உவமைவழி அறநெறி விளக்கம் (நீதி நூல்கள்) 1 செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் நூற்குறிப்பு உவமை ஆவணம் மழைநாள் : மலை சார்ந்த காடு, செடிகள் தூறுகள் புல்வெளி எனப் பச்சைப் போர்வை பரத்திய அழகு. தொழுவத்தில் இருந்து ஆயன் தன் ஆக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிக் கொண்டு காட்டுக்குச் சென்றான். பசுக்கள் ஆர்வமாய்ப் புல் மேய்ந்தன. மழை மின்னல் இடிகளால் நிலம் குளிர்ந்து, அங்கும் இங்கும் காளான் முளைத்துக் கிடந்தன. நிலத்திற்குக் குடைப்பிடித்து நிற்பது போல் நின்றன! மேயும் மாட்டின் கால் நகரும்போது, கல் புரள்கிறது; கால் பதிந்து நிலம் குழியாகிறது; புல் மிதிபடுகிறது; புதிது தோன்றி வெண்குடையாக நின்ற காளானும், பசுவின் காலில் பட்டு நிலைபெயர்கின்றது; தலைசாய்கின்றது; நொறுங்கியும் போகின்றது! ஆயனுக்கு வழக்கமாகிப் போன காட்சி அவனை அக்காட்சி கவர்ந்து விடவில்லை! அவன் தொழில் மேய்ச்சல். ஆனால், அக் காட்சியை இன்னொருவர் காண்கிறார். அவர் நல்ல சிந்தனையாளர், புலமைத் தோன்றல்; படைப்பு வல்லார். அவர் பெயர் பொய்கை யார்! அவர்க்குப் பசுவின் காலடியில் பட்டுக் குடைசாய்ந்து போகும் காளான் காட்சி, கண்ணைவிட்டு அகலவில்லை! பின்னொரு நாள் : ஒரு போர்க்களம் ; மானமே உயிரென வாழ்ந்த சேரமான் கணைக்கால் இரும்பொறை என்பானுக்கும் சோழன் கோச்செங்கணான் என்பானுக்கும் நிகழ்ந்த போர்க்களம். சேரமான் மேல் அளவற்ற அன்பும் பற்றுமையும் உடையவர்தாம் புலவர். ஆனால், சோழன் யானை செய்த வீறுமிக்க செயலைக் கண்டது கண்டவாறு கூற அவர் தயங்கவில்லை. சோழன் யானை, அச்சோழனுக்கு மாறாக நின்றவர் தூக்கிப் பிடித்திருந்த வெண்கொற்றக் குடைகளையெல்லாம் எற்றி எற்றித் தள்ளின. எளிமையாக - இயல்பாக - அக்குடைகள் சாய்ந்தன, உருண்டன; சிதைந்தன. புலவர் பொய்கையார் பார்வை, முன்னோக்கிச் சென்றது ! ஆயன் பசு காளானை எற்றித் தள்ளிய காட்சி முன்னே நின்றது ! யானை குடையை எற்றும் காட்சி பின்னே தொடுத்து நின்றது! உவமை வழி அறநெறி விளக்கம் குடைக்காளான் எனப் பொது மக்களால் வழங்கப்படும் 'சொல்லாட்சி ' அவரை வியப்பில் ஆழ்த்தியது! காளான் நிறம், குடைநிறம் - இரண்டும் வெள்ளை ! காளான் வடிவம், குடைவடிவம் - இரண்டும் வட்டம்! பசு எற்றுதல், யானை எற்றுதல் - இரண்டும் வினைஒற்றுமை! காளான் சிறு வடிவம், குடை பெருவடிவம் - இரண்டன் அளவுநிலை! இவற்றை எண்ணிப் பூரித்தார். ''இப்படியொரு , 'காட்சி இணையைக் காண முடியுமா? யான் கண்டேனே ! காண்கிறேனே!'' என வியந்தார். காட்சியை அன்று! கண்ட தம்மையே வியந்தார். தாம் காணவாய்த்த காட்சியை ஓவியமாக - சொல்லோவியமாகத் தீட்டினார்! அது களவழி நாற்பது என்னும் நூலில் இடம் பெற்றது. அப்பாடல் அவர்தம் உணர்வு மேம்பாட்டை மட்டுமன்றி, உவமை மேம்பாட்டையும், உவமை உள்ளத்தை ஆட்கொள்ளும் திறத்தையும் உணர்த்த வல்லனவாகத் திகழ்கின்றது. அப்பாடல் : "ஓஓ உவமன் உறழ்வின்றி ஒத்ததே காவிரி நாடன் கழுமலம் கொண்ட நாள் மாவுதைப்ப மாற்றார் குடையெலாம் கீழ்மேலா ஆவுதை காளாம்பி போன்ற புனல்நாடன் மேவாரை அட்ட களத்து." என்பது. பொய்கைப் புலவர் கண்ட காட்சி, அருமையான காட்சியாக இன்றும் விளங்குவது எதனால்? அவர் படைப்பை அவர் துய்த்த அளவில் விட்டுவிடாமல், அவர் வருங்கால மக்களுக்காக ஆவணப் படுத்தி வைத்துள்ள அருமை அல்லவோ இதன் மூலம் ! ''இப்படி எத்தனை எத்தனை பேர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். நம் முந்தையர் தேடி வைத்த தேட்டைத் தொகுத்துத் தோட்டாக்கி வைத்தால் என்ன?' என்னும் எண்ணம் எனக்கு 1965 இல் உண்டாயிற்று இதற்கு இதுவே உவமை என்று கூறும் 'உவமான சங்கிரகம்' என்னும் பின்னூல், புலவன் புலமையை 'ஆலை உருவாக்கப் பொருள்' போல் ஆக்கும் குறைபாடுடைய தாயிற்று. ஆனால், செய்யுள் சிறந்த சுவையாகவும், பொருள் விளக்கமுடையதாகவும் அமைய உவமை என ஓர் அழகியல் வேண்டும் என்பதைத் தம் கூர்த்த அறிவால் கண்டு, செய்யுள் இயலுக்கு முற்பட உவமை யியலையும், அதற்கு முற்பட மெய்ப்பாட்டியலையும் வைத்த தொல்காப்பியத் தோன்றல் காட்டிய வழியில், சங்கப்புலவர்கள் முதல் இக்காலப் புலவர்கள் வரை படைத்த படைப்புகளில் உள்ள உவமைகளைத் தொகுத்து அடைவாக்கினால் எத்தகு பாரிய நலமாக இருக்கும் என்ற எண்ணத்தில் ஆழ்ந்தேன். எல்லையிலாக் கடலாழம் காண எளியேன் முயல்வதாக அவ்வுவமைத் தொகுப்பு முடிந்தது! ஈராண்டுகள் கொண்ட முயற்சியில், ஏறத்தாழ எண்ணாயிரம் உவமைகள் தொகுக்கப்பட்டன. ஆயினும் தொகையாக்கப்பட வேண்டுவ மேலும் பல மடங்காக உணர்ந்த பட்டறிவால், ஒரு கட்டளை எனக்கு யானே அமைத்துக் கொண்டேன். "அறங்கூறும் உவமைகளை மட்டும் அடைவு செய்து, பொருள் வகைப்படுத்தித் தமிழுலாக் கொள்ள வைத்தல் சாலும் '' என முடிவு செய்தேன். அவ்வடைவையும் முப்பால் படுத்திக் கொண்டேன். 'அறம்' என்றே புறநானூற்றுப் புலவர் ஆலத்தூர் கிழாரால் பாடப்பெற்ற திருக்குறள் முதலாக வெளிப்பட்ட அறநூல்கள் வழியாகக் காணக் கிடைக்கும் அறம் பற்றிய உவமைகள் ஓராயிரத்தைத் தொகுத்து, அத் தொகையை இறை முதலாக மெய்யுணர்வு ஈறாகப் பதினைந்து தலைப்புகளில் பகுத்து நூலாக்கம் செய்தேன். ''உவமை வழி அறநெறி விளக்கம் என்னும் பெயரால் முதற் பாகமாகத் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வழியாக வெளிவந்தது. ஆண்டு 1968. இரண்டாம் பாகம், சங்க நூல் உவமைகளையும், மூன்றாம் பாகம், காப்பிய உவமைகளையும் கொண்டமைய எழுதிவந்தேன். இவ்விரு தொகுதிகளிலும் ஏறத்தாழ ஆயிரத்து ஐந்நூறு உவமைகள் இடம் பெற்றன. முதற்பதிப்பு வெளிவந்து அதன் பயன்பாட்டை உணர்ந்த பெருமக்கள் பலர்; பாராட்டிக் கூறியவர் சிலர். அவருள் நெறி யொன்று காட்டியவர் ஒருவர். அவர் நாவலர் இரா. நெடுஞ் செழியன் ஆவர். "இத்தொகுப்பு மேடைப் பொழிவாளர், கட்டுரையாளர் ஆயோர்க்கு அரிய கையேடாகும். இந்நூலில் காட்டப்பட்டுள்ள நூல்கள் அனைத்தையும் கற்பார் ஒவ்வொருவரும் தொகுத்து வைத்திருப்பார் எனல் இயலாது. உரைநடையில் காட்டியுள்ள உவமையின் மூலமாகிய பாடல், பாடற்பகுதி அவ்வவற்றின் கீழே அமைந்தால், மேலும் பயனாம்" என்றார். இதனைக் கூறக் கேட்டவர் கழக நிறுவனரும் பதிப்பாளாரும் ஆகிய தாமரைச் செல்வர் வ. சுப்பையா அவர்கள் ஆவர். தாம் நாவலர்பால் கேட்ட குறிப்பைக் கூறிப், பின்வரும் தொகுதிகளை உரையும் பாட்டுமாக அமைக்க வேண்டினார். அவ்வகையில் பின்னிரண்டு தொகுதிகளும் தொடர்ந்து வெளிவந்தன. உவமை வழி அறநெறிவிளக்க முத்தொகுதிகளும் 1968 முதல் 1971 ஆம் ஆண்டுக்குள் வெளிவந்தன. சிலர்தம் ஆழிய உணர்வு எக்காலக் கழிவும் தாண்டிச் சுடர்விட வல்லது என்பதை உணர்த்தியது. உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவராய்த் திகழும் திரு. பழ. நெடுமாறனார் உரை. திரு. கோ. இளவழகனாரும் யானும் ஐயா அவர்களைக் கண்டு உரையாடிக் கொண்டு இருக்கும்போது, 'உவமைவழி அறநெறி விளக்கத் தொகுதிகளின் பயன்பாட்டையும், அவற்றை மீளப் பதிப்பிக்க வேண்டிய தேவையையும் உணர்வோடு உணர்த்தினார். இளவழகனார் உடனே வெளியிடுவதாக உறுதி மொழிந்தார். ஆனால், என்னுளம் திகைப்பில் ஆழ்ந்தது. முத்தொகுதி களில் முதல் தொகுதி என்னிடம் இல்லை. பின்னிரு தொகுதிகள் மட்டுமே இருந்தன. பல்லாண்டுகளாக முதல் தொகுதியை அடைய முயன்றும் கைகண்ட பயன் இல்லை! மூலப்படி இல்லாமல் என்ன செய்வது? தமிழ்க்கடல் மறைமலையடிகளார் பெயர் தாங்கி, வள்ளலார் முதற் பொழிவிடத்தில் அமைந்துள்ள கழக நூலகத்தில், தேடிப் பெறக்கூடும் என்னும் நம்பிக்கையில் ஒரு துணிவு கொண்டு இசைந்தேன். ஊருக்கு வந்தேன் ; ஈரோட்டில் இருந்து, தமிழ் இலக்கியக் கழகச் செயலாளர் இனிய அன்பர் திரு. கண்ணையனார் பன்னிரண்டு சிப்பங்களில் நூல்களைப் பாவாணர் ஆராய்ச்சி நூலகத்திற்கு விடுத்தும், கொடையாக்கியதைக் கண்டு மகிழ்ந்தேன்! முதற்சிப்பத்தைப் பிரித்து நூல்களை நோக்கினேன். தேடியிருந்த உவமைவழி அறநெறி விளக்க முதற் தொகுதி ஓடிவந்து என்கையை அடைந்தது! உவகையானால் உவகை! "அழுந்திய உணர்வு ஆக்கம் செய்தே தீரும்" என்று, அத்தொகுதி சொல்லாமல் சொல்லி மகிழ்வித்தது. கண்ணையனார் முதற்கண் இந்நூலை வாங்கும் போதும், யான் கொண்ட மகிழ்ச்சியை அடைந்திருக்க மாட்டார். முதற்பதிப்பு வெளிவந்து முதன் முறையாக இந்நூலைக் கண்ட போதும் இம்மகிழ்ச்சியை யான் உறுதியாகக் கொண்டிருக்க மாட்டேன். ஏனெனில், ''காணாமல் போனதைக் கண்டடைந்த களிப்பு " இக்களிப்பு ! இளங்கோவடிகள் வாக்காகச் சொன்னால், "கண்களி மயக்கத்துக் காதல் காட்சி அது. நெடுஞ்செழியனார் உரையை மறவாமல், முதற் தொகுதிக் குரிய உவமைகளுக்கு மூலப்பகுதி அல்லது பாடல் சேர்க்கப்பட்டு அச்சிடப்பட்டது. குறுகிய காலத்தில் அச்சிட்டு முடிக்கும் திட்டம். அதனால், இளவழகனார் தம் பதிப்பகம் சார் புலமையரைக் கொண்டு பெரும்பால் தொகுப்பும், மெய்ப்புப் பார்ப்பும் நிறைவித் தார். முத்தொகுதிகளும் ஒரு சேர வெளியிடும் திட்டம் உலகத் தமிழர் பேரமைப்பு வழியே, பழஞ் சேரலமாம் , சேலமா நகரில் வெளிப்பட லாயிற்று. கழக ஆட்சிப் பொறுப்பாளர் அமைச்சர், முனைவர் திருமிகு. இரா. முத்துக்குமாரசாமி அவர்கள் கழகவழி வெளிவந்த என் நூல்களைத் தவச்சாலை வெளியீடாகக் கொள்ள இசைவு வழங்கி னார்கள். ஆதலால், தவச்சாலை உரிமை கொண்ட நூல்களைத் திரு. இளவழகனார் வெளியிடும் பொறுப்பேற்றுச் செய்துள்ளமைக்குப் பெருநன்றியுடையேன். இத்தொகுப்பு களுக்குப் பல்லாற் நானும் உழைத்த தமிழ்மண் பதிப்பகப் பணியாளர் தொண்டர் ஆகிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்தும் நன்றியும் உடையேன். இனி, இத்தொகுதிகளின் பயன்பாடு குறித்த சில செய்திகள் : 1. சொற்பொழிவாளர், கட்டுரையாளர் ஆகியோர்க்குக் கையில் வாய்த்த கருவூலம் அன்னவை இவை. 2. ஒப்பீட்டு ஆய்வாளர்க்கு அருந்துணை. 3. வாழ்வியல் வளம் காண விழைவார்க்கு வாய்த்த விருந்து. 4 தமிழர் தம் ஊன்றிய பார்வையை உணர்த்தும் உயிர்ப்பிடம். 5. "இக் காட்சிதானே, அக்காட்சி ! அக்காட்சியை அவர் பொதுவாக்கம் செய்தது போல, நாமும் ஏன் செய்யக்கூடாது?" எனப் படைப்பாளியையும் சிந்தனையாளர்களையும் தூண்டும், தூண்டாமணிவிளக்கு. மேல் ஒரு குறிப்பு: ஒரு காட்சியை ஒரு புலவர் தாமா கண்டார்? எத்தனை எத்தனை பேர்கள் கண்டனர்? அவர்கள் காட்சிகள் எத்தனை எத்தனை வெளிப்பாடாகிச் சிறக்கின்றன - என வியப்பில் ஆழ்த்து கின்றன! நெல் புல், வாழை கரும்பு, வண்டு நண்டு, ஆடு மாடு, ஆறு மலை, கடல் வான், கதிர் திங்கள் - இக்காட்சிகள் கால - இட - எல்லைகள் கடந்தவை அல்லவோ! இவற்றைக் கண்டு படைத்த படைப்பாளர்களும் கால இட எல்லை கடந்து நின்றவர்கள் அல்லரோ! ஆயினும் என்ன; அவர்கள் நம்மோடு உறவாடுகின்றனரே! தம் படைப்புகளை நம்மோடு உறவாட விடுகின்றனரே! தாமும், தம் படைப்புகளும் 'சாவா வாழ்வுக்குத் தூண்டலாய்த் திகழ ஓவிய ஆவணக் காட்சி ஆக்கிவிட்டனரே! "நாம் பிறந்தமண் எவ்வளவு உயர்ந்தமண்! நம்மவர் எவ்வளவு உயர்ந்தவர்!' என்னும் வீறுகள் கிளர்ந்து நம்மை விம்மிதம் உறச் செய்வன் அல்லவா! ஆற்றலும் ஆர்வமும் உடையார் கூட்டுப்பணியாக - கூட்டுறவுப் பணியாக - உவமைகளையெல்லாம் பொருள் வரிசையில் தொகுத்தால், அரும்பெருஞ்செயல் அல்லவா! அத் தொகை தொடர இத்தொகை தூண்டு மானால், இத் தொகை பெற்ற பேறாக அமையும் அல்லவோ! வாழிய நலனே! வாழிய நிலனே! இன்ப அன்புடன், இரா. இளங்குமரன் பதிப்புரை தமிழ்ச் செம்மல், செந்தமிழ் அந்தணர் புலவர் இரா. இளங்குமரனார் தொகுத்து தமிழர்களுக்குச் செல்வமாகத் தந்துள்ள நூல் உவமைவழி அறநெறி விளக்கம். இந்நூல் உருவாக்கம் குறித்தும் இந்நூலின் வரலாற்றுப் பின்னணி குறித்தும் முன்னுரையில் தெளிவாகத் தம் உணர்வுகளை ஐயா இளங்குமரனார் பதிவு செய்துள்ளார். இந்நூல் உருவாக்கம் 1965இல் தம் உள்ளத்தில் கருக்கொண்டதாகவும், 1968 முதல் 71வரை மூன்று தொகுதிகளை வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். கழகக் காலப் புலவர்கள் முதல் இக்காலப் புலவர்கள் வரை படைத்தளித்த படைப்புகளில் உள்ள உவமை களைத் தொகுத்து நீதி நூல்கள், சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் எனும் முத் தொகுதிகளாக நமக்குத் தந்துள்ளார். தம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்த உணர்வுகள் ஆக்கம் செய்தே தீரும் என்பதை இத் தொகுதிகளின் வழி நாம் அறியலாம். முன்னர் வெளியீடு கண்ட இத் தொகுதிகளை மறுபதிப்பு செய்து சேல மாநகரில் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் தலைமையில் நடைபெறும் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் வெளியிடுகிறோம். உவமைவழி அறநெறி விளக்கம் என்னும் இந்நூல் சொற்பொழி வாளர்கள், கட்டுரையாளர்கள், ஆய்வாளர்கள், வாழ்வில் வளம் காண விழைவோர் அனைவருக்கும் இது ஒரு கை விளக்காகும். உவமைவழி அறநெறி விளக்கம் என்னும் இத் தொகுதிகள் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு முகாமையான ஆவணமாகத் திகழும் என்று நம்புகிறோம். இந் நூலாசிரியர் அருந்தமிழ் அறிஞர் மொழிஞாயிறு பாவாணர் வழி நின்று தமிழர்களுக்கு வழிகாட்டும் மொழி விளக்கு ; தமிழ்நெறியைத் தம் உயிர்நெறியாகக் கொண்டவர்; தமிழ்மொழியின் தவ மகன், இளந்தமிழர் நலம் நாடும் தமிழ் ஏந்தல்; இணையில்லாப் பெருமகன். சொல்லாய்வுப் பெருங்கடல்; மூத்தத் தமிழறிஞர், தமிழ்த் தொண் டாற்றும் தகைமையர் ; கொஞ்சு தமிழ் கெஞ்சி வரும் விஞ்சுபுகழ் ஆய்வாளர்; இப் பெருந்தமிழ் ஆசானின் தமிழ் நெறி தவழும் தமிழ் ஆவண விளக்கை உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஒன்றுகூடும் சேலமா நகரில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளும் தமிழர்களின் கைகளில் தவழவிடுகிறோம். தமிழ் இலக்கியங்களில் காணப்படும் உயர் பண்புகளைத் தனக்கேயுரிய தனிநடையில் கையாண்டு பொதுமாந்த நிலையில் நின்று உலகப் பொதுமைகளை இந்நூல்களில் பதிவு செய்துள்ளார். பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் உள்ள நம் தமிழ் மொழியின் அருமை பெருமைகளை இளை யோர்க்குக் கொண்டு சேர்க்கும் இத் தமிழ் அறிஞரின் பெரும் பணி வணங்குதற்குரியது. அவர் தமிழர்களின் அகவாழ்வு, புறவாழ்வு, உயர்ந்த உள்ளம், உயரிய வாழ்வுக் கொள்கைளை உள்ளடக்கி தொன்மை வாய்ந்த தமிழினத்தின் பண்புநலன்களைத் தம் எழுத்தாற்றலின் வழி படம் பிடித்துக் காட்டுபவர். இப் பெருந்தமிழ் அறிஞர் நம் காலத்தில் நம்மோடு வாழ்பவர் என்ற பெருமையோடு அவர் ஆக்கிய நூல்களை வெளியிடுகிறோம். தமிழ் மண் பெருமைமிக்க மண், உயர்ந்த மண் என்ற பெருமித் உணர்வோடு தமிழர்கள் தலை நிமிர்ந்த வாழ்வு வாழ்வதற்கு இத் தொகுதிகள் ஊன்று கோலாக அமையுமென்று நம்புகிறோம். பதிப்பாளர் செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் சான்றோர்கள் பார்வையில் ...... '' அரசினர் கல்லூரி எதிலும், இளங்குமரனார் போல் அகரமுதலிப் பணியாற்றுவார் எவருமில்லை. ஆங்கிலப் பெரும் பட்டம் பெற்ற பண்டாரகருள்ளும் அவர் போல், இலக்கணம் கற்றாரும் ஆய்ந்தாரும் ஒருவருமில்லை " - மொழிஞாயிறு பாவாணர் "இளங்குமரனார் ஆழ்ந்த புலமையுடையவர்; பெருஞ் செல்வத்தைத் தன்னகத்தே கொண்ட ஆழ்கடலென அமைதியான தோற்றமுடையவர். பண்பிற் சிறந்தவர், பழகுதற்கினியவர்" - சைசி நூக நிறுவனர், வ. சுப்பையா. ''இளங்குமரனார் எந்த ஒன்றையும் நுணுகி நோக்குவதும் அகப் புறச் சான்றுகளால் அறுதியிடுவதும் இவர்தம் புலமை இயல்புகள் உழைத்து உழைத்து பல அறிய நூல்களை வெளியிட்ட இவர்தம் எழுத்துக்கள் பெருமையும் புகழும் பெற்றவை.'' - குறளியம் வேலா . "புலவர் இளங்குமரன் ஆழ்ந்த பலதுறைப் புலமையோடு தமிழ்ச் சொற்களின் வேர்களையும் வேரொப்புமைகளையும் கூர்ந்து ஆராயும் நுண்மதி பெற்றவர்; சிதறிக் கிடந்த நூற்பாக்களைத் தேடித் திரட்டிக் காக்கைபாடினியம் என்ற நூலை உருப்படியாக்கி, விரிந்த உரையும் வரைந்த இலக்கணப் பணியாளர்.'' - தமிழ்ச் செம்மல் வ.சுப. மாணிக்கம். ''அறிஞர் இளங்குமரன் அவர்கள் இலக்கணப் புலவர், இலக்கியச் செல்வர், தமிழ் மரபு காக்கும் மரபினர் நுழைபுலம் மிக்க ஆய்வாளர். கற்றது விரித்துரைக்கவல்ல பேராசிரியர். கற்றபடி நிற்கும் சான்றோர்.'' - பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன். "புலவர் இளங்குமரன் அவர்கள் முறையாகத் தமிழ் பயின்றவர். தனித்தமிழ்ப் பற்று மிக்கவர், கல்வியைச் செல்வமாக மதித்து கற்றோரைச் சுற்றமாகக் கொண்டு வாழ்பவர். தமிழ் நூற் பரப்பின் எல்லையைக் கண்டவர். - இலக்கண அறிஞர் மு.வை.அரவிந்தன். 1. இறை 1. எழுத்துகள் எல்லாம் அகரத்தை முதலாக உடையன; அதுபோல் உலகம் முழுமுதல் இறைவனை முதலாக உடையது. (1) அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. - திருக்குறள் : 1 2. முகில் இல்லாமல் மழை இல்லை; நிலம் இல்லாமல் விளைவு இல்லை; பசு இல்லாமல் கன்று இல்லை; கதிர் இல்லாமல் ஒளி இல்லை; அரசு இல்லாமல் காவல் இல்லை; தாய் இல்லாமல் பிள்ளை இல்லை; அவை போல் கடவுள் இல்லாமல் உலகம் இல்லை. (2) வானின்றி மழையு மில்லை வயலின்றி விளைவு மில்லை ஆனின்றிக் கன்று மில்லை அரியின்றி யொளியு மில்லை கோனின்றிக் காவலில்லை குமரர்தா யின்றி யில்லை மேனின்ற கடவுளின்றி மேதினியில்லை மாதோ. - நீதிநூல் : 1 : 7 3. தலைவன் இல்லாத வீடு தக்க முறையில் நடை பெறாது. அதுபோல் இறைவன் இல்லை என்றால் உலகம் செவ்வையாக நடந்து கொண்டிராது.(3) நாதனில் லாத வீடு நாளுமே நடவா தென்னில் வேதநா யகனிலானேல் விரிகதில் மீனுதித்தல் சீதநீர் பெயல்தருக்கள் சீவராசிகள் கதித்தல் பூதபௌதீக மெல்லாம் புரையற ஒழுகற் பாற்றோ . - நீதிநூல் :1:4 4. தீட்டுவோன் இன்றிச் சித்திரம் இல்லை; பாவை ஆட்டுவோன் இன்றித் தானே ஆடாது. யாழை மீட்டுவோன் இன்றி இசை உண்டாகாது. அவைபோல் நாட்டிய ஒருவன் இன்றி உலகம் நன்கு அமையாது. (4) தீட்டுவோன் இன்றி யாமோ சித்திரம் ; திகழ்பொற் பாவை ஆட்டுவோன் இன்றித் தானே ஆடுமோ திவவி யாழின் மீட்டுவோன் இன்றிக் கீதம் விளையுமோ சராசரங்கள் நாட்டுவோன் ஒருவன் இன்றி நன்கமைந் தொழுகுங் கொல்லோ. - நீதிநூல் : 1:2. 5. மரம், செடி, கொடிகள் அசைதலால் காற்று உள்ளதென அறிவர். புகை இருத்தலால் தீ உளதென அறிவர்; நறுமணம் வீசுவதால் பூ உளதென அறிவர். அவைபோல் உலகம் இருத்தலால் இறைவன் உளனென அறியலாம். (5) மாமுத லசைத லாற்கா லுளதென மதிப்பா ரெங்கும் பரவிய புகையாற் செந்தீ யுளதெனப் பகர்வார் சுற்றும் விரவிய மணத்தாற் பாங்கர் வியுள தென்று தேர்வார் பரனுள னெனுமுண்மைக்குப் பாரெலாஞ் சான்று மன்னோ. - நீதிநூல் : 1 : 3. 6. மண்டபங்களைக் காணும்போது அவற்றைக் கட்டிய சிற்பியுள்ளான் என்றும், குண்டலம் முதலிய அணிகலங்களைக் காணுங்கால் அவற்றைச் செய்த பொற்கொல்லன் உள்ளான் என்றும், ஆடைகளைக் காணும் பொழுது அவற்றை நெய்த நெசவாளன் உள்ளான் என்றும் அறிவது போல், உலகத்தைக் காணுங்கால் அதனைப் படைத்த ஒருவன் - இறைவன் - உள்ளான் எனத் தெளியலாம். (6) மண்டப மாதி கண்டோர் மயனுளன் என்னல் போலுங் குண்டல முதல் கண் டோர்பொற் கொல்லனுண் டென்னல் போலும் ஒண்டுகில் கண்டோர் நெய்தோன் ஒருவனுண் டென்னல் போலும் அண்டமற் றகண்டஞ் செய்தோன் உளனென அறிவாய் நெஞ்சே - நீதிநூல் : 1 : 1. 7. காற்றில் உயிர்ப்புப் போலவும், கரும்பில் பாகு போலவும், பாலில் நெய் போலவும், பழத்துள் சுவை போலவும், பூவில் மணம் போலவும் எங்கும் சிறக்க அமைந்துள்ளான் இறைவன். (7) காலினில் ஊறுங் கரும்பினிற் கட்டியும் பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும் பூவினுள் நாற்றமும் போலுளன் எம்மிறை காவலன் எங்குங் கலந்துனின் றானே. - திருமந்திரம் : 2639. 8. தேனுக்குள் அமைந்துள்ள இன்பம் கறுப்பா? சிவப்பா? அதனைக் காட்ட முடியாது. ஆனால் இன்பம் அமைந்துள்ளது உண்மை. அதுபோலவே ஊனுக்குள் இறைவன் ஒளிந்துள்ளான் என்பதும் உண்மை . (8) தேனுக்குள் இன்பஞ் சிவப்போ கறுப்போ வானுக்குள் ஈசனைத் தேடு மதியில தேனுக்குள் இன்பஞ் செறிந்திருந் தாற்போல் ஊனுக்குள் ஈசன் ஒளித்திருந் தானே. - திருமந்திரம் : 3065. 9. குற்றமற்ற சுவைப்பாலிலே நெய் கலந்து இருப்பது போல் இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான். (9) புரை அற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல் திரை அற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும் உரையற் றுணர்வோர் உடம்பிங் கொழிந்தாற் கரையற்ற சோதி கலந்தசத் தாமே. - திருமந்திரம் : 134 10. மூங்கிலின் உள்ளே தீ அமைந்து இருப்பது போல் உடல் என்னும் கோயிலின் உள்ளே அமைந்துள்ளான். இறைவன். (10) வேயின் எழுங்கனல் போலே இம் மெய்யெனுங் கோயிலிருந்து குடிகொண்ட கோன்நந்தி தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னுந் தோயம தாய்எழுஞ் சூரிய னாமே. - திருமந்திரம் : 116. 11. நீரும் பாலும் இரண்டறக் கலந்து நிற்பது போல் இறைவன் உயிர்களுடன் இரண்டறக் கலந்து நிற்கிறான். (11) ஆரும் அறியாத அண்டத் திருவுருப் பார்முத லாகப் பயிலுங் கடத்திலே நீரினிற் பால் போல நிற்கின்ற நேர்மையைச் சோராமற் காணுஞ் சுகம் அறிந் தேனே. - திருமந்திரம் : 450. 12. இறை உணர்வு இல்லாமல் ஒருவன் வாழும் வாழ்வு, நிலத்தில் ஊன்றி இருந்த வேர்களைப் பறித்துப் போடப் பெற்ற பயிரின் வாழ்வுக்கு ஒப்பான தாகும். (12) - நீதிநூல் : 14 13. மரத்தின் மேல் ஏறி நின்று கொண்டு கால் மிதியையும், கைப்பிடி யையும் விடுத்து மரத்தை இகழ்ந்தவன் கீழே வீழ்ந்து அழிவான். அவ்வாறே இறைவன் படைத்த உலகில் இருந்து கொண்டு அவன் மேல் நம்பிக்கையற்று இகழ்ந்தவனும் தாழ்வே அடைவான். இவரிய தருவைக் கைவிட் டிகழ்ந்து கீழ் வீழ்வார் போலும், இவவுறத் தம் தாய் வந்தி என்பவர் போலும், பைங்கூழ் அவனியை நீத்தல் போலும் அகிலமாள் கோவைத் தேவைத் தவநிதி யினையின் றென்போர் தாமுமே யிலரா வாரே. - நீதிநூல் : 14 14. ஒரு தாயின் வயிற்றில் இருந்து பிறந்த ஒருவன் என் தாய் மலடி' என்பது எத்தகைய அறிவற்றதோ அத்தகையது இறைவனால் படைக்கப் பெற்ற ஒருவன் இறைவன் இல்லை ' என்பது. (14) - நீதிநூல்; பிற்சேர்க்கை , 1 : 2. 15. தன் தாய் தந்தையரைக் கண்ணால் காணாதவன் ஆயினும் அவன் தனக்குத் தாய் தந்தையர் இருந்ததில்லை என்று சொல்லமாட்டான். ஒலி, சுவை, நாற்றம் முதலியவற்றைக் கண்ணால் காணமுடிவதில்லை என்றாலும் அவற்றை இல்லை என்று எவரும் கூறார். அவ்வாறே கடவுளைக் கண்ணால் காணமுடிவதில்லை என்றாலும் உணர்வு உடையோர் கடவுள் இல்லை என்று கூறமாட்டார். (15) அத்தன் தாய் முன்னோர் தம்மை அறிகிலான் இலரென் பானோ சத்தமின் சுவைகந் தத்தைத் தரிசியான் இலனென் பானோ நித்தனைக் கண்ணில் காணா நீர்மையால் இலனென் றோதும் பித்தரிற் பித்தர் பாரில் பேசிட உளரோ அம்மா. - நீதிநூல் 1: 9. 16. கண்ணொளி இல்லாதவன் கதிருக்கு ஒளியில்லை என்பது போலவும், செவிடன் கடலுக்கு ஒலியில்லை என்பது போலவும் மெய்யுணர்வு இல்லாதவர் கடவுள் இல்லை என்று மயங்கிக் கூறுவர். (16) கதிரவற் கொளியின் றென்னக் கண்ணிலார் கழறல் போலும் வதிரர்போ ராழி யோசை மாறிய தென்னல் போலும் எதிருறு பொருளைக் காணா திடருறு பித்தர் போலும் மதியிலார் தேவின் றென்ன மருளொடும் இயம்பு வாரே. - நீதிநூல் 1: 8. 17. வானத்தையும், காற்றையும், உயிரையும், உள்ளத்தையும், அறத்தை யும் கண்ணால் கண்டது இல்லை என்றாலும் உண்டென உணர்கிறோம். அதுபோல் கண்ணால் காண முடியவில்லை என்றாலும் கடவுள் உண்டென உணர்தல் வேண்டும். (17) பூதம்யா வுக்கும் ஏணாய்ப் பொருந்திய விசும்பைக் காற்றை வேதனூ லதனை மண்ணோர் மெய்யுரை யுயிரை நெஞ்சை ஏதமில் அறத்தைக் கண்ணாற் பார்த்திலோ மெனினு முண்டென்று ஓதல் போல் தெய்வந் தானொன்று உளதெனல் தேற்ற மம்மா. - நீதி நூல் 1: 5. 18. பகுத்தறிவற்ற விலங்கும் தன்னை வளர்த்தவனுக்கு நாளும் உதவி செய்து வாழும். மரமும், பயிரும், செடியும், கொடியும் அவற்றைப் பேணி வளர்த்தவனுக்குப் பெரிதும் பயன்படும். அவ்வாறிருக்க ஆறறிவு படைத்த மனிதன் தன்னைப் படைத்து எல்லா நலங்களும் செய்து வரும் இறைவனைப் போற்றாதிருப்பது புன்மையே ஆகும். (18) விருகமும் தனைவளர்த்தோர் வியப்புற வேலை செய்யும் தருவொடு பயிர்வைத் தோர்க்குத் தனிப்பயன் நல்கும் நம்மை ஒருபொரு ளெனச்சி ருட்டித் துலகமு மற்ற யாவும் தருமொரு முதலைப் போற்றாத் தன்மையோர் புன்மை யோரே. - நீதிநூல்; பிற்சேர்க்கை 2 : 35. 19. இறைவன் திருவடியாகிய மரக்கலத்தைப் பற்றிக் கொள்ளாதவர், வானத்தைப் பிரிந்த பறவையைப் போலவும், நீரைப் பிரிந்த மீனைப் போலவும், காட்டைப் பிரிந்த விலங்கைப் போலவும், காவல் அற்ற நகரைப் போலவும் துன்புறுவர். (19) தோன்றகல் இடம தென்னும் துன்பசா கரத்தி லத்தன் தேன்தரு மலர்த்தாள் தெப்பம் சேர்கிலா தகன்றுநிற்போர் வான்றனைப் பிரிந்த புள்ளும் வாழுநீர் நீத்த மீனும் கான்றனை யகல்வி லங்குங் காவல்தீர் நகரு மொப்பார். - நீதிநூல் 2: 10. 20. இறைவன் திருவடிகளை நினைத்து இன்பம் அடை யாமல் தீயவழிகளில் உழல்வது, அரியணை ஏறி அரசு செய்வ தற்கு இருந்த வாய்ப்பினை உதறி எறிந்துவிட்டுக் கழுமரத்தில் ஏறுவது போன்றதாகும்.(20) மாசறு கடவுள் பாத மலரினைத் தினமும் போற்றிப் பாசமில் சுகம் பெறாமல் பவஞ்சத்தூ டுழலல் பைம்பொன் ஆசனம் தன்னில் ஏறி அரசுசெய் தகைமை நீத்துக் காசனக் கழுவில் ஏறும் கயமையே கடுக்கு மாதோ. - நீதி நூல் 2: 16. 21. இறைவனைப் பற்றி எண்ணாமல் அவனால் படைக்கப் பெற்ற பொருள்களையே எண்ணுவது, பேரருளுடன் பயன் எதிர்பாராமல் பொருள் வழங்குபவனைப் புகழாமல் அவன் தந்த பொருளைப் புகழ்வது போன்றதாம். (21) தனந்தந்தான் தனை இகழ்ந்து தனத்தினைத் தொழல் போலீசன அனந்தந்தான் வாழ்வு தந்தான் ஆவியும் உடலும் தந்தான் இனந்தந்தான் இன்பம் தந்தான் யாவும் தந்தானை நீங்கி முனந்தந்த பொருள் அவாவு மூடருன் சீடர் நெஞ்சே. - நீதி நூல்; பிற்சேர்க்கை 2 : 25 22. தலைவனுடைய மக்களை மதித்து அவர்களுக்கு வேண்டியவற்றை உதவாமல், தலைவனையே பேணி நிற்கும் ஊழியர் தலைவன் அன்பைப் பெறார். அதுபோல் இறைவனால் படைக்கப் பெற்ற உயிர்களை நினைக்காமல் இறைவனையே நினைப்பவரும் இறைவன் அன்பைப் பெறார். (22) கண்டமன் னுயிரைப் பேணான் காணொணாப் பரன்பால் நேசம் கொண்டனன் எனல் பொய் யாஞ்செங் கோல்வழி நிலார்கோன் சேயார்க் கண்டலர்க்கோனுக் கன்ப ராவரோ, நற்குணங்கள் விண்டவர் பிறர்க்கன் பில்லார் விமலர்க்கும் அன்பிலாரால். - நீதிநூல்; பிற்சேர்க்கை 2 : 32. 23. கடலுக்குள் ஒரு பொருளைப் போட்டுத் தொலைத்து விட்டுக் குளத்துக்குள் புகுந்து தேடி அலுப்பது போன்றதாகும். தம் உடலுக்குள்ளேயே இறைவன் தங்கி இருக்க அவனை வேறு இடங்களில் தேடித் தேடி அலைவது. (23) கடலிற் கெடுத்துக் குளத்தினிற் காண்டல் உடலுற்றுத் தேடுவார் தம்மையொப் பாரிவர் திடமுற்ற நந்தி திருவரு ளாற்சென் றுடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே. - திருமந்திரம் : 513. 24. காதலால் ஒரு பெண்ணை விரும்புபவன் எப்பொழுதும் அப்பெண் நினைவாகவே இருப்பான். ஆசையால் பொன்னை விரும்புபவன் எப்பொழும் அப் பொன் நினைவாகவே இருப்பான். அவற்றைப் போல் இறைவனை விரும்புபவனும் எப்பொழுதும் அவ்விறைவன் நினைவாகவே இருத்தல் வேண்டும். (24) மாதரை விழைந்தோன் என்றும் மாதரை நினைப்பன் பொன்மீ தாதர முளோனப் பொன்னை | அனுதினம் ஓர்வன் ஈசன் பாதமீ தன்பு ளே மேல் பகலிரவினுமோ வாது நாதனை உன்னேம் கொன்னே நாள்கழித் திட்லென் நெஞ்சே. - நீதிநூல் : பிற்சேர்க்கை : 2 : 22. 25. ஒருவனுடைய தடிக்காக அஞ்சி அவனுக்கு வேண்டியதைத் தருவது அறம் ஆகாது. கணவன் கொடுமை மிக்கவன் என்று அஞ்சி அவன் மனைவி அடங்கி இருப்பது உண்மைக் கற்பு ஆகாது. அவற்றைப் போல் அச்சமே காரணமாக ஆண்டவனை வழிபடுவதும் உண்மைப் பக்தி ஆகாது. (25) தடியடிக் கஞ்சி ஈவோன் தருமனோ ; கற்பைக் காந்தன் கொடியனென் றஞ்சிக் காப்பாள் சதிகொலோ; ஈசன் மாட்டுப் படிற்றும் அன்பே அன்பாம் பயத்தினால் நயத்த லாவான் முடிவிலான் பாற்கொள் பத்தி முத்தியின் உய்த்தி பாதால். - நீதி நூல் : பிற்சேர்க்கை 2 : 27. 26. ஆட்சிப் பொறுப்புடையவர்கள் உளர் என்றால் மக்களின் நன்மையைக் கருதி இன்ப மிக்க மாளிகைகளையும், துன்பமிக்க சிறைக் கூடங்களையும் அமைப்பர். அவ்வாறே இறைவன் ஒருவன் உளன் என்றால் இன்ப துன்ப உலகங்கள் (சுவர்க்க நரகங்கள்) உண்டு என்பது தெளிவு. (26) மன்னுள னேல்உண் டாணை மகிழவும் சிறையும் உண்டாம் முன்னுதே வுளனேல் பாவம் புண்ணியம் மோக்கம் அள்ளல் என்னும்யா வையுமுண் டொப்பில் ஏணுளான் கோபம் தாங்கி மன்னுவோர் யாவர் நெஞ்சே மறமொழித் தறம்செய் வாயே. - நீதிநூல் : 42:19 27. தாய் தந்தையர் தம் மக்களின் நன்மையைக் கருதிச் சிற்சில வேளைகளில் கடிந்து கொள்வர். அதற்காக அவர்களை வெறுக்கும் மக்கள் அறிவுடையவர் ஆகார். அவ்வாறே பின்வரும் நன்மையை முன்னிட்டு இறைவன் உயிர்களுக்கு இன்னல்களை அருள்வான். அதற்காக அவனை வெறுத்தல் அறிவுடைமை அன்றாம் . (27) நலன்கள்யா வுறினும் தந்த நாதனைத் திமோ நோய்நாம் கலங்கவேயுறினும் தந்தை காதலர்ச் சிவைல் போல்பிற் பலன்கள் நாம் பெறவத் துன்பம் பணித்தனன் இறையென் றுன்னி விலங்கிடா தவன்தன் நெஞ்சே விரைவில் பரவி உய்யே. - நீதிநூல்; பிற்சேர்க்கை 2 : 23 28. மைந்தன் அவன் மனம் போன் வழியே போகக் கண்டும் பெற்றவர் சினம் கொள்ளாதிருப்பின் அதுவே அவர்கள் கொண்ட பெருஞ்சினத்திற்கு அடையாளம் ஆகும். அதுபோல் ஒருவன் தன் வாழ்வில் துன்பம் இல்லாமல் இன்பமே அடைந்தால் அதுவே இறைவன் அவன் மேல் சினம் கொண்டதற்கு அடையாளம் ஆகும். (28) அறமென்பதற்கும் அறிவுக்கும் மூலம் அஞராகும் உலகின் பம்மே; மறமென் பதற்கும் மடமைக்கும் வித்து மகவிச்சை யாறொழுகல் கண்டு இறையும் தகப்பன் முனியாமை சீற்ற ஏற்றத்தின் நீர்மை எனல் போல் உறுபுன்க ணின்றி ஒருவன் சுகங்கள் உறலீசன் முனிவா கும்மால். - நீதிநூல் 41 : 14. 29. கணவனைக் காணுந்தொறும் களிப்படையும் கற்புடைய மனைவி யைப் போலவும், தாயினைக் காணுந்தொறும் இன்புறும் சேயினைப் போலவும் இறைவனை நினையுந்தொறும் இன்புற்று நல்லோர் வழிபடுவர்.(29) கற்பினால் கணவர் தம்மைக் காண்டொறும் களித்தல் போலும் பொற்புறு சிறார் தாய் கையில் பொருந்துபு மகிழல் போலும் அற்புத வுவகை யோடும் அடிகளை அடிகள் போற்றா துற்பவ வுவர்ப்போ டேத்தும் உள்ளத்தார் கள்ளத் தாரே. - நீதிநூல்; பிற்சேர்க்கை 2:40. 30. மணத்தை மூக்கே அறியும், வாய், செவி, கண் முதலிய உறுப்புக்கள் அறியா. வாயே பேசும்; மற்றை உறுப்புக்கள் பேச அறியா. அவற்றைப் போல் அடியார்கள் தம் அறிவுக்கண் கொண்டு காணும் இறைவனை, எளிய முகக்கண் கொண்டு காண முடியாது. (30) வாசமூக் கறியு மன்றி வாய்செவி விழி மெய் தேரா பேசவாய் அறியு மன்றிப் பின்னையோர் புலன்தே ராது நேசமார் தொண்டர் ஞான நேத்திரம் கொண்டு காணும் ஈசனை முகத்தில் கண்ணால் இகத்தில் யார் காண வல்லார். - நீதிநூல் 1: 6. 31. கதிரோன் வருகையைத் தாமரை எதிர்பார்த்திருக்கும்; திங்கள் வருகையை அல்லி எதிர் நோக்கியிருக்கும்; பூ மலர்வதை வண்டு எதிர் பார்த்திருக்கும்; அவற்றைப் போல் இறைவன் வருகையை அவன் அடியார் எதிர்நோக்கி இருப்பர். (31) செந்தாமரை இரவிசேர் உதயம் பார்க்குமே சந்திரோத யம் பார்க்கும் தண் குமுதம் - கந்தம் மிகும் பூ அலரப் பார்க்கும் பொறிவண்டு, அரன் அன்பர் தேவரவைப் பார்ப்பர் தெளிந்து - நீதிவெண்பா : 96. 32. இளங்கன்றினைத் தொடர்ந்து அதன் தாய்ப் பசு வருவதைப் போல உண்மை அடியார்களைத் தொடர்ந்து இறைவன் வருவான். (32) சிவனே சிவனே சிவனேஎன் பார்பின் சிவன் உமையா ளோடும் திரிவன் - சிவனருளால் பெற்ற இளங் கன்றைப் பிரியாமல் பின்னோடிச் அன்பாகப்போல் கொடரங்கா - நீதிவெண்பா : 58. 33. சிறிதும் அசைவில்லாத தூயநீர் போன்ற தெளிந்த உள்ளம் உடையவர் இடத்தே இறைவன் இனிது தங்கியிருப்பான். (33) உரையற்ற தொன்றை யுரைசெய்யு மூமர்காள் கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ திரையற்ற நீர் போல் சிந்தை தெளிவார்க்குப் புரையற் றிருந்தான் புரிசடை யோனே. - திருமந்திரம் : 2955. 34. ஞாயிறு, திங்கள் இவற்றின் ஒளி எங்கும் பரவி இருப்பினும், சந்திர காந்தக் கல்லில் அது மிகப் பொலிவுடன் விளங்கும். அவ்வாறே இறைவன் எங்கும் காணப் பெறுபவன் என்றாலும் உண்மை அடியார்கள் இடத்தே மிக விளக்கமாகக் காணப் பெறுவான். (34) இந்துஇரவி நீள்கிரணம் எங்கும் நிறைந்தாலும் இந்துஇரவி காந்தத்து இலகுமே - இந்துஇரவி நேத்திரத்தோன் எங்கும் நிறைந்தாலும் நித்தன் அருள் நேத்திரத்தோர் பாலே நிறைவு. - நீதி வெண்பா : 50. 35. தீயுள்ள இடங்களில் எல்லாம் ஒளி உண்டு என்றாலும் விளக்கின் இடத்தே அதற்குத் தனிப்பெருமை உண்டு. அவ்வாறே உலகப் பொருள்கள் அனைத்திலும் இறைவன் அருள் வெளிப் படும் என்றாலும் நல்லடியார் இடத்தே அவன் அருள் மிக நன்றாக வெளிப்படும். (35) முற்றும் இறைசெயலே முற்றிடினும் தன்னருளைப் பெற்றவர்தம் பாலே பெரிதாகும் - பற்று பெரும் தாபத் திடத்தே தழன்றிடினும் நற்சோதி தீபத்து இடத்தே சிறப்பு. - நீதி வெண்பா : 40. 36. வேட்டுவனை (குளவிளய) அடைந்து பழகிவிட்ட புழு, அவ் வேட்டுவன் தன்மையைக் கொண்டு விடும். அதுபோல் அறக்கடலாம் இறைவனை அடைந்தவர் அவன் தன்மையை அடைவர். (36) புறத்துமனம் செல்லாமே வேட்டுவன்பால் புக்க திறத்தால் புழுவும் அதன் வடிவாம் தேரின் அறக்கடலாம் அண்ணல் அடி சேர்ந்தால் அன்னோன் இறப்பில் உரு எய்தல் இயல்பு. '- இன்னிசை இருநூறு : 73. 37. கதிரோனின் வெயிலைத் தாங்கிக் கொண்டு நிற்க முடிந்தாலும், அவ் வெயிலை ஏற்றுள்ள வெப்பமிக்க மணலில் சிறிது பொழுதும் நிற்க முடியாது. அதுபோல் இறைவனை ஒரு வேளை எதிர்த்து நிற்க முடிந்தால் கூட இறைவன் அடியாரை எதிர்த்து நிற்க இயலாது. (37) ஈசன் எதிர் நின்றாலும் ஈசன் அருள் பெற்றுயர்ந்த நேசர் எதிர் நிற்பது அரிதாமே - தேசு வளர் செங்கதிர்முன் நின்றாலும் செங்கதிரவன் கிரணம் தங்குமணல் நிற்காதே தான். - நீதி வெண்பா : 30. 38. மரத்தை நட்டு வைத்தவன் நீர்விட்டு வளர்க்கத் தவறமாட்டான். அவ்வாறே, மக்களைப் படைத்த கடவுள் உணவினைத் தந்து காப்பாற்றத் தவறமாட்டான். (38) மரத்தினை நட்டவன் தண்ணீர் - நன்கு வார்த்ததை ஓங்கிடச் செய்வான், சிரத்தை யுடையது தெய்வம் - இங்கு சேர்ந்த உணவெல்லை இல்லை. - முரசு : 22. 39. குயில், தன் முட்டையைக் கொண்டு போய்க் காக்கைக் கூட்டில் வைத்து விட்டால் அது தன் முட்டை என்றே எண்ணி அடைகாத்துக் குஞ்சு பொரித்து வளர்க்கும். அதுபோல் இறைவனும் உலகத்துயிர்களை யெல்லாம் தன்னுயிராகவே கருதி வளர்க்கின்றான். (39) குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால் அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல் இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லை மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே. - திருமந்திரம் : 488. 40. கண் பலவகைப் பொருள்களையும் பார்க்க வல்லது. ஆனால் அக்கண்ணுக்குத் தன்னைப் பார்க்க இயலாது. அவ்வாறே, உயிர்களை யெல்லாம் மிகக் கருத்தாகக் கருதிக் காக்கும் இறைவன் தன்னைப் பற்றிக் கருதுவதே இல்லை. (40) மண்ணொன்று தான் பல நற்கல மாயிடும் உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே கண்ணொன்று தான் பல காணுந் தனைக்காணா அண்ணலும் இவ்வண்ண மாகிநின் றானே. - திருமந்திரம் : 440,2351. 41. வில்லாளன் ஏவிவைத்த குறிவழியே அம்பு தவறாமல் செல்லும். அதுபோல், இறைவன் எண்ணப்படியே சிறிதும் மாறாமல் எல்லாமும் நடக்கும். (41) செல்வங் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும் புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல் இல்லங் கருதி இறைவனை ஏத்துமின் வில்லி இலக்கெய்த விற்குறி யாமே. - திருமந்திரம் : 269.. 42. ஓட்டைக் குடத்தினுள் காற்றினை அடைத்துத் தங்க வைத்தது போல், ஒன்பது பெரிய ஓட்டைகளையும் பல கோடிச் சிறிய ஓட்டைகளையும் கொண்ட உடலில் உயிரினைத் தங்கி இருக்கச் செய்யும் இறைவன் இணையற்றவனே ஆவன். (42) காற்றினைப் பலது வாரக் கடத்தினுளடைத்தல் போல ஏற்றிடு நவது வாரம் எண்ணிலா மயிர்த்து வாரம் தோற்றிய சடக்க டத்துள் துன்னுயிர்க் காற்றடைத்து நாற்றிசை மிசைப்பல்லாண்டு நடத்துவோன் திடத்தி னானே. - நீதிநூல் : பிற்சேர்க்கை 2 : 5. 43. முகில் விண்ணினைச் சேர்ந்து அடைந்துவிட மாட்டாது. காட்சி கண்களைப் போய் அடைந்து விட மாட்டாது. அவற்றைப் போல் எண்ணுவார் எண்ணத்தாலும் எட்டமுடியாத இறைவனை எத்தகைய பற்றுக்களும் ஒட்டமாட்டா. (43) விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள் கண்ணிளைச் சென்றணு காப்பல காட்சிகள் எண்ணினைச் சென்றணு காம லெணப்படும் அண்ணலைச் சென்றணு காபசு பாசமே. - திருமந்திரம் : 1436. 44. நீரிலே படிந்துள்ள உவர்ப்பு, கதிரோன் வெம்மையால் உப்பு என்னும் தனிப்பொருள் ஆகின்றது. பின்னர் அவ்வுப்பு நீருடன் கலந்து தனிமையை இழந்து விடுகின்றது. அது போலவே உயிரும் இறைவனிடம் இருந்து உலகுக்குப் பிரிந்து வந்து மீண்டும் அவ்விறைவனையே அடைந்து உயர்கின்றது. (44) அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால் உப்பெனப் பேர்பெற் றுருச்செய்த அவ்வுரு அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோற் செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே. - திருமந்திரம் : 136. 2. அரசு 45. உயிர்கள் அனைத்தும் மழையை எதிர்நோக்கி வாழும் ; அதுபோல் மக்கள் அனைவரும் செங்கோலை எதிர் நோக்கி வாழ்வர். (1) வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி. - திருக்குறள் : 542. 46. வறியவன் ஒருவன் தன் வாழ்வுக்கு ஒரே துணையாகத் தன் கொல்லையில் வைத்துக் காத்துவரும் பழ மரத்தைப் போல் ஆள்வோர் தம் குடிமக்களைப் பேணுதல் வேண்டும். (2) எல்லையொன்று இன்றியே இன்னாசெய் தாரையும் ஒல்லை வெகுளார் உலகாள்தும் என்பவர் சொல்லின் வளாஅய்த்தம் தாள்நிழல் கொள்பவே கொல்லையுள் கூழ்மரமே போன்று. - பழமொழி : 256. 47. வேரில் விடப்பெறும் நீர் மரம் எங்கும் பரவி அதனைச் செழிக்கச் செய்யும். வயிற்றினுள் செல்லும் உணவு குருதியாக மாறி உடலெங்கும் சென்று வளர்க்கும். அவற்றைப் போல் அரசுக்குச் செலுத்தும் வரிப்பணமும் பலப்பல நல்வழிகளுக்குப் பயன்பட்டு நாடு முழுமையும் நிரந்து நல்வாழ்வு வாழத் துணை செய்யும். (3) வேருறுநீர் மரமெங்கும் விரவும் உத ரங்கொள்சுவை ஆருணவு தேகமெலாம் அண்ணுறும் கோன் கொள்ளும் இறை பாருயிர்க் கெலாம் பின்பு பயன்படலால் தகும் பருவத்து ஏருறவே தக்க இறை இனிதீவர் குடிகளரோ. - நீதிநூல் : பிற்சேர்க்கை 4:1. 48. அரும்பாக இருக்கும் பொழுது வண்டு அதனுள் சென்று தேன் எடுப்பதில்லை. மலர்ந்த பொழுதும் இதழ்களைச் சிதைத்துக் கொண்டு சென்று தேன் எடுப்பது இல்லை; அந் நெறிகள் அறிந்து குடிமக்களிடம் வரிவாங்குவது ஆள்வோர்க்கும் மக்களுக்கும் நலமாகும். (4) பொருத்தம் அழியாத பூந்தண்டார் மன்னர் அருத்தம் அடிநிழலாரை - வருத்தாது கொண்டாரும் போலாதே கோடல் அதுவன்றோ வண்டூதா துண்டு விடல். - பழமொழி : 244. 49. குடிகளைக் கொடுமையாகத் துன்புறுத்தி அளவுக்கு விஞ்சி வரிவாங்கி அவர்களுக்கு நன்மை செய்யப் போவதாகக் கூறுவது மயிலினது உச்சிக் கொண்டையை அறுத்தெடுத்து அதன் வாய்க்குள் வைத்து ஊட்டுவது போன்றது ஆகும். (5) அடைய அடைந்தாரை அல்லவை செய்து கொடை வேந்தன் கோல்கொடிய னாகிக் - குடிகள் மேல் கூட்டிறப்பக் கொண்டு தலையளிப்பின் அஃதன்றோ குட்டறுத்து வாயிலிடல். - பழமொழி : 26. 50. வேளை தோறும் பசுவின் பால் கறப்பதை விடுத்துப் பல நாட்களுக்கு ஒருமுறை மொத்தமாகக் கறந்து கொள்ளலாம் என தினைப்பவர் இலர். அதுபோல், பருவம் அறிந்து பல தவணைகளில் வரிவாங்குவதை விடுத்து ஒரே தடவையாக - மொத்தமாக - வரிவாங்கிட அறிவுடையோர் நினையார். (6) பாற்பட்டு வாழ்ப எனினும் குடிகள் மேல் மேற்பட்ட காட்டு மிக நிற்றல் வேண்டாவாம் கோல்தலையே யாயினும் கொண்டீக காணுங்கால் பால்தலைப் பாலூறல் இல். - பழமொழி : 245. 5. பானையை உருட்டி அதனுள் இருக்கும் உணவையானை உண்பதற்குத் தொடங்கினால் பானையை மூடிப் பாதுகாத்தற்கு ஏற்ற மூடிச் சட்டி எதுவும் கிடையாது. அதுபோல் குடிமக்களைக் கொடுமையாக வற்புறுத்தி ஆள்வோர் வரி வாங்க முனையும் போது அதனைத் தடுத்து நிறுத்துவதற்கும் வாய்த்த வழி இல்லை . (7) வெண்குடைக்கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும் செங்கோலன் அல்லாக்கால் செய்வதென் - பொங்கு படுதிரைச் சேர்ப்பு மற்றில்லையே யானை தொடுவுண்ணின் மூடுங் கலம். - பழமொழி : 27. 52. குடிகளைக் கொடுந்துயர் செய்து வரிவாங்குவது பசுவின் மடியை வெட்டிப் பால் கொள்ள நினைக்கும் கொடுமை போன்றதாகும். (8) குடிகொன்று இறைகொள்ளும் கோமகற்குக் கற்றா மடி கொன்று பால் கொளலும் மாண்பே - குடியோம்பிக் கொள்ளுமா கொள்வோர்க்குக் காண்டு மே மாநிதியம் வெள்ளத்தின் மேலும் பல. - நீதிநெறி விளக்கம் : 29. 53. கொடுங்கோல் ஆட்சியால் குடிகளை வாட்டிப் பொருளைப் பறிக்கும் ஆள்வோன், வேலைக் கையில் கொண்டு வழிப்பறி செய்யும் கள்வனுக்கு ஒப்பானவன் ஆவான். (9) வேலொடு நின்றான் கொடுவென்றது போலும் கோலொடு நின்றான் இரவு. - திருக்குறள் : 5:52. 54. தொழில்வகை முன்னேற்றத்திற்கு உரிய திட்டங்களைத் தீட்டிச் செயல்படாத நாட்டுக்கு வரிப்பணம் வழங்குவது விழலுக்கு இறைக்கின்ற நீர் போல் பயனற்று ஒழியும். (10) தொழிலுக் குதவாத நாட்டுக்குத் தீர்வை விழலுக் கிறைக்கின்ற நீர். - கைவிளக்கு : 8:9. 55. மலையில் பெய்த மழையின் அளவை ஆங்கிருந்து பெருக்கெடுத்து வரும் வெள்ளம் காட்டிவிடும். அதுபோல் ஆள்வோரது கல்வி, நடுவு நிலைமை ஆகியவற்றை அவர்களைச் சேர்ந்துள்ள அவையே காட்டி விடும். (11) கல்வி யகலமும் கட்டுரை வாய்பாடும் கொல்சின வேந்தன் அவை காட்டும் - மல்கித் தலைப்பாய் இழிதரு தண்புனல் நீத்தம் மலைப்பெயல் காட்டுந் துணை. - பழமொழி : 258. 56. தேர்ந்த அமைச்சர்களும், தெளிந்த அறிஞர்களும் ஒன்றுபட்ட கருத்துடன் இயைந்து ஆளும் ஆட்சி, வலிமை மிக்க காளையும், மற்றொரு காளையும் இணைந்து சென்று வண்டியை இழுத்து வெற்றி நடை போடுவது போல் சிறப்படையும். (12) நல்லவும் தீயவும் நாடிப் பிறருரைக்கும் நல்ல பிறவும் உணர்வாரைக் கட்டுரையின் வல்லிதின் நாடி வலிப்பதே புல்லத்தைப் புல்லம் புறம்புல்லு மாறு. - பழமொழி : 261. 57. நெய் வைக்கப் பெற்றிருந்த காலம், நெய்யை எடுத்துப் பரிமாறுவ தற்கும் பயன்படும். அதுபோல் ஆள்வோரால் மதிக்கப்படும் ஒருவர் பிறராலும் மதிக்கப் பெற்றுச் சிறப்படைவர். (13) வேந்தன் மதித்துணரப் பட்டாரைக் கொண்டேனை மாந்தரும் ஆங்கே மதித்துணர்வர் – ஆய்ந்த நலமென் கதுப்பினாய் நாடின் நெய் பெய்த கலனேநெய் பெய்து விடும். - பழமொழி : 272. 58. அம்புலியைக் காட்டி, அடம்பிடிக்கும் குழந்தையை அமுது உண்ணச் செய்யும் தாயரைப் போல் தவறிச் செல்லும் ஆள்வோரை அறிவுடையோர் பொய்க்காரணம் காட்டியேனும் திருத்தி நல்வழிப்படுத்துவர். இந்தவர். (14) செறிவுடைத் தார்வேந்தன் செவ்வியல் பெற்றால் அறிவுடையார் அவ்வியமும் செய்வர் - வறிதுரைத்துப் பிள்ளை களைமருட்டும் தாயர்போல் அம்புலிமேல் ஒள்ளிய காட்டாளர்க்கு அரிது. - பழமொழி : 264. 59. கற்றவர்கள் துணையை நாடாமல் நாடாளும் ஒருவனின் வருந்தத்தக்க நிலைமை, ஒரே நரம்பினைக் கொண்ட சுரையாழ் என்னும் யாழின் ஒரு நரம்பையும் வெட்டிவிட்டு இசை மீட்டுவது போன்ற இழிபாடு உடையது ஆகும். (15) கற்றார் பலரைத்தன் கண்ணாக இல்லாதான் உற்று இடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம் மரையா துணைபயிரும் மாமலை நாட சுரையாழ் நரம்பறுத் தற்று. - பழமொழி : 260. 60. நல்லறிஞர்கள் தக்க முறையில் இடித்துச் சொல்லியும் அதனைக் கேட்டு நல்வழியில் நடக்காமல் அல்வழியில் செல்லும் ஆள்வோன் மனிதனே எனினும் கண்விழித்துப் பெருமூச்சு விட்டு அலையும் நடைபிணம் போன்றவனே ஆவன். (16) முடிப்ப முடித்துப்பின் பூசுவ பூசி உடுப்ப உடுத்துண்ப உண்ணா – இடித்திடித்துக் கட்டுரை கூறின் செவிகொளா கண்விழியா நெட்டுயிர்ப்போடு உற்ற பிணம். - நீதிநெறி விளக்கம் : 31. 61. பாய்ந்து செல்ல வல்ல புலியின் முன்னர் நிற்கும் புள்ளி மானுக்கு உய்வு இல்லை; சூறைக்காற்றின் முன்னர்க் கிடக்கும் வைக்கோல் போருக்கும் உய்வு இல்லை. அவற்றைப் போல் ஆள்வோரை முறை கெட்டு எதிர்த்து நிற்பவர்க்கும் உய்வு இல்லை. (17) தீயன வல்ல செயினும் திறல்வேந்தன் காய்வன சிந்தியார் கற்றறிந்தார் - பாயும் புலிமுன்னம் புல்வாய்க்குப் போக்கில் அதுவே வளிமுன்னர் வைப்பாரம் இல். - பழமொழி : 265. 62. செல்வர் வறியர் என வேற்றுமை பாராமல் அனை வருக்கும் நடுவு நிலைமையுடன் ஒத்த நீதி வழங்க வேண்டும். அவ்வாறன்றி முறை தவறி நீதி வழங்குவது ஒருபக்கம் பாலையும், மற்றொரு பக்கம் நீரையும் ஒழுக விடுவது போன்றதாகும். (18) முறை தெரிந்து செல்வர்க்கும் நல்கூர்ந் தவர்க்கும் இறைதிரியான் நேரொக்க வேண்டும் - முறைதிரிந்து நேரொழுகா னாயின் அதுவாம் ஒருபக்கம் நீரொழுகிப் பாலொழுகு மாறு. - பழமொழி : 243. 63. கொலைக்கு அஞ்சாக் கொடுவினையாளர்களைக் கொன்று ஒழிப்பது குற்றம் அன்று. அவ்வாறு செய்வது உழவன் பயிரைக் காப்பதற்காகக் களையை வேருடன் பிடுங்கி எறிவதற்கு இணையானது. (19) கொலைமேற்கொண் டாரின் கொடிதே அலைமேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து. - திருக்குறள் : 551. 64. ஆள்வோர் அன்புக்கு உரியவராக அமைந்த ஒருவர், ஆள்வோரின் ஏவலர்க்கு உதவி செய்து அவர் வழியாக ஆள்வோர் உதவியைப் பெறலாம் என நினைப்பது, பசுவினை நெருங்கி நிற்கும் அதன் கன்று மடியில் வாய் வைத்துப் பாலை உறிஞ்சிக் குடிக்காமல் தாடையை நக்கிக் கொண்டு இருப்பது போன்றதே. (20) காவலனை ஆக வழிபட்டார் மற்றவன் ஏவல் வினைசெய் திருந்தார்க் குதவடுத்தல் ஆவணைய நின்றதன் கன்று முலையிருப்பத் தாயணல் தான் சுவைத் தற்று. - பழமொழி : 274. 65. வஞ்சக நெஞ்சம் உடைய மக்களை, ஆள்வோர் தம் பதவிக்கு ஏற்ற துணையாகக் கொண்டு இருப்பது, நச்சுப் பாம்புடன் கூடி ஒரே வீட்டில் குடியிருப்பது போன்றதாகும். (21) தலைமை கருதும் தகையாரை வேந்தன் நிலைமையால் நேர்செய் திருத்தல் - மலைமிசைக் காம்பனுக்கும் மென்தோளாய் அஃதன்றோ ஓரறையுள் பாம்போ டுடனுறையும் ஆறு. - பழமொழி : 253. 66. செய்பவனுடைய கலை உணர்ச்சிக்குத் தக்கவாறு அவனால் செய்யப் பெறும் பதுமைகள் அமையும். அது போல் ஆள்வோர் கருத்திற்குத் தக்கவாறே அதிகாரிகளும் அமைந்து பணி செய்வர். (22) செயிர் அறு செங்கோல் சினவேந்தன் தீமை பயிர் அறு பக்கத்தார் கொள்வர் - துகிர்புரையும் செவ்வாய் முறுவல்நற் சின்மொழியாய் செய்தானை ஒவ்வாத பாவையோ இல். - பழமொழி : 259. 67. நீர் ஓடிச் செல்லும் வழியே மிதவை செல்வது இயற்கை. அதுபோல், ஆள்வோர் செல்லும் வழியே மக்கள் செல்வதும் இயற்கை (23) இகழின் இகழ்ந்தாங்கு இறைமகன் ஒன்று புகழினும் ஓக்கப் புகழ்ப - இகல் மன்னன் சீர்வழிப் பட்டதே மன்பதைமற்று என்செயும் நீர்வழிப் பட்ட புணை. - நீதிநெறி விளக்கம் : 4. 68. வண்டியைச் செலுத்துபவன் வல்லமையனாக இருப்பான் என்றால் அவன் மாடுகள் சோம்பாமல் செல்லும். அதுபோல் ஆள்வோர் தக்கவராக அமைந்தால் ஆளப்படுவோரும் தக்கவராக அமைந்து கடமை ஆற்றுவர். (24) வண்டி செலுத்துவோன் வன்மை யுடையானேல் சண்டி யடையா எருது. - கைவிளக்கு : 10 : 12. 69. நன்மை தரும் முகில் இடத்தும் கெடுப்பதும், எடுப்பதும் ஆகிய இரு தன்மைகளும் உள் . அன்றியும் வேண்டிய இடத்தில் வேண்டிய காலத்தில் வேண்டிய அளவில் பெய்யாக் குறைபாடும் அதற்கு உண்டு. ஆயினும் அதனை மாந்தர் வெறார். அதுபோல் ஆள்வோர் நாட்டு மக்கள் அனைவருக்கும் விரும்பிய விரும்பிய நலங்களைச் செய்யத் தவறினாலும் நல்லோர் அவர்களைத் தழுவியே நடப்பர். (25) அல்லாரு மழையெவர்க்கும் அமுதெனினும் கால முணர்ந் தெல்லாம் நலம்பெறச் செய்திடும் கொல்லோ ஒருநிருபன் பல்லாரும் மகிழ்வுறவே பண்ணல சாத்தியமெனலால் நல்லாரன் னோன் செயலை நயமெனக் கொண் டொழுகுவரால். -நீதிநூல் : பிற்சேர்க்கை , 4:3. 70. தீமை தரும் கூட்டத்தில் இருந்து நீங்கித் தனியே யுள்ள குட்டிப் பாம்பு என்று பாம்பினை எளிமையாகக் கருதிச் சோம்பி இருப்பது தீமை தரும். அதுபோல் உயர் பதவியில் உள்ளவரை இளையர் என நினைத்து எள்ளி நகை செய்வதும் கேடு தரும். (26) சீர்த்தகு மன்னர் சிறந்தனைத்துங் கெட்டாலும் நேர்த்துரைத் தெள்ளார் நிலைநோக்கிச் - சீர்த்த கிளையின்றிப் போய்த் தனித்தாயக் கண்ணும் இளைதென்று பாம்பிகழ்வா ரில். - பழமொழி : 277. 71. ஒரு மரத்தின் கீழே மற்றொரு மரம் முளைத்தால் செழிப்பாக வளர்ந்து பயன் தராது. அதுபோல் ஒரு தலைவன் இடும் ஆணைக்குக் கீழே மற்றொரு தலைவன் இடும் ஆணையும் செல்லாது. (27) மன்னவன் ஆணைக்கீழ் மற்றையார் மீக்கூற்றம் என்ன வகையால் செயப்பெறு - புன்னைப் பரப்புநீர் தாவும் படுகடல் தண்சேர்ப்ப மரத்தின்கீழ் ஆகா மரம். - பழமொழி : 251. 72. குளிர் காய்பவர் தீயினிடம் நெருங்காமலும் விலகாம லும் அமைந்து அளவுடன் இருப்பதுபோல், ஆட்சிப் பொறுப்பு உடையவர்களிடம் பழகுவோரும் அமைந்திருத்தல் வேண்டும். (28) அகலா தணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தரச் சேர்ந்தொழுகு வார். - திருக்குறள் : 691 73. ஆட்சித் தலைவன் தலை ; அவன் உறுப்புக்களே நாட்டு மக்கள். உறுப்புக்கள் அனைத்தும் மூளையின் ஆணை வழியே இயங்கும். அதுபோல் ஆட்சித் தலைவன் ஆணை வழியே நாடும் இயங்கும். (29) தரையெனும் உடற்கொடு தலைவ னேதலை நரர்பல உறுப்புகள் நலங்கொள் மெய்யது சிரமுறும் பொறிவழிச் செல்லும் தன்மை போல் உரவர சனுக்கமைந் தொழுகும் வையமே. - நீதிநூல் : 4 : 4. 74. கதிரவனுடைய வெம்மை கொடியதே எனினும் அவன் இல்லாமல் உலகியல் நடைமுறைகள் எவையும் இல்லை. அவ்வாறே , ஆள்பவர் கொடியவரே எனினும் அவர்கள் இல்லை யேல் நாட்டின் நடைமுறைகள் எவையும் இல்லை . (30) பானுவெய் புடையவன் எனினும் பானுவே வானில வாணரில் வையம் உய்யுமோ கோனருங் கொடியனே களினும் கோனின்றி மானவர் உய்யவோர் வழியும் இல்லையே. - நீதிநூல் : 4:5. 75. மரம் கீழே வீழ்ந்தால், அதன் கிளைகளும் அதனைச் சுற்றியிருந்த கொடிகளும் வீழ்ந்து அழியும். அது போல் ஆட்சித் தலைவைர்க்கு அழிவு உண்டானால் நாட்டு மக்களுக்கும் நலிவு அன்றி நல்வாழ்வு இல்லை. (31) தருவிளெடு கிளைகளும்சார் வல்லியும் சாய்ந் தழிதலெனப் பெருமகனோர் இடரெய்தில் பிழைக்கும் வகை பிறர்க்குண்டோ மருவலரான் மற்றொன்றான் மகிபன் அயர் வெய்தாமல் ஒருமையொடும் அன்னானை உயர்குடிகள் ஓம்புவரால். - நீதிநூல் : பிற்சேர்க்கை 4 : 2. 76. உயர்ந்த செல்வத்தையும், சிறந்த பதவியையும் அடக்கமும் ஒழுக் கமும் இல்லாதவனிடம் ஒப்படைப்பது குரங்கின் கையில் கொடுக்கப்பட்ட கொள்ளி போன்றதாகும். (32) உடைப்பெருஞ் செல்வத் துயர்ந்த பெருமை அடக்கமில் உள்ளத்த னாகி - நடக்கையின் ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல் குரங்கின்கைக் கொள்ளி கொடுத்து விடல். - பழமொழி : 255. 77. குறும்பு மிக்க குரங்கை நண்டு கவ்வியது; தேள் கொட்டியது பேய் பற்றியது; இவை காணாவென்று குரங்கு மதுவைக் குடித்து இஞ்சியைக் கடித்துக் காஞ்சொறியின் பொடியைத் தூவிக்கொண்டு கொள்ளிக் கட்டையை எடுத்துக் கொண்டு புறப்பட்டது. அந்நிலைமையில் அது செய்யும் கேட்டுக்கு அளவுண்டா? இல்லை. அதுபோல், புல்லியர்களிடம் செல்வமும் ஆட்சிப் பொறுப்பும் சேர்ந்து விட்டால் அவர்கள் செய்யும் கேட்டுக்கும் அளவு இல்லை. (33) குரங்குமாய் நண்டு கட்டித் தேளும் கொட்டிக் குடியாத மதுக்குடித்துப் பேயு மேறி இரங்கவரும் காஞ்சொறியின் பொடியும் தூவி இஞ்சிதின்று கொள்ளிபிடித் தெழுந்தாற் போலத் தருங்கருணை இல்லாத புல்லர் வாழ்வில் தண்டிகையின் மீதேறிச் சம்பத் தேறிக் கருங்கைமதக் களிறேறிக் கழுவி லேறிக் காடேறி நாடேறித்திரிவார் கண்டீர். பெருந்தொகை : 262. 78. தன் கண்ணீரையே துடைக்கக் கூடிய ஆற்றல் அற்றவன் பிறர் கண்ணீரைத் துடைக்க மாட்டான். அது போல் வீட்டு ஆட்சியையே செவ்வை யாக நடத்தத் தெரியாதவன் நாட்டு ஆட்சியைச் சரியாக நடத்த மாட்டான். (34) தன் கண்ணீர் நீக்குந் தகவில்லான் காண்பனோ புன்கண் அகற்றும் புலம். வீட்டாட்சி செய்யும் விரகறியார் தேர்வரோ நாட்டாட்சி செய்யும் நலம். - கைவிளக்கு : 9:6, 7. 79. முறை தவறி ஆள்பவர்க்குக் குடிமக்களே பகைவர்; கோட்டையே போர்முனை ; நடமாடும் இடமெல்லாம் படுகுழி; இருக்கையே தூக்கு மேடை பணி செய்பவரே இயமன் தூதுவர் ; அரண்மனையே சுடுகாடு ! இத்தகையவர் என்றும் உய்யார் (35) கொடியமன்னவர்க்குக் குடிகளே ஒன்னார் கோட்டையே அமர்க்களம் அவர்தம் அடிகள்தோய் நிலமெங் கணும் படுகுழியாம் அயின்றிடும் அன்னமும் விடமாம் நெடியஆ சனமே காசன மேடை நிமிர்உழை யோர்நமன் தூதர் கடிமனை மயானக் காடெனில் கொடுங்கோற் காரணர் உய்யுமா றுளதோ. - நீதிநூல் : 3 : 10. 80. மழை பெய்யாமையால் உயிர்களுக்கு எவ்வளவு துன்பம் உண்டோ , அவ்வளவு துன்பம் உண்டு ஆள்வோர் அருள் பெறாமல் வாழும் மக்களுக்கு. (36) துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு. - திருக்குறள் : 5:57. 81. துயரத்தைப் பொறுக்கமாட்டாமல் மக்கள் அரற்றி அழுது வடிக்கும் கண்ணீர், ஆட்சி என்னும் இரும்பினை அராவும் அரம் ஆகும். (37) அல்லற்பட்டாற்றா தழுதகண் ணிர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. - திருக்குறள் : 555. 3. இல்வாழ்வு 82. உடம்புக்கும் உயிருக்கும் அரிய முறையில் அமைந்துள்ள பிரிதல் அறியாத் தொடர்பு போன்றது கணவன் மனைவியர்க் கமைந்துள்ள தொடர்பு. (1) உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன மடந்தையொ டெம்மிடை நட்பு. வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை; சாதல் அதற்கன்னள் நீங்குமிடத்து. - திருக்குறள் : 1122 ; 1124. 83. உயிரும் உடலும் போன்றவர் கணவன் மனைவியர் ; அவர்கள் அதனை உணர்ந்து ஒன்றுபட்டு வாழாமல் மாறுபட்டு வாழ்வது உடலும் உயிரும் போராட்டம் நடத்துவது போன்ற தாம். (2) ஆவியின்றி உடலில்லை; உடலின்றி ஆவியிலை; அதுபோல் பார்த்தா தேவியெனும் இருவர் சேர்ந்தோருருவாம் செழுமலரும் தேனும் போல மேவியவர் இருவருமே நள்ளாது முரண்செய்யின் விளங்கு மெய்யும் சீவனுமொன் றோடொன்று போராடி அழிந்ததொக்கும் செப்புங் காலே. - நீதிநூல் : 11 : 1. 84. தமக்குரிய இல்லத்தில் இருந்து தம் உழைப்பினால் வந்த பொருளைப் பிறருக்கும் பகுத்துத் தந்து தாமும் உண்பது போன்றது, நன் மனைவியுடன் கூடி நடத்தப் பெறும் இனிய இல்லறம். (3) தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால், அம்மா அரிவை முயக்கு. - திருக்குறள் : 1107. 85. பருவம் அறிந்து தவறாமல் செழிக்கப் பெய்யும் மழை போன்றது அன்புமிக்க மனைவியினிடத்துக் கணவன் காட்டும் அருள். (4) வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால், வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி. - திருக்குறள் : 1192. 86. அரிய நூல்களை ஆராய்ந்து காணக் காணப் புதுப்புது இன்பம் தோன்றிக் கொண்டே இருத்தல் போல் நன் மனைவியுடன் கூடி இல்லறம் நடாத்த நடாத்தப் புதுப் புது இன்பம் தோன்றிக் கொண்டே இருக்கும்.