நீதி நூல்கள்-2 பதினெண்க்கணக்கு உரைவிளக்கம்: நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் நூற் குறிப்பு நூற்பெயர் : நீதி நூல்கள்-2 ஆசிரியர் : ந. மு. வேங்கடசாமி நாட்டார் பதிப்பாளர் : இ. தமிழமுது முதல் பதிப்பு : 2006 தாள் : 11.6 வெள்ளை மேப்லித்தோ அளவு : 1/16 கிரௌன் எழுத்து : 12 புள்ளி பக்கம் : 240 படிகள் : 1000 விலை : உரு. 150/- நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : தமிழ்க்குமரன் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் 20 அஜீஸ் முல்க் 5வது தெரு ஆயிரம் விளக்கு, சென்னை -6 கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : மாணவர் பதிப்பகம், 20/33 - P. 3 பாண்டியன் அடுக்ககம் சீனிவாசன் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017, பதிப்புரை நம் தமிழ் மன்பதை பல்வேறு பெருமை களைத் தன்னகத்தே கொண்டிருந்தது என்று சொல்வது வெறும் புகழ்ச்சி இல்லை; அது முற்றிலும் உண்மை! அதற்குப் பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். நம்மைச் சற்று முன் கடந்துபோன இருபதாம் நூற்றாண்டில்கூட, ‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?’ என்ற பிற்போக்குத்தனமான கருத்து வேரூன்றி யிருந்தது. ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இலக்கணப் புலமையுடன் இலக்கியம் படைத்த பெண்பாற் புலவர்கள் பலர் தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஒளவையார். அவர் புலவராக மட்டுமல்லாது, அரசர்களுக் கெல்லாம் அறிவுரை வழங்கி ஆட்சியைச் செம்மைப் படுத்தும் ஆற்றல் பெற்றவராகவும் விளங்கினார். அரசர்களும் ‘இவர் பெண்தானே!’ எனத் தாழ்வாகக் கருதாமல் அவருக்கு உயரிய மதிப்பளித்து வந்துள்ளமை வரலாற்றுச் செய்திகள் மூலம் தெரிய வருகிறது. இன்றைய இந்தியாவின் நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு முப்பத்து மூன்று விழுக்காடு ஒதுக்கும் உப்புச் சப்பில்லாத ஒரு தீர்மானத்திற்கே ஒப்புதல் தர அடம் பிடிக்கும் அரசியல் நிலையோடு பழந் தமிழகத்தை ஒப்பிடும்போது .....அடடா! நமது வழிவழிப் பண்பாட்டுக்கு எதிரான பகைவர் - அயலார் இந்த மண்ணில் நுழைந்த பிறகே இங்கே அனைத்து ஏற்றத் தாழ்வுகளுடன் பெண் ணடிமைத்தனமும் புகுத்தப் பட்டது என்பதை இதன் மூலம் நன்கு உணரலாம். அதே ஒளவையார், ‘மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்’ என்று பாடினார். அதாவது, ‘மன்னன் மதிப்புடையவன் தான்; ஆனால் அவனை விடவும் கற்றறிந்த புலவன் மிகவும் சிறப்புக் குரியவன்’ எனக் கூறியுள்ளார். அவரது காலத்திற்குப் பின், தமிழ்நாட்டில் ஒருவன், மன்னனாகவும் அரசு புரிந்து, கற்றறிந்த புலவராகவும் பாக்கள் இயற்றி ‘இரட்டைச் சிறப்பு’ப் பெற்றிருந்ததை அறியும்போது நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. இத்தகைய வரலாற்றுப் பெருமைக்குரியவர் பழங்காலத்தில் முத்து வணிகத்தில் உலகப் புகழ் பெற்ற கொற்கை நகரைத் தலைமை யிடமாகக் கெhண்டு ஆண்ட அதிவீரராம பாண்டியன் என்பவர் ஆவhர். மேலும் - முல்லைக்குத் தேர் கொடுத்து வள்ளல் தன்மையில் எல்லையில்லாப் புகழ் பெற்ற பாரியின் உற்ற தோழர் கபிலர் என்பார். இவர் பாரிக்குத் துன்பக் காலத்தில் தோள் கொடுத்ததோடு மட்டுமல்லாது, பாரியின் மறைவுக்குப் பின் அவரின் மகளிர் இருவரின் எதிர்கால வாழ்வுக்காக இமைசோராது உழைத்தவர். சிறந்த புலவர். தொடர்ந்து - கண்ணன் மகன் கூத்தன் என்பவர் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்ததனால் மதுரைக் கண்ணங் கூத்தனார் என்ற பெயருடன் புலமை பெற்று விளங்கினார். மற்றும் - பொய்கை என்னும் இடத்தில் பிறந்ததால் பொய்கையார் எனும் இடவாகுபெயர் பெற்ற புலவரும் பழந்தமிழகத்தில் வாழ்ந்திருந்தார். இவர்களெல்லாம் சங்க காலங்களைச் சேர்ந்தவர்கள். அடுத்து - ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் என்பவர். இவரும் சங்கப்புலவர் களுடன் ஒப்பிடும் அளவு தகுதி பெற்று விளங்கியவர். மேற்சொல்லப் பெற்ற அனைவரும் பல்வேறு நூல்களையும் தனிப் பாடல்களையும் இயற்றி, தமிழ் இலக்கியத்திற்கு மிகவும் சிறப்புச் சேர்த்துள்ளனர். அவற்றுள், ஒளைவையாரின் ‘ஆத்திசூடி’, ‘மூதுரை’, ‘நல்வழி’, ‘கொன்றைவேந்தன்’, அதிவீரராம பாண்டியரின் ‘வெற்றிவேற்கை’ எனும் ‘நறுந்தொகை’, கபிலரின் ‘இன்னா நாற்பது’ - சிவப்பிரகாசரின் ‘நன்னெறி’ மதுரைக் கண்ணங் கூத்தனாரின் ‘கார் நாற்பது’, பொய்கையாரின் ‘களவழி நாற்பது’ ஆகிய நூல்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளராக இருந்த பண்டித நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் 1950-களிலேயே உரை எழுதி அவை தமிழ் மக்களிடையே பரவ வழி செய்துள்ளார். அவற்றை ‘இளையோர் வரிசை’ என்னும் பிரிவில் எமது ‘மாணவர் பதிப்பகம்’ தனித்தனி நூல்களாக வெளிக்கொணர்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஆத்திசூடி, மூதுரை, நல்வழி, கொன்றைவேந்தன், நறுந்தொகை ஆகிய மூல நூல்களைத் தந்துதவி எமக்குப் பாராட்டும் வழங்கி ஊக்குவித்த தஞ்சாவூர், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி நிறுவனர் - பேராசிரியர் திருமிகு பி.விருத்தாசவனார் அவர்களுக்கும், கார்நாற்பது, களவழி நாற்பது ஆகிய மூல நூல்களைத் தந்துதவிய திருச்சி,‘திருவள்ளுவர் தவச் சாலை’ நிறுவனர் ‘உலகப் பெருந்தமிழர்’, ‘செந்தமிழ் அந்தணர்’ புலவர் இரா. இளங் குமரனார் அவர் களுக்கும் எம் நெஞ்சம் நிறைந்த நன்றி உரித்தாகுக. தமிழ்கூறு நல்லுலகத்தின் இளைய தலைமுறை எமது இம்முயற்சியை வரவேற்றுப் பயன்பெறும் என்று நம்புகிறோம். பதிப்பாளர் உள்ளடக்கம் பதினெண்க்கணக்கு நூல்கள் பதிப்புரை 3 1. இன்னா நாற்பது 8 2. கார் நாற்பது 59 3. களவழி நாற்பது 105 4. திரிகடுகம் 147 இன்னா நாற்பது முகவுரை இன்னா நாற்பது என்பது கடைச்சங்கப் புலவர் களியற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இறையனார் களவியலுரையிற் கடைச் சங்கப் புலவர் பாடியவற்றைக் கூறிவருமிடத்தே கீழ்க் கணக்குகள் குறிக்கப்பட்டிலவேனும், பின்னுளோர் பலரும் அவையும் சங்கத்தார் பாடிய வென்றே துணிந்து எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என எண்ணி வருகின்றனர். கீழ்க் கணக்கியற்றிய ஆசிரியர்களுள் கபிலர், கூடலூர் கிழார் முதலிய சிலர் சங்கத்துச் சான்றோ ரென்பது ஒருதலை, கீழ்க்கணக்குப் பதினெட்டென்பது, தொல்காப்பியச் செய்யுளியலில், “ வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியாற் றாய பனுவலோ டம்மை தானே யடிநிமிர் பின்றே” என்னும் சூத்திர வுரையிற் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் உரைக்குமாற்றானறியலாவது. அவை அம்மையென்னும் வனப்புடைய வாதலும் அவ்வுரையாற்றெளியப்படும்; பழைய பனுவல்களை அளவு முதலியனபற்றி மேற்கணக் கெனவும் கீழ்க் கணக்கெனவும் பின்னுள்ளோர் வகைப்படுத்தின ராவர். “அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி யறம்பொரு ளின்ப மடுக்கி யவ்வத் திறம்பட உரைப்பது கீழ்க்கணக் காகும்” என்பது பன்னிரு பாட்டியல். கீழ்க்கணக்குகள் பதினெட்டாவன: நாலடியார், நான்மணிக் கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை யைம்பது, திணைமொழி யைம்பது, ஐந்திணை யெழுபது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம், இன்னிலை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி என்பன, இதனை, “நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைசொற் காஞ்சியோ டேலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு” என்னும் வெண்பாவானறிக. இதில் ‘நால்’ என்பதனை ‘ஐந்திணை என்பதன் முன்னுங் கூட்டி நாலைந் திணையெனக் கொள்ள வேண்டும். சிலர் இன்னிலையை விடுத்துக் கைந்நிலையை ஒன்றாக்குவர். மற்றுஞ் சிலர் ஐந்திணையை ஐந்து நூலெனக்கொண்டு இன்னிலை, கைந்நிலை இரண்டனையும் ஒழித்திடுவர். அவர் ‘திணைமாலை’ என்பதொரு நூல் பழைய வுரைகளாற் கருதப்படுவதுண்டாகலின் அதுவே ஐந்திணையுட் பிறிதொன்றாகல் வேண்டுமென்பர். முற்குறித்த வெண்பாவில் ‘ஐந்தொகை’ ‘இன்னிலைய, ‘மெய்ந்லைய’ கைந்நிலை யோடாம்’ ‘நன்னிலையவாம்’ என்றிவ்வாறெல்லாம் பாடவேற்றுமையும் காட்டுவர். கீழ்க்கணக்குகள் பதினெட்டேயாதல் வேண்டு மென்னுங் கொள்கையால் இவ்விடர்ப்பாடுகள் விளை கின்றன. இனி, இன்னா நாற்பது என்னும் இந்நூலை யியற்றினார் நல்லிசைப் புலவராகிய கபிலரென்பார். இவரது காலம் கி. பி. 50 முதல் 125வரை ஆதல் வேண்டும். இவர் தமிழ்நாட்டு அந்தணருள் ஒருவர். இவர் அந்தணரென்பது ‘புலனழுக்கற்ற அந்தணாளன்’ (புறம். 126) என மாறோக்கத்து நப்பசலையார் இவரைப் புகழ்ந்து கூறியிருத்தலானும், இவரே பாரிமகளிரை விச்சிக்கோன், இருங்கோவேன் என்பவர்களிடம் கொண்டு சென்று, அவர்களை மணந்து கொள்ளுமாறு வேண்டிய பொழுது, ‘யானே பரிசிலன் மன்னு மந்தணன்’ (புறம் 200) என்றும், ‘அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே’ (புறம். 201) என்றும் தம்மைக் கூறிக்கொண்டிருத்தலானும் பெறப்படுவதாகும். இவரது சமயம் சைவமே. இவர் இந்நூற்கடவுள் வாழ்த்தில் சிவபெருமானையடுத்து வேறு கடவுளரை யுங் கூறியிருப்பது இவர்க்கு ஏனைக் கடவுளர்பால் வெறுப்பின்றென்பது மாத்திரையேயன்றி விருப்புண் டென்பதையும் புலப்படுத்தாநிற்கும். சமயங்களின் கொள்கைகளும், சமயநெறி நிற்போர் நோக்கங்களும் அவ்வக்கால இயல்புக்கும் ஏனைச் சார்புகளுக்கும் ஏற்பப் பிழையின்றியோ பிழையாகவோ வேறுபா டெய்தி வருதல் உண்மை காணும் விருப்புடன் நுணுகி ஆராய்ச்சி செய்வார்க்குப் புலனாகும். இனி, இவரியற்றிய பாட்டுகள் சங்கத்தார் தொகுத்த எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என்னும் மூன்று வகுப்பிலும் உள்ளன. பல நூறு புலவர்கள் பாடிய செய்யுட்களில் இவர் பாடியன ஏறக்குறைய பதினொன்றிலொருபங்காக இருத்தலும், அவை ஒவ்வொரு தொகையிலும் சேர்ந் திருத்தலும் இவரது பாட்டியற்றும் பெருமையையும் நன்மதிப்பையும் புலப்படுத்துகின்றன. இவரியற்றிய குறிஞ்சிப் பாட்டும், குறிஞ்சிக்கலியும் இயற்கை வளங்களை யெழில் பெற எடுத்துரைப்பதில் இணையற்ற பெருமை வாய்ந்தன. தமிழ்ச்சுவை யறியாதிருந்த ஆரியவரசன் பிரகத்தனுக்கு இவர் குறிஞ்சிப்பாட்டி யற்றித் தமிழ் அறிவுறுத்தினார் என்பதிலிருந்து, தமிழின்பால் இவருக்கிருந்த பெரும் பற்றும், ஏனோரும் தமிழினை யறிந்தின்புற வேண்டுமென்னும் இவரது பெரு விருப்பமும், தமிழின் சுவையறியா தோரும் அறிந்து புலவராகும்படி தெருட்டவல்ல இவரது பேராற்றலும் புலனாகின்றன. நச்சினார்க்கினியர், சேனாவரையர், பரிமேலழகர் முதலிய உரையாசிரியன்மாரெல்லாரும் ஆறாம் வேற்றுமைச் செய்யுட் கிழமைக்குக் ‘கபிலரது பாட்டு, என்று உதாரணங் காட்டி யுள்ளார் களென்றால் இங்ஙனம் சான்றோர் பலர்க்கும் எடுத்துக் காட்டாக முன்னிற்றற் குரிய இவர் பாட்டுக்களின் அருமை பெருமை களை எங்ஙனம் அளவிட்டுரைக்கலாகும்.? இவ்வாறு புலமையிற் சிறந்து விளங்கிய இவ்வாசிரியர் அன்பு, அருள், வாய்மை முதலிய உயர்குணனெல்லாம் ஒருங்கமையப் பெற்றவராயும் இருந்தார். இவரது பாட்டியற்றும் வன்மையையும், வாய்மையையும், மனத் தூய்மையையும், புகழ் மேம்பாட்டையும் சங்கத்துச் சான்றோர்களே ஒருங்கொப்பப் புகழ்ந்து கூறியுள்ளார்கள். “உலகுடன் றிரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன்” (அகம். 78) என நக்கீரனாரும், “அரசவை பணிய அறம்புரிந்து வயங்கிய மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின் உவலை கூராக் கவலையி னெஞ்சின் நனவிற் பாடிய நல்லிசைக்கபிலன்” (பதிற்றுப்பத்து. 85) எனப் பெருங்குன்றூர் கிழாரும், “தாழாது செறுத்த செய்யுட் செய்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்” (புறம். 53) எனப் பொருத்திலிளங்கீரனாரும், “நிலமிசைப் பிறந்த மக்கட் கெல்லாம் புலனழுக் கற்ற வந்த னாளன் இரந்துசெல் மாக்கட் கினியிட னின்றிப் பரந்திசை நிற்கப் பாடினன்” (புறம். 127) எனவும், “பொய்யா நாவிற் கபிலன்” (புறம். 174) எனவும் மாறோக்கத்து நப்பசலையாரும் பாடியிருத்தல் காண்க. இங்ஙனம் புலவரெல்லாரும் போற்றும் புலமையும் சான்றாண்மையும் உடையராய இவர்பால், அக்காலத்து வேந்தர்களும் வள்ளல்களும் எவ்வளவு மதிப்பு வைத்திருத்தல் வேண்டும்! வரையா வள்ளன்மையால் நிலமுழுதும் புகழ் பரப்பிய பறம்பிற்கோமானாகிய வேள்பாரி இவரை ஆருயிர்த் துணையாகக் கொண்டொழுகினமையே, இவர்பால் அவ்வள்ளல் வைத்த பெருமதிப்புக்குச் சான்றாகும். சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் வேந்தர் பெருமான், இவர் பாடிய ஒரு பத்துப் பாடல்களுக்குப் பரிசிலாக நூறாயிரம் காணம் கொடுத்ததன்றி, ஒரு மலைமீதேறிக் கண்ட நாடெல்லாம் கொடுத்தான் என்றால், அவ்வரசன் இவர்பால் வைத்த மதிப்பினை அளவிடலாகு மோ? மாந்தரஞ்சேர லிரும்பொறையென்ற சேரர்பெருமான் இப்புலவர் பெருந்தகை தமது காலத்தில் இல்லது போனமைக்கு மனங்கவன்று ‘தாழாது, செறுத்த செய்யுட் செய்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன், இன்றுள னாயின் நன்றுமன்’ என்று இரங்கிக் கூறினன். இது கேட்ட பொருந்தி லிளங்கீரனார் என்ற புலவர் அவ்வரசனைப் பாடுங்கால் இதனைக் கொண்டு மொழிந்தனர். இன்னணம் புலவரும், மன்னரும் போற்றும் புகழமைந்த இவர் தொல்லாணை நல்லாசிரியரும் ஆவர். இது, தமிழினை மதியாது கூறிய குயக் கொண்டான் பெரும் பிறிதுறுமாறு நக்கீரர் தாம் பாடிய அங்கதப் பாட்டினுள், “முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி பரண கபிலரும் வாழி” என்று, அருந்தவக் கொள்கை அகத்தியனாரொடு ஒப்பவைத்து வாழ்த்தி, இவரது ஆணை பிழையாமை காட்டினமையாற் றெளியப் படும். இவ்வாசிரியரது வரலாற்றின் விரிவையும், குறிஞ்சிப் பாட்டு முதலியவற்றின் ஆராய்ச்சியையும் யானெழுதிய கபிலர் என்னும் உரை நூலால் நன்கு அறியலாகும். இனி, இந்நூல் கடவுள்வாழ்த்து உட்பட நாற்பத்தொரு வெண்பாக்களையுடையது. இதிலுள்ள ஒவ்வொரு பாட்டும் இன்னது இன்னது ‘இன்னா’ எனக் கூறுதலின், இஃது இன்னா நாற்பது எனப் பெயரெய்திற்று. இதற்கெதிராக இன்னது இன்னது இனிது எனக் கூறும் பாக்களையுடைய நூல் இனியவை நாற்பது என வழங்குகிறது. இவற்றுள் ஒன்று மற்றொன்றைப் பார்த்துப் பாடியதாகும் எனக் கருதற்கு இடனுண்டு. இவ்வாசிரியர் துன்பின் மூலங்கள் இன்னின்ன வெனக் கண்டு, அவற்றையே தொகுத்தெடுத்துக் கூறியிருப்பது பாராட்டற் பாலதொன்றாம். மக்கள் யாவரும், தாம் விரும்புவது இன்பமேயாயினும் இன்ப துன்பங்களின் காரணங்க ளை யறிந்து ஏற்ற பெற்றி நடவாமையால், துன்பமே பெரிதும் எய்துகின்றனர். இஃது எக்காலத்திற்கும் பொதுவாக ஒக்கும். இன்பத்தின் காரணத்தை யறிந்து மேற்கொள்ளுதலினும், முதற்கட் செய்யற்பாலது, துன்பத்தின் காரணத்தை யறிந்து அதனின் நீங்குத லாகும். ஆதலாற்றான் அந்தண்மை பூண்ட கபிலர் துன்பின் மூலங்களைத் தொகுத்துரைப் பாராயின ரென்க. இந்நூல், திருக்குறள் முதலியன போன்று, கூறவேண்டும் பொருள்களையெல்லாம் அடைவுபட வகுத்துக் கூறவந்ததன்று; ஆகலின் இதனை, அவற்றோடு ஒப்பித்துப் பார்த்தல் பொருந்தாது. ஒரு பேரறிஞர் ஒருவாறாக உலகியலை விரைந்து நோக்குங்கால், அவருள்ளத்தில் இன்னாவெனத் தோன்றியவை, இதில், அவ்வப்படி வைக்கப் பட்டுள்ளன வென்றே கொள்ளல் வேண்டும்.இதில் நீதி களல்லாமல், சிற்சில மக்களியற்கை முதலியவும் கூறப்பட்டுள. ஒரே கருத்துப் பலவிடத்தில் வெவ்வேறு தொடர்களாற் கூறப்பட்டு மிருக்கிறது. இதிலுள்ள ‘இன்னா’ என்னுஞ் சொற்கு யாண்டும் துன்பம் என்றே பொருள் கூறிவந்திருப்பினும், சிலவிடத்து ‘இனிமை யன்று’ எனவும், சிலவிடத்து ‘தகுதியன்று’ எனவும் இங்ஙனமாக ஏற்றபெற்றி கருத்துக் கொள்ளவேண்டும். கள்ளுண்டல், கவறாடல், ஊனுண்டல் என்பன இதிற் கடியப்பட்டுள்ளன. இந்நூலில் வந்துள்ள, ‘ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா’, ‘குழவிகளுற்ற பிணியின்னா’, ‘கல்லா ருரைக்குங்’ கருமப் பொருளின்னா என்னுந் தொடர்களோடு, இனியவை நாற்பதில் வந்துள்ள ‘ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்னினிதே,’ குழவி பிணியின்றி வாழ்தலினிதே,’ ‘கற்றறிந்தார் கூறுங் கருமப் பொருளினிதே’ என்னுந் தொடர்கள் ஒற்றுமை யுறுதல் காண்க. இந்நூற்குப் பழைய பொழிப்புரை யொன்றுளது. சின்னாளின் முன்புஞ் சிலர் உரை யெழுதி வெளிப்படுத்தியிருக்கின்றனர். நம் தமிழன்னைக்கு அரிய தொண்டுகள் பல ஆற்றிப் போற்றிவரும் திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் விரும்பியவாறு இப்புதிய வுரை பல மேற்கோளுடன் என்னால் எழுதப் பெறுவதாயிற்று. பல சுவடிகள் பார்த்துப் பாட வேற்றுமையும் காட்டப்பெற்றுளது. இதிற் காணப்படும் குற்றங் குறைகளைப் பொறுத்தருளி எனக்கு ஊக்க மளிக்குமாறு அறிஞர்களை வேண்டிக்கொள்கிறேன். “ஞால நின்புக ழேமிக வேண்டும்தென் னால வாயி லுறையுமெம் மாதியே” இங்ஙனம், ந. மு. வேங்கடசாமி நாட்டார். கபிலர் இயற்றிய இன்னா நாற்பது 1. முக்கட் பகவ னடிதொழா தார்க்கின்னா பொற்பனை வெள்ளையை 1 யுள்ளா தொழுகின்னா சக்கரத் தானை மறப்பின்னா 2 வாங்கின்னா சத்தியான் றாடொழா தார்க்கு. (பதவுரை) முக்கண் பகவன் - மூன்று கண்களையுடைய இறைவனாகிய சிவபிரானுடைய, அடி - திருவடிகளை, தொழாதார்க்கு - வணங்காதவர் களுக்கு, இன்னா - துன்ப முண்டாம்; பொன் பனை வெள்ளையை -அழகிய பனைக் கொடியையுடையவ னாகிய பலராமனை, உள்ளாது - நினையாமல், ஒழுகு - நடத்தல், இன்னா - துன்பமாம்; சக்கரத்தானை - திகிரிப்படையை யுடையவனாகிய மாயோனை, மறப்பு- மறத்தல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, சத்தியான் - வேற்படையை யுடையவனாகிய முருகக் கடவுளின், தாள் - திருவடிகளை, தொழாதார்க்கு – வணங்காதவர் களுக்கு, இன்னா - துன்ப முண்டாகும் என்றவாறு. முக்கண் - பகலவன் திங்கள் எரி யென்னும் முச்சுடராகிய மூன்று நாட்டங்கள். பகவன் - பகம் எனப்படும் ஆறு குணங்களையும் உடையவன். அறுகு™ மாவன; முற்றறிவு, வரம்பிலின்பம், இயற்கை யுணர்வு, தன்வயம், குறைவிலாற்றல், வரம்பிலாற்றல் என்பன. பகவன் என்பது பொதுப் பெயராயினும் ‘முக்கண்’ என்னுங் குறிப்பால் இறைவனை யுணர்த்திற்று; இறைவனுக்கு உண்மையும் ஏனையர்க்கு முகமனும் எனக் கொள்ளலுமாம். “ ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனுங் கடல்வளர் புரிவளை புரையு மேனி யடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனு மண்ணுறு திருமணி புரையு மேனி விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனு மணிமயி லுயரிய மாறா வென்றிப் பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென ஞாலங் காக்குங் கால முன்பிற் றோலா நல்லிசை நால்வ ருள்ளும்” என்னும் புறப்பாட்டால் பலராமனைக் கூறுதல் தமிழ் வழக்காதலுணர்க. பலராமன் வெண்ணிற முடைய னாகலின் வெள்ளை எனப்பட்டான். பொற்பனவூர்தி என்னும் பாடத்திற்கு அழகிய அன்ன வாகனத்தை யுடைய பிரமன் என்று பொருள் கூறிக்கொள்க. இணியவை நாற்பதில் அயனையும் வாழ்த்தினமை காண்க. ஒழுகும் முதனிலைத் தொழிற்பெயர். (1) 2. பந்தமில் லாத மனையின் வனப்பின்னா தந்தையில் லாத புதல்வ னழகின்னா அந்தண ரில்லிருந் தூணின்னா 1 வாங்கின்னா மந்திரம் வாயா விடின். (ப - ரை) பந்தம் இல்லாத - சுற்றமில்லாத, மனையின் - இல்வாழ்க்கையின், வனப்பு - அழகானது, இன்னா - துன்பமாம்; தந்தையில்லாத - பிதா இல்லாத, புதல்வன் - பிள்ளையினது, அழகு - அழகானது, இன்னா - துன்பமாம்; அந்தணர் - துறவோர், இல் இருந்து - வீட்டிலிருந்து, ஊண் - உண்ணுதல், இன்னா துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, மந்திரம் - மறைமொழியாய மந்திரங்கள், வாயா விடின் - பயனளிக்காவிடின், இன்னா துன்பமாம் எ - று. பந்தம் - கட்டு; சுற்றத்திற்காயிற்று. மனை - மனைவாழ்க்கை அதன் வனப்பாவது செல்வம். “சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன்” என்பவாகலின் சுற்ற மில்லாத மனையின் வனப்பு இன்னாவாயிற்று. இனி, அன்பில்லாத இல்லாளின் அழகு, இன்னாவாம் எனினும் அமையும். ‘தந்தையொடு கல்வி போம்’. ஆதலின் தந்தையில்லாத என்றதனால் கல்விப் பேற்றையிழந்த, என்னும் பொருள் கொள்ளப்படும். அந்தணர் - துறவோர். இதனை, ‘அந்தண ரென்போ ரறவோர் மற்றெவ்வுயிர்க்குஞ், செந்தண்மை பூண் டொழுகலான்’ என்னும் பொய்யா மொழியா னறிக. துறவறத்தினர் காட்டில் கனி கிழங்கு முதலிய உண்டலேனும், நாட்டில் ஒரு வழித் தங்காது திரிந்த இரந்துண்டலேனும், செயற்பாலரன்றி, ஒரு மனையின் கட்டங்கியுண்ணற்பாலரல்ல ரென்க. மந்திரம் இன்னதென்பதனை “நிறைமொழி மாந்த ராணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரமென்ப” என்னும் தொல்காப்பியத்தா னறிக. மந்திரம் அமைச்சரது சூழ்ச்சி எனப் பொருள் கோடலும் ஆம்; சூழாது செய்யும் வினை துன்பம் பயக்குமென்பது கருத்து. (2) 3. பார்ப்பாரிற் கோழியு நாயும் புகலின்னா ஆர்த்த மனைவி யடங்காமை நன்கின்னா பாத்தில் புடைவை யுடையின்னா 1 வாங்கின்னா காப்பாற்றா வேந்த னுலகு. (ப - ரை) பார்ப்பார் - பார்ப்பாருடைய, இல் - மனையில், கோழியும் நாயும் -, புகல் - நுழைதல், இன்னா - துன்பமாம்; ஆர்த்த - கலியாணஞ் செய்துகொண்ட, மனைவி - மனையாள். அடங்காமை - (கொழுநனுக்கு) அடங்கி நடவாமை, நன்கு இன்னா - மிகவுந் துன்பமாம்; பாத்துஇல் - பகுப்பு இல்லாத, புடைவை - புடைவையை, உடை - உடுத்தல், இன்னா - துன்பமாம், ஆங்கு அவ்வாறே, உலகு - நாடு, இன்னா - துன்பமாம் எ - று. பார்ப்பாரில்லிற் கோழியும் நாயும் புகலாகா தென்பதனை மனையுறை கோழியொடு ஞமலி துன்னாது’ என்னும் பெரும் பாணாற்றுப்படை யடியானு மறிக. ஆர்த்தல் - கட்டுதல்; அது தொடர் புண்டாமாறு கலியாணஞ் செய்து கொள்ளுதலை யுணர்த்திற்று. அடங்காமை - எறியென் றெதிர் நிற்றல் முதலியன. பாத்து பகுத்து என்பதன் மரூஉ: ஈண்டுத் தொழிற் பெயர். சிலப்பதிகாரத்தில் ‘பாத்தில் பழம்பொருள்’ என வருதலுங் காண்க.புடைவை - ஆடவருடையையும் குறிக்கும். ‘பாத்தில் புடைவை யுடையின்னா’ என்றதனாற் சொல்லியது ஒன்றுடுத் தலாகாதென்பதாம். ‘ஒன்ற மருடுக்கை’ என்னும் பெரும்பாணாற்றடி ஒன்றுடாமையே தகுதியென்பது காட்டி நிற்கின்றது. காப்பு ஆற்றா - காத்தலைச் செய்யாத : ஒரு சொல்லுமாம். (3) 4. கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த லின்னா நெடுநீர் புணையின்றி நீந்துத லின்னா கடுமொழி யாளர் தொடர்பின்னா வின்னா தடுமாறி வாழ்த லுயிர்க்கு. (ப - ரை) கொடுங்கோல் - கொடுங்கோல் செலுத்தும், மறம் - கொலைத் தொழிலையுடைய, மன்னர்கீழ் - அரசரது ஆட்சியின் கீழ்,வாழ்தல் - வாழ்வது, இன்னா - துன்பமாம்; நெடுநீர் - மிக்கநீரை, புணை இன்றி - தெப்பமில்லாமல், நீந்துதல் - கடந்து செல்லுதல், இன்னா - துன்பமாம்; கடுமொழியாளர் - வன்சொல் கூறுவோரது, தொடர்பு - நட்பு, இன்னா - துன்பமாம்; உயிர்க்கு - உயிர்களுக்கு, தடுமாறி - மனத்தடுமாற்ற மடைந்து, வாழ்தல் - வாழ்வது, இன்னா - துன்பமாம் எ - று. கொடுங்கோல் - வளைந்த கோல்; அரச நீதியாகிய முறை யினைச் செங்கோல் என்றும், முறையின்மையைக் கொடுங்கோல் என்றும் கூறுதல் வழக்கு: இவை ஒப்பினாகிய பெயர். மன்னர் என்பது அவரது ஆட்சிக்காயிற்று. கடுமொழியாளர் - மிகுதிக் கண் கழறிக் கூறுமுறையன்றி, எப்பொழுதும் வன் சொல்லே கூறுமியல்பினர் என்றபடி, தடுமாற்றம் - வறுமை முதலியவற்றாலுண்டாகும் மனவமைதி யின்மையாகிய துன்பம். உயிரென்றது ஈண்டு மக்களுயிரை. (4) 5. எருதி லுழவர்க்குப் போகீர மின்னா கருவிகண் மாறிப் புறங்கொடுத்த லின்னா திருவுடை யாரைச் செறலின்னா வின்னா பெருவலியார்க் கின்னா செயல். (ப - ரை) எருது இல் - (உழவுக்குரிய) எருது இல்லாத - உழவர்க்கு - உழுதொழிலாளர்க்கு, போகு ஈரம் - அருகிய ஈரம், இன்னா - துன்பமாம்; கருவி - படையின் தொகுதி, கண்மாறி, நிலையழிந்து, புறங்கொடுத்தல் - முதுகு காட்டுதல், இன்னா - துன்பந் தருவதாகும்; திரு உடையாரை - (மிக்க) செல்வமுடையவர் பால், செறல் - செற்றங் கொள்ளல், இன்னா - துன்பந் தருவதாகும்; பெருவலியார்க்கு - மிக்க திறலுடையார்க்கு, இன்னா செயல் - தீமை செய்தல், இன்னா துன்பந் தருவதாகும் எ - று. போகுதல் - அருகுதல், ஒழித்தல்; ‘மன்னர் மலைத்தல் போகிய, என்புழி இப் பொருட்டாதல் காண்க. கருவி - தொகுதி; ஈண்டுப் படையது தொகுதியென்க. கண்மாறி : ஒருசொல்; ‘ஆங்கவனீங் கெனை யகன்று கண்மாறி’ என்புழிப்போல. இனி, கண்மாறியென்பதற்கு அரசனிடத் தன்பின்றி எனப் பொருள் கொள்ளலுமாம். கருவிகள் மாறி எனப் பிரித்தல் பொருந்து மேற்கொள்க. பெருவலியார் - பொருள் படை முதலியவற்றாற் பெருவலி யுடையராய அரசரும், தவத்தால் ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலுமாம். பெருவலி பெற்றுடையராய முனிவரும் ஆம்; பெருவலியார்க்கின்னா செயல் துன்பந் தரும் என்பதனைக், ‘கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க், காற்றாதாரின்னா செயல்’ என்னுந் திருவள்ளுவப்பயனாலுமறிக. (5) 6. சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா உறைசேர் 1 பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா முறையின்றி யாளு மரசின்னா வின்னா மறையின்றிச் செய்யும் வினை. (ப - ரை) சிறை இல் -வேலியில்லாத, கரும்பினை - கரும்புப் பயிரை, காத்து ஓம்பல் -பாதுகாத்தல், இன்னா - துன்பமாம்; உறைசேர் - மழைத்துளி ஒழுகுதலையுடைய, பழங்கூரை - பழைய கூரையை யுடைய மனையில், சேர்ந்து ஒழுகல் - பொருந்தி வாழ்தல், இன்னா - துன்பமாம்; முறை இன்றி - நீதியில்லாமல், ஆளும் - ஆளுகின்ற, அரசு - அரசரது ஆட்சி, இன்னா - துன்பமாம்; மறை இன்றி - சூழ்தலில்லாமல், செய்யும், வினை - செய்யுங் கருமம், இன்னா - துன்பந் தருவதாகும், எ - று. காத்தோம்பல் : ஒரு பொருளிருசொல். உறைசேர் பழங்கூரை என்றது செய்கையழிந்து சிதைவுற்று மழைநீர் உள்ளிழியுஞ் சிறு கூரையினை. அரசு - அரசனுமாம். அரசன் முறையிலானயின் முறையிழத்த லானே யன்றி மழையின்மையாலும் நாடு துன்புறும்; ‘முறைகோடி மன்னவன் செய்யினுறை கோடி, யொல்லாது வானம் பெயல்’ என்பது காண்க. அமைச்சருடன் மறைவிற் செய்யப்படுவதாகலின் சூழ்ச்சி மறையெனப்பட்டது. (6) 7. அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா 1 மறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுக லின்னா இடும்பை யுடையார் கொடையின்னா வின்னா கொடும்பா டுடையார்வாய்ச் சொல். (ப - ரை) அறம் மனத்தார் - அறத்தை விரும்பும் நெஞ்சத்தினர், கூறும் - சொல்லுகின்ற, கடுமொழியும் - கடுஞ் சொல்லும், இன்னா - துன்பமாம்; மறம் மனத்தார் - வீரத் தன்மையுடைய நெஞ்சத்தினர், ஞாட்பில் - போரின்கண், மடிந்து ஒழுகல் - சோம்பி இருத்தல், இன்னா - துன்பமாம்; இடும்பை உடையார் - வறுமை உடையாரது, கொடை - ஈகைத் தன்மை, இன்னா துன்பமாம் - கொடும்பாடு உடையார் - கொடுமையுடையாரது, வாய்ச்சொல் - வாயிற் சொல்லும், இன்னா - துன்பமாம் எ - று. ‘அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொ னான்கும், இழுக்காவியன்ற தறம்’ என்பவாகலின் அறமனத்தார் கூறுங் கடுமொழியும் இன்னாவாயிற்று. உம்மை; எச்சப்பொருளது. இடும்பை - துன்பம் ஈண்டுக் காரணமாய வறுமைமேல் நின்றது. ‘வளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்’ என்று பிற சான்றோருங் கூறினர். கொடும்பாடு - கொடுமை: ஒரு சொல். ‘அருங்கொடும்பாடுகன் செய்து’ என்பது திருச்சிற்றம்பலக் கோவையார்; நடுவு நிலை யின்மையும் ஆம். வாய்ச் சொல் என வேண்டாது கூறியது தீமையே பயின்ற தெனவேண்டியது முடித்தற்கு வாய்ச் சொல்லும் என்னும் உம்மை தொக்கது. (7) 8. ஆற்ற லிலாதான் பிடித்த படையின்னா நாற்ற மிலாத மலரி னழகின்னா தேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா மாற்ற மறியா னுரை. (ப - ரை) ஆற்றல் இலாதான் - வலியில்லாதவன், பிடித்த படை - கையிற்பிடித்த படைக்கலம், இன்னா - துன்பமாம்; நாற்றம் இலாத - மணமில்லாத, மலரின் அழகு - பூவின் அழகானது, இன்னா - துன்பமாம்; தேற்றம் இலாதான் - தெளிவு இல்லாதவன், துணிவு - ஒருவினை செய்யத்துணிதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, மாற்றம் - சொல்லின் கூறு பாட்டினை, அறியான் - அறியாதவனது, உரை - சொல், இன்னா - துன்பமாம் எ - று. ஆற்றல் - ஈண்டு ஆண்மை யெனினும் ஆம்; ‘வானொடென். . . வன்கண்ண ரல்லார்க்கு’ என்பது காண்க. தேற்றம் - ஆராய்ந்து தெளிதல்; ‘தெளிவி லதனைத் தொடங்கார்’ என்பது வாயுறை வாழ்த்து. மாற்றம் - பேசு முறைமையென்றும், எதிருரைக்கும் மொழியென்றும் கூறலுமாம். (8) 9. பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா நகையாய நண்பினார் நாரின்மை யின்னா இகலி னெழுந்தவ ரோட்டின்னா வின்னா நயமின் மனத்தவர் நட்பு. (ப - ரை) பகல்போலும் - ஞாயிறுபோலும், நெஞ்சத்தார் - மனமுடையார், பண்பு இன்மை - பண்பில்லாதிருத்தல், இன்னா - துன்பமாம்; நகை ஆய - நகுதலையுடைய, நண்பினார் - நட்பாளர்; நார் இன்மை - அன்பில்லா திருத்தல், இன்னா - துன்பமாம்; இகலின் எழுந்தவர் - போரின்கண் ஏற்றெழுந்தவர், ஒட்டு – புறங்காட்டி யோடுதல், இன்னா - துன்பமாம்; நயம்இல் - நீதியில்லாத, மனத்தவர் - நெஞ்சினை யுடையாரது, நட்பு - கேண்மை, இன்னா - துன்பமாம் எ - று. பகல்போலும் நெஞ்சம் - ஞாயிறு திரிபின்றி ஒரு பெற்றித்தாதல் போலத் திரிபில்லாத வாய்மையை யுடைய நெஞ்சம்; ‘ஞாயிறன்ன வாய்மையும்’ என்பது புறம். இனி நுகத்தின் பகலாணி போல் நடுவுநிலை யுடைய நெஞ்சம் எனினும் பொருந்தும். “நெடுநுகத்துப் பகல்போல, நடுவு நின்ற நன்னெஞ்சீனோர்” என்பது பட்டினப்பாலை. பண்பாவது உலகவியற்கை யறிந்து யாவரொடும் பொருந்தி நடக்கும் முறைமை. “பண்பெனப் படுவது பாடறிந்தொழுகல்” என்பது கலித்தொகை. தூய மனமுடையரேனும் உலகத்தோடு பொருந்தி நடவாமை தீதென்பதாம் நகையாய நண்பினார் நாரின்மையாவது - முகத்தால் நகுதல் செய்து அகத்தே அன்பு கருங்குதல். நயம் - நீதி யென்னும் பொருளதாதலைத் திருக்குறள் பரிமேலழகருரை நோக்கித் தெளிக; இனிமை யெனவும் விருப்பம் எனவும் பொருள் கூறலும் ஆம். (9) 10. கள்ளில்லா மூதூர் களிகட்கு நன்கின்னா வள்ளல்க ளின்மை பரிசிலர்க்கு முன்னின்னா வண்மை யிலாளர் வனப்பின்னா வாங்கின்னா பண்ணில் புரவி பரிப்பு. (ப - ரை)கள் இல்லா - கள் இல்லாத, மூதூர் - பழைமையாகிய ஊர், களிகட்கு - கள்ளுண்டு களிப்பார்க்கு, நன்கு இன்னா - மிகவுந் துன்பமாம்; வள்ளல்கள் - வள்ளியோர், இன்மை - இல்லா திருத்தல், பரிசிலர்க்கு - (பரிசில் பெறும்) இரவலர்க்கு, முன் இன்னா - மிகவுந் துன்பமாம்; வண்மை இலாளர் - ஈகைக்குண மில்லதாவர்களுடைய, வனப்பு - அழகு, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, பண் இல் - கலனையில்லாத, புரவி - குதிரை, பரிப்பு - தாங்குதல், இன்னா - துன்பமாம் எ - று. களிகட்கு இன்னா என்றது எடுத்துக்காட்டு மாத்திரையே, களித்த லென்னுஞ் சொல் கள்ளுண்டு மகிழ்தல் என்னும் பொருளில் முன் வழங்கியது; இக்காலத்தே பொதுப்பட மகிழ்தல் என்னும் பொருளதாயிற்று. களி - கள்ளுண்போன். முன் : மிகுதி யென்னும் பொருளது. பண் கலனை; இது கல்லனையெனவும் வழங்கும். (10) 11. பொருளுணர்வா ரில்வழிப் பாட்டுரைத்த லின்னா இருள்கூர் சிறுநெறி தாந்தனிப்போக் கின்னா அருளில்லார் தங்கட் செலவின்னா வின்னா பொருளில்லார் வண்மை புரிவு. (ப - ரை) பொருள் உணர்வார் - (பாட்டின்) பொருளை அறியும் அறிவுடையார், இல்வழி - இல்லாத இடத்தில், பாட்டு உரைத்தல் - செய்யுளியற்றிக் கூறுதல், இன்னா - துன்பமாம்; இருள் கூர் - இருள் மிகுந்த, சிறுநெறி - சிறிய வழியிலே, தனிப் போக்கு - தனியாகப் போகுதல், இன்னா - துன்பமாம்; அருள் இல்லார் தம்கண் - தண்ணளியில்லாதவரிடத்தில், செலவு - (இரப்போர்) செல்லுதல்; இன்னா - துன்பமாம்; பொருள் இல்லார் - பொருளில்லாதவர், வண்மை புரிவு - ஈதலை விரும்புதல், இன்னா - துன்பமாம் எ - று. புலவராயினார் பாட்டின் பொருளுணரும் அறிவில்லார்பால் தாம் அரிதிற் பாடிய பாட்டுக் களைக் கூறின், அவர் அவற்றில் பொருளை அறியாராகலின், தம்மை நன்கு மதித்தல் செய்யார். அதுவேயன்றி இகழ்தலுஞ் செய்வர்; அவற்றின் மிக்க துன்பம் பிறிதில்லை யாகலின் ‘பொருளுணர்வா ரில்வழிப் பாட்டுரைத் தலின்னா’ எனப்பட்டது. “ புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம்” ‘ கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர் பொல்லாத தில்லை யொருவற்கு’ என்னும் பழமொழிச் செய்யுட்கள் இங்கே கருதற்பாலன. (11) 12. உடம்பா டில்லாத மனைவிதோ ளின்னா 1 இடனில் சிறியாரோ டியர்த்தநண் பின்னா இடங்கழி யாளர் தொடர்பின்னா வின்னா கடனுடையார் காணப் புகல். (ப - ரை) உடம்பாடு இலாத - உளம் பொருந்துதலில்லா, மனைவி தோள் - மனைவியின் தோளைச்சேர்தல், இன்னா - துன்ப. . . மாம்; இடன் இல் - விரிந்த வுள்ளமில்லாத, சிறியாரோடு – சிறுமையுடை யாருடன், யாத்த நண்பு - பிணித்த நட்பு, இன்னா - துன்பமாம்; இடங்கழியாளர் - மிக்க காமத்திணை யுடையாரது, தொடர் - சேர்க்கை, இன்னா - துன்பமாம்; கடன் உடையார் - கடன் கொடுத்தவர், காண - பார்க்கமாறு, புகல் - அவர்க் கெதிரே செல்லுதல், இன்னா - துன்பமாம் எ - று. மனைவிதோள் : இடக்கரடக்கல். ‘உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட், பாம்போ டுடனுறைந் தற்று’ என்னுங் குறள் இங்கு நினைக்கற்பாலது. இட னென்றது ஈண்டு உள்ள விரிவையுணர்த்திற்று. குற்றியலிகரம் அலகு பெறாதாயிற்று. இடங்கழி - உள்ளம் நெறிப்படாதோடுதல்; கழி காமம் என்பது கருத்து; ‘இடங்கழி காமமொடடங்கானாகி’ என்பது மணிமேகலை. சிலர் ‘விடங்களியாளர்’ எனப் பாடங் கொண்டு, விடம்போலும் கள்ளுண்டு களிப்போர் எனப் பொருள் கூறினர்; அது பொருந்தாமை யோர்க். ‘கடன் கொண்டான் றோன்றப் பொருள் தோன்றும்’ ஆகலின், ‘காணப் புகல் இன்னா’ என்றார்; கடன் படுதல் துன்பம் என்பது கருத்தாகக் கொள்க. (12) 13. தலைதண்ட மாகச் சுரம்போத லின்னா வலைசுமந் துண்பான் பெருமித மின்னா புலையுள்ளி வாழ்த லுயிர்க்கின்னா வின்னா முலையில்லாள் பெண்மை விழைவு. (ப - ரை) தலை தண்டம் ஆக - தலை அறுபடும்படி, சுரம் போதல் - காட்டின்கட் செல்லுதல், இன்னா - துன்பமாம்; வலை சுமந்து - வலையைச் சுமந்து, உண்பான் - அதனால் உண்டு வாழ்வானது. பெருமிதம் - செருக்கு, இன்னா - துன்பமாம்; புலை - புலால் உண்ணுதலை. உள்ளி - விரும்பி, வாழ்தல் - வாழ்வது, உயிர்க்கு - (மக்கள்) உயிர்க்கு, இன்னா - துன்பமாம் - முலை இல்லாள் - முலையில்லாதவள், பெண்மை - பெண்தன்மையை, விழைவு - விரும்புதல், இன்னா - துன்பமாம் எ - று வலைசுமந்து என்னுங் காரணம் காரியத்தின் மேற்று. புலை - புன்மை : தன்னுயிரோம்பப் பிறவுயிர் கொன்றுணல் சிறுமையாகலின் அது புலை யெனப்படும். பெண்மை விழைவு இன்னா என் என்றது கடைபோகாதாகலின், ‘கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டு, மில்லாதான் பெண்காமுற் றற்று’ என்பதுங் காண்க. (13) 14. மணியிலாக் குஞ்சரம் வேந்தூர்த லின்னா துணிவில்லார் சொல்லுந் தறுகண்மை யின்னா பணியாத மன்னர்ப் பணிவின்னா வின்னா பிணியன்னார் வாழு மனை. (ப - ரை) மணி இலா - (ஓசையினால் தன் வருகையைப் பிறர்க்கு அறிவிக்கும்) மணியை அணியப் பெறாத, குஞ்சரம் - யானையை, வேந்து - அரசன், ஊர்தல் - ஏறிச் செல்லுதல், இன்னா துன்பமாம்; துணிவு இல்லார் - பகையை வெல்லுந் துணி வில்லாதார், சொல்லும் - கூறும், தறுகண்மை - வீரமொழிகள், இன்னா துன்பமாம்; பணியாத - வணங்கத்தகாத, மன்னர் - அரசரை, பணிவு - வணங்குதல், இன்னா - துன்பமாம்; பிணி அன்னார் (கணவருக்குப்) பிணிபோலும் மனைவியர், வாழும் மனை - வாழ்கின்ற இல், இன்னா - துன்பமாம் எ - று. சொல்லும் என்றதனால் தறு கண்மை மொழிக்காயிற்று; வஞ்சினமும் ஆம். பணியாத மன்ன ராவார் தம்மிற் றாழ்ந்தோர் பணிதல் - இன்சொல்லும் கொடையும். ‘எள்ளாத வெண்ணிச் செயல் வேண்டுந் தம்மொடு கொள்ளாத கொள்ளா துலகு’ என்றபடி, தாம் வலியராய் வைத்து மெலிய பகைவரை வணங்குதல் எள்ளற் கேதுவாகலின் ‘பணிவின்னா’ என்றார். ‘மன்னர் பணிவு’ என்று பாடமாயின், அகத்தே பணிதலில்லாத பகை மன்னரது புற வணக்கம் இன்னாவாம் என்று பொருள் கூறிக்கொள்க. ‘சொல் வணக்கம் மொன்னார்கட் கொள்ளற்க’ ‘தொழுத கையுள்ளும் படையொடுங்கும்’ என்பன இங்கே கருதற்பாலன. பிணிபோறல் - சிறு காலை அட்டில் புகாமை முதலியன. (14) 15. வணரொலி 1 யைம்பாலார் வஞ்சித்த லின்னா துணர்தூங்கு மாவின் படுபழ மின்னா புணர்பாவை யன்னார் பிரிவின்னா வின்னா உணர்வா ருணராக் கடை. (ப - ரை) வணர் - குழற்சியையுடைய, ஒலி - தழைத்த, ஐம்பாலார் - கூந்தலையுடைய மகளிர், வஞ்சித்தல் - (தம் கணவரை) வஞ்சித் தொழுகுதல், இன்னா - துன்பமாம்; துணர் -கொத்தாக, தூங்கும் - தொங்குகின்ற, மாவின் - மாவினது, படு பழம் - நைந்து விழுந்த கனி, இன்னா - துன்பமாம்; புணர் - வேற்றுமையின்றிப். . . பொருந்திய, பாவை அன்னார் - பாவைபோலும் மகளிரது, பிரிவு - பிரிதல், இன்னா - துன்பமாம்; உணர்வார் - அறியுந் தன்மைய.hர் . . உணராக் கடை - அறியாவிடத்து, இன்னா - துன்பமாம் எ - று. வணர் - வளைவு; ஈண்டுக் குழற்சி. ஒலி - தழைத்தல்; இஃதிப் பொருட்டாதலை ‘ஒலிநெடும் பீலி’ என்னும் நெடுநல்வாடை யடி உரையானறிக. ஐம்பால் - ஐந்து பகுப்பினையுடையது. கூந்தல் ஐந்து பகுப்பாவன: குழல், கொண்டை, சுருள், பனிச்சை, முடி யென்ப. இங்ஙனம் ஒரோவொருகால் ஒவ்வொரு வகையாக வன்றி ஒரொப்பனை யிற்றானே ஐந்து வகையாற் பிரித்து முடிக்கப்படுவது என்று கோடலும் ஆம். படு பழம் - செவ்வியிழந்து விழுந்த பழம். புணர்தல் - அன்பால் நெஞ்சு கலத்தல்: மணம் பொருந் துதலும் ஆம். உணர்வார் - உணர்ந்து குறை தீர்க்கவல்லார்; பாட்டின் பொருளறி வாரும் ஆம். (15) 16. புல்லார் புரவி மணியின்றி யூர்வின்னா கல்லா