களிடம் வரிவாங்கி அல்லற்படுத்த, அவர் ஆட்சியின் கீழ்ப்பட்டு வெம்பிப் போய் நிற்கும் மக்களைப் போன்றன. - கலித்தொகை : 10 அலவுற்றுக் குடிகூவ ஆறின்றிப் பொருள் வெஃகிக் கொலையஞ்சா வினைவரால் கோல் கோடி அவன்நிழல் உலகுபோல் உலறிய உயர்மர வெஞ்சுரம். (24) 25. ஆற்றமுடியாக் கவலைப்பட்டு நாட்டு மக்கள் நலிந்து அரற்ற, அதனை மாற்ற முடியாத ஆட்சியாளர் படும் கவலை, கடலிடைச் சென்ற கப்பல் சிதைந்து போக அச்சிதைவுக்கு ஆட்பட்டோர் கடலில் வீழ்ந்து தத்தளிக்குங்கால் அவர்களுக்கு உதவமாட்டாத கப்பலோட்டியின் கவலை போன்றது. - பெருங்கதை : 2:9:46. கூற்றுறழ் வேழம் குணஞ் சிதைந் தழியச் சீற்ற வெம்புகை செருக்க ஊட்டிக் கலக்கிய காலை விலக்குநர்க் காணாது நாவாய் கவிழ்த்த நாய்கள் போல ஓவா அவலமொடு காவலன் கலங்கி . (25) 26. முறை கேட்க வேண்டி மக்கள் நாடி வந்த போது ஆள்வோர் அவர்களைக் காலத்தாழ்வு சிறிதும் இல்லாமல் கண்டு, அவர்கள் கூறும் குறைகளைக் கேட்டு முறை வழங்குதல் வேண்டும். அவ்வாறு முறை வழங்குவது மழை வேண்டும்' என்று வேண்டிக்கொண்ட அளவில் பெய்தால் எத்தகைய நலம் பயக்குமோ அத்தகைய நலத்தை நாட்டு மக்கட்கு உண்டாக்கும். - புறநானூறு : 35. அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து முறை வேண்டு பொழுதில் பதன்எளி யோர்ஈண்(டு) உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோரே. (26) 27. கடல் நீர் வெதும்பிச் சுடுவதாயின் அந்நீருள் வாழும் உயிர்கள் படும் அல்லலைச் சொல்ல வேண்டுவது இல்லை. அது போல், ஆள்பவர்கள் அருளற்ற கொடியவர்கள் ஆயின் அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட மக்கள் படும் பாட்டையும் சொல்லி முடியாது. - சூளாமணி : 263 நிறந்தலை மயங்கி வெம்பி நெடுங்கடல் சுடுவ தாயின் இறந்தலை மயங்கு நீர்வாழ் உயிர்க்கிடர் எல்லை யுண்டே மறந்தலை மயங்கு செவ்வேல் மன்னவன் வெய்யன் ஆயின் அறந்தலை மயங்கி வையம் அரும்படர் உழக்கும் அன்றே. (27) 28. இருள் தொகுதியை ஒழித்து ஒளிபரப்பும் கதிரோனால், ஒளிபெற்ற சூரிய காந்தக் கற்பாறை' பேரொளி செய்யும். அதுபோல் ஆள்வோர்க்குரிய ஒளி மிகுதியால் இயற்கை ஒளியுடைய அறிஞர்கள் மேலும் ஒளியுடைய வர்களாக விளங்குவார்கள். - சூளாமணி : 258. பொழிற்கதிர் பரப்பி வந்து பொங்கிருள் புதைய நூறும் தொழிற்கதிர்க் கடவுள் தோன்றச் சூரிய காந்தம் என்னும் எழிற்கதிர்ப் பிறங்கல் வட்டம் எரியுமிழ்ந்திடுவ தன்றே அழற்கதிர் இலங்கும் செவ்வேல் அதிர்கழல் அரசர் கோவே. (28) 29. திங்கள் வெளிப்பட்டு நிலவொளியைச் சொரிவதால் 'சந்திர காந்தக் கல்லின் ஒளிமிகுதியாவதுடன், தண்ணீர் ஒழுக்கும் உண்டாகும். அதுபோல் ஆள்வோர்க்குரிய ஒளியால் அறிஞர்கள் ஒளி பெறுவதுடன் உயிர்களுக்கு நன்மை தரும் அருட்செயல்களையும் செய்வார்கள். - சூளாமணி : 260 சூழ்கதிர்த் தொகுதி மாலைச் சுடர்ப்பிறைக் கடவுள் தோன்றித் தாழ்கதிர் சொரிந்த போழ்தில் சந்திர காந்த மென்னும் வீழ்கதிர் விளங்கு வட்டம் - வெள்ள நீர் விரியும் அன்றே போழ்கதிர் பொழிந்து பொங்கிப் புலால்நிணம் பொழியும் வேலோய். (29) 30. தண்ணிய பளிங்கு போன்ற நீர் நடுவே நின்றால் கூட, விண்ணிலே எழும்பிவரும் செங்கதிரைக் கண்டே தாமரை மலர்ந்து மணம் பரப்பும். அதுபோல் அரசர் குடியிலே தோன்றி நற்பேறுகளிலே வாழும் ஆள்வோரே எனினும் சீரிய அறிஞர் களின் துணைகொண்டே சிறப்படைவர். - சூளாமணி : 234 தண்ணிய தடத்தவே எனினும் தாமரை விண்ணியல் கதிரினால் விரியும் வேந்தரும் புண்ணியப் பொதும்பரே புரிந்து வைகினும் கண்ணிய புலவரால் அலர்தல் காண்டுமே. (30) 31. காற்று தக்கவாறு வீசுமேயானால் சிறிய படகும் கடலின் கரையை எளிதில் அடைந்துவிடும். அதுபோல் நூலறிவும் நுண்ணறிவும் உடையவர் துணை வாய்ப்பின் ஆள்வோர் தாம் கருதிய செயலை இனிது முடிப்பர். - சூளாமணி : 235. மாலமர் நெடுங்கடல் மதலை மாசிலாக் காலமைந் தொழுகுமேல் கரையும் காணுமே நூலவர் நுழைவொடு நுழைந்து செல்லுமேல் வேலவர் ஒழுக்கமும் வேலை காணுமே. (31) 32. 'காகா' என ஆரவாரம் செய்யும் இயல்புடையது காகம் என்றாலும் இல்லத்தின் ஒருபக்கம் தங்கும் போது உள்ளடங்கிய ஒலியுடையதாக இருக்கும். அதுபோல் ஒற்றர் தொழில் மேற்கொண்டவர் தம் தொழிலுக்கு ஏற்றவண்ணம் அடக்க ஒடுக்கமாக நடந்து தம்மை வெளிக் காட்டாதவராக இருத்தல் வேண்டும். - அகநானூறு : 313 ஒற்றுச்செல் மாக்களின் ஒடுங்கிய குரல் இல்வழிப் படூஉங் காக்கைக் கல்லுயர் பிறங்கல் மலை. (32) 33. ஆள்வோர் ஒருவரே எனினும் செயலாற்றுதலால் அவர் தாயாகவும், தீயாகவும் இருத்தல் வேண்டும். தம் நாட்டு மக்களைக் காத்தலால் தாயாகவும், மாறுபட்டு எழுந்த பகைமையை அழித்தலால் தீயாகவும் அமைவதே அவர் கடைப்பிடிக்க வேண்டிய இரண்டு நிலைமைகளாம், - நீலகேசி : 22 ஆற்ற லால் அரிசி மா அவன் ஆணையாற் கூற்ற மேஎனக் கூறலும் ஆம்குடி போற்றல் தாயனை யான்பொருந் தார்கள்மேல் சீற்றத்தால் தெறு தீத்திர ளேயான். (33) 34. ஆளும் திறம் இல்லாத ஒருவன் மேல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுவது, சுமக்க மாட்டாத ஒருவன் மேல் பெரும்பாரத்தை ஏற்றுவது போன்றது. திறம் வாய்ந்த ஒருவன் ஆட்சிப் பொறுப்பு ஏற்பது, கோடை வெப்பத்தால் உலர்ந்த நெட்டிச் சுள்ளிபோல் சுமையற்றது. - புறநானூறு : 75. மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின் எய்தினம் சிறப்பெனக் குடிபுர விளக்கும் கூரில் ஆண்மைச் சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே; மண்டமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின் ஆழ்நீர் அறுகய மருங்கில் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் நொய்தால் அம்ம தானே மையற்று விசும்புற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே. (34) 35. கதிரோன் மறைந்து இருள் சூழ்ந்த பின்னரே விண்மீன்கள் வெளிப்பட்டுத் தோன்றும். அதுபோல் ஆள்வோர் வலிமையாய் அமைந்து செங்கோல் செலுத்தும்போது மறைந்து கிடந்த குறும்பர்கள், ஆள்வோர் வலிமை குன்றத் தொடங்கிய வுடன் வெளிப்பட்டுச் சிறு செயல் செய்வர். - பெருங்கதை, 1:33:48. நிறைகடல் மண்டிலம் நேமி உருட்டிய இறைகெழு பெருவிறல் எஞ்சிய பின்றைக் கடங்கண்ண ரிந்த கையர் ஆகி இடந்தொறும் பல்கிய மன்னர் போல வரம்பில் பன்மீன் வயின்வயின் விலங்கிப் பரந்து தரும்பிய பச்லை வானம். (35) 36. விரிந்த கதிர்களையுடைய கதிரோன் ஒளிபரப்பி மறைந்து போக, திங்கள் வெளிப்படும் முன்னர் அமைந்த அந்திமாலை இருள், நல்லவர் ஆட்சி செலுத்தி மறைய, வேறொருவரின் ஆட்சி வருதற்கு முன்னர், குறும்பர்கள் நாட்டைப் பற்றிக்கொண்டு குடிகளைத் துன்புறுத்துவது போன்றதாம். - சிலப்பதிகாரம், 4:1-11. விரிகதிர் பரப்பி உலகமுழு தாண்ட ஒரு தனித் திகிரி உரவோற் காணேன் அங்கண் வானத் தணிநிலா விரிக்கும் திங்கள் செல்வன் யாண்டுளன் கொல்லெனத் திசைமுகம் பசந்து செம்மலர்க் கண்கள் முழுநீர் வார முழுமெயும் பனித்துத் திரைநீர் ஆடை இருநில மடந்தை அரைசுகெடுத் தலம் வரும் அல்லல் காலைக் கறைகெழு குடிகள் கை தலை வைப்ப அறைபோகு குடிகளொ பொருதிறம் பற்றி வலம்படு தானை மன்னர் இல்வழிப் புலம்பட இறுத்த விருந்தின் மன்னர். (36) 37. கதிரோன் தோன்றி ஒளியைப் பொழியவும் திரளையாகப் படிந்திருந்த இருள் ஒழியும். அதுபோல் செவ்விய அரசு அமைந்து ஆற்றலுடன் திகழுமாயின் கேடுசெய்யும் உட்பகை சிறிதும் தலை காட்டாது. - சூளாமணி : 1066. ஆணைசெய் தரசுவீற் றிருப்ப ஆயிடைக் கோணைசெய் குறும்புகூர் மடங்கும் ஆறுபோல் சேணுயர் திகிரியான் கதிர்சென்றூன்றலும் பாணியாற் கரந்தன பரந்த சோதியே. (37) 38. ஆளும் வல்லமை இல்லாதவன் தான் சிறந்த செல்வக் குடும்பத்தில் பிறந்தது ஒன்றே கொண்டு நாடாளக் கருதுவது, உறங்கும் ஊமையாளன் கண்ட கனாப்போல் பயனற்று ஒழியும். - திரிகடுகம் : 7. வாளைமீன் உள்ளல் தலைப்படலும் ஆளல்லான் செல்வக் குடியுள் பிறத்தலும் - பல்லவையுள் அஞ்சுவான் கற்ற அருநூலும் இம்மூன்றும் துஞ்சூமன் கண்ட கனா. (38) 39. தக்க பொறுப்பும் சிறப்பும் உடைய உயர்ந்த பதவியைத் தகவில்லா ஒருவன் மேல் வைப்பது, உயர்ந்த யானையின் மேல் இட்டிருந்த வண்ண வேலைப்பாடுடைய அழகிய தவிசை நாயின் மேல் இடுவது போன்றது. - சீவகசிந்தாமணி : 202. அண்ணல்தான் உரைப்பக் கேட்டே அடுகளிற் றெருத்தின் இட்ட வண்ணப்பூந் தவிசு தன்னை ஞமலிமேல் இட்ட தொக்கும் கண்ணகல் ஞாலம் காத்தல் எனக்கெனக் கமழுங் கண்ணி மண்ணகம் வளரும் தோளான் மறுத்து நீ மொழியல் என்றான். (39) 40. தன் மகள் என்னும் ஒரே ஒரு விருப்பத்தால் கண், கால், கை முதலிய உறுப்புக்கள் இல்லாத ஒருத்தியை அழகி என்று அறிவுடைய எந்தத் தந்தையும் உரைக்க மாட்டான். அதுபோல் தகுதி இல்லாத் தன்மை உடைய தலைவன் ஒருவனைத் தன் அன்புக்கு உரியவன் என்ற ஒன்று மட்டும் கருதி ஆன்றோர் உயர்த்திக் கூறார். - நீலகேசி : 191. கண்ணொடு காதிவையிலள் கரந்தன முலையிரண்டு முன்னும் வாய் உதட்டொடு மூக்கிலள் உறு நோய்த்தி பெண்ணழகிற் கிவள்பிறராற் பேசவும் படுவாளோ எண்ணுங்கால் என்பதை எனஉரைக்கும் அவன் ஒத்தான். (40) 41. கலம் வனைதற்கு என்று சக்கரத்தில் வைக்கப்பட்ட மண், வனையும் குயவன் கருத்துப்போல் உருவாகி வெளியேறும். அதுபோல் ஆள்பவர்கள் கருத்துக்கு ஏற்றவண்ணமே அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட மக்கள் கருத்தும் உருப்பெற்றுச் செயலுக்கு வரும். - புறநானூறு : 32. வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த பசுமண் குரூஉத்திரள் போலவவன் கொண்ட குடுமித்தித் தண்பணை நாடே. (41) 3. இல்வாழ்வு 1. அறிவு, உரு, திரு முதலியவற்றால் ஒப்புமையுடைய தலைவன் தலைவியர் அழகும் மணமும் உடைய இரட்டை மாலைகள் ஒருங்கு பிணைந்த ஒரு மாலை போன்ற பொலிவு உடையவர் ஆவர். - குறுந்தொகை : 229 துணைமலர்ப் பிணையல் அன்னஇவர் மணமகிழ் இயற்கை . (1) 2. ஓருயிரை இரண்டு உடற்கண்ணே பகுத்து வைக்கப் பெற்றால் போன்ற மாண்புடையது தலைவன் தலைவியர் ஒன்றுபட்ட நிலைமை. - நற்றிணை : 128 நினக்கு யான், உயிர்பகுத்தன்ன மாண்பினனே. (2) 3. அன்புப் பெருக்குடைய தலைவன் தலைவியர், இரண்டு தலைகளைக் கொண்ட ஒரு பறவை போல் உணர்வாலும், செயலாலும் ஒன்றுபட்டு வாழ்வர். - அகநானூறு : 12 யாமே, பிரிவின் றியைந்த துவரா நட்பின் இருதலைப் புள்ளின் ஓருயி ரம்மே. (3) 4. உயிரொடு கலந்து தோன்றும் உயர்ந்த தலைவன் தலைவியரின் அரிய நட்பு, அவிழ்த்துப் பிரித்தெடுக்க இயலாத முடிச்சுப் போல்வதாம். - குறுந்தொகை : 313 யாத்தே யாத்தன்று நட்பே அவிழ்த்தற் கரித்து முடிந்தமைந் தன்றே. (4) 5. என்றும் இணைபிரியாமல் வாழும் தலைவன் தலைவியரின் இனிய வாழ்வு, என்றும் வெள்ளப்பெருக்கு ஒழியாத ஆற்றின் பெரிய கரையிலே இருக்கும் வளமான மரம் போன்றது ஆகும். - குறுந்தொகை : 368 நாளிடைப் படாஅநளிநீர் நீத்தத் திண்கரைப் பெருமரம் போலத் தீதில் நிலைமை முயங்குகம் பலவே. (5) 6. நீர்வழியில் செல்ல விரும்புபவர்க்கு மிதவை துணையாக இருந்து உதவும். அதுபோல் இல்வாழ்வு, பேரின்பம் அடையக் கருதுவார்க்குத் துணையாக உதவும். - இன்னிலை : 21 துணைஎன்ப காம விருந்துய்ப்பார் தோமில் இணைவிழைச்சின் மிக்காகா ராகல் - புணைதழீஇக் கூட்டுங் கடுமிசையான் கட்டியிற் கொண்டற்றால் வேட்டபோழ் தாகும் அணி. (6) 7. மெல்லியல் தன்மையால் வளர்ந்தோங்கும் மகளிர், முல்லைப் பூங்கொடி போன்றவர். நல்லியல் சுரக்கும் ஆடவர் முல்லைக்கொடியை மலரச் செய்யும் மாரிக்கால மழை போன்றவர். - சூளாமணி : 1123 உலம்பா ராட்டுந் தோளவன் ஒண்பூங் குழலாளை நலம்பா ராட்டி நாகிள முல்லை நகுவிக்கும் வலம்பா ராட்டி வந்ததொர் மாரிப் புயலொத்தான் குலம் பாராட்டும் கொம்புமொர் முல்லைக் கொடியொத்தாள். (7) 8. தலைவனும் தலைவியும் மணியும் அதனுள் தோன்றிய நீரும் போன்று வேறுபட்டவர் அல்லர்; மணியும் அதன் ஒளியும் போல் ஒன்றுபட்டவர் ஆவர். நல்கிய கேள்வன் இவன்மன்ற மெல்ல மணியுள் பரந்த நீர் போலத் துணிபாம். (8) 9. உலகத்துக்கு ஒளியூட்டும் கதிரை நோக்கித் தாமரை மலரும். அதுபோல் இயற்கை உணர்ச்சியால் உந்தப்பெற்ற தலைவி தன் தகுதிக்கு ஒப்பான தலைவனைத் தேர்ந்தெடுத்து மகிழ்வாள். - பெருங்கதை : 4:15:65 ஞாலம் விளக்கும் ஞாயிறு நோக்கிக் கோலத் தாமரை கூம்பவிழ்ந் தாங்குத் தன்பாற் பட்ட அன்பின் அவிழ்ந்த நன்னுதல் மகளிர். (9) 10. இனிய அன்புடைய உயர்ந்த தலைவன் கதிரோனைப் போன்றவன். அவன் அன்புக்குரிய தலைவி , கதிரை நோக்கி மலரும் நெருஞ்சி போன்றவள். - (1) குறுந்தொகை : 315; (2) பெருங்கதை : 2:4:14 (1) (1) எழுதரு மதியம் கடற்கண் டாஅங்கு ஒழுகுவெள் ளருவி ஓங்குமலை நாடன் ஞாயிறனையன் தோழி நெருஞ்சி அனையவென் பெரும்பணைத் தோளே. (2) செங்கதிர் விரும்பும் பைங்கொடி நெருஞ்சிப் பொன்புனை மலரின் புகற்சி போல வெறுத்த வேட்கைத் தாமுளம் சிறப்பக் காதலற் கவாஅம் காம நோக்கம். (10) 11. பலவகைத் துயரங்களும் நிரம்பிய உலகியல் வாழ்வில் ஒருவனுக்கு உயிர்த்துணையாம் நல்ல தலைவி ஒருத்தி வாய்ப்பது, சுழித்துச் செல்லும் வெள்ளத்தில் பட்டு அலமரும் ஒருவனுக்கு வலிய மிதப்பு ஒன்று கையகத்துவந்து வாய்த்தது போல் நலமாக்கும். - பெருங்கதை : 2:17:122 அருஞ்சுழி நீத்தத் தாழும் ஒருவன் பெரும்புணை பெற்ற பெற்றி போல நிற்பெறு சிறப்பு. (11) 12. தென்கடலில் இடப்பட்ட நுகக்கழி ஒன்று வட கடலில் போடப்பெற்ற நுகக்கோல் துளையில் தானே சேர்ந்து செறிந்து கொண்டது போன்றது, வெவ்வேறிடத்துப் பிறந்து வளர்ந்த தலைவன் தலைவியர் உயிர் கலந்து ஒன்றிய நட்பினராகி வாழ்வது. - பெருங்கதை : 1:32:17 13. ஞாயிறும் திங்களும் தாம் செல்லும் தனித்தனி வழி விலகி ஒருவழிப்பட்டது போல் அமைந்தது. வெவ்வேறிடத்துத் தலைவனும் தலைவியும் ஓரிடத்துக்கூடிய ஒன்றுபட்டு வாழ்வது. - பெருங்கதை : 1:32:22. தென்கடல் இட்டதோர் திருமணி வான்கழி வடகடல் நுகத்துளை வந்து பட் டாஅங்கு நனிசேண் இட்ட நாட்டின ராயினும் பொறைபடு கருமம் பொய்யா தாதலில் சிறைபடு விதியில் சென்றவள் குறுகி மதியமும் ஞாயிறும் கதிதிரிந் தோடிக் கடல் நிற விசும்பில் உடனின் றாங்குப் பைந்தொடிச் சுற்றமொடு தந்தை தலைத்தாள் ஆயத் திடையோள் பாசிழைப் பாவை யானை மிசையோன் மாமுடிக் குருசில் இருவரும் அவ்வழிப் பருகினர். (12-13) 14. உருவினை விடுத்து எத்தகு முயற்சியாலும் பிரிக்க இயலாத ஒன்று நிழல். அது போல் காதல் என்னும் உயரிய தன்மையும் காதல் உடையாரை விட்டுப் பிரிக்க முடியாத ஒன்றாகும். - சீவகசிந்தாமணி : 1511 கழலும் நெஞ்சொடு கைவளை சோருமால் சுழலும் கண்களும் சூடுறு பொன்னென அழலும் மேனியும் ஆற்றலென் ஐயவோ நிழலின் நீப்பரும் காதலும் நீத்தியோ. (14) 15. புகழ் மிகக் கொண்டு வாழ்பவர்களுடைய செல்வம் மேலும் மேலும் பெருகிப் பொலிவடையும். அதுபோல் அன்புடையார் ஒருவரை ஒருவர் காணுந் தோறும் மேலும் மேலும் அன்பு பெருகிப் பொலிவடையும். - நற்றிணை : 217. இசைபட வாழ்பவர் செல்வம் போலக் காண்டொறும் பொலியும். (15) 16. கள்ளால் உண்டாகிய விருப்பு நோயை அக்கள்ளே தீர்க்க வல்லது. அது போல் காதலால் உண்டாகிய நோயைத் தீர்க்கவல்லது காதல் ஒன்றே ஆகும். - பெருங்கதை : 2:16:63. நறவிளை தேறல் உறுபிணி போலப் பிறிதில் தீராப் பெற்றி. (16) 17. ஈன்ற தாயின் இனிய முகம் நோக்கி வளரும் தன்மையினது ஆமையின் பார்ப்பு. அதுபோல் தலைவனைப் பல்கால் காணுத லால் பெருகி வளரும் பேற்றினது தலைவியின் காதல். - குறுந்தொகை : 152. யாவதும் அறிகிலர் கழறு வோரே தாயின் முட்டை போலவுட் கிடந்து சாயின் அல்லது பிறிதெவன் உடைத்தோ. யாமைப் பார்ப்பின் அன்ன காமம் காதலர் கையற விடினே. (17) 18. பிறிதொருவர் அறியாமல் பருகிய கள்ளால் களிப்புக் கொண்ட ஒருவன், பின்னர்ப் பிறர்க்கு நாணாமல் பருகவும் துணிவான். அத்துணிவு கள்ளுக்கே அன்றிக் காதல் வாழ்வுக்கும் உண்டாதல் உண்டு. - கலித்தொகை : 115. காணாமை உண்ட கடுங்கள்ளை மெய்கூர நாணாது சென்று நடுங்க உரைத்தாங்குக் கரந்ததூஉம் கையோடு கோட்பட்டாம் கண்டாய். (18) 19. பாம்பின் குட்டி உருவால் சிறியதே என்றால் கூட, விலங்கில் பெரிய வலிய யானையையும் துன்புறுத்தி வீழ்த்த வல்லது. அதுபோல் மெல்லியல் தன்மை வாய்ந்த தலைவியின் காதல், வல்லாண்மை மிக்க தலைவனையும் வருத்தும் தகையது ஆகும். - குறுந்தொகை : 119. சிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளை கான யானை அணங்கி யா அங்கு இளையள் முளைவாள் எயிற்றள் வளையுடைக் கையள் எம் அணங்கி யோளே. (19) 20. நீர், மேலும் மேலும் பெருக்கெடுத்து மோதுதலால் ஓங்கிய மணற்கரை அழியும். அதுபோல், காமம் மிகுந்து உள்ளத்தில் மோதுதலால் நாணம் சிதையவும் நேரிடும். - குறுந்தொகை : 149 வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறு சிறை தீம்புனல் நெரிதர வியந்துக் காஅங்குத் தாங்கும் அளவைத் தாங்கிக் காமம் நெரிதரக் கைந்நில்லாதே. (20) 21. உப்பைக் குவித்து அணையாகக் கட்டிவைத்தாலும் அவ்வணை வெள்ளத்தைத் தடுத்து நிறுத்திவிடாது. அதுபோல் காமம் என்னும் வெள்ளப் பெருக்கு உண்டாகிய போது நாணம் என்னும் அணை அதனைத் தடுத்து நிறுத்தி விடாது. - அகநானூறு : 208 மிகுபெயல், உப்புச்சிறை நில்லா வெள்ளம் போல நாணுவரை நில்லாக் காமம். (21) 22. தான் உயிராகப் பேணி வளர்த்து வந்த அன்பு மகவைப் பலி கொடுத்தற்குத் தாயொருத்தி கைவிட்டால் போன்றது, உயிரொடும் தோன்றிய நாணத்தைக் காதல் நிமித்தமாகக் கைவிடுவது. - நற்றிணை : 15 மாசில் கற்பின் மடவோள் குழவி ஒய்ய வாங்கக் கைவிட் டாங்குச் சேணும் எம்மொடு வந்த நாணும் விட்டேம் அலர்கவிவ் வூரே. (22) 23. நீங்காக் காதலால் நெஞ்சம் உருகி நைபவர் நிலைமை, திரட்டி வைக்கப்பெற்ற வெண்ணெய்க் குன்றத்தில் தீப்பிடித்து விட்டால் போன்றது. - சூளாமணி : 1020 கண்ணியற் காதலாள்தன், கன்னியின் உருவங் கண்டே வெண்ணெயின் குன்றந் தீயால் வெதும்புகின்றதனோ டொத்தான். (23) 24. ஒருசில இனிய தழைகளை உண்ணுதலால் யானைக்கு மதம் உண்டாகிவிடும். அதுபோல் நாளும் பொழுதும் கண்டு மகிழ்வாரைப் பெற்றால்தான் காமமும் மிகுதிப்படும். - குறுந்தொகை : 136. காமம் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக் கடுத்தலும் தணிதலும் இன்றே யானை குளகுமென்றாண்மதம் போலப் பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே. (24) 25. நீர் வற்றாத்தொடங்கியபோது அங்கு உறைந்து மீன் நீர்ப் பெருக்குடைய வேறு இடத்தைத் தேடி அடையும். அதுபோல் அன்பிலார் இருக்கும் சூழலை விடுத்து அன்புடையார் வாழும் சூழலை அடையவே காதலர் விரும்புவர். - அகநானூறு : 303 அழிநீர் மீன்பெயர்ந் தாங்கவர் வழிநடைச் சேறல் வலித்திசின் யானே. (25) 26. உப்புச்சுமை ஏற்றப்பெற்ற வண்டி, மழை பொழிதலால் உப்புச்சுமையைத் தானே இழந்து போகும், அதுபோல் காதலர் ஒருவரையொருவர் காணுங்கால் நாணத்தையும், உரத்தையும் இழந்துவிடுவர். - குறுந்தொகை : 165. 27. ஒருமுறை கள்ளுண்டவன் நாணும் உரனும் அற்றுப் போகக் களிப்படைவான். ஆயினும் மீண்டும் மீண்டும் கள்ளைப் பருகிக் களிக்கவே விரும்புவான். அதுபோல் நானும் உரனும் அழிவதை அறிந்தால் கூட காதலன் காதலியர் மீண்டும் காணவே விரும்புவர். - குறுந்தொகை : 165 மகிழ்ந்ததன் தலையும் நறவுண் டாங்கு விழைந்ததன் தலையும் நீவெய் துற்றனை அருங்கரை நின்ற உப்பொய் சகடம் பெரும்பெயல் தலைய வீந் தாங்கிவள் இரும்பல் கூந்தல் இயலணி கண்டே (26-27) 28. அன்புடைய தலைவன் தலைவியரின் இரண்டற்ற நெஞ்சக் கலப்பு , செவல் நிலமும் மழை நீரும் இணைந்து இரண்டறக் கலந்துவிட்டது போன்ற பிரியாத் தன்மையதாகும். - குறுந்தொகை : 40. யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே. (28) 29. உயிர்க் காதலராக இணைந்து வாழும் வாழ்வு வாய்ப்பது, இறப்பு பிறப்பு என்பன இல்லாத இனிய வீட்டுலகம் கிடைத்தால் போன்றது ஆகும். - சூளாமணி : 1049 காதலார் காதன்மை கலந்து காதலர்க்கு ஏதிலார் அயலராய் இயல்ப வாய்விடில் சாதலும் பிறத்தலும் இலாத தானமும் கோதெனக் கொண்மின் என் றொருத்தி கூறினாள். (29) 30. மாலைப் பொழுதில் வெண்ணிலவு தோன்ற அதனுடன் அல்லியும் மலர்ந்தால் போன்றது , ஊழ்முறை அமைந்த காதலால் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு உயிர்கலந்து ஒன்றிய நட்புக்கொள்வது. - சூளாமணி : 342 காம்பின் வாய்ந்த மென் தோளியக் காதலன் தீம்பன் மாலைநன் மார்பகம் சேருமால் ஆம்பல் மாலையும் ஆய்கதிர்த் திங்களும் தாம்பல் மாலையும் சார்ந்த தனைத்தென்றான். (30) 31. போர்வீரர் தாம் நுகரும் ஐம்புல இன்பங்களையும் பொருட்டாகக் கொள்ளாமல் போர் ஒன்றையே குறியாகக் கொண்டு இருப்பர். அதுபோல் தலைவி, தலைவன் ஒருவனையே குறியாகக் கொண்டு தன் வாழ்வை அமைத்து இன்புறுவாள். - கல்லாடம் : 7 செருவிழும் இச்சையர் தமதுடல் பெற்ற இன்புகழ் நோக்கா இயல்வது போல மருங்குபின் நோக்காது ஒருங்குவிட் டகலப் பொருந்திய தெப்படி யுள்ளம் அருந்தழல் சுரத்தில் ஒருவனன் பெடுத்தே. (31) 32. காமம், வருத்தும் அணங்கும் அன்று; துன்புறுத்தும் நோயும் அன்று. முதிய பசு இளம்புல்லை நாவால் தடவி இன்புற்றாற்போல நினைக்கும் பொழுதும் புதிய இன்பம் தருவதாகும். - குறுந்தொகை : 204. காமம் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின் முதைச்சுவல் கலித்த முற்றா இளம்புல் மூதா தைவந் தாங்கு விருந்தே காமம் பொருந்தோ ளோயே. (32) 33. அன்பு மிகக் கொண்ட தலைவனுக்கு அவன் தலைவி, வேனில் பொழுதில் தண்ணிய சந்தனம் போன்றவள்; பனிக் காலத்தில் தாமரை முகையின் உள்ளே பொதிந்துள்ள சிறிய வெம்மை போன்றவள். - குறுந்தொகை : 376 மன்னுயிர் அறியாத் துன்னரும் பொதியில் சூருடை யடுக்கத்து ஆரம் கடுப்ப வேனிலானே தண்ணியள் பனியே வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி ஐயென அலங்கு வெயிற் பொதிந்த தாமரை உள்ளகத் தன்ன சிறுவெம் மையளே. (33) 34. காதலும் கடவுளும் வேற்றுமையில்லா ஒன்றேயாம். கடவுள் படைப்புத் தொழில் புரிகின்றார். காதலும் மக்களைப் படைத்துத் தருகின்றது. கடவுள் தாம் படைத்த மக்களுக்கு வேண்டுவன உதவிக் காக்கின்றார். காதலும் அவ்வாறே மக்களைக் காத்து உதவுகின்றது. கடவுள் அழிப்பவராகவும் உள்ளார். காதலும் அவ்வாறே உயிர்களை அழிக்கவும் செய்கின்றது. ஆதலால் இரண்டும் ஒன்றேயாம். - இன்னிலை : 30 காதல் விரிநிலத்து ஆரா வகைகாணார் சாதல் நன் றென்ப தகைமையோர் – காதலும் ஆக்கி அளித்தழிக்கும் கந்தழியின் பேருருவே நோக்கிலரை நோவ தெவன். (34) 35. நிலம் ஒருகால் இடம்பெயர்ந்து செல்லினும் செல்லலாம்; வானம் கீழே இறங்கி வீழினும் வீழலாம். அத்தகு நிலைமை உண்டாயினும் கூட, சிறிதும் அசையாத் திண்மையது மகளிர் கற்பு. - பெருங்கதை : 2:17:139. நிலம்புடை பெயரினும் விசும்புவந் திழியினும் கலங்காக் கடவுள் நின் கற்பு. (35) 36. முற்றிக் காய்த்த தினைக்கதிர் வளைந்து தலை தாழ்ந்து நிற்கும். அது, பெண்ணலன் கனிந்த நன்மகளிர், இயற்கை அணிகலமாம் நாணத்தை அணிந்து தலை தாழ்ந்து நிற்பது போன்றது. - கலித்தொகை : 40. நகைமொழி நல்லவர் நாணு நிலைபோல் தகைகொண்ட ஏனலுள் தாழ்குரல். (36) 37. பொருளில்லா வறியவன் இன்ப நலங்களை எளிதில் எய்தமாட்டான். அதுபோல் ஊழ் வயத்தான் அன்றிப் பெறுதற்கு அரிய காதலியை ஒருவன் பெறமாட்டான். - குறுந்தொகை : 120 இல்லோன் இன்பம் காமுற் றாஅங்கு அரிதுவேட் டனையால் நெஞ்சே காதலி நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு அரியள் ஆகுதல் அறியா தோயே. (37) 38. கல்லாதவர் நெஞ்சம் செல்லத்தக்க நெறி இன்னது என்னும் ஒரு நெறிப்பாடு இல்லாது செல்லும் இயல்பினது. அதுபோல் அசையாத உறுதிப்பாடு இல்லாதவர் காதலன்பும் நிலைபேறு இல்லாமல் ஒழியும் இயல்பினது. - கல்லாடம் : 20 கல்லா மனனினும் செல்லுதி பெரும். (38) 39. முகைப் பதம் பார்த்துத் தேன் நுகரச் செல்லுவது வண்டின் இயற்கைத் தன்மை. அதுபோல் நகைப்பதம் பார்த்துக் காதலன்பு கொள்ளுதலே நாகரிகத்தின் நிலைக்களம் ஆகும். - பெருங்கதை :1:35:211-14. நாட்போது நயந்த வேட்கைய ஆயினும் முகைப்பதம் பார்க்கும் வண்டினம் போலத் தகைப்பரும் காமத்துத் தாம்வீழ் மகளிர் நகைப்பதம் பார்க்கும் நனிநாகரிகம். (39) 40. எக்காலும் நிலைத்து நிற்கும் இணையற்ற செல்வம் எதிரில் வந்து சேரும்போது அதனை ஏற்றித் தள்ளி ஒதுக்குவார் இலர். அதுபோல், ஆருயிர்த் தொடர்பால் அமைந்த அன்புக் காதலரை அகன்று வாழ்தல் கூடாது. - கல்லாடம் : 66 நிலையிடைப் பெருந்திரு நேர்வரு காலைக் காலாற் றடுத்துக் கான்றெதிர் கறுத்தும் நனிநிறை செல்வம் நாடு நன்பொருளும் எதிர்பெறில் கண் சிவந் தெடுத்தவை களைந்தும் தாமரை நிதியும் வால்வளைத் தனமும் இல்லம் புகுதரில் இருங்கத வடைத்தும் அரிஅயன் அமரர் மலைவடம் பூட்டிப் பெருங்கடல் வயிறு கிடங்கெழக் கடைந்த அமுதமுட்கையில் உதவுழி ஊற்றியும் மெய்யுல கிரண்டினுள் செய்குநர் உளரேல் எழுகதிர் விரிக்கும் மணிகெழு திருந்திழை நிற்பிரிவுள்ளும் மனன் உளன் ஆகுவன். (40) 41. தன்கண் தோன்றிய கொடியைப் பற்றிப் பறித்துக் கொண்டு செல்பவரைக் கண்டும் மலை தடுத்து நிறுத்துவது இல்லை. தலைவியைத் தடுத்து நிறுத்தும் பெற்றோரும் தகவுடையவர் ஆகார். - கல்லாடம் : 17. விட்டொளிர் மாணிக்க மலையின் ஒருபால் அடங்கப் படர்ந்த பசுங்கொடி அதனை வளர்த்த சேண்மலை யுளத்துயர் கொண்டு தொடர்ந்தது மிலை. (41) 42. கடலில் பிறந்த முத்து தன்னைக் கைக்கொண்டவர்க்கு அன்றிக் கடலுக்குத் தந்ததோர் இன்பம் இல்லை. அதுபோல் தலைவி பிறந்தமையால் அடையும் இன்பம் அவளைக் கொண்ட தலைவனுக்கே அன்றி, அவளைத் தந்த பெற்றவர்க்கு இல்லை. - கல்லாடம் : 17. செறிதிரைப் பாற்கடல் வயிறுநொந் தீன்ற செம்மகள் கரியோற் கறுதி யாக மகவின் இன்பம் கடல்சென் றிலவால் அன்றியும் விடிமின் முளைத்த தரளம் வவ்வினர் இடத்தும் அவ்வழி யான. (42) 43. தன்னிடம் தோன்றிச் செழித்து வளர்ந்த கரும்பின் சாற்றை வாங்குபவர்க்கு வழங்குவது அன்றி நிலம்தான் வைத்துக்கொள்வது இல்லை. அதுபோல் அன்பினால் கவரப்பெற்ற தலைவனுக்கு அல்லாமல் தலைவி பெற்றவர்க்கு உரியவள் ஆகமாட்டாள். - கல்லாடம் : 17. பெருஞ்சோற்றுக் கழனி கரும்பு பெறு காலைக் கொள்வோர்க் கன்றி அவ்வயல் சாயா. (43) 44. அரிய கருத்துகளை ஆராய்ந்து கண்ட ஆசிரியர் தாம் மாணவர்களுக்கு வழங்கிய அக்கருத்துக்களை மீண்டும் கவர்ந்து கொள்வது இல்லை. அதுபோல் தலைவனைத் தானே தேர்ந்து தேடிக்கொண்ட தலைவியைப் பிரித்து வைக்கச் சான்றோர் ஒருப்படார். - கல்லாடம் : 17 பள்ளிக் கணக்கர் உள்ளது பெற்ற புறமார் கல்வி அறமா மகளைக் கொண்டு வாழுநர்க் கண்டரு கிடத்தும் அவர்மன அன்னை கவரக் கண்டிலம். (44) 45. நறுமணமுடைய சந்தனம் தன்னைப் பூசியவர்க்கு அன்றித் தான் பிறந்த மலைக்குச் செய்யும் பயன் என்ன? தண்ணிய முத்து தன்னை அணிவார்க்கு அன்றித் தான் பிறந்த கடலுக்குச் செய்யும் பயன் என்ன? ஏழு நரம்புகளால் கூட்டப்பெற்ற இன்னிசை கேட்பவர்க்கு அன்றித்தான் பிறந்த யாழுக்குச் செய்யும் பயன் என்ன? தலைவனுக்கு இன்பூட்ட வேண்டிய தலைவியைத் தலைவனுடன் செல்லவிடாமல் தடுத்து நிறுத்துவதால் பெற்றோர் பெறும் பயன் என்ன? - கலித்தொகை : 9. பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும் நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே. சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என்செய்யும் தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே. ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என் செய்யும் சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே. (45) 46. நீங்குதற்கு அரிய துன்பங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று இணையற்ற இன்பத்தில் வாழும் பேறு பெற்ற தலைவன் தலைவியர் செயற்கரிய தவத்தை வருந்திச் செய்து தம் உடலை விடுத்து இன்ப உலகம் எய்திய துறவி போன்றவர். - கலித்தொகை : 138 அன்புறு கிளவியாள் அருளிவந் தளித்தலின் துன்பத்தில் துணையாய மடல் இனி இவட்பெற இன்பத்துள் இடம்படல்என் றிரங்கினள் அன்புற்று அடங்கருந் தோற்றத்து அருந்தவம் முயன்றோர்தம் உடம்பொழிந் துயருல கினிதுபெற் றாங்கே. (46) 47. இல்லறம் போற்றுதலால் எளிதில் அடையும் இன்பம் இருக்க அதனை விடுத்துத் துறவறத்தால் ஒருவன் இன்பம் எய்த எண்ணுவது கையிற் கிடைத்த பொருளைத் தொலைவில் எறிந்து விட்டுப் புதுப்பொருள் தேடி உழல்வது போன்றது. - இன்னிலை : 31. அளகும் அளிநாகைப் பேண அணியார் அழகரிவை வீழ்முயக்கை அண்ணாத் - தளியாளர் பெற்ற பிறக்கெறிந்து புத்தாய பெட்டுழலும் பெற்றியர் பெட்ட கழுது. (47) 48. இனிப்புப் பூசப் பெற்றமையால் அதனுட் பொதிந்த கசப்பு மருந்தையும் வெறுப்பின்றி உண்பது மக்கள் இயற்கை. அதுபோல் இல்லற இன்பம் நுகர்தல் வழியாகப் பேரின்ப வாழ்வுக்குரிய பற்றறுத்து வாழ்வதே இயற்கை நியதியாகும். - இன்னிலை : 21. துணையென்ப காம விருந்துய்ப்பார் தோமில் இணைவிழைச்சின் மிக்காகா ராகல் - புணை தழீஇக் கூட்டும் கடுமிசையான் கட்டியில் கொண்டற்றால் வேட்டபோழ் தாகும் அணி. (48) 49. பிரிவு என்னும் சொல்லைக் கேட்கவே அஞ்சித் துடிக்கும் தலைவி, தலைவன் பிரிந்து சென்ற காலையில் வருந்துவது எழுரார்களுக்குப் பொதுவாக ஓர் ஊரில் அமைந்த துருத்தி இடைவிடாது உயிர்ப்பது போன்றது. - குறுந்தொகை : 172. எமியம் ஆக ஈங்குத் துறந்தோர் தமியர் ஆக இனியர் கொல்லோ ஏழூர்ப் பொதுவினைக் கோரூர் யாத்த உலைவாங்கு மிதி தோல் போலத் தலைவரம் பறியாது வருந்துமென் நெஞ்சே (49) 50. கணவன் பிரிதலால் தனித்திருந்து வருந்தும் தலைவி, போர்ப் பொருட்டாக மக்களை அகன்று செல்லச் செய்த பொலிவற்ற ஊர் மன்றத் திடத்து, மழை பெய்தலால் இளகியும் வெயில் காய்தலால் பொடிந்தும் வண்ணம் வேறுபட்டுக் காணும் ஓவியம் போல்வாள். - அகநானூறு : 157. முனைபுலம் பெயர்த்த புல்லென் மன்றத்துப் பெயலுற நெகிழ்ந்து வெயிலுறச் சாஅய் வினையழி பாவையின் உலறி மனையொழிந் திருத்தல் வல்லு வோர்க்கே. (50) 51. வினை முயற்சி பற்றி எழுந்த ஆண்மை முன்னே இழுக்கவும், காமமானது பின்னே சென்று தடுக்கவும் ஆக இருநிலைப்பட்டு அலமரும் நெஞ்சம், இருப்பக்கங்களிலும் தீப்பற்றி எரியும் துளையமைந்த தட்டையின் உள்ளே இருந்து வருந்தி எப்பக்கமும் செல்ல மாட்டாத எறும்பு போன்றது. - அகநானூறு : 339. ஆள்வினைக் கெழுந்த அசைவில் உள்ளத்து ஆண்மை வாங்கக் காமந் தட்பக் கவைபடு நெஞ்சங் கட்கண் அகைய இருதலைக் கொள்ளி இடைநின்று வருந்தி ஒருதலைப் படாஅ உறவி போன்றனம். (51) 52. கணவனைப் பிரிந்து மனைவி தனித்துத் துன்பம் அடையும் நிலைமை, பொருத்துவாய் நன்கு அமையப்பெற்ற செப்பினுள் இட்டு மூடிச் சூடாமல் வைக்கப் பெற்ற பூப் போன்றது ஆகும். - குறுந்தொகை : 9. மடைமாண் செப்பில் தமிய வைகிய பொய்யாப் பூவின் மெய்சா யினளே. (52) 53. நீரில் வாழும் அகன்றில் ஆண் பெண் பறவைகளுக்கு இடையே ஒரு பூநின்று மறைத்து விட்டால்கூடப் பல்லாண்டுகள் பாழாகி விட்டதாகக் கருதித் துன்புறும். அதுபோல் உயர்ந்த உயிர்த்தொடர்பினராகிய காதலர்களது சிறிதளவு பொழுது பிரிவும் பெருந்துயர் ஊட்டும். - (1) குறுந்தொகை : 57. (2) நற்றிணை : 124. (1) பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன நீருறை மகன்றில் புணர்ச்சி போலப் பிரிவரி தாகிய தண்டாக் காமம். (2) ஒன்றில் காலை அன்றில் போலப் புலம்புகொண் டுறையும் புன்கண் வாழ்க்கை யானும் ஆற்றேனது தானும்வந் தன்று நீங்கல் வாழியர் ஐய. (53) 54. சக்கர வாளம் என்னும் பெயருடைய பறவை, பொய்கைக்குள் புகுந்து இருந்ததாயினும் பிரிவு உண்டாயின் அப் பொய்கை நீர் தீயாகவே அதற்குத் தோன்றும். அது போல் அன்புக் காதலர் பிரிவும், தண்மையான இடத்தில் இருப்பரே ஆயினும் பெரும் வெறுப்பு உண்டாக்கும். - சூளாமணி : 1050. திணைவிராய்ப் பொய்கையும் திகிரிப் புள்ளினுக்கு இணைதிரப் பிரிந்தபின் ரியொ டொக்குமால் துணைவரால் தனியவர் திறத்துச் சொல்லினோர் துணைவராம் படியவ ரில்லைப் பொன்னர் (54) 55. கதிரோன் மறைந்ததும் தாமரை முதலிய பூக்கள் குவியும். அவை, காதலன் பிரிவு உண்டானபோது கூம்பும் கற்புடைய மகளிர் முகம் போன்றன. - சூளாமணி. 1029. காதலார் அகன்ற போழ்தில் கற்புடை மகளிர் போலப் போதெலாம் குவிந்த பொய்கைத் தாமரை பொலிவு நீங்க. (55) 56. தம்பால் உள்ள பொருளையெல்லாம் பிறர்க்கு வாரி வழங்கிவிட்ட கொடையாளர் முன்னர்ச் சென்று வறுமையால் வாடி வருந்திய ஒருவன் 'இல்லை' என்று சொன்னால் அவ் வள்ளலாளன் நெஞ்சம் அச்சொல்லைக் கேட்டுப் பெரிதும் வருந்தும். அதுபோல், நின்னைப் பிரிய நேரும்' என்று தலைவன் சொல்லும் சொல் தலைவியின் செவியில் புகும் போதே துன்புறுவாள். - கல்லாடம் : 75. 57. எவ்வுயிரும் தம்முயிராய் எண்ணி வாழும் அருளாளன் முன்னர்ச் சேர்ந்த இரக்கமென்றொரு பொருள் அறியாக் கயவன் 'கொல்லுதல்' என்னும் சொல்லைச் சொல்வது போன்றது, இனிய தலைவியினிடம் நின்னைப் பிரிவேன்' என்னும் இன்னாத சொல்லைத் தலைவன் சொல்லுவது. - கல்லாடம் : 75. 