நீதி நூல்கள்-1 நீதி நூல்கள் உரைவிளக்கம்: நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் நூற் குறிப்பு நூற்பெயர் : நீதி நூல்கள்-1 ஆசிரியர் : ந. மு. வேங்கடசாமி நாட்டார் பதிப்பாளர் : க. தமிழமுது முதல் பதிப்பு : 2014 தாள் : 11.6 வெள்ளை மேப்லித்தோ அளவு : 1/16 கிரௌன் எழுத்து : 12 புள்ளி பக்கம் : 280 படிகள் : 1000 விலை : உரு. .175/- நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : தமிழ்க்குமரன் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் 20 அஜீஸ் முல்க் 5வது தெரு ஆயிரம் விளக்கு, சென்னை -6 கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : மாணவர் பதிப்பகம், 20/33 - P. 3 பாண்டியன் அடுக்ககம் சீனிவாசன் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017, பதிப்புரை நம் தமிழ் மன்பதை பல்வேறு பெருமை களைத் தன்னகத்தே கொண்டிருந்தது என்று சொல்வது வெறும் புகழ்ச்சி இல்லை; அது முற்றிலும் உண்மை! அதற்குப் பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். நம்மைச் சற்று முன் கடந்துபோன இருபதாம் நூற்றாண்டில்கூட, ‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?’ என்ற பிற்போக்குத்தனமான கருத்து வேரூன்றி யிருந்தது. ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இலக்கணப் புலமையுடன் இலக்கியம் படைத்த பெண்பாற் புலவர்கள் பலர் தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஒளவையார். அவர் புலவராக மட்டுமல்லாது, அரசர்களுக் கெல்லாம் அறிவுரை வழங்கி ஆட்சியைச் செம்மைப் படுத்தும் ஆற்றல் பெற்றவராகவும் விளங்கினார். அரசர்களும் ‘இவர் பெண்தானே!’ எனத் தாழ்வாகக் கருதாமல் அவருக்கு உயரிய மதிப்பளித்து வந்துள்ளமை வரலாற்றுச் செய்திகள் மூலம் தெரிய வருகிறது. இன்றைய இந்தியாவின் நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு முப்பத்து மூன்று விழுக்காடு ஒதுக்கும் உப்புச் சப்பில்லாத ஒரு தீர்மானத்திற்கே ஒப்புதல் தர அடம் பிடிக்கும் அரசியல் நிலையோடு பழந் தமிழகத்தை ஒப்பிடும்போது .....அடடா! நமது வழிவழிப் பண்பாட்டுக்கு எதிரான பகைவர் - அயலார் இந்த மண்ணில் நுழைந்த பிறகே இங்கே அனைத்து ஏற்றத் தாழ்வுகளுடன் பெண் ணடிமைத்தனமும் புகுத்தப் பட்டது என்பதை இதன் மூலம் நன்கு உணரலாம். அதே ஒளவையார், ‘மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்’ என்று பாடினார். அதாவது, ‘மன்னன் மதிப்புடையவன் தான்; ஆனால் அவனை விடவும் கற்றறிந்த புலவன் மிகவும் சிறப்புக் குரியவன்’ எனக் கூறியுள்ளார். அவரது காலத்திற்குப் பின், தமிழ்நாட்டில் ஒருவன், மன்னனாகவும் அரசு புரிந்து, கற்றறிந்த புலவராகவும் பாக்கள் இயற்றி ‘இரட்டைச் சிறப்பு’ப் பெற்றிருந்ததை அறியும்போது நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. இத்தகைய வரலாற்றுப் பெருமைக்குரியவர் பழங்காலத்தில் முத்து வணிகத்தில் உலகப் புகழ் பெற்ற கொற்கை நகரைத் தலைமை யிடமாகக் கொண்டு ஆண்ட அதிவீரராம பாண்டியன் என்பவர் ஆவார். மேலும் - முல்லைக்குத் தேர் கொடுத்து வள்ளல் தன்மையில் எல்லையில்லாப் புகழ் பெற்ற பாரியின் உற்ற தோழர் கபிலர் என்பார். இவர் பாரிக்குத் துன்பக் காலத்தில் தோள் கொடுத்ததோடு மட்டு மல்லாது, பாரியின் மறைவுக்குப் பின் அவரின் மகளிர் இருவரின் எதிர்கால வாழ்வுக்காக இமைசோராது உழைத்தவர். சிறந்த புலவர். தொடர்ந்து - கண்ணன் மகன் கூத்தன் என்பவர் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்ததனால் மதுரைக் கண்ணங் கூத்தனார் என்ற பெயருடன் புலமை பெற்று விளங்கினார். மற்றும் - பொய்கை என்னும் இடத்தில் பிறந்ததால் பொய்கையார் எனும் இடவாகுபெயர் பெற்ற புலவரும் பழந்தமிழகத்தில் வாழ்ந்திருந்தார். இவர்களெல்லாம் சங்க காலங்களைச் சேர்ந்தவர்கள். அடுத்து - ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் என்பவர். இவரும் சங்கப் புலவர் களுடன் ஒப்பிடும் அளவு தகுதி பெற்று விளங்கியவர். மேற்சொல்லப் பெற்ற அனைவரும் பல்வேறு நூல்களையும் தனிப் பாடல்களையும் இயற்றி, தமிழ் இலக்கியத்திற்கு மிகவும் சிறப்புச் சேர்த்துள்ளனர். அவற்றுள், ஒளைவையாரின் ‘ஆத்திசூடி’, ‘மூதுரை’, ‘நல்வழி’, ‘கொன்றைவேந்தன்’, அதிவீரராம பாண்டியரின் ‘வெற்றிவேற்கை’ எனும் ‘நறுந்தொகை’, கபிலரின் ‘இன்னா நாற்பது’ - சிவப்பிரகாசரின் ‘நன்னெறி’ மதுரைக் கண்ணங் கூத்தனாரின் ‘கார் நாற்பது’, பொய்கையாரின் ‘களவழி நாற்பது’ ஆகிய நூல்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளராக இருந்த பண்டித நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் 1950-களிலேயே உரை எழுதி அவை தமிழ் மக்களிடையே பரவ வழி செய்துள்ளார். அவற்றை ‘இளையோர் வரிசை’ என்னும் பிரிவில் எமது ‘மாணவர் பதிப்பகம்’ தனித்தனி நூல்களாக வெளிக்கொணர்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஆத்திசூடி, மூதுரை, நல்வழி, கொன்றைவேந்தன், நறுந்தொகை ஆகிய மூல நூல்களைத் தந்துதவி எமக்குப் பாராட்டும் வழங்கி ஊக்குவித்த தஞ்சாவூர், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி நிறுவனர் - பேராசிரியர் திருமிகு பி.விருத்தாசவனார் அவர்களுக்கும், கார்நாற்பது, களவழி நாற்பது ஆகிய மூல நூல்களைத் தந்துதவிய திருச்சி,‘திருவள்ளுவர் தவச் சாலை’ நிறுவனர் ‘உலகப் பெருந்தமிழர்’, ‘செந்தமிழ் அந்தணர்’ புலவர் இரா. இளங் குமரனார் அவர் களுக்கும் எம் நெஞ்சம் நிறைந்த நன்றி உரித்தாகுக. தமிழ்கூறு நல்லுலகத்தின் இளைய தலைமுறை எமது இம்முயற்சியை வரவேற்றுப் பயன்பெறும் என்று நம்புகிறோம். பதிப்பாளர் உள்ளடக்கம் நீதி நூல்கள் பதிப்புரை 3 1. ஆத்திசூடி 4 2. கொன்றைவேந்தன் 49 3. நல்வழி 82 4. மூதுரை 121 5. உலகநீதி 159 6. நன்னெறி 191 7. நறுத்தொகை 229 ஆத்திசூடி முகவுரை ஆத்திசூடி என்பது நல்லிசைப் புலமை வாய்ந்த ‘ஒளவையார்’ என்னும் மெல்லியலார் அருளிய நூல்களுள் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக் கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப்பாக் களும், ஒளவையார் இயற்றின வென்ப. கம்பர் முதலிய புலவர்கள் விளங்கிய காலத்தில் இருந்தவர் இவர். இவரைக் குறித்து எத்தனையோ பல கதைகள் வழங்குவதுண்டு. கடைச்சங்க நாளிலே புலமையிற் சிறந்து விளங்கிய மகளிரில் ஒளவையார் என்னும் பெயரினரும் ஒருவர். அவர் பாடிய பாட்டுகள் புறநானூறு முதலிய சங்க நூல்களில் சேர்க்கப் பட்டுள்ளன. அவர் அதியமான் என்னும் வள்ளல் அளித்த அமுதமயமான நெல்லிக்கனியை உண்டு நெடுங்கால உயிர் வாழ்ந்தனரெனச் சங்க நூல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சங்ககாலத்து ஒளவையாரும் வேறு; கம்பர் காலத்து ஒளவையாரும் வேறு என்பது இற்றைநாள் ஆராய்ச்சியாளர் கொள்கையாகும். தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும், பெண்டிர்களிலும் கற்றவர்களும், கல்லாதவர்களும் ஆகிய யாவரும் ஒளவையென்னும் பெயரை அறிந்திருப்பர். அப்பெயரை அறியாதார் மிகவும் அரியர். அதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய நீதி நூல்களேயாகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவ ராலும் ஒப்புக் கொள்ளப்பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சி யுடையா ரெவரும் ஒளவையாரின் நீதிநூல்களுள் ஒன்றை யாவது படித்தேயிருப்பர். பல பெரிய நூல்களின் சாரமாகவுள்ள நீதிகளும் கருத்துகளும் ஆத்திசூடி யிலும், கொன்றைவேந்தனிலும் சிறு சிறு சொற் றொடர்களில் தெளிவுற அமைக்கப்பெற்று விளங்கு கின்றன. இளம்பருவத்தினர் எளிதாய்ப் பாடஞ் செய்து நினைவில் வைத்துக் கொள்ளும்படி, அகரம் முதலிய எழுத்துகளை முறையே முதலில் உடையனவாக, இவற்றின் சூத்திரம் போலுஞ் சொற்றொடர்கள் அமைந் துள்ளன. ஆத்திசூடி மிகச்சிறிய சொற்றொடர்களாலும், கொன்றை வேந்தன் சற்றுப் பெரிய சொற்றொடர்களாலும், ஆக்கப் பெற்றிருப்பது பிள்ளைகளின் பருவத்திற் கேற்பக் கற்பிக்க வேண்டுமென்னும் கருத்துப் பற்றியே யாகும். மிக்க இளம் பருவத்தினரா யிருக்கும் பொழுதே, பிள்ளைகளின் மனத்தில் உயர்ந்த நீதிகளைப் பதியவைக்க வேண்டுமென்னும் பெருங் கருணையுடனும், பேரறிவுடனும் ‘அறஞ் செய விரும்பு’ என்று தொடங்கி ஆக்கப் பெற்றுள்ள ஆத்திசூடியின் மாண்பு அளவிடற் பாலதன்று. இங்ஙனம் உலகமுள்ளவரையும் இளைஞர்கள் பயின்று பயன் பெறும் முறையினை ஏற்படுத்தி வைத்தவர் பெண்மக்களுள் ஒருவ ரென்னும் பெருமை தமிழ்நாட்டிற்கு உரியதா கின்றது. ஆத்திசூடி உரைப்பதிப்புகள் வேறு பல இருப்பினும், இப்பதிப்பு மூலபாடம் தனியே சேர்க்கப்பெற்றும், பதவுரையும் பொழிப்புரையும் திருத்தமாக எழுதப்பெற்றும் சிறந்து விளங்குவது காணலாம். இங்ஙனம், ந. மு. வேங்கடசாமி நாட்டார். பாராட்டுரை பேராசிரியர் பி.விருத்தாசலம், நிறுவனர், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, கபிலர் நகர்,வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் - 613 003. தமிழ்மொழிக் காவலர் கோ.இளவழகன் அவர்கள் தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி, அதன் வாயிலாக அமிழ்தினும் ஆற்ற இனிய நம் அருமைச் செந்தமிழ் மொழிக்கு அளப்பரிய தொண்டுகளைச் செய்து வருகின்றார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், ஈழத்துப் பேரறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, அரசியல் தலைவர் சீர்பரவுவா ராகிய அறிஞர் வெ.சாமிநாதசர்மா, தமிழ்த்தென்றல் திரு.வி.க. ஆகிய தமிழ்ச் சான்றோர்கள் எழுதிய நூல்களை எல்லாம் தேடிப்பிடித்து ஒன்று கூட விடாமல் அவற்றை அழகாக அச்சிட்டு வெளிப்படுத்தி உள்ளார். தமிழ்ப் பதிப்புலக வரலாற்றில் அவரது முயற்சி ‘இமய மலையைப் பெயர்த்தெடுத்து இந்தியப் பெருங்கடலில் வைத்தது போன்ற’ அரிய செயலாகும். அவர் வாழ்க. அவரது முயற்சி வெல்க. இப்பொழுது கோ.இளவழகன் அவர்கள் நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதிய நூல்களை எல்லாம் வெளியிடும் திருத்தொண்டில் ஈடுபட்டுள்ளார். அம்முயற்சியின் முதற் கட்டமாகத் தமிழில் உள்ள நீதிநூல்களாகிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, நன்னெறி, வெற்றி வேற்கை என்னும் நறுந்தொகை, இன்னா நாற்பது முதலிய நூல்களுக்கு நாட்டார் ஐயா அவர்கள் எழுதிய உரைகளை வெளியிடுகின்றார். நாவலர் ந.மு.வே. அவர்கள் அகநானூறு என்னும் சங்கத்தொகை நூலுக்கும், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரட்டைக் காப்பியங்களுக்கும், திருவிளை யாடற் புராணம் என்னும் சமயநூலுக்கும் உரை எழுதிய பேரறிஞர் ஆவார். அத்தகைய அறிஞர் பெருந்தகை தமிழில் எழுதப் பெற்றுள்ள சிறுவர் இலக்கியங் களாகிய ஆத்திசூடி முதலிய சின்னஞ் சிறு நூல்களுக்கும் உரை எழுதியிருப்பது பெரிதும் பாராட்டற் பாலதாகும். ஒரு குடும்பத்தில் பாட்டனுக்குள்ள பேரறிவு ‘குறுகுறு நடந்து சிறுகை நீட்டி’ விளையாடும் மழலைச் செல்வமாகிய பேரனுக்கு இல்லாம லிருக்கலாம். ஆனாலும் அக்குடும்பத்தில் உள்ளவர்கள் பாட்டனிடம் காட்டும் அதே மதிப்பையும், அன்பையும் அந்தப் பெயரனிடமும் காட்டுவர் என்பது உறுதி. அதுபோலவே, தமிழறிஞர்கள் ந.மு.வே. அவர்களின் அகநானூற்று உரையைப் போலவே, ஆத்திசூடி உரையையும் போற்றிப் பாராட்டு கின்றார்கள். உலகில் என்றும் நிலைபெற்றுள்ள வாழ்வியல் உண்மைகளை விளக்கிக் கூறும் பொருண்மொழிக் காஞ்சி, முதுமொழிக்காஞ்சி என்னும் துறையமைந்த புறநானூற்றுப் பாடல்கள், அகவை முதிர்ந்தும் அறநெறிப்படி வாழாத அறிவில் மாக்கட்கு உரைக்கப் பெற்றவை ஆகும். சிறுவர்களுக்குக் கூறப்பெறும் அறஞ்சார்ந்த அறிவுரைகளே தமிழில் உள்ள நீதிநூல்களாகும். இளமையில் கற்ற கல்வி பசுமரத் தாணி போல் பதியும். அவ்வாறு, இளவயதில் கேட்டு நெஞ்சில் நிலைத்து நிற்கும் அறவுரைகள் மக்களை வாழ்க்கை முழுதும் நடத்திச் செல்லும். அதனால் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலுள்ள தமிழ் நாட்டுத் தொடக்கப்பள்ளிகளில் மேற்சொன்ன நீதிநூல்கள் பாடமாக வைக்கப் பெற்றிருந்தன. அக்காலம் போல் இக்காலத்தில் நீதிநூல்களைப் பாடமாக வைப்பது மிகவும் குறைந்து உள்ளது. எனவே, தமிழில் உள்ள நீதிநூல்களைத் தொடக்கப் பள்ளிகளில் பாடமாக வைக்கும்படி தமிழக அரசையும், பாடத்திட்டக் குழுவினரையும் இதன்வழி அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன். இங்ஙனம், பேரா.வி.விருத்தாசலம். ஆத்திசூடி கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி யமர்ந்த தேவனை ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே. நூல் 1. அறஞ்செய விரும்பு. 2. ஆறுவது சினம். 3. இயல்வது கரவேல். 4. ஈவது விலக்கேல். 5. உடையது விளம்பேல். 6. ஊக்கமது கைவிடேல். 7. எண்ணெழுத் திகழேல். 8. ஏற்ப திகழ்ச்சி. 9. ஐய மிட்டுண். 10. ஒப்புர வொழுகு. 11. ஓதுவ தொழியேல். 12. ஒளவியம் பேசேல். 13. அஃகஞ் சுருக்கேல். 14. கண்டொன்று சொல்லேல். 15. ஙப்போல் வளை. 16. சனிநீ ராடு. 17. ஞயம்பட வுரை. 18. இடம்பட வீடெடேல். 19. இணக்கமறிந் திணங்கு. 20. தந்தைதாய்ப் பேண். 21. நன்றி மறவேல். 22. பருவத்தே பயிர்செய். 23. மன்றுபறித் துண்ணேல். 24. இயல்பலா தனசெயேல். 25. அரவ மாட்டேல். 26. இலவம்பஞ்சிற் றுயில். 27. வஞ்சகம் பேசேல். 28. அழகலா தனசெயேல். 29. இளமையிற் கல். 30. அறனை மறவேல். 31. அனந்த லாடேல். 32. கடிவது மற. 33. காப்பது விரதம். 34. கிழமைப் படவாழ். 35. கீழ்மை யகற்று. 36. குணமது கைவிடேல். 37. கூடிப் பிரியேல். 38. கெடுப்ப தொழி. 39. கேள்வி முயல். 40. கைவினை கரவேல். 41. கொள்ளை விரும்பேல். 42. கோதாட் டொழி. 43. சக்கர நெறிநில். 44. சான்றோ ரினத்திரு. 45. சித்திரம் பேசேல். 46. சீர்மை மறவேல். 47. சுளிக்கச் சொல்லேல். 48. சூது விரும்பேல். 49. செய்வன திருந்தச் செய். 50. சேரிட மறிந்து சேர். 51. சையெனத் திரியேல். 52. சொற்சோர்வு படேல். 53. சோம்பித் திரியேல். 54. தக்கோ னெனத்திரி. 55. தானமது விரும்பு. 56. திருமாலுக் கடிமைசெய். 57. தீவினை யகற்று. 58. துன்பத்திற் கிடங்கொடேல். 59. தூக்கி வினைசெய். 60. தெய்வ மிகழேல். 61. தேசத்தோ டொத்துவாழ். 62. தையல்சொற் கேளேல். 63. தொன்மை மறவேல். 64. தோற்பன தொடரேல். 65. நன்மை கடைப்பிடி. 66. நாடொப் பனசெய். 67. நிலையிற் பிரியேல். 68. நீர்விளை யாடேல். 69. நுண்மை நுகரேல். 70. நூற்பல கல். 71. நெற்பயிர் விளை. 72. நேர்பட வொழுகு. 73. நைவினை நணுகேல். 74. நொய்ய வுரையேல். 75. நோய்க்கிடங் கொடேல். 76. பழிப்பன பகரேல். 77. பாம்பொடு பழகேல். 78. பிழைபடச் சொல்லேல். 79. பீடு பெறநில். 80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ். 81. பூமி திருத்தியுண். 82. பெரியாரைத் துணைக்கொள். 83. பேதைமை யகற்று. 84. பையலோ டிணங்கேல். 85. பொருடனைப் போற்றிவாழ். 86. போர்த்தொழில் புரியேல். 87. மனந்தடு மாறேல். 88. மாற்றானுக் கிடங்கொடேல். 89. மிகைபடச் சொல்லேல். 90. மீதூண் விரும்பேல். 91. முனைமுகத்து நில்லேல். 92. மூர்க்கரோ டிணங்கேல். 93. மெல்லினல்லாள் தோள்சேர். 94. மேன்மக்கள் சொற்கேள். 95. மைவிழியார் மனையகல். 96. மொழிவ தறமொழி. 97. மோகத்தை முனி. 98. வல்லமை பேசேல். 99. வாதுமுற் கூறேல். 100. வித்தை விரும்பு. 101. வீடு பெறநில். 102. உத்தம னாயிரு. 103. ஊருடன் கூடிவாழ். 104. வெட்டெனப் பேசேல். 105. வேண்டி வினைசெயேல். 106. வைகறைத் துயிலெழு. 107. ஒன்னாரைத் தேறேல். 108. ஓரஞ் சொல்லேல். ஆத்திசூடி கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி யமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோ மியாமே. (பதவுரை) ஆத்தி-திருவாத்திப் பூமாலையை, சூடி-தரிப் பவராகிய சிவபெருமான், அமர்ந்த-விரும்பிய, தேவனை-விநாயகக் கடவுளை, யாம்-நாம், ஏத்தி ஏத்தி-வாழ்த்தி வாழ்த்தி, தொழுவோம்-வணங்குவோம். (பொழிப்புரை) சிவபெருமான் விரும்பிய விநாயகக் கடவுளை நாம் பலகாலும் துதித்து வணங்குவோம். விநாயகக் கடவுள் சிவபெருமானுக்கு மூத்த பிள்ளையார் ஆதலின், சிவபெருமான் விரும்பிய தேவன் என்று கூறப்பட்டார். ஏ : ஈற்றசை. நூல் 1. அறஞ்செய விரும்பு. (பத.) அறம்-தருமத்தை, செய-செய்வதற்கு, விரும்பு-நீ ஆசை கொள்ளு. (பொழி.) நீ தருமம் செய்ய ஆசைப்படு. 2. ஆறுவது சினம். (பத.) ஆறுவது-தணியவேண்டுவது, சினம்-கோபமாம். (பொழி.) கோபம் தணியத் தகுவதாம். 3. இயல்வது கரவேல். (பத.) இயல்வது-கொடுக்கக்கூடிய பொருளை, கரவேல்-(இரப்பவர்களுக்கு) ஒளியாதே. (பொழி.) கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு. 4. ஈவது விலக்கேல். (பத.) ஈவது-(ஒருவர்க்கு மற்றொருவர்) கொடுப்பதை, விலக்கேல்-தடுக்காதே. (பொழி.) ஒருவர் மற்றொருவர்க்குக் கொடுப்பதைக் கொடுக்கவேண்டாமென்று நீ தடுக்காதே. 5. உடையது விளம்பேல். (பத.) உடையது-(உனக்கு) உள்ள பொருளை, விளம்பேல்-(பிறர் அறியும்படி) சொல்லாதே. (பொழி.) உன்னுடைய பொருளைப் பிறர் அறியும்படி சொல்லாதே. உன்னுடைய பொருளை அல்லது கல்வி முதலிய சிறப்பை நீயே புகழ்ந்து பேசவேண்டா. 6. ஊக்கமது கைவிடேல். (பத.) ஊக்கம்-(செய்யுந் தொழிலில்) மன எழுச்சியை, கைவிடேல்-கைவிடாதே. (பொழி.) நீ எத்தொழில் செய்யும்பொழுதும் மன வலிமையினைக் கைவிடாதே. (அது : பகுதிப்பொருள் விகுதி.) 7. எண்ணெழுத் திகழேல். (பத.) எண்-கணித நூலையும், எழுத்து-இலக்கண நூலையும், இகழேல்-இகழ்ந்து தள்ளாதே. (பொழி.) கணிதத்தையும், இலக்கணத்தையும் இகழாமல் நன்றாகக் கற்றுக்கொள். (கணிதம்-கணக்கு.) 8. ஏற்ப திகழ்ச்சி. (பத.) ஏற்பது-(ஒருவரிடத்திலே போய்) இரப்பது, இகழ்ச்சி-பழிப்பாகும். (பொழி.) இரந்துண்டு வாழ்வது பழிப்பாகை யால் நீ ஒருவரிடத்தும் சென்று ஒன்றை வேண்டாதே. 9. ஐய மிட்டுண். (பத.) ஐயம்-பிச்சையை, இட்டு-(இரப்பவர் களுக்குக்) கொடுத்து, உண்-நீ உண்ணு. (பொழி.) இரப்பவர்க்குப் பிச்சையிட்டுப் பின்பு நீ உண்ணு. ஏழைகட்கும், குருடர் முடவர் முதலானவர் கட்கும் பிச்சையிட வேண்டும். 10. ஒப்புர வொழுகு. (பத.) ஒப்புரவு-உலக நடையை அறிந்து, ஒழுகு-(அந்த வழியிலே) நட. (பொழி.) உலகத்தோடு பொருந்த நடந்துகொள். 11. ஓதுவ தொழியேல். (பத.) ஓதுவது-எப்பொழுதும் படிப்பதை, ஒழியேல்-விடாதே. (பொழி.) அறிவு தரும் நல்ல நூல்களை நீ எப்பொழுதும் படித்துக்கொண்டிரு. 12. ஒளவியம் பேசேல். (பத.) ஒளவியம்-பொறாமை வார்த்தைகளை, பேசேல்-பேசாதே. (பொழி.) நீ ஒருவரிடத்தும் பொறாமை கொண்டு பேசாதே. 13. அஃகஞ் சுருக்கேல். (பத.) அஃகம்-(நெல் முதலிய) தானியங்களை, சுருக்கேல்-குறைத்து விற்காதே. (பொழி.) மிகுந்த இலாபத்துக்கு ஆசைப்பட்டுத் தானியங்களைக் குறைத்து விற்காதே. 14. கண்டொன்று சொல்லேல். (பத.) கண்டு-(ஒன்றைக்) கண்டு, ஒன்று-வேறொன்றை, சொல்லேல்-சொல்லாதே. (பொழி.) கண்ணாற் கண்டதற்கு மாறாகச் சொல்லாதே. (பொய்ச்சாட்சி சொல்லலாகாது.) 15. ஙப்போல் வளை. (பத.) ஙப்போல்-ஙகரம்போல், வளை-உன் இனத்தைத் தழுவு. (பொழி.) ங என்னும் எழுத்தானது தான் பயனுடையதாயிருந்து பயனில்லாத ஙா முதலிய தன் வருக்க எழுத்துகளைத் தழுவிக்கொள்ளுதல் போல, நீ பயனுடையவனாயிருந்து உன் இனத்தார் பயனில்லாதவராயினும் அவரைத் தழுவிக்கொள். (ஙா முதலிய பதினொரெழுத்தும் எந்தச் சொல்லிலும் வருவதில்லை. ஙகரத்தின் பொருட்டே அவற்றையும் சுவடியில் எழுதுகிறார்கள். இனி இதற்கு ஙகர வொற்றானது அகரவுயிர் ஒன்றையே தழுவுவதுபோல நீ ஒருவனையே தழுவு என மாதர்க்குக் கூறியதாகவும் பொருள் சொல்லலாம்.) 16. சனிநீ ராடு. (பத.) சனி-சனிக்கிழமைதோறும், நீர் ஆடு-(எண்ணெய் தேய்த்துக்கொண்டு) நீரிலே தலைமுழுகு. (பொழி.) சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்து முழுகு. (புதன்கிழமைகளிலும் முழுகலாம்.) 17. ஞயம்பட வுரை. (பத.) ஞயம்பட-இனிமையுண்டாக, உரை - பேசு. (பொழி.) கேட்பவர்களுக்கு இன்ப முண்டாகும் படி இனிமையாகப் பேசு. (நயம் என்பதன் போலி.) 18. இடம்பட வீடெடேல். (பத.) இடம்பட - விசாலமாக, வீடு-வீட்டை, எடேல்-கட்டாதே. (பொழி.) அளவுக்குமேல் இடம் வீணாய்க் கிடக்கும்படி வீட்டைப் பெரிதாகக் கட்டாதே. “சிறுகக் கட்டிப் பெருக வாழ்” என்பது பழமொழி. 19. இணக்கமறிந் திணங்கு. (பத.) இணக்கம்-(நட்புக்கு ஏதுவாகிய) நற்குண நற்செய்கைகளை, அறிந்து-ஆராய்ந்தறிந்து, இணங்கு-(பின் ஒருவரோடு) நண்புகொள். (பொழி.) நற்குண நற்செய்கை உடையவ ரென்பது தெரிந்து கொண்டு ஒருவரோடு நட்புச் செய். 20. தந்தைதாய்ப் பேண். (பத.) தந்தை-பிதாவையும், தாய்-மாதாவையும், பேண்-காப்பாற்று. (பொழி.) உன் தாய் தந்தையரை அன்புடன் போற்றிக் காப்பாற்று. 21. நன்றி மறவேல். (பத.) நன்றி-(ஒருவர் உனக்குச் செய்த) உதவியை, மறவேல்-(ஒருபோதும்) மறவாதே. (பொழி.) உனக்குப் பிறர் செய்த நன்மையை எப்பொழுதும் மறக்காமல் தீமையை மறந்துவிடு. உதவி செய்தவர்க்கு ஒருபொழுதும் தீமை செய்தலாகாது. 22. பருவத்தே பயிர்செய். (பத.) பருவத்தே-தக்க காலத்திலே, பயிர்செய்-பயிரிடு. (பொழி.) விளையும் பருவமறிந்து பயிரிடு. எச்செயலும் அதற்குரிய காலத்திலே செய்யப் படவேண்டும். 23. மன்றுபறித் துண்ணேல். (பத.) மன்று-நீதிமன்றத்திலே இருந்துகொண்டு, பறித்து-(வழக்குத் தீர்ப்புக்கு வரும் குடிகளுடைய பொருளைக்) கவர்ந்து, உண்ணேல்-உண்டு வாழாதே. (பொழி.) நீதிமன்றத்திலே இருந்துகொண்டு இலஞ்சம் வாங்கி வாழாதே. ‘மண்பறித் துண்ணேல்’ என்று பாடமிருந்தால் பிறர் நிலத்தைக் கவர்ந்து வாழாதே என்று பொருளாம். 24. இயல்பலா தனசெயேல். (பத.) இயல்பு அலாதன-இயற்கைக்கு மாறான செயல்களை, செயேல்-செய்யாதே. (பொழி.) நல்லொழுக்கத்திற்கு மாறான செயல்களைச் செய்யாதே. 25. அரவ மாட்டேல். (பத.) அரவம்-(நஞ்சுடைய) பாம்புகளை, ஆட்டேல்-பிடித்து ஆட்டாதே. (பொழி.) பாம்பைப் பிடித்து ஆட்டி விளையாடாதே. 26. இலவம்பஞ்சிற் றுயில். (பத.) இலவம்பஞ்சில்-இலவம்பஞ்சு மெத்தை யிலே, துயில்-உறங்கு. (பொழி.) இலவம்பஞ்சினாற் செய்த மெத்தையிலே படுத்து உறங்கு. 27. வஞ்சகம் பேசேல். (பத.) வஞ்சகம்-கபடச் சொற்களை, பேசேல்-பேசாதே. (பொழி.) கபடச் சொற்களைப் பேசாதே. 28. அழகலா தனசெயேல். (பத.) அழகு அலாதன-சிறப்பில்லாத செயல் களை, செயேல்-செய்யாதே. (பொழி.) இழிவான செயல்களைச் செய்யாதே. 29. இளமையிற் கல். (பத.) இளமையில்-இளமைப் பருவத்திலே, கல்-கல்வியைக் கற்றுக்கொள். (பொழி.) இளமைப் பருவத்திலேயே படிக்கத் தொடங்கிக் கல்வியைக் கற்றுக்கொள். 30. அறனை மறவேல். (பத.) அறனை-தருமத்தை, மறவேல்-(ஒரு போதும்) மறவாதே. (பொழி.) தருமத்தை எப்பொழுதும் மறவாமல் செய். 31. அனந்த லாடேல். (பத.) அனந்தல்-தூக்கத்தை, ஆடேல்-மிகுதி யாகக் கொள்ளாதே. (பொழி.) மிகுதியாகத் தூங்காதே. 32. கடிவது மற. (பத.) கடிவது-(ஒருவரைச்) சினந்து பேசுவதை, மற-மறந்துவிடு. (பொழி.) யாரையும் கோபத்தாற் கடிந்து பேசாதே. 33. காப்பது விரதம். (பத.) காப்பது-(உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் அவற்றைக்) காப்பாற்றுவதே, விரதம்-நோன்பாகும். (பொழி.) பிற உயிர்களுக்குத் துன்பஞ் செய்யாமல் (அவற்றைக்) காப்பாற்றுவதே தவமாகும். தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமற் செய்வதே விரதம் என்றும் பொருள் சொல்லலாம். 34. கிழமைப் படவாழ். (பத.) கிழமைப்பட-(உன் உடலும் பொருளும் பிறருக்கு) உரிமைப்படும்படி, வாழ்-வாழு. (பொழி.) உன் உடம்பாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழு. 35. கீழ்மை யகற்று. (பத.) கீழ்மை-இழிவானவற்றை, அகற்று-நீக்கு. (பொழி.) இழிவான குணஞ் செயல்களை நீக்கு. 36. குணமது கைவிடேல். (பத.) குணமது-(மேலாகிய) குணத்தை, கைவிடேல்-கைவிடாதே. (பொழி.) நற்குணங்களைக் கைசோரவிடாதே. நன்மை தருவதென்று கண்டறிந்ததைக் கைவிடாதே. அது : பகுதிப்பொருள் விகுதி. 37. கூடிப் பிரியேல். (பத.) கூடி-(நல்லவரோடு) நட்புக்கொண்டு, பிரியேல்-பின் (அவரைவிட்டு) நீங்காதே. (பொழி.) நல்லவரோடு நட்புச் செய்து பின்பு அவரை விட்டுப் பிரியாதே. 38. கெடுப்ப தொழி. (பத.) கெடுப்பது-பிறருக்குக் கேடு செய்வதை, ஒழி-விட்டுவிடு. (பொழி.) பிறருக்குக் கெடுதி செய்வதை விட்டுவிடு. (கேடு விளைக்கும் காரியத்தைச் செய்யாதே.) 39. கேள்வி முயல். (பத.) கேள்வி-கற்றவர் சொல்லும் நூற் பொருளைக் கேட்பதற்கு; முயல்-முயற்சி செய். (பொழி.) கற்றறிந்தவர்கள் சொல்லும் நூற்பொருளைக் கேட்க முயற்சி செய். 40. கைவினை கரவேல். (பத.) கைவினை-(உனக்குத் தெரிந்த) கைத்தொழிலை, கரவேல்-ஒளியாதே. (பொழி.) உனக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களுக்கு ஒளியாமற் செய். (ஏதேனும் கைத்தொழில் செய்துகொண்டிரு.) 41. கொள்ளை விரும்பேல். (பத.) கொள்ளை-(பிறருடைய பொருளைக்) கொள்ளையிடுதற்கு, விரும்பேல்-ஆசைப்படாதே. (பொழி.) பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாதே. 42. கோதாட் டொழி.* (பத.) கோது-குற்றம் பொருந்திய, ஆட்டு-விளையாட்டை, ஒழி-நீக்கு. (பொழி.) குற்றமான விளையாட்டை விட்டுவிடு. 43. சக்கர நெறிநில். (பத.) சக்கரநெறி-(அரசனது ஆணையாகிய) சக்கரம் செல்லும் வழியிலே, நில்-அடங்கி யிரு. (பொழி.) அரசன் கட்டளை வழியில் அடங்கி நட. 44. சான்றோ ரினத்திரு. (பத.) சான்றோர்-அறிவினால் நிறைந்தவர் களுடைய, இனத்து-கூட்டத்திலே, இரு-எந்நாளும் இரு. (பொழி.) அறிவொழுக்கங்களில் நிறைந்த பெரியோர்களின் கூட்டத்தைச் சேர்ந்திரு. 45. சித்திரம் பேசேல் (பத.) சித்திரம்-பொய்ம்மொழிகளை, பேசேல்-பேசாதே. (பொழி.) பொய் வார்த்தைகளை மெய்போலப் பேசாதே. 46. சீர்மை மறவேல் (பத.) சீர்மை-புகழுக்கு ஏதுவாகிய குணத்தை, மறவேல்-மறந்துவிடாதே. (பொழி.) புகழுக்குக் காரணமானவற்றை மறந்து விடாதே. 47. சுளிக்கச் சொல்லேல். (பத.) சுளிக்க-(கேட்பவர்) கோபிக்கும்படியாக, சொல்லேல்-(ஒன்றையும்) பேசாதே. (பொழி.) கேட்பவர்க்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும்படி பேசாதே. 48. சூது விரும்பேல். (பத.) சூது-சூதாடலை, விரும்பேல்-(ஒரு போதும்) விரும்பாதே. (பொழி.) ஒருபொழுதும் சூதாடுதலை விரும்பாதே. 49. செய்வன திருந்தச்செய். (பத.) செய்வன-செய்யும் செயல்களை, திருந்த-செவ்வையாக, செய்-செய். (பொழி.) செய்யுஞ் செயல்களைத், திருத்தமாகச் செய். 50. சேரிடமறிந்து சேர். (பத.) சேர் இடம்-அடையத்தகும் (நன்மை யாகிய) இடத்தை, அறிந்து-தெரிந்து, சேர்-அடை. (பொழி.) சேரத்தக்க நல்லிடத்தை ஆராய்ந் தறிந்து சேர். 51. சையெனத் திரியேல். (பத.) சை என-(பெரியோர் உன்னைச்) சீ என்று அருவருக்கும்படி, திரியேல்-திரியாதே. (பொழி.) பெரியோர் சீ என்று வெறுக்கும்படி வீணாய்த் திரியாதே. 52. சொற்சோர்வு படேல். (பத.) சொல்-(நீ பிறரோடு பேசும்) சொற்களில், சோர்வு படேல்-மறதிபடப் பேசாதே. (பொழி.) நீ பிறருடன் பேசும்பொழுதும் மறந்து குற்ற முண்டாகப் பேசாதே. 53. சோம்பித் திரியேல். (பத.) சோம்பி-(நீ செய்யவேண்டும் முயற்சியைச் செய்யாமல்) சோம்பல் கொண்டு, திரியேல்-வீணாகத் திரியாதே. (பொழி.) முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே. 54. தக்கோ னெனத்திரி. (பத.) தக்கோன் என-(உன்னைப் பெரியோர்கள்) யோக்கியன் என்று புகழும்படி, திரி-நடந்துகொள். (பொழி.) பெரியோர்கள் உன்னைத் தக்கவன் என்று புகழும்படி நடந்துகொள். 55. தானமது விரும்பு. (பத.) தானமது-(சற்பாத்திரங்களிலே) தானம் செய்தலை, விரும்பு-ஆசைப்படு. (பொழி.) தக்கவர்களுக்குத் தானங்கொடுத்தலை விரும்பு. அது : பகுதிப்பொருள் விகுதி. 56. திருமாலுக் கடிமை செய். (பத.) திருமாலுக்கு-விட்டுணுவுக்கு, அடிமை செய்-தொண்டு பண்ணு. (பொழி.) நாராயணமூர்த்திக்குத் தொண்டு செய். 57. தீவினை யகற்று. (பத.) தீவினை-பாவச் செயல்களை, அகற்று-(செய்யாமல்) நீக்கு. (பொழி.) பாவச் செயல்களைச் செய்யாமல் விலக்கு. 58. துன்பத்திற் கிடங்கொடேல். (பத.) துன்பத்திற்கு-வருத்தத்திற்கு, இடங் கொடேல்-(சிறிதாயினும்) இடங்கொடாதே. (பொழி.) துன்பத்திற்குச் சிறிதும் இடங்கொடாதே. முயற்சி செய்யும்பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டுவிடலாகாது. 59. தூக்கி வினைசெய். (பத.) தூக்கி-(முடிக்கும் வழியை) ஆராய்ந்து, வினை-ஒரு தொழிலை, செய்-(அதன் பின்பு) செய். (பொழி.) முடிக்கத் தகுந்த உபாயத்தை ஆராய்ந்தறிந்து ஒரு காரியத்தைச் செய். 60. தெய்வ மிகழேல். (பத.) தெய்வம்-கடவுளை, இகழேல்-பழிக்காதே. (பொழி.) கடவுளை இகழ்ந்து பேசாதே. 61. தேசத்தோ டொத்துவாழ். (பத.) தேசத்தோடு-நீ வசிக்கும் தேசத்தி லுள்ளவர்களுடனே, ஒத்து-(பகையில்லாமல்) ஒத்து, வாழ்-வாழு. (பொழி.) நீ வசிக்கும் தேசத்தவருடன் பகையில்லாமல் பொருந்தி வாழு. 62. தையல்சொல் கேளேல். (பத.) தையல்-(உன்) மனைவியினுடைய, சொல்-சொல்லை, கேளேல்-கேட்டு நடவாதே. (பொழி.) மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே. 63. தொன்மை மறவேல். (பத.) தொன்மை-பழைமையாகிய நட்பை, மறவேல்-மறந்துவிடாதே. (பொழி.) பழைமையாகிய நட்பினை மறந்துவிடாதே. 64. தோற்பன தொடரேல். (பத.) தோற்பன-தோல்வியடையக்கூடிய வழக்குகளிலே, தொடரேல்-சம்பந்தப்படாதே. (பொழி.) தோல்வியடையக்கூடிய காரியங் களில் தலையிடாதே. 65. நன்மை கடைப்பிடி. (பத.) நன்மை-புண்ணியத்தையே, கடைப்பிடி-உறுதியாகப் பிடி. (பொழி.) நல்வினை செய்தலை உறுதியாகப் பற்றிக்கொள். 66. நாடொப் பனசெய். (பத.) நாடு-உன் நாட்டில் உள்ளோர் பலரும், ஒப்பன-ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை, செய்-செய்வாயாக. (பொழி.) நாட்டிலுள்ளோர் ஒப்புக்கொள்ளக் கூடிய நல்ல செயல்களைச் செய். 67. நிலையிற் பிரியேல். (பத.) நிலையில்-(நீ நிற்கின்ற உயர்ந்த) நிலையிலே நின்று, பிரியேல்-(ஒருபோதும்) நீங்காதே. (பொழி.) உன்னுடைய நல்ல நிலையினின்றும் தாழ்ந்து விடாதே. 68. நீர்விளை யாடேல். (பத.) நீர்-(ஆழம் உள்ள) நீரிலே, விளையாடேல்-(நீந்தி) விளையாடாதே. (பொழி.) வெள்ளத்திலே நீந்தி விளையாடாதே. 69. நுண்மை நுகரேல். (பத.) நுண்மை-(நோயைத்தருகிற) சிற்றுண்டி களை, நுகரேல்-உண்ணாதே. (பொழி.) நோயைத் தரும் சிற்றுண்டிகளை உண்ணாதே. 70. நூல்பல கல். (பத.) நூல் பல-(அறிவை வளர்க்கிற) நூல்கள் பலவற்றையும், கல்-கற்றுக்கொள். (பொழி.) அறிவை வளர்க்கும் பல நூல்களை யும் கற்றுக் கொள். 71. நெற்பயிர் விளை. (பத.) நெற்பயிர்-நெல்லுப் பயிரை, விளை-(வேண்டிய முயற்சி செய்து) விளைவி. (பொழி.) நெற்பயிரை முயற்சியெடுத்து விளையச்செய். உழுதுண்டு வாழ்வதே மேல். 72. நேர்பட வொழுகு. (பத.) நேர்பட-(உன் ஒழுக்கம் கோணாமல்) செவ்வைப்பட, ஒழுகு-நட. (பொழி.) ஒழுக்கந் தவறாமல் செவ்வையான வழியில் நட. 73. நைவினை நணுகேல். (பத.) நை-(பிறர்) கெடத்தக்க, வினை-தீவினைகளை, நணுகேல்-(ஒருபோதும்) சாராதே. (பொழி.) பிறர் வருந்தத்தகுந்த தீவினைகளைச் செய்யாதே. 74. நொய்ய வுரையேல். (பத.) நொய்ய-(பயன் இல்லாத) அற்ப வார்த்தைகளை, உரையேல்-சொல்லாதே. (பொழி.) வீணான அற்ப வார்த்தைகளைப் பேசாதே. 75. நோய்க்கிடங் கொடேல். (பத.) நோய்க்கு-வியாதிகளுக்கு, இடங் கொடேல்-இடங்கொடாதே. (பொழி.) உணவு உறக்கம் முதலியவற்றால் பிணிக்கு இடங்கொடுக்காதே. 76. பழிப்பன பகரேல். (பத.) பழிப்பன-(அறிவுடையவர்களாலே) பழிக்கப் படுவனவாகிய இழி சொற்களை, பகரேல்-பேசாதே. (பொழி.) பெரியோர்களாற் பழிக்கப்படுஞ் சொற்களைப் பேசாதே. பழிக்கப்படும் சொற்களாவன : பொய், குறளை, கடுஞ்சொல், பயனில் சொல் என்பனவும்; இடக்கர்ச் சொற்களுமாம். 77. பாம்பொடு பழகேல். (பத.) பாம்பொடு-(பால் கொடுத்தவருக்கும் விடத்தைக் கொடுக்கிற) பாம்பைப்போல்பவர் களுடனே, பழகேல் சகவாசஞ் செய்யாதே. (பொழி.) பாம்புபோலும் கொடியவர்களுடன் பழக்கஞ் செய்யாதே. 78. பிழைபடச் சொல்லேல். (பத.) பிழைபட-வழுக்கள் உண்டாகும்படி, சொல்லேல்-ஒன்றையும் பேசாதே. (பொழி.) குற்ற முண்டாகும்படி பேசாதே. 79. பீடு பெறநில். (பத.) பீடு-பெருமையை, பெற-பெறும்படியாக, நில்-(நல்ல வழியிலே) நில். (பொழி.) பெருமை யடையும்படியாக நல்ல வழியிலே நில்லு. 80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ். (பத.) புகழ்ந்தாரை-உன்னைத் துதிசெய்து அடுத்தவரை, போற்றி-(கைவிடாமற்) காப்பாற்றி, வாழ்-வாழு. (பொழி.) அடுத்தவரை ஆதரித்து வாழு. 81. பூமி திருத்தியுண். (பத.) பூமி-(உன்) விளைநிலத்தை, திருத்தி-சீர்திருத்திப் பயிர் செய்து, உண்-உண்ணு. (பொழி.) பூமியைச் சீர்திருத்திப் பயிர்செய்து உண்ணு. 82. பெரியாரைத் துணைக்கொள். (பத.) பெரியாரை-(அறிவிலே சிறந்த) பெரியோரை, துணைக்கொள்-உனக்குத் துணை யாகப் பேணிக்கொள். (பொழி.) பெரியாரைத் துணையாக நாடிக்கொள். 83. பேதைமை யகற்று. (பத.) பேதைமை-அஞ்ஞானத்தை, அகற்று-போக்கு. (பொழி.) அறியாமையை நீக்கிவிடு. 84. பையலோ டிணங்கேல். (பத.) பையலோடு-சிறு பிள்ளையோடு, இணங்கேல்-கூடாதே. (பொழி.) அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே. 85. பொருடனைப் போற்றிவாழ். (பத.) பொருள் தனை-திரவியத்தை, போற்றி-(மேன் மேலும் உயரும்படி) காத்து, வாழ்-வாழு. (பொழி.) பொருளை வீண்செலவு செய்யாமற் பாதுகாத்து வாழு. 86. போர்த்தொழில் புரியேல். (பத.) போர்-சண்டையாகிய, தொழில்-தொழிலை, புரியேல்-செய்யாதே. (பொழி.) யாருடனும் கலகம் விளைக்காதே. 87. மனந்தடு மாறேல். (பத.) மனம்-உள்ளம், தடுமாறேல்-கலங்காதே. (பொழி.) எதனாலும் மனக்கலக்க மடையாதே. 88. மாற்றானுக் கிடங்கொடேல். (பத.) மாற்றானுக்கு-பகைவனுக்கு, இடம் கொடேல் இடங்கொடாதே. (பொழி.) பகைவன் உன்னைத் துன்புறுத்தும்படி இடங்கொடுக்காதே. 89. மிகைபடச் சொல்லேல். (பத.) மிகைபட-சொற்கள் அதிகப்படும்படி, சொல்லேல்-பேசாதே. (பொழி.) வார்த்தைகளை மிதமிஞ்சிப் பேசாதே. 90. மீதூண் விரும்பேல். (பத.) மீது ஊண்-மிகுதியாக உண்ணுதலை, விரும்பேல்-இச்சியாதே. (பொழி.) மிகுதியாக உணவுண்டலை விரும்பாதே. 91. முனைமுகத்து நில்லேல். (பத.) முனைமுகத்து-சண்டை முகத்திலே, நில்லேல்-(போய்) நில்லாதே. (பொழி.) போர் முனையிலே நின்று கொண்டிருக்காதே. 92. மூர்க்கரோ டிணங்கேல். (பத.) மூர்க்கரோடு-மூர்க்கத்தன்மையுள்ளவர் களுடனே, இணங்கேல்-சிநேகம் பண்ணாதே! (பொழி.) மூர்க்கத்தன்மை யுள்ளவர்களுடன் சேர்ந்து பழகாதே. 93. மெல்லினல்லாள் தோள்சேர்.* (பத.) மெல்-மெல்லிய, இல்-(உன்) மனையாட்டி யாகிய, நல்லாள்-பெண்ணுடைய, தோள்-தோள் களையே, சேர்-பொருந்து. (பொழி.) பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் சேர்ந்து வாழு. 94. மேன்மக்கள் சொற்கேள். (பத.) மேன்மக்கள்-உயர்ந்தோருடைய, சொல்-சொல்லை, கேள்-கேட்டு நட. (பொழி.) நல்லொழுக்கமுடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட. 95. மைவிழியார் மனையகல். (பத.) மைவிழியார்-மைதீட்டிய கண்களை யுடைய வேசையருடைய, மனை-வீட்டை, அகல்-(ஒருபோதும் கிட்டாமல்) அகன்றுபோ. (பொழி.) பரத்தையர் மனையைச் சேராமல் விலகு. 