ருரைக்குங் கருமப் பொருளின்னா இல்லாதார் நல்ல விருப்பின்னா 1 வாங்கின்னா பல்லாரு ணாணப் படல். (ப - ரை.) புல் - புல்லை, ஆர் - உண்கின்ற; புரவி - குதிரையை, மணி இன்றி - மணி யில்லாமல், ஊர்வு - ஏறிச் செலுத்துதல், இன்னா - துன்பமாம்; கல்லார் உரைக்கும் - கல்வியில்லாதார் கூறும், கருமப் பொருள் - காரியத்தின் பயன், இன்னா - துன்பமாம்; இல்லாதார் - பொருளில்லாதவரது, நல்ல விருப்பு - நல்லவற்றை விரும்பும் விருப்பம், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, பல்லாருள் - பலர் நடுவே, நாணப்படல் - நாணப்படுதல், இன்னா - துன்பமாம் எ - று. ஊர்வு: தொழிற்பெயர். பொருள் - பயன், நல்ல - அறம் நுகரப்படு வனவும் ஆம். நாணப்படல் - மானக்கே டெய்துதல். (16) 17. உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னா நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனியின்னா கண்ணி லொருவன் வனப்பின்னா வாங்கின்னா எண்ணிலான் செய்யுங் கணக்கு. (ப - ரை.) உண்ணாது வைக்கும் - நுகராது வைக்கும். பெரும் பொருள் வைப்பு - பெரிய பொருளின் வைப்பானது, இன்னா துன்பமாம்; நண்ணா - உளம் பொருந்தாத, பகைவர் -பகைவரது, புணர்ச்சி - சேர்க்கை, நனி இன்னா - மிகவுந் துன்மாம்; கண் இல் ஒருவன் – விழி யில்லாத ஒருவனது, வனப்பு - அழகு, இன்னா துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, எண் இலான் - எண்ணூல் பயிலாதவன், செய்யும் கணக்கு - இயற்றும் கணக்கு, இன்னா - துன்பமாம் எ - று. வைப்பு - புதைத்து வைப்பது, கண் - கண்ணோட்டமும் ஆம், எண் - கணிதம்; நூலுக் காயிற்று. எண்ணிலான் என்பதற்குச் சூழ்ச்சித் திறனில்லான் என்றும், செய்யுங் கணக்கு என்பதற்குச் செய்யுங் காரியம் என்றும் பொருள் கூறலும் ஆம். (17) 18. ஆன்றவிந்த சன்றோருட் பேதை புகலின்னா மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா ஈன்றாளை யோம்பா விடல். (ப - ரை.) ஆன்று - கல்வியால் நிறைந்து, அவிந்த - அடங்கிய, சான்றோர் உள - பெரியோர் நடுவே, பேதை - அறிவில்லாதவன், புகல் - செல்லுதல், இன்னா - துன்பமாம்; மான்று - மயங்கி, இருண்ட போழ்தின் - இருண்டுள்ள காலத்தில், வழங்கல் - வழிச் செல்லுதல், பெரிது இன்னா - மிகவுந் துன்பமாம்; நோன்று - (துன்பங்களைப்) பொறுத்து, அவிந்து - (மனம்) அடங்கி, வாழாதார் - வாழமாட்டாதவர், நோன்பு - நோற்றல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, ஈன்றாளை - பெற்ற தாயை, ஓம்பாவிடல் - காப்பாற்றாமல் விடுதல், இன்னா - துன்பமாம், எ - று. ஆன்று: ஆகல் என்பதன் மரூஉவாகிய ஆல் என்னும் பகுதியடியாகப் பிறந்தது. குணங்களால் நிறைந்து என்று கூறலும் ஆம். அவிந்த - ஐம்புலனும் அடங்கிய; பெரியோர்பாற் பணிந்த என்றுமாம். ‘ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர்’ என்னும் புறப்பாட்டும், அதனுரையும் நோக்குக. மான்று - மால் என்பது திரிந்து நின்ற தெனினும் ஆம். பொழுது என்பதன் மரூஉ. ஓம்பா: ஈறுகெட்டது. (18) 19. உரனுடையா னுள்ள மடிந்திருத்த லின்னா மறனுடை யாளுடையான் மார்பார்த்த லின்னா சுரமரிய கானஞ் செலவின்னா வின்னா மனவறி யாளர் 1 தொடர்பு. (ப - ரை.) உரன் உடையான் - திண்ணிய அறிவுடையவன், உள்ளம் மடிந்து இருத்தல் - மனமடிந்திருத்தல், இன்னா - துன்பமாம்; மறன் உடை - வீரமுடைய, ஆள் உடையான் - ஆட்களை யுடையான், மார்பு ஆர்த்தல் - மார்பு தட்டுதல், இன்னா - துன்பமாம்; சுரம் - அருநெறியாகிய, அரிய - இயங்குதற்கரிய, கானம் - காட்டின் கண், செலவு - செல்லுதல், இன்னா - துன்பமாம்; மனம் வறியாளர் - மனவறுமை யுடையாரது, தொடர்பு - சேர்க்கை, இன்னா - துன்பமாம். உரன் - திண்ணிய அறிவாதலை ‘உரனென்னுந் தோட்டியான்’ என்னுங் குறட்குப் பரிமேலழகர் உரைத்த உரையா னறிக. மார்பு ஆர்த்தல் - மார்பு தட்டிப் போர்க்கெழுதல்; காரணம் காரியத்திற் காயிற்று. வீரரை யுடையான் தானே போர்க்குச் செல்லுதல் வேண்டா என்றபடி; வலிதிற் செல்லுதல் எனினும் ஆம். மனவறியாளர் - மனநிறைவில்லாதவர்; புல்லிய எண்ணமுடையார் எனினும் ஆம். (19) 20. குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா நிலத்திட்ட நல்வித்து நாறாமை யின்னா நலத்தகையார் நாணாமை யின்னாவாங் கின்னா கலத்தல் குலமில் வழி. (ப - ரை.) குலத்துப் பிறந்தவன் - நற்குடியிற் பிறந்தவன், கல்லாமை - கல்லாதிருத்தல், இன்னா- துன்பமாம்; நிலத்து இட்ட - பூமியில் விதைத்த, நல்வித்து - நல்ல விதைகள், நாறாமை - முளையாமற் போதல், இன்னா - துன்பமாம்; நலம் தகையார் -தன்மையாகிய அழகினையுடைய மகளிர், நாணாமை - நாணின்றி யொழுகுதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, குலம் இல்வழி - ஒவ்வாத குலத்திலே, கலத்தல் - மணஞ் செய்து கலத்தல், இன்னா - துன்பமாம் எ - று. மகளிர்க்கு நாணம் சிறந்ததென்பது ‘உயிரினுஞ் சிறந்தன்று நாணே’ என்னும் தொல்காப்பியத்தானு மறியப்படும். நலத்தகையார் நாணாமை என்பதற்கு நற்குணமுடைய ஆடவர் பழிபாவங்கட்கு அஞ்சாமை எனப் பொருள் கூறுவாருமுளர். மணஞ்செய்வார் ஆராய வேண்டியவற்றுள் குடியொப்புக் காண்டலும் ஒன்று: “கொடுப்பினன் குடைமையும் குடிநிர லுடைமையும், வண்ண முந் துணையும் பொரீஇ யெண்ணா, தெமியேத் துணிந்த வேமஞ்சா லருவினை” என்னுங் குறிஞ்சிப் பாட்டடிகள் ஈண்டு நோக்கற் பாலன. (20) 21. மாரிநாட் கூவுங் குயிலின் குரலின்னா வீர மிலாளர் கடுமொழிக் கூற்றின்னா மாரி வளம்பொய்ப்பி னூர்க்கின்னா வாங்கின்னா மூரி யெருத்தா லுழவு. (ப - ரை.) மாரி நாள் - மழைக்காலத்தில், கூவும் - கூவுகின்ற, குயிலின் குரல் - குயிலினது குரலோசை, இன்னா - துன்பமாம்; ஈரம் இலாளர் - அன்பில் லாதவரது, கடுமொழிக் கூற்று - கடியதாகிய சொல், இன்னா - துன்பமாம்; மாரி வளம் பொய்ப்பின் - மழை வளம் பொய்க்குமாயின், ஊர்க்கு - உலகிற்கு, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, மூரி எருத்தால் - மூரியாகிய எருதால், உழவு - உழுதல், இன்னா - துன்பமாம் எ - று. வீரமிலாளர் என்று கொள்ளலும் ஆம். மொழிக் கூற்று; ஒருபொருளிருசொல்; மொழியின் பகுதியுமாம். மழையாகிய வளம் என்க; மழையினது வளம் எனலுமாம். பொய்த்தல் - இல்லையாதல்; ‘விண்ணின்று பொய்ப்பின்’ என்பது திருக்குறள். ‘மாரி பொய்ப்பினும்’ என்பது புறம். மூரி யெருத்து: இருபெயரொட்டு. வலிமை மிக்க எருதுமாம். ‘எருமையு மெருதும் பெருமையுஞ் சோம்பும் வலியு முரணு நெரிவு மூரி’ என்பது பிங்கலம். கட்டுக் கடங்காத காளையால் உழுதல் துன்பம் என்பதாம். முதிர்ந்த எருதால் என்று பொருள் கூறுவாரு முளர். (21) 22. ஈத்த வகையா னுவவாதார்க் கீப்பின்னா பாத்துண லில்லா ருழைச்சென் றுணலின்னா மூத்த விடத்துப் பிணியின்னா வாங்கின்னா ஓத்திலாப் பார்ப்பா னுரை. (ப - ரை.) ஈத்த வகையால் - கொடுத்த அளவினால், உவவாதார்க்கு - மகிழாதவர்க்கு, ஈப்பு கொடுத்தல், இன்னா - துண்பமாம்; பாத்து உணல் - பகுத்து உண்ணுதல், இல்லார் உழை - இல்லாதவரிடத்தில், சென்று - போய், உணல் - உண்ணுதல், இன்னா - துன்பமாம்; மூத்த இடத்து - முதுமையுற்ற பொழுதில், பிணி - நோய் உண்டாதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு அவ்வாறே, ஓத்து இலா - வேதத்தை ஓதுதல் இல்லாத, பார்ப்பான் - பார்ப்பானுடைய, உரை - சொல், இன்னா - துன்பமாம் எ- று. ஈந்த வென்பது வலித்தாலாயிற்று. உவவாதார்க் கீப்பின்னா என்பதனை, ‘இன்னா திரக்கப்படுத லிரந்தவ ரின்முகங் காணுமளவு ’என்னுங் குறளுடன் பொருத்திக் காண்க. பாத்துணல் - தென்புலத்தார் முதலாயினார்க்கும், துறந்தார் முதலாயினார்க்கும் பகுத்துண்ணுதல். பாத்து - பகுத்து என்பதன் மரூஉ. ஓத்து - ஓதப்படுவது; வேதம். (22) 23. யானையின் மன்னரைக் காண்ட னனியின்னா ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா தேனெய் புளிப்பிற் சுவையின்னா வாங்கின்னா கான்யா 1 றிடையிட்ட வூர். (ப - ரை.) யானைஇல் - யானைப்படையில்லாத, மன்னரை - அரசரை, காண்டல் - பார்த்தல், நனி இன்னா - மிகவுந் துன்பமாம்; ஊனைத் தின்று (பிறிதோன் உயிரின்) ஊனை உண்டு, ஊனை - (தன்) ஊனை, பெருக்குதல் - வளர்த்தல், முன் இன்னா -மிகவுந் துன்பமாம்; தேன் நெய் - தேனும் நெய்யும், புளிப்பின் புளித்துவிட்டால், சுவை - (அவற்றின்) சுவை, இன்னா - துன்பமாம், ஆங்கு - அவ்வாறே, கான்யாறு - காட்டாறு, இடை இட்ட இடையிலே உளதாகிய, ஊர் - ஊரானது, இன்னா - துன்பமாம் எ- று. ‘யானையில் மன்னரைக் காண்டல்’ என்றா ரேனும் அரசர் படையில் யானையில்லாதிருத்தல் இன்னா என்பது கருத்தாகக் கொள்க. ‘படைதனக்கு யானை வனப்பாகும்’என்பது சிறுபஞ்சமூலம். இனியவை நாற்பதிலுள்ள ‘யானையுடைய படை காண்டன் மிகவினிதே ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்னினிதே, கான்யாற்றடைகரை யூரினி தாங்கினிதே, மானமுடையார் மதிப்பு’ என்னுஞ் செய்யுளுடன் இதனை ஒப்பு நோக்குக. (23) 24. சிறையில்லாத மூதூரின் வாயில்காப் பின்னா துறையிருந் தாடை கழுவுத லின்னா அறைபறை யன்னவர் 1 சொல்லின்னா வின்னா நிறையில்லான் கொண்ட தவம். (ப - ரை.) சிறை இல்லா - மதில் இல்லாத, மூதூரின் – பழைமை யாகிய ஊரினது, வாயில் காப்பு - வாயிலைக் காத்தல், இன்னா - துன்பமாம்; துறை இருந்து - நீர்த்துறையிலிருந்து, ஆடை கழுவுதல் - ஆடைதோய்த்து மாசுபோக்குதல், இன்னா - துன்பமாம்; அறை - ஒலிக்கின்ற, பறை அன்னவர் - பறைபோன்றாரது, சொல் – சொல் லானது, இன்னா - துன்பமாம்; நிறை இல்லான் - (பொறிகளைத் தடுத்து) நிறுத்துந் தன்மையில்லாதவன், கொண்ட - மேற்கொண்ட, தவம் தவமானது, இன்னா - துன்பமாம்; எ - று. நீர்த்துறையில் ஆடை யொலித்தல் புரியின், நீர் வழி நோயணுக்கள் பரவி இன்னல் விளைக்குமாகலின், “துறையிலிருந் தாடை கழுவுதலின்னா” என்றார். இனம் பற்றிப் பிற தூயதன்மை புரிதலுங் கொள்க. அறைபறை யன்னவர் - தாம் கேட்ட மறைக்கப்படும் பொருளினை யாண்டும் வெளிப்படுத்து மியல்பினர். ‘அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட, மறைபிறர்க் குய்த்துரைக் கலான்’ என்றார் பொய்யில் புலவரும். (24) 25. ஏமமில் மூதூ ரிருத்தன் மிகவின்னா தீமை யுடையா ரயலிருத்த னன்கின்னா காம முதிரி னுயிர்க்கின்னா 1 வாங்கின்னா யாமென் பவரொடு நட்பு. (ப - ரை.) ஏமம் இல் - காவல் இல்லாத, மூதூர் - பழைய ஊரிலே, இருத்தல் - வாழ்தல், மிக இன்னா - மிகவுந் துன்பமாம்; தீமை உடையார் - தீச்செய்கை யுடையவரது, அயல் இருத்தல் - பக்கத்திலே யிருத்தல், நன்கு இன்னா - மிகவும் துன்பமாம்; காமம் முதிரின் - காமநோய் முற்றினால், உயிர்க்கு இன்னா - உயிர்க்குத் துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, யாம் என்பவரொடு - யாமென்று தருக்கியிருப்ப வரோடு செய்யும், நட்பு - நட்பானது, இன்னா - துன்பமாம் எ -று. ஏமம் - மதிற்காவலும், அரசின் காவலும் ஆம். அயலிருத்தல் என்றமையால் அவரைச் சேர்ந் தொழுகுதல் கூறவேண்டாதாயிற்று. காமம் உயிரைப் பற்றி வருத்து மென்பதனைக் ‘காமமு நாணு முயிர் காவாத் தூங்குமென், னோனா வுடம்பி னகத்து’ என்னும் முப்பாலானு மறிக. (25) 26. நட்டா ரிடுக்கண்கள் காண்டல் நனியின்னார் 2 ஒட்டார் பெருமிதங் காண்டல் பெரிதின்னா 3 கட்டில்லா மூதூ ருறையின்னா வாங்கின்னா நட்ட கவற்றினாற் சூது. (ப - ரை.) நட்டார் - நட்புக் கொண்டவருடைய, இடுக்கண்கள் - துன்பங்களை, காண்டல் - பார்த்தல், நனி இன்னா - மிகவுந் துன்பமாம்; ஒட்டார் - பகைவரது, பெருமிதம் - செருக்கை, காண்டல் - பார்த்தல், பெரிது இன்னா - மிகவுந் துன்பமாம்; கட்டு இல்லா - சுற்றமாகிய கட்டு இல்லாத, மூதூர் - பழையவூரிலே, உறை - வாழ்தல், இன்னா - துன்பமாம்; ஆங்கு அவ்வாறே, நட்ட - நட்பாகக் கொள்ளப்பட்ட, கவற்றினால் - கவற்றைக் கொண்டு ஆடுகின்ற, சூது - சூதாட்டம், இன்னா - துன்பமாம் எ - று. கட்டு - கட்டுப்பாடும் ஆம். உறை: முதனிலைத் தொழிற் பெயர். நட்ட என்பது விருப்புடன் அடிப் பட்டுப் பழகிய என்றபடி. கவறு - பாய்ச்சி; ஆவது தாயக்கட்டை, ஒரு சொல் வருவிக்கப்பட்டது. (26) 27. பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னா அரியவை செய்து மெனவுரைத்த லின்னா பரியார்க்குத் தாமுற்ற கூற்றின்னா வின்னா பெரியோர்க்குத் தீய செயல். (ப - ரை.) பெரியாரோடு - பெரியவருடன், யாத்த - கொண்ட, தொடர் - தொடர்ச்சியை, விடுதல் - விடுவது, இன்னா - துன்பமாம்; அரியவை - செய்தற்கரிய காரியங்களை, செய்தும் - செய்து முடிப்போம், என உரைத்தல் - என்று சொல்லுதல், இன்னா - துன்பமாம்; பரியார்க்கு - (தம்மிடத்தில்) அன்பு கொள்ளாதவர்க்கு, தாம் உற்ற - தாம் அடைந்த துன்பங்களைக் கூறும்; கூற்று - சொல், இன்னா - துன்பமாம்; பெரியார்க்கு - பெருமைiயுடையார்க்கு, தீய செயல் - தீயனவற்றைச் செய்தல், இன்னா - துன்பமாம் எ - று. பெரியார் தொடர் விடுதல் இன்னா என்பதனைப் ‘பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்’ என்னுந் திருக்குறளானு மறிக. பெரியார் - ஈண்டுக் கல்வியறிவு நற்குண நல்லொழுக்கங் களிற் சிறந்த நல்லோர். குற்றிய லிகரம்அலகுபெறா தாயிற்று. ‘அரியவை செய்துமென உரைத்தல் இன்னா’ என்றது தாம் செய்யக் கருதிய அரிய செயல்களைச் செயலால் வெளிப்படுத்தலன்றி உரையாற் கூறுதல் தக்கதன்று என்றபடி; தம்மாற் செய்ய வியலாத வற்றைச் செய்து தருவேமெனப் பிறர்க்கு வாக்களிப்பது இன்னாவாம் எனப் பொருள் கூறினும் அமையும். செய்தும்: தன்மைப் பன்மை யெதிர்கால வினைமுற்று; இறந்தகால முற்றும் ஆம். பரிதல் - அன்பு செய்தல்: இரங்குதலுமாம். பெரியார்க்குத் தீங்கு செயல் இன்னா என்பதனை ‘எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார், பெரியார்ப் பிழைத்தொழுகு வார்’ என்னும் வாயுறை வாழ்த்தானு மறிக. உற்ற, தீய என்பன முறையே தெரிநிலையும் குறிப்புமாய வினைப்பெயர்கள். (27) 28. பெருமை யுடையாரைப் பீடழித்த லின்னா கிழமை யுடையார்க் 1 களைந்திடுத லின்னா வளமை யிலாளர் வனப்பின்னா வின்னா இளமையுண் மூப்புப் புகல். (ப-ரை) பெருமை உடையாரை - பெருமை யுடையவரை, பீடு அழித்தல் - பெருமை யழியக் கூறல், இன்னா - துன்பமாம்; கிழமை உடையார் - உரிமை உடையவரை, களைந்திடுதல் - நீக்கி விடுதல்; இன்னா - துன்பமாம்; வளமை இலாளர் - செல்வமில்லாத வருடைய, வனப்பு - அழகு, இன்னா - துன்பமாம்; இளமையுள் - இளமைப் பருவத்தில், மூப்பு - முதுமைக்குரிய தன்மைகள், புகல் - உண்டாதல், இன்னா - துன்பந் தருவதாகும் எ - று. பீடு அழித்தல் என்னும் இருசொல்லும் ஒரு சொன்னீர்மை யெய்தி இரண்டாவதற்கு முடிபாயின. பீடழித்தலாவது பெருமையுள தாகவும் அதனை யிலதாக்கிக் கூறுதல் கிழமையுடையார் - பழையராக வரும் அமைச்சர் முதலாயினார்; நண்பரும் ஆம். கிழமை யுடையாரைக் கீழ்ந்திடுதலின்னா என்று பாடங் கொள்ளுதல் சிறப்பு; ‘பழமையெனப்படுவதியாதெனின் யாதுங் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு’ என்னும் திருக்குறளுஞ் காண்க. வளமை வண்மையு மாம். (28) 29. கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னா வல்லாதான் சொல்லு முரையின் பயனின்னா இல்லார்வாய்ச் சொல்லி னயமின்னா வாங்கின்னா கல்லாதான் கோட்டி கொளல். (ப-ரை) கல்லாதான் - (நடத்த வேண்டிய முறையைக்) கல்லாதவன், ஊரும் - ஏறிச் செலுத்தும், கலிமா - மனஞ்செருக்கிய குதிரை, பரிப்பு - (அவனைச்) சுமந்து செல்லுதல், இன்னா துன்பமாம்; வல்லாதான் - கல்வியில்லாதவன், சொல்லும் - சொல்லுகின்ற, உரையின் பயன் - சொல்லின் பொருள், இன்னா - துன்பமாம்; இல்லார் - செல்வ மில்லாதவருடைய, வாய்ச் சொல்லின் - வாயிலிருந்து வரும் சொல்லினது, நயம் - நயமானது, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, கல்லாதான் - கல்வியில்லாதவன், கோட்டி கொளல் - கற்றவரவையில் ஒன்றைக் கூறுதல், இன்னா - துன்பமாம் எ- று. கலி - ஆரவாரமும் ஆம். வல்லாதான் ஒன்றனைச் செய்ய மாட்டாதான் எனினும் அமையும். இல்லார் வாய்ச்சொல்லின் நயமின்னா என்பதனை ‘நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்’ என்னுந் தமிழ்மறை யானுமறிக. கோட்டிகொளல்: ஒரு சொல்; அவை யின்கண் பேசுதல் என்னும் பொருளது; ‘அங்கணத் துளுக்க. . . . கோட்டி கொளல்’ என்பதுங் காண்க. (29) 30. குறியறியான் மாநாக 1 மாட்டுவித்த லின்னா தறியறியா 2 னீரின்கட் பாய்ந்தாட3 லின்னா அறிவறியா மக்கட் பெறலின்னா வின்னா செறிவிலான் கேட்ட மறை. (ப - ரை) குறியறியான் - (பாம்பாட்டுதற்குரிய மந்திர முதலியவற்றின்) முறைகளை அறியாதவன், மாநாகம் - பெரிய பாம்பினை, ஆட்டுவித்தல் - ஆடச் செய்தல், இன்னா - துன்பமாம்; தறி அறியான் - உள்ளிருக்கும் குற்றியை யறியாமல், நீரின்கண் - நீரில் பாய்ந்து, ஆடல் - குதித்து விளையாடுதல், இன்னா - துன்பமாம் ; அறிவு அறியா - அறியவேண்டுவனவற்றை அறியமாட்டாத, மக்கள் - பிள்ளைகளை, பெறல் - பெறுதல், இன்னா - துன்பமாம்; செறிவு இலான் - அடக்கம் இல்லாதவன், கேட்ட மறை - கேட்ட இரகசியம், இன்னா - துன்பமாம் எ - று. தறி - குற்றி; கட்டை. அறிவறியான் என்னின் அறிவு வறியனா யினான்; ஆவது கல்லா இளமையன் என்க. ‘அறிகொன்று என்புழிப் போல’ ஈண்டு அறி யென்பது முதனிலைத் தொழிற்பெயர். அறிவறியா மக்கள் - அறியவேண்டுவன அறியமாட்டாத மக்கள்: ‘அறிவறிந்த மக்கள்’ என்பதற்குப் பரிமேலழகர் கூறிய பொருளை நோக்குக. செறிவு - அடக்கம் : ‘செறிவறிந்து சீர்மை பயக்கும்’ என்னுங் குறளில் செறிவு இப் பொருட் டாதல் காண்க: அடக்கமில்லாதவன் மறையினை வெளிப்படுத்தலின் ‘கேட்ட மறையின்னா’ என்றார்.(30) 31. நெடுமர நீள்கோட் டுயர்பாய்த லின்னா 1 கடுஞ்சின வேழத் தெதிர்சேற லின்னா ஒடுங்கி யரவுறையு மில்லின்னா வின்னா கடும்புலி வாழு மதர் (ப - ரை) நெடுமரம் - நெடிய மரத்தினது, நீள் கோட்டு - நீண்ட கிளையின், உயர் - உயரத்திலிருந்து, பாய்தல் - கீழே குதித்தல், இன்னா - துன்பமாம்; கடும் சினம் - மிக்க கோபத்தினையுடைய, வேழத்து எதிர் - யானையின் எதிரே, சேறல் - செல்லுதல், இன்னா - துன்பமாம்; அரவு - பாம்பு, ஒடுங்கி உறையும் - மறைந்து வசிக்கின்ற, இல் - வீடானது, இன்னா - துன்பமாம்; கடும் புலி - கொடிய புலிகள், வாழும் அதர் - வாழ்கின்ற வழியானது, இன்னா - துன்பமாம் எ- று. கோட்டுயர் பாய்தல் என்பதற்குக் கோட்டின் நுனியிலேறிய தோடமையாது மேலும் பாய்ந்து சேறல் என்று பொருள் கூறலுமாம்; ‘நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி, னுயிர்க்கிறுதி யாகிவிடும்’ என்பது ஈண்டு நோக்கற்பாலது. நெடுமர நீற் கோட்டுயர் பாய்தல் முதலிய நான்கற்கும், ஓட்டென்னும் அணி பற்றி, முறையே தம் வளியளவறியாது பெரிய வினைமேற் சேறலும், வலியார்க்கு மாறேற்றலும், உடம்பாடிலாத உட்பகையுடன் வாழ்தலும், பகைக் கெளியராம்படி நெறியலா நெறியிற்சேறலும் இன்னா வாமெனப் பொருள்கோடலும் பொருந்துமாறு காண்க. (31) 32. பண்ணமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிதின்னா எண்ணறியா மாந்தர் 1 ஒழுக்குநாட் கூற்றின்னா மண்ணின் முழவி னொலியின்னா வாங்கின்னா தண்மை யிலாளர் 2 பகை. (ப - ரை) பண் அமையா - இசை கூடாத, யாழின் கீழ் - யாழின் கீழிருந்து, பாடல் - பாடுதல், பெரிது இன்னா - மிகவுந்துன்பமாம்; எண் அறியா மாந்தர் - குறி நூல் (சோதிடம்) அறியாத மாக்கள், ஒழுக்கு நாள் கூற்று - ஒழுகுதற்குரிய நாள் கூறுதல், இன்னா - துன்பமாம்; மண் - இல் - மார்ச்சனையில்லாத, முழவின் - மத்தளத்தினது, ஒலி - ஓசை, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, தண்மை இலார் - தண்ணிய குணம் இல்லாதவரது, பகை - பகையானது, இன்னா - துன்பமாம் எ - று. பண் என்பதனை முதனிலைத் தொழிற்பெயராகக் கொண்டு, இசைக்கரணம் எட்டனு ளொன்று என்னலுமாம். ஒழுகுதற்குரிய நாளாவது கருமங்கட்கு விதிக்கப்பட்ட நாள். நற்குணமுடையார் பகையிடத்தும் இனியன செய்தலும், நற்குணமில்லார் நட்பிடத்தும் இன்னா செய்தலும் உடையாராகலின் தண்மை யிலாளர் பகை இன்னா வெனப்பட்டது; தீயோர்பால் பகையும் நண்புமின்றி நொதுமலாக விருத்தல் வேண்டு மென அறிக. (32) 33. தன்னைத்தான் போற்றா தொழுகுத னன்கின்னா முன்னை யுரையார் புறமொழிக் கூற்றின்னா நன்மை யிலாளர் தொடர்பின்னா வாங்கின்னா தொன்மை யுடையார் கெடல் (ப - ரை) தன்னைத்தான் - (ஒருவன்) தன்னைத் தானே, போற்றாது - காத்துக்கொள்ளாது, ஒழுகுதல் - நடத்தல், நன்கு இன்னா - மிகவுந் துன்பமாம்; முன்னை உரையார் - முன்னே சொல்லாமல், புறமொழிக் கூற்று - புறத்தே பழித் துரைக்கும் புறங்கூற்று, இன்னா - துன்பமாம்; நன்மை இலாளர் - நற்குணமில்லாதவரது, தொடர்பு - நட்பு, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, தொன்மை உடையார் - பழைமையுடையவர், கெடல் - கெடுதல், இன்னா - துன்பமாம் எ - று. தன்னைத்தான் போற்றுதலாவது மனமொழி மெய்கள் தீயவழியிற் செல்லாது அடக்குதல். முன்னை - ஐ : பகுதிப் பொருள் விகுதி. உரையார் : முற்றெச்சம். மொழிக்கூற்று : ஒரு பொருளிரு சொல். தொன்மை யுடையார் கெடல் என்றது தொன்று தொட்டு மேம்பட்டு வரும் பழங்குடியினர் செல்வங் கெடுதல் என்றபடி. (33) 34. கள்ளுண்பான் கூறுங் கருமப் பொருளின்னா முள்ளுடைக் காட்டி னடத்த னனியின்னா 1 வெள்ளம் படுமாக் கொலையின்னா வாங்கின்னா கள்ள மனத்தார் தொடர்பு (ப - ரை) கள் உண்பான் - கட்குடிப்பவன், கூறும் - சொல்லுகின்ற, கருமப் பொருள் - காரியத்தின் பயன், இன்னா - துன்பமாம்; முள் உடை காட்டில் - முட்களையுடைய காட்டில், நடத்தல் - நடத்தலானது, நனி இன்னா - மிகவுந் துன்பமாம்; வெள்ளம் படு – வெள்ளத்திலகப் பட்ட, மா - விலங்கு, கொலை - கொலையுண்டல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, கள்ளம் மனத்தார் - வஞ்ச மனத்தினை யுடையாரது, தொடர்பு - நட்பு, இன்னா - துன்பமாம் எ- று. மாக்கொலை - விலங்கைக் கொல்லுதல் எனினும், நீர்ப் பெருக்கிலகப்பட்டு வருந்தும் விலங்கைக் கரையேற வொட்டாது தடுத்துக் கொல்லுதல் இன்னாவாம் என்பது கருத்து. (34) 35. ஒழுக்க மிலாளார்க் குறவுரைத்த 2 லின்னா விழுத்தகு நூலும் 3 விழையாதார்க் கின்னா இழித்த தொழிலவர் நட்பின்னா வின்னா கழிப்புவாய் மண்டிலங் கொட்பு. (ப - ரை) ஒழுக்கம் இலாளர்க்கு - நல்லொழுக்கம் இல்லாத வரிடத்தே, உறவு உறைத்தல் - தமக்கு உறவுளதாகக் கூறுதல், இன்னா - துன்பமாம்; விழுத்தகு நூலும் - சீரிய நூலும், விழையாதார்க்கு - விரும்பிக் கல்லாதார்க்கு, இன்னா - துன்பமாம்; இழித்த தொழிலவர் - இழிக்கப்பட்ட தொழிலையுடையாரது, நட்பு - கேண்மை, இன்னா - துன்பமாம்; கழிப்பு வாய் - நல்லாரால் கழிக்கப்பட்ட இடமாகிய, மண்டிலம் - நாட்டிலே, கொட்பு - திரிதல், இன்னா - துன்பமாம் எ - று. ஒழுக்கமிலாளர் குறைவுரைத்தல் என்னும் பாடத்திற்கு ஒழுக்க மில்லாதவரை இழித்துரைத்தல் என்று பொருள் கொள்க. இழித்த தொழில் - அறிவுடையோராற் பழிக்கப்பட்ட தொழில். ஈற்றடிக்கு, ஒழுகக் குறைந்த மதியினது செலவு காண்டல் என்று பொருள் கூறலுமாம். (35) 36. எழிலி யுறைநீங்கி னீண்டையார்க் கின்னா குழலி னினிய 1 மரத் தோசைநன் கின்னா குழவிக ளுற்ற பிணியின்னா வின்னா அழகுடையான் பேதை யெனல் (ப - ரை) எழிலி - மேகமானது, உறை நீங்கின் - நீரைச் சொரியா தாயின், ஈண்டையார்க்கு - இவ்வுலகத்திலுள்ளவர்களுக்கு, இன்னா - துன்பமாம்; குழலின் இனிய - புல்லாங் குழலைப் போலும் இனிய, மரத்து ஓசை - மரத்தினது ஓசை, நன்கு இன்னா - மிகவுந் துன்பமாம்; குழவிகள் உற்ற - குழந்தைகள் அடைந்த, பிணி - நோயானது, இன்னா - துன்பமாம்; அழகு உடையான் - அழகினையுடையவன், பேதை எனல் - அறிவில்லாதவன் என்று சொல்லப்படுதல், இன்னா - துன்பமாம் எ - று. உறை - நீர்த்துளி, ‘குழலினினியமரத் தோசை நன்கின்னா’ என்பதன் கருத்து (காற்று ஊடறுத்துச் செல்லுதலால் மரங்களினின் றெழும் ஓசை குழலிசைபோ லினியதாயினும் பாராட்டப்படுவ தின்று என்பது போலும்) குழலில் என்னும் பாடத்திற்குக் குழல் இல்லாத என்று பொருள் கூறிக் கொள்க. (36) 37. பொருளிலான் வேளாண்மை காமுறுத லின்னா நெடுமாட நீணகர்க் கைத்தின்மை யின்னா வருமனை பார்த்திருந் தூணின்னா வின்னா கெடுமிடங் கைவிடுவார் நட்பு. (ப - ரை) பொருள் இலான் - செல்வ மில்லாதவன், வேளாண்மை - (பிறர்க்கு) உதவி புரிதலை, காமுறுதல் - விரும்புதல், இன்னா - துன்பமாம்; நெடுமாடம் - நெடிய மாடங்களையுடைய, நீள் நகர் - பெரிய நகரத்திலே, கைத்து இன்மை - பொருளின்றி யிருத்தல், இன்னா - துன்பமாம்; வருமனை - வரப்பட்ட மனையிலுள்ளாரை, பார்த்திருந்து - எதிர்நோக்கி யிருந்து, ஊண் - உண்ணுதல், இன்னா - துன்பமாம்; கெடும் இடம் - வறுமையுள்ள இடத்தில், கைவிடுவார் - கைவிட்டு நீங்குவாரது, நட்பு - கேண்மை, இன்னா - துன்பமாம் எ- று. வேளாண்மை - உபகாரம் வருமனை பார்த் திருந்தூண் என்றது பிறர் மனையை அடைந்து அம் மனைக்குரியாரது செவ்வி நோக்கியிருந்துண்டல் என்றபடி. கெடுமிடங் கைவிடுவார் நட்பு இன்னா வென்பதனைக் ‘கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை யுள்ளினு முள்ளஞ் சுடும்’ என்னுந் திருக்குறளானு மறிக. (37) 38. நறிய மலர்பெரிது நாறாமை யின்னா துறையறியா னீரிழிந்து 1 போகுத லின்னா அறியான் வினாப்படுத லின்னாவாங் கின்னா சிறியார்மேற் செற்றங் கொளல். (ப - ரை) நறிய மலர் - நல்ல மலரானது, பெரிய நாறாமை - மிகவும் மணம் வீசாதிருத்தல், இன்னா - துன்பமாம்; துறை அறியான் - துறையை அறியாதவன், நீர் இழிந்து போகுதல் - நீரில் இறங்கிச் செல்லுதல், இன்னா - துன்பமாம்; அறியான் (நூற்பொருள்) அறியாதவன், வினாப்படுதல் - (அறிவுடையோரால்) வினாப்படுதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, சிறியார் மேல் - சிறியவர்மீது, செற்றங் கொளல் - சினங் கொள்ளுதல், இன்னா - துன்பமாம் எ - று. நறிய - நல்ல அழகுடைய, துறை - நீரில் இறங்கு தற்கும் ஏறுதற்குமுரிய வழி அறியா நீர் என்பது பாடமாயின் அறியப்படாத நீர் என்க. சிறியார் - வெகுளி செல்லுதற்குரிய எளிமையுடையார்; குழவிப் பருவத்தினருமாம். (38) 39. பிறன்மனையாள் பின்னோக்கும் பேதைமை யின்னா மறமிலா மன்னர் செருப்புகுத லின்னா வெறும்புறம் வெம்புரவி யேற்றின்னா வின்னா திறனிலான் செய்யும் வினை. (ப - ரை) பிறன் மனையாள் பின் நோக்கும் - பிறன் மனைவியைக் காமுற்றுப் பின் றொடரக் கருதும், பேதைமை - அறிவின்மை, இன்னா - துன்பமாம்; மறம் இலா மன்னர் - வீரமில்லாத அரசர், செரு புகுதல் - போர்க்களத்திற் செல்லுதல், இன்னா - துன்பமாம்; வெம் புரவி - விரைந்த செலவினையுடைய குதிரையினது, வெறும் புறம் - கல்லணையில்லாத முதுகில், ஏற்று - ஏறுதல், இன்னா - துன்பமாம்; திறன் இலான் - செய்யுங் கூறுபாடறியாதவன், செய்யும் வினை - செய்யுங் காரியம், இன்னா - துன்பமாம் எ - று. புரவியின் புறமென்று மாற்றுக. திறன் - அறிந் தாற்றிச் செய்யும் வகை. (39) 40. கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா கடித்தமைந்த பாக்கினுட் கற்படுத லின்னா கொடுத்து விடாமை கவிக்கின்னா வின்னா மடுத்துழிப் பாடா விடல். (ப - ரை) கொடுக்கும் - கொடுத்தற்குரிய, பொருள் இல்லான் - பொருளில்லாதவனுடைய, வள்ளன்மை - ஈகைத் தன்மை, இன்னா - துன்பமாம் : கடித்து அமைந்த - கடித்தற்கு அமைந்த, பாக்கினுள் - பாக்கில், கல்படுதல் - கல் இருத்தல், இன்னா - துன்பமாம்; கவிக்கு - புலவனுக்கு, கொடுத்து விடாமை - பரிசில் கொடுத் தனுப்பாமை, இன்னா - துன்பமாம்; மடுத்துழி - தடைப்பட்ட விடத்து, பாடாவிடல் - பாடாது விடுதல், இன்னா - (பாடும் புலவனுக்குத்) துன்பமாம் எ - று. கடித்து; கடிக்க என்பதன் றிரிபு; பிளந்து எனினுமாம். கல் என்றது பாக்கிற் படுவதொரு குற்றம், மடுத்துழி - பொருள் பெற்ற விடத்தில் எனினுமாம். பாடா: ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம். (40) 41. அடக்க முடையவன் மீளிமை யின்னா துடக்க மிலாதவன் றற்செருக் கின்னா அடைக்கலம் வவ்வுத லின்னாவாங் கின்னா அடக்க வடங்காதார் சொல். (ப - ரை) : அடக்கம் உடையவன் - (ஐம் பொறிகளை) அடக்கு தலுடையவனது, மீளிமை - தறுகண்மை, இன்னா - துன்பமாம், துடக்கம் இல்லாதவன் - முயற்சியில்லாதவன், தற்செருக்கு - தன்னையே மதிக்கும் மதிப்பு, இன்னா - துன்பமாம்; அடைக்கலம் - பிறர் அடைக்கலமாக வைத்த பொருளை, வவ்வுதல் - கவர்ந்து கொள்ளுதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, அடக்க - (அறிவுடையோர்) அடக்கவும், அடங்காதார் - அடங்குதலில்லாதவர்க்குக் கூறும், சொல் - சொல் லானது, இன்னா - துன்பமாம் எ - று. மீளமை - பெருமிதமுமாம். துடக்கம் - வளைவு; உடல் வளைந்து வினைசெய்தற் கேற்ற முயற்சியை உணர்த்திற்று; தொடக்கம் என்று கொண்டு யாதானும் நற்கருமஞ் செய்யத் தொடங்குதல் என்றுரைப் பினுமாம். அடங்காதார் சொல் - அடங்காதார் அவையிற் கூறுஞ் சொல் எனினும் ஆம். (41) இன்னா நாற்பது உரையுடன் முற்றும் பொற்பன வெள்ளியை என்றும் பொற்பன வூர்தியை என்றும் பாடம். மறப்பின்னாது என்றும் பாடம். ஊணின்னாது என்றும் பாடம். உடையின்னாது என்றும் பாடம். புரைசேர் என்றும் பாடம். கடு மொழி யின்னா என்றும் பாடம். மனைவி தொழி லின்னா என்றும் பாடம். வணரொளி என்றும் பாடம். விழைவின்னா என்றும் பாடம். அகம்வறியாளர் என்றும் பாடம். கானாது என்றும் பாடம். அறைபறை யாயவர் என்றும் பாடம். உயிர்க்கின்னாது என்றும் பாடம். இடுக்க ணனிகண்டா னன்கின்னா என்றும் பாடம். கண்டாற் பெரிதின்னா என்றும் பாடம். கிழமை யுடையாரை என்றும் பாடம். மானாகம் என்றும் பாடம். இன்னா தறிவறியான் என்றும் பாடம். கீழ்நீர்ப்பாய்ந் தாடுதல் என்றும் பாடம். நெ டுமாநீள் கோட்டுயர் பாஅய்த லின்னா என்றும் பாடம். எண்ணறிய மாந்தர் என்றும் பாடம். தன்மையிலாளர் என்றும் பாடம். நடக்கி னனியின்னா என்றும் பாடம். ஒழுக்கமிலாளர்க் குறைவுரைத்தல் என்றும் பாடம். விழித்தகுநூலும் என்றும் பாடம். குழலிலினிய என்றும் பாடம். துறையறியா நீரிழிந்து என்றும் பாடம். செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை (எண் - பக்கவெண்) அடக்க 37 அறமனத்தார் 8 ஆற்றலிலா 9 ஆன்றவிந்த 18 ஈத்தவகை 21 உடம்பாடி 12 உண்ணாது 17 உரனுடையா 18 எருதிலுழ 6 எழிலி 33 ஏமமில் 24 ஒழுக்க 32 கல்லாதா 27 கள்ளில்லா 11 கள்ளுண்பான் 32 குலத்துப் 19 குறியறியான் 30 கொடுக்கும் 36 கொடுங்கோல் 5 சிறையில் கரு 7 சிறையில்லா 23 தலைதண்ட 13 தன்னைத்தான் 31 நட்டாரிடுக் 24 நறியமலர் 35 நெடுமர 29 பகல்போலு 9 பண்ணமையா 30 பந்தமில் 3 பார்ப்பாரிற் 4 பிறன்மனையாள் 35 புல்லார் 16 பெரியாரோ 25 பெருமை 26 பொருளிலான் 37 பொருளுணர்வா 11 மணியிலாக் 14 மாரிநாட் 20 முக்கட் 1 யானையின் 22 வணரொலி 15 கார் நாற்பது முகவுரை கார்நாற்பது என்பது கடைச்சங்கப் புலவர் களியற்றிய பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்று. கீழ்க் கணக்கு நூல் பதினெட்டென்பது, ‘வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியாற்றாய பனுவலோ டம்மை தானே யடிநிமிர் பின்றே’ என்னும் தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திர வுரையிற் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் உரைக்குமாற்றா னறியலாவது. அவை அம்மை யென்னும் வனப்புடையவாதலும் அவ்வுரையாற் றெளியப்படும். பழைய பனுவல்களை அளவு முதலியன பற்றி மேற் கணக்கெனவும் கீழ்க்கணக் கெனவும் பின்னுளோர் வகைப்படுத் துரைத்தன ராவர். ‘ அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி யறம்பொரு ளின்ப மடுக்கி யவ்வத் திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும்’ என்பது பன்னிரு பாட்டியல். கீழ்க்கணக்குகள் பதினெட்டாவன : நாலடியார், நான்மணிக் கடிகை, இன்னாநாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை யைம்பது, திணைமொழியைம்பது, ஐந்திணை யெழுபது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறு பஞ்சமூலம், இன்னிலை, முது மொழிக்காஞ்சி, ஏலாதி என்பன. இதனை, ‘நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைசொற் காஞ்சியோ டேலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு’ என்னும் வெண்பாவானறிக. இதில் ‘நால்’ என்பதனை ‘ஐந்திணை’ என்பதன் முன்னுங்கூட்டி நாலைந் திணையெனக் கொள்ளவேண்டும். சிலர் கைந்நிலை யென்பது கூட்டி இன்னிலையை விடுத்திடுவர். வேறு சிலர் ஐந்திணையை ஐந்து நூலெனக் கொண்டு இன்னிலை. கைந்நிலை இரண்டனையும் ஒழித்திடுவர். அவர் ‘திணை மாலை’ என்பதொரு நூல் பழைய வுரைகளாற் கருதப்படுவதுண்டாகலின் அதுவே ஐந்திணையுட் பிறிதொன்றாகல் வேண்டுமென்பர். முற்குறித்த வெண்பாவில் ‘ஐந்தொகை’ ‘இன்னிலைய’ ‘மெய்ந்நிலைய’ ‘கைந்நிலை யோடாம்’ ‘நன்னிலைய வாம்’ என்றிவ்வாறெல்லாம் பாடவேற்றுமையும் காட்டுவர். இனி, கார்நாற்பது என்னும் இந்நூலை யியற்றி னார் மதுரைக் கண்ணங்கூத்தனார் எனப்படும் நல்லிசைப் புலவராவர். கூத்தனார் என்னும் பெயருடைய இவர் கண்ணன் என்பார்க்கு மகனா ராதலிற் கண்ணங் கூத்தனார் என்றும், மதுரையிற் பிறந்தமையாலோ இருந்தமையாலோ மதுரைக் கண்ணங்கூத்தனார் என்றும் வழங்கப் பட்டனரெனக் கொள்ளல் வேண்டும். கண்ணனுக்கு மகனாராகிய கூத்தனார் கண்ணங் கூத்தனார் என வழங்கப்படுதற்கு விதி, ‘அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியும் நிற்றலு முரித்தே யம்மென் சாரியை மக்கண முறைதொ கூஉ மருங்கி னான’ என்னும் தொல்காப்பியச் சூத்திரமாகும். இவ்வாசிரியர் கடைச் சங்கப் புலவரென்பது ஒருதலையாயின் இவரது காலம் கி. பி. 200 - க்கு முற்பட்டதெனக் கருதலாகும். இவர் இன்ன பிறப்பினர் எனத் துணிதற்கு இடனின்று. இவரது சமயம் சமணமோ பௌத்தமோ அன்றென்பது தெளிவு. இவர் இந்நூலன்றி வேறு செய்யு ளொன்றும் இயற்றியதாகத் தெரியவில்லை. இந்நூற் செய்யுட்களெல்லாம் அகம் புறம் என்னும் பொருட் பாகுபாட்டினுள் இன்பங் கண்ணிய அகத்தின் பகுதியாகிய முல்லைத் திணையின்பாற் பட்டனவாகும். முல்லையாவது ஒரு தலைமகன் தனக்குரியயாதானும் ஒரு நிமித்தத்தாற் பிரிந்து சென்றவழி அவன் வருந்துணையும் தலைமகள் அவன் கூறிய சொற் பிழையாது கற்பால் ஆற்றியிருத்தலாம். வேந்தற்குந் துணையாகப் போர்புரியச் செல்லு தலுற்ற தலைமகன் ‘கார் காலத்து மீண்டு வருவேன்’ எனக் காலங் குறித்துப் பிரிந்தானாக, அதுகாறும் அரிதின் ஆற்றியிருந்த தலை யன்பினளாய தலைவிக்கு அப்பருவம் வந்தும் அவன் வரத் தாழ்த் திடின் ஆற்றாமை விஞ்சுதல் இயற்கை. அங்ஙனம் விஞ்சுத லுற்ற ஆற்றாமையும் ஆற்றுதலும், ஒன்றி னொன்றிகலி நிற்கும் அந்நிலைமை தலைமகளது அன்பின் பெருமையும் கற்பின் அருமையும் நனி விளங்குதற் குரியதொன் றாகலின் அதுவே பொருளாக இந்நூல் இயற்றப்பட்டதென்க. இதிலுள்ள செய்யுட் களெல்லாம் தலைவி, தோழி, தலைவன் என் போரின் கூற்றுக்களாக வுள்ளன. ஒவ்வொரு செய்யுளிலும் கார் வந்தமை கூறப்படுதலின் இந்நூல் கார் நாற்பது எனப்பட்டது. இதில் முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளும் முதற்பொருளும் அன்றிக் கருப்பொருளிற் பல கூறப்பட்டுள்ளன. இதிலுள்ள உவமைகளெல்லாம் கற்போர்க்கு இன்பம் பயக்குந் தகையன மாயோனையும் பலராமனையும், வேள்வித் தீயையும், கார்த்திகை விளக்கீட்டையும் இவ் வாசிரியர் குறித்திருப்பது கருதற்பாலது. இந்நூற்குப் பழைய பொழிப்புரையொன் றுளது. அவ்வுரை 23 முதல் 38 வரையுள்ள பாடல்களுக்குக் கிடைத்திலது. சின்னாளின் முன்னரும் சிலர் உரையெழுதி யிருக்கின்றனர். அவற்றுள் காலஞ் சென்ற திருவாளர் பி. எஸ். இரத்தி வேலு முதலியார் அவர்கள் எழுதிய விருத்தியுரை முச்சங்கம், பதினெண் கீழ்க் கணக்கு, அகப் பொருளியல் என்பன முதலிய ஆராய்ச் சிகளையும் கொண்டிருப்பது. இதில் காணப்படும் குற்றங் குறைகளைப் பொறுத்தருளுமாறு அறிஞர் களை வேண்டிக் கொள்கின்றேன். “ஞால நின்புக ழேமிக வேண்டும் தென் னால வாயி லுறையுமெம் மாதியே” இங்ஙனம், ந. மு. வேங்கடசாமி நாட்டார். மதுரைக் கண்ணங்கூத்தனார் அருளிய கார்நாற்பது மூலமும் உரையும் தோழி தலைமகட்குப் பருவங் காட்டி வற்புறுத்தது. 