(5) அறிதோ ற்றியாமை கண்டற்றால், காமம் செறிதோறும் சேயிழை மாட்டு. - திருக்குறள் : 1110. 87. இரண்டு கண்களும் ஒரு பொருளையே நோக்குவது போல் கணவன் மனைவியர் இருவரும் ஒருமித்த கருத்து உடையவர்களாக எச் செயலையும் செய்தல் வேண்டும். (6) காதல் மனையாளும் காதலனும் மாறுஇன்றித் தீதில் ஒரு கருமம் செய்பவே - ஓதுகலை எண்ணிரண்டும் ஒன்றுமதி என் முகத்தாய் நோக்கல்தான் கண்ணிரண்டும் ஒன்றையே காண். - நன்னெறி : 6. 88. இனிய பாட்டுடன் இசையும் பொருந்தி நடப்பது போல் கணவன் மனைவியர் இசைந்து நடத்தல் வேண்டும். (7) வேட்கை பெருகினால் வேறும் தடையுண்டோ பாட்டொடு பண்ணாய்ப் பயில். - கைவிளக்கு : 7 : 10. 89. காலில் வலி கண்டாலும் கண் அதற்காக வருந்தி நீர் வடிக்கும். அதுபோல் கணவன் மனைவியர் இன்ப துன்பங்களில் இணைந்து பரிவுடன் வாழ்தல் வேண்டும். (8) கால் வலிக்கக் கண்ணீர் வருவதுபோல் காதலனும் கோல்வளையும் நிற்றல் குணம். - கைவிளக்கு : 7: 7. 90. மணியும் ஒளியும் போல் கணவனும் மனைவியும் ஒன்றுபட்டு வாழ்ந்தால் அவர்கள் நோய்க்கும் வறுமைக்கும் ஆட்பட்டவர்களாக இருந்தால் கூடப் பெருஞ்செல்வர்களே ஆவர். (9) மணியுமொளியும் போலாண் மகனுமனை வியும் பொருந்தி வாழு வாரேல் பிணியுறுமா துலரெனினும் பெருஞ்செல்வர். - நீதிநூல் : 11 : 2. 91. நீரை விட்டுப் பிரிந்த தாமரை பிறிதிடத்தில் செழிக்காது; கொம்பை விட்டுப் பிரிந்த கொடி பிறிதிடத்தில் வளம் பெறாது; அவற்றைப் போல் கொழுநனைப் பிரிந்து வாழும் மனைவியும் நலம் பெறாள். (10) செழுமுளரி புனல்நீங்கில் செழிக்குமோ படர்கொடிகள் கொழுகொம்பைப் பிரியின் வளம் கொண்டுய்யு மோகணவர் அழுதயர வைத்தாலும் அரந்தைபல இயற்றிடினும் தொழுதகுகற் புடையார் தம் துணைவரைவிட்டகல்வாரோ. - நீதிநூல் : 11:33. 92. நன் மனைவயின் முகம் தாமரை மலர் போன்றது. தன் கணவன் ஆகிய கதிரவனைக் கண்டபோது மட்டுமே அது மலரும். அயல் ஆடவனாம் மதியைக் கண்டால் மலராது குவியும் தன்மையது. (11) கதிரவன் அனையதம் கணவர் ஏர்முகம் எதிருற மலருமற் றேதி லார்முக மதிய நோக் கிடஇதழ் வாடிக் கூம்புமால் சதியர்வாள் முகமனும் சலசப் பூவரோ. - நீதிநூல் : 11 : 17. 93. கணவன் மனைவியர் கீரியும் பாம்பும் போல் தங்களுக் குள் பகை கொண்டு வாழ்வார்கள். ஆனால், அவர்கள் பெருஞ் செல்வர்களாக இருந்தாலும் அவர்கள் செல்வம் பிணத்தின் மேல் பூட்டி வைக்கப்பட்ட அணிகலம் போன்ற தாகவே அமையும். (12) . . . . . . . . . • • • • • நகுலமும்வெம் பெரும் பாம்பும் போல் தணியாத பகையுற்று நள்ளாரேல் உயிரற்ற சவத்தின் மீது பணிகள் மிகப் பூட்டியலங் கரித்தலொக்கும் அவர் செல்வப் பயன்தான் அம்மா. - நீதிநூல் : 11:2. 94. வாழ்வியல் இன்னதென அறியாத பெண்ணை இல் வாழ்வில் புகுத்தி வைப்பது, நீந்த அறியாத ஒருவனைக் கடலில் தள்ளி நீந்தவிட்டது போன்றது ஆகும். (13) கலையுணர்ந்தறி யாதவோர் கன்னியை உலையு றுஞ்சமு சாரத்தின் உய்க்குதல் நிலையு ணர்ந்தறல் நீந்தறி யான்தனை அலைகடற்கண் அமிழ்த்தலை ஒக்குமே. - நீதிநூல் : 9:9 95. உலகியலும் வாழ்வியலும் அறியாத பெண்ணுடன் கூடி இல்லறம் நடத்துவது பிணத்தோடும், கல்லோடும் கூடி வாழ்வு நடத்துவது போன்றது. (14) நல்லறி வேயணி நன்னுத லார்க்கஃது இல்லவ ரோடுமி யைந்து கலத்தல் புல்லுயிர் நீங்குபு ழுக்கொள் வத்தைக் கல்லுரு வைப்புணர் காம நிகர்த்ததே. - நீதிநூல் : 9: 10. 96. தன்னை அடுத்துள்ள பொருள்களை எரித்துத் தானும் அழியும் தன்மையினது நெருப்பு தன் கணவனையும் துன்புறுத்தித் தானும் துன்புற்று அழியும் மனைவியும் அந் நெருப்புப் போன்றவளே. (15) தாங்குபொருள் சுட்டழித்துத் தானுமழி யுங்கனல் போல் தலைவன் நெஞ்சைத் தீங்குகளால் சுடுமனைவி தன்வாழ்வைக் கெடுத்தலால் செழுங்கண் டத்தில் தூங்குதிரு நாணினால் என்ன பயன் அதைக் கழுத்தில் சுருக்கிக் கொண்டு தேங்குமுயிர்ப் பொறை நீக்கில் பூமகள்தன் பெரும்பொறையும் தீரு மன்றே. - நீதிநூல் : 11:10. 97. தன் குறிப்பினை உணர்ந்து நடந்து, விருந்தினர்களை இனிய முறையில் பேணி வாழும் நன்மனைவியைக் கொண்ட கணவனுக்கு எக் குறையும் இல்லை. அவன் வாழ்வு, கடலில் துலாப் போட்டு இறைப்பதுபோல் குறையாது இருக்கும். (16) சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பிற்றம் இல்லாளே வந்த விருந்தோம்பிச் - செல்வத் திடரின்றி ஏமாந் திருந்தாரே நாளும் கடலுள் துலாம் பண்ணினார். - பழமொழி : 330. 98. நீந்துவதற்கு அரிய வெள்ளத்தையும் பசுவின் வாலைப் பற்றிக் கொண்டு நீந்தி விடலாம். ஆனால் நாயின் வாலைப் பற்றிக்கொண்டு நீந்த முடியாது, அவ்வாறே நற்பண்புடைய மனையாள் ஒருவனுக்கு வாய்ப்பின் அவன் எத்தகைய இடர்ப் பாடான நிலைமையிலும் தன் வாழ்வை நடத்தி விடலாம். ஆனால் நற்பண்பில்லாதவள் வாய்க்கப்பெற்றால்...? (17) உற்ற பெரும் சுற்றம் உறநன் மனைவியுடன் பற்றிமிக வாழ்க பசுவின் வால் - பற்றி நதிகடத்தல் அன்றியே நாயின் வால் பற்றி நதிகடத்தல் உண்டோ நவில். - நீதிவெண்பா : 11. 99. கடலில் வாணிகத்திற்காகச் சென்ற கப்பல் பெரும் பொருளுடன் அல்லல் எதுவும் இல்லாமல் கரைக்குத் திரும்பினால் பட்டினத்து மக்கள் பெரிதும் மகிழ்வர். அதுபோல் உரிய காலத்தில் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் முறை பெறச் செய்து கொண்ட நல்வாழ்வினரும் மகிழ்வர். (18) கருமமும் உட்படாப் போகமும் துவ்வாத் தருமமும் தக்கார்க்கே செய்யா - ஒருநிலையே முட்டு இன்றி மூன்றும் முடியுமேல் அஃதுஎன்ப பட்டினம் பெற்ற கலம். - நாலடியார் : 250. 100. குடும்பம் என்னும் வண்டியில் இல்வாழ்க்கை என்னும் சரக்கை ஏற்றிக்கொண்டு கணவன் மனைவியர் என்னும் குதிரைகள் இழுத்துச் செல்ல வேண்டியுள்ளது. அக்குதிரைகள் மனம் ஒன்றுபட்டுச் செல்லாவிடில் வண்டி யும் சரக்கும் அழியும். வண்டி ஓட்டியாம் இறைவனும் தண்டிப்பான். (19) பரவுசமு சாரமெனும் பண்டியில் வாழ் வெனும் பொருளைப் பரப்பிப் பூண்ட புரவிகள் போல் காந்தனும் காந்தையுமமைந்தார் மனமொத்தோர் போக்கை நாடி விரவொடுமே காரென்னின் ஊர்தியொடப் பொருள்விளியும் விண்பு ரக்கும் பரமனெனும் சாரதியப் பரிகள் மேல் சினமுற்றுப் படர்செய் வானே. - நீதிநூல் : 11:8. மருவிய காதல் மனையாளும் தானும் இருவரும் பூண்டுய்ப்பின் அல்லால் – ஒருவரால் இல்வாழ்க்கை என்னும் இயல்புடைய வான் சகடம் செல்லாது தெற்றிற்று நின்று. அறநெறிச்சாரம் : 164. 101. திருமணத்திற்கு முன்னரே ஆராயாமல் கணவன் மனைவியர் ஆகிய பின்பு தங்களுக்குள் ஆய்வு நடத்துவது, கடலில் ஓடிக்கொண்டிருக்கும் ஓடம் நல்லதா என்று ஆராய்வது போன்றது ஆகும். (20) 102. கடலில் செல்லும்போது ஓடம் குறையுடையது என ஆராய்ந்து கண்டாலும் அதனை விடமுடியாது. உடலில் நோயோ உறுப்புக் குறையோ உண்டாகி விட்டால் கூட உடலை விட்டொழிக்க முடியாது. அவற்றைப் போலவே கணவன் மனைவியர் குறையுடையவர் எனினும் பின்னர் ஒருவரை ஒருவர் பிரியமுடியாது. (21) தவனாட்டி யிருவரில் நற் குணமுளார் இலர் என்னும் தன்மை நோக்கல் நவமணம் செய்ய முன்னன்றிப் பின்னுற்றிற் பயனுளதோ நாவாய் தன்னை உவராழி நடுவில் நன் றன்றெனக்கை விடத்தகுமோ உடல்பல் நோய் சேர்ந்து அவயவங்கள் குறைந்தாலும் அதை யோம்பா தெறிவாரோ அவனி மீதே. - நீதிநூல் : 11:4. 103. கணவன் மனைவியர்க்குள் கருத்து வேறுபாடு தோன்றினால் அன்பினால் திருத்திக் கொள்ளுதல் வேண்டும். கொடிய விலங்குகளையும் பக்குவமாகத் திருத்திவிடக் கூடியவர் களை உலகில் காண்கிறோம் அல்லவா! (22) 104. கணவன் மனைவியர் தங்களுக்குள் தோன்றும் கருத்து வேறுபாட்டைக் கோபத்தால் சரிப்படுத்தி விட முடியாது. கண்ணில் புண் இருந்தால் அதில் மருந்து பூசினால் நீங்குமே அன்றிக் கொதிக்கும் நெய்யை ஊற்றினால் நீங்குமா? (24) கொழுநனா யினுமனையா யினுமியல்பில் லாரென்னில் கூறின் சொல்லால் செழுமை நெறி யினிற்றிருப்ப வேண்டுமிதத் தால் வசமாம் சினவி லங்கும் அழல்வதினால் துன்பமிகு மல்லாது பயனுளதோ அருநோய் உற்ற விழிமிசைநன் மருந்திடா தழற்பிரம்பை விடிலந்நோய் விலகுங் கொல்லோ . - நீதிநூல் : 11:5. 105. நறுமணம் வாய்ந்த பூ தக்கவர்களிடம் பெருமை அடையும். அவ்வாறே இல்வாழ்வும் தக்கவர்களிடம் சிறப்பு அடையும். தீயிடையிட்ட பூ கரிந்து சாம்பல் ஆகும். அவ்வாறே தீயோர் இடைப்பட்ட இல்வாழ்வும் கெட்டொழியும். (24) பெருமணப்பூ தீப்பட்ட பெற்றியாம் காதல் திருமணப்பூ தேரா ரிடம். - கைவிளக்கு : 7: 2. 106. உள்ளதை உணராமல் வெளிமயக்கினைக் கண்டு திருமணம் செய்து கொண்டவர் வாழ்வு, வெளிச்சத்தை நம்பி ஓடிக்கெட்டழியும் விட்டில் போன்று முடியும். (25) உளக்கூட றறியா துவந்தோடும் காதல் விளக்கிற் குழலும் பூச்சி. - கைவிளக்கு : 7: 5. 107. வயிறு நிரம்பி விட்டாலும், பதனீர்ப் புழு அதில் இருந்து வெளியேறாமல் பருகிக் கொண்டிருந்தே சாவும். அதுபோல், உடலின்பம் ஒன்றே இன்பம் எனக் கொண்டவர்களும் அவ்வின்பத்தில் மூழ்கிக் கிடந்தே அழிவர். (26) பதநீரில் பட்டழுந்தும் வண்டுபோல் ஆழ்தல் இதமிலாக் காதல் இயல். - கைவிளக்கு : 7: 4. 108. மலர் மிக மெல்லியது; அதனினும் அனுபவிக்க மெல்லி யது காதல்; அதன் நுட்பத்தை உணர்ந்து அனுபவிக்க வல்லவர் உலகில் ஒரு சிலரே உளர். (27) மலரினும் மெல்லிது காமம்; சிலர் அதன் செவ்வி தலைப்படு வார். - திருக்குறள் : 1289. 109. மென்மையான கண் முதலிய உறுப்புக்களை எவ்வளவு நயமாகப் பேணிக் காக்கிறோமே அவ்வளவு நயமாக மெல்லியல் வாய்ந்த பெண்களைக் காக்க வேண்டும். (28) மென்மை யாகும் விழிமுதல் யாவையும் நன்மை யாஇட ரின்றிநன், கோம்பல் போல் வன்மை இல்மட மாதர்கள் பாற்கொடுந் தன்மை இன்றித் தயையுற வேண்டுமால். - நீதிநூல் : 11:46. 110. பெண்களினும் ஆண்கள் உயர்ந்தவர்கள் என்பது மடமை. இரண்டு கண்களிலும் எந்தக் கண்ணை உயர்ந்தது என்று கூறுவது? இரண்டும் உயர்ந்த வையே! (29) இக்கினை நகுமொழி எழில்மின் னாரின் ஆண் மக்கள் மிக் கோரெனல் மடமை யாமிரண்டு அக்கமும் ஒக்குமே யன்றி நல்லகண் எக்கண்மற் றெக்கணே இழிவுடைக்க ணே. - நீதிநூல் : 9:8. 111. கணவனை எதிர்த்துப் பேசி வீணாகத் துன்புறுத்தும் மனைவி இருக்கும் இல்லம், புலி தங்கி இருக்கும் குகை போன்றதே. (30) இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்கு மேல் அவ்இல் புலிகிடந்த தூறாய் விடும். - மூதுரை : 21. 112. கணவனுக்கு வந்த துன்பத்தைக் கண்டு துடித்து வருந்தி ஆவன செய்யாத மனைவி, கணவன் மடியிலே வைத்துக் கட்டிக்கொள்ளப்பெற்ற நெருப்புப் போன்றவளே. (31) துடியாப் பெண்டிர் மடியின் நெருப்பு. - கொன்றை வேந்தன் : 41. 113. கணவன் இல்லாத மனைவிக்கு அமைந்துள்ள நல்லழகு பருவம் அல்லாப் பருவத்தில் பூத்த மலரைப் போல் பயனற்றது. (32) இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால் இன்னா அளவில் இனியவும் - இன்னாத நாளல்லா நாள்பூத்த நன்மலரும் போலுமே ஆளில்லா மங்கைக் கழகு. - மூதுரை : 3. 114. இல்வாழ்வில் இன்பத்திற்குத் துணையாகும் சிறு கோவமும் (துனியும்) பெருங்கோவமும் (புலவியும்) இல்லா விடின் அஃது இளங்காய் போலவும், மிகப் பழுத்த கனி போலவும் சுவையற்றதாகப் போய்விடும்.(33) துனியும் புலவியும் இல்லாயின், காமம் கனியும் கருக்காயும் அற்று. - திருக்குறள் : 1306. 115. கோடைக் காலத்தில் நிழலில் வைக்கப்பெற்ற நீரே குளிர்ச்சியாக இருக்கும். அதுபோல் விரும்பத்தக்கவரிடம் ஊடுவதே (சிறு கோவம் கொள்வதே இன்பம் பயக்கும். (34) நீரும் நிழலது இனிதே; புலவியும் விழுநர் கண்ணே இனிது. - திருக்குறள் : 1309. 116. உண்ணும்போது உண்டாகும் இன்பத்திலும், அவ் வுணவு செரித்தலால் உண்டாகும் இன்பமே பெரிது. அதுபோல் கூடலில் காணும் இன்பத்திலும் ஊடலில் அடையும் இன்பமே பெரிது. (35) உணலிலும் உண்ட தறல் இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. - திருக்குறள் : 1326. 117. ஊடல் கொண்டவரை உணராமல் செயலாற்றுதல் முன்னரே நீரின்றி வாடிக் கிடக்கும் கொடியின் வேரையும் பறித்து எறிந்ததற்கு இணை யாகும். (36) ஊடி யவரை உணராமை, வாடிய வள்ளி முதலரிந் தற்று. - திருக்குறள் : 1304. 118. அளவே அமைந்த உப்பு உணவுக்குச் சுவையூட்டுவது போல் அளவே அமைந்த ஊடல் வாழ்வுக்கு வளமூட்டும். ஊடல் அளவு கடந்து நீளப் பெற்றால் உப்புக் கைக்கும் உணவு போல் வெறுக்கத் தக்கதாகிவிடும்.(37) உப்பமைந் தற்றால் புலவி, அது சிறிது மிக்கற்றால் நீள விடல். - திருக்குறள் : 132. 119. சிற்பியால் செதுக்கப்பெற்ற சிலை சிற்பிக்கும் தெய்வ மாகத் திகழும். அதுபோல், தந்தையால் தக்க முறையில் வளர்க்கப் பெற்றுச் சிறந்தவனாக ஆக்கப்பெற்ற மைந்தன், தன் உயர் பெருந் தன்மையால் தந்தை யின் அன்பு வணக்கத்திற்கும் உரியவன் ஆவான். (38) எந்நெறி யானும் இறைவன்றன் மக்களைச் சென்னெறிமேல் நிற்பச் செயல்வேண்டும் - அந்நெறி மான்சோர்ந்த நோக்கினாய் ஆங்க வணங்காகும் தான் செய்த பாவை தனக்கு . - பழமொழி : 331. 120. நல்ல தன்மைகளை அறியாத நூறு மைந்தர்களைப் பெறுவதிலும் நல்ல தன்மைகளை அறிந்த ஒரு மைந்தனைப் பெறுவது நலம். நிறைந்த விண்மீன்கள் வானில் இருப்பதால் பயன் என்ன? ஒரு நிறைமதியின் ஒளிக்கு இணையாகாவே! (39) குலத்தையிங் காத ரிக்கக் குணமாக வொன்றே போதும் நலத்தை திங் கிதத்தைச் சற்றும் நண்ணிடாச் சேய்கள் நூறு பெலத்துடன் இருக்கின் என்னலாம் பெருக்கிடும் அநேக மீன் விண் தலத்திடை இருக்கின் என்னாம் விளங்குதல் மதிதான் ஒன்றே . - நீதிசாரம் : 11. 121. அறிவில்லாத பல மக்களைப் பெறுவதினும் அறிவுடைய ஒரு மைந்தனைப் பெறுவது போதும். பன்றி பல குட்டிகளை ஈன்றதனால் என்ன பயன்? யானைக் கன்று ஒன்று போதாதா? (40) பொற்பறிவில்லாத பல புத்திரரைப் பேறலின்ஓர் நற்புதல்வரைப் பெறுதல் நன்றாமே! - பொற்கொடியோ பன்றி குட்டி பயந்ததனால் ஏதுபயன்? ஓன்றமையா தோகரிக்கன்று? ஓது. - நீதிவெண்பா : 4. 122. பன்றிக்குட்டி பலவற்றினும் யானைக் கன்று ஒன்றே புகழ் பெறும். ஆகவே, வளர்பிறைபோல் அறிவும் பண்பும் வளரும் மகவு ஒன்றைப் பெற்றால் வேறொன்றும் வேண்டுவது இல்லை .(41) பறழ்பல பன்றி பயப்பினும் என்மன் கறையடி சுட்டுறுங் கன்றொன்றீன்றாலும் பிறைபோ லறிவு பெருகு மகவொன் முறினுறுவ வேறென் னுள. - இன்னிசை இருநூறு : 25. 123. அடிமரம் கறையானால் அரிக்கப்பட்டு அழிந்து போனாலும் ஆல் கீழே வீழ்ந்துவிடுவதில்லை. அதன் வீழ்துகள் மரம் கீழே வீழாமல் காக்கும். அவ்வாறே , நற்குடியில் பிறந்த மைந்தர்கள் தம் தாய் தந்தை முதலியோர் தளர்ச்சி அடைந்த போதும் தம் குடியை இனிது காப்பர். (42) சிதலை தினப்பட்ட ஆல மரத்தை மதலையாய் மற்றும் அதன் வீழ்ஊன்றி யாங்குக் குதலைமை தந்தைகண் தோன்றின்தான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும். - நாலடியார் : 197. 124. பச்சை மண்ணைக் கொண்டு குயவன் தான் விரும்பும் வகையில் கலங்களை வனைந்து கொள்வான். அது போல், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை இளம் பருவத்திலேயே தாங்கள் விரும்பும் நல்வழிகளில் செல்லுதற்குப் பயிற்றுதல் வேண்டும். (43) பச்சைமண் கொடுநி னைத்த படி பல கலம்செய் வார்போல் விச்சையும் அறமும் மூப்பு மேவுமுன் தம்ம கார்க்குப் பிச்சைகொண் டெனினும் ஓதல் பெற்றவர் கடனாம் அன்றேல் இச்சைசேர் பழிபாவங்கள் ஈன்றவர்க் கெய்து மாலோ. - நீதிநூல் : பிற்சேர்க்கை : 8:4. 125. ஆடை முதலியவை, அடுத்துள்ள பொருள்களின் நிறங்களைக் கவர்ந்து அந்நிறத்தைத் தாமும் ஏற்றுக் கொள்ளும். அவ்வாறே இளங் குழந்தைகளும் சுற்றியுள்ளோர் தன்மைகளையும் செயல்களையும் பின் பற்றுவது இயற்கை. ஆதலால் தீயவர்கள் உறவில் இருந்து பிள்ளைகளை விலக்கி வைத்தல் பெற்றோர் கடமை . (44) அயற்பொருள் நிறங்கவர் ஆதனங்கள் போல் செயப்பிறி தறிகிலாச் சேயர் சுற்றுளோர் கயப்புறுந் தீச்செயல் கற்கை யாலவர் நயப்புறுஞ் சேர்க்கையை விலக்கல் நன்றரோ. - நீதிநூல் : 8:1. 126. கொட்டி அல்லி, தாமரை, மீன் ஆகியவை ஒரே குளத்தில் தோன்றினாலும் தனித்தனித் தன்மைகளை அவை பெற்றிருத்தல் போல் ஒரே தாய் வயிற்றில் பிறந்தால் கூட மக்கள் பல தன்மை யினராக இருப்பர்.(45) உற்றிடும் குளத்தில் கொட்டி ஆம்பல்பங் கயங்க ளோடு மற்றமச் சமும் சனித்து வெவ்வேறு வகையாம் போல உற்பனத் தொருத்தி கெர்ப்பத்துடன் பிறந்தார்க ளேனும் விற்பனக் குணநிறங்கள் வேறுபட்டிருக்கும் அன்றே. - நீதிசாரம் : 45. 127. நிலத்தின் வளமையை ஆங்குத் தோன்றிய வித்தின் முளை காட்டும். அதுபோல் உயர் குடியில் பிறந்தவனை அவன் சொல்லும் சொல்லே காட்டும். (46) நிலத்தில் கிடந்தமை கால்கட்டும்; காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். - திருக்குறள் : 959. 128. குடி என்பது ஓர் ஒளி விளக்கு; அதற்குச் சோம்பல் என்பது கருக்கு. அக்கருக்கு நிரம்பச் சேர்ந்து விட்டால் விளக்கே அணைந்து போகும்.(47) குடியென்னும் குன்றா விளக்கம், மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும். - திருக்குறள் : 01. 129. ஆண்மை உடையவர்களே போராட்டம்' என்னும் சுமையைத் தாங்க முடியும். அவ்வாறே , ஆற்றல் உடையவர்களாலேயே 'குடி' என்னும் சுமை யையும் தளராமல் தாங்க முடியும். (48) அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை. - திருக்குறள் : 1027. 130. நீர்விட்டு நன்றாகப் பேணி வளர்க்கப்பெற்ற மரம், பயன்மிக்க மலர், நிழல், கனி ஆயவற்றைத் தாராது ஆயின் அதனை வெட்டி அழிப்பர். அதுபோல் தன்னைப் பெற்றுப் பேணிக் காத்த தாய் தந்தையர்க்கு உதவாத பிள்ளைகளை இறைவன் ஆழ்துயரத்தில் ஆழ்த்துவான். (49) வைத்தவர் உள்மு வப்ப மலர்நிழல் கனியீ யாத அத்தருத் தன்னை வெட்டி அழலிடு மாபோல் ஈன்று கைத்தலத் தேந்திக் காத்த காதற்றாய் பிதாயை ஓம்பாப் பித்தரை அத்தன் கொன்று பெருநர கழல் சேர்ப்பானே. - நீதிநூல் : 7: 4. 131. எவரும் ஏவாமல் தக்கவற்றைச் செய்து முடிக்கும் மக்கள் அவர்களின் பெற்றோர்களுக்கு வாய்த்த அமுதம் போன்றவர். (50) ஏவா மக்கள் மூவா மருந்து. - கொன்றை வேந்தன் : 8. 132. ஏவாமல் செயலாற்றும் திறம் வாய்ந்த நன்மக்கள் பூவாமல் காய்க்கும் மரத்திற்கு இணையானவர். (பூவாமல் காய்க்கும் மரம் பலா). (51) பூவாதே காய்க்கும் மரமும்உள மக்களுளும் ஏவாதே நின்றுணர்வார் தாம்உளரே – தூவா விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு. - நல்வழி : 35. 133. பெற்றெடுத்துப் பேருதவி புரிந்த தாய் தந்தையர் முதிர்ந்த காலத்தில் வன்சொற்களைக் கூறினாலும், மக்கள் அதனைக் கரும்புப் பாகெனக் கொள்ளுதல் வேண்டும். ஊன்றுகோல் உதவுவது போல் அவர்களுக்கு ஏற்ற தாங்குதலாய் அமைந்து காக்கவேண்டும். (52) ஈன்றவர் நம்மால் உற்ற எண்ணரும் இடர்கட் கான்ற மூன்றுல கமுமொப் பாமோ மூப்பினால் இளைப்பால் அன்னார் கான்றவன் சொற்கள் கன்னல் கான்றவின் பாகெனக்கொண் டூன்றுகோல் என்னத் தாங்கி ஊழியம் செய்யாய் நெஞ்சே - நீதிநூல் : 7: 5. 134. ஒரு திரியாக இருக்கும் விளக்கைச் சிறிய காற்றும் அணைத்து விடும். பல திரிகள் கூட்டியமைத்த விளக்கைப் பெருங் காற்றும் அணைக் காது. அதுபோல் உடன் பிறந்தவர்கள் அன்பாகக் கூடியுள்ள குடும்பத்தை எவராலும் வெல்ல முடியாது. (53) ஒற்றைஒண் சுடரினை ஒழிக்கும் மெல்வளி கற்றையாய்ப் பல்சுடர் கலப்பின் மாவளி சற்றும் வெல்லாதுசூழ் தமர்ச கோதரர் பற்றொடு மருவிடிற் படர்உ றார்களே. - நீதிநூல் : 10 : 4. 135 மரக்கிளை வறண்டு வாடினால் அதிலுள்ள இலைகளும் வறண்டு விடும். கொம்பு செழித்து வளர்ந்தால் இலைகளும் செழித்து வளரும். அவற்றைப் போல் உடன்பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை இணைந்து அனுபவித்து ஒன்றுபட்டு வாழ்தல் வேண்டும். (54) கொம்பருள் உலர்ந்திடக் கூடவாடும் இலைகளும் பம்பியக்கொம் போங்கிடப் பன்னமும் செழிக்குமால் தம்பியண்ணன் என்னவே சார்ந்துளோர்தம் இன்பமும் வெம்புதுன்பும் ஒன்றென மேவிவாழ்தல் மேன்மையால். - நீதிநூல் : பிற்சேர்க்கை : 10:2. 136. ஓர் இழையை அறுப்பது எளிது; ஆனால், பல இழை களைச் சேர்த்துக் கயிறாக முறுக்கி விட்டால் அறுப்பது அரிது. அதுபோல் உடன் பிறந்தவர்கள் ஒன்றுபட்டு இருப்பார்கள் என்றால் பிறரால் எளிதில் அசைக்க முடியாது. (55) ஓரிழை அறுத்திடல் எளிதொன் றாகவே சேரிழை பலவறத் திரித்த தாம்பினை யாருமே சிதைத்திடார் அமைச கோதரர் சீரோடு பொருந்திடில் திறல்கொள் வாரரே. - நீதிநூல் : 10 : 5. 137. இருந்த வயிறு, பாலுண்ட மார்பு, குடியிருந்த இடம் இவை அனைத்தும் ஒன்றாகக் கொண்ட உடன்பிறந்த மக்கள் பாலும் தேனும் கலந்தது போல் கூடிவாழ்தல் வேண்டும். (56) தந்தை தாய் ஒருவர் தம்மைத் தாங்கிய உதரம் ஒன்று முந்ததின் பாலருந்து முலையொன்று வளரும் இல்லொன் றிந்தவா றெல்லாம் ஒன்றாய் இயைந்தசோ தரரன் புற்றுச் சிந்தையும் ஒன்றிப் பாலும் தேனும் போல் விளங்கல் நன்றே. - நீதிநூல் : 10 : 1. 138. பல நற்பண்புகளைக் கொண்டிருந்தாலும், தன் இனம் பேணாத் தன்மையால் நாய் இழிந்ததாக எண்ணப்படும். பல பொல்லாக் குணங்களைக் கொண்டிருந்தாலும் தன் இனம் பேணும் தன்மையால் காகம் உயர்ந்ததாகக் கருதப் படும். ஆகவே இனத்தைப் பேணி வாழ்தல் பேரும் புகழும் தரும்.(57) பண்புபல பெற்றுமினம் பேணாப் பரிசினால் புண்படூஉம் காக்கைபல பொல்லாக் குணம் பெற்றும் உண்ப விளித்துதவுமாற்றின் உயர்வுறுஉம் எண் பெறார் பாத்தூண் இலார். - இன்னிசை இருநூறு : 64. 139. தாய்க்கோழி மிதித்து விடுவதால் குஞ்சு முடம் ஆகி விடுவது இல்லை. அதுபோல் இனிய உறவினர் சொல்லும் வன் சொற்களால் ஒருவன் கெட்டுப்போவது இல்லை. (58) உளைய உரைத்து விடினும் உறுதி கிளைகள் வாய்க் கேட்பதே நன்றே - விளைவயலுள் பூமிதித்துப் புட் கலாம் பொய்கைப் புனலூர தாய்மிதித்து ஆகா முடம். - பழமொழி : 353. 140. தையல் ஊசி செல்லும் வழியிலே தடை இல்லாமல் நூல் செல்லும். அதுபோல் தகுதிமிக்க உறவினர்கள் போகும் வழியில் பின்பற்றிப் போவதால் இடரின்றி நன்மையே உண் டாகும். (59) தன்னை மதித்துத் தமரென்று கொண்டக்கால் என்ன படினும் அவர்செய்வ செய்வதே இன்னொலி வெற்ப இடரென்னை துன்னூசி போம்வழி போகு மிழை. - பழமொழி : 354. 141. உடன் பிறந்தவர்களிலும் கேடு செய்பவர்கள் இல்லாமல் இல்லை. உடன் பிறவாதவர்களிலும் நன்மை செய்பவர்கள் இல்லாமல் இல்லை. தன் உடன் பிறந்த நோய் தன்னைக் கொல்வதையும், மலையில் பிறந்த மருந்து, நோய் போக்கி வாழவைப்பதையும் கண்கூடாகக் காண்கிறோம் அல்லவா! (60) உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும் ஆமருந்து போல்வாரும் உண்டு. - மூதுரை : 20. 142. முன்கை நீண்டவர்க்கு அக்கையின் நீளத்திற்கு ஏற்றபடி தோளும் பெருத்திருக்கும். அதுபோல் எவ்வெவர்க்கும் அவ்வவர்க்கு ஏற்ற அளவில் ஒட்டும் உறவும் அமைந்திருக்கும் . (61) எங்கணொன்றில்லை எமரில்லை என்றொருவர் தங்க ணழிவுதாம் செய்யற்க - எங்கானும் நன்கு திரண்டு பெரியவாம், ஆற்றவும் முன்கை நெடியார்க்குத் தோள். - பழமொழி : 156 143. மகவின் முகத்தைக் கண்ட அளவில் அதனைப் பெற்ற தாய்க்கு மகப்பேற்று நோவும், துன்பமும் மறைந்தொழியும். அதுபோல் உற்ற பொழுதில் உதவும் உறவினர்களைக் காணும் அளவில் ஒருவனுக்கு இருந்த அச்சமும் தளர்ச்சியும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். (62) வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும் கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தா அங்கு அசா அத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன் கேளிரைக் காணக் கெடும். - நாலடியார் : 201. 144. ஙகரமானது அங்ஙனம் இங்ஙனம் என்று சொல்லுக்கு முதலாக வரும். அவ்வோர் எழுத்தால்தான் சொல்லில் பயன் படாத 'ங', 'ங', ங' முதலாய பதினோரெழுத்தும் எழுத்தென எண்ணப்படுகின்றன. ஆகவே தம் கல்வி செல்வங்களால் பிறருக்கு உதவுபவர்களையும், அவர்கள் இனத்தை யும் பிறர் அன்பாகத் தழுவிக்கொள்வர். (63) ஙப்போல் வளை. - ஆத்திசூடி : 15. 145. நம் வண்டியாக இருந்தாலும் அஃது இரைச்சல் இல்லாமல் செல்வதற்கு உயவு நெய் (மசை) போட வேண்டும். அதுபோல் தமக்கு மிக நெருங்கியவராக இருந்தாலும் அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொண்டுதான் அவரிடம் வேலை வாங்குதல் வேண்டும். (64) ஆணியாக் கொண்ட கருமம் பதிற்றாண்டும் பாணித்தே செய்ய வியங்கொள்ளின் - காணி பயவாமல் செய்வாரார் தஞ்சாகா டேனும் உயவாமல் சேறலோ இல். - பழமொழி : 168. 146. இனிய சுவைமிக்க கரும்பில் இருந்து தோன்றினாலும் அதன் பூவுக்குச் சிறிதும் மணம் இல்லை. அதுபோல் நற்குடியில் பிறந்தவர் களிலும் தம் குடிக்குத் தக்க பெருமைக்குரிய செயல்களைச் செய்து தம் பெயரை நிலை நிறுத்தும் திறம் இல்லாதவர் உண்டு. (65) தீங்கரும்பு ஈன்ற திரள்கால் உளை அலரி தேங்கமழ் நாற்றம் இழந்தாஅங்கு - ஓங்கும் உயர்குடி யுள்பிறப்பின் என்ஆம் பெயர் பொறிக்கும் பேராண்மை இல்லாக் கடை? - நாலடியார் : 199. 147. குலம், தவம், கல்வி, நற்குடிப் பிறப்பு, முதிர்ச்சி என்னும் ஐந்தும் ஒருவன் நல்வாழ்வுக்கு வேண்டியவை. எனினும், இவற்றுடன் உலகியல் அறிவும் இன்றி மற்றவற்றை மட்டும் கொண்டிருப்பது நெய்யில்லாத வெண் சோறு போன்றதாகும். (66) குலம்தவம் கல்வி குடிமை மூப்பு ஐந்தும் விலங்காமல் எய்தியக் கண்ணும் - நலம் சான்ற மை அறு தொல்சீர் உலகம் அறியாமை நெய்இலாப் பாற்சோற்றின் நேர். - நாலடியார் : 333. 148. அன்பு இல்லாத உயிர்களின் வாழ்வு, வலிய பாறையில் உள்ள பட்டமரம் தளிர்த்தது போன்றதாகும். (67) அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை, வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று. - திருக்குறள் : 78. 149. எலும்பு இல்லாத புழுக்களையும் பூச்சிகளையும் வெயில் சுட் டெரிப்பது போல், அன்பு இல்லாத உயிர்களை அறக்கடவுள் சுட்டெரிக்கும். (68) என்பிலதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். - திருக்குறள் : 77. 150. அன்பு என்னும் தாய் பெற்ற அருள் என்னும் குழந்தை பொருள் என்னும் வளர்ப்புத் தாயால் (செவிலியால் நன்கு வளர்க்கப் பெறும்.(69) அருளென்னும் அன்பின் குழவி, பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு. - திருக்குறள் : 757. 151. விழியில் ஒளி இல்லார்க்கு விளக்கால் ஆகிய பயன் ஒன்றும் இல்லாமை போல், இடம், பொருள், ஏவல் ஆகிய எல்லாம் இருந்தும் அன்பு இல்லாதவர்க்கு ஆகும் பயன் ஒன்றும் இல்லை . (70) இல்லானுக்கு அன்பிங்கு இடம் பொருள் ஏவல்மற்று எல்லாம் இருந்தும் அவற்கு என்செய்யும்? – நல்லாய் மொழியிலார்க்கு ஏது முகநூல் தெரியும்? விழியிலார்க்கு ஏது விளக்கு? - நன்னெறி : 15. 152. மானை வேட்டையாடிக் கொல்வதற்கு முன்னர் அதன் ஊனை வாட்டுவதற்குரிய வகையினை ஆராயார். அதுபோல் ஒருவர் அன்பின் ஆழத்தை நன்றாக அறிந்து கொண்ட பின்னர் அல்லது அவரிடம் தம் மறைவான செய்திகளை அறிவுடையோர் கூறார். (71) அன்பறிந்த பின்னல்லால் யார்யார்க்கும் தம்மறையே முன்பிறர்க் கோடி மொழியற்க - தின்குறுவான் கொல்வாங்குக் கொன்றபி னல்ல துயக்கொண்டு புல்வாய் வழிப்படுவார் இல். - பழமொழி : 179. 153. கையாலேயே கல்லைத் தோண்டுபவன் கை பிழைக்க மாட்டான். அதுபோல் அன்பு இல்லாதவர்களை நண்பர்கள் ஆக்கிக் கொண்டவனும் நன்மை அடைய மாட்டான். (72) தம் கண் மரபுஇல்லார் பின்சென்று தாம் அவரை எம்கண் வணக்குதும் என்பவர் - புன்கேண்மை நல் தளிர்ப் புன்னை மலரும் கடற்சேர்ப்ப கல்கிள்ளிக்கை இழந் தற்று. - நாலடியார் : 336. 154. கண்களைப் பெற்றிருந்தும் அவற்றுக்குரிய கண்ணோட்டத்தை (அருளை) இல்லாதவர்கள், மண்ணோடு பொருந்திய மரத்தைப் போன்றவரே அன்றி மக்கள் ஆகார். (73) மண்ணோ டியைந்த மரத்தனையர், கண்ணோ டியைந்துகண் ணோடா தவர். - திருக்குறள் : 576 155. பாட்டோடு பொருந்தாத இசையால் பயனனில்லை. அதுபோல் அருளோடு பொருந்தாத கண்ணாலும் பயனில்லை. (74) பண்என்னளம் பாடற் கியைபின்றேல், கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண். - திருக்குறள் : 573. 156. ஊமரையும், கிறுக்கரையும், சிறுவரையும், பெண்டிரையும், அறிவிலி யையும் காத்தல் ஆண்மையாளர் கடமையாகும். அதுபோல் வாயிலாத (பேசாத விலங்கு பறவை முதலிய உயிர்களைக் காப்பதும் வாழ்வோர் கடமையாகும். (75) ஊமரைப் பித்து ளாரை யுணர்வில் சே யரைமின் னாரைப் பாமரர் தம்மை மிக்க பரிவொடுங் காத்தல் போல நாமற விலங்கைக் காப்பர் நல்லவ ரதைவ ருத்துந் தீமன முடையோர் துன்பஞ் செய்வர்மா னிடர்க்கு மம்மா. - நீதிநூல் : 4 : 4. 157. இனிய சொற்கள் தன்னிடம் இயல்பாக வாய்த்திருக்க அவற்றை விடுத்துக் கேட்க வெறுப்பூட்டும் இன்னாத சொற் களைச் சொல்வது நல்ல கனியிருக்க அதனைத் தின்னாமல் கருங்காயைக் களவு செய்து தின்பது போன்றதாகும். (76) இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. - திருக்குறள் : 10. 158. தென்றல் காற்று வருகையால் மாமரம் தளிர்க்கும். சுழல் காற்று வருகையால் அது வருந்தும். அவ்வண்ணமே நல்லோர் வரவு கண்டு மகிழ்வதும், அல்லோர் வரவு கண்டு வருந்துவதும் உலகத்து இயற்கை .(77) நல்லோர் வரவால் நகைமுகம் கொண்டு இன்புறீஇ அல்லோர் வரவால் அழுங்குவார் - வல்லோர் திருந்தும் தளிர்காட்டித் தென்றல் வரத்தேமா வருந்தும் சுழல்கால் வர. - நன்னெறி :19. 159. குயில் நமக்கு எந்த நன்மையும் செய்ததில்லை , கழுதை எந்தக் கேடும் செய்தது இல்லை. எனினும் முன்னதன் குரலை விரும்புகிறோம். பின்னதன் குரலை வெறுக்கிறோம். இவை, இனிய சொல்லை உலகோர் விரும்புவதையும், வன்சொல்லை வெறுப்பதையும் காட்டும். (78) மென்மதுர வாக்கால் விரும்பும் சகம்கடின வன்மொழியி னால்இகழும் மண்ணுலகம் – நன்மொழியை ஒதுகுயில் ஏதங்கு உதவியது? கர்த்தபந்தான் ஏதபரா தம் செய்தது? இன்று. - நீதிவெண்பா : 4. 160. வெங்கதிர்க்குப் பொங்காத கடல், தண்கதிர்க்குப் பொங்கும். அது போல் வன்சொல்லுக்கு மகிழாத மக்கள் இன் சொல்லுக்குப் பெரிதும் மகிழ்வர். (79) இன்சொலால் அன்றி இரு நீர் வியனுலகம் வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய் அதிர்வளையாய்! பொங்காது அழல்கதிரால் தண்ணென் கதிர் வரவால் பொங்கும் கடல். - நன்னெறி : 18. 161. முகர்ந்து பார்த்த அளவில் அனிச்சம் என்னும் ஒரு வகைப் பூ வாடிவிடும். ஆனால், முகம் வேறுபட்டு நோக்கிய உடனேயே விருந்தினர் முகம் வாடிவிடுவர். (80) மோப்பக் குழையும் அனிச்சம்; முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து. - திருக்குறள் : 90. 162. தக்கவர்களோடு இருந்து உண்ணும் உணவே உயர்ந்த உணவாகும். அவ்வாறுண்ணாமல் தனித்திருந்து உண்பது கொக்கு தான் கவர்ந்த மீனைத் தானே உண்பது போன்றதாம். (81) தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் என்றவரோடு இன்புறத்தான் உண்டல் இனிதாமே - அன்புறவே தக்கவரை இன்றித் தனித்துண்டல் தான் கவர்மீன் கொக்கருந்தல் என்றே குறி. - நீதிவெண்பா : 49. 163. வளமாக வாழ்பவர் வறியவரையே விருந்தினராகக் கொள்ள வேண்டும். அன்றி வாழ்வார்க்கு வாழ்வாரே விருந்தினர் என்பது ஒரு மலை யில் இருந்து வீழ்வார்க்கு வீழ்வாரே துணை என்பது போன்றது ஆகும். (82) அட்டுண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்றும் அட்டுண்ணா மாட்சி உடையவர் - அட்டுண்டு வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்றுஉரைத்தல் வீழ்வார்க்கு வீழ்வார் துணை. - அறநெறிச்சாரம் : 167. 164. சுற்றத்தினருடன் அளவளாவி இன்புற்று வாழாதவன் வாழ்வு கரையில்லாக் குளத்தில் நீர் நிறைந்தது போல் பயனின்றி ஒழியும்.(83) அளவளா வில்லாதான் வாழ்க்கை, குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. - திருக்குறள் : 523. 165. பயிர் நீரால்தான் வளரும்; நெருப்பால் வளராது. அதுபோல் இனிய வாழ்வு நற்செயல்களால் உண்டாகுமே அன்றித் தீய செயல்களால் உண்டா காது. (84) புத்தியொடு முத்திதரும் புண்ணியத்தால் அன்றியே மத்தமிகு பாவத்தால் வாழ்வாமோ? - வித்துபயிர் தாயாகி யே வளர்க்கும் தண்புனலால் அல்லாது தீயால் வளருமோ? செப்பு. - நீதிவெண்பா : 57. 166. உயிரை விதைத்து, உடலை விளையச் செய்து, இயமனுக்கு உணவாகப் படைப்பது போன்றது வாழ்வு. இவ் வாழ்வில் நல்வினைகளைச் செய்யாமல் குற்றங்களை விதைத்து ஒழுக்கத்தைத் தின்பது எத்தகைய அறியாமை? (85) உயிர்வித்தி ஊன்விளைத்துக் கூற்றுண்ணும் வாழ்க்கைச் செயிர்வித்திச் சீலம் தின்று என்னை? - செயிரினை மாற்றி மறுமை புரிகற்பின் காணலாம் கூற்றம் குறுகா இடம். - அறநெறிச்சாரம் : 193. 167. தாய் இல்லையேல் பிள்ளையும் இல்லை. அது போல் இல்லறம் என்னும் ஒன்று இல்லையேல் துறவறம் என்னும் ஒன்றும் இல்லை .(86) வீட்டறத்தோர் இல்லாக்கால் வேறுண்டோ நல்லறத்தோர் கேட்டதுண்டோ தாயில்லாச் சேய். - கைவிளக்கு : 7:12. 168. வலிமை வாய்ந்த தூணும், அதன் மேல் அமைந்த கூரையும் போல் இல்லறத்தவரும், துறவறத்தவரும் பொருந்தித் துணையாக வாழ்தல் வேண்டும். (87) நோற்பவர் இல்லவர்க்குச் சார்வாகி, இல்லவரும் நோற்பவர்க்குச் சார்வாய் அறம் பெருக்கி - யாப்புடைக் காழும் கிடுகும் போல் நிற்கும், கயக்குஇன்றி ஆழிசூழ் வையத்து அறம். - அந்நெறிச்சாரம் : 15. 169. இல்லறம் துறவறம் என்னும் இரண்டனுள் ஒன்றில் அமைந்து சிறந்து வாழாதவர், காவின் இருபக்கங்களிலும் இருந்த பொருளைப் போக்கிக் காத் தண்டை மட்டுமே சுமந்து திரிபவரைப் போன்றவர். (88) இல்வாழ்க்கை யானும் இலதானும் மேற்கொள்ளார் நல்வாழ்க்கை போக நடுவுநின் - றெல்லாம் ஒருதலையாச் சென்று துணியா தவரே இருதலையும் காக்கழித் தார். - பழமொழி : 390. 4. கல்வி 170. நினைத்தவற்றையெல்லாம் தரும் மணி போன்றது கல்வி. அஃது இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை தரும். (1) சுகமுற வாழ்வில எனினும் தோன்றற்குச் சகமகிழ் கலையறந் தனைப்ப யிற்றுதல் அகநினைந் ததுதரும் அரத னந்தனை இகபரம் இரண்டினை ஈதல் ஒக்குமே. - நீதிநூல் : 8:5. 171. கைவிளக்குக் காலடியைத் தெளிவாகக் காட்டும் அது போல் ஆராய்வு என்னும் மெய்விளக்கு உலகைத் தெளிவாகக் காட்டும். (2) கைவிளக்குக் காட்டுமால் காலடி; ஆய்வென்னும் மெய்விளக்குக் காட்டும் உலகு. - கைவிளக்கு : 11 : 20. 172. எல்லையைக் கடக்கு முன்னரே சுங்கச் சாவடியில் வரி வாங்கி விடுவர். ஓரிடத்தில் இருந்து கீழே இறங்கு முன்னரே ஓடக்காரன் கூலி வாங்கி விடுவான். அவற்றைப் போல் இளமை கடக்கு முன்னரே அனைவரும் கற்றுத் தேர்ச்சி அடைதல் வேண்டும். முதுமையில் பார்த்துக் கொள்வோம் என்பது முடியாத செயல் . (3) ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண் போற்றும் எனவும் புணருமோ - ஆற்றச் சுரம் போக்கி உல்குகொண்டார் இல்லையே யில்லை மரம் போக்கிக் கூலிகொண் டார். - பழமொழி : 1. 173. வளைந்துள்ள இளங் கிளையை நிமிர்த்தல் எளிது; காய்ந்து உருகிய பொழுதில் பொன்னை அணிகலம் ஆக்குவது எளிது; அவ்வாறே இளம் பருவத்திலேயே மக்களுக்குக் கல்வியும் பண்பாடும் பயிற்றுதல் எளிது.(4) வளைஇள மரந்தனை நிமிர்த்தல் வாய்க்கும்பொன் இளகிய பொழுதணி இயற்ற லாகுதல் வளமுறு கேள்விநூல் மாண்பு நற்குணம் இளமையில் அன்றி மூப்பெய்தின் எய்துமோ. - நீதிநூல் : 8 : 2. 174. பாலனைப் படிக்க வைக்காமல் செல்வமாக வளர்ப்பது காலனை வீட்டில் வைத்து வளர்ப்பது போன்றதே ஆகும். (5) மாலினால் இருவரும் மருவி மாசிலாப் பாலனைப் பயந்தபின் படிப்பி யாதுயர் தால மேல் செல்வமா வளர்த்தல் தங்கட்கோர் காலனை வளர்க்கின்ற காட்சி போன்றதே. - நீதிநூல் : 8 : 3. 175. களையினை அகற்றிப் பயிரினை உழவன் காப்பது போல் பிழையினை நீக்கிப் பிள்ளைகளைப் பெற்றோர் காத்தால் அப்பிள்ளைகள் பெற்றோரை நன்கு பேணிக் காப்பர். (6) பயிர், களை எடுத்திடப் பலனளித்தல் போல் செயிரினைக் கடிந்துநற் செயல்வி யந்தரும் தயையொடும் சேயினை வளர்க்கும் தந்தைதாய் துயருறா வண்ணமத் தோன்றல் காக்குமே. - நீதிநூல் : 8 : 7. 176. ஒழுக்கம், அறிவு முதலியவற்றைத் தாராமல் ஒரு குழந்தையை உலகியலில் விடுவது, கடிவாளம் இல்லாத அடங்காக் குதிரையின் மேல் அதனைச் செலுத்த அறியாத ஒருவனை ஏற்றிவைத்து ஓட்டிவிடுவது போன்றதாகும். (7) புவிநடை கடவுள் மெய்ப் போதம் அன்பறம் செவியின் தாதொரு சேயைப் பார்விடல் அவியென ஊருமா ற்றிகிலான்தனைக் கவியமில் புரவிவைத் தோட்டும் காட்சியே. - நீதிநூல் : 8 : 9. 177. கல்வி செல்வம் தாராமல் பொருட் செல்வம் ஒன்றையே மக்கட்குத் தருவது, கிறுக்கனிடம் வாளைத் தருவது போன்றதே. அன்றியும், அறியாக் குழந்தையை மலைமுகட்டின் ஓரத்தில் வைத்து விடுவது போன்றதும் ஆம் (8) கலைபயிற் றாதுகா தலாக்கு மாநிதி நிலையென அளிக்குதல் நெறியில் பித்தர்க்குக் கொலைசெய்வாள் ஈவதும் குழவி தன்னைமா மலையினோ ரத்துவைப் பதுவும் மானுமே. - நீதிநூல் : 8 : 6. 178. செந்நெல்லை வயலில் விதைத்தபின் அவ்வித்தில் இருந்து வெளிவரும் முளையும் செந்நெல் முளையாகவே இருக்கும். அதுபோல் தந்தையின் அறிவு எத்தகையதாக இருக்கிறதோ அத்தகையதாகவே அமையும் அவன் மக்கள் அறிவு. (9) பொத்தநூல் கல்லும் புணர்பிரியா அன்றிலும்போல் நித்தலும் நம்மைப் பிரியலம் என்று உரைத்த பொற்றொடியும் போர்த்தகர்க்கோடு ஆயினாள் நன்னெஞ்சே நிற்றியோ போதியோ நீ? - நாலடியார் : 376. 179. ஆண்களும் பெண்களும் நாட்டின் கண்கள் ஆவர். அவர்களுள் ஆண்களுக்கு மட்டும் கல்வி தந்து பெண்களுக்குக் கல்வி தாராதிருப்பின் அந்நாடு ஒற்றைக் கண் பார்வையுடையதே ஆகும். (10) ஒற்றைக்கண் பார்வையை ஓப்பதாம் பெண்கல்வி பெற்றோங்கும் காலம் வரை. - கைவிளக்கு : 1:10. 180. கல்வி அறிவில்லாத பெண்கள் உள்ள குடும்பம் கதிரவன் ஒளியின்றி இருள் செறிந்த விண்ணையும் மண்ணையும் போன்றவர்கள் ஆவர். (11) கதிரோன் இல் பார், சேண் நிகரும் கல்வியிலா மாதரகம். - நீதிநூல் : பிற்சேர்க்கை : 9:3. 181. ஆண்களுக்குக் கல்வி கற்பித்துப் பெண்களுக்குக் கற்பிக்கா திருத்தல் உடலின் ஒரு பகுதியை அழகுபடுத்தி மறு பகுதியை அழகுபடுத் தாமல் விடுவது போன்றதாகும். (12) நீதிநூல் மைந்தர்க்கு நிகழ்த்தி மென்மலர் ஓதியர்க் கோதிடா தொழித்தல் மெய்யினில் பாதியை யேயலங் கரித்துப் பாதி மெய் மீதினில் அணியின்றி விடுத்தல் ஒக்குமே. - நீதிநூல் : 9: 7. 182. கல்வி நிறைந்த பெண்கள் இருளில் வைக்கப்பட்ட சுடர் விளக்குப் போல் ஒளிவிடுவர். கல்வி தாராமல் பெண்களை மூலையில் வைப்பது, விளக்கை ஒரு கூடைக்குள் வைத்து மூடிவிடுவது போன்றதாகும். (13) அரிவையர் நேசமும் ஆர அல்லினில் விரிசுடர் விளக்கென விளங்கு வாரவர்க்கு உரியநன்னூலுணர்த் தாமை கூடையால் எரியொளி விளக்கினை மறைத்தல் ஒக்குமே. - நீதிநூல் : 9: 6. 183. கல்வியைப் பெறுவதால் மகளிர் கற்பு நெறி மேலும் சிறப்படை யுமே அன்றிக் குறைவுறாது. அது குறையும் என்பது மருந்து உண்டால் நோய் தீரும் என்பதற்குப் பதில் சாவு வரும் என்று சொல்லும் மடமை போன்றதே. (14) பொருந்துநற் கலை தெரி பூவை கற்பது திருந்தியே மிகுமலால் தேய்ந்து போமெனல் வருந்திடா துயிர்தரு மருந்தை மானிடர் அருந்திடல் சாவரென் றறைதல் ஒக்குமே. - நீதிநூல் : 9: 4. 184. பெண்மக்கட்குக் கல்வி தந்தால் கெட்டுவிடுவார் என்று சொல்லிக் கல்வி தாராதிருப்பது, கண் இருந்தால் அயலானைக் கண்டு விடுவாள் என்று மனைவியின் கண்களை அவள் கணவன் தோண்டி விடுவது போன்றதாம். (15) பெண்மகள் கெடுவளென் றஞ்சிப் பெற்றவன் உண்மை நூல் அவட்குணர்த் தாமை தன்மனைக் கண்மறு புருடரைக் காணு மென்றதை எண்மையாய்த் தவன்பறித் தெறிதல் ஒக்குமே. - நீதிநூல் : 9: 2. 185. இருளை ஒழிக்கின்றது என்பதனால் தான் விளக்கினை விலை கொடுத்து வாங்குகின்றோம். அதுபோல் மன இருளை ஒழிப்பதற்காகவே அறிவு நூல்களைக் கற்க வேண்டும். (16) விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத் துளக்கம்இன்று என்றனைத்தும் தூக்கி விளக்கு மருள்படுவ தாயின் மலைநாட என்னை பொருள் கொடுத்துக் கொள்ளார் இருள். - பழமொழி :3. 186. கல்வி அறிவில்லாதார் தோற்றத்தால் மனிதரைப் போலவே இருந்தாலும் மனிதர் ஆகார். அவர் ஒரு பயனும் தாராத களர் என்னும் நிலத்திற்கு ஒப்பானவரே. (17) உளரென்னும் மாத்திரையர் அல்லால், பயவாக் களரனையர் கல்லா தவர். - திருக்குறள் : 406. 187. முருக்கம் பூவிற்கு அழகு உண்டு. ஆனால், அதனிடம் மணம் இல்லை. அதுபோல் கல்லாதவன் எத்தகைய அழகுடையவனாக இருந்தாலும் மணம் (புகழ் அற்றவனே ஆவன். (18) தேசிகம் இளமை முற்றச் சிறந்தநற் கலங்கள் ஆளும் காசினி ரசிதம் சொன்னம் கரிபரி படைத்தா னேனும் நேசமாம் வித்தை யற்றால் நிறைந்திடு முருக்கம் பூவின் வாசனை இல்லாத தோங்கும் வனப்பென வயங்கு வானே. - நீதிசாரம் : 32. 188. பால் கொள்ள விரும்புவோர் அதனைத் தரும் பசுவின் தோற்றக் குறைவைக் கருதார். பழம் கொள்ள விரும்புவோர் அதனைத் தரும் கிளையின் வளைவைக் கருதார். நீரைக் கொள்ள விரும்புவோர் சேற்றினை நீக்கியும் கொள்வர். அவற்றைப் போல், பாட்டின் குற்றங்களைப் பாராமல் பயன் கருதிக் கற்றல் அறிவுடையார் கடன். (19) பயன்கொள்வோர் அதனை நல்கும் பசு உரு விலதென் றோரார், வியன்சினை வளைவு நோக்கார் விளைந்ததீங்க கனிபறிப்போர்; கயங்கொள்சே ற கற்றித் தெண்ணீர் கைக்கொள்வார் என்ன நூலின் நயன் கொள்வ தன்றிப் பாவின் நவையைநோக் கார்மே லோரே. - நீதிநூல் : அவையடக்கம் : 4. 189. ஆறுகளின் வழியாகப் பெருக்கெடுத்து வரும் நீரை அடக்கி வைத்துக் கொள்கிறது கடல். நிரம்பிவரும் செல்வங்களையெல்லாம் பூட்டி வைத்துக் காக்கிறான் கருமி. அவ்வாறே கிடைக்கும் நல்ல செய்திகளையெல் லாம் விடாமல் சேர்த்து வைத்துக் கொண்டு உரிய பொழுதுகளில் பயன் படுத்துவர் அறிவுடையவர். (20) நதி முதல் புகுவ தெல்லாம் நன்ககட் டிடைய டக்கும் அதிர்கடல் எனவும் ஈயார் அருந்தமஞ் சிகையே போலும் வதிசெவி நுழைவ தெல்லாம் மனத்தினுள் அடக்கித் தக்க ததியறிந் துரைப்ப தன்றிச் சகலர்க்கும் உரையார் மிக்கோர். - நீதிநூல் : 32 : 9. 190. பால் கடல் போல் பெருகிக் கிடந்தாலும் வயிற்றின் அளவுக்கே பருகிக்கொள்ள முடியும். அதுபோல் நூல் கடல் போல் பெருகிக் கிடந்தாலும் உயிருள்ள அளவுக்கே கற்க முடியும். ஆகவே நல்லவற்றைத் தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டும். (21) பாற்கடல் பெற்றாலும் பயனோ வயிற்றளவே நூற்கடல் எல்லாம் சுரரும் நுவலரிதால் யாக்கை இருக்கும் துணையும் இயலளவால் போக்கறுநூல் கற்க புரிந்து. - இன்னிசை இருநூறு : 113. 191. நீரும் பாலும் கலந்து இருப்பினும், நீரை விலக்கிப் பால் மட்டுமே பருகும் தன்மை வாய்ந்ததா அன்னப் பறவை. அதுபோல் அறிவுடையவர்கள் தாம் கண்டும் கேட்டும் அறிபவற்றுள் தகாதவற்றை விலக்கித் தக்கவற்றை எடுத்துக் கொள்வர். (22) கல்வி கரைஇல; கற்பவர் நாள்சில ; மெல்ல நினைக்கின் பிணிபல ; - தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுஉடைய கற்பவே நீர் ஒழியப் பால்உண் குருகின் தெரிந்து. - நாலடியார் : 135. 192. முயன்று கற்றவற்றைப் பன்முறையும் எண்ணி நினைவில் வைத்துக் கொள்ளாமல் புதுப்புது நூல்களைத் தேடிச் செல்வது கையில் வைத்திருந்த பொற்கட்டியை வீசி எறிந்து விட்டு, மண்ணில் சிதறிக்கிடக்கும் பொற்பொடியைப் பொறுக்குவது போன்றதாம். (23) வருந்தித்தாம் கற்றன ஓம்பாது மற்றும் பரிந்துசில கற்பான் தொடங்கல் - கருந்தனம் கைத்தலத்த வுய்த்துச் சொரிந்திட் டரிப்பரித்தாய் கெய்த்துப் பொருள் செய்திடல். - நீதிநெறி விளக்கம் : 8. 193. நீரில் போட்டால் பதர் நெல் மேலே மிதக்கும் மணி யுடைய நெல் கீழே செல்லும். பதர் போன்றவன் நூலுள் ஆழமாகச் சென்று கல்லான். மணிபோன்றவன் நூலின் ஆழத்துள் ஆழத்திற்குச் சென்று ஆராய்வான். (24) நீரில் பதர்மிதப்ப நெல்லமிழல் ஒக்குமால் கூரியல் மந்தன் அரியநூல் கொள்ளுமுறை மாரி எனத்தானும் மந்தனைவிட் டென்கொடுக்கும் கூரியனைச் சார்ந்து கொளல். - இன்னிசை இருநூறு : 159. 194. தோண்டப்பெற்ற அளவுக்கே மணலில் நீர் ஊறிப் பெருகும். அவ்வாறே நூல்களைக் கற்ற அளவுக்கே அறிவுமிகும். (25) தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. - திருக்குறள் : 396. 195. நீரளவே ஆகும் அல்லித்தண்டின் நீளமும். அதுபோல் ஒருவன் கற்ற நூலின் அளவே ஆகும் அவன் பெற்ற நுண்ணறிவு (26) நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு. - மூதுரை : 7. 196. செல்வர் முன்னர் வறியர் நின்று தாழ்ந்து பொருள் பெறுவது போல், ஆசிரியரை அணுகிப் பணிந்து நின்று கல்விப் பொருளைப் பெற்றவரே கற்றவர்; பிறர் கல்லார். (27) உடையார்முன் இல்லார் போல் ஏக்கற்றுங் கற்றார்; கடையரே கல்லா தவர். - திருக்குறள் : 395. 197. கனிகளை மிகுதியாகக் கொண்ட மரம் தாழ்ந்து வளையும். அது போல் அறிவை மிகுதியாகப் பெற்ற பெரு மக்களும் பணிவு உடையவராக இருப்பர். (28) தேமலி சுவைக்கனி பலசெ றிந்துயர் காமரம் வளைதல் போல் கலையு ணர்ந்திடும் தூமன மாட்சியோர் தொழுவர் யாரையும் பாமரர் எவரையும் பணிந்தி டார்களே. - நீதிநூல் : 45: 2. 198. வறியவர்கள் உதவிகளைக் கருதிச் செல்வர் முன் பணிந்து நிற்பது போல், கல்வியும் செல்வமும் உடையவர்களும் பணிவு உடையவர்களாக இருத்தல் வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் அவர்கள் செல்வர் எனப் படுவர். இல்லையேல் செல்வம் மிகப் பெற்றிருந்தாலும் அவர் வறியரே. (29) தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை அம்மா! பெரிதென்று அகம் மகிழ்க! - தம்மினும் கற்றாரை நோக்கிக் கருத்தழிக, கற்றதெல்லாம் எற்றே இவர்க்கு நாம் என்று! - நீதிநெறி விளக்கம் : 15. 199. விரிந்த கதிரோனின் வெப்பத்தைச் சிறிய கைக்குடையும் காக்கும். ஆகவே சிறிய பொருள்களை எளிமையாகக் கருதுவது தவறு. பல கற்றவர்களுக்கும் பயன்படத்தக்க சொல் சில கற்றவர் இடத்தும் கிடைத்தால் உண்டு. (30) பலகற்றோம் யாம் என்றுதற்புகழ வேண்டா! அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்! சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு அச்சாணி அன்னதுார் சொல் - அறநெறிச்சாரம் : 79. 200. தோணியைச் செலுத்தும் முறையும் திறமும் அறிந்த வனது துணையைக் கொண்டே ஆற்றைக் கடக்க வேண்டும். அதுபோல் கல்வி என்னும் பேராற்றையும் திறமாகக் கற்றவர்களின் துணையைக்கொண்டே கடக்க வேண்டும். (31) தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக் காணின் கடைப்பட்டான் என்றிகழார் - காணாய் அவன்துணையா ஆறுபோய் அற்றேநூல் கற்ற மகன்துணையா நல்ல கொளல். - நாலடியார் : 136. 201. தந்தம், கவரிமான்மயிர், புலிநகம் முதலியவை தாம் பிறந்த இடத்தைவிடப் பிற இடங்களிலேயே பெருமை மிகப் பெறும். அதுபோல் கற்றோரும் தாம் சென்ற பிற இடங்களில் பெருஞ்சிறப்பு அடைவர்.(32) ஆனை மருப்பும் அருங்கவரி மான்மயிரும் கான வரிஉகிரும் கற்றோரும் - மானே! பிறந்த இடத்து அன்றிப் பிறிதொரு தேசத்தே செறிந்த இடத்து அன்றோ சிறப்பு. - நீதிவெண்பா : 27. 202. உவர் நிலத்தில் உப்பு உண்டாகின்றது; நல்ல வளம் வாய்ந்த வயல் நிலத்திலே நெல் விளைகின்றது; எனினும் நெல்லைப் பார்க்கிலும் உப்பு உயர்வாக மதிக்கப்படுகின்றது. அதுபோல் கல்வி அறிவால் சிறந்தவர்கள் எத்தகைய தாழ்ந்த குடியில் பிறந்தவர்களாக இருப்பினும் அவர்கள் உயர்ந் தோராகப் பாராட்டப் பெறுவர். (33) களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர் விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்: கடைநிலத்தோர் ஆயினும் கற்று அறிந் தோரைத் தலைநிலத்து வைக்கப் படும். - நாலடியார் : 133. 203. பாம்பு ஊர்ந்து சென்ற வழியைத் தடம் கண்டுபிடிப்பது அரிது. ஆயினும் அதன் தடத்தைப் பிற பாம்புகள் எளிதாக அறிய வல்லன. அதுபோல் நுண்ணிய அறிவு உடையவர்களை அவர்கள் போன்ற நுண்ணிய அறிவு படைத்தவர்கள் எளிதில் அறிந்து கொள்வர். (34) புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க பூம்புனல் ஊர் பொதுமக்கட்கு ஆகாதே பாம்பறியும் பாம்பின கால். - பழமொழி : 7. 204. பழகிய யானையைக் கொண்டே , பழகாத காட்டு யானையைப் பிடிப்பது வழக்கம். அது போல், அறிஞர்களைக் கொண்டே நல்லறிஞர்களை வயப்படுத்திக் கொள்ள வேண்டும் (35) ஆணம் உடைய அறிவார் தம் நலம் மானும் அறிவி னவரைத் தலைப்படுத்தல் மான்அமர் கண்ணாய் மறம்கெழு மாமன்னர் யானையால் யானையாத் தற்று. - பழமொழி : 29. 205. ஓர் இரும்பை அதனினும் கூர்மையான ஓர் இரும்பா லேயே அறுக்க முடியும். மழுங்கிய இரும்பால் அறுக்கமுடியாது. அதுபோல் கல்வி அறிவால் சிறந்தவர்களை அவர்களினும் கல்வி அறிவால் சிறந்தவர்களா லேயே அறிய முடியும். (36) நல்லார் நலத்தை உணரின் அவரினும் நல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல மயிலாடு மாமலை வெற்பமற்று என்றும் அயிலாலே போழ்ப அயில். - பழமொழி : 8. 206. மகப்பேற்றின் துயரத்தை மலடி அறியாள் தாயானவள் அறிவாள். அதுபோல் கற்றறிந்தோர் பெருமையைக் கற்றறிந்தவரே அறிவர்; மற்றை யோர் அறியார். (37) கற்றோர் கனமறிவர் கற்றோரே கனமறியா மற்றோர் அறியார் வருத்தமுறப் - பெற்றறியா வந்தி பரிவாய் மகவைப் பெறுந்துயரம் நொந்தறிகு வாளோ நுவல். - நீதிவெண்பா : 15. 207. எருது உண்ட உப்பும் பிற ஊட்டமிக்க பொருள்களும் இழப்பாகப் போய்விடாமல் நன்மையே தரும். அதுபோல் அறிவுடையவனிடம் பொறுப் பாக விடப்பெற்ற பணியும் கெட்டுப்போகாமல் நன்மையே தரும். (38) உற்றான் உறாஅன் எனல் வேண்டா ஒண்பொருளைக் கற்றானை நோக்கியே கைவிடுக்க - கற்றான் கிழவனுரை கேட்கும் கேளா னெனினும் இழவன் றெருதுண்ட உப்பு. - பழமொழி : 172. 208. ஒருபானை அளவு சோற்றின் தன்மையையும், சுவையையும் ஓரகப்பை சோற்றால் அறிவர். அதுபோல் புலப்பட்டதைக் கொண்டு புலப் படாததையும் அறிவு உடையோர் ஆராய்ந்து கொள்வர். (39) பேருலையுள் பெய்த அரிசியை வெந்தமை ஓர் மூழை யாலே உணர்ந்தாங்கு - யார் கண்ணும் கண்டதனால் காண்டலே வேண்டுமாம் யார்கண்ணும் கண்டது காரணமாம் ஆறு. - பழமொழி : 142. 209. வெள்ளம் பின்னர் வர இருப்பதை ஈரமணல் முன்னே காட்டும். அதுபோல் ஒருவன் உள்ளத்துள்ள உணர்ச்சியையும் எண்ணத்தையும் அவன் முகமே காட்டிவிடும். (40) வெள்ளம் வருங்காலை ஈரம்பட்ட ஃதேபோல் கள்ள முடையாரைக் கண்டே அறியலாம் ஒள்ளமர்க் கண்ணாய் ஒளிப்பினும் உள்ளம் படர்ந்ததே கூறும் முகம். - பழமொழி : 144. 210. மணமிக்க பாதிரிப்பூவைப் பானைக்குள் போட்டு வைத்தால் அப் பூவின் மணத்தைப் பானையும் பெறும். அதுபோல் கல்வி அறிவு அற்றவர் களாக இருப்பவரும் கற்றவர்களைச் சேர்ந்து அவர்களுடன் பழகி வந்தால் நன்மை அடைவர். (41) அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது உலகநூல் ஓதுவது எல்லாம் - கலகல கூஉந் துணை அல்லால் கொண்டு தடுமாற்றம் போஒந் துணை அறிவார் இல். - நாலடியார் : 140. 211. எத்தகைய அணிகலன்களை அணிந்தாலும் பிற உறுப்புக்கள் கண்ணுக்கு இணையாகமாட்டார். அதுபோல் எத்துணைய செல்வங்களை உடையவராக இருந்தாலும் அறிவுடையார்க்கு ஒப்பாக மாட்டார். (42) பொன் அணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி மன்னும் அறிஞரைத்தாம் மற்றொவ்வார் - மின்னும் அணி பூணும் பிற உறுப்புப் பொன்னே அதுபுனையாக் காணும்கண் ஒக்குமோ? காண். - நன்னெறி : 40. 212. பொன்னால் செய்யப்பெற்ற பூவுக்கு மணம் இல்லை. அப்பூவுக்கு மணமும் அமைந்திருந்தால் எவ்வளவு சிறப்புண்டோ அவ்வளவு சிறப்புண்டு, கல்வியறிவுடையவர் சொல்வன்மையும் உடையவராக இருந்தால்.(43) எத்துணைய தாயினும் கல்வி இடமறிந் துய்த்துணர் வில்லெனின் இல்லாகும் – உய்த்துணர்ந்தும் சொல்வன்மை இன்றெனில் என்னாம் அஃதுண்டேல் பொன்மலர் நாற்ற முடைத்து. - நீதிநெறி விளக்கம் : 4. 213. தாம் அரிதில் கற்றுத் தெளிந்தவற்றைப் பிறர் அறியும் வண்ணம் விரித்து உரைக்கும் திறமை பெறாதவர் மலர்ந்தும் மணம்பெறாத மலருக்கு ஒப்பானவர். (44) இணரூழ்த்தும் நாறா மலரனையர் , கற்ற துணர விரித்துரையா தார். - திருக்குறள் : 0. 214. கற்றவர்கள் கூடியிருக்கும் அவையில் தாம் கற்ற நூற் கருத்துகளை உரைக்க அஞ்சுபவன் பெற்றிருக்கும் அறிவு, போரில் நிற்க அஞ்சும் பேடியின் கையில் உள்ள வாள் போன்றதாகும். (45) பகையகத்துப் பேடிகை ஒள்வாள், அவையகத் தஞ்சு மவன்கற்ற நூல். - திருக்குறள் : 727. 215. பகையை நினைத்தே அஞ்சிச் சோர்வடை பவர்க்குப் பாது காப்பளிக்கும் அரண் என்பது ஒன்றும் இல்லை. அதுபோல் மறதியாளர்க்கு நன்மையானவை என எவையும் இல்லை. (46) அச்ச முடையார்க் கரணில்லை; ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு. - திருக்குறள் : 534. 216. எரி நெருப்பின் இடையே பட்டாலும் பெரும் பாம்பு சிறிதும் அசையாமல் கிடக்கும். அவ்வாறே மூடர்களும் தமக்கு நேர் எதிரே எத்தகைய கேடு வந்தாலும் அதனை அறியும் உணர்ச்சி இன்றி வறிதே இருப்பர். (47) கண்கூடாப் பட்டது கேடெனினும் கீழ்மக்கட் குண்டோ உணர்ச்சிமற் றில்லாகும் - மண்டெரி தான்வாய் மடுப்பினும் மாசுணம் கண்துயில்வ பேரா பெருமூச் செறிந்து. - நீதிநெறி விளக்கம் : 33. 217. நற்குணம் அமைந்த மனைவியை அடையப் பெற்றவன் செய்யக் கூடிய அறம் சிறப்படைவது போல் செல்வமிக்கவன் பெற்ற கல்வியறிவும் சிறப்படையும். (48) எனைத்துணைய தேனும் இலம்பாட்டார் கல்வி தினைத்துணையும் சீர்ப்பா டிலதாம் - மனைத்தக்காள் மாண்பிலள் ஆயின் மணமகன் நல்லறம் பூண்ட புலப்படா போல். - நீதிநெறி விளக்கம் : 9. 218. காக்கையையும் குயிலையும் குரலால்தான் வேறுபடுத்தி அறிய முடியும். அது போல் கற்றவரையும், கல்லாத வரையும் அவர் சொல்லும் சொல்லால்தான் அறியமுடியும். (49) வாக்குநயத் தால் அன்றிக் கற்றவரை மற்றவரை ஆக்கைநயத்தால் அறியல் ஆகாதே - காக்கையொடு நீலச்சிறு குயிலை நீடுஇசையால் அன்றியே கோலத்து அறிவருமோ கூறு. - நீதிவெண்பா : 87. 219. வெண்கலத்திற்கு மிகுந்த ஒலியுண்டு. பொன்னுக்குச் சிறிதளவு ஒலியும் இல்லை. அவற்றைப் போலவே முற்ற அறிந்த பெரியவர்கள் ஆரவாரம் சிறிதும் இன்றி அமைந்து இருப்பர். சிற்றறிவுடையவரோ படபடத்து ஆரவாரம் செய்வர். (50) சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர் ஆன்றமைந்த முற்றுணர்வோர் ஒன்றும் மொழியாரே - வெற்றி பெறும் வெண்கலத்தின் ஓசை மிகுமே விரிபசும்பொன் ஒண்கலத்தின் உண்டோ ஒலி. - நீதி வெண்பா : 35. 220. சம்மட்டியால் உடைக்க முடியாத பெருங்கற் பாறையையும் சிறிய உளியால் உடைக்க முடியும். ஆதலால் 'யாமே எல்லாமும் கற்றேம்' என்று அறிவுடையோர் பெருமிதம் கொள்ளார். (51) முற்றும் உணர்ந்தவர் இல்லை முழுவதூஉம் கற்றனம் என்று களியற்க – சிற்றுளியால் கல்லும் தகரும் தகரா கனங்குழாய் கொல்லுலைக் கூட்டத்தினால். - நீதிநெறி விளக்கம் : 13. 221. பிறர் உரைக்கும் கொடுமையான சொற்கள் கொள்ளி போல் உள்ளத்தில் சுட்டாலும், அறிவென்னும் நீரால் நனைத்து அதனை அணைத்திட வேண்டும். அவ்வாறு செய்ய வல்லவர்க்கு வேறு தவநெறி வேண்டா. (52) எள்ளிப் பிறர் உரைக்கும் இன்னாச்சொல் தன் நெஞ்சில் கொள்ளிவைத் தால்போல் கொடிது எனினும் – மெள்ள அறுவு என்னும் நீரால் அவித்து ஒழுகல் ஆற்றின் பிறிது ஒன்றும் வேண்டா தவம். - அறநெறிச்சாரம் : 81. 