58. கல்வி அறிவில்லாதவன் செவிக்குக் கற்றறிந்த பெரு மக்கள் கூறும் கருத்துரைகள் பெருந்துயரூட்டும். அதுபோல் தலைவனின் பிரிவுச் செய்தி தலைவியைப் பெருந்துயருக்கு ஆளாக்கும். - கல்லாடம் : 75. பகுத்துண் டீகுநர் நிலைத்திரு முன்னர் இல்லெனும் தீச்சொல் இறுத்தனர் தோமும், அனைத்துயிர் ஓம்பும் அறத்தினர் பாங்காக் கோறல்என் றயலினர் குறித்த குற்றமும், நன்றறி கல்வியர் நாட்டுறுமொழி புக்கு அவ்வரண் இழந்தோர்க்கு அருவிட மாயதும் ஒருகணம் கூடி ஒருங்கே இருசெவிப் புக்கது ஒத்தன இவட்கே. (56 - 58) 59. துணைக்கு வந்து உதவிய ஒருவன் உரிய பொழுதில் ஒதுங்கிச் சென்றுவிட, யானைப்படையுடைய பகைவனால் சூழப்பெற்று மதிலுக்குள் ஒடுங்கிக் கிடக்கும் ஒருவனது துயரம் போன்றது தலைவனைப் பிரிந்து தனித்து இல்லத்தே வாழும் தலைவியின் துயரம். - நற்றிணை : 43. அஞ்சல் என்ற இறைகை விட்டெனப் பைங்கண் யானை வேந்துபுறத் திறுத்தலில் களையுநர்க் காணாது கலங்கிய உடைமதில் ஓரெயில் மன்னன் போல அழிவுவந் தன்றால் ஒழிதல் கேட்டே. (59) 60. காற்றொடு மழை பெய்யும் காலத்துக் கற்கள் உருளு மாறு இடிக்கும் இடியினும் வலிது, அன்பு மிக்க தலைவியைப் பெருந்துயரூட்டும் சுரவழியில் அழைத்துச் செல்லும் தலைவன் தன்மை . - நற்றிணை : 2. வையெயிற்று ஐயள் மடந்தை முன்னுற்று எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம் காலொடு பட்ட மாரி மால்வரை மிளிர்க்கும் உருமினுங் கொடிதே. (60) 61. வலிய வீரனின் சோர்வு நிலை அறிந்து அவனை வெற்றி கொள்ளக் கருதும் புல்லிய வீரர்கள் தாக்குவதற்குக் காத்துக் கொண்டு இருப்பர். அதுபோல் தலைவன் பிரிவினால் வருந்திக் கிடக்கும் தலைவியின் தளர்ச்சி நிலையை அறிந்த பசலை நோய் பாய்ந்து வளர்ச்சி பெறும். - பெருங்கதை : 2 : 7: 0 - 61. அற்றம் பார்க்கும் செற்றச் செய்தொழில் பற்றா மாந்தரில் பசலை பாய்ந்த. (61) 62. தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி மாலைப் பொழுதில் படும் துயர், சேறு படிந்துவிட்ட தொழுவில் இருந்து அகற்றி வேற்றிடத்தே கட்டவேண்டிய பொழுதில் அவ்வாறு செய்யாமல், அத்தொழுவிலும் கீழே படுக்கவிடாமல் நின்ற நிலையிலேயே இருக்குமாறு தலைக்கயிற்றை இழுத்துக் கூரை யின்மேற் கைம்மரத்தில் இறுகப் பிணிக்கப் பெற்ற பசு படும் துயரம் போன்றது. - நற்றிணை : 109. உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென விரைக்கும் வாடை இருள்கூர் பொழுதில் தொளியுடைத் தொழுவில் துணிதல் அற்றத்து உச்சிக் கட்டிய கூழை ஆவின் நிலையென ஒருவேன் ஆகி உலமரக் கழியுமிப் பகல்மடி பொழுதே. (62) 63. உயிரும் உடலும் ஒன்றி இருப்பது போன்றது காதலால் அமைந்த நட்பு. உடலில் இருந்த உயிர் பிரிந்து செல்வது போன்றது தலைவனின் பிரிவு. - அகநானூறு : 339. யாக்கைக்கு, உயிரியைந் தன்ன நட்பின் அவ்வுயிர் வாழ்தல் அன்ன காதல் சாதல் அன்ன பிரிவரி யோளே. (63) 64. இன்பமும் துன்பமும், புணர்தலும் பிரிதலும் வாழ்வில் பகலும் இரவும் போல மாறுபட்ட தன்மையினவாகி மாறாது வந்தே தீர்வனவாம். - அகநானூறு - 327. இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் நன்பகல் அமையமும் இரவும் போல வேறுவேறியல ஆகி மாறெதிர்ந்து உளவென உணர். (64) 65. மேய்தற்குப் பிரிந்து சென்ற பசு வீடு நோக்கி வருவதை எதிர்பார்த்து நிலை கொள்ளாமல் சுழன்று தலையெடுத்து நிற்கும் கன்றைப் போலப் பிரிந்த தலைவன் வருகை எப்பொழுது வாய்க்குமென்று நொடிதோறும் எதிர் பார்த்திருப்பள் தலைவி - குறுந்தொகை : 64. பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப் புன்றலை மன்றம் நோக்கி மாலை மடக்கண் குழவி அணவந் தன்ன நோயெம். (65) 66. பெருகிக் கிடக்கும் நீர்நிலையில் படிந்துள்ள நீர்ப்பாசி நீர் கொள்ளுங்கால் விலகும். கொண்ட பின்னர் உடனே பரவி நிரம்பும். அதுபோல் தலைவன் பிரிந்து சென்ற போழ்தில் பரவிக் கிடந்த பசலை, அவன் வந்தவுடன் அகன்றோடும். - குறுந்தொகை : 399. ஊருண் கேணி உண்டுறைத் தொக்க பாசி அற்றே பசலை காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பாத்த லானே. (66) 67. அறநெஞ்சம் உடைய பேருதவியாளன் செல்வம் அவனிடத்துத் தங்கியிருக்காமல் பலர்க்கும் சென்று பயன்படும். அதுபோல் தலைவன் பிரிவால் மண்டிக் கிடக்கும் பசலை அவன் வருகையால் உடன் ஒழியும். - குறுந்தொகை : 143. நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சில் கடப்பாட் டாளன் உடைப்பொருள் போலத் தங்குதற் குரிய தன்றுநின் அங்கலுழ் மேனிப் பாய பசப்பே. (67) 68. தாம் வேறு அவர் வேறு என்றில்லாத அன்புடைய வரை அடைவதற்காக விரைந்து செல்லும் உள்ளம், மழை பெய்தலால் உண்டாகிய ஈரம் போகுமுன்னர் நிலத்தை உழுது விடக் கருதும் ஓர் ஏருடைய உழவனது விரைந்து செல்லும் செலவு போன்றது. - குறுந்தொகை : 131. ஆடமை புரையும் வனப்பில் பணைத்தோள் பேரமர்க் கண்ணி இருந்த ஊரே | நெடுஞ்சேணாரிடை யதுவே நெஞ்சே ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து ஓரேர் உழவன் போலப் பெருவிதுப் புற்றன்றால் நோகோ யானே. (68) 69. அறநெஞ்சத்தான் ஒருவனைப்பற்றி இழிமகன் கூறிய பழிப்புரை, நல்லோர் அவையில் ஆராய்ந்து தள்ளப்பெறும். அதுபோல் தலைவன் பிரிவினால் தலைவி பட்ட துயர் அவன் வருகையால் அகலும். - கலித்தொகை : 144. கட்லொடு புலம்புவோள் கலங்கஞர் தீரக் கெடலருங் காதலர் துனைதரப் பிணிநீங்கி அறனறிந் தொழுகும் அங்க ணாளனைத் திறனிலார் எடுத்த தீமொழி எல்லாம் நல்லவை யுட்படக் கெட்டாங்கு இல்லா கின்றவள் ஆய்நுதற் பசப்பே. (69) 70. மக்களைத் தம் உயிராகக் கருதிப் பாதுகாக்கும் ஆட்சி யாளரின் உள்ளார்ந்த அன்பு வாய்ந்த படையைக் கண்டதும் பகைப்படை அகன்றோடும். அதுபோல் தலைவி மேல் உயிர் அன்பு செலுத்தும் தலைவன் வருகையால் தலைவி கொண்ட பிரிவுத் துயர் அகன்றோடும். - கலித்தொகை : 130. படுசுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளைக் குடிபுறங் காத்தோம்பும் செங்கோலான் வியன்தானை விடுவழி விடுவழிச் சென்றாங்கவர் தொடுவழித் தொடுவழி நீங்கின்றாற் பசப்பே. (70) 71. பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்ற தலைவன் பெரும் பொருளோடு திரும்பி வருவதைக் கண்ட தலைவி அளவிலா மகிழ்வு அடைவாள். அவள் அடையும் மகிழ்ச்சி, நிரம்ப மழை பெய்தலால் வளமிக்க நிலம் அடையும் மலர்ச்சி போன்றது. - பெருங்கதை : 1 : 49: 87 - 95. தூநிறத் தண்டுளி தானின்று சொரிந்து வேனில் தாங்கி மேனி வாடிய மண்ணக மடந்தையை மண்ணுநீ ராட்டி முல்லைக் கிழத்தி முன்னருள் எதிரப் பல்லோர் விரும்பப் பரந்துகண் ணகன்று பொருள்வயின் பிரிந்து பொலங்கல வெறுக்கையொடு இருள்வயின் வந்த இன்னுயிர்க் காதலன் மார்பகம் மணந்த நேரிழை மடந்தையர் மருங்குல் போலப் பெருங்கவின் எய்திய. (71) 72. இழந்து போன ஒரு பொருளை மீண்டும் கண்டு அடைவது இன்பம் தரும். அதனினும் முன்னர் இழந்து போன இன்பத்தை மீண்டும் தடையின்றிப் பெறுவது பேரின்பம் போன்றதாம். - நற்றிணை : 182. கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக்கொண் டாங்கு நன்மார்பு அடைய முயங்கி மென்மெலக் கண்டனம் வருகம். (72) 73. வலிமையற்ற ஒருவன் வலிமை வாய்ந்த ஒரு படையின் முன்னர் நின்று அல்லல்படும்போது திடுமென்று வலிய துணைப்படை ஒன்று வந்து உதவுமானால் அதுவே காலத்தால் செய்த உதவியாம். அத்தகு உதவி போன்றது, தலைவன் பிரிவால் வருந்தி நிற்கும் தலைவியினிடம் தலைவன் வந்து சேர்ந்து பேரருள் செலுத்துவது. - கலித்தொகை : 120. இடனின் றலைத் தரும் இன்னாசெய் மாலை துனிகொள் துயர்தீரக் காதலர் துனைதா மெல்லியான் பருவத்து மேனின்ற கடும்பகை ஒல்லென நீக்கி ஒருவாது காத்தோம்பும் நல்லிறை தோன்றக் கெட்டாங்கு இல்லா கின்றால் இருளகத் தொளித்தே. (73) 74. பிரிந்து சென்ற தலைவன் தலைவியினிடம் மீண்டும் வந்து சேர்வது, கோடை வெப்பத்தால் வற்றக் காய்ந்து வறண்டு வெடிப்போடிப்போன வயல் நிலத்தில், வளமான மழை பொழிந்து புது வெள்ளம் பாய்ந்து பரவினால் போன்ற நலம் செய்வதாம். - நற்றிணை : 230. புதுவறங் கூர்ந்த செறுவில் தண்ணென மலிபுனல் பரத்தந் தாஅங்கு இனிதே தெய்யநின் காணுங் காலே. (74) 75. மரக்கிளையைத் தொட்டுச் செல்லுமாறு பெருகிய வெள்ளமும் பின்னர் மணலைத் தோண்டி இறைத்துப் பருகும் அளவுக்குச் சுருங்கிவிடுதல் உண்டு. அதுபோல் தலைவன் பிரிவின் போதில் பெருகியிருந்த காமநோய் அவனைக் கூடுங்கால் குறைந்துவிடும். - குறுந்தொகை : 99. நீடிய மரத்த கோடுதோய் மலிர்நிறை இறைத்துணச் சென்றற் றாஅங்கு அனைப்பெருங் காமம் ஈண்டுகடைக் கொள்வே. (75) 76. தாம் எடுத்துக்கொண்ட செயலை எளிதில் இனிதாக நிறைவேற்றித் தரவல்ல வழிபடு தெய்வத்தைக் கண்கூடாகக் கண்டது போன்ற மகிழ்ச்சி, தலைவனைக் கண்ட தலைவிக்கு உண்டாகும். - நற்றிணை : 9. அழிவில முயலும் ஆர்வ மாக்கள் வழிபடு தெய்வம் கட்கண் டாஅங்கு அலமரல் வருத்தம் தீர யாழநின் நலமென் பணைத்தோள் எய்தினம். (76) 77. இணைந்த அன்புடைய தலைவனும் தலைவியும், கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அடையும் இன்பப் பேறு, இறைவன் திருவடித் துணையே துணையாய் அடைந்தவர் அடையும் வீட்டின்பப் பேறு போன்றது. - கல்லாடம் : 12. குரவம் மலர்ந்த குவையிருட் குழவி இருவேம் ஒரு கால் எரியதர் இறந்து விரிதலைத் தோல் முலை வெள்வாய் எயிற்றியர்க்கு அரும்புது விருந்தெனப் பொருந்திமற் றவர்தரும் இடியும் துய்த்துச் சுரைக்குடம் எடுத்து நீணிலைக் கூவல் தெளிபுனல் உண்டும் பழம்புற் குரம்பை யிடம்புக் கிருந்து முடங்கள் உறுத்த முகிழ்நகை எய்தியும் உடனுடன் பயந்த கடலொலி யேற்றும் நடைமலை எயிற்றின் இடைதலை வைத்தும் உயர்ந்த இன் பதற்கின் றுவமம் உண்டெனின் ----------------------------------------- தேவ நாயகன் கூடல்வாழ் இறைவன் முண்டகம் மலர்த்தி முருகவிழ் இருதாள் உறைகுநர் உண்ணும் இன்பம் அறையல் அன்றி மற்றொன்றும் அடாதே. (77) 78. தலைவனும் தலைவியும் பிரிவின்றி வாழும் பெறுதற்கு அரிய வாழ்வு, அருளாளன் பெற்ற ஆக்கம் போன்றது. தலைவன் இல்லாத தலைவியின் தனிமை வாழ்வு, பொருள் வளம் இல்லாதவன் இளமைபோல் பொலிவு அற்றது. - கலித்தொகை : 38. இருளிடை என்னாய் நீ இரவஞ்சாய் வந்தக்கால் பொருளில்லான் இளமைபோல் புல்லென்றாள் வைகறை அருள்வல்லான் ஆக்கம் போல் அணிபெறும் அவ்வணி தெருளாமல் காப்பதோர் திறனுண்டேல் உரைத்தைக் காண். (78) 79. தலைவனும் தலைவியும் ஒன்றுபட்டு வாழும் வாழ்வு, முயற்சித் திறம் மிக்கவன் சேர்த்து வைத்த செல்வம் போல் பெருநலம் பயப்பதாகும். அத்தன்மை இல்லாதவர் வாழ்வு அற நெறியில் செல்லாதவன் அடைந்த முதுமை போல் பயனற்றது. - கலித்தொகை : 38. மறந்திருந்தார் என்னாய் நீ மலையிடை வந்தக்கால் அறஞ்சாரான் மூப்பே போல் அழிதக்காள் வைகறை திறஞ்சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும் அத்திருப் புறங்கூற்றுத் தீர்ப்பதோர் பொருளுண்டேல் உரைத்தைக் காண். (79) 80. தலைவன் தலைவியர் இணைந்த வாழ்வு மழை வரப்பெற்ற பயிர்போல் தளிர்ப்புடையது. இணைந்து வாழாத அவர்கள் வாழ்வு நீரற்ற நிலம் போல் பொலிவற்றது. - கலித்தொகை : 38 ஆரிடை என்னாய் நீ அரவஞ்சாய் வந்தக்கால் நீரற்ற புலமேபோல் புல்லென்றாள் வைகறை கார்பெற்ற புலமேபோல் கவின்பெறும் அக்கவின் தீராமல் காப்பதோர் திறனுண்டேல் உரைத்தைக் காண். (80) 81. இனிய தலைவியுடன் தலைவன் இணைந்து வாழும் வாழ்வு, எடுத்துக் கொண்ட நன்முயற்சி இடைத்தடை எதுவும் இல்லாமல் இனிதாக நிறைவேறியது போன்ற இன்பமானது. - நற்றிணை : 3. உள்ளிய, வினைமுடித் தன்ன இனியோள். (81) 82. தலைவனும் தலைவியும் விடுதல் அறியா விருப்புடன் கூடிவாழும் வாழ்வு, விழாக்கோலம் கொண்ட பெரு நகரத்தையும், செங்கோல் நடாத்தப்பெறும் வளமிக்க நாட்டையும், நீர்வளம் சிறக்கப் பெற்ற நறுமலர்க் கொடியையும் போல் பொலிவுடையது. பிரிந்து வாழும் வாழ்வு விழாவிலா நகரையும், செங்கோலிலா நாட்டையும், பறித்துப் போட்ட மலர்க் கொடியையும் போல் பொலிவற்றது. - கலித்தொகை : 5. கல்லெனக் கவின்பெற்ற விழாவாற்றுப் படுத்தபின் புல்லென்ற களம்போலப் புலம்புகொண் டமைவாளோ? ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடுபோல் பாழ்பட்ட முகத்தோடு பைதல்கொண் டமைவாளோ? ஓரிரா வைகலுள் தாமரைப் பொய்கையுள் நீர்நீத்த மலர்போல நீநீப்பின் வாழ்வாளோ? (82) 83. உருவும் அதனை விடாது தொடர்ந்து வந்து தங்கும் நிழலும் போலத் தலைவன் தலைவியர் கூடி அமைந்த இனிய இல்லற வாழ்வே எய்துதற்கு அரிய பேரின்ப வாழ்வாகும். - புறநானூறு : 222. அழலவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி நிழலினும் போகாநின் வெய்யோள். (83) 84. தலைவன் தலைவியுடன் கூடி இல்லறம் நடாத்தும் நல்ல நாட்களே வாழும் நாட்கள். அவ்வாறின்றிக் கழிந்த நாட்கள் உள்ளீடு எதுவும் இல்லாத கருக்காயைப் (பதரைப்) போன்ற வீண் நாட்களே . - குறுந்தொகை : 323. எல்லா எவனோ பதடி வைகல் ----- --- அரிவை தோளிணைத் துஞ்சிக் கழிந்த நாளிவண் வாழும் நாளே. (84) 85. முதற்கண் பழகத் தொடங்கிய நாளினும் உயர்ந்தவர் களது நட்பு வளர்ந்து பெருகிக் கொண்டே வரும். அதுபோல் உயர்ந்த தலைவனும் தலைவிமேல் வரவர மிகுந்த அன்பு செலுத்திக் கொண்டே வருவான். - அகநானூறு : 178. கனவினும் பிரிவறி யலனே அதன்தலை முன்தான் கண்ட ஞான்றினும் பின்பெரிது அளிக்கும் தன்பண்பினானே. (85) 86. இனிய தலைவன் தன் அன்புக்குரிய தலைவியுடன் இணைந்து தழுவி வாழும் வாழ்வு, கலைத் தேர்ச்சிமிக்க பாணன் தான் கற்றறிந்த நூன் முறைப்படி வகுத்த பண்ணிசையைக் காட்டிலும் - அப் பண்ணின் திறத்தைக் காட்டிலும் இனியது. - அகநானூறு : 352. நல்லிசை நிறுத்த நயவரு பனுவல் தொல்லிசை நிறீஇய உரைசால் பாண்மகன் எண்ணுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும் புதுவது புனைந்த திறத்தினும் ‘ வதுவை நாளினும் இனியால் எமக்கே. (86) ‘87. தாம் அமைத்துக் கொண்ட தம்முடைய வீட்டில் இருந்து, தம்முடைய நன் முயற்சியால் தேடிச் சேர்த்த நற் பொருளில் தம் பங்கை உண்டு வாழும் இன்ப இல்லற வாழ்வு, கிளை தொறும் முதிர்ந்து தொங்கும் சுவை மிக்க பலாப் பழச் சுளையை உண்பது போன்றது. - குறுந்தொகை : 83. அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப் பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை தம்மில் தமதுண் டன்ன சினைதொறும் தீம்பழம் தூங்கும் பலவின் ஓங்குமலை நாடனை வருமென் றோளே. (87) 88. நாளும் பொழுதும் ஆராய ஆராயக் கல்வி அறிவு பெருகி வளர்ந்து முதிரும். அதுபோல் தோய்த் தோயத் தலைவன் தலைவியர்க்கு இன்பம் பெருகி வளரும். - இன்னிலை : 25. இன்ப இயலோரார்; யாணர் விழைகாமம் பொன்னின் அணிமலரில் செவ்விதாம். (88) 89. ஒளி பரப்பும் திங்களைச் சேர்தலால் உடுக் கூட்டங்கள் ஒளி பெற்றுச் சிறப்படையும். அதுபோல் தக்க சிறப்புடைய கணவனை அடைதலால் மகளிர் பிறவிப் பேற்றை அடைந்து மகிழ்வர். - சூளாமணி : 1044. திங்களங் கொழுநனைச் சேர்ந்து தாரகை அங்கொளி முகிழ்நகை அரும்பும் ஆதலால் மங்கல மணமகன் மணந்த போதலால் எங்குள திளையவர்க் கிளைமை இன்பமே. (89) 90. கடலை நீந்திக் கடப்பதற்கு நல்ல வலிய மிதவை வேண்டும். அம் மிதவை வாய்க்கப் பெறார் நீந்தமாட்டார். அதுபோல் இனிய இல்லறம் என்னும் பெருங்கடலை நீந்துதற்கு நல்லவனும் வல்லவனும் ஆகிய கணவனே மிதப்பாக உள்ளான். அம் மிதப்பு வாய்க்கப் பெறாரும் இல்லறக் கடலில் இனிது நீந்தார். - சூளாமணி : 1050. துணைவரால் தனியவர் திறத்துச் சொல்லினோர் புணைவராம் படியவ ரில்லைப் பொன்னனிர். (90) 91. உயிர் கலந்து ஒன்றிய பேரன்புடையவர்கள் சொல்லும் சொல் எத்தகைத்தாயினும் அது பாலும் தேனும் அமுதும் தருகின்ற இன்பம் எல்லாம் சேர்த்து ஒன்றாகத் தரும் தன்மையது. - கல்லாடம் : 58. பாலும் அமுதமும் தேனும் பிலிற்றிய வின்பமர் சொல்லி நண்பும். (91) 92. தலைவன் தலைவியரின் இனிய தொடர்பு, மலரும் அதன் நறிய மணமும் போலவும், செந்தமிழ்ப் பாட்டும் அதன் சீரிய பொருளும் போலவும், பசுவின் பாலும் அதன் இனிய சுவையும் போலவும், கனியும் அதன் சுவைச் சாறும் போலவும், உடலும் அதனுள் உறையும் உயிரும் போலவும் பொருந்தி அமைந்தது. - கல்லாடம்: 58. நிரைஇதழ் திறந்து மதுவண் டருந்தும் விருந்து கொள் மலரும் புரிந்துறை மணமும் செந்தமிழ்ப் பாடலும் தேக்கிய பொருளும் பாலும் சுவையும் பழமும் இரதமும் உடலும் உயிரும் ஒன்றிய தென்னக் கண்டும் தெளிந்தும் கலந்த உள்ளுணர்வு. (92) 93.கதிரோன் மறையும் மாலைப்பொழுதில் தாமரைப் பூவினுள் புகுந்து அப் பூக்குவிந்து விடுதலால் இரவுப் பொழுதில் அதனுள் தங்கியிருந்து கதிரோன் காலைப் பொழுதில் தோன்றியதும் பூ மலர வெளியேறி மகிழும் வண்டு போன்றது, மனமும், கண்ணும் ஒன்றுசேரத் தலைவனும் தலைவியும் மகிழும் இன்ப வாழ்வு. - கல்லாடம் : 29. பனிச்சிறுமை கொள்ளா முள்ளரை முளரி வண்டொடு மலர்ந்த வண்ணம் போலக் கண்ணும் மனமும் களிவர மலர்த்துதி ---- - - - - - - - - - - - - - - - - - - --- அருளும் பொருளும் ஆகித் திருவுல களிக்கும் பரிதிவா னவனே. (93) 94. எல்லா வகையாலும் ஒப்புடைய தலைவனும் தலைவி யும் பொருந்தி வாழும் இன்ப வாழ்வு, விருந்தினரைத் தம் பக்கத்தே வைத்து உடன் உண்ணும் இல்லறத்தவர் அடையும் நீங்காத இனிமைப் பேறு போன்றது. - கல்லாடம் : 14. விருந்துகொண் டுண்ணும் பெருந்தவர் போல நீங்காத் திருவுடை நலனும் பாங்கிற் கூட்டுக இன்பத்திற் பொலிந்தே. (94) 95. வாழ்வியல் நெறியை வகையாக அறிந்த வாழ்க்கைத் துணைவி விருந்தோம்புதலில் கணவனுக்கு நட்பினள் ஆகவும், இல்லத்தைப் பேணிக் காத்தலில் பெற்ற தாய் ஆகவும், மக்களைப் பெற்று மனையறம் காத்தலில் மனைக்கிழத்தி ஆகவும் விளங்குதல் வேண்டும். - திரிகடுகம் : 64. நல்விருந்தோம்பலின் நட்டாளாம்; வைகலும் இல்புறம் செய்தலின் ஈன்றதாய் - தொல்குடியின் மக்கள் பெறலின் மனைக்கிழத்தி இம்மூன்றும் கற்புடையாள் பூண்ட கடன். (95) 96. நீர் இல்லாமல் உலகியல் எதுவும் நடைபெறாது. தலைவிக்குத் தகவுடன் வாய்த்த தலைவனே அந்நீர் போன்றவன். - நற்றிணை : 1. நீரின்றமையா உலகம் போலத் தம்மின்றமையா நம்நயந் தருளி. (96) 97. தலைவனும் தலைவியும் மகிழ்வுமிக்க புணர்ச்சியால் பாம்பையும், அன்புமிக்க மெல்லியல் தன்மையால் அன்னத்தையும், கண் முதலிய பொறிகளின் நுகர்ச்சியால் ஆமான் என்னும் விலங்கையும் போல் அமைதல் வேண்டும். - சீவகசிந்தாமணி : 189 காதலால் காமபூமிக் கதிரொளி யவரும் ஒத்தார்; மாதரும் களிற நானும் மாசுண மகிழ்ச்சி மன்றல் ஆதரம் பெருகுகின்ற அன்பினால் அன்னம் ஒத்தும் தீதிலார் திளைப்பின் ஆமான் செல்வமே பெரிதும் ஒத்தார்.(97) 98. அன்புடைய துணைவனும் துணைவியும் இணையாக மலர்க்காவில் செல்வது, கலைத்திறம் வல்லவனால் செய்யப் பெற்ற பாவைகள் இரண்டு அல்லியம் என்னும் கூத்தை ஆடுவது போல் கண்டோர்க்குக் கழிபேரின்பம் நல்குவதாகும். - புறநானூறு. 33. வல்லோன் தைஇய வரிவனப் புற்ற அல்லியப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக் காம இருவர் அல்லது யாமத்துத் தனிமகன் வழங்காப் பனிமலர்க் கா. (98) 99. எங்கிருந்தாலும் எப்பணி செய்தாலும் தலைவன் நலம் ஒன்றையே கருதிச் சூழ்ந்து சூழ்ந்து பணிபுரியும் தலைவி, தயிரைக் கடையும் மத்தைச் சுற்றிச் சுற்றி வரும் கயிற்றைப் போன்றவள் ஆவள். - கலித்தொகை : 110. அச்சத்தால் மாறி அசைவினால் போத்தந்து நிச்சத் தடுமாறும் மெல்லியல் ஆய்மகள் மத்தம் பிணித்த கயிறுபோல் நின்னலம் சுற்றிச் சுழலும் என் நெஞ்சு. (99) 100. திங்களும் உரோகிணி என்னும் நாண்மீனும் பிரியாமல் எப்பொழுதும் உடன் நிற்கும், அது போல் தலைவனும் தலைவி யும் ஒருப்பட்டு நின்று வாழ்தல் வேண்டும். - பெருங்கதை : 2 : 9 : 167 - 70. உறுவுகொள் உரோகிணியொ டுடனிலை புரிந்த மறுவுடை மண்டிலக் கடவுளை வளைத்த கரந்துறை ஊர்கோள் கடுப்பத் தோன்றி நிரந்தவர் நின்ற பொழுதில். (100) 101. இல்லத்தில் இருந்து பிறர்க்கு உதவி வாழும் பெருந் தகைமை உடையவர், பூவில் அமைந்த தேன் போன்றவர். அவரிடைச் சென்று உதவிகளைப் பெற்று இனிதாக வாழ்வோர் தேனுண்ணும் வண்டு போன்றவர். - பரிபாடல் - திரட்டு : 7 தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள் தாதுண், பறவை அனையர் பரிசில் வாழ்நர். (101) 102. தாய் தன் மனம் மாறுபட்டுத் துன்புறுத்தினாள் . என்றால் கூட 'அம்மா' என்றே அலறித் துடித்து அழும் குழந்தை. அதுபோல் தலைவன் தகவற்ற துயரம் ஊட்டினால் கூட அவன் நலத்தையும் நல்வாழ்வையும் நினைத்தே வாழ்வாள் தலைவி. - குறுந்தொகை : 397. தாயுடன் றலைக்கும் காலையும் வாய்விட்டு அன்னா என்னும் குழவி போல இன்னா செயினும் இனிதுதலை அளிப்பினும் நின்வரைப் பினள் என் தோழி. (102) 103. ஈன்று அணித்தான எருமை தன் கன்றின் மேல் கொண்ட அன்பினால் அதனை அகன்று செல்லாமல் அருகில் போடப்பெற்ற பசும்புல்லைத் தின்னும். அதுபோல் மனையறக் கடமைகளை மேற்கொண்ட தலைவி தலைவன் மேல் சிறு கோபம் ஏற்படினும் அவனை அகலாமல் நின்று பணி புரிவாள். - குறுந்தொகை : 181. இருமருப் பெருமை ஈன்றணிக் காரான் உழவன் யாத்த குழவியின் அகலாது பா அற் பைம்பயிர் ஆரும் ஊரன் திருமனைப் பலகடம் தூண்ட பெருமுது பெண்டிரேம் ஆகிய நமக்கே. (103) 104. கோடைக் காலத்தில் நீர் வேட்கையால் வானத்தில் தோன்றும் மேகத்தில் இருந்து மழைத் துளியைப் பெறுவதற்குச் சுழன்று திரியும் வானம்பாடிக்கு, அம்மேகம் மழை வழங்கினால் போன்றது தலைவன் தலைவியின் மேல் செலுத்தும் அருள். - கலித்தொகை : 146. வறக் கூர் வானத்து வள்ளுறைக் கலமரும் புள்ளிற் கதுபொழிந் தாங்கு மற்றுத்தன் நல்லெழில் மார்பன் முயங்கலின் அல்லல் தீர்ந்தன்று ஆயிழை பண்பே. (104) 105. தலைவன் செலுத்துதற்குரிய அன்பைப் பெறாத தலைவி, கிழங்குடன் கருகி வாடிப்போய்க் கிடக்கும் கொடி போன்றவள் ஆவாள். - நற்றிணை : 295 முரிந்த சிலம்பின் எரிந்த வள்ளியின் புறன் அழிந்து ஒலிவரும் தாழிருங் கூந்தல். (105) 106. பெய்ய வேண்டிய பருவத்தில் மழை பெய்யத் தவறினால் உலகத்தில் அல்லல் மிகுந்து விடும். அதுபோல் தலைவன் அன்பை உரிய பொழுதுகளில் பெறமாட்டாத தலைவியின் வாழ்விலும் அல்லல் மிகுந்துவிடும். - கலித்தொகை : 25. துளிமாறு பொழுதினில் இவ்வுலகம் போலும் நின் அளிமாறு பொழுதினில் ஆயிழை கவினே. (106) 107. தலைவி தனக்குத் தந்த இணையற்ற இன்பத்தை மறந்து தலைவன் வாழ்வது, வறுமையுற்ற நாளில் பிறரால், பெற்று மகிழ்ந்த உதவியைத் தான் பெருஞ்செல்வம் அடைந்த போழ்தில் மறந்து வாழும் நன்றி கொன்றவன் செயல் போன்றது. - குறுந்தொகை : 225. கெட்டிடத் துவந்த உதவி கட்டில் வீறுபெற்று மறந்த மன்னன் போல நன்றி மறந்து அமையாய் ஆயின் மென்சீர்க் கலிமயில் கலாவத் தன்ன இவள் ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே. (107) 108. இனியவற்றைச் செய்து வந்த காதலன், காதலிக்கு இன்னாத செயல்களைச் செய்வது, கண்ணுக்கு இன்பம் நல்கும் புதுமலரைத் தாங்கி நின்ற நெருஞ்சி , பின்னே துன்புறுத்தும் முள்ளைத் தந்தது போன்றதாம். - குறுந்தொகை : 202. நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந் தா அங்கு இனிய செய்த நம் காதலர் இன்னா செய்தல் நோமென் னெஞ்சே. (108) 109. முன்னை நாளில் இன்ப விளையாடல் ஆடிய தலைவன் பின்னை நாளில் துன்பந் தருவோனாய் மாறுவது, குறிஞ்சிச் சிறுவருடன் கூடி விளையாடி மகிழ்ந்த இளைய யானைக்கன்று வளர்ந்த பின்னை நாளில் அவர்தம் தினைக்கதிரை மேய்ந்து, அழிக்கத் தலைப்பட்டது போன்றது. - குறுந்தொகை : 396. முழந்தாள் இரும்பிடிக் கயந்தலைக் குழவி நறவுமலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற குறியிறைப் புதல்வரொடு மறுவந் தோடி முன்னாள் இனிய தாகிப் பின்னாள் அவர்தினை மேய்தந் தாங்குப் பகையா கின்றவர் நகைவிளை யாட்டே. (109) 110. பெற்றுத் திளைத்த மகிழ்வினைப் பின்னர்ப் பெறாது வருந்தி நிற்கும் தலைவியின் வாழ்வு, இன்னியம் ஒலிக்கக் கூத்தர்களின் ஆடுகளத்தைக் கண்டவர் பின்னர் அக் கூத்தர்கள் ஆடி முடித்துப் போன பொலிவற்ற ஆடுகளத்தைக் காண்பது போன்றது. - அகநானூறு : 301. பல்லூர் பெயர்வனர் ஆடி ஒல்லெனத் தளைப்புணர்ந் தசைத்த பஃறொகைக் கலப்பையர் இரும்பேர் ஒக்கல் கோடியர் இறந்த புன்றலை மன்றங் காணின் வழிநாள் அழுங்கல் மூதூர்க் கின்னா தாகும் அதுவே மருவினம் மாலை அதனால் காதலர் செய்த காதல் நீடின்று மறத்தல் கூடுமோ மற்றே. (110) 111. தலைவன் தலைவியின் மேல் அன்பு செலுத்தாவிடினும் தலைவி தலைவன் மேல் தணியா அன்புடையவளாக இருப்பாள். அவனைக் கண்ட அளவாலும் மகிழ்வாள். அம்மகிழ்ச்சி, உயர்ந்த மலையில் அமைந்த பெருமரக்கிளையில் தோன்றும் தேன் அடையைக் கண்ட முடவன் தன் உள்ளங்கையை நீட்டித் தேனடையைப் பார்த்துக்கொண்டு நக்கி இன்புற்றால் போன்றது. - குறுந்தொகை : 60. குறுந்தாள் கூதளியாடிய நெடுவரைப் பெருந்தேன் கண்ட விருக்கை முடவன் உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து சுட்டுபு நக்கி யாங்குக் காதலர் நல்கார் நயவார் ஆயினும் பல்கால் காண்டலும் உள்ளத்துக் கினிதே. (111) 112. வண்டியில் ஊர்ந்து சென்று இன்பம் அடையா விடினும் அதனை இழுத்துச் செல்வதால் இன்பம் அடைவர் இளஞ்சிறார். அதுபோல் தலைவனுடன் இணைந்து இன்பம் அடையாவிடினும் அவன் அன்பை நினைந்தும் தலைவி மகிழ்வாள். - குறுந்தொகை : 61. தச்சன் செய்த சிறுமா வையம் வாந்தின் புறாஅர் ஆயினும் கையின் ஈர்த்தின் புறூஉம் இளையோர் போல் உற்றின் புறேஎம் ஆயினும் நற்றேர்ப் பொய்கை ஊரன் கேண்மை செய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே. (112) 113. கிளி கொய்து தின்றமையால் கதிர் இழந்த தினைத்தாள், பெரு மழை பெய்தமையால் வாடாமல் மீண்டும் தளிர்க்கும். அதுபோல் அன்புடையார் தொடர்பு மீண்டும் வாய்க்குமானால் முன்னர் அவரை இன்றிப் பட்ட துயர் மாறுவதுடன் புதிய தளிர்ப்பும் உண்டாகும். - குறுந்தொகை : 133. புனவன் துடவைப் பொன்போல் சிறுதினை கிளிகுறைத் துண்ட கூழை இருவி பெரும்பெயல் உண்மையின் இலைஒலித் தாங்கென் உரஞ்செத்து முளெனே தோழியென் நலம்புதி துண்ட புலம்பினானே. (113) 114. தலைவி உற்ற துயரைக் களைதற்கு உரியவர் களைதல் இன்றித் தனித்து வருந்தியிருப்பது, விலக்குதற்கு எவரும் இல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குப்பைக் கோழிப் போர் போன்றது. - குறுந்தொகை : 305. உய்த்தனர் விடாஅர் பிரித்திடை களையார் குப்பைக் கோழித் தனிப்போர் போல விளிவாங்கு விளியின் அல்லது களைவோர் இலையான் உற்ற நோயே. (114) 115. தனக்கு ஊட்டப்பெற்ற குருதிப்பலி தன்மேல் வழிந்து ஓடினாலும் அதன் சுவையைச் சிறிதும் அறியாது பறை. அப் பறையைப் போன்ற தன்மையர் இல்லறத்தால் வாய்க்கும் இன்பத்தைச் சிறிதும் அறியார். - இன்னிலை : 28. கறங்குபறை காணா வுறுமனைக் காதல் பிறங்கறை நாவாரும் அஃதே - திறமிரங்கி ஊடி உணர்வாரே தாமிசைவார் பல்காலும் ஈடிலதோர் இன்ப விருந்து. (115) 116. அசுணம் என்னும் பறவையைக் கொல்ல விரும்புபவன் முதற்கண் யாழை இசைத்துப் பின்னர்ப்பறையை முழக்கி இன்பமும் துன்பமும் உண்டாக்குவான். தலைவிக்கு முதற்கண் இன்பத்தை உண்டாக்கிப் பின்னர்த் துன்பத்தைச் செய்யும் தலைவன் அசுணமாவைக் கொல்பவனைப் போன்றவனே. - நற்றிணை : 304. அசுணம் கொல்பவர் கைபோல் நன்றும் இன்பமும் துன்பமும் உடைத்தே தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே. (116) 117. ஒருகாலத்தில் இன்பத்தையும், மற்றொரு காலத்தில் துன்பத்தை யும் தலைவிக்குத் தரும் தலைவன் செய்கை, இனிய காற்றை வழங்கிய வானமே, கொடிய தீயையும் வழங்கியது போன்றது. - நற்றிணை : 294. தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு நோயும் துன்பமும் ஆகின்று மாதோ ...... ........ ...... இலங்குமலை நாடன் மலர்ந்த மார்பே. (117) 118. இனிய மனைவியைப் பிரிந்து வாழும் தலைவனது தனிமை இல்வாழ்வு, விருந்தினர் விரும்பித் தேடி வாராத பொலிவற்ற நாள் போன்றது. - குறுந்தொகை : 137. மெல்லியல் அரிவைநின் நல்லகம் புலம்ப நிற்றுறந் தமைகுவென் ஆயின் எற்றுறந்து இரவலர் வாரா வைகல் பலவா குயான் செலவுறு தகவே. (118) 119. நீரின் ஓட்டத்தால் இடையீடு பட்டுக் கிடக்கும் நுண்ணிய மணல். அதுபோல், ஒருவேளை விடுத்து ஒருவேளை உண்ணும் நிலைமையில் தன் கணவன் குடும்பம் வறுமையுற்றுக் கெட்டாலும், செல்வ மிக்க தன் தந்தையின் வீட்டில் சென்று இருந்து வாழும் வாழ்வைப் பண்புடைய இல்லாள் நினையாள். - நற்றிணை : 110. கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் ஒழுகுநீர் நுணங்கு அறல் போலப் பொழுது மறுத்துண்ணும் சிறுமது கையளே. (119) 120. கதிரோன் மறைந்த பின்னர்ப் பொய்கைப் பூக்களுக்குப் பொலிவு இல்லை. அதுபோல் பொருள் இழந்து வறுமையுற்றுக் கெட்டவர் இல்லற வாழ்வும் சிறப்படைவது இல்லை. - கலித்தொகை : 148. இல்லவர் ஒழுக்கம் போல் இருங்கழி மலர் கூம்ப. (120) 121. கணவன் மனைவியர் ஆகிய இருவரின் செருக்கு மிக்க செயலால் இடைப்பட்ட அவர்தம் அன்புக்குரிய ஒருவர் அல்லல்படுவது, அரவம் போன்ற கறையால் கவ்வப்பெற்று அவலம் அடையும் மதியம் போன்றது. - குறுந்தொகை : 43. இருபே ராண்மை செய்த பூசல் நல்லராக் கதுவி யாங்கென் அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே. (121) 122. ஆட்டுக் கடாக்களுள் ஒன்று மற்றொன்றை முட்டி னால் விடாமல் மீண்டும் மீண்டும் தாக்குமே ஒழிய எளிதில் போரை விடுத்து விலகிச் செல்லா; நல்லறிவும் நல்லுணர்வும் இல்லாதவர் செயலும் இத்தகைத்தே ஆம். - இன்னிலை : 10. நீள் மோத்தை ஒன்ற உணராதார் ஊங்கு. (122) 123. தலைவி தலைவனுடன் மாறுபட்டு நின்று துயரூட்டுவது, உடலும் உயிரும் ஒன்றாகித் தலை மட்டும் இரண்டாகிய பறவை யின் தலைகள் இரண்டனுள் ஒன்று மற்றொன்றைத் தாக்கிப் போரிடுவது போன்றது. - கலித்தொகை : 89. ஒருயிர்ப் புள்ளின் இருதலை யுள்ளொன்று போரெதிர்ந் தற்றால் புலவல் நீ. (123) 124. பொறுமை இல்லாத அறிவு, இன்பச் சேர்க்கை இல்லாத இளமை, படித்துறை இல்லாத தாமரைக் குளம், ஆடை இல்லாத அணிகலம், மணம் இல்லாத மலர், கல்வித் தெளிவு இல்லாத புலமை, நீர்நிலை இல்லாத ஊர் - ஆகிய இவை போன்றது மக்கள் பேறு இல்லாத ஒருவன் செல்வ வாழ்வு. - வளையாபதி : 12. பொறையிலா அறிவு போகப் புணர்விலா இளமை மேவத் துறையிலா வனச வாவி துகில் இலாக் கோலத் தூய்மை நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னீர்ச் சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வம் அன்றே. (124) 125. காமம், கடலாகும் ; புணர்ச்சி, அக்கடலில் தோன்றும் அலையாகும்; அன்பு, அலையில் வந்த முத்து ஆகும் ; ஊடல், முத்தின் ஒளியாகும் ; மக்கள், அவ்வொளி கூடும் இடமாகும். - இன்னிலை:27. காமம் வீழின்பக் கடலாமே காதலரின் ஏம இருக்கையே தூந்திரையாம் - ஏமத்தீண்டு ஆம்பரலே தோன்றும் அளியூடல் ஆம்பாலில் தெற்றித் தெறிப்பாம் ஒளியொளிபாய் கண்ணேசீர்த் துற்றுகப்பாய்ப் பெற்ற மகவு. (125) 126. குடும்பம் என்பது ஒரு மரம் ; அம்மரத்தின் அடி , தலைமகன்; கிளை, மனைவி; பூங்கொத்து, மக்கள் ; அன்பாலும் அறிவாலும் முதிர்ந்து செல்லும் விருந்தினரே வண்டுகள். - சூளாமணி : 414. தலைமகன் தாள்தனக் காசுச் சாகைய நிலைமைகொள் மனைவியாம் நிமிர்ந்த பூந்துணர் நலமிகு மக்களா முதியர் தேன்களாக் குலமிகு கற்பகங் குளிர்ந்து தோன்றுமே. (126) 127. வலுவான மதில் உடையவர் அஞ்ச வேண்டுவது இல்லை. அதுபோல் தம்மை அடைந்தவரைக் காப்பதில் தளராத ஆண்மையாளரைப் பெற்ற குடியினரும் அஞ்ச வேண்டியது இல்லை . - பதிற்றுப்பத்து : 56. ஓடாப் பூட்கை மறவர் மிடல்தப இரும்பனம் புடையலொடு வான்கழல் சிவப்பக் குருதி பனிற்றும் புலவுக்களத் தோனே ............. ...... ...... ஒண்ணுதல் மகளிர் துனித்த கண்ணினும் இரவலர் புன்கண் அஞ்சும் புரவெதிர் கொள்வனைக் கண்டனம் வாற்கே. (127) 128. மலர்ச் செறிவில்லாத சோலையும், தாமரை மலராத பொய்கையும், பிறை தோன்றாத வானமும் மக்கள் இல்லாத இல்வாழ்வும் ஒப்பானவை யேயாம். - சூளாமணி : 413. தொக்கிள மலர்துதை விலாத சோலையும் புக்கிளந் தாமரை நகாத பொய்கையும் மிக்கிளம் பிறைவிசும் பிலாத அந்தியும் மக்களை இலாததோர் மனையும் ஒக்குமே. (128) 129. பூத்தாலும் காய்க்காதது மாதிரி என்னும் மரம். அம்மரத்தைப் போன்றவரே, மக்கள் பேறு வாய்க்கப் பெறாத இல்லற வாழ்வினர். - சூளாமணி : 418. மக்களை இலாதவர் மரத்தோ டொப்பவென்று ஒக்கநின் றுரைப்பதோர் உரை. (129) 130. அன்பால் பொருந்தித் தழுவிச் செல்லுதலால் பல்லியைப் போலவும், போற்றிக் காத்தலால் தாயரைப் போலவும், ஐம்புலன்களையும் அடக்குதலால் துறவிகளைப் போலவும், அடங்குதலால் ஆமையைப் போலவும், தீமையைத் திருத்துதலால் பகைவரைப் போலவும், உண்பித்தலால் அன்னையைப் போலவும் இருந்து தம் புதல்வரைக் காத்தல் வேண்டும். - சீவகசிந்தாமணி : 195. பொருந்தலால் பல்லி போன்றும் போற்றலால் தாயர் ஒத்தும் அருந்தவர் போன்று காத்தும் அடங்கலால் ஆமை போன்றும் திருந்துவேல் தெவ்வர் போலத் தீதிற எறிந்தும் இன்ப மருந்தினால் மனைவி ஒத்தும் மதலையைக் காமின் என்றான். (130) 131. தூய நீர் ஆறு பாய்தலால் கடலும் தூயநீர் என்று போற்றப் பெறும். அதுபோல் நன்மகவு ஒரு குடியில் பிறத்தலால் அக்குடியும் பெருமை அடையும். - சூளாமணி : 222. கங்கை நீர் பாய்ந்துழிக் கடலும் தீர்த்தமாம் அங்கணீர் உலகெலாம் அறியப் பட்டது . நங்கைநீ பிறந்ததற் பின்னை நங்குடி வங்க நீர் வரைப்பெலாம் வணங்கப் பட்டதே. (131) 132. தகவுடைய பெற்றோர்க்கு அறிவாற்றலால் சிறந்த மக்கள் பிறந்து புகழுடன் விளங்குவது, நறு நெய்யில் இனிய பால் சொரிந்தது போல் இன்பம் தரும். - சூளாமணி : 1829. நெய்த்தலைப் பால்உக்காங்கு நெடுவரை உலகின் வந்த மைத்துனக் குமரன். (132) 133. புகழ்வாய்ந்த நல்ல குடியிலே பண்புவாய்ந்த நன்மகள் பிறப்பது, வலம்புரிச் சங்கின் வயிற்றிலே, விலை மதித்தற்கு அரிய மாமணி பிறந்தது போன்றது. - சூளாமணி : 417. வலம்புரி வயிற்றிடைப் பிறந்த மாமணி நலம்புரி பவித்திர மாகும் நாமநீர் பொலம்புரி மயிலனாய் பயந்த பூங்கொடி கலம்புரிந் தவர்க்கெலாம் கோல மாகுமே. (133) 134. வெளிப்படத் தோன்றி நீண்டு வளர்ந்த இரண்டாய மூக்குகளுக்கும் ஊடு உள்ள துளை ஒன்றே. அதுபோல் ஒரு குடிப் பிறந்தவர் பலர் ஆயினும் பண்பு அறிவு ஆற்றல்களால் ஒன்று பட்ட தன்மையினராய் விளங்கிக் குடிச்சிறப்பை மேலும் உயர்த்துதல் வேண்டும். - பெருங்கதை : 2 : 3 : 97. ஒடுகொடி மூக்கின் ஊடுபோழ்ந்து ஒன்றாய்க் கூடுதல் வலித்த கொள்கைய போலப் ... ..... ..... ..... ..... பிறந்தவிற் பெருங்கிளை நிறைந்தொருங்கு ஈண்ட. (134) 135. கடலும் கடற்கரைக் கானலும் வேறுபட்ட தோற்றம் உடையவை. அத்தகு வேறுபட்ட தோற்றம் உடையவர் ஆயினும் உடன் பிறந்தவர், சொல் தோன்றப் பொருள் தோன்றுமாறு போல் ஒன்றுபட்ட உள்ளத்தவராக இருத்தல் வேண்டும். - பரிபாடல் : 15: 10. கல்லறை கடலும் கானலும் போலவும் புல்லிய சொல்லும் பொருளும் போலவும் எல்லாம், வேறு வே றுருவின் ஒரு தொழில் இருவர்த் தாங்கும் நீணிலை ஓங்கிரும் குன்றம். (135) 136. தந்தையினால் தக்க முறையில் தண்டித்து வழிப்படுத்தி வளர்க்கப் பெறாத மைந்தன், ஒரு நெறியில் செவ்வையாகச் செல்லவிடாது மாறிச் செல்லும் மனம் போன்றவன். - பெருங்கதை : 2 : 9:194. தந்தையொ டொறுக்கப் படாஅன் சிந்தை அகனுணர் வில்லா மகனே போலத் தன்மனம் பிறந்த ஒழுக்கினன். (136) 4. அறிவு 1. காணுதற்கு அரிதாய் மறைந்துள்ள பொருள்களை யெல்லாம் வெளிப்படுத்துவதும், கலைகளுக்கு இருப்பிடமாக இருப்பதும் கல்வியேயாம். ஆதலால் கல்வி உலகைப் படைத்த கடவுளுக்கு ஒப்பானது. - கல்லாடம் : 11. 2. எவ்விடத்தும் பரவி, உலகத்து உயிர்களையெல்லாம் நன்னெறியில் நிறுத்திக் காக்க வல்லது கல்வி. ஆதலால் அக்கல்வி உலகத்து உயிர்களை யெல்லாம் தன்னுடையதாகக் கொண்டு காத்து உதவும் காவற்கடவுள் போன்றது. - கல்லாடம் : 11. 3. இம்மை வாழ்வில் இன்பமாக வாழச் செய்வதுடன் மறுமை வாழ்வை ஒருவன் அடைவதற்கும் அரும்பெரும் துணையாக அமைவது கல்வியே. ஆதலால் கல்வி முழுமுதல் இறைவனுக்கு இணையானது. - கல்லாடம் : 11. 4. அள்ளி அள்ளி வழங்கினாலும் குறையாமல் மேலும் பெருகி வளரும் தன்மையினது கல்வி. ஆதலால் அது நிறைந்தோர் நெஞ்சில் இருந்து எந்நாளும் நீங்காத அருள் போன்றது. - கல்லாடம் : 11. 5. கடல் ஆழ, நீள, அகலங்களால் அளவிடுதற்கு அரியது. அரிய பொருள்களைத் தன்னகத்துக்கொண்டது. அது போல் கல்வியும் அளவிடுதற்கு அருமையும், அரும்பொருள் உடைமையும் உடையது. - கல்லாடம் : 11. 6. கடலில் பலப்பல துறைகள் அமைந்து தன்னை நாடி வருவார் விருப்புக்கு ஏற்பப் பயன்படும். அதுபோல் கல்வியும் பலப்பல துறைகள் அமைந்து கற்றோர் தத்தமக்கு வேண்டிய நல்லவற்றையெல்லாம் உதவி நிற்கும். - கல்லாடம் : 11. 7. மலை அண்மையில் நின்றவர்க்கும் புலப்படும்; நெடுந் தொலைவில் சென்றவர்க்கும் புலப்படும்; அதுபோல் கல்வியும் தன்னைப் பொருளாகக் கொண்டவரை, உள் நாட்டவரே அன்றி வெளிநாட்டவரும், உலகப் பன்னாட்டவரும் அறிந்து கொள்ளும் பான்மையை உண்டாக்கும். - கல்லாடம் : 11. 