1. பொருகடல் வண்ணன் புனைமார்பிற் றார்போல் திருவில் விலங்கூன்றித் தீம்பெய றாழ1 வருது மெனமொழிந்தார் வாரார்கொல் வானங் கருவிருந் தாலிக்கும் போழ்து.2 (பதவுரை.) பொருகடல் வண்ணன் - கரையை மோதுங் கடலினது நிறத்தினையுடைய திருமால், மார்பில் புனை தார் போல் - மார்பில் அணிந்த பூமாலைபோல, திருவில் - இந்திரவில்லை, விலங்கு ஊன்றி - குறுக்காக நிறுத்தி, தீம் பெயல் தாழ - இனிய பெயல் வீழாநிற்க, வருதும் என மொழிந்தார் - வருவோம் என்று சொல்லிப்போன தலைவர். வானம் - மோகமானது. கரு இருந்து - கருக்கொண்டிருந்து, ஆலிக்கும் போழ்து - துளிகளைச் சொரியாநிற்கையில், வாரார் கொல் - வாராரோ? (வருவார்) என்றவாறு. பொருகடல் - வினைத்தொகை, புனைதார் என்க. திரு - அழகு, விரும்பப்படும் தன்மை. திருவில் என்பது இந்திரவில் என்னும் பொருட்டு: ‘திருவிற் கோலி’ என ஐங்குறு நூற்றுள் வருவதுங் காண்க. விலங்கு - குறுக்கு; ‘விலங்ககன்ற வியன் மார்ப’ என்பது புறம். ஆக என்னுஞ் சொல் வருவிக்கப்பட்டது. நீலநிறமுடைய வாளின்கண் பன்னிறமுடைத்தாய் வளைந்து தோன்றும் இந்திரவில் நீலநிறமுடைய மாயோனது மார்பிலணிந்த பன்னிற மலர்த்தாரினைப் போலும் என்க. தாழ - நிகழ்கால வினையெச்சம். வருதும் - தனித்தன்மைப் பன்மை. வருவர் என்பது கிறிப்பாற் போந்தது. (1) இதுவுமது 2. கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த நெடுங்காடு நேர்சினை யீனக் - கொடுங்குழாய் 1 இன்னே வருவர் நமரென் றெழில்வான மின்னு மவர்தூ துரைத்து. (ப-ரை.) கொடுங்குழாய் - வளைந்த குழையை யுடையாய், கடுங் கதிர் நல்கூர - ஞாயிற்றின் வெங்கதிர் மெலிவெய்த, கார் செல்வம் எய்த - கார்ப்பருவம் வளப்பத்தைப் பொருந்த, நெடுங்காடு - நெடிய காடெல்லாம், நேர்சினை ஈன - மிக்க அரும்புகளை யீன, எழில் வானம் - எழுச்சியையுடைய முகில், நமர் இன்னே வருவர் என்று - நமது தலைவர் இப்பொழுதே வருவரென்று, அவர் தூது உரைத்து - அவரது தூதாய் அறிவித்து, மின்னும் - மின்னாநின்றது எ - று. கடுங்கதிர் - அன்மொழித் தொகையாய் ஞாயிற்றை உணர்த்து வதெனக் கோடலும்ஆம். ஞாயிற்றுக்கு வெங்கதிர் செல்வமெனப் படுதலின் அது குறைதலை நல்கூர்தல் என்றார். கார் - ஆகுபெயர். முதலடியிற் பொருள்முரண் காண்க. நேர் - ஈண்டு மிகுதி என்னும் பொருட்டு. கொடுமை - வளைவு. கொடுங்குழை - காதணி. எழில் - அழகுமாம். செயவெனெச்சம் மூன்றும் மின்னும் என்னும் வினை கொண்டன. (2) பருவங் கண்டழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது 3. விரிநிறப் பாதிரி வாட வளிபோழ்ந் தயிர்மணற் றண்புறவி னாலி - புரள உருமிடி வான மிழிய வெழுமே 1 நெருந லொருத்தி திறத்து. (ப-ரை.) வரிநிறப் பாதிரி வாட - வரி நிறத்தை யுடைய பாதிரிப் பூக்கள் வாட, வளிபோழ்ந்து - காற்றினால் ஊடறுக்கப்பட்டு, அயிர் மணல் - இளமணலையுடைய, தண் புறவின் - குளிர்ந்த காட்டின்கண், ஆலி புரள - ஆலங்கட்டிகள் புரள, உரும் இடி வானம் - இடி இடிக்கும் முகில், நெருநல் - நேற்று முதலாக, ஒருத்தி திறத்து - தமித்திருக்கும் ஒருத்தி மாட்டு (அவளை வருத்துவான் வேண்டி,) இழிய - மழை பெய்ய, எழும் - எழாநின்றது எ- று. பாதிரி - ஆகுபெயர்; அது வேனிற்பூ ஆகலின் வாட என்றார். வாட என்றமையின் அது முல்லைக்கண் மயங்காமையோர்க. ‘புன்காற் பாதிரி வரிநிறத் திரள்வீ’ என அகத்தினும் வரிநிறம் கூறப்பட்டமை காண்க. போழ்தல் - ஊடறுத்தல்; ‘வளியிடை, போழப் படாஅ முயக்கு’ என முப்பலினும் இப்பொட்டாயது இது. நீர்திரண்ட கட்டி. உழிய எனப் பாடங் கொள்ளுதல் சிறப்பு; உழிதர என்க. நெருநல் எழும் என முடிக்க. நேற்றுமுதல் தமிமையால் வருந்துவாள் எனினும் மையும். பாதிரி வாட ஆலி புரள வானம் வளி போழ்ந்து ஒருத்தி திறத்து எழும் என வினை முடிவு செய்க. (3) தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது 4. ஆடு மகளிரின் மஞ்ஞை யணிகொளக் காடுங் கடுக்கை கவின்பெறப் 1 பூத்தன பாடுவண் டூதும் பருவம் பணைத்தோளி வாடும் பசலை மருந்து. (ப-ரை.) ஆடும் மகளிரின் - கூத்தாடும் மகளிர் போல, மஞ்ஞை - மயில்கள், அணிகொள - அழகுபெற, காடும் - காடுகளும், கடுக்கை - கொன்றைகள், கவின் பெற - அழகு பெற, பூத்தன - அலர்ந்தன; பாடு வண்டு - பாடுகின்ற வண்டுகளும், ஊதும் - அப்பூக்களை ஊதாநிற்கும்; (ஆதலால்) பணைத்தோளி - மூங்கில் போலும் தோளையுடையாய், பருவம் - இப்பருவ மானது, வாடும் பசலை - வாடுகின்ற நின் பசலைக்கு, மருந்து - மருந்தாகும் எ-று. மகளிரின் என்பதில் இன் உவமப் பொருவு. மஞ்ஞை கார் காலத்திற் களிப்புமிக்கு ஆடதலின் ஆடுமகளிரை உவமை கூறினார். காடும் - உம்மை எச்சப்பொருளது. பூத்தன என்னும் சினைவினை முதலொடும் பொருந்திற்று; காடு முதலும் கடுக்கை சினையுமாகலின். வாடும் - காரணகாரியப் பொருட்டு. (4) இதுவுமது 5. இகழுநர் சொல்லஞ்சிச் சென்றார் வருதல் பகழிபோ லுண்கண்ணாய் பொய்யன்மை யீண்டைப் பவழஞ் சிதறி யவைபோலக் கோபந் தவழுந் தகைய புறவு. (ப-ரை.) பகழிபோல் - அம்புபோலும், உண் கண்ணாய் - மையுண்ட கண்களையுடையாய், ஈண்டை - இவ்விடத்து, பவழம் சிதறியவைபோல் - பவழம் சிந்தியவை போல, புறவு - காடுகள், கோபம் தவழும் தகைய - இந்திர கோபங்கள் பறக்குந் தகைமையை உடைய வாயின; (ஆதலால்) இகழுநர் சொல் அஞ்சி - இகழ்வார் கூறும் பழிக்கு அஞ்சி, சென்றார் - பொருள் தேடச் சென்ற தலைவர், வருதல் - மீளவருதல், பொய் அன்மை - மெய்யாம் எ - று. தமது தாளாண்மையாற் பொருள்தேடி அறஞ் செய்யாதார்க் குளதாவது பழியாகலின் ‘இகழுநர் சொல் லஞ்சி’ எனப்பட்டது. வடிவானும் தொழி லானும் கண்ணுக்குப் பகழி உவமம். பொய்யன்மை - மெய்ம்மை. ஈண்டைப் பவழஞ் சிதறியவை என்றமை யால் தலைமகள் வருத்த மிகுதியால் தான் அணிந் திருந்த பவழ வடத்தை அறுத்துச் சிந்தினாளென்பது கருதப்படும். ஈண்டை - குற்றுகரம் ஐகாரச் சாரியை யேற்றது. கோபம் - கார்காலத்தில் தோன்றுவதொரு செந்நிறப்பூச்சி; தம்பலப்பூச்சி யென்பர். (5) இதுவுமது 6. தொடியிட வாற்றா தொலைந்ததோ ணோக்கி வடுவிடைப் போழ்ந்தகன்ற கண்ணாய் வருந்தல் கடிதிடி வான முரறு நெடுவிடைச் 1 சென்றாரை நீடன்மி னென்று. (ப-ரை.) வடு இடை - மாவடுவின் நடுவே, போழ்ந்து - பிறந்தாற்போலும், அகன்ற கண்ணாய் - பரந்த கண்களையுடையாய், கடிது இடி வானம் - கடுமையாய் இடிக்கும் முகில், நெடு இடை சென்றாரை - நெடிய வழியிற் சென்ற தலைவரை, நீடன்மின் என்று - காலந் தாழ்க்கா தொழிமின் என்று சொல்லி, உரறும் - முழங்காநிற்கும்; (ஆதலால்) தொடிஇட ஆற்றா - வளையிடுதற்கு நிரம்பாவாய், தொலைந்த - மெலிந்த, தோள் நோக்கி - தோள்களைப் பார்த்து, வருந்தல் - வருந்தாதே எ - று. ஆற்றா - எதிர்மறை வினையெச்சமுற்று. தொடி யிடவாற்றா தொலைந்த தோள் என்றது உறுப்பு நலனழிதல் கூறியவாறு; ‘தொடியொடு தொல்கவின் வாடிய தோள்’ என்பது முப்பால். போழ்ந்தால் என்பது போழ்ந்து எனத் திரிந்துநின்றது. உவமவுருபு தொக்கது. நெடுவிடை - மருபின்பாற்படும்; நெட்டிடை என்பதே பயின்ற வழக்காகலின். (6) இதுவுமது 7. நச்சியார்க் கீதலு நண்ணார்த் தெறுதலுந் தற்செய்வான் சென்றார்த் தரூஉந் தளரியலாய் பொச்சாப் பிலாத புகழ்வேள்வித் தீப்போல எச்சாரு மின்னு மழை. (ப-ரை.) தளர் இயலாய் - தளர்ந்த இயல்பினை யுடையாய், நச்சியார்க்கு - தம்மை விரும்பியடைந் தார்க்கு, ஈதலும் - கொடுத்தலும், நண்ணார் - அடையாத பகைவரை, தெறுதலும் - அழித்தலும், தற்செய்வான் - தம்மை நிலைநிறுத்துவனவாக நினைத்து, (அவற்றின் பொருட்டு) சென்றார் - பொருள் தேடச் சென்ற தலைவரை, பொச்சாப்பு இலாத - மறப்பில்லாத, புகழ் - புகழையுடைய, வேள்வித் தீப்போல - வேள்வித் தீயைப்போல, எச்சாரும் - எம்மருங்கும், மின்னும் - மினனாநிற்கும், மழை - வானமானது, தரூஉம் - கொண்டு வரும் எ-று. அறஞ் செய்தற்கும் பகைதெறுதற்கும் பொருள் காரணமாதலை ‘அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும், பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும் . . . . . . தருமெனப், பிரிவெண்ணிப் பொருள் வயிற் சென்ற நங்காதலர்’ என்னும் பாலைக்கலி யானு மறிக. தற்செய்வான் சென்றார் - பன்மை யொருமை மயக்கம்; சில சொற்கள் வருவிக்கப்பட்டன. ‘தளிரியலாய்’ என்பது பாடமாயின் தளிர்போலும் சாயலையுடையாய் என்று பொருள் கூறப்படும். பொச்சாப்பின்றிச் செய்தலாற் புகழுண்டாம் ஆகலின் ‘பொச்சாப்பிலாத என்னும் பெயரெச்சம் காரணப் பொருட்டு; ‘பொச்சாப்பார்க்கில்லை புகழ்மை’ என்பது திருள்ளுவப் பயன். வேள்வித்தீ உவமம். அது மழைக்குக் காரணமென்பதற்கு ஞாபகமாகவும் உள்ளது. (7) இதுவுமது 8. மண்ணியன் ஞாலத்து மன்னும் புகழ்வேண்டிப் பெண்ணிய னல்லாய் பிரிந்தார் வரல்கூறும் தண்ணிய லஞ்சனந் தோய்ந்தபோற் காயாவும் நுண்ணரும் பூழ்த்த புறவு. (ப-ரை.) பெண் இயல் நல்லாய் - பெண் தகைமையையுடைய நல்லாய், மண் இயல் ஞாலத்து - மண்ணானியன்ற உலகத்து, மன்னும் புகழ் வேண்டி - நிலைபெறும் புகழை விரும்பி, பிரிந்தார் - பிரிந்து சென்ற தலைவர், வரல் - மீண்டு வருதலை, கண் இயல் அஞ்சனம் - கண்ணிற்கு இயற்றப்பட்டமையை, தோய்ந்தபோல் - தோய்ந்தவை போல, காயாவும் - காயாஞ் செடிகளும், நுண் அரும்பு ஊழ்த்த - நுண்ணிய அரும்புகள் மலரப்பேற்ற, புறவு - காடுகள். கூறும் - சொல்லா நிற்கும் எ-று. பெண் இயல் - நாண் முதலியன; ‘அச்சமு நாணு மடனு முந்துறுத்த நிச்சமும் பெண்பாற் குரியவென்ப’ என்று தொல்காப்பியம் கூறுவதுங் காண்க. காயா மலர் அஞ்சனந் தோய்ந்தாற் போலும் என்பதனை, ‘செறியிலைக் காயா அஞ்சன மலர’ என்னும் முல்லைப் பாட்டானும் அறிக. ஊழ்த்தல் - மலர்தல்; ‘இணரூழ்த்து நாறாமலர்’ என்பது திருக்குறள். புறவு பிரிந்தார்வரல் கூறும் என முடிக்க. (8) இதுவுமது 9. கருவிளை கண்மலர்போற் பூத்தன கார்க்கேற் றெரிவனப் புற்றன தோன்றி - வரிவளை முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும் இன்சொற் பலவு முரைத்து. (ப-ரை.) கண்மலர்போல் பூத்தன - கண்மலர் போலப் பூத்தனவாகிய, கருவிளை - கருவிளம்பூக்களும், கார்க்கு ஏற்று - கார்ப்பருவத்திற் கெதிர்ந்து, எரி வனப்பு உற்றன - தீயினது அழகையுற்றனவாகிய, தோன்றி - தோன்றிப் பூக்களும், வரிவளை முன் கை இறப்ப - வரியையுடைய வளைகள் முன்னங் கையினின்று கழல, இன்சொல் பலவும் உரைத்து - இனிய சொற்கள் பலவும் மொழிந்து, துறந்தார் - பிரிந்து சென்ற தலைவர், வரல் - வருதலை, கூறும் - கூறாநிற்கும் எ-று. கருவிளை - கருங்காக்கணம்பூ; அது கண் போலும் என்பதனைக் ‘கண்ணெனக் கருபிளை மலர’ என்னும் ஐங்குறு நூற்றானு மறிக. தோன்றிப்பூச் செந்நிற ஒளியுடையது; ‘சுடர்ப் பூந்தோன்றி’ என்பது பெருங்குறிஞ்சி, ‘தோடார் தோன்றி குருதி பூப்ப’ என்றார் பிறரும். உரைத்து இறப்பத் துறந்தார் என்க. கருவிளையும் தோன்றியும் துறந்தார் வரல் கூறும் என முடிக்க, (9) இதுவுமது 10 வானேறு வானத் துரற வயமுரண் ஆனேற் றொருத்த லதனோ டெதிர்செறுப்பக் கான்யாற். றொலியிற் கடுமான்றே ரென்றோழி மேனி தளிர்ப்ப வரும். (ப-ரை.) என் தோழி - எனது தோழியே, வான்ஏறு - இடியேறு, வானத்து உரற - முகிலின்கண் நின்று ஒலிப்ப, வய - வலியினையும், முரண் - மாறு பாட்டினையும் உடைய, ஆன் ஏறு ஒருத்தல் - எருமையின் ஆணாகிய ஒருத்தல், அதனோடு - அவ்விடியேற்றுடன்; எதிர் செறுப்ப - எதிராகி வெகுள, கடுமான்தேர் - விரைந்த செலவினையுடைய குதிரை பூட்டப்பட்ட நம் காதலர் தேர், கான் யாற்று ஒலியின் - காட்டாற்றின் ஒலிபோலும் ஒலியினையுடைத்தாய், மேனி தளிர்ப்ப - நின்மேனி தழைக்க, வரும் - வாரா நிற்கின்றது எ-று. வய - வலி; ‘வயவலியாகும்’ என்பது தொல் காப்பியம். ஆன் என்னும் பெயர் எருமைக் குரித்தாதலும் ஒருத்தல் என்னும் பெயர் அதன் ஆணுக்குரித்தாதலும் தொல்காப்பிய மரபியலானறிக; இடபம் எனினும் ஆம். தேரொலி அருவியொலி போலும் என்பதனை ‘அருவியினொலிக்கும் வரிபுனை நெடுந்தேர்’ என்னும் பதிற்றுப் பத்தானும் அறிக. செயவெனெச்சம் முன்னையவிரண்டும் நிகழ்விலும், பின்னையது எதிர்விலும் வந்தன. (10) இதுவுமது 11. புணர்தரு செல்வந் தருபாக்குச் சென்றார் வணரொலி யைம்பாலாய் வல்வருதல் கூறும் அணர்த்தெழு பாம்பின் றலைபோற் புணர்கோடல் பூங்குலை யீன்ற புறவு (ப-ரை) வணர் - குழற்சியையுடைய, ஒலி - தழைத்த, ஐம்பாலாய் - கூந்தலையுடையாய், அணர்த்து எழு - மேனோக்கியெழும், பாம்பின் தலைபோல் - பாம்பினது படத்தைப் போல, புணர் கோடல் - பொருந்திய வெண்காந்தள்கள், பூங்குலை ஈன்ற - பூங்கொத்துக் களை யீன்ற, புறவு - காடுகள், புணர்தரு - (இம்மை மறுமை யின்பங்கள்) பொருந்துதலையுடைய, செல்வம் - பொருளை, தருபாக்கு - கொண்டுவர, சென்றார் - பிரிந்து சென்ற தலைவர், வல் வருதல் - விரைந்து வருதலை, கூறும் - கூறாநிற்கின்றன எ - று. தருபாக்கு - வினையெச்சம், வணர் - வளைவு; ஈண்டுக் குழற்சி. ஒலி - தழைத்தல்; இஃதிப் பொருட்டாதலை ‘ஒலி நெடும்பீலி’ என்னும் நெடுநல்வாடையடி உரையானறிக. ஐம்பால் - ஐந்து பகுப்பினையுடையது; கூந்தல். ஐந்து பகுப்பாவன; குழல், கொண்டை, சுருள், பனிச்சை, முடியென்ப. இங்ஙனம் ஒரொவொருகால் ஒவ்வொரு வகையாக வன்றி, ஓரோப்பனையிற்றானே ஐந்து வகையாற் பிரித்து முடிக்கப்படுவது என்று கோடலும் ஆம். ‘வணரொலி யைம்பாலார்’ என இன்னாநாற்பதிலும் இத்தொடர் வந்துள்ளமை காண்க. (11) இதுவுமது 12. மையெழி லுண்கண் மயிலன்ன சாயலாய் ஐயந்தீர் காட்சி யவர்வருதல் திண்ணிதாம் 1 நெய்யணி குஞ்சரம் போல விருங்கொண்மூ வைகலு மேரும் வலம். (ப-ரை) மை எழில் - கருமையும் அழகும் பொருந்திய, உண் கண் - மையுண்ட கண்களையுடைய, மயில் அன்ன சாயலாய் - மயில் போலும் சாயலினை யுடையாய் நெய் அணி குஞ்சரம்போல - எண்ணெய் பூசப்பட்ட யானைகள்போல, இருங்கொண்மூ - கரிய மேகங்கள், வைகலும் - நாடோறும், வலம் வரும் - வலமாக எழாநின்றன; (ஆதலால்) ஐயம் தீர் காட்சி - ஐயந்தீர்ந்த அறிவினை யுடைய, அவர் - நம் தலைவர், வருதல் திண்ணிது - மீள வருதல் உண்மை எ - று. சாயல் - மென்மை; உரிச்சொல் ஐயந்தீர்ந்த எனவே திரிபின்மையும் பெற்றாம். காட்சி - அறிவு. காட்டியவர் எனக் குறிப்புவினைப் பெயராக்கலும் ஒன்று பொய் உள்ளீடில்லாததாகலின் உண்மையைத் ‘திண்ணிது’ என்றார். ஆம் - அசை. இருமை - கருமை; பெருமையுமாம். ஏர்தல் - எழுதல்; ‘பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு’ என்பது முல்லைப் பாட்டு. (12) இதுவுமது 13. ஏந்தெழி லல்குலா யேமார்ந்த 1 காதலர் கூந்தர் வனப்பிற் பெயறாழ - வேந்தர் களிறெறி வாளரவம் போலக்கண் வெளவி ஒளிறுபு மின்னு மழை. (ப-ரை) எழில் - அழகினையுடைய, ஏந்து அல்குலாய் - ஏந்திய அல்குலையுடையாய், ஏம் ஆர்ந்த காதலர் - தம் தலைவரொடு கூடி இன்பந் துய்த்த மகளிரின், கூந்தல் - சரிந்த கூந்தலினது, வனப்பின் - அழகு போல, பெயல் தாழ - மழை பெய்ய, மழை - முகில், வேந்தர் களிறு எறி - அரசர்யானையை வெட்டி வீழ்த்துகின்ற, அரவம் - ஒலியினையுடைய, வாள் போல - வாளிளைப்போல, கண் வெளவி - கண்களைக் கவர்ந்து, ஒளிறுபு - ஒளிவிட்டு, மின்னும் - மின்னா நின்றது; (ஆதலால் நம் காதலர் வருவர்) எ - று. ஏம் - ஏமம்; கடைக்குறை காதலர் - ஈண்டு மகளிரை உணர்த்திற்று. ‘அரவம்’ என்றமையால் மழைக்கு முழக்கம் வருவித்துக் கொள்ளப்படும். மழையின் மின்னுக்கு வாள் உவமமாதலை ‘அருஞ்சமத் தெதிர்ந்த பெருஞ்செய லாடவர், கழித்தெறி வாளி னழிப்பன விளங்கு, மின்னுடைக் கருவியை யாகி நாளுங், கொன்னே செய்தியோ அரவம் - மழையே’ என்னும் அகப்பாட்டhனும் அறிக. கண் வெளவல் - கண்வழுக்குறச் செய்தல். ஒளிறுபு - செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம். காதலர் வருவரென்பது வருவிக்கப்பட்டது. (13) இதுவுமது 14. செல்வந் தரல்வேண்டிச் சென்றநங் காதலர் வல்லே வருத றெளிந்தாம் வயங்கிழாய் முல்லை யிலங்கெயி றீன நறுந்தண்கார் மெல்ல வினிய நகும். (ப-ரை) வயங்கிழாய் - விளங்காநின்ற அணிகளை யுடையாய், முல்லை - முல்லைக்கொடிகள், இலங்கு - விளங்குகின்ற, எயிறுஈன - மகளிரின் பற்களைப் போலும் அரும்புகளை ஈனும் வகை, நறு தண்கார் - நல்ல குளிர்ந்த மேகம், மெல்ல இனிய நகும் - மெல்ல இனியவாக மின்னாநின்றன; (ஆதலால்) செல்வம் தரல்வேண்டி - பொருள் தேடிக்கொள்ளுதலை விரும்பி, சென்ற - பிரிந்து சென்ற, நம் காதலர் - நமது தலைவர், வல்லே வருதல் - விரைந்து வருதலை, தெளிந்தாம் - தெளிய அறிந்தாம் எ - று வல்லே என்பதில் ஏகாரம் அசை; தேற்றமும் ஆம். தெளிந்தாம் - உளப்பாட்டுத் தன்மைப் பன்மை. எயிறு போலும் அரும்பினை எயிறென்றார். ‘முல்லையெ யிறீன’ என்பது ஐந்திணையெழுபது. நறு - நல்ல; இஃதிப்பொருட்டாதலைப் ‘பொலனறுந் தெரியல்’ என்பதானும் அறிக. (14) இதுவுமது 15. திருந்திழாய் காதலர் தீர்குவ ரல்லர் குருந்தின் குவியிண ருள்ளுறை யாகத் திருந்தி னிளிவண்டு பாட விருந்தும்பி இன்குழ லூதும் பொழுது. (ப-ரை) திருந்திழாய் - திருந்திய அணிகளை யுடையாய், குருந்தின் - குருநத மரத்தின், குவி இணர் உள் - குவிந்த பூங் கொத்துக்களின் உள்ளிடமே, உறை ஆக - தமக்கு உறையிடமாக இருந்து, திருந்து இன் இளி - திருந்திய இனிய இளியென்னும் பண்ணை, வண்டுபாட - வண்டுகள் பாட, இரும் தும்பி - கரிய தும்பிகள், இன்குழல் ஊதும்பொழுது - இனிய குழலை ஊதாநிற்கும் இக்காலத்தில், காதலர் - நம் தலைவர், தீர்குவர் அல்லர் - நம்மை நீங்கியிருப்பாரல்லர் எ - று. திருந்து இழை என்னும் இரு சொல்லும் தொக்க வினைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைப் பெயர் விளியேற்றுத் திருந்திழாய் என்றாயது; வயங்கிழாய் போல்வனவும் இன்ன. உறை என்னும் முதனிலைத் தொழிற்பெயர் உறையும் இடத்திற்காயிற்று; உள்ளுறை என்பதனை உறையுள் என மாறுதலும் ஆம். இளி - பஞ்சம சுரம். ‘குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட, மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய, மயிலாடரங்கின் மந்திகாண் பன காண்’ என்பது மணிமேகலை. (15) இதுவுமது 16. கருங்குயில் கையற மாமயி லாலப் பெருங்கலி வான முரறும் - பெருந்தோள் 1செயலை யிளந்தளி ரன்னநின் மேனிப் பசலை பழங்கண் கொள. (ப-ரை) பெருந்தோள் - பெரிய தோளினை யுடையாய், செயலை - அசோகினது, இளந்தளிர் அன்ன - இளந்தளிர் போன்ற, நின்மேனி - உன் உடம்பினது, பசலை - பசலையானது, பழங்கண் கொள - மெலிவு கொள்ளவும், கருங்குயில் - கரிய குயில்கள், கையற - செயலற்றுத் துன்பமுறவும், மா மயில் - பெரிய மயில்கள், ஆல - களித்து ஆடவும், பெருங் கலிவானம் - பெரிய ஒலியையுடைய முகில்கள், உரறும் - முழங்காநிற்கும் எ - று. கையறல் - ஈண்டுக் கூவாதொடுங்குதல்; கார் காலத்தில் குயில் துன்புறலும் மயில் இன்புறலும் இயற்கை. ஆல - அகல; ஆட. பசலை - காதலர்ப் பிரிந்தார்க்கு உளதாகும் நிறவேற்றுமை. பழங்கண் - மெலிவு; ‘பழங்கணும் புன்கணும்’ மெலிவின் பால’ என்பது திவாகரம். *பசலை பழங்கண் கொள என்றது தலைவர் வருகையால் தலைவி மகிழ்ச்சியுற என்றபடி. (16) இதுவுமது 17. அறைக்க லிறுவரைமேற் பாம்பு சவட்டிப் பறைக்குர லேறொடு பௌவம் பருகி உறைத்திருள் கூர்ந்தன்று வானம் பிறைத்தகை கொண்டன்று பேதை நுதல். (ப-ரை) பேதை - பேதாய், வானம் - மேகமானது, பௌவம் பருகி - கடல் நீரைக் குடித்து, பறைக்குரல் ஏறொடு - பறையொலி போலும் ஒலியையுடைய இடியேற்றாலே, பாம்புசவட்டி - பாம்புகளை வருத்தி, அறைக்கல் - பாறைக் கற்களையுடைய, இறுவரைமேல் - பக்க மலையின்மேல், உறைத்து - நீரைச்சொரிந்து; இருள்கூர்ந்தன்று - இருள்மிக்கது; (ஆதலால்) நுதல் - உனது நெற்றி, பிறைத்தகை - பிறை மதியின் அழகை, கொண்டன்று - கொண்டதே எ - று. இறுவரை - பக்கமலை சவட்டி - வருத்தி; ‘மன்பதை சவட்டுங் கூற்றம்’ எனப் பதிற்றுப்பத்திலும் இச்சொல் இப்பொருளில் வந்துள்ளமை காண்க; இது ‘கடிசொல்லில்லைக் காலத்துப்படினே’ என்பதனாற் போந்தது. பௌவம் - ஆகுபெயர். உறைத்தல் - துளித்தல்; சொரிதல். கூர்ந்தன்று - கூர் என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த உடம்பாட்டு வினை முற்று. இருள் கூர்ந்தன்று - ஒரு சொல்லாய் வானம் என்னும் எழுவாய்க்கு முடிபாயிற்று. (17) இதுவுமது 18. கல்பயில் கானங் கடந்தார் வரவாங்கே நல்லிசை யேறொடு வான் நடுநிற்பச் செல்வர் மனம்போற் கவினீன்ற நல்கூர்ந்தார் மேனிபோற் புல்லென்ற காடு. (ப-ரை) கல்பயில் - மலைநெருங்கிய, கானம் கடந்தார் - காட்டைக் கடந்து சென்ற தலைவர், வர - வரும்வகை, ஆங்கே - அவர் வருங்காலம் வந்த பொழுதே, வானம் - மேகங்கள், நல் இசை - மிக்க ஒலியையுடைய, ஏறொடு - உருமேற்றுடனே, நடுநிற்ப - நடுவுநின்று எங்கும் பெய்தலால், நல்கூர்ந்தார் மேனிபோல் - வறுமையுற்றார் உடம்புபோல, புல்லென்ற - (முன்பு) பொலிவிழந்த, காடு - காடுகள், செல்வர் மனம் போல் - பொருளுடையார் மனம் போல, கவின் ஈன்ற - அழகைத் தந்தன எ - று. நல் - ஈண்டு மிக்க என்னும் பொருளது; ‘நன்று பெரிதாகும்’ என்னும் தொல்காப்பியச் சூத்திரம் இங்கு நோக்கற்பாலது. கடந்தார் வர ஆங்கே வானம் நடுநிற்பக் காடு கவினீன்ற என வினைமுடிவு செய்க; வர நடுநிற்ப ஆங்கே கவினீன்ற என முடிப்பினும் அமையும். (18) வினைமுற்றிய தலைமகன் பாகற்குச் சொல்லியது. 19. நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச் செங்கான் மராஅந் தகைந்தன - பைங்கோற் றொடிபொலி முன்கையாள் தோடுணையாவேண்டி நெடுவிடைச் சென்றதென் னெஞ்சு. (ப-ரை) நாஞ்சில் வலவன் - கலப்பைப் படை வென்றியை யுடையவனது, நிறம்போல - வெண்ணிறம் போல, பூஞ்சினை - பூங்கொம்பினையும், செங்கால் - செவ்வியதாளினையு முடைய, மராஅம் - வெண் கடம்புகள், தகைந்தன - மலர்ந்தன; (ஆதலால்) என் நெஞ்சு - என் மனம், பைங்கோல் தொடி - பசுமையாகிய திரண்ட வளைகள், பொலி - விளங்குகின்ற, முன்கையாள் - முன்னங்கையையுடையாளின், தோள் - தோள்கள், துணையாவேண்டி - எனக்குத் துணையாக வேண்டி, நெடு இடைச் சென்றது - நெடிய காட்டுவழியைக் கடந்து சென்றது எ - று. நாஞ்சில் வலவன் - பலராமன்; அவன் வெண்ணிற முடைய னென்பதனையும், கலப்பைப் படையால் வெற்றியுடைய னென்பதனையும் ‘கடல்வளர் புரிவளை புரையுமேனி, அடல்வெந் நாஞ்சிற் பனைக் கொடி யோனும்’ என்னும் புறப்பாட்டானு மறிக. மராஅம் - வெண்கடம்பு; ‘செங்கான் மரா அத்த வாலிணர்’ என்னும் திருமுருகாற்றுப்படையானும் மராஅம் செங்காலும் வாலிணரு முடைத்தாதல் காண்க. ‘ஒருகுழை யொருவன்போ லிணர்சேர்ந்த மராஅமும்’ எனப் பாலைக்கலியிலும் வெண்கடம்பின் பூங்கொத்திற்குப் பலராமன் உவமை கூறப்பட்டிருத்தல் ஓர்க. தகைதல் - மலர்தல்; இஃதிப் பொருட்டாதலைப் ‘பிடவுமுகை தகைய’ (ஐங்குறுநூறு) என் புழிக் காண்க. நெடுவிடைக்கு முன்புரைத்தாங் குரைத்துக் கொள்க. (19) இதுவுமது 20. வீறுசால் வேந்தன் வினையு முடிந்தன ஆறும் பதமினிய வாயின - ஏறோ - ருமணி நாக மனுங்கச் செருமன்னர் சேனைபோற் செல்லு மழை. (ப-ரை) வீறுசால் - சிறப்பமைந்த, வேந்தன் - அரசனுடைய, வினையும் - போர்த்தொழில்களும், முடிந்தன - முற்றுப்பெற்றன; ஆறும் - வழிகளும், பதம் இனிய ஆயின - செவ்வி யினியவாயின; மழை - மேகங்கள், அருமணி - அரிய மணியை யுடைய, நாகம் - பாம்புகள், அனுங்க - வருந்தும் வகை, ஏறொடு - உருமேற்றுடனே, செருமன்னர் சேனை போல் - போர்புரியும் வேந்தரின் சேனைபோல, செல்லும் - செல்லாநிற்கும்; (ஆதலால் நாம் செல்லக் கடவேம்) எ - று. இடியோசையால் நாகம் வருந்துதலை ‘விரிநிற நாகம் விடருளதேனும்; உருமின்கடுஞ்சினஞ் சேணின்று முட்கும்’ என்னும் நாலடியானறிக. ‘முதிர்மணி நாக மனுங்க முழங்கி’ என்னும் திணைமொழியைம்பதும் ஈண்டு நோக்கற்பாலது. அணியணியாய் விரைந்து சேறலும் முழங்கலும் அம்பு சொரிதலும் பற்றிச் சேனை உவமமாயிற்று. (20) இதுவுமது 21. பொறிமாண் புனைதிண்டேர் போந்த வழியே சிறுமுல்லைப் போதெல்லாஞ் செவ்வி - நறுநுதற் செல்வ மழைத்தடங்கட் சின்மொழிப் பேதைவாய் முள்ளெயி றேய்ப்ப வடிந்து (ப-ரை) பொறிமாண் - எந்திரச் செய்கைகளான் மாட்சி மைப்பட்ட, புனை திண் தேர் - அலங்கரிக்கப் பட்ட திண்ணிய தேர், போந்த வழியே - வந்த வழியிதே, சிறு முல்லைப் போது எல்லாம் - சிறிய முல்லையின் அரும்புகளெல்லாம், வடிந்து - கூர்மையுற்று, செவ்வி நறுநுதல் - செவ்விய அழகிய நெற்றியையும், செல்வ மழைத் தடங்கண் - வளப்பமான மழைபோற் குளிர்ந்த அகன்ற கண்களையும், சில்மொழி - சிலவாகிய மொழியினையுமுடைய, பேதைவாய் - மடவாளது வாயின்கண் உள்ள, முள் எயிறு - கூரிய பற்களை, ஏய்ப்ப - ஒவ்வாநிற்கும் எ - று. சின்மொழி - மெல்லிய மொழியுமாம், ‘முள்ளெயி றொக்க வடிவு பட்டு’ என்று பொருளுரைத்து, ‘நின்றது’ என்னும் பயனிலை தொக்கது என்றுரைப்பர் பழைய வுரைகாரர். இப்பொருளில் ‘ஏய்ப்ப’ என்பது வினையெச்சம். (21) இதுவுமது 22. இளையரு மீர்ங்கட் டயர வுளையணிந்து புல்லுண் கலிமாவும் பூட்டிய - நல்லார் இளநலம் போலக் கவினி வளமுடையார் ஆக்கம்போற் பூத்தன காடு. (ப-ரை) இளையரும் - சேவகரும், ஈர்ங்கட்டு அயர - குளிர் காலத்திற்குரிய உடையினை உடுக்க, உளை அணிந்து - தலையாட்டம் அணிந்து, புல்உண் - புல்லினையுண்ட, கலிமாவும் - மனஞ் செருக்கிய குதிரையையும், பூட்டிய - தேருடன் பூட்டுதலைச் செய்ய, காடு - காடுகள், நல்லார் - நற்குணமுடைய மகளிரின், இள நலம் போல - இளமைச் செவ்விபோல, கவினி - அழகுற்று, வளம் உடையார் - வருவா யுடையாரது, ஆக்கம்போல் - செல்வம்போல, பூத்தன - பொலிவுற்றன எ - று. இளையர் - சேவகர்; ஏவலாளர் ஈர்ங்கட்டயர என்பதற்கு அழகிதாகக் கட்டியுடுத்தலைச் செய்ய என்றனர் பழையவுரைகாரர். உளை - தலையாட்டம்; சாமரை யெனவும்படும்; இது கவரிமான் மயிராற் செய்து குதிரையின் தலையிலணியப்படுவது. பூட்டிய - செய்யிய என்னும் வினையெச்சம். இளநலம் என்புழி நலம் வடிவுமாம். வளம் வருவாயாதலை ‘வளத்தக்காள் வாழ்க்கைத் துணை’ என்பதற்குப் பரிமேலழகர் உரைத்த உரையானறிக. பூத்தல் - பொலிதல்; மலர்தலுமாம். (22) தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது. 23. கண்டிரண் முத்தங் கடுப்பப் புறவெல்லாந் தண்டுளி யாலி புரளப் புயல்கான்று கொண்டெழில் வானமுங் கொண்டன் றெவன் கொலோ ஒண்டொடி யூடு நிலை (ப-ரை) ஒண்டொடி - ஒள்ளிய வளைகளை யணிந்தவளே, புறவு எல்லாம் - காடெங்கும், கண்திரள் முத்தம் கடுப்ப - இடந் திரண்ட முத்தையொப்ப, தண்துளி - குளிர்ந்த நீர்த்துளிகளும், ஆலி – ஆலங் கட்டி களும், புரள - புரளும் வகை, புயல் - மேகம், கான்று கொண்டு - மழை பொழிந்து கொண்டு, எழில் - அழகினையுடைய, வானமும் கொண்டன்று - வானத் திடத்தையெல்லாம் கொண்டது; (ஆதலால்) ஊடு நிலை - பிணங்குந்தன்மை, எவன்கொல் - எற்றுக்கு எ-று. கண்டிரள் முத்தம் என்றது மேனி திரண்ட முத்தம் என்றபடி - அகத்திலும், பிறாண்டும் ‘கண்டிரண் முத்தம்’ என வருதலுங் காண்க. கொல் ஓ - அசைநிலை. தலைவர் வருவர்; இனிப் பிணங்குதல் வேண்டா என்பது குறிப்பு. (23) வினைமுற்றிய தலைமகன் நெஞ்சோடு சொல்லியது 24. எல்லா வினையுங் கிடப்ப வெழுநெஞ்சே கல்லோங்கு கானங் களிற்றின் மதநாறும் பல்லிருங் கூந்தல் பணிநோனாள் கார்வானம் 1மெல்லவுந் தோன்றும் 2பெயல் (ப-ரை) கல் ஓங்குகானம் - முலைகள் உயர்ந்த காடுகள், களிற்றின் மதம் நாறும் - யானையின்மதம் நாறாநிற்கும்; கார் வானம் - கரிய வானத்தின்கண், பெயல் - மழை, மெல்லவும் தோன்றும் - மென்மை யாகத் தோன்றாநிற்கும்; (ஆதலால்) பல் இருங்கு கூந்தர் - பலவாகிய கரிய கூந்தலையுடையவள், பணிநோனாள் - ஆற்றியிருத்தற்கு நான் கூறிய சொல்லை இனிப் பொறுக்கமாட்டாள்; நெஞ்சே - மனமே, எல்லா வினையும் கிடப்ப - எல்லாத் தொழில்களும் ஒழிந்து நிற்க; எழு - நீ போதற்கு ஒருப்படு எ - று. கிடப்ப - வியங்கோள்; வினையெச்சமாகக் கொண்டு கிடக்கும் வகை எனப் பொருளுரைத் தலுமாம். களிற்றின் மதம் நாறும் என்றது கார் காலத்தில் பிடியுடன் இயைந்தாடுதலான் என்க. பணி - பணித்த சொல். எல்லியும் என்று பாடமாயின் இரவிலும் எனப் பொருள் கொள்க. (24) பருவங்கண் டழிந்த தலைமகன் ஆற்றல் வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது. 25. கருங்கால் வரகின் பொரிப்போ லரும்பவிழ்ந் தீர்ந்தண் புறவிற் றெறுழ்வீ மலர்ந்தன சேர்ந்தன செய்குறி வாரா ரவரென்று கூர்ந்த பசலை யவட்கு (ப-ரை) ஈர்ந்தண் புறவில் - குளிர்ச்சி மிக்க காட்டில், கருங்கால் வரகின் பொரிபோல - காரிய தாளினை யுடைய வரகினது பொரியைப்போல, தெறுழ்வீ - தெறுழினது மலர்கள், அரும்பு அவிழ்ந்து மலர்ந்தன - அரும்புகள் முறுக்குடைந்து விரிந்தன; செய்குறி சேர்ந்தன - (தலைவர்) செய்த குறிகள் வந்துவிட்டன; (ஆதலால்) அவர் வாரார் என்று - தலைவர் இனி வரமாட்டாரென்று, அவட்கு - தலைவிக்கு, கூர்ந்த - பசலை மிக்கது எ - று. ஈர்ந்தண் - ஒரு பொரு ளிருசொல். தெறுழ்: காட்ட கத்ததொரு கொடி. கூர்ந்தது என்பதில் ஈறு கெட்டது. (25) தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது. 26. நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப் புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி 1 தூதொடு வந்த மழை. (ப-ரை) சிலமொழி - சிலவாகிய மொழியினை யுடையாய், தோன்றி - தோன்றிப்பூக்கள், நலம்மிகு கார்த்திகை - நன்மை மிக்க கார்த்திகைத் திருவிழாவில், நாட்டவர் இட்ட - நாட்டிலுள்ளோர் கொளுத்தி வைத்த, தலைநாள் விளக்கின் - முதல் நாள் விளக்கைப் போல், தகை உடையவாகி - அழகுடையனவாகி, புலம் எலாம் - இடமெல்லாம், பூத்தன - மலர்ந்தன; மழை தூதொடு வந்த - மழையும் தூதுடனே வந்தது எ - று. கார்த்திகை நாளில் நீரை நிரையாக விளக்கிட்டு விழாக் கொண்டாடும் வழக்கம் பண்டை நாள் தொட்டுள்ளது; ‘குறு முயன் மறுநிறங் கிளர மதிநிறைந், தறுமீன் சேரு மகலிருணடுநாண், மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப், பழவிறன் மூதூர்ப் பலருடன் றுவன்றிய, விழவுடனயர வருகதிலம்ம’ அகநானூற்றிலும், ‘கார்த்திகைச் சாற்றிற் கழிவிளக்கு’ எனக் களவழிநாற்பதிலும், துளக்கில் கபாலீச் சுரத்தான்றொல் கார்த்திகைநாள் . . . . . . விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்’ எனத் தேவாரத் திலும், ‘குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன’ எனச் சிந்தாமணியிலும் இத்திருவிழாக் கூறப்பெற்றுமை காண்க. தலைநாள் - திருவிழாவின் முதல் நாளாகிய கார்த்திகை; நலமிகு கார்த்திகை என்பதனைக் கார்த்திகைத் திங்கள் எனக் கொண்டு, தலைநாள் என்பதனை அத்திங்களிற் சிறந்த நாளாகிய கார்த்திகை எனக் கொள்ளலும் ஆம்; முன்பு நாட்கள் கார்த்திகை முதலாக எண்ணப் பட்டவாகலின் தலைநாள் என்றார் எனலுமாம். வந்த - ‘கூர்ந்த’ என்புழிப்போல் ஈறு கெட்டது. (26) ஊடுதலாற் பசலைமிகும் எனத் தோழி தலைமகட்குக் கூறி வற்புறுத்தது. 27. முருகியம்போல் வான முழங்கி யிரங்கக் குருகிலை பூத்தன கானம் - பிரிவெண்ணி உள்ளா தகன்றாரென் றூடியாம் பாராட்டப் 1 பள்ளியுட் பாயும் பசப்பு. (ப-ரை) வானம் - மேகம் முருகியம்போல் - குறிஞ்சிப் பறைபோல், முழங்கி இரங்க - முழங்குதலைச் செய்ய, கானம் - காட்டின்கண், குறுகுஇலை பூத்தன - குருக்கத்தியிலை விரிந்தன; பிரிவு எண்ணி - (நம் காதலர்) பிரிதலை நன்றென்று நினைத்து, உள்ளாது அகன்றார் என்று - நம் வருத்தத்தைக் கருதாது சென்றார் என்று, ஊடுயாம் பாராட்ட - நாம் ஊடுதலைப் பாராட்டுவதால், பசப்பு - பசலைநோய், பள்ளியுள் பாயும் - படுக்கை யிடத்தில் பரவும் எ - று. முருகு இயம் - குறிஞ்சிப் பறை விசேடம்; முருகனுக்கு இயக்கப்படுவது; தொண்டகம், துடி என்பனவும் குறிஞ்சிப் பறைகள். முழங்கி இரங்க - ஒரு பொருளிருசொல். குருகு குருக்கத்தி; முருக்கென் பாரும் உளர். இலையென்றமையால் பூத்தலாவது தழைத்தல் எனக் கொள்க. ஊடு - முதனிலைத் தொழிற் பெயர் இகரம் சந்தியால் வந்தது. பள்ளியுட்பாயும் என்றது படுக்கையிற் கிடக்கச் செய்யும் என்னும் குறிப்பிற்று. (27) வினைமுற்றிய தலைமகன் நெஞ்சொடு சொல்லியது 28. இமிழிசை வானம் முழங்கக் குமிழின்பூப் 1 பொன்செய் குழையிற் றுணர்தூங்கத் தண்பதஞ் செவ்வி யுடைய சுரநெஞ்சே காதலியூர் கவ்வை யழுங்கச் செலற்கு (ப-ரை) இமிழ் இசை - ஒலிக்கும் இசையினை யுடைய, வானம் - முகில், முழங்க - முழங்குதலைச் செய்ய, குமிழின் பூ - குமிழின் பூக்கள், பொன் செய் குழையின் - பொன்னாற் செய்யப்பட்ட குழைபோல், துணர் தூங்க - கொத்துக்களாய்த் தொங்க, நெஞ்சே - மனமே, காதலி ஊர் - நம் காதலியது ஊருக்கு, கவ்வை அழுங்க - அலர் கெடும் வகை, செலற்கு - நாம் செல்வதற்கு, சுரம் - காடுகள், தண்பதம் செவ்வி உடைய - குளிர்ந்த பதமும் செவ்வியும் உடைய வாயின எ - று. இமிழ் இசை - இனிய இசையுமாம். சுரம் - காடு; அரு நெறியுமாம். கவ்வை அலர்; ஊரார் கூறும் பழி மொழி. அழுங்கல் - வருந்துதல்; ஈண்டு இலவாதல். (28) இதுவுமது 29. பொங்கரு ஞாங்கர் மலர்ந்தன தங்காத் தகைவண்டு பாண்முரலுங் கானம் - பகை கொண்ட லெவ்வெத் திசைகளும் வந்தன்று சேறுநாஞ் செவ்வி யுடைய சுரம். (ப-ரை) பொங்கரும் - சோலைகளெல்லாம், ஞாங்கர் - பக்கங்களில், மலர்ந்தன - பூத்தன; கானம் - காட்டின் கண்ணே, தங்கா - தங்குதலின்றித் திரியும், தகை வண்டு - அழகையுடைய வண்டுகள், பாண்முரலும் - இசைப்பாட்டைப் பாடா நின்றன; பகை கொண்டல் - பகைத் தெழுந்த மேகம், எவ்வெத்திசைகளும் - எல்லாத் திசைக் கண்ணும், வந்தன்று - வந்தது; சுரம் - காடுகளும், செவ்வி உடைய - தட்பமுடையவாயின; (ஆதலால்) நாம் சேறும் - நாம் செல்லக்கடவேம் எ - று. பொங்கர் - இலவுமாம். பகைகொண்டல் - வினைத் தொகை. சேறும் என்றது நெஞ்சை உளப் படுத்தி; தேர்ப்பாகற்குக் கூறியதுமாம். (29) இதுவுமது 30. வரைமல்க வானஞ் சிறப்ப வுறைபோழ்ந் திருநிலந் தீம்பெய றாழ - விரைநாற 1 ஊதை யுளரு நறுந்தண்கா பேதை பெருமட நம்மாட் டுரைத்து (ப-ரை) வரைமல்க - மலைகள் வளம் நிறைய - வானம் சிறப்ப - வானகம் சிறப்பெய்த, இருநிலம் - பெரியபூமியை, உறை போழ்ந்து - துளிகளால் ஊடறுத்து, தீம்பெயல் தாழ - இனிய மழை வீழாநிற்க, விரை நாற - நறுமணம் கமழா நிற்க, ஊதை - காற்றானது, பேதை பெருமடம் - காதலியது பெரிய மடப்பத்தை, நம்மாட்டு உரைத்து - நமக்குத் தெரிவித்து, நறுந்தண் கா - நறிய குளிர்ந்த சோலையில், உளரும் - அசையாநிற்கும் (ஆதலால் நீ விரையத் தேரைச் செலுத்துவாய்) எ - று. உறை - நீர்த்துளி; மூன்றன்தொகை. ஊதை - குளிர் காற்று. உளர்தல் - அசைதல்; பேதை பெருமடம் - தலைவர்வாராரென்று கருதி வருந்தியிருக்கும் தலைவியது அறியாமை. (30) வினைமுற்றிய தலைமகன் பாகற்குச் சொல்லியது. 31. கார்க்சே ணிகந்த கரை மருங்கி னீர்ச்சேர்ந் தெருமை யெழிலே றெறிபவர் சூடிச் செருமிகு மள்ளரிற் செம்மாக்குஞ் செவ்வி திருநுதற் கியாஞ்செய் குறி (ப-ரை) எருமை எழில் ஏறு - எருமையினது எழுச்சியையுடைய ஆண், கார்ச்சேண் இகந்த - மேகத்தையுடைய வானின் எல்லையைக் கடந்து உயர்ந்த, கரை மருங்கின் - கரையின் பக்கத்திலுள்ள, நீர்ச்சேர்ந்து - நீரையடைத்து, எறி - எறியப்பட்ட, பவர் - பூங்கொடிகளை, சூடி - சூடிக்கொண்டு, செருமிகு மள்ளரில் - போரின்கண் மறமிக்க வீரரைப் போல, செம்மாக்கும் செவ்வி - இறுமாந்திருக்கும் காலமே, திருநுதற்கு - அழகிய நெற்றியையுடையாளுக்கு, யாம் செய்குறி - நாம் மீள்வதற்குச் செய்த குறியாகும்; (ஆதலால் விரைந்து தேர் செலுத்துவாய்) எ - று. சேண் - ஆகாயம்; தூரமும் ஆம். எழில் - அழகுமாம். எறி - துணித்த எனினும் பொருந்தும். பவர் - கொடி, ‘அரிப்பவர்ப் பிரம்பின்’ எனக் குறுந் தொகையும், ‘நெடுங்கொடியுழிஞைப் பவரொடு மிடைந்து, எனப் புறநானூறும் கூறுதல் காண்க. மள்ளர் - வீரர்; போர்வீரர் வெட்சி, வஞ்சி முதலிய மாலை களைச் சூடித் தருக்கி யிருக்குமாறு போலக் கடாக்கள் பூங்கொடிகளைச் சூடிக் கொண்டு தருக்கியிருக்கும் என்க. ‘மள்ளரன்ன தடங் கோட்டெருமை, மகளிரன்ன துணையொடு வதியும்’ (ஐங்குறுநூறு) என்றார் பிறரும். குற்றியலிகரம் அலகு பெறாதாயிற்று. (31) இதுவுமது 32. கடாஅவுக பாகதேர் காரோடக் கண்டே கெடாஅப் புகழ்வேட்கைச் செல்வர் மனம்போற் படாஅ மகிழ்வண்டு பாண்முரலுங் கானம் பிடாஅப் பெருந்தகை நற்கு (ப-ரை) கெடாப் புகழ்வேட்கை - அழியாத புகழை விரும்புகின்ற, செல்வர் மனம்போல் - செல்வரது மனத்தைப் போல, படா மகிழ் வண்டு - கெடுதலில்லாத மகிழ்ச்சியையுடைய வண்டுகள், கானம் - காட்டின் கண், பிடா - பிடவமாகிய, பெருந்தகை – பெருந்தகை யாளிடத்து, நன்கு - நன்றாக, பாண்முரலும் - இசைப்பாட்டினைப் பாடாநிற்கும்; பாக - பாகனே, கார் ஓடக் கண்டு - மேகம் ஓடுதலைக் கண்டு, தேர் கடாவுக - தேரை விரையச் செலுத்துவாயாக எ - று. இப்பாட்டு நான்கடியிலும் முதற்கண் அள பெடை வந்தன; கடாவுக என்று பாட மோதுவாரு முளர். கார் ஓட என்றமையால் மேகத்தின் விரைந்த செலவு குறிப்பித்தவாறு; ‘கொடுஞ்செலவெழிலி’ என்றார் பிறரும். புகழை விரும்பும் செல்வர் மனம் மகிழ்ச்சி நிறைந்திருக்கு மென்க. பிடவம் - ஒரு செடி; வள்ளன்மை யுடையாரிடத்துப் பாண் மக்கள் பரிசில் கருதிப்பாடுமாறு போலப் பிடவத்தினிடத்துத் தேன் கொளக் கருதிய வண்டுகள் பாடினவென் றுரைக்கப் பட்டது. பெருந்தகை என்புழி ஏழனுருபு தொக்கு நின்றது. நற்கு - வலித்தல் விகாரம். (32) இதுவுமது 33. கடனீர் முகந்த கமஞ்சூ லெழிலி குடமலை யாகத்துக் கொள்ளப் பிறைக்கும் 1 இடமென வாங்கே குறிசெய்தேம் பேதை மடமொழி யெவ்வங் கெட (ப-ரை) கடல்நீர் முகந்த - கடலினது நீரை முகந்த, கமம் சூல் எழிலி - நிறைந்த சூலினையுடைய மேகம், குடமலை ஆகத்து – மேற்கு மலையிடத்து, கொள் அப்பு இறைக்கும் - தான் கொண்ட நீரினைச் சொரியும், இடம் என - சமய மென்று, ஆங்கே - அப்பொழுதே, பேதை - பேதையாகிய, மடமொழி - மடப்பத்தினையுடைய மொழியையுடை யாளது, எவ்வம் கெட - வருத்தம் நீங்க, குறி செய்தேம் - (மீளுங் காலத்திற்குக்) குறி செய்தேம்; (ஆதலால் தேரினை விரையச் செலுத்துக) எ - று. சூல் போறலின் நீர் சூலெனப்பட்டது; ‘கார் கோண் முகந்த கமஞ்சூன் மாமழை’ என்பது திருமுரு காற்றுப்படை. ஆகம் - அகம் என்பதன் நீட்டல்; மார்பு எனினும் ஆம். கொள்ளப் பிறக்கும் என்பது பாடமாயின் தாரை கொள்ளத் தோன்றும் எனப் பொருளுரைக்கப்படும்; பிறவாறுரைத்தல் பொருந்து மேற் கொள்க. இடம், ஆங்கு என்பன காலத்தை உணர்த்தின. (33) பருவங் கண்டழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது 34. விரிதிரை வெள்ளம் வெறுப்பப் பருகிப் பெருவிறல் வானம் பெருவரை சேருங் கருவணி காலங் குறித்தார் திருவணிந்த ஒண்ணுதல் மாதர் திறத்து. (ப-ரை) பெருவிறல் வானம் - மிக்க பெருமையை யுடைய மேகம், விரிதிரை வெள்ளம் - விரிந்த அலையை யுடைய கடலினது நீரை, வெறுப்பப் பருகி - நிறைய உண்டு, பெருவரை சேரும் - பெரிய மலையை அடையா நிற்கும், கரு அணி காலம் - கருக்கொள்ளுங் காலத்தை, திரு அணி - தெய்வவுத்தியென்னும் தலைக் கோலத்தை யணிந்த, ஒள்நுதல் - ஒள்ளிய நெற்றியை யுடைய, மாதர் திறத்து - காதலியிடத்து, குறித்தார் - (தலைவர் தாம் மீண்டுவருங் காலமாகக்) குறிப்பிட்டார் எ -று. வெறுத்தல் - செறிதல், நிறைதல்; உரிச்சொல். கெடுப்பதும் எடுப்பதும் ஆகிய எல்லாம் வல்லது மழை யாகலின் ‘பெருவிறல் வானம்’ என்றார். கருஅணி காலம் - மழை சூற்கொள்ளும் கார்காலம். திரு - சீதேவி என்னுந் தலையணி; இது தெய்வ வுத்தியென்றுங் கூறப்படும்; ‘தெய்வவுத்தியொடு வலம்புரி வயின் வைத்து’ என்பது திருமுருகாற்றுப்படை. (34) இதுவுமது 35. 1சென்றநங் காதலர் சேணிகந்தா ரென்றெண்ணி ஒன்றிய நோயோ டிடும்பை பலகூர வென்றி முரசி னிரங்கி யெழில்வானம் நின்று மிரங்கு மிவட்கு. (ப-ரை) சென்ற நம் காதலர் - வினைவயிற் பிரிந்து சென்ற நம் தலைவர், சேண் இகந்தார் என்று எண்ணி - நெடுந்தூரத்தைக் கடந்து சென்றாரென்று நினைத்து, ஒன்றிய நோயோடு - பொருந்திய பசப்பு நோயுடனே, இடும்பை பல கூர - பல துன்பங்களும் மிகப்பெறு தலால், இவட்கு - இவள் பொருட்டு, எழில்வானம் - எழுச்சியையுடைய முகில்,வென்றி முரசின் இரங்கி - வெற்றியை யறிவிக்கும் முரசின் ஒலியைப்போல இடித்து, நின்றும் - வானின்கண் இருந்தும், இரங்கும் - பரிவுறாநிற்கும் எ - று. முரசின் என்பதில் இன் உவமப்பொருவு. நின்றும் என்பதற்குச் சலியாது நின்று என்று பொருள் கூறுவாருமுளர். வானின்கண் உள்ள மேகமும் இரங்கு மியல்பினாள் திறத்துத் தலைவர் இரங்கி வாராதது என்னை யென்றபடி. (35) வினைமுற்றி மீளுந் தலைமகன் பாகற்குச் சொல்லியது. 