222. செருக்கு மிக்க இருவருக்கு இடையே ஒருவன் சென்று ஒருவருக்கும் பயன்படாததைச் சொல்வது தீமையாகும். அஃது இரண்டு முரட்டு மாடுகளுக்கு இடையே வேறோரு மாடு புகுந்து வைக்கோல் தின்பது போன்றது. (53) செருக்குடைய மன்ன ரிடைப்புக் கவருள் ஒருத்தற் குதவாத சொல்லின் தனக்குத் திருத்தலு மாகாது தீதாம் அதுவே எருத்திடை வைக்கோல் தினல். - பழமொழி : 278. 223. விண்மீன்கள் பல்லாயிரம் சேர்ந்தாலும் ஒரு திங்களைப் போல் ஒளிவிட மாட்டா. அதுபோல், பல்லாயிரம் அறிவிலார் சேர்ந்தாலும் அறிவுடைய ஒருவருக்கு ஒப்பாக மாட்டார். (54) கல்லார் பலர் கூடிக் காதலித்து வாழினும்நூல் வல்லான் ஒருவனையே மானுவரோ? - அல் ஆரும் எண்ணிலா வான்மீன் இலகிடினும் வானத்துஓர் வெண்ணிலா ஆமோ? விளம்பு. - நீதிவெண்பா : 98. 224. எவ்வளவு பெறுமானம் உடைய அணிகலங்களாக இருந்தாலும் ஆடையில்லாமல் அவற்றை அணியும் போது சிறப்பில்லை. அதுபோல் எத்தனை வகை வாழ்வு வளங்களைப் பெற்றி ருந்தாலும் அறிவில்லாத ஒருவன் சிறப்படைய மாட்டான். (55) அறிவினால் மாட்சியொன்று இல்லா ஒருவன் பிறிதினால் மாண்டது எவனாம் – பொறியின் மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன அணியெல்லாம் ஆடையின் பின். - பழமொழி : 26. 225. ''பழமையான நூல்கள் அனைத்தையும் கற்றுத் தெளிவாக அறிந்து விட்டோம்" என்று சிறிது கற்றவர் எண்ணுவது. "கிணற்றளவே உலகம்' என்று தவளை எண்ணுவது போன்றதாகும். (56) அண்டம் கிணற்றின் அளவென் றதில்தேரை கண்டுரை ஒக்குமால் கல்லார் நெறிப்படப் பண்டைநூல் எல்லாம் பயன்தெரிந்தால் என்னவே கொண்டு களியுறூஉம் கூற்று. - இன்னிசை இருநூறு : 14. 226. கிணற்றுத் தவளையின் உலகம் மிகமிகச் சுருங்கியது. ஆதலால் இக்கிணற்றைப் போல் பெரியதும், சுவை மிக்க நீர் உடையதும் ஆகிய கிணறு உலகில் இல்லை என்று எண்ணும் அத் தவளையைப் போன்ற குறுகிய அறிவினரும் தாம் கற்ற நூல்களே மிக்கன், சிறந்தன என எண்ணுவர்.(57) உணற்கினிய இன்னிர் பிறிதுழி இல்லென்னும் கிணற்றகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை முற்றப் பகலும் முனியாதினிதோதிக் கற்றலிற் கேட்டலே நன்று. - பழமொழி : 5. 227. வாழ்நாள் முழுமையும் நீருக்குள்ளேயே கிடந்தாலும் தவளை தன் மேல் உள்ள அழுக்கைப் போக்கிக் கொள்ளாது; அவ்வண்ணமே எத்தகைய அரிய நூல்களைக் காலமெல்லாம் கற்றாலும் கீழ்மக்கள் நூலின் உண்மைப் பயனை அடைய மாட்டார். (58) செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும் வழும்பு அறுக்க கில்லாவாம் தேரை - வழும்பு இல்சீர் நூல்கற்றக் கண்ணும் நுணுக்கம்ஒன்று இல்லாதார் தேர்கிற்கும் பெற்றி அரிது. - நாலடியார் : 352. 228. வலிய இரும்பினால் அமைந்த ஆப்பை மரத்தில் அறைந்தால் எளிதாக இறங்கும். ஆனால், அதனைப் பாறையில் அறைந்தால் சிதறி ஓடும். அவற்றைப் போல் அறிவு மிக்கவனிடம் கூறப்பெற்ற சொற்கள் நன்கு பதியும், அறிவிலியினிடம் கூறப் பெற்ற சொற்கள் அவன் செவிக் கண் ஏறா. (59) பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால் நன்று அறியா மாந்தர்க்கு அறத்து ஆறு உரைக்குங்கால் குன்றின் மேல் கொட்டும் தறிபோல் தலைதகர்ந்து சென்று இசையா ஆகும் செவிக்கு. - நாலடியார் :257. 229. மிகப் பக்குவமாகச் சமைக்கப் பெற்றிருந்தாலும் பாற் சோற்றின் சுவையை அகப்பை அறிந்து கொள்ளாது. அவ்வாறே அறிவு நலங் கனிந்த சொற்களாக இருந்தாலும் அவற்றை மடவன் அறியான். (60) அருளின் அறம் உரைக்கும் அன்புஉடையார் வாய்ச்சொல் பொருளாகக் கொள்வர் புலவர் - பொருள் அல்லா ஏழை அதனை இகழ்ந்து உரைக்கும் பாற்கூழை மூழை சுவை உணரா தாங்கு. - நாலடியார் : 321. 230. உரிய பருவத்தில் பூத்துப் பொலிவுடன் நின்றாலும் காய்க்காத மரங்கள் (பாதிரி போல்வன) உள. அவற்றைப் போல் அகவையால் நிரம்ப முதிர்ந்தாலும் அறிவால் முதிராத மக்களும் உளர். (61) பூத்தாலும் காயா மரமுள மூத்தாலும் நன்கறியார் தாமும் நனியுளர் - பாத்தி விதைத்தாலும் நாறாத வித்துள் பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு. - பழமொழி : 93. 231. உழுது, எருவிட்டுப் பாத்தி கட்டி, விதைத்து, நீர் விட்டாலும் முளைக்காத விதைகள் உண்டு, அவற்றைப் போல், எவ்வளவு நயமாகவும், கனிவாகவும் உரைத்தாலும் உணராத அறிவிலிகளும் உளர். (62) பூத்தாலும் காயா மரமுள் மூத்தாலும் நன்கறியார் தாமும் நனியுளர் - பாத்தி விதைத்தாலும் நாறாத வித்துள பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு. - பழமொழி : 93 232. நீல நிறச் சாயம் போடப்பட்ட துணி, மற்றை நிறங் களை ஏற்காது. அதுபோல் மூர்க்கனும் தான் சொன்னதையே சொல்வானே ஒழியப் பிறர் சொல்வதைச் சிறிதும் ஏற்க மாட்டான். (63) ஓர்த்த கருத்தும் உணர்வும் உணராத மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க - மூர்க்கன்தான் கொண்டதே கொண்டு விடானாகும் ஆகாதே உண்டது நீலம் பிறிது. - பழமொழி : 94. 233. ஈரத்திரியில் நெருப்புச் சேராதது போல் மந்தத் தன்மையினர் இடத்தே அறிவு ஒளி ஏறாது, நெய்த்திரியில் நெருப்புச் சேர்வது போல் கூர்மையுடையவரிடம் அறிவு ஒளி மிகும். (64) ஈரத் திரியின் இருந்த களி நெய்த்திரியில் சாரும் தழலொப்ப நூற்பொருள் சாருமால். - இன்னிசை இருநூறு : 102. 234. கருப்பூரம், கத்தூரி இவற்றைச் சேறாக்கிப், பன்னீரை நீராகவிட்டு, உள்ளி நட்டாலும் அதன் இயல்பு மாறாது, அதுபோல் கீழ்மக்களுக்கு எவ்வளவு நல்லவற்றைச் சொன்னாலும் தம் இயல்பில் மாறார். (65) கண்ணுறு கற்பூ ரத்தால் புனுகுகத் தூரி யாலே பண்ணிடு சேறு செய்தே உள்ளியைப் பதித்துப் பன்னீரத் தண்ணீராற் பயிர்செய் தாலும் தன்நாற்றம் நீங்கா தேபோல் நண்ணி எத்தனை சொன்னாலும் துர்ச்சனன் நல்லன் ஆகான். - நீதிசாரம் : 96. 235. கமலப் பூவைத் தேடிச் செல்வதும் ஒருவகை ஈயே. கமலத்தின் முதல் எழுத்துக் குறைந்த மலத்தை நாடிச் செல்வதும் ஒருவகை ஈயே. அவற்றைப் போல் இலக்கிய இலக்கணங்களில் தேர்ந்த புலவர்கள் சொல் நயங்களைத் தேடுவர். அத்தேர்ச்சியில்லாதவர்கள் கீழான சொற்களையே தேடித்திரிவர். (66) பொழிந்து இனிது நாறினும் பூமிசைதல் செல்லாது இழிந்தவை காமுறூஉம் ஈப்போல் - இழிந்தவை தாம்கலந்த நெஞ்சினார்க்கு என்ஆகும் தக்கார்வாய்த் தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு? - நாலடியார் : 259. 236. ஓர் இடத்தே சுவையான உணவு வகைகள் இருக்க, அவற்றை எடுத்துண்ணாமல் மிளகைத் தேடி எடுத்து அதன் ஓட்டைக்குள் இருக்கும் உளுவைப் பொறுக்கி உண்பது போன்றது. அறிவுடையவர்களின் உயர்ந்த திறமையைப் பயன்படுத்திக் கொள்ளாமல் அவர்களை எள்ளி நகையாடுவது. (67) அல்லவையுள் தோன்றி அல அலைத்து வாழ்பவர் நல்லவையுள் புக்கிருந்து நாவடங்கக் - கல்வி அளவிறந்து மிக்கார் அறிவு எள்ளிக் கூறல் மிளகு உளு உண்பான் புகல். - பழமொழி : 23. 237. பாற்சோறு சுவையுடன் இருந்தாலும் புலையரது நாய் அதனை விரும்பாமல் தோலையே விரும்பித் தின்னும். அது போல் புல்லறிவுடைய வர்கள், அறிவாளிகளின் நல்லுரைகளை விரும்பாமல் இழிசொற்களையே விரும்பிக் கேட்பர். (68) அவ்வியம் இல்லார் அறத்துஆறு உரைக்குங்கால் செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார் கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற் சோற்றின் செவ்வி கொளல்தேற்றா தாங்கு. - நாலடியார் : 322. 238. நோவுமிக்க புண்ணை அடைந்து, அதிலுள்ள 'சீ' யைத் தின்னும் ஈ; அது போல் அமைதி தரக் கூடிய அரிய நூல்களைக் கற்றுத் தெளியாதவர், பகை வளர்க்கும் வகைகளையே நாடித் திரிவர். (69) காந்துநறும் புண்ணைக் கலந்து விரும்புமே வேந்தர் தனமே விரும்புவார் - சாந்தநூல் கல்லார் பகைசேர் கலகம் விரும்புவார் நல்லார் விரும்புவார் நட்பு. - நீதி வெண்பா : 82. 239. காக்கை உரலில் உள்ள அரிசியைத் தின்னவும் முடியாமல், உலக்கையின் மேல் உட்காரவும் முடியாமல் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து பயனொன்றும் பெறாது. அதுபோல் அறிவிலார் எந்த ஓர் இடத்தி லேயும் நிலையாக இருந்து செயலாற்றிப் பயன் பெறார். (70) நிலத்தின் மிகையாம் பெருஞ்செல்வம் வேண்டி நலத்தகு வேந்தருள் நல்லாரைச் சார்ந்து நிலத்து நிலைகொள்ளாக் காலரே காணின் உலக்கை மேல் காக்கையென் பார். - பழமொழி : 157. 240. கண் குருடன் கணவனாக வாய்த்தால், மணமகளைத் திருமகளைப் போல் அழகுபடுத்துவதால் ஆகும் பயன் இல்லை. அதுபோல் அறிவற்ற மூடர்களிடம் உயரிய கருத்துடைய பாடல்களைச் சொல்வதாலும் பயன் இல்லை. (71) மூடர்முன்னே பாடல் மொழிந்தால் அறிவரோ ஆடெடுத்த தென்புலியூர் அம்பலவா - ஆடகப் பொற் செந்திருப் போலணங்கைச் சிங்காரித் தென்னபயன் அந்தகனே நாயகனானால். - பெருந்தொகை : 357. 241. தெளிவுமிக்க அறிவில்லாதவர்களிடம் பயன் மிக்க இனிய அறவுரை களைக் கூறுவது, பன்றி உண்ணும் பத்தரில் தேமாஞ்சாற்றினை விடுவது போன்றதாகும். (72) பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால் நன்று அறியா மாந்தர்க்கு அறத்து ஆறு உரைக்குங்கால் குன்றின்மேல் கொட்டும் தறிபோல் தலை தகர்ந்து சென்று இசையா ஆகும் செவிக்கு. - நாலடியார் : 257. 242. நுண்ணிய நூற்பொருளை அறியாப் பேதையினிடம் உரைப்பது , குரங்கின் கையில் அழகுறத் தொடுக்கப் பெற்ற நறுமண மாலையைத் தருவது போன்றதாம். (73) உலவாத நுண்பொருள் பேதைக் குரைத்தல் மலர்மாலை வானரத்தின் கைக்கொடுத்தல் மானும். - இன்னிசை இருநூறு : 119. துர்ச்சனர் முன்னே நல்ல துலங்கிய மதுர மான விற்பனக் கவிதை தன்னை விளம்பிடில் அவர்கள் தங்கள் அற்பமாம் குணத்தி னாலே அவகடம் செய்வர் என்போல் மற்கடம் தன்கை மாலை தான்படும் வண்ணம் போலும். - நீதிசாரம் : 19. 243. அறிவிலார்க்கு நல்லறம் உரைத்துப் பயன் கொள்ளச் செய்ய வேண்டும் என்று முயல்வது, வேதல் இல்லாத ஆமைஓட்டினை அடுப்பில் போட்டு எரித்துவிட முயல்வது போன்றது. (74) கொடுத்துண்மின் கொண்டொழுக்கம் காணுமின் என்பார்சொல் அடுப்பேற்றி யாமைதீந் தற்று. - அறநெறிச்சாரம் : 220. 244. நாற்றத்தில் மிதித்துக் கழுவாத காலை நல்லிடத்து வைப்பது போன்றது, அறிவறிந்த சான்றோர் அவையில் அறியாப் பேதை ஒருவன் புகுவது. (75) கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால், சான்றோர் குழாஅத்துப் பேதை புகல் - திருக்குறள் : 40. 245. நிரம்பிய நூலறிவில்லாமல் அறிவுடையோர் அவையில் பேதை ஒன்றைச் சொல்ல விரும்புவது, அரங்கம் (சொக்கட்டான் ஆட உதவும் கட்ட மிட்ட பலகை) இல்லாமல், சொக்கட்டான் ஆடத் தொடங்குவது போன்றது. (76) அரங்கின்றி வட்டாடி யற்றே; நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல். - திருக்குறள் : 401. 246. கல்வி அறிவில்லாதவன் கற்றோர் நிரம்பிய அவையில் ஒன்றைச் சொல்ல விழைவது, மார்பகம் இல்லாத ஒருத்தி ஆடவனுடன் கூடி இன்பம் நுகர விரும்புவது போன்றதாகும். (77) கல்லாதான் சொற்கா முறுதல், முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் தற்று. - திருக்குறள் : 402. 247. கல்லாத ஒருவன் கற்றவருக்குள்ள சிறப்பினைக் கண்டு தானும் கற்றவனாக நடிப்பது, எழில் மிக்க தோகையுடைய மயில் ஆடுவதைக் கண்டு வான்கோழி தானும் ஆடுவது போன்றதாம். (78) கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினால் போலுமே கல்லாதான் கற்ற கவி. - மூதுரை : 14. 248. கதிரவனின் விரிந்த ஒளியைக் கையைக் கொண்டு மறைத்துவிட முடியாது. அவ்வாறே, அறிவு மாண்புடைய பெரியவர்கள் பெருமையைப் பொறாமையால் தடுத்துவிட முடியாது. (79) பரந்த திறலாரைப் பாசிமேல் இட்டுக் கரந்து மறைக்கலும் ஆமோ? - நிரந்து எழுந்து வேயின் திரண்ட தோள் வேல்கண்ணாய் விண்இயங்கும் ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல். - பழமொழி : 32. 249. மாட்டையும் ஆட்டையும் பல்லைப்பிடித்துப் பார்த்து விலைபேசும் வழக்கம் உண்டு. யானையைப் பல்லைப் பிடித்துப் பார்க்கும் வழக்கம் இல்லை. சிறந்த அறிஞர்களின் திறமையை அறிவிலார் அளவிட முயல்வது யானையைப் பல்லைப் பிடித்துப் பார்க்க முயல்வது போன்றதாம். (80) மானமும் நாணும் அறியார் மதிமயங்கி ஞானம் அறிவார் இடைப்புக்குத் தாமிருந்து ஞானம் வினாஅய் உரைத்தல், நகையாகும் யானைப்பல் காண்பான் புகல். - பழமொழி : 22. 250. கற்றறிந்த அறிஞர்களிடம் கல்வி அறிவில்லாதார் எதிர்த்துச் சொற்போர் இடுவது, கைத்தடி ஊன்றிக் கொண்டு நடக்கும் முடவன் யானையை எதிர்த்துப் போரிட முன்வருவது போன்றது. (81) கற்று ஆற்று வாரைக் கறுப்பித்துக் கல்லாதார் சொல்தாற்றுக் கொண்டு சுவைத்து எழுதல் எற்றெனின் தானும் நடவான் முடவன் பிடிப்பு ஊணி யானையோடு ஆடல் உறவு . - பழமொழி : 16. 251. கற்றறிந்த பெரியவர்கள் கூடியுள்ள அவைக்குக் கல்வி அறிவில்லாதவன் சென்று அமர்வது நாய் போய் அமர்வதற்கு இணை யானதாகும். அவன் அங்குப் பேசத் தொடங்குவதோ நாய் குரைத்தலுக்கு மிக ஒப்பானதாகும். (82) கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து நல்அறி வாளர் இடைப்புக்கு - மெல்ல இருப்பினும் நாய்இருந் தற்றே ; இராஅது உரைப்பினும் நாய்குரைத் தற்று. - நாலடியார் : 254. 252. அவையில் ஒன்றைச் சொல்பவனது குறிப்பினை அறியாமல் இருப்பவனே உண்மையான மரம் ஆவான். மற்றைக்கவடு, கிளை, இலை, உடையவை இம்மனித மரத்திற்கு ஒப்பாகா. (83) கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் - சவைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவன்நன் மரம். - மூதுரை : 13. 253. ஒருவனுக்கு முழங்கால் கிழிந்து போக அதனைச் சரி செய்யக் கருதிய மருத்துவன் அவன் மூக்கைத் தைத்து மூட்டுவது போன்றதாகும். ஒருவன் வினாவிய வினாவை வாங்கிக் கொண்டு தக்க விடை கூறாமல் முந்தி முந்தி முறையின்றி உளறுவது. (84) துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில் பின்னை உரைக்கப் படற்பாலான் - முன்னி மொழிந்தால் மொழியறியான் கூறல் முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு. - பழமொழி : 19. 254. இரண்டு பேர்கள் உரையாடும் போது ஒருவர் கருத்தை ஒருவர் வாங்கிக் கொண்டு ஒருவர் உரைத்தபின்னர் மற்றொருவர் உரைத்தல் வேண்டும். அவ்வாறின்றி ஒரே வேளையில் இருவரும் பேசுவது, ஒரு வேட்டை நாயைக் கொண்டு ஒரே வேளையில் இருவர் வேட்டையாட முயல்வது போன்றதாம். (85) ஒருவர் உரைப்ப உரைத்தால் அதுகொண்டு இருவரா வாரும் எதிர்மொழியல் பாலார் பெருவரை நாட்! சிறிதேனும் இன்னாது இருவர் உடன்ஆடல் நாய். - பழமொழி : 18. 255. சிங்கம் உதிர்த்த பற்களைப் பொறுக்கி எடுத்து, நாய் பொருந்தி வைத்துக்கொண்டு புலியின் முன்னர்க் குரைப்பது போன்றது, அறிவினர் சொல்லிய சில சொற்களைக் கேட்டு, அறிவிலி, தன் மனத்தில் வைத்துக் கொண்டு, அறிவுடையோர் இடத்தே அவற்றை மொழிவது. (86) வெற்றியுறு கோளரிப்பல் வீழ்ந்த சில கொண்டு நாய் கொற்றப் புலிமுன் குரைப் பொக்கும் - குற்றமறக் கற்றவர் முன் முன்னூல் உரைசில கற்றார்பால் மற்றவர் கேட்டுரைக்கும் மாண்பு. - இன்னிசை இருநூறு : 120. 256. பன்றிக்குட்டி முகபடாம் போர்த்துக்கொண்டு நின்றாலும் அதனை யானை என்று எவரும் கூறார். அது போலக் கவிதை இயற்றினாலும், கற்றுத் தெளியாதவர்களை அறிவுடை யோர் மதியார். (87) பன்றிக் குருளை படாம் போர்த்து நிற்பினும் வென்றிக் களிறென விள்ளுப் யாவரே நன்று கல்லார்கவி பாடினும் நாவலோர் என்றும் மதித்தல் இலர். - இன்னிசை இருநூறு : 116. 257. குருடன் இரவில் விளக்கேந்திச் செல்வது அவனுக்காக அன்று. அவனைக் கண்டு பிறர் ஒதுங்கிச் செல்வதற்கே ஆகும். அதுபோல் பேதை ஒருவன் பெரியோர் அவையில் புகுந்து ஏதேனும் பேசுவது அவன் அறிவு இன்மையைக் காட்டுவதற்கே ஆகும். (88) இரவு விளக்கம் குருடேந்திச் செல்லின் வருவோர் வழிவிலங்கு மாறுணர்த்தி யற்றே பெரியார் அவைப்புக்கப் பேதைநாணாமை தெரியத்தன் தீவாய் திறப்பு. - இன்னிசை இருநூறு 181. 258. பச்சை ஓலை ஒலியின்றி இருக்கும்; காய்ந்த ஓலை மிகச் சலசலக்கும். கற்றவர்கள் கூடிய அவையில் கற்றவர்கள் ஏதேனும் சொற் குற்றம் உண்டாகிவிடுமோ என அவை அஞ்சி அமைந் திருப்பர், கல்லாத வர்கள் அச்சமின்றி எதையும் வாய் போன போக்கில் பேசுவர். (89) கற்று அறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வு அஞ்சி. மற்றையர் ஆவார் பகர்வர்; பனையின்மேல் வற்றிய ஓலை கலகலக்கும்; எஞ்ஞான்றும் பச்சோலைக்கு இல்லை ஒலி. - நாலடியார் : 256. 259. இசைப்பதையே தொழிலாகக் கொண்ட பாணர்கள் தெருவில் போய் இசையின் இயல்புகளை ஒருவர் விளக்குவதற்கும் அறிவுடையவர்கள் முன்னர் அறிவிலார் பேசுதற்கும் எத்தகைய வேற்றுமையும் இல்லை.(90) அகலம் உடைய அறிவுஉடையார் நாப்பண் புகலறியார் புக்கவர் தாமே - இகலினால் வீண்சேர்ந்த புன்சொல் விளம்பல் அதுவன்றோ பாண்சேரிப் பல்கிளக்கும் ஆறு. - பழமொழி : 21. 260. பலரும் போய்வரும் ஊர்ப் பொது மன்றத்திற்குத் தாழ்ப் போட்டுப் பூட்டி வைக்கமுடியாது. அதுபோல் பயனற்ற பலவற்றைப் பேசித்திரியும் அறிவிலி வாய்க்கும் தாழ்ப் போட்டுப் பூட்டிவைக்க முடியாது. (91) தெறியா தவர்தம் திறனில் சொல் கேட்டால் பரியாதார் போல இருக்க - பரிவு இல்லா வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே அம்பலம் தாழ்க்கூட்டுவார். - பழமொழி : 55. 261. பசு தன் கொம்பால் குத்தித் தாக்கினால் அதனைப் பதிலுக்குக் குத்தித் தாக்குபவர் இலர். அது போல் அறிவிலார் சொல்லும் கீழான சொற்களுக்குப் பதிலாக அறிவுடையோர் அத்தகைய சொற்களைச் சொல்லார். (92) ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக் காய்ந்து எதிர் சொல்லுபவோ கற்றறிந்தார்? - தீந்தேன் முசுக்குத்தி நக்கும் மலை நாட! தம்மைப் பசுக்குத்தின் குத்துவார் இல். - பழமொழி : 57. 262 அறிவிலிகளைக் கண்டு பெரியவர்கள் ஒதுங்கிச் செல்வது அச்சத் தினால் அன்று. மலந்தின்னும் பன்றியைக் கண்டு மலை போன்ற யானை விலகுவது அச்சத்தினாலேயா? (93) பேதையரைக் கண்டால் பெரியோர் வழிவிலகி நீதியொடு போதல் நெறியன்றோ - காதுமத மாகரத்த யானை வழிவிலகல் புன்மலந்தின் சூகரத்துக்கு அஞ்சியோ சொல். - நீதிவெண்பா : 37. 263. வாழைக்குத் தான் ஈன்ற காயே கூற்றாகும்; அறம் அற்றவர்க்கு அறமே கூற்றாகும்; கல்லாதவர்க்குக் கற்றார் சொல்லே கூற்றாகும். (94) கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம் அல்லாத மாந்தர்க் கறங்கூற்ற - மெல்லிய வாழைக்குத் தானீன்ற காய்கூற்றங் கூற்றமே இல்லிற் கிசைந்தொழுகாப் பெண். - மூதுரை : 27. 264. கருடனுக்கு நஞ்சு என ஒன்று இல்லை ; தீயின் முன்னர்க் குளிர் இல்லை. அவ்வாறே அறிவினர்க்குத் துன்பமும் அறிவிலிக்கு இன்பமும் இல்லை. (95) தூய அறிவினர்முன் சூழ்துன்பம் இல்லையாம் காயும் விடம் கருடற்கு இல்லையாம் - ஆயுங்கால் பன்முகஞ்சேர் தீமுன் பயில் சீதம் இல்லையாம் துன்முகனுக்கு உண்டோ சுகம். - நீதிவெண்பா : 48. 265. பாம்பு பருகிய நீரும் நஞ்சாவது போல், கீழ் மக்கள் கற்ற நூல் அவர்களுக்கு மயக்கத்தைத் தரும், பசு உண்ட நீர் பாலாவது போல் மேலோர் கற்ற நூல் அவர்களுக்குத் தெளிவினைத் தரும். (96) பாம்புஉண்ட நீர் எல்லாம் நஞ்சாம், பசுஉண்ட தேம்படு தெண்ணீர் அமுதாம்! - ஓம்பற்கு ஒளியாம் உயர்ந்தார்கள் ஞானம் அதுபோல் களியாம் கடையாயார் மாட்டு. - அறநெறிச் சாரம் : 188. 266. அறிவிற் சிறந்தோர் முன்னர் அடங்கிக் கிடந்து, அறிவிலார் முன்னர்ப் பேசித் தற்பெருமை கொள்பவன் செயல், வேட்டைக்குச் செல் லாமல் வீட்டுக்குள் அடுக்கி வைக்கப் பெற்றுள்ள பானைகளின் மேல் அம்பு ஏவும் ஒருவன் செயலுக்கு ஒப்பானது. (97) நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி நன்றுணராப் புல்லவையுள் தம்மைப் புகழ்ந்துரைத்தல் - புல்லார் புடைத்தறுகண் அஞ்சுவான் இல்லுள்வில் லேற்றி இடைக்காலத்து எய்து விடல். - பழமொழி : 24. 267. வலிய புலி அகப்பட்டுக் கொண்டு தம்மிடத்தில் இருந்தாலும் அது உறங்கும் வேளையில் அதன் இயல்பை அறிந்தோர் எழுப்ப மாட்டார். அதுபோல் ஆற்றல் மிக்கவர்கள் தம்மிடம் அகப்பட்டுக் கொண்டாலும் அறிவுடையோர் அவர் களை ஏளனமாக நினையார். (98) வெஞ்சின மன்னவன் வேண்டாத வேசெயினும் நெஞ்சத்துட் கொள்வ சிறிதும் செயல்வேண்டா என்செய் தகப்பட்டக் கண்ணும் எழுப்புவோ துஞ்சு புலியைத் துயில். - பழமொழி : 281. 268. உறங்கிக் கொண்டிருக்கும் கரடியை அறிவில்லாத நாயே எழுப்பும், அது போல் பெரியவர்கள் சினம் கொள்ளுமாறு அறிவிலிகளே மாறுபட்டுச் செயல் ஆற்றுவர். (99) பெரியாரைச் சார்ந்தார்மேல் பேதைமை கந்தாச் சிறியார் முரண்கொண் டொழுகல் - வெறியொலி கோநா யினம்வெரூஉம் வெற்ப புலம்புகின் தீநாய் எழுப்புமாம் எண்கு. - பழமொழி : 292. 269. கசப்பு மிக்க மருந்தையும் இனிப்புப்பூசி உண்ணச் செய்து உடல் நோயைப் போக்குவார் மருத்துவர். இனிய மொழிகளால் அரியவற்றைப் புகட்டி உயிர்க்குப் பற்றிய அறிவின்மை நோயைப் போக்குவார் ஆசிரியர். (100) கைத்திட்ட மருந்திலக் காரம் கலந்து கூட்டி மத்தித் தருள்பண்டிதர் போல்மற நோய்தவிர்ப்பான் எத்திக்கினுங் கேட்பவர் காதுள மின்ப மேவித் தித்தித்திட ஆரியர் நன்மறை செப்பு வாரே. - நீதிநூல் 5 : 8. 270. சிறிய வாயையுடைய பாத்திரத்துள் துளிதுளியாக நீரைச் செல்லுத்துவதுபோல், சிறுவர், அறியார் முதலியவர்களுக்கு எளிதாக விளங்கும்படி நன்னெறி காட்டுவார் நல்லாசிரியர். (101) சிறுவாய்க் கலத்துள் துளியாகச் செலுத்து நீர்போல் அறியாச் சிறுவர்க்கும் உணர்ந்தறி யாத வர்க்கும் வறியார்க்கும் விளங்கிட வேதெளி வாவகுத்து நெறியைத் தெரிவிப்பர்நன் னூ னெறி நின்றமேலோர். - நீதிநூல் : 5 : 9. 271. குழந்தையின் கையைப் பற்றிப் பிடித்துக் கொண்டு நடைகாட்டும் தாயைப்போலவும், ஆடுவோர்க்கு முதற்கண் . ஆடிக்காட்டி ஆடச்செய்யும் கூத்தரைப் போலவும் ஆசிரியர் மாணவர்க்கு வழி காட்டியாக அமைதல் வேண்டும். (102) மகவின் கரம் பற்றி முன்தான் நடந்து வளமேவு நடைகாட்டி மகிழன்னை போலும் தகமுன்பு தாமாடி நடலம் பயிற்றுந் தகையோர்கள் போலும் சகத்தோர் செவிக்கண் புகவேநல் வழியோது புரையற்ற புனிதர் பொறை சீலம் அன்பிகை புகழ்வாய்மை விரதம் பகர்கின்ற சுகுணங்கள் யாவிற்கும் அவரோர் பதியாகி விதியாகி மதியோது வாரால். - நீதி நூல் : பிற்சேர்க்கை : 5:1. 272. அறிவுமிக்கவர் முன் அறிவு மிக்கவராகவும், அறிவிலார் முன் அவரினும் அறியாதவராக வெளுத்த சுவர் போலவும் அறிவுடையோர் விளங்குதல் வேண்டும். (103) ஒளியார்முன் ஒள்ளிய ராதல் ; வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல். - திருக்குறள் : 714. 273. தன்னை அடுத்து நெருங்கியவர்களுக்குத் தான் பெற்ற கல்வியை உதவாமல் கருமியாக இருப்பவன் பூதம் காக்கும் புதையல் போன்றவன். (104) நலனுடையார் தற்சாரின் நல்காதான் அன்றே பிலமிக்க பொன்காத்த பேய். - இன்னிசை இருநூறு : 119. 274. தலையில் மணியைக் கொண்டிருந்தாலும் வாயில் நஞ்சைக் கொண்டுள்ள பாம்பைக் கண்டு எவரும் அஞ்சுவர். அதுபோல் பேரறிவினராக இருப்பினும் கொடுஞ்சொல் உடைய ஆசிரியரை மாணவர் நெருங்கார்.(105) தீயவர்பால் கல்வி சிறந்தாலும் மற்றவரைத் தூயவர் என்று எண்ணியே துன்னற்க - சேயிழையோ! தண்ணொளிய மாணிக்கம் சர்ப்பம் தரித்தாலும் நண்ணுவரோ மற்றதனை நாடு. - நீதிவெண்பா : 71. 275. பல நல்ல நூல்களைக் கற்றும் நன்னெறிச் செல்லாத ஆசிரியர் விளக்கினை ஏந்தும் தூணையும், புத்தகத்தைத் தாங்கும் கவளிப் பலகை யையும், பால் வைத்திருக்கும் பானையையும் போன்றவரே ஆவார். (106) உணர்ந்தும் தாம் பிறர்க் கோதிய நல்வழி தணர்ந்து ளோர் சுடர் தாங்கித்தன் மேலிருள் புணர்ந்த தம்பம்கொல் புத்தகம் தாங்கிய கொணர்ந்த சட்டம் கொல் பால் கொள்க லங்கொலோ. - நீதிநூல் : பிற்சேர்க்கை : 6:2. 5. முயற்சி 276. மெல்லிய காற்று அடித்தாலும் ஆடி அசையும் மரக்கிளை ஒரு காலத்தில் மிகுந்த வலிமை பெற்றுவிடும் அப்பொழுது அது வலிய யானை யைப் பிணைக்கும் தூணாக அமையும். அதுபோல் வலிமை குறைந்தவர்கள் என்றாலும் இடையறாது முயற்சி செய்துவந்தால் வலியவர்களையும் வெற்றி கொள்ளும் வலியவர்கள் ஆகிவிடலாம். (1) ஆடுகோடு ஆகி அதர்இடை நின்றதூஉம் காழ் கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்துஆகும் வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்தான் தாழ்வுஇன்றித் தன்னைச் செயின். - நாலடியார் : 192. 277. தன் தகுதிக்கு ஏற்ற ஊன்கிடைக்காமல் புலி, சிறிய தேரையைப் பிடித்துத் தின்று உயிர்வாழும் கால நிலையும் வரலாம். ஆதலால் ஒவ்வொரு வரும் உயர்ந்த தொழில் இது தாழ்ந்த தொழில் இது' என்று பாராமல் எந்தத் தொழிலையும் பழகிக்கொள்ளுதல் வேண்டும். ஒரு தொழில் இல்லாவிடினும் இன்னொரு தொழில் வாழ்வுக்கு உதவும். (2) உறுபுலி ஊன்இரை இன்றி ஒருநாள் சிறுதேரை பற்றியும் தின்னும்; - அறிவினால் கால்தொழில் என்று கருதற்க; கையினால் மேல் தொழிலும் ஆங்கே மிகும். - நாலடியார் : 193. 278. தொடங்கியுள்ள தொழில் நிரம்பிய வருவாய்தாராது என்றால் கூட, நிரம்பிய வருவாய் தரும் தொழில் ஒன்று வாய்க்கும் வரை அதனைச் செய்து கொண்டிருத்தல் வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் நீருள் தோன்று மீனை விரும்பி, நாய் தன் வாயில் இருந்த மீனை விட்டுவிடுவது போன்ற இழப்புக்கே ஆளாக நேரிடும். (3) தாளற்றா நின்ற வினைதான் தகவருவாய் ஈனா தெனினும் இனிய பிற வெய்தளவும் ஆனாமை வேண்டும் அவாவான் விடினாய் நீர் மீனாடி வாயூன் விடல். - இன்னிசை இருநூறு : 127. 279. கண்கவரும் தோற்றத்தை உடையவராக மட்டும் ஒருவர் இருந்து பயன் இல்லை. அதனுடன் வினையாற்றும் திறமையும் இன்றியமையாது வேண்டும். வெறும் தோற்றப் பொலிவை மட்டுமே ஒருவன் கொண்டிருப்பது பருகுதற்கு வைத்திருந்த பாலில் நீரை மிக அதிகமாக விட்டு நிரப்பியதற்கு நேராகும். (4) உருவிற்கு அமைந்தான்கண் ஊர் ஆண்மை இன்மை பருகற்கு அமைந்த பால் நீர் அளாய் அற்றே; தெரிவு உடையார் இனத்தார் ஆகுதல் நாகம் விரிபெடையோடு ஆடிவிட் டற்று. - நாலடியார் : 40. 280. வீட்டுக்கு வீடு சுற்றித்திரிந்து கிடைப்பவற்றை எல்லாம் உண்டு வளரும் வாழ்வு உடையது நாய். அது போல் கடமை உணர்வு இல்லாமல் கிடைத்தவற்றை உண்டு வாழும் வாழ்வு இழிவு மிக்கது. (5) ஞமலிபோல் வாழேல். - புதிய ஆத்திசூடி : 37. 281. தேனீக்கள் கூடிச் சேர்ந்து மகிழ்வுடன் தொழில் செய்வதைப் பார்த்தாவது மனிதன் கூட்டுறவைக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும்.(6) நுண்தாது தேரும் அளிகூடிச் சேர்த்தாக்கும் எண்படும் தொண்டாக்கம் எண். - கைவிளக்கு 8 : 19. 282. ஓராட்டை மேய்ப்பதற்காக ஒருவன் அலைவதைப் பார்க்கிலும் பலருடைய ஆடுகளையும் மேய்த்துத் தானும் பிறரும் பயன் பெறுவது நலம். அதுபோல் பலருக்கும் பயன்படும் கூட்டுறவுத் தொழிலில் கருத்துச் செலுத்துதல் நாட்டுக்கு நலம் தரும். (7) தனியாடு மேய்ப்பதினும் கூட்டாடு நன்றாம் இனிநாடே கூட்டுறவை நாடு. - கைவிளக்கு 3 : 7. 283. ஒரு செயலைச் செய்து முடிக்க முடியாத சூழ் நிலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும் பார்த்து நிற்கும் கொக்கைப் போல் அமைதியாக இருத்தல் வேண்டும். செயலை முடித்தற்கு ஏற்ற வாய்ப்பு வரின் அப்பொழுது மீனைக் குத்திப் பிடிக்கும் கொக்கைப் போல் விரைந்து செயலாற்றுதல் வேண்டும். (8) கொக்கொக்க கூம்பும் பருவத்து; மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து. - திருக்குறள் : 490. 284. நீரில் இருக்கும் வரை எவ்வளவு வலியவற்றையும் முதலை வெல்லும். நீரை விட்டுக் கடந்தால் எவ்வளவு எளிய வற்றாலும் வெல்லப்படும். அதுபோல் எத்தகைய வலிமை வாய்ந்தவர் எனினும் தாம் இருக்கும் இடத்தை எண்ணிச் செய லாற்றுதல் வேண்டும். (9) நெடும்புனலுள் வெல்லும் முதலை, அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற. - திருக்குறள் : 495. 285. நிலத்தில் செல்லத்தக்க வலிய தேர் நீரில் செல்லாது. நீரில் செல்லத்தக்க கப்பல் நிலத்தில் செல்லாது. ஆதலால் இடத்தை அறிந்து செயலாற்றுதலே செயல் நிறைவேறுதற்குரிய வாய்ப்பினைத் தரும். (10) கடலோடா கால்வல் நெடுந்தேர் ; கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து. - திருக்குறள் : 496. 286. இரவுப் பொழுதில் வல்லமையுடையதாகத் தோன்றும் கூகையைக் காக்கை, பகற்பொழுதில் எளிமையாக வெற்றி கொண்டு விடும். அதுபோல் காலம் கருதிச் செயலாற்ற வல்லவர் எளிதில் கடமையை நிறைவேற்றிக் கொள்வர். (11) பகல்வெல்லும் கூகையைக் காக்கை ; இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. - திருக்குறள் : 481. 26. அம்பு தன் மேல் ஆழமாகத் தைத்த போதும் யானை தளர்ச்சி யின்றித் தாக்கும். அதுபோல் தனக்கு அழிவு வரும் நிலை தோன்றினால் கூட எடுத்த செயலைத் தளர்ச்சியின்றி முடிக்கவே முயல்வர் ஊக்கமிக்கவர்.(12) சிதைவிடத் தொல்கார் உரவோர்; புதையம்பிற் பட்டுப்பா டூன்றும் களிறு. - திருக்குறள் : 97. 288. வலிய பாரத்தையும் தாங்கி இழுக்கவல்ல காளை போன்ற வனுக்குத் துன்பம் சிறிதும் இல்லை. அவனைத் துன்புறுத்த வந்த துன்பமே துன்புற்று ஓடும். (13) மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடுடைத்து. - திருக்குறள் : 24. 289. தேனீ இசைபாடிக் கொண்டே தன் கடமையைச் செய்து இன்ப முடன் வாழும். அதுபோல் கடமைகளை விருப்பத்துடன் நிறைவேற்றி, மாந்தர் இன்புற்று வாழ்தல் வேண்டும். ஞிமிறென இன்புறு. (14) - புதிய ஆத்திசூடி : 39. 290. இன்பத்தைக் கருதாமல் கடமையை நிறைவேற்றுதலே கருத்தாக உடையவன் தன் உறவினர் என்னும் சுமையைத் தாங்கக் கூடிய சுமை தாங்கித் தூண் போன்றவன். (15) இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண். - திருக்குறள் : 65. 291. உழவன் அடிக்கடி தன் நிலத்திற்குச் சென்று ஆங்குச் செய்ய வேண்டியவற்றைத் தவறாமல் செய்தல் வேண்டும். இல்லாவிடின் கணவனால் பேணப்பெறாத மனைவி கணவனை வெறுத்து ஒதுக்குவது போல் நிலம் உழவனை வெறுத்து, வளத்தைச் சுருக்கிக் கொள்ளும்.(16) செல்லான் கிழவன் இருப்பின், நிலம்புலந் தில்லாளின் ஊடி விடும். - திருக்குறள் : 1039. 292. பழக்கப்பட்ட யானையைக் கொண்டு பழகாத புதிய யானையைப் பிடித்து வயப்படுத்திக் கொள்வர். அதுபோல் செய்யப் புகுந்த ஒரு செயலைக் கொண்டு மற்றொரு செயலையும் நிறைவேற்றிக்கொள்வர் செயல்திறம் வாய்ந்தவர். (17) வினையால் வினையாக்கிக் கோடல், நனைகவுள் யானையால் யானையார்த் தற்று. - திருக்குறள் : 78. 293. எடுத்துக்கொண்ட செயலை முடியாத குறையும் எதிரிட்ட பகையை முழுக்க அழியாத குறையும் சிறு நெருப்புப் போல் இருந்து பெருகிக் கெடுத்து விடும். (18) வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும். - திருக்குறள் : 674. 294. குத்திவிடுமோ என்று அஞ்சி நடப்பவரையே நெருஞ்சி முள் குத்தித் துன்புறுத்தும். துணிந்து நடப்பவரைக் குத்தினாலும் அதைத் துடைத்துவிட்டுப் போய் விடுவர். அது போல் ஊக்கம் இல்லாதவர்களுக்கே எடுத்துக் கொண்ட செயலை முடிப்பதற்குப் பல தடைகள் உண்டாகின்றன. ஊக்கம் உடைய வர்களோ தடையின்றி இனிது முடித்துவிடுகின்றனர். (19) உரிஞ்சி நடப்பாரை உள்ளடி நோவா நெருஞ்சியும் செய்வது ஒன்று இல்லை - செருந்தி இருங்கழித் தாழும் எறிகடல் தண்சேர்ப்ப பெரும்பழியும் பேணாதார்க்கு இல். - பழமொழி : 41. 295. தின்னுவதற்காகக் கரும்பை வெட்டுபவர் தம்கை வெட்டுப்பட்டுத் துன்பம் அடைவதும் உண்டு. அது போல் எடுத்துக்கொண்ட பணிக்கு இடைத் தடை நேர்ந்தாலும் சோர்வு அடையாமல் முயன்று வெற்றிகாண வேண்டும். (20) தின்னக் கரும்பு தெறுவார் கரமறுப்புண் டின்னல் படலும் உளவினையின் இன்புற எண்ணித் தொடங்கின் இடருமுள அஞ்சாமே திண்ணத்தால் பின்னும் செயல். - இன்னிசை இருநூறு : 125. 296. செய்யத் தொடங்கிய பணி நன்மை தாராததாகப் பின்னர்த் தோன்றினாலும் முழுமையாகச் செய்து முடித்தல் வேண்டும். கிணற்றைத் தாண்ட முனைந்தவன் சிறிதளவு குறைத்துத் தாண்டினாலும் தப்பிப் பிழைக்க மாட்டான் அல்லவா? (21) கடைபோகா வாயினலங் காட்டா எனினும் இடரில செய்க திருநீர்க் கிணறு திடனுறத் தாண்டிற் சிறிதிழுக்கு மேனும் இடரெய்தல் தப்பாமை யின். - இன்னிசை இருநூறு : 126. 297. பிழையாக எழுதப் பெற்ற எழுத்தை அப்படியே வைத்து அறிவுடையவன் காக்க மாட்டான். அதனைத் திருத்தி வைக்கவே முயல் வான். அதுபோல் சிறந்த முயற்சியாளன் முன்னர் உண்டாகிய முயற்சிக் குறைபாடுகளை நீக்கி, எடுத்த பணியை முடிக்கவே முயல்வான். (22) முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று தொழுதிருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல் இழுகினா னாகாப்ப தில்லையே முன்னம் எழுதிளன் ஓலை பழுது. - பழமொழி : 10. 298. செயல் ஆற்றும் திறம் சிறிதும் இல்லாதவர்கள் "யாம் இச்செயலை எளிதாகச் செய்து முடிப்போம்" என்று நினைப்பது, ''வயலில் நிற்கும் பறவையைப் பிடித்து விலைக்கு விற்பேன்" என்று வேட்டையாடத் தெரியாதவன் ஒருவன் சொல்வது போன்றதாகும். (23) செய்த கருமம் சிறிதானும் கைகூடா மெய்யா உணரவுந் தாம்படார் - எய்த நலத்தகத் தம்மைப் புகழ்தல் புலத்தகத்துப் புள்ளரைக்கால் விற்பேம் எனல். - பழமொழி : 65. 299. "வன்சொல் கூறினால் அதனைக் கேட்டு அவன் உள்ளம் வேகும் என்று கருதி அவன் தலையை வெட்டி விடுவேன்'' என்பவன் மிக இழிவுக்கு உரியவன் ஆவான். அது போல் எளிதில் முடிக்கக் கூடிய செயலைச் செய்ய மாட்டாதவன் ''அரிய செயலைச் செய்து முடிப்பேன்" என்றாலும் இழிவுக்கு உரியவனே ஆவான். (24) செயக்கடவ அல்லனவும் செய்துமன் என்பார் நயத்தகு நாகரிகம் என்ளம்? - செயிர்த்துரைப்பின் நெஞ்சு நோம் என்று தலைதுமிப்பான் தண்ணளிபோல் எஞ்சாது எடுத்துரைக்கல் பாற்று. - நீதிநெறி விளக்கம் : 71. 300. நீர்ப்பூச்சி நீரின் அடியில் அமைந்துள்ள மண்ணில் எழுதும் எழுத் தெல்லாம் எழுத்துகள் ஆக மாட்டார். அதுபோல் செயல் திறம் இல்லாதவர், செயல் திறம் வாய்ந்தவர் போல் செய்யும் செயல்களும் திறம் உடையன ஆகமாட்டா. (25) தந்தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன வெந்தொழில ராய வெகுளிகட்குக் கூடுமோ? மைந்திறை கொண்ட மலைமார்ப ஆகுமோ நந்துழுத எல்லாம் கணக்கு - பழமொழி : 92. 301. தண்ணீரை வெந்நீராக ஆக்கியும், வெந்நீரில் வெப்பம் மிகுதியாக இருந்தால் தண்ணீர் விட்டுத் தமக்கு ஏற்றவண்ணம் அமைத்தும் நீராடுவர். அதுபோல் நல்லவர்களுக்கும் பொல்லவர் களுக்கும் ஏற்ற வண்ணம் நடந்து தங்கள் செயலை முயற்சியாளர் முடித்துக் கொள்வர். (26) செந்நீரார்போன்று சிதைய மதிப்பார்க்கும் பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும் அந்நீர் அவரவர்க்குத் தக்காங் கொழுகுபவே வெந்நீரின் தண்ணீர் தெளித்து. - பழமொழி : 12. 302. தன்னைத் துன்புறுத்தும் பற்களைக் கொண்ட நாக்கு தனக்கு வேண்டிய சுவைப் பொருள்களை அரைத்துக் கொள்ளும், அதுபோல் தம் பகைவர்களைப் பயன்படுத்திக் கொண்டும் திறம் வாய்ந்தவர் தாங்கள் எடுத்துக் கொண்ட செயலை நிறைவேற்றி விடுவர். (27) பகைசேரும் எண்ணான் பற்கொண்டே நன்னா வகைசேர் சுவையருந்து மாபோல் - தொகைசேர் பகைவரிடம் மெய்யன்பு பாவித்து அவரால் சுகமுறுதல் நல்லோர் தொழில். - நீதிவெண்பா : 5. 303. கூர்மையான அம்பை முடிந்த அளவும் விரைவாகச் செலுத்தினால் அதனைத் தடுப்பதற்குரிய மெய்ம்மறை (கவசம்) இல்லை. அதுபோல் முடியும் வகை அறிந்து முனைந்து முயற்சி செய்யப் பெற்றால் அது தடைப்படாமல் முடியும். (28) எங்கணொன்றில்லை எமரில்லை என்றொருவர் தங்க ணழிவுதாம் செய்யற்க – எங்கானும் நன்கு திரண்டு பெரியவாம் ஆற்றவும் முன்கை நெடியார்க்குத் தோள். - பழமொழி : 156. 304. இளந்தளிரின் மேல் நின்றாலும் உளி தானாக அதனை வெட்டி விடாது. அதனைத் தட்டிவிட ஒருவர் வேண்டும். அதுபோல் மிக நல்ல முயற்சியாளராக இருந்தாலும் அவருக்கும் தக்க வகையில் தூண்டுதல் செய்வார் வேண்டும். (29) விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும் முட்டா தவரை வியங்கொளல் வேண்டுமால் தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும் தட்டாமல் செல்லா துளி. - பழமொழி : 169. 305. பிறர் சொல்லாமல் தாமே ஒரு செயலை எடுத்துக் கொண்டு சிறப்பாகச் செய்து முடிப்பவர் பெரியவர். அவர் பூவாமலே காய்க்கும் பலாமரம் போன்றவர். (30) 306. பிறரால் ஏவப் பெற்று ஒரு செயலைச் செய்து முடிப் பவர் சிறியர். அவர் பூத்துக் காய்க்கும் மாமரம் போன்றவர். (31) 307. 'இதனை இவ்வாறு செய்க' எனப் பிறர் ஏவியும் செய்ய இயலாதவர் கயவர். அவர் பூத்தும் காய்க்காத பாதிரி மரம் போன்றவர். (32) சொல்லாம லேபெரியார் சொல்லிச் சிறியர் செய்வர் சொல்லியும் செய்யார் கயவர் - நல்ல குலாமாலை வேற்கண்ணாய் கூறுவமை நாடிற் பலாமாவைப் பாதிரியைப் பார். - பெருந்தொகை : 26. 308. தம்மால் செய்து முடிக்கத் தக்கதாக இருந்தாலும் சரி, செய்து முடிக்க முடியாததாக இருந்தாலும் சரி, மேன்மக்கள் பெருமைமிக்க செயல்களைச் செய்தற்கே தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். நரியின் மார்பைக் கிழித்துக் கீழே வீழ்த்தும் அம்பினும் சிங்கத்தின் மேல் தைக்க ஏவும் அம்பு பெருமைக் குரியது அல்லவா! (33) இசையும் எனினும் இசையாது எனினும் வசைதீர எண்ணுவர் சான்றோர்; - விசையின் நரிமா உளம் கிழித்த அம்பினின் தீதோ அரிமாப் பிழைப்பெய்த கோல்? - நாலடியார் : 152. 309. செயலாற்றும் திறம் படைத்த ஒருவன் அத்தியமில்லாத ஒருவனுக்குச் செயல் முறை காட்டி ஒரு செயலை முடித்துக் கொள்ள நினைப்பது 'வட்டு' ஆடத்தெரிந்த ஒருவன் பக்கத்தே இருந்து கொண்டு ஆடத் தெரியாத ஒருவன் வழியாக எதிரியை வெற்றி கொள்ள நினைப்பது போன்றது. (34) உழையிருந்து நுண்ணிய கூறிக் கருமம் புரையிருந்த வாற்றியான் புக்கான் விளிதல் நிரையிருந்து மாண்ட அரங்கினுள் வட்டுக் கரையிருந் தார்க்கெளிய போர். - பழமொழி : 176. 310. ஓய்ந்து கிடையாக் கிடக்கும் கிழமாட்டைக் கொண்டு தொழி உழவு நடத்த நினைப்பதற்கும் முழுச் சோம்பனைக் கொண்டு ஒரு செயலைச் செய்து முடிக்க நினைப்பதற்கும் எத்தகைய வேற்றுமையும் இல்லை.(35) மடியை வியங்கொள்ளின் மற்றைக் கருமம் முடியாத வாறே முயலும் - கொடியன்னாய் பாரித் தவனை நலிந்து தொழில்கோடல் மூரி உழுது விடல் - பழமொழி : 167. 311. தம்மால் செய்து முடிக்கக் கூடிய ஒரு செயலைத் தாமே செய்து முடிக்காமல் பிறரைக் கொண்டு முடிக்கக் கருதுபவர் என்றும் செய்து முடியார். வெந்நீரிலேயே குளிக்க மாட்டாதவர் தீயிலே புகுவாரா?(36) தம்மால் முடிவதனைத் தாமாற்றிச் செய்கல்லார் பின்னை ஒருவரால் செய்வித்தும் என்றிருத்தல் சென்னி அருவி மலைநாட பாய்பவோ வெந்நீரு மாடாதார்தீ . - பழமொழி : 159. 312. முயற்சியற்ற சோம்பன் ஒருவன் பிறருக்குச் செய்ய நினைக்கும் உதவி, ஆற்றல் இல்லாத ஒருவன் கையில் உள்ள வாள் போல் பயன் தராமல் அவனையும் கெடுக்கும். (37) தாளாண்மை இல்லாதான் வேளாண்மை, பேடிகை வாளாண்மை போலக் கெடும். - திருக்குறள் : 614. 313. மனத்தூய்மை இல்லாதவரிடம், ''இச் செயலைச் செய்து முடிக்க" என ஏவுவது, ஆமையினிடம் "நீ குளத்திற்குச் சென்று குளித்துவிட்டுத் திரும்பி வா' என்பது போன்றதாம். (38) அகம்தூய்மை யில்லாரை ஆற்றப் பெருக்கி இகந்துழி விட்டிருப்பின் அஃதால் - இகந்து நினைந்து தெரியானாய் நீள்கயத்துள் யாமை நனைந்துவா என்று விடல். - பழமொழி : 175. 314 தொட்டவரை ஒட்டாத பொருள் இல்லை. சமைத்தவர் சுவைக்காத உணவு இல்லை. அவற்றைப் போல் பயன் கருதிப் பணியில் புகுபவரே பலர். ஆதலால் ஆராய்ந்து தெளிந்த பின்னரே ஒருவரைச் செயலாற்ற விடுதல் வேண்டும். (39) கட்டுடைத் தாகக் கருமஞ் செய்வைப்பின் பட்டுண்டாங் கோடும் பரியாரை வையற்க தொட்டாரை ஒட்டாப் பொருளில்லை இல்லையே அட்டாரை ஒட்டாக் கலம். - பழமொழி : 173. 315. சொல்லால் நலிய வைத்தவர்களை , நற்செயலால் நாண வைக்காமல் சொல்லாலேயே நலியவைக்க நினைப்பது நரி ஊளையிட்டுக் கடலை அடக்க நினைப்பது போன்றதாம். (40) உரைத்தாரை மீதூரா மீக்கூற்றம் பல்லி நெரித்த சினைபோலும் நீளிரும் புன்னைப் பொரிப்பூ இதழுறைக்கும் பொங்குநீர்ச் சேர்ப்ப நரிக்கூஉக் கடற்கெய்தா வாறு. - பழமொழி : 316. 316. செயல்வீரம் காட்டாமல் வீண் வாய்வீரம் காட்டிப் பலவகை நன்மைகளை அடையும் வீரர், ஆடல் திறம் இல்லாமல் உடல் அழகால் மட்டும் பலவகை வரிசைகளையும் பெறும் நாடகமகள் போன்றவர். (41) உருத்தெழு ஞாட்பினுள் ஒன்னார் தொலையச் செருக்கினால் செய்கல்லார் செய்வாரே போலத் தருக்கினால் தம்மிறைவன் கூழுண் பவரே கருக்கினால் கூறைகொள் வார். - பழமொழி : 321. 317. முற்றிய பனம்பழம் தன்னை உண்டாக்கிய தாய்ப் பனையின் காலடியில் வீழ்வது போல் ஒரு தொழிலைச் செம்மையாக முடிப்பதனால் உண்டாக்கிய புகழ் முடித்தவனையே சாரும். (42) உவப்ப உடன்படுத்தற் கேய கருமம் அவற்றவற் றாந்துணைய வாகிப் பயத்தால் வினைமுதிரின் செய்தான்மே லேறும் பனைமுதிரின் தாய் தாள்மேல் வீழ்ந்து விடும். - பழமொழி : 270. 318. தகுதியற்றவர்களை மிகத் தகுதிவாய்ந்தவர்களாகப் புகழ்ந்து பாராட்டுவது, அடுப்பின் அருகில் முடங்கிக் கிடக்கும் நாயை வலிமைமிக்க புலியென்று புகழ்ந்து கூறுவதற்கு ஒப்பானது. (43) தாயானும் தந்தையா லானும் மிகவுஇன்றி வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல் நோயின்று எனினும் அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியாம் எனல். - பழமொழி : 67. 319. குளத்தில் தேங்கிக்கிடந்த நீர் அறவே வற்றிப் போய் விட்டால், குளக்கரையின் காலடியில் இருந்த பயிரும் வாடிப் போய்விடும். அதுபோல் தன் முயற்சி சிறிதும் இல்லாமல் பிறரையே நம்பி வாழ்பவன் பிறர் வறுமை அடைவதற்குமுன் தானே வறுமையில் வாடுவான். (44) கோள் ஆற்றக் கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங் கூழ்போல் கேள்ஈவது உண்டு கிளைகளோ துஞ்சுப்; வாள் ஆடு கூத்தியர் கண்போல் தடுமாறும் தாள் ஆளர்க்கு உண்டோ தவறு. - நாலடியார் : 191. 320. கடுங்காற்றில் கைவிளக்கை வைத்துக்கொண்டு காற்று அணைத்து விட்டது என்பது அறிவின்மையே ஆகும். அதுபோல் எந்தவொரு முயற்சியும் செய்யாமல், 'விதி எம்மை வீழ்த்தி விட்டது' என்று சோர்வதும் அறிவின்மை யேயாம். (45) முயலாது வைத்து முயற்றின்மை யாலே உயலாகா ஊழ்த்திறந்த என்னார் - மயலாயும் ஊற்றமில் தூவிளக்கம் ஊழுண்மை காண்டுமென் றேற்றார் எறிகான் மிகுந்து. - நீதிநெறி விளக்கம் : 49. 321. காற்று, நிலம், நெருப்பு, நீர் ஆகியவையும் மரம், பயிர் முதலியன வும் அசையும். அவை அசையாவிடின் அழிவெய்தும் என்பது தெளிவு. அவற்றைப் போலவே மக்களும் உடலை அசைத்துப் பணிகள் செய்யாரேல் அவருக்கு உடல் வலிமை கெடும்; நோயும் துயரும் சேரும். (46) அசையும் வளிபுவி அசையும் அனல்சலம் அசையும் மரம்விளை பயிரெலாம் விசையி னொடுமவை அசைவதிலையெனில் விளியும் எனல் நிசம் நரர்கள்தம் தசைகொள் உடல்நிதம் அசைய வினைபல தரணி மிசைபுரி கிலரெனில் இசையும் வலிகெடும் நலிகள் அடுமுறும் இசையின் மிசையொடு வசையுமே. - நீதிநூல் : 24: 7. 322. எறும்பு முதல் யானை இறுதியாக உள்ள எல்லா உயிர்களும் உழைத்தே வாழ்கின்றன. அவ்வாறு இருப்பதைக் கண்டும் உழைக்காமல் உயிர்வாழும் மனிதன் பிணம் போன்றவன். அன்றியும் அசையாத மரம், செடி, கொடி போன்றவனும் ஆவன். (47) சிற்றெறும் பாதியாச் சீவ கோடிகள் முற்றுமெய் யுழைத்துயிர் முறையில் காக்குமால் சற்றுமெய் யசைவிலாச் சழக்க ராருயிர் அற்றவோர் சவங்கொல்மற் றசர மேகொலோ - நீதிநூல் : 24 : 1. 323. உலையாத உரம் இல்லாத மாந்தர் உணர்ச்சியும் முயற்சியும் இல்லாத மரம் போன்றவரே. (48) உரமொருவற் குள்ள வெறுக்கை அஃதில்லார் மரம் ; மக்க ளாதலே வேறு. - திருக்குறள் : 600. 324. வாழைப்பழம் எந்தக் காலத்திலேனும் உவர்ப்புச் சுவை உடைய தாவது இல்லை. அதுபோல் உண்மையான வீரர்களும் என்றும் ஊக்கம் குறைதல் இலர். (49) இருகயல் உண்கண் இளையவளை வேந்தன் தருகென்றாற் றன்னையரு நேரார் - செருவறைந்து பாழித்தோள் வட்டித்தார் காண்பாம் இனிதல்லால் வாழைக்காய் உப்புறைத்தல் இல். - பழமொழி : 326. 325 புலி தான் இறக்கும் அளவும் தன் தோலைப் பிறி தொன்று தொடவும் விடாது. அதுபோல் உண்மை வீரன் உயிர் போகும் அளவும் புறங் காட்ட மாட்டான். (50) புலியுயிர் போகுமட்டும் பொருந்திய தோலை ஈயா வலியுறு வீரன் தானும் மரித்தன்றித் புறம்வ ழங்கான் பொலிவுறு கற்பள் ஆவி பொன்றிடாத் தனங்கள் ஈயாள் நலிவுறு லோவன் சீவன் ஒழிவின்றி ஒன்றும் நல்கான். - நீதிசாரம் : 27. 326. எவ்வளவு துன்புறுத்தினாலும் நாய் பின்னே வர ஆடு அதன் முன்னே போகாது. அதுபோல் எவ்வளவு ஊக்கப்படுத்தினாலும் உண்மை யான ஊக்கம் இல்லாத வீரர் உயரிய வீரருக்கு முன்னே போகார் (51) தன்னலி கிற்பான் தலைவரின் தானவற்குப் பின்னலி வானைப் பெறல் வேண்டும் - என்னதூஉம் வாய்முன்ன தாக வலிப்பினும் போகாதே நாய்பின்ன தாகத் தகர். - பழமொழி : 304. 327. நெற்பயிரைப் பேணி நன்றாக வளர்த்தால் புல் தானாகவே ஒழிந்து போகும். அதுபோல் தன்னை நன்றாக வலுப் படுத்திக் கொண்டால் பகைவர்களை அடக்குதற்குச் செல்ல வேண்டுவது இல்லை. அவர்களே அடங்கிப் போவர். (52) உற்றதற்கு எல்லாம் உரம் செய்ய வேண்டுமோ கற்றறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பமையும் நெல் செய்யப் புல்தேய்ந்தாற் போல நெடும்பகை தற்செய்யத் தானே கெடும். - பழமொழி : 53. 328. கடல் போல் பெருக்கமாகக் கூடி எலிகள் ஆரவாரம் செய்தாலும் ஆவது என்ன? பாம்பு மூச்சு விட்டாலே அவை யெல்லாம் அஞ்சி ஓடிவிடும். அதுபோல் உள்ள வலிமையுடைய ஒருவனைக் கண்டாலே மெலியவர் நில்லாது ஓடி ஒளிவர். (53) ஒலித்தக்கால் என்னாம் உவரி? எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும். - திருக்குறள் : 763 329 உருவத்தால் பருத்துக் கூர்மையான தந்தங்களைக் கொண்டு இருந்தால் கூட யானை புலிக்கு அஞ்சும். அதுபோல் படைப் பெருக்கமும், கருவி வலிமையும் கொண்டு இருந்தால் கூட ஊக்கம் இல்லாதவர் ஊக்கம் உடையவரை வெல்லுவது அரிது. (54) பரியது கூர்ங்கோட்ட தாயினும், யானை வெரூஉம் புலிதாக் குறின் - திருக்குறள் : 599 330. ஊக்கம் மிக்கவன் அஃதில்லாதவன் போல் பின்வாங்கிச் செல்வது, போரிடும் ஆட்டுக்கடா மேலும் வலிந்து தாக்கி வெற்றி பெறுவதற்காகப் பின்வாங்கிச் செல்வது போன்றது. (55) ஊக்க முடையான் ஒடுக்கம், பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து. - திருக்குறள் : 486 331. வேலுக்கும் அஞ்சாத யானை எனினும் அவற்றில் மாட்டிக் கொண்டால் எளிய நரியாலும் வெல்லப் பெறும். அதுபோல் படைப் பெருக்கமும் வலிமையும் உடையவர் எனினும் பொருந்தாத இடத்தில் அகப்பட்டுக் கொண்டால் தம்மினும் எளியவர்களாலும் எளிதில் வெல்லப் பெறுவர். (56) காலாழ் களரில் நரியடும்; கண்ணஞ்சா வேலாழ் முகத்த களிறு. - திருக்குறள் : 500. 332. சிங்கத்தைக் காணும்போது யானை தன் கொம்புகளை மயில் தோகைபோல் கீழே சாய்த்துவிடும். அதுபோல் வலிய வீரரைக் கண்டபோதே வலிமையில்லார் படைக்கலங்களையும் களத்தில் போட்டு விட்டு அடைக் கலம் அடைவர். (57) தாளாளர் அல்லாதார் தாம்பலர் ஆயக்கால் என்னாம் என்னாம் யாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும் பீலிபோல் சாய்த்து விடும் பிளிற்றியாங்கே. - பெருந்தொகை : 380. 333. அரிசிதான் முளை கொண்டு வெளியேறிப் பயிராகும். ஆனால் உமி நீங்கிய அரிசி முளைப்பது இல்லை. அதுபோல் துணைவலி இல்லாமல் ஒருவன் எடுத்துக் கொண்ட செயலை நிறைவேற்றுவது அரிது. (58) பண்டு முளைப்ப தரிசியே ஆனாலும் விண்டு போனால் முளையாதாம் - கொண்டபேர் ஆற்றல் உடையார்க்கும் அக்கா தளவின்றி ஏற்ற கருமம் செயல். - மூதுரை : 11. 334. திங்கள் பிறையாக இருக்கும் பொழுது அதனை இருள் (கிரணம்) பற்றுவது இல்லை . முழுமதிப் பொழுதிலேயே அதனைப் பற்றும். அதுபோல் ஆண்மை மிக்கவர்கள், பகைவர் தளர்ந்தபோது அதனைப் பயன் படுத்திக் கொண்டு அவர்களை அடக்கி ஒடுக்கி விட நினைக்க மாட்டார்கள். (59) பகைவர் பணிவுஇடம் நோக்கித் தகவுடையார் தாமேயும் நாணித் தலைச்செல்லார்; காணாய் இளம்பிறை ஆயக்கால் திங்களைச் சேராது அணங்கு அருந் துப்பின் அரா. - நாலடியார் : 241. 335. பகையின் வலிமை தானே குறைந்த பின்னர் வெற்றி கொள்ளலாம் என்று வீரர் நினைப்பது, அலை ஓய்ந்து விட்ட பின்னர்க் கடலில் நீராடுவோம் என்று நினைப்பது போன்றது. (60) வரைபுரை வேழத்த வன்பகையென் றஞ்சிப் புரையுடை மன்னருள் புக்காங் கவையுள் நிரையுரைத்துப் போகாதொன் றாற்றத் துணிக திரையவித் தாயார் கடல். - பழமொழி : 318. 336. தான் வீரம் காட்டாமல் தன் முன்னோரால் காட்டப் பெற்ற வீரத்துள் மறைந்து பெருமையுடன் வாழக் கருதும் வீரன் தன் மகன் தன் தீய நடத்தையால் பிறந்தவன் என்பது வெளிப் படாது இருப்பதற்காகக் கணவனுடன் கூடி வாழும் மனைவியைப் போன்றவன் ஆவான். (61) அமர்விலங்கி ஆற்ற அறியவும் பட்டார் எமர் மேலை இன்னரால் யார்க்குரைத்தும் என்று தமர்மறையால் கூழுண்டு சேறல் அதுவே மகன்மறையாத் தாய் வாழு மாறு. - பழமொழி : 322. 337. பகைவருக்கு முன்னர்ச் சென்று போரிடாமல் அரணுக்குள் இருந்து கொண்டு படைவீரர் வீர உரை (வஞ்சினம்) பகர்வது, பகையாகிய பயிர் வளர்வதற்குப் பாத்தி கட்டி நீர் விட்டது போன்றதே (62) தூக்கி அவர் வெலினும் தாம்வெலினும் வெஞ்சமத்துள் தாக்கி எதிர்ப்படுவர் தக்கவர் அஃதன்றிக் காப்பி னகத்திருந்து காய்வார் மிகவுரைத்தல் யாப்பினுள் அட்டிய நீர். - பழமொழி : 311. 338. தம்மை அழிக்க வருமுன்னரே குறிப்பறிந்து பகைவரை அழித்து விடுதல் வீரர்கள் கடமை. பாம்பு கடித்த பின் அதன் பல்லைப் பிடுங்கினால் தான் என்ன? பிடுங்காமல் விட்டு வைத்தால்தான் என்ன? (63) முன்னலிந்து ஆற்ற முரண்கொண் டெழுந்தோரைப் பின்ளலிது மென்றிருத்தல் பேதைமையே - பின்சென்று காம்பன்ன தோளி கடிதிற் கடித்தோடும் பாம்பின்பல் கொள்வாரோ இல். - பழமொழி : 287. 339. உணர்ச்சிமிகுந்து போரிடுதற்காக நிற்கும் இரண்டு பேர் களின் இடையே புகுந்து அமைதிப் படுத்த எடுத்துக் கொள்ளும் முயற்சி, கோவ மிக்க காளையின் கொம்புக் கயிற்றைத் திருகிச் சரிப்படுத்த நினைப்பது போன்றது. (64) ஒருவன் உணராது உடன்று எழுந்த போருள் இருவரிடை நட்பான் புக்கார் - பெரிய வெறுப்பினால் போர்த்துச் செறுப்பின் தலையுள் குறுக்கண்ணி யாகி விடும். - பழமொழி : 186. 6. செல்வம் 340. மலைமேல் ஏறி நின்று கொண்டு அடிவாரத்தில் யானைகள் செய்யும் போரைக் காண்பது எளிது. அதுபோல் தன் கையில் நிரம்பப் பொருளைச் சேர்த்து வைத்துக் கொண்டு இருப்பவன் எடுத்த செயலில் வெற்றி காண்பது எளிது. (1) குன்றேறி யானைப்போர் கண்டற்றால், தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை. - திருக்குறள் : 758. 341. விதை போடப் பெறாமல் விளைவை அடைவது இல்லை; நாணம் இல்லாமல் பெண்தன்மை சிறப்படைவது இல்லை; ஊண் இல்லாமல் இனிய உயிர் வாழ்வு இல்லை; அவற்றைப் போல், கைப்பொருள் இல்லாமல் எடுத்துக் கொண்ட செயல் இனிது நிறைவேறுவது இல்லை. (2) நாணின்றி ஆகாது பெண்மை நயமிகு வணின்றி ஆகா துயிர் வாழ்க்கை - பேணுங்கால் கைத்தின்றி ஆகா கருமங்கள் காரிகையாய் வித்தின்றிச் சம்பிரதம் இல். - பழமொழி : 27. 342. புலியால் அது தாங்கியுள்ள புதருக்கு வலிமையும், புதரால் புலிக்கு வலிமையும் உண்டு. அதுபோல் பொருளால் பொருள் உடையவருக்குக் காவலும் பொருள் உடையவரால் பொருளுக்குக் காவலும் ஏற்படும். (3) உடையதனைக் காப்பான் உடையான் அதுவே உடையானைக் காப்பதூஉ மாகும் - அடையின் புதற்குப் புலியும் வலியே புலிக்குப் புதலும் வலியாய் விடும் - பழமொழி : 200. 343. பொருளை மிகத் தேடிக் கொண்டவர்களுக்கு அவர்கள் தேடாமலே பணி செய்ய ஆட்கள் வந்து சேர்வர். கிணற்றை வெட்டி வைத்து விட்டுத் தவளையைத் தேடிப் போகின்றவர் உளரா? இல்லை அல்லவா? (4) அருமை யுடைய பொருளுடையார் தங்கண் கரும முடையாரை நாடார் - எருமைமேல் நாரை துயில்வதியும் ஊர குளம் தொட்டுத் தேரை வழிச்சென்றா ரில். - பழமொழி : 198. 344. நோயால் வாட்டம் அடைந்து வலிமை எல்லாம் இழந்து கிடந்தாலும் புலியின் தலையை நாய் முகர்ந்து பார்ப்பது இல்லை. அதுபோல் உலகம் அறிந்த உயர்ந்த செல்வர்கள் வறுமையுற்றுக் கெட்டு விட்டாலும் பிறர் இகழ்ச்சிக்கு உரியவர் ஆகார். (5) நாடறியப் பட்ட பெருஞ்செல்வர் நல்கூர்ந்து வாடிய காலத்தும் வகுபவோ - வாடி வலித்துத் திரங்கிக் கிடந்தே விடினும் புலித்தலையை நாய்மோத்தல் இல். - பழமொழி : 204. 345. பகைவர்களின் பகையை வெட்டி அழிக்கும் வாள் போன்றது பொருளேயாகும். ஆதலால் வெற்றி மிக்க வாழ்வு உடையவனாக இருக்க விரும்புபவன் பொருளைத் தேடிக் கொள்ள வேண்டும். (6) செய்க பொருளை; செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில். - திருக்குறள் : 759. 346. நத்தை பின்வர இருக்கும் நெடுநாட்களுக்கு உதவுமாறு நீரைச் சேர்த்து வைத்துக் கொள்ளும். அது போல் அனைவரும் தம் பிற்கால நன்மையை நோக்கிப் பொருளைச் சேர்த்துப் பாதுகாத்துக் கொள்ளுதல் வேண்டும். (6) தந்தம் பொருளும் தமர்கண் வளமையும் முந்துற நாடிப் புறந்தரல் ஓம்புக அந்தண் அருவி மலைநாடிச் சேணோக்கி நந்துரீர் கொண்டதே போன்று. - பழமொழி : 205. 347. விண்மீன்கள் பல ஒன்று சேர்ந்து ஒளிவிட்டால் இருள் நீங்கி ஒளி பெருகும். மழைத்துளிகள் பல ஒன்று சேர்ந்து பெருகினால் பெருவெள்ள மாகும். அவற்றைப் போல், குறைந்த அளவுடைய வருவாய் எனினும் நாள் தோறும் வந்து கொண்டே இருக்குமானால் பெரிய வருவாய் ஆகிவிடும். (7) வருவாய் சிறிதெனினும் வைகலும் ஈண்டின் பெருவாய்த்தாய் நிற்கும் பெரிதும் - ஒருவா றொளிமண்டி நின்றால் உலகம் விளங்கும் துளியீண்டில் வெள்ளம் தரும். - பழமொழி : 201. 348. வெற்றிலையும் பாக்கும் மட்டும் சேர்த்து மென்றால் வாய் சிவக்காது. சுண்ணாம்பையும் சேர்த்துக் கொண்டால் தான் வாய் சிவப்பாவதுடன், சுவையும் உண்டாகும். அவ்வாறே கல்வியும் பண்பாடும் ஒருவனிடம் அமைந்திருந்தாலும் செல்வம் சேர்ந்திராத போது அத்துணைச் சிறப்பு இல்லை. (9) மெல்லிலை காயோ டுறுமெனினும் வெண்சுண்ணம் இல்லாயில் தோன்றாது செம்மை இறப்பவே கல்வி குணரோ டுறினும் கவினாதே செல்வமில் லாயிற் சிறந்து. - இன்னிசை இருநூறு : 133. 349. நெய் வைக்கப்பெற்றுள்ள கலத்தை நன்றாக மூடி வைத்திருந் தாலும், அதன் புறத்தே எறும்புகள் நிரம்பச் சுற்றித் திரியும். அவ்வாறே, கொடாக் கயவராக இருப்பினும் செல்வம் உடையவரை இரவலர் தேடித் திரிவர். (10) ஆகாது எனினும் அகத்து நெய் உண்டாகின், போகாது எறும்பு புறம் சுற்றும்; - யாதும் கொடாஅர் எனினும் உடையாரைப் பற்றி விடாஅர் உலகத் தவர். - நாலடியார் : 337. 350. வலிய கல்லை மெல்லிய கையினால் தோண்டி எடுக்க இயலாது. அதுபோல் கல்வியும் செல்வமும் சேர்ந்து வாய்க்கப் பெற்றவர்களை அவற்றை இல்லாதவர் கெடுப்பது என்பது இயலாது. (11) மிக்குடையர் ஆகி மிகமதிக்கப் பட்டாரை ஒற்கப் படமுயறும் என்றல் இழுக்காகும் நற்கு எளிது ஆகி விடினும் நளிர்வரைமேல் கற்கிள்ளிக் கையுய்ந்தார் இல். - பழமொழி : 48. 