96. மொழிவ தறமொழி. (பத.) மொழிவது-சொல்லப்படும் பொருளை, அற-(சந்தேகம்) நீங்கும்படி, மொழி-சொல்லு. (பொழி.) சொல்லுவதை ஐயமின்றித் திருத்தமுறச் சொல்லு. 97. மோகத்தை முனி. (பத.) மோகத்தை-ஆசையை, முனி-கோபித்து விலக்கு. (பொழி.) நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்துவிடு. 98. வல்லமை பேசேல். (பத.) வல்லமை-(உன்னுடைய) சாமர்த்தியத்தை, பேசேல்-(புகழ்ந்து) பேசாதே. (பொழி.) உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே. 99. வாதுமுற் கூறேல். (பத.) வாது-வாதுகளை, முன்-(பெரியோர்) முன்னே, கூறேல்-பேசாதே. (பொழி.) பெரியோர்களிடத்தில் முற்பட்டு வாதாடாதே. 100. வித்தை விரும்பு. (பத.) வித்தை-கல்விப்பொருளையே, விரும்பு-இச்சி. (பொழி.) கல்வியாகிய நற்பொருளை விரும்பு. 101. வீடு பெறநில். (பத.) வீடு-மோட்சத்தை, பெற-அடையும்படி, நில்- (அதற்குரிய ஞானவழியிலே)நில். (பொழி.) முத்தியைப் பெறும்படி சன்மார்க்கத் திலே நில்லு. 102. உத்தம னாயிரு. (பத.) உத்தமனாய்-உயர்குணமுடையவனாகி, இரு-வாழ்ந்திரு. (பொழி.) நற்குணங்களிலே மேற்பட்டவனாகி வாழு. 103. ஊருடன் கூடிவாழ். (பத.) ஊருடன்-ஊரவர்களுடனே, கூடி-(நன்மை தீமைகளிலே) அளாவி, வாழ்-வாழு. (பொழி.) ஊராருடன் நன்மை தீமைகளிற் கலந்து வாழு. 104. வெட்டெனப் பேசேல். (பத.) வெட்டு என - கத்திவெட்டைப்போல, பேசேல் - (ஒருவரோடுங் கடினமாகப்) பேசாதே. (பொழி.) யாருடனும் கத்திவெட்டுப்போலக் கடினமாகப் பேசாதே. 105. வேண்டி வினைசெயேல். (பத.) வேண்டி-விரும்பி, வினை-தீவினையை, செயேல்-செய்யாதே. (பொழி.) வேண்டுமென்றே தீவினைகளைச் செய்யாதே. 106. வைகறைத் துயிலெழு. (பத.) வைகறை-விடியற்காலத்திலே, துயில்-நித்திரையை விட்டு, எழு-எழுந்திரு. (பொழி.) நாள்தோறும் சூரியன் உதிக்குமுன்பே தூக்கத்தைவிட்டு எழுந்திரு. 107. ஒன்னாரைத் தேறேல். (பத.) ஒன்னாரை-பகைவர்களை, தேறேல்-நம்பாதே. (பொழி.) பகைவரை நம்பாதே. ‘ஒன்னாரைச் சேரேல்’ என்றும் பாடமுண்டு. 108. ஓரஞ் சொல்லேல். (பத.) ஓரம்-பட்சபாதத்தை, சொல்லேல்-(யாதொரு வழக்கிலும்) பேசாதே. (பொழி.) எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாகப் பேசாமல் நடுவுநிலையுடன் சொல்லு. ஆத்திசூடி மூலமும் உரையும் முற்றிற்று. கோதாட்டொழி என்பதன்பின் ‘கௌவை யகற்று’ என்று ஒரு கட்டுரை சில புத்தகங்களில் உள்ளது. ‘துன்பத்தை நீக்கு’ என்பது இதன் பொருள்.* ‘மெல்லியா டோன் சேர்’ என்னும் பாடம். கொன்றைவேந்தன் முகவுரை கொன்றைவேந்தன் என்பது நல்லிசைப் புலமை வாய்ந்த ஒளவையார் என்னும் மெல்லியலார் அருளிய நூல்களில் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும் பல தனிப்பாக்களும் ஒளவையார் இயற்றின வென்ப. கம்பர் முதலிய புலவர்கள் விளங்கிய காலத்தில் இருந்தவர் இவர். இவரைக்குறித்து எத்துணையோ பல கதைகள் வழங்குவதுண்டு. கடைச்சங்க நாளிலே புலமையிற் சிறந்து விளங்கிய மகளிரில் ஒளவையார் என்னும் பெயரினரும் ஒருவர். அவர் பாடிய பாட்டுக்கள் புறநானூறு முதலிய சங்கநூல்களிற் சேர்க்கப் பட்டுள்ளன. அவர் அதியமான் என்னும் வள்ளல் அளித்த அமுதமய மான நெல்லிக்கனியை உண்டு நெடுங்காலம் உயிர் வாழ்ந்தனரெனச் சங்கநூல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ‘சங்ககாலத்து ஒளவையாரும் வேறு, கம்பர் காலத்து ஒளவையாரும் வேறு’ என்பது இற்றைநாள் ஆராய்ச்சியாளர் கொள்கையாகும். தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும், பெண்டிர்களிலும் கற்றவர்களும், கல்லாதவர்களும் ஆகிய யாவரும் ஒளவை யென்னும் பெயரை அறிந்திருப்பர். அப் பெயரை அறியாதார் மிகவும் அரியர். அதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய நீதிநூல்களே யாகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் ஒத்துக் கொள்ளப்பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சி யுடையா ரெவரும் ஒளவையாரின் நீதி நூல்களில் ஒன்றையாவது படித்தே யிருப்பர். பல பெரிய நூல்களின் சாரமாகவுள்ள நீதிகளும் கருத்துக் களும் ஆத்திசூடியிலும், கொன்றை வேந்தனிலும் சிறு சிறு சொற்றொடர்களில் தெளிவுற அமைக்கப் பெற்று விளங்குகின்றன. இளம் பருவத்தினர் சுலபமாய்ப் பாடஞ்செய்து நினைவில் வைத்துக் கொள்ளும்படி, அகரம் முதலிய எழுத்துகளை முறையே முதலில் உடையனவாக அவற்றின் சூத்திரம் போலுஞ் சொற்றொடர்கள் அமைந் துள்ளன. ஆத்திசூடி மிகச் சிறிய சொற் றொடர்களாலும் கொன்றை வேந்தன் சற்றுப் பெரிய சொற்றொடர்களாலும் ஆக்கப் பெற்றிருப்பது பிள்ளைகளின் பருவத்திற்கேற்பக் கற்பிக்க வேண்டுமென்று கருத்துப்பற்றியதாகும். மிக்க இளம் பருவத்தினராயிருக்கும் பொழுதே பிள்ளை களின் மனத்தில் உயர்ந்த நீதிகளைப் பதிய வைக்க வேண்டு மென்னும் பெருங்கருணையுடனும் பேரறி வுடனும் ‘அறஞ்செய விரும்பு’ ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று தொடங்கி ஆக்கப் பெற்றுள்ள ஆத்திசூடி, கொன்றை வேந்தன் என்னும் இவற்றின் மாண்பு அளவிடற் பாலதன்று. இங்ஙனம் உலக முள்ள வரையும் இளைஞர்கள் பயின்று பயன்பெறும் முறையினை ஏற்படுத்தி வைத்தவர் பெண் மக்களில் ஒருவ ரென்னும் பெருமை தமிழ் நாட்டிற்கு உரியதா கின்றது. தொல்காப்பியச் செய்யுளியலுரையில் இந் நூற் கடவுள் வாழ்த்து, ‘கொன்றை வேய்ந்த செல்வ னடியிணை யென்று மேத்தித் தொழுவோ நாமே’ என்ற உருவுடன் பேராசிரியராலும் நச்சினார்க் கினியராலும் காட்டப்பெற்றுள்ளது. இங்ஙனம், ந. மு. வேங்கடசாமி நாட்டார். கொன்றைவேந்தன் மூலமும் உரையும் கடவுள் வாழ்த்து கொன்றை வேந்தன் செல்வ னடியிணை என்று மேத்தித் தொழுவோ மியாமே. பதவுரை: கொன்றை - கொன்றைப் பூமாலையைச் சூடிய, வேந்தன் - சிவபெருமானுக்கு, செல்வன் - குமாரராகிய விநாயகக் கடவுளுடைய , அடி இணை - பாதங்களிரண்டையும், யாம் - நாம், என்றும் - எந்நாளும், ஏத்தி - துதிசெய்து, தொழுவோம் – வணங்கு வோம். பொழிப்புரை: சிவபெருமானுக்குத் திருக் குமாரராகிய விநாயக் கடவுளின் இரண்டு திருவடி களையும் நாம் எப்பொழுதும் துதித்து வணங்கு வோம். (ஏ - ஈற்றசை) நூல் 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் பதவுரை: அன்னையும் - தாயும், பிதாவும் - தகப்பனும், முன் - முன்னே, அறி - காணப்பட்ட, தெய்வம் - தெய்வங்களாவார். பெhழிப்புரை: தாயும் தந்தையும் முன்பு காணப்பட்ட தெய்வங்களாவார். 2. ஆலயம் தொழுவது சாலவு நன்று பதவுரை: ஆலயம் - கோயிலுக்குப்போய், தொழுவது - கடவுளை வணங்குவது, சாலவும் மிகவும், நன்று - நல்லது. பொழிப்புரை : கோயிலுக்குப் போய்க் கடவுளை வணங்குவது மிகவும் நல்லது. 3. இல்லற மல்லது நல்லற மன்று பதவுரை: இல்லறம் - (மனையாளோடு கூடிச் செய்யும்) இல்லறமானது, நல் அறம் - நல்ல அறமாகும்; அல்லது - இல்லறமல்லாத துறவற மானது, அன்று - நல்ல அறமன்றாகும். பொழிப்புரை: வீட்டிலிருந்து மனைவியுடன் கூடிச் செய்யும் இல்லறமே நல்லறமாகும்; துறவறம் நல்லறமன்று. (இல்லறம் எளிதிற் செய்யத் தகுந்தது. துறவறம் எளிதிற் செய்யக் கூடாதது.) 4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் பதவுரை: ஈயார் - கொடாதவருடைய, தேட்டை - சம்பாத்தியத்தை, தீயார் - (கள்வர் முதலிய) தீயவர், கொள்வர் - அபகரிப்பர். பொழிப்புரை: வறியவர்க்குக் கொடாத உலோபிகள் தேடிய பொருளைத் தீயோர் அபகரித்துச் செல்வர். 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு பதவுரை: உண்டி - உணவு, சுருங்குதல் - குறைதல், பெண்டிர்க்கு - பெண்களுக்கு, அழகு - ஆழகாகும். பொழிப்புரை: மிதமாக உண்பது மாதர் களுக்குச் சிறப்பாகும். 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் பதவுரை: ஊருடன் - ஊராருடன், பகைக்கின் - (ஒருவன்) விரோதித்தால், வேருடன் - (தன்) வமிசத்துடன், கெடும் - (அவன்) கெடுவான். பொழிப்புரை: ஒருவன் தன் ஊராருடன் பகைத்துக்கொண்டால் அடியுடன் அழிந்து விடுவான். 7. எண்ணு மெழுத்தும் கண்ணெனத் தகும் பதவுரை: எண்ணும் - கணிதநூலும், எழுத்தும் - இலக்கண நூலும், கண் எனத் தகும் - (மனிதருக்கு) இரண்டு கண்களென்று சொல்லப்படும். பொழிப்புரை: கணிதமும் இலக்கணமும் மனிதர்க்கு இரண்டு கண்கள் என்று சொல்லத் தகும். 8. ஏவா மக்கண் மூவா மருந்து பதவுரை: ஏவா - (பெற்றவர் இதைச் செய் என்று) ஏவுதற்கு முன் குறிப்பறிந்து செய்கிற, மக்கள்- பிள்ளைகள், மூவா மருந்து - (அப்பெற்ற வருக்கு) தேவாமிர்தம் போல்வார். பொழிப்புரை: பெற்றோர்கள் கட்டளை யிடுவதற்குமுன் குறிப்பறிந்து செய்யும் பிள்ளைகள் அவர்களுக்குத் தேவாமிர்தத்தை யொப்பார்கள். 9. ஐயம் புகினுஞ் செய்வன செய் பதவுரை: ஐயம் புகினும் - பிச்சை எடுத்தாலும், செய்வன - செய்யத்தக்கவைகளை, செய் - (விடாது) செய். பொழிப்புரை: பிச்சையெடுத்துச் சீவித்தாலும் செய்யத்தக்க காரியங்களைச் செய். 10. ஒருவனைப் பற்றி யோரகத் திரு பதவுரை: ஒருவனை - (நற்குணமுடைய) ஒருவனை, பற்றி - (துணையாகப் )பற்றிக்கொண்டு, ஓரகத்து - ஓரிடத்தில், இரு - வாசம் பண்ணு. பொழிப்புரை: தக்கான் ஒருவனைத் துணை யாகப் பற்றிக்கொண்டு ஓரிடத்தில் வாசஞ்செய். 11. ஓதலி னன்றே வேதியர்க் கொழுக்கம் பதவுரை: வேதியர்க்கு - பிராமணருக்கு, ஒழுக்கம் - ஆசாரமானது, ஓதலின் - (வேதம்) ஓதலினும், நன்றே - நல்லது. பொழிப்புரை: பிராமணருக்கு வேதம் ஓதுவதைக் காட்டிலும் நல்லொழுக்கம் சிறந்தது. 12. ஒளவியம் பேசுத லாக்கத்திற் கழிவு பதவுரை: ஒளவியம் - பொறாமை வார்த்தை களை, பேசுதல் - (ஒருவன்) பேசுதல், ஆக்கத்திற்கு - (அவன்) செல்வத்திற்கு, அழிவு - கேட்டைத் தருவதாகும். பொழிப்புரை: ஒருவன் பொறாமை வார்த்தை பேசுவது அவன் செல்வத்திற்கு அழிவைத் தரும். 13. அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடு பதவுரை: அஃகமும் - தானியத்தையும், காசும் - திரவியத்தையும், சிக்கெனத் தேடு - வீண்செலவு செய்யாமற் சம்பாதி. பொழிப்புரை: தானியத்தையும் திரவியத்தையும் வீண் செலவு செய்யாமல் தேடிக்கொள். 14. கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை பதவுரை: கற்பு எனப்படுவது - (பெண் களுக்குக்) கற்பென்று சொல்லப்படுவது, சொல் - (கணவர்) சொல்லுக்கு, திறம்பாமை - தப்பி நடவாமையாம். பொழிப்புரை: மகளிர்க்குக் கற்பு என்று சொல்லப்படுவது கணவர் வார்த்தைக்கு மாறு பட்டு நடவாமையாம். 15. காவ றானே பாவையர்க் கழகு பதவுரை: காவல்தானே - (கற்புக்கு அழிவு வராமல், தம்மைக்) காத்துக்கொள்வதுதானே, பாவையர்க்கு - பெண்களுக்கு, அழகு - அழகாகும். பொழிப்புரை: கற்பினின்று வழுவாமல் தம்மைக் காத்துக் கொள்வதே மாதர்களுக்கு அழகாகும். 16. கிட்டா தாயின் வெட்டென மற பதவுரை: கிட்டாதாயின் - (இச்சித்த ஒரு பொருள்) கிடையா தானால், வெட்டென - சீக்கிரத்தில்தானே, மற - (அப்பொருளை) மறந்து விடு. பொழிப்புரை: நீ விரும்பிய பொருள் கிடைக்கா விட்டால், சீக்கிரத்தில் அதனை மறந்துவிடு. 17. கீழோ ராயினுந் தாழ வுரை பதவுரை: கீழோர் ஆயினும் - (கேட்பவர் உனக்குக்)கீழ்பட்டவராய் இருந்தாலும், தாழ - (உன் சொல்) வணக்கமுடையதாய் இருக்கும்படி, உரை - (அவருடன்) பேசு. பொழிப்புரை: தாழ்ந்தோரிடத்திலும் தாழ்மை யாகப் பேசு. 18. குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லை பதவுரை: குற்றம் - குற்றங்களை, பார்க்கின் - (ஆராய்ந்து)பார்த்தால், சுற்றம் - உறவாவோர், இல்லை - (ஒருவரும்) இல்லை. பொழிப்புரை: குற்றத்தையே ஆராய்ந்து பார்த்தால் சுற்றமாவார் ஒருவருமில்லை. (குற்றமே யில்லாதவர் ஒருவருமில்லை யாகையால் சுற்றத்தார் அகப்படார் என்பதாம்.) 19. கூரம் பாயினும் வீரியம் பேசேல் பதவுரை: கூர் அம்பு ஆயினும் - (உன் கையிலிருக்கிறது) கூர்மை பொருந்திய அம்பானா லும், வீரியம் - வீரத்தன்மையை, பேசேல் - (வீணாகப்) பேசாதே. பொழிப்புரை: உன் கையிலே கூரிய அம்பு இருந்தாலும், உன் வீரத்தை வியந்து பேசாதே. 20. கெடுவது செய்யின் விடுவது கருமம் பதவுரை: கெடுவது - தீமையை, செய்யின் - (தன் சிநேகன்) செய்தால், விடுவது - (அவன் சிநேகத்தை) விடுவதே, கருமம் - நற்செயலாகும். பொழிப்புரை: தன் நண்பன் தீமையைச் செய்தால், அவனது நட்பை விட்டுவிடுவது நற்செய்கையாம். 21. கேட்டி லுறுதி கூட்டு முடைமை பதவுரை: கேட்டில் - (கைப்பொருள்) இழந்த காலத்தில், உறுதி - மனந்தளராமை, உடைமை - செல்வத்தை, கூட்டும் - சேர்க்கும். பொழிப்புரை: பொருளை இழந்த காலத்தில் மனந்தளராமல் உறுதியுடனிருப்பது மீண்டும் செல்வத்தை யுண்டாக்கும். 22. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி பதவுரை: கைப்பொருள் தன்னின் - கையிலிருக்கிற பொருளைப் பார்க்கிலும், மெய்ப் பொருள் - மெய்ப்பொருளாவது, கல்வி - கல்வியேயாம். பொழிப்புரை: கையிலிருக்கிற திரவியத்தைப் பார்க்கிலும் கல்வியே உண்மைப் பொருளாகும். 23. கொற்றவ னறித லுற்றிடத் துதவி பதவுரை: கொற்றவன் - அரசனானவன், அறிதல் - (ஒருவனை) அறிந்திருந்தால், உற்ற இடத்து (அவனுக்கு ஆபத்து) வந்த இடத்து, உதவி - உதவியாகும். பொழிப்புரை: ஒருவனுக்கு அரசன் அறிமுகமாயிருப்பது அவனுக்கு ஆபத்தில் உதவியாகும். (உற்றவிடத்து என்பது உற்றிடத்து என விகாரப்பட்டது) 24. கோட்செவிக் குறளை காற்றுட னெருப்பு பதவுரை: கோட்செவி - கோள் கேட்குங் குணமுடையவனது காதிலே, குறளை - (பிறர்மேல் ஒருவன் வந்து சொன்ன) கோளானது, காற்றுடன்- காற்றுடன் சேர்ந்த, நெருப்பு - நெருப்பைப் போல மூளும். பொழிப்புரை: கோள் கேட்கும் இயல் புள்ளவன் காதில் ஒருவன் சொன்ன கோள் வார்த்தை காற்றுடன் சேர்ந்த நெருப்புப்போல மூளும். 25. கௌவை சொல்லி னெவ்வருக்கும் பகை பதவுரை: கௌவை - (பிறர்மேலே) பழிச்சொற் களை, சொல்லின் - (ஒருவன்) சொல்லினால், எவ்வருக்கும் - எல்லாருக்கும், பகை - (அவன்) பகையாவான். பொழிப்புரை: ஒருவன் பிறர் பழிகளைச் சொல்லிக் கொண்டிருந்தால் அவன் யாருக்கும் பகையாவான் (எவருக்கும் என்பது எவ்வருக்கும் என விகாரப்பட்டது) 26. சந்ததிக் கழகு வந்திசெய் யாமை பதவுரை: சந்ததிக்கு - தன் வமிசம் பெருகுதற்கு, அழகு - அழகாவது, வந்தி - மலரடியாக, செய்யாமை - செய்யாமல் (தன் மனையாளோடு) கூடி வாழ்தலாம். பொழிப்புரை: வமிசத்திற்கு அழகாவது மக்கட்பேறு உண்டாகும்படி மனைவியுடன் கூடி வாழ்தலாம். 27. சான்றோ ரென்கை யீன்றோட் கழகு பதவுரை: சான்றோர் என்கை - (தன் புத்திரரைக் கல்வியறிவால்) நிறைந்தோர் என்று (பிறர்) சொல்லுகிறது, ஈன்றோட்கு பெற்றவளுக்கு, அழகு - அழகாகும். பொழிப்புரை: தன் புதல்வரை, அறி வுடையோர் என்று பிறர் சொல்லக் கேட்பது பெற்ற தாய்க்கு மகிழ்ச்சியாம். 28. சிவத்தைப் பேணிற் றவத்திற் கழகு பதவுரை: சிவத்தை - (முதற் கடவுளாகிய) பரமசிவத்தை, பேணின் - (ஒருவன்) வழிபட்டால், தவத்திற்கு - (அவன் செய்யும்) தவத்திற்கு, அழகு - அழகாகும். பொழிப்புரை: ஒருவன் சிவபெருமானை விரும்பி வழிபட்டால் அதுவே அவன் தவத்திற்கு அழகாகும். 29. சீரைத் தேடி னேரைத் தேடு பதவுரை: சீரை - சௌக்கியத்தை, தேடின் - (உனக்குத்) தேடுவா யானால், ஏரை - பயிரிடுந் தொழிலை, தேடு - தேடிக்கொள்ளு. பொழிப்புரை: சுகமாக வாழ விரும்பினால் உழுது பயிரிடுந் தொழிலைத் தேடிக்கொள். 30. சுற்றத்திற் கழகு சூழ விருத்தல் பதவுரை: சுற்றத்திற்கு - உறவினருக்கு, அழகு - அழகாவது, சூழ இருத்தல் - சுற்றிலும் வந்திருத்த லாகும். பொழிப்புரை: சுற்றத்தார்க்கு அழகாவது நலந்தீங்குகளில் சூழ வந்திருப்பதாகும். 31. சூதும் வாதும் வேதனை செய்யும் பதவுரை: சூதும் - சூதாடுதலும், வாதும் -குதர்க்கம் பேசுதலும், வேதனை - வருத்தத்தை, செய்யும் - உண்டாக்கும். பொழிப்புரை: சூதாடுதலும் விதண்டாவாதம் பேசலும் துன்பத்தை உண்டாக்கும். 32. செய்தவ மறந்தாற் கைதவ மாளும் பதவுரை: செய்தவம் - செய்யுந் தவத்தை, மறந்தால் - (ஒருவன்) மறந்தால், கைதவம் - பொய்யாகிய அஞ்ஞானமானது, ஆளும் - (அவனை அடிமைகொண்டு) ஆளும். பொழிப்புரை: ஒருவன் செய்யுந் தவத்தை மறந்துவிட்டால் அவனை அஞ்ஞானம் அடிமை கொள்ளும். 33. சேமம் புகினும் யாமத் துறங்கு பதவுரை: சேமம் - காவற்கூடத்திலே; புகினும் - போய் இருந்தாலும், யாமத்து - ஏழரை நாழிகைக்குப்பின்; உறங்கு - நித்திரை பண்ணு. பொழிப்புரை: காவற்கூடத்திலே போய் இருந்தாலும் இரவு ஏழரை நாழிகைக்குப்பின் நித்திரை செய். (காவல் வேலை செய்தாலும் நள்ளிரவில் உறங்க வேண்டும். ‘சாமத்துறங்கு’ என்றும் பாடம்.) 34. சையொத் திருந்தா லைய மிட்டுண் பதவுரை: சை ஒத்து இருந்தால் - பொருள் ஒத்திருந்தால், ஐயம் இட்டு- பிச்சை இட்டு, உண் - உண்டு வாழு. பொழிப்புரை: பொருள் ஒத்திருந்தால் பிச்சை யிட்டு உண்டு வாழ். (சை - பொருள்.) 35. சொக்க ரென்பவ ரத்தம் பெறுவர் பதவுரை: சொக்கர் என்பவர் - பொன் னுடையவர் என்று சொல்லப்படுவோர், அத்தம் - (அறமும் இன்பமுமாகிய மற்றைப்) புருடார்த்தங் களையும், பெறுவர் - பெறுவர். பொழிப்புரை: பொருளுடையவர் அறமும் இன்பமும் ஆகிய மற்றைப் புருடார்த்தங்களையும் பெறுவர். (முயற்சியுடையவர் பொருள் பெறுவர் என்றும், களங்கமற்றவர் நல்வழியை அடைவர் என்றும் இதற்குப் பொருள் சொல்வதும் உண்டு.) 36. சோம்ப ரென்பவர் தேம்பித் திரிவர் பதவுரை: சோம்பர் என்பவர் - சோம்ப லுடையவர் என்று சொல்லப்படுவோர், தேம்பி - (வறுமையினால்) வருந்தி, திரிவர்- (இரந்து) திரிவர். பொழிப்புரை: சோம்பலுடையோர் வறுமை யால் வருந்தி அலைவார்கள். 37. தந்தைசொன் மிக்க மந்திர மில்லை பதவுரை: தந்தை - பிதாவினுடைய; சொல் - சொல்லுக்கு, மிக்க - மேற்பட்ட, மந்திரம் (பலனைத் தரும்) மந்திரமானது, இல்லை - இல்லையாம். பொழிப்புரை: பிதாவின் சொல்லுக்கு மேற்பட்ட மந்திரம் இல்லை. (மந்திரம் என்பதற்கு ஆலோசனை என்றும் பொருள் கூறலாம்.) 38. தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை பதவுரை: தாயின் - மாதாவைப் பார்க்கிலும், சிறந்த - சிறப்புப் பொருந்திய, ஒரு கோயிலும் - ஓர் ஆலயமும், இல்லை - இல்லையாம். பொழிப்புரை: அன்னையைப் பார்க்கிலும் சிறந்த கோயிலும் இல்லை. (தாயைப் பூசித்தால் ஆலயத்திற் கடவுளைப் பூசிக்கும் பலனை அடையலாம் என்பது கருத்து. சிறந்த என்பது சிறந்து என விகாரப்பட்டது. ‘தாய்சொற் றுறந்தால் வாசக மில்லை’ என்றும் பாடம். இதற்கு, தாயின் வார்த்தையைத் தப்பினால் உறுதி பயக்கும் வேறு வாசகமில்லை என்பது பொருளாகும்.) 39. திரைகட லோடியுந் திரவியந் தேடு பதவுரை: திரை கடல் - அலைவீசுகின்ற கடலிலே, ஓடியும் - (கப்பலேறி, தூரதேசங்களிற்) போயானாலும், திரவியம் - திரவியத்தை, தேடு - சம்பாதி. பொழிப்புரை: கடல் வழியாகத் தேசாந்தரஞ் சென்றும் பொருளைத் தேடு. 40. தீராக் கோபம் போரா முடியும் பதவுரை: தீரா - நீங்காத, கோபம் - கோப மானது, போரா - (பின்பு) சண்டையாக, முடியும் - முடிந்துவிடும். பொழிப்புரை: தணியாத கோபமானது கலகமாக முடியும். 41. துடியாப் பெண்டிர் மடியி னெருப்பு பதவுரை: துடியா - (தங் கணவனுக்குத் துன்பம் வந்தபோது) மனம் பதையாத, பெண்டிர் - பெண்கள், மடியில் - (அவர்) வயிற்றில், நெருப்பு - நெருப்பாவர். பொழிப்புரை: கணவர்க்குத் துன்பம் வந்த போது மனம் பதையாத மகளிர், அவர் வயிற்றில் நெருப்பாவர். (மடியில் நெருப்பு என்பதற்கு உடையிற் கட்டிய நெருப்பை யொப்பர் என்றும் பொருள் கூறலாம்.) 42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும் பதவுரை: தூற்றும் - (தங் கணவர்மேற் குற்றஞ்சொல்லித்) தூற்றுகிற, பெண்டிர் - பெண்களை, கூற்று எனத் தகும் - (அவருக்கு) இயமன் என்று எண்ணத்தகும். பொழிப்புரை: கணவர்மேல் அவதூறு சொல்லும் பெண்டிரை அவருக்கு இயமன் என்று சொல்லத்தகும். 43. தெய்வஞ் சீறிற் கைதவ மாளும் பதவுரை: தெய்வம் -தெய்வமானது, சீறின் - (ஒருவனைக்) கோபித்தால், கைதவம் - (அவனுக்குக்) கைகூடியிருந்த தவமும், மாளும் - (பயன் கொடாமல்) அழியும். பொழிப்புரை: ஒருவன் கடவுளின் சினத்துக்கு ஆளானால் அவனுக்குக் கைகூடிய தவமும் அழிந்துவிடும். (கைத்தவம் என்பது கைதவம் என விகாரப்பட்டது.) 44. தேடா தழிக்கிற் பாடா முடியும் பதவுரை: தேடாது - (ஒருவன் வருந்திச்) சம்பாதியாமல், அழிக்கின் - (இருக்கிற பொருளைச்) செலவழித்தால், பாடா முடியும் - (அவனுக்குப் பின்) வருத்தமாக முடியும். பொழிப்புரை: பொருளைச் சம்பாதியாமல் செலவழித்துக் கொண்டிருந்தால் பின்பு துன்பமாக முடியும். 45. தையும் மாசியும் வையகத் துறங்கு பதவுரை: தையும் - தை மாதத்திலும், மாசியும் - மாசி மாதத்திலும், வை அகத்து - (பனிவருத்தந் தராத) வைக்கோல் வீட்டிலே, உறங்கு - நித்திரை பண்ணு. பொழிப்புரை: தை, மாசி மாதங்களாகிற பனிக்காலத்தில் வைக்கோலால் வேய்ந்த கூரை வீட்டில் நித்திரை செய். (வை - வைக்கோல்.) 46. தொழுதூண் சுவையி னுழுதூ ணினிது பதவுரை: தொழுது - (ஒருவரைச்) சேவித்து, ஊண் - உண்ணும் உணவினது, சுவையின் - சுவையைப்பார்க்கிலும், உழுது - உழுது பயிர் செய்து, ஊண் - உண்ணும் உணவின் சுவை, இனிது – இன்பந்தருவ தாகும். பொழிப்புரை: சேவகஞ்செய்து உண்ணும் உணவைப் பார்க்கிலும் உழுது பயிர்செய்து உண்ணும் உணவு இன்பந் தருவதாகும். 47. தோழ னோடு மேழைமை பேசேல் பதவுரை: தோழனோடும் - (உன்) சிநேகித னோடாயினும், ஏழைமை - (உனக்கு இருக்கிற) சிறுமையை, பேசேல் - பேசாதே.. பொழிப்புரை: உன் வறுமை முதலிய எளிமையை நண்பனிடத்திலும் சொல்லாதே. 48. நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும் பதவுரை: நல் இணக்கம் அல்லது - நல்ல சகவாசம் அல்லாதது, அல்லல் - துன்பத்தையே, படுத்தும் - உண்டாகும். பொழிப்புரை: நற்சேர்க்கையல்லாத கெட்ட சகவாசம் துன்பத்தை உண்டாக்கும். 49. நாடெங்கும் வாழக் கேடொன்று மில்லை பதவுரை: நாடு எங்கும் - தேசமெங்கும், வாழ – செழித்திருக்கு மாயின், கேடு ஒன்றும் - ஒரு கெடுதியும், இல்லை - இல்லை. பொழிப்புரை: தேசமெங்கும் செழித்திருந்தால் யாருக்கும் ஒரு குறைவுமில்லை. 50. நிற்கக் கற்றல் சொற்றிறம் பாமை பதவுரை: நிற்க - நிலைபெறும்படி, கற்றல் - கற்றலாவது, சொல் - (தான் சொல்லும்) சொற்கள், திறம்பாமை - தப்பிப்போகாமை யாம். பொழிப்புரை: நிலைபெறக் கற்றலாவது சொல்லுஞ்சொல் தவறாமையாம். கற்றவர்கள் பயனின்றி யொழியாது நிலைபெறும் சொற்களைச் சொல்லுதல்வேண்டும். (சொல் திறம்பாமை என்பதற்கு வாக்குறுதியிற் பிறழாதிருத்தல் என்றும் பொருள் சொல்லலாம்.) 51. நீரகம் பொருந்திய வூரகத் திரு பதவுரை: நீர் - நீர்வளமானது, அகம் - தனக்குள்ளேயே, பொருந்திய - அமைந்த, ஊரகத்து- ஊரினிடத்திலே, இரு - குடியிரு. பொழிப்புரை: நீர்வளம் பொருந்திய ஊரிலே குடியிரு. 52. நுண்ணிய கருமமு மெண்ணித் துணி பதவுரை: நுண்ணிய - சிறிய, கருமமும் - தொழிலையும், எண்ணி - (நன்றாக) ஆலோசித்து, துணி - (பின்பு அதைச்) செய்யத் துணி. பொழிப்புரை: சிறிய காரியத்தையும் நன்கு ஆலோசனை செய்து செய்யத்துணி. 53. நூன்முறை தெரிந்து சீலத் தொழுகு பதவுரை: நூல் - தருமநூலிலே சொல்லப்பட்ட, முறை - (விதிகளின்) முறையை, தெரிந்து - அறிந்து, சீலத்து- நல்லொழுக்க வழியில், ஒழுகு - நட. பொழிப்புரை: நீதிநூலிற் சொல்லப்பட்ட விதிகளை அறிந்து நல்லொழுக்க வழியில் நட. 54. நெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை பதவுரை: நெஞ்சை - (தம்முடைய) மனசுக்கு, ஒளித்த மறைக்கப்பட்ட, ஒரு வஞ்சகம் - யாதொரு வஞ்சனையும், இல்லை - இல்லை. பொழிப்புரை: மனத்திற்குத் தெரியாத வஞ்சகம் ஒன்றுமில்லை. 55.நேரா நோன்பு சீரா காது பதவுரை: நேரா - (மனசினால்) உடன்படாத, நோன்பு - தவமானது, சீர் ஆகாது - சீராக முடியாது. பொழிப்புரை: மனம்பொருந்திச் செய்யாத தவமானது செம்மையாக முடியாது. 56. நைபவ ரெனினு நொய்ய வுரையேல் பதவுரை: நைபவர் எனினும் - (கேட்போர் எதிர்பேசாமல்) வருந்துவோராயினும், நொய்ய - அற்பவார்த்தைகளை, உரையேல் - சொல்லாதே. பொழிப்புரை: கேட்பவர் எதிர்பேசாமல் வருந்துவோராயினும், அற்பவார்த்தைகளைப் பேசாதே. 57. நொய்யவ ரென்பவர் வெய்யவ ராவர் பதவுரை: நொய்யவர் என்பவர் - (உருவத்தி னாலே) சிறியவர் என்று இகழப்படுவோரும், வெய்யவர் ஆவார்- (செய்காரியத்தால் யாவரும்) விரும்பும் குணத்தை யுடையவராவர். பொழிப்புரை: உருவம் முதலியவற்றால் சிறியவரென்று இகழப்படுவோருஞ் செய்யுங் காரியத்தால் யாவரும் விரும்புந் தன்மையினர் ஆவர். 58. நோன்பென் பதுவே கொன்று தின்னாமை பதவுரை: நோன்பு என்பது - தவமென்று சொல்லப்படுவது, கொன்று - (ஒரு சீவனைக்) கொலை செய்து, தின்னாமையே - (அதன் மாமிசத்தைத்) தின்னாமையேயாம். பொழிப்புரை: விரதம் என்று சொல்லப் படுவது ஓருயிரைக் கொன்று அதன் ஊனைத் தின்னாமையாம். 59. பண்ணிய பயிரிற் புண்ணியம் தெரியும் பதவுரை: பண்ணிய - (ஒருவன்) செய்த, பயிரின் - பயிரின் விளைவினாலும் விளைவில்லாமையி னாலும், புண்ணியம் - (அவனிடத்தே) புண்ணியம் இருத்தலும் இல்லாமையும், தெரியும் - அறியப்படும். பொழிப்புரை: (ஒருவன்) செய்த பயிர் விளைவதிலிருந்து அவன் முன்பு செய்த புண்ணியம் அறிந்து கொள்ளப்படும். 60. பாலோ டாயினுங் கால மறிந்துண் பதவுரை: பாலோடு ஆயினும் - பாலோடு கூடிய அன்னத்தை உண்டாலும், காலம் அறிந்து - (உண்ணத்தகுங்) காலத்தை அறிந்து, உண் - (அதை)உண்ணு. பொழிப்புரை: பாலுடன் கூடிய அன்னமாயினும் உண்ணத் தகும் காலமறிந்து உண். 61. பிறன்மனை புகாமை யறமெனத் தகும் பதவுரை: பிறன் - பிறனுடைய, மனை - மனையாளிடத்தில், புகாமை - (இச்சித்துப்) போகாமையே, அறம் எனத் தகும் - (எல்லாத் தருமங்களிலும் உயர்ந்த) தருமம் என்று சொல்லத்தகும். பொழிப்புரை: பிறன்மனைவியை விரும்பாமையே உயர்ந்த தருமம் என்று சொல்லத்தகும். 62. பீரம் பேணி பாரந் தாங்கும் பதவுரை: பீரம்பேணி - தாய்ப்பால் குறைவற உண்டு வளர்ந்தவன், பாரம் - பாரமான சுமையை, தாங்கும் - சுமப்பான். பொழிப்புரை: தாய்ப்பாலைக்குறைவற உண்டு வளர்ந்தவன் பெரும் பாரத்தைச் சுமக்க வல்லவ னாவான். (காரணத்தைக் குறை வறக் கொண்டவன் காரியத்தை எளிதில் முடிப்பான்.) (பீரம் என்பதில் அம் சாரியை.) 63. புலையுங் கொலையும் களவுந் தவிர் பதவுரை: புலையும் - புலாலுண்ணுதலையும், கொலையும் - சீவ வதை செய்வதையும், களவும் - பிறர்பொருளைத் திருடுதலையும், தவிர் - (செய்யாது) ஒழித்துவிடு. பொழிப்புரை: புலால் உண்ணுதலும், பிறவுயிரைக்கொல்லுதலும், பிறர்பொருளைத் திருடுதலும், செய்யாதே. 64. பூரியோர்க் கில்லை சீரிய வொழுக்கம் பதவுரை: பூரியோர்க்கு - கீழ்மக்களுக்கு, சீரிய - சிறப்பாகிய, ஒழுக்கம் - நடையானது, இல்லை - இல்லை. பொழிப்புரை: கீழ்மக்களிடத்தில் சிறந்த நடை காணப்படு வதில்லை. 65. பெற்றோர்க் கில்லை சுற்றமுஞ் சினமும் பதவுரை: பெற்றோர்க்கு - (மெய்ஞ் ஞானத்தைப்) பெற்றவர்க்கு, சுற்றமும் - உறவினர்மேல் ஆசையும், சினமும் - (மற்றவர்மேல்) வெறுப்பும், இல்லை - இல்லை. பொழிப்புரை: கடவுளருளைப் பெற்றோர்க்கு உறவுமில்லை கோபமும் இல்லை. 66. பேதைமை யென்பது மாதர்க் கணிகலம் பதவுரை: பேதைமை என்பது - அறியாமை யென்று சொல்லப் படுங் குணமானது, மாதர்க்கு - பெண்களுக்கு, அணிகலம் – ஆபரண மாகும். பொழிப்புரை: அறிந்தும் அறியாதவர்போல அடங்கியிருக்கும் குணம் மாதர்களுக்கு ஆபரண மாகும். 67. பையச் சென்றால் வையந் தாங்கும் பதவுரை: பைய - மெள்ள, சென்றால் - (ஒருவன் தகுதியான வழியிலே) நடந்தால், வையம் - பூமியிலுள்ளோர், தாங்கும் - (அவனை) மேலாகக் கொள்வர். பொழிப்புரை: ஒருவன் தகுதியான வழியில் நடந்தால் உலகத்தார் அவனை மேலாகக் கொள்வர். 68. பொல்லாங் கென்பவை யெல்லாந் தவிர் பதவுரை: பொல்லாங்கு என்பவை - தீங்குகளென்று சொல்லப் பட்டவை, எல்லாம் - எல்லாவற்றையும், தவிர் - (செய்யாது) ஒழித்து விடு. பொழிப்புரை: தீங்குகள் என்று சொல்லப் பட்ட யாவற்றையும் செய்யாதொழி. 69. போனக மென்பது தானுழந் துண்டல் பதவுரை: போனகம் என்பது - போசனமென்று சொல்லப்படுவது, தான் உழந்து - தான் பிரயாசைப் பட்டுச் சம்பாதித்து, உண்டல் - உண்ணுதலாம். பொழிப்புரை: உணவென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது தான் வருந்திச் சம்பாதித்து உண்பதாம். 70. மருந்தே யாயினும் விருந்தோ டுண் பதவுரை: மருந்தே ஆயினும் - (உண்ணப் படுவது கிடைத்தற்கு அரிய) தேவாமிர்தமே யானாலும், விருந்தோடு - வந்த விருந்தாளி களோடு கூடி, உண் - உண்ணு. பொழிப்புரை: கிடைத்தற்கரிய தேவாமிர்தமே யானாலும் விருந்தினரோடு புசி. 71. மாரி யல்லது காரிய மில்லை பதவுரை: மாரி அல்லது - மழையினால் அல்லாமல், காரியம் - யாதொரு காரியமும், இல்லை - (யாருக்கும் நடப்பது)இல்லை. பொழிப்புரை: மழை யிருந்தாலல்லாமல் உலகத்தில் எக்காரியமும் நடப்பதில்லை. 72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை பதவுரை: மின்னுக்கு எல்லாம் - (வானத்திலே காணப்பட்ட) மின்னலுக்கு எல்லாம், பின்னுக்கு மழை - பின்னே மழை உண்டாகும். பொழிப்புரை: மின்னுவதெல்லாம் பின்னே மழை பெய்தற்கு அடையாளம். (ஒருவனுடைய ஊக்கம் முதலியவெல்லாம் அவனுக்குப் பின்னே வரும் நன்மைக்கு அடையாளம்) 73. மீகாம னில்லா மரக்கல மோடாது பதவுரை: மீகாமன் - (தன்னை ஓட்டத்தக்க) மாலுமி, இல்லா - இல்லாத, மரக்கலம் - கப்பல், ஓடாது - (கடலிலே செவ்வையாக) ஓடாது. பொழிப்புரை: மாலுமி யில்லாத கப்பல் ஓடாது. (நல்வழியில் நடத்தும் தலைவனில்லாத குடும்பமும், வேந்தனில்லாத நாடும் முதலியன செவ்வையாக நடைபெறமாட்டா.) 74. முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும் பதவுரை: முற்பகல் - ஒரு பகலின் முன்பங்கிலே, செய்யின் - (பிறனுக்குத் தீங்கு) செய்தால், பிற்பகல் - அதன் பின்பங்கிலே, விளையும் - (செய்தவனுக்கு) அத்தீங்கு தானே உண்டாகும். பொழிப்புரை: ஒரு பகலின் முற்பாகத்தில் பிறருக்குத் தீங்கு செய்தால் பிற்பாகத்தில் தனக்கு அத்தீங்கு உண்டாகும். (முற்பகல் பிற்பகல் என்று சொன்னது விரைவில் உண்டாகும் என்பதைக் காட்டு தற்கு. நன்மை தீமை இரண்டுக்கும் பொதுவாகச் சொன்னதாகவும் கொள்ளலாம்.) 75. மூத்தோர் சொன்ன வார்த்தை யமிர்தம் பதவுரை: மூத்தோர் - (கல்வியறிவினாலே) முதிர்ந்தவர், சொன்ன - சொல்லிய, வார்த்தை - வார்த்தையானது, அமிர்தம் - தேவாமிர்தத்தைப் போலும். பொழிப்புரை: பெரியோர் சொல்லிய வார்த்தை யானது தேவமிர்தம்போல் இன்பத்தைச் செய்யும். 76. மெத்தையிற் படுத்த னித்திரைக் கழகு பதவுரை: மெத்தையில் -பஞ்சணையிலே, படுத்தல் - படுத்தலானது, நித்திரைக்கு - (ஒருவன் செய்கிற) நித்திரைக்கு, அழகு - அழகாகும். பொழிப்புரை: மிருதுவான பஞ்சணையிற் படுத்தல் நித்திரைக்கு அழகாகும். (மெத்தெனப் படுத்தல் என்றும் பாடம்.) 77. மேழிச் செல்வம் கோழை படாது பதவுரை: மேழி - கலப்பை பிடித்து உழுது பயிர் செய்தலால் உண்டாகின்ற, செல்வம் - செல்வ மானது, கோழை படாது - (ஒருபோதும்) குறைவை அடையாது. பொழிப்புரை: உழுது பயிர்செய்தலால் வரும் செல்வம் சிறுமையுறாது. 78. மைவிழி யார்தம் மனையகன் றொழுகு பதவுரை: மை விழியார்தம் - மை தீட்டிய கண்களையுடைய வேசிகளது, மனை - வீட்டினை, அகன்று ஒழுகு - விலகி நட. பொழிப்புரை: மைதீட்டிய கண்களையுடைய பரத்தையர் மனையை அணுகாமல் விலகிநட. 79. மொழிவது மறுக்கி னழிவது கருமம் பதவுரை: மொழிவது - (பெரியோர்) சொல்வதை, மறுக்கின் - கேளாமற் செய்தால், கருமம் - (ஒருவன் செய்யுந்) தொழில், அழிவது - கெடுவதாகும். பொழிப்புரை: ஒருவன் பெரியோர் சொல்லை மீறி நடந்தால் அவன் செய்யும் தொழில் பயன்படாது அழியும். 80. மோன மென்பது ஞான வரம்பு பதவுரை: மோனம் என்பது - மௌனநிலை என்பது, ஞானம் - மெய்ஞ்ஞானத்துக்கு, வரம்பு - எல்லையாகும். பொழிப்புரை: மௌனம் என்பது ஞானத்திற்கு எல்லையாம். 81. வளவ னாயினு மளவறிந் தழித்துண் பதவுரை: வளவன் ஆயினும் - (செல்வத்தில் நீ) சோழனுக்கு ஒப்பானவன் ஆனாலும், அளவு - (பொருள் வரவின்) அளவை, அறிந்து - தெரிந்து, அழித்து - செலவழித்து, உண் - அனுபவி. பொழிப்புரை: நீ சோழன் போன்ற செல்வ முடையவன் ஆனாலும் வரவுக்குத் தக்கபடி செலவுசெய்து உண்ணு. 82. வானஞ் சுருங்கிற் றானஞ் சுருங்கும் பதவுரை: வானம் - மழையானது, சுருங்கின் - குறையுமாயின், தானம் - தருமமானது, சுருங்கும் - குறைவுபடும். பொழிப்புரை: மழை பெய்வது குறைந்தால் தானஞ்செய்வது குறையும். 83. விருந்திலோர்க் கில்லை பொருந்திய வொழுக்கம் பதவுரை: விருந்து இலோர்க்கு - விருந்தினரை உபசரித்தல் இல்லாதவருக்கு, பொருந்திய - தகுதியான, ஒழுக்கம் - இல்லற வொழுக்கம், இல்லை - இல்லையாம். பொழிப்புரை: விருந்தினரை உபசரியாதவர் களுக்குத் தகுதியான இல்லற வொழுக்கம் இல்லையாம். 84. வீரன் கேண்மை கூரம் பாகும் பதவுரை: வீரன் - வீரனுடைய, கேண்மை - சிநேகம், கூர் அம்பு ஆகும் - கூர்மைபொருந்திய அம்பை ஒப்பாகும். பொழிப்புரை: ஒருவனுக்கு வீரனுடைய நட்பு இருந்தால் அஃது அவனுக்குக் கூரிய அம்புபோல் பகையை வெல்ல உதவும். 85. உரவோ ரென்கை யிரவா திருத்தல் பதவுரை: உரவோர் என்கை - வல்லவரென்று சொல்லப்படுதல், இரவாது - யாசியாமல், இருத்தல்- இருக்கையாம். பொழிப்புரை: திட்பமுடையோர் என்று சொல்லப்படுவது சிறுமைவந்த காலத்திலும் பிறரை இரவாதிருப்பதாம். 86. ஊக்க முடைமை யாக்கத்திற் கழகு பதவுரை: ஊக்கம் - மனந்தளராமையை, உடைமை - உடைத்தாதல்; ஆக்கத்திற்கு - செல்வத் திற்கு, அழகு - அழகாகும். பொழிப்புரை: செய்யுந் தொழிலில் மனம் தளராதிருத்தல் செல்வத்திற்கு அழகாகும். 87. வெள்ளைக் கில்லை கள்ளச் சிந்தை பதவுரை: வெள்ளைக்கு - களங்கமில்லாத பரிசுத்த குணமுடையவனிடத்து, கள்ளம் - வஞ்சனை பொருந்திய, சிந்தை - நினைப்பானது, இல்லை - இல்லை. பொழிப்புரை: களங்கமற்ற மனமுடையவ னிடத்தில் வஞ்சக நினைப்பில்லை. 88. வேந்தன் சீறி னாந்துணை யில்லை பதவுரை: வேந்தன் - அரசனானவன், சீறின் - (ஒருவனைக்) கோபித்தால், ஆம் -(அப்போது அவனுக்கு) ஆகின்ற, துணை - உதவி, இல்லை - இல்லையாம். பொழிப்புரை: அரசன் ஒருவனைக் கோபித்தால் அவனுக்கு வேறு உதவியில்லை. 89. வையந் தோறுந் தெய்வந் தொழு பதவுரை: வையம் தோறும் - பூமியிலுள்ள தலந்தோறும் (போய்), தெய்வம் - கடவுளை, தொழு- வணங்கு. பொழிப்புரை: பூமியிலுள்ள தெய்வத்தலந் தோறுஞ் சென்று கடவுளை வணங்கு. 90. ஒத்த விடத்து நித்திரை கொள் பதவுரை: ஒத்தவிடத்து - (மேடுபள்ளம் இல்லாமற்) சமமான இடத்திலே, நித்திரை கொள் - நித்திரை பண்ணு. பொழிப்புரை: சமமான இடத்திலே படுத்து நித்திரைசெய். 