36. சிரல்வாய் வனப்பின வாகி நிரலொப்பப் ஈர்ந்தண் டளவந் தகைந்தன - சீர்த்தக்க செல்வ மழைமதர்க்கட் சின்மொழிப் பேதையூர் நல்விருந் தாக நமக்கு. (ப-ரை) ஈர் தண் - குளிர்ச்சி மிக்க, தளவம் - செம்முல்லைப் பூக்கள், சிரல் - சிச்சிலிக் குருவியின், வாய் - வாய் போலும், வனப்பின ஆகி - அழகுடை யனவாகி, நிரல் ஒப்ப - வரிசை பொருந்த, தகைந்தன - அரும்பின; (ஆதலால் இப்பொழுது) சீர்த்தக்க - சிறந்த, செல்வம் - செல்வத்தையுடைய, மழை மதர்க்கண் - மழைபோற் குளிர்ந்த மதர்த்த கண்களையும், சில் மொழி - சிலவாகிய மொழியினையு முடைய, பேதை - காதலியது, ஊர் - ஊரானது, நமக்கு நல்விருந்து ஆக - நமக்கு நல்ல விருந்தயரும் இடமாகக் கடவது எ-று. சிரல் - மீன்குத்திக் குருவி. தளவம் - செம்முல்லை; அதன் அரும்பு சிரலின் வாய்போலும் என்பதனை ‘பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை’ என்னும் ஐங்குறுநூற்றானும் அறிக. ஈர்ந்தண் - ஒருபொருளிரு சொல். சீர்த்தக்க - ஒரு சொன்னீர்மைத்து. செல்வத்தை யுடைய பேதை என்க; செல்வமழை எனினும் ஆம். விருந்து - ஆகுபெயர். தலைவன் வினைமுற்றி மீண்ட பின் காதலியுடன் விருந்தயரும் வழக்க முண் டென்பதைனை ‘வினை கலந்து வென்றீக வேந்தன் மனை கலந்து, மாலை யயர்கம் விருந்து’ என்னும் முப்பாலானும் அறிக. (36) தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது 37. கருங்கடல் மேய்ந்த கமஞ்சூ லெழிலி இருங்க லிறுவரை யேறி யுயிர்க்கும் பெரும்பதக் காலையு;ம் வாரார்கொல் வேந்தன் அருந்தொழில் வாய்த்த நமர். (ப-ரை) கருங்கடல் மேய்ந்த - கரிய கடலின் நீரைக் குடித்த, கமம்சூல் - நிறைந்த சூலினையுடைய, எழிலி - மேகம், இரு - பெரிய, கல் - கற்களையுடைய, இறுவரை - பக்கமலையின்மேல், ஏறி உயிர்க்கும் - ஏறியிருந்து நீரைச் சொரியும், பெரும்பதக் காலையும் - மிக்க செவ்வியையுடைய காலத்தும், வேந்தன் - அரசனது, அருந்தொழில் - போர்த் தொழில், வாய்த்த - வாய்க்கப்பெற்ற, நமர் - நம் தலைவர், வாரார் கொல் - வாராதிருப்பாரோ எ-று. கடல் - ஆகு பெயர், சூல் என்றதற்கேற்ப உயிர்க்கும் என்றார். உயிர்த்தல் - நீரைக் காலுதல்; ஒலித்தல் எனினும் ஆம். வாய்த்த என்றதனால் தப்பாது வென்றிருப்பரென்பது குறிப்பித்தவாறாம். போர்த் தொழிலும் முற்றுப்பெற்றுக் காலமும் செவ்வியை உடைத்தாயவழித் தலைவர் வராhதிரார் என்று கூறித் தோழி தலைவியை ஆற்றுவித்தாளென்க. (37) தலைவர் பொய்த்தாரெனக் கூறித் தோழி தலைவியை ஆற்றுவித்தது 38. புகர்முகம் பூழிப் 1புரள வுயர்நிலைய 2 வெஞ்சின வேழம் பிடியோ டியைந்தாடுந் 3 தண்பதக் காலையும் வாரா ரெவன்கொலோ ஒண்டொடி யூடு நிலை. (ப-ரை) உயர்நிலைய - உயர்ந்த நிலையினை யுடைய, வெம் சினம் வேழம் - கடிய கோபத்தினை யுடைய ஆண் யானைகள், புகர்முகம் - புள்ளியினை யுடைய முகம், பூழி புரள - புழுதியிற் புரளும் வகை, பிடியோடு - பெண்யானைகளுடன், இயைந்து ஆடும் - கூடி விளையாடும், தண்பதக் காலையும் - குளிர்ந்த செவ்வியையுடைய காலத்தும், வாரார் - நம் தலைவர் வாராராயினார்; (ஆதலால்) ஒள்தொடி - ஒள்ளிய தொடியினை யுடையாளே, ஊடுநிலை - அவருக்காக நீ பிணங்குந் தன்மை, எவன்கொல் - என்னை எ-று. வேழம் பிடியோடியைந்தாடும் என்றது தலைவர் வருதற்கு ஏதுக் கூறியவாறு. குறித்த பருவம் வந்தும் வாராமையாற் பொய்ம்மையும் வேழம் பிடியோடியைந் தாடுதல் கண்டும் வாராமையால் அன்பின்மையும் உடையராயினார்பால் ஊடுதலாற் பயனென்னை என்று தோழி கூறினா ளென்க. வாரார்கொல்லோ என இயைத்து வருவர் என்று கூறி ஆற்றுவித்தாள் எனப் பொருள் கொள்ளலும் ஆம். (38) இதுவுமது 39. அலவன்க ணேய்ப்ப வரும்பீன் றவிழ்ந்த 1கருங்குர னொச்சிப் பசுந்தழை சூடி இரும்புன மேர்க்கடி கொண்டார் பெருங்கௌவை ஆகின்று நம்மூ ரவர்க்கு. (ப-ரை) அலவன் கண் ஏய்ப்ப - ஞெண்டினது கண்ணினை யொப்ப, அரும்பு ஈன்று - அரும்பினை யீன்று, அவிழ்ந்த - பின் மலர்ந்த, கருங்குரல் - கரிய பூங்கொத்தினையுடைய, நொச்சி - நொச்சியினது, பசுந்தழை சூடி - பசிய தழையைச் சூடிக்கொண்டு, இரும்புனம் - பெரிய புனங்களை, ஏர்க்கடி கொண்டார் - உழவர் புதிதாக ஏருழுவிக்கத் தொடங்கினார்கள்; (ஆதலால்) நம் ஊர் - நம் ஊரின்கண், அவர்க்கு - நம் தலைவர்க்கு, பெருங் கௌவை ஆகின்று - பெரிய அலராயிற்று. எ - று. நொச்சியின் அரும்பு ஞெண்டின் கண்ணுக்கு உவமையாதலை ‘நொச்சி மாவரும் பன்ன கண்ண, எக்கர் ஞெண்டினிருங்கிளைத் தொகுதி’ என்னும் நற்றிணை யானும் அறிக. ஏர்க்கடி கொள்ளுதல் - புதிதாய் ஏருழத் தொடங்குதல்; இதனை ‘நல்லேர்’ என்றும், ‘பொன்னேர்’ என்றும் வழங்குவர். ஆகின்று - உடம்பாட்டு முற்று. (39) பருவம் வந்தமையால் தலைவர் வருதல் ஒருதலையெனக் கூறித் தோழி தலைமகளை ஆற்றுவித்தது 40. வந்தன செய்குறி வாரா ரவரென்று நொந்த வொருத்திக்கு நோய்ரீர் மருந்தாகி இந்தின் 1கருவண்ணங் கொண்டன் றெழில்வானம் நந்துமென் பேதை நுதல். (ப-ரை.) மென்பேதை - மெல்லிய பேதையே, செய்குறி - தலைவர் செய்த குறிகள், வந்தன - வந்துவிட்டன; அவர் வாரார் என்று - தலைவர் வருகின்றிலர் என்று, நொந்த ஒருத்திக்கு - நோதலுற்ற ஒருத்தியாகிய நினக்கு, நோய்தீர் மருந்து ஆகி - நோயைத் தீர்க்கும் மருந்தாகி, எழில்வானம் - அழகிய முகில், இந்தின் கருவண்ணம் - ஈந்தின் கனியினிறம் போலும் கருநிறத்தை, கொண்டன்று - கொண்டது; நுதல் நந்தும் - நினது நுதல் இனி ஒளிவளரப் பெறும் எ-று. இச்செய்யுளைத் தலைவர் மீண்டனரென்று தோழி மகிழ்ந்து தன் நெஞ்சிற்குக் கூறியதாகக் கொண்டு, என் பேதை எனப் பிரித்துப் படர்க்கையாக உரைப்பாரும் உளர், ஈந்து இந்தெனக் குறுகியது; ‘முந்நீரை யிந்துருவின் மாந்தியிருங்கொண்மூ’ என்பது திணைமாலை நூற்றைம்பது. ஈந்து - ஈச்சமரம். (40) முற்றிற்று தீம்பெயல் வீழ என்றும் பாடம். பொழுது என்றும் பாடம். கொடுங்குழை என்றும் பாடம். இழிந்தெழுந் தோங்கும் என்றும் பாடம். கவின்கொள என்றும் பாடம். நெறியிடை என்றும் பாடம். திண்ணிதால் என்றும் பாடம். ஏமார்ந்த என்றும் பாடம். அசோகினிளந்தளிர் என்றும் பாடம். எல்லியும் என்றும் பாடம். 2. செயல் என்றும் பாடம். தோன்றிசின் மென்மொழி என்றும் பாடம். பாராட்டில் என்றும் பாடம். குமிழிணைப்பூ என்றும், குமிழிணர்ப்பூ என்றும் பாடம். திரை நாற என்றும் பாடம். கொள்ளப் பிறக்கும் என்றும் பாடம். சென்று என்றும் பாடம். பூமி புரள என்றும் பாடம். உயர்நிலை என்றும் பாடம். இணைதாழ என்றும் பாடம். கருங்கதிர் என்றும் பாடம். கணிவண்ணம் என்றும், கொண்டது என்றும் பாடம். செய்யுள் முதற்குறிப்பு அகராதி (எண் - பக்கவெண்) அலவன்க 35 சென்றநங் 32 அறைக்கலிறு 16 திருந்திழாய் 14 ஆடுமகளிரின் 4 தொடியிட 6 இகழுநர் 5 நச்சியார் 7 இமிழிசை 26 நலமிகு 23 இளையரு 20 நாஞ்சில் 17 எல்லாவினை 22 புகர்முகம் 34 ஏந்தெழி 12 புணர்தரு 10 கடனீர் முகந்த 30 பொங்கரு 26 கடாஅவுக 29 பொருகடல் 1 கடுங்கதிர் 2 பொறிமாண் 19 கண்டிரண் 21 மண்ணியன் 8 கருங்கடல் 33 முருகியம்போல் 25 கருங்கால் 23 மையெழி 11 கருங்குயில் 15 வந்தன 36 கருவிளை 9 வரிநிறப் 3 கல்பயில் 17 வரைமல்க 27 கார்ச்சேணிகந்த 28 வானேறு 9 சிரல்வாய் 32 விரிதிரை 31 செல்வந் தரல் 13 வீறுசhல் 19 களவழி நாற்பது முகவுரை களவழி நாற்பது என்பது கடைச்சங்கப் புலவர்களால் இயற்றப்பட்ட கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இறையனாரகப் பொருளுரையிற் கடைச்சங்கப் புலவர் பாடியவற்றைக் கூறிவரு மிடத்தே கீழ்க் கணக்குகள் குறிக்கப்படவில்லையேனும், பின்னுளோர் பலரும் அவையும் சங்கத்தார் பாடியனவென்றே துணிந்து எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதிணென்க்கீழ் கணக்கு என எண்ணி வருகின்றனர். கீழ்க்கணக் கியற்றியோருட் கபிலர், கண்ணஞ் சேந்தனார், கூடலூர் கிழார், பொய்கையார் முதலாயினார் சங்கத்துச் சான்றோரென்பது ஒருதலை யாகலின், அவற்றுட் பலவும் அக்காலத்தின வெண்பதில் இழுக்கொன்று மின்று. கீழ்க்கணக்கு நூல் பதினெட் டென்பது, தொல்காப்பியச் செய்யுளியலில், ‘வனப்பியல் தானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியாற் றாய பனுவலோ டம்மை தானே யடிநிமிர் பின்றே’ என்னுஞ் சூத்திரவுரைக்கட் பேராசிரியரும், நச்சினார்க் கினியரும் உரைக்குமாற்றான் அறியப் படுவது. அவை அம்மை யென்னும் வனப்புடைய வாதலும் அவ்வுரையாற் றெளியப்படும். பழைய பனுவல்களை அளவு முதலியன பற்றி மேற்கணக் கெனவும் கீழ்க்கணக் கெனவும் பின்னுளோர் வகைப்படுத்தினராவர். ‘ அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி யறம்பொரு ளின்ப மடுக்கி யவ்வத் திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும்’ என்பது பன்னிருபாட்டியல். கீழ்க்கணக்கு நூல் பதினெட்டாவன: நாலடியார், நான்மணிக் கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை யைம்பது, ஐந்திணை யெழுபது, திணைமொழி யைம்பது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்பன. இதனை, ‘ நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைசொற் காஞ்சியோ டேலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு’ என்னும் வெண்பாவா னறிக. இதில் ‘நால்’ என்பதனை ‘ஐந்திணை’ என்பதன் முன்னுங் கூட்டி நாலைந்திணை யெனக் கொள்ள வேண்டும். சிலர் இன்னிலையை விடுத்துக் கைந்நிலையை ஒன்றாக்குவர். வெண்பாவின் சொற்கிடக்கை முறை அதற்கேற்ற தன்றென்க. சிலர் ஐந்திணை ஐந்து நூலெனக்கொண்டு இன்னிலை, கைந்நிலை இரண்டனையும் ஒழித்தல் செய்வர். அவர், ‘திணைமாலை’ என்பதொரு நூல் பழைய வுரைகளாற் கருதப்படுவ துண்டாகலின் அதுவே ஐந்திணையுட் பிறிதொன்றாகு மென்பர். ‘ஐந்தொகை’ ‘இன்னிலைய’ ‘மெய்ந்நிலைய’ ‘கைந்நிலையோடாம்’ ‘நன்னிலைய வாம். என்றிங்ஙனம் பாட வேற்றுமையும் காட்டுவர். இனி, களவழி நாற்பது என்னும் இந்நூலை யியற்றினார் நல்லிசைப் புலவராகிய பொய்கையா ரென்பார். இவர் இது பாடியதன் காரணம் இந்நூலிறுதி யில் இதன் பழைய உரையாளரால் எழுதப் பட்டிருக்கும் தொடரால் விளங்கும். அது, ‘சோழன் செங்கணானும் சேரமான் கணைக்கா லிரும்பொறையும் (திருப்?) போர்ப் புறத்துப் பொரு துடைந்துழிச் சேரமான் கணைக்கா லிரும்பொறையைப் பற்றிக் கொண்டு சோழன் செங்கணான் சிறை வைத்துழிப் பொய்கையார் களம்பாடி வீடுகொண்ட களவழி நாற்பது முற்றிற்று’ என்பது. இச்செய்தி, கலிங்கத்துப்பரணி இராச பாரம்பரியத்தில் “ களவழிக் கவிதை பொய்கையுரை செய்யவுதியன் கால்வழித் தளையை வெட்டியர சிட்டவவனும்” என்றும், விக்ரம சோழனுலாவில் ‘ மேதக்க பொய்கை கலிகொண்டு வில்லவனைப் பாதத் தளைவிட்ட பார்த்திவனும்’ என்றும் குறிக்கப்பட்டுள்ளது. சோழனொருவன் ஒரு சேரமன்னனை வென்ற வெற்றிச் சிறப்பைப் பாடியதே களவழி நாற்பது என்பதற்கு இதன்கண்ணேயே சான்றுகள் உள்ளன. செய்யுள்தோறும் சோழனது வென்றி கூறப்படுதல் bவளிப்படை. அவன் ‘செங்கண்மால்’ ‘செங்கட்சினமால்’ என்று பல பாடல்களிற் குறிக்கப் படுதலின் அவனது பெயரும் பெறப்படுவதாயிற்று. ‘கொங்கரையட்ட களத்து’ என்றும், ‘வஞ்சிக்கோ வட்ட களத்து’ என்றும் வருதலின், வெல்லப் பட்டோன் சேரனென்பது போதருவதாயிற்று. ‘காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள்’ என்கையால் வென்றுகொண்ட இடம் கழுமலம் என்பதாயிற்று. புறநானூற்றிலே, ‘ குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும் ஆளன் றென்று வாளில் தப்பார் தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுரை யின்றி வயிற்றுத்தீத் தணியத் தாமிரந் துண்ணு மளவை ஈன்ம ரோவிவ் வுலகத் தானே’ (செய்யுள் - எச) என்னுஞ் செய்யுளின்கீழ் வரையப்பட்டுள்ள குறிப்பால், செங்கணா னொடு பொருதான் சேரமான் கணைக்காலிரும்பொறை யென்பது தெரிகின்றது. அது, ‘சேரமான்கணைக்கா லிரும்பொறை சோழன் செங்கணானோடு போர்ப் புறத்துப் பொருது பற்றுக்கோட் பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு என்பது’ ‘குழவியிறப்பினும்’ என்னும் இச் செய்யுள், தமிழ்நாவலர் சரிதையில், ‘சேரன் கணைக்கா லிரும்பொறை செங்கணானாற் குணவாயிற் கோட்டத்துத் தளைப்பட்டபோது பொய்கையாருக் கெழுதி விடுத்த பாட்டு’ என்னும் தலைப்பின்கீழ்க் காணப்படுகிறது. செய்யுளின் பின்னே, ‘இது கேட்டுப் பொய்கையாற் களவழி நாற்பது பாடச் செங்கணான் சிறைவிட் டரசளித்தான்’ என்று குறிக்கப்பெற்றுள்ளது. இங்ஙனம் இரு குறிப்பும் வேறுபடுவதன் காரணம் புலப்படவில்லை. இவ் விரண்டினுள்ளே புறநானூற்றுக் குறிப்பே வலியுடைய தென்று கொள்ளின், அது பரணி, உலா முதலியவற்றுடன் முரணாமைப் பொருட்டு, துஞ்சினான் கணைக்கா லிரும்பொறையாகச் சிறைவீடு செய் தரசளிக்கப்பட்டான் பிறனொரு சேரனாவன் என்று கொள்ள வேண்டும். சேரமான் கொக்கோதை மார்பனைப் பொய்கையார் பாடிய இரண்டு பாட்டுக்கள் புறநானூற்றில் உள்ளன. நற்றிணையில் அவர் பாடிய பாட்டு ஒன்றும் அவனைக் குறிப்பிடு கின்றது. அவ்வேந்தன் கணைக்கா லிரும்பொறை யின் வேறாகிச் சோழனாற் சிறைப் பட்டவனாயின், அவனை விடுவித்தற்குக் களவழி நாற்பது பாடப் பட்டதென்று கோடல் அமையும். இனி, சிலர் நல்லிசைப் புலவராகிய பொய்கையாரை யும், திருமாலடியாருள் ஒருவராகிய பொய்கை யாழ்வாரையும் ஒருவராகக் கொண் டுரைத்துப் போந்தனர். அது திரிபுணர்ச்சியின்பாற் பட்ட தென்பதும், சங்கத்துச் சான்றோரை ஆழ்வாராக்கு தற்கு ஒரு சிறிதும் இயைபின்றென்பதும் செந்தமிழ்ச் செல்வி இரண்டாஞ் சிலம்பினுள் ‘பொய்கையார்’ என்னும் தலைப்பின்கீழ் யானெழுதிய கட்டுரையா னறிக. கடைச்சங்கப் புலவருள் ஒருவராகும் பொய்கை யாராற் பாடப்பட்ட இந்நூல், கி. பி. 250 -ஆம் ஆண்டுக்குப் பிற்பட்டதாகா தென்பது ஒருதலை. களவழி கொண்ட சோழன் செங்கணானைக் கரிகாலனுக்கு முன்வைத்துக் கூறுகின்றது பரணி. உலாவானது கரிகாலனை யடுத்துப் பின்வைத்தோது கிறது. இவற்றுள் எது உண்மை யாயினும் செங்கணான் கடைச்சங்க நாளில் விளங்கிய மன்னன் என்பதில் இழுக்கொன்று மில்லை. அவன் கழுமலங் கொண்டமை களவழியானும், வெண்ணியினும், அழுந்தையினும் ஏற்ற மன்னரை வெற்றிகொண்ட செய்தி திருமங்கையாழ்வா ரியற்றிய பெரிய திருமொழியிலுள்ள திருநறையூர்ப் பதிகத்தானும் அறியப்படுகின்றன. இவ் வேந்தர் பெருமானே திருத்தொண்டர் புராணத்திற் கூறப்பட்ட சிவனடியார் களில் ஒருவராகிய கோச்செங்கட் சோழர் என்பர். திருவானைக்காவில் திருவெண்ணாவற்கீழ் எழுந்தருளி யுள்ள இறைவனை வழிபட்ட சிலந்தி கோச்செங்கட் சோழராகப் பிறந்த வரலாற்றினைப் பெரியபுராணம் இனிது விளக்குகின்றது. திருநெறிந்தமிழ் வேதமாகிய தேவாரம் முதலிய வற்றிலும் இவ்வுண்மை விதத்தோதப்படுகிறது. இவ்வரசர் பெருந்தகை சிவனார் மேவுந் திருக் கோயில்கள் பற்பல சமைத்த பரிசும் திருமுறைகளிற் பேசப்படுகின்றது. திருமங்கை யாழ்வாரும் ‘இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற் கெழின்மாட மெழுபதுசெய் துலகமாண்ட - திருக்குலத்து வளச்சோழன்’ என்று இதனைப் பாராட்டு வாராயினர். இவ்வாற்றால் இம்மன்னரது பெருமை அளப்பரிய தொன்றாதல் காண்க. இனி, இந்நூலாசிரியர் பொய்கை யென்னும் நாட்டிற் பிறந்தமையால் இப்பெய ரெய்தினரென ஒரு சாராரும், பொய்கை யென்னும் ஊரிற் பிறந்தமையா லெனப் பிறிதொரு சாராரும் கூறுப. இவ்வாசிரியர் ‘கானலந்தொண்டி அஃதெம்மூர்’ என்று புறத்திலே கூறியிருப்பதனால் மேற்கடற் கரையிலுள்ள தொண்டி நகரம் இவரது பிறப்பிடம் என்று உணரலாகும். அன்றித் தம்பாற் பேரன்புடையவனான சேரமானது பதியாதல் குறித்து அங்ஙனம் கூறினா ரென்னினும் அமையும். களவழி நாற்பது என்னும் இந்நூல் செங்கட் சோழரது போர்க்கள வென்றியைத் தனித்தெடுத்துக் கூறுதற் கெழுந்தது. ‘கூதிர் வேனில்’ என்னும் புறத்திணை யிற் சூத்திரத்து ‘ஏரோர் களவழியன்றிக் களவழித் - தேரோர் தோற்றிய வென்றியும்’ என்பதனால் களவழி இருவகைப்படும் என்க. இவற்றுள் முன்னது, உழுதொழி லாளர் விளையுட் காலத்துக் களத்தின்கட் செய்யுஞ் செய்கை; என்றது, நெற்கதிரைக் கொன்று களத்திற் குவித்துப் போர் அழித்து அதரிதிரித்துச் சுற்றத்தோடு நுகர்வதற்கு முன்னே கடவுட் பலி கொடுத்துப் பின்னர்ப் பரிசிலர் முகந்து கொள்ள வரிசையின் அளிப்பது; பின்னது, அரசர் போக்களத்துச் செய்யுஞ் செய்கை; என்றது நாற்படை யுங் கொன்று களத்திற் குவித்து எருது களிறாக வாண்மடலோச்சி அதரிதிரித்து . . அட்ட கூழ்ப்பலியைப் பலிகொடுத்து எஞ்சிநின்ற யானை குதிரைகளையும், ஆண்டுப் பெற்றன பலவற்றையும் பரிசிலர் முகர்ந்து கொள்ளக் கொடுத்தல். களவழி - களத்தினிடம், களத்திடத்து நிகழ்ச்சியைப் பாடும் செய்யுளைக் களவழி யென்றது ஆகுபெயர். பிற்கூறிய களவழிச் செய்யுளைப் புலவர் தேரேறி வந்து பாடுவ ரென்ப. இவ்வாற்றால் இதன் இலக்கணம் ஓர்ந்துகொள்க. இந்நூலின்கண்ணே யானைப்போர் மிகுத்துக் கூறப்படுகின்றது. திருக்கார்த்திகைத் திருவிழா குறிக்கப்பட்டுள்ளது. இந்நூலானது சொற்செறிவும், பொருட் செறிவும் வாய்ந்த பாக்களாலாயது. பழைய உரையாசிரியர்களால் தொல்காப்பியவுரை முதலிய வற்றில் மேற்கோளாக எடுத்துக்காட்டப் பட்டப்பெற்ற பெருமையினை யுடையது. இதிலுள்ள ஒவ்வொரு வெண்பாவிலும் பொருட்கேற்ற பெற்றி இவ்வாசிரியர் அமைத்திருக்கும் உவமைகள் கற்போர்க்குக் கழிபேரின்பம் விளைப்பன. இந்நூற்குப் பழையவுரை யொன்றுண்டு. அது செய்யுட் பொருளைப் பொழிப்பாக வெடுத் துரைப்பது; விசேடக்குறிப்பு யாதும் கொண்டிராதது. மற்ற இதற்குச் சோடசாவதானம் சுப்பராயச் செட்டியாரவர்களால் பதப்பொருளும், இலக்கணக் குறிப்புக்களுமாக எழுதப்பெற்ற உரையொன்றுண்டு. அதிலுள்ள இலக்கணக் குறிப்புக்கள் பெரும்பாலும் இக்காலத்துக்கு வேண்டப்பெறாதனவாயும், வழு வுள்ளனவாயும் தோன்றின; பதப்பொருளும் பலவிடத்துத் தவறான பாடத்தின்மே லெழுந்தும், மூலத்தொடு மாறுபட்டும் வழுவியிருந்தமை புலனாயிற்று. இவ்வேதுக்களாற்றான் நல்லிசைப் புலவர் செய்யுட்கு உரைகாணுந்திறன் ஒரு சிறிதும் வாய்க்கப்பெறாத யானும் இதற்கோர் உரை யெழுதுமாறு நேர்ந்தது. என் சிற்றறிவிற் கெட்டியவாறு பழைய பொழிப்புரையை முற்றிலும் தழுவிப் பதப் பொருள் கூறியும், இன்றியமையாத மேற்கோள்களும், இலக்கணங்களும் காட்டியும் இவ்வுரையினை வகுத்தமைக்கலானேன். பல சுவடிகள் பார்த்துப் பாட வேற்றுமையுங் காட்டப்பெற்றுள்ளது. இதில் காணப்படும் பிழைகளைப் பொறுத்தருளுமாறு அறிஞர்களை வேண்டிக்கொள்கின்றேன். இங்ஙனம், ந. மு. வேங்கடசாமி நாட்டார். களவழி நாற்பது 1. நாண்ஞாயி றுற்ற செருவிற்கு வீழ்ந்தவர் வாண்மாய் குருதி களிறுழக்கத் - தாண்மாய்ந்து 1முன்பக லெல்லாங் குழம்பாகிப் 2பின்பகல் துப்பத் துகளிற் கெழூஉம் புனனாடன் தப்பியா ரட்ட களத்து. (பதவுரை.) புனல் நாடன் - நீர்நாட்டையுடைய செங்கட் சோழன், தப்பியார் - பிழைசெய்தவரை, அட்ட - கொன்ற, களத்து – போர்க் களத்தில், நாள் ஞாயிறு - ஞாயிறு தோன்றிய காலைப்பொழுதில், உற்ற - வந்தடைந்த, செருவிற்கு - போரில், வீழ்ந்தவர் – பட்ட வருடைய, வாள்மாய் - வாளழுந்துதலா லொழுகும், குருதி - உதிரத்தை, களிறு உழக்க - யானைகள் கலக்க, தாள் - (அவற்றின்) காலாலே, மாய்ந்து - சுருங்கி, முன்பகல் எல்லாம் - முற்பகற் பொழு தெல்லாம், குழம்பு ஆகி - சேறாகி, பின்பகல் - பிற்பகற்பொழுதில், துப்பு துகளில் - பவளத் துகள்போல, கெழூஉம் - (விசும்பெங்கும்) பரந்து செறியாநிற்கும் எ - று. நாள் என்பது பசுவின் முற்கூறாகிய காலைப் பொழுதைக் குறிக்கும். இதனை, நாணிழல், நாளங்காடி என்பவற்றால் அறிக. குருதிமாய்ந்து குழம்பாகியக் கெழூஉம் என முடிக்க. செருவிற்கு - வேற்றுமை மயக்கம். வாண்மாய் - மறைதல் என்னும் பொருட்டாய மாய்தல் என்பதன் முதனிலை அழுந்தும் என்னும் பொருளில் வந்தது. கெழூஉம் - செய்யுளிசை கெட்டவழி வந்த அளபெடை, தப்பியார் - வினையா லணையும் பெயர்; தப்பு - பகுதி, இன் இடைநிலை ஈறு கொண்டது. (1) 2. ஞாட்பினு ளெஞ்சிய ஞாலஞ்சேர் யானைக்கீழ்ப் போர்ப்பி லிடிமுரசி னூடுபோ மொண்குருதி கார்ப்பெயல் பெய்தபிற் செங்குளக் கோட்டுக்கீழ் நீர்த்தூம்பு நீருமிழ்வ போன்ற புனனாடன் ஆர்த்தம ரட்ட களத்து. (ப -ரை) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், ஆர்த்து - குணலையிட்டு, அமர் - போரில், அட்ட - கொன்ற, களத்து - போர்க்களத்தில், ஞாட்பின்உள் - படையின்கண், எஞ்சிய - ஒழிந்த, ஞாலஞ்சேர் - நிலத்திற்சேர்ந்த, யானை கீழ் - யானைகளின்கீழ் (கிடந்த), போர்ப்பு இல் - மேற் போர்வையில்லாத, இடி - இடிபோன் றொலிக்கும், முரசின் ஊடுபோம் - முரசத்தினூடு செல்லும், ஒள் குருதி - ஒள்ளிய உதிரம், கார்பெயல் பெய்தபின் - கார்காலத்து மழைபெய்த பின்பு, செங்குளம் - செங்குளத்தினது, கோடுகீழ் -கரையின் கீழுள்ள, நீர்தூம்பு - மதகுகள், நீர் உமிழ்வ - நீருமிழ்தலை, போன்ற - ஒத்தன எ- று. செங்குளம் - செம்மண்ணாற் சிவந்த நீரையுடைய குளம். பொருளின்கண் உள்ள குருதி யென்னும் பெயருக்கேற்ப உவமைக் கண் உமிழ்தலையுடைய நீர் என மாற்றுக. கார் - பருவத்திற்கு இருமடியாகுபெயர். போன்ற - போல் என்னும் இடைச்சொல்லடியாகப் பிறந்த வினைமுற்று. (2) 3. ஒழுக்குங் குருதி யுழக்கித் தளர்வார் இழுக்குங் களிற்றுக் கோடூன்றி யெழுவர் 1 மழைக்குரன் மாமுரசின் மல்குநீர் நாடான் பிழைத்தாரை யட்ட களத்து. (ப -ரை) மழைக் குரல் - மேகத்தின் முழக்கம் போலும் முழக்கத் தையுடைய, மா முரசின் - பெரிய முரசினையுடைய , மல்குநீர் நாடன் - நிறைந்த நீரினையுடையனாகிய செங்கட் சோழன், பிழைத்தாரை -தப்பினவரை, அட்ட - கொன்ற, களத்து - போர்க் களத்தில், ஒழுக்கும் குருதி - புக்காரை ஒழுகச்செய்யுங் குருதியை, உழக்கி - கலக்கி, தளர்வார் - (*அதனைக் கடக்கலாற்றாது)தளர்ச்சி யுறுவார், இழுக்கம் - மறிந்துகிடக்கின்ற, களிற்றுக்கோடு - யானையின் கொம்புகளை, ஊன்றி எழுவர் - ஊன்றுகோலாகக் கொண்டு எழாநிற்பர் எ-று. ஒழுக்கும்- ஒழுகும் என்பதன் பிறவினை; ஒழுகல் - கால் தளர்ந்து செல்லுதல்; இதனை, ‘பரங்குன்றினிற் பாய்புனல் யாமொழுக’ என்னும் கோவையாரால் உணர்க. இழுக்குதல் - தவறுதல்; ஆவது வெட்டுண்டு கிடத்தல். முரசினையுடைய நாடன் என்றும், தளர்வார் ஊன்றி யெழுவர் என்றுங் கூட்டுக. (3) 4. உருவக் கடுந்தேர் முருக்கிமற் றத்தேர்ப் பரிதி சுமந்தெழுந்த யானை - யிருவிசும்பிற் செல்சுடர் சேர்ந்த மலைபோன்ற செங்கண்மால் புல்லாரை யட்ட களத்து. (ப-ரை) செங்கண்மால் - செங்கட்சோழன், புல்லாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், உருவக் கடுந்தேர் – அஞ்சத் தக்க கடிய தேரை, முருக்கி - சிதைத்து, அ தேர் பரிதி - அந்தத் தேரினுருளினை, சுமந்து எழுந்த யானை - சுமந்தெழுந்த யானைகள், இருவிசும்பு இல் - பெரிய வானத்தில், செல்சுடர் - செல்லுகின்ற ஞாயிறு, சேர்ந்த மலை போன்ற - அடைந்த மலையை யொத்தன எ-று. உரு என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது. இஃது அச்சம் என்னும் பொருட்டாதலை ‘ உருவுட்காகும்’ என்பதனால் அறிக. மற்று - அசைநிலை, பரிதி - இது பருதியெனவும் வழங்கும். பருதி - வட்டம்; தேருருளை வட்டமுடைமையின் பருதியெனப்பட்டது; ‘சுரம்பல கடவும் சுரைவாய்ப் பருதி’ என்னும் பதிற்றுப்பத்தும் அதன் உரையும் நோக்குக. சுடர் - ஆகுபெயர். போன்ற - அன்பெறாத அகரவீற்றுப் பலவறிசொல். திருமாலின் வழியில் வந்தமையால் சோழனுக்கு ‘மால்’ என்பது ஒரு பெயர்; பெரும்பாணாற்றில் ‘முந்நீர்வண்ணன் புறங்கடை’ என வருவது காண்க. (4) 5. தெரிகணை யெஃகந் திறந்தவா யெல்லாங் குருதி படிந்துண்ட காகம் - உருவிழந்து குக்கிற் புறத்த சிரல்வாய செங்கண்மால் தப்பியா ரட்ட களத்து. (ப-ரை) செங்கண்மால் - செங்கட்சோழன், தப்பியார் - பிழைத்தாரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், தெரி கணை - ஆராய்ந்த அம்புகளாலும், எஃகம் - வேல்களாலும், திறந்த – திறக்கப் பட்ட, எல்லாவாய் (உம்) - எல்லாப் புண்களின் வாய்களினின்றும் , குருதி படிந்து - (ஒழுகும்) உதிரத்திற் படிந்து, உண்ட காகம் - (அவ் வுதிரத்தை) உண்ட காகங்கள், உரு இழந்து - (தம்முடைய) நிறத்தை இழந்து, குக்கில் புறத்த - செம்போத்தின் புறத்தை யுடைய வாகி, சிரல்வாய் - சிச்சிலிக் குருவிபோன்ற வாயையுடையவாயின எ-று. வாயெல்லாம் என்பதனை எல்லாவாயும் என மாற்றுக. உண்ட என்பது பொதுவினையாதலை ‘உண்ணு நீ ரூட்டிவா’ என்னும் குறிஞ்சிக்கலியானும் அறிக. குக்கில் - செம்போத்தாதலை ‘குக்கில் செம்போத்துச் சகோரமு மதற்கே’ என்னும் பிங்கலந்தையான் அறிக. சிரல் - சிச்சிலி, மீன்கொத்துக் குருவி; ‘புலவுக் கயலெடுத்த பொன்வாய் மணிச்சிரல்’ என்பது சிறுபாண். (5) 6. நானாற் றிசையும் பிணம்பிறங்க யானை யடுக்குபு வேற்றிக் கிடந்த - இடித்துரறி யங்கண் விசும்பி னுருமெறிந் தெங்கும் பெருமலைத் 1தூறெறிந் தற்றே யருமணிப் பூணேந் தெழின்மார் பியறிண்டேர்ச் செம்பியன்தெவ் வேந்தரை யட்ட களத்து. (ப-ரை) அரு மணி - (பெறுதற்கு) அரிய மணிகள் (அழுத்திய), பூண் ஏந்து - அணிகலத்தை ஏந்திய, எழில் - எழுச்சியை யுடைய, மார்பு - மார்பையும், இயல் - நடத்தலையுடைய, திண் தேர் - வலிய தேரையுமுடைய, செம்பியன் - செங்கட்சோழன், தெவ்வேந்தரை - பகையரசரை, அட்ட களத்து - கொன்ற போர் க்களத்தில், நால் நால் திசையும் - பல திசைகளிலும், பிணம் பிறங்க - பிணங்கள் மிக, யானை அடுக்குபு - யானைகளடுக்கப்பட்டு, ஏற்றிக்கிடந்த - உயர்ந்து கிடந்தன, இடித்து உரறி - இடித்து முழங்கி, அம் கண் - அழகிய இடத்தையுடைய, விசும்பின் -வானத்தினின்று, உரும் எறிந்து - இடிவீழ்ந்து, எங்கும் - எவ்விடத்து முள்ள, பெரு மலை - பெரிய மலைகளை, தூறு - தொடக்கு (அற), எறிந்தால் அற்று - எறிந்தாற்போலும் எ-று. நானால் - பன்மை குறித்தது; எட்டு எனினும் அமையும். அடுக்குபு வேற்றி - உயிர்வர உகரம் கெடாது நின்றது; ‘அடித்தடித்து வக்காரம்’ என்புழிப்போல. இயல்திண்டேர் என்புழி இயல் இப் பொருட்டாதலை ‘இயறேர்க்குட்டுவன்’ என்னும் சிறுபாண்உரையா லறிக. (6) 7. அஞ்சனக் குன்றேய்க்கும் யானை யமருழக்கி இங்கு லிகக்குன்றே போற்றோன்றுஞ் -செங்கண் வரிவரான் முன்பிறழுங் காவிரி நாடன் பொருநரை யட்ட களத்து. (ப-ரை) செம் கண் - சிவந்த கண்களையும், வரி - வரிகளையுமுடைய, வரால்மீன் பிறழும் - வரால் மீன்கள் பிறழா நிற்கும், காவிரிநாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட்சோழன், பொருநரை - (தன்னோடு) போர் செய்வாரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், அஞ்சனம்குன்று - நீலமலையை, எய்க்கும் - ஒத்துத்தோன்றும், யானை - யானைகள், அமர் உழக்கி - போரின்கட் கலக்கி, இங்குலிகம் குன்றுபோல் - சாதிலிங்க மலையைப் போல, தோன்றும் - சிவந்து தோன்றாநிற்கும் எ-று. ஏய்க்கும் - உவமச்சொல். மீன் - இத் தமிழ்ச் சொல்லை வட நூலார் மீனம் எனத் திரித்து வழங்குவர். (7) 8. யானைமேல் யானை நெரிதர வானாது கண்ணேர் கடுங்கணை மெய்ம்மாய்ப்ப 1 - எவ்வாயும் எண்ணருங் குன்றிற் குரீஇயினம் போன்றவே பண்ணா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன் நண்ணாரை யட்ட களத்து. (ப-ரை) பண்ஆர் - ஒப்பனையமைந்த, இடிமுரசு இன் - இடிக்கும் முரசினையுடைய, பாய் புனல் - பாய்ந்துசெல்லும் நீரினையுடைய, நீர்நாடன் - காவிரிநாட்டை யுடையோன், நண்ணாரை - பகைவரை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், யானை மேல் யானை நெரிதர- யானைகள் மேல் யானைகள் சாய, ஆனாது - நீங்காமல், கண் நேர் - (மகளிரின்) கண்களை யொக்கும், கடுங்கணை - கடிய அம்புகள், எ வாய் உம் - எவ்விடத்தும் (பாய்ந்து), மெய் மாய்ப்ப - (அவற்றின்) உடலை மறைத்தலால்(அவை), எண் அரு -அளவில்லாத, குன்றில் - மலை களில், குரீஇ இனம் - குருவியின் கூட்டங்கள் மொய்த் திருப்பவற்றை, போன்ற - ஒத்தன எ-று. மாய்ப்ப - மறைக்க; இஃது இப்பொருட்டாதலை ‘களிறு மாய்க்குங் கதிர்க்கழனி’ என்னும் மதுரைக் காஞ்சியடி உரையானறிக. குரீஇ - இயற்கை யளபெடை, முரசினை யொக்கும் பாய்புனல் என உவமையாக்கலும் ஒன்று. (8) 9. மேலோரைக் கீழோர் குறுகிக் குறைத்திட்ட காலார்சோ டற்ற கழற்கா லிருங்கடல் ஊணில் சுறபிறழ்வ 1 போன்ற புனனாடன் நேரரரை யட்ட களத்து. (ப-ரை) புனல் நாடன் - நீர்நாட்டையுடைய செங்கட்சோழன், நேராரை - பகைவரை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், மேலோரை - (குதிரை முதலாயினவற்றின்) மேலிருந்தவரை, கீழோர் - கீழ்நின்ற காலாட்கள், குறுகி - சென்று சார்ந்து, குறைத்திட்ட - துணித்த, கால் ஆர் சோடு - காற்கிட்ட அரணத்தோடு, அற்ற - அறுபட்ட, கழல் கால் - வீரக்கழ லணிந்த கால்கள், இருங்கடல் - பெரிய கடலுள், ஊண் இல் - இரையில்லாத, சுறபிறழ்வ போன்ற - சுறாமீன்கள் பிறழ்வனவற்றை யொத்தன எ -று. சோடு - சுவடு என்பதன் மருஉ : அரணம் என்பது பொருள். அரணம் - செருப்பு. சுற - இது ‘குறியதனிறுதிச் சினைகெட’ என்னுஞ் சூத்திரத்து இலேசானே ஆகாரங் குறுகி உகரம் பெறாது நின்றது. நீலச்சுறா என்னும் பாடத்திற்குக் கரிய சுறாமீன்கள் என்று பொருள் கொள்க. (9) 10. பல்கணை யெவ்வாயும் பாய்தலிற் செல்கலா தொல்கி யுயங்குங் களிறெல்லாந் - தொல்சிறப்பிற் செவ்வலங் குன்றம்போற் றோன்றும் புனனாடன் தெவ்வரை யட்ட களத்து. (ப-ரை) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், தெவ்வரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், பல் கணை - பல அம்புகளும், எவாய் உம் - எவ்வுறுப்பிலும், பாய்தல்இன் - பாய்தலால், செல்கலாது - செல்ல மாட்டாது, ஒல்கி - தளர்ந்து, உயங்கும் - வருந்தும், களிறு எல்லாம் - யானைகளெல்லாம், தொல் சிறப்பு இன் - தொன்றுதொட்டு வருஞ் சிறப்பினை யுடைய, செவ்வல் குன்றம்போல் - தாதுமலை போல ,தோன்றும் - தோன்றா நிற்கும் எ-று. செல்கலாது - வினையெச்சம்; குவ்வும் அல்லும் சாரியைகள். செவ்வல் - பண்புப்பெயர். அம் - சாரியை. தாதுமலை - சிந்தூர மலை. ‘இங்குலிகக் குன்றேபோற் றோன்றும்’ என முன் வந்தமையும் காண்க. (10) 11. கழுமிய ஞாட்பினுண் மைந்திகாந்தா ரிட்ட1 ஒழிமுரச மொண்குருதி யாடித் - தொழின்மடிந்து கண்காணா யானை யுதைப்ப விழுமென மங்குன் மழையி னதிரு மதிராப்போர்ச் செங்கண்மா லட்ட களத்து. (ப-ரை) அதிரா போர் - கலங்குதலில்லாத போரையுடைய, செங்கண்மால் - செங்கட்சோழன், அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், கழுமிய - நெருங்கிய, ஞாட்பின்உள் - போரில், மைந்து இகந்தார் - வலியிழந்தவர்கள், இட்ட - போகவிட்ட, ஒழி முரசம் - ஒழிந்த முரசம், ஒள் குருதி - ஒள்ளிய உதிரத்தில், ஆடி - படிந்து, தொழில் மடிந்து - (தம்) தொழிலைத் தவிர்த்து, கண்காணா - (படைகளா லூறுபட்டு) கட்புலனிழந்த, யானை உதைப்ப – யானை களுதைத்தலால், மங்குல் மழையின் - மேகம்போல, இழும் என அதிரும்- இழுமென முழங்காநிற்கும் எ-று. முரசம் ஆடிமடிந்து முழங்கும் என வினiமுடிவு செய்க. மங்குல் மழை - ‘ஒரு பொரு ளிருசொற்பிரிவில் வரையார்’ என்பதனால் ஒரு பொருண்மேல் வந்தன. அதிரா - கலங்காத, நடுங்காத; ‘அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும்’ என்பது காண்க. (11) 12. ஓவாக் கணைபாய வொல்கி யெழில்வேழந் தீவாய்க் குருதி யிழிதலாற் செந்தலைப் பூவலங் குன்றம் புயற்கேற்ற போன்றவே காவிரி நாடன் கடாஅய்க் கடிதாகக் கூடாரை யட்ட களத்து. (ப-ரை) காவிரி நாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட்சோழன், கடாய் - படையைச் செலுத்தி, கடிதுஆக - விரைந்து, கூடாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், ஓவா - இடை விடாமல், கணைபாய - அம்புகள் தைக்க, எழில்வேழம் - எழுச்சியுடைய யானைகள், ஒல்கி - தளர்ந்து, தீவாய் - தீயின் நிறம்பொருந்திய, குருதி இழிதலால் - உதிரத்தை யொழுக்குதலால், செம் தலை - சிவந்த இடத்தை யுடைய, பூவல் குன்றம் - செம்மண் மலைகள், புயற்கு ஏற்ற போன்ற - மழைக்கு எதிர்ந்தன ஒத்தன எ -று. செம்மண்மலையிற் பெய்த மழை செந்நீரா யொழுகுமாதலின், உடல்முழுதும் குருதியை யொழுகவிடும் யானைகள் அம்மலைகளை யொக்கும் என்றார். தீவாய் என்பதனைக் கணையோடு இயைப் பினும் அமையும். இழிதல் பிறவினையாயிற்று. பூவல் - செம்மண்; “பூவலூட்டிய புனை மாண்பந்தர்க் - காவற்சிற்றிற் கடிமனைப் படுத்து” எனச் சிலப்பதிகாரத்து வருவது காண்க. அம் - சாரியை. (12) 13. நிரைகதிர் நீளெஃக நீட்டி வயவர் வரைபுரை யானைக்கை நூற - வரைமேல் உருமெறி பாம்பிற் புரளுஞ் செருமொய்ம்பிற் சேஎய்பொரு தட்ட களத்து. (ப-ரை) செரு மொய்ம்புஇன் - போர்வலிமை யுடைய, சேய் - செங்கோட்சோழன், பொருது அட்ட - போர்செய்து கொன்ற, களத்து - போர்க்களத்தில், நிரைகதிர் - நிரைத்த வொளியினையுடைய, நீள் எஃகம் - நீண்ட வாளை, நீட்டி - பின்னே வாங்கி, வயவர் - வீரர்கள், வரை புரை - மலையையொத்த, யானை கை - யானைகளின் கைகளை, நூற - துணிக்க, வரைமேல் - மலையின்மேல், உரும் எறி - இடிவிழுந்த, பாம்புஇன் - பாம்பைப்போல, புரளும் - புரளாநிற்கும். - எ-று. பாம்பு உருமெறியப்பட்டு மலைமேனின்றும் விழுந்து புரளுமாறு போலக் கையும் வாளெறியப்பட்டு யானையினின்றும் விழுந்து புரளா நிற்கும் என்க. எஃகம் வாளினையும், நீட்டல் பின் வாங்கலையுங் குறித்து நின்றன. எறி - என்னும் பெயரெச்ச முதனிலை பாம்பென்னும் செயப்படுபொருட்பெயர் கொண்டது. (13) 14. கவளங்கொள் யானையின் கைதுணிக்கப் 1 பட்டுப் பவளஞ் சொரிதரு பைபோற் - றிவளொளிய 2 வொண்செங் குருதி யுமிழும் புனனாடன் கொங்கரை யட்ட களத்து. (ப-ரை) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், கொங்கரை - கொங்குநாட்டவரை, அட்ட களத்து - கொன்ற போர்க் களத்தில், கவளம் கொள் -கவளத்தைக் கொள்ளும், யானை கை - யானைகள் (தம்) துதிக்கைகள், துணிக்கப்பட்டு - துண்டு படுத்தப்பட்டு, பவளம் சொரிதரு - பவளத்தைச் சொரியாநின்ற, பைபோல் – பையைப் போல, திவள் ஒளிய - விளங்கும் ஒளியையுடைய, ஒள் - ஒள்ளிய, செம் குருதி - சிவந்த உதிரத்தை, உமிழும் - உமிழாநிற்கும் எ-று. கவளம் - யானையுணவு; ‘கல்லாவிளைஞர் கவளங்கைப்ப’ ‘வாங்குங்கவளத்து’ என்பன காண்க. இன் - சாரியை. (14) 15. கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும் புக்கவா யெல்லாம் பிணம்பிறங்கத் - தச்சன் வினைபடு பள்ளியிற் றோன்றுமே செங்கட் சினமால் பொருத களத்து. (ப-ரை) சினம் - கோபத்தையுடைய, செங்கண்மால் – செங்கட் சோழன், பொருத களத்து -போர்செய்த களத்தில், எ வாய் உம் - எவ்விடத்தும், குடை முருக்கி - குடைகளையழித்து, கொல்யானை - கொல்லும் யானைகள், பாய - பாய்தலால், புக்க வாய் எல்லாம் - அவ் யானைகள் புகுந்த இடமெல்லாம், பிணம் பிறங்க - பிணங்கள் விளங்க, தச்சன் - தச்சனால், வினைபடு - வினைசெய்யப்படும், பள்ளியில் - இடங்கள்போல, தோன்றும் - தோன்றாநிற்கும். எ-று. பள்ளி - இடமென்னும் பொருளாதலைத் தொல்காப்பியத்தே ‘சொல்லிய பள்ளி’ என வருதலா னறிக. தச்சன் - மரவினைஞன்; ‘மரங்கொல் தச்சர்’, ‘தச்சச்சிறார்’ என்பன காண்க. (15) 16. பரும வினமாக் கடவித் தெரிமறவர் ஊக்கி யெடுத்த வரவத்தி னார்ப்பஞ்சாக் குஞ்சரக் கும்பத்துப் பாய்வன குன்றிவரும் வேங்கை யிரும்புலி போன்ற புனனாடன் வேந்தரை யட்ட களத்து. (ப-ரை) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், வேந்தரை - பகை மன்னரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், பருமம் - கல்லணையையுடைய, இனம் மா - திரண்ட குதிரைகள், தெரி மறவர் - விளங்கிய வீரத்தினையுடையரால், கடவி – நடத்தப் பட்டு, ஊக்கி - மனவெழுச்சி மிக்கு, எடுத்த - எழுப்பப் பட்ட, அரவத்தின் ஆர்ப்பு - மிக்க ஆரவாரத்தை, அஞ்சா - அஞ்சாத, குஞ்சரம் – யானை களின், கும்பத்து - மத்திகத்தில், பாய்வன - பாய்கின்றவை, குன்று - மலையின்கண், இவரும் - பாய்கின்ற, இரு - பெரிய, வேங்கை புலி - வேங்கை யாகிய புலியை, போன்ற - ஒத்தன எ-று. பருமம், பண், கல்லணை என்பன ஒரு பொருட் சொற்கள். கடவி - செயப்பாட்டு வினையெச்சம். மறவர் கடவி என மாற்றுக. கடவப்பட்டு ஊக்கிப் பாய்வன என்க; யானைக்கு அடையாக்கி அஞ்சா என்பதனோடு முடிப்பினும் அமையும். (16) 17. ஆர்ப்பெழுந்த ஞாட்பினு ளாளா ளெதிர்த்தோடித் தாக்கி யெறிதர வீழ்தரு மொண்குருதி கார்த்திகைச் சாற்றிற் கழிவிளக்கைப் 1 போன்றனவே போர்க்கொடித் தானைப் பொருபுன னீர்நாடன் ஆர்த்தம ரட்ட களத்து. (ப -ரை) போர் - போர்க்குரிய, கொடி - கொடி யினையுடைய, தானை - படையினை உடையனான, பொரு - மோதுகின்ற, புனல் - நீரினையுடைய, நீர் நாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட்சோழன், ஆர்த்து - ஆரவாரித்து, அமர் - போரில், அட்ட - (பகைவரைக்)கொன்ற, களத்து - களத்தில், ஆர்ப்பு எழுந்த - ஆரவாரகுருந்த, ஞாட்பின் உள் - போரின்கண், ஆள்ஆள் - ஆளும் ஆளும், எதிர்த்து ஓடி - எதிர்சென்றோடி, தாக்கி - பொருது, எறிதர - (படைகளை) வீசுதலால், வீழ்தரும் - சொரியாநின்ற, ஒள் குருதி - ஒள்ளிய உதிரம், கார்த்திகை சாறுஇல் - கார்த்திகை விழாவில் , கழிவிளக்கை - மிக்க விளக்கினை, போன்றன - ஒத்தன எ-று. சாறு -விழா: இதனைச் ‘சாறுதலைக் கொண் டென’ என்னும் புறப்பாட்டானும், ‘சாறயர்களத்து’ என்னும் முருகாற்றுப்படையானும் அறிக. கார்த்திகை நாளில் நிரைநிரையாக விளக்கிட்டு விழாக் கொண்டாடும் வழக்கம் மிக்கிருந்தது. இதனை ‘குறுமுயன் மறுநிறங் கிளர மதிநிறைந், தறுமீன் சேரும் அகலிருள் நடுநாள், மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப், பழவிறன் மூதூர்ப் பலருடன் துவன்றிய, விழவுட னயர வருகதி லம்ம’ என்னும் அகப்பாட்டா னறிக. ‘துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள் . . . விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்’ என்பது