351. இளம்பாட்டு ஈரமாக இருக்கும் பொழுது, உழும் கலப்பை நிலத்தின் உள்ளே பதிந்து செல்லாமல் மேலேயே எழும்பிக் கொண்டு வரும். அதுபோல் நயமிக்க சொற்களாக இருந்தால் கூட ஏழைகள் சொல்வது பிறர் செவிகளில் நுழைவது இல்லை. (12) 352. உயர்ந்த இனத்து மாட்டின் கன்று மெலிந்து சிறிதாக இருந்தாலும் ஏறிய விலைக்கு விற்கப் பெறும். அதுபோல் செல்வம் நிரம்ப உடையவர் கல்வி அறிவில்லாதவராக இருந்தாலும் அவர் சொல்லைப் பலரும் விரும்பி ஏற்றுக் கொள்வர். (13) நல்ஆவின் கன்று ஆயின் நாகும் விலை பெறூஉம்; கல்லாரே ஆயினும் செல்வர்வாய்ச் சொல் செல்லும் ; புல்ஈரப் போழ்தின் உழவே போல் மீது ஆடிச் செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல். - நாலடியார் : 115. 353. கடைத் தெருவில் கிடக்கும் கழி பொருள்களைத் தின்று திரியும் கன்றும் ஒருநாளில் உயர்ந்த காளையாகி விடும். அது போல் மிக வறியவராக இருப்பவரும் ஒருநாளில் பெருஞ் செல்வராக மாறிவிடக்கூடும். ஆதலால் ஒருவர் வறுமையைக் கண்டு இகழாதிருத்தல் வேண்டும். (14) உள்ளுரவரால் உணர்ந்தாம் முதலெனினும் எள்ளாமை வேண்டும் இலங்கிழாய் - தள்ளா தழுங்கல் முதுபதி அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு. - பழமொழி: 202. 354. புதிதாகக் கடைந்து எடுக்கப்பட்ட மோரைப் பார்க்கி லும் பழைய நெய் தரக் குறைவு உடையது ஆகாது. அதுபோல் சிறியவர் பெற்ற செல்வத்தினும் பெரியவர் கொண்ட வறுமை குறைவு உடையது ஆகாது.(15) சிறியவர் எய்திய செல்வத்தின் நாணப் பெரியவர் நல்குரவு நன்றே - தெரியின் மதுமயங்கு பூங்கோதை மாணிழாய் மோரின் முதுநெய்தீது ஆகலோ இல். - பழமொழி : 9. 355. எத்துணை நாட்கள் நின்றாலும் பூக்க வேண்டிய பருவத்திலேயே வேங்கை மரம் பூக்கும். அதுபோல் எவ்வளவு காலம் முயன்றாலும் சேரவேண்டிய காலத்திலேதான் செல்வம் சேரும். (16) பன்னாளும் நின்ற விடத்தும் கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால் - மன்னர் உவப்ப வழிபட் டொழுகினும் செல்வம் தொகற்பால போழ்தே தொகும். - பழமொழி : 233. 356. பனை மரத்தைப் பகலோடு இரவிலும் பாதுகாத்துக் கொண்டு வந்தாலும் அதன் பழம் கிடைப்பவர்க்கே கிடைக்கும். அதுபோல் செல்வமும் சேரவேண்டிய காலத்தில் சேரவேண்டி யவர்க்கே சேரும். (17) ஆஅய் வளர்ந்த அணிநெடும் பெண்ணையை ஏஎய் இரவெல்லாம் காத்தாலும் - வாஅய்ப் படற்பாலார் கண்ணே படுமே பொறியும் தொடற்பாலார் கண்ணே தொடும். - பழமொழி : 231. 357. நற்குண நற்செயல் உடையவனிடம் செல்வம் சேர்ந்து இருப்பது, ஊர் நடுவே பயன் மிக்க மரம் பழுத்து நிற்பது போல் பலருக்கும் பயன்படும். (18) பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால், செல்வம் நயனுடை யான்கண் படின். - திருக்குறள் : 216. 358. பெருந்தன்மை யுடையவனிடம் செல்வம் நிறைந்து இருப்பது நோயாளர்க்கு மருந்து மரம் பயன்படுவது போல் வறுமையுற்றார்க்கெல்லாம் பயன்பட்டு நலம் பயக்கும். (19) மருந்தாகித் தப்பா மரத்தற்றால், செல்வம் பெருந்தகை யான்கண் படின். - திருக்குறள் : 217. 359. உலகோரால் விரும்பப்படும் உயர்ந்த அறிவாளியினிடம் செல்வம் சேர்ந்திருப்பது ஊருணி நீரால் நிரம்பி உயிர் வகைளுக்கெல்லாம் பயன்படுவது போல் பயன்படும். (20) ஊருணி நீர்நிறைந் தற்றே ; உலகவாம் பேரறிவாளன் திரு. - திருக்குறள் : 215. 360. உயர்ந்த பெருமக்களால் அருளப்பெற்ற நூல் ஆராயுந் தோறும் புதுப்புதுப் பொருள் தந்து விரிவாகி இன்பம் பயக்கும். அதுபோல் நல்லவர் கொண்டுள்ள செல்வமும் நாளும் பெருகி வளர்ந்து பிறர்க்கு நன்மை பயக்கும். (21) உள்ளத்து உணர்வு உடையான் ஓதிய நூல் அற்றால் வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; - தெள்ளிய ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்து அரோ நாண் உடையாள் பெற்ற நலம். - நாலடியார் : 386. 361. நன்மக்கள் தங்களிடம் செல்வம் இல்லாமையால் நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமல் இருப்பது, மழை பொழியாமை யால் நாடு வறட்சி அடைவதற்கு இணையான தாகும். (22) சீருடைச் செல்வர் சிறுதுனி, மாரி வறங்கூர்ந் தனைய துடைத்து. - திருக்குறள் : 1010. 362. நரி நக்கிக் குடித்தலால் பெரிய கடல் நீர் குறைந்து போகாது. அதுபோல் ஏவல் செய்பவர் சிறிது சிறிது சுரண்டுவதால் பெருஞ்செல்வர்களது பொருள் குறைந்து போகாது. (23) களமர் பலரானும் கள்ளம் படினும் வளமிக்கார் செல்வம் வருந்தா - விளைநெல் அரிநீர் அணை திறக்கும் ஊர அறுமோ நரிநக்கிற்று என்று கடல். - பழமொழி : 203. 363. கதிரோன் தன் ஒளியினால் உலகத்திற்கு ஒளியூட்டி வாழச் செய்யும். அதுபோல் செல்வரும் தம் பொருளால் ஏழைமக்கள் இன்பமாக வாழ்வதற்கு வகை செய்ய வேண்டும். (24) சுடரவன் விளங்கிற் பூமி சோதியாம் விளங்கி லானேல் புடவியும் இருளாம் அன்ன வாறுபோல் திருவோர் செல்லு நடவையின் தாழ்ந்தோர் மேவி நடத்தலால் வரைமே லேற்றும் அடர்சுடர் விளக்கிற் செல்வர் அறத்தராய்ச் சிறத்தல் நன்றே. - நீதிநூல்; 13:12. 364. தொழில் செய்பவர்கள் கொண்டு விற்கும் வணிகரைப் போன்றவர்கள். அவர்கள் தம் உழைப்பைக் கொடுத்து அதற்கு மாற்றாகக் கூலி பெறுகின்றனர். ஆதலால் அவர்கள் பாராட்டுதற்குரியரே அன்றிக் குறைவு உடையவர் ஆகார். (25) என்று மெய் வருந்த வேலை இயற்றுவோர்க் குயர்ந்தோர் அற்பப் பொன்றலை ஈவர் செட்டுப் புரிகின்ற வணிக ரென்ன ஒன்றுகொண் டொன்றை யிவோர் உழையரில் தாமு யர்ந்தோர் என்றுகொள் எண்ணம் திண்ணம் என்னவெவ் வண்ணம் அம்மா . - நீதி நூல் 13 : 9. 365. யானை உண்ணும் கவளத்தில் ஒரு சிறு பகுதி கிடைத்தால் கூட அது பல்லாயிரம் எறும்புகட்கு உணவாகும். அதுபோல் செல்வர்கள் வீணாகச் செலவிடும் பணத்தில் ஒரு பகுதியைக் கொண்டு கூட ஏழைகள் பலர் நன்றாக வாழமுடியும். (26) வாங்கும் கவளத் தொருசிறிது வாய்தப்பில் தூங்கும் களிறோ துயருறா - ஆங்கதுகொண் நீரும் எறும்பிங் கொருகோடி உய்யுமால் ஆரும் கிளையோ டயின்று. - நீதிநெறி விளக்கம் : 37. 366. கடலில் நீர் பெருகிக் கிடப்பினும் அதனை அள்ளி உதவும் மேகத் திற்கே புகழ் உண்டு. அதுபோல் செல்வம் ஒருவருக்கு உரியதாக இருப்பினும் அதனை எடுத்துப் பிறருக்கு உதவி செய்பவர்களுக்கே புகழ் உண்டு. (27) பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு பிறர்க்குதவி யாக்குபவர் பேறாம் - பிறர்க்குதவி செய்யாக் கருங்கடல் நீர் சென்று புயல்முகந்து பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு. - நன்னெறி : 4. 367. பயன்படாமல் வைத்திருப்பவர்களது பெருஞ்செல்வம் கடல் நீர் போன்றது. பலருக்கும் பயன்படும் குறைந்த அளவுச் செல்வம் கிணற்று ஊற்றுப் போன்றது. (28) உவர்க்கடல் அன்ன சொல்வரும் உளரே கிணற்றூற் றன்ன நீயுமா ருளையே செல்வர்தாம் பெருந்திரு வுறுக பல்பகல் நீவாழியரோ நெடிதே ஈயாச் சிறுவிலைக் காலத் தானும் உறுபொருள் தந்தெம். - பெருந்தொகை : 273 368. மணியைக் கொண்டிருப்பதால், பாம்புக்குப் பயன் எதுவும் இல்லை. அதுபோல் கீழ்மக்களிடம் பெருஞ் செல்வம் இருப்பதால் அவருக்குப் பயன் இல்லை ; பிறருக்கும் பயன் இல்லை. (29) திருவுற்ற போதும் தாம் உண்ணலும் கீழ் செய்யா இருமணிபாம் பெய்தினும் என். - இன்னிசை இருநூறு : 197. 369. வஞ்சத்தால் பிறர் பொருளைத் திரட்டிப் பாதுகாப்பது, சுடப்படாத மண்பாண்டத்தில் நீர்விட்டு வைத்தது போல் தன் பொருளையும் கெடுத்துத் தானும் கெடவே வழியாகும். (30). சலத்தால் பொருள்செய் தேமார்த்தல், பசுமண் கலத்துள் நீர் பெய்திரீதி யற்று. - திருக்குறள் : 660. 370. எளிதில் பிறர் காண வாய்ப்புத் தராதவனும், இனிமை யற்ற முகம் உடையவனும் ஆகிய ஒருவனிடம் செல்வம் இருப்பது, பேயினிடம் பெருஞ்செல்வம் இருப்பது போன்றதாம். (31) அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் போய்கண் டன்ன துடைத்து. - திருக்குறள் : 565. 371. ஒருவன் தான் பெற்ற பொருளைப் பிறர் நலம் கருதிச் செலவிடல் வேண்டும். அவ்வாறு செய்யாதவன் பொருள் அளற்று நிலத்தில் போடப் பெற்ற மணி இல்லாப்பதர் வித்துப் போல் பயனற்று ஒழியும்.(32) பெருந்துயர மாற்றிப்பொன் ஈட்டினும் பின்னை அருந்தவர்ப் பேணான் அறஞ்செய்யா னாயின் மருந்ததால் பெற்றும் வயிற்றுட்பெய் யாது பரிந்தளற்றுள் பெய்த பதர். - இன்னிசை இருநூறு : 140. 372. தனக்காகவும் பிறருக்காகவும் செலவிடாதவனது பொருள் போர்க்களம் போய் அறியாத பேடியின் கையில் உள்ள வாள் போன்றது. அன்றியும் ஆண் என்று எண்ணி அலியை நெருங்கிய அழகு மிக்க பெண்ணைப் போன்றதும் ஆகும். (33) பொலிவளம் தங்கிய புவியில் தானுண்டும் . பலிபிறர்க் கிட்டுமே பயன்துவ் வான்பொருள் வலியிலாப் பேடிகை வாள்கொல் ஆணென அலியினை மேவிய அரம்பை யேகொலோ. - நீதிநூல் : 23 : 3. 373. பிறருக்குப் பயன்படாமையால் எவராலும் விரும்பப் படாதவன் செல்வம், ஊரின் நடுவே பழுத்து நிற்கும் கொடிய நச்சுமரம் போன்றது. (34) நச்சப் படாதவன் செல்வம், நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று. - திருக்குறள் : 1008. 374. தன்னை வளர்த்துக் காத்தவர்க்குப் பயன்படாமல் நெடுங் காலம் சென்று பிறருக்குப் பயன்படும் பனைமரம். அது போல் அறிவிலார் செல்வம் வருந்தி வந்தவர்க்கும், சுற்றத்தவர்க்கும், தனக்கும் பயன்படாமல் அயலார்க்கே பயன்படும். (35) விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத் தவர்க்கும் வருந்தும் பசிகளையார் வம்பர்க் குதவல் இரும்பணைவில் வென்ற புருவத்தாய் ஆற்றக் கரும்பனை யன்ன துடைத்து. - பழமொழி : 220. 375. தேனீ அரும்பினைத் தேடிச் செல்லாமல் மலர்ந்த பூவையே தேடி அடையும். அதுபோல் இன்சொல்லும் முக மலர்ச்சியும் உயர்ந்த உள்ளமும் இல்லாத செல்வர்களை இரவலர் தேடிச் செல்லார்; அத்தன்மைகளை உடையவர்களையே விரும்பி அடைவார். (36) கல்ஓங்கு உயர்வரைமேல் காந்தள் மலராக்கால் செல்லாவாம் செம்பொறி வண்டுஇனம் - கொல்லைக் கலாஅல் கிளிகடியும் கானக நாட்! இலாஅர்க்கு இல்லை தமர். - நாலடியார் : 283. 376. செல்வத்தை நல்வழிகளுக்குச் செலவிடாமல் சேர்த்து வைப்பவன் சுமைதாங்கிக் கல்லையும், பொதி சுமக்கும் கழுதையையும் போன்றவன். (37) நித்தியம் அனுபவி யாது நீள்நிதி பத்திரம் செய்குவோன் பாரம் தாங்கவூர் மத்தியில் புதைத்தகல் மாசில் தூசர்க்கு வத்திரம் சுமக்கும் வா லேய ஓப்பனே. - நீதிநூல் : 23 : 4. 377. பாத்திரத்தில் அமைந்துள்ள குற்றத்தினால் அதில் வைக்கப் பெற்றாலும் கெட்டுப் போகும். அது போல் பண்பிலானிடம் உள்ள செல்வமும் அவன் தன்மையால் கெட்டதாகவே அமையும். (38) பண்பிலான் பெற்ற பெருஞ் செல்வம், நன்பால் கலந்தீமை யால்திரிந் தற்று. - திருக்குறள் : 1000. 378. பொருளாசைக்காரன் பொருளை நல்வழிக்குச் செலவிடாமல் மண்ணைத் தோண்டிப் புதைத்து வைக்கிறான். அவன் தோண்டும்போது மண்ணைத் தன்பக்கம் இழுக்கும் அச்செயல், ''பொன் உலகுக்கு, மண் எனக்கு" என்று சொல்வது போல் அமைந்துள்ளது. (39) பொன்னினைப் புதைத்திடப் புவியைத் தோண்டுவோன் தன்னிடந் தொட்டமண் தனைஇ ழுத்தலால் உன்னுடை யது; நிதி உலகமே இம்மண் என்னுடை யதுவென இயம்பல் ஒக்குமே. - நீதிநூல் 23 : 1. 379. தேனீ நெடுந்தொலைவுக்குச் சென்றும் தேன் எடுத்துக் கொண்டு வந்து கூட்டில் சேர்க்கின்றது. ஆயினும் அதனை ஒரு நாளில் இழந்து போகின்றது. அவ்வாறே அரும்பாடுபட்டுச் செல்வம் சேர்த்த சிலர் நன்றாக உண்ணாமலும், உடுக்காமலும் வைத்திருந்து செல்வத்தை முழுமையாக இழந்துவிடுகின்றனர். (40) உடாஅதும் உண்ணாதும் தம்முடம்பு செற்றும் கெடா அத நல்லறமும் செய்யார் - கொடாஅது வைத்துஈட்டி னார்இழப்பர்; வான்றோய் மலைநாட்! உய்த்தீ ட்டும் தேனீக் கரி. - நாலடியார் : 10. 380. கையில் உள்ள பனம்பழத்தை உண்ணாமல் புதைத்து நட்டு மரமாக்கி அதன் பழத்தை உண்ணலாம் என நினையார். அதுபோல் பின்னர் வர இருக்கும் பெரிய வருவாயை எண்ணி உடனே கிடைக்கும் சிறிய வருவாயை இழக்காது இருத்தல் வேண்டும். (41) எனைப்பலவே யாயினும் சேய்த்தாற் பெறலின் தினைத்துணையே யானும் அணிக்கோடல் நன்றே இனக்கலை தேன்கிழக்கு மேகல்சூழ் வெற்ப பனைப்பதித்து உண்ணார் பழம். - பழமொழி : 187. 381. தன் முன்னால் இருக்கும் பொருளைக் காத்துக் கொள்ளாமல் இழந்து பின்னர்ப் பெரும் பொருள் தேடிக்காக்க நினைப்பது, "வெண்ணெயைத் தலைமேல் வைத்து வெயிலில் அஃது உருகிக் கண்ணை மறைத்த பின் மயிலைப் பிடித்துக் கொள்வேன்" என்று நினைப்பது போன்றது. (42) முன்னை யுடையது காவா திகந்திருந்து பின்னையஃ தாராய்ந்து கொள்குறுதல் - இன்னியல் மைத்தடங்கண் மாதராய் அஃதாதல் வெண்ணெய்மேல் வைத்து மயில் கொள்ளு மாறு. - பழமொழி : 210. 382. மாமரம் பழுத்தலால் தன் மேல் கல் எறியையும், கழியின் தாக்குதலையும் தானே தேடிக் கொள்வது போல், புல்லர்களும் தாம் சேர்த்த செல்வத்தால் பலவகைத் துன்பங்களைத் தமக்குத் தாமே உண்டாக்கிக் கொள்வர். (43) தொன்மையின் மாண்டதுணிவொன்றும் இல்லாதார் நன்மையின் மாண்ட பொருள் பெறுதல் - இன்னெளலிநீர் கல்மேல் இலங்கு மலைநாட மாக்காய்த்துத் தன்மேல் குணில்கொள்ளு மாறு. - பழமொழி : 214. 383. மிகுந்த அழகு நலங்கனிந்த பெண்ணொருத்தி தக்க ஒருவனை மணந்து இன்புற்று வாழாமல் வறிதே நாளைக் கழித்து இறப்பது போன்றது, வாடிவந்த வறியவர்க்கு உதவாமல் வைத்துச் செல்லும் ஒருவனுடைய செல்வம். (44) அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம், மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று. - திருக்குறள் : 1007. 384. போக்கிடமற்ற நீரும் நெருப்பும் தாம் இருக்கும் வீட்டை அழிக்கும். அவ்வாறே நல்வழியில் செலவிடாதவன் செல்வமும் அவன் குடியை அழிக்கும். (45) செல்லவோர் போக்கின்றிச் செறிந்த நீர்கனல் இல்லமே அழித்தெழுந் தேகல் போற்செலவு இல்லையென்றடைத்த பொன் னெழுந்து தன்னைக் கொள் புல்லரைக் குடிகெடுத் தகன்று போகுமே. - நீதிநூல் 23 : 5. 385. வேந்தனொடு சிவிகையில் ஏறி ஆறு சுவையுடைய உணவை உட்கொண்டு வாழ்ந்தால்கூட நாய் மலத்தினை நினைக்காமல் இருப்பது இல்லை. அதுபோல் கீழோனுக்கு நிலம் ஆளும் செல்வம் கிடைத்தாலும் இரவல் வாங்குவதை விட மாட்டான். (46) வேந்தொடு பொற்சிவிகை மேவி அறுசுவையூண் மாந்தினும் பவ்வீ மறக்குமோ நாய்கீழும் வேந்தன் எனத்திரு மேவினும் வெஃகுமே போந்துபரி தானப் பொருள். - இன்னிசை இருநூறு : 183. 386. "மாங்கனியைக் கவ்விக்கொண்டு மரத்திலே இருக்கும் மந்தி நீரில் தெரிந்த தன் நிழலை மற்றொரு மந்தியாக எண்ணி அதன் வாயில் உள்ள பழத்தையும் பறிக்கும் ஆசையால் தாவி உயிர் விட்டது போல் பொருளாசைக் காரர்களும் அழிவர். (47) மாங்கனி வாயில் கவ்வி மரத்திடை இருக்கும் மந்தி பாங்கர்சீர் நிழலை வேறோர் பழமுணும் குரங்கென் றெண்ணித் தாங்கரும் அவாவில் தாவிச் சலத்திடை இறந்த தொப்ப நீங்களும் பொறாமை யுள்ளோர் நிலத்திடைக் கெடுவர் நெஞ்சே - நீதிநூல் 26 : 1. 387. தசையற்ற வெள்ளெலும்புகளையே பெற்று வந்த நாய்க்கு ஒரு துண்டு தசை கிடைத்தால் அதன் மகிழ்ச்சிக்கு எல்லை இராது. அதுபோல் உள்ள பொருளுடன் ஓர் 'இம்மி' யளவு மிகுந்தாலும் கீழ்மக்கள் வெள்ளப் பெருக்குப் போல் செருக்கடைவர். (48) வெள்ளென்பு பெற்ற நாய் துண்ட விடக்குறின் கொள்ளும் நனிகளி கோடியும் வேண்டுமோ உள்ளதுடன் இம்மி மிகினும் உறுபகீழ் வெள்ளத் தனைய வியப்பு. - இன்னிசை இருநூறு : 182. 388. அழிவு காலம் வரும்போது ஈசலுக்கு இறகு முளைக்கும்; அணையும் பொழுதுக்குச் சிறிது முன்னர் விளக்கு மிகச் சுடர் விடும். அவ்வாறே செல்வத்திற்கு அழிவு வரும்போது செருக்குதல் உண்டாகும். (49) நாசமாங் காலமே நண்ணு முன் இறகு ஈசலுக் கெய்தலும் இரியு முன்னமே தேசத்து மிகுத்தொளிர் தீபம் போலவும் நீசர்தம் செருக்கினான் நிதியிழப்பரே. - நீதிநூல் 29: 6. 389. தீய வழிகளில் பொருள் சேர்ப்பவன் அச் செல்வத்தாலே அழிவான். அவன் செல்வத்திற்கு ஆசைப்பட்டு அழிவது தூண்டில் புழுவுக்கு ஆசைப்பட்டு மீன் இறப்பது போன்றதாகும். (50) நல்வழியில் தேடான் நகு செல்வம் தூண்டிலுறு புன்மீனின் போக்கென்னப் போம். - கைவிளக்கு 4 : 5. 390. நாயின் மடியில் உள்ள பால் நாய்க்குட்டிக்கே பயன்படும். அது போல் பாவியின் பணமும் அவனைப் போன்ற பாவிகளுக்கே பயன்படும். (51) பாவிதனம் தண்டிப்போர் பாலாகும் அல்லதுஅருள் மேவுசிவன் அன்பர்பால் மேவாதே - ஓவியமே! நாயின் பால் அத்தனையும் நாய்தனக்காம் அன்றியே தூயவருக்கு ஆகுமோ? சொல். - நீதி வெண்பா : 63. 391. பொன்னும் மணியும் அழுத்திச் செய்யப் பெற்றாலும் செருப்பை எவரும் தம் தலைமேல் தாங்கார். அதுபோல் எத்தகைய பெருஞ் செல்வராக இருந்தாலும் கீழ் மக்கள் மேன்மக்கள் ஆகார். (52) மைதீர் பசும்பொன் மேல் மாண்ட மணியழுத்திச் செய்த தெனினும் செருப்புத்தன் காற்கேயாம் எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச் செய்தொழிலால் காணப் படும். - நாலடியார் : 347. 392. நல்ல புற்களைக் கொண்டுவந்து நாள் தவறாமல் ஊட்டி வளர்த் தாலும் சண்டி எருது சுறுசுறுப்படைந்து வண்டி யிழுக்கச் செல்லாது. அது போல், கீழ்மக்களுக்கு எவ்வளவு செல்வம் சேர்ந்தாலும் தமக்குரிய இழி குணத்தை விட மாட்டார். (53) கொய்புல் கொடுத்துக் குறைத்து என்றும் தீற்றினும் வையம்பூண் கல்லா சிறுகுண்டை ; - ஐயா கேள்; எய்திய செல்வந்தர் ஆயினும் கீழ்களைச் செய்தொழிலால் காணப்படும். - நாலடியார் : 350. 393. மிகக் கிழமான எருது தின்ற புல் எத்தகைய பயனும் அற்று ஒழியும். அதுபோல் நல்ல குடியில் பிறவாதவரிடம் பாதுகாப்பாக வைக்கப் பெற்ற பொருளும் பயன் இன்றி ஒழியும். (54) தொடி முன்கை நல்லாய் அத் தொக்க பொருளைக் குடிமகன் அல்லான்கை வைத்தல் - கடி நெய்தல் வேரி கமழும் விரிதிரைத் தண்சேர்ப்ப மூரியைத் தீற்றிய புல். - பழமொழி : 209. 394. வருந்தி உழைத்துச் சேர்த்து வைத்த வளர் பொருளைக் காக்குமாறு கீழ்மக்களிடம் ஒப்படைப்பது சுவை மிகச் சமைக்கப்பட்ட சோற்றுக்குக் காக்கையைக் காவல் வைப்பது போன்றது. (55) ஊக்கி உழந்தொருவர் ஈட்டிய ஒண்பொருளை நோக்குமின் என்றிகழ்ந்து நொவ்வியார் கைவிடுதல் போக்கில் நீர் தூஉம் பொருதழித் தண்சேர்ப்ப காக்கையைக் காப்பிட்ட சோறு. - பழமொழி : 208. 395. தன்னுடைய நீண்ட வேலைத் தொலைத்தவன் குடத்தின் உள்ளே யும் தேடிப்பார்ப்பான். அதுபோல் பொருளை இழந்த ஒருவன் எவ்வளவு அறிவுடையவனாக இருந்தாலும் அவன் முன்னர் நிற்பவன் தெய்வத் தன்மை வாய்ந்தவனாக இருந்தால் கூட அவன் மேலும் ஐயப்படுவான். (56) யாவரே யானும் இழந்த பொருளுடையார் தேவரே யாயினும் தீங்கு ஓர்ப்பார் - பாவை படத்தோன்று நல்லாய் நெடுவேல் கொடுத்தான் குடத்துளு நாடி விடும். - பழமொழி : 193. 396. உலைநீரில் போடப்பட்ட அரிசி நன்றாகக் கொதிக்கும். அதுபோல் வறுமைத் துயருக்கு ஆட்பட்டவர்களும் மிகமிகக் கொதிப்பர். (57) வடுஇலா வையத்து மன்னிய மூன்றில் நடுவணது எய்த இருதலையும் எய்தும்; நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து. அடுவது போலும் துயர். - நாலடியார் : 114. 397. குருவியின் தொடையை அறுக்க அதன் குடலும் சரிந்துவிடும். அதுபோல் எளியவர் மனைக்குச் செல்வர் விருந்தினராகச் சென்று தங்கினார் என்றால் மிக வறுமையுற்றுக் கெட்டுப்போவர். (58) நல்கூர்ந் தவர்க்கு நனிபெரிய ராயினார் செல்விருந்தாகிச் செலவேண்டா – ஒல்வ திறந்தவர் செய்யும் வருத்தம் குருவி குறங்கறுப்பச் சோருங் குடர். - பழமொழி : 337. 398. கூத்தாட்டம் நடக்கும் இடத்திற்கு மக்கள் சிறுகச் சிறுகச் சென்று சேர்வது போல் செல்வமும் சிறிது சிறிதாக வளரும். கூத்து முடிந்தவுடன் கூட்டம் ஒருசேர அகல்வது போலச் செல்வமும் போகுங்காலத்தில் முழுமை யாகப் போய் விடும். (59) கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்; போக்கும் அதுவிளிந் தற்று. - திருக்குறள் : 332. 399. பெருக்கெடுத்து வரும் ஆறு உண்டாக்கும் மேட்டையும் பள்ளத்தை யும் போல் செல்வம் மாறிமாறி வரும் தன்மையினது. (60) ஆறிடும் மேடும் மடுவும் போல் ஆம்செல்வம் மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும் தண்ணீரும் வாரும்; தருமமே சார்பாக உண்ணீரமை வீறும் உயர்ந்து. - நல்வழி : 32. 400. மேலும் கீழும் ஏறி இறங்கும் இராட்டின ஊஞ்சலைச் சுழற்றும் போது கீழே உள்ளோர் மேலேயும் மேலே உள்ளோர் கீழேயும் போவார். அவ்வாறே இன்று செல்வராக இருப்பவர் நாளை வறியராகவும், இன்று வறியராக இருப்பவர் நாளைச் செல்வராகவும் மாறுவர். ஆதலால் செல்வச் செருக்கு ஒழிதல் வேண்டும். (61) ஏலிராட் டினவூ சற்கண் ஏறியே சுற்றும் காலை மேலவர் கீழும் கீழோர் மேலுமாய்ச் சுழலல் போல ஞாலமீ தின்று யர்ந்தோர் நாளையே வறிய ராவர் சீல நெஞ்சினர்கீ ழோரைச் சினந்திக ழார்கள் மாதோ. - நீதிநூல் 13 : 4. 401. செல்வம் நிலையற்றது, கொற்றக் குடைக்கீழ் இருந்து யானை மேல் சென்ற செல்வரும் தளர்நடையில் தனியே ஓர் ஊருக்குப் போக வேண்டிய வறிய நிலைமை ஏற்படலாம். அத் தகையவர், அறச் சாலையில் கிடைக்கும் உணவுக்காகக் காத்துக் கிடக்கவும் நேரலாம்; அவ்வாறு காத்துக் கிடந்தவர் ஆள்வோருடன் கூடியிருக்கும் காலமும் வரலாம்; ஏழு நிலைகளை யுடைய மாடம் கழுதை மேயும் இடமாகவும், கழுதை மேய்ந்த பாழ்நிலம் வளமிக்க வயல் நிலமாகவும் மாறலாம். (62) குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந்து ஒரூர் நண்ணினும் நண்ணுவர். சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர் அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர். அறத்திடு பிச்சை கூவி இரப்போர் அரசோடு இருந்து அரசாளினும் ஆளுவர். குன்றத் தனைஇரு நிதியைப் படைத்தோர் அன்றைப் பகலே அழியினும் அழிவர். எழுநிலை மாடம் கால் சாய்ந்து உக்குக் கழுதை மேய்பாழ் ஆயினும் ஆகும். பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ் பொற்றொடி மகளிரும் மைந்தரும் கூடி நெற்பொலி நெடுநகர் ஆயினும் ஆகும். - வெற்றிவேற்கை : 50 - 55. 402. பிறருக்கு எந்த உதவியும் செய்யாதவர்களிடத்துச் செல்வம் சேர்ந்திருப்பது முன்வினைப் பயனால் ஆகும். இப்பொழுது எந்த உரமும் போடாதிருப்பினும் முன்னர்ப் போடப்பட்ட உரத்தால் போர் வைக்கும் அளவுக்கு விளையும் நிலம் உள்ளது அல்லவா! அது போன்றது அவர்கள் பெற்ற செல்வம். (63) வழங்கார் வலியிலார் வாய்ச்சொல்லும் பொல்லார் உழந்தொருவர்க் குற்றால் உதவலும் இல்லார் இழந்ததில் செல்வம் பெறுதலும் இன்னார் பழஞ்செய்போர் பின்று விடல். - பழமொழி : 221. 7. அறம் 403. அணிகலம் இல்லார்க்கு அணிகலம் ஆகவும், அழகு இல்லார்க்கு அழகு ஆகவும், நோயாளர்க்கு நன் மகிழ்ச்சி யாகவும், பிறவாய்ப்புகள் இல்லாதவர்கட்கு வாய்ப்பாகவும், துணிவில்லாதவர்க்குத் துணிவாகவும், உணர்வில்லாதவர்க்கு உணர்வாகவும் அமைந்துள்ள ஒன்று அறமேயாம். (1) அனியிலார்க் கணியாம் வாய்ந்த அழகிலார்க் கழகாம் நீண்ட பிணியினார்க் கெக்க ளிப்பாம் பேறிலார்க் கன்ன தாமுள் துணிவிலார்க் குணர்வெல் லாமாம் தப்பிலார்க் கொப்பில் துப்பாம் தணிவில்பாக் கியங்க ளெல்லாம் தருமமல் லதுவே றுண்டோ - நீதிநூல் 42 : 20. 404. அமுதுக்கு முன்னர் வேறு இனிமையான பொருள்கள் இல்லை : கதிரோனுக்கு முன்னர் வேறு ஒளிமிக்க சுடர்கள் இல்லை: முத்திக்கு முன்னர் வேறு உயரிய இன்பம் இல்லை; அவற்றைப் போல் அறத்திற்கு ஒப்பான செல்வம் எதுவும் இல்லை. (2) இன்னமு தத்தின் முன் வேறினிமையும் உளதோ பானு முன்னமோர் சுடரும் உண்டோ மோக்கத்திற் சுகம்வே றுண்டோ துன்னற மேநல்லோர்க்குத் துகளறு செல்வ மாகும் அன்னதை அன்றி வேறோர் ஆக்கமும் வேண்டும் கொல்லோ. - நீதி நூல் : 42 : 18. 405. வெள்ளை , சிவப்பு, கறுப்பு என எத்தனை நிறப் பசுக்களில் கறந்தாலும் அவற்றின் பாலின் நிறம் தூய வெண்மையாகவே இருக்கும். அதுபோல் அறத்தை எத்தனை வகைகளில் செய்தாலும் அதனால் ஆகும் பயன் ஒன்றேயாம். (3) ஆவேறு உருவின ஆயினும் ஆபயந்த பால்வேறு உருவின அல்லவாம்; - பால்போல் ஒருதன்மைத்து ஆகும் அறம்; நெறி ஆபோல் உருபு பலகொளல் ஈங்கு. - நாலடியார் : 118. 406. வீடு தோறும் சிறிது சிறிதாகப் போடப்பெற்றால் கூடத் துறவியின் உண்கலம் உணவால் நிரம்பிவிடும். அதுபோல் சிறிய அளவினது என்றால் கூடத் தொடர்ந்து நல்லறங்களைச் செய்து கொண்டு வந்தால் அது மிகுந்த அறம் ஆகிவிடும். (4) இறப்புச் சிறிதுஎன்னாது இல்என்னாது என்றும் அறப்பயன் யார்மாட்டும் செய்க; - முறைப்புதவின் ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல் பைய நிறைத்து விடும். - நாலடியார் : 99. 407. மிகச் சிறிய அளவான அறமே என்றாலும் தக்க பெரியவர்களுக்கு அதைச் செய்யும் பொழுது அது மிகப் பெரிய அறம் ஆகிவிடும். ஆலம் வித்து மிகச் சிறிதாக இருந்தாலும், யானை குதிரை, தேர், காலாள் ஆகிய நாற்படைகளும் தங்கும் அளவுக்கு விரிந்து நிழல் தரும் மரமாக வளர்ந்து விடுகின்றது அல்லவா! (5) உறக்கும் துணையது ஓர் ஆலம்வித்து ஈண்டி இறப்ப நிழல்பயந் தா அங்கு - அறப்பயனும் தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும். - நாலடியார் : 38. 408. சிறிய அயிரை மீனைத் தூண்டில் முள்ளில் குத்தி வைத்துப் பெரிய வரால் மீனைத் தூண்டில்காரர் பிடிப்பர். அதுபோல் எளிய அறங்களை இவ் வுலகில் செய்து உயர்ந்த மறுமை இன்பத்தை அறிவுடையோர் அடைவர். (6) சிறிய பொருள் கொடுத்துச் செய்த வினையால் பெரிய பொருள்கருது வாரே - விரிபூ விராஅம் புனலூர வேண்டயிரை விட்டு வராஆ அல் வாங்கு பவர். - பழமொழி : 372. 409. ஒருவர் தம்முடைய செல்வத்தால் இவ்வுலகில் நுகர்ச்சி இன்பமும், அறம் செய்தலால் மறுமை இன்பமும் அடைவது கரும்பினை மென்று சாற்றை அருந்தியதுடன், கரும்புச் சாற்றைக் காய்ச்சிப் பின்னாட்களுக்குப் பயன்படுமாறு பாகுக் கட்டியாக்கிக் கொண்டது போன்றதாகும். (7) மல்லல் பெருஞ்செல்வம் மாண்டவர் பெற்றக்கால் செல்வுழியும் ஏமாப்பச் செய்வதாம் - மெல்லியல் சென்றொசிந் தொல்கு நுசுப்பினாய் பைங்கரும்பு மென்றிருந்து பாகு செயல். - பழமொழி : 359. 410. ஒருவர் தம்முடைய செல்வத்தால் அறம் செய்து இம்மை இன்பத் தையும், மறுமை இன்பத்தையும் அடைவது ஓர் ஊருக்குப் போய்த் திரும்பி வரும் இரண்டு வழிகளிலும் நடை பெறுவதும், தாம் போய்க் கலந்து கொள்ள வேண்டிய இன்றி யமையாமை உடையதுமான இரண்டு திருமணங்களுக்கும் சென்று கலந்து கொள்ளும் வாய்ப்புப் போன்றது. (8) ஈனுலகத் தாயின் இசை பெறூஉம் அஃதிறந் தேனுலகத் தாயின் இனித்தூஉம் - தானொருவன் நாள்வாயும் நல்லறம் செய்வார் கிரண்டுலகும் வேள்வாய்க் கவட்டை நெறி. - பழமொழி : 360. 411. பெரிய குளத்தில் தேங்கிக் கிடக்கும் நீரை இறைத் தலால் குறைந்து விடாது. அதுபோல் பல்லாண்டுகளாகத் தேடி நிரம்பிக் கிடக்கும் செல்வம் அறம் செய்தலால் குறைந்துவிடாது. (9) பல்லாண்டு மீண்டிப் பழுதாய்க் கிடந்தது வல்லான் தெரிந்து வழங்குங்கால் - வல்லே வளநெடிது கொண்ட தறாஅ தறுமோ குளநெடிது கொண்டது நீர். - பழமொழி : 374. 412. நூல்களைக் கற்பது முதற்கண் அரிதாக இருப்பினும் முயன்று கற்கத் தொடங்கிய பின்னர் எளிதாம். அவ்வாறே நல்வினைகளைச் செய்வது முதற்கண் அரிதாக இருப்பினும் முயன்று செயல்படும் பொழுது எளிதாம். (10) சிற்பநூல் இலக்கண நூல் வைத்தியநூல் மரக்கலநூல் செருநூல் இன்னம் பற்பல நூல் உணர்வதினும் புண்ணிய நூல் அரிதாமோ பகரந் நூல்கள் கற்பதன்முன் அரிதெனினும் பின்னெளிதாம் அதுபோல் நற் கருமம் என்னும் அற்புத நூல் முயலுவோர்க் கெளிதாகும் அதையடைவாய் அறிவில் நெஞ்சே. - நீதிநூல் : 42 : 3. 413. திருமணத்திற்கு வேண்டிய உடையினை முன்னரே பருத்தி விதைத்துப் பஞ்செடுத்து, நூலாக்கி நெய்து கொள்ள வேண்டும். அதுபோல் இணையற்ற நல்வினையையும் உரிய காலத்தே செய்தல் வேண்டும். (11) எத்தொழிலும் முற்பழக்கம் இன்றியெய்தா தறமென்னும் இணையொன் றில்லா அத்தொழில்முற் பழக்கமின்றிச் சாங்காலத் தமையுமோ வருமன் றற்கு வத்திரம் வேண் டிற்பருத்தி விதைத்து முன்னம் நெய்யாமல் மணஞ்செய் காலத் தொத்ததுகில் வேண்டுமென எத்தனைபேர் முயன்றாலும் உறுமோ நெஞ்சே. - நீதிநூல் 42 : 2. 414. வெயிலில் காயவைக்கப்பட்டுள்ள பொருள்களைக் காப்பவரின் கண் இமைக்குமுன் பறவைகள் கொத்திக் கொண்டு போகிவிடும். அதுபோல், செல்வத்தைக் காப்பவர் கண்ணை மூடித் திறக்கு முன் கள்வர் கவர்ந்து போய்விடுவர். ஆதலால் அச் செல்வம் உள்ளபோதே அறவழிக்கு அதனைப் பயன்படுத்துதல் வேண்டும். (12) நோக்கி யிருந்தார் இமைக்கும் அளவின்கண் நோக்கப் படினும் உணங்கலைப் புட்கவரும் போற்றிப் புறந்தந் தகப்பட்ட ஒண்பொருட்கும் காப்பாரிற் பார்ப்பார் மிகும். - பழமொழி : 368. 415. நல்வழியில் தேடித் திரட்டிய செல்வத்தை அறவழிக்குப் பயன் படுத்தாமல் 'வாளா' வைத்து இருப்பது, சருக்கரை கலந்த இனிய பாலை வாயில் விட்டுக் குமட்டித் துப்புவது போன்றது. (13) தக்கமில் செய்கைப் பொருள் பெற்றால் அப்பொருள் தொக்க வகையும் முதலும் அதுவானால் மிக்க வகையால் அறம்செய் கென்வெகுடல் அக்காரம் பால்செருக்கு மாறு. - பழமொழி : 362. 416. மலை உருண்டு கொண்டு வரும்போது அதனைத் தடுத்து நிறுத்த வல்ல தடைக்கல் எதுவும் இல்லை. அது போல் செல்வம் புரளத் தொடங்கும் போதும் அதனைத் தடுத்து நிறுத்தும் தடைக்கல் இல்லை. ஆதலால் செல்வம் உள்ள போதே நல்லறங்களை நாளும் செய்து வருதல் வேண்டும். (14) இன்றியமையா இருமுது மக்களைப் பொன்றினமை கண்டும் பொருள் பொருளாக் கொள்வோ ஒன்றும் வகையான் அறஞ்செய்க ஊர்ந்துருளின் குன்று வழிபடுப்பதில். - பழமொழி : 39. 417. அறச்செயல்களை உடனே செய்யாமல் பின்னர்ப் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பது, நாயின் வடிவில் செய்யப்பட்ட சிலையை நாய் என்று நினைத்துப் பார்க்கும் போது கல்லும், கல் என்று நினைத்துப் பார்க்கும் போது நாயும் தோன்றாதவாறு போல் அறநினைவும் தோன்றாமல் ஒழிதற்கே. (15) மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல்வினையை ஆய்வின்றிச் செய்யாதார் பின்னை வழிநினைந்து நோய்காண் பொழுதின் அறம் செய்வார்க் காணாமை நாய்காணின் கற்காணா வாறு. - பழமொழி : 361. 418. "என் கடமைகள் அனைத்தையும் இனிது முடித்துக் கொண்ட பின்னரே பிறர்க்கு நலம் தரும் அறச் செயல்களைச் செய்வேன்'' என்பவன் ஒரு நாளும் அறம் செய்யமாட்டான். அலை ஓய்வது எப்பொழுது? கடலில் தலை முழுகுவது எப்பொழுது? (16) பெருங்கடல் ஆடிய சென்றார் ஒருங்குஉடன் ஓசை அவிந்தபின் ஆடுதும்' என்றற்றால் ‘இல்செய் குறைவினை நீக்கி அறவினை மற்று அறிவாம்’ என்று இருப்பார் மாண்பு. - நாலடியார் : 332. 419. இளமைப் பருவத்தில் அறம் செய்து கொள்ளாமல் முதுமைப் பருவத்தில் அறம் செய்ய நாட்டம் கொள்வது வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது அதனை அவிக்க ஆற்றினைத் தோண்ட முயல்வது போன்றதாம். (17) 420. உடல் நன்னிலையில் இருக்கும் பொழுது அறநாட்டம் கொள்ளாமல் விக்கிக் கக்கி நோயுற்ற பொழுதில் அறநாட்டம் கொள்வது போர் தொடங்கிய பின்னர்ப் படைநூல் கற்பது போன்றதாம். (18) 421. இளமைக் காலத்தில் அறம் செய்யாமல் இறுதிக் காலத்தில் அறம் செய்ய விருப்புக் கொள்வது பசிமிகுந்த பின்னர் நெல்லை விதைத்துப் பயிராக்கிப் பயன் கொள்ள விரும்புவது. (19) பசிமிகுந்த பின் நெல்லை விதைப்பது போல் வீட்டில் தீ பற்றிக் கொண்டு நசியும்போ ததையவிக்க ஆறுவெட்டல் போலும் போர் நடக்கும் காலை விசிகநூல் கற்கமுயல் வதுபோலுங் கபமிஞ்சி விக்கிச் சிக்கி இசிவுகொண்டு சாங்காலத் தெப்படிநீ அறம்புரிவாய் இதயப் பேயே. - நீதிநூல் : 42 : 1. 422. நல்லறங்களைச் செய்யாமல் சேர்த்து வைக்கப் பட்டிருக்கும் செல்வம், எட்டிக்காய் பழுத்தது போல் எவருக்கும் பயன்படாமல் ஒழியும். (20) எட்டி பழுத்த இருங்கனி விழ்ந்தன ஒட்டிய நல்லறஞ் செய்யா தவர்செல்வம் வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும் பட்டிப் பதகர் பயன்அறி யாரே - திருமந்திரம் : 260. 423. முன்னைச் செய்த நல்வினைப் பயனை அனுபவித்துக் கொண்டு, மேலும் நல்வினை செய்யாமல் இருப்பது, பாலைக் கறந்து பயன்படுத்திக் கொண்டு பசுவைப் பேணாமல் விடுவது போன்றது. (21) அம்மைத்தாம் செய்த அறத்தின் வருபயனை இம்மைத்துய்த்து இன்புறா நின்றவர் - உம்மைக்கு அறம் செய்யாது ஐம்புலனும் ஆற்றுதல் நல்லாக் கறந்துண்டு அஃது ஓம்பாமை யாம். - அறநெறிச்சாரம் : 155. 424. உப்பு மலைமேல் இருந்து உணவு அருந்தினாலும் உப்பை உணவில் அள்ளிப் போட்டால் அல்லாமல் அதில் உப்பின் சுவை உண்டாகாது. அதுபோல் உடம்பும் பொருளும் உடைய ஒருவன் நல்வினை செய்யாதபோது அவற்றால் எப் பயனும் உண்டாகாது. (22) உப்புக் குவட்டின் மிசை இருந்து உண்ணினும் இட்டுணாக் காலத்துக் கூராதாம் – தொக்க உடம்பும் பொருளும் உடையான் ஓர் நன்மை தொடங்காக்கால் என்ன பயன்? - அறநெறிச்சாரம் : 169. 425. வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது அணை கோலி நீரைக் கால்வாய் வழியே திருப்ப முடியாது. மரங்கள் முதிர்ச்சி அடைந்த பின்னர் அவற்றின் கிளையை வளைத்து நம் விருப்பம் போல் திருப்ப முடியாது. அவற்றைப் போல் பாவத்தையும் பெருகவிட்டு விட்டால் பின்னர் எதுவும் செய்தற்கு இயலாது. (23) பெருவெள்ளம் சேர்ந்த பின்னர் அதைத்திருப்ப ஒண்ணுமோ பெருத்து நீண்ட தருவின்கோ ணலைநிமிர்க்கத் தகுமோபா வங்களைநீ தள்ளி மேலாம் கருமமதின் முயலென்றால் பின்னையா கட்டுமென்றாய் கசடு விஞ்சி ஒருமலைபோ லானபின்னெவ் வாறதைநீ சாம்பருவத் தொழிப்பாய் நெஞ்சே - நீதிநூல் : 42 : 8. 426. வெள்ளம் வருவதற்கு முன்னே அணைகோலிவைத்துக் கொள்வது போல் காலன் வருமுன்னே நல்லறம் செய்திருத்தல் வேண்டும். (24) கொள்ளும் கொடுங்கூற்றம் கொல்வான் குறுகுதல்முன் உள்ளம் கனிந்து அறம் செய்து உய்கவே - வெள்ளம் வருவதற்கு முன்னர் அணைகோலி வையார் பெருகுதற்கண் என் செய்வார்? பேசு. - நன்னெறி : 30 427. குதிரைமேல் இருப்பவனைப் பணியாமல் குதிரையைப் பணிவதை யும், கடவுளை வழிபடாமல் கோயிலை அழகுபடுத்து வதையும், பொன்னை வெளிப் போக விட்டுச் செப்பினைக் காப்பதையும் ஒப்பானதாம், உயிர்காக்கும் அறத்தைப் பேணாமல் உடலைப் பேணிக்கொண்டு மட்டுமே இருத்தல். (25) பரியூர்வோன் தனைமறந்து பரிக்குபசா ரங்கள் மிகப் பண்ணல் போலும் பெரியகட வுளைப் பணியா தாலயத்தை அலங்கரிக்கும் பித்தர் போலும் அரிய பொருள் வெளியிட்டுச் செப்பினைக்காத் திடல் போலும் ஆன்மாவுக்கு உரிய அறம் புரியாமல் உடலினைநீ ஓம்புகின்றாய் உள்ளப் பேயே. - நீதிநூல் : 2 : 10. 428. கப்பல் அடியில் ஊறிக்கொண்டு வரும் நீரை அடிக்கடி இறைத்து வெளியேற்றாவிடின் நீர் மிகுந்து கப்பலையே ஆழ்த்தி விடும். அதுபோல் நல்வினைகளைச் செய்து அப்போதைக்கப் போது பாவத்தைத் துடைத்துக் கொள்ளாவிடின் அப்பாவம் பெருகி இருள் உலகில் ஆழ்த்திவிடும். (26) கலம் ஊறும் சிறுநீரை விரைவில் இறை யாவிடின் அக் கலந்தான் மிக்க சலம் ஊறி அழுந்துமது போற்பவத்தை விரைவுற்றுத் தள்ளி டாமல் நிலமீதில் யாம்வாளா இருப்போமேல் பாவங்கள் நிறைந்து மோக்க நலம் நீங்கி நரகமெனும் பேராழி இடைவிழ்ந்து நலிவோம் நெஞ்சே. - நீதிநூல் : 42 : 7. 429. சோறு வாங்குவதற்காகக் கொண்டு வரும் காலத்தில் கல்லைப் போடுபவர் அறிவுடையவர் ஆகார். அது போல் ஒன்றை இரந்து வருபவன் குறிப்பை அறிந்து அறம் செய்யாதவர் அறவோர் ஆகார். (27) நினைத்த திதுவென்றந் நீர்மையை நோக்கி மனத்த்தறிந்தீவார் மாண்டார் - புனத்த குடிஞை யிரட்டும் குளிர்வரை நாட கடிஞையில் கல்லிடுவா ரில். - பழமொழி : 375. 430. அழுது பாலுண்ணாமல் கிடக்கும் குழந்தையைத் துன்புறுத்தி யேனும் தாய்மார் பால் புகட்டத்தவறார். அதுபோல் உலக நலம் கருதி, அறவழியில் செல்லாதவர்களை ஆன்றோர்கள் வற்புறுத்தியேனும் அறவழி யில் செலுத்தத் தவறார். (28) உலப்பிலுலகத் துறுதியை நோக்கிக் குலைத்தடக்கி நல்லறம் கொள்வார்க் கொளுத்தல் மலைத்தழு துண்ணாக் குழவியைத் தாயார் அலைத்துப்பால் பெய்து விடல். - பழமொழி : 363. 431. குழந்தையின் நலத்தையும் வளர்ச்சியையும் கருதிக் காலையும் கையையும் பிடித்து அழுத்திப் பாலும் எண்ணெயும் புகட்டும் தாய் போலப், பிறர் நலம் கருதும் மக்கள் அறவுரைகளை மென்மையாகவும், வன்மை யாகவும் வற்புறுத்தி அறத்தில் அவர்களை நிலைக்கச் செய்வர். (29) காலொடு கை அமுக்கிப் பிள்ளையை வாய்நெறித்துப் பாலொடு நெய்பெய்யும் தாய் அனையர் – சால அடக்கத்தை வேண்டி அறன்வலித்து நாளும் கொடுத்து மேற் கொண்டுஒழுகு வார். - அறநெறிச்சாரம் : 96. 432. வெந்து கரியான மரத்துண்டத்தை எத்தனை தடவைகள் பால் விட்டுக் கழுவினாலும் அது வெள்ளை நிறமாக மாறாது. அதுபோல் எத்தனை விதங்களால் அறவுரை கூறினாலும் அறிவிலிக்கு அவன் தன்மை மாறாது. (30) பாலால் கழீஇப் பலநாள் உணக்கினும் வாலிது ஆம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று; கோலால் கடாஅய்க் குறினும் புகல்ஒல்லா நோலா உடம்பிற்கு அறிவு. - நாலடியார் : 258. 433. குளத்துள் கிடந்தாலும் கல் நனையாது; எவ்வளவு நேரம் வேகவைத்தாலும் வேகாத பயறு வேகாது; அவை போல, எத்தனை விதமாக அறிவுரை அறவுரை கூறினாலும் அறிவிலார் அவற்றை உணரார். (31) கயத்திடை உய்த்திடினும் கல் நனையாது என்றும் பயற்றுக் கறிவேவாது அற்றால் - இயற்றி அறவுரை கேட்ட இடத்தும் அனையார் திறவுரை தேறா தவர். - அறநெறிச்சாரம் : 32. 434. செங்கல் அறுக்கும் சட்டகம் கோணலாக அமைந்திருந்தால் அதனால் அறுத்தெடுக்கப்படும் செங்கலும் கோணலாகவே இருக்கும். அதுபோல் அறிவு வேறுபட்டால் அறமும் வேறுபடவே செய்யும். (32) கட்டளை கோடித் திரியில் கருதிய இட்டிகையும் கோடும்! அதுபோலும் - ஒட்டிய காட்சி திரியின் அறம் திரியும் என்று உரைப்பர் மாட்சியின் மிக்கவர் தாம். - அறநெறிச்சாரம் : 37. 435. நாளெல்லாம் நீருள் கிடந்தாலும், கல், மெல்லிய தன்மையை அடையாது. அதுபோல் நாளும் நல்லுரை கேட்பாலும் கயவர் மனம் கல்லினும் வல்லிதாகவே இருக்கும். (33) வைகலும் நீருள் கிடப்பினும் கல்லிற்கு மெல்என்றல் சால அளிது ஆகும்! - அஃதேபோல் வைகலும் நல்லறம் கேட்பினும் கீழ்கட்குக் கல்லினும் வல்என்னும் நெஞ்சு. - அறநெறிச்சாரம் : 31. 436. அகப்பை, அதனால் எடுக்கப் பெறும் நெய்யின் சுவையை அறியாதது போல் கல்லாத ஒருவன் அறத்தினைப் பன்முறை கேட்டாலும் அதனை உணர மாட்டான். (34) கல்லா ஒருவனைக் காரணம் காட்டினும் இல்லைமற்று ஒன்றும் அறன் உணர்தல் - நல்லாய்! நறுநெய் நிறைய முகப்பினும் மூழை பெறுமோ சுவைஉணரு மாறு. - அறநெறிச்சாரம் : 30. 437. இறை வழிபாட்டிலும், அறச்செயல் செய்தலிலும் ஈடுபாடு கொள்ளாத ஒருவன், புகழை விரும்பி நிற்பது, காமநோய் நீங்குதற்கு விரும்பும் ஒருத்தி தன் உடலில் குளிர் பொருள்களைப் பூசிக்கொள்வது போன்றது. (35) பகவன தருளும் நெஞ்சும் பழிச்சலும் நிலையாம் தன்னை அகமுனிந் தனல் போல் தீக்க அறமென்ப தொருபால் சீறச் சகமெலாம் புகழ்தல் மெய்மேல் சைத்திய உபசா ரங்கள் சுகமிலாக் கொடிய தாபச் சுரத்தினார்க் கியற்றல் போலும். - நீதிநூல் 37 : 4. 438. முதற்கண் சமமாக நின்று பின்னர்த் தன்னிடம் வைத்த பொருளை நிறையிட்டுக் காட்டும் துலாக்கோலைப் போல், எவர் மேலும் விருப்பு வெறுப்புக் காட்டாமல் நடுவு நிலையில் நின்று அறங்கூறுதல் சான்றோர்க்கு அழகாகும். (36) சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. - திருக்குறள் : 118. 439. நுகக்கோலின் நடுவே அமைந்துள்ள ஆணியைப் போலவும், மக்கள் வயிற்றின் நடுவே அமைந்துள்ள கொப்பூழைப் போலவும் அறவோர் நடுவு நிலையில் அமைந்து அறங்கூறுவர். (37) நுகத்துக்குப் பகலாணி போலவும் மக்கட்குக் கொப்பூழ் போலவும் ........ நடுவுநின்று செங்கோ லோச்சி - பெருந்தொகை : 349. 440. நிறுத்தும், வெட்டியும், சுட்டும், தேய்த்தும் பொன்னைப் பற்பல வகைகளாலும் ஆராய்வது போல் அற நூல்களையும் பற்பல வகைகளில் ஆராய்ந்து அதன்படி நடத்தல் வேண்டும். (38) நிறுத்து அறுத்துச் சுட்டு உரைத்துப் பொன்கொள்வான் போல அறத்திறனும் ஆராய்ந்து உள் புக்கால் - பிறப்பு அறுக்கும் மெய்ந்நூல் தலைப்படல் ஆகும்மற்று ஆகாதே கண்டிக் கண்டதே கண்டு. - அறநெறிச்சாரம் : 41. 441. கன்று நிற்கும் இடத்தைத் தானே தேடிக் கொண்டு வரும் தாய்ப் பசுவைப்போல் அறமும் அறம் செய்தவனை இம்மை மறுமைகளில் தொடர்ந்து வந்து நன்மை செய்யும். (39) பெற்றி கருமம் பிழையாமல் செய்குறின் பற்றின்கண் நில்லாது அறம் செய்க! - மற்றது பொன்றாப் புகழ் நிறுத்திப் போய்ப் பிறந்த ஊர்நாடிக் கன்றுடைத் தாய்போல் வரும். - அறநெறிச்சாரம் : 149. 8. கொடை 442. பூவுக்கு இனிய தேனும், நறுமணமும் பெருமையளிக்கும். அதுபோல் மாந்தர்க்கு இன்சொல்லும் ஈகையும் பெருமையளிக்கும். (1) தீந்தேனும் நன்மணமும் ஒண்மலர்க்கு மாண்பாகும் மாந்தருக்கின் சொல்லிகை மாண்பு. - கைவிளக்கு 4 : 14. 443. நாள் தவறாமல் இறைத்துக் கொண்டிருந்தாலும் கிணற்றில் நீர் ஊறவே செய்யும். அதுபோல் இல்லை என்று சொல்லாமல் நாள் தவறாமல் கொடுத்தாலும் செல்வம் பெருகவே செய்யும். (2) இரப்பவர்க் கீயக் குறைபடுமென் றெண்ணிக் கரப்பவர் கண்டறியார் கொல்லோ - பரப்பிற் றுறைத்தோணி நின்றுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப இறைத்தோறும் ஊறுங் கிணறு. - பழமொழி : 378. 444. நெடுநாட்கள் எடுக்கப்படாமல் இருந்தாலும் தேன் அடையில் அளவுக்கு மிஞ்சித் தேன் சேர்ந்துவிடாது. அதுபோல் கருமிகள் தம் செல்வத்தைக் கொடுக்காமல் சேர்த்து வைத்திருப்பினும் அளவுக்கு மிஞ்சிப் பெருகிவிடாது. (3) பன்னாள் நிற்பினும் பண் அடையின் மிகா அது ஈயா மாந்தர் ஈட்டிய பெரும்பொருள் போல் - பெருந்தொகை : 280. 445. வறுமையின் காரணத்தால் பொருளை இரந்து வருபவர்கள் உலகில் இல்லையாயின், உலகத்தில் மக்கள் வாழ்வு, உயிர்ப்பற்ற மரப்பாவை சென்று வருவது போலவே இருக்கும். (4) இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று. - திருக்குறள் : 1058. 446. காக்கை கரைந்து அழைத்துத் தன் இனத்துடன் கூடிக் கிடைத்த வற்றை உண்ணும். அதுபோல் அவர் இவர் என்று பார்க்காமல் அனைவருக்கும் உதவி செய்து வாழ்தல் வேண்டும். (5) ஆர்க்கும் இடுமின் அவரவர் என்னன்மின் பார்த்திருந்துண்மின் பழம்பொருள் போற்றன்மின் வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின் காக்கை கரைந்துண்ணுங் காலம் அறிமினே. - திருமந்திரம் : 250. காக்கை கரவா கரைந்துண்ணும்; ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள. திருக்குறள் : 527. 447. உறுப்புக்களில் உயர்வு தாழ்வு பார்க்காமல் எல்லா உறுப்புக்களை யும் பேணுவது போலவும், பெருமலை தான் கொண்ட நீரைப் பள்ளத்தாக் கிற்கு அளிப்பது போலவும் செல்வர்கள் உழைப்பாளர்களையும், வறியவர் களையும் பேணுதல் வேண்டும். (6) உடலுறுப்புகள் மேல் கீழென்றுன்னிடா தோம்பல் போலும் தடமலை கொண்ட நீரைத் தாழ்தரைக் களித்தல் போலும் தொடர்புறு மேலோர் தம்கைத் தோய்நிதி யாவும் தாழ்ந்தோர்க் கிடவெனக் கடவுள் ஈந்த தெனநினைந்திடுவர் மாதோ. - நீதிநூல் 13 : 8. 448. ஒன்றைக் கேட்டு வந்தவன் குறிப்பை அறிந்து அருள் செய்ய மாட்டாதவன் கண், உணவுச் சுவை அறிந்து கல்விச் சுவை அறியாத நாவைப் போன்றதே ஆகும். (7) உண்ணும் சுவையுணர்ந்தும் ஓதலிலா நாப்போல் எண்ணில் பொருள் கண்டும் என்கொல் பயனின்றே புண்ணே எனப்படூஉம் போந்தார்உள் நோக்கறிந்து கண்ணோட்டம் செய்யாத கண். - இன்னிசை இருநூறு : 45. 449. கொடிய வறுமைக்கு ஆட்பட்டவர்களுக்குக் கொடுக்கும் கொடை வறட்சி மிக்க நிலத்தில் உள்ள பயிருக்குப் பெய்யும் மழை போன்றது. (8) கரப்புடையார் வைத்த கடையும் உதவா துரப்புடைய மன்னர்க்கே துப்புரவ தல்லால் நிரப்பிடும்பை மிக்கார்க் குதவான்றிதல் சுரத்திடைப் பெய்த பெயல். - பழமொழி : 373. 450. முகில் தானே தேடி வந்து மழையை உதவுவது போல் மிகப் பெருந்தன்மையாளர்கள் வறியவர்களைத் தேடி வந்து உதவி செய்து மகிழ்வர். (9) ஓடி எங்கும் உலரும்பைங் கூழ்களை நாடி மைமுகில் நன்மழை பெய்தல் போல் வாடி நையும் வறிஞர் இருக்கையைத் தேடி மேலவர் செய்வர் உதவியே. - நீதிநூல் 38 : 18. 451. பொருள்முடையுடைய வறியவர்க்கு வழங்காமல் செல்வர்க்குப் பொருள் வழங்குவது, நோயற்றவர்க்கு மருந்து ஊட்டுவதையும், கடலில் மழை பொழிவதையும் போன்றது. (10) மெலியும் ஏழைக் கிடாமல் விளைபொன்னை. மலியும் செல்வர்க்கு வாரி வழங்குதல் நலியி லார்க்கருள் நன்மருந்தும் பெருகு ஒலிக டற்பெய் உறையையும் ஒக்குமால். - நீதிநூல் 23 : 10. 452. பசியுடைய கன்றுக்கு விரும்பிப் பால் ஊட்டும் பசுவைப் போல் வேண்டியோர்க்கு வேண்டிய பொழுதில் நல்லோர் பொருள் உதவுவர். கன்றுக்கும் ஊட்டாமல், அடித்தும் உதைத்தும் பால் கறக்கப்படும் பசுவுக்கு ஒப்பாக இருப்பர், அறிவிலாச் செல்வர். (11) இரவலர் கன்று ஆக ஈவார் ஆ வாக விரகின் சுரப்பதாம் வண்மை ; - விரகு இன்றி வல்லவர் ஊன்ற வடி ஆபோல் வாய்வைத்துக் கொல்லச் சுரப்பதாம் கீழ். - நாலடியார் : 279. 453. தம்மிடத்து ஒரு பொருளை விரும்பிக் கேட்டு வந்தவர்களுக்குத் தருவது போல் ஆசை காட்டித் தாராமல் அலைய விடுவது, மாட்டின் வாயில் இடுவது போல் காட்டிய புல்லை அதன் கழுத்தில் கட்டி வைத்தது போன்றது. (12) ஓற்கப்பட்டாற்றார் உணர உரைத்தபின் நற்செய்கை செய்வார்போல் காட்டி நசையழுங்க வற்கென்ற செய்கை யதுவால் அவ் வாயுறைப் புற்கழுத்தில் யாத்து விடல். - பழமொழி : 222. 454. நீர் ஊற்றாமலே வளர்ந்து பயன் தரும் பனை மரத்தைப் போல், ஒருவர் வந்து கேட்கு முன்னரே பயன் எதிர்பாராது தலையாயவர் கொடுப்பர். (13) - நீதிவெண்பா : 92. 455. நீரூற்றி வளர்த்துப் பாதுகாத்த அளவுக்கே பயன்தரும் தென்னை மரத்தைப் போல், ஒருவர் முயன்று வந்து கேட்ட அளவுக்குப் பயன் எதிர்பார்த்து இடையாயவர் கொடுப்பர். (14) - நீதிவெண்பா : 92. 456. நாள் தவறாமல் நீர்விட்டு வளர்த்த பின்னரே பயன் தரும் கமுகையும், வாழையையும் போல், ஒருவர் பன்னாளும் அலைந்த பின்னர் நடைக்கூலி தருவது போல் கடையாயவர் கொடுப்பர். (15) உத்தமர்தாம் ஈயுமிடத் தோங்குபனை போல்வரே மத்திமர்தாம் தெங்குதனை மானுவரே - முத்தலரும் ஆங்கமுகு போல்வர் அதமர் அவர்களே தேங்கதலியும் போல்வர் தேர்ந்து. - நீதி வெண்பா : 91. 457. நீரின் அளவினதாகவே நீர்ப்பூவின் அளவும் அமையும், அதுபோல் கொடுப்பவரின் உள்ளத்தின் அளவினதாகவே கொடை அளவும் அமையும்.(16) இரவலர் தம்வரிசை யென்பார் மடவார் கரவலராய்க் கைவண்ணம் பூண்ட - புரவலர் சீர்வரைய வாகுமாம் செய்கை சிறந்தெனைத்தும் நீர்வரைய வாநீர் மலர் - பழமொழி : 379. 458. எவ்வளவு காய்கள் காய்த்தாலும், எத்துணை முறைகள் காய்த்தாலும் அவற்றையெல்லாம் தாங்குவதைக் கிளை கடமையாகக் கொண்டுள்ளது. அதுபோல் பெரியவர்களும் பல காலங் களிலும் பலப்பல உறவினர்கள் வந்து கொண்டே இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்து காப்பர். (17) அடுக்கல் மலைநாட்! தஞ்சேர்ந் தவரை ‘எடுக்கலாம்’ என்னார் பெரியோர் : - அடுத்துஅடுத்து வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே தன்காய் பொறுக்கலாக் கொம்பு. - நாலடியார் : 203. 459, பயன்மரம், தான் வெயிலில் நின்றும் தன்னை அடைந்தவருக்குத் தண்ணிழலும், தான் வறண்டிருந்தும் தன்னை நாடி அடைந்தவருக்கு நற் கனியும், அளிக்கின்றது. அதுபோல் பெருங்குணம் படைத்தோர் தாம் வருந்தி யும் பிறர் நல்வாழ்வு வாழ்வதற்காக உதவுவதைக் கடமையாகக் கொள்வர். (18) அழல்மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கு எல்லாம் நிழல்மரம் போல் நேர்ஓப்பத் தாங்கிப் - பழுமரம் போல் பல்லார் பயன்துய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே நல் ஆண் மகற்குக் கடன். - நாலடியார் : 202. 460. மரம் தன்னை அடைந்தவருக்குப் பழம், காய், இலை, நிழல் இவற்றைத் தருவதுடன் பலகைகளுக்கும் பயன்படுமாறு தன்னையும் தருகின்றது. அவ்வாறே, நல்லோரும் தம் பொருளைப் பிறருக்கு வழங்குவ துடன் தம்மையும் தருவர். (19) மன்னிய கனிகாய் நீழல் மற்றெலாம் உதவிப் பின்னும் தன்னையும் உதவா நின்ற தருவெனத் தங்கை யார்ந்த பொன்னெலாம் உதவிப் பின்னும் பூட்சியால் உழைத்திட் டேனும் இன்னுயிர் உதவி யேனும் இடுக்கண்தீர்ப் பார்நல் லோரே. - நீதிநூல் : 38:8. 461. ஆறு, மரம், வானம் ஆகியவை எத்தகைய பயனையும் எதிர் பாராமல் உதவுவன. அவற்றைப் போல் நல்லோரும் பயன் எதிர்பாராமல் பிறருக்கு உதவுவர். (20) நதிமரம் வானம் மூன்றும் நலம் தரும் உபகா ரங்கள் இதமுடன் செய்வதல்லால் எதிர்உப காரம் ஏற்கா மதிபெறு நல்லோர் தாமும் வழங்கிடும் உபகா ரத்துக் கெதிருப காரம் கொள்ளார் இது நிச மாகும் தானே. - நீதிசாரம் : 90. 462. புகழ்ச்சியைக் கருதியாக நாவிற்குச் சுவைப் பொருள் களை அள்ளித் தருகின்றது? இல்லை. அவ்வாறே பெரியோரும் தம்மைப் புகழ்வது கருதிக் கொடுப்பதில்லை வேண்டியோரைத் தேடிப்போய்த் தாமே தருவர். (21) என்று முகமன் இயம்பா தவர்கண்ணும் சென்று பொருள் கொடுப்பர் தீதற்றோர் – துன்றுசுவை பூவிற் பொலிகுழலாய்! பூங்கை புகழவோ நாவிற்கு உதவும் நயந்து. - நன்னெறி : 1 463. புகழை எதிர்பார்த்துப் பொருட் கொடை புரிபவர் தன்மை, கூலிக்குத் தொழில் செய்து உண்ணுபவர்களது தன்மை போன்றதே. (22) பயனோக்கா தாற்றவும் பாத்தறிவொன் றின்றி இசைநோக்கி ஈகின்றார் ஈகை - வயமாப் போல் ஆலித்துப் பாயும் அலைகடல் தண்சேர்ப்ப கூலிக்குச் செய்துண்ணு மாறு. - பழமொழி : 383. 464. பிறர் வள்ளல் என்று பாராட்ட வேண்டும். என்று எண்ணிக் கொடுக்கும் ஒருவரது கொடைத் தன்மை முழு மதியைப் பற்றிக் கொண்ட இருள்போல் (கிரகணம்) குறையுடையதே ஆகும். (23) சிவாநினக்கே ஓவா தறவினை செய்வேன் அவாவேன் பிறவன் பளியெனல் வேண்டும் உவாமதி பாம்போ டுறுவது போலும் அவாவொடு கூடும் அறன். - இன்னிசை இருநூறு : 13. 465. வலிமையற்றுக் கிடந்தாலும் போரில் பழகிய குதிரை போர்க்குரிய அணிகளைத் தன் மேல் பூட்டப் பெற்ற அளவில் ஆண்மை பெற்றுவிடும். அதுபோல், கொடுத்துப் பழகியவர் வறுமையுற்றுக் கெட்டாலும் இரவலரைக் கண்டதும் அவர்க்கு வேண்டுவதைக் கொடுக்கவே முந்துவர். (24) கூஉய்க் கொடுப்பதொன் றில்லெனினும் சார்ந்தார்க்குத் தூஉய்ப் பயின்றாரோ துன்பம் துடைக்கிற்பார் வாய்ப்பத்தான் வாடியக் கண்ணும் பெருங்குதிரை யாப்புள் வேறாகி விடும். - பழமொழி : 376. 466. சந்தனக்கட்டை தேய்ந்து அளவில் சிறிதாகப் போனா லும் அதன் மணம் குறைந்து போகாது. அதுபோல் செல்வம் மிகக் குறைந்த காலத்தும் வள்ளல் தன்மையுடையோர் கொடைத் தன்மையில் குறையார். (25) சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும் கந்தம் குறைபடா தாதலால் – தந்தம் தனம் சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால் மனம் சிறியர் ஆவரோ மற்று? - மூதுரை : 28. 467. ஆற்றில் நீரோட்டம் இல்லாமல் ஒழிந்தாலும் ஊற்றினால் அவ் வாறு உலகுக்கு உதவும். அதுபோல் உயர் குடியில் பிறந்தவர் வறுமை யுற்றாலும் தம்மை நாடி வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் இயன்ற அளவு உதவுவர். (26) ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் அந் நாளும் அவ்வாறு ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லை என மாட்டார் இசைந்து. - நல்வழி : 9. 468. மேகத்தினிடம் இருந்து நீரைப் பெற்றாவது ஆறு வயலுக்கு வழங்கும். அதுபோல் பிறரிடம் இருந்து பொருளைக் கடன் பெற்றேனும் வள்ளல் தன்மையோர் வறியவர்க்கு வழங்குவர். (27) காரிடத்திரந் தேனும் கயந்தி நீரினைப்பணை யெங்கு நிறைத்தல் போல் யாரிடத்திரந் தேனு மற்முளார் பாரிடத்துப் பகுப்பர் வறிஞர்க்கே . - நீதி நூல் : 38 : 19. 469. வாழை காய் ஈன்றமையால் வெட்டுண்டு அழிவதைக் கண்டும் அதன் கன்று கனி தரத் தவறுவது இல்லை. அதுபோல் என் தந்தை இரவலர்க்கு உதவியமையால் வறுமையுற்றுக் கெட்டான் என்று கூறி உயர்ந்த குடியில் பிறந்தவர் உதவி செய்யத் தவறார். (28) எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்குஈந்து என்றுஅவன் மைந்தர்தம் ஈகை மறுப்பரோ - பைந்தொடீ! நின்று பயனுதவி நில்லா அரம்பையின்கீழ்க் கன்றும் உதவும் கனி. - நன்னெறி : 17. 470. முளைத்துக் கொண்டிருக்கும் பற்களும் முதிர்ந்த சுவையினை நாவிற்கு விரும்பி ஊட்டும். அவ்வாறே நற்குடியில் பிறந்தோர் இளையரே எனினும் கைம்மாறு கருதாமல் பிறர் நலத்திற்கு வேண்டிய செயல்களைச் செய்வர். (29) கைம்மாறுகவாமல் கற்றறிந்தோர் மெய்வருந்தித் தம்மால் இயல் உதவி தாம் செய்வர் - அம்மா! முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு விளைக்கும் வலியானதாம் மென்று. - நன்னெறி : 27. 471 கதலி, காயாக இருந்தாலும் பயன்படும். எட்டி பழுத்து இருந்தாலும் பயன்படாது. அவற்றைப் போல் நல்லோர் கோவத்துடன் இருந்தாலும் உதவி புரிவர்; பொல்லோர் கனிவுடைய பொழுதிலும் இனியவை செய்யார். (30) முனிவினும் நல்குவர் மூதறிஞர்; உள்ளக் கனிவினும் நல்கார் கயவர் - நனிவிளைவில் காயினும் ஆகும் காதலிதான்; எட்டிபழுத்து ஆயினும் ஆமோ? அறை. - நன்னெறி : 28. 472. கன்னிப் பருவத்தவள் கொண்ட கற்பே உயர் கற்பு; அறத்திறம் மிக்கவன் கொண்ட அடக்கமே உயர் அடக்கம்; வலிமை மிகப் பெற்றவன் கொண்ட பொறுமையே உயர் பொறுமை. அவற்றைப் போல் வறியவர் கொடுக்கும் கொடையே உயர் கொடை; செல்வர் வழங்கும் கொடை சீரிய கொடை ஆகாது. (31) விறலிகற் பதுவே கற்பு கூனுடல் விருத்தை கற்பரி தன்று கலையெலாம் அறவுணர்ந்த்தக் கோர்நொறிலே நொறில் அஞ்ஞை கொண்ட அடக்கம் கதழ்வன்று திறலினார்பொறை யேபொறை அற்பமும் திறலிலார்தம் பொறுமை தலையன்று மறலுளார் கொடை யேகொடை சீரெலாம் வாய்த்த செல்வர் கொடை பெரிதன்றரே. - நீதிநூல் : 42 : 25. 473. வேம்பு எந்நாளிலும் இனிக்காது; வெயில் எந்நாளிலும் தண்மை தாராது; பாம்பு எந்நாளிலும் அமுது அளிக்காது. அவற்றைப் போல் பணப் பேயர் எந்நாளிலும் பிறர்க்கு உதவார் (32) வேம்புதேன் ஈயுமோ வெயில் தண் ணாகுமோ பாம்பமு தளிக்குமோ பரிவில் பூரியர் தாம்பொதி யாளெனத் தாங்கும் பொன்னினைத் தேம்புமா துலாக்குளம் சிறந்த ளிப்பரோ. - நீதிநூல் 23 : 6. 474. கிடை என்னும் செடி எவ்வளவு நாட்களுக்கு நீரின் உள்ளேயே கிடப்பினும் அதனுள் ஈரம் புகுவது இல்லை. அதுபோல், கயவர்களாய செல்வர்கள் நெஞ்சில் ஈரம் (அருள்) புகுவதே இல்லை. (33) நீருள் பிறந்து நிறம்பசியது ஆயினும் ஈரம் கிடைஅகத்து இல் ஆகும்; - ஒரும் நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும் அறைப்பெருங்கல் அன்னார் உடைத்து. - நாலடியார் : 360. 475. பலரும் விரும்பும் வண்ணம் பயன்மிக்க கொடை புரியும் பெருமக்கள் ஊரின் நடுவில் அமைந்த பயன்மிக்க பனைமரத்திற்கு ஒப்பாவர். பிறருக்கு எந்த ஒன்றையும் உதவாதவர்களோ சுடுகாட்டில் வளர்ந்த மலட்டுப் பனைக்கு ஒப்பாவார்கள். (34) நடுவரருள் வேதிகைச் சுற்றுக்கோள் புக்க படுபனை அன்னர் பலர்நச்ச வாழ்வார்; குடிகொழுத்தக் கண்ணும் கொடுத்துண்ணா மாக்கள் இடுகாட்டுள் ஏற்றைப் பனை. - நாலடியார் : 96. 476. உண்ணா நோன்பு கொண்டிருக்கும் கடுந்துறவி யினிடம் பிச்சைச் சோறு வாங்கப் போவவர் பயன் பெறார் அதுபோல், மரத்துப்போன நெஞ்சம் உடைய செல்வரை அடைந்து இரந்து நின்றவரும் பயன் பெறார். (35) மரம்போல் வலிய மனத்தாரை முன்னின்று இரந்தார் பெறுவதொன்றில்லை - குரங்கூசல் வள்ளி யினாடு மலைநாட அஃதன்றோ பள்ளியுள் ஐயம் புகல். - பழமொழி : 224. 