91. ஓதாதார்க் கில்லை யுணர்வொடு மொழுக்கம் பதவுரை: ஓதாதார்க்கு - படியாதவர்க்கு, உணர்வொடும் - அறிவுடனே, ஒழுக்கம் - நல்ல நடையும், இல்லை - (உண்டாதல்) இல்லை. பொழிப்புரை: நல்ல நூல்களைப் பயிலாதவர்க்கு அறிவும் நன்னடையும் இல்லை. கொன்றைவேந்தன் மூலமும் உரையும் முற்றிற்று. நல்வழி முகவுரை நல்வழி என்பது ஒளவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய எவ்வமறுக்குஞ் செவ்விய தமிழ் நூல்களில் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள் அசதிக் கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப்பாக்களும் ஒளவையார் இயற்றியன வென்ப. தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும் பெண்டிர்களிலும், கற்றவரும் கல்லாதவரும் ஆகிய யாவரும் ஒளவையார் என்னும் பெயரை அறிந்திருப்பதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய நீதி நூல்களேயாகும். தமிழ் நாட்டு மக்கள் அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சியுடையவ ரெவரும் ஒளவையாரின் நீதி நூல்களில் ஒன்றையாவது படித்தே யிருப்பர். பல பெரிய நூல்களின் சாரமாகவுள்ள நீதிகளும், கருத்துக்களும் இந்நீதி நூல்களில் தெளிவுற அமைந்து விளங்குகின்றன. நல்வழியிலுள்ள செய்யுட்கள் பல மெய்ந்நூற்களின் முடிந்த கருத்துக்களை விளம்புவ தாகும். இந் நூலின்கண் திருவைந்தெழுத்தும், திருநீறும் சிறப்பாக எடுத்தோதப் படுவதும், இறுதிச் செய்யுளில் திருக்குறள், திருநான் மறை முடிவு, தேவாரம் முதலிய சைவத்திருமுறைகள் என்னும் இவை யெல்லாம் ஒத்த கருத்துடையன எனக் கூறப்படுவதும் பிறவும் ஆக்கியோரின் சமயத்தையும், உண்மை நூலுணர்வையும் புலப்படுத்துவதாகும். மூவர் தமிழை எடுத்தோதியதிலிருந்து இந்நூல் தோன்றிய காலம் 9 - ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகு மென்பதும் விளக்கமாம். இங்ஙனம், ந. மு. வேங்கடசாமி நாட்டார். பாட்டு முதற்குறிப்பு அம்மி 17 ஆண்டாண்டு 9 ஆவாரை 12 ஆறிடும் 26 ஆற்றங் 11 ஆற்றுப் 9 ஆனமுத 21 இடும்பை 4 இழுக்குடை 25 ஈட்டும் 8 உண்பது 23 உள்ள 6 எண்ணி 5 எல்லாப் 7 ஒருநாள் 10 ஒன்றை 22 கல்லானே 27 சாதி 3 சிவாய 13 செய்தீ 14 சேவித்துஞ் 16 தண்ணீர் 4 தாந்தாமுன் 24 தேவர் 33 நண்டு 29 நன்றென்று 31 நீருநிழலு 18 நீறில்லா 20 பாடுபட்டு 18 பாலும் 1 பிச்சைக்கு 12 பூவாதே 28 பெற்றார் 15 புண்ணியம் 5 மரம்பழு 24 மானங் 21 முப்பதாம் 32 வருந்தி 5 வினைப்பயனை 30 வெட்டன 27 வேதாளஞ் 19 நல்வழி மூலமும் உரையும் கடவுள் வாழ்த்து பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா. பதவுரை: கோலம் செய் - அழகினைச் செய்கின்ற, துங்கம் - உயர்வாகிய, கரிமுகத்து - யானை முகத்தையுடைய, தூமணியே - பரிசுத்தமாகிய மாணிக்கம்போலும் விநாயகக் கடவுளே, பாலுந் தெளி தேனும் பாகும் பருப்பும் - ஆவின் பாலும் தெளிந்த தேனும் வெல்லப்பாகும் பருப்பும் ஆகிய, இவை நாலும் கலந்து - இந்நான்கையும் கலந்து, நான் உனக்குத் தருவேன் - அடியேன் தேவரீருக்கு நிவேதிப்பேன்; சங்கத் தமிழ் மூன்றும் - சங்கத்தில் வளர்க்கப்பட்ட முத்தமிழையும், நீ எனக்குத் தா - தேவரீர் அடியேனுக்குத் தந்தருள்வீராக. இதன் கருத்து : விநாயகக் கடவுளே! தேவரீர் அடியேனது பூசையை ஏற்றுக்கொண்டு எனக்கு முத்தமிழ்ப் புலமையும் தந்தருளவேண்டும் என்பதாம். முத்தமிழ் - இயல், இசை, நாடகம் என்னும் பிரிவினையுடைய தமிழ். தமிழ் முதல், இடை, கடையென்னும் முச்சங்கங்களால் வளர்க்கப் பெற்றமையால் சங்கத் தமிழ் எனப் பெயர் பெறுவதாயிற்று. நன்மையே செய்க 1. புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்த அவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந் தீதொழிய நன்மை செயல். பதவுரை: புண்ணியம் ஆம் - அறமானது விருத்தியைச் செய்யும்; பாவம் போம் - பாவமானது அழிவினைச் செய்யும்; போனநாள் செய்த அவை - முற்பிறப்பிற் செய்த அப் புண்ணிய பாவங்களே, மண்ணில் பிறந்தார்க்கு - பூமியிலே பிறந்த மனிதர்களுக்கு, வைத்த பொருள் - (இப்பிறப்பிலே இன்பதுன்பங்களை அநுபவிக்கும்படி) வைத்த பொருளாகும்; எண்ணுங்கால் - ஆராய்ந்து பார்க்கின், எச்சமயத்தோர் சொல்லும் - எந்த மதத்தினர் சொல்லுவதும், ஈது ஒழிய வேறு இல்லை - இதுவன்றி வேறில்லை; (ஆகையால்) தீது ஒழிய நன்மை செயல் - பாவஞ் செய்யாது புண்ணியமே செய்க. புண்ணியத்தால் இன்பமும், பாவத்தால் துன்பமும் உண்டாதலால், பாவத்தை யொழித்துப் புண்ணியத்தைச் செய்க எ-ம். ஆக்கும் போக்கும் என்பன ஆம் போம் என நின்றன. (1) ஈயாமையின் இழிவு 2. சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி. பதவுரை: சாற்றுங்கால் - சொல்லுமிடத்து, மேதினியில் - பூமியில், சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை - இரண்டு சாதியின்றி வேறில்லை, (அவ்விரண்டு சாதியாரும் யாவரெனின்) நீதி வழுவாநெறி - நீதி தவறாத நல்வழியில் நின்று, முறையின் - முறையோடு, இட்டார் - (வறியர் முதலானவர்க்கு) ஈந்தவரே, பெரியோர் - உயர்வாகிய சாதியார்; இடாதார் - ஈயாதவரே, இழிகுலத்தார் - இழிவாகிய சாதியார்; பட்டாங்கில் உள்ளபடி - உண்மை நூலில் உள்ள இயற்கை இதுவேயாம். கொடுத்தவர் உயர்குலத்தினர்; கொடாதவர் இழிகுலத்தினர்; இவ்வகையன்றி வேறு சாதியில்லை எ-ம். (2) ஈதலின் சிறப்பு 3. இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே இடும்பொய்யை மெய்யென் றிராதே - இடுங்கடுக உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய் விண்டாரைக் கொண்டாடும் வீடு. பதவுரை: இயல் உடம்பு இது - பொருந்திய இவ்வுடம்பானது, இடும்பைக்கு - துன்பமாகிய சரக்குகட்கு, இடும்பை அன்றே - இட்டு வைக்கும் பை யல்லவா, இடும் பொய்யை - (உணவினை) இடுகின்ற நிலையில்லாத இவ்வுடம்பை, மெய் என்று இராது – நிலை யுடையதென்று கருதியிராமல் கடுக - விரையில், இடும் - வறியார்க்கு ஈயுங்கள், உண்டாயின் - (இவ்வறம் உங்களிடத்து) உண்டாயின், பெருவலிநோய் - மிக்க வலிமையுடைய பாசமாகிய பிணியினின்றும், விண்டாரை - நீங்கியவரை, கொண்டாடும் - விரும்புகின்ற, வீடு - முத்தியானது, ஊழின் - முறையாலே, உண்டாகும் - உங்கட்குக் கிடைக்கும். அறஞ் செய்தவர்க்கு முறையாலே வீடுபேறுண் டாகும், எ-ம். நீரிலெழுத்துப்போற் கணத்துள் அழிவதாகலின் உடம்பு பொய் எனப்பட்டது. உடம்பிற்கு மெய் என்று பெயர் வந்தது எதிர் மறை யிலக்கணை. பயன் கருதாது செய்யும் அறத்தால் மனத்தூய்மையும், மெய்யுணர்வும், வீடுபேறும் முறையானே உண்டாகும் என்க. (3) காலம் நோக்கிச் செய்க 4. எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது புண்ணியம் வந்தெய்து போதல்லாற் – கண்ணில்லான் மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே ஆங்கால மாகு மவர்க்கு. பதவுரை: யார்க்கும் - எத்தன்மையோர்க்கும், புண்ணியம் வந்து எய்துபோது அல்லால் - (முன்செய்த) புண்ணியம் வந்து கூடும்பொழு தல்லாமல், ஒரு கருமம் - ஒரு காரியத்தை, எண்ணி - ஆலோசித்து, செய்யொண்ணாது - செய்து முடிக்க இயலாது; (அப்படிச் செய்யின் அது) கண் இல்லான் - குருடன், மாங்காய் விழ - மாங்காயை விழுவித்தற்கு, எறிந்த மாத்திரைக்கோல் ஒக்கும் - எறிந்த மாத்திரைக்கோலைப் போலும்; ஆம் காலம் -புண்ணியம் வந்து கூடும் பொழுது, அவர்க்கு ஆகும் - அவர்க்கு அக்காரியம் எளிதில் முடியும். புண்ணிய மில்லாதவன் செய்யத் தொடங்கிய காரியம் முடியப் பெறாது கைப்பொருளும் இழப்பன் எ - ம். மாத்திரை - அளவு. குருடன் மாங்காயும் பெறாது கோலும் இழப்பன் என்க. (4) கவலையுறுதல் கூடாது 5. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமினென்றாற் போகா - இருந்தேங்கி நெஞ்சுசம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து துஞ்சுவதே மாந்தர் தொழில். பதவுரை: வாராத - (ஊழால்) வரக் கூடாதவைகள், வருந்தி அழைத்தாலும் - பரிந்து அழைப்பினும், வாரா - வாராவாம்; பொருந் துவன - (ஊழால்) வரக்கூடியவை, போமின் என்றால் போயிடுங்கள் என வெறுப்பினும், போகா - போகாவாம்; இருந்து ஏங்கி - (இவ்வுண்மை யறியாமல்) இருந்து ஏக்கமுற்று, நெஞ்சம் புண் ஆக - மனம் புண்ணாகும்படி. நெடுந்தூரம் தாம் நினைந்து - (அவற்றைத்) தாம் நெடுந்தூரம் சிந்தித்து, துஞ்சுவதே - மாண்டு போவதே, மாந்தர் தொழில் - மனிதர் தொழிலாக வுள்ளது. இருவினைப் பயன்களாகிய இன்ப துன்பங்கள் தப்பாமல் வந்து கொண்டிருக்கும். ஆதலால் இன்பத்தை விரும்பியும் துன்பத்தை வெறுத்தும் கவலையுறுதல் தக்க தன்று எ-ம். (5) பேராசை கூடாது 6. உள்ள தொழிய ஒருவர்க் கொருவர்சுகங் கொள்ளக் கிடையா குவலயத்தில் - வெள்ளக் கடலோடி மீண்டு கரையேறி னாலென் உடலோடு வாழும் உயிர்க்கு. பதவுரை: ஒருவர்க்கு - ஒருவருக்கு, உள்ளது ஒழிய - (ஊழினால்) உள்ள அளவல்லாமல், ஒருவர் சுகம் - மற்றொருவருடைய சுகங்களை, கொள்ள- அநுபவிக்க விரும்பினால், கிடையா - அவை கூடாவாம்; (ஆதலால்) குவலயத்தில் - பூமியில், உடலோடு வாழும் உயிர்க்கு - மக்களுடம்போடு கூடிவாழும் உயிர்களுக்கு, வெள்ளக் கடல் ஓடி - வெள்ள நீரையுடைய கடல்கடந்து சென்று (பொருள்தேடி), மீண்டு கரையேறினால் - திரும்பிவந்து கரையேறினாலும், என் - அதனால் பயன் என்னை? கப்பலேறிச் சென்று பெரும்பொருள் ஈட்டி னாலும் ஊழினள வன்றி அநுபவித்தல் கூடாது எ-ம். (6) ஞானிகள் பற்றற்றிருப்பர் 7. எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை - நல்லார் அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற் பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு. பதவுரை: எல்லாப் படியாலும் - எல்லா வகையாலும், எண்ணினால் - ஆராயுமிடத்து, இவ்வுடம்பு - இந்த உடம்பானது, பொல்லாப் புழு - பொல்லாத புழுக்களுக்கும், மலி நோய் - நிறைந்த பிணிகளுக்கும், புல் குரம்பை - புல்லிய குடிசையாக இருக்கின்றது; நல்லார் - நல்லறிவுடையோர், அறிந் திருப்பார்-(இவ்வுடம்பினிழிவை) அறிந்திருப்பார்கள்; ஆதலினால் - ஆகையால் (அவர்கள்), கமல நீர் போல் - தாமரை இலையில் தண்ணீர் போல, பிறிந்து இருப்பார் - (உடம்போடு கூடியும்) கூடாதிருப்பார்கள்; பிறர்க்குப் பேசார் - (அதைக் குறித்துப்) பிறரிடத்தில் பேச மாட்டார்கள். ஆம்: அசை. உடம்பின் இழிவை யறிந்த ஞானிகள் உடம்போடு கூடி இருப்பினும் அதிற் பற்றற்றிருப் பார்கள் எ-ம். (7) மரியாதையே தேடத்தக்கது 8. ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த வாயினும்ஊழ் கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம் மரியாதை காணு மகிதலத்தீர் கேண்மின் தரியாது காணுந் தனம். பதவுரை: மகிதலத்தீர் - பூமியிலுள்ள மனிதர்களே, கேண்மின் - கேளுங்கள்; ஈட்டும் பொருள்- தேடுதற்குரிய பொருள்களானவை, முயற்சி எண் இறந்த ஆயினும் - முயற்சிகள் அளவில்லாதன வாயினும், ஊழ் கூட்டும்படி அன்றிக் கூடாவாம் - ஊழ்கூட்டு மளவினல்லாமல் சேராவாம்; தனம் தரியாது - ஊழினாலே சேரினும்)அப்பொருள் நிலைபெறாது; தேட்டம் மரியாதை - (ஆதலினால் நீங்கள்) தேடத்தகுவது மரியாதையே யாம். ஆம்; ஆசை. காணுமிரண்டும் முன்னிலை யசை. பொருள் ஊழினளவன்றி வாராமையானும், வந்த பொருளும் நிலைபெறாமையாலும், நிலை பெறுவதாகிய நல்லொழுக்கத்தையே தேடல் வேண்டும் எ-ம். (8) குடிப்பிறந்தார் இல்லை எனமாட்டார் 9. ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லையென மாட்டார் இசைந்து. பதவுரை: ஆற்றுப் பெருக்கு அற்று - ஆற்றில் வெள்ளம் வற்றிப் போய், அடி சுடும் அந்நாளும்- (மணலானது வெயிலினாலே காய்ந்து நடப்பவ ருடைய) அடியைச் சுடுகின்ற அக்காலத்திலும், அவ் ஆறு - அந்த ஆறானது, ஊற்றுப் பெருக்கால் - ஊற்றுநீர்ப் பெருக்கினால், உலகு ஊட்டும் - உலகத்தாரை உண்பிக்கும்; (அது போல)நல்ல குடிப்பிறந்தார் - நற்குடியிற் பிறந்தவர், நல்கூர்ந்தார் ஆனாலும் - வறுமையுடையவரானாலும், ஏற்றவர்க்கு - இரந்தவர்க்கு, இசைந்து - மனமிசைந்து, இல்லை யென மாட்டார் - இல்லையென்று சொல்ல மாட்டார் (இயன்றது கொடுப்பர்). உயர்ந்த குடியிற் பிறந்தவர் வறுமைக் காலத் திலும் இரந்தவர்க்குக் கொடாது விடார் எ-ம். (9) இட்டு உண்டு இரும் 10. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும் எமக்கென்னென் றிட்டுண் டிரும். பதவுரை: மா நிலத்தீர் - பெரிய பூமியிலுள்ள மனிதர்களே, ஆண்டு ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் - வருடா வருடந் தோறும் அழுது புரண்டாலும், மாண்டார் வருவரோ - இறந்தவர் திரும்பி வருவரோ (வரமாட்டார்); வேண்டா - (ஆதலினால்) அழ வேண்டுவதில்லை; நமக்கு அதுவழியே - நமக்கும் அம்மரணமே வழியாகும்; நாம் போம் அளவும் - நாம் இறந்துபோ மளவும் எமக்கு என் என்று - எமக்கு யாது சம்பந்தமென்று, இட்டு உண்டு இரும் - பிச்சையிட்டு நீங்களும் உண்டு கவலையற்று இருங்கள். இறந்தவர் பொருட்டு அழுதலாற் சிறிதும் பயனில்லாமையால் கவலையற்று அறஞ்செய்து வாழ்க எ-ம். (10) பசி கொடியது 11. ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும் என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது. பதவுரை: இடும்பைகூர் என் வயிறே - துன்பம் மிகுக்கின்ற என்னுடைய வயிறே; ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் - (கிடையாதபோது) ஒருநாளுக் குணவை விட்டிரு என்றால் விட்டிராய்; இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - (கிடைத்த போது) இரண்டு நாளுக்கு ஏற்றுக்கொள் ளென்றால் ஏற்றுக்கொள்ளாய். ஒருநாளும் என் நோ அறியாய் - ஒரு நாளிலாயினும் என்னுடைய வருத்தத்தை அறியாய்; உன்னோடு வாழ்தல் அரிது - (ஆதலினால்) உன்னோடு கூடி வாழ்தல் எனக்கு அருமையாக இருக்கின்றது. வயிற்றுக்கு உணவளிப்பதினும் வருத்தமான செயல் பிறிதில்லை எ-ம். (11) உழவின் உயர்வு 12. ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு. பதவுரை: ஆற்றங்கரையின் மரமும் - ஆற்றின் கரையிலுள்ள மரமும், அரசு அறிய வீற்றிருந்த வாழ்வும் - அரசன் அறியப் பெருமையாக வாழ்கின்ற வாழ்க்கையும், விழும் அன்றே - அழிந்து விடும் அல்லவா; (ஆதலினால்) உழுது உண்டு வாழ்வு ஏற்றம் - உழுது பயிர்செய்து உண்டு வாழ்வதே உயர்வாகும்; அதற்கு ஒப்பு இல்லை - அதற்கு நிகரான வாழ்க்கை வேறில்லை; வேறு ஓர் பணிக்கு - வேறு வகையான தொழில் வாழ்க்கைக் கெல்லாம், பழுது உண்டு - தவறு உண்டு. அம்: சாரியை. கண்டீர்: முன்னிலை அசை. உழுது பயிர்செய்து வாழும் வாழ்க்கையே சுதந்திர முடையதும், குற்றமற்றதும், அழி வில்லாததும் ஆகிய வாழ்க்கையாகும் எ-ம். (12) விலக்க இயலாதன 14. ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச் சாவாரை யாரே தவிர்ப்பவர் - ஓவாமல் ஐயம் புகுவாரை யாரே விலக்குவார் மெய்யம் புவியதன் மேல். பதவுரை: அம் புவியதன்மேல் - அழகிய பூமியின்மேலே, மெய் - உண்மையாக, ஆவாரை அழிப்பார் யார் - வாழ்வதற்கு உரியாரை அழிக்கவல்லார் யாவர்? அது அன்றி - அது வல்லாமல், சாவாரைத் தவிர்ப்பவர் யார் - இறத்தற்கு உரியவரை இறவாமல் நிறுத்த வல்லார் யாவர்? ஓவாமல் - ஒழியாமல், ஐயம் புகுவாரை - பிச்சைக்குச் செல்வோரை, விலக்குவார் யார் - தடுக்க வல்லவர் யாவர்? ஏ மூன்றும் அசை. ஊழினால் அடைதற்பாலனவாகிய ஆக்கக் கேடுகளைத் தவிர்க்க வல்லவர் ஒருவரும் இல்லை எ-ம். (13) மானமே உயிரினும் சிறந்தது 15. பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால் இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது உயிர்விடுகை சால உறும். பதவுரை: பேசுங்கால் - சொல்லுமிடத்து, பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை - பிச்சை எடுத்து உண்டலினும் (இழிவிற்) பெரிய குடிவாழ்க்கை யாவது, பல இச்சை சொல்லி இடித்து உண்கை - பலவாகிய இச்சைகளைப்பேசி (ஒருவரை) நெருங்கி வாங்கி உண்ணுதலாம்; சிச்சீ - சீ சீ (இது என்ன செய்கை), வயிறு வளர்க்கைக்கு - இப்படி வயிறு வளர்ப்பதைப் பார்க்கிலும், மானம் அழியாது - மானங் கெடாமல், உயிர் விடுகை - உயிரை விடுதல், சால உறும் - மிகவும் பொருந்தும். பிறரிடத்திலே இச்சை பேசி வாங்கி உண்டு மானம் இழந்து உயிர் வாழ்தலினும் உயிரை விட்டு, மானத்தை நிறுத்துதல் உயர்வுடைத்து எ-ம். (14) திருவைந்தெழுத்தின் சிறப்பு 15. சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும். பதவுரை: சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு - சிவாயநம வென்று தியானித்துக் கொண்டிருப்பவருக்கு, ஒரு நாளும் அபாயம் இல்லை - ஒருபொழுதும் துன்பம் உண்டாகாது; இதுவே - இஃதொன்றுமே, உபாயம் - (விதியை வெல்லுதற் கேற்ற)உபாயமும், மதி - இது வல்லாத எல்லா அறிவுகளும், விதியே ஆய்விடும் - விதியின்படியே ஆகிவிடும். சிவபெருமானுக்குரிய திருவைந்தெழுத்தை இடையறாது நினைந்துகொண் டிருப்போர்க்கு விதியால் வரும் துன்பமில்லை; ஏனையர்க்கு உண்டு எ-ம். (15) வியத்தகு விழுப்பொருள் 17. தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணங்கொடையால் கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள் அற்புதமாம் என்றே அறி. பதவுரை: தண்ணீர் நில நலத்தால் - தண்ணீ ரானது நிலத்தினது நன்மையினாலும், தக்கோர் குணம் கொடையால் - நல்லோருடைய குணமானது ஈகையினாலும், கண் நீர்மை மாறாக் கருணையால் - கண்களுடைய குணமானது நீங்காத அருளி னாலும், பெண் நீர்மை கற்பு அழியா ஆற்றல் - பெண்களுடைய குணமானது கற்புநிலை கெடாத வழியினாலும், கடல் சூழ்ந்த வையகத்துள் - கடல் சூழ்ந்த பூமியினிடத்து, அற்புதம் ஆம் -வியக்கத்தக்க மேன்மையுடையன வாகும், என்று அறி - என்று நீ அறிவாயாக. நில நன்மையினாலே தண்ணீருக்கும், கொடை யினாலே நல்லோருக்கும், அருளினாலே கண் களுக்கும், கற்பினாலே பெண் களுக்கும் பெருமை உண்டாகும் எ - ம். (16) தீவினையே வறுமைக்கு வித்து 17. செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இருநிதியம் - வையத்து அறும்பாவம் என்னவறிந்து அன்றிடார்க் கின்று வெறும்பானை பொங்குமோ மேல். பதவுரை: வையத்துப் பாவம் அறும் என்ன அறிந்து- பூமியிலே (அறஞ்செய்தலினாலே) பாவம் நீங்கும் என்று உணர்ந்து, அன்று இடார்க்கு - அக்காலத்திலே ஈயாதவருக்கு, செய் தீவினை இருக்க - செய்த அப்பாவம் (வறுமைக்கு வித்தாய்) இருக்க, இன்று தெய்வத்தை நொந்தக்கால் - இப்பொழுது கடவுளை வெறுத்தால், இரு நிதியம் எய்த வருமோ - பெரிய திரவியம் பொருந்த வருமோ? (வராது.) வெறும் பானைமேல் பொங்குமோ - வெறும் பானை (அடுப்பிலே வைத்து எரித்தால்)மேலே பொங்குமோ; (பொங்காது.) வறியவர் அவ்வறுமைக்கு வித்தாகிய தீவினையைச் செய்த தம்மை நோவாது, தெய்வத்தை நோதலிற் பயன் இல்லை எ -ம். (17) இடிப்பார்க்கு ஈவர் 18. பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில் உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர் இரணங் கொடுத்தால் இடுவர் இடாரே சரணங் கொடுத்தாலுந் தாம். பதவுரை: பேர் உலகில் - பெரிய நிலவுலகத்திலே, பெற்றார் - (எம்மைப்) பெற்றவர், பிறந்தார் - (எமக்குப்) பிறந்தவர், பெருநாட்டார் - (எம்முடைய) பெரிய தேசத்தார், உற்றார் - (எம்முடைய) சுற்றத்தார், உகந்தார் - (எம்மை) நேசித்தவர், என nவண்டார் - என்று விரும்பாதவ ராகிய உலோபிகள், மற்றோர் - பிறர், இரணம் கொடுத்தால் - தம்முடம்பிலே புண்செய்தால், இடுவர் - (அவருக்கு எல்லாம்) கொடுப்பர்; சரணம் கொடுத்தாலும் இடார் - (முன் சொல்லப்பட்டவர்) அடைக்கலம் புகுந்தா ராயினும் அவருக்கு ஒன்றுங் கொடார். ஏ -தாம் இரண்டும் அசை. உலோபிகள் தம்மைத் துன்புறுத்தும் கொடியவர் களுக் கன்றி நலம் புரியும் தாய் தந்தையார் முதலாயி னோருக்குக் கொடார் எ-ம். (18) பேரின்பம் நாடாப் பேதைமை 19. சேவித்துஞ் சென்றிரந்துந் தெண்ணீர்க் கடல்கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம் பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி அரிசிக்கே நாம். பதவுரை: வயிற்றின் கொடுமையால் - வயிற்றி னுடைய (பசிக்) கொடுமையினாலே, சேவித்தும் - (பிறரைச்) சேவித்தும், சென்று இரந்தும் - (பலரிடத்தே) போய் யாசித்தும், தெள்நீர்க் கடல் கடந்தும் - தெளிவாகிய நீரையுடைய கடலைக் கடந்து வேறு நாடு சென்றும், பாவித்தும் - (ஒருவரைப் பெரியவராகப்) பாவித்தும், பார் ஆண்டும் - பூமியை ஆண்டும், பாட்டு இசைத்தும் - (செல்வரைப் புகழ்ந்து) பாட்டுப் பாடியும், நாம் - நாம், உடம்பை - இந்த உடம்பினை, நாழி அரிசிக்கே - நாழி யரிசிக்காகவே, பாழின் - வீணிலே, போவிப்பம் - செலுத்துகின்றோம். வீட்டு நெறியிற் செல்லும் பொருட்டு அரிதாகக் கிடைத்த மனிதவுடம்பினை உணவு தேடுவதிலேயே கழிப்பது அறியாமையாகும் எ-ம். (19) பரத்தையரால் செல்வம் பாழாம் 20. அம்மி துணையாக ஆறிழிந்த ஆறொக்குங் கொம்மை முலைபகர்வார்க் கொண்டாட்டம் - இம்மை மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி வெறுமைக்கு வித்தாய் விடும். பதவுரை: கொம்மை முலை - திரட்சி பொருந்திய தனங்களை, பகர்வார்க் கொண்டாட்டம் - விற்கின்ற பரத்தையரை (இன்பங் காரணமாக) கொண்டாடுதல், அம்மி துணையாக - அம்மிக் கல்லே துணையாக, ஆறு இழிந்தவாறு ஒக்கும் - ஆற்று வெள்ளத்தில் இறங்கிய தன்மையைப் போலும்; (அன்றியும்) மாநிதியம் போக்கி - (அது) பெரிய செல்வத்தை அழித்து, வெறுமைக்கு வித்து ஆய்விடும் - வறுமைக்குக் காரணமாகிவிடும்; (ஆதலால்) இம்மை மறுமைக்கு நன்று அன்று - அஃது இப்பிறப்பிற்கும் வருபிறப்பிற்கும் நல்லதாகாது. விலைமகளிரைச் சேர்பவன் தான் கருதிய இன்பத்தை யடையாமல், வறுமையையும், பழி பாவங்களையும் அடைந்து இம்மை மறுமைகளில் துன்புறுவன் எ-ம். (20) வஞ்சனையில்லார்க்கு வாய்க்கும் நலன் 21. நீரு நிழலு நிலம்பொதியும் நெற்கட்டும் பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும் வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க்கு என்றுந் தருஞ்சிவந்த தாமரையாள் தான். பதவுரை: சிவந்த தாமரையாள் - செந்தாமரை மலரில் இருக்கின்ற திருமகள், வஞ்சம் இல்லார்க்கு - வஞ்சனை இல்லாத வருக்கு, நீரும் - நீர்வளத்தை யும், நிழலும் – நிழல் வளத்தையும், நிலம்பொதியும் நெற்கட்டும் - நிலத்திலே நிறையும் நெற்போரையும், பேரும் - பேரையும், புகழும் - கீர்த்தியையும், பெரு வாழ்வும் - பெரிய வாழ்வையும், ஊரும் - கிராமத்தை யும், வரும் திருவும் - வளர்கின்ற செல்வத்தையும், வாழ்நாளும் - நிறைந்த ஆயுளையும், என்றும் தரும் - எந்நாளும் கொடுத்தருளுவள். வஞ்சனை யில்லாதவருக்கு இலக்குமியினது திருவருளினாலே எல்லா நலமும் உண்டாகும் எ-ம். (21) பாவிகளின் பணம் 23. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங் காவிதான் போயினபின்பு யாரே யநுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம். பதவுரை: பணத்தைப் பாடுபட்டுத்தேடி - பணத்தினை வருந்தி யுழைத்துச் சேர்த்து, புதைத்து வைத்து - (உண்ணாமலும் அறஞ் செய்யாமலும்) பூமியிலே புதைத்து வைத்து, கேடு கெட்ட மானிடரே - நன்மை யெல்லாவற்றையும் இழந்த மனிதர்களே, கேளுங்கள் - (நான் கூறுவதைக்) கேட்பீர்களாக; கூடுவிட்டு - உடம்பினை விட்டு, ஆவி போயின பின்பு - உயிர் நீங்கிய பின்பு, பாவிகாள் - பாவிகளே, அந்தப் பணம் - அந்தப் பணத்தை, இங்கு ஆர் அனுபவிப்பார் - இவ்விடத்து யாவர் அநுபவிப்பார்? தான், ஏ இரண்டும் அசை. அறத்திற்கும் இன்பத்திற்கும் சாதனமாகிய பொருளை வீணிலே பூமியிற் புதைத்து வைப்பதைப் பார்க்கிலும் அறியாமையில்லை எ-ம். (22) வழக்கோரஞ் சொன்னவர் மனை பாழ் 23. வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே பாதாள மூலி படருமே - மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்றோரஞ் சொன்னார் மனை. பதவுரை: மன்று ஓரஞ் சொன்னார் மனை - தருமசபையிலே ஓரஞ் சொன்னவருடைய வீட்டிலே, வேதாளம் சேரும் - பேய்கள் (வந்து) சேரும்; வெள்ளெருக்குப் பூக்கும் - வெள்ளெருக்கு (முளைத்து) மலரும்; பாதாளமூலி படரும் - பாதாளமூலி யென்னும் கொடி படரும்; மூதேவி சென்று இருந்து வாழ்வள்- மூதேவியானவள் போய் நிலைபெற்று வாழ்வாள்; சேடன் குடி புகும் - பாம்புகள் குடியிருக்கும். ஏ ஐந்தும் அசை. நீதிமன்றத்திலே வழக்கோரஞ் சொன்னவர் குடும்பத்தோடு அழிவதுமன்றி, அவர் குடியிருந்த வீடும் பாழாம் எ-ம். (23) ஓரம் - நடுவுநிலை யின்மை. வாழ்க்கை மாண்பு ஐந்து 24. நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ் ஆறில்லா ஊருக் கழகுபாழ் - மாறில் உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே மடக்கொடி யில்லா மனை. பதவுரை: நீறு இல்லா நெற்றி பாழ் - விபூதியில்லாத நெற்றி பாழாகும்; நெய் இல்லா உண்டி பாழ் - நெய்யில்லாத உணவு பாழாகும்; ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ் - நதி யில்லாத ஊருக்கு அழகு பாழாகும், மாறு இல் உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ் – மாறு படாத சகோதரர் இல்லாத உடம்பு பாழாகும்; மடக்கொடி இல்லா மனை பாழே - (இல்லறத்திற்குத் தக்க) மனைவியில்லாத வீடு பாழே யாகும். திருநீற்றினாலே நெற்றியும், நெய்யினாலே உணவும், நதியினாலே ஊரும், துணைவராலே உடம்பும், மனைவியினாலே வீடும் சிறப்படையும் எ-ம். (24) வரவறிந்து செலவிட வேண்டும் 25. ஆன முதலில் அதிகஞ் செலவானான் மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. பதவுரை: ஆன முதலில் செலவு அதிகம் ஆனால் - தனக்குக் கிடைத்த முதற்பொருளுக்குச் செலவு மிகுதி செய்யலானவன், மானம் அழிந்து - பெருமை கெட்டு, மதி கெட்டு - அறிவு இழந்து, போனதிசை எல்லார்க்கும் கள்ளன் ஆய் - தான் ஓடிப்போன திசையினும் எல்லார்க்கும் திருடனாகி, ஏழ் பிறப்பும் தீயன் ஆய் - எழுவகைப் பிறப்புக் களினும் பாவம் உடையவனாகி, நல்லார்க்கும் பொல்லன் ஆம் - (தன்னிடத்து அன்புவைத்த) நன்மக்களுக்கும் பொல்லாதவ னாவான்; நாடு - (இதனை) ஆராய்ந்து அறிவாயாக. வரவுக்கு மிகுதியாகச் செலவு செய்பவன் பழிபாவங்களை அடைவான். ஆதலின், வரவுக்குத் தக்க செலவு செய்ய வேண்டும் எ-ம். (25) பசி வந்திடப் பத்தும் பறக்கும் 26. மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசிவந் திடப்பறந்து போம். பதவுரை: பசி வந்திட - பசிநோய் வந்தால், மானம் - மானமும், குலம் - குடிப்பிறப்பும், கல்வி - கல்வியும், வண்மை - ஈகையும், அறிவுடைமை - அறிவுடைமையும், தானம் - தானமும், தவம் - தவமும், உயர்ச்சி - உயர்வும், தாளாண்மை - தொழின் முயற்சியும், தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் - தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லையுடைய மங்கையர்மேல் ஆசை வைத்தலும் ஆகிய, பத்தும் பறந்துபோம் - இப் பத்தும் விட்டோடிப் போம். மான முதலிய எல்லா நலங்களையும் கெடுத்தலி னாலே பசி நோயினுங் கொடியது பிறிதில்லை, எ ம். தானம் தக்கார்க்கு நீருடன் அளிப்பது; பதவியும் ஆம். (26) எல்லாம் இறை செயல் 27. ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல். பதவுரை: ஒன்றை நினைக்கின் - ஒரு பொருளைப் பெற நினைத்தால், அது ஒழிந்திட்டு ஒன்றாகும் - அப்பொருள் கிடையாமல் வேறொரு பொருள் கிடைத்தாலும் கிடைக்கும்; அன்றி அதுவரினும் வந்து எய்தும் - அப்படி யல்லாமல் அப்பொருளே வந்து கிடைத்தாலும் கிடைக்கும்; ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் - (இன்னும்) ஒரு பொருளை நினையாதிருக்க முன்னே அது தானே வந்து நின்றாலும் நிற்கும்; எனை ஆளும் ஈசன் செயல் - (இவை களெல்லாம்) என்னை ஆண்டருளும் கடவுளுடைய செய்கை களாகும். இருவினைகளுக் கீடாக இன்ப துன்பங்களை ஊட்டும் கடவுளுடைய கருத்தின்படியே யன்றி, உயிர்களுடைய கருத்தின்படி ஒன்றும் நடவாது எ-ம். (27) மனவமைதி வேண்டும் 28. உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் எண்பது கோடிநினைந்து எண்ணுவன - கண்புதைந்த மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச் சாந்துணையுஞ் சஞ்சலமே தான். பதவுரை: உண்பது நாழி - உண்பது ஒரு நாழியரிசி யன்னமேயாகும்; உடுப்பது நான்கு முழம்- உடுப்பது நான்கு முழ உடையேயாகும்; (இப்படியாகவும்) நினைந்து எண்ணுவன எண்பது கோடி - நினைத்து எண்ணும் காரியங்களோ எண்பது கோடியாகின்றன; (ஆதலினால்) கண் புதைந்த - அகக்கண் குருடாயிருக்கிற, மாந்தர் குடி வாழ்க்கை - மக்களின் குடிவாழ்க்கையானது, மண்ணின் கலம்போல - மட்கலம்போல, சாம் துணையும் - இறக்குமளவும், சஞ்சலமே - (அவர்க்குத்) துன்பமாகவே இருக்கிறது. உள்ளதே போதும் என மனம் அமைந் திராதவர்கள் இறக்கும் வரையில் சஞ்சலமே அடைவார்கள். எ-ம். (28) கொடையாளருக்கு எல்லாரும் உறவினர் 29. மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம் கற்றா தரல்போற் கரவாது அளிப்பரேல் உற்றார் உலகத் தவர். பதவுரை: மரம் பழுத்தால் - மரம் பழுத் திருந்தால், வா என்று வெளவாலைக் கூவி இரந்து அழைப்பார் - (இப்பழத்தைத் தின்னுதற்கு) வா என்று வெளவாலைக் கூவி வேண்டி அழைப்பவர், அங்கு யாவரும் இல்லை -அம் மரத்தருகில் ஒருவரும் இல்லை; கன்று ஆ அமுதம் சுரந்து தரல்போல் - கன்றையுடைய பசுவானது பாலைச் சுரந்து கொடுத்தல்போல, கரவாது அளிப்பரேல் - ஒளிக்காமற் கொடுப்பாராயின், உலகத்தவர் உற்றார்- உலகத்தார் (அவ் வெளவால் போலத் தாமே வந்து) உறவினராவார். கொடையாளர்க்கு எல்லாரும் தாமே உறவினராவார். எ-ம். (29) விதியின் தன்மை 30. தாந்தாமுன் செய்தவினை தாமே யநுபவிப்பார் பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே ஒறுத்தாரை யென்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா வெறுத்தாலும் போமோ விதி. பதவுரை: வேந்தே - அரசனே, தாம் தாம் முன் செய்த வினை - தாம் தாம் முற்பிறப்பிலே செய்த நல்வினை தீவினைகளை, பூந்தாமரையோன் பொறி வழியே - தாமரை மலரில் இருக்கின்ற பிரமன் விதித்தபடியே, தாமே அநுபவிப்பார் - தாமே அநுபவிப்பார்கள்; ஒறுத்தாரை என் செயலாம் - (தீவினையினாலே தூண்டப்பட்டுத்)தீங்கு செய்தவரை நாம் யாது செய்யலாம்; ஊர் எல்லாருந் திரண்டு வெறுத்தாலும் விதி போமோ - ஊரிலுள்ளார் எல்லாம் ஒன்றா வெறுத்தாலும் விதி போகுமா (போகாது). தமக்கு ஒருவன் துன்பஞ் செய்யின், அது தாம் முன் செய்த தீவினைக்கீடாகக் கடவுளாலே தமக்குக் கிடைத்ததென்று அமைவதே அறிவு எ-ம். (30) நல்லன நான்கு 31. இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று சாலும் ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத் தாரத்தின் நன்று தனி. பதவுரை: இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று - இலக்கண வழுக்களையுடைய செய்யுளினும் (அஃதில்லாத) வழக்கு நல்லது, உயர்குலத்தின் சாலும் ஒழுக்கம் நன்று - உயர் குலத்தினும் (அஃதில்லாத) மாட்சிமைப்பட்ட ஒழுக்கம் நல்லது; வழுக்கு உடைய வீரத்தின் விடா நோய் நன்று - தவறுதலையுடைய வீரத்தினும் தீராப்பிணி நல்லது; பழிக்கு அஞ்சாத் தாரத்தின் தனி நன்று - பழிச் சொல்லுக்கு அஞ்சாத மனைவியோடு கூடி வாழ்தலினும் தனியே இருத்தல் நல்லது. இலக்கணப் பிழையுடைய பாட்டும், நல்லொழுக்க மில்லாத உயர்குலமும், தவறுதலடை யும் வீரமும், கற்பில்லாத மனைவியோடு கூடிய இல்வாழ்க்கை யும், தீரா வசையை விளைவிக்கும் எ-ம். இசை - உலக வழக்காகிய சொற்றொடர். (31) செல்வநிலையாமையறிந்து உதவுக 32. ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆஞ்செல்வம் மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடுந் தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக உண்ணீர்மை வீறும் உயர்ந்து. பதவுரை: மா நிலத்தீர் - பெரிய பூமியிலுள்ளவர் களே, ஆறு இடும் மேடும் மடுவும் போல் - ஆற்று வெள்ளத்தினால் உண்டாக்கப் படும் மேடும் பள்ளமும் போல, செல்வம் ஏறிடும் மாறிடும் - செல்வம் வளர்வதும் தேய்வதுமாய் இருக்கும்; (ஆதலினால்) சோறு இடும் - (இரப்பவருக்கு உண்ண) அன்னத்தை இடுங்கள்; தண்ணீரும் வாரும் - (பருகுதற்கு நல்ல) தண்ணீரையும் வாருங்கள்; தருமமே சார்பு ஆக - (இப்படிச் செய்து வருவீர் களானால்) இந்தத் தருமமே துணையாக, உள்நீர்மை உயர்ந்து வீறும் - உள்ளத்திலே தூயதன்மை ஓங்கி விளங்கும். ஆம்: அசை. நிலையில்லாத செல்வம் உள்ளபொழுதே இரப்பவர்களுக்குச் சோறும் தண்ணீரும் அளித் தால் மனம் தூய்மையுற்று விளங்கும் எ-ம். (32) வன்சொல்லும் இன்சொல்லும் 33. வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில் பட்டுருவுங் கோல்பஞ்சில் பாயாது - bநட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும். பதவுரை: வேழத்தில்பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது - (வலிய) யானையின் மேலே பட்டுருவும் அம்பானது (மெல்லிய) பஞ்சின்மேலே பாயாது; நெடு இருப்புப்பாறைக்கு நெக்கு விடாப்பாறை - நெடுமையாகிய இருப்புப் பாரைக்குப் பிளவாத கருங்கற் பாறையானது, பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும் - பச்சை மரத்தின் வேருக்குப் பிளந்துபோம்; (அவ்வாறே) வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் - வன்சொற்கள் இன்சொற்களை வெல்ல மாட்டா வாகும்; (இன் சொற்களே வெல்லும்) வன்சொல் தோற்கும்; இன்சொல் வெல்லும் எ-ம் (33) பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை 34. கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின் எல்லாருஞ் சென்றங்கு எதிர்கொள்வர் - இல்லானை இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றெடுத்த தாய்வேண்டாள் செல்லாது அவன்வாயிற் சொல். பதவுரை: கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின் - (ஒருவன்) படியாதவனே யாயினும் (அவன்) கையிலே பொருள் மாத்திரம் இருந்தால், எல்லோரும் சென்று எதிர்கொள்வர் - (அவனை) யாவரும் போய் எதிர்கொண்டு உபசரிப்பர்; இல்லானை இல்லாளும் வேண்டாள்- (படித்தவனே யாயினும் பொருளே) இல்லாதவனை (அவன்) மனைவியும் விரும்பாள்; ஈன்று எடுத்த தாய் வேண்டாள் - (அவனைப்) பெற்று வளர்த்த அன்னையும் விரும்பாள்; அவன் வாயில் சொல் செல்லாது - அவன் வாயிற் பிறக்குஞ் சொல்லானது பயன்படாது. அங்கு, மற்று: அசை. கல்லாதவனே யாயினும் பொருளுடையவனை எல்லாரும் மதிப்பர்; கற்றவனே யாயினும் பொரு ளில்லாதவனை ஒருவரும் மதியார் எ-ம். (34) உரைப்பினும் பேதை உணரான் 35. பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும் ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு உரைத்தாலுந் தோன்றா துணர்வு. பதவுரை: பூவாதே காய்க்கும் மரமும் உள - பூவாமலே காய்க்கின்ற மரங்களும் உண்டு; (அதுபோல) மக்களுளும் ஏவாதே நின்று தாம் உணர்வார் உளர் - மனிதர்களுள்ளும் ஏவாமலே இருந்து தாமே அறிந்து செய்ய வல்லவரும் உண்டு; தூவா விரைத்தாலும் நன்று ஆகா வித்து என - தூவி விரைத்தாலும் முளைத்துப் பயன் படாத விதைபோல, பேதைக்கு உரைத்தாலும் உணர்வு தோன்றாது - மூடனுக்கு (எடுத்து விளங்கச்) சொன்னாலும் (அதனை அறியும்) அறிவு (அவனிடத்து ) உண்டாகாது. குறிப்பறிந்து செய்வாரே அறிவுடையோர்; அறிவிக்கவும் அறிந்து செய்யாதவர் மூடர் எ-ம். (35) பிறர்மனை விரும்பாமை 36. நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில் கொண்ட கருவளிக்குங் கொள்கைபோல் - ஒண்டொடீ போதந் தனங்கல்வி பொன்றவருங் காலம்அயல் மாதர்மேல் வைப்பார் மனம். பதவுரை: ஒள் தொடீ - ஒள்ளிய வளையலை அணிந்தவளே, நண்டு சிப்பி வேய் கதலி - நண்டும் சிப்பியும் மூங்கிலும் வாழையும்; நாசம் உறும் காலத்தில் - தாம் அழிவை அடையுங் காலத்திலே; கொண்ட கரு அளிக்கும் கொள்கைபோல் - (முறையே தாம்) கொண்ட (குஞ்சும் முத்தும் அரிசியும் காய்க்குலையும் ஆகிய) கருக்களை ஈனுந் தன்மைபோல, (மனிதர்கள்) போதம் தனம் கல்வி பொன்றவரும் காலம் - ஞானமும் செல்வமும் வித்தையும் அழிய வருங்காலத்தில், அயல் மாதர்மேல் மனம் வைப்பார்- பிற மகளிர் மேல் மனம் வைப்பார்கள். ஒருவன் மனைவியையன்றிப் பிற மகளிரை இச்சிக்கின், அஃது அவனிடத்துள்ள ஞானம் செல்வம் கல்வி என்னும் மூன்றுங் கெடுதற்கு அறிகுறியாகும் எ-ம். (36) வீடடைவார்க்கு விதியில்லை 37. வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக் கண்ணுறுவது அல்லால் கவலைபடேல் நெஞ்சேமெய் விண்ணுறுவார்க் கில்லை விதி. பதவுரை: வினைப்பயனை வெல்வதற்கு - இருவினைப் பயனை வெல்வதற்கு (உபாயம்), வேதமுதலாம் அனைத்து ஆயநூல் அகத்தும் இல்லை - வேத முதலாகிய எல்லா நூல்களையும் கற்பதன் கண்ணும் இல்லை, (எனினும்) நெஞ்சே - மனமே, கவலைபடேல் கவலையுறாதே, மெய் விண் உறுவார்க்கு - மெய்யாகிய வீட்டு நெறியில் நிற்பவர்க்கு, நினைப்பது எனக் கண்உறுவது அல்லால் - (அவர்) நினைப்பதுபோலத் தோன்றுவது அல்லாமல், விதி இல்லை - ஊழ் இல்லையாம். முத்தி நெறியாகிய தியான சமாதிகளினாலன்றி நூல்களைக் கற்றலினால் வினையைக் கடக்க வொண்ணாது எ-ம். விண் - பரவெளியும் ஆம்; இப்பாட்டிற்கு வேறு வகையாகப் பொருள் கூறுவாரும் உளர். (37) இறைவனுடன் இரண்டற்று நில் 38. நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும் அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை தானதாந் தத்துவமாஞ் சம்பறுத்தார் யாக்கைக்குப் போனவா தேடும் பொருள். பதவுரை: நன்று என்றும் - (இது) நல்லது என்றும், தீது என்றும் - (இது) தீயது என்றும், நான் என்றும் - (இது செய்தவன்) நான் என்றும், தான் என்றும் - (இது செய்தவன்) அவன் என்றும், அன்று என்றும் - (இது) அன்று என்றும், ஆம் என்றும் - (இது) ஆகும் என்றும், ஆகாதே நின்ற நிலை - பேதஞ் செய்யாமல் (இரண்டறக் கலந்து)நின்ற நிலையே, தான் அது ஆம் தத்துவம் ஆம் - ஆன்மாவாகிய தான் (பதியாகிய) அதுவாகுகின்ற உண்மை நிலையாகும்; தேடும் பொருள் - தன்னின் வேறாக மெய்ப்பொருளாகிய கடவுளைத் தேடுவது, சம்பு அறுத்தார் யாக்கைக்குப் போனவா - சம்பை அறுத்தவர் (அதனைக் கட்டுதற்கு அதுவே அமையுமென்று அறியாமல்) கயிறு தேடிப் போனது போலும். உயிரினுள்ளே கடவுளைக் கண்டு அதனோடு பேதமின்றிக் கலந்து நிற்கும் நிலையே உண்மை நிலை எ-ம். சம்பு - ஓர் வகைப் புல். (38) முப்பது ஆண்டிற்குள் முதல்வனை யறி 39. முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத் தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்புங் கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள் முலையளவே ஆகுமாம் மூப்பு. பதவுரை: முப்பது ஆம் ஆண்டு அளவில் - முப்பது வயதினளவிலே, மூன்று அற்று - முக்குற்றமும் ஒழியப்பெற்று, ஒரு பொருளை - கேவலப்பொருளாகிய கடவுளை, தப்பாமல் தன்னுள் பெறான் ஆயின் - (ஒருவன்) தவறாமல் தன்னுள்ளே (அனுபவ உணர்வால்) அடையா னாயின், காரிகையார் தங்கள் மூப்பு முலை அளவே ஆகுமாம் - அழகிய மாதர்கள் முதுமையில் (பதியுடன் கூடி இன்பம் நுகர்தலின்றி) முலையினை யுடையராதல் மாத்திரமே போல, செப்பும் கலை அளவே ஆகும் - (அவன் முதுமையில் பதியுடன் கூடி இன்பம் நுகரப் பெறாமல்) கற்கும் கல்வியை உடையவனாதல் மாத்திரமே ஆவன். மூப்பு வருவதற்குள்ளே முக்குற்றமற்று மெய்ப் பொருளை யடைந்தின்புற முயலல் வேண்டும் எ-ம். முக்குற்றம் காம வெகுளி மயக்கங்கள். ஆணவம் கன்மம் மாயை ஆகிய பாசம் மூன்றும் என்னலும் ஆம். இப்பாட்டிற்கு யாம் கூறி பொருளே பொருத்தமுடைத்தாதலை ஓர்ந்துணர்க. (39) ஒத்த கருத்தமை ஒண்தமிழ் நூல்கள் 40. தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர். பதவுரை: தேவர் குறளும் - திருவள்ளுவ நாயனாருடைய திருக்குறளும், திருநான்மறை முடிவும் - சிறப்புப் பொருந்திய நான்கு வேதங்களின் முடிவாகிய உபநிடதங்களும், மூவர் தமிழும் (திருஞான சம்பந்தமூர்த்திநாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் சமயகுரவர்) மூவர்களுடைய (தேவாரமாகிய) தமிழ் வேதமும், முனிமொழியும் - வாதவூர் முனிவராகிய மாணிக்கவாசகர் மொழிந்தருளிய, கோவை திருவாசகமும் - திருக்கோவையார் திருவாசகங் களும், திருமூலர் சொல்லும் - திருமூல நாயனாருடைய திருமந்திரமும், ஒரு வாசகம் என்று உணர் - ஒரு பொருளையே குறிப்பனவென்று அறிவாயாக. திருக்குறள் முதலிய இவையெல்லாம் பொருண் முடிவு வேறுபடாத மெய்ந்நூல்கள் எ-ம். ‘முனிமொழியும்’ என்பதற்கு ‘வியாச முனிவருடைய வேதாந்த சூத்திரம்’ என்றும் பொருள் கூறுவர். (40) நல்வழி மூலமும் உரையும் முற்றிற்று. மூதுரை முகவுரை மூதுரை என்பது ஒளவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய எவ்வமறுக்குஞ் செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப் பாக்களும் ஒளவையார் இயற்றியன வென்ப. கடைச்சங்க நாளிலே புலமையிற் சிறந்து விளங்கிய மகளிருள் ஒளவையார் என்னும் பெயரினரும் ஒருவர். புறநானூறு என்னும் அரிய தொகை நூலுள் அவரியற்றிய முப்பத்து மூன்று செய்யுள்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு என்னும் தொகைகளிலும் அவருடைய செய்யுள்கள் பல உள்ளன. இதினின்றே அவருடைய பெருமையை அறியலாகும். தொகை நூல்களிலுள்ள அவருடைய பாட்டுக்கள் மிக்க அருமை பெருமை வாய்ந்தவை. கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய அதியமான் அஞ்சி அவரைப் பெரிதும் ஆதரித்து வந்தான். அவன் ஒரு மலை முழைஞ்சினுள்ளே அருமை யாகப் பெற்ற அமிழ்தமயமான நெல்லிக்கனி யொன்றை அவருக்கு அளிப்ப, அவர் அதனையுண்டு நெடிது உயிர் வாழ்ந்தனரென அவரும் பிறரும் பாடிய சங்கப் பாட்டுக்கள் தெரிவிக்கின்றன. அவர் அதியமா னிடத்திருந்து தொண்டைமான் இளந்திரையன் பக்கல் தூதாகச் சென்று, தொண்டைமானின் படைக் கலக் கொட்டிலைப் பார்த்துப் பாடிய பாட்டும், அதியமான் உயிர் நீத்தபின் கையற்றுப் பாடிய பாட்டுக்களும் அவருடைய செய்யுளியற்றுந் திறமையையும், அஞ்சாமை, நன்றியறிவு, அன்பு, இரக்கம் முதலிய உயர் குணங்களையும் நன்கு புலப் படுத்தும். தமிழ் நாட்டிலே இளைஞரும், முதியவரும் ஆகிய ஆடவர் பெண்டிர்களுள் கற்றவரும் கல்லாதவரும் ஆகிய யாவரும் ஒளவையார் என்னும் பெயரை அறிந்திருப்பதற்குக் காரணம் அவரி யற்றிய ஆத்திசூடி முதலிய நீதி நூல்களே யாகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் ஒத்துக் கொள்ளப்பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சியுடையா ரெவரும் ஒளவையாரின் நீதிநூல் களுள் ஒன்றையாவது படித்தேயிருப்பர். பல பெரிய நூல்களின் சார மாக வுள்ள நீதிகளும், கருத்துக்களும் இந் நீதி நூல்களில் தெளிவுற அமைந்து விளங்குகின்றன. நான்மணிக் கடிகையிலுள்ள “கல்லா வொருவர்க்கு” என்னுஞ் செய்யுளோடு, மூதுரையிலுள்ள “கல்லாத மாந்தர்க்கு” என்னுஞ் செய்யுள் சொல்லானும் பொருளானும் பெரிது ஒற்றுமையுறுகின்றது. வெண்பாவின் இடையிலும் மூச்சிரடி வருமென்பதற்கு இதிலுள்ள “அட்டாலும்” என்னுஞ் செய்யுளைத் தொல்காப்பிய உரை யாளர்கள் எடுத்துக் காட்டி இருப்பது இந்நூலின் பெருமைக்குச் சான்றாகும். இந்நூல் மூதுரை யென்னும் பெயரானே தொல்காப்பியவுரை முதலியவற்றில் வழங்கியுள்ளது. ‘வாக்குண்டாம்’ என்னும் பெயரானும் பிற்காலத்தாரால் வழங்கப் பெறுகின்றது. இங்ஙனம், ந. மு. வேங்கடசாமி நாட்டார். மூதுரை மூலமும் உரையும் கடவுள் வாழ்த்து வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு. (பதவுரை.) துப்பு ஆர்-பவளம் போலும் (சிவப் பாகிய), திருமேனி-திருமேனியையும், தும்பிக்கையான்-துதிக்கையையும் உடைய விநாயகக் கடவுளின், பாதம்-திருவடிகளை, பூக்கொண்டு-(அருச்சிக்க) மலர் எடுத்துக் கொண்டு, தப்பாமல்-நாடோறும் தவறாமல், சார்வார் தமக்கு-அடைந்து பூசை செய்வோருக்கு, வாக்கு உண்டாம்-சொல்வளம் உண்டாகும்; நல்ல மனம் உண்டாம்-நல்ல சிந்தனை உண்டாகும்; மாமலராள்-பெருமை பொருந்திய செந்தாமரைப் பூவில் இருக்கும் இலக்குமியின், நோக்கு உண்டாம்-அருட் பார்வை உண்டாகும்; மேனி-அவர் உடம்பு, நுடங்காது-(பிணிகளால்) வாட்ட முறாது. விநாயகக் கடவுளின் திருவடிகளைப் பூசிப் பவர்க்குக் கல்வியும், செல்வமும், நலமும் உண்டாகும். நூல் பயன் கருதாது அறஞ்செய்க 1. நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி என்று தருங்கொ லெனவேண்டா-நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான்தருத லால். (பதவுரை.) நின்று-நிலைபெற்று, தளரா-சோராமல், வளர்-வளர்கின்ற, தெங்கு-தென்னை யானது, தாள் உண்ட நீரை-தன் அடியால் உண்ட தண்ணீரை, தலையாலே-தன் முடியாலே, தான் தருதலால்-(சுவையுள்ள இளநீராக்கித்) தானே தருதலால், ஒருவற்கு - (நற்குணமுடைய) ஒருவனுக்கு, நன்றி செய்தக்கால்-உதவி செய்தால், அந்நன்றி-அவ்வுதவியை, என்று தருங்கொல்-அவன் எப் பொழுது செய்வானோ, என வேண்டா-என்று ஐயுற வேண்டுவதில்லை. நற்குணமுடையவனுக்கு உதவி செய்தால், அவனுஞ் சிறந்த உதவியை வணக்கத்தோடு விரைந்து செய்வான் என்பதாம். (1) நல்லவர்க்குச் செய்த உதவி 2. நல்லா ரொருவர்க்குச் செய்த உபகாரம் கல்மே லெழுத்துப்போற் காணுமே-அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர்மே லெழுத்திற்கு நேர். (ப-ரை) நல்லார் ஒருவர்க்கு-நற்குணமுடைய ஒருவர்க்கு, செய்த உபகாரம்-செய்த உதவியானது, கல் மேல் எழுத்துப்போல்-கருங்கல்லின்மேல் வெட்டப்பட்ட எழுத்தைப்போல, காணும்-அழியாது விளங்கும்; அல்லாத-நல்லவரல்லாத, ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு-அன்பில்லாத மன முடையார்க்கு, ஈந்த உபகாரம்-செய்த உதவி யானது, நீர்மேல் எழுத்திற்கு-நீரின்மேல் எழுதப் பட்ட எழுத்திற்கு, நேர்-ஒப்பாக(அழிந்துவிடும்). நல்லவருக்குச் செய்த உபகாரம் என்றும் நிலை பெற்று விளங்கும், தீயவருக்குச் செய்த உபகாரம் செய்த அப்பொழுதே அழிந்துவிடும் எ-ம். (2) இளமையில் வறுமை 3. இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால் இன்னா அளவி லினியவும்-இன்னாத நாளல்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே ஆளில்லா மங்கைக் கழகு. (ப-ரை.) இளமை-(இன்பத்தைத் தரும்) இளமைப் பருவத்தில், வறுமை வந்து எய்தியக்கால்-வறுமை வந்து அடைந்தால், இன்னா-அது துன்பத்தைத் தருவதாகும். இன்னா அளவில்-துன்பத்தைத் தரும் முதுமைப் பருவத்தில், இனியவும் - இனியனவாகிய பொருள்களும், இன்னாத - துன்பத்தைத் தருவனவாம்; (அவை) நாள் அல்லா நாள்-(சூடுதற்குரிய) காலமல்லாத காலத்தில், பூத்த நல்மலரும்-மலர்ந்த நல்ல மலரையும், ஆள் இல்லா மங்கைக்கு அழகும்-(அனுபவித்தற்குக்) கணவன் இல்லாத மங்கையின் அழகையும், போலும்-ஒக்கும். ஏ : அசை. அழகும் என்பதில் உம்மை தொக்கது. வறுமைக் காலத்து இளமையும், முதுமைக் காலத்துச் செல்வமும் துன்பம் விளைவிப்பனஎ-ம். (3) மேன்மக்கள் இயல்பு 4. அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு சுட்டாலும் வெண்மை தரும். (ப-ரை.) பால்-பாலினை, அட்டாலும்-காய்ச்சினாலும், சுவையிற் குன்றாது-அஃது இனிய சுவையிற் குறையாது; சங்கு-சங்கினை, சுட்டாலும்-சுட்டு நீறாக்கினாலும், வெண்மை தரும்-அது வெண்ணிறத்தையே கொடுக்கும் (அவைபோல), மேன் மக்கள்-மேலோர், கெட்டாலும்-வறுமை யுற்றாலும், மேன் மக்களே-மேலோராகவே விளங்குவர்; நண்பு அல்லார்-நட்பின் குணமில்லாத கீழோர், அளவளாய் நட்டாலும்-கலந்து நட்புச் செய்தாலும், நண்பு அல்லர்-நண்பராகார். பால் சங்கு என்னும் இரண்டும் மேன் மக்களுக்கு உவமைகளாக வந்தன. மேலோர் வறுமையுற்றபொழுது முன்னையினும் சிறந்து விளங்குவரென்பது உவமைகளாற் புலனாகின்றது. ஏ : தேற்றப் பொருட்டு. மேலோர் வறுமையுற்றாலும் மேலோரே; கீழோர் கலந்து பழகினாலும் நண்பராகார் எ-ம். (4) காலமறிந்து நடத்தல் 5. அடுத்து முயன்றாலு மாகுநா ளன்றி எடுத்த கருமங்க ளாகா-தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம் பருவத்தா லன்றிப் பழா. (ப-ரை.) தொடுத்த-கிளைத்த, உருவத்தால் நீண்ட - வடிவத்தால் நீண்ட, உயர் மரங்கள் எல்லாம்-உயர்ந்த மரங்களெல்லாம், பருவத்தால் அன்றி-பழுக்குங்காலம் வந்தாலல்லாமல், பழா-பழுக்கமாட்டாவாம்; (அதுபோல) அடுத்து முயன்றாலும்-அடுத்தடுத்து முயற்சி செய்தாலும், ஆகுநாள் அன்றி-முடியுங்காலம் வந்தால் அல்லாமல், எடுத்த கருமங்கள்-மேற்கொண்ட காரியங்கள்; ஆகா-முடியாவாம். எந்தச் செயலும் முடியுங் காலத்திலேதான் முடியும்; ஆகையால் அக்காலம் அறிந்து தொடங்க வேண்டும் எ-ம். (5) மானம் இழந்து வாழாமை 6. உற்ற இடத்தில் உயிர்வழங்குந் தன்மையோர் பற்றலரைக் கண்டாற் பணிவரோ-கற்றூண் பிளந்திறுவ தல்லால் பெரும்பாரந் தாங்கின் தளர்ந்து வளையுமோ தான். (ப-ரை.) கல் தூண்-கருங்கற் கம்பமானது, பெரும்பாரம் தாங்கின்-பெரிய பாரத்தைச் சுமந்தால், பிளந்து இறுவது அல்லால்-பிளந்து முரிவதல்லாமல், தான் தளர்ந்து வளையுமோ-தான் தளர்வுற்று வளையுமோ (வளையாது; அதுபோல), உற்ற இடத்தில்-மானக்கேடு உண்டானவிடத்தில், உயிர் வழங்கும் தன்மையோர்-தம் உயிரைவிடும் குணமுடையோர், பற்றலரை-பகைவரை, கண்டால் - பார்த்தால், பணிவரோ-வணங்குவரோ? (வணங்கார்). ஓ இரண்டும் எதிர்மறை. மானமுடையவர் ஆபத்து வந்தபோது உயிரை விடினும் விடுவரேயன்றி மானத்தை விடார் எ-ம். (6) அறிவு செல்வம் குணம் 7. நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு-மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். (ப-ரை.) நீர் ஆம்பல்-நீரிலுள்ள அல்லியானது, நீர் அளவே ஆகும்-நீரினது உயரத்தின் அளவாகவே இருக்கும். (அதுபோல) நுண் அறிவு-கூரிய அறிவானது, தான் கற்ற-தான் படித்த, நூல் அளவே ஆகும்-நூல்களின் அளவாகவே இருக்கும்; தான் பெற்ற செல்வம்-தான் அடைந்த செல்வ மானது, மேலை-முற்பிறப்பிற் செய்த, தவத்து அளவே ஆகும்-தவத்தின் அளவாகவே இருக்கும் குணம்-குணமானது, குலத்து அளவே ஆகும் - (தான் பிறந்த) குடியின் அளவாகவே இருக்கும். ஆம் மூன்றும் அசைநிலை. ஒருவருக்கு அறிவு நூலினளவாகவும், செல்வம் தவத்தினளவாகவும், குணம் குலத்தினள வாகவும் இருக்கும் எ-ம். (7) நல்லார் தொடர்பின் நலம் 8. நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொற் கேட்பதுவும் நன்றேஎ-நல்லார் குணங்க ளுரைப்பதுவும் நன்றே அவரோ டிணங்கி யிருப்பதுவும் நன்று. (ப-ரை.) நல்லாரை-நற்குணமுடையோரை, காண்பதுவும்-பார்ப்பதும், நன்றே-நல்லதே; நல்லார்-நல்லவருடைய, நலம் மிக்க-பயன் நிறைந்த, சொல்-சொல்லை, கேட்பதுவும்-கேட்டலும், நன்றே-நல்லதே; நல்லார்-நல்ல வருடைய, குணங்கள்-நற்குணங்களை, உரைப்பது வும்-பேசுதலும், நன்றே-நல்லதே, அவரோடு-அந் நல்லவருடன், இணங்கி இருப்பதுவும்-கூடியிருத்தலும், நன்று-நல்லதே. ஏ மூன்றும் தேற்றம். நல்லவரைக் காணினும், அவர் சொல்லைக் கேட்பினும், அவர் குணங்களைப் பேசினும், அவரோடு கூடியிருப்பினும் நல்லறிவும் நல் லொழுக்கமும் உண்டாகும் எ-ம். (8) தீயார் தொடர்பின் தீமை 9. தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற தீயார்சொற் கேட்பதுவுந் தீதேஎ-தீயார் குணங்க ளுரைப்பதுவுந் தீதே அவரோ டிணங்கி யிருப்பதுவுந் தீது. (ப-ரை.) தீயாரை-தீக்குணம் உடையவரை, காண்பதுவும் - பார்ப்பதும், தீதே-தீயதே; தீயார்-தீயவருடைய, திருஅற்ற-பயன் இல்லாத, சொல்-சொல்லை, கேட்பதுவும்-கேட்டலும், தீதே-தீயதே; தீயார்-தீயவருடைய, குணங்கள் - தீய குணங்களை, உரைப்பதுவும்-பேசுதலும், தீதே-தீயதே, அவரோடு-அத் தீயவருடன், இணங்கி இருப்பதுவும்-கூடியிருத்தலும், தீதே-தீயதே. ஏ மூன்றும் தேற்றம். தீயாரைக் காணினும், அவர் சொல்லைக் கேட்பினும் அவர் குணங்களைப் பேசினும், அவரோடு கூடியிருப்பினும் தீயறிவும் தீயொழுக்க மும் உண்டாகும் எ-ம். (9) நல்லாரால் எல்லார்க்கும் நலம் 10. நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில் நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட் டெல்லார்க்கும் பெய்யு மழை. (ப-ரை.) நெல்லுக்கு-நெற்பயிருக்கு, இறைத்த நீர் இறைக்கப்பட்ட தண்ணீரானது, வாய்க்கால் வழி ஓடி - கால்வாய் வழியாகச் சென்று, ஆங்கு-அவ்விடத்திலுள்ள, புல்லுக்கும் பொசியும்-புல்லுகளுக்கும் கசிந்தூறும்; (அதுபோல), தொல் உலகில் - பழைமையாகிய இவ்வுலகத்தில், நல்லார் ஒருவர் உளரேல்-நல்லவர் ஒருவர் இருப்பா ராயின், அவர் பொருட்டு-அவர் நிமித்தமாக, எல்லார்க்கும் மழை பெய்யும் - அனைவருக்கும் மழை பெய்யா நிற்கும். ஏ, ஆம் இரண்டும் அசை. நல்லோரைச் சேர்ந்த எல்லோரும் பயனடைவர் எ-ம். (10) துணை வலிமை வேண்டும் 11. பண்டு முளைப்ப தரிசியே யானாலும் விண்டுமி போனால் முளையாதாம்- கொண்டபேர் ஆற்ற லுடையார்க்கும் ஆகா தளவின்றி ஏற்ற கருமஞ் செயல். (ப-ரை.) பண்டு முளைப்பது-(உமி நீங்குதற்கு) முன்னே முளைப்பது, அரிசியே ஆனாலும்-அரிசியே யாயினும், உமி விண்டு போனால்-உமி நீங்கிப்போனால், முளையாது-(அவ்வரிசி) முளை யாது; (அதுபோல), கொண்ட-பெற்ற, பேர் ஆற்றல் உடையார்க்கும், பெரிய வல்லமையை உடைய வர்க்கும், அளவு இன்றி-துணைவலி யில்லாமல், ஏற்ற கருமம்-எடுத்துக்கொண்ட செயலை, செயல் ஆகாது-செய்து முடித்தல் இயலாது. மிக்க வல்லமை யுடையவர்க்கும் ஒரு செயலைச் செய்து முடிக்கத் துணைவலி வேண்டும் எ-ம். (11) உருவமும் குணமும் 12. மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம் உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா-கடல்பெரிது மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல் உண்ணீரு மாகி விடும். (ப-ரை.) *தாழை மடல் பெரிது-தாழம்பூ இதழ்களினாலே பெரிதாயிருக்கின்றது, மகிழ் கந்தம் இனிது-மகிழம்பூ (இதழ்களினாலே சிறிதாயினும்) மணத்திலே (தாழம்பூவினும்) இனிதாயிருக்கின்றது, கடல் பெரிது-சமுத்திரம் பெரிதாயிருக்கிறது, மண் நீரும் ஆகாது-ஆயினும் அதிலுள்ள நீர் (உடம்பழுக்கைக்) கழுவுவதற்குத் தக்க நீருமாகாது; அதன் அருகு சிற்றூறல்-அதன் பக்கத்தே சிறிய மணற்குழியிற் சுரக்கும் ஊற்றுநீர், உண் நீரும் ஆகும்-குடிக்கத்தக்க நீருமாகும்; (ஆதலினால்) உடல் சிறியர் என்று இருக்க வேண்டா-(ஒருவரை) உருவத்தினாலே சிறியவ ரென்று (மதியாமல்) இருக்கவேண்டா. மண்ணுதல்-கழுவுதல், ஏ : அசை. உருவத்தாற் பெரியவர் குணத்தாற் சிறிய வராதலும் உருவத்தாற் சிறியவர் குணத்தாற் பெரியவராதலும் உண்டு; எ-ம். (12) அறிவற்றவனின் இழிவு 13. கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்-சவைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டா தவன்நல் மரம். (ப-ரை.) கவை ஆகி-கிளைகளை உடையன வாகியும், கொம்பு ஆகி-கொம்புகளை உடையன வாகியும், காட்டு அகத்து நிற்கும்-காட்டினுள்ளே நிற்கின்ற, அவை-அந்த மரங்கள், நல்ல மரங்கள் அல்ல-நல்ல மரங்கள் ஆகா; சவை நடுவே-கற்றோர் சபையின் நடுவே, நீட்டு ஓலை-(ஒருவர்) நீட்டிய ஓலையை, வாசியா நின்றான்-படிக்கமாட்டாமல் நின்றவனும், குறிப்பு அறிய மாட்டாதவன்-பிறர் குறிப்பை அறிய மாட்டாதவனுமே, நல்மரம்-நல்ல மரங்களாம். ஏ இரண்டும் அசை. கல்வியில்லாதவனும், ஒருவருடைய குறிப்பை அறியாதவனும், ஆறறிவுடைய மனிதராய்ப் பிறந்தாராயினும் ஓரறிவுடைய மரத்தினுங் கடையாவர்; எ-ம். (13) போலி அறிவின் புன்மை 14. கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானு மதுவாகப் பாவித்துத்-தானுந்தன் பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே கல்லாதான் கற்ற கவி. (ப-ரை.) கல்லாதான்-கற்கவேண்டியவற்றை (முறைப்படக்) கல்லாதவன், கற்ற கவி-(கற்றோர் கூறுவதைக் கேட்டு) ஒரு கவியைக் கற்றுக்கொண்டு சொல்லுதல், கானம் மயில் ஆட-காட்டிலுள்ள மயில் (தன் அழகிய தோகையை விரித்து) ஆட, கண்டு இருந்த வான் கோழி-அதைப் பார்த்துக் கொண்டிருந்த வான்கோழியானது, தானும் அதுவாகப் பாவித்து-தன்னையும் அம்மயிலாகவே நினைத்துக் கொண்டு, தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலும்-தானும் தனது அழகில்லாத சிறகை விரித்து ஆடினாற் போலும். ஏ : அசை. கல்லாதவன் கற்றவனைப்போல் நடித்தாலும் கற்றவனாகான் எ-ம். (14) தீயோர்க்கு உதவுதல் கேடு தரும் 15. வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி ஆங்கதனுக் காகார மானாற்போல்-பாங்கறியாப் புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரங் கல்லின்மே லிட்ட கலம். (ப-ரை.) வேங்கை வரிப்புலிநோய்-வரிகளை யுடைய வேங்கைப் புலியின் விடநோயை, தீர்த்த-போக்கிய, விடகாரி-விட வைத்தியன், ஆங்கு-அப்பொழுதே, அதனுக்கு-அப்புலிக்கு, ஆகாரம் ஆனால்போல்-இரையானாற்போல, பாங்கு அறியா-நன்றியறிவில்லாத, புல் அறிவாளர்க்கு-அற்ப அறிவினருக்கு, செய்த உபகாரம்-செய்யப் பட்ட உதவி, கல்லின் மேல் இட்ட கலம்-கல்லின்மேலே போடப்பட்ட மட்கலம்போல (அழிந்து, செய்தவனுக்கே துன்பத்தை விளைக்கும்.) தீயோர்க்கு உதவி செய்தால் துன்பமே உண்டாகும். விஷகாரி என்னும் வடமொழி விடகாரி என்றாயிற்று. அதற்கு விடத்தை அழிப்பவன் என்பது பொருள். கல்லின் மேலிட்ட கலம் என்பதற்குக் கல்லின்மேலே தாக்கிய மரக்கலம் போலும் எனப் பொருள் சொல்லினும் பொருந்தும் எ-ம். (15) அடக்கத்தின் சிறப்பு 16. அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா-மடைத்தலையில் ஓடுமீ னோட உறுமீன் வருமளவும் வாடி யிருக்குமாங் கொக்கு. (ப-ரை.) கொக்கு-கொக்கானது, மடைத் தலையில்-நீர் மடையினிடத்து, ஓடும் மீன் ஓட - ஓடுகிற சிறு மீன்கள் ஓடிக் கொண்டிருக்க, உறு மீன்-(இரையாதற்கேற்ற) பெரிய மீன், வரும் அளவும்-வரும் வரையும், வாடி இருக்கும் - அடங்கி யிருக்கும்; (அதுபோல) அடக்கம் உடையார்-தக்க பகைவர் வரும் வரையும் அடங்கி யிருப்பவரை, அறிவு இலர் என்று எண்ணி-அறிவில்லாதவ ரென்று கருதி, கடக்க-அவரை வெல்லுவதற்கு, கருதவும் வேண்டா-நினைக்கவும் வேண்டுவதில்லை. அடக்கமுடையவரின் வலிமையை அறியாது அவரை வெல்ல நினைப்பவனுக்குத் தப்பாது கேடுவரும் எ-ம். (16) உண்மை உறவினர் 17. அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவல்லர்-அக்குளத்திற் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு. (ப-ரை.) அற்ற குளத்தின்-நீர்வற்றிய குளத்தி னின்றும், அறு-நீங்குகின்ற, நீர்ப்பறவைபோல்-நீர்வாழ் பறவைகள்போல, உற்றுழி-வறுமை வந்தபொழுது, தீர்வார்-நீங்குவோர், உறவு அல்லர்-உறவினராகார்; அக்குளத்தில்-அந்தக் குளத்தி லுள்ள, கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போல-கொட்டியும் அல்லியும் நெய்தலும் போல, ஒட்டி உறுவார்-நீங்காது சேர்ந்திருந்து வருத்தத்தை அனுபவிப்போரே, உறவு-உறவினராவர். போலவே என்பதிலுள்ள ஏகாரத்தை உறுவார் என்பதனுடன் சேர்க்க. வறுமை வந்தபொழுதும் சேர்ந்திருந்து துன்பம் அனுபவிப்போரே உறவினராவர் எ-ம்.(17) தாழ்ந்தாலும் மேன்மக்களே சிறந்தவர் 18. சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற் றல்லாதார் கெட்டாலங் கென்னாகும்-சீரிய பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகு மென்னாகும் மண்ணின் குடமுடைந்தக் கால். (ப-ரை.) சீரியர் கெட்டாலும்-மேன்மக்கள் வறுமையுற்றாலும், சீரியரே-மேன்மைக் குண முடையோரே யாவர்; சீரியர் அல்லாதார் கெட்டால்-கீழ்மக்கள் வறுமையுற்றால், அங்கு என் ஆகும்-அப்பொழுது அவரின் குணம் யாதாகும், சீரிய பொன்னின் குடம் உடைந்தால்-சிறந்த பொன்னா லாகிய குடம் உடைந்தாலும், பொன் ஆகும்-பழைய பொன்னேயாகிப் பயன் தரும்; மண்ணின் குடம் உடைந்தக்கால்-மண்ணலாகிய குடம் உடைந்தால், என் ஆகும்-அது யாது பயனுடையதாம். மற்று: அசை. மேலோர் வறுமையுற்றாலும் மேன்மை குன்றார்; கீழோர் வறுமையுற்றால் சிறிதும் மேன்மையில ராவர் எ-ம். (18) ஆசையால் பயனில்லை 19. ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால்நாழி-தோழி நிதியுங் கணவனும் நேர்படினும் தந்தம் விதியின் பயனே பயன். (ப-ரை.) ஆழ் கடல் நீர்-ஆழமாகிய கடலின் நீரை, ஆழ அமுக்கி முகக்கினும்-அழுந்தும்படியாக அமிழ்த்திமொண்டாலும், நாழி-ஒரு படியானது, நால் நாழி முகவாது-நான்குபடி நீரை மொள்ளாது; (அதுபோல), தோழி-தோழியே, நிதியும் கணவனும் நேர்படினும்-(பெண்டிர்க்கு) மிக்க பொருளும் தக்க நாயகனும் கிடைத்தாலும், தம்தம்-அவரவருடைய, விதியின் பயனே பயன்-ஊழினளவாகிய பயனே (அனுபவிக்கப்படும்) பயனாகும். தோழி : மகடூஉ முன்னிலை. வேண்டும் பொருளெல்லாம் கிடைத் திருந்தாலும், பழ வினையின் அளவன்றி மிகுதியாய் அனுபவிக்க முடியாது எ-ம். (19) மருந்தும் உடன்பிறப்பும் 20. உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி-உடன்பிறவா மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும் அம்மருந்து போல்வாரு முண்டு. (ப-ரை.) வியாதி-நோயானது, உடன்பிறந்தே கொல்லும்-உடம்புடன் பிறந்தே அதனைக் கொல்லுகின்றது, (ஆதலால்) உடன் பிறந்தார்-உடன் பிறந்தவர் எல்லோரும், சுற்றத்தார் என்று இருக்க வேண்டா-(நன்மை செய்யும்) சுற்றத்தா ரென்று கருதியிருக்க வேண்டுவதில்லை, உடன் பிறவா - உடன் பிறவாத, மாமலையில் உள்ள மருந்தே-பெரிய மலையில் இருக்கிற மருந்தே, பிணி தீர்க்கும்-நோயைப் போக்கும்; அம்மருந்து போல் வாரும் உண்டு-அம் மருந்து போல் (அயலாரா யிருந்தும்) உதவி செய்வாரும் சிலர் உண்டு. உடன்பிறந்தாருள்ளே தீமை செய்வோரும் அயலாருள்ளே நன்மை செய்வோரும் உண்டுஎ-ம். (20) மனையாளில்லாத மனை 21. இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றில்லை இல்லாளும் இல்லாளே யாமாயின்-இல்லாள் வலிகிடந்த மாற்ற முரைக்குமேல் அவ்வில் புலிகிடந்த தூறாய் விடும். (ப-ரை.) இல்லாள் அகத்து இருக்க - (நற்குண நற்செய்கைகளையுடைய) மனையாள் வீட்டில் இருக்கின், இல்லாதது ஒன்று இல்லை-(அவ் வீட்டில்) இல்லாத பொருள் ஒன்றுமில்லை, இல்லாளும் இல்லாளே ஆம் ஆயின்-மனையாள் இல்லாமற் போயினும், இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்கு மேல்-மனையாள் கடுமை பொருந்திய சொற்களைச் சொல்லினும், அவ் வில் புலி கிடந்த தூறு ஆய் விடும்-அவ் வீடு புலி தங்கிய புதர்போல் ஆய்விடும். ஆம் : அசை. நற்குண நற்செய்கைகளையுடைய மனையாள் இருக்கும் வீடே எல்லாப் பொருளும் நிறைந்த வீடு; அஃதல்லா வீடு யாவரும் கிட்டுதற்கரிய காடே யாகும் எ-ம். (21) ஊழின் வலிமை 22. எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே கருதியவா றாமோ கருமம்-கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காயீந்ததேல் முற்பவத்திற் செய்த வினை. (ப-ரை.) இரங்கும் மடம் நெஞ்சே-வருந்துகின்ற அறியாமை பொருந்திய மனமே, கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்கு-(நல்ல பயனைப் பெறலாமென்று) நினைத்துப் போய்க் கற்பகத்தருவை அடைந்தவர்க்கு, காஞ்சிரங்காய் ஈந்ததேல்-(அது) எட்டிக்காயைக் கொடுத்ததாயின், முற் பவத்தில் செய்த வினை-(அதற்குக் காரணம் அவர்) முற்பிறப்பிற் செய்த தீவினையாகும்; கருமம் கருதியவாறு ஆமோ-செய்தொழில்கள் (நீ) நினைத்தபடியே ஆகுமோ, எழுதியவாறே காண்-(கடவுள்) விதித்தபடியே ஆகும் என்று அறிவாயாக. செய்தொழில்கள் ஊழின்படி யன்றி அவரவர் நினைத்தபடி முடியா எ-ம். (22) நல்லார் சினமும் பொல்லார் சினமும் 23. கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப் பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே- விற்பிடித்து நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே சீரொழுகு சான்றோர் சினம். (ப-ரை.) கயவர்-கீழோர், கடுஞ்சினத்து-கடுங்கோபத்தால் வேறுபட்டால், கல் பிளவோடு ஒப்பர்-கல்லின் பிளவு போல் திரும்பக்கூடார்; பொன்பிளவோடு ஒப்பாரும் போல்வார்-(அப்படி வேறுபட்டபோது) பொன்னின் பிளவோடு ஒப்பாவாரும் ஒப்பாவர்; (ஒருவர் கூட்டக் கூடுவர்.) சீர் ஒழுகு சான்றோர் சினம்-சிறப்பு மிக்க பெரியோருடைய கோபம்; வில்பிடித்து நீர்கிழிய எய்த வடுப்போல மாறும்-வில்லைப் பிடித்து (அம்பினாலே) நீர் பிளக்க எய்த பிளவு போல் (அப்போதே) நீங்கும். ஏ இரண்டும் அசை. கோபத்தினால் வேறுபட்டவிடத்துக் கடை யாயார் எக்காலத்துங் கூடார்; இடையாயார் ஒருவர் கூட்டக் கூடுவர்; தலையாயார் பிரிந்த அப் பொழுதே கூடுவர் எ-ம். (23) குணமும் தொடர்பும் 24 நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ்சேர்ந்தாற் போல் கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற் காக்கை உகக்கும் பிணம். (ப-ரை.) கயத்தின்-குளத்தில் உள்ள, நல் தாமரை - நல்ல தாமரைப்பூவை, நல் அன்னம் சேர்ந் தாற்போல்-நல்ல அன்னப் பறவை சேர்ந்தாற்போல, கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கல்வி யுடையோரைக் கல்வி யுடையோரே விரும்பிச் (சேர்வர்); முதுகாட்டில்-புறங்காட்டில் உள்ள, பிணம்-பிணத்தை, காக்கை உகக்கும் - காக்கை விரும்பும்; (அதுபோல்) கற்பு இலா மூர்க்கரை-கல்வியில்லாத மூடரை, மூர்க்கர்-மூடரே, முகப்பர்-விரும்புவர். கற்றவரோடு கற்றவரும், மூடரோடு மூடரும் நட்புச் செய்வர். எ-ம். (24) கரவுடையவர் ஒளிந்தே நிற்பர் 25. நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும் அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு-நெஞ்சிற் கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார் கரவிலா நெஞ்சத் தவர். (ப-ரை.) நாகம்-விடப்பாம்பானது, தான் நஞ்சு உடைமை அறிந்து - தான் விடம் உடையதா யிருத்தலை அறிந்து, கரந்து உறையும் - மறைந்து வசிக்கும்; நீர்ப்பாம்பு-(விடமில்லாத) தண்ணீர்ப் பாம்பானது, அஞ்சா புறம் கிடக்கும் - அஞ்சாமல் வெளியே கிடக்கும்; (அவைபோல்) நெஞ்சில் கரவு உடையார்-மனத்தில் வஞ்சனையை உடையவர், தம்மைக் கரப்பர்-தம்மைத் தாமே மறைத்துக் கொள்வர்; கரவு இலா நெஞ்சத்தவர்-வஞ்சனை யில்லாத மனத்தை உடையவர், கரவார்-தம்மை மறைத்துக் கொள்ளார். வஞ்சனையுடையவர் மறைந்தொழுகுவர்; வஞ்சனையில்லாதவர் வெளிப்பட்டொழுகுவ எ -ம். (25) அரசனும் அறிஞனும் 26. மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்- மன்னற்குத் தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச் சென்றஇட மெல்லாம் சிறப்பு. (ப-ரை.) மன்னனும்-அரசனையும், மாசு அறக் கற்றோனும்-கசடறக் கற்ற புலவனையும், சீர் தூக்கின்-ஆராய்ந்து பார்த்தால், மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன்-அரசனைக் காட்டிலும் புலவனே சிறப்புடையனாவன்; மன்னற்கு-அரசனுக்கு, தன் தேசம் அல்லால்-தன் நாட்டி லல்லாமல் (பிற நாடுகளில்), சிறப்பு இல்லை-சிறப்பில்லையாகும்; கற்றோற்கு-புலவனுக்கோ எனில், சென்ற இடம் எல்லாம் சிறப்பு-அவன் சென்ற எல்லா நாடுகளிலும் சிறப்பு உண்டாகும். அரசனிலும் புலவனே சிறப்புடையவன் எ-ம். (26) பல்வகைக் கூற்றங்கள் 27. கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம் அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம்-மெல்லிய வாழைக்குத் தானீன்ற காய்கூற்றங் கூற்றமே இல்லிற் கிசைந்தொழுகாப் பெண். (ப-ரை.) கல்லாத மாந்தர்க்கு-கல்வியறி வில்லாத மாக்களுக்கு, கற்று உணர்ந்தார் சொல்-கற்றறிந் தவருடைய உறுதி மொழி, கூற்றம் - இயமனாம்; (துன்பஞ் செய்யும் என்றபடி); அல்லாத மாந்தர்க்கு-(தருமத்தில் விருப்ப முடையர்) அல்லாத மனிதர்க்கு, அறம்-தருமமே, கூற்றம்-இயமனாகும், மெல்லிய வாழைக்கு-மெல்லிய வாழை மரத்துக்கு, தான் ஈன்ற காய் கூற்றம்-அஃது ஈன்ற காயே இயமனாம்; (அதுபோல) இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்-இல்வாழ்க்கைக்குப் பொருந்தி நடவாத மனைவி, கூற்றம்-(கணவனுக்கு) இயமனாவள். கற்றறிந்தவருடைய உறுதிமொழியினாலே கல்லாதவருக்கும், தருமத்தினாலே பாவிகளுக்கும், பொருத்தமில்லாத மனையாளாலே கணவனுக் கும் துன்பம் விளையும் எ-ம். (27) கெட்டாலும் மனவிரிவு குறையார் 28. சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்துங் கந்தங் குறைபடா தாதலால்-தந்தந் தனஞ்சிறிய ராயினுந் தார்வேந்தர் கேட்டால் மனஞ்சிறிய ராவரோ மற்று. (ப-ரை.) மெல் சந்தனக் குறடு - மென்மையாகிய சந்தனக் கட்டையானது, தான் தேய்ந்த காலத்தும்-தான் தேய்ந்து போன காலத்திலும், கந்தம் குறைபடாது-மணம் குறையாது; ஆதலால்-ஆதலினாலே, தார் வேந்தர்-மாலையை அணிந்த அரசர்கள், தம்தம் தனம் சிறியர் ஆயினும்-தங்கள் தங்கள் செல்வத்திற் குறைந்தவரானாலும், கேட்டால்-அவ்வறுமையினாலே, மனம் சிறியர் ஆவரோ-மனஞ் சுருங்கினவராவாரோ (ஆகார்). தார்-சேனை; மனம்-மன வலிமை என்று பொருள் கூறுதலும் ஆம். அரசர்கள் செல்வத்திற் குறைந்தாலும் மன விரிவு (தளராத் தன்மை)குன்றார் எ-ம். (28) நிலையில்லாத வாழ்வு 29. மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல உருவும் உயர்குலமு மெல்லாம்-திருமடந்தை ஆம்போ தவளோடு மாகும் அவள்பிரிந்து போம்போ தவளொடு போம். (ப-ரை.) மருவு இனிய சுற்றமும்-தழுவிய இனிய உறவும், வான் பொருளும்-மேலாகிய பொருளும், நல்ல உருவும்-நல்ல அழகும், உயர்குலமும் எல்லாம்-உயர்வாகிய குலமும் என்னும் இவை யெல்லாம், திருமடந்தை ஆம் போது-சீதேவி வந்து கூடும்பொழுது, அவளோடும் ஆகும்-அவளுடனே வந்து கூடும்; அவள் பிரிந்து போம்போது-அவள் நீங்கிப் போம்பொழுது, அவளொடு போம்-அவளுடனே நீங்கிப் போகும். திருமடந்தை-இலக்குமி, ஆகும் போகும் என்பன ஆம் போம் என்றும், பொழுது என்பது போது என்றும் விகாரப்பட்டன. சுற்றமும், பொருளும், அழகும், உயர்குலமும் நிலையுடையனவல்ல எ-ம். (29) அறவோர் அருள் உள்ளம் 30. சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர் குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து மறைக்குமாங் கண்டீர் மரம். (ப-ரை.) மரம்-மரங்களானவை, மாந்தர் குறைக்கும் தனையும்-(தம்மை) மனிதர் வெட்டு மளவும், குளிர்நிழலைத் தந்து மறைக்கும்-(அவருக்குங்) குளிர்ச்சியாகிய நிழலைக் கொடுத்து வெயிலை மறைக்கும் (அதுபோல), அறிவு உடையோர்-அறிவுடையவர்; சாம்தனையும்-(தாம்) இறந்து போமளவும், தீயனவே செய்திடினும்-(பிறர் தமக்குத்) தீங்குகளையே செய்தாராயினும், தாம் அவரை ஆம் தனையும் காப்பர் - தாம் அவரையும் தம்மாலே ஆகுமளவும் காப்பார். ஆம் : அசை. கண்டீர் : முன்னிலையசை. அறிவுடையவர் தமக்குத் தீங்கு செய்வோருக்கும் நன்மையே செய்வார் எ-ம். (30) மூதுரை மூலமும் உரையும் முற்றிற்று. பாட்டு முதற்குறிப்பு அகரவரிசை (எண் ; பக்க எண்) அடக்கமுடையா 12 அடுத்து முயன்றாலும் 4 அட்டாலும் 4 அற்ற குளத்தின் 13 ஆழ அமுக்கி 14 இல்லாளகத்திருக்க 15 இன்னா இளமை 3 உடன் பிறந்தார் 15 உற்ற இடத்தில் 5 எழுதியவா 16 கல்லாத மாந்தர்க்குக் 20 கவையாகிக் 10 கற்பிளவோ 17 கானமயிலாடக் 11 சந்தன மென்குறடு 20 சாந்தனையும் 22 சீரியர் கெட்டாலுஞ் 13 தீயாரைக் 7 நஞ்சுடைமை 18 நல்லாரைக் 6 நல்லாரொருவர்க்குச் 2 நற்றாமரைக் 18 நன்றி ஒருவர்க்கு 2 நீரளவேயாகுமாம் 6 பண்டுமுளைப்ப 8 மடல் பெரிது 9 மருவினிய 21 வாக்குண்டாம் 1 வேங்கை 11 நெல்லுக்கிறைத்த 8 அருஞ்சொற்கள் அட்டாலும் - காய்ச்சினாலும் அற்ற - நீர் வற்றிய ஆந்தனையும் - ஆகுமளவும் ஆளில்லா - ஆள்வதற்கில்லா இசைந்து - பொருந்தி இணங்கி - கூடி உகக்கும் - விரும்பும் உறுமீன் - பெரியமீன் எய்தியக்கால் - அடைந்தால் ஒட்டி - நீங்காது ஒழுகா - நடவாத கடக்க - வெற்றிபெற கந்தம் - மணத்தினாலே கரந்து - மறைந்து கருமங்கள் - காரியங்கள் கலம் - மட்கலம் கவை - கிளை கற்பகம் - கற்பகத்தரு காஞ்சிரங்காய் - எட்டிக்காய் காமுறுவர் - விரும்புவர் கானம் - காடு குறடு - கட்டை குறைக்கும் - வெட்டும் கூற்றம் - இயமன் சவை - சபை சாம்தனையும் - இறந்துபோமளவும் சார்வார் - பூசைசெய்வோர் சிற்றுஊறல் - சிறிய ஊற்றுநீர் சீர்தூக்கின் - ஆராய்ந்து பார்ப்பின் சீரியர் - மேன்மக்கள் தளரா - சோராத துப்பார் - பவளம்போன்ற தூறாய் - புதர்போல் தெங்கு - தென்னைமரம் தொல்லுலகு - பழமை உலகு நட்டாலும் - நட்புச்செய்தாலும் நிதி - பொருள் நுடங்காது - வாட்டமுறாது நேர்படினும் - கிடைத்தாலும் நோக்குண்டாம் - அருட்பார்வையுண்டாம் பண்டு - முன்னர் பற்றலரை - பகைவரை பாங்கறியா - நன்றியறிவில்லாத புல்லறிவு - அற்ப அறிவு புலிகிடந்த - புலி தங்கிய பொசியுமாம் - கசிந்தூறும் மகிழினிது - மகிழம்பூ இனிது மண்ணீரும் - கழுவும் நீரும் மருவு இனிய - தழுவிய இனிய மறைக்கும் - வெயிலை மறைக்கும் மாசற - கசடற மாற்றம் - சொற்கள் முகப்பர் - விரும்புவர் முதுகாடு - புறங்காடு வடு - பிளவு வலிகிடந்த - கடுமையான வான்பொருள் - மேலான பொருள் விடகாரி - விடவைத்தியன் விண்டுஉமி - உமி நீங்கி மூதுரை முத்துக்கள் கல்வியும் குணமும் வளமும் இருக்கும் வரையில் உடம்பும் வாடாமல் நலமாயிருக்கக் கூடும். இதனால் உயிரும் நலமாயிருக்கும். இறைவனைச் சார்ந்திருப் பவர்களுக்கு அவன் இப்படி மூவகை நோக்குகளாய் விரிந்து அருள் கின்றனன்.  