திருநெறித் தமிழ் மறை. கார்த்திகைக்கு மலையில் விளக்கிடுவது ‘குன்றிற் கார்த்திகை விளக்கிட் டன்ன’ என்று சிந்தாமணியிற் கூறப்பெற்றுளது. (17) 18. நளிந்த கடலுட் டிமிறிரை போலெங்கும் விளிந்தார் பிணங்குருதி யீர்க்குந் - தெளிந்து தடற்றிடங் கொள்வாட் 1 டளையவிழுந் தார்ச்சே(ய்) உடற்றியா ரட்ட களத்து. (ப-ரை) தெளிந்து -விளக்கி, தடறு - உறையினது, இடம் கொள் - இடத்தினைக்கொண்ட, வாள் - வாளையும், தளை அவிழும் - கட்டவிழ்ந்த, தார்- மாலையையுமுடைய, சேய் -செங்கட்சோழன், உடற்றியார் -சினமூட்டிய பகைவரை, அட்ட - கொன்ற, களத்து -போர்க்களத்தில், நளிந்த - நீர்செறிந்த, கடல்உள் - கடலில், திமில்- தோணியையும், திரை - அலையையும், போல் - போல, எங்கும் - எவ்விடத்தும், விளிந்தார் - பட்டாருடைய ,பிணம் - பிணக்குப்பையை, குருதி ஈர்க்கும் - உதிரவெள்ளம் இழாநிற்கும் எ-று. ‘தடற்றிலங்கொள்வாள்’ என்னும் பாடத்திற்கு உறையில் விளங்குகின்ற ‘ஒள்ளியவாள்’ என்று பொருளுரைக்க. நளிந்து – நளி யென்னும் உரிச் சொல்லடியாக வந்த பெயரெச்சம்; நீர்மிக்க எனினுமாம்; நளியென்பது பெருமையும், செறிவுமாதல் தொல் காப்பியத்தா னறிக. (18) 19. இடைமருப்பின் விட்டெறிந்த வெஃகங்கான்2 மூழ்கிக் கடைமணி கான்வரத் தோற்றி 3 - நடைமெலிந்து முக்கோட்ட போன்ற களிறெல்லா நீர்நாடன் புக்கம ரட்ட களத்து. (ப-ரை) நீர் நாடன் - நீர்நாட்டையுடைய செங்கட்சோழன், அமர் புக்கு - போரிற்புகுந்து; அட்ட களத்து - (பகைவரைக்) கொன்ற போர்க்களத்தில், மருப்பின் இடை - (யானைகளின்) கொம்பினடுவே, விட்டு எறிந்த எஃகம் - விட்டெறிந்த வேல், கால்மூழ்கி - காம்பு குளித்தலால், கடைமணி - (அவ்வேலின்) கடைமணி, காண்வர - விளங்க, களிறு எல்லாம் - யானைகளெல்லாம், தோற்றி -தோன்றி, நடைமெலிந்து - நடைதளர்ந்து, மு கோட்ட போன்ற - மூன்று கொம்புகளையுடைய யானைகளை யொத்தன (எ-று.) காழ் என்பதே சிறந்த பாடம். காழ் - காம்பு, மூழ்கலான் என்பது மூழ்கியெனத் திரிந்து நின்றது. முக்கோட்ட இது குறிப்பு வினைப்பெயர். (19) 20. இருசிறக ரீர்க்குப் பரப்பி யெருவை குருதி பிணங்கவருந் தோற்றம் - அதிர்விலாச்1 சீர்முழாப் பண்ணமைப்பான் போன்ற புனனாடன் நேராரை யட்ட களத்து. (ப-ரை) புனல் நாடன்- நீர்நாட்டையுடைய செங்கட் சோழன், நேராரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், எருவை - கழுகுகள், இரு சிறகர் - இரண்டு சிறகின் கண்ணுமுள்ள, ஈர்க்கு பரப்பி - ஈர்க்குகளைப் பரப்பி, குருதி - உதிரத் தோடு, பிணம் கவரும் -பிணங்களைக் கொள்ளை கொள்ளும், தோற்றம் - காட்சி, அதிர்வு இலா - கலக்க மில்லாத, சீர் - ஓசையையுடைய, முழா - முழவினை, பண் அமைப் பான் - பண்ணமைப்பவனை, போன்ற - ஒத்தன எ-று. சிறகர் - ஈற்றுப்போலி. (20) 21. இணைவே லெழின்மருமத் திங்கப்புண் கூர்ந்து கணையலைக் கொல்கிய யானை - துணையிலவாய்த் தொல்வலி யாற்றித்1 துளங்கினவாய் மெல்ல நிலங்கால் கவரு மலைபோன்ற செங்கட் சினமால் பொருத களத்து. (ப-ரை) சினம் - கோபத்தையுடைய, செங்கண்மால் –செங்கட் சோழன், பொருத களத்து - போர் செய்த களத்தில், இணை வேல் - இணைத்த வேல்கள், எழில் மருமத்து -அழகிய மார்பில், இங்க - அழுந்துதலால், புண்கூர்ந்து - புண்மிகுத்து, கணை அலைக்கு - அம்பின் அலைப்புகளால், ஒல்கிய யானை - தளர்ந்த யானைகள், துணை இலவாய் - (தம்மேற்கொண்ட) துணைவரை யிலவாய், தொல் வலி - பண்டை வலியினின்று, ஆற்றி - நீங்கி, துளங்கின ஆய் - நடுங்கி, மெல்ல - மெல்ல, நிலம் - நிலத்தை, கால் கவரும் - காலாலே அகப் படுக்கும், மலைபோன்ற - மலையை யொத்தன எ-று. இங்கல் -அழுந்தல், அலை - முதனிலைத் தொழிற் பெயர். அலைக்கு - வேற்றுமை மயக்கம். (21) 22. இருநிலஞ் சேர்ந்த குடைக்கீழ் வரிநுதல் ஆடியல் யானைத் தடக்கை யொளிறுவாள் ஓடா மறவர் துணிப்பத் துணிந்தவை கோடுகொ ளொண்மதியை நக்கும்பாம் பொக்குமே பாடா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன் கூடாரை யட்ட களத்து. (ப-ரை.) பாடுஆர் - ஒலிநிறைந்த, இடி - இடிபோன்ற, முரசின் - முரசினையுடைய, பாய் புனல் - பாய்ந்து செல்லும் நீரினையுடைய, நீர் நாடன் - காவிரிநாட்டை யுடையவனாகிய செங்கட் சோழன், கூடாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், ஒளிறு வாள் - விளங்கும் வாளையேந்திய, ஓடா மறவர் - புறங்கொடாத வீரர்கள், வரி நுதல் - வரிபொருந்திய நெற்றியையுடைய, ஆடு இயல் - வெற்றி சேர்ந்த, யானை தட கை - யானையின் நீண்ட கைகளை, துணிப்ப - துண்டுபடுத்த, துணிந்தவை - துண்டிக்கப்பட்ட அவைகள், இருநிலம் சேர்ந்த - பெரிய நிலத்தில் விழுந்துகிடக்கும், குடைகீழ் - குடைகளின் அருகே. (கிடப்பன), கோடுகோள் - கலை நிறைந்த, ஒள் மதியை - ஒள்ளிய சந்திரனை, நக்கும் பாம்பு - தீண்டுகின்ற பாம்பினை, ஒக்கும் - ஒத்திருக்கும் எ-@று. குடைக்கீழ்க் கிடப்பன என ஒரு சொல் வருவிக்க. ஆடு - வென்றி; அசைதலும் ஆம். கோடு - பக்கம்; ஈண்டுக் கலையை யுணர்த்திற்று. ‘கோடுதிரள் கொண்மூ’ என்பது காண்க. நீர்நாடு - பெயர்; நீர் - ஆகுபெயரும் ஆம். (22) 23. எற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து நெய்த்தோர்ப் புனலு ணிவந்தகளிற் றுடம்பு செக்கர்கொள் வானிற் கருங்கொண்மூப் போன்றவே கொற்றவேற் றானைக் கொடித்திண்டேர்ச் செம்பியன் செற்றாரை யட்ட களத்து. (ப-ரை) கொற்றம் - வெற்றியையுடைய, வேல் - வேலையேந்திய, தானை - சேனையையும், கொடி திண் தேர் - கொடி கட்டிய வலிய தேரையுமுடைய, செம்பியன் - செங்கட்சோழன், செற்றாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், வயவர் எற்றி எறிய - வீரர்கள் (படைக்கலங்களை) எடுத்து எறிய, நுதல் பிளந்து - நெற்றி பிளத்தலால், நெய்த்தோர் புனல்உள் - உதிர நீருள், நிவந்த - மூழ்கியெழுந்த, களிறு உடம்பு - யானைகளின் உடம்புகள், செக்கர் கொள் வான் இல் - செக்கர் வானத்தில், கரும் கொண்மூ - கரிய மேகத்தை, போன்ற - ஒத்தன எ-று. பிளத்தலால் என்பது பிளந்தெனத் திரிந்து நின்றது. நெய்த்தோர் -குருதி. செக்கர் - செந்நிறம்.(23) 24. திண்டோண் மறவ ரெறியத் திசைதோறும் பைந்தலை பாரிற் புரள்பவை நன்கெனைத்தும் பெண்ணையந் தோட்டம் பெருவளி புக்கற்றே கண்ணார் கமழ்தெரியற் காவிரி நீர்நாடன் நண்ணாரை யட்ட களத்து. (ப-ரை) கண்ஆர் - கண்ணுக்கு நிறைந்த (காட்சியையுடைய), கமழ் தெரியல் - மணக்கின்ற மாலையை (அணிந்த), காவிரி நீர் நாடன் - காவிரி நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், நண்ணாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், திண்தோள் - வலிய தோளையுடைய, மறவர் - வீரர்கள், எறிய - (வாளால்) எறிதலால், திசைதோறும் - திசைகள் தோறும், பார் இல் - பூமியில், பைந்தலை - கரிய தலைகள், புரள்பவை - புரளுவன, நன்கு எனைத்து உம் - மிகவும், பெண்ணை தோட்டம் - பனங்காட்டில், பெருவளி – பெருங் காற்று, புக்கது அற்று - புக்க செயலை யொத்தன எ-று. பசுமை - கருமைமேல் நின்றது. அம் - சாரியை. புக்கதற்று என்பது புக்கற்று என்றாயது. பனந் தோட்டத்திற் பெருவளி புக்கால் காய்கள் உதிர்ந்து புரளுமாறு போலத் தலைகள் புரண்டன என்க. (24) 25. மலைகலங்கப் பாயு மலைபோ னிலைகொள்ளாக் குஞ்சரம் பாயக் கொடியெழுந்து - பொங்குபு வானந் துடைப்பன போன்ற புனனாடன் மேவாரை யட்ட களத்து. (ப-ரை) புனல் நாடன் - நீர்நாட்டையுடைய செங்கட்சோழன், மேவாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், மலை கலங்க - மலைகள் கலங்க, பாயும் - பாயாநின்ற, மலைபோல் - மலைகள்போல், கொடி - (அவற்றின் மிசை கட்டப் பெற்ற) கொடிகள், எழுந்து - மேல் எழுந்து ,பொங்குபு - விளங்கா நின்று, வானம் - வானத்தை, துடைப்பன போன்ற - துடைப்பனவற்றை யொத்திருந்தன எ-று. மலைகலங்கப் பாயுமலைபோல் என்றது இல் பொருளுவமம். கொடி துடைப்பனபோன்ற என்க. (25) 26. எவ்வாயு மோடி வயவர் துணித்திட்ட கைவாயிற் கொண்டெழுந்த செஞ்செவிப் புன்சேவல் ஐவாய் வயநாகங் கல்வி விசும்பிவருஞ் செல்வா யுவணத்திற் றோன்றும் புனனாடன் தெவ்வரை யட்ட களத்து. (பி-ரை) புனல் நாடன் - நீர்நாட்டையுடைய செங்கட்சோழன், தெவ்வரை - பகைவரை, அட்ட களத்து -கொன்ற போர்க்களத்தில், எ வாய் உம் ஓடி -எவ்விடத்தும் சென்று, வயவர் - வீரர்கள், துணித்திட்ட - துணித்த, கை - கைகளை, வாய்இல் - (தமது) வாயில், கொண்டு எழுந்த - கல்விக் கொண்டு மேலெழுந்த, செம்செவி - சிவந்த செவிகளையுடைய, புல் சேவல் - புல்லிய பருந்தின் சேவல்கள், ஐ வாய் - ஐந்து வாயையுடைய, வயம் நாகம் - வலியையுடைய பாம்பை, கவ்வி - கவ்விக்கொண்டு, விசும்பு இவரும் - வானிலே பறந்து செல்லும், செம் வாய் - சிவந்த வாயையுடைய, உவணத்தில் - கருடனைப்போல, தோன்றும் - தோன்றாநிற்கும் எ-று. புன்மை - புற்கென்ற நிறம். உவணத்தில் என்புழி இல் ஒப்புப் பொருட்டு. (26) 27. செஞ்சேற்றுட் செல்யானை சீறி மிதித்தலால் ஒண்செங் குருதிகள் தொக்கீண்டி நின்றவை பூநீர் வியன்றமிடாப்1 போன்ற புனனாடன் மேவாரை யட்ட களத்து. (ப-ரை.) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், மேவாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், செம் சேறு உள் - (உதிரத்தாற் சேறுபட்ட) செஞ்சேற்றில், செல் யானை - செல்லுகின்ற யானைகள், சீறி மிதித்தலால் - வெகுண்டு மிதித்தலால் (குழிந்த இடங்களில்), தொக்கு ஈண்டி நின்றவை - ஒருங்கு தொக்குநின்ற, ஒள் - ஒள்ளிய, செம் குருதிகள் - சிவந்த உதிரங்கள், பூ வியன்ற - செம் பூக்களை யாக்கிய, நீர்மிடா - நீர்மிடாவை, போன்ற - ஒத்தன எ-று. குழிந்த இடங்களில் என்னுஞ் சொற்கள் அவாய்நிலையான் வந்தன. பூநீர் வியன்ற மிடா - செம்பூக்களையுடைய நீரினையுடைய அகன்றமிடா எனினும் ஒக்கும். தொக்கு ஈண்டி- ஒரு பொருளன. (27) 28. ஓடா மறவ ருருத்து மதஞ்செருக்கிப் பீடுடை வாளார்1 பிறங்கிய ஞாட்பினுட் கேடகத்தோ டற்ற தடக்கைகொண்2 டோடி இகலன்வாய்த் துற்றிய3 தோற்ற மயலார்க்குக் கண்ணாடி காண்பாரிற் றோன்றும் புனனாடன் நண்ணாரை யட்ட களத்து. (ப-ரை) புனல் நாடன் - நீர்நாட்டையுடைய செங்கட்சோழன், நண்ணாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், ஓடா மறவர் - புறங்கொடாத வீரர்கள், உருத்து - கோபித்து, மதம் செருக்கி - களிப்பால் மிகுந்து, பீடு உடை - பெருமையையுடைய, வாளார் - வாளேந்தினவராய், பிறங்கிய - போர் செய்த, ஞாட்பின்உள் - போரின்கண், கேடகத்தோடு அற்ற - கேடகத்தோடறுபட்ட, தட கை - நீண்ட கைகளை ,கொண்டு ஓடி - கொண்டு சென்று, இகலன் - ஓரிகள், வாய் துற்றிய - (தமது) வாயிற் கவ்விய, தோற்றம் - காட்சி, அயலார்க்கு - அயலில் நின்றவர்க்கு, கண்ணாடி காண்பார் இல் - கண்ணாடி காண்பாரைப் போல, தோன்றும் - தோன்றாநிற்கும் எ-று. பிறங்குதல் போர்செய்தலை யுணர்த்திற்று. அயலார்க்குத் தோன்றும் என்க. (28) 29. கடிகாவிற் காற்றுற் றெறிய வெடிபட்டு வீற்றுவீற் றோடு மயிலினம்போல் - நாற்றிசையும் கேளி ரிழந்தா ரலறுபவே செங்கட் சினமால் பொருத களத்து. (ப-ரை) செம் கண் - சிவந்தகண்களையும், சினம்- வெகுளியையுமுடைய, மால் - செங்கோட்சோழன், பொருத களத்து - போர் செய்த களத்தில் , கடிகா இல் -மரங்கள் செறிந்த சோலையில், காற்று உற்று எறிய - காற்று மிக்கு எறிதலால், வெடிபட்டு - அஞ்சி, வீற்று வீற்று ஓடும் - வேறு வேறாக ஓடும், மயில் இனம்போல் - மயிலின் கூட்டம் போல், நால் திசைஉம் - நான்கு திசையிலும், கேளிர் இழந்தார் - கொழுநரை யிழந்த மகளிர், அலறுப - அலறாநிற்பர் எ-று. வீறு - வேறு; ‘சோறுடைக் கையர் வீற்று வீற் றியங் கும்’ எனப் புறத்தில் வருவது காண்க. செங்கண் மால் என இயைத்துப் பெயராக்குதலும் ஆம். நாற்றிசை யும் அலறுப என்க. அலறுப - பலர்பால் முற்று (29). 30. மடங்கா வெறிந்து மலையுருட்டு நீர்போல் தடங்கொண்ட வொண்குருதி கொல்களி றீர்க்கு மடங்கா மறமொய்ம்பிற்1 செங்கட் சினமால் அடங்காரை யட்ட களத்து. (ப-ரை.) மடங்கா - மங்குதலில்லாத, மறம் - மறத்தினையுடைய, மொய்ம்பு இன் - மார்பினையும், செம் கண் -சிவந்த கண்ணினையும், சினம் - கோபத்தையும் உடைய, மால் - செங்கட்சோழன், அடங்காரை - பகைவரை, அட்ட களத்து -கொன்ற போர்க்களத்தில், மலை மடங்கா எறிந்து - மலைகள் மறிய எறிந்து, உருட்டும் நீர்போல் - (அம்மலைகள்) உருட்டுகின்ற வெள்ளத்தைப்போல, தடம்கொண்ட - பரந்த, ஒள் குருதி - ஒள்ளிய உதிர வெள்ளம், கொல் களிறு - கொல்லப்பட்ட யானைகளை, ஈர்க்கும் - இழுத்துச் செல்லhநிற்கும் எ-று. மறம் மொய்ம்பு - முறையே வீரமும் வலியும் எனினும் பொருந்தும். மடங்கல் என்னும் பாடத்திற்குச் சிங்கம்போல என்றும், மடங்குதல் அல்லாத என்றும் பொருள் கொள்ளலாகும். கொல் களிறு - கொலைத் தொழிலையுடைய யானை எனினும் அமையும். செங்கண் என்பதற்கு மேலுரைத்தமை காண்க. (30) 31. ஓடா மறவ ரெறிய நுதல் பிளந்த கோடேந்து கொல்களிற்றுக் கும்பத் தெழிலோடை மின்னுக் கொடியின் மிளிரும் புனனாடன் ஒன்னாரை யட்ட களத்து. (ப-ரை) புனல் நாடன் -நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், ஒன்னாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், ஓடா மறவர் - புறங்கொடாத வீரர்கள், எறிய - வேலினை யெறிதலால், நுதல் பிளந்த - நெற்றி பிளந்த, கோடு ஏந்து - கொம்பினை யேந்திய, கொல் களிறு - கொல்லும் யானையின், கும்பத்து – மத்தகத்தில் (கட்டிய), எழில் ஓடை - அழகிய பட்டம், மின்னுகொடி இல் - (முகிலின்கண்) மின்னற்கொடிபோல, மிளிரும் - விளங்கா நிற்கும் எ-று. பிளந்தகளிறு, ஏந்துகளிறு எனத் தனித்தனி முடிக்க. பிளந்த - பிளக்கப்பட்ட. மின்னுக்கொடி - ‘தொழிற் பெயரில்’ என்பதனான் உகரம் பெற்றது. (31) 32. மையின்மா மேனி நிலமென்னும் நல்லவள் செய்யது போர்த்தாள்போற் செவ்வந்தாள்1 - பொய் பூந்தார் முரசிற் பொருபுன னீர்நாடன் காய்ந்தாரை யட்ட களத்து. (ப-ரை) பூ தார் - பூமாலையினையும், முரசு இன் - வெற்றி முரசினைமுயுடைய, பொய்தீர்ந்த - வறத்த லில்லாத, பொரு - (கரையொடு) மோதும், புனல் - நீரினையுடைய, நீர்நாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட்சோழன், காய்ந்தாரை - வெகுண்ட பகைவரை, அட்ட களத்து -கொன்ற போர்க்களத்தில், மை இல் - குற்றமில்லாத, மாமேனி -அழகிய மேனியையுடைய, நிலம் என்னும் நல்லவள்- பூமி என்னு மாது, செய்யது - சிவந்த போர்வையை, போர்த்தாள்போல் - போர்த்தவள் போல, செவ்வந்தாள் - செந்நிற மெய்தினாள் எ-று. நிலத்தை மகடூஉவாகக் கூறுதல் மரபு. “செல்லான் கிழவனிருப்பி னிலம்புலந், தில்லாளி னூடி விடும்” என்பதும் சிந்திக்கற்பாலது. செய்யது - குறிப்பு வினைப்பெயர். செவ்வந்தாள் - செவ்வரல் பகுதி. செவ்வென்றாள் எனின் செவ்வென் பகுதி. முரசினையுடைய நாடன் என்க. பொய் தீர்ந்த என்பதனை ‘வானம் பொய்யாது’ என்புழிப்போலக் கொள்க. காவிரியின் பொய்யாமையை ‘கரியவன் புகையினும். .................ஓவிறந் தொலிக்கும்’ என்னும் நாடுகாண்காதை யடிகளா னறிக. (32) 33. பொய்கை யடைந்து புனல்பாய்ந்த வாயெல்லா நெய்த லிடையிடை வாளை பிறழ்வனபோல் ஐதிலங் கெஃகி னவிரொளிவா டாயினவே கொய்சுவன் மாவிற் கொடித்திண்டேர்ச் செம்பியன் தெவ்வரை யட்ட களத்து. (ப-ரை) கொய் - கத்திரித்த, சுவல் - புறமயிரையுடைய, மாஇன் - குதிரையினையும், கொடி - கொடிகட்டிய, திண்தேர் - வலிய தேரினையுமுடைய, செம்பியன் - செங்கட்சோழன், தெவ்வரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், பொய்கை உடைந்து - பொய்கைக் கரையுடைதலால், புனல் பாய்ந்த - (அதன் கண்ணுள்ள) நீர்பரந்த, வாய் எல்லாம் - இடமெல்லாம், நெய்தல் - (மலர்ந்த) நெய்தற் பூக்களின், இடை இடை - நடுவே நடுவே, வாளை பிறழ்வனபோல் - வாளை மீன்கள் பிறழ்தல்போல, ஐது இலங்கு - அழகியதாய் விளங்காநின்ற, எஃகுஇன் - வேலொடு, அவிர் ஒளி - விளங்கும் ஒளியையுடைய, வாள் தாயின - வாள் பறந்தன எ-று. ஐது அஃறிணை யொன்றன்பாற் படர்க்கைக் குறிப்பு வினை முற்று எச்சமாய் இலங்கு என்னும் காலங்கரந்த பெயரெச்சங் கொண்டது. ஐ பகுதி, து ஒன்றன்பால் விகுதி. தாயின அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை இறந்தகால வினைமுற்று; தாவு பகுதி, இன் இடைநிலை, வகரம் யகரமாய்த் திரிந்தது. (33) 34. இணரிய ஞாட்பினு ளேற்றெழுந்த மைந்தர் சுடரிலங் கெஃக மெறியச்சோர்ந் துக்க குடர்கொண்டு 1 வாங்குங் குறுநரி கந்தில் தொடரொடு கோணாய் புரையு மடர்பைம்பூட் சேய்பொரு தட்ட களத்து. (ப-ரை) அடர் - தகட்டுவடிவமாகிய, பைம் - பூண் - பசிய அணி கலத்தினையுடைய, சேய் - செங்கட்சோழன், பொருது அட்ட - போர்செய்து கொன்ற, களத்து- களத்தின்கண், இணரிய ஞாட்பின் உள்- தொடர்ந்து நெருங்கிய போரில், ஏற்று எழுந்த - எதிர்த்தெழுந்த, மைந்தர் - வீரர்கள், சுடர் இலங்கு - ஒளிவிளங்காநின்ற, எஃகம் - வேல்களை, எறிய - எறிதலால், சோர்ந்து உக்க - சரிந்து சிந்திய, குடர்கொண்டு - (வீரர்களின்) குடர்களைக் கவ்விக்கொண்டு, வாங்கும் - இழுக்கும், குறுநரி -குறுநரிகள், கந்துஇல் - தூணிலே (கட்டப்பட்ட), தொடர் ஒடு - சங்கிலியோடு (நின்ற), கோணாய் புரையும் - கோணாய்களை யொக்கும் எ-று. இணரிய - இணர் பகுதி, இன் இடைநிலை கடைகுறைந்து நின்றது. கோணாய் வேட்டமாடும் நாய். குறு நரி - நரியின் ஓர் வகை; ‘குறுநரி பட்டற்றால்’ என்பது கலி. அடர் - தகடு. (34) 35. செவ்வரைச் சென்னி யரிமானோ டவ்வரை ஒல்கி யுருமிற் குடைந்தற்றான் - மல்கிக் கரைகொன் றிழிதரூஉங் காவிரி நாடன் உரைசா னுடம்பிடி மூழ்க வரசோ(டு) அரசுவா வீழ்ந்த களத்து. (ப-ரை) மல்கி - மிகுந்து, கரை கொன்று - கரைகளை யழித்து, இழிதரும் - செல்லும், காவிரிநாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட் சோழனது, உரைசால் - புகழமைந்த, உடம்பிடி மூழ்க - வேல்கள் குளிப்ப, அரசுஓடு - அரசரோடு, அரசுஉவா - (பட்டம்பெற்ற) யானைகள், வீழ்ந்த களத்து - மறிந்துவீழ்ந்த களத்தின்கண் (அங்ஙனம் விழுந்தமை), செம் வரை - செவ்விய மலையின், சென்னி - உச்சியிலுள்ள, அரிமான் ஓடு - சிங்கத்துடன், அ வரை - அந்த மலை, ஒல்கி - தளர்ந்து, உருமிற்கு - இடி யேற்றிற்கு, உடைந்தற்று - அழிந்தாற்போலும் எ-று. அரசர்க்கு அரிமானும், யானைக்கு மலையும் உவமம். உடைந்தால் என்பது உடைந்து என நின்றது. 36. ஓஒ உவம னுறழ்வின்றி யொத்ததே காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள் மாவுதைப்ப் மாற்றார் குடையெலாங் கீழ்மேலா ஆவுதை காளாம்பி போன்ற புனனாடன் மேவாரை யட்ட களத்து. (ப-ரை) காவிரி நாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட்சோழன், கழுமலம் - கழுமலமென்னும் ஊரினை, கொண்ட நாள் – கைக் கொண்ட நாளில், புனல் நாடன் - அவன், மேவாரை - பகைவரை, அட்ட களத்து -கொன்ற போர்க்களத்தில், மா உதைப்ப- குதிரைக ளுதைத்தலால், மாற்றார் - பகைவரின், குடையெல்லாம் – குடை களெல்லாம், கீழ்மேல் ஆய் - கீழ்மேலாகி, ஆ, உதை - ஆணிரைகளா லுதைக்கப் பட்ட, காளாம்பி போன்ற - காளாம்பியை யொத்தன, உவமன் - அவ்வுவமை, உறழ்வு இன்றி - மாறுபா டில்லாமல், ஒத்தது - பொருந்தியது எ-று. முதலடி முற்றுமோனை, ஓ வென்பது சிறப்புணர்த்திற்று. புனனாடன் என்பது சுட்டு. உவமன் என்புழிச் சுட்டு வருவிக்க, கழுமலம் ‘சேர நாட்டகத்ததோர் ஊராதல் வேண்டும். ‘நற்றேர்க் குட்டுவன் கழுமலம்’ என்பதும் காண்க. (36) 37. அரசர் பிணங்கான்ற நெய்த்தோர் முரசொடு முத்துடைக் கோட்ட களிறீர்ப்ப - எத்திசையும் பௌவம் புணரம்பி போன்ற புனனாடன் தெவ்வரை யட்ட களத்து. (ப-ரை) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், தெவ்வரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், அரசர் பிணம் - அரசர் பிணங்கள், கான்ற - சிந்திய, நெய்த்தோர் - உதிரவெள்ளங்கள், எ திசை உம் - எல்லாத் திசைகளிலும், முரசு ஒடு - முரசினோடு, முத்து உடை - முத்தினையுடைய, கோட்ட - கொம்புகளையுடைய, களிறு - யானைகளை, ஈர்ப்ப - இழுப்ப (அவைகள்), பௌவம் - கடலையும், புணர் - (அக்கடலைச்) சேர்ந்த, அம்பி - மரக்கலன்களையும், போன்ற - ஒத்தன எ-று. அரசரின் உடல் மறிந்து கிடப்பதனை அரசர் பிணம் என்றார். முரசினையும் களிற்றினையும் ஈர்ப்ப என்க. அவையெனச் சுட்டு வருவிக்க. கோட்ட - குறிப்புப் பெயரெச்சம். (37) 38. பருமப் பணையெருத்திற் பல்யானை புண்கூர்ந்(து) உருமெறி பாம்பிற் புரளுஞ் - செருமொய்ம்பிற் பொன்னார மார்பிற் புனைகழற்காற் செம்பியன் துன்னாரை யட்ட களத்து. (ப-ரை) செரு மொய்ம்பு இன் - போர் வலியினையும், பொன் ஆரம் -பொன்னாற் செய்த ஆரத்தை யணிந்த, மார்பு இன் - மார்பினையும், புனைகழல்கால் - கட்டிய வீரக்கழலினையுடைய காலினையுமுடைய, செம்பியன் -செங்கட்சோழன், துன்னாரை - பகைவரை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், பருமம் - பண்ணினையும், பணை - பருத்த, எருத்து ,ன் - பிடரினையு முடைய, பல் யானை - பல யானைகள், புண்கூர்ந்து -(படைகளால்) புண் மிகுதலால், உரும் எறி - இடியேற்ற லெறியப் பட்ட, பாம்பு இன் - பாம்பு போல, புரளும் - புரளாநிற்கும் எ-று. பருமம் - ஒப்பனை. பாம்பின் - ஐந்தனுருபு ஒப்புப் பொருட்டு. எருத்தின் முதலியவற்றில் சாரியை யுள்வழித் தன்னுருபு நிலையாது வருதலை ‘மெல் லெழுத்து மிகுவழி’ என்னுஞ் சூத்திரத்து ‘மெய்பெற’ என்பதனாற் கொள்ப. (38) 39. மைந்துகால் யாத்து மயங்கிய ஞாட்பினுட் புய்ந்துகால் போகிப் புலான்முகந்த வெண்குடை பஞ்சிபெய் தாலமே போன்ற புனனாடன் வஞ்சிக்கோ வட்ட களத்து. (ப-ரை) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், வஞ்சி கோ - வஞ்சி யரசனாகிய சேரனை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், மைந்து - (வீரர்கள் தங்கள்) மறவலிகள், கால் யாத்து - காலைத் தளை செய்தலால், மயங்கிய - போகாது மிடைந்த, ஞாட்பின் உள் - போரின்கண், கால் புய்ந்து போகி - காம்பு பறிந்து போகப்பட்டு, புலால் முகந்த - செந்தசையை முகந்த, வெண்குடை - வெள்ளைக் குடைகள், பஞ்சிபெய் - செம் பஞ்சுக் குழம்பு பெயத, தாலம் ஏ போன்ற - தாலத்தையே யொத்தன எ-று. தாலம் - வட்டில், புய்ந்து - புய் பகுதி, ‘புய்த்தெறி நெடுங்கழை’ என்பது புறம். (39) 40. வெள்ளிவெண் ணாஞ்சிலான் ஞால முழுவனபோல் எல்லாக் களிறு நிலஞ்சேர்ந்த - பல்வேற் பணைமுழங்கு போர்த்தானைச் செங்கட் சினமால் கணைமாரி பெய்த களத்து. (ப-ரை) பல்வேல் - பல வேலினையும், பணை முழங்கு - முரசு முழங்காநின்ற, போர் தானை - போர்ச்சேனையையும், சினம் - கோபத்தையு முடைய, செங்கண்மால் - செங்கட்சோழன், கணை மாரி - அம்பு மழை, bபய்த களத்து - பெய்த போர்க்களத்தில், வெள்ளி - வெள்ளியாற் செய்த, வெள்நாஞ்சிலால் - வெள்ளிய கலப்பையால், ஞாலம் உழுவனபோல் - நிலத்தை யுழுதல்போல, களிறு எல்லாம் - யானை களெல்லாம், நிலம் சேர்ந்த - (முகங்கவிழ்ந்து) நிலத்தைச் சேர்ந்தன எ-று. (40) யானையின் வெண்கோடுகள் வெள்ளிநாஞ்சில் போன்றன. மாரி பெய்தவழி நிலம் உழுதலாகிய செயல் நிணைப்பிக்கப்பட்டது. 41. வேனிறத் திங்க வயவரா லேறுண்டு கானிலங் கொள்ளாக் கலங்கிச் செவிசாய்த்து மாநிலங் கூறு மறைகேட்ப போன்றவே பாடா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன் கூடாரை யட்ட களத்து. (ப-ரை) பாடு ஆர் - ஒலி நிறைந்த, இடி - இடிபோன்ற, முரசு இன் - முரசினையுடைய, பாய் புனல் - பாய்ந்து செல்லும் நீரினையுடைய, நீர்நாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட்சோழன், கூடாரை - பகைவரை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், வேல் - வேலானது, நிறத்து இங்க - மார்பிலழுந்த, வயவரால் - வீரரால், ஏறுண்டு - குத்துப்பட்டு, கால் நிலம் கொள்ளாது - கால்கள் தளர்ந்து, கலங்கி - வீழ்ந்து, செவிசாய்த்து - செவிகளைச் சாய்த்து, (யானைகள் கிடத்தல்), மா நிலம் -பெரிய நிலமகள், கூறும் - உபதேசிக்கும், மறை - உபதேச மொழியை, கேட்ப போன்ற - கேட்டலை யொத்தன எ-று. மறை - மந்திரம், மறைந்த பொருளுடையது. செவி சாய்த்து என்பதனால் அது கேட்கு முறைமை யுணர்த்தப்பட்டது, அவாய் நிலையாற் சில சொற்கள் வருவிக்கப்பட்டன. (41) பாட்டு முதற்குறிப்பகராதி (எண் - பக்கவெண்) அஞ்சனக் 6 அரசர் 28 ஆர்ப்பெழுந்த 13 இடைமருப்பின் 15 இணரிய 26 இருசிறக 16 இருநிலஞ் 17 இணைவே 17 உருவக்கடுந் 4 எவ்வாயு 20 எற்றிவயவ 18 ஒழுக்குங் 3 ஓஒஉவம 28 ஓடாமறவரு 24 ஓடாமறவரெறி 22 ஓவாக்கணை 10 கடகாவிற் 22 கவளங்கொள் 11 கழுமிய 9 கொல்யானை 12 செஞ்சேற்றுட் 21 செவ்வரைச் 27 ஞாட்பினு 2 திண்டோண் 19 தெரிகணை 4 நளிந்த 15 நானாற்றிசை 5 நாண்ஞாயி 1 நிரைகதிர் 11 பருமவின 13 பருமப்பணை 29 பல்கணை 8 பொய்கை 25 மடங்க 23 மலைகலங்க 20 மேலோரை 8 மையின்மா 24 மைந்து 30 யானைமேல் 7 வெள்ளி 30 வேனிறத் 31 ‘முற்பகல்’ என்றும் பாடம். 2. ‘பிறபகல்’ என்றும் பாடம். ‘எழூஉம்’ என்றும் பாடம். ‘தூவெறிந்து’ என்றும் பாடம். ‘மெய்ம்மறைப்ப’ என்றும் பாடம். ‘இருங்கடலுணீலச்சுறாப்பிறழ்வ’ என்றும் பாடம் ‘கைகடுணிக்க’ என்றும், ‘திகழொளிய’ என்றும் பாடம். ‘விளக்குப்போன்றனவே’ என்றும் பாடம். ‘தடற்றிலங்கொள்வாள்’ என்றும் பாடம். ‘எஃகங்காழ்’ என்றும் பாடம் ‘தோன்றி’ என்றும் பாடம் ‘தோற்றந்திரலிலா’ என்றும் பாடம். தொல்வலியிற்றீர என்பதுவே சிறந்த பாடம். ‘பூவியன்ற நீர்மிடா’ என்று பாடங் கொள்ளுதல் வேண்டும். ‘வாளர்’ என்றும், ‘ஓரி இகலனவாய்’ என்றும், ‘வாய்துற்றிய ’ என்றும் பாடம். ‘மடங்கன் மறமொய்ம்பின்’ என்றும் பாடம். ‘செவ்வென்றாள்’ என்றும் பாடம். ‘குடர் கொடு’ என்றும் பாடம். திரிகடுகம் முகவுரை திரிகடுகம் என்பது கடைச்சங்கப் புலவர்கள் இயற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இறையனாரகப் பொருளுரையிற் கடைச்சங்கப் புலவர் பாடியவற்றைக் கூறி வருமிடத்தே கீழ்க்கணக்குகள் குறிக்கப்படவில்லையேனும், பின்னுளோர் பலரும் அவையும் சங்கத்தார் பாடியனவென்றே துணிந்து எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு என எண்ணி வருகின்றனர். கீழ்க்கணக்கியற்றியோருட் கபிலர், கண்ணஞ் சேந்தனார், கூடலூர் கிழார், பொய்கையார் முதலானார் சங்கத்துச் சான்றோரென நன்கறியப்படுதலின், அவற்றுட் பலவும் அக்காலத்தினவெனக் கருதுவதில் இழுக்கொன்றுமின்று. கீழ்க்கணக்கு நூல் பதினெட் டென்பது, தொல்காப்பியச் செய்யுளியலில், வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியிற் றாய பனுவலோ டம்மை தானே யடிநிமிர் பின்றே. என்னுஞ் சூத்திரவுரைக்கட் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரைக்குமாற்றானறியப்படுவது. அவை, அம்மையென்னும் வனப் புடைய வென்பதும் அவ்வுரையாற் றெளியப்படும். அம்மை யெனவே, அவையெல்லாம் சிலவாகிய மெல்லிய சொற்களா லமைந்தன வென்பதும், அடிநிமிராதன வென்பதும் பெரும்பாலும் அறம் பொருளின் பங்களைப் பற்றியன வென்பதும் போதரும். பழைய பனுவல்களை அளவு முதலியன பற்றி மேற்கணக்கெனவும் கீழ்க்கணக் கெனவும் பின்னுளோர் வகைப்படுத்தினர். அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி யறம்பொரு ளின்ப மடுக்கி யவ்வத் திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும். என்பது பன்னிருபாட்டியல். நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலை சொற் காஞ்சியோ டேலா தியென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு. என்பதோர் வெண்பா. கீழ்க்கணக்கு நூல்கள் இவை யென்பதனை அறிவித்தற் கெழுந்தது. எனக் கொள்ள வேண்டும். இதனால் அறிவிக்கப்படும் நூல்களாவன: நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, *இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழிநாற்பது, ஐந்திணை யைம்பது, ஐந்திணை யெழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம், இன்னிலை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி என்பன. இவற்றுள் இன்னிலை என்பதனை விடுத்துக் கைந்நிலை யென்பதொன்றைச் சேர்த்துக் கூறுவாருமுளர்; அவர் இன்னிலை யென்பது ஓர் பழம் பனுவலன்றெனவும், கைந்நிலையே பழமையாய தெனவும் கூறுவர். “நாலடி நான்மணி என்னும் வெண்பா”வானது, “ஐந்தொகை”, ‘இன்னிலைய’, ‘மெய்ந்நிலைய’, ‘கைந்நிலையோடாம்’, ‘நன்னிலையவாம்’ என்னும் பல பாடவேற்றுமைகளையுடையது; ஆகலின் அது கொண்டு இன்னிலை யென்றோ கைந்நிலை யென்றோ துணிதல் அரிதாகும். இப்பொழுது இன்னிலை யென்பதோர் நூலும் கைந்நிலை யென்பதோர் நூலும் வெளி வந்துள்ளன. இரண்டும் கீழ்க்கணக்கின் இலக்கணம் அமைந்தனவே. அவற்றுள், பதினெட்டென்னும் தொகையுட்பட்டது யாதாயினும் ஆக. இனி, திரிகடுகம் என்னும் இந்நூலை இயற்றினவர் நல்லாதனார் என்பவர். நல்லந்துவனார், நன்முல்லையார், நல்வேட்டனார் என்றிங்ஙனம் நல் என்னும் அடையடுத்த பெயர்களையுடைய சங்கப் புலவர் பலராவர். ஆதன் என்னும் பெயர் நல் என்னும் சிறப்புப் பற்றிய அடையை முன்னும் ஆர் என்னும் உயர்வு பற்றிய விகுதியைப் பின்னும் பெற்று நல்லாதனார் என்றாயிற்று. இவர் திருமால் பத்தியுடையரென்பது ‘கண்ணகன் ஞால மளந்ததூஉம்’ என்னும் இந்நூற் கடவுள் வாழ்த்துச் செய்யுளால் அறியப்படும். இந்நூல் கடவுள் வாழ்த்து உட்பட நூற்றொரு வெண்பாக்களை யுடையது; ஒவ்வொரு வெண்பாவும் மும்மூன்று பொருள்களைக் கூறுவதனாலும், ‘அருந்ததிக் கற்பினார் தோளும்’ என்னும் முதற் செய்யுளில் ‘இம் மூன்றும் திரிகடுகம் போலும் மருந்து என இவரே உவமை கூறினமையாலும் இது திரிகடுகம் என்னும் பெயரின தாயிற்று. திரிகடுகம் சுக்குத் திப்பிலி மிளகு என்னும் மூன்று கார்ப்புடைய மருந்துப்பொருள்கள். அவை உடற் பிணியை அகற்றி இன்பஞ் செய்தல் போல் இந்நூற் செய்யுட்கள் கூறும் மும்மூன்று பொருள்களும் உயிர்ப்பிணியாகிய அறியாமையைக் கெடுத்து இன்பஞ் செய்வனவாம் என்க. இந் நூலிலுள்ள வெண்பாக்களிற் பாதியின் மிக்கன இன்னிசை வெண்பா; ஏனையன நேரிசை வெண்பா.’ திரிகடுகம் கடவுள் வாழ்த்து கண்ணகன் ஞாலமளந் ததூஉங் காமருசீர்த் தண்ணறும் பூங்குருந்தஞ் சாய்த்ததூஉம்- நண்ணிய மாயச் சகட முதைத்ததூஉ மிம்மூன்றும் பூவைப்பூ வண்ண னடி. (பதவுரை) கண்அகல் - இடம்பரந்த, ஞாலம் - உலகத்தை, அளந்ததூஉம்- அளந்ததுவும், காம சீர் - அழகிய புகழையுடைய, தண் - குளிர்ந்த, நறும்பூ குருந்தம் - நல்ல (மணமுடைய) நீல மலர்களையுடைய குருந்த மரத்தை, சாய்த்ததூஉம் - வீழ்த்தியதுவும், நண்ணிய - (கஞ்சனால் விடப்பட்டுத்) தன்னைக்கிட்டிய, மாயச் சகடம் - வஞ்சனைச் சகடத்தை, உதைத்ததூஉம் - உதைத்து வீழ்த்தியதுவும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்று செய்கையும், பூவைப்பூவண்ணன் - காயாமலர் போலும் நிறத்தை யுடைய திருமாலின், அடி - அடிகளின் செய்கைகளாம் என்றவாறு. ஞாலம் ஈண்டு உலகம் என்னும் பொருட்டு. “ஞால மூன்றடித் தாய முதல்வற்கு” (கலி - 1 - 124) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. ஞாலமளந்தது முதலியன “ மூவுலகு மீரடியான் முறைநிரம்பா வகை முடியத் தாவிய சேவடி.” “ கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன்.” “ நின் மாமன் செய்வஞ்ச உருளுஞ் சகடமுதைத் தருள் செய்குவாய்” எனச் சிலப்பதிகாரத்திற் கூறப்பட்டன. “ பூவைப் புதுமல ரொக்கு நிறம்”. என்பது நான்மணிக்கடிகை. காமரு, உ- சாரியை; காமம் மரு என்பது விகாரமாயிற்றெனக் கொண்டு, விருப்பம் மருவிய என்றுரைத்தலுமாம். அளபெடைகள் இன்னிசை நிறைக்க வந்தன. இம்மூன்றும் செய்தவை அடிகள் என்றுமாம். இம்மூன்று அரிய செயல்களும் செய்தன திருமாலின் அடி களாதலின் அவ்வடிகளை நினைந்து வாழ்த்தி வணங்கின் எல்லா நலமும் எய்தலாம் என்பது கருத்து. இது பொருளியல்புரைக்கு முறையில் உலகிற்குப் பயனுண்டாகக் கூறிய வாழ்த்தாகும். 1. அருந்ததிக் கற்பினார் தோளுந் திருந்திய தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியுஞ் - சொல்லின் அரிலகற்றுங் கேள்வியார் நட்புமிம் மூன்றுந் திரிகடுகம் போலு மருந்து. (ப-ரை): அருந்ததி கற்பினார்- அருந்ததி போலும் கற்பினையுடைய மகளிரது, தோளும் - தோளின் சேர்க்கையும், திருந்திய - குற்றமற்ற, தொல்குடியின் - பழைமையாகிய குடிப்பிறப்பின் கண், மாண்டார் - மாட்சிமையுற்றாரது, தொடர்ச்சியும் - தொடர்பும், சொல்லின் - சொல்லின்கண், அரில் அகற்றும் - பிணக்கை நீக்கும், கேள்வியார் - நூற்கேள்வியுடை யாரிடத்துக் கொண்ட, நட்பும் - நட்பும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்றும், திரிகடுகம் போலும் மருந்து - (ஒருவர்க்கு) திரிகடுகையொக்கும் மருந்துகளாம். எ-று. அருந்ததி - வசிட்டன் மனைவி; கற்பிற்கு எடுத்துக் காட்டாயவள். “ தீதிலா வடமீனின் றிறமிவள் திறம்” என்று சிலப்பதிகாரத்தும், “ அருந்ததிக் கற்பினாளை யடிபணிந் தவனுங் கண்டான்” என்று சிந்தாமணியிலும், “சீலமின்ன தொன்ற ருந்ததிக் கருளிய திருவே.” என்று கம்பராமாயணத்திலுங் கூறப்பெற்றமை காண்க. அரில் - மாறுபாடு, குற்றம். திரிகடுகம் - மூன்று கார்ப்புடைய மருந்துப் பொருள்கள், சுக்கு, திப்பிலி, மிளகு என்பன; திரிகடுகம் உடலின் பிணி நீக்கி இன்பம் பயத்தல் போல இம்மூன்றும் உடல் உயிர்களின் பிணிகளை நீக்கி இன்பம் விளைப்பனவாகுமென்க. சொல்லின் இம்மூன்றும் மருந்து எனக் கூட்டியுரைத்தலுமாம். மாண்டார் - மாண் பகுதி. 2. தங்குணங் குன்றாத் தகைமையுந் தாவில்சீர் இன்குணத்தா ரேவின செய்தலும் - நன்குணர்வின் நான்மறை யாளர் வழிச்செலவு மிம்மூன்றும் மேன்முறை யாளர் தொழில். (ப-ரை): தம்குணம் குன்றா - தமது குடிமைக்கும் நிலைமைக்கு மேற்ற பண்பினின்றும் வழுவாத, தகைமையும் - தன்மையும், தாஇல்- கேடில்லாத, சீர் - புகழையுடைய, இன்குணத்தார் - இனிய குணத்தினை யுடையவர், ஏவின - பிறர் ஏவினவற்றை, செய்தலும்- செய்வதும், நன்கு உணர்வின் - நன்றாகிய உணர்வினையுடைய, நான்மறையாளர் - நான்கு வேதங்களையும் அறிந்த அந்தணர் கூறிய நெறியில், செலவும் - ஒழுகுதலும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்றும், மேன்முறையாளர் - மேலாகிய முறையினையுடையாரின், தொழில் - செயல்களாம். எ-று. தகைமை - பெருமையுமாம். ஏவின - வினையாலணையும் பெயர். மேன்முறையாளர் - மேலோரின் ஒழுக்கமாகிய முறையைக் கையாளுபவர். 3. கல்லார்க் கினனா யொழுகலுங் காழ்கொண்ட இல்லாளைக் கோலாற் புடைத்தலும் - இல்லஞ் சிறியாரைக் கொண்டு புகலுமிம் மூன்றும் அறியா மையான்வருங் கேடு. (ப-ரை): கல்லார்க்கு - (நூல்களைக்) கற்றறியாதார்க்கு, இனன் ஆய் - இனமாகி, ஒழுகலும் - நடத்தலும், காழ் கொண்ட - வயிரங்கொண்ட, இல்லாளை - மனையாளை, கோலால் புடைத்தலும் - கோல் கொண்டு அடித்தலும், இல்லம் - (தம்) மனையின்கண், சிறியாரை - சிறுமைக் குணமுடைய காமுகரை, கொண்டு புகலும் - உடன் கொண்டு செல்லுதலும் , இம்மூன்றும் - (ஆகிய) இந்தமூன்றும், அறியாமையான் வருங்கேடு - பேதமை காரணமாக வருங்கேடுகளாம். எ-று. இனன் - சுற்றம், காழ்கொண்ட - செற்றங்கொண்ட “ காழ்த்த பகைவர் வணக்கமும்”. (திரிகடுகம் -24) என்புழிக் காழ்த்தல் இப்பொருட்டாதல் காண்க. காழ்கொண்டவள் எறியென்று எதிர்நிற்பாளாவள். காழ்கொண்ட என்பதற்குக் கற்பின் உறுதியைக் கொண்ட என்றுரைப்பாருமுளர். சிறியார் காமுகராதலை “செருக்குஞ் சினமுஞ் சிறுமையுமில்லார்”. என்னுங் குறளுரை நோக்கியுணர்க. கேடு பயப்பனவற்றைக் கேடு என உபசரித்தார். 4. பகைமுன்னர் வாழ்க்கை செயலுந் தொகைநின்ற பெற்றத்துட் கோலின்றிச் சேறலும் - முற்றன்னைக் காய்வானைக் கைவாங்கிக் கோடலு மிம்மூன்றுஞ் சாவ வுறுவான் றொழில். (ப-ரை): பகைமுன்னர் - தன்பகைவரிடத்துக்கு அணிமையில், வாழ்க்கை செயலும் - (குடியிருந்து) வாழ்க்கை நடத்துதலும், தொகை நின்ற - கூட்டமாக நின்ற, பெற்றத்துள் - எருதுகளின் நடுவில், கோல் இன்றிச் சேறலும் - கோல் இல்லாமல் செல்லுதலும், முன் தன்னைக் காய்வானை - காலம் நேர்ந்துழித் தன்னை வருத்தும் உட்பகையுடைய வனை, கைவாங்கிக் கோடலும் - (பகையிலனென்று) தழுவிக் கொள்ளுதலும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்றும், சாவ உறுவான் தொழில் - சாதற்கு அமைந்தவனுடைய செயல்களாம். எ-று. வாழ்க்கை செயல் என்பதற்குச் செல்வத்துடன் வாழ்தல் என்று கூறுதலுமாம். முன் என்பது எதிர்வையுணர்த்திற்று. கைவாங்கி என்பதற்கு நீங்கி எனப் பொருள் கொண்டு, தன்னைப் பகைக்குமியல் புடையவனை முன்னே கைவிட்டு நீங்கிப் பின் நட்புக் கொள்ளுதலும் என்று உரைப்பாருமுளர். இவை சாதலை விளக்குமென்பார், ‘இம்மூன்றும் சாவவுறுவான்றொழில்’ என்றார். 