477. பிறருக்குக் கொடுத்து உதவாமலும், தனக்குப் பயன்படுத்தாமலும் வறிதே வைத்திருக்கும் கருமியின் செல்வம் நாய் பெற்ற தேங்காய் போன்றது. (36) வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி வேய் முற்றி முத்துதிரும் வெற்ப அதுவன்றோ நாய் பெற்ற தெங்கம் பழம். - பழமொழி : 216. 478. இமைகளை மூடி இருந்தாலும், திறந்திருந்தாலும் குருடனுக்கு அதனால் ஆகும் பயன் ஒன்றும் இல்லை. அதுபோல் தீவினைக்கு அஞ்சினாலும் அஞ்சா விட்டாலும் ஈயாமல் செல்வத்தை இறுக்கிப் பிடிப்ப வனுக்கு ஆகும் பயன் ஒன்றும் இல்லை. (37) நாவின் இரந்தார் குறையறிந்து தாமுடைய மாவினை மாணப் பொதிகிற்பார் - தீவினை அஞ்சிலென் அஞ்சா விடிலென் குருட்டுக்கண் துஞ்சிலென் துஞ்சாக்கா லென். - பழமொழி : 218. 479. பெருஞ்செல்வத்தைத் தனக்காகவும் பிறருக்காகவும் பயன் படுத்தாமல் வீணாக வைத்திருந்து இறப்பவர் போர்க் களத்தில் குடல் சரிந்து போக வேறு ஏதோ ஒன்றினை உள்ளே வைத்துக் கட்டுக்கட்டி வைத்திருப்பவரைப் போன்றவர். (38) படரும் பிறப்பிற்கொன்றீயார் பொருளைத் தொடரும் தம் பற்றினால் வைத்திறப் பாரே அடரும் பொழுதின்கண் இட்டுக் குடரொழிய மீவேலி போக்கு பவர். - பழமொழி : 219. 480. திருவிழாக் கூட்டத்திற்குக் கூடிப் பிரியும் மக்களைப் போல் சேர்ந்து அகலும் இயல்பினது செல்வம். அதன் இயல்பை அறிந்தும் அதனைப் பெற்ற பொழுதில் ஈயாமல் இருப்பவனிடம் அச்செல்வம் இருப்பது வடிவழகு உடைய ஒருவன் கண் இழந்து நிற்பது போன்றதாகும். (39) முழவொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார் விழவூரில் கூத்தேபோல் விழந்தவிதல் கண்டும் இழவென் றொரு பொருள் ஈயாதான் செல்வம் அழகொடு கண்ணி னிழவு. - பழமொழி : 217. 481. நெற்பயிர் பொதியும் கதிருமாக உள்ள பொழுதில் அங்கு மழை பெய்யாமல் கடலில் பொழிந்தால் பயன் எதுவும் இல்லை. அதுபோல் வெள்ளை அறிவுடைய செல்வர்கள் தங்கள் செல்வத்தை உரிய காலத்தில் பயன்படும் வழிகளுக்குச் செலவிடாமல் தீய வழிகளில் தொலைப்பர். (30) பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட மின்ஒளிர் வானம் கடல் உள்ளும் கான்றுஉகுக்கும்; வெண்மை உடையார் விழுச்செல்வம் எய்தியக்கால் வண்மையும் அன்ன தகைத்து. - நாலடியார் : 29. 482. கையால் அள்ளிக் கொள்ளும் அளவுக்கு நிரம்பிய பூக்களை உடையது கள்ளி. இருப்பினும் சூடுதற்காக அதன் பூக்களைப் பறிக்க விரும்பார். அதுபோல் பெருஞ் செல்வர்கள் என்பதற்காகக் கீழ்மக்களை அறிவுடைய பெருமக்கள் நெருங்க மாட்டார். (41) அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ ஆயினும் கள்ளிமேல் கை நீட்டார் சூடும் பூ அன்மையால், செல்வம் பெரிது உடையர் ஆயினும் கீழ்களை நள்ளார் அறிவுஉடை யார். - நாலடியார் : 262. 483. விரிந்து பரந்த கடல் அருகில் இருந்தாலும், நீர் வேட்கையுடையவர் சிறிய ஊற்றையே தேடுவர். அதுபோல், பண்பிலாச் செல்வர் பக்கத்தில் இருந்தாலும் அவரை விடுத்துப் பண்புடைய வறியவரையே நல்லோர் நாடுவர். (42) மல்கு திரைய கடற்கோட்டு இருப்பினும் வல்மாற்று உவர்இல் கிணற்றின்கண் சென்று உண்ப; செல்வம் பெரிதுஉடையர் ஆயினும் சேண்சென்றும் நல்குவார் கட்டே நசை. - நாலடியார் : 263. 484. பழத்துடன் விளாமரம் பக்கத்தில் இருந்தாலும் வெளவால் அதனை நெருங்காமல் நெடுந்தொலைவில் உள்ள சுவைமிக்க பழமரங்களையே தேடும். அதுபோல் பெருந்தன்மையில்லாத செல்வர் அருகில் இருந்தாலும் அவரைத் தேடாமல் நெடுந்தொலைவில் இருக்கும் பெருந்தன்மை வாய்ந்த செல்வரையே இரவலர் தேடுவர். (43) அருகலது ஆகிப் பலபழுத்தக் கண்ணும் பொரிதாள் விளவினை வாவல் குறுகா; பெரிது அணியர் ஆயினும் வீடுஇலார் செல்வம் கருதும் கடப்பாட்டது அன்று. - நாலடியார் : 261. 485. தம்மிடத்தில் இருக்கும் ஒரு பொருளை வாய்ப்பற்ற ஒருவன் கேட்கும் பொழுது 'இல்லை' என்பது, இடையன் தோட்டியால் இழுக்கப் பட்டு நடுவே முரிந்து தாழ்ந்து பொலிவு இழக்கும் மரக்கிளை போலப் புகழ் குறைதற்கே இடமாக இருக்கும். (44) அடையப் பயின்றார் சொல் ஆற்றுவராக் கேட்டால் உடையதொன்றில்லாமை யொட்டின் – படைபெற் றடைய அமர்த்தகண் பைந்தொடி அஃதால் இடைய னெறிந்த மரம். - பழமொழி : 223. 486. மரத்தை வெட்டவல்ல வாளும் கோடரியும் மயிரை வெட்டப் பயன்படா; அவற்றைப் போல் கற்பன கற்றுக் கூர்மையானவராக இருந்தாலும் ஈகைக் குணம் இல்லார் செல்வம் தமக்கும் பிறருக்கும் பயன்படாது. (45) பெற்றாலும் செல்வம் பிறர்க்கீயார் தாந்துவ்வார் கற்றாரும் பற்றி இறுகுபவால் - கற்றா வரம்பிடைப் பூமேயும் வண்புனல் ஊர மரங்குறைப்ப மண்ணா மயிர். - பழமொழி : 215. 487. விருந்தினர்க்கு வேண்டிய உடை, மருந்து, உணவு, ஆகிய அனைத்தும் உதவி, இனிய சொற்களை மட்டும் சொல்லா மல் அனுப்புவது எருமையை விலைக்கு வாங்கிக் கொன்று அதனைச் சமைப்பதற்குக் காயம் வாங்கக் கருமித் தனம் காட்டுவது போன்றது. (46) உடுக்கை மருந்துறையுள் உண்டியோ டின்ன கொடுத்துக் குறைதீர்த்த லாற்றி - விடுத்தின்சொல் ஈயாமை யென்ப எருமை எறிந்தொருவர் காயக் குலோபிக்கு மாறு. - பழமொழி : 338. 488. ஆசை மிகக் கொண்ட இரவலர் அதனை நீக்க மாட்டாத செல்வர்களை அடைந்து தம் ஆவலை முடிக்க நினைப்பது, வண்டி அச்சில் இடும் உயவு (மசை) எண்ணெயில் குளித்து அழுக்கினைப் போக்க நினைப்பது போன்றது. (47) தோற்றம் பெரிய நசையினார் அந்நசை ஆற்றா தவரை அடைந்தொழுகல் - ஆற்றுள் கயற்புரை உண்கண் கனங்குழாய் அஃதால் உயவுநெய் யுட் குளிக்கும் ஆறு. - பழமொழி : 385 489. குளவியும், முள்ளும் பேயும், சுடுகாடும் சூழப்பெற்ற இடிகரையில் உள்ள புற்றில் வளர்ந்த மடற்பனையில் சேர்த்து வைக்கப்பெற்ற தேன் போன்றது வறியர்க்கு உதவாத கயவர் செல்வம் (48) சுற்றும் கருங்குளவி சூரைத்தூ றாரியப்பேய் எற்றும் சுடுகாட் டிடிகரையின் – புற்றில் வளர்ந்த மடற்பனைக்குள் வைத்ததேன் ஒக்கும் தளர்ந்தோர்க் கொன்றீயார் தனம். - பெருந்தொகை : 281. கருங்குளவிச் சூரைத்தூற் றீச்சங் கனிபோல் வருந்தினர்க்கொன் றீயாதான் வாழ்க்கை - அரும்பகலே இச்சித் திருந்த பொருள் தாயத்தார் கொள்வரே எற்றோமற் றெற்றோமற் றெற்று. - பெருந்தொகை : 282. 490. தாமும் கொடாமல், பிறர் கொடுப்பதையும் கொடுக்க விடாமல் செயலாற்றும் கீழ்மக்கள் நன்னிழலும், நறுமலரும், இனிய கனியும் தரும் பயன் மரத்தைச் சூழ்ந்துள்ள முள்வேலிக்கு ஒப்பாவர். (49) தாமும் கொடார்கொடுப் போர்தம்மையும் ஈயாதவகை சேமம்செய் வாரும் சிலருண்டே - ஏமநிழல் இட்டுமலர் காய்கனிகள் ஈந்துதவும் நன்மரத்தைக் கட்டும் உடை முள்ளெனவே காண். - நீதி வெண்பா : 59. 491. கண்ணாடியுள் தோன்றும் யானையின் நிழலுக்குக் கனம் இல்லை. சுரைக்குடுக்கையின் உள்ளே புகுந்து மிதக்கும் பொருளுக்கும் அதற்குரிய கனம் இல்லை. அவற்றைப் போல் ஈயாதவரிடம் சேர்ந்த செல்வத்திற்கும் உரிய சிறப்பு இல்லை. (50) கண்ணாடி காட்டும் களிறும் சுரைப்பழத்தின் உண்ணாடிப் புக்க உறுபொருறும் - அண்ணா கனங்குறைந்த வாறென் கயவர்பாற் சென்று தினந் தெரிந்த வாறெனவே செப்பு. - பெருந்தொகை : 286. 492. தாமும் பயன்படுத்தாமல், பிறருக்கும் கொடுக்காமல் வைத்துச் செல்வத்தைக் காவல் செய்வது, நச்சு மரத்தைக் காத்து நிற்பது போன்றது. (51) தினமுமே நுகர்த லின்றித் தீர்க்கும் வழங்கல்இன்றித் தனமதைக் காத்தல் நச்சுத் தருவினைக் காத்தல் போலாம். - நீதிநூல் : 23 : 8. 493. இரந்து திரியும் தொழில் பாதுகாப்பற்ற தோணி போன்றது. கொடாமை என்னும் பாறைதாக்கும் போது இரத்தல் என்னும் தோணி உடைந்துவிடும். (52) இரவென்னும் ஏமாப்பில் தோணி, கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும். - திருக்குறள் : 1068. 494. ஒருவருக்கு ஏதேனும் நன்மை செய்துவிட்டு அதன் பயனை எதிர்பார்க்க வேண்டாம். வளர்ந்தோங்கிய தென்னை தாளுண்ட நீரைத் தலை யால் தரவில்லையா? அவ்வாறே நன்மையைப் பெற்றோரும் ஒருவழியால் திருப்பித் தருவர். (53) நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா - நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான்தருத லால். - மூதுரை :1. 495. நல்லவர்க்குச் செய்த உதவி கல்லின் மேல் எழுதிய எழுத்துப் போல் நிலை பெறும். அல்லாதவர்க்குச் செய்த உதவி நீர் மேல் எழுதிய எழுத்தாக உடனே ஒழியும். (54) நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப் போல் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர்மேல் எழுத்துக்கு நேர். - மூதுரை : 2. 496. நெல்லுக்கே நீர் இறைப்பர். புல்லுக்கென நீர் இறையார்; அதுபோல் உயர்ந்தோர் தக்கவர்களுக்கே உதவுவர். பிறர்க்கு உதவார். (55) தக்கார்க்கே ஈவர் தகார்க்கு அளிப்பார் இல்என்று மிக்கார்க்கு உதவார் விழுமியோர் - எக்காலும் நெல்லுக்கு இறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி புல்லுக்கு இறைப்பரோ போய். - நன்னெறி : 36. 497. உயர்ந்தவர்களுக்குச் செய்த உதவி சிப்பியில் விழுந்த மழைத்துளி போல் ஒளி சிறக்கும். இடைப்பட்டவர்க்குச் செய்த உதவி தாமரை இலை யில் விழுந்த துளி போல் உள்ளே நிற்கும். கடையாயவர்க்குச் செய்த உதவி சுடும் இரும்பில் விழுந்த மழைத் துளி போல் உடனே மறையும். (56) தானமாம் பாத்தி ரத்தின் விதமது தான்மூன் றாகும் ஆனவுத்த மமத்தி மத்தோடதமமே அவைகள் என்பார் வானநீர் காய்ந்த யத்தில் வற்றிடும் வாரி சத்தில் போன நீர் உள்ளமட்டும் பொருந்துஞ்சிப் பியில்முத் தாமே. - நீதிசாரம் : 24. 498. கல்லின் மேல் போடப்பெற்ற மெல்லிய கலம் உடைந்து போகும். அதுபோல் புல்லியர்க்குச் செய்த உதவியும் கெடும். (57) புல்லறி வாளருக்குச் செய்த உபகாரம் கல்லின்மேல் இட்ட கலம். - மூதுரை : 15. 499. ஒழுக்கமும் நோன்பும் இல்லாதவர்க்குச் செய்த உதவி, பருவம் தவறி விதைக்கப் பெற்று வளரும் பயிரைப் போல் பயன் தராமல் ஒழியும். (58) - திருமந்திரம் : 05. 500. தகுதி அற்றவர்க்கு உதவி செய்து பயன் கொள்ள நினைப்பது, மலட்டு மாட்டுக்கு நல்ல தீனிகளைத் தந்து பால் கறக்க நினைப்பது போன்றது. (59) கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப் பாலைக் கறந்து பருகுவ தேயொக்குஞ் சீலமும் நோன்பும் இலாதவர்க் கீந்தது காலங் கழிந்த பயிரது ஆகுமே. - திருமந்திரம் : 505. 501. பாம்புப் புற்றில் நின்று, முட்களையுடையதாக இருப்பினும் மணத்தைக் கருதித் தாழம் பூவை விரும்பித் தலையில் சூடுவர். அதுபோல் ஈகைத் தன்மை உடையவர் என்றால் இழிந்தவர்களும் உயர்ந்தவராக மதிக்கப் பெறுவர். (60) தாழைமுள் பாம்பொடு தானுரினும் அப்பூவைச் சூழ்மணத்தால் சென்னிமிசைச் சூடுப ஈகையினால் கீழ்குலத்தான் தூயோர்க் கெழுமியான் ஆயினும் சீர் சூழ்தலான் வையம் தொழும். - இன்னிசை இருநூறு : 69. 502. இடியும் மின்னலும் கொண்டிருந்தாலும் கருமுகிலை அனைவரும் போற்றுவர். அதுபோல் சினம் முதலிய குற்றம் உடையவர் எனினும் கொடைத் தன்மை உடையவரை உலகோர் புகழ்வர். (61) வெய்ய குரல்தோன்றி வெஞ்சினவேறுட்கொளினும் பெய்யு மழைமுகிலைப் பேணுவரால் – வையத் திருள்பொழியும் குற்றம் பலவெனினும் யார்க்கும் பொருள் பொழிவார் மேற்றே புகழ். - பெருந்தொகை : 292. 503. அருள் இல்லாமல் கொடுக்கும் கொடை சிறிதும் பயனற்றது. அது நிலத்தில் ஓடும் முயலைப் பிடிக்க மாட்டாதவன் வானில் பறக்கும் காக்கை யைப் பிடிக்க முயலும் முயற்சி போல் பயனற்றதாகவே அமையும். (62) அற்றாக நோக்கி அறத்திற் கருளுடைமை முற்ற அறிந்தார் முதலறிந்தார் - தெற்ற முதல்விட் டஃதொழிந்தார் ஓம்பா ஒழுக்கம் முயல் விட்டுக் காக்கை தினல். - பழமொழி : 370. 504. தாழ்ப்பாள் இல்லாத கதவால் பயன் இல்லை . அது போல் அறிவிலார் செய்யும் அறத்தாலும் பயன் இல்லை . (63) பன்னும் பனுவல் பயன்தேர் அறிவிலார் மன்னும் அறங்கள் வலியிலவே - நன்னுதால் காழொன்று உயர்திண் கதவு வலியுடைத்தோ தாழொன்று இலதாயின் தான். - நன்னெறி : 32. 505. வண்டு பூக்களில் புகுந்து அதற்குச் சிறிதும் சிதைவு இல்லாமல் தேன் எடுப்பது போல் கொடுப்பவர்களுக்குத் துன்பம் ஏற்படாத அளவில் இரவலர் இரத்தல் வேண்டும். அத்தகைய 'இரப்பு 'ஈவது போன்ற அறமே ஆகும். (64) 506. இளந்தளிரைப் பூச்சி அரிப்பது போல் கொடுப்பவர் முழுமையாகக் கெட்டுப்போகும் அளவுக்குத் துன்புறுத்தி வாங்குவது பெரும்பழியாகும்.(65) ஆயுமலர்த் தேன்வண்டு அருந்துவது போல்இரப்போர் ஈயும் அவர் வருந்தாது ஏற்றல் அறம் - தூயஇளம் பச்சிலையைக் கீடம் அறப் பற்றி அரிப்பது போல் அச்சமுற வாங்கல் அகம். - நீதிவெண்பா : 60. 507. நேராக உதவாதவர் பொருளை அவருக்கு உரிய ஒருவர் வழியாகக் கொள்ளுதல் வேண்டும். பசு தேக்கி வைத்துள்ள பாலை அதன் கன்றைக் கொண்டு கறந்து கொள்கிறோம் அல்லவா! (66) தங்கட்கு உதவிலர்கைத் தாம் ஒன்று கொள்ளின் அவர் தங்கட்கு உரியவரால் தாம் கொள்க - தங்க நெடும் குன்றினால் செய்தனைய கொங்கையாய்! ஆவின்பால் கன்றினால் கொள்ப கறந்து. - நன்னெறி : 3. 508. குவளையைப் பறித்து அதன் தண்டைக் கொண்டே கட்டாகக் கட்டுவர். அதுபோல் வள்ளல் ஒருவர் வழங்கிய செல்வத்தைக் கொண்டே அவருக்குச் சிறப்புச் செய்தலால் அவர் அன்பைப் பெற்றுவிடலாம். (67) பன்னாள் தொழில் செய் துடைய கவர்ந்துண்டார் இன்னாமை செய்யாமை வேண்டி இறைவர்க்குப் பொன்யாத்துக் கொண்டு புகுதல் குவளையைத் தன்னாரால் யாத்து விடல். - பழமொழி : 279. 509. கூகை பகற்பொழுதில் கண் மழுங்கலுடன் இருப்பது அதன் குற்றம் ஆகாது. அதுபோல் ஒருவன் ஒன்றைக் கேட்டு வரும்போது இல்லாத நிலைமை ஏற்பட்டால் கேட்டு வந்தவன் குற்றம் ஆகுமே அல்லாமல் கொடுக்காதவன் குற்றமாக அமையாது. (58) கூகை பகற்கட் குருடெனின் யார்குற்றம் ஈகையர்தில் லென்னின் இரப்பார்தம் குற்றமே சோகம் பெரியாரைச் சார்ந்தும் தொடர்ந்தக்கால் ஆகுமே குற்றம் அவர்க்கு. - இன்னிசை இருநூறு : 180. 510. வெள்ளியும் இரும்பும் பொன் என்றே பெயர் பெறும். அதுபோல் பிறர்க்கு வேண்டுவதை விரும்பிக் கொடுப்பவரும் கொடாதவரும் மக்கள் என்றே பெயர் பெறுவர். (69) மின்னும் தமனியமும் வெற்றிரும்பும் ஓரினமாய்ப் பொன்னின் பெயர்படைத்தாற் போலாதே - கொன்னே ஒளிப்பாரும் மக்களாய் ஓல்லுவ தாங்கே அளிப்பாரும் மக்களா மாறு. - பெருந்தொகை : 274. 9. நட்பு 511. பண்பால் உயர்ந்த பெரியவர்களின் நட்பு நாள் தோறும் வளரும் பிறைபோல் வளர்ந்து முழு மதியைப் போல் நிறை வடையும். பண்பற்ற சிறியவர்களின் உறவு நாள்தோறும் தேயும் மதிபோல் தேய்ந்து இறுதியில் அறவே இல்லாமல் கெட்டுவிடும். (1) பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையா நந்தும்; - வரிசையால் வான்ஊர் மதியம் போல் வைகலும் தேயுமே தானே சிறியார் தொடர்பு. - நாலடியார் : 125. நிறைநீர நீரவர் கேண்மை, பிறைமதிப் பின்நீர பேதையார் நட்பு. திருக்குறள் : 782. 512. பயிலும் தோறும் புதிது புதிதாகத் தோன்றும் நூல் நயம் போலப் பழகும் தோறும் பண்புடையவர்கள் நட்பு வளர்வடைந்து சிறக்கும். (2) நவில்தொறும் நூல்நயம் போலும், பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு - திருக்குறள் : 783. 513. குளத்தில் நீரற்றுப் போனாலும் வேரற்றுப் போகாமல் கிடக்கும் நெய்தல், கொட்டி, அல்லி முதலிய கொடிகளைப் போல், ஒருவர் வறுமை யுற்ற பொழுதிலும் அவரை விட்டு விலகாமல் ஒட்டி இருப்பவர்களே உண்மை நட்பினர். (3) அற்ற குளத்தி னறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வா ருறவல்லர் - அக்குளத்திற் கொட்டியு மாம்பலு நெய்தலும் போலவே ஒட்டி யுறுவா ருறவு. - மூதுரை : 17. 514. மரம், வலிய நிலத்தையும் பிளந்து கொண்டு தன் வேரை ஊன்றி நிலைப்புறும். அதுபோல், பெரியவர்கள் நட்பு மிக உறுதிப் பிடியுடன் அமையும். (4) ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்விழ்க் கும்மே. - வெற்றி வேற்கை : 34. 515. முதல் இல்லாத வாணிகர் ஊதியம் அடையார், அதுபோல் பெரியவர்களைத் துணையாகக் கொண்டு வாழா தவர் உலகில் நிலையான வாழ்வை அடையார். (5) முதலிலார்க் கூதியம் இல்லை மதலையாம் சார்பிலார்க் கில்லை நிலை. - திருக்குறள் : 449. 516. கரும்பை நுனிப்பகுதியில் இருந்து அடிப்பகுதிக்குத் தின்றுகொண்டு வந்தால் வரவர இனிமை மிகும். அதுபோல், நற்குண நல்லறிவுடைய பெரியவர்களின் உறவு நாள்தோறும் வளர்ந்து நன்மை பயக்கும். (6) கனைகடல் தண்சேர்ப்ப கற்று அறிந்தார் கேண்மை நுனியின் கரும்புதின் றற்றே; - நுனிநீக்கித் தூரின்தின் றன்ன தகைத்து அரோ பண்புஇலா ஈரம் இலாளர் தொடர்பு. - நாலடியார் : 138. 517. இணைந்த தொடர்புடைய தொட்டியில் விடப் பெற்ற நீர் குறைந்தாலும் நிறைந்தாலும் ஒத்த அளவினதாகவே இருக்கும். ஒன்று நிறையின் மற்றொன்றும் நிறையும், ஒன்று குறையின் மற்றொன்றும் குறையும். அத்தன்மை போல் வாழ்வு வறுமைகளில் இணைந்து நிற்றல் உயர்ந்த நட்பு முறையாகும். (7) இணைந்துள்ள தொட்டியின் நீர்போல நிற்றல் இணைந்துள்ள நட்பின் இயல். - கைவிளக்கு 2 : 7. 518. கற்றவரைக் கற்றவரே விரும்பி நட்புக் கொள்வர்; கல்லாதவரைக் கல்லாதவரே விரும்பி உறவாடுவர்; அன்னம் தாமரைக் குளத்தை விரும்புவதும், காக்கை சுடுகாட்டுப் பிணத்தை விரும்புவதும் இயல்பு அல்லவா! (8) நற்றா மரைக்கயத்தி னல்லன்னஞ் சேர்ந்தாற்போற் கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற் காக்கை யுகக்கும் பிணம். - மூதுரை : 24. 519. வண்டு பூவைத் தேடிச் செல்லும் ; காக்கை வேப்பம் பழத்தைத் தேடிச்செல்லும். அவற்றைப் போல் மேன்மக்கள் மேன்மக்களையும், கீழ்மக்கள் கீழ்மக்களையும் உறவினராகக் கொள்வது இயற்கை. (9) உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும்கீழ் கொண்டு புகல்வது அவர் குற்றமே - வண்டுமலர்ச் சேக்கை விரும்பும் செழும்பொழில்வாய் வேம்பன்றோ காக்கை விரும்பும் கனி. - நன்னெறி : 24. 520. மலரினிடத்தில் தேன் அமைந்து இருக்கும். பாம்பின் இடத்தில் நஞ்சு பொருந்தி இருக்கும். அவற்றைப் போல் நல்லவரை நெருங்கி நல்லவரும், தீயவரை அணுகித் தீயவரும் இருப்பர். (10) செழுமல ரிடைமது சிறையளி நுகரும் முழுவிட மதுபெறு முனிவுடை யரவம் பழுதறு மற்நிலை பயிலுவர் சிலரே வழுவய லவரிட மருவுவர் பலரே. - நீதிநூல் : 30 : 1. 521. நிறைய நீர் பாய்ச்சிக்கொண்டு வந்தால்தான் கமுகு பயன் தரும். ஓரளவு நீரைப் பாய்ச்சினாலும் தென்னை பயன் தரும். நீர் பாய்ச்சா விட்டாலும் பனை பயன் தரும். அவற்றைப்போல் நாம் செய்த உதவியின் அளவைப் பொறுத்து நண்பர்களாக அமைபவர்களும், உதவியைக் கருதாமலே நண்பர்களாக அமைபவர்களும் உளர். அவர்களை ஆராய்ந்து நண்பர்களாகக் கொள்ளுதல் வேண்டும். (11) கடையாயார் நட்பில் கமுகு அனையர் ஏனை இடையாயார் தெங்கின் அனையர் - தலையாயார் எண்அரும் பெண்ணை போன்று இட்டஞான்று இட்டதே தொன்மை உடையார் தொடர்பு. - நாலடியார் : 216. 522. உண்மை நண்பர்கள், பருவ காலத்தில் திரண்டு பொய்க்காமல் பெய்யும் மழை மேகத்திற்கு ஒப்பானவர். பொய்ம்மை நண்பர்கள், பெய்வது போலத் தோன்றிப் பெய்யாமல் அகன்று செல்லும் மேகத்திற்கு ஒப்பானவர். (12) சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய் மாரிபோல் மாண்ட பயத்ததாம்; - மாரி வறந்தக்கால் போலுமே வால் அருவி நாட; சிறந்தக்கால் சீர்இலார் நட்பு. - நாலடியார் : 232. 523. காலைப் பொழுதில் தோன்றும் நிழல் பொழுது ஏற ஏறக் குறுகிக்கொண்டே வரும். மாலைப் பொழுதில் தோன்றும் நிழல் பொழுது இறங்க இறங்க நீண்டு கொண்டே செல்லும். சிறியவர் உறவு காலை நிழலுக்கு ஒப்பானது ; பெரியவர் நட்பு மாலை நிழலுக்கு இணையானது.(13) நளிகடல் தண்சேர்ப்பநாள் நிழல் போல விளியும் சிறியவர் கேண்மை - விளிவுஇன்றி அல்கு நிழல் போல் அகன்று அகன்று ஓடுமே தொல்புக ழாளர் தொடர்பு. - நாலடியார் : 166. 524. மரத்தில் தோன்றும் அரும்பு ஒரே ஒரு முறையே மலரும்; மலர்ந்த பின்னர்க் குவியாது. குளத்தில் தோன்றும் பூ நாள்தோறும் மலர்ந்து குவியும். ஆதலால் மரப்பூப் போன்றவர் நட்பினைத் தேடிக் கொள்ளுதல் வேண்டும். குளப்பூப் போன்றவர் உறவை ஒதுக்கித் தள்ளுதல் வேண்டும்.(14) கோட்டுப்பூ போல மலர்ந்து பிற் கூம்பாது வேட்டதே வேட்டதா நட்பாக்கித் - தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை நயப்பாரும் நட்பாரும் இல். - நாலடியார் : 215. 525. நாயின் கால் விரல்கள் நெருக்கமாக உள்ளது போல் அமைந்த உறவினராகச் சிலர் இருப்பர். இருப்பினும் அவர்கள் ஈயின் கால் அளவுக்குக் கூட எந்தவோர் உதவியும் செய்யார். அத்தகையவர் நட்பால் ஆகும் பயன் இல்லை . வயலுக்கு நீர் கொண்டுவந்து உதவும் வாய்க்கால் போன்றவரை நட்பினராகக் கொள்ள வேண்டும். (15) நாய்க்கால் சிறுவிரல் போல் நன்கு அணியர்ஆயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பு என்னாம்? சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு. - நாலடியார் : 218. 526. விருப்பத்துடன் எவ்வளவு காலம் பழகி நன்மைகளை அடைந்திருந்தாலும் தன் பாகனைக் கொல்லும் தன்மையினது யானை. எளிய உதவி ஒன்றைச் செய்தவன் ஏவிய வேலையும் தாங்கி அன்புடன் வாலை ஆட்டிக் கொண்டு இருக்கும் தன்மையினது நாய். ஆதலால், யானை அனைய புல்லர்களின் நட்பினை விலக்கி, நாயனைய நல்லவர்களின் நட்பினைக் கொள்ளுதல் வேண்டும். (16) யானை அனையவர் நண்புரீதி நாய் அனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்; - யானை அறிந்து அறிந்தும் பாகனையே கொல்லும்; எறிந்தவேல் மெய்யதா வால் குழைக்கும் நாய். - நாலடியார் : 213 527. கொல்லரது குறடு இரும்பினை உலையில் போட்டு விட்டு ஒதுக்கிக் கொள்ளும். ஆனால் சூட்டுக்கோலோ இரும்பின் உடன் இருந்து அதனோடும் வேகும். குறடு போன்ற போலி நண்பினர் ஒருகாலத்தில் உறவாக இருந்து வேளை வரும்போது பிரிந்து செல்வர். சூட்டுக்கோல் போன்ற உண்மை நண்பினர் இன்பத்திலும் துன்பத்திலும் உடன் இருந்து அனுபவிப்பர். (17) முட்டிகை போல முனியாது வைகலும் கொட்டிஉண் பாரும் குற்டுபோல் கைவிடுவர்; சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே நட்டார் எனப்படு வார். - நாலடியார் : 208 528. குவளையும் அல்லியும் ஒரே குளத்தில் தோன்றினாலும் தன்மையால் அவை வேறுபடுகின்றன. குவளை நீல நிறம் உடையது. அல்லி வெண்ணிறமுடையது. கதிரோன் மறைந்த வுடன் அல்லி மலரும்; குவளை அத்தகையது இல்லை. அவற்றைப் போல் ஒத்த நண்பர்களாக இருப்பினும், உள்ளத்தில் வெவ்வேறு உணர்ச்சிகள் உடையவர்களாக இருக்கக் காணலாம். ஆகவே நண்பர்களைத் தெரிந்து தெளிதல் வேண்டும். (18) ஒரு நீர்ப் பிறந்து ஒருங்கு நீண்டக் கடைத்தும் விரிநீர்க் குவளையை ஆம்பல்ஜக் கல்லா; பெருநீரளர் கேண்மை கொளினும் நீர் அல்லார் கருமங்கள் வேறு படும். - நாலடியார் : 236 529 காய் முதிர்ந்தால் கனியாகும் ; தளிர் முற்றினால் சருகே ஆகும். அவ்வண்ணமே , நல்லோல் நட்பு நாளும் நலம் தந்து சிறக்கும். அல்லோர் நட்பு பயனின்றிக் கெடும். (19) நல்லார் செயும் கேண்மை நாடோறும் நன்றாகும் அல்லார் செயும் கேண்மை ஆகாதே - நல்லாய்கேள்! காய் முற்றின் தின்தீங் கனியாம் இளந்தளிர் நாள் போய் முற்றின் என்னாகிப் போம்? - நன்னெறி : 38 530. வேட்டை நாயின் நட்புக் கிடைத்தால், முயல் கறிக்குப் பஞ்சம் இருக்காது. ஆதலால் செல்வர் வறியர் என்று பாராமல் எவர் நட்பினை யேனும் தேடிக் கொள்ளுதல் வேண்டும். (20) தாம் நட்டு ஒழுகுதற்குத் தக்கார் எனல்வேண்டா யார் நட்பே யாயினும் நட்புக் கொளல்வேண்டும் கானட்டு நாறுங் கதுப்பினாய் தீற்றாதோ நாய்நட்டால் நல்ல முயல். - பழமொழி : 128. 531. நன்றாகப் பழகிய பின்னர் நச்சுப் பாம்பு அனைய வரிடம் இருந்தும் பிரிவது அரிது. ஆதலால் நன்றாக ஆராய்ந்து அறிந்த பின்னரே ஒருவரை நண்பராகக் கொள்ள வேண்டும். (21) மரீஇப் பலரோடு பல் நாள் முயங்கிப் பொரீஇப் பொருள் தக்கார்க் கோட்லே வேண்டும்; பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா மரீஇப் பின்னைப் பிரிவு. - நாலடியார் : 220 532. பாசி எவ்வளவு நாட்கள் கிடந்தாலும் நீரில் வேரூன்றிப் பிடிக்காது. அதுபோல் மூர்க்கர் எவ்வளவு காலம் பழகினாலும் ஊன்றிய நட்பினர் ஆகார். (22) நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்க்குள் பாசிபோல் வேர்க்கொள் ளாதே. - வெற்றிவேற்கை : 33. 533. குளத்தில் நீரற்றுப் போனவுடன் ஓடிப்போகும் பறவைக் கூட்டம் போன்றவர் உண்மை நண்பர் ஆகார். அவர், செல்வம் தீர்ந்தவுடன் ஓட்டம் பிடித்து விடுவர். (23) அற்ற குளத்தி னறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வா ருறவல்லர் - அக்குளத்திற் கொட்டியு மாம்பலு நெய்தலும் போலவே ஒட்டி யுறுவா ருறவு. - மூதுரை : 17 534. உள்ளத்தால் ஒன்று படாதவர்களுடன் உறவாடுவது ஒரே குடிசைக்குள் பாம்புடன் குடியிருப்பது போன்ற கொடுமையுடையதாகும்.(24) உடம்பா டிலாதவர் வாழ்க்கை , குடங்கருள் பாம்போ டுடனுறைந் தற்று. - திருக்குறள் : 890. 535. எருதிற்கு அமைந்த வலிமையால் அதற்கு மழுக்கை யான கொம்பு இருந்தாலும் கூர்மை மிக்கதாகக் கருதப்படுவது போல், வலிமை யற்றவராக இருந்தாலும் வலிமை மிக்கவரைச் சேரும் பொழுது அவரும் வலியவராகவே கருதப்படுவர். (25) செருக்கெழு மன்னர் திறலுடையார் சேர்ந்தார் ஒருத்தரை யஞ்சி உலைதலும் உண்டோ உருத்த சுணங்கின் ஒளியிழாய் கூறிது எருத்து வலியதன் கொம்பு. - பழமொழி : 271. 536. நெருப்புடன் சேர்ந்த பொழுது நெய்யும் நெருப்பின் வெப்பத்தைப் பெறும். அதுபோல் தீயவர்களுடன் கலந்து உறவாடினால் நல்லவர்களும் தீயவர்கள் ஆகிவிடுவார்கள். (26) நெருப்பு அழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம் எளிப்பச் சுட்டு எவ்வநோய் ஆக்கும்; - பரப்பக் கொடுவினையர் ஆகுவர் கோடாரும் கோடிப் படுவினையர் ஆகியார்ச் சார்ந்து. - நாலடியார் : 124. 537. மணமக்களை அடைந்த மாலை மாண்பு பெறும். பிணத்தை அடைந்த மாலை தன் பெருமையை இழக்கும். அது போல் எவ்வளவு தகுதி யானவர் என்றாலும் அவர் சேர்ந்தவரைப் பொறுத்துப் பெருமையும் சிறுமையும் அடைவார். (27) மணமனை சேர்மண மாலை மாண்புறும் பிணவனத் தாழி வெய்தும் பெற்றியார் கணமதிற் சேர்ந்தவர் கனங்கொண் டோங்குவர் குணமிலா ரினமுறல் குறையுண் டாக்குமே. - நீதிநூல் : 30:4 538. நீருக்குத் தனக்கென ஒரு நிறம் இல்லை. அது தான் சேர்ந்த நிலத்தின் நிறத்தையே தன் நிறமாகப் பெறும். அதுபோல் தூய உள்ளம் உடையவர்கள் தமக்கென ஒரு தன்மையினர் அல்லர். அவர்கள் நட்பாகச் சேர்ந்தவர்களைப் பொறுத்த இயல்பினராக இருப்பர். (20) நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும்; மாந்தர்க் கினத்தியல்ப தாகும் அறிவு. திருக்குறள் : 452. 539. தண்ணீர்தான் சேர்ந்த மண்ணின் நிறத்தையே தன் நிறமாகக் கொள்ளும். காற்று தான் பொருந்திய பொருளின் மணத்தையே தன்மணமாகக் கொள்ளும். அவற்றைப் போல் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என அவது அவரவர் சேர்ந்த இனத்தைப் பொறுத்ததே. (29) மண்ணியல் பாற்குண மாறுந் தண்புனல் கண்ணிய பொருள் மணங் கலந்து வீசுங்கால் புண்ணிய ராதலும் புல்ல ராதலும் நண்ணினத் தியல்பென நவில லுண்மையே. - நீதி நூல் : 30: 5. 540. கடலின் உவர் நீருடன் நன்னீர் கலந்தால் அந்நன்னீரும் உவர் நீராக மாறும். அதுபோல் உரமிக்க உள்ளமில்லாதவர் தீயவர்களுடன் உறவாடினால் அவர்களும் தீயவரே ஆவர். (30) சிப்பி முளரிசுரம் ஆறு திரைவீழ்நீர் ஒட்பத் தரளமஃதொப்பழியுண் ணீருவராம் அப்படியே மாந்த ரறிவு மினத்தியல்பால் பற்பல மாறு படும். - இன்னிசை இருநூறு : 110. 541. ஞாயிற்றின் கதிர்கள் அங்கணத்துள் வீழ்ந்தாலும் அவற்றின் தூய்மை கெடா. அக்கதிர்கள் வீழப்பெற்ற அங்கணமும் தூய்மை யடையும். அதுபோல் நல்லறிஞர் புல்லியரை அடைந் தால் அவர் புல்லியர் ஆகார். புல்லியரே நல்லவராக மாறுவர். (31) பரிதியின் கிரணமங் கணமதிற் படியினும் அரிதின்மா சணுகுறா தகலல்போ லினியநற் சரிதமில் லவர்குழாஞ் சார்ந்துபோ திக்கினுந் தூதவெம் பவமுறார் தொன்மறைக் கிழவரே. - நீதிநூல் : 5 : 11. 542. ஆராயாமல் ஒருவனை நண்பனாக ஏற்றுக் கொள்வது, நீரின் ஆழத்தில் உள்ள இரும்புத்தூணை அறியாமல் மேலே இருந்து அதன் மேல் பாய்ந்து வீழ்வதற்கு ஒப்பானது. (32) அளவறியான் நட்டவன் கேண்மையே கீழ்நீர்த் தறியறியான் பாய்ந்தாடி யற்று. - பெருந்தொகை : 378 543. உள்ளொன்று வைத்துப் புறம் போன்று பேசுவார் உலகில் பலர். ஆகவே, அத்தகையவர் உரையை உண்மையெனக் கொள்ளுதல், கண்ணை மூடிக் கொண்டு உயரமான சுவர்மேல் நடந்து செல்வது போன்றது. (33) அத்திசூ ழுலகிற் சில்லோ ரகத்தொன்றும் வாக்கிலொன்றும் வைத்திதஞ் சொல்லா லியாவும் வனச்செவி யேற்ப தன்றிச் சத்திய மெனக்கொண் டேகல் சக்கினை மூடி நீண்ட பித்தகை யேறிச் செல்லும் பேதைமை நிகர்க்கு மாதோ. - நீதிநூல் : 45: 5. 544 வாழைக்காயைப் பழுக்க வைப்பதற்காகவேப்பிலையை நிரம்பப் போட்டு அதனுள் பொதிந்து வைப்பர். ஆனாலும், வாழைப்பழம் இனிப்ப தன்றிக் கசப்பது இல்லை. அதுபோல் திறமிக்க நல்லவர்கள் தீயவர்களின் இடையே இருந்தாலும் கெட்டுப் போகமாட்டார். (34) வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன் தீஞ்சுவை யாதும் திரியாதாம்; - ஆங்கே இனம்தீது எனினும் இயல்பு உடையார் கேண்மை மனம்தீது ஆம் பக்கம் அளிது. - நாலடியார் : 24. 545. வெண்பட்டு கரியைச் சேர்ந்தால் கருநிறம் ஆகிவிடும். கரி வெண்பட்டைச் சேர்ந்தாலும் அதன் நிறம் மாறாது. அவ்வாறே நல்லோர் தீயோரைச் சார்ந்தால் எளிதில் கெட்டு விடுவார். தீயோர் நல்லோரைச் சார்ந்தால் தம் இயல்பில் மாறார். (35) கரிநிற முறும் வெளிறுடைகரி யணுகின் சொரிகறி கலையுறு சுசியினை யுறுமோ பெரியவர் குணநிலை பெறலரி தறமே யிரிகல ரொடுகல வறவுறும் இழிபே. - நீதி நூல் : 30:2 546. தூய்மை அற்ற இடத்தில் விழுந்த கனி தன் தூய்மையை இழந்து போகும். அதுபோல் கீழோரைச் சேர்ந்த நல்லோரும் தம் நற்றன்மையை இழந்து புறக்கணிக்கப்படுவர். (36) மனிதர்கோள் மருவுநர் தமைக்கொண் டோதுவர் புனிதமில் இடையின் வீழ் பொருவில் வாசத்தீங் கனியையுந் தள்ளுவர் கயவர் தம்மைச்சேர் இனியநற் குணத்தரும் இகழ்ச்சி கொள்வரே. - நீதி நூல் : 30: 3. 547. அறிவிலாரைச் சேர்ந்தால் அறிவுடையவர்க்கு உரிய பெருமை அகலும். மெல்லிய மிதப்பில் வைக்கப்பெற்ற வலிய பொருளுக்கும் 'கனம்' இருப்பது இல்லையே! (37) கல்லா அறிவிற் கயவர்பால் கற்றுணர்ந்த நல்லார் தமது கனம் நண்ணாரே - வில்லார் கணையிற் பொலியும் கருங்கண்ணாய் நொய்தாம் புணையிற் புகும் ஒண் பொருள். - நன்னெறி : 25. 548. செல்வர், வறியவரைப் பொருட்டாக எண்ணி உறவாடுதல் இலர். ஒருவேளை, அவர்கள் உறவாடினாலும் அறிவுடையோர் அறிவிலியைப் பொருட்டாக எண்ணி உறவாடார். அவ்வாறே உறவாடினாலும் அவர்கள் உறவு தாமரை இலையில் பட்ட நீர் போல் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும். (38) வறியரைச் செல்வர் மதித்துறவு கொள்ளல் உறினு மறிவுடையார் பேதையரை ஒன்றார் அறிதுமவர் சேர்க்கையெனின் அம்புயநீர் சேரப் பெறுமுறவு போலாம் பிற. இன்னிசை இருநூறு : 157. 549. புரையோடிய புண்ணைக் கருவி கொண்டு அறுக்காமல் மூடிவைக்க மாட்டார். முகத்தால் நட்புக் கொண்டு அகத்தால் மாறுபட்டவர் புரையோடிய புண் போன்றவர். அவர்கள் மேல் இரக்கம் காட்டாமல் விட்டொழித்தல் வேண்டும். (39) புறம் நட்டு அகம் வேர்ப்பார் நச்சுப் பகைமை வெளியிட்டு வேறாதல் வேண்டும் கழிபெரும் கண்ணோட்டம் செய்யேல் கருவியிட்டு ஆற்றுவார் புண்வைத்து மூடார் பொதிந்து. - நீதிநெறி விளக்கம் : 56. 550. தன் கைவளைத் தன் பகைவன் பறித்துக் கொண்டால் அவன் அவ்வாளைக் கொண்டே தன்னை அழித்து விடுவான். அத்தகைய கை வாளுக்கு ஒப்பானவர் அறிவிலார். அவர்களுடன் நட்புக் கொள்வதை விடுதல் வேண்டும். (40) ஓக்கிய ஒள்வாள் தன் ஒன்னார்கைப் பட்டக்கால் ஊக்கம் அழிப்பதூஉம் மெய் ஆகும் - ஆக்கம் இருமையும் சென்று சுடுதலால் நல்ல கருமமே கல்லார்கண் தீர்வு. - நாலடியார் : 129 551. கரும்பினை அடிப்பகுதியில் இருந்து நுனிப்பகுதிக்குத் தின்று கொண்டு வந்தால் வரவரச் சுவை குறைந்து கடைசியில் 'சப்'பென்று இருக்கும். அதுபோல் பண்பும் அறிவும் இல்லா தவர் உறவு தொடக்கத்தில் நன்றாக இருந்தாலும் வரவரக் கெட்டுவிடும். (41) கனைகடல் தண்சேர்ப்ப கற்று அறிந்தார் கேண்மை நுனியின் கரும்புதின் றற்றே; - நுனிநீக்கித் தூரின்தின் றன்ன தகைத்து அரோ பண்புஇலா ஈரம் இலாளர் தொடர்பு - நாலடியார் : 138. 552. சருக்கரையுடன் சேர்ந்து கிடக்கும் மணலைச் சருக்கரை என்று எவரும் தின்னமாட்டார். அபோல் தக்கவர்களுடன் சேர்ந்திருக்கும் ஒரே ஒரு காரணத்திற்காகத் தகுதி இல்லாதவர்களைத் தக்கவர் என்று அறிவுடையோர் கொள்ளார். (42) தக்காரோ டொன்றித் தமராய் ஒழுகினார் மிக்காரால் என்று சிறியாரைத் தாம்தேறார் கொக்கார் வளவய லூர தினலாமோ அக்காரம் சேர்ந்த மணல். - பழமொழி : 91. 553. பயன்மிக்க பலாமரத்தை வெட்டி எறிந்துவிட்டு அவ்விடத்தில் காஞ்சிரஞ் செடியை (எட்டியை) அறிவுடைய எவரும் நட்டுவைக்கமாட்டார். அதுபோல் மேன்மக்களை நீக்கிக் கீழ்மக்களை நண்பராக அறிவுடையார் கொள்ளார். (43) ஊழாயி னாரைக் களைந்திட்டு உதவாத கீழாயினாரைப் பெருக்குதல் – யாழ்போலும் தீஞ்சொல் மழலையாய் தேனார் பலாக்குறைத்துக் காஞ்சிரை நட்டு விடல். - பழமொழி : 104 554. பசு நெய் இருந்த கலத்தில், வேப்ப எண்ணெயை எவரும் விட்டு வைக்கமாட்டார். அதுபோல் நல்ல நண்பர்களை அகற்றித் தீய நண்பர்களை ஏற்றுக் கொள்ளார் அறிவுடையார். (44) ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து வேம்பு அடு நெய்பெய் தனைத்து அளே - தேம்படு நல்வரை நாட்! நயம் உணர்வார் நண்புஒரீஇப் புல் அறிவி னாரொடு நட்பு. - நாலடியார் : 239. 555. வைக்கோல் போருக்குள் வைக்கப்பட்ட நெருப்பு எளிதில் வெளித் தோன்றாமல் உள்ளேயே எரிந்து கொண்டு சென்று போர் முழுமையையும் சாம்பலாக்கிவிடும். அது போல் புல்லிய நட்பும் உண்மையாக வளராமல் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்து கெடுத்துவிடும். (45) பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல் ஒருபொழுதும் செல்லாதே நந்தும் - அருகு எல்லாம் சந்தன நீள்சோலைச் சாரல் மலைநாட்! பந்தம் இலாளர் தொடர்பு. - நாலடியார் : 234. 556. கயவர்கள் நட்பில் இருந்து விலகினால் உடைந்த கல்லைப் போல் என்றும் ஒட்டார்; ஓரளவு நல்ல தன்மையுடையவர்கள் பிரிந்தால் பொன்னைப்போல் பிறரால் மீண்டும் ஒட்டிக்கொள்வர்; உயர்ந்தவர்கள் நட்பில் இருந்து பிரியார்; பிரியினும் நீரில் கிழித்த கோடுபோல் உடனே ஒட்டிக் கொள்வர். (46) கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப் பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே - விற்பிடித்து நீர்கிழிய வெய்த வடுப்போல் மாறுமே சீரொழுகு சான்றோர் சினம். - மூதுரை : 23. 557. செப்பில் இருந்து சாந்தை எடுப்பதற்குத் திறந்த ஒருவன் பாம்பு ஆங்கிருந்து வெளியேறக் காண்பது போன்றது நல்லவர் என நம்பி நட்புக் கொள்ளப் பெற்ற ஒருவர் தீயவராகப் பின்னர்க் காணப் பெறுவது. (47) சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச் சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் - சார்ந்தாய் கேள்; சாந்தகத்து உண்டு என்று செப்புத் திறந்து ஒருவன் பாம்பு அகத்துக் கண்டது உடைத்து - நாலடியார் : 126. 558. ஒன்றுபட்ட உள்ளம் இல்லாமல் ஏற்ற பொழுதில் கெடுத்துவிட நினைப்பவன் நட்பு, கொல்லர் உலைக்களத்தில் காய்ச்சப்பெற்ற இரும்பை அடித்து நைப்பதற்குப் பயன்படும் பட்டடைக்கல் போன்றது. (48) சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. - திருக்குறள் : 21 559. ஓருயிர் உடையவர் போல் உறவாடிப் பின்னர்த் தம் வாய்ப்புக்கு உரிய பொழுதில் ஒதுங்கிச் செல்பவர் செயல் , மாடியில் ஒருவரை ஏறவிட்டு அவர் ஏறியவுடன் அவர் அறியாமலே ஏணியை எடுத்து விடுவது போன்றது ஆகும். (49) எய்ப்புழி வைப்பாம் எனப் போற்றப் பட்டவர் உற்றுழி ஒன்றுக் குதவலார் பைத்தொடீஇ அச்சிடை யிட்டுத் திரியின் அதுவன்றோ மச்சேற்றி ஏணி களைவு. - பழமொழி : 136. 560. சரியான பொழுதில் நட்பை விட்டு அகன்று செல்பவன் போர்க் களத்தில் பகைவன் முன்னர் நிற்கும் போது தன் மேல் இருக்கும் வீரனைக் கீழே வீழ்த்திவிட்டுச் செல்லும் முரட்டுக் குதிரைக்கு ஒப்பானவன். (50) அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை. - திருக்குறள் : 814. 561. பயன் கருதி ஒருவனுடன் நட்புக் கொண்டு, பயன் இல்லாத போது விலகிச் செல்பவன், கள்வனுக்கும் விலை மகளுக்கும் இணையானவன்.(51) உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும், கள் வரும் நேர். - திருக்குறள் : 813. இனம் போன்றினமல்லார் கேண்மை, மகளிர் மனம் போல வேறு படும். - திருக்குறள் : 22. 562. நெல்லுக்கு உமி உண்டு; நீருக்கு நுரை உண்டு; பூவிற்குப் புற இதழ்கள் உண்டு; அவற்றைப் போல் உயரிய நண்பர் இடத்தும் குறைகள் இருக்கலாம். அவற்றைப் பொறுத்துக் கொள்வது நட்பு வளர்வதற்குரிய வழியாகும். (52) நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும்; நெல்லுக்கு உமிஉண்டு , நீர்க்கு நுரை உண்டு; புல் இதழ் பூவிற்கும் உண்டு. - நாலடியார் : 221. 563. தீப்பற்றி எரிதலால் வீடும், வீட்டில் இருந்த பொருள் களும் எரிந்து போகின்றன; அதற்காகத் தீயை மூட்டாமலே இருந்து விடுகின்றோமா? இல்லை. அதுபோல் தகுதி வாய்ந்த நண்பர் சில வேளைகளில் ஏதேனும் தவறு செய்து விட்டாலும் அத்தவற்றை நினைத்து ஒதுக்குதல் கூடாது. (53) இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப் பொன்னாகப் போற்றிக் கொள்ளல் வேண்டும் – பொன்னொடு நல்இல் சிதைத்த நாள்தொறும் நாடித்தம் இல்லத்தில் ஆக்குத லால். - நாலடியார் : 225. 564. தம் கன்று செத்தொழியுமாறு மாட்டில் எவரும் பால் கறவார். அதுபோல் தம்மால் ஆராய்ந்து கொள்ளப்பட்ட நண்பர்களிடம் கண்கண்ட குற்றம் இருந்தாலும் அறிவுடையோர் சினம் கொண்டு நட்பினைக் கொடுக்க மாட்டார். (54) நண்பொன்றித் தம்மாலே நாட்டப்பட் டார்களைக் கண்கண்ட குற்றம் உளவெனினும் - காய்ந்தீயார் பண்கொண்ட தீஞ்சொல் பணைத்தோளாய் யாருளரோ தங்கன்று சாக்கறப் பார். - பழமொழி : 131. 565. எவராவது கண்ணைக் குத்தியது கருதித் தம் கையை வெட்டியது இல்லை. அதுபோல் உண்மை நண்பர்கள் அறியாமல் துன்பப்படுத்தி விட்டால் அதற்காக அவர்களை வெறுத்து ஒதுக்கார். (55) இன்னா செயினும் விடுதற்கு அரியாரைத் துன்னளத் துறத்தல் தகுவதோ? - துன்ன அருஞ்சீர் விண்குத்தும் நீள்வரை வெற்ப களைபவோ கண்குத்திற்று என்று தம் கை? - நாலடியார் : 226. 566. கால் இடறிக் கீழே தம்மை வீழ்த்தினாலும் அதனை வெட்டார். பல் நாவைக் கடித்துத் துன்பப்படுத்தினாலும் அதனை உடையார். அவ்வாறே நண்பர்களால் தீமை உண்டானால் கூட உண்மை நட்பியல் அறிந்தோர் அவர்க்குக் கேடு செய்யார். (56) நட்டாராற் கேடு வரலுமுள நாடாமே ஓட்டா ரெனச் சினந் தூறவர்க் கெண்ணற்க வெட்டார் நெறிபிழைத்து விழினுங்கால் நாக்கடிக்கப் பட்டாலும் தட்டார்தம் பல். - இன்னிசை இருநூறு : 5. 567. கோடரியும் தன்னொடு பொருந்தியுள்ள காம்பாகிய மரத்தை வெட்டுவது இல்லை. அவ்வாறு பகைவரே எனினும் நெருங்கியவரை அழிக்காமல் காப்பது சிறந்தோர் கடமை. (57) கொல்லும் பயன் குறித்துக் கோடரி யெம்மரனும் கொல்லாதா லஃதுறிற் காம்பெனக் கூடாரை நல்ல குறித்தட னன்றெனினு நாடியவர் புல்லியக்கால் காக்க புரிந்து. - இன்னிசை இருநூறு : 166. 568. இழிவான கனாவைக் கண்டவர் அதனைப் பிறரிடம் உரையார். அதுபோல், ஆராய்ந்து கொள்ளப் பட்டுப் பின்னர்த் தீயர் என அறிந்த நண்பரை அறிவுடையார் பிறரிடம் பழித்துச் சொல்லார். (58) கொழித்துக் கொளப்பட்ட நண்பி னவரைப் பழித்துப் பலர்நடுவண் சொல்லாடார் என்கொல் விழித்தலரும் நெய்தல் துறைவா உரையார் இழித்தக்க காணிற் கனா. - பழமொழி : 130. 569 வெள்ளம் பெருக்கெடுத்துப் பன்முறை அணையை உடைத்துச் சென்றாலும் மீண்டும் மீண்டும் கரையைப் போட்டு நீரைத் தேக்கிவைக்கவே முயல்வர். அதுபோல் நண்பர் தவறான வழியில் சென்றால் அவரைப் பன்முறை வற்புறுத்தி நல்வழியில் நிறுத்துவதே கடமை ஆகும். (59) இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப் பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும் - பொன்னொடு நல்இல் சிதைத்ததீ நாள்தொறும் நாடித்தம் இல்லத்தில் ஆக்குத லால். - நாலடியார் : 225. 570. தமக்குள்ள நோயைப் போக்கிக் கொள்ள விரும்புபவர் அதனை ஒளிக்காமல் மருத்துவரிடம் கூறுவர். அதுபோல், 'நம் துயரைத் தீர்ப்பார்' என்ற கருதப்பெறும் ஒருவரிடம் அறிவுடையார் தம் துயரை உரைப்பர். (60) தெற்றப் பரிந்தொருவர் தீர்ப்பரெனப் பட்டார்க்கு உற்ற குறையை உரைப்பதாம் - தெற்ற அறையார் அணிவளையாய் தீர்தல் உறுவார் மறையார் மருத்துவர்க்கு நோய். - பழமொழி : 133. 571. மக்கள் இல்லாத காட்டுப்புறத்தில் எறிக்கப் பட்ட நிலவொளியால் எத்தகைய பயனும் இல்லை. அதுபோல் நெஞ்சார்ந்த அன்புடைய நண்பர்க்கு உதவி செய்யாதவர்களது நட்பால் ஒரு சிறு பயனும் இல்லை. (61) தாமகத்தால் நட்டுத் தமரென் றொழுகியக்கால் நாணகத்துத் தாமின்றி நன்றொழுகா ராயினென் மான்மானும் கண்ணால் மறந்தும் பரியலரா கானகத் துக்க நிலா. - பழமொழி : 139. 572. ஒருவன் உடை அவிழ்ந்தபோது அவனது கை ஓடிப்போய் உதவுவது போல் நண்பனுக்குத் துன்பம் வந்தபோது உடனே சென்று உதவுவதே உண்மையான நட்பாகும். (62) உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. - திருக்குறள் : 788. 573. நிரம்பப் பெய்தாலும் பனி நீரால் குளம் நிரம்பி விடுவதில்லை. அதுபோல் நலமிக்க சொல்லைச் சொல்வதால் மட்டும் நண்பன் துயரம் தீர்ந்து விடாது. அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தல் வேண்டும். (63) இனியாரை உற்ற இடர்தீர் உபாயம் முனியார் செயினும் மொழியால் முடியா துனியால் திரையுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப பனியால் குளம் நிறைதல் இல். பழமொழி : 127. 574. நண்பர்கள் நலிவடைந்த பொழுது அவர்களுக்குச் சிறிதளவு கூட உதவாமல் அவர்கள் இறந்து போன பின்னர்ப் பல்வகைச் சிறப்புக்களை அவர்கள் பெயரால் செய்வது, விழா நடந்து முடிந்த ஊருக்கு விழாக் காட்டுவதற்காகத் தம் மக்களைத் தோளில் எடுத்துக் கொண்டு போவது போன்றதாகும். (64) பாப்புக் கொடியாற்குப் பால் மேனி யான்போலத் தாக்கி அமருள் தலைப்பெய்யார் - போக்கி வழியராய் நட்டார்க்கு மாதவம்செய் வாரே கழிவிழாத் தோளேற்று வார். - பழமொழி : 137. 575. நெல்லின் உமி சிறிதளவு விலகினாலும், அது முன்னைப் போல் அரிசியுடன் ஒன்றிப் பொருந்தாது அது போல் பிரிதற்கரிய நண்பர்கள் ஒரு காரணத்தால் பிரிந்து விட்டார்கள் . என்றால் அவர்கள் நட்பு முன்னைப்போல் ஒன்றுபட்டதாக இராது. (65) நீக்கம் அறும் திருவர் நீங்கிப் புணர்ந்தாலும் நோக்கின் அவர் பெருமை நொய்தாகும் - பூக்குழலாய் நெல்லின் உமி சிறிது நீங்கிப் பழமைபோல் புல்லினும் திண்மைநிலை போம். - நன்னெறி : 5. 576. செப்பினது மூடி வெளியே புலப்படாதவாறு செப்புடன் கூடியிருந் தாலும் பொருந்தாமல் தனித்திருப்பது போல், எவ்வளவு கூடியிருந்தாலும் உட்பகை உடையவர் உரிய பொழுது வரும் பொழுது பிரிந்து விடுவர். (66) செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி. - திருக்குறள் : 87. 577. சுவராகத் திரட்டி வைத்த போதும், உவர்மண் உள்ளே வெதும்பி உதிர்ந்து போகும். அதுபோல் பகைவரை எத்துணை உறவாகக் கொண்டு, இணைந்து நடந்தாலும் அவர் பகைவராக இருப்பாரே அன்றி நண்பர் ஆகார். (67) தமரல் லவரைத் தலையளித்தக் கண்ணும் அமரக் குறிப்பவர்க் காகாதே தோன்றும் சுவர் நிலம் செய்தமையக் கூட்டியக் கண்ணும் உவர்நிலம் உட்கொதிக்கு மாறு. - பழமொழி : 200. 578. மண்ணின் ஆழத்தில் மறைந்து கிடந்த கிழங்கு மழை பெய்தவுடன் முளைத்துத் தழைக்கும். அதுபோல், பழம் பகையும் உரிய வாய்ப்பு வரும்போது கொழுந்து விட்டு எரியவே செய்யும் (68) தழங்கு குரல் வானத்துத் தண்பெயல் பெற்றால் கிழங்குடைய வெல்லாம் முளைக்குமோ ராற்றால் விழைந்தவரை வேர்சுற்றக் கொண்டொழுகல் வேண்டா பழம்பகை நட்பாதல் இல். - பழமொழி : 296. 579. நிழலுடன் அமைந்த நீர் பருகுவார்க்குக் கேடு செய்யும். அந் நீரைப் பருகாமல் விலக்குதல் வேண்டும். அதுபோல் உட்பகை உடையவரும் கேடு செய்வர்; அவரையும் விலக்குதல் வேண்டும். (69) நிழல் நீரும் இன்னாத இன்னா; தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின். - திருக்குறள் : 81. 580. முள்மரத்தைச் சிறிதாக இருக்கும் பொழுதே வெட்டி விடுதல் வேண்டும். இல்லையேல் அது வளர்ந்து வெட்டுவார் கையையும் நோவச் செய்யும், அதுபோல் பகைவர் வலுப்பெற்று விட்டால் கேடு விளைப்பர். (70) இளைதாக முள்மரம் கொல்க; களையுநர் கைகொல்லும் காழ்த்த விடத்து. - திருக்குறள் : 879. 581. எட்காயின் பிளவுபோல் சிறிய அளவில் உட்பகை இருப்பினும், அது பின்னர் விரிவடைந்து குடியைக் கெடுக்கத் தவறாது. (71) எட்பக வன்ன சிறுமைத்தே யாயினும் உட்பகை உள்ளதாம் கேடு. - திருக்குறள் : 29. 582. அரத்தினால் அராவப்படும் இரும்பு தேய்வது போல், உட்பகை உள்ள குடியும் கெட்டு அழியத் தவறாது. அரம்பொருத பொன்போலத் தேயும், உரம்பொருது உட்பகை உற்ற குடி. - திருக்குறள் : 28. 583. உட்பகைக்கு அஞ்சி முன்னாகவே தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். இல்லையானால் உட்பகை, உள்வாங்கு மண் போல் வெளிப் படாமல் கெடுத்து விடும். (73) உட்பகை அஞ்சித்தற் காக்க ; உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும். - திருக்குறள் : 83. 584. தவளை குதித்துச் செல்லும் பொழுது உண்டாகும் நீர் அசைவால் பெரிய யானையின் நிழலைக் காண்பதும் அரிதாக இருக்கும். அதுபோல் பகை சிறிதாக இருந்தாலும் அதனால் உண்டாகும் விளைவு பெரிதாக இருக்கும்.(74) சிறிய பகைஎனினும் ஓம்புதல் தேற்றார் பெரிதும் பிழைபாடு உடையார் - நிறையகத்து ஆழ்நீர் மடுவில் தவளை குதிப்பினும் யானை நிழல்காண் பரிது. - நீதிநெறி விளக்கம் : 53. 585. மெல்லிய மயில் தோகையே எனினும் அளவிறந்து ஏற்றினால் வண்டியின் இரும்பு அச்சும் ஒடிந்து போகும். அதுபோல் பகைவர் வலிமை இல்லாதவர் எனினும் பலர் கூடிச் சேர்ந்து கொண்டனர் என்றால் வலிய ஒருவனையும் அழித்து விடுவர். (75) பீலிபெய் சாகாடும் அச்சிறும், அப்பண்டம் சால மிகுத்துப் பெயின். - திருக்குறள் : 475. 586. வில்லின் வணக்கம் (வளைவு) தீமை செய்தற்கு முன்னோடியானது. அதுபோல், பகைவன் கூறும் சொல் வணக்கம் பின்வரும் தீமைக்கு முன்னோடியானது. (76) சொல்வணக்கம் ஒன்னார்க்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். - திருக்குறள் : 27. 587. உட்பகை உள்ளவரைப் பொருந்தி வாழ நினைப்பது விளக்குடன் விட்டில் விளையாட நினைப்பது போன்றதே. (77) உளத்தால் பகைத்தாரை ஓராது நட்டல் வளத்தோ டுயிர் போக்கும் - அந்தோ வயவர்க் களப்பில் புறப்பகை யால் துயரென் அஃதே விளக்கின்கண் விட்டில் விழல். - இன்னிசை இருநூறு : 164. 588. நேரிடையாக மோதுபவர் வாள் போன்ற பகைவர் ; மறைமுகமாகத் தாக்குபவர் கேள் (உறவு) போன்ற பகைவர்; வாள் போன்ற பகைவரினும் கேள் போன்ற பகைவர்க்கே அஞ்சி அகலுதல் வேண்டும். (78) வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு. - திருக்குறள் : 882. 589. முகத்தைக் கண்ட அளவிலேயே வெறுத்து ஒதுக்கு பவர்களின் அகத்தில் (உள்ளத்தில்) புகவேண்டும் என்று ஆசைப்படுவது, நல்ல சாலை யிலேயே பெற்றோர் கையைப் பற்றிக் கொண்டு நடக்க மாட்டாத பிள்ளை கரடு முரடான கொடிய பாலை வழியில் அவர்கள் பின்னே நடந்து வர விரும்புவது போன்றது. (79) முகம்புறத்துக் கண்டால் பொறுக்கலா தாரை அகம்புகுது மென்றிரக்கும் ஆசை இருங்கடத்துத் தக்க நெறியிடைப் பின்னும் செலப்பெறார் ஒக்கலை வேண்டி அழல். - பழமொழி : 290. 590. ஒளி மங்கிய கண்ணைப் பார்க்கிலும் குருட்டுக் கண்ணே நல்லது. அதுபோல் பழிபாவங்களுக்கு அஞ்சாமல் அடுத்துக் கொடுக்க இருக்கும் பகைவர்களினும் நேரிடையில் தாக்க நிற்கும் பகைவரே நல்லர். (80) இம்மைப் பழியும் மறுமைக்குப் பாவமும் தம்மைப் பரியார் தமரா - யடைந்தாரின் செம்மைப் பகைகொண்டு சேராதார் தீயரோ? மைம்மைப்பின் நன்று குருடு - பழமொழி : 298. 591. பாம்பு, புற்றுக்குள் மறைந்து பாதுகாப்புடன் இருந்தாலும் வானத்தில் தோன்றும் இடியின் ஒலியைக் கேட்ட அளவில் அஞ்சி நடுங்கும். அதுபோல் பெரியவர்களின் பகைக்கு ஆளானவர்கள் எத்தகைய அரணுக்குள் பதுங்கிக் காப்பாக இருந்தாலும் பிழையார். (81) விரிநிற நாகம் விடர்உள தேனும் உருமின் கடுஞ்சினம் சேண்நின்றும் உட்கும்; அருமை உடைய அரண்சேர்ந்தும் உய்யார் பெருமை உடையார் செறின். - நாலடியார் : 164. 592. பகைவரை வென்ற அளவில் நிற்காமல் பகைமையின் வேரையும் அறுத்து எறிவது, நெல்லரிந்த பின் அவ்விடத்தில் நீர்ப்பாய்ச்சி உழுது அரிதாளையும் பெயர்த்து மண்ணோடு மண்ணாக்குவது போன்றது. (82) பொருந்தா தவரைப் பொருதட்ட கண்ணும் இருந்தமையா ராகி இறப்ப வெகுடல் விரிந்தருவி வீழ்தரும் வெற்ப அதுவே அந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு. - பழமொழி : 299. 593. வாய்த்த ஒருவரை வஞ்ச நெஞ்சத்தால் கொல்ல முயல்பவர் நீண்டு வளர்ந்த பனைமரத்தைத் தம் மேல் விழுமாறு தாமே வெட்டும் பேதையர் போன்றவர். (83) மெய்ம்மையே நின்று மிக நோக்கப் பட்டவர் கைம்மேலே நின்று கறுப்பன செய்தொழுகிப் பொய்ம் மேலே கொண்டவ் விறைவற்கொன்றார் குறைப்ப தம் மேலே வீழப் பனை. - பழமொழி : 280. 594. எலிகள் வீட்டில் இருப்பதால் தான் பூனை பாலூட்டிப் பேணி வளர்க்கப்படுகிறது. அதுபோல், பகை இருப் பதால் தான் வீரர்கள் பேணிக் காக்கப்படுகின்றனர். ஆதலால் வீரங்காட்டாத போது அவர்களை எவரும் பொருட்டாக எண்ணார். (84) தன்னின் வலியானைத் தானுடைய னல்லாதான் என்ன குறையன் இளையரால் - மன்னும் புலியிற் பெருந்திறல வாயினும் பூசை எலியில் வழிப்பெறா பால். - பழமொழி : 324. 595. ஆந்தை இருட்டுக்குள் இருந்தாலும் அச்சத்தினால் வெளிச்சத்தில் இருப்பதாக நினைத்துத் துன்புறும். அதுபோல் சிறந்த மதிலுக்குள் இருந்தாலும் வலிமை இல்லாதவர் பாதுகாப்பின்றி இருப்பதாக அஞ்சிப் பகைவர் கைப்பட்டு அழிவர். (85) இஞ்சி அடைத்துவைத் தேமாந் திருப்பினும் அஞ்சி அகப்படுவார் ஆற்றாதார் - அஞ்சி இருள்புக் கிருப்பினும் மெய்யே வெரூஉம்புள் இருளிலிருந்தும் வெளி. - பழமொழி : 320. 596. பாம்பையும் கொல்லும் மயில் ஓந்தியைக் கண்டு அஞ்சுவதும் உண்டு. அதுபோல் எளியர் சில வேளைகளில் வலியரை வெல்லுவதும் உண்டு. (86) களிமயில் கோம்பியை கண்டஞ்சு மன்றே எளியர் வலியரை எற்றலு முண்டே விளியுங் கொடும்புலியாற் கற்றாவும் வென்றி ஒளியில் கொடியார்க்கும் உண்டு. - இன்னிசை இருநூறு : 165. 10. பெருமை 597. வலிய இரும்பையும் அராவும் அரத்தைப் போன்ற மூளைக் கூர்மை உடையவர் என்றாலும் மக்கட் பண்பு இல்லாதவர் மக்கள் ஆகார். மரம் போன்றவரே ஆவர். (1) அரம்போலும் கூர்மைய ரேனும், மரம் போல்வர் மக்கட்பண் பில்லா தவர். - திருக்குறள் : 997. 598. கொடியவர்களையும் மக்கள் என்று கூறுவது, இடிபோல் கொல்லும் தன்மை வாய்ந்த வெடியுப்பினை நன் மருந்து என்று கூறுவது போன்றது. (2) படியின்மா னிடர்மிகு பண்பு ளோரலாற் கொடியரை நரரெனக் கூறல் பாரெலாம் இடியெனக் கொலைத்தொழி லியற்றுந் தீவெடிப் பொடியினை மருந்தெனப் புகல லொக்குமே. - நீதிநூல் : 33 : 2. 599. கருப்பூரமும் உப்பும் தோற்றத்தால் ஒப்புடையதாக இருக்கும். எனினும் தன்மையால் ஒத்த தன்றாம். அவ்வாறே, நல்வினை செய்பவரும் தீவினை செய்பவரும் உருவத்தால் ஒப்புடையவர் எனினும் செயலால் வேறு பட்டவரே. (3) கர்ப்பூரம் போலக் கடலுப்பு இருந்தாலும் கர்ப்பூரம் ஆமோ கடலுப்பு - பொற்பூரும் புண்ணியரைப் போல் இருந்தாலும் புல்லியர்தாம் புண்ணியர் ஆவாரோ புகல். - நீதி வெண்பா : 33 600. புழுதியிலே கிடந்தாலும் அதனுடன் ஒட்டாமல் மணி பொலிவுடன் ஒளிவிட்டு விளங்கும். அதுபோல் ஆயிரம் பேர்களின் இடையே இருந்தாலும் சால்பு உடையவர்கள் மிகத் தெளிவாக அறியப் பெறுவர். (4) நீறுஆர்ந்தும் ஒட்டா நிகரில் மணியேபோல் வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகித் தாறாப் படினும் தலைமகன் தன்னொளி நூறா யிரவர்க்கு நேர். - பழமொழி : 69. 601. மணி, சேறு படிந்து மங்கிக் கிடந்தாலும் ஆய்தல் வல்லவர்கள் எளிதில் அதனைக் கண்டுபிடித்து விடுவர். அதுபோல் உயர் குடியில் பிறந்த வர்கள் எவ்வளவு வறுமையால் நலிவடைந்து இருந்தாலும் தக்கவர்களால் எளிதில் அறியப் பெறுவர். (5) இணரேறங்கி வந்தாரை என் உற்றக் கண்ணும் உணர்பவர் அஃதே உணர்ப - உணர்வார்க்கு அணிமலை நாட்! அளறாடிக் கண்ணும் மணிமணி யாகி விடும். - பழமொழி : 72 602. துறந்த பெருமக்களின் பெருமை இவ்வளவினது என்று கூறப் புகுவது, உலகில் இறந்த உயிர்களையெல்லாம் எண்ணப் புகுந்தது போன்ற முடியாத செயலாகும். (6) துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை எண்ணிக்கொண் டற்று - திருக்குறள் : 22 603. உள்ளம் விரிவடைந்தவர்கள் உலகக் குடிகள் என்று சொல்லத் தக்கவர். உள்ளம் விரியாத பிறர் இருள் மிக்க குகை களில் வாழும் விலங்குக் குடிகள். (7) உள்ளம் விரிந்தோர் உலகக் குடிமற்றோர் எள்ளும் குகைக்கே இருப்பு. - கைவிளக்கு : 9:20 604. குளத்து நீரைக் கரைகாக்கும்; கடல் நீரைக் கரை காப்பது இல்லை. சிறியவர்க்குத் தான் பழி உண்டாகாமல் காப்பவர் வேண்டும்; பெரியவர்க்கு வேண்டுவது இல்லை. (8) எள்ளாது இருப்ப இழிஞர்போற் றற்குரியர் விள்ளா அறிஞர் அது வேண்டாரே - தள்ளாக் கரைகாப்பு உளது நீர் கட்டுகுளம் அன்றிக் கரைகாப்பு உளதோ கடல்? - நன்னெறி : 33. 605. நீரின் ஆழத்தின் அளவே நீரிப்பூவின் தண்டின் நீளமும் இருக்கும். அதுபோல் மாந்தரது உறுதியான உள்ளத்தின் அளவே உயர்ச்சியும் இருக்கும். (9) வெள்ளத் தனைய மலர்நீட்டம்; மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு. - திருக்குறள் : 595. 606. இருளே உலகத்து இயற்கையாக உள்ளது. அவ்விருளை அகற்றும் கைவிளக்காக அறிவுடைமை உள்ளது. கை விளக்கின் நெய்யாக அருளுடைமை உள்ளது; நெய்யைத் தந்த பாலைப் போன்ற தூய ஒழுக்கத்தவரே இன்ப உலகம் அடைவர். (10) இருளே உலகத்து இயற்கை ; இருள் அகற்றும் கைவிளக்கே கற்ற அறிவுடைமை; - கைவிளக்கின் நெய்யேதன் னெஞ்சத்து அருளுடைமை; நெய்பயந்த பால்போல் ஒழுக்கத் தவரே பரிவில்லா மேல்உலகம் எய்து பவர். - அறநெறிச்சாரம் : 194. 607. கடல் பரந்தது ; ஊற்று நீர் சுருங்கியது. இருப்பினும் ஊற்று நீர் பயன்படுவது போல் கடல் நீர் பருகுவதற்குப் பயன் படுவது இல்லை. ஆதலால் உருவினைக் கண்டு ஒரு முடிவுக்கு வருதல் வேண்டாம். (11) மடல் பெரிது தாழை மகிழினிது கந்தம் உடல் சிறிய ரென்றிருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல் உண்ணீ ரு மாகி விடும். - மூதுரை : 12. 