மனைவிக்குக் கணவனும் கணவனுக்கு மனைவியும் இருவருக்கும் மக்களும் மற்றுமுள்ள சுற்றங்களுமெல்லாம் செல்வங்களே யாம்.  ‘கல்வி’ யென்பது பிறர்க்குப் பயன்படுகின்ற திறமையும், பிறர் குறிப்பை அறிந்துகொள்கின்ற திறமையுமாகும். நூல்களைப் படித்து விடுவது மட்டுங் கல்வியாகாது; பிறர் வாழ்க்கையைச் செப்பஞ் செய்யத்தக்க திறமையைப் பெறுகின்ற போதுதான் அக் கல்வி நிறைவடைகின்றது.  அவரவரும் முறையாகப் பயின்று அவரவர்க்கே உரியவாய் அவரவர் உயிரறிவினுள் மறைந்து கிடக்கும் தனித்திறமைகளை மேலெழுப்பி உலகுக்குப் பயன் படும்படி ஒளிரவைக்க வேண்டும்.  குணத்திலும் மாட்சிமைப்படும்போதுதான் கல்வி பெருமையடை கிறது.  மாசறக்கற்று நிறைவடைந்தால் அக் கற்றோர்க்கு இணையானவர்கள் இவ்வுலகத்தில் யாரிருக்கிறார்கள்?  பழகுவதற்கு இனியரான சுற்றத்தவரும், மேன்மைவாய்ந்த செம்பொற்றிரளும், அழகு, வடிவம் முதலிய நல்ல தோற்றமும், சிறந்த நண்பர் களுமெல்லாம் செழுமையின் கூறுகளேயாம்.  பயன்களில் முனைப்புக்கொள்ளாமல் முயற்சி களில் திருந்திய எண்ணம் வைத்து ஒழுகுதலே, உரிய நேரங்களில் நல்ல வளங்கள் மிகுவதற்கு ஏற்றதாகும்.  காரிய வெற்றிக்கு உறவு என்பது முதன்மை யன்று உண்மை யோடு திறமையே முதன்மை யானது.  துணைவலிக்குத்தெரிந்தெடுப்போரிடம் திறமையையே முதன்மையாகக் கருதல்வேண்டும். தோற்றம் ஆடம்பரம் முதலியன அவ்வளவு பொருளல்ல. ‘நேரத்தில் தன்னை இழந்தாயினுஞ் செயலை நிறைவேற்றுவோரா?’ என்பதே கருதுதல் வேண்டும்.  அவர் கரவில்லாதவரா என்றும் ஆராய வேண்டும்.  இல்லாள் அகத்திருந்தால் தேடிய செல்வங் களும் வளம் பெறும்; அப்போது, இல்லாத தென்பதே ஒன்றுமில்லை.  எவ்வகை முயற்சிக்கும், நலன்கள் எய்துதற்கும் நட்பியல்பே சிறந்த அடிப்படையாயிருக்கின்றது.  தம்மைப் பிறர் பகைத்து நெருக்கினாலும், கெடுத்தாலும், தாம் வறுமையுற்றாலும், நிலைகுலைந்து உயிர் துறக்கும்படி நேர்ந்தாலும் தம் குண மாட்சிமையிற் சிறிதுங் குன்றார் நல்லோர்.  சூழ்ந்தோரின் அறியாமையினால் ஒரோ வொருகால் நல்லோர்க்குச் சிறிது சினம் எழுவதாயினும் அருள் காரணமாக அந்நொடியே முழுதும் மறைந்து மாறிவிடும்.  தமக்கு இறக்குந்தனையும் ஊறுசெய்தாருக்கும் ஆதரவும் உதவியுமாயிருந்து நலமே புரிந்துவருவர் நல்லோர்.  பொதுவாக நன்மைசெய்தல் எஞ்ஞான்றும் வீண்போகாது. எனினும், ஏதானும் நன்றி செய்வதாயின் நல்லாராயினாரைத் தெரிந்து அவர்க்குச் செய்தலே உலகுக்கும் தமக்கும் நலம் பயப்பதா யிருக்கும்.  சான்றோரைப் போற்றி வாழ்கின்ற உலகவர் நலம் அனைத்தும் பெற்றுச் சிறப்பர்.  உலகநீதி முகவுரை இந்நூற் பெயர் உலகநீதி என்பதும், இதனை இயற்றியவர் உலகநாதன் என்னும் பெயருடையவ ரென்பதும் இதன் இறுதிச் செய்யுளால் விளங்குகின்றது. இதனை இயற்றியவர் ஒளவையார் என்று சிலர் எழுதியிருப்பது மாறுபாடாகும். ஒளவையார் இயற்றியது என்பதற்கு ஆன்றோர் வழக்கு முதலிய சான்று ஒன்று மில்லை. இது பெரும்பாலும் பேச்சு வழக்கு நடையிலேயே அமைந்திருக்கிறது. இதிற் சொல்லப்பட்டன வெல்லாம் யாவரும் கைக்கொள்ள வேண்டிய சிறந்த நீதிகள் என்பதில் ஐயமில்லை. சிறுவர்களும் எளிதாகப் படித்துப் பாடம் பண்ணக் கூடியவாறு எளிய நடையில் ஓசை நலத்தோடு விளங்குவது இதற்குத் தனியாக உள்ள சிறப்பியல்பு ஆகும். இதனை இயற்றியவர் முருகக் கடவுளிடத்திலும், வள்ளி நாய்ச்சியாரிடத்திலும் பத்தியுடையவ ரென்பது ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் வள்ளிபங்கனாகிய முருகனை வாழ்த்து வாயாக என நெஞ்சை நோக்கிக் கூறுதலால் வெளியாகின்றது. இவர் இருந்த காலம் இடம் முதலியன தெரிய வில்லை. ஒளவையார் இயற்றிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதலியவற்றைப் போலவே இந்நூலும் தமிழ்நாட்டில் சிறுவர் சிறுமியர் அனைவரும் படித்துப் பயனெய்தற்குரியதாய் விளங்குகின்றது. இங்ஙனம் ந. மு. வேங்கடசாமி காப்பு உலகநீதி புராணத்தை யுரைக்கவே கலைக ளாய்வருங் கரிமுகன் காப்பு (பதவுரை) உலக நீதி - உலக நீதியாகிய, புராணத்தை - பழஞ்செய்திகளை, உரைக்க - நான் கூறுதற்கு, கலைகள் - வேதம் முதலிய நூல்களால், ஆய்வு அரும் - ஆராய்ந்து காண்டற்கு அரிய, கரிமுகன் - யானை முகத்தையுடைய விநாயகக் கடவுள், காப்பு - காப்பாவர் என்றவாறு. (பொழிப்புரை) உலக நீதி என்னும் பழஞ் செய்திகளைச் சொல்லு தற்கு வேத முதலிய நூல்களாலும் அறிய வொண்ணாத விநாயகக் கடவுள் காப்பாவர் எ - று. உலகநீதி உலகத்தில் பண்டைக்காலந் தொடங்கி உயர்ந் தோர்களால் ஏற்கப்பட்டு வரும் நீதிகள். இவைதாம் புதியனவாகச் சொல்வனவல்ல, தொன்று தொட்டுள்ளனவே என்பது அறிவித்தற்குப் ‘புராணம்’ என்றார்; புராணம் பழைமை; பதினெண் புராணம் முதலிய வற்றைப் போல் இதனையும் புராணமென்றா ரென்று கொள்ளற்க: கலைகளாய் வரும் என்பதற்குக் கலைகளின் வடிவாகி வரும் என்றுரைப்பினும் அமையும். காப்பு - காவல்; இடையூறு வராமல் பாதுகாப்பர் என்றபடி. உலகநீதி மூலமும் உரையும் 1. ஓதாம லொருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம் போகாத இடந்தனிலே போக வேண்டாம் போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் வாகாரும் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. (‘வேண்டாம்’ - என்னும் இச்சொல், ‘வேண்டா’ என்றிருத்தல் வேண்டுமெனப் பெரும் புலவர் சிலரால் கருதப்படுகின்றது). (பதவுரை) ஓதாமல் - (நூல்களை) கற்காமல், ஒருநாளும் - ஒருபொழுதும், இருக்கவேண்டாம் - (நீ) வாளா இராதே. ஒருவரையும் - யார் ஒருவர்க்கும், பொல்லாங்கு - தீமை பயக்கும் சொற்களை, சொல்லவேண்டாம் - சொல்லாதே. மாதாவை - (பெற்ற) தாயை, ஒருநாளும் - ஒரு பொழுதும், மறக்க வேண்டாம் - மறவாதே. வஞ்சனைகள் - வஞ்சகச்செயல்களை, செய்வாரோடு - செய்யுங் கயவர்களுடன், இணங்கவேண்டாம் - சேராதே. போகாத - செல்லத்தகாத, இடந்தனிலே - இடத்திலே, போகவேண்டாம் - செல்லாதே. போகவிட்டு - (ஒருர்) தன் முன்னின்றும் போன பின்னர். புறம் சொல்லி - புறங்கூறி, திரிய வேண்டாம் - அலையாதே. வாகு - தோள்வலி, ஆரும் - நிறைந்த, குறவருடை - குறவருடைய (மகளாகிய), வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்- பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய்- வாழ்த்துவாயாக. (பொழிப்புரை) எக்காலத்திலும் இடைவிடாது கல்வி கற்க வேண்டும். எவரையும் தீய சொற்களால் வையாதே. பகைவராயினும் என்பதற்கு ஒருவரையும் என்றார். பொல்லாங்கு சொல்ல வேண்டாம் என்றமையால், நன்மைபயக்கும் சொற்களே சொல்ல வேண்டும் என்பதாயிற்று. பெற்ற தாயை எக்காலத்தும் நினைந்து போற்றுதல் வேண்டும். வஞ்சகச் செயல்களைச் செய்பவர்களுடன் நட்புக் கொள்ளுதல் கூடாது. வஞ்சனை - கபடம். செல்லத்தகாத தீயோரிடத்தில் ஒன்றை விரும்பிச் செல்லாதே. தகுதியில்லாரிடத்தில் எவ்வகைச் சம்பந்தமும் கூடாது. ஒருவரைக் கண்டபோது புகழ்ந்து பேசிக் காணாத விடத்தில் இகழ்ந்து பேசுதல் கூடாது. புறஞ் சொல்லல் - புறங்கூறல்; காணா விடத்தே ஒருவரை இகழ்ந்துரைத்தல். குறவர் மகளாகிய வள்ளியம்மையின் கணவனாகிய முருகக் கடவுளை நெஞ்சே நீ வாழ்த்துவாயாக. வாகு : ஆகுபெயர்; மான் வயிற்றிற் பிறந்து குறவர் தலைவனால் வளர்க்கப் பெற்றமையானும் குறவரெல்லாராலும் அன்பு பாராட்டப் பெற்றமையானும் ‘குறவருடை வள்ளி’ என்றார். உடைய என்னும் பெயரெச்சம் குறைந்து நின்றது. பெருமான் என்பது பெருமாள் எனத் திரிந்து நின்றது. வாழ்த்தாய் முன்னிலை யேவலொருமை வினைமுற்று. நெஞ்சே என்றது விளி; ‘இதனை வேண்டாம்’ என்பது முதலிய ஒவ்வொன்றோடும் கூட்டுக; பின்வரும் பாட்டுகளிலும் இங்ஙனமே கூட்டிக் கொள்க. (1) 2. நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம் நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம் நல்லிணக்கம் இல்லாரோ டிணங்க வேண்டாம் அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் அடுத்தவரை யொருநாளும் கெடுக்க வேண்டாம் மஞ்சாருங் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. (பதவுரை) நெஞ்சு ஆர - மனம் பொருந்த, பொய்தன்னை - பொய்யை, சொல்லவேண்டாம் - சொல்லாதே. நிலை இல்லா - நிலைபெறாத, காரியத்தை - காரியத்தை நிறுத்த வேண்டாம் - நிலைநாட்டாதே. நஞ்சுடனே - விடத்தையுடைய பாம்புடனே, ஒருநாளும் - ஒருபொழுதும், பழகவேண்டாம் - சேர்ந்து பழகாதே. நல் இணக்கம் - நல்லவர்களுடைய நட்பு, இல்லாரோடு - இல்லாதவர்களுடன், இணங்க வேண்டாம் - நட்புக் கொள்ளாதே. அஞ்சாமல் - பயப்பாடாமல், தனி - தன்னந் தனியாக, வழி போகவேண்டாம் - வழிச்செல்லாதே. அடுத்தவரை - தன்னிடத்து வந்து அடைந்த வரை, ஒரு நாளும் - ஒருபொழுதும், கெடுக்க வேண்டாம் - கெடுக்காதே. மஞ்சு ஆரும் - வலிமை நிறைந்த, குறவருடை - குறவருடைய (மகளாகிய) வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே; வாழ்த்தாய் - (நீ) வாழ்த்துவாயாக. (பொழிப்புரை) மனமறியப் பொய் கூறுதல் கூடாது. “தன்னெஞ் சறிவது பொய்யற்க” என்றார் திருவள்ளுவர். பொய்தன்னை என்பதில், தன் : சாரியை. உறுதியில்லாததை நிலைநிறுத்த முயலுதல் கூடாது. நிலையின்மை - பொய்த்தன்மை. பாம்பைப் போன்ற கொடியாருடன் பழகுதல் கூடாது. நஞ்சு, பாம்பிற்கு ஆகுபெயர் : அஃது ஈண்டுக் கொடியாரை உணர்த்திற்று. நல்லோரினத்தைப் பெறாது தீயவருடன் நட்புடையோரை நட்பினராகக் கொள்ளுதல் கூடாது. நல்லிணக்கம் இல்லார் என்றமையால், தீயவரின் இணக்க முடையவரென்று கொள்க. நட்பிற்குரிய நல்ல பண்பில்லாதவர்களுடன் நட்புச் செய்ய வேண்டாம் என்றும் பொருள் கொள்ளலாம். ஆத்திசூடியில் இணக்க மறிந் திணங்கு என்றதும் காண்க. 245துணையில்லாமல் தனியாக வழிச்செல்லல் கூடாது. தனி வழி என்பதற்கு மனிதர் நடமாட்டமில்லாத காட்டுவழி என்றும் பொருள் சொல்லலாம். தன்னை அண்டினவர்களைக் கெடுக்காமல் காத்தல் வேண்டும். அடுத்தவர் - வறுமை முதலியவற்றால் துன்பமுற்று அடைந்தவர். கெடுக்கவேண்டாம் என்றமையால் காத்தல் வேண்டும். என்றும் கொள்க. மைந்து என்பது மஞ்சு எனப் போலியாயிற்று. (2) 3. மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம் மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம் தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம் தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம் சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம் சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம் வனந்தேடுங் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. (பதவுரை) மனம் - உள்ளமானது, போனபோக்கு எல்லாம் சென்றவாறெல்லாம், போக வேண்டாம் - செல்லாதே. மாற்றானை - பகைவனை, உறவு என்று - உறவினன் என்று நம்பவேண்டாம் - தெளியாதே. தனம் தேடி - பொருளை (வருந்தித்) தேடி, உண்ணாமல் - நுகராமல், புதைக்க வேண்டாம் - மண்ணிற் புதைக்காதே. தருமத்தை - அறஞ் செய்தலை, ஒருநாளும் - ஒரு பொழுதும், மறக்க வேண்டாம் - மறக்காதே. சினம் - வெகுளியை, தேடி - தேடிக் கொண்டு, அல்லலையும்- (அதனால்) துன்பத்தினையும், தேடவேண்டாம் - தேடாதே. சினந்து இருந்தார் - வெகுண்டிருந்தாருடைய, வாசல் வழி - வாயில் வழியாக, சேறல்வேண்டாம் - செல்லாதே. வனம் தேடும் - காட்டின்கண் (விலங்கு முதலியன) தேடித் திரியும், குறவருடை - குறவருடைய (மகவாகிய), வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக. (பொழிப்புரை) மனம் போன வழியில் தான் போகாமல் தன் வழியில் மனத்தை நிறுத்த வேண்டும். “எந்நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால் ஏழை நெஞ்சே” என்பது போல நெஞ்சை விளித்து, ‘மனம்போன போக்கெல்லாம்’ என்றார். பகைவன் உறவினனாயினும் அவனை நம்பலாகாது. பகைவன் நண்பன்போல் நடித்தாலும் அவனை நண்பனென்று நம்பிவிடக் கூடாது என்னலும் ஆம். உறவு : ஆகுபெயர். பொருளைத் தேடி அனுபவிக்கமல் புதைத்து வைத்தல் கூடாது. உண்ணாமல் என்பதனோடு அறஞ்செய்யாமல் என்பதும் சேர்த்துக் கொள்க. நாள்தோறும் அறத்தினை மறவாது செய்தல் வேண்டும். மறக்க வேண்டாம் என்றமையால் நினைந்து செய்தல் வேண்டும் என்பது ஆயிற்று. கோபத்தை வருவித்துக் கொண்டு துன்பமடையலாகாது. உம்மை எச்சவும்மை. சினங்கொண்டிருந்தாருடைய வீட்டின் வழியாக நடத்தல் கூடாது இல்வாய் என்பது வாயில் என்றாகி வாசல் என மருவிற்று சினத்திருந்தார் எனவும் பாடம். தேடும் என்பதற்கேற்ப விலங்கு முதலியன என்பது வருவிக்கப்பட்டது; வனம் என்பதற்கு அழகு என்று பொருள் கூறி அழகைத் தேடிய வள்ளியென்று இயைத்துரைத்தலும் ஆகும். (3) 4. குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம் கொலைகளவு செய்வாரோ டிணங்க வேண்டாம் கற்றவரை யொருநாளும் பழிக்க வேண்டாம் கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம் கொற்றவனோ டெதிர்மாறு பேசவேண்டாம் கோயிலில்லா ஊரிற்குடி யிருக்க வேண்டாம் மற்றுநிக ரில்லாத வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே (பதவுரை) குற்றம் ஒன்றும் - (ஒருவர் செய்த) குற்றத்தை மாத்திரமே, பாராட்டி - எடுத்துச்சொல்லி, திரியவேண்டாம் - அலையாதே. கொலைகளவு - கொலையும் திருட்டும், செய்வாரோடு - செய்கின்ற தீயோருடன், இணங்கவேண்டாம் - நட்புச் செய்யாதே. கற்றவரை - (நூல்களைக்) கற்றவரை; ஒருநாளும் - ஒருபொழுதும், பழிக்க வேண்டாம் - பழிக்காதே. கற்பு உடைய மங்கையரை - கற்புடைய பெண்களை, கருதவேண்டாம் - சேர்தற்கு நினையாதே. எதிர் - எதிரேநின்று, கொற்றவனோடு - அரசனோடு, மாறு - மாறான சொற்களை, பேசவேண்டாம் - பேசாதே. கோயில் இல்லா - கோயில் இல்லாத, ஊரில் - ஊர்களில், குடிஇருக்க வேண்டாம் - குடியிருக்காதே. மற்று - பிறிதொன்று, நிகர் இல்லாத - ஒப்புச் சொல்ல முடியாத வள்ளி - வள்ளிநாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக. (பொழிப்புரை) ஒருவரிடத்துள்ள குற்றத்தையே எடுத்துத் தூற்றுதல் கூடாது. குற்றத்தை விட்டுக் குணத்தைப் பாராட்ட வேண்டும் என்பதாம். பிரிநிலை ஏகாரம் தொக்கு நின்றது. கொலை செய்வாருடனும், களவு செய்வாருடனும் கூடுதல் கூடாது. செய்வாருடன் சேர்தல் கூடாது என்றமையால் அவை செய்தல் ஆகாது என்பது, தானே பெறப்படும். கல்விகற்ற பெரியாரை நிந்தித்தல் கூடாது. பழிக்கவேண்டாம் என்றமையால் புகழவேண்டும் என்பது பெறப்படும். கற்புடைய மாதர் மேல் விருப்பம் வைத்தல் கூடாது. இங்கே மங்கையர் என்றது தம் மனைவியல்லாத பிற மாதர்களை நினைத்தலும் செய்தலோடு ஒக்குமாகையால் நினைத்தல் கூடாது என்றார். அரசன் முன்னின்று அவனுக்கு மாறாகப் பேசுதல் கூடாது. மாறு - விரோதம். கோயில் இல்லாத ஊரில் குடியிருத்தல் கூடாது. திருக்கோயில் இல்லாத ஊர் கொடிய காட்டை யொக்கும். (4) 5. வாழாமற் பெண்ணைவைத்துத் திரிய வேண்டாம் மனையாளைக் குற்றமொன்றுஞ் சொல்ல வேண்டாம் வீழாத படுகுழியில் வீழ வேண்டாம் வெஞ்சமரிற் புறங்கொடுத்து மீள வேண்டாம் தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம் தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் வாழ்வாருங் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. (பதவுரை) பெண்ணை - மனையாளை, வைத்து - (வீட்டில் துன்பமுற) வைத்து, வாழாமல் - (அவளோடு கூடி) வாழாமல், திரிய வேண்டாம் - அலையாதே. மனையாளை - பெண்டாட்டியின்மீது, குற்றம் ஒன்றும் - குற்றமான சொல் யாதொன்றும், சொல்ல வேண்டாம் - சொல்லாதே. வீழாத - விழத் தகாத, படுகுழியில் - பெரும் பள்ளத்தில், வீழ வேண்டாம் - வீழ்ந்துவிடாதே. வெஞ்சமரில் - கொடிய போரில், புறங்கொடுத்து - முதுகு காட்டி, மீள வேண்டாம் - திரும்பி வாராதே. தாழ்வான - தாழ்வாகிய, குலத்துடன் - குலத்தினருடன், சேர வேண்டாம் - உறவு கூடாது. தாழ்ந்தவரை - தாழ்வுற்றவர்களை, பொல்லாங்கு - தீங்கு, சொல்ல வேண்டாம் - சொல்லாதே. வாழ்வு ஆரும் - செல்வம் நிறைந்த, குறவருடை - குறவருடைய (மகளாகிய) வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக. (பொழிப்புரை) மனையாளோடு கூடி வாழாமல் அலைதல் கூடாது. திரிதல் - வேசையர் முதலியோரை விரும்பி அலைதல். இனி, பெற்ற பெண்ணைக் கணவனுடன் வாழாமல் தன் வீட்டில் வைத்து மாறுபட வேண்டாம் என்பதும் ஆம். மனைவியைப் பற்றி எவ்வகைக் குற்றமும் அயலாரிடத்துச் சொல்லுதல் கூடாது. மனைவிக்குள்ளது தனக்கும் உள்ளதாம் ஆகலானும், கேட்ட அயலார் ஒரு காலத்துப் பழிக்கக்கூடும் ஆகலானும் சொல்ல வேண்டாம் என்றார். கற்புடைய மனைவிமீது குற்றம் சுமத்துவது பாவம் என்பதுமாம். விழத்தகாத படுகுழியில் விழுதல் ஆகாது. படுகுழி என்பது கொடுந்துன்பத்ததிற்கு ஏதுவாகிய தீயசெய்கையைக் குறிக்கின்றது. மீளாத துன்பத்தை யுண்டாக்கும் தீச்செய்கையைச் செய்யலாகாது என்க. போரில் அச்சத்தால் முதுகுகாட்டி ஓடுதல் கூடாது, ஆண்iமயுடன் எதிர்த்து நின்று போர்புரிய வேண்டுமென்க. புறம் - முதுகு. சமர் - போர், யுத்தம். தாழ்ந்த குலத்தாருடன் சேர்தல் கூடாது. குலம், அதனை உடையார்க்கு ஆகுபெயர். தாழ்ந்த குலத்தார் - இழிதொழில் செய்யும் குடியிற் பிறந்தவர். சேர்தல் - நட்புக்கொள்ளுதலும் சம்பந்தஞ் செய்து கொள்ளுதலும். உயர்ந்த நிலையிலிருந்து தாழ்வெய்தியவர்களைத் தீமையாகப் பேசுதல் கூடாது. தாழ்ந்தவர் என்பதற்குக் கீழோர் என்றும், வணங்கினவர் என்றும் பொருள் கூறுதலும் பொருந்தும். (5) 6. வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரியவேண்டாம் மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம் முன்கோபக் காரரோ டிணங்க வேண்டாம் வாத்தியார் கூலியைவைத் திருக்க வேண்டாம் வழிபறித்துத் திரிவாரோ டிணங்க வேண்டாம் சேர்த்தபுக ழாளனொரு வள்ளி பங்கன் திருக்கைவே லாயுதனைச் செப்பாய் நெஞ்சே. (பதவுரை) வார்த்தை சொல்வார் - (பயனில்) சொற்கள் கூறுவாருடைய, வாய் பார்த்து - வாயைப் பார்த்துக் கொண்டு, திரிய வேண்டாம் - அவரோடு கூட அலையாதே. மதியாதார் - நன்கு மதிக்காதவருடைய, தலைவாசல் - கடை வாயிலில், மிதிக்க வேண்டாம் - அடியெடுத்தது வைக்காதே. மூத்தோர் - மூத்தோர்கள், சொல் - கூறுகின்ற, வார்த்தைகளை- சொற்களை, மறக்கவேண்டாம் - மறவாதே. முன்கோபக்காரரோடு முன்கோபமுடையாருடனே, இணங்க வேண்டாம் - சேராதே. வாத்தியார் - (கல்வி கற்பித்த) ஆசிரியருடைய, கூலியை - சம்பளத்தை, வைத்திருக்க வேண்டாம் - (கொடுக்காமல்) வைத்துக் கொள்ளாதே. வழி பறித்து - வழிப்பறி செய்து, திரிவாரோடு - திரிந்து கொண்டிருப்பவருடன், இணங்க வேண்டாம் - சேராதே. சேர்த்த - ஈட்டிய புகழாளன் - புகழுடைய வனாகிய, ஒரு - ஒப்பற்ற, வள்ளி பங்கன் - வள்ளியம்மையாரைப் பக்கத்தில் உடைய வனாகிய, திருகை - அழகிய கையின்கண், வேலாயுதனை – வேற் படையையுடைய முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே, செப்பாய் - புகழ்வாயாக. (பொழிப்புரை) வீண் பேச்சுப் பேசுவார் சொற்களைக் கேட்டுக் கொண்டு அவர்பின் அலைதல் கூடாது. வாய், சொல்லுக்கு ஆகுபெயர். வாய்பார்த்தல் என்றது “பண் கண்டளவில்” என்பது போல நின்றது. மதியாதாருடைய வீட்டிற்குச் செல்லல் கூடாது. மதியாதார் - அவமதிப்பவர். மிதித்தல் - அடியெடுத்து வைத்தல், சேர்தல். பெரியோர் கூறியனவற்றை மறத்தல் கூடாது; பெரியோர் சொன்னபடி நடக்க வேண்டும் என்க. மூத்தோர் - தாய், தந்தை, தமையன், ஆசான் முதலியவர்களும், அறிவிற் பெரியோர்களும் ஆவர். மிக்கக் கோபமுடையாருடன் நட்புக்கொள்ளுதல் கூடாது. முன்கோபம் - பொறுமையின்றி முதலெடுப்பில் உண்டாகும் சினம். கோபக்காரருடன் சேரவேண்டாம் என்றதனால் கோபம் கூடாது என்பதும் ஆயிற்று. கல்வி கற்பித்த ஆசிரியன் காணிக்கையைக் கொடாமல் இருத்தல் கூடாது. உபாத்தியாயர் என்பது வாத்தியார் எனத் திரிந்தது. வழிப்பறி செய்யும் கள்வருடன் சேர்தல் கூடாது. வழிப்பறி செய்தல் - வழியிற் பயணம் போகிறவர்களின் பொருளைப் பறித்துக் கொள்ளுதல். சேர்த்த - சம்பாதித்த; சேர்த்த என்பது வலித்தல் விகார மாயிற்று என்னலுமாம். (6) 7. கருதாமற் கருமங்கள் முடிக்க வேண்டாம் கணக்கழிவை யொருநாளும் பேச வேண்டாம் பொருவார்தம் போர்க்களத்திற் போக வேண்டாம் பொது நிலத்தி லொருநாளும் இருக்க வேண்டாம் இருதார மொருநாளுந் தேட வேண்டாம் எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம் குருகாரும் புனங்காக்கும் ஏழை பங்கன் குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே. (பதவுரை) கருமங்கள் - (செய்யத்தக்க) காரியங்களை, கருதாமல் - (செய்யும் வழியை) எண்ணாமல், முடிக்க வேண்டாம்- முடிக்க முயலாதே. அழிவு கணக்கை - பொய்க்கணக்கை, ஒரு நாளும் - ஒரு பொழுதும், பேச வேண்டாம் - பேசாதே. பொருவார் - போர் செய்வாருடைய, போர்க்களத்தில் - போர் (நடக்கும்) இடத்தின்கண், போகவேண்டாம் - போகாதே. பொது நிலத்தில் - பொதுவாகிய இடத்தில், ஒருநாளும் - ஒருபொழுதும், இருக்க வேண்டாம் - (குடி) இராதே. இருதாரம் - இரு மனைவியரை, ஒரு நாளும் - ஒருபொழுதும், தேடவேண்டாம் - தேடிக் கொள்ளாதே. எளியாரை - ஏழைகளை, எதிரிட்டுக் கொள்ள வேண்டாம் - பகைத்துக் கொள்ளாதே. குருகு - பறவைகள், ஆரும் - நிறைந்த, புனம் - தினைப் புனத்தை காக்கும் - காத்த, ஏழை - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்- பக்கத்தில் உடையவனாகிய, குமரவேள் - குமரவேளின், பாதத்தை - திருவடியை, நெஞ்சே - மனமே கூறாய் - புகழ்வாய். (பொழிப்புரை) செய்யப்படும் காரியங்களை முடிக்கும் வழியை ஆராய்ந்து செய்தல் வேண்டும். ஒரு காரியத்தை அதனால் வரும் நன்மை தீமைகளை ஆராயாமற் செய்தல் கூடாது என்பதும் ஆகும். பொய்க்கணக்குக் கூறுதல் கூடாது. வேற்றுமை உருபைப் பிரித்துக் கூட்டுக. பொய் நிலை பெறாதாகலின் அஃது அழிவு என்று சொல்லப்பட்டது. பிறர் போர் செய்யும் இடத்தில் குறுக்கே செல்லலாகாது. வீணாகப் போரிலே கலந்து கொள்ளக்கூடாது என்றுமாம். தம் : சாரியை. பலர்க்கும் உரிய பொது நிலத்தில் குடியிருத்தல் கூடாது. பொது நிலம் - மந்தை, சாவடி முதலியன. பொதுவிடத்தில் பலரும் வருவார்களாகையால் அங்கே குடியிருப்பின் துன்ப முண்டாகும் என்க. இரண்டு மனைவியரை மணந்துகொள்ளல் கூடாது. இரு மனைவியரைக் கொண்டால் பெரும்பாலும் அவர்களுக்குள் போராட்ட முண்டாகு மாதலின் தனக்குத் துன்பமேயன்றி இன்பம் இராதென்க. தாரம் - மனைவி. ஏழைகளிடத்துப் பகைத்தல் கூடாது. எளியார் - இடம் பொருள் ஏவல் இல்லார், எதிர் - பகை. மறுகையில் நரகத்திற்கேதுவாகலின் எதிரிட்டுக் கொள்ள வேண்டாம் என்றார். காத்த என்பதைக் காக்கும் என்றது காலவழுவமைதி ஏழை - பெண், குமரவேள் - குமரனாகிய வேள்; குமரன் இளைஞன்; முருகன். (7) 8. சேராத இடந்தனிலே சேர வேண்டாம் செய்தநன்றி யொருநாளும் மறக்க வேண்டாம் ஊரோடுங் குண்டுணியாய்த் திரிய வேண்டாம் உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம் பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம் பிணைப்பட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம் வாராருங் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. (பதவுரை) சேராத இடந்தனில் - சேரத்தகாத இடங்களில், சேரவேண்டாம் - சேராதே. செய்தநன்றி - ஒருவன் செய்த உதவியை, ஒரு நாளும் - ஒரு பொழுதும், மறக்க வேண்டாம் - மறக்காதே. ஊரோடும் - ஊர் தோறும் ஓடுகின்ற, குண்டுணியாய் - கோட் சொல்பவனாகி, திரியவேண்டாம் - அலையாதே. உற்றாரை - உறவினரிடத்து, உதாசினங்கள் - இகழ்ச்சியுரைகள், சொல்ல வேண்டாம் - சொல்லாதே. பேர்ஆன - புகழ் அடைதற்குக் காரணமாகிய, காரியத்தை - காரியத்தை, தவிர்க்க வேண்டாம் - (செய்யாது) விலக்க வேண்டாம். பிணைப்பட்டு - (ஒருவனுக்குப்) பிணையாகி, துணைபோகி- துணையாகச் சென்று, திரியவேண்டாம் - அலையாதே. வார்ஆரும் - பெருமை நிறைந்த, குறவர் உடை - குறவர்களுடைய (மகளாகிய), வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக. (பொழிப்புரை) சேர்தற்குத் தகுதியில்லாதவருடன் சேர்தல் கூடாது. தகாதவர் - கள்ளுண்போர், தூர்த்தர் முதலாயினார். தன் : சாரியை, ஒருவர் செய்யும் உபகாரத்தை எப்பொழுதும் மறத்தல் கூடாது. நன்றி மறப்பது தீராக் குற்றமாகும்; “ எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்பது திருக்குறள். “நன்றி மறவேல்” என்றார் ஒளவையாரும். ஊர் தோறும் சென்று புறங்கூறுதல் கூடாது. ஓடும் என்னும் பெயரெச்சம் குண்டுணி என்னும் பெயருடன் முடிந்தது. குண்டுணி - கோட் சொல்வோன் என்னும் பொருளில் வழங்குகிறது. ஊரோடும் என்பதற்கு ஊரிலுள்ள தீயவர்களுடன் சேர்ந்து என்று பொருளுரைத்தலும் ஆம். உறவின் முறையாரை மதியாது இகழ்தல் கூடாது. புகழைத் தருதற்குரிய வினையைச் செய்யா திருத்தல் கூடாது. பேர், பெயர் என்பதன் மரூஉ; பெயர் - புகழ். ஒருவனுக்குப் பிணையாகித் திரிந்து கொண்டிருத்தல் கூடாது. கடன் வாங்குவோர்க்கும் குற்றஞ் செய்வோர்க்கும் பிணையாதல் துன்பத்தை யுண்டாக்கும். பிணை - புணை; ஈடு - ஜாமீன். வார் - விலங்கு, பறவை முதலிய பிடித்தற்குரிய வலையும் ஆம்.(8) 9. மண்ணின்று மண்ணோரஞ் சொல்ல வேண்டாம் மனஞ்சலித்துச் சிலுக்கிட்டுத் திரிய வேண்டாம் கண்ணழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம் காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம் புண்படவே வார்த்தைதனைச் சொல்ல வேண்டாம் புறஞ்சொல்லித் திரிவாரோ டிணங்க வேண்டாம் மண்ணளந்தான் தங்கையுமை மைந்தன் எங்கோன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. (பதவுரை) மண்ணில் நின்று - நிலத்தில் நின்று, மண் - மண்ணைப் பற்றி, ஓரம் - ஒருதலைச் சார்பாக, சொல்ல வேண்டாம்- பேசாதே. மனம் - உள்ளம், சலித்து - இளைத்து, சிலுக்கிட்டு - (யார் மாட்டும்) சண்டையிட்டு, திரியவேண்டாம் - அலையாதே. கண் - அருளை, அழிவு செய்து - அழித்து, துயர் காட்ட வேண்டாம் - (பிற உயிர்கட்குத்) துன்பஞ் செய்யாதே. காணாத - காணாதவற்றைப் பற்றி, கட்டுவார்த்தையை - கட்டு வார்த்தைகளை, உரைக்க வேண்டாம் - செய்யாதே. புண்பட - (கேட்போர் மனம்) புண்படுமாறு, வார்த்தைதனை- சொற்களை, சொல்ல வேண்டாம் - சொல்லாதே. புறம் சொல்லி - புறங்கூறி, திரிவாரோடு - அலைபவருடன், இணங்க வேண்டாம் - சேராதே. மண் அளந்தான் - நிலத்தை (மூவடியால்) அளந்த திருமாலுக்கு, தங்கை - தங்கையாகிய, உமை - உமாதேவிக்கு, மைந்தன் - மகனும், எம் கோன் - எமக்குத் தலைவனும் ஆகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக. (பொழிப்புரை) நிலத்தின் மீது நின்று நிலத்தைப் பற்றிய வழக்கில் ஓரஞ் சொல்லுதல் கூடாது. “ஓரஞ் சொல்லேல்” என்பது ஆத்திசூடி. ஓரம் - நடுநிலையின்மை, பட்சபாதம். மனத்திட்ப மில்லாது கோபத்தால் யாருடனும் சண்டை யிடுதல் கூடாது. அருளின்றிப் பிற உயிர்களை வருத்துதல் கூடாது. கண், கண்ணோட்டத்திற்கு ஆகுபெயர். ஈண்டு அருளைக் குறித்து நின்றது. இனி, கண்ணீர் ஒழுகுமாறு தனக்குள்ள துயரைப் பிறரிடத்துப் புலப்படுத்தல் வேண்டா என்பதும் ஆம். கண்ணழிவு என்பதை ஒரு சொல்லாகக் கொண்டு தடுத்து என்றும், பிரித்து என்றும் பொருள் சொல்லலுமாம். பிறர் செய்யும் நற்காரியத்தைத் தடுத்து என்றும், சேர்ந்திருப் போரைப் பிரித்து என்றும் கொள்ள வேண்டும். காணாதவற்றைக் கண்டதுபோல வைத்துப் பொய் கூறல் கூடாது. கட்டு வார்த்தையை என மாற்றப்பட்டது. கட்டு வார்த்தை - கற்பனை வார்த்தை. இனி, வார்த்தை என்பதற்குச் செய்தி என்று பொருள்கூறி, காணாத செய்தியைக் கண்டது போல உறுதியாகப் பேச வேண்டாம் என்று உரைத்தலுமாகும். கட்டுரைத்தல் - உறுதியாகப் பேசுதல். கேட்போர் மனம் வருந்துமாறு கொடுஞ்சொற் கூறலாகாது. புண்படல் - புண்பட்டாற்போல் வருந்தல். “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு” என்பது திருக்குறள் புறங்கூறுவாருடன் சேர்தல் கூடாது. புறஞ்சொல்லல் இன்னதென்பது முன்பு உரைக்கப் பட்டது. (9) 10. மறம்பேசித் திரிவாரோ டிணங்க வேண்டாம் வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம் திறம் பேசிக் கலகமிட்டுத் திரியவேண்டாம் தெய்வத்தை யொருநாளும் மறக்க வேண்டாம் இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம் ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம் குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன் குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே. (பதவுரை) மறம்பேசி - வீரமொழி கூறி, திரிவாரோடு (போருக்கு) அலைபவருடன், இணங்க வேண்டாம் - நட்புக் கொள்ளாதே. வாதாடி - வாதுகூறி, அழிவு வழக்கு - கெடுவழக்கு, சொல்ல வேண்டாம் - கூறாதே. திறம்பேசி - வலிமை கூறி, கலகம் இட்டு - கலகம் செய்து, திரிய வேண்டாம் - அலையாதே. தெய்வத்தை - கடவுளை, ஒருநாளும் - ஒருபொழுதும், மறக்க வேண்டாம் - மறவாதே. இறந்தாலும் - (கூறாதிருப்பின்) இறக்க நேரிடுமாயினும், பொய் தன்னை - பொய்யை, சொல்ல வேண்டாம் - சொல்லாதே. ஏசல் இட்ட - இகழ்ச்சி செய்த, உற்றாரை - உறவினரை, நத்த வேண்டாம் - விரும்பாதே. குறம்பேசி - குறிசொல்லி, வாழ்கின்ற - வாழும், வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடைய வனாகிய, குமரவேள் - முருகவேளின், நாமத்தை - பெயர்களை, நெஞ்சே - மனமே, கூறாய்- சொல்லித் துதிப்பாயாக. (பொழிப்புரை) வீரவாதம் பேசித் திரிவாருடன் நட்புக் கொள்ளுதல் கூடாது. மறம்பேசல் - தம் வீரத்தைத் தாமே புகழ்ந்து பேசுதல். திரிவார் - வீணே அலைகின்றவரும் ஆம். இனி, மறம்பேசி என்பதற்குக் கொலை முதலிய கொடிய காரியங்களைப் பேசி என்று உரைத்தலும் பொருந்தும். மன்றம் ஏறி அழிவழக்குப் பேசுதல் கூடாது. அழிவழக்கு - வழக்கல்லாத வழக்கு; பொய் வழக்கு. வல்லமை பேசிக் கலகஞ் செய்தல் கூடாது. திறம்பேசல் தம் வலிமை முதலியவற்றைப் புகழ்ந்து பேசுதல். கலகம் - சிறு சண்டை. “வல்லமை பேசேல்” என்பது ஆத்திசூடி. கடவுளை எப்பொழுதும் மறத்தல் கூடாது. சிந்தித்து வணங்க வேண்டும் என்க. ஒருநாளும் என்றது இன்பத்திலும் துன்பத்திலும் என்றபடி. உயிர் நீங்க நேர்ந்தவிடத்தும் பொய் கூறுதல் கூடாது. உயிரைக் கொடுத்தாயினும் உண்மையை நிலைநாட்டுதல் வேண்டும் என்பது கருத்து. மதியாது இகழ்ந்த உறவினரை விரும்பிச் சேர்தல் கூடாது, நத்தல் - விரும்பல். குறமகளிர் சொல்லும் குறியைக் குறம் என்பர். குறி-சோதிடம்; ஒருவர் மனத்து நினைத்ததனைக் குறித்துக் கூறல். குறப் பெண்டிர் செய்கையை வள்ளிக்கு ஏற்றிக் கூறினார். (10) 11. அஞ்சுபேர்க் கூலியைக்கைக் கொள்ள வேண்டாம் அதுவேதிங் கென்னின்நீ சொல்லக் கேளாய் தஞ்சமுடன் வண்ணான் நாவிதன்றன் கூலி சகலகலை யோதுவித்த வாத்தியார் கூலி வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவிச்சி கூலி மகாநோவு தனைத்தீர்த்த மருத்துவன்றன் கூலி இன்சொலுடன் இவர்கூலி கொடாத பேரை ஏதேது செய்வானோ ஏமன் றானே. (பதவுரை) அஞ்சுபேர் கூலியை - ஐவருடைய கூலியை கைக் கொள்ள வேண்டாம் - கைப்பற்ற வேண்டாம் (கொடுத்து விட வேண்டும்), அது - அக் கூலி, ஏது என்னின் - யாது என்று கேட்பின், சொல்ல - நான் சொல்கின்றேன், நீ - நீ, கேளாய் - கேட்பாயாக, வண்ணான் கூலி - வண்ணானுடைய கூலியும், நாவிதன் கூலி - அம்பட்டன் கூலியும், சகலகலை - பல கலைகளையும். ஓதுவித்த - படிப்பித்த, வாத்தியார் கூலி - ஆசிரியர் கூலியும், வஞ்சம் அற - வஞ்சனை நீங்க, நஞ்சு அறுத்த - நச்சுக் கொடி அறுத்த, மருத்துவிச்சி கூலி - மருத்துவிச்சியின் கூலியும், மகாநோவுதனை- (நீக்குவதற்கு அரிய) கொடிய நோயினை, தீர்த்த - நீக்கிய, மருத்துவன் கூலி - வைத்தியன் கூலியும், (ஆம்); இவர் கூலி - இவருக்குக் கொடுக்க வேண்டிய கூலியை, தஞ்சமுடன் - அன்புடனும், இன்சொல்லுடன் - இன்சொல்லோடும், கொடாத பேரை - கொடுக்காதவர்களை, ஏமன் - இயமன், ஏதுஏது - என்ன என்ன துன்பம், செய்வானோ - செய்வானோ, (நான் அறியேன்) (பொழிப்புரை) வண்ணான், அம்பட்டன், ஆசிரியர், மருத்துவிச்சி, மருத்துவன் என்னும் ஐவரின் கூலியையும் கொடுத்துவிட வேண்டும். இன்றேல் எமனால் துன்புறுத்தப் படுவார்கள். அஞ்சு ஐந்து என்பதன் போலி. கூலியென்னும் பொதுமை பற்றி அது என ஒருமையாற் கூறினார். கூலி என்பதை வண்ணான் என்பதோடும் ஒட்டுக. மருத்துவிச்சி, மருத்துவன் என்னும் ஆண்பாற் பெயர்க்குப் பெண்பாற் பெயர். ஏது ஏது என்னும் அடுக்குப் பன்மைபற்றி வந்தது; குறிப்புச் சொல். ஓ; இரக்கம். யமன் என்பது ஏமன் எனத்திரிந்தது. இங்கு தன், தான், ஏ, என்பன அசைகள். (11) 12. கூறாக்கி யொருகுடியைக் கெடுக்க வேண்டாம் கொண்டைமேற் பூத்தேடி முடிக்க வேண்டாம் தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம் துர்ச்சனராய்த் திரிவாரோ டிணங்க வேண்டாம் வீறான தெய்வத்தை யிகழ வேண்டாம் வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம் மாறான குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. (பதவுரை) ஒரு குடியை - ஒரு குடும்பத்தை, கூறு ஆக்கி - பிரிவுபடுத்தி, கெடுக்க வேண்டாம் - கெடுக்காதே. பூ தேடி - பூவைத் தேடி, கொண்டைமேல் - கொண்டையின் மீது, முடிக்க வேண்டாம் - முடித்துக் கொள்ளாதே. தூறுஆக்கி - (பிறர்மீது) பழிச்சொற்களை யுண்டாக்கி, தலையிட்டு - தலைப்பட்டுக் கொண்டு, திரிய வேண்டாம் - அலை யாதே. துர்ச்சனராய் - தீயவர்களாகி, திரிவாரோடு - (ஊர்தொறும்) அலைபவருடன், இணங்க வேண்டாம் - சேராதே. வீறு ஆன - பெருமையுடையனவாகிய, தெய்வத்தை - தெய்வங்களை, இகழ வேண்டாம் - இகழாதே. வெற்றி உள்ள - மேன்மையுடைய, பெரியோரை - பெரி யோர்களை, வெறுக்க வேண்டாம் - வெறுக்காதே. மாறு ஆன - (மற்ற நிலத்தில் உள்ளாருடன்) பகைமையுடைய ராகிய, குறவர் உடை - குறவர்களுடைய (மகளாகிய), வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக. (பொழிப்புரை) ஒரு குடியின்கண் ஒற்றுமையுடன் வாழ்பவர் களைப் பிரிவுசெய்தல் கூடாது. கூறு - பிளவு; பிரிவு குடி; குடியிலுள்ளார்க்கு ஆகுபெயர். கொண்டைமேல் பூ முடித்தல் கூடாது. பிறர் காணும்படி கொண்டை மேற் பூ முடித்துக்கொண்டு தூர்த்தர்போலத் திரியலாகாது என்க. மலர் பறித்துக் கடவுளுக்குச் சாத்த வேண்டும் என்னுங் கருத்துங் கொள்க. பிறர்மேல் பழிச் சொற்களைக் கட்டிவிட்டு, அதுவே தொழிலாகத் திரிதல் கூடாது. தலையிடல் - தொடர்புவைத்துக் கொள்ளுதல்; பொறுப் பேற்றல். தீத்தொழில் உடையாருடன் சேர்தல் கூடாது. துர்ச்சனர் - துட்டர், தீயோர் பெருமையுள்ள தெய்வங்களை இகழ்ந்துரைத்தல் கூடாது. கூறு - பெருமை, வெற்றியுமாம். “தெய்வ மிகழேல்” என்பது ஆத்திசூடி. பெரியோரை வெறுத்தல் கூடாது. வெற்றி - பிறரினும் மேம்படுதல்; வாழவும் கெடவும் ஆற்றலுடைமையுமாம். வெறுத்தல் - இகழ்தல். மாறு - பகை: மாறுபட்ட நடையுமாம்; முருகக்கடவுளின் பெருமைக்கு மாறான என உரைப்பினும் அமையும். (12) 13. ஆதரித்துப் பலவகையாற் பொருளுந் தேடி அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி ஓதுவித்த வாசகத்தால் உலக நாதன் உண்மையாய்ப் பாடி வைத்த உலக நீதி காதலித்துக் கற்றோருங் கேட்ட பேரும் கருத்துடனே நாடோறுங் களிப்பி னோடு போதமுற்று மிகவாழ்ந்து புகழுந் தேடிப் பூலோக முள்ளளவும் வாழ்வர் தாமே. (பதவுரை) ஆதரித்து - விரும்பி, பலவகையாய் - பல (நல்ல) வழியால், பொருளும் தேடி - பொருளையும் ஈட்டி, அறுமுகனை- ஆறுமுகங்களையுடைய முருகக்கடவுளை, அருந்தமிழால் அரிய தமிழ்மொழியால், பாட வேண்டி - பாடுதலை விரும்பி, ஓதுவித்த - அவ்விறைவன் அறிவித்தருளிய, வாசகத்தால்- வாசகங்களினால், உலகநாதன் - உலகநாதன் என்னும் பெயருடையான், உண்மையாய் - மெய்மைமையாக, பாடி வைத்த - பாடிய, உலகநீதி - உலக நீதி என்னும் இந்நூலை, காதலித்து - விரும்பி, கற்றோரும் படித்தவர் களும் கேட்ட பேரும் - கேட்டவர்களும், நாள் தோறும் – ஒவ்வொரு நாளும், கருத்துடன் - நல்லெண்ணத்தோடும், களிப்பினோடு – மகிழ்ச்சி யோடும், போதம் - அறிவும், உற்று - உறப்பெற்று, மிகவாழ்ந்து - மிகவும் வாழ்வுடையராய், புகழும் தேடி - புகழையும் பெற்று, பூலோகம் உள்ளளவும் - ஊழிக் காலம் வரையிலும், வாழ்வர் - வாழ்வார்கள். (பொழிப்புரை) உலகநாதன் என்னும் புலவன் பல நல்வழியாற் பொருள் சேர்த்து, பின்பு, தமிழ்மொழியால் முருகக் கடவுளைப் பாட விரும்பி, அப்பெருமான் உணர்த்திய வாசகங்களாற் பாடிவைத்த ‘உலகநீதி’ என்னும் இந்நூலை விருப்புடன் கற்றவரும், கேட்டவரும் நல்லெண்ணமும், மனமகிழ்ச்சியும் ஞானமும், வாழ்வும் புகழும் உடையவர்களாய் உலகமுள்ளவரையும் வாழ்வார்கள். இப்பாட்டின் முற்பகுதியால் இந்நூலைப் பாடியவர் உலகநாதன் என்னும் பெயரினர் என்பதும், அவர் பல வழியாலும் பொருள் தேடியதுடன் முருகக்கடவுளிடத்தில் அன்புடையவரா யிருந்தார் என்பதும் உலகநீதி என்பது இந்நூற் பெயரென்பதும் விளங்குகின்றன. பிற்பகுதியில் இதனைக் கற்றவரும் கேட்டவரும் அடையும் பயன்கள் கூறப்பட்டன. பொருளும் தேடி என்பதிலுள்ள உம்மை கல்வியும் தேடினார் என்பதைக் குறிப்பிடுகின்றது. பொருள் தேடி என்பதற்கு முருகக் கடவுட்குப் பொருள் தேடி வைத்து என்றும், ‘ஓதுவித்த’ என்பதற்குத் தனக்கு ஆசான் கற்பித்த என்றும் கூறுதலுமாகும். இனி, உலகநாதன் ஓதுவித்த வாசகத்தால் எனக் கொண்டு கூட்டி, உலகநாதன் கேட்டுக் கொண்டபடி என்றுரைத்தலுமாகும்; அப்பொழுது இந்நூலைச் செய்தோன் பெயர் விளங்கவில்லை. கேட்டவர் என்பது உலக வழக்கின்படி கேட்ட பேர் என்றிருக்கிறது. உள்ள அளவும் என்பது உள்ளளவும் என்றாயிற்று. தாம், ஏ: அசைகள். (13) உலகநீதி மூலமும் உரையும் முற்றிற்று நன்னெறி முகவுரை நன்னெறி யென்னும் இந் நீதிநூல் ஏறக்குறைய இருநூற்றெண்பது ஆண்டுகளின் முன்பு விளங்கிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் என்னும் கவிஞர் பெருமானால் அருளிச் செய்யப்பெற்றது. சிவப்பிரகாசரின் தந்தையார் காஞ்சிபுரத்திலே தொண்டைமண்டல வேளாளர்க்குக் குருக்களா யிருந்த குமார சுவாமி தேசிக ரென்பவர். இவர் பின்பு சிவலிங்க தாரணஞ்செய்து கொண்டு வீரசைவ (இலிங்காயத) மதத்தினராயினர். சிவப்பிரகாசருக்கு வேலையர், கருணைப்பிரகாசர் என இருதம்பியரும், ஞானாம்பிகை என ஒரு தங்கையும் இருந்தனர். ஞானாம்பிகையம்மை திருப்போரூரி லிருந்தவரும், வைராக்கிய சதகம் முதலிய அரிய நூல்களை அருளிச் செய்தவரும் ஆகிய சாந்தலிங்க சுவாமிகள் என்னும் பெரியாருக்கு மணஞ்செய்து கொடுக்கப்பெற்றனர். சிவப்பிரகாசர் மணஞ்செய்து கொள்ளாது துறவு பூண்டிருந்தனர். இளைஞர் இருவரும் இல்லற வாழ்க்கையராயினர். சிவப்பிரகாசர் மிக்க இளம் பருவத்தினரா யிருந்தபொழுதே தமிழ்க்கல்வியிற் றலைசிறந்து விளங்கியதுடன், செய்யுளியற்றும் வன்மை கைவரப்பெற்றவருமாயினர். இவர் இளைஞராய்த் திருவண்ணாமலையில் வதிந்து வருநாட்களில் ஒருநாள் சோணசைலமாலை யெனப் பெயரிய நூறு செய்யுட் களாலாய பிரபந்தம் பாடி அதனைத் துதித்தனர் என்ப. அவர் தமிழிலக்கணம் பாடங்கேட்ட வரலாறாகக் கேட்கப்படுவது பின் வருமாறு:- “பாண்டிய நாட்டிலே தாமிரவரணிக் கரையிலுள்ள சிந்துபூந் துறையில் தருமபுரவாதீனத்து வெள்ளியம்பல வாணத் தம்பிரான் இலக்கண விலக்கியங்களில் மிகவும் வல்லுநராயிருந்திருக்கின்றன ரெனக் கேள்வியுற்று, இவர் அவ்விடத்தெய்தித் தம்பிரான் சுவாமி களைக் கண்டு தாம் இலக்கணங் கற்க வேண்டி வந்தமையைத் தெரிவித்துக் கொண்டனர். சுவாமிகள் இவரது இலக்கியப் பயிற்சியை அறிதற்பொருட்டு, ‘கு என்னும் எழுத்து முதலிலும் இறுதியிலும் அமையவும், ஊருடையான் என்பது இடையிற் பொருந்தவும் ஒரு வெண்பாப் பாடுக’ என்று கூற, இவர் உடனே, ‘குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழன் முடக்கோடு முன்னமணி வாற்கு - வடக்கோடு தேருடையான் றெவ்வுக்குத் தில்லைதோன் மேற்கொள்ள லூருடையா னென்னு முலகு.’ என்னும் வெண்பாவைப் பாடினர். இதனுள் ‘வடக்கோடு தேருடையான்’ என்று அமைத்தமையைத் தம்பிரானடிகள் வியந்து பாராட்டி, வேலையர், கருணைப்பிரகாசர் என்னும் இருவர்க்கும் சில நாட்களில் ஐந்திலக்கணமும் பாடஞ்சொல்லி முடித்தனர். அது கண்ட சிவப்பிரகாசர் தாம் அண்ணாமலை ரெட்டியாராற் கொடுக்கப் பெற்றுக் கொண்டு வந்திருந்த முந்நூறு பொன்னையும் ஆசிரியர்க்குக் காணிக்கையாக வைத்து உபசரிக்க, அவர் ‘இது நமக்கு வேண்டு வதில்லை; புலவர்களை இகழும் புன்மையுடை யராய்த் திருச் செந்தூரில் வசிக்கும் தமிழ்ப்புலவரொரு வரைச் செருக்கடக்கி, அவர் நம்மை வந்து வணங்கும்படி செய்தலே நமக்குக் காணிக்கையாகும்’ என்றனர். சிவப்பிரகாச முனிவர் அதற்குடன்பட்டுத் திருச் செந்தூருக்குப் போய் முருகக் கடவுளைத் தரிசித்து வலம்வரும் பொழுது அப் புன்புலவர் இவரை யெதிர்ப்பட்டு இகழத் தலைப்பட்டவர், இவரைப் புதிய முறையால் வெற்றி பெறுவோமெனத் துணிந்து, ‘நாமிருவரும் நிரோட்டக யமகம் பாடுவோம்; முன்பு பாடி முடித்தவர்க்கு அஃதியலாதார் அடிமை யாவோம்’ என்று கூறினர். சுவாமிகள் அதற் கிசைந்தருளி , உடனே அத் தலத்து முருகக்கடவுள் மீது நிரோட்டக யமக அந்தாதியாக முப்பது கட்டளைக் கலித்துறை பாடி முடித்தனர். அப்பொழுது ஒரு செய்யுளேனும் பாடி முடிக்கா லாற்றாத அப் புலவர், அடிகளின் திருவடிகளை வணங்கி ‘அடிமையா யினேன்’ என்று விண்ணபப்பஞ் செய்ய, சிவப்பிரகாச முனிவர் அவரை யழைத்து வந்து தம் ஆசிரியருக்கு அடிமையாக்கிவிட்டனர்.” சிவப்பிரகாச சுவாமிகள் பெரும்பாலும் வதிந்த இடம் வடவெள்ளாற்றின் பக்கத்திலுள்ள வாலிகண்ட புரத்திற்கு அணித்தாகிய நல்லாற்றூர் என்னும் துறைமங்கலமாகும். அதனாலேயே அவரது ஊர் துறைமங்கலம் எனப்படும். அக் காலத்து அங்கிருந்த பெருஞ் செல்வரும், தமக்கு அணுக்கத் தொண்ட ரானவரும் ஆகிய அண்ணாமலை ரெட்டியார் வேண்டிக் கொண்டபடி திருவெங்கைமா நகரத்தில் எழுந் தருளியிருக்கின்ற சிவபெருமான் மீது கோவை, கலம்பகம், உலா, அலங்காரம் ஆகிய பிரபந்தங்கள் பாடினர். அவற்றுள் அண்ணாமலை ரெட்டியாரை யும் ஒவ்வோரிடங்களில் புகழ்ந்து கூறியிருக் கின்றனர். அக்காலத்திலே இத்தாலி தேசத்தி னின்றும் வந்திருந்த பாதிரியாகிய வீரமாமுனிவர் என்பவர் தமது ஏசுமதக் கொள்கையை நிலைநிறுத்துதற் பொருட்டுத் தருக்கஞ் செய்ய, சிவப்பிரகாச அடிகள் அக் கொள்கைகளை மறுத்து ஏசுமத நிராகரணம் எனப் பெயரிய நூல் இயற்றினர். சிவப்பிரகாசருக்கு ஞானாசிரியர் பொம்ம புரம் சிவஞான பாலைய தேசிகர். தம் ஞானாசிரியர் மீது தாலாட்டு, நெஞ்சுவிடு தூது, திருப்பள்ளியெழுச்சி, பிள்ளைத்தமிழ், கலம்பகம் ஆகிய பிரபந்தங்கள் அடிகளால் இயற்றப் பெற்றுள்ளன. சைவசமய குரவர்களாகிய நால்வர் களையும் அடிகள் துதித்துள்ள ‘நால்வர் நான்மணி மாலை’ என்னும் பிரபந்தம் சைவ நன்மக்கள் யாவராலும் போற்றப்படுகின்றது. திருவா வடுதுறை யாதீனத்துப் பெரியார்கள், சிவப்பிரகாசர் தமது சித்தாந்த சைவ மரபினரல்ல ராயினும், அவர் நால்வர்மீது பாடியுள்ள நான்மணிமாலைப் பாடல்களின் அருமை பெருமைகளைப் பாராட்டி அப் பாடல்களைச் சிறிய எழுத்துக்களால் எழுதிச் சுருள் செய்து உருத்திராக்க வடத்துடன் தொடுத்து அணிந்து கொள்வதுண்டென்று பெரியோர் சிலர் சொல்லக் கேட்டுளோம். சிவப்பிரகாச சுவாமிகள் போலவே, அவருடைய தம்பியரிருவரும் புலமை மிக்கவரா யிருந்தனர். இளையவராகிய கருணைப் பிரகாசரும், மூத்தவராகிய சிவப்பிரகாசரும் இவ்வுலக வாழ்வைத் துறந்த பின்பு , ‘அல்லிமலர்ப் பண்ணவனும் ஆராய்ந் தறிகவிதை சொல்லும் இருவரிடைத் தோன்றியயான் - முல்லை அரும்பிற் பொலியும் அணிமுறுவல் நல்லாய் கரும்பிற் கணுநிகர்த்தேன் காண்.’ என்று வேலையர் இரங்கிக் கூறியுள்ளார். சிவப்பிரகாசர் தமது முப்பத்திரண்டாம் ஆண்டிற் சிவப் பேறெய்தின ரெனக் கூறப்படு கின்றது. அவருடைய பாடல் களெல்லாம் புதிய புதிய கற்பனையலங் காரங்களுடன் கூடிக் கற்றவ ருள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் பான்மையன. அவர் பாடலின் சுவையில் ஈடுபடாத உள்ள முடையார் அவிழ்ச் சுவையன்றித் தமிழ்ச்சுவை யறியாதவரே யாவர். சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய நூல்கள்:- இட்டலிங்கப் பெருமான்மீதும் சிவஞான பாலைய தேசிகர் மீதும் இயற்றியுள்ள பிரபந்தங் களும், சோணசைமாலை, நால்வர் நான்மணிமாலை, திருச்செந்திலந்தாதி, பழமலையந்தாதி, பிக்ஷாடண நவமணிமாலை, பெரியநாயகியம்மை விருத்தம், பெரிய நாயகியம்மை கலித்துறை, நன்னெறி, திருவெங்கைக் கோவை, திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கையுலா, வேதாந்தசூடாமணி, சித்தாந்த சிகாமணி, பிரபுலிங் கலீலை, திருக்கூவப்புராணம், சீகாளத்திப்புராணம் (கண்ணப்பச் சருக்கம், நக்கீரச் சருக்கம்) என்பனவும், தருக்க பரிபாஷை முதலியனவும் ஆம். சீகாளத்திப் புராணத்தின் முற்பகுதி கருணைப் பிரகாசராலும், பிற்பகுதி வேலையராலும் பாடப்பெற்றன. சிவப்பிரகாச சுவாமிகள் பொம்மபுரத்தில் எழுந்தருளியிருந்த காலத்தில் ஒருநாள் தனிமை யாகக் கடற்கரை யெய்தி, அங்குள்ள நறுமணற் பரப்பிலே நன்னெறி வெண்பா நாற்பதையும் எழுதிவிட்டு வந்து, அதனை ஏட்டிலெழுதி வரும்படி கருணைப்பிரகா சருக்குக் கட்டளையிட, அவரும் அங்ஙனமே எழுதி வந்தனரெனக் கூறுப. இந்நூலின் ஒவ்வொரு பாவும் மக்கட்கு இன்றியமையாத நீதிகளை அழகிய உவமைகளுடன் கூறுவதாகும். உவமைகளெல்லாம் யாவராலும் அறியப்பட்டனவாகவும் அமைந்து, கற்போர்க்கு வியப்பும் மகிழ்ச்சியும் விளைப்பனவாகும். மக்களின் உடலுறுப்புக்களாகிய கண் முதலிய வற்றின் இயல்புகளை ஒன்பது பாக்களிலும், ஞாயிறு, திங்கள், கடல், காற்று முதலிய இயற்கைப் பொருள்களையும், நெல், வாழை, பசு முதலிய பயிற்சி மிக்க பொருள்களையும், வேறு பல பாக்களிலும் உவமையாக அமைத்திருப்பது இளைஞர்கட்குக் கல்வி பயில்விப்ப தில் இவ்வாசிரியர்க்குள்ள திறப்பாட்டை நன்கு விளக்கா நிற்கும். இங்ஙனம், ந. மு. வேங்கடசாமி நாட்டார். நன்னெறி மூலமும் உரையும் கடவுள் வாழ்த்து மின்னெறி சடாமுடி விநாயக னடிதொழ நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே. (பதவுரை) மின் எறி - மின்னல்போலும் ஒளியை வீசுகின்ற, சடாமுடி - சடைமுடியையுடைய , விநாயகன் அடிதொழ - விநாயகக் கடவுளின் திருவடிகளை வணங்குதலால், நன்னெறி வெண்பா நாற்பதும் வரும் - நன்னெறி என்னும் நூலின் நாற்பது வெண்பாவும் வரும் ஏ: ஈற்றசை (கருத்து) விநாயகக் கடவுளை வணங்குதலால் நன்னெறி என்னும் நூல் இடையூறின்றி இனிது முடியும் என்பதாம். முகமன் எதிர்பாராமல் உதவுக 1. என்று முகமன் இயம்பா தவர்கண்ணுஞ் சென்று பொருள்கொடுப்பர் தீதற்றோர் – துன்றுசுவை பூவிற் பொலிகுழலாய்! பூங்கை புகழவோ நாவிற் குதவும் நயந்து. (பத.) பூவின் பொலி குழலாய் - பூவினால் விளங்குகின்ற கூந்தலை யுடையவளே, பூ கை - அழகிய கையானது, புகழவோ - தன்னைப் புகழ்தல் கருதியோ, நாவிற்கு - நாவினுக்கு, துன்றுசுவை - மிக்க சுவையுள்ள உணவினை, நயந்து உதவும் - விரும்பிக் கொடுக்கும் (புகழஅன்று; அதுபோல), தீது அற்றோர் - குற்றமற்றவராகிய பெரியோர், என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும் - யாதொரு நாளிலும் (தமக்கு) அன்புமொழிகளைச் சொல்லாதவரிடத்திலும், சென்று பொருள் கொடுப்பர் - தாமே சென்று (அவர்க்கு வேண்டும்) பொருளைக் கொடுப்பார். (க-து) பெரியோர் தமக்கு அன்பு காட்டாதவ ரிடத்தும் தாமே சென்று அவர்க்கு வேண்டும் பொருளை வழங்குவர் (எ- ம்.) (1) வன்சொல்லும் இனிதாதல் உண்டு 2. மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினி தேனையவர் பேசுற்ற இன்சொல் பிறிதென்க – ஈசற்கு நல்லோன் எறிசிலையோ நன்னுதால் ஒண்கருப்பு வில்லோன் மலரோ விருப்பு. (பத.) நல் நுதால் - நல்லநெற்றியை உடையவளே, மாசு அற்ற நெஞ்சு உடையார் வன்சொல் இனிது - குற்றமற்ற மனத்தை யுடையவரது கடுஞ்சொல்லும் இனியதாகும்; ஏனையவர் பேசுற்ற இன்சொல் பிறிது என்க - (குற்றம் பொருந்திய மனத்தையுடையவராகிய) பிறர் சொல்லிய இன்சொல்லும் கொடியதாகும் என்று அறிவாயாக; ஈசற்கு - சிவபெருமானுக்கு, நல்லோன் எறிசிலையோ - நற்குணமுடையவராகிய சாக்கிய நாயனார் (அன்போடு) எறிந்த கல்லோ, ஒள் கருப்பு வில்லோன் மலரோ - ஒள்ளிய கரும்புவில்லையுடைய மன்மதன் (அன்பின்றி) எறிந்த பூவோ, விருப்பு - விருப்பாயிற்று? (க-து) மன நன்மையுடையோருடைய கடுஞ் சொல்லும் இன்பம் விளைக்கும்; மன நன்மை இல்லாதவருடைய இன்சொல்லும் துன்பம் விளைக்கும். உ - ம்: சிவபெருமான் சாக்கியர்க்கு அருள் செய்தார்; மன்மதனை எரித்தார். (2) இனிய நெறியறிந்து பெறுக 3. தங்கட் குதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவன் தங்கட் குரியவராற் றாங்கொள்க – தங்கநெடுங் குன்றினாற் செய்தனைய கொங்கையாய்! ஆவின்பால் கன்றினாற் கொள்ப கறந்து. (பத.) நெடும் தங்கக் குன்றினால் செய்து அனைய கொங்கையாய் - நெடிய பொன்மலையினால் செய்தாற் போன்ற தனங்களை யுடையவளே, ஆவின்பால் கன்றினால் கறந்து கொள்ப - (தங்களுக்குக் கொடாத) பசுவினுடைய பாலை (அப் பசுவுக்குரிய) கன்றைக் கொண்டு கறந்துகொள்வார்கள், (அதுபோல) தங்கட்கு உதவிலர் கை - தங்களுக்கு உதவாதவர் களுடைய கையினின்றும், தாம் ஒன்று கொள்ளின் - தாங்கள் ஒரு பொருளைக் கொள்ள வேண்டினால், அவர் தங்கட்கு உரியவரால் தாம் கொள்க - அவர்களுக்கு உரியவராலே (அப் பொருளைத்) தாங்கள் கொள்ளக் கடவர்கள். (க - து) தமக்கு உதவாதவரிடத்தில் ஒரு பொருள் பெற வேண்டின், அதனை அவருக்கு உரியவரைக் கொண்டு பெறல் வேண்டும் (எ - ம்.) (3) செல்வம் பயன்படுத்துவார்க்கே உரியது 4. பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு பிறர்க்குதவி யாக்குபவர் பேறாம் – பிறர்க்குதவி செய்யாக் கருங்கடனீர் சென்று புயன்முகந்து பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு. (பத.) பிறர்க்கு உதவி செய்யா - பிறர்க்கு உபகாரஞ் செய்யாத, கருங் கடல் நீர் - கரிய கடலின் நீரை, புயல் சென்று முகந்து - மேகமானது போய் மொண்டுவந்து, பிறர்க்குப் பெய்யாக் கொடுக்கும் - பிறர்க்குப் பெய்து கொடுக்கும்; (அதுபோல) பிறர்க்கு உதவி செய்யார் பெருஞ்செல்வம் - பிறர்க்கு உபகாரஞ் செய்யாதவருடைய பெரிய செல்வமானது, வேறு - பிறிதேயாயினும், பிறர்க்கு உதவி ஆக்குபவர் பேறு ஆம் - பிறருக்கு உபகாரஞ் செய்பவருடைய செல்வமாகும். (க - து) உலோபிகளின் பொருள் அதனை யெடுத்து ஈவோரின் பொருளாகவே கொள்ளப்படும் (எ - ம்.) (4) நட்பிற் பிரியாமை நன்று 5. நீக்க மறும்இருவர் நீங்கிப் புணர்ந்தாலும் நோக்கி னவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்! நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோற் புல்லினுந் திண்மைநிலை போம். (பத.) பூக்குழலாய் - பூக்களை முடித்த கூந்தலையுடையவளே! நெல்லின் உமி சிறிது நீங்க - நெல்லினின்றும் உமியானது சிறிது நீங்கி, பழைமை போல் புல்லினும் - முன்போலவே கூடினாலும், திண்மை நிலைபோம் - (முளைத்தற்கேற்ற) வலிமையின் நிலை போய்விடும்; (அதுபோல) நீக்கம் அறும் இருவர் நீங்கிப் புணர்ந்தாலும் - பிரிவு இல்லாத நண்பர் இருவர் பிரிந்து (முன்போலவே) கூடினாலும், நோக்கின் அவர் பெருமை நொய்து ஆகும் - பார்க்குமிடத்து அவருடைய பெருமை அற்பமாகும். (க-து) இடையே பகைமையாற் பிரிந்து கூடும் நட்பு முன்போல் உறுதியுடையதாகாது (எ - ம்.) (5) காதலர் ஒருமை 6. காதன் மனையாளுங் காதலனும் மாறின்றித் தீதி லொருகருமஞ் செய்பவே – ஓதுகலை எண்ணிரண்டு மொன்றுமதி என்முகத்தாய் நோக்கறான் கண்ணிரண்டு மொன்றையே காண். (பத.) ஓது - புகழ்ந்து சொல்லப்படுகின்ற, எண்ணிரண்டு கலையும் ஒன்றும் - பதினாறு கலைகளும் பொருந்திய, மதி என் முகத்தாய்- சந்திரன் என்று சொல்லப்படும் முகத்தை யுடையவளே!, கண் இரண்டும் - இரண்டு கண்களும், நோக்கல் - பார்த்தல், ஒன்றையே - ஒரு பொருளையேயாம்; (அதுபோல) காதல் மனையாளும் காதலனும் - அன்பையுடைய மனைவியும் கணவனும், மாறு இன்றித் தீது இல் ஒரு கருமமே செய்ப - (தம்முள்ளத்தில்) மாறுபாடில்லாமல் (ஒத்துக்) குற்ற மில்லாத ஒரு கருமத்தையே செய்வர். தான்: அசை. காண்: முன்னிலையசை. (க - து.) கணவனும் மனைவியும் ஒத்துச் செய்யும் அறமே நிறைவேறும் (எ - ம்.) (6) கல்விச் செருக்கு விடுக 7. கடலே யனையம்யாங் கல்வியா லென்னும் அடலே றனையசெருக் காழ்த்தி – விடலே முனிக்கரசு கையான் முகந்து முழங்கும் பனிக்கடலும் உண்ணப் படும். (பத.) முழங்கும் பனிக்கடலும் - ஒலிக்கின்ற குளிர்ச்சி பொருந்திய கடலும், முனிக்கு அரசு கையால் - முனிவர்களுக்குத் தலைவராகிய அகத்திய முனிவர் கையால், முகந்து உண்ணப் படும் - மொண்டு பருகப்படும்; (ஆதலால்) யாம் - நாம், கல்வியால் கடல் அனையம் - கல்விப் பெருமையால் கடலை நிகர்ப்போம், என்னும்- என்று கொள்கின்ற, அடல் ஏறு அனைய செருக்கு - வலிமை பொருந்திய ஆண் சிங்கத்தினது செருக்கைப் போலும் செருக்கிலே, ஆழ்த்திவிடல் - (உங்களை) அமிழ்த்திவிடாதிருங்கள். ஏ இரண்டும் அசை (க - து.) எத்துணைப் பெருங்கல்வி யுடையவரும், செருக்கடைவாராயின் வல்லவரொருவராலே தப்பாது வெல்லப்படுவர் (எ - ம்.) (7) சினத்தைக் காத்துக் கொள்க 8. உள்ளம் கவர்ந்தெழுந் தோங்கு சினங்காத்துக் கொள்ளும் குணமே குணமென்க – வெள்ளந் தடுத்த லரிதோ தடங்கரைதான் பேர்த்து விடுத்த லரிதோ விளம்பு. (பத.) உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்குசினம் - மனத்தைத் தன்வயத்ததாக்கிக் கொண்டு எழுந்து வளர்கின்ற கோபத்தை, காத்துக் கொள்ளும் குணமே குணம் என்க - அடக்கிக்கொள்கின்ற கு™மே (அருமையாகிய)குணம் என்று அறியக்கடவாய்; வெள்ளம் தடுத்தல் அரிதோ - (பெருகி வருகின்ற) வெள்ளத்தை (கரை கட்டி)த் தடுத்தல் அரியதோ, தடம் கரை பேர்த்து விடுத்தல் அரிதோ - முன் கட்டப் பட்டிருந்த பெரிய கரையை உடைத்து (அதனுள் அடங்கியிருந்த வெள்ளத்தைப் புறத்திலே செல்ல) விடுத்தல் அரியதோ, விளம்பு - நீ சொல்வாயாக, தான்: அசை (க-து) சினங்கொள்ளுதல் எளிது; சினத்தை அடக்குதல் அரிது. ஆதலின், அரியதைச் செய்தலே பெருமை (எ - ம்) (8) சார்பின் வலி 9. மெலியோர் வலிய விரவலரை யஞ்சார் வலியோர் தமைத்தா மருவில் – பலியேல் கடவு ளவிர்சடைமேற் கட்செவியஞ் சாதே படர்சிறையைப் புள்ளரசைப் பார்த்து. (பத.) பலி ஏல் - (அன்பருடைய) பூசையை ஏற்றுக்கொள்ளும், கடவுள் - சிவபெருமானது, அவிர் சடைமேல் கட்செவி- விளங்குகின்ற சடையின்மேல் அணியப்பட்டிருக்கின்ற பாம்பானது, படர் சிறை விரிந்த சிறகினையுடைய, அப் புள் அரசைப் பார்த்து - அந்தப் பறவைகட்கு அரசாகிய கருடனைப் பார்த்து, அஞ்சாது - பயப்படாது; (அவ்வாறே) மெலியோர் - வலிமையில்லாதவர், வலிய விரவலரை - வலிமை யுடைய பகைவருக்கு, தாம் வலியோர் தமை மருவில் அஞ்சார் - தாம் (அவரினும்) வலியோரைச் சேர்ந்தால் பயப்படார். ஏ: அசை (க - து) பகைவர் வலியவராயவிடத்து, அவரினும் வலியவரைச் சேர்ந்தாற் பயமில்லை (எ - ம்) (9) தன்னலங் கருதாமை 10. தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம் வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் – திங்கள் கறையிருளை நீக்கக் கருதா துலகின் நிறையிருளை நீக்குமே னின்று. (பத.) திங்கள் - சந்திரனானவன், கறை இருளை நீக்கக் கருதாது - தனது களங்கமாகிய இருளை நீக்குதற்கு நினையாமல், மேல் நின்று உலகின் நிறை இருளை நீக்கும் - ஆகாயத்திலே நின்று உலகத்து நிறைந்த இருளை நீக்குவான்; (அதுபோல்) விழுமியோர் - மேலோர், தம் குறை தீர்வு உள்ளார் - (தமது) குறை நீக்குதலை நினையாராகி, தளர்ந்து - மனம் இளகி, பிறர்க்கு உறும் - பிறருக்கு உண்டாகிய, வெம் குறை - வெவ்விய குறையை, தீர்க்கிற்பார் - நீக்குவார். (க-து) மேலோர் தங்குறையை நீக்காது பிறர்குறையை நீக்குவர் (எ - ம்) (10) புலன்களால் வரும் புன்மை 11. பொய்ப்புலன்க ளைந்துநோய் புல்லியர்பா லன்றியே மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் – துப்பிற் சுழற்றுங்கொல் கற்றூணைச் சூறா வளிபோய்ச் சுழற்றுஞ் சிறுபுன் றுரும்பு. (பத.) சூறாவளி போய் - சுழற்காற்றானது சென்று, சிறு புல் துரும்பு - சிறிய நொய்தாகிய துரும்பை, சுழற்றும் - (எடுத்துச்) சுழற்றும்; துப்பின் - (அது - தன்) வலிமையால், கல்தூணைச் சுழற்றும் கொல் - கல்லுக்கம்பத்தைச் சுழற்றுமோ - (சுழற்றமாட்டாது;) (அது போல) பொய்ப் புலன்கள் ஐந்தும் - பொய்யாகிய ஐந்து புலன் களும், புல்லியர் பால் அன்றி - புல்லறிவாளரிடத்தல்லாமல், மெய்ப் புலவர் தம்பால் - மெய்யறி வுடையவரிடத்தே, நோய் விளையா - துன்பத்தைச் செய்யமாட்டா. ஏ, ஆம்: அசை. (க-து) ஐம்புலன்களினால் மூடரேயன்றி, மெய்யறிவுடையவர் துன்பமடையார் (எ - ம்.) புலன்கள் ஐந்தாவன: ஓசை, ஊறு, உருவம், சுவை, நாற்றம் என்பன. (11) உடம்பில் உயிர் அமைப்பு 12. வருந்து முயிரொன்பான் வாயி லுடம்பிற் பொருந்துத றானே புதுமை - திருந்திழாய்! சீதநீர் பொள்ளற் சிறுகுடத்து நில்லாது வீதலோ நிற்றல் வியப்பு. (பத.) திருந்து இழாய் - திருந்திய அணிகலன்களை யுடையவளே, சீதநீர் - குளிர்ச்சியாகிய நீரானது, பொள்ளல் சிறுகுடத்து நில்லாது வீதலோ - இல்லியையுடைய சிறிய குடத்திலே நில்லாது ஒழுகிப் போதலோ (ஆச்சரியம்), நிற்றல் வியப்பு - நிற்றலே ஆச்சரியமாகும்; (அதுபோல) வருந்தும் உயிர் - வருந்துகின்ற உயிரானது, ஒன்பான் வாயில் உடம்பில் பொருந்துதலே புதுமை - ஒன்பது துவாரங்களை யுடைய உடம்பிலே தங்குதலே ஆச்சரியம்; (நீங்குதல் - ஆச்சரியமன்று.) தான் : அசை. (க-து.) ஒன்பது தொளைகளையுடைய உடம்பிலே உயிர் நிற்றலுக்கன்றி நீங்குதலுக்கு ஆச்சரிய மடைதல் பேதைமை (எ - ம்.) (12) அன்பின் உதவுக 13. பெருக்க மொடுசுருக்கம் பெற்றபொருட் கேற்ப விருப்ப மொடுகொடுப்பர் மேலோர் – சுரக்கு மலையளவு நின்றமுலை மாதே! மதியின் கலையளவு நின்ற கதிர். (பத.) மலை அளவு நின்ற சுரக்கும் முலை மாதே - மலையளவாக நின்ற (பால்) சுரக்கின்ற தனங்களையுடைய பெண்ணே, மதியின் கதிர் கலை அளவுநின்ற - நிலாவினுடைய கிரணங்கள் வளர்தலை யும் தேய்தலையும் பொருந்திய கலைகளினளவாக நின்றன; (அதுபோல) மேலோர் - பெரியோர்; பெருக்கமொடு சுருக்கம் பெற்ற பொருட்கு ஏற்ப - வளர்தலையும் குறைதலையும் பொருந்திய செல்வத்திற்கு இசைய, விருப்பமொடு கொடுப்பர் - அன்போடு கொடுப்பர். (க -து) பெரிnயார் தாம்பெற்ற செல்வத்திற்கேற்ப மிகுதியாகவும் குறைவாகவும் கொடுப்பர்; ஒன்றும் கொடாதிரார் (எ - ம்) (13) செல்வச் செருக்கு விடுக 14. தொலையாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோ மென்று தலையா யவர்செருக்குச் சார்தல் – இலையால் இரைக்கும்வண் டூதுமல ரீர்ங்கோதாய்! மேரு வரைக்கும்வந் தன்று வளைவு. (பத.) இரைக்கும் வண்டு ஊதும் - ஒலிக்கின்ற வண்டுகள் ஊதுகின்ற, மலர்ஈர்ங்கோதாய் - பூக்களாலாகிய குளிர்ச்சி பொருந்திய மாலையை யுடையவளே, மேருவரைக்கும் வளைவு வந்தன்று - (எக்காலத்தினும் அசைவற்றிருந்த) மகாமேரு மலைக்கும் (ஒரு காலத்தில்) வளைவு வந்தது; (ஆதலால்) தலையாயவர் - முதன்மையான அறிவுடையவர்கள், தொலையா - அழியாத, பெருஞ் செல்வம் - பெரிய செல்வத்திலே, தோற்றத்தோம் என்று - பிறந்திருக்கின்றோம் என்று, செருக்குச் சார்தல் இலை - செருக்கடைதல் இல்லை. ஆல் - அசை. (க-து) எத்துணைப் பெருஞ் செல்வத்துக்கும் அழிவு வருமென்றறிந்து அடங்குவோரே அறி வுடையோர் (எ - ம்). (14) அன்பிலார்க்குச் செல்வம் பயனில்லை 15. இல்லானுக் கன்பிங் கிடம்பொரு ளேவன்மற்று எல்லா மிருந்தும்அவற் கென்செய்யும் – நல்லாய் மொழியிலார்க் கேது முதுநூல் தெரியும் விழியிலார்க் கேது விளக்கு. (பத.) நல்லாய் - நற்குணமுடையவளே, மொழி இலார்க்கு முது நூல் ஏது - பேச்சில்லாதவராகிய ஊமைகளுக்குப் பழமையாகிய நூல் யாது பயனைச் செய்யும்; தெரியும் விழி இலார்க்கு விளக்கு ஏது - பார்க்கின்ற கண்ணில்லாதவராகிய குருடர்க்குத் தீபம் யாது பயனைச் செய்யும்; (அதுபோல) இங்கு அன்பு இல்லானுக்கு - இவ் வுலகத்தில் அன்பில்லாதவனுக்கு, இடம் பொருள் ஏவல் எல்லாம் இருந்தும் - இடமும் பொருளும் ஏவலுமாகிய இவையெல்லாம் இருந்தும், அவர்க்கு என் செய்யும் - அவனுக்கு யாது பயனைச் செய்யும்? (ஒரு பயனுஞ் செய்யா.) மற்று: அசை. (க-து.) அன்பில்லாதவன், இடம்பொரு ளேவல் களுடைய வனாயினும், அவைகொண்டு அறமும் புகழுஞ் செய்துகொள்ள மாட்டான் (எ- ம்). (15) மேலோர் அன்புடையார்க்குத் தாமே உதவுவர் 16. தம்மையுந் தங்க டலைமையையும் பார்த்துயர்ந்தோர் தம்மை மதியார் தமையடைந்தோர் – தம்மின் இழியினுஞ் செல்வ ரிடர்தீர்ப்ப ரல்கு கழியினுஞ்செல் லாதோ கடல். (பத.) கடல் - (பெரிய) கடலானது, அல்கு கழியினும் - (தன்னை அடுத்த) சிறிய உப்பங்கழியிலும், செல்லாதோ - போய்ப் பாயாதோ (போய்ப் பாயும்; அதுபோல) உயர்ந்தோர் - (அறிவொழுக்கங்களினால்) உயர்ந்தவர்கள்; தமை அடைந்தோர் தம்மின் இழியினும் - தங்களைச் சார்ந்தவர்கள் தங்களைப் பார்க்கினும் தாழ்ந்தவர்களாயினும், தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துத் தம்மை மதியார் - தங்களையும் தங்களுடைய தலைமையையும் பார்த்துத் தங்களை மதியாதவர்களாகி, செல்வர் இடர் தீர்ப்பர் - (அவர்கள் இருக்கும் இடத்துக்குப்) போய் (அவர்களுடைய) துன்பத்தை நீக்குவார்கள். (க-து.) மேலோர் தம்மைச் சார்ந்தவர் தம்மிற் றாழ்ந்தவராயினும் செருக்கின்றி அவரிடந் தேடிச்சென்று பாதுகாப்பர் (எ- ம்). (16) வறுமையிலும் உதவி 17. எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றவன் மைந்தர்தம் ஈகை மறுப்பரோ - பைந்தொடீ! நின்று பயனுதவி நில்லா அரம்பையின்கீழ்க் கன்று முதவுங் கனி. (பத.) பைந்தொடீ - பசும்பொன்னாலாகிய வளையல்களை யுடையவளே, எந்தை இரப்பார்க்கு ஈந்து நல்கூர்ந்தான் என்று - எங்கள் பிதா இரப்பவருக்குக் கொடுத்து வறியனானான் என்று, அவன் மைந்தர் தம் ஈகை மறுப்பரோ - அவனுடைய புதல்வர் தம் ஈகையைக் கைவிடுவரோ, (விடார்; எதுபோல எனின்) நின்று பயன் உதவி நில்லா - (முன்னே அழிவில்லாமல்) நின்றுகொண்டு (பழமாகிய) பயனைக் கொடுத்து (அதனாலே) அழிவை யடைந்த, அரம்பையின் - வாழைமரத்தினது, கீழ்க்கன்றும் - கீழ்நிற்கின்ற கன்றும், கனி உதவும் - பழத்தைக் கொடுக்கும் (அதுபோல). (க-து.) தந்தை இரப்பவர்க்கு ஈந்து வறியனானானென்று அவன் மக்கள் ஈகையைக் கiவிடார் (எ -ம்). (17) இன்சொல் 18. இன்சொலா லன்றி இருநீர் வியனுலகம் வன்சொலா லென்றும் மகிழாதே – பொன்செய் அதிர்வளையாய்! பொங்கா தழற்கதிராற் றண்ணென் கதிர்வரவால் பொங்குங் கடல். (பத.) பொன் செய் அதிர் வளையாய் - பொன்னாலே செய்யப்பட்ட ஒலிக்கின்ற வளையல் களையுடையவளே, கடல் தண் என் கதிர் வரவால் பொங்கும் - கடலானது குளிர்ச்சி பொருந்திய கிரணங்களையுடைய நிலாவின் வருகையினால் பொங்கும்; (அதுவன்றி) அழற்கதிரால் பொங்காது - வெம்மை பொருந்திய கிரணங்களையுடைய சூரியன் வருகையினாலே பொங்காது; (அதுபோல) இருநீர் வியன் உலகம் - பெரிய கடல் சூழ்ந்த பரந்த உலகத் திலுள்ளவர், இன்சொலால் அன்றி வன்சொலால் என்றும் மகிழாது - இன்சொல்லினாலல்லாமற் கடுஞ் சொல்லினால் எந்நாளும் மகிழ்ச்சியடையார். ஏ: அசை. (க-து.) இன்சொல்லினாலன்றி வன்சொல்லினால் ஒருவரும் மகிழ்ச்சியடையார் (எ - ம்). (18) நற்குணம் 19. நல்லோர் வரவால் நகைமுகம்கொண் டின்புறீஇ அல்லோர் வரவான் அழுங்குவார் – வல்லோர் திருந்துந் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா வருந்துஞ் சுழற்கால் வர. (பத.) தேமா - தேமாமரமானது, தென்றல் வரத் தளிர் காட்டித் திருந்தும் - தென்றற்காற்று வரத் தளிரைக் காட்டிச் சிறப்புற்றிருக்கும்; சுழல்கால் வர வருந்தும் - சுழற்காற்று வர வருந்தும்; (அதுபோல) வல்லோர் - (கல்வியறிவில்) வல்லவர், நல்லோர் வரவான் முகநகை கொண்டு இன்பு உறீஇ - நல்லவருடைய வருகையினாலே முகமலர்ச்சி கொண்டு இன்பத்தை அடைந்து, அல்லோர் வரவான் அழுங்குவார் - தீயவருடைய வருகையினாலே துன்பத்தை அடைவார். (க-து.) கல்வியறிவுடையவர்க்கு, நல்லோர் வரவினாலே இன்பமும்; தீயோர் வரவினாலே துன்பமும் விளையும் (எ - ம்.) (19) பிறர் துன்பங்கண்டு உள்ளங் கசிதல் 20. பெரியவர்தந் நோய்போற் பிறர்நோய்கண் டுள்ளம் எரியின் இழுதாவர் என்க - தெரியிழாய்! மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக் கண்டு கலுழுமே கண். (பத.) தெரிஇழாய் - ஆராய்ந்த அணிகலன்களையுடையவளே! கண் - கண்கள், மண்டு பிணியால் வருந்து பிற உறுப்பைக் கண்டு - நெருங்கிய நோயினால் வருந்துகின்ற மற்றைய உறுப்புக்களைப் பார்த்து, கலுழும் - அழும்; (அதுபோல) பெரியவர் - (அறிவொழுக் கங்களிற்) பெரியவர். பிறர் நோய் கண்டு - பிறருக்கு வந்த நோயைக் கண்டு, தம் நோய்போல் உள்ளம் எரியின் இழுது ஆவர் என்க - தமக்கு வந்த நோய்போல் நினைத்து மனம் நெருப்பிலே பட்ட நெய்போல உருகுவார் என்று அறியக்கடவாய். ஏ: அசை. (க-து.) பிறருக்கு வருந் துன்பத்தைக் கண்டபோது இரங்குதல் பெரியோர்க்கு இயல்பாகும் (எ - ம்.) (20) அறிவிலார் செருக்கு அறிஞர்முன் அடங்கும் 21. எழுத்தறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும் எழுத்தறிவார்க் காணின் இலையாம் – எழுத்தறிவார் ஆயுங் கடவுள் அவிர்சடைமுன் கண்டளவில் வீயுஞ் சுரநீர் மிகை. (பத.) சுரநீர் மிகை - ஆகாய கங்கையின் பெருக்க மானது, எழுத்து அறிவார் ஆயும் கடவுள் - எழுத்துக்களி னியல்பை அறியும் பேரியோரால் ஆராயப்படும் சிவபெருமானது, அவிர் சடைமுன் கண்ட அளவில் - விளங்குகின்ற சடையை எதிரே கண்ட அளவில், வீயும் - அடங்கி விடும்; (அதுபோல) எழுத்து அறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும் - இலக்கண நூலை அறியாதவருடைய மற்றைக் கல்வியினது பெருக்க முழுதும், எழுத்து அறிவார்க் காணின் இலை - இலக்கண நூலை அறிந்தவரைக் கண்டால் இல்லாமற் போகும். ஆம் : அசை. (க-து.) இலக்கண நூலுணர்ச்சியில்லாத வருடைய கல்வி இலக்கண நூலுணர்ச்சியுடையா ரெதிரே பயன்படாது (எ - ம்) (21) பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை 22. ஆக்கும் அறிவா னலது பிறப்பினான் மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க – நீக்கு பவரார் அரவின் பருமணிகண் டென்றுங் கவரார் கடலின் கடு. (பத.) அரவின் பருமணி கண்டு நீக்குபவர் ஆர் - (நஞ்சையுடைய) பாம்பினிடத்து உண்டாகிய பருத்த மாணிக்கத்தைக் கண்டு நீக்குவோர் யாவர்; (ஒருவருமில்லை) கடலின் கடு என்று கவரார் – பாற் கடலினிடத்து உண்டாகிய நஞ்சை ஒருநாளும் கொள்வாருமில்லை; (ஆதலால்) மீக்கொள் உயர்வு இழிவு - மேலாகக் கொள்கின்ற உயர்வையும் (கீழாகக் கொள்கின்ற) இழிவையும், ஆக்கும் அறிவான் அலது பிறப்பினான் வேண்டற்க - (நற்குணங்களை) உண்டாக்குகின்ற கல்வியறிவினானல்லாமல் சாதியினாலே விரும்பாதிருக்கக் கடவீர். (க -து.) எக்குலத்தினராயினும் அறிவுடையோரை உயர்ந்தவ ராகவும் அறிவில்லாதோரை இழிந்தவ ராகவும் கொள்ள வேண்டும் (எ - ம்.) (22) மனவுறுதி நெகிழலாகாது 23. பகர்ச்சி மடவார் பயிலநோன் பாற்றல் திகழ்ச்சி தருநெஞ்சத் திட்பம் – நெகிழ்ச்சி பெறும்பூரிக் கின்றமுலைப் பேதாய்! பலகால் எறும்பூரக் கற்குழியு மே. (பத.) பூரிக்கின்ற முலைப் பேதாய் - விம்முகின்ற தனங்களை யுடைய பெண்ணே, பலகால் எறும்பு ஊரக் கல் குழியும் - பலதரம் சிற்றெறும்புகள் ஊர்ந்து கொண்டு வந்தாலும் கருங் கல்லும் குழிந்து போகும், (அதுபோல) மடவார் பகர்ச்சி பயில - பெண் களிடத்தில் வாய்ப் பேச்சோடு பழகிக்கொண்டு வந்தாலும், நோன்பு ஆற்றல் திகழ்ச்சி தரும் நெஞ்சத் திட்பம் நெகிழ்ச்சி பெறும் - தவத்தைச் செய்தலில் விளங்குகின்ற (ஒருவனுடைய) மனத்தின் உறுதியானது (நாளுக்குநாள்) தளர்ந்துபோகும். ஏ: அசை. (க-து.) மாதர்களிடம் பேசிப் பழகுதலால் தவஞ் செய்தற்குரிய மனவுறுதியும் கெட்டுவிடும் (எ - ம்). (23) கீழோர் பிறர்குற்றமே பேசுவர் 24. உண்டு குணமிங் கொருவர்க் கெனினுங்கீழ் கொண்டு புகல்வதவர் குற்றமே – வண்டுமலர்ச் சேக்கை விரும்புஞ் செழும்பொழில்வாய் வேம்பன்றோ காக்கை விரும்புங் கனி. (பத.) செழும் பொழில்வாய் - செழுமையாகிய சோலை யினிடத்தே, மலர்ச்சேக்கை வண்டு விரும்பும் - பூவாகிய மெத்தையை வண்டுகள் விரும்பும், வேம்பு அன்றோ காக்கை விரும்பும் கனி - வேப்பம்பழமன்றோ காக்கைகள் விரும்பும் பழம்; (அதுபோல) இங்கு ஒருவர்க்குக் குணம் உண்டு எனினும் - இவ் வுலகத்தில் ஒருவருக்கு