5. வழங்காத் துறையிழிந்து நீர்ப்போக்கு மொப்ப விழைவிலாப் பெண்டிர்தோட் சேர்வும் - உழந்து விருந்தினனாய் வேற்றூர் புகலுமிம் மூன்றும் அருந்துயரங் காட்டு நெறி. (ப-ரை): வழங்கா - (பலரும் இறங்கிச்) செல்லப் பெறாத, துறை இழிந்து - துறையின்கண் இறங்கி, நீர்ப்போக்கும் - நீரில் நடந்து செல்லுதலும், ஒப்ப - தன்னையொப்ப, விழைவு இலா – விருப்ப மில்லாத, பெண்டிர்தோள் - மகளிரின் தோள்களை, சேர்வும் - அணைதலும், உழந்து - வருந்தி, விருந்தினனாய் - விருந்தினனாகி, வேற்றூர் - அயலூரில், புகலும் - செல்லுதலும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்றும், அருந்துயரம் - அரிய துன்பத்தைக், காட்டும் நெறி - உண்டாக்கும் வழிகளாம். எ-று. ஒப்ப விழைதல் - ஒத்த அன்புடைத்தாதல்; விழைவு என்பதற்கு விரும்பப்படும் அழகும் குணனும் என்றுரைத்தலுமாம். உழந்து என்பதற்குச் செல்வத்தையிழந்து வருந்தி என்று பொருள் கொள்க. அருந்துயரம் - சாக்காடு முதலியன; துயர் என்பது சாதலையும் சாதல் என்பது வருந்துதலையும் உணர்த்துதலை, “ காதலனுற்ற கடுந்துயர் பொறாள்” என மணிமேகலையும், “ சென்ற விருந்தும் விருப்பிலார் முற்சாம்.” என நான்மணிக்கடிகையும் கூறுவனவற்றால் முறையே அறிக. 6. பிறர்தன்னைப் பேணுங்கா னாணலும் பேணார் திறன்வேறு கூறிற் பொறையும் - அறவினையைக் காராண்மை போல வொழுகலு மிம்மூன்றும் ஊராண்மை யென்னுஞ் செருக்கு. (ப-ரை): தன்னை - தன்னை, பிறர் பேணுங்கால் - பிறர் நன்கு மதிக்குமிடத்து, நாணலும் - தான் அதற்கு நாணுதலும், பேணார் - மதியாராய், திறன் - தன்றகுதியை, வேறுகூறில் - வேறுபட இழித்துக் கூறில், பொறையும் - அதனைப் பொறுத்தலும், அறம் வினையை - அறமாகிய நற்செய்கையை, கார் - மழையானது, ஆண்மை போல - (கைம்மாறு கருதாது) ஆளுந் தன்மைபோல, ஒழுகலும்- வளர்த்து ஒழுகலும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்றும், ஊர் ஆண்மை என்னும் - ஊரை ஆளுந்தன்மை என்று சொல்லுகின்ற, செருக்கு - செல்வங்களாம். எ-று. பேணுதல் - மதித்துப் புகழ்தலும் உபசரித்தலும். பேணார், முற்றெச்சம்; பெயராக்கிப் பகைவர் என்றுரைப்பாருமுளர். வேறுதிறன் என மாறுதலுமாம். காராண்மை என்பதற்குப் பயிர்த் தொழில் என்றுரைத்தலும் பொருந்தும். இன்சொல் விளைநிலனா வீதலே வித்தாக வன்சொற் களைகட்டு வாய்மை யெருவட்டி அன்புநீர் பாய்ச்சி பறக்கதி ரீனவோர் பைங்கூழ் சிறுகாலைச் செய். என்றார் முனைப்பாடியார். ஊராண்மையாவது ஊரிலுள்ளாரை உயரச் செய்து தன் வழிப்படுத்தல்; பிறரின் மேம்படும் ஆண்மை எனலுமாம். இம்மூன்றும் ஊராண்மை யென்னுஞ் செருக்கு எனக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார். செருக்கு, செல்வத்திற்கு ஆகுபெயர். “வேண்டாமை யென்னுஞ் செருக்கு.” என்பதற்குப் பரிமேலழகர் கூறிய உரையை நோக்குக. 7. வாளைமீ னுள்ள றலைப்படலு மாளல்லான் செல்வக் குடியுட் பிறத்தலும் - பல்லவையுள் அஞ்சுவான் கற்ற வருநூலு மிம்மூன்றுந் துஞ்சூமன் கண்ட கனா. (ப-ரை): வாளைமீன் - வாளைமீனை, உள்ளல் - உள்ளான் என்னும் பறவை, தலைப்படலும் - வெளவுதற்கு முயறலும், ஆள் அல்லான் - ஆளுந்திற மில்லாதவன், செல்வக் குடியுள் – செல்வ முடைய குடும்பத்தில், பிறத்தலும் - பிறப்பதும், பல் அவையுள் - பல அவையின் கண்ணும், அஞ்சுவான் - (எடுத்துச் சொல்லுதற்கு) அஞ்சுபவன், கற்ற - கற்றறிந்த. அருநூலும் - அரிய நூற்கல்வியும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்றும், துஞ்சுஊமன் - தூங்கிய ஊமையன், கண்ட கனா - கண்ட கனவினை யொக்கும்; எ-று. உள்ளல் என்பது உள்ளு எனவும் உள்ளான் எனவும் வழங்கும். சிறுபறவையாகிய உள்ளல் பெருமீனாகிய வாளையை அடைய வொண்ணாதென்றபடி. வாளை மீனுள்ளல் தலைப்படல் என்னுந் தொடரை எழுவாயும் இரண்டாம் வேற்றுமையும் மயங்கி வந்ததற்கு உதாரணமாகக் காட்டினர் மயிலைநாதர் முதலாயினார். பல்அவை - செல்லும் அவையின்கண்ணெல்லாம்; அறிஞர்பலர் கூடிய அவை என்றுமாம்; “ பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத் தஞ்சு மவன்கற்ற நூல்.” என்னுந் திருக்குறள் இங்கு நோக்கற்பாலது. பயனிலதென்பார் ஊமன் கண்ட கனா, என்றார். ஊமன் கனவினைப் பிறர்பாற் கூறி உசாவலாமையின், அதன் பயனை அறியமாட்டு வானல்லன் ஆகலின் கனவு பயனிலதாகும் என்க. 8. தொல்லவையுட் டோன்றுங் குடிமையுந் தொக்கிருந்த நல்லவையுண் மேம்பட்ட கல்வியும் - வெல்சமத்து வேந்துவப்ப வட்டார்த்த வென்றியு மிம்மூன்றுந் தாந்தம்மைக் கூறாப் பொருள். (ப-ரை): தொல் அவையுள் - பழைமையாகிய அவையின் கண், தோன்றும் - விளங்கித் தோன்றும், குடிமையும் - உயர் குடிப்பிறப்பும், தொக்குஇருந்த - கூடியிருந்த, நல்அவையுள் - நல்லோர் அவையின் கண், மேம்பட்ட கல்வியும் - மேன்மையுற்ற புலமையும், வெல்சமத்து - வெல்லும் போரின்கண், வேந்து உவப்ப - (தம்)அரசன் மகிழுமாறு, அட்டு - (பகைவரைக்) கொன்று, ஆர்த்த வென்றியும் - ஆரவாரித்த வெற்றியும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்றும், தாம் - (அவற்றை உடையராகிய) தாம், தம்மைக் கூறா - தம்மைப் புகழ்ந்து கூறாத, பொருள் - பொருள்களாம். எ-று. தொல் அவை - தொல்லோர் அவை. தொல்லோர் - தொல்குடியில் வந்தோர். நல் அவை - நல்லார் அவை, “நல்லவை” எனவும் “நல்லாரவை” எனவும் வள்ளுவனார் கூறுதல் காண்க. ஆர்த்தவென்றி - ஆர்த்தற்குக் காரணமாகிய வென்றி. “ தேன்வாயுமிழ்ந்த வமிர்து”. (சிந்தாமணி) என்புழிப்போல, கூறாப்பொருள் என்றது. இவைதாமே விளங்கித் தோன்றுமாகலின் கூறவேண்டா என்றபடி; கூறின் பெருமை குன்றுமாகலின் கூறலாகாதன என்றுமாம். கற்றனவுங் கண்ணகன்ற சாயலுமிற் பிறப்பும் பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும் தானுரைப்பின் மைத்துனர் பல்கி மருந்திற் றணியாத பித்தனென் றெள்ளப் படும். என்பதும் காண்க. 9. பெருமை யுடையா ரினத்தி னகறல் உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல் விழுமிய வல்ல துணிதலிம் மூன்றும் முழுமக்கள் காத லவை. (ப-ரை): பெருமை உடையார் - பெருமைக் குணமுடையாரது, இனத்தின் அகறல் - கூட்டத்தினின்றும் நீங்குதலும், உரிமை இல் பெண்டிரை - மனைவியாகாத பிற மகளிரை, காமுற்று - விரும்பி, வாழ்தல் - அவரோடு கூடி ஒழுகுதலும், விழுமிய அல்ல – சிறந்தவை யல்லாத வினைகளை, துணிதல் - துணிந்து செய்தலும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்று செயல்களும், முழுமக்கள் - அறிவில்லாதார், காதலவை - விரும்புவனவாம். எ- று. உரிமை - மனைவியென்னும் பொருட்டாதலை, “ உரிமை முன்போக்கியல்லா லொளியுடை மன்னர்போகார்” என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளாலறிக. விழுமிய வல்ல - சிறந்தபயனில்லனவும் இழிதக்கனவுமாய செயல்கள். முழுமக்கள் - அறிவு உட்புகுதற்கு ஓர் புரையில்லாதவர். “ முழுப்பதகர் தாடுரந்து.” என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளுரையில் முழு என்பதற்கு அறிவு நுழைதற்கு வழியிலராய் என நச்சினார்க்கினியர் பொருள் கூறினமை காண்க. “ முழுமகன் சிதடனிழுதை மூடன்” என்பது திவாகரம். “ நடலை யிலராகி நன்றுணராராய முடலை முழுமக்கள்.” என்பது பழமொழி. 10. கணக்காய ரில்லாத வூரும் பிணக்கறுக்கும் மூத்தோரை யில்லா வவைக்களனும் - பாத்துண்ணுந் தன்மையி லாள ரயலிருப்பு மிம்மூன்றும் நன்மை பயத்த லில. (ப-ரை): கணக்காயர் இல்லாத - ஓதுவிப்பாரைப் பெறாத, ஊரும் - ஊரும், பிணக்கு அறுக்கும் - மாறுபாட்டினை நீக்கும், மூத்தோரை இல்லா - முதியோரைப் பெறாத, அவைக்களனும் - அவையும், பாத்து உண்ணும் - பகுத்து உண்ணும் , தன்மை இலாளர்- தன்மை யில்லாதவரது, அயல் இருப்பும் - பக்கத்திற் குடியிருத்தலும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்றும், நன்மை பயத்தல் இல - நன்மை தருதல் உடையனவல்ல. எ-று. கணக்காயர் - நூல் கற்பிக்கும் ஆசிரியர், “கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தால்” என்பது நாலடியார். பிணக்கு - மாறுபாடு; ஐயம், திரிபுகள். மூத்தோர் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்ந்தவர். இதனை “ அறனறிந்து மூத்தவறிவுடையார்” என்னுங் குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரையானறிக. “அவைக்குப்பாழ் மூத்தோரையின்மை” என்பது நான்மணிக்கடிகை. பாத்து - பகுத்து என்பதன் மரூஉ. பாத்துண்ணல் - வறியர் முதலாயினார்க்குப் பகுத்தளித்துப் பின்பு தான் உண்ணுதல். “பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின்” என்னுங் குறளுரை நோக்குக. ஊர்கல்வி விருப்பினர்க்கும் அவைக்களன் முறை கூறுவார்க்கும், அயலிருப்பு வறியராதியோர்க்கும் நன்மைபயவா என்க. 11. விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழக் களியாதான் காவா துரையுந் - தெளியாதான் கூரையுட் பல்காலுஞ் சேறலு மிம்மூன்றும் ஊரெல்லா நோவ துடைத்து. (ப-ரை): விளியாதான் -பாடுந்திறமில்லாதவனது,கூத்தாட்டு -கூத்தாட்டத்தினை, காண்டலும் - பார்த்தலும், வீழ களியாதான் - (மயக்கத்தால்) வீழுமாறு கள்ளுண்ணாதவன், காவாது உரையும் - போற்றாது சொல்லும் சொல்லும், தெளியாதான்கூரையுள் - (குற்றமிலனென்று) தன்னைத் தேறாதவனுடைய வீட்டின்கண், பல்காலும் - பலமுறையும், சேறலும் - செல்லுதலும், இம்மூன்றும்- (ஆகிய) இந்தமூன்றும், ஊரெல்லாம் - ஊரெல்லாரும், நோவது- வருந்துங் குற்றத்தை, உடைத்து - உடையன. எ-று. விளி - இசைப்பாட்டு. “ இளிவாய்ப் பிரசம் யாழாக” என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளுரையில், விளியாக் கொண்டு, என்பதற்குப் ‘பாட்டாகக் கொண்டு’, என்று பொருள் கூறி, விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும், என்றார் பிறரும், என இதனையே மேற்கோளாகக் காட்டினர் நச்சினார்க்கினியர். விளியாதான் - என்பதனை எழுவாயாக்கி உரைப்பாருமுளர். காவாது - நாவைப் பாதுகாவாமல், கூரை - மனை. - நோவது, வினையாலணையும் பெயர். உடைத்து, பன்மையிலொருமை. 12. தாளாள னென்பான் கடன்படா வாழ்பவன் வேளாள னென்பான் விருந்திருக்க வுண்ணாதான் கோளாள னென்பான் மறவாதா னிம்மூவர் கேளாக வாழ்த லினிது. (ப-ரை): தாளாளன் என்பான் - முயற்சியுடையானென்று சொல்லப் படுவானாகிய, கடன்படா வாழ்பவன் - கடன் கொள்ளாமல் வாழ் பவனும், வேளாளன் என்பான் - ஒப்புரவு செய்வான் என்று சொல்லப் படுவானாகிய, விருந்து இருக்க - தன்னைத் தேடி வந்த விருந்தினர் இல்லின் புறத்திருக்க, உண்ணாதான் - தனித்து உண்ணுதலைச் செய்யாதவனும், கோளாளள் என்பான் - ஆசிரியன் கற்பித்தவற்றை உள்ளத்திற் கொள்ள வல்லன் என்று சொல்லப் படுவானாகிய, மறவாதான் - கற்றவற்றை மறவாதவனும், இம்மூவர் - (ஆகிய) இந்த மூவரையும், கேள் ஆக - நட்டாராகப் பெற்று, வாழ்தல் - வாழுதல், இனிது - (ஒருவர்க்கு) இன்பத்தைத் தருவதாம். எ-று. தாள், தாளாண்மை -முயற்சி, வேளாண்மை - உபகாரம், முயற்சியுடையானென்று சொல்லப்படுவோன் கடன்படாமல் வாழ்பவனாவன்; என்றிங்ஙனம் தனித்தனி முடித்துரைத்தலுமாம். படா - ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம், கோள் - முதனிலை திரிந்த தொழிற்பெயர். “கடமுண்டு வாழாமை காண்டலினிதே” என இனியவை நாற்பதிலும், “வேளாண்மை செய்தற் பொருட்டு” எனத் திருக்குறளிலும், “வேளாணெதிரும் விருந்தின் கண்ணும்” எனத் தொல் காப்பியத்திலும் போந்த தொடர்கள் இங்கு நோக்கற்பாலன கோளாளன் - கொள்ளுதல் வல்ல மாணவன். 13. சீல மறிவா னிளங்கிளை சாலக் குடியோம்பல் வல்லா னரசன் - வடுவின்றி மாண்ட குணத்தான் றவசியென் றிம்மூவர் யாண்டும் பெறற்கரி யார். சீலம் அறிவான் - ஆசிரியன் கற்பித்த நிலையை அறிவானாகிய, இளங்கிளை - மாணவனும், குடி - தளர்ந்த குடிகளை, சால - ஓம்பல்வல்லான் - மிகவுங் காத்தல் வல்லானாய, அரசன் - வேந்தனும், வடுஇன்றி - குற்றமில்லாமல், மாண்ட குணத்தான் - மாட்சிமையுற்ற குணத்தினனாகிய, தவசி - துறவியும், என்று இம்மூவர் - என்று இந்த மூவரும், யாண்டும் - எக்காலத்தும், பெறற்கு அரியார் - பெறுதற்கு அரியவர். எ-று. சீலம் - கற்பித்த நிலையாதலைச் “சீலக் கஞ்சி நற்போதகஞ் செல்வன” என்னும் சிந்தாமணிச் செய்யுளுரையாலறிக, இளங்கிளை என்பது, தம்பி, தங்கை, மைந்தன், மைத்துனன் முதலிய இளஞ் சுற்றங்களையும் குறிக்கும். “மாலவற் கிளங்கிளை” எனச் சிலப்பதிகாரத்திலே தங்கை என்னும் பொருளிலும், “எழுமையும் பெறுக வின்ன விளங்கிளைச் சுற்றமென்றாள்” எனச் சிந்தாமணியில் மைத்துனன் என்ற பொருளிலும் இச்சொல் வந்துள்ளமை காண்க. “இளங்கிளையாரூரன்” என நம்பியாரூரர் தேவாரத் திருப்பாட்டிற் கூறிக் கொள்ளுதலின் தோழன், தொண்டன் என்னுஞ் சுற்றங்களையும் இது குறிக்குமென்க. இங்கே தம்பி என்றும், புதல்வன் என்றும் உரைத்தலுமாம். சீலம் அறிவான் இளங்கிளையாவன் என்றிங்ஙனம் தனித்தனி முடித்தலும் அமையும். தளர்ந்த குடியை ஓம்பலாவது “ஆறிலொன்றாய பொருடன்னையும் வறுமை நீங்கிய வழிக் கொள்ளல் வேண்டின் அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின் இழத்தலும்” என்பர் பரிமேலழகர். வடு - காமவெகுளி மயக்கங்கள். 14. இழுக்க லியல்பிற் றிளமை பழித்தவை சொல்லுதல் வற்றாகும் பேதைமை யாண்டுஞ் செறுவொடு நிற்குஞ் சிறுமையிம் மூன்றுங் குறுகா ரறிவுடை யார். (ப-ரை): இளமை - இளமைப் பருவமுடையவர், இழுக்கல் இயல்பிற்று - தவறுபுரிதலாகிய இயற்கையை உடையார், பேதைமை - அறியாமையுடையவர், பழித்தவை - பெரியார் விலக்கிய சொற்களையே, சொல்லுதல் வற்று ஆகும் - சொல்லுதலில் வல்லவராவார், சிறுமை - கீழ்மையுடையவர், யாண்டும் - எப்பொழுதும், செறுவொடு நிற்கும் - கறுவுதலுடையராய் நிற்பர், (ஆதலால்) இம்மூன்றும் - இந்த மூவரையும், அறிவுடையார் - அறிவினையுடையோர், குறுகார் - அணுகார். எ-று. பொருளின் தொழில்கள் பண்பின்மேல் ஏற்றப் பட்டன. “ பணியுமா மென்றும் பெருமை சிறுமை அணியுமாந் தன்னை வியந்து”. என்புழிப்போல. இளையர், பேதையர், கீழோர் என்று இவர்களை அறிவுடையோர் நெருங்காரென். 15. பொய்வழங்கி வாழும் பொறியறையுங் கைதிரிந்து தாழ்விடத்து நேர்கருதுந் தட்டையும் - ஊழினால் ஒட்டி வினைநலம் பார்ப்பானு மிம்மூவர் நட்கப் படாஅ தவர். (ப-ரை): பொய்வழங்கி - பொய்ச் சொற்களைக் கூறி, வாழும் - உயிர்வாழ்கின்ற, பொறிஅறையும் - திருவற்றானும், ஊழினால் - விதியினால், தாழ்விடத்து - மேலோர் தாழ்வெய்திய காலத்து, கைதிரிந்து - ஒழுக்கம் வேறுபட்டு, நேர்கருதும் - அவரைத் தனக்கு ஒப்பாக எண்ணும், தட்டையும் - மூங்கில் போல்வோனும், ஒட்டி - பிறரோடு நட்புக் கொண்டு, வினைநலம் பார்ப்பானும் - தன் கருமத்தின் நன்மையையே நோக்குவோனும், இம்மூவர் - (ஆகிய) இந்தமூவரும், நட்கப்படாஅதவர் - நட்புக் கொள்ளப்படாதவர். எ-று. இந்நூலிலே பின் “நட்பின் கொழுமுளை பொய் வழங்கி னில்லாகும்” என்றும், நான்மணிக்கடிகையில் “பொய்த்தலிறு வாயநட்புக்கள்” என்றும் கூறியிருப்பன இங்கு நோக்கற் பாலன. பொறி - அறிவுமாம், பொறியறை - பொறியிலி, கண்ணறை போல. தட்டை - மூங்கில்; உள்ளே புரையுடைத்தாதல் பற்றித் தட்டை என்றார்; வணங்காமை குறித்துமாம். ஒட்டி வினை நலம் பார்ப்பான் என்றது. “உறுவது சீர்தூக்கும் நட்பினை.” 16. மண்ணின்மேல் வான்புகழ் நட்டானு மாசில்சீர்ப் பெண்ணினுட் கற்புடையாட் பெற்றானும் - உண்ணுநீர்க் கூவல் குறைவின்றித் தொட்டானு மிம்மூவர் சாவா வுடம்பெய்தி னார். (ப-ரை): மண்ணின் மேல் - புவியின் மீது, வான்புகழ் - சிறந்த புகழை, நட்டானும் - நிலைநிறுத்தினவனும், பெண்ணினுள் – பெண் களுள், மாசுஇல்சீர் - குற்றமில்லாத சிறப்பினையுடைய, கற்பு உடையாள் - கற்புடைய மனைவியை, பெற்றானும் - பெற்றவனும், உண்ணும் நீர் - உண்ணுதற்குரிய நீரையுடை, கூவல் - கிணற்றினை, குறைவு இன்றி - குறைவில்லாமல், தொட்டானும் - தோண்டின வனும், இம்மூவர் - (ஆகிய) இந்த மூவரும், சாவா உடம்பு - அழியாத உடம்பினை, எய்தினhர் - பெற்றவராவர். எ-று. “ இந்நிலத்து மன்னுதல் வேண்டினிசை நடுக.” என்று நான்மணிக்கடிகையும், “ பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின்.” என்று திருக்குறளும் கூறுவன இங்கே கருதற்பாலன. உண்டல் பொதுவினையுமாகலின், உண்ணுநீர் என்றார். “உண்ணுநீர் விக்கினா னென்றேனா” என்பது கலித்தொகை. சாவா உடம்பு - புகழுடம்பு; தேவயாக்கையுமாம். தெளிவு பற்றி எய்தினார் என இறந்த காலத்தாற் கூறினார். 17. மூப்பின்க ணன்மைக் ககன்றானுங் கற்புடையாட் பூப்பின்கட் சாராத் தலைமகனும் - வாய்ப்பகையுட் சொல்வென்றி வேண்டு மிலிங்கியு மிம்மூவர் கல்விப் புணைகை விட்டார். (ப-ரை): மூப்பின்கண் - மூப்பு வந்தவிடத்தும், நன்மைக்கு அகன்றானும் - துறவறத்தை அடைதற்கு அஞ்சி நீங்கினவனும், கற்புடையாள் - கற்புடைய தன் மனைவியை, பூப்பின்கண் - பூப் பெய்திய காலத்தே, சாராத்தலைமகனும் - அடையாத கணவனும், வாய்ப்பகையுள் - சொற்போரின் கண், சொல்வென்றி - சொல் வெற்றியை, வேண்டும் - விரும்பும், இலிங்கியும் - துறவியும், இம்மூவர் - இந்த மூவரும், கல்விப் புi™கைவிட்டார் - கல்வியாகிய தெப்பத்தைக் கைக்கணின்றும் தவறவிட்டு அழுந்துவார். எ-று. மூப்பின் கண்ணும் என உம்மை விரிக்க. நன்மை துறவின் மேற்று: “ வேண்டி னுண்டாகத் துறக்க துறந்தபின் ஈண்டியற் பால பல”. (திருக்குறள்) “ நரைவருமென் றெண்ணி நல்லறிவாளர் குழவியிடத்தே துறந்தார்”. (நாலடியார்) என்பனவாகலின், இளமைக் கண்ணே துறத்தல் கடவதாகவும் முதுமையிலும் துறத்தற்கஞ்சி யொழிந்தான் என இழித்துக் கூறியவாறு. அறந்தலை நிரம்பமூப் படைந்த பின்னரும் துறந்தில னென்பதோர் சொல்லுண்டான பின் என்னும் கம்பராமாயணச் செய்யுளும் ஈண்டுக் கருதற்பாற்று. பூப்பு- மாதவிடாய். பூத்தபின் மூன்றுநாள் சொற்கேட்கும் வழியுறைதலும், பன்னிருநாள் கூடியுறைதலும் வேண்டும் என்பர். பூப்பின் புறப்பா டீராறு நாளும் நீத்தகன் றுறையா ரென்மனார் புலவர் பரத்தையிற் பிரிந்த காலையான. என்பது தொல்காப்பியம். இலிங்கி - துறவி; தவக்கோலந் தாங்கியவன் என்றும், தார்க்கிகன் என்றும் உரைத்தலுமாம். துன்பக் கடலினின்றும் கரையேறுதற்குப் புணையாகிய கல்வி இவர்கட்கு அப்பயன் விளைத்திலாமையின் கல்விப்புணை கைவிட்டார் என்றார். 18. ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க் கிருதலையு மின்னாப் பிரிவும் - உருவினை உள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியு மிம்மூன்றும் கள்ளரி னஞ்சப் படும். (ப-ரை): ஒருதலையான் - உறுதியாக, வந்துறூஉம் மூப்பும் - வந்து பொருந்தும் முதுமைப் பருவம், புணர்ந்தார்க்கு - நட்டவர்க்கு, இருதலையும் - இருவர்மாட்டும், இன்னாபிரிவும் - துன்பத்தைப் பயக்கும் பிரிவும், உருவினை - உடலை, உள்உருக்கி - உள்ளேயுள்ள எலும்பு முதலியவற்றை யுருக்கி, தின்னும் - வருத்தும், பெரும்பிணியும் - பெரிய நோயும், இம்மூன்றும் - இந்த மூன்றும், கள்ளரின் அஞ்சப்படும் - திருடர்க்கு அஞ்சுதல்போல அஞ்சப்படும். எ-று. ஒருதலையான் என்பதற்குக் கணவன் மனைவி யென்னும் இருவருள் ஒருவரிடத்து என்றுருரைப்பாருமுளர். அளபெடை இன்னிசை நிறைத்தற் பொருட்டு. தின்னல் - நலிதல்; “பிணிதன்னைத் தின்னுங்கால்” எனப் பின்னுங் கூறுவர். படும் - தகும் என்னும் பொருட்டு. 19. கொல்யானைக் கோடுங் குணமிலியு மெல்லிற் பிறன்கடை நின்றொழுகு வானும் - அறந்தெரியா தாடும்பாம் பாட்டு மறிவிலியு மிம்மூவர் நாடுங்காற் றூங்கு பவர். (ப-ரை): கொல்யானைக்கு ஓடும் - கொல்கின்ற யானையின் முன் ஓடுகின்ற, குணம்இலியும் - குணமில்லாதவனும், எல்லில் - இரவில், பிறன்கடை நின்று - (பிறன் இல்லாளைக் காதலித்து) அவன் வாயிலின்கட் சென்று நின்று, ஒழுகுவானும் - ஒழுகுபவனும், ஆடும் பாம்பு - படமெடுத்தாடும் பாம்பினை, அறம்தெரியாது - அறத்தை ஆராய்ந்து தெளியாது, ஆட்டும் - ஆட்டுகின்ற, அறிவிலியும் - அறிவில்லாதவனும், இம்மூவர் - இம்மூவரும், நாடுங்கால் - ஆராயுமிடத்து, தூங்குபவர் - இறப்பவராவர். எ-று. கொல்யானைக் கோடுங்குணமிலி என்பதற்குக் கொல்லுந் தொழிற்குரிய யானைக்கு அஞ்சிப் போர்க் களத்தினின்றோடுகின்ற வீரத்தன்மை யில்லாதவன் என்றுரைப்பாருமுளர். அறந்தெரியாது பிறன்கடை நின்றொழுகுவானும் என மாறுதலுமாம். “ அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையா ரில்.” என்னுந் திருக்குறளை நோக்குக. மறந்தெரியாது எனப் பிரித்து நன்றி செய்தார்க்கும் தீங்கினைச் செய்கின்ற (பாம்பின்) கொடுமையை உணராமல் என்றுரைத்தலுமாம்; ஆடும்பாம்பு - பெயர் மாத்திரை; அடும் என்பது நீண்டதாகக் கொண்டு கொல்லும் பாம்பு என்றுரைத்தலும் பொருந்தும். தூங்கல் - துஞ்சல்; மடிதல். 20. ஆசை பிறன்கட் படுதலும் பாசம் பசிப்ப மடியைக் கொளலுங் - கதித்தொருவன் கல்லானென் றெள்ளப் படுதலு மிம்மூன்றும் எல்லார்க்கு மின்னா தன. (ப-ரை): பிறன் - பிறன்பொருண்மேல், ஆசைப்படுதலும் - விரும்புதலும், பாசம் பசிப்ப - சுற்றத்தார் பசித்திருக்குமாறு, மடியைக் கொளலும் - சோம்பலைக் கோடலும், கதித்து - வெகுண்டு, ஒருவன் - ஒருவனால், கல்லான்என்று - கல்லாதவன் என்று, எள்ளப் படுதலும் - இகழப்படுதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், எல்லார்க்கும் - (அறிவுடையோர்) எல்லோருக்கும், இன்னாதன - துன்பம் பயப்பனவாம். எ-று. பிறன் என்றது பிறன்பொருளை யுணர்த்திற்று. ஆசை என்பதற்குப் பொன் என்று பொருள் கொண்டு அறிவில்லாத பிறனிடத்துச் செல்வமுண்டாதலும் என்றுரைத்தலுமாம், பாசம் - அன்பு, அன்பு செய்யும் சுற்றத்தின்மேல் நின்றது. கதித்து - கதங் கொண்டு, பருத்துவளர்ந்து என்றுரைத்தலும் பொருந்தும். 21. வருவாயுட் கால்வழங்கி வாழ்தல் செருவாய்ப்பச் செய்தவை நாடாச் சிறப்புடைமை - எய்தப் பலநாடி நல்லவை கற்றலிம் மூன்றும் நலமாட்சி நல்லவர் கோள். (ப-ரை): வருவாயுள் - வரும்பொருளில், கால்வழங்கி வாழ்தல் - காற்பகுதியை ஈந்து வாழுதலும், செரு - போரின்கண், வாய்ப்பச்செய்தவை - வெற்றி பொருந்தச் செய்த வீரச் செயல்களை, நாடா - நினைந்து தம்மை நன்குமதியாத, சிறப்புடைமை - மேன்மைக் குணமுடையராதலும், பலநாடி - பலநூல்களையும் ஆய்ந்து, நல்லவை - அவற்றுள் நல்ல நூல்களை, எய்தக் கற்றல் - பொருந்தக் கற்றலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், நலமாட்சி - நன்மையாகிய குணங் களையுடைய, நல்லவர்கோள் - நல்லோரின் கொள்கையாம். எ-று. கால் என்பது அவ்வளவிற்றாய பொருளுக்கு ஆகுபெயர். வருவாயறிந்து வழங்கலினிதே என்பது இனியவை நாற்பது. “ ஆற்றின ளவறிந் தீகவது பொருள் போற்றி வழங்கு நெறி.” என்னுங் குறளுரையில், பிறரும் வருவாயுட் கால்வழங்கி வாழ்தல் என்றார் எனப் பரிமேலழகர் இதனை எடுத்துக் காட்டினமை காண்க. நல்லவை பலவும் நாடிக் கற்றல் என்றும், பல அவையினுஞ் சென்று நல்லவைகற்றல் என்றும் உரைத்தலுமாம். பின்னும் பல்லவையுள் நல்லவை கற்றலும் என்பர். 22. பற்றென்னும் பாசத் தளையும் பலவழியும் பற்றறா தோடு மவாத்தேருந் - தெற்றெனப் பொய்த்துரை யென்னும் பகையிருளு மிம்மூன்றும் வித்தற வீடும் பிறப்பு. (ப-ரை): பற்று என்னும் - பற்று என்று கூறப்படும், பாசத்தளையும் - அன்பாகிய கட்டும், பலவழியும் - பலபொருள் களிடத்தும், பற்று அறாது - விருப்பம் நீங்காது, ஓடும் - செல்லும், அவாத்தேரும் - அவா வாகிய தேரும், தெற்றென - தெளிவாக, பொய்த்து உரை என்னும் - பொய்த்துச் சொல்லுதல் என்னும், பகைஇருளும் - பகைமையுடைய இருளும், இம்மூன்றும் - இவை மூன்றும், வித்து - பிறவிக்கு மூல மாம், அற - இவை கெடுதலால், பிறப்புவீடும் - பிறவியொழியும். எ-று. சிலப்பதிகாரத்தில் வரும், “ பிணிப்பறுத்தோர்தம் பெற்றி யெய்தவும்.” என்னுந் தொடர்க்கு உரையெழுதுமிடத்தில், “பிணிப்பு - பற்று; ஆவது - அன்பாகிய ஒருதளை; அதனை அறுத்தோர் அருளுடையோர்” என்று அடியார்க்கு நல்லார் கூறியிருப்பது ஈண்டு அறியற் பாலது. தளை - கட்டு, பந்தம். அவா - எனக்கிது வேண்டுமென்னும் உணர்வு, வித்தற என்பதற்கு அடியுடன் கெட என்றுரைத்தலுமாம். அறுதல் என்பது அற எனத் திரிந்து நின்றது. “ பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்.” “ அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து”. என்னும் குறள்கள் இங்கே சிந்திக்கற்பாலன. பொய்த்து என்பதில் து பகுதிப் பொருள் விகுதியுமாம். அறியாமையைச் செய்தலின் பொய்யுரையை இருள் என்றார். “ எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.” என்னுங் குறளுரையில், “உலகத்தார் விளக்காவன ஞாயிறு, திங்கள், தீ என்பன. இவற்றிற்குப் போகாதவிருள் போகலின், பொய்யா விளக்கே விளக்கென்றார். அவ்விருளாவது அறியாமை,” எனப் பரிமேலழகர் கூறியிருப்பது அறியற்பாலது. 23. தானங் கொடுக்குந் தகைமையு மானத்தார் குற்றங் கடிந்த வொழுக்கமுந் - தெற்றெனப் பல்பொரு ணீங்கிய சிந்தையு மிம்மூன்று நல்வினை யார்க்குங் கயிறு. (ப-ரை): தானம் கொடுக்கும் - தானமாகப் பொருளைக் கொடுக்கும், தகைமையும் - பெருந்தன்மையும், மானத்தார் - மான முடை யாரது, குற்றம் கடிந்த ஒழுக்கமும் - குற்றங்களை நீக்கிய நல்லொழுக்கமும், தெற்றென - தெளிய பல்பொருள் நீங்கிய - பல பொருளினின்றும் நீங்கிய, சிந்தையும் - எண்ணமும், இம்மூன்றும் - இந்த மூன்றும், நல்வினை - நல்வினையை, ஆர்க்கும் கயிறு - பிணிக்கும் கயிறாம். எ-று. தானங் கொடுத்தலாவது அறநெறியால் வந்த பொருளைத் தக்கார்க்கு உவகையோடளிப்பது. மானம் - பெருமை, மானத்தார் ஒழுக்கம் என இயையும், தெற்றென - தெளிவாக; எச்சத் திரிபாகக் கொண்டு, உண்மை தெளிந்து என்றுரைத்தலுமாம். யாதனின் யாதனி னீங்கியா னோதல் அதனி னதனி னிலன். என்பவாகலின், பல்பொருள் நீங்கிய என்றார். நீங்குதல் - பற்றுவிடுதல், ஆர்க்குங்கயிறு - நீங்காமற் பிணிக்கும் கயிறு. “ திருவினைத் தீராமை யார்க்குங் கயிறு”. என்று முப்பால் கூறுதல் காண்க. 24. காண்டகு மென்றோட் கணிகைவா யின்சொல்லும் தூண்டிலி னுட்பொதிந்த தேரையும் - மாண்டசீர்க் காழ்த்த பகைவர் வணக்கமு மிம்மூன்றும் ஆழ்ச்சிப் படுக்கு மளறு. (ப-ரை): காண்தகு - காணத்தகுந்த, மெல்தோள் - மெல்லிய தோள்களையுடைய, கணிகை - பரத்தையினது, வாய் இன் சொல்லும் - வாயாற் சொல்லும் இனிமையுடைய சொல்லும், தூண்டிலினுள் - தூண்டிலின்கண்ணே, பொதிந்த - இரும்பை மூடிய, தேரையும் - தவளையும், காழ்த்த பகைவர் - வயிரம் பற்றிய பகையை யுடையாரது. மாண்டசீர் - மாட்சிமைப்பட்ட சிறப்பையுடைய, வணக்கமும் - பணிவும், இம்மூன்றும் - இந்த மூன்றும், ஆழ்ச்சிப் படுக்கும் அளறு- (அறியாதிறங்கினாரை) அழுந்துவிக்கும் சேறு போலாம். எ-று. உளத்தோடு சொல்லாமை தோன்ற ‘வாய்இன் சொல்லும்’ என்றார். தேரை மீனுக்கு இரையாகத் தூண்டிலிற் கோத்தது, அளறு- நிரயமுமாம். கணிகை வாயின் சொல்லும் பகைவர் வணக்கமும் துன்பம் விளைத்தலை “ அன்பின் விழையார் பொருள்விழையுமாய் தொடியார் இன்சொ லிழுக்குத் தரும்.” “ தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னார் அழுத கண்ணீரு மனைத்து.” என்னும் வாயுறை வாழ்த்தாலறிக. மூன்று பொருள் கூறும் நியதி பற்றித் தேரையும் என எண்ணினாரேனும் அதனை உவமமாகவே கொள்க. மேல் இங்ஙனம் வருவனவற்றிற்கும் இஃதொக்கும். 25. செருக்கினால் வாழுஞ் சிறியவனும் பைத்தகன்ற அல்குல் விலைபகரு மாய்தொடியும் - நல்லவர்க்கு வைத்த வறப்புறங் கொன்றானு மிம்மூவர் கைத்துண்ணார் கற்றறிந் தார். (ப-ரை): செருக்கினால் வாழுஞ் - தருக்கோடு வாழும், சிறியவனும் - கீழ்மகனும், பைத்து அகன்ற - (நாக) படத்தின் தன்மை யுடைத்தாய்ப் பரந்த, அல்குல் - அல்குலை, விலைபகரும் – விலை கூறி விற்கும், ஆய்தொடியும் - ஆராய்ந்த வளையலணிந்த கணிகையும், நல்லவர்க்கு வைத்த - துறவிகட்கமைத்த, அறப்புறம் - அறச்சாலையை, கொன்றானும் - கெடுத்தவனும், இம்மூவர் - இந்த மூவருடைய, கைத்து - பொருளை, கற்று அறிந்தார் - நூல்களைக் கற்று அவற்றின் பொருள்களை அறிந்தவர், உண்ணார் – உண்ண மாட்டார். எ-று. “ அல்குனலம் வரைவின்றி விற்கும்.” என்றார் திருத்தக்கதேவரும். ஆய்தொடி, அன்மொழித் தொகை, நல்லவர் என்றது ஈண்டுத் துறவறத்தினரை, ” அடிசில் வைகலாயிரம் அறப்புறமு மாயிரம்” என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளுரையில் நச்சினார்க்கினியர், அறப்புறம் என்பதற்கு அறத்திற்கு விட்ட இறையிலி நிலங்கள் என்று பொருள் கூறி, ஓதுவிக்குஞ் சாலையென்பதும் ஒன்று என்றுரைத்தனர். ஆகலின் ஈண்டு நல்லவர் என்பதற்கு மாணாக்கர் என்றும், அறப்புறம் என்பதற்குக் கல்விச்சாலை என்றும் உரைத்தலுமாம். கொல்லுதல் - கெடுத்தல். “ பொச்சாப்புக் கொல்லும் புகழை.” என்புழிப்போல. 26. ஒல்வ தறியும் விருந்தினனு மாருயிரைக் கொல்வ திடைநீக்கி வாழ்வானும் - வல்லிதிற் சீல மினிதுடைய வாசானு மிம்மூவர் ஞால மெனப்படு வார். (ப-ரை): ஒல்வது - தான் சென்ற வீட்டின்கட் பொருந்திய, அறியும் - அறிந்து ஒழுகும், விருந்தினனும் - விருந்தினனும் , ஆர்உயிரை - அரிய உயிரை, கொல்வதிடை - கொல்லுதற்கண், நீக்கி - அதனை விலக்கி, வாழ்வானும் - வாழ்பவனும், வல்லிதின் - மனவுறுதியால், சீலம் இனிது உடைய - ஒழுக்கம் நன்கு உடைய, ஆசானும் - ஆசிரியனும், இம்மூவரும் - இந்த மூவரும், ஞாலம் எனப்படுவார் - உயர்ந்தோர் என்று எல்லாரானும் சிறப்பித்துச் சொல்லப்படுவார். எ-று. ஒல்வது அறிதலாவது இல்வாழ்வார் அளிக்கும் உணவு நொய்தாயினும் அவர்க்கியல்வது அஃதென விருப்புடன் ஏற்றுக் கோடல். கொல்வது இடை நீக்கி என்பதற்குக் கொல்லுந்தொழில் தன்கண் நிகழாமற் போக்கி என்றுரைத்தலுமாம். சீலம் - வாய்மை, தூய்மை, அழுக்காறின்மை, அவாவின்மை முதலியன. ஞாலம் என்பது உயர்ந்தோர் என்னும் பொருட்டு. “ உலகம் எனப்படுவார் ” எனப் பின்னுங் கூறுவர். 27. உண்பொழுது நீராடி யுண்ணுத லென்பெறினும் பால்பற்றிச் சொல்லா விடுதறம் - தோல்வற்றிச் சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை யிம்மூன்றும் தூஉய மென்பார் தொழில். (ப-ரை): உண்பொழுது- உண்ணுதற்குரிய பொழுதில், நீராடி உண்ணுதல் - நீரின்மூழ்கிப் பின் உண்ணுதலும், என் பெறினும் - எத்துணைப் பொருள் பெறுவதாய் இருப்பினும், பால்பற்றி - ஒரு பக்கம் சார்ந்து, சொல்லாவிடுதல் - நடுநிலை பிறழக் கூறாமலொழிதலும், தம் தோல்வற்றி - தம் உடல் மெலிந்து, சாயினும் - அழிவதாயினும், சான்றாண்மை - சான்றாண்மையானது, குன்றாமை – குன்றா திருத்தலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், தூஉயம் - யாம் தூய்மை யுடையேம், என்பார் - என்பவருடைய, தொழில் - தொழில்களாம். எ-று. “ நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய் துண்டாரே யுண்டா ரெனப்படுவார்.” என ஆசாரக்கோவை கூறுவது இங்கு நோக்கற்பாலது. பால்பற்றி என்பதற்குப் பகை நொதுமல் நண்பு என்னும் முறைமை பற்றி என்றுரைத்தலுமாம். “ பகுதியாற், பாற்பட்டொழுகப் பெறின்” என்பதற்குப் பரிமேலழகர் கூறிய உரையை நோக்குக. சொல்லா- ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். தோல் - உடம்பு; சான்று ஆண்மை - பலகுணங்களானும் நிறைந்து அவற்றை ஆளுதற்றன்மை. பா - ம். உண்டலும், விடுதலும். 28. வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கும் நோன்பிலியும் இல்லது காமுற் றிருப்பானுங் - கல்வி செவிக்குற்றம் பார்த்திருப் பானுமிம் மூவர் உமிக்குற்றிக் கைவருந்து வார். (ப-ரை): வெல்வது வேண்டி - வெற்றியுறுதலை விரும்பி, வெகுண்டு உரைக்கும் - சினந்து கூறும், நோன்பு இலியும் - பொறுமை இல்லாதவனும், இல்லது - தன்கண்இல்லாததொன்றை, காமுற்று - (நுகர) விரும்பி, இருப்பானும் - வருந்தியிருப்பவனும், கல்வி - பிறர் கல்விக்கண், செவிக்குற்றம் - செவிப்புலனாகிய சொற் குற்றத்தை, பார்த்திருப்பானும் - நோக்கியிருப்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், உமிகுற்றி - உமியைக் குற்றி, கைவருந்துவார் - அதனால் கைவருந்து பவரை ஒப்பர். எ-று. வெல்வது - சொல்லில் வெற்றி கொள்ளுதல், நோன்பு பொறுமையாதலை “உற்ற நோய் நோன்றல்” என்பதனால் அறிக. சொற்குற்றத்தையே ஆராய்ந்து பிறர் சொல்லின் பயன்கொள்ளா திருப்பவன்” என்பார். ‘செவிக்குற்றம் பார்த்திருப்பானும்’ என்றார். கைவருந்துவார், சினைவினை முதலோடு முடிந்தது. “ வெல்வது வேண்டின் வெகுளி விடல்” என நான்மணிக்கடிகையும், “ வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே” என இனியவை நாற்பதும், “ உமிக்குற்றிக் கைவருந்துமாறு” எனப் பழமொழியும் கூறுந் தொடர்கள் இங்கு ஒப்பு நோக்கற் பாலன. 29. பெண்விழைந்து பின்செலினுந் தன்செலவிற் குன்றாமை கண்விழைந்து கையுறினுங் காதல் பொருட்கின்மை மண்விழைந்து வாழ்நாண் மதியாமை யிம்மூன்றும் நுண்விழைந்த நூலவர் நோக்கு. (ப-ரை): பெண் - மகளிர், விழைந்து - விரும்பி, பின்செலினும்- தன்பின்றொடரினும், தன் செலவில் - தனக்குரிய ஒழுக்கத்தி னின்றும், குன்றாமை - குறையாமையும், விழைந்து - தன்னை விரும்பி, கைக்கண்உறினும் - தன்கைக்கண் உற்றாலும், பொருட்கு - பொருளின்கண், காதல் இன்மை - விருப்பமின்மையும், மண் விழைந்து - (மனை படப்பை முதலிய) மண்ணை விரும்பி, வாழ்நாள் - வாழும் நாளினை, மதியாமை - உயர்வாக மதித்தல் செய்யாமையும், இம்மூன்றும் - இந்த மூன்றும், நுண்நூலவர் - நுண்ணிய பொருள் களையுடைய நூற்களையுணர்ந்தவர், விழைந்த - விரும்பிய, நோக்கு - நோக்கமாம். எ-று. கண்விழைந்துதன் செலவிற் குன்றாமை என இயைதலும் பொருந்தும். கண்அசையுமாம். பொருட்கு, வேற்றுமை மயக்கம். நுண்நூல் விழைந்தவர் என விகுதி பிரித்துக் கூட்டலுமாம். நூலவர் தன்செலவு எனப் பன்மையொருமை மயங்கின. பெண்ணாசை பொன்னாசை மண்ணாசை யென்னும் மூவாசைகளையும் ஒழித்தல் கூறியவாறு. 30. தன்னச்சிச் சென்றாரை யெள்ளா வொருவனும் மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும் என்று மழுக்கா றிகந்தானு மிம்மூவர் நின்ற புகழுடை யார். (ப-ரை): தன்நச்சி - தன்னை விரும்பி, சென்றாரை – அடைந்த வரை, எள்ளா ஒருவனும் - இகழாத ஒருவனும், மன்னிய செல்வத்து - மிக்க செல்வமுடைய காலத்து, பொச்சாப்பு நீத்தானும் - மறத்தலை நீக்கியவனும், என்றும் - எக்காலத்தும், அழுக்காறு - பொறாமையை, இகந்தானும் - நீங்கினவனும், இம்மூவர் - இந்த மூவரும், நின்ற புகழ் உடையார் - நிலைபெற்ற புகழுடையார். எறு. மன்னிய - மிக்க என்னும் பொருட்டு. செல்வக்களிப்பாலே செய்வதும் தவிர்வதும் மறந்திருத்த லில்லாதவன் என்க. செல்வம் வந்துற்ற காலைப் பழைய சுற்றமும் துணையும் முதலியவற்றை மறத்தல் இல்லாதவன் என்றுமாம். நின்றபுகழ் - நிற்றற்குக் காரணமாகிய புகழுமாம். 31. பல்லவையு ணல்லவை கற்றலும் பாத்துண்டாங் கில்லற முட்டா தியற்றலும் - வல்லிதின் தாளி னொருபொரு ளாக்கலு மிம்மூன்றும் கேள்வியு ளெல்லாந் தலை. (ப-ரை): பல்லவையுள் - பல நூல்களுள்ளும், நல்லவை கற்றலும் - நல்ல நூல்களைக் கற்றலும், பாத்து - பிறர்க்குப் பகுத்துக் கொடுத்து, உண்டு - தானும் உண்டு, ஆங்கு - அவ்வாற்றால், இல்அறம் - மனையறத்தை, முட்டாது - குறைவுபடாமல், இயற்றலும் - நடத்தலும், வல்லிதின் - விரைவின், தாளின் - முயற்சியால், ஒரு பொருள் - ஒருபொருளை, ஆக்கலும் - செய்து கோடலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், கேள்வியுள் எல்லாம் - கேட்கப்படும் அறங்கள் எல்லாவற்றுள்ளும், தலை - சிறந்த அறமாம். எ-று. பல்லவையுள் என்பதற்குப் பல அவையின் கண்ணும் என்றுரைத்தலுமாம். முன் பலநாடி நல்லவை கற்றல் என்பதற் குரைத்தமையுங் காண்க. பாத்து, பகுத்து என்பதன் மரூஉ. ஏனை மூவகை நிலையினர்க்கும், வறியர் முதலாயினார்க்கும் பகுத்தளித்தல் இல்வாழ்வார் கடனாகுமென்க. வல்லிதின் என்பதற்குத் திட்பமுடன் என்றுரைத்தலுமாம். ஒருபொருள், ஒப்பற்ற பொருள்; மெய்யுணர்வு கேள்வியுள் எல்லாம் இதில் உள் என்பது மாறிநின்றது, கேள்வியெல்லா வற்றுள்ளும் என்க. 32. நுண்மொழி நோக்கிப் பொருள்கோட னூற்கேலா வண்மொழி வேண்டினுஞ் சொல்லாமை - நன்மொழியைச் சிற்றின மல்லார்கட் சொல்லுத லிம்மூன்றுங் கற்றறிந்தார் பூண்ட கடன். (ப-ரை): மொழிநோக்கி - சொற்களை ஆராய்ந்து, நுண்பொருள் - (அவற்றின் கண்ணுள்ள) நுட்பமாகிய பயனை, கோடல் – கொள்ளு தலும், நூற்கு ஏலா - அறநூலுடன் பொருந்தாத, வெண்மொழி - பயனில் சொற்களை, வேண்டினும் - பிறர்கேட்க விரும்பினும், சொல்லாமை - கூறாமையும், நன்மொழியை - (உயிர்க்கு உறுதி பயக்கும்) நல்ல சொற்களை, சிற்றினம் அல்லார்கண் - சிறிய வினத் தார் அல்லாரிடத்து, சொல்லுதல் - சொல்லுதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், கற்று அறிந்தார் - நூல்களைக்கற்று அவற்றின் பொருள்களை அறிந்தவர், பூண்ட - மேற்கொண்ட, கடன் - கடனாம். எ-று. நுண்ணிய பொருளுள்ள மொழிகளை ஆராய்ந்து என்றுமாம். வெண்மொழி - வெளிற்றுரை, பயனில்சொல் - சிறிய இனமாவது நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லையென்போரும் விடரும் தூர்த்தரும் நடரும் உள்ளிட்ட குழு. “ பிறர்வாய் நுண்பொருள் காண்பதறிவு. பிறர்சொற் பயன் கோடல். “ புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார்.” என்னும் வள்ளுவர் வாய்மொழிகள் இங்கே சிந்திக்கற்பாலன. பா - ம்: பொருள்கொளலும், சொல்லலும். 33. கோலஞ்சி வாழுங் குடியுங் குடிதழீஇ ஆலம்வீழ் போலு மமைச்சனும் - வேலின் கடைமணிபோற் றிண்ணியான் காப்புமிம் மூன்றும் படைவேந்தன் பற்று விடல். (ப-ரை): கோல் அஞ்சி - செங்கோலை அஞ்சி, வாழும் - தனக்குக் கீழ்ப்படிந்து வாழ்கின்ற, குடியும் - குடிகளும், குடிதழீஇ – அக்குடி களைத் தழுவுதலுடனே, ஆலம்வீழ் போலும் - (தன் பாரத்தைச் சுமத்தலால்) ஆலமரத்தின் விழுதினை ஒக்கும், அமைச்சனும் - மந்திரியும், வேலின்- வேலிடத்துள்ள, கடைமணிபோல் – பூணினைப் போல, காப்பு - காத்தலையுடைய, திண்ணியhன்- உறுதியுடைய படைத் தலைவனும், இம்மூன்றும் - இந்த மூன்றும், படை வேந்தன் - தானையையுடைய அரசன், பற்றுவிடல் - அன்பைப் பொருந்த விடும் இடங்கள். எ-று. வீழ் - விழுது “ மதலையாய் மற்றதன் வீழூன்றியாங்கு.” என்பது நாலடி. வேலின் கடைமணி - வேலினது காம்பின் அடியிலுள்ள பூண், இஃது இப்பொருட்டாதலை, “ இடைமருப்பின் விட்டெறிந்த வெஃகங்காழ் மூழ்கிக் கடைமணி காண்வரத் தோன்றி - நடைமெலிந்து முக்கோட்ட போன்ற களிறெல்லாம்.” என்னும் களவழிச் செய்யுளானறிக. திண்ணியானும் என உம்மையை மாறுக. விடல் - விடுமிடம் என்னும் பொருட்டு; இம்மூன்றிடத்தும் வேந்தன் விடுக என வியங் கோளாக்கி யுரைத்தலுமாம். 34. மூன்று கடன்கழித்த பார்ப்பானு மோர்ந்து முறைநிலை கோடா வரசுஞ் - சிறைநின் றலவலை யில்லாக் குடியுமிம் மூவர் உலக மெனப்படு வார். (ப-ரை): மூன்று கடன் - மூவர்க்குச் செய்யும் மூன்று கடன் களையும், கழித்த - செய்து கழித்த, பார்ப்பானும் - மறையோனும், முறைஓர்ந்து - அறநூல்களை உணர்ந்து, நிலைகோடா - அவை கூறிய வற்றில் நிற்றலினின்றும் கோணுதல் செய்யாத, அரசும் - அரசனும், சிறைநின்று - அரசனது ஆணைவழி நின்று, அலவலை இல்லா - வீணாரவாரம் செய்தலில்லாத, குடியும் - குடிமக்களும், இம்மூவர் - இந்த மூவரும், உலகம் எனப்படுவார்- உயர்ந்தோர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவர். எ-று. மூன்றுகடன் - தேவர்கடன், முனிவர்கடன், தென்புலத்தார் கடன் என்பன. ஓர்ந்து என்பதற்குக் குற்றத்தை நாடி என்றும், முறை என்பதற்கு நீதி என்றும் பொருள் கூறுதலுமாம். அலவலை - ஆரவாரம்; ஆராயாது செய்தலுமாம். இச்சொல் கீழ்மகன் என்னும் பொருளிலும் வரும்; மேலும் “அல்லவை செய்யும் அலவலையும்” என்பர். 