608. தாழையின் பூமடல் பெரிது; மகிழம் பூ சிறியது. எனினும் தாழையினும் மகிழே மணமிக்கது. ஆகவே உருவினைக் கொண்டு ஒருவரை மதிப்பிட வேண்டா. (12) மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம் உடல் சிறிய ரென்றிருக்க வேண்டா - கடல்பெரிது மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல் உண்ணீ ரு மாகி விடும். - மூதுரை : 12. 609. தன்னைத் தானே ஒழுக்கத்தால் பேணி உயர்த்திக் கொள்ளும் நற் பெண்டிரைப்போல் தன்னைத் தானே நன்னெறியில் செலுத்தி வாழ்பவனுக்கே பெருமை உண்டு. (13) ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. - திருக்குறள் : 974. 610. கொல்லர்கள் தெருவில் ஊசி செய்யப்படும். ஆதலால் அங்கு ஊசியை விற்பார் பிறர் இலர். அதுபோல் நற்குடியில் பிறந்தவர்களிடம் ஒழுக்கம் இயல்பாகவே அமைந்து கிடக்கும். ஆதலால் அவர்களுக்கு ஒழுக்கத்தைச் சொல்ல வேண்டுவதில்லை. (14) கற்றதொன் றின்றி விடினும் குடிப்பிறந்தார் மற்றொன் றறிவாரின் மாண்மிக நல்லாரால் பொற்ப உரைப்பான் புக் வேண்டா கொற்சேரித் துன்னூசி விற்பவர் இல். - பழமொழி : 73. 611. பசுவின் நெய்யில் பால் சேர்ந்தால் மேலும் அதன் சுவைமிகும். அதுபோல் நற்குடிப் பிறந்தவர்களிடம் ஒழுக்கமும் அமைந்திருக்குமானால் மிகச் சிறப்புண்டு. (15) விழுத்தொடையர் ஆகி விளங்கித்தொல் வந்தார் ஒழுங்கு உடையார் ஆகி ஒழுகல் - பழத்தெங்கு செய்த்தலை வீழும் புனலூர அஃதன்றோ நெய்த்தலைப்பால் உக்கு விடல். - பழமொழி : 34. 612. வளையும் மூங்கில் சிவிகைக் கொம்பாகிச் சிறப்பு அடையும். வளையாத மூங்கில் கழைக் கூத்தர்களது காற்கீழ் மிதிபடும். பணிவின் பெருமையையும், பணிவு இன்மையின் சிறுமையையும் அவற்றால் அறியலாம். (16) வருத்தவளை வேய் அரசர் மாமுடியின் மேலாம் வருத்த வளையாத மூங்கில் - தரித்திரமாய் வேழம்பர் கைப்புகுந்து மேதினியெல்லாம் திரிந்து தாழும் அவர் தம் அடிக்கீழ்த் தான். - நீதிவெண்பா : 7. 613. நறுங்சுவையுடைய கனிகளை நிரம்பக் கொண்ட மரக்கிளை வளைவதுபோல் அறிவும் பண்பாடும் நிறைந்த பெருமக்கள் பணிவினைக் கொள்வர். (17) தேமலி சுவைக்கனி பலசெ றிந்துயர் காமரம் வளைதல் போல் கலையு ணர்ந்திடு தூமன மாட்சியோர் தொழுவர் யாரையும் பாமர ரெவரையும் பணிந்தி டார்களே. - நீதிநூல் : 32 : 6. 614. மழை பெய்தற்குரிய பருவத்தில் பெய்யத் தவறினால் உலக வாழ்வே நடைபெறாது. அவ்வாறே, பெரியவர்கள் தாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தற்குரிய பொழுதில் செய்யத் தவறினாலும் உலகம் உய்யாது. (18) பெயற்பால் மழை பெய்யாக் கண்ணும் உலகம் செயற்பால செய்யா விடினும் - கயற்புலால் புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப! என்னை உலகுய்யு மாறு? - நாலடியார் : 97. 615. வற்றக் காய்ச்சினாலும் பாலின் சுவை குறையாது. எவ் வளவு வெப்பப்படுத்தினாலும் சங்கின் வெண்மை குறையாது; அவற்றைப் போல் துன்புற்ற நிலைமையிலும் மேன்மக்கள் மேன்மக்களே ஆவர். (19) அட்டாலும் பால் சுவையிற் குன்றா தளவளாய் நட்டாலு நண்பல்லார் - நண்பல்லார் கெட்டாலு மேன்மக்கண் மேன்மக்க ளேசங்கு சுட்டாலும் வெண்மை தரும். - மூதுரை : 4. 616. தங்கமாக இருந்தாலும் தகுதி அற்ற முறையில் செய்யப்பெற்ற அணிகலத்தைத் தக்கோர் அணியார். அதுபோல் புகழ்ந்துரையே என்றாலும் தகுதியற்ற முறையில் வரும் உரையைப் பெரியோர் ஏற்கமாட்டார். (20) தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில் அமரா ததனை அகற்றலே வேண்டும் அமையாரும் வெற்ப அணியாரே தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம். - பழமொழி : 66. 617. நெருப்பு நெய்யை ஏற்று ஒளிவிடும்; அதுபோல் பிறரிடம் பொருள் பெற்று வாழ்ந்தாலும் நல்லோர் புகழ் குறையாது விளங்குவர். (21) நிலம்பொறை யாற்றா நிதி பல கொண்டும் குலம்பெறுதீங் கந்தணர் கொள்ளார் - நலங்கிளர் தீவாய் அவிசொரியத் தீவிளங்கு மாறுபோல் தாவா தொளிசிறந்தார் தாம். - பெருந்தொகை : 29. 618. நல்ல இனத்தைச் சேர்ந்த பசுவின் கன்று புல் கிடைக் காமல் குப்பை கூளங்களையே தின்று திரிந்தாலும் ஒருநாள் அதன் உயர்ந்த இனத்துக்கு ஏற்றபடி சிறந்தோங்கத் தவறாது. அதுபோல் எளிய வாய்ப்பும் இல்லாவிடினும் நற்குடியில் பிறந்தவர்கள் நற்குடியாளராகவே திகழ்வர். (22) ஈட்டிய ஒண்பொருள் இன்றெனினும் ஒப்புரவு ஆற்றும் மனைப்பிறந்த சான்றவன் - ஆற்றவும் போற்றப் படாதாகிப் புல்லின்றி மேயினும் ஏற்றுக்கன்று ஏறாய் விடும். - பழமொழி : 81. 619. அறிவு ஒழுக்கங்களால் உயர்ந்தவர், தங்களை அடைந் தவர், தம்மினும் தாழ்ந்தவர் ஆயினும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு நெருங்கிச் சென்று உதவுவர். கடல் நீர் தன்னினும் சிறிய கழிமுகத்துச் சென்றும் பாய்வது இல்லையா! அதுபோல். (23) தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்து உயர்ந்தோர் தம்மை மதியார் தமை அடைந்தோர் - தம்மின் இழியினும் செல்வர் இடர்தீர்ப்பர் அல்கு கழியினும் செல்லாதோ கடல். - நன்னெறி : 16 620. கண்டித்துக் கூறி ஒரு வேலையை அரை குறை இல்லாமல் செய்து முடிக்கத் தூண்டும் பெரியவர் தாய்க்கு ஒப்பானவர். (24) காய உரைத்துக் கருமம் சிதையாதார் தாயரோடு ஒவ்வாரோ தக்கார்க்கு - வாய்பணிந்து உள்ளம் உருக உரைத்துப் பொருள்கொள்வார் கள்ளரோடு ஒவ்வாரோ தாம். - அறநெறிச்சாரம் : 98. 621. தாமரை, பொன், முத்து, சாமரை, கோரோசனை, பால், தேன், பட்டு, புனுகு, சவ்வாது, தீ ஆகியவை எவ்வெவ்விடங்களில் பிறந்தாலும் பெருமைக் குரியனவாம். அவற்றைப் போல் நல்லோர் எக்குடியில் பிறந்தாலும் நல்லோர் என்றே போற்றப் படுவர். (25) தாமரைபொன் முத்துச் சவரம்கோ ரோசனைபால் பூமருதேன் பட்டுப் புனுகுசவ்வாது - ஆமழல்மற்று எங்கே பிறந்தாலும் எள்ளாரே நல்லோர்கள் எங்கே பிறந்தாலும் ஏன்? - நீதிவெண்பா : 1. 622. தன் உடலின் மேல் படவரும் அடியைப் படவிடாமல் கை சென்று காக்கும். சான்றோரும் அவ்வாறே தாம் துன்புற நேர்ந்தால் கூடப் பிறர் துயரைப் போக்கவே முனைவர். (26) பேரறிஞர் தாக்கும் பிறர் துயரம் தாங்கியே வீரமொடு காக்க விரைகுவார் - நேரிழாய்! மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல் கைசென்று தாங்கும் கடிது. - நன்னெறி : 31. 623. நெல்லுக்குச் செல்லும் நீரால் புல்லும் நலம் பெறும். நல்லவர்க்கு வந்து சேரும் நலத்தால் பிறரும் பயன் பெறுவர். (27) நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கு மாங்கே பொசியுமாந் - தொல்லுலகில் நல்லா ரொருவ ருளரே லவர்பொருட் டெல்லார்க்கும் பெய்யு மழை. - மூதுரை : 10. 624. மதியினை மக்கள் வணங்குவர். அவர்களின் வணக்கம் ஒளிப் பகுதிக்கு மட்டும் இல்லை. கறைப் பகுதிக்கும் சேர்த்துத் தான் உள்ளது. அது போல், பெரியவர்க்குரிய பெருமையை அவர்களைச் சேர்ந்த சிறியவர்களும் பெறுவர். (28) ஒண்கதிர் வாள்மதியம் சேர்தலால் ஓங்கிய அங்கண் விசும்பின் முயலும் தொழப்படுஉம்; குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர் குன்று அன்னார் கேண்மை கொளின். - நாலடியார் : 176. 625. பூ தன்னுடன் சேர்ந்த நாருக்குப் பெருமையையும், மணத்தையும் தரும். அதுபோல் நற்குடிப் பிறப்பாளர் தம்முடன் சேர்ந்த சிறியவரையும் இனமாகத் தழுவிப் பெருமைப்படுத்துவர். (29) பெரிய குடிப்பிறந் தாரும் தமக்குச் சிறியார் இனமாய் ஒழுகுதல் - எறியிலை வேலோடு நேரொக்கும் கண்ணாய் அஃதன்றோ பூவோடு நாரியைக்கு மாறு. - பழமொழி : 88. 626. புல்லின் நுனியில் தேங்கி நிற்கும் பனிநீர் கதிரவனைக் கண்ட அளவில் காய்ந்து மறைந்து போகும். அதுபோல் அறியாப் பருவத்தில் தோன்றிய அடக்கம் இல்லாச் செயல்கள் அறி வறிந்த பெரியவர் உறவு உண்டாய போது மறைந்து போகும். (30) அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி நெறி அல்ல செய்து ஒழுகி யவ்வும் – நெறிஅறிந்த நற்சார்வு சாரக் கெடுமே வெயில்முறுகப் புற்பனிப் பற்றுவிட்டாங்கு. - நாலடியார் : 171. 627. தம்மை அடைக்கலமாக அடைந்தவர்க்கு வந்த துயரத்தை மாற்றுபவர்கள், தம் வீட்டின் ஒரு புறத்தில் வளர்ந் துள்ள நல்ல மரம் போன்றவர். (31) அல்லல் ஒருவர்க் கடைந்தக்கால் மற்றவர்க்கு நல்ல கிளைகள் எனப்படுவார் - நல்ல வினைமரபின் மற்றதனை நீக்கும் அதுவே மனைமர மாய மருந்து. - பழமொழி : 350. 628. அருளுடைய பெரியவர்கள் நடுவே சென்ற நச்சுப் பாம்பும் உயிர் பிழைத்துக் கொள்ளும். அதுபோல் உயர் குடிப் பிறப்பாளர்களை அடுத்துச் சென்ற கொடிய பகைவனும் உயிர் பிழைப்பான். (32) தெற்றப் பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால் மற்றுங்கண் ணோடுவர் மேன்மக்கள் - தெற்ற நவைக்கப் படும் தன்மைத் தாயினும் சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு. - பழமொழி : 86. 629. பிற உறுப்புக்கள் துன்பம் அடையின் அதனைக் கண்டு கண் நீர் வடிக்கும். அதுபோல் பிறர் துயர் கண்டு சான்றோர் நெருப்பிடைப்பட்ட மெழுகு போல் மனம் உருகுவர். (33) பெரியவர்தம் நோய் போல் பிறர்நோய் கண்டு உள்ளம் எரியின் இழுது ஆவர் என்க - தெரியிழாய்! மண்டு பிணியால் வருந்தும் பிற உறுப்பைக் கண்டு கலுழுமே கண். - நன்னெறி : 20. 630. மேலோர் தம் துயரை நீக்கக் கருதாமல் பிறர் துயரைப் போக்கக் கருதுவர். திங்கள் தன்னிடத்துள்ள இருளை நீக்காமல், உலகத்து இருளை நீக்குவதைக் காண்கிறோம் அல்லவா! (34) தம் குறைதீர்வு உள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம் வெம் குறைதீர்க் கிற்பார் விழுமியோர் - திங்கள் கறை இருளை நீக்கக் கருதாது உலகின் நிறை இருளை நீக்கும் மேல் நின்று. - நன்னெறி : 10. 631. பால் தன்னுடன் கூடிய நீருக்காகப் பொங்கி எழுந்து தீயினது செருக்கை அடக்கும். அதுபோல் பெரியவர் தம்மைச் சேர்ந்தவர்க்குத் துன்பம் உண்டாக்குபவர்களின் செருக்கை அடக்கிக் காப்பர். (35) பாலின் நீர் தீ அணுகப் பால் வெகுண்டு தீப்புகுந்து மேலும் நீர் கண்டு அமையும் மேன்மை போல் – நூலின்நெறி உற்றோர் இடுக்கண் உயிர்கொடுத்தும் மாற்றுவரே மற்றோர் புகல மதித்து. - நீதிவெண்பா : 77. 632. கடல் தன்னிடத்து வந்த துரும்பைத் தன்னுடன் சேர்த்துக் கொள்ளாமல் கரையில் ஒதுக்கிவிடும். அதுபோல் கொடிய வறுமைக்கு ஆட்பட்டாலும் பெரியவர் பிறர் கொடுக்கும் பொருளை விரும்பாமல் ஒதுக்கித் தள்ளுவர். (36) மடங்கிப் பசிப்பினும் மாண்புடை யாளர் தொடங்கிப் பிறருடைமை மேவார் - குடம்பை மடலோடு புட்கலாம் மால்கடல் சேர்ப்ப கடலொடு காட்டொட்டல் இல். - பழமொழி : 78. 633. ஆற்றின் அருகிலும், காட்டிலும் துளிர்த்த புல்லை அன்றிக் குளத்திலும் வேலிப்புறத்திலும் முளைத்த புல்லைத் தின்னாது சிறு முயல். அதுபோல் பொருந்தி வாராத வழியால் வரும் வாழ்வைச் சிறந்தோர் கொள்ளார். (37) அறனதிப் பாற்புல் லருங்கானத் தன்றி நிறைகுள மாதியுள் வேலி நிலத்துட் சிறுமுய லுண்ணாதால் சீரியரு மன்னர் பிறர்தேட்டால் வாழ்வு பிழை. - இன்னிசை இருநூறு : 17. 634. முழக்கும் பறையைக் கையில் கொண்டு செல்பவர் அதனை அடிக்காமல் செல்லார். அதுபோல் தம்மை நெருங்கி அடைக் கலமாக அடைந்தவர்களைப் பெரியவர் காக்கத் தவறார். (38) ஆண்டீண் டெனவொன்றோ வேண்டா அடைந்தான். மாண்டிலார் என்றே மறைப்பக் கிடந்ததோ? பூண்டாங் கிளமுலைப் பொற்றொடி! பூண்ட பறையறையார் போயினார் இல். - பழமொழி : 4. 635. பெரிய மாடம் சிதைந்து போனாலும், அதிலுள்ள பொருள்கள் ஒரு கூடம் அமைக்கப் போதுமானவையாக இருக்கும். அதுபோல் பெருந்தன்மை வாய்ந்தவர் வறுமையுற்றுக் கெட்டாலும் தம் பெருந்தன்மையை இழந்து விடார். (39) மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர் கூடம் மரத்திற்குத் துப்பாகும் - அஃதேபோல் பிடிலாக் கண்ணும் பெரியோர் பெருந்தகையர் ஈடில் லதற்கில்லை பாடு. - பழமொழி : 71. 636. நிலவை மேகம் மறைத்துக் கொண்டாலும், அது தன் ஒரு பக்கத்தால் உலகுக்கு ஒளி தரும். அதுபோல் உயர்ந்த பெருமக்கள் தாம் கொடிய வறுமைக்கு ஆட்பட்ட பொழுதிலும் பிறருக்கு உதவுவதையே விரும்புவர். (40) ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை அங்கண்மா ஞாலம் விளக்குறூஉம் திங்கள்போல் செல்லாமை செவ்வன்நேர் நிற்பினும் ஒப்புரவிற்கு ஒல்கார் குடிப்பிறந்தார். - நாலடியார் : 148. 637. முகில் மறைத்துக் கொண்ட போதும் கதிரோன் உலகுக்கு ஒளி யூட்டத்தவறாது. அதுபோல் வறுமைக்கு ஆட் பட்டாலும் பெரியோர் பிறர்க்கு உதவுவதைத் தவறார். (41) இரவியிருள் சீக்கும் புயல்மறைக்கு மேனும் பெரியார் மிடியினும் பீழை துடைப்ப திருவுற்ற போதுந்தாம் உண்ணலுங்கீழ் செய்யா இருமணிபாம் பெய்தினும் என். - இன்னிசை இருநூறு : 197. 638. கொடிய பசிக்கு ஆட்பட்டாலும் புலி, புல்லைத் தின்னாது. அதுபோல் அறிவுமிக்க சான்றோர் கொடிய வறுமைக்கு ஆட்பட்டாலும் இழிசெயல் செய்யார். (42) உடுக்கை உலறி உடம்பு அழிந்தக் கண்ணும் குடிப்பிறப் பாளர்தம் கொள்கையிற் குன்றார்; இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா கொடிப்புல் கறிக்குமோ மற்று? - நாலடியார் : 141. 639. யானையையும் வீழ்த்தக்கூடிய வலிமை வாய்ந்தது புலி. அவ்வாறு வீழ்த்தினாலும், அது தன் வலப்புறம் வீழ்ந்தால்தான் அதனை உண்ணும். இடப்புறம் வீழ்ந்தால் அதனை விடுத்துச் செல்லும். அதுபோல் மானம் உடைய பெருமக்கள் வானுலகமே கிடைப்பதாக இருந்தாலும் மானக் குறை வுடைய செயல்களைச் செய்யார். (43) கடமா தொலைச்சிய கான்உறை வேங்கை இடம் வீழ்ந்தது உண்ணாது இறக்கும்; - இடம் உடைய வானகம் கைஉறினும் வேண்டார் விழுமியோர் மானம் மழுங்க வரின். - நாலடியார் : 300. 640. மயிர் நீங்கினால் உயிர் வாழாது கவரிமான். அதுபோல் மானம் கெடும் நிலைமை உண்டானால் உயிர் வாழார் பெரியோர். (44) மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் . உயிர்நீப்பர் மானம் வரின். - திருக்குறள் : 969. 641 . உயர்ந்தவர், தம் உயிருக்கு ஊறு வரும் நிலைமையிலும் தம் உயிரைக் கொடுப்பரே அன்றிப் பிறருக்கு வளைந்து போகார். பாரம் வலுவாக இருந்தால் ஒடிவதை அன்றிக் கற்றூண் வளைவது உண்டா? (45) உற்ற விடத்தி லுயிர்வழங்குந் தன்மையோர் பற்றலரைக் கண்டாற் பணிவரோ - கற்றூண் பிளந்திறுவ தல்லாற் பெரும்பாராந் தாங்கிற் வளர்ந்து வளையுமோ தான். - மூதுரை : 6. 642. கரும்பினை ஒடித்தாலும், கடித்து மென்றாலும் சுவை உடைய தாகவே இருக்கும். அதுபோல் தகுதிவாய்ந்த பெரியவர் களைப் பழித்து இழிபாடு செய்தாலும் பதிலுக்குப் பழிப்புரையோ, இழிசெயலோ செய்யார், நல்லவற்றையே சொல்லி, நல்லவற்றையே செய்வர். (46) கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி இடித்து நீர் கொள்ளினும் இன்சுவைத்தே ஆகும்; வடுப்பட வைத்து இறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார் கூறார் தம் வாயிற் சிதைந்து. - நாலடியார் : 156. 643. பெருக்கெடுத்து ஓடும் காலத்திலன்றி வறண்டு நீர் அற்ற காலத்திலும் ஆறு தன் கண் உள்ள ஊற்றினால் உலகத்தைக் காக்கும். அதுபோல் செல்வத்தை யெல்லாம் இழந்து வறுமையடைந்த காலத்தும் பெரியவர், தம்மிடம் இல்லை' என்று வந்து கேட்டவர்க்குத் தாமும் 'இல்லை' என்று சொல்லாமல் இயன்றதைக் கொடுப்பர். (47) எற்று ஒன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார் அற்றுத்தற் சேர்ந்தார்க்கு அசைவுஇடத்து ஊற்றுஆவர்; அற்றக் கடைத்தும் அகல்யாறு அகழ்ந்தக்கால் தெற்றெனத் தெள்நீர் படும். - நாலடியார் : 150. 644. சுவைமிக்க கரும்பைக் கைக்கும் வேம்பு என்பதால் கரும்புக்கு உண்டாய பழி ஒன்றும் இல்லை. அதுபோல் குற்றம் ஒன்றும் இல்லாதிருக் கும்போது பிறர் குறை கூறினால் அதற்காக வருந்த வேண்டியது ஒன்றும் இல்லை. (48) உனையொருவ நிகழ்ந்தனரே லேதுக்கா விகழ்ந்தனரென் றுன்னி யுன்பால் தினையளவு தப்புளதே லதை நீக்காய் தப்பின்றேற் சின்மு றாதே கனைகழையை வேம் பென்னிற் கழைக்குமோர் குறையுண்டோ கல்லின் மோதித் தனையுடைப்போர்க் குணவுதரும் தேங்காய்போ லெவர்க்கு நன்மை தனைச் செய் நெஞ்சே. - நீதிநூல் 31 : 4. 645. கடல் நீரில் தீப்பற்றியது என்றாலும், கதிரோனுக்குக் குளிர் நோய் பற்றியது என்றாலும் மலை சாய்ந்தது என்றாலும் எவரும் நம்பார். அவற்றைப் போல் மேலோர் மேல், கீழோர் கூறும் பழிமொழிகளையும் அறிவுடையார் ஒப்பார். (49) கடலனலுற்று எரிந்ததென்றுங் கதிர்குளிர்நோ யுற்றதென்றுந் தடவரையே சாய்ந்ததென்றுஞ் சாற்றுமொழி நம்புவரார் திடமுடைய சான்றோர்மேற் செப்புமவ தூறதனைப் புடவிமிசை வாழறிஞர் பொய்யெனவே தற்ளுவரால். - நீதிநூல் : 22 : 3. 646. தலை கீழாக வைத்தாலும் தீ மேலேயே நோக்கி எரியும். கலை தேய்ந்தாலும் நிலவு ஒளிதரும். மாணிக்கத்தைப் பொடி யாக்கினாலும் ஒளி நீங்காது. அவற்றைப் போல் பெருமக்கள் எவ்வளவு துன்பம் அடைந்தாலும் தம் நிலைமையில் தாழ்வடையார். (50) தலைகீழுறச் செய்யினுந் தீபம்விண் டன்னை நோக்குங் கலை தேயினுந் தண்கதிர் வீசுமக் கங்குற் றிங்கள் விலைமாமணி யைப் பொடி செய்யினு மின்ன றாது நிலை நீங்குவ ரோ துயர் மேவினு நீர்மை யோரே. - நீதி நூல் : 5:7. 647. விளக்கின் ஒளியில் மாசு ஏற்படுவது இல்லை. அதுபோலவே, தூய பெரியவர்கள் மனத்திலும் மாசு ஏற்படுவது இல்லை. விளக்கொளிக்குக் கறை உண்டாக்க எவராலும் இயலாது. அதுபோலவே, பெரியவர்கள் மனத்தைப் பொய்ப்பழி உரைத்துக் கறைப்படுத்திவிட முடியாது. (51) கடுக்கி ஒருவன் கடுங்குறனை பேசி மயக்கி விடினும் மனப்பிரிப்பு ஒன்று இன்றித் துளக்கம் இலாதவர் தூய மனத்தார் விளக்கினுள் ஒண்சுடரே போன்று. - நாலடியார் : 189. 648. உயர்ந்த பெருமக்கள் ஒரு குற்றமும் செய்யார். அவ்வாறின்றி ஏதேனும் ஒரு குற்றம் செய்தாலும் அக்குற்றம் மலைமேல் ஏற்றி வைக்கப் பட்ட விளக்குப் போல் அனைவருக்கும் புலப்பட்டு விடும். (52) கன்றிமுதிர்ந்த கழியப்பன் னாள் செயினும் ஒன்றும் சிறியார்கண் என்றானும் - தோன்றாதாம் ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம் குன்றின்மேல் இட்ட விளக்கு. - பழமொழி :80 649. உயர்குடியில் பிறந்த பெருமக்களிடத்து உண்டாய குற்றம் நிலவில் தோன்றும் கறை போல் உலகுக்கு வெளிப்படத் தோன்றும். ஆதலால் அவரவர் தகுதிக்கு ஏற்பக் குற்றமும் பெருகி விளக்கமாகத் தெரியும். (53) குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம், விசும்பின் மதிக்க மறுப்போல் உயர்ந்து. - திருக்குறள்: 957. 650. தூய வெண்ணிற மாட்டிற்குச் சூடுபோடப் பெற்றால் அது மிகத் தெளிவாகப் புலப்படும். அதுபோல் குற்றமற்ற தூய பெரியவர்களிடத்துச் சிறிய குற்றம் உண்டானாலும் அது பிறருக்குத் தெளிவாகப் புலப்படும். (54) பெருவரை நாட்! பெரியோர்கண் தீமை கருநரைமேல் சூடேபோல் தோன்றும்; - கருநரையைக் கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல் ஒன்றானும் தோன்றாக் கெடும். - நாலடியார் : 186. நிரைதொடி தாங்கிய நீடோள் மாற்கேயும் உரையொழியா வாகும் உயர்ந்தோர்கட் குற்றம் மரையாகன்று ஊட்டும் மலைநாட்! மாயா நரையான் புறத்திட்ட சூடு. - பழமொழி : 79 651. பொன், கரும்பு, பால், சந்தனம் இவற்றைச் சுட்டும், ஆட்டியும், காய்ச்சியும் அரைத்தும் துன்புறுத்திலும் முன்னிருந்த நற்குணங்களே மேலும் மிகுந்து வெளிப்படும். அது போல் நல்லோரை எவ்வளவு துன்புறுத்தினாலும் நற்குணமே மிகுந்து வெளிப்படும். (55) பொன்னும் கரும்பும் புகழ்பாலும் சந்தனமும் சின்னம் பட வருத்தம் செய்தாலும் – முன்இருந்த நற்குணமே தோன்றும் நலிந்தாலும் உத்தமர்பால் நற்குணமே தோன்றும் நயந்து. - நீதிவெண்பா : 64. 652. தலைமயிர், நகம், பல் ஆகியவை தாம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும் அளவும் சிறப்படையும். சான்றோரும் தம் நிலைமையில் தாழாத அளவும் சிறப்படைவர். (56) தலைமயிரும் கூருகிரும் வெண்பல்லும் தத்தம் நிலையுடைய மானவரும் நிற்கும் - நிலைதவறாத் தானத்தில் பூச்சிய மே சாரும் நிலைதவறும் தானத்தில் பூச்சியமோ தான். - நீதிவெண்பா : 28. 653. புலிநகம், கவரிமான்மயிர், யானைத்தந்தம் ஆகியவை பிறந்த இடத்தில் இருந்து பிற இடங்களை அடைந்தாலும் மிக்க பெருமையே அடையும். அதுபோல் உயர் மக்கள் ஒரு பதவியில் இருந்து ஒரு காரணத்தால் நீங்கினால் கூட அவருக்குரிய பெருமை நீங்காது. (57) வென்றி வரிஉகிரும் வெண்கவரி மான்மயிரும் துன்றுமத யானைச் சுடர்மருப்பும் - நின்றநிலை வேறுபடி னும் சிறப்பாம் மெய்ஞ்ஞானி நின்றநிலை வேறுபடி னும் சிறப்பா மே. - நீதி வெண்பா : 29. 654. கல்லில் மோதி அடித்து உடைத்தாலும் தேங்காய் சுவையான பருப்பையும் நீரையுமே தரும். அது போல் துன்பம் செய்தவர்க்கும் நன்மை செய்வதையே கடமையாகக் கொள்வர் பெரியர். (58) நாவையே கடித்த தெனப் பல் தகர்க்கும் பேருளரோ நடக்கும் வேளை பூவையே பொருவு கழல் சருக்கியதென் றதைக்களை வோர்புவியி லுண்டோ காவையா ருலகமெனும் பேருடலி னவயவம் போல் கலந்த சீவர் தாவையே செய்யுனுமிக் கறிவுடையோர் கமைசெய்தல் தகுதி யாமால். - நீதி நூல் : 31:4 655. அவித்து இடித்துக் காய்ச்சினாலும் அரிசி சுவையான உணவாகவே அமையும். அதுபோல் தம்மை எவ்வளவு துன்புறுத் தினாலும் உயர்ந்தோர் நன்மையே செய்வர். (59) தீதொருவர் செய்தனரென் றதற்கெதிராய் தீயவர்க்கோர் தீங்கு செய்யின் சாதுநீ யவர்தீய ரென்பதற்குக் கரியென்ன சக்கி லாதார் ஓதவிட முண்ணின்விழி யுடையாரு முண்ணுவரோ வுலப்பில் செந்நெல் சேதமுற அவைத்திடுவோர்க் குணவாதல் போன்லமே செய்வாய் நெஞ்சே - நீதிநூல் : 31:5 656. மழை தரும் முகில் இடியையும் மின்னலையும் தன்னகத்துக் கொண்டிருக்கும். ஆனால் இன்சொற் கூறும் பெரியவரோ பிறர் கண்டும் கேட்டும் வருந்தும் சொற்களைக் கூறாமல் உள்ளடக்கிக் கொண்டு நன்மை யானவற்றை மட்டுமே கூறுவர். (60) உருமைமின்னினைத்தன் பாற்கொண்டுதகமன் உயிர்க்கு நல்கும் கருமுகி லெனக்கண்ணாலென் காணினும் கேட்பினுஞ்சூழ் பருவர லேதி லார்க்குப் பயக்குவன் சொல்லை நீத்து மருவிய நலங்க லந்த வசனமே பகர்வர் நல்லோர். - நீதிநூல் : 32:8. பைதலே யெய்த லாதிப் பரன்செய லாமப் பைதல் செய்தவர் தமைச்சினத்தல் சினவரா தன் மேற் கல்லைப் பெய்தவன் தனைவிட் டக்கல் பிளந்திடப் பொரலுங் கையால் எய்தவன் தனைவிட்டம்பை முனிதலு மேய்க்கு மாலோ. - நீதிநூல் : 25 : 8. 657. வேனில் காலத்து வெண்முகிலும் மழை பெய்வதுண்டு அதுபோல் மேலோர், பகைகொண்ட காலத்தும் எதிர்பாராத நலங்களைச் செய்வர். கீழ்மக்கள், நட்புடைய காலத்தும் நலம் செய்யார். (61) வன்பாட்டவர்பகை கொள்ளினும் மேலாயோர் புன்பாட் டவர்பகை கோடல் பயனின்றே கண்பாட்ட பூங்காவிக் கானலந் தண்சேர்ப்ப வெண்பாட்டம் வெள்ளந் தரும். - பழமொழி : 300. 658. எவ்வளவு கொதித்தாலும் வெந்நீர் வீட்டை எரித்து விடாது. அதுபோல் பெரியவர்கள் எவ்வளவு சினம் கொண்டாலும் தமக்குச் சின மூட்டியவர்களைக் கெடுத்து விட மாட்டார். (62) இறப்பச் சிறியவர் இன்னா செயினும் பிறப்பினால் மாண்டார் வெகுளார் - திறத்துள்ளி நல்ல விறகின் அடினும் நனிவெந்நீர் இல்லம் சுடுகலா வாறு. - பழமொழி : 51. 659. நரியை வீழ்த்துவதற்குக் குறுந்தடியையே பயன்படுத்துவர். அன்றித் தெய்வத் தன்மை வாய்ந்த 'நாராயணம்' என்னும் அம்பைச் செலவிடார். அதுபோல் கீழ் மக்கள் செய்யும் தீமையை நீக்குதற்காக மேன்மக்கள் தம் அரிய ஆற்றலை வீணில் செலவிடார். (63) காழார மார்பகசடறக் கைகாவாக் கீழாயோர் செய்த பிழைப்பினை மேலாயோர் உள்ளத்துக் கொண்டு நேர்ந்து ஊக்கல் குறுநரிக்கு நல்லநா ராயம் கொளல். - பழமொழி : 50. 660. நல்லொழுக்கம் உடைய பெருமக்கள் சொல், வழுக்கல் நிலத்தில் நடப்பவருக்கு ஊன்றுகோல்போல் அமைந்து அனைவருக்கும் நன்மை தரும். (64) இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே, ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். - திருக்குறள் : 415. 661. திங்களின் கதிர் தண்ணிது; அதனினும் சந்தனம் தண்ணிது; அதனினும் அருளாளர் சொல் தண்ணிது. (தண்ணிது = தண்மையானது) (65) திங்கள் அமிர்த கிரணம் மிகச் சீதளமே திங்களினும் சந்தனமே சீதளமாம் - இங்கு இவற்றின் அன்பு அறிவு சாந்தம் அருள் உடையார் நல்வசனம் இன்பம் மிகும் சீதளம்ஆ மே. - நீதி வெண்பா : 94. 11. சிறுமை 662. அறம், கல்வி இவற்றால் பெரியரே பெரியர். அகவையால் (வயதால்) ஒருவர் பெரியர் என்பது, மைந்தன் தன் தந்தையின் தோள் மேல் ஏறித்தான் பெரியன் என்பது போலவும், காலையிலும் மாலையிலும் நீண்டு தோன்றும் தன் நிழலைக் காட்டித் தான் பெரியன் என்பது போலவும் ஆகும். (1) நயமறங் கல்வியின்றி நனிநிதி யாற்கு லத்தால் வயதினாற் பெரிய ரென்னல் மைந்தர்தந் தையின்றோ ளேறி இயலித்தாம் பெரியோ ரென்ன இயம்பலுங் காலை மாலை உயர்நீழ லுள்ளோர் தம்மை யுயர்ந்தவ ரெனலு மொப்பே. - நீதிநூல் : 13:3. 663. நன்செய்யிலோ புன்செய்யிலோ ஊன்றப்பெற்று நிற்கும் கற்றூணை ஒட்டி முளைத்த புல், உழவர்களது கலப்பைக்குத் தப்பிப் பிழைக்கும். அதுபோல், பெரியவர்கள் தொடர்பினைக் கொண்ட சிறியவர்களும் நன்மை அடைவர். (2) கொல்லை இரும்புனத்துக் குற்றி அடைந்தபுல் ஒல்காவே ஆகும் உழவர் உழுபடைக்கு; மெல்லியரே ஆயினும் நற்சார்வு சார்ந்தார்மேல் செல்லாவாம் செற்றார் சினம். - நாலடியார் : 178. 664. பிறந்து வளரும் நிலத்தின் நிறத்திற்கு ஏற்றபடி ஆங்கு வளரும் பறவைகளின் நிறமும் அமைந்திருக்கும். அதுபோல், மக்களும் தாம் பிறந்த குலத்தின் தன்மைக்கு ஏற்றவாறே அமைந்திருப்பர். (3) ஓரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத் தேரும் திறமரிதால் தேமொழி - யாரும் குலக்குல வண்ணத்த ராகுப ஆங்கே புலப்புல வண்ணத்த புள். பழமொழி : 146. 665. அயல் வீட்டாரால் அறியப் படாமல் ஆக்கப்பட்டதொரு சமையல் இல்லை. அதுபோல், அவரவர் இனத்தால் அறியப் பெறாத இயல்பும் இல்லை. (4) முயலவோ வேண்டா முனிவரை யானும் இயல்பினர் என்பதினத்தால் அறிக. கயலியலும் கண்ணாய் கரியரோ வேண்டா அயலறியா அட்டூணோ இல். - பழமொழி : 148. 666. கடற்கரையை அடுத்துள்ள இடத்திலும் குடிப்பதற்கு ஏற்ற நன்னீர் கிடைக்கின்றது. மலைப்பகுதியிலேயும் உவர் நீர் ஊறுகின்றது. அவற்றைப் போல் மாந்தர் தாம் சேர்ந்த இனத்தைப் பொறுத்தே அமைவர். அல்லர். தத்தம் மனத்தைப் பொறுத்தும் அமைவர். (5) கடல் சார்ந்தும் இன்நீர் பிறக்கும்; மலை சார்ந்தும் உப்புஈண்டு உவரி பிறத்தலால் தத்தம் இனத்து அனையர் அல்லர் எறிகடல்தண் சேர்ப்ப! மனத்து அனையர் மக்கள் என் பார். - நாலடியார் : 245. 667. தம்மைச் சேர்ந்தவர்க்கு வந்த துயரைத் தம் துயராகக் கருதி அதனை நீக்க முயலாதவரைத் தஞ்சமாக ஒருவர் அடைவது உமிக் குற்றிக்கை சோர்வது போல் எத்தகைய பயனும் அற்றது ஆகும். (6) தமக்குற்ற தேயாகத் தம்மடைந்தார்க் குற்ற தெமக்குற்ற தென்றுணரா விட்டக்கால் என்னாம் இமைத்தருவி பொன்வரன்றும் ஈரங்குன்ற நாட உமிக்குற்றுக் கைவருந்து மாறு. - பழமொழி : 348. 668. தமக்குப் பல வகைகளாலும் துணையாக இருந்து உதவி செய்பவர்களைத் தழுவிப் பேணிக் கொள்ளாமல் கடிந்து உரைப்பது, வறியவர் தாம் உண்ணுதற்கு வைத்திருந்து மண் ஓட்டைத் தாமே போட்டு உடைப்பதற்கு ஒப்பானது. (7) தாமாற்ற கில்லாதார் தாஞ்சாரப் பட்டாரைத் தீமாற்றத் தாலே பகைப்படுத்திட்டு - ஏமாப்ப முன்னோட்டுக் கொண்டு முரணஞ்சிப் போவாரே உண்ஒட்டகலுடைப் பார். - பழமொழி : 163. 669. நம் அன்புக்கு உரியவர் என்று கருதி உதவி செய்த வர்களை உதவி பெற்றவர் பல வகையாலும் புறஞ் சொல்லிப் பழித்துத் திரிவது, தாம் உண்டு மகிழ்ந்திருந்த வீட்டுக்குத் தாமே தீ வைத்தது போன்றாகும். (8) பண்டின ரென்று தமரையும் தம்மையும் கொண்ட வகையால் குறைதீர நோக்கியக்கால் விண்டவரோடொன்றிப் புறனுரைப்பின் அஃதால்வ் உண்ட இல் தீயிடு மாறு. பழமொழி : 347. 670. எமக்கு வேண்டியவர் என்று எண்ணிக் காத்தவர்க்குக் காக்கப் பெற்றவர்கள் கெடுதி செய்வது, தாம் நின்று கொண்டிருக்கும் கிளையின் அடியை நினைவின்றி வெட்டுவது போன்றது. (9) நாடி நமரென்று நன்கு புரந்தாரைக் கேடு பிறரோடு சூழ்தல் கிளர்மணி நீடுகல் வெற்ப நினைப்பின்றித் தாமிருந்த கோடு குறைத்து விடல். - பழமொழி : 346. 671. தகுதிமிக்க பெரியவர்களைத் தகவற்ற சிறியவர்கள் பலவாறாகப் பழித்துரைப்பது, விண்ணில் ஒளியுடன் விளங்கும் வெண்ணிலவைக் கண்டு நாய் குரைப்பது போன்றது. (10) நெறியால் உணராது நீர்மையும் இன்றிச் சிறியார் எளியரால் என்று - பெரியாரைத் தங்கணேர் வைத்துத் தகவல்ல கூறுதல் திங்களை நாய் குரைத் தற்று. - பழமொழி : 107. 672. குடிப்பதற்கு ஏற்ற வாய்ப்பு இல்லாவிட்டாலும் கள்ளைக் கண்ட அளவில் மகிழ்வான் குடியன். அதுபோல் தன் பகைவரை வெல்லும் ஆற்றல் தனக்கு இல்லையாயினும் பிறர் தன் பகைவரை இழித்துரைத்த சொல்லைக் கேட்ட அளவில் தான் வெற்றி கொண்டதாக மகிழ்வான். கீழ்மகன். (11) மாணாப் பகைவரை மாறொறுக் கல்லாதார் பேணா துரைக்கும் உரைகேட் டுவந்ததுபோல் ஊணார்ந் துதவுவது ஒன்றில்லெனினும் கள்ளினைக் காணாக் களிக்கும் களி. - பழமொழி : 99. 673. பெரியவர்களைப் பகைத்துக் கொண்ட சிறியவர்கள், வழி அறியாமல் வேடர்கள் வாழும் ஊருக்குள் சென்ற விலங்கு எவ்வாறு அழியு மோ அவ்வாறு தவறாமல் அழிவர். (12) ஆமாலோ என்று பெரியாரை முன்னின்று தாமாச் சிறியார் தறுகண்மை செய்தொழுகல் போமாறு அறியாப் புலன் மயங்கி ஊர்புக்குச் சாமாகண் காணாத வாறு. - பழமொழி : 61. 674. நெருப்புப் பிழம்பான கதிரோனை ஊடறுத்துக் கொண்டு செல்ல முயல்பவர் எரிந்து அழிவர். அம்முயற்சியில் ஒருவேளை தப்பிப் பிழைக்க முடிந்தாலும், பெரியவர்களுக்கு மாறுபட்டு நடந்தவர் தப்பிப் பிழையார். (13) அறிவன்று அழகன்று அறிவதூஉம் அன்று சிறியார் எனப் பாடும் செய்யும் - எறிதிரை சென்றுலாம் சேர்ப்ப! குழுவத்தார் மேயிருந்த என்றூடு அறுப்பினும் மன்று. பழமொழி : 60. 675. புன்மையான எருக்கம் புதரில் மறைந்து கொண்டு யானைமேல் அம்பு ஏவுபவனுக்கு எவ்வாறு பாதுகாப்பு இல்லையோ அவ்வாறு பெரியவர்கள் மேல் புன்சொற்களை வீசியவனுக்கும் பாதுகாப்பு இல்லாமல் அழிவான். (14) எல்லாத் திறத்தும் இறப்பப் பெரியாரைக் கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல் சொல்லின் நிறைந்தார் வளையினாய் அஃதால் எருக்கு மறைந்துயானை பாய்ச்சி விடல். - பழமொழி : 62. 676. வலிமைமிக்க பெரியவர்க்கு மெலிய சிறியவர் கேடு செய்ய முனைவது, இயமனையே கைகாட்டி அழைப்பது போன்றது. (15) கூற்றத்தைக் கையால் விளித்தற்றால், ஆற்றுவார்க் காற்றாதார் இன்னா செயல். - திருக்குறள் : 894. 677. வாயில் தேனையும், கொடுக்கில் நஞ்சையும் கொண்டுள்ள தேனீயைப்போல் வாயில் இனிப்பும் கையில் கொடுமையும் உடையவனை எவரும் இகழ்வர். அவன் உள்ளமும் அவனை இகழும். (16) வாயில் தேனுந்தன் வாலிற் கொடுக்குஞ்சேர் ஈயின் வாயினி லிங்கிதச் சொல்லொடுந் தீய செய்கையு ளானைத் தினஞ்சிறு சேயும் எள்ளுந்தன் சிந்தையும் எள்ளுமே. - நீதிநூல் : 6 : 6. 678. வாய் கைக்கும் நோய் உடையவர்க்கு இனிய தேனும் கசக்கும். காமாலை நோயர்க்குக் கதிரோன் ஒளிக்கதிரும் மஞ்சள் நிறமாகத் தோன்றும். அவற்றைப் போலவே தீயவர்க்குத் தூய வரும் தீயவராகவே தோன்றுவர்.(17) வாய்கைக்கு நோயினர்க்கே மாமதுவுங் கைப்பாகுங் காய்வெயிரு மஞ்சணிறங் காமாலைக் கண்ணருக்கே சாய்நிழலுஞ் சுடுவெயிலாந் தாபச் சுரத்தினர்க்கே தீயவர்க்குத் தூயவருந் தீயவர்போற் றோன்றுவரே. - நீதிநூல் : 22 : 4. 679. கண்ணாடியில் தன் முகத்தையே காண்பது போல் கீழோனும் தன்னிடம் உள்ள குறையையே பெரியவர் மேல் ஏற்றிப் பழிப்பான். (18) கஞ்சனத்தில் தம்முகமே காணுவது போற்கயவர் தஞ்செயிரைப் பிறர்செயிர்போல் தாமெண்ணித் தூறுவரோர் வஞ்சகனை நம்பியொரு மாசிலான் இன்னலொடும் எஞ்சலுறா வண்ணமவன் இழிவுரைத்தல் முறையாமே. - நீதிநூல் : 22 :5. 680. காற்றின் எதிரே நின்று காறித் துப்புபவன் தன்மேல் அவ்உமிழ் நீர் தெறிக்கப் பெறுவான். அதுபோல் மேலோர் மீது பழிமொழிகளை அள்ளி வீசுபவன் அவற்றைத் தனக்கே மீண்டும் பெற்றுக் கொள்வான். (19) 681. காற்றின் மேல் உமிழ்நீரைத் துப்பி அதனை களங்கப் படுத்திவிட முடியாது. அதுபோல், பெரியவர்களைப் பழித்துரைத்து அதனால் அவர்களைக் களங்கப்படுத்திவிட முடியாது. (20) காற்றின் எதிரே நின்றொருவன் காறி உமிழும் உச்சிட்டம் மாற்றி யவன்மேல் வந்துவிழும் வாய்மை போலித்தாரணியில் தோற்றி யொழியும் வாழ்வதனைத் துறந்த மேலோர் மீதொருவன் தூற்றிக் கூறும் வசைச்சொற்கள் சொன்னேன்மீதே தோயுமால். - நிதிநூல் : 22 : 2. 682. பெரியவர்களைப் பற்றிப் பழித்துரைத்து அவர்களைக் களங்கப்படுத்த வேண்டும் என்று கருதுவது, கதிரோன் ஒளிக் கதிர்களைப் பற்றிப் பிடித்து அவற்றின் மேல் கரிபூச முற்படுவது போன்றதாம். (21) அரிய குணஞ்சேர் பெரியர் தமக்கு அமையக் கடல்சூழ் புவனமெங்கும் விரியும் இசைமா சுறவவர்மேல் விளம்பும் பொய்ச்சொல் அண்டமிசைத் திரியும் பானுக் கிரணமதைத் திரட்டிப் பற்றி அதன்மீது கரியைப் பூச வேண்டுமெனக் கருதுந் தன்மை பொருவுமால். - நீதிநூல் : 22 : 1 683. பயனில்லாத சொற்கள் மணியில்லாத பதர் போன்றன. அவற்றைச் சொல்பவன் மகன் ஆகான் ; பதரே ஆவன். (22) பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி எனல். - திருக்குறள் : 196. 684. சிறந்தவர் கெட்டுப் போனாலும் சிறந்தவரே ஆவர். பொன்னின் குடம் உடைந்தால் பொன் ஆகும். மண்குடம் உடைந்தால்..........? (23) சீரியர் கெட்டாலுஞ் சீரியரே சீரியாமற் நல்லாதார் கெட்டாலங் கென்னாகுஞ் - சீரிய பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகு மென்னாகு மண்ணின் குட்முடைந்தக் கால். - மூதுரை : 18. 685. மெய்யுணர்வு உடையவர் சிற்சில வேளைகளில் பெயர், குழந்தை, பித்தர் போல் நடப்பர். அவர்களைக் கண்டு பிறரும் அவ்வாறே நடக்க முயல்வது சிறுநரி சிங்கத்தைப் போல் நடக்க நினைப்பது போன்றதாம். (24) பேய ரொடுபாலர் பித்தரென மெய்யறிவின் தூயர் வழீஇ நடப்பினும் சூழற்க ஆயுங்கா லவ்வா றொழுக வவாவனரி சீயவினை மேற்கொள் செயல். - இன்னிசை இருநூறு : 20. 686. பொற்கலத்தில் சுவைமிக்க உணவைப் படைத்து ஊட்டினாலும் நாய்க்குப் பிறர் எச்சில் இலைமேல் உள்ள பற்று ஒழியாது. அதுபோல் கீழோனை எவ்வளவு உயர்ந்தவனாகக் கருதினாலும் அக்கருத்திற்கு ஏற்ப அவன் உயர்ந்தவனாக இரான் (25) பொற்கலத்து ஊட்டிப் புறந்தரினும் நாய்பிறர் எச்சிற்கு இமையாது பார்த்து இருக்கும்; - அச்சீர் பெருமை உடைத்தால் கொளினும்கீழ் செய்யும் கருமங்கள் வேறு படும். - நாலடியார் : 345. 687. பாலும் சோறும் தந்து பொற் சங்கிலியால் பூட்டி வைத்தாலும் நாய் குரைத்தலையும் கடித்தலையும் விடாது. அதுபோல் எவ்வளவு நல்லவற்றைச் சொன்னாலும் செய்தாலும் மூர்க்கர் தம் குணத்தை விடார். (26) இணங்கிடா மூர்க்கருக்கிங் கெத்தனைவிதஞ்சொன் னாலும் வணங்கித்தூர்க்குணம்விடார்கள் வளர்த்திடும் சுணங்க னுக்கு நிணங்கொள்பால் அன்னம் இட்டுநிறைந்தபொற் றொடரும் பூட்டி மணங்கொள் தண்டிகையில் வைத்தும் குரைத்தது கடிக்கும் போலாம். - நீதிசாரம் : 2. 688. பொறுக்கி எடுத்த தானிய மணிகளாகப் போட்டாலும் கோழி தனக்கு இயல்பான குப்பையைக் கிளறும் தொழிலை விடாது. அவ்வாறே எவ்வளவு அரிய கருத்துக்களை எடுத் துரைக்கக் கேட்டாலும் கீழோர் தம் இயல்பை விடார். (27) காழ் ஆய கொண்டு கசடு அற்றார் தம்சாரல் தாழாது போவாம் என உரைப்பின் - கீழ்தான் உறங்குவாம் என்று எழுந்து போமாம் அஃது அன்றி மறங்குமாம் மற்றுஒன்று உரைத்து. - நாலடியார் : 341. 689. கோரைப்புல் எவ்வளவு நாட்களுக்கு உயர்ந்து வளர்ந் தாலும் அதன் தண்டில் உள்ள 'உள்துளை' ஒழியப் பெறுவது இல்லை. அவ்வாறே அகவை யாலும், செல்வத்தாலும் கீழ்மக்கள் முதிர்ந்த போதிலும் தம் இயல்பில் இருந்து நீங்கப் பெறுவது இல்லை. (28) ஆர்த்த அறிவினர் ஆண்டுஇளையர் ஆயினும் காத்துஓம்பித் தம்மை அடக்குப; - மூத்தொறூஉம் தீத்தொழிலே கன்றித் திரிதந்து எருவைபோல் போத்து அறார் புல் அறிவினார். - நாலடியார் : 351. 690. குதிரைக்குரிய சேணத்தை மானுக்குப் பூட்டி வைத் தாலும் அது குதிரை ஆகிவிடாது. அவ்வாறே சிறியவர்கள் எவ்வளவு செல்வத்தைப் பெற்றாலும் பெரியவர்கள் ஆக மாட்டார். (29) செல்லா இடத்தும் குடிப்பிறந்தார் செய்வன செல் இடத்தும் செய்யார் சிறியவர்; - புல்வாய் பருமம் பொறுப்பினும் பாய்பரி மாபோல் பொருமுரண் ஆற்றுதல் இன்று. - நாலடியார் : 149. 691. பொறாமைக்குணம் உடைய தீயோரைச் செவ்வியர் ஆக்குவது அரிது; எத்தனை மணப் பொருள்களைக் கூட்டினா லும் உள்ளியின் மணம் ஒழியுமா? (30) அவ்விய நெஞ்சத்து அறிவிலாத் துர்ச்சனரைச் செவ்வியர் ஆக்கும் செயலுண்டோ - திவ்வியநற் கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளியது கந்தம் கெடுமோ கரை. - நீதிவெண்பா : 21. 692. ஆலைப் பலாவாக்க இயலாது; நாயின் வாலை நேராக்க இயலாது; காக்கையைப் பேசுவிக்க இயலாது; அவற்றைப் போல் மூர்க்கரைச் சீராக்கவும் இயலாது. (31) ஆலைப் பலாவாக்க லாமோ அருஞ்சுணங்கள் வாலை நிமிர்க்க வசமாமோ - நீலநிறக் காக்கைதனைப் பேசுவிக்க லாமோ கருணையிலா மூர்க்கரைச்சீ ராக்கலா மோ. - பெருந்தொகை : 259. 693. வற்றக் காய்ச்சினாலும் பாலின் சுவை குறையாது; சுட்டு எரித்தாலும் பொன்னின் ஒளி குறையாது; நன்றாக அரைத் தாலும் சந்தனத்தின் மணம் குறையாது; எவ்வளவு எரித்தாலும் அகில் கட்டையின் மணம் மாறாது; கலக்கினாலும் கடல் சேறாகாது; பால் விட்டுக் காய்ச்சினாலும் பேய்ச் சுரைக்காயின் கசப்பு மாறாது. பலவகை மணங்களைக் கூட்டினாலும் உள்ளி யில் மணம் உண்டாகாது. ஆகவே பெருமையும், சிறுமையும் அவை அவை உண்டாக்கிக் கொள்வனவேயாம். (32) அடினும் ஆவின்பால் தன் சுவை குன்றாது. சுடினும் செம்பொன் தன்னொளி கெடாது. அரைக்கினும் சந்தனம் தன்மணம் அறாது. புகைக்கினும் கார் அகில் பொல்லாங்கு கமழாது. கலக்கினும் தண்கடல் சேறுஆ காது. அடினும்பால் பெய்து கைப்பு அறாது பேய்ச் சுரைக்காய். ஊட்டினும் பல்விரை உள்ளி கமழாதே. பெருமையும் சிறுமையும் தான்தர வருமே. - வெற்றிவேற்கை : 23 30. 694. பனம்பழத்தின் விதை பெரியது. ஆயினும், அதன் மரம் ஒருவருக்கும் நிழல் தாராது. ஆலம் பழத்தின் விதை மிகச் சிறியது. ஆயினும், அதன் கீழ்ப் பெரும்படையும் தங்கமுடியும். ஆதலால், பெரியவர் எல்லாம் பெரியவர் அல்லர்; சிறியவர் எல்லாம் சிறியரும் அல்லர். (33) தேம்படு பனையின் திரள்பழத்து ஒருவிதை வானுற ஓங்கி வளம்பெற வளரினும் ஒருவர்க்கு இருக்க நிழல்ஆ காதே. தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒருவிதை தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை அணிதேர் புரவி ஆள்பெரும் படையொடு மன்னர்க்கு இருக்க நிழல்ஆ கும்மே. பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர், சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர். - வெற்றிவேற்கை : 16 - 19. 695. பலப்பல ஆறுகள் நீர்ப் பெருக்குடன் வந்து வீழ்ந்தாலும் கடலின் தன்மை மாறுவது இல்லை. அதுபோல், எத்தகைய உயர்ந்த இனநலம் பெற்றிருந்தாலும் கீழ்மக்கள் மனநலம் பெறுவது அரிது. (34) மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும் உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் - மிக்க இனநலம் நன்குடைய வாயினும் என்றும் மனநலம் ஆகாவாம் கீழ். - பழமொழி : 90. 696. தின்னும் ஓர் உயிர் , தன்னால் தின்னப்பெறும் மற்றோர் உயிரின் துயரைக் கண்டு அஞ்சாது. அதுபோல் கீழ் மக்கள் தம்மேல் ஏற்றக்கூடிய எப்பழிக்கும் அஞ்சார். (35) கருந்தொழில ராய கடையாயார் தம்மேல் பெரும்பழி யேறுவ பேணார் - இரும்புன்னை புன்புலால் தீர்க்கும் துறைவ மற் றஞ்சாதே தின்ப தழுவதன் கண். - பழமொழி : 97. 697. போற்றிக் காக்காதவர்களிடம் பொருள் நிலைக்காது. அதுபோல் ஊன் தின்பவரிடம் அருள் நிலைக்காது. (36) பொருளாட்சி போற்றாதார்க் கில்லை ; அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. - திருக்குறள் : 252. 698. குருட்டுக்கண் இருளுக்கு அஞ்சாது; அது போல் சிறியவரும் பழிக்கு அஞ்சார். (37) அறிவுடையார் அன்றி அதுபெறார் தம்பால் செறிபழியை அஞ்சார் சிறிதும் - பிறைநுதால் வண்ணம்செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக் கண் அஞ்சு மோஇருளைக் கண்டு? - நன்னெறி : 34 699. நெல்லினுள் பிறந்தாலும் பதர், பதராகுமே அன்றி நெல்லாகாது. அதுபோல் உயர்ந்த குடியில் பிறந்தாலும் கல்லாதவர் உயர்ந்தவர் ஆகார்.(38) கல்லா ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லினுள் பிறந்த பதர் ஆ கும்மே. - வெற்றி வேற்கை : 36. 700. மறைவான தீய எண்ணங்களை மனத்தகத்து வைத்துக் கொண்டு பிறரைப் பெருந்துயருக்கு ஆளாக்குபவன் செருப்பின் இடையே இருந்து காலில் அழுத்தித் துன்புறுத்தும் கல்லுக்கு ஒப்பானவன். (39) உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய நிறையுளர் அல்லர் நிமிர்ந்து பெருகல் வரைதாழ் இலங்கருவி வெற்பா அதுவே சுரையாழ அம்மி மிதப்பு. - பழமொழி : 122. 701. எங்கெங்கு தேடிப்பார்த்தாலும் குரங்கினுள் நன்முகத்தை உடைய ஒன்றைக் காணமுடியாது. அதுபோல் தீயவர்களை யெல்லாம் தேடி ஆராய்ந்து பார்த்தாலும் நல்லவர் ஒருவரைக் காணமுடியாது. (40) நிரந்து வழிவந்த நீசருள் எல்லாம் பரந்தொருவர் நாடுங்கால் பண்புடையார் தோன்றார் மரம்பயில் சோலை மலைநாட, என்றும் குரங்கினுள் நன்முகத்த இல். - பழமொழி : 103. 702. நரிக்கு, வளமை வறுமை ஆகிய எக்காலத்திலும் உணவுப் பஞ்சம் இல்லை. அதுபோல் வளமை வறுமை ஆகிய எக்காலமாக இருந்தாலும் கீழ்மக்கள் செய்யும் கொடுமை களுக்குப் பஞ்சம் இல்லை. (41) அல்லவை செய்ப அலப்பின் அலவாக்கால் செல்வது அறிகலர் ஆகிச் சிதைத்தெழுப் கல்லாக் கயவர் இயல்போல் நரியிற்கு ஊண் நல்யாண்டும் தீயாண்டும் இல். - பழமொழி : 101. 703. இருமல் நோயும் கீழ்மக்களும் இயல்பால் ஒப்புடையவர்கே, கசப்புடைய மருந்துக்கே இருமல் நோய் கட்டுப்படும். கொடுமையான சொற்களுக்கே கீழ்மக்கள் கட்டுப்படுவர். (42) துன்னும் இருமலும் துர்ச்சனரும் ஒக்குமே முன்னும் இனிமையான் மாறாகிப் - பன்னும் கடுவும் கடுநேர் கடுமொழியும் கண்டால் கடுக வசமாகை யால். - நீதிவெண்பா : 22. 704. உகரமும், குற்றியலுகரமும் ஒத்த ஒலியுடையன என்றாலும் வல்லினத்தை ஒட்டி வரும்போது குற்றுகரம் நன்கு வெளிப்பட்டுவிடும். அவ்வாறே பெரியவர்களைச் சேர்ந்தபோது சிறியவர் நன்றாக வெளிப்பட்டு விடுவர். (43) உவ்வொடு குற்றுகரம் ஒக்கும் உருவெனினும் தவ்வெனும் தவ்வைசார் வல்லாறு தாங்காட்டும் செவ்வியர் போல்வர் சிறியரும் வல்லாறே வெவ்வேறு காட்டி விடும். - இன்னிசை இருநூறு : 199. 705. வலிய வேலைப்பாடுடைய மரக்கலத்தையும் சுழல் காற்று உடைத்துக் கடலில் ஆழ்த்திவிடும். அதுபோல் வலிமை வாய்ந்த பெரியவர் களையும் சில வேலைகளில் மிகக் கொடிய தீயவர் கெடுத்து விடுவதுண்டு. (44) நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தம் குலநலத்தால் ஆகுவர் சான்றோர்; - கலநலத்தைத் தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை தீயினம் சேரக் கெடும். - நாலடியார் : 179. 706. குடையின் கைப்பிடி மேலாகவும், காம்பு கீழாகவும் இருக்கிறது. அதனை விரித்துப் பிடிக்கும்போது காம்பு மேலாகவும், கைப்பிடி கீழாகவும் மாறிப்போகிறது. அதுபோல் கால மாற்றத்தால் உயர்ந்தோர் தாழ்வதும், தாழ்ந்தோர் உயர்வதும் உண்டு. (45) உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப் புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக் கடைக்கால் தலைக்கண்ணது ஆகிக் குடைக்கால் கீழ்மேலாய் நிற்கும் உலகு. - நாலடியார் : 368. 707. வில்லைக் கண்டவுடன் அதன் கொடுமையை முன்னரே உணர்ந்த காகம் பறந்து ஓடுவது போல், வஞ்சகர்கள் வாய் திறந்து பேசத் தொடங்கிய வுடன் அவர்கள் இயல்பை அறிந்து கொண்ட பெரியவர்கள் அவ்விடத்தில் இருந்தும் அகன்று போய்விடுவர். (46) தீப்பால் வினையினைத் தீரவும் அஞ்சாராய்க் காப்பாரே போன்றுரைத்த பொய்குறளை – ஏய்ப்பார்முன் சொல்லோடு ஒருப்படார் சோர்வின்று மாறுபவே வில்லோடு காக்கையே போன்று. - பழமொழி : 77. 708. ஏதேனும் ஒன்று தன்னைத் தொடும் பொழுது ஆயிரங்கால் புழு சுருண்டுவிடும். அதுபோல் கெட்டவர்களைக் கண்டபோது நல்லோர் எட்டிப் பாராமல் அமைக. (47) தொட்டாற் சுருளும் தொடர்புழுவாய் ஆகுக் கெட்டவை எல்லாம் கெட. - கைவிளக்கு : 4 : 2. 709. பெண்களின் பேரழகு ஒரு பிள்ளைப் பேற்றின் பின்னர்க் குறையத் தொடங்கும். அதுபோல் பெரியோர் பெருமை அவர்கள் ஒரு சிறு செயலைச் செய்தார்கள் என்று பிறர் கேள்விப்பட்டவுடன் குறைந்துவிடும். (48) கற்றைக் குழலார் கவினெல்லாம் ஓர்மகவைப் பெற்றக் கணமே பிரியுமே – கற்றுஅருளை வேட்ட பெரியோர் பெருமையெல்லாம் வேறொன்றைக் கேட்ட பொழுதே கெடும். - நீதிவெண்பா : 83. 710. எத்தகைய வளமாக நிலத்தில் விதைக்கப் பெற்றாலும் காஞ்சிரங் காய் தென்னை மரமாக முளைக்காது. அதுபோல் எவ்வளவு உயர்ந்தவர் செய்தாலும் தீவினை நல்வினை ஆகாது. (49) எந்நிலத்து வித்து இடினும் காஞ்சிரங்காழ் தெங்கு ஆகாது தென்னாட்ட டவரும் சுவர்க்கம் புகுதலால் தன்னால் தான் ஆகும் மறுமை ; வடதிசையும் கொன்னாளர் சாலப் பலர். - நாலடியார் : 243. 711. பனையின் கீழ் இருந்து பசுப்பால் பருகினாலும் அதனைக் கள் குடித்ததாகவே பிறர் எண்ணுவர். அது போல் பழியற்ற பெரியவர்களும் பழியுடையவர்களைச் சேர்ந்தால் பழியுடையவராகவே எண்ணப் பெறுவர். (50) நிந்தை இலாத் தூயவரும் நிந்தையரைச் சேரில்அவர் நிந்தையது தம்மிடத்தே நிற்குமே - நிந்தைமிகு தாலநிழல் கீழிருந்தான் தன்பால் அருந்திடினும் பாலது எனச் சொல்லுவரோ பார் - நீதி வெண்பா : 79. 712. நல்லொழுக்கம் இல்லாதவரைச் சேர்ந்த நல்லொழுக்கத் தவரும் பழி அடைவர். பாம்பின் புற்றருகே கிடக்கும் வைக்கோல் புரியும் பாம்பாகத் தோன்றுவது இயற்கை அல்லவா? (51) நல்லொழுக்கம் இல்லார் இடஞ்சேர்ந்த நல்லோர்க்கு நல்லொழுக்கம் இல்லாச்சொல் நண்ணுமே – கொல்லும்விடப் பாம்பென உன்னாரோ பழுதையே ஆனாலும் தூம்பு அமரும் புற்றடுத்தால் சொல். - நீதிவெண்பா : 86. 713. எவ்வளவு மூடி மறைத்துப் போர்த்தினாலும் புலால் உடம்பின் நாற்றம் பிறர் முகத்தில் படவே செய்யும். அதுபோல் மறைவாகச் செய்யப் பெற்ற பழிச் செயல்களும் பறையறைந்தால் போல் வெளிப்படாமல் போகாது. (52) மறைவழிப் பட்ட பழிமொழி தெய்வம் பறையறைந்தாங் கோடிப் பாக்கும் - இழிமுடைப் புன்புலால் நாற்றம் புறம் பொதிந்து மூடினும் சென்றுதைக்கும் சேயார் முகத்து. - நீதிநெறி விளக்கம் : 4. 714. முன்னர்ச் செய்த தவற்றையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருப்பது ஊர்ச் சாய்க்கடையில் மூழ்கி மூழ்கிக் குளிப்பது போன்றதாம். (53) மிக்க பழிபெரிதும் செய்தக்கால் மீட்டதற்குத் தக்க தறியார் தலைசிறத்தல் – எக்கர் அடும் பலரும் சேர்ப்ப அகலுள்நீ ராலே துடும்பல் எறிந்து விடல். - பழமொழி : 98. 715. அறிவு, உணர்வு, கல்வி இவற்றை இல்லாதவன் கொண்ட உடல் அழகு, மண் பதுமைமேல் பூசிய பூச்சையும் துடைப்பத்தில் கட்டிவைத்த பூமாலையையும் போன்றது. (54) மண்ணிற்செய் பாவைமீது வயங்குபொற் பூச்சோ தண்பூங் கண்ணியை மாற்றிச் சூடுங் காட்சியோ பழம்பாண் டத்திற் பண்ணிய கோல மோநற் பண்பொடு ஞானங் கல்வி புண்ணிய மேது மில்லான் பூண்டபே ரெழிலுடம்பே . - நீதிநூல் 28 : 5. 716. முன்னர்ப் பட்ட துயரங்களையும், தண்டனைகளையும் கருதிப் பாராமல் மேலும் மேலும் தீய செயல்களை ஒருவன் விருப்புடன் செய்வது, நச்சுச் செடி ஒன்றைச் சாண் அளவு குறைக்க முழ அளவு நீள்வது போன்றது. (55) உழந்ததூஉம் பேணாது ஒறுத்தமை கண்டும் விழைந்தார்போல் தீயவை பின்னரும் செய்தல் தழங்கண் முழவிரங்கும் தண்கடற் சேர்ப்ப! முழங்குறைப்பச் சாணிளு மாறு. - பழமொழி : 10. 717. வெள்ளாடு தன் பாலாலும், தன்னிடத்துள்ள மருந்தாலும் (மென்று கூழாக்கி வாயில் வைத்துள்ள இலை தழைகள்) மக்களுக்கு வரும் நோயைப் போக்க வல்லதாக இருந்தாலும், தனக்கு வரும் நோயைத் தீர்க்க வல்லதாக இல்லை. அதுபோல் பிறர் குற்றங்களைப் போக்க வல்லமை உடையவர்கள் இடத்தும் தம் குற்றம் போக்கும் திறம் இல்லாமை உண்டு. (56) தம் குற்றம் நீக்கலர் ஆகிப் பிறர்குற்றம் எங்கேனும் தீர்த்தற்கு இடைப்புகுதல் - எங்கும் வியன் உலகில் வெள்ளாடு தன்வளி தீராது அயல்வளி தீர்த்து விடல். - பழமொழி : 38. 718. ஊரவரால் அறியப்பெறாத பொலிகாளை இல்லை. அதுபோல் அறிவும் பண்பும் கெட்டுத் தீய செயல்களைச் செய்து உழலும் கொடியவர்களை அறியாதவரும் ஊரில் எவரும் இரார். (57) கூரறிவினார்வாய்க் குணமுடைச்சொல் கொள்ளாது காரறிவு கந்தாக் கடியன செய்வாரைப் பேரறியார் ஆயின பேதைகள் யாருளரோ ஊரறியா மூரியோ இல். - பழமொழி : 102. 719. பால், பழத்தை விரும்பும், புளிங்காடி அதனை விரும்பாது. அதுபோல், மேன்மக்கள் கற்றோரை விரும்புவர்; மற்றவர்கள் அவர்களை விரும்பார். (58) கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள் மற்றையர்தாம் என்றும் மதியாரே - வெற்றிநெடும் வேல் வேண்டும் வாள்விழியாய் வேண்டா புளிங்காடி பால் வேண்டும் வாழைப் பழம். - நன்னெறி : 35. 720. சிறியவர் தலையெடுத்துத் தருக்குவது கண்டு, அறிவு பண்புகளால் நிறைந்த பெரியவர் தாழ்வர். தராசின் ஒரு தட்டு வெறுமையாலோ, கனமற்ற பொருளாலோ உயரச் செல்லுமாயின் கனமுள்ள தட்டுத் தணிந்து கீழே இறங்கும் அல்லவா! (59) ஆக்கம் பெரியார் சிறியார் இடைப்பட்ட மீச்செலவு காணின் நனிதாழ்ப - தூக்கின் மெலியது மேன்மேல் எழச்செல்லச் செல்ல வலிதன்றே தாழும் துலைக்கு. - நீதிநெறி விளக்கம் : 16. 721. பெரியவர்கள் நெடுந்தொலைவில் இருந்தால் கூட நன்மக்களால் மதிக்கப் பெறுவர், சிறியவர்கள் எவ்வளவு நெருங்கி இருந்தாலும் நன் மக்களால் பொருட்டாக எண்ணப் பெறார். அடுக்களையில் கிடக்கும் பூனை, புறக்கடையில் நிற்கும் யானை அளவுக்குப் பெருமை பெறாது அல்லவா! (60) வேத்தவை காவார் மிகன்மக்கள் வேறுசிலர் காத்தது கொண்டாங் குவப்பெய்தார் - மாத்தகைய அந்தப் புரத்தது பூஞை புறங்கடைய கந்து கொல் பூட்கைக் களிறு. - நீதிநெறி விளக்கம் : 25. 722. மெல்லிய பொருள் கீழே வீழ்ந்து உடையாதிருப்பினும் வலிய பொருள் ஒன்று வீழ்ந்தால் உடையத்தவறாது. அதுபோல் கீழ் நிலையில் இருப்பவர் தவறு செய்து தப்பினாலும், மேல்நிலை யில் இருப்பவர் தவறு செய்து விட்டு அதில் இருந்து தப்புவது அரிது. (61) மெலியார் விழினு மொருவாற்றா னுய்ப வலியார்மற் றொன்றானு முய்யார் - நிலை தப்பி நொய்ய சழக்கென விழாவாம் வீழினும் உய்யுமா லுய்யா பிற. - நீதிநெறி விளக்கம் : 95. 723. சிங்கத்தின் குகையை அடைந்தால் யானைத் தந்தம் முத்து ஆகியவைகளை அடையலாம். நரியின் வளையை அடைந் தால் மயிர், வால் தோல் ஆகியவற்றையே பெறலாம். அவற்றைப் போல் பெரியவர்களை அடையும் பொழுது பெருமையும், சிறியவர்களை அடையும் பொழுது சிறுமை யும் கிட்டும். (62) அரிமந்திரம் புகுந்தால் ஆனை மருப்பும் பெருகொளிசேர் முத்தும் பெறலாம் - நரிநுழையில் வாலும் சிறிய மயிர் எலும்பும் கர்த்தபத்தின் தோலும் அல்லால் வேறுமுண்டோ சொல். - நீதிவெண்பா : 2. 724. ஒளி இல்லாததான மயில் தோகையில் உள்ள கண்ணும் உயர்ந்த வர்களை அடையும் பொழுது உயர்வு பெறும். ஒளி உடைய மாந்தர்களின் கண்ணும், இழிந்தவர்களை அடைவதால் இழிவு எய்தும். (63) நாலிறகிற் கண்ணில் தேயெனினு நன்பொருளின் பேரிறையா னுண்பெயரிற் பிற் சிறக்கு மோரும் இருகண் ணுளதே யெனிறு மதனை வெருண்டு விலங்காமற் கா. - அறநெறிச்சாரம் : பிற்சேர்க்கை : 6. 725. சந்தன மரத்தைச் சேர்ந்த மற்ற மரங்களும் மணம் பெறுவது போல் பெரியவரைச் சேர்ந்த சிறியவரும் பெருமை பெறுவர். மூங்கில் மரத்தைச் சேர்ந்த மற்ற மரங்களும் தீப்பற்றி எரிந்து அழிவது போல் சிறியவரைச் சேர்ந்த பெரியவரும் அழிவர். (64) சந்தனத்தைச் சேர்தருவும் தக்க மணம் கமழும் சந்தனத்தைச் சார்வேய் தழல்பற்ற - அந்தவனம் தானும் அச் சந்தனமும் தன் இனமும் மாள்வது அன்றித் தானும் கெடச்சுடுமே தான். - நீதிவெண்பா : 99. 726. கரும்புச் சாற்றுடன் கூட்டினாலும் வேம்புச் சாறு இனிக்காது; இரும்புடன் சேர்த்தாலும் பொன்னின் இயல்பு மாறாது; வேம்புச் சாற்றுடன் சேர்ந்த கரும்புச் சாறும் கசக்கும். இம்மூன்றும் இடை, மேல், கீழ்களின் தன்மைகளை விளக்கும். (65) கரும்பொடு கூட்டினும் வேம்பினிமை காட்டா இரும்புட னொன்றினும் ஏமமியல் குன்றா கரும்பாநீர் வேம்பா மவற்றிற் கலப்பின் விரும்பிடைமேல் கீழுமன்ன வே. - இன்னிசை இருநூறு : 194. 727. கரும்பு எவரால் தின்னப் பெற்றாலும் இனிமையாகவே இருக்கும்; வேம்பு எவரால் தின்னப் பெற்றாலும் கசப்பாகவே இருக்கும். அவற்றால் தக்கவரும், தகாதவரும் எப்பொழுதும் தத்தம் இயல்பை விடமாட்டார் என்பதை அறியலாம். (66) தக்காரும் தக்கவர் அல்லாரும் தம்நீர்மை எக்காலும் குன்றல் இலர் ஆவர்; - அக்காரம் யாவரே தின்னினும் கையாதாம்; கைக்குமாம் தேவரே தின்னினும் வேம்பு. - நாலடியார் : 112. 728. சிறுகாற்றாலும் பஞ்சு எழும்பிப் பறக்கும். அது போல் கீழ்கள் சிறிய இடராலும் அழிவர், பெருங்காற்று மோதினாலும் மலை அசையாது; அது போல் பெருந்துயர் சூழ்ந்தாலும் பெரியவர் சற்றும் தளரார். (67) தென்றலினும் நுண்பஞ்சு சேட்சென் றலைவுபடும் என்றும் பெயரா பெருங்காற் றெனினுமலை ஒன்றிற் சிறுபடரும் ஆற்றா துடையுங்கீழ் வென்றிடுமெத் துன்பினையும் மேல். - இன்னிசை இருநூறு : 195. 729. தங்கத்தின் மாற்றை உரைகல்லில் தேய்த்து அறிந்து கொள்ளலாம். அதுபோல் ஒருவன் சிறுமை பெருமைகளை அவன் செயலாலேயே தெரிந்து கொள்ளலாம். (68) பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். - திருக்குறள் : 505. 730. யானைக்குள்ள தந்தத்தைப் போல் முதிர்ந்த பன்றிகளுக்கும் கொம் புண்டு. அக்கொம்பில் வயிரத்தால் பூண் கட்டி விட்டாலும் பன்றி யானையாக மாறிவிடாது. அதுபோல் கீழோர் எத்தகைய செல்வத்தையும் பொலிவையும் பெற்றாலும் மேலோர் ஆகார். (69) ஏட்டைப் பருவத்தும் இல்பிறந்தார் செய்வன மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள் – கோட்டை வயிரம் செறிப்பினும் வாள் கண்ணாய்! பன்றி செயிர்வேழம் ஆகுதல் இன்று. - நாலடியார் : 358. 731. மரங்கள் வெட்டி அழிக்கப்பட்ட காட்டில் தீ மூட்டி எரிப்பர். அப்பொழுது காட்டு மரங்களுடன், உயர்ந்த வேங்கை சந்தனம் முதலிய மரங்களும் எரிந்தொழியும். அவ்வாறே, சிறியவர்களின் இனத்தைச் சேர்ந்து நிற்கும் பெரியவர்களும் இழிவும் பழியும் எய்துவர். (70) மனத்தான் மறு இல ரேனும் தாம் சேர்ந்த இனத்தால் இகழப் படுவர்; - புனத்து வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே எறிபுனம் தீப்பட்டக் கால். - நாலடியார் : 180. 732. பாலுடன் விடப் பெற்ற நீர் பாலாகவே தோன்றும்; அதுபோல் பெரியவர்களைச் சேர்ந்த சிறியவர்கள் பெரியவர்களாகக் கருதப்படுவார்களே அல்லாமல் சிறியவர்களாகக் கருதப்படார். (71) பாலோடு அளாயநீர் பால் ஆகும் அல்லது நீராய் நிறம் தெரிந்து தோன்றாதாம்; - தேரின் சிறியார் சிறுமையும் தோன்றாதாம் நல்ல பெரியார் பெருமையைச் சார்ந்து. - நாலடியார் : 177. 