8. மலை தான் நிற்கும் நிலைமையில் சிறிதும் அசையாமல் நிற்கும். பலவகைப்பட்ட அரிய பொருள்களையும் வழங்கும். அதுபோல் கல்வியும் கற்றோர்க்கு அசையாத் தன்மையையும் அரிய நுண்ணிய பல பொருள்களையும் நிரம்ப வழங்கும். - கல்லாடம் : 11. 9. வேண்டுவார்க்கு வேண்டுவனவற்றை விரும்பி நல்கும் தெய்வமரம் போன்றது, நினைத்தவற்றையெல்லாம் நினைத்த போது தவறாமல் தந்துதவும் கல்வி. - கல்லாடம் : 11. நிலையினில் சலியா நிலைமை யானும் பலவுல கெடுத்த ஒருதிறத் தானும் நிறையும் பொறையும் பெறுநிலை யானும் தேவர் மூவரும் காவ லானும் தமனியப் பராரைச் சைலம் ஆகியும் அளக்கவென் றமையாப் பரப்பின தானும் அமுதமும் திருவும் உதவுத லானும் பலதுறை முகத்தொடு பயிலுத லானும் முள்ளுடைக் கோட்டு முனையெறி சுறவம் அதிர்வளை தடியும் அளக்கர் ஆகியும் நிறையுளங் கருதி நிகழ்ந்தவை நிகழ்பவை தருதலின் வானத் தருவைந் தாகியும் மறைவெளிப் படுத்தலில் கலைமகள் இருத்தலில் அகமலர் வாழ்தலில் பிரமன் ஆகியும் உயிர்பரிந் தளித்தலில் புலமிசை போக்கலில் படிமுழு தளந்த நெடியோன் ஆகியும் இறுதியில் சலியா திருத்த லானும் மறுமைதந் துதவும் இருமை யானும் பெண்ணிடங் கலந்த புண்ணியன் ஆகியும் அருள்வழி காட்டலின் இருவிழி யாகியும் கொள்ளுநர் கொள்ளக் குறையா தாதலின் நிறையுளம் நீங்கா துறையருள் ஆகியும் அவைமுதல் ஆகி இருவினை கெடுக்கும் புண்ணியக் கல்வி. (1-9) 10, பூ, மணி, தந்தம், பொன் முதலாயவற்றை அடித்துக் கொண்டு வானார்ந்த மலையில் இருந்து இழிந்து வரும் ஆறு. அதுபோல் அரிய பல பொருள்களைக் கொண்டு உயர்ந்த பெருக்குடன் வரும் சிறந்த கவிஞர்களின் கவிதை. - கல்லாடம் : 2. பூமணி யானை பொன்னென எடுத்துத் திங்களும் புயலும் பருதியும் சுமந்த மலை வரும் காட்சிக்குரிய வாகலின் நிறையுடைக் கல்வி பெறுமதி மாந்தர் ஈன்றசெங் கவியெனத் தோன்றிநனி பரந்து பாரிடை இன்ப நீளிடைப் பயக்கும் பெருநீர் வையை. (10) 11. விண்மீன்கள் பலவாக இருப்பினும் ஒளியுடைய ஒரு திங்களுக்கு இணையாகமாட்டார். அதுபோல் எவ்வளவு மக்கள் இருப்பினும் அறிவு, பண்பு, செம்மை முதலியவற்றில் நிகரில்லா ஒளியுடைய அறிஞர்போலப் பொலி வடைய மாட்டார். - சூளாமணி : 270. தண்சுடர்க் கடவுள் போலத் தாரகைக் குழாங்கள் தாமே விண்சுடர் விளக்க மாக விளங்கல வேந்தர் போல மண்சுடர் வரைப்பின் மிக்க மக்களும் இல்லை கண்டாய். (11) 12. ஞாயிறு தன்னால் விளக்கப்படும் இடம் அனைத்தையும் ஒரு பொழுதிலே ஒன்றுபோல் விளக்கமாக்குவது போல் முற்றறி வுடைய பெருமக்களும் தாம் அறியும் பொருளை ஒருகாலத்தே முழுமையாக அறிந்து கொள்வர். - நீலகேசி : 437. 13. நீர் நிலைகள் பலவற்றிலும் திங்கள் மண்டிலம் ஒரு பொழுதில் ஒப்பாக உருவத்தைக் காட்டி நிற்பது போல் முற்றறி வுடையவர்களும் ஒரு காலத்தே அறியப்பெறும் பொருளை யெல்லாம் அறிந்து தம்முடையதாக்கிக் கொள்வர். - நீலகேசி : 437. நீருநீர் தோறு மொவ்வா நிலையிற்றே திங்கள் என்றும் ஊரினூர் தோறு மொவ்வா வொளியிற்றே ஞாயி றென்றும் யாரின்யார் கேட்ட றீவார் அன்னனே அண்ணல் என்றார் தேரன்நீ சொன்ன தன்னம் சேரல் ஆக என்றாள். (12-13) 14 கடலிடத்தைப் பற்பல ஆறுகளும் அடைந்து வளமிக்க தாக்கும். அதுபோல் பேரறிவுடையவர் இயற்றிய நூல்களும் உயர்ந்த பல கருத்துக்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கும். அவற்றைக் கற்றுத் தெளிந்தவர்க்கு அறியாப் பொருட்கள் இரா. - சீவகசிந்தாமணி : 1127. ஆறெலாம் கடலுள் வைகும் அருந்தவத் திறைவன் நூலுள் வேறொலாப் பொருளும் வைகும். (14) 15. கலைத்தேர்ச்சி மிக்கவர்கள் உரிய முறைப்படி கழுவுதல் லால் ஒளியுடைய மாணிக்கம் மேலும் ஒளியுடையதாகும். அதுபோல் தெளிவுடைய சான்றோர்கள் அறிவு நீர் கொண்டு கழுவி அமைத்தலால் அவர்கள் கூறும் சொல்லும் பொருளும் ஒளியுடையதாகும். - சீவகசிந்தாமணி : அவை அடக்கம் : 1. கற்பால் உமிழ்ந்த மணியும் கழுவாது விட்டால் நற்பால் அழியும் நகைவெண்மதி போல் நிறைந்த சொற்பால் உமிழ்ந்த மறுவும்மதி யாக மூஉவிப் பொற்பா இழைத்துக் கொளற்பாலர் புலமை மிக்கோர். (15) 16. தகுதியான காலம் இடம் அறிந்து, கற்றறிந்த பெருமக்கள் கூறும் பயன் மிக்க சொற்கள், உடற் கூறு அறிந்து தெளிவு வரப்பெற்ற மருத்துவன், நோயாளன் நிலைமைக்கு ஏற்பத் தரும் மருந்து போல் நன்மை செய்யும். - கலித்தொகை : 17. பொருந்தியான் தான்வேட்ட பொருள்வயின் நினைந்தசொல் திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய மருந்து போல் மருந்தாகி மனனுவப்பப் பெரும்பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே. (16) 17. கல்லும் ஓடும் புல்லும் கரியும் உமியும் பிறவும் அகற்றித் தூர்த்துக் கட்டிடத்திற்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பது போல், பதர்ச்சொற்களை அகற்றிப் பயன்மிக்க சொற்களையே அமைத்துச் செந்நாப் புலவர் செய்யுள் செய்வர். - பெருங்கதை : 2 : 4:51. பதர்ச்சொல் பருப்பொருள் பன்னுபு நீக்கிப் பொருட்சொல் நிரப்பும் புலவர் போலக் கல்லும் ஓடும் புல்லும் கரியும் உமியும் மயிரும் என்பும் உட்பட அமைவில் தன்மைய அத்துடன் களைந்து .................. ..................... வலமுறை வகுத்த நலமுறை நன்னகர். (17) 18. மருத்துவர், கசப்புடைய மருந்தை இனிய கட்டி பூசியும், தேனில் குழைத்தும் ஊட்டுவர். அதுபோல் நலம் பயக்கும் உறுதிச் சொற்களை இனிய சுவையுண்டாக அறிஞர் பேணி உரைப்பர். - பெருங்கதை : 2 : 11 : 173. தேன்சுவைக் கொளீஇ வேம்பின் ஊட்டும் மகா அர்மருந் தாளரின் மறத்தகை அண்ணல். (18) 19. தன்னிடம் வைக்கப் பெற்ற பொருளின் அளவு இவ்வளவு என வரையறுக்கும் கருவி துலாக்கோல். அதுபோல் தன்னிடம் சொல்லப் பெற்றதை ஆய்ந்து தெளிவான முடிவு செய்வர் சான்றோர். - அகநானூறு : 349. ஞெமன்ன், தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி. (19) 20. கடலில் உள்ள உவர் நீரை மேகம் நன்னீராக மாற்றி மழையாகப் பொழிகிறது. அதுபோல் மக்களிடத்துள்ள அறியாமை யைக் கண்டும் கேட்டும் அறிந்த சான்றோர் அவற்றை விலக்கி நன்னெறியில் செலுத்தி உலகைக் காப்பர். - இன்னிலை : 9. கடல் முகந்து தீம்பெயலை ஊழ்க்கும் எழிலி மடனுடையார் கோதகற்றி மாண்புறுத்தல் ஏமம் படைத்தாக்கல் பண்பறிந்தோர் சால்பு. (20) 21. கப்பலின் பாயை விரித்துக் கட்டினால் காற்றின் உதவி கொண்டு அக்கப்பல் சேரவேண்டிய இடத்தைச் சேரும். அது போல் அறிஞர் அறிவுரைகளைக் கேட்டு அதன்படியே நடந்தால் நற்பேறு அடைவர். - இன்னிலை : 5. திரைத்த விரிக்கின் திரைப்பின் நாவாய்போல் உரைத்த உரையதனைக் கேட்டும் - உரைத்த பயன்தவா செய்வார் சிலரேதம் நெஞ்சத்து இயன்றவா செய்வார் பலர். (21) 22. உள்ளே போலியான ஒரு பொருளை வைத்து மேலே பொன்னைப் பூசி இருந்தாலும் பொன்னின் மாற்றுக் கண்டறிய வல்ல திறம் வாய்ந்தவர் அதனைப் பொன் என்று கொள்ள மாட்டார். அதுபோல் வெளித்தோற்றம் கண்டு, மனமாசு உடையவர்களை உயர்ந்தோர் என்று அறிவுடையோர் கொள்ளார். - நீலகேசி : 274. பொன் கொண்டார் ஆயினும் போர்வைபூச் செனில் புலையன் வன்கண்மையாற் செய்த வஞ்சமே எனவளைப்பர். (22) 23. அகன்றதாகவும் மேடு பள்ளம் முதலாய தடைகள் இல்லாததாகவும் இருக்கும் சாலையில் நடக்கும் போதும் குருடனுக்கு இடறுதல் உண்டாகும். அதுபோல் தெளிவு உடைய எளிய கருத்தே ஆயினும் கல்வியறிவு இல்லார்க்கு விளங்காததே யாகும். - நீலகேசி : 304. பெருவழியுள் இடறுதியால். (23) 24. உருவத்தைக் கண்டு இகழ்தலும், படைப்பின் அருமை இன்னதென அறியாது பழித்தலும், அறியாமையே. கொன்றைக் காயைப் பெருக்கிய இறைவன் பயற்றங்காயைச் சுருக்கியது ஏன்? கரும்பினைச் சுருக்கிய இறைவன் மூங்கிலைப் பெருக்கியது ஏன்? - பெருங்கதை. 3:15: 4. ஒருபே ருலகம் படைத்த இறைவன் உருவுகரந் தொழுகல் உணரார் ஆகக் கொன்றையம் பசுங்காய் பெருக்கியும் பயற்றின் நன்றுவிளை நெற்றினைச் சிறுக்கியும் குன்றா இன்தீங் கரும்பினைச் சுருக்கியும் விண்டலைத் துன்னரும் விசும்புற நீட்டிய நெறியும் இன்னவை பிறவும் இசைவில எல்லாம் படைத்தோன் படைத்த குற்றம் இவையென எடுத்தோத் துரையின் இயம்பி யாஅங்கு. (24) 25. உவர்க்கடலில் பிறந்தது என்றாலும் விலைமிக்க பவழத்தையும் முத்தையும் எவரும் வேண்டா என வெறுத்து ஒதுக்கமாட்டார். அது போல் சுவையற்ற முறையில் அமைந்து உள்ள தாயினும் பயன்மிக்க சொல்லைப் புறக்கணித்தல் கூடாது. - சீவகசிந்தாமணி ; அவை அடக்கம் : 2. முந்நீர்ப் பிறந்த பவழத்தொடு சங்கு முத்தும் அந்நீ ருவர்க்கும் எனின்யார்வை நீக்கு கிற்பார் இந்நீர என்சொல் பழுதாயினும் கொள்ப அன்றே பொய்ந்நீர அல்லாப் பொருளால் விண்புகுத்தும் என்பார். (25) 26. நோயுற்ற மக்கள் அந்நோய் தீர்க்கக் கருதினார் என்றால் மருந்தின் சுவையைப் பற்றிச் சிறிதும் கருதார். அதுபோல் உயிர்ப்பிணியைத் தீர்க்கவல்ல மெய்யுணர்வு நூலைக் கற்க விரும்புபவர் அந்நூல் சுவையற்ற சொற்களை உடையது என்றால் கூட அதனை ஒதுக்கமாட்டார். - குண்டலகேசி :2. 27. நடுக்கும் குளிரைப் போக்க விரும்புபவர் தீக்காயும் போது அத்தீயுடன் சேர்ந்த புகையைப் பற்றிக் குற்றமாகக் கருத மாட்டார். அதுபோல் உயர்ந்த பொருளைப் பற்றி உரைக்கும் நூலிலே அமைந்த சொற்குற்றத்தை அறிவுடையோர் பொருட் டாகக் கொள்ளார். - குண்ட லகேசி : 2. நோய்க்குற்ற மாந்தர் மருந்தின் சுவைநோக்க கில்லார் தீக்குற்ற காதல் உடையார் புகைத்தீமை ஓரார் போய்க்குற்ற மூன்றும் அறுத்தான் புகழ் கூறு வேற்கென் வாய்க்குற்ற சொல்லின் வழுவும் வழுவல்ல அன்றே. (26-27) 28. நெருப்பினுள் மறைந்து நின்று மேல் எழுவதாகிய புகையை நோக்கி விளக்கினை எவரும் இகழார். அதுபோல் உள்ளே பொதிந்துள்ள பொருளை ஆராயும் பெரியவர்கள் அப்பொருளைக் கூறும் சொல்லில் உண்டாகும் குற்றத்தைப் பொருட்டெனக் கருதார். - யசோதர காவியம் : 3. உள்வி ரிந்த புகைக்கொடி உண்டென எள்ளு கின்றனர் இல்லை விளக்கினே உள்ளு கின்ற பொருள்திறம் ஓர்பவர் கொள்வர் எம் உரை கூறுதற் பாலதே. (28) 29. கப்பலின் பாயைச் சுருக்கிக் கட்டிவிட்டால் எங்கும் செல்லாமல் ஓரிடத்தே சுழன்று அசைந்து திரியும். அதுபோல் அறவோர் அறிவுரை கேட்டு நட அறவோர் அறிவுரை கேட்டு நடக்க வல்லவர் அமைவர். தவறிய வர்கள் தம் மனம் போல் அலைந்து கெடுவர். - இன்னிலை : 5. திரைத்த விரிக்கின் திரைப்பின்நா வாய்போல் உரைத்த உரையதனைக் கேட்டும் - உரைத்த பயன்றவா செய்வார் சிலரேதம் நெஞ்சத்து இயன்றவா செய்வார் பலர். (29) 30. ஒருவர் உள்ளத்துள்ள உணர்ச்சிகளை எல்லாம் ஒன்று விடாமல் குறிப்பால் அறிந்து கொள்ளும் திறத்தினராக இருப்பது, ஆங்காங்கு மலர்ந்து தோன்றும் நறுமண மலர்களைப் பறித்துத் தேர்ச்சிமிகக் கட்டிய மாலையை எடுத்துக்கொள்வது போன்றது. - பெருங்கதை : 4: 10:160. நூல்நெறி மரபில் தானறிவு தளரான் தொடுத்த மாலை எடுத்தது போல முறைமையின் முன்னே தெரிய அவன்எம் இறை மகற் குரைத்தனன். (30) 31. அன்பாலும் வித்தைத் தேர்ச்சியாலும் அடக்கவல்ல பாகனுக்குத் தாழ்ந்து பணிந்து ஏவல் செய்யும் யானை. அதுபோல் அன்பாலும் அறிவாலும் நிரம்பிய ஆசிரியருக்கு அடங்கிநின்று தலையாய மாணவர் கற்பர். - பெருங்கதை : 2 :9:58. உதையண குமரனும் உள்ளம் பிறழ்ந்ததன் சிதைவுகொள் சீலம் தெளிந்தனன் கேட்டு வீணை யெழீஇ வீதியில் நடப்ப ஆணை ஆசாற்கு அடியுறை செய்யும் மாணி போல மதக்களிறு படிய. (31) 32. இப்பையிலுள்ள எல்லாக் காசுகளும் செல்லும் என்றோ, செல்லா என்றோ அக்காசுகளை எடுத்துப் பார்த்து ஆராயாமல் எவரும் சொல்லார். அதுபோல் அறிவுடையோரும் பிறர் கூறும் பொருளை ஆராய்ந்து பாராமல் அதனை நல்லது என்றோ கெட்டது என்றோ கூறிவிட மாட்டார். - நீலகேசி : 182. உலகத்தார், கிழியோடு மாறாக் காசு என்றான் சொல் கேட்பவோ? (32) 33. அழுக்குப் படிந்துள்ள ஆடையில் உள்ள அழுக்கினைப் போக்க முயல்பவர் அவ்வழுக்கு நீங்கும் அளவும் ஆடையை நீரில் இட்டுத் தோய்த்து அலசுவர். அதுபோல் பிறர் அறியாமையை நீக்க விரும்புபவர் அவரைப் பன்முறையும் வினாவி விளக்கம் - தந்து தெளிவு செய்வர். - நீலகேசி : 783. ஆட்டினாள் அவனையும் ஆக்கிச் செல்பவள். (33) 34. முன்னுண்ட தேனினும் இனிய தேனைக் கொள்வதற் காகத் தேனீ கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ இவற்றைத் தேடி அலையும். அதுபோல் நன் மாணவர்களும் நல்லாசிரியர் பலரை அடுத்துச் சென்று அரியவற்றைக் கற்றுச் சேர்த்துக்கொள்வர். - கல்லாடம் : 35. அருள்தரும் கல்வி அமையத் தேக்கப் பற்பல ஆசான் பாங்கு செல் பவர்போல் மூன்றுவகை அடுத்த தேன்தரு கொழுமலர் கொழுதிப் பாடும் குணச்சுரும்பு இனங்காள். (34) 35. கலத்தில் கறக்கப் பெறும் பால் உடனுக்குடன் வெளி யேறியாவது, வற்றியாவது போய்விடுமாயின் பாலின் வழியாகக் கிடைக்கும் தயிர், மோர், நெய் ஆயவை கிடையா. அது போல் கற்றவை அனைத்தும் உடனுக்குடன் மறந்து போகுமாயின் கல்வியால் உண்டாகும் பயன் எதுவும் இல்லையாம். - நீலகேசி : 511. பிறந்து பிறந்துநின் இச்சை கெடலன்றிப் பின்னொன்றின்மேல் சிறந்து சிறந்தாங் குணர்ச்சி விரியும் திறமரிதால் கறந்த கறந்த கலஞ்சுவைத் திட்டால் கறைக் கலங்கள் நிறைந்த நிறைந்தவை பால்தயிர் மோரெனத் தானென்னையோ. (35) 36. அறவோர்கள் கூறும் அருள் உரை அரிய மிதவை யாகும். அம்மிதவையைப் பெற்றுப் பற்றிக் கொண்டவர்கள் துன்பம் என்னும் கடலை நீந்தி இன்பம் என்னும் கரையை அடைதல் எளிது. - சீவகசிந்தாமணி : 1132. வசையற நிறைந்த கற்பின் மாலையும் மாமி தானும் தசையற உருகி வெந்து தம்முயிர் நீங்கும் ஆங்கண் நொசிதவன் சொற்கள் என்னும் நோன்புணை தழுவி நெஞ்சில் கசிவெனும் கடலை நீந்திக் கரையெனும் காலை கண்டார் . (36) 37. மலையில் இருந்து ஓடிவரும் ஆறு நொய்யையும், நுரையையும் கொண்டு கலங்கி வரும். அதன் கலங்கிய தன்மை, கல்லாத மாந்தர் உள்ளம் போன்றது. - பெருங்கதை : 1 : 50: 12. அரும்பொருள், கல்லா மாந்தர் உள்ளம் போல நொய்ந் நுரை சுமந்து இழிதரும் அருவி. (37) 38. எல்லாப் பொருள்களும் தம்மிடத்து நிரம்பியிருப்பவர் வேறு இடங்களில் சென்று தமக்கு இன்ன பொருள் வேண்டு மெனக் கேளார். அதுபோல் கல்லார் சொல்லும் பொருளற்ற சொல்லைக் கற்று வல்ல பெருமக்கள் கொள்ளார். - பெருங்கதை : 1:38: 66. ஆணைத் தடைஇய நூல்நெறி அவையத்துக் கல்வியாளார் சொல்லிசை போல வேட்போர் இன்றி வெறிய வாக. (38) 39. கல்லாதவரது அருளில்லாத உள்ளம் இருள் படிந்ததாக இருக்கும். அவ்வுள்ளம், பரவி எழும் மாலைக் காலத்து மையிருட்டுப் போன்றது. - கலித்தொகை : 130. நிரை கதிர்க் கனலி பாடொடு பகல்செலக் கல்லாது முதிர்ந்தவன் கண்ணிலா நெஞ்சம்போல் புல்லிருள் பரத்தரூஉம் புலம்புகொள் மருள்மாலை. (39) 40. கண்ணில் இடப்பெற்றுக் கிடந்த அஞ்சனத்தால், அக்கண்ணுக்கு உண்டாகிய பயன் எதுவும் இல்லை. அதுபோல் தனக்குப் பயன்படாத கல்வி தன் மனத்துக் கிடப்பதாலும் உண்டாகும் பயன் ஒன்றும் இல்லை. - சீவகசிந்தாமணி : 1632. காதல் மிக்குழிக் கற்றவுங் கைகொடா ஆதல் கண்ணகத் தஞ்சனம் போலுமால். (40) 41. இல்லாத பொருளாகிய காக்கையின் பல்பெரிதென்றாவது நுண்ணியது என்றாவது கூறுவது அறிவில்லாமையேயாம். அது போல் இல்லாப் பொருள் ஒன்றின் தோற்றம் அழிவு பற்றி விவரித்துக் கூறுவதும் அறிவில்லாமையே ஆகும். - நீலகேசி : 633. இல்லதற் கேயில்லை கேடென்னை காக்கையின் பல்லதற்கு ஒதார் பருமையும் நுண்மையும் சொல்லிதற்கு ஆவதுண் டேல் எனச் சொல்லினள் நல்லதற் கல்லது நாப்பெய ராதாள். (41) 42. கன்னிமைத் தன்மை நிரம்பியவள் மார்பகம் விம்மிப் பெருக்கும். அதுபோல் கல்வியறிவில்லாக் கயவர்க்கு அரிய மெய்ப்பொருளை உரைக்கும் ஆசிரியர்க்கும் குற்றம் மிகும். - கல்லாடம் : 1. கல்லாக் கயவர்க்கு அருநூல் கிளைமறை சொல்லினர் தோம் எனத் துணைமுலை பெருத்தன. (42) 43. எண்ணும் எழுத்தும் கற்பிக்கவல்ல ஆசிரியர் இல்லாத ஊர், கற்றறிந்த பெருமக்கள் இல்லாத அவை, பிறர்க்குப் பகுத்துத் தந்து உண்ணாதவர்கள் அடுத்துக் குடியிருத்தல் ஆயவை நன்மை தாராமையில் ஒப்பானவை ஆகும். - திரிகடுகம் : 10. கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும் தன்மை யிலாளர் அயலிருப்பும் இம்மூன்றும் நன்மை பயத்தல் இல. (43) 5. அறம் 1. மிதவையைப் பற்றிக் கொண்டவர் வெள்ளப் பெருக் குடைய ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு எளிதாகப் போய்விடுவர். அதுபோல் அறம் என்னும் மிதவையைப் பற்றிக் கொண்டவரும் இவ்வுலகில் இருந்து வீட்டுலகம் எளிதில் சேர்வர். - புறநானூறு : 357 புணைகை விட்டோர்க் கரிதே துணையழத் தொக்குயிர் வெளவும் காலை இக்கரை நின்றிவர்ந் துக்கரை கொளலே. (1) 2. அழகு மிக்க குடை ஒன்றைத் தொடர்ந்து மற்றிரு குடைகள் உலாப் போவது போன்றது, அறத்தின் பின்னர்ப் பொருளின்பங்கள் தொடுத்துச் செல்வது. - புறநானூறு : 31. சிறப்புடை மரபில் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல இருகுடை பின்பட ஓங்கிய ஒரு குடை. (2) 3. உலகத்து உயிர்களின் நலமே கருதிய மேகம் மின்னுடன் தோன்றிப் பெருமழை பொழியும். அதுபோல் தக்க பொழுதில் பிறரை நல்வழிப்படுத்தும் ஒரு நோக்கமே கொண்டு அறவோர் அறநெறிகளைப் புகல்வர். - யசோதர காவியம் : 68. மின்னொடு தொடர்ந்து மேகம் மேதினிக்கு ஏதம் நீங்கப் பொன்வரை முன்னர் நின்று புயல் பொழிந்திடுவ தேபோல் அன்னமென் நடையனாளின் அருகணைந் துருகும் வண்ணம் மன்னவ குமரன் மன்னற்கு அறமறை பொழிய லுற்றான். (3) 4. அருள்மிக்க பெருமக்கள் தோன்றிச் சிறைச்சாலைகளை அறச்சாலைகளாக மாற்றி அமைப்பது, தீய பிறப்பு அடைந்தவர் கள் தாம் செய்த நல்வினைப் பயத்தால் நற்பிறப்பு அடைவது போன்றதே. - மணிமேகலை: 20: 3. அரசன் ஆணையின் ஆயிழை அருளால் நிரயக் கொடுஞ்சிறை நீக்கிய கோட்டம் தீப்பிறப் புழந்தோர் செய்வினைப் பயத்தால் யாப்புடை நற்பிறப் பெய்தினர் போலப் பொருள்புரி நெஞ்சிற் புலவோன் கோயிலும். (4) 5. அறம் என்பது ஒரு பயிர்; அப்பயிர்க்கு அறமே வித்து; அருளே நீர்; கொலை, களவு முதலாய குற்றங்களை ஒழித்தலே களைவெட்டல், நல்லாணை செலுத்துதலே வேலி ; அறமே விளைபயன். - கல்லாடம் : 37. செங்கோல் முளையிட்டு அருள் நீர் தேக்கிக் கொலைகள வென்னும் படர்களை கட்டுத் திக்குப் படர்ஆணை வேலி கோலித் தருமப் பெரும்பயிர் உலகுபெற விளைக்கும். (5) 6. குத்துக் கோலுக்கும் அடங்காத யானை இனிய யாழிசைக்கு அடங்கிப் பணி புரியும். அதுபோல் வன்சொல்லுக்கு அடங்காத வலியவரும் அறத்தின் வழி வந்த இனிய மென் சொல்லுக்கு அடங்கி அன்பு செலுத்துவர். - கலித்தொகை : 2. புன்கண் கொண் டினையவும் பொருள்வயின் அகறல் அன்பன்று என்றியான் கூற அன்புற்றுக் காழ்வரை நில்லாக் கடுங்களிற் றொருத்தல் யாழ்வரைத் தங்கி யாங்குத் தாழ்புநின் தொல்கவின் தொலைதல் அஞ்சிஎன் சொல்வரைத் தங்கினர் காத லோரே. (6) 7. அல்லல் அடைந்து அலமருவார்க்கு அவ்வல்லலை அகற்றுதற்கு உரிய ஒருவரைக் காண்பது, தீப்பற்றி எரித்தலால் உண்டாகிய புண்ணில் சந்தனக் குழம்பை இட்டால் போன்ற தண்ணிதாகும். - பெருங்கதை : 3 : 7: 108. செந்தீக் கதீஇய வெந்தழல் புண்ணினுள் சந்தனச் சாந்திட் டன்ன தன்மையொடு வந்தது மாதோ வைகல் இன்றென். (7) 8 நெருப்பின் வெப்பத்தை நீர் எளிதில் தணித்து விடும். அதுபோல் கொடுந்துயர்க்கு ஆட்பட்ட நெஞ்சத்தின் வெப்பத்தை, அன்புடையார் சொல்லும் அருள் மிக்க சொல்லே தணிக்கும். - நற்றிணை : 154. பேரஞர் பொருத்த புகார்படு நெஞ்சம் நீரடு நெருப்பில் தணிய இன்றவர் வாராராயினோ நன்றே. (8) 9. வலிய கயிற்றால், பிணைக்க இயலாத வலியவர்களையும், பிணைக்க வல்ல கயிறு ஒன்று உண்டு. அஃது அன்புடன் வெளி வரும் நயமிக்க சொல் என்னும் அறாத கயிறே ஆகும். - பெருங்கதை : 3 : 22 : 4. ஆற்றல் சான்ற அவன் அன்பு கந்தாகத் தொல்லுரைக் கயிற்றில் தொடரப் பிணிக் கொளீஇ வல்லிதின் அவனை வணங்கிய வண்ணம். (9) 10. அன்புடையார் அடைந்த துயரத்தை அறவே தடுத்து நிறுத்த முடியாது. ஆயினும் கனிவுடைய சொற்களால் அவரைத் தேற்றுவது ஓரளவு துயரைத் தடுக்க உதவும். அச்செயல், கொல்லன் உலையில் தெளிக்கும் நீர், வெப்பம் முழுவதையும் தணிக்காவிடினும் ஓரளவு தணிக்க உதவுவது போன்றது. - நற்றிணை : 133. நாமுறு துயரம் செய்யலர் என்னும் காமுறு தோழி காதலம் கிளவி இரும்புசெய் கொல்லன் வெவ்வுலைத் தெளித்த தோய்மடற் சின்னீர் போல நோய்மலி நெஞ்சிற்கு ஏமமாம் சிறிதே. (10) 11. உள்ளத்தில் இருந்து அன்பு ஊற்றெடுக்க வெளிவரும் இனிய சொல், பிறரை இன்புறுத்தி நலம் செய்து வாழவைப்பதில் அமிழ்தத்திற்கு ஒப்பானதாகும். - பெருங்கதை : 3 : 24 : 110. அகத்துநின் றெழுதரும் அன்பில் பின்னிக் குளிர்நீர் நெடுங்கடற் கொண்ட அமிழ்தென அளிநீர்க் கட்டுரை அயல்நின் றோர்க்கும் உள்ளம் பிணிப்ப ஒன்ற உரைத்து. (11) 12. அன்புக்கு உடையவர் வேம்பின் காயைத் தரினும் சுவைமிக்க பாகுக் கட்டி போல் இனிமையானதாகும். அன்பிலார் இனிய குளிர் நீர் தானும் உவர் நீர் போல் வெறுப்பூட்டும். அன்பின் செயல்கள் இவை. - குறுந்தொகை : 196. வேம்பின் பைங்காய்என் தோழி தானே தேம்பூங் கட்டி என்றனிர் இனியே பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணிர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் வெய்ய உவர்க்கும் என்றனர் ஐய அற்றால் அன்பின் பாலே. (12) 13. மாறாப் பிணித் துயரை மாற்றவல்ல மருந்தினைத் தெளிவாக அறிந்த ஒருவன் அம்மருந்தை அறியேன் என்று வஞ்சக நெஞ்சத்தால் மறைப்பது கொடிது. அக்கொடிது போன்றது, தம் அன்பால் பிறர் அடைந்த துன்பத்தைத் துடைக்க வல்லவர்கள் அவ்வன்பைச் செலுத்தாமல் இருப்பது. - கலித்தொகை : 129. வருந்திய செல்லல் தீர்த்த திறனறி ஒருவன் மருந்தறை கோடலில் கொடிதே யாழநின் அருந்தியோர் நெஞ்சம் அழிந்து விடினே. (13) 14. அருள் என்னும் உலகம் காக்கும் உயர்பண்புடைய சான்றோர் உள்ளம், இனிய தேன் நிரம்பிய அடை (தேன் கூடு) போன்றது. - கல்லாடம் : 1 அருள்நிறைந் தமைந்த கல்வியர் உளமெனத் தேக்கிய தேனுடன் இறால்மதி கிடக்கும். (14) 15. உயிர்கள் அனைத்தும் தன் உயிராகக் கருதி அவற்றின் துயரத்தை மாற்றுபவனே தாய் போன்ற அருளாளன். தன் கன்றினையே சாகுமாறு பால் கறப்பவன் இடத்து அருள் என்னும் அரும்பொருள் இருத்தற்குச் சிறிதும் இடமில்லை. - நீலகேசி : 190. தன்கன்று சாக்கறப்பான் தயாப் பிறிதிற்கு உடையவனோ? (15) 16. ஈரமண்ணால் செய்யப் பெற்றுக் காயாத மண்பாண்டத்தில் மழை பொழிந்தால், மழை நீருடன் பாண்டமும் கரைந்து போய்விடும். அது போல் இளகிய நெஞ்சம் பிறிதொருவர் கலக்கத்தைக் கண்டபோது தானும் கலங்கிக் கரைந்தோடும். - நற்றிணை : 308. ஈர்மண் செய்கை நீர்படு பசுங்கலம் பெருமழைப் பெயற்கு ஏற்றாங்கு எம் பொருள்மலி நெஞ்சம் புணர்ந்துவந் தன்றே. (16) 17. உயர்ந்தவர் ஒருவர் மேல் கொண்ட அன்பால் அவர் பயன்படுத்திய பொருளையும் உயரியதாக மதித்துப் போற்றிக் காப்பர். அதுபோல் உயிர்களின் மேல் கொண்ட அன்பால் அவ்வுயிர்கள் வாழும் உடல்களை அழிக்காமல் (கொல்லாமல்) இருப்பதுடன், அவற்றின் நல்வாழ்வுக்கு உற்ற துணையாகவும் இருத்தல் வேண்டும். - நீலகேசி : 328, ௸ 330. புத்தர்கண் பத்தியில் போதி மரந் தொழின். (328) கொல்வதும் தின்பதும் குற்றம். (330) (17) 18. நல்லிலக்கணம் அமைந்த நங்கையர் இடை, தேய்ந்து சிறிதாய் இருக்கும். அதுபோல் ஊன் உண்ணும் வழக்கத்தை உடையவர்கள் செய்யும் தவநெறியும் சிறுத்துத் தேய்ந்து போகும். - கல்லாடம்: 1. பலவுடம்பு அழிக்கும் பழிஊன் உணவினர் தவமெனத் தேய்ந்தது துடியெனும் நுசுப்பே. (18) 19. தொழு நோயாளன் ஒருவனை நலமுறுத்த வேண்டிக் குளத்து நீரில் நஞ்சைக் கலந்து பலர் கொலைக்கு வழி செய்யும் அறிவில்லாத் தன்மையை அருளாளர் மேற்கொள்ளார். அது போல் ஒருவர் உயிரைக் காக்க விரும்பிப் பலரைக் கொல்லும் செயலையும் அறிவுடையோர் கடைப்பிடியார். - நீலகேசி : 360. உடம்பினுள்ள பல்லுயிர் சாவவூனுண் பானுக்குத் தடங்கொள் மா வரைமிசைத் தன்னையில் நன்மையேல் படம் புனைந்த வர்கள்தாம் பலருமுண்ணும் நீரினுள் விடம்பெய்தாற்கு நன்றுகொல் வியாதியாளன் தீர்கென. (19) 20. ஒருத்தியின் கணவனைக் கொன்று கைம்பெண் ஆக்கி அவளைக் கொண்டவனுக்கும், தானே கைம்பெண் ஆனவளைக் கொண்டவனுக்கும் ஒரேயளவுத் தீவினையே உண்டாகும். அதுபோல் கொன்று கொணரும் ஊன் தின்பார்க்கும் தாமே இறந்துபட்டதன் ஊன் தின்பார்க்கும் குற்றம் ஒப்பானதே. - நீலகேசி : 332. வெற்றுடம் புண்பதும் வேலின் விளிந்தவை தெற்றென உண்பதும் தீமை தருமென்னை ஒற்றைநின் றாள் துணை ஊறு படுத்தவள் குற்றமன் றோசென்று கூடுவ தேடா. (20) 21. பொருள் ஈட்டும் விருப்பம் மிகக் கொண்டவர் உடல்நலம் கருதி ஓய்ந்து இரார். அதுபோல் அருள் நாட்டம் உடையவர்களும் தந்நலம் பேணி 'வாளா' இரார். - இன்னிலை : 2. பொருள் விழைவார் போற்றார் உடல்நலம் அம்மை அருள் விழைவார் அஃதே. (21) 22. தீயிலே வேகும் பொன்னணிகலங்கள் மேலும் மேலும் ஒளியுடன் விளங்கும். அதுபோல் குறிக்கோள் என்னும் தீயில் புகுந்து மனமாசு என்னும் அழுக்கைப் போக்கிய அறவோர்களும் நாளும் சுடர் விடுவர். - பெருங்கதை : 2 : 19 : 62. மணியும் முத்தும் அணியும் இழந்துதிர்ந்து ஆரக் கம்மம் சாரவீற் றிருந்து கொள்கைக் கட்டழல் உள்ளுற மூட்டி மாசுவினை கழித்த மாதவர் போலத் தீயகத் திலங்கித் திறல்விடு கதிரொளி. (22) 6. வினைத்திறம் 1. பின்னாளில் உண்டாக இருக்கும் விளைவுக்கு அடிப் படையான வித்தைக் கண்ணும் கருத்துமாக உழவன் பேணிக் காப்பான். அது போல் பிற்பயன் தவறாமல் விளைக்கக் கூடிய நன்முயற்சியில் தம் வாழ்வை அறிவுடையோர் ஈடுபடுத்துவர். - பெருங்கதை : 4:15:34 விளைவித்து ஓம்புதும் வேண்டிய தாமென ஒடுக்கி வைக்கும் உழவன் போல அடுத்த ஊழிதோ றமைவர நில்லா யாக்கை நல்லுயிர்க்கு அரணம் இதுவென மோக்கம் முன்னிய முயற்சி. (1) 2. மீனின் கண்கள் ஒருவேளை உறங்கினாலும் உறங்கக் கூடும். ஆனால் தாம் எடுத்துக்கொண்ட செயலை இடையீடு இன்றி நிறைவேற்ற முனைந்தவர் தம் கண் துஞ்சுதல் அரிது. - நற்றிணை : 319 மீன்கண் துஞ்சும் பொழுதும் யான்கண் துஞ்சிலன் யாதுகொல் நிலையே. (2) 3. உள்ளம் என்னும் ஊர்தியில் ஊக்கம் என்னும் காளையைப் பூட்டி ஊர்ந்து செல்ல வல்லவர்கள் எடுத்துக் கொண்ட செயல் தடையின்றி முடியும். - பெருங்கதை : 2:20:50. உள்ள ஊர்தி ஊக்கம் பூட்ட. (3) 4. கம்புகள் கட்டிய ஆக்கை அறுந்து கீழே வீழ்ந்தாலும் ஊன்றப் பெற்ற தூண் உறுதி தளராமல் நிற்கும். அதுபோல் உறுதித் துணையாக இருந்தவர் விலகிச் சென்றாலும், இறந்து போனாலும் வினைத்திறம் வல்லவர் தம் உறுதியில் தளராது இருத்தல் வேண்டும். - பெருங்கதை : 2:10:163 கொடுங்காழ் சோரினும் கூடம் ஊன்றிய நெடுங்காழ் போல நிலைமையின் வழாஅது துன்பத்தில் துளங்காது இன்பத்தின் மகிழாது ஆற்றுளி நிற்றல் ஆடவர் கடன். (4) 5. ஆழ்ந்த பள்ளமான மணல் வழியில் பதிந்த வண்டியை அப்பதிவில் இருந்து, ஊக்கமிக்க காளைகள் மண்டியிட்டு இழுத்தாவது வெளியேற்றி விடும். அதுபோல் நினைத்தாலும் நெஞ்சைச் சுடும் கவலை சூழ்ந்து இருந்தாலும் அக்கவலையை ஒழித்து, ஒழியா முயற்சியால் எடுத்த செயலை முடித்தல் வேண்டும். - பெருங்கதை : 1:53:51 உள்ளு தோறும் உள்ளம் சுடுதலில் கவற்சியிற் கையற நீக்கி முயற்சியிற் குண்டுதுறை இடுமணல் கோடுற அழுந்திய பண்டிதுறை யேற்றும் பகட்டிணை போல இருவேம் இவ்விடர் நீக்குதற்கு இயைந்தனம். (5) 6. கடலுப்பை அள்ளிமலைப்பகுதிக்குக் கொண்டு செல்லும் உப்பு வண்டி, பள்ளத்துள் பாய்ந்து ஆரம் மறையக் கிடந்தாலும் வலிய காளைகள் மண்டியிட்டுத் தலையைச் சாய்த்து ஊன்றி இழுத்து வண்டியை உயரே கொண்டு வந்துவிடும். அதுபோல் எத்தகைய இடர்ப்பாடுகள் குறுக்கிட்டாலும் தடைப்பாடு எதுவும் இல்லாமல் முயற்சியாளன் தான் எடுத்துக்கொண்ட செயலை முடித்தே தீர்வான். - புறநானூறு : 60. கானல், கழியுப்பு முகந்து கன்னடு மடுக்கும் ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் உரனுடை நோன்பகட் டன்ன எங்கோன் வலன்இரங்கு முரசின் வாய்வாள் வளவன். (6) 7. எடுத்த செயலை இடைவிடாது முடிக்கும் தளர்ச்சி இல்லாத முயற்சி, பட்டினி கிடந்து வருந்தி உயிர் போகும் நிலைமை அடைந்தாலும் தன்னால் தாக்கி வீழ்த்தப்பெற்ற விலங்கு இடப்பக்கம் வீழ்ந்தால் அதனைத் தின்னாமல், பின்னர் வேறொரு விலங்கை வலப்பக்கம்பட வீழ்த்தித் தின்னும் புலியின் செயல் போன்றது. - அகநானூறு : 29 தொடங்குவினை தவிரா அசைவில் நோன்தாள் . கிடந்துயிர் மறுகுவதாயினும் இடம்படின் வீழ்களிறு மிசையாப் புலியினும் சிறந்த தாழ்வில் உள்ளம் தலைத்தலைச் சிறப்பச் செய்வினைக் ககன்ற காலை. (7) 8. தன்னால் தாக்குண்ட பன்றி வலப்புறம் அல்லாமல் இடப்புறம் வீழ்ந்தால் அதனை உண்ணாமல் அன்று பட்டினி கிடந்து மறுநாள் குகை அதிருமாறு முழங்கி வெளியேறி ஒரு யானையை வலம்பட வீழ்த்தி உண்ணும் புலி போன்ற செயல் வீரரைத் தழுவிக்கொள்ளுதல் வேண்டும். - புறநானூறு : 190 கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென அன்றவண் உண்ணா தாகி வழிநாள் பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும் புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து உரனுடை யாளர் கேண்மை யொடு இயைந்த வைகல் உளவா கியரோ. (8) 9. செயலாற்றும் திறமின்றி வறிதே உழலும் பெருஞ் சுற்றத்தை ஒருவன் கொண்டிருப்பது, கொள்கையும் முயற்சியும் இல்லாத உடலைக் கொண்டிருப்பது போன்றது. - புறநானூறு : 69. பூட்கை இல்லோன் யாக்கை போலப் பெரும்புல் என்ற இரும்பேர் ஒக்கலை. (9) 10. வளமிக்க நிலத்தில் வளரும் மரங்கள் இடமின்றித் தோன்றிப் பூத்துக் காய்க்கும். அதுபோல், உள்ள உறுதிமிக்க முயற்சியாளர் செல்வம் பெருகி வளரும். - கலித்தொகை : 35. மடியிலான் செல்வம் போல் மரம் நந்த. (10) 11. இடம்விட்டுப் பெயர்ந்து பின் சென்று தாக்குவதில் வல்லது செம்மறி ஆட்டுக் கடா. அதுபோல் உறுதியும் சூழ்ச்சித் திறமும் உடைய செயல் வீரரும் பின் வாங்குவதுபோல் தோன்றி விரைந்து செயலாற்றி வெற்றி கொள்வர். - பெருங்கதை : 3:1:30 ஒடுங்கா மாந்தர் உள்ளம் அஞ்சப் பாடுபெயர்ந்திடிக்கு மேடகம் போல அகன்று பெயர்ந் தழிக்கும் அரும்பெறல் சூழ்ச்சி. (11) 12. வெப்பம் ஏற்றப்பெற்ற இரும்பு தான் உண்ட நீரை வெளிப்படுத்தாது தனக்குள்ளே மறைத்துக் கொள்ளும். அது போல் வினையாற்றும் திறம் வல்லவரும் தாம் எடுத்துக் கொண்ட முயற்சியை வெளிப்படக் காட்டாது அகத்தடக்கி நிறை வேற்றுவர். - பெருங்கதை : 3:25:71 கனல்இரும்பு உண்ட நீரின் விடாது மனவயின் அடக்கி மறைந்தனன் ஒழுகித் தன்குறை முடிதுணைத் தான்ருள் தோற்றி நன்கினி துரைக்கும். (12) 13. தன் மேல் ஒருவன் எறிந்த கல்லை மறைத்துக் கன்னத்தே வைத்துக் கொண்டு காலத்தை எதிர்பார்த்திருக்க வல்லது களிறு. அதுபோல் செயல்வீரர்களும், காலம் கருதி இருந்து வாய்த்த போது செயலாற்றி விடுவர். (1) சீவகசிந்தாமணி : 2910; (2) சூளாமணி : 666; (3) புறநானூறு : 30 (1) காய்ந்தெறி கடுங்கல் தன்னைக் கவுள்கொண்ட களிறு போல ஆய்ந்தறி வுடையர் ஆகி அருளொடு வெகுளி மாற்றி வேந்தர் தாம் விழைப் எல்லாம் வெளிப்படார் மறைத்தல் கண்டாய் நாந்தக உழவர் ஏறே நன்பொருள் ஆவதென்றான். (2) வேந்தன்மற் றதனைக் கேட்டே வேற்றுவன் எறிந்த கல்லைக் காந்திய கந்த தாகக் கவுட் கொண்ட களிறு போலச் சேர்ந்தவர் உரைத்த மாற்றம் சிந்தையுள் அடக்கி வைத்து நாந்தகக் கிழவர் கோமான் நயந்தெரி மனத்தன் ஆனான். (3) அறிவறி வாகாச் செறிவினை ஆகிக் களிறுகள் அடுத்த எறிகற் போல ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட யாங்ஙனம் பாடுவர் புலவர். (13) 14. காக்கை ஒன்றே எனினும் பகற்பொழுதில் ஆயிரம் கோடி கூகை களையும் வெற்றிகொண்டுவிடும். அதுபோல் இடமும் காலமும் அறிந்து செயலாற்றுவோரும் அவ்வண்ணமே வெற்றி கொள்வர். - சீவகசிந்தாமணி : 1927 இடத்தொடு பொழுது நாடி, எவ்வினைக் கண்ணும் அஞ்சார் மடப்படல் இன்றிச் சூழும் மதிவல்லார்க் கரிய துண்டோ கடத்திடைக் காக்கை ஒன்றே யாயிரங் கோடி கூகை இடத்திடை அழுங்கச் சென்றாங் கின்னுயிர் செகுத்த தன்றே. (14) 15. படமெடுத்தாடும் பாம்பின் பெருமூச்சுப்பட்ட உடனேயே ஓடி ஒளிந்து போய்விடும் எலிக்கூட்டம்; அது போல் ஊக்கமிக்க வீரனைக் கண்ட உர மில்லாதவர்களும் ஓடிப் போய்விடுவர். - பெருங்கதை : 1:56:274. மத்துறு கடலில் தத்துறு நெஞ்சினர் பைவிரி நாகத் தைவாய்ப் பிறந்த ஒலிப்புயிர் பெற்ற எலிக்கணம் போல ஒழிந்தோர் ஒழிய. (15) 16. நீரிலே வாழும் முதலை, வலிமை மிக்க பெரிய யானையையும் தன் ஈர்ப்பினால் வீழ்த்தி விடும். ஆதலால் தக்க இடத்திலே இருந்து செயலாற்று பவர் எவ்வளவு வலியவரையும் எளிதில் வீழ்த்தி வெற்றி கொள்வர். - புறநானூறு : 104 போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை ஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும் தாட்பாடு சின்னிரக் களிறட்டு வீழ்க்கும் ஈர்ப்புடைக் கராஅத் தன்ன என்னை நுண்பல் கருமம் நினையாது இளையனென் றிகழில் பெறலரி தாடே. (16) 17. உள்ள உறுதி படைத்த வீரர், தம் பகைவர் பலராயினும் அழித் தொழிப்பர். அவ்வொழிப்பாற்றற்கண் கனலில் காய்ந்த இரும்பு தன் மேல் பாய்ந்து உண்ணச் செய்தது போன்ற புண்ணை யுடையவராகப் பொலிவுடன் திகழ்வர். - புறநானூறு : 180 18. மருந்துக்குப் பயன்படும் மரம், வேரும் பட்டையும் வெட்டப் பெற்று அழகின்றித் தோன்றினாலும் அதன் பயன் கருதிப் புகழ் மிக்கதாகும். அதுபோல் விழுப்புண்பட்ட வீரர்கள் பார்ப்பவர்கள் கண்களுக்கு அழகின்றித் தோன்றினாலும் புகழால் உயர்ந்தவர்கள் ஆவர். - புறநானூறு : 180 இறையுறு விழுமம் தாங்கி அமரகத்து இரும்புச்சுவைக் கொண்ட விழுப்புண் நோய்தீர்ந்து மருந்து கொள் மரத்தின் வாள்வடு மயங்கி வடுவின்று வடிந்த யாக்கையன். (17-18) 19. உள்ளத்து ஆற்றலை வெளிக்காட்டாமல் அமைந் திருக்கும் வீரன், வீட்டின் இறப்பில் செருகப் பெற்ற தீக்கடை கோல் போன்றவன். ஆனால் அவன் தன் ஆற்றலைக் காட்டிப் போரிடுங்கால் தீக்கடை கோலைக் கடைய வெளிப்படும் தீக்கதிர் போன்றவன். - புறநானூறு : 315 உடையன் ஆயின் உண்ணவும் வல்லன் கடவர் மீதும் இரப்போர்க் கீயும் மடவர் மகிழ் துணை நெடுமான் அஞ்சி இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத் தோன்றா திருக்கவும் வல்லன் மற்றதன் கான்றுபடு கனையெரி போலத் தோன்றவும் வல்லன்தான் தோன்றுங் காலே. (19) 20. பாம்பு உமிழ்ந்து போட்ட ஒளிமணியை அப்பாம்பிற்கு அஞ்சி எவரும் எடுக்க முன்வரார். அதுபோல் உயிரைப் போற்றாது போரிட்டவல்ல வீரனை எதிர்க்கப் பகைவர் அஞ்சி நடுங்கி அகல்வர். - புறநானூறு : 294. போர்மலைத் தொருசிறை நிற்ப யாவரும் அரவுமிழ் மணியிற் குறுகார் நிரைதார் மார்பினின் கேள்வனைப் பிறரே. (20) 21. கடுமையான மழை பெய்யும் போதும், அம்மழைத்துளி மேலே வீழாதவாறு ஓலைக் குடை காக்கும். அதுபோல் ஆற்றல் மிக்க வீரன் தன் தலைவன் மேல் பகைவர் மழைபோல் அம்பும் வேலும் தூவிப் பொழிந்தாலும் தனி ஒருவனாக நின்று அவற்றைத் தடுத்து நிறுத்தித் தலைவனைக் காக்கத் தவறான். - புறநானூறு : 290 மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும் உறைப்புழி ஓலை போல மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே. (21) 22. உறுதி மிக்கவீரன் பெரும் படையையும் தனி ஒருவனாக நின்று அழிப்பான். அவன் படை அழிக்கும் தன்மை, குடத்தின் அளவு நிரம்பியுள்ள பாலைச் சிறிதளவு மோர்ப் பிறை சிதைப்பது போன்றதாம். - புறநானூறு : 276. செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன் மடப்பால் ஆய்மகள் வள்ளுகிர்த் தெறித்த குடப்பால் சில்லுறை போலப் படைக்கு நோய் எல்லாம் தானா யினனே. (22) 23. கோலால் ஒருமுறை அடித்தாலும் பன்முறை நடுங்கி அதிரும் கிணைப்பறை. அதுபோல் வலிய வீரரால் ஒருமுறை தாக்குண்டவர் பன்முறையும் அஞ்சி நடுங்குவர். - புறநானூறு : 382. கிடைக்காழ் அன்ன தெண்கண் மாக்கிணை கண்ணகத்து யாத்த நுண்ணரிச் சிறுகோல் எறிதொறும் நுடங்கி யாங்குநின் பகைஞர் கேட்டொறும் நடுங்க ஏத்துவேன் வென்ற தேர்பிறர் வேத்தவை யானே. (23) 24. உள்ளம் வலிய வீரன் எள்ளிய பகைவரை நோக்கித் தன் ஆற்றலைக் காட்டச் செம்மாந்து செல்வது, குகையின் கட் கிடந்த புலி இரைதேட விரும்பி முழக்கத்துடன் செல்வது போன்றது. - புறநானூறு : 78 வணங்குதொடைப் பொலிந்த வலிகெழு நோன்தாள் அணங்கருங் கடுந்திறல் என்னை முணங்கு நிமிர்ந்து அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன மலைப்பரும் அகலம். (24) 25. அடிக்கும் கோலுக்கும் அஞ்சாமல் எதிர்த்து மேலே எழுந்து தாக்கும் இயல்பினது பாம்பு. அதுபோல் உள்ள உறுதி படைத்த வீரரும் உயிருக்குச் சிறிதும் அஞ்சாமல் போரிட்டுப் பகைவரை நடுங்கி ஓடச் செய்வர். - புறநானூறு : 89. எறிகோல் அஞ்சா அரவின் அன்ன சிறுவன் மள்ளரும் உளரே. (25) 26. தன் மேல் வைத்துக் காய்ச்சப்பெற்ற இரும்பை எவ்வளவு கடுமையாக அடித்தாலும் தான் அசைவில்லாமல் இருந்து தன் மேல் வைக்கப்பெற்ற பொருளையே உருமாறச் செய்ய வல்லது கொல்லரது உலைக்கல் (பட்டடைக் கல்). அதுபோல் தன்னை எதிர்த்து வந்தவரைச் சிதைத்து உருமாற்றியும், ஓடச் செய்தும் தாம் சிறிதும் நடுக்கமின்றி வலிய வீரர் இருப்பர். - புறநானூறு : 170 நசைவர்க்கு மென்மை யல்லது பகைவர்க்கு இரும்பு பயன் படுக்கும் கருங்கைக் கொல்லன் விசைத்தெறி கூடமொடு பொரூஉம் உலைக்கல் அன்ன வல்லா ளன்னே. (26) 27. புதிதாகப் பற்றிக் கொண்டுவந்த யானையைப் பாகர்கள் பலவகை நயமிக்க வழிகளால் பிணித்து அடக்கிவிடுவர். அது போல் மனச் செருக்கு உடையவரையும் தகுதியான வழியால் திறம் வாய்ந்தவர் அடக்கி விடுவர். - பெருங்கதை : 3:1:34. ‘ புதிதில் கொண்ட பூக்கவின் வேழம் பணிசெயப் பிணிக்கும் பாகர் போல நீதி யாளர் ஆதி யாகிய திறத்தில் காட்டவும். (27) 28. சிங்கம் நரிமேல் பாய்ந்து சென்று அந் நரியால் விரிக்கப்பெற்ற வலையிலே சிக்கிச் சீரழிவதும் உண்டு. இடமும் காலமும் வலிமையும் அறியாமல் செயலாற்றுவார் கெடும் கேடு இத்தகைத்தாம். - சீவகசிந்தாமணி : 1928 முழையுறை சிங்கம் பொங்கி முழங்கிமேற் பாய்ந்து மைதோய் வழையுறை வனத்து வன்கண் நாவலைப் பட்ட தன்றே. (28) 29. அஞ்சனக் கோலால் அடிக்கவும் தாங்கமாட்டாத அரவம், தான் தீண்டுதலால் அருவி ஒழுகும் குன்றம் போன்ற யானையையும் வீழ்த்தி விடும். ஆதலால் எளிய பகை என எண்ணிச் சோர்ந்து இருப்பவர் பெருங்கேடு அடைவர். - சீவகசிந்தாமணி : 1894. அஞ்சனக் கோலின் ஆற்றா நாகமோர் அருவிக் குன்றில் குஞ்சரம் புலம்பி வீழக் கூர்நுதி எயிற்றிற் கொல்லும் பஞ்சியின் மெல்லி தேனும் பகைசிறி தென்ன வேண்டா அஞ்சித்தற் காத்தல் வேண்டும் அரும்பொரு ளாக என்றான். (29) 30. காடும் மலையும் கடந்து கனிவளம் கவர்ந்து கொண்ட வெளவால் தன் கடமை முடிந்ததும் இருப்பிடம் மீளும்; அதுபோல் வினைவழிச் சென்றவரும் அது நிறைவேறியதும் தம் வீட்டை அடைதல் வேண்டும். - (1) பெருங்கதை : 2:8:118. (2) ௸ 2:9:112 (1) நாடும் மலையும் காடும் பொருந்திக் கனிவளம் கவர்ந்து பதிவயின் பெயரும் பனியிறை வாவல் படர்ச்சி ஏய்ப்ப ........................................................ குறுகுதல் குணம். (2) பழந்தீர் மரவயின் பறவை போல .............................................................. யான்பின் போந்தனன் பொருட்டாகான். 31. உழுவதற்குப் பயன்படும் எருதுகள் பலவாயினும் உழவன் அவற்றைத் தரம் பிரித்து அவ்வவற்றுக்கு ஏற்பப் பேணி வளர்ப்பான். அவ்வாறே வினைத்திறம் வல்லவர்களைத் தரம் பிரித்து அவ்வவர்க் கேற்ற சிறப்புக்களை ஆள்வோர் செய்தல் வேண்டும். - புறநானூறு : 289. ஈரச் செவ்வி உதவின ஆயினும் பல்லெருத் துள்ளும் நல்லெருது நோக்கி வீறுவீறாயும் உழவன் போலப் பீடுபெறு தொல்குடி பாடு பல தாங்கிய மூதி லாள ருள்ளும் காதலில் தனக்கு முகந் தேந்திய பசும்பொன் மண்டை இவற்கீக. (31) 32. திரியும் நெய்யும் தீர்ந்தொழியும் நிலைமையை எதிர் நோக்கிக் கொண்டு இருள் தான் பாய்வதற்கு இருப்பது போல் வலிமை கெடும் சூழல் எதுவென நோக்கி இருப்பவர் அவ் வாய்ப்புக் கிட்டினால் தம் செயலை எளிதாக நிறைவேற்றிக் கொள்வர். - பெருங்கதை : 3:1:7 திரியும் நெய்யும் ஒருவயிற் செல்லிய எரிவிளக் கற்றம் இருள்பரந் தாங்குப் பாய தொல்சீர்ப் பகையடு தானை ஏயர் அற்றத் திடுக்கட் காலை அன்றவண் அறிந்தே ஒன்றுவழி வந்த குலப்பகை ஆகிய வலித்துமேல் வந்து நன்னகர் வௌவும் இன்னாச் சூழ்ச்சியன். (32) 7. செல்வம் 1. பயிற்சியால் மிகுந்த வீரனின் கையில் இருக்கும் வாள் வலப்பக்கம் இடப்பக்கம் ஆகிய இரண்டு பக்கங்களிலும் சென்று செயலாற்றும். அதுபோல் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றனுள் இடையே இருக்கும் பொருள் இருபக்கங்களிலும் சென்று வளமூட்டும். - இன்னிலை : 11. 2. கண்கள் இரண்டும் பொருளைக் காணுதலில் ஒன்று பட்டு நிற்கும். அக்கண்களைப் போல் இருபக்கமாக அமைந்த அறம் இன்பம் என்பவை இரண்டும், நடுவே அமைந் துள்ள பொருள் என்னும் ஒன்றையே பெரிதும் நாடி நிற்கும். - இன்னிலை : 11 உண்மை யொராப்பித்தர் உடைமை மயக்கென்ப வண்மையுற வூக்கல் ஒரு தலையே - கண்ணீர் இருபாலும் தோன்றன்ன ஈர்க்கலாம் போழ்வாள் இருபால் இயங்கலினோடு ஒப்பு. (1-2) 3. கண் குருடனான இடையன் பெரிய காட்டில் தன் ஆட்டு மந்தைகளை மேய்த்து ஓட்டிக் கொண்டு சரியான வழியில் அல்லல் இல்லாமல் தன் வீட்டுக்கு வந்து சேர மாட்டான். அதுபோல் தன் வாழ்வுக்கு இன்றியமையாத பொருள் இல்லாத வனும் அறநெறியில் வாழ்வு நடாத்தி இன்ப உலகம் எய்தான். - இன்னிலை : 15. குருட்டாயன் நீள்கானம் கோடல் சிவணத் தெருட்டாயம் காலத்தால் சேரான் - பொருட்டாகான். 4. எவ்வெவ் வழிகளால் சிறப்புடையவராக இருந்தாலும் பொருள் இல்லாதவரைப் பிறர் விரும்பி நெருங்கிச் சேர மாட்டார். வேரற்று வீழ்ந்துபட்ட பழமரத்தை விரும்பிச் சேரும் பறவைக் கூட்டம் எங்கும் இல்லை அல்லவா! - வளையாபதி : 67. 5. சுவையற்ற பழம் உடையதே ஆயினும் மரம் பழுத்துக் கிடந்தால் பறவைகள் அம் மரத்தைத் தேடிவந்து கூட்டம் கூட்ட மாகச் சூழ்ந்து கிடக்கும். அதுபோல் கீழ் மகனே ஆனாலும் பொருள் மிகுதியாக உடையவன் என்றால் அவனை மேன் மக்களும் தேடிவந்து சூழ்ந்து உறவாடி இருப்பர். - வளையாபதி : 67. தொழுமகன் ஆயினும் துற்றுடை யானைப் பழுமரம் சூழ்ந்த பறவையிற் சூழ்ப விழுமிய ரேனும் வெறுக்கை உலந்தால் பழுமரம் வீழ்ந்த பறவையில் போப. (4-5) 6. இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்று கூறாமல் எல்லை இன்றி ஈயும் ஈகையும், சான்றோர் கண்டுரைத் தெளிந்த முறையால் அமைந்த அறநெறியும், எவர்க்கும் எந்நிலையினும் தீமை தாராத செயல் திறமையும் உடையவன் செல்வம் நீர்வள மிக்க ஆற்றங்கரையில் நிற்கும் மரம் போல் வளம் பெற்றுத் தழைக்கும். - கலித்தொகை : 27. ஈதலில் குறை காட்டாது அறனறிந்து ஒழுகிய தீதிலான் செல்வம் போல் தீங்கரை மரம் நந்த. (6) 7. உயிருடன் ஒன்றியது போன்ற இனிய நண்பர்கள் எங்கிருந்தாலும் அவரைத் தேடி அவர் நண்பர்கள் சேர்ந்து விடுவர். அதுபோல் தவம் உள்ள இடத்திற்குப் பொருள் எப்படியும் போய்ச் சேர்ந்து விடும். - பெருங்கதை : 2:8:126. பெருந்தவம் உள்வழி விரும்புபு செல்லும் பொருளும் போகமும் புகழும் போல மறுவில் மணிப்பூண் மன்னவன் உள்வழிக் குறுகுதல் குணன். (7) 8. பொருள் இல்லாதவன் குடிப்பிறப்பு, பொறுமை இல்லாதவன் கொண்ட நோன்பு, அருள் இல்லாதவன் செய்த அறச் செயல், சிறந்த அமைச்சன் இல்லாத அரசு ஆயவை இருட் பொழுதில் கண்ணில் எழுதப் பெற்ற கறுப்பு மை போல் இருந்தும் இல்லாதனவேயாம். - வளையாபதி : 68. பொருளில் குலனும் பொறைமையில் நோன்பும் அருளில் அறனும் அமைச்சில் அரசும் ‘ இருளினுள் இட்ட இருள்மையிது என்றே மருளில் புலவர் மனங்கொண் டுரைப்ப. (8) 9. பெருங்கொடையாளன் பெற்றுள்ள செல்வம், கற்றதை மீண்டும் நினைத்துப் பார்ப்பவன் கல்வி, குறிப்பறிந்து செய் லாற்றும் தலைவன் உயர் தன்மை ஆகியவை பொத்தல் சிறிதும் இல்லாமல் வயிரம் வாய்க்கப் பெற்ற மரம் போல்வன. - திரிகடுகம் : 75. வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலும் - புணர்வின்கண் தக்க தறியும் தலைமகனும் இம்மூவர் பொத்தின்றிக் காழ்த்த மரம். (9) 10. பொருள் இல்லாதவர்க்கு நுகர்ச்சிப் பேறு இல்லை. அருள் இல்லார்க்கு அறத்தின் பேறு இல்லை; பலப்பல நூல் களை நுணுக்கமாக ஆராயாதவர்க்கு நல்லுணர்வு இல்லை; இவைபோல் தெளிவு இல்லார்க்குப் பொருள் சேரும் வாய்ப்பு இல்லை . - சூளாமணி : 2082. பொருளிலார்க் கிவ்வழிப் பொறியின் போகமும் அருளிலார்க் கறத்தினாம் பயனும் நூல்வழி உருள்விலா மனத்தவர்க் குணர்வும் போல்மனந் தெருளிலார்க் கிசைவிலள் திருவின் செல்வியே. (10) 11. தலையில் சுமைவைத்து நடந்தவன் தவறிக் கீழே விழுந்தால் அவன் சுமையும் கீழே விழும். அதுபோல் பொருளை ஈட்டியவன் கீழே விழுந்ததும், அவனால் தேடப்பட்ட பொரு ளும் அவனை விடுத்து ஓடிவிடும். - இன்னிலை :44. மெய்யுணர்வே மற்றதனைக் கொள்ள விழுக்கலனாம் பொய்யுணர்வான் ஈண்டிய எல்லாம் ஒருங்கழியும். (11) 12. சூதாடுதற்குப் பயன்படும் தாயக்காய் ஒரு வேளைக்கு ஒருவேளை மாறி மாறி வீழும். அதுபோல் செல்வமும் நிலைப் பற்று வெவ்வேறு இடங்களில் சுழன்று திரியும். - நற்றிணை : 243 கவறு பெயர்த் தன்ன நில்லா வாழ்க்கை. (12) 13. செல்வமாயினும் சரி, வறுமையாயினும் சரி அவை ஒரு வாழ்வில் நிலைப்பன அல்ல. ஓடும் தேரின் கால் போல் மேல் கீழாகவும், கீழ் மேலாகவும் சுழன்று வரும். - பெருங்கதை : 3:6:34. ஆக்கமும் கேடும் யாக்கை சார்வா ஆழிக் காலில் கீழ்மேல் வருதல் வாய்மையாம். (13) 14. மீன் நீரில் சென்ற வழி இன்னதென எவராலும் தடம் கண்டுபிடிக்க முடியாது. அதுபோல் பொருள் சென்ற தடம் இன்னதெனக் காணமுடியாமல் போய்விடுவதும் உண்டு. - நற்றிணை : 16 பொருளே, வாடாப் பூவின் பொய்கை நாப்பண் ஓடுமீன் வழியில் கெடுவ. (14) 15. வஞ்சக நெஞ்சமுடைய பரத்தையரை நம்பியவர் பெரும் பொருளும் கெட்டொழியும். அதுபோல் பொருள் சேர்ப் பதையே குறியாகக் கொண்டவர்களது நற்குணங்களும் கெட் டொழியும். - சூளாமணி : 2086 அம்பென நெடியகண் கணிகை யார்தமை நம்பிய இளையவர் பொருளும் நையுமால் வம்பின மணிவண்டு வருடுந் தாமரைக் கொம்பினை மகிழ்ந்தவர் குணங்கள் என்பதே. (15) 8. கொடை 1. கருநிறங் கொண்டு திரண்டு, மழைமேகம் அளவிறந்து மழை பொழியும். அதுபோல், உயர்ந்த வள்ளல்களும் வரையறை கடந்து மிகுதியாக ஏற்று வந்தவர்களுக்கு உதவுவர். - கல்லாடம் : 26 வள்ளியோர் ஈதல் வரையாது போல எண்டிசைக் கருவிருந்து இனமழை கான்றது. (1) 2. இவர் வேண்டியவர், இவர் வேண்டாதவர் என்று எண்ணிப் பாராமல் எவ்விடத்தும் சென்று எவர்க்கும் முகில், மழை பொழிந்து உதவும். அதுபோல் வள்ளல்களும் வறியவர் இருக்கும் இடங்களைத் தாமே தேடிச் சென்று உதவி செய்வர். - புறநானூறு : 107 பாரி ஒருவனும் அல்லன் மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப் பதுவே. (2) 3. கொடிய வெயில் சுட்டு எரித்தலால் வெம்பிப் போய்க் கிடக்கும் காட்டில் வளமான மழை பொழிவது போன்றது, பசித்துயர்க்கு ஆற்றாமல் அல்லல்படுபவரைத் தேடிச் சென்று அவர்க்கு உணவு வழங்குவது. - மணிமேகலை : 17:91. வெயில் சுட வெம்பிய வேய்கரி கானத்துக் கருவி மாமழை தோன்றிய தென்னப் பசிதின வருந்திய பைதல் மாக்கட்கு அமுத சுரபியோடு ஆயிழை தோன்றி . (3) 4. மலையிடைப் பொழியப்பெற்ற மழை நீர் ஆறாகப் பெருக்கெடுத்து வந்து ஆங்காங்கு இருப்பாரை வாழச் செய்யும். அதுபோல் தலையாய வள்ளல்கள் வேண்டியவர்க்கு வேண்டும் பொருள்களை அவர் இருக்கும் இடம் தேடிப் போய்த் தந்து உதவுவர். - சீவகசிந்தாமணி : 36. வள்ளல் கைத்தலம் மாந்தரின் மால்வரை கொள்ளை கொண்ட கொழுநிதிக் குப்பையை உள்ள மில்லவர்க்கு ஊர்தொறும் உய்த்துராய் வெள்ளம் நாடும டுத்து விரைந்ததே. (4) 5. நீரற்ற குளம், நெடிய வயல், உவர் நிலம் ஆகிய எவ் விடத்துச் சென்றும் வழங்கும் இயல்பினது மேகம். அவ்வாறே இன்னவர் என எண்ணிப் பார்க்காமல் எவருக்கும் வழங்குவது வள்ளல்களின் இயல்பு. - புறநானூறு : 142. அறுகுளத்து குத்தும் அகல்வயல் பொழிந்தும் உறுமிடத்துத்வா துவர்நிலம் ஊட்டியும் வரையா மரபின் மாரி போலக் கடாஅ யானைக் கழற்கால் பேகன் கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படான்பிறர் படைமயக் குறினே. (5) 6. முன்னாள் பெய்தேன் என்று பின்னாள் பெய்வதை மறுக்காமல் பெய்யும் மழை. முன்னை விளைந்தேன் என்று பின்னை விளைய மறுக்காமல் விளையும் நிலம். இவற்றைப் போல் முன்னர்த் தந்தேன் எனப் பின்னைத் தர மறுக்காமல் தருவர் வண்மையாளர். - (1) புறநானூறு : 203; (2) பதிற்றுப்பத்து : 60. (1) கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும் தொல்லது விளைந்தென நிலம் வளங் கரப்பினும் எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை இன்னும் தம்மென எம்மனோர் இரப்பின் முன்னும் கொண்டிரென நும்மனோர் மறுத்தல் இன்னா தம்ம இயல்தேர் அண்ணல். (2) மறாஅ விளையுள் அறாஅ யாணர். (6) 7. நிரம்ப மழை பெய்த முகில் தூய பஞ்சைப் போல் நிறம் வெளுப்பாகி உயர்ந்து சென்று மலை முகட்டை அடையும். அதுபோல் தம்மிடம் உள்ளவற்றை வழங்கிய வள்ளல்கள் தம் நிலையில் மேலும் உயர்ந்து செல்வரே அன்றித் தாழார். - பதிற்றுப்பத்து : 55 வாரார் ஆயினும் இரவலர் வேண்டித் தேரில் தந்தவர்க்கு ஆர்பதம் நல்கும் நசைசால் வாய்மொழி இசைசால் தோன்றல் வேண்டுவ அளவையுள் யாண்டுபல கழியப் பெய்துபுறந் தந்து பொங்கல் ஆடி விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச் சென்றா லியரோ பெரும். (7) 8. உலகத்து உயிர்கள் அனைத்தும் வாழுமாறு, ஆறு கால்வாய்கள் பலவற்றைக் கொண்டு நிலமெங்கும் பரவி நாட்டை வளப்படுத்தும். நீர்ப் பெருக்கு வற்றிப்போன நாளிலும் ஊற்று நீரால் பயிர்களை வளர்க்கும். அதுபோல் முன்னே செய்த முழு உதவியும் பயன்படாமல் ஒழிந்தாலும் உயர்ந்த பெருமக்கள் பின்னும் போய் இயன்ற அளவும் உதவி செய்வர். - கலித்தொகை : 34. மன்னுயிர் ஏமுற மலர்ஞாலம் புரவின்று பன்னீரால் கால்புனல் பரந்தூட்டி இறந்தபின் சின்னீரால் அறல்வார அகல்யாறு கவின்பெற முன்னொன்று தமக்காற்றி முயன்றவர் இறுதிக்கண் பின்னொன்று பெயர்த்தாற்றும் பீடுடை யாளர்போல். (8) 9. யானையின் கொம்புகளுக்கு இடையே வைக்கப்பெற்ற கவளம் தவறாமல் அதன் வாய்க்குள் செல்லும். அதுபோல் உள்ளத்தால் உயர்ந்த வள்ளல்கள் கொடையும் தவறாமல் கிடைக்கும். - புறநானூறு : 101 ஒருநாள் செல்லலம் திருநாள் செல்லலம் பலநாள் பயின்று பலரொடு செல்லினும் தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ அணிபூண் அணிந்த யானை இயல்தேர் அதியமான் பரிசில் பெறூஉம் காலம் நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன் கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத் ததுவது பொய்யா காதே. (9) 10. நறுமணமலர் ஆயினும் சரி, மணமிலா இதழ் ஆயினும் சரி, மலர்ந்தது ஆயினும் சரி, முகையாயினும் சரி அவற்றைத் தெய்வங்கள் வெறுக்காமல் நிற்கும். அதுபோல் அருள்மிக்க வள்ளல்களும் தம்மிடம் வேண்டி வந்தவர் அறிவுடையவர் அன்றி அறிவிலா மடவரே எனினும் உதவத் தவறார். - புறநானூறு : 106. நல்லவும் தீயவும் அல்ல குவியிணர்ப் புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை கடவுள் பேணேம் என்னா ஆங்கு மடவர் மெல்லியர் செல்லினும் கடவன் பாரி கைவண்மையே. (10) 11. நீர்ச்சுழியில் அகப்பட்டு ஆழ்ந்து அலைக்கழிவாரைக் கண்டு உள்ளம் படைத்தவர் ஓடிப்போய் உதவுவர். அதுபோல் தம்மைத் தேடிவருவாரை எதிர்நோக்கி இருந்து ஓடிப்போய் உதவுதல் வேண்டும். - மலைபடுகடாம் : 280 காடுகாத் துறையும் கானவர் உளரே நிலைத்துறை வழீஇய மதனழி மாக்கள் புனற்பாடு பூசலின் விரைந்து வல்எய்தி உண்டற் கினிய பழனும் கண்டோர் மலைதற்கு இனிய பூவும் காட்டி ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற நும்மின் நெஞ்சத் தவலம் விட இம்மென் கடும் போடு இனியிர் ஆகுவீர். (11) 12. நிழலே காணப்பெறாத நெடுவழியிலே நிற்கும் ஒரு நிழல் மரம் மிகப் பயன்படுவதாகும். அம்மரம் ஈயாச் செல்வர் இடையே நிற்கும் ஈகையாளன் ஒருவனுக்கு ஒப்பானது. - புறநானூறு : 119 நிழல் இல் நீளிடைத் தனிமரம் போலப் பணைகெழு வேந்தரை இறந்தும் இரவலர்க்கு ஈயும் வள்ளியோன். (12) 13. பயன்மரம் இடம் சிறிதும் இல்லாமல் பூத்து அப்பூக்கள் வீணாகாமல் காய்த்து நன்மை செய்யும். அதன் கொடை, வாழ்வியல், செல்வம் ஆயவற்றைத் தெளிவாக உணர்ந்த பெரு மக்கள் கொடுக்கும் உள்ளமுவந்த கொடை போன்றது. - கலித்தொகை : 32. உணர்ந்தவர் ஈகைபோல் இணர்ஊழ்த்த மரம். (13) 14. முயன்று தேடிய பொருளைப் பிறர்க்கு வழங்கி எஞ்சியதை உண்ணும் வள்ளல், அயரா உழைப்பால் விளைந்த தானிய மணியை உங்களுக்கு வழங்கிவிட்டு வைக்கோலைத் தின்னும் காளைக்கு ஒப்பான பெருங்குணத்தவன் ஆவன். - புறநானூறு : 125. உழுதநோன் பகடு அழிதின் றாங்கு நல்லமிழ் தாக நீ நயந்துண்ணும் நறவே. (14) 15. 'மறுமுறை வா' என்று கூறாமல் கேட்டவுடன் தரும் வள்ளல், மரத்தின் பொந்திலே கிளி சேர்த்து வைக்கப்பெற்ற தினைக் கதிர்போல் தவறாமல் பயன் தரத்தக்கவன் ஆவன். - புறநானூறு : 138 கிளிமா இய வியன் புனத்து மரன் அணி பெருங்குரல் அனையன். (15) 16. வருந்தி முயன்று கொய்யவேண்டாமல் தானே வளைந்து நின்று பூவும் கனியும் வழங்கும் மரத்தையும் கொடியையும் போன்றவர் வேண்டியவர்க்கு வேண்டியவற்றை அவர் இடத் திற்குத் தாமே தேடிச் சென்று உதவும் உள்ளம் படைத்தவர். - கலித்தொகை : 28 பாடல்சால் சிறப்பில் சினையவும் சுனையவும் நாடினர் கொயல் வேண்டா நயந்துதாம் கொடுப்ப போல் தோடவிழ் கமழ்கண்ணி தையுபு புனைவார்கண் தோடுறத் தாழ்ந்து துறை துறை கவின்பெற . (16) 17. இம்மையில் செய்த உதவிகள் மறுமைக்கு உதவும் என்று எண்ணி நல்லவர்கள் கொடை புரியார். அவ்வாறு புரிவாரே யானால் அது கொடை யாகாது: வாணிகமே யாம். வேண்டும் மானால் அதனை அறவிலை வாணிகம்' என்று சொல்லலாம். - புறநானூறு : 134. இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும் அறவிலை வணிகன் ஆயலன் பிறரும் சான்றோர் சென்ற நெறியென ஆங்குப் பட்டன்றவன் கைவண்மையே. (17) 18. மனைக்கு விளக்கு ஆகிய மங்கல மடந்தை வறுமைப் போழ்தினும் செம்மையாக நின்று உதவுவாள். அதுபோல் பேருள்ளம் உடையவனும் தான் வறுமையுற்ற நாளில் தன்னிட முள்ள மிகச் சுருங்கிய உணவையும் பலர்க்கும் பகுத்துத் தந்து உண்ணச் செய்வான். - புறநானூறு : 331 உள்ளது, தவச்சிறிதாயினும் மிகப்பலர் என்னாள் நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும் இற்பொலி மகடூஉப் போலச் சிற்சில வரிசையின் அளிக்கவும் வல்லன். (18) 19. கடல் நீர் தெளிவுடையதாக இருந்தாலும் நீர் வேட்கை உடையவர் பருகார். ஆடும் மாடும் பறவையும் பிறவும் சென்று நீர் பருகுதலால் கலங்கிச் சேறொடு கிடப்பது ஆயினும் வறிய நீர்க் கேணியையே விரும்பிச் சென்று பருகுவர். அது போல் மிகுந்த செல்வம் படைத்தவர் எனினும் அவரைத் தேடிச் செல்லாமல் கொடைத்தன்மையுடையார் எளியராக இருந்தாலும் அவரிடமே வறுமையாளர் செல்வர். - புறநானூறு : 204. தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல் உண்ணார் ஆகுப நீர்வேட் டோரே ஆவும் மாவும் சென்றுணக் கலங்கிச் சேறொடு பட்ட சிறுமைத்து ஆயினும் உண்ணிர் மருங்கின் அதர்பல ஆகும். (19) 20. அலைமிக்க கடற்கரை அடுத்துச் சென்றாலும் நீர்வேட்கை உடையவர் கடல் நீரைப் பருகாமல் ஊற்றையே தேடுவர். அதுபோல் பெருஞ் செல்வர் தம் அருகில் இருப்பார் எனினும் அவரை நெருங்காமல் தொலைவில் இருக்கும் கொடை யாளர்களையே இரவலர் தேடிச் செல்வர். - புறநானூறு : 154. திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும் அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும் சின்னீர வினவுவர் மாந்தர் அதுபோல் அரசர் உழையர் ஆகவும் புரைதபு வள்ளியோர்ப் படர்குவர் புலவர். (20) 21. விழாக் கொண்ட நகரம் பெருமகிழ்ச்சியும் ஆரவாரமும் கொள்ளும். அதுபோல் வள்ளல்களிடம் சென்று பரிசு பெற்றவர் வாழ்வும், மகிழ்வும் ஆரவாரமும் உடையதாக விளங்கும். - பதிற்றுப்பத்து : 61. விழவின் அன்னநின் கலிமகி ழானே. (21) 22. சுவைமிக்க பழம் பழுத்து வளம் பெருகிய மரத்திலே பறவையின் ஆரவாரம் மிகும். அதுபோல் கொடை நலம் உடைய செல்வர் மாளிகையில் எப்பொழுதும் ஆரவார ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும். - புறநானூறு : 173. யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந் தன்ன ஊணொலி அரவம் தானும் கேட்கும் ..................................................... பசிப்பிணி மருத்துவன் இல்லம். (22) 23. மலையில் விழுந்த மழைத் துளிகள் ஒன்று சேர்ந்து கடலை நோக்கிச் செல்லும். அதுபோல் வறிய இரவலர் கூட்டம் வறுமை தீர்க்க வல்ல புரவலரை நோக்கிச் செல்லும். - புறநானூறு : 42. மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி நிலவரை இழிதரும் பல்யாறு போலப் புலவர் எல்லாம் நின்னோக் கினரே. (23) 24. பாரூரில் தோன்றிய பச்சிள நெருஞ்சியின் மஞ்சள் பூ, எழுந்து வரும் செங்கதிரை நோக்கியே நிற்கும். அது போல் வறியவர் கூட்டம் கொடையாளர் கைகளையே நோக்கி நிற்கும். - புறநானூறு : 155. பாமூர் நெருஞ்சிப் பசலை வான்பூ ஏர்தரு சுடரின் எதிர்கொண் டாஅங்கு இலம்படு புலவர் மண்டை விளங்குபுகழ்க் கொண்பெருங் கானத்துக் கிழவன் தண்டார் அகலம் நோக்கின மலர்ந்தே. (24) 25. மகளிர் ஊடல் கொள்ளுங்கால் அவர்கள் பார்வை ஆடவர்க்கு அச்சம் உண்டாக்கும். அதனினும் இரவலர் வறுமைக்குரல் வள்ளன்மையாளர்க்கு அச்சம் உண்டாக்கும். ஊடலைத் தீர்க்க ஆடவர் முந்துவது போலவே, வறுமைத் துயரை ஒழிக்க வள்ளன்மையாளன் முந்துவான். - பதிற்றுப்பத்து : 57 ஒண்ணுதல் மகளிர் துனித்த கண்ணினும் இரவலர் புன்கண் அஞ்சும் புரவெதிர் கொள்வன். (25) 26. வறுமையுற்றுக் கெட்டுப் போகும் அளவில் தம் குடிகளிடம் ஆள்வோர் வரிவாங்க மாட்டார். அதுபோல் ஈகையாளர் கெட்டுப்போகும் அளவுக்கு இரவலர் அவர்களிடம் பேரளவு உதவி கொள்ள மாட்டார். - நற்றிணை : 226 27. மருந்திற்குப் பயன்படும் மரத்தில் இருந்து, அந்த மரமே அழிந்து போகுமாறு வேர், பட்டை முதலியவற்றை வெட்டிக் கொள்ளமாட்டார். அதுபோல் தமக்கு உதவியாக வாழ்பவர் கெடுமாறு அவரிடம் இருந்து அளவுகடந்த உதவியை அறி வுடையோர் கொள்ளார். - நற்றிணை : 226. 28. தம் வலிமை முழுவதும் அழிந்து போகுமாறு எத்தகைய துறவோரும் தவம் செய்யார். அதுபோல் தமக்கு உதவியாக வாழ்பவர் கெட்டுப் போகுமாறு தகுதிக்கு விஞ்சிய உதவியை நல்லோர் வேண்டார். - நற்றிணை : 226. மரம்சாம் மருந்தும் கொள்ளார் மாந்தர் உரம் சாச் செய்யார் உயர்தவம் வளம்கெடப் பொன்னும் கொள்ளார் மன்னர். (26 - 28) 29. ஈவதையே தொழிலாகக் கொண்ட இரக்கமிக்க வள்ளல்கள் இறந்துபோன நிலைமையில் கலைஞர்களின் வாழ்வு பூவில்லாத தலை போலப் பொலிவற்றதாகும். - குறுந்தொகை : 19. எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர் பூவில் வறுந்தலை போலப் புல்லென்று இனைமதி வாழிய நெஞ்சே. (29) 30. நாளும் உதவி வாழும் வள்ளலை இரவலர் தேடிச் செல்ல அவன் இறந்தான் என்னும் சொல்லைக் கேட்பது, சோறு அடப்பெற்ற பானையைத் திறந்து பார்க்கத் தீக்கிளம்பியது போன்றதாம். - புறநானூறு : 237. நச்சி இருந்த நசைபழு தாக அட்ட குழிசி அழற் பயந் தா அங்கு அளியர் தாமே ஆர்க என்ன அறனில் கூற்றம் திறனின்று துணிய. (30) 31. பழத்தை விரும்பி வானிலே பறந்து மலைக் குகை அதிரச் சென்ற பறவை, சென்ற இடத்தில் பழமரம் பழுத்து மாறிற்றாக வறிதே திரும்புவது போன்றது , ஈயாச் செல்வரை நாடிச் சென்று எதுவும் இல்லாமல் கவலையும் கால்நடைத்துயருமே கொண்ட பொருளாய் மீளும் இரவலர் நிலைமை. - புறநானூறு : 209. பல்கனி நசைஇ அல் குவியும் புகந்து பெருமலை விடரகம் சிலம்ப முன்னிப் பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக் கையற்றுப் பெறாது பெயரும் புள்ளினம் போலநின் நசைதர வந்துநின் இசைநுவல் பரிசிலேன் வறுவியேன் பெயர்கோ. (31) 32. உள்ளக் கனிவும் கொடைப்பயனும் இல்லாத இரக்கம் இல்லான் உதவியை எதிர்பார்த்து அலைவது, உட்சுளை யில்லாமல், தோல்வன்மை அமைந்த பழத்தை விரும்பிச் சுற்றிக் கொண்டு வருவது போன்றது. - புறநானூறு : 207 அருகில் கண்டும் அறியார் போல அகநக வாரா முகனழி பரிசில் தாளில் ஆளர் வேளார் அல்லர் ............................................... உள்ளம் உள்ள விந் தடங்காது வெள்ளென நோவா தோன்வயிற் றிரங்கி வாயா வன்கனிக் குலமரு வோரே. (32) 33. உழைத்துச் சேர்த்தவனுடைய செல்வத்தை இரந்து பெற்று வாழும் இரவலன், பூக்கள் தோறும் புகுந்து ஆங்குள்ள தேனை எடுத்து ஆரவாரித்து மகிழும் வண்டு போன்றவன். - கலித்தொகை : 35. செல்வம், படியுண்டார் நுகர்ச்சிபோல் பல் சினை மிஞறார்ப்ப. (33) 34. கிடைக்கும் என்று எதிர்பார்க்காத ஓர் இடத்தில் இருந்து ஒருவன் பெருஞ்செல்வம் பெறுவது, விறகு வெட்டச் சென்ற இடத்திலே ஒருவன் விழுமிய பொற்குவியல் கண்டது போன்றதாம். - புறநானூறு : 70. செல்வை ஆயின் செல்வை ஆகுவை விறகொய் மாக்கள் பொன்பெற் றன்னதோர் தலைப்பா டன்றவன் ஈகை நினைக்க வேண்டா வாழ்க அவன் தாளே. (34) 35. களிறு ஆகிய உணவு தனக்குக் கிடைக்காமல் தப்பி விட்டது என்று புலி, ஓர் எலியைக் கொன்று தின்னாது. அதுபோல் எதிர்பார்த்த ஒரு பொருளை அன்றிப் பெருமைமிக்க இரவலர் எது கிடைத்தாலும் போதும் என்று வாங்கிச் செல்ல மாட்டார். - புறநானூறு : 237 புலிபார்த்து ஒற்றிய களிற்றிரை பிழைப்பின் எலிபார்த்து ஒற்றா தாகும் ... எழுமதி நெஞ்சே துணிபுமுந் துறுத்தே. (35) 36. கடலை அடைந்த முகில் நீரிடைப் படிந்து அள்ளிக் கொள்ளாமல் கிளம்பாது. அது போல் வள்ளல்களை நாடிச் சென்ற இரவலர் எவ்வாறேனும் பொருள் பெறாமல் மீளார். ஆதலால் காலந்தாழ்த்தாமல் ஈவது செல்வர் கடமை. - புறநானூறு : 205 ஆர்கலி யாணர்த் தாதிய கால்விழ்த்துக் கடல்வயின் குழீஇய அண்ணலங் கொண்மூ நீரின்று பெயரா ஆங்குத் தேரொடு ஒளிறுமருப் பேந்திய செம்மல் களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே. (36) 37. திறமை வாய்ந்த தச்சச் சிறார் தங்கள் கருவிகளுடன் காட்டுக்குச் சென்றால் மரம் வெட்டாமல் திரும்பார். அதுபோல் கலைஞர்களும் தம் தொழில் ஆற்றக் கிளம்பினால் பயன் இன்றி மீளார். - புறநானூறு : 206 மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர் மழுவுடைக் காட்டகத் தற்றே எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே. (37) 38. நல்ல நிலத்திலே போடப்பெற்றவித்து, பெரும் பயன் தரும். அதுபோல் முதன்மை வாய்ந்த கொடையும் பெறுதற்கு அரிய நன்மைகளை உறுதியாக வழங்கும். - சீவகசிந்தாமணி : 2823 39. வறண்ட புல்லிய நிலத்திலே போடப்பெற்ற வித்து முளைத்தும் முளைக்காமலும் பயனற்று ஒழியும். அதுபோல் உயர் தன்மை இல்லார்க்கு வழங்கப்பெற்ற உதவி பயனற்று ஒழியும். - சீவகசிந்தாமணி : 2823. நன்னிலத் திட்ட வித்தின் நயம்வர விளைந்து செல்வம் பின்னிலம் பெருக ஈனும் பெறலரும் கொடையும் பேசில் பின்னிலத் திட்ட வித்திற் புற்கென விளைந்து போகம் மின்னெனத் துறக்கும் தானத் தியற்கையும் விரித்து மன்றே. (38-39) 9. நட்பு 1. பொன்னும், பவழமும், முத்தும், மணியும் வெவ்வேறு இடங்களில் தோன்றினாலும் அணிகலமாக அமைக்கும் போது ஓரிடத்தே விளங்கி அழகுபடுத்தும். அதுபோல் சான்றோர்கள் வெவ்வேறு இடங்களில் பிறந்தால் கூட ஓரிடத்தே கூடிப் பழகி மகிழ்வர். - புறநானூறு : 218. பொன்னும் துகிரு முத்து மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் இடைபடச் சேய வாயினும் தொடைபுணர்ந்து அருவிலை நன்கலம் அமைக்கும் காலை ஒருவழித் தோன்றியாங் கென்றும் சான்றோர் சான்றோர் பால ராப சாலார் சாலார் பாலரா குபவே. (1) 2. உயர்ந்தவர்களது இனிய நட்பு தாமரையில் இருந்து எடுத்துச் சந்தன மரத்தில் வைக்கப்பெற்ற உயரிய தேனைப் போன்றது. - நற்றிணை : 1 தாமரைத் தண்டாது ஊதி மீமிசைச் சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப் புரைய மன்ற புரையோர் கேண்மை. (2) 3. உடலுடன் ஒன்றியது உயிர். அவ்வுயிர் உடலைப் பிரிந்தால் தனக்கென ஓர் உருவத்தையும் உணர்ச்சியையும் இல்லாமல் ஒழியும். அவ்வுயிரைப் போல் நண்பர்க்கு அமைப் வரே நல்ல நண்பர். - பெருங்கதை : 2:9:221 ஒன்றி ஒழுகலின் உயிரே போலவும் ........ ...... இனியோர்க் கியன்ற படுகடன். (3) 4. இரும்பு கொல்லுலையில் வேகுங்கால் அதனுடன் சூட்டுக்கோலும் வேகும். அதுபோல் நண்பர் இடர்ப்படுங்கால் அவருக்குத் துணையாகி நின்று அவர் துயரத்தில் பங்கு கொள்வது உயரிய நண்பர் இயற்கை. - பெருங்கதை : 2:8:154. இட்டிடர்ப் பொழுதில் இன்பம் நீக்கிக் கட்டழல் புகூஉம் சுட்டுறுகோல் போல் நட்டை இட்டு நாட்டகம் துறந்துதம் பெருமகற் கொள்ளும் வேட்கையில் போந்த குயமகன் இல்லம் குறுகினன். (4) 5. இரு கண்களின் மணிகளும் ஒரு பொருளைப் பார்க்குங் கால் ஒன்றுபட்டு நிற்கும். அக்கண்மணிகளைப் போன்று அமைபவரே அரிய நண்பர். - பெருங்கதை : 2:8:170 கண்மணி அன்ன திண்நட் பாளன். (5) 6. உயர்ந்த மலையில் இருந்து ஒழுகும் அருவி தூயதாய் இடைவிடாமல் வீழும். அஃது உள்ளன்பால் இடையீடு இன்றி உயர்ந்த நட்புச் செலுத்தும் மேலோர் போன்றது. - பெருங்கதை : 1:50:14 மெய்ந்நயம் தெரிந்த, மேலோர் நண்பிற் றாழ இழிதரும் அருவி. (6) 7. ஒருநாள் பூசினால் ஓராண்டுக் காலத்துக்கு மாறாமல் மணம் பரப்பவல்ல மண எண்ணெய், ஒருநாள் பழகினும் உயிர் உள்ளவரைக்கும் தொடரும் பெரியோர் நட்புப் போன்றது. - சீவகசிந்தாமணி : 2737. ஒருபகல் பூசின் ஓராண் டொழிவின்றி விடாது நாறும் பெரியவர் கேண்மை போலும் பெறற்கரும் வாச எண்ணெய். (7) 8. இனிய சொல்லும், உயிர் நட்பும், குறிப்புணர்திறமும் கறையிலா வாய்மையும் உடையவர் நட்பு, உருவும் நிழலும் போல என்றும் அகலாமல் உறையும் பெற்றியதாகும். - (1) கல்லாடம் : 58; (2) கல்லாடம் : 62 (1) பாலும் அமுதமும் தேனும் பிலிற்றிய இன்ப ர் சொல்லி நண்புமனக் குறியும் வாய்மையும் சிறப்பும் நிழலெனக் கடவார். (2) உடல் நிழல் மான உனதருள் நிற்கும் என்னையும் கடந்தனள். (8) 9. கண்ணில் விழுகின்ற நுண்ணிய துகளையும் கைவிலக்கும். அதுபோல் நண்புடையார் கொண்ட துன்பத்தைத் தவறாமல் நீக்குதல் அவர் நண்பர் கடமை. - நற்றிணை : 216 கண்ணுறு விழுமம் கைபோல் உதவி நம்முறு துயரம் களையார். (9) 10. நெடுந்தொலைவு செல்லும் பாரமேற்றப் பெற்ற வண்டியின் கீழ் மரத்திலே ஓரச்சினைப் பாதுகாப்பாகக் கட்டிச் செல்வர் உப்பு வணிகர். அதற்குச் சேம் அச்சு என்பது பெயர். அவ்வச்சு உற்ற பொழுதில் உறுதுணையாய் அமையும். நண்பர்க்கு ஓர் ஊறுபாடு என்றால் ஓடிப்போய் உதவுபவர் அவ்வச்சுப் போன்றவர். - புறநானூறு: 102 எருதே இளைய நுகமுண ராவே சகடம் பண்டம் பெரிது பெய் தன்றே அவல் இழியினும் மிசை ஏறினும் அவண தறியுநர் யாரென உமணர் கீழ்மரத் தியாத்த சேம அச் சன்ன இசை விளங்கு கவிகை நெடியோய். (10) 11. கழியின் கரையில் நிற்கும் தாழை, கழிநீர் மிகும் போது உயர்ந்தும், கழிநீர் வடியும் போது தளர்ந்தும் ஒரு நிலைப்படாமல் இருக்கும். அதுபோல் அன்பு உடையவர், இன்ப துன்பங்களுக்கு ஏற்ப அவர் அன்புக்குரியவரும் ஒரு நிலைப்படாது இருப்பர். - குறுந்தொகை : 340 அழுவம் நின்ற அலர்வேய் கண்டல் கழிபெயர் மருங்கின் ஓல்கி ஓதம் பெயர்தரப் பெயர்தந் தாங்கு வருந்தும் தோழி அவர் இருந்தவென் நெஞ்சே. (11) 12. சண்பக மலரை விரும்பிச் செல்லாத வண்டுகள் மல்லிகை மலரைச் சூழ்ந்து மொய்க்கும். அதுபோல் சேர்ந்து பயன்கொள்ளத் தகாதவரை நெருங்காமல் விலகித் தக்கவரை அறிவுடையோர் நெருங்கிச் சேர்வர். - சூளாமணி : 225. கண்பகர் மல்லிகை கமழக் காதலால் சண்பகத் தனிவனம் தும்பி சாருமே பெண்பகர் திருவனாய் பிறந்து நங்குடி மண்பகர் உலகெலாம் மகிழ்ந்து செல்லுமே. (12) 13. தன்னை அடுத்துள்ள பொருள்களின் நிறத்தையே பளிங்கு காட்டும். அதுபோல் தன்னை அடுத்துச் சேர்ந்துள்ளோர் தன்மைக்கு ஏற்பவே ஒருவன் தன்மை அமையும். - சூளாமணி : 253. எடுத்தனன் இலங்கு சாதி எழிலொடு திகழு மேனும் அடுத்தன நிறத்த தாகும் அணிகிளர் பளிங்கு போல. (13) 14. எவ்வளவு ஏறி எழும்பி வந்தாலும் கடலின் அலை கரையைக் கடந்து செல்லாது. அதுபோல் உயர் நண்பினர் உரைக்கும் உரையை எந் நிலையிலும் கடத்தல் கூடாது. - பெருங்கதை : 2:19:28 காலம் கலக்கக் கலக்கமொ டுராஅய் ஞால முழுதும் நவைக்குற் றெழினும் ஊர்திரை யுடைய ஒலிகெழு முந்நீர் ஆழி இறத்தல் செல்லா தாங்குத் தோழரை இகவாத் தொடுகழற் குரிசில். (14) 15. நறுநெய்யையும் தீம்பாலையும் குழந்தையைத் துன்புறுத் தியும் தாய் உண்ணச் செய்வாள். அது போல் இன்னாசெய்தும் இனியதை ஆக்குவர், வாழ்வு தாழ்வுகளில் ஒன்றாய் அமைந்த உயரிய நண்பர். - பெருங்கதை: 2:17:6 நலத்தகு சேதா நறுநெய்த் தீம்பால் அலைத்துவாய்ப் பெய்யும் அன்புடைத் தாயின் இன்னா செய்தும் மன்னனை நிறூஉம் .................. உருமண்ணு வாவொடு வயந்தகன். (15) 16. நன்னெறி நீங்கிப் புன்னெறியிலே நண்பன் போகும்போது பகைவனைப்போல் இரக்கம் சிறிதும் இல்லாமல் இடித் துரைத்தும் திருத்துதல் வேண்டும். இது நல்ல நண்பர் கடமையாம். - பெருங்கதை: 2:9:223 நன்றி அன்றிக் கன்றியது கடிதற்குத் தகவில செய்தலில் பகைவர் போலவும் .......... ……………… இனியோர்க் கியன்ற படுகடன். (16) 17. செயலாற்றும் திறமை இல்லாமல் சோர்வடைந்த பொழுதில் ஒருவனை அவன் ஆண்மை ஒன்றே சோர்வை நீக்கிக் காக்க வல்லது. அவ்வாண்மை போல் உதவுபவரே உயர்ந்த நண்பர். - பெருங்கதை 2:9:219 18. குற்றம் செய்பவரை அவரின் நன்மை ஒன்றே கருதிய பெரியவர்கள் அன்புரையாலும் வன்புரையாலும் நல்வழிப் படுத்துவர். அதுபோல், நண்பன் தவறிச் செல்லுங்கால் தடுத்து நல்வழிப் படுத்துபவரே உண்மை நண்பினர். - பெருங்கதை, 2:9:220 அற்றங் காத்தலின் ஆண்மை போலவும் குற்றங் காத்தலின் குரவர் போலவும் ................. இனியோர்க் கியன்ற படுகடன். (17-18) 19. ஒருவன் நற்குண நற்செயலால், அவன் குடிப்பிறப்பு இன்னதெனத் தெளிவாகும். அதுபோல் பொருள் சுருங்கிய போது உண்மை நட்பாளர் இவர் என்னும் உண்மையை