35. முந்நீர்த் திரையி னெழுந்தியங்கா மேதையும் நுண்ணூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும் மைந்நீர்மை யின்றி மயலறுப்பா னிம்மூவர் மெய்ந்நீர்மை மேனிற் பவர். (ப-ரை): முந்நீர்த்திரையின் - கடலின்கண் (ஓயாது எழுந்து இயங்கும்) அலையைப் போல, எழுந்து இயங்கா - மனம் எழுந்து அலைதல் இல்லாத, மேதையும் - அறிவுடையவனும், நுண்நூல் பெருங்கேள்வி - நுண்ணிய நூல்களின் மிக்க கேள்வியால், நூல்கரை கண்டானும் - கல்விக் கடலின் எல்லை கண்டவனும், மைநீர்மை இன்றி - குற்றத்தன்மை இன்றி, மயல் அறுப்பான் - மருட்சியை அறுப்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், மெய் நீர்மை - மெய்ம்மைத் தன்மையுடைய, மேல் - வீட்டுலகத்தில், நிற்பவர் - அழிவின்றி நிலைத்து வாழ்பவர். எ-று. முந்நீர் - கீழதாகிய ஊற்று நீரும் மேலதாகிய மழைநீரும் நடுவணதாகிய ஆற்று நீரும் உடையது; படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று நீர்மையுடையது என்றும் உரைப்ப. “ திரையற்ற நீர்போற் சிந்தை தெளிவார்க்குப் புரையற் றிருந்தான் புரிசடை யோனே.” என்னும் திருமந்திரம் இங்கே சிந்திக்கற்பாலது. பின்னுள்ள நூல் என்பது கல்வி என்னும் பொருட்டு. மை - களங்கம், மயல் - அவிச்சை, மெய்ந்நீர்மைமேல் என்பதற்கு மெய்யாகிய வீட்டு நெறியில் என்றுரைத்தலுமாம். 36. “ ஊனுண் டுயிர்கட் கருளுடைய மென்பானும் தானுடன்பா டின்றி வினையாக்கு மென்பானும் காமுறு வேள்வியிற் கொல்வானு மிம்மூவர் தாமறிவர் தாங்கண்ட வாறு.” (ப-ரை): ஊன்உண்டு - புலாலுண்டு வைத்து, உயிர்கட்கு - உயிர்களிடத்து, அருள் உடையேம் என்பானும் - அருள் உடையேம் என்று கூறுபவனும், தான் - தான், உடன்பாடு இன்றி - முயறற்கு உடன்படுதல் இல்லாமல், வினை - ஊழானது, ஆக்கும் என்பானும் - செய்யும் என்று கருதி மடிந்திருப்பானும், காமுறு - பயனை விரும்பிச் செய்யும், வேள்வியில் - யாகத்தின்கண், கொல்வானும் - ஓருயிரைக் கொல்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், தாம் கண்டவாறு - (தம்புல்லறிவால்) தாம் அறிந்தபடியே, தாம் அறிவர் - தாம் அறிந்தவராவர். எ-று. ஊனுண்பான் அருளுடையனாகான் என்பதும், வேள்வியிற் கொல்வது நன்றன் றென்பதும், “ தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙன மாளு மருள். “ அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.” என்னும் திருக்குறள்களால் முறையே அறிவுறுத்தப்படுதல் காண்க. வேள்வியால் வரும் பயன் அநித்தமும், கொல்லாமை யானெய்தும் பயன் நித்தமும் ஆகலின் வேள்வியிற் கோறலும் இகழன் மாலைத் தென்க. இம்மூவரும் புல்லறிவாளரென்பார் தாமறிவர் தாங்கண்டவாறு என்றார். “ காணாதாற் காட்டுவான் றான்காணான் காணாதான் கண்டானாந் தான்கண்ட வாறு.” என்னும் குறள் நோக்கற்பாலது. 37. குறளையு ணட்பளவு தோன்று முறலினிய சால்பினிற் றோன்றுந்1 தவக்குடிமை -பால்போலும் தூய்மையுட் டோன்றும் பிரமாண மிம்மூன்றும் வாய்மை யுடையார் வழக்கு. (ப-ரை): குறளையுள் - புறங்கூறுதலின்கண், நட்பு அளவு - கொண்ட நட்பினது அளவு, தோன்றும் - விளங்கும், உறல்இனிய - பொருந்துதல் இனிமையுடைய, சால்பினில் - நற்குணங்களின் நிறைவினால், தவக்குடிமை - உயர்குடிப் பிறப்பின் தன்மை, தோன்றும் - விளங்கும், பால்போலும் - பாலினது வெண்மையை ஒக்கும், தூய்மையுள் - தூயதன்மையின்கண், பிரமாணம் - நூல்வழி ஒழுகல், தோன்றும் - விளங்கும், இம்மூன்றும் - இந்தமூன்றும், வாய்மை உடையார் - உண்மையுடையவர் மேற்கொண்ட, வழக்கு - முறைமை. எ-று. நண்பர் இருவருள் ஒருவன் மற்றொருவனைப் புறம் பழிப்பனேல் பொய்த்தலிறுவாய நட்புக்கள் என்றபடி அந்நட்புச் சுருங்கியொழிதலும், அங்ஙனமில்லாவிடத்து அது பெருகி விளங்குதலும் உண்மையின் ‘குறளையுள் நட்பளவு தோன்றும்’ என்றார்; இதற்கு, நட்பினரிருவரைப் பிரிக்கக் கருதிக் குறளை கூறுவானொருவன் இடைப்புகுந்து ஒருவர் பால் இழுக்கமுளதாக மற்றொருவருழைச் சொல்லியவழி ‘எம் நண்பர் அது செய்யார்’ எனக் கொண்டு, அவன் கூற்றை ஏற்றுக் கொள்ளாத உரிமைக் கேற்ப நட்பு விளங்கித் தோன்றும் என்றும் குறளை என்பதற்கு வறுமை எனப் பொருள் கொண்டு, செல்வக் காலத்து நட்பினராய்ப் போந்தார் வறுமையுற்றுழிச் செயல் வேறுபடாமையும், வேறு படுதலுங் கொண்டு நட்பின் அளவு அறியப்படும் என்றும் உரைத்தலுமாம். கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார் வாய்மைக்குடி என்பதுபோல தவக்குடிமை என்றார். பிரமாண வழியொழுகுதலைப் பிரமாணம் என்றார். “ கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்.” என்னும் வள்ளுவர்வாய்மொழிகள் சிந்திக்கற்பாலன. “ பால்போ லொழுக்கத் தவரே பரிவில்லா மேலுலக மெய்து பவர்.” என அறநெறிச்சாரம் கூறுதல் காண்க. 38. தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும் - முன்னிய பல்பொருள் வெஃகுஞ் சிறுமையு மிம்மூன்றும் செல்வ முடைக்கும் படை. (ப-ரை): தன்னை வியந்து - தன்னைத்தானே நன்கு மதித்து, தருக்கலும் - செருக்குதலும், கொன்னே - பயனின்றி, வெகுளி - கோபத்தை, தாழ்வுஇன்றி - தணிதல் இல்லையாக, பெருக்கலும் - பெருகச் செய்தலும், முன்னிய - நினைத்த, பல்பொருள் - பல பொருள்களையும், வெஃகும் சிறுமையும் - விரும்பும் சிறுமைக் குணமும், இம்மூன்றும் - இந்த மூன்றும், செல்வம் உடைக்கும் - செல்வத்தை அழித்தற்கு வல்ல, படை - படைக்கலங்களாம். எ-று. தாழ்வு இன்றி என்பதற்கு அடக்கமில்லாமல் என்றுரைத்தலு மாம். தாழ்வின்றி வியந்து தருக்கல் என்று கூட்டுதலும் பொருந்தும். அகப்பகை ஆறனுள் மதம் குரோதம் காமம் என்பன இங்கு விலக்கப்பட்டன. இச்செய்யுளின் பொருள். “ செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார் பெருக்கம் பெருமித நீர்த்து.” என்னும் குறளில் அடங்கியிருத்தல் காண்க. மேலும் நல்வினை நீக்கும் படை என்பர்; தெய்வப் புலவரும் ‘செல்வத்தைத் தேய்க்கும் படை’ எனச் செல்வத்தை யழிப்பதனைப் படையாக்கிக் கூறினர். 39. புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டிர்த் தோய்தல் கலமயக்கங் கள்ளுண்டு வாழ்தல் - சொலைமுனிந்து பொய்ம்மயக்கஞ் சூதின்கட் டங்க லிவைமூன்றும் நன்மை யிலாளர் தொழில். (ப-ரை): பொருட்பெண்டிர் - விலைமாதரை, வேண்டி - விரும்பி, தோய்தல் - முயங்குதல், புலைமயக்கம் - புலைத்தன்மை (புன்மை) யுடன் கலத்தலாகும், கள் உண்டுவாழ்தல் - கள்ளினை உண்டு செல்லுதல், கலம் மயக்கம் - (எச்சிற்) கலத்துடன் கலத்தலாகும், சொலை முனிந்து - (ஆன்றோர்)சொல்லை வெறுத்து, சூதின்கண் தங்கல் - சூதாட்டத்தில் அடிப்படுதல், பொய் மயக்கம் - பொய்யுடன் கலத்த லாகும், இவை மூன்றும் - இந்த மூன்றும், நன்மை இலாளர் தொழில் - குடிப்பிறப்பு முதலிய நன்மை இல்லாதவரின் தொழில் களாம். எ-று. புலைமயக்கமாவது தோய்தல் என்றிங்ஙனம் இயைத் துரைத்தலுமாம். வாழ்தல் - வாழ்நாள் கழித்தல்; கெடுதல் என்ற குறிப்புமாம். சொலை முனிந்து என்பதற்கு மெய்ச்சொல்லை வெறுத்து என்றுரைத்தலுமாம். தங்கல் - அடிப்படல்; இடையறாது நிற்றல். 40. வெகுளி நுணுக்கும் விறலு மகளிர்கட் கொத்த வொழுக்க முடைமையும் - பாத்துண்ணும் நல்லறி வாண்மை தலைப்படலு மிம்மூன்றும் தொல்லறி வாளர் தொழில். (ப-ரை): வெகுளி - சினத்தை, நுணுக்கும் - கெடுக்கும், விறலும்- வெற்றியும், மகளிர்கட்கு - பெண்டிர்கட்கு, ஒத்த - பொருந்திய, ஒழுக்கம் உடைமையும் - ஒழுக்கத்தையுடைய தன்மையும், பாத்து உண்ணும் - பிறர்க்குப் பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்ணும், நல் அறிவு ஆண்மை - நல்ல அறிவினைஆளுந் தன்மையை, தலைப் படலும் - பொருந்துதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், தொல் அறிவாளர் - முதிர்ந்த அறிவுடையாரது, தொழில் - தொழில்களாம். எறு. உள்ளங் கவர்ந்தெழுந் தோங்கு சினமாகிய உட்பகையைக் கெடுத்தால் பெரியதோர் வெற்றியாகுமென்பார். வெகுளி நுணுக்கும் விறலும் என்றார். மகளிர்க்கு ஒத்த வொழுக்கமாவது மென்மை யுடைமை; இதனை “ மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து.” எனக் கோப்பெருஞ்சோழனைப் பொத்தியார் பாடிய புறப் பாட்டடி யானறிக. தொல் அறிவாளர் என்பதற்குப் பழைய நூலறிவினை ஆளுபவர் என்றுரைத்தலுமாம். 41. அலந்தார்க் கொன்றீந்த புகழுந் துளங்கினும் தன்குடிமை குன்றாத் தகைமையும் - அன்போடி நாணாளு நட்டார்ப் பெருக்கலு மிம்மூன்றும் கேள்வியு ளெல்லாந் தலை. (ப-ரை): அலந்தார்க்கு - (வறுமையால்) மெலிந்தவர்க்கு, ஒன்று - ஒருபொருளை, ஈந்தபுகழும் - அளித்தமையால் உளதாகிய புகழும், துளங்கினும் - தளர்ந்தவிடத்தும், தன்குடிமை - தனது குடிப் பிறப்பிற் குரிய பண்பு, குன்றா - குன்றலில்லாத, தகைமையும்- பெருமையும், அன்புஓடி - அன்புமிக்கு, நாள்நாளும் - நாள்தோறும், நட்டார் - நட்பினரை, பெருக்கலும் - பெருகச் செய்தலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், கேள்வியுள் எல்லாம் - கேட்கப்படும் நன்மை எல்லாவற்றுள்ளும், தலை - சிறப்புடையன. எ-று. வறுமையான் மெலிந்தார்க்கு ஈவதே ஈகையாமென்ப தனையும், அதனாற் புகழுண்டாமென்பதனையும், குடிப்பிறந்தார் பொருள் சுருங்கிய வழியும் பண்பு குன்றாரென்பதனையும், அன்பு மிகுதலால் நண்பர் பெருகுவரென்பதனையும் “ வறியார்க் கொன்றீவதே யீகை” “ ஈத லிசைபட வாழ்தல்” ” வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பிற் றலைப்பிரித லின்று.” ” அன்பீனு மார்வ முடைமை யதுவீனும் நண்பென்னு நாடாச் சிறப்பு.” என்னும் திருக்குறட்பாக்களான் முறையே அறிக. ஈந்த என்னும் பெயரெச்சமும், ஓடி என்னும் வினையெச்சமும் காரணப் பொருளன. முன்னும் ‘கேள்வியுளெல்லாந் தலை’ என்றமை காண்க. 42. கழகத்தால் வந்த பொருள்கா முறாமை பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் - ஒழுகல் உழவின்கட் காமுற்று வாழ்தலிம் மூன்றும் அழகென்ப வேளாண் குடிக்கு. (ப-ரை): கழகத்தால் - சூதாட்டத்தால், வந்தபொருள் - வரும் பொருளை, காமுறாமை - விரும்பாமையும், பழகினும் - (பலநாள்) பழகினராயினும், பார்ப்பாரை - (மறையுணர்ந்த) அந்தணரை, தீப்போல் ஒழுகல் - தீயைப் போற்கருதி நடத்தலும், உழவின் கண் - உழுதொழிலின் கண், காமுற்று வாழ்தல் - விருப்பம் வைத்து வாழுதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், வேளாண்குடிக்கு - வேளாண்மை செய்யும் குடியிலுள்ளார்க்கு, அழகு என்ப - அழகைத் தருவன வென்று சொல்லுவர் (பெரியோர்). எ-று. கழகம் - சூதாடுமிடம், “ பழகிய செல்வமும் பண்புங் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்” எனத் திருக்குறளும், “ சூதர் கழகம் அரவ மறாக்களம் பேதைக ளல்லார் புகாஅர் புகுபவேல் ஏதம் பலவுந் தரும்” என ஆசாரக் கோவையும் கூறுதல் காண்க. ஈண்டுக் கழகம் என்றது சூதாட்டத்திற்கு ஆகுபெயர். “வென்றதூஉம் தூண்டிற்பொன்மீன் விழுங்கியற்று” ஆகலின் வந்த பொருள்காமுறாமை என்றார். குடி என்பதும் அதிற் பிறந்தார்க்கு ஆகுபெயர். உழவின்கண் என்பதனை வேற்றுமை மயக்கமாகக் கொண்டு, உழவினை என்றுரைத்தலுமாம். 43. வாயி னடங்குத றுப்புரவா மாசற்ற செய்கை யடங்குதறிப்பியமாம் - பொய்யின்றி நெஞ்ச மடங்குதல் வீடாகு மிம்மூன்றும் வஞ்சத்திற் றீர்ந்த பொருள். (ப-ரை): வாயின் அடங்குதல் - சொல்லடங்குதல், துப்புரவுஆம் - தூய்மையாகும், செய்கை அடங்குதல் (மெய்யின்) செய்கை அடங்குதல், திப்பியம் ஆம் - தெய்வத் தன்மையாகும், நெஞ்சம் அடங்குதல் - மனம் அடங்குதல், பொய்இன்றி - மெய்ம்மையாக, வீடு ஆகும் - முத்தியாகும், இம்மூன்றும் - இந்த மூன்றும், வஞ்சத்தின் தீர்ந்த பொருள் - பொய்யின் நீங்கிய பொருள்களாம். எ-று. வாயின் -இன்சாரியை; வாயின்கண் அடங்குதல் என்றுமாம். வாயடக்கம் முதலிய காரணங்கள் துப்புரவு முதலிய காரியங்களாக உபசரிக்கப்பட்டன; அடங்குதலால் என உருபு விரித்து, ஆம் என்பதற்கு உண்டாகும் என்றுரைத்தலுமாம். துப்புரவு என்பதற்கு இம்மைக்கண் நுகர்பொருள் எனவும், திப்பியம் என்பதற்கு மறுமைக்கண் தெய்வப்பிறப்பு எனவும் பொருள் கூறி, மும்மைப் பயனும் உரைத்தவாறாக்கலுமாம். மெய்யாக மனம் அடங்குதல் என்றுரைத்தலும் பொருந்தும். மூன்றும் - மூவகை யடக்கமும். “ பொய்குறளை வன்சொல் பயனிலவென் றிந்நான்கும் எய்தாமை சொல்லின் வழுக்காது - மெய்யிற் புலமைந்துங் காத்து மனமா சகற்றும் நலமன்றே நல்லா றெனல்.” என்னும் நீதிநெறி விளக்கச் செய்யுள் இங்கே அறியற் பாலது. 44. விருந்தின்றி யுண்ட பகலுந் திருந்திழையார் புல்லப் புடைபெயராக் கங்குலும் - இல்லார்க்கொன் றீயா தொழிந்தகன்ற காலையு மிம்மூன்றும் நோயே யுரனுடை யார்க்கு. (ப-ரை): விருந்து இன்றி - விருந்தினரைப் பெறாமல், உண்ட- தமியராய் உண்ட, பகலும் - பகற்பொழுதும், திருந்து இழையார்- அழகிய அணிகளையுடைய மகளிர், புல்ல - தழுவ, புடைபெயரா- நீங்காத, கங்குலும் - இராப்பொழுதும், இல்லார்க்கு - நல்கூர்ந் தார்க்கு, ஒன்று - ஒருபொருள், ஈயாது - கொடாமல், ஒழிந்து அகன்ற – வறிதே நீங்கிய, காலையும் - காலைப்பொழுதும், இம்மூன்றும் - இந்த மூன்று காலங்களும், உரன்உடையார்க்கு - திண்ணிய அறிவுடையார்க்கு, நோய் - துன்பத்தைத் தருவனவாம். எ-று. புல்ல என்னும் வினையெச்சம் பெயரா என்பதன் முதனிலை கொண்டது. கற்புடை மகளிரை நீங்காது மருவியொழுக வேண்டுமென்றபடி, ஒன்று - அவர் வேண்டிய தொருபொருள், காலையில் ஈதல் மரபு. பெயரெச்சங்கள் காலப் பெயர் கொண்டன. உரன் அறிவின் மேற்றாதலை. “ உரனென்னுந் தோட்டியான்.” என்பதற்குப் பரிமேழகர் உரைத்த உரையாலறிக. 45. ஆற்றானை யாற்றென் றலைப்பானு மன்பின்றி ஏற்றார்க் கியைவ கரப்பானுங் - கூற்றம் வரவுண்மை சிந்தியா தானுமிம் மூவர் நிரயத்துச் சென்றுவீழ் வார். (ப-ரை): ஆற்றாiன - செய்யும் வலிமையில்லாதவனை, ஆற்று என்று - செய்யென்றுகூறி, அலைப்பானும் - வருத்துபவனும், ஏற்றார்க்கு - இரந்தவர்க்கு, அன்பு இன்றி - இரக்கம் இல்லாமல், இயைவ - ஈதற்கிசையும் பொருளை, கரப்பானும் - ஈயாமலொளிப் பவனும், கூற்றம் - கூற்றுவன், வரவுஉண்மை - என்றும் வருதலுண்மையை, சிந்தியாதானும் - மறப்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், நிரயத்து - நரகத்தின்கண், சென்று வீழ்வார் - சென்று விழுந்து அழுந்துவார். எ-று. ஆற்றான் - ஆற்றலில்லாதவன், இதனை, “ ஆற்றுவார்க் காற்றாதா ரின்னா செயல்” என்னும் திருக்குறளானறிக. ஒரு தொழில் செய்ய வலிமையில்லாத ஏவலாளனை அதனைச் செய்யுமாறு தூண்டி வருத்தவொண்ணா தென்றபடி. அன்பின்றி அலைப்பானும் என இயைத்தலுமாம். கூற்றம் வரவுண்மை சிந்தியாதான் நல்லன செய்தற் கொருப் படாமையோடு தீயன செய்தற்கும்அஞ்சா னென்க. “ இறப்பெனு மெய்ம்மையை யிம்மை யாவர்க்கும் மறப்பெனு மதனின் மேற் கட்டுமற்றுண்டோ.” என்னும் கம்பராமாயணச் செய்யுள் இங்குநோக்கற்பாலது. 46. காறூய்மை யில்லாக் கலிமாவுங் காழ்கடிந்து மேறூய்மை யில்லாத வெல்களிறும் - சீறிக் கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளியிம் மூன்றும் குறுகா ரறிவுடை யார். (ப-ரை): கால் - காலினது நடை, தூய்மையில்லா - குற்ற முடைய, கலிமாவும் - மனஞ்செருக்கிய குதிரையும், காழ்கடிந்து - குத்துக் கோற்காரரைச் சினந்து, மேல் - மேலுள்ளோராய், தூய்மை இல்லாத - அடங்குதலைப் பெறாத, வெல்களிறும் - வெல்லும் யானையும், கறுவி - உள்வைரமுடையனாய், சீறி - சீற்றங் கொண்டு, வெகுண்டு உரைப்பான் - சினந்து பாடங் கூறுவானது, பள்ளியும் - கல்விபயிலிடமும், இம்மூன்றும் - இந்த மூன்றினையும், அறிவுடையார் - அறிவுடையவர்கள், குறுகார் - அணுகார். எ-று. கால், நடைக்கு ஆயிற்று. காழ் - குத்துக்கோல்; குத்துக் கோற்காரருக்கு ஆயிற்று. மேல் என்பதும் ஆகுபெயர். “ காழோர் கையற மேலோரின்றி.” என்னும் மணிமேகலையடியுங் காண்க. காழ் என்பதற்குக் கட்டுத்தறி என்றும், வயிரிகள் என்றும் உரைப்பாருமுளர். பா - ம். பள்ளியும் மூன்றும். 47. சில்சொற் பெருந்தோண் மகளிரும் பல்வகையும் தாளினாற் றந்த விழுநிதியும் -நாடோறும் நாத்தளிர்ப்ப வாக்கிய வுண்டியு மிம்மூன்றுங் காப்பிகழ லாகாப் பொருள். (ப-ரை): சில்சொல் - சிலவாகிய சொற்களையும், பெருந்தோள் - பெரிய தோள்களையுமுடைய, மகளிரும் - பெண்டிரும், பல்வகையும் - பலமுறையிலும், தாளினால் தந்த - முயற்சியாலீட்டிய, விழுநிதியும் - சிறப்புடைய செல்வப் பொருளும், நாத்தளிர்ப்ப - நாவின்கண் நீரரும்ப, ஆக்கிய உண்டியும் - சமைத்த உணவும், இம்மூன்றும் - இந்த மூன்றும், நாள்தோறும் - ஒவ்வொரு நாளும், காப்பு இகழலாகா- காத்தலைப் புறக்கணித்தலாகாத, பொருள் - பொருள்களாம். எறு. சில்சொல் - மென்மொழியுமாம். தாள் - முயற்சி. “ தாளாற்றித் தந்த பொருளெல்லாம்” என்பது திருக்குறள். பின்நினைக்கும் நாளிலெல்லாம் நா நீரரும்ப என்றுரைப்பாருமுளர். 48. வைததனை யின்சொல்லாக் கொள்வானு நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானும் - ஊறிய கைப்பதனைக் கட்டியென் றுண்பானு மிம்மூவர் மெய்ப்பொருள் கண்டுவாழ் வார். (ப-ரை): வைததனை - பிறர் வைத வசைமொழியை இன் சொல்லா - இனிமை பயக்கும் சொல்லாக, கொள்வானும் - உள்ளத்துக் கொள்வானும், கூழை - புல்லரிசிக்கூழை, நெய்பெய்த சோறு என்று - நெய்வார்த்த சோறு என்று, மதிப்பானும் - கருதியுண்பவனும், ஊறிய கைப்பதனை - மிக்க கைப்புடைய பொருளை, கட்டி என்று - இனிப்புடைய வெல்லக்கட்டி என்று கருதி, உண்பானும் - உண்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், மெய்ப்பொருள் - உண்மைப் பொருளை, கண்டுவாழ்வார் - உணர்ந்து வாழ்பவராவர். ஊறிய கைப்பு - மிக்க கைப்பு; ஊறிய என்பதனைச் செய்யிய வென்னும் வினையெச்சமாக்கி, வாயில் ஊறும்படி உண்பவனும் என்றுரைப்பாருமுளர். கற்பனைகளைக் கழித்து உண்மை காண்டலின் ‘மெய்ப்பொருள் கண்டு வாழ்வார்’ என்றார். 49. ஏவாது மாற்று மிளங்கிளையுங் காவாது வைதெள்ளிச் சொல்லுந் தலைமகனும் - பொய்தெள்ளி அம்மனை தேய்க்கு மனையாளு மிம்மூவர் இம்மைக் குறுதியில் லார். (ப-ரை): ஏவாது - ஏவப்படாமல், மாற்றும் - மறுத்து விடு கின்ற, இளங்கிளையும் - புதல்வனும், காவாது - மனைவியைப் பாதுகாவாமல்வைத்து, எள்ளிவைது சொல்லும் - இகழ்ந்து வைதுரைக்கும், தலைமகனும் - தலைவனும், பொய்தெள்ளி - பொய்யையே ஆராய்ந்து கூறி, அம்மனை தேய்க்கும் - அழகிய மனையறத்தைக் கெடுக்கும், மனையாளும் - மனைவியும், இம்மூவர் - இந்த மூவரும், இம்மைக்கு உறுதியில்லார் - இம்மைக்கு உறுதியாய பயனளிப்பவர் அல்லர். எ-று. ஏவுஆதும் எனப் பிரித்து ஏவிய எதனையும் என்றுரைத் தலுமாம்; இதற்கு ஆதும் என்பது யாது மென்பதன் மரூஉ; “ ஆதுமில் காலத் தெந்தை யச்சுத னமலனையே” என்னும் ஆன்றோர் வாக்குங் காண்க. இளங்கிளை என்பதற்கு மேல் ‘சீலமறிவா னிளங்கிளை’ என்புழி உரைத்தமை காண்க. 50. கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும் உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும் இல்லிருந் தெல்லை கடப்பாளு மிம்மூவர் வல்லே மழையருக்குங் கோள். (ப-ரை): கொள்பொருள் - கொள்ளும் இறைப் பொருளையே, வெஃகி - விரும்பி, குடி அலைக்கும் - குடிகளை வருத்தும், வேந்தனும் - அரசனும், உள்பொருள் - உண்மைப் பொருளை, சொல்லா - சொல்லாமல், சலம்மொழி - பொய்ம்மை கூறும், மாந்தரும் - மக்களும், இல்இருந்து - மனையிலிருந்து, எல்லை கடப்பாளும் - தனக்குக்கூறிய ஒழுக்கத்தின் எல்லையைக் கடந்து ஒழுகும் மனைவியும், இம்மூவர் - இந்த மூவரும், வல்லே - கடுக, மழை அருக்கும் - மழையைக்குறைக்கும், கோள் - கோள்கள். எ-று. குடிகளின் நலங் கருதாது பொருள்கோடலே கருதுவா னென்பார் கொள் பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும் என்றார். பொருள் கொள்ளுதலை விரும்பி என மாறியுரைத் தலுமாம். மாந்தர் - முறை புரிமன்றத்தார் முதலாயினர். சொல்லா, பெயரெச்ச மறையுமாம். அருக்கும் - அருகச் செய்யும், அரசனது கொடுங்கோலால் மழை குன்றுமென்பது. “ முறைகோடி மன்னவன் செய்யினுறை கோடி யொல்லாது வானம் பெயல்.” எனத் திருக்குறளிலும், “ கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியும் கோணிலை திரியின் மாரிவறங் கூரும்.” என மணிமேகலையிலும், கோணிலை திரிந்து நாழிகுறைபடப் பகல்கண்மிஞ்சி நீணில மாரியின்றி வினைவஃகிப் பசியுநீடிப் பூண்முலை மகளிர்பொற்பிற் கற்பழிந் தறங்கண்மாறி ஆணையிவ் வுலக. . . கோல் கோடினென்றான். எனச் சிந்தாமணியிலும் கூறப் பெற்றுள்ளமை காண்க. வானிலே சூழ் வரும் கோட்களின் நிலைமாறுதலால் மழை குன்றுவ துண்டாகலின் மழையருக்குங் கோள் என்றார். 51. தூர்ந்தொழுகிக் கண்ணுந் துணைக டுணைகளே சார்ந்தொழுகிக் கண்ணுஞ் சலவர் சலவரே ஈர்ந்தகல் லின்னாக் கயவ ரிவர்மூவர் தேர்ந்தக்காற் றோன்றும் பொருள். (ப-ரை): தூர்ந்து - வருவாய் அடைபட்டு, ஒழுகிக் கண்ணும் - வாழ்ந்த காலத்தும், துணைகள் - துணையாந் தன்மையுடையார், துணைகளே - துணைவரேயாவர், சார்ந்து - தம் கருத்தொடு பொருந்தி, ஒழுகிக் கண்ணும் - நடந்தகாலத்தும், சலவர் - பகையாந் தன்மையுடையார், சலவரே - பகைவரே யாவர், இன்னா - துன்பத்தைச் செய்யும், கயவர் - கீழ்மக்கள், ஈர்ந்தகல் - பிளக்கப்பட்ட கல்லையே ஒப்பாவார், இவர்மூவர் - ஆகிய இவர் மூவரையும், தேர்ந்தக்கால்- ஆராயுமிடத்து, பொருள்தோன்றும் - அவரிடத்துள்ள மெய்ம்மை காணப்படும். எ-று. ஒழுகியக் கண்ணும் என்பது விகாரமாயிற்று. ஈர்ந்தகல் - பிளவுண்டகல்; கூர்ங்கல்லுமாம். துன்புறுத்த லொப்புமையால் ‘ஈர்ந்தகல்’ என்றார். இவர் மூவரும் ஆராயுமிடத்து வெளிப்படும் பொருள்களாவர் என்றுரைத்தலுமாம். 52. கண்ணுக் கணிகலங் கண்ணோட்டங் காமுற்ற பெண்ணுக் கணிகல நாணுடைமை - நண்ணும் மறுமைக் கணிகலங் கல்வியிம் மூன்றுங் குறியுடையார் கண்ணே யுள. (ப-ரை): கண்ணுக்கு அணிகலம் - கண்ணுக்கு அணியும் அணி யாவது, கண் ஓட்டம் - கண்ணோடுதல், காமுற்ற - கணவனால் விரும்பப்பட்ட, பெண்ணுக்கு - பெண்ணுக்கு, அணிகலம் - அணியும் அணியாவது, நாண் உடைமை - நாணமுடைமை, மறுமைக்கு - மறுபிறப்பிற்கு, அணிகலம் - அணியும் அணியாவது, நண்ணும் கல்வி - உயிரோடு பொருந்தி வரும் கல்வி, இம்மூன்றும் - இந்த மூன்றும், குறிஉடையார்கண்ணே - நுண்ணறிவுடை யாரிடத்தில் மாத்திரமே, உள - உண்டு. எ-று. கண்ணோட்டமாவது தம்மொடுபயின்றார் எதிர்ப்பட்ட விடத்து அவர் கூறியன மறுக்க மாட்டாமை; இஃது அவர் மேற்கண் சென்றவழி நிகழ்வதாகலின் கண்ணோட்டம் எனப்பட்டது. கண்ணோட்டம் முதலியவற்றால் கண் முதலியன அழகுபெறும் என்க. வருகின்ற மறுமைக்கு அணிகலம் கல்வி என்றுரைத்தலுமாம். குறி - சிந்தனையுமாம். “ கண்ணுக் கணிகலங் கண்ணோட்ட மஃதின்றேற் புண்ணென் றுணரப் படும்.” “ ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற் கெழுமையு மேமாப் புடைத்து.” என்னும் திருக்குறட்பாக்களும், “உயிரினுஞ் சிறந்தன்று நாணே.” என்னும் தொல்காப்பியத் தொடரும் இங்கே கருதற் பாலன. 53. குருடன் மனையா ளழகு மிருடீரக் கற்றறி வில்லான் கதழ்ந்துரையும் - பற்றிய பண்ணிற் றெரியாதான் யாழ்கேட்பு மிம்மூன்றும் எண்ணிற் றெரியாப் பொருள். (ப-ரை): குருடன் மனையாள் - கண்ணில்லாதவன் மனைவி யினது, அழகும் - அழகும், இருள் தீர - அறியாமை நீங்க, கற்று - நூல்களைக் கற்று, அறிவுஇல்லான் - அவற்றின் பொருளை அறிதல் இல்லாதவன், கதழ்ந்து உரையும் - விரைந்து கூறும் சொல்லும், பற்றிய பண்ணின் - பொருந்திய இசைத்திறங்களை, தெரியாதான்- அறியாதவன், யாழ்கேட்பும் - யாழிசையைக் கேட்பதுவும், இம்மூன்றும் - இந்த மூன்றும், எண்ணில் - ஆராயு மிடத்து, தெரியாப் பொருள் - விளங்காப் பொருள்கள். எ-று. அழகு முதலிய மூன்றும் குருடன் முதலிய மூவர்க்கும் முறையே விளங்காத பொருள்கள் என்க. பண்ணின் என்பதில் சாரியை நிற்க உருபு தொக்கது. யாழ், ஆகுபெயர். 54. தன்பயந் தூக்காரைச் சார்தலும் தாம்பயவா நன்பயங் காய்வின்கட் கூறலும் - பின்பயவாக் குற்றம் பிறர்மே லுரைத்தலு மிம்மூன்றும் தெற்றென வில்லார் தொழில். (ப-ரை): தன்பயம் - தனது பயனை, தூக்காரை - எண்ணாதவரை, சார்தலும் - அடைதலும், நன்பயம் - நல்ல பயனுடைய சொற்களை, தாம் பயவாக் காய்வின்கண் - பயனையளிக்காத சினத்தின்கண், கூறலும் - சொல்லுதலும், பிறர்மேல் - அயலார் மீது, பின்பயவா குற்றம் - பிறகு தனக்கு நன்மை பயவாத அவர் குற்றங்களை, உரைத்தலும் - பாரித்துச் சொல்லுதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், தெற்றெனவு - பின் வருதலைத் தெளிதல், இல்லார் தொழில் - இல்லாதவருடைய செய்கை. எ-று. தன் பயம்தூக்கார் - தமக்கு வரும் பயனையே அன்றித் தம்மை யடைந்தார் பயனைச் சிந்தியாதவர். கூறலும் என்றமையால் நன்பயம் என்றது சொல்லாயிற்று. சினத்தால் உள்ளம் மாறு பட்டிருப்பாரிடத்தில் உறுதியுள்ள சொற்களைக் கூறின் அவர் ஏற்றுக் கொள்ளா ரென்க. பிறர் குற்றமுரைப்பது அப்பொழுது நலம் பயப்பது போற் றோன்றினும் பின்பு தீமை பயக்கு மென்றவாறா யிற்று. தெற்றெனவு - தெளிவு; தெற்றென் பகுதி; “ தெற்றென்க மன்னவன் காண்” என்னும் திருக்குறள் காண்க. பயவா என்னும் பெயரெச்ச மறை குற்ற முரைத்தல் என்னும் பெயர் கொண்டது. தன்பயம், இல்லார்தொழில், பன்மை யொருமை மயக்கம். 55. அருமறை காவாத நட்பும் பெருமையை வேண்டாது விட்டொழிந்த பெண்பாலும் - யாண்டானும் செற்றங்கொண் டாடுஞ் சிறுதொழும்பு மிம்மூவர் ஒற்றா ளெனப்படு வார். (ப-ரை): அருமறை - வெளிப்படுத்தலாகாத மறையினை, காவாத - உள்ளத்தடக்காத, நட்பும் - நண்பனும், பெருமையை – மனையறத் திற்குத் தக்க மாண்பினை, வேண்டாது - விரும்பாமல், விட்டு ஒழிந்த - விட்டு நீங்கிய, பெண்பாலும் - மனைவியும், யாண்டானும் - எவ்விடத்திலும், செற்றம் கொண்டு - கறுவுதலை மேற்கொண்டு, ஆடும் - உரையாடும், சிறுதொழும்பும் - குற்றேவ லாளனும், இம்மூவர் - இந்த மூவரும், ஒற்றாள் எனப்படுவார் - ஒற்றர் என்று சொல்லப்படுவர். எ-று. நட்பு, தொழும்பு என்பன அவற்றை உடையார்க்கு ஆயின. இழிவுபற்றி மனையாளைப் பெண்பால் என்றார். யாண்டானும்- யாண்டும்; யாண்டாயினும் என்னலுமாம். ஒற்றாள் - ஒற்றாகிய ஆள். “ அறிவார் யார் நல்லாள் பிறக்குங் குடி” என்னும் நான்மணிக்கடிகைச் செய்யுளிலும் ஆள் என்பது ஆடவன் என்னும் பொருளில் வந்துளது. ஆள், பன்மையில் ஒருமை. (55) 56. முந்தை யெழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு தந்தையுந் தாயும் வழிபட்டு - வந்த ஒழுக்கம் பெருநெறி சேர்தலிம் மூன்றும் விழுப்ப நெறிதூரா வாறு. (ப-ரை): முந்தை - இளமைப் பருவத்தில், எழுத்தின்வரவு - கல்வியின் வரவும், உணர்ந்து - அதனை அறிந்து, பிற்பாடு - பின்பு, தந்தையும் தாயும் - தந்தையையும் தாயையும், வழிபட்டு வந்த - வழிபட்டு ஒழுகிய, ஒழுக்கம் - ஒழுக்கமும், பெருநெறி - பெரியோர் வழியை, சேர்தல் - அடைதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், விழுப்பம்நெறி - வீட்டு நெறியை, தூராஆறு - அடைக்காத வழிகளாம். எ-று. முந்தை என்பது இளமையையும், எழுத்து என்பது கல்வியையும் உணர்த்தின. வழிபட்டு வந்த ஒழுக்கம் - வழிபாட்டுடன் கூடிய ஒழுக்கம். பெருநெறி - துறவறமுமாம். விழுப்பம் - சிறப்பு; வீடு. ‘எல்லாப் பேற்றினும் சிறந்தமையின் வீடுசிறப்பெனப்பட்டது’ என்றார் பரிமேலழகரும். 57. கொட்டி யளந்தமையாப் பாடலுந் தட்டித்துப் பிச்சைபுக் குண்பான் பிளிற்றலும் - துச்சிருந்தான் ஆளுங் கலங்கா முறுதலு மிம்மூன்றும் கேள்வியு ளின்னா தன. (ப-ரை): கொட்டி - தாளத்தால், அளந்து - அளக்கப்பட்டு, அமையாப் பாடலும் - பொருந்துதல் இல்லாத இசையும், தட்டித்து - கொட்டிக் கொண்டு, பிச்சைபுக்கு - பிச்சைக்குச் சென்று, உண்பான் - உண்ணுபவன், பிளிற்றலும் - வெகுண்டுரைத்தலும், துச்சுஇருந்தான் - ஒதுக்குக் குடியிருந்தவன், ஆளும் கலம் - தான் இருந்த இல்லுக் குரியன் ஆளும் பண்டங்களை, காமுறுதலும் - விரும்புதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், கேள்வியுள் - கேட்கப் படுவனவற்றுள், இன்னாதன - துன்பம் பயப்பன. எ-று. கொட்டி - கொட்டுவது, தாளம்; பாடல் - பாட்டு, தட்டித்து என்பதில் து பகுதிப் பொருள் விகுதி; துப்பிச்சை எனப் பிரித்தியைத்துச் சோற்றுப் பிச்சை என்றுரைப்பாரும் உளர். “ பிச்சைபுக் குண்பான் பிளிற்றாமை முன்னினிதே” என்பது இனியவை நாற்பது. கலம் - கட்டில் முதலியன. 58. பழமையை நோக்கி யளித்தல் கிழமையாற் கேளி ருவப்பத் தழுவுதல் - கேளிராய்த் துன்னிய சொல்லா லினந்திரட்ட லிம்மூன்றும் மன்னற் கிளையான் றொழில். (ப-ரை): பழமையை நோக்கி - நண்பரது பழையராந் தன்மையைக் கருதி, அளித்தல் - அவர்க்கு வேண்டுவ தருதலும், கேளிர் - உறவினர், உவப்ப - மகிழுமாறு, கிழமையால் - உரிமையால், தழுவுதல் - தழுவுதலும், கேளிராய் துன்னிய - தமராகிச் சூழுமாறு, சொல்லால் - இன்சொற் கூறுதலால், இனம் திரட்டல் - பெரியோர் இனத்தைக் கூட்டுதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், மன்னற்கு இளையான் - மன்னவன் மைந்தற்குரிய, தொழில் - தொழில்களாம். எ-று. அளித்தல் - பிழை பொறுத்தலுமாம். துன்னிய-செய்யிய வென்னும் வினையெச்சம். பழமை பாராட்டுதல், சுற்றந் தழுவுதல், பெரியாரைத் துணைக்கோடல் என்னும் இவை அரசற் குரியன. ஈண்டு அரசகுமாரன் மேல்வைத்துக் கூறப்பட்டன. மன்னற் குழையான் என்பது பாடமாயின் அமைச்சன் என்பது பொருளாம். 59. கிளைஞர்க் குதவாதான் செல்வமும் பைங்கூழ் விளைவின்கட் போற்றா னுழவும் - இளையனாய்க் கள்ளுண்டு வாழ்வான் குடிமையு மிம்மூன்றும் உள்ளன போலக் கெடும். (ப-ரை): கிளைஞர்க்கு - உறவினர்க்கு, உதவாதான் - உதவி புரியாதவ னுடைய, செல்வமும் - செல்வமும், பைங்கூழ் - பயிரை, விளைவின்கண் - விளையும் பருவத்தில், போற்றான் - காவாதவ னுடைய, உழவும் - உழுதொழிலும், இளையனாய் - அறிவிலானாகி, கள்உண்டு வாழ்வான் - கள்ளைக் குடித்து ஒழுகுபவனுடைய, குடிமையும் - குடிவாழ்க்கையும், இம்மூன்றும் - இந்தமூன்றும், உள்ளனபோல - உள்ளன போலப் புறத்தே தோன்றி, கெடும் - கெட்டுவிடும். எ-று. உழவு என்றது ஏர் வளத்தை. இளையன் - அறிவு முதிராதவன்; அறிவால் மெல்லியன். இளையனாய் என்பதற்கு இளமை தொடங்கி என்றும், குடிமை என்பதற்கு நற்குடிப்பிறப்பு என்றும் கூறுதலுமாம். 60. பேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும் பாஅய் விலங்கின் பிறப்பின் வெருவும் - புலந்தெரியா மக்கட் பிறப்பி னிரப்பிடும்பை யிம்மூன்றும் துக்கப் பிறப்பாய் விடும். (ப-ரை): பேஎய் பிறப்பில் - பேய்ப்பிறப்பின்கண், பெரும்பசியும் - மிக்க பசியாகிய துன்பமுடன், பாஅய் - பாயுமியல் புடைய, விலங்கின் பிறப்பின் - விலங்காகிய பிறப்பின்கண், வெருவும் - அச்சமாகிய துன்பமும், மக்கள் பிறப்பின் - மனிதப் பிறப்பின்கண், புலம்தெரியா - அறிவு விளங்காமைக் கேதுவாகிய, நிரப்புஇடும்பை - வறுமையாகிய துன்பமும் (உள்ளன; ஆதலால்), இம்மூன்றும் - இந்த மூன்றும், துக்கப் பிறப்பாய் விடும் - துக்கத்தைத் தரும் பிறவியாய் முடியும். எ-று. இடும்பை என்பதனைப் பசி, வெருவு என்பவற் றோடும், எண்ணும்மையை நிரப்பிடும்பை என்பதனோடும் கூட்டியும் உள்ளன, ஆதலால் என்னுஞ் சொற்கள் விரித்துமுரைக்கப்பட்டன. ‘நிரப்பிடும்பை’ என்றார் வள்ளுவனாரும். எப்பிறப்பும் இன்னாதன வாகலின் பிறப்பினை யொழிக்க முயறல் வேண்டும் என்றபடி. புலந்தெரியா மக்கட் பிறப்பு எனக் கொண்டு, மெய்யுணர்வு பெறாத மக்கட்பிறப்பு என்றுரைத்தலுமாம். 61. ஐயறிவுந் தம்மை யடைய வொழுகுதல் எய்துவ தெய்தாமை முற்காத்தல் - வைகலும் மாறேற்கு மன்னர் நிலையறித லிம்மூன்றும் சீரேற்ற பேரமைச்சர் கோள். (ப-ரை): ஐ அறிவும் - ஐம்பொறிகளின் அறிவும், தம்மை அடைய - தமக்கு வயமாக, ஒழுகல் - ஒழுகுதலும், எய்துவது - தம் அரசர்க்கு மேல் வரக்கடவ துன்பத்தை, முன் - முன்னரறிந்து, எய்தாமை காத்தல் - வாராமற் காத்தலும், மாறுஏற்கும் - பகைமையை ஏற்கும், மன்னர் நிலை - அரசரது நிலைமையை, வைகலும் அறிதல் - நாடோறும் தெரிந்தொழுகலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், சீர் ஏற்ற - புகழினைக் கொண்ட; பேர் அமைச்சர் - பெருமையுடைய மந்திரிகளின், கோள் - துணிவுகளாம். எ-று. மன்னர் விழைப விழையாமையும், உற்றநோய் நீக்கி உறாமை முற்காத்தலும், இகல் வேந்தரைத் தீயைப் போற்கருதியொழுகுதலும் ஆகிய மன்னரைச் சேர்ந்தொழுகும் முறைமைகள் கூறப்பட்டன. மாறேற்கும் மன்னர்நிலையறிதல் என்பதற்குப் பகை மன்னர் இருப்பை ஒற்றரால் அறிந்து அதற்கேற்பச் செய்தல் என்றுரைப் பாருமுளர். 62. நன்றிப் பயன்றூக்கா நாணிலியுஞ் சான்றோர்முன் மன்றிற் கொடும்பா டுரைப்பானும் - நன்றின்றி வைத்த வடைக்கலங் கொள்வானு மிம்மூவர் எச்ச மிழந்துவாழ் வார். (ப-ரை): நன்றிப்பயன் - பிறர்செய்த நன்றியின் பயனை, தூக்கா - ஆராயாது மறந்த, நாண்இலியும் – நாண மற்றவனும், சான்றோர் மன்றின் முன் - அறிவால் நிறைந்தாரது அவைக்களத்தின் கண், கொடும்பாடு உரைப்பானும் - கொடிய சொற்களைக் கூறுவானும், வைத்த அடைக்கலம் - ஒருவர் தன்னிடத்துவைத்த அடைக்கலப் பொருளை, நன்று இன்றி- அறத்தொடு பொருந்துதல் இன்றி, கொள்வானும் - வெளவிக் கொள்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், எச்சம் இழந்து வாழ்வார் - மக்களையிழந்து வருந்தி வாழ்பவர் ஆவர். எறு. நாண் - பழி பாவங்களுக்கு அஞ்சுமியல்பு. கொடும்பாடு என்பதற்குப் பொய் என்று பொருள்கொண்டு முறை மன்றத்தில் சான்றோர் முன் பொய் கூறுபவனும் என்றுரைத்தலுமாம். நன்று - அறம். அடைக்கலப் பொருளை உரியவர் கேட்ட பொழுதே கொடுக்க வேண்டும் என்பதனை, “ உள்ள தொருவர் ஒருவர்கை வைத்தகாற் கொள்ளும் பொழுதே கொடுத்ததாம் - கொள்ளார் நிலைப்பொரு ளென்றதனை நீட்டித்தல் வேண்டா புலைப்பொருள் தங்கா வெளி.” என்று பழமொழி வலியுறுத்துரைத்தலுங் காண்க. (62) 63. நோவஞ்சா தாரோடு நட்பும் விருந்தஞ்சும் ஈர்வளையை யில்லத் திருத்தலும் - சீர்பயவாத் தன்மை யிலாள ரயலிருப்பு மிம்மூன்றும் நன்மை பயத்த லில. (ப-ரை): நோ - தாம் உறுந் துன்பத்தைக் கண்டவழி, அஞ்சா தாரோடு நட்பும் - அஞ்சாதாரிடத்துக் கொண்ட நட்பும், விருந்து அஞ்சும் - விருந்தினர் அஞ்சும், ஈர்வளையை - மனைவியை, இல்லத்து இருத்தலும் - மனையின் கண் வைத்திருத்தலும், சீர்பயவா - சிறப்பைத் தராத, தன்மையிலாளர் - தன்மையுடையவர்க்கு, அயல் இருப்பும் - பக்கத்தில் குடியிருத்தலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், நன்மை பயத்தல் இல - நன்மையைத் தருவன அல்ல. எ-று. அஞ்சும் என்னும் பெயரெச்சம் ஏதுப்பெயர் கொண்டது. விருந்தினரைக் கண்டு அஞ்சும் என்றுமாம்; அஞ்சுதல் - உணவளிக்க மறுத்தல். ஈர்வளை - அறுத்தியற்றப்பட்ட வளையினை அணிந்தவள்; மனைவி. தன்மையிலாளர், இல்சாரியை; தவமிலார், அரசிலார் என நான்மணிக்கடிகையில் இச்சாரியை வருதல் காண்க. புகழ்பயவாத பண்பில்லாதவர் என்றுரைத்தலும் பொருந்தும்; இதற்குப் பயவா என்னும் பெயரெச்சம் இல்லாளர் என்பதன் விகுதியோடியையும், இல்லாளர் என்பதற்கு இல்வாழ்வார் என்றுரைப்பாருமுளர். 64. நல்விருந் தோம்பலி னட்டாளாம் வைகலும் இல்புறஞ் செய்தலி னீன்றதாய் - தொல்குடியின் மக்கட் பெறலின் மனைக்கிழத்தி யிம்மூன்றும் கற்புடையாள் பூண்ட கடன். (ப-ரை): நல்விருந்து - தக்க விருந்தினரை, ஓம்பலின் - பேணுதலால், நட்டாள் ஆம் - நட்பினளாவள், இல்புறஞ் செய்தலின் - இல்லறத்தைக் காத்தலினால், ஈன்றதாய் - பெற்றதாயாவள், தொல் குடியின் - பழமையாகிய குடிக்குரிய, மக்கட் பெறலின் – பிள்ளை களைப் பெறுதலினால், மனைக்கிழத்தி - மனையவளாவள், இம் மூன்றும் - இந்த மூன்றும், கற்புடையாள் - கற்புடையவள், பூண்ட கடன் - மேற்கொண்ட கடமைகள். எ-று. நல்விருந்து - தக்கவிருந்து, தகுதி - ஞானவொழுக்கங்களா னுயர்தல்; “நல்விருந் தோம்புவான்” என்புழிப் பரிமேலழகர் உரைத்த உரையை நோக்குக. ஆம் என்பதனைத் தாய், கிழத்தி என்பவற்றோடும் ஒட்டுக. மனைக்கிழத்தி - மனைக்கு உரியவள்; மனையாள். இம்மூன்றும் - இம்மூன்றியல்பும் உடையளாதல். 65. அச்ச மலைகடலிற் றோன்றலு மார்வுற்ற விட்டகல கில்லாத வேட்கையும் - கட்டிய மெய்ந்நிலை காணா வெகுளியு மிம்மூன்றும் தந்நெய்யிற் றாம்பொரியு மாறு. (ப-ரை): அலைகடலின் - அலைகின்ற கடலைப் போல, அச்சம் தோன்றலும் - உளத்தின்கண் அச்சமுண்டாதலும், ஆர்வுஉற்ற - நுகரப்பட்டனவற்றை, விட்டு அகலகில்லாத - பற்றி நீங்குந்திற மில்லாத, வேட்கையும் - அவாவும், கட்டிய - உயர்ந்தோர் யாப்புறுத்த, மெய்ந்நிலை - உண்மை நிலைமையை, காணா வெகுளியும் - அறியாமைக் கேதுவாய சினமும், இம்மூன்றும் - இந்த மூன்றாலும் இவற்றையுடையார் கெடுதல், தம் நெய்யில் - (ஆடு முதலியன) தம்மிடத்துத் தோன்றிய நெய்யால், தாம் பொரியுமாறு - தாம் பொரிதல் போலவாம். எ-று. கடலின் அலை மாறிமாறித் தோன்றுதல் போல அச்சம் மாறி மாறித் தோன்றுதல் என்க. ஆர்தல் - நுகர்தல், ஆர்வுற்ற, வினைப் பெயர், கில் ஆற்றலுணர்த்தும் இடைநிலை. இசையெச்சமாக வேண்டுஞ் சொற்கள் விரித்துரைக்கப்பட்டன. அச்சம், அவா, வெகுளி என்பன அவையுடையாரை அழிக்கும் என்றபடி. 