நற்குணம் உள்ளதாயினும், கீழ் கொண்டு புகல்வது அவர் குற்றமே - கீழோர் எடுத்துப் பேசுவது அவருடைய குற்றமேயாகும். (க-து) ஒருவரிடத்துள்ள நற்குணத்தையே மேலோர் எடுத்துப் பேசுவர்; தீக்குணத்தையே கீழோர் எடுத்துப் பேசுவர் (எ - ம்.) (24) கீழோர் சேர்க்கை ஆகாது 25. கல்லா அறிவிற் கயவர்பாற் கற்றுணர்ந்த நல்லார் தமதுகனம் நண்ணாரே – வில்லார் கணையிற் பொலியுங் கருங்கண்ணாய் நொய்தாம் புணையிற் புகுமொண் பொருள். (பத.) வில் ஆர் கணையின் பொலியும் கருங்கண்ணாய் - வில்லோடு கூடிய அம்பைப்போலப் (புருவத்தோடுகூடி) விளங்குகின்ற கருமையாகிய கண்களையுடையவளே, புணையில் புகும் ஒள்பொருள் நொய்து ஆம் - (கனமில்லாத) தெப்பத்திலே சேர்ந்த கனமுடைய பொருள் இலகுவாம்: (அதுபோல) கல்லா அறிவின் கயவர்பால் - கல்லாத அறிவினையுடைய மூடரிடத்திலே (சேர்ந்தால்), கற்று உணர்ந்த நல்லார் தமது கனம் நண்ணார் - கற்றறிந்த நல்லோர் தமது பெருமையை இழப்பர். (க-து.) கற்றறிந்தவர் மூடரிடத்தே சென்றால் தமது பெருமை இழப்பர் (எ - ம்.) (25) கல்விப் பெருமை கருதுக. 26. உடலின் சிறுமைகண் டொண்புலவர் கல்விக் கடலின் பெருமை கடவார் – மடவரால் கண்ணளவாய் நின்றதோ காணுங் கதிரொளிதான் விண்ணளவா யிற்றோ விளம்பு. (பத.) மடவரால் - இளமை பொருந்திய பெண்ணே, ஒள் புலவர் உடலின் சிறுமை கண்டு - ஒள்ளிய புலவருடைய உடலின் சிறுமையைக் கண்டு, கல்விக் கடலின் பெருமை கடவார் - (அவரின்) கல்வியாகிய கடலின் பெருமையை (ஒருவரும்) கடக்கமாட்டார்; கதிர் காணும் ஒளி - சூரியனுடைய ஒளியோடு கூடிக் காண்கின்ற கருமணி யொளியானது, கண் அளவு ஆய் நின்றதோ - (தனக்கிட மாகிய சிறிய) கண்ணினளவாக அடங்கி நின்றதோ, விண் அளவு ஆயிற்றோ விளம்பு - (தான் காண்கின்ற பெரிய) ஆகாயத்தினளவாக வியாபித்து நின்றதோ நீ சொல்லுவாயாக. தான்: அசை. (க-து.) உருவத்தாற் சிறியவரும் அறிவினாற் பெரியவராயிருப்பர் (எ - ம்.) (26) கைம்மாறு கருதாது உதவுக 27. கைம்மா றுகவாமற் கற்றறிந்தோர் மெய்வருந்தித் தம்மால் இயலுதவி தாஞ்செய்வார் – அம்மா முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு விளைக்கும் வலியனதாம் மென்று. (பத) முளைக்கும் எயிறு - முளைக்கின்ற பற்களானவை, நாவிற்கு - (தமக்கு ஓருபகாரஞ் செய்தற்கியலாத) நாக்குக்கு, வலியன தாம் மென்று முதிர்சுவை விளைக்கும் - கடினமாகிய தின்பண்டங் களைத் தாமே மென்று கொடுத்து நிறைந்த சுவையை உண்டாக்கும்; (அதுபோல) கற்று அறிந்தோர் - கற்றறிந்தவர், கைம்மாறு உகவாமல் - பிரதி யுபகாரத்தை விரும்பாமல், மெய்வருந்தித் தம்மால் இயல் உதவி தாம் செய்வர் - உடம்பு வருந்தித் தம்மால் இயன்ற உதவிகளைத் தாமே செய்வர். அம்மா: வியப்பிடைச் சொல். (க-து.) அறிவுடையார் கைம்மாறு வேண்டாமலே பிறருக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்வர் (எ - ம்.) (27) வெறுப்பிலும் உதவுவர் மேலோர் 28. முனிவினும் நல்குவர் மூதறிஞ ருள்ளக் கனிவினும் நல்கார் கயவர் – நனிவிளைவில் காயினு மாகும் கதலிதா னெட்டிபழுத் தாயினும் ஆமோ அறை. (பத.) மூதறிஞர் முனிவினும் நல்குவர் - பேரறி வுடையவர் கோபமுள்ள காலத்திலும் கொடுப்பர், கயவர் உள்ளக் கனிவினும் நல்கார் - மூடர் மனமகிழ்ச்சி உள்ள காலத்திலும் கொடார், கதலி நனி விளைவு இல் காயினும் ஆகும் - வாழையானது மிக முற்று தலில்லாத காயானாலும் பயன்படும், எட்டி பழுத்து ஆயினும் ஆமோ அறை - எட்டியானது பழுத்தாலும் பயன்படுமோ நீ சொல்வாயாக. தான்: அசை. (க-து.) அறிவுடையவர் கோபத்தினுங் கொடுப்பர்; மூடர் மகிழ்ச்சியினுங் கொடார் (எ - ம்.) (28) இடுக்கண் அஞ்சாது உதவுக 29. உடற்கு வருமிடர்நெஞ் சோங்குபரத் துற்றோர் அடுக்கும் ஒருகோடி யாக – நடுக்கமுறார் பண்ணிற் புகலும் பனிமொழியாய் அஞ்சுமோ மண்ணிற் புலியைமதி மான். (பத.) பண்ணின் புகலும் பனிமொழியாய் - பண்ணைப் போலப் பேசுகின்ற குளிர்ச்சி பொருந்திய சொல்லையுடையவளே, மதிமான் - சந்திரனிடத் திலிருக்கின்ற மானானது, மண்ணில் புலியைக் கண்டால் அஞ்சுமோ - பூமியிலிருக்கிற புலிகளுக்குப் பயப்படுமோ (பயப்படாது; அதுபோல) நெஞ்சு ஓங்கு பரத்து உற்றோர் - (தம்முடைய) மனம் உயர்ந்த பரம்பொருளிடத்தே அழுந்தப் பெற்ற ஞானிகள், உடற்கு வரும் இடர் அடுக்கும் ஒருகோடி ஆக - (தம்முடைய) உடம்புக்கு வருந் துன்பங்கள் அடுக்கிச் சொல்லப்படும் ஒரு கோடியளவினவாக இருந்தாலும், நடுக்கம் உறார் - அச்சமடையார். (க - து.) கடவுளிடத்து மனம் அழுந்தப்பெற்றவர் எத்துணைப் பெருந் துன்பங்களுக்கும் அஞ்சார் (எ - ம்.) (29) காலத்தில் அறஞ்செய்க 30. கொள்ளுங் கொடுங்கூற்றங் கொல்வான் குறுகுதன்முன் உள்ளங் கனிந்தறஞ்செய் துய்கவே – வெள்ளம் வருவதற்கு முன்னர் அணைகோலி வையார் பெருகுதற்கண் என்செய்வார் பேசு. (பத.) கொள்ளும் கொடும் கூற்றம் கொல்வான் குறுகுதல்முன் - (உயிரைக்) கொண்டு செல்கின்ற கொடுமையாகிய யமனானவன் கொல்லும்படி அணுகுவதற்கு முன்னே, உள்ளம் கனிந்து அறம் செய்து உய்க - மனங்கரைந்து தருமங்களைச் செய்து பிழைக்கக் கடவாய்; வெள்ளம் வருவதற்கு முன்னர் அணைகோலி வையார் - வெள்ளம் வருவதற்கு முன்னே கரையைக் கட்டி வையாதவர், பெருகுதற்கண் என்செய்வார் பேசு - (அது) பெருகி வரும்பொழுது யாது செய்வார், நீ சொல்வாயாக. ஏ: அசை. (க-து.) இறப்பு வருமுன்னே அறத்தை விரைந்து செய்தல் வேண்டும் (எ ம்.) (30) பிறர் துயரந் தாங்குக 31. பேரறிஞர் தாக்கும் பிறர்துயரந் தாங்கியே வீரமொடு காக்க விரைகுவார் - நேரிழாய்! மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேற் கைசென்று தாங்குங் கடிது. (பத.) நேர் இழாய் - தகுதியாகிய ஆபரணத்தை யுடையவளே, மெய் சென்று தாக்கும் வியன்கோல் அடி - உடம்பிலே போய்த் தாக்குகின்ற பெரிய கோலி னுடைய அடியை, கை கடிது சென்று தன்மேல் தாங்கும் - கை விரைந்து போய்த் தன்மேலே ஏற்றுக்கொள்ளும்; (அதுபோல) பேர் அறிஞர் - பெரிய அறிவை யுடையவர், தாக்கும் பிறர் துயரம் வீரமொடு தாங்கி - வருத்துகின்ற பிறருடைய துன்பத்தை வீரத்தொடு தாம் ஏற்றுக் கொண்டு, காக்க விரைகுவார் - (அவரைப்) பாதுகாத்தற்கு முற்படுவர், ஏ: அசை. (க-து.) பேரறிவுடையோர் பிறருக்கு வருந் துன்பத்தை விரைந்து நீக்குவர் (எ - ம்.) (31) மெய்யுணர்ந்து உதவுக 32. பன்னும் பனுவற் பயன்றே ரறிவிலார் மன்னும் அறங்கள் வலியிலவே - நன்னுதால்! காமொன் றுயர்திண் கதவு வலியுடைத்தோ தாழொன் றிலதாயிற் றான். (பத.) நல் நுதால் - நல்ல நெற்றியையுடையவளே, காழ் ஒன்று உயர் திண் கதவு - வயிரம் பொருந்திய உயர்ந்த வலிய கதவானது, தாழ்ஒன்று இலது ஆயின் வலி உடைத்தோ - ஒரு தாழ் இல்லாததாயின் உறுதியை உடைத்தாகுமோ, (உடைத்தாகாது; அதுபோல) பன்னும் பனுவல் பயன் தேர் அறிவு இலார் - சொல்லப்படுகின்ற நூல்களினது பொருளை அறியும் விவேக மில்லாதவர் செய்யும், மன்னும் அறங்கள் வலி இலவே - மிகுந்த தருமங்கள் உறுதியில்லாதனவேயாம். தான்: அசை. (க-து.) விதிவிலக்குகளைப் பகுத்தறியும் அறிவில்லா தவர் செய்யுந் தருமங்கள் பயன்படா (எ - ம்.) (32) பெரியோர் போற்றுதல் வேண்டார் 33. எள்ளா திருப்ப இழிஞர்போற் றற்குரியர் விள்ளா அறிஞரது வேண்டாரே – தள்ளாக் கரைகாப் புளதுநீர் கட்டுகுள மன்றிக் கரைகாப் புளதோ கடல். (பத.) நீர்கட்டு குளம் தள்ளாக் கரை காப்பு உளது - நீரைக்கட்டி வைக்கின்ற (சிறிய) குளமே தள்ளப்படாத கரை காவலாக உள்ளது; அன்றிக் கடல் கரை காப்பு உள்ளதோ - அதுவல்லாமற் (பெரிய) கடலானது கரை காவலாக உள்ளதோ (உள்ளதன்று; அதுபோல), இழிஞர் எள்ளாது இருப்பப் போற்றற்கு உரியர் - அறிவில்லாத சிறியோர் (தம்மைப் பிறர்) இகழாதிருக்கும்படி காக்கப்படுதற்கு உரியவராவர், விள்ளா அறிஞர் அது வேண்டார் - நீங்காத அறிவுடைய பெரியோர், அங்ஙனம் காக்கப்படுதல் வேண்டார். ஏ : அசை. (க-து.) பிறர் இகழாவண்ணங் காக்கப்படுதல் சிறியோருக்கன்றிப் பெரியோருக்கு வேண்டுவதில்லை (எ - ம்.) (33) பெரியோர் பழிக்கு அஞ்சுவர் 34. அறிவுடையா ரன்றி அதுபெறார் தம்பாற் செறிபழியை அஞ்சார் சிறிதும் – பிறைநுதால் வண்ணஞ்செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக் கண்ணஞ்சு மோஇருளைக் கண்டு. (பத.) பிறைநுதால் - பிறைபோலும் நெற்றியை யுடையவளே! வண்ணம் செய் வாள்விழியே அன்றி- அழகு செய்கின்ற ஒளியையுடைய கண்களே யல்லாமல், மறை குருட்டுக்கண் - (ஒளி மறைந்த) குருட்டுக் கண்களானவை, இருளைக் கண்டு அஞ்சுமோ - இருட்டைக் கண்டு அஞ்சுமோ, (அஞ்சா; அதுபோல) அறிவுடையார் அன்றி - அறிவுடையவரே யல்லாமல், அது பெறார் - அவ்வறிவைப் பெறாத மூடர்; தம்பால் செறிபழியைச் சிறிதும் அஞ்சார் - தம்மிடத்து நெருங்கிவரும் பழியைச் சிறிதும் அஞ்சார். (க-து.) அறிவுடையோர் பழிக்கு அஞ்சுவர்; மூடர் அஞ்சார் (எ - ம்) (34) மேன்மக்கள் நல்லோரை விரும்புவர் 35. கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள் மற்றையர்தாம் என்றும் மதியாரே – வெற்றிநெடும் வேல்வேண்டும் வாள்விழியாய்! வேண்டா புளிங்காடி பால்வேண்டும் வாழைப் பழம். (பத.) வெற்றி நெடும் வேல் வேண்டும் வாள் விழியாய் - வெற்றியையுடைய நெடிய வேற்படை விரும்புகின்ற ஒளிபொருந்திய கண்களையுடையவளே! வாழைப்பழம் பால் வேண்டும் - வாழைப்பழத்தைப் (தித்திப்பாகிய) பாலானது அவாவும், புளிங்கொடி வேண்டா - புளிப்பாகிய காடிநீரானது (அதனை) அவாவாது; (அதுபோல) கற்ற அறிவினரை மேன் மக்கள் காமுறுவர் - (நூல்களைக்)கற்ற அறி வுடையவரை மேலோர் விரும்புவர்; மற்றையர் என்றும் மதியார் - கீழோர் (அவரை) எப்போதும் மதியார். தாம், ஏ : அசை. (க-து.) கல்வி அறிவுடையவரை மேன்மக்களே விரும்புவர்; கீழ்மக்கள் விரும்பார் (எ - ம்) (35) தக்கார்க்கே உதவி செய்க 36. தக்கார்க்கே ஈவர் தகார்க்களிப்பா ரில்லென்று மிக்கார்க் குதவார் விழுமியோர் – எக்காலும் நெல்லுக் கிறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி புல்லுக் கிறைப்பரோ போய். (பத.) எக்காலும் நீர் நெல்லுக்கு இறைப்பதே அன்றி - எக்காலத்தும் நீரை நெற்பயிருக்கே இறைப்பதல்லாமல், காட்டு முளிபுல்லுக்குப்போய் இறைப்பரோ - காட்டினிடத்தே உலரும் புல்லுக்குப் போய் இறைப்பரோ; (இறையார்; அதுபோல) தக்கார்க்கே ஈவர் தகார்க்கு அளிப்பார் இல் என்று - தகுதியுடையவருக்கே கொடுப்பார்; தகுதியற்றவருக்குக் கொடுப்பவர் இல்லையென்று அறிந்து, விழுமியோர் - மேலோர், மிக்கார்க்கு உதவார் - நன்னெறி கடந்த வர்க்குக் கொடார். (க-து.) மேலோர் தகுதியுடையவருக்கன்றித் தகுதியில்லாத வர்க்குக் கொடார் (எ - ம்.) (36) தற்புகழ்ச்சியால் தாழ்வு அடைபவர் 37. பெரியார்முன் தன்னைப் புகழ்ந்துரைத்த பேதை தரியா துயர்வகன்று தாழும் – தெரியாய்கொல் பொன்னுயர்வு தீர்த்த புணர்முலையாய்! விந்தமலை தன்னுயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து. (பத.) பொன் உயர்வு தீர்த்த புணர் முலையாய் - இலக்குமியுடைய உயர்வை (அழகினாலே) நீக்கிய நெருங்கிய தனங்களையுடையவளே, பெரியோர்முன் தன்னைப் புனைந்து உரைத்த பேதை - பெரியார் முன்னே தன்னைச் சிறப்பித்துச் சொல்லிய மூடன், உயர்வு தரியாது அகன்று தாழும் - உயர்வைப் பொறுக்க மாட்டாது இழந்து தாழ்வை யடைவன், விந்தமலை தாழ்ந்து தன் உயர்வு தீர்ந்தன்று - (அகத்திய முனிவர் முன்னே தன்னைச் சிறப்பித்துச் சொல்லிய) விந்தமலையானது (அவர் கையினாலே ஊன்றப் பாதாளத்திலே) தாழ்ந்து தன்னுடைய உயர்வு நீங்கியது; தெரியாய் கொல் - (நீ அதனை) அறியாயோ? (க-து.) பெரியாரெதிரே தன்னைப் புகழ்ந்து ரைத்தவன் தாழ்வையடைவன் (எ - ம்.) (37) தக்கார் தொடர்பு நலம் பெருக்கும் 38. நல்லார் செயுங்கேண்மை நாடோறும் நன்றாகும் அல்லார் செயுங்கேண்மை யாகாதே – நல்லாய்கேள் காய்முற்றின் தின்தீங் கனியாம் இளந்தளிர்நாள் போய்முற்றின் என்னாகிப் போம். (பத.) நல்லாள் கேள் - நற்குணத்தையுடையவளே! கேட்பாயாக, காய்முற்றின் தின் தீம் கனி ஆம் - காயானது (நாள் சென்று) முற்றினால் தின்னுதற்குரிய இனிய கனியாகும், இளம் தளிர் நாள்போய் முற்றின் என் ஆகிப்போம் - இளந்தளிரானது நாள்சென்று முற்றினால் யாதாகிப்போகும். (அதுபோல), நல்லார் செயும் கேண்மை நாடோறும் நன்று ஆகும் - நல்லோர் செய்யும் நட்பானது நாடோறும் நன்றாகி வளரும், அல்லார் செயும் கேண்மை ஆகாது - அல்லார் செய்யும் நட்பானது நல்லதாகாது. (க-து.) நல்லோர் நட்பு நாள் செல்லச் செல்ல இனிதாகும்; தீயோர் நட்பு அங்ஙனமாகாது கெடும் (எ - ம்.) (38) தகாதார் தொடர்பில் தீமை உள்ளது 39. கற்றறியார் செய்யுங் கடுநட்புத் தாங்கூடி உற்றுழியுந் தீமைநிகழ் வுள்ளதே – பொற்றொடீ சென்று படர்ந்த செழுங்கொடிமென் பூமலர்ந்த அன்றே மணமுடைய தாம். (பத.) பொன் தொடீ - பொன்னாலாகிய வளையல்களை யுடையவளே, சென்று படர்ந்த செழுங்கொடி மென்பூ - போய்ப் படர்ந்த செழுமையாகிய கொடியின் மெல்லிய பூவானது, மலர்ந்த அன்றே மணம் உடையது ஆம் - மலர்ந்த அன்றைக்கே மணம் உடையதாகிப் பின் கெட்டுவிடும் (அதுபோல), கற்று அறியார் செய்யும் கடு நட்பும் - கற்றறியாதவர்கள் செய்கின்ற மிகுதியாகிய நட்பும், தாம் கூடி உற்ற உழியும் - (நெடுங்காலம்) தாங்கள் கூடியிருந்தவிடத்தும், தீமை நிகழ்வே உள்ளது - தீங்கு விளைதலே உள்ளதாகும். (க-து.) மூடருடைய நட்புத் தொடக்கத்திலே நன்றாயினும், பின்பு தீங்கு விளைவிக்கும் (எ - ம்.) (39) தக்காரைப் போற்றிக் கொள்க 40. பொன்னணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி மன்னும் அறிஞரைத்தாம் மற்றொவ்வார் – மின்னுமணி பூணும் பிறவுறுப்புப் பொன்னே அதுபுனையாக் காணுங்கண் ஒக்குமோ காண். (பத.) பொன்னே - இலக்குமியைப் போன்றவளே, மின்னும் அணிபூணும் பிற உறுப்பு - விளங்குகின்ற, ஆபரணத்தை அணிந்து கொள்ளுகின்ற (கைகால் முதலிய) மற்றை அவயவங்களானவை, அது புனையாக் காணும் கண் ஒக்குமோ - அதனை அணியாத பார்க்கின்ற கண்களுக்கு ஒப்பாகுமோ? (ஒப்பாகா; அதுபோல), பொன் அணியும் வேந்தர் - பொன் ஆபரணங்களாலே அலங்கரித்துக்கொள்ளும் அரசர்கள், புனையாப் பெருங் கல்வி மன்னும் அறிஞரை ஒவ்வார் - (அதனை) அணியாத பெரிய கல்விப்பொருள் நிலைபெற்ற விவேகிகளுக்கு ஒப்பாகார். தாம், மற்று : அசை, காண்: முன்னிலையசை. (க-து.) புலவர்களுக்கு அரசர்களும் ஒப்பாகார் (எ - ம்.) (40) நன்னெறி மூலமும் உரையும் முற்றிற்று. செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை அறிவுடையா 25 இல்லானுக் 11 இன்சொலா 14 உடலின் சிறு 19 உடற்குவரு 21 உண்டுகுண 18 உள்ளங்கவர் 6 எந்தைநல் 13 எழுத்தறியார் 16 எள்ளாதிருப் 24 என்றுமுக 1 கடலேயனை 6 கல்லாஅறி 25 கற்றஅறிவி 28 கற்றறியார் 5 காதன்மனை 20 கைம்மாறுக 22 கொள்ளுங் 26 தங்கட்குத 3 தங்குறைநீர் 3 தம்மையுந் 12 தொலையாப் 11 நல்லார்செயுங் 27 நல்லோர்வர 4 நீக்கமறும் 17 பகர்ச்சி 23 பன்னும்பனு 4 பிறர்க்குதவி 15 பெரியார்முன் 27 பெருக்கமொடு 10 பேரறிஞர் 23 பொய்ப்புலன் 9 பொன்னணியும் 29 மாசற்ற 2 மின்னெறி 1 முனிவினும் 21 மெலியோர் 7 வருந்துமுயி 9 நறுந்தொகை முகவுரை நறுந்தொகை என்னும் இந் நீதிநூல் அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப் பட்டது. இவர் கொற்கை நகரத்திலிருந்து அரசு புரிந்தவரென்று, இந் நூற்பயன் கூறும் பாயிரத்தில் ‘கொற்கையாளி’ என வருதலால் அறியப்படுகின்றது. கொற்கை, பாண்டி மன்னர்கள் இருந்து அரசு புரியும் பதிகளிலொன்றா யிருந்ததென்பதைச் சிலப்பதிகாரத் திலே ‘கொற்கையிலிருந்த வெற்றி வேற் செழியன்’ எனக் கூறப்பட்டிருத்தலானும், பிறவிடத்தும் ‘கொற்கைச் செழியர்’ என வருதலானும், அறியலாகும். இப் பதி பாண்டி நாட்டில் முத்துக் குளிக்கும் துறைமுகங்களுள் ஒன்றாயும் இருந்தது. சிறுபாணாற்றுப் படையில் ‘உப்பு வாணிகரின் சகட வொழுங்கோடு கொற்கைக்கு வந்த மந்திகள் அங்குள்ள முத்துக் களைக் கிளிஞ்சலின் வயிற்றிலடக்கி உப்பு வணிகச் சிறாருடன் கிலுகிலுப்பையாடும்’ என்று கொற்கைவருணிக்கப் பட்டிருக்கிறது. அதில், பாண்டியன் ‘தத்துநீர் வரைப்பிற் கொற்கைக் கோமான்’ எனக் கூறப்பட்டிருத்தலும் அறியற்பாலது. அதிவீரராம பாண்டியர் தென்காசி யிலிருந்து அரசு புரிந்தனரெனவும் கூறுவர். இவர் காலம் கி.பி. 11,12 ஆம் நூற்றாண்டு எனச் சிலரும், 15 ஆம் நூற்றாண்டு எனச் சிலரும் கூறாநிற்பர். இவர் தமிழில் நிரம்பிய புலமை வாய்ந்தவர். வட மொழிப் புலமையும் உடையவர். தமிழில் இவரியற்றிய நூல்கள் நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிகாண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதிகள், நறுந்தொகை முதலியனவாம். இவர் தமையனார் வரதுங்கராமபாண்டிய ரென்பவர். அவரும் சிறந்த புலவராய்த் தமிழில் பிரமோத்தர காண்டம் முதலிய நூல்கள் இயற்றியிருக்கின்றனர். அவர் மனைவியாரும் சிறந்த புலமையுடையார் எனக் கூறுகின்றனர். இனி, இவரியற்றிய நூல்களுள்ளே நைடத மானது இலக்கியப் பயிற்சிக்குச் சிறந்த நூலாகக் கொண்டு தமிழ்மக்கள் பல்லோரானும் பாராட்டிப் படிக்கப்படுகின்றது. திருக்கருவையில் எழுந்தருளி யிருக்கும் சிவபிரான்மீது இவர் பாடிய வெண்பா வந்தாதி, கலித்துறையந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி என்பன பத்திச்சுவை ததும்பும் துதி நூல்களாம். நறுந்தொகை யென்பது இளைஞர் பலராலும் படிக்கப்படுகின்ற நீதிநூல்களுளொன்றாக வுளது. இந் நூற்குப் பெயர் இதுவே யென்பது ‘நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்’ எனப் பாயிரத்திற் கூறி யிருத்தலாற் பெறப்படும். அச் சூத்திரம் ‘வெற்றி வேற்கை’ என்று தொடங்கி யிருப்பது கொண்டு இதனை அப்பெயரானும் வழங்கி வருகின்றனர். நறுந்தொகை என்பது நல்லனவாகிய நீதிகளின் தொகை எனப் பொருள்படும். இதனால், பழைய நூல்களிலுள்ள நல்ல நீதிகள் பல இந்நூல்களே தொகுத்து வைக்கப்பட்டன என அறியலாகும். இதிலுள்ள நீதிகளெல்லாம் தொன்னூல்களிற் காணப் படுவனவே யெனினும், ஒரு சில புறநானூறு, நாலடியார் முதலியவற்றின் செய்யுள்களோடு சொல்லினும் பொருளினும் பெரிதும் ஒற்றுமையுற்று விளங்குகின்றன. அவை உரையில் அங்கங்கே காட்டப்பட்டுள்ளன. இந்நூல் முன் பலரால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. அப் பதிப்புக்கள் ஒன்று ஒன்றனோடு பெரிதும் வேறுபட்டுள்ளன. அவற்றிற் காணப்படும் பாடவேறுபாடுகள் எண்ணிறந்தன. வாக்கியங்களின் முறையும் பலவாறாகப் பிறழ்ச்சி யடைந்துள்ளது. ‘அதனால்’ என்பது போலுஞ் சொற்கள் தனிச்சீராக வேண்டாத இடங்களி லெல்லாம் வைக்கப்பட்டுள்ளன. இப் பதிப்பில் இவை பலவற்றையும் கூடிய வரையில் திருத்தம் செய்து, இன்றி யமையாத பாடவேறுபாடுகளையும் காட்டி, பதவுரை, பொழிப்புரை களுடன் சிறப்புக் குறிப்புக் களும் திருந்த எழுதியிருப்பது காணலாகும். ‘வாழிய நலனே வாழிய நலனே’ என்னும் வாக்கியம் சில பதிப்புகளில் ஓரியைபுமின்றி நூலின் நடுவே வைக்கப்பட்டுள்ளது. ஒரு பதிப்பில் அஃது இறுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இப் பதிப்பிலும் அங்ஙனமே வாழ்த்தினை இறுதியில் அமைத்துளேம். இங்ஙனம், ந. மு. வேங்கடசாமி நாட்டார். நறுந்தொகை கடவுள் வாழ்த்து பிரணவப் பொருளாம் பெருந்தகை யைங்கான் சரணஅற் புதமலர் தலைக்கணி வோமே. நூற் பயன் வெற்றி வேற்கை வீர ராமன் கொற்கை யாளி குலசே கரன்புகல் நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னாற் குற்றங் களைவோர் குறைவிலா தவரே. நூல் 1. எழுத்தறி வித்தவ னிறைவ னாகும். 2. கல்விக் கழகு கசடற மொழிதல். 3. செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல். 4. வேதியர்க் கழகு வேதமு மொழுக்கமும். 5. 1 மன்னவர்க் கழகு செங்கோன் முறைமை. 6. 2 வைசியர்க் கழகு வளர்பொரு ளீட்டல். 7. 3 உழவர்க் கழகிங் குழுதூண் விரும்பல். 8. மந்திரிக் கழகு4வரும்பொரு ளுரைத்தல். 9. தந்திரிக் கழகு தறுக ணாண்மை. 10. உண்டிக் கழகு விருந்தோ டுண்டல். 11. பெண்டிர்க் கழகெதிர் பேசா திருத்தல். 12. குலமகட் கழகுதன் கொழுநனைப் பேணுதல். 13. விலைமகட் கழகுதன் மேனி மினுக்குதல். 14. 1அறிஞர்க் கழகு கற்றுணர்ந் தடங்கல். 15. 2வறிஞர்க் கழகு வறுமையிற் செம்மை. 16. தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை வானுற வோங்கி வளம்பெற வளரினும் ஒருவர்க் கிருக்க நிழலா காதே. 17. தெள்ளிய வாலின் சிறுபழத் தொருவிதை தெண்ணீர்க் 3கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு மன்னர்க் கிருக்க நிழலா கும்மே. 18. பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர். 19. சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர். 20. பெற்றோ ரெல்லாம் பிள்ளைக ளல்லர். 21. உற்றோ ரெல்லாம் உறவின ரல்லர். 22. கொண்டோ ரெல்லாம் பெண்டிரு மல்லர். 23. அடினுமா வின்பால் தன்சுவை குன்றாது. 24. சுடினுஞ் செம்பொன் தன்னொளி கெடாது. 25. அரைக்கினுஞ் சந்தனந் தன்மண மறாது. 26. புகைக்கினுங் காரகில் பொல்லாங்கு கமழாது. 27. கலக்கினும் தண்கடல் சேறா காது. 28. அடினும்பால் பெய்துகைப் பறாதுபேய்ச் சுரைக்காய். 29. ஊட்டினும் பல்விரை யுள்ளிகம ழாதே. 30. பெருமையுஞ் சிறுமையுந் 1தான்றர வருமே. 31. சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம் பெரியோ ராயிற் பொறுப்பது கடனே. 32. சிறியோர் பெரும்பிழை செய்தன ராயிற் பெரியோ ரப்பிழை பொறுத்தலு மரிதே. 33. நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள் ளாதே. 34. ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே. 35. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினுங் கற்கை நன்றே. 36. கல்லா ஒருவன் குலநலம் 2பேசுதல் நெல்லினுட் பிறந்த பதரா கும்மே. 37. நாற்பாற் குலத்தின் மேற்பா லொருவன் கற்றில னாயிற் கீழிருப் பவனே. 38. எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் 3கற்றோரை மேல்வரு கென்பர். 39. அறிவுடை யொருவனை யரசனும் விரும்பும். 40. அச்சமுள் ளடக்கி யறிவகத் தில்லாக் கொச்சை மக்களைப் பெறுதலி னக்குடி எச்சமற் றேமாந் திருக்கை நன்றே. 41. யானைக் கில்லை தானமுந் தருமமும். 42. பூனைக் கில்லை தவமுந் தயையும். 43. ஞானிக் கில்லை இன்பமுந் துன்பமும். 44. சிதலைக் கில்லை செல்வமுஞ் செருக்கும். 45. முதலைக் கில்லை நீத்தும் நிலையும். 46. அச்சமு நாணமும் அறிவிலோர்க் கில்லை. 47. நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை. 48. கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை. 49. உடைமையும் வறுமையு மொருவழி நில்லா. 50. குடைநிழ லிருந்து குஞ்சர மூர்ந்தோர் நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர். 51. சிறப்புஞ் செல்வமும் பெருமையு முடையோர் அறக்கூழ்ச் சாலை யடையினு மடைவர். 52. அறத்திடு பிச்சை கூவி யிரப்போர் அரசோ டிருந்தர சாளினு மாளுவர். 53. குன்றத் தனையிரு நிதியைப் படைத்தோர் அன்றைப் பகலே யழியினு மழிவர். 54. எழுநிலை மாடங் கால்சாய்ந் துக்குக் கழுதை மேய்பா ழாயினு மாகும். 55. பெற்றமுங் கழுதையும் மேய்ந்த அப்பாழ் பொற்றொடி மகளிரும் மைந்தருங் கூடி நெற்பொலி நெடுநக ராயினு மாகும். 56. மணவணி யணிந்த மகளி ராங்கே பிணவணி யணிந்துதங் கொழுநரைத் தழீஇ உடுத்த ஆடை கோடி யாக முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர். 57. இல்லோ ரிரப்பதும் இயல்பே யியல்பே. 58. இரந்தோர்க் கீவதும் உடையோர் கடனே. 59. நல்ல ஞாலமும் வானமும் பெறினும் எல்லா மில்லை இல்லில் லோர்க்கே. 60. தறுகண் யானை தான்பெரி தாயினும் சிறுகண் மூங்கிற் கோற்கஞ் சும்மே. 61. குன்றுடை நெடுங்கா டூடே வாழினும் புன்றலைப் புல்வாய் புலிக்கஞ் சும்மே. 62. ஆரையாம் பள்ளத் தூடே வாழினும் தேரை பாம்பிற்கு மிகவஞ் சும்மே. 63. கொடுங்கோன் மன்னர் வாழும் நாட்டிற் கடும்புலி வாழுங் காடு நன்றே. 64. சான்றோ ரில்லாத் தொல்பதி யிருத்தலின் தேன்றேர் குறவர் தேயம் நன்றே. 65. காலையு மாலையும் நான்மறை யோதா அந்தண ரென்போர் அனைவரும் பதரே. 66. குடியலைத் திரந்துவெங் கோலொடு நின்ற முடியுடை யிறைவனாம் மூர்க்கனும் பதரே. 67. முதலுள பண்டங் கொண்டுவா ணிபஞ்செய்து அதன்பய னுண்ணா வணிகரும் பதரே. 68. வித்தும் ஏரும் உளவா யிருப்ப எய்த்தங் கிருக்கும் ஏழையும் பதரே. 69. தன்மனை யாளைத் தாய்மனைக் ககற்றிப் 1பின்பவட் பாராப் பேதையும் பதரே. 70. தன்மனை யாளைத் 2தனிமனை யிருத்திப் பிறர்மனைக் கேகும் பேதையும் பதரே. 71. தன்னா யுதமுந் தன்கையிற் பொருளும் பிறன்கையிற் கொடுக்கும் பேதையும் பதரே. 72. வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும் சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின். 73. பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால் மெய்போ லும்மே மெய்போ லும்மே. 74. மெய்யுடை யொருவன் சொலமாட் டாமையாற் பொய்போ லும்மே பொய்போ லும்மே. 75. இருவர்தஞ் சொல்லையும் எழுதரங் கேட்டே இருவரும் பொருந்த வுரையா ராயின் 1மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தாம் மனமுற மறுகிநின் றழுத கண்ணீர் முறையுறத் தேவர் மூவர் காக்கினும் வழிவழி யீர்வதோர் வாளா கும்மே. 76. பழியா வருவது மொழியா தொழிவது. 77. சுழியா வருபுனல் இழியா தொழிவது. 78. துணையோ டல்லது நெடுவழி போகேல். 79. புணைமீ தல்லது நெடும்புன லேகேல். 80. எழிலார் முலைவரி விழியார் தந்திரம் இயலா தனகொடு முயல்வா காதே. 81. வழியே யேகுக வழியே மீளுக. 82. இவைகா ணுலகிற் கியலா மாறே. வாழ்த்து வாழிய நலனே வாழிய நலனே. நறுந்தொகை மூலமும் உரையும் கடவுள் வாழ்த்து பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன் சரணஅற் புதமலர் தலைக்கணி வோமே. (பதவுரை) பிரணவம் - பிரணவ மந்திரத்தின்; பொருள் ஆம் - அருத்தமாகிய, பெருந்தகை - பெருந்தன்மை யுடைய, ஐங்கரன் - ஐந்து கைகளை யுடையவராகிய விநாயகக் கடவுளின், சரணம் - திருவடியாகிய, அற்புதம் - அதிசயமிகுந்த, மலர் - செந்தாமரை மலரை, தலைக்கு அணிவோம் - தலையில் சூடிக்கொள்வோம் என்றவாறு. (பொழிப்புரை) பிரணவ மந்திரத்தின் பொரு ளாகிய விநாயகக் கடவுளின் திருவடிகளை வணங்குவோம் என்றவாறு. பிரணவம் எல்லா மந்திரங்களுக்கும், வேதத் திற்கும் முதலாக வுள்ளது. யாம் என்னும் எழுவாய் தொக்குநின்றது; ஏ: ஈற்றசை. நூற்பயன் வெற்றி வேற்கை வீர ராமன் கொற்கை யாளி குலசே கரன்புகல் நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால் குற்றங் களைவோர் குறைவிலா தவரே. (பத.) கொற்கை - கொற்கை யென்னும் நகரை, ஆளி - ஆள்பவனும், குலசேகரன் - தன்குலத்திற்கு முடிபோல்பவனும் ஆகிய, வெற்றிவேல் கை - வெற்றி பொருந்திய வேலினை யேந்திய கையை யுடைய, வீரராமன் - அதிவீரராம பாண்டியன், புகல் - சொல்லிய, நல் தமிழ் தெரிந்த - நல்ல தமிழில் விளக்கமுற்ற, நறுந்தொகை தன்னால் - நறுந்தொகை யென்னும் இந்நீதி நூலால், குற்றம் களைவோர் - குற்றத்தைப் போக்குவோர், குறைவு இலாதவர் - சிறுமை இல்லாதவராவர் (எ -று). (பொழி.) கொற்கை நகரதிபனும் குலத்திற்கு மகுடம் போன்றவனுமாகிய அதிவீரராம பாண்டியன் கூறிய நறுந்தொகை யென்னும் இந்நீதி நூலைக் கற்றுக்குற்றத்தைப் போக்கிக் கொள்வோர் ஒரு குறையும் இல்லாதவராவர் (எ று.) நறுந்தொகை யென்பதற்கு நல்ல நீதிகளைத் தொகுத்திருப்பது என்பது பொருள். இதுவே இந்நூலின் பெயர். இச்செய்யுளின் முதலில் ‘வெற்றி வேற்கை’ என்னுந்தொடர் இருத்தலால், அதனாலும் இந்நூலை வழங்குவர். ஏ - ஈற்றசை. நூல் 1. எழுத்தறி வித்தவ னிறைவ னாகும். (பத.) எழுத்து - எழுத்துக்களை, அறிவித்தவன் - கற்பித்த ஆசிரியன், இறைவன் ஆகும் - கடவுள் ஆவான். (பொழி.) ஒருவனுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியன் அவனுக்குத் தெய்வமாவான். எழுத்து முதலாகக் கற்பிக்க வேண்டுதலின் கல்வியை எழுத்து என்றார். ஆசிரியனைத் தெய்வ மாகக் கருதி வணங்க வேண்டுமென்பது கருத்து. 2. கல்விக் கழகு கசடற மொழிதல். (பத.) கல்விக்கு - (ஒருவன் கற்ற) கல்விக்கு, அழகு - அழகாவது, கசடு அற - குற்றம் நீங்க, மொழிதல் - (தான் கற்றவற்றைச்) சொல்லுதல். (பொழி.) ஒருவன் கற்ற கல்விக்கு அழகாவது தான் கற்றவற்றைக் குற்றமறச் சொல்லுதல். கசடு, ஐயம் திரிபு என்பன. ஒருவன் தான் கற்றவற்றை ஐயம் திரிபு இன்றியும், திருத்தமாகவும் பிறருக்குச் சொல்லவேண்டும் என்பதாம். 3. செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல். (பத.) செல்வர்க்கு - பொருளுடையவர்க்கு, அழகு - அழகாவது, செழும் கிளை - நல்ல சுற்றத்தை, தாங்குதல் - பாதுகாத்தல். (பொழி.) செல்வ முடையோர்க்கு அழகாவது, சுற்றத்தார் வறுமையுற்ற பொழுது அவரைப் பாதுகாத்தல். கிளைபோன்றிருத்தலின் சுற்றம் கிளை யெனப் படும். செழுங்கிளை யென்பது நல்ல உறவு என்றும், தமக்கு அழகைச் செய்யும் உறவு என்றும் பொருள் படும். 4. வேதியர்க் கழகு வேதமு மொழுக்கமும். (பத.) வேதியர்க்கு - மறையோர்க்கு, அழகு - அழகாவன, வேதமும்-வேதம் ஓதுதலும், ஒழுக்கமும் - நல்லொழுக்கம் குன்றா திருத்தலும் ஆம். (பொழி.) வேதத்தை மறவாமல் ஓதுதலும், ஒழுக்கத்திற் குன்றாமையும் அந்தணர்க்கு அழகாம். வேதத்தை மறந்தவரும், நல்லொழுக்க மில்லா தவரும் அந்தணராகார் என்பதாம். 5. மன்னவர்க் கழகு செங்கோன் முறைமை. (பத.) மன்னவர்க்கு - அரசருக்கு, அழகு - அழகாவது, செங்கோல் முறைமை - நீதி செலுத்தும் முறைமையாம். (பொழி.) அரசருக்கு அழகாவது நீதி செலுத்தும் இயல்பாம். நீதியானது செவ்விய கோல்போன்றிருத்தலின், அது செங்கோல் எனப்படும். தமது நாட்டை நீதியுடன் ஆளாதவர் அரசராகார் என்பதாம். 6. வைசியர்க் கழகு வளர்பொரு ளீட்டல். (பத.) வைசியர்க்கு - வணிகர்க்கு, அழகு - அழகாவது, வளர் பொருள் - வளர்கின்ற பொருளை, ஈட்டல் - தேடுதல். (பொழி.) வாணிகர்க்கு அழகாவது வளர்கின்ற பொருளைச் சேர்த்தல். வளர்தலாவது மேன்மேற் கிளைத்தல். 7. உழவர்க் கழகிங் குழுதூண் விரும்பல். (பத.) உழவர்க்கு - வேளாளர்க்கு, அழகு - அழகாவது, இங்கு - இந்நிலத்தில், உழுது - உழுது பயிர் செய்து, ஊண் - உண்டு வாழ்தலை, விரும்பல் - இச்சித்தல். (பொழி.) வேளாளர்க்கு அழகாவது பயிர் செய்து உண்டலை விரும்புதல். 8. மந்திரிக் கழகு வரும்பொரு ளுரைத்தல். (பத.) மந்திரிக்கு - அமைச்சனுக்கு, அழகு - அழகாவது, வரும் பொருள் - (மேல்) வரும் காரியத்தை; உரைத்தல் - (முன்னறிந்து) சொல்லுதல். (பொழி.) அமைச்சனுக்கு அழகாவது மேல் வருங்காரியத்தை முன்னறிந்து அரசனுக்குச் சொல்லுதல். 9. தந்திரிக் கழகு தறுக ணாண்மை. (பத.) தந்திரிக்கு - படைத்தலைவனுக்கு, அழகு - அழகாவன, தறுகண் - அஞ்சாமையும், ஆண்மை - வீரமும் ஆம். (பொழி.) படைத்தலைவனுக்கு அழகாவன அஞ்சாமையும் ஆண்மையுமாம். தந்திரம் - சேனை, தந்திரி - சேனையை உடையவன். 10. உண்டிக் கழகு விருந்தோ டுண்டல். (பத.) உண்டிக்கு - உணவிற்கு, அழகு - அழகாவது, விருந்தோடு - விருந்தினருடன், உண்டல் - உண்ணுதல். (பொழி.) உணவுண்டலுக்கு அழகாவது வந்த விருந்தினருடன் கலந்து உண்ணுதல். விருந்தினர் - புதியராய் வருகின்றவர், பரதேசிகள். 11. பெண்டிர்க் கழகெதிர் பேசா திருத்தல். (பத.) பெண்டிர்க்கு - மகளிர்க்கு, அழகு - அழகாவது, எதிர் பேசாது - (கணவன் சொல்லுக்கு) எதிர் பேசாமல், இருத்தல் - அடங்கியிருத்தல். (பொழி.) மாதர்களுக்கு அழகாவது கணவனோடு எதிர்த்துப் பேசாது அடங்கியிருப்பது. 12. குலமகட் கழகுதன் கொழுநனைப் பேணுதல். (பத.) குலமகட்கு - குலப்பெண்ணுக்கு, அழகு - அழகாவது, தன் கொழுநனை - தன் கணவனை, பேணுதல் - வழிபடுதல். (பொழி.) குலமாதுக்கு அழகாவது, தன் கணவனைப் பூசித்தல். குலமகள் - ஒருவனுக்கு உரியளாய் இல்லறம் நடாத்தும் நற்குடிப் பிறந்த பெண். பேணுதல் என்பதற்கு உண்டி முதலியவற்றால், உபசரித்தல் என்றும் பொருள் சொல்லலாம். 13. விலைமகட் கழகுதன் மேனி மினுக்குதல். (பத.) விலைமகட்கு - விலைமாதுக்கு, அழகு - அழகாவது, தன் மேனி - தன் உடம்பை, மினுக்குதல் - மின்னச் செய்தல். (பொழி.) பொதுமகளுக்கு அழகாவது, தன் உடம்பினை மின்னச் செய்தல். பொருள் கொடுப்பார்க்கு உரியளாதலின் பரத்தை விலைமகள் எனப்படுவள். மினுக்குதல் - ஆடை அணிகளாலும், மஞ்சள் முதலிய பூச்சுக் களாலும் விளங்கச் செய்வது. 14. அறிஞர்க் கழகு கற்றுணர்ந் தடங்கல். (பத.) அறிஞர்க்கு - அறிவுடையோர்க்கு, அழகு அழகாவது, கற்று - (கற்கவேண்டிய நூல்களை யெல்லாம்) கற்று, உணர்ந்து - (அவற்றின் பொருள் களை) அறிந்து, அடங்கல் - அடங்கியிருத்தல். (பொழி.) அறிவுடையோர்க்கு அழகாவது நூல் களைக் கற்றுணர்ந்து அடங்கியிருத்தல். அடங்கல் - செருக்கின்றி யிருத்தல்; மனம் அடங்குதல் நூல்களிற் கூறியபடி நடத்தல். 15. வறிஞர்க் கழகு வறுமையிற் செம்மை. (பத.) வறிஞர்க்கு - வறுமையுடையோர்க்கு, அழகு - அழகாவது, வறுமையில் - அவ்வறுமைக் காலத்தும், செம்மை - செம்மையுடையராதல். (பொழி.) வறியோர்க்கு அழகாவது வறுமை யுற்ற அக்காலத்தும் செம்மை குன்றாதிருத்தல். செம்மையாவது மானத்தை விட்டு இரவாமலும், தீயன செய்யாமலும் இருத்தல். 16. தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை வானுற வோங்கி வளம்பெற வளரினும் ஒருவர்க் கிருக்க நிழலா காதே. (பத.) பனையின் - பனைமரத்தின், தேம்படு - மதுரம் பொருந்திய, திரள் - திரண்ட, பழத்து - கனியில் உள்ள, ஒரு விதை - வித்தானது, வான் உற - ஆகாயத்தைப் பொருந்தும்படி, ஓங்கி - உயர்ந்து, வளம் பெற - செழுமை உண்டாக, வளரினும் - வளர்ந் தாலும், ஒருவர்க்கு - ஒருவர்க்காயினும், இருக்க - இருப்பதற்கு, நிழல் ஆகாது - நிழலைத் தராது. (பொழி.) சுவை பொருந்திய பெரிய பனங்கனியி லுள்ள விதையானது முளைத்து வானமளாவ வளத்துடன் வளர்ந்தாலும் ஒருவரேனும் தங்கி யிருக்க நிழலைத் தராது. உருவத்தாற் பெரியவரெல்லாம் பெருமை யுடையவராகார் என்னும் கருத்தை அடக்கிக் கொண்டிருப்பது இது. தேம்பழம் எனக் கூட்டுக. விதை முளைத்து வளரினும் அது நிழலாகாது என விரித்துக் கொள்க. தொல்காப்பிய இலக்கணப்படி பனை முதலிய புறவயிரம் உள்ளவற்றிற்குப் புல் என்று பெயர். ஒருவர்க்கும் - என்னும் உம்மை தொக்கது. ஏ : ஈற்றசை. 17. தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை அணிதேர் புரவி யாட்பெரும் படையொடு மன்னர்க் கிருக்க நிழலா கும்மே. (பத.) ஆலின் - ஆலமரத்தின், தெள்ளிய - தெளிந்த, சிறு பழத்து - சிறிய கனியிலுள்ள, ஒரு விதை - ஒரு வித்தானது, தெள் நீர் - தெளிந்த நீரையுடைய, கயத்து - குளத்திலுள்ள, சிறு மீன் - சிறிய மீனினது, சினையிலும் - முட்டையைக் காட்டிலும், நுண்ணிதே ஆயினும் - சிறியதே யானாலும், (அது), அண்ணல் - பெருமை பொருந்திய, யானை - யானையும், அணி - அலங்கரிக்கப்பட்ட, தேர் - தேரும், புரவி - குதிரையும், ஆள் - காலாளும் (ஆகிய), பெரும் படையொடு - பெரிய சேனையோடு, மன்னர்க்கு - அரசருக்கும், இருக்க - தங்கியிருப்பதற்கு, நிழல் ஆகும் - நிழலைத் தரும். (பொழி.) சிறிய ஆலம்பழத்திலுள்ள விதையானது சிறிய மீனின் முட்டையைப் பார்க்கிலும் சிறியதாயிருப்பினும் அது முளைத்து வளர்ந்து நால்வகைச் சேனையுடன் கூடிய அரசரும் தங்கியிருக்க நிழலைத் தரும். உருவத்தாற் சிறியவரெல்லாம் சிறுமை யுடையவ ராகாது பெருமையுடையவருமாவர் என்னும் கருத்தை அடக்கிக் கொண்டிருப்பது இது. தெள்ளிய பழத்து என்றும், விதை நுண்ணிதே யாயினும் என்றும் கூட்டிக்கொள்க. அது முளைத்து வளர்ந்து நிழலாகும் என விரித்துக் கொள்க. மன்னர்க்கும் என்னும் உம்மை தொக்கது. நிழலாகும்மே என்பதில், ம்:விரித்தல் விகாரம்; ஏ : ஈற்றசை. 18. பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர். (பத.) பெரியோர் எல்லாம் - (உருவத்தால்) பெரியவரெல்லாரும், பெரியரும் அல்லர் - பெருமை யுடையவரும் ஆகார். (பொழி.) உருவத்தாற் பெரியவரெல்லாரும் பெருமையுடைய வராகார். பெரியோர் என்பதற்கு வயதிற் பெரியவ ரென்றும், செல்வத்திற் பெரியவரென்றும் பொருள் கூறினாலும் பொருந்தும். அறிவினாலும், பிறர்க்கு உதவி செய்தல் முதலியவற்றாலும் பெரியவரே பெருமை யுடையவ ரென்க. பெரியவரும் என்பதிலுள்ள உம்மை பின்வரும் சிறியரும் என்பதைத் தழுவியிருக்கிறது. இங்கே கூறிய விசேடவுரை களை மேல்வரும் தொடர்க்கு மாற்றி யுரைத்துக் கொள்க. 19. 1சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர் (பத.) சிறியோர் எல்லாம் - (உருவத்தால்) சிறியவரெல்லாரும், சிறியரும் அல்லர் - சிறுமை யுடையவரும் ஆகார். (பொழி.) உருவத்தாற் சிறியவரெல்லாரும் சிறுமையுடையவராகார். 20. பெற்றோ ரெல்லாம் பிள்ளைக ளல்லர். (பத.) பெற்றோர் எல்லாம் - பெறப்பட்டவர்க ளெல்லாரும், பிள்ளைகள் அல்லர் - (நல்ல) பிள்ளைகளாகார். (பொழி.) ஒருவர் பெற்ற பிள்ளைகளெல்லாரும் நல்ல பிள்ளைகளாகார். அறிவு ஒழுக்கங்களில் மேம்பட்ட பிள்ளை களே பிள்ளைகள் என்று சொல்வதற்குத் தகுதி யுடை யவர்கள் என்க. 21. உற்றோ ரெல்லாம் உறவின ரல்லர். (பத.) உற்றோர் எல்லாம் - உறவின ரெல்லோரும், உறவினர் அல்லர் - (நல்ல) உறவினராகார். (பொழி.) உறவினரனைவரும் சிறந்த உறவின ராகார். இன்ப துன்பங்களில் ஈடுபட்டிருக்கும் சுற்றத்தாரே உறவினர் என்று சொல்லுவதற்குத் தகுதியுடையோர் என்க. 22. கொண்டோ ரெல்லாம் பெண்டிரு மல்லர். (பத.) கொண்டோர் எல்லாம் - கொள்ளப்பட்ட மனைவிய ரெல்லாரும், பெண்டிரும் அல்லர் - (நல்ல) மனைவியருமாகார். (பொழி.) மணஞ் செய்து கொள்ளப்பட்ட மனைவிய ரெல்லாரும் நல்ல மனைவியருமாகார். கணவன் குறிப்பறிந்து பணிசெய்து நடப்பவளே மனைவி யென்று சொல்லுவதற்குத் தகதி யுடையவள் என்க. பெண்டிரும் என்பதிலுள்ள உம்மை மேல்வந்த பிள்ளைகள், உறவினர் என்பவற்றைத் தழுவியது. 23. அடினுமா வின்பால் தன்சுவை குன்றாது. (பத.) அடினும் - காய்ச்சினாலும், ஆவின்பால் - பசுவின் பால், தன்சுவை - தனது மதுரம், குன்றாது - குறையாது. (பொழி.) பசுவின்பாலை வற்றக் காய்ச்சினாலும் அதன் சுவை குறையாது (மிகும்.) இது முதல் ஐந்து வாக்கியங்கள் பெரியோர்க்கு எவ்வளவு துன்பம் செய்தாலும் அவர்கள் தம் பெருமைக் குணத்தைக் கைவிடார் என்னும் கருத்தை அடக்கிக் கொண்டிருக்கின்றன. 24. சுடினுஞ் செம்பொன் தன்னொளி கெடாது. (பத.) சுடினும் - சுட்டாலும், செம்பொன் - சிவந்த பொன்னானது, தன் ஒளி - தனது ஒளி, கெடாது - அழியாது. (பொழி.) தங்கத்தைத் தீயிலிட்டுச் சுட்டாலும் அதன் ஒளி கெடாது (மிகும்.) 25. அரைக்கினுஞ் சந்தனந் தன்மண மறாது. (பத.) அரைக்கினும் - அரைத்தாலும், சந்தனம் - சந்தனக் கட்டை யானது, தன் மணம் - தனது வாசனை, அறாது - நீங்காது. (பொழி.) சந்தனக் கட்டையை அரைத்தாலும் அதன் மணம் நீங்காது (மிகும்.) 26. புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது. (பத.) புகைக்கினும் - புகையச் செய்தாலும், கார் அகில் - கரிய அகிற்கட்டையானது, பொல்லாங்கு கமழாது - தீ நாற்றம் வீசாது. (பொழி.) அகிற் கட்டையை நெருப்பிலிட்டுப் புகைத்தாலும் அது தீ நாற்றம் நாறாது (நன்மணங் கமழும்). பொல்லாங்கு - தீமை; அது தீய நாற்றத்தைக் குறிக்கிறது. 27. கலக்கினும் தண்கடல் சேறா காது. (பத.) கலக்கினும் - கலக்கினாலும், தண் கடல் - குளிர்ந்த கடலானது, சேறு ஆகாது - சேறாக மாட்டாது. (பொழி.) கடலைக் கலக்கினாலும் அது சேறாகாது (தெளிவாகவே யிருக்கும்.) 28. 1அடினும்பால் பெய்துகைப் பறாதுபேய்ச் சுரைக்காய். (பத.) பால் பெய்து - பால் வார்த்து, அடினும் - சமைத்தாலும், பேய்ச்சுரைக்காய் - பேய்ச் சுரைக்காயானது; கைப்பு அறாது - கசப்பு நீங்காது. (பொழி.) பேய்ச் சுரைக்காயைப் பால்விட்டுச் சமைத்தாலும் அதன் கசப்பு நீங்காது. இதுவும், அடுத்துவரும் வாக்கியமும் சிறியோர்க்கு எவ்வளவு நன்மை செய்தாலும் அவர்கள் தம் சிறுமைக் குணத்தைக் கைவிடார் என்னும் கருத்தை அடக்கிக் கொண்டிருக்கின்றன. இக்கருத்து, “உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும், கைப்பறாபேய்ச் சுரையின் காய்” என நாலடியாரில் வந்துள்ளது. பேய்ச்சுரைக்காய் சுரைக்காயில் ஒரு வகை. 29. ஊட்டினும் பல்விரை யுள்ளிகம ழாதே. (பத.) பல் விரை - பல வாசனைகளை, ஊட்டினும் - ஊட்டி னாலும், உள்ளி - உள்ளிப் பூண்டானது, கமழாது - நன் மணம் வீசாது. (பொழி.) உள்ளிப் பூண்டுக்குப் பல வாசனை களை ஊட்டினாலும் அது நறுமணம் கமழாது (தீ நாற்றமே வீசும்). ஏ : அசை. 30. பெருமையும் சிறுமையுந் தான்தர வருமே. (பத.) பெருமையும் - மேன்மையும், சிறுமையும் - கீழ்மையும், தான்தர - தான்செய்து கொள்ளுதலால், வரும் - உண்டாகும். (பொழி.) மேன்மையும் கீழ்மையும் தான் செய்யுஞ் செய்கையாலேயே உண்டாகும் (பிறரால் உண்டாவ தில்லை). ஏ:அசை. 31. சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம் பெரியோ ராயிற் பொறுப்பது கடனே. (பத.) சிறியோர் செய்த - சிற்றறிவுடையோர் செய்த, சிறுபிழை எல்லாம் - சிறிய குற்றங்க ளெல்லாவற்றையும், பெரியோர் ஆயின் - மேலோரா யிருப்பின், பொறுப்பது - பொறுத்துக் கொள்வது, கடன் - முறைமையாம். (பொழி.) சிற்றறிவுடையோர் செய்த சிறிய பிழைகளைப் பெரியோர் பொறுத்துக் கொள்வது கடமை. பொறுமையினாலேயே பெருமை அறியப் படும் என்க. ஏ : அசை. 32. சிறியோர் பெரும்பிழை செய்தன ராயிற் பெரியோ ரப்பிழை பொறுத்தலு மரிதே. (பத.) சிறியோர் - கீழோர், பெரும் பிழை - பெரிய குற்றங்களை, செய்தனர் ஆயின் - செய்தாரானால், பெரியோர் - மேலோர், அப்பிழை - அக்குற்றங்களை, பொறுத்தலும் - பொறுத்துக் கொள்ளுதலும், அரிது - அருமையாம். (பொழி.) சிறியோர்கள் பெரும் பிழைகளைச் செய்தால் பெரியோர் அவற்றைப் பொறுத்தலும் அருமையாம். பெரியோர் பொறுப்பரென்று கருதி அவரிடத்துப் பெரும்பிழை செய்தல் கூடாது என்க. ஏ:அசை. 33. நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள் ளாதே. (பத.) நூறு ஆண்டு - நூறு வருடம், பழகினும் - பழகினாலும், மூர்க்கர் - கீழ் மக்களுடைய, கேண்மை - நட்பானது, நீர்க்குள் நீரிலுள்ள, பாசிபோல் - பாசியைப்போல, வேர்க்கொள்ளாது - வேரூன்றாது. (பொழி.) எத்தனை காலம் பழகினாலும் கீழ் மக்களுடைய நட்பு நீர்பாசி வேரூன்றாமைபோல வேரூன்றாது. ஏ : அசை. 34. ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே. (பத.) ஒருநாள் - ஒருதினம், பழகினும் - பழகினாலும், பெரியோர் - மேன்மக்களுடைய, கேண்மை - நட்பானது, இரு நிலம் பிளக்க - பெரிய பூமி பிளக்கும்படி, வேர் வீழ்க்கும் - வேரூன்றப் பெறும். (பொழி.) ஒருநாட் பழகினும் மேலோருடைய நட்பானது பூமி பிளக்கும்படி, வேரூன்றி நிற்கும். நட்பை மரமாக உருவகப்படுத்தி ‘இருநிலம் பிளக்க வேர் வீழ்க்கும்’ என்றார். பின் சலித்தலின்றி நிலைபெறு மென்பதாயிற்று. 35. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே. (பத.) கற்கை நன்று கற்கை நன்று - (நூல்களைக்) கற்றல் நல்லது, கற்றல் நல்லது, பிச்சை புகினும் - பிச்சைக்குப் போனாலும், கற்கை நன்று - கற்றல் நல்லது. (பொழி.) பிச்சை யெடுத்தாலும் கல்வி கற்பது நல்லது. வற்புறுத்துவதற்குப் பலமுறை கூறினார். ஏ : மூன்றும் அசை; தேற்றமும் ஆம். 36. கல்லா ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லினுட் பிறந்த பதரா கும்மே. (பத.) கல்லா ஒருவன் - கல்வி கல்லாத ஒருவன், குல நலம் - தனது குலத்தின் மேன்மையை, பேசுதல் - சொல்லுதல், நெல்லினுள் பிறந்த - நெற்பயிரில் உண்டாகிய, பதர் ஆகும் - பதடியாகும். (பொழி.) கல்லாதவன் தன் குலத்தின் மேன்மையைப் பாராட்டும் வார்த்தை பதர்போலப் பயனற்றதாகும். பேசுதல் வீண். அவன் பதராகும் எனச் சொற்கள் வருவித்து முடித்தலுமாம். நெற்பயிர் நற்குடிக்கும், பதர் நற்குடிப்பிறந்த கல்லாத வனுக்கும் உவமைகளாம். ம் : விரித்தல் விகாரம். 37. நாற்பால் குலத்தின் மேற்பா லொருவன் கற்றில னாயிற் கீழிருப் பவனே. (பத.) நற்பால் நான்கு வகையான, குலத்தில் - குலங்களில், மேற்பால் ஒருவன் - உயர்குலத்திற் பிறந்த ஒருவன், கற்றிலன் ஆயின் - கல்லாதவ னானால், கீழ் இருப்பவனே - தாழ்ந்த இடத்தில் இருப்பவனே. (பொழி.) உயர் குலத்திற் பிறந்தவன் கல்லா தவனாயின் தாழ்ந்த இடத்தில் இருக்கத்தக்கவனே. நாற்பாற் குலம் : அந்தண அரச வணிக வேளாள குலங்கள். இக்கருத்து, “வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும், கீழ்ப்பாலொருவன் கற்பின், மேற்பா லொருவனு மவன்கட்படுமே” எனப் புறநானூற்றில் வந்துள்ளது. ஏகாரம் : பிரிநிலையும் தேற்றமும் ஆம். 38. எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பர். (பத.) எக்குடி - எந்தக் குலத்தில், பிறப்பினும் - பிறந்திருந்தாலும், யாவரே ஆயினும் - யாரா யிருந்தாலும், அக்குடியில் - அந்தக் குலத்தில், கற்றோரை - கல்வி கற்றவரை, மேல் வருக என்பர் - மேலிடத்து வருக என்று அழைப்பார். (பொழி.) எக்குலத்திற் பிறந்திருந்தாலும் யாராயிருந்தாலும் கற்றோரை மேல் வருக என்று உபசரித்து அழைப்பார். யாவரேயாயினும் என்றது, எந்த நிலைமையின ராயினும் என்றபடி, தாழ்ந்த குலத்திற் பிறந்தவ ராயினும் இளைஞராயினும் கற்றோரை அழைப்ப ரென்க. ‘வருக வென்பர்’ என்பது ‘வருகென்பர்’ எனத் தொகுத்தது. 39. அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும். (பத.) அறிவுடை ஒருவனை - கல்வியறிவுடைய ஒருவனை, அரசனும் விரும்பும் - வேந்தனும் விரும்புவான். (பொழி.) கல்வியறிவுடையவனை அரசனும் விரும்புவான். “அறிவுடையோனா றரசுஞ் செல்லும்” எனப் புறநானூற்றில் இக் கருத்து வந்துள்ளது. உடைய என்பது உடை என விகாரமாயிற்று. 40. அச்சமுள் ளடக்கி அறிவகத் தில்லாக் கொச்சை மக்களைப் பெறுதலி னக்குடி எச்சமற் றேமாந் திருக்கை நன்றே. (பத.) அச்சம் உள் அடக்கி - அச்சத்தை உள்ளே வைத்து, அறிவு அகத்து இல்லா - அறிவு மனத்தி லில்லாத, கொச்சை மக்களை - கீழான பிள்ளை களை, பெறுதலின், பெறுவதைக் காட்டிலும், அக்குடி - அக்குடியிலுள்ளவர், எச்சம் அற்று - சந்ததியில்லாமல், ஏமாந்து இருக்கை - இன்புற் றிருப்பது, நன்று - நல்லது. (பொழி.) அறிவும் ஆண்மையுமில்லாத மக்களைப் பெறுவதைப் பார்க்கினும் மகப் பேறில்லாது களித் திருப்பது நன்று. கொச்சை - கீழ்மை; வெள்ளாடு என்று பொருள் கொண்டு வெள்ளாடுபோலும் மக்கள் என்று கூறுதலுமாம். அப்பிள்ளைகளைப் பெறுதலால் துன்பமே விளையுமாதலின், பெறாது களித்திருப்பது நல்லது என்றார். ஏமாத்தல் - களித்தல். ஏ : அசை. 41. யானைக் கில்லை தானமுந் தருமமும். (பத.) யானைக்கு - யானைக்குக் (கைந்நீண்டிருந் தாலும்), தானமும் - தானஞ் செய்தலும், தருமமும் - அறஞ்செய்தலும், இல்லை - இல்லையாம். (பொழி.) யானைக்குக் கை நீண்டிருந்தாலும் அது தானமும் தருமமும் செய்வதில்லை. தானதருமஞ் செய்பவர்போற் காணப்படு கிறவர்கள் அவை செய்யாமலு மிருப்பர் என்பதாம். தானம் - தக்கோர்க்குப் பொருளை நீருடன் அளிப்பது. தருமம் - வறியவர்க்கு ஈதல் முதலியன. 42. பூனைக் கில்லை தவமுந் தயையும். (பத.) பூனைக்கு - பூனைக்கு (அது கண்மூடி ஒடுங்கியிருந்தாலும்) தவமும் - தவஞ்செய்தலும், தயையும் - (உயிர்களிடத்து) இரக்கம் வைத்தலும், இல்லை - இல்லையாம். (பொழி.) பூனை (கண்ணை மூடிக்கொண்டு அமைதியாயிருந் தாலும்) அது தவஞ்செய்தலும் அருளுடைத்தாதலுமில்லை. தவவொழுக்கமும், சீவகாருணியமும் உடையவர் போற் காணப்படுகிறவர்கள் அவை யில்லாமலு மிருப்பர் என்பதாம். இவ்விரண்டு வாக்கியங்களும் வேடத்தினாலேயே ஒருவரை மதிக்கலாகாது என்னுங் கருத்தை அடக்கிக் கொண்டிருக்கின்றன. 43. ஞானிக் கில்லை இன்பமுந் துன்பமும். (பத.) ஞானிக்கு - ஞானமுடையவனுக்கு, இன்பமும் - சுகமும், துன்பமும் - துக்கமும், இல்லை - இல்லையாம். (பொழி.) மெய்ஞ்ஞானிக்குச் சுகமும் இல்லை; துக்கமும் இல்லை. ஞானி இன்ப துன்பங்களை அடைபவன்போற் காணப்பட்டாலும் அவன் மகிழ்ச்சியாவது துயர மாவது அடையான் என்க. 44. சிதலைக் கில்லை செல்வமுஞ் செருக்கும். (பத.) சிதலைக்கு - செல்லுக்கு, செல்வமும் - செல்வமுடைய ரென்பதும், செருக்கும் - செருக்குடைய ரென்பதும், இல்லை - இல்லையாம். (பொழி.) செல்வ முடையரென்றும் செருக் குடைய ரென்றும் பாராமல் கரையான் யாவருடையையும் அரித்துவிடும். கீழ்நிலையிலிருப்பவர் பிறருடைய செல்வத்தையோ அதிகாரத்தையோ கண்டு அஞ்சார் என்க. விலை யுயர்ந்த ஆடைகளை அரித்துவிடுவதால் செல்லானது செல்வமும் செருக்குமுடையதன்று; அஃது அதன் இயற்கையே என்று பொருள் கூறி, கீழ் மக்கள் தம் அறியாமை யாகிய இயற்கையினாலேயே பிறர்க்கு இடர் விளைப்பர் என்று கருத்துக் கொள்ளுதலும் ஆம். 45. முதலைக் கில்லை நீத்தும் நிலையும். (பத.) முதலைக்கு - முதலைக்கு, நீத்தும் - நீந்தும் நீர் (என்பதும்), நிலையும் - நிலைகொள்ளும் நீர் (என்பதும்), இல்லை - இல்லையாம். (பொழி.) நீச்சென்றும் நிலையென்றும் பாராமல் முதலை எவ்வளவு ஆழமாகிய நீரிலும் செல்லும். மூர்க்கராயினார் தக்கது தகாதது என்று பாராமல் எவ்வளவு தகாத காரியத்தையும் துணிந்து செய்வர் என்க. 46. அச்சமு நாணமும் அறிவிலோர்க் கில்லை. (பத.) அச்சமும் - (தீய தொழிலுக்கு) அஞ்சுதலும், நாணமும் - (பழிக்கு) நாணுதலும், அறிவு இலோர்க்கு - அறிவில்லாதவருக்கு, இல்லை - இல்லையாம். (பொழி.) அஞ்சத்தக்க தீய தொழிலுக்கு அஞ்சுதலும், பழிக்கு நாணுதலும் அறிவில்லா தவரிடத்தில் இல்லை. 47. நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை. (பத.) நாளும் - நட்சத்திரமும், கிழமையும் - வாரமும், நலிந்தோர்க்கு - பிணியால் மெலிந்தவர்க்கு, இல்லை - இல்லையாம். (பொழி.) நோயால் வருந்தினவர்க்கு நட்சத்திர மும் கிழமையும் இல்லை. இன்ன நாளில் இன்னது செய்யவேண்டு மென்னும் நியதி நோயுற்றார்க்குக் கூடாதென்க. 48. கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை. (பத.) கேளும் - நட்பும், கிளையும் - உறவும், கெட்டோர்க்கு - வறுமையுற்றோர்க்கு, இல்லை - இல்லையாம். (பொழி.) வறுமையுற்றோர்க்கு நண்பரும் உறவினரும் இல்லை. 49. உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா. (பத.) உடைமையும் - செல்வமும், வறுமையும் - தரித்திரமும், ஒருவழி - ஓரிடத்திலே, நில்லா - நிலைத்திரா. (பொழி.) செல்வமும் வறுமையும் ஓரிடத்திலே நிலைத்திராமல் மாறிமாறி வரும். பின்வருஞ் சில தொடர்கள் இவ்வியல்பை விளக்குவனவாம். 50. குடைநிழ லிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர். (பத.) குடை நிழல் இருந்து - வெண்கொற்றக் குடையின் நிழலில் இருந்து, குஞ்சரம் ஊர்ந்தோர் - யானையை நடாத்திச் சென்ற அரசரும், நடைமெலிந்து - நடத்தலால் தளர்ச்சியுற்று, ஓர் ஊர் - மற்றோர் ஊரை, நண்ணினும் நண்ணுவர் - அடைந்தாலும் அடைவர். (பொழி.) யானையின் பிடர்மேல் வெண் கொற்றக் குடை நிழல் செய்ய வீற்றிருந்து அதனைச் செலுத்திச் சென்ற அரசரும் வறுமையெய்திக் காலால் நடந்து மற்றோர் ஊருக்குச் செல்லினும் செல்வர். “யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச் சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை வினையுலப்ப வேறாகி வீழ்வர்” என நாலடியாரில் இக்கருத்து வந்துள்ளது. 51. சிறப்புஞ் செல்வமும் பெருமையு முடையோர் அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர். (பத.) சிறப்பும் - (பிறரை யேவிக்கொள்ளும்) முதன்மையும், செல்வமும் - பொருளும், பெருமையும் - மேன்மையும், உடையோர் - உடையவரும், அறக்கூழ்ச்சாலை - அறத்திற்குக் கஞ்சிவார்க்கும் சத்திரத்தை, அடையினும் அடைவர் - அடைந்தாலும் அடைவர். (பொழி.) பிறரை யேவிக்கொள்ளும் முதன்மை யும் செல்வமும் மேன்மையும் உடையவரும் வறியராய் உணவின்றி அறத்திற்குக் கூழ்வார்க்கும் சத்திரத்தை அடைந்தாலுமடைவர். இவ்விரண்டு தொடர்களிலும் உயர்வு சிறப்பும்மை விகாரத்தாற் றொக்கது. 52. அறத்திடு பிச்சை கூவி யிரப்போர் அரசோ டிருந்தர சாளினும் ஆளுவர். (பத.) அறத்து இடு பிச்சை - அறத்திற்கு இடுகின்ற பிச்சையை, கூவி - (கடைத் தலையில் நின்று) கூவியழைத்து, இரப்போர் - இரக்கும் வறுமை யுடையோரும், அரசோடு இருந்து - அரச அங்கங்களோடு கூடியிருந்து, அரசு ஆளினும் ஆளுவர் - அரசாட்சி செய்தாலும் செய்வர். (பொழி.) வீடுகள்தோறும் கடைத்தலையில் நின்று கூவி யழைத்துப் பிச்சை ஏற்போரும் செல்வராகி அரசு அங்கங்களுடன் கூடி அரசாண்டாலும் ஆளுவர். இழிவு சிறப்பும்மை தொக்கது. பின் சிறப்பும்மை தொக்கு வருவனவற்றையும் கண்டு கொள்க. 53. குன்றத் தனையிரு நிதியைப் படைத்தோர் அன்றைப் பகலே யழியினும் அழிவர். (பத.) குன்று அத்தனை - மலையவ்வளவு, இரு நிதியை - பெரிய செல்வத்தை, படைத்தோர் - படைத் தவரும், அன்றைப் பகலே - (படைத்த) அன்றைக்கே, அழியினும் அழிவர் - வறுமை யுற்றாலும் உறுவர். (பொழி.) மலையளவு பெரும்பொருள் பெற்றவரும் பெற்ற அப்பொழுதே அதனை யிழப்பினும் இழப்பர். 54. எழுநிலை மாடங் கால்சாய்ந் துக்குக் கழுதை மேய்பா ழாயினு மாகும். (பத.) எழுநிலை - ஏழு நிலைகளுடைய, மாடம் - மாளிகையும், கால்சாய்ந்து - அடியுடன் சாய்ந்து, உக்கு - சிதறுண்டு, கழுதை மேய் - கழுதைகள் மேய்கின்ற, பாழ் ஆயினும் ஆகும் - பாழ்நில மானாலும் ஆகும். (பொழி.) ஏழடுக்கு வீடுகளும் சரிந்து வீழ்ந்து துகளாகிக் கழுதைகள் மேயும் பாழ்நில மானாலும் ஆகும். 55. பெற்றமுங் கழுதையும் மேய்ந்த அப்பாழ் பொற்றொடி மகளிரும் மைந்தருங் கூடி நெற்பொலி நெடுநக ராயினு மாகும். (பத.) பெற்றமும் - எருதுகளும், கழுதையும் - கழுதைகளும், மேய்ந்த அப் பாழ் - மேய்ந்த அப் பாழ் நிலமானது, பொன் தொடி - பொன்னாலாகிய வளையலை (அணிந்த), மகளிரும் - மாதர்களையும், மைந்தரும் - ஆடவர்களையும், கூடி - பொருந்தி, நெல் பொலி - நெற் குவியல்களையுடைய, நெடுநகர் - பெரிய நகரம், ஆயினும் ஆகும் - ஆனாலும் ஆகும். (பொழி.) எருதும் கழுதையும் மேய்ந்த அப் பாழ் நிலம் பொன்வளை யணிந்த மாதரையும் மைந்தரையும் உடையதாய் நெற்பொலி மிக்க பெருநகர மாயினும் ஆகும். மேல், பாழாயினுமாகும் என்றதைச் சுட்டி ‘அப்பாழ்’ என்றார். மைந்தர் - புதல்வர் என்னலுமாம். கூட என்பது கூடியெனத் திரிந்ததாகவும் கொள்ளலாம். 56. மணவணி யணிந்த மகளி ராங்கே பிணவணி யணிந்துதங் கொழுநரைத் தழீஇ உடுத்த ஆடை கோடி யாக முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர். (பத.) மண அணி அணிந்த - மணக்கோலம் பூண்ட, மகளிர் - பெண்கள், ஆங்கே - அப்பொழுதே (அவ்விடத்திலேயே), பிண அணி அணிந்து - (கணவர் இறத்தலால்) பிணத்திற்குரிய கோலத்தைப் பூண்டு, தம் கொழுநரைத் தழீஇ - தம் கணவருடம்பைத் தழுவி, உடுத்த ஆடை - முன்பு உடுத்த கூறையே, கோடி ஆக - கோடிக் கூறை யாக, முடித்த கூந்தல் - பின்னிய கூந்தலை, விரிப்பினும் விரிப்பர் - விரித்தாலும் விரிப்பர். (பொழி.) மணக்கோலம் பூண்ட மகளிர் அப்பொழுது அவ்விடத்தே கணவர் இறத்தலால் பிணத்திற்குரிய கோலம் பூண்டு, அவருடம்பைத் தழுவி, முன்பு உடுத்த கூறையே கோடியாகப் பூவுடன் முடித்த கூந்தலை விரித்து அழுதாலும் அழுவர். கோடி - புது உடை; இறந்த உடம்பிற்கு இடும் உடை; மங்கல நாண் இழந்த மகளிர் உடுக்கும் உடை “மன்றங்கறங்க மணப்பறை யாயின” என்னும் நாலடியார்ச் செய்யுள் இந்நிலையாமையை உணர்த்துவது. 57. இல்லோ ரிரப்பதும் இயல்பே இயல்பே. (பத.) இல்லோர் - பொருளில்லாதவர், இரப்பதும் - யாசிப்பதும், இயல்பே இயல்பே - இயற்கையே இயற்கையே. (பொழி.) வறியவர் இரப்பது இயற்கையே யன்றிப் புதுமையன்று. இரப்பதும் என்பதிலுள்ள உம்மையும் பின் ஈவதும் என்பதிலுள்ள உம்மையும் ஒன்றையொன்று தழுவியுள்ளன. அடுக்கு வற்புறுத்தலைக் குறித்தது. 58. இரந்தோர்க் கீவதும் உடையோர் கடனே. (பத.) இரந்தோர்க்கு - யாசித்தவர்க்கு, ஈவதும் - கொடுப்பதும், உடையோர் கடனே - பொரு ளுடையவர் கடமையே. (பொழி.) வறியராய் இரப்பவர்க்கு ஈவது பொருளுடையவர் கடமையே. இவ்விரு வாக்கியத்தும் ஏ : தேற்றம். 59. நல்ல ஞாலமும் வானமும் பெறினும் எல்லா மில்லை யில்லில் லோர்க்கே. (பதவுரை.) நல்ல ஞாலமும் - நல்ல பூவுலகையும், வானமும் வானுலகையும், பெறினும் - பெற்றாலும், எல்லாம் - அவை யாவும், இல் - (மாண்புள்ள) மனைவியரை, இல்லோர்க்கு - இல்லாதவர்க்கு, இல்லை - இல்லையாம். (பொழி.) பூவுலகத்தையும் தேவருலகத்தையும் பெற்றாலும், மாண்புள்ள மனைவி யில்லாதவர்க்கு அவற்றால் யாதும் பயனில்லை. ஏ : அசை. 60. தறுகண் யானை தான்பெரி தாயினும் சிறுகண் மூங்கிற் கோற்கஞ் சும்மே. (பத.) தறுகண் - அஞ்சாமையையுடைய, யானை - யானையானது, தான் பெரிது ஆயினும் - தான் பெரிய உருவத்தை உடையதாயினும், சிறுகண் - சிறிய கணுக்களையுடைய, மூங்கில் கோற்கு - மூங்கில் கோலுக்கு, அஞ்சும் - அஞ்சாநிற்கும். (பொழி.) அஞ்சாமையுடைய யானை உருவத்தாற் பெரிய தாயினும் சிறிய கணுக்களை யுடைய மூங்கிற்கோலுக்கு அஞ்சும். வலிமையும் பெருமையும் உடையவரும் தம்மை யாள்வோர் சிறியர் (இளைஞர்) ஆயினும் அவருக்கு அஞ்சி நடப்பர் என்னுங் கருத்தை அடக்கிக் கொண்டிருப்பது இது. கோற்கும் என்னும் உம்மை தொக்கது. ம் : விரித்தல் விகாரம். ஏ : அசை. 61. குன்றுடை நெடுங்கா டூடே வாழினும் புன்றலைப் புல்வாய் புலிக்கஞ் சும்மே. (பத.) குன்று உடை - மலைகளையுடைய, நெடுங் காடு ஊடே - நீண்ட காட்டினுள்ளே, வாழினும் - வாழ்ந்தாலும், புல்தலை - சிறிய தலையுடைய, புல்வாய் - மானானது, புலிக்கு அஞ்சும் - புலிக்கு அஞ்சா நிற்கும். (பொழி.) மானானது மலைகளையுடைய பெரிய காட்டிற்குள் வாழ்ந்தாலும் புலிக்கு அஞ்சும். 62. ஆரையாம் பள்ளத் தூடே வாழினும் தேரை பாம்பிற்கு மிகவஞ் சும்மே. (பத.) ஆரை ஆம் - ஆரைப்பூண்டு படர்ந்த, பள்ளத்து ஊடே - ஆழத்தினுள்ளே, வாழினும் - வாழ்ந்தாலும், தேரை - தேரையானது, பாம்பிற்கு - பாம்பினுக்கு, மிக அஞ்சும் - மிகவும் அஞ்சாநிற்கும். (பொழி.) தேரையானது ஆரைப் பூண்டு நிறைந்த பள்ளத்தில் வாழ்ந்தாலும் பாம்பிற்கு மிக அஞ்சும். இவ்விரண்டு தொடர்களும், வீரரல்லாதவர் எவ்வகை அரணுக்குள் இருப்பினும் வீரருக்கு அஞ்சுவர் என்னுங் கருத்தை அடக்கிக் கொண்டிருக் கின்றன. ஆரை - நீரிற் படர்வதொரு கீரைப் பூண்டு. 63. கொடுங்கோன் மன்னர் வாழும் நாட்டிற் கடும்புலி வாழுங் காடு நன்றே. (பத.) கொடுங்கோல் மன்னர் - நீதியில்லாத அரசர், வாழும் நாட்டில் - வாழுகின்ற நாட்டைப் பார்க்கிலும், கடும்புலி வாழும் - கொடிய புலி வாழுகின்ற, காடுநன்று - காடு நல்லது. (பொழி.) கொடுங்கோலரசர் ஆட்சிபுரியும் நாட்டிலிருப்பதைப் பார்க்கிலும், கொடிய புலி வாழும் காட்டிலிருப்பது நல்லது. அவ்வரசர் நாட்டிலே குடிகளுக்கு அச்சமும் கவலையும் அளவின்றியிருக்கு மென்க. 64. சான்றோ ரில்லாத் தொல்பதி யிருத்தலின் தேன்றேர் குறவர் தேயம் நன்றே. (பத.) சான்றோர் இல்லா - பெரியோர் இல்லா, தொல்பதி - பழைமையாகிய நகரத்தில், இருத்தலின் - குடியிருப்பதைப் பார்க்கிலும், தேன் தேர் - தேனை ஆராய்ந்து திரியும், குறவர் - குறவருடைய, தேயம் - மலைநாட்டில் இருப்பது, நன்று - நல்லது. (பொழி.) அறிவொழுக்கங்களால் நிறைந்த பெரியோர் இல்லாத பழைமையான நகரத்தில் இருப்பதைப் பார்க்கிலும் குறவர் வசிக்கும் மலைப்பக்கத்தில் இருப்பது நல்லது. அப் பதியிலிருப்போர்க்கு இம்மை மறுமை யின்பங்கள் இல்லையா மென்க. ஏ: அசை. இரண்டிலும் ஏ தேற்றமுமாம். 65. காலையு மாலையும் நான்மறை யோதா அந்தண ரென்போ ரனைவரும் பதரே. (பத.) காலையும் மாலையும் - காலைப் பொழுதிலும் மாலைப்பொழுதிலும், நான்மறை - நான்கு வேதங்களையும், ஓதா - ஓதாத, அந்தணர் என்போர் அனைவரும் - மறையோர் என்று சொல்லப் படுவோர் எல்லாரும், பதரே - பதரேயாவர். (பொழி.) காலையிலும் மாலையிலும் வேதம் ஓதாத அந்தணரென்று சொல்லப்படுவோர் அனைவரும் பதர்போலப் பயனில்லாதவரே யாவர். நான்மறை : இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்பன : வேறு வகையாகவும் கூறுவர். பதர்போல ஒதுக்கத் தக்கவரென்க. ஏ : தேற்றம்; பின் வருவனவும் அது. 66. குடியலைத் திரந்துவெங் கோலொடு நின்ற முடியுடை யிறைவனாம் மூர்க்கனும் பதரே. (பத.) குடி அலைத்து - குடிகளை வருத்தி, இரந்து - பொருள் வாங்கி, வெங்கோலொடு நின்ற - கொடுங்கோலொடு பொருந்தி நின்ற, முடி உடை இறைவன் ஆம் - மகுடத்தையுடைய அரசனாகிய, மூர்க்கனும் - கொடியவனும், பதரே - பதரேயாவன். (பொழி.) கொடுங்கோலனாய்க் குடிகளை வருத்திப் பொருள் வாங்கும் தீய அரசனும் பதர்போல்பவனே யாவன். அரசர்களுக்குள் அவன் பதர் என்றுஞ் சொல்லலாம். 67. முதலுள பண்டங் கொண்டுவா ணிபஞ்செய்து அதன்பய னுண்ணா வணிகரும் பதரே. (பத.) முதல் உள - முதலாகவுள்ள, பண்டம் கொண்டு - பொருளை வைத்துக்கொண்டு, வாணிபம் செய்து - வியாபாரஞ் செய்து, அதன் பயன் - அதனால் வரும் இலாபத்தை, உண்ணா - அனுபவியாத, வணிகரும் - வைசியரும், பதரே - பதரேயாவர். (பொழி.) முதற்பொருளை வைத்துக்கொண்டு வாணிகஞ் செய்து அதனால் வரும் இலாபத்தை அனுபவியாத வணிகரும் பதரே யாவர். முதலை யிழத்தல் கூடாதென்க. 68. வித்தும் ஏரும் உளவா யிருப்ப எய்த்தங் கிருக்கும் ஏழையும் பதரே. (பத.) வித்தும் - விதையும், ஏரும் - (உழுதற்குரிய) ஏரும், உளவாய் இருப்ப - உள்ளனவாகி யிருக்கவும், அங்கு - அவ்விடத்தில், எய்த்து இருக்கும் - இளைத் திருக்கும், ஏழையும் - அறிவில்லாதவனும், பதரே - பதரேயாவன். (பொழி.) விதையும் ஏரும் இருக்கவும் உழுது பயிரிடாமற் சோம்பியிருக்கும் அறிவிலியாகிய வேளாளனும் பதரே யாவன். அங்கு : அசையுமாம். 69. தன்மனை யாளைத் தாய்மனைக் ககற்றிப் பின்பவட் பாராப் பேதையும் பதரே. (பத.) தன் மனையாளை - தன் மனைவியை, தாய் மனைக்கு - (அவளின்) தாய் வீட்டிற்கு, அகற்றி - போக்கி, பின்பு - பின்னே, அவள் பாரா - அவளை நோக்காதிருக்கிற, பேதையும் - அறிவில்லாதவனும், பதரே - பதராவான். (பொழி.) தன் மனைவியைப் பிறந்தகத்திற்குப் போக்கி விட்டுப் பின்பு அவளை யேற்றுக் கொள்ளாமலே யிருக்கிற அறிவில்லா தவனும் ஆடவருள் பதராவன். 70. தன்மனை யாளைத் தனிமனை யிருத்திப் பிறர்மனைக் கேகும் பேதையும் பதரே. (பத.) தன் மனையாளை - தன் மனைவியை, தனி - தனியே மனை இருத்தி - வீட்டில் இருக்கச் செய்து, பிறர் மனைக்கு - பிறர் வீட்டுக்கு, ஏகும் - செல்லுகின்ற, பேதையும் - அறிவில்லாதவனும், பதரே - பதரேயாவன். (பொழி.) தன் மனைவியை வீட்டில் தனியே, இருக்கச் செய்து, பிறர் மனைவியை விரும்பி அயல் வீட்டுக்குச் செல்லும் அறிவில்லாதவனும் பதரேயாவன். 71. தன்னா யுதமுந் தன்கையிற் பொருளும் பிறன்கையிற் கொடுக்கும் பேதையும் பதரே. (பத.) தன் ஆயுதமும் - தனது தொழிற்குரிய கருவியையும், தன் கையில் பொருளும் - தனது கையிலுள்ள பொருளையும், பிறன் கையில் கொடுக்கும் - அயலான் கையில் கொடுத்திருக்கும், பேதையும் அறிவிலானும், பதரே - பதரேயாவன். (பொழி.) தன் தொழிற் கருவியையும் தன் கைப் பொருளையும் பிறர் கையில் கொடுத்துவிட்டுச் சோம்பியிருக்கின்ற அறிவில்லாதவனும் பதரே யாவன். தன் ஆயுதத்தையும் பொருளையுங் கொண்டு தொழில் செய்ய வேண்டுமென்க. பிறர் என்பதற்கு ஒரு சம்பந்தமுமில்லாதவர் என்றும் கூறலாம். 72. வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும் சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின். (பத.) வாய்ப் பறை ஆகவும் - வாயே பறை யாகவும், நாகடிப்பு ஆகவும் - நாவே குறுந்தடி யாகவும் (கொண்டு), சாற்றுவது ஒன்றை - (அறிவுடையோர்) சொல்வது ஒன்றை, போற்றி - (மனம் புறம் போகாமல்) பாதுகாத்து, கேண்மின் - கேளுங்கள். (பொழி.) வாயே பறையாகவும் நாவே குறுந்தடியாகவுங் கொண்டு அறிவுடையோர், சாற்றுகின்ற உறுதிமொழியைக் குறிக்கொண்டு கேளுங்கள். கடிப்பு - பறையடிக்கும் கோல். சான்றோர்கள் பறைசாற்றுவது போல உலகத்தார்க்கு உறுதிப் பொருளை அறிவுறுத்துவரென்க. 73. பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால் மெய்போ லும்மே மெய்போ லும்மே. (பத.) பொய் உடை ஒருவன் - பொய்ம்மை யுடைய ஒருவன், சொல்வன்மையினால் - வாக்கு வன்மையால், மெய்போலும் மெய் போலும் - (அவன் கூறும் பொய்) மெய்யே போலும் மெய்யே போலும். (பொழி.) பொய்ம்மையுடைய ஒருவன் கூறும் பொய்ம் மொழி அவன் பேச்சு வன்மையால் உண்மைபோலவே தோன்றக்கூடும். சொற்சாதுரியத்தில் மயங்கிப் பிறர் கூறும் பொய்யை மெய்யென்று கொள்ளலாகாதென்க. இருமுறை கூறியது வற்புறுத்துதற்கு.ம் : விரித்தல், மேல் வருவதற்கும் இங்ஙனம் உரைத்துக்கொள்க. 74. மெய்யுடை யொருவன் சொலமாட் டாமையாற் பொய்போ லும்மே பொய்போ லும்மே. (பத.) மெய் உடை ஒருவன் - மெய்ம்மையுடைய ஒருவன், சொலமாட்டாமையால் - (திறம்படச்) சொல்லமாட்டாமையால், பொய் போலும் பொய் போலும் - (அவன் கூறும் மெய்) பொய்யே போலும், பொய்யே போலும். (பொழி.) உண்மையுடைய ஒருவன் கூறும் மெய்ம்மொழி அவனது சொல்வன்மை யின்மை யால் பொய்போலத் தோற்றக் கூடும். 75. இருவர்தஞ் சொல்லையும் எழுதரங் கேட்டே இருவரும் பொருந்த வுரையா ராயின் மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தாம் மனமுற மறுகிநின் றழுத கண்ணீர் முறையுறத் தேவர் மூவர் காக்கினும் வழிவழி யீர்வதோர் வாளா கும்மே. (பத.) இருவர் தம் சொல்லையும் - (வாதி எதிரி யென்னும்) இருவருடைய சொற்களையும்; எழுதரம் கேட்டு - ஏழு முறை கேட்டு (உண்மை யுணர்ந்து), மனுமுறை நெறியின் - மனு நீதி வழியால், இருவரும் பொருந்த - இருவரும் ஒத்துக்கொள்ள, உரையார் ஆயின் - (முடிவு) சொல்லாரானால், வழக்கு இழந்தவர் தாம் - (நீதியின்றி) வழக்கினை இழந்தவர், மனம் - மனமானது, உற மறுகி நின்று - மிகவும் கலங்கி நின்று, அழுத கண் நீர் - அழுத கண்ணீரானது, முறை உற - முறையாக, தேவர் மூவர் - மூன்று தேவர்களும், காக்கினும் - காத்தாலும், வழி வழி - (அவர்) சந்ததி முழுதையும், ஈர்வது - அறுப்பதாகிய, ஓர்வாள் ஆகும் - ஒரு வாட்படையாகும். (பொழி.) இரு திறத்தினர் சொல்லையும் ஏழு முறைகேட்டு ஆராய்ந்து உண்மையுணர்ந்து நீதி வழுவாது இருவரும் மனம் பொருந்தும்படி முடிவு சொல்லாராயின், அநீதியாக வழக்கிலே தோல்வி யுற்றவர் மனங்கலங்கி நின்று அழுத கண்ணீரானது அயன்அரி அரன் என்னும் மும்மூர்த்தியும் முறையாகப் பாதுகாத்தாலும் முடிவு கூறியவரின் சந்ததி முழுதையும் அறுக்கின்ற வாளாகும். இது நீதி செலுத்தற்குரிய அவையினரும் நீதிபதியும் அரசனும் என்பவர்களை நோக்கிக் கூறியது. சொல்வன்மையாலும் சொல மாட்டாமை யாலும் பொய் மெய்யாகவும், மெய் பொய்யாகவும் தோன்றக்கூடுமாகலின், ‘எழுதரங் கேட்டு’ என்றார். ஏனைத் தேவரும் மூவரும் என்று கூறினும் பொருந்தும், முற்றும்மை தொக்கது. தம், தாம் என்பன சாரியை; ம்: விரித்தல். “அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை” என்னுந் திருக்குறளில் இதன் கருத்து அமைந் துள்ளது. 76. பழியா வருவது மொழியா தொழிவது. (பத.) பழியா வருவது - நிந்தையாக வருங் காரியம், மொழியாது ஒழிவது - பேசாது விடத்தகுவது. (பொழி.) பின் பழியுண்டாகுஞ் செய்தியைப் பேசாது விடவேண்டும். பழியாக என்பது ஈறுகெட்டது. 77. சுழியா வருபுன லிழியா தொழிவது. (பத.) சுழியா - சுழித்து, வரு புனல் - வருகின்ற வெள்ளத்திலே, இழியாது ஒழிவது - இறங்காது தவிர்க. (பொழி.) சுழித்து வருகின்ற நீர்ப் பெருக்கிலே இறங்காது ஒழிக. உயிர்க்கிறுதி விளைக்கும் காரியத்திற் புகலாகா தென்க. சுழியா : செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். ஒழிவது : வியங்கோள். 78. துணையோ டல்லது நெடுவழி போகேல். (பத.) துணையோடு அல்லது - துணையினோ டல்லாமல், நெடுவழி- தூர வழியில், போகேல் - செல்லாதே. (பொழி.) தூரமான இடத்திற்குத் துணை யின்றிப் போகாதே. 79. புணைமீ தல்லது நெடும்புன லேகேல். (பத.) புணைமீது அல்லது - தெப்பத்தின்மேல் அல்லாமல், நெடும் புனல் - பெரிய வெள்ளத்தில், ஏகேல் - செல்லாதே. (பொழி.) தெப்பமின்றிப் பருவெள்ளத்திற் செல்லாதே. பிறவியைக் கடக்கலுறுவார்க்குத் தக்க துணையும் பற்றுக்கோடும் வேண்டுமென்க. 80. எழிலார் முலைவரி விழியார் தந்திரம் இயலா தனகொடு முயல்வா காதே. (பத.) எழில் ஆர் முலை - அழகு பொருந்திய தனங்களையும், வரி விழியார் - நீண்ட கண்களையும் உடைய மாதர்களின், தந்திரம் - உபாயங்களுள், இயலாதன - பொருந்தாதனவற்றை, கொடு - கைக்கொண்டு, முயல்வு ஆகாது - முயலுதல் கூடாது. (பொழி.) மாதர்மேல் வைத்த காதலால் அவர் கூறும் உபாயங் களிற் பொருந்தாதனவற்றை மேற்கொண்டு முயலுதல் கூடாது. வரி - இரேகையுமாம். தந்திறம் என்ற பாட மிருப்பின் அவர் விடயத்தில் என்று பொருள் கொள்க. 81. வழியே யேகுக வழியே மீளுக. (பத.) வழியே ஏகுக - (செவ்விய) வழியிலே செல்க, வழியே மீளுக - (செவ்விய) வழியிலே திரும்புக. (பொழி.) நேர்மையான வழியிலே செல்க, நேர்மையான வழியிலே திரும்புக. யோகப் பயிற்சி செய்வோர் சுழிமுனையாகிய வழியிலே சென்று திரும்பிப் பயிலுக என்றும், பிறவாறும் இதற்குக் கருத்துரைத்தலும் ஆம். 82. இவைகா ணுலகிற் கியலா மாறே. (பத.) இவை - கூறப்பட்ட இவை, உலகிற்கு உலகிலுள்ளோர்க்கு, இயல் ஆம் - நடத்தற்குரிய, ஆறு நன்னெறிகளாம். (பொழி.) இந்நூலிற் கூறிய இவையெல்லாம் உலகத்தார் நடத்தற்குரிய வழிகளாம். இந்நூலிற் சொல்லிவந்த நீதிகளெல்லாம் ‘இவை’ எனத் தொகுத்துச் சுட்டப்பட்டன. காண் : முன்னிலையசை. வாழ்த்து வாழிய நலனே வாழிய நலனே. (பத.) நலன் - எல்லா நன்மைகளும், வாழிய - வாழ்க, நலன் - எல்லா நன்மைகளும், வாழிய - வாழ்க. (பொழி.) எல்லா நலங்களும் வாழ வேண்டும்; எல்லா நலங்களும் வாழ வேண்டும். நலங்களாவன : மழை, பயிர், பசு, அறம் முதலியன. நன்மை வாழவேண்டு மென்றமையால் தீமை ஒழிய வேண்டுமென்பதுமாயிற்று. மகிழ்ச்சி யால் இருமுறை கூறினார். ஏ : அசை. நறுந்தொகை மூலமும் உரையும் முற்றிற்று.  (பா-ம்) 1. மன்னர்க் கழகு. 2. வணிகர்க்கழகு. 3. உழவர்க் கழகே ருழுதூண். 4.வருபொருள். (பா-ம்) 1. அறிவோர்க்கு. 2. வறியோர்க்கு. 3. கயத்துள். (பா -ம்) 1 . தாந்தர. 2. பேசின். 3. கற்றோரை வருக வென்பார். (பா-ம்) 1. பின்பவட் பேணா, 2. தனியே யிருத்தி (பா-ம்). 1. மனுநெறி முறையின். சில பதிப்பில் ‘சிறியோர்’ என்பது முன்னும் ‘பெரியோர்’ என்பது பின்னும் காணப்படுகின்றன. அடினும் என்னும் இவ்வாக்கியம் ‘ஊட்டினும் என மேல்வரும் வாக்கியமும் சில பதிப்புக்களிலேயே உள்ளன.