733. சாய்க்கடையில் இருந்து வழியும் நீர் என்றாலும் பெரிய கடலைச் சேரும் பொழுது, 'சாய்க்கடை' என்னும் தன் பெயரை இழந்து பெருமை அடையும். அதுபோல் இழிந்த குடிப்பிறப்பு உடையவரும் நற்குடிமக்களைச் சேர்ந்து வாழ்ந்தால் இழிவு நீங்கப் பெறுவதுடன் பெயரும் புகழும் எய்துவர். (72) ஊர் அங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால் பேரும் பிறிது ஆகித் தீர்த்தமாம்; - ஒரும் குலமாட்சி இல்லாரும் குன்றுபோல் நிற்பர் நலமாட்சி நல்லாரைச் சார்ந்து. - நாலடியார் : 175. 734. இடர்மிக்க இடத்தில் இருந்து நீங்குவதை விரும்பி முரட்டுக் குதிரையைச் சாட்டையால் அடித்தால் அது தன்னை அடித்த பாகனை அவ்விடத்திலேயே வீழ்த்தி விடும். அதுபோல் கீழ்மக்கள் தம்முள் பகை கொண்டு போரிடும் போது அதனை விலக்குவதற்கு மேன்மக்கள் சென்றால் அவர்கள் மேலும் வெகுள்வர். (73) குலத்துச் சிறியார் கலாந்தளிப்பான் புக்கு விலக்குவார் மேலும் எழுதல் - நிலத்து நிலையழுங்க வேண்டிப் புடைத்தக்கால் வெண்மாத் தலைகீழாக் காதி விடல். - பழமொழி : 111. 735. கொடுமைக்கு அஞ்சாத கீழ் மக்களுக்கு நன்மையான செயல்களைச் செய்யப் போவது, கொடிய புலிக்குப் பற்றியுள்ள உண்ணியை இரக்கத்துடன் பறிக்கப்போவது போன்றதாகும். (74) கண்ணில் கயவர் கருத்துணர்ந்து கைமிக நண்ணி அவர்க்கு நலனுடைய செய்பவேல் எண்ணி இடர்வரும் என்னார் புலிமுகத்து உண்ணி பறித்து விடல். - பழமொழி : 109. 736. மலட்டு மாட்டினை மிகப் பேணிப் பால் கறக்க நினைப்பது போன்றது, நற்குணம் இல்லாதவரை நாடி வழிபட்டு நற்பயன் அடைய நினைப்பது. (75) மால்கடல்சூழ் வையத்து மை ஆதாம் காத்தோம்பிப் பால்கருதி அன்னது உடைத்து என்பர் – மேல்வகுத்து மன்னிய நற்குணம் இல்லாரைத் தாம் போற்றிப் புண்ணியம் கோடும் எனல். - அறநெறிச்சாரம் : 55. 737. மணலுள் மறைந்து கிடக்கும் தவளை தன் ஒலியால் பகைவர்க்குத் தன்னைக் காட்டிக் கொடுத்து அழிவை உண்டாக்கிக் கொள்ளும். அதுபோல் அறிவிலியும் தன் சொல்லாலே தனக்கு அழிவை ஆக்கிக் கொள்வான். (76) பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன் சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய் மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் நுணலும் தன் வாயால் கெடும். - பழமொழி : 114. 738. பாம்பைப் பிடித்து மற்றொருவன் மேல் கடிக்க விடுபவன் அப்பாம்பால் முதற்கண் தான் தீண்டப்படுவான். அதுபோல் பிறர்க்குத் துன்பம் ஆக்க நினைப்பவன் முதற்கண் அத்துன்பத்திற்குத் தான் ஆளாவான். (77) விடதரம் பற்றிவே றொருவன் மேலிடும் அடலுளோன் தன்னைமுன் னதுக டித்தல்போல் இடர்பிறர்க் கிழைத்திடு மியவன் றன்னைமுன் மிடலொடு மவ்விடர் மேவிச் சாடுமே. - நீதிநூல் : 33 : 1. 739. இடுகாட்டை 'நன்காடு' என்று சொன்னாலும் அது இடுகாடாகவே இருக்கும். அதுபோல் சான்றோர் தம் பெருந்தன்மையால் கீழ்மக்களை மேலோர் என்று சொன்னாலும் அவர்கள் தம் கீழ்த் தன்மையில் இருந்து சிறிதும் மாறார். (78) இடுகாட்டை நன்கா டெனவிசைத்தும் அச்சொல் இடுகாடே தன்பொரு ளென்றுணர்த்தும் சான்றோர் ‘வடுவுரையாம் என்றுதம் போல் மாண்பினரென் றாலும் கெடுவுடைமை காட்டிவிடும் கீழ். இன்னிசை இருநூறு : 187. 740. தாம் கேட்ட மறைவுச் செய்திகளை உடனுக்குடன் பிறருக்குக் கூறுவதால் கயவர்கள் அடிக்கும் பறையைப் போன்ற வர்கள். அடிபட்டதும் பறை ஒலித்துவிடும் அல்லவா? (79) அறைபறை அன்னர் கயவர், தாம் கேட்ட மறைபிறர்க் குய்த்துரைக்க லான். - திருக்குறள் : 1076. வெள்ளமாண் பெல்லாம் உடைய தமரிருப்ப உள்ளமாண் பில்லா ஒருவரைத் - தெள்ளி மறைக்கண் பிரித்தவரை மாற்றா தொழிதல் பறைக்கண் கடிப்பிடு மாறு. - பழமொழி : 178. 741. நல்லுரைகளைக் கேட்டு நடக்கமாட்டாமல் தீய வழிச் செல்லும் கீழ்மக்களை அவர்கள் வீட்டிற்குச் சென்று சின மூட்டுவது, தேரின் கீழே இருந்து கொண்டு அதன் அச்சாணியைக் கழற்றிவிடுவது போன்றது. (80) சொல்லெறிந்து தம்மை வழிபட்டு ஒழுகலராய்க் கல்லெறிந்தாற் போலக் கலாந்தலைக் கொள்வாரை இல்லிருந் தாற்ற முனிவித்தல் உள்ளிருந்து அச்சாணி தாம் கழிக்கு மாறு. - பழமொழி : 112. 742. சுவரோடு சேராமல் உதிர்ந்த மண்ணை மீண்டும் ஒட்டி வைத்தாலும் உதிர்ந்து போகும். அதுபோல் கீழ் மக்களை எவ்வளவு அன்புடன் தழுவிச் சேர்த்துக் கொண்டாலும் ஒட்டாமல் அகல்வர். (81) திருந்தாய் நீ ஆர்வத்தைத் தீமை உடையார் வருந்தினார் என்றே வயப்படுவ துண்டோ அரிந்தரிகால் பெய்தமையக் கூட்டியக் கண்ணும் பொருந்தாமண் ஆகா சுவர். - பழமொழி : 110. 743. கீழ்மக்களிடம் ஓர் உயர்ந்த செயலைச் செய்யுமாறு ஒப்படைப்பது, உலரப் போட்ட மீனுக்குப் பூனையைக் காவல் வைப்பது போன்று அமையும். (82) காட்டிக் கருமம் கயவர்மேல் வைத்தவர் ஆக்குவர் ஆற்றஎமக் கென்றே அமர்ந்திருத்தல் மாப்புரை நோக்கின் மயிலன்னாய் பூசையைக் காப்பிடுதல் புன்மீன் தலை. - பழமொழி : 170. 744. கயவர்கள் கட்டுப்பாட்டுக்கு அடங்கார். ஆதலால் அவர்கள் எத்தகைய கட்டுப்பாடும் இன்றி வாழும் தேவர்களுக்கு இணையானவர். (83) தேவ ரனையர் கயவர், அவருந்தாம் மேவன செய்தொழுக லான். - திருக்குறள் : 1073. 745. பாலை ஊட்டினாலும் பாம்பு நஞ்சை அன்றி மணியைக் கொடாது. அதனைக் கொன்றால்தான் மணியைப் பெறமுடியும். அதுபோல் கீழோரைத் துன்புறுத்தினால் அன்றி வழிக்கு வாரார். (84) அருத்தினும் பாலை அராக்கடு வன்றிக் குருத்திண் மணிகொடா கொன்று கொளா ராயின் வருத்திற் பயன்படுங்கீழ் நன்றியற்றின் மாய்க்கும் கருத்துடையார் நாடல் கடன். - இன்னிசை இருநூறு : 185. 746. கரும்பை ஆட்டிப் பயன் கொள்வது போல், கயவர்களையும் துன்புறுத்தித் தான் பயன் கொள்ள முடியும். (85) சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ். - திருக்குறள் : 1078. 747. பணிவு உடையவர்களாய்த் தம்மை நெருங்கியவர் மேல் பகை கொள்வதும், பழைய பகைமை உடையவருடன் கூடி இருந்து பரிந்து உண்பதும் பாம்பின் படத்தின் மேல் எலி குடியிருப்பது போன்றது. (86) அடுத்தங்கை தமைச்சேவிப்பேர் அவர்கள் மேல் குறைகள் நித்தம் தொடுத்தங்கே மிகப்பா ராட்டித் தொல்வழக் கிடுவோர் தங்கள் இடத்தங்கே சேவித் துண்டி இயற்றுத லெல்லாம் பாம்பின் படத்தங்கே எலிதான் வாழ்க்கை பண்ணுதல் போலாம் அன்றே. - நீதிசாரம் : 66. 748. கையில் வைத்துக் கனிவுடன் வளர்த்தாலும் காடைப் பறவையின் நினைவு காட்டைப் பற்றியே இருக்கும். அதுபோல், காடே மேடே என்று திரிந்தவர்களை ஓர் இடத்தில் வைத்து எவ்வளவு வாய்ப்புக்கள் செய்து தந்தாலும் அவர்கள் கட்டுக்குள் அடங்காமல் கிளம்பி விடுவர். (87) காடுறை வாழ்க்கைக் கருவினை மாக்களை நாடுறைய நல்கினும் நன்கொழுகார் - நாடொறும் கையுள் தாகி விடினும் குறும்பூழ்க்குச் செய்யுள தாகு மனம். - பழமொழி : 96. 749. பண்பின்றிப் பயன் இல்லாத செயல்களைச் செய்யும் அறிவிலிகளை அணைத்துக் கொண்டு வாழ்வது, குழிப் புண்ணில் புழுவை வைத்துக் கட்டுப் போட்டுக் கொள்வது போன்றது. (88) நாணார் பரியார் நயனில செய்தொழுகும் பேணா அறிவிலா மாக்களைப் பேணி ஒழுக்கி அவரோ டுடனுறை செய்தல் புழுப்பெய்து புண்பொதியு மாறு. - பழமொழி : 113. 750. எவ்வளவு களைத்துச் சோர்ந்தாலும் விடாமல் நெருப்பில் வீழ்ந்து உயிர்விடும் விட்டில். அதுபோல் எவ்வளவு துன்பப் பட்டாலும் விடாமல் சிற்றின்ப நெருப்பில் வீழ்ந்து படுவார் சிறியர். (89) களைப்பினும் பல்கால் கனல்சுட விட்டில் விளக்கத்துப் பின்னும் விழுந்துயிர் மாயும் அளப்பில் துயரத் தழுந்தினுங்கீழ் பின்னும் களித்துவிழும் காமக் கனல். - இன்னிசை இருநூறு : 184. 751. காற்றின் துணை கிடைத்தபோது நெருப்பு பிறவற்றைச் சுட்டெரிக்கும். அக்காற்றின் துணை இல்லாத போது தானே அணைந்து போகும். ஆனால் 'கயவர்' என்னும் நெருப்போ எப்பொழுதும், எவர் துணை இல்லாமலும் எல்லாவற்றையும் சுட்டெரிக்கத் தவறாது. (90) வளித்துணை பெற்றக்கால் வன்னிசுடும் அக்கால் ஒளித்தக்கால் தானும் ஒளியும் கயமை இளைத்த பொழுதும் ஒளியாதே எல்லாம் கொளுத்தலின் யாமஞ்சும் கூற்று. - இன்னிசை இருநூறு : 190. 752. தேள் நெருப்பில் வீழ அதன் மேல் இரக்கம் கொண்டு ஒருவன் உதவி செய்யப் போனால் அவனையும் கொட்டும். அதுபோல் தீயோரும் தமக்கு நேரிட்டதுயரை நீக்கினோர்க்கும் உடனே கேடு செய்வர். (91) இடங்கருக் கிடுக்கண் வந்தால் அகற்றுதல் என்றும் ஆகா விடங்கொள்தேள் நெருப்பில் வீழ்ந்தால் எடுத்துவிட்டவனைக் கொட்டும் அடங்கிடாத்தூர்ச்சர்க்கும் அருள் செய்தால் மதித்துப் பாரார், திடங்களால் அபகா ரங்கள் செய்குவர் திண்ணந் தானே. - நீதிசாரம் : 18. 753. பாம்புக்குப் பால் விட்டு வளர்த்தாலும் நஞ்சே தரும். பசுவிற்குப் புல் போட்டு வந்தாலும் பால் தரும். ஆதலால், அவரவர் இயல் தன்மைக்கு ஏற்பவே செயலும் அமையும். (92) பாத்திர பாத்திரங்கள் பார்க்குங்கால் பசுவுக் கெந்த மாத்திரம் திரணம் ஈந்தால் பால் தரும் அந்தப் பாலை வார்த்திடிற் பாம்பினுக்கு விடமதே வளரும் அன்றே ஏற்ற பாத்திரமறிந்திங் கீவதே கடமை யாகும். - நீதிசாரம் : 23. 754. கடல் நீர் பொங்கி எழுந்தால் அதனைத் தடுக்கும் கரையில்லை. அதுபோல் ஊரே கூடிக் குறை சொல்லும் போது அதனைப் பொய்யெனக் காட்டும் சான்று இல்லை. (93) தூய்மை மனத்தவர் தோழர் மனையகத்தும் தாமே தமியர் புகல்வேண்டா - தீமையான் ஊர்மிகின் இல்லை கரியோ ஒலித்துடன் நிர்மிகின் இல்லை சிறை. - பழமொழி : 335. 755. நோயால் பற்றிக் கொள்ளப்பட்டவன் அதற்கு ஏற்ற மருந்தினைத் தேடி அந்நோயைப் போக்கிக் கொள்வான். அதுபோல் பழி என்னும் நோயால் பற்றிக் கொள்ளப் பெற்றவன் அந்நோயை ஒழுக்கம் என்னும் மருந்தாலேயே நீக்க முடியும். (94) பொருந்தாப் பழியென்னும் பொல்லாப் பிணிக்கு மருந்தாகி நிற்பதாம் மாட்சி - மருந்தின் தணியாது விட்டக்கால் தண்கடல் சேர்ப்ப பிணியீடு அழித்து விடும். - பழமொழி : 40. 756. வெப்பத்தைத் தண்மையால் தணிப்பது போல் தீவினையை நல்லொழுக்கத்தால் தான் தீர்க்க முடியும். (95) வெப்பத்தால் ஆய வியாதியை வெல்வதூஉம் வெப்பமே என்னல் விதி அறிவார் - வெப்பம் தணிப்பதூஉம் தட்பமே தான்செய் வினையைத் துணிப்பதூஉம் தூய ஒழுக்கு. அறநெறிச்சாரம் : 46. 757. குன்றத்தைப் போல் எவரும் அறிய வாழ்ந்த பெரியவர் களும் குன்றிமணி அளவில் குறை செய்வார்களானால் தாழ்ந்தவராக எண்ணப் பெறுவர். (96) குன்றின் அனையாரும் குன்றுவர், குன்றுவ குன்றி அனைய செயின். - திருக்குறள் : 965. 758. தம் உயர்ந்த நிலைமைக்கு ஏற்ற தகுதியான செயல் களைச் செய்யாமல் தாழ்ந்த செயல்களைச் செய்தவர் தலையில் இருந்து வீழ்ந்த மயிருக்கு இணையானவர். (97) தலையின் இழிந்த மயிரனையர், மாந்தர் நிலையின் இழிந்தக் கடை. - திருக்குறள் : 964. 759. மலை அளவு பஞ்சும் சிறு தீப் பொறியால் அழியும். அதுபோல் முதன்மையான பல அறங்களைச் செய்தவர், சான்றோர்க்கு ஒரே ஒரு தீமை செய்தால் அனைத்து அறப் பயன்களும் கெடும். (98) மலைத்துணைப் பஞ்சுமொரு தீப்பொறியான் மாயுந் தலைப்பட்ட நல்லறம்பல் கோடியுஞ் சாயும் நிலைப்பட்ட சான்றோர்க்கோர் தீங்கியற்றி னீள்வான் தலைப்பட்டுச் சாய்நகுடன் சான்று. - இன்னிசை இருநூறு : 19. 760. மகிழுமாறு பேசியும், பணிவுடையார் போல நடித்தும் வாழ்பவர் திருடர்க்கு இணையானவர். (99) காய உரைத்துக் கருமம் சிதையாதார் தாயரோடு ஒவ்வாரோ தக்கார்க்கு - வாய்பணிந்து உள்ளம் உருக உரைத்துப் பொருள் கொள்வார் கள்ளரோடு ஒவ்வாரோ தாம். - அறநெறிச்சாரம் : 98. 761. அறிவு குணம் ஆகியவற்றால் உயர்ந்த பெரியவர்களுக்குச் செய்யப் பெறும் சிறப்பை, அவற்றை இல்லாத சிறியவர்களுக்குச் செய்வது, யானைக்கு அணிவிக்கக் கூடிய முதுகு படத்தை நாய்க்கு இடுவது போன்றது. (100) பெரியார்க்குச் செய்யும் சிறப்பினைப் பேணிச் சிறியார்க்குச் செய்து விடுதல் - பொறிவண்டு பூமேல் இசைமுரலும் ஊர அதுவன்றோ நாய்மேல் தவிசிடு மாறு. - பழமொழி : 105. 762. தகுதிமிக்க வீரர்கள் தமக்கெனச் சிறப்பினை விரும்பாதிருக்கவும் தகுதி இல்லாதவர் சிறப்பினை விரும்புவது ஆழ்ந்த சேற்றிலும் ஆற்றலுடன் இழுக்கவல்ல எருது சேற்றில் இருந்து வெளியேற முடியாதிருக்க வண்டி வெளியேற விரும்புவது போன்றதாம். (101) ஆற்ற வினைசெய்தார் நிற்பப் பலவுரைத்து ஆற்றாதார் வேந்தனை நோவது - சேற்றுள் வழா அமைக் காத்தோம்பி வாங்கும் எருதாங் கெழா அமைச் சாக்கா டெழல். - பழமொழி : 313. 763. தீமை வருமுன்னர்த் தன்னைக் காத்துக் கொள்ள முடியாதவன் நெருப்பின் முன் வைக்கப்பெற்ற வைக்கோல் போர் போல் அழிவான். (102) வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை, எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். - திருக்குறள் : 435. 764. பிறருக்குத் தீமை செய்தவர்கள் கெடுவது, நிழல் தன்னை விட்டகலாது தொடர்வது போன்றதே. (103) தீயவை செய்தார் கெடுதல், நிழல்தன்னை வீயா தடி உறைந் தற்று. - திருக்குறள் : 208. 765. தச்சர் வைத்திருக்கும் உளி கூர்மையானதாக இருந் தாலும் அது தானே பாய்ந்து வெட்டாது. தளிரை வெட்டுவதற்காக இருந்தாலும் தட்டி விட வேண்டும். அது போல் தாமே தீமை செய்யாமல் பிறர் தூண்டுதலால் தீமை செய்பவரும் உளர். (104) தளிர்மேலே நிற்பினும் தட்டாமல் செல்லா உளிநீரார் மாதோ கயவர் - அளிநீரார்க்கு என்னாலும் செய்யார் எனைத்தானும் செய்பவே இன்னாங்கு செய்வார்ப் பெறின். - நாலடியார் : 355. 766. இறக்கப் போகும் ஆட்டையும் அதன் உள்ளம் ஒப்பவைத்து உயிரை வாங்க இயலாது. அதுபோல் நன்மை செய்பவராக எண்ணி ஒரு செயலில் விடப் பெற்ற ஒருவர் தீமை செய்பவராகக் காணப்பட்டால் அவரை நயமாகச் சொல்லிப் போக்க இயலாது. வலிந்து அகற்றிவிட வேண்டும். (105) நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலராயின் காட்டிக் களைது மெனவேண்டா - ஓட்டி இடம்பட்ட கண்ணாய் இறக்குமை யாட்டை உடம்படுத்து வெளவுண்டா ரில் - பழமொழி : 174. 767. பாம்பு, தேள், புலி முதலியவற்றை அவற்றின் தீய குணங்களைக் கருதி அடித்து வெருட்டுவர். அதுபோல் தீயவர் களும் அடித்து வெருட்டப் பெறுவர். (106) புயகமதைத் தேள்புலியைப் பொல்லாத விலங்கையெலாம் அயர்வாக வடித்தோட்டல் அவைகள் குணத் தாலன்றோ இயல்பின்றி யெந்நாளும் ஏதிலார்க் கிடரிழைக்குங் கயவனையே வைதடித்துக் கானோட்ட னன்றாமே. - நீதிநூல் : 33: 5. 768. மிகத் தீயவர்களை நாட்டினர் கூடி அழிக்கப் பார்ப்பர். அப்போது அவர்கள் நிலைமை ஆயிரம் பாம்புகளின் இடைப்பட்ட ஒரு தேரை போன்றதாக இருக்கும். (107) உரவுநீர்க் கருங்கட லுடுத்த பார்மிசைப் பரர்வருந்திடவிடர் பண்ணு வோன்றனை நரரெலாம் பகைசெய்வர் நண்ணு மாயிரம் அரவுசூழ் கின்றவோர் தேரை யாவனே. - நீதிநூல் : 3 : 3. 769. கெண்டை மீனைப் பற்றிப் பிடிக்கப் போன சிச்சிலிப் பறவை சேற்றுள் மாட்டித் தன் வலிமையை இழந்து இறக்கும். அதுபோல் பிறர் கெடும் வண்ணம் தீமை செய்ய முனைந்தவனும் கெடுவான். (108) கயலிற் பாய்சிரல் கால்சிக்கிக் கொண்டெழ வயமிலா துயிர்மாய் கின்ற தன்மைபோல் அயல வர்க்கழிவாகவோ ரந்தரஞ் செயநினைத்தவர்க் கேவந்து சேருமே. - நீதிநூல் : 33 : 4. 770. இடிக்கு நடுங்குவரே அல்லாமல் அதனை உண் டாக்கும் முகிலுக்கு நடுங்கார்; கடிக்கின்ற முயிற்றை வெறுப்பரே அல்லாமல் அது வாழும் மரத்தினை வெறார். அவற்றைப் போலவே, தீமையை வெறுப்பதல்லால் தீயவரை வெறுத்தல் சிறப்பன்று. (109) உருமினை யஞ்சியாரு மிகழுவ ரன்றியாய ஒலிதரு கின்ற காரை முனிவரோ தருவுறை கின்றதீய முயிறுக ளன்றியாய தருவைவெ குண்டு சீறல் தகுதியோ அருமறமு மீது கை செயலன்றி நாளுமவை புரிகின்ற தீய அசடர்பால் பெருமுனை கொண்டு காய்தல் அழகல வென்றுகோதில் பெரியவர் என்றும் ஆள்வர் கலரையே. - நீதிநூல் : 25 : 11. 771. காலில் செருப்புக்களை அணிந்து கொண்டால் முள் தைக்காது. அதுபோல், உறுதி, அறிவு என்னும் செருப்புக்களை மனம் என்னும் காலில் அணிந்து கொண்டால் தீய எண்ணம் என்னும் முள் தைக்காது. (110) ஊரூர் எனும் வனத்தே ஒள்வாட்கண் மாதர்எனும் கூரூர் விடமுள் குழாம் உண்டே - சீரூர் விரத்திவைராக்கிய விவேகத் தொடுதோல் உரத்தணியத் தையாவென்று ஓது. - நீதிவெண்பா : 72. 12. நன்மை 772. நறுமணமும் தண்மையும் வாய்ந்த மலரை நெருங்கி யவர்க்கு அம்மலரின் மணமும் தண்மையும் கிடைக்கும். கல்வி யால் சிறந்த அடக்க மிக்க பெரியவர்களை நெருங்கியவர்க்கும் அவர்கள் இயல்பு உண்டாகும். (1) ஓதுபொருள் கண்டோர்க்கு உறும் ஆசை நீதிஇலாப் பாதகரைக் கண்டோர்க்குப் பாவமாம் - சீதமலர் கண்டோர்க்கு உறும் வாசம் கற்றமைந்த நற்றவரைக் கண்டோர்க்கு உடனாம் கதி. - நீதி வெண்பா : 62. 773. சிறிய மீனைச் செல்லவிட்டுப் பெரிய மீன் வருகைக்காக அமைந்து காத்துக் கொண்டிருக்கும் இயல்பினது கொக்கு. ஆகவே, அடக்கம் உடைய பெருமக்களை அறிவிலாதவர் என்று எண்ணி இகழற்க. (2) அடக்க முடைய ரறிவிலரென் றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா - மடைத்தலையில் ஓடுமீ னோட வுறுமீன் வருமளவும் வாடி யிருக்குமாங் கொக்கு. - மூதுரை : 16. 774. காய்த்து மணிமுதிர்ந்த நெற்பயிர் தலைதாழ்ந்து குவியும். அவ்வாறே அறிவும் பண்பும் செறிந்த உயர்ந்தோர் அடக்கமும் பணிவும் கொண்டிருப்பர். மணிபிடிக்காத பதர் நெற்கதிர் நிமிர்ந்து நிற்கும். அவ்வாறே அறிவிலியும் பணிவின்றிச் செருக்கி நிற்பான். (3) காய்த்த விளைநெற் கதிரிறைஞ்சல் காண்டுமால் கோத்த பதர்கொள் குலைநிமிர்வே கொள்ளுமுல கேத்தும் அறிஞர்க் கியல்பு பணிவுடைமை வாய்த்தலிலை பேதை வயின். - இன்னிசை இருநூறு : 196. 775. திரியளவில் நின்றால் தீயைத் தெய்வத் தன்மை மிக்க பெரு மக்களும் வணங்குவர். வீடு பற்றி எரியும் அளவுக்கு வளர்ந்த தீயாயின் அதனை நீர்விட்டு அணைப்பர். அதுபோல் அடக்கம் உடையவரைப் பகைவரும் பாராட்டுவர். அடக்கம் இல்லார்க்கு இடர் செய்யாரும் இலர். (4) தேவருந்திப் போற்றுப நிற்பிற் றிரியளவின் யாவரும் நீர் பெய் தவிப்ப அகம்பற்றின் மேவாரும் போற்றும் தாமடங்கின் மிக்குழி யாவரும் செய்ப இடர். - இன்னிசை இருநூறு : 150. 776. நீரை எவ்வளவு கொதிக்க வைத்தாலும் சிறிது பொழுதுக்குள் தண்மை அடைந்துவிடும். அதுபோல் நல்லோர்க்கு எவ்வளவு கொதிப்பை ஊட்டினாலும் கோவம் கொள்ளாததுடன் கொடுமையும் செய்யார். (5) அங்கி தனைக்கொதிப்பச் செய்யினும் அந்நீரம் பொங்காது சில்கணத்தே தண்ணெனல் பூணுமால் புங்கவர்பாற் சீற்றம் பொருந்தத்தீ யார்செயினும் தங்காது செய்யார் தவறு. - இன்னிசை இருநூறு : 89. 777. பொங்கித் ததும்பி வரும் கோவத்தை அடக்குவதே எவருக்கும் பெருமை தரும். பெருக்கெடுத்து ஓடி வரும் வெள்ளத்தைக் கரை போட்டுத் தடுப்பது அரிதா? கரையை வெட்டிவிட்டு வெள்ளத்தைப் போக விடுவது அரிதா? (6) உள்ளங் கவர்தெழுந் தோங்கு சினம் காத்துக் கொள்ளும் குணமே குணமென்க - வெள்ளம் தடுத்தல் அரிதோ தடங்கரைதான் பேர்த்து விடுத்தல் அரிதோ விளம்பு. - நன்னெறி : 8. 778. ஒருவர் தாம் இறக்கும் காலம் வரைக்கும் இன்னா தவையே செய்தாலும் அறிவுடையோர் தம்மால் முடிந்த அளவும் பொறுத்துக் கொள்ளவே செய்வர். வெட்டிக் குறைப்பவர்க்கும் மரம் குளிர்நிழல் தருகின்றது அல்லவா! (7) சாந்தனையுந் தீயனவே செய்திடினுந் தாமவரை ஆந்தனையுங் காப்ப ரறிவுடையோர் - மாந்தர் குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து மறைக்குமாங் கண்டீர் மரம். - மூதுரை : 30. 779. தன்னைத் தோண்டித் துன்புறுத்துபவரையும் தாங்கிப் பொறுக்கும் நிலத்தைப் போல் தம்மை இகழ்வாரையும் பொறுத்துக் கொள்வதே பெருமை யாகும். (8) அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. - திருக்குறள் : 151. 780. நாவைப் பல் கடித்துப் புண்ணாக்கி விட்டது என்று அதனை எவரும் உடைக்கமாட்டார். தடுக்கிக் கீழே வீழ்த்தி விட்டது என்று எவரும் தம் காலை வெட்ட மாட்டார். அவ்வாறே உலகுக்கு உறுப்புப் போல் அமைந்த மக்கள் குற்றம் செய்தால் அறிவுடைய பெரியோர் பொறுப்பர். (9) நாவையே கடித்த தெனப் பல் தகர்க்கும் பேருளரோ நடக்கும் வேளை பூவையே பொருவு கழல் சருக்கியதென் றதைக்களை வோர்புவியி லுண்டோ காவையா ருலமெனும் பேருடலி னவயவம் போல் கலந்த சீவர் தாவையே செய்யினுமிக் கறிவுடையோர் கமைசெய்தல் தகுதியாமால். - நீதிநூல் : 31: 3. 781. பிறர் தமக்குக் கேடு செய்தாலும் பெரியோர் தம் ஊழ் என்று கருதிப் பொறுப்பர். எய்தவன் ஒருவன் இருக்க அம்பை நோவதில் பயனில்லை என்பது அவர்களின் தெளிந்த முடிவு. (10) கேடு பிறராற் கெழீஇயினும் தாஞ்சினவார் கோடா மனத்தவர் கூர்ந்துணரி னெப்பயனும் பீடுறு மூழா னலதில் பிறர்கருவி நாடினம்பை நோதல் நகை. - இன்னிசை இருநூறு : 83. 782. சிறிய ஈ தலையின் மேல் ஏறி மிதித்தாலும் அதனைக் கொல்ல முயல்பவர் இலர். அவ்வாறே சிறியவர் செய்த தவற்றைக் கருதித் தண்டிப்ப தற்குப் பெரியோர் விரும்பார். (11) மதித்து இறப் பாரும் இறக்க; மதியா மிதித்து இறப் பாரும் இறக்க; - மிதித்துஏறி ஈயும் தலை மேல் இருத்தலால் இஃதுஅறிவார் காயும் கதம் தின்மை நன்று. - நாலடியார் : 61. 783. இவர் நல்லவர்' 'இவர் தீயவர்' என்று எண்ணாமல் அவர்களைப் புவி தாங்கும். அவர்கட்குக் கதிர் ஒளி பரப்பும் ; காற்று வீசும்; வானம் இடம் தரும்; இறைவனும் இன்னருள் புரிவான். அதுபோல் மாந்தரும் பொறுத்துக் கொண்டு பிறர் நல்வாழ்வு வாழச் செய்தல் கடன். (12) நல்லவர்தீ யவரென்னா தெவரையுமே புவிதாங்கு நனிநீர் நல்குஞ் செல்லருண னொளிபரப்புங் கால்வீசு மந்தரமுஞ் சேரு மொப்பொன்று இல்லாதான் தீயவர்க்கா இரங்கிமனு வேடமுற்றா னெனிலன் னார்பாற் செல்லாதுன் சினமனமே பொறுமையே பெருமையன்றோ செப்புங் காலே. - நீதிநூல் : 31: 6. 784. மழையில் இடியுண்டு; திங்களில் கறையுண்டு; மலரில் முள் உண்டு; கரும்பில் சக்கை உண்டு; கனியில் தோலும் விதையும் உண்டு; அவற்றைப் போல் நன்மாந்தரிடத்தும் குற்றம் உண்டு. அதனைப் பொறுத்துக் கொண்டவர்க்கு நன்மை உண்டு. (13) பிழையிலான் கடவுளன்றி மக்களில் தப் பில்லாதார் பிறரு முண்டோ மழையினுமே அசனியுண்டு மதிக்குமோர் மறுவுண்டு மலர்க்கு முள்ளாம் கழையினுமே சக்கையுண்டு கனியினுந்தோல் கொட்டையுண்டு கதிக்குங் காம விழைவினான் மறம்புரிதல் நரர்க்கியல்பா தலினவரை வெறுக்கொண்ணாதே. - நீதிநூல் : 31 : 2. 785. நாயொன்று கடித்துவிட்டால் பதிலுக்கு அந்நாயைக் கடிக்கும் மாந்தர் இலர். அதுபோல் கீழ்மக்கள் தம் இயல்புக்கு ஏற்றவாறு கீழான சொற்களைச் சொல்லிவிட்டால் மேன்மக்கள் பொறுமையின்றி ஏதேனும் சொல்லார். (14) கூர்ந்துநாய் கௌவிக் கொளக்கண்டும் தம்வாயால் பேர்த்து நாய் கெளவினார் ஈங்கு இல்லை; - நீர்த்து அன்றிக் கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ மேன்மக்கள் தம் வாயால் மீட்டு? நாலடியார் : 70. 786 தீச் சுடுதலால் அடுப்பில் வைக்கப்பெற்ற நீரும் வெப்பம் அடையும். அதனை அடுப்பில் இருந்து அகற்றி விட்டால் வெப்பம் தானே குறைந்து போகும். அது போல் சான்றோர்கள் . தாம் கொண்ட கோவத்தைத் தாமே அடக்கிக் கொள்வர். (15) நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி கெடுங்காலம் இன்றிப் பாக்கும்; - அடுங்காலை நீர்கொண்ட வெப்பம் போல் தானே தணியுமே சீர்கொண்ட சான்றோர் சினம். - நாலடியார் : 68. 787. நிறை குடத்தில் உள்ள நீர் ததும்பி அலைதல் இல்லை . குறை குடத்து நீர் அலைந்து கூத்தாடும். அது போல் அறிவால் நிறைந்த சான்றோர் அடக்கமாக இருப்பர். அறிவிலாத சிறியவர் அடங்காமல் ஆரவாரம் செய்வர். (16) கற்றுஅறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார் பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார் - தெற்ற அறைகல் அருவி அணிமலை நாட்! நிறைகுடம் நீர் தளும்பல் இல். - பழமொழி : 9. 788. மனத்தில் அடக்கம் பெற்று அமைந்து வாழ்வது இவ் வுலகிலேயே வீட்டுலகுக்குரிய தாழ்க்கோலைப் பெற்றுக் கொண்டது போன்றதாகும். (17) நின்னை அறப்பெறு கிறகிலேன் நல்நெஞ்சே! பின்னையான் யாரைப் பெறுகிற்பேன்? - நின்னை அறப்பெறு கிற்பேனேல் பெற்றேன்மற்று ஈண்டே துறக்கம் திறப்பது ஓர் தாழ். - அறநெறிச்சாரம் : 143. 789. தன்னை நெருங்கிய பொருளைத் தெளிவாகக் காட்டும் பளிங்கு. அதுபோல் அகத்தில் உள்ளதைத் தெளிவாகக் காட்டும் முகம். (18) அடுத்தது காட்டும் பளிங்கு போல், நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். - திருக்குறள் : 706. 790. முரசு அறைபவன் என்ன எண்ணம் கொண்டிருக்கிறானோ அவ் வெண்ணத்தையே வெளிக்காட்டுகின்றது அவன் முரசம். அதுபோல் ஒருவன் உள்ளத்தில் உள்ளதை அவன் சொல்லே தெளிவாகக் காட்டும். (19) நீர்த்தன்று ஒருவர் நெறியன்றிக் கொண்டக்கால் பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே கூர்த்த நுண் கேள்வி அறிவுடையார்க்கு ஆயினும் ஓர்த்தது இசைக்கும் பறை. - பழமொழி : 37. 791. சிந்தனை என்னும் தூணில், அறிவு என்னும் கயிற்றைக் கொண்டு புலன்கள் என்னும் யானைகளைக் கட்டினால் இம்மை இன்பமும் மறுமை இன்பமும் கிடைக்கும். (20) இந்தியக் குஞ்சாரத்தை ஞான இருங்கயிற்றால் சிந்தனைத் தூண்பூட்டிச் சேர்த்தியே - பந்திப்பர் இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பயனும் தம்மைத் தலைப்படுத்து வார். - அறநெறிச்சாரம் : 190. 792. ஆமை ஓர் ஓட்டினுள் தலை, கால்கள் ஆகிய ஐந்து உறுப்புக்களையும் அடக்கிக் கொள்ளும். அதுபோல் ஐந்து உறுப்புக்களையும் அடக்கவல்லவனுக்குப் பின்வரும் பிறப்புக்களில் நல்ல பாதுகாப்புக் கிடைக்கும். (21) ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து. - திருக்குறள் : 126. 793. நீரிலே நின்றாலும் தாமரை இலையில் நீர் ஒட்டாது. அதுபோல் அலைந்து திரியும் புலன்களுடன் இருந்தாலும் பற்றற்றவர்களிடம் அப் புலன்கள் தம் தன்மையைச் சிறிதும் காட்டமாட்டா. (22) அலைபுனலுள் நிற்பினும் தாமரை ஈன்ற இலையின்கண் நீர்நிலாது ஆகும் - அலைவில் புலன்களில் நிற்பினும் பொச்சாப்பு இலரே மலம்படிவு ஆளா தவர்க்கு. - அறநெறிச்சாரம் : 148. 794. உணர்ச்சிமிக்கவர்கள் கொண்டுள்ள உயரிய அடக்கம் நீறுபூத்த நெருப்புப் போன்றது. (23) நீறு படிந்த நெருப்புக் கிணையாகும் வீறும் உளத்தோன் விறல். - கைவிளக்கு : 11 : 13. 795. நல்லுணர்வு உடையவர்களிடம் உயர்ந்த பொருள்களைப் பற்றிப் பேசுவது, வளமுறச் செழித்து வளரும் பாத்தியில் நீர்பாய்ச்சுவது போன்றது. (24) உணர்வ துடையார்முன் சொல்லல், வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந் தற்று. - திருக்குறள் : 718. 796. யானையை ஊடறுத்துச் செல்லவல்ல அம்பும் பஞ்சுப் பொதியைத் தைத்து வெளியேறாது. ஆதலால் மென்மையான சொற்களை வன்மையான சொற்கள் என்றும் வெற்றி பெற மாட்டா. (25) 797. இரும்புக் கம்பிக்கும் இடந்தராத பாறை, மெல்லிய மரத்தின் வேர் புக இடம் தரும். ஆதலால் வலிய சொற்களினும் மெலிய இனிய சொற்களே பிறர் மனத்தில் எளிதில் பதியும். (26) வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில் பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும். - நல்வழி : 33. 798. முத்து, பவழம் முதலியவை நீரின் ஆழத்துள் கிடக்கும். எளிய துரும்பு மேலே மிதந்து திரியும். அது போல் புகழாளர் அடக்கம் மிக்கவராக இருப்பர்; அஃதில்லார் தருக்கித் தம்மைத் தாமே புகழ்ந்து திரிவர். (27) குலமணி வெளியு றாதாழ் குரவையூ டொளித்திருக்கும் சலமிசை எவருங் காணச் சஞ்சரித் திருந்து ரும்பு கலமென மானம் பூண்ட கலைவலோர் அடங்கி நிற்பர் புலனில்சீத்தையர் தமைத்தாம் புகழ்ந்தெங்கும் திரிவர்மாதோ. - நீதிநூல் : 36: 8. 13. தீமை 799. கோவத்தின் எல்லை கடந்தவர் உயிர் போனவருக்கு ஒப்பானவர்; கோவம் வராமல் அடக்கிக் காத்தவர் துறவிக்கு இணையானவர். (1) இறந்தார் இறந்தார் அனையர்; சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. - திருக்குறள் : 310 800. தீயினால் சுட்டபுண் உள்ளே ஆறிவிடும். ஆனால் நாவினால் சுட்ட சொல் உள்ளே புண்ணாக இருந்து என்றும் ஆறாது; வடுவாக அமைந்து மாறவும் செய்யாது. (2) தீயினால் சுட்டபுண் உள் ஆறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு. - திருக்குறள் : 129 801. மெல்லிய மலரை எரிநெருப்புச் சுடுவது போல் துன்பம் செய்தாலும் அத்துன்பம் செய்தவன் மேல் கோவம் கொள்ளா திருத்தல் நல்லது. (3) இணரெரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. - திருக்குறள் : 308. 802. கோவத்தைப் பொன்னைப் போல் போற்றிக் காப்பவன் நிலத்தில் அறைந்தவனது கை தப்பிப் பிழைக்க மாட்டாமல் அழிவது போல் அழிவான். (4) சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு, நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. - திருக்குறள் : 307. 803. சினம் என்பது நெருப்புப் போன்றது. அது சினம் கொண்டவனை அன்றி அவன் சுற்றத்தையும் ஒரு சேர அழிக்க வல்லது. (5) சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும். - திருக்குறள் : 306. 804. சினங்கொண்டவன் வாழ்வு தேளும், பாம்பும், கொடு விலங்குகளும் கூடி வாழும் காட்டில் வாழ்வது போன்ற கொடிய துயருக்கு உரியதாகும்.(6) நாளு நாங்கொளுந் துயர்க்கெலாங் காரண நாடின் மூளுஞ் சீற்றத்தின் விளைவதா முனிவக முடையோர் தேளும் பாம்பும்வெஞ் சினவிலங்கினங்களு நனி வாழ்ந்து ஆளுங் கானில்வாழ் பவரெனத் தினமஞ ரடைவார். - நீதிநூல் : 25:6, 805. வெகுளியுடையோன் வீட்டை விட்டு வெளியே சென்றால் வீட்டினர் விழாக் கொண்டாடுவர். அவன் வீட்டில் இருந்தால் வீட்டில் இழவு உண்டாகியது போல் தோன்றும். அவன் இறந்தால் வீட்டில் மணவிழா ஒன்று நடைபெறுவது போல் மகிழ்வுண்டாகும். (7) சினமு ஸோன்மனை மைந்தர்க ளவன்வெளிச் செல்லுந் தினமெ லாந்திரு விழவுகொண் டாடுவர் செல்லாது இனையன் தங்குநா ளிழவுகொண் டாடுவ சிறப்பின் மனையி லோர்பெரு மணவிழா வந்தென மகிழ்வார். - நீதிநூல் : 25:5. 806. தன்னுடைய நாட்டினை அடக்கிச் செம்மையாக ஆட்சி செய்ய முடியாதவன் பிற நாட்டைக் கவர்ந்து அதனை ஆளமாட்டான். அதுபோல் தன் சினத்தை அடக்கிக் காக்க ஆற்றல் இல்லாதவன் பிறனை அடக்க வல்லவன் அல்லன். (8) பெற்றதன் நாட்டை யாளான் பிறர் நாட்டை யாள்வான் கொல்லோ உற்றதன் சீற்ற மாற்றி உரத்தொடு தனைத்தான் வெல்லக் கற்றறி யானொன்னாராங் கனலிக்கோர் வையே யாவன் கொற்றமவ் வொல்லார் கொள்வார் கோபம் போல் தாப முண்டோ . - நீதிநூல் : 25:10. 807. வலியவர் மேல் கோவம் கொண்டு மோதுபவர் மலை மேல் மோதும் மண்பானை போல் அழிவர்; தமக்கு ஒப்பானவர் மேல் மோதுபவர் புலியொடு புலி போர் செய்து அழிவது போல் அழிவர். தம்மினும் மெலியவர்மேல் மோதுபவர் எலியொடு மோதும் புலிபோல் இழிவு அடைவர். (9) வலியரைச் சினப்போர் வரையினின் மோது மட்கல மெனவுடைந் தழிவார் பொலிவுறத் தமையொப் பவர்களைச் சினப்போர் புலியிரண் டொன்றையொன் றடித்து மெலிவோடு இரண்டுங் கெடுவபோற் கெடுவார் மெலியரை வெகுளுவோர் வேங்கை எலியினை யெதிர்த்த தன்மைபோ லிழிவு றெரிநர கிடையமிழ்ந் துவரே. - நீதிநூல் : 25:1. 808. தாங்க முடியாத் துயரங்களை வலியவர்களுக்கு ஓயாது செய்து கொண்டிருப்பவன், கூன் விழுந்துள்ள முதுகின் மேல் பெரிய கட்டி ஒன்று புறப்பட்டது போன்ற துயருக்கு உள்ளாவான். (10) உறாஅ வகையது செய்தாரை வேந்தன் பொறாஅன் போலப் பொறுத்தால் - பொறாஅமை . மேன்மேலும் செய்து விடுதல் அதுவன்றோ கூன்மேல் எழுந்த குரு. - பழமொழி : 283. 809. வாழை ஒரு முறையே அல்லாமல் இருமுறை ஈனுவது (தார் போடுவது இல்லை. அதுபோல் பொறுமை மிக்கவர்களாலும் ஒருவன் செய்யும் தீமையை ஒரு முறைக்கு மேல் பொறுக்க முடிவது அரிதேயாம். (11) முன்னும் ஒருகால் பிழைப்பானை ஆற்றவும் பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ? - இன்னிசை யாழின்வண்டு ஆர்க்கும் புனலூர் ஈனுமோ வாழை இருகால் குலை. - பழமொழி : 63. 810. மிக வலிய கல்லும் காற்று, மழை, பனி, வெயில் இவற்றுக்கு ஆட்பட்டு உடைந்து தேய்ந்து போகும். ஆனால், ஒருவன் சொல்லிய சொல்லோ சிறிதும் தேயாமல் வளரவே செய்யும். (12) கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர் வடுவல்ல செய்தலே வேண்டும் - நெடுவரை முற்றுநீர் ஆழி வரையகத்து ஈண்டிய கல்தேயும் தேயாது சொல். - பழமொழி : 39. 811. மெய்யுரைக்க அமைந்த வாயால் பொய்யுரைத்தல் சோறு (அமுது) வைக்க வேண்டிய பாத்திரத்தில் சாணம் வைப்பது போன்றது. (13) விலங்குபறவையினுநரர் வாக்கொன்றாற் சிறப்புடையார் விளங்குந் திண்மை இலங்குவா யாலுரையா தவத்தமுரைப் போருலகம் இகழ்வி லங்கின் குலங்களினுங் கடையராஞ் சாணமதை யமுதுவைக்குங் கோலச் செம்பொற் கலங்களின்வைத் தலையொக்கும் மெய்க்குரிய வாயாற் பொய் கழற லன்றே. - நீதிநூல் : 15 : 6. 812. உண்மை எவருக்கும் வெறுப்பை உண்டாக்கும். பொய்ம்மை எவருக்கும் விருப்பினை உண்டாக்கும். பாலை வீடுதோறும் அலைந்து போய் விற்பதையும் மதுவைத் தாமே தேடிச் சென்று வாங்குவதையும் காண்கிறோம் அல்லவா! (14) சத்தியம் எக் காலும் சனவிருத்தம் ஆகுமே எத்திய பொய் யார்க்கும் இதமாகும் - நத்தியபால் வீடுதொறும் சென்றுவிலையாம் மதுஇருந்த வீடு தனி லேவிலையா மே. - நீதிவெண்பா : 5. 813. கற்க வேண்டியவற்றையெல்லாம் கற்றறிந்தும் அவற்றைக் கடைப்பிடிக்க முடியாமல் தீய எண்ணங்கள் எழும்புவது, மெல்லிய தாமரைப் பூவில் வலிய கல்பட்டது போன்ற அழிவைத் தரும். (15) கற்றதுவும் கற்றுஒருபால் நிற்பக் கடைப்பிடியும் மற்றுஒருபால் போக மறித்திட்டுத் - தெற்றென நெஞ்சத்துள் தீமை எழுதரு மேல் இன்னாதே கஞ்சத்துள் கல்பட்டால் போன்று. அறநெறிச்சாரம் : 73. 814. பாம்பினைக் கொன்று தின்றாலும் அடக்கமும் மென்மையும் வாய்ந்ததாகத் தோன்றும் மயில். அது போல் இரவெல்லாம் இன்னாத செயல்கள் செய்து, பகலில் பண்புடையவர்கள் போல் காட்சி வழங்குபவர் உளர். (16) துயிலும் பொழுதத் துடைவூண்மேற் கொண்டு வெயில் விரி போழ்தின் வெளிப்பட்டா ராகி அயில்போலும் கண்ணாய் அடைந்தார்போல் காட்டி மயில் போலும் கள்வருடைத்து. - பழமொழி : 194 815. பிறரைப் பழிப்பதையே தொழிலாகக் கொண்ட ஒருவன் நம்மை மட்டும் பழிக்க மாட்டான் என்பது இல்லை. மாந்தர்க்குக் கசப்புடையதாக உள்ள வேம்பு தேவர்களுக்கு மட்டும் இனிப்புடையதாக இருக்குமா? (17) தெற்ற ஒருவரைத் தீதுரை கண்டக்கால் இற்றே அவரைத் தெளியற்க - மற்றவர் யாவரே ஆயினும் நன்கொழுகார் கைக்குமே தேவரே தின்னினும் வேம்பு. - பழமொழி : 95. 816. கல்லால் எறித்தவர்களைக் கடிக்காமல் கல்லைக் கடிக்கும் நாய் போன்றவர் ஆவர், தம் ஆசையை அடக்க முடியாமல் அவ்வாசை நிறைவேறாமைக்குத் தடையாக இருந்தவர்களை அடக்க முனைபவர். (18) ஒறுக்கிலேன் ஊர்பசை என்கண் பிறரை ஒறுக்கிற்பேன் என்றுரைப்பை யாகில் - கறுத்தெறிந்த கற்கறித்துக் கற்கொண் டெறிந்தாரைக் காய்கல்லாப் பற்கழல் நாய் அன்ன துடைத்து. - அறநெறிச்சாரம் : 138. 817. கோங்க மரத்தின் மேல் ஏறியவர்க்கு ஏற்ற பாதுகாப்பு இல்லை. அதுபோல் தம்மைக் காக்க முடியாமல் தம்மினும் வலியவர் மேல் கோவம் கொண்டவர்க்கும் ஏற்ற பாதுகாப்பு இல்லை. (19) தாமேயும் தம்மைப் புறந்தர வாற்றாதார் வாமான்றேர் மன்னரைக் காய்வ தெவன்கொலோ ஆமா உகளும் அணிவரை வெற்பகேள் ஏமாரார் கோங்கேறினார். - பழமொழி : 282. 818. தன்னினும் தாழ்ந்தவன் என்னும் எண்ணத்தால் எதுவும் பேசலாம், எத்துன்பமும் ஆக்கலாம் என்று நினைப்பது தவறு. அன்புடன் வளர்க்கப் பெற்ற நாயாக இருந்தால் கூட வளர்த்தவன் அடிக்கப் போகும் பொழுதில் கடிப்பதும் உண்டு. (20) ஆற்றா ரிவரென் றடைந்த தமரையும் தோற்றத்தா மெள்ளி நலியற்க – போற்றான் கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கவ்வி விடும். - பழமொழி : 45. 819. ஒருவன் அறிவில்லாமல் சொல்லிய தீய சொல்லுக்குப் பதிலாகத் தீய சொல் சொல்லுவது தன் வீட்டைத் தானே தீ வைத்து எரிப்பது போன்றது. (21) நோவ உரைத்தாரைத் தாம்பொறுக்க லாகாதார் நாவின் ஒருவரை வைத்தால் வயவுரை பூவிற் பொலிந்தகன்ற கண்ணாய் அதுஅன்றோ தீ இல்லை ஊட்டும் திறம். - பழமொழி : 58. 820. சந்தனம் உள்ள செப்பும், சாணம் உள்ள கூடையும் அவ்வவற்றின் மணத்தையே காட்டும். அவ்வாறே பொல்லாரையும், நல்லாரையும் அவரவர் சொற்களே காட்டும். (22) சந்தநிறை செப்பிறைவை சாணமுள தென்னக் கந்தம் தெவர்க்குநனி காட்டிவிடல் போலும் நிந்தனையு ளாரினிய நீர்மையின ரென்ன முந்தவவர் வாய்மொழி மொழிந்துவிடு மன்றோ. - நீதிநூல் : 32 : 3. 821. உடலை அழகுடன் வைத்துக் கொண்டு தான் சொல்லும் சொல்லை நாற்றம் உடையதாக வைத்திருப்பவன் மலத்தை உள்ளடக்கிய அழகிய செப்புப் போன்றவன். (23) தோற்றம் மிகப் பேணித் தூய உரைபேணான் நாற்றம் அகங்கொண்ட செப்பு. மலர்கண்டு செம்மாப்போன் மாசு மலங்காணின் என்னென்பான் இன்னதை எண். - கைவிளக்கு : 4 : 18, 19. 822. கீழ்மக்களிடம் மறைவான செய்திகளைச் சொல்வது உயர்ந் தோங்கிய பனைமரத்தின் மேல் ஏறி நின்று கொண்டு பஞ்சைத் தூவி விடுவது போன்றது. (24) பெருமலை நாட்! பிறரறிய லாகா அருமறையை ஆன்றோரே காப்பர் – அருமறையை நெஞ்சிற் சிறியார்க் குரைத்தல் பனையின்மேல் பஞ்சிவைத் தெஃகிவிட் டற்று. - பழமொழி : 181. 823. சுடுகாட்டில் பிணநாற்றம் மிகும்; சோலையில் நறுமணம் மிகும்; அவற்றைப் போல் புறங் கூறுவோர் இடத்தில் இருந்து பழிச் சொற்களே வெளிவரும். புகழாளர்களிடம் இருந்து புகழ்ச் சொற்களே வெளிவரும். (25) சாம்பிணம் இடுவனஞ் சாருந் துன்மணம் பூம்பொழில் பரிமளம் பொருந்தி நாறிடும் தாம்பழி யுளரலால் தகுதி யோர்பிறர் நோம்படி யவர்குறை நுவலு வார்களோ. - நீதிநூல் : 21 : 1. 824. நல்லுணர்வு இல்லாதவரிடம் உயர்ந்த பொருள்களைப் பற்றி உரைத்தல் சாய்க்கடையில் கொட்டப் பெற்ற அமுது போன்றது. (26) அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால், தம்கணத்தர் அல்லார்முன் கோட்டி கொளல். - திருக்குறள் : 720. 825. வெங்காரம் முதற்கண் வெப்பம் தந்தாலும் பின்னர்க் குளிர்தரும். நச்சு முதற்கண் குளிர்ந்தாலும் பின்னர்க் கொல்லும். ஆதலால், நல்லவர் எச் சொல்லைச் சொன்னாலும் நலமான தாகவும், தீயவர் எச்சொல்லைச் சொன்னாலும் தீமையான தாகவும் இருக்கும். (27) மனத்த கறுப்பெனின் நல்ல செயினும் அனைத்தெவையும் தீயவே ஆகும் - எனைத்துணையும் தீயவே செய்யினும் நல்லவாக் காண்பவே மாசின் மனத்தி னவர். - நீதிநெறி விளக்கம் : 58. 826. ஞாயிற்றின் கதிர் சுடும். அதனினும் தீ சுடும்; அதனினும் தீயோர் சொல் சுடும். (28) வெய்யோன் கிரணம் மிகச்சுடுமே வெய்யவனின் செய்யோன் கிரணமிகத் தீதாமே - வெய்யகதிர் எல்லோன் கிரணத்து எயிரினிலும் எண்ணம்இலார் சொல்லே மிகவும் சுடும். - நீதிவெண்பா : 93 827. கூடுகட்டுதல் குருவிக்கும், புற்று உண்டாக்குதல் கறையானுக்கும், அடை செய்தல் தேனீக்கும் எளிது. அவற்றைப் போல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிது. நாம் திறம் மிகப் பெற்றவர் என்று இறுமாப்படைவதே இழிவு. (29) வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான் தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் - யாம் பெரிதும் வல்லோமே என்று வலிமைசொல வேண்டாம் காண் எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது. - பெருந்தொகை : 355. 828. புகழை விரும்பி அலையும் நெஞ்சம் அளவிறந்த துயருக்கு ஆளாக்குவதால் அது நஞ்சுக்கு ஒப்பானது. (30) வசையுமீக் கூற்று மற்றோர் வாய்வரு வாயு வல்லாற் பசையுள தோவக் காற்றைப் பாரிலோர் பொருளென் றெண்ணி இசையினான் மகிழ்வும் பேசும் இகழ்வினால் துயரும் உற்று நசையினால் கொல்லு நெஞ்சம் நஞ்சமே யொக்கு மாதோ. - நீதிநூல் : 37: 2. 829. துரும்பு நீரின் மேலே மிதக்கும்: முத்து முதலிய அரும் பொருள்கள் ஆழத்துள் கிடக்கும். அவற்றைப் போல் அறிவிலார் தம்மைப் புகழ்ந்து தருக்கித் திரிவர். அறிவுடையார் அடங்கி அமைந்து இருப்பர். (31) குலமணி வெளியுறாதாழ் குரவையூ டொளித்திருக்குஞ் சலமிசை யெவருஞ் காணச் சஞ்சரித்திருந்து ரும்பு கலமென மானம் பூண்ட கலைவலோ ரடங்கி நிற்பர் புலனில் சீத் தையர்தமைத்தாம் புகழ்ந்தெங்குந் திரிவர் மாதோ. - நீதிநூல் : 45:3. 830. உச்சிக் கிளையில் எல்லை கடந்து ஏறிச் செல்பவன் அழிவான். அதுபோல் அளவின்றிச் செருக்குபவனும் அழிவான். (32) நுனிக் கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதியாகி விடும். - திருக்குறள் : 476. 831. எறும்பும் தன்கையால் எட்டுச் சாண் அளவு உடையதே. நான் பெரியன் என்று செருக்குபவனும் தன்கையால் எட்டுச் சாண் அளவு உடையவனே. ஆகவே நான் பெரியன் என்று தருக்குவது இழிவே. (33) கற்றது கைம்மண்ணளவு கல்லா துலகளவென் மற்ற கலைமடந்தை ஓதுகிறாள் - மெத்த வெறும் பந்தயம் கூற வேண்டா புலவீர் எறும்பும் தன் கையால் எண் சாண். - பெருந்தொகை : 354. 832. தேர் பெரிது; அச்சாணி சிறிது. எனினும் அச்சாணி இல்லாத தேர் ஓடாது. அத்தகைய அச்சாணி போன்ற செயல் வீரர்களும் உளர். ஆகவே உருவினைக் கண்டு ஒருவரை இகழாமல் இருக்க வேண்டும். (34) உருவுகண் டெள்ளாமை வேண்டும்; உருள்பெருந்தேர்க் கச்சாணி அன்னார் உடைத்து. - திருக்குறள் : 667. 833. தன் புகழைத் தானே கூறுவது, பல்லக்கின் மேல் செல்பவன், அப்பல்லக்குச் சுமக்கும் ஆட்கள் இல்லாமல் தானே அதனைச் சுமப்பது போன்றது. (35) தன்துதி பிறர்சொலத் தகுந்தன் வாயினால் ஒன்றுறத் தன்துதி யோதல் ஊர்ந்துதான் சென்றிடும் ஊர்தியைச் சிவிகை யாரின்றித் துன்றுதன் தோளினால் சுமத்தல் போலுமே. - நீதிநூல் : 36:3. 834. தன் புகழை ஒருவன் தானே கூறுவது, வண்டியுள் இருப்பவன் அவ்வண்டியை இழுக்கும் மாடு, குதிரை ஆகியவை இல்லாமல் தானே உள்ளிருந்து உந்தித் தள்ளுவது போன்றது. (36) தன்றுதி பிறர்சொலத் தகுமன் னோர்புகழ் இன்றியே தன்னைத்தான் ஏத்தல் ஊர்தியில் ஒன்றுமா பூட்டிடா தொருவன் உள்ளுறூஉம் மன்றவே நடத்துவான் வலித்தன் மானுமே. - நீதிநூல் : 36 : 1. 835. நீர்வளத்தால் நெற்பயிர் வளர்தல் போல் பண்புச் சிறப்பால் புகழ் வளர்த்தல் வேண்டும். அவ்வாறின்றித் தன் புகழைத் தானே கூறுவது, நீர் விடாமல் கையால் பயிரைப் பிடித்து இழுத்து இழுத்து வளர்த்து விட முயல்வது போன்றது. (37) நீரினால் பயிர்வளம் நிலைத்தல் போற்குணச் சீரினால் புகழ்ப்பயிர் செழிக்க வேண்டும்நற் பேரிலான் தற்புகழ் பிடித்தி ழுத்தரு மாரியில் பயிரினை வளர்த்தல் மானுமே. - நீதிநூல் : 36 : 4. 836. தன்னைத் தானே புகழ்ந்து பேசிப் பெருமையை வளர்க்க முயல்வது, நெருப்பை நீர்விட்டு வளர்க்க நினைப்பது போன்றது. (38) விலக்கிய ஓம்பி விதித்தனவே செய்யும் நலத்தகையார் நல்வினையும் தீதே - புலப்பகையை வென்றனம் நல்லொழுக்கில் நின்றேம் பிறவென்று தம்பாடு தம்மிற் கொளின். - நீதிநெறி விளக்கம் : 18. 837. தன் புகழைத் தானே கூறுவது, தன் உடல் உயரமானது என்பதைப் பிறருக்குக் காட்டத் தன் கையால் தன் உடலைத் தூக்க முயல்வதற்கு ஒப்பானது. (39) துதிபெற ஆதா மிகலாலே தூயவ ராகுவர் கலைதேறி மதியினர் ஆகுவர் அரிபோல வலியின ராகுவ ரேயேனும் அதிதுதி பிறர்சொலின் அழகாகும் அமைவொடு தனது தான் கூறல் கதிதன துடலுயர் வுறவேதன் கைகொடு தூக்கிட வுனல்போலும். - நீதிநூல் : 36:6. 838. தன் புகழைத் தானே கூறிப் பெருமை பெறலாம் என்பது, குளிப்பதற்காகச் சேற்றில் மூழ்குவதையும், விளக்கைத் தூண்டுவதற்காக ஊதுவதையும் போன்றது. (40) சடமதைக் கழுவ வுன்னிச் சகதியிற் றோய்தல் போலும் சுடரினைத் தூண்ட வேண்டி யூதியே தொலைத்தல் போலும் மடமையால் தன்னைத் தானே புகழுவோன் வசைக ளெல்லாம் புடவியே யெடுத்துரைக்கப் பூணுவன் நிந்தை யம்மா. - நீதிநூல் : 36 : 7. 839. உறுதிப்பாடற்ற உள்ளம் உடைய மக்களின் புகழ்ச்சி நீரின் மேல் எழுதப்பெற்ற எழுத்துப்போல் நிலையற்றது. (41) தன்றுணை யிலானே யுள்ளத் தன்மையை யறிவான் பூமி இன்றொரு வனைத் துதிக்கும் ஏசிடு மவனைப் பின்னும் நன்றினைத் தீதென்றுன்னுந் தீதைநன் றென்ன வுன்னும் பொன்றுமானிடர்புகழ்ச்சி புனலின்மேல் எழுத்துக் கொப்பே. - நீதிநூல் : 37:1. 840. இளமைச் செருக்காலும், வளமைச் செருக்காலும் நல்லவற்றை விடுத்துத் தீயவற்றைச் செய்வது உரிய பருவத்தில் பயிருக்கு நீர்ப் பாய்ச்சுவதை விடுத்துத் தீ மூட்டுவது போன்றது. (42) தெருளாதார்ப் பற்றும் செருக்கெனும் பேயால் குருடாம் புறக்ககண்ணும் நல்ல செவிக் கொள்ளா மருளும் மதிதிறப்பில் வாய்திறக்கு மேனும் பருவந்து சோர்வு படும். - இன்னிசை இருநூறு : 149. 841. பருத்தி விதைத்து நூலாக்கி ஆடை நெய்து தந்தால் உடுத்துதலில் துயரில்லை. நெல்லை விதைத்து விளையச் செய்து சோறாக்கித் தந்தால் உண்ணுதலில் துன்பில்லை. அவற்றைப் போல் அரிய நூல்களை முன்னவர் ஆய்ந்து தந்திருக்க அவற்றில் சிலவற்றைக் கற்றதற்காகச் செருக்கடைதல் அறிவுடைமை ஆகாது. (43) பருத்திவிதைத் தெடுத்து நூலாக்கி யாடை பண்ணியளித் தாலுடுத்தல் பார மாமோ திருத்திமண்ணிற் செந்நெல் விதைத் தரிசி யாக்கித் தீஞ்சோறட் டூட்டிலுண்ணச் செவ்வாய் நோமோ அருத்தமொடு மிலக்கணங்க ளிலக்கியங்கள் - அரியநூல் பல முன்னோரளித்த தாலே கருத்தேயந் நூல்கள்சில கற்று ணர்ந்து கவிசொல்லல் வியப்பன்று கர்வ மென்னே. - நீதிநூல் : 27 : 4. 842. சிற்றெறும்பு தன்னையும் தான் வாழும் குழியையும் பெரிய உலகமாக எண்ணுவது போல் செருக்குடையவனும் தன்னைப் பொருந்தாத அளவில் பெரியவனாக மதித்துச் செருக்கடைகிறான். (44) எறும்புதன் பிலத்தைத் தன்னை யாவுமென் றுனல் போல் அண்டத்து உறும்புவ னங்க ளெண்ணில் உவைமுன்னம் நரரும் பாரும் இறும்புமுன் அணுவோ வாழி யெதிரொரு துளியோ நில்லாது அறும்படி வத்தின் மாக்கள் அகம் அகம் மிகல்த காதால். - நீதிநூல் : 27: 6. 843. கண்ணைக் கவரும் கட்டழகு உடையோம் என்று செருக்குவது அறிவின்மை ஆகும். அவ்வுடல் அழகு, மண் சுவர் மேல் எழுதப்பட்ட வண்ண ஓவியம் போன்றது. (45) கட்புலன்றனை யேகவர்ந்திடு கவினுளேமென வனுதினம் பெட்புறப்புவியிற் செருக்குதல் பெருமையன் றொளிர்பேருடல் உட்புறத்தி னையே திருப்பிடி லோங்கலாமலக் காடு சூழ் மட்புறச்சுவர் தீட்டு சித்திர மானுநம்மெழில் நெஞ்சமே. நீதிநூல் : 28 : 4. 844. வண்டி உருளை போலவும், மின்னலைப் போலவும் தோன்றி மறையும் செல்வத்தைப் பெரிதாகக் கருதி மனம் செருக்குவது முகில் நிழலை நம்பிக் குடையைக் கைவிடுவது போன்றது. (46) சுழல்சக டக்கால் போலுந் தோன்றியே யழிமின் போலும் அழன்மன வேசைபோலு மருநிதி மேவி நீங்கும் பழமைபோ லதனை நம்பிப் பழியுறச் செருக்கல்மேக நிழலினை நம்பிக்கைக் கொள் நெடுங்குடை நீத்தலொப்பே. - நீதிநூல் : 29 : 4. 845. படைக் கருவிகள் படைப்போர் அவற்றைப் பயன் படுத்த அறியார்; அவற்றைப் பயன்படுத்த அறிந்தவர் படைக்க அறியார், ஓவியங்களைத் தீட்ட வல்லவர் கருவிகள் செய்யார்; கருவிகள் செய்ய வல்லவர் ஓவியம் தீட்ட அறியார்; உடை உடுப்போர் நெய்தலை அறியார். அவற்றைப் போல் ஒன்றை அறிந்தவர் ஒன்றை அறியார். அவ்வாறிருந்தும் மனம் செருக்கு வது அறிவாகாது. (47) அத்திரங்கள் செய்வோர்தாம் எய்தல் தேரார் ஆய்ந்தெய்ய அறிந்தோரம் பியற்றல் தேரார் சித்திரங்கள் பொறிப்பவர்தாங் கருவி செய்யார் திகழ்கருவி செய்பவர் சித்திரித்தல் கல்லார் வத்திரங்கள் பூண்போர்நெய் தறியார் இன்ன வாய்மைபோ லொன்றறிவோர் ஒன்று கல்லார் சத்தியமாச் சகலமுநன் குணர்ந்தோர் போலத் தருக்குற்றார் பெருக்குற்றார் திருக்குற் றாரே. - நீதிநூல் : 27:3. 846. பிறர் உரைக்கும் கோள் உரையை உண்மை என ஏற்பவன், கண்ணாரக் கண்ட ஒன்றை நம்ப மறுப்பவனையும், கனவில் தன் மனைவி தவறான ஒழுக்கம் உடையவள் எனக் கண்டு அவளைக் கொன்றவனையும், தன் முயற்சி இன்றிப் பிறர் உதவியால் வாழ நினைக்கும் அறிஞனையும் போன்றவன். (48) கண்டதனைத் தேற்றா தவனும், கனாக்கண்டு பெண்டிரைப் பேதுற்றுக் கொன்றானும் - பண்டிதனாய் வாழ்விப்பக் கொண்டானும் போல்வரே, வையத்துக் கோள் விற்பக் கொள்ளாநின் றார். - அறநெறிச்சாரம் : 62. 847. கோட் சொல்லைக் கேட்பவன் காதில் ஒருவன் வந்து சொல்லிய சொல், காற்றுடன் கலந்த நெருப்புப் போல் மூண்டு பெருகும். (49) கோள்செவிக் குறளை சாற்றுடன் நெருப்பு. - கொன்றை வேந்தன் : 24. 848. எரியும் விளக்கில் இருந்து திரியை இழுத்துச் செல்லும் எலி அத்திக்கு ஆட்பட்டு ஆழிகின்றது. அது போல், பிறரைப் பற்றிச் சொல்வதை எல்லாம் தம்மைச் சொல்வதாக எண்ணி வலுச் சண்டைக்குச் செல்லும் அறிவில்லாரும் அழிவர். (50) எய்தா நகைச்சொல் எடுத்துரைக்கப் பட்டவர் வைத்தாராக் கொண்டு விடுவர்மன் அஃதால் புனற்பொய்கை ஊர விளக்கு எலிகொண்டு தனக்கு நோய் செய்து விடல். - பழமொழி : 54. 849. பொறாமைக்காரன், எவரேனும் துன்புற்றால் தான் மணிமுடி சூடியதுபோல் மகிழ்ச்சி அடைவான். பிறனொருவன் ஏதேனும் சிறப்பினைப் பெற்றால் தன் பெண்டு பிள்ளைகள் இறந்தது போல் கவலைப்படுவான்.(51) தாரணியி லெவரேனுந் துயருறிற்றன் தலையின்முடி தரித்த தொப்பாஞ் சீரணியுஞ் செல்வமவர் படைத்திடிற்றன் தாய்மனைசேய் செத்த தொப்பாங் காரணமே யொன்றுமின்றிச் சுக துக்கந் தன்வலியாற் கணத்துக் குள்ளே பூரணமா வாக்கிடுவோன் பொறாமையுளோன் அன்றியெவர் புவியின் கண்ணே . - நீதிநூல் : 26 : 2. 850. ஆழமாகக் கிடக்கும் நீர்க்கு அசைவு இல்லை . குறைந்த நீர்க்கே மிகுந்த அசைவு உண்டு. அவ்வாறே , குறைந்த அறிவின் ரிடமே பொறாமை உண்டு. (52) நிறைய நீர்க்கசை வில்லை நீணிலத்து அறையுங் கல்வியில் அறிவின் மேன்மையில் குறையு ளார்க்கலாம் கோதின் மாண்பினார்க்கு இறையும் அவ்வியம் இல்லை யில்லையே. - நீதிநூல் : 26:6. 851. தன் கழுத்தில் தானே மாட்டிக்கொள்ளும் இரும்பு வளையம் போன்றது பொறாமை. அப்பொறாமை உடையவர் தோட்டி என்னும் கருவி யால் துன்புறும் யானை போல் துன்புறுவர். (53) பூட்டுமரி கண்டம் புனைந்தழுங்கு வார்போலுந் தோட்டியினைத் தானே சுமந்து கெடுங் கயம்போலும் வாட்டுந் துயர்கள்பல வைய மிசையிருக்கக் கோட்டமுளோர் வேறா குலந்தமக்குண் டாக்குவரே. - நீதிநூல் : 26:8. 852. வஞ்சக நெஞ்சம் உடையவன் பொறாமை மொழி களை அள்ளி வீசிப் பரப்புவது, நாற்றமிக்க சாய்க்கடை பெருகி ஓடுவது போன்றது. (54) உள்ளவங் கணங்கசிந் தோடல் போலொரு கள்ளநெஞ் சினன்புறங் கழற லன்னவன் உள்ளமார் புரையெலாம் ஒழுகி வாய்மொழி வெள்ளமாய் வழிகின்ற விதத்தை மானுமே. - நீதிநூல் : 21 :3. 853. ஒருவன் புறங்கூறினால் அதனைக் கேட்டவர் ஒன்றைப் பத்தாக்கிப் பரப்புவர். ஆகவே, புறங் கூறுபவன் அம்மை நோய் போன்றவன். அவனை ஊரைவிட்டு ஒழிப்பதும் தகும். (55) ஒருவனொருவன் குறையையுரைத் திடவே யதனைக் கேட்டோர்கள் பெருக பத்துங் கலந்து பல பேருக் குரைக்க விவ்வாறே மருவி யெங்கும் பரவுதலான் மண்ணின் முன்னம் தூறுமவன் குரு நோ யொப்பானவனைக்கோ னூர் விட்ட கற்றல் நன்றேயாம். - நீதிநூல் : 21 : 7. 854. வாட்கருவியை வாங்குவோர் இலரேல் அதனை விற்பவர் இலர். அதுபோல் கோட் சொல்லைக் கேட்பவர் இஸ்ரேல் அதனைச் சொல்பவர் இரார். (56) வாட்படைவாங் குவரிலரேன் மாறுவார் புறங்கூற்றைக் கேட்பவர்தா மிலரென்னிற் கிளப்பவரார் பிறன்பழியை வேட்பொடுசொல் வோரவற்கு மேவலரென் றுனியதனைக் கோட்புறலிலாது சினங் கொண்ட கற்றல் நெறியாமே. - நீதிநூல் : 21 : 8. 855. உள்ளொன்று வைத்துப் புறம் போன்று பேசுபவர் உரையை உண்மை எனக் கொள்வது, கண்ணை மூடிக்கொண்டு மதில் சுவர் மேல் நடக்கும் அறிவில்லாமை போன்றது. (57) அத்திசூ ழுலகிற் சில்லோர் அகத்தொன்றும் வாக்கி லொன்றும் வைத்திதஞ் சொல்லா லியாவும் வனச்செவி யேற்ப தன்றிச் சத்திய மெனக்கொண் டேகல் சக்கினை மூடி நீண்ட பித்திகை யேறிச் செல்லும் பேதைமை நிகர்க்கு மாதோ. - நீதிநூல் : 37: 6. 856. தீய மனப் போக்கின்படி பின் சென்றவன் துன்புறுவான். அவன், பிடிப்பதற்காக நிறுத்தி வைக்கப் பெற்ற பெண் யானையின் வழியே போய் அகப்பட்டுத் துன்புறும் காட்டு ஆண் யானை போன்றவன். (58) தன்னைத்தன் நெஞ்சம் கரியாகத் தான் அடங்கின் பின்னைத்தான் எய்தா நலன் இல்லை - தன்னைக் குடிகெடுக்கும் தீநெஞ்சின் குற்றேவல் செய்தல் பிடிபடுக்கப் பட்ட களிறு. - அறநெறிச் சாரம் : 141. 857. வஞ்சகம் இல்லார்க்கு மறைந்து திரிதல் இல்லை ; வஞ்சகம் உடையார்க்கு வெளிப்பட்டுத் திரிதல் இல்லை; நஞ்சிலா நீர்ப்பாம்பு வெளியே திரிய , நஞ்சுடைய பாம்பு புற்றுள் அஞ்சிக் கிடக்கும் அல்லவா! (59) நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும் அஞ்சாப் புறங்கிடக்கு நீர்ப்பாம்பு - நெஞ்சிற் கரவுடையார் தம்மைக் காப்பர் கரவார் கரவிலா நெஞ்சத் தவர். - மூதுரை : 25. 858. 'கவயமா' என்னும் காட்டு விலங்கு நயமாகத் தன் நாவினால் நக்குவதால் பகையை மயக்கிக் கொன்றுவிட வல்லது. அதுபோல் தீயவை எவ்வளவு நயமாகச் செய்யப் பெற்றாலும் தீயவை ஆகுமே அல்லாமல் நல்லவை ஆகா. (60) தீய செயற்செய்வா ராக்கம் பெருகினுந் தீயன தீயனவே வேறல்ல – தீயன நல்லன வாகாவாம் நாவின் புறநக்கிக் கொல்லுங் கவயமா போல். - நீதிநெறி விளக்கம் : 74. 859. அன்பினால் ஒருவரை வயப்படுத்திக் கொள்வதற்கு வகை இருந்தும் அதனை விடுத்து வன்பினால் வயப்படுத்த நினைப்பது, தன் கன்றினை விட்டுப் பசுவில் பால் கறப்பதற்குப் பதிலாக அம்பினை விட்டுப் பால் கறக்க முனைவது போன்றது. (61) அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது கன்றுவிட் டாக்கறக்கும் போழ்தில் கறவானாய் அம்புவிட்டு ஆக்கறக்கு மாறு. - பழமொழி : 166 860. தமக்கு உதவி செய்வதற்காக வந்தவர்களின் உதவியை நன்றியறித லுடன் பெறாமல் அவர்களின் குற்றம் குறைகளைச் சொல்லித் திரிவது, விருந்தில் வைக்கப்பட்ட அப்பத்தைத் தின்பதை விடுத்துத் தொளையை எண்ணிக்கொண்டு இருப்பதற்கு ஒப்பானது. (62) நிலைஇய பண்பிலார் நேரல்லர் என்றொன் றுளைய உரையா துறுதியே கொள்க வளையொலி ஐம்பாலாய் வாங்கி யிருந்து தொளையெண்ணார் அப்பந்தின் பார். பழமொழி : 165 861. நாணம் என்னும் உயரிய தன்மை இல்லாமல் ஒருவர் உயிர் வாழ்வது, கயிற்றால் கட்டப் பெற்ற மரப்பாவை உயிர் உள்ளது போல் ஆடுவது போன்றது. (63) நாணகத் தில்லார் இயக்கம், மரப்பாவை நாணால் உயிர்மருட்டி யற்று - திருக்குறள் : 1020 862. வறுமை அறிவை அழித்துவிடும். அதுபோல் மறதி புகழை அழித்து விடும். (64) பொச்சாப்புக் கொல்லும் புகழை. அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. - திருக்குறள் : 532. 863. கைக்கூலி (இலஞ்சம் வாங்குபவன், கைக்கூலி தந்தவர்களால் மயிரே போல் மதிக்கப்படுவான். அவன் தலையையே பிறருக்கு உட்காரும் இடமாகத் தந்தவன் ஆவான். 'நான் அடிமை' என்று பட்டயம் தீட்டித் தந்தவனும் ஆவான். (65) ஆசையால் வாங்கிடு மவனை யீந்தவர் கேசமா மதிப்பரக் கீழ்நன் சென்னிதம் ஆசன மாக்குவரடிமை நானெனச் சாசன மவர்க்கவன் தந்த தென்னவே. - நீதிநூல் : 20 : 5. 864. வேலியே பயிரை மேய்ந்தது போல் அறமுறையை அழித்துத் தன் வயிற்றுப் பாட்டுக்காகக் கைக்கூலி வாங்கும் பொருள் வெயிலிடை வைக்கப்பெற்ற வெண்ணெய் போல் விரைவில் அழியும். (66) பயிரினை வேலிதான் மேய்ந்த பான்மைபோற் செயிருற நீதியைச் சிதைத்தோர் தீயன்சாண் வயிறினை வளர்த்திட வாங்கு மாநிதி வெயிலுற வெண்ணெய் போல் விளியும் உண்மையே. - நீதிநூல் : 20 : 4. 