66. கொழுநனை யில்லா ணலமும் வழிநிற்கும் சிற்றாளில் லாதான்கைம் மோதிரமும் - பற்றிய கோல்கோடி வாழு மரசனு மிம்மூன்றும் சால்போடு பட்ட தில. (ப-ரை): கொழுநனை இல்லாள் - கணவனை இல்லா தவளுடைய, நலனும் - அழகும், வழிநிற்கும் - தான்கூறிய வழியில் நின்று ஒழுகும், சிறுஆள் இல்லாதான் - ஏவலாள் இல்லாதவன், கை மோதிரம் - கை விரலில் அமைந்த மோதிரமும், பற்றிய - கைக் கொண்ட, கோல் - செங்கோல், கோடி வாழும் - கோணுமாறு ஒழுகும், அரசனும்- வேந்தனும், இம்மூன்றும் - இந்த மூன்றும், சால்போடு பட்டது இல - நன்மையோடு பொருந்தியனவல்ல. எ-று. கறை என்ற பாடத்திற்குப் பூப்பு என்பது பொருளாம். கலன் என்று பாடங் கொள்வாருமுளர். கோடி என்பதனைக் கோடவெனத் திரிக்கப் பட்டது, து சாரியை. திணைவிரவி அஃறிணை முடிபேற்றன. 67. எதிர்நிற்கும் பெண்ணு மியல்பி றொழும்பும் செயிர்நிற்குஞ் சுற்றமு மாகி - மயிர்நரைப்ப முந்தைப் பழவினையாய்த் தின்னு மிவைமூன்றும் நொந்தார் செயக்கிடந்த தில். (ப-ரை): எதிர்நிற்கும் - மாறுபட்டொழுகும், பொண்ணும் - மனையாளும், இயல்புஇல் - அடங்கி நடக்குந் தன்மையில்லாத, தொழும்பும் - ஏவலாளும், செயிர் நிற்கும் - சென்று நிலைபெற்ற, சுற்றமும் - உறவினரும், ஆகி - ஆகிநின்று, முந்தை - முற்பிறப்பிற் செய்த, பழவினையாய் - பழவினைபோல, மயிர்நரைப்ப - மயிர் வெளிறிவந்த முதுமைப் பருவங்காறும், தின்னும் - வருத்தும், இவைமூன்றும் - இவைமூன்றாலும், நொந்தார் - துன்பமுற்றவர், செயக்கிடந்தது இல் - செய்யக் கிடந்ததோர்கழுவாய் இல்லை.எ-று. எதிர் நிற்றல் - மாறுபட்டு நிற்றல். “எறியென்றெதிர் நிற்பாள் கூற்றம்” என்பது நாலடி. பழவினை, வினையென்னுந் துணையாய் நின்றது. தின்னுதல் - வருத்துதல் மயிர் நரைப்ப என்பதற்கு யாண்டு பலவாகா முன்னும் நரையுண்டாகுமாறு என்றுரைத்தலுமாம், கேட்குங் காலம் பலவாலோ நரை நுமக்கில்லையாலோ என வினவிய சான்றோர்க்குப் பிசிராந்iதார் கூறிய புறப்பாட்டு ஈண்டு அறியற் பாலது. பழவினையாய் என்பதற்குப் பழவினை யனையவாகி என்றுரைக்க. 68. இல்லார்க்கொன் றீயு முடைமையு மிவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும் துன்புறுவ செய்யாத தூய்மையு மிம்மூன்றும் நன்றறி மாந்தர்க் குள. இல்லார்க்கு - நல்கூர்ந்தவர்க்கு, ஒன்றுஈயும் - அவர் விரும்பிய பொருளொன்றைக் கெhடுக்கும், உடைமையும் -செல்வமுடைமையும், இவ் உலகில் - இந்த உலகத்தில், நில்லாமை - பொருளும், யாக்கையும் முதலியன நிலையின்றி அழிதலுண்மையை, உள்ளும் - நினைக்கும், நெறிப்பாடும் - முறைமையும், எவ்வுயிர்க்கும் - எல்லாவுயிர்க்கும், துன்பு உறுவ - துன்பமுறுதற்கேதுவாய செயல்களே, செய்யாத தூய்மையும் - செய்யாத தூய தன்மையும், இம்மூன்றும் - இந்த மூன்றும், நன்று அறியும் - நன்மையை யறிந்தொழுகும், மாந்தர்க்கு உள - மக்களிடத்து உள்ளன. இல்லார் என்பது உலக வழக்கு. “உடையார் முன் இல்லார் போல்” என்னுங் குறளுரையிற் பரிமேலழகர் கூறினமைகாண்க. நெறிப் பாடு என்பதற்குத் துறவற நெறியிற் படுதல் என்றுரைத் தலுமாம். “இன்னா செய்யாமை மாசற்றார் கோள்” என்பவாகலின் அதனைத் தூய்மை என்றார். மாந்தர் - ஆடூஉப் பன்மை. 69. அருந்தொழி லாற்றும் பகடுந் திருந்திய மெய்ந்நிறைந்து நீடிருந்த கன்னியும் - நொந்து நெறிமாறி வந்த விருந்துமிம் மூன்றும் பெறுமா றரிய பொருள். (ப-ரை): அருந்தொழில் - .....அரிய தொழில்களை, ஆற்றும் பகடும் - செய்யவல்ல எருதுவும், திருந்திய - குற்றமற்ற, மெய்ந்நிறைந்து - வடி வழகு..., நிறையபெற்று, நீடு இருந்த - நெடுநாள் மணமின்றி யிருந்த, கன்னியும் - குமரியும், நெறிமாறி - வழிதவறி, நொந்துவந்த - வருந்தியடைந்த, விருந்தும் - விருந்தினரும், இம் மூன்றும் - இந்த மூன்றும், பெறுமாறு அரிய பொருள் - கிடைத்தற்கரிய பொருள்கள். எ-று. அருந்தொழிலாவன - அளற்று நிலம் முதலியவற்றிற் பண்டியீர்த்தல் முதலியன. “மடுத்தவாயெல்லாம் பகடன்னான்” என்னுங் குறளும், அதனுரையும் நோக்குக. பகடு - கடாவுமாம். நீடிருந்த என்றது நெடுநாள் மணமின்றியிருத்தல் அரிதென்னுங் குறிப்பிற்று. பெறுமாறு - பெற. பலரும் விரும்புவராகலின் பெறற்கரிய பொருள் என்றார். ஈண்டும் திணைவிரவி அஃறிணை முடிபேற்றன. 70. காவோ டறக்குளந் தொட்டானு நாவினால் வேதங் கரைகண்ட பார்ப்பானும் - தீதிகந்து ஒல்வதுபாத் துண்ணு மொருவனு மிம்மூவர் செல்வ ரெனப்படு வார். (ப-ரை): காவோடு - சோலையை உண்டாக்குதலோடு, அறக்குளம் - அறத்துக்குரிய குளத்தை, தொட்டானும் - தோண்டியவனும் நாவினால் - நாவினால் ஓதி, வேதம் கரைகண்ட - வேதத்தை முடிவுகண்ட, பார்ப்பானும் - பார்ப்பனனும், தீது இகந்து - தீமைபயக்கு நெறியினீங்கி, ஒல்வது இசையும் பொருளை, பாத்து உண்ணும் - வறியர் முதலாயினார்க்குப் பகுத்து உண்ணும், ஒருவனும் - ஒப்பற்ற இல்லறத்தானும், இம்மூவர் - இந்த மூவரும், செல்வர் - செல்வமுடையார், எனப்படுவார் - என்று பெரியோராற் சிறப்பித்துச் சொல்லப்படுவார். எறு. அறத்திற்குச் சோலை வைத்து வளர்த்தவனும், குளம் தோண்டிய வனும் என்க. காவோடு என்பதில் ஓடுவேறுவினை யுடனிகழ்ச்சி. தொட்டான், ஏவும் வினை முதல். கரைகண்ட என்பது ஒரு சொல். வேதமாகிய கடலின் கரையைக் கண்ட என்னின் வேதங்கரை என்பது மெலித்தல் விகாரமாம். “ காவோ டறக்குளந் தொட்டல் மிகவினிதே” என்பது இனியவை நாற்பது. 71. உடுத்தாடை யில்லாதார் நீராட்டும் பெண்டிர் தொடுத்தாண் டவைப்போர் புகலும் - கொடுத்தளிக்கும் ஆண்மை யுடையவர் நல்குரவு மிம்மூன்றும் காண வரியவென் கண். (ப-ரை): உடுத்து ஆடை இல்லாதார் - உடுத்திட ஆடை யில்லாதவர், நீராட்டும் - நீராடுதலும், பெண்டிர் - மகளிர், போர் தொடுத்து - வழக்கிட்டு, ஆண்டு அவை - அவ்விடத்துள்ள சபையின் கண், புகலும் - புகுதலும், கொடுத்து அளிக்கும் - நல்கூர்ந்தார்க்குப் பொருள் கொடுத்துப் புரக்கும், ஆண்மை உடையவர் – ஆண்டன்மை யுடையவரது, நல்குரவும் - வறுமையும், இம்மூன்றும் - இந்த மூன்றையும், காண - காண்டற்கு, என்கண் அரிய - எனது கண்கள் இல்லையாகுக. எ-று. “ உடுத்தலால் நீராடார்” என்பது ஆசாரக்கோவை. கொடுத்தளித்தல் ஆண்மையாம் என்பதனை, “ ஏற்றகை மாற்றாமை யென்னானும் தாம்வரையாது ஆற்றாதார்க் கீவதாம் ஆண்கடன் என்னும் நாலடியாராலும் அறிக. என் கண்கள் காணத்தகாதன என்றுமாம். 72. நிறைநெஞ் சுடையானை நல்குர வஞ்சும் அறனை நினைப்பானை யல்பொரு ளஞ்சும் மறவனை யெவ்வுயிரு மஞ்சுமிம் மூன்றும் திறவதிற் றீர்ந்த பொருள். (ப-ரை): நிறைநெஞ்சுடையானை - நிறைந்த வுள்ள முடையானை, நல்குரவு அஞ்சும் - வறுமை அஞ்சும், அறனை நினைப்பானை - அறத்தை மறவாதவனை, அல்பொருள் அஞ்சும்- பாவம் அஞ்சும், மறவனை - வன்கண்மை யுடைய வீரனை, எவ்வுயிரும் அஞ்சும் - போர்க்களத்துற்ற யாவரும் அஞ்சுவர், இம்மூன்றும் - இந்த மூன்றும், திறவதில் - உறுதியுடைமையில், தீர்ந்த பொருள் - தெளிந்த பொருள்களாம். எ-று. “ செல்வமென்பது சிந்தையின் நிறைவு” என்பவாகலின், அஃதுடையானை நல்குரவு அஞ்சும் என்றார். அல்பொருள் - அறனல்லாதது; பாவம். எவ்வுயிரும் என்றது போர்க் களத்துற்ற படைஞர்களை, நிறைநெஞ்சு முதலிய மூன்றும் தீர்ந்த பொருள் என்க. அஞ்சுதல் மூன்றும் நன்கு தெளியப்பட்டவை என்னலுமாம். 73. இரந்துகொண் டொண்பொருள் செய்வலென் பானும் பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பானும் விரிகட லூடுசெல் வானுமிம் மூவர் அரிய துணிந்துவாழ் வார். (ப-ரை): இரந்து கொண்டு - பிறரிடம் இரந்துபெற்று, ஒண்பொருள் செய்வல் - ஒள்ளிய பொருளைத் தேடுவேன், என்பானும் - என்று கருதுபவனும், பரந்து ஒழுகும் - ஒருமைப் பாடின்றி உள்ளம் திரிய ஒழுகும், பெண்பாலை - விலைமகளை, பாசம் என்பானும், - அன்புடையாள் என்று கருதுபவனும் விரிகடலூடு - அகன்ற மாகடலினூடே, செல்வானும் - பொருள்தேடச் செல்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், அரிய துணிந்து - அரியனவற்றைத் துணிந்து, வாழ்வார் - ஒழுகுபவராவர். எ-று. அரியன - இயலாததும், இல்லாததும், அஞ்சத் தகுவதும் ஆம். பாசம் என்னும் பண்புப்பெயர் பண்பியின்மேல் நின்றது. இழித்தற் குறிப்பால் ‘பெண்பால்’ என்றார். முன்னர் ‘பெருமையை வேண்டாது விட்டொழிந்த பெண்பால்’ என்றமையுங் காண்க. 74. கொலைநின்று தின்றொழுகு வானும் பெரியவர் புல்லுங்காற் றான்புல்லும் பேதையும் - இல்லெனக்கொன் றீகென் பவனை நகுவானு மிம்மூவர் யாதுங் கடைப்பிடியா தார். (ப-ரை): கொலை நின்று - கொலைத் தொழிலில் நிலைபெற்று, தின்று ஒழுகுவானும் - அதனால் வந்த ஊனைத் தின்று வளர்பவனும், பெரியவர் - பெரியோர்கள், புல்லுங்கால் - தன்னைத் தழுவுமிடத்து, தான் புல்லும் - தானும் அவரைத் தழுவும், பேதையும் - அறிவிலாதவனும், இல் எனக்கு - எனக்கு இல்லை, ஒன்று ஈக - ஒரு பொருளை ஈவாயாக, என்பவனை - என்றிரப்பவனை, நகுவானும் - இகழ்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், யாதும் - ஓரறத்தையும், கடைப்பிடியாதார் - உறுதியாகக் கைக்கொள்ளாதவராவர். எ-று. வணங்குதற்குரிய பெரியாரை எதிர்புல்லுபவன் உலகநடை அறியாதவனாகலின் ‘பேதை’ என்றார். இல் எனக்கு - பொருளில்லா எனக்கு என்றுரைத்தலுமாம். ஈக என்பதன் அகரம் தொக்கது. 75. வள்ளன்மை பூண்டான்கட் செல்வமு முள்ளத் துணர்வுடையா னோதிய நூலும் - புணர்வின்கண் தக்க தறியுந் தலைமகனு மிம்மூவர் பொத்தின்றிக் காழ்த்த மரம். (ப-ரை): வள்ளன்மை -வரையாது கொடுத்தலை, பூண்டான் கண் - கடனாகக் கொண்டவனிடத்துள்ள, செல்வமும் - பொருளும், உள்ளத்து - மனத்தினாற் சிந்தித்தறியும், உணர்வு உடையான் - அறிவுடையவன், ஓதிய நூலும் - கற்ற நூலும், புணர்வின்கண் - பிறர் தன்னைச் சார்ந்தவிடத்து. தக்கது அறியும் - அவர்க்குச் செய்யத் தகுவதனை அறியவல்ல, தலைமகனும் - தலைவனும், இம்மூவர் - இந்த மூவரும், பொத்து இன்றி - பொந்து இல்லாமல், காழ்த்த - வயிரம் பற்றிய, மரம் - மரம்போல் உறுதியுடையராவர். எ-று. நூல் - கல்வியுமாம், தலைவியுடன் கூடிய காலத்து நலம் பாராட்டுதல் முதலிய தகுதியினை அறியும் தலைவன் என்றுரைத் தலுமாம். செல்வம், நூல் தலைமகன் என்பன. திணைவிரவி, என உயர்திணை முடிபேற்றன. இவற்றுள் முன்னைய இரண்டும், “ உள்ளத் துணர்வுடையா னோதிய நூலற்றால் வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள் என நாலடியாரில் உவமையும் பொருளுமாக வந்திருத்தல் அறியற் பாலது. பொத்து - பொந்து; வலித்தல் விகாரம். 76. மாரிநாள் வந்தவிருந்து மனம் பிறிதாய்க் காரியத்திற் குன்றாக் கணிகையும் - வீரியத்து மாற்ற மறுத்துரைக்குஞ் சேவகனு மிம்மூவர் போற்றற் கரியார் புரிந்து. (ப-ரை): மாரிநாள் - மழைக் காலத்தில், வந்த விருந்தும் - வந்த விருந்தினரும், மனம் பிறிது ஆய் - உளம் மாறுபட்டு, காரியத்தில் - தனது கருமத்தில் நின்றும், குன்றாக் கணிகையும் - குன்றாதொழுகும் வேசைமகளும், வீரியத்து - போரிடத்து, மாற்றம் - தலைவனது சொல்லை, மறுத்து உரைக்கும் - மறுத்துக் கூறும், சேவகனும் - வீரனும், இம்மூவர் - இந்த மூவரும், புரிந்து - விரும்பி, போற்றற்கு - பேணுதற்கு, அரியார் - அரியவர். எ-று. மழைக்காலத்தில் வந்த விருந்தினரை அவர் ஏகுங்காறும் உண்டியும் உடையும் கொடுத்துப் பாதுகாத்தல் யாவர்க்கும் எளிதன் றென்பதும், கவர்த்த மனமுடையளாய்ப் பொருள் வெளவுதலாகிய தன் இயல்பினின்றும் மாறாதிருக்கும் கணிகையை ஒரோவழி அவள் எய்திய எளிமை நோக்கி இரங்கிப் பாதுகாக்கப் புகின் பொருளையிழந்து துன்புற நேரும் என்பதும், தலைவன் ஆணைக்குக் கீழ்ப்படியாத போர்வீரனை வைத்திருத்தலால் பகையை வெல்லுதல் அரிதென்பதும் தோன்ற ‘இம்மூவர் போற்றற்கரியார்’ என்றார். “வீரியத்து . . . . . சேவகனும்” என்பதற்குத் ‘தலைவன் பகைவர்மேற் கருணையாற் சொல்லுஞ் சொல்லை மறுத்துப் போருக்குச் செல்லும் வீரன்’ என்று பொருள் கொண்டு இம்மூவரும் போற்றுதற்கு அருமையானவர் என்றுரைப்பாருமுளர்; இப்பொருள் பொருந்துமேற் கொள்க. 77. கயவரைக் கையிகந்து வாழ்த னயவரை நள்ளிருளுங் கைவிடா நட்டொழுகல் - தெள்ளி வடுவான வாராமற் காத்தலிம் மூன்றும் குடிமா சிலார்க்கே யுள. (ப-ரை): கள்வரை - கீழ்மக்களை, கையிகந்து - விட்டுநீங்கி, வாழ்தல் - ஒழுகுதலும், நயவரை - நல்லவரை, நள்இருளும் கைவிடா - பாதியிரவிலும் கைவிடாமல், நட்டு - அவருடன் நட்புப் பூண்டு, ஒழுகல் - ஒழுகுதலும், வடுவான - குற்றம் பயக்கும் செயல்கள்; வாராமல் காத்தல் - தங்கண் உண்டாகாமல் தடுத்தலும், இம்மூன்றும்- இந்த மூன்றும், குடி - குடிப்பிறப்பில், மாசுஇலார்க்கே - குற்றம் இல்லாதவர்க்கே, உள - உண்டாகும். எ-று. கையிகத்தல், கைவிடாமை என்பவற்றில் கை என்பன வேறுபொருளின்றி, வினையுடன் ஒட்டி ஒரு சொல்லாய் நின்றன. நயவர் - நற்குணமுடையார்; நீதியுடையார் என்றுமாம். விடா – ஈறு கெட்டது. வடு - குற்றம்; பழியுமாம். குடிமாசிலார் - நற்குடிப் பிறந்தார். 78. தூய்மை யுடைமை துணிவாத் தொழிலகற்றும் வாய்மை யுடைமை வனப்பாகும் - தீமை மனத்தினும் வாயினுஞ் சொல்லாமை மூன்றும் தவத்திற் றருக்கினார் கோள். (ப-ரை): தூய்மை உடைமை - தூய தன்மையுடைமை, துணிவு ஆம் - துணிவுடைமைக்கேதாகும். வாய்மையுடைமை - உண்மை யுடைமை, வனப்பு ஆகும் - அழகிற் கேதுவாகும், தீமை - தீமை யுடையவற்றை, மனத்தினும் வாயினும் சொல்லாமை - உள்ளத்தால் உள்ளுதலும் வாயாற் சொல்லுதலும் இன்மை, தொழில் அகற்றும் - தீய தொழில்களின்றும் நீக்கும், மூன்றும் - இந்த மூன்றும், தவத்தில் தருக்கினார் - தவத்தினால் மிக்காரது, கோள் - கொள்கைகள் எ - று. மனந்தூயார்க்கு அச்சமின்றாகலின் ‘தூய்மையுடைமை துணிவாம்’ என்றும், ‘பொய் சிதைக்கும் பொன்போலு மேனியை’ என்பவாகலின் ‘வாய்மையுடைமை வனப்பாகும்’ என்றும், தீமையை மனத்தால் நினைத்தலும் வாயாற் சொல்லுதலும் இல்லார்க்கு அவற்றின் வழிப்பட்ட தீத்தொழில் நிகழ்தலின்மையின், அவை ‘தொழிலகற்றும்’ என்றும் கூறினார். தொழிலகற்றும் என்பதனைச் சொல்லாமை என்பதன்பின் மாட்டேற்றியுரைக்க. தொழில் என்றது ஈண்டுத் தீத்தொழிலை. மனத்திற்கேற்ப நினையாமை என்பது விரித்துரைக்க. இனி, துணிவாந் தொழிலகற்றும் வாய்மையுடைமை என்றும், வனப்பாகுந் தீமை என்றும் இயைத்து. நலிந்து பொருள் கொண்டு, தூய்மை யுடைமையும் வாய்மையுடைமையும் சொல்லாமையும் என எண்ணி முடிப்பாருமுளர். துணிவாந் துணிவகற்றும் என்பதற்கு மெய்ந்நூல்களாலே ‘துணியப் பட்டதாகிய நற்செய்கையை விரிக்கும் என்பதும் வனப்பாகுந் தீமை’ என்பதற்கு மங்கையருடைய அழகாகிய தீமையைத் தருவது என்பதும் அவர் கொண்ட பொருள்களாம். 79. பழியஞ்சான் வாழும் பசுவு மழிவினாற் கொண்ட வருந்தவம் விட்டானும் - கொண்டிருந் தில்லஞ்சி வாழு மெருது மிவர்மூவர் நெல்லுண்ட னெஞ்சிற்கோர் நோய். (ப-ரை): பழி அஞ்சான் - பழிக்கு அஞ்சாதவனாகி, வாழும் - ஒழுகும், பசுவும் - ஆவினை யொத்தவனும், கொண்ட அரும் தவம் - மேற்கொண்ட அரிய தவவொழுக்கத்தை, அழிவினால் – மனவுறுதி யின்மையால், விட்டானும் - கைவிட்டவனும், கொண்டிருந்து - மணஞ்செய்து வைத்து, இல் - மனைவிக்கு, அஞ்சி வாழும் - அஞ்சியொழுகும், எருதும் - எருதைப் போல்வானும், இவர் மூவர் - இவர் மூவரும், நெல் உண்டல் - உணவினை உண்டிருத்தல், நெஞ்சிற்கு - அறிவுடையோர் நெஞ்சிற்கு, ஓர் நோய் - ஒரு நோயாகும் எ - று. மக்கட்குரிய சிறப்பறிவின்மையின் பசு என்றும், எருது என்றும் கூறினார். இச்செய்யுளைத் திணை விரவிய உயர்திணை முடிபு பெற்றதற்கு உதாரணமாகக் கூட்டினார் சங்கரநமச்சிவாயப் புலவர் முதலாயினார். அதற்கேற்பப் ‘பழியஞ்சா வாழும்’ எனப் பாடங் கொள்வது சிறப்பு. அழிவு - வறுமையும் ...... நெல் - உணவிற்காயிற்று. உணவினையுண்டு புவிக்குப் பொறையாக - இருந்தல் என்றபடி. ‘நெல்லுண்ட நெஞ்சு’ என்ற பாடத்துடன் பழைய வுரைகளிற் காணப்படுகின்றது. 80. முறைசெய்யான் பெற்ற தலைமையு நெஞ்சில் நிறையிலான் கொண்ட தவமும் - நிறையொழுக்கம் தேற்றாதான் பெற்ற வனப்பு மிவைமூன்றும் தூற்றின்கட் டூவிய வித்து. (ப-ரை): முறை செய்யான் - நீதி நூல்வழி முறைசெய்யுந் திறமில்லாதவன், பெற்ற தலைமையும் - பெற்ற அவைத்தலைமையும், நெஞ்சில் நிறையிலான் - உள்ளத்தின்கண் அவாவுடையான், கொண்ட தவமும் - மேற்கொண்ட தவமும், நிறை ஒழுக்கம் - நிறைந்த நல்லொழுக்கத்தை, தேற்றாதான் - அறிந்து நடவாதவன், பெற்ற வனப்பும் - பெற்ற வழகும், இவை மூன்றும் - இவை மூன்றும், தூற்றின்கண் - புதலிடத்து, தூவிய வித்து - விதைத்த விதையை யொக்கும் எ. று. தலைமை - முறை செய்யும் மன்றின் றலைமை, நிறை - சிந்தையின் நிறைவாகிய செல்வம்; நிறையின்மை - அச்செல்வமின்மையாகிய நல்குரவு.; புலன்களிற் செல்லாது நிறுத்துந் தன்மையைப் பேணலும்.... பாதுகாத்தலும் நிறையொழுக்கம் - சால்பும் ஒழுக்கமும், இந்த மூன்றும் பயனில வென்பதாம். 81. தோள்வழங்கி வாழுந் துறைபோற் கணிகையும் நாள்கழகம் பார்க்கு நயமிலாச் சூதனும் வாசிகொண் டொண்பொருள் செய்வானு மிம்மூவர் ஆசைக் கடலுளாழ் வார். (ப-ரை): துறைபோல் - தன் கட் செல்வார்க்கெல்லாம் பொதுவாய் நீர்த்துறைபோல, தோள்வழங்கி வாழும் கணிகையும் - பொருள் கொடுப்பார் யாவர்க்கும் தோள் களை விற்று வாழும் வேசையும், வாழும் - வாழும், நாள் - நாடோறும், கழகம் பார்க்கும் – சூதாடு மிடத்தையே நோக்கிச் செல்லும், நயம் இலா - நன்மை பயத்தல் இல்லாத, சூதனும் - சூதினையாடுவோனும், வாசிகொண்டு - மிகு வட்டி கொண்டு, ஒண் பொருள் செய்வானும் - ஒள்ளிய பொருளீட்டு வானும், இம்மூவர் - இந்த மூவரும், ஆசைக்கடலுள் - ஆசையாகிய கடலினுள்ளே, ஆழ்வார் - முழுகி யழுந்துவார் எ - று. நாளும் என்னும் உம்மைதொக்கது. நயமிலா என்னும் பெயரெச்சம் சூதர் என்பதன் முதனிலை கொண்டு முடியும். “ பழகிய செல்வமும் பண்புங் கெடுக்கும் கழகத்துக் காலை புகின் என்னும் வாயுறை வாழ்த்து ஈண்டு அறியற் பாலது. நயம் - நீதி யென்றுமாம் இவர்களுடைய ஆசைகளுக்கு அளவில்லையென்றவாறு. 82. சான்றாருட் சான்றா னெனப்படுத லெஞ்ஞான்றும் தோய்ந்தாருட் டோய்ந்தா னெனப்படுதல் - பாய்ந்தெழுந்து கொள்ளாருட் கொள்ளாத கூறாமை யிம்மூன்றும் நல்லாள் வழங்கு நெறி. (ப-ரை): சான்றாருள் - குணங்களானிறைந்தவர் அவைக்கண், சான்றான் எனப்படுதல் - சால்புடையான் என்று சொல்லப்படுதலும், எஞ்ஞான்றும் - எக்காலத்தும், தோய்ந்தாருள் - நெஞ்சுகலந்து நட்டார் குழாத்தின்கண், தோய்ந்தான் எனப்படுதல் - உள்ளங் கலந்த நண்பன் என்று சொல்லப்படுதலும், பாய்ந்து எழுந்து - தம் மீது பாய்ந் தெழுந்து, கொள்ளாருள் - தாம் கூறியவற்றை ஏற்றுக்கொள்ளா தாரவைக்கண், கொள்ளாத கூறாமை - அவனாற்கொள்ளப்படாத நற்சொற்களைச் சொல்லாமையும், இம்மூன்றும் - இந்த மூன்றும், நல்ஆள் - வழங்கும் நெறி - நற்பண்புடையவன் செல்லும் வழிகள் எ - று. எனப்படுதல் ..... தோய்தல் - கலத்தல், நற்பண்புடையவன் நட்டவர், பாய்ந்தெழுதல் - தோட்புடையார் ....வெகுளுதல். 83. உப்பின் பெருங்குப்பை நீர்படியி னில்லாகும் நட்பின் கொழுமுளை பொய்வழங்கி னில்லாகும் செப்ப முடையார் மழையனைய ரிம்மூன்றும் செப்ப நெறிதூரா வாறு. (ப-ரை): உப்பின் பெருங்குப்பை - உப்பினது பெரிய குவியல், நீர் படியின் - நீர்கலந்தால், இல்லாகும் - இல்லையாகும், நட்பின் கொழு முளை - நட்பின் செழிய முளை, பொய் வழங்கின் இல்லாகும் – பொய் கூறின் இல்லையாகும், செப்பம் உடையார் - நடுநிலையுடையார், மழையனையர் - மழையை யொப்பர். இம்மூன்றும் - இந்த மூன்றும், செப்ப நெறி தூராத ஆறு - நல்நெறி அடையாமைக்கு ஏதுவாவன எ. று. முளையாவது ஆரம்பம். மழையனையர் - மேகம் போற் கைம்மாறு கருதாது யாவர்க்கும் நலம் புரிந்து வாழ்பவர். செய்யுள் தோறும் மூன்று பொருள் கூறும் முறைமைக்கேற்ப ஈண்டு இம் மூன்றும் என்றாராயினும், உப்பின் பெருங் குப்பை நீர் படியினில் லாகும் என்பதனை, அடுத்து வரும் நட்பின் கொழுமுளை பொய் வழங்கினில் லாகும் என்பதற்கு உவமை மாத்திரமாகக் கொண்டு, பொய் வழங்காமையும் மழையனைய ராதலும் என்னு மிரண்டும் செப்ப நெறி தூராதவை என்பது கருத்தாகக் கொள்க. 84. வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத் தாய்முலை யுண்ணாக் குழவியுஞ் - சேய்மரபிற் கல்விமாண் பில்லாத மாந்தரு மிம்மூவர் நல்குரவு சேரப்பட் டார். (ப-ரை): வாய் நன்கு அமையா - நீர் வரும் வழி நன்கு பொருந்தப் பெறாத, குளனும் - குளமும், வயிறு ஆர - வயிறு நிறைய, தாய் முலை உண்ணாக் குழவியும் - தாயின் முலைப்பால் உண்ணாத குழவியும், சேய் மரபின் - தொன்றுதொட்டமுறைப்படி, கல்வி மாண்பு இல்லாத மாந்தரும் - கல்வி மாட்சியைப் பெறாத மக்களும், இம்மூவர் - இந்த மூவரும், நல்குரவு சேரப்பட்டார் - வறுமையால் அடையப்பட்டவர் எ - று. வாய் - வழி; மதகு. சேய் என்பதற்கு மாணாக்கர் எனப் பொருள் கொண்டு, மாணாக்கர் கல்வி கற்கும் வழிபாட்டு முறைப்படிக் கல்வியைப் பெறாத மாந்தர் என்றுரைத்தலுமாம். இளம் பருவத்திற் கல்வியைப் பெறாத மாந்தர் என்றுரைப் பாருமுளர். துணிவு பற்றி இறந்த காலத்தாற் கூறினார். திணை விரவிச் சிறப்பினால் உயர்திணை முடிபு பெற்றது. 85. எள்ளப் படுமரபிற் றாகலு முள்பொருளைக் கேட்டு மறவாத கூர்மையு முட்டின்றி உள்பொருள் சொல்லு முணர்ச்சியு மிம்மூன்றும் ஒள்ளிய வொற்றாள் குணம். (ப-ரை): எள்ளப்படும் மரபிற்று ஆகலும் - (தன் வடிவு) கண்டோரால், இகழப்படும் முறைமையையுடையதாகலும் - உள்பொருளை - உண்மைப்பொருளை, கேட்டு - தானே கேட்டு, மறவாத கூர்மையும் - அதனை மறத்தல் இல்லாக் கூரியவறி வுடைமையும், முட்டு இன்றி - குறைவில்லாமல், உள்பொருள் - முன்கேட்ட உண்மைப் பொருளை, சொல்லும் உணர்ச்சியும் - தன் தலைவனிடத்துச் சொல்லும் அறிவுடைமையும், இம்மூன்றும் - இந்த மூன்றும், ஒள்ளிய - ஒண்மையுடைய, ஒற்றாள் குணம் - ஒற்றனின் பண்புகளாம் எ - று. வடிவு என்பது வருவித்துரைக்க. “கடாஅவுருவோடு” என்பவாகலின், நன்கு மதிக்கப்படாத வடிவு வேண்டியதாயிற்று. செய்கை எள்ளப்படு மரபிற் செலும் என்றுரைத்தலுமாம். நிகழ்ந்த காரியத்தை ஐயந் திரிபின்றி அறியல் வேண்டுமென்பார் உள் பொருளைக் கேட்டு என்றார். ஒண்மை - அறிவு. ஒற்று ஆள் - ஒற்றாகிய ஆள். ஒற்றாள் குணம் என இயல்பாகலுமாம். 86. அற்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல் கற்புப் பெரும்புணை காதலிற் கைவிடுதல் நட்பி னயநீர்மை நீங்க லிவை மூன்றும் குற்றந் தரூஉம் பகை. (ப-ரை): அற்புப் பெருந்தளை - உயிர்கண் மாட்டுத் தனக்குள்ள அன்பாகிய பெரிய தளை, யாப்பு நெகிழ்ந்து ஒழிதல் - கட்டுந் தளர்ந்து நீங்குதலும், கற்புப் பெரும்புணை - கல்வியாகிய பெரிய தெப்பத்தை, காதலின் கைவிடுதல் - பொருள் மீதுண்டாய வாசையாற் கைவிடு தலும், நட்பின் - நட்புப்பூண்டொழுகுங்கால், நயம் நீர்மை - அதற்குரிய நல்ல தன்மையினின்றும், நீங்கல் - நீங்குதலும், இவை மூன்றும் - இவை மூன்றும்; குற்றம் தரூஉம் பகை - தனக்குக் குற்றத்தைத் தரும் பகைகள் எ - று. அற்பு - அன்பு. கற்பு - கல்வி. “கைப்பொருள் கொடுத்துங் கற்றல் கற்றபின் கண்ணுமாகும், மெய்ப்பொருள் விளைக்கு நெஞ்சின் மெலிவிற்கோர் துணையு மாகும்” என்பவாகலின், கற்புப் பெரும்புணை என்றார். ஒருவரிடத்துள்ள நட்பினால் நீதித் தன்மையினின்று நீங்கல் எனலுமாம். 87. கொல்வது தானஞ்சான் வேண்டலுங் கல்விக் ககன்ற வினம்புகு வானு மிருந்து விழுநிதி குன்றுவிப் பானுமிம் மூவர் முழுமக்க ளாகற்பா லார். (ப-ரை): கொல்வது - கொல்லுந் தொழிலை, அஞ்சான் - அஞ்சாதவனாகி, வேண்டலும் - அதனை விரும்புபவனும், கல்விக்கு அகன்ற - கல்விக்குச் சேய்மையான, இனம் புகுவானும் - தீய கூட்டத்திலே சேர்பவனும், இருந்து - ஒரு முயற்சியுஞ் செய்யாதிருந்து, விழுநிதி - முன்னுள்ள சிறந்த பொருளை, குன்று விப்பானும் - குறையச் செய்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், முழு மக்கள் ஆகற்பாலார் - அறிவிலார் ஆகும்பான்மை யையுடையார் எ - று. தான், அசை. வேண்டலும் என்பதற்கு வேண்டுபவனும் என்று பொருள் கொள்க. தொழிற்பெயர், இம்மூவர் என்பதனோடு இயை யாமையின், முழுமக்கள் என்பதற்கு, முன் ‘பெருமையுடையார்’ என்னுஞ் செய்யுளுரையில் உரைத்தமை காண்க. கொல்வது தானஞ் சான் வேண்டலும் என்பதற்குத் தன்னை வருத்துவதனைத் தான் அஞ்சாதவனாகி அடைய விரும்புபவனும் என்று ரைப்பாருமுளர். 88. பிணிதன்னைத் தின்னுங்காற் றான்வருந்து மாறும் தணிவில் பெருங்கூற் றுயிருண்ணு மாறும் பிணைசெல்வ மாண்பின் றியங்கலுமிம் மூன்றும் புணையி னிலைகலக்கு மாறு. (ப-ரை): பிணி - நோய், தன்னைத் தின்னுங்கால் - தன்னை வருத்துங் காலத்து, தான் வருந்துமாறும் - தான் வருந்துமியல்பும், தணிவு இல் - தாழ்தல் இல்லாத, பெருங் கூற்று - பெரிய கூற்றுவன், உயிர் உண்ணுமாறும் - உயிரைக்கவரவருமியல்பும், பிணை செல்வம் - பிணைந்த செல்வம், மாண்பு இன்று இயங்கலும் - நன்னெறியின்றிச் செலவிடப் படுமியல்பும், இம்மூன்றும் - இந்த மூன்றும் புணையின் நிலை - பற்றுக் கோடாவாரினது நிலைமையை, கலக்குமாறு - கலக்குந் தன்மையையுடையன எ. று. தின்னுதல் - வருத்துதல்; “உருவினை யுள்ளுருக்கித் தின்னும் பெரும் பிணி” என்றார் முன்னும். பிணைசெல்வம் என்பதற்கு விரும்பப்படும் செல்வம் எனப் பொருளுரைப்பின் பிணைச் செல்வம் என்பது தொக்கதாகக் கொள்க. சுற்றத்தார் முதலியோர் வந்து சேர்தற்குக் காரணமாகிய செல்வம் என்றுரைப்பாருமுளர். மாண் பின்றியங்கல் என்பதற்கு நிலையின்றி யொழிதல் என்றுரைத்தலுமாம். புணையின் நிலை - மரக்கலம் போலும் மனத்தின் நிலை யெனலுமாம். 89. அருளினை நெஞ்சத் தடைகொடா தானும் பொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பானும் இறந்தின்னா சொல்லகிற் பானுமிம் மூவர் பிறந்தும் பிறந்திலா தார். (ப-ரை): அருளினை - அருளை, நெஞ்சத்து - உள்ளத்தின் கண், அடை கொடாதானும் - அடையச் செய்யாதவனும், பொருளினைத் துவ்வான் - பொருளைநுகராதவனாகி, புதைத்து வைப்பானும் - மண்ணிற் புதைத்து வைப்பவனும், இறந்து - நெறிகடந்து, இன்னா, சொற்களை, சொல்ல கிற்பானும் - சொல்லும் வன்கண்மையுடை யவனும், இம்மூவர் - இந்த மூவரும், பிறந்தும் - உலகத்து மக்களாய்ப் பிறந்தும், பிறந்திலாதார் - பிறவாதவராவர் எ-று. அடைகொடாதான் - அடைவியாதவன், துவ்வான் - முற்றெச்சம், இனம் பற்றிப், பிறர்க்கு வழங்காதவனாகி யென்றும் உரைத்துக் கொள்க. இறத்தல் - நெறிகடத்தல்; “இறந்தார்வாய், இன்னாச் சொல் நோற்கிற்பவர்” என்புழி இறந்தார் என்பதற்கு, நெறியைக் கடந்தார் என்று பரிமேலழகர் உரைத்திருப்பது காண்க. சொல்லகிற்பான் என்பதில் கில் வன்கண்மையை உணர்த்துகின்றது. மக்கட் பிறப்பின் பயனை அடையாமையின் பிறந்திலாதார் என்றார். பின்னரும் இவ்வாசிரியர் “பிறந்தும் பிறவாதவர்என்பர்”. 90. ஈதற்குச் செய்க பொருளை யறநெறி சேர்தற்குச் செய்க பெருநூலை யாதும் அருள்புரிந்து சொல்லுக சொல்லையிம் மூன்றும் இருளுலகம் சேராத வாறு. (ப-ரை): ஈதற்கு - பிறர்க்கு ஈதற்பொருட்டு, பொருளைச் செய்க - பொருளை ஈட்டுக, அறநெறி சேர்தற்கு - அற வழியையடைதற் பொருட்டுப், பெருநூலைச் செய்க - பெரிய நூற் பொருள்களைக் கற்க, யாதும் - எத்துணையும், அருள்புரிந்து - அருளை விரும்பி, சொல்லைச் சொல்லுக - நல்ல சொற்களைக் கூறுக, இம்மூன்றும்- இந்த மூன்றும், இருள் உலகம் இருளையுடைய நரகவுலகத்தின்கண், சேராத ஆறு - அடையாத வழிகள் எ - று. செய்க பெருநூலை என்புழிச் செய்க என்பதற்குத் தகுதி பற்றிக் கற்க வென்றுரைக்கப்பட்டது. யாது சொல்லையும் என விகுதி பிரித்துக் கூட்டி யுரைத்தலுமாம். புரிதல் - விரும்புதல், இருள் - நரக வகையுளொன்று. “அருள் சேர்ந்த நெஞ்சினார்க் கில்லையிருள் சேர்ந்த இன்னா வுலகம் புகல்” என்னும் குறளும், ‘இருள் செறிந்த துன்பவுலக மென்றது திணிந்த விருளையுடைத்தாய் தன்கட் புக்கார்க்குத் துன்பஞ் செய்வதோர் நரகத்தை ; அது கீழ்உலகத்தோரிட மாகலின் உலகமெனப்பட்டது’ என்னும் அதன் உரைக்குறிப்பும் ஈண்டு அறியற்பாலன. 91. பெறுதிக்கட் பொச்சாந் துரைத்த லுயிரை இறுதிக்கண் யாமிழந்தே மென்றன் - மறுவந்து தன்னுடம்பு கன்றுங்கானா ணுதல் லிம்மூன்றும் மன்னா வுடம்பின் குறி. (ப-ரை): பெறுதிக் கண் - செல்வம் பெற்றகாலை, பொச்சாந்து - தெய்வத்தை மறந்து, உரைத்தல் - கூறத் தகாதவற்றைக் கூறலும், இறுதிக்கண் - வாழ்நாளின் முடிவு நெருங்கியகாலை, யாம் - நாம், உயிரை - பெறுதற்கரிய இவ்வுயிரினை, இழந்தேம் என்றல் - அவமே இழந்தோம் என்று இரங்கலும், தன் உடம்பு - தன்னுடைய உடல், கன்றுங்கால் - நோயினால் வருந்துமிடத்து, மறுவந்து - உள்ளம் மறுகி, நாணுதல் - முன் செய்த தீவினையை நினைந்து நாணுதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், மன்னா உடம்பின் குறி - அறிவு பொருந்தாத உடம்பின் செய்கைகளாம் எ - று. ‘செல்வம் வந்துற்றகாலைத் தெய்வமும் சிறிது பேணார், சொல்வன அறிந்து சொல்லார்’ என்பதனால்; கீழோர் செல்வமுற்ற காலத்துத் தெய்வத்தை மறத்தலும் மிகுதிச் சொல் சொல்லலுங் காண்க. துன்புற்ற காலத்துப் பிறர் செய்த யுதவியைச் செல்வமுற்ற காலத்து மறந்து ரைத்தல் என்றுமாம்; “கெட்டிடத் துவந்த வுதவி கட்டில்”, வீறு பெற்று மறந்த மன்னன்போல” (குறுந்தொகை - 225) என்னும் சான்றோருரையும் நோக்குக. இதற்கு எடுத்துக் காட்டா வான் பாஞ்சால மன்னன் துருபதன் என்க. 92. “ விழுத்திணைத் தோன்றா தவனு மெழுத்தினை ஒன்று முணராத வேழையும் - என்றும் இறந்துரை காமுறு வானுமிம் மூவர் பிறந்தும் பிறவா தவர்” (ப-ரை): விழுத்திணை - (ஒழுக்கத்தால் உயர்ந்த) சிறந்த குடியில், தோன்றாதவனும் - பிறவாதவனும், எழுத்தினை - கல்வியை, ஒன்றும் உணராத - சிறிதும் அறியாத, ஏழையும் - அறிவில்லாதவனும், என்றும் - எப்பொழுதும், இறந்து உரை - நெறி கடந்து பேசுதலை, காமுறுவானும் - விரும்புவோனும், இம்மூவர் - இந்த மூவரும், பிறந்தும் - உலகில் தோன்றி வைத்தும், பிறவாதவர் – தோன்றாத வரேயாவர். எ- று. ஒழுக்கம், வாய்மை, நாண் முதலிய பண்புகள் உயர் குடிப்பிறந்தார் மாட்டு இயல்பினைமையுமென்னுங் கருத்தால் அக்குடியிற் பிறவாமையைப் பயனிலதாகக் கூறினாரேனும், உயர்குடிக்குரிய ஒழுக்கம் முதலியன இல்லாதவன், பயனிலியாவன் என்பது கருத்தாகக் கொள்க. ஈண்டு எழுத்து என்றது கல்வியை. உரை - முதனிலைத் தொழிற்பெயர். இறந்துரைக்கும் உரை என விரித்துரைத்தலுமாம். காமுறுவானும் - விரும்புவோனும், இம்மூவர் - இந்த மூவரும், பிறந்தும் - உலகில் தோன்றி வைத்தும், பிறவாதவர் - தோன்றாதவரேயாவர் எ - று. 93. இருளாய்க் கழியு முலகமும் யாதுந் தெரியா துரைக்கும் வெகுள்வும் - பொருளல்ல காதற் படுக்கும் விழைவு மிவைமூன்றும் பேதைமை வாழு முயிர்க்கு. (ப-ரை): இருளாய்க் கழியும் - எப்பொழுதும் இருள் போன்று கழியும், உலகமும் - உலக வாழ்க்கையும், யாதும் - (நன்மை தீமைகளில்) ஒன்றும் தெரியாது) உரைக்கும் - உணராது சொல்லுகின்ற, வெகுள்வும் - சினமும், பொருள் அல்ல - நற்பொருள்களல்லா தவற்றை, காதற்படுக்கும் - விரும்பும், விழைவும் - விருப்பமும், இவை மூன்றும் - இம்மூன்றும், வாழும் உயிர்க்கு - இவ்வுலகில் வாழ்ந்து வரும். மக்கள் உயிர்க்கு, பேதைமை - அறியாமையை விளைப் பனவாம் எ - று. உலகம் - உலக வாழ்க்கை. மக்கட் பண்பின்மையால் யாவ ரோடும் கலந்து அறியப் பெறாதார்க்கு உலகிய லொன்றும் தெரியாதாகலின் அவர்கள் வாழ்க்கையை இருளாய்க் கழியும் உலக வாழ்க்கை யென்றார். “ நகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும் பாற்பட்டன் றிருள்” என்னும் திருக்குறள் ஈண்டு அறியற்பாலது உரைக்கும் - உரைத்தற் கேதுவாகிய. 94. நண்பிலார் மாட்டு நசைக்கிழமை செய்வானும் பெண்பாலைக் காப்பிகழும் பேதையும் - பண்பில் இழுக்கான சொல்லாடு வானுமிம் மூவர் ஒழுக்கங் கடைப்பிடி யாதார். (ப-ரை): நண்பு இலார் மாட்டு - நட்புக் குணம் இல்லாதவ ரிடத்து, நசைக் கிழமை, செய்வானும் - நட்புரிமை செய்கின்றவனும், பெண் பாலை - தன் மனைவியை, காப்பு இகழும் - காத்தலை இகழு கின்ற, பேதையும் - அறிவிலியும், பண்பும் இல் - குணமில்லாத, இழுக்கு ஆன சொல் ஆடுவானும் - குற்றமாகிய சொல்லைச் சொல்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், ஒழுக்கம் - தாம் ஒழுகுந்திறத்தினை, கடைப்பிடியாதார் - உறுதியாகக் கொள்ளாதவ ராவர் எ- று. நண்பிலார் மாட்டு, நசைக்கிழமை செய்தல் - நட்கத் தகாதவரிடத்து நட்புச் செய்தல் என்றபடி, அன்றி, பழகிய நண்பரல்லாரை நண்பராகக் கருதி அவர் மாட்டு நட்புரிமை செய்தல் என்றுமாம். உரிமை செய்தல் - அவர் வினையைக் கேளாது செய்தல், கெடும் வகை செய்தல், பெண்பால் என்றது ஈண்டு மனைவியை. சொல்லுக்குப் பண்பாவன இனிமை, வாய்மை, பயனுடைத்தாதல் முதலியன. (94) 95. அறிவழுங்கத் தின்னும் பசிநோயு மாந்தர் செறிவழுங்கத் தோன்றும் விழைவுஞ் - செறுநரின் வெவ்வுரை நோனா வெகுள்வு மிவைமூன்றும் நல்வினை நீக்கும் படை. (ப-ரை): அறிவு அழுங்க - அறிவு கெடும் வண்ணம், தின்னும்- வருத்துகின்ற, பசி நோயும் - பசிப் பிணியும், மாந்தர் - மக்களது, செறிவு அழுங்க - அடக்கம் கெடும்படி, தோன்றும் - தோன்றுகின்ற, விழைவும் - விருப்பமும், செறுநரின் - பகைவர்களுடைய, வெவ்வுரை - கொடுஞ் சொற்களை, நோனா - பொறுக்காமைக்குக் காரணமாகிய, வெகுள்வும் - சினமும், இவை மூன்றும் - இம் மூன்று குணங்களும், நல்வினை - அறவினையை, நீக்கும் - அழிக்கின்ற, படை - படைக்கலங்களாம். எ - று. அழுங்கல் - கெடுதல், செறிவு - அடக்கம்; “செறிவறிந்து சீர்மை பயக்கும்” என்பது காண்க. ஈண்டு அடக்கமாவது புலன டக்கம். நோனா - பொறுக்காத; நோன்றல் - பொறுத்தல். நல்வினை என்பதற்கு மேற்கொண்ட நல்ல கருமம் என்றுரைத்தலுமாம். 96. கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி கொண்டன செய்வகை செய்வான் றவசி கொடிதொரீஇ நல்லவை செய்வா னரசனிவர் மூவர் பெய்யெனப் பெய்யு மழை. (ப-ரை): கொண்டான் - கணவனுடைய, குறிப்பு அறிவாள் - உள்ளக் குறிப்பினை யுணர்ந்து நடப்பவளாகிய, பெண்டாட்டி - மனைவியும், கொண்டன - தான் மேற்கொண்ட விரதங்களை, செய்வகை - செய்யும் முறைப்படி, செய்வான் - செய்பவனாகிய, தவசி - தவமுடையோனும், கொடிது - தீமையை, ஒரீஇ - விலக்கி, நல்லவை - குடிகளுக்கு நன்மையானவற்றை, செய்வான் - செய்வபனாகிய, அரசன் - அரசனும் (ஆகிய), இம்மூவர் - இம்மூவரும் - பெய்என - பெய்யென்று சொல்ல, மழை பெய்யும் - மழையானது பெய்யும் எ- று. பெண்டு - பெண்மை; பெண்டாட்டி - பெண்மையை ஆளுபவள்; ஈண்டு மனைவியென்னும் பொருட்டு, குறிப்பறிவாள் பெண்டாட்டி யாவள், செய்வகை செய்வான் தவசியாவான், நல்லவை செய்வான் அரசனாவன் எனத் தனித்தனி முடித்து இவர் மூவரும் பெய்யென மழை பெய்யும் என்றுரைத்தலுமாம். உலகம் நலம் பெறுதற்குக் கற்புடை மாதரும், தவஞ் செய்வாரும், நீதிமன்னரும் இன்றியமை யாதவ ரென்பது பெற்றாம். 97. ஐங்குரவ ராணை மறுத்தலு மார்வுற்ற எஞ்சாத நட்பினுட் பொய்வழக்கும் - நெஞ்சமர்ந்த கற்புடை யாளைத் துறத்தலு மிம்மூன்றும் நற்புடை யிலாளர் தொழில். (ப-ரை): ஐங்குரவர் - . . . . , ஆணை - ஏவலை, மறுத்தலும் - மறுத்து நடத்தலும், ஆர்வு உற்ற - விருப்பம் மிக்க, எஞ்சாத - குறைவில்லாத, நட்பினுள் - நண்பரிடத்து, பொய் வழக்கும் - பொய்கூறுதலும், நெஞ்சு அமர்ந்த - உள்ளம் விரும்பிய, கற்பு உடையாளை - கற்புடைய மனைவியை, துறத்தலும் - நீக்கிவிடலும், இம்மூன்றும் - இம்மூன்றும், நற்புடை இலாளர் - நற்சார்வு இல்லாதவருடைய, தொழில் - செய்கைகளாம் எ - று. ஐங்குரவராவார் ஐந்து பெரியவர்களுடைய உவாத்தியான், தாய், தந்தை தமையன் என்போர். ஆர்வுற்ற நட்பு, எஞ்சாத நட்பு எனப் பெயரெச் சங்களைத் தனித்தனிக் கூட்டுக. நற்புடை - நற்சார்வு; நல்லினம். இனி நற்புடை - தருமசிந்தை என்றலுமாம். 98. செந்தீ முதல்வ ரறநினைந்து வாழ்தலும் வெஞ்சின வேந்தன் முறைநெறியிற் சேர்தலும் பெண்பால் கொழுநன் வழிச்செலவு மிம்மூன்றுந் திங்கண் மும்மாரிக்கு வித்து. (ப-ரை): செந்தீ - சிவந்த முத்தீ வேள்விக்கும், முதல்வர் - முதன்மையான அந்தணர், அறம் நினைந்து வாழ்தலும் - தமக்குரிய அறங்களை மறவாது செய்து - வாழ்ந்துவரலும், வெஞ்சின வேந்தன் - கொடிய கேhபத்தினையுடைய அரசன், முறைநெறியில்- நீதி நெறிக்கண், சேர்தலும் - செல்லுதலும், பெண்பால் - ஒருபெண், கொழுநன்வழி - கணவனுடைய குறிப்பின்வழியே, செலவும் - செல்லுதலும், இம்மூன்றும் - இந்த மூன்று செயல்களும், வித்து - திங்கள் மும்மாரிக்கு - மாதந் தோறும் பெய்ய வேண்டிய மூன்று மழைக்கும், வித்து - காரணங்களாம் எ - று. அந்தணர் அறத்தாலும் அரசனது நீதியாலும் மகளிர் கற்பாலும் திங்கள் மும்மாரி பெய்யும் என்றபடி. 99. கற்றாரைக் கைவிட்டு வாழ்தலுங் காமுற்ற பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் - முட்டின்றி அல்லவை செய்யு மலவலையு மிம்மூவர் நல்லுலகஞ் சேரா தவர். (ப-ரை): கற்றாரை - கற்றறிந்த அறிஞர்களை, கைவிட்டு - விட்டு நீங்கி, வாழ்தலும் - (கீழாரொடு கூடி) வாழ்பவனும், காமுற்ற - தான் விரும்பியவற்றை, பெட்டாங்கு - தான் விரும்பியவாறே, செய்து - புரிந்து, ஒழுகும் - நடக்கின்ற, பேதையும் - அறிவில்லாதவனும், முட்டு இன்றி - யாதொரு தடையுமில்லாது, அல்லவை - தீமை யானவற்றை, செய்யும் - செய்கின்ற, அலவலையும் - கீழ்மகனும், இம்மூவர் - இந்த மூவரும், நல் உலகம் - நன்மை அமைந்த மேலுலகத்தை, சேராதவர் - அடையாதவராவர் எ - று. அலவலை - வீண் ஆரவாரஞ் செய்பவன் என்றுமாம். 100. பத்திமை சான்ற படையும் பலர் தொகினும் எத்துணையு மஞ்சா வெயிலானும் - வைத்தமைந்த எண்ணி னுலவா விழுநிதியு மிம்மூன்றும் மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு. (ப-ரை): பத்திமை சான்ற - (தம் மீது) அன்பு நிறைந்த, படையும் - சேனையும், பலர் தொகினும் - பகைவர் பலர் கூடி எதிர்ப்பினும், எத்துணையும் - எவ்வளவும், அஞ்சா - அச்சமுறாமைக்குக் காரண மாகிய, வைத்து அமைந்த - உணவு முதலிய எல்லாப் பொருளும் வைக்கப் பெற்று அமைந்த, எயில் அரணும் - மதிலையுடைய அரணும், எண்ணின் - அளவிடின், விழுநிதியும் - சிறந்த செல்வமும், இம்மூன்றும் - இந்த மூன்று பொருள்களும், மண்ஆளும் வேந்தர்க்கு - இவ்வுலகத்தினை ஆளுகின்ற வேந்தர்க்கு, உறுப்பு - உறுப்புக்களாம். எ - று. பத்திமை சான்ற படை - இறைவன் செறினும் சீர் குன்ற லில்லாத சேனை. எயில் என்றது உபலக்கணத்தால் அகழி, காடு முதலியவற்றையுங் குறிக்கும். அமைந்த - இலக்கணத்தால் அமைந்த வென்க; தொகுத்து வைக்கப்பட்டு நிறைந்த நிதியென்னலுமாம். அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு என்னும் ஆறங்கங்களுள் வினை செய்தற்கண் இன்றியமையாத மூன்றினை இதனுட் சிறந்தெடுத் தோதினார். திரிகடுகம் மூலமும் உரையும் முற்றிற்று.