அறிதல் கூடும். - திரிகடுகம் : 37. குறளையுள் நட்பளவு தோன்றும் உறவினிய சால்பினால் தோன்றும் குடிமை. (19) 20. அகன்ற வானத்துத் தோன்றிய திங்களால் அல்லி மலரும்; தாமரை குவியும். ஆதலால், உலகில் ஒருவரே எவருக்கும் இனியவராக இரார் போலும்! சிலர்க்கு இனியவர் ஆவார் வேறு சிலர்க்கு இன்னாதவராக இருப்பார் போலும்! - சூளாமணி : 1031 அங்கொளி விசும்பில் தோன்றும் அந்திவான் அகட்டுக் கொண்ட திங்களங் குழவி பால்வாய்த் தீங்கதிர் அமிழ்த மாந்தித் தங்கொளி விரிந்த ஆம்பல் தாமரை குவிந்த ஆங்கே எங்குளார் உலகில் யார்க்கும் ஒருவராய் இனிய நீரார். (20) 21. கப்பல் கவிழ்ந்து போனதால், ஒரு கட்டையைப் பற்றிக் கொண்டவனுக்கு அந்தக் கட்டையும் கையை விட்டு நழுவினாற் போன்றது, அல்லல் மிக்க பொழுதில் துணையாக இருந்தவரும் பின்னர் அவரை விடுத்துச் சென்று விடுவது. - பெருங்கதை : 1:53:3 நொப்புணை வலியா நுரைநீர்ப் புக்கோற்கு அப்புணை அவல்வயின் அவன்கை தீர்ந்தா அங்கு .... அரும்பிடி நம்மை ஆற்றறுத் தன்றால். (21) 22. விளைந்ததைப் பார்த்து கதிரைத் திருடிக் கொண்டு போய்த் தன் வளைக்குள் சேர்த்து வைத்துக் கொள்ள வல்லது எலி; அத்தகைய எளிய முயற்சியாளர் நட்பினைக் கொள்ளாமல் உதறித் தள்ளுதல் வேண்டும். - புறநானூறு : 190. விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர் வல்சி கொண்டளை மல்க வைக்கும் எலிமுயன்றனையர் ஆகி உள்ளதம் வளன்வலி யுறுக்கும் உளமி லாளரொடு இயைந்த கேண்மை இல்லா கியரோ. (22) 23. செல்வம் உளதாய காலத்து உடன் இருந்து, அச்செல்வம் அகன்றதும் அகன்றுவிடும் புல்லிய நண்பர், தலைவன் தன்னுடன் இருந்த காலத்தில் கையில் செறிவாக இருந்து அவன் பிரிந்தவுடன் கழன்றோடும் தலைவியின் வளையல் போன்றவர். - கலித்தொகை : 25. ஈங்கு நீர் அளிக்குங்கால் இறைசிறந் தொருநாணீர் நீங்குங்கால் நெகிழ்போடும் வளையெனவும் உளவன்றோ செல்வத்துட் சேர்ந்தவர் வளனுண்டு மற்றவர் ஓல்கிடத் துலப்பிலா உணர்விலார் தொடர்புபோல். (23) 24. முன்னே இருக்கும்போது மகிழ்ச்சியால் புகழ்ந்து சிறிது பின்னே சென்றதும் புறங்கூறிப் பழிக்கும் புல்லிய நண்பர், தலைவன் உடன் இருந்த காலத்தில் களிப்புடன் இருந்து அவன் பிரிந்த போது கண்ணீர் வடித்துக் கலங்கும் கண்கள் போன்றவர். - கலித்தொகை : 25. மணக்குங்கால் மலரன்ன தகையவாய்ச் சிறிதுநீ தணக்குங்கால் கலுழ்பானாக் கண்ணெனவும் உளவன்றோ, சிறப்புச்செய் துழையராப் புகழ் போற்றி மற்றவர் புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் தொடர்புபோல். (24) 25. மலைவழி , செல்லச் செல்லக் குறுகி இறுதியில் இல்லாது மறைந்து போகும். அதுபோல் கீழ்மக்களின் நட்பும் நாட்செல்லச் செல்லக் குறைந்து தேய்ந்து அறவே இல்லாது போய்விடும். - சீவகசிந்தாமணி : 1416 செல்வர் மனத்தின் ஓங்கித் திருவின் மாந்தர் நெஞ்சின் எல்லை இருளிற் றாகிப் பூந்தா தினிதின் ஒழுகிக் கொல்லும் அரவின் மயங்கிச் சிறியார் கொண்ட தொடர்பிற் செல்லச் செல்ல அஃகும் நெறிசேர் சிலம்பு சேர்ந்தான். (25) 26. செல்வப் பெருக்குடைய காலத்துச் சேர்ந்திருந்து வறுமையுற்றபோது பிரிந்து செல்லும் நண்பர், கதிர் உள்ள வரை தினைப்புனத்தில் தங்கியிருந்து அஃது ஒழிந்தவுடன் விட்டுச் செல்லும் மயில், கிளி முதலிய பறவைகளைப் போன்றவர். பிரியா நண்பர், புனத்திடத்தே தங்கும் பறவைகள் போன்றவர். - கல்லாடம் : 4 அருவியம் சாரல் இருவியம் புனத்தினும் மயிலும் கிளியும் குருவியும் படிந்து நன்றி, செய்குநர்ப் பிழைத்தோர்க் குய்வில வென்னும் குன்றா வாய்மை நின்றுநிலை காட்டித் தங்குவன. (26) 27. உரையால் மட்டும் ஒன்றாகி உள்ளத்தால் பெரிதும் வேறாகிப் பொய்யாக நடிக்கும் போலிகளின் தொடர்பு, நல்ல மரத்தில் புல்லுருவி வாய்த்துக் கெடுப்பது போன்றது. - கல்லாடம் : 37. உயர்மரம் முளைத்த ஊரி போல ஒருடல் செய்து மறுமனம் காட்டும். (27) 28. தனக்கென ஒரு தகுதியும் உறுதியும் இல்லாமல் ஒவ்வொரு வருக்கும் தக்கவாறு பொய்யாக நடித்து வாழ்பவன் கையும் காலும் தூக்கத் தூக்கும் கண்ணாடிப் பாவை போன்றவனாம். - குறுந்தொகை : 8 எம்மில் பெருமொழி கூறித் தம்மில் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல மேவன செய்யும். (28) 29. செல்வம் உள்ளவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களைத் தேடி, அச் செல்வம் குறைந்தவர்களை விடுத்தகலும் பண்பிலாத மக்கள், சுனைப் பூக்களை விடுத்துச் சினைப்பூக்களை (கிளைப் பூக்களை) அடையும் வண்டு போல்வர். - அகநானூறு : 71. நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர் பயனின் மையில் பற்றுவிட் டொருஉம் நயனின் மாக்கள் போல் வண்டினம் சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படர. (29) 30. திங்கள் ஒருகால் நாளும் நாளும் வளர்ந்து பின்னர் ஒருகால் நாளும் நாளும் தேயும். அதுபோல் நிலையிலா உள்ளத்தவரும் பொருள் உள்ள அளவும் நெருங்க நெருங்க உறவாடிப் பின்னர்ப் பொருள் போகப் போகத் தாமும் அகன்று அகன்று மறைவர். - வளையாபதி : 56 நாடொறு நாடொறு நந்திய காதலை நாடொறு நாடொறு நய்ய ஒழுகலின் நாடொறு நாடொறு நந்தி உயர்வெய்தி நாடொறும் தேயும் நகைமதி ஒப்ப. (30) 31. ஒரு பாணன் இறப்பானே ஆனால், அவன் கைப்பட்டிருந்த யாழ் பிறிதொரு பாணன் கைவயத்ததாகிப் பயன்படும். அதுபோல் நிலைப்பிலா மனம் உடையவரும் பொருள் உள்ள அளவும் ஒருவனொடு உறவாடிப் பின்னர் வேறு ஒருவனை நாடுவர். - வளையாபதி : 54 எங்ஙனம் ஆகியது இப்பொருள் அப்பொருட்டு அங்ஙனம் ஆகிய அன்பினர் ஆதலின் எங்ஙனம் பட்டனன் பாண்மகன் பாண்மகற்கு அங்ஙனம் ஆகிய யாழும் புரைப். (31) 32. தாமரை இலையின் மேல் நிற்கும் நீர் காற்று வீசும் அவ்வளவு சிறுபொழு தெல்லைக்கே நிலை பெறும். அதுபோல் பொருளைக் கருதி உறவாடியவரும் அப்பொருள் இருக்கும் சிறுபொழுதளவே உறவில் நிலைப்பர். - வளையாபதி : 11 தளிப்பெயல் தண்துளி தாமரை யின்மேல் வளிப்பெறு மாத்திரை நின்றற் றொருவன் அளிப்பவற் காணும் சிறுவரை யல்லால் துளக்கிலர் நில்லார் துணைவளைக் கையார். (32) 33. மழை பெருகிப் பெய்தலால் பெருகிவரும் ஆறு, மழை பெய்யாமல் பொய்த்தால் தன் நீரும் அற்றுப்போகும். அதுபோல் பொருள் கருதி நட்பாடுபவன் தன்மையும் பொருள் இருக்கும் அளவும் இருந்து போம் அளவில் போகும். - வளையாபதி : 53 வாரி பெருகப் பெருகிய காதலை வாரி சுருங்கச் சுருக்கி விடுதலின் மாரி பெருகப் பெருகி அறவறும் வார்புனல் ஆற்றின் வகையும் புரைப். (33) 34. பள்ளத்தில் உள்ள நீரில் நெடுங்காலம் பழகினாலும், புது வெள்ளத்தைக் கண்டால் உடனே அதனை விரும்பிச் செல்லும் மீன். அதுபோல் எத்தகு நெடுங்காலம் பழகினாலும் உறுதிப்பாடு இல்லாத உள்ளத்தவர் நிலைத்த அன்பினர் ஆகார். - வளையாபதி : 8 பள்ள முதுநீர்ப் பழகினும் மீனினம் வெள்ளம் புதியது காணின் விருப்புறூஉங் கள்ளவிழ் கோதையர் காமனே டாயினும் உள்ளம் பிறிதாய் உருகலும் கொள்நீ . (34) 35. உப்புக் குவியலில் நீர் விழுந்து பெருகுமானால் குவியல் இல்லாமல் மறைந்து போகும். அதுபோல் நட்பில் பொய்யை ஊடாட விடுவார்க்கு நட்பே இல்லாது ஒழிந்து போகும். - திரிகடுகம் : 83. உப்பின் பெருங்குப்பை நீர்படின் இல்லாகும் நட்பின் கொழுமுனை பொய் வழங்கின் இல்லாகும். (35) 36. உடைந்து போன கல் ஒருநாளும் ஒன்று சேராது. அதுபோல் பண்பில்லாக் கீழ்மக்கள் பகைமையும் ஒருநாளும் ஒன்றுபட்டுக் கலக்காது. - திரிகடுகம் : 51 ஈர்ந்த கல் இன்னாக் கயவர் (36) 37. தீக் கடைகோல் தன்னுடன் பொருந்த வைக்கப் பெற்ற பஞ்சுக்கு நன்மை செய்வது போல் வளைத்து நெருப்புண்டாக்கி அதன் அழிவுக்கு வழிகாட்டும். அதுபோல் நிலையிலா உள்ளத் தவரும் நன்மை செய்வார் போல் உறவாடிப் பின்னர்ப் பெருங் கேடு செய்வர். - வளையாபதி : 55. கரணம் பல செய்து கையுற் றவர்கட்கு அரணம் எனும் இலர் ஆற்றில் கலந்து திரணி உபாயத்தின் திண்பொருள் கோடற்கு அரணி ஞெலிகோல் அமைவர ஒப்ப. (37) 38. பள்ளத்தின் வழியே பாய்ந்து செல்லும் வெள்ளம். அதுபோல் உள்ளத்தின் வழியே பாய்ந்து செல்லும் உணர்வு. - பெருங்கதை : 3:1:89. பள்ளம் படரும் பன்னீர் போலவன் உள்ளம் படர்வழி உவப்பக் காட்டி, (38) 39. அன்பு மீக்கூர்ந்த நண்பன் மறைவின் பின் அவன் இருந்த இடத்தைப் பார்க்கவே அவலம் கட்டுக்கடங்காமல் பெருகும். அவ்வவலம் தன்னால் பேணி வளர்க்கப் பெற்ற யானை இறந்து போகப் பாழ்பட்டுக் கிடக்கும் அதன் கட்டுத் தறியைக் காணும் பாகன் துயர் போன்றது. - புறநானூறு : 220 பெருஞ்சோறு பயந்து பல்லாண்டு புரந்த பெருங்களி றிழந்த பைதல் பாகன் அதுசேர்ந் தல்கிய அழுங்கல் ஆலை வெளில் பாழாகக் கண்டுகலுழ்ந் தாங்குக் கலங்கினேன் அல்லனோ யானே பொலந்தார்த் தேர்வண் கிள்ளி போகிய பேரிசை மூதூர் மன்றங் கண்டே. (39) 40. உயிரொடும் ஒன்றிய குற்றமில்லாத நண்பன் ஒருவனைப் பெறுவது, என்றும் பெயர்தல் இல்லாத இன்ப உலகத்தைப் பெற்றது போன்றதாகும். - பெருங்கதை : 1:56: 171 உயிர்த்துணைத் தோழன் உளனென உவந்து பெயர்ச்சியில் உலகம் பெற்றான் போல. (40) 41. நல்ல நண்பரை வாய்க்கப் பெறாத அல்லல் மிக்க உலகவாழ்வு, ஒளி வெளிப்படுதல் இல்லாத இருள் உலகிடை (நரகம் அழுங்குவது போன்றது. - பெருங்கதை :2:10:133 காதல் தோழனைக் காணாது கலங்கி மாதாங்கு தடக்கை மன்னருள் மன்னவன் நளிகதிர் மண்டில நாள்முதல் தோன்றி ஓளியிடப் பெறாஅ உலகம் போல இருளகம் புதைப்ப மருளகத் தெய்தி. (41) 10. பெருமை 1. ஓங்கி உயர்ந்து விரிந்த பாங்குடையது மலை. அதுபோல் உயர்ந்த பெருமக்கள் உள்ளம் ஓங்கி உயர்ந்து விரிவு உடையது ஆகும். - சீவகசிந்தாமணி : 1416. செல்வர் மனத்தின் ஓங்கி .... .... சிலம்பு சேர்ந்தான். (1) 2. மலையில் இருந்து வீழும் அருவி நீர் தூய்மையானது; பருகுதற்குச் சுவையும் உடையது. அதுபோல் உள்ளத்தால் உயர்ந்த பெருமக்கள் தூயவர்; அடுத்துப் பழகுதற்கு இனியவர். - புறநானூறு : 105. மால்புடை நெடுவரைக் கோடுதோ றிழிதரும் நீரினும் இனிய சாயல் பாரி வேள். (2) 3. சங்கும் பாலும் கறை சிறிதும் இல்லாத வெண்ணிற மானவை. வஞ்சமற்றவராகி வாய்மை பேணி நிற்கும் சான்றோர் உள்ளம் இவற்றினும் தூய்மையானது. - பெருங்கதை :2:5:65 சங்கினும் பாலினும் சலமில் வாய்மை விழுத்திணைப் பிறந்த ஒழுக்குடை மரபினர். (3) 4. மாசற்றும் பரப்பால் எல்லையின்றியும் காணப் பெறுவது வானம் தூய துறவிகள் உள்ளம் அவ்வானம் போன்ற தூய்மையும், விரிவுப் பெருக்கும் உடையது. - சீவகசிந்தாமணி : 851 காசறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போல மாசறு விசும்பு. (4) 5. ஈரம் உடைமையால் நீரையும் அளத்தற்கு அருமையால் வானையும், கொள்ளக் குறையாமையால் கடலையும், சுற்றம் சூழ விருத்தலால் உடுக்கள் சூழப்பெற்ற திங்களையும் போன்று சான்றோர் இருப்பர். - பதிற்றுப்பத்து : 90 ஈரம் உடைமையில் நீரோர் அனையை அளப்பரு மையின் இரு விசும் பனையை கொளக்குறை படாமையின் முந்நீர் அனையை பன்மீன் நாப்பண் திங்கள் போலப் பூத்த சுற்றமொடு பொலிந்து. (5) 6. குன்றத்திலேதான் வைரம் தோன்றும்; குளத்திலேதான் குவளை பூக்கும்; இவைபோல் தகுதிப்பாடு உடையவர்கள் இடத்தேதான் பகுத்துண்ணும் பான்மை உண்டாம். - சீவகசிந்தாமணி : 2925 அட்டு நீர் அருவிக் குன்றத் தல்லது வைரம் தோன்றா குட்டநீர்க் குளத்தின் அல்லால் குப்பைமேற் குவளை பூவா விட்டு நீர் வினவிக் கேண்மின் விழுத்தகை யவர்கள் அல்லால் பட்டது பகுத்துண் பாரிப் பார்மிசை இல்லை கண்டீர். (6) 7. தேனீயும் வண்டும் வெவ்வேறிடத்தன ஆயினும் குணத் தால் ஒருதன்மையன. அதுபோல் வெவ்வேறு இன வழியில் வந்தவர் ஆயினும் தக்கவர்கள் எல்லாம் ஒரு தன்மையராகவே இருப்பர். - சூளாமணி : 309 தேனும் வண்டும் தீதில பாடும் செறிதாரோய் யானும் கண்டேன் அச்சுவ கண்டன் திறமிஃதே. (7) 8. சூளாமணி என்னும் முடிமணி மற்றை மணிகளின் ஒளியை உள்ளடக்கி ஒளிரும். அதுபோல் பிறர் ஒளியைத் தன் ஒளியால் அடக்கவல்ல அறிவு பண்பு ஆற்றல் உடையவர் சூளா மணி ஒப்பர். - சூளாமணி : 329 அஞ்சு நீர் அலங்கல் வேலான் அருஞ்சயன் அவனை நங்கள் மஞ்சுசூழ் மலைக்கோர் சூளா மணியெனக் கருத்து மன்னா. (8) 9. வானம் களங்கமின்றி இருந்தால் கதிர், திங்கள் இவற்றின் ஒளி நன்றாக விளங்கும். அதுபோல் காமம் முதலிய குற்றங்கள் நீங்கியதாக இருப்பின் தவமும், பேரொளியுடையதாக இருக்கும். - இன்னிலை : 42. மாசகல வீறும் ஒளியன்ன நோன்புடையோர் மூசா இயற்கை நிலன் உணர்வார். (9) 10. சுவைக்க இனிமையாக இருக்கும் கரும்பைக் கட்டாகக் கட்டிப் போட்டுப் பெருக்குடைய ஆற்று வெள்ளத்தையும் கடந்து விடலாம். அதுபோல் உயர்ந்த பெருமக்கள் துணை வாய்த்தால் இன்ன வழி என்றில் லாமல் எவ்வழியாலும் உயர்ந்து விடலாம். - பதிற்றுப்பத்து : 87. சென்மோ பாடினி நன்கலம் பெறுகுவை சந்தம் பூழிலொடு பொங்குநுரை சுமந்து தெண்கடல் முன்னிய வெண்டலைச் செம்புனல் ஒய்யுநீர் வழிக் கரும்பினும் வல்வேல் பொறையன் வல்லனால் அளியே. (10) 11. தன் கன்று மடிவைக் கடித்து விட்டது என்பதற்காகத் தாய்ப் பசு அதற்குப் பாலூட்டத் தவறுவதில்லை. அதுபோல் அறியார் தம்மைத் துன்புறுத்தினாலும் அறிந்த பெருமக்கள் அவர்க்குச் செய்ய வேண்டிய நன்மைகளைச் செய்யத் தவறார். - இன்னிலை : 10. கடிப்பக், கன்றமர்ந்து தீம்பால் கலுழுமே. (11) 12. தீட்டுவானால் உயிர்ப்புத் தன்மை கொடுக்கப் பெற்ற ஓவியப் பாவை அதன் சிதைவுவரை அப்பண்பைக் காட்டிக் கொண்டிருக்கும். அதுபோல் நற்பண்புடையவரும் தம் இறுதி வரை தம் இயல்பில் தவறார். - கலித்தொகை : 21 உயிர்பெய்த பாவை போல நயனுடையார் மொழிக்கண் தாவார். (12) 13. பாம்பு உருவத்தால் சிறியதே எனினும் அதனைக் கண்டு பெரும்படையும் நடுங்கும். அதுபோல் உருவில் சிறியவர் எனினும் உள்ளத் திண்மை உடையவரைக் கண்டு அத்திண்மை இல்லார் நடுங்கி அகல்வர். - (1) சூளாமணி : 34; (2) பெருங்கதை : 4:10:130 (1) மிகையின் வந்தவிச் சாதா வேந்தர்தம் தொகையை வென்ற என் தோள்உள வாப்பிற பகையினிப்படர்ந் தென்செயும் என்றனன் நகை கொள் நீள்முடி நச்சரவம் அனான். (2) பாம்பும் அரசும் பகையும் சிறிதென ஆம்பொருள் ஓதினர் இகழார். (13) 14. மகளிர் தாம் கொண்ட காதலை உள்ளடக்கி வைத்து எளிதில் வெளிப்படுத்த மாட்டார். அதுபோல் மானப் பெருக் குடைய பெருமக்களும் தாம் கொண்ட வறுமைத் துயரைப் பிறர் அறிய வெளிப்படுத்தமாட்டார். - பெருங்கதை :4:2:24. மானம் வீடல் அஞ்சித் தானம் தளராக் கொள்கையொடு சால்பகத் தடக்கிக் கன்னி காமம் போல உள்ள இன்மை உரையா இடுக்க ணாளிர். (14) 15. அரவக் கீற்றால் கௌவப் பட்டுக் கிடந்தாலும் திங்கள் வெம்மை யைக் கக்காது. அதுபோல் சிறியவர் சிறுமை செய்தனர் ஆயினும் பெரியோர் அதனைப் பொருட்டாகக் கருதிக் கொடுமை செய்யார். - பெருங்கதை. 3:14:139 அரவு வாய்க் கிடப்பினும் அலர்கதிர்த் தண்மதிக் குருவுக் கதிர் வெப்பம் ஒன்றும் இல்லை . (15) 16. சுனை நீர் வெளியே வெதும்பியிருந்தாலும் உள்ளே தண்ணிதாய் இருக்கும்; அதுபோல் அறிவறிந்த பெருமக்கள் புறத்தே சினம் உடையவராகத் தோன்றினாலும் அகத்தே அன்பின் நெகிழ்வு உடையவராக இருப்பர். - பெருங்கதை : 1:57:93. காமர் கற்சுனை ......... முன்னர் எழுந்த முழுக்கதம் போலப் புறவயின் பொம்மென வெம்பி அகவயின் தண்மை அடக்கிய நுண்ணிறைத் தெண்ணீர். (16) 17. மனம் போனவாறு போகும் யானையையும் வணக்கு தலில் கைவந்த கலைஞன் வயப்படுத்தி அதன் காலையும் துதிக்கையையும் தான் ஏறிச் செல்லுதற்குத் தருமாறு செய்து அதன் பிடர் மேல் இருந்து தன் கருத்துப்படி செலுத்துவான். அதுபோல் மாறுபட்டு உழலும் மனத்தவரையும் திறம் வாய்ந்த அறிவினர் தம்வயப்படுத்தி நன்னெறியில் செலுத்துவர். - நீலகேசி : 265 காட்டுழல் களிநல்யானை கால்கையின் ஓர்ப்பித்தேறித் தோட்டியிட் டூர்வதேபோல் சூரிய சோமன் தானும் வாட்டடங் கண்ணி நல்லாள் வாக்கெனும் தூக்க யிற்றாற் பூட்டுபு கொள்ளப் பட்டான் போதியர்க் காதி யன்னான். (17) 18. அறிவு என்னும் நீரைச் செவி என்னும் வாய்க்கால் வழியாகப் பாய்ச்சி மனத்துயர் என்னும் வெப்பத்தை அணைத்தல் வேண்டும். - மணிமேகலை : 23:138 ஞான நன்னீர் நன்கலந் தெளித்துத் தேனார் ஒதி செவிமுதல் வார்த்து மகன்றுயர் நெருப்பா மனம்விற காக அகஞ்சுடு வெந்தீ ஆயிழை அவிப்ப. (18) 19. கடல் மிக எளிமையாக முத்து பவழம் முதலிய கடல்படு செல்வங்களை வாரி இறைக்கும். அதுபோல் அகன்று ஆழ்ந்து பெருகிய அறிவுடைய பெருமக்களும் அரிய கருத்துக்களை மிக எளிதாக வாரி வழங்குவர். - சூளாமணி : 330. வாங்கிரும் பரவை முந்நீர் மணிகொழித் தனைய சொல்லான். (19) 20. தீர்த்தற்கு அரிய நோய்வாய்ப்பட்டவர்க்கு அவர் விரும்புபவற்றைக் கொடாமல், அந்நோயை அகற்றத்தக்க மருந்தையே மருத்துவர் தருவர். அதுபோல் பிறர் விரும்புப் வற்றைச் சொல்லக் கருதாமல் அவர்க்குப் பயன் தருவன வற்றையே நல்லோர் கூறுவர். - நற்றிணை : 136 அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாது மருந்தாய்ந்து கொடுத்த அறவோன் போல என் ஐ ......... (20) 21. இன்பக் காலத்தில் இணைந்திருந்து, துன்பக் காலத்தில் துணையாகி நிற்கும் பெரியவர் செய்த பயன் கருதாத உதவி, சிறிய ஆலம் வித்து மரமாகிப் பெருநிழல் தருவது போல் பெருமை யுடையதாகும். - பெருங்கதை :4:7:219 துன்பக் காலத்துத் துணையெமக் காகி இன்பம் ஈதற் கியைந்து கைவிடாது பெருமுது தலைமையின் ஒருமிக் கூரிய உயர்தவக் கிழமைநும் முடம்பினாகிய சிற்றுப காரம் வற்றல் செல்லாது ஆல விதத்தில் பெருகி ஞாலத்து நன்றி ஈன்றது. (21) 22. நன்றியின் அருமையை உணர்ந்தவர்க்குச் செய்த உதவி யின் பயன், நாளும் ஒளி பெருகிப் பெருகி வளரும் வளர்பிறை போன்று வளரும். - பெருங்கதை :2:7:32 உணர்ந்தோர் கொண்ட உறுநன் றேய்ப்ப வணர்ந்தேந்து வளர்பிறை . (22) 23. வேட்டை நாயால் வெருட்டிப் பிடிக்கப் பெற்ற மான் அந்நாய்க்குப் பயன்படாமல் வேடர்க்குப் பெரிதும் பயன்படும். அதுபோல் பேரன்புடைய வர்கள் நெஞ்சம் அவர்க்கு மிகுதி யாகப் பயன்படாமல் பிறர்க்கே பெரிதும் பயன்படும். - கலித்தொகை : 23. கொலைவெங் கொள்கையொடு நாயகப் படுப்ப வலைஞர்க் கமர்ந்த மடமான் போல நின்னாங்கு வருஉமென் னெஞ்சினை என்னாங்கு வாராது ஓம்பினை கொண்மே. (23) 24. நெற்கதிர் மணிபிடிக்குமுன் நிமிர்ந்து நிற்கும். மணி பிடித்தவுடன் தணிந்து வளையும். அதுபோல் பண்பிலாச் செல்வர் தலைநிமிர்ந்து நிற்பர். கற்கவேண்டியவற்றைக் கற்றுத் தெளிந்த பெருமக்கள் பணிவுடன் திகழ்வர். - சீவக சிந்தாமணி : 53. சொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம் போல் மெல்லவே கருவிருந்து ஈன்று மேலலார் செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே. (24) 25. மாலைப் பொழுது வரவும் மரங்களின் இலைகள் குவிவது, தம்முடைய புகழைப் பிறர் உரைப்பதை நேரில் கேட்கும் பெருமக்கள் நாணத்தால் தலை தாழ்வது போன்றது. - கலித்தொகை : 119. தம்புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச. (25) 26. நன்னெறியில் சென்று வருந்தித் தவம் செய்பவன் பின்னர்ப் பெரும் பயன் கொள்வான். அதுபோல் செயற்கரிய செய்கையும் பிற்பயனைத் தரத் தவறாது. - பெருங்கதை : 2:10:80 நன்னெறி நூல்வழித் திண்ணறி வாளன் வருந்தி நோற்ற அருந்தவம் போலப் பிற்பயம் உடைமை தெற்றெனத் தெளிந்து. (26) 27. தான் கோபம் கொள்ளுதற்கு ஏற்ற கொடுஞ்செயலைச் செய்தால் கூட, தன் குழந்தையின் அறியாமைக்காக வருந்தி அருள் கூர்ந்து தன் மார்ப்புப் பாலை ஊட்டுவாள் அன்னை. அது போல் தமக்குத் தீயன செய்தவர் இடத்தும் பேரருள் கொண்டு அவர்க்கு நன்மை தரும் செயல்களையே செய்வர் அருளாளர். - நீலகேசி : 134 காய்வ செயினும் குழவிக்கண் கவன்று கழிகண் ணோட்டத்தால் தாய் தன் முலையில் அமுதூட்டும் தகையன் அறவோன் தானென்று. (27) 28. நீரில் பிளவு உண்டானால் உடனே அதில் பிளவு இருந்தது என்பதற்குரிய அடையாளம் எதுவும் இல்லாமல் ஒன்றுபட்டுவிடும். அதுபோல் மாறுபட்டு நிற்பரே எனினும் நல்லியல்புடையவர்கள் விரைவில் அம் மாறுபாடு நீங்கிக் கலந்து இன்புறுவர். - கல்லாடம் : 61. இருபுல வேந்தர் மறுபுலப் பெரும்பகை நீர்வடுப் பொருவ நிறுத்திட (28) 29. விசிறியில் இருந்து உண்டாகும் காற்று எவ்வளவு மிகுதியாக இருந்தாலும் அக்காற்று, குன்றத்தை நடுங்கச் செய்து விடாது. அதுபோல் வலிமையில்லாதவர் எவ்வளவு ஆரவாரத் துடன் வந்தாலும் ஊக்கம் உடையவனை ஒன்றும் செய்துவிட முடியாது. - சூளாமணி : 635 மாசில் ஆலவட் டத்தெழு மாருதம் வீச விண்டொடு மேருத் துளங்குமோ பேசின் மானிடப் பேதைகள் ஆற்றலால் ஆசில் தோளிவை தாமசை வெய்துமோ. (29) 30. வேழத்தின் கூர்மையான தந்தம் வாழைத் தண்டை ஊடுருவிச் செல்லுதலால் கூர் மழுங்கி விடாது. அதுபோல் உள்ளார்ந்த ஊக்கம் உடையவர், பகைவர் ஆரவாரத்தைக் கண்டு அஞ்சிச் சோர்வு அடைந்து விட்டார். - சூளாமணி : 636 வேழத்தின் மருப் புத்தடம் வீறுவ வாழைத் தண்டினுள் ஊன்ற மழுங்குமோ ஆழித் தானவர் தானையை அட்டஎன் பாழித் தோள்மனித் தாக்குப் பணியுமோ. (30) 31. தாயின் இளமை அழகைக் கெடுப்பதுடன், மிகுந்த துயரையும் உண்டாக்க வல்லது மகப்பேறு. ஆனால் தாய் தான் பெற்ற புதல்வன் வளர்ந்து தன் குடியைத் தாங்குதலால் மகிழ்ச்சியடைவாள். அதுபோல் அயராமல் உழைத்து அல்லல் களுக்கு ஆளாகி வாழும் உழவர்கள் தம் உழைப்பின் பயனால் உலகம் வாழ்வது கண்டு மகிழ்வர். - கலித்தொகை : 29 தொல்லெழில் வரைத்தன்றி வயவுநோய் நலிதலின் அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கைபோல் பல்பயம் உதவிய பசுமை தீர் அகல்ஞாலம் புல்லிய புனிறொரீஇப் புதுநலம் ஏர்தர. (31) 32. பெரியவர்க்குச் செய்த சிறிதளவு உதவியும் அவர் பெருமையால் பெருகி வளரும். அதுபோல் தான் விரும்பிய ஒன்று தன் உழைப்பால் கைகூடிய போது உண்டாகும் மகிழ்ச்சி யும் பெருகி வளரும். - பெருங்கதை : 1:44:138 பெரியோர்க் குதவிய சிறுநன் றேய்ப்பக் கரவாது பெருகிக் கை இகந்து விளங்கும் உள்ளத் துவகை. (32) 33. ஆரவாரம் எல்லாம் அடங்கி, இரவுப் பொழுதில் பறவைகள் உறங்குதலால், அமைதியாக விளங்கும் பொய்கை. அதுபோல், மாறுபாடு எதுவும் இல்லாமல் செல்வ வளத்துடன் விளங்கும் மக்கள் வாழும் நகரம் அமைதியாக இருக்கும். - கல்லாடம் : 38 பதினெண் கிளவி ஊர்துஞ் சியபோல் புட்குலம் பொய்கை வாய்தாழ்க் கொள்ள. (33) 34. பெருமை வாய்ந்த குடியில் ஒளிமிகுந்த ஒருவன் பிறந்து மேலும் அக்குடிக்கு உயர்வு தருவது உயர்ந்த மலையின் மேல் ஒளிவிளக்கு ஏற்றி வைத்தது போன்றது. - சூளாமணி : 255. கொங்குடை வயிரக் குன்றின் கொடுஞ்சுடர் விளக்கிட்டாங்கு நங்குடி விளக்க வந்த நங்கைதன் நலத்திற் கொத்தான். (34) 35. நல்லுடற் கூறும் பேணுதலும் அமைந்த மகளிர் கூந்தல் நீண்டு வளரும். அதுபோல் விருந்தினருடன் கூடி உண்ணும் நல்லியல்பு உடையவரைச் சேர்ந்த சுற்றத்தாரும் நீண்டு பெருகுவர். - கல்லாடம் : 35. கொலையில் உள்ளமும் குறைகொள இருண்டு நானம் நீவி நாள்மலர் மிலைந்து கூடி யுண்ணும் குணத்தினர் கிளைபோல் நீடிச் செறிந்து நெய்த்துடல் குளிர்ந்த கருங்குழல். (35) 36. கதிரோனை நோக்கி மலரும் நெருஞ்சில் பூப்போலத் தம் சுற்றத்தவர் தம் முகம் நோக்கி வளருமாறு அமைந்த இனிய வாழ்வு மிக உயர்வுடையது. - கல்லாடம் : 2. ஏழுளைப் புரவியோ டெழுகதிர் நோக்கிய சிற்றிலை நெருஞ்சிற் பொற்பூ வென்ன நின்முகக் கிளையினர். (36) 37. பருவம் வரும் அளவும் மலராமல் அமைந்திருக்கும் மரம். அதுபோல் செயல் நிறைவேறத் தக்க காலம் வரும் அளவும் அறிவு ஆராய்வில் சிறந்த மக்கள் காத்திருப்பர். - கலித்தொகை : 32 உணர்ந்தவர் ஈகைபோல் இணரூழ்த்த மரம். (37) 38. ஊர்ச்சிறுவர்கள் கொம்பினைத் தேய்த்துக் கழுவுமாறு நிற்கும் யானை, போரின்கண் பகைவரை அதிர்ந்து ஓடுமாறு தாக்கும். அதுபோல் பேராண்மையாளரும் அன்பர்க்கு இனியவராகவும், பகைவர்க்கு இன்னாதவ ராகவும் இருப்பர். - புறநானூறு - 94 ஊர்க்குரு மாக்கள் வெண்கோடு கழாஅலின் நீர்த்துறை படியும் பெருங்களிறு போல இனியை பெரும் எமக்கே மற்றதன் துன்னரும் கடாஅம் போல இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே. (38) 39. ஏற்றத் தாழ்வு சிறிதும் இல்லாமல் இசைந்து வாழும் நற்குடியினர், நூற்றுக்கணக்கான இதழ்களைக் கொண்டு எழிலுடன் விளங்கும் செந்தாமரை மலர் போன்றவர். - புறநானூறு : 27 சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ் நூற்றிதழ் அலரின் நிரைகண் டன்ன வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து வீற்றிருந்தோர். (39) 40. கமுகு, வாழை, மா, பலா, தென்னை முதலிய மரங்கள் கொடி, இலை, காய், பழம் முதலியவற்றைத் தாங்கிப் பரவி நிற்கும். அவ்வாறு நிற்பது இரக்கமிக்க நெஞ்சத்தவர் தம் அன்புக்கு உரியவர்களைத் தாங்கி நிற்பது போன்றது. - பெருங்கதை : 3:19:35 ஈர நெஞ்சத் தார்வலாளர் பாரம் தாங்கும் பழமை போல இலைக் கொடிச் செல்வமொடு தலைப்பரந் தோங்கிய கணைக்கால் இணையும் கமுகும் வாழையும் சினைப்பெரு மாவும் பணைக்கால் பலாவும் கொழுமுதல் தெங்கொடு முழுமுதல். (40) 41. திங்களில் கறைபடிந்திருந்தாலும் உலகோர் அதனை ஏற்றுச் சிறப்புச் செய்வர். அதுபோல் பெரியோர் கூறும் உரையில் குற்றம் உளதாயினும் நல்லோர் அதனை ஏற்றுப் போற்றுவர். - நீலகேசி : 6 கண்டிங்கு நாளும் கடல்வையகம் காதல் செய்யும் வெண்டிங்கள் தானும் விமலம் தனக் கில்ல தன்றே கொண்டென்சொல் எல்லாம் குணனே எனக்கூறு கென்னேன் உண்டிங்கோர் குற்றம் எனில்யானும் ஒட்டாமை உண்டோ. (41) 42. நிலவின் இடத்துள்ள கறையைப் பொருட்டாக எண்ணாமல் அதன் ஒளிச் சிறப்பைக் கருதிக் கொண்டாடுவர். அதுபோல் பெரியோர்களிடம் அமைந்துள்ள சிறு குறையைக் கருதி வெறுக்காமல் அவர்கள் செய்துள்ள செயற்கரும் செயல் களை நினைந்து புகழவேண்டும். - சூளாமணி : 5 செங்கண் நெடியான் திறம் பேசிய சிந்தை செய்த நங்கண் மறுவும் மறுவன்று நல்லார்கள் முன்னர் அங்கண் விசும்பின் இருள்போழ்ந் தகல்வான் எழுந்த திங்கள் மறுவும் சிலர்கை தொழச் செல்லு மன்றே. (42) 43. மணி பொதிந்து வைக்கப்பெற்ற துணியையும் மணி யுடன் சேர்த்து மதித்துப் போற்றுவர். அதுபோல் உயர்ந்த பொருளைப் பற்றிக் கூறும் நூலில் குற்றம் உளதாயினும் அதனைப் பொருட்டாகக் கொள்ளார் அறிஞர். - உதயணகுமார காவியம் : 3 மணிபொதி கிழியு மிக்க மணியுடன் இருந்த போழ்தில் மணிபொதி கிழிய தன்னை மணியுடன் நன்கு வைப்பார் துணிவினில் புன்சொ லேனும் தூயநற் பொருள் பொ திந்தால் அணியெனக் கொள்வார் நாமும் அகத்தினில் இரங்கல் செல்லாம். (43) 44. காக்கை முதலிய சில பறவைகளின் ஒலி , இன்பம் தாராதவையாக இருந்தாலும் அவை உணர்த்தும் நிமித்தங்களை எண்ணி இனிதாகக் கொள்வர். அதுபோல் அறிவுடையோர் ஒரு நூலால் ஏற்படும் பயனைக் கருதி அதில் உள்ள குற்றங்களைக் கருதார். - நீலகேசி : 7 தெள்ளி நரைத்துத் தெருளாதுறு தீமை செய்யும் புள்ளின் உரையும் பொருளாமெனக் கோடலினால் எள்ளும் திறத்தல் துரையென்றிது நீக்கல் இன்றாய்க் கொள்ளும் உலகங் குணமாணறம் வேண்டு மென்றால். (44) 45. தன் கண் வைக்கப்பெற்ற பொருளை அளவிட்டுக் காட்டுதலில் தவறாதது சமன்கோல் என்னும் துலாக்கோல். அதுபோல் ஒருபால் சாயாமல் அளவிட்டு நடுவுநிலை பேணுதல் அறவோர் கடமை. - புறநானூறு : 6 விரிசீர்த். தெரிகோல் ஞமன்ன் போல ஒருதிறம் பற்றல் இலியரோ நிற்றிறம் சிறக்க. (45) 46. பள்ளமான இடங்களில் அணை கட்டிவைத்து நீரைத் தேக்கிவைத்து நாட்டில் வளப்பம் உண்டாக்கியவர் வெறும் நீரைத் தேக்கி வைத்தவர் மட்டுமல்லர். அவரே நில்லா இயல்புடைய உலகில், ஓடும் இயல்புடைய நீரைத் தடுத்தது போல் புகழைத் தம்மைவிட்டுப் போகாமல் தடுத்து நிறுத்தியவர். - புறநானூறு : 18. நிலனெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண் தட் டோரே தள்ளா தோரிவண் தள்ளா தோரே. (46) 47. நிலம் பெயர்ந்து தனித்துச் செல்லமாட்டாது. அதுபோல் தலைமைத் தன்மையுடையவர் தாம் சொல்லிய சொல்லில் இருந்து சிறிதும் பெயர்தல் கூடாது. - புறநானூறு : 3. நிலம் பெயரினும் நின்சொற் பெயரல். (47) 48. பலரும் தொழும் வண்ணம் தவறாமல் தோன்றி ஒளி செய்யும் கதிரோன். அதுபோல் பலரும் போற்றுமாறு ஒளியுடன் திகழும் பண்பு வாய்மையே. - நற்றிணை : 283 முந்நீர் மீமிசைப் பலர்தொழத் தோன்றி ஏமுற விளங்கிய சுடரினும் வாய்மை சான்றநின் சொல்நயந் தோர்க்கே. (48) 49. நடுக்கும் துயரம் கப்பிக்கொண்ட பொழுதிலே நல்ல உள்ளம் உடைய ஒருவன் ஓடிவந்து உதவுவது, காரிருள் கப்பிக் கொண்ட பொழுதில் திங்கள் எழுந்து பேரொளி செய்வது போன்றது. - கலித்தொகை : 118 ஆனாது கலுழ்கொண்ட உலகத்து மற்றவன் ஏனையான் அளிப்பான் போல் இகலிருள் மதிசீப்ப. (49) 50. துன்பத்தில் துடிப்பவர்க்குக் காலத்தால் செய்யும் உதவி, கரை காணமுடியாத கடலில் ஒருவன் செல்லுங்கால் கப்பல் கவிழ்ந்து போக அவனுக்கு மிதப்பு ஒன்று தந்து கரையேற்றும் செயல் போன்றது. - கலித்தொகை . 134. கரைகாணாப் பௌவத்துக் கலம் சிதைந் தாழ்பவன் திரைதரப் புணைபெற்றுத் தீதின்றி உய்ந்தாங்கு விரைவனர் காதலர் புகுதர நிரைதொடி துயரம் நீங்கின்றால் விரைந்தே. (50) 11. சிறுமை 1. கறையானால் பெரும்பாடுபட்டுச் செய்யப்பெற்ற புற்றில் இருந்து சிறகு முளைத்துக் கிளம்பிய ஈயலின் வாழ்வு ஒரு பகற் பொழுதுடன் முடியும். ஈகையால் புகழ்பெற வாழாதவரும் அவ்வீயல் போல் விரைந் தழிவர். - புறநானூறு : 51 நுண்பல சிதலை அரிது முயன் றெடுத்த செம்புற்றியல் போல ஒருபகல் வாழ்க்கைக் குலமரு வோரே. (1) 2. தண்ணிய நீரிலே தோன்றிய பகன்றை மலர் சூடப் படாமலே கழியும். அதுபோல் பிறர்க்கு எதுவும் உதவாதவன் வாழ்வும் பயனின்றிக் கழியும். - புறநானூறு : 235 இனிப் பாடுநரும் இல்லை பாடுநர்க்கொன் றீகுநருமில்லைப் பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர் சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன்று ஈயாது வியும் உயிர்தவப் பலவே. (2) 3. பாலைக் கடைந்து திரட்டி எடுக்கப்பெற்ற வெண்ணெய் வெப்பத்தால் விரைந்து உருகிவிடும். அவ்வெண்ணெய் போல் விரைந்து மறைந்து போகும் இயல்பினது உயிர்களின் வாழ்வு. - சீவகசிந்தாமணி : 2754 வெண்ணெயில் திரண்டபின் பிழைக்கவும் பெறுமே. (3) 4. வானத்தே விளங்கும் நிறைமதியில் நிரம்பித் தோன்றும் கறைபோல் இருந்து ஒருகாலைக்கு ஒரு கால் தேய்ந்து குறைந்தொழியும் தன்மையது வாழ்வு. - கல்லாடம் : 80 5. கீழ்மக்கள் கூறிய சூள் மொழி சிறிதும் வாய்மை இன்றி ஒழியும். அதுபோல் நிலைபேறு இன்றி ஒழிவதே உலகியல் வாழ்வு. - கல்லாடம் : 80 வான்தவழ் உடற்கறை மதியெனச் சுருங்கிப் புல்லர்வாய்ச் சூளெனப் பொருளுடன் அழியும் சீறுண வின்பத் திருந்தா வாழ்க்கை. (4-5) 6. நெருப்பின் நிறம் போல் தோன்றிய மாந்தளிர் சில நாட்கள் சென்றதும் பசுமை நிறமாகிப் பின்னர் அந்நிறமும் மாறிக் காய்ந்து போகும்; காற்றில் வீழும். அது போன்ற நிலையாமைத் தன்மை உடையது மாந்தர் வாழ்வு. - சூளாமணி : 1847 எரிபுரை எழில தாய இளந்தளிர் இரண்டு நாளில் மரகத உருவம் எய்தி மற்றது பசலை கொண்டு சருகிலை ஆகி வீழ்ந்து சரிந்துமண் ணாதல் கண்டும் வெருவிலர் வாழ்த்தும் என்பார் வெளிற்றினை விலக்கலாமோ? (6) 7. நீரில் தோன்றும் மொக்குள் (குமிழ் நிலையின்றி நொடிப் பொழுதில் வெடித்து மறையும் இயல்பினது. அதுபோல் உயிர் களின் வாழ்வும் நிலையற்றதாகும். - (1) சீவகசிந்தாமணி : 2754. (2) கல்லாடம் : 80 (1) இன்னதன்மையின் அருமையின் எய்திய பொழுதே பொன்னும் வெள்ளியும் புணர்ந்தென வயிற்றகம் பொருந்தி மின்னும் மொக்குளும் எனநனி வீயினும் வீயும். (2) நிலைநீர் மொக்குளின் விளைவாய்த் தோன்றி. (7) 8. எப்படித் தோன்றியது என்னும் வெளிப்பாடு இன்றி நொடிப் பொழுதளவில் தோன்றி உடனே மறையும் தன்மையது மின்னல். உயிர்களின் நிலைப்பற்ற தோற்ற ஒடுக்க வாழ்க்கை அம்மின்னலைப் போன்றதே. - சீவகசிந்தாமணி : 2754 மின்னும் மொக்குளும் எனநனி வீயினும் நீயும். (8) 9. செறிந்த நிழலின் கீழ் உள்ள தளிர் இலை விரைவில் வெளுப்படைந்து தன் இயற்கை நிறம் மாறுபட்டுப்போகும். அதுபோல் இளமைப் பருவமும் விரைந்து மாறும் இயல்பினது. ஆதலால் இளமையை வாளா கழிக்காமல் வளமான செயல்களில் பயன்படுத்துதல் வேண்டும். - கலித்தொகை : 20. நீணிழற் றளிர்போல நிறனூழ்த்தல் அறிவேனும் தாணிழல் கைவிட்டியான் தவிர்தலைச் சூழ்வலோ. (9) 10. இளமைப் பருவமும் அப்பருவத்தில் அமைந்த எழிலும் கட்குடத்தையும் அதனுள் அமைந்த கள்ளையும் போன்றது. கள் உண்டார்க்குச் செருக்கு ஊட்டுதல் போலவே இளமைப்பருவ எழில் கண்டார்க்குச் செருக்கு ஊட்டும். - நற்றிணை : 295 பெருந்துறை, கலிமடைக் கள்ளின் சாடி அன்னஎம் இளநலம் இற்கடை ஓழியச் சேறும் வாழியோ முதிர்கம் யாமே. (10) 11. வில்லில் இருந்து வெளியேறிச் செல்லும் அம்பின் நிழல் விரைந்து அழிவதுபோல் இளமைப் பருவமும் இன்ப வாழ்வும் கழியும். - நற்றிணை : 46 வைகல்தோறும் இன்பமும் இளமையும் எய்கணை நிழலில் கழியும் இவ்வுலகத்துக் காணீர் என்றாலோ அரிதோ. (11) 12. ஆற்று நீரின் ஓட்டம் போல ஓடிக் கழியும் தன்மையது இளமைப் பருவம். ஆதலால் அவ்விளமையை வீணாகக் கழிக்காமல் வினைத்திறத்தில் செலவிடுதல் வேண்டும். - கலித்தொகை : 20. ஊறுநீர் அமிழ்தேய்க்கும் எயிற்றாய் நீ உணல் வேட்பின் ஆறுநீ ரிலவென அறநோக்கிக் கூறுவீர் யாறுநீர் கழிந்தன்ன இளமை நும் நெஞ்சென்னும் தேறுநீர் உடையேன்யான் தெருமந்தீங் கொழிவலோ. (12) 13. காற்றைக் காட்டிலும் ஓர் எல்லைக்குள் அகப்பட்டு நில்லாமல் அகலும் தன்மையது இளமை. ஆதலால் அவ்விள மையைப் பயன்மிக்க வழிகளில் செலுத்துதல் வேண்டும். - கலித்தொகை : 20. கிளிபுரை கிளவியாய் நின்னடிக் கெளியவோ தளியுறு பறியாவே காடெனக் கூறுவீர் வளியினும் வரைநில்லா வாழும் நாள் நும்மாகத்து அளியென உடையேன்யான் அவலங்கொண் டழிவலோ. (13) 14. மக்கள் இளமை, நீரில் தோன்றும் மொக்குள் போன்றது; அவர் பெறும் இன்பம் மின்னலைப் போல் தோன்றி மறைவது; அவர் செல்வம் வெயில் கண்ட பனிபோல் ஒழிவது. - சீவகசிந்தாமணி : 1537 மன்னுநீர் மொக்குள் ஓக்கும் மானிடர் இளமை இன்பம் மின்னினெணத் திறக்கும் செல்வம் வெயிலுறு பனியின் நீங்கும் இன்னிசை இரங்கு நல்யாழ் இளியினும் இனிய சொல்லாய் அன்னதால் வினையின் ஆக்கம் அழுங்குவ தென்னை என்றாள். (14) 15. பையின் உட்புறம் அழகின்றி இருந்தால் கூட வெளிப் புறம் அழகு மிக்கதாக இருக்கும். அதுபோல் உடலின் வெளித் தோற்றம் அழகின் நிலைக்களமாக இருப்பினும் உட்புறம் அழுக்குக் குடிலே யாகும். - இன்னிலை : 45 பைம்மறியாத், தன்பாற் பெயர்க்குந்து பற்றுதலைப் பட்டோர் நன்பாலறிந்தார். (15) 16. எரிகின்ற விளக்கின் திரி நொடி நொடிதோறும் நிலைபேறு இன்றி அழிபாட்டுக்கு ஆளாகிக் கொண்டே இருக்கும். அதுபோலவே உருவம், நுகர்ச்சி, கந்தம், அறிவு, குறி என்பவை நிலைபேறற்றவையே. - நீலகேசி :177 முந்துரைத்தான் முந்நூலும் அந்நூலின் முடிபொருள் தாம் ஐந்துரைப்பில் உருஉழப்பு அறிவோடு குறிசெய்கை சிந்தனை கட் செலவோடு வரவுமே நிலையில்ல தந்துரைப்பின் எரிநுதி போல் தாம்கேடு நிகழ்வென்றாள். (16) 17. யானை வெருட்டிக் கொண்டு வருதலால் அதற்கு அஞ்சிப் பாம்பு உறையும் கிணற்றுக்குள் தொங்கும் கொடி யொன்றைப் பற்றிக்கொண்டு தொங்குபவன், மேலே ஒரு கிளையில் இருந்து முதிர்ந்து சொட்டும் தேன்துளியை நக்குவது போன்ற இன்பங் குறித்தது இவ்வுலக வாழ்வு. - சூளாமணி : 1989 யானை துரப்ப அரவுறை யாழ்குழி நானவிர் பற்றுபு நாலும் ஒருவனோர் தேனெயின் அழிதுளி நக்குந் திறத்தது மானுயர் இன்ப மதித்தனை கொண்ணி. (17) 18. மாலை, நறுமணத்தாலும் அழகாலும் பெருமைக் குரியதே எனினும் அது பிணத்தினைச் சேருங்கால் தன் உயர் தன்மையை இழந்து போம். அதுபோல் உயர்ந்த பெருமக்களே எனினும் இழிந்தவரைச் சேர்ந்து இருப்பார் என்றால் அவரும் இழிவுக்கு உரியவர் ஆவர். - சீவகசிந்தாமணி : 210 ஈமஞ்சேர் மாலை போல இழித்திடப் பட்ட தன்றே. (18) 19. முயற்சியில்லாதவன் குடிவாழ்வு எவ்வளவு செல்வச் செழுமை உடையதாயினும் குலைந்து போகும். அது போல் உறவினர்கள் மனம் வருந்தத் தன்னிடம் சேர்த்து வைத்துக் கொண்ட பொருளும் குலைந்து போகும். - கலித்தொகை : 149 கேளிர்கள் நெஞ்சழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள் தாளிலான் குடியேபோல் தமியவே தேயுமால். (19) 20. அறிவாற்றல் முதலிய தகுதி உடைய நல்லோர் இல்லா மல் திரண்டு செறிந்துள்ள அவையம் , வெண்மதி இல்லாத போழ்தில் தோன்றிய விண்மீன் திரள் போன்றது. - பெருங்கதை : 1:47: 260 வான்மதி இழந்த மீனினம் போலப் பொலிவின் றாகிப் புல்லென் கோலம். (20) 21. கற்றறிந்த பெருமக்கள் கூறும் அறிவுரையை ஏற்றுக் கொள்ளாமல் தன் மனம் போன போக்குப்படி போபவன் தேர்ச்சி மிக்க பாகனது தோட்டிக்கு அடங்காமல் மனம் செருக்கிச் செல்லும் மதயானை போன்றவன். - சீவகசிந்தாமணி : 2610. ... அமைச்சர் நுண்ணூல் தோட்டியால் அழுத்தி வெல்லும் பாகர்க்குத் தொடக்க நில்லாப் பகடுபோல் பொங்கி விட்டான். (21) 22. கற்றவர் உரைக்கும் கருத்துடைய மொழிகளைக் காதில் போட்டுக்கொள்ளாமல் கடந்து செல்பவன் அணைக்கு அடங்காமல் அதனை உடைத்துச் செல்லும் அழிவுமிக்க வெள்ளம் போன்றவன். - சீவகசிந்தாமணி : 2612. கற்சிறை அழித்து வெள்ளம் கடற்கவா யாங்குக் கற்றோர் சொற்சிறை அழித்து வேந்தன் ... காவல் விட்டான். (22) 23. கற்றவர் உரைக்கும் ஆழ்ந்து அகன்று நுண்ணிய கருத்துக்களைப் பற்றி அறிவிலி தன் கருத்தை உரைக்கப் புகுவது நாணயத்தின் மாற்றுக் காணவல்ல வண்ணக்கத் தொழிலை அறிவிலி ஒருவன் மேற்கொண்டது போன்றதாம். - நீலகேசி : 301 மெய்யளவிற் றுயிரென்று மெய்யாகத் தடக்குரைத்தல் பொய்யளவைக் குடம் குடத்தில் புகலருமை போலன்பாய் மெய்யாவின் மெய்யுணர்வை மெய்யாகத் தடக்குரைத்தி ஐயனையே அடங்கான் என்றது ஆதன் வண்ணக்கு ஆல். (23) 24. இளஞ்சிறுமியர் சிறுவீடு கட்டி, மணலைச் சோறு என்றும் கல்லைக் கறி என்றும் சொல்லி விளையாடுவர். அது தெளிவில்லாதவர் தாம் தெளிவுடையவர் போல் உரைக்கும் உரையை ஒப்பது. - நீலகேசி : 289 இப்பொருட்கண் நிகழ்ச்சியும் இவை இவையாம் என விரித்துச் செப்பினான் ஆதன்தன் சிந்தைக் கெழுந்தவா றப்பொருளும் அந்நிகழ்வும் அவைஅவையா அறியாதே வப்பிள வனமுலையார் மணல் விளையாட் டதுவேபோல்.