865. கைக்கூலி வாங்குபவனிடம் மெலியவர் போய்த் தம் வழக்கினைச் சொல்வது எலி பூனையினிடத்தும், மான் புலியினிடத்தும் அடைக்கலம் அடைவது போன்றதாகும். (67) வலியினால் இலஞ்சங்கொள் மாந்தர்பாற் சென்று மெலியவர் வழக்கினை விளம்பல் வாடிய எலிகள்மார்ச் சாலத்தி னிடத்தும் மாக்கள்வெம் புலியிடத் தினுஞ் சரண் புகுத லொக்குமே. - நீதிநூல் : 20:1 866. கைக்கூலி வாங்கி முறை தவறி நடந்து ஏழைகளை இடருக்கு ஆளாக்குபவன், காசே கண்ணாக இருக்கும் கணிகையினும் கயவன் ஆவன். (68) எனதுன தெனவொரு பொருட்கு இரண்டு பேர் சினமொடு வாதித்தோர் தீயன் பாற்செலின் தனதென அப்பொருள் தனைக்கொள் வானவர் மனதொரு மித்தை வகிர்தன் மாண்பரோ. - நீதிநூல் : 20 : 7. 867. பெற்ற தந்தையின் செல்வம் பிள்ளைக்கு உரியதாகும். ஆனால் கோடி கோடிப் பேர்களிடம் கைக்கூலி வாங்குபவன் அவர்களுக்கெல்லாம் பிறந்தவன் போலும். (69) பெற்றவன் கைப்பொருள் பிள்ளைக் கோயலான் மற்றவர்க் கிலையெனன் மனுவினீதியாம் குற்றமே விட நிதி கோடி பேர்கையிற் பற்றுவோ னவர்க்கெலாம் பாலன் போலுமே - நீதிநூல் : 20 : 9. 868. பிறருக்குரிய பொருளை அவரிடம் ஒப்படைத்து விடாமல் தான் வைத்துக் கொள்வது என்றேனும் ஒருநாள் வெளிப்பட்டே தீரும். புலால் நாறும் பொருளை எப்படி மூடி வைத்தாலும் அதன் நாற்றம் வெளிப்படத் தவறுமா? (70) உள்ளது ஒருவர் ஒருவர்கை வைத்தக்கால் கொள்ளும் பொழுதே கொடுக்கதாம் - கொள்ளார் நிலைப்பொரு ளென்றதனை நீட்டித்தல் வேண்டா புலைப்பொருள் தங்கா வெளி. - பழமொழி : 340. 869. உறுதியாக வெற்றியே பெறும் திறமை இருந்தால் கூடச் சூதாடுதல் வேண்டாம். அதனால் பெற்ற சிறு செல்வம், புழுவுக்கு ஆசைப்பட்டு இறந்து போகும் மீனைப் போல் தன் செல்வ அழிவுக்கே துணை செய்யும். (71) வேண்டற்க வென்றிடினும் சூதினை; வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று. - திருக்குறள் : 931. 870. துன்பம் அடைய அடைய உயிரின் மேல் ஆசைமிகவே செய்யும். அதுபோல் பொருளை இழக்க இழக்கச் சூதின்மேல் ஆவலே மிகும். (72) இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல், துன்பம் உழத்தொறூஉம் காதற் றுயிர். - திருக்குறள்: 90. 871. சூது, கற்பிக்கும் ஆசிரியனைப் போன்றது. அது களவு, பொய், சினம், பகை, காமம் ஆகிய பல படிப்பினைகளைத் தருதலில் வல்லது. (73) வளமலிநிடதநா டளிக்கு மாண்புசேர் நளனையும் அலைவுசெய் நாசச் சூதுதான் களவுபொய் சினம்பகை காம மியாவையும் அளவறப் பயிற்றிடும் ஐயன் போலுமே. - நீதிநூல் : 19 : 4. 872. கள், கொடும் பறவை போன்றது , பேராசையும் கொடுஞ் செயலும் அதன் குஞ்சுகள் போன்றன . (74) கொஞ்சமுஞ் சுவையிலை குளத்தைக் கோணியே நஞ்சென நுகர்வர்மெய் நலிய மூப்புற விஞ்சிய ஆவல் தீ வினைகள் யாவுமே குஞ்சுகள் கள்ளெனுங் கொடிய பக்கிக்கே. - நீதிநூல் : 18 : 8. 873. பாலும், தேனும், பாகும் பருகுவதை விடுத்து மதுவை அருந்து வோர், மலர்த்தேனை விட்டுப் புண்ணையும் இரத்தத்தையும் விரும்பி யுண்ணும் ஈக்களைப் போன்றவர். (75) பாலினைத் தேனையின் பாகை நீத்து வெண் மாலியை மாந்துவோர் மலர்க்கள் நீத்துமெய்த் தோலிரணந்தனைச் சூத கந்தனைக் கோலியுண் டுவக்குக் கூட்ட மொப்பரே. - நீதிநூல் : 18 : 4. 874. கள்ளருந்தியுள்ள ஒருவனுக்கு அப்பொழுதில் காரணம் காட்டி விளக்குதல், நீருள் மூழ்கியவனை விளக்குக் கொண்டு தேடுவது போன்றது. (76) களித்தானைக் காரணம் காட்டுதல், கீழ்நீர்க் குளித்தானைத் தீத்தூரீஇ யற்று. - திருக்குறள் : 929. 875. உறங்கியவர் செத்தவர்க்கு ஒப்பானவர். அது போல் கள்ளுண்பவர் நஞ்சுண்பவர்க்கு இணையானவர். (77) துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்; எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர். - திருக்குறள் : 926. 876. நாவறட்சியுடைய ஒருவன் அதனுடன் புகைக் குடியும் உடையவனாக இருந்தால், இடிக்கும் புயலுக்கும் ஆட்பட்டவன் போல் அழிவான். (78) கடுவெயிலில் நாக்குலரத் தீக்குடித்தல் தீக்கும் கடுநடுக்கும் காரிடியும் போல் - கைவிளக்கு : 5 : 14. 877. நோயுற்ற பொழுதில் கவலையற்று இருக்க வேண்டும். ஏனெனில் மகிழ்ச்சியே நோயைக் கொல்லும் மருந்து போன்றது. அந்நிலையில் கவலைப்படுவது வீட்டைப் பற்றி எரிக்கும் தீக்குக் காற்றும் துணை செய்தது போல் கேடு தரும். (79) தீயொடு காற்றுத் திரண்டது போலாகும் நோயிடை உள்ளத்தின் நோய். - கைவிளக்கு : 4: 3. 878. அத்தியின் பூவும், வெண்ணிறக் காக்கையும், மீனின் கால்தடமும் காணுதற்கு அரியன. ஒருவேளை அவற்றைக் காணக் கூடுமாயினும் நிலை யற்ற நோக்கம் உடையவரது உள்ளத்தைக் காணுதல் அரிது. (80) அத்தி மலரும் அருங்காக்கை வெண்ணிறமும் கத்துபுனல் மீன்பதமும் கண்டாலும் - பித்தரே கானார் தெரியல் கடவுளரும் காண்பாரோ மானார் விழியார் மனம். - நீதிவெண்பா : 55. 879. சிறிது பொழுது அடையும் இன்பத்தைக் கருதிப் பெரும் பாவத்தைச் செய்வது, தலையில் உண்டாகிய சிறு தினவைப் போக்குவதற்காகக் கொள்ளிக் கட்டையால் சொறிவதைப் போன்றது. அன்றியும் எலிசெய்யும் துயரைப் போக்கு வதற்காக வீட்டையே தீ மூட்டி எரிப்பது போன்றது. (81) நிலையில் சிற்றின்பத்தினையத் தால்தினம் அலைவுசெய் பவந்தனை ஆற்றல் கொள்ளியால் தலையினைச் சொறிதலுந் தகிக்குந் தீயினை எலியினுக் கஞ்சியில் லிடலும் ஏய்க்குமே. - நீதிநூல் : 12 : 7. 880. தகவற்ற பலருடன் உறவாடிப் பழகும் பெண்ணின் கற்பு, புனலொடு பட்ட உப்பைப் போலவும், அனலொடுபட்ட மெழுகைப் போலவும் கரைந்து அழியும். (82) மனமகிழ் வாயயல் மைந்தர் தம்மொடுந் தினமுரை யாடிடுந் தெரிவை கற்பது புனலுறு முப்பினைப் போலு மென்மெழுகு அனலுற லென்னவும் அழிவ துண்மையே. - நீதிநூல் : 12 : 4. 881. நஞ்சு உண்டவரைக் கொல்லும்; சிங்கம் நெருங்கிய வரைக் கொல்லும்; பாம்பு தொட்டவரைக் கொல்லும். ஆனால் தீய பெண்களோ கண்டவரையும் நினைத்தவரையும் கொல்வர். (83) உண்டவர் தமைக்கொலும் ஓத வெவ்விடம் அண்டினோர் தமைக்கொலு மாளிகையினால் தண்டினோர் தமைக்கொலுஞ் சற்பந் தையலார் கண்டவர் நினைப்பவர் தமைக்கொல் காலமே. - நீதிநூல் : 12:6. 882. விறகு நெருப்பினை மூண்டு எரியச் செய்யும். அதுபோல் தீய பெண்களைப் பார்ப்பதும் நினைப்பதும் நெருங்குவதும் விறகு போல் அமைந்து காமத் தீயை வளர்க்கும். (84) மின்னொளி மூட்டிடு விறகு போற்சுவைக் கன்னலைப் பழித்த சொல் லாரைக் காணலுந் துன்னலும் உன்னலுஞ் சுடுவெங் காமத்தீ தன்னையே மூட்டிடுஞ் சமிதை போலுமே. - நீதிநூல் : 12: 8. 883. வளைத்துச் சுருட்டி இழுக்கும் நீர்ச்சுழியை அடைந்தவர் மீளாமல் ஆழ்ந்து அழிவர். அவ்வாறே தீமனப் பெண்டிரை நாடியவரும் மீளாது அழிவர். (85) மனைபுகு வார்கள் மனைவியை நாடில் சுனைபுகு நீர்போற் சுழித்துடன் வாங்குங் கன்வது போலக் கசிந்தெழும் இன்பம் நனவது போலவும் நாடவொண் ணாதே. - திருமந்திரம் : 205. 884. தீய பெண்களின் வலையில் வீழ்பவர் விளக்கொளியை விரும்பிச் சென்று அழியும் விட்டிலையும், கொப்பத்தில் (பொய் யாக இலை தழை பரப்பப்பட்ட குழி) அகப்பட்டு வருந்தும் யானையையும் போன்றவர். (86) விட்டமின் னோடாங் கெய்தும் வெடியெனத் தீமை செய்யுங் கட்டழகினைய வாவிக் காமசா கரத்தினாழ்வோர் கிட்டருஞ் சுடரை மேவிக் கேடுறும் பதங்கம் போலும் தொட்டகொப் பத்து வீழ்மா வென்னவுந் துயர்சார் வராரால் - நீதிநூல் : 12:17 885. எட்டிப் பழம் அழகாக இருந்தாலும் அதனை எடுத்துண்ணார். அதுபோல் அழகுடையவர் எனினும் பிறன் மனையாளைப் பண்புடையோர் நெருங்கார். (87) இலை நல வாயினும் எட்டி பழுத்தாற் குலை நல் வாங்கனி கொண்டுண லாகா முலை நலங் கொண்டு முறுவல் செய் வார்மேல் விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே - திருமந்திரம் : 204. 886 தன் மனைவியை விடுத்துப் பிறிதொருத்தியை நாடுதல், வளமுற வளர்ந்த தேமாவின் கனியை அறைக்குள் மூடிவைத்து விட்டுச் சுவையற்ற புளிமாங்கனியைப் பறித்துண்பதற்காகக் கிளையில் ஏறித் தன் காலை ஒடித்துக் கொண்டது போன்றது. (88) திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை அருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப் பொருத்தமில்லாத புளிமாங் கொம்பேறிக் கருத்தறி யாதவர் காலற்ற வாறே. - திருமந்திரம் : 202. 887. நன்மகளாம் தன் மனைவியை விடுத்துப் பொது மகளைப் பொருந்தி வாழ்வது, சுவை உணவை விடுத்து நாய் மலத்தை விரும்புவதையும், நல்லிடத்தை விடுத்துக் கழுதை குப்பை மேட்டை விரும்புவதையும், தூய நீரை விடுத்துச் சாய்க் கடையில் நீராட நினைப்பதையும் போன்றது. (89) வையுணவு தானிருக்க மலந்தேடி யோடுகின்ற சுணங்கன் போலும் . குவை யதனிற் கிடந்துறுநல் இட நீங்கித் திரிகின்ற கோடு போலும் நவைதீர்தண் நதித்தநீர் அருந்தாதங் கணநீரை நாடல் போலுஞ் சிவையனைய காந்தையரை வெறுத்தசடர் வேசையரைச் சேர்வார் மாதோ. - நீதிநூல் : 43 : 11. 888. அன்பில்லா விலைமகளுடன் கூடிப் பெறும் இன்பம் இருட்டறை யில் உள்ள அயலானுக்குரிய பிணத்தைத் தழுவுவது போன்றது. (90) பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம், இருட்டறையில் ஏதில் பிணம் தழீஇ யற்று. - திருக்குறள் : 913. 889. அன்புமிக்க மனைவியை விடுத்து அயலாரை நாடி இன்புறுதல், காய்த்த பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்தை எடுத்து இடர் அடைந்தது போன்றதாம். (91) ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே காத்த மனையாளைக் காமுறுங் காளையர் காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே. - திருமந்திரம் : 201. 890. மன அடக்கம் இல்லாத மகளிரைச் சிறையிட்டுக் காக்க நினைப்பது, நாயின் வாலை நேராக்குவதற்காகக் கட்டுப் போடுவது போன்றது. (92) நிறையான் மிகுகல்லா நேரிழை யாரைச் சிறையான் அகப்படுதல் ஆகா - அறையோ வருந்த வலிதினின் யாப்பினும் நாய்வால் திருந்துதல் என்றுமோ இல். பழமொழி : 336. 891. கற்பழிந்து போன மனைவியைக் கணவன் காவல் கொண்டு ஒழுகுவது, களவு போன பின்னும் அப்பொருள் ஆங்கு இருப்பதாகக் கருதிக் கொண்டு காவல் செய்வது போன்றதாம். (93) உவந்து தன்னுளத் தோங்கிய கற்பிலாச் சிவந்த வாயுடைச் சேயிழை யைப்பதி இவர்ந்து சேமஞ்செய் தெய்க்குதல் பட்டிகள் கவர்ந்த பின் பொருட் காவலை யொக்குமே. - நீதிநூல் : 12:10. 892. ஆசான் ஒரு பிழை செய்யின் மாணவன் ஒன்பது பிழை செய்வான். அதுபோல் கணவன் பலரை விரும்பி நிற்பின் அவன் எப்பொழுது வெளியே செல்வான் என எதிர்நோக்கி இருப்பாள் அவன் மனைவி. (94) ஓர்பிழை குருவே செய்யின் ஒன்பது பிழைகள் செய்ய நேர்சிறு சீடரென்ன நிதம்பதி பலமின் னார்தோள் சேர்வது காணு மில்லாள் தினம் பல புருடர்ச் சேர்தல் சீரென வுன்னி யன்னான் செலவுபார்த்திருப்பள் மாதோ. - நீதிநூல் : 12:14. 893. எவரும் என் தீயொழுக்கத்தை அறியார் என்று ஒருத்தி அயலானுடன் கூடி இன்புறுவது, பூனை, தன் கண்களை மூடிக் கொண்டால் யாருக்கும் தெரியாது என்று பாலைக் களவு செய்து குடிப்பது போன்றது. (95) ஒருவரு மறிகிலா ரெனவோ ரொண்ணுதல் கரவயற் குமரரைக் கலத்தல் பூசைதன் இருவிழி மூடிமற் றெவர்கள் பார்வையுந் தெரிகிலா தெனப்பயன் றிருட லொக்குமே. - நீதிநூல் : 12 : 2. 894. அச்சத்துடன் ஒரு பெண் அயலானுடன் அடையும் இன்பம், மதயானை முரித்துத் தின்னும் கரும்பில் இருந்து வழியும் சாற்றை அஞ்சி அஞ்சிச் செத்துக்கொண்டும் நக்கிக் கொண்டும் இருப்பது போன்றதாம். (96) கொழுந் னறியில் உயிர்க்கொலையாங் கோவாக் கினையாம் பெரும்பழியாம் அழல்போ னெஞ்சைச் சுடும் பயத்தோ டயலா டவரை யொரு பேதை தழுவி யின்பமுறல்மதமா தானுண் டகல்வா யிடையொழுகுங் கழையின் சாற்றை விழைந்ததன்பாற் கடுகி நக்க லேய்க்குமால். - நீதிநூல் : 12 : 12. 895. எம் இசைவு இல்லாமல் அயலான் என்னுடன் கூடி விட்டான் என்பது, திருடன் யான் பொன்னைத் திருடினேன் அல்லேன், பொன்னே என் கையில் வலிய வந்து சேர்ந்தது . என்பது போலாம். (97) அள்ளிய ரெம்மியை பன்றிச் சேர்ந்தனர் என்னமின்னிடையவர் இயம்பல் சோரர்கள் பொன்யைாம் வல்லிலேம் பொருள்வந் தெங்களை முன்னைவவ் வியதென மொழித் லொக்குமே. - நீதிநூல் : 12 : 3. 896. வலக்கை செய்யும் தொழில்களை யெல்லாம் இடக்கை செய்யின் இழிவே. அதுபோல் ஆடவர் செய்யும் தொழில்களை யெல்லாம் பெண்டிர் செய்வதும் பழியே. (98) வலதுகை துணைவனா மற்றொர் கைமனை தலைவன்செய் தொழிலெலாந் தாரம் ஆற்றுதல் தொலைவிலா வலக்கையின் தொழிலி டக்கர நிலமிசைச் செய்தென நிந்தை மேவுமே. - நீதிநூல் : 12:5. 897. நிழலும், அளவுக்கு விஞ்சிய நீரும் கொண்ட பயிர் அழியும். அதுபோல் அளவுக்கு விஞ்சி உண்பவனும் அழிவான். (99) நனிநிழல் புனல்கொள் பைங்கூழ் நாசமா மிகவே யுண்ணும் இனியமா மருந்து நஞ்சா மின்பமு மிகிற்றுன் பாகும் பனிபிணி மடமை மந்தம் பழியெலாம் வம்மி னென்னக் கனிவொடு மழைக்குந் தூதாங் கழிய பேருண்டி மாதோ. - நீதிநூல் : 35:1. 898. அளவுக்கு விஞ்சிய நீரைக் கொண்ட குளம் உடைந்து முன்னர் இருந்த நீரையும் இழந்து போகும். அதுபோல் அளவிறந்து வயிறு பெருக்க உண்பவனும் உள்ள வலிமையையும் இழந்து பலவகை நோய்கட்கு ஆட்படுவான். (100) கொள்ளுறு நீரைக் கொண்ட குளங்கரை புரண்டு முன்னம் உள்ளநீ ரையுமிழக்கும் உண்மை போற் பேர கட்டின் பள்ளமே டாக வுண்ணும் பதமுடல் வளத்தைப் போக்கும் எள்ளலில் சிற்றுணாவற் றுடலெங்கு மியங்கு மாலோ. - நீதிநூல் : 35: 2. 899. அளவுக்கு விஞ்சி உண்டு அவ்வுணவைத் தாங்கிச் சுமப்பது, தம்மைச் சுமப்பதற்கு அமைந்த குதிரை முதலியவற்றைத் தாம் தூக்கிச் சுமப்பது போன்றது. (101) மாந்தன மழிந்து தக்க மலசலங் கழிந்தூண் ஆவல் சார்ந்த பின்னுணுஞ்சிற்றுண்டி சபலமாம் மீதூண் உண்டு சோர்ந்திட அதைத்தான் தாங்கிச் சுமக்குதல் தன்னைத் தூக்க நேர்ந்தமாவினைத்தான் தூக்கி நெஞ்சம் புண்ணறதல் போலும். - நீதிநூல் : 35 : 5. 900. தலையணைக்குப் பஞ்சு திணிப்பது போல் உணவை வயிற்றுக்குள் திணிப்பவர் உடல், உப்பு வைக்கப்பெற்ற பானை போல் ஒளி இழந்து போகும். (102) புட்களும் விலங்கு மொவ்வோரிரையையோபுசிக்கும் மாந்தர் உட்கலிலாதி யாவும் உண்பரன்றியுஞ்சற் றேனும் வெட்கமில்லாத கட்டின் மிகமிக அடைப்பர் உப்பார் மட்கல மெனவன் னார்மெய் மட்கலாம் வட்க லாமால். - நீதிநூல் : 35: 6. 901. உண்ட உணவு முழுக்க அற்றுப் போனபின் (செரித்த பின்) உண்பவனுக்கு இன்பம் நிலைக்கும். அதுபோல் அளவு கடந்து உண்பவனுக்குத் தீரா நோய்களே நிலைக்கும். 103) இழிவறிந் துண்பான்கண் இன்பம் போல் நிற்கும், கழிபேர் இரையான்கண் நோய். - திருக்குறள் : 946 902. நல்லவர்களால் சில பொழுதுகளில் கெடுதலும், தீயவர்களால் நன்மையும் உண்டாகி விடுவதுண்டு. அது போல் காலம் தவறிப் பருகினால் பாலும் பல நோய்கட்கு ஆளாக்கும். காலம் அறிந்து அளவே ஊட்டப்பெற்றால் நஞ்சும் பல நோய் களை நீக்கும் மருந்தாகும். (104) காலம் பிழைத்தக்காற் பாலு நோய் காட்டிவிடும் நூலா ருணர்ந்தீயின் நஞ்சமும் நோய்வீட்டும் சீலரால் துன்பமும் தீயரான் இன்பமுமாம் காலங் கருதல் கடன். - இன்னிசை இருநூறு : 104. 903. அளவினைப் பேணாமல் உண்பவனுக்குக் கூற்று ஒன்று மட்டும் இல்லை. மற்றொரு கூற்றும் அவனுக்கு உண்டு. எப்பொழுதும் பிரியாமல் இருந்து கொன்று கொண்டு இருக்கும் கூற்று அவன் வயிறே ஆகும். (105) பேணா தருந்தும் பெருநோய்க்குக் கூற்றொன்றோ வாணாள் அருந்தும் வயிறு. - கைவிளக்கு : 5 : 17. 904. ஊன் உண்டு வாழும் சிங்கத்தின் வாழ்நாட்கள் குறைந்தனவே. ஆதலால் நெடிது வாழ விரும்புவார் ஊனுண்ணலை விட்டொழித்தல் வேண்டும். (106) தூய விடுத்தாயுள் தேய்த்துத் துயர்தரூஉம் தூய புலாலுண்ணின் நல்லறிவுந் தேயுமால் சீயத்தின் வாழ்நாள் சிலவாந்தர் தீனியல்பால் காய நெடி துய்க்குங் கரி. - இன்னிசை இருநூறு : 33. 905. கொலைக் கருவியைக் கையில் கொண்டவர்களது மனம் பிற உயிர்கள் இன்பமாக வாழ்வதை நினைக்காது. அதுபோல் ஊன் உண்பவர்களது உள்ளமும் அருள் என்னும் நற்பொருளை நினைக்காது. (107) படை கொண்டார் நெஞ்சம் போல் நன்றூக்கா தொன்றன் உடல்சுவை உண்டார் மனம். - திருக்குறள் : 253. 14. ஊழ் 906. விளாங்கனியை உருட்டித் திரட்டி வைத்தவர் எவரும் இலர்; களாக்கனியைக் கருநிறத்துடன் செய்து வைத்தவரும் எவரும் இலர்; அவற்றைப் போலவே, ஒவ்வொருவர் வாழ்வும் ஊழால் அமைந்ததாகும். (1) வளம்பட வேண்டா தார்யார்?யாரும் இல்லை! அளந்தன போகம் அவரவர் ஆற்றான்; விளங்காய் திரட்டினார் இல்லை ; களங்கனியைக் கார்எனச் செய்தாரும் இல். - நாலடியார் : 103. 907. வல்லவனால் ஏவப்பட்ட அம்பு வைத்த குறிதவறாமல் சென்று தாக்கும். அதுபோல், ஊழும் தான் அடைய வேண்டிய வனைத் தவறாமல் சென்றடையும். (2) நனியஞ்சத் தக்க அவைவந்தால் தங்கண் துனியஞ்சார் செய்வதுணர்வார் - பனியஞ்சி வேழம் பிடிதரூஉம் வேய்சூழ் மலைநாட ஊழம்பு விழா நிலத்து. - பழமொழி : 240. 908. மிகப்பெரிய மந்தையில் நின்றாலும் கன்று அதன் தாய்ப் பசுவை எளிதில் தேடி அடையும். அதுபோல் ஊழும் தான் பற்றிப் பிடித்தற்கு உரியவன் எங்கே ஓடி ஒளிந்து மறைந்து கொண்டாலும் தவறாமல் பற்றிப் பிடித்துக் கொள்ளும். (3) பல்ஆவுள் உய்த்து விடினும் குழக்கன்று வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப் பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த கிழவனை நாடிக் கொளற்கு. - நாலடியார் : 101. 909. கன்று பிறந்தவுடன் தாய் காட்டாமலே மடுவை நாடிப் பால் அருந்தும். அதுபோல் முற்பிறவியில் கற்றுத் தெளிந்த நல்லறிவினர்க்குக் கற்பிக்காமலே கல்வி அறிவு நிறைந்திருத்தல் உண்டு. (4) கன்று பிறந்தவுடன் தாய்முலைப்பால் காட்டாமே சென்றருந்தி யாங்குச் சிலர்தாமே காணினுமென் தொன்றுபயில் வானவை தோன்றலிற் காட்டாமே ஒன்றுமிலை தாமே யுணர்வு. இன்னிசை இருநூறு : 145. 910. பூவைத் தேடி வண்டு செல்லும் ; தகவுடையவனைத் தேடித் திருமகள் செல்வாள்; நீர் பள்ளத்தை நோக்கி ஓடும்; அவற்றைப் போல் விதி வழியே ஒருவன் அறிவு செல்லும். (5) வண்டனு சரிக்கும் பூவை மலர்த்திரு நயமுள் ளானைக் கண்டனு சரிக்கும் நீர்தான் கனத்தபள் ளத்தைத் தேடிக் கொண்டனு சரிக்கும் என்றும் குலவிய விதியைப் புத்தி பண்டனு சரிக்கும் என்பர் பாரினில் அறிவுள் ளோரே. - நீதிச்சாரம் : 46. 911. முதல் இல்லாதவர்க்கு அதனால் உளதாகும் ஊதியம் இல்லை. அதுபோல் ஊழ் இல்லாதவர்க்கு அதனால் உண் டாகும் நற்பயனும் இல்லை . (6) முற்பெரிய நல்வினை முட்டின்றிச் செய்யாதார் பிற் பெரிய செல்வம் பெறலாமோ - வைப்போடு இகலிப் பொருள் செய்ய எண்ணியக்கால் என்னாம் முதலிலார்க் கூதிய மில். - பழமொழி : 232. 912. ஆழ்கடலில் அள்ளி அமுக்கி முகந்தாலும் நாழி, நாழி அளவையே தான் முகக்கும். அதுபோல் அவரவர் ஊழின் அளவே அவரவர்க்குக் கிடைக்கும். (7) ஆழ வமுக்கி முகக்கினு மாழ்கடலில் நாழி முகவாது நானாழி - தோழி நிதியுங் கணவனு நேர்படினுந் தந்தம் விதியின் பயனே பயன். - மூதுரை : 19. 913. வானில் எறியப்பட்ட விதை, மண்ணில் விழுந்து முளைப்பது போல் பிறருக்குச் செய்த வினை தன்னையே அடையும். ஒருவேளை தன்வினை பல நாட்கள் வெளிப்படாமல் இருந்தால் கூடப், பனையின் விதை போல் நாட்கள் சென்றேனும் வெளிப்படத் தவறாது. (8) வானெறி வித்துநில னுற்றாங்கு மன்னுயிர்க்குத் தானியற்று மெவ்வினையுந் தற்சாருஞ் சிற்சில பானெறி யாற்பயன் பன்னாட் கழிப்பியும் ஈனும் பனைவித் தென. - இன்னிசை இருநூறு : 103. 914. எவ்வளவு நாட்கள் முயன்றாலும் செயல் முடியத் தக்க பொழுது வரும் பொழுதே முடியும். பருவம் அல்லாப் பருவத்தில் பழம் பழுக்குமா? (9) அடுத்து முயன்றாலு மாகுநா ளன்றி எடுத்த கருமங்க ளாகா - தொடுத்த உருவத்தா னீண்ட வுயர்மரங்க ளெல்லாம் பருவத்தா லன்றிப் பழா. - மூதுரை : 5. 915. குருடன் எறிந்த கோலால் கூடச் சில வேளைகளில் மாங்காய் வீழ்ந்து விடுவது உண்டு. அதுபோல் நாம் நினையா திருந்தால் கூடச் சில செயல்கள் எளிதாக நிறைவேறி விடுவ துண்டு. அது முன்னை ஊழின் பயன் ஆகும். (10) எண்ணி ஒருகருமம் யார்க்கும் செய் யொண்ணாது புண்ணியம் வந்து எய்து போது அல்லால் - கண் இல்லான் மாங்காய் விழஎறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே ஆம் காலம் ஆகும் அவர்க்கு. - நல்வழி : 4. 916. முத்துமாலையும், நிலவொளியும், சந்தனக் கலவையும் குளிர்ச்சி மிக்கன. ஆனால் தலைவனைப் பிரிந்த தலைவியர்க்கு அவை வெம்மை தருகின்றன. அதுபோல் உயர்ந்த அமிழ்தனைய நுகர் பொருள் கூட ஊழ் வலிமையால் கேடு செய்வது உண்டு. (11) ஆர வட்டமும் அதிசீத சந்தனமும் ஈர நிலவும் எரிவிரவும் – பாரில் துதிவகையால் மேம்பட்ட துப்புரவும் தத்தம் விதிவகையான் வேறு படும். - பெருந்தொகை : 344. 917. பெருவழிப் போவாரைப் பிறிதொரு வழியில் திருப்பிவிட்டுக் கவரும் கள்வர் உளர். அதுபோல், ஊழ் என்னும் கள்வனும் ஒருவனை நல்வழியில் இருந்து அல்வழிக்குத் திருப்பி விட்டுத் துயரூட்டுவான். (12) நல்லவை செய்யத் தொடங்கினு நோனாமே அல்லன வல்லவற்றிற் கொண்டுய்க்கும் – எல்லி வியனெறிச் செல்வாரை யாறலைத் துண்பார் செலவு பிழைத்துய்ப்ப போல். - நீதி நெறி விளக்கம் : 91. 918. கோவேந்தன் செல்லும் பொழுது குறுநில மன்னன் பணிந்து தாழ்ந்து நிற்பான். அதுபோல் ஊழ் முனைந்து நிற்கும் பொழுது முயற்சி அதற்குத் தாழ்ந்து போகும். (13) எவ்வந் துணையாய்ப் பொருள் முடிக்கும் தாளாண்மை தெய்வம் முடிப்புழி என்செய்யும் - மொய்கொண்டு பூப்புக்கு வண்டார்க்கும் ஊர குறும்பியங்கும் கோப்புக் குழிச்செய்வ தில். - பழமொழி : 227. 919. நம் செய்வினைக்கு ஏற்பத் துன்பம் நுகர்தல் இறைவன் ஆணை. அவ்வாறு இருக்கத் துன்பம் செய்பவர் மேல் நாம் கோவம் கொள்வது, எறிந்தவனை விடுத்துக் கல்லையும், ஏவிய வனை விடுத்து அம்பையும் நோவது போன்றதாம். (14) பைதலே யெய்த லாதிப் பரன்செய லாமப் பைதல் செய்தவர் தமைச்சினத்தல் சினவரா தன் மேற் கல்லைப் பெய்தவன் தனைவிட்டக்கல் பிளந்திடப் பொரலுங் கையால் எய்தவன் தனைவிட்டம்பை முனிதலு மேய்க்கு மாலோ. - நீதிநூல் : 25 : 8. 15. மெய்யுணர்வு 920. "நாம் இளமைப் பருவத்தினராக இருக்கின்றோம்; முதுமைப் பருவம் வரும்போது நல்லறங்களைச் செய்து கொள்வோம்" என்று எண்ணாமல் உடனே நல்லறங்களைச் செய்துவிட வேண்டும். ஏனெனில் முதிர்ந்த கனி மட்டுந்தானா காற்றில் உதிர்ந்து விழுகின்றது? இளங்காய் உதிர்வது இல்லையா? (1) 'மற்று அறிவாம் நல்வினை; யாம் இளையம்' என்னாது கைத்துண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின் முற்றி இருந்த கனிஒழியத் தீவளியால் நற்காய் உதிர்தலும் உண்டு. - நாலடியார் : 19. 921. கடல் நீரில் இருந்து, உப்பு திரண்டு எழுவது போல் விண்ணுலகில் படிந்திருந்த உயிர் தான் நன்மை எய்துதற் பொருட்டாக மண்ணில் பிறந்துள்ளது. (2) பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம் உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டித் திரைக்கடல் உப்புத் திரண்டது போலத் திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே. - திருமந்திரம் : 491. 922. மண் ஒன்றுதான்; ஆனால், அதனால் ஆக்கப்பட்ட கலங்கள் பலப்பல. அதுபோல் இறைவன் ஒருவன் தான் எனினும் அவன் உயிர்கள் அனைத்துள்ளும் உறைகின்றான். (3) மண்ணொன்று தான் பல நற்கல் மாயிடும் உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே கண்ணொன்று தான் பால் காணுந் தனைக்காணா அண்ணலும் இவ்வண்ண மாகிநின் றானே. திருமந்திரம் : 440,2351 923. காலம், நாள் என்று எளிமையாகச் சொல்லி முடிக்கக் கூடிய ஒன்று அன்று. அது வாள் போன்றதாகும். அதுவும் உயிரைத் தவறாமல் வெட்டியழிக்கும் வாள். (4) நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும் வாள துணர்வார்ப் பெறின். - திருக்குறள் : 334. 924. உயிர்களின் வாழ்வு நிலையற்றது. அது நீரில் தோன்றி எழும்பும் மொக்குள் போல் நொடிப் பொழுதில் அழிந்து போகும் தன்மையது. (5) அனமிகிலோ வாயுகுறை யிற்சூடுண் ணாவிடிலின் ஆவி நீங்குங் கனமான வெய்யின்மழை பனியுதவா தவையின்றேற் கணநில் லாது தினமுமா யிரங்கண்ட மிமைப்போதா கிலுமதன்மேற் சிந்தை யின்றேற் புனன்மொக்கு ளெனவழியு நெஞ்சமே நாஞ்சுமக்கும் பூட்சி தானே. - நீதிநூல் : 40 : 12. 925. உறக்கம் வருவது போல் சாவு வருகின்றது; உறங்கி யவன் விழிப்பது போல் பிறப்பு வருகின்றது. அவ்வளவு இயற்கை யானவை பிறப்பும் இறப்பும். (6) உறங்குவது போலும் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு. - திருக்குறள் : 339. 926. கூட்டில் இருந்து பறவையும், முட்டையில் இருந்து குஞ்சும் வெளியேறுவது போல் உயிர் உடலில் இருந்து வெளியேறி விடும். அத்தகைய நிலையாமை உடையது உயிர்வாழ்வு (7) குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே. உடம்போ டுயிரிடை நட்பு - திருக்குறள் : 338. 927. இலவின் நெற்று வெடித்துக் காற்றில் பஞ்சு பறப்பது போல் பறந்து வெளியேறி விடக் கூடியது உயிர் வாழ்வு. (8) வாழ்கின்றோம் என்று மகிழன்மின் வாழ்நாளும் போகின்ற பூளையே போன்று. - பெருந்தொகை : 300 928. பொன் தேய்மானத்தை மெருகு ஏற்றுவதால் தடுத்து நிறுத்த முடியாது. அதுபோல் உடல் அழிவை, அழகுபடுத்து வதால் தடுக்க முடியாது. (9) - அறநெறிச்சாரம் : 221. 929. உயிரானது அடிக்கடி உருமாறிப் பிறந்து இறந்து வருவது, நாடகத்தில் வெவ்வேறு வேடம் கொண்டு நடிக்கும் கூத்தனைப் போன்றது.(10) - அறநெறிச்சாரம் : 121. குணநோக்கான் கூழ்நோக்கான் கோலமும் நோக்கான் மணநோக்கான் மங்கலமும் நோக்கான் - கணநோக்கான் கால்காப்பு வேண்டான் பெரியார் நூல் காலற்கு வாய்காப்புக் கோடல் வனப்பு. - ஏலாதி : 23. 930. நேற்றைப் பொழுது வரை இன்பத்தின் நிலைக்களமாக இருந்தவன் இன்று, பாணர்களது பழைமையான யாழ் போல இனிய குரல் இழந்து, அதன் நரம்புகளைப் போல நரம்புகள் எழும்பித் தோன்ற, மன்றத்தின் மூலையில் போடப்பட்ட அவ் யாழ்போலப் புறத்தே ஒதுக்கப் பெற்றுள்ளான். உடல் நிலையாமை இத்தகையது. (11) யாணர் வரவின் மேனாள் ஈங்கிவன் இளமைச் செவ்வி நயந்த பேதையர் காத லுண்கண் வருபனி நீங்கி இன்னும் துயில் கொண் டிலவே இன்றிவன் போர்வை பசையற உணங்கிப் பாணர் பழந்தலைக் சீறியாழ் போலக் குரலழிந்து நரம்புமடிந் தியாத்த யாக்கை மூப்புறப் பதியெழு மூதூர் மன்றத்துப் பொதியில் புறஞ்சிறைச் சார்ந்தனன் மன்னே. - பெருந்தொகை : 302. 931. கயிறு அறுந்து போன ஊஞ்சல் போன்றது உயிர் பிரிந்து சென்ற உடம்பு; ஆகவே, அவ்வுயிர் பிரியும் முன்னரே நல்வினை புரிதல் வேண்டும். (12) ஆசையும் பாசமும் அன்பும் அகத்து அடக்கி பூசிப் பொதிந்த புலால் உடம்பு - ஊசல் கயிறு அற்றால் போலக் கிடக்குமே கூற்றத்து எயிறுஉற்று இடைமுரிந்தக் கால். - அறநெறிச்சாரம் : 113. 932. வைக்கோலால் செய்யப்பெற்ற மிதப்பினால் தீக் கடலைக் கடப்பேன் என்பவனது அறிவின்மை போன்றதே நிலையற்ற இவ்வுடம்பை நிலையான தென்று எண்ணுவார் இழிந்த அறிவு. (13) வையாற்செய் புணைநம்பி யனலாழி கடக்கவுன்னும் மதியி லார்போல் பொய்யாற்செய் மெய்நம்பி யேதேதோ நினைவுற்றாய் புரைசேர் நெஞ்சே பையவோர் புட் பிடிக்கக் ககனமிசை வட்டமிடும் பருந்து போல ஐயோகூற் றுனைப்பிடிக்க அற்றம்பார்த் தொளித்துநின்ற தறிகிலாயோ. - நீதிநூல் : 40 : 2. 933. பெற்றோர் பிள்ளைகளைத் தண்டித்து அறிவுறுத்துவதுபோல் கடவுளும் மெய்யடியார்க்குத் துன்பத்தை அருளி நல்வழிப்படுத்துவான். (14) பத்த ரன்பினைச் சோதனை பண்ணவும் பார்மேல் வைத்த வாஞ்சையை மாற்றவும் பேரின்ப வாழ்விற் சித்த மெய்தவும் அன்னரைத் துயர்செயுந் தெய்வம் அத்தன் சேயரை யடித்தறி வுறுத்தல் போ லம்மா. - நீதிநூல் : 41: 9. 934. தன் முன்னே துயிலும் மாணவனைத் தண்டு கொண்டு எழுப்புவான் ஆசிரியன். அதுபோல், இறைவன் ஆணவம் உடையவனை வறுமையால் எழுப்புவான். (15) ஆசான்முன் னேதுயில் மாண வகரைத் தேசாய தண்டால் எழுப்புஞ் செயல்போல் நேசாய வீசனு நீடாண வத்தரை ஏசாத மாயாடன்னாலே எழுப்புமே. - திருமந்திரம் : 2163. 935. உழுது கிளறக் கிளறப் புன்செய்யும் நன்செய்யாம்; தீயில் சுடப் பொன்னின் ஒளி மிகுதியாகும்; தீட்டத் தீட்ட மணியின் ஒளி விஞ்சும். அவற்றைப் போல் துன்புறத் துன்புற உயிர்க்கு நலம் சிறக்கும். (16) உழுது புண்செயப் புன்செயும் நன்செயா முயர்பொன் முழுதுந் தீயனிற் சுடச்சுட வொளிருமால் மொழியும் பழுதின் மாமணி தேய்பட வொளிமிகும் படர்கொண்டு அழுது நொந்தவர்க் கன்றிமற் றவர்க்கற மரிதே. - நீதிநூல் : 41: 6. 936. எவருக்கும் துன்பம் உண்டாதல் இயல்பாகும். அதற்கு அஞ்சுதல் போருக்குச் சென்றவன் சாவ அஞ்சுவதையும், மீன் குஞ்சு குளிருக்கு அஞ்வதையும் போன்றதாம். (17) பாரில் யார்க்கும் பழங்கண் சகசமாம் வீரி யங்கெட வெந்துயர்க் கஞ்சுதல் போரி னேர்ந்தவன் பொன்றலுக் கஞ்சலும் நீரின் மீன் குளிர்க் கஞ்சலும் நேருமே. - நீதிநூல் : 41 : 1. 937. இருளும் ஒளியும், நிழலும் வெயிலும், சூறையும் தென்றலும் மாறி மாறி வருவதைப் போல் இன்பமும் துன்பமும் மாறி மாறி ஒவ்வொருவர் வாழ்விலும் வருவனவாம். (18) ஒளியி னோடிரு ணிழலொடு வெயில் பொழியுதகத் துளியி னோடுமின் னசனிமா மலையையுஞ் சுழற்றும் வளியி னோடிளந் தென்றலும் வருதல் போன் மாக்கள் களியி னோடருந் துயரமுங் கொள்ளுவர் கலந்தே. - நீதிநூல் : 41: 5. 938. கருக்கொள்ளும் துயரத்திற்கு அஞ்சுபவளுக்கு மகப் பேறு வாய்ப்பு இல்லை. காற்றுக்கு அஞ்சும் கப்பலுக்கு உண் டாகும் பயன் இல்லை. கசக்கும் மருந்துண்ண அஞ்சுபவனுக்கு உடல் நல வாய்ப்பு இல்லை. அவற்றைப் போலவே துன்பத்திற்கு அஞ்சுபவர்க்கு இன்பம் அடைய வழி இல்லை. (19) சூற்றுயர்க் கஞ்சு வாட்டுச் சுதரிலைப் பயனொன்றில்லைக் காற்றினுக் கஞ்சா நின்ற கலத்தினுக் கவிழ்தங் கைப்பென்று ஏற்றிட வஞ்சி னாரோக் கியமிலை யின்னற் கஞ்சிற் சாற்றரு மறமு மில்லைத் தனிப்பார கதியு மின்றே - நீதிநூல் : 42 : 16. 939. பல துளைகளையுடைய குடத்தில் நீர் தங்குவது தான் அருமை. அதுபோல் துளைகள் பலவற்றைக் கொண்ட உடலில் உயிர் தங்குவதும், துன்பம் குழாது இருப்பதுமே வியப்பு. துன்பம் வரின் வருந்துவது அறிவின்மையே. (20) பஃறுளைக்கடம் பாணியைத் தாங்குவ தரிதே எஃகு பஃறுளைச் சடத்துயிரிருக்கையு மியைசீர் அஃகிப் பல்பட ரணுகுறா மையுமதி சயமாம் இஃது னார்துயர்க் கிடைந்துறு வாரிறும் பூதே. - நீதிநூல் : 41 : 12. 940. தொலைவான வேற்றூருக்குச் செல்ல விரும்புவார் வழித்துயரைப் பொருட்டாக எண்ணார். வழிக் காட்சிகளைக் கண்டும் தன்னை மறந்து நில்லார். அவ்வாறே, மண்ணுலகில் இருந்து விண்ணுலகு செல்ல விரும்பு வாரும் உலகியல் துயரைக் கருதி இன்பத்தில் மூழ்கார். (21) அயலா ரொண்பதிக் கேகுவார் வழித்துயர்க் கஞ்சார் வயவை தன்னிற்காண் பொருளையும் வாஞ்சியார் வசுதை உயர்பெ ருங்கதிக் கேகுமா ரென்னலால் உலகின் துயரை யின்பினை மதித்திடார் துகளறு நீரார். - நீதிநூல் : 41 : 10. 941. மண்ணில் நிற்கும் புலியைக் கண்டு வெண்மதியில் தோன்றும் மான் அஞ்சாது. அதுபோல் உலகியலில் ஏற்படும் அல்லல் களைக் கண்டு உண்மை உணர்வு உடையவர் அஞ்சார். (22) உடற்கு வரும் இடர்நெஞ்சு ஓங்குபடுத்து உற்றோர் அடுக்கும் ஒரு கோடி யாக - நடுக்கமுறார் பண்ணிற் புகலும் பணிமொழியாய்! அஞ்சுமோ மண்ணிற் புலியைமதி மான். - நன்னெறி : 29. 942. சுடச் சுட மேலும் மேலும் ஒளிபெறும் பொன்னைப் போல் துன்பத்தால் வருந்த வருந்த உயிர்களுக்குப் பொலிவு உண்டாகும். (23) சுடச்சுடரும் பொன் போல் ஒளிவிடும், துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. - திருக்குறள் : 267. 943. துன்பம் என்னும் வெயில் காயும் பிறவியாகிய காட்டைக் கடப்பதற்கு, மெய்ப்பொருளே மழையும் நிழலும் போன்றது .(24) துக்கவெயில் காய்பிறவிக் கான்கடப்பத் தூயநெறிப் புக்கார்க் குறிற்பொன் புயல் நிழல் போலாம்பயன் அற்கா வியல்பிற்றுச் செல்வம் அது பெற்றால் அற்குப ஆங்கே செயல். - இன்னிசை இருநூறு : 146. 944. குழலிசையாழிசை இவற்றைக் கேட்பது மட்டும் செவி அன்று. வாளால் வெட்டுவது போன்ற கொடுஞ் சொற்களையும் தாங்கி இம்மை மறுமைகட்கு நலம் பயக்கும் சொற்களைக் கேட்பதே செவியாம். (25) பண்ணமை யாழ்குழல் கீதம் என்று இன்னவை நண்ணி நயப்ப செவிஅல்ல - திண்ணிதின் வெட்டெனச் சொல் நீக்கி விண்இன்பம் வீட்டொடு கட்டுரை கேட்ப செவி. - அறநெறிச்சாரம் : 197. 945. உடலில் செய்யப்பெற்ற வேடம் உயிர்க்குப் பயன் படாது. உடல் ஒழிந்தால் அதில் செய்யப்பட்ட வேடமும் ஒழியும்; உடல் உயிர் இவற்றில் உண்மையானது எது என்று உணராதார் கடற் பேரலைகளின் இடைப்பட்ட கட்டை போன்றவர்கள் ஆவர். (26) உடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா உடல்கழன்றால் வேடம் உடனே கழலும் உடலுயிர் உண்மையென் றோர்ந்துகொள் ளாதார் கடலில் அகப்பட்ட கட்டையொத் தாரே. - திருமந்திரம் : 1677. 946. அறிவை அச்சாணியாகக் கொண்ட ஆராய்ச்சி என்னும் வண்டியில் ஐம்புலன் என்னும் குதிரைகளைப் பூட்டி , உயிர் என்னும் பாகன் சரியான வழியில் செலுத்தினால் பிறவிப் பிணி ஒழிக்கும் வீட்டை அடையலாம்.(27) உணர்ச்சி அச் சாக உசாவண்டி யாகப் புணர்ச்சிப் புலன் ஐந்தும் பூட்டி - உணர்ந்ததனை ஊர்கின்ற பாகன் உணர்வுடையான் ஆகுமேல் பேர்கின்றது ஆகும் பிறப்பு. - அறிநெறிச்சாரம் : 191. 947. பிறப்பும், வளர்ச்சியும், இறப்பும் ஆகிய அனைத்தும் மாயையே. அதனை அறிந்தவர்கள் பகைப் படையின் முன் நிற்கும் படைத் தலைவனைப் போல் சோர்வில்லாமல் முயன்று பிறவிப் பிணியை ஒழிக்க வேண்டும். (28) தோற்றமும் சம்பிரதம் துப்புரவுஞ் சம்பிரதம் கூற்றமும் கொள்ளுங்கால் சம்பிரதம் - தோற்றம் கடைப்பட்ட வாற்றிந்து கற்றறிந்தார் துஞ்சார் படைப்பட்ட நாயகனே போன்று. - அறநெறிச்சாரம் : 115. 948. காய்ந்த இரும்பு நெருப்பை விட்டு நீங்கினாலும் அதன் கனல் தன்மை மேலும் நீடிக்கும். அவ்வாறே கரணங்கள் அழிந்தால் கூடக் கருமத்தின் முத்திரை அகலாது. (29) காய்ந்த இரும்பு கனலை யகன்றாலும் வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல் ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத் தோய்ந்த கருமத் துரிச்க லாதே. - திருமந்திரம் : 2309. 949. பிறப்பு அறுத்தற்குரிய செயல்களைச் செய்யாமல் வீணே காலத்தைப் போக்குவது, மிகுந்த பயன் தர உள்ள வித்தினைக் குத்திச் சமைத்து உண்பது போன்றதாகும். (30) தெரிவில் இளமையும் தீப்பிணியும் மூப்பும் பிரிவும் துயிலும் உறீஇப் - பருவந்து பத்து எட்டு நாளைப் பயனிலா வாழ்க்கைக்கு வித்துக்குற்று உண்பார் பலர். - அறநெறிச்சாரம் : 117. 950. நீர்வேட்கை உடையவர் கடல் நீரைப் பருகினாலும், பொன்மேல் பற்றுடையார் மண், கல், மரம் இவற்றின் மேல் பற்றுக் கொண்டாலும், இறைவன் அடியை விரும்பினோர் பொருள்மேல் பற்றுக் கொள்ளார். (31) தாகமே உடையார் வேலைச் சலமருந்தினும்பொன் மீது மோகமே யுடையார் மண்கல் முதல்கரங் கொளினும் தேவ போகமே புரிந்து இல்லாமை பூண்டபுண் ணியவர்வா னத்தூர் மேகமார் மின்னின் நில்லா விருத்தி மேல் அருத்தி கொள்ளார். - நீதிநூல் : 42 : 23. 951. தாமரை இலையின் மேல் நீர்த்துளி கிடந்தாலும் அது இலையில் ஓட்டுவது இல்லை. பற்றற்றவர்களும் அவ்வாறே உலக வாழ்வில் ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பர். (32) எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை - நல்லார் அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர் போல் பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு. - நல்வழி : 7. 952. அழலின் வெப்பத்தை நீக்குவதற்கு நிழலை அடைவது போல் காமம், வெகுளி, மயக்கம் ஆகியவற்றை ஒழிப்பதற்குத் தவத்தை நாடுதல் வேண்டும். (33) அழல் அடையப் பட்டான் அதற்குமாறு ஆய நிழல் ஆதி தன் இயல்பே நாடும் - அழலதுபோல் காமாதி யாலாம் கடுவினைக் கட்டு அழித்துப் போமாறு செய்வார் புரிந்து. - அறநெறிச்சாரம் : 45. 953. சிறு துரும்பைச் சூறைக் காற்றுச் சுழற்றி எடுக்கும். கற்றுணை அசைக்கவே அசைக்காது. அதுபோல் ஐம்புலன் களும் (மெய், வாய், கண், மூக்கு, செவி) பொய்யறிவுடையாரை அன்றி மெய்யறிவுடையாரை ஒன்றும் செய்யா. (34) பொய்ப்புலன்கள் ஐந்து நோய் புல்லியர்பால் அன்றியே மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் - துப்பின் சுழற்றுங்கொல் கற்றுணைச் சூறாவளிபோய்ச் சுழற்றும் சிறுபுன் துரும்பு. - நன்னெறி : 11. 954. கருடனைப் பாம்பு சுற்றிப் பிடிக்காது. நெருப்பைக் கயிறு கட்டிப் பிடிக்காது. அவ்வாறே பற்றுக்களும் உண்மைத் துறவிகளை நெருங்கா.(35) காளவிடப் பாந்தள் கருடனையும் கட்டுமோ? வாளெரியைக் கட்டுமோ வன்கயிறு - நீளும் பவம் அருளும் பாசம் வெம் பஞ்சேந் திரியம் சிவயோகி யைப்பிணியா வே. - நீதிவெண்பா : 56. 955. தூய துறவு உடையவர்கள் கைவரப் பெற்ற மெய் யுணர்வு, கல்வியால் சிறந்த தலைவனுக்குப் பெற்றுக் கொடுத்த கற்புடைய மங்கையின் பிள்ளையினைப் போன்றது. (36) கற்றுத் துறை போய காதலற்குக் கற்பினாள் பெற்றுக் கொடுத்த பெருமகன் போல் - முற்றத் துறந்தார்க்கு மெய்யுணர்வு தோற்றுவதே இன்பம் இறந்தவெலாம் துன்பமலா தில். - பெருந்தொகை : 339. 956. அறம் என்னும் மண்ணைச் சார்ந்தால் அணு அளவு விதைகூடப் பெருமரமாக வளரும். ஆனால், அம் மரத்தில் தீப்பற்றினால் அணுவளவும் நில்லாது எரிந்து விடும். அதுபோல் மேலோர் கொண்ட துறவு வாழ்வு செழித்து வளரும். கீழோர் கொண்ட துறவு வாழ்வு உடனே கெட்டொழியும். (37) அணுத்துணை வித்தும் அறன்மண்ணைச் சாரிற் பணைத்த பெருமரமாம் அம்மரம் தீப் பற்றின் அணுத்துணையும் நில்லா தறிஞர் கயவர் கணத்துறவு மத்தகைய காண். - இன்னிசை இருநூறு : 158. 957. விளக்கொளியின் முன்னர் இருள் நிற்காமல் ஒழிவது - போல் நல்வினையின் முன்னர்த் தீவினை நிற்காமல் அகலும் விளக்கில் எண்ணெய் தீர்ந்து விட்டால் இருள் பாய்ந்து வந்து சேர்வது போல் நல்வினை தீர்ந்தவர்களையே தீவினை அணுகும். (38) விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு ஒருவன் தவத்தின் முன் நில்லாதாம் பாவம் - விளக்கு நெய் தேய்வுஇடத்துச் சென்று இருள் பாய்ந்தாங்கு நல்வினை தீர்விடத்து நிற்குமாம் தீது. - நாலடியார் : 51. 958. புல்லைக் களைந்து நெல்லாகிய பயனைப் பெறும் உழவனைப் போல் மயக்கமும் கோவமும் ஆகிய களைகளைப் பறித்து நல்வினை யாகிய பயனைக் கொள்ளுதல் வேண்டும். (39) உயிரும் உடம்பும் பிரிவு உண்மை உள்ளிச் செயிரும் சினமும் கடிந்து - பயிரிடைப் புல்களைந்து நெல்பயன் கொள்ளும் ஒருவன்போல் நல்பயன் கொண்டு இருக்கற் பாற்று. - அறநெறிச்சாரம் : 67. 959. உற்றார், உறவு, சுற்றம், பொருள் ஆகிய பற்றுக்கள் அகன்றும் தன் உடல் மேல் வைத்த பற்று அகலாமல் இருப்பது, யானை போகிய வாயிலில் அதன் வால் போகமாட்டாமை போன்றதாம். (40) சிறந்ததம் மக்களும் செய்பொருளும் நீக்கித் துறந்தார் தொடர்ப்பா டெவன்கொல் - கறங்கருவி ஏனல்வாய் வீழும் மலைநாட்ட அஃதன்றோ யானைபோய் வால்போகா வாறு. - பழமொழி : 395. 960. எல்லாவகைப் பற்றுக்களையும் விட்டும் புலால் உண்பதை விடாமை, கடல் நீரை நீந்தியவன், பசுவின் காற்குளம்பு பட்ட பள்ளத்தில் தேங்கிய நீரை நீந்த முடியாமல் ஆழ்ந்து போனதற்கு ஒப்பாகும். (41) விடலரிய துப்புடைய வேட்கையை நீக்கிப் டர்வரிய நன்னெறிக்கண் நின்றார் - இடருடைத்தாப் பெற்ற விடக்கு நுகர்தல் கடல் நீந்திக் கற்றடியு ளாழ்ந்து விடல். - பழமொழி : 342. 961. இளம் பருவத்திலேயே புலன்களை அடக்கிப் பற்றுக்களை விடுத்து வாழ முடியாதவர், தீயின்மேல் விதை நெல்லைக் கொட்டிப் பொரித்துத் தின்ன முயல்பவரை ஒப்பர். (42) அடங்கி அகப்பட ஐந்தினைக் காத்துத் தொடங்கிய மூன்றினால் மாண்டீண் - டுடம் பொழியச் செல்லும் வாய்க் கேமம் சிறுகாலைச் செய்யாரே கொல்லிமேல் கொட்டுவைத் தார். - பழமொழி : 388. 962. எளிய இன்பங்களுக்கு இரையாகி, இறைவனுடன் இரண்டறக் கலத்தலை அறியாதவர், சிறுவர்கள் மணல் கொண்டு சமைத்த சிறு சோற்றை உண்டு தெவிட்டுபவர் போன்றவர். (43) சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல் செறிவால் அனுபோகஞ் சித்திக்கும் என்னில் குறியாத தொன்றைக் குறியாதார் தம்மை அறியாதிருந்தார் அவராவர் அன்றே. - திருமந்திரம் : 306. 963. விரைவில் தான் வெட்டுப்பட்டுச் சாவ இருந்தும், ஆடு வெறியாடும் களத்தில் கட்டப் பெற்றுள்ள பூவையும் இளந் தளிரையும் மகிழ்ந்து தின்னும். அதுபோல் புல்லறிவுடையவர்கள் எளிய ஆசைகளை அடையப் பெறுவதில் மகிழ்ந்து அழிவுக்கு ஆட்படுவர். (44) வெறி அயர் வெங்களத்து வேல்மகன் பாணி முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி அறிவுடை யாளர்கண் இல். - நாலடியார் : 16. 964. வெதும்பிக் கொண்டு வரும் உலை நீருள் போடப் பெற்ற ஆமை முதற்கண் ஓடியாடி மகிழும். வெப்பம் ஏற ஏற் மூச்சுவிட முடியாமல் திணறிச் சாவும். அதுபோல் மெய்யறிவு இன்றிப் பொய்யான இன்பங்களில் போய்த் திரிபவர் விரைந்து கெடுவர். (45) கொலைஞர் உலை ஏற்றித் தீமடுப்ப ஆமை நிலை அறியாது அந்நீர் படிந்து ஆடி யற்றே கொலைவல் கொடுங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை கலையகத்துச் செம்மாப்பார் மாண்பு. - நாலடியார் : 331. 965. கண்காண வரும் தீவினைகளை விட்டு ஒழிக்கா திருத்தல், பழம் புண்ணில் வெட்டுங் கருவி புகுவதைத் தடுக்காது இருப்பது போன்றது. (46) எண்ணற்கு அரிய இடையூறு உடையதனைக் கண்ணினால் கண்டும் கருதாதே - புண்ணின்மேல் வீக்கருவி பாய இருந்தற்றால் மற்றும் அதன்கண் தீக்கருமம் சோர விடல். - அறநெறிச்சாரம் : 123. 966. வீட்டின்பம் என ஒன்று இல்லை : விரும்பிய வண்ணமே இவ்வுலகில் எதுவும் செய்து வாழலாம் என்பவர், நெய்யில் செய்யப்பெற்ற பாகினை உண்ணாமல் கண்ணை மூடிக் கொண்டு செங்கல்லை உண்பவர்க்கு ஒப்பானவர். (47) மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம் பெறுமாறு செய்ம்மினென் பாரே – நறுநெய்யுள் கட்டி யடையைக் களைவித்துக் கண்சொரீஇ இட்டிகை தீற்று பவர். - பழமொழி : 108. 967. வீட்டின்பம் கருதாமல் வேறின்பங்களைக் கருதி வாழ்பவர், உயர்ந்த சந்தன மரத்தேனை உண்ணாமல் முள்ளிச் செடியின் தேனை உண்கின்ற வர்க்கு ஒப்பானவர். (48) செல்வத் துணையுந்தம் வாழ்நாட் டுணையுந்தாம் தெள்ளி உணரார் சிறிதினால் செம்மாந்து பள்ளிப்பால் வாழார் பதிமகிழ்ந்து வாழ்வாரே முள்ளித்தேன் உண்ணு மவர். - பழமொழி : 393. 968. கரும்பினை ஆட்டி அதன் சாற்றினை எடுத்துக் கொண்டவர்கள் கரும்புச் சக்கை தீயில் வேவதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார். அவ்வாறே , நல்லறம் செய்து உடலைக் கொண்டதன் பயனை அடைந்த பெருமக்கள் இறப்பு வருவது குறித்துக் கவலைப்படார். (49) கரும்பு ஆட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் துரும்பு எழுந்து வேம்கால் துயர் ஆண்டு உழவார்; வருந்தி உடம்பின் பயன் கொண்டார் கூற்றம் வருங்கால் பரிவது இலர். - நாலடியார் : 35. 969. நுகக்கோலின் நடுவே நிற்கும் ஆணியைப்போல், ஒருவன் தன்னை வாளினால் வெட்டினாலும், சாந்தினால் பூசினாலும் ஒப்பாகக் கருதி நிற்கும் ஒருதன்மையே தவம் ஆகும். (50) தத்தமக்குக் கொண்ட குறியே தவமல்ல செத்துக் சாந்து படுக்கமன் – ஒத்துச் சகத்தனாய் நின்றொழுகும் சால்பு தவமே நுகத்துப் பகலாணி போன்று. - பழமொழி : 339. 970. நஞ்சினை அமிழ்து என்று எத்துணைப்பேர்கள் கூறினாலும் உண்மை உணர்ந்தவன் ஒப்புக் கொள்ள மாட்டான். அதுபோல் பொய்ந் நூல்களை மெய்ந்நூல்கள் என்று எத்துணைப் பேர்கள் கூறினாலும் உண்மை அறிவினன் ஏற்க மாட்டான். (51) உடங்கு அமிழ்தம் கொண்டான் ஒருவன் பலரும் விடம் கண்டு நன்று இதுவே என்றால் - மடம் கொண்டு பல்லவர் கண்டது நன்று என்று அமிழ்து ஒழிய நல்லவனும் உண்ணுமோ நஞ்சு? - அறநெறிச்சாரம் : 56. 971. கண்கள் இல்லாமல் ஒளிப்பயனை அடைய முடியாது. திறவுகோல் இன்றிப்பூட்டினைத் திறக்க முடியாது. அவற்றைப் போல் அறிவுநூல் ஆசான் இன்றி மெய்யுணர்வு எய்த இயலாது. (52) நாட்டமின்றி யொளியெப் பயனை நல்கும் மனையில் பூட்டு பொன் திறவுகோலினையலாது புகுமோ வேட்டகத் தரியநூல்களுளவேனு மினிதாக் காட்டருட் குரவனின்றி யெவர்காண்பர் பயனே. - நீதிநூல் 5 : 3. 972. கறுத்த இரும்பு தங்கமானால், மீண்டும் அஃது இரும்பாக மாறாது. அதுபோல் மெய்க் குருவை அடைந்து மேல் நிலை பெற்றவன் பிறவியில் மீண்டும் புகுந்து துயர் அடையான். (53) கறுத்த இரும்பே கனகம தானான் மறித்திரும் பாகா வகையது போலக் குறித்த அப்போதே குருவருள் பெற்றான் மறித்துப் பிறவியில் வந்தணு கானே. - திருமந்திரம் : 2051. 973. கருடன் உருவைக் கருதும் அளவிலேயே நஞ்சின் கொடுமை அகலும், அதுபோல் மெய்க்குருவை நினைத்த பொழுதே மும்மலங்களும் (ஆணவம், கன்மம், மாயை) கெடும். (54) கருடன் உருவங் கருதும் அளவிற் பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல் குருவின் உருவங் குறித்த அப்போதே திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே. - திருமந்திரம் : 2659. 974. பரிசனவாதி (இரசவாதி) தொட்டதெல்லாம் பொன்னாகும். அதுபோல் மெய்க்குருவின் அருள் பெற்றோர் அனைவரும் பழவினை கெட்டுப் பிறப்பினை நீங்குவர். (55) பரிசன வாதி பரிசித்த தெல்லாம் வரிசை தரும் பொன் வகையாகு மாபோற் குருபரி சித்த குவலயம் எல்லாந் திரிமலந் தீர்ந்து சிவகதி யாமே - திருமந்திரம் : 2054. 975. நிலவில் கறை இருந்தாலும் அதனை மக்கள் கைகூப்பி வணங்குவர். அதுபோல் ஆசையை அறுத்து மெய்யுணர்வு எய்தியவர் பிச்சை எடுத்து உண்பவராக இருந்தாலும் அவரை மதித்து வணங்குவர். (56) இச்சை யறுத்துயர் மெய்யுணர் வெய்தினோர் எச்சம யத்தி லிருப்பது நீங்கினும் பிச்சை புகினும் பெருமுயல் கொள்ளினும் உச்சிமேற் கொள்ளும் உலகு. - இன்னிசை இருநூறு : 80. 976. படைக் கருவிகளைக் கண்டு அஞ்சி நடுங்கும் ஒருவனைத் தன் வினைத்துயர் தீர்ப்பான் என்று சார்வது, பல எலிகளும் பண்டங்களைக் கொறித்துக் கொடுக்கவும் ஒன்றும் செய்யமாட்டாத பூனையை 'வீட்டு எலித் துயரைப் போக்கும்' என்று எண்ணுவது போன்றது. (57) புனைபடை கண்டு அஞ்சித் தற்காப்பான் தன்னை வினைகடியும் என்று அடி வீழ்தல் – கனைஇருட்கண் பல்லெலிதின்னப் பறைந்து இருந்த பூனையை இல்லெலி காக்கும் என் றற்று. - அறநெறிச்சாரம் : 2. 977. நாடக மன்றில் அரச வேடம் பூண்டு மிகத் துன்பத் துடன் நடிக்கும் ஒருவனை ஊரார் தமக்கு அரசனாக இருக்க வேண்டுவது போன்றது, மாளிகையையும், மண் குடிசையையும் பார்த்து ஆசையை அடக்கி நடக்க மாட்டாத ஒருவனைக் குருவாகக் கொள்வது. (58) மாடமும் மண்ணிடும் கண்டு அடக்கம் இல்லாரைக் கூடி வழிபடும் கோள் அமை - ஆடரங்கின் நோவகமாய் நின்றான்ஓர் கூத்தனை ஊர்வேண்டிச் சேவகமாய் நின்றது உடைத்து. - அறநெறிச்சாரம் : 53. 978. மரக்கலத்தை இயக்கத் தெரியாதவன் துணையைக் கொண்டு எவரும் கடல் கடக்கத் துணியார். அது போல் பற்றுகள் அகலாத ஒருவனைக் குருவாகக் கொண்டு பிறவிக் கடலைக் கடக்க அறிவுடையோர் நினையார். (59) பாவச் சலதிக்குள் உறாவகை பாருளோர்க்குக் காவல் துணையாங் குரவன்குணங் கல்வியின்றி ஆவல் தளைபூண்ட வனேயெனி லாருங்கொள்ளார் ஏவத் தெரியான் திமின்மீதெவர் ஏறுவாரே. - நீதிநூல் : 6:3. 979. செவ்வட்டை என்னும் சிற்றுயிர் ஒளியைப் பின் புறம் ஒதுக்கி, இருளை நாடிச் செல்லும். அதுபோல் தகுதியற்ற ஆசானும் நல்லவற்றை நாடாமல் அல்லவற்றை நாடி அலைவான். (60) ஒளியை வாற்புறம் போக்கியோர் செவ்வுரு நளியி ருட்டி னகருதல் போற்கற்ற தெளிவெ லாமொரு பாங்க ரெறீஇச்செல்வர் இளிகொள் தீநெறி யீனக் குரவரே. நீதிநூல் பிற்சேர்க்கை : 6:1. 980. பெருந்திருடன் சிறுதிருடனைப் பழிப்பது போன்றது, பணப் பற்றாளன் பிறருக்குப் பற்றற்ற தன்மையைப் போதிப்பது. (51) சொன்னத் திருடன் சிறு கள்வனைத் தூரியேசல் என்னப் பொருளாசை யுளான்பிறர் இச்சை தீர்ந்து மன்னத் திருஞான முரைத்தன்மற் றோர்துறக்கும் பொன்னைக் கவரச்செயும் வஞ்சனை போலுமாதோ. - நீதிநூல் : 6 : 5. 981. மெய்யுணர் வில்லாத ஒருவன் துணையால் பிறவித் துன்பத்தைப் போக்க நினைப்பது, குருட்டு முடவன் துணையால், குருடன் ஒரு பெரிய கோட்டைக் கடக்க நினைப்பது போன்றதாம். (62) அறுதொழில் நீத்தாரை மெச்சாது அவற்றோடு உறுநரைச் சார்ந்து உய்யப் போதல் - இறுவரைமேல் கண்ணில் முடவன் துணையாக நீள்கானம் கண்ணிலான் சென்றது உடைத்து. அறநெறிச்சாரம் : 99. 982. மெய்ஞ் ஞானக் குருவை நாடாமல் பொய்ஞ் ஞானக் குருவைப் பொருந்தி ஒருவன் மெய்நூல் அறிவு பெற விரும்புவது, குருடும் குருடும் சேர்ந்து குருட்டாட்டம் ஆடிக் குழிக்குள் வீழ்வது போன்றது. (63) குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார் குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக் குருடுங் குருடுங் குழிவிழு மாறே. - திருமந்திரம் : 1680. 983. அருளிலா நெஞ்சத்தவன் மெய்ந்நூல் ஆசானாக அமைவது, கள்வன் பொருட் காவலனாக அமர்வது போன்றது. (64) திருடன் பொருட்கா வலனாதலுஞ் செல்வழிக்குக் குருடன் குருடன்றனை யேதுணைக் கொள்ளல் போலும் இருடங் குளமாந்தரை வான்கதி யேற்றவென்னா அருடங்கிய நெஞ்சமிலான்குரு வாயவாறே. - நீதிநூல் : 6 : 1. 984. துன்பம் நிறைந்த வீட்டை இறைவன் உறையும் இன்ப வீடாகக் கருதுவது போன்றது , பற்றுகள் நீங்காத ஒருவனை அறிவு நூல் ஆசானாகக் கொள்வது. (65) இகத்தின் வாழ்வினில் இச்சைய றான்றனை சகத்தி னிற்குரு சாமியென் றோதுதல் சுகத்தை நீங்கித் துயரஞ் செறிநரர் அகத்தை வீடென்று) அறைதல் சிவணுமே. - நீதிநூல் : 6 : 7. 985. தன் நோயைப் போக்கிக் கொள்ளமாட்டாதவன் பிறர் நோயைப் போக்க மந்திரம் செய்வான் என்பதை ஒப்புக் கொள்ளார். அதுபோல் குற்ற முடைய ஒருவன் குருவாக அமைந்தால் அவனை உண்மைக் குருவென உலகோர் கொள்ளார். (66) பெருவெம் பிணியாளன் மற்றோர்பிணி பேரும்வண்ணந் திருமந்திரஞ்சொல்வ னென்றோதிடிற் றிண்மையாமோ தருமந் தனைநாட்ட வந்தோன் குறை தானுளானேல் இருமண் டலமீதவன் சொல்லெவ ரேற்பர் மாதோ. - நீதிநூல் : 6:2. 986. ஒழுக்கம் இல்லாதவனிடம் உறுதிப் பொருள் கூறுமாறு வேண்டுவது, மணம் இல்லாத பூவினிடம் மணம் வேண்டுவது போன்றதாம். (67) நாற்றம் ஒன்று இல்லாத பூவொடு சாந்தினை நாற்றம்தான் வேண்டியது போலும் - ஆற்ற மறுஅறு சீலமும் நோன்பும்இல் லாரை உறுபயன் வேண்டிக் கொளல். - அறநெறிச்சாரம் : 54. 987. புறத்தே தவக்கோலமும் அகத்தே வஞ்சமும் உடையவன், உடலெல்லாம் சிவப்பாகவும் மூக்குக் கறுப்பாகவும் உள்ள குன்றிமணி போன்றவன். (68) புறங்குன்றி கண்டனைய ரேனும், அகங்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து. - திருக்குறள் : 277. 988. தவக்கோலத்தில் மறைந்து கொண்டு அவச்செயல் களைச் செய்வது, வேடர்புதரில் மறைந்து கொண்டு பறவையைப் பிடிப்பது போன்றது. (69) தவமறைந் தல்லவை செய்தல், புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. - திருக்குறள் : 274. 989. மன உறுதிப்பாடு இல்லாமல் வெளிவேடம் உடைய வன் தோற்றம், புலித்தோலைப் போர்த்துக் கொண்ட பசுவுக்கு ஒப்பானது. (70) வலியில் நிலைமையான் வல்லுருவம், பெற்றம் புலியின்தோல் போர்த்து மேய்ந் தற்று. - திருக்குறள் : 273. 990. தன் வயிற்றுப்பாடு ஒன்றே நினைத்து ஆசான் வேடம் புனைவது, ஆட்டை உண்பதற்காகப் புலி ஆட்டுத்தோலைப் போர்த்துக் கொண்டது போன்றது. (71) ஒருமை யாய்த்தன் உதர நிமித்தமே தரும வேடந் தாக்குதல் வெம்புலி புருவை தன்னைப் புசிக்கப் புருவையின் சருமம் பூண்டங்குச் சார்தல் நிகர்க்குமே - நீதிநூல் : 6 : 9. 991. நுண்ணிய நூல்களை அறிந்து நோன்புகள் கொள்ளாமல் சோற்றைக் கருதித் துறவியாக வாழ்வது, ஆற்றில் கிடந்த முதலைக்கு அஞ்சிப் போய் ஈற்றுக் கரடிக்கு எதிரே மாட்டிக் கொண்டது போன்றது. (72) ஆற்றிற் கிடந்து முதலைகண் டஞ்சிப்போய் ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும்’ நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர் சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே. - திருமந்திரம் : 1642. 992. மெய்ப்பொருளை எண்ணாமல் உடை, சோறு, எண்ணெய் என்று உழல்பவர்கள், பாறைமேல் இருந்து பிடிக்கப்பட்ட சேலை, காற்றில் அடித்துப் பறப்பது போல் பறந்து அலமருவர். (73) கூறையுஞ் சோறுங் குழாயகத் தெண்ணெயுங் காறையும் நாணும் வளையலுங் கண்டவர் பாறையி லுற்ற பறக்கின்ற சீலை போல் ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே. - திருமந்திரம் : 2894. 993. கற்க வேண்டிய நூல்களைக் கற்றுத் தெளிந்த மெய்யுணர்வாளர் செய்யும் பழிச்செயல், நிலவில் தோன்றும் கறை போல் அனைவருக்கும் எளிதில் புலப்படும். (74) விதிப்பட்ட நூல் உணர்ந்து வேற்றுமை நீக்கிக் கதிப்பட்ட நூலினைக் கை இகந்து ஆக்கிப் பதிப்பட்டு வாழ்வார் பழியாய செய்தல் மதிப்புறத்தில் பட்ட மறு. - அறநெறிச்சாரம் : 74. 994. பண்பாடு அற்றவர்களிடம் அமைந்துள்ள அறிவு நூல் ஆய்வு, நாற்றம் மிக்க பாத்திரத்தில் வைக்கப் பெற்ற நன்னீர் போன்றது. (75) ஞானம்ஆ சாரம் நயவார் இடைப்புகழும் ஏனைநால் வேதம் இருக்குநெறி - தான்மொழியின் பாவநிறை சண்டாளர் பாண்டத் துக்கங்கைநீர் மேவுநெறி என்றே விடு. - நீதி வெண்பா : 25. 995. இறைவன் அருள் இன்றி அவனை உணர்தல் அரிது. அவ்வருள் இன்றி அறிதல், ஆட்டின் கழுத்தில் தொங்கு தாடி (அதர்) போன்ற தாகவே முடியும். (76) காட்டுங் குறியுங் கடந்தவர் காரணம் ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன் கூட்டுங் குருநந்தி கூட்டிடி னல்லது ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே. - திருமந்திரம் : 2937. 996. இறைவனைக் காண மாட்டாதவர் நிறை அறிவினைப் பெற்றேம் என்று செருக்கடைவது, பிறைக்கண் தங்கியுள்ள முயலை வெட்டுதற்கு, அறைக்கண் கட்டியுள்ள வாளைக்கையில் எடுத்துக் கொள்வோர் வீரம் போன்றது. (77) பிறையுட் கிடந்த முயலை எறிவான் அறைமணி வாட்கொண்டவர்தமைப் போலக் கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார் நிறையறி வோமென்பர் நெஞ்சிலர் தாமே. - திருமந்திரம் : 2512. 997. ஒரு பேரூருக்குப் பலப்பல வழிகள் இருப்பது போல இறைவனை அடைதற்குப் பலப்பல வழிகள் உள்ளன. அவையே சமயங்கள். (78) ஓன்றது பேரூர் வழியா றதற்குள் என்றது போல இருமுச் சமயமும் - திருமந்திரம் : 1588. 998. புளியை நினைத்தவுடன் வாயில் நீர் ஊறுவது போல் இறை இன்பத்தில் மூழ்கியவர்க்கு இறைவனை நினைத்த போதே இன்பம் ஊறும். (79) புளிக்கண் டவர்க்குப் புனலூறு மாபோற் களிக்குந் திருக்கூத்துக் கண்டவர்க் கெல்லாம் அளிக்கும் அருட்கண்ணி சோர்நெஞ் சுருக்கும் ஒளிக்குளா னந்தத் தமுதூறும் உள்ளத்தே. - திருமந்திரம் : 2778. 999. உயிர் இறை நிலையை எய்தும் போது மலம், பற்று வேற்றுமை ஆகியவை கதிரோன் முன் நின்ற மதியம் போல் ஒளிவிட மாட்டா. (80) தானே சிவமான தன்மை தலைப்பட ஆன மலமுமப் பாச பேதமும் மான குணமும் பரான்மா வுபாதியும் பானுவின் முன்மதி போற்பட ராவே. - திருமந்திரம் : 2314. 1000. நீர் அற்றுப்போனால் நீர்ச் சார்புடைய பறவை அற்றுப்போகும் எண்ணெய், திரி, அகல் முதலிய சார்புகள் அற்றுப் போனால் சுடர் அற்றுப் போகும்; அவற்றைப் போல் வினை என்னும் சார்பு அற்றுப்போனால் பிறப்பு அற்றுப்போகும். (81) திரியும் இடிஞ்சிலும் நெய்யுஞ்சார் வாக எரியும் சுடரே ரனைத்தாய்த் - தெரியுங்கால் சார்வற ஓடிப் பிறப்பறுக்கும் அஃதே போல் நீரற நீர்ச்சார் வறும். - பழமொழி : 397.