(24) 25. பனை ஓலை வார்பவர் அதற்கு நன்மை செய்வது போல் வார்வர். ஆனால் அவ்வோலைக்கு உண்டாய நன்மை ஒன்றும் இல்லை. வார்பவர்க்கே நன்மை உண்டு. அதுபோல் பிறரைப் புகழ்ந்துரைப்பவனும் அவனைப் புகழ்வதை நோக்கமாகக் கொள்ளாமல் தனக்கு உண்டாகும் நலத்தையே கருதிப் புகழ்வான். - நீலகேசி : 475 ஆடுவார் காண்பார் அவரருகே தான் சென்று தோடுவார்ந் தாலொப்பச் சொல்விரிப்பான் போற்பாவம் கூடுவார்.(25) 26. துயரூட்டும் மாலைப்பொழுது வரவும் மரங்களின் இலைகள் பொலிவற்றுக் குவியும். அது வாழும் வகை அற்று இரந்து வாழ வருபவரைக் கண்டும் காணாமல் செல்பவனது ஒடுங்கிய பொலிவற்ற உள்ளம் போன்றது. - கலித்தொகை : 120 27. மாலைப்பொழுதில் மரங்கள் பொலிவிழந்து தோன்றுவது, ஊக்கத்தை ஒடுக்கித், தனக்கு ஏதேனும் இடுபவர் எவர் என்று எண்ணி அலமரும் இரவலன் உள்ளம் போன்றது. - கலித்தொகை : 120 இருள்தூர்பு புலம்பூரக் கனைசுடர் கல்சேர உரவுத்தகை மழுங்கித் தன் இடும்பையால் ஒருவனை இரப்பவன் நெஞ்சம் போல் புல்லென்று புறம்மாறிக் கரப்பவன் நெஞ்சம் போல் மரமெல்லாம் இலைகூம்ப. (26-27) 28. உலகுக்கு ஒளியூட்டும் கதிரோன் மறையவும் உண்டாகிய மாலைப் பொழுதின் மையிருள், இரக்கம் சிறிதும் இல்லாமல் உயிர்கள் அஞ்சி அலறத் தாக்கிக் கொல்லும் கொடியவன் மாசுபடிந்த உள்ளம் போன்றது. - கலித்தொகை : 120 அருள்தீர்ந்த காட்சியான் அறனோக்கான் நயம்செய்யான் வெருவுற உய்த்தவன் நெஞ்சம் போல் பைபய இருள்தூர்பு புலம்பூரக் கனைசுடர் கல்சேர. (28) 29. தன்னை அணிந்தவள் வெந்நெருப்பில் வேகவும் தான் வேகாமல் ஒதுங்கி ஒளிவிட்டு நகைக்கும் நெற்றிப் பட்டம், தனக்கு உதவிய துணைவர், துன்பம் உற்ற காலத்தில் ஒதுங்கிச் சென்று நகைக்கும் சிறு செயலாளர் போன்றது. - பெருங்கதை: 2:19:83 சிறப்புடைப் பட்டஞ் சிறியோர் போல இறப்புக் காலத்துத் துறப்புத் தொழில் துணிந்த வன்கண்மை பெரிது. (29) 30. தகுதிவாய்ந்த ஒருவரைத் தமக்கு வேண்டிய பொழுதில் பயன் படுத்திக்கொண்டு பின்னர்ப் புறக்கணித்து ஒதுக்குவது, பதனீர் பருகுதற்கு உதவி செய்த பட்டையைப் பதனீர் பருகி முடிந்ததும் தொலைவில் விட்டெறிவது போன்றது. - கலித்தொகை : 23 தோள்நலம் உண்டு துறக்கப் பட்டோர் வேணீர் உண்ட குடையோர் அன்னர். (30) 31. தம் இனிய வாழ்விற்குத் துணையாகும் அளவும் ஒருவரைப் பயன்படுத்திக்கொண்டு பயன்படார் என்ற வேளையில் அவரை ஒதுக்கிச் செல்வது, தலையில் சூடியிருந்த நறுமலர் வாடியதை அறிந்ததும் எடுத் தெறிவது போன்றது. - கலித்தொகை : 23 கூடினர் புரிந்து குணனுணப் பட்டோர் சூடினர் இட்ட பூவோ ரன்னர். (31) 32. அன்புடையவர் தந்த இன்பத்தைப் பெற்றுப் பின்னர் அவரைப் புறக்கணிப்பது, இனிய பாலைப் பருகுபவர், பாலைப் பருகி முடிந்ததும் பால் இருந்த காலத்தைக் கவிழ்த்து வைப்பது போன்றது. - கலித்தொகை : 133. நன்னுதல் நலனுண்டு துறத்தல் கொண்க தீம்பால் உண்பவர் கொள்கலம் வரைதல். (32) 33. முன்னரே துயரம் கொண்டு இருப்பவர்க்குத் தாமும் துயரம் ஊட்டுவது, வெந்த புண்ணுக்கு மருந்திட்டு ஆற்றுவதை விடுத்து வேல் கொண்டு இடிப்பது போன்றது. - கலித்தொகை : 120. மாலை நீ, கந்தாதல் சான்றவர் களைதாராப் பொழுதின்கண் வெந்ததோர் புண்ணின்கண் வேல்கொண்டு நுழைப்பான் போல் காய்ந்த நோய் உழப்பாரைக் கலக்கிய வந்தாயோ. (33) 34. துன்புற்று இருப்பவர்க்கு மேலும் போய்த் துன்பம் தருவது போர்க்களத்திற்குச் சென்று தோல்வி கண்டு வந்தவரைப் பார்த்து ஆறுதல் கூறாமல் அவர்பட்ட தோல்வியை எள்ளி நகையாடுவது போன்றது. - கலித்தொகை : 120 மாலை நீ, ஈரமில் காதலர் இகந்தருளா இடம் நோக்கிப் போர் தொலைந்திருந்தாரைப் பாடெள்ளி நகுவார்போல் ஆரஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ. (34) 35. அல்லல்பட்டு இருப்பார்க்கு மேலுமோர் அல்லலை ஊட்டுவது, வெள்ளத்திற்கு ஆட்பட்டு வருந்தித் தத்தளிக்கும் மானின் மேல், அருள் சிறிதும் இன்றி அம்பு தொடுப்பது போன்ற கொடுமையானது. - கலித்தொகை : 120 மாலை நீ, உள்ளங்கொண் டகன்றவர் துணைதானப் பொழுதின்கண் வெள்ளமான் நிறம் நோக்கிக் கணைதொடுக்கும் கொடியான்போல் அல்லல்பட் டிருப்பாரை அயர்ப்பிய வந்தாயோ. (35) 36. அன்புடையவர் இவர் என்று சார்ந்த ஒருவருக்குத் துன்பம் உண்டாக்குவது, நம்மைக் காக்கும் என்று வழிபட்டு வந்த தெய்வமே வழிபட்டவரை வாட்டுவது போன்றது. - கலித்தொகை : 132. வழிபட்ட தெய்வந்தான் வலியெனச் சார்ந்தார்கண் கழியுநோய் கைம்மிக அணங்காகி யதுபோலப் பழிபரந் தலர்தூற்ற என்தோழி அழிபடர் அலைப்ப அகறலோ கொடிதே. (36) 37. முன்னாளில் இன்பத்தை உண்டாக்கிப் பின்னாளில் பெருந்துன்பத்தை உண்டாக்கும் ஒருவன் செயல், இன்னிசை மீட்டி அசுண மாவைத் தன்னிடம் வரச் செய்தவன் அதனைக் கொல்லுவதற்காகக் கொடிய பறையை முழக்குவது போன்றது. - கலித்தொகை : 143 மறையில் தன் யாழ்கேட்ட மானை அருளா தறைகொன்று மற்றதன் ஆருயிர் எஞ்சப் பறையறைந் தாங்கொருவன் நீத்தான். (37) 38. வறிதே ஒழுகும் மதநீரைப் பருகுதற்கு, ஈ வந்தாலும் அதனை உட்காரவிடாமல் வெருட்டி ஓட்டும் யானை. அது போல் பெருமைமிக்க குடியில் பிறந்தவர் ஆயினும் பெருந்தன்மை இல்லாதவர் தம் கருமித்தனத்தைக் கைவிடார். - பெருங்கதை : 2:12:144. பெருமையில் பிறப்பினும் பெற்றி போகாச் சிறுமையாளர் செய்கை போல மூசுதல் ஓவா மிஞற்றினம் இரிய வீசுதல் ஓவா விழுத்தகு தடக்கை இருங்களிற் றினநிரை. (38) 39. கதிரோன் மறைந்தவுடன் தன்னைத் தேடி வந்த வண்டுகள் தேன் எடுக்க விடாமல், கவிழ்ந்து கீழ் நோக்கும் தாமரை மலர், இரப்பவர்க்கு எதுவும் தாராமல் தலை கவிழ்ந்து நோக்கும் கொடைத்தன்மை இல்லாதவர் போன்றது. - பெருங்கதை : 3:7:15 40. தன்னருகே குவிந்திருக்கும் தாமரையை விடுத்து நெடுந் தொலைவில் மலர்ந்திருக்கும் அல்லியை அடுத்துச் செல்லும் வண்டு. அதுபோல் தம் சுற்றத்தவரின் வறுமைத் துயரை நீக்கக் கருதியவர், தம் அருகில் உள்ள கொடாச் செல்வரை விடுத்துத் தொலைவிடத்தில் இருப்பவர் ஆயினும் கொடையாளர் களையே அடைவர். - பெருங்கதை : 3:7:20. வெறுக்கைச் செல்வம் வீசுதல் ஆற்றாது மறுத்துக் கண்கவிழ்ந்த மன்னர் போல வாசம் அடக்கிய வாவிப் பன்மலர் மாசில் ஒள்ளொளி மணிக்கண் புதைப்பப் பெருமை பீடற நாடித் தெருமந்து ஒக்கல் உறுதுயர் ஓம்புதல் உள்ளிப் பக்கம் தீர்ந்த பரிசிலர் உந்தவாச் செறுமுகச் செல்வரில் சேராது போகி உறுபொருள் உள்ளது உவப்ப வீசி வெறுவது விடாஅ விழுத்தகு நெஞ்சத் தரத்தகை யாளர் சுரத்து முற் சீறூர் எல்லுறு பொழுதில் செல்லல் ஓம்பி மகிழ்பதம் அயின்றிசின் ஆங்கு மல்லிகை அவிழ்தா தூதி அளிதுயில் அமர. (39-40) 41. இதழ் விரிந்து மலர்ந்து இருந்தாலும் சண்பகப் பூவில் சென்று வண்டு தேன் கொள்ளாது. அது சிறியவர்கள் பெற்ற செல்வம் உரிய வர்களுக்குப் பயன்படாதது போன்றது. - பெருங்கதை : 2:14:33. உரியோர்க் குதவுதல் செல்லாது ஒய்யெனச் சிறியோர் உற்ற செல்வம் போலப் பொருசிறை வண்டினம் பொருந்தாது மறக்க நறுமலர்ச் செல்வமொடு நாட்கடி கமழும் செண்பகச் சோலை. (41) 42. தன் குடிதளராமல் வாழவேண்டும் என்பதற்காகப் பிறர் குடிகளை இரக்கமின்றிக் கெடுக்கும் கொடுமை, தான் பிழைக்க வேண்டும் என்னும் பெருவேட்கையால் மரமே கெட்டொழியு மாறு பட்டை, வேர் இவற்றை வெட்டி அழிப்பது போன்றது. - பெருங்கதை : 1:37:188 தாம்முயல் வேட்கையின் மாநிலத் துறையுநர் மாமுதல் சாய மருந்து கொண் டாஅங்கு நங்குடி வலித்தல் வேண்டி நம்பி தன்குடி கெடுத்த தகவி லாளனேன். (42) 43. தான் பெரும் பெருந் தீமை செய்தலால் தான் கெடுவ துடன் தன் குடியையும் கெடுத்துப் பழிப்புக்கு ஆளாக்குபவன், கிளையையே அன்றி வேரோடு மரம் கீழே வீழ்ந்து அழியுமாறு சுடும் வெங்கதிர் போன்றவன். - கலித்தொகை : 10. யார் கண்ணும் இகந்துசெய் திசைகெட்டான் இறுதிபோல் வேரோடு மரம் வெம்ப விரிகதிர் தெறுதலின். (43) 44. விரிந்த உள்ளம் இல்லாதவனது செல்வம் எவர்க்கும் சிறிதும் பயன்படாது. அது சேர்ந்தவர்க்குச் சிறிதும் நிழல் தாராத கள்ளி, கற்றாழை மரம் போல்வது. - கலித்தொகை : 10. சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழலின்றி. (44) 45. நன்மகளின் இடை தேய்ந்து நுணுகி இருக்கும். அவ்விடை போல், வறியவர்க்கு வழங்காத வன்கண்மையாளன் செல்வம் தேய்ந்துபோகும். - கல்லாடம் : 25 ஈயா மாந்தர் பொருள் தேய்ந் தென்ன நுண்ணிடை . (45) 46. கானல் நீரை நீரெனக் கருதிய கலைமான் காடெல்லாம் ஓடித் தேடி ஏமாற்றம் அடையும். அதுபோல் கொடைச் சீர்மை இல்லாத கீழ்மக்களை நாடிச் சென்ற மேன்மக்கள் இரந்து நின்று ஏமாற்றம் அடைவர். - சூளாமணி : 784 விசையி னோடுவெண் டேர்செலக் கண்டுநீர் நசையின் ஓடிய நவ்வி இருங்குழாம் இசையில் கீழ்மகன் கண்ணிரந் தெய்திய வசையில் மேன்மகன் போல வருந்துமே. (46) 47. மாலைப் பொழுதில், வேங்கை மரத்தைத் தழுவிக் கிடந்த முல்லை மலர்ந்து நகைப்பது, பெரியவர் கெட்டுப்போன போழ்தில் அவரை எள்ளி இகழும் சிறியவர் செயல் போன்றது. - சீவகசிந்தாமணி : 1227 மிக்கார்தம் கேட்டின்கண் மேன்மை இல்லாச் சிறியார் போல் நக்காங்கே எயிறுடைந்த நறவ முல்லை நாள் வேங்கை. (47) 48. முல்லை அரும்பிலும், மலரிலும் வண்டுகள் புகுந்து தேனை ஒழுகச் செய்து அலைக் கழிப்பது, பெரியவரை இகழ்ந்து உள்ளே நகைத்துப் பின்னர்ப் பிறர்க்கும் புலப்படுமாறு சிரிக்கும் கீழ்மக்கள் செயலைக் கண்டவர் உங்கள் பல்லை உடைப்போம் . என்று சொல்லி உடைப்பது போன்றது. - சீவகசிந்தாமணி : 1228. கொல்லை அகடணைந்து குறும்பு சேர்ந்து தமியாரை முல்லை முறுவலித்து நகுதிர் போலும் இனிநும்மைப் பல்லை உகுத்திடுவம் என்று பைம்போ தலர்சிந்தித் தொல்லை நிறங்கருகித் தும்பி பாய்ந்துதுகைத்தனவே. (48) 49. பெரியவரைக் கண்டு நகைக்கும் சிறியவர் செயலை அடக்கும் நன்மக்கள் அருட்கை போன்றது. மாலைப் பொழுதில் மலர்ந்து தோன்றும் காந்தள் பூ. - சீவகசிந்தாமணி : 1227 மிக்கார்தம் கேட்டின்கண் மேன்மை இல்லாச் சிறியார்போல் நக்காங்கே எயிறுடைந்த நறவ முல்லை நாள் வேங்கைத் தக்கார்போல் கைம்மறித்த காந்தள் அந்தோ தகாதெனவே தொக்கார்போல் பன்மாவும் மயிலுந் தோன்றித் துளங்கினவே. (49) 50. வெளிப்படக் கூடாத மறைவுப் பொருளை அறிந்து பிறர்க்கு உரைக்கும் பேதை, தலைவன் உடன் இருந்த காலத்தில் பொலிவுடன் திகழ்ந்து பின்னர் அவன் பிரிந்த வேளையில் பசப்பூரும் தலைவியின் நெற்றி போன்றவன். - கலித்தொகை : 25 ஒருநாள் நீர் அளிக்குங்கால் ஒளிசிறந் தொருநாள்நீர் பாராட்டாக் காற்பசக்கும் நுதலெனவும் உளவன்றோ பொருந்திய கேண்மையின் மறையுணர்ந் தம்மறை பிரிந்தக்கால் பிறர்க்குரைக்கும் பீடிலாளர் தொடர்புபோல். (50) 51. தண்ணுமை என்னும் இசைக்கருவி உள்ளே வெற்றுக் கூடாக இருந்தாலும் மேற்பார்வையால் உள்ளே உள்ள வெற்றுக் கூட்டை மறைத்துவிடும். அஃது உண்மை சிறிதும் இல்லாத பகட்டுச் சொல்லைப் போர்வையாகக் கொண்டு வெளிப்படும் பொய் போன்றது. - நற்றிணை : 310 வள்ளுயிர்த் தண்ணுமை போல உள்யாதும் இல்லாதோர் போர்வையஞ் சொல்லே. (51) 52. வெளிப்பட இனித்து உட்பட வஞ்சம் பொருந்தச் சொல்லும் சொல், தூண்டில் முள்ளில் தேன் தோய்த்த தொடக்கு வைத்தது போன்றது. - பெருங்கதை : 1:35. 108 தூண்டில் இரையில் துடக்குள் ளுறுத்துத் தேன்தோய்த் தன்ன தீஞ்சொல் அளைஇ. (52) 53. மரங்கள் செறிந்த காட்டில், ஒளி விளங்கும் பகற் பொழுதிலும் இருள் மண்டிக் கிடக்கும். அதுபோல் கீழ்மக்கள் உள்ளம் எத்தகைய நல்ல சூழலிலும் கறை படிந்ததாகவே இருக்கும். - சீவகசிந்தாமணி : 1416 செல்வர் மனத்தின் ஓங்கித் திருஇல் மாந்தர் நெஞ்சின் எல்லை இருளிற் றாகிப் பூந்தா தினிதின் ஒழுகிக் கொல்லும் அரவின் மயங்கிச் சிறியார் கொண்ட தொடர்பில் செல்லச் செல்ல அஃகும் நெறிசேர் சிலம்பு சேர்ந்தான். (53) 54. அறிவு, பண்பு, ஆற்றல் முதலாய உள்ளீடுகள் இல்லாத ஒருவன் தன்மை, யானை நோய் என்னும் ஒரு நோயால் பற்றப்பெற்ற உள்ளீடு இல்லாத விளாம்பழம் போன்றதாம். - சீவகசிந்தாமணி : 1122. வெஞ்சின வேழமுண்ட விளங்கனி போன்று நீங்கி எஞ்சினான் போல நின்றான். (54) 55. நீல நிறம் கொண்ட நூலிழையில் பின்னர் எந்நிறத்தை ஊட்டினாலும் அந்நீல நிறத்தை விட்டொழியாது. அதுபோல் கீழோர்க்கு எத்துணை நன்னெறிகளை நயமாக உரைத்தாலும் தாம் கொண்டது விடாக் குறிப்புடையவராகவே இருப்பர். - பெருங்கதை : 2:9:89 நீலமுண்ட நூலிழை வண்ணம் கொண்டது விடாமைக் குறிப்பொடு கொளுத்தல். (55) 56. குளிர்ந்த பொய்கையின் நீரை வள்ளை, தாமரை, அல்லி முதலிய கொடிகளின் இலைகள் மறைக்கும். அதுபோல் கல்வி கேள்விகளில் கருத்துச் செலுத்தாத மக்களின் சிற்றறிவைச் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புலன்களும் மறைக்கும். - கல்லாடம் : 7 வையகத் துருவினர் மலரா அறிவினைப் புலனிரை மறைத்த புணர்ப்பது போலக் குளிர்கொண் டுறையும் தெளிநீர் வாவியை வள்ளைசெங் கமலம் கள்ளவிழ் ஆம்பல் பாசடை மறைக்கும். (56) 57. மரக்கலத்தில் வந்த காக்கை சுழன்று சுழன்று பறந்தாலும் அந்த மரக்கலம் ஒழிய வேறு தங்குமிடம் அதற்குக் கடலில் கிடையாது. அதுபோல் விரிந்த அறிவில்லாதவர்கள் உரையும் ஒரு பொருளையே மையமாகக் கொண்டு வெளிப்படுமே அன்றி விரிந்து செல்லாது. - நீலகேசி : 431 வினையும் அவ் வினையினாய விகலஞானங்கள் தாமும் இனையவே கருவி என்றால் இங்கு நின் னுள்ளம் வையாய் முனைவனாய் மூர்த்தி யல்லான் மூடுமே மாசும் என்பாய் கனைகடல் எல்லை காணும் காக்கையொத் தாய்கொல் என்றாள்.(57) 58. தாமரைப் பொய்கையைக் காகம் போன்ற சில கீழ்க்குணப் பறவைகள் விரும்பா. அதுபோல் உயர் பெருமக்கள் சூழலில் இருக்கக் கீழ்மக்கள் விரும்பார். - சூளாமணி : 223 போதுலாம் தாமரை பூத்த பொய்கையைத் தீதுலாங் கீழுயிர் தீண்டச் செல்லல மாதுலா மடந்தை நீ பிறந்திம் மண்டிலம் ஏதிலார் இடைதிறம் இருந்து நின்றதே. (58) 59. உணவு ஒன்றை மட்டுமே கருதிக்கொண்டு வாழும் பாழ்பட்ட வாழ்வு, பகை வேந்தனது படையின் தாக்குதலால் குடிமக்கள் அடியோடு அகன்று போய் பாழ்நகரைக் காவல் புரியும் ஒருவன் வாழ்வு போன்றது. - நற்றிணை : 153. நெஞ்சம் அவர்வயின் சென்றன ஈண்டொழிந் துண்டல் அளித்தென் உடம்பே விறற்போர் வெஞ்சின வேந்தன் பகையலைக் கலங்கி வாழ்வோர் போகிய பேரூர்ப் பாழ் காத்திருந்த தனிமகன் போன்றே. (59) 60. யானை மதங்கொண்ட பின்னர் அதனை அடக்கி நெறிப்படி செலுத்துவது அத்துறை வல்லவர்க்கும் அருஞ்செய் லாகும். அதுபோல் செருக்குடன் சென்று சிறு செயல் செய்வாரைத் தடுத்து நிறுத்துவது அறிஞர்க்கும் அருஞ் செயலாம். - சூளாமணி : 251 ... ... ... .... மதர்த்த மன்னர்க் கடைந்தவர் மாண்பும் ஆங்கொன் றில்லையேல் அரச வாழ்க்கை கடந்தவழ் கடாத்து வேழம் களித்தபின் கல்வி மாணா மடந்தவழ் ஒருவன் மேல்கொண் டன்னதோர் வகையிற் றாமே. (60) . 61. பெருகிவரும் வெள்ளம் வயலையும் வரப்பையும் கழனிகளையும் குடியிருப்பையும் அழித்து மக்களை வேறிடத்துக் குடிபோக வைக்கும் கொடுஞ்செயல், போர் நெறி அறியாமல் அழிவு செய்யும் கீழ்மக்கள் செயல் போன்றது. - கல்லாடம் : 54. முதுநீர் வெள்ளமும், மிடைந்து வயல் திரிந்து முதுகு சரிந் துடைந்து சிறியோன் செருவென முறியப் போகி யுழவக் கணத்தைக் குலைக்குடி புகுத்தும் பெருநீர். (61) 62. விரைந்த காற்று வீசுங்கால், சிறிய முகில் கூட்டம் அதனை எதிரிட்டுச் செல்லாது. அதுபோல் வலிய படையின் முன்னர் மெலிய படைஞர் எதிரிட்டு நில்லார். - சூளாமணி : 637 வேக மாருதம் வீசுவின் பார்சிறு மேக சாலம் விரிந்தெதிர் செல்லுமோ ஏக மாயஎன் சீற்றமஞ் சாதெதிர் ஆக மானிடர் தாமசை கிற்பவோ. (62) 63. யானைக்காலின் கீழ்ப்பட்ட மூங்கில் முளை எளிதாக அழிந்துபோம். அதுபோல் வலிய வீரரைப் பகைத்த மெலியவர் எளிதில் அழிந்துபடுவர். - புறநானூறு : 73 64. உள்ளமுடைய ஒருவன் ஊக்கத்தை வலிமை இல்லா ஒருவன் எள்ளி இகழ்ந்து அவன் மேல் போரிடச் செல்வது, உறங்கும் புலியை மிதித்து எழுப்பிவிடும் குருடனது அறியாச் செயல் போன்றது. - புறநானூறு : 73. மெல்ல வந்தென் நல்லடி பொருந்தி ஈயென இரக்குவர் ஆயின் சீருடை முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம் இன்னுயிர் ஆயினும் கொடுக்கு வென் இந்நிலத் தாற்றல் உடையோர் ஆற்றல் போற்றாதென் உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதில் துஞ்சுபுலி இடறிய சிதடன் போல உய்ந்தனன் பெயர்தலோ அரிதே மைந்துடைக் கழைதின் யானைக் காலகப் பட்ட வன்திணி நீள் முளை போலச் சென்றவண் வருந்தப் பொரே என் ஆயின் பொருந்திய தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப் பல்லிருங் கூந்தல் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைகவென் தாரே. (63-64) 65. பன்றியினால் தாக்கப் பெற்று அஞ்சி ஓடிவந்த வேட்டை நாய், வீட்டில் உள்ள கரியேறிய பானையைக் காணினும் கலங்கி ஓடும். அதுபோல் முன்னர் ஒரு கொடிய நிகழ்ச்சியைக் கண்டு அஞ்சியவர் பின்னர் அதனைக் கேட்ட அளவிலும் நடுங்குவர். - பெருங்கதை : 1:37:253 பன்றி யெறியுற்ற புண்கூர் ஞமலி குன்றா அடிசில் குழிசி காணினும் வெரீஇ அன்ன வியப்பினர். (65) 66. வண்டி ஓட்டிச் செல்லும் பழக்கம் இல்லாதவர் வழியின் ஏற்ற இறக்கம் கண்டு அஞ்சுவர். அது போல் போர் முகத்தைக் காணாதவர் வலிய வீரரைக் கண்ட அளவிலேயே அஞ்சி நடுங்குவர். - புறநானூறு : 84. போரெதிர்ந் தென்னை போர்க்களம் புகினே கல்லென் பேரூர் விழவுடை யாங்கண் ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க் குமணர் வெரூஉம் துறையன் னன்னே. (66) 67. காரிருள் விண்ணும் மண்ணும் ஆகிய எங்கும் பரவி உலகையே இருளுக்கு உள்ளாக்கிவிடும். அதுபோல் நிலைப் பாடற்ற நெஞ்சத்தவரும் களங்கத்துடன் எங்கும் அலைந்து கேடு புரிவர். - கல்லாடம் : 26 வெண்ணகை கருங்குழல் செந்தளிர்ச் சீறடி மங்கையர் உளமெனக் கங்குலும் பரந்தது. (67) 68. தெளிந்த நீரிலே விடப் பெற்றுப் பரவிய எண்ணெயை மீண்டும் எடுத்துச் சேர்க்க இயலாது. அது போல் நிலைப்படா உள்ளத்தவரை ஒரு நெறிப்படுத்தவும் இயலாது. - வளையாபதி : 49. தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க்கெட்ட எண்ணெய் கொண் டீட்டற் கிவறுதல் என்னொக்கும் பெண்மனம் பேதித் தொருப்படுப்பேன் என்னும் எண்ணில் ஒருவன் இயல்பொண்ணு மாறே. (68) 69. மக்கட்குரிய செயல்களும் தன்மைகளும் இல்லாமல் தோற்றத்தால் மட்டும் மக்களாக இருப்பவர், நெல்லைப் போலத் தோன்றினாலும் உள்ளீடாம் மணி இல்லாத பதர் போன்றவர். - சூளாமணி : 1983. முக்குலத் தாரோடு மூடத் தொழுதியர் தக்க தகாதென்ப தோராத் தகையவர் மக்கள் எனப்படு வாரலர் மற்றவர் பக்கம் கிடக்கும் பதரெனக் கொண்ணி. (69) 70. உறுதிப்பாடு இல்லாத உள்ளம் பலவழிப் பிரிந்து செல்வாக்கு மயக்கமூட்டும் கவர்ந்தவர் போன்றது. - (1) பெருங்கதை :1:49:40; (2) சீவகசிந்தாமணி : 1212 (1) ஒருபாற் படாதோர் உள்ளம் போல இருபாற் பட்ட இயற்கைத் தாகிய நெறியின் ஏதம். (2) ஏற்றரும் அணிவரை இறந்து போனபின் மாற்றரும் மணநெறி மகளிர் நெஞ்சமே போற்பல கவர்களும் பட்ட தாயிடை ஆற்றல்சால் செந்நெறி அறியக் கூறுவாம். (70) 71. நன்மகளிர் மெல்லிடை சுருங்கிச் செல்லும். அது நஞ்சனைய கொடுஞ்செயல் செய்பவனது சுருங்கிய மனம் போன்றது. - பெருங்கதை : 1:40:206 நச்சுமன வேந்தர்க்குத் துச்சில் சிறுவலி ஒருவனின் தன்மனம் சுருங்கி ...... ........ ......... ஒசிவது போலும் நின் ஒசி நுசுப்பு. (71) 72. ஆற்றில் அமைந்து தன்கண் வருவாரை அல்லலுக்கு ஆட்படுத்தும் நெடுஞ்சுழி போன்றது , வஞ்சகத்தை எஞ்சாமல் செய்பவர் நெஞ்சம். - பெருங்கதை : 1:40:184 கலையுணர் மகளிர் உள்ளம் போல நிலையின் றுழிதரும் நெடுஞ்சுழி நீத்தத்து. (72) 73. குயவன் பானை வனைதற்குச் சுழற்றும் சக்கரம் சுழல்வது போன்றது நிலைப்பட்ட தன்மை இல்லாதவர் நெஞ்சம். - சீவகசிந்தாமணி : 1108 வனைகலத் திகிரி போல மறுகுமெம் மனங்கள் என்பார். (73) 74. பரத்தைமை வாழ்வு, தேன் இருக்கும் போதில் அதனை எடுத்து உண்டு, அஃதில்லாப் போழ்தில் வேறு பூவை நாடிச் சேரும் வண்டின் வாழ்வு போன்றது. - மணிமேகலை : 18:20 நறுந்தா துண்டு நயனில் காலை வறும்பூத் துறக்கும் வண்டுபோல் குவம். (74) 75. பரத்தைமை வாழ்வு, பாணன் இறந்தபின்னர் பிறர் இசை மீட்டுவதற்குப் பயன்படும் யாழ் போன்றது. - மணிமேகலை : 18 17 பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மையில் யாழினம் போலும் இயல்பினம். (75) 76. பரத்தையை நாடும் இழிபண்பினன், ஊர்மக்கள் எல்லாம் நீருண்ணும் பொது நீர் நிலையாகிய ஊருணிக்கு ஒப்பான பொதுவான வாய்த்தம்பலம் உண்போன் ஆவன். - கல்லாடம் : 56. பொய்பல புகன்று மெய்யொழித் தின்பம் விற்றுணும் சேரி விடாதுறை ஊரன் ஊருணி யொத்த பொதுவாய்த் தம்பலம் நீயும் குதட்டினை. (76) 12. நன்மை 1. நெஞ்சம் ஒரு சோலை; அச்சோலைக்கண் கொலை, களவு முதலிய தீவினைக் கனி மரங்கள் முளைக்காமல் அழித்து, கொல்லாமை, கள்ளாமை முதலாய நல்வினைக் கனிமரங்கள் முளைத்துக் கிளைக்க வழி செய்தல் வேண்டும். - கல்லாடம் : 22. 2. நெஞ்சம் ஒரு மணி மண்டபம்; அம்மண்டபத்தைச் சூழ்ந்த பாவம் என்னும் சுவரை இடித்துத் தள்ளிப் பிறவாமை என்னும் சுவர் கட்டுதல் வேண்டும். வன்பு என்னும் கூரையை அகற்றி அன்பு என்னும் பொற்றகட்டால் வேய்தல் வேண்டும். - கல்லாடம் : 22. கொலைகள் வென்னும் பழுமரம் பிடுங்கிப், பவச்சுவர் இடித்துப் புதுக்கக் கட்டி அன்புகொடு வேய்ந்த நெஞ்சமண் டபத்துப் பாங்குடன் காணத் தோன்றி . (1-2) 3. உலகத்தார் நன்மை கருதி அரும்பொருள் அமைந்த நூல் ஒன்றைப் படைப்பது, கடலைக் கடைந்து அமுதம் திரட்டி எடுத்துக் கட்டியாக்கிக் கரையில் வைப்பது போன்றது. - கல்லாடம் : 3. அன்பின் ஐந்திணையென்றறுபது சூத்திரம் கடலமு தெடுத்துக் கரையில் வைத்ததுபோல் பரப்பின் தமிழ்ச்சுவை திரட்டி மற்றவர்க்குத் தெளிதரக் கொடுத்த தென்தமிழ்க் கடவுள். (3) 4. உயர் பெரும் புலவர்களின் கவிதை உயர்ந்த பொருள்களை உள்ளடக்கியதாய், அமுதன்ன சுவையும், அழகும் உடைய தாய் விளங்கும். அது மகளிரின் ஓங்கிப் பரந்த அழகிய மார்பகம் போன்றது. - கல்லாடம் : 45. நின்றறி கல்வி ஒன்றிய மாந்தர் புனைபெருங் கவியுள் தருபொருள் என்ன ஓங்கிப் புடைபடர்ந் தமுதம்உள் ளூறிக் காண்குறி பெருத்துக் கச்சது கடிந்தே எழுத்து, மணி பொன்பூ மலையென யாப்புற்று அணிபெருமுலை. (4) 5. சிற்பக்கலை வல்லவர் மெழுகால் உருவம் செய்து அதன் மேல் பன்முறை மண்பூசி உலர்த்திப் பின்னர்ப் பொன்னை உருக்கி அக்குழம்பை அது புகுதற்கென அமைத்த துளையின் வழியே செல்லவிடுவர். அப்பொற் குழம்பு புகுந்ததும் மெழுகு தானே உருகி வெளியேறுதற்கு என அமைத்த துளைவழியே ஒழுகிவிடும்; சிற்பம் பொன்னுருவோடு இலங்கும். அதுபோல் அறவோர் உரை கேட்கும் பேறு பெற்றோர் தம் தீக் குணங்கள் ஒழிய நற்குணம் பெறுவர். - நீலகேசி : 138. மெழுகுருகு மண்பாவை பேதையான் காய்த்தி ஒழுகுருகு செம்பொன்னால் உண்ணிறைந்த தேபோல் புழுகுருக மெய்காட்டிப் பொல்லாத போக்கி யழகுருவு கொண்டாள் அற அமிர்தம் உண்டாள். (5) 6. உடல் அழகுடன் உள்ளத்தே பண்பழகும் பொருந்தி அமைந்த நல்வாழ்வு, மணியினால் செய்யப்பட்ட செப்பிலே வைக்கப்பெற்ற அமுதம் போன்றது. - சீவகசிந்தாமணி : 1172. கணிப்பருங் குணத்தொகைக் காளை யென்றனன் மணிக்கலத் தகத்தமிழ் தனைய மாண்பினான். (6) 7. கலங்கல் நீரைத் தேற்றாங் கொட்டையை இட்டுத் தெளிவு ஆக்குவர். அதுபோல், கலங்குபவரை இனிய அன்புச் சொல்லாலே தெளிவித்தல் வேண்டும். - (1) பெருங்கதை 1 : 35: 215; (2) கலித்தொகை : 142; - (3) மணிமேகலை 23: 142. (1) சொல்லின் நுண்பொருள் காட்டி இல்லின் படுகாழ்ப் படுத்துத் தேய்வை உறீஇக் கலுழி நீக்கும் கம்மியர் போல மகர வீணையின் மனமாசு கழீஇ . (2) கலஞ்சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போற் றெளிந்து நலம் பெற்றாள் நல்லெழில் மார்பனைச் சார்ந்து (3) தேறுபடு சின்னீர போலத் தெளிந்து. (7) 8. உயர்ந்த கிளையில் இருக்கும் மந்தி தன் குட்டியைத் தழுவிக் கொள்வது போல் தாம் கூறும் துன்ப உரையை உள்ளார்ந்த அன்புடன் கேட்பவரைப் பெற்றால் தம் குறை உரைத்தலும் இன்பம் பயப்பதாம். - குறுந்தொகை : 29. நெஞ்சே நன்றும், பெரிதால் அம்மன் பூசல் உயர்கோட்டு மகவுடை மந்திபோல அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே. (8) 9. திங்களை அரவு பற்றியதாகக் கருதுவோர் அதனை நீக்க மாட்டார் ஆயினும் திங்கள் மேல் இரக்கம் காட்டுவர். அது போல் ஒருவன்பட்ட துயர் முழுவதும் போக்க இயலாது என்றாலும் அவன் மேல் பரிவு கூர்தலும் ஓரளவு நலம் தரும். - கலித்தொகை : 140. திங்கள் அரவுறின் தீர்க்கலார் ஆயினும் தங்காதல் காட்டுவர் சான்றவர் இன்சாயல் ஒண்டொடி நோய்நோக்கில் பட்ட என் நெஞ்சநோய் கண்டுங்கண் ணோடாதிவ் வூர். (9) 10. நீர்ச் சுழியிடைப் பட்டு அலைக்கழிபவனுக்குக் கை கொடுத்து உதவவில்லை என்றாலும் கரையில் இருந்து ஊக்க உரை கூறுதலும் ஓரளவு நன்மை செய்யும். அதுபோல் அல்லல் பட்டார்க்குத் தரும் ஆறுதல் மொழிகூட ஓரளவு அவர் துயரை ஒழிக்கும். - கலித்தொகை : 140. வெஞ்சுழிப் பட்ட மகற்குக் கரைநின்றார் அஞ்சலென்றாலும் உயிர்ப்புண்டாம் அஞ்சீர்ச் செறிந்தேர் முறுவலாள் செறிந்தஇக் காமம் அறிந்தும் அறியாதிவ் வூர். (10) 11. சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மருந்துகளும் உடல் நோயைப் போக்கி நலம் தரும். அதுபோல் நற்குண மனைவியைப் பெறுவதும், நல்லோர் நட்பு அடைவதும், அரிய நூற் கல்வியாளரைத் துணையாகக் கொள்வதும் ஆகியவை உள்ளத்துயரைப் போக்கி உவகைதரும். - திரிகடுகம்: 1 அருந்ததிக் கற்பினார் தோளும், திருந்திய தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியும் – சொல்லின் அரில் அகற்றும் கேள்வியார் நட்புமிம் மூன்றும் திரிகடுகம் போலும் மருந்து. (11) 12. நீரால் உடல் தூயதாகும். வெற்றிலை பாக்கு மெல்லுத லால் நாற்றம் போகி, வாய் தூயதாகும்; குச்சியை மென்று துலக்குதலால் பல் தூயதாகும். இவைபோல் வாய்மையால் உள்ளம் தூயதாகும். - நீலகேசி : 278. நிறம்தூய்தாம் நீரினால் வாய்தூய்தாம் பாகால் பறைந்து பொய் மெல்கோலால் பல்லெல்லாம் தூயவாம் புறந்தூய்மை செய்தக்கால் புரிவுள்ளந் தூய்தாமேல் அறந்தூய்மை கணிகையர்க்கே ஆற்றவும் உளதாமால். (12) 13. பகைவரிடமிருந்து நாட்டைக் காப்பதற்குப் பலவகை அரண்கள் உண்டு. அதுபோல் மாந்தர் நற்பேற்றுக்கு உள்ளம், உரை, உடல் இவற்றைக் காக்கும் செறிவு என்னும் அரண் இன்றியமையாது வேண்டும். - சூளாமணி : 2112. செறிவெனப் படுவ மூன்று செழுமதில் செறியச் செய்து பொறியெனும் வாயில் ஐந்து பொற்கதவடைத்து மாற்றி அறிவமை சிந்தை யின்மாட் டகம்படி உழையர் ஆக்கிக் கறையினர் அறுவர் நிற்ப இறைவராக் காக்க வைத்தான். (13) 14. தவநெறியில் செல்லாமல் பிற நெறியில் செல்வாரை இழுத்துத் தவநெறியில் செலுத்தி இன்பம் சேர்ப்பது போன்றது, கேடு மிக்க வழியில் நடப்பாரைத் தடுத்து நல்வழி காட்டிப் போக விடுப்பது. - கலித்தொகை : 139. அறிந்தனிர் ஆயின் சான்றவிர் தான்தவம் ஒரீஇத் துறக்கத்தின் வழீஇ ஆன்றோர் உள்ளிடப் பட்ட அரசனைப் பெயர்த்தவர் உயர்நிலை உலகமும் உறீஇ யாங்கென் துயர்நிலை தீர்த்தல் நுந்தலைக் கடனே. (14) 15. கேட்டவர்கள் விரும்பி எதிர் நோக்குமாறு இனிய சொற்களைத் தேர்ந்தெடுத்துச் சொல்வது, ஆவின் பால் பெருகிய கடலில் தேன் மழை பொழிவது போன்றது. - பெருங்கதை : 1 : 34 : 101. ஆன்பால் தெண்கடல் அமுதற வளைஇய தேன்பெய் மாரியில் திறவ தாகப் பருகு வன்ன பயத்தொடு கெழீஇ உருகு வன்ன உவகையன் ஆகி ........... ………….. நேர்ந்ததை எல்லாம் நெடுந்தகைக் குரைப்ப. (15) 16. பொல்லாத செய்திகள் உள்ளே போகாத செவிகளே வளநிலமாக, சான்றோர் கூறும் சால்புரைகளே வற்றாத நீராக , அறிவறிந்து இனிதாக மொழியும் நாவே நல்லேராக, உழுதுண்ணும் புலமை வாழ்வு தமக்கே அன்றிப் பிறர்க்கும் நன்மை பயப்பதாம். - கலித்தொகை : 68. பொதுமொழி பிறர்க்கின்றி முழுதாளும் செல்வர்க்கு மதிமொழி இடன்மாலை வினைவர்போல் வல்லவர் செதுமொழி சீத்த செவிசெறு வாக முதுமொழி நீராப் புலனா வுழவர் புதுமொழி கூட்டுண்ணும். (16) 17. நிலவு பிறை நிலையில் இருந்து பெருகி வளரும் போது அதனைக் காணும் உலகோர் மகிழ்வர். அதுபோல் நன்மக்களின் வளர்ச்சி கண்டு நானிலத்தோர் இன்புறுவர். - சூளாமணி : 224. வானகத் திளம்பிறை வளர வையக மீனகத் திருள்கெட இன்ப மெய்துமே நானகக் குழலிநீ வளர நங்குடி தானகத் திருள்கெடத் தயங்கு கின்றதே. (17) 18. பெருநன்மை செய்யும் மழையிடத்தில் இடியும் இருப்பதை எண்ணி எவரும் வெறுத்து ஒதுக்கமாட்டார். அதுபோல் உலகுக்கு நன்மை உண்டாக்கும் உயர் பெரு மக்கள் இடத்தில் ஓரொரு குற்றம் உளதாயினும் அது கருதி அவரைப் புறக்கணிக்க மாட்டார். - இன்னிலை : 10. இடிப்பது என்றெண்ணி இறைவனைக் காயார். (18) 19. வெப்பமிக்க நிலத்தில் விதை போட்டால் அது காய்ந்து போய்ப் பயன் தாராது ஒழியும். குளிர் நிலத்தில் விதை போட்டால் முளைத்து வளர்ந்து பயன் தரும். அதுபோல் நற்குடியில் தோன்றியவன் உலகுக்குப் பயன் படப், பிறன் பயன்படான். - இன்னிலை : 39. பண்போன், பனிநிலத்தின் வித்தாய்ப் பெயரான் நடுக்கற் றினியனா வான்மற் றினி. (19) 20. இல்லை என்று சொல்லாமல் வழங்கும் ஈகை, மானம் கெடாத ஒழுக்கம், நல்லவற்றை நாடும் சிந்தை ஆகியவை அறத்தைத் தன்னிடத்தில் இருந்து விலகிச் செல்ல விடாமல் கட்டி வைக்கும் கயிறுகள் போன்றன . - திரிகடுகம் : 23. தானம் கொடுக்கும் தகைமையும் மானத்தார் குற்றம் கடிந்த ஒழுக்கமும் - தெற்றெனப் பல்பொருள் நீங்கிய சிந்தையும் இம்மூன்றும் நல்வினை யார்க்கும் கயிறு. (20) 21. பிறை வளர வளர அதன் கறையும் வளரும்; அது தேயத் தேயக் கறையும் தேயும். அதுபோல் தனக்கு உதவி செய்வானது பெருக்க சுருக்க நிலைகளுக்கு ஏற்ப உதவி பெறுபவனும் வாழ்தல் வேண்டும். - சீவகசிந்தாமணி : 254. பிறையது வளரத் தானும் வளர்ந்துடன் பெருகிப் பின்னாள் குறைபடு மதியம் தேயக் குறு முயல் தேய்வ தேபோல் இறைவனாத் தன்னை யாக்கி அவன்வழி ஒழுகின் என்றும் நிறைமதி இருளைப் போழும் நெடும்புகழ் விளைக்கும் என்றான். (21) 22. பருகுபவர்க்கு இனிமையானது என்று நீரைப் பருகுவரே அல்லாமல் நீர்க்கு இனிது என்று பருகார். அதுபோல் தமக்கு நலமென்று கருதினால் பிறர் சொல்லும் சொல்லை எவரும் கேட்பாரே அல்லாமல் அவர்க்கு நலமென்று எண்ணிக் கேளார். - கலித்தொகை : 62. சுடர்த்தொடீ, போற்றாய் களைநின் முதுக்குறைமை போற்றிக்கேள் வேட்டார்க் கினிதாயின் அல்லது நீர்க்கினிதென் றுண்பவோ நீருண் பவர். (22) 23. காரரக்குத் தடவப் பெற்ற மாதுளை வித்து முளைத்துப் பூத்தால் அதன் பூ கருநிறமாகவும், செவ்வரக்குத் தடவப் பெற்ற வித்து முளைத்துப் பூத்தால் அதன் பூ செந்நிறமாகவும் இருக்கும். அதுபோல் தீயவுள்ளம் தீமையையும், நல்ல உள்ளம் நன்மை யையும் செய்யும். - நீலகேசி : 576. தீதுள்ள மேலது தீயுழப் பேசெய்யும் யாதுள்ள மாண்புள் மேலின்ப மாமென்னை மாதுளம் பீசமுண் மாணரக் கின்னிறம் போதுள்ளம் காண்பது போல மற் றென்றான். (23) 13. தீமை 1. முட்செடி முளைத்து வரும் பொழுதில் கை நகத்தால் கூட எளிதாகக் கிள்ளி எறிந்து விடலாம். ஆனால் அது பருத்து நீண்டு சுவடுகளுடன் முதிர்ந்து விட்டால் வலிய கோடரியால் வெட்டினாலும் பிளக்க இயலாதது ஆகிவிடும். ஆதலால் தீமையை வளர்க்காமல் தொடக்கத்திலேயே அழித்தல் வேண்டும். - சூளாமணி : 644. முட்கொள் நச்சு மரமுளை யாகவே உட்க நீக்கின் உகிரினும் நீக்கலாம் வட்க நீண்டதற் பின்மழுத் தன்னினும் கட்கொ டாமன்ன யார்களை கிற்பவே. (1) 2. உலண்டு என்னும் பூச்சி, தன் எச்சிலால் உண்டாகிய நூலால் தன் உடலைச் சுற்றிக் கட்டி, ஒரு கூட்டினை உருவாக்கி அக் கூட்டினை விட்டு வெளியேற மாட்டாமல் அதனுள்ளேயே உயிர்விடும். அதுபோல் அறிவில்லா மாந்தரும் பழவினை என்னும் நூலால் தம் உடலாகிய கூட்டினை அமைத்துக் கொண்டு வெளியேறும் வழியின்றி அதனுள் அகப்பட்டுத் துன்புற்று மாய்வர். - கல்லாடம் : கடவுள் வாழ்த்து : மூத்த பிள்ளையார் வாழ்த்து. வரியுடல் சூழக் குடம்பைநூல் தெற்றிப் போக்குவழி படையா துள்ளுயிர் விடுத்தலின் அறிவுபுறம் போய உலண்டது போலக் கடற்றிரை சிறுக மலக்குதுயர் காட்டும் உடலெனும் வாயில் சிறை நடுவு புக்குப் போகா துணங்குறும் வெள்ளறிவேம். (2) 3. வேறு வேறு நிறங்களை யெல்லாம் நீல நிறம் தன் நிறம் ஆக்கி அகப்படுத்திக் கொள்ளவல்லது. அதுபோல், தீயவரும் பிறரைத் தம் வயப் படுத்தித் தம்மவர் ஆக்கிக் கொள்வதில் மிகத் தேர்ச்சி உடையவராக இருப்பர். - பெருங்கதை : 1:35: 139. இட்டதை உண்ணும் நீலம் போல ஒட்டிடத் தொட்டும் உறுதி வாழ்க்கையுள் பத்திமை கொள்ளார். (3) 4. அரிசியைச் சோறாக்கி உண்பதற்குப் பதில் நெல்லையே சோறாக்கி உண்பவன் நெஞ்சுக்கு உறுதுயர் உண்டாகும். அது போல் உலகோர் பழிக்கு அஞ்சி வாழாதவன் நெஞ்சுக்கும் உறுதுயர் உண்டாகும். - திரிகடுகம் : 79. பழியஞ்சான் வாழும் பசுவும் அழிவினால் கொண்ட அருந்தவம் விட்டானும் கொண்டிருந்து இல்லஞ்சி வாழும் எருதும் இவர்மூவர் நெல்லுண்டல் நெஞ்சிற்கோர் நோய். (4) 5. நெடுங்காலம் தேய்த்து ஒளியூட்டப் பெறாத மணியின் ஒளி மழுங்கி விடும். அதுபோல் நெடும் பிரிவுக்கு ஆட்பட்ட அன்பரின் உடற் பொலிவும் மங்கி விடும். - கலித்தொகை : 132. வாடுபு வனப்போடி வயக்குறா மணிபோன்றாள் நீடிறை நெடுமென்தோள் நிரைவளை நெகிழ்ந்ததை. (5) 6. பூத்தல் மாறிப் போன கொடியின் பொலிவு குறைந்து போகும். அதுபோல் புலம்புதலை மேற்கொண்டவர் உடற்பொலிவும் குறைந்து போகும். - கலித்தொகை : 132. பொறையாற்றா நுசுப்பினால் பூவீந்த கொடி போன்றாள் மறைபிறர் அறியாமை மாணாநோய் உழந்ததை. (6) 7. பகற் பொழுதில் வெளியிடத்தில் வைக்கப் பெற்ற விளக்கின் ஒளி மழுங்கித் தோன்றும். அது போல் துன்பத்திடையே பட்டவர் உடலழகும் வெளிப்படாது மறைந்து போகும். - கலித்தொகை : 132. பாவின பசலையால் பகற்கொண்ட சுடர்போன்றாள் மாவின தளிர்போலும் மாணலம் இழந்ததை. (7) 8. ஓய்வு ஒழிவு இல்லாமல் கடல் அலை கரையுடன் ஏறியும் இறங்கி யும் மோதிக் கொண்டே இருக்கும். அதுபோல் கவலைப் பட்ட நெஞ்சமும் இரவு பகல் என வேற்றுமை இல்லாமல் மோதித் துடித்துக் கொண்டே இருக்கும். - கலித்தொகை : 123. எல்லையும் இரவும் துயில் துறந்து பல்லூழ் அரும்படர் அவல நோய் செய்தான்கண் பெறனசைஇ இருங்கழி ஓதம் போல் தடுமாறி வருந்தினை அளியஎன் மடங்கெழு நெஞ்சே. (8) 9. உப்பினால் செய்யப் பெற்ற பாவை நீரால் கரைந்து போகும். அது போல் துயரமும் உள்ளத்தை வாட்டி உடலை உருக்கிக் கெடுக்கும். - கலித்தொகை : 138. பொறையென் வரைத்தன்றிப் பூநுதல் ஈத்த நிறையழி காமநோய் நீந்தி அறையுற்ற உப்பியல் பாவை யுறையுற் றதுபோல உக்கு விடுமென் உயிர். (9) 10. துன்பம் என்பதொரு தீ. அஃது எங்கும் எவரும் காணத் திரியில் தோன்றும் தீ அன்று. ஒருவரும் கண்ணாரக் காண ஒட்டாமல் உயிர் என்னும் திரியில் பற்றி ஒழியாமல் எரிந்து கெடுக்கும் தீ. - கலித்தொகை : 142. கதிர்பகா ஞாயிறே கல்சோதி ஆயின் அவரை நினைத்து நிறுத்தென்கை நீட்டித் தருகுவை யாயின் தவிருமென் நெஞ்சத்து உயிர் திரியா மாட்டிய தீ. (10) 11. நெருப்புப் பரவிய நெய்யில் கிடக்கும் மெழுகு விரைந்து உருகிப் போகும். அதுபோல் ஆறாத்துயரில் அழுங்கிக் கிடக்கும் உடலும் உருகிப் போகும். - கலித்தொகை : 138. உரித்தென் வரைத்தன்றி ஒள்ளிழை தந்த பரிசழி பைதல் நோய் மூழ்கி எரிபரந்த நெய்யுண் மெழுகின் நிலையாது பைபயத் தேயும் அளித்தென் உயிர். (11) 12. மாற்றோரால் சூழப்பெற்ற மதிலுக்குள் அஞ்சி அடங்கிக் கிடப்ப தற்கும், மனக் கவலைக்கு இடையே தங்கி இருப்பதற்கும் வேற்றுமை சிறிதும் இல்லை. - கலித்தொகை : 149. சினைஇய வேந்தன் எயிற்புறத் திறுத்த வினைவரு பருவரல் போலத் துனைவர் நெஞ்சமொடு வருந்தினன் பெரிதே. (12) 13. உட்பகைவர் ஊடாடும் குடும்பம் ஒன்றுபட்டு வாழாமல் கலவரம் உடையதாகவே இருக்கும். அதுபோல் கவலைக்கு ஆட்பட்ட உள்ளமும் பிறருடன் கலந்து களிப்புடன் வாழ விடாமல் கலக்கத்துடன் ஒதுங்கி வாழவே செய்யும். - கல்லாடம் : 14. நட்டுட் பகையினர் உட்குடி போல உறவுசெய் தொன்றா நகைதரும் உளம். (13) 14. மாறுபாடுடைய இரண்டு நினைவுகளுக்கு இடையே நின்று வருந்தும் உடல், இரண்டு யானைகள் ஒன்றோடு ஒன்று மாறாகப் பற்றி இழுத்த பழைய கயிறு அறுந்து படுவது போல் அழிவதற்கே இடமாகும். - நற்றிணை : 284. உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம் செல்லல் தீர்க்கம் செல்வாம் என்னும் செய்வினை முடியாது எவ்வம் செய்தல் எய்யாமை யோடு இளிவுதலைத் தருமென உறுதி தூக்கத் தூங்கி அறிவே சிறிது நனிவிரையல் என்னும் ஆயிடை ஒளிறேந்து மருப்பில் களிறுமாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல வீவது கொல்என் வருந்திய உடம்பே. (14) 15. தான் கொண்ட துயரைப் பிறருக்குச் சொல்லும் வல்லமை இல்லாமல் வருந்துவது, இராப்பொழுதில் பசு கிணற்றில் வீழ்ந்து விட்டதைக் கண்ட ஊமன் அதனை விளக்கிப் பிறருக்குச் சொல்லும் வல்லமை இல்லாமல் வருந்துவது போன்றது. - குறுந்தொகை : 224. நோயினு நோயா கின்றே கூவல் குராலான் படுதுயர் இராவில் கண்ட உயர்திணை ஊமன் போலத் துயர்பொறுக் கல்லேன் தோழி நோய்க்கே. (15) 16. காட்டில் வெட்டப்பெற்ற மரத்தின் வேரடிக் கட்டையில் இடையர்கள் இரவுப்பொழுதில் வெளிச்சத்திற்காகத் தீ மூட்டி எரியச் செய்வர். பின்னர் அந்நெருப்பு அணைப்பார் எவரும் மின்றித் தானே அணையும். அது, துன்பத்தைத் தணிப்பதற்கு உரிமை அன்புடையவர் இருந்தும் அவரால் தணிக்கப் பெறாமல் தானே வருந்தித் தணிவார் தன்மை போன்றது. - நற்றிணை : 289. கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய பெருமர வேரடிப் போல அருளிலேன் அம்ம அளியேன் யானே. (16) 17. மார்பினை ஊடு அறுத்துச் செல்லும் வேல் கொடுமை யானது. அதனினும், இன்பமாக வாழும் காலத்தில் அல்லாமல் துன்பக் காலத்தில் துணைக்கு வாரான் என்னும் பழியை ஒருவன் அடைவது கொடுமையானது. - பெருங்கதை : 3 : 21 : 94. வாழ்ந்த காலை அல்லது யாவர்க்கும் ஆழ்ந்த காலை அன்பும் இல்லெனப் புறத்தோர் உரைக்கும் புன்சொற் கட்டுரை நிறத்தே றெஃகின் அனைய. (17) 18. முன்னை ஒருவன் ஒருவனைத் துன்புறுத்திச் சென்றிருக்க அவனை மீண்டும் ஒருவன் துன்பத்துக்கு உள்ளாக்குதல் வெந்த புண்ணில் வேல் நுழைப்பது போன்ற கொடுமை உடையது. - கலித்தொகை : 83. முந்தை இருந்து மகன் செய்த நோய்த்தலை வெந்த புண் வேலெறிந் தற்றால் வடுவொடு தந்தையும் வந்து நிலை. (18) 19. 'அலி' பெற்றுள்ள அழகு பயனற்றது. அதுபோல் தன் நாட்டு மக்கள் படும் தாழாத் துயரத்தைத் தவிர்க்க மாட்டாத ஆள்வோனது ஆண்மைத் தன்மையும் பயனற்றது. - சூளாமணி : 775. மன்னுயிர் வருத்தம் கண்டும் வாழ்வதே வலிக்கு மாயின் அன்னவன் ஆண்மையாவதலிபெற்ற அழகு போலாம். (19) 20. வெள்ளம் பெருக் கெடுத்து வருமானால் அதைச் சிறையிட்டுக் காப்பதற்கொரு காவல் இல்லை. அதுபோல் காமம் முதிர்ந்து நிற்கு மானால் அதனை நிறுத்திக் காக்க வல்ல நிறை என்னும் ஒரு தன்மையும் இல்லை. - சூளாமணி : 981. சிறையென்ப தில்லைச் செவ்வே செம்புனல் சிறக்கு மாயின் நிறையென்ப தில்லைக் காமம் நேர்நின்று பெருகு மாயின். (20) 21. சுவையாலும் தோற்றத்தாலும் மயக்கித் தன்னை விரும்பி உண்ணச் செய்து உண்டவரை உயிர் போக்க வல்லது நச்சுக்கனி. அக்கனி போன்றதே காமமும். - பெருங்கதை : 2 : 20:3 - 23. படுதிரைப் பௌவத்துக் கடுவளி கலக்கப் பொறியவிழ்ந்து கவிழ்ந்த பொருகலத் துய்ந்தோர் நெறிதிரிந் தொரீஇ நீத்துயிர் வழங்காத் தீவகம் புக்குத் தாவகம் கடுப்பப் பெருந்துயர் உழக்கும் அருந்துபசி மூளத் திண்ணிலை வரைப்பில் சினைதொறும் செறிந்து கண்ணவை யுறூஉம் கனிபல கண்டவை நயவரு நஞ்செனப் பெயர்தெரி வின்மையின் ஊழுறுத் தக்கனி தாழ்விலர் வாங்கித் துன்பம் நீக்கும் தோற்றமு மன்றி இன்ப நாற்றமும் இயைந்தன இவையென நச்சுபு தெரிந்த நாற்றமும் சுவையும் ஒப்புமை இன்மையின் உயிர் முதல் தாங்க அமரர் காட்டிய அமுதுநமக் கிவையெனப் பசிநோய் தீர அயிறலிற் கதுமெனத் தசைபோழ்ந்து கழற்றித் தபுத்திசி னாங்குத் தாமரைச் செங்கண் தகைமலி மார்ப காமத் தியற்கையும் காணும் காலை இறுதியில் இன்பமொ டினியது போல உறுபயன் ஈனா உடம்புமுதற் புகுத்தலிற் பெறுபயன் இதுவெனப் பேணார் பெரியோர். (21) 22. கற்புடைய மகள் தன் கணவனையே கண்கண்ட கடவுளாகக் கருதி வழிபாடு செய்து வாழ்வாள். அது போல் பொருள் கருதிய பொய்ம்மை யாளனும் அப்பொருளாசையால் அஃதுடையாரைப் போற்றி வழிபட்டு வாழ்வான். - வளையாபதி : 59. ஒத்த பொருளான் உறுதி செய்வார்களை எத்திறத் தானும் வழிபட் டொழுகலின் ............ ....... பத்தினிப் பெண்டிர் படியும் புரைப். (22) 23. தீய மகளிர், தம் அழகைத் தூண்டில் ஆகவும், அச்சம், நாணம், சுற்றம் ஓம்பல், அழகு ஆயவற்றைத் தூண்டிலில் கட்டும் இரையாகவும், இளையவர்கள் வைத்துள்ள செல்வத்தை மீனாகவும் கொண்டு பொருள் பறிப்பதே வாழ்வாக இருப்பர். - பெருங்கதை : 2 : 7 : 73. காரிகை கடுநுனைத் தூண்டி லாக உட்கும் நாணும் ஊராண் ஒழுக்கும் கட்கின் கோலமும் கட்டிரை யாக இருங்கண் ஞாலத் திளையோர் ஈட்டிய அருங்கல வெறுக்கை அவைமீ னாக வாங்குபு கொள்ளும் வழக்கியல் வழாஅப் பூங்குழை மகளிர். (23) 24. பூங்கொடி , வண்டுகளைத் தன்பால் அழைப்பதற்கு அழகுடன் மலர்ந்து, மணம் பரப்பி, தேன் தாங்கி நிற்கும். அது போல் பொருட் பெண்டிரும் பொருள் உடையாரைத் தம்பால் ஈர்த்தற்குப் பொலிவுடன் விளங்குவர். - வளையாபதி : 57. வனப்பிலர் ஆயினும் வன்மையி லோரை நினைத்தவர் மேவர நிற்பமைக் கவர்தாம் கனைத்துடன் வண்டொடு தேனினம் ஆர்ப்பப் புனத்திடைப் பூத்த பூங்கொடி ஒப்ப. (24) 25. நெடு நாள் ஈட்டி வைத்த பொருளைத் தன்கண் அகப் படுத்தி நொடிப் பொழுதில் கடலுக்குள் போடும் அறிவின்மை போன்றது, நிலைப்படா நெஞ்சத்தவரை உறவாகக் கொண்டு அவர்கள் வழியால் தேடிய பொருளை எல்லாம் இழந்து போகும் இழவு. - வளையாபதி : 58. தங்கட் பிறந்த கழியன்பி னார்களை வன்கண்மை செய்து வலிய விடுதலின் இன்பொருள் ஏற்றி எழநின்ற வாணிகர்க்கு அங்கண் பரப்பகத்து ஆழ்கலம் ஒப்ப. (25) 26. மேயும் நிலத்தில் புல் இல்லாது போனால் அவ்விடத்தை நீங்கிப் புல்லுள்ள இடத்தைத் தேடிச் செல்லும், புல் மேயும் விலங்குகள். அதுபோல் பொருள் கருதி உறவாடுபவர், அப்பொருள் இருக்கும் அளவும் உறவாக இருந்து பொருள் இல்லாக்கால் வேறிடத்திற்குச் செல்வர். - வளையாபதி : 60. வீபொரு ளானை அகன்று பிறனுமோர் மாபொரு ளான்பக்க மாண நயத்தலின் மேய்புலம் புல்லற மற்றோர் புலம்புகு மாவும் புரைப் மலரன்ன கண்ணார். (26) 27. முள் முருக்கம் பூ சிவப்பும் அழகும் உடையது எனினும் வண்டு அதனை நெருங்காமல் தேனுள்ள பூக்களையே தேடும். அதுபோல் பொருள் கருதிய நட்பாளரும் அப்பொருள் ஒன்றே கருதி நெருங்குவாரே அல்லாமல் பிறிதொன்று கருதி நெருங்கார். - வளையாபதி : 62. முருக்கலர் போற் சிவந் தொள்ளிய ரேனும் பருக்கா டில்லவர் பக்கம் நினையார் அருப்பிள மென்முலை அஞ்சொ லவர்தம் வரிச்சிறை வண்டின் வகையும் புரைப். (27) 28. ஒருகிளையில் உள்ள கனி காய்கள் தீர்ந்தவுடன் வேறொரு கிளைக்குத் தாவிச் செல்லும் இயல்பினது பறவை. அதுபோல் பொருள் கருதிப் பொருந்திய நட்பாளரும் அது தீர்ந்தவுடன் வேறிடம் செல்வர். - வளையாபதி : 61. நுண்பொரு ளானை நுகர்ந்திட்டு வான்பொருள் நன்குடை யானை நயந்தனர் கோடலின் வம்பிள மென்முலை வாணெடுங் கண்ணவர் கொம்பிடை வாழும் குரங்கும் புரைப். (28) 29. அன்புக்கு உரியவரை அடிக்கடி கண்டு தழுவிக் கொள்ளும் ஆவல் உண்டாவது போல, ஊன் சுவை விரும்பு பவர்க்கு அச்சுவைமிக்க ஊனைத் தரும் உயிரைக் காணும் போதெல்லாம் அதனைக் கொன்று தின்னும் வேட்கையே மிகும். - நீலகேசி : 340. கன்றிய காமந்துய்ப் பான்முறைக் கன்னியை என்றுகொல் எய்துவ தோவெனும் சிந்தையன் முன்தினப் பட்ட முயல்முத லாயின நின்றன உந்தின நேர்ந்தனை நீயே. (29) 30. கொலை செய்தலில் கைதேர்ந்த மாக்களின் அருளிலா நெஞ்சத்தில் படிந்துள்ள அறியாமை, மகளிரின் திரண்டு செறிந்த கருநிறக் கூந்தல் போல்வது. - கல்லாடம் : 14. கொலையினர் நெஞ்சம் கூண்டவல் இருளெனும் ஐம்பால் குழலையும் அணிநிலை கூட்டுக. (30) 31. அறம் கருதிக் கொடுக்கும் பொருட் பயன் அக்கொடையாளர்பால் வந்து நிற்கும். அதுபோல், கொலை கருதி வாழும் வலைஞர் வேடர் ஆயவர் வழி சேர்க்கும் பொருளின் பயனும் கொடுத்தவர்பால் வந்து நிற்கும். - நீலகேசி : 337. விலையறம் போலும் எனின்வினை யாக்க நிலையுமீ றென்பது நேர்குவை யாயின் வலையினின் வாழ்நர்க்கும் வைகலும் ஈந்தால் கொலையென்றும் வேண்டலன் றோகுண மில்லாய். (31) 32. அருளற்ற தன்மையாளர் என்பதை உண்மையாக உணர்ந்திருந்தும் அவர் சொல்லை அருள்மிக்க சொல்லாகக் கருதுவது, தவறாமல் உயிரைப் போக்கும் தன்மையுடைய நஞ்சென அறிந்து கொண்டும் அது நன்மை தருமெனக் கருதி உண்பது போன்றதாம். - கலித்தொகை : 74. நஞ்சுயிர் செகுத்தலும் அறிந்துண்டாங் களியின்மை கண்டுநின் மொழிதேறும் பெண்டிரும் ஏமுற்றார். (32) 33. ஒருவன் உடலின்கண் அடங்கிய அம்பினை அவன் மேல் அன்புடையான் பறித்துப் பிடுங்கும்போது அவன் உயிர் போய் விட்டால் அம்பைப் பறித்தவன் கொலைஞன் ஆகான். அவன் தன் அன்பன் துயரத்தைப் போக்க முனைந்து தோல்வி கண்டவன் ஆதலால், உயிர்க் கொலையும் ஊன் தின்பதும் போன்ற குற்றத் தில் அவன் செயல் சேராது. - நீலகேசி : 345. அடங்கிய அம்பு பறித்தல் முதலா உடங்கு செய் தார்வினை ஓட்டலர் என்பாய் மடங்கினர் வாழ்க எனுமாற் றார்போல் சடஞ்சொல்லித் தின்பதிங் கியார்கட் டயாவோ. (33) 34. ஒரு பிள்ளையைத் தாயும் பேயும் பற்றி இழுக்க அப் பிள்ளை இறக்குமானால் கொலை தாய் மேல் சாராது. என்னெனில் தாய் தன் குழந்தையின் உயிரைக் காக்க விரும்பும் பேரருளால் ஈர்க்க, பேய் அக்குழந்தையைக் கொல்லுதற்கே ஈர்த்ததால், அதுபோல் ஊன் உண்பதையும், அதனால் வரும் பொருள் வருவாயையும் கருதி உயிரைக் கொல்பவர்க்குக் கொலைப் பழி தவறாது. - நீலகேசி : 346. தின்னு மனமுடைப் பேயெய்தும் தீவினை மன்னு மிகவுடைத் தாய்வினைப் பட்டில்லாள் என்னும் உரைபெரி தேற்கும் இகழ்ச்சி தன்னை வினைப்பட நீசொல்லினாயால். (34) 35. சினம் என்பது கொடிய தீயாகும். அத்திக்கு மனச் செருக்கு என்பது மிகமிக ஊட்டம் அளித்து வளர்க்கும் உண வாகும். - சூளாமணி : 1165. சினமெனப் பட்ட தீயுள் பிறந்தது செருக்கு நன்னீர் மனவுண வுண்டு மானப் பூநின்ற வயிர ஒள்வாள் அன்லதொன்றகத்த தாக ஆரமர் குருதி வேட்டுக் கனல்வதோர் கால ஓள்வாள் கடைக்கணித் தொருவன் சொன்னான். (35) 36. எரி முன்னர்ப்பட்ட பஞ்சு எளிதில் எரிந்தொழியும். அதுபோல் வெகுளி என்னும் எரிநெருப்புக்கு ஆட்பட்டோர் தம் கிளையுடன் அழிவர். - பெருங்கதை: 3:24 : 114. எள்ளும் மாந்தர் எரிவாய்ப் பட்ட பன்னற் பஞ்சி அன்னர் ஆகென வெகுளித் தீயில் கிளையறச் சுடுதல் முடிந்த திந்நிலை முடிந்தனர் அவர். (36) 37. கொடுமை ஏற்றப் பெற்ற சொற்கள், சூடு ஏற்றப் பெற்ற கம்பி போல்வன. கொடுஞ் சொல்லைச் சொல்வது, சூடேற்றப் பெற்ற கம்பியைப் பிறர் செவியில் நுழைப்பது போன்றது. - பெருங்கதை : 1 : 47: 238. நெருப்பு நுனையுறீஇச், சுடுநா ராசம் செவிசெறித் தாங்கு வடிவேல் தானை வத்தவன் தன்னொடு பாவை பிரிவினைக் காவலன் உணர்த்தலின். (37) 38. ஆசையினால் உண்டாகும் கோட்டை விளக்க வேறு சான்று வேண்டுவதில்லை. தூண்டில் இரைக்காக ஆசைப்பட்டு ஆருயிர் இழக்கும் மீனே போதிய சான்றாகும். - நீலகேசி : 129. கரையவா வாங்கும் கயமகன் கைத்தூண்டில் இரையாவாப் பன்மீன் இடருறுவ தேபோல் நுரையவா நுண்டுகிலும் மேகலையும் சூழ்ந்த வரையவாய்ப் பட்டார்க்கு மாழ்துயரே கண்டீர். (38) 39. புறத்தே புகை உண்டாயின் அகத்தே தீ உண்மை உறுதி. அதுபோல் புறப்பற்று உண்டாயின் அதற்கு அடிப்படையான அகப்பற்றாம் அவா உண்மையும் உறுதியே. - நீலகேசி : 261. உள்ளமும் பாயிரம்மு மொக்கு மேல் வீடு முண்டாம் கொள்ளுமேற் குற்ற மாஃதாக் கூடுமே பற்று மாங்கண் விள்ளுமேல் வேற தாய வேடமு மன்ன தேயாம் கள்ளமே சொல்லி நின்று கன்றினாற் காட்ட லாமோ. (39) 40. நாரை பற்றிக் கொள்ள அதன் வாயில் இருந்து தப்பி நீருள் மறைந்த கெண்டை மீன் பின்னர்த் தாமரையின் அரும்பைக் கண்டும் நாரை யென எண்ணி அஞ்சும். அதுபோல் ஒருவர் சொல்லிய பொய்யுரையால் உலகவர் உரை எல்லாம் பொய்யே எனக் கருதுவாரும் உளர். - குறுந்தொகை : 127. குருகு கொளக் குளித்த கெண்டை அயலது உருகெழு தாமரை வான்முகை வெரூஉம் கழனியம் படப்பைக் காஞ்சி யூர ஒருநின் பாணன் பொய்யன் ஆக உள்ள பாண ரெல்லாம் கள்வர் போல்வர் நீ யகன்றிசி னோர்க்கே. (40) 41. மழை பெய்யாமல் பொய்க்குமானால் உலகுக்குக் கேடு உண்டாகும். அதுபோல் உயர்ந்தோர் மெய்யாய கொடை நீக்கிப் பொய்ப்பாரானால் உலகுக்குப் பெருங் கேடாகும். - பதிற்றுப்பத்து : 18. மன்னுயிர் அழிய யாண்டுபல் துளக்கி மண்ணுடை ஞாலம் புரவெதிர் கொண்ட தண்ணிய எழிலி தலையாது மாறி மாரி பொய்க்குவ தாயினும் சேரலாதன் பொய்யலன் நசையே. (41) 42. நுகக்கோலின் நடுவே இருக்கும் ஆணி மிகச் சமனிலையில் பகுத்துக் கணக்கிட்டு அடிக்கப் பெற்றிருக்கும். அது சிறிதளவு இடம் தவறி இருப்பினும் ஒரு பக்கம் சுமை குறைந்து மறுபக்கம் சுமை மிகுந்தும் மாட்டுக்குக் கேடு செய்யும். அதுபோல் நடுவு நிலைமையாளர் அந்நிலையில் இருந்து தவறிச் சிறிதே ஒருபக்கம் சார்ந்தாலும் மறுபக்கத்தார்க்குப் பெருங்கேடு உண்டாகும். - பட்டினப்பாலை : 205. கொடுமேழி நசையுழவர் நெடுநுகத்துப் பகல் போல நடுவுநின்ற நன்னெஞ்சினோர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்பநாடிக் கொள்வதூஉ மிகை கொளாது, கொடுப்பதூஉம் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்து வீசும் (42) 43. இல்லாத பொல்லாத பழியை ஒருவர் மேல் இட்டுக் கட்டி ஏற்றிக் கூறுவது, பொய்த்தேள் போட்டு நடுங்கச் செய்வது போன்றது. - சிலப்பதிகாரம் : 9:48. பட்ட பதியில் படாத தொரு வார்த்தை இட்டனர் ஊரார் இடுதேளிட்டு என்றன்மேல் (43) 44. உண்மைக் காரணத்தை விடுத்துப் பொய்க்காரணங் களையும் கதைகளையும் சொல்லி ஏமாற்றுவது, பால் கறக்கும் பொழுது தும்மினால் பசு வெருளும் என்று எழுந்து போய் வேறிடத்தில் இருந்து தும்ம நினைப்பவன், எழுவதற்குக் காரணம் இஃதாக அதனை மறைப்பதற்காக இம்மாடு பொதி ஏற்றுதற்குத் தகுதி உடையதாகும், என்று அதன் மேல் பழி போடுவது போன்றது. - நீலகேசி : 212. ஆதனாற்குறந்தாங்கெழு வான்றும்ம ஏத மில்சுமை யேற்றெரு தாமென்றான் சாத கம்மிவற் றானருள் சாதிப்பான் ஓதி னார்க்கும் உணர்வொருப் பாயதே. (44) 45. ஒப்பில்லாத வாய்மையாளன் இடத்துப் பொய்மை தோன்றியதாயின் அது தண்ணிய திங்களிடத்தே கொடிய தீத் தோன்றியது போன்றது ஆகும். - கலித்தொகை : 41. பொய்த்தற் குரியனோ பொய்த்தற் குரியனோ அஞ்சலோம் பென்றாரைப் பொய்த்தற் குரியனோ குன்றகல் நன்னாடன் வாய்மையில் பொய் தோன்றின் திங்களுள் தீர்த்தோன்றி யற்று. (45) 46. ஒருவன் காட்டும் இரக்கத்திலே இன்னல் தோன்றிக் கெடுக்குமாயின் அக்கேடு, நிழல் மல்கிய நீர்ப் பொய்கையிலே நிற்கும் குவளை மலர் வெப்பத்தால் வெந்தது போன்றது. - கலித்தொகை : 41. வாரா தமைவானோ வாரா தமைவானோ வாரா தமைகுவான் அல்லன் மலைநாடன் ஈரத்துள் இன்னவை தோன்றின் நிழற்கயத்துள் நீருட் குவளை வெந் தற்று. (46) 47. விரும்பிக் கொண்டிருந்த நல்வாய்ப்பு நெருங்கி வந்தும் கைக்கு அகப்படாமல் அகன்று போவது, யாழிசை மீட்டத் தொடங்கி இன்பத்தை நுகரக் காத்திருந்த வேளையில் அதன் நரம்பு அறுந்தது போல்வது. - கலித்தொகை : 142. புரிவுண்ட புணர்ச்சியுள் புல்லாரா மாத்திரை அருகுவித் தொருவரை அகற்றலின் தெரிவார்கண் செயநின்ற பண்ணினுட் செவிசுவை கொள்ளாது நயநின்ற பொருள்கெடப் புரியறு நரம்பினும் பயனின்று மன்றம்ம. (47) 48. பிரிவற்ற இனிய நண்பினர் இடையே பிரிவு நிலை உண்டாவது, பெருகிய ஒளியின் இடையே இருள் தோன்றுவது போன்றது. - கலித்தொகை : 4. துறக்குவ னல்லன் துறக்குவ னல்லன் தொடர்வரை வெற்பன் துறக்குவ னல்லன் தொடர்புள் இனையவை தோன்றின் விசும்பின் சுடருள் இருள் தோன்றி யற்று. (48) 49. நோயால் துயரம் உற்றவனுக்கு அந்நோய்த் துயர் நீங்கும் அளவில் அது மீண்டும் திருப்பிக் கொண்டது போன்றது, பெயர்ந்து சென்ற போர்ப் பகைவர்கள் திரும்பியும் வந்து நாட்டைத் தாக்கிக் கொள்ளையிடுவது. - பெருங்கதை : 3 : 19:45. வேக மன்னர் மீட்டுவந் திறுத்த வெங்கட் செய்தொழில் தன்கட் கூறலும் மறுநோய் மக்களின் ஆழ்ந்த மனத்தன் செறுவேல் வேந்தன் செய்வதை அறியான். (49) 50. மலர்ந்த வேங்கை மரத்தைப் புலியென்று கருதிய யானை அதனை மோதிப் பிளந்து விடுவதும் உண்டு. அதுபோல் இல்லாப் பொய்ம்மையை உண்மையாகக் கொண்டு அவர் மேல் வெகுண்டு அழிவு செய்வாரும் உளர். - பதிற்றுப்பத்து : 41. கைவல் இளையர் கடவுட் பழிச்ச மறப்புலிக் குழூஉக்குரல் செத்து வயக்களிறு வரைசேர் பெழுந்த சுடர்வீ வேங்கைப் பூவுடைப் பெருஞ்சினை வாங்கப் பிளந்துதன் மாயிருஞ் சென்னி அணிபெற மிலைச்சி. (50) 51. குயவன் தன் கையகத்துள்ள நாண்' என்னும் கருவியால் தான் வனையும் பாண்டங்களை அறுத்து எடுப்பான். அதுபோல் தீயவர் நல் வாழ்வுடைய பிறர்க்கு அன்பராக இருப்பவரை வஞ்சம் என்னும் கருவியால் அறுத்து விலக்கி விடுவர். - சீவகசிந்தாமணி : 2614. வனைகலக் குயவன் நாணின் மன்னரை அறுத்து முற்றிக் கனை குரல் உருமின் ஆர்ப்பக் காவலன் நின்னை வேண்டி வினைமயிற் பொறியின் என்னைப் போக்கிவிண் விரும்பப் புக்கான் புனைமுடி வேந்த போவல் போற்றென மயங்கி வீழ்ந்தான். (51) 52. எரியும் நெருப்புச் சிறிதே எனினும் வளர்ந்து பேரழிவு செய்யவும் கூடும். அதுபோல் ஆறிப்போய்க் கிடக்கும் பழம் பகை ஒருநாள் மூண் டெழுந்து பேரழிவு செய்யவும் கூடும். - சூளாமணி : 643. எரியும் தீத்திரள் எட்டுணை யாயினும் கரியச் சுட்டிடும் காந்திக் கனலுமேல் தெரியில் தொல்பகை தான்சிறி தாயினும் விரியப் பெற்றிடின் வென்றடு கிற்குமே. (52) 53. பாம்பின் வாய்ப்பட்ட தேரை என்னென்னவோ நினைத்து அழுங்கும். அதுபோல் தந்த வாக்கினைக் காப்பாற்றாத அன்பரின் செயலை நினைந்தவர் நெஞ்சமும் அழுங்கும். - கல்லாடம் : 23. அரவுவாய் ஆயிற் பலவும் நினைந்து நிலையாச் சூளின் நிலையா நெஞ்சம். (53) 54. தீராத நோய் எம் மருந்துக்கும் தேயாமல் பெருகி வளரும். அதுபோல், வறியவர்க்கு வழங்காமல் தாமே உண்ணும் புல்லிய செல்வருக்கு உண்டாகும் பழியும் பெருகி வளரும். - கல்லாடம் : 30. தண்டா அருநோய், ஈயா துண்ணுநர் நெடும்பழி போலப் போகாக் காலை புணர்க்குவ என்னாம். (54) 55. மழை கொட்டிக் கொண்டிருக்கும் மாரிக்கால மையிருட் போதில் மரக்கலத்தில் ஏறிக் கண்ணொளியற்ற ஊமன் செல்ல, அம்மரக்கலமும் கவிழ்ந்துவிட அவன் படும் அல்லல் போன்றது, வழங்குவார் எவரும் இல்லாமல் வறுமையில் பட்டு உழல்பவன் நிலைமை. - புறநானூறு - 238. மாரி இரவின் மரங்கவிழ் பொழுதின் ஆரஞர் உற்ற நெஞ்சமொ டொராங்குக் கண்ணில் ஊமன் கடற்பட் டாங்கு வரையளந் தறியாத் திரையரு நீத்தத்து அவல மறுசுழி மறுகலில் தவலே நன்றுமற் றகுதியும் அதுவே. (55) 56. வறுமையால் வாடி வதைபவன் உடல், வளையல் கழற்றிக் கைம்மை நோன்பு கொண்ட பெண்களின் உடல் போலப் பொலிவிழந்து தோன்றும். - புறநானூறு : 238. தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடி. (56) 57. முன்னர் உதவி செய்தவருக்குத் துயருண்டாய வழி அவருக்கு ஓர் உதவியும் செய்யாதவன், கல்விப் பொருள் தந்தவர் வறுமையுற்று வாடிய போதில் அவருக்குத் தம்மிடம் உள்ள செல்வப் பொருளைச் சிறிதும் உதவாமல் சேர்த்து வைத்தவர் செல்வம் தேய்ந்து அழிவது போல் புகழ் தேய்ந்து அழிவான். - கலித்தொகை : 149. கற்பித்தான் நெஞ்சழுங்கப் பகர்ந்துண்ணான் விச்சைக்கண் தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால் ஒற்கத்துள் உதவியார்க் குதவாதான் மற்றவன் எச்சத்துள் ஆயினும் தெறியாது விடாதேகாண். (57) 58. அருகே இருக்கும் பெருமக்களை அறிந்து பழகி நற்பயன் பெறாமல், ஒருவன் காலம் கழிப்பது, தன்னூரிலே இருக்கும் ஒரே ஒரு தன்மையால் தண்ணறும் சுனை நீரை நன்னீரெனக் கருதாமல் கழிப்பவன் அறிவில்லாத் தன்மை போன்றது. - புறநானூறு : 176. பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் ஒரூர் உண்மையின் இகழ்ந்தோர் போலக் காணாது கழிந்த வைகல் காணா வழிநாட்கு இரங்கும் என் நெஞ்சம்அவன் கழிமென் சாயல் காண்டொறும் நினைந்தே. (58) 59. நடுவு நிலை, வாய்மை முதலாய நற்பண்புகளை உடைய நல்லோன் ஒருவனுடன் அவன் செல்வமும் சேர்ந்து அழிவது உலகுக்குப் பேரிழப்பாகும். அவ்விழப்பு ஒளிப் பகுதியை எல்லாம் மூடி ஒளித்து உலகெல்லாம் இருளாக்கிச் செல்லும் கதிரோன் மறைவு போன்றது. - கலித்தொகை : 130. நயனும் வாய்மையும் நன்னர் நடுவும் இவனில் தோன்றிய இவையென இரங்கப் புரைதப நாடிப் பொய்தபுத் தினிதாண்ட அரசனோ டுடன் மாய்ந்த நல்லூழிச் செல்வம்போல் நிரை கதிர்க் கனலி பாடொடு பகல்செல. (59) 60. பல்லோர்க்கும் பயன்படும் நல்லோரின் நாடு, பகைவரால் அழிபடுவது, ஊராருக்குப் பயன்படும் வகையில் பருகுநீர் உதவும் ஊருணி காப்பார் இல்லாமல் கரையுடைத்துக் கொண்டு சென்று அழிபாடு அடைவது போன்றது. - புறநானூறு : 118. அறையும் பொறையும் மணந்த தலைய எண்ணாட் டிங்கள் அனைய கொடுங்கரைத் தெண்ணிரச் சிறுகுளம் கீள்வது மாதோ கூர்வேல் குவைஇய மொய்ம்பிற் தேர்வண் பாரி தண்பறம்பு நாடே . (60) 61. அன்புடையவர்க்கு நன்மை செய்யாது அழிவு செய்வது கரைக்கண் இருந்த பழமரத்தை ஆறு பிடுங்கி அடித்துக் கொண்டு வருவது போன்றது. - குறுந்தொகை : 327. நல்கின் வாழும் நல்கூர்ந் தோர்வயின் நயனிலர் ஆகுதல் நன்றென உணர்ந்த குன்ற நாடன் தன்னினும் நன்றும் நின்னிலை கொடிதால் தீய கலுழி நம்மனை மடமகள் இன்ன மென்மைச் சாயலள் அளியள் என்னாய் வாழைதந் தனையால் சிலம்புபுல் லெனவே. (61) 62. ஒரு பணியாளனைப் பலர் ஏவலிட்டுத் துன்புறுத்துவது, கடலிடைக் கப்பல் கவிழ்ந்தபோது அதில் சென்றவர் கண்முன் ஒரு பலகை வர, அதனை ஒவ்வொருவரும் தத்தமக்கெனப் பற்றி இழுத்துப் படாப்பாடு படுத்துவது போன்றது. - நற்றிணை : 30. கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி யுடன்வீழ்பு பலர்கொள் பலகை போல வாங்க வாங்கநின் றூங்கஞர் நிலையே. (62) 63. முன்னமே வித்தினை வீட்டில் சேர்த்து வைத்துக் கொள்ளாதவன் நிலத்தை ஆழமாக முயன்று உழுவது வீண் செயலாம். அதுபோல் முற்றவும் இல்லா வறுமையாளர் பொருள் இன்பப் பேறுகளைப் பெற முயலுதல் வீண் முயற்சியாம். - வளையாபதி : 46. உய்த்தொன்றி யேர்தந் துழவுழு தாற்றவும் வித்தின்றிப் பைங்கூழ் விளைக்குறல் என்னொக்கும் மெய்த்தவம் இல்லான் பொருளொடு போகங்கட்கு எய்த்துழந் தேதான் இடர்ப்படு மாறே. (63) 64. கதிரோனைக் கண்டு மலரும் தாமரை, பனித்துளியால் கேடு அடையும். அதுபோல் அறிவு என்னும் கதிரோனால் மலரும் செல்வம் என்னும் தாமரை, செருக்கு என்னும் பனியால் கேடு அடையும். - சூளாமணி : 627. அருக்கன் தன்னறிவாக அலர்ந்த நீர்த் திருக்க வின் செல்வச் செழுந் தாமரை செருக்கெ னப்படுந் திண்பனி வீழுமேல் முருக்கு மற்றத னைமுகைத் தாரினாய். (64) 65. கல்வித் தேர்ச்சி மிக்கவரிடம் அத்தேர்ச்சி இல்லார் மறுத்துரை யாடுவதும் எதிர்ப்பதும், கோபம் கொண்ட மத யானையின் முகத்தில் கல்லைக் கொண்டு அறிவிலி ஒருவன் எறிவது போன்றது. - நீலகேசி : 739. கதக்களி யானைமுன் கல்லெறிந் தால்போல் பதப்பொருள் தம்மைப் பழுதென் றுரைப்ப. (65) 66. பலரும் பயின்று நடவாத வழி புல் மூடி மறைந்து பிறழ்ந்து போகும். அதுபோல் இறைவன் மேல் அன்பு செலுத்தி நடவாதவர்க்குச் சான்றோர் கூறும் நன்னெறியும் பிறழ்ந்து போகும். - கல்லாடம் : 26. தெய்வங் கருதாப் பொய்யினர்க் குரைத்த நல்வழி மானப் புல்வழி புரண்டது. (66) 67. பால் நல்லதே எனினும், அதனைப் பாம்பு பருகுமானால் அப்பாம்பின் நச்சுத் தன்மையால் பாலும் நஞ்சாகி விடும். அதுபோல் நற்பொருளே ஆயினும் தீயவர் செவிக்கண்படுமாயின் அவர் உள்ளத்திற்கு ஏற்றவாறு தீய பொருளாகவே மாறி விடும். - நீலகேசி : 293. பலம்படும் உரைநினக்குப் பாம்புண்ட பாலே போல். (67) 68. பொருத்தமற்ற பொருளைப் பொருத்தமற்ற சொல்லால் நிலைநாட்ட விரும்புவது, மாலைக்கண் உடையவன் பொழுது மறைந்தால் எதுவும் தனக்குத் தெரியாது என்று எண்ணிப் பகற் பொழுதிலே திருடுவதற்குப் போய் மாட்டிக் கொள்வது போன்றதாம். - நீலகேசி : 514. இருளுடை மாலைக்கண் தோன்றா தெனக்கென நண்பகலே பொருளுடை யார்பொருள் கொள்வான் அகழுநன் போன்று இலையோ? (68) 69. நல்லுரைகளைக் கேட்காமல் புல்லிய உரைகளைக் கேட்பவன், தீயால் சுடப்பெறாத மண்பானைமேல் மழை பெய்தால் போல் கரைந்து அழிந்து போவான். - குறுந்தொகை : 29. நல்லுரை இகந்து புல்லுரை தாஅய்ப் பெயரக் கேற்ற பசுங்கலம் போல் உள்ளந் தாங்கா வெள்ளம் நீந்தி அரிதவா வுற்றனை நெஞ்சே. (69) 70. தான் கூறும் ஒன்று எந்தக் குற்றமும் அற்றது என்று தானே உறுதி கூறித் தருக்குக் கொள்வது, குட்ட நோயாளன் ஒருவன் தன் குடுமியைக் காட்டி இதனைக் காணுங்கள் ; என் உடலகத்து எந்த நோயும் இல்லை' என்று கூறுவது போன்றது. - நீலகேசி : 402. இட்ட நீபல உரைத்தனை இவற்றுள் ஒன்றொழிய நட்ட மாயினும் நன்மையை நின்வயின் தருவோய் குட்ட மே முழு மெய்யினும் எழுந்தவன் குடுமி தொட்டியா னெனினுந்தூய னோவது மாமோ. (70) 71. அன்பர் இருவர் படும் அல்லல்களைத் தாங்க மாட்டாமல் ஒருவன் படும் அவலம், இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தாய் அவ்விரு குழந்தைகளும் நஞ்சுண்டால் அவ் இருவருக்கும் ஒப்ப வருந்துவது போன்றது. - குறுந்தொகை : 324. நீநின், நயனுடை மையின் வருதி இவள்தன் மடனுடை மையின் உயங்கும் யானது கவைமக நஞ்சுண் டாஅங்கு அஞ்சுவல் பெரும் என் நெஞ்சத் தானே. (71) 72. காட்டில் பொழிந்த பால் நிலவின் பளிங்குக்கதிர் பயனின்றி ஒழியும். அதுபோல் தம் வாணாளை வீணாளாக்கிப் பாழ்படுத்துவாரும் உளர். - வளையாபதி : 44. தானம் செய்திலம் தவமும் அன்னதே கானம் தோய் நில விற்கழி வெய்தின. (72) 73. பயனின்றிக் கழிந்து போகும் நாள், அரிய கிளையிலே அமைந்த காய் நன்றாகக் கனிந்து எவருக்கும் பயன்படாமல் மலை வெடிப்பிலே வீழ்ந்து பாடுவது போன்றது. - நற்றிணை : 116. மலைகெழு நாடன் கேண்மை பலவின் மாச்சினை துறந்த கோள்முதிர் பெரும்பழம் விடாளை வீழ்ந்துக் கொங்குத் தொடர்பறச் சேணும் சென்றுக் கன்றே. (73) 74. உயர்குடியில் பிறந்த பெருமக்கள் இடத்துத் தோன்றிய சிறிய குற்றமும் முழுமதியைச் சேர்ந்த முயற்கறை போல் எளிதில் புலப்படும். - மணிமேகலை : 6 : 2. வந்து தோன்றிய மலர்கதிர் மண்டிலம் சான்றோர் தங்கண் எய்திய குற்றம் தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல மாசறு விசும்பின் மறுநிறம் கிளர. (74) 75. உலகுக்குப் பயன்படும் உயர்திறத்தைப் பயன்படுத் தாமல் வாளா' செலவிடுவது, கந்தசாலி என்னும் உயர்ந்த நெல் வித்தை உவர் நிலத்தில் விதைப்பது போன்றது. - மணிமேகலை : 10:46. கந்த சாலியின் கழிபெரு வித்தோர் வெந்துகு வெண்களர் வீழ்வது போன்மென அறத்தின் வித்தாங் காகிய உன்னையோர் திறப்படற் கேதுவாச் சேயிழை செய்தேன். (75) 14. ஊழ் 1. பாடகம் என்பது மகளிர் காலணிகளுள் ஒன்று. அது காலை விடாமல் அமைந்து போக்கும் வரவும் உடையது. அக் காலணிபோல் உயிருடன் ஒன்றிப் போக்கும் வரவும் உடையது ஊழ் வினை. - (1) சீவகசிந்தாமணி : 510; (2) கல்லாடம் : 8. (1) ஆடகச் செம்பொற் கிண்ணத் தேந்திய அலங்கல் தெண்ணீர் கூடகங் கொண்ட வாழ்நாள் உலந்ததேல் கொல்லும் பவ்வத்து ஊடகம் புக்கு முந்நீர் அழுந்தினும் உய்வர் நல்லார் பாடகம் போலச் சூழ்ந்த பழவினைப் பயத்தின் என்றான். (2) உயிர்புகும் சட்டகம் உழிதொறும் உழிதொறும் பழவினை புகுந்த பாடகம் போல முதிர்புயல் குளிறும் எழுமலை. (1) 2. பறவையைத் தொடர்ந்து அதன் நிழல் விடாமல் வரும். அதுபோல் வினையும் வினை செய்தாரை விடாமல் தொடர்ந்து வரும். - சீவகசிந்தாமணி : 2877 அறவிய மனத்த ராகி ஆருயிர்க் கருளைச் செய்யிற் பறவையும் நிழலும் போலப் பழவினை யுயிரோ டாடி மறவியொன் றானு மின்றி மனத்ததே சுரக்கும் பால கறவையில் கறக்கும் தம்மாற் காமுறப் பட்ட வெல்லாம். (2) 3. அல்லித்தண்டு அற்றுப் போன போதும் அதன் நூல் அறாமல் தொடர்ந்து வரும். அதுபோல் உடலில் இருந்து உயிர் நீங்கினாலும் ஊழ்வினை அதனை விடாமல் தொடரும். - சீவகசிந்தாமணி : 2876. அல்லித்தாள் அற்ற போதும் அறாதநூல் அதனைப் போலத் தொல்லைத்தம் உடம்பு நீங்கத் தீவினை தொடர்ந்து நீங்காப் புல்லிக்கொண் டுயிரைச் சூழ்ந்து புக்குழிப்புக்குப்பின் னின்று எல்லையில் துன்ப வெந்தீச் சுட்டெரித் திடுங்கள் அன்றே. (3) 4. போட்ட விதையே முளையாக வெளிவந்து வளர்வது போல், அவரவர் செய்த வினைப்பயன் ஒழியாமல் வந்து அவரை ஒட்டிக் கொள்ளும். - சிலப்பதிகாரம் : 10 : 171. ஓழிகென ஒழியா தூட்டும் வல்வினை இட்ட வித்தின் எதிர்ந்துவந் தெய்தி ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா. (4) 5. பொற்குடம் அழிக்கப்பெற்று, முடியாகச் செய்யுமளவும் பொன் னாகவே பயனின்றி இருந்து முடியாதும் பயன்படும்; அணிபவன் தகுதி இழந்ததும் தானும் தகுதி இழந்து பயன்படாது ஒழியும். அதுபோல், வினையும் வெவ்வேறு வகைப்பட்ட உயிர் களையும் பற்றி நின்று நுகரச் செய்து பின்னர் அகலும். - நீலகேசி : 312. பைம்பொன்செய் குடமழித்துப் பன்மணிசேர் முடிசெய்தால் செம்பொன்னா நிலையுதலும் சிதைவாக்கம் அவைபெறலும் நம்பொன்றிங் கிவைபோல நரர்தேவர் உயிர்களையும் வம்பென்று கருதனீ வைகலும்யாம் உரையாமோ? (5) 6. கார்காலத்தில் மழை நிரம்பப் பெய்த பின்னரும், கூதிர் காலத்திலும் விடாது பெய்யும். அதுபோல் முற்பிறப்பில் செய்த வினை பிற் பிறப்புக்களிலும் வந்து இன்ப துன்பங்களை ஊட்டும். - இன்னிலை : 6. அம்மை இழைத்த தலைப்பட் டழிவாயா இம்மையும் கொண்டுறுத்தும் ஈர்ம்பெயலாம். (6) 7. காற்று அடித்தலால் காற்றாடியும், சருகு முதலியவையும் இடம் பெயர்ந்து போகும். அதுபோல் உயிரில்லாப் பொருள் கூட ஊழ்வினைத் தொடர்புக்கு ஆட்பட்டு நிற்கும். - நீலகேசி : 307. கறங்குகளும் அல்லனவும் காற்றெறியத் திரியாவோ? (7) 8. நீரின் வழியே மிதவை செல்லும்; அதுபோல் ஊழின் வழியே உயிர்களின் போக்கு அமையும். - புறநானூறு : 192. வானம் தண்டுளி தலைஇ ஆனாது கல்பொரு திரங்கும் மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம். (8) 9. முன்னால் பிறருக்குக் கேடு செய்தவர் பின்னால் தமக்குக் கேட்டைத் தவறாமல் அடைவர். அது முன்னைச் செய்த வினையின் பயனைப் பின்னைத் தவறாது அடைவது போன்றது. - பெருங்கதை : 1 : 56 : 259. முற்பகல் செய்வினை பிற்பகல் உறுநரில் பார்வை நின்றும் பதுக்கையுட் கிடந்தும் ... ... ... ... ... வெங்கணை வாளியுள் விரிந்தனர். (9) 10. கதிரவன் தோன்றி வருவதால் காரிருள் அகலக் காண்பர். அதுபோல் நல்வினையைப் பேணி வருவோர் முன்னைச் செய்த தீவினை நலியக் காண்பர். - சூளாமணி : 1064. நள்ளிருள் இடையது நடப்ப வைகறை புள்ளிமிழ் இசையொடு புகுந்து போம்வழித் தெள்ளிய மதியவள் செய்த தீமைபோல் மெள்ளவே கனைஇருள் மெலிவு சென்றதே. (10) 11. ஒளி மிக்க பகற்பொழுது கழிந்ததும் காரிருள் வந்து கப்பிக் கொள்வது போல நல்வினை கழிந்ததும் தீவினை வந்து சூழ்ந்து கொள்ளும். - சூளாமணி : 1057. நல்வினை கழிதலும் நலியும் தீவினை செல்வதே போலிருள் செறிந்து சூழ்ந்தது பல்வினை மடிந்தன படர்ந்த தாயிடை வல்வினைக் கயவரே வழங்கும் கங்குலே. (11) 12. தீவினை என்னும் குழந்தை இரக்கமின்மை என்னும் செவிலி யால் வளர்க்கப் பெற்றுப் பிறப்பு என்னும் நோயில் அலமரும். - சீவகசிந்தாமணி : 3098. தீவினைக் குழவி செற்றம் எனும் பெயர்ச் செவிலி கையுள் வீவினை இன்றிக் காம முலையுண்டு வளர்ந்து வீங்கித் தாவினை இன்றி வெந்நோய்க் கதிகளுள் தவழும் ...... (12) 13. ஆடும் கூத்தர் போன்றது உயிர் வாழ்வு. கூத்தர் பல கோலங் கொண்டு ஆடுவது போலப் பலப்பல பிறப்புக்களிலும் பலப்பல உருவங்களைக் கொண்டு செய்வினையின்படி இயங்கும். - சிலப்பதிகாரம் : 28 : 165. ஆடுங் கூத்தர் போல் ஆருயிர் ஒருவழிக் கூடிய கோலத் தொருங்குநின் றியலாது செய்வினை வழித்தாய் உயிர் செலும். (13) 14. காற்றால் மோதப் பெற்ற முகிற் கூட்டம் சிதறி ஓடும். அதுபோல் தீவினைக் காற்றால், பற்றாக அமைந்த சுற்றமும் சூழலும் வெவ்வேறாகச் சிதறி ஓடும். - சீவகசிந்தாமணி : 2618. கடுவளி புடைக்கப் பட்ட கணமழைக் குழாத்தில் நாமும் விடுவினை புடைக்கப்பாறி வீற்றுவீற் றாயினல்லால் உடனுறை பழக்கமில்லை. (14) 15. பொற் கிண்ணத்தில் இருக்கும் நீராலும் ஒருவர் இறக்கக் கூடும். ஆழ்ந்து அகன்ற கடலில் வீழ்ந்த ஒருவரும் பிழைக்கக் கூடும். ஆதலால் ஊழ்வினையைப் பொறுத்தே உயிர் வாழ்வு அமையும் என அறியலாம். - சீவகசிந்தாமணி : 510. ஆடகச் செம்பொன் கிண்ணத் தேந்திய அலங்கல் தெண்ணீர் கூடகம் கொண்ட வாழ்நாள் உலந்ததேல் கொல்லும் பவ்வத்து ஊடகம் புக்கு முந்நீர் அழுந்தினும் உய்வர் நல்லார் பாடகம் போலச் சூழ்ந்த பழவினைப் பயத்தின் என்றான். (15) 16. நல்வினையாளன் நஞ்சு உண்டாலும் அமுதம் ஆகும். தீவினையாளன் அமுதம் உண்டாலும் நஞ்சு ஆகும்; இவை, தாம் செய்த வினையின் வண்ணமாம். - சீவகசிந்தாமணி 2314. நல்வினை யுடைய நீரார் நஞ்சுணின் அமுதம் ஆகும் இல்லையேல் அமுதும் நஞ்சாம் இன்னதால் வினையின் ஆக்கம். (16) 17. நல்வினை என்னும் குழந்தை, அருள் என்னும் அரிய செவிலியால் வளர்க்கப் பெற்றுத் தெய்வநிலை எய்தும். - சீவகசிந்தாமணி : 3099. நல்வினைக் குழவி நன்னீரத் தயாவெனும் செவிலி நாளும் புல்லிக்கொண் டெடுப்பப் பொம்மென் மணிமுலை கவர்ந்து வீங்கிச் செல்லுமால் தேவர் கோவாய். (17) 18. கொடை, ஒழுக்கம், துறவு, வழிபாடு என்னும் மனைவிமார் வழிப் பிறந்த நல்வினை என்னும் மகன் ஒருவனே வீட்டின்பம் சேர்க்கத் தக்கவன். - சீவகசிந்தாமணி : 1545. நற்றானம் சீலம் நடுங்காத் தவமறிவர் சிறப்பிந் நான்கு மற்றாங்குச் சொன்ன மனைவியரிங் நால்வரவர் வயிற்றுட் டோன்றி உற்றான் ஒருமகனே மேற்கதிக்குக் கொண்டுபோம் உரவோன் தன்னைப் பெற்றார் மகப்பெற்றார் அல்லாதார் பிறர்மக்கள் பிறரே கண்டீர். (18) 19. காய் முதிர்ந்து கனியானால் அது தானே கீழே விழும். அது போல் யாக்கையும் வினை முதிரவும் வீழ்ந்து விடும். ஆதலால் அதற்கு வருந்திப் பயன் இல்லை . - சீவகசிந்தாமணி : 1435. நோய்முதிர் குரங்கு போல நுகர்ச்சிநீர் நோக்கல் வேண்டா காய்முதிர் கனியின் ஊழ்த்து - வீழுமிவ் வியாக்கை இன்னே வேய்முதிர் வனத்தின் வென்றான் உருவொடு விளங்க நோற்றுப் போய்முதிர் துறக்கத் தின்பம் பருகுவ புரிமின் என்றான். (19) 20. ஆடை தீயால் வெந்து போகும் என அஞ்சி, அந்நெருப்பை ஆடைக்குள் பொதிந்து வைத்தால் எரிக்காது போகுமா? அது போல் எங்கே தப்பிச் சென்றாலும் பழவினைக்குத் தப்பி ஓட முடியுமா? - சீவகசிந்தாமணி : 1434. நுண்கில் வேதல் அஞ்சி நெருப்பகம் பொதிந்து நோக்கிக் கொண்டுபோய் மறைய வைத்தால் கொந்தழல் சுடாது மாமே கண்டத்தின் ஆவி யார்தாம் கடிமனை துறந்து காட்டுள் பண்டைச் செய் தொழிலிற் பாவம் பறைக்குற்றால் பறைக்க லாமே. (20) 21. பெருக்கெடுத்தோடும் வெள்ளம் ஆக்க வேலையும் செய்யும்; அழிவு வேலையும் செய்யும் ; அச்செயல், ஆக்கமும் கேடும் உலகத்து இயற்கை என்பதைக் காட்டும். - பெருங்கதை : 1 : 51:82. நிலைப்பரு நீள்நீர் நீத்திற் றாகி மாக்கடல் வரைப்பின் மன்னுயிர்க் கியன்ற ஆக்கமும் கேடும் சாற்றிய தொப்ப. (21) 22. ஆவதே ஆகும்; போவதே போகும்; இது மாற்றுதற்கு அரிய ஊழின் வண்ணமாம். உப்பு நீர்க் கடல் என்றும் உலகுக்கு நன்னீரைத் தருவது இல்லை; மேகம் இயல்பாகக் கொடுப்பதை அன்றி ஆறு வேண்டிக் கொண்டதற்காக உவர் நீரை மாற்றி நன்னீராக்கித் தருவதும் இல்லை. அவ்வவற்றின் இயற்கை அது. - சீவகசிந்தாமணி : 48. ஆம்பொருள்கள் ஆகுமது யார்க்குமழிக் கொண்ணாப் போம் பொருள்கள் போகுமவை பொறியின் வகை வண்ணம் தேம்புனலை நீர்க்கடலும் சென்றுதர லின்றே வீங்குபுனல் யாறுமழை வேண்டியது யாதே. (22) 23. நெய்யும் திரியும் தீர்ந்து போன அளவில் விளக்கு அணையும். அதுபோல் தான் செய்த நல்வினை தீர்ந்து போனால் செல்வமும் பொருளும் அழியும். - சீவகசிந்தாமணி : 2316. புரிமுத்த மாலைப் பொற்கோல் விளக்கினுட் பெய்த நெய்யும் திரியும் சென் றற்ற போழ்தே திருச்சுடர் தேம்பி னல்லால் எரிமொய்த்துப் பெருகல் உண்டோ இருவினை சென்று தேய்ந்தால் பரிவுற்றுக் கெடாமல் செல்வம் பற்றியார் அதனை வைப்பார். (23) 24. பொருள் போனவுடன், தான் வளைத்துக் கொண்டிருந்த ஆடவனைப் புறக்கணித்து விடுவாள் பொதுமக்கள். அதுபோல் ஆகூழ் அகன்றது ஆயின் பொருளும் விலகிவிடும். - சூளாமணி : 2084. புண்ணியம் உலந்தபின் பொருளிலார்களைக் கண்ணிலர் துறந்திடும் கணிகை மார்கள் போல் எண்ணிலள் இகழ்ந்திடும் யாவர் தம்மொடும் நண்ணிய நண்பிலள் நங்கை வண்ணமே. (24) 25. மருத்துவன் பிணியாளனுக்கு அறுவைக் கருவி கொண்டு அறுத்தும் சூட்டுக்கோல் கொண்டு சுட்டும் செய்யும் வினை, தீவினை போலக் காணப்படினும் நல்வினையேயாம். அதுபோல், நல்வினை, தீவினைகளைச் செயலைக் கண்ட அளவில் முடிவு கொள்ளாது செய்பவன் மனத்தைக் கொண்டே முடிவு செய்தல் வேண்டும். - நீலகேசி : 259. தீங்கொழுக் கென்ற தெல்லாம் தீவினை என்னல் வேண்டார். (25) 26. கொடுங் காற்றடிக்கும் நெடுவெளியில் வைக்கப் பெற்ற திரிவிளக்குப் போல், உயிரின் அழிவொடு வினை போகுமே அன்றி அதற்குமுன் ஒழியாது. - சிலப்பதிகாரம் : 10 : 174. கடுங்கான் நெடுவெளி இடும் சுடர் என்ன ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள். (26) 27. கையால் தடவித் தடவிக் கறக்கப் பசுவின் பால் ஊறி வருவது போல் வினை செய்யச் செய்யப் பிறப்புப் பெருகி வரும். - இன்னிலை : 7. தாமீட்டருவினைகள் தண்டா உடம்பொன்ற நாமீட் டொறுக் கொணா ஞாங்கர் அடித்தீம்பால் பிதுக்கப் பெயல் போல் பிறப்பு இறப்புப் போகா கதுப்போடு இறுத்தல் கடன். (27) 15. மெய்யுணர்வு 1. உலகத்து இருளை ஒழிக்க வல்லது ஞாயிறு. அதுபோல் மனமயக்கம் என்னும் அக இருளை அகற்றுபவனே மெய்யுணர் வாளன். - நீலகேசி : 462. அருளே உடையள் அறனே அறிவாள் தெருளா தவரைத் தெருட்டல் லதுவே பொருளா உடையாள் புலனே நிறைந்தாள் . இருள்தீர் சுடர்போல் எழுந்தாள் அவன்மேல். (1) 2. உயிர்களுள் ஏற்றத் தாழ்வு கருதாமல் எல்லா உயிர்களும் தம் உயிர் எனக்கருதுவர் அருளாளர். அவ்வாறே அவர்கள் கல்லும் ஓடும் பொன்னும் மணியும் ஒப்பான பொருள்கள் என்றே கொள்வர். - நீலகேசி : 40. நீறும் ஓடும் நிழல்மணியும் பொன்னும் நிகரா நோக்குவான். (2) 3. மயிர்க்கண் தோறும் தவறாது வெட்டினாலும், மலர் போலும் அடியில் வீழ்ந்து வணங்கினாலும் வைதலையும் வாழ்த்துதலையும் கொள்ளாமல் ஒப்பு நோக்கும் ஒரு தன்மையரே மெய்யுணர்வுப் பெரியர். - சீவகசிந்தாமணி : 2825. வாய்ச்சிவாய் உறுத்தி மாந்தர் மயிர்தொறும் செத்தி னாலும் பூச்சுறு சாந்தம் ஏந்திப் புகழ்ந்தடி பணிந்த போதும் தூக்கியவ் விரண்டு நோக்கித் தொல்வினை என்று தேறி நாச்செறு பராவு கொள்ளார் நமர்பிறர் என்றும் உள்ளார். (3) 4. மாற்றுயர்ந்த பொன் அழுக்குப் படிந்த கலத்தின் அகத்தே கிடப்பினும் தெளிவு உடையவர் அதனை மதித்துப் போற்றுவர். அதுபோல் புறத் தோற்றத்தால் அருவறுக்கத் தக்கவராக இருப்பினும் அகத்தே மாசு இல்லார் தெளிவுடைய வர்களால் மதிக்கப் பெறுவர். - நீலகேசி : 274. பொன்கொண்டார் ஆயினும் போர்வைபூச் செனில்புலையன் வன்கண்மையாற் செய்த வஞ்சமே எனவளைப்பர் தன் தன்மை யாகிய தான்பழிப்பார் தாமுளரோ. (4) 5. உயிர்க்கு இறுதி வரும் பொழுதிலும் அதனை நினைக் காமல், சுடர்விட்டு எரியும் விளக்கு நடுங்குவதுபோல் சிறிதும் நடுக்கம் இல்லாமல் நகைத்து நிற்பது மெய்யுணர் வாளர்க்கு இயல்பானதாம். - யசோதர காவியம் : 62. இடுக்கண்வந் துறவும் எண்ணா தெரிசுடர் விளக்கின் என்கொல் நடுக்கமொன்றின்றி நம்பால் நகுபொருள் கூறு கென்ன அடுக்குவ தடுக்கு மாயின் அஞ்சுதல் பயனின் றென்றே நடுக்கம தின்றி நின்றாம் நல்லறத் தெளிவு சென்றாம். (5) 6. வசை மொழியை இனிய சொல்லாகக் கொள்பவர், கூழை நெய்ச் சோறாகக் கருதி உண்பவர்,கைப்பு மருந்தினைக் கருப்புக்கட்டியாகத் தின்பவர் ஆகிய மூவரும் மெய்யுணர்வுத் திறத்தில் மேம்பட்டவர் ஆவர். - திரிகடுகம் : 48. வைத்தனை இன்சொல்லாக் கொள்வானும் நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானும் - ஊறிய கைப்பதனைக் கட்டியென் றுண்பானும் இம்மூவர் மெய்ப்பொருள் கண்டுவாழ் வார். (6) 7. சிறிதாகப் பெற்ற ஊதியத்தையும் மிகப் பெரிதாகக் கருதி நிறைமனம் உடையவர் மகிழ்வர். அதுபோல், உள்வாங்கும் ஒவ்வொரு மூச்சுக்கும் செலவாகும் சிறிதளவு வாழ்வைக் கூடத் தமக்கு ஊதியமான பெருவாழ்வாகக் கருதி நற்பணி புரிவர் மெய்யுணர்வாளர். - குண்டலகேசி :7. போதர உயிர்த்த ஆவி புகஉயிர்க் கின்ற தேனும் ஊதியம் என்று கொள்வர் உணர்வினான் மிக்க நீரார். (7) 8. காற்றுக் கடுக அடிக்கும்போது எரியும் விளக்கு நடுங்கி அசைந்து அணைந்து போகும். அவ்வாறே இடுக்கண் என்னும் காற்றின் வயப்பட்டு நடுங்குபவரும் எளிதில் அழிவர். இடுக்கணைக் கண்டு நகைத்து முன்னேறுபவர் இன்புறுவர். - சீவகசிந்தாமணி : 509. இடுக்கண்வந் துற்ற காலை எரிகின்ற விளக்குப் போல நடுக்கமொன் றானு மின்றி நகுகதாம் நக்க போழ்தவ் விடுக்கணை அரியும் எஃகாம் இருந்தழுதியவர் உய்ந்தார் வடுப்படுத் தென்னை யாண்மை வருபவந் துறுங்கள் அன்றே. (8) 9. கருவி செய்யும் கம்மாளர் உள்ளம் பிறவற்றை நினைக் காமல் தாம் செய்யும் கருவி ஒன்றனையே நினைக்கும். அதுபோல் ஐம்பொறிகளையும் புலன்களின் வழியே செல்லவிடாமல் தடுத்து நிறுத்துவர் மெய்யுணர்வாளர். - கல்லாடம் : 98. பகழிசெய் கம்மியர் உள்ளம் போல ஐம்புலக் கேளிரும் ஒரு வாய்ப் புக்கன. (9) 10. ஞாயிறு இருளைக் கெடுத்து உலகத்தைக் காப்பது போல, உலகமாந்தர் மனத்திருள் கெடுத்து அறக்கதிர் பரப்ப வல்லவனே முழுதுணர்ந்த அறவோன். - சீவகசிந்தாமணி : 3112. விண்ணின் மேல் மலர்மழை பொழிய வீங்குபால் தெண்ணிலாத் திருமதி சொரியத் தேமலர் மண்ணின் மேல் மழகதிர் நடப்ப தொத்ததே அண்ணலார் உலாய் நிமிர்ந்தளித்த வண்ணமே. (10) 11. மெய்யுணர்வு இல்லாத ஒருவன் மற்றொரு மெய்யுணர்வு இல்லாதானுக்கு வழி காட்டி வீட்டுலகம் சேர்ப்பேன் என்பது, குருடன் ஒருவன் மற்றொரு குருடனுக்கு வழி காட்டத் துணிவது போன்றதாம். - வளையாபதி : 69. அந்தகன் அந்தகற்கு ஆறுசொலல் ஒக்கும் முந்து செய் குற்றம் கெடுப்பான் முழுவதும் நன்கறி வில்லான் அஃதறி யாதவற்கு இன்புறு வீட்டின் நெறிசொல்லு மாறே. (11) 12. முதிர் பெருஞ் சான்றோர்களால் செய்யப் பெற்ற மெய் யுணர்வு நூலின் பொருட் சீர்மை சிறிதும் அறியாமல் ஒருவன் அதனைச் சிதைத்துப் பொருள் காண்பது, உயர்ந்த கிளைக்கண் அமைந்து முதிர்ந்த தேன் அடையினை வெறி கொண்ட விலங்கு ஒன்று சிதைத்து அழிப்பது போன்றது. - கல்லாடம் : 25. உளத்துநின் றளிக்கும் திருத்தகும் அருநூல் பள்ளிக் கணக்கர் பாற்பட்ட டாங்குக் குறிஞ்சிப் பெருந்தேன் இறாலொடு சிதைத்து மென்னடைப் பிடிக்குக் கைப்பிடித் துதவி யடிக்கடி வணக்கும். (12) 13. நல்ல பாம்பு அகமும் புறமும் தூயதாகத் தோல் உரிக்கும். அதுபோல் அகப்பற்றும் புறப்பற்றும் நீங்கப் பெறுவதே தவம் ஆகும். - சீவகசிந்தாமணி : 1546. படநாகம் தோலுரித்தால் போல் துறந்து. (13) 14. பாம்பு தன் உடற்கண்ணே ஒட்டியிருந்த தோலை உரிக்கும். அதுபோல் துறவிகளும் பற்று , ஆர்வம், கோபம் முதலியவற்றைக் களைந்து எறிதல் வேண்டும். - சீவகசிந்தாமணி : 3039. பற்றார்வம் செற்றம் முதலாகப் பாம்புரிபோல் முற்றத் துறந்து முனிகளாய் எல்லாரும் உற்றுயிர்க்குத் தீம்பால் சுரந்தோம்பி உள்ளத்து மற்றிருள் சேரா மணிவிளக்கு வைத்தாரே. (14) 15. நடக்கும்போது வழுக்கல் மிக்க களர் நிலத்தில் அகப்பட்டுக் கொண்ட மான்கூட வேடுவனுக்குத் தப்பி ஓடி விடும். அதுபோல் சுற்றத்துடன் கூடிய பற்றுதல் மிக்க வாழ்வில் இருந்தும் ஒருவன் தப்பிச் சென்று நன்னெறியில் சேரக்கூடும். - புறநானூறு : 193. அதளெறிந் தன்ன நெடுவெண் களரின் ஒருவன் ஆட்டும் புல்வாய் போல ஓடி உய்தலும் கூடுமன் ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே. (15) 16. வெண்ணிற ஆடையில் பட்ட குருதிக் கறையைக் குருதியால் கழுவிப் போக்கி விடமுடியாது. அதுபோல் பாவத்தைப் பாவத்தால் ஒரு நாளும் ஒழித்துவிட இயலாது. - சீவகசிந்தாமணி : 1433. வெண்ணிறத் துகிலின் ஆங்கண் வீழ்ந்துமா சாகி நின்ற ஒண்ணிற உதிரம் தன்னை உதிரத்தால் ஒழிக்க லாமே பண்ணிறக் கிளவி யார்தம் பசையினால் பிறந்த பாவம் கண்ணிற முலையி னார்தம் கல்வியால் கழிக்க லாமே. (16) 17. குருதியால் அமைந்த கறையைக் குருதியால் ஒழிக்க முடியாது. அதுபோல் பற்றினால் ஆகிய கறையை அக்கறை யாலேயே போக்க முடியாது. - வளையாபதி : 43. உற்ற உதிரம் ஒழிப்பான் கலிங்கத்தை மற்றது தோய்த்துக் கழுவுதல் என்னொக்கும் பற்றின் ஆகிய பாவத்தை மீட்டும் பற்றொடு நின்று பறைக்குறு மாறே. (17) 18. பெருகி எழும் நெருப்பை, நெய்யை ஊற்றுதலால் அவித்துவிட முடியாது. அதுபோல் ஆசையை ஆசையால் எவரும் அணைத்துவிட முடியாது. - குண்ட லகேசி : 5. வகையெழில் தோள்கள் என்றும் மணிநிறக் குஞ்சி என்றும் புகழெழ விகற்பிக் கின்ற பொருளில்கா மத்தை மற்றோர் தொகையெழுங் காதல் தன்னால் துய்த்தியாம் துடைத்து மென்பார் அகையழல் அழுவம் தன்னை நெய்யினால் அவிக்க லாமோ? (18) 19. ஆசை என்பது கொழுந்துவிட்டுப் பெருகி வளரும் தீ. அதனை மெய்யுணர்வு என்னும் நீரால் தான் அறவே இல்லாமல் அவிக்க முடியும். - குண்டலகேசி : 6. 20. பெருகிவரும் வெள்ளத்தை மற்றொரு வெள்ளத்தால் தடுக்க இயலாது. அதுபோல் ஆசைப் பெருக்கை மற்றோர் ஆசைப் பெருக்கால் தடுக்க இயலாது. - குண்டலகேசி : 6. அனலென நினைப்பில் பொத்தி அகந்தலைக் கொண்ட காமக் கனலினை உவர்ப்பு நீரால் கடையற அவித்தும் என்னார் நினைவிலாப் புணர்ச்சி தன்னால் நீக்குதும் என்று நிற்பார் புனலினைப் புனலினாலே யாவர்போ காமை வைப்பார். (19, 20) 21. பொருத்தப்பட்ட மூட்டு வாயை அறுக்கப் பிணிப்பு விடும். அதுபோல் பற்று என்னும் மூட்டு வாயை அறுக்கப் பிறப்பு என்னும் பிணிப்பு விடும். - இன்னிலை : 7. பிறப்பு இறப்புப் போகா, கதுப்போடு இறுத்தல் கடன். (21) 22. மனம் என்னும் இல்லத்தில், ஆசை என்னும் பேய் குடிகொண்டு 'அது வேண்டும்' 'இது வேண்டும்' என்னும் வேட்கையாம் கத்தியால் ஓயாமல் குத்தி அலைக்கப் பெறும் ஒருவன், தூயவனாக இருப்பது அரிதே. - நீலகேசி : 260. கத்திகொண் டில்லில் வாழ்பேய் கால்தலை வேறு செய்து குத்துவதின்னும் போழ்தில் கூடுமோ நன்மை யேடா. (22) 23. ஒரு கால் செய்த உழவு முதலிய செயல்களாலே நெல் முதலியன விளையும். விளைந்த அந்நெல் முதலியனவே மீண்டும் உழவு முதலியன செய்வதற்குக் காரணமாம். அதுபோல் வினை யால் பயனும், அப்பயனால் மீண்டும் வினையும் மாறிமாறித் தோன்றும். - நீலகேசி : 597. செய்கையினால் துப்பு மாக்கியத் துப்பினால் செய்கையும் ஆம்வகை செப்பு வித்தேன். (23) 24. உண்டு கக்கிய சோற்றைக் கண்டதும் வெறுப்பு உண்டா வது போல், நிலையாத உலக வாழ்வு கருதிய நிலைத்த மெய் யுணர்வுச் சான்றோர், ஐம்புல இன்பங்களில் கருத்துச் செலுத்த மாட்டார். - கம்பர், அயோத்தியா கண்டம் : 28. கச்சையங் கடக்கரி கழுத்தின் கண்ணுறப் பிச்சமும் கவிதையும் பெய்யும் இன்னிழல் நிச்சயம் அன்றெனின் நெடிது நாள்உண்ட எச்சிலை நுகருவதின்ப மாவதோ? (24) 25. தம் பொருள்களைப் போகவிடாமல் காக்க விரும்பு பவர், வீட்டுக்கதவினைத் திறந்து போடாமல் அடைத்து வைப்பர். அதுபோல் ஐம்பொறிகள் என்னும் வாயில்களைத் தக்கவாறு அடைத்துக் காப்பவன் அரிய ஆற்றலைப் பெற்று இன்புறுவான். - சூளாமணி : 2112. செறிவெனப் படுவ மூன்று செழுமதில் செறியச் செய்து பொறியெனும் வாயில் ஐந்து பொற்கதவடைத்து மாற்றி அறிவமை சிந்தை யின்மாட் டகம்படி உழையர் ஆக்கிக் கறையிலர் அறுவர் நிற்ப இறைவராக் காக்க வைத்தாள். (25) 26. பகையை வேரற அறுக்க விரும்பியவர் அவரின் அரணையும் காவற் காட்டையும் அழிப்பர். அதுபோல் அகப் பகையை அழிக்க முனைந்த முனைவரும் நான்' 'எனது' என்னும் செருக்குகளாகிய அரண்களையும், மெய், வாய், கண், மூக்கு, செவி இவற்றால் உண்டாகிய ஆசை என்னும் காவற் காடுகளை யும் அழித்து வெற்றி கொள்வர். - சூளாமணி : 2115. தருக்கெயில் காப்பு வாங்கத் தடக்கைமால் பகடு நுந்தித் திருக்கிளர் குணமேற் சேடிச் செழுமலைக் குவட்டின் ஒட்டி முருக்கிய உருவு வேட்கை முனைப்புலம் அகற்றி முற்றிச் செருக்கிய வினைவர் வாழும் திண்குறும் பழிக்க லுற்றான். (26) 27. மயக்கம் செய்யும் ஐம்பொறிகளின் போராட்டத்தையும் ஒடுக்கிக் காக்கவல்லது ஒழுக்கமேயாம். அவ்வொழுக்கம் போர்க் களத்தில் பகைவரால் தாக்கப் பெறாமல் வீரரைக் காக்கும் கவசம் போன்றது. - சீவகசிந்தாமணி : 2819. மொய்யமர் ஞாட்பினுள் முரண்கொள் மன்னவர் மெய்புகு பொன்னணி கவசம் ஒப்பன மையலைம் பொறிமதம் வாட்டி வைகலும் செய்வினை நுணுக்குவ சீலம் என்பவே. (27) 28. கால் தடம் நிலத்திடை அழுந்தாமல் மெல்லென நடக்கும் நடை, முன்னைச் செய்த தவத்தின் குறையை முடிக்கப் பிறந்தவர், உலகியலில் அழுந்தி நிற்காமல் பட்டும் படாமலும் பற்றற்று வாழ்வது போன்றது. - கல்லாடம் : 45. செய்குறை முடிப்பவர் சென்னம் போலப் பதமலர் மண்மிசைப் பற்றிப் படர்ந்தன. (28) 29. முத்து மாலையின் இடையே நூல் ஒன்று இருந்து முத்துக்களை இணைத்து வைக்கும். அது போல் உடலின் அகத்தே இருந்து அதனை இயக்குவிக்கும் உயிர் உள்ளது. - நீலகேசி : 201. பேசினை நீ உளதெனினும் பெருந்தாமத் துண்ணூல்போ லோசனையில் நெடியதோர் உயிருரைத்தாய் ஆகாயோ? (29) 30. விழாப் போழ்தில் ஒப்பனை செய்து கொண்டு கூத்தர் ஆடுவர். ஓர் ஆட்டம் முடிந்ததும், வேறோர் ஆட்டத்திற்கு வேண்டிய ஒப்பனை செய்து கொண்டு ஆடுவர். இவ்வாறு புதுப்புதுக் கோலங்களில் தோன்றி ஆடுவது அவர்க்கு இயல்பு. அதுபோல் உயிர்கள் வெவ்வேறு பிறப்புக்கள் எடுத்து வாழ்ந்து இறந்து போகின்ற தன்மையது உலகம். - புறநானூறு : 29. விழவில், கோடியர் நீர்மை போல முறைமுறை ஆடுநர் கழியுமிவ் வுலகம். (30) 31. பேதைமை, வித்து; வினைகள், மரங்கள் ; வேட்கை , வேர்; காதல் களிப்பு, கவடுகள்; அவலம், பூ, இடும்பை , காய்; இறப்பு, கனி; - இத்தன்மையது வாழ்வு. - சீவகசிந்தாமணி : 1389. பேதைமை என்னும் வித்தில் பிறந்து பின் வினைகள் என்னும் வேதனை மரங்கள் நாறி வேட்கைவேர் வீழ்த்து முற்றிக் காதலும் களிப்பு மென்னும் கவடுவிட் டவலம் பூத்து மாதுயர் இடும்பை காய்த்து மரணமே கனிந்து நிற்கும். (31) 32. வண்டு சென்ற வழியும், மீன் சென்ற வழியும் மாந்தர் தம் கண்களால் தடம் கண்டு பிடிக்க முடியாமல் அழிந்து போகும். அதுபோல் உயிரின் பிறப்பு வழியும் இறப்பின் வழியும் வெளிப்படத் தோன்றாது அழிந்துபோம். - சீவகசிந்தாமணி : 1390. தேன்சென்ற நெறியும் தெண்ணிரச் சிறுதிரைப் போர்வை போர்த்து மீன்சென்ற நெறியும் போல விழித்திமைப் பவர்க்குத் தோன்றா மான்சென்ற நோக்கின் மாதே மாய்ந்துபோ மக்கள் யாக்கை ஊன்சென்று தேயச் சிந்தித் துகுவதோ தகுவ தென்றாள். (32) 33. காலையில் எழுந்து ஒளியினை உலகுக்குக் காட்டி மாலையில் மறைந்து போகும் ஞாயிற்று மண்டிலம் போல் நிலைபேறின்றிச் செல்வது செல்வப்பொருள். - கல்லாடம் : 20. எழுந்து காட்டிப் பாடுசெய் கதிர்போல் தோன்றி நில்லா நிலைப்பொருள். (33) 34. பிறப்பு இறப்பு பெருக்கம் அறிவு என்பவற்றையே தன் வாழ்வாகக் கொண்டது திங்கள். இது மாந்தர் எண்ணி அறிதற் குரிய அரிய எடுத்துக்காட்டாம். - சீவகசிந்தாமணி : 2932. மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்கலும் தேய்தலும் உடைமையைத் திங்கள் செப்புமால். (34) 35. களிற்றின் மருப்பிடையில் வைக்கப் பெற்ற கவளம் அதனால் உண்ணப்பட்டுக் கெடுவது உறுதி ; அதுபோல், பிறப்பும் கூற்றுவனால் ஒருநாள் உண்ணப்பட்டு அழிவதும் உறுதியே. - சீவகசிந்தாமணி : 3017. காய்களிற்றின் இடைமருப்பிற் கவளம் போன் ஹேமாராக் கதியுட் டோன்றி ஆய்களிய வெவ்வினையின் அல்லாப்புற்று அஞ்சினேன் அறிந்தார் கோவே. (35) 36. தம் உடலில் தோன்றிய புண்கட்டியை ஒழிக்க மாந்தர் எடுத்துக் கொள்ளும் முயற்சி போலப் பாவம் என்னும் பிறவிக் கட்டியை ஒழித்து விடும் முயற்சியை மேற்கொள்வர் பெரியர். - சீவகசிந்தாமணி : 281. மெய்ப்பாடு முதுபுண் தீர்ப்பான் மேலிய முயற்சி போல ஒப்புடைக் காமம் தன்னை உவர்ப்பினோடு ஒழித்துப் பாவம் இப்படித் திதுவென் றஞ்சிப் பிறவிநோய் வெருவினானே. (36) 37. தென்கடலில் போடப்பட்டதொரு நுகக்கழி, வட கடலில் போடப்பட்ட நுகத்தை அடைந்து பொருந்திக் கொண்டது போன்றது , பலப்பல பிறப்புகளில் சேராமல் ஓருயிர் மானிடப் பிறவியை அடைவது. - சீவகசிந்தாமணி : 2749. பரவை வெண்டிரை வடகடல் படுநுகத் துளையுட் டிரைசெய் தென்கடல் இட்டதோர் நோன்கழி சிவணி அரச வத்துளை அகவயிற் செறிந்தென வரிதால் பெரிய யோனிகள் பிழைத்திவண் மானிடம் பெற்லே. (37) 38. உயிர்களின் பிறப்பும், இறப்பும், உறங்குவதையும் விழிப்பதையும் ஒப்பன. - மணிமேகலை : 16:86. பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின். (38) 39. பாதிரிப் பூ, அப் பூ வைக்கப் பெற்ற பானைக்கும், அப்பானை யில் விடப் பெற்ற நீருக்கும் மணம் தருவது போல, ஓர் உடம்பு ஒழிய அவ் வுடம்பில் இருந்த உயிர் மற்றோர் உடற்கண் புகும். - நீலகேசி : 202. பாதிரிப்பூப் புத்தோடு பார்ப்பினுந்தான் பல்வழியும் தாதுரித்தாங் கேடின்மை யென்பது நுன் தத்துவமோ போதுரைத்த ஓடுநீர் போலுடம்பு பொன்றிடினும் மூதுரைத்த வாசம் போல் முடிவுயிர்க்கே ஆகாதோ . (39) 40. வித்தில் இருந்து முளையும், அம்முளையில் இருந்து கிளையும் தோன்றுவது போலத் தொடர்ந்து பிறப்புக்கள் மாறிமாறித் தோன்றும். - நீலகேசி : 573. வித்தின் வழிவழித் தோன்றும் முளைகிளை சத்தியின் ஆயசந் தானத்தை மாற்றென்பேன். (40) 41. துலாக்கோலின் பிடிப்பகுதி கையில் நிலைத்து இருக்க, அதன் தட்டுப் பகுதியில் ஒன்று ஏற மற்றொன்று இறங்கும். அதுபோல் உயிர் நிலையாய் இருக்க அது தங்கிய உடலுக்கு ஏற்ற இறக்கத் தோற்ற அழிவுகள் உண்டு. - நீலகேசி : 36. கோல்திரள் ஒன்றாய் அதன்தலைக் கேயுடன் ஆற்றியும் ஓக்கமும் நாட்டினை அஃதொப்பத் தோற்றமும் கேடும் தொகுபிண்ட மொன்றிற்குச் சாற்றுதி யாய்விடில் தக்கதென் னேனோ. (41) 42. பிறப்பின் சுழற்சி பெரிது. அது விரைந்து சுழலும் காற்றாடி யையும், வண்டிச் சக்கரத்தையும், நெடுங்கயிற்று ஊசலையும், சுழற்காற்றையும், பேய்த்தேரையும் விஞ்சிச் சுழலும். - கல்லாடம் : கடவுள் வாழ்த்து : 1. கால் முகம் ஏற்ற தொளை கொள் வாய்க்கறங்கும் விசைத்த நடை போகும் சகடக் காலும் நீட்டிவலி தள்ளிய நெடுங்கயிற் றூசலும் அலமரு காலும் அலகைத் தேரும் குறைதரு பிறவி. (42) 43. ஊஞ்சல், ஒருபால் வந்தும் போயும் ஆடிக்கொண்டு இருப்பதுபோல் உயிர்களுக்குப் பிறப்பும் இறப்பும் வந்து போவதாய் உள் . - கல்லாடம் : 13. செறிபிறப் பிறப்பென இருவகை திரியும் நெடுங்கயிற் றூசல். (43) 44. ஆயிரத்தெட்டு நரம்புகளைக் கொண்டது பேரியாழ். அவ் யாழ் நரம்புகளின் வழியே வெளிவரும் பல வகை இசை ஒலிகள் உயிரின் பலவகைப் பிறப்புக்களை ஒப்பாவன. - கல்லாடம் : 2. ஆயிரத் தொட்டில் அமைந்தன பிறப்புப் பிறவிப் பேதத் துறையது போல ஆரியப் பதங்கொள் நாரதப் பேரியாழ். (44) 45. முன்னர் உடுத்த உடை அழுக்கு ஆகியதும் அதனைக் களைந்து விட்டு வேறு உடை உடுப்பது போன்றது ஓர் உடலை விட்டு நீங்கிய உயிர் வேறுடலை அடைவது. - யசோதர காவியம் : 44. 46. குடியிருந்த ஒரு வீட்டைக் காலி செய்து, தனக்கு வாய்ப்பெனக் கருதும் பிறிதொரு வீட்டில் ஒருவன் குடியேறுவது போல் ஓர் உடம்பில் நின்று நீங்கிய உயிர் அதன் வினைக்குரிய வேறோர் உடலை அடையும். - யசோதர காவியம் : 44. ஆடைமுன் னசைஇய திட்டோர் அந்துகில் அசைத்தல் ஒன்றோ மாடமுன் அதுவி டுத்தோர் வளமனை புகுதல் ஒன்றோ நாடினெவ் வகையு மஃதே நமதிறப் பொடுபி றப்பும் பாடுவதினியென் தங்கை பரிவொழிந்திடுக என்றான். (45, 46) 47. ஓடும் வண்டிச் சக்கரம், வீசி எறியும் வளையம், காற்றால் இயங்கும் அணு ஆயவை எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கும். அவற்றைப் போலவே பிறவிகளும் பலவாகச் சுழன்று வரும். - சூளாமணி : 1922. ஓடும் சகடத் துருளும் ஒளிகொள டில் ஒருவன் விசிறும் வளையமும் ஆடும் துகளும் எனச் சுழன் றாருயிர் நாடும் கதியவை நான்குள கண்டாய். (47) 48. கருப்பஞ்சாறு விட்டுச் சேர்த்த சாந்தினால் செய்யப்பட்ட மண் பதுமைகள், அக் கரும்புச் சாற்றின் ஆற்றல் அழிந்த வழிச் சிதைந்து போகும். அதுபோல் உயிர் நீங்கிய வழி உடலும் அழிந்து போகும். - நீலகேசி. 310. எப்பொருளும் ஒன்றொன்றிற் கிடம் கொடுத்த இரும் புண்ணிர் புக்கிடங்கொண் ட்டங் குதலே போலவும் தந்தை தாய் சுக்கிலமும் சோணிதமும் தழீஇச் சுதையுள் நெய்யனைத் தாய் ஒத்துடம்பின் அகத் தடங்கி உடன்பெருகும் என உரைத்தாள். (48) 49. ஓர் இல்லத்தே புகுந்து வாழ்ந்திருக்கும் ஒரு குடும்பத் தாருள் ஒருசிலர் வெளியே செல்வதும் மீண்டு வருவதும் கண்டு அவருடைய மக்கள் தாயர் முதலியவர் வெகுண்டு அஞ்சார். அதுபோல் மெய்யுணர்வு உடையவர் பல்வேறு பிறப்புக்களையும், அவற்றில் பட்டுழலும் உயிர்களின் இயல்பையும் கண்டு அஞ்சார். - நீலகேசி : 70. புக்கிருந் தொருமனை உறைவார் போவதும் வருவதும் கண்டால் மக்களும் தாயாரும் தம்முள் மருள்வதும் வெருள்வதும் உளதோ மிக்கபல் கதிகளும் உயிரின் மெய்ம்மையும் உணர்ந்தவர்க் கரிதே. (49) 50. கடல் நீர், காற்றைப் போல் கப்பலை இயங்கச் செய்யாது எனினும் கடல் நீர் இல்லையேல் கப்பல் இயங்காது. அதுபோல் உயிரும் உடம்பும், இயங்குகாரணமும் நிலைக்காரணமும் இல்லாமல் இயங்கா. - நீலகேசி : 293. கலம் செல்லும் கடலதனைக் காற்றேபோல் உந்தாதாம். (50) 51. விளைநிலத்தை உழும் மாந்தர், அடுத்த ஆண்டுக்கு வேண்டிய வித்தினை விளையும் பொழுதிலேயே எடுத்து வைத்துக் கொள்வர். அதுபோல் வரும் பிறவிக்கு நலமூட்டும் அறவித்தினை அறிவுடையோர் தவறாமல் தேடிக்கொள்ளுதல் வேண்டும். - வளையாபதி : 41. இளமையும் நிலையாவால் இன்பமும் நின்றவல்ல வளமையும் அஃதேபோல் வைகலும் துன்பவெள்ளம் உளவென நினையாதே செல்கதிக் கென்று மின்றும் விளைநிலம் உழுவார் போல் வித்து நீர் செய்துகொண்மின்.(51) 52. நோயையும், நோய்க் காரணத்தையும், நோய்க்கு ஏற்ற மருந்தினையும் அறிந்து மருந்துண்டால்தான் நோய் தீரும். அது போல் பிறப்பையும், அதன் காரணத்தையும் அறிந்து, பிறவியைத் தீர்க்கும் மருந்தாம் அறவோர் உரையை உட் கொண்டால் தான் பிறவிப்பிணி அகலும். - நீலகேசி : 723 நோயைத் தனித்தே உறுநோய் முதல் நாடி அந்நோய்க்கு ஆயமருந்தே அறிந்தூட்டும் அஃதுண்டு காட்டிற் பாயமறுக்கும் படியாமது பல்லுயிர்க்கும் கூயத்தின் என்னை குரவர் உபதேச மென்றாள். (52) 53. பிறவி என்பது பெருங்கடல். அதனைக் கடக்க நினைப் பவர் இறைவன் அடியார் என்னும் மிதப்பைப் பற்றிக் கொள்ளுதல் வேண்டும். - மணிமேகலை : 11 : 23. அறவியங் கிழவோன் அடியிணை ஆகிய பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம் அறவி நாவாய் ஆங்குளது. (53) 54. எல்லா உயிர்களும் தம் வாழ்வு நாள் எத்துணை?' என்பது பற்றிய எண்ணத்திலேயே இருப்பது போல, மனந்தூய பெருமக்கள் இறையருள் ஒன்றையே நோக்கி இருப்பர். - குண்ட லகேசி : 3. வாயுவினை நோக்கியுள மாண்டவய நாவாய் ஆயுவினை நோக்கியுள வாழ்க்கை யதுவேபோல் தீயவினை நோக்குமியல் சிந்தனையும் இல்லாத் தூயவனை நோக்கியுள துப்புரவு மெல்லாம். (54) 55. ஓர் இடத்தை விட்டுச் சென்றோர் வேறோர் இடத்தை அடைவர். அதுபோல் உடம்பை விட்டு ஓடிய உயிருக்கும் மற்றொரு தங்குமிடம் உண்டு. - மணிமேகலை : 16: 100. போனார் தமக்கோர் புக்கிலுண் டென்ப தியானோ அல்லேன் யாவரும் உணர்குவர் உடம்பிண் டொழிய உயிர்பல காவதம் கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை யாங்கனம் போகி அவ்வுயிர் செய்வினை பூண்ட யாக்கையில் புகுவது தெளிநீ. (55) 56. நாம் வெட்டி அழிக்க விரும்புபவற்றை வாள் என்னும் கருவி கொண்டு அழிக்கிறோம். அதுபோல் உயிர்க் குற்றங்களை அழிக்க விரும்புவார் இறைவனை உண்முகமாக நோக்கும் ஒருமித்த உணர்வால் அழிக்கலாம். - சூளாமணி : 2116. குறைவிலாத் தியானம் என்னும் கொற்றவாள் உருவிக் கொண்டான். (56) 57. மரக்கலம் தன் செலவுக்குத் துணை செய்யும் காற்றை எதிர்பார்த்து இருக்கும். அதுபோல் வீட்டின்பம் நாடிய பெரு மக்கள் இறையருளை எதிர் நோக்கி இருப்பர். - குண்டலகேசி :3. வாயுவினை நோக்கியுள் மாண்டவய நாவாய் .... ..... ...... தூயவனை நோக்கியுள துப்பரவு மெல்லாம். (57) 58. நெய்தல் தொழிலுக்குப் பயன்படும் நாழிகை என்னும் கருவி அங்கும் இங்கும் சென்று அலமரும். அதுபோல் இறைவன் அடியை எய்தா உயிரும் அலமரும். - சீவகசிந்தாமணி : 3019. நின்னை அமராதார், வெய்ய வெந்நோய் வினை உதைப்ப வீழ்ந்து துன்பக் கடல் அழுந்தி நெய்யு நுண்ணுனாழிகையின் நிரம்பா நின்று சுழல்வாரே. (58) 59. உலகத்து உயிர்களையெல்லாம் படைத்த ஒரு தனி முதல்வன் , அவ்வுயிர்த் தொகைகளை எல்லாம் தன்னிடத்தே ஒடுக்கிக் கொள்வது, கதிர்களால் உலகுக்கு ஒளியூட்டிய ஞாயிறு அக்கதிர்களை மீண்டும் தன்னிடம் வாங்கிக் கொள்வது போன்றது. - கலித்தொகை : 129. தொல்லூழி தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தால் பல்வயின் உயிரெல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் போல் எல்லுறு தெறுகதிர் மடங்கித்தான் கதிர்மாய. (59) 60. புகழ்மிக்க மன்னவன் தன் சால்பினாலும், நன்னெறிகளாலும் உலகத்து உயிர்களைக் காத்துப் பின்னர்த் தன் பிறவிப் பயனாம் வீட்டை அடைந்தால் போன்றது, பல்லாயிரம் ஒளிக் கதிர்களால் பகற்பொழுதை உண்டாக்கி உலகைக் காத்த கதிரோன் மறைவு. - கலித்தொகை : 118. வெல்புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்தால் நல்லாற்றின் உயிர்காத்து நடுக்கத் தான்செய்த தொல்வினைப் பயன்துய்ப்பத் துறக்கம் வேட் டெழுந்தாற்போல் பல்கதிர் ஞாயிறு பகலாற்றி மலை சேர. (60) 61. நெய்க் கடலில் இடப்பெற்ற திருவிளக்கு நெடுங்காலம் கெடாமல் எரியும். அதுபோல் இறைவன் அடியை எய்தியவர் பேராப் பெருநிலை பெற்றுப் பொலிவுடன் விளங்குவர். - சீவகசிந்தாமணி : 3020. அழுது வினைகள் அல்லாப்ப அறைந்தோய் நின்சொல் அறைந்தார்கள் . பழுதில் நறுநெய்க் கடற்சுடர்போல் பல்லாண் டெல்லாம் பரியாரே. (61) 62. யானையின் பிடரியில் இருந்து தோட்டியால் ஈர்த்துத் தக்க வழியில் அதனைப் பாகர் செலுத்துவர். அதுபோல் அறிவு என்னும் யானையின் பிடரியின்கண் அமர்ந்து, மெய்யுணர்வு என்னும் தோட்டியால் செலுத்த வல்ல அறவோர் ஈறிலா இன்பநிலை எய்துவர். - சூளாமணி : 2114. பின்னிய யோகு நான்மை அபரகாத்திரம் பெற் றேனைத் தன்னவயவங்கண் முற்றித் தயங்குநூல் மனங்கள் ஓவா துன்னிய திசையின் உய்க்கும் உணர்வெனும் வயிரத் தோட்டி இன்னியன் ஞான வேழத் தெழிலெருத் தேறினானே. (62) 63. யானையை எதிர் நோக்கித் தாக்க நிற்கும் சிங்கம் எலியைத் தாக்க நினைக்காது. அது போல் வீட்டின்பத்தை எதிர் நோக்கி இருப்பவரும் வேறின்பத்தைக் கருதுவது இல்லை. - சீவகசிந்தாமணி : 2985. கொல்சின யானை பார்க்கும் கூருகிர்த் தறுகண் ஆளி இல்லெலி பார்த்து நோக்கி இறப்பின் கீழ் இருத்தல் உண்டே பல்வினை வெள்ளம் நீந்திப் பகாவின்பம் பருகின் அல்லால் நல்வினை விளையுள் என்னும் நஞ்சினுள் குளித்தல் உண்டே. (63) 64. யானை வேட்டைக்குச் செல்பவன் அதனைப் பெறவும் கூடும்; சிறுபறவை வேட்டைக்குச் செல்பவன் அதனைப் பெறாமல் மீளவும் கூடும்; நல்வினை செய்தோர் பிறவாப் பேரின்பம் அடையவும் கூடும்; மீண்டும் பிறக்கவும் கூடும். எஃது எவ்வா றாயினும் சரி, இம்மையில் மலைக் குவட்டைப் போல நிலை பெறும் புகழ் எய்துதல் உறுதி. - புறநானூறு : 214. யானை வேட்டுவன் யானையும் பெறுமே குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச் செய்வினை மருங்கில் எய்தல் உண்டெனில் தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும் தொய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனில் மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும் மாறிப் பிறவார் ஆயினும் இமயத்துக் கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே. (64) 65. உயிர் போகுங் காலத்தில் ஒரு நொடியளவில் உதிரம் மறைந்து போகும். அதுபோல் இறைவன் அடியை எய்துங் காலத்தில் இருவினையும் மறைந்து போம். - சீவகசிந்தாமணி : 3079. செழுமலர் ஆவி நீங்கும் எல்லையில் செறிந்து காயம் கழுமிய உதிரம் போல இமைப்பினுள் கரந்து நீங்கக் கொழுமலர்க் குவளைக் கண்ணிக் கூற்றுயிர் உண்ப தேபோல் விழுமிய தெவ்வர் வாணாள் வீழ்ந்துக் வெம்பினானே. (65) 66. சுழியிடைப் படினும் மிதவை கீழே செல்லாமல் மேலேயே மிதக்கும். அது வினை தீர்ந்த உயிர் , சுழற்சியுடைய உலகில் நின்று மேலே ஏறிச் செல்லுவது போன்றது. - பெருங்கதை : 40: 186. நிலையின்றுழிதரும் நெடுஞ்சுழி நீத்தத்து வினைதீர் உயிரின் மிதந்தது கீழாப் பண்ணமை நெடும்புணை திண்ணிதில் தழீஇ (66) 67. கருப்பை , நிலம்; குழந்தைப் பருவம், நாற்று; காளைப் பருவம், கதிர், முதுமை, அறுவடை ; இத்தகைய மக்கட் பயிர்க்குத் தீவினையே, அழிவு செய்யும் விலங்கு, அவ்விலங்கு அழிக்காமல் காக்க ஒழுக்கம் என்னும் வேலியிட்டுக் கொள்ளுதல் வேண்டும். - சீவகசிந்தாமணி : 379. பவழவாய்ச் செறுவு தன்னுள் நித்திலம் பயில வித்திக் குழவிநா றெழுந்து காளைக் கொழுங்கதிர் ஈன்று பின்னாக் கிழவுதான் விளைக்கும் பைங்கூழ் கேட்டிரேல் பிணிசெய் பன்மா உழவிர்காண் மேயும் சீல வேலியுய்த்திடுமின் என்றான். (67) 68. ஒருப்பட்ட முயற்சி என்னும் ஏர் பூட்டி, உடலாகிய நிலத்தைப் பற்றறுத்தலால் பண்படுத்தி, நோன்பாகிய நெல் விதைத்து, ஒழுக்கமாகிய நீரைப் பாய்ச்சி ஐம்பொறி அடக்க மாகிய வேலியிட்டுக் காத்தால் அஃதின்ப உலகை நல